திருவையாறு


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

தன்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும், மார்பின்கண் மான்தோலோடு விளங்கும் முப்புரிநூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

குறிப்புரை :

அடியார்களுடைய அருவினைகளையறுத்து அருள் செய்யத்துணிந்தவன்; தோல் சேர்ந்த நூல் செறிந்த மார்பினையுடையவன்; அரவோடு ஆமை ஓட்டைப் பிணித்தவன் வளநகர் ஐயாறு என்கின்றது. பணிந்தவர் - தாழ்வெனும் தன்மையோடு அடி பணிந்த அடியார்கள் . அருவினை - திருவருளன்றி வேறொன்றாலும் நீக்குதற்கரியவினை . பிணித்தவன் எனற்பாலது எதுகை நோக்கி பிணிந்தவன் என மெலிந்தது .

பண் :

பாடல் எண் : 2

கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியத ளரவரை
ஆர்த்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

புகழ்மிக்கவனும், பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடிமீது வைத்துள்ளவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், புலித்தோலைப் பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்தவன், யானையையுரித்துப் போர்த்தி யவன், புலித்தோல் பாம்பு இவற்றை அரையிற் கட்டியவன் நகர் ஐயாறு என்கின்றது. கீர்த்தி மிக்கவன் நகர் - திரிபுரம். திரிபுராதிகளுக்கு உண்டான கீர்த்தி அவர்கள் அழிவிற்குக் காரணமாயிற்று எனக்குறித்த வாறு, அடப் பார்த்தவன் - அழிய விழித்தவன். திரிபுரத்தை விழித்தெரித்ததாக ஒரு வரலாறு தேவாரத்துப் பல இடங்களிலும் வருதல் காண்க. அதள் - தோல். ஆர்த்தவன் - கட்டியவன்.

பண் :

பாடல் எண் : 3

வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவ னெழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது விமையவர் குறைகொள
அரிந்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து, அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கணை எய்தவனும், தேவர்கள் வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்த வனுமாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

வில்லேந்தி அவுணர் முப்புரங்களும் எரிய எய்த வனும், பிரமனுடைய சிரத்தைத் தேவர்கள் வேண்ட அரிந்தவனும் ஆகிய இறைவன் நகர் இது என்கின்றது. வரிந்த - கணுக்கள் தோறும் கட்டப்பெற்ற. பிரமன் சிரங்கொய்தது தம்மைப்போல ஐந்தலை படைத் திருந்தமையால் அன்று; தேவர்கள் வேண்டிக் கொள்ள அவர்கள் மீது வைத்த கருணையினாலேயே என்பது விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 4

வாய்ந்தவல் லவுணர்தம் வளநக ரெரியிடை
மாய்ந்தற வெய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை யாறங்கம்
ஆய்ந்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வலிமை வாய்ந்த அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும், வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும், பழமையான நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்தவன், பிறையும் நீரும் பொருந்திய சடையினன், வேதம் அங்கம் இவற்றையாய்ந்தவன் நகர் ஐயாறு என்கின்றது. வாய்ந்த - வரங்களின் வன்மைவாய்ந்த. ஆய்ந்தவன் - ஆராயப் பெற்றவன். வேதங்களை ஆயவேண்டிய இன்றியமையாமை இறை வற்கின்றாதலின் வேதங்களால் ஆராயப் பெற்றவன் என்பதே பொருந்துவதாம்.

பண் :

பாடல் எண் : 5

வானமர் மதிபுல்கு சடையிடை யரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வானின்கண் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும், தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும், விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.

குறிப்புரை :

பிறையணிந்த சடையில் பாம்பையும் கொன்றையை யும் சூடியவன், விளங்கும் மார்பினையுடையவன், உமையொருபாதியன் வளநகர் ஐயாறு என்கின்றது. வானமர் மதி என்றது மதியென்ற பொதுமைநோக்கி. ஓர் பாகம் ஆனவன் என்பதற்கு இடப்பாகம் கொண்டவன் என்றுரைப்பினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 6

முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும்
இன்பனை யிணையில விறைவனை யெழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வலிமையுடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும், ஒப்பற்ற முதல்வனும், அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

வலியுடையனை, முனிவரும் தேவரும் வணங்கும் இன்ப வடிவனை, என் பொன்போன்றவனை, அந்தணர் வணங்கும் அன்பனை உரிமையாக உடைய தலம் ஐயாறு என்கின்றது. முன்பு - வலிமை. இணையில இறைவனை - ஒப்பற்ற முதல்வனை. எழில் - அழகு. அன்பன - அன்பனுடையதான.

பண் :

பாடல் எண் : 7

வன்றிற லவுணர்தம் வளநக ரெரியிடை
வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

பெருவலி படைத்த அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

திரிபுரங்கள் தீயிடை வேவ எய்தவன், பந்தணை விரலியைப் பாகங்கொண்டவன் வளநகர் ஐயாறு என்கின்றது. அந்தம் இல் - அழிவில்லாத.

பண் :

பாடல் எண் : 8

விடைத்தவல் லரக்கனல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தாலிறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

செருக்கோடு வந்த வலிய இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி, அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள், தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

இராவணனை அடித்தலத்தால் அடர்த்தவன் நகர் ஐயாறு என்கின்றது. விடைத்த - செருக்கிய. நல்வெற்பு - கயிலை. இறை - சிறிது. இறையூன்றியது கருணையின் மிகுதியால்.

பண் :

பாடல் எண் : 9

விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனல்
எண்ணிலி தேவர்க ளிந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வானகத்தே வாழ்வார் தம்மோடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர் வழிபட, திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர், அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறிப்புரை :

இந்திரன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இவர்கள் வழிபட, திருமாலும் பிரமனும் காண்டற்கரிய கடவுள் நகர் ஐயாறு என்கின்றது. அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்.

பண் :

பாடல் எண் : 10

மருளுடை மனத்துவன் சமணர்கண் மாசறா
இருளுடை யிணைத்துவர்ப் போர்வையி னார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தணை யாறே.

பொழிப்புரை :

தெளிந்த மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர்நிறஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

மருண்ட மனத்துச் சமணர்கள் முதலாயினார்களிடம் பொருந்தாது, தெளிந்த மனத்தவர்களே! உறுதியாகத் தெளிவுறுங்கள்; அருள் உடைய அடிகள் இடம் ஐயாறே என்கின்றது. மருள், இருள் - அறியாமை. இணை துவர் போர்வை யினார் - இரண்டான காவிப் போர்வையுடையவர்கள்.

பண் :

பாடல் எண் : 11

நலமலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கு மந்தணை யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்.

குறிப்புரை :

ஐயாற்றைப்பற்றித் திருஞானசம்பந்தர் சொல்லிய கலைமலிதமிழிவை வல்லார் புகழ்மிகுந்த நன்மையர் ஆவர் எனப்பயன் கூறுகின்றது.
சிற்பி