பண் :

பாடல் எண் : 1

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

`இந்து` என்பது வடசொல்லாதலின் இன்பெறாது என்று, `இந்து விளம்பிறை` எனப்பாடம் ஓதுவாரும் உளர். `நந்தி` என்பது சிவபெருமானுக்கே பெயராதல் அறிக. திருமூலர் தமது நூலை ``ஒன்றவன்முன்`` எனத் தொடங்கினார் என்பது சேக்கிழார் திருமொழி யாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர் தாம்முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க. திருமுறைகளுள் ஒன்றிலும் முதற்கண் விநாயகர் காப்பு இல்லாமையும், சாத்திரங்களிலும் உந்தி, களிறு முதலிய சிலவற்றில் இல்லாமையும் நோக்கத்தக்கன. ``ஒன்றவன்றான் எனஎடுத்து முன்னிய அப்பொருள்மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி`` என்பதே சேக்கிழார் திருமொழியாகலின், இந் நூலின் தொடக்கப்பாடல் ``ஒன்றவன்றானே`` என்னும் பாடலே என்பது இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 1

கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

பொழிப்புரை :

ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

குறிப்புரை :

முதற்கடவுளை, `அவன்` எனப் பண்டறிசுட்டாற் கூறுதல் வழக்கு. ``அவன்தானே`` என்றதில் தான் அசைநிலை; ஏகாரம் பிரிநிலை./n ``பிரமம் ஒன்றே இரண்டாவதில்லை``1 எனவும், ``மெய்ப் பொருள் ஒன்றே``2 எனவும், வேதமும் கூறுதல் காண்க. ``தனக் குவமை இல்லாதான்`` என்றதும் இப்பொருட்டு. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியுமாம். இலயம் முதலிய வற்றின் இயல்பையும் ஆறத்துவாக்களின் இயல்பையும் சிவாகமங் களிலும், மெய்கண்ட நூல்களிலும் கண்டுகொள்க./n ``அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொருளின்பம் வீடு - மொழிந்த வாயான்``3 எனவும், ``விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்``4 எனவும், போந்த அருட்டிரு மொழிகளால், அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள்களையே முனிவர் நால்வர்க்கு நான்கு வேதங்களால் உணர்த்தியருளினான்` என்பது இனிது விளங்கிக் கிடத்தலின், `நான்கு உணர்ந்தான்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``உணர்ந்தான்`` என்னுமிடத்து, `தானே` என்பது இசையெச்சம். அவ்வினைச் சொல் உணர்ந்து உணர்த்துதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது./n ``வென்றனன்`` என்றது, `அவற்றொடு பொருந்திநின்றே அவற்றால் திரிபின்றி நின்றான்` என்றவாறு. ``வினையின்நீங்கி`` 5 என்றும், ``பற்றற்றான்``6 என்றும் ஓதியவற்றிற்கும் இவ்வாறே உரைக்கப்படுதல் காண்க. இவற்றானே, ``பொறிவாயில் ஐந்த வித்தான்``7 என்றதும் இப்பொருட்டாயிற்று. ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் - வென்றானை``8 ``மங்கை யோடிருந்தே யோகுசெய்வானை``9 என்பனவும் இக்கருத்தே பற்றி வந்தன. மனைவியோடிருந்த முனிவரைத் திருவள்ளுவர், ``ஐந்த வித்தான்`` 10 என்றதும் இங்கு நினைக்கத்தக்கது./n நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகட்கு உட்பட்ட புவனங்களை அவற்றிற்கு முதல்வராகிய கடவுளரது உலகங்களாகவும், இறுதிக் கண்ணதாகிய சாந்தியதீத கலையில் இலய புவனங்களை வேறிரண் டாகவும் வைத்து `ஏழுலகம்` என்றலே ஆகம முறை. `பூலோகம், புவ லோகம், சுவலோகம், மகலோகம், தவலோகம், சத்தியலோகம்` என வேதமுறையிற் கூறப்படும் ஏழுலகங்களில் ஏழாவதாகிய உலகம் புவனபதி உலகமாகவும், ஏனைய ஆறும் கீழ்க்கீழ் நோக்க ஒன்றின் ஒன்று தாழ்ந்தோர்க்குரிய உலகமாகவும் மேல் ஆகம முறையிற் கூறிய ஒவ்வோர் உலகத்திலும் உட்கூறுகளாய் அவ்வவ்வுலகங்கட்கு ஏற்ற பெற்றியில் அமைந்துள்ளவை என்பது சிவாகம நூல் துணிவு. கீழ்க்கீழ் உள்ள உலகங்களில் மேன்மேல் உள்ள புவனபதிகட்குரிய இடங்களும் உள; மேன்மேல் உள்ள உலகங்களில் கீழ்க்கீழ் உள்ள புவன பதிகட் குரிய இடங்கள் இல்லை என உணர்க. ``சென்றனன்`` என்றது முற்றெச்சம்./n ``தான் இருந்தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரமும், ஆக்கச் சொல்லும் தொகுத்தல் பெற்றன. தானேயாய் இருத்தலாவது சத்தி யோடு கூடிச் செயற்படுத்தலைத் தவிர்ந்திருத்தல். இதுவும், முதற்கண் ``ஒன்றவன்றானே`` என்றதும் இறைவனது, `சொரூபம்` எனப்படும் உண்மை நிலை. ஏனைய, `தடத்தம்` எனப்படும் பொது நிலை. ஒன்று முதலாகத் தொடங்கி ஆறு ஈறாகக் கூறியது, `ஒருவனே பலவாய் விரிந்து நிற்கின்றான்` என்பது உணர்த்துதற்கு. ``ஏழும்பர்ச் சென்றனன்`` என்றது, `அவ்வாறு விரிந்து நிற்பினும் அவன் மன வாக்கிற்கு எட்டாதவனே`` என்றற் பொருட்டு./n ``எட்டு`` என்றது, சொல் ஒப்புமையால் எண்ணலங்காரத்தை நிரப்பிற்று, ``நால்வாய் ஐங்கரத்தன்``1 என்பதிற்போல. எட்டுதல் - முயன்று பற்றுதல். அம் முயற்சிகள் பலவும் நூலுட் கூறப்படும். ``உணர்ந்து எட்டு`` என்றது, `மேற்கூறியவாற்றால் அவன் ஒருவனே உணரப்படுதற்கும், அடையப் படுதற்கும் உரியவன்` என்பது அறிவித்தவாறு./n `வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல்` என்னும் மூவகை வாழ்த்துள் இது பொருளியல்புரைத்தல். இதனானே இந்நூல் நுதலிய பொருள் தொகுப்புக் குறிப்பாற் கூறப்பட்டது. அஃது ஆமாறு, `முதற்கடவுள் உளன்; அவன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை. ஆயினும் அவன் தன்னின் வேறாகாத சத்தியால் `அருளல், மறைத்தல்` என்னும் இரண்டனையும் செய்தற் பொருட்டு, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூவகை நிலைகளில் நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு, என்பவற்றை அடையும் நெறிகளை உலகிற்கு உணர்த்தித் தான் ஒன்றிலும் தோய்விலனாய் நின்றே எப்பொருளுமாக விரிந்து, அங்ஙனம் விரிந்தவிடத்தும், மன வாக்குக்களைக் கடந்த தனது நிலைமையில் மாறுபடாதே நிற்கின்றான். ஆதலின், அவனை அறிந்து அடைதலே உயிர்கள் செயற்பாலன` எனக் கண்டு கொள்க. நூல்நுதல் பொருள் இங்ஙனம் குறிப்பால் தோன்றவருதல் நூன்முகத்து வரும் கடவுள் வாழ்த்திற்கு இயல்பு என்க./n இப்பாட்டு இந்நூல் நுதலிய பொருள் இது என்கின்றது.

பண் :

பாடல் எண் : 2

நுதலிய பொருள்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொழிப்புரை :

மலமாசகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும், உலகம் முழுவதற்கும் நலந் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும், தென்திசைக்குத் தலைவனாம் கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதிமுறையால் கூறுவேன்!

குறிப்புரை :

போற்று, முதனிலைத் தொழிற்பெயர். போற்றுதல் - துதித்தல். `போற்றி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தல் பெற்றது எனக் கொண்டு, `வணக்கம்` எனப்பொருள் கொள்ளலும் பொருந்தும். `போற்றிசைத்து` என்றதனை, `கூறுகின்றேன்` என்பதற்கு முன்னே வைத்து உரைக்க. `தூய உயிர்` என்றதற்கு, `இன்னுயிர்` என்றார். தயிரில் நெய்போல இறைவன் இனிது விளங்கி நிற்றல் சுத்தான்ம சைதன்னியத்திலே யாதல் அறிக. `நாற்றிசைக்கும்` என்றது, `உலகம் முழுவதற்கும்` என்றவாறாம். நன்மை, அருள். உலகத்தோடு இறைவ னுக்கு உளதாய தொடர்பு அவனது சத்தி வழியே ஆதலின், `நாற்றி சைக்கு நாதன்` என்னாது, `நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதன்` என்றார் `அளி யன்றித் தெறலும் அருளே` என்றற்கு `நல்ல` என்றும், `அவ்விரண் டனையும் செய்வது சத்தியே` என்றற்கு, `மாது` என்றும், `சத்தி, முதலன்று; முதலது பண்பே` என்றற்கு, `நாதன்` என்றும் கூறினார். `மாது` உயர்திணை ஆதலின், சாரியை வேண்டாதாயிற்று. மேல் திசை - மேற்சுட்டிய நான்கு திசைகள். `ஒரு வேந்தன்` என்றது, `திசைக்காவலர் எண்மருள் ஒருவன் என அவனது சிறப்பின்மை கூறியவாறு. கூற்றுதைத்தமையைக் கூறியது, மேல், `அவன்` எனப் பொதுப்படக் குறித்த முதற்கடவுளை, `சிவபெருமான்` எனச் சிறப்பு வகையால் விளக்குதற் பொருட்டு, சிறப்பாதற்கு `மாதுக்கு நாதன்` என்றதினும் இது வலி யுடைத்து என்க. முதற் கடவுளை முதற் கண்ணே சிறப்புப் பெயராற் கூறாது இலக்கணத்தாற் பொதுப்படக் கூறியது, `முதற்கடவுளாவான் இத்தன்மையனே, என்பது உணர்த்து முகத்தால், தாம் கூறும் சிவபெருமானையன்றி ஏனையோர் கூறும் கடவுளரை முதற்கடவுள் என்றல் ஒவ்வாமையை நிறுவுதற் பொருட்டாம். `புனிதன்` முதலியன ஆகுபெயராய் அவனது பெருமைமேல் நின்றன. எனவே, `இந்நூல் சிவபெருமானது பெருமையை உணர்த் தற்கு எழுந்தது` என்பது பெறப்பட்டது. `சிவபெருமானது பெருமையே யன்றி உயிர்களின் இயல்பு, அவைகளைப் பற்றியுள்ள பாசங்களின் இயல்பு என்பனவும் இதனுட் கூறப்படுகின்றன அல்லவோ, எனின், அவை அவனது அடிமையும், உடைமையுமே ஆதலின்` அவற்றது இயல்புகளும் அவனது பெருமையாய் அடங்கும் என்க./n `போற்றிசைத்துக் கூறுகின்றேன்` என்றதனால். வரையறை வகையால் கூறாமை பெறப்பட்டது. வரையறை வகையாற்கூறின், அளவு படாமையின் குன்றக் கூறலாய் முடியும்` என்பது கருத்து. `யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென்`1 எனப் பிறிதோரிடத்தும் கூறப்பட்டமை காண்க. இதனானே இந்நூல் தோத்திர வகையாகிய திருமுறைகளுள் ஒன்றாயிற்று./n `கூறுகின்றேன்` என வாளா கூறின், `வரையறை வகையாற் கூறுகின்றார்` என்பதே படும் ஆதலின், அது படாமைப் பொருட்டு, `போற்றிசைத்து` என்றதனையும் உடன் கூறினார். ஆகவே, நுதலிய பொருளோடு அதனைக் கூறும் முறைமையும் இதனுள் பெறப்பட்டது. `கூறுகின்றேன்` எனத் துணிவுபற்றி எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது./n இதுவும், அடுத்த பாட்டும் நூற்சிறப்புக் கூறுகின்றன/n

பண் :

பாடல் எண் : 3

நூற் சிறப்பு

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

எண்ணில்லாத தேவர்களில் ஒருவனாய் அவர் களோடொப்ப நிற்பவனும், அவ்வாறு நிற்பினும் அவர் அனை வராலும் என்றும் வணங்கப்படுபவனும், தன்னை அடைந்தவர் களாலும் தன் தன்மை முழுதும் அறியப்படாத மேலானவனும், ஆகிய சிவபெருமானது பெருமையை யான் அவனுள் அடங்கிநின்று உணர்ந்து துதிக்கின்றேன்.

குறிப்புரை :

`உலப்பிலி தேவர்கள்` என்றது தாப்பிசையாய், முன்னும் சென்று தொகைநிலை வகையான் இயைந்தது. இலி என்பது இன்மையென்னும் பொருட்டாய் அதனையுடைய பொருண்மேல் இந் நூலுட் பயின்றுவரும். திகம்பரன் என்னும் பொருட்டாகிய `நக்கன்` என்பது வியாபகனாதலைக் குறித்து, ஏனையோரால் ஏத்தப்படுதற் குரிய இயைபு உணர்த்தி நின்றது. நம்பன் - விரும்புதற்குரியவன். `பழை யோன்` என்றும் ஆம். `நாள்தொறும் ஏத்திடும்` என முன்னே கூட்டுக./n `பக்கம் நின்றார்` என்றது சீவன் முத்தரையும், பரமுத்தரையும். `பக்கம் நின்றாரும்` என்னும், சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. நாதன், பரமன் என்பனவும் மேலனபோல ஆகுபெயர்கள். இறைவனது பெருமை முத்தராலும் முற்றும் அறியப்படாது என்பதனை,/n கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்/n கடல்அளக்க வாராதாற் போலப் -படியில்/n அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்/n கருத்திற்குச் சேயனாய்க் காண். -திருக்களிற்றுப்படியார். 90/n என்பதனான் அறிக./n புக்கு நின்று என்றது அதீத நிலையையும், உன்னி என்றது துரியநிலையையும் குறித்தவாறு. உன்னுதலன்றிப் புகாதே நிற்கும் துரிய நிலையிலே நிற்பின் சிவானந்தத்தை உணர்தல் கூடாமையால், `புக்குநின்று` என்றும், புக்கு உன்னுதலொழித்த அதீத நிலையிலே நிற்பின் மனவாக்கினால் போற்றுதல் கூடாமையால், `உன்னி` என்றும் கூறினார். இந்நிலைகளின் இயல்புகளை நூலுள் அறிக. இதனால் தமது அநுபவ நிலையை உணர்த்தியவாறாயிற்று./n

பண் :

பாடல் எண் : 4

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தவராகிய மக்கட்கும், விண்ணுலகத் தவராகிய தேவர்கட்கும் முதலாய் நிற்பவனும், வந்த இடத்திலே எனது உடம்பை விழச்செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் பகலும், இரவும் வணங்கியும், துதித்தும் மயக்கத்தைச் செய்யும் இவ்வுலகத் திற்றானே மயக்கமின்றி இருக்கின்றேன்.

குறிப்புரை :

சிறப்புப்பற்றி, ``அகலிடத்தார்`` என மக்களையே கூறி னாராயினும், இனம்பற்றிப் பிற உயிர்களும் கொள்ளப்படும். நிலை பேறு உடைமைபற்றிக் காரணத்தை, ``மெய்`` என்றார். காரணம் இங்கு வினைமுதல். அகலிடத்தார் என்றதனோடு இயைய `அண்டத்தார்` என நின்றதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. அனைத்துயிர்க்கும் முதல்வனாதலை வலியுறுத்தற்பொருட்டு இரு தொடராக வகுத்தருளிச் செய்தார். ``விட்டான்`` என்பது `விடு வித்தான்` என்னும் பொருளது. `போத இட்டார்` எனப் பிரித்து, `மிக இருத்தினான்` என்றலும் ஆம். நாயனாரது உடம்பை நீக்கி அவரை மூலன் உடம்பில் இருக்குமாறு இறைவன் செய்த வரலாறு பெரிய புராணத்துள் விரித்துரைக்கப் பட்டது. `எம்மெய்யை, என்றனை` என்பனவும் பாடங்கள். ஐம்புலன் கள் உயிர்செல்லும் வழிக்கு மாறாய் நின்று மறித்தலின், அவற்றின் வடிவாகிய உலகத்தை ``இக லிடம்`` என்றும், அஃது அன்னதாயினும், மேற்கூறியவாறு நான் இறை நிறைவில் நீங்காது நிற்குமாற்றால் மயக்க மின்றி இருக்கின்றேன் என்பார், ``இருள் நீங்கி நின்றேன்`` என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டாலும், `இந்நூல் அருள்வழி நின்று செய்யப்படுவதன்றி, ஆன்ம போதத்தின் வழிநின்று செய்யப்படுவ தன்று எனவும், அன்ன தாயினும். பதி போதமும் ஒரோவழி உள தாங்கொல்லோ` என ஐயுறல் வேண்டா எனவும் கூறி, நூலது சிறப்பு உணர்த்தப்பட்டது.
இவற்றின் பின்னவாகப் பதிப்புக்களில் காணப்படும் ``சிவனோ டொக்கும் தெய்வம்`` என்பது முதலிய பாட்டுக்களும், வேதச்சிறப்பு, ஆகமச்சிறப்பு, திரிமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை என்னும் அதிகாரப் பாட்டுக்களும் எடுத்துக்கொண்ட பொருளையே கூறலின், அவை நூற்பாட்டுக்களன்றிப் பாயிரப் பாட்டுக்களல்லவாதல் இனிது விளங்கும். அதனால், ஏடுசேர்த்தோர் அவற்றை முறைபிறழக் கோத்தார் எனவே கொள்க.
இந்நூல் பொருள் வரலாற்றுமுறையாற் கேட்டுச் சொல்லப் பட்டதன்றித் தாமே தம் மனவழிப்பட்டுச் சொல்லியதன்று என்றற்கு இது முதல் ஏழு பாட்டுக்களால் தமது அருட்குடி வரவு கூறுகின்றார். குரு பாரம்பரியம் - ஆசிரியத் தலைமுறை.

பண் :

பாடல் எண் : 5

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

பொழிப்புரை :

எங்கள் நந்தி பெருமான், ஆனேறு, மான், மழு என்ப வற்றை விடாது கொண்டுள்ள சீகண்ட பரமேசுரனது உபதேசப் பொரு ளாகிய பொருட் பெற்றியாம் மறைபொருளையும் எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தரும் திருவடிகளையும் அடியேனது தலைமேல் சூட்டியருளினார்.

குறிப்புரை :

சீகண்ட வுருத்திரர் என்பது விளங்குதற் பொருட்டே வாளா, `தற்பரன்` என்னாது, பெற்றம் முதலிய அடையாளங்களைக் கூறினார். கற்பனை - உபதேசம். சராசரம் என்பது, `சித்து, அசித்து` என்னும் பொருட்டாய், அனைத்துப் பொருள்களையும் குறித்தது. அற்றம் - மறை பொருள்; இரகசியம். நன்மை - ஞானம். இதனால், சீகண்ட பரமேச்சுரன்பால் நந்திபெருமானும், நந்திபெருமான்பால் இவ்வாசிரியரும் ஞானம் பெற்றமை கூறப்பட்டன. இப்பாட்டும் பதிப்புக்களில் இடம் மாறி உள்ளது.

பண் :

பாடல் எண் : 6

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

பொழிப்புரை :

நந்திபெருமானது அருளைப்பெற்ற ஆசிரியன்மார் யாவர் என்று ஆராயுமிடத்து, அவரோடு ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தை வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்ற இவர் என்னொடு கூட எண்மருமாவர் என்பதாம்.

குறிப்புரை :

ஆசிரியரை, நாயனார் `நாதர்` என்கின்றார். ``நமச் சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க`` என்ற திருவாசகம் இங்கு நினைக்கத் தக்கது. நந்தி பெருமானோடு ஒத்தமை, சீகண்ட பரமேசுரன் பால் அறம் முதலிய நான்கையும் கேட்டமையாலாம். `அந்நான்கையும் உணர்த்துவன வேதங்கள்` என்பது முதல் திருப்பாட்டின் உரையுட் காட்டப்பட்டது. அறமுதலியவற்றோடு ஒருங்கோதிய வீட்டுநெறி பொதுவகையானன்றிச் சிறப்பு வகையான் அன்மையின், அதனைச் சிறப்பு வகையான் இனிதுணர்ந்து அடைய அப்பெருமான் அவர் களை, நந்தி பெருமான்பால் கேட்க என விடுத்தவண்ணம் அவர்களும் நந்தி பெருமான்பால் ஆகமவழியாக வீட்டு நெறியைச் சிறப்பு வகையாற் கேட்டுணர்ந்தார். ஆகவே, அவர்கள் நந்தி பெருமானோடு ஒருங்கொத்த மாணவராய், முதிய மாணாக்கரிடம் இளைய மாணாக்கர் கேட்கும் முறையிற் கேட்டனர் என்றற்கு, ``நந்திகள் நால்வர்`` என்றார். அவர்களை `சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர்` என்ப. சிவயோகமுனி என்பவரைப் பற்றிப் பிற நூல்களில் ஓரிடத்தும், ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் அவரைப்பற்றி யாதும் அறிதற்கில்லை. சிலர் இவரை `அகத்தியர்` என்றும், `துருவாசர்` என்றும் கூறுவர். அவ்வாறாயின், நாயனார் அப்பெயரால் கூறுதலல்லது பிறவாறு கூறார் என்க. எனவே, சிவயோக முனி என்பது பெயரேயன்றித் தன்மை கூறுவதன்று என்க.
பதஞ்சலியாரும், வியாக்கிரரும் தமிழ்நாட்டோடு தொடர் புடையவர் என்பதற்கு, ``மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்`` என்றார். எனவே, மன்று தொழுத என்னும் அடைமொழியைப் பதஞ்சலிக்கு மட்டுமே உரியதாக வைத்து அஃது யோகநூல் பதஞ்சலி யாரினை வேறு படுத்தற்குக் கூறப்பட்டது என்றல் பொருந்தாதாம். ஆகமத்துள் யோக பாதமும் உளதாதலின், அதனையே இப் பதஞ்சலியார் செய்யப் பின் வந்தோர் அதனை நன்குணராது வேறு கூறினமையின் அது, `பாதஞ் சலம்` என வேறு மதமாயிற்று எனக் கொள்ளுதலில் தவறில்லை. பொருட்பெற்றியை இனிதுணர்த்துவது ஞானபாதமேயாதலின், யோக பாதத்துட் கூறப்பட்ட தத்துவங்கள் சிறிது சுருங்கியிருத்தல் கூடும். மன்று தொழுது நின்றமையால் நூல்செய்தல் கூடாதென்பது இல்லை யன்றோ! நாயனாரும் மன்று தொழுதவராதல் பின்னர்க் காணப்படும்.
இங்குக் கூறப்பட்ட எண்மரும் ஒருகாலத்தே நந்தி பெரு மானிடம் ஞானம்பெற்றனர் என எண்ணுதல் கூடாது. நந்திகள் நால் வரும் முதற்கண் பெற்றனர் என்றும், சிவயோக மாமுனி அதற்குப்பின் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும், அவருக்குப்பின் பதஞ்சலி வியாக் கிரர் இரு வரும் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும் இறுதியாக இவ்வாசிரியர் பெற்றனர் என்றும் கொள்ளற்பாலன. ``மன்று தொழுத`` என இறந்த காலத்தால் கூறினமையின், முன்னே மன்று தொழுது பின்னர் அதன் பயனாக நந்தி பெருமானை அடைந்து ஞானம் பெற்று மீண்டனர் என்பது பெறப்படும். வியாக்கிரர் மூத்தோராகவும், வழி பாட்டில் பெரும்பற்றுடையராகவும் சொல்லப்படுதலால், தில்லை, `பெரும்பற்றப்புலியூர்` என அவர்பெயராலே வழங்கப்பட்டது. பதஞ் சலியாரும் அத்தலத்திலே தங்கி யோகநூல் செய்தார் என்க. வியாக் கிரர் நூல் செய்திலர். வியாக்கிரர் வசிட்ட முனிவர்தம் தங்கையை மணந்து பெற்ற உபமன்னிய முனிவர் இமயத் தாழ்வரையிலே பிறந்து சிறிது வளர்ந்து, பின்னர்ச் சில்லாண் டுகள் தில்லையில் தந்தையார்பால் வளர்ந்து பின்னர்த் தவத்திற்கு உரியராய காலத்து மீளவும் அத்தாழ் வரைக்கண்ணே சென்று தங்கினார் என்க. உபமன்னியரை யாதவன் - துவரைக் கிறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தான் என்று சேக்கிழார் அருளிச் செய்தமையால் இம் முனிவர் பாரத காலத்தவர் என்பது பெறப்படும். இருக்கு என வழங்கப்பட்ட ஆரிய மந்திரப் பாடல்களை, இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வியாச முனிவர் முறைப்படுத்து நான்காக வகுத்து பிராமணம், உபநிடதம் என்ப வற்றையும் அவற்றுக்கு உரிமை செய்து அனைத்திற்கும் வேதம் எனப் பெயரிட்டதும் பாரத காலத்திலேயாம். அதன் பின்னரும் உப நிடதங்கள் தோன்றின என்க.

பண் :

பாடல் எண் : 7

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

பொழிப்புரை :

நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.

குறிப்புரை :

பெற்றோம், நாடினோம் என்பன பாடமாயின் அவற்றை ஒருமைப் பன்மை மயக்கமாகக் கொள்க,

பண் :

பாடல் எண் : 8

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

பொழிப்புரை :

எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

குறிப்புரை :

மந்திரம் எனப்பின்னர்க் கூறப்படும் பெயரை இங்கு எதிரது போற்றிக் கூறினார். இந்திரன் முதலியோர் கடவுளரல்லர், அப்பெயர்பெற்ற மாணாக்கர் என்க. இவர்களை ஓரோரிடத்தில் நாயனார் பின்னர்க் குறித்தல் காண்க. இவர் என்வழியாம் என வேறு தொடராக்குக. இங்ஙனமாகவே, இவர் எழுவரும் திருமூலர்தம் நேர் மாணாக்கராய்ப் பின்பு அவரது மரபினை வேறுவேறிடத்தில் இருந்து வளர்த்தனர் என்பது பெறப்படும். அண்மையில் வாழ்ந்த தாயுமான அடிகள் தம் ஆசிரியராகிய மௌன குருவை, மூலன் மரபில்வரு மௌன குருவே என விளித்தமை காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 9

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

பொழிப்புரை :

நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.

குறிப்புரை :

அதனால், அவர் இந்நிலவுலகத்திற்கு வந்திலர் என்ற வாறு. அந்நால்வருள் சனற்குமாரர்க்குச் சத்தியஞான தரிசினிகளும், அவர்க்குப் பரஞ்சோதி மாமுனிகளும் மாணாக்கராக, பரஞ்சோதி மாமுனிகள் வான்வழிச் செலவின் இடையே தமிழ்நாட்டில் திரு வெண்ணெய்நல்லூரில் கருவிலே திருவுடையவராய் (சாமுசித் தராய்)த் தோன்றி, சுவேதவனப்பெருமாள் என்னும் பிள்ளைத் திருப் பெயர் உடையாராய் இருந்தவர்க்குச் சிவஞானத்தை உபதேசித்து, மெய் கண்டார் எனத் தீக்கைத் திருப்பெயரும் இட்டுச் செல்ல, அவரது மரபு இன்றும் தமிழ் நாட்டில் நின்று நிலவுதல் அனைவராலும் அறியப் பட்டது. நான் என்றது, பன்மை ஒருமை மயக்கம். மெய்கண்டாரது தோற்றம் நாயனார்க்குப் பன்னூறாண்டுகட்குப் பிற்பட்டது என்பதைப் பலர் அறிவர்.

பண் :

பாடல் எண் : 10

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

பொழிப்புரை :

பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான்மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோகமாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.

குறிப்புரை :

அவர்களோடு அப்பேறு எனக்கும் கிடைத்தது என்பது குறிப்பெச்சம். பணிவினால் இதனை எடுத்தோதாது குறிப்பாற் பெறவைத்தார். நாங்கள் பெற்ற பேறு பிறர் பெறுதற்கரியது என அதன் அருமை கூறியவாறு. இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கிப் பொருள் கூறுக. மூன்று, நான்கு என்னும் முறைமையால் உளதாகும் செய்யுளின்பம் நோக்கி மூவரை முன் வைத்தார். இறப்பும், பிறப்பும் ஒழிந்த பெருமையை உடைய தேவன் என்க. ஒழிந்த அதனையே பெருமை எனக் கூறலால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். மூன்றன் என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முச்சுடர்களின் ஒளியும் சிவபெருமானது முக்கண்ணின் ஒளியாதல்பற்றி, செழுஞ்சுடர் மூன்றன் ஒளியாகிய தேவன் என்றார்.

பண் :

பாடல் எண் : 11

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

பொழிப்புரை :

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.

குறிப்புரை :

அதனால் அவர்கள் என்றும் அவனோடு இருப்பர் என்றவாறு. எழுந்து நீர் பெய்வன ஏழுமேகங்களும். அவைவிடாது பெய்யினும் என்றது, ஊழிக் காலத்தும் என்றவாறு. எட்டுத் திசையும் பெய்யினும் என முன்னே கூட்டுக. மூன்றாம் அடி சிவபெருமான் காட்சி வழங்கினமையைக் குறித்தது. ஆசான் மூர்த்தி வாயிலாக அருள்செய்தபின்னர் நேர்நின்று அருள்புரிந்தார் என்பதாம்.
நந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பிலராயினார் எனக் கூறி, `இந்த எழுவரும் என்வழியாமே` எனத் தமது மரபினை எடுத்துக் கூறிப்போந்தமையால், ஏனை மூவரும் இவ்வாறே தம் தம் மாணாக்கர் சிலரால் நந்திமரபினை நிலைபெறுத்தினர் என்பது கொள்ளக் கிடக்கின்றது. எனினும், இன்று சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலைபெற்றுளது என்க.
மேல் ஆசிரியமரபுவகை பலவற்றையும் கூறிய நாயனார் இனி அவற்றுள் ஒன்றன் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்தற்பொருட்டுச் செய்யும் இந்நூலாசிரியர் வரலாறு விளங்குதற் பொருட்டுத் தம் வரலாற்றைக் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 12

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

பொழிப்புரை :

என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்.

குறிப்புரை :

முதலிரண்டு அடிகளும் ஆசிரிய வணக்கங்கூறும் கருத்துடையன. `மந்திரம்` என்பது `மனத்தில் நிலைத்து நிற்பது` எனவும் பொருள்தருமாதலின், பின்னிரண்டடிகளால் நூற்பெயர்க் காரணமும் புலப்படுத்தவாறாயிற்று, இதனானே நாயனார் சிவாக மங்களை மொழிபெயர்த்துச் செய்யாது, அவற்றது தெளிந்த பொருளையே திரட்டி இந்நூலால் அருளிச் செய்கின்றார் என்பது பெறப்பட்டது. படவே, ``ஆகமம்`` என்றது அவற்றின் தெளிந்த பொருளையாயிற்று. சிவாகம நெறியே `சைவம்` எனப்படும் சிவநெறி யாதலின், நாயனார் தமிழ்நாடு செய்த தவப்பயனானே இங்கு எழுந் தருளியிருந்து, அந்நெறியின் முறைமையை இந்நூலால் அறியச் செய்தார் என்க.

பண் :

பாடல் எண் : 13

செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.

பொழிப்புரை :

உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்றபின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்திபெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.

குறிப்புரை :

இருந்தது கயிலைத் தாழ்வரையிலாம். இவ் வரலாற்றைத் தமக்கு இயைபில்லாமைபற்றிச் சேக்கிழார் கூறிற்றிலர் என்க. மண்ணுலகத்தார் மன்றின்கட்சென்று திருக்கூத்துக் காண்டல் இன்றியமையாதது என்னும் மரபு நிலைபெறுதற்கு நந்திதேவர் நாயனாரை அது செய்யுமாறு பணித்தருளினார் எனக் கொள்க. அநுபவ ஞானம் கைவரப்பெற்றோர் உடம்பொடு நிற்க விரும் பாமையை வாதவூரடிகளது நிலைபற்றி உணர்க. ஞானம் கைவந்தபின் நாயனாரது நிலை இதுவாயினும், அதற்கு முன்னர் அவர் நெடுங்காலம் இருக்க விரும்பிச் செய்த பெருந்தவம் தனது பயனைத் தந்து நின்றமை யின், அவர் அவ்வாறே இருத்தல் வேண்டுவதாயிற்று என்பதை அவர் அடுத்தபாட்டிற் கூறுதல் காண்க. இவ்வாற்றானே இவரைச் சேக்கிழார், `அணிமாதி சித்திபெற்றவர்` எனக் குறித்தல் காண்க. ஒப்பு - உடன்பாடு. இவ்வாறு உடன்பாடின்றி இருந்தமையால், ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் யுகம்போலத் தமக்குத் தோன்றின என்பது தோன்ற, ``எழுகோடியுகம் இருந்தேன்`` என்றார். பலவற்றைக் குறித்தற்கு, `கோடி` எனக்கூறலும், பலவற்றைக் குறிக்கு மிடத்து ஏழென்னும் எண்ணோடு தொடர்புபடுத்தலும் வழக்கு. எனவே இன்னோரன்ன வாக நாயனார் கூறுவனவற்றிற்கு, `பன்னெடு நாள் இருந்தார்` என்னும் பொதுப்பொருளே கொள்ளலாவது அறிக. இது பற்றியே நாயனாரது வாழ்நாளைச் சேக்கிழார் அவரது நூலின் பாடற்கணக்கொடு தொடர்பு படுத்தி, `மூவாயிரம் ஆண்டு` என வரையறுத்து, `பாடலும் மூவா யிரம், நாயனார் வாழ்ந்த ஆண்டும் மூவாயிரம்` என்னும் நயம்பற்றி, `ஓராண்டுக்கு ஒன்றாக ஒன்றவன்றான் என எடுத்து இந் நூலை அருளிச் செய்தார்` எனக்குறித்தருளினார். நாயனார் தாம் வாழ்ந்த காலத்தை `மூவாயிரம் ஆண்டு` என ஓரிடத்தும் குறியாமையை நோக்குக.

பண் :

பாடல் எண் : 14

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொழிப்புரை :

இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவமாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்துவந்தேன்.

குறிப்புரை :

`அதனால் அவள் என்னை அவ்வாறு இருக்கச் செய் தாள்` என்றவாறு. அருந்தவச் செல்வி, உருவகம். ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும் செய்ய வல்லது தவமாகலின், அதனை உலகத்தின் தலைவியாகக் கூறினார். கல்வி செல்வங்களைக் `கலை மகள், திருமகள்` என்றல்போலத் தவத்தை, `புவனாபதி` என்றார். `புவனா` என்பது உலகமாகிய பெண்பாலை உணர்த்தி நின்றது. `பதி` என்பது, `அவனைப் பதமாக உடையவள்` என்னும் ஈகார ஈற்று ஆரியச்சொல். `இந்திரனே` என்றது, அப்பெயருடைய மாணாக்கரை முன்னிலைப் படுத்ததாம்.

பண் :

பாடல் எண் : 15

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.

பொழிப்புரை :

இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக் காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெரு மானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.

குறிப்புரை :

கீழுள்ள மகேசுரர் முதலியவர்க்கும் தலைவர் சதா சிவரேயாதலின், அவரே ஐந்தொழிற்கும் தலைவராதல் வெளிப்படை. அதனால், ஐந்தொழில் நிலையை, `சதாசிவம்` என்ற ஒன்றினாலே குறித்தார். இனி அதனை `உபலக்கணம்` என்றலும் ஆம். `முத்தமிழ்` என்ற இதனால், கயிலைத் தாழ்வரையிடத்தும் அக்காலத்தில் தமிழ் போற்றிக் கற்கப்பட்டது என்பது தெளிவாகும். அதனாலன்றோ பிற் காலத்திற் சேரமான் பெருமாள் நாயனார் தமது `திருக்கயிலாய உலா` என்னும் ஞானத் தமிழ்ப்பாடலைத் திருக்கயிலையில் யாவரும் கேட்க அரங்கேற்றினார்! இதனால், நாயனார் தாம் பலகலை வல்லுநராயி னமையைக் குறித்தவாறு காண்க. இவற்றையெல்லாம் இவர் நந்தி பெருமானது அருள்பெற்ற பின்னர் அதனையே துணையாகப் பற்றி நன்குணர்ந்தார் என அறிக. எனவே, இறைவன் திருவருள் உலகர் உய்தற்பொருட்டு இவரை இந்நிலையினராக்கியது என்பதும் உணரற் பாற்று. `மிருதம், இதம்` என்பன செய்யுள் நோக்கி; `மிதா, இதா` என நின்றன. சனித்தல் - தோன்றுதல். உதா சனித்தல் - புறக்கணித்தல். இரண்டாம் அடியில் `நிதாசனி` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 16

மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  

பொழிப்புரை :

மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். சிவபெருமான் முதற்கண் உமை அம்மைக்கு முதல் நூலாகச் சொல்லிய சிவாகமத்தின் ெபாருளைச் சொல்லுதற்காகவே வந்தேன்.

குறிப்புரை :

`மாலாங்கன்` என்பவர் நாயனார்தம் மாணாக்கருள் ஒருவர் என்பது மேலே சொல்லப்பட்டது. `மொழிந்த வேதம்` என இயையும். பல தேவர்களையும் பொதுப்பட வைத்துக்கூறிய வேதமும், தான் ஒருவனையே முதல்வனாக வைத்துக் கூறிய வேதமும் எனச் சிவ பெருமான் கூறிய வேதங்கள் இரண்டு எனவும், அவற்றுள் முன்னதை முனிவர் நால்வர்க்கும், பின்னதை உமையம்மைக்கும் கூறினான் எனவும் கூறப்படுவனவற்றுள், பின்னதாகிய வேதம் என்பார், திருக் கூத்தின் சீலாங்கவேதம் என்றார். அது சிவாகமம் என்பது வெளிப் படை. ஆகமமும், முதல்நூல் என்னும் பொருளில் வேதம் எனப்படுதல் அறிந்து கொள்க. சீலம் - இயல்பு. அங்கம் - வகை. நாயனார் வந்தது அகத்தியரைக் காணுதற்பொருட்டேயாயினும், திருவருட் செயல் இவ்வாறு இருந்தது என்பது இப் பாட்டின் கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 17

நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொழிப்புரை :

`உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய இச் சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.

குறிப்புரை :

`தேவியாவாள் சிவனது சத்தியே` என்பது பற்றி இவ்வாறு அருளிச்செய்தார், ``பேரின்பமான பிரமக்கிழத்தி`` என்றார் திருவுந்தியாரிலும் (பா.34). இதனால், தாம் திருவாவடுதுறையில் நிரதி சயானந்தம் உற்று இருந்த நிலையைக் கூறினார் என்க சீர் - செல்வம். `சீராக` என ஆக்கம் வருவிக்க. ஆவடுதுறை அம்மை ஆவாய் நின்று பூசித்த தலமாதல் அறிக,

பண் :

பாடல் எண் : 18

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

பொழிப்புரை :

சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்திருக்கின்றேன். இத் திருவா வடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவனுடையதுந்தான். இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக்கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

போதம் - ஞானம். போதத்தை உடையது போதி. `புத்தருக்குப்பின் அரசமரத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று எனினும், இதன் கீழ்ப் புத்தர்பெற்றது சூனியஞானம்; நான் பெற்றது சிவஞானம்` என்பார், `அரச மரம்` என்னாது ``சிவபோதி`` என்றார்.

பண் :

பாடல் எண் : 19

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.

பொழிப்புரை :

இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.

குறிப்புரை :

ஆசிரியர் சிவமேயாதல்பற்றி, நந்தி இணையடி சிவனடியேயாதல் அறிக. `இரவு, பகல்` என்பன அறியாமையும், அறிவுமாம். இவை கருவி கரணங்களின் நீக்கத்தாலும், தொடக் கினாலும் வருவன. இவை அற்றஇடம், என்றும் ஒரு பெற்றியாய் விளங்கும் பேரறிவாம். அதனால் அங்குத் துன்பம் என்பதின்றி, இன்பமே உளது என்க.

பண் :

பாடல் எண் : 20

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

பொழிப்புரை :

முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.

குறிப்புரை :

`ஆதலால் இதனைச் செய்கின்றேன்` என்பது குறிப் பெச்சம். மூலன் உடம்பில் புகுதற்குமுன்னே இருந்தநிலையை முற் பிறப்பாகவும், அதற்குப்பின் இருந்த நிலையைப் பிற்பிறப்பாகவும் வைத்து, இதில் நாயனார் அருளிச் செய்தார். ஆகவே, `படைத்தனன்` என்றது, மூலன் உடம்பில் இருக்கச் செய்ததையேயாயிற்று. தவம் இன்றியாதொன்றும் ஆகாது என்பதே முதல் இரண்டு அடிகளால் உணர்த்தப் பட்டது. `தமிழ்செய்தல்` என்னும் இரண்டாவதன் தொகை ஒருசொல் நீர்மைத்தாய்ப் பாடுதல் எனப் பொருள்தந்து, ``தன்னை`` என்றதற்கு முடிபாயிற்று. `தமிழ்ச்செய்யுமாறே` என்பதும் பாடம். இரண்டாம் அடியை முதலில் வைத்துரைக்க.

பண் :

பாடல் எண் : 21

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப் பாடல்கள் மேற்கூறியவற்றை மிகப் பின்வந்து கூறுதலாலும், இவர் மாணாக்கரல்லாத ஒருவரை நோக்கிக் கூறுதலாலும், `நாயனார் தரைவழியாகவே பல தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை அடைந்தார்` என்ற சேக்கிழார் திருமொழிக்கு மாறாக. வான் வழி வந்ததாகக் கூறுதலாலும் `இவைநாயனார் அருளிச் செய்தன அல்ல` என்க.

பண் :

பாடல் எண் : 22

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப் பாடல்கள் மேற்கூறியவற்றை மிகப் பின்வந்து கூறுதலாலும், இவர் மாணாக்கரல்லாத ஒருவரை நோக்கிக் கூறுதலாலும், `நாயனார் தரைவழியாகவே பல தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை அடைந்தார்` என்ற சேக்கிழார் திருமொழிக்கு மாறாக. வான் வழி வந்ததாகக் கூறுதலாலும் `இவைநாயனார் அருளிச் செய்தன அல்ல` என்க.

பண் :

பாடல் எண் : 23

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

பொழிப்புரை :

மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.

குறிப்புரை :

`தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு நியமித்து அதற் கேற்ற உடம்பைக் கொடுத்துக் கருத்துக்களையும் தோற்றுவித்தான்` என்றபடி. `உற்பத்தியும்` என்ற உம்மை தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 24

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப் பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப்பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.

குறிப்புரை :

உயிர்களின் உணர்வில் தோன்றும் கருத்துக்களே சுத்தமாயையின் காரியமாகிய நாதத்தைப்பற்றி நிற்பனவாக, இறைவன் உலகிற்கு உணர்த்தும் பொருள்கள் அவனது அருள் வெளியைப் பற்றுக்கோடாகக் கொண்டுநிற்றல் பற்றி ``வான் பற்றி நின்ற மறைப்பொருள்`` என்றார். இதனால், மந்திரங்களின் இயல்பும், அவற்றின் பயனும் இவை எனக் கூறுவார்போன்று, தாம் செய்யும் நூல் மந்திரமாதலையும், அதன் பயனையும் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 25

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.

பொழிப்புரை :

தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.

குறிப்புரை :

`உண்மைச் சிவநூல் எங்கு உளதாயினும் அதனைத் தேவர் மகிழ்ச்சியோடும் கைக்கொண்டு போற்றுவர்` என்னும் துணிவு பற்றி; ``வானவர் மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை`` என்றார். இக்கருத்தே பற்றிச் சேக்கிழாரும், `ஞானசம்பந்தர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை வானமும் நிலனுங்கேட்க அருளிச்செய்தார்` என்றும், `நாவுக்கரசரது திருப்பெயரை உலகேழினும் மன்னுக என்று இறைவன் அருளிச்செய்தான்` என்றும் கூறினார். ``மந்திர மாலை`` என்றது நூற் பெயர் குறித்தவாறு. எனவே, இவை இரண்டுபாட்டாலும் நூற் பெயரும், நூலது பெருமையும் கூறப்பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 26

அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

பொழிப்புரை :

உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப்படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல் களையும் கற்பாரின்றி வீணேகிடக்கவையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.

குறிப்புரை :

`ஆகவே, தமிழாலாய இந்நூலும் மூவாயிரம் பாடலுள் இன்றியமையாப் பொருள்களைக் கூறுவதாய் அமையும்` என்பதாம். `இலட்சம் கிரந்தம், கோடி கிரந்தம் என்றாற்போல் வனவற்றை நோக்க, இம்மூவாயிரம் பாடல் எம்மட்டாய் எல்லா ஆகமங்களுமாகும் என்று இகழற்க` என்றவாறு. இதனானே, `சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராய்ச் சுருங்கிய நில வுலகத்தின் கண் வாழும் சகலராய மக்கட்கு ஏற்புடையன தமிழ் நூல்களே` என்பதும் குறித்தவாறு காண்க. ``உலகேழ்`` என்றது நாவலந்தீவு முதலிய ஏழு தீவுகளை. நாயனார் இந்நூல்செய்த காலத்தில், `தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருவாசகம், திருக்கோவையார்` என்னும் இவையே தமிழ்மொழியில் சிறந்த நூல்களாய் விளங்கிப் பயனைக் குறை வின்றித் தந்தமையின்; ``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் - பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே`` என்றார். காரைக்காலம்மையார் பாட்டு முதலாக இன்று பதினொன்றாந் திருமுறையில் உள்ளனவற்றுள் சில, நாயனார் காலத்து இருந்தனவா என்பது ஆராய்ந்துணரத் தக்கது. மாணிக்கவாசகர் தாம் கூறும் தலங்களுள் திருவிடைமருதூரைக் குறித்துத் திருவா வடுதுறையைக் குறியாமையால், இந்நாயனாராலே அத்தலம் `நவகோடி சித்தபுரம்` என்பது முதலிய பல சிறப்புக்களைப் பெற்றது, அவர் காலத்திற்குப் பின்னரே என்பது துணியப்படும். நாயனாரது காலத்தில் திருவாவடுதுறை பொதுவான ஒரு சிவதலமாய் இருந்தது எனவும், எக்காரணத்தாலோ இறைவன் திருவருள் இவரை அத்தலத்தில் இருத்தியது எனவும் கொள்க. `கோகழி` என்பதைத் `திருவாவடு துறை` எனச் சிலர் கருதுதல் பொருந்துவதாய் இல்லை.
இப்பாட்டின் பின்பதிப்புக்களில் காணப்படும் ``அடிமுடி காண்பார்`` என்னும் பாட்டுச் சிவபரத்துவத்தில் இருத்தற்குரியது.

பண் :

பாடல் எண் : 27

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொழிப்புரை :

இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.

குறிப்புரை :

சுத்த தத்துவம் காலம் கடந்தன ஆதல்பற்றி, `நித்தப்பொருள்` என்று சொல்லப்படுதலால், காலத்திற்கு உட்பட்ட ஏனைத் தத்துவங்களை, `மாயம்` என்றார். மாயம் - மாய்தலுடையது. `பரை` என்றது பரநாதத்தை. ஆயம் - கூட்டம்; தொகுதி. `பரை முதலாகிய தொகுதி` எனச் சுத்ததத்துவங்களைக் குறித்தவாறு. மாயையைக் கூறவே, ஏனைய கன்ம ஆணவ மலங்களும் பெறப் படும். `அறிபவன்` எனப்பட்டது பசுவாகிய ஆன்மாவே என்பது வெளிப்படை. `ஞாதுருவத்தை` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. பதியாகிய இறைவன் அறியப்படும் பொருளாய் நிற்றல் தடத்தநிலையிலாதலின், ``ஞேயம்`` என்றது தடத்த சிவனையாம். ஞானம், அவனது சத்தி. `சொரூப சிவன்` என்பது உணர்த்துதற்கு, ``அச்சிவன்`` எனச் சேயனாகச் சுட்டிக் கூறினார். அகோசரம் - அகப் படாமை. பசு பாசங்களின் உண்மை இயல்புகளும் வாக்கு மனங்கட்கு அகப்படுவன அல்லவாதல் பற்றி அனைத்தையும் `அகோசரம்` என்றார். `பீசம்` என்னும் ஆரியச்சொல். `வீசம்` என்று ஆகிப் பின் எதுகை நோக்கி, `வீயம்` எனத் திரிந்தது. பீசம் - வித்து. `சிறிய அளவில் செய்யப்படினும், `இந்நூலுள் ஆகமப்பொருளாகிய முப்பொருள் இயல்பு முழுவதும் எஞ்சாமற் கூறப்படும்` என்றவாறு. துணிவு தோன்ற, ``விளக்கியிட்டேன்`` என இறந்த காலத்தாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 28

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொழிப்புரை :

இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெரு மானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.

குறிப்புரை :

பரமாகும் சோதி, பெருமையன், ஆனந்த நந்தி என்பனவும் சிவபெருமானையே குறித்தன. `வளப்பம்` என்பது, `வளப்பு` என நின்றது

பண் :

பாடல் எண் : 29

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றிநின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்திநிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.

குறிப்புரை :

``மூலனை நாடி`` என்றது வழிமொழிதல். `ஆகமத்தை அருளிச்செய்தவர் சதாசிவ நாயனார்` என்றல் பற்றித் தம்மை அவ்வாறு கூறினார். `சீவன் முத்தி நிலையிலிருந்தே இதனைச் செய்கின்றேனாதலின், இது, சிவன் மொழியேயன்றி என்மொழி யன்று` என்பதாம். உலகம் உய்தல் காரணமாக அருளாளர் இங்ஙனம் பட்டாங்குக் கூறுவனவற்றை நம்மனோர் சொற்போலத் தற்புகழ்ச்சி என்றல் கூடாமை அறிக. இது பற்றி யன்றே `நிறைமொழி மாந்தரா யினார் சில சொற்களை ஆணையாற் கிளப்பர்` (தொல் - செய்யுள் - சூ. 178) என்றதூஉம் என்க. `பல்லாண்டுகள்` என்பது ஆற்றலான் வந்தது.

பண் :

பாடல் எண் : 30

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.

பொழிப்புரை :

பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறை விடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இரு காற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும் படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.

குறிப்புரை :

`அவ்வாற்றால் நான் பல்லாண்டுகளாக இருக் கின்றேன்` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத்தொடங்கி, `இருக்கும் ஆரழலை அருக்கனும் சோமனும் வீச இருக்கில் எண்ணிலி கோடி இருக்கும்` எனக்கூட்டி, ``இருக்கும்`` என்பதற்கு `உடம்பு` என்பது வருவிக்க. உருக்குதல் - மனத்தைக் கவர்தல்.

பண் :

பாடல் எண் : 31

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

பொழிப்புரை :

இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.

குறிப்புரை :

விடாது சொல்லுதலை, `பிதற்றுதல்` என்றார். `நந்தி பேர் தன்னை` என மாற்றுக. நெஞ்சத்து இயற்றுதல், நினைத்தல். `உஞற்றுவன்` என்பது, `உயற்றுவன்` என நின்றது. `முயற்றுவன்` எனவும் பாடம் ஓதுவர். `இயல்பாகத் திகழ்கின்ற சோதி` என்க. இறைவன், ஆகுபெயர். ``ஆம்`` என்றதற்கு எழுவாய் வருவிக்கப் பட்டது.
பதினெட்டுத் திருமந்திரங்களால் தம் வரலாறும், நூல் வரலாறும் கூறிய நாயனார், நான்கு திருமந்திரங்களால் அவையடக்கம் கூறுகின்றார். நாயனார் அவையடக்கம் கூறியது, இறைவனது பெருமையை மாணாக்கர் உணர்தற்பொருட்டு என்க.

பண் :

பாடல் எண் : 32

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணர வல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.

குறிப்புரை :

``ஒன்று`` எனச் சிவபெருமானையே வேறு போலக் கூறினார். மெய்ம்மையை, ``வேர்`` என்றார். `அறியாமல்` என்றது, `முற்ற உணராது சிறிதுணர்ந்த அளவிலே` என்றவாறு. `அறிந்த அளவில் செய்கின்றேன்` என்றபடி. விளம்புதல் - பலரறியக் கூறுதல்.

பண் :

பாடல் எண் : 33

பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

பொழிப்புரை :

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் ஒன்றையும் நெறிப்பட அறிகிலேன். அளவை நூல் முறையால் ஆராயவும் வல்லனல்லேன். பேரன்பினால் இறைவனையே தேடி அலையும் நிலைமையும் இல்லேன்.

குறிப்புரை :

`நான் சிவபெருமானது பெருமையைக் கூறுதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். எனவே, `எனது சொல் அறிவுடை யோர்க்கு நகை விளைக்கும்` என்பதாம். பாடுதல், இயல்வகையாலும். இசைவகையாலும் என்க.

பண் :

பாடல் எண் : 34

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொழிப்புரை :

தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசைபோல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெரு மையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.

குறிப்புரை :

`அவ்வாற்றால் ஆகமத்தின்வழிச் சிறிது கூறு கின்றேன்` என்பது குறிப்பெச்சம். எனவே, `அம்முதனூற் பொருளை யுடையது என்பதுபற்றி அறிவுடையோர் இந்நூலை இகழார்` என்பது கருத்து. `மதித்தவர் உள்ளே இன்னிசைபோல எழுகின்ற ஈசனை` எனக் கூட்டுக. ``இன்னிசை வீணையில் இசைந் தோன் காண்க`` (தி.8 திருவாசகம் . திருவண்டப்பகுதி - 35) என்றமை நினைக்கத்தக்கது. பின்னைப் படைத்தல் - மீளப் படைத்தல்.

பண் :

பாடல் எண் : 35

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொழிப்புரை :

மன்னிய வாய்மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத் தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக்கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தி யருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.

குறிப்புரை :

`அதனால், அவற்றை வேதத்திற்குப் புறம்பான நூல் என்று இகழ்வர். அவர் என்னையும் இகழ்வராதலின், அது பொருளன்று` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `பத்திமையால் தத்துவஞானம் தாழ்வரை உரைத்தது` எனக்கூட்டி உரைக்க. ``உரைத்தது`` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன்னைப் பாட்டினின்றும் வந்தது. `பத்திமையால் உரைத்தது` எனவே, அறியார் அஃதில்லாதோர் என்பது விளங்கிற்று. இதனால், `வேதம் உலகர்பொருட்டும், சிவாகமம் சத்திநிபாதர் பொருட்டும் சிவபெருமானால் செய்யப்பட்டன` என்பது சொல்லப்பட்டது.
இதனை,
``வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறுமுள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம்;
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
எனச் சிவஞானசித்தி விளக்குதல் காண்க.
பாயிரத்திறுதியில் நூற்பாட்டின் தொகையும், நூற்பயனும் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 36

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.

குறிப்புரை :

``மூலன்`` என்றது தம்மைப் பிறர்போலக் கூறியவாறு. ஞானசம்பந்தரும், நம்பியாரூரரும் தம் பதிகத்திறுதியில் இவ்வாறு கூறுதல் காண்க. இங்ஙனம் நாயனார் ``மூவாயிரம் தமிழ்`` என்றமை யானும், மேல் ``மந்திர மாலை`` என்றமையானும் சேக்கிழார், ``நற்றிரு மந்திரமாலை`` எனவும், ``தமிழ் மூவாயிரம் சாத்தி`` எனவும் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 37

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தரும்இவை தானே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 38

வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 39

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 1

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
 

பொழிப்புரை :

தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.

குறிப்புரை :

``இங்கு`` என்றது ``இம் மண்ணுலகில்`` என்றபடி. `சித்தியாலும், முத்தியாலும் சிலர் சிவனோடு ஒத்திருப்பர்` என மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு, ``அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` என்றார். ``ஆதலின்`` என்பது சொல்லெச்சம். ``அன்று கடந்து`` என மாற்றுக. ``அன்று`` என்றது ``அநாதி`` என்னும் பொருளது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பொன் - பகலவன். ``பொன்னொளியாய்`` என உருவகப் பொருண்மைத்தாய ஆக்கம் விரிக்க. தவன் - தவத்தின் பயனாய் உள்ளவன்; பரமுத்திப் பேறாய் உள்ளவன்; ``முதற்கடவுள்`` என்றவாறு. தா மரையான் - தாவுகின்ற மானை ஏந்தியவன். ``சடைமுடித் தா மரையான்`` என்றது, `சிவபெருமான்` என்னும் பெயரளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 2

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. 

பொழிப்புரை :

சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

குறிப்புரை :

``சிவனொடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை`` என மேற்கூறியதனையே அநுவதித்தார்; அதனால், பின்வருவன வற்றை வலியுறுத்தற்பொருட்டு. அருந்தவம், வீடடைவிக்கும் தவம். ``ஊர் புகுதல்`` என்றது ஒட்டணியாய் நின்று, முத்திபெறுதலைக் குறித்தது. இறவாமை முதலிய நான்கும் முதற்கடவுளது இயல்புகள் என்பதைப் பெயர்த்துரை (அநுவாத) வாய்பாட்டாற் கூறி, `அவ்வியல் புகளை உடையவன் சிவபெருமான் ஒருவனே` என்பது உணர்த்திய வாறு. நஞ்சுண்ட வரலாறு கூறும் புராணத்தால் சிவபெருமான் இறவாதவன் என்பது தெளிவாதலாலும், `சிவன் முத்திக் கடவுள்` என்பதே வழக்காதலாலும் ``அவனை ஒழிய அமரரும் இல்லை; அருந்தவம் இல்லை`` என்றார். அவை அங்ஙனமாகவே, ஏனைய இரண்டும் இனிது பெறப்பட்டன. ``நீல மணிமிடற் றொருவன்போல மன்னுக``, (புறம் - 91) ``சாவா மூவாச் சிங்கமே`` (தி. 6. ப.99 பா.2) என்றாற் போலும் மெய்ம்மொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 3

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. 

பொழிப்புரை :

பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

``முன்`` என்றது பல ஊழிக்காலங்களை. ``முன்னோன்`` என்றது, அவர்களை என்றும் தானே படைத்தல் பற்றி. ``படைப்போற் படைக்கும் பழையோன்``, ``முன்னோன் காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 13,29) என்றமை காண்க. ``அயனைமுன் படைத்திடும் ஒரு கற்பத்து; அரியை முன் படைத்திடும் ஒரு கற்பத்து`` (சிவஞானபாடியம் - சூ. 1 அதி. 2) என்றது அறிக. ``தன்னை யொப்பாய் ... ... தலைமகன்`` என்றது, ஒருவனாதல் குறித்தபடி. ``ஏகோ ஹிருத்ர:`` (சுவேதாசுவதரம்) ``தன்னேரில்லோன் தானே காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 30) என்றதும் காணத்தக்கது. இவ்வாறாகவே இது, ``ஒன்றவன்றானே`` என்றதனை விளக்கியவாறாம். ``அப்பனும், அம்மையும்`` என்றது, ``உலகிற்கு முதல்வன்`` என்றதாம். இதுவும், முதற் கடவுள் இயல்பும், அவற்றைச் சிவபெருமான் உடையனாதலுங் கூறியது.

பண் :

பாடல் எண் : 4

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 

பொழிப்புரை :

நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.

குறிப்புரை :

அறியாமையாவது, உலகில் நிகழும் மறமும், அறமும் அவன் ஆணைவழியால் நிகழ்வன என்பதை அறியாமல், பிறவாற்றான் நிகழ்வனவாக எண்ணுதல். தெறலும் கருணை யேயாதல் பற்றி, `அருள்` எனப் பொதுப்படக் கூறினார். தாயது தன்மை; குழவிக்குத் தனது பாலைக் கைம்மாறு கருதாது அளித்தல் ஆதலின் அஃது, உயிர்கட்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது வழங்கும் கடவுட்டன்மைக்கு உவமையாயிற்று. தாய்க்குக் குழவி பசித்த காலத்தில் பால்கொடுத்தல் இயலாமையும், இயலினும் நிரம்பக் கொடுக்க இயலாமையும், அவை காரணமாகக் குழவி மாட்டு அவட்கு வெறுப்பும் ஒரோவழித் தோன்றுதலும் உண்டாகலின், அன்ன குறைபாடில்லாத கடவுளை, ``தாயினும் நல்லன்`` என்றார். ``பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து` (தி.8 திருவாசகம் - பிடித்த பத்து 9) என்றதும் காண்க. இதனால், `ஒறுத்தல், அளித்தல்களால் உலகத்தை உடனாய்நின்று நடத்துதலும், அவ்வாறு நடத்தினும் உலகர்க்கு வெளிப்படாது, உணர்வினர்க்கே வெளிப்படுதலும், வெளிப்படக் கண்ட உணர்வினர்க்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது இடையறவின்றி வழங்குதலும்` ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன. `சேயினும் நல்லன்` என்பது பாடம் அன்று. `நற்றாழ்சடையோனே` என்பது பாடமாதல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 5

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

பொழிப்புரை :

என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

`தானே எல்லாராலும் வணங்கப்படுபவன்` என்பதாம். ``பொற்சடை`` என்பதில், ``பொன்`` என்றது, வாளா பெயராய் நின்றது. பின் - பின்னுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஆல், ஒடுவின் பொருளில் வந்தது. ``பின்னால்`` என்பதனை இடப்பொருட் டாக்கி, அது பிறரைத் தலைதாழ்த்து வணங்காமையைக் குறிக்கும் குறிப்புமொழியாக உரைப்பாரும் உளர். `பின்தாழ் சடையானை`(தி.1 ப.74 பா.4) என்றாற்போல வரும் எவ்விடத்தும் அங்ஙனமே உரைத்தல் அவர் கருத்து. சடை தவக்கோலத்தை உணர்த்துதலால், பற்றின்மையைக் குறிக்கும் குறிப்பாகும். பொன்மை கவர்ச்சியையும், பின்னல் பழமையையும் குறிக்கும். நந்தி - இன்பம் உடையவன். ``அதனைத் தனக்கே உரிய பெயராக உடையவன்`` என்றவாறு. ``சிவன்`` என்பது இப்பொருளும் தரும். இன்பம், இயல்பாய் இருத்தற்குக் காரணம் மெய்ம்மையும், அறிவும் இயல்பாக இருத்தலே என்பது தோன்ற, முதற்கடவுளை, ``சச்சிதானந்தன்`` என உபநிடதங்கள் கூறுதல் அறிக. எனவே, அவையும் இதனாற் குறிக்கப்பட்டனவாம். இதனால், பற்றின்மையும், கவர்ச்சியும், காலத்திற்கு உட்படாமையும், மெய்யறிவின்பங்களை இயல்பாக உடைமையும், தனக்கு மேலாவார் இன்றித் தானே எல்லார்க்கும் மேலானவனாதலும் ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், `நந்தி` என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.

குறிப்புரை :

முயல் - முயற்சி; `முயற்சி` எனினும், `உழவு` எனினும் பொருந்தும். ``சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்``(குறள். 1031) என்பதனால், உலகத்திற்கு முதலாதலை இவ்வாறு கூறினார். இதனானே மெய்ந்நெறியிலும் சாதனமும், அதனைத் தருகின்ற திருவருளும், அதற்கு முதலும் ஆதலும் பெறப்படுவதாம். இதனால், பந்தம், வீடு இரண்டற்கும் முதல்வனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

பொழிப்புரை :

சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, `இவனே முதல்வன்` எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். ``காதல்`` என்றது அருளை. ஒருபெற்றியாய அருளை, `ஓர் அருள்` என்றார். நிற்றல் - அழிவின்றி நிலைத்திருத்தல். இதனால், அழிவில னாதல் கூறப்பட்டது. ஆகவே, `அவனை ஒழிய அமரரும் இல்லை` என்பது விளக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 8

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

எண் - எண்ணம்; சிந்தனை. `எண்ணால் அளந்து` என்க. கண் - இடம். ``எங்கும்`` என்றது, `எவ்விடத்தையும்` என்றவாறு. இதனால், அவனது பெருநிலை (வியாபகம்) கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :

`சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

குறிப்புரை :

`காண்பாராய இருவர்` எனவும், `கண்டிலராய்க் கூடி` எனவும் இயைத்துரைக்க. இருவருள் ஒவ்வொருவரும் அடி, முடி இரண்டையுங் காணுங் கருத்தினராய் முதற்கண்ணே தோல்வியுற் றமையின், ``அடி முடி காண்பார் அயன் மால் இருவர்`` எனப் பொதுப் படவே கூறினார். படி - தாம் கருதிய நிலை. நிலவுலகினின்றே புறப்பட் டமையின், ``மீண்டும் பார்மிசைக் கூடி`` என்றார். சிவபெருமானைப் பொதுநீக்கி உணர்தற்கு இவ்வரலாறு பெரிதும் சிறந்ததாய்ப் பயின்று வருவதாகலின், பின்னர்க் கூறப்படும் புராண வரலாறுகளுட் கூறுத லன்றி இவ்விடம் குறித்தருளினார். இவ்வாறன்றி, `இத் திருமந்திரமும் பின்னர் வரும் இவ் வரலாற்று மந்திரங்களுள் ஒன்றாகற் பாலதே` என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 10

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

ஆதி - முதல்வன். இறுதியில், ``கடந்து நின்றான்`` என்றதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. இதனால் மேலதனை வலியுறுத்தி, எங்கும் நிறைந்து நிற்றலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 

பொழிப்புரை :

அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.

குறிப்புரை :

ஆதி - பிரமன். அரன் - உருத்திரன். வேதி - மாற்றம். ``உடலுள் நின்ற`` என்றதனால், அஃது இன்பதுன்ப நுகர்ச்சியைக் குறித்தது. எனவே, இது நிலைத்தொழிலை உணர்த்திற்று. முதல் இரண்டடிகளால் முத்தொழிற்கும் முதல்வனாதல் கூறப்பட்டது. இறுதி இரண்டடிகளால் அத்தொழில் புரிதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலால் கூறப்பட்டது. முன்னைத் திருமந்திரத்தில் பேரறிவு கூறப்பட்டாற்போல, இத் திருமந்திரத்தில் பேராற்றல் கூறப்பட்டவாறு காண்க. `எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிதலின், உயிர்கள் நன்மையடைதற்பொருட்டு நடுவு நிலையாளனாய் என்றும் நின்று ஆக்கல் அழித்தல் முதலியவற்றைச் செய்கின்றான்` என்றபடி. `விரிந்து ஆர்ந்திருந்தான்` என்றது, `அவனது பெருநிலையால் விளையும் பயன் இது` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 12

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

பொழிப்புரை :

திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்கு கின்றார்கள்?

குறிப்புரை :

``தாம்தாம் வேண்டுவன யாவற்றையும் விரும்பியே அவ்வாறு வணங்குகின்றார்கள்`` என்பது குறிப்பெச்சம். `கோது` இரண்டனுள் முன்னது, `கொழுது` என்பதன் மரூஉ. கொழுதுதல் - திருத்துதல். பின்னது - குற்றம். மகளிர் கூந்தலும் சிலபொழுது குழல் போலத் திருத்திவிடப்படுதல் பற்றியே, `குழல்` எனப்படுகின்றது. அமரர் என்றது ஏனையோரை நோக்க நெடுநாள் வாழ்வுடையராதல் பற்றி மும்மூர்த்திகளைக் குறித்தது. `கோது குணமாகக் குலாவிப் பயில்வார்` என மாற்றிக் கொள்க. குற்றமாவன, எலும்பும் சாம்பலும் அணிதல், சுடுகாட்டில் ஆடுதல், இரந்துண்டல் முதலியன.
கானார் புலித்தோல் உடை, தலைஊண், காடுபதி
ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலுங் கேளாய் அயனும் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.
-தி.8 திருவாசகம். திருச்சாழல். 12
என்றமை காண்க. ஒன்றும் இல்லாதவன்போலவும், பித்தன் போலவும் காணப்படினும் வேண்டுவார் வேண்டுவன பலவற்றையும் அருளுதல் இதனால் தொகுத்துக் கூறப்பட்டது. ``மாது குலாவிய வாள்நுதல் பாகன்`` என்றதும் அதனைத் தெளிவிக்கும் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 13

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 

பொழிப்புரை :

``காயம், கத்தூரி`` என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; சிவனருளே மேம்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

``கத்தூரி`` எனப் பின்னர் வருதலின், அது முன்னரும் கூட்டி எண்ணப்படும். மாயம் - மருட்கை. ``மாயமாக`` என ஆக்கம் வருவிக்க. ``அவ்வழி`` என்றதனை, ``கொதிக்கும்`` என்றதன் பின்னர்க்கூட்டுக. ``தேசம்`` என்றது மக்களை. கலத்தல் - ஒப்ப வைத்தல். `ஏனைத் தேவர் பிற சில பயன்களைத் தரவல்லராயினும், உண்மை ஞானத்தையும், வீடு பேற்றையும் தரவல்லராகாமையின், அவரது அருளால் பெறும்பயன் யாது`` என்பதும், `பிற பயன்களிலும் சிவபெருமானால் தரப்படுவனவேமிக்கு விளங்கும்` என்பதும் கருத்து. சிவபெருமான் இம்மை, மறுமைப் பயன்களையும் நிகரின்றித் தருதலும், முடிந்த பயனாய வீடு பேற்றைத் தருதலும் இதனால் வகுத்துக் கூறப்பட்டன. பின்னிரண்டடிகளில் யகரத்திற்குச் சகரம் எதுகையாயிற்று. உயிரெதுகையுமாம்.

பண் :

பாடல் எண் : 14

அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே. 

பொழிப்புரை :

அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு புரந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.

குறிப்புரை :

`அதனால் பெருஞ்செல்வம் உடையவன்` எனப் புகழப்படுகின்ற குபேரனுக்கு அந்நிலையை வழங்கினவனும், `எங்கள் சிவபெருமானே` என்றவாறு. `அளகை வேந்தனை` `கொள் என்ற` என்பன பாடமல்ல. `அந்நிதிபதி` என்னும் சுட்டு வருவிக்க. `அது பதியை, இதுபதி; இதனை ஆதரித்து ஆக்கமதாக்கின் கொள் என்றான்` என முடிக்க. இதுகாறும் சிவபிரான் தேவர்க்குந் தேவனாதலைக் கூறி, `சிவனோடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை` என்பதனை விரித்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 15

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே. 

