திருக்கள்ளில்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளின்மே யவண்ணல் கழல்க ணாளும்
உள்ளுமே லுயர்வெய்த லொரு தலையே.

பொழிப்புரை :

முள்ளுடைய மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்ததும், விளமரங்களின்மேல் படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும் நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.

குறிப்புரை :

கள்ளில் மேவிய கடவுளின் கழல்களைத் தியானிக்க உயர்வெய்தல் துணிவு என்கின்றது. முள்ளின்மேல் - முள்மரத்தின்மேல். வெள்ளில்மேல் - விளாவின்மேல். உள்ளுமேல் - தியானிக்குமாயின். ஒருதலை - துணிவு.

பண் :

பாடல் எண் : 2

ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லா னுறை பதியால்
காடலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.

பொழிப்புரை :

ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகள் பல வற்றை அணிந்தவனும், தலையோட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும், சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தைத் தனது இடமாகக் கொள்ளாதவனும் ஆகிய சிவபிரான், பெரியோர்கள் அருகிலிருந்து அவன் புகழைப் பரவக்கள்ளில் என்னும் தலத்தைத் தான் உறையும் பதியாகக் கொண்டுள்ளான்.

குறிப்புரை :

ஆடல்பாடல் உடையவன் உறைபதிகள்ளில், அதன் கண் மேயானுடைய பெருமைகளைப் பெரியார்கள் பேசுவார்கள் என்கின்றது. அரவம் - பாம்பு. கலன் - உண்கலன். பாடு - பெருமை.

பண் :

பாடல் எண் : 3

எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.

பொழிப்புரை :

பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும், கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார் பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த பரமயோகி கள்ளில் மேயவன்; அவனே பெண் ஆண் ஆனான் என்கின்றது. எண்ணார் - பகைவர். கண் - அழகு. பிஞ்ஞகன் - அழகிய சிவன் (தலைக்கோலமுடையவன்).

பண் :

பாடல் எண் : 4

பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார்ந யந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான்
நிறைபெற்ற வடியார்கள் நெஞ்சு ளானே.

பொழிப்புரை :

பிறை சூடிய சடையை உடைய அண்ணலும், பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை விரும்பிச் சூடிய, விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மனநிறைவு பெற்ற அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பவனுமாகிய சிவபிரான், கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் என்நெஞ்சுளான் என்கின்றது. ஆலும் - ஒலிக்கும். நறை - தேன். கறை - விடம். நிறைபெற்ற அடியார்கள் - மனநிறைவுற்ற அடியார்கள்.

பண் :

பாடல் எண் : 5

விரையாலு மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளின் மேயான்
அரையார்வெண் கோவணத்த வண்ணல் தானே.

பொழிப்புரை :

இடையில் வெண்ணிறமான கோவணத்தை உடுத்த சிவபிரான் மணம் கமழும் ஐவகை மணப் பொருள்களாலும் மலர்களாலும் சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர் மக்கள் எதிர்கொள்ள, அழகியவும் பெரியவுமான கரைகளை உடைய பொன்னி நதியின் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் மணப்பொருள்களாலும், மலராலும் தோத்திரப் பாக்களாலும் ஊரார் எதிர்கொள்ளும் அண்ணலாக இருக்கின்றான் என்கின்றது. விரை - மணம். எண்வகை விரைகள் சங்க இலக்கியங்களிற் கூறப்பெற்றுள்ளன. விழுமை - பெருமை. உரை - புகழ்.

பண் :

பாடல் எண் : 6

நலனாய பலிகொள்கை நம்பா னல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்தெய்து மாதவத் தோர்க்கே.

