திருப்பிரமபுரம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

காட தணிகலங் காரர வம்பதி காலதனில்
தோட தணிகுவர் சுந்தரக் காதினிற் றூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம் வில்லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப் பிரம புரத்தரரே.

பொழிப்புரை :

பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியவர்.

குறிப்புரை :

மொழிமாற்று என்பது பொருள்கோள்வகையுள் ஒன்று. பொருளுக்கு ஏற்பச் சொல்லைப் பிரித்து முன்பின் கூட்டிக் கொள்வது. பிரமபுரத்தவர் காட்டைப் பதியாகக்கொள்ளுவர்; அரவத்தை அணிவர்; அழகிய காதில் தோடு அணிவர்; காலில் சிலம்பணிவர்; வேடுருவந்தாங்கி விசயற்குப் பாசுபதாஸ்திரம் அளிப்பர் என்கின்றது. காடது பதி, அணிகலம் காரரவம், காலதனில் தூச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர் எனப்பிரித்துக் கூட்டுக. பீடம் - மேடை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

கற்றைச் சடையது கங்கண முன்கையிற் றிங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.

பொழிப்புரை :

கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.

குறிப்புரை :

வேணுபுரத்து வேதியரின் சடையது திங்களும் கங்கையும்; முன்கையிற் கங்கணமாக அணிந்தது பாம்பு; கையில் பற்றியது பிரமன் தலை; சுட்டது முப்புரம் என்கின்றது. பண்டு கூற்றை எற்றித்து என மொழிமாற்றிக் காண்க. பற்றித்து எற்றித்து என்பன பற்றிற்று எற்றிற்று என்பதன் மரூஉ. எற்றித்து - உதைத்து.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாக முரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவிய புண்ணியரே.

பொழிப்புரை :

இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற்பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர்.

குறிப்புரை :

கூவிளம் சடைமுடிக் கூட்டத்தது; பேரி கையது; தூவிளங்கும் பொடி பூசிற்று; துத்திநாகம் பூண்டது என மொழிமாற்றிப் பொருள்கொள்க. கூவிளம் - வில்வம். பேரி - உடுக்கை. தூ - தூய்மை. பொடி - விபூதி. துத்தி - படப்பொறி. ஏவிளங்குநுதல் - வில்போல் விளங்கும் நெற்றியையுடையாள் என்றது உமாதேவியை. ஏ என்றது ஆகுபெயராக வில்லை உணர்த்திற்று. உரித்தனர் - தோலைத் தனியாக உரித்துப் பூண்டனர். புகலி - சீகாழி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

உரித்தது பாம்பை யுடன்மிசை யிட்டதோ ரொண்களிற்றை
எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற் றிருந்தவரே.

பொழிப்புரை :

பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர்.

குறிப்புரை :

பாம்பை உடல்மிசையிட்டது; ஓர் ஒண்களிற்றை உரித்து; ஆமையை இன்புறப் பூண்டது; முப்புரத்தை எரித்தது; சூலத்தை ஏந்திற்று; தக்கனை வேள்வி செருத்தது எனக்கூட்டுக. களிறு - யானை. செருத்தது - வருத்தியது. பன்னூல்விரித்தவர் - பல நூல்களையும் விரித்துணர்ந்த அந்தணர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு மேந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.

பொழிப்புரை :

வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச்சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று.

குறிப்புரை :

வான்தொட்டு வருங்கொடித் தோணிபுரத்துறை சுந்தரர் மத்தம் சூடுவர்; அக்கு அரையார்ப்பது; தக்கை கொட்டுவர்; குறுந்தாளன பூதம் இன்புகழ் விட்டுவர்; என்பு கலப்பிலர்; உலவின்மட்டு வருந்தழல் ஏந்துவர் எனக்கூட்டிப் பொருள்காண்க. அக்கு - சங்கு மணி. தக்கை - ஒரு வாத்தியம். உலவின் மட்டு வருந்தழல் - உலகத்தையழிக்குமளவு வரும் காலாக்கினி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

பொழிப்புரை :

தவமுனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர்.