பொழிப்புரை :

சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; அவ் வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆதலின், அவன் அருளைப் பெறுதற்கு அத்தவமே செயற்பாலது` என அதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. `இப்பதி` என்பதனை `இது பதி` என்றார். `பதி` நான்கில் முன்னவை இரண்டும் உலகம். இறுதியில் உள்ளது உறைவிடம். விது - சந்திரன். பதி செய் தவன் - பதித்தலைச் (சூடுதலை) செய்தவன். ``ஏலங் கமழ்`` என்றது சொல்லளவாய் நின்ற பொழிலுக்கு அடை. எல்லாவற்றையும் நினைத்த அளவாலே செய்தலின், செயலைக் கூறாது அறிவையே கூறி னார். `சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவமே மெய்த்தவம்` என்ப தனை விளக்கவே, `தவம்` என்றொழியாது; `மெய்த்தவம்` என்றார். `சிவபுண்ணியம்` அல்லது `பதிபுண்ணியம்` எனப்படுவதும் இதுவே என்க. எனவே, இதனால், `அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை` என்பதனை விளக்கியவாறாயிற்று. `சிவனை நோக்கிச் செய்யும் தவமே மெய்த் தவமாதற்குக் காரணம் உண்மைக் கடவுள் அவனாதலே` என்பதனை விளக்கவே, பொழில் ஏழும் முதுபதியும் செய்தவனா தலை எடுத்தோதினார். முதுமை, இங்குப் பெருமைமேல் நின்றது.

பண் :

பாடல் எண் : 16

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே. 

பொழிப்புரை :

உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

குறிப்புரை :

`ஆதலின், அந்நூல்களின்வழி நின்று தவம் செய்து அவனது திருவுருவை விளங்கக் கண்டு பயன் பெறுக` என்பது குறிப் பெச்சம். ``அறனெறி`` என்றது காரியவாகு பெயராய் அதனை உணர்த்தும் நூலைக் குறித்தது. அறம், இங்குச் சிவதன்மமாதலின் அதற்கு, `தவம்` எனப் பொருள் உரைக்கப்பட்டது. சிவதன்மத்தைக் கூறும் நூல்கள் சிவாகமங்கள். அவை இறைவன் திருவருள் வடிவா மாகலின், அவற்றை அவனுக்கு உறைவிடமாக அருளினார். அதனால் அந்நூல்கள் அவனது திருவருளை அங்கை நெல்லிக் கனியென இனிது விளக்குதல் பெறப்பட்டது. `அவற்றின்வழி நிற்பின் அப்பெருமான் அநுபவப் பொருளாதல் தப்பாது` என்றற்கு, `அவனது உருவம் மலையும், கடலும்போல விளங்குவது` என்றார். ``முழக்கம்`` என்றது, முழங்கும் பறைகளைக் குறித்த காரியவாகு பெயர். இதன்பின், `போலும்` என்பது எஞ்சி நின்றது. கடி - மணம். மலைகள் மணம் நிறைந்த மலர் மரங்களை உடையவாதல் அறிக. அலை, ஆகுபெயர். `அரனெறி` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 17

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 

பொழிப்புரை :

கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.

குறிப்புரை :

`ஆதலின் அவன் அருளைப் பெறுதற்கு அவனை நினைத்து நிற்றலே செய்யத்தக்கது` என்றவாறு. மாய நாடன் - வஞ் சனையை இடமாகக் கொண்டு நிற்பவர். `வஞ்சம்` என்றது புலனாகாமையை. `பிறர்க்குத் தீங்கு சூழும் வஞ்சனை அன்று` என்பது தோன்ற, `நல்` என்னும் அடை கொடுத்தார். ``எனக்கு`` என்றது பன்மை் ஒருமை மயக்கம். `எனக்கு அன்பிலன்` என இயையும். பிழைத்தல், பிறவற்றினின்று நீங்குதல். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை.

பண் :

பாடல் எண் : 18

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 

பொழிப்புரை :

உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்துவருகின்றான்.

குறிப்புரை :

`உலகம் ஒருவனது ஆணை வழிநடப்பதும், அவ் வொருவன் எல்லாம் வல்லவன் என்பதும் கடல் கரையின்றியே அடங்கி நிற்கும் இவ்வொன்றானே அறியப்படும்` என்பது முன்னிரண்டு அடிகளின் கருத்து. ``வல்லவன், முதல்`` என்பவற்றில் ஆக்கச்சொல் விரிக்க.

பண் :

பாடல் எண் : 19

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 

பொழிப்புரை :

`நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.

குறிப்புரை :

``சிவனடிக்கே செல்வம்`` என்பது பாடமாயின், `இவ்வாறு செய்தால் சிவனடியை அடைவோம்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 20

காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே. 

பொழிப்புரை :

`இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் அவ்வாற்றால் அவனை மனத்தில் எழுந் தருளப் பண்ணிக்கொண்மின்கள்` என்பதாம். இரண்டாம் அடியை முதற்கண் மொழிமாற்றி வைத்து, ``உளர்`` என்றதன்பின், `என்று` என்பது வருவித்து உரைக்க. இது காறும் நினைதல் கூறியவாறு; இதன் பின் வாழ்த்துதலைக் கூறுதலே முறையாயினும், அஃது இந்நூற்குச் சிறந்ததாதல் பற்றி இறுதிக்கண் கூறுவாராய், வணங்குதலை முன்னர் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 21

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாத வன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

`சிவபெருமான்` என்பது அதிகாரத்தால் வந்தது. ``தன்னை`` என்றது, `அவனை` என்றவாறு. இவ்வாறு `பிறப்பிலி` முதலியவற்றைப் பயனிலையாக்காது, பெயராக வைத்துரைத்தல் சிறவாமை அறிக. பிறப்பிலி முதலிய பலவும் அவன் ஒருவனே வணக்கத்திற்கு உரியவனாதலைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. சடைமுடி யோகியாதலைக் குறித்தலின், அதுவும் வணக்கத்திற்கு உரிய வனாதலைக் குறித்தல் அறிக. மாயா விருத்தம் - மாயைக்கு மாறானது. மாயை - அஞ்ஞானம்; `அதற்கு மாறு` எனவே, `ஞானம்` என்பது போந்தது. இறைவனை மறக்கும் மறதி அஞ்ஞானத்தால் உளதாவதாம். அது நீங்கவே, மறவாமையாகிய மெய்ஞ்ஞானம் உளதாம் என்க.

பண் :

பாடல் எண் : 22

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

பொழிப்புரை :

யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

பரி பாரகம் - எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலமாகிய இடம். ``பாரகம் முற்றும்`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்று இயையும். ``கமலமலர்`` என்றது அன்பரது உள்ளங்களை. `புணர்ந்து` என்றது உயிரெதுகை. `உடந்திருந்தான்` என்பது பாடம் ஆகாமை அறிக. `படர்ந்து நிற்றல், நடந்து நிற்றல், புணர்ந்திருத்தல்` என்னும் மூன்றும் முறையே இறைவன் உலகத்தோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்கும் முறைமையை உணர்த்தியவாறு. `அம் முறைமையே சிவநெறி அத்துவிதம்` என்பதும், `அதனை உணர்தலே சிவஞானம்` என்பதும் அறிக. சிவனடிப் புண்ணியம் - சிவதன்மம்; சிவதன்மத்தால் விளைகின்ற சிவஞானத்தை, `சிவதன்மம்` என்றார்.

பண் :

பாடல் எண் : 23

சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 

பொழிப்புரை :

`அந்தி வானம் என்று சொல்லத் தக்க நிறத்தை யுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்` என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் வணங்குமின்` என்பது கருத்து. படுதல் - உடன்படுதல்.

பண் :

பாடல் எண் : 24

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 

பொழிப்புரை :

மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.

குறிப்புரை :

இங்கு வழிபடுதல், பயன் கருதாத மெய்யன்பினால் வழிபடுதலாதலின், `திருமாலும் அது செய்யவில்லை` என்றும், பயன் கருதி வழிபட்டுச் சக்கரம் பெற்றமையால் ``இணங்கி நின்றான்`` என்றும் கூறினார். பிரமனும், இந்திரனும் அவ்வாறு வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறு ஒன்றும் சிறப்பாகச் சொல்லப்படாமையால், அவர் களை, பிணங்கியும், வணங்கியும் நிற்பவராகக் கூறினார். ``எங்குமாகி நின்றான்`` என்றது, `விட்டுணு` என்னும் சொற்பொருளை எடுத்தோதியவாறு. ``பின்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. மேல் பொது வணக்கம் கூறி, இதனால், உண்மை வணக்கம் கூறியவாறு. இதுகாறும் வணங்குதல் கூறப்பட்டது. இனி, வாழ்த்துதல் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 25

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 

பொழிப்புரை :

மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.

குறிப்புரை :

வானம் - விண். ``கூடலும்`` என்ற உம்மை சிறப்பு.

பண் :

பாடல் எண் : 26

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே. 

பொழிப்புரை :

`வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.

குறிப்புரை :

`நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே` என்றதனால், `பலர் பயன் கருதித் துதித்து அவற்றைப் பெற்றனர்` என்பது பெறப்பட்டது. `அவர் அங்ஙனம் பெற்றமை அனுபவ மாகலின், சிலர்போல நீங்கள் ஐயுற வேண்டுவதில்லை` என்றபடி. `ஞானம் கருதித் துதித்தலே சிறந்தது` என்பதும் குறிக்கப்பட்டது என்க.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரம்முரலுந் தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே.
என்ற திருவாசகத்தையும் காண்க. (தி.8 திருச்சதகம். 20) `போல்` என்பது வினைத்தொகையாய், ``நந்தி`` என்பதனோடு இயைந்தது.

பண் :

பாடல் எண் : 27

மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 

பொழிப்புரை :

மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.

குறிப்புரை :

``ஒக்கும்`` நான்கும் பெயரெச்ச அடுக்கு. அவை, ``பாடலுற்றான்`` என்பதனோடு முடிந்தன. `யாவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்ப நின்று அருள்புரிபவனாகிய சிவபெருமான் விரும்புவது இசை என்பதை உணர்ந்து, அவன் அருளாலே அவனைப் பாடித் துதிக்கின்றேன்` என்பது இத் திருமந்திரத்தின் திரண்ட கருத்து. துதிக்கும்பொழுதும் நான் என்ற முனைப்புடன் துதியாது, `இப் பேறும் அவனது அருளால் கிடைத்தது` என அவனது அருள்வழி நின்று துதித்தல் வேண்டும் என்றற்கு, ``கண்ணகத்தே நின்று`` என்றார். `அவன் கண்ணகத்தே நின்று` என்க. ``அவனரு ளாலே அவன்தாள் வணங்கி`` என்றதும் காண்க. (தி.8 திருவாசகம். சிவபுராணம் அடி 18).

பண் :

பாடல் எண் : 28

தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.

குறிப்புரை :

``தேவர் பிரான்`` முதலியவற்றைப் பல தொடராகக் கூறியது, அவற்றின் சிறப்புணர்த்தற்கு. காட்சிக்கு எய்துதல் பற்றி ``விரிநீர் உலகு ஏழையும்`` என நிலவுலகத்தையே கூறினாராயினும், மேல், ``திசை பத்தும்`` கூறினமையால் பிற உலகங்களும் கொள்ளப் படும். `முற்ற அறிய வாராமை பற்றி அவன் முனிதல் இல்லை; அறிந்த அளவு பாடின் உவப்பான்` என்பது கருத்து. ``யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் - நின்னடி உள்ளி வந்தனென்`` (திருமுருகாற்றுப் படை. 277 - 279) என்றதும் காண்க. மேவுதல் - விரும்புதல்; அது, பற்றிநிற்றலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 29

பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 

பொழிப்புரை :

பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.

குறிப்புரை :

`அதனால் சிவனது முதன்மையாகிய மெய்ம் மையைத் தெளிவித்தல் அரிதேயாம்` என்பது குறிப்பெச்சம். பதி - கடவுள்.

பண் :

பாடல் எண் : 30

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 

பொழிப்புரை :

சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு செய்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். `மான்மத மணம் சந்தன மணத்தினும் வேறாய் மிக்குத் தோன்றுமாறுபோலச் சிவபிரான் அறிவுறுத்திய நெறி ஏனை நெறி யினும் மிக்குத் தோன்றுதல் அறிவுடையார்க்குப் புலனாகும்` என்பது, `சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்` என்ற உவமையால் குறிக்கப் பட்டது. ``மாயங்கத் தூரியது மிகும் அவ்வழி`` என மேலேயும் கூறினார். (தி.10 திருமந்திரம் - 51) கவரி, ஆகுபெயர்.
`முத்தியுலகத்தில் மெய்ந்நெறி அறிவுறுக்கப்பட்டோர் பிரணவர் முதலியோர்` என்பது பின்னர்க் காணப்படும் `மெய்ந் நெறி யானே` என உருபு விரிக்க. ``ஆர்ந்தசுடர்`` பன்மையும், ஒளியும் பற்றி வந்த உவமை. `பேர்ந்தும்` என்பதும் பாடமாகலாம்.

பண் :

பாடல் எண் : 31

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

பொழிப்புரை :

பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்.

குறிப்புரை :

``ஆற்றுகிலா`` என்றதில் ஆற்றுதல், ``வையகமும் - வானகமும் ஆற்றல் அரிது`` (குறள். 101) என்பதிற் போல `ஒத்தல்` என்றும், ``ஆற்றுவன்`` என்றதில், ஆற்றுதல் ``அற்றார்க் கொன்றாற் றாதான் செல்வம்`` (குறள். 1007) என்பதிற்போல, `கொடுத்தல்` என்றும் பொருள் தந்து நின்றன. `வழக்கும், எதிர்வழக்கும் கூறு வோரது கூற்றினுள் மெய்ம்மை இது என்பது நடுவுநிற்பார்க்கு இனிது விளங்கி நிற்றல்போலப் பல நெறிகளும் பிறர்கோள் மறுத்துத் தம் கோள் நிறுவுமாயினும், உண்மை காண் பார்க்குச் சிவநெறியது உயர்வு `சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்` (தி.10 பா.69) இனிது விளங்கியே நிற்கும் என்பார், சிவநெறியை `ஆற்று கிலா வழி` என்று அருளினார்.
ஆதல், உளவாதல். அஃது இங்குப் பெறப் படுதலைக் குறித்தது. ``மேற்கு, கிழக்கு`` என்பவை, `மேல், கீழ்` என்னும் பொருளவாய் நின்றன. திசைக்கண் உள்ளவற்றை, `திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்றார். மூவுலகமும் இங்கு, `மேல், கீழ்` என இரண்டாக அடக்கப் பட்டன. அப் படி - அவ்வுலகம். `தம் விருப்பப்படி நடத்தலாம்` என்பது தோன்ற, `ஆளலுமாம்` என்னாது, ``ஆட்டலுமாம்`` என்றார்.
இனி, `ஆளலுமாம்` என்பதே பாடம் என்றலும் ஆம். `சிவபிரானைப் போற்றுவோர் எவ்வுலகத்தை ஆளநினைப்பினும் ஆள்பவராவர்` என்பது திருமுறைகளுள் பலவிடத்தும் இனிது எடுத்துச் சொல்லப்படுவது. `ஏனைக் கடவுளர்பால் அடையும் பயனையும் சிவபிரான்பால் அடையலாம்` என்பது கூறி, அவனை வாழ்த்துதலை வலியுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 32

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத் தக அவனது அருளைப் பெறலாம்.

குறிப்புரை :

`பொது நீக்கி ஒப்புயர்வற்ற தலைவனாக உணருந்தன்மை இல்லாது பொதுப்பட ஏத்தினும் அது பின்னர் உண்மையுணர்வைப் பயக்கும்` என்பதும், பயன்கருதித் துதிப்பினும் அது பின்னர்ப் பயன் கருதாது துதிக்கும் மெய்யன்பினைப் பயக்கும் என்பதும் கருத்து.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ``
(தி.5 ப.23 பா.9)
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசரும்.

பண் :

பாடல் எண் : 33

நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பொழிப்புரை :

சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.

குறிப்புரை :

உம்மைகள் எச்சம். ``தழல்தான்`` என்பதில்தான், அசைநிலை. `தழலொக்கு மேனியனாகிய தானும் மதிபோல் உடலுள் உவந்து நின்றான்` எனக் கூட்டுக. உவத்தல் - நிறைதல். ``ஊனில் நின்று`` என்பதனால், அவன் அதனோடு இயைபில்லாத தூயனாதல் பெறப்பட்டது. ``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே`` (தி.6 ப.95 பா.4) எனவும், ``எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய் யானிதற் கிலனொர்கைம் மாறே`` (தி.8 கோயில் திருப்பதிகம் 10) எனவும் போந்த அருட்டிருமொழிகளைக் காண்க. உயிர்ப்பாய் வெளிப்படுதலாவது, உயிர்க்குந்தோறும் புறத்தும், அகத்தும் இன்பமாய்த் தோன்றுதல்.
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` (தி.5 ப.21 பா.1)
என்றருளியதும் காண்க. இதனை அசபா மந்திரத்தின் அநுபவம் என்ப. ஏத்தினால் ஈசன் அருளைப் பெறுதலை அனுபவத்தின் வைத்து உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 34

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே. 

பொழிப்புரை :

யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.

குறிப்புரை :

பிதற்றுதல் போலுதலின், `பிதற்று` என்றார்; இது முதனிலைத் தொழிற்பெயர். ``பிதற்றொழியேன்`` என்பதனைச் சொற்பொருட்பின் வருநிலையாகப் பலகாற் கூறியது, வலியுறுத்தற் பொருட்டு. வேறு வேறு தொடராதலின், இஃது ஒருசொல்லடுக்கன்மை உணர்க. `பெரியானை` என்னும்
இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. `இத்தன்மையனை இடையறாது துதித்தல் தவமிலார்க்குக் கூடாது` என்றற்கு, `பெருமைத் தவன் நானே` என்றார். `தவமும் தவமுடையார்க்கே ஆகும்` (குறள் 262) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
யானே தவமுடையேன்; என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேஅக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். -அம்மை திருவந்தாதி. 7
என்றது காண்க.

பண் :

பாடல் எண் : 35

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே. 

பொழிப்புரை :

தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும், `எம் தலைவன்` என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.

குறிப்புரை :

``அங்கே`` என்பது ``தீர்த்தன்`` என்பதனோடும் இயையும். ``திளைக்கின்ற`` என்பது, ``தேவன்`` என்ற செயப்படு பொருட்பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 36

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே. 

பொழிப்புரை :

கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.

குறிப்புரை :

`குரைகழலை நாடும்; அது செம்பொன்னின் ஒளியொக்கும்` என்னும் தொடர்கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. `நாடும்` என்பது உம்மீற்றுப் பன்மை ஏவல். மறைஞ்சு, `மறைந்து` என்பதன் போலி. `மறைந்தடம்` எனவும் ஓதுவர். உள்ளத்தைச் சடம் என்றது, உடம்பையும் குறித்தற்கு.

பண் :

பாடல் எண் : 37

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

பொழிப்புரை :

சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத் தோடு ஒப்பச் செய்யப்பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத்தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.

குறிப்புரை :

`நெஞ்சிடை வைத்து` என ஒருசொல் வருவிக்க. பார்வை விலங்கினை குருவடிவிற்கேயன்றி, உள்ளத்தில் நினைக்கப் படும் வடிவிற்கும் கூறினார் என்க. ``கனஞ் செய்த`` என்றதில் `செய்த` உவம உருபு. கனம் - மேகம். `வாள் நுதல்` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 38

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.

குறிப்புரை :

``நான்`` என்றது, `நான்` என்னும் முனைப்பிற்குக் காரணமான பசுபோதத்தைக் குறித்த காரியவாகுபெயர். முடி - முடிவு; முதனிலைத் தொழிற்பெயர். `செய்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இஃது எதிர்காலத்து இறந்த காலம். ``அது`` என்றது, ``அந்தப்பயன்` எனச் சிவபோதத்தை உணர்த்திற்று. ஆணவ சத்தி மெலிதல், அனாதிதொட்டே நோக்கிவரும் இறைவனது திரு வருள் நோக்கத்தாலாதலின், `நாயகன் முடிசெய்த அது` என்றார். `பெறுவது` எனக் கூறிப் பின்னரும், `நல்கும்` என்றார்; `தானே விரும்பிக் கொடுப்பான்` என்பது உணர்த்துதற்கு. ``அகம்`` என்றது, `நான்` என்னும் பொருளதாகிய வடசொல், ``அகத்தால்`` என உருபு விரித்து, சூழ்தற்குச் செயப்படு பொருளாகிய, `சிலவற்றை` என்பது வருவிக்க. ``வல்லர்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ஒன்றுதல் - உடன்படுதல்; அது, கொடுத்தலாகிய தன் காரியம் தோன்றநின்றது. சிவபெருமானை வாழ்த்துவார், போகம், மோட்சம் இரண்டும் பெறுவர் என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 39

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே. 

பொழிப்புரை :

சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`நாளும் பாவிப்ப` எனவும், `அடி உரன் செய்து` எனவும், ` அடி நிரன்` செய்து எனவும் மாற்றுக. உரன் - வலிமை; அது துணைவலிமேல் நின்றது. `நிறன்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. நிறன் - விளக்கம்.

பண் :

பாடல் எண் : 40

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 

பொழிப்புரை :

தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் அதுவே செய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். இயக்கர், கந்திருவர் முதலியோரைத் தேவருள்ளும், நரகரை அசுரருள்ளும் அடக்கினார். நரகரும் தேவராதற்குச் சிவனது திரு வடியைத் துதிப்பர் என உணர்க. வேறு வேறு தொடராகக் கூறியது, போற்றுதலின் சிறப்பை விளக்குதற்கு. சிவன் அப்பெயரால் கூறப் படுதல், `நிறைமலம் அனாதியின் நீங்கி நிற்றல்`. (காஞ்சிப் புராணம். திருநெறிக்காரைக்காட்டுப் படலம். 23) பற்றியும் ஆதலின், `புனிதன்` என்றார்.

பண் :

பாடல் எண் : 41

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.

குறிப்புரை :

`ஆதலின் வினைவழியினின்று விடுதிபெற வேண்டு வோர் சிவபெருமானைத் துதிக்க` என்பது குறிப்பெச்சம். திருவள்ளுவ நாயனாரும், வினை நீங்குதற்கு வாயில் இறைவனது பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதலே எனக் கூறுமாறு அறிக.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள். 5)
``இன்பம்`` என்றதன்பின்,`உளதாதல்` என்பது வருவித்து, உம்மையைப் பிரித்து அதனொடு கூட்டுக. ``இல்லை`` என்பது ``அல்லது`` என்றதனோடும் இயை யும்.
இதன்பின், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. வினை உள தாவது அஞ்ஞானத்தால் ஆதலின் அது மெய்ஞ்ஞான வடிவினனாகிய சிவபெருமானால் நீங்கும் என்பார், ``சோதிப் பிரான்`` எனவும், ``பகலவன் ஆம்`` எனவும் கூறினார். ``சோதிப் பிரானும்`` என்ற உம்மை, அசைநிலை.

பண் :

பாடல் எண் : 42

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே. 

பொழிப்புரை :

`அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.

குறிப்புரை :

அரன் - பாசத்தை அரிப்பவன். சிவன் - மங்கலமான வன். வடிவத்தை ``வண்ணம்`` என்றார். ``தொழ`` என்றது, ``ஞாயிறு பட வந்தான்`` என்பதிற்போல நிகழ்கால வினை. `அடியார் தொழ நானும் தொழுதேன்` என்றது, `அவர் செய்ததை நானும் செய்தேன்; அச் செயலின் திறம் முற்றும் அறிந்து செய்தேனில்லை` என்றபடி.
``ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே`` -தி.5 ப.91 பா.3
என்ற அப்பர் திருமொழியும் காண்க. ``என்று`` என்றது, தன்மை ஒருமை இறந்த காலமுற்று. இங்கு ``என்றேன்`` என வருதல் யாப்பிற்கு ஒவ்வாமை அறிக. ``இவ்வண்ணம்`` எனச் சுட்டியது தம் அநுபவங்களை. இத்துணையும் வாழ்த்துதலே கூறினார். வணங்குதல், திருவடிவின் முன்னன்றிச் சிறவாது. நினைதற்கு நெஞ்சு ஒடுங்குதல் அரிது. அதனால் எப்பொழுதும் யாவர்க்கும் எளிதிற் கூடுதல் பற்றி வாழ்த்துதலையே பெரிதும் வலியுறுத்தினார். தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் பரக்க எழுந்தமைக்கும் இதுவே காரணம் என்க. திருவள்ளுவரும் மேற்குறித்த குறளில் இறைவனது பொருள்சேர் புகழையே எப்பொழுதும் இடைவிடாது சொல்லுதல் வேண்டுமென விதித்தல் நினைக்க. இனி மூவகை வழிபாட்டினையும் இறுதிக்கண் தொகுத்துணர்த்துவார்.

பண் :

பாடல் எண் : 43

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.

குறிப்புரை :

பின்னர் `நினையாதவர்` என வருதலால், முன்னர் `நினைப்பவர்` என்பதும், முன்னர் ``மனையுள் இருந்தவர்`` என்றதனால். பின்னர், `துறந்திருந்தவர்` என்பதும் பெறப்பட்டன. `ஞானம் ஈசன்பால் அன்பே` (தி.12 பெ. பு. ஞானசம்பந்தர். 843) ஆதலின், ஞானத்தை, ``நேசம்`` என்றார். `நின் இன்பம்` என்பது பாடம் அன்று. இதனால் நினைத்தலின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொழிப்புரை :

மெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

மெய்யுணர்ந்தோரே சிவனுக்கு ஆட்படுவாராதலின், அடியாராவர் அவரேயாதல் அறிக. `படி ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``முடியால்`` என்றதற்கேற்ப, `மனத்தால்` என்பது வருவிக்கப்பட்டது. ``வணங்கி, முன்னி`` என்று ஒழிந்தாராயினும், முன்னர் ``பரவும்`` என்ற குறிப்பால், வாயால் வாழ்த்தலும் பெறப்பட்டது. ``அமரர் பிரான்`` முதலாக வந்த சிறப்பினால் வணங்கப் படுதல் முதலியவற்றிற்கு அவனே உரியவன் எனக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 45

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே. 

பொழிப்புரை :

தன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``உரை பசு பாசம்`` என்பதில், ``பாசம்`` என்றது உடம்பை. ``உள்ளி உரை பாசத்து ஒருங்க`` என்றது, `மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் அவனிடத்தே ஒரு நெறிப்பட` என்றவாறு. ``திரை`` என்பது, ``கடல்`` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. பாவம் - உளதாந்தன்மை; என்றது பிறப்பை. செழுமை, அளவிடப்படாத அகல ஆழங்கள். `நீந்திக் கடந்து கரை எய்தல் ஆம்` எனக்கூட்டுக. ஆதல் - கூடுதல்.

பண் :

பாடல் எண் : 46

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.

குறிப்புரை :

`நான் இன்று அறிவது இவ்வளவே` என்றது, `இதற்குமேல் உண்மை வேறில்லை` என்றதாம். `பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த - மக்கட் பேறல்ல பிற` (குறள் - 61)
`யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை - எனைத்தொன்றும் - வாய்மையின் நல்ல பிற`(குறள் - 300) என்றவற்றிற்கும் கருத்து இவ்வாறாதல் அறிக.
நாற்பத்தாறு திருமந்திரங்களால் சிவபெருமானது முதன் மையை முதற்கண் கூறிய நாயனார், `சிவன் ஒருவனே கடவுளாயின் `அயன், அரி, அரன்` என மும் மூர்த்திகளாக யாண்டும் கூறப்படு வோரது நிலை என்னை?` என்னும் ஐயத்தை நீக்குதற்கு அம்மூவரது மேல் கீழ் நிலையைப் பத்துத் திருமந்திரங்களால் விளக்குகின்றார்.

பண் :

பாடல் எண் : 47

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

பொழிப்புரை :

என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.

குறிப்புரை :

எனவே,`புண்ணிய மிகுதியால் அத்தொழில்களுள் சிலவற்றை இயன்ற அளவு பெற்று நடாத்துதல் பற்றி அவரும் ஒருபுடைத் தலைவராய் நிற்பர்` என்றவாறு. தோற்றத்தை ``இளமை`` என்றார்.
``அந்தம்`` என்றது உயிர்களின் அலைவிற்கு முடிவாதலை; எனவே, அஃது அருளலாயிற்று; இறுதியில் நிற்கற்பாலதாய அதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார்.
ஈறு - ஒடுக்கம். அளவியல் காலம், `தோற்றத்திற்குப் பின்னதாயும், ஈற்றிற்கு முன்னதாயும் இடைநிற்றலின் வரையறைப்பட்டு நிகழ்கின்ற காலம்; அஃது அதனை உடைத்தாகிய நிலைத்தொழிலின்மேல் நின்றது. மறைத்தலின் வகையே படைப்பு முதலிய மூன்றுமாகலின், அதனை வேறுவைத்து எண்ணாது,``நாலும் உணரில்`` என்றார். இத்தொழில் அனைத்தும் என்றும் நிகழ்வன வாகலின், அவற்றிற்கு, `அளவில்` என்ற அடை கொடுத்தார்.

பண் :

பாடல் எண் : 48

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 

பொழிப்புரை :

யாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!

குறிப்புரை :

தொழில் இயைபு பின்னர் விளக்கப்படும். இயைபு பட்ட தொழில்கள் பலவற்றைப் பலர் இயற்றுங்கால் தம்முள் இணங்கி இயற்றுதலன்றிப் பிணங்கி இயற்றாமையும், ஒரோவழிப் பிணங்கி இயற்றியவழி ஒன்றும் நடவாதொழிதலும் காட்சியால் அறியப் படுவனவாகலின், அவைபற்றி இடையறாது நிகழும் படைப்பு முதலியவற்றை இயற்றுவோர் அவற்றைத் தம்முள் இணங்கியே இயற்றுகின்றமை துணியப்படும் என்பார், ``மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித்துப் பிணங்குகின்றார்களே`` என்றார். எனவே, `மால், அயன் இருவரும் பொருளால் சிவபெருமானின் வேறாயினும், தொழிலால் அவனோடு ஒருவரே என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 49

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

பொழிப்புரை :

வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத் தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!

குறிப்புரை :

``ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``ஈசனே, தூரே`` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. முதலதனால், `ஏனைத் தேவர் பலரும் வினையாற் கட்டுண்டு நிற்பவரே` என்பது பெறப்பட்டது. `இருக்கும்` என்பது முற்று. ``உலகில்`` என்றதனால், காட்சிப் பொருளாய `கோயில்` என்பது விளங்கிற்று. பெருமை, இங்கு முதன்மையைக் குறித்தது. ``ஆனது`` என்றது, `ஆகிநின்றது` என்றவாறு. இதன் முதல் அடி மேற்கோளாயும், இரண்டாம் அடி ஏதுவாயும் நின்றன. நினைப்பு - ஆய்வு. ``தூசு`` என்றது பின்வரும் தூரினை. தூர் - பள்ளங்களைத் தூர்த்து நிற்கும் பொருள்கள். கூரிய நோக்குடையவரே, தூரினை அறிந்து அகற்றி உள்ளே கிடக்கும் பொருளைக் காண்பர். அதுபோல அறிவுடையவரே கலாய்ப்புக்களை அகற்றி உண்மையை உணர்வர் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 50

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :

`சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

குறிப்புரை :

`இதனை யறியாது மேற்கூறியவாறு தம்முள் முரணிக் கூறிக் கலாய்க்கின்றவரைத் தெருட்டுதல் இயலாது`` என்பது குறிப்பெச்சம்.
முதற்கடவுள் ஒருவனே, பிறிதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது `பரசிவன்` அல்லது `பரமசிவன்` எனப் படுவான். பரமசிவனே, `சொரூபசிவன், சுத்தசிவன்` என்றெல்லாம் சொல்லப்படுவான். அப்பொழுது அவனது, சத்தி `பராசத்தி` எனப்படும். பின் அப்பரமசிவன் உலகைத் தொழிற்படுத்த நினைக்கும் பொழுது `சிவன்` அல்லது `தடத்த சிவன்` எனப்பட, அவனது சத்தி பராசத்தியில் பல கூற்றில் ஒருகூறாய் `ஆதிசக்தி` எனப்படும், `திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.
சிவனுக்கு உலகை உய்வித்தற்கு உள்ள விருப்பமே `இச்சாசக்தி` என்றும், அச்செயலுக்கு ஆனவற்றை அறியும் அறிவே `ஞான சத்தி` என்றும், அறிந்தவாறு செய்யும் செயலாற்றலே `கிரியா சத்தி` என்றும் சொல்லப்படும், இவற்றுள் இச்சை, என்றும் ஒருபெற்றியாய் உள்ளதே. ஏனைய ஞானம் கிரியை இரண்டுமே பலவாறு அவ்வப்பொழுது செயற்படும். சிவன் (தடத்த சிவன்) சுத்த மாயை முதற்கண் தனது ஞானசத்தி மாத்திரத்தால் பொதுவாக நோக்கிப் பின்பு கிரியா சத்தியைப் பொதுவாக அதன்கண் செலுத்துவான். கிரியையின் செயற்பாடே செய்கையாகையால் இந்நிலை சத்திக்கே உரியது. அதனால், இந்நிலை `சத்தி` என்றே சொல்லப்படும். இது முன் சொன்ன ஆதிசத்தியன்று. முன்பு, ஆதி சத்தியும், தானும் வேறின்றி ஒருவனேயாய் நின்ற சிவன், இச்சத்தி தோன்றிய பின்பு `சிவன், சத்தி` என இரண்டாய் நிற்பன். அச்சிவன் பின்பு சுத்தமாயையை ஞான சத்தியால் சிறப்பாக நோக்கி `நாதம்` என நின்று, பின்பு கிரியா சத்தியைச் சிறப்பாகச் செலுத்துவன். அந்நிலை யில் அவனது சத்தி `விந்து` எனப்படும். எனவே, இந்த அளவிலே, இறைவனது நிலை, `சிவன் சத்தி, நாதம், விந்து` என நான்காதல் அறியலாம், இந்நான்கிலும் ஞானமே மிகுந்திருப்பதால் இவை அருவம் (சூக்குமம்). சிவனை, `பர நாதம்` என்றும், சத்தியை, `பர விந்து` என்றும் ` நாதத்தை, `அபர நாதம்` என்றும், விந்துவை `அபர விந்து` என்றும் சொல்வது உண்டு. பரம் - மேல். அபரம் - கீழ். `நாதனை` என்பதற்கு `நாதம் என்கின்ற நிலையில் நிற்பவன்` என்பதே பொருள். நாதம் - ஒலி. சுத்த மாயையில் நாத தத்துவமே எழுத்தொலி என்பது உணர்க.
மேற்கூறியவாறு ஞான சத்தியே மிக்கு விளங்கிய நிலைக்குப் பின் ஞான சத்தியையும், கிரியா சத்தியையும் இறைவன் சமமாகச் செலுத்தி மாயையைச் செயற்படுத்த முயல்வன். இந்நிலையில் அவன் `சதாசிவன்` எனப்படுவன். இந்நிலை அருவுருவம் (சூக்குமத்திற்கும், தூலத்திற்கும் இடைப்பட்டது). பின்பு ஞான சத்தியைக் குறைவாகவும் கிரியா சத்தியை மிகுதியாகவும் செலுத்திச் சுத்தமாயையில் ஐந்தொழில் செய்வான், அப்பொழுது அவன் `மகேசுரன்` எனப் பெயர் பெறுவான். பின்பு ஞானசத்தியை மிகுதியாகவும், கிரியா சத்தியைக் குறைவாகவும் செலுத்தி உரியோர் சிலரை ஏவி அசுத்த மாயை, பிரகிருதி மாயைகளில் ஐந்தொழில் செய்யச் செய்வான், இந்நிலையில் அவன் `வித்தி யேசுரன்` எனப்படுவான். வித்தியேசுரன் கீழ் நிற்போருள் உயர் நிலையை அடைந்தோரும், `வித்தியேசுரர்` எனப் பெயர்பெறுவர். அவர், `அனந்தர், சூட்சுமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி` என எண்மராவர். இவருள் முதல்வராகிய `அனந்தர்` என்பவரே அசுத்த மாயையில் ஐந்தொழில் செய்தும், சீகண்டருத்திரரை ஏவி அவர் வாயிலாகப் பிரகிருதி மாயையில் ஐந்தொழிலைச் செய்வித்தும் நிற்பார்.
ஐந்தொழில்களுள், `படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் மாயையின் மேலும், `மறைத்தல், அருளல் `என்னும் இரண்டும் ஆன்மாக்கள் மேலும் நிகழ்வன, இவற்றை இறைவன் பிறரைக் கொண்டு செய்விக்குங்கால், படைப்பு முதலிய மூன்றனையும் தான் அவரேயாய் மறைந்து நின்றும், ஏனை இரண்டனையும் அவர் தானேயாக விளங்கி நின்றும் செய்வன். எனவே, படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்யும் `அயன், அரி. அரன்` என்னும் மூவரே மகேசுரனுக்கு வேறாக வைத்து எண்ணப்படுவர். அனந்த தேவரது தொழிலோடு எவ்வாற்றானும் நம்மனோர்க்கு நேரே தொடர்பு இன்மையால் அவரையும் அவர்கீழ் நிற்பாரையும் வேறு வைத்து எண்ணுவதில்லை. சீகண்டரது மறைத்தல், அருளல் தொழில் சிவனுடையனவே என்பது மேலே குறித்தவாற்றால் விளங்கும். எனவே, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சதாசிவனுக்குக் கீழ் நான்கு நிலைகளே சொல்லப்படுகின்றன. இவை நான்கும் உருவம் (தூலம்). அனைத்தும் கூட, `சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகள் ஒன்பது என்பது விரியாக அமைந்துள்ளன. இவை `நவந்தரு பேதம்` எனப்படும். முதல் நான்கும் இலய நிலைகள்; இடை ஒன்று போக நிலை; இறுதி நான்கு அதிகாரநிலை. இவைகளை மூன்றாகத் தொகுத்துக் கூறுமிடத்து. `சிவன்` என்னும் இலய நிலையுள் ஏனைய மூன்றும் `மகேசுரன்` என்னும் அதிகார நிலையுள் ஏனைய மூன்றும் அடங்கும். ஐந்தாக வகுத்துக் கூறுமிடத்து, `சிவன்` என்பதில் நாதமும், `சத்தி` என்பதில் விந்துவும் அடங்க, `உருத்திரன்` மால், அயன் என்னும் மூன்றும் `வித்தை` என ஒன்றாகச் சொல்லப்படும். இவற்றையே, ``சிவன் முதல் மூவர்`` என்றும், ``ஐவர்` என்றும், ``ஆறு இரண்டு ஒன்று-ஒன்பது`` என்றும் கூறினார். ஒன்பது நிலைகளுள் `சத்தி, விந்து என்பன சத்தியின் நிலைகளே` என்பதை மேலே குறித்தோம். எனவே, இறைவன்` `சிவன், நாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன், என்னும் நிலைகளுள் நிற்கும்பொழுது இறைவி, முறையே, சத்தி, விந்து, மனோன்மனி, உமை, திரு, வாணி` என நிற்பாள். எனவே, மறைந்து நிற்றல் வகையாயினும், விளங்கி நிற்றல் வகையாயினும் ஒன்பது நிலைகளும் எவ்வாற்றானும் சிவபெருமானுடையனவே. ஆதலின்,`மால், அயன்` என்போரை அப்பெருமானின் வேறாக எண்ணி உயர்த்தியோ, தாழ்த்தியோ கூறிப் பிணங்க வேண்டுவது இல்லை என்பதாம்.
சிறந்த அவை முதல் ஒன்பது - சிறப்புடைய அவை முதலாய் நிற்கின்ற ஒன்பது, `முதலுகின்ற ஒன்பது` என வினைத்தொகை. இரண்டாவதாய் நின்ற ``அவை`` என்றது, ``ஓங்க` என்பதனோடு இயையும், இதனை அடுத்து நின்ற முதல், கருவி; தத்துவம். தத்துவத் திற்கு ஏதுவாகும் இறைவன் நிலைகளை `தத்துவம்` என்றார். சவை - சபை. தொகுதி. ``பெயர்` எனச் சொல்மேல்வைத்துக் கூறினாரேனும், அதனால் உணர்த்தப்படும் நிலைகளைக் கூறுதலே கருத்து என்க. இறைவனது நிலைகளை இவ்வாறு தொகுத்தும், வகுத்தும் விரித்தும் கூறப்படுதலை எடுத்தோதி, இவையெல்லாம் ஒருவனது பல நிலைகளே யன்றி பொருளால் வேறல்ல என்பார். `ஒன்று ஆகும்` என்றார்.

பண் :

பாடல் எண் : 51

பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.

பொழிப்புரை :

மேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங் கால் சீகண்ட வுருத்திரர்க்குக்கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.

குறிப்புரை :

``எண்ணும்`` என்றதற்கு, `அவற்றை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க, இங்கு, `அயன், மால்` என்றது சீகண்ட உருத்திரர்க்குக் கீழ் நிற்பவரையே என்பது. ஏற்புழிக் கோடலால் விளங்கும், `அன்னியம் இல்லை` என அமைதிகூற வேண்டுதல் அவரைப்பற்றியே யாகலின், அன்னியராவாரை, ``அன்னியம்`` என்றார். அதன்பின், ஆதலால் என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `மாலும்` எனவும், `அவ்வானவராலும்` எனவும் போந்த இழிவு சிறப்பும் தொகுத்தலாயின, ``அன்னியம் இல்லை` என்றது சிவ பிரானுக்கு வேறானவராய்த் தோன்றுதல் இல்லை என்றவாறு. அவரால் சிவனடியாராதலைப் பெறுதலாவது, `இவரும் சிவ பெருமானது தொழிற்குரியராம் நிலைமையைப் பெற்றுச் சீகண்ட உருத்திரர் வாயிலாக அப்பெருமானது திருவருளைப் பெற்று நிற்பவர்` என உணர்ந்து அவனது அடியவராகக் கருதி வழிபட்டுச் சிவ புண்ணியத்தைப் பெறுதல். ``ஆம்`` என்றது எச்சம்; முற்றாதற்கு ஏலாமை அறிக. `வயணம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `வயணம்` என்பதே பாடம் எனலுமாம், வயணம் - வகை.
நவந்தரு பேதங்களில் இறைவன் தன் அடியவரை அவர்க்கு விருப்பம் உள்வழி ஏற்புடையவற்றில் நிறுத்துதலும் உண்டு. ஆகவே, அவை `சம்பு பட்சம், அணு பட்சம்` என இருவேறு வகையாய் நிற்கும். இறைவன் தானே கொள்ளும் நிலைகள் சம்பு பட்சம்; தன் அடியவரை அந்நிலைகளில் நிறுத்தித் தானே செய்விப்பனவும், பிறர் வாயிலாகச் செய்விப்பனவும் அணுபட்சம், இவ்விருவகை நிலைகளும் சுத்த மாயையிலே உள்ளன. ஏனை இருமாயைகளிலும் அணுபட்சம் மட்டுமே உள்ளன. அவற்றுள்ளும் தூலமாய் உள்ள உருவநிலை நான்குமே உள்ளன. அந்நான்கனுள் மகேசுர நிலையில் நிற்பவர் முறையே அனந்த தேவரும், சீகண்டருமேயாவர். ஆன்ம வருக்கத் தினராகிய இவர் எல்லாரிடத்தும் பதியாகிய சிவபெருமான் தான் அவரேயாய்க் கலந்துநின்று அவரவர் தொழிலை இயற்றுவிப்பான், இவ்வாற்றால் அணுபட்சத்தினராகிய அயன், மால் என்பவரும் ஓராற்றால் சிவ நிலையினரேயாகலின், ``அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை`` என்றார். இவ்வாறே.
``ஒருவிண்முதல் பூதலம் - ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை`` -தி,1 ப.28
``நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்``
-தி,6 ப.8 பா.3
``மாதிவர் பாகன் மறை பயின்ற
வாசகன் மாமலர் மேய சோதி`` -தி.8 திருவார்த்தை 1
``ஆதி - அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்``
-ஞானவுலா 5
என அருட்டிருமொழிகள் `அயன், மால்`` என்பவரையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுமாறு அறிக.
அருட்டிருமொழிகளில் மேற்காட்டியவாறு அயனையும், மாலையும், சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுவனவேயன்றி,
``முந்நீர்த் துயின்றோன் நான்முக னறியாப்
பண்பொடு நின்றனை`` -தி.1 ப.28
``பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன்`` -தி.4 ப.14 பா.2
``பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க``
-தி.8 திருவாசகம். திருவண்டப் பகுதி 32
என வேறாக வைத்து இழித்துக் கூறுவனவும் உள்ளனவன்றோ எனின், ஆம், அவையெல்லாம், `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்பதும், அவை ஐந்தும் ஒருவனது தொழிலே என்பதும் உணராது படைத்தல் முதலிய மூன்றே தொழில்கள் உள்ளன எனவும், அவற்றுள் அழித்தல் தொழில் கொடியதாகலின் அதனைச் செய்வோன் இறைவனாகான் என விடுத்து ஏனைய இரண்டும் செய்யத் தக்கனவாயினும் அவற்றுள் ஒவ்வொன்றே உயர்ந்தது எனவும் கொண்டு அதுவதற்கு உரிய ஒவ்வொருவனையே இறைவன் எனப் புகழ்ந்து, ஏனை இருவரையும் இகழ்ந்தொதுக்குவாரை நோக்கி, `முதல்வனாவான் ஓரோர் தொழிற்கே முதல்வராய் அவர் எல்லாரினும் மேம்பட்ட ஒருவன்` எனத்தெளிவித்தற் பொருட்டு வருவனவாகலின், `அவை, முன்னர்க் காட்டியவற்றோடு முரணுவன அல்ல` என்க.
எனவே, அயனையும், மாலையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்துக் கூறும் திருமொழிகள் சிவபெருமான் தானே செய் வோனாய் சம்பு பட்சங்களில் வெளிப்பட்டு நிற்கும் நிலை, செய்விப் போனாய் அணுபட்சங்களில் மறைந்து நிற்கும் நிலை என்னும் இவற்றை நோக்கின எனவும், அவ்விருவரையும் வேறாக வைத்துக் கூறுந்திருமொழிகள் அவர் அணுபட்சத்தினராகின்ற நிலையை நோக்கின எனவும் பகுத்துணரற்பாலன என்பதாயிற்று.
இதுபற்றி யன்றே இந் நாயனாரும், ``பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில் ... ... நமக்கு அன்னியமில்லை`` என்றார்! `அவ்வழி எண்ணும் அளவில் அன்னியம் இல்லை` எனவே, `சிவபெருமானது நிலைவேறுபாடுகளாகிய சம்புபட்சங்களை எண்ணாது அணுபட்சங்களாகிய அவரவரையே எண்ணிய வழி அன்னியம் உண்டு`` என்து போந்தது.
``நமக்கு அன்னியம் இல்லை`` என்றது, `சம்புபட்சங்களை எண்ண வல்ல சிவநெறியாளராகிய நமக்கு அன்னியம் இல்லை`` என்றவாறு. எனவே, `அது மாட்டாது அணுபட்சத்தையே எண்ணும் ஐரணியகருப்பர், பாஞ்சராத்திரிகள் முதலியோர்க்கு எவ்வாற்றானும் உளதாவது அன்னியமே என்பதும் போந்தது. இதனானே, `இது மாட்டாத பௌராணிகர், அனைவரையும் ஒப்பவைத்து அனேகேச்சுர வாதம் பேசுவர்` என்பதும் பெறப்படும்.
இன்னும், ``பயனறிந்து அவ்வழி எண்ணும் அளவில்`` என்ற தனால், உயிர்களின் நன்மையின் பொருட்டு இறைவன் கொள்ளும் தடத்த நிலைகள் மேற்கூறியவாற்றான் முன்னும் பின்னுமாய் நிற்றல் நோக்கிச் சம்புபட்சமாகிய அவற்றில் மேல், கீழ் கூறப்படுதல் பற்றி அணுபட்சத்திலும் மேல், கீழ் கூறப்படுகின்றனவன்றி, அணுப் பட்சத்தில் உண்மையில் மேல் கீழ் இன்றி யாவரும் ஒரு தன்மையினரே என்பதும் உணர்த்தப்பட்டதாம். இதனை,
அயனை முன்படைத் திடுமொரு கற்பத்
தரியை முன்படைத் திடுமொரு கற்பத்
துயரு ருத்திரன் றனைமுனம் படைப்பன்
ஒருகற் பத்தின்மற் றொருகற்பந் தன்னின்
முயலு மூவரை ஒருங்குடன் படைப்பன்
முற்பி றந்தவர் மற்றிரு வரையும்
செயலி னாற் படைக் கவும் அருள் புரிவன்
சிவபிரான் எனில் ஏற்றமிங் கெவனோ.
எனச் `சிவதத்துவ விவேக` நூல் விளக்கிற்று.
`இச் சிவதத்துவ விவேகச் செய்யுளில் `சிவபிரான்` என்றதற்கு ஈடாக `மாயோன்` அல்லது `நான்முகன்` என்பதைப் பெய்து, இவை அனைத்தையும் மால் அல்லது அயனுக்கு ஆக்கிக் கூறின் வரும் குற்றம் யாது` எனின், ``சிவம் சாந்தம் சதுர்த்தம்` என்று சிவபெருமானைக் குணமூர்த்திகளாகிய மூவரின் மேம்பட்ட நான்காமவனாய நிர்க்குண மூர்த்தியாகக் கூறியது போல, அவரை ஓரிடத்தும் கூறாமையானும், மாயோனையும், நான்முகனையும் முதல்வராகக் கூறுவோர் அவரை முறையே `சத்துவ மூர்த்தி, இராசத மூர்த்தி` என்பதல்லது, நிர்க்குண மூர்த்திகளாகக் கூறாமையானும் அங்ஙனம் கூறுதல் கூடாது என்க. உருத்திரனைச் சிவபிரானின் மேம்பட்டவனாகக் கூறிப் பிணங்குவார் இன்மையின், அவன் அன்னியன் ஆகாமையைக் கூறிற்றிலர்.

பண் :

பாடல் எண் : 52

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

பொழிப்புரை :

எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.

குறிப்புரை :

`ஆகவே, மக்களுலகத்துள்ளாரைச் சிவபெருமான் மாலும் அயனுமாகச் செய்தல் உண்டு` என்றவாறு. ``உலப்பிலி தேவர்கள்`` என்றதை முதலிற் கூட்டுக. சிவபெருமானது திருமேனி, பால் போலுதல் திருநீற்றுப் பூச்சினாலாம். இனிபால், இனிமை பற்றிவந்த உவமை என்றலுமாம், அருளை, `அடி` என்றல் மரபு என்பது, ``இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆை\\\\\\\\\\\\\\\\u2970?`` என்ற சிவஞான சித்தியானும் (சுபக்கம் - பாயிரம் - 4) உணர்க. திருமாலும், பிரமனும் வேதம் முதலியவற்றால் பலர்க்குச் சிவபிரானது திருவருட் பெருமையைப் பலர்க்கு உணர்த்துவோராதல் அறியத்தக்கது. `ஞாலக்கு` என்பதே பாடம் போலும். நாயனார்க்கு சிவபெருமான் இவ்வாறு ஆணை தந்தது நந்திதேவர் வாயிலாக என்க. இனித் திருவாவடுதுறையில் சிவபோதியின் கீழ் இருந்து கண்ட யோகக் காட்சியில் என்றலும் பொருந்துவதேயாம், இவ் ஆணையின் வழி நல்கப்பட்டதே இத் திருமந்திர மாலை என்க.

பண் :

பாடல் எண் : 53

வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

பொழிப்புரை :

உடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை.

குறிப்புரை :

`அதனால், ஏனைத் தேவரும், தலைமக்களும் மாலயன் போலச் சிவபெருமானது கலப்பினை நோக்கும்வழி அவனாதலும், இவர்தந் தன்மையை நோக்கும்வழி இவரோயாதலும் பெறப்படும், என, வானுலகத்தில் இந்திரன் முதலாகவும், மண் ணுலகத்தில் அரசர் முதலாகவும் உள்ள தலைவரது நிலைமையை விளக்கியவாறு. இவ்வாற்றானே. ``திருமாலுக் கடிமைசெய், தெய்வம் இகழேல், சக்கர நெறிநில் (ஆத்திச்சூடி) என்றற்றொடக்கத்து அறநூற் கட்டளைகள் எழுந்தன என்க. ``ஓரும்`` என்றது செயப்பாட்டு வினையாய் நின்றது. தனிமை, இங்குச் சுதந்திரத்தைக் குறித்தது. மற்று, அசைநிலை,

பண் :

பாடல் எண் : 54

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

பொழிப்புரை :

சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளி யாகிய அநாதிப் பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறு வேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.

குறிப்புரை :

`அவர் உரை பொருளாதல் இன்று` என்பது குறிப்பெச்சம். ``ஆதி`` என்றதனால், `அநாதி` என்பதும், நீதி நூல் என்றதனால் ``சிவதன்ம நூல்`` என்பதும் கொள்ளப்பட்டன. நீதி - உலகியல்; இஃது ஆகுபெயராய் நின்றது. ``நீதிக்கண் நின்று`` என ஒருசொல் வருவிக்க. ஈசன் முதலிய மூவரும் நின்று` என ஒரு சொல் வருவிக்க ஈசன் முதலிய மூவரும் பின்னர்க் கூறப்படுதலின் முன்னர்க் கூறாயினார். `அவரைப் பேதித்துப் பிதற்றுகின்றார்` என மாறிக் கூட்டுக.
`உலகியல் நூல், பல்வேறு சமயத்தாருக்கும் பொது வாய அறங்களைக் கூறும் நூல், அஃது `முதற்கடவுளாவது இதுவே` என ஒருதலையாக ஒருதெய்வத்தை வரையறுத்துணர்த்தாமையின், அதனையே பற்றி நிற்பார்க்கு மலைவுண்டாதல் இயல்பு` என்பதும், `அம்மலைவு, மெய்ந்நெறி நூலை உணர்வார்க்கு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 55

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வரு தலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல் வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கி யருளுகின்றான்.

குறிப்புரை :

எனவே, `இவற்றிற்கெல்லாம் காரணம் பல்வேறு நிலைப்பட்ட உயிர்கள் மாட்டுக் கொண்ட அருளேயன்றிப் பிறி தில்லை` என, `ஒருவன் ஒருநிலையில் நில்லாது பல நிலையை மேற் கொள்ள வேண்டுவது என்னை` என்னும் ஐயத்தை நீக்கியவாறு ``மாயவன், அயன்``, ``தரம்`` என்பன உபலக்கணம். வரத்து, `வரவு` என்னும் தொழிற் பெயர். சொரூபம் நிலையும், தடத்தம் வரவும் ஆதல் உணர்ந்து கொள்க. கரம் போல்வதனை, ``கரம்`` என்றார். இறைவனது சத்தியை அவனுக்குக் கை போல்வதாதலை.
``நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனாம்``
என்னும் திருக்களிற்றுப்படியார். 78 இதனாலறிக. இதனானே, ``என்னை இப்பவத்திற் சேராவகை எடுத்து`` (சிவஞானசித்தி. பாயிரம். 2) என்பதில் எடுத்து என்றது, `அருளாகிய கையால் எடுத்து` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 56

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொழிப்புரை :

எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவதாகிய இலயசிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.

குறிப்புரை :

`அதனால் அவனது நிலைவேறுபாடுகளை அறிதல் உயிர்கட்கு அரிது` என்பது கருத்து. `இந்நிலையெல்லாம் தன் இச்சையாற் கொள்வனவே` என்றற்கு முதற்கண், ``தான்`` என்றார். சாந்தியதீத கலையும் ஆகாயம் எனப்படுமாறு அறிக. உண்மையை ``அங்கு`` என்பதனுடன் கூட்டுக. ``கோன்`` என்றது. `எசமானன்` என்னும் பொருளது. பாசத்தின் வழி நின்று நடத்துதலை, `உடலுள் நின்று உயிர்த்தல்` என்றார். இறுதிக் கண் நின்ற ``ஒரு கூறு`` என்றது முன்னும் சென்று இயையும், ``ஆம்`` என்பதனை, ``தான்`` என்றதற்கும் கூட்டுக. தண்ணியனாதல் பற்றி அருள்வோனாதலை, ``சலமயன் ஆம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 1

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 

பொழிப்புரை :

`அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர், `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.

குறிப்புரை :

`கொல்லாமையே சிறந்த அறம்; அது வேதத்துள் இல்லை` எனக் கூறும் புத்த சமண மதத்தவரது கூற்றை உட்கொண்டு கூறியது இத்திருமந்திரமாதலின், இதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. வேதத்துள் ஊன் வேள்வி கூறப்பட்டதாயினும், வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுட் கூறப்பட்ட அறங்கள் அவ்வத்திறத்தார்க்கே உரியனவன்றி, எல்லா அறங்களும் எல்லார்க்கும் உரியன அல்ல; அவ்வாற்றால், ஊன் வேள்விகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கியே கூறப்பட்டன என்பதும், ஊன் வேள்வியன்றித் தூய வழிபாடுகளும், தூய நோன்பு களும் அவற்றிற்கு உரியாரை நோக்கி வேதத்திற் கூறப் பட்டுள்ளன என்பதுமே வேதத்தை உடன்பட்டோர் துணிபாகலின் ``வேதத்தை விட்ட அறமில்லை`` என்பது முதலியவற்றால் வேதத்தின் சிறப்பை வலியுறுத்தினார் நாயனார். திருவள்ளுவ நாயனாரும்,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
என `ஊன்வேள்விகள் உயர்ந்தோர்க்கு உரியன அல்ல என்பது மாத்திரையே கூறியதல்லது, `ஒருவர்க்கும் ஆகாது` என முற்றக் கடிந்து கூறினாரல்லர். ஊன் வேள்விகளை அறிவுடையோர் விலக்கா மைக்குக் காரணம், அவற்றாலும் சிலர்க்குக் கடவுள் உணர்ச்சி உள தாதல் பற்றியேயாம். புத்த சமண மதங்கள் கடவுட் கொள்கை இல்லாத மதங்களாதலின் அவை அவற்றை மறுக்கு முகத்தான் கடவுள் வழி பாட்டினையே மறுப்பனவாயின. அன்றியும், ஊன் வேள்வியை விலக்குதலைத் தம் மதத்தினைப் பரப்புதற்குத் தக்கதொரு கருவி யாகவுங் கொண்டு தம் ஆரவார உரைகளைப் பெருக்கின என்பது, ``கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம்`` (தி.12 திருநாவுக் கரசர் புராணம். 37) என்ற சேக்கிழாரது திருமொழிக் குறிப்பால் நன் குணரலாம்.
``வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை`` -தி.3 ப.108 பா.7
என்னும் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
`கடவுள் வழிபாடு உயிர்க்கொலையோடு கூடாது நிற்றலே சிறப்பு; கூடினும் அமைக` என்பது வேத மதங்களின் கருத்து. `கடவுள் வழிபாடு செய்யப்படாது ஒழியினும் ஒழிக; உயிர்க் கொலை கூடாது` என்பது புற மதங்களின் கொள்கை. `இப்புறமதக் கொள்கையால் ஒழிவது கடவுள் வழி பாடேயன்றி உயிர்க்கொலையன்று` என்பதை ஊன்றியுணரவல்லார்க்கு, அம்மதங்களால் விளையும் தீங்கு புலனாவ தாகும். அது நோக்கியே அறிவுடையோர் அனைவரும் வேதத்தை உடம்பட்டு ஒழுகினர் என்க.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். -குறள் 543
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின். -குறள் 560
என்பவற்றால் திருவள்ளுவ நாயனாரும் வேதத்தை உடம்பட்டமை புலனாகும். ``வேதத்தில் அறம் எல்லாம் உள`` என்றதனால், `வேதம் அறத்தைக் கூறும் பொது நூல்` என்பது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

பொழிப்புரை :

வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமனும் வேதத்தைச் செய்தவனாயினானில்லை. ஏனெனில், வேதத்தைச் செய்தவன் அதனைச் செய்தது, அப்பிரமன் அதனை ஓதி அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும், மற்றும் கன்மத்தில் விருப்பம் உடைய வர்க்கு வேள்விகளை உளவாக்குதற்பொருட்டும், மெய் யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டுமாம்.

குறிப்புரை :

`பிரமன் வேதத்தால் அறிவு விளங்கப்பெறுதல், அவன் அதனை இடையறாது ஓதுதலால் அறியப்படும்` என்றற்கு, அவனை `வேதம் உரைத்தான்` என்னும் பெயராற்கூறினார். உம்மை நான்கனுள் முதலது, சிறப்பு; ஏனையவை எச்சம். `வேதத்தை ஓதி அறிவு விளங்கப் பெறுபவன், அவ்வேதத்தைச் செய்தவனாதல் எவ்வாறு` என்றற்கு, ``வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட`` என்றார். இக்கருத்தால் இது கூறப் புகுந்தவர், வேதத்தால் உளவாகும் ஏனைய பயன்களையும் உடன் கூறினார் என்க. இப்பயன்களது சிறப்பை வலிறுத்தற்கு எச்ச உம்மை புணர்த்து வேறு வேறு தொடராற் கூறினார். அவ்வும்மைகட்கு முன் `உரைத்தது` என்பன சொல் லெச்சமாய் எஞ்சிநின்றன. இதனால் `வேத்தைச் செய்தவன் பிரமன் எனக் கூறும் ஐரணிய கருப்பமத`த்தவர் முதலாயினவர் கூற்றும் பொருந்தா` என்பதும், `வேதத்தின் பயன் இவை` என்பதும் கூறப்பட்டன. இதனானே வேதம் ஒருவராலும் செய்யப்பட்டதன்று என்னும் மீமாஞ்சகரது கொள்கையும் பொருந் தாமை பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே. 

பொழிப்புரை :

பூனையை ஒத்த புறத்தோற்றம் உடைய வேதியர்கள் சொல்கின்ற, பிறப்பை உடைய ஆசிரியனாகிய மாயோன் றானும், மந்திரவடிவாகிய எழுச்சியான ஓசையை உடைய கன்ம காண்டத்துள் உள்ளத்தை உருக்குகின்ற அன்புருவாயும், ஞான காண்டத்துள் கேள்வி, ஆய்வு முதலியவற்றால் துணியப்படும் மெய்ப் பொருளாயும் உயர்ந்து நிற்பவனாவனோ? ஆகான்.

குறிப்புரை :

`அதனால், அவனும் வேதத்தைச் செய்தவன் ஆகான்` என்றபடி. வேதத்தின் பாகங்களையும் `வேதம்` என்றல் வழக்கு. உருக்கு உணர்வு, அன்பு உணர்வேதம், உணரப்படும் வேதம். ``ஓங்கி`` என்றது பெயர். `வேதம் முதல் நூலாதலின், அதனைச் செய்தவன் யாவர்க்கும் முன்னோனாய தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவனேயாதல் வேண்டும். அதனால், அவன் தனது தன்மையை உணர்ந்து தன்னைச் சாரமாட்டாத பிறர்க்கு அன்பினானும், ஆராய்ச்சியானும் தன்னை அடையுமாற்றையே அந்நூலுட் கூறியிருத்தல் வேண்டும். ஆகவே, அவன் அதன் கன்ம காண்டத்துள் அன்பிற்கும், ஞானகாண்டத்துள் அறிவிற்கும் பற்றாய் நிற்றல் வேண்டும். அத்தன்மை பிறப்பினுட்பட்டு நிற்கும் மாயோனுக்கும் கூடாது` என்பார், ``கருக் குரு வாய் நின்ற கண்ணனும் ஆமே`` என்றார். ``கரு`` என்றது பிறப்பை. ``கருக்குரு`` என்றதை, `கருவை உடை குரு` என விரிக்க. `கருவில் வீழ்பவன் குருவாகமாட்டான்` என்பது குறிப்பு. `கண்ணன்` மாயோன்` என்பன ஒருபொருட்சொற்கள். ``கண்ணனும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `ஆமே` என்ற வினா, `ஆகான்` என எதிர்மறைக்கண் வந்தது. `கண்ணனும் உருக்குணர்வாய் ஓங்கி ஆமே` எனக் கூட்டுக.
வரையறை இன்மையின், ``வெருக்குரு`` என, வேற்றுமைப் புணர்ச்சியுள் நிலைமொழியில் சிறுபான்மை ககரம் இரட்டிற்று. ``வெருக்குக்கண்`` (நாலடியார் 210) எனப் பிறவிடத்தும் வந்தது. `பிரமத்தை உணர்ந் திருத்தலால் பிராமணர் எனவும், பிரமஞானம் மிக்கிருத்தலால் விப்பிரர் எனவும் சொல்லப்படுகின்றோம்` என்று சொல்லிக்கொண்டு, பிரமமாகிய சிவபெருமானைச் சிறிதும் உணர்ந்து அன்பு செய்யாமலே, மாயோன் முதலியோரையே புகழ்வதோடு சிவபெருமானை இகழ்வதும் செய்துகொண்டே, நூலும் சிகையும் முதலாய தோற்றத்தால் மட்டும் சிலர் பிராமணராய் நிற்றலின், அவரது தோற்றத்திற்குத், தவத்தோடு சிறிதும் இயைபின்றி அதற்கு மாறாய் நின்று கொண்டே தோற்றத்தால் பெரிதும் தவமுடயைது போலத் தோன்றுகின்ற பூனையினது தோற்றத்தை உவமை கூறினார். பிராமணருட் சிலர் இவ்வாறு நிற்றற்குக் காரணம், ததீசி, கௌதமர் முதலிய முனிவர் சிலரது சாபம் என்பதைக் காந்தம், கூர்மம் முதலிய புராணங்களுட் காண்க.
இதனால், `வேதத்தை மாயோன் இயல்பாய் நின்றே செய்தான்` எனப் பாஞ்சராத்திரிகளும், `வியாதனாய் அவதரித்துச் செய்தான்` எனப் பௌராணிகரும் கூறுங் கூற்றுக்கள் பொருந்தா என்பது உணர்த்தினார். `வேதத்தைச் செய்தவன் பிரமனு மல்லன்; மாயனுமல்லன், என்பதைப் பொருந்துமாற்றின் வைத்து உணர்த்தி, `அது செய்தவன் சிவபெருமானே` என்பதைப் பாரிசேடத்தாற் பெறுவித்தார் என்க. வியாச முனிவன் வேதத்தை வகைப்படுத்திய தல்லது செய்திலாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 

பொழிப்புரை :

`வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.

குறிப்புரை :

`அதனால், வேதத்தைச் செய்தவன் சிவபெருமானே` என்பது குறிப்பெச்சம். `திரு` என்பது வீடாதலை `போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7 ப.59 பா.1) என்பதனுட் காண்க. வியாபக நிலையை, ``பெரு நெறி`` என்றார். ``சிவமாம் நெறி`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பிரான்`` என்று போயினார். ``குருவே சிவம்`` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவாராகலின், ``குருநெறிஆம்`` என்றது, `அவனருளால் அல்லது கிடைக்கப்பெறாத` என்றவாறு. ``ஒருநெறி`` என்றதன்பின், `என்று` என்பது எஞ்சிநின்றது. `பிரானையே, ஒருநெறியே` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `திருநெறியாவது சிவமாம் நெறி கூடும் ஒருநெறியே` என வேதாந்தம் கூறுதல், ``பிற எல்லாவற்றையும் விடுத்துச் சிவன் ஒருவனே தியானிக்கப்படத் தக்கவன்; அதர்வ சிகை முற்றிற்று`` ``ஸிவ ஏகா தியேயக சிவங்கர ஸர்வ மன்யத் பரித் யஜ்யேதி ,மாப் தார்த்த வஸிஹா`` என்று வேதாந்தம் (அதர்வசிகோப நிடத முடிவு) இறுதியிற் கூறி முடிதலால் அறியப்படும்.
இதனால் மேல் பாரிசேடத்தாற் பெறப்பட்டதனைப் பொருந்து மாற்றின் வைத்துணர்த்தி வலியுறுத்தல் செய்யப்பட்டது. இதனானே, சிவமாம் நெறியாகிய திருநெறியது இயல்பும் தொகுத்துணர்த்தப் பட்டவாறு அறிக.
திருஞானசம்பந்தரது, ``அருநெறிய மறை`` (தி.1 ப.1 பா.11) என்னும் திருப்பாடல் இத்திருமந்திரத்தை அடியொற்றிச்செல்வதாய் இருத்தலும், அவர் தமது பாடலை, ``திருநெறிய தமிழ்`` என்று குறித்திருத்தலும் இங்கு நினைவுகூரத் தக்கன.

பண் :

பாடல் எண் : 5

ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 

பொழிப்புரை :

ஆறு அங்கங்களை உடையதாய், மேற்றொட்டு எழுதாக் கிளவியாய் வருகின்ற அவ்வேதத்தைச் செய்த சிவபெரு மானை அதன் முடிவில் விளங்குபவனாக உணர்ந்து அவனது அருட் குணங்களைப் போற்றுபவர் உலகருள் ஒருவரும் இல்லை; அவர் பலரும் வேறு எவ்வெவற்றையோ தங்கள் கடனாக நினைந்து, அவற் றால் சில பேறுகளை உளவாக்கிக் கொண்டு அவற்றால் கிடைக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பேயாக அவற்றைப் பெருக்கி உழல்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `சிவஞானத்தாலன்றிப் பிறவி அறமாட்டாது` என்பது கருத்து. ஆறங்கம்`-`சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி` என்பன. அவற்றுள் `சிட்சை வேதத்தை ஒலிக்கும் முறையை நன்குணர்த்துவது; வியாகரணம், வேதத்தில் உள்ள தொடர் மொழிகளின் இயல்பைப் புலப்படுத்துவது; நிருத்தம், வேதத்தின் தனி மொழிகளின் இயல்பைக் கூறுவது; சோதிடம், வைதிக கருமங்கட் குரிய காலத்தின் இயல்பைத் தெரிவிப்பது. கற்பம், வைதிக கருமங் களை அனுட்டிக்கும் முறையைக் கூறுவது சந்தோவிசிதி வேதத்தின் சந்தங்களை எழுத்தெண்ணிக்கை கூறி உணர்த்துவது. இவையின்றி வேதத்தாற் பயன்கொள்ளுதல் கூடாமையின், இவை வேதத்திற்கு அங்கமாயின. அங்கம் உடையதனை ``அங்கம்`` என்றார்` ``ஆறங் கமாய்`` என்றும், ``வரும்`` என்றும் கூறியது, `இவ்வாற்றால் வேதத்தை வருந்திக் கற்றும் சிலர் அதனால் பயன் பெறாத வராகின்றனர்` என்பது உணர்த்துதற்கு.
கூறு அங்கம் - சிறப்பாகச் சொல்லப்படும் உறுப்பு; தலை; ``வேறு அங்கம்`` என்றதில், ``அங்கம்`` என்பது, `இன்றியமையாதது` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே. 

பொழிப்புரை :

இயலும், இசையும், நாடகமும் ஆகிய கலை களின் பயனை அறியாவிடினும் அவற்றை இடையறாது நிகழ்த்தி நிற்கின்ற இவ்வுலகில், வேதத்தை இடையறாது ஓதுகின்ற வேதியரும் அத் தன்மைரேயாய்ப் பொருள் பெறவிரும்பி, பொருளாசை நிறைந்த நெறி முறை இல்லாத அக்கலைவல்லுநர் பொருள் ஈட்டும் இடத்திற் சென்று அவரோடு மாறுகொண்டு நிற்கின்றனர்.

