திருப்பருப்பதம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறல னெருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

மிக்க ஒளியைத் தரும் மாணிக்க மணியை உமிழும் பாம்பை இடையில் பொருந்தக் கட்டியவனும், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்ட அழகிய யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மிசை ஏறாது ஆனேற்றில் ஏறி வருபவனும், நஞ்சணிந்த மிடறு டையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நீண்ட சிகரங்களை உடையதும் ஆங்காங்கே தோன்றும் மணிகள் உமிழ்கின்ற ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

குறிப்புரை :

திருவரையில் நாகத்தைக் கட்டியவர்; யானையேறாது ஆனேறு ஏறியவர்; நீலகண்டர் எழுந்தருளிய சீபருப்பதத்தைப் பரவுவோம் என்கின்றது. சுடுமணி - ஒளிவிடுகின்ற மாணிக்கம். அசைத்தான் - கட்டியவன். இடுமணி எழில் ஆனை - இரு மருங்கும் இடப்பெற்ற மணிகளையுடைய யானையை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

நோய்புல்கு தோறிரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லா நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

அறியாமையுள் மூழ்கித் திளைக்கும் நெஞ்சே! நீ போக நுகர்ச்சிக்குரிய இவ்வுடம்பில் இளமை முதல் மாறிவரும் தோற்ற மெல்லாவற்றையும், நோய்கள் தழுவும் தோல் சுருங்கி நரை தோன்றும் நிலையையும், நினைந்து சிந்திப்பாயாக. மூப்பு வருமுன் வாய் நிறைந்த தோத்திரங்களைப் பாடி, வலம் வந்து, தலையால் வணங்கிப் பாயும் புலியின் தோலை உடுத்த பெருமான் எழுந்தருளிய திருப்பருப் பதத்தைப் பரவுவோம்; வருக.

குறிப்புரை :

நெஞ்சே! தோல் திரங்கி, நரைத்துப் போகும் உனது தோற்றம் எல்லாவற்றையும் கொஞ்சம் நினைத்துப்பார், வாய் நிறைந்த தோத்திரத்தால் வலஞ்செய்து வணங்கிச் சீபருப்பதத்தைப் பரவுவோம் வா என்கின்றது. புல்கு - தழுவிய. திரைய - சுருங்க. நினை உள்கு - நினைத்துப்பார் சிந்தித்துப்பார். புல்கு - நிறைந்த.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாத லிரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம்பரவுதுமே.

பொழிப்புரை :

நெஞ்சே! வருத்தத்தைத் தரும் பிறவித் துயர்தீரத் தோன்றிய நீ, நல்வினைகள் செய்து அப்புண்ணியத்தால் தேவர் உலக இன்பங்களை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை எய்துதல் ஆகிய இரண்டிலும் பற்றுக்கொள்ளாதே. கரிய குரங்குகள் கனி நிறைந்த மரத்தில் ஏறி அதனை விடுத்து மூங்கில் மரங்களில் தாவி உகளும், குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெரு மானின் திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருக. மனிதமனம் ஒன்றை விட்டு ஒன்று பற்றும் நிலையை இப்பாடலின் வருணனை தெரிவிக்கிறது.

குறிப்புரை :

பிறவித் துன்பம் நீங்கப் பிறந்த நீ, செய்த நல்வினை யால் எய்தப்போகும் இன்பப் பிறவியை எண்ணி இரண்டுபட்ட மனம் எய்தாதே; திருமலையைப் பரவுவோம் வா என்கின்றது. துனி - வருத்தம். கோடிசெல்வம் பெறமுயன்றார் பிடி செல்வம் பெற்றுமகிழார்கள். அதுபோல நீ பேரின்பம் பெறப்பிறந்து புண்ணிய வசத்தால் வரும் தேவலோக இன்பம் முதலியவற்றைச் சிந்தியாதே உறுதியாக இரு என்பதாம். முசு - குரங்கு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கணோ யகலநின்றா னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையா னநங்கனை யழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

தேன் நிறைந்ததாய் மணம் கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடியவன், குளிர்ந்த சடைமுடியை உடையவன், எங்கள் துன்பங்களைப் போக்க எழுந்தருளியவன் என்று அடியவர் போற்ற அவர்கட்கு அருள்புரியும் ஈசனது இடம், ஐவகை மலர்களையும் வரிந்த கரும்புவில்லையும் உடைய மன்மதனின் அழகினை அழித்து அவனை எரித்துப் பசிய கண்களை உடைய வெள்ளேற்றை உடையவனாய் அப்பெருமான் எழுந்தருளிய பதிதிருப்பருப்பதம். அதனைப் பரவுவோம்.

குறிப்புரை :

எங்கள் பிறவிநோய் போக்க அருள் செய்யும் ஈசன் இடம் திருமலை என்கின்றது. கொங்கு - தேன். தொங்கலன் - மாலையையுடையவன். அநங்கன் - மன்மதன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

துறைபல சுனைமூழ்கித்தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந் தேனின மொலியோவாப்
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

கிளிகள் சிறகுகளால் எழுப்பும் ஓசையோடு வாயால் எழுப்பும் மெல்லிய அழைப்பொலியும், வண்டுகளின் ஒலியும் நீங்காததாய்ப் பறைபோல ஒலிக்கும் அருவிகளை உடையதாய் விளங்குவதும், தேவர்கள் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில் மூழ்கித் தூய மலர்களைச் சுமந்து விரைந்து வந்து வேத கீதங்களைத் தம் வாய்மொழியாக ஓதி மகிழ்வோடு வழிபடுமாறு சிவபெருமான் விளங்குவதுமாகிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.

