திருச்சிவபுரம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.

பொழிப்புரை :

மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திருவுருவினனும், அதனால் ஒரு கூற்றில் நகில் தோன்றும் திருவுருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கருங்கற்களால் இயன்ற மதில்களால் பொதியப்பட்டுள்ள சிவபுரநகரைத் தொழுதால் நம்மை நலியும் வினைகள் இல்லை. இருமையிலும் இடர்கெடும்.

குறிப்புரை :

தனது திருமேனியிலேயே உமையையும் உடையவன்; அதனால் ஒருபாகத்தை முலைவிளங்கும் உருவமுடையவன்; அவனது சிவபுரநகரைத் தொழ வருத்தும்வினை இல்லை; இருமையும் இடர்கெடும் என்கின்றது. கலை - ஆடை, அரிவை - உமாதேவி. நலி வினை இலை இடர் இருமையும் கெடும் எனக் கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவ னுறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுர மடையநம்
இடர்கெடு முயர்கதி பெறுவது திடனே.

பொழிப்புரை :

ஒளி விரிந்த சடையினனும், விடை ஊர்தியனும் அசுரர்களின் மும்மதில்களை விளங்கும் எரி கொள்ளுமாறு செய்தழித்தவனுமாகிய சிவன் உறையும் பதிஆகிய, இடையிடையே திடலைக் கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால் நம் இடர்கெடும். உயர்கதி பெறுவது உறுதி.

குறிப்புரை :

ஒளிபொருந்திய சடையினன்; இடபத்தையுடையவன்; திரிபுரமெரித்த வீரன் உறைபதி சிவபுரம்; அதனையடைய நம் துன்பம் தொலையும்; உயர்கதி பெறுவது உறுதி என்கின்றது. திடல் - மேடு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விட நுகர்பவ னெழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரு மடியவ ருயர்கதி யினரே.

பொழிப்புரை :

மந்தரமலை மத்தாகச் சுழல அதில் கயிறாகச் சுற்றிய வாசுகி என்னும் பாம்பின் வயிற்றிலிருந்து அழலாகத் தோன்றி, நுரையுடன் வெளிப்பட்ட விடம், கடலில் பொருந்த, ஆலகாலம் என்னும் அந்நஞ்சினை உண்டவனுடைய, அழகு விளங்கக் கரையில் மோதும் நீர் நிறைந்த அரிசிலாற்றங்கரையில் விளங்கும் சிவபுரத்தின் பெயரைக் கூறுபவர் உயர் கதிகளைப் பெறுவர்.

குறிப்புரை :

மந்தர மலை சுற்ற, வாசுகியின் உடல் அழலெழ வந்த நுரையோடு கூடிய விடத்தை நுகர்ந்தவனது சிவபுரத்தைப் புகழ்பவர் உயர்கதியினர் என்கின்றது. வரை - மந்தரமலை. வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எனவும், எழில் திகழ் திரைபொரு புனல் அரிசிலது அடை சிவபுரம் எனவும் பிரித்துப் பொருள் கொள்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

துணிவுடை யவர்சுடு பொடியின ருடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய
மணிமிட றனதடி யிணைதொழு மவரே.

பொழிப்புரை :

அடக்கமுடைய மக்கள் வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய நீலமணிபோலும் மிடற்றினை உடைய சிவபிரானுடைய திருவடிகளை வணங்குவோர் துணிபுடையவராவர். திருநீறு பூசும் அடியவர் ஆவர். உடலை வருத்தும் பிணிகளை அடையார். பிறவியும் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

அடங்கிய மனத்து அடியவர்கள் பயில்கின்ற சிவபுரஞ் சேர்ந்த நீலகண்டப் பெருமானது திருவடியைத் தொழுபவர்கள் துணிவுடையர்; நீற்றினர்; பிணியிலர்; பிறவியும் அறப்பெறுவர் என்கின்றது. உடல் அடு பிணி - உடலில் வருத்துகின்ற நோய். விசிறுவர் - வீசுவர். தணிவு - பணிவு. மணி - நீலம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

மறையவன் மதியவன் மலையவ னிலையவன்
நிறையவ னுமையவண் மகிழ்நட நவில்பவன்
இறையவ னிமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென வுடையவ னெமையுடை யவனே.

பொழிப்புரை :

தேவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றுச் சிவ புரத்தைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக் கொண்டவனுமாகிய சிவபிரான் வேதங்களை அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது இடமாகக் கொண்டவன். நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் புரிபவன். எல்லோர்க்கும் தலைவன்.