குறிப்புரை :

``பாட்டு`` என்றது, இயற் பாட்டினையும், ``ஒலி`` என்றது பண்ணமைந்த இசைப் பாடல்களையுமாம். நெறிப்பட்ட வாழ்க்கையை `விரதம்` என்றார் `இயற் பாட்டு முதலிய கலைகள் யாவும் நற்பண்பினை வளர்த்தற்கு உரியனவாகவும், அவற்றில் வல்லுநராகியும் அவை வளரப் பெறாதார் பொருளீட்டுதல் ஒன்றே அவற்றாற்பெறும் பயனாகக்கொள்வர். என்பார். ``விருப்பு ஆர் விரதம் இல்லாதவர்`` என்றும், `அவர் பொருளீட்டும் இடம் அரசர் முதலிய செல்வம் மிக்கோர்களாதலின், அவ்விடத்தில் இவ்வேதியரும் சென்று, அவர்க்கு முன்னே எமக்குத் தம்மின் என அவரின் முந்துகின்றதல்லது, தாம்வேதம் ஓதியதற்குப் பயன் பிறிதில்லை` என்பார், ``அவர் ஈட்டு மிடஞ்சென்று இகலலுற்றாரே`` என்றும் கூறினார். வேதியர் அவரின் முந்துதல், `தக்கார்க்குக் கொடுத்தலாகிய இது முன்செய்யத் தக்கது` என அறிவுறுத்தி நிற்றல். `வேதியர், பிறரெல்லாம் இலௌகிகர், யாம் வைதிகர் என்று சொல்லால் தம்மை உயர்த்திக் கொள்வதல்லது, செயலால் இலௌகிகரோடு ஒக்கின்றார்` என்பதும் கூறியவாறு. `சிவபிரானை உணராதார்க்கு உலகப் பற்று நீங்காது` என்பதாம்.
இம்மூன்று திருமந்திரங்களாலும், `வேதத்தின் பயன் சிவநெறியே நெறி என்று உணர்ந்து அந்நெறிநிற்றலே` என்பது உடம்பாட்டானும் எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது. ``வேதப் பயனாம் சைவம்`` (தி.12 சண்டேச்சுரர் 9) என்று அருளிய சேக்கிழார் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. இப்பயன் எய்தாதாரை நோக்கியே,
``அசிக்க ஆரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணாக் கண்; வாய்
பேசாத பேய்க ளோடே`` (தி.9 திருவிசைப்பா. 4, 5)
என்றாற்போலும் திருமொழிகள் எழுந்தன.
`வேதத்தைச் செய்தவன் இவன்` என்பது பற்றியும், அதனால், முடித்துக் கூறப்படும் நெறி இன்னது` என்பது பற்றியும் நாயனார் இவ்வாறெல்லாம் வலியுறுத்து அருளிச் செய்தமையால், `வேதம் அவரவர் தகுதிக்கேற்பப் பலவாற்றாற் பொருள் கொள்ள நிற்பது` என்பது பெறப்பட்டது, எனவே, நாயனார் பின்னர்க் கூறுமாறுபோல, உண்மையை முதற்கண்ணே முற்ற உணர்த்தினால் உணர்தல் அரிதாதல் பற்றி அதனை முதற்கண் ஒருவாற்றான் உணர்த்தும் பொது நூலே வேதம்` என்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

பொழிப்புரை :

சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம்.

குறிப்புரை :

அவ்வாகமங்கள், `காமிகம், யோகசம், சிந்தியம், காரணம்,அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்` என்பன.
சிவபெருமானுக்கு நாற்றிசை நோக்கி நான்கு முகங்களும், உச்சியில் வான்நோக்கி ஒருமுகமுமாக உள்ள ஐந்து முகங்களையும் கீழிருந்து முறையே, `சத்தியோசாதம் (மேற்கு), வாமதேவம் (வடக்கு), அகோரம் (தெற்கு), தற்புருடம் (கிழக்கு) ஈசானம் (உச்சி)` என எண்ண, ஐந்தாவதாக வருவது ஈசான முகம். `சிவபெருமான் மேற்சொல்லிய இருக்கு முதலிய வேதங்கள் நான்கனையும் கீழுள்ள தற்புருடம் முதலிய நான்கு முகங்களானும், ஆகமங்களை மேலே உள்ள ஈசான முகத்தாலும் அருளிச்செய்தான்` என்பவாகலின், ஆகமங்களை, ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றார்.
அஞ்சாம் முகம் - ஐந்து என்னும் எண்ணின்கண் நிற்கும் முகம். இனி, `சத்தியோசாதம் முதல் கீழே உள்ள நான்கு முகங்களாலும் முகத்திற்கு ஐவைந்தாகக் காமிகம் முதல் முகவிம்பம் ஈறாக உள்ள இருபது ஆகமங்களையும், மேலே உள்ள ஈசானமாகிய ஒருமுகத்தால் எஞ்சிய எட்டு ஆகமங்களும் அருளிச்செய்தான்` எனக் கூறுதலும் உண்டு. ஆதலின், அப்பொருளும் தோன்றுமாறு ``அஞ்சாம் முகத்தில்`` என்றார். இப்பொருட்கு, ``அஞ்சாம் முகம்`` என்றதை, `அஞ்சாகி நிற் கின்ற முகம்` என்றவாறாக உரைக்க. பின்னர்க் கூறிய முறைமைக்கு, `மேல்முகமாகிய ஈசானம் ஒன்றே சத்தியோசாதம் முதலிய ஐந்தனை யும் உடையதாய் இருக்கும்; அவற்றின்கண்ணே காமிகம் முதலிய ஆகமங்கள் ஐவைந்தாகவும், எட்டாகவும் தோன்றின` என, இரண்டு கருத்தும் தம்முள் முரணாதவாறு விளக்கம் தருபவர் உளர்.
இனிச் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் முகங்களால் முறையே, `கௌசிகர், காசிபர், பாரத்து வாசர், கௌதமர், அகத்தியர்` என்னும் முனிவர்கட்கு மேற்சொல்லிய ஆகமங்கள் உணர்த்தப்பட்டன என்பது, `நிலவுலகில் மகேந்திர மலையில்` என்ற, தி.8 திருவாசகக் கீர்த்தித் திருவகவலால் (அடி. 19. 20) அறியப் படுவதாம்.
இனி, ஆகமங்களைக் கேட்ட அறுபத்தறுவருள், `எல்லாரும் எல்லா ஆகமங்களும் கேட்டனர்` என்பதில்லை; `காமிகம் முதல் சுப்பிரபேதம் ஈறாக உள்ள பத்தினையும் ஒன்றை ஒருவராகப் பதின்மர் சிவபெருமானிடங் கேட்க, அவருள் ஒருவரிடத்து ஒருவராக ஓரா கமத்தை மற்றும் இருவர் கேட்டனர்` என்பதே வரலாறு. ஆகவே, காமிகம் முதலிய பத்தினையும் கேட்டவர் முப்பதின்மராகின்றனர்.
அவருள் காமிக முதலிய பத்தினையும் சிவபெருமானிடம் நேரே கேட்ட பதின்மராவார், `பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர்` என்போர்.
இனி இப்பதின்மருள் ஒருவரிடத்தினின்று இவ்விருவராக வழிவழிக் கேட்ட இருபதின்மராவார், `திரிகலர், அரர் - பசுமர், விபு - கோபதி, அம்பிகை - சர்வருத்திரர், மிரசேசர் - சிவர், அச்சுதர் - திரிமூர்த்தி, உதாசனர் - வைச்சிரவணர், பிரபஞ்சனர் - பீமர், தருமர் - உக்கிரர், ஆதித்தியர் - விக்னேசர், சசி` என்போர்.
இம்முப்பதின்மரும், `சிவர்` எனப்படுதலால், இவர்களால் கேட்கப்பட்ட காமிகம் முதலிய பத்து ஆகமங்களும் `சிவபேதம்` எனப்படுகின்றன.
இனி, எஞ்சிய விசயம் முதல் வாதுளம் ஈறாக உள்ள பதினெட்டு ஆகமங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொருவர் சிவபெரு மானிடம் நேரே கேட்க, அவரிடம் அவற்றை மற்றும் ஒவ்வொரு வராகக் கேட்டனர். ஆகவே எஞ்சிய பதினெட்டு ஆகமங்களைக் கேட்டோர் முப்பத்தறுவர் ஆகின்றனர். அவர் பெயர் முறையே வருமாறு:
அநாதிருத்திரர் (அநாதிருத்திரரை, `மகாருத்திரர்` என்றும் சொல்வது உண்டு.) பரமேச்சுரர் - தசாரணர், பார்வதி - நிதனேசர், பதுமபூ - வியோமர், உதாசனர் - தேசர், பிரசாபதி - பிர மேசர், நந்திகேசர் - சிவர், மகாதேவர் - சர்வான்மர், வீரபத்திரர் - அநந் தர், பிருகற்பதி - பிரசாந்தர், ததீசி - சூலி, கவசர் - ஆலயேசர், இலளிதர் - பிந்து, சண்டேசர் - சிவநிட்டர், அசம்பாதர் - சோமதேவர், நிருசிங்கர் - சீதேவி, உசனர் - தேவவிடி, சம்வர்த்தர் - சிவர், மகா காளர், இவரெல்லாம் `உருத்திரர்` எனப்படுதலின், இப்பதினெட்டு ஆகமங்களும், `உருத்திரபேதம்` எனப்படுகின்றன.
இவர்களுள் ஒருவர் பெயரையே பிறரும் உடையவராய் இருத்தல் பற்றியும், ஆகமங் கேட்டவரல்லாத பிறரது பெயரும் இவர்களுட் சிலர்க்குக் காணப்படுதல் பற்றியும் நாம் மலைவெய்துதல் கூடாது. இவரெல்லாரும் சுத்தாமாயா புவனங்களுள் சதாசிவ புவனத்தில் சதாசிவ மூர்த்திபால் ஆகமங்களைநேராகவும், வழிமுறை யாலும் கேட்டவர் என்க.
ஐந்து முகம் உடைய மூர்த்தி சதாசிவ மூர்த்தியே. அதனால், ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றது, இவரிடம் கேட்டதையே என்பதாதல் அறிக. இவரது நிலை மேலே விளக்கப்பட்டது.(தி.10 பா.89 - 90) ``அஞ்சாம் முகத்தில் அரும் பொருள் கேட்டது`` என்பதற்கு ஈடாக, `எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும்`` என்று ஓதுவது, தாமே தமக்கு வேண்டியவாறு கட்டிக் கொண்ட பாடம்.
``அரும்பொருள்`` என்றது, மெய்யுணர்வினை. எனவே, `ஆகமங்கள் மெய்ந்நெறியை உணர்த்தும் சிறப்புநூல்` என்பது கூறியவாறாயிற்று. ``பாகத்தன் ஆகமம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகை.

பண் :

பாடல் எண் : 2

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்கள்மேல் வைத்த அருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்களை எண்ணாற்கூறின், `இருபத் தெட்டு` என்னும் அளவில் நில்லாமல், அளவின்றியுள்ளன. அவைகளால் மேற்கூறிய அறுபத்தறுவரும், பிறரும் சிவபெரு மானது மேன்மையைத் தத்தமக்கியைந்தவாற்றால் விளங்க உரைத்தார்கள். அவ்வாறு உரைக்கப்பட்ட அளவிலே நானும் கேட்டுச் சிந்தித்துத் துதிக்கத் தொடங்கினேன்.

குறிப்புரை :

``கோடி நூறாயிரம்`` என்றது அளவின்மை கூறிய வாறு. அற்றாயினும் முற்கூறிய இயைபு தோன்றுதற் பொருட்டு, ``இருபத்தெண்கோடி நூறாயிரம்`` என்றார். விண்ணவர் என்றது மக்களினும் மேம்பட்ட பலரையும், `அவர் இவர்` என்பது பின்னர் விளக்கப்படும். `வேதம் நான்கு` எனவும், `ஆகமம் இருபத் தெட்டு` எனவும் வரையறை கூறப்படினும், அவ்வப்பொழுது இறைவன் அவரவருக்கு உணர்த்துமாற்றால் உண்மையில் அவை அளவில் லனவே என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார். ``வேதங்கள் அநந்தம்`` என்ற வாக்கியமும் உண்டு. இது பற்றியே, ``ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் - திங்கள் போலத் திசைவிளக் கும்மே`` என்னும் திருமுருகாற்றுப் படைப் பகுதிக்கு நச்சினார்கினியர் உரைகூறுமாறும் அறிக.
இனி `இஃது ஆகமங்களின் கிரந்தங்கள் எண்ணில வாதலையும், உபாகமங்கள் இருநூற்றேழாதலையும் கூறியது` என்றலுமாம். சேக்கிழாரும் ``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்`` என்றமை அறியத் தக்கது. (தி.12 திருக்குறிப்புத் தொண்டர். 51) இதனால், `ஆகமங்கள், அறுபத் தறுவரேயன்றிப் பின்னும் பலரால் கேட்கப்பட்டு வந்து நிலவுலகில் விளங்கின` என்பது கூறப்பட்டது.
ஆகமங்களின் கிரந்த அளவு மரபாகச் சொல்லப்பட்டுவரும் முறை வருமாறு:
1. காமிகத்திற்குக் கிரந்தம் பரார்த்தம்.
2. யோகஜத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்.
3. சிந்தியத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்.
4. காரணத்திற்கு கிரந்தம் ஒரு கோடி.
5. அஜிதத்திற்கு கிரந்தம் நியுதம்.
6. தீப்தத்திற்கு கிரந்தம் நியுதம்.
7. சூட்சுமத்திற்கு கிரந்தம் பத்மம்
8. சகஸ்ரத்திற்கு கிரந்தம் சங்கம்
9. அம்சுமானுக்கு கிரந்தம் ஐந்து லட்சம்
10. சுப்பிரபேதத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
11. விஜயத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
12. நிஸ்வாசத்திற்கு கிரந்தம் ஒரு கோடி
13. சுவாயம்புவத்திற்கு கிரந்தம் ஒன்றரைக் கோடி
14. ஆக்னேயத்திற்கு கிரந்தம் முப்பதினாயிரம்
15. வீரத்திற்கு கிரந்தம் நியுதம்
16. ரௌரவத்திற்கு கிரந்தம் எட்டு அற்புதம்
17. மகுடத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
18. விமலத்திற்கு கிரந்தம் மூன்று லட்சம்
19. சந்திர ஞானத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
20. முக விம்பத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
21. புரோத்கீதத்திற்கு கிரந்தம் மூன்று லட்சம்
22. லளிதத்திற்கு கிரந்தம் எண்ணாயிரம்
23. சித்தத்திற்கு கிரந்தம் ஒன்றரைக் கோடி
24. சந்தானத்திற்கு கிரந்தம் ஆறாயிரம்
25. சர்வோக்தத்திற்கு கிரந்தம் இரண்டு லட்சம்
26. பாரமேசுரத்திற்கு கிரந்தம் பன்னிரண்டு லட்சம்
27. கிரணத்திற்கு கிரந்தம் ஐந்து கோடி
28. வாதுளத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
இருபத்தெட்டு மூலாகமங்கட்கு உபாகமங்களின் அளவு மரபாகச் சொல்லப்பட்டு வரும் முறை வருமாறு:
1. காமிகத்திற்கு உபாகமம் 3:- வக்தாரம், பைர
வோத்தரம், நாரசிம்மம் (மிருகேந்திரம்).
2. யோகஜத்திற்கு உபாகமம் 5:- தாரம்,
வீணாசிகோத்ரம், ஆத்மயோகம், ஸந்தம், ஸந்ததி.
3. சிந்தியத்திற்கு உபாகமம் 6:- ஸுசிந்தியம்,
ஸுபகம், வாமம், பாபநாசம், பரோத்பவம், அம்ருதம்.
4. காரணத்திற்கு உபாகமம் 7:- காரணம்,
வித்வேஷம், பாவனம், மாரணம், தௌர்கம், மாஹேந்திரம், பீனஸம்ஹிதை.
5. அஜிதத்திற்கு உபாகமம் 4:- பிரபூதம்,
பரோத்பூதம், பார்வதீஸம்ஹிதை, பத்மஸம்ஹிதை.
6. தீப்தத்திற்கு உபாகமம் 9:- அமேயம், சப்தம்,
ஆச்சாத்தியம், அஸங்கியம், அமிருதோஜஸம், ஆனந்தம், மாதவோத்பூதம், அற்புதம், அக்ஷயம்.
7. சூட்சுமத்திற்கு உபாகமம் 1:- சூட்சுமம்.
8. சகஸ்ரத்திற்கு உபாகமம் 10:- அதீதம்,
மங்கலம், சுத்தம், அப்ரமேயம், ஜாதிபாக்கு, பிரபுத்தம், விபுதம், அஸ்தம், அலங்காரம், ஸுபோதம்.
9. அம்சுமானுக்கு உபாகமம் 12:- வித்தியா
புராணம், தந்திரம், வாஸவம், நீலலோகிதம், பிரகரணம், பூததந்திரம், ஆத்மாலங்காரம், காசியபம்,
கௌதமம், ஐந்திரம், பிராமம், வாசிட்டம், ஈசானோத்தரம்.
10. சுப்பிரபேதத்திற்கு உபாகமம் 1:- சுப்பிரபேதம்.
11. விசயத்திற்கு உபாகமம் 8:- உற்பவம்,
சௌமியம், அகோரம், மிருத்யுநாசனம், கௌபேரம், மகாகோரம், விமலம், விசயம்.
12. நிசுவாசத்திற்கு உபாகமம் 8:- நிசுவாசம்,
நிசுவாசோத்தரம், நிசுவாச சுகோதயம், நிசுவாச நயனம், நிசுவாச காரிகை, நிசுவாச கோரம், நிசுவாசகுய்யம், மந்திர நிசுவாசம்.
13. சுவாயம்புவத்திற்கு உபாகமம் 3:- பிரஜாபதி மதம், பதுமம், நளினோற்பவம்.
14. ஆக்னேயத்திற்கு உபாகமம் 1:- ஆக்கினேயம்.
15. வீரத்திற்கு உபாகமம் 13:- பிரஸ்தரம்,
புல்லம், அமலம், பிரபோதகம், அமோகம், மோகசமயம், சகடம், சகடாதிகம், பத்திரம்,
விலேகனம், வீரம், அலம், போதகம்.
16. இரௌரவத்திற்கு உபாகமம் 6:- காலாக்கியம்,
காலதகனம், இரௌரவம், இரௌரவோத்தரம்,மகாகாலமதம், ஐந்திரம்.
17. மகுடத்திற்கு உபாகமம் 2:- மகுடம், மகுடோத்தரம்.
18. விமலத்திற்கு உபாகமம் 16:- அனந்தம்,
போகம், ஆக்கிராந்தம், இருடபிங்கம், இருடோதரம், இருடோற்பூதம், இரௌத்திரம், சூதந்தம், தாரணம்
ஆரேவதம், அதிக்கிராந்தம், அட்டகாசம், பத்திரவிதம், அர்ச்சிதம், அலங்கிருதம், விமலம்.
19. சந்திர ஞானத்திற்கு உபாகமம் 14:- ஸ்திரம், ஸ்தாணு,
மகாந்தம், வாருணம், நந்திகேசுரம், ஏகபாதபுராணம், சாங்கரம், நீலருத்திரகம், சிவபத்திரம், கற்பபேதம்,
சீமுகம், சிவசாசனம், சிவசேகரம், தேவீமதம்.
20. முக விம்பத்திற்கு உபாகமம் 15:- சதுமுகம்,
சமத்தோபம், பிரதிபிம்பம், அயோகஜம், ஆன்மாலங்காரம், வாயவியம், பட்டசேகரம்,
தௌடிகம், துடிநீரகம், குட்டிமம், துலாயோகம்,
காலாத்தியயம், மகாசௌரம், நைருதம், மகாவித்தை.
21. புரோத்கீதத்திற்கு உபாகமம் 16:- வாராகம், கவசம்,
பாசபந்தம், பிங்கலாமதம், அங்குசம், தண்டதரம், தனுதரம், சிவஞானம், விஞ்ஞானம், சீகாலஞானம்,
ஆயுர்வேதம், தனுர்வேதம், சர்பதம், ஷ்டரவிபேதனம்,
கீதகம், பரதம், ஆதோத்தியம்.
22. இலளிதத்திற்கு உபாகமம் 3:- இலளிதம்,
இலளிதோத்தரம், கௌமாரம்.
23. சித்தத்திற்கு உபாகமம் 4:- சாரோத்தரம்,
ஔசனசம், சாலாபேதம், சசிமண்டலம்.
24. சந்தானத்திற்கு உபாகமம் 7:- இலிங்காதியட்சம்,
சுராத்தியட்சம், அமரேசுரம், சங்கரம், அசங்கியம், அனிலம், துவந்தம். 25. சர்வோக்தத்திற்கு உபாகமம் 5:- சிவ
தருமோத்தரம், வாயுப்புரோத்தம்,
திவ்வியப்புரோத்தம்,ஈசானம், சருவோற்கீதம்.
26. பாரமேசுரத்திற்கு உபாகமம் 7:- மாதங்கம்,
யட்சணிபதுமம், பாரமேசுரம், புட்கரம், (பௌட்கரம்) சுப்பிரயோகம், அமிசம், சாமானியம்.
27. கிரணத்திற்கு உபாகமம் 9:- காருடம்,
நைருதம், நீலம், இரூட்சம், பானுகம், தேனுகம், காலாக்கியம், பிரபுத்தம், புத்தம்.
28. வாதுளத்திற்கு உபாகமம் 12:- வாதுளம்,
வாதுளோத்தரம், காலஞானம், பிரரோகிதம், சருவம், தருமாத்மகம், நித்தியம், சிரேட்டம், சுத்தம்,
மகானனம், விசுவம், விசுவான்மகம்.
ஆக உபாகமங்கள் இருநூற்றேழு - 207
காமிகம் முதலிய இருபத்தெட்டு மூலாகமங்கள் சிவபெருமானுக்குப் பாதம் முதலிய உறுப்புகளாகவும், ஆடை, ஆபாரணம் முதலிய பிற பொருள்களாகவும் அமைந்த முறைமை ஆகமங்களுட் சொல்லப்படும்.
எண்ணற்ற கிரந்தங்களாயும், உபாகமங்களாயும் விரிந்த ஆகமங்களைப் பின்வந்த ஆசிரியர்கள் பலவாறு சுருக்கிச் சொன்னார்கள். அச்சுருக்கங்களிற் சிலவே இப்பொழுது கிடைக்கும் ஆகமங்கள்.

பண் :

பாடல் எண் : 3

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த மேலான ஆகமங்கள் வானத்தில் உள்ள தேவர் களாலும் அறிதற்கரிய பொருள்களை உடையன. அதனால், அவை அளவிறந்து கிடப்பினும், உயிர்கட்குப் பயன்படுதல் அரிது.

குறிப்புரை :

`அஃது அறிந்து சிவபெருமான் அவற்றைத் தானே நேராகவும், பிறர் வாயிலாகவும் பலர்க்கு விளக்கியருளினான்` என்பது குறிப்பெச்சம். ``நீர்மேல் எழுத்து`` பயன்கொள்ளுதல் அரிதாதற்கு உவமை. `அங்ஙனம் விளக்கம் பெற்றோர் இவர்` என்பதனை வருகின்ற திருமந்திரங்களால் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 4

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 

பொழிப்புரை :

சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

குறிப்புரை :

இஃது ஆகமங்கள் நிலவுலகிற்கு வந்த வரலாற்றைத் தொகுத்துக் கூறியது. பராபரம் - உயர்ந்ததும் தாழ்ந்தனவும் ஆகிய பொருள்; அவை பதியும், பசு பாசங்களுமாம். எனவே, `முப் பொருளின் இயல்பு` என்றவாறாம். தரனாய் - ஏற்ற பெற்றியில் நிற் பவனாய். இங்ஙனங் கூறவே, `சிவபெருமான் ஆகமங்களை முதற் கண் அனந்ததேவர் வாயிலாகச் சீகண்ட உருத்திரர்க்கு உணர்த்தி, பின்பு அவர் வாயிலாகத் தேவர், முனிவர், கணங்கட்கு உணர்த் தினான்` என்பது கொள்க.`வேதங்களை அனந்ததேவர் வாயிலாகப் பிரமதேவர்க்கு உணர்த்தினான்` என்ப. அரன் - உருத்திரன்; அஃது ஏற்புழிக் கோடலால், சீகண்ட உருத்திரரைக் குறித்தது. பரமசிவன் சீகண்ட உருத்திரராய் நிற்றல், அவரே தானாக அவருள் நிற்றல். சிவ தன்மம் - சிவபுண்ணியம். `அவை சரியையும், கிரியையும்` என்பது, ``நல்லசிவ தன்மத்தால் நல்லசிவயோகத்தால் நல்லசிவ ஞானத்தால்`` (திருக்களிற்றுப்படியார். 15) என்பவற்றால் அறிக. சிவதன்மங் கூறவே, இனம் பற்றிச் சிவயோகமும் கொள்ளப்படும். ``பராபரம், சிவதன்மம்`` என்றவை, ஏனையிடங்களிலும் சென்று இயையும். எனவே, சிவாகமங்கள் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நாற்பாதங்களாய் உள்ளன என்பது உணர்த்தப்பட்டதாம்.
சிவாகமங்களில்,
சிவபெருமானது இலிங்கத் திருமேனி, உமா மகேசுர மூர்த்தம் முதலிய உருவத் திருமேனி, நந்திதேவர் முதலிய பரிவார மூர்த்தங்கள் முதலியவற்றின் அமைப்புமுறைகளையும், திருக் கோயில் அமைப்பு, புட்ப விதி, பிராயச்சித்த விதி, பவித்திர விதி, செப மாலை யோகபட்டம் முதலியவற்றின் அமைப்பு, அந்தியேட்டி விதி, சிரார்த்த விதி முதலியவற்றையும் கூறும் பகுதிகள் சரியாபாதம் எனவும்,
மந்திரங்களின் உச்சாரணமுறை, குண்டமண்டல வேதிகை முதலியவற்றின் அமைப்புக்கள், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் முதலியவற்றின் விதிகள், சமய விசேட நிருவாண தீட்சைகள் ஆசாரியாபிடேகம் என்பவற்றின் விதிகள், ஆன்மார்த்தமும், பரார்த்தமும் ஆக அமைந்த நித்திய நைமித்திய பூசை முறைகள் விழா முறைகள் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் கிரியா பாதம் எனவும்,
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகளின் முறைமையும், மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களின் இயல்பும், ஞானபாதத்திற் சொல்லப்படும் பொருள்களைப் பாவனையாற்காணும் முறைகளும் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் யோக பாதம் எனவும்,
`பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பு, உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள், அண்டகோடிகளின் இயல்புகள், நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதத்தின் இயல்புகள், வினைவகை வினைப்பயன் வகைகள், ஞானத்தின் படிநிலைகள், அவற்றின் பயன்கள் முதலிய வற்றைக் கூறும்பகுதிகள் ஞானபாதம் எனவும்
உணர்க.
சிவாகமங்களைச் சிவபெருமான் சொல்லியருளினமையைத் திருஞானசம்பந்தரும்,
``திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான்``
-தி.2 ப.43 பா.6
எனக் குறிப்பிட்டருளினமை காண்க. இதனுள், ``அறங்கொண்டு`` என்றது, ``சார்ந்தாரைக் காத்தல் வேண்டுவதாகிய கடன் பற்றி`` எனப் பொருள் தரும். உரன் - உரம் உடையவன். உரம் - மெய்யுணர்வு, ``உரனென்னுந் தோட்டியான்`` (குறள். 24) என்பதிற்போல, ஓங்கி - ஓங்கப்பெற்று. ஓங்குதல் - விளங்குதல்.

பண் :

பாடல் எண் : 5

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே. 

பொழிப்புரை :

தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.

குறிப்புரை :

``உவமா`` என்பது, `ஒப்பு` என்னும் பொருளதாகிய ஆரியச்சொல். `உருத்திரன், திருமால், பிரமன்` என்போர் சுத்த மாயையில் உள்ளோர் என்பது அறி வித்தற்கு, `உருத்திர தேவர்` என்றும், ``தவமால்`` என்றும், ``பிர மேசர்`` என்றுங் கூறினார். மால் - பெருமையுடையோன். தவமால் - மிக்க பெருமையுடையோன். முதற்கண் கூறியவாறு அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்ட அறுபத்தறுவரும் சதாசிவ புவனத்தில் வாழும் அணுசதாசிவராகலின், இது அவ்வாகமங்கள் கீழ்க்கீழ்ப் புவனங்களில் வந்த முறைமை கூறியவாறு. மந்திர மகேசுரர் ஈசுர தத்துவத்திலும் உருத்திரர் முதலிய மூவரும் சுத்த வித்தியாதத்துவத்திலும் வாழ்வார் என்று அறிக. உருத்திரதேவர்க்கு மந்திர மகேசுரரால் உணர்த்தப்பட்டது எனவே, `சுத்த வித்தையில் அவரோடு ஒப்ப நிற்கும் அனந்த தேவர்க்கும் அவர்வழியாகவே உணர்த்தப்பட்டது` என்பதும், அங்ஙனமாயினும் அனந்ததேவர் சதாசிவரிடமிருந்தே ஆகமங்களைப் பெற்றார் எனச் சில ஆகமங்களில் கூறப்படுதல் முகமனுரை என்பதும் பெறப்படும்.
நந்தி பெருமான் ஆகமங்களில் ஒன்பதைச் சிறப்பாகப் பெற்றமையாவது, ஆசிரிய வழிமுறையால் (குருபரம்பரையால்) சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோராகிய மக்கட்கு விண்ணோர் தமக்கும் விளங்கரிய எல்லா ஆகமங்களின் பொருளையும் எளிமை யாகத் தொகுத்துணர்த்தற் பொருட்டாம். எனவே, அவ்வொன்பது ஆகமங்களுள் ஏனை எல்லா ஆகமப் பொருளும் அடங்கி நிற்றல் பெற்றாம். ``ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு`` (தி.10 ஐந்தாம் தந்திரம்) என்னும் திருமந்திரத்தால் இக்கருத்து வலியுறுத்தப் படுகின்றது. `அவ்வாகமங்கள் இவை` என்பதனை அடுத்துவரும் திருமந்திரத்தால் உணர்த்துவார். `அவற்றை நந்தி பெருமானிடம் கேட்டு உலகிற்கு உணர்த்தினோர் இந் நாயனாரை உள்ளிட்ட எண்மர்` என்பதையும், `இவர் வழியாக மற்றும் பலர் அவற்றை உலகிற் பரப்பினர்` என்பதையும் முன்னே கூறினார் (தி.10 எட்டாம் தந்திரம்) இன்னும் சனற்குமார முனிவர் கேட்டுச் சத்திய ஞான தரிசனிகள் நில வுலகில் வழியாகப் பரஞ்சோதிமாமுனிவர்க்கும், அவர்வழியாக திரு வெண்ணெய்நல்லூரில் `சுவேதவனப் பெருமாள்` என்னும் பிள்ளைத் திருநாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவர்க்கும் உணர்த்தற்ப்பட்டு, அவர் வழியாகப் பலவிடத்தும் ஆகமப்பொருள் விளங்கிவருதல் அம் மரபினராகிய உமாபதிதேவ நாயனார் அருளிச் செய்த சிவப்பிரகாச நூலாலும், பிறவற்றாலும் நன்கறியப்பட்டது.
`சிவபெருமான் ஆகமங்களைப் பிரதி சங்கிதை முறையால் (ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றாக வகுத்துக் கூறும் முறையால்) பிரணவர் முதலிய இருபத்தெண்மர்க்கும் நேரே உணர்த்தி, மகௌக முறையால் (எல்லாவற்றையும் ஒருவர்க்கு ஒருங்கு தொகுத்துக் கூறும் முறையால்,) அனந்த தேவர் வாயிலாகச் சீகண்டருக்கு உணர்த்த, அவர் நந்திபெருமானுக்கும் அவ்வாறே அனைத்தையும் உணர்த்தி னார்` என ஆகமங்களில் கூறப்படுதலால், ``நவ ஆகமம் எங்கள் நந்திபெற்றானே`` என இங்கு நாயனார் அருளிச்செய்ததற்கு, குருபரம்பரையால் நிலவுலகிற்குத் தருமாறு உணர்த்தப்பட்டவை ஒன்பது` என்பதே கருத்தாதல் அறிக.
ஆகமங்களைச் சிவபெருமானிடம் நேரே கேட்டவர் மந்திர மகேசுரர் ஆதலின் அது `அதிபர சம்பந்தம்` என்றும், மந்திர மகேசுரரிடம் அனந்ததேவர் கேட்டது `பர சம்பந்தம்` என்றும், அனந்த தேவரிடம் சீகண்டர் கேட்டது `மகா சம்பந்தம்` என்றும், சீகண்டரிடம் நந்திபெருமான் கேட்டதும், திருமால் முதலிய தேவர்கள் கேட்டதும் `அந்தராள சம்பந்தம்` என்றும், நந்தி பெருமானிடத்தும், திருமாலி டத்தும், மற்றைய தேவர்களிடத்தும் முனிவர்களும் சித்தர்களும் கேட்டது `திவ்வியசம்பந்தம்` என்றும், தேவர்களிடமும், முனிவர்களிடமும் மக்கள் கேட்டது `திவ்வியாதிவ்விய சம்பந்தம்` என்றும், மக்களிடம் மக்கள் கேட்டது `அதிவ்விய சம்பந்தம்` என்றும் சொல்லப் படுகின்றன.
`வேதம், சிவாகமம்` என்னும் இரண்டும் `ஆப்த வாக்கியம்` எனப்படுகின்றன. `ஆப்தன்` என்பதற்கு, `உள்ளது கூறுவோன்` என்பது பொருள். பொதுமக்கட்கு நன்மக்கள் ஆப்தர். நன்மக்கட்கு முனிவர்களும், தேவர்களும் ஆப்தர். முனிவர்கட்கு நந்தி பெரு மானும், தேவர் கட்குப் பிரமதேவரும் ஆப்தர். நந்திதேவர், பிரம தேவரினின்று மேன் மேல் உள்ளவர் கீழ்க்கீழ் உள்ளவருக்கு ஆப்தர். எல்லார்க்கும் ஆப் தராய்த் தமக்கோர் ஆப்தர் இல்லாத அதிபரமாப்தர் சதாசிவ நாயனார். அவர்க்குமேல் உள்ள சத்தியும், சிவமும் இலய நிலை (ஒடுக்கநிலை) ஆதலின், அங்கு வேத சிவாகமங்கள் விளங்கித் தோன்றுதல் இல்லை.

பண் :

பாடல் எண் : 6

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நந்திபெருமான் சீகண்டரிடம் சிறப்பாகப்பெற்ற ஒன்பது ஆகமங்கள், `1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6 ... ... 7. ... ... 8 சுப்பிரபேதம், 9. மகுடம்` என்பன.

குறிப்புரை :

இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, `நாயனார் திருமொழியன்று` என்பது தெளிவாய்த் தெரிகின்றது. எவ்வாறெனில், `யாமளமாகும் காலோத்தரம்` என்பது பெரும்பான்மையும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாய் உள்ளது. அவ்வாறு கொண்டால், ஒன்பது கூறவந்தவர் ஒன்றனை மறந்தார் ஆவர். `யாமளம், ஆகும் காலோத்தரம்` என இரண்டாகக் கொள்ளினும், யாமளம் சைவாகம மன்று; வாம தந்திரம். அது சைவத்திற்குப் புறம்பானது. `காலோத்தரம்` என்ற பெயரில் பல உள. ஒன்றேனும் மூலாகமம் அன்று. அதனால், வாம மதத்தினர் ஒருவர் தமது தந்திரத்தையும் திவ்வியாகமங்களில் ஒன்றாக்கிக்கொள்ள இத்திருமந்திரத்தைத் திரித்துவிட்டார் போலும்! அவ்விடத்தில் நாயனார் கூறிய இரு ஆகமங்கள் இவை என்பது அறியப்படாது போயினமை வருத்தத்திற்குரியது. `நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்கள் ஒன்பது` என்பதற்கேற்ப அவர்பால் அவற்றைப்பெற்ற இந்நாயனார் இந்நூலையும் ஒன்பது தந்திரங்களாக அருளிச்செய்திருத்தல் அறியத் தக்கது. எனினும், ஒவ்வோர் ஆகமத்தையே ஒவ்வொரு தந்திரமாகச் செய்தார் என்பதற்கில்லை. ஏனெனில், அவ்வாறு செய்திருப்பின், அவற்றின் தொடக்கத்தில் `இன்ன ஆகமத்தைச் செப்புகின்றேன்` எனச் சொல்லித் தொடங்கி யிருப்பார். அவ்வாறன்றி முதற்கண் ``சிந்தைசெய்து ஆகமம் செப்ப லுற்றேனே`` எனப் பொதுப்படக்கூறி அமைந் தமையானே அது பெறப்படுவதாம்.
ஆகமங்கள் பலவும் தனித்தனி வேறு வேறு பொருளைக் கூறுவன அல்ல; எல்லா ஆகமங்களும் எல்லாப் பொருளையும் கூறு வனவே எனினும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் கூறுமாற்றால் வேறு வேறு ஆகமங்களாயின. ஆகவே, நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்களை உணரின், அனைத்து ஆகமங்களை யும் உணர்ந்ததாம். அவற்றின் பொருளையே கூறினமையால், இந் நூலை உணரினும் அனைத்து ஆகமங்களும் உணர்ந்தவாறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறியமாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்.

குறிப்புரை :

என்றது, வருகின்ற திருமந்திரங்கட்குத் தோற்றுவாயாக லின், `அதனால் அவற்றின் பொருளை அறிதற் பொருட்டுப் பல மொழிகளை அவன் படைத்தனன்` என்பது குறிப்பெச்சமாக உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 

பொழிப்புரை :

பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

குறிப்புரை :

`அவற்றையே பின்னர் பாணினி முனிவர்க்கும், அகத்திய முனிவர்க்கும் செப்பஞ் செய்யுமாறு உணர்த்தி, உலகில் பரவச்செய்தான்` என்க. `வடமொழிக்கு இந்திரனால் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமே முதல் நூல்` என்றல் பழங்கதையேயாக, உண்மையில் உள்ளது பாணினீயமே. அதனால்,
``வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்``
-காஞ்சிப்புராணம்
என்றலே சிவநெறி மரபு என்க.
பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்துசென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரியமொழியும், அவ்வாறன்றி ஒருதலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன்பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ்மொழியுமாக இருமொழியை இறைவன் சொல்லியருளினான் என்பது,
``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்`` -தி.10. பா.26
என நாயனார் மேலே அருளிச்செய்தவாற்றால் பெறப்படும். இவ்வாறு இவ்விருமொழியையும் ஒப்பக்கொண்டதன்றி ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் ஆன்றோர் கொண்டிலர் என்பது இதனால் பெறப்பட்டது. இங்ஙனமாகவும் சிலர் இவற்றுள் ஒன்றைப் பற்றி மற்றொன்றனை இகழ்வர். அவர், இது முதல் மூன்று திருமந்திரங்களை, `நாயனார் வாக்கல்ல` என விலக்கிச் செல்வர். அவர், ``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர`` (தி.1 ப.77 பா.4) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற் போல்வன வற்றையும் அவ்வாறு விலக்கிப்போவர் போலும்!
மொழிகளது நிலை, `நுண்மை, பொதுமை, இடைமை, பருமை` என நான்கு வகைப்படும். அவை முறையே, `சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். அவற்றுள், `மத்திமை, வைகரி` எனப்படுகின்ற இடைமொழி பரு மொழிகள் தாம் ஆரியம், தமிழ் முதலிய பாகுபாடுகளைப் பெற்று நிற்கும். அவற்றிற்கு முந்திய நிலைகள் பாகுபாடின்றியே விளங்கும். அவற்றுள் பிரணவர் முதலியோரும் அனந்த தேவரும் ஆகமங்களைப் பெற்றது `சூக்குமை` எனப்படும் நுண்மொழியினாலாம். சீகண்டர் பெற்றது `பைசந்தி` என்னும் பொதுமை மொழியால். சீகண்டரிட மிருந்து நந்தி முதலிய கணங்கள், தேவர், முனிவர், சித்தர் பெற்றது இடைமொழியாகிய மத்திமையினால். அவர்களிடமிருந்து மக்கள் பெற்றது `வைகரி` எனப்படும் பருமொழியினால். `சிலர்க்கு இயல் பாகவே மெய்யுணர்வு உண்டாயிற்று` என்றல் இறைவன் உள்நின்று நுண்மொழி இடைமொழிகளால் விளக்கியதே என்க. அதனால், கணங்கள் முதலியோர் பொருட்டே பாகுபட்ட மொழிகளை இறைவன் சொல்லினன்` எனக் கொள்க. இவற்றுள், இடைமொழிக்கு (மத்தி மைக்கு) முற்பட்டவற்றையே, ``சொற்பிரிவிலாத மறை`` (தி.3 ப.78 பா.2) என்று திரு ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதற்கு இவ்வாறு பொருள் கொள் ளாது `சொற்கள் நீங்காது நிற்கின்ற மறை` என உரைப்பின் பொருள் படாமை அறிக. ``எழுதா மறை`` எனப்படுவதும் இச்சொற்பிரிவிலாத மறையே. அதனையே ஆரிய வேதத்திற்கு மரபாகக் கொண்டனர் அந்தணர். `எழுதா மறை` என்பதற்கு, `எழுத வாராத மறை` என்பதே பொருளன்றி, `எழுதாமல் இருப்பதையே மரபாகக் கொண்ட மறை` என்பது பொருளாகாது.
``ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றிஉரைத் தேட்டின் புறத்தெழுதார்`` -திருவள்ளுவமாலை. 15
என்ற செய்யுளும், `எழுதப்படுவதனை எழுதாதிருக்கின்றனர் அந்தணர்` என்றே கூறிற்று. எனவே, `எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை` (தி.12 பெ.பு.ஞானசம். 75) என்பதில், `எழுது மறை` என்றது, `சொற்பிரிவிலாத மறையைத் `தமிழ்` என `ஒரு மொழியாய்ப் பிரிந்து தோன்றி எழுதப்படுமாறு வைத்த மறை` என்றவாறாயிற்று.
இதனால், மேலுலகத்தில் பிரணவர் முதலியோர்க்குச் சொல்லிய ஆகமங்கள் கீழுலகத்தார்க்கு விளங்குதற்பொருட்டு இறைவன் பருமொழிகளைப் படைத்தமை கூறப்பட்டது. `ஆகமங்கள் விளங்குதற்பொருட்டே மொழிகளைப் படைத்தான்` என்றமையால், அம்மொழிகளில் அவ்வாகமங்களை அவன் கூறினமையும் பெறப்படும்.
``மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்``
-தி.8 திருவாசகம். கீர்த்தி. 9. 10
``கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்``
-தி.8 திருவாசகம் கீர்த்தி. 16. 20.
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுதே
தெள்ளும் வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
-தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 50.
என்றாற்போல வருவன பலவும் சிவபெருமான் தனது ஆகமங்களைப் பருமொழியால் விளக்கிய வரலாற்றைக் குறிப்பனவேயாம். இறைவன் படைத்த பருமொழியை இந்நாயனார், `ஆரியம், தமிழ்` என இரண்டாகக் கூறினமையின், ஆகமங்கள் அவ் இருமொழியிலும் கூறப்பட்டன என்றல் பொருந்துவதே என்க. இதனானே, பிறநெறிகள்யாவும், `ஆரியம் ஒன்றே கடவுள்மொழி; தமிழ் முதலிய பிறமொழிகள் யாவும் தேசியம் - அஃதாவது அவ்வந் நிலப்பகுதியில் வாழும் மக்கட்கு அமைந்த மொழி` என்னுமாயினும், சிவநெறி, ஆரியம் தமிழ் இரண்டையுமே கடவுள்மொழி என ஒப்பக்கொள்வது என்பது பெறப்பட்டது. இந்நாயனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பின் பிறர் சிலரும் இவ்வாறு கொண்டனர்.

பண் :

பாடல் எண் : 9

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்களைப் பாசத்தளை யினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயி லாகத் தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையே யன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்.

குறிப்புரை :

``உயிர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``அவிழ்க் கின்றவாறு`` என்றார். ``அது`` என்றது, `அவ்வினத்தை` என்றவாறு. `சிமிட்டலை` எனவும் பாடம் ஓதுப. `உணரலும்` என்ற உம்மை, உணர் தற்கு அருமை குறித்து நின்ற சிறப்பும்மை. `ஆரியம், தமிழ் இரண்டனையும் உணர்தல் சிறப்புடைத்தாயினும் அஃது எல்லார்க்கும் கூடாமையின், ஒன்றை உணரினும் பயனைப்பெறுதல் தப்புதல் இல்லை` என்றவாறு. ஈற்றடி ஆசிடை வந்த மூன்றாம் எழுத்து எதுகை.

பண் :

பாடல் எண் : 10

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 

பொழிப்புரை :

கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. அதனால், `கற்றவர்` எனப்படுவார், பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.

குறிப்புரை :

`அவனன்றி ஓரணுவும் அசையாது` ஆதலின், உலகில் மொழிகள் பலவாய்த்தோன்றி வளர்தலும் சிவபெருமானது திருவுளத்தின்படியே எனவும், `அங்ஙனம் அவன் திருவுளம் செய்தது, தான், பிரணவர் முதலியோர், அனந்ததேவர், சீகண்டர், உமையம்மை முதலியோர்க்குச் சொல்லிய ஆகமப் பொருள்கள் நிலவுலகில் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் விளங்குதற்பொருட்டே` எனவும் கூறுவார், ``பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறம் சொன்ன ஆறே`` என்றார். `சொன்ன ஆறே` என்பதில் ``சொன்ன`` என்றதை ``அன்போடியைந்த வழக்கு`` (குறள். 73) என்பதில் `இயைந்த` என்றதுபோலக் கொள்க.
ஆறு - வழி; வாயில். ``பதினெட்டுப் பாடை`` என்றது `மொழிகள் பதினெட்டு` என்னும் வழக்குப் பற்றி. எனவே, `பன்மொழியும்` என்பதே அதற்குக் கருத்தாகும். ஆரியம், தமிழ் இரண்டும் முன்னர்க் கூறப்பட்டமையின், `பன்மொழிகள்` என்றதில் அவை இரண்டும் ஒழிந்தனவே கொள்ளப்படும். ``கண்டவர்`` என்றது, ``அறிந்தவர்`` என்றபடி. `அவ்வம்மொழிகளில் வல்லோர் அவை வாயிலாக உயர்ந்த பொருள்களை மக்கட்கு உணர்த்துவாராதலின், அப்பொருள்களும் தமிழ்ச்சொல் வடசொற்களில் அமைந்த பொருளின் பகுதியவே; பிற அல்ல` என்பார், ``பண்டிதராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார்`` என்றார். ``கருத்தறிவார்`` என்றதனால், `அச்சொற்களை அறிதல் வேண்டும் என்பதில்லை` என்றவாறாயிற்று. அங்ஙனமாகவே, `அவற்றில் உள்ள பொருள்கள்` தமிழ்ச்சொல் வடசொற்களில் உள்ள பொருள்களின் பகுதியே என்பதும் உணர்த்தப்பட்டதாம். அதனானே, `தமிழும், ஆரியமுமே தொன்மை மொழிகள்` என்பதும், `பிறமொழிகள் இவற்றின் வழித்தோன்றின` என்பதும் போந்தன.
இதனால் வழிமொழிகளாகிய பிறமொழிகளும் பயனுடைய வாதலை அறிந்து அவற்றை இகழாமை வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 

பொழிப்புரை :

மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பி னால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.

குறிப்புரை :

`இழிந்து, கொண்டு நின்றதாள்` என்க. ``விண்`` என்றது மேல்நிலையை. அது, `பரநிலை` எனப்படுதலின், அந்நிலைக் கண் நிற்கும் அவனது சத்தி `பராசத்தி` எனப் பெயர்பெற்று நிற்கும். அந் நிலையினின்றும் இறங்குதலாவது, உலகை நோக்குதல். அது முன்னை நிலையிற் கீழ்ப்பட்டதாகலின், ``தண் நின்ற`` என்றார். தண்மை - தாழ்வு, ``தண்பதத்தாற் றானே கெடும்`` (குறள். 548) என்பதிற்போல `மெய்யை வினைக்கீடாய்க் கொண்டு` என்க. மெய் - உண்மை நிலை. அஃது அறக்கருணையாய் நின்று விளக்குதலைச் செய்தல். அதனை மாற்றிக் கொள்ளுதலாவது, மறக் கருணையாய் நின்று மறைத்தலைச் செய்தல். சத்தியை, `தாள் - திருவடி` என்றல் மரபு.
உலகை நோக்காது இயற்கையில் நிற்கும் பராசத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி சத்தி` என நின்று உலகைத் தொழிற்படுத்தும். அந் நிலையில் அஃது உயிர்கட்குச் சிவத்தைக் காட்டாது உலகத்தையே காட்டி நிற்குமாதலின், `திரோதாயி அல்லது திரோதான சத்தி` என்று சொல்லப் படும். `மறைக்கும் ஆற்றல்` என்பது இதன் பொருள். இறைவனது சத்தி இவ்வாறு செய்தல், உயிர்களை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தியை மெலிவித்தற் பொருட்டாம். அது மெலிவுறுதலே `மல பரிபாகம்` எனப்படும். மல பரிபாகம் வந்தவுடன் அத்திரோதான சத்தி தானே அருட்சத்தியாய் மாறிப் பதிந்து, உயிரின் அறிவில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கும். இவ் வுணர்ச்சி, உயிருக்கு ஓர் அதிர்ச்சியாய்த் தோன்றும். அதுபற்றி அருட்சத்தி பதிதலை, `சத்தி நிபாதம்` என்பர். நிபாதம் - வீழ்ச்சி.
மலபரிபாகத்திற்கு முந்தின நிலை பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் நிலையாகலின் அது, `பெத்தம், பெந்தம், பந்தம், கட்டு` என் றெல்லாம் சொல்லப்படும். மல பரிபாகத்திற்குப் பிந்தின நிலை பாசத் தினின்றும் விடுபட்ட நிலையாகலின் அது, `முத்தி, மோட்சம், வீடு` என்றெல்லாம் சொல்லப்படும். பெத்த நிலையையே `முன்` என்றும், முத்தி நிலையையே `இன்று` என்றும் அருளிச்செய்தார். பெத்தநிலை திரோதான சத்திவழிப்பட்டே நிற்றலின் அதனை, ``தலைக்காவல்`` என்றார். ``முன்`` என்றதனை முதலில் வைத்து, ``வைத்து`` என்றதன் பின், ``நடாத்தி`` என்பது வருவித்து, `இன்று, காட்டி உருக்கி அறுத் தான்` என முடிக்க. அதிகாரம் வேறாயவழியும் முன்னைத் திருமந்திரத் தோடு தொடர்பு தோன்ற எழுவாயை அதனினின்றும் தோன்ற வைத்தார். களிம்பு உவமையாகுபெயர். இதனால், `ஆணவ மலம் செம்பிற் களிம்புபோல அனாதியே உயிரில் கலந்துள்ளது` என்பதும், அங்ஙனம் கலந்த கலப்பால், `உயிர் அனாதிபெத்த சித்துரு` என்பதும், `அதனை அறுத்தான்` என்றதனால், `சிவன் இயல்பாகவே மலம் இல்லாத அனாதிமுத்த சித்துரு` என்பதும், அவனது அருள் செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாக்குகின்ற இரசகுளிகை போல்வது என்பதும் பெறப்பட்டன. ஆனந்தக் கண் - ஆனந்தத்தைப் பயக்கும் கண்; அஃது அருட்கண். அதனை உணரச் செய்தலே வழங்கு தலாகலின், ``காட்டி`` என்றார். `முன், வைத்து நடாத்தி, இன்று, காட்டி, உருக்கி அறுத்தான்` என்றதனால், இது நாயனாரது அநுபவமேயாதல் பெறப்பட்டது.
``எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்``
என்றார் திருவாசகத்தும் (தி.8 சிவபுராணம். 31. 32). ``ஆய்`` என்றது, `ஆக` என்பதன் திரிபு.
இதனால், `உலகை நோக்காது நிற்கும் நிலையே இறைவற்கு உண்மை நிலை` என்பதும், உலகை நோக்கி நின்று செயல் புரியும் நிலை பொதுநிலை என்பதும், `பொதுநிலையில் நிற்பனவெல்லாம் மறைப்பு நிலையே` என்பதும், `அந்நிலை பலவற்றையும் அவனது சத்தி திரோதான சத்தியாய் நின்றே செய்யும்` என்பதும், `அச்செயல் களெல்லாம் செம்பில் உள்ள களிம்பைத் தேய்ப்பது போல உயிர் களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைத் தேய்க்கும் செயல்களேயாகும்` என்பதும், `அம்மலம் தேய்வுற்றபொழுது அத்திரோதான சத்திதானே அருட்சத்தியாய் மாறி உயிரைப் பொதுநிலையினின்று நீக்கி, உண்மை நிலையை அடையச்செய்யும்` என்பதும், `இவையே இறைவன் என்றும் உயிர்கள்பொருட்டு இடையறாது செய்துவரும் செயல்` என்பதும் கூறப்பட்டன. படவே, `இறை, உயிர், தளை` என்னும் முப் பொருள்களின் இயல்பு பற்றிய ஆகமப்பொருள் பலவும் இவ்வொரு திருமந்திரத்தானே தொகுத்துக் கூறப்பட்டவாறு அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 2

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 

பொழிப்புரை :

என் மலத்தைப் பற்றற நீக்கியவனாகிய எங்கள் சிவபெருமான் நந்தி தேவரே. அவர் மேற்கூறியவாறு அருட்கண்ணை எனக்குத் திறப்பித்து ஆணவ மலமாகிய களிம்பை அறுத்து, அக் களிம்பு அணுக ஒண்ணாத சிவமாகிய மாற்றொளி மிக்க பொன்னை உணர்வித்து, பளிங்கினிடத்துப் பவளத்தைப் பதித்தாற் போல்வதொரு செயலைச் செய்தார். அவர் பதிப்பொருளேயன்றி வேறல்லர்.

குறிப்புரை :

பளிங்கு ஆன்மாவிற்கும், பவளம் சிவத்திற்கும் உள்ளுறை உவமமாய் நின்றன. எனவே, ``பளிங்கிற் பவளம் பதித் தான்`` என்றது, `ஆன்மாவாகிய என்னிடத்துச் சிவத்தை விளங்குவித் தான்` என்றதாயிற்று. பளிங்கு நீலமணியோடு சேர்ந்தவழி நீல மாயும், செம்மணியோடு சேர்ந்தவழிச் செம்மையாயும் சார்ந்ததன் வண்ண மாம் தன்மையுடையதாகலின், அவ்வுவமையால், `ஆன்மாவும் பாசத்தொடு சேர்ந்தவழிப் பாசமாயும் சிவத்தொடு சேர்ந்தவழிச் சிவமாயும் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது` என்பதும், `அத் தன்மைத்தாய ஆன்மா அனாதியே பாசத்தோடு சேர்ந்து நின்று பாச மாய்ப் பசுத்தன்மை எய்தி, அப்பாசம் நீங்கியவழிச் சிவத்தொடு சேர்ந்து பசுத்துவம் நீங்கிச் சிவமாம் தன்மையைப் பெற்று நிற்கும்` என்பதும், ``நந்தி பதித்தான்`` என்றதனால், `ஆன்மாவிற்குப் பாசத்தைப் பற்றறச் செய்து சிவமாந் தன்மையை எய்துவிப்பவன் ஆசான் மூர்த்தியே` என்பதும் உணர்த்தப்பட்டனவாம். இதனானே, `எம் போலியர்க்கு (சகல வருக்கத்தினருக்குச்) சிவபெருமான் ஆசான் மூர்த்தி வாயிலாகவே ஞானத்தை உணர்த்துவன்` என்பதும் கூறிய வாறு காண்க.
சிவம் செம்பொருளாகலின் பவளம் அதற்கு உவமை யாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே. 

பொழிப்புரை :

(பதி ஒன்றேயன்றோ என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது விட்டு நீங்கும். (என்று அருளிச்செய்தார்)

குறிப்புரை :

``அணுகின்`` என்றதனால், `அணுகுந் தன்மை உடையது` என்பதும், `அதனை உடையதாயினும், பாசப் பிணிப்பால் அணுகமாட்டாதாயிற்று` என்பதும், `அப்பிணிப்பு, கால எல்லையில் நெகிழுமாகலான் அங்ஙனம் நெகிழ்ந்தபொழுது பசு, பதியை அணுகும்` என்பதும் பெறப்பட்டன. பதி - கடவுள். பசு - உயிர். பாசம் - அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பொருள்கள். இவை மூன்றும் முறையே, `இறை, உயிர், தளை` எனத் தமிழிற் சொல்லப்படும்.
இத் திருமந்திரம் ஒர் ஐயம் அறுத்தது.

பண் :

பாடல் எண் : 4

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே. 

பொழிப்புரை :

கால வழிப்பட்டு, `குழவி, இளமை, முதுமை` என்னும் மாற்றங்களை உடையதாய் நிலையற்றதான இவ்வுடம்பு என்கின்ற கோயிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்ற தலை வனாகிய சிவன், மூங்கிலில் மறைந்து நின்ற தீ, தான் வெளிப்படுங் காலத்து வெளிப்பட்டு விளங்குதல்போல, ஆன்மாவின் பக்குவ காலத்தில் மும்மல இருளை நீக்கி எழுகின்ற சூரியனாய் வெளிப்பட்டு விளங்குவான். அப்பொழுது அவன் தாயன்பினும் மிக்க பேரருளாகிய வெள்ளமாயும் நின்று பேரின்பத்தைத் தருவான்.

குறிப்புரை :

``எழும்`` என்றதை இரட்டுற மொழிந்து, முற்றாயும், எச்சமாயும் கொண்டு முறையே முன்னும், பின்னும் இயைக்க. இதனால், `ஆனந்தக் கண்காட்டிக் களிம்பறுத்தலையும், பளிங்கிற் பவளம் பதித்தலையும் சிவன் முன்னே செய்யாமைக்குக் காரணம் பக்குவம் இன்மை` என்பது கூறப்பட்டது. ``வேயின் எழுங்கனல் போலே`` என்றமையால், `பளிங்கிற் பவளம் பதித்தான்` என்ற உவமை பற்றிச் சிவம் புதிதாக வந்து ஆன்மாவின்கண் புகுவது போலும் என மயங்குதல் கூடாது; முன்பு விளங்காது யாண்டும் உடனாய் நின்ற அதுவே பின்பு விளங்கும் என்பதை உவமை காட்டி விளக்கிற்று இத்திருமந்திரம். உயிர் உடலின்கண் அதுவே தானாய் நிற்றல்பற்றியும், இதயத்தானத்திலும், புருவ நடுவிலும் வைத்துத் தியானித்தலை உடன்பட்டுக் கொள்ளுதல் பற்றியும், உயிரின்கண் நிற்கின்ற சிவனை, உடம்பினுள் நிற்பவனாகக் கூறினார்.
``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே``(தி.6 ப.95 பா.4) என அப்பரும்,
``எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே``
-தி.8 திருவாசகம். கோயில்திரு. 10
என்று மாணிக்கவாசகரும் அருளிச்செய்தமையும் காண்க. ``இம்மெய்`` என்றது, `நிலையற்றதான உடம்பு` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 5

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 

பொழிப்புரை :

`பதியினைப்போல் அனாதியே` என மேல் விளக்கப்பட்ட பசுக்களும், பாசங்களும் முறையே சூரியகாந்தக் கற் களும், அவற்றை மூடியுள்ள பஞ்சும் போல்வனவாம். அவற்றுள், சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சு களைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரிய னாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.

குறிப்புரை :

``அவ்`` என்பது வகர ஈற்றுச் சுட்டுப் பெயர். `அவை` என்பது இதன் பொருள். இது, மேல், ``பசு, பாசம்`` என்பவற்றைச் சுட்டி, அவற்றை நிரல்நிறை வகையால் சூரிய காந்தத்திற்கும், சூழ் பஞ்சிற்கும் உவமிக்கப்படும் பொருளாக்கி நின்றது. `போலவே` என்பது பாடம் ஆகாமை அறிக. சூரியன் சந்நிதியில் சுடுதற்கு உப மேயம் கூறிய அதனால், தனியே நின்று சுடாமைக்கு உபமேயம் கொள்ளப்பட்டது. ஆரியன் - ஆசிரியன். ``சுட்டிடா`` எனவும், ``சுடும்`` எனவும் பொது உணர்வே பற்றிக் கூறினாராயினும், உண்மை உணர்வு பற்றி, `சுடுந்தன்மையைப் பெறா` எனவும், `பெறும்` எனவும் கூறுதலே கருத் தாதலின், உவமைக்கேற்ப, `அகற்றும் மலங்களே` என்னாது ``அற்ற மலங்களே`` என்றார். இதனால், `ஆன்ம அறிவு தன்னியல்பில் நின்று பாசத்தை நீக்குவதன்று; சிவனது அறிவைப் பெற்று அவ்வறிவாய் நின்றே நீக்கும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``வேயின் எழுங்கனல் போலே`` என மேற்கூறியவாற்றால், `விறகில் உள்ள தீ வெளிப்படுதற்கு அதனைக் கடைவோன் நிமித்தமாம் அளவே யல்லது, அதனிடத்து தீயைப் புகுத்துவோனாகாமைபோல, மாணாக் கனது அறிவின்கண் உள்ள சிவஞானம் வெளிப்பட்டுத் தோன்றுதற்கு ஞானாசிரியன் நிமித்தமாதலல்லது, அதனை அவனறிவின்கண் புகுத்துவானல்லன்` என்றற்கு, `சூரியன் சந்நிதியில்` என உவமைக் கண்ணும், ``ஆரியன் தோற்ற`` எனப் பொருட் கண்ணும் கூறினார்.
``சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்``
-சிவஞானசித்தி. சூ. 8. 28
என இதனை அருணந்தி சிவாசாரியர் இனிது விளக்கினமை காண்க. ``அற்ற`` என்றது முற்று. ``சுட்டிடா`` என்ற பன்மையால் உயிர்கள் பலவாதல் குறிக்கப்பட்டது.
இதனால் சிவஞானம் உண்டாதல் ஞானாசிரியனது வருகை இன்றி யமையாமை சிறந்ததோர் உவமத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தான்நற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 

பொழிப்புரை :

யாவரும் புகழும் அம்பலத்துள் ஆடுவோனாகிய சிவபெருமான், எனது பக்குவத்தை அறிந்து எனக்கு ஐந்து மலங்களையும் போக்கித் தன்னைத் தந்து, சுத்த தத்துவங்கள் ஐந்தினாலும் தான் ஐந்தொழில்புரிவோனாய் நிற்கும் கருத்தை என்னளவில் தவிர்த்தான். தவிர்த்து, நன்மையைத் தரும் திருவைந் தெழுத்தால் என் உள்ளத்தில் நீங்காது விரும்பி நின்றான்.

குறிப்புரை :

`மலங்கள் ஐந்தாம், தலங்கள் ஐந்தான், புலம் களைந் தான், நலங்கள் ஐந்தான்` எனப் பிரித்துப் பொருள் கொள்க. `ஐந்த னானும்` என்பவற்றில் சாரியையும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. `மலங்கள் ஐந்தாம் என` என்றதற்கு, `மேல், அற்ற எனப்பட்ட மலங்கள் ஐந்து என்று சொல்லும்படி` என உரைத்து, `ஐந்து மலங்களும் அற் றொழியுமாறு` என்பது அதனாற் போந்த பொருளாக உரைக்க. ``அருளி`` என்றது, `தந்து` என்னும் பொருளது. அதற்கும், ``அறிந்து`` என்பதற்கும் செயப்படுபொருள் வருவித்து உரைக்கப்பட்டன. சுத்த தத்துவங்கள் சுத்த மாயையின் விருத்தியே (விரிவே) ஆகலின், அவற்றைத் ``தலங்கள்`` என்றார். ``சதாசிவம் ஆன`` என்றது, `சதா சிவன் முதலாக நின்ற` என்றவாறு. `அறிவு` என்னும் பொருளதாகிய `புலம்` என்பது இங்குக் கருத்தின்மேல் நின்றது. திரோதான சத்தி யோடு இயைந்து நின்று ஐந்தொழில் செய்வது பெத்தான்மாக்கள் பொருட்டேயாதலின், முத்தராகிய தம்மளவில் இறைவன் அக் கருத்தைத் தவிர்த்தான் என்றார். நலம் தருவனவற்றை, `நலம்` என்றார். நலம் - வீடுபேறு. `அதனைத் தரும் ஐந்து` எனவே, முத்தி பஞ் சாக்கரம் என்பது போந்தது. இஃது அற்ற மலங்களின் வாதனை வந்து மீண்டும் தாக்காதவாறு செய்யுமாகலின், உள்ளத்தில் சிவன் நீங்காது நிற்கும் நிலை அதனால் நிகழ்வதாகக் குறித்தார். `மலங்கள் ஐந்து, தலங்கள் ஐந்து, நலங்கள் ஐந்து` என்பன இவை என்பதனைப் பின்னர் விளக்குவார். ``அப் பொது`` என்றதில் அகரம் பண்டறி சுட்டு.
இதனால் சிவன் குருவாய் வந்து செய்த அருட்செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

அறிவைம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபரனாமே.

பொழிப்புரை :

(பாசத்தில் அகப்பட்ட உயிரினது அறிவு தானே அதனின்றும் விடுபடமாட்டாதோ எனின், மாட்டாது. ஏன் எனின்,) ஆணவமாகிய இயற்கைப் பாசத்தின் வழிவந்து பற்றியுள்ள மாயையின் காரியமாகிய பொறி, புலன் முதலிய செயற்கைப் பாசத்தில் உயிரினது அறிவு கட்டுண்டு, நீரின் ஆழத்தில் அமிழ்ந்து கரை ஏற அறியாத நிலைமைபோல, அவற்றினின்றும் விடுபடும் நெறியை அறியாது இடர்ப்படும். ஆகவே, அதற்கு அந்நெறியை அறிவிப்போன் நீராழத்தினின்றும் எடுத்துக் கரையேற்ற வல்லவன் போல்பவனாய், ஆசிரியர்க்குள் மேலானவனாகிய ஞானாசிரியனே.

குறிப்புரை :

நான்றது - கட்டுப்பட்டது. ``உற்ற நீராழம் போல`` என்றாராயினும், `நீராழத்தில் உற்றதுபோல` என்றல் கருத்தென்க. `உற்ற நீராழம்போல நெறியறியாது` எனமாற்றுக. ``அறியாது`` என்றது முற்று. இஃது எதிர்மறைத் தொழில் உவமம். `நெறியாவது இது` என்பது அறிவித்தற்கு, `அறிவு அறிவுள்ளே அழிந்ததுபோல` என்றார். `உயிரினது அறிவு சிவத்தினது அறிவினுள்ளே பொருந்தித் தான் என்ப தொரு முதல் இல்லாது அழிந்தொழிந்தது போலும்படி` என்பது அதன் பொருள். இதுவே, `சிவமாந்தன்மை` எனப்படுவது. இந் நிலையைப் பன்னாள் பாவனையால் உணர்ந்து நிற்பின், பின்பு உண்மையிலேயே அஃது உண்டாவதாகும். இதனையே உப நிடதங்கள் `சோகம் பாவனை` என்றும், சிவாகமங்கள் `சிவோகம் பாவனை` என்றும் கூறும். சோகம் - அவன் நான் (ஆனேன்). சிவோகம் - சிவன் நான் (ஆனேன்). ``சோகம் எனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றிப் - பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று பாவிக்கச் சொல் லுவதிப் பாவகத்தைக் காணே`` என்று சிவஞானசித்தி (சூ. 9.7) நூல் இதனை எடுத்தோதுதல் காண்க. `அகம்பிரம்மாஸ்மி, தத்துவமசி` முதலிய வேதாந்த மகாவாக்கிய உபதேசங்கள் சோகம் பாவனையையும், `சிவத்துவமசி` என்னும் சித்தாந்த மகாவாக்கிய உபதேசமும், பஞ்சாக்கர உபதேசமும் சிவோகம் பாவனையையும் அடைவிப்பனவாம். இவை யெல்லாம் ஞானாசிரியனாலன்றி அடையலாகாமை அறிக.
இதனால், ஞானாசிரியனாலன்றி ஞானத்தை உணர்தல் கூடாமை, உவமையால் உணர்த்தப்பட்டது.
ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின்.
என்றார் திருவருட்பயன் (பா.50).

பண் :

பாடல் எண் : 8

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 

பொழிப்புரை :

தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் எரி சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.

குறிப்புரை :

``ஆமேவு பால்நீர்`` என்றதனை, `ஆவின் பால்மேவு நீர்` எனப் பொருட்கேற்ப மாற்றிக்கொள்க. `தாம் மேவு, தீமை` என் பன, கடைக்குறைந்து நின்றன. தாம் மேவு நித்தம் - சத்திநிபாதர் சென்று காண்கின்ற நடனம். நித்தம் - நிருத்தம். குருவடிவமும் சிவ பெருமான் கொள்கின்ற சகளத்திருமேனிகளுள் ஒன்றாதல் பற்றி அதற்கு ஈடாக ஆடும் கோலத்தைக் குறித்தார். சத்திநிபாதர்க்கு அக் கோலமும் அப்பயனைத்தருதல் நோக்கி. ஆடும் கோலமும் சத்தி நிபாதர்க்குப் பாசத்தை அறுத்துப் பேரின்பத்தைத் தருதலை,
மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம். 36
என்பதனால் அறியலாம்.
``உற்றன`` என்றது வினையாலணையும் பெயராய் வினை களைக் குறித்து நின்றது. அதன்பின் `பிரிக்கும்; அதனால்` என்னும் சொல்லெச்சங்கள் வருவித்து, `அன்னம்போல் நித்தம் கரணங்களுள் உற்றன பிரிக்கும், அதனால், பிறப்பு எரிசேர்ந்த வித்தாம்` என முடிக்க. `பிரிக்கும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. தாம் ஏழ் பிறப்பு - தாமாகிய எழு பிறப்பு. இங்கு, ``தாம்`` என்றது ``உற்றன`` என முன்னர்க் கூறிய வினைகளை. `அவையே பிறவிக்கு வித்து` என்பார், ``தாம் ஏழ் பிறப்பு`` என்றார். பிறப்பிற்குக் காரணத்தை, `பிறப்பு` என்றது பான்மை வழக்கு.
`நுகர்வினை, கிடைவினை, வருவினை` என வினை மூன்றாகி நிற்கும். நுகர்வினை, இப்பிறப்பில் இன்பமாகவும், துன்பமாகவும் அனுப விக்கப்படுவன. இவற்றை, `பிராரத்தம்` என்பர். கிடைவினை, இனி வரக்கடவனவாகிய எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய்த் திரண்டு கிடப் பவை; இவற்றை, `சஞ்சிதம்` என்பர். வருவினை, நுகர்வினையை அநுபவிக்கும்பொழுதே செய்யப்பட்டு வருவன. இவற்றை, `ஆகா மியம்` என்பர். இவற்றுள் கிடைவினையே எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய் நிற்றலால், குருவருள் அதனையே எரி சேர்ந்த வித்துப்போல அழிக்கும். அதனால் பிறவி அறும்; பிறவியற்ற நிலையே வீடு. எனவே, குருவருளால், பாசநீக்கமும், வீடுபேறும் உளவாதல் அறிக.
இதனால், குருபரன் அருள்செய்யுமாறும், அவ்வருளால் எய்தும் பயன்களும் கூறப்பட்டன. குருவருளால் கிடைவினை எரிசேர்ந்த வித்தாய்விடுதலை, ``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின் ஒல்லையின் அகலும்`` எனச் சிவப்பிரகாச (பா.89) நூலும் கூறுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 9

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே. 