குறிப்புரை :

தவர் பூ கைதொழுபூந்தராய் மேவிய புண்ணியர் பாசம் தடக்கையில் ஏந்துவர்; கோவணம் சாத்துவர்; தம்கூத்தவர்; கச்சு குலவி நின்று ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்; பல்படைபேய் பேர்த்தவர்; பேர் எழிலார் எனக்கூட்டுக. கச்சு குலவி நின்று ஆடுவர் - அரையில் கச்சு விளங்க நின்றாடுவர். குலவி: குலவ எனத்திரிக்க. பேர்த்தவர் - அடி பெயர்த்தாடல் செய்தவர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற் கழல்சிலம்பு
மாலது வேந்தன் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
டாலது வூர்வ ரடலேற் றிருப்ப ரணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர மேயவரே.

பொழிப்புரை :

அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர்.

குறிப்புரை :

அணிமணி நீர்ச் சேலது கண்ணி ஓர் பங்கர் சிரபுரம் மேயவர் காலது கழல் சிலம்பு, கற்றைச்சடை உள்ளால் கங்கை, மாலது பாகம், ஏந்தல் மழுவது, வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர் எனமொழிமாற்றுக. கோடு - மேருமலைத் தென் சிகரம். ஆலது, சேலது, என்பனவற்றுள் அது பகுதிப்பொருள் விகுதி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.

பொழிப்புரை :

வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவநகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.

குறிப்புரை :

விறல் மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியர், நெருப்புரு மேனியர், வெள்விடை ஏறுவர், நெற்றியின் கண்ணர், மருப்புருவன் தாதை, மா முருகன் விருப்புறு தந்தையார், பாம்புக்கு மெய் (யைக்) காட்டுவர் எனக் கூட்டுக. மருப்பு உருவன் - கொம்பினையுடைய விநாயகப்பெருமான், தாதையை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்து மெய் என்பதனோடு கூட்டி மெய்யை எனப்பொருள் கொள்க. இது உருபு பிரித்துக் கூட்டல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவிய தத்துவரே.

பொழிப்புரை :

நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத்தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர்.

குறிப்புரை :

சலம் கிளர் வாழ் வயல் சண்பையில் மேவிய தத்துவர் இலங்கைத் தலைவனை இறுத்தது; இரலை ஏந்திற்று; கலங்கிய கூற்று குமை பெற்றது; இல் நாள் மாணி உயிர்பெற்றது; கலங்கிளர் மொந்தை யின் கொட்டுவர்; காட்டகத்து ஆடுவர் எனக்கூட்டுக. இரலை - மான். இல் நாள் மாணி - வாழ்நாள் உலந்த மார்க்கண்டன், குமை பெற்றது - அளிந்தழிந்தது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுண் மேய கறைக்கண்டரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் விளங்கும் கறைக்கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன் முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.

குறிப்புரை :

கடி அணியும் பொழில் காழியுள் மேயகறைக்கண்டர் அடியிணை மால் கண்டிலன்; தாமரையோன் முடி கண்டிலன்; கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர்; புலித்தோல் உடுப்பர்; பிடியணியும் நடையாள் கூறுடையர்; வெற்பு இருப்பது எனக் கூட்டுக. கடி - மணம். கொடியணியும் - கொடியையலங்கரிக்கும், பிடி அணியும் நடையாள் - பெண் யானையையொத்த நடையினையுடைய பார்வதி. வெற்பு - கைலை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கையது வெண்குழை காதது சூல மமணர் புத்தர்
எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொ ரேனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவிய கொற்றவரே.

பொழிப்புரை :

சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம் உடுத்தவர்.

குறிப்புரை :

கொய்து அலர் பூம்பொழில் மேதகைய கொச்சையுள் மேவிய கொற்றவர் கையது சூலம்: காதது வெண்குழை; அமணர் புத்தர் தம்மை எய்தார்; அடியவர் எய்துவர்; ஓர் ஏனக்கொம்பு மெய்திகழ் பூண்பது; கோவணம் உடுப்பது எனக்கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 12

கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுடன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ லோகமதே.

பொழிப்புரை :

உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.

குறிப்புரை :

கழுமலநகர்க் கடவுளை ஞானசம்பந்தன் சொன்ன ஞானத்தமிழ் நல்லுரைகளைச் சொல்லவும் கேட்கவும் வல்லார் தேவரோடு சிவலோகம் பெறுவர் என்கின்றது. புண்ணியஞ் செய்து தேவராய்ப் பதவியில் நிற்பாரை விலக்கத் தொல்லை வானவர் என்றருளினார். இப்பதிகம் கட்டளைக் கலித்துறையாதலின் இப்பாடல் முதலடி, `கல்லுயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுடன்னை` என்றிருந்து சிதைந்திருக்கலாம் என்பர் தி.வே.கோ.
சிற்பி