குறிப்புரை :

சிவபுரம் உறைபவன் எம்மையும் ஆளாக உடையவன் என்கின்றது. நிலை - அழியாமை. உறைவு - உறையும் இடம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழ லொலிசெய வருநட நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த விணையிலி யணைபதி
சதிர்பெறு முளமுடை யவர்சிவ புரமே.

பொழிப்புரை :

முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை, கங்கை நதி ஆகியவற்றைப் பொருந்த அணிந்து, காலில் அசையும் கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும், தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியதலம், திறமையான மனம் உடைய அடியவர் வாழும் சிவபுரமாகும்.

குறிப்புரை :

முதிர் சடையிலே மதியையும் கங்கையையும் பதியச் செய்து நடம் செய்பவன்; திரிபுரம் எரித்த சிவன்; அவன் உறைபதி சிவபுரம் என்கின்றது. எதிர்பவர் - பகைவர். இணையிலி - ஒப்பற்றவன். சதிர் - சாமர்த்தியம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடு முழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரு மடியவ ரருவினை யிலரே.

பொழிப்புரை :

அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் நீர் மகளாகிய கங்கை ஆகியோருடன் புள்ளி பொருந்திய மானினது தோல் விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும், தீ நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்.

குறிப்புரை :

மலைமகளும் அலைமகளும் உடனுறையும் உருவுடையன்; பலிக்குத்திரிபவன் உறைபதி சிவபுரம்; அதனையடைபவர் வினையிலராவர் என்கின்றது. சலமகள் - கங்கை. உழை அதள் - மான் தோல். செடி படு பலி - முடைநாற்றம் கமழும் பிச்சை. செடி - ஆகு பெயராய்த் தலைஓட்டைக் குறித்தது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கரமிரு பதுமுடி யொருபது முடையவன்
உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென வடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதனம் முயர்கதி யதுவே.

பொழிப்புரை :

இருபது கைகளையும், பத்துத் தலைகளையும் உடையவனாகிய இராவணனின் மார்பு நெரியுமாறு கயிலை மலையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும், மேலான பரம் பொருள் இவனேயாவான் என அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய சிவ புரத்தை அடைதல் நமக்கு உயர்கதியைத் தரும்.

குறிப்புரை :

சிவபுரம் புகுதலே நமக்கு உயர்கதியாம் என்கின்றது. உரம் - மார்பு. அடர்வு - நெருக்குதல். சிவபுரநகர் அது புகுதல் நம் உயர் கதியதுவே எனப்பிரிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

அன்றிய லுருவுகொ ளரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடு முடையரிவ் வுலகே.

பொழிப்புரை :

தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையொடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரமன் ஆகியோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் சிவபுரம் என்று இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும் இலராவர். இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.

குறிப்புரை :

சிவபுரத்தை இருவேளையிலும் வழிபடுவார் துன்பஞ் சேரார்; இவ்வுலகிற் புகழொடும் பொருந்துவர் என்கின்றது. அன்று இயல் உருவு - கோபித்த இயல்பினையுடைய வடிவம், சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் எனப்பிரிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

புத்தரொ டமணர்க ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

பொழிப்புரை :

புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுத்து விடையூர்தியை உடைய தலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத்தரும்.

குறிப்புரை :

புறச்சமயிகளுடைய புறவுரைகள் வித்தகம் ஒழியா; ஆதலால் சிவபுரத்தைத் தொழுதல் உங்கட்குச் சிறந்த குணமாம் என்கின்றது. அவர்களது அறவுரையாகத் தோன்றுவனயாவும் புறம்பான உரைகளாம்; அதுவேயும் அன்றிச் சதுரப்பாடு உடையனவும் அல்ல. மெய்த்தக - உண்மையாக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த விசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.

பொழிப்புரை :

அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக் கொண்டு சிவபுரநகரில் உறையும் எந்தையைப் போற்றி உரைசெய்த இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள் முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தப் பெருமான் சிவபுரநகருறை எந்தையைச் சொன்ன இப்பதிகத்தை இசையோடு மொழிபவர்கள் வினையைக் கெடுத்து உயர்கதி அடைவார்கள் என்கின்றது. புந்தியர் - புத்தியையுடையவர்கள். சிந்தி - கெடுத்து.
சிற்பி