பொழிப்புரை :

குருவருளால் சிவயோகம் கைவரப் பெற் றவர்கள், பிறவிக்கு வித்தாகிய கிடைவினையை (சஞ்சித கருமத்தை) முற் கூறியபடி அழித்து, குரு அருளிச்செய்த உபதேச மொழியிலே உறைத்து நின்று, சுத்த துரிய நிலை மிகவும் தோன்றப் பெற்று, ஐம் புலன்களை நுகர்கின்ற உணர்வு அவற்றால் கட்டுண்ணாமலே அவற் றோடு பொருந்தி நிற்கச் சிவத்தோடு ஒன்றாய் உடம்பு உள்ளபொழுதே செத்தார்போல உலகத்தை நோக்காது புருவ நடுவிலே நிற்பார்கள்.

குறிப்புரை :

வியாக்கிரம் - முடிவிடம்; ஆறாவது ஆதாரம். உணர்வை, ``உயிர்`` என்றார். `சிவத்தோடு` என்பது ஆற்றலால் வந்தது. மேற்குறித்த சிவோகம் பாவனையின் முதிர்ச்சியே `சிவ யோகம்` எனப்படுவது. இது ஞானத்தில் யோகம். இது கைவரப்பெற்ற நிலையே சுத்த துரியம். இயமம் முதலிய எட்டுறுப்புக்களை உடைய யோகம் தவயோகம் என்க. சிவயோகத்தில் நிற்பவர்கள் காண்ப வற்றையெல்லாம் சிவமாகக் காண்பதன்றிப் பிறவாகக் கண்டு விருப்பு வெறுப்புக்கள் கொள்ளுதலும், இன்பும், துன்பும் உறுதலும் ஆகிய வேறுபாடுகளுள் யாதொன்றும் இல்லாதிருத்தலை, ``செத்திட் டிருப்பர்`` என்றார். இதனால், குருவருளைப் பெற்றாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாரா தவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே. 

பொழிப்புரை :

மேற்குறிக்கப்பட்ட சிவயோகமாவது, `சித்தாகிய (அறிவுடைப் பொருளாகிய) ஆன்மாவும், தானே அறியும் தன்மை இன்மையால் தானே அறிந்தும், அறிவித்தும் நிற்கின்ற சிவத்தை நோக்க அசித்தாம் (அறிவில்லாத பொருளேயாம்) என்றுணர்ந்து, ஏகமாந் தன்மையுள் மிகச்சென்று, சிவனது அருளொளியே தானாகப் பெற்று, பிற பொருள்களைச் சார்தலாகிய பயனில்லாத சேர்க்கையிற் செல்லாதபடி, மிகுகின்ற அன்பினால் விளைகின்ற சிவபோகத் தினைத் தருகின்ற புதியதோர் யோகம். அதனையே எங்களுக்கு நந்திதேவர் அளித்தருளினார்.

குறிப்புரை :

சிவனை நோக்க உயிர் அசித்தாதலை, ``அவனுக்கு இவனும் அசித்தாமே``(சிவஞானசித்தி. சூ. 11- 11 1) என்பதனான் அறிக. `தவப்புக்கு` என இயையும். தவ, உரிச்சொல். `யோகம்` நான்கில் முன்னது ஒழிய ஏனை மூன்றும் `ஒன்றாதல்` என்னும் காரணக் குறியேயாய் நின்றது. உலகப் பொருள்களைச் சார்தலை, `அவயோகம்` என்றார், அது முன்னே பல காலும் பல துன்பங்கட்கு இடையே நுகர்ந்து நுகர்ந்து அலுத்து விட்ட சிற்றின்பத்தையே மீளத் தருதலின். ``சிவயோக மேயோகம்; அல்லாத யோகம் - அவயோகம் என்றே அறி`` என்றது திருக்களிற்றுப்படி (பா.74) யும். அச்சிற்றின்பம் போல் துன்பத்தொடு விரவுதலும், வரையறைப்பட்டுக் கழிதலும் இன்றி எல்லையில்லாது புதிதுபுதிதாய்த் தோன்றி என்றும் இன்புறுத்துகின்ற சிவபோகம் முன்பு ஒருகாலும் கண்டறியாத தாகலின், அப்பயனை விளைவிக்கின்ற சிவயோகத்தை, `நவயோகம்` என்றார். ``சாராத அன்பு`` என்றதற்குச், `சாராமைக்கு ஏதுவாகிய அன்பு` என உரைக்க. அதிபோகம் - ஒப்புயர்வற்ற பேரின்ப நிலை. இதனால், `மேற்குறித்த சிவயோகமாவது இது` என்பதும், `அஃது இன்ன பயனைத் தரும்` என்பதும் கூறப்பட்டன. சிவயோகம் துரிய நிலை யாதலின், அதனால் விளையும் சிவபோகம் துரியாதீத நிலை என்க.

பண் :

பாடல் எண் : 11

அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே. 

பொழிப்புரை :

மேற்கூறிய நவயோகத்தை எங்கட்கு அளித் தருளிய நந்தி தேவராகிய சிவபெருமான், அப்பொழுதே உலக முழுதும் தான் ஒழிவற நிறைந்து நிற்கும் மெய்ம்மையையும், மாயோன் முதலிய புத்தேளிராலும் அறியப்படாத தனது சிவலோக நிலை யையும், திருமன்றுள் பேரின்ப நடனம் செய்தருளும் தனது எடுத்த திருவடியாகிய பற்றுக்கோட்டினையும், அப்பற்றுக் கோட்டினால் கிடைக்கின்ற அருளாகிய பேரின்ப வெளியையும் அளித்தருளினான்.

குறிப்புரை :

என்றது, `அச்சிவயோகத்தானே பராயோக அநுபவம், பதமுத்தி அநுபவம், சீவன்முத்தி அநுபவம், பரமுத்தி அநுபவம் ஆகிய அனைத்து அநுபவமும் உளவாயின` என்றவாறு. பராயோக அநுபவமாவது, அறிவு இச்சை செயல்கள் புறத்துப் பரவுங் கால் காண் பன பலவும் சிவமேயாய்த் தோன்றுதல். பத முத்தி அநுபவமாவது, அவ்விடத்து உளவாகும் சிற்றின்ப நுகர்ச்சிகளும் சிவபோமாகவே விளைவது. சீவன் முத்தி அநுபவமாவது, சிந்தனைக்கு எட்டாத சிவனைச் சிந்தனைக்கு எட்டுபவனாகக் கண்டு வழிபட்டு இன்புறும் அநுபவம். பரமுத்தி அநுபவமாவது, அறிவு இச்சை செயல் கட்குப் பிறிதொன்றும் புலனாகாது சிவமே புலனாக, அதன்கண் அழுந்தித் தன்னை இழந்து நிற்பது. இவையெல்லாம் இவ்வுடம்பு உள்ள பொழுதே பெறப்படுவனவே என்க. இவற்றைப் பெற்றோரே, `அணைந்தோர்` எனப்படுவர். அணைந்தோர் - சிவனது திருவடி நிழலை அணைந்தவர். இவர், `சீவன் முத்தர்` என வடமொழியிற் சொல்லப்படுவார்.
``பெற்றசிற் றின்பமே பேரின்பமாய் அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற`` -திருவுந்தியார் - 332
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் தாக்கில்`` -திருக்களிற்றுப்படியார். 76
எனவும்,
``காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனக்
காணும் அடியார்`` -தி.8 திருவாசகம். பண்டாய. 6
எனவும் வருவனவற்றால் இவையெல்லாம் இவ்வுடம்புள்ளபொழுது தானே பெறத்தக்கனவாதல் அறிக.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
என்ற திருக்குறள் -359 இச்சிவயோக, சிவபோக நிலைகளையே கூறுவது என்பதை,
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் என்றமையால்
சார்புணர்தல்தானே தியானமுமாம்; - சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.
என்று கூறும் திருக்களிற்றுப்படி நூல். இதனால், மேல் தொகுத்துக் கூறப்பட்ட பயனை வகுத்துக் கூறியவாறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 12

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே. 

பொழிப்புரை :

குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறி வாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`அடயோகம் முதலியவற்றால் அணிமாதி ஆற் றல்கள் சித்திக்கப் பெற்றோர் `சித்தர்` எனப்படினும், அவர் சிவஞானம் பெற்று பிறவியை அறுத்துக்கொள்ளாமையின் அவசித்தரே` என்றற்கு, குருவருளால் சிவஞானம் பெற்றுச் சிவப்பேறு சித்திக்கப் பெற்றோரை, ``சிவசித்தர்`` என்றார். நாயனாரும் அத்தகைய சிவசித்தரேயாதல் அறிந்துகொள்க. இதனால், சிவபோக அநுபவத்தில் ஆன்மா வானது தன்னை இழந்து சிவமாய் நிற்கும் அநுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 

பொழிப்புரை :

சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவ லோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற் றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கின வர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத் தாறினின்றுமாம்.

குறிப்புரை :

கருவிகள் முப்பத்தாறாவன சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம்.
அவற்றுள் சிவ தத்துவம் ஐந்தாவன, `சிவம், சத்தி, சாதாக் கியம், ஈசுரம், சுத்த வித்தை` என்பன. வித்தியா தத்துவம் ஏழாவன, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என்பன. ஆன்ம தத்துவம் இருபத்து நான்காவன, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்னும் அந்தக் கரணங்கள் நான்கும், `செவி, தோல், கண், நாக்கு, மூக்கு` என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும், `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், `சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்` என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும், `ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி` என்னும் மாபூதங்கள் ஐந்துமாம். இவை இங்கு இவ்வாறு தோற்ற முறை பற்றிக் கூறப்பட்டன. இவற்றை எல்லாம் நாயனார் பின்னர் விளக்குவார்.
கருவிகள் முப்பத்தாறனுள்ளும் ஆன்மா கட்டுண்டு தன்னியல்பை அறியாது அவையே தானாக மயங்கி நிற்கும். அந்நிலை முழுவதும் கழிதலே முத்தி அல்லது விடுதலையாகலின், ``தம் முத்தி முப்பத்தாறே`` என்றார். முப்பத்தாறே என்றதன்பின் நீக்கப் பொருளில் வந்த ஐந்தாம் உருபும், முற்றும்மையும் தொகுத்தலாயின. மேற்காட்டிய முப்பத்தாறனுள் சிவ தத்துவம் ஐந்தும் சுத்த மாயையின் காரியம் எனவும், வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையின் காரியம் எனவும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் பிரகிருதி மாயையின் காரியம் எனவும் உணர்க. இதனால் தத்துவங்களே மாயாமலமாதல் அறியப்படும்.
தத்துவங்கள் முப்பத்தாறின் கூறாகிய தாத்துவிகங்கள் அறுபதனுள் நால்வகை வாக்குகள் உயிர்க்குப் பரம பந்தம் (பெருங் கட்டு) ஆதலின், அவற்றினின்றும் நீங்குதலை முன்னர்க் கூறினார்.
இதனால், குருவருளால் பெறும், `பாசநீக்கம், (சிவப்பேறு)` என்னும் பயன்கள் இரண்டனுள் பாச நீக்கத்தினது இயல்பு வகுத் துரைக்கப்பட்டது.
சிவனைப் பெற்றவர் நித்தர், நிமலர், நிராமயர், நீள் பரமுத்தர் ஆதலை, ``நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளும், - துன்பமில்லை`` (தி.6 ப.98 பா.1) என்பன முதலிய அருட்டிரு மொழிகளான் அறிக.

பண் :

பாடல் எண் : 14

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :

சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

எனவே, `தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து அவற்றினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பதும், `தத்துவக் கூட்டமே தனக்கு நிலைக்களமாக நின்ற ஆன்மாவிற்கு அவற்றினின்றும் நீங்கிய பின்னர்ச் சிவனது அருளே நிலைக்களமாம்` என்பதும், `அந் நிலைக்களத்து நீங்காது நிற்பின் அவ் வருட்கு முதலாகிய சிவம் வெளிப்படும்` என்பதும், `அது வெளிப்பட்டவழி அதனிடத்து அசைவற நிற்கவே அதனால் பெருகி விளைகின்ற இன்பத்தில் மதுவுண்ட வண்டுபோல் ஆன்மா அழுந்தித் தன்னையும் மறந்து நிற்கும்` என்பதும் கூறியவாறாயிற்று. ஆகவே, இதனால், பாசத்தின் நீங்குமாறும், பின்னர்ச் சிவத்தைப் பெறுமாறும், பெற்றவழி இன்புற்றிருக்குமாறும் கூறப்பட்டனவாம். இதனுள் ``சிவம் கண்டு`` என்றது சிவதரிசனம் செய்தலையும், ``தான் தெளிந்து`` என்றது அதில் அதீதப்படுதலையும் கூறியனவாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்னும் திருக்குற(பா.341)ளும் தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து நீங்குதலின் மேல் நோக்குடைத்தாதல் அறிந்துகொள்க. கே்கிழாரும், கண்ணப்பர் திருக்காளத்தி மலையின் உச்சியில் இருக்கும் இறை வனைக்காண வேண்டி அம்மலையின் படிகளைக் கடந்தமைக்கு,
``பேணுதத் துவங்கள் என்னும் பெருகுசோ பானம்ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல``
-தி.12 கண்ணப்பர் புராணம் - 103
என இத் தத்துவ முத்தரது செயலையே உவமையாகக் கூறுமாற்றால் இதனை இனிது விளக்கினமை காண்க.

பண் :

பாடல் எண் : 15

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 

பொழிப்புரை :

சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச் செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.

குறிப்புரை :

``நோக்கி, குறித்து`` என்றவற்றிற்கு இவ்வா றுரையாவிடில், ``இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே`` என்பதற்கு ஒவ்வாமை அறிக. தம்மை இழந்து செயலற்றவரது நிலை தாமத குண மிகுதியால் விளையும் சோம்பலில் நிற்பவர் நிலையோடு ஒத்தல்பற்றி ``இருந்தார் ... எய்திய சோம்பே`` என்றார். இது, பழிப்பதுபோலப் புகழ்ந்தது. பின் வருவதும் அது. சோம்பு, முதனிலைத் தொழிற்பெயர்; இதன்கண் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. இதனால், `சிவத்தைப் பெற்றவர் எல்லா அறிவாற்றலும் உடையராயினும், சிவத்தை அறிந்து அழுந்துதலல்லது பிறிதொன்றும் செய்யார்` என்பது கூறப்பட்டது.
``எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர்ஒன்
றல்லா தறியார் அற``
எனத் திருவருட் பயனிலும் ஓதியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 16

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 

பொழிப்புரை :

செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.

குறிப்புரை :

உலகத்தார் அறியும் பொருள்களில் `வெளி` எனப்படும் வானமே எல்லை இல்லாததாக அறியப்படுவது. அதனால், உண்மையில் எல்லை இல்லாத சிவ பரம்பொருளை, `வெளி` என்று உருவகித்து நூல்கள் கூறும். அவ்வாறாயினும், `உலக வெளியின் வேறாய் மேம்பட்டது` என்பது உணர்த்துதற் பொருட்டு, வாளா, `வெளி` என்னாது, `பரவெளி` என்று கூறும். இன்னும் அப் பரம் பொருள், ஞானமே வடிவாய் நிற்றலின், `சிதாகாசம், சிற்பர வியோமம்` என்றெல்லாம் சொல்லப்படும். சிவ பரம்பொருளை, `சிவம், சத்தி` என வேற்றுமை கருதாதவிடத்து சிவமே பரவெளியாம். அவ்வாறு வேற்றுமை கருதுமிடத்து, சத்தி பரவெளியாக, சிவம் அதனைத் திருமேனியாகவாயினும், இடமாகவாயினும் பெற்று நிற்கும் பொருளாகச் சொல்லப்படும்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி`` (தி.6 ப.57 பா.3) என்றாற் போல்வன வேற்றுமை கருதிக் கூறிய திருமொழிகளாம். இங்கு வேற்றுமை கருதாது கூறியது என்க.
``இருப்பது`` என்றது தம்மை இழவாது நின்ற துரிய நிலை யையும், ``கிடப்பது`` என்றது, தம்மை இழந்து நின்ற அதீத நிலை யையுமாம். இவ்விடம், நாதமாகிய சொல்லைக் கடந்து நின்ற தாகலின், ``சுருதி முடிந்திடம்`` என்றார். `முடிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. ``முடிந்த`` என்றது, `இளைத்து நின்ற` என்னும் பொருளது.
`` ... ... ... நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய்; இதுஉன் தன்மை`` -தி.9 ப.5 பா.4
எனத் திருமுறையுள்ளும்,
``சொல்லும் இடமன்று; சொல்லப் புகும்இடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
என்றால்நாம் என்செய்கோம் உந்தீபற``
-திருவுந்தியார் 29
எனச் சாத்திரத்துள்ளும் கூறப்பட்டமை காண்க.
இத்தகையோர்க்குச் சொல்வடிவாய வேதம் முதலிய நூல்களான் ஆகக்கடவது இன்மையின், `சுருதிக்கண் தூக்கமே கண்டார்` என்றார். தூக்கம் - மறதி; என்றது விரும்பாமையை.
``கற்றாரை யான்வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்``
(தி.8 திருவாசகம், திருப்புலம்பல் -3) என்றதூஉம் இந்நிலையில் நின்றமையாலாம். இதனால், அதீத நிலையினது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 

பொழிப்புரை :

சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங் களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக்கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற் கரிதாம்.

குறிப்புரை :

`தூங்குதல்` என்றது, தம் முனைப்பால் சிவமல்லாத பிற பொருளாகிய தம்மையும், தம்மைச் சார்ந்துள்ள உடம்பு, உலகம் என்ப வற்றையும் அறிதலை ஒழிந்து நிற்றலையாம். இதனையே `அறி துயில்` எனவும், `யோக நித்திரை` எனவும், `தூங்காமல் தூங்குதல்` எனவும் கூறுவர். தம்மையும், தம்மைச் சார்ந்த பாசங்களையும் மறந்திருத்தலால் தூங்குதலும், சிவத்தை உணர்ந்து நிற்றலால் விழித்திருத்தலும் ஆகின்ற இரு நிலைமையும் ஒருங்கு நிகழ்தலை இவ்வாறு உணர்த்துவர் என்க.

இதனால், அதீதத்தில் நின்றாரது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 

பொழிப்புரை :

அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.

குறிப்புரை :

ஆன்மாக்களினது அறிவு, மேல், ``களிம்பு`` (தி.10 பா.112) எனக் குறிக்கப்பட்ட ஆணவ மல சத்தியினது வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிறிதாயும், பெரிதாயும் நிற்கும். அதனால் அவ்வறிவு கொண்டு அவற்றால் விரும்பப்படுகின்ற பொருள்களும் இழிந்தனவும், உயர்ந் தனவுமாய் இருக்கும். வேண்டுவனவற்றை யன்றி வேண்டாதனவற்றைத் தரின் பயன்படாது ஒழியுமாதலின், வேண்டுவார் வேண்டுவனவற்றையே அவன் தருகின்றான் என்க.
``வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்`` -தி.6 ப.23 பா.1
என்று அருளிச் செய்ததும் இதனையேயாம். பின் இரண் டடிகளில் வெளிப்படைப் பொருள் இனிது விளங்கிக் கிடத்தலின், உள்ளுறைப் பொருளே உரைக்கப்பட்டது. `பொதுச்செயல்` என்றது, `தன்பொருட்டன்றி ஆன்மாக்கள் பொருட்டுச் செய்யும் செயல்` என்றபடி. `அச்செயல்களை வேண்டு வார் வேண்டுமாறே செய்தலின், அஃது அவனுக்குக் கோட்டம் ஆகாது` என்றற்கு நடுவு நிலைமையைக் குறித்தார். அதனால், `பெத்தான் மாக்களுக்கு உலகியலையும், முத்தான்மாக்களுக்கு வீட்டினையும் தருகின்றான்` என்பது போந்தது. படைப்புப் பல படியாய்க் காணப் படுதற்கும் இதுவே காரணம் என்பது உணர்க. ``செவ்வானில் செய்ய செழுஞ்சுடர்`` எனவந்த செம்மை இரண்டனுள் முன்னது நடுவு நிலைமையையும், பின்னது திரிபின்மையையும் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றன. திரிபின்மை மெய்யறிவின் இயல்பாகலின், அதுவே அதற்குப் பொருளாய் உள்ளது. செழுஞ்சுடர் சூரியன், மாணிக்கம், ஒப்புயர்வற்ற தன்மையைக் குறிக்க வந்த உவமை. இறுதிக்கண் `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், `சொல்லொணாப் பெருமையை உடைய அதீத வாழ்வினைச் சிவன் பலர்க்கும் அளியாது, ஒரு சிலர்க்கே அளித்தல் என்னை` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. இதனுள் உள்ளுறை உவமமாய் நின்ற பின்னிரண்டடிகளால் திருக்கோயிலுள் இருக்கும் திருமேனியது சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது என்க.

பண் :

பாடல் எண் : 19

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே

பொழிப்புரை :

மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!

குறிப்புரை :

மேல், ``அரன்`` எனவும், ``உமை`` எனவும் குறிக்கப் பட்ட அப்பன், அம்மை இவரது நிறம் முறையே செம்மையும், பசுமையும் ஆகலானும், அம்மையது வடிவம் அப்பனது வடிவிற் பொருந்தி நிற்றலானும் ``மாணிக்கத்துள்ளே ... ... ... மாடமாய்`` என்றார். ஆணிப் பொன் பிற பொன், எல்லாவற்றின் மாற்றினையும் அளத்தற்கு உரையாணியாய் நிற்கும் பொன். `மன்றினில் நின்று` என ஒரு சொல் வருவிக்க. ``என்ன`` என்ற வினா, `எத்துணையாவன` என்னும் பொருட்டாய், அளவின்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 20

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

பொழிப்புரை :

மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.

குறிப்புரை :

`ஆதலின் அவர்க்கு மீளப் பிறவிக்கு வித்தாகிய வினை உண்டாதல் இல்லை` என்பதாம். `பேசுதல்` என்பது, `அளவ ளாவுதல் - தொடர்புறுதல்` என்றவாறு. `அஃது இல்லை` எனவே, உலகத்தில் நின்றே அதனின் நீங்கிநிற்றல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

பொழிப்புரை :

பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.

குறிப்புரை :

``பெருமை, சிறுமை`` என்பவை உலகியல் பற்றிக் கூறியவை. உலகியலில் பெரியராய்த் தன்னை நினையாதவர்க்கு இறைவன் அரியனாயும், உலகியலில் சிறியராயினும் தன்னை நினைவார்க்கு எளியனாயும் நிற்றலை,
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல். 143. 44
என்னும் திருவாசகத்தான் அறிக. `அவனது இத்தன்மையை அறிந்து, அன்பர்கள் முனைப்பின்றி அவன்பால் அடங்கி நிற்பர்` என்றற்கு இவற்றை எடுத்தோதினார். `கண்டறிவார், உண்டறிவார்` என்பன போல `அறிந்தறிவார்` என்பது ஒருசொல்லாய் நின்றது.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. -குறள் 126
எனத் திருவள்ளுவர் புலனடக்கத்திற்கு இவ்வுவமையைக் கூறினார்.
புலனடக்கித் தம்முதற்கண் புக்குறுவர் போதார்
தலன்நடக்கும் ஆமை தக.
எனத் திருவருட்பயனிலும் (பா.94) கூறப்பட்டமை காண்க. `கேட்டிருந்தார்` என்பது பாடம் அன்று.
இம் மூன்று திருமந்திரத்தானும், `அதீத நிலையில் நிற் போர்க்கு அறிவு இச்சை செயல்கள் உலகிடைச் செல்லுமாயின், அவை திருக்கோயில் வழிபாடு முதலிய அன்பு நெறியிற் செல்லுதலல்லது பிறிதாற்றிற் செல்லா`` என்பது கூறப்பட்டது. இந்நிலை ஞானசம்பந்தர் முதலிய நால்வரது செயல்களால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 22

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற பாலில் உள்ள நெய் அப் பாலினுள் வேற்றுமையின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமை அற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப் பொருளில் அழுந்திநிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மாத் தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று, என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்.

குறிப்புரை :

`குற்றம்` என்றது வேற்றுப் பொருளாகிய பிரையை. பாலில் பிரை சேருமாயின், அஃது அதனைத் திரித்து அதன்கண் உள்ள நெய்யை வேறாகச் செய்யுமாதலின் அதனைப் ``புரை`` என்றார். உரை அறுதலாவது, சொல்லாய் வேறு நில்லாது பொருளாய் உணர்வோடு ஒன்றுதல்; என்றது அநுபூதி நிலையை. எனவே, `ஆசிரியனது அருண்மொழியை, கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் அளவிற் கொண்டொழியாது, நிட்டை நிலையில் அநுபவமாகக் கைவரப் பெற்றவர், உடம்பு நீங்கியபின் சிவனோடு இரண்டறக் கலத்தலாகிய சாயுச்ச பரமுத்தியை எய்துவர்` என்றவாறாம். `கரையற்ற சோதியாய்` என்றார், பின்வரும் பொருட்குத் தோற்றுவாயாதற்கு. ஆக்கச்சொல் தொகுத்தல். சத்து - மெய்ப்பொருள்; சிவம். இக்கலப்பு முன்பே உள்ளதன்றிப் புதுவதன்றாகலின், `அஃது இயற்கையாய் விடும்` என்றற்கு, ``கலந்த சத்தாமே`` என்றார். ``அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் சூ.8) என்றார் மெய்கண்டதேவரும்.
இதனால், இவ்வுலகில் அதீதத்தைப் பெற்றோர் பின்னர் எய்தும் பயன் கூறப்பட்டது.
``காயம்ஒழிந் தால்சுத்த னாகி ... ...
... ... ... ... ... ...
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீழ் இருப்பன்
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே`` 2
எனச் சிவஞான சித்தியினும் (சூ. 11.1) இவ்வாறே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. 

பொழிப்புரை :

சடமாகிய சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும், சடமாகிய தத்தம் காரணத்துள்ளே சென்று சேர்ந்துவிடுமாயின் அதன்பின் சித்தாகிய ஆன்மாவிற்குச் சித்தாகிய சிவத்தையன்றிச் சாருமிடம் வேறுண்டோ? இல்லை. அதனால் அந்நிலையில் அப் பயனைத் தரக் கருதியே குருவாய் வந்து ஆண்டுகொண்ட திருவருளாகிய வெள்ளத்தின் செயலால், தூய பரவெளியில் விளங்கும் சிவமென்னும் ஞாயிறாகிய பேரொளியிடத்து ஆன்மா என்னும் விண்மீனாகிய சிற்றொளி சென்று சேர்ந்து ஒன்றாய்விடும்.

குறிப்புரை :

பின்னர் `சித்திற்குச் சித்து இடம்` என்பது வருதலால், முன்னர், `சடத்திற்குச் சடம் இடம்` என்பது பெறப்பட்டது. `ஒரு பொருள் தன்னினப் பொருளொடு சேர்தலன்றி, வேற்றினப் பொருளொடு சேராதாயினும், சித்தாகிய ஆன்மா, சடமாகிய தத்துவங் களோடு சேர்ந்திருந்தமை, மதுவுண்டவனுக்கு அம்மயக்கத்தால் உள தாகும் தலைதடுமாற்றம் போல, ஆணவ மலமாகிய குற்றச் சார்பினால் உளதாயது` என்பதும், `அக்குற்றம் நீங்கவே, ஆன்மா அம் மயக்கம் நீங்கப் பெற்றுச் சிவத்தை அடையும்` என்பதும் உணர்த்துதற் பொருட்டுச் சடத்திற்குச் சடமும், சித்திற்குச் சித்துமே இடமாதலைக் குறித்தார். இன்னும், ``சுடரில் சுடர்சேரும்`` என்றதும் அதுபற்றி. இதனால், உயிருக்கு உலகை நோக்கிச் செல்லுதல் செயற்கையும், சிவத்தை நோக்கிச் செல்லுதல் இயற்கையும் ஆதல் பெறப்பட்டது. இச் செயற்கை இயற்கைகளை,
சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறைசெய் புலன்உணர்வின் தீர்ந்து - சிறைவிட்
டலைகடலிற் சென்றடங்கும் ஆறுபோல் மீளா
துலைவில்அரன் பாதத்தை உற்று.
என (சிவஞானபோதம் சூ.8) விளக்கினார் மெய்கண்ட தேவர்.
தூநிழல் ஆர் தற்காருஞ் சொல்லார் தொகும்இதுபோல்
தானதுவாய் நிற்கும் தரம். -திருவருட்பயன் 61
என்னும் திருவருட்பயனும் ஆன்மாவிற்குச் சிவத்தைச் சார்தலே இயற்கை என்பதை விளக்கிற்று.
`இருபொருள் ஒன்றாதல் எவ்வாறு` என்பார்க்கு விளக்கமாக, ``சுடரில் சுடர் சேரும்`` என்றார். சுடரில் சுடர் சேர்தல், நீரில் நீர் சேர்தல் போல, ஒருபொருள்தானே பிற பொருளது இடையீட்டால் இரண்டாய் நின்று, அவ்விடையீடு நீங்கியபின் முன்போல ஒன்றாதலாகிய ஐக்கியம் அல்லாமை உணர்க. சுடரில் சுடர் சேர்ந்தவழியும் சேர்ந்தது பொருளால் வேறேயாய் நிற்குமாற்றை,
``வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல`` -சிவஞானபோதம் சூ.8
என விளக்கினார் மெய்கண்டதேவர். இவ்வுண்மை அறியாதார், `உடம்பு நீங்கியவழி ஆன்மா சிவத்தொடு சேர்ந்து ஒன்றாதல், குடம் உடைந்தவழி, அக்குடத்தினுள் நின்ற ஆகாயம், புறத்து நின்ற ஆகாயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போலும்` எனத் தமக்குத் தோன்றியவாறே உரைப்பர். தத்துவங்களுள் ஒடுக்க முறையில் முன் நிற்பன மாபூதங்களே யாயினும், தன்மாத்திரைகளையே முதலாகக் கூறினார். அவை அவற்றிற்கு முதலாய் அவை ஒடுங்கும் இடமாதல் பற்றியும், நிலம் நீர் முதலிய பூதங்கள் ஒன்றின் ஒன்று ஒடுங்கும் என்றல் சிவாகம நெறியாகாமை பற்றியும் என்க. உருவகமாய் வந்த அப்பு, ஆகு பெயராய் நின்றது. அருளையுடையோன் செயலை அருளின் செயலாகவே கூறினார். ``அப்பில்`` என்பதில் இல், ஏதுப் பொருட் டாகிய ஐந்தாம் உருபு.
இதனால், `மேற்கூறியவாறு கரையற்ற சோதி கலந்த சத்தாமாறு இது` எனச் சிவசாயுச்ச பரமுத்தியில் ஆன்மா நிற்கும் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொழிப்புரை :

கடல்நீரில் ஒன்றாய் நிற்கும் உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் அந்நீரின் வேறாய் உருவெய்தி `உப்பு` எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடைய தாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.

குறிப்புரை :

செய்யுட்கு ஏற்ப, ``உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த`` என்றாராயினும், `உருச்செய்து உப்பெனப் பேர் பெற்ற` என ஓதுதல் கருத்தென்க. ``அவ்வுரு`` என்றதில் ``உரு`` என்றது பொருளை. ``கூடியது`` என்பதில் `ஆயின்` என்பது வருவித்து, ``கூடியதாயின்`` என உரைக்க. ``செப்பினில்`` என்பதில், இன், எதுகைநோக்கித் தவிர்வழி வந்த சாரியையாய் நின்றது. `செப்பிடில்` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.
இஃது, `ஆன்மாச் சிவத்தோடு ஒன்றாதலே இயற்கை; வேறு நிற்றலே செயற்கை` என்பதனைத் தக்கதோர் உவமங்காட்டி வலியுறுத்தவாறு. உப்பு, நீரின் குணமாகாது வேறு பொருளேயாதல் அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 25

அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 

பொழிப்புரை :

எல்லாப்பொருளும் அடங்கி நிற்கும் இடமாகிய `அண்டம்` என்னும் பேருருண்டையுள் அணு என்னும் சிறியதோர் உருண்டை அடங்கி நிற்பதல்லது, அதற்குப் புறம்பாய் வேறோ ரிடத்தில் நிற்றல் இல்லை. அதுபோலப் பலவகை உடம்புகளை எடுத்து அவற்றின் அளவாய் நிற்கின்ற சிற்றுயிர்களுக்குப் பிறவிக் கடலி னின்றும் நீங்கி அலமராது நிலைத்து நிற்கும் கரையை அடைவதாயின் அக்கரை, என்றும் அலமரல் இல்லாது ஒருபெற்றியே நிற்பவனாகிய சிவபெருமானது திருவடியே. இதுவன்றி வேறு கரை உண்டோ?

குறிப்புரை :

அண்டம் - உருண்டை; ``அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்``(தி.8 திருவண்டப்பகுதி.1) என்றார் மணிவாசகரும். `இடங்கொண்ட தன்றி வேறில்லை` எனச் சில சொல் வருவித்து உரைக்க. ``இதுவன்றி உண்டோ`` என்பதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. கடம் - குடம். அஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது.
இதனால், சிவம் பெரிய பொருளாதலும், உயிர் அதனிற் சிறிய பொருளாதலும் உணர்த்தி, மேற்கூறியவாறு சீவன் சிவத்துள் அடங்குமாறு கூறப்பட்டது. `திடம்பெற நின்றானே` என்று ஒழியாது `அவன் திருவடிதானே` என்றதும், சிவனது பெருமைக்கண் சீவன் சிறியதோர் அளவில் அடங்கும் என்றற்காம். இதனானே, உயிர்கட்குப் பயன் தருபவன் இறைவன் என்னாது, அவனது அடியே என நூல்கள் கூறுவதன் உண்மையும் விளங்கும். இன்னும் சித்தாந்த முத்தி, `அடிசேர் முத்தி அல்லது அருள்சேர் முத்தி` எனப்படுமாறும் இதனானே விளக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 26

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 

பொழிப்புரை :

உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லு மிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம் பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத்தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.

குறிப்புரை :

என்றது, `மிகப்பெரியோனாகிய சிவபெருமானது பேராற்றலுள் ஒரு சிறு கூறுதானே எண்ணில்லாத உயிர்கட்கும் எல்லா மாய் நின்று பயன்தரும்` என்றவாறு. இதனானே, சத்தியைத் திருவடி யாகக்கொண்டு, `அத்திருவடி தானே எல்லாம் செய்ய வல்லது` என வும், `உயிர்கட்கு வீடுபேறாய் நிற்பது அத்திருவடி நிழலே` எனவும் கூறுதல் மரபாயிற்று என்பதும் உணர்ந்து கொள்ளப்படும். சத்தியே திரு வடி எனவே, `ஞானசத்தி, கிரியாசத்தி` என்பனவே இரண்டு திருவடி களாதல் உணரப்படும். இச்சை இவ்விரண்டினும் விரவிநிற்பதாம்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள் 2
என்பது முதலாகத் திருவள்ளுவ நாயனாரும் திருவடியையே பலவிடத்தும் கூறினார். திருநாவுக்கரசர், `திருவடித் திருவிருத்தங்கள், திருவடித்திருத்தாண்டகங்கள்` என்பவற்றால் திருவடிகளின் பெருமையைப் பலபட விரித்தருளிச் செய்தார். மாணிக்கவாசகர் தி.8 திருவெம்பாவையின் இறுதித் திருப்பாட்டில் திருவடியே எல்லாமாய் நின்று ஐந்தொழில் செய்வனவாக அருளிச்செய்தார். இன்னும் திருமுறைகளில் யாண்டும் திருவடிப் பெருமையே பேசப்படுதல் வெளிப்படை. இவ்வாற்றால், `யாவரும், யாவர்க்கும் சிவபெரு மானது திருவடியே பற்றாதல் உணர்ந்து அதனைப் பற்றி வாழ்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது.
இதனால் திருவடியது சிறப்புக் கூறும் முகத்தால் சிவனது சிறப்பு வகுத்துணர்த்தப்பட்டது. இதனானே சிவநெறிக்குப் பொருளாவது யாண்டும் சிவனது திருவடியே என்பதும் முடித்துக் கூறப் பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 27

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. 

பொழிப்புரை :

`பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத் திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக்கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.
ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெய ராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.

குறிப்புரை :

ஐய உணர்வும், திரிபுணர்வும் ஞானம் ஆகாமையின், மெய்யுணர்வை, ``தெளிவு`` என்றார். தெளிவு தருவனவற்றைத் தெளி வாகப் பாற்படுத்து ஓதினார். ஞானாசிரியரைச் சிவமாக உணராது நம்மனோருள் ஒருவனாக எண்ணுதல் ஆணவ மலச் சார்பினால் நிகழ்வதாகலின், அச்சார்புடையார்க்கு உண்மை ஞானம் விளங்க மாட்டாது என்பதனை ஈற்றில் நின்ற தேற்றேகாரத்தால் பெற வைத்தார். அதனால் மலம் நீங்கப் பெற்றார்க்கு இவை இயல்பால் நிகழும் என்பது பெற்றாம்.
`உலகிற்கு ஆசிரியரும், அடைந்தவர்க்கு ஆசிரியரும், இருமை ஆசிரியரும்` என ஆசிரியர் முத்திறப்படுவர். அறம் முதலிய உறுதிப் பொருள் நான்கனுள் ஒன்றையாயினும், பலவற்றையாயினும் பற்றி முதலும், வழியும் ஆன நூல்களையாயினும், உரைகளையாயினும் செய்தோர் உலகிற்கு ஆசிரியர். இவர் திருவள்ளுவரும், ஞான சம்பந்தர் முதலிய சமயாசாரியர் நால்வரும் போல்பவர். இனி உறுதிப் பொருள்களை வரலாற்று முறையாற் கேட்டுணர்ந்து தம்மை அடைந்தவர்கட்கு அவற்றைக் கேட்பித்தல் சிந்திப்பித்தல்களைச் செய்விப்போர் அடைந்தவர்க்கு ஆசிரியர். இவர்களை, `தாதாரகுரு` என்பர். இவர் சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் போல்பவர். மேற்கூறிய இருதன்மையும் உடையோர் இருமை ஆசிரியர். இவர் மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர் போல்பவர். இம்மூவருள்ளும் சில குடியினர்க்குமட்டும் ஆசிரியராய்க் குலகுருவாய் நிற்பாரும் உளர்.
இவருள் உலகாசிரியர் தவிர ஏனையோருள் எழுத்தும், சொல்லும் அவற்றின் வடிவளவில் கற்பிப்பவர் `கணக்காயர்` எனப் படுவார். `உபாத்தியாயர், ஓதுவிப்பவர்` என்றெல்லாம் கூறுதல் இவரையே. பலவகைச் செய்யுட்களையும், நூல்களையும் பொருள் உணர்வு பெறக் கற்பிப்பவர் `கற்பிக்கும் ஆசிரியர்` எனப்படுவார். `வித்தியா குரு` என்றல் இவரையே. மணவினை, பிற்கடன் (உத்தர கிரியை, அந்தியேட்டி) முதலியவற்றை முன்னின்று செய்விப்பார், `பார்ப் பார்` எனவும், `ஐயர்` எனவும் சொல்லப்படுவர். இவருள்ளும் சிலகுடி யினர்க்கு மட்டும் உறுதி உணர்த்திக் குல குருமாராய் நிற்ப வரும் உளர் என்க. `புரோகிதர்` என்றல் இவரையேயாம். இவர், தெய்வங்கட்குச் சீற்றந்தணிவிக்கும் கடன் முறைகளையும் செய்வர் என அறிக.
சமய விசேட தீக்கைகளால் சிவவழிபாட்டினைப் பிறர்க்கு அளிப்பவர்களும், திருக்கோயில்களில் சிவனது திருமேனிகளை உலக நலத்தின் பொருட்டு வழிபடுகின்றவர்களும் `வழிபாட்டாசிரியர்` எனப்படுவர். `கிரியாகுரு` எனப்படுவார். இவரே. இனிச் சமய விசேட தீக்கைகளைப் பெற்றுச் சிவதன்மதத்திலும், சிவயோகத்திலும் பயின்ற தன் பயனாக மலபரிபாகம் வரப்பெற்றவர்க்கு அப் பரிபக்குவத்தை அறிந்து நோக்கம், பரிசம் முதலியவற்றால் பாசத்தை அறுத்தலாகிய நிருவாண தீக்கையின்வழிச் சிவனது திருவடி ஞானத்தை உணர்த் துவோர் `அருளாசிரியர்` எனப்படுவார். `ஞானகுரு` என்றும், `ஞானா சிரியர்` என்றும் சொல்லப்படுவார் இவரே. இங்குக் கூறப்பட்டு வந்த ஆசிரியன்மார்கள் அம்முறையானே ஒருவரில் ஒருவர் உயர்ந்தோர். அனைவரிலும் உயர்ந்தோர் அருளாசிரியாராகிய ஞானகுருவே. சிவன் ஆசானாய் நிற்றல் இந்த ஞானகுருவிடத்தேயாம். அதனால், `குருவேசிவன்` (தி.10 6ஆம் தந்திரம்) என்றற்கு முழுதுரிமை உடையவர் ஞானாசிரியரே.
``எழுத்தறிவித்தவன் இறைவனாகும்`` -நறுந்தொகை
``தெய்வத்தைப் போல மதிக்கிற்பான்``
-தொல். பாயிரம் உரை நச்சினார்க்கினயம்
என்றாற் போல ஏனை ஆசிரியன்மாரையும் இறைவனாகக் கூறுதல் முகமனுரையேயாம். அதனால், இத்திருமந்திரத்துள் ``குரு`` என்றது அனைவரிலும் மேலாய ஞானகுருவையே என்பது இனிது விளங்குதல் காண்க. இவரது சிறப்பினை இவ்வாறே,
ஞானயோ கக்கிரியா சரியை நான்கும்
நாதன்றன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி
யானஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேஉரியன். ஆதலினால், யார்க்கும்
ஈனமிலா ஞானகுரு வேகுருவும். இவனே
ஈசனிவன் றானென்றும் இறைஞ்சி ஏத்தே.
எனச் சிவஞான சித்தி (சூ. 12,5) வகுத்துணர்த்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 28

தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. 

பொழிப்புரை :

ஒருவன், `நான்` என்னும் முனைப்பு இன்றி ஞானாசாரியரை அடுத்து நிற்பானாயின், அவனது ஐம்புல ஆசை தன் னியல்பில் உலகப் பொருள்கள் மேல் செல்லாது அவன்வழிப்பட்டுச் சிவனிடத்திற் செல்வதாய்ப் பள்ள மடையில் வீழ்ந்து பயனின்றிக் கழிந்துகொண்டிருந்த நீர் அம்மடை அடைக்கப்பட்ட வழித் தேங்கி நின்று மேட்டுமேடையிற் போய்ப் பாய்ந்து பயன்தருதல் போலத்தன் அறிவினிடத்தே மாறுவதாகும்.

குறிப்புரை :

`ஆதலின் ஞானத்தைப் பெற்றவனும், பயிற்சி வயத் தால் மீள அஞ்ஞான வயப்படாதிருத்தற்கு ஞானாசாரியரை விட்டு அகலாது நின்று வழிபடுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். ``புலன்`` அவற்றின்மேல் செல்கின்ற ஆசை. அஃது ஒன்றேயாதல் பற்றி, ``தானே`` என ஒருமையாற் கூறினார். ``தன் வசம்`` இரண்டனுள் முன்னது, மாணவன்வசமும், பின்னது ஆசையின் வசமுமாம். தன் வசம் போயிடும் - சுதந்திரம் நீங்கப்பெறும். ``தன்னில்`` என்றதும், மாணவன் அறிவையே தன்முனைப்பு இழந்து செல்லுதலைத் ``தனித்து`` என்றார். `தனித்துத் தானேயாய்` என மாற்றி ஆக்கம் வருவித்து உணர்க. எம் பிரானை - எங்கள் சிவபெருமானை. ஞானத்தை உணர்த்துபவன் அவனேயாகலின், குருவை இவ்வாறு கூறினார். சந்தித்து - தலைப்பட்டு என்றது `பிரியா நின்று` என்றவாறு. `சந்தித்தலால்` என்பது ``சந்தித்து`` எனத் திரிந்து நின்றது. `சந்தித்தலால் ஆயிடும், போயிடும், மாறும்` என மேலே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 29

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே. 

பொழிப்புரை :

நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிருவுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.

குறிப்புரை :

`ஆதலின் பிறரும் தம் ஆசிரியரிடத்து நிற்க` என்பது குறிப்பெச்சம். செம்மை - திரிபின்மை; அதனை உடையது அருள் என்க. `தாளிணை, மேனி, நாமம்` என்பவற்றில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. திருவை நாமத்திற்கும் கூட்டுக. `வந்தித்தல்` என்பது இங்கு வழுத்துதலாகிய வழிபாட்டின்மேல் நின்றது.

பண் :

பாடல் எண் : 30

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

பொழிப்புரை :

உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெரு மானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந் தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.

குறிப்புரை :

``புண்ணியராயினார்`` என்புழித் தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தால் ஏனையோரது நிலை குறிக்கப்பட்டது. இதனால், `இப்பயனைப் பெறவேண்டின், பிறரும் அருளுருவான தம் ஆசிரியரை நினைக` என்பது குறிப்பெச்சமாய் நிற்றல் அறிக.

பண் :

பாடல் எண் : 1

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தி னின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப் படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.

குறிப்புரை :

`குறிக்கோள்` என்றது மக்கட் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை. அதனை, எடுத்த பிறப்பிலே அடையக் கருதுவார் அதன்பொருட்டு யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்வாராகலின், அத்தகையோரது உடம்பைத் தீயினாற் சுடப்பட்ட பாண்டத்தோடும், அக்கருத்தில்லாதாரது உடம்பைத் தீயினாற் சுடப்படாத பாண்டத்தோடும் உவமித்தார். இதனானே, பின்னர்க் கூறப்படும் காய சித்தி உபாயத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.
``எழிலை ஆழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந் துருகி
அழலைஆழ் புருவம் புனலொடும் கிடந்தாங்கு`` -தி.9. ப.17 பா.7
என இவ்வுவமையைப் பிற்றை ஆசிரியர், திருவருள் கைவரப் பெற்றார் பெறாதாரது உணர்வுகட்குக் கூறினார். இனி இங்கும் அவ்வாறே கொண்டு, ``மண்`` என்றது உடம்பையும், `பாத்திரம்`` என்பது அதனை ஏற்று ஒட்டி நிற்கின்ற உயிரது உணர்வையும் குறிப் பனவாக வைத்து உரைத்தலும் ஒன்று. இவ்வுரைக்கு மீண்டும் மண் ணாதல் மீளப் பிறவியில் வீழ்தலும், இறத்தல் பயனின்றி ஒழிதலு மாகும். ஆகவே, `அவ்வாறாகாது, மட்பாண்டத்தை மழைவரும் முன்னே சுட்டுக்கொள்ளுதல் போல, மக்கட் பிறப்பில் அமைந்த உணர்வை அப்பிறப்பிற்கு இறுதிக் காலம் வருதற்கு முன்னே அரு ளுணர்வுடையதாக்கிக் கொள்க. என்பது இதனாற் கூறப்பட்ட பொருளாகும். இரண்டுரைக்கும் விண்ணின்று விழும் வீர் உடம்பை வீழ்த்துகின்ற இறுதிக் காலமேயாம்.
இதனால்,மக்கட் பிறப்பின் பயனை அடையமுயலுதலைப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
``அன்றறிவாம் என்னா தறம்செய்க`` -குறள். 36
எனவும்,
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும். -குறள். 335
எனவும் திருவள்ளுவ நாயனாரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 

பொழிப்புரை :

பல பண்டங்களை நிரப்பிவைத்துள்ள இல்லம் போல்வதாகிய உடம்பு, உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தொழியுமாயின், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம் பினுள் நின்ற உயிராகிய இல்லத் தலைவரைப் பின் தொடர்ந்து செல்லும் வலியிலராவர். இனிச் சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் அல்லது பிறிதொன்றும் அவரோடு உடன் செல்லாது.

குறிப்புரை :

`அதனால், பெண்டிர், மக்கள் முதலியோர்க்கு உழைத்தலை விடுத்து, அவ்விரண்டையுமே பெற முயல்க` என்பதாம். `பெண்டிர் மக்களேயன்றிப் பிறவும் செல்லா` என்றற்கு, ``நடவாதே`` எனப் பின்னருங் கூறினார்.
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செயல் ஆவதென் ஏழைகாள்!
நல்லத் தான் நமை ஆளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே. -தி.5 ப.43 பா.1
என்றார் அப்பரும்.

பண் :

பாடல் எண் : 3

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

பொழிப்புரை :

உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.

குறிப்புரை :

`ஆதலால், ஊரவரையும் உறுதி என்று நினையாது, மேற்குறித்தவற்றைப் பெற முயல்க` என்பதாம். ஊர், ஆகுபெயர்.
ஊர், `பிணம்` என்று பேரிட்டு எடுத்தலை,
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதே
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. -திருவெண்பா. 8
என ஐயடிகளும் கூறினார்.
இன்னும் அவர்.
இல்லும் பொருளும் இருந்த மனையளவே;
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியேல் நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. -திருவெண்பா. 14
என அருளிச் செய்தமை அறிக. இல் - மனைவி. துடிப்பு - அடக்கம் செய்ய விரைதல்.

பண் :

பாடல் எண் : 4

காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே. 

பொழிப்புரை :

உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப் பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீள வந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.

குறிப்புரை :

`கால் இரண்டும் முகட்டு அலக்கு ஒன்றும் உள` எனவும், `மேற்கூரையும் உள` எனவும், `உயிர் பிரியும்; பிரிந்தால் முன்போல் மீளப் புக அறியாது` எனவும் கொள்க. `நில்லாது பிரிதலும், பிரிந்தால் மீளப் புகாமையும் உடைமை யாலும், வேறாகச் சென்று புகப்படுவது இத்தன்மைத்தாய மக்களுடம் பேயாய் இருக்கும் என்றல் கூடாமையாலும் அங்ஙனம் பிரியுங்காலம் வருதற்கு முன்பே மேற்குறித்தவற்றைத் தேடிக்கொள்க` என்பதாம்.
என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தல்ஆர் குரம்பையின்
மூழ்கி டாதே
அன்பன்ஆ ரூர்தொழு துய்யலாம் மையல்கொண்
டஞ்சல் நெஞ்சே.
என(தி.2 ப.79 பா.8)ச் சம்பந்தரும்,
கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீரால் சுவரெடுத் திரண்டுவாசல்
ஏல்வுடைத் தா அமைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.
(தி.4 ப.83 பா.4) எனவும்,
``இருகாற் குரம்பை இதுநான் உடைய திது பிரிந்தால்
தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே``
(தி.4 ப.113 பா.2) எனவும், அப்பரும் உடம்பை இல்லமாக உருவகித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 5

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே. 

பொழிப்புரை :

`சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற் படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.

குறிப்புரை :

மேற்காட்டிய ஐயடிகள் வெண்பாவில் ``தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாமல்`` என வந்ததனை நோக்குக. `காக்கைக்குப் பலியிடுதல் ஒரு சடங்கு`` என்பர். ``காக்கைக்கே இரை யாகிக் கழிவரே``(தி.5 ப.90 பா.5) என்னும் அப்பர் திருமொழியால் உடல் மண்ணில் இடப்பட்டுப் பின் காக்கைக்கு இரையாதலும் கொள்ளப்படும். ``முது காட்டில் காக்கை உகக்கும் பிணம்`` (மூதுரை) என்ற ஔவையார் திருமொழியும் காணத்தக்கது. இனி, `இன்னோரன்னவை முறைப்படி அடக்கம் செய்யப்படாத உடம்பின் நிலைமையைக் குறித்தன` என்று ஒழிதலுமாம்.

பண் :

பாடல் எண் : 6

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :

உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சில வற்றை உசாவுதல் செய்தார்; அச்செயலுக்கிடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார்; படுத்தவர் படுத்துவிட்டவரே யாயினார்; மீள எழுந்திருக்கவில்லை.

குறிப்புரை :

`இவ்வாறாகின்றது சிலரது வாழ்க்கை` என்றவாறு. `நிலையாமை வரும் காலத்தை அறிந்தார் இல்லை; அதனால், செய்யவேண்டுவதை விரைந்து செய்தலே அறிவுடைமை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 7

மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

பொழிப்புரை :

நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலை வனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.

குறிப்புரை :

`எத்துணைப் பெருஞ் செல்வத்தாராயினும் `இறந்தார்` என்னும் இகழ்ச்சியைப் பெறாதொழிந்தவர் இல்லை. என்றவாறு.
மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். -நாலடியார் 21
என்று அறநூல் கூறுதலும் காண்க. ``சிவிகை`` என்றது. புகழ்வது போலப் பழித்தல். ``முக்கோடி`` என்றது சிலேடை.

பண் :

பாடல் எண் : 8

வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

பொழிப்புரை :

குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.

குறிப்புரை :

`இறவாதிருந்தால் தான் பெறுவது என்னை?` என்றற்கு முன்னிரண்டு அடிகளைக் கூறினார். வாசந்தி - குருக்கத்தி, இது களவிற்குரிய இடமாக இலக்கியங்களில் குறிக்கப்படும். `முதற் கண் மிக்க காதலுடையராய் இருந்தார்` என்பது உணர்த்தற்கு இக்களவு முறையை எடுத்தோதினார். `மணம் புணர்ந்தப் பதி` என்பது பாடம் அன்று. ஆசந்தி- பாடை. ``பாசம்`` என்றது, ``பாசம் பரஞ் சோதிக்கு`` (தி.8 திருவெம்பாவை -2) என்பதிற்போல், `அன்பு` எனப் பொருள் தந்து. `அன்பு`, `நார்` எனப் படுதலும் உணர்க. `பாசமும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அன்பை அறவே விட்டொழிதலை. அச் சுடுதலோடு ஒன்றாக ஒதினார்.

பண் :

பாடல் எண் : 9

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 

பொழிப்புரை :

உடல் நிலையை நாடியால் ஆய்ந்துணர்வோர் அவ்வாறு ஆய்ந்து கைவிட்டுவிட, அதன்பின் அறிவு அழிந்து, உட லாகிய தேர்க்கு அச்சாய் இருந்த உயிர் நீங்கிவிட, சோற்றை நெய்கலந்து சுவைபட உண்டு வாழ்பவனவாகிய ஐம்பூதக் கூறுகளும் அழிவன வாயின, அப்பொழுது, முன்பு, உடம்பால் தழுவப்பட்டிருந்த மனை வியும், செல்வமும் முன்போலவே இருக்கவும், அவ்வுடம்பு அவர்களை விட்டு வேறிடத்திற்குப் போக விடைபெறுவதுதான் கண்டது.

குறிப்புரை :

`கண்டது` என்பது சொல்லெச்சம். ``கை விட்டு`` என்பதை `கைவிட` எனத் திரிக்க. உடம்பைத் தாங்கி நடத்துதலின், உயிரை ``அச்சு`` என்றார். இஃது ஏகதேச உருவகம்.
``நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்`` -திருவெண்பா. 1
என்று அருளினார் ஐயடிகளும், `நெய்யட்டி உண்டும், மையிட்ட கண்ணாளோடு இன்புற்றும், செல்வத்தால் சிறப்பெய்தியும் நிற்பனவெல்லாம் உடம்பு உள்ள துணையுமே; ஆனால், அவ்வுடம்பு நிலைத்தல் இல்லையே` என்றபடி

பண் :

பாடல் எண் : 10

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே. 

பொழிப்புரை :

தீய ஊழ் விரைய வந்தமையால், தங்க நிழல் தரும் பந்தல்போல்வதாகிய உடம்பு நிலைகெட்டு விட்டது. அதனால் அதற்குள் கருவூலம் போல இருந்த உயிர், காவலற்றுக் கொள்ளை போகும் நிலையை (யமதூதுவர் கொண்டு செல்லும் நிலையை) அடைந்து விட்டது. பந்தலில் ஒன்பது வாயில்கள் அமைக்கப் படிருந் தன; அவை அனைத்தும் அடைபட்டு விட்டன. அன்புடைய சுற்றத் தார் என் செயவல்லார்! தொடர்ந்து அழுததோடு போய்விட்டனர்.

குறிப்புரை :

இத்திருமந்திரம் பிசிச்செய்யுள். இவ்வாறு வருவன இந்நூலிற் பல உள. பின்வந்த `சித்தர்` என்போர் இம்முறையைப் பெரிதும் கைக்கொண்டனர். துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு. நிலையாக நிற்கும் இடம் அன்மையால், உடம்பை, `வழியிலே தங்கும் பந்தல்` என்றார். திருவள்ளுவரும், `துச்சில்` (திருக்குறள். 340) என்றார். `மனைவி முதலாயினார் உண்மையில் அன்புடையர்களாயினும், அவர்களால் நிலையாமை விலக்க ஒண்ணாது` என்றபடி. `அதனால், இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 11

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.

குறிப்புரை :

`காட்டுச் சிவிகை` என்பது அடைவேறுபடுத்துப் பொருள்புலப்படுத்தல். இதனை, `வெளிப்படை` (வெளிப்படுத்தல்) என்பர். இங்ஙனங் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு. `நிகழ்வது` என்பது சொல்லெச்சம். ``நாட்டுக்கு நம்பி`` என்றது, சுட்டளவாய் நின்றது. `நம்பியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `அரசராயினும் நிலையாமையைக் கடக்கமாட்டார்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 12

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. 

பொழிப்புரை :

வினையாகிய மதிலால் சூழப்பட்ட உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்வன் தொண்ணூற்றாறு தத்துவதாத்து விகங்கள். அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர விைரய நீங்கும்.

குறிப்புரை :

செப்ப மதில் - செம்மையான மதில். மதில் இன்றிக் கோட்டை இன்மையால், மதில் சிதைதலை, `கோட்டை சிதைதல்` என்றார். `தத்துவதாத்துவிகங்களின் காரியமே உடம்பு` என்பதும், காரியம் தோற்றமும், முடிவுமாகிய எல்லைகளை உடையன ஆதலின், உடம்பாகிய காரியம் வினையின் எல்லையையே எல்லையாக உடையது என்பதும், `அதனால், அவ்வினை நீங்கவே, உடம்பு நீங்கும்; அதனால் நாடும், ஊரும் துணையாகா` என்பதும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 13

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே. 

பொழிப்புரை :

எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.

குறிப்புரை :

`அதற்குமேல் அவர்களால் என்ன செய்ய இயலும்! ஆகவே, நாட்டுக்கு நாயகனாகியும், ஊருக்குத்தலைமகனாகியும் இருக்க முயல்வதனால் பயன் என்னை` என்பதாம். மது, தேன் போன்ற அன்பு.

பண் :

பாடல் எண் : 14

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.

குறிப்புரை :

`ஆதலின் அவனையே நாடுக` என்பது குறிப் பெச்சம். `பிச்சு, எய்ச்சு` என்பன, `பித்து, எய்த்து` என்பவற்றின் சிதைவு.

பண் :

பாடல் எண் : 15

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 

பொழிப்புரை :

கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழி வார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.

குறிப்புரை :

`காலத்தாலும், இடத்தாலும் கட்டுண்டு கிடக்கும் அவர்களைப் பற்றுவதால் பயனில்லை` என்பதாம். ``கால்`` என்றது எல்லை. அயன்மையை `நீதியின்மை` என்றார்.

பண் :

பாடல் எண் : 16

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. 

பொழிப்புரை :

உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.

குறிப்புரை :

ஒருப்படாமைக்குக் காரணம், சிதைந்த, உடம்பு பெரிதும் தீ நாற்றம் வீசி, மக்களுக்கு இன்னல் விளைத்துத் தானும் அழுகியொழிவதாய் இருத்தலே. ``அதனால், பின்னர் அத்துணை நெருப்புக்கு முதலாகும் உடலை முன்னரே வெறுத்து உயிர்க்கு உறுதி தேடக் கருதுதலே அறிவுடைமையாம்`` என்றவாறு. ``ஓர் குயவன்`` இனம் பற்றிய ஒருமை, உயிர் நீங்கியபின், உடல் பலராலும் வெறுக்கப்படும் பொருளாம் என்பதனை,
``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே`` -தி.5 ப.90 பா.4
என்று அப்பரும் அருளிச்செய்தார், ``வைப்பர்`` என்றும், ``வையார்`` என்றும் உறழ்ந்து காட்டிய அதனால், பண்ணப்படும் முறையில் இரண்டும் ஒத்தல் பெறப்பட்டது. படவே, `உடல்களும் உலகெங்கும் தந்தையது உடம்பினின்றும் ஒரு கூற்றை எடுத்துத் தாயின் வயிற்றில் வைத்து உருப்பெருமாறு படைப்புக் கடவுளால் ஆக்கப்படும்` என்பது கொள்க. இத் திருமந்திரம் வேற்றுமையணி. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 17

ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே. 

பொழிப்புரை :

தலைக்கூடைபோல உலகங்களைத் தாங்கி நடத்தும் சிவதத்துவங்கள் ஐந்து; அக்கூடையில் உள்ள பொருள்போல வித்தியா தத்துவம் ஏழும் பிரகிருதி ஒன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகிய பதினெட்டு: ஒரு வீட்டினுள் அமைந்த பல கட்டுக்கள் போல உடலில் ஆறு ஆதாரங்கள்; அக்கட்டுக்களில் அமைந்த அகன்ற முற்றம்போல வாயுக்கள் பத்தும்; நாடிகள் பத்தும், `காமம் குரோதம் முதலிய குற்றங்கள் ஆறும், நால்வகை வாக்கும் ஆகிய முப்பது; அம்முற்றத்தை மூடிய பந்தல் போல யோனி பேதத்தால் ஒன்பதாகிய மக்கள் உடம்பு, அப்பந்தலில் அமர்ந்து உண்ணும் பந்திபோலச் சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், குணம் மூன்றும், இன்ப துன்பங்களாகிய பயன் இரண்டும் ஆகிய பதினைந்து உளவாகி இயங்கின. ஆயினும், உடம்பு வெந்து கிடப்பதையே பார்க்கின்றோம். மற்றவை என்னாயின என்பதை அறியோம்.

குறிப்புரை :

பறி - கூடை. கடை - வாயில்; கட்டு. `ஆறு சடை` என்பது பாடம் அன்று. சந்து - வெளி. வாயுக்கள் முதலியவற்றின் இயக்கமே உயிரின் உணர்வு நிகழ்ச்சிக்கு ஏதுவாகலின் அவற்றை நன்கு உலாவும் முற்றம் என்றார். சார்வு - சார்ந்த பொருள். ``சார்வு பதினெட்டு` என்பதனை ``தலைப் பறி`` என்றதன்பின்னர்க் கூட்டுக. உண்ணப்படும் (நுகரப்படும்) பொருள்களாகிய சத்தம் முதலியவற்றை உண்பன போலக் கூறினார். இதனால், உடலின் ஆக்கப்பாடும், செயற்பாடும் கூறி, அவை அனைத்தும் நிலையாமை உடையவாதல் உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 18

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 

பொழிப்புரை :

அட்டில் தொழில் செய்வார் வறிய குடும்பத் தலைவன் ஒருவனுக்கு அத்திப் பழத்தையும், அறைக் கீரை விதையையுமே திருத்தி உலையில் இட்டு உணவும், கறியுமாக ஆக்கிவைத்தார்கள். அந்த உணவை அக்கறியோடு உண்பதற்கு, வேண்டப்படாத கூரிய கத்தியை எடுத்து அவாவுடன் புகுந்த அத்தலைவன், அதற்குள்ளே சுடுகாட்டை அடைந்தான்.

குறிப்புரை :

`இவ்வாறு விரைய வருகின்றது நிலையாமை` என்பதாம். அத்தி, எலும்பு ஆகலின், அதனிற் பழுத்த பழம் போல்வது பருவுடம்பு (தூல தேகம்). அறைக்கீரை, அறுக்க அறுக்கத் தளிர்த்து வளர்வதாகலின், அதனோடொப்பது, ஒரு பருவுடம்பு நீங்க, வேறு பருவுடம்பைத் தொடர்ந்து தரும் நுண்ணுடம்பு (சூக்கும தேகம்). இதனை, ``காலம் உற்று - நீக்கிட மரம் பின் வேர் ஓர் நீள்மரம் நிகழ்த்துமாபோல்`` (சிவஞானசித்தி. சூ. 2. 48) என்றார் அருள் நந்தி சிவாசாரியரும். `கூழ்` என்னும் பொதுச் சொல்லால் உணவும், கறியும் கொள்ளப்பட்டன. அவ்விருவகை உடம்புகளாலும் உண்டாகும் பயனை அவையேயாகச் சார்த்திக் கூறினார். பருவுடம்பே புறப்பொருளை நுகர்வதாகலின் அதனை உணவாகவும், அதற்குத் துணைசெய்து நிற்பதே நுண்ணுடம் பாகலின் அதனைக் கறியாகவும் உருவகித்தார். கொத்தி உலைப் பெய்து அடுதல் உயிரின் பக்குவத்திற்கேற்ப அமைத்தல். ``உண்ணக் கத்தி எடுத்தவர்`` என்றது மாம்பழம், பலாப்பழம் முதலியவை ஆயின் அவற்றை உண்ணக் கத்தி வேணடும்; அத்திப் பழம்; அது தானும் வேவித்த பழம்; அதை உண்ணக் கத்தி எதற்கு என்னும் குறிப்பினது. ``கத்தி எடுத்தவர்`` என்றது, `இறைவன் திருவருளை நாடியவர்` என்ற தாம். இறைவன் திருவருளைப் பிறவிக் கடலைக் கடத்தற் பொருட்டு நாடுதலே முறை, அதனை விடுத்து, உலகப் பயனைப் பெறுதற்கு நாடுதல் ஏன் என்பது பின்னிரண்டடிகளின் உள்ளுறைப் பொருள்.
``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீஅறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 38
எனவும்,
``முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்தென் றுந்தீபற
அப்பழம் உண்ணாதே உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 41
எனவும் வரும் திருவுந்தியாரையும்
முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னும் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏகக் கொடிஎழுங்காண் இன்று. -மெய். திருக்களிற்றுப்படியார் 38
என வரும் திருக்களிற்றுப்படியாரையும் காண்க.
இறைவனை உலகப்பயன் கருதி வழிபடுதல் `காமிய வழி பாடு` என்றும், பயன் கருதாது வழிபடுதல் `நிட்காமிய வழிபாடு` என்றும் சொல்லப்படும். அவற்றுள் காமிய வழிபாடு செய்யத் தொடங்கினோர் அது முற்றுப் பெறுதற்குள்ளே வந்து நிலையாமை பற்ற, கருதிய பயனையும் இழந்து மீளப் பிறவிக் கடலுள் மூழ்கலால் அந்நிலையாமையை உணர்ந்து காமிய வழிபாட்டை விடுதல் வேண்டும் என்றபடி ``காமியம் செய்து காலங்கழியாதே`` (தி.5 ப.22 பா.8) என்று அருளிச் செய்தார் அப்பரும். காமிய வழிபாட்டு முயற்சியின் தன்மையை,
பரப்பமைந்து கேண்மின்இது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடுங் கடன். -திருவருட்பயன், 39
என விளக்குவர் உமாபதி சிவனார். ``வித்துண்ண``என்றதன் இடை யில் அடுக்கிவந்த இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 19

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே. 

பொழிப்புரை :

ஓலையால் வேய்ந்த வீட்டை, உடையவர் தாமே செய்யாமல், கூலியாளைக் கொண்டு செய்வித்தமையால் அவனால் செப்பமின்றி வேயப்பட்ட பொத்தற் குடில்போலும் உடம்பிற்கு மேலேயும் கவிப்பில்லை; கீழேயும் அடிநிலை இல்லை. ஒப்பிற்கு வைக்கப்பட்ட இரண்டு கால்களும், ஒரு நடு விட்டமுமே உண்டு.

குறிப்புரை :

`அஃது எவ்வாறு நீடித்து நிற்கும்? விரைவில் வீழ்ந் தொழிந்தது` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளை முன்னர் வைத்து உரைக்க. பின்னர், ``வேலையான்`` என்றலால் முன்னர் ``மேய்ந்தவர்`` என்றது உடையவரையாயிற்று. ``மேய்ந்தவர்`` என்றது, `வேய முயன்றவர்` என்றபடி, ஊடு - அத் தொழிலினுள்; இதன் பின், `புக்கு` என்பது எஞ்சி நின்றது. `வரியாமையால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. வரிதல் - கட்டுதல். வேலையான் - கூலிக்கு வேலை செய்பவன். காலத்தைக் குறிக்கும் `வேலை` என்பது, அதனை முதலாகக் கொண்டு நிகழும் தொழிலைக் குறித்தலின், கருவியாகு பெயர். ``கூலி கொடுத்து என்வேலை கொள்வாருண்டோ`` (திருவிளையாடல் பு. . மண்சுமந்தது . 18) என்பது முதலிய இடங்களிலும் இவ்வாறு வருதல் காணப்படும். `வேலையாள் மேய்ந்த` என்று பாடம் ஓதுதலும் ஆம். ``வெள்ளி`` என்றதில் ளகர வொற்று, விரித்தல். பொத்தலை `வெளி` என்றார். தளி - இல்லம். `வேலையாள் நன்கு வேயாமையால் எடுத்தபொழுதே பொத்தற் கூரையாய்க் கிடந்தது; மற்றும் பல குறைபாடுகளும் உள` என்றதாம். தலையிலும் பிரமந்திரம் (பெருந்துளை) முதலிய புழைகள் இருத்தலின், `மேலும் முகடில்லை` என்றார். கீழே அடிகள் நிலத்தினுள் ஊன்றாமை வெளிப்படை. ``காலும்`` என்ற இழிவு சிறப்பும்மையால், `அது பெயருக்குக் `கால்` அன்றி, உண்மைக் கால் அன்று` என்பது போந்தது. இல்லத்திற்குக் `கால்கள்` எனப்படுவன, நிலத்தினுள் ஊன்றி நிலைத்து நிற்பன வல்லது சகடக் கால் போல உழலுவன ஆகா. ``முகட்டு அலக்கு`` என்றது முதுகெலும்பை. அதுவும் நேர் நிற்றல் அல்லது; மேலே குறுக்கிட்டு நின்றிலது. இதனால் அவை ஒப்பிற்கு வைக்கப்பட்டனவல்லது, உண்மையில் வைக்கப் படவில்லை என்றார். ``உடையவர்`` என்றது சிவபெருமானையும், `வேலையாள்` என்றது பிரமனையும், `உடை யவர் இவ்வில்லத்தை ஓலையால் வேய நினைத்தார்` என்றது `நிலையாக எடாமல், சிறிது காலத்திற்கு நிற்கவே எடுத்தார்` என்பது குறித்தவாறு. முன்பு `பந்தல்` என்றதும் இக்குறிப்புத் தோன்றவேயாம். `சிறிது காலத்திற்கு நிற்க எடுத்ததையும் தாமே செய்யாமல், பிறன் ஒருவனைக் கொண்டு செய்வித்தமையால். குறையுற்றுக் கிடந்தது` என்றவாறு.
இதனால், யாக்கையது இயல்பை உணர வல்லார்க்கு அதனது நிலையாமை எளிதின் விளங்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

பொழிப்புரை :

கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்.