பொழிப்புரை :

மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலியேற்கும் கொள்கையனாகிய நம்பனும், அழகிய வெற்றியைத் தரும் மழு வாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும், உண்கலனாகிய தலையோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான், தன்னை எய்தும் மாதவத்தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனாய்க் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் மாதவத்தோர்க்கு மூலமலத்தைத் தீர்த்து அவரைப் பொருந்துவன் என்கின்றது. நலன் ஆயபலி - இடுவார்க்கு நன்மையமைத்த பிச்சை. வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் - வெற்றியைத் தருவதாய மழுமுதலிய படைகளை வல் லவன். மலன் ஆய தீர்த்து - மலங்களைப்போக்கி, தீர்த்து என்பது உபசார வழக்கு. வலியை வாட்டி என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 7

பொடியார்மெய் பூசினும் புறவி னறவம்
குடியாவூர் திரியினும் கூப்பி டினும்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளின் மேயான்
அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே.

பொழிப்புரை :

மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழந்த கள்ளிலில் எழுந்தருளிய இறைவன் அடியவர்கள் திருநீற்றுப் பொடியை உடலில் பூசினும், சோலைகளில் எடுத்த தேனை உண்டு திரியினும் பலவாறு பிதற்றினும் அவர்கள் மனம் இறைவன் திரு வருளிலேயே அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம் செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் அடியார்கள் நீறணியினும், தேனைக் குடித்து ஊர்திரியினும், கூப்பிடினும் அவர்களை இகழ்வார்கள் கீழ் மக்கள் என்கின்றது. `எத்தொழிலைச் செய்தாலும், ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் மோனத்தே` இருக்குமாதலின் அவர்களையிகழ்வார் ஆதர் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 8

திருநீல மலரொண்கண் டேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.

பொழிப்புரை :

அழகிய நீலமலர் போன்ற ஒளி பொருந்திய கண் களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முப்புரிநூலும் திருநீறும் பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரியமிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்.

குறிப்புரை :

கள்ளிலே இறைவன் என்றும் பேணுவது என்கின்றது. பேணுவது - விரும்புவது.

பண் :

பாடல் எண் : 9

வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய வளந்தானு முள்ளு தற்கங்
கரியானு மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.

பொழிப்புரை :

சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும், நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும் பெரியோனாகிய இறைவன், அரியதலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள் ளான். அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப் போற்றிப் புகழ்வர்.

குறிப்புரை :

`கள்ளின் மேயான் பெரியான்` என்று அறிவார்கள் இவனைப் பற்றிப் புகழ்வார்கள் என்கின்றது. அறியாத ஒன்று பேசவாராதாகலின் பெரியான் என்று அறிவார்களே பேசுவர் என்றார்கள். வரி - செவ்வரி. வையந்தன்னை உரிய ஆய அளந்தான் - உலகத்தை உரித்தாக்க அளந்த திருமால்.

பண் :

பாடல் எண் : 10

ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயன் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந்த டியே.

பொழிப்புரை :

பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும், புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக் கேளாது விடுத்து, பெருமைக்குரிய வளவயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.

குறிப்புரை :

புறச்சமயிகள் பேச்சு நெறியற்றன; கள்ளில் இறைவன் திருவடியைச் சிந்தியுங்கள் என்கின்றது. ஆச்சியப்பேய்கள் - பரிகசிக்கத்தக்க பேய்கள். ஆச்சியம் ஹாஸ்யம் என்பதன் திரிபு. மா - பெருமை.

பண் :

பாடல் எண் : 11

திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல
முகைமேவு முதிர்சடையன் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுது மன்றே.

பொழிப்புரை :

நாற்றிசை மக்களாலும் புகழப்பெறும் சீகாழிப்பதியில் செல்வவளம் நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞானசம்பந்தன், நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த, முதிர்ந்த சடை முடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால், புகழோடு பேரின்பம் அடையலாம்.

குறிப்புரை :

நாற்றிசையும் புகழ்பெற்ற ஞானசம்பந்த சுவாமிகள் பதிகத்தைக்கொண்டு கள்ளில் ஏத்தப் புகழோடு பேரின்பமும் பொருந்தும் என்கின்றது. திகை - திசை. பகல் - சூரியன். பந்தன் - நாம ஏகதேசம்.
சிற்பி