திருவீழிமிழலை


பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோ னின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே.

பொழிப்புரை :

அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய நால்வேதங்களின் உண்மைப்பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப்புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

வடவாலமரத்தின்கீழ் நால்வர்க்கு அறம் உரைத்து ஒளிநெறியளித்த இறைவன்கோயில், பண்டிதர்கள் பலகாற்பயிலும் ஓசையைக்கேட்டு, கிளிகள் வேதப்பொருள் சொல்லும் திருவீழிமிழலையாம் என்கின்றது. ஏர் - அழகு. எழுச்சியுமாம். ஈரிருவர் - சனகர் முதலிய தேவமுனிவர் நால்வர். `நேரிய நான் மறைப்பொருள்` எனவே இங்ஙனம் இறைவன்முன் உணராத பரம்பரையினர் தற்போத முனைப்பால் நேர்மையற்ற பொருளுங்கொள்வர் என்பது அமைந்து கிடந்தது. ஒளிசேர் நெறி - சிவஞான நெறி. வேரி - தேன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட விளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே.

பொழிப்புரை :

தேவர்கள் அனைவரும் கூடி மந்தரமலையை மத் தாக நாட்டி உடலில் புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவ னாகிய சிவபிரான் உறையும் கோயில், செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய இருக்கையில் விளங்கும், தாமரை இலையாகிய குடையின்கீழ் உள்ள இளஅன்னம், வயலில் விளையும் செந்நெற் கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

வாசுகியை கடைகயிறாகச் சுற்றி, மந்தரமே மத்தாக, தேவர்கள் கூடி பாற்கடலைக் கடைந்தகாலத்து எழுந்த விடத்தை உண்ட கண்டன் மன்னுங்கோயில், தாமரையாசனத்தில் இலை குடையாக, செந்நெற்கற்றை சாமரையாக, இளஅன்னம் வீற்றிருக்கும் மிழலையாம் என்கின்றது. பொறியரவம் - படப்பொறிகளோடு கூடிய வாசுகியென்னும் பாம்பு. மறி கடல் - அலைகள் மறிகின்ற கடல். செய் - வயல். வெறி - மணம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்று மெழிற்கணாடி
உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநகம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.

பொழிப்புரை :

வானத்திற் பறந்து திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில், உளுந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும், தாமரைகள் முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

உலகை வருத்தும் அவுணர்தம் புரத்தைக் கண்ணாடி யில் உழுந்துருளும் காலத்தில் எரித்த இறைவன்கோயில், முத்து, மகளிர் பல்காட்ட, தாமரை, முகங்காட்ட, துள்ளுங்கயல், விழிகாட்ட, பவளம் வாய்காட்டும் வீழிமிழலையாம் என்கின்றது. நலிந்து - வருத்தி. உழுந்து உருளும் அளவை - ஓர் உளுந்து உருளக்கூடிய காலச்சிறுமையில். தரளம் - முத்து. கோகநகம் - தாமரை. வில் - ஒளி.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே.

பொழிப்புரை :

நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல நடனமாட, வண்டுகள்பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்களையும் படைத்து, அவற்றின் உயிர்க்குயிராக நிற்கும் இறைவன் கோயில், முகிலாகிய முழவம் ஒலிக்க, மயில் நடமாட, வண்டுபாட, கொன்றைமரம் பொற்பரிசில் வழங்க, காந்தள் கையேற்று வாங்கும் மிழலையாம் என்கின்றது. உரைசேரும் - நூல்களில் உரைக்கப் பெறுகின்ற. முகில் - மேகம். விரை - மணம். இதழி கொன்றை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

காணுமா றரியபெரு மானாகிக் காலமாய்க் குணங்கண்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை யுத்தமனை யிறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப போலோங்கு மிழலையாமே.

பொழிப்புரை :

காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளாய், பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரான் உறையும் கோயில், மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய, உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பன போல, அசைந்து ஓங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.

குறிப்புரை :

காணுதற்கரிய கடவுளாகி, காலம் குணம் இவையுமாகி, எல்லாரானும் போற்றப்பெறும் பிரம விஷ்ணு ருத்ரனாகி, பெரிய உலகத்தைப் படைத்தும் அளிக்கும் பெருமான்கோயில், இறைவனை வணங்குங்கள் என்று கொடிகள் தேவரையழைக்கும் வீழிமிழலை என்கின்றது. காலமாய் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலமாய்; என்றது எல்லாவற்றையும் அடக்கித் தம் எல்லைக்குள் இன்பத்துன்பங்களை எய்தி நடக்கச்செய்தலின். குணங்கள் மூன்றாய் - சாத்துவிகம் முதலிய குணங்கள் மூன்றாய். பேணும் - போற்றப் பெறுகின்ற. படைத்து அளித்து எனவே அழித்தலாகிய இவர்தொழில் சொல்லாமலே பெறப்பட்டது. தாணு - நிலைத்த பொருள். தூண் வடிவு என்றுமாம். வேணுவார்கொடி - மூங்கிற்றண்டில் கோக்கப்பெற்ற நீளமான கொடிகள். விண்ணோர்கள் போகத்தால் மோகித்து மறந்திருத்தலின் கொடிகள் நினைவூட்டி அழைக்க வேண்டியதாயிற்று.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யு மிழலையாமே.