குறிப்புரை :

இதன் உள்ளுறைப் பொருள் வெளிப்படை. காரணத்திற் குரிய தேடப்பட்ட தன்மையைக் காரியத்தின்மேல் ஏற்றிக் கூறினார். இனி, ``தீ`` என்றது காரிய ஆகுபெயராய், விறகினை உணர்த்திற்று எனினும் ஆம். `பண்ணில்பாடுகின்றாராயும், அழுதிட்டும்` என்க.
இதனால், `யாக்கையது நிலையாமை, ஒரு கண்மாயம் போல வந்து நிற்பது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.

பொழிப்புரை :

அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டை யாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது. பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும் உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக் கொண்டது யாதும் இல்லை.

குறிப்புரை :

சேமித்தலை ``இட்டது`` என்றார். மணவினையைப் பெண்டிர்க்குப் பன்னிரண்டாண்டு அகவையினும், ஆடவர்க்குப் பதினாறாண்டு அகவையினும் நிகழ்த்துதல் பெரும் பான்மை வழக்க மாதலின், எல்லாம் அடங்க, ``பன்னிரண்டாண்டினில் மணம் பட்டது` என்றார்.
எனவே, ``மணம்` என்றதனை இரட்டுற மொழிந்து பெண்டிர்க்கு `மண வினை` என்றும், ஆடவர்க்கு `மணம் என்ற பேச்சு` என்றும் பொருள் உரைத்துக் கொள்க.
சுற்றத்தார் ஆடவர்க்குப் பன்னிரண்டாண்டிற்றானே. `இவற்கு இன்னாளை வாழ்க்கைத் துணைவி ஆக்கல் வேண்டும்` என வரையறை செய்ய முயலுதல் இயல்பு என்க.
இதனால், உடம்பு, `காலம்` என்னும் வாளின்வாய்ப்பட்டு இடையறாது அறுக்கப்பட்டு வருகின்றது என்பது கூறப்பட்டது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். -குறள். 334
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்;
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்;
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
என்ற நாலடியார்ச் செய்யுளும் நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 22

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. 

பொழிப்புரை :

அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள் களை விளக்குகின்ற சுடரை அணைத்து விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும் உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக் கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``விளக்கெரி`` வினைத்தொகை. அணைத்தலை, `கொள்ளுதல்` என்றார். `கொண்டான்` என்பது பாடம் அன்று. ``முடிஞ்சது, விடிஞ்சு, படிஞ்சு`` என்பவற்றில் நகர தகரங்கட்கு ஞகர சகரங்கள் போலியாய்வந்தன. முடிதலுக்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `விடிஞ்சிருளாவது போல`` என உவம உருபு விரிக்க. `குருடர்க்கு` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `உடம்பின் நிலையாமையை அறிதற்குக் காட்சியே அமைவதாகலின், நூல் வேண்டுவதில்லை` என்பதனை நாவுக்கரசர்,
``நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்,
சுடலை சேர்வது சொற்பிர மாணமே`` (தி.5 ப.90 பா.4)
என்று அருளிச் செய்தார்.
இதனால், `யாக்கை நிலையாமை காட்சியானே விளங்குவது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 

பொழிப்புரை :

விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.

குறிப்புரை :

மாயன் - கள்வன். தோன்றாது மறைந்து நிற்றலின் இவ்வாறு கூறினார். படைத்தலை உயிர்க்கு ஏற்றுங்கால், புணர்த்தலாக உரைக்க. `இடரொடு` என உருபு விரிக்க. `நரகம் ஏழு` என்பதற்கு, முதல் நரகம் ஒன்றே ஏழு நரகங்களை உடையதாயிருக்கும் என்னும் கருத்தினாலாம் என்பதே ஆகம நெறியாகலின், `ஏழ் நரகம்` என்னாது, ``ஏழாம் நரகு`` என்றார். மேற்கூறியவாற்றால் நோக்க நரகம் எட்டாகும். அவை, `இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மகாபதுமம், காலசூத்திரம்` என்பன. இவற்றுள் இரௌரவமே முதல் நரகம்; ஏனைய ஏழும் கிளை நரகங்கள். இன்னும், `இவை நரகம்` என்று வைத்து, மற்றும் `மகா நரகம், இராச நரகம், இராச ராச நரகம் என்று மூவெட்டு நரகங்கள் உள்ளன என அவற்றின் பெயர் முதலியவற்றைச் சிவாகமங்கள் விரித்துக்கூறும். எல்லாவற்றிலும் முதலிற் சொல்லப்படுவன ஒழித்து ஏனைய கிளை நரகங்களாம். ``நரகம் ஏழ்புக நாடின ராயினும்`` (தி.3 ப.49 பா.7) என்ற ஞானசம்பந்தர் திருமொழியில் எழுந்த ``நரகம் ஏழ்`` என்பதற்கும் சிவாகமங்களின் வழி இவ்வாறே பொருள் உரைக்கப்படும். `மக்கள் உடம்பை உயிர்கட்குச் சிவபெருமான் படைத்துக் கொடுத்தது, தன்னை வணங்குதற் பொருட்டே` என்பதை,
``மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன்பணிக்காக அன்றோ``
(சிவஞான சித்தி. சூ. 2.92)என்பதனானும் அறிக. `கொடுத்தவனது குறிப்பிற்கு மாறாகக் கொடுக்கப்பட்ட பொருளைப் பயன்படுத்துதல் உய்தியில் குற்றமாம்` என்றபடி. இதனால், `யாக்கை நிலையாமையை உணர்ந்தோர் அஃது உள்ளபொழுதே அதனாலாகும் பயனைப் பெற முயலுதல் வேண்டும்; இல்லாவிடில் இடர் விளையும்` என்பது கூறப்பட்டது,

பண் :

பாடல் எண் : 24

குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதரார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 

பொழிப்புரை :

வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.

குறிப்புரை :

எனவே, `இம்மை வாழ்வைப் பெரிதாக நினையாது மறுமை நோக்கி முயல்க` என்பது கூறப்பட்டதாம். ``இடையும்`` என்றது `இடையதாகின்ற` என்றவாறு, இனி, உம்மையை அசை நிலை யாக்கினும் ஆம், ``புடையும்`` என்பதில் உள்ள உம்மை, `அயலும்` என இறந்தது தழுவிற்று. `ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல், `இடையும் அக்காலம்` புடையும் மனிதர் ஆர, நடுவே குடையும், குதிரையும், வாளும் கொண்டு இருந்து போகும் அப்போது ஆருயிர் அடையும் இடமே வலம் ஆம்` எனக் கூட்டுக. `மனிதனார்` என்பது பாடம் அன்று, ``அப்போதே`` என்ற ஏகாரம் பிரித்துக் கூட்டப் பட்டது. வலம் - வலிமை.

பண் :

பாடல் எண் : 25

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 

பொழிப்புரை :

தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படு வதுதான் யாது!

குறிப்புரை :

`பெருமை சிறுமைகளும், பேறிழவுகளும் எஞ் ஞான்றும் உயிர்க்கே யன்றி உடம்பிற்கு இல்லை` என்றவாறு, இவ் வுண்மை உணர்த்தற் பொருட்டே இவ்வாறு கூறினமையால், பின்னர்,
அந்தமில் ஞானிதன் னாகம்வெந் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெம்பும்வெந் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்குறி னுண்செரு
வந்துநாய் நரிக்குண வாம்வை யகமே. -தி.10 ஏழாம் தந்திரம்
என்பதனோடு இது முரணாமை அறிக. அதனானே, உலகியலில் நின்றாரது உடம்பை நல்லடக்கம் செய்தலும் அவரது மறுமை நலன் நோக்கி என்பதும் பெறப்படுவதாம், உடம்பு உயிராகாமை உணர்த் துவார் அதனைக் கூத்தன் புனைந்து கொள்ளும் கோலத்தோடு உவமித் தற்கு, உயிரை, ``கூத்தன்`` என்றார். அதனானே, உடம்பும், அது வாயிலாகச் செய்யப்படும் செயல்களும் உயிர்க்கு என்றும் உள்ளன வாகாது, சிறிது காலம் வந்து நின்று நீங்குவனவாதலும் பெறப்பட்டது. ``புறப்பட்டுப் போன`` என்றதன் பின், `பின்` என்பது வருவிக்க. அவ்வாறு வருவியாதவழி, `இக்கூட்டை` என்றது, உயிர் நீங்கிக் கிடந்த ஓர் உடம்மைச் சுட்டிக் கூறிற்றாக உரைக்க. `இச்சட்டையை` என்�%A

பண் :

பாடல் எண் : 1

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே. 

பொழிப்புரை :

குடிகளிடத்து இரக்கங்கொள்ளும் நல்ல அரச னாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இல னாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலமருவன், அவன் செய்த அறம் தன் வாழ்நாள் முழுதும் அரசனேயாய் வாழ்தற்கு ஏற்ற பேரறம் என்பது ஒரு தலையன்றாகலின்.

குறிப்புரை :

``அருளும்`` என்றது, பெயரெச்சம். ``அரசனும்`` என்ற உம்மை உயர்வு சிறப்பு. ``ஆனையும், தேரும்`` என்றது உபலக்கணம். ``பிறர்`` என்றது பகைவரை. ``தெருளும், மருளும்`` என்னும் செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலில் வந்தன. தெருளலும், மருளலும் அலமரல் இன்மையையும், அதனை உடைமையையும் குறித்து நின்றன. `சேரின் தெருளும்` எனவும், `பினை மருளும்` எனவும் மாற்றிப் பொருள் கொள்க. ``பின்னை`` என்றது வினைமாற்றின்கண் வந்த `மற்று` என்னும் பொருட்டாய் நின்றது. `ஆதலின்` என்பது சொல்லெச்சம். `அவன் மாதவமன்றே` என்பது பாடம் ஆகாமை அறிக. இதனுள், `சிற்றம் பலமேய செல்வன் கழல் ஏத்தும் செல்வமே நிலையுடைய செல்வம்; (தி.1 ப.80 பா.5) பிற செல்வங்கள் அன்ன வல்ல` என்றற்கு நாயனார் சிவபெருமானை இங்கு, ``செல்வன்`` எனக் குறித்தமை அறியத்தக்கது.
யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
என்றார் நாலடி நானூற்றினும்.

பண் :

பாடல் எண் : 2

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொழிப்புரை :

வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் இருட்பிழம்பு போல்வதாகிவிடுகின்ற துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டு வதில்லை. (நேற்று அரசனாய் இருந்தவன் இன்று அடியனாயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே.) ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, துறக்கச் செல்வத்தினரான தேவர் கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள்; அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவனாகின்றான்.

குறிப்புரை :

இயக்கு - இயங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். பொதுப்பட, ``இயக்கு`` என்றமையால், முற்பக்கமாகிய நற்காலம் காரணமாகத் திங்கள் வளர்ச்சியுறுதலும், பிற்பக்கமாகிய தீக் காலம் காரணமாக அது தேய்வுற்று இருட்பிழம்பு போலாவதும் ஆகிய இருதன்மையும் கொள்ளப்படும். படவே, பொருட்கண்ணும், செல்வம் நல்லூழ் காரணமாக வளர்தலும், தீயூழ் காரணமாகக் குறைந்து மறைதலும் ஆகிய இருதன்மைகளும் விளங்குவனவாம்.
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று. -குறள். 232
எனத் திருவள்ளுவர், செல்வத்தின் ஆக்கக் கேடுகட்கு உண்மைக் காரணமான காலத்தை, அதன்வழி நிகழும் பொதுக் காரணத்தின்வழி உய்த்துணரக் கூறினமை உணர்க. மேல், ``செல்வன்`` எனக் குறிப்பாற் கூறியதனை இதனுட் கிளந்து கூறியவாறு காண்க. செல்வத்தைத் தருபவனை, ``செல்வம்`` என்றார்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `செல்வம் நில்லாது நீங்கும் இயல்பினது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 

பொழிப்புரை :

தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப்பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. (அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!)
பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள்கண்ணில் உள்ளது. அதனைக்கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.

குறிப்புரை :

``தன்னது, என்னது`` என்றவற்றில் னகர ஒற்று விரித்தல். ``தனது, தனக்கு`` என்றவை, பன்மையொருமை மயக் கங்கள். மாடு - செல்வம். ``எனது மாடு`` என்றதன்பின், `எமக்கு உதவும்` என்பது எஞ்சிநின்றது. உன் உயிர், வினைத்தொகை. உயிரை, ``உன் உயிர்`` என்றதனால், `உடல், காணப்படுவது` என்பது பெறப் பட்டது. இவ்வாறு அவ்விரண்டன் தன்மைகளையும் எடுத்தோதியது `இயைபில், லன ஒரு நிமித்தத்தால் தம்முள் இயைந்தன; அந்நிமித்தம் நீங்கியவழி அவ்வியைபும் நீங்கும்` என்பது உணர்த்தற்கு. நிமித்த மாயது வினை. ``உடலோடு`` என உருபு விரிக்கப்பட்டது. ``போம்`` என்றதனைப் ``பிறந்தது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `ஒக்கப் பிறந்தது போம்` என்றது, `அவ்வாறு பிறவாதது போதல் சொல்ல வேண்டா` என்றற்கு. ``கண்ணது காணொளி`` என மிகுத்துக் கூறியது, `பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்றற்கு. தனது நிழல் தனக்கு உதவாமையை எடுத்துக் காட்டியது, தமக்கு உரியது தமக்குப் பயன்படாதொழிதலைத் தெளிவித்தற்காம்.
``வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே``
-கந்தரலங்காரம்
என்ற அருணகிரி நாதர் திருமொழியும் காண்க.
இதனால், `செல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

பொழிப்புரை :

ஈக்கள் தேனைச் சேர்த்தற்குப் பூக்களின் மணங் களை அறிந்து அதன் வழியே பூக்களை அணுகித் தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, அவையாதும் செய்யமாட்டாது அத் தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.

குறிப்புரை :

அஃதாவது, வலியுடையார் புகுந்து தம்மைத் துன்புறுத்தி விலக்கிவிட்டுக் கைக்கொள்ளத் தாம் யாதும் செய்ய மாட்டாது விலகியொழிவர் என்பதாம்.
ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு. -குறள். 1077
என்னும் திருக்குறளால், கீழ்மக்களது செல்வம் அவர்க்கும், சுற்றத்தார் முதலியோர்க்கும் பயன்படாது; வலிமையால் துன்பம் செய்வார்க்கே பயன்படும் என்பது விளங்கும்.
உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னாரிழப்பர்; வான்றோய் மலைநாட,
உய்த்தீட்டுந் தேனீக் கரி. -நாலடியார் 10
என்ற நாலடி வெண்பாக் காணத்தக்கது. ``ஈட்டிய``, வினையெச்சம்.
இதனால், `செல்வம் கொடுத்தும், துய்த்தும் இன்புறாது இறுகப் பிடித்தவிடத்தும் நில்லாதொழியும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 

பொழிப்புரை :

அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.

குறிப்புரை :

``தெற்ற`` என்பது நீட்டலாயிற்று. தெற்றத் தெளிதல், நன்கு தெளிதல். `கலக்கி மலக்கல்` என்பதொரு வழக்கு என்பது, ``கலக்கி மலக்கிட்டுக்கவர்ந்துதின்ன`` (தி.4 ப.1 பா.8) என்பதனால் அறிக. பெரிதும் கடிந்துரைத்தல் தோன்றச் ``செல்வத்தை`` என்றாராயினும், `செல்வப் பற்றினை` என்றலே, கருத்து என்க. ``ஆமே`` என்ற ஏகாரம் எதிர்மறை உணர்த்திற்று. அதனை ஈற்றசையாக்கிக், `களைந்தால் குதித்தல் கூடும்` என உரைப்பாரும் உளர். இதனால், `செல்வம் பயன் தருவதாயினும், பெரும்பயன் தருதல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. 

பொழிப்புரை :

மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந் தொழிதலைப்போல விழுந்தொழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினை யால் கூட்டுவிக்கப்பட்டிருத்தலை உலகர் அறிந்திலர்.

குறிப்புரை :

`அதனால் அவற்றையே வீடுபேறாகக் கருதி அதன் கண் மயங்கி நின்று அழிகின்றனர்` என்றபடி. மாடு - காசு. செல்வம் - ஏனைய வளங்கள். `கவிழ்கின்ற கலம்` என இயையும். சிமிழ் - கட்டு. செல்வம் கட்டாதல், ஈட்டல் காத்தல்கள் காரணமாகச் செய்யப்படும் முயற்சிகளாலும், பற்றினாலும் உயிர்க்கு உறுதி நாடுதற்குக் காலம் பெறாதவாறு செய்தல். இம் மந்திரத்துள் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், செல்வம் தான் நிற்கும் சிறிதுகாலத்திலும் பந்தமாயே நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே. 

பொழிப்புரை :

ஒத்து வாழ்கின்ற, `மனைவி, மக்கள், உடன் பிறந்தார்` என்போரும் தம் தலைவரால் தங்கட்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவிற்று என்றே நோக்கி நிற்பர். அவரால் விரும்பப் படுகின்ற அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாள் போக்கு வார்க்கு இறுதிக்கண், `அந்தோ! எம்மைக் காக்க எம்முடன் வருக` என்று அழைத்துச் செல்லும் துணை ஒன்றைப் பெறுதலும் கூடுமோ!

குறிப்புரை :

`மனைவி முதலாயினார் உடன்வரும் துணையாக மாட்டாமை அறிந்து, அவர் பொருட்டாகப் பொருள் ஈட்ட முயலு தலை விடுத்துச் சிவபெருமானை வழிபட்டு வாழின், அவன் துணை யாவான் ஆதலின் அவனையே வழிபடுக` என்பது கருத்து. `வாழ்வும்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. செல்வத்தை ``ஒண் பொருள்`` என்றது, மனைவி முதலானோர் கருத்துப்பற்றி, `எமக்கு ஒண்பொருள் அளவு ஏது என்பர்` என மாற்றி உரைக்க. ``கூடலும் ஆமே`` என்றதற்கு, மேல், ``குதிக்கலும் ஆமே`` என்றதற்கு உரைத்த வாறே உரைக்க. ஈண்டும் ஏகாரத்தை ஈற்றசையாக்கி, `ஒண்பொருள்`; என்றதனைச் சிவபெருமானாகக் கொண்டு, `ஒண்பொருளாகிய அதனைச் செய்வார்கட்கு` எனக் கூட்டி உரைப்பாரும் உளர். இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `உயிர்ச்சார்பாகிய சுற்றத்தாரையும், அவர் தந்நலத்தராதல் நோக்கிப் பொருட் சார்பாகிய செல்வத்தோடு ஒப்ப வைத்துத் துறக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 

பொழிப்புரை :

உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப் பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசை மிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

``வேட்கை மிகுத்தது`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிலும்,`` மெய்கொள்வார் இங்கிலை`` என்பதை இறுதிக் கண்ணும் கூட்டி உரைக்க. ``மிகுத்தது`` என்பதன் பின் `ஆயினும்` என்பதும், ``கைவிட்டவாறே`` என்பதன்பின் `உளதாம்` என்பதும் எஞ்சிநின்றன. ``தறி`` என்றது உடம்பையும், ``வழி ஒன்பது`` என்றது அதில் உள்ள ஒன்பது பெரும்புழைகளையுமாம். பூட்டுதலுக்குச் செயப் படு பொருள் வருவிக்கப்பட்டது.
இதனால், `தந்நலம் கருதாத சுற்றத்தாராயினும் துணையாக மாட்டுவரல்லர்` என்பதுணர்த்தி, மேலது வலி யுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

பொழிப்புரை :

உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யம தூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.

குறிப்புரை :

`அடுக்கும்` என்பது இடைக் குறைந்து நின்றது. ``பரிசு`` மூன்றும் ஆகுபெயராய் அவற்றை உடைய பொருள்களைக் குறித்தன. `அதனையும்` என்பது, `அத்தையும்` என மருவிற்று. அதன்பின், `கொள்ள` என்பது எஞ்சிநின்றது. `அத்தையும் நமன் தூதர் சூழகிலாரே` எனக் கூட்டுக.
இதனால், செல்வமும், சுற்றமும் துணையாகாமையைத் தொகுத்துக் கூறி, `சிவபெருமானை அடைக` என முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

பொழிப்புரை :

நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை. பிறந்த கன்று வளர்ந்து காளையாய்ப் பின் கிழமாதற்கு ஞாயிற்றின் தோற்றம் செலவு சாய்வு என்னும் இவை ஒருவாற்றான் உவமையாதல் அறிக. தமது இளமை நீங்குதல் அப்பொழுது காட்சிக்கு எய்தாதாயினும், காட்சிக்கு எய்துவதாயகன்றின் இளமை நீக்கமாகிய உவமை யளவையின் வைத்தாயினும் உணர்தலே அறிவுடைமையாம் எனவும், அவ்வாறு உணர்வார் உளராயினும், உணர்ந்த தற்கேற்ப ஒழுகாமையின், அவரும் உணராதவரே எனவும் கூறுவார் இவ்வாறு கூறினார். இனி, இங்ஙனம் எடுத்துக்காட்டுவமையாக்காது, ஞாயிற்றையும், கன்றோடு உடன்வைத்து இரண்டு உவமை அளவை கூறிற்றாக உரைப்பாரும் உளர். ``எருதாய்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``கன்று`` என்று போயினார். வருவித்துரைத்தன பலவும் இசையெச்சங்கள். இதனால், இளமை நிலையாமை காட்சியானே உணரப்படுதலின், அதனையறிந்து தக்கது செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 2

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 

பொழிப்புரை :

மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.

குறிப்புரை :

`ஆகவே, அவர் இளமை நிலையாமையை அறிவா ரல்லர்` என்பதாம். ``கழிந்தன`` என்றதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. பூண்டுகொள்ளுதல், கடனாக மேற்கொள்ளுதல். ``நீண்டன`` என்றது வினைப்பெயர். காலம் ஒன்றாயினும், நாள், திங்கள், யாண்டு முதலிய பாகுபாட்டால் பலதிறப்படுதலின், ``காலங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். ``கொடுக்கினும்`` என்ற உம்மை, எதிர்மறை. `பேரொளி உடையவன்` என்பார், சிவபெரு மானை, `தூண்டப்பட்ட விளக்கின் ஒளி` என்றார். ``தூண்டு சுடரனைய சோதி கண்டாய்`` (தி.6. ப.23. பா.1) என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.
இதனால், உலகரது அறியாமை கூறுதல்போல, ஆண்டு தோறும் இளமை கழிந்து செல்லுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. 

பொழிப்புரை :

சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவ பெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

துணிவு பற்றி, ``ஒழிந்த`` என இறந்த காலத்தாற் கூறினார். அற்ற கங்கை - அடங்கிய கங்கையை உடைய. முதுமைக் காலத்தில் உயிர் செயலற்றுப்போதலின், அது செயலாற்றுதற்குரிய இளமைப் பருவத்தையே, ``உயிருள்ள போது`` என்றார். இதனால், முதுமைக் காலம் யாதொரு பயனையும் தாராத தாகலின், இளமை நிலையாமையை மறக்கலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. 

பொழிப்புரை :

முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய்போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.

குறிப்புரை :

இது, முதுமை எய்தி, அதனால் நாணமும், துயருங் கொண்டு வருந்துவான் ஒருவனது கூற்றாகச் சொல்லப் பட்டது. இதன் பயன், `இளையராயினார் பலரும் இளமைக்காலத்தே உயிர்க் குறுதியைத் தேடிக்கொள்ளாராயின், பின்னர் இவ்வாறு வருந்துதல் அன்றிப் பிறிதொன்றும் காணார்` என்பது உணர்த்துதல். திருநாவுக்கரசர்,
``தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்பமெய்த
இளையது மல்லேன் எந்தாய், என்செய்வான்தோன்றினேனே ``
-தி.4 ப.78 பா.9
என்று அருளிச்செய்ததும் மேற்காட்டியவாறு, இளமையிலே பயன் பெறாது முதுமையில் துன்புறுதல்கருதி இரங்கியதேயன்றிப் பிறி தில்லை என்பது வெளிப்படை. அங்ஙனமாகவும், `அவரும் மகளிரின் பத்தை இழந்தமையை எண்ணிக் கழிவிரக்கங்கொண்டார்` எனத் தமக்கு வேண்டியவாறே உரைத்து, எரிவாய் நிரயத்தைத் தேடிக்கொள் வாரும் உளர். ``முன்விரும்புவர்`` என்றது இயற்கைக்கண் வந்த கால வழுவமைதி. ``முன்`` என்றதனால், `இது பொழுது` என்பது போந்தது. முடிவில் உளதாதல் பற்றிப் பயனை, ``கடை`` என்றார். `கடையாக` என ஆக்கம் வருவிக்க. `நீர்போல் விரும்புவர்` என மேலே கூட்டி முடிக்க. மூன்றாம் அடி, `அவர்க்கு` என்னும் அளவாய் நின்றது. ``கரும் பொத்து`` என்றது வழிமொழிதல் (அனுவாதம்). அதனால், `அந் நிலையை உடையனாய் இருந்தயானே, இந்நிலையை எய்தினேன்` என்பது பெறப்பட்டது.
இதனால், இன்பச் செருக்கும் இளமையோடே ஒழிதல் கூறப்பட்டது.
காலி னோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்
ஏல வார்கு ழலினா ரிகழ்ந்து ரைப்ப தன்முனம்
மாலி னோடு நான்முகன் மதித்த வர்கள் காண்கிலா
நீல மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே.-தி.2 ப.97 பா.9
எனத் திருஞானசம்பந்தரும், இன்பச் செருக்கு இவ்வாறொழியும் என்று அருளிச்செய்தார். இன்னும் அவர்,
நிலைவெ றுத்தநெஞ்ச மோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெ றுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்
தலைப றித்த கையர் தேரர் தாம்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான் திருந்து காழி சேர்மினே.
-தி.2 ப.97 பா.8
என முதுமைக் காலத்தில் புதல்வர், பெயரர் என்பவராலும் வெறுக்கப் படுதலை அருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 5

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 

பொழிப்புரை :

ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.

குறிப்புரை :

``பாலன்`` முதலிய மூன்றும், அப்பருவத்தையே குறித்து நின்றமை அறிக. தம் செய்தியைக் கூறியது நிலையாமையால் தமக்கு உளதாய அச்சத்தினை உணர்த்து முகத்தான் அறிகிலாதவரது அச்ச மின்மை குறித்தற் பொருட்டாதலின், அது வருவித்துரைக்கப் பட்டது.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர். -குறள். 1072
எனத் திருவள்ளுவரும் அறிவிலாதாரது யாதும் அறியாநிலையை எடுத்து உள்ளுறையாக இகழ்ந்தோதினார். `அடி, மேல்கிடந்தும்` என உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. `பிறிதொன்றைச் சிறிது விரும்பினும் அது பிறப்பிற்கு ஏதுவாம்` என்பது கருத்து. அதனை, ஆலாலசுந்தரரது வரலாறு நன்கு உணர்த்துதல் காண்க. இதனால், `இளமை நிலையாமை நோக்கிக் கவலாமை அறிவிலாதாரது இயல்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. 

பொழிப்புரை :

நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர் தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.

குறிப்புரை :

``நித்தலும்`` இரண்டனுள் முன்னதனை முதலிற் கூட்டுக. ``சாலும்`` என்றது, `அதனால் பயனில்லை` என்றவாறு. `இச் சலவியன்` எனச் சுட்டு வருவித்துரைக்க. சலம் - சினம்; அது மறைத்தற் சத்தியாம். ``முற்சினமருவுதிரோதாயி`` என்றார் சிவப்பிரகாசத்தினும் (48). மிக நினைத்தலாவது, இளமைதொட்டே நெடுங்காலமாக நினைத்தல்.
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்
இவன் என்னைப் பன்னாள் அழைப்பொழியான் என்று
எதிர்ப்படுமே`` -தி.4 ப.112 பா.9
என அப்பரும்,
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. -தி.11அற்புதத் திருவந்தாதி 78
எனக் காரைக்கால் அம்மையாரும் சிவபெருமானைப் பன்னாள் வழிபடுதலை வலியுறுத்து ஓதுதல் காண்க. இதனால், `இளமை நீங்குதற்கு முற்றொட்டே சிவபெருமானை நினைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொழிப்புரை :

நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையுமாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.

குறிப்புரை :

பொருள்களை அறியும் அறிவுடைப்பொருள் உயிரே யாகலின் அதனை, `நுண்ணூசி` என்று வைத்து, அதற்கு வாயி லாய் நிற்றலின் தாமே அறிவுடையனபோலத் தோன்றுகின்ற ஐம்பொறி களைப் ``பருவூசி`` என்றார். ``பை`` என்றது உடம்பை. அறியு மாற்றால், `ஊசி` எனத்தக்க ஐம்பொறிகள் தாமே அடங்காது புலன்கள் மேற் செல்லுமாற்றால் `யானை` எனப்படுமாகலானும், `அவ்வாற்றால் அவை யானை எனப்படினும், புலன்களைச் சென்று பற்றும் விரைவு பற்றிப் பறவையாகவும் கூறுதற்கு உரிய` என்பார், `பறக்கும் விருகம்` என்றார். விருகம் - `மிருகம்` என்பதன் சிதைவு. ``பல்விருகமாகி`` (தி.8 சிவபுராணம்) எனத் திருவாசகத்தினும் வந்தது. `மிருகம்` என்றது ஏற்புழிக் கோடலால் யானையாயிற்று. ``ஆக மதத்தன ஐந்து களிறுள`` (தி.10 -5 ஆம் தந்திரம்). என்பது போல ஐம்பொறிகளை யானையாக உருவகித்தல் பெரும்பான்மை யாதல் அறிக. பனித் தல் - நடுங்கல்; தளர்ச்சி. பொறிகள் புலன்களைக் கவரும் ஆற்றலை இழப்பின் உடல் இறந்ததோடு ஒக்குமாதலின் `பரு வூசி ஐந்தும் பனித் தலைப் பொருந்தினால் பையும் பறந்தது போல்வதே` என்றார். எனவே, `அவைமெலிதலாகிய முதுமை வருதற்கு முன்னே ஈசனை நினைக` என்பதாம்.
இதனால் `இளமையது நீக்கம் உடல் நீக்கத்தோடு ஒக்கும்` என அதனது இன்னாதநிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :

திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபது யாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.

குறிப்புரை :

`திருமால் உலகத்தை அதன் உள்ளிருந்து ஈரடியாலே அளந்தான் என்பதனை என்றோ ஒரு காலத்து நிகழ்தொழிந்த நிகழ்ச் சியாக எண்ணுதல் கூடாது; என்றும் நிகழ்வதாகவே எண்ணல் வேண்டும்; ஏனெனில், அக்கதையின் உட்பொருள், அவன் காத்தற் கடவுளாதலின், உயிர்கள் பிறக்கும் இடங்களிலெல்லாம் சென்று காத்தற்பொருட்டு அவ்விடங்களைத் தன்னுள் ஓர்ந்துணர்கின்றான் என்பதே ஆதலின்` என்பது நாயனார் கருத்து. அதனால், உலகத்தைத் திருமால் இடவகையாலும், பகலவன் கால வகையாலும் அளக்கின்ற வராதல் அறிக. இப்பொருள் உணரமாட்டாதார் ``கண்ணனும்`` என்னும் பாடத்தை, `கண்ணதும்` என ஓதுப.
``எண்ணுறும் முப்பது`` என்றதற்கு, `முதல் முப்பது. இரண்டா வது முப்பது` மூன்றாவது முப்பது என்று இவ்வாறு எண்ணப் படும் முப்பது` என உரைக்க. இவற்றுள் முதல் முப்பதாண்டிற்குள்ளே கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிரம்பி, நிலையாமை உணர்வுபெற்று நின்றாரை; `இனி இவர் உலகருள் ஒருவராகவைத்து எண்ணற் பால ரல்லர்` எனவும், அங்ஙனம் அவ்வுணர்வு பெறாதாரை அறுபதாண்டு வரையும் கண்காணித்து நின்று, அத்துணை ஆண்டுகள் கழிந்த பின்ன ரும் நிலையாமை உணர்வு வரப்பெறாதவரை, `இனி இவர் இவ்வுலகத் தில் வாழ்ந்தும் வாழ்நாள் முடிந்தவரேயாவர்` எனவும் காத்தற் கடவுள் துணிந்தொழிதலின், அவ்விருதிறத்தாரும் அவ்வவ் ஆண்டளவில் அக்கடவுளால் உலகத்தினின்றும் பிரிக்கப்படுவோராதல் அறிக. காய்கதிரோன் காத்தற் கடவுளது துணிவிற்குக் கருவியாய் நிற்றல் பற்றி, அவனையும் அக்கடவுளோடு ஒப்பவைத்து எண்ணினார்.
பதினாறாண்டில் மணவினை முடிக்கப்பெற்று முப்பதாண்டின் காறும் உலகியலில் ஈடுபட்டிருப்பினும், கட்டிளமைக் காலம் முப்ப தாண்டோடு முடிவுறுதலின், அதற்குள்ளே நிலையாமை உணர்வு பெறாதொழியின் அதன் பின்னர் அதனைப் பெறுதல் ஐயமேயா தலின், `இவர் வீடு பெறுதற்கு உரியார்` எனக் காத்தற்கடவுள் துணிதற்கு அவ் யாண்டே எல்லையாயிற்று.
இனி, முப்பதாண்டிற்கு மேலாய் அறுபதாண்டின்காறும் செல்லும் காலம், `இவர் இத்தன்மையாராவர்` என்னுந் துணிவினைப் பயவாது ஐயத்தையே தந்து நின்று, அதன்பின் நிலையாமை உணர்வு வருதல் பெரும்பான்மையும் இல்லையாதலின், `இனி இவர்க்கு நிலையாமை உணர்வு வாராது` என்று துணிதற்கு அவ்யாண்டே எல்லையாயிற்று. அறுபதாண்டின் காறும் பற்று விடப்பெறாதவர் பின் விடப்பெறுதல் பெரும் பான்மை இல்லை என்பதே ஆன்றோரது துணிபு. திருநாவுக்கரசு நாயனார்போல அறுபது யாண்டின் பின்னரும் மெய்யுணர்வு பெறுதல் இறைவன் திருவருள் தானே முன்நிற்க நிகழும் அருஞ்செயல் என்க. அது பற்றியன்றே, அந்நாயனார் இறைவன் தம்மை ஆட்கொண்ட நிலையைப் பெரிதும் சிறப்பித்துப் புகழ்கின்றார். இக்காலத்து உள நூலாரும், `அறுபதுயாண்டின் பின்னர் ஒருவர்க்கு மனமாற்றம் உண்டாகாது` என்பர்.
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு. -நல்வழி என ஔவையாரும், `மூவாசை நீங்கி மெய்ப்பொருளைப் பெறுதல் முப்பதாண்டிற்குள் உண்டாகவில்லையெனின், பின்னர் உண்டாதல் அரிது` என்றது காண்க.
இங்கு, `முப்பது` என்றது கதிரளவை (சௌரமான) யாண் டேயாம். மதியளவை (சாந்திரமான) யாண்டு கதிரளவை யாண்டிற்குச் சிறிது ஏறக்குறைய நாற்பது நாள்கள் குறைவுடையது. இனிப்பிற கோள் அளவைகள் மிகக் குறைந்தும், கூடியும் நிற்கும். அதனால் கதிர ளவையின் பத்துத் திங்களைப் பல்கோள்களின் பொதுயாண்டாக வைத்து, அவற்றின் பேராட்சி, உள்ளாட்சிகளை (திசா புத்திகளை)க் கணக்கிடுவர். அவ்வாற்றால் பலகோள் யாண்டின் ஒரு வட்டம், `நூற் றிருபதுயாண்டு` எனப்படுகின்றது. எனினும், அது கதிரளவையின் நூற்றியாண்டேயாம். ஆகவே, மக்களின் நிறைவாழ்நாள் `நூற்றியாண்டுக் காலம்` என்றல் இழுக்காதல் இல்லை. இஃது அறியாது இக்காலத்தார் கோள்களின், பேராட்சி உள்ளாட்சியாண்டுகளைக் கதிரளவையாண்டின் வைத்துக் கணக்கிட்டு, நடைமுறைக்குப் பொருந்தாவகை செய்கின்றனர். அது நிற்க.
சிலர், `இங்குக் கூறிய முப்பதிற்றுயாண்டு பல்கோள் யாண்டே; அதனால் அவை கதிரளவையில் இருபத்தைந்துயாண்டே யாகலின், ஒருவனது வாழ்நாள் எல்லையாகிய நூற்றியாண்டினை நாற் கூறிட்டு ஒவ்வொரு கூற்றினும் முறையே மாணி (பிரமசாரி), இல்வாழ் வான் (கிருகத்தன்), நோன்பி (வானப்பிரத்தர்) துறவி (சந்நியாசி) என்னும் நிலைகளை உடையனாதல் வேண்டும். இந்நிலை களில் நான் காம் நிலையிலே பற்றறுதி உளதாகும். இவ்வாறன்றி முதல் நிலைக் கண்ணே பற்றறுதி உடையனாய் நிலைமாணி (நைட்டிக பிரமசாரி) யாகி வீடுபேறு ஒன்றையே விரும்பி நிற்பவனே தலையாய மகனாகலின், அவனது நிலைபற்றியே முப்பது யாண்டு மெய்யுணர்வு பெறுதற்கு எல்லை எனப்பட்டது `எனவும், `அவ்வாறின்றி மேற்கூறிய வாற்றால் இல்வாழ்க்கை முதலிய நிலைகளை மேற்கொண்டு செல்வார்க்கு யாக்கை நிலைநிற்றலும், பற்றறுதலும் ஒருதலையன் மையின், அவற்றை வீடுபேற்றிற்குரிய காலமாக ஆன்றோர் கொண்டிலர்` எனவும் கூறுவர். அவையெல்லாம் ஒக்குமாயினும், முதல் நிலைக்கண்ணே பற்றற்று நிலைமாணிகளாய் நிற்போர் உலகத்து அரியராகலானும், இல்வாழ்க்கைக்குப் பின்னர் நோன்பியாய் இருத்தல் வேண்டும் என்பதும், முப்பதுயாண்டு இல்வாழ்க்கையில் நிற்றல்வேண்டும் என்பதும் பொதுவாகக் கொள்ளப்படுவனவன்றிக் கட்டளையல்ல ஆகலின், பற்றறுதி உண்டாய வழி அறுபதிற்றி யாண்டிலாயினும், அதற்கு முன்னராயினும் முற்றத் துறத்தல் குற்றமன்று ஆகலானும். அறுபதிற்று யாண்டின் பின்னரே நோன்பின ராதல் வழக்கின்கட் காணப்படுதலாலும், `முப்பதுயாண்டு` என் பதனைக் கதிரளவை யாண்டாகக் கொள்ளுதலே பொருந்துவது என்க.
அஃது அவ்வாறாக, சிலர் நூற்றியாண்டின் மேலும் வாழக் காண்கின்றோம் ஆதலின், `மக்கள் வாழ்நாள் எல்லை நூற்றியாண்டு` என்றல் எவ்வாறு பொருந்தும் எனின், அவையெல்லாம் கையிலும், காலிலும் சிலர் ஆறுவிரல், ஏழுவிரல் பெற்றுப் பிறத்தல்போல அரிதிற் காணப்படுவனவாகலின், பொதுமுறைமை ஆகா என்க. இவ் வாற்றால் இத்திருமந்திரம் முப்பதிற்றுயாண்டளவையாகிய இளமையின் சிறப்பை உணர்த்தி, அதற்குள்ளே சிவனது திருவடி உணர்வைப் பெறல்வேண்டும் என வலியுறுத்து முகத்தால், இளமை நிலையாமையைக் கூறியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 9

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 

பொழிப்புரை :

பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

குறிப்புரை :

``ஈரெண்கலை`` என்றதனால், `அதனை ஒருங்கு பெற்று நின்றது திங்கள்` என்பது விளங்கிற்று, ``நின்றது`` என்றது அதன் நிலைமையைக் குறித்த ஆகுபெயர். ``கருங்குழி`` என்றது `இருட்குழி` என்றவாறு. `கருக்குழி` எனப் பாடம் ஓதுதல் இவ் இடத்திற்கு ஏலாமை அறிக.
இதனால், இளமை சிறிது சிறிதாகக் கழியும் முறைமை உவமையில் வைத்துக் காட்டப்பட்டது.
``தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதருள் உலகத்து``
என்னும் புறநானூற்று (27) அடிகள் இதனோடு ஒருவாற்றான்வைத்து ஒப்புநோக்கத் தக்கன.

பண் :

பாடல் எண் : 10

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 

பொழிப்புரை :

மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக் கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.

குறிப்புரை :

`பலரும் முதுமைவந்த பிறகுதான் இறப்பர்` என்ற கட்டளை இன்மையால், இளமையிலே சிவனைப் பெறுதல் வேண்டும்` என்றபடி.
``அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க``
என்று திருக்குறளிலும் (36),
மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது
கைத்துண்டாம் போழதே கரவா தறம்செய்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
என்று நாலடி நானூற்றிலும் (பா.19) கூறப்பட்டமை காண்க.
இதனால், இளமை நிலையாமையை உணர்ந்து இளமைக் கண்ணே சிவனைப்பெற முயலல் வேண்டும் என்பது முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

பொழிப்புரை :

தண்ணிய பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாக அதனால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே அவரது சொற்கடவாது அதனையடைதற்கு முயலாது, `பின்பு முயல்வோம்` என்று புறக்கணித் திருப்பர்.

குறிப்புரை :

`அவ்வாறிருப்பின், அவ்வுணர்வு முறுகி எழாது மெலிந்து, முன்போல உலகியலில் ஆழ்ந்து கெடும்` என உணர்வினது நிலையாமை கூறியவாறு காண்க. ஒன்றே செய்க; நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க` என, `நல்லன செய்தல் வேண்டும் என்ற உணர்வு உண்டாய வழி அப்பொழுதே செய்தல் வேண்டும்` எனக் கூறுதலும், உணர்வு நிலையாமையை நோக்கியேயாம். இன்னும், `புராண வைராக்கியம், மசான வைராக்கியம்` முதலியவற்றாலும் உணர்வு நிலையாமையைக் கூறுப. ``மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு`` (குறள் - 425) என்றாற் போல்வனவற்றாலும் திருவள்ளுவர் உணர்வு நிலையாமையை உணர்த்தினார்.
``நின்னைஎப் போதும் நினையலொட் டாய்; நீ நினையப்புகின்,
பின்னை அப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி``
-தி.4 ப.112 பா.4.
என்றதனாலும் இவ்வுணர்வு நிலையாமை நன்கறியப்படும். உயிர் உளதாகவும் உணர்வு இவ்வாறு நிலையாது போதலின், அதற்குக் கொம்பு கேடின்றி நிற்கவும் அதன்கண் உளவாகின்ற தளிர் முதலியன உருமாறிக் கெடுதல் உவம அளவையாயிற்று. தளிர் முதலியன தோன்றுதல் இயல்பாயினும், அதற்குக் கொம்பு முதலாத லின் அதனால் ஆக்கப்படுவனவாகக் கூறினார். இழைத்தலுக்குக் காலத்தை முதலாக வைத்து உரைப்பினும் அமையும். பிழைப்பு - பிழைத்தல்; பிழை செய்தல். அஃதாவது அழைத்தவாறே உடன்பட்டுச் செல்லாதொழிதல்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். -குறள். 833
என்பவற்றில் இது, ``பேணாமை`` என்னும் குற்றமாம்.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே``
-தி.8 போற்றித் திருவகவல் -75-77
என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தார். எம்பெருமானடியை ஏத்த அழைப்பவர் ஞானாசிரியரேயாதல் அறிக. வேறு தொடராக்காது. `அறியாரவர்தாம், அழைக்கின்றபோது பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்` எனக் கூட்டி உரைக்க.
இதனால், உணர்வு நிலையாமை உவம அளவையின்வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே. 

பொழிப்புரை :

உடையான் ஒருவனால் ஐவர் உழவர்க்கு ஒரு நிலம் விளைவு செய்ய விடப்பட்டது. அவ் ஐவரும் அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத் தது. ஆயினும், உடையான் அந்நிலத்தை மாற்றக் கருதி அவர்களை விலகுமாறு ஓலை விடுத்தமையால், அவ் ஐவரும் அந்நிலத்தைக் கைவிட்டனர்.

குறிப்புரை :

`அந்நிலையில் அந்நிலம் விளைவைத் தருதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ஐவர், ஐம்பொறிகள், செய், உயிர், விளைதல், உணர்வு நிகழப்பெறுதல். நாயகன், சிவன். ஓலை, ஆணை; நியதி தத்துவத்தின் செயல். ``காவல் விட்டார்`` என்ற அளவே கூறினமையின், `பொறிகள் ஆற்றல் அடங்கின` என்ற அளவே கொள்க. உயிர் உளதாகவும் பொறிகள் அடங்கின் உணர்வு ஒழிதல் காட்சியானே உணரப்படுதலின், ஒரு பொறியன்றி ஐம்பொறியின் வயப்பட்டு நிற்கும் உணர்வு ஒரு நிலையதாதல் எவ்வாறு` என்பது கருத்து. ஓர் உணர்வு ஐம்பொறியின் வயப்பட்டுப் பலவாறாகச் சிதறுண்டலால் வரும் துன்பத்தினை மாணிக்கவாசகர்,
``ஆனைவெம் போரில் குறுந்தூறெனப் புலனால் ஆலைப் புண்டேன்``
எனவும்,
``எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால் அரிப்புண்டலந்த
வெறுந்தமியேன்`` தி.8 நீத்தல் விண்ணப்பம் - 21,25.
எனவும் விளங்க ஓதினார். இன்னும்,
``அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆதனேன்``
-தி.4 ப.26 பா.5
என அப்பரும்,
``ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியுளீரே``
-தி.7 ப.5 பா.1
என ஆரூரரும் அருளிச்செய்தலும் காண்க.
பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு
அறிவென்ற பேர்நன் றற. -திருவருட்பயன் - 15.
என்றதும் உயிர் உணர்வு தன்வயமுடைத்தாய் நிலை நில்லாமை பற்றியேயாம்.
``ஒருபுலன் நுகரும் போதங் கொன்றிலை; ஒன்றன் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும்; எல்லாம் மாறும்
ஒருபொழுது``
என்னும் சிவஞான சித்தி (சூ. 2.94)ச் செய்யுள் இவ்வுணர்வு நிலையாமையை இனிது விளக்குதல் காண்க.
இதனால், உணர்வு நிலையாமை, இறுதிக்கால நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 

பொழிப்புரை :

பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.

குறிப்புரை :

`மத்தளம் ஒன்றோடு கூடிய தாளம் இரண்டு உள்ளன என்பதொரு நயம்தோன்றுதற் பொருட்டு, `மகத் தளி, தளம்` என்ப வற்றை, இடைக் குறைத்தும், முதல் நீட்டியும் கூறினார். மத்தளத்தை `மத்தளி` என்றலும் பொருந்துவதே; இகரம் பகுதிப்பொருள் விகுதி. மத்தளம் ஒன்றாய் நின்றே ஓசைதர, தாளம் இரண்டாய் நின்றே ஓசை தருவது என்பதும் குறித்தவாறு. இவ்வாறு சொல்லளவால் பிறிது பொருள் தோற்றுதலையும் ஒட்டணியின்பாற் படுத்துவர். மகத்தளி - பெரியகோயில்; அரண்மனை; உடம்பு மேல்கீழ்த்தளம் புருவ நடுவும், மூலாதாரமும். அமைச்சர் ஐவர், ஐம்பொறிகள். `அரசரும்` என்பது பாடம் அன்று. அரசன், உயிர். அது மூலாதாரத்துச் சென்று ஒடுங்கும் நிலையில் எல்லாக் கருவிகளும் செயலற்றுப் போக, உயிர்ப்பும் இல் லையாய், உடல் மண்மேல் சாய்ந்து கிடக்கும். இந்நிலையை `மூர்ச்ை\\\\\\\\u2970?` என்பர். `கேவல துரியா தீதம்` என்பதும் இதுவே. இஃது இறப்பு அன் றாகலின், `அரசனும் அமைச்சரும் உள்ளிருக்கும் பொழுதே அரண் மனை சாய்ந்தது வியப்பு` என்றார். சாக்கிரம் முதலாக இவ் வதீதங்காறும் உள்ள அவத்தைகள் ஐந்தும் வினைவழி உயிர்க்கு உளவாவனவாம். ``மண் ஆய்`` என்பதில் `மண்ணின்கண் ஆகி` என உருபு விரித்து, ``ஆய்`` என்றதை, `ஆக` எனத் திரிக்க. ஆதல், இங்கு, பொருந்துதல். மயங்குதலுக்கு வினைமுதல் அமைச்சரும் அரசனும். `வியப்பு` என்பது சொல்லெச்சம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதீதநிலை நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது. மேற்காட்டிய, ``ஒருபுலன் நுகரும்போது`` என்ற சிவஞானசித்தி (பா.187. உரை)ச் செய்யுளில், ``எல்லாம் மாறும் ஒருபொழுது`` என்றதில், ``ஒருபொழுது`` எனப்பட்டது இவ்வதீத நிலையேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொழிப்புரை :

இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.

குறிப்புரை :

வேம் கட நாதன் - வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள். இனி, `வேங்கடமலைமேல் உள்ள நாதன்` என வேறொரு பொருளும் தோன்றக் கூறினமை காண்க. ``வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் - வேங்கடத்து நோயால் வியந்து`` (தி.11. கபிலர் அந்தாதி 15) என வருதலின், வேங்கடம் சிவதலமாதல் பெறப்படும். வேம் கடத்துள்ளே - வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்ளே. இறைவன் நமது புலாலுடம்பினுள்ளும் உளனாதல் மேலே (தி.10 பா.115 - 116) காட்டப்பட்டது. வேம் கடம் என்று - வெந்தொழியும் உடம்பு என்று அறிந்து. விரகு - உபாயம்; உபாயத்தால், என உருபு விரிக்க. `தாங்க வல்லதாகிய ஆருயிர்` என்க. `உயிரை அதற்கு உயிராய் நின்று யாண்டும் காத்தலின்` இறைவனை, ``தாங்க வல்ல ஆருயிர்`` என்றார். ``தன் கடன் அடியேனையும் தாங்குதல்`` (தி. 5. ப.19. பா.9) எனவும், ``எடுத்துச் சுமப்பான்`` (திருவருட்பயன் 55) என்றும் வருவனவும், இறைவன் உயிரைத் தாங்குவோனாதலை விளக்க எழுந்தனவாம். தாங்கவல்ல ஆருயிரை அறியாமையாவது, `அவ்வுயிரே, தாங்கப்படுகின்ற உயிர்க்கு உணர்வைத் தருவது` என அறியாமை. `அறிந்தால், தமது உணர்வு நிலையாமை உடையது என்பது விளங்கும்` என்பது கருத்து. `சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது` என்பதனை,
அக்கரங்கட் கெல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்குயிராய் மேவினோம் - எக்கண்ணும்
நில்லா விடத்துயிர்க்கு நில்லா தறிவென்று
நல்லாகமம் ஓதும் நாடு.
-உண்மை விளக்கம் 30
என்பதனான் அறிக.
``நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்`` -தி.6 ப.62 பா.2
என அருளிச்செய்ததும் இதனை.
இதனால், உணர்வு உளதாகுமாறு கூறு முகத்தான், அதனது நிலையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 

பொழிப்புரை :

பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.

குறிப்புரை :

ஒளி காரணமாகப் பகலவனை இறைவனோடு உவ மித்தல் வழக்காதல் நோக்கி இறைவன் அவனினும் மிக்கவனாதலை விளக்கினார். இங்ஙனம் அவனது முற்றுணர்வின் பெருமையை எடுத்துக்கூறியது, அவ்வறிவாற்றலால் அவன் அனைத்துயிர்களையும் தன் இச்சைவழி நடாத்துகின்றான் எனக் கூறுதலை நிறுவுதற் பொருட்டாம். ``அன்று`` என்பதன்பின் `முதல்` என வருவிக்க. அளக் கின்றதற்கு வினைமுதலாகிய ``நந்தி`` என்பது மேலைத் திருமந்திரத் தினின்றும் வந்து இயைந்தது. ``அறிகின்றிலர், உணரார்`` என இரு தொடராக வைத்து அருளியது, `அவ்விரண்டும் தனித்தனி ஆய்ந் துணரத் தக்க சிறப்புடையன` எனறற்கு. ``இந்நிலத்தின்`` எனச் சுட்டிக் கூறினமையால், ஏனையிடத்தில் அனைத்துலகமும் கொள்ளப் பட்டன. மூன்றாம் அடியை இறுதியின் வைத்து உரைக்க. பொன்றுதல், இங்கு, நிலையாமை. ``உணர்வார்`` என்பது, `உணர்வு` என்பதன் அடியாகப்பிறந்த பெயர். அனைத்துயிர்களையும் உயர்திணையாக வைத்துக் கூறினார் என்க. மாயம் - அழிவு. சிவன் பெத்தத்தில் கருவிகள் வாயிலாக நிலையாத உணர்வையே உயிர்கட்கு உண்டாக் குகின்றான் என்பதை உணர்வார்க்கு உணர்வினது நிலையாமையும் விளங்கும் என்பது கருத்து.
இதனால், உணர்வு நிலையாமைக்குக் காரணங் கூறுமுகத்தால், அந்நிலையாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 

பொழிப்புரை :

பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை: என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர்யாண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொரு வர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், `தம் அறிவும் ஆற்றலும் இன்றுள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக் கின்றனர். இன்னதோர் அறியாமை இருந்தவாறு இரங்கத் தக்கது!

குறிப்புரை :

மாறு, முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகு பெயராய், அதனை உடையவற்றைக் குறித்தது. \\\\\\\"கூறும்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி, அவ்வடி முழுவதையும் இறுதியின் வைத்து உரைக்க. `ஈற்றினாலும்` பிறப்பினாலும்` என்னும் உம்மைகள் தொகுத்தலாயின. `ஓர்யாண்டின் இறுதிநாளை அடுத்த மற்றோர் யாண்டின் முதல்நாள் தொடங்கிவிடுகின்றது` என அவற்றின் இடையறாமையை உணர்த்தற்கு ஈற்றினை முன்னர்க்கூறினார். `அதனைப் பெரிதறிவாரில்லை` என்னும் அத்தொடரினைப் பின்னும், \\\\\\\"கூறும்`` என்பதனுடன் கூட்டுக. இளமைக் காலத்துள்ள உணர் வாற்றல் முதுமைக் காலத்துத் தளர்ச்சியுறும் என்றவாறு.
இதனால், உணர்வு நிலையாமை மூப்பினது இழிவுணர்த்து முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

பொழிப்புரை :

ஓர் அகப்பையே இடப்பட்ட ஐந்து பானைகள் அடுக்காய் உள்ளன. அவை அனைத்திலும் இட்டு அடப்படுகின்ற அரிசி ஒன்றே உள்ளது. அப்பானைகளை ஏற்றிவைக்கின்ற அடுப்புகள் மூன்று உள. அம்மூன்று அடுப்பிலும் மாட்டி எரிக்கின்ற விறகுகள் ஐந்து உள்ளன. இதனால் அவ்வரிசி நன்முறையில் அடப்படுமோ! படாது. அதனால், அவைகளில் வைத்து அவ்வரிசியை அட நினையாமல், நல்ல அட்டில் தொழிலாளனிடம் கொடுங்கள்; கொடுத்தால் நன்கு அட்டு உண்ணலாம். முன்சொன்ன வகையில் அரிசியை அடலாம் என்று நினைத்துக் கழித்த நாள்களும் பலவாய் முன்னே போய்விட்டன. இனியேனும் அவனிடம் அவ்வரிசியை விரையக் கொடுங்கள்.

குறிப்புரை :

`உயிர் உணர்வு சிவனைச் சார்ந்தால் நிலை பெற்று இன்பந் தருமேயல்லது, மாயாகாரியங்களைச் சார்ந்தால் நிலை பெறாது துன்பத்தையே தரும்` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார். துடுப்பு, உயிர்; அரிசி, அதன் உணர்வு; ஐந்து பானை, ஐந்து உடம்பு; மூன்று அடுப்பு, `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என்னும் மூன்று காலங்கள்; ஐந்து விறகு, ஐம்பொறிகள். இவை இங்ஙனம் உருவகிக்கப் பட்டமைக்குரிய இயைபுகளை ஓர்ந்துணர்ந்துகொள்க. இங்குச் சொல்லப்பட்ட பானை முதலியவற்றால் அடுதல் தொழில் நிகழ லாகாமை அறிக. ``எரியாமல்`` என்பது, பிறவினை வினையெச்சம். `விடுத்தனவாகிய நாள்களும்` என்க. `துடுப்பிடு பானைக்கும்` என்பது பாடம் அன்று. நல்ல அட்டில் தொழிலாளன், சிவன். ஐந்துடம் பாவன, `சோற்றுடம்பு, காற்றுடம்பு, உளத்துடம்பு, உணர்வுடம்பு, களிப் புடம்பு` என்பன. இவை முறையே, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` எனப்படும். இவற்றின் இயல்பு அப்பால் விளங்கும்.
இதனால், மாயா காரியங்களின் வேறுபாட்டால் உணர்வு நிலையாமை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே. 

பொழிப்புரை :

தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாததுபோல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.

குறிப்புரை :

இங்ஙனமாகவே அகக்கண்ணில் நின்ற உயிர் உணர் விற்கு விளங்குவானாயிற்று. இனமலர் - கூட்டமாய மலர். இஃது ஒரு மைக்குப் பன்மை உவமை. வாசம் - வசித்தல்; `வாசத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. \\\\\\\"போல்`` என்னும் முதனிலை முற்றுப் பொருளது. பொருட்கண். ``இன்புற நாடி நினைக்கிலும் - கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே`` எனப் பின்னுங்கூறி விரித்தமையால், உவமைக்கண்ணும் அவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. நினைக்கினும் என்பது பாடம் அன்று. `கட்புறம்` என்பது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. இது, `புறக்கண்` என்பதன் நிலைமாற்றம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதன் மறுதலை முகத்தால் கூறப்பட்டது. கண், ஞானமுமாம்.

பண் :

பாடல் எண் : 9

ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 

பொழிப்புரை :

மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசுபுண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுத லாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.

குறிப்புரை :

`மானிடர் ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கு ஆம் விதி வேண்டும்; அது என் சொலின்` என எடுத்துக்கொண்டு உரைக்க. ஈரிடத்தும் `நாடி` எனவும் பாடம் ஓதுப. `நாம் விதி வேண்டும்` என ஓதுதல் பாடம் ஆகாது, பின்னர் ``அந்நிலம்`` என்றதனால், முன்னர் `இந்நிலம்` என்பது பெறப்பட்டது. ``வல்லார்க்கு வேண்டும்`` என்றது வேறு முடிபாகலின், \\\\\\\"செய்மின், போற்றுமின்`` என்பன இடவழு ஆகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 10

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.

பொழிப்புரை :

வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

குறிப்புரை :

`இந்நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பெச்சம். அவ்வியம் - பெறாமை. அது, \\\\\\\"பேசி`` என்றதனால், அதனால் வரும் புறங்கூற்றைக் குறித்தது. \\\\\\\"வெவ்வியர், செவ்வியர்`` என்பன இடவழுவமைதி. `வெவ்வியன், செவ்வியன்` என்பன பாடமாயின், பன்மை ஒருமை மயக்கமாகவும் கொள்க. தவ்வி - சிறிது. \\\\\\\"யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி`` எனப் பின்னரும் அருளுவார். `செவ்வி தலைப்பட்ட போது` என ஒரு சொல் வருவித்து முதலிற் கூட்டுக. `தவ்விக் கொடுண்மின்` என்பது பாடமன்று.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `உணர்வு நிலை யாமையை உணர்ந்து நிலைபெறுதற்குரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 

பொழிப்புரை :

மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.

குறிப்புரை :

``குருபூசைக்கும்`` என்ற உம்மை, `சிவ பூசைக் கேயன்றி` என, இறந்தது தழுவிற்று. ``பன்மலர்`` என்பதன்பின், `வேண்டும், ஆயினும்` என்பவற்றை வருவித்து, `ஒண்மலர் நல் தார் கொல்லாமை` எனவும், `தீபம் சித்தமும் அமர்ந்திடம் ஆவி உச்சியும்` எனக்கூட்டுக. ``சித்தம் `` என்றதை அடுத்து நின்ற குறிப்பால, `உற்று ஆர்தல் இருதயத்தில்` என்பது தோன்றிற்று. ``தீபமும்`` என்ற உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. ``ஓர்`` என்றது `ஒருவகை` என்னும் பொருட்டு, ``தார்`` என்றதனால் ``கொல்லாமை`` என்றது, `கொல் லாமைகள்` எனப்பன்மையாய் நின்றமை பெறப்பட்டது. உயிர்ப் பன்மையால் கொல்லாமைகளும பலவாயின. ஒருசார் உயிர்களைக் கொல்லாதார் மற்றொருசார் உயிர்களைக் கொல்வாராதலின், `எல்லா உயிர்களிடத்தும் கொள்கின்ற கொல்லாமை நோன்பே வேண்டும்` என்பார், `கொலலாமை மலர்` என்னாது, ``கொல்லாமை மலர்த் தார்`` என்றார். ஞான நெறியார் செய்கின்ற அகப்பூசைக்குக் கொள்ளப்படும் எட்டு மலர்களுள்ளும் கொல்லாமையே தலையாயதாகச் சொல்லப் படும். அவ்வெட்டு மலர்களாவன. `கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` எனபன. இவ்வாறு சிவஞான மாபாடியத்து (9 அதி.3)க் கூறப்பட்டது. `அமர்ந்த` என்னும் பெயரெச்சத்து கரம் தொகுத்தலாயிற்று. இறைவன் எழுந்தருளியிருந்து அன்பரது வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும் இடம் இலிங்கமாதல் உணர்க. இருதயமாகிய ஆசனத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி ஆன்மாவும், மூர்த்திமான் சிவனுமாதல் பற்றித் திருநாவுக்கரசர், ``காயமே கோயிலாக`` (தி.4 ப.76 பா.4) என்னும் திருப்பாடலுள், ``மனம் மணி இலிங்கமாக`` என ஓதியருளினமை காண்க. ``மனம்`` எனப்படுவது ஆன்மாவே என்பது உணர்த்தற்கு, நினைகருவியாகிய மனத்தை, ``கடிமனம்`` என முன்னே அடைகொடுத்துப் பிரித்தருளினார். உபநிடதங்களுள் தகரவித்தை கூறுமிடத்து, ``இருதயமாகிய தாமரை மலரின் மேல் விளங்குகின்ற சுடரின் முனையில் பரமான்மா நிற்கின்றது`` எனக் கூறப்படுவதில், `சுடர் என்றது, சீவான்மாவை` என்பது பின்னர், `பரமான்மா` என வருதலான் அறியப்படும் (மகாநாராயணோப நிடதம்). ``எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே`` என உண்மை விளக்க (32) நூலும் ஆன்மாவை` இலிங்கம்` என்றது காண்க. ஆன்மா வேயன்றித் திருவைந்தெழுத்தும் சிவபெருமானுக்கு இலிங்கமாம். தனது சத்தியும் இலிங்கமாம். இவ்வாறு பல தலைப்படக் கூறுதல் என்னை என ஐயுறும் மாணாக்கர்க்கு, `சிவபெருமானுக்குத் திருவைந் தெழுத்துத் தூல சரீரமும், ஆன்மா சூக்கும சரீரமும், சத்தி அதிசூக்கும சரீரமும் ஆதலின், அதுபற்றி ஐயமில்லை` என்பதை மாபாடியம் உடையார் தமது சிவஞான சித்தி (சூ. 9. 9) உரையுள் இனிது விளக்கினார். `கொல்லாமை என்னும் அறம் ஞான பூசையிலும் முதல் மலராகக் கொள்ளப்படும் சிறப்புடைத்து` என்பது கூறுவார், அப்பூசையின் உறுப்புக்கள் பிறவும் உடன் கூறினார் என்க.
இதனால், கொல்லாமையது சிறப்பு உணர்த்தப்பட்டவாறறிக.

பண் :

பாடல் எண் : 2

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

: ``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யம தூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது.
இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொல்லாங்கு, கொலையால் வருவதாயும், கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, `புலையர்` என்றார். புலையர் - கீழ்மக்கள்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை`` -குறள் 315
என்றவாறு, அருளில்லார், `அறிவுடையார்` எனப்படாமை யானும்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 252
என்பதனால் புலால் உண்பவர் அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் `உயர்ந்தோர்` எனப்படாது `இழிந்தோர்` எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்துத் தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. -குறள் 255
எனத் திருவள்ளுவரும், `புலால் உண்பவர் நிரயம் புகுந்து மீளார்` என்றார். இரண்டிடத்தும், `மீளாமை` என்பதற்கு, `நெடுங்காலம் கிடத்தல்` என்பதே கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 1

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

பொழிப்புரை :

அறமுதலிய நான்கற்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.

குறிப்புரை :

ஆத்தம் - துணையாக நம்புதற்கு உரிய தகுதி. இஃது, `ஆப்தம்` என்னும் வடசொல்லின் திரிபு. இனி இதனை, `யாத்த` என் பதன் மரூஉவாகக் கொண்டு, `கட்டிய மனைவி` என்று உரைப்பாரும் உளர். பிறன்மனை நயத்தல், காமத்தோடு, `களவு` என்னும் குற்றமு மாம் என்றற்கு, ``காத்த மனையாள்`` என்றார். இவற்றால் மக்கட்குரிய நெறிமுறை இலராதல் பற்றிப் பிறன்மனை நயக்கும் பேதையரை `எருது போல்பவர்` என இழித்துக் கூறினார். காய்ச்ச, `காய்த்த` என்பதன் போலி `இயற்கையாய்ப் பழுத்த பழம்` என்றற்கு, `கனிந்த` என்னாது ``காய்த்த`` என்றார். இயற்கையானன்றி இடையே பறித்துச் செயற்கையாற் பழுக்க வைக்கும் பழம் சுவையுடைத்தாகாமை அறிக. `உண்ணமாட்டாமை, மடமையான் ஆயது` என்க. `பேதைமை யாவது, ஏதம் கொண்டு ஊதியம் போக விடலே` (குறள் 831) யாதல் உணர்க.
தனது தோட்டத்தில் உள்ள பலாப்பழம் அச்சமும், இளி வரவும் இன்றி நாவாரவும், வயிறாரவும் உண்ணப்படுமாகலின் அதனை, அத்தன்மையளாய தனது மனையாட்கும், பிறனது புழைக் கடையில் உள்ள ஈச்சம் பழம் முள்ளுடைதாய அம்மரத்தியல்பானும், பிறனுடையதாகலானும் அச்சமும், இளிவரவும் தருவதாய் உண்ணப் போதாத சிற்றுணவாம் ஆதலின், அதனை, அத்தன்மையளாய பிறன் மனையாட்கும் உவமை கூறினார். அதனானே, பிறன்மனை நயப்பார் அறத்தையேயன்றித் தாம் கருதிய இன்பமும் பெறாமை பெறப்பட்டது. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும்,
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில். -குறள் 142
என்றார். இன்னும் அவர்,
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். -குறள் 146
என்றலும் காண்க.
இதனால், பிறன்மனை நயத்தல் மடவோரது செயலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

பொழிப்புரை :

தமக்கு உறுதியை அறியாதவர் ஆத்தமனையாள் அகத்தில் இருக்கவே, பிறன் காத்த மனையாளைக் காமுறுதல், காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்ற வாறன்றியும், தாம் செழிப்புறப் பேணி வளர்த்த தேமாமரத்தில் பழுத்த பழத்தைக் குறையுடையதென்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்த புளிமாமரத்தின் நுனிக்கிளையில் ஏறிக் கீழே விழுந்து கால் ஒடிந்ததையும் ஒக்கும்.

குறிப்புரை :

தேமாமரத்தைத் திருத்தி வளர்த்தமை, மனைவி உள்ளத்தில் ஒத்த அன்பும், மனைமாட்சியும் வளர அவளோடு அள வளாவி வாழ்ந்தமையைக் குறித்தது. அறத்தொடும், புகழொடும் இயைந்த இன்பத்தையும், உண்டி முதலிய உபசரிப்பையும் தந்து எஞ் ஞான்றும் விரும்பப்படுதல் பற்றித் தன் மனைவியைத் தேமாங் கனியா கவும், அவற்றிற்கெல்லாம் மறுதலையாதல் பற்றி அயலான் மனைவியைப் புளிமாமரமாகவும் கூறினார். அருத்தம் - பாதி; குறை. மாம்பழத்தை அறையில் புதைத்தல் பிறர் கொள்ளாமைப் பொருட்டு. பொருத்தம் இன்மை - இயைபின்மை; அயல். காலறுதல் கூறின மையால், கொம்பு, நுனிக் கொம்பாயிற்று. காலறுதல், அவளைக் கொண்டவனால் அவ்வழி வந்த கால் வெட்டப்படுதல். நாலடியுள், ``காணிற் குடிப்பழியாம்; கையுறிற் கால்குறையும்`` (நாலடியார், 84) என்றது காண்க.
`நுனிக் கொம்பர் ஏறினார்`(குறள் 476) வீழ்ந்து காலொடிதலும் இயல்பு. நுனிக் கொம்பர் செல்லலாகாத இடத்துச் சேறலைக் குறித்தது. ``காலற்ற வாறு`` என்றதில், இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், வேறும் ஓர் உவமையால் மேலது வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொழிப்புரை :

செல்வச் செருக்கில் ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.

