திருவீழிமிழலை


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

அலர்மகண் மலிதர வவனியி னிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர்
நலமலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மலர் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும், அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது நிலவுலகத்தே நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினையவல்லவர் திருமகளின் கருணையால் செல்வம் நிறையப் பெற்று உலகில் வாழ்வர்.

குறிப்புரை :

திருவீழிமிழலையை நினையவல்லவரே சீதேவி சிறக்க இப்பூமியில் வாழ்பவராவர் என்கின்றது. அலர்மகள் - லஷ்மி. அவனி - பூமி. இடம் - இடப்பாகம். நலம் - அழகு. உமைதனை இடம் மகிழ்பவர் உருவுடையவர் நகராகிய வீழிமிழலையை நினைபவர் அலர் மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் எனக்கூட்டிப் பொருள் காண்க.

பண் :

பாடல் எண் : 2

இருநில மிதன்மிசை யெழில்பெறு முருவினர்
கருமலி தருமிகு புவிமுத லுலகினில்
இருளறு மதியின ரிமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

எண்ணற்ற உயிரினங்கள் வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப் போக்கும் மதி போல ஒளியும் தண்ணளியும் செய்பவரும், தேவர்களால் தொழப்பெறும் தன்னொப்பார் இல்லாதவரும் ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவர்.

குறிப்புரை :

மண்முதலாகிய அண்டத்தில் மயக்கமலமற்ற உண்மை ஞானிகளும் தேவர்களும் தொழும் உவமனிலியாகிய இறைவன் மிழலையை நினைய வல்லவர்களே இவ்வுலகத்து அழகான உருவுடையவர்கள் என்கின்றது. எழில் - அழகு. கரு மலிதரு மிகு புவி - பிறவி மிக்க இப்பூமி. இருள் - ஆணவம். நிருபமன் - உவமம் இல்லாதவர். ஒப்பிலி என்பதாம்.

பண் :

பாடல் எண் : 3

கலைமக டலைமக னிவனென வருபவர்
அலைமலி தருபுன லரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

அலைகள் நிறைந்த கங்கை நதி, பாம்பு, தலை யோடு, வில்வஇலை, மிக்க கொன்றை ஆகியன பொருந்திய சடைமுடியினனாகிய சிவபிரான் உறையும் நிலைபேறு உடைய திருவீழிமிழலையை நினைய வல்லவர் கலைமகளின் தலைவன் இவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க் கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்.

குறிப்புரை :

மிழலையை நினைவார் கலைமகள் கணவனாவார் என்கின்றது. நகுதலை - கபாலம். இலைமலி இதழி - இலைகளோடு நிறைந்த கொன்றை. இலை - இதழுமாம்; நிலை - நிலைபேறு; அழியாமை.

பண் :

பாடல் எண் : 4

மாடமர் சனமகிழ் தருமன முடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலி னவில்பவர் மிகுதரு முலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

இடுகாட்டில் வாழும் பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான் இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு நீண்டகாலமாக விளங்குவதுமாகிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும் மனம் உடையவராவர்.

குறிப்புரை :

பேயோடாடும் பெம்மான், இவ்வுலகில் இனிதமரும் மிழலையை நினைபவர் சுற்றம் மகிழஇருப்பர் என்கின்றது. மாடு - பக்கம். மாடமர்சனம் - சுற்றம். காடு - சுடுகாடு. கழுது - பேய்.

பண் :

பாடல் எண் : 5

புகழ்மகள் துணையினர் புரிகுழ லுமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையை இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேதநெறிகளை ஓதி வளர்க்கும் தலையைச் சினந்து சிதைத்தருளியவனாகிய சிவபிரானது புகழ் பொருந்திய திருவீழிமிழலையை நினைய வல்லவர் புகழ்மகளைப் பொருந்துவர்.

குறிப்புரை :

உமாதேவியை இகழ்ந்த பிரமனது சிரத்தைக் கொய்த சிவபெருமான் எழுந்தருளிய இத்தலத்தை நினையவல்லவர் கீர்த்தி மாதைப் பொருந்துவர் என்கின்றது. இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர் முகம் - இகழ்ந்த பிரமனது அழகிய வேதநெறி வளரும் முகத்தை; என்றது வேதஞ்சொல்லும் வாயையுடைய தலையை என்பதாம்.

