திருவிடைமருதூர்


பண் :

பாடல் எண் : 1

விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரு மெயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையின ரிடைமரு தடைவுனல்
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே.

பொழிப்புரை :

விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடை யினரும், வானகத்தில் திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த சடை யினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ்மிக உளதாகும்.

குறிப்புரை :

புலித்தோலரையினராகிய இறைவனது திருஇடை மருதினை அடைய விரும்பிய மனத்தவர்க்குப் புகழ் மிகவுளது என்கின்றது. திரிதரும் எயில் - திரிபுரம்.

பண் :

பாடல் எண் : 2

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரு மிடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவில ருலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெறுகுவ தரிதே.

பொழிப்புரை :

சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றினர் உறைவதும், காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம், மயிரின் நரை ஆகியன நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்.

குறிப்புரை :

நீலகண்டர் எழுந்தருளிய இடைமருது என்று கூறுபவர் நரைதிரை எய்தார்; மீட்டும் இவ்வுடலையும் எய்தார் என்கின்றது. பிறிது இரைபெறும் உடல் பெறுகுவது அரிது. வேறு உணவை உட்கொளும் இந்த அன்னமயகோசத்தை அடைவது அரிது; பிறவியில்லை என்பதாம்.

பண் :

பாடல் எண் : 3

சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய வுடலினர் நிறைமறை மொழியினர்
இலரென விடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடனலி விலதுள வினையே.

பொழிப்புரை :

சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும், மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும், நிறைவான வேதங்களை மொழிபவரும், உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.

குறிப்புரை :

இடைமருதை வலம்வர வினைகளால் உடல் நலிவு இல்லையாம் என்கின்றது. புனல் - கங்கை. நிலவிய - விளங்கிய. உளவினையால் உடல் நலிவு இலது என இயைக்க.

பண் :

பாடல் எண் : 4

விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவ ரிடைமரு தெனுநகர்
உடையவ ரடியிணை தொழுவதெம் முயர்வே.

பொழிப்புரை :

விடையூர்தியை உடையவரும், வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக்கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும், ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும், இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.

குறிப்புரை :

இடைமருதினை உடையவர் அடியிணை தொழுவது எம்முயர்வுக்கு வழியாம் என்கின்றது. வெளியது ஓர் தலை - பிரமகபாலம். கலன் - உண்கலன். முடுகுவர் - விரைவர். இடைவிடல் அரியவர் - ஆன்மாக்களால் இடைவிடாமல் எண்ணுதற்குரியவர் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 5

உரையரு முருவின ருணர்வரு வகையினர்
அரைபொரு புலியத ளுடையின ரதன்மிசை
இரைமரு மரவின ரிடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.

பொழிப்புரை :

சொல்லுதற்கரிய அழகரும், உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.

குறிப்புரை :

சொல்லுதற்கரிய உருவினரும், உணர்தற்கரிய தன்மைகளை உடையவரும், புலித்தோலாடையினரும் ஆன இறைவனது இடைமருதென நினைக்கவும் பேசவும் வல்லவர்கட்குப் புகழ்மிக உளதாம் என்கின்றது. இரை மரும் அரவினர் - உணவை உட்கொள்ளும் பாம்பினையுடையவர். உளம் உடையவர், உரைகளது உடையவர் (க்குப்) புகழ் உளது என முடிக்க.

பண் :

பாடல் எண் : 6

ஒழுகிய புனன்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை யடிகள தறைகழல்
எழிலின ருறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருற லிலரே.

பொழிப்புரை :

வழிந்தொழுகும் கங்கை நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித்தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.

குறிப்புரை :

இடைமருதை மலர்கொண்டு தொழுவார் துயருறுதல் இலர் என்கின்றது. அடிகளது இடைமருது, அறைகழல் எழிலினர் உறையிடைமருது எனத்தனித்தனி இயைக்க.

பண் :

பாடல் எண் : 7

கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமக ளுலவிய சடையினர்
மலைமகண் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவ ரிடமிடை மருதே.

பொழிப்புரை :

வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும், கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலையினரும், கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும், இலைவடிவான சூலத்தை ஏந்தியவருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

கங்கையுலாவிய சடையையும், உமாதேவியார் முலைத்தழும்பு சேர்ந்த வடிவினையும் உடையவர் இடம் இடைமருது என்கின்றது. வீணைவாயிலாக இசைக்கலையை வெளிப்படுத்துதலின் கலை மலி விரலினர் எனக் கூறப்பெற்றார்.

பண் :

பாடல் எண் : 8

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடை மருதது
பரவுவ ரருவினை யொருவுதல் பெரிதே.

பொழிப்புரை :

போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.

குறிப்புரை :

இடைமருதைப் பரவுவார்வினை நீங்குதல் பெரிதாமோ என்கின்றது. செருவு அடையில வல செயல் செய் அத்திறலொடும் - போரில் முறையற்ற வலிய செயல்களைச் செய்யும் அத்தகைய வலிமை யோடும். இருவகை விரல் நிறியவர் - அவன் வலிமையும் முடியும் ஆகிய இரண்டும் நெரியும்படியான இருவகைத் திருவுள்ளக்குறிப்போடு விரலை ஊன்றியவர். அதாவது அவன் அழியப்படாது அடங்க வேண்டும் என்ற திருவுள்ளக்குறிப்புடன் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 9

அரியொடு மலரவ னெனவிவ ரடிமுடி
தெரிவகை யரியவர் திருவடி தொழுதெழ
எரிதரு முருவர்த மிடைமரு தடைவுறல்
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காண முயன்றபோது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சிதந்த சிவபிரானாரது இடைமருதினை அடைய விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாகும்.

குறிப்புரை :

இடைமருதை எய்த வேண்டும் என்ற சித்தம் உடை யார்க்குப் புகழ் உண்டாம் என்கின்றது. தெரிவகை - ஆராய்ந்து அறிவதற்கு.

பண் :

பாடல் எண் : 10

குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமன நினைவது மெழிலே.

பொழிப்புரை :

குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள்யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப்பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது இடைமருது என மனத்தால் நினைவது அழகைத்தரும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் பலபேச அவற்றோடு நமக்கு உறவே யில்லை என்று அடைகின்ற சில புண்ணியசீலர்கள் வணங்குகின்ற திருவடியையுடையார் இடைமருது என எண்ணுவதே அழகு என்கின்றது. குடை மயிலினதழை மருவிய உருவினர் - குடையையும் மயிற் பீலியையும் தழுவிய வடிவத்தையுடையவர்களாகிய சமணர்கள். துவர் - காவி. பல சொல என்றது அவற்றின் பொருளற்ற தன்மையையும் பொருந்தாக்கோளையும் புலப்படுக்க.

பண் :

பாடல் எண் : 11

பொருகட லடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப்
பரவிய வொருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.

பொழிப்புரை :

கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப்பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தப்பெருமான் இடைமருதைப் பரவிய இப்பாடல் பத்தும் பயிலவல்லார் வினையும் இலர்; அவற்றால் வரும் துன்பமும் இலர் எனப்பயன் விளக்கிற்று. வியன் உலகு - அகன்ற சுவர்க்க பூமி.
சிற்பி