குறிப்புரை :

`கண்டகன்` என்பது இடைக் குறைந்து நின்றது. செல்வச் செருக்கினாலும், புல்லறிவினாலும் தூர்த்தராய்த் திரிவோ ராயினும், அவர்தம் உள்ளமும், இம்மையில் `மழையைப் பெய் யெனப் பெய்விக்கும்` (குறள் 55) ஆற்றலையும், மறுமையில் புத்தேளிர் வாழும் உலகத்துப் பெருஞ் சிறப்பினையும் தருவது (குறள் 58) கற்பு என்று அதனது சிறப்பினைத் தெளிந்து அதன் கண்ணே நிற்கும் பெருந்தகைப் பெண்டிர்மாட்டுப்புகாது, அத்தெளிவின்மையால் அங்ஙனம் நிற்க மாட்டாது இழுக்கிச் செல்கின்ற பெண்டிர்மாட்டே புகுவராகலின், ``மருள்கொண்ட மாதர் மயல் உறு வார்கள்`` என்றார். இதனானே, அவ் இழுக்குடை மாதரும் கேடெய் துதலை உடம்பொடு புணர்த்துக் கூறினாராயிற்று. திருவள்ளுவரும்,
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். -குறள் 56
என்பதில் ``தகைசான்ற சொற்காத்து`` என்பதனால், அதனைக் `காவாதவள் பெண்ணல்லள்` என்பதும்,
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. -குறள் 57
என்பதனால், `சிறைக்காவல் நிறைக்காவலுக்குத் துணையாவதே யாகலின், அந்நிறைக்காவல் இல்வழிச் சிறைக்காவலாற் பயனின்றாம்` என்பதும்,
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. -குறள் 59
என்பதனால், ``கற்பென்னும் திண்மையால்`` (குறள் 54) கொண்டார்க்குப் பெருமையைத் தந்து, அவர்க்குத் தம் பகைவர்முன்னே ஏறுபோல இறுமாந்து நடக்கும் பீடு நடையை உண்டாக்கும் பெண்டிரே யன்றி, தம்மைக் கொண்டார்க்குத் தம் பகைவர்முன்னே தலை கவிழ்ந்து நிற்கும் இளிவரவினை உண்டாக்கும் பெண்டிரும் உளர் என்பது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கூறினமை காண்க. மேல், ``காத்த மனையாள்`` (தி.10 பா.199) என்பதனால் சிறைக்காவல் குறிக்கப்பட்டது. இவ்விழுக்குடையாளை, ``இல்லிருந்து எல்லை கடப்பாள்`` எனப் பிறருங் கூறி, அவளை, `வல்லே அருக்குங் கோள்` (திரிகடுகம்) என்பதனால், `உலகிற்கு ஆகாதவள்` என்றார்.

பண் :

பாடல் எண் : 1

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 

பொழிப்புரை :

இலை, தளிர் முதலியவற்றால் கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவரு மாயினும், குலைமாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்குபயப்பதாம். அதுபோல உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந் நகை காட்டி அதனால் மேலும் கருத்தைக் கவர்வாராயினும், நகைப்புமாத்திரத்தால் அன்புடையராய்த் தோன்று கின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன் னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.

குறிப்புரை :

எடுத்துக்காட்டுவமைக்கு ஏற்ற பொருள்கள் இசையெச்சமாய் நின்றமையின், அவை விரித்துரைக்கப்பட்டன. `வெய்தாக` என ஆக்கம் வருவித்து உரைக்க. இதனால் வரைவின் மகளிரை அவரது வடிவழகு பற்றியும், பொய்ச்செயல் பற்றியும் விரும்புவார், பின் தீங்குறுவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே. 

பொழிப்புரை :

இல்லறநெறியில் நிற்கக் கருதுவார்க்குத் தம் மனைவியது இன்பத்தை நினைக்கும்பொழுது சுனையில் உள்ள நீர், மூழ்குவார்க்குத் தண்ணிதாய்த் தன்னினின்று மீளாதவாறு தன்னுள் ஆழ்த்திக்கொள்வதுபோல இருவர்க்கும் அரும்பெறல் இன்பமாய் அவரைப் பிரியாவகைச் செய்யும். அந்நெறியில் நிற்கக் கருதாத பிறர்க்குப் பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம்போல அவர் தம் உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்தொழியும். அதனால், பொது மகளிரது இன்பத்தை உண்மை என்று நினைத்தலும் கூடாது.

குறிப்புரை :

மனை, மனைவி ஆகுபெயர்கள். முன்னர், ``மனை புகுவார்கள்`` என்றும், ``மனைவியை நாடில்`` என்றும் கூறினமை யால், பின்னர், `பிறர்` என்பதும் பொதுமகளிரை நாடில் என்பதும் பெறப்பட்டன. உண்மையை, ``நனவு`` என்றார் உண்மையாகாமை யின், `போல` என்றார். உம்மை, மாற்றி உரைக்கப்பட்டது. அற நெறி யில் நிற்கும் ஆடவர் தம் மனைவியரைப் பிரிய மாட்டாமையை அகத் திணையுள், செலவழுங்கல், இடைச்சுரத் தழுங்கல் முதலிய துறை களில் வைத்து இனிது விளங்கப்பாடுவர் நல்லிசைப் புலவர்.
இதனால், பொது மகளிரது உள்ளத்து அன்பின்மை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 

பொழிப்புரை :

ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம்கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில் லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.

குறிப்புரை :

`இவ்விரண்டனுள் முன்னது பொருள் இருந்த காலத்து நிலைமை; பின்னது பொருள் அற்ற காலத்தில் உண்டாம் நிலைமை` என்பது கருத்து. இளம்பிடி, நடைக்கு உவமை, அன்னதொரு நடையாலும் ஆடவரை மயல்கொள்ளச்செய்தல் குறித்தவாறு. `மயலால்` என உருபு விரிக்க. அயல் - அயன்மை. அஃது உறுமாறு பேசி அகன்றமையைக் கோவலன் வரலாற்றாலும் உணர்க. அயலுறப் பேசுதல், அவர் பொருளுடையார் பக்கம் போதலைக் காணும் பொழுதாம். ஆகவே, `பொருட் பெண்டிராகிய அவரது பொய்ம் முகத்தால் மயங்கலாகாது` (குறள் - 913) என்பதாம்.
இதனால், பொதுமகளிரது நிறைஇன்மை கூறி, மயக்கத்தால் அவ்விழிபினை மறந்து அவரை விழைதல் கூடாது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே. 

பொழிப்புரை :

நிலவுலகத்தில் வாழும்பொழுது மகளிரோடும் கூடிப்பெறுவது யாதும் இல்லை. ஆயினும், உடம்பொடு கூடி நிற்பாரது உள்ளத்தில் ஊழ் கூட்டிய ஒரு மயக்கமே அக்கூட்டத்தின்கண் உளதாய விருப்பம். இன்னும் அவ்விருப்பம், கையிலே கிடைத்த கருப்பஞ்சாறு போன்ற சிவானந்தத்தை உடைய மக்களுடம்பில் ஒருபக்கம் வைக்கப் பட்ட வேம்பு போல்வதுமாகும்.

குறிப்புரை :

``கூடி என்`` என்றது, அவ்வின்பம் கணத்தில் அழியும் சிற்றின்பமாதலேயன்றிப் பின்னரும் பல இடர்விளைத்தல் பற்றியாம். விதியின் பயனாகிய காரியத்தை, ``விதி`` எனக் காரணமாக்கிக் கூறினார். ``சாறுகொள்`` என்றது ஒட்டணி. ``வைத்த விதி`` எனவும், ``வேம்பதுவாம்`` எனவும் கூறியவாற்றால், அவ் வின்பத்தை அறம் பொருள்கட்குத் துணையாக அமைந்த மனைவியிடத்து நுகர்தலோடு ஒழியாது, அறத்தோடும், பொருளோடும் சிறிதும் இயைபில்லாத பொதுமகளிடத்தும் நுகர விரும்புதல் பெரும் பேதைமைத்து என்றவாறாம்.
இதனால், `பொதுமகளிரது இன்பம் வேண்டத்தகாத தொன்று` என்பது கூறப்பட்டது. இத்திருமந்திரம், காமவின்பத்தினை முற்ற விலக்கும் நோக்குடைத்தாதலும் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 

பொழிப்புரை :

வீரம் இல்லாத ஒழுக்கத்தால் பொது மகளிர் மயக்கத்தில் ஆழநினைத்து அதன்பொருட்டுத் தம் பொருளை அளக் கின்ற பேதையரை அறிவுடையோர் இடித்து வரை நிறுத்தி விலக்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவரது நிலைமை படுகுழியில் வீழ்ந்தவர் மீளமாட்டாது அழுந்தியொழிதல் போல்வதேயாம்.

குறிப்புரை :

எனவே, `படுகுழியில் வீழ்வாரை விலக்காதொழிந்த பாவம் அறிவுடையோர்க்கு உண்டாகும்` என்பது கருத்தாயிற்று. கோழை - உரன் (திட்பம்) இன்மை. அஃதாவது மனத்தை அடக்கும் வலி இன்மை. `ஒழுக்கத்தால்` என உருபு விரிக்க. `குளம் மூடு பாசியில்` என்றாராயினும், `பாசி மூடு குளத்தில்` என்றலே கருத்து என்க. இஃது உருவகம், `நாடுவார்` என்பது குறுகிநின்றது. நாடுவார், முற்றெச்சம். குளம், இயல்பால் விரும்பி ஆடத்தக்கதெனினும், பாசியால் மூடப்பட்டவாற்றால் இகழ்ந்தொதுக்கப்படுதல் போல, மகளிர் இயல்பால் விரும்பிக் கூடத்தக்கவர் எனினும், வரைவில் ஒழுக்கத்தால் இகழ்ந்தொதுக்கப்படுவர் என்றற்குப் பொதுமகளிரை, பாசி மூடிய குளமாக உருவகித்தார். இக்குளத்தில் மூழ்கினார் மாசு தீராமையேயன்றி மாசு மிகப்பெறுதலும் உடையாராவர் எனினும், ஒருகால் மீண்டு வருதல் உண்டு; பொதுமகளிர்தம் இன்பத்தில் ஆழ்ந்தவர் பழி பாவங்களை எய்தன்மேலும், மீள அறம் பொருள்கட்கு உரியராகாது வெறுவியராவர் என்றற்கு, ``பூழை நுழைந்தவர் போகின்றவாறே` என வேறும் ஓர் உவமை கூறினார். இவற்றையும் கோவலன் வரலாறு முதலியவற்றான் அறிந்துகொள்க.
இதனால், பொதுமகளிரது கூட்டம் உய்தியில் குற்றமாய் முடியும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 

பொழிப்புரை :

`பிற உயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.

குறிப்புரை :

மலைவு, அறத்திற்கு நேர்மாறாதல், எனவே, `பெருந் தீவினை` என்றவாறாம். இவற்றை, `பஞ்ச மாபாதகம்` என்பர். `அவை நீக்கி` என்பது பாடம் அன்று. தலையாயதனை, `தலை` என்றார். ஆம் - உண்டாகும். ``அவை நீக்கத் தலை ஆம்`` என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``இலையாம்`` என்றதில் ஆம், அசைநிலை. இறுதிக்கண், `உளதாம்` என்பது சொல்லெச்சம். ``இன்பம் சார்ந்தோர்க்கு`` என்றது, கொலை முதலியன தோன்றாமைக்கு ஏது உணர்த்தற்பொருட்டும், ``ஞானானந்தத்திருத்தல்`` என்றது, அவையே யன்றிப் பிற தீங்கு நலங்களுள் யாதொன்றும் இல்லை என்பது உணர்த்தற்குமாம். எனவே, `சிவனடியைச் சாராதவழி இவற்றை முற்றக்கடிதல் இயலாமையின், அவற்றை அடைதலே தக்கது` என்பதும், `அவற்றை அடைந்தவழித் தீமை நீங்குதலேயன்றி, நன்மை பெருகுதலும் உளவாம்` எனவும் கூறியவாறாயிற்று.
இதனால், `பெரிதும் குறிக்கொண்டு கடியத்தக்க பெருங் குற்றங்கள் இவை` என மேற்போந்தவைகளைத் தொகுத்துக் கூறி, அவற்றை முற்றக் கடிதற்கு வழியும் கூறப்பட்டது. களவையும், பொய் கூறலையும் வழிமொழிதல் வகையாற் கூறினார் எனவும் கள் உண்டலை எதிரது போற்றிக் கூறினார் எனவும் கொள்க. பின்னர் வரும் வாய்மை பொய் கூறாமையாகாது வேறாதல் அறிக. இதனானே, இத்திருமந்திரம் இவ்விடத்ததாதலும், `புலால் மறுத்தலின்` கண்ணது ஆகாமையும் அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 1

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 

பொழிப்புரை :

ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.

குறிப்புரை :

`கிழிந்ததேல்` என்னு வினையெச்சம் ``கிழிந்தது`` என முற்றாய்த் திரிந்தது. ``புடவை கிழிந்தது`` என்பது, `வறுமை வந்தது` என்பதனை உணர்த்திய குறிப்புச்சொல். அடைதல், இங்கு அதன் காரணமாகிய தெளிதலை உணர்த்திற்று. தெளியப்பட்டார், பெண்டி ரும், பிள்ளைகளும், பிற சுற்றத்தாருமாவர்.
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். -குறள் 1047
என்றார் திருவள்ளுவரும். ``இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்`` என ஔவையாரும் நல்வழியில் கூறுதல் காண்க. வறுமை எய்தினார்க்குப் பிறர்பால் பொருள்கொடுக்கும் நிலை இல்லை என்றல் கூறவேண்டாமையின், இங்கு, ``கொடை, கொள்ளல்`` என்றவை, உறவு பற்றி நிகழும் மகட்கொடை, மகட்கோடலேயாம். அவை இன்மையால் கொண்டாட்டமும் இல்லையாயிற்று. பிற உலக நடையாவன, கண்டவழி இன்முகம் காட்டலும், முகமன் கூறலும் போல்வன. ``இயங்குகின்றார்கட்கு`` என்றது, `பிறிது செயலில்லை` என்றவாறு. ``நாட்டில் இயங்குகின்றார்கட்கு`` என்பதனை, மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், நல்குரவினது கொடுமை கூறும் முகத்தால், அதனால் உள்ளந் திரியாமை நிற்றலின் அருமை குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொழிப்புரை :

`பொழுது விடிந்து விட்டதே; காலை உணவுக்கு என் செய்வது` என்று நிலையில்லாத வயிற்றை நிரப்புதற்கு வருந்தி, அதற்குரிய அரிய பொருள்களைத் தேடி அலைகின்றவர்களே! நீவிர் உங்கள் வயிற்றை நிரப்பினாலும், உங்கள் சுற்றத்தார் வயிற்றை நிரப்பினாலும், வேறு யார் வயிற்றை நிரப்பினாலும், குற்றமில்லை. அவைகளை நிரப்பும் முயற்சியால் சிவனை மறவாதீர்கள்; மறவாது நின்று துதியுங்கள். அப்பொழுதுதான் வினை நீங்கும்; வினை நீங்கினால் வறுமை நீங்கும்.

குறிப்புரை :

வயிற்றினது இழிபு உணர்த்த வேண்டி அதனை, `பொய்க்குழி` என்னும் பெயரால் கூறினார். கூறவே, பின் வருவன வற்றையும் அதனோடு இயைய, ``குழி`` என்றார். எனவே, அதற் கேற்ப, `தூர்த்தல்` என்றார். ``தூர்த்து`` என்னும் செய்தெனெச்சம்,
``செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்`` -தொல். சொல். வினை
என்பதனால், இங்கு எதிர்காலத்தில் வந்தது. அழுக்கு, வினை மாசு. ``புகலூர்ப் பாடுமின் புலவீர்காள் - இம்மையே தரும் சோறும் கூறையும்`` ( தி.7 ப.3 பா.41) என அருளிச் செய்ததனாலும் சிவபெருமானை ஏத்துவார்க்கு வறுமை நீங்குதல் அறியப்படும்.
இதனால், `சிவபெருமானை ஏத்தாமையே வறுமைக்குக் காரணம்` என்பது கூறும் முகத்தால், அவ்வறுமை வந்த காலத்து அது காரணமாக அவனை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. 

பொழிப்புரை :

மக்கள் அன்னமே (சோறே) யன்றிச் சொன்னமும் (பொன்னும்) தேடுதல், இயல்பாகவே தூர்ந்து போவதாகிய மட்குழிபோலாது, தூர்க்கினும் தூராத கற்குழி போன்ற வயிற்றை நிரப்புதற்கேயாம். ஆயினும், அப்பொன்னை நிரம்பக் குவித்து வைத்தவர்க்கும் வயிற்றை நிரப்புதல் இயலாததே எனினும், அதனை நிரப்புதற்கு வழி ஒன்று உண்டு; அவ்வழியை அறிந்தால் உள்ளம் தூய்மைப்பட்டு வயிறும் நிரம்பும்.

குறிப்புரை :

ஒருவேளை நிரம்பியபின் அஃது அற்றொழிய, மறுவேளை வெறுவிதாய்விடுதல் பற்றி, ``அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது`` என்றார். அங்ஙனம் தூராத குழியைத் தூர்க்கும் வழி பிறப்பை நீக்கிக் கொள்ளுதலேயாகலானும், பிறப்பு நீங்குதல் வினை நீங்கியவழியேயாகலானும், `அது நீங்கும் வழியை அறிந்தால் வினை நீங்க அக்குழி தூரும்` என்றார். `அழுக்கற்றவாற்றானே அக்குழி தூரும்` என உருபு விரித்து மாறிக் கூட்டுக. `அவ்வழியாவது இறைவனை ஏத்துதலே` என்பது குறிப்பாதல், மேலைத் திருமந்திரம் பற்றி அறியப்படும்.
இதனால், `வயிற்றை நிரப்பும் துன்பம் செல்வம் உடையவர்க் கும் நீங்காமையை அறிந்து வறுமையால் உள்ளம் வருந்தாது நிறைவெய்தியிருத்தல் வேண்டும்` என்பது கருத்து.
``தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே`` -புறநானூறு 189
என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது.

பண் :

பாடல் எண் : 4

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே. 

பொழிப்புரை :

புதிய வினைகள் பலவற்றைச் செய்யத் தூண்டுதலால், `ஒருவரைப் பற்றி மற்றொருவர், அவரைப் பற்றி வேறொருவர்` என்று இவ்வாறு தொடர்ந்துவரும் சுற்றத்தார் பழ வினையினும் பார்க்கக் கொடியோரே. அதனால், அவரைப் புறந் தருதலில் தனது நாள் பல வற்றைக் கடந்துவிட்ட ஓர் உயிர், அந்நாளை முற்றக் கடந்தொழிவ தற்கு முன்னே என்றாயினும் ஒருநாளில் அச்சுற்றத்தை வெறுத்து மெய்யுணர்வாகிய விளக்கை ஏற்றினால், அவ்விளக்கொளியைப் பற்றிச் சென்று, பின்னும் அவர்களோடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைத்தலும் கூடுவதாம்.

குறிப்புரை :

`உடன்று` என்பது, எதுகை நோக்கி, `உடந்து` எனத் திரிந்தது. உணர், முதனிலைத் தொழிற்பெயர்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். -குறள் 38
என்பவாகலின், `அவ்வழி தூர்த்தல்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக.
``அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே`` -புறநானூறு 193
எனச் சான்றோரொருவர் சுற்றத் தளைக்கட் பட்டு வருந்தினமை இங்கு அறியத்தக்கது. `ஒருவர் உயிர்` என்னாது `ஓர் உயிர்` என்றது, இழிவு பற்றி.
இதனால், `சுற்றம் ஓம்புதலைப் பற்றுக்கொண்டு செய்யாது அறம்நோக்கிச் செய்யின் வறுமைத் துன்பம் உண்டாகாது` என, அத்துன்பம் நீங்குதற்கு வழி கூறப்பட்டது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். -குறள் 341
எனப் பின்னர்க் கூறலின், முன்னர்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. -குறள் 341
என்ற திருவள்ளுவனார்க்கும் இதுவே கருத்தாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 5

அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே. 

பொழிப்புரை :

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக்கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல; பல. (இவற்றை யெல்லாம் நோக்கி) நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.

குறிப்புரை :

`ஆனினம் ஆறினும்` என மாற்றுக. `ஆறினும், ஐவரும்` (குறள் 43)என்றவை தொகைக் குறிப்பு. நல்லன, தீயனவற்றைப் பகுத்துணரும் அறிவும் ஐவரால் அடர்க்கப்படுதலின் அனைத் துயிரையும் வேடரால் கவரப்படுகின்ற பசுக்கூட்டமாகக் கூறினார். `ஆனினம்` என்னாது, `மானினம்` என ஓதுதலும் ஆம். `அறுத்தல்` `வேண்டி நின்றானே` என்பன பாடம் அல்ல. `ஈசனையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால், தேவர் வாழ்க்கையும் முற்கூறிய பசுவினங்களின் வாழ்க்கையோடு ஒத்ததாதல் குறிக்கப் பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 1

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

பொழிப்புரை :

சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``விழுப் பொருள்`` என்பது, வான் முதலிய நான்கு எழுவாய்கட்கும் உரிய பயனிலை. வெற்றியாவது தத்தமக்குரிய பெருமையைத் தப்பாது பெறுதல். அதனைப் பெறுதற்குரிய வழியைக் கூறுவது வேதம். அது நிலைபெறுதலாவது, மறக்கப்பட்டொழியாது, ஓதப்பட்டு நிற்றல். `ஒழுக்கம் ஒழிந்தபின், அதனைக் கூறும் நூலால் பயனின்றிப் போம்` என்பது கருத்து. இதனானே,
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும். -குறள் 134
எனக் கூறினார் திருவள்ளுவர்.
மழை விழுப் பொருளாதலாவது, காலத்தில் பொய்யாது பொழிதல். நிலம் விழுப்பொருளாதலாவது, விளைவு குன்றாது மிகுதல். நாடுகள் விழுப்பொருளாதலாவது, அவ்வந்நாட்டுப் பண்டங் கள் குன்றாது பெருகல். தேவர் விழுப்பொருளாதலாவது, உவகை மேலீட்டால் மேலனவற்றை யெல்லாம் பயன்தரச் செய்தல். `அந்தணர் வேத விதியை ஆறங்கங்களாலும் உணர்ந்து, உணர்ந்தவாறே வேள்வியைத் தப்பாது செய்தலாலே நாடு, பசியும் பிணியும் நீங்கி, வசி யும், வளனும் சுரப்பதாகின்றது` என்பதனைத் திருஞானசம்பந்தரும்,
``கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லை`` (தி.1 ப.80 பா.1)
என்பதனால் குறித்தருளினார். உலக நலம் கருதி இதனைச் செய்தலானே இவர் `அந்தணர்` என்னும் காரணப்பெயர் எய்தினர். எனினும், `புலால் மறுத்தும், கொல்லாதும், அனைத்துயிர்மேலும் அருளுடையார்க்கே அது முற்றப் பொருந்தும்` என்றதற்கு, ``அந்தணர் என்போர் அறவோர்`` (குறள் - 30) என்றார் திருவள்ளுவர். சோர்வின்மை, நெறிமுறைகளில் உறைத்து நிற்றல்.
இதனால், முத்தீ வேள்வியது இன்றியமையாமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓது கின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.

குறிப்புரை :

`முத்தீ வேள்வி செய்கின்ற` என்றதனால், தேவ யாகம் பிதிர் யாகங்களும், `வேதத்தை ஓதுகின்ற` என்றதனால் பிரம யாகமும், `பிறர்க்கும் பிற உயிருக்கும் கொடுத்து உண்பர்` என்றதனால், மானுட யாகம், பூத யாகங்களும் ஆகிய ஐவகை வேள்விகளும் குறிக்கப்பட்டன. எனவே, `சிறப்புப்பற்றி, அக்கினி காரியமே, `வேள்வி` எனப்படுமாயினும், இவையும் வேள்வியேயாக, வேள்வி ஐவகைத்து` என்பதும், `ஐவகை வேள்வியையும் எஞ்சாமற் செய்பவரே சிறப்புடை அந்தணர்` என்பதும் கூறியவாறாயிற்று,
இனைத்துணைத் தென்பதொன் றில்லை, விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -குறள் 87
எனவும்,
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார், விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். -குறள் 88
எனவும் விருந்தோம்பலைத் திருவள்ளுவரும் `வேள்வி` எனக் குறித்தார். `போங்கதி` என்பது தொகுத்தலாயிற்று. `போகதி` வினைத் தொகை என்றலுமாம். ``புறம்`` என்றது ``அயல்`` என்னும் பொருட் டாய், பிற மக்களையும், உயிரையுங் குறித்து நின்றது. `அறங் கறக்கும்` என்றல்போல, ``புறங் கொடுக்கும்`` என்றது நான்காவதன் தொகை.
`அந்தணர்க்கு வீட்டு நெறி அவரவர் அறிவிற்கேற்ப அமையும்` எனவே, `கன்மமே வீடு பயக்கும்` என்று உணர்வார்க்கு, அக்கன்மத்தின் பயனாகிய துறக்கமே வீடாகும். `பிரமம் ஒன்றே மெய்; பிறவெல்லாம் பொய் என்று உணர்வதாய பிரம ஞானமே வீடு பயக்கும்` என உணர்வார்க்கு, அவர் பிறவெனக் கழிப்பன பிரகிருதி யளவேயாதலால், பிரகிருதிக்கு மேலேயுள்ள புருட தத்துவமே அவர்க்கு வீடாகும். தத்துவங்களும், அவற்றிற்கு வேறாய் உள்ள சீவான்மாவும், பரமான்மாவைப் போல வேறு முதல்களே; ஆயினும், தத்துவங்கள் சடமாயும், சீவான்மா தூல சித்தாயும் நிற்றலின், சூக்கும சித்தாகிய பரமான்மாவிற்கு அவை முறையே உடைமையும், அடிமையுமாய்ச் சுதந்திரமின்றி நிற்பனவாம் என்பதை உணர்ந்து யான், எனது என்னும் செருக்கு நீங்கிப் பரமான்மாவினது நிறைவில் அடங்கிநிற்றலே உண்மைப் பேறு என உணரும் பதி ஞானமே வீடு பயக்கும் என உணர்பவர்க்குப் பரமான்மாவே வீடாகும் என்பது பெறப்பட்டது.
இங்ஙனம் கூறிவந்த பலவற்றுள் ஒன்றையும் வேதம் ஒரு தலைப்பட உணர்த்தாது, எவ்வாறும் உணர நிற்றலின், வேதம் ஒன்றையே ஓதி வீடுபெற எண்ணுவார் மெய்ந்நெறியைப் பலபட உணர்ந்து தம்முள் இகலி நிற்பர் ஆகலின், ``தாமறிவாலே தலைப் பட்டவாறே`` என்றார்.
வேதத்துட் கூறப்பட்ட பல திறப்பொருளையும் இஃது இன்ன அளவினது எனவும் `எல்லாவற்றினும் மேலாக முடிந்து நிற்கும் பொருள் இது` எனவும் வரையறுத்து ஒருதலைப்பட உணர்த்துவன சிவாகமங்களே யாதலின், அவற்றை உணரும் சைவர் பிறரோடு இகலுதலின்றி மெய்ந்நெறியை உண்மையாகத் தலைப்படுவர் என்க.
வேதத்தை உடம்பட்டோர் அனைவர்க்கும் `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றுள், `வீடே சிறந்த பேறு` என்பது ஒப்ப முடிந்ததாக லின், `அதனை இத்தன்மைத்து என உணரும் உணர்விற்கு ஏற்பவே, அவரது வேள்வி முறைகளும் அமையும்` என்றற்கு இது கூறினார். கூறவே, `ஐவகை வேள்விகளும் அவற்றைச் செய்வாரது கருத்திற்கேற்ப `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றைத் தரும் என்பது பெறப்பட்டது.
`அக்கினி காரியமேயன்றிப் பிறவும் வேள்விகளே` எனக் கூறியவாற்றால், `சைவாகமங்கள், `சிவபெருமானை அகத்தாலும், புறத்தாலும், அறிவாலும் வழிபடும் வேள்வியே சிறப்புடை வேள்வி` எனவும், அக்கினி காரிய வேள்வியுள்ளும் சிவபெருமானைப் பொது நீக்கித் தனிப்பெரு முதல்வனாக வைத்துச் செய்யும் வேள்வியே செய்யத்தக்கது` எனவும் கூறும்.
இன்னும், ``தாமறி வாலே தலைப்பட்ட வாறே`` என்றதனால், வேதத்தின் பொதுமை காரணமாக முத்தீ வேள்வியும் அவ்வாறு அமையும் என்பது கொள்க. அஃதாவது, பரிமேதம், பசுமேதம் முதலாகச் சொல்வனவற்றை உயிர்ப்பலி வேள்வியாகச் செய்தல் வேண்டும் எனக் கொண்டு ஊனை அவிசாக இட்டுச்செய்தலும், அவற்றிற்கெல்லாம் வேறு பொருள்கொண்டு பசுவிடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், நெற்பொரி, அரிசிமா, தேங்காய், வாழைப்பழம் முதலியவற்றையும் அவிசாகச் சொரிந்து செய்தலும் போல்வன. வேதத்துள் `அஜத்தைக் கொண்டு வேட்க` என்பதற்குப் பிறரெல்லாரும் `அஜம்` என்பதற்கு `யாடு` என்பது பொருள் என்று கூறினர் எனவும், அகத்திய முனிவர், `மூன்றியாண்டு கழிந்த நெல்` எனப் பொருள் கூறினர் எனவும் பாரதத்துட் கூறப்பட்டன. இங்ஙனம் வேறுபடுவாரது நிலையைத் திருஞானசம்பந்தர்,
``ஊனொ டுண்டல் நன்றென ஊனொ டுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்``
-தி.3 ப.53 பா.9
எனக் குறித்தருளினார்.
அறவினை யாதெனிற் கொல்லாமை; கோறல்
பிறவினை யெல்லாம் தரும். -குறள் 321-
என்றவாறு, கொலைப் பாவம் ஏனை எல்லாவற்றினும் பெரிதாகலின், அதனோடு தொடர்புடைய யாதொன்றும் அறமாவதில்லை எனினும், செய்வாரது கருத்துவகையால் அதுவும் அறம் என வைக்கப்பட்ட தாயினும், அன்னதொரு வேள்வி கடைப்பட்ட வேள்வி எனக் கழித்து, உயிர்க்கொலை இல்லாத தூயவேள்வியே, வேள்வி என உயர்ந்தோர் கொள்வர் என்பது பற்றியே,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
எனப் பொதுப்படக் கூறுமிடத்து ஊனாகிய அவியையே பெரும் பான்மையும் குறிப்பாற் கீழ்ப்படுத்துக் கூறி,
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. -குறள் 328
எனச் சிறப்பாகக் கூறுமிடத்து ஊன் வேள்வியை வெளிப்படை யாகவே மறுத்துக் கூறினார் திருவள்ளுவர். சைவ வேள்விகள் பலவும் சைவாகமத்துள்ளும், வழக்கத்துள்ளும் பசு விடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், தாவரங்களினின்று பெறப்படும் நெல் முதலியவற்றான் ஆய பொருள்களையுமே அவிசாக இட்டுச் செய்யப் படும் தூய வேள்விகளாகவே காணப்படுதல் அறிக.
இதனால்,
``பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லை`` -தி.1 ப.80 பா.2
என்றதனுள், ``பசு`` என்றது; `பசுவிடத்து உண்டாகும் நெய் பால்கள்` எனப் பொருள்படுதலன்றிப் பிறிது பொருள்படாமை அறிந்து கொள்க. `பிறிது பொருள்படும்` என்பார் உளராயின், அவர் சிவாகமங் களையே யன்றித் தில்லைக்கணுள்ள வழக்கத்தினையும் அறியாதவரே யாவர்.
``அவன்உகந் திட்டஇறைச்சி எனக்குநன்
மாதவர் இட்ட நெய்பால் அவியே`` -தி.11 நக். திருமறம்
எனப் பதினொன்றாம் திருமுறையிலும், `மாதவர், நெய்பால் அவியே இட்டுச் சைவ வேள்வியே வேட்பர்` என்பது சொல்லப்பட்டது. இவ்வாற்றானே, சிவபாத இருதயர் செய்யக் கருதியதாகச் சேக்கிழார்,
``ஆதி மாமறை விதியினால் ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே புரியும்நல் வேள்வி``
-தி.12 திருஞான. பு. 429
எனக் குறித்த நல்வேள்வியும், ஞானசம்பந்தர்தாமே,
``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்`
-தி.12 திருஞான. பு. 821
எனக்குறித்த வேள்வி. `உலகம் இன்புறச் சங்கரர்க்கு முன்வந்த அற்சனை வழிபாடுகளுள் ஒன்று`` என அவர் (சேக்கிழார்) விளக்கிய சந்த வேள்வியும் எல்லாம் சிவநெறி வேள்வியாகிய தூய வேள்வி களே என்பது விளங்கும். இவற்றானே, தம் உணவினும் சைவராய் உள்ளவரே ஊன் வேள்வியை மறுத்தற்குரியரன்றி, உணவில் சைவராய் இல்லாதோர் ஊன் வேள்வியை மறுத்தற்கு உரியரல்லர் என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
புத்தர் புலால் உண்டலை விலக்காது, கொல்லுதலை மட்டுமே விலக்குவர்; சமணர் இரண்டனையும் விலக்குவர். அவ்வாற்றால் அவ் விருவரும் ஊன்வேள்வியை இகழ்தல் அவர்தம் மதத்திற்கு ஏற்புடைய தாயினும், வேள்வி செய்வார்க்கு வரும் பயனை உணராமையானும், ஊன் இடப்படாத தூய வேள்வியை அவர் கைக் கொள்ளாமையானும் அவர் செயல் சிவநெறியாளரால் இகழப் படுவதாயிற்று என்க. இத்திருமந்திரத்துள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், வேள்விகளின் வகைகள் பலவும் வகுத்துக் கூறி, `அவற்றுட் சிறந்தது சைவ வேள்வியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 

பொழிப்புரை :

உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.

குறிப்புரை :

``அணைதுணை`` இரண்டில் பின்னது ஆகு பெயராய், அணைதுணை உள்ள இடத்தைக் குறித்தது. `இணை துணையோடு` என உருபு விரிக்க. யாமம் - இரவு; உலகியல் பிறவித் துன்பத்ததாக லின், அதனை `இரவு` என்றார். ``துணைஅணை`` என்றதில் அணை, முதனிலைத் தொழிற்பெயர்.
`வைதிக வேள்வி வேட்பார்தீயையே தெய்வமாகக்கொண்டு வேட்பர். அது பிறவியை நீக்கும் தூநெறியாகாது; சிவநெறி வேள்வி வேட்பார், தீயைத் தெய்வமாகக் கருதாதது, அத்தீக்கு உள்ளீடாய் நிற்கும் சிவபெருமானையே முதல்வனாகக்கொண்டு வழிபடுவர்; அதுவே பிறப்பை நீக்கும் தூநெறியாகும்` என இதனால் சிவநெறி வேள்வியின் சிறப்புக் கூறப்பட்டது. சிவநெறி வேள்வியில் அக்கினியைச் சிவாக்கினியாகப் பிறப்பித்து வளர்க்கும் முறையைச் சிவாகமங்களில் கண்டுணர்க.

பண் :

பாடல் எண் : 4

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 

பொழிப்புரை :

இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. போது - பொழுது. ``இரண்டு ஓதி`` என்றதில் இரண்டு, வேத சிவாகமங்கள். ``ஓதி`` என்பதில் பிறவினை விகுதி தொகுத்தலாயிற்று. மாது - சத்தி. அவள் இரண்டாதலாவது, திரோதான சத்தியும், அருட் சத்தியுமாய் அவ்வவ்வுயிருக்கேற்ப நிற்றல். திரோதானமும் ஒரு வகைக் கருணையே ஆதலின், `அருள் செய்திட்டு` என்றார். ``தாதிரண் டாகிய`` என்பதில், ஆதல், மேற் சொல்லுதல். ``இரண்டின் கண் ஆகிய`` என உருபு விரிக்க. தாது இரண்டு - இருவகை மகரந்தம்; அவை, குவளை, ஆம்பல் முதலிய சிறு மலரின்கண் உள்ளனவும், தாமரையாகிய பெரு மலரின்கண் உள்ளனவுமாம். ``தண்ணம் பறவை`` என்பதில் தண்மை, சிறுமை மேல் நின்றது. அம், சாரியை. வண்டினை `பறவை` என்றல் இலக்கிய மரபு. ``பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறுபறவை `` (தி.2 ப.76 பா.6) என்றார் திருஞானசம்பந்தரும். வேது - வேற்றுமை. இனத்தால் ஒன்றாயினும் விரும்பப்படும் தாது வேற்றுமையால் இரண்டாய் நிற்கின்ற வண்டு போல, உயிர்கள் அனைத்தும் இனத்தால் ஒன்றாயினும், விரும்பப்படும் பயனால் இரண்டு ஆதலாவது, உலகின்பமும், வீட்டின்பமும் ஆகியவற்றை விரும்பு தலால் `உலகர்` எனவும், `சத்தி நிபாதர்` எனவும் இருதிற னாய் நிற்றல். எனவே, சிவசத்தி உலகர்க்குத் திரோதாயியாய் நின்று வேதத்தை ஓது வித்து, அதன் பயனாக வைதிக வேள்வியை வேட்பித்து உலகின் பத்தை அடைவிப்பவளாயும், சத்தி நிபாதர்க்கு அருட்சத்தியாய் நின்று சிவாகமங்களை ஓதுவித்து, அதன் பயனாகச் சிவநெறி வேள்வியை வேட்பித்துச் சிவானந்தத்தை அடைவிப்பவளாயும் நிற்பாள் எனக் கூறுமாற்றால் வேள்விகளது வகை கூறியவாறு. வெறித்தல் - மதர்த்தல். `வெறிக்கின்றவாற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், `உலகவேள்வி, சிவவேள்வி` என்னும் வேள்வி களது வகையும், பயனும் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே. 

பொழிப்புரை :

நெய் பொருந்துதலால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறி கின்ற அந்தணர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.

குறிப்புரை :

மை - இருள்; புற இருளைப் போக்குகின்ற தீயினை ஓம்புமாற்றானே, அக இருளையும் போக்கிக்கொள்ளுதல் கூடும் என்பது பற்றி ``நெய்நின்றெரியும் ... வகை அறிவார்கட்கு`` என்றார். அவ் வகையாவது, சிவபெருமானை முதல்வனாக உணர்ந்து பயன் கருதாது அன்பு மாத்திரத்தால் வேட்டல், அங்ஙனம் வேட்டோர் சிறப்புலி நாயனார், சோமாசிமாற நாயனார் முதலியோராதல் அறிக. ``அவிழ்தரும்`` என்னும் பெயரெச்சம் `மந்திரம்` என்னும் கருவிப் பெயர் கொண்டது. செய்தல் - தேடுதல். ``செய் நின்ற`` என்பது `செய்ய நின்ற` என்னும் பொருட்டு.
இதனால், `அந்தணர் வேள்வி அவர்க்கு முத்தி சாதனமும்` ஆம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பாழி அகலுள் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய் தங்கி வினைசுடு மாமே. 

பொழிப்புரை :

ஆழ்ந்த அகலில் நின்று எரிகின்ற திரிபோலச் சேர்க்கப்பட்டுப் பல்லூழி காலம் தொடர்ந்து நின்று வருத்துகின்ற மிக்க பாவப்பயனாகிய துன்பங்களோ பல. அவை அனைத்தும் ஓமாக்கினி அணையாது நின்று ஓங்க ஒழிவனவாம். அன்றியும், அவ்வக்கினியே வினைக்கட்டு முழுவதையும் அழித்தலையும் செய்யும்.

குறிப்புரை :

பாழி - பள்ளம். `வாழி, வீழி` என்பன, `வாழ்தல், வீழ்தல்` எனத் தொழிற்பெயராய் நின்றன. ``வினைநோய்`` என்றது, `வினையால் வரும் நோய்` என வேற்றுமைத் தொகை. நோய் - துன்பம். `துன்பத்தைத் தரும் வினை` எனவே, `பாவம்` என்பது போந்தது. பின்னர் நின்ற வினை, பொதுப்பட நிற்றலின், இரு வினையையுங் குறித்தது. `பாவத்தை ஒழிக்குமாற்றால் நரகத்தின் நீக்கிச் சுவர்க்கத்தில் சேர்ப்பதும்` இருவினைகளையும் நீக்குமாற்றால் ஞானத்தைத் தோற்றுவித்து வீடு அடைவிப்பதும் வேள்வியாம்` என்றபடி. இவற்றுள் முன்னது வைதிக வேள்வி என்பதும், பின்னது சிவநெறி வேள்வி என்பதும் உணர்ந்துகொள்க.
இதனால், இருவகை வேள்விகளின் பயனும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே. 

பொழிப்புரை :

மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து நும் அருஞ் செல்வ மாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.

குறிப்புரை :

``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின்பின், ``இரண்டும்`` என்னும் தொகை தொகுத்தலாயிற்று. படைத்தல் - சொல்லால் வெளிப்படுத்தல். `நின்றாரே` என்பது பாடமாயின், ஏகா ரத்தை ஈற்றசையாக்காது, விளியுருபாக்குக. மீமாஞ்சகர் வேதத்தைச் செய்த முதல்வனை அறியாது `வேதம் அனாதி` என மயங்குதலாலும், பிறர் சிவபெருமானையே தலைவனாக உணராமை யாலும் அவர்க்கு வேள்வி முத்தி சாதனமாதல் கூடாமையால், அவர்க்கு அஃது அன்னதாதற் பொருட்டு அவரை நோக்கி இது கூறினார்.
இதனால், வேள்விகளுள் சிவநெறி வேள்வியது இன்றியமை யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப் பவனும், இறப்பில்லாத முதல்வனும் ஆகிய அவனை நினைத்தால், ஒளி பெற்றுத் திகழ்கின்ற எனது உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, முச்சுடர் களையே மூன்றுகண்களாக உடைய அப்பெருமானே உலகங் கடந்த தண்ணிய ஒளிப்பொருளாகிய முதற்பொருளும், வேள்விக்குத் தலைவனும் ஆவன்.

குறிப்புரை :

இங்குக் கூறியவாறே திருநாவுக்கரசரும்,
அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறி வார்! அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என ஓதியருளுதல் காண்க. சிவபெருமான் வேள்வித் தலைவன் ஆதலை விளக்குதற் பொருட்டு அவனது முதன்மையை எடுத்துக் கூறினார். ``நினைத்தால்`` என்னும் சொல்லெச்சம் முன்னை மந்திரத் தினின்றும் வந்தது.
இதனால், வேள்வியைச் சிவநெறி வேள்வியாக வேட்டற்கு வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.

பொழிப்புரை :

வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.

குறிப்புரை :

`ஆகவே, அவ்வினைக்கடல் கடத்தற்கரியது` என்ற படி. `ஈமத்துள் அங்கி உளன்` என இயையும். இரதம் - சாரம்; என்றது உடலினின்றும் நீங்கிய உயிரை. கொள்ளுதல் - தாங்கிக் கொள்ளுதல். `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. கோ மத்து - பெரிய மத்து. `மத்து` என்பது கடைக்குறைந்து நின்றது. `மத்தால்` என உருபு விரிக்கப்பட்டது. \\\"வினைக்கடல் குரைகடல் தானே`` என்றது, \\\"மாதர் வதன மதியம் - உதய மதியமே ஒக்கும்` (தண்டியலங்காரம்) என்பதிற் போல உருவக உவமை.
இதனால், `சிவபெருமானை வணங்கா தொழியினும் இகழ்தல் கூடாது; இகழின் உய்தியில் குற்றமாம்` என, வேள்வி செய் வார்க்கு இன்றியமையாததோர் அறம் கூறப்பட்டது. இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த சான்றாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 10

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 

பொழிப்புரை :

வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.

குறிப்புரை :

`முத்தீ வழியாக அன்றிப் பிறவாற்றால் சிவ பெருமானை அடைதல் கூடுமாயினும், முத்தீ வேள்வி வேட்கப்படா விடின், வேதவழக்கு மறைந்தொழியும்; அது மறைந்தொழியின், கடவுட் கொள்கையும், சிவபத்தியும் போல்வன பலவும் அவ்வாற்றானே மறைந்தொழியும்; ஆகவே அவ்வாறெலாம் நிகழாமைப் பொருட்டு முத்தீ வேட்டல் பேணற்பாற்று` என்பதாம். எனவே, `சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலும், சிவாகமம், திருமுறை முதலிய சைவ நூல்களிலும் முத்தீ வேள்வி சிறப்பிக்கப் படுதலும் இது பற்றி` என்பது இனிது விளங்குவதாம்.
இதனால், அக்கினி காரியம் மரபு நிலையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 

பொழிப்புரை :

ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.

குறிப்புரை :

தழல் ஓம்பல் முதலியவற்றைப் பின்னரும் எடுத்துக் கூறியவதனால், `அவற்றை வழுவின்றி ஆர்வத்தொடு செய்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. ``தழல் ஓம்பி`` என்றதனால், வேட்டலையும், ``சந்தியும் ஓதி`` என்றதனால் ஓதலையும் வலியுறுத் தமை வெளிப்படை. ஆகவே, நற்கருமம் என்றது பிறர்க்கு உதவுத லாகிய ``ஓதுவித்தல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல்`` என்னும் நான்கனை யும் வலியுறுத்துவதாயிற்று. ஈதல் ஒழிந்த பிறவும் பொருளாசையின்றிச் செய்யின் அவர்க்கு அறமாதல் பற்றி அவற்றை, ``அம் தவம்`` என்றார். ஏற்றலாவது, குற்றக் கழுவாயாகவும் குறித்த பயனைத்தரும் அறமாக வும் கருதி உயர்ந்தோர்க்குக் கொடுக்கும் கொடையாகப் பிறர் தருவனவற்றை, அவர் நலங் கருதி ஏற்றல். அங்ஙனம் ஏற்ற பொருளை அவ்வந்தணர், தென்புலத்தார் தெய்வம் முதலிய அறவழியிலே செலவிடுதலன்றி, இவறுதல் செய்து ஈட்டிவையார் என்க. முப்போதும் நியமம் செய்தல் வேட்டலின் பகுதியாகவும், சடங்கறுத்தல் ஈதலின் பகுதியாகவும் வைத்து வற்புறுத்தப்பட்டன என்க. ``சடங்கறுப்போர் களே`` என்ற ஏகாரம் பிரிநிலை. இங்ஙனம் பிரித்துக் கூறிய அதனால், `இவ்வொழுக்கம் இல்லா தவர் பிறப்பால் அந்தணராயினும், அந்தணர் எனப்படார்` என்பது பெறப்பட்டது. படவே, அந்தணர், அரசர் முதலிய வருணவகை ஒழுக்கம் பற்றி உயர்ந்தோரால் வகுக்கப்பட்டன வல்லது, `உடம்பிலே தானே அமைந்தது` என்னும் மிருதிநூற் கொள்கை அடாது என்ற தாயிற்று. இங்கு, `பிறப்பு` எனப்படுவது, தம் குடியின் முன்னோர், தம் ஒழுக்கத்தால் பெற்ற வருணவகை.
``பிறப்பே குடிமை ஆண்மை`` -தொல். பொருள் - 269
``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்`` -குறள் - 972
``பார்ப்பான் - பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` -குறள் - 134
என்பவற்றிலும், ``பிறப்பு`` எனப்படுவது இதுவே என்க. `சாதிகள் நெறியின் தப்பா`` (தி.12 திருநாட்டுச் சிறப்பு 34) என்பதில் சேக்கிழார் ``சாதி`` என்றதும் ஒழுக்கம் பற்றியதே என்பது, திருஞானசம்பந்தர் திருநீலகண்டப் பாணரையும், தில்லைவாழந்தணர் திருநாளைப் போவாரையும் ``ஐயரே`` என உயர்த்து அழைத்தாராக அவர் கூறிய குறிப்பால் விளங்குவதாகும். இன்னும் ஞானசம்பந்தர் நாவுக்கரசரை ``அப்பர்`` என்றே குறித்துப் போந்தமையும் நோக்கற்பாற்று.
இதனால் அந்தணர்க்குரிய ஒழுக்கங்கள் பலவும் தொகுத்துக் கூறப்பட்டன.


பண் :

பாடல் எண் : 2

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருளை உணர்தற்கண் விருப்பம் உடையவராய், மூன்று கூறுகளை உடையதாய் நூல்களின் முடிவாகிய பிரணவ மந்திரத்தின் பொருள் நிலையில் நின்று, நாத முடிவான பொருட் பிரபஞ்சத்திற்கும், வேத முடிவான சொற்பிரபஞ்சத்திற்கும், உயிர்களது அறிவின் எல்லைக்கும் அப்பால் நிற்கும் முதல்வனாகிய சிவபெருமானை உணர்ந்து, இன்பத்தின் எல்லை காணாராய் அதில் திளைத்திருப்பவரே அந்தணர் எனப்படுவோர்.

குறிப்புரை :

பிரணவம், ஓங்காரம். இதன் முக்கூறுகளாவன அகரம், உகரம், மகரம், அவற்றின் பொருள் நிலை பகுப்பும் (வியட்டியும்) தொகுப்பும் (சமட்டியும்) என இருவகைத்து. அகரம் தோற்றத்தையும், உகரம் நிலைபேற்றையும், மகரம் ஒடுக்கத்தையும் குறித்தல் பகுப்புப் பொருளாம். அவை அப்பொருளைக் குறித்தல் அவற்றின் பிறப்பியல் பால் அமைந்தது என்க. முத்தொழிலையும் உடைய மண்முதல் நாதம் ஈறாகச் சொல்வடிவாயும், பொருள் வடிவாயும் நிற்கும் உலகம் முழுவதையும் ஒருங்கு சுட்டி நிற்றல் அதன் தொகுப்புப்பொருளாம். அப்பொருள் நிலையில் நிற்றலாவது, `முத்தொழிலை உடைய பொருள் செயற்கையாவதலல்லது இயற்கையாகாமையானும், செயற்கைப்பொருள் யாவும் அறிவிலவாதலல்லது அறிவுடையன வாகாமையானும் அவை, தாமே அங்ஙனம் தோன்றல், நிற்றல், ஒடுங்கல் என்பவற்றை எய்துதுல் கூடாமையின், அவற்றை அங்ஙனம் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் பேரறிவும் பேராற்றலும் உடைய முதல்வன் ஒருவன் உளன்` என்பதை ஆசிரியர் அருளுரையும், நூற்கொள்கையும் சார்பாக நின்று ஓர்ந்து தெளிதல். அதன்பின் நாதனைக் காணுதலாவது, அங்ஙனம் உணரப்பட்ட அம்முதல்வனது அருட்குணங்கள் பல வற்றையும் அறிந்து அன்புசெய்து அவனிடத்தே அழுந்திநிற்றல். அங்ஙனம் அழுந்தி நிற்கும் நிலையை மாற்றுதற்கு வேறு பொருள் இன்மையின், அந்நிலையில் விளையும் அவனது இன்பத்திற்கும் எல்லை இல்லையாம். ஆகவே, அந்தணர் எனப்படுவோர் இப் பேற்றினைப் பெற்று நிற்போரேயாவர் என்க.
`பிரமத்தை அறிந்தவனே பிராமணன்` என மிருதி நூலாரும் சொற்பொருள் கூறுவர். ஆயினும் அவர், `பிரமத்தை அறியும் தன்மை பிராமணன் என்னும் பிறப்பிலே அமைவது; ஆதலின், அத்தன்மை இல்லாத பிற வருணத்தார்க்கு அவ்வறிவு கூடாது` என்பர். அவர் கூற்று வேதத்திற்கு ஒவ்வாததேயாம்.
``ஈதாந்தம்`` என்பதில், `அந்தம்` என்பது முதல்நீண்டு நின்றது. `அந்தம் ஈது என்னார்` என மாற்றி, `முடிவு இதுவென்று உணர்தல் இன்றி` என உரைக்க. இவ்வாறு உரைக்கவே, `எல்லையற்ற இன்ப நுகர்ச்சியைப் பெற்று` என்பது அதனாற் போந்த பொருளாகும். என்னார், முற்றெச்சம். `எனாது` என்பது பாடம் அன்று. ``கண்டு`` என்பதனை, ``நாதனை`` என்றதன்பின்னர்க் கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 

பொழிப்புரை :

அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.

குறிப்புரை :

எனவே, `பிறரெல்லாம் அவ்விருப்பமின்றி, வாளா அம்மந்திரங்களைச் சிறிதுபொழுது ஓதுதலோடு ஒழிவர்` என்றது ஆயிற்று. ஆகவே, `இந்நிலையுடையோரே சிறப்புடை அந்தணர்` என்பது பெறப்பட்டது. அநுபவத்திற்கு அறிவன்றி அன்பே நேர் வாயிலாகலின், ``நேயத் தேர் ஏறி`` என்றார். ``நேயத்தாய்`` என்றதில், நேயம், `ஞேயம்` என்னும் வடசொல்லின் திரிபு. ஞேயம் - அறியப் படும் பொருள்.

பண் :

பாடல் எண் : 4

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே. 

பொழிப்புரை :

பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான் காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.

குறிப்புரை :

மந்திரங்கள் அனைத்திற்கும் முதலாவது ஓங்கார மாதலின், அதனை அனைத்து நெறிகட்கும் இடம் என்றார். ``உரை`` என்றது விடாத ஆகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் முடிந்த பொருளைக் குறித்தது. `வேதத்திற்குப் புறம்பான நெறிகளின் முத்தி உண்மை முத்தியாகாது போலியாய்ப்போம்` என்றற்குத் `திருநெறி` என வாளா கூறியொழியாது, ``வேதத் திருநெறி`` என விதந் தோதினார். பின் வந்த திரு, செல்வம்; அது `சென்றடையாத` (தி.1 ப.98 பா.1) (தி.6 ப.87 பா.1) இறைவன் செல்வமாகிய திருவருளையே குறித்தது. திருவருளின் வசமாய் நிற்றலை, `அதன் கையில் இருத்தி` என்றார்.

பண் :

பாடல் எண் : 5

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே. 

பொழிப்புரை :

`பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்க தாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.

குறிப்புரை :

`பிரமஞானம் எய்தினோரே பிராமணர் என்னும் சொல் பொருளுடையதாக வேண்டின், இவ்வொழுக்கம் கைவரப் பெறல் வேண்டும்` என்றற்கு, பிரமஞானமாவது இது என்பதை வகுத்துக் கூறினார். இவற்றுள் ``உணர்வுற்று`` என்பது ஒன்றுமே பிரமஞானமாக, ஏனையவை அவற்றிற்குப் படிகளாயினும், பரம்பரையால் பிரமஞானத்தைப் பயத்தல் பற்றி, அவற்றையும் `பிரமஞானம்` என்றார். பிரமத்தை உணரும் உணர்வை ஒற்றுமை பற்றி, ``பிரமம்`` என்றார். ``பிரமம், ஒத்த உயிர்கள்`` என்பவற்றை இம்முறையானே முதற்கண் கூட்டி உரைக்க. தான் அவனாதலாகிய சமாதிநிலை உணர்வுறுதற்கு முன்னிற்கற்பாலதாயினும், செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். ``தவம்`` என்புழியும் எண்ணும்மை விரிக்க.
இவை நான்கு திருமந்திரங்களானும் அந்தணர் ஒழுக்கமும், அவற்றது சிறப்பும் உடன்பாட்டு முகத்தால் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே. 

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையே யாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.

குறிப்புரை :

`அங்ஙனம் ஆசையறாது நின்று ஒதல் முதலிய அறு தொழில்களைப் பொருளாசை முதலியவற்றாற் செய்வோர் அந்தண ராகார்` என்பதாம். பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. `ஒழிந்த` என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று. நிலையை, ``இடம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 7

நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

பொழிப்புரை :

முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்புரை :

இங்ஙனமாகவே, `முப்புரி நூலாகிய பஞ்சு நூல், அறிவு நூலாகிய வேதாந்தத்தைக் குறிக்கும் அடையாளமும், சிகை, அதன் முடிந்த பொருளைக் குறிக்கும் அடையாளமுமேயாய் அந்தணக் கோலத்திற்கு உரியவாயின. அப்பொருளைப் பெறாதவர் அவற்றைக் குறிக்கும் அடையாளமாகிய வேடமாத்திரங்கொள்வதால் அந்தண ராகி விடமாட்டார்` என்றதாயிற்று.
இங்கும் பிரமஞானத்தையே ஒற்றுமை பற்றிப் பிரமமாகக் கூறினார். இங்குக் கூறிய பிரமஞானம் இல்லாதோர் வேட மாத்திரத்தால் பிராமணராகார் என்றவாறு. திருநாவுக்கரசரும்,
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.
-தி.5 ப.39. பா.8
என்பதனால், `முப்புரிநூல் முதலிய வேடம் புனைந்தும் அபர ஞான பரஞானங்களில்லாதார் அந்தணராதல் இல்லை` எனவும், `அந்த ஞானங்களை உடையவர், முப்புரிநூல் முதலிய வேடங்கள் இன்றியும் அந்தணராவர்` எனவும் அருளிச்செய்தார். எனினும், நூலும், சிகையும் போல்பவை கலியூழிக் காலத்தில் பிறப்படை யாளமேயாயின. கார்ப் பாசம் - பஞ்சு. கேசம் - தலைமயிர். சிறப்புடைய இவை இரண்டன் உண்மையைக் கூறவே, கோவண உடை முதலிய பிற அடையாளங் களின் உண்மையும் உணர்ந்து கொள்ளப்படும் என்க. இங்குக் கூறப் பட்ட பொருள் இன்றிப் பிறப்பு ஒன்றே காரணமாக வேடமாத்திரம் புனையும் பிராமணர் பிராமணராகாது, பிராமணப் போலிகள் ஆவர் என்பதனை இந்நாயனார், ``பேர்கொண்ட பார்ப்பான்`` (தி.10 2ஆம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 8

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. 

பொழிப்புரை :

மேல் (தி.10 பா.225) சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்த்தலில் விருப்பம் மிக்க அறிவிலிகள் ஒருபோதும் பிராமணராதல் இல்லை.

குறிப்புரை :

என்றது, உடல் ஓம்புதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டமை காரணமாக, `பிராமணர் முதலிய வருண வேறுபாடு ஒழுக்கத்தாலன்றிப் பிறப்பிலே அமைந்தன` எனப் பிதற்றுவாரை வன்மையாக மறுத்தவாறு. விடயம் - ஐம்புலன். ஓர்தல், மெய்ப் பொருளை; அது, கற்றும் கேட்டும் ஓர்ந்துணரப்படுவதாம். ``உணர்வு`` என்று அந்த அபர ஞானத்தை. பரன் உண்மை - முதற்பொருளின் சொரூபம். இவ்விடத்து, `உணர்தல்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. பித்து, பேராசை. அதன்கண் பின்னும் உறைத்து நிற்றலின், `ஏறும்` என்றும், கிடைத்தற்கரிய பிறவியைப் பிழைபடும் நெறியிற் போக்கலால் ``மூடர்`` என்றும் கூறினார்.
இவை மூன்று திருமந்திரங்களாலும் அந்தணர் ஒழுக்கத்தது சிறப்பு எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. 

பொழிப்புரை :

``சத்தியமும் தவம்`` (தி.10 பா.227) என்னும் திருமந்திரத்துட் கூறப்பட்ட முறைமையில் நிற்கும் உண்மை அந்தணர்கட்கே சித்தாகிய தம்மையும், அசித்தாகிய பாசங்களையும் பொருளென உணரும் தன்மை நீங்கி, ``வேதத் திருநெறி`` (தி.10 பா.226) என மேற்கூறிய உபதேச பரம்பரை முறையிலே ஞானகுருவைத் தலைப்பட்டு, நாட்கடன் நோன்பு முதலியவை `உறங்கினோன்கை வெறும்பாக்கென்னத் தானே தவிர` (சங்கற்ப நிராகரணம் - 4. 234) ஞேயம் ஒன்றையே கண்டிருக்கின்ற துரியாதீத நிலை கை கூடுவதாகும்.

குறிப்புரை :

``சித்த சித்தின்றி`` என்பதை முதலிற் கூட்டி, ``தூய்மறையோர்க்கே ஆம்` என மாற்றி உரைக்க. ``இன்றி`` என்பது `நீங்கி` என்றவாறு. காண்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. சமாதி, `அதீதம்` என்னும் பொருளது.

பண் :

பாடல் எண் : 10

மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே. 

பொழிப்புரை :

அந்தணர் என்று சொல்லப்படுவோர் அந்தணரேயாதல் உண்மையாயின், `அந்தணர்க்குரிய வேத முடிவின் மெய்ப்பொருளால் அடையும் தூய்மையாவது, உயிர்களின் குறை பாட்டினை உணர்தலே` என்றும், ``நூலும் சிகையும் முதலிய பிற வெல்லாம் வெளிப்பகட்டாகிய ஆரவாரங்களே` என்றும் அறிவார். அவ்வாறு அறிந்தவரே வேதம் உணர்ந்த அந்தணராவர்.

குறிப்புரை :

`தெரிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவரே அந்தணராம்` என வேறு தொடராக்கி உரைக்க.

பண் :

பாடல் எண் : 11

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 

பொழிப்புரை :

உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப்பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.

குறிப்புரை :

`அந்தணர்` என்னும் சொற்பொருள் `அம் தணர்` எனவும், `அந்த அணர்` எனவும் பிரித்து இருவகையாகக் கூறப் படுதலை முறையே பரிமேலழகர் உரையிலும் (திருக்குறள் 30) நச்சினார்க் கினியர் உரையிலும் காண்க (திருமுருகாற்றுப்படை - 96. மதுரைக் காஞ்சி - 474, கலி கடவுள் வாழ்த்து). இவ்விருபொருளும் இங்குக் கூறப்பட்டவாறு அறிக. `நரபதி` என்பது வடசொல்லாதலின்; அஃறிணை முடிபு ஏற்றது. அந்தியும் சந்தியேயாயினும் சந்தியாதற்குச் சிறப்புப் பற்றி வேறெடுத்து ஓதினார். ``பண்ணும்`` என்பது `பண்ணப்படும்` என்னும் பொருட் டாய் நின்றது; ``எண்ணும் அஞ்செழுத்தே`` (சிவஞானபோதம் சூ. 9) என்பதிற்போல. ``நாடாயினும், காடாயினும், அவலாயினும், மிசையாயினும் எவ்வழி மக்கள் நல்லரோ அவ்வழியே நிலனும் நல்லதாம்`` (புறம் - 187) ஆகலின், நல்ல அந்தணர் வாழும் நாடு நலமிகப் படைத்தலை அறிந்து கொள்க. திருவள்ளுவரும் இக்கருத்தே பற்றி, `தள்ளாவிளையுள் முதலிய வற்றோடு, தக்காரை உடையதே நல்ல நாடு` (குறள் -731) என்றார்.

பண் :

பாடல் எண் : 12

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.

பொழிப்புரை :

நாதமுடிவான தத்துவங்களின் ஞானத்தைப் பெற்றவர்க்கே அஃது ஆன்ம போதத்தைக் கடந்த இறைவனை அடையும் நெறியாக அமைவது, ஆதலின் அதுவே வேதாந்த ஞானமாம். அதனால் அந்த ஞானத்தை உணரும் ஊழ் இல்லாமையால் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்களையே உணர்வார்க்கு மேற்கூறிய இறைவனை அடையும் பரமுத்தியாதல், அதற்குக் கீழாய்ச் சுத்த தத்துவ புவனங்களை அடையும் பதமுத்தியாதல் கிடைக்குமோ! கிடையா.

குறிப்புரை :

முதலடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி, தொகுக்கப்பட்ட உருவை `விதியிலோர்க்கு` என விரித்துக் கொள்க. புக்கது - கிடைத்த ஞானம். ``நண்ணுமே`` என்பதில் ஏகாரம் எதிர்மறைக்கண் வந்தது. பிரகிருதிக்குமேல் உள்ள வித்தியா தத்துவ சிவதத்துவங்களை உணர்தல் சிவாகமங்களை உணர்ந்தார்க்கன்றிக் கூடாமையால், சிவாகமங்களைக் கொள்ளாது, வேதத்தை மட்டுமே கொள்ளும் அந்தணர், அந்தணத் தன்மை நிரம்பப் பெற்றவர் ஆகார் என்றற்கு இவ்வாறு கூறினார்.
வேதமும், சிவாகமும் முறையே நூலும், உரையும்போல நின்று பொருள்களைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணர்த்தி நிற்றலின், நூலுள் தொக்கு நிற்கும் பொருள்களை விரித் துரைக்கும் உரையின்றி நூலது பொருளை முற்ற உணர்தல் கூடாமை போல, சிவாகமங்கள் இன்றி வேதத்தின் பொருளை விளங்க உணர்தல் கூடாது. அதனால், சிவாகமங்களை இகழ்ந்து வேதத்தமைட்டுமே ஓதுவோர் வேதத்தின் பொருளை முற்ற உணரமாட்டாது ஒருபுடையே உணர்வர். வேதத்தின் பொருளை முற்ற உணராத பொழுது, வேதத் திருநெறியின் முடிந்த பயனைப் பெறுதல் இயலாது என்க.
வேதம், சிவாகமம் இரண்டையும் ஒப்ப உணரும் அந்தணருள், வழிபாட்டுச் செயல்கள் பலவற்றையும் வேதமந்திரங்களால் செய்வோர், `வைதிக அந்தணர்` எனவும், ஆகமமந்திரங்களால் செய்வோர், `சைவ அந்தணர்` எனவும் சொல்லப்படுவர். `வைதிக அந்தணர்` எனினும், `மகாசைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர்` எனினும், `ஆதி சைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர், `சிவவேதியர், சிவ மறையோர்` என்றாற்போலச் சிறப்பித்துக் கூறிய வழியே `அந்தணர்` முதலிய சொற்கள் ஆதிசைவரைக் குறிக்கும். வாளா கூறியவழி அவை வைதிக அந்தணரையே குறிக்கும். எனவே, நாயனார் இங்குக் கூறுவனவெல்லாம் வைதிக அந்தணரையே குறிப்பனவாதல் அறிந்து கொள்ளப்படும். படவே, இவர் சிவாகமங்களையும் இகழாது வேதத்தோடு ஒப்ப மேற்கொள்ளுதல் வேண்டும் என நாயனார் கூறலின், `சிவாகமவழித் தீக்கை பெற்று - மகாசைவராய் விளங்கும் மறையவர்களே அந்தணர் எனப்படுதற்கு உரியர்` என்பது நாயனாரது திருவுள்ளமாயிற்று. ஆகவே, மகா சைவரல்லாத வைதிகப் பிராமணரைப் புரோகிதராகவும், பரிசாரகராகவும் கொள்ளுதல் சைவர்க்கும், பரார்த்த பூசை முதலியவற்றிற்கும் குற்றமாதல் விளங்கும்.
இதனானே, நாயனார் தமிழையும், வடமொழியையும் ஒரு நிகராகவே கூறினமையின், `வேத சிவாகமங்களோடு ஒத்து நிகழும் தமிழ் நூல்களையும் அந்தணராவார் இகழாது போற்றுதல் வேண்டும்` என்பதும், இங்ஙனம் வேதம், சிவாகமம், திருநெறித் தமிழ்நூல் என்ப வற்றை ஒப்ப ஓதி உணர்வோருள் வழிபாட்டுச் செயல்களைத் தமிழ் மந்திரத்தால் செய்வோர் `திருவந்தணர்` என்றும், `திருவாசிரியர்` என்றும் கொள்ளத்தகுவர் என்பதும் நாயனார்க்கு ஏற்புடையதாதல் விளங்கும்.
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த - மறைமொழி தானே மந்திரம் என்ப`` (தொல். செய்யுளியல்) என்ற தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தால், தமிழ் மொழியில் மந்திரம் உளதாதல் தெற்றெனப் புலப்படும்.
இத்தன்மை உடைய மகாசைவருள் தில்லைவாழந்தணர் தில்லைக் கூத்தப் பெருமானுக்குத் தொண்டு பூண்டு அவனைக் காலந் தோறும் தவறாது வழிபடும் நியமம் உடையராதல்பற்றித் திருத் தொண்டருள் அவரே முதன்மை வாய்ந்தவர் என்னும் திருக்குறிப்பால் திருவாரூர்த் தியாகேசப் பெருமான், `தம்மைத் திருத்தொண்டருக்கு அடியராக்கும் நாள் எந்நாளோ` என இறைஞ்சி நின்ற நம்பி யாரூரர்க்கு, `தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` என அடியெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டத் தொகையில் முதற்கண் தில்லைவாழந்தணரை இடம்பெறச் செய்தருளினான் என்க. இவ்வுண்மை திருத்தொண்டத் தொகை தோன்றுதற்கு முன்பே குறிப்பாற் புலப்படுமாறு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தில்லை வாழந்தணரைச் சிவாகம நெறியாகிய, `தீக்கை` என்னும் சிறப்புப் (மெய்ந்நெறிச் செய்கை) பெற்றமை பற்றி, ``சிறப்பர்`` (தி.1 ப.80 பா.2) என்றும், இச்சிறப்பால் இவர் சிவோகம் பாவனையைத் தலைப்பட்டுச் சிவனுரு எய்தி நின்றமையை,
``நீலத்தார் கரியமிடற் றார், நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப்பொடி நீறணி வார்சடையார்``
-தி.3 ப.1 பா.3
என்றும் அருளிச்செய்தார். இச்சிறப்புப் பற்றி இவர் `தீக்கிதர்` எனப் பெயர் பெற்று நிற்றல் அறியற்பாற்று. இதனானே `தீக்கிதர்` என்னும் பெயருடைய பிற அந்தணரும் மகாசைவராதல் விளங்கும்.
தில்லைவாழந்தணர் சிவாகமங்களையும் வேதத்தோடு ஒப்ப மேற்கொண்டு ஒழுகுதலைச் சேக்கிழார்,
``வருமுறை எரிமூன்றோம்பி ... ..
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்றுவல்லார்``
``அறுதொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கியுள்ளார்``
``ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்துமிக்கார்``
-தி.12 தில்லைவாழந்தணர் பு. 5,6,7
என விளக்கினார்.
`இவர்கள் கூத்தப் பெருமானை வேதமந்திரங்களாலே வழிபடுவர்` என்பதனையும் அவர்,
``மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து .... ....
.... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... ....
அங்கணர் கோயி லுள்ளா அகம்படித் தொண்டு செய்வார்``
எனக் குறித்தருளினார்.
தில்லைவாழந்தணரைச் சேக்கிழார், ``அகிலமெல்லாம்புகழ் திருமறையோர்`` எனச் சிறப்பித்தார். அதனானே அவரால் ``திரு மறையோர்`` எனக் குறிக்கப்பட்ட அப்பூதியடிகள் முதலாயினாரும் மகாசைவராதல் அறியப்படும். ஞானசம்பந்தரது தந்தைவழி, தாய்வழி இரண்டும் மகாசைவ மரபே என்பதனைச் சேக்கிழார்,
``மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய்`` -தி.12
எனக் குறித்தருளினார். இவ்வாற்றானே, `குங்குலியக் கலயர், முருகர், சண்டேசர், சோமாசிமாறர், நமிநந்தியடிகள், நீலநக்கர்` என்னும் நாயன்மார்களும் மகாசைவரேயாதல் பெறப்பட்டது. சேக்கிழார் தில்லைவாழந்தணர் முதலியோரைக் குறித்தவாறே உமாபதிதேவரும் பெரியபுராணத்துட் போந்த வைதிக அந்தணர் அனைவரையும் ``திருமறையோர்`` (சேக்கிழார் நாயனார் புராணம் - 36) எனக் குறிப்பிடுதல் காண்க.
சண்டேசுர நாயனாரது பதியாகிய திருச்சேய்ஞலூரைச் சேக்கிழார், ``திருமறையோர் மூதூர்`` என்றமையால், அதன்கண் வாழ்ந்த அந்தணரும் மகாசைவரே என்பது பெறுதும். எச்சதத்தன் சிவாபராதம் செய்து ஒறுக்கப்பட்டோனாதல் பற்றி அவனது சைவச் சிறப்பையும், அவனொடு வாழ்ந்த பிற அந்தணரது சைவச் சிறப்பையும் சேக்கிழார் விரித்திலர் எனினும், ``வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப்பதி`` என்பதனால் அங்குத் திகழ்ந்த சைவச் சிறப்பைக் குறித்தருளினார். இத்தகு சைவச்சிறப்பு அங்கு இல்லையேல், அவர் கூறியவாறு அவ்வூர் தில்லை வாழந்தணர்கள் சோழமன்னர்கட்கு முடிசூட்டும் தலங்கள் ஐந்தனுள் ஒன்றாயிருத்தல் கூடுமோ!
சைவ அந்தணர்க்கு நூல், சிகை என்பவற்றோடு காதில் சுந்தர வேடம் சிறப்படையாளமாம்.
சிவாகமத்தை இகழ்ந்தொதுக்குமாற்றால் அந்தணருட் சிலர் வேதத்தின் பொருளை முன்னொடு பின் முரணாதவாறு ஒருபடித்தாக உணரமாட்டாது, `பூர்வ பாகமாகிய கன்மகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `ஞானகாண்டம் புனைந் துரை` எனப் பொதுவகையால் தழுவி, `தெய்வம் இல்லை` எனக்கூறி நாத்திகராய் ஒழிவாரும், (மீமாஞ்சகர்) `உத்தர பாகமாகிய ஞானகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `கன்ம காண்டம் மந்த பரிபாகிகட்கே உரியது; அதனால் அதனுள் வலியது இப்பகுதி, மெலியது இப்பகுதி என ஆராய்தல் பயனில் உழப்பாம்` என்று பொதுவகையால் தழுவிக் கிரியா மார்க்கத்தில் அனேகசுர வாதிகளாயும், ஞான மார்க்கத்தில் `சீவான்மாவே பரமான்மா` என்னும் அகம்பிரமக்காரர்களாயும் நிற்பாரும் (மாயாவாதிகள்) `கன்ம காண்டம், ஞானகாண்டம்` என்னும் இரண்டையும் ஒப்பக்கொள்ளினும், உலகத்தின் `தோற்றம், நிலை, இறுதி` என்னும் முத்தொழிலையும் செய்பவனே முதல்வன் என உணரமாட்டாது, `அவற்றுள் நிலையாகிய சாத்துவிகத் தொழிலைச் செய்பவனே முதல்வன்; ஏனை இராசதத் தொழிலாகிய தோற்றத்தைச் செய்பவனும், தாமதத் தொழிலாகிய இறுதியைச் செய்பவனும் முதல்வர் ஆகார்` என்று இகழ்ந்து, `அவருள்ளும் தாமதத்தொழிலைச் செய்பவன், தோற்றத்தைச் செய்பவனிலும், கீழ்ப்பட்டவன்` எனக்கூறிச் சிவநிந்தகராவாரும் (பாஞ்சராத்திரிகள்) ஆவர். இவரை எல்லாம் சைவாகமங்கள் புறச்சமயிகள் என்றே ஒதுக்கும். இவருள் சிவநிந்தை செய்தொழுகுவாரை `அகத்தியர், கௌதமர்` முதலிய முனிவர்களது சாப வயப்பட்ட துர்ப் பிராமணர்கள் என்று காந்தம், கூர்மம் முதலிய உயரிய புராணங்கள் இகழ்ந்தொதுக் குதலை அறிந்துகொள்க. இன்னோரன்ன, குழறு படிகள் பலவும் சிவாகமங்களைப் பொருட்படுத்தி உணராமையான் உளவாவன என அறிக.
இதனால், `வேத சிவாகமஞானமும் வைதிக சைவ ஒழுக்க மும் உடைய அந்தணரே அந்தணத் தன்மை நிரம்பியவர்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
* * * * * * 

பொழிப்புரை :

இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 14

பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே
* * * * * * 

பொழிப்புரை :

இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 1

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

பொழிப்புரை :

நீதி நூலைக் கல்லாத அரசனும், கூற்றுவனும் யாவரிடத்தும் கொலையே புரிதலால் தம்முள் ஒருபடியாக ஒப்பர். ஆயினும், கல்லா அரசனினும் கூற்றுவனே மிக நல்லவன். என்னை? கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; கூற்றுவன் அறமுடையவர்பால் தண்டம் செய்தற்கு அடையான்.

