திருவிடைமருதூர்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.

பொழிப்புரை :

இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித்தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருதமரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத்தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.

குறிப்புரை :

திரிபுரம் தீயெழச் சிரித்த மழுவேந்தியவனது இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிது என்கின்றது. நடை மரு திரி புரம் - இயங்குதலை மருவிய முப்புரம். படை மரு தழல்எழ - படைக்கலமாகப் பொருந்தித் தீயெழ. புடைமருது - பக்கங்களிலுள்ள மருத மரங்கள். பொதுளிய - செறிந்த.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி யழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியண லிடமிடை மருதே.

பொழிப்புரை :

மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசைவற்றிய தலையோடு ஆகியவற்றையும், மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திருவிடைமருதூராகும்.

குறிப்புரை :

மதியத்தையும் கபாலத்தையும் கங்கையையும் தாங்கிய சடையன்; குழைக்காதோடு விளங்கும் பூணூலையணிந்த அண்ணல் இடம் இது என்கின்றது. மழை நுழை மதியம் - மேகத்தினூடே நுழை யும்பிறை. அழிதலை - தசைநார் அழிந்த பிரமகபாலம். மடமஞ்ஞை கழை நுழை புனல் - இளைய மயில்கள் மூங்கிலிடையே நுழைகின்ற தேவகங்கை. இழை நுழைபுரி அணல் - இழையாகத் திரண்ட முப்புரிநூலை அணிந்த பெருமையிற் சிறந்தவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

அருமைய னெளிமைய னழல்விட மிடறினன்
கருமையி னொளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையு முடையண லிடமிடை மருதே.

பொழிப்புரை :

அன்பில்லாதவர்க்கு அரியவனும், அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

அரியனாக, எளியனாக, நீலகண்டனாக, சடை முடியனாக, ஓருருவிலேயே சிவமும் சக்தியுமாகிய ஈருருவத்தையுடையவனாக இருக்கும் அண்ணல் இடம் இடைமருது என்கின்றது. அருமையன் - அணுகியடிவணங்காத புறச்சமயிகட்கும், ஆணவ பரிபாகமுறாத பதவிமோகமுடையார்க்கும் அரியன். எளிமையன் - அடியார்க்கு எளியன். பெருமையன் - பெரியவற்றிற்கு எல்லாம் பெரிய பெருமையுடையவன். சிறுமையன் - சிறியவற்றிற்கெல்லாம் சிறியவன். பிணை பெண்ணொடு - பிணைந்துள்ள உமாதேவியோடு. ஒருமையின் - ஒரு திருமேனியிலேயே. இருமையும் உடைய - சிவமும் சத்தியுமாகிய இரண்டன்தன்மையும் உடைய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையு ணடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையண லிடமிடை மருதே.

பொழிப்புரை :

நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

இடுகாட்டுள் நடமாடுவோன், மதி புனைந்த சடையண்ணல் இடம் இது என்கின்றது. பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி - பொரிந்த முதுகிற் பொருந்தக் காய்ந்த களிப்போடு கூடிய நரி. வரி - கோட்டு அளவாக. அதாவது கீற்றாக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கு மிடமிடை மருதே.

பொழிப்புரை :

அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மட நடையினளாகிய மலையரையன் மகளும், பெருநல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதனபாரங்களைக் கூடியவனும், போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

பெருநலமுலையம்மையோடு கூடிய பெருமான் நகர் இடைமருது என்கின்றது. வருநல மயில் அன மட நடை மலைமகள் - வருகின்ற மயிலன்ன சாயலையும் அன்னம் போன்ற மடநடையையும் உடைய மலைமகள். பெருநலமுலையாள் இத்தலத்து இறைவியின் திருநாமம். செருநலமதில் - போர்நலம் வாய்ந்த முப்புரம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

கலையுடை விரிதுகில் கமழ்குழ லகில்புகை
மலையுடை மடமகள் தனையிட முடையோன்
விலையுடை யணிகல னிலனென மழுவினோ
டிலையுடை படையவ னிடமிடை மருதே.

பொழிப்புரை :

மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மட மகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

உமாதேவியை இடப்பாகம் உடையோன், மழு சூலம் இவற்றையுடையவன் இடம் இது என்கின்றது. துகிலையும், அகில் புகை கமழ் குழலையும் உடைய மடமகள் எனக் கூட்டுக. விலையுடை அணிகலன் இலன் என - விலைமதிப்புடைய உயர்ந்த ஆபரணங்கள் இல்லாதவன் என. இலையுடை படையவன் - இலைவடிவாகிய சூலப்படையை உடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமண லணைகரை யிசைசெயு மிடைமரு
துளமென நினைபவ ரொலிகழ லிணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.

பொழிப்புரை :

இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருதவாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க.

குறிப்புரை :

வண்டுகள் இசைமுரலும் இடைமருதுறைபவனிணை யடியைக் குளத்தில் மூழ்கி வழிபடல் குணமாம் என்கின்றது. வளம் என வளர்வன - இது வளமான இடம் என்று வளர்வனவாகிய. வரி முரல் பறவைகள் - வரிகளோடு ஒலிக்கின்ற வண்டுகள். மனம் நினைத்த பொருள் வடிவாக அமையும் இயல்பிற்றாதலின் `இடைமருது உளமென நினைபவர்` என்றார். குளம் அணல் உற மூழ்கி - குளத்தில் கழுத்தளவிருந்து மூழ்கி. அணல் - தாடி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

மறையவ னுலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவ னெனவல வடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவ னுறைதரு மிடமிடை மருதே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத்துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

வேதியன், உலகெலாமாயவன் என்றெல்லாம் சொல்ல வல்ல அடியவர்கள் துயரிலர் என்கின்றது. செந்தீக் கொழுந்துபோலச் சுடர்விடும் சடையவன் என்க. மிடறது கறையவன் என மாறிக்கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிட லரியதொ ருருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.

பொழிப்புரை :

மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

திருமாலும் பிரமனும் மாறுபட இன்னதென அறிய முடியா வடிவத்தோடு எழுந்த பெருமானிடம் இது என்கின்றது. மரு திடை நடவிய மணிவணர் - மருதமரங்களினிடையே கட்டிய உரலோடு புகுந்த கண்ணன். இனது எனக் கருதிடல் அரியது - இன்னது என்னக் கருதமுடியாத. எருது - இடபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

துவருறு விரிதுகி லுடையரு மமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மி னிடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெட லணுகுதல் குணமே.

பொழிப்புரை :

துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் பேச்சை விரும்பாதீர்கள்; இடை மரு தினைக் கைதொழும்; அவர்களின் வினை கேட்டையணுகுதல் குணம் என்கின்றது. துவர் உறு உடையர் - புத்தர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.

பொழிப்புரை :

நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.

குறிப்புரை :

தமிழ் விரகினனாய ஞானசம்பந்தப் பெருமான், இடைமருதைப் பற்றி இயம்பிய தமிழை வல்லவர் வினைகெடப் புகழொடு ஒளியுமிக விளங்குவர் என்கின்றது. படம் மலி தமிழ் - பட மெடுத்தாற்போலச் சிறந்த தமிழ். கிளர் - மிகுகின்ற.
சிற்பி