பொழிப்புரை :

உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

உள்ளன்புடையாராக அரிஷட்வர்க்கங்களை அழித்து, ஐம்புலன்களையும் அடக்கிய சிவஞானச் சேர்க்கையுடையோர்களின் இதயத் தாமரையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் கோயில் அழகிய இடத்தில் சங்குகளாகிற சுற்றம்விளங்க தாமரையாகிய தீயில் புன்கம் பொரிதூவி மணங்களைச் செய்யும்மிழலை என்கின்றது. உள்ளப் புண் டரிகம் - இதயதாமரை. தகவு - தகுதி. நீர் மணித்தலத்து - நீரோட்டத்தோடு கூடிய இரத்தினங்கள் அழுத்தப்பெற்ற இடத்து. சங்கு உள வர்க்கம் திகழ - சங்குகளாகிய உள்ளசுற்றம் விளங்க. சலசத்தீயில் - தாமரைப் பூவாகிய தீயில். மலர்ந்த தாமரையைத் தீக்கு ஒப்பிடுவது மரபு.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

ஆறாடு சடைமுடிய னனலாடு மலர்க்கைய னிமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங் குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலையாமே.

பொழிப்புரை :

கங்கையணிந்த சடைமுடியை உடையவனும், மலர் போன்ற கரத்தில் அனலை ஏந்தியவனும், இமவான் மகளாகிய பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியை உடையவனும், கூத்தாடும் குணமுடையவனும், ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து தேனையுண்டு, தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த நிறம் உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக்களிக்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

ஆறுசேர் முடியன், அனல்சேர் கையன், உமையொரு கூறன். கூத்தன்கோயில், செங்கழுநீர்ப்பூவின் மகரந்தத்தில் ஆடி, தேன்குடித்துச் சிவந்த வண்டு வேற்றுவடிவுகொண்டு செவ்வழிப் பண்ணைப்பாடும் மிழலையாம் என்கின்றது. தாது - மகரந்தம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கருப்பமிகு முடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்ற னுடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே.

பொழிப்புரை :

கர்வம் மிகுந்த உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை வளைத்துக் கயிலை என்னும் மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும் தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில், செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப் பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

கயிலையை எடுக்கலுற்ற இராவணனை நெரித்த விரலையுடைய பெருமான்கோயில், சலந்தரன் உடலையழித்த சக்கரத்தைத் திருமால் வழிபட்டுப்பெற்ற திருவீழிமிழலை என்கின்றது. கருப்பமிகும் உடல் - கருவம் மிகுந்த உடல் என்றது அப்பிராகிருதமான கயிலையைத்தீண்டும் உரிமையுங் கூட, பிராகிருத மேனி தாங்கிய இவற்கில்லை என்பது, உணர்த்தியவாறு. தருப்பம் - செருக்கு, மால் வழிபாடு செய்த வரலாறு இத்தலத்து நிகழ்ச்சி. இழிவிமானம் - விண்ணிழி விமானம். இது இத்தலத்து விமானம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் ஏனமோ டன்னமாகி
அந்தமடி காணாதே யவரேத்த வெளிப்பட்டோ னமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேரூமூர் மிழலையாமே.

பொழிப்புரை :

சிவந்த இதழ்களையுடைய பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும், திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும் முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய சிவபிரான் அமரும் கோயில், தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய், சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும், அன்னமும் ஏனமுமாகித் தேடியறிய முடியாது வணங்க வெளிபட்ட இறைவன்கோயில், வேதவிதிப்படி தருப்பையைப்பரப்பி, நெய் சமித்து இவைகளைக்கொண்டு வேள்வி செய்து, உலகைக்காக்கும் அந்தணர் வாழும் மிழலையாம் என்கின்றது. அந்தம் - முடி. புந்தியினா - அறிவால். வேட்டு - வேள்வி செய்து.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

எண்ணிறந்த வமணர்களு மிழிதொழில்சேர் சாக்கியரு மென்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க் கருள்புரியு நாதன்கோயில்
பண்ணமரு மென்மொழியார் பாலகரைப் பாராட்டு மோசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ டும்மிழியும் மிழலையாமே.

பொழிப்புரை :

எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித்தன் அடியவர்களுக்கு அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் தம்மை அறியாவகையாக அவர்களை மயக்கித்தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன்கோயில், பண்மொழிப் பாவைமார்கள் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு விண்ணவர்கள் விமானத்தோடு வந்திறங்கும் வீழிமிழலை என் கின்றது.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

மின்னியலு மணிமாட மிடைவீழி மிழலையான் விரையார்பாதம்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லா ரிருநிலத்தி லீசனெனு மியல்பினோரே.

பொழிப்புரை :

மின்னல் போலும் ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும், செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாட வல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.

குறிப்புரை :

வீழிநாதன் திருவடியைச் சிரமேற்கொண்டு ஒழுகும் திருஞானசம்பந்தர் பரிந்துரைத்த பாடல் வல்லார் பெரியபூமியில் ஈசன் எனும் இயல்புடையோர் ஆவர் என்கின்றது. பரிந்து - அன்புகொண்டு.
சிற்பி