திருக்கச்சியேகம்பம்


பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற வணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய வேகம்பந் தொழுதேத்த விடர்கெடுமே.

பொழிப்புரை :

அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.

குறிப்புரை :

திருநீறு பூசிய திருமார்பிற் பூணூல் கிடந்திலங்க, உமாதேவியோடு எழுந்தருளிய கச்சியுள் எல்லையற்ற குணங்களையுடைய அடியார்கள் போற்ற எந்தை மேவிய ஏகம்பம் தொழுதேத்த இடர்கெடும் என்கின்றது. அந்தம் - முடிவு. அணங்கினொடு - பார்வதியோடு.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்த மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, கடம்ப மரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

திரிபுரம் எரியச் சரம்விட்ட சங்கரன் மேவிய இடமாகிய பொழில் சூழ்ந்த ஏகம்பம்சேர, இடர்கெடும் என்கின்றது. துரந்து - செலுத்தி. மாதவி - குருக்கத்தி. மரவம் - வெண்கடம்பு.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடல் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த வேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக் கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.

குறிப்புரை :

திருநீறணிந்த மார்பில் அரவம் அணிந்து, பெண்ணை ஒருபால் விரும்பி, எரிக்கண் திருநடனத்தை விரும்பிய பிஞ்ஞகன் இடம், விண்ணளாவிய மாடமோங்கிய கச்சியுள் ஏகம்பம் ஆம்; அதனைச்சேர இடர்கெடும் என்கின்றது. பிஞ்ஞகன் - மயிற்பீலியை யுடையான்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

தோலுநூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூ ழேகம்ப மேத்த விடர்கெடுமே.

பொழிப்புரை :

மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

கரு மான்தோலும் பூணூலும் நெருங்கிய மார்பில் நீறணிந்து காலனைக் காய்ந்த கடவுள் கருதுமிடம், கச்சியுள் ஏகம்பம்; அதனை ஏத்த இடர்கெடும் என்கின்றது.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
பாடனான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துட னாடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர் மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான் மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பலசூழப், புலால்வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

இதழோடு கூடிய அழகிய கொன்றை மலரை அணிந்த சடையிலே பிறைமதியைச் சூடி, நான்மறை பாடலாக, பேய்க்கணம் புடைசூழ, அனலேந்தி ஆடும் பெரியோன் சேரும் இடம் கச்சியுள் ஏகம்பம் என்கின்றது. சேடர் - உலகம் அழியத் தான் எஞ்சி நிற்பவர். சேர - தியானிக்க.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்து
ஆகம்பெண் ணொருபாக மாக வரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரிநூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.

குறிப்புரை :

மேருமலை வில்லாக முப்புரம் எரித்து, உடலில் ஒருபாகம் பெண்ணாக ஏற்று, அரவையும் நூலையும் அணிந்து கச்சியேகம்பத்துள் அமர்ந்த ஈசன் திருவடி ஏத்த இடர்கெடும் என்கின்றது. சாகம் - வில். சாபம் எதுகை நோக்கிச் சாகம் ஆயிற்று, தானவர் - அசுரர். ஆகம் - உடல். மாகம் - ஆகாயம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா வரக்கன்ற னீண்முடி பத்து மிறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.

குறிப்புரை :

பிறையணிந்த செஞ்சடையில் அரவத்தையும் அணிந்து, இடப்பாகத்து நாணோடு கூடிய இல்வாழ்க்கைக்குரிய உமாதேவியை வைத்து, மண்டையோட்டில் பிச்சையேற்று, இராவணன் சிரம் பத்தும் இறுத்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது. வாள் நிலா - ஒளிபொருந்திய நிலா. புல்கு - தழுவிய. இல்வாழ்க்கை - மனையில் வாழ்தலையுடையாளாகிய உமாதேவி; தொழிலாகுபெயர். ஏண் - உறுதி. சேண் - ஆகாயம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை யந்தண னணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வல்வினை மாய்ந்தறுமே.

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையையுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய, வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அடிவணங்க அழல்வண்ணமாகிய பெருமான் உமாதேவியோடு உறையுமிடம், வள்ளல்கள் வாழ்கின்ற கச்சியில் ஏகம்பமாம்; அதனைத்தொழ வல்வினையறும் என்கின்றது. கரவு - உள்ளதை மறைக்கும் வஞ்சம். மரவம் - மல்லிகை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை யொன்றினா லவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.

பொழிப்புரை :

பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித்தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் கூறும் கட்டுரைகளை நம்பாதீர்கள்; அவை அவர்கள் கட்டிய கட்டுக்கள்; பகைவரது முப்புரங்களும் ஓரம்பினால் உடையச்செய்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது. குண்டுபட்டு - உடல்பருத்து. கூறை - ஆடை. விண்டவர் - பகைவர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்ப மேயவனைக்
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.

பொழிப்புரை :

அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.

குறிப்புரை :

இப்பதிகம் வல்லவர்கள் புகழ் ஓங்கித் தேவர்களோடும் சேர்வர் என்கின்றது. ஏரின் ஆர் பொழில் - அழகு நிறைந்த சோலை. காரின் ஆர் - மேகங்கள் கவிந்த.
சிற்பி