பண் :

பாடல் எண் : 6

அன்றின ரரியென வருபவ ரரிதினில்
ஒன்றிய திரிபுர மொருநொடி யினிலெரி
சென்று கொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

தவம் செய்து அரிதாகப் பெற்ற ஒன்றுபட்ட முப் புரங்களைத் தேவர்கள் வேண்டுகோட்படி ஒருநொடிப் பொழுதில் எரி உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து புகழ்பெற்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையைநினைய வல்லவர் பகைவர்கட்குச் சிங்க ஏறு போன்ற வன்மை உடையவராவர்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய இந்நகரை நினைய வல்லவர் பகைவர்களாகிய யானைகட்குச் சிங்கம் போல்பவர் என்கின்றது. அன்றினர் - பகைவர். அரி - சிங்கம். சிறுமுறுவல் - புன்னகை.

பண் :

பாடல் எண் : 7

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மணங்கமழும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனுடைய தலைகளில் ஒன்றை அவனது உடலில் பொருந்தா வண்ணம் கொய்த சிவபிரான் உறையும் செழுமையான நகராய். மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேதவிதிகளையும், அறநெறிகளையும் அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர் தம் கைகளால் பலகாலும் கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர்.

குறிப்புரை :

மிழலை நினைவார் வள்ளலாவார் என்கிறது. கரம் பயில் கொடையினர் - கை பலகாலும் பயின்ற வள்ளன்மையையுடையவராவர். கடிமலர் - மணமுள்ளமலர். பயில்வு அற எறி சிவன் எனப் பிரிக்க. வரம் - மேன்மை.

பண் :

பாடல் எண் : 8

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கனன் மணிமுடி யொருபது மிருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

இராவணனுடைய மணிமுடி தரித்த பத்துத் தலைகளும், இருபது கரங்களும் நெரியுமாறு தன்மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.

குறிப்புரை :

மிழலையை நினைவார் ஒன்றுபட்ட உணர்வோடு ஞானமார்க்கத்தை நாடுவர் என்கின்றது. ஒருக்கிய - ஒன்றுபட்ட. ஒளிநெறி - சிவஞானமார்க்கம். கரக்கனம் - கைகளாகிய கூட்டம்.

பண் :

பாடல் எண் : 9

அடியவர் குழுமிட வவனியி னிகழ்பவர்
கடிமல ரயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுக ணிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மணம் மிக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரம னும், திருமாலும் நினைதற்கு அரியவகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய பெரியோனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள், அடியவர் பலர் தம்மைச் சூழ இவ்வுலகில் இனிது வாழ்வர்.

குறிப்புரை :

இந்நகரை நினைவார் அடியார் கூட்டத்தோடு அவனி யில் நிகழ்பவர் என்கின்றது. குழுமிட - கூட. கருதருவகை - தியானிக்க முடியாதவண்ணம். உலகுகள் நிறைதரு நெடியவன் என்றது திருமாலும் நெடியவனாயினும் அவன் நின்ற இடமும் காலமும் நீங்க ஏனைய இடத்தும் எக்காலத்தும் நிறைந்தான் அல்லன்; சிவன் என்றும் எங்கும் பேரொளியாய் நிறைந்தான் என்பது விளக்க வந்தது.

பண் :

பாடல் எண் : 10

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களு மதியிலர்
துன்மதி யமணர்க டொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மருதத்தினது வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர். சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

புத்தர்கள் மதியிலிகள்; சமணர்களோ துன்மதிகள்; இந்த இருவகையாராலும் தொடர்பரிய புகழுடைய இறைவன் மிழலையை நினையவல்லவர் மன்மதன்போல அழகு பெறுவர் என்கின்றது. மருது அமர் வன்மலர் துவர் உடையவர் - மருதமலரால் ஊட்டிய காவியாடையையுடையவர்கள்.

பண் :

பாடல் எண் : 11

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே.

பொழிப்புரை :

முத்துப் போன்றவனாகிய சிவபிரானது திருவீழி மிழலையை ஒப்பற்ற புகலிப்பதியில் வாழும் சதுரப்பாடுகளோடு வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசம்பந்தனது பத்தியால் விளைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று கற்று வல்லவர் உலகினில் சிறந்த அடியவராய் விளங்குவர்.

குறிப்புரை :

அன்பால் விளைந்த இப்பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகில் சிறந்த அடியாராவர் என்கின்றது. நித்திலன் - முத்துப் போன்றவன். பத்தியில் வருவன என்பது பிறப்பால் விளைந்தன அன்று; அன்பால் வருவன என்றதாம். அடியவராதலைக்காட்டிலும் சிறந்த பேறு இல்லாமையால் ஒவ்வொரு பாடல்தோறும் ஒவ்வொரு பயன் கூறிவந்த சுவாமிகள் இப்பதிகப் பயனாக அடியராவார் என்றார்கள்; இதனைக் காட்டிலும் சிறந்தபேறு இல்லை என்பதனைத் தெரிவிக்க.
சிற்பி