திருமாற்பேறு


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும், பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும், அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.

குறிப்புரை :

இப்பதிகம், மருந்தாய், மாறிலியாய், உமாபதியாய், கயிலாய பதியாய். கால காலனாய், முனிவரும் தேவரும் மக்களும் ஒருசேர வணங்கத்தகும் எளிமையனாய் மாதுடையனாய், பிறை முதலிய சூடியவனாய், எந்தையாய் இருப்பவன் நகர் மாற்பேறு என்கின்றது. குருந்தவன் - குருந்த மரத்தடியிற் குருவானவன். இவ்வுரை மாணிக்கவாசகர் காலத்துக்கு ஞானசம்பந்தப் பெருமான் பின்னவராயிற் கொள்ளலாம். குருந்து - குருத்து எனலும் ஆம். குருகவன் - வயிர வகையில் ஒன்றானவன். மருந்து - அமுதம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும், தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர், மாற்பேறு.

குறிப்புரை :

பாறு - பருந்து. மாறிலி - மாறுபாடில்லாதவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை யேறியுஞ் சென்றுநின்று
உருவிடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப்பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும், போரில் வல்ல விடை மீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்.

குறிப்புரை :

கருவுடையார் உலகங்கள் வேவ - பிறப்புடைய ஆன்மாக்களின் போக நுகர்ச்சிக்காகப் படைக்கப்பெற்ற உலகங்கள் அழிய. உரு - அழகிய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

தலையவன் றலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

எல்லோரினும் மேம்பட்டவனும், அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும், பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும், கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

குறிப்புரை :

தலையணிமாலை - கபாலமாலை. நவில் - விரும்பும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

துறையவன் றொழிலவன் றொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும், பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும், பிறையணிந்த சடைமுடியனும், உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

துறையவன் - பல நெறிகளாய் இருப்பவன். தொழிலவன் - ஐந்து தொழிலையுடையவன். கறை - விடம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.

பொழிப்புரை :

பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள் முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

உமையையொருபாகம் வைத்தும் மன்மதனைக் கண்ணாற் காய்ந்தவன் என்பதில் நயம்ஓர்க. விண்ணவர் முதலானோர் ஒப்ப வணங்கத்தகும் எளிமையில் இருப்பவன் என இறைவனுடைய ஒப்பநோக்கும் பேரருள் உரைக்கப்பட்டது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய வண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

மாதி - மாதினையுடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

செய்யதண் டாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயனன் சேவடி யதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

சிவந்த தண்தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

ஐயன் நன்சேவடி - தலைவனுடைய நல்ல சேவடியை. மையல் - விருப்பம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

குளித்துணா வமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி காணலுறார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப்பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

`கூழாயினுங் குளித்துக் குடி` என்பது உலக வாய்மொழியாகவும் குளித்து உண்ணாத அமணர்கள் என அவர்கள் இயல்பு கூறியது. குண்டு ஆக்கர் - பரு உடலராகிய புத்தர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

அந்தமின் ஞானசம் பந்தன்சொன்ன
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி யெய்துவரே.

பொழிப்புரை :

ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.

குறிப்புரை :

அந்தம் இல் - அழிவற்ற. சந்தம் இன் தமிழ் - இசையோடு கூடிய இனிய தமிழ். இப்பதிகம் பாடினவர்க்குப் பயன் திருவடிப்பேறு எனச் சொல்லப்படுகின்றது. செந்து இசை பாடல் - செவ்விய இசையையுடைய பாடல். து - சாரியை.
சிற்பி