குறிப்புரை :

வானவர்கள் சுனைநீராடித் தொழும் பருப்பதம் பரவு தும் என்கின்றது. சிறை - சிறகுகள். தேனினம் - வண்டுக்கூட்டம். பறை படும் - முழவுபோல ஒலிக்கும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவாப் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

அழகிய மடநெஞ்சே! பெருமை மிக்க சிறப்புக்கள் அகலாததாய் நாம் மேற்கொள்ளத்தக்க தவநெறியை நீ பின்பற்ற விரும்புவாயாயின், வேண்டுமா வேண்டாவா என இரண்டுபட எண்ணாமல் உறுதியாக ஒன்றை நினைந்து நெறியின் பயனாய் விளங்கும், கார்காலத்தே மலரும் மணம் மிக்க கொன்றை மலர்மாலை சூடியவனாய் எழுந்தருளியுள்ள அக்கடவுளது இடமாய் உலகிற் புகழ்மிக்க தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.

குறிப்புரை :

நெஞ்சே! சிறப்பகலாத செய்தவம் வேண்டில் இரண் டுபட எண்ணாதே; புகழ் நீங்காப் பொருப்பைப் பரவுதும் என்கின்றது. ஏர் - எழுச்சி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

ஓடைகளின் புறத்தே நிறைந்து வளர்ந்த விரிந்த தாமரை மலர்கள் அந்தணர் வேட்கும் யாகப் புகையோடு மணம் கமழுமாறு தொடுக்கப் பெற்ற நறுமாலை திருமுடியின்மேல் விளங்க, விடைக் கொடியைக் கையில் ஏந்தி, மேனியில் திருவெண்ணீறு அணிந்து மழுப்படை ஏந்தியவனாய் விளங்கும் சிவபெருமானது பருப்பதத்தை நாம் பரவுவோம்.

குறிப்புரை :

விடைக்கொடியை ஏந்தி நீறணியும் நிமலன் பருப் பதம் பரவுதும் என்கின்றது. புடை - பக்கம். புகை - யாகப்புகை. விரை - மணம். தொடை புல்கு - தொடுத்தலைப் பொருந்திய. விடை - இடபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தே னவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

நினைப்பு என்னும் ஆழமான கிணற்றின் அருகில் இடையறாது நின்று சோர்வுபடாமல், மனம் என்னும் கயிற்றைப் பற்றி இழுத்து, எண்ணங்கள் ஈடேறாமல் அயர்வுற்றேன். ஆதலின் இதனைக் கூறுகின்றேன். துன்பங்கள் நம்மை அடையாவண்ணம் காத்துக் கொள்ளுவதற்கு இதுவே வழி. ஆரவாரித்து எழுந்த பரந்துபட்ட வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தனது மணம் கமழும் சடையிலே தாங்கி மறையச் செய்தவன் ஆகிய சிவபிரானது பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவி நீரை உடைய திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

குறிப்புரை :

நினைப்பாகிய கிணற்றைப் பார்த்து நின்று நின்று மயங்காமல், மனத்தை வலிய அடிப்படுத்தினேன்; ஆதலால் அவலம் அடையாவண்ணம் பருப்பதம் பரவுதும் என்கின்றது. அயராது - மயங்காமல். வலித்து - இழுத்து. நினைப்பை ஆழமான கிணறாகவும், மனத்தைக் கயிறாகவும் உருவகித்தார்; இது மனத்தினை வலித்து என்பதனால் உணரப்பெறுகின்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

மருவிய வல்வினைநோ யவலம்வந் தடையாமல்
திருவுரு வமர்ந்தானுந் திசைமுக முடையானும்
இருவரு மறியாமை யெழுந்ததோரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான் முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாவண்ணம் எரிநடுவே மலை யாய் எழுந்தானது பருப்பதம் பரவுதும் என்கின்றது. வல்வினை நோய் - பரிபாகமுற்ற வினையால் வரும் துன்பம், அவலம் - அதனால் விளைந்த செயலறிவு. திரு உரு அமர்ந்தான் - திருமகளைத் தன் மார்பில் வைத்த திருமால், பருவரை உற - பெரியமலையைப் போல.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.

குறிப்புரை :

சமணர் புத்தர்கட்குப்பின் பேய்த்தேர்முன் குடங் கொண்டு தண்ணீர்க்குப் போவார்போல போவார்போக, யானையுரிபோர்த்த இறைவன் பருப்பதம் பரவுதும் என்கின்றது. சடம் - அறியாமை. மடம் - அறியாமை. பேய்த்தேர் - கானல்நீர். குஞ்சரத்தின் படம் - யானைத்தோலாகிய ஆடை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாட லிசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தனல்ல
ஒண்சொலி னிவைமாலை யுருவெணத் தவமாமே.

பொழிப்புரை :

வெண்ணெல், செந்நெல் ஆகிய இருவகை நெற் பயிர்களும் விளைவுதரும் வயல்களையுடையதும் விழாக்களின் ஆரவாரம் மிகுந்து தோன்றுவதுமாகிய கழுமலத்தில் அவதரித்தவனாய்ப் பண்ணோடு பொருந்திய பாடல்கள் பலவற்றால் இசைபாடி இறை வனைப் பரவிவரும் ஞானசம்பந்தன், திருப்பருப்பதத்தை நல்ல சொற்கள் அமைந்த பாடலால் பாடிய ஒளி பொருந்திய இத்திருப்பதிகப் பாமாலையைப் பலகாலும் எண்ணிப்பரவ, அதுவே தவமாகிப் பயன்தரும்.

குறிப்புரை :

சீபருப்பதத்தைத் திருஞானசம்பந்தர் சொன்ன இம் மாலையை உருவெண்ணத்தவமாம் என்கின்றது. வெண் செந்நெல்: உம்மைத்தொகை. எண்ண என்பது எண எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.
சிற்பி