குறிப்புரை :

`அதனால் அரசர்க்கு நீதிநூற் கல்வி இன்றியமை யாதது` என்பது குறிப்பெச்சம். கற்றற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `ஆயினும், என்னை` என்பன சொல்லெச்சம். ``அறம்`` என் றது நீதியை. ``ஓரான்`` என்பது முற்றெச்சம். நணுக நில்லான் என்புழி, `தண்டம் செய்தற்கு` என்பது இசையெச்சம். `நலியகில்லானே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கல்லா அரசன் அறம் ஓராது கொல்லென் றலை, ``பெண்கொலை செய்த நன்னன்`` (குறுந்தொகை - 292) முதலியோரிடத்துக் காண்க.
இதனால், `நீதிநூலை ஓதி உணர்தல் அரசர்க்கு முதற்கண் வேண்டப்படுவது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

பொழிப்புரை :

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை யறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.

குறிப்புரை :

``நாட்டில்`` என்புழி `நிகழும்` என்பது வருவிக்க. `அவன் நெறி` என்பது பாடம் அன்று. வைதிக நெறி பொதுமையான கடவுள் நெறியாதலின், அதனை, `தவநெறி` என்றார். வைதிக நெறி சைவநெறிகளே நீதி நூலின் நோக்காதலை, மேற்கூறிய உண்மை அந்தணர் அந்நூலை ஓதுவிக்கும்வழி, அவர் அரசனுக்கு உணர்த்து வாராதலின், அரசன் அவ்வழியில் வழுவாது நிற்றல் வேண்டும் என்பதாம். `நரபதி கெடும், குன்றும்` என உடைமையது தொழில்கள், உடையான்மேல் ஏற்றப்பட்டன. ``மூடம்`` என்றது அதன் காரியந் தோன்ற நின்றது. இத்தவநெறி சிவநெறிகளைப் புரத்தலில் வழுவாது நிற்பித்தற்பொருட்டே, `அரசன் பெரியாரைத் துணைக் கொள்ளல் வேண்டும்` (திருக்குறள், 45ஆம் அதிகாரம்) என்றார் திருவள்ளுவர். ஞானசம்பந்தர் ``வேந்தனும் ஓங்குக`` (தி.3 ப.54 பா.1) என அரசனை வாழ்த்தியதும் இது பற்றியே என்பதனைச் சேக்கிழார்,
``ஆளும் மன்னனை வாழ்த்திய தற்சனை
மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்``
-தி.12 திருஞான.பு. 4-822
என விளக்கினார். இவ்வரச ஒழுக்கத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திருத்தொண்டர் புராணத்துட் போந்த நாயன்மார் சிலரது அரசாட்சியைக் கண்டுகொள்க.
இதனால், அரசன், தன்கீழ் வாழும் மக்கட்கு, நிலை பேறில்லாத உடல் நலத்தை மட்டும் காப்பவனாகாது, நிலையுடைய உயிர் நலத்தையும் காப்பவனாதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. 

பொழிப்புரை :

யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்குரிய கோலம் இன்றியமையாதாயினும், அத்தொழிற்கண் செவ்வே நில்லாதார் அதற்குரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்! செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.

குறிப்புரை :

பலவகைக் கடவுள் நெறிக் கோலத்தை உடை யாரையும் அவற்றிற்குரிய செயலில் நிற்பித்தல் அரசனுக்குக் கடமையாதலை உணர்த்துவார் இங்ஙனம் பொதுப்படக் கூறினார். `வேடமே மெய்வேடம்` என, ஏகாரத்தை மாற்றி உரைக்க. ஒழுக்கம் இல்லாதார் வேடம் மாத்திரம் புனையின், உண்மையில் நிற்பாரையும் உலகம், `போலிகள்` என மயங்குமாகலானும், அங்ஙனம் மயங்கின் நாட்டில் தவநெறியும், சிவநெறியும் வளராது தேய்ந்தொழியும் ஆகலானும் அன்ன போலிகள் தோன்றாதவாறு செய்தல் அரசற்குக் பேரறமாம் என்பார், `அதுவே வீடாகும்` எனவும், இது செய்ய அரசற்குக் கூடும் ஆதலின் அதனை விட்டொழிதல் கூடாது என்பார், வேந்தனை, ``விறல் வேந்தன்`` எனவும் கூறினார். `உண்மை வேடத்தாலன்றிப் பொய் வேடத்தாற் பயன் இன்று` என்பதை,
வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின். -குறள், 272
எனவும், பொய்வேடத்தால் பயன் விளையாமையேயன்றித் தீமையும் பெருகுதலை,
தவம்மறைந் தல்லவை செய்தல், புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. -குறள், 273
வலியில் நிலைமையான் வல்லுருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று -குறள், 274
எனவும், வேடம் புனையாராயினும், உண்மையில் நிற்பார் உயர்ந் தோரே ஆவர் என்பதனை,
மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த தொழித்து விடின். -குறள், 280
எனவும் திருவள்ளுவரும் வகுத்துக் கூறியருளினார்.
இதனால், கடவுள் நெறியில் போலிகள் தோன்றாதவாறு குறிக் கொண்டு காத்தல் அரசற்குக் கடமை என்பது பொதுவாகக் கூறப் பட்டது.
எவரேனுந் தாமாக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே

உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. -தி.6 ப.51 பா.3
என்றாற்போலும், திருமொழிகள் உலகியலைக் கடந்து அருள் நெறியில் நிற்கும் அன்புநெறி (பக்திமார்க்கம்) பற்றியனவும், இங்குக் கூறிய பலவும் உலகியலைக் கடவாத நூல்நெறி (விதிமார்க்கம்) பற்றியனவுமாம் ஆதலின் இவை தம்முள் முரணாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 

பொழிப்புரை :

`பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன்` என்று வாய்ப்பறை சாற்றிவிட்டு, அப்பொழுதே அம்முயற்சி சிறிதும் இன்றி மூடத்தில் அழுந்திக்கிடப்போர் குலப்பெருமை கூறிக்கொள்ளுதற் பொருட்டுப் பிராமணர்க்குரிய சிகையையும், பூணூலையும் முதன் மையாக மேற்கொள்வாராயின், அத்தன்மையோர் உள்ள நாடும், நன்னெறி நிகழாமையால் வளம் குன்றும்; அந் நாட்டிற்குத் தலை வனாகிய அரசனும் பெருவாழ்வுடையனாயினும், தன் கடமையைச் செய்யாமையால், பெருமை சிறிதும் இலனாவன். ஆதலால், அத்தன்மையாளரது உண்மை நிலையை அரசன் பல்லாற்றானும் ஆராய்ந்தறிந்து, வெளியாரை மருட்டும் அவரது பொய்வேடத்தைக் களைந்தெறியச் செய்தால், பலர்க்கும் நன்மை உண்டாகும்.

குறிப்புரை :

வேடமாத்திரத்தானே தம்மைப் பிராமணர் என மதித்துக்கொள்வோர் தம் மூடத்தை நீக்கிக்கொள்ள முயலாராகலான் அவர்க்கும், அவரது வேடத்தால் அவரை உயர்ந்தோர் எனக் கருதி அவர்க்குப் பிறர் செய்யும் தானங்கள், அவரது தீயொழுக்கத்தால் உலகிற் பல தீச்செயல்கள் நிகழ்தற்கே காரணமாதலின் உலகிற்கும் உளவாகின்ற தீமைகள் அனைத்தும் அப்பொய் வேடத்தைக் களையவே நீங்க, மெய் வேடத்தாரால் நன்மை விளையும் என்பது பற்றி, ``அறுத்தால் நன்றே`` என்றார்.
இதனால், `அரசன் கடவுள் நெறியுள் வைதிக நெறியைக் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொழிப்புரை :

சிவஞானம் இல்லாத வெறுவியர் சிவஞானம் பெற்றுச் சிவனே ஆயினார் போலச் சிவனுக்குரிய சடை, சிகை, பூணூல் என்பவற்றைப் புனைந்துகொண்டு சிவஞானிகள் போல நடிப்பார் களாயின், அவரை அரசன் சிவஞானிகள் வாயிலாகவே பரிசோதனை செய்து உண்மைச் சிவஞானிகளாகச் செய்தல் நாட்டிற்கு நன்மை பயப்பதாகும்.

குறிப்புரை :

எனவே, `அது செய்யாவழி நாட்டிற்குத் தீமை உண்டாகும்` என்றதாயிற்று. ஞானம் உண்மையை அறிதல் அரசற்குக் கூடாமையின், `ஞானிகளாலே சோதிக்க` எனவும், `சிவசின்னத்தைக் களைக` எனக் கூறுதலும் குற்றமாதலின், `அவர்க்குச் சிவஞானத்தை உண்டாக்குக` எனவும் கூறினார். `சடை` என்னும் கோலத்தைக் கூறவே, ஞானம், சிவ ஞானமாயிற்று.
இதனால், `அரசன் கடவுள் நெறியில் சிவநெறியைப் பழுது படாமல் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை :

ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

குறிப்புரை :

`பாவையரையும்` என்பது குறைந்து நின்றது. `காப்பவன் காவலன்` என மாறிக் கூட்டுக. வைதிக வேள்வி சைவ வேள்விகட்கு அவியையும், சிவவழிபாட்டிற்குப் பால் முதலிய ஐந்தையும் தருவன ஆக்களும் (பசுக்களும்) `அறவோர்க்களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்` (சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை) முதலியவற்றையும், சிவவழிபாடு செய்யும் ஆடவர்க்கு அதற்கு வேண்டுவனவற்றை அமைத்து உடன் இருந்து உதவுதலையும் செய்வோர் பெண்டிரும், அறமுதற் பொருள்களை உலகர்க்கு உணர்த்துவார் துறவறத்தவரும், சிவஞான சிவபத்திகளைப் பரிபக்கு வர்க்குத் தருவார் சிவனடியாரும் ஆகலானும், இவரை நலியும் இயல்பு உடையார் முறையே புலையரும், தூர்த்தரும், நாத்திகரும், புறச்சமயி களும் ஆகலானும் அவரால் இவர்க்கு நலிவு வாராமைக் காத்தல் அரசற்குக் கடன் என்பதும்,
`அக்கடனை அவன் ஆற்றாதொழியின், ஆற்றுவார் பிறர் இன்மையின் உளவாகும் தீங்குகட்கு அவனே காரணன் ஆதலின், அவன் நிரயத் துன்பத்தை நெடுங்காலம் எய்துவன்` என்பதும் கூறியவாறு. மறுமைக்கு - மறுமைக்கண்.
இதனால், `உலகியல், மெய்ந்நெறி` என்னும் இருவகை நன்னெறிகட்கும் ஊறுண்டாகாதவாறு காத்தல் அரசற்குக் கடன் என்பதும், அக்கடமையைச் செய்யாவழி அவற்கு உளதாகும் குற்ற மும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

பொழிப்புரை :

பல சமய நூலாரும் தாம் தாம் அறிந்தவாறு கூறும் யாதொரு முத்தியைப் பெறவேண்டினும், இம்மை மறுமைச் செல்வங் களை எய்த வேண்டினும் அரசன் மறந்தும் தனது அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது. அதனால், அவன், தன்கீழ் வாழும் குடிகளிடத்து விரும்பற்பாலது அவர்தம் தொழில் வருவாயுள் ஆறில் ஒன்றேயாம்.

குறிப்புரை :

ஆகவே, `அதனின்மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாம்` என்றபடி. இல்லறத்தார் `தென்புலத்தார் முதலிய ஐந்திடத்து அறமும்` (குறள், 43) செய்ய வேண்டுதலின், ஆறில் ஒன்றிற்கு மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாயிற்று.
அரசரது ஒழுக்கம் கூறும்வழி அவர்க்குப் பொருள் வருவாயும் கூறவேண்டுதலின், அதனை அறத்தாற்றின் வழுவாது பெறல் வேண்டும் என்பது இதனால் கூறப்பட்டது. `உறுபொருளும், உல்கு பொருளும், தன்ஒன்னார்த் தெறுபொருளும்` (குறள், 756) பெறுதற்கண் அறத்தின் வழுவுதல் உண்டாகாமையின், அவை இங்குக் கூற வேண்டாவாயின.

பண் :

பாடல் எண் : 8

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

பொழிப்புரை :

அரசன் உலகத்தை மேற்கூறியவாற்றாலெல்லாம் காப்பது பலர்க்கும் நன்மையை மிகத் தருவதாகும். எவ்வாறெனில், அத்தகைய ஆட்சியில் பொருந்திய மக்கள் மேற்கூறிய நெறிகளிலே வழுவாது நிற்பராகலின். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து தனது நாட்டைப் பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு தான் தனது குடிமக்களைத் தமக்கும், அறத்திற்கும் உரியவராகக் கருதாது, தனது நலம் ஒன்றற்கே உரியதாகக் கருதிவிடுவானாயின், அவன் தனது பசியின்பொருட்டுப் பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியோடொத்த தன்மையனே ஆவன்.

குறிப்புரை :

`அறநெறி பிறழ்ந்த அரசற்குக் கெடுவது மறுமை யேயன்றி இம்மையுமாம்` என்பார், ``இவ்வுலகைப் பிறர் கொள்ள`` என்றார். கொடுங்கோல் அரசனோடு குடிகளும், பிறரும் மேவுதல் (குறள் - 740 உரை) இன்மையால், அவன் தற்காத்தலையும் செய்து கொள்ளமாட்டாது பகைவர்க்கு எளியனாவான் என்க. `தாம்` என்பது பாடம் அன்று. ``தான்கொள்ளின்`` என்புழியும் `கொள்ள` என்பதே பாடமாயின் பொருள் இதுவேயாம் என்க. பாவகம் - தன்மை.
இதனால், `தன் கடமையினின்றும் வழுவுதல் அரசற்குப் பெருங்கேடு பயக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொழிப்புரை :

`கால் கட்டி மேல் ஏற்றிப் பால் கொண்டு சோம பானம் செய்க` என்பது யோகியரிடை வழங்குவதொரு குறிப்புச் சொல். அதன் பொருள் `காற்றை (பிராண வாயுவை) இடைகலை பிங்கலை வழிச் செல்லாதவாறு தடுத்து, சுழுமுனைவழிமேல் ஏறச் செய்து, அதனால் வளர்கின்ற மூலக்கனலால் நெற்றியில் உள்ள சந்திரமண்டலத்தினின்றும் வழிகின்ற அமுதத்தை உண்டு சமாதியில் அழுந்திப் பரவசம் எய்தியிருக்க` என்பதேயல்லது, `ஒருவனை இருகால்களையும் கட்டிக்கொண்டு பனை மரத்தின்மேல் ஏறச்செய்து, அவன் அதன் பாளையினின்றும் இறக்கிக் கொணர்கின்ற கள்ளை உண்டு அறிவிழந்திருக்க` என்பது பொருளன்று. அதனால், அவ்வுட் பொருளை உணரும் அறிவிலாதோர் தமக்குத் தோன்றிய வெளிப் பொருளே பொருளாக மயங்கித் தாமும் கள்ளுண்டு களித்துப் பிறரை யும் அவ்வாறு களிக்கச் செய்வர். அப் பேதை மாக்களை ஒறுத்தலை அரசன் தனது முதற்கடனாகக் கொண்டு ஒறுத்தல் வேண்டும்.

குறிப்புரை :

வேள்விக்கண் கொள்ளப்படும் சோமபானத்தைப் புகழ்ந்து கூறலும் இன்னதொரு மயக்க உரையே என்பது தோன்றுதற் பொருட்டுத் திங்களை அப்பெயராற் கூறாது, `சோமன்` என்னும் பெயராற் கூறினார். அதனால் அன்னதொரு வேள்வியை உயிர் நலம் கருதாது உடல் நலத்தின்பொருட்டு அப்பானம் செய்தல் வேண்டி வேட் பார்க்கும் அரசன் அறிவு புகட்டல் வேண்டும் என்பது பெறப்பட்டது. இத்திருமந்திரத்துள், `கால், மேலேற்றல், பால், சோமன்` என்னும் சொற்கள் இவ்விரு பொருள் பயந்து நிற்றல் அறிக. `முகத்தின்கண் சோமனைப் பற்றிப் பால்கொண்டு உண்ணாதார்` எனக் கூட்டுக. செய், `செய்கை` என்னும் பொருட்டாய முதனிலைத் தொழிற் பெயர்.
``காயத்தின் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற;
வறட்டுப் பசுக்களென் றுந்தீபற`` -திருவுந்தியார் 43
என்றார் திருவுந்தியாரிலும்.
இதனால், அரசன், `கடவுள் நெறியில் பேதை மாக்களது கட்டுரைகள் நிகழ்ந்து குழறுபடை செய்யாதவாறு காத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

பொழிப்புரை :

சமயிகள் பலரும் தம் தம் சமய அடை யாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லா தொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.

குறிப்புரை :

`மறுமைத் தண்டம், அதன்பின் வரும் பிறப்பில் அப்பாவம் தொடராது கழிதற்பொருட்டாதலானும், அதனைச் செய்தல் பிறர்க்கு இயலாதாகலானும் அதனைச் சிவபிரான் தானே செய் வானாய், இம்மையிற் செய்யும் தண்டம் அப்பாவம் மறுமையில் தொடராது கழிதற்பொருட்டாதலின், அதனை அவன் அரசனுக்குக் கடமையாக்கினான். ஆகவே, அரசன் அக்கடமையினின்றும் வழுவுதல் கூடாது` என்பதாம். சமயங்கள் பலவும் உயிர்களின் அறிவு வளர்ச்சிப்படிகளேயாதலின், `அவற்றை மேற்கொண்டுள்ளோம்` என்பவர் அவ்வொழுக்க நெறி நில்லாராயின் பொய்ம்மையாளராய்ப் பிறரை வஞ்சித்துக் கேடெய்துவராகலின், அவ்வாறு ஆகாமைப் பொருட்டு அவரை ஒறுத்தல் அரசற்குக் கடமையாயிற்று.
இதனால், `அவரவர் மேற்கொண்ட சமயங்கள் பலவற்றையும் பழுதுபடாமற் காத்தல் அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. 

பொழிப்புரை :

வற்றாத அமுத ஊற்றுப்போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.

குறிப்புரை :

முதற்கண், ``அமுதூறும்`` என்பதன் இடையில் `போல` என்னும் உவம உருபு விரிக்க. `நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுமாறுபோலவே, இயற்கை விளைவுகளைக் கூறியதேயன்றி, உழவரால் உளவாகும் செயற்கை விளைவுகளையும் கூறினார், சிறப்புடைய மக்களுலகம் அவற்றால் வாழ்தல் கருதி. ``ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் - வாரி வளங்குன்றிக் கால்`` (குறள் - 14 1) என்றார் திருவள்ளுவரும். இதனானே உழ வாகிய முதற்றொழிலும், ஓரிடத்து விளையும் பொருளைப் பிற விடத்துக்கொண்டு கொடுக்கும் வாணிகம் முதலிய துணைத்தொழிலும் ஆகியவற்றால் பல்வேறு திறத்து மக்களது வாழ்விற்கும் மழை முதலாதல் போந்தது. போதரவே, மேல் கூறாதொழிந்த வணிகர், வேளாளர் என்பாரொடு ஏனைமக்களது ஒழுக்கங்களும் ஓராற்றால் கூறப்பட்டனவாயின. இங்கும் அமுதூறும் மரங்களுடன், நஞ்சூறும் மரங்களும் மழையினால் உளவாதல் கூறினார், ``பார்மிை\\\\u2970?`` எனக் கூறிய இந்நிலவுலகம் நல்வினை தீவினை இரண்டற்கும் இடமாகிய இருவினை உலகமாவதல்லது, சுவர்க்கமும், நரகமும் போல ஒரு வினை உலகமன்று என்பது அறிவித்தற்கு. எனவே, `கன்ம பூமியாகிய இந்நிலவுலகம் நடத்தற்கு மழையே முதல்` என்பது கூறப்பட்டதாம். புல், பூடு முதலிய பலவும் இங்கு, `மரம்` என அடக்கப்பட்டன. ``மரப் பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை`` (தொல்-எழுத்து, 415) என்றாற்போல. ``காஞ்சிரை யும்`` என்ற உம்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 2

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 

பொழிப்புரை :

எம்தந்தையாகிய சிவபெருமான் பொழிகின்ற திருவருளாகிய வெள்ளம் அன்பரது நெஞ்சகத்தினின்றும் ஊறுகின்ற சூக்குமமாகிய தெளிநீராம் ஆதலின், அதற்கு உலகில் மழையால் மலையினின்றும் பாய்கின்ற வெள்ளிய அருவி நீர்க்கு உள்ளதுபோல இடமும், காலமும் சுட்டும் சொல்லில்லை; நுரை இல்லை; மேலே மூடுகின்ற பாசியில்லை; கரையில்லை.

குறிப்புரை :

``நுரையில்லை மாசில்லை`` என்பதனை இறுதியடியின் முதலிற் கூட்டுக. ``நுரை இல்லை`` என்றது, `பயன்படா தொழியும் கூறில்லை` எனவும், ``மாசில்லை`` என்றது, `பாசத் தொடர்பு இல்லை` எனவும் கூறியவாறாம். எனவே, `அமுத ஊற்று` என மேல் சிறப்பிக்கப்பெற்ற நீர்மழையினும் இறைவனது கருணைமழை மிகச் சிறந்தது என்பது கூறும் முகத்தால், `இறைவனது கருணையானே மழை உளதாகும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே - என்னப் பொழியாய் மழை`` என மாணிக்கவாசகர், மழையை இறைவன் கருணையோடு உவமித்ததும் இதுபற்றி. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும் வான்சிறப்பைக் கடவுள் வாழ்த்தினை அடுத்து வைத்தார். இதனானே மக்களது ஒழுக்க மும், ஒழுக்கம் இன்மையும் மழைக்கும், மழை இன்மைக்கும் நேரே காரணமாகாது, இறைவனது திருவுள்ளத்திற்கு உவகையும் வெகுளி யும் உளவாக்கும் முகத்தால் காரணமாம் என்பது பெறப்பட்டது. சிறந்த ஒளியாதல் பற்றித் திருவருளை, ``கழுமணி`` என்றார்.
இதனால், மழை இறைவனது திருவருள் வடிவாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொழிப்புரை :

அறம் செய்தலில் விருப்பம் உடையவர்களே, அறம் வேண்டுமாயின், இரப்பாரை `அவர் நல்லர் இவர் தீயர்` என அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள்.
காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடிவைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.

குறிப்புரை :

`ஆர்க்கும் இடுமின், பார்த்திருந்துண்மின், பழம் பொருள் போற்றன்மின்` என்பவற்றால் முறையே `தாழ்ந்தோர், உயர்ந் தோர், ஒத்தோர்` என்னும் முத்திறத்தார்க்கும் உதவுதல் கூறப்பட்டமை காண்க.
தாழ்ந்தோர்க்கு உதவுதலே ஈகை அல்லது தருமம். அஃது `அற்றார் அழிபசி தீர்த்தலே` (குறள், 226) ஆகலின், அதற்கு ஏற்பாரது தகுதியை ஆராயவேண்டுவதில்லை என்றார்.
``பார்த்திருந்து உண்மின்`` என்றதனால், `தக்கார் வரின், மகிழ்ந்து வரவேற்று அவரோடு உண்டலும் வாராதவழி வாராமைக்கு வருந்தித் தாமே உண்டலும் செய்க` என்றதாயிற்று. இதுவே `விருந்தோம்பல்` என்றும், `தானம்` என்றும் சொல்லப்படும். இவர்க்குப் பொருளும் கொடுக்கப்படும் ஆதலின், தகுதி வேண்டப்படுவதாயிற்று. திருவள்ளுவரும் `தக்க விருந்தினரையே ஓம்புக` எனக் கூறுதல் அறிக. (குறள், அதி. 9)

``பழம்பொருள் போற்றன் மின்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. சுற்றம், அடுக்கிய சுற்றமாய் வருதலின், (குறள், 525) பழம் பொருளைப் போற்றாது வழங்குதலை அதற்கே கூறினார். எனினும் பொதுப்படவே ஓதினமையால், பிறவற்றிற்கும் கொள்ளப்படும். காக்கை கரைந்துண்ணுதலைத் திருவள்ளுவர் சுற்றந்தழாலுக்கே உவமையாகக் கூறுதலும், (குறள், 527)
காக்கை தனது இனம் ஒன்றையே கரைந்து உண்ணுதலும் அறிக. ``காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே`` என்றாராயினும், `உண்ணுங் காலம் காக்கை கரைதல் அறிமின்` என்றலே கருத்து என்க.
இதனால், `தேடிய பொருளைப் பிறர்க்குப் பயன்படச் செய்தல் வேண்டும்` என்பதும், அங்ஙனம் செய்யுமாறும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 1

தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

பொழிப்புரை :

`சிவபெருமானது திருவடியை வணங்குதல், பிறர்க்கும் பிற உயிர்க்கும் உதவுதலை மேற்கொண்டு செய்தல், தத்துவ உணர்வு பெறுதல்` என்னும் இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ உடையவரே அறிவுடையோராவர். அவர்க்கே சிவபெருமான் உறுதுணையாவான்.

குறிப்புரை :

``தாள்பணிவார்`` முதலிய மூன்றனையும் எழு வாயாக்கியும், ``தாமறிவார்`` மூன்றனையும் அவற்றிற்குத் தனித்தனிப் பயனிலையாக்கியும் முடிக்க. இவற்றால் இவை மூன்றும் அறத்தின் வகையாதல் இறுதியடியில் பெறப்பட்டது. தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தை விரித்து, `தாமறிவார்க்கே பரன் தமனாம்` எனக் கூட்டி உரைக்க. `தமர்` எனப் பன்மையாக ஓதுதல் பாடம் அன்று. `அறம் செய்வோரே அறிவுடையோர்` என்பது உணர்த்துவார், ஏனைய வற்றையும் உடன் கூறினார். ``விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு``(குறள், 89) எனத் திருவள்ளுவரும் அறம் செய்யாமையை, `மடமை` எனவும், அதனை உடையாரை, `மடவோர்` எனவும் கூறுதல் காண்க.
இதனால், `அறத்தை விரும்பிச் செய்தல் அறிவுடையோர்க்கே கூடுவது` என்பதும், அறத்தின் வகையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 

பொழிப்புரை :

உண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.

குறிப்புரை :

`அதனால், யாம் பொருள் இலம் என்று அறஞ் செய்யாமைக்குக் காரணங் கூறியொழிதல் பொருந்துவதன்று` என்பது குறிப்பெச்சம். ஆம் - கூடும். ``பச்சிலை`` முதலிய நான்கன் பின்னும் முறையே, `சூட்டல், கொடுத்தல், இடுதல், சொல்லல்` என்பன சொல் லெச்சமாய் நின்றன.
இதனால், மக்கள் யாவரும் `அறத்தினைத் தத்தமக்கு ஒல்லும் வகையான் ஓவாதே செல்லும்வாயெல்லாம் செயல் வேண்டும்` (குறள் - 33) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. 

பொழிப்புரை :

`பொருள் இல்லாத வறியவர், பொருள் உடை யவர் கொடுக்க உண்ணும் அதுவே பொருள் உடையவர்க்கு அறமாகி நிலை பெறும்` என்பதை நூல்களால் அறிந்த அறிவு செயலில் மணக்கப் பெறுபவரே மக்களாக மதிக்கப் பெறுவர். ஆயினும் அவ்வறிவைப் பெற்றும், சிலர், நீர்வேட்கையுடையார் பலரும், (பெரிய நீர் நிலையாகிய கடலை நோக்கிச் செல்லாது) ஊருணியாகிய சிறிய கிணறு குளங்களைத் தேடிச் சென்று உண்ணும் செயலின் தன்மையை அறிதல் இல்லை.

குறிப்புரை :

`அறிந்தாராயின், செல்வத்துப்பயன் ஈதலே` (புறம், 189) என்று உணர்ந்து வறியார்க்கு ஈவர் என்பது கருத்து. ``வறியார்க்கொன் றீவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து`` (குறள் - 221) ஆதலின், ``அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன்`` என்றார். ``கூவல் குளத்தினில்`` என்பது, `கூவலிலாதல் குளத்திலாதல்` என்னும் பொருளது. `கடல்நீர் பெரிதாயினும் நீர்வேட்கையுடையார் அதனிடத்துச் செல்லாமை போலப் பெருஞ்செல்வராயினும் ஈயாதார் மாட்டு இரவலர் செல்லார்; அதனால், அப்பெருஞ்செல்வர் அச்செல்வத்தால் சிறிதும் பயன் பெறார் என்பதும், கூவலும், குளமும் சிறியவேயாயினும் நீர்வேட்கை யுடையார் அவற்றிடத்தே சென்று நீருண்டல்போலச் சிறிது செல்வம் உடையாராயினும் ஈபவரிடத்தே இரவலர் சென்று தாம் வேண்டிய பெறுவர்; அதனால் அச்சிறு செல்வரே புகழும், அறமும் ஆகிய செல்வத்துப் பயனைப் பெறுவர் என உணர்ந்து ஈகையுடையராதல் வேண்டும்` என்பது பின்னிரண்டடிகளாலும் உணர்த்தப்பட்டது.
``தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்``
என்னும் புறப்பாட்டினைக் காண்க (புறம், 204).
இதனால், `அறிவுடை மக்களாயின், செல்வத்தின் பயன் அறம் செய்தலேயாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.

பொழிப்புரை :

அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?

குறிப்புரை :

`தருக்கிய` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `திரியாது ஓதுதலே பாடம்` எனினுமாம். `கூற்றுவன்` என்பது வருகின்ற திருமந்திரத்தினின்றும் கொள்ள வைத்தார்.

பண் :

பாடல் எண் : 5

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொழிப்புரை :

கூற்றுவன், தன்னைப் பிறர் காணாதபடியும், தன்னால் பற்றப்படுவர் நற்பண்பினை உடையர் என்றோ, தம்மை யன்றித் தம் சுற்றத்தார்க்குக் களைகணாவாரை இலர் என்றோ முதியர் என்றோ, இளையர் என்றோ எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவன். அவ்வாறு வருமுன்னே நீவிர் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`முதியர் என்று ஓராது` என்பது இசையெச்சம். தன்மம் செய்தல் கூறுவார், தவம் செய்தலையும் உடன் கூறினார், அதுவும் அறத்தின் வகையாதல் பற்றி. `தவமும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இவை இரண்டு திருமந்திரங்களானும், `யாக்கை முதலியவை நிலைத்துள்ளபொழுதே அறத்தைச் செய்துகொள்க` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. 

பொழிப்புரை :

மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.

குறிப்புரை :

வருவித்து உரைத்தன பலவும் இசையெச்சங்கள். ``வந்திலன்`` எனத் துணிவு பற்றி இறந்தகாலமாயிற்று. வழிமுதல் - பிற் காலம். ``அறியும்`` என்றது `அறிந்து நில்லுங்கள்` என்றபடி. அளவு - உண்மை. இதனால், மக்கள் அறிவுடையராயின், இருவகை அறங் களுள் யாதானும் தமக்கு இயன்றதொன்றனைச் செய்தல் வேண்டு மன்றிச் செய்யாதொழிதல் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது. ``அறத்தினூஉங் காக்கமும் இல்லை; அதனை - மறத்தலினூஉங் கில்லை கேடு`` (குறள், 32) என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 7

தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 

பொழிப்புரை :

மக்கட்பிறப்பைப் பெற்றுடையீர், அறிவுடை மகனால் செய்யத்தக்கது தவம் ஒன்றே. தவநெறி சிவபிரானையே பரம் பொருளாக உணர்ந்து ஒழுகுதலாய் இருக்கும். பலர் இந்நெறி நில்லாது உடம்பையே தெய்வம்போலப் பேணி மூச்சு விடுகின்ற பிணங்களாய் நிற்கின்ற உலகாயத நெறியில் உள்ளனர். அவர்க்கு இறுதியில் யமன், `தெய்வம் இல்லை என்ற உங்கட்குக் காட்சியளிக்கின்ற தெய்வம் நான்தான்` என்று சொல்லுவான்போலக் கண்முன் வந்து நிற்பான்.

குறிப்புரை :

`தான் செய்வது தவமாம்` என மாறுக. `தவமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தவத்து அவ்வழி - தவத்திற்குரிய அவ்வழி. மான் - பெரியோன். சிவபெருமானை வட மொழி `மகாதேவன்` என்றும், தமிழ்மொழி `பெரியோன்` என்றும் கூறுதலை அறிந்துகொள்க. மதிக்கும் - மதிக்கும் இயல்புடையதாகும். `சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு` (கொன்றை வேந்தன்) என ஔவையாரும் கூறினார். ``மனிதர்கள்`` என்பது விளி. `மனிதர்காள்` என்பதே பாடம் எனலு மாம். ``உயிர்க்கின்ற`` என்பது முற்று. இழிவு தோன்ற அஃறிணை யாகக் கூறினார். இதனால், இருவகை அறங்களுள் துறவறமே உயர்ந்தது என்பது கூறப்பட்டது. `கூற்றங் குதித்தலும் அதனாலே கை கூடுவ தாகும்` (குறள் - 269) என்பதும் குறிப்பால் புலப்படுத்தப்பட்டது. ``தவம் செய்வார் தங்கருமம் செய்வார்மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு`` (குறள் - 266) என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 8

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே. 

பொழிப்புரை :

அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.

குறிப்புரை :

``திளைக்கும் ... ... ... ... இளைக்கும்`` என்பதனை ``அறம்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தோணியாய்` என ஆக்கம் விரிக்க. `ஒருவன் செய்யும் நல்வினை தீவினைகள் அவன் கிளைஞர்க்கும் ஆகும்` என்பது வேத சிவாகமங்களின் துணிவு.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். -குறள், 115
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். -குறள், 166
என்றாற்போலும் திருக்குறள்களையும் காண்க. இதனால், இருவகை அறத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 9

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொழிப்புரை :

சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.

குறிப்புரை :

``பற்று`` இரண்டனுள் பின்னது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``அற்றம்`` என்புழி, `என்று` என்பதும், `ஒன்றும்` என்புழி, `ஆயின்` என்பதும், எஞ்சி நின்றன. அறநெறி வேட்கையரை ``அறநெறி`` என்றார். `அறநெறிக்கல்லது உரையான்` என முன்னே கூட்டி முடிக்க. ``அண்ணல்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``உரையான்`` என்றார். `ஒன்றாயினும், உங்களால் உற்று ஈந்ததுவே துணை` என மாறிக் கூட்டுக. `மற்றும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `கொள்ளுமாறு` என்பதன்பின் எச்ச உம்மையும் `அது` என்னும் பயனிலையும் எஞ்சி நின்றன. இதனால், `அறம் ஒன்றே உயிர் உய்யும் நெறி` என்பது வரையறுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. 

பொழிப்புரை :

எட்டிமரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிந்தாலொப்பனவாகிய, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மிகப் பெறுதலாலே குவிந்து, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டொழிவதேயாகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.

குறிப்புரை :

``பழுத்த`` என்றது, முதல்மேல் நின்ற சினைவினை. `வீழ்ந்தன` என்பதே பாடம் எனினும், பொருள் இதுவே என்க.
`மண் ணின் இடும்` என இயையும். முகத்தல், மண்ணைப் பறித்தல். `இடும்` என்பது செயப்பாட்டு வினையாய் நின்றமுற்று.
பட்டி - பட்டிமை; அஃதாவது வேண்டியவாறே ஒழுகுந்தன்மை. பொருள் முட்டுவந்துழி அது நீங்குதற்பொருட்டுத் கடன் கொள்பவர்பால் அம் முட்டுப்பாடே காரணமாக அவர் பொருளை `வட்டி` என்னும் பெயரால் தாம் வேண்டும் அளவு பறிப்பார், தம் பொருளைப் பிறர்க்கு ஈயாதவரினும் கொடியராதல்பற்றி அவரை, `பட்டிப் பதகர்` என்றார்.
``பாதகர்`` என்பது குறுகி நின்றது. கடன் கொடுப்பார் வட்டி பெறுதல் இயல்பாய் இருக்க அதனை மிகைபடக் கூறலாக எடுத்தோதிய அதனால், ``வட்டி`` என்று அளவிற்கு மேற்பட்டதனைக் குறித்தது. `ஆகலான்` என்பது சொல்லெச்சம்.
இதனால், அறஞ் செய்யாதவரது பொருள் போமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 

பொழிப்புரை :

உலகில் பல்லுயிர்கட்கும் அவை வாழுங் காலம் நிலைபெறாது ஒழிதலையும், உலகம் நிலைபெறும் காலமாகிய ஊழிகளும் நில்லாது பல நீங்குதலையும், தாம் எண்ணிய எண்ணங் களும் கைகூடாது கனவுபோலக் கழிதலையும், பசி பிணி பகை முதலியவற்றால் பெருந்துன்பத்தை எய்துகின்ற தங்கள் உடம்பும் இறுதி நாள் நெருங்க, சாறுபிழியப்பட்ட கரும்பின் கோதுபோலாகி வலியழி தலையும் கண்டுவைத்தும் மக்களிற் பலர் அறத்தை நினைக்கின்றிலர்.

குறிப்புரை :

`இஃது அறியாமையின் வலி` என்பது குறிப்பெச்சம். ``ஒழிந்தன`` முதலிய அத்தொழில்மேல் நின்ற வினைப்பெயர். முற்றாக வைத்து, `அவற்றை` என்பது வருவித்து, அச்சுட்டு அத் தொழிலைக் குறித்ததாகவும் உரைப்பர்.
ஊழி பல நீங்குதல் உரை யளவையால் அறியப்பட்டது. ஏனைய காட்சியால் அறியப்பட்டன. வேண்டுமிடங்களில் எச்ச உம்மை விரிக்க.
இதனால், அறஞ் செய்யாதவரது அறியாமை மிகுதி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. 

பொழிப்புரை :

அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.

குறிப்புரை :

அறம் என்பது, சிவபெருமான் தனது திருவுளத்தின் விருப்பத்தைக் கூறியதேயாகலான், அதனைச் செய்யாதே நிகழ்த்தும் பிற செயல்கள் அவனது வழிபாடாம் எனக் கருதுதல் அறியாமை யாதல்பற்றி, ``அறம் அறியார், அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார்`` என்றார். மறம் செய்வார் யாவராயினும் அவரைச் சிவபிரானது மறக்கருணை நரகிற் செலுத்தும் என்பதனை,
``இரப்பவர்க் கீய வைத்தார்; ஈபவர்க் கருளும் வைத்தார்;
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்;
.... .... .... .... .... .... ஐயன் ஐயாறனாரே`` -தி.4 ப.38 பா.10
எனத் திருநாவுக்கரசரும் வலியுறுத்தோதினார். திருமூலரும், திரு நாவுக்கரசரும் முதலிய சிவநெறிப் பேரருளாசிரியர்கள் அறத்தினை இத்துணை வலியுறுத்தி அருளிச்செய்திருக்கவும், `புறநெறியின்கண் உள்ளது போலச் சிவநெறியில் அறம் அத்துணை வலியுறுத்தப் படவில்லை` என்பார் உளராயின், அவரதுநிலை இரங்கத்தக்கதாம் மறம் (பாவம்) மன்னுதல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.
இதனால், `அறநெறி சிவநெறிக்கு இன்றியமையா உறுப்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே. 

பொழிப்புரை :

பலவகை நோய்களும், இடைஇறப்பும் (அவ மிருத்தும்) போல்வனவாகிய இம்மைத் துன்பங்கள் பலவும் அறம் செய்யாதவரிடத்தே செல்வன; அறஞ்செய்வார் இருக்கும் திசையை யும் அவை நோக்கா.

குறிப்புரை :

இரண்டாம் அடியை ஈற்றடியின் முன்னே வைத்து உரைக்க. உரும் இடி - பேரிடி. நாகம் - பாம்பு. உரோணி - ரோகிணி; நோயுடையாள்; அஃது ஆகுபெயராய் அவளால் வரும் நோயைக் குறித்தது. இனி, `உரோணியால் வரும்கழலை` என்றலுமாம். கழலை - கட்டி. பக்கல் - திசை. இருமல் முதலியன இன்னவாதல் சிவ பெருமானது சீற்றத்தாலும், அருளாலுமாம்.
இதனால், அறம் செய்யாதவர்க்கும், செய்பவர்க்கும் இம்மை யில் உளவாகும் நலந் தீங்குகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.

பொழிப்புரை :

வாழ்நாள் வாளா குறையப்பெற்ற மக்களே, நீவிர் யாவராலும் போற்றப்படுகின்ற சிவபெருமானைத் துதிக்கவும் இல்லை; இரப்பார்க்கு ஈதலும் இல்லை; குடத்தால் நீர்முகந்து ஊற்றிச் சோலைகளை வளர்க்கவும் இல்லை; ஆகவே, இறந்தபின் நரகத்தில் நீங்காதிருக்கப் போகின்றீர்களோ?

குறிப்புரை :

இவற்றுள் ஒன்றே செய்யினும் அறமாம் என்னும் கருத்தால் இவ்வாறு கூறினார். ``ஈதலும் ஈயார்`` என்பது, ``உண்ணலும் உண்ணேன்`` (கலி - பாலை 22) என்பதுபோல நின்றது. `தானே மரங்களை வைத்தா யினும், முன்பு உள்ள மரங்கட்கு நீருற்றியாயினும் வளர்த்தலே அறம்` என்றற்கு, `கரகத்தால் நீரட்டி` என்றார்.
இக்காலத்தார் இவற்றைச் செய்யாதொழியினும் வளர்ந்துள்ள மரங்களை வெட்டா மலேனும் இருப்பார்களா என்பது தெரியவில்லை.
``நரகத்தில் நிற்றிரோ`` என்றது ``கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` என்னும் (தி.4) அப்பர் திருமொழியை நன்கு வலியுறுத்துவதாகும். `ஏத்தார்` என்பனபோலப் படர்க்கையாக ஓதுவன பாடம் அல்ல.
இதனால், அறம் செய்யாதார் நரகினை எய்துதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.

பொழிப்புரை :

உலகில் நல்வழியில் நடத்தல் இன்றி மேலுலகம் கிடையாதொழியும் தீய வழியிலே நடக்கின்றவரே பலர். அவரொழிய, ஞானம் நிகழம் செயல்கள், மிகப் பெற்ற சிலரே, கேடு நிகழ்தற்கு ஏதுவான பாவத்தை நீக்கி நரகத்தையும் கடந்தவராவர்.

குறிப்புரை :

இத்திருமந்திரத்துள் பாடங்கள் பல்வேறு வகை யாய்க் காணப்படுகின்றன. அவை, `கடந்தார் - நடந்தார், கரும் பாரும் - கருப்பாரும், மழி - வழி, மாசற ஓட்டிட்டு ஒழி நடப்பார் வினை ஓங்கி நின்றாரே - மாசற ஓட்டிட வழிநடக்கும் மளவீழ்ந்தொழிந்தாரே` என்பன.
கழி` என்பது, `கழிய` எனப் பொருள் தந்தது. கரும்பார் - இருளுலகம். மழி - மழித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஒளி` என்பது, எதுகை நோக்கி `ஒழி` எனத் திரிந்து நின்றது. ஒளி - ஞானம்.
இதனால், ஞான நெறியில் நிற்பார்க்கு அறம் தானே உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் நலம்பெறுதலும், தீங்குறுதலும் இறைவன் செய்யும் நடுவு நிலைமையே (நீதியே) அதனால், அவை அறம் அல்லாதவற்றைச் செய்து அவற்றானே இன்பம் அடைய விரும் புதலை அவன் ஒருபோதும் உடன்படான்.
ஆகையால், மாந்தரீர், இன்பம் கெடுதற்கு ஏதுவாகிய பாவத்தைச் செய்தல் விலங்கின் செயலேயாகி விடும்; அதனை அறிந்து நீவிர் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலையும், தாழ்ந்தோர்க்கு ஈதலையும் செய்ய நினையுங்கள்.

குறிப்புரை :

கெடுவதும் ஆவதும் என்னும் எழுவாய்கள் `நடு` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டன.
`நடு` என்னும் இடப்பெயர் முன்னர் அதன்கண் நிற்றலைக் குறித்துப் பின்நின்று செய்தலைக் குறித்தது. ``செய்து`` என்றது, ``நாட`` என்பதனோடு முடிந்தது. ``நாடவும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``அது பசுவாம்`` என மாற்றுக.
பசு, ஆகுபெயர்.
இதனால், அறம் செய்பவரையே இறைவன் விரும்புதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்தவினை அறமும், மறமும் என இரண்டாய் இருத்தல் பற்றியேயாம். அதனால் முற்பிறப்பில் அறம் செய்தவர்கள் இப்பிறப்பில் இன்பம் நுகர்தலைக் கண்டுவைத்தும் இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே யாவர். அவர் அறம் என்பதையும் அறியார்.

குறிப்புரை :

இதனால், இப்பிறப்பில் விளையும் நலந் தீங்குகட்குக் காரணம் அற மறங்கள் என்பதும், அறத்திற்குக் காரணம் அன்பு என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. 

பொழிப்புரை :

அறிவுடையீர், சிலவிடத்துச் சிலராகவும் சில விடத்துப் பலராகவும் வாழ்வாரது பெருவாழ்வாகிய செல்வத்தைக் கண்டு, அதனானே அவர் ஈவர் என்று கருதி அற்பராயிருப்பாரைப் புகழ்ந்து, பயன் கிடையாமையால் பின் மெலிவடைதலைச் செய்யாமல், நுமக்குப் புக்கிலாம் வீடு கருதி இறைவனைத் துதியுங்கள். அதுவே வில் வல்லோன் எய்த அம்புக் குறிபோலத் தப்பாது பயன் தருவதாகும்.

குறிப்புரை :

`செல்வங் கருதி` என்பதனை, ``வாழ்வெனும்`` என்பதற்குப் பின்னர்க் கூட்டியுரைக்க. `செல்வத்துப் பயன் ஈதலே` என்பதை அறியாது, ஈட்டலும், நுகர்தலுமே எனக் கருதுவாரை, ``புல்லறிவாளர்`` என்றார். `சிலரும் பலரும் ஆகியோரது வாழ்வு` என்க. `உயிர்க்கு உடம்பு துச்சில்` எனவும், `வீடுபேறே புக்கில்` எனவும் திருவள்ளுவர் (குறள், 340) கூறுமாறு காண்க. இலக்கு - இலக்காய பொருள். ``விற்குறி`` என்பதில், வில் ஆகுபெயர்.
இரத்தலும் ஈதலே போலும், கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. -குறள், 1054
என்பராகலின், கரப்பார் மாட்டுச் சென்று இரத்தலே வறியார்க்கு இரப்பு என்னும் இழிதொழிலாதல் பெறப்பட்டது.
இதனானே,
இரப்பன் இரப்பாரை யெல்லாம், இரப்பிற்
கரப்பார் இரவன்மி னென்று. -குறள், 1067
எனவும் கூறுப.
அதனால், `கரப்பார்பால் சென்று இரவாமையே வறியார்க்கு ஓர் அறம்` என்பார் ``புல்லறிவாளரைப் போற்றிப் புலராமல்`` என்றும், `பொருளிலார்க்கு ஈதலாகிய அறம் கூடா தாயினும், இறைவனை ஏத்துதலைவிட வேண்டாவன்றோ` என்பார், ``இறைவனை ஏத்துமின்`` என்றும் கூறினார்.
இதனால், வறியார்க்கு ஆகும் அறம் கூறப்பட்டது. ``தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்`` (தி.7 ப.34 பா.1) என்னும் சுந்தரர் திருப் பதிகம் இத்திருமந்திரத்தொடு வைத்து நோக்கற்பாற்று.

பண் :

பாடல் எண் : 10

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :

பொருள் உடையவரேயாயினும், இலரே யாயினும் அன்பால் இளகுகின்ற மனம் உடையவரே சிவபெருமானது திருவடிகளை அடையும் நெறியைப் பெறுவர். அங்ஙனம் அந் நெறியைப் பெற்று அவனது திருவடிகளே எல்லா உயிர்கட்கும் பற்றுக் கோடு என ஒருதலையாக உணர்பவரே அவன் உலகத்தை அடைந்து வாழ்வர்.
அவன் திருவடியல்லாத பிற பொருள்களில் ஆசை நிறைந் தவர், தாம் இறக்குங்காறும் தமக்கு உய்யப்போவதொரு நெறியும் இன்றி, அறிவின்மை காரணமாக, தம்பால் வந்து இரப்பவரிடத்தும், `இரப்பவர்க்கு இல்லை என்னாது ஈக` என்று அறிவுறுப்பாரிடத்தும் கொள்கின்ற சினமாகிய தீயில் விழுந்து அழிவர்.

குறிப்புரை :

காண்டல் - பொதுவகையான் உணர்தல். துணை - அளவு. உம்மை முற்றும்மை. ஒன்று - ஒருநெறி. மெலிந்த சினம் - அறிவு குறைந்தமையால் விளைந்த சினம். `வீழ்ந்தார்` என்பது குறிப்பு உருவகம்.
இதனால் அறத்திற்கு முதலாவது அன்பு என்பதும், அவ்வன்பு தானே இறைவனை அடைதற்கும் வழி` என்பதும் கூறப்பட்டன. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப் பட்டது.
இவ்வதிகாரத்தின் இறுதி நான்கு திருமந்திரங்கள் சில பதிப்பு களில் முறைமாறிக் கிடக்கின்றன.

பண் :

பாடல் எண் : 1

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``இரண்டு`` என்றதற்கு முன், `இரண்டும்` என்னும், செவ்வெண் தொகை தொகுத்தலாயிற்று. `அன்பும் சிவமும்` என்பதும் பாடம். இரண்டு - இருவேறு பொருள்கள். ``சிவம்`` என்றது இங்கு, விடாத ஆகுபெயராய் அவனது பேரின்பத்தின்மேல் நின்றது. அறிவு - பொருட்பெற்றியை ஓர்ந்துணரும் அறிவு. ``ஆரும்`` இரண்டனுள் முன்னது உயர்ந்தோரையும், பின்னது தாழ்ந்தோரையும் குறித்துநின்ற அறிதலின் அருமையையும், அமர்தலின் எளிமை யையும் குறித்து நின்றன. `அறிந்தபின் ஆரும் அமர்ந்திருந்தார்` என மாற்றுக. ``அறிந்தபின்`` என்றது, `அறியின்` என்றவாறு. அமர்ந் திருத்தல் - அலமரல் இன்றி நிலைபெற்றிருத்தல். துணிவினால் எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று. உயிர்களிடத்துக் கொள்ளும் அன்பு பின் இறைவனிடத்து அன்பு செய்யும் தன்மையையும், இறைவனிடத்துச் செய்யும் அன்பு அவனிடத்தே அழுந்தி இன்புற்றிருக்கும் நிலையை யும் தரும் என்றற்கு, பொதுப்பட, ``அன்பு`` என்று அருளிச் செய்தார். இவ்விருவகை அன்பும் நிரம்பிய காலத்து அவை தம் பயனை இடை யீடின்றி விரையத்தருதலால், அவற்றையே இறைவனாக வலியுறுத்து ஓதினார். மாணிக்கவாசகரும் ``அன்பினில் விளைந்த ஆரமுதே`` (தி.8 பிடித்த பத்து, 3) என அன்பையும், சிவனையும் ஓரிடத்து வேற்றுமைப்பட ஓதினாராயினும், `இன்பமே என்னுடை அன்பே`` (தி.8 கோயில் பதிகம், 1) எனப் பிறிதோரிடத்தில் ஒன்றாகவே ஓதினமை காண்க. ``இன்பில் இனி தென்றல் இன்றுண்டேல் இன்றுண் டாம் - அன்பு நிலையே அது`` 3 என்றார் திருவருட்பயனிலும் (பா.80).
இதனால் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொழிப்புரை :

ஏனை அன்பினும் சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பின் பெருமையை நான் அறிந்தவாற்றால், என் உள்ளத்தில் சிறந்திருப்பது அந்த அன்பே.

குறிப்புரை :

கடந்து - வென்று. ``துன்னிக்கிடந்த`` என்பதில் `தலையில்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. தான் அசைநிலை. ஏகாரம் பிரிநிலை. அதனை, ``பொடியாடிக்கு`` என்றதனோடு இயைக்க. தோலாடையால் அவனது பற்றற்றதன்மையையும், பிறைச் சூட்டால் அவனது அருளையும், பொடியாடுதலால் அவனது முதன்மையையும் உடம்பொடு புணர்த்தலாகக் கூறி, `அவனே அன்பு செய்யப்படுதற்கு உரியவன்` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 3

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.

பொழிப்புரை :

மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றல், வேனிலில் ஐந்தீ நாப்பண் நிற்றல் முதலிய துணைச்செயல்களைச் செய்து உடம்பை ஒறுத்தாராயினும், முதற்செயலாகிய அன்பு செய்தல் இல்லாதார் என் தலைவனாகிய சிவபெருமானை அடைதல் இயலாது.

குறிப்புரை :

``பொன்மணி`` என்னும் உம்மைத்தொகை உவமை யாகுபெயராயிற்று. `என்போல்` எனப் பாடம் ஓதி அதனை ``எய்த`` என்பதனோடு இயைப்பாரும், முன்னே மூன்றாம் அடியோடு இயைப் பாரும் உளர். அவர் உரையிலெல்லாம், ``மணி`` என்பது ஒன்றே சிவபெருமானை வரைந்து சுட்டாமை அறிக.
இதனால், அன்பொடு கூடாத தவம் பயன்படாது என்பது கூறப்பட்டது. படவே, கடவுட் கொள்கை இல்லாத சமயிகள் கூறும் தவம் தவமாகாமையும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 4

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 

பொழிப்புரை :

சிவபெருமானிடத்துப் பேரன்பு உள்ளவரே அவனை முற்றப் பெறுவர். சிறிது அன்பு உடையவர் அவனது அருளைப் பெறுவர். அன்பே இல்லாது குடும்ப பாரத்தை உடைய வராய் இருப்பவர் பிறவிக் கடலையே காண்பவராய், கொடுமை நிறைந்த வழியிற்சென்று, கொங்குநாட்டை அடைந்தவர்போல் ஆவர்.

குறிப்புரை :

கொங்குநாட்டை இடர்மிகுந்த நாடு என்பர். ``கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பார்இலை`` (தி.7 ப.92 பா.3) என்ற நம்பியாரூரர் வாக்கைக் காண்க.
இதனால் அன்புடையார் பெறும் பயனும், அன்பிலாதார் எய்தும் துன்பமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே. 

பொழிப்புரை :

உலகீர், நீவிரும் எனது அன்பு போன்ற அன்பைப் பெருக்கிச் சிவபெருமானைத் துதியுங்கள். நீவிர் முன்னே அதனைச் செய்யுங்கள்; அவன் பின்னே உங்கட்கு அவ்வன்பு பெருகுமாறு வெளிப்பட்டுத் தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்கட்கும் கைவரச் செய்வான்.

குறிப்புரை :

`என் அன்புபோல உருக்கி` என்க. ``தன் அன்பு`` என்புழி ``அன்பு`` என்றது அருளை. `தலை நின்றவாறு` என்பதன்பின், `செய்வன்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 6

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொழிப்புரை :

வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாத வாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.

குறிப்புரை :

சயம்பு - சுயம்பு; தானே தோன்றியவன். வான் வழி - உயர்நெறி. சிவலோக நெறியுமாம். சடையிற் புனைதலால் தேன் ஏற்கும் வழியால் ஒழுகுதல் வேண்டிற்று. `தேன், உமாதேவி` என்பாரும் உளர். `ஒருவண்ணம் ஆக` என ஆக்கம் வருவிக்க. `தானொருவண்ணம்` என்னும் பாடமே பதிப்புக்களில் காணப் படுகின்றது.
இவ்விரண்டு திருமந்திரங்களானும் சிவனிடத்துச் செய்யும் அன்பின் சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

பொழிப்புரை :

தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `அம்முதலிடை` எனச் சுட்டு வருவிக்க. ``எம்பெருமானை`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. வன்பு - துன்பம், `வன்பு அடைத்த` (தி.7 ப.92 பா. 3) என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அடைத்தல் - நிறைதல்; நிறைத்தல் உலகத்தைத் திருஞானசம்பந்தரும், ``துயரிலங்கும் உலகம்`` என்றார். (தி.1 ப.1 பா.8)

பண் :

பாடல் எண் : 8

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 

பொழிப்புரை :

கருத்தில் ஒளிரும் பொன்னொளியாகிய சிவ பெருமானை உளத்திற்கொண்டும், புறத்தில் வைத்து வணங்கியும், `இறைவனே` என்று துதித்தும், அன்பினால் அவனை அவனது அரிய அருளைத் தருமாறு வேண்டினால், தேவர் தலைவனாகிய அவன் அங்ஙனம் வேண்டுவார்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பான்.

குறிப்புரை :

`கருத்துறு சோதி` என இயையும். அருத்தி - அன்பு. `அருத்தியுள் நின்று` என ஒரு சொல் வருவிக்க. விருத்தி - வாழ்வு. ``விண்ணவர் கோன்`` என்றது, விண்ணவர் பலரும் தாம் வேண்டிய வாழ்வை அவன்பால் பெற்று நின்றமையைக் குறித்த குறிப்பு என்க.
இவை இரண்டு திருமந்திரங்களாலும் சிவபெருமானிடத்து அன்பு செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடகி லாரே. 

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் உறக்கமும், விழிப்பும் நாள் தோறும் நிகழுமாறு செய்தவன் அங்ஙனம் செய்த குறிப்பை அறியாதார் நிற்க, அறிந்தவர்தாமும் உலக ஆசையையே உள்ளத்தில் கொள்கின்றனர். அத்தலைவனை விரும்பி, அவனையே தமக்குப் பெருமானாக நினைக்கின்றிலர்.

குறிப்புரை :

`அவர்தம் அறிவு என்னோ` என்பது குறிப்பெச்சம். துஞ்சு, முதனிலைத் தொழிற்பெயர். `உறக்கமும் விழிப்பும் நாள் தோறும் நிகழ வைத்தது, இறப்பும், பிறப்பும் மாறி மாறி விரையவரும் என்பதனை உணர்தற்பொருட்டு` என்பது கருத்து. அதுபற்றியே `உறக்கம், விழிப்பு` என்பவற்றை அவையேயாகக் கூறினார். திருவள்ளுவரும்,
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என அறிவுறுத்தல் காண்க. இங்ஙனம் கூறியவாற்றால், `சிவபெரு மானிடத்து அன்பு செய்யாதார் அடைவது பிறப்பும், இறப்புமாகிய துன்பமே` என்பது கருத்தாதல் அறிக.
இதனால், சிவபெருமானிடத்து அன்பு செய்யாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 

பொழிப்புரை :

உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறு துணையாவான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``புறத்தான்`` என்பதில் ஆன், உருபு மயக்கமாக வந்த மூன்றன் உருபு. ``புறத்தான்`` எனவே, `அகத்தான்` என்பது கொள்ளப்பட்டது. ``உடல்`` என்றது, `மூர்த்தி` என்றவாறு.
இதனால், `சிவபெருமானை அடைதற்கு எவ்வாற்றானும் அன்பே வாயில்` என்பது முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே. 

பொழிப்புரை :

மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத் தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலிற் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள்புரிவன்; அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தேயாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. `இகழ்தலும், பெறுதலும் அன்பை` என்பது பின்வரும் குறிப்பால் விளங்கிற்று. கொழுந்து - இளையநிலை. ``அருள் என்னும் அன்பீன் குழவி` என்ற திருக்குறளிலும், `அன்பின் முதிர்ந்த நிலையே அருள்` என்பது கூறப்பட்டது. `அன்பு காரணம்பற்றிப் பிறப்பது` எனவும், `அருள், காரணம் பற்றாது பிறப்பது` எனவும் உணர்க. `வல் லார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அன்பு செய்யும்` என்பதை, `அன்பின்மேற் செய்யும்` என ஏழாவதாக விரிக்க. பெருவிருப்பை, `பித்து` என்றார். ``அது`` என்பது ஆகுபெயராய், `அதன் காரணம்` எனப் பொருள் தந்தது. `அது மகிழ்ந்தன்பு ... ... ஆம்` எனக் கூட்டுக.
இதனால் இறைவன் அன்பு செய்வார்க்கே அருள் செய்தலும், செய்யாதார்க்கு அருள் செய்யாமையுமாகிய இரண்டும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. 

பொழிப்புரை :

முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.

குறிப்புரை :

`பிறவிக்குச் செய்தவன்` என இயையும். `செய்த` என்பதன். ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆதிப் பிரான் முன்பு வைத்த இப்பிறவி முடிவு அதுதானே` எனக் கூட்டுக. துன்பப் பிறவித் தொழில் பலவாவன ``அறமும், மறமும்` என வகையால் இரண்டாய், விரியால் எண்ணிறந்தனவாய் உள்ள வினைகளை அறிந்து அவற்றை ஏற்ற காலத்தில் ஏற்குமாற்றால் கூட்டுதல். எனவே, `பிறப்பிற்குக் காரணங்கள் பலவாயினும், வீட்டிற்குக் காரணம் அன்பு ஒன்றே` என்றதாயிற்று.
இதனால், `சிவபெருமான் அன்புடையாரிடத்தே கலந்து நின்று பிறவித் துன்பத்தை நீக்குவன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொழிப்புரை :

அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடையவளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.

குறிப்புரை :

``ஒளி`` என்றது உருவகம். அஞ்ஞான இருளைப் போக்குதல் பற்றி இவ்வாறு உருவகித்தார். அவ்வொளி ஒன்றே யாயினும், நிலை வேறுபாட்டால் பலவாகக் கூறப்பட்டது. அந் நிலைகளை,
நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன். -திருக்களிற்றுப்படியார் - 15
என்பதனானும், பிறவாற்றானும் அறிக. அருட்சத்தியே சிவத்தை அடைவித்தலின், திரோதானசத்தி, தானே தொழில் செய்வதாகக் கூறினார். அருட்சத்தி அன்பின் வழியே சிவத்தை அடைவிக்கும் என்பதை ``அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். அதனானே, `வீடுபெற வேண்டில்; உள்ளம் அன்புடையது ஆமாற்றை நாடுங்கள்` என்றார். ``நண்பு`` என்றது, அன்பை. ``நண்புறு சிந்தையை`` என்றாராயினும், `சிந்தை நண்புறுமாற்றை` என்பது கருத்து என்க. ``நீர்`` என்றது சிவனைப் பெற விரும்புவாரை `ஐந்தோடு` என உருபு விரிக்க.
இதனால், பெத்தர்களுக்கு விளங்காது நிற்கின்ற சிவபெரு மான், முத்தர்கட்கு `அன்பினில் விளையும் ஆரமுதாய்` (தி.8 பிடித்த பத்து, 3) விளங்கி நின்றருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே. 

பொழிப்புரை :

பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகிவிளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.

குறிப்புரை :

``ஆயிழை`` என்றது இனங்குறித்து நின்றது. பொருளிற் கூறப்பட்ட ஒடுங்குதலை உவமைக்குங் கூட்டுக. ஆயிழை மேல் அன்பை ஒடுங்குதல் மாத்திரைக்கே உவமைபோலக் கூறினா ராயினும், ஏனையவற்றிற்கும் ஆதலை அறிந்து கொள்க. இல்லாது - இல் லாதபடி. பெருகுதலை, `உலாவுதல்` என்றார். குலாவுதல் - விளங் குதல். ``இன்பமது`` என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. இஃது அதீதமாகிய முடிந்த அனுபவ நிலையைக் கூறியது. இவ்வாறே இந்நிலையை,
``சொற்பால் அமுதிவள் யான்சுவை என்னத்
துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நான் இவளாம் பகுதிப்
பொற்பார் அறிவார்`` (தி.8 திருக்கோவையார், 8)
``உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்
பலத்தொருத்தன்`` (தி.8 திருக்கோவையார், 9)
எனவும், மாணிக்கவாசகரும் குறித்தருளுதல் காண்க. `இவ்வதீத நிலையும் அன்பானன்றி ஆகாது` என்றபடி. மெய்கண்ட தேவரும் இதனை, ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் - சூ. 11) என ஓதியருளினார். ``அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே`` (தி.10 பா.268) என்றது இதனையே என்க.
இதனால், `அன்புடையார்க்கே சிவபெருமான் தன்னை முழுவதும் கொடுப்பன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொழிப்புரை :

அடியவர்கள் தங்களுக்கு உளதாகிய அன்பினாலே சிவபெருமானை நிலத்தில் வீழ்ந்து பணிந்தும், கை கூப்பிக் கும்பிட்டும் பல்லாற்றானும் வழிபட அப்பெருமான் அவர்க்கு முத்தியைக் கொடுத்து, அவரது செயல் யாதொன்றிற்கும் தானே முன்னிற்பான். இவ்வாறு தன்னையே சார்ந்து நிற்கும் அவரோடே தானும் அவரையே சார்ந்து நிற்கின்ற சிவபெருமானது தன்மையைச் சித்தர்கள் ஆராய்ந்தறிகின்றார்களில்லை.

குறிப்புரை :

`அறிந்தாராயின், அவர் அவன்பால் அன்பையே வேண்டுதலல்லது, அணிமாதி சித்துக்களை வேண்டார்` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. பயன் வேண்டுவாருட் சிறந்தவர் சித்தராகலின், அவரையே எடுத்து ஓதினார். ஓதவே, பிறரும் அத்தன்மையராதல், தானே பெறப்பட்டது. அடியவரது செயல்யாதாயினும் அதற்குச் சிவன்தானே முன்னிற்றலை,
``சிவனும்இவன் செய்தியெல்லாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்று கொள்வன்;
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே``
-சிவஞானசித்தி - சூ. 10.1
என்பதனான் அறிக. சிவபெருமான் தன்னையே சார்ந்து நின்றாரையே தானும் சார்ந்து நிற்றலை, `அற்றவர்க்கு அற்ற சிவன்` (தி.3 ப.120 பா.2) என்று அருளியவாற்றான் அறிக.
``சித்தர்கள் என்றும் தெரிந்தறிவார் இல்லை`` என்றதனால், பத்திமையாலே தொழாதார்க்குச் சிவபெருமான் முத்தி கொடுத்தலும், முன்னிற்றலும் செய்யாது, பிறப்பைக் கொடுத்து அவர் வினைக்கு அவரையே முதல்வராகச் செய்தல் பெறப்பட்டது.
இதனால், இருதிறத்தாரையும் சிவன் அறிந்து அவரவர்க்கு ஏற்றன செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 

பொழிப்புரை :

கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத் தாமரையின்கண் விளங்கு பவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.

குறிப்புரை :

கொன்றை மாலையும், கரியுரியும் சில குறிப்படை யாளங்களாய் உள்ளன. அவற்றையும், மலர் உறைதலையும் வைத்த வைப்புமுறை அறிந்துகொள்க.
கழலது என்ற ஒருமை, இனம்பற்றி வந்தது. ``அன்பினுள்`` என்றதன்பின், `ஆதலால்` என்பது சொல்லெச் சமாய் நின்றது.
இதனால், `மந்திரங்களின் உண்மையறிந்து ஓதி வழிபாடு செய்து அதனால் மலம் நீங்கப்பெற்று, அதன்பயனாக அன்பு நிகழப் பெற்றாரிடத்தே சிவன் உறைவன்` என்பது குறிப்பாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 

பொழிப்புரை :

அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவ ரல்லது பிறர் அறியமாட்டார்.

குறிப்புரை :

``நம்பனை`` என்பது முதலியவற்றால், `அன்பு செய்யப்படுபவன் சிவபெருமானே யாதலைத் தெரித்துணர்த்தி, அவ் வாறாகவும் அதனைப் பலர் செய்கின்றிலர்` என்று இரங்கியவாறு.
``இன்பம்`` இரண்டும் ஆகுபெயர்கள். ``இரதிக்கும்`` என்றது `ரதிக்கும்` என்னும் ஆரியச்சொல்லின் திரிபு. ``அன்பன்`` என்றதனால், அறியமாட்டாதவர் அன்பில்லாதவர் என்பது போந்தது.
இதனால், அன்பில்லாதவர்க்குச் சிவன் அறியப்படானாதல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.

பொழிப்புரை :

இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.

குறிப்புரை :

முன்பு, இடமுன் ``அறியாதார்`` என்றது, `இல்லாதவர்` என்றபடி. ``நந்தி அன்பு`` என்றது `நந்தி மேல் செலுத்தும் அன்பு` என்றதாம்.
இதனால், அன்பினால் சிவனை அடைதல் பக்குவர்க்கே கூடுவதும், ஏனையோர்க்கு அது கூடாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே. 

பொழிப்புரை :

இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

குறிப்புரை :

`இருந்திடில்` என்பது பாடம் அன்று. ``எம்`` என்றது, தம்மோடு ஒத்தாரை. ஈட்டுதல், `ஈண்டுதல்` என்னும் தன்வினைச் சொல் திரிந்த பிறவினைச்சொல்; ஈண்டுதல் - சேர்தல்; ஈட்டுதல் - சேர்த்தல்.
இதனால், அன்பும், அதன் பயனும் கைவரப்பெற்ற தம் அநுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 

பொழிப்புரை :

மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெரு மானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெரு மானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.

குறிப்புரை :

`அதனால் அவன் என்னைக் கைவிடாமை திண்ணம்` என்பது குறிப்பெச்சம். ``ஆருயிரால்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `மட்டுப்போல` என உவம உருபு விரித்து, `அறிந்து` என்பது வருவிக்க. அன்பே பெருமானுக்கு மஞ்சனமாதலை,
`நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டி` (தி.4)
என்பதனால் அறிக. அன்பு சிவபெருமானுக்குப் பிறவுமாதலை,
``அறவாணர்க்கன்பென்னும் அமுதமைத்தற் சனைசெய்வார்``
-தி.12 பெ.பு.வாயிலார், 8
என்பதனால் அறிக.

பண் :

பாடல் எண் : 1

குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 

பொழிப்புரை :

மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, நீவிரும் இப்பயன் வேண்டின் மாசில்லாத உயர்ந்த கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற் கொள்க. `உடலுயிரது` என்பது பாடம் அன்று. ``கூடி`` என்றது, `கூடியதன் பயனைப் பெற்று` என்றவாறு. `கூடிக் குறிப்பறிந்தேன்` எனவும், `தேவர் பிரானைச் செறிப்பறிந்தேன்` எனவும் முன்னே கூட்டுக. மறிப்பு - மீட்சி. கறிப்பு - உணவினின்று உமிழப்படுவது; மாசு. `கற்பவையே கற்றல் வேண்டும்` (குறள், 391) என்றற்கு, ``கறிப்பறியா மிகுங்கல்வி`` என்றார்.
இதனால், `சிறப்புடைக் கல்வியே கல்வி` என்பதும், அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

பொழிப்புரை :

கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ் வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லு கின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.

குறிப்புரை :

``பாம்பறியும் பாம்பினகால்`` (பழமொழி நானூறு) என்றபடி, கற்றாரது நிலைமையைக் கற்றவரே உணர்வரல்லது மற்றவர் உணர மாட்டார் ஆதலின், ``கற்றறிவாளர் கருதிய காலத்து ... ... ... கண்ணுண்டு`` என்றார். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்` (மூதுரை) என ஔவையாரும் கூறினார். ``ஓர் கண்`` என்றது, பலர்க்கும் முகத்தின்கண் உள்ள ஊனக் கண்ணல்லாத வேறொருவகைக்கண் என்றவாறு. அது ஞானக்கண். ஞானக்கண்ணே சிறப்புடைத்தாதலை,
கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். -குறள், 393
எனத் திருவள்ளுவரும் குறித்தருளினார். நான்கிடத்தும், `கற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயின. கற்ற அறிவு - கற்றதனால் உண்டாகிய அறிவு; ``கற்றறி`` என்பதில் அறி, அறிவு; முதனிலைத் தொழிற்பெயர். காடு, இங்குப் பாலை நிலம், ``அக்கயல்`` என்பதில், சுட்டுப்பண்டறி சுட்டாய், `நீரினுள் வசிக்கும் அத்தன்மை உடைய` என அதன் இயல்பை விதந்தவாறாய், நீர் நிறைந்து நிற்றலைச் சுட்டுங் குறிப்பாயிற்று. `காட்டில்` என ஓதுதலும் ஆம். `பாலையை மருதம் ஆக்கினாற்போல, அறியாமையாற் பாழ்பட்டுக் கிடக்கும் உள்ளத்தை அறிவுடையதாய் நலனுறச் செய்யும்` என்பதாம். `கற்ற அறிவு கயலை உளவாக்கும்` என்க. எனவே, `அவர் சொல் கேட்கத்தக்கது` என்பதும் குறிக்கப்பட்டதாம்.
இதனால், கல்வியின் சிறப்பும், அது, தன்னை உடையார்க்கே யன்றிப் பிறர்க்கும் பயன் தருதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே. 

பொழிப்புரை :

இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம்.

குறிப்புரை :

கற்றற்கு வேண்டுவது இளமைக் காலமே யாதலின், அஃது இங்கு ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. இளமை முதலிய நிலை யாமையுடையார்க்கு நிலைபேறாவது இறைவன் திருவடியே என்றற்கு, `நிலையுடையான் கழல்` என்றும், `அதனை விளக்கும் கல்வியே கல்வி` என்றற்கு, ``கழல் கற்கின்ற செய்மின்`` என்றும், `அக்கல்வியால் வினைமாசு, நீங்கும்` என்பதுபற்றி ``கழிந்தறும் பாவங்கள்`` என்றும்,
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக. குறள்,391
என்றவாறு, கற்றவண்ணம் நில்லாதபொழுது கற்றலாற் பயனில்லை யாகலானும்,
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள்,2
என்பவாகலின், கல்வியின் உண்மைப் பயன் இறைவன் திருவடியைத் தொழுதலேயாகலானும், ``சொற்குன்றல் இன்றித் தொழுமின்`` என்றும், திருவடிக் கல்வியால் வினை நீங்கப்பெற்றார் அத்திருவடியைத் தொழுவாராயின் அதனைப் பெற்று - இன்புறுவ ராகலின், ``தொழுதபின் மணி விளக்காம்`` என்றும் கூறினார். `திருவடிக் கல்வியே கல்வி` என்பதனை,
`சிவமுயன் றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதி`
-தி.12 பெ. பு. மனுநீதி, 18
எனவும்,
``உள்ளம்நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப்பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவு``
-தி.12 பெ. பு. சிறுத்தொண்டர், 4
எனவும் சேக்கிழார் குறிப்பிடுதல் காண்க. ``கற்றதனாலாய பயன் என்கொல்`` என மேற்காட்டிய திருக்குறளைக் கூறிய திருவள்ளு வனார்க்கும் இதுவே கருத்தாதல் உணர்க. வினைமாசினை அறுக்கும் திருவடிக்கல்வியை,
``சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
(ஆகிய)
உவமையிலாக் கலைஞானம்`` -தி.12 பெ. பு. திருஞான. 70
எனவும், இறைவன் திருவடியைப் பலவாற்றானும் தொழுது அடைத லாகிய அனுபவத்தை, அதே பாட்டில்,
``பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
(ஆகிய)
உணர்வரிய மெய்ஞ்ஞானம்`` தி.12 ஞான. 70
எனவும் சேக்கிழார் விரித்தமை காண்க.
சொல் - சொல்வடிவாகிய கல்வி. இதனை, `வாசக ஞானம்` என்றல் அறிக. குன்றல் - பயனின்றிக் கெடுதல்.
இதனால், `உண்மைக் கல்வியாவது இது` என்பது, அதன்
பயன்களும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே. 

பொழிப்புரை :

கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழி கின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவ தாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

`கல்வியுடையாரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பல்லி - பலிதம்; பயன். `பாம்பரிந் துண்கின்றார்` என்பது பாடம் அன்று என்பதற்கு, யாப்புச் சிதைதலே சான்று.
இதனால், கல்வியின்வழி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே. 

பொழிப்புரை :

உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.

குறிப்புரை :

`ஆதலின் அதனைக் கற்க` என்பது குறிப்பெச்சம். `கந்தம்போல்` என உவம உருபு விரிக்க. ஒடுவின் பொருளில் வந்த ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
இதனால், உண்மைக் கல்வி ஆசிரியர் உறுதி மொழியைத் தெளிவிக்கும் முகத்தால் இறைவனை அடைவித்தல் கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 6

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொழிப்புரை :

வருந்தியாயினும் நூல் ஏணியைப்பற்றி ஏறுவோர் மதிலின் உச்சியை அடைந்து கோட்டையைப் பிடிப்பர். அது செய்ய மாட்டாதார் பக்கத்தில் உள்ள சில வழிகளைப்பற்றி ஏறின் இடையே நின்று பயன்பெறார். அதுபோல நுண்ணிதாயினும் மெய்ந்நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் ஆன்ம லாபமாகிய முடிந்த பயனைப் பெற்று இன்புறுவர். அது மாட்டாது அயலாகிய மயக்க நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் பிற சில சிறுபயன்களைப் பெறுதலோடு ஒழிவர்; ஆன்ம லாபத்தைப் பெறார். இன்னும் ஓர் உணவுப் பொருளைக் காப்பவர் கையில் கோல் ஒன்றை உடையாராய் இருப் பின் அப்பொருளைக் கவர எண்ணும் பறவைகள் அணுக மாட்டா. அதுபோல மெய்யறிவு உடை யாராய் இருப்பாரது மனத்தை ஐம்புலன் கள் அலைக்க அணுகா. இவற்றையெல்லாம் அறியாது மக்கள் அறியாமையுள் நின்று மயங்கு கின்றார்களே, இஃது இரங்கத்தக்கது!

குறிப்புரை :

இத்திருமந்திரம் ஒட்டணி. ``மயங்குகின்றார்களே`` என்ற தேற்றேகாரம், இரக்கங் குறித்து நின்றது.
இதனால் மயக்க நூற்கல்வியது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே

பொழிப்புரை :

பகலவனது கதிர்கள் எங்கும் பரவி நிற்பினும் தூயதாகிய சூரியகாந்தக் கல்லே அதனால் நெருப்பை உமிழ்வதாகும். அதுபோல, இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் கற்றவரே அத்திருவருளால் இறைவனைக் காண்பவராவார். ஆகவே, இளம்பிறையை அணிந்த சிவபெருமானை அடையும் ஆற்றலுடை யார்க்குப் பொருந்திய மனம் நிறைந்த மெய்ந்நூல்களே ஏணிபோல உதுவுவனவாம்.

குறிப்புரை :

எடுத்துக்காட்டுவமையாய் நின்ற இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``வெளிப்படும்`` என்றாராயினும், உவமைக்கேற்ப `வெளிப்படக் காண்பர்` என்றல் கருத்து என்க. தோய்ந்த நெருப்பு - சூரிய கிரணத்தில் தோய்ந்ததனால் உண்டாகிய நெருப்பு. ``இளமதி`` என்பது, ``கனங்குழை`` (குறள், 1081) என்றாற்போல அதனை யுடையான் மேல் நின்றது.
இதனால், மெய்நூற் கல்வியது இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 

பொழிப்புரை :

வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)

குறிப்புரை :

வழித்துணையாதலும், `யாண்டு பலவாயினும் நரையிலவாக்கி` அமுதமாதலும் கற்றார்க்கன்றிக் கூடாமையின், `கல்வியால்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. இதனாலும் கல்வியது சிறப்புக் குறிக்கப்பட்டது. `கழிதுணை, ஒழிதுணை` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. கழி, உரிச்சொல். ``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` (தி.1 ப.1 பா.2) ``கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) என்பன திருஞானசம்பந்தர் வாக்காதல் அறிக.
இதனால், `திருவருள் பெறுதல் கல்வியானே ஆவது` என்பது கூறப்பட்டது. கண்ணப்பர் முதலாயினார் கல்வி இன்றியும் திருவருள் பெற்றாரால் எனின், அவரெல்லாம் முற்பிறப்பிற் கற்று இப்பிறப்பில் அதன் பயனை எய்தினார் என்பதனை,
``கலிமலிந்த சீர்நம்பி கண்ணப்பன்`` -தி.7 ப.39 பா.2
என்பது முதலிய அருட்டிருமொழிகளான் அறிந்துகொள்க. இது பற்றியன்றே திருவள்ளுவர்,
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து. -குறள், 298
எனவும்,
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. -குறள், 297
எனவும் ஓதுவாராயினர் என்க.

பண் :

பாடல் எண் : 9

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொழிப்புரை :

யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.

குறிப்புரை :

`ஆதலின் அவனை அறிவிக்கும் கல்வியை ஒழியாது கற்றுக்கொண்மின்` என்பது குறிப்பெச்சம். முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. முற்று அது, வினைத்தொகை. `ஆவதாம்` என்பதும், `ஆயினும்` என்பதும், சொல்லெச்சம். `கற்றவரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், எத்தகையோர்க்கும் மெய்ப்பொருட் கல்வி இன்றி வீடு எய்தலாகாமை கூறப்பட்டது. முனிவரும், தேவரும், கணங்களும் போல்வாரும் சிவபெருமானிடம் வேதாகமங் களைக் கேட்டுணர்ந்தன ராகக் கூறும் புராண வரலாறுகளை நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 10

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் கொண்டு, அதன்பின், பல ``ஊழிதொறூழி`` என்றதனைக் கூட்டி உரைக்க. உருவத்தை ``உடல்`` என்றார். `பூதம்` என்றே ஒழியின், கட்புலனாகாகது, அருவமாயுள்ள தத்துவ மாத்திரையே குறிக்குமாகலின், கட்புலனாம் உருவை உணர்த்த வேண்டி இது கூறினார். இடம், ``இடனில் பருவம்`` என்புழிப் போல ஏற்புடைத்தாய நிலை. `அது கல்வியானாயது` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.
இதனால், சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பவனாயினும் கற்றாரது நெஞ்சத்திலே இனிது விளங்குதல் கூறுமாற்றால், `அவனைக் கண்டு பெறுதற்கு அவனது அருள்நூற் கல்வி இன்றியமையாதது` என்பது அறுதியிட்டுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொழிப்புரை :

முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.

குறிப்புரை :

`அதனால் அவைகளை இகழாது கேட்க` என்பது குறிப்பெச்சம். மறம் - வீரம். அஃது அரசர்க்குரிய பண்பாய் நின்று `பொருள்` என்னும் உறுதிப் பொருளை உணர்த்திற்று. புறம் - பிறிது; அஃது இன்பம். அந்தணர் இடைவிடாது பற்றி ஓதுதல் கன்ம காண்டத்தையேயாதலின், அதனை, ``அந்தணர் வாய்மொழி`` என்றார். வானவர் மந்திரம் - கடவுளரை வழிபடும் மந்திரங்கள். பொன்னுரை ஈசன் - பொன்னை உரைத்தாற்போலும் மேனியை உடைய சிவபெருமான். `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்புகளுள் தலைமைபற்றிப் பதி இயல்பு ஒன்றையே கூறினா ராகலின், ஏனையவும் அதன் கண் அடங்கும். கன்ம காண்டம் முதலிய மூன்றன் பொருளும் சிவாகமங்களுள் `தந்திர கலை, மந்திரகலை, உபதேசகலை` (சிவஞானசித்தி, அளவை, 4) எனப்படுமாகலானும், வேதத்திற்கும் சிவாகமத் திற்கும் பேதம் இன்மையானும் (தி.10 எட்டாம் தந்திரம்) அவ்வாகமப் பொருளும் ஈண்டுக் கூறியவாறேயாதல் அறிக. செய்யுள் பற்றி உலகியற் பொருளையும், மெய்ந்நெறிப் பொருளையும் முறைப்படுத்தோதாது, விரவ ஓதினார். `பெற்றது` என்பது ஈறுதொகுத்தல்.
இதனால், கேட்கப்படும் பொருள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே. 

பொழிப்புரை :

`சிவபிரானை உள்ளவாறு உணர்ந்தோர் யாவர்` என்பதனை முன்னே அறிந்து, பின்னர் அவர்பால் கற்றலையும், கேட்டலையும் செய்யுங்கள். கற்றும் கேட்டும் அறிந்த பின், சிந்தித்துத் தெளியுங்கள். ஏனெனில், கற்றுக் கேட்ட பின்னர்ச் சிந்தித்துத் தெளிந்தவரே சிவனைப் பெற்று உயர்ந்து நின்றனர்.

குறிப்புரை :

`என்பதை` என்பதும், `அவர்பால்` என்பதும் சொல்லெச்சங்கள். இதனால், யாதொரு பொருளாயினும் அதனை வல்லா ரிடத்தே கற்றலும், கேட்டலும் செயற்பாலதல்லது பிறரிடத்து ஆகாது என்பதும், கல்வி கேள்விகட்குப் பின்னர்ச் செயற்பாலன இவை என்பதும் கூறப்பட்டன, திருவள்ளுவரும் `ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்லே கேட்கற்பாற்று`` (குறள், 415) என்றார். ``கற்றபின் நிற்க அதற்குத் தக`` (குறள், 391) என்றது கல்வியின் பகுதியானாற் போலக் கேள்வியோடு இயைபுடையனவும் இங்குக் கேள்வியின் பகுதியாயின. இதனுள் இரண்டடி எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 3

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே. 

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலிய தேவரை வழிபடும் முறைகளும் கேட்கத்தக்கனவாதல், சிவபெருமானது ஆணைவழியே யாம். அதனால், முதல்வனாகிய அப்பெருமானை வழிபடும் முறையைக் கேட்டு, அவனை வழிபடுதலே சிறந்தது. ஆகவே, மக்கட் பிறப்பின் பயனும், உயிர்க்கு உறுதுணையாவதும் சிவபெருமானை வழிபடும் முறையைக் கேட்டலேயாம்.

குறிப்புரை :

`மாயன்` என்பது முதல் குறுகி நின்றது. `அத்தேவர்` எனவும், `அப்பணி கேட்பது` எனவும் சுட்டு வருவிக்க. `பற்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. திருமால் முதலிய தேவர், தாம் செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவபெருமானால் தத்தமக்குப் பொருந்திய எல்லையளவும் தலைவராக அருள் புரியப் பட்டமையின், அவரை வழிபடுதலும் சிவபெருமான் ஆணையே ஆயிற்று. ஆயினும், மேன்மேல் உள்ளாரை வழிபடுபவர் கீழ்க்கீழ் உள்ளாரை வழிபடு வோர் எய்தும் பயனோடு அதனின் மேம்பட்ட பயனையும் பெறுவாராகலின், எல்லார்க்கும் மேலோனாகிய சிவபெருமானை வழிபடுதலே சிறந்ததாதல் தெளிவு. ``காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்`` (சிவஞானசித்தி. சூ. 2.27) என்றது காண்க. இப்பயனை அவர் வழங்கமாட்டாமையைச் சுட்டும் முகத்தால், சிவனது வழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்பட்டது. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மெய்ந்நெறிக் கேள்வியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 

பொழிப்புரை :

உலகியலை விட்டு மெய்ந்நெறி நோக்கி வருகின்ற தவத்தோர்க்கு அதனை அருளுபவன் அரிய தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய எங்கள் சிவபெருமானே. அதனால், `இவனே யாவர்க்கும் தலைவன்` என்று உணர்ந்து அவனது புகழைத் தம்மிடையே பேசிக் களிக்கும் திருவுடை மக்களே பின்னர் எப் பயனையும் எளிதிற் பெறுவர்.

குறிப்புரை :

`அதனால் அவன் புகழையே கேட்க` என்பது குறிப் பெச்சம்.
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப.9 பா.3
என்று அருளிச் செய்தார் திருநாவுக்கரசரும். பேசுதல், கருத்துக்களைக் கொண்டும், கொடுத்தும் அளவளாவுதல். ``உன் திருவார்த்தை - விரிப்பார் கேட்பார் மெச்சுவார்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம் - 9) என்ற திருவாசகத்தைக் காண்க. திரு - நற்பேறு. ``பேசி இருக்கும் திருமானுடர்`` என உடம்பொடு புணர்த்து ஓதியதனால், `அவ்வாறு பேசி இருத்தலே திருவாம்` என்பது பெறப்பட்டது. ``மாதவர்`` என்றதனால், `அவர் மெய்ந்நெறி விருப் பினர்` என்பதும், ``அருமாதவன்`` என்றதனால், `அவர்க்கு அருள் புரிய வல்லான் அவனே` என்பதும் பெறப்பட்டன.
இதனால், மெய்ந்நெறியுள் சிவநெறிக் கேள்வியது சிறப்புத் தனித்தெடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருவருளின் பெருமையையும், இறப்புப் பிறப்புக்களது சிறுமையையும் ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து, அவனது திருவருளையே காதலித்துப் பிதற்றி மகிழ்ந்தால், அப்பெருமான்மேல் அன்பு, முறுகி வளரும். வளர்ந்தால், அப் பெருமான் அவ்வன்பில் விளங்குகின்ற பேரொளியாய் எதிர்ப்பட்டு நின்று, பின்னர் மலரில் நின்று கமழும் மணம்போல உள்ளே நிலைபெற்று, இன்பம் தருவான்.

குறிப்புரை :

`அருளையும்` என்னும் இரண்டனுருபு தொகுத்தல். இறப்புப் பிறப்பு, உம்மைத் தொகை. அருள் முதலிய மூன்றும் ஆகுபெயரால் அவற்றின் தன்மையை உணர்த்தின. ``எய்தி ஆகு`` எனப் பாடம் ஓதி, `ஆகு` என்பதனை ஏவல்வினையாக்கி உரைப் பாரும் உளர். `வாசமலர்` என்பது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.
``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது`` -தி.10 5ஆம் தந்திரம்
எனவும்,
``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``
-தி.8 அதிசயப் பத்து, 9
எனவும் ஓதுதல் காண்க.
இதனால், சிவநெறிக் கேள்வி பயன்தரும் முறைமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 

பொழிப்புரை :

`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.

குறிப்புரை :

`கல்வி விழுச்செல்வம்` (குறள், 400) ஆதலின், அதனை, ``விழுப்பம்`` என்றார். மெய்நின்ற - மெய் நிலைபெற்ற; இது `விழுப்பம், கல்வி` என்றவற்றோடும் இயைந்தது. வழுக்கி விழுத லாவது, பொய்யை மெய்யெனத் துணிதல். காலம் எல்லாப் பொரு ளினும் நுண்ணிதாய் அவற்றை நடத்துவதாயினும் வரையறை உடைத்தாகலின், அதனைக் கடந்த நிலையை, ``எண்ணிலி காலம்`` என்றார். மேற்கூறிய சிறப்புப்பற்றிக் காலத்தையே கூறினாராயினும், அதனொ டொத்த `முதற்பொருளாகிய` (தொல். பொருள்) இடமும் கொள்ளப்படும். படவே, `மெய்ம்மையான கல்வி கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப் படாத இறை நிறைவை எய்துவர்` என்றதாயிற்று. கேள்வியே கூறப்புகுந்தாரா யினும் அத்தன்மையவாதல் பற்றி ஏனையவற்றையும் உடன் கூறினார். `வழுக்கி விடாவிடில்` என்பது பாடம்.
இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும் ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே.

பொழிப்புரை :

சிறுமகார் தம் விளையாட்டு விருப்பம் காரணமாகத் தாம் சோறாகக் கருதிக்கொண்ட மணலாலே வயிறு நிரம்பினார் போலத் தேக்கெறிந்து கொள்ளுதல்போல, உலகப் பற்றுக் காரணமாகச் சுற்றத் தொடக்குண்டு வாழும் வாழ்க்கையாலே இன்பம் கிடைத்துவிடும் என்பவர் உளராயின் அவர், தம்மையும், தலை வனையும் அறியாத மடவோரேயாவர்.

குறிப்புரை :

`அதனால் அங்ஙனம் கொள்ளற்க` என்பது குறிப் பெச்சம். செறிவு - கூடியிருத்தல். இதற்கு, `செறியப் படுவார் இவர்` என்பது வருவிக்கப்பட்டது. ``அநுபோகம்`` என்பது சிறப்பினால் இன்ப நுகர்ச்சியையே குறித்தது. `அவர் குறியாதாரும், இருந்தாரும் ஆவர்` என்க. குறியாதது ஒன்று - சுட்டிறந்த முதற்பொருள். சிறப்புப் பற்றி இதனை முன்னர்க் கூறினார். `தம்மை யுணர்ந்து, அதனானே தலைவனையும் உணர்பவரே ஞானத் தலைவர்` என மெய்கண்ட தேவரும் கூறினார் (சிவஞானபோதம் அவையடக்கம்).
இதனால், உலகாயதம் பேதைமைத்தாதல் கூறுமாற்றால், `ஆகா` என விலக்கிய கல்வி கேள்வி ஒழுக்கங்களுள் பெரிதும் கூடாதன இவை என்பது கூறப்பட்டது.
``நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்`` -தி.5 ப.31 பா.6
என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 8

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 

பொழிப்புரை :

உயிரும் உடம்பும் ஒன்றற்கு ஒன்று உறுதுணை யாவன. அவை அவ்வாறு நிற்றற்கு உறுதுணையாய் நிற்பதே உலகியல் பற்றிய கேள்வி; (என்றது, யாண்டும் உயிர் உடம்பொடு நிற்றலாகிய பிறப்பு நிலையை நீக்க மாட்டாது; அதன்கண் சில நன்மையைத் தருவதே என்றபடி) இனி உயிரோடு ஒட்டி நிற்கும் துணையாவன சிவபெருமானது திருவடிச் சிந்தனையைத் தூண்டும் சிவநெறிக் கேள்விகளே; பெறுதற்குரிய துணையாகிய அக்கேள்விகளைக் கேட்டபின், பிறப்பு இறப்புக்கள் இல்லாத வீடு கூடுவதாம்.

குறிப்புரை :

``ஆவது`` என்ற ஒருமையால், `உயிர் உடம்பிற்குத் துணையாவது, உடம்பு உயிர்க்குத் துணையாவது` எனத் தனித்தனி உரைத்தல் கருத்தாயிற்று. இத்தொடரின்பின், `அதற்கு` என்பது எஞ்சி நின்றது. சிந்தை, ஆகுபெயர்.
இதனால், `சிவநெறிக் கேள்வியே விழுமியது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. 

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், ஒருப்பட்டு நிற்கும் அன்பர்க்கும், ஒருப்படாது முரணி, இகழ முற்பட்டு நிற்கும் வன்பர்க்கும் மூதாதையே. எனினும், தம்மொடு மேவாத மைந்த ரிடத்து அன்பு செய்யாத தந்தையர்போல, தன்னை இகழ்ந்து, தனது பெருமையை மகிழ்ச்சியுண்டாகக் கற்றும் கேட்டும் உணராது நீங்கி நிற்பார்க்குத் துன்பத்திற்கு ஏதுவாக, பால் கறவாத கற்பசுப்போல அருள்செய்யாது நிற்பன்.

குறிப்புரை :

`புகழ நின்றார்க்கும், இகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்` எனவும், `கழிய நின்றார்க்கு இடும்பைக் கிடமாக் கற்பசுவாம்` எனவும் கூட்டுக. இனி, `இடும்பைக் கிடமாக் கழிய நின்றார்க்கு` என இயைத்தலுமாம். ``கற்பசுவாம்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `கேட்டு` என்பது அதிகாரத்தால் வந்தது. `உணராது` என்பது ஈறு குறைந்து நின்றது. ஒன்று - சிறுமை; பயன்படாமை. ``கழிய நின்றார்க்குக் கற்பசுவாம்`` எனவே, கழியாது பற்றிநின்றார்க்குப் பாற்பசுவாதல் பெறப்பட்டது. இதன்கண் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், சிவநெறிக் கேள்வியுடையோர் பேரின்பம் எய்த லும், அஃது இல்லாதார் அதனை எய்தாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானை மனம் ஒருங்கி உணர்ந்தவனே அப்பெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.

குறிப்புரை :

``ஆதியை, மனம்`` என்பன முதலிலும் சென்று இயையும். ``வைத்துணர்ந்தான் .. ... ஒத்துணர்ந்தான்`` என்றதனால், வாளா நினைத்தலும், வாழ்த்தலும் செய்வார் அதனை உண்மையாற் செய்தவர் ஆகாமை பெறப்பட்டது. `கல்வி கேள்விகளானன்றி அறியாமை நீங்காமையின், அவை இல்லாது செய்வது அறிவின் வழிப்பட்டதாகாது, ஏரல் எழுத்துப் போல்வதொரு விழுக்காடாம்` என்பது கருத்து. இஃதே பற்றி,
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். -குறள் 404
எனவும்,
``தெருளாதான் மெய்ப்பொருல் கண்டற்றால்`` -குறள் 249
எனவும் கூறினார் திருவள்ளுவர். இங்ஙனம் கூறவே, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் ஆயிற்று.
ஞானத்தால் தொழுவார் சிலஞானிகள்;
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்;
ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு,
ஞானத்தாய்உனை நானும் தொழுவனே. -தி.5 ப.91பா.3
என்றருளியதும் இப்பொருட்டு.
சிவபெருமானது திருக்குறிப்பு, உயிர்கள் தன்னை அறிவால் அடைதல் வேண்டும் என்பதேயாதலின், வைத்துணர்ந்தான் ஒத்துணர்ந்தானாவன். இவ்வொருமைச் சொற்கள் இனத்தின் மேல் நின்றன. இதனை `ஒருபால் வழக்கு` (தொல். பொருள், 218) என்பர் தொல்காப்பியர். உரு - உடம்பு; என்றது அதன் கூறுகளை. அவை வாத பித்த ஐ முதலியவை. ``ஒவ்வாது`` என்றதின்பின் `ஆக` என்பது வருவிக்க. `உழன்று` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. `நச்சி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ஏகாரம் இரண்டனுள் முன்னது தேற்றம்; பின்னது ஈற்றசை. `உணர்ந்தார்க்கு` என்பது பாடம் அன்று. அறிவால் தன்னை அடைந்தாற்கு,
``புலன் ஐந்தும், பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐ மேல் உந்தி, உயிர் அலமரும் நிலை` வந்ததாயினும், அவரைச் சிவபெருமான், `அஞ்சேல்` என்று அருள்செய்வான் (தி.1 ப.130 பா.1) ஆகலின், ``நச்சி உணர்ந்தாற்கே நணுகலும் ஆம்`` என்றார்.
இதனால், சிவபெருமானைக் கல்வி கேள்விகளின் வழி அடைதலே சிறந்தது என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

பொழிப்புரை :

`கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.

குறிப்புரை :

``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்
கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுர மேவிய
பெம்மான்`` -தி.1ப.1பா.2
`கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) ``கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி`` (தி.6 ப.32 பா.1) கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி`` ``கற்றார் இடும்பை களைவாய் போற்றி`` (தி.6 ப.5 பா.1) ``கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை`` (தி.9 ப.5 பா.2) ``உளர்என்னும் மாத்திரைய ரல்லால், பயவாக் களரனையர் கல்லாதவர்`` (குறள், 406) என்றாற்போல வரும் மெய்யுரைகள் பலவற்றிற்கும் மாறாமாகலின், அங்ஙனங் கூறுதல், `கையிலான் காட்டக் கண்ணிலான் கண்டான்` என்பதுபோல நகை விளைப்பதொன்றாய்ப் பொருந்தாது` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம், `புலால் மறுத்தல் இன்றியும் அருளாடல் கூடும்` என முரணிக் கூறுவாரை, ``பொருளாட்சி போற்றாதார்க் கில்லை; அருளாட்சி - ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு`` (குறள், 252) என ஓர் உவம அளவையான் மறுத்து, `புலால் மறுத்தல் இன்றி அருளாடல் உண்டாகாது` என புலால் மறுத்தலை வலியுறுத்திய திருக்குறள் போல, `கல்வி இன்றியும் மெய்ப்பொருளை உணர்தல் கூடும்` என முரணிக் கூறுவாரை உரையளவைகள் பலவற்றான் மறுத்து, `கல்வி இன்றி மெய்ப்பொருட் காட்சி உளதாகாது` எனக் கல்வியை வலியுறுத்தியது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. -குறள், 356
எனத் திருவள்ளுவரும் மெய்ப்பொருட் காட்சிக்குக் கல்வி கேள்விகள் இன்றியமையாதச் சிறப்பினவாகக் கூறுதல் காண்க. `கண்ணப்பர் முதலாயினார் முற்பிறப்பிற் கற்ற கல்வி உடையார்` என்பது மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.296 உரை) ``கல்வியாவது இது` என்பதனை நாயனார் `கல்வி` அதிகாரத்துட் கூறினமையை நினைவு கூர்க.
கருத்து - அறிவு. இதன்கண் `உள்` என்னும் பொருள் பட வந்த ஏழாவது விரிக்க. ``கருத்தறி காட்சி`` எனவே மெய்ப்பொருட் காட்சி யாயிற்று. ``அருள்`` என்றது, ஞானம் என்னும் பொருட்டு; இது கலை ஞானம். மதித்துளோர் - பொருள்களின் இயல்பை ஆய்ந்துணர்ந்தவர், `மதித்துளோர் நிற்பவராவர்` எனவும், `கற்றோரும் காணகிலாராவர்` எனவும் இயைத்துரைக்க. ``கற்றோரும்`` என மறித்தும் கூறினார், வலியுறுத்தற்பொருட்டு. `மதித்துளோரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``கல்லாதார் உண்மை`` ``கல்லாதார் இன்பம்`` என்பன காரகப் பொருண்மைக்கண் வந்த ஆறாவதன் தொகை. `பற்றாது` என்பதன் ஈறு குறைந்தது.
இதனால், கல்லாமை எவ்வாற்றானும் கடியப்படும் குற்றமாவ தன்றி, ஒருவாற்றானும் கொள்ளப்படும் குணமாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 

பொழிப்புரை :

கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.

குறிப்புரை :

`வழி, அறிவு` என வேறு வேறு நின்ற இருசொற் களையும் ஏனையிடத்தும் கூட்டி, ஈரிடத்தும் `அறிவு வழி` என உரைக்க. ``பல என்பார், வாழ்கின்றார்`` என்பவற்றால், ஒன்றெனலும், தாழ்தலும் பெறப்பட்டன. ``இறை`` என்பதன் பின் `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. ஐய உணர்வு உள்வழியும் மெய்ப்பொருட் காட்சி நிகழாதாகலின், `அவர் கலப்பறியார்` உள்வழி என்றார். ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கே வானம் நணித்து`(குறள், 453) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
இதனால், கல்வி, கேள்வி இல்லாதார்க்கு ஐயம் நீங்கு மாறின்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 

பொழிப்புரை :

நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.

குறிப்புரை :

`கற்றவர் நெஞ்சில் மட்டுமே காண இயலும்` என்ப தாம். நிலை - இயல்பு; அஃது அதனை உடைய பொருளைக் குறித்தது. ``நெஞ்சத்து`` என்றதன்பின், `நினைத்தலால்` என்பது எஞ்சி நின்றது.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. -குறள், 331
என்ப ஆகலான், நில்லாக் குரம்பை நிலையென்றுணர்தல் புல்லறி வாண்மை யாதலும், ``கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை`` (தி.8 கண்டபத்து, 4) என்றமையால், கல்லாதார்க்கு உள்ளது அப் புல்லறிவே என்பதும் பெறப்பட்டன. மேலைத் திருமந்திரத் துள்,``எங்கள்தம் இறை`` என்றது இதனுள்ளும் வந்து இயைந்தது. ``ஒண்ணாதே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதனால், கல்வி கேள்வியில்லாதார்க்கு உளதாவது புல்லறிவே (திரிபுணர்வே) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.

பொழிப்புரை :

நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.

குறிப்புரை :

நாயனார் எவ்விடத்தும் தம்மை இழித்துக் கூறாது, தாம் பெற்ற பேற்றின் சிறப்பையே கூறுதலின், இம்மந்திரத்திற்கு அவர் தம்மை இழித்துக் கூறினாராக வைத்து உரைத்தல் பொருந்தாது என்க. இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. தகைமை - தன்மை; தன்மை உடையாரை, `தன்மை` என அஃறிணையாகக் கூறினார்; இழிபு பற்றி. `அறியாத் தன்மையர்முன் கல்லேனாகின்றேன்` என் றதனால், `அறிந்த தன்மையர் முன் கற்றேனாய் விளங்குகின்றேன்` என்பது போந்தது. இதனால், கற்றாரைக் கல்லாதார் `அறிவிலர்` என்று இகழ்தல் பெறப்பட்டது. அதனை,
உருவமும், உணர்வும், செய்தி ஒத்திரா; கன்மம் என்னின்
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண்டாகி
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன்? மதியி லாதாய்,
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.
-சிவஞானசித்தி பரபக்கம். உலகாயதன் மதம் - 9.
என்பார் போல்பவரிடத்துக் காண்க.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. -குறள் 976
என்றார் திருவள்ளுவரும். `வினை கில்லேன், தகைமையின் கல்லேன், பொருளே வல்லேன்` என முன்னே கூட்டி முடிக்க. ``தகைமையின்`` என்பதில் சாரியை நிற்க, `முன்` என்னும் பொருட்டாய கண்ணுருபு தொக்கது. ``வழங்கும் பொருளே வல்லேன்`` என்றாராயினும், `பொருள் வழங்கவே வல்லேன்` என்றல் கருத்து என்க. `உட்கலேன்` என்பது விரித்தல் பெற்றது.
இதனால், கல்லாதார் வினை செய்தல், துயர்ப்படல், இவறன்மை, சாக்காடு முதலியவற்றிற்கு அஞ்சுதல் என்னும் குற்றங் களை உடையராதல், எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 

பொழிப்புரை :

கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.

குறிப்புரை :

சீவன் - உடம்பொடு நிற்கும் உயிர்; என்றது அதன் நிலையை. ``அறம்`` என்றது துறந்தார் முதலியோர்க்குத் துணை செய்தலை `ஆதலின்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. போகம் செய்தல் - அனுபவித்தல்.
இதனால் கல்லாதார், தம் உயிர்க்கு உறுதி தேடிக்கொள்ளாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 

பொழிப்புரை :

நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.

குறிப்புரை :

`இந்நிலை கண் இல்லாமையான் ஆயதன்றோ` என்பது குறிப்பெச்சம். `முப்பத்தாறு தத்துவங்களையும், ஆன்ம போதத்தையும் கடந்து அப்பால் உள்ளது எல்லையில்லாத சிவானந்தமாகிய பேரின்பம்; அதனைக் கல்வி உடையவர் அறிந்து தவ ஞானங்களால் அடைந்து திளைக்கின்றனர்; கல்வி இல்லாதவர், பேரின்பம் ஐம்புலப் பொருள்களில் உள்ளதாக நினைத்து அவற்றைத் தத்தமக்கு இயலுந் திறத்தால் பல தொழில்வழி முயன்று ஈட்டித் தொகைபண்ணி, அத்தொகையை மறவாமைப் பொருட்டு ஏட்டிலும் எழுதிக் காத்து, அவற்றை நுகருமிடத்துப் பேரின்பம் பயவாது பெருந்துன்பத்தையும், சிறிது இன்பத்தையும் பயந்து நிற்றலை அறிந்து தளர்ச்சி எய்துகின் றார்கள்; இந்நிலை கல்லாமையான் ஆயதன்றோ! என்பது இதனாற் பெறுவிக்கப்பட்ட பொருள். இம் மந்திரம் பிசிச் செய்யுள்.
ஐம்புலப் பொருள்களைத் தேடி இளைத்தலால் பயனில்லை; இறைவன் திருவடியை அடைதலே பயன் தருவது என்பதைத் திருநாவுக்கரசர்,
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி எய்த்தும் பயனிலை; ஊமர்காள்,
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்அடி யேஅடைந் துய்ம் மினே.
-தி. 5 ப.77 பா.4 எனக் கல்லாதாரை நோக்கி இரங்கி அருளிச்செய்தமை காண்க.
``விண்ணினின்`` முதலிய மூன்றிலும் ஓர் இன், விரித்தல் பெற்றது. கண்ணினுள்ளே கலந்திருத்தல், கண்ணால் நன்கு காணப் படுதல். ``மண்ணினுள்ளே`` என்பதன்பின், `உளதாக` என்பது வருவிக்க. அடுக்கு, பலர் மதித்தலைக் குறித்தது. ``எழுதி`` என்பது, உவமைக்கண், ``இம்மை உன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை`` (தி.4 ப.96 பா.6) என்பதிற்போலப் பதித்தலைக் குறித்தது. விளம்பழம், பழமாக உண்ணப்படுதலேயன்றித் தனியாகவும், கூட்டாகவும் அட்டுண்ணப் படுதல் முதலிய பயன் மிகுதி பற்றி அதனையே கூறினார்.
இதனால், கல்லாதார் பேரின்பம் பெறாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொழிப்புரை :

நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப் பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியா தவர்க்கு அவை கூடாவாம்.

குறிப்புரை :

பின் இரண்டு அடிகளை முதலிற் கூட்டி, ``கல்வி கற்றறிந்தாரே`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. கணக்கு - நூல். அதனை, கீழ்க்கணக்கு, மேற்கணக்கு, கணக்காயர் முதலிய வழக்குக்களான் அறிக. ``உண்மை, அண்டம்`` என்பன `உண்மையைக் காண ஒண்ணாது, அண்டம் காட்சி கைகூடா` என முன்னரும் சென்று இயைந்தன. உண்மை - மெய்ப்பொருள். அஃது அதன் இயல்பைக் குறித்தது. அண்டம் - பரவெளி. ``கைகூடா`` என்ற பன்மை, பெறுவாரது பன்மை பற்றிவந்தது.
இதனால், கல்லாதார் மெய்ந்நெறியை அறிதலும், அதன் பயனைப் பெறுதலும் இல்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :

கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. அதன் இறுதி யில் `ஆதலால்` என்பது எஞ்சி நின்றது. ``காணவும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. இழிவு, காட்சியளவில் பெறுவதும் தீமையேயாதல்.
இதனால், கல்லாதாரால் உலகிற்குத் தீங்கு உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 

பொழிப்புரை :

சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.

குறிப்புரை :

`ஞானம், அன்பு` என்பன அவற்றின்வழி நிகழும் ஒழுக்கத்தின்மேல் நின்றன. கல்லாது ஒழுக்கம் இல்லாதார், தம் தீயொழுக்கத்தை, `நல்லது` என மருட்ட வகையறியார்; கற்று ஒழுக்கம் இல்லாதார் அவ்வகையை நன்கறிவராகலின் அவரை, `மூடர்` என்று மட்டும் கூறியொழியாது, ``கலதிகள்`` என்றும் இகழ்ந்தார். `மேலைத் திருமந்திரத்துள் கூறப்பட்ட கல்லாதாரால் உலகிற்கு உளவாகும் தீங்கினும், இக் கற்றாரால் உலகிற்கு உளவாகும் தீங்கு பெரிது` என்பது கருத்து. `விடார்` என்பது நீண்டு நின்றது. `வீடார்` என்றே கொண்டு, உடைமையது தொழில். உடையார்மேல் ஏற்றப்பட்டது எனலுமாம். துரிசு - மனமாசு. திசை, ஆகுபெயர். ``மூடர்கள், மதியிலோர்`` என இருகாற் கூறியது, தாமே உணர்தலும், பிறரைக் கண்டு உணர்தலும் ஆகிய இரண்டும் இலர் என்றற்கு.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குத் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். -குறள் 834
என்றார் திருவள்ளுவரும். `நிற்போரே கணக்கறிந்தார்கள்` என ஏகாரத்தைப் பிரித்துக்கூட்டி உரைக்க.
இதனால், நூலைக் கற்றும் ஒழுக்கத்தைக் கல்லாதவர் கல்லாதவரே; கற்றவராகார் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.

குறிப்புரை :

`அது நிரம்பாது` என்பது குறிப்பெச்சம். `உள்நின்ற சோதி` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `ஆதிப்பிரான்` முதலிய நான்கும் முதல்வனது இயல்பை வகுத்தோதியவாறு. ஆதிப்பிரான் முதற்கடவுள்; வேறு பலரைத் தொழிற் கடவுளாக நிறுத்தி உலகை நடத்துபவன். அமரர்க்கும் பரஞ்சுடர் - தேவர்க்கும் நெறிகாட்டும் மேலான விளக்கு. சோதி - எல்லையில் பேரொளி. அடியார் தொடரும் பெருந்தெய்வம் - தன்னை அடைந்தவர் விடாது தொடர்தற்குக் காரணமான இன்பப் பெருக்கினை உடையவன். இதன்பின், `அவனை` என்பது எஞ்சி நின்றது.
இதனால், கல்வியின் நிறைவாகிய அனுபவம் இல்லாதாரும் ஓராற்றாற் கல்லாதவரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 

பொழிப்புரை :

நடுவுநிலைமையிற் பிறழாதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவர் வழியிலே நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஞானம் பெறுதல் இறுதியிற் கூறற்பாலதாயினும், சிறப்புப்பற்றி முன்னர்க் கூறினார். அதனை எதிர்மறை முகத்தாற் கூறியது, `துறவறத்திற்கு முதலாகிய அருளுடைமைக்கு நடுவு நிலைமை இன்றியமையாச் சிறப்பிற்று` என்பது உணர்த்தற்கு. அது,
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 251
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான், என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். -குறள் 318
என்றாற்போல்வனவற்றால் அறியப்படும். உம்மைகள் எச்ச உம்மைகள்.

பண் :

பாடல் எண் : 2

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.


நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

பொழிப்புரை :

நடுவுநிலைமை பிறழாதவர் மால் அயனாம் நிலைகளைப் பெறுதலேயன்றிச் சிவஞானிகளாய்ச் சிவமாந் தன்மையையும் பெறுவர்.

குறிப்புரை :

``ஓதி`` என்பது பெயர். ``கார் வண்ணன், மறை யோதி`` என்னும் ஈரிடத்தும் `ஆவன்` என்பது எஞ்சி நின்று. அவற்றோடு இயைய, ``நடுவு நின்றான்`` என ஒருமையாற் கூறினாராயினும், ஏனையபோலப் பன்மையாற் கூறுதலே கருத்து என்க. இனி `கார் வண்ணன், மறையோதி` என்பவற்றை எழுவாயாக்கி, அவற்றை `நின்றான்` என்பவற்றோடு முடிப்பாரும் உளர். `நடுவுநின்றார்` என்று ஒழியாது, ``சிலர்`` என்றது, `நடுவுநிற்றல் அரிது` என்பது உணர்த்துதற்கு. `சிவமாதல் ஞானம் இன்றி அமையாது` என்றற்கு அதனை இடையே விதந்தோதினார்.
இவ்விரண்டு திருமந்திரங்களானும் நடுவுநிற்றலின் பயனே கூறப்பட்டது.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் பாடல் இடைச் செருகல்.

பண் :

பாடல் எண் : 3

தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 

பொழிப்புரை :

தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்கு பவன் சிவபெருமானே. அதனால் `அயன், அரி, அரன்` என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே, `மற்றுப் பற்றின்றிப்` (தி.7 ப.48 பா.1) பற்றி நிற்பவரே உண்மையாக நடுவு நிற்பவராவர்.

குறிப்புரை :

சிவபெருமானே முதற்கடவுள் என்பது உரை யளவையான் அன்றிப் பொருந்துமாற்றானும் துணியப்படும் என்றற்கு, ``தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன்`` என்றார். `எல்லா வற்றையும் ஒடுக்கியபின், எஞ்சிநிற்பவன் அவற்றை ஒடுக்கியவனே ஆதலாலும், அவனை ஒடுக்குவார் பிறர் இன்மையாலும், `ஒடுக்கக் காலத்தில் வேறு சிலரும் ஒடுங்காது நிற்பர்` எனின், அதனை, `முற்ற ழிப்புக் காலம்` (சருவ சங்கார காலம்) என்றல் கூடாமையானும் ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிப்பவன் ஒடுக்குபவனேயாதல் தெற்றென விளங்கும்; விளங்கவே, ஒடுக்கத்தைச் செய்பவனே உலகத்தைத் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் முதற்கடவுள் என்றற்கு ஓர் ஐயமில்லையாம்` என்பது கருத்து.
``வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாய் இலர்`` -தி.3 ப.54 பா.3
என்ற திருப்பாசுரத்திற்கும் இதுவே கருத்து என்றார் சேக்கிழார். (தி.12 பெ. பு. திருஞான - 828; 829) எனவே, ``ஈமம்இடு சுடுகாட்டகத்தே - ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்பன்`` (அம்மை மூத்த திருப்பதிகம் 1, 3) என்றாற்போலும் திருமொழிகளில் சிவபெரு மானைச் சுடுகாட்டில் ஆடுவானாகக் கூறுதலின் உண்மையும், முற்றழிப்புக் காலத்தில் அவன் ஒருவனே நின்று, ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிக்கு மாற்றை எண்ணுதலே யாதல் விளங்கும். இவ்வுண்மை உணரமாட்டாதார், ``கோயில் சுடுகாடு`` (தி.8 திருச்சாழல், 3) என்பதற்கு, `திருக்கோயில்கள் பலவும் பெரியாரை அடக்கம் செய்த சமாதிகள்` என்பதே பொருள் எனக் குழறிவழிவாரும், `உருத்திரன் கோயில் மசானபூமி யாதலின், அதனுட் புகலாகாது` எனக் கூறி எரிவாய் நிரயத்திற்கு ஆளாவாரும் ஆவர் என்க. இங்ஙனம் பலவாற்றானும் உண்மை விளங்கி நிற்றல் பற்றியே, மெய்கண்டதேவர்,
``அந்தம் ஆதி என்மனார் புலவர்``
-சிவஞானபோதம், சூ - 1.
என்றும்,
``சங்காரமே முதல்`` -சிவஞானபோதம் அதிகரணம் - 3.
என்றும் அறுதியிட்டுரைத்தார்.
செய்யுளாதலின், ``அவன்`` எனச் சுட்டுப் பெயர் முன் வந்தது. ``அன்றி`` என்பது, `மற்று` என்னும் பொருட்டு. மூன்று நின்றார் - மூன்று என்னும் எண்பெற நின்றார். இதனை முன்னருங் கூட்டுக. `தோன்றிய எல்லாம் துடைப்பன் ஈசன்; அன்றி மூன்று நின்றார், என்றும் அவன் இணையடி ஏன்று நின்றார்; அதனால், அம்மூன்று நின்றார்க்கும் முதல்வன் திருநாமத்தை நான்று நின்றாரே நடுவாகி நின்றார்` என இயைத்துரைக்க.
`பலரது வழக்குகளைக் காய்தல், உவத்தல் இன்றி நடுவு நின்று ஆராய்ந்து உண்மை கண்டு கூறுவார், இச்சமய வழக்கினையும் அவ்வாறு ஆராய்ந்து கண்டு கூறாதொழியின், அவர்க்கு நடுவு நிலைமை நிரம்பாது` என்பதாம்.
இதனால், உண்மை நடுவு நிலைமை இது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 

பொழிப்புரை :

பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக் கழு நீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மைய வாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.

குறிப்புரை :

`ஆதலின், அதுவே மக்கள் பருகற்பாலது` என்பது குறிப்பெச்சம். `ஞானிகள் கள்ளுண்டு களிப்பர்` என்னும் வழக்கிற்குப் பொருள் இதுவேயன்றிப் பிறிதன்று என்பது மேலே விளக்கப் பட்டது. கழுநீர், வினைத்தொகை. முழுமை - நிறைவு. ``முழுநீர், செழுநீர்`` என்பவற்றில் நீர், நீர்த்தன்மையுடைய பொருளைக் குறித்தது. முதல் அடியின் உண்மைப் பாடம் வேறாதல் வேண்டும். ``கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா`` என்பதாதல் கூடும்.
இதனால், கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும் என்க.

பண் :

பாடல் எண் : 2

சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே. 

பொழிப்புரை :

சித்த விருத்தியைக் கெடுத்துச் சிவமாய் நிற்கின்ற, அதீத நிலையில் விளைகின்ற சிவானந்தமாகிய தேனே தூய மதுவாம். அதனை உண்டால், இயற்கை இன்பம் நீங்காது நிற்கும். அஃதல்லாத பிற மதுக்களை நாள்தோறும் உண்டு மகிழ்தலும், செயலற்றுக் கிடத்தலும் பிறபொருட் கலப்பாலாகிய செயற்கை விளைவேயாம்.

குறிப்புரை :

``சிவானந்தத்து`` என்பதில் அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை. ``செயற்கை விளைவு மயக்கமே யன்றி, உண்மை யன்று`` என்பது கருத்து. `கீழ்க்காலன` என்பவற்றை, ``கீழ்க்கால்`` என்றார். கீழ்க்காலன - கீழிடத்தன; இழிந்தன. எனவே, அவற்றை உண்டல் நன்மக்கட்கு ஆகா என்றதாயிற்று. செயற்கையை, `இழிந்தன` எனவே, `இயற்கை உயர்ந்தது` என்பது பெறப்பட்டது.
இதனால், கள்ளுண்டல் நன்மக்கட்கு ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. 

பொழிப்புரை :

காமக் களிப்பும், கள்ளுக் களிப்பும் கீழ் மக்கட்கே உரியனவாம். அதனால், அவற்றைச் சிறப்பித்துச் சொல்கின்ற, அறியா மையும் மயக்க உணர்வும் பொருந்திய சமயத்தில் நிற்பவர்க்கு அறிவு அழிவதேயாகும். தூயோனாகிய சிவபெருமானது திருவடியி னின்றும் உண்டாகின்ற, மாசற்ற, நிறைந்த இன்பத் தேனில், அறிவு நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

என்றது, ``காமம், கள் என்பவற்றிலும் சுத்த அதீத நிலையிலும் அறிவு நிகழாமை ஒன்றே யாயினும், காமத்திலும், கள்ளிலும் உண்டாகும் இன்பம் அறிவு அழிதலால் யாதும் அறியாது கிடக்கும் துன்பநிலையையே இன்பநிலையென மயங்கும் மயக்கமே. அதீத நிலையில் உண்டாகும் இன்பம் ஞேயப் பொருளையொழிந்த பிறவற்றை அறியாது அதனையே அறிந்து நிற்றலாகிய உண்மை இன்பமாம்` என்றவாறு.
மா மலம் - ஆணவம். `மயலும்` என உம்மை விரித்து, `மயலும் உறும் சமயத்துள் மதி போவதாகும்` என மாற்றிக் கொள்க. `இணையடி ஆனந்தத் தேறல்` என இயையும். ஓ - ஓவுதல்; நீங்குதல். மயம் - நிறைவு. `தேறலின்கண்` என உருபு விரிக்க. கள்ளினை விலக்குவார், ஒப்புமை பற்றிக் காமத்தையும் விலக்கினார்.

பண் :

பாடல் எண் : 4

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 

பொழிப்புரை :

`சத்தியை வழிபடுகின்றோம்` என்று சொல்லிக் கொள்ளும் அவைதிகராகிய வாம மதத்தினரும், அக் கொள்கை இல்லாதே கள்ளுண்ணும் மடவோர் போலக் கள்ளுண்டு அறிவு அழிபவரேயன்றிச் சிறப்பு ஒன்றும் இலர். இனிக் காமத்தை மட்டும் விரும்புபவர் அறிவு அழியப்பெறாராயினும், மயக்கம் உடையவரே. (ஆகவே, கள், காமம் இரண்டையும் போற்றிக் கூறும் சமயங்களால் உய்தி கூடாது) அவ்விரண்டையும் வெறுத்தொதுக்கும் வைதிக சமயிகளே வழிமுறைக் காலத்தில் அறிவினுள் அறிவாய் நிற்கின்ற முதற்பொருளினுள் ஒடுங்கி அதன் இன்பத்தை நுகர்வர். சிவநாமத்தை உய்யும் வழியாகப் பற்றும் சித்தாந்த சைவர் அவ்வின்பத்தை இடையீடின்றி அப்பொழுதே பெறுவர்.

குறிப்புரை :

தந்திர மார்க்கத்தார் காமம் முதலிய தீயொழுக்கங் களைப் போற்றிக் கொள்ளுதலை,
வாழவே வல்லை,வாமி; வலக்கைதா; என் உயிர்க்குத்
தோழன்நீ; உன்னை ஒப்பார் சொல்லிடின் இல்லை கண்டாய்;
கோழைமா னுடர்தீ தென்னும் கொலைகள வாதி கொண்டே
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றினாயே.
-சிவஞானசித்தி - பரபக்கம் - உலகாயதன் மதம் - 15
என்னும் உலகாயதன் கூற்றாலும், அவர் ஒழுகுமாற்றாலும் அறிக. வாமம் முதலிய மதங்கள் தங்கள் நூல்களையும் `ஆகமம்` என்று சொல்லிக்கொள்வதால், ஆகமங்கள், `சுரௌதம், அசுரௌதம்` என இருவகைப்படும் எனப் பிரித்து, `வேதநெறியோடு முரணாத ஆகமங்கள் சுரௌதம்` என்றும், அதற்கு முரணான ஆகமங்கள் `அசுரௌதம்` என்றும் சொல்லப்பட்டு, அசுரௌதமாகிய ஆக மங்களே `தந்திரம்` எனவும், அவற்றை உடைய சமயங்கள் `தந்திர மார்க்கங்கள்` எனவும் விலக்கப்பட்டன. சிலவிடத்து, `தந்திரம்` என்றும், சிலவிடத்து `ஆகமம்` என்றும் கூறி அவற்றை இகழும் பகுதிகள் அசுரௌதமாகிய தந்திரங்களை இகழ்வனவேயாம். இவ் வேற்றுமை அறியாதார், சுரௌதமாகிய `திவ்வியாகமங்கள்` எனப்படும் சைவாகமங்களும் அத்தகையன போலும் என மயங்கிக் கூறியொழிவர். தந்திர மார்க்கங்களும் சைவாகமத்தை ஒருவாற்றால் தழுவுதல் பற்றி ஒரோவிடத்து, `சைவம்` எனக் கூறப்படுதலால், வேத சிவாகமங்களையன்றிப் பிறவற்றை முதல் நூலாகக் கொள்ளாத சிவநெறியை, `வைதிக சைவம்` என அடைகொடுத்து வழங்குதலும் உண்டு. எனவே உண்மை வைதிகத்திற்கும், சைவத்திற்கும் கள் ளுண்டலோடு சிறிதும் இயைபில்லாமை அறிக. இதனால், `சத்திக்கு உவப்பைத் தருவன கள்ளும் ஊனும்` என்று அவற்றை அவட்குப் படைத்துத் தாமும் உண்டு மகிழ்தல் வைதிகரும், சைவரும் ஆய உயர்ந்தோரல்லாத தாழ்ந்தோர்க்கேயாதல் உணர்க.
வாமத்தோர் - வாம மதத்தவர். இவர்கள் சத்தியே உலக முதல்வி என்று அவளை வணங்குவோர். இதனால், இவர்மதம், `சாத்தேயம்` எனப்படும். `அறிவழிதலின் இறந்தாரொடு ஒப்பர்` என்றற்கு, ``மாள்பவர்`` என்றார். ``நஞ்சுண்பார் கள்ளுண்பவர்`` (குறள், 926) என்பது திருவள்ளுவர் வாக்கு. ``ஓமத்தோர்`` என்றது, `வைதிகர்` என்றவாறு. பின்னர், `அன்றே` என்றமையால், முன்னர், `வழிமுறைக் காலத்தில்` என்பது பெறப்பட்டது. உணர்தல் நணுதல்கட்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :

கள்ளினை உண்டு களிக்கும் அவைதிகராகிய வாம மார்க்கத்தவர் வேதாகமங்களின் கருத்துக்களை உணரமாட்டா மையின், `சுரௌதம்` எனப்படும் திவ்வியாகமங்களாகிய சிவாகமங் களில் சொல்லப்பட்ட `பதி, பசு, பாசம்` என்னும் மூன்று பொருள்கள் உண்மையை உணர்தலும், அவ்வுணர்வால் அவற்றுள் மேலான வனாகிய பதியின் அருளைப் பெற விழைதலும், அவ்விழைவால் சரியை கிரியா யோகங்களாகிய இறப்பில் தவத்தில் நின்று அதன் பயனாகத் தெளிந்த உண்மை ஞானமாகிய சிவஞானத்தைப் பெறு தலும், அச்சிவஞானத் தெளிவினால் சிவனோடு ஏகமாகிய இறைபணி நின்று இன்புறுதலும் இலராவர்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு, `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. சைவாகம ஞானபாதப் பொருள் அடைவைக் கூறி, அப் படிமுறையானே சைவ சமயிகள் பெரும்பயன் பெறு தலையும், தாந்திரிகர்க்கு (தந்திரமார்க்கத்தவர்க்கு) அது கூடாமையும் விளக்கு முகத்தால் அவர் விரும்பும் கள்ளுண்டலை விலக்கினார் என்க. உள்ளாயவற்றை `உள்` என்றார்.

பண் :

பாடல் எண் : 6

மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொழிப்புரை :

மயக்கத்தைத் தருகின்ற மயக்க நோய், மயக்கம் இல்லாதாரையும் மயங்கச் செய்யும் மருந்தால் நீங்கும் எனக் கூறுவார் கூற்றைத் தெளிந்து அம்மருந்தை உண்ணின் உண்டாவது பெரு மயக்கமேயன்றி வேறுண்டோ! இல்லை. அதுபோல, `உலகப் பற்றாகிய மயக்கம், அறிவை மயக்குவதாகிய கள்ளினால் நீங்கும் எனக் கூறி மயக்குகின்ற அறியாமையையுடைய சமயத்தில் உறைத்து நிற்கும் அறிவிலிகள், அவ்வறியாமையால் அறிவை அழிக்கும் கள்ளை உண்டு மேலும் பேரறியாமையில் அழுந்துவர்; அவரைத் தெளிவித்தல் இயலாது.

குறிப்புரை :

பின்னிரண்டு அடிகளை முதலிற் கொண்டு உரைக்க. `மலச் சமயம்` என்பது பின்முன்னாக நின்றது, ``தேறார்`` என்பது வேறு முடிபு. ``மாமாயை`` என்பதும், ``மாயை`` என்பதும் மாயைபோல மயக்கும் நோயையும், மருந்தையும் குறித்தன. இன், ஏதுப்பொருளில் வந்த ஐந்தாம் உருபு. ``வீடும்`` என்பதன் பின், `என்னும்` என்பது வருவிக்க. மயக்கு - மயக்க உரை. தெளியின் - தெளிவு கொண்டால். அன்றே, தேற்றம். `மாயை மாயையால் நீங்கும்` என்றல், `நோய் நோயால் நீங்கும்` என்றல்போலும் என்பது கருத்து.
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. -குறள், 929
என்றவாறு, கள்ளுண்பார்க்கே உண்மை தெளிவித்தல் கூடாதபொழுது `அது சமய ஒழுக்கம்` என்பாரைத் தெளிவித்தல் எவ்வாறு கூடும் என்பார், ``தேறார்`` என்று அறுதியிட்டுக் கூறினார்.
இவை நான்கு திருமந்திரங்களானும், `கள்ளுண்டல் சமய ஒழுக்கமே` என்பாரது கூற்று அடாது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொழிப்புரை :

தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய கள், வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!

குறிப்புரை :

வாய்மை, உபலக்கணம்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. -குறள், 913
என்பதனால், `பொருள் காரணமாகப் பொய்யாக முயங்கும் பொது மகளிரது இன்பம், பொருள் இல்வழி இழக்கப்படுதலே யன்றி உள்ள பொழுதும் உண்மையாவதன்று` என்றற்கு, ``இடையறா ஆனந்தம் எய்துமே`` என்றார். `வெண்ணெயைப் பெற்றும் நெய்க்கு அழுவான் போல, கற்புடை இல்லாளைப் பெற்றும் அவளால் இன்பத்தைப் பெறாது பொருட்பெண்டிரை நாடித் திரியும் பேதை மகன், கிடைத் தற்கரிய சிவானந்தத்தைப் பெயர்தானும் கேட்டறிவனோ` என்பதும், ``இடையறா ஆனந்தம்`` என்ற சொல்லாற்றலால் பெறுதும். ஏகாரம், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், கள்ளுண்டல் கழிகாமத்தையும், பொய் களவு முதலிய பலகுற்றங்களையும் தருதல் கூறப்பட்டது.
இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.

பண் :

பாடல் எண் : 8

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. 

பொழிப்புரை :

சத்தியின் அருளைப் பெறவேண்டிச் சத்தி மதத்தார் (வாம மதத்தவர்கள்) கள்ளுண்பார்கள். அதன் பயனாக அவர்கள் பெறுவது இயல்பாகத் தமக்கு அமைந்த சத்தியையும் (வலிமை யையும்) இழத்தலேயாம். (ஆகவே, அவர்தம் கொள்கை அறியாமை வழிப்பட்டது என்பது தெளிவு. அஃது எவ்வாறு எனில், கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து வீழ்ந்து செயலற்றுக் கிடத்தலால்) உண்மையில் `சத்தி` என்பது சிவபெருமானது அறிவு வடிவாகிய ஆற்றலே; அச் சத்தியால் பெறும் பயன், அதன்வழி நின்று, நிலைபேறும், தெளிவும் உடைய சிவானந்தத்தைப் பெறுதலே.

குறிப்புரை :

``சத்தி`` நான்கில் முதலது ஆகுபெயர். `அச் சமயத்தார்` எனச் சுட்டு வருவிக்க. தன்னில் - அந்த ஞானத்தில். `சார்தலே பயன்` என ஒருசொல் வருவிக்க.
இதனால், `சாத்தேயம்` எனப்படும் மதம் போலியாதல் கூறும் முகத்தால், அவர்தம் ஒழுக்கமாகிய கள்ளுண்டல் கடியப்படுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. 

பொழிப்புரை :

சத்திமானும், (சத்தியை உடையவனும்) சத்தியும் தன்மையால் இரண்டாதலல்லது, பொருளால் இரண்டாதல் யாண்டும் இல்லை. (இதனைத் தெரிவிக்கவே, `சிவன்` என்னாது சத்தன் என்றார்) ஆகவே, சிவமும், சத்தியும் தம்முள் வேறல்லர் என்பது வெளிப்படை. அதனால், முதற்பொருளை அடைய வேண்டுவார், `சத்தி, சிவம்` ஆகிய இரண்டனையும் ஒப்பக்கொள்ளல் வேண்டு மன்றி, அவற்றுள் ஒன்றனையே புகழ்ந்து கொள்ளுதலும், ஏனையதை இகழ்ந்து நீக்கலும் கூடாவாம். மேற்கூறியவாறு அவ்விரண்டனையும் ஒப்பக்கொண்ட வழியே எப்பயனும் கிடைத்தல் உறுதி.

குறிப்புரை :

இரண்டிடத்தும் ``தரின்`` என்பவற்றில் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `சிவன், சத்தி என்னும் இருவருள் ஒருவர் அருள் இன்றி ஏனையோரது அருள் உண்டாக மாட்டாது` என்பது முதல் இரண்டடிகளில் கூறப்பட்டது. ``சத்தி சிவம்`` செவ் வெண். ``தன்`` என்றது, வழிபடுவோனை. சத்தியம் - உண்மை; இது தனிமுடிபு; இதற்கு, `இது` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, இறுதியில் வைத்து உரைக்க. ``எண்சித்தித் தன்மையும்`` என்ற உம்மையால், `பிறவும்` என உரைக்க. எண்சித்தி, அணிமா முதலியன.
இதனால், வாமமதம் போலியாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே. 

பொழிப்புரை :

மேல் பலவிடத்தும் சொல்லிவந்த சிவானந்த மாகிய தேன், உயிர், நிலமுதல் நாதம் ஈறாகிய தத்துவங்களே தானாய்த் தன்னை அறியாது நிற்கும் நிலையே முதற்கண் நீக்கி, அதன்பின்னர், தன்னைச் சடமாகிய தத்துவங்களின் வேறாகக் கண்ட உயிர் `யான் சித்தாகிய பிரமமே` என மயங்கும் மயக்கத்தையும் போக்கிச் சிவமாகச் செய்து, காமியத்தவங்களைக் கைவிடப்பண்ணி, இன்பத்தைத் துய்ப் பதாகிய அவ்வுயிர் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவத்தின்பால் சென்று அடங்கி இன்புற வைத்து உடம்பு உள்ள துணையும் நிற்பதாகிய இவ்வுலகத்தின் இன்ப துன்ப நுகர்ச்சியை உடல் ஊழாக நுகர்ந்து கழித்து, உடம்பு நீங்கிய பின்னர்ப் பேரா இன்பப் பெருவாழ்வாகிய பரமுத்தியைத் தலைப்படச் செய்யும்.

குறிப்புரை :

`ஆதலின், ஏனைநெறிகளை விடுத்து அத்தேனைத் தரும் நெறியாகிய சிவநெறியைப் பற்றிப் பயனடைதல் சமயிகள் பலரும் செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம். வாம மதத்தின் இழிபுணர்த்துவார், ஏனை மதங்களின் சிறப்பின்மையும் உடன் கூறினார். போகம் தருவதனை, `போகம்` என்றார். மெய்த்த - மெய்யின் கண்ணதான.
இதனால், சிவநெறியது சிறப்புக் கூறும் முகத்தால் பிறநெறிகளது தாழ்வு கூறிக் கள்ளுண்ணும் வாமம் முதலிய மதங்கள் கடியப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.

பொழிப்புரை :

உண்மை யோகிகள் ஆவார், பிராண வாயுவைத் தடுத்து அதனால் எழும் மூலக் கனலால் புருவ நடுவில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும், அறிவை வளர்க்கின்ற, இனிய அமுதத்தை உண்பவரே. (அவ்வமுதம் சிவானந்தத் தேறலில் இச்சையுண்டாக்கும்) அந்நிலையைப் பெறாத சிலர் அணிமா முதலிய சித்திகளில் இச்சையுடையராய்க் கள்ளை உண்டு மயக்கம் உற்று, அம்மயக்கத்தால் எழும் உன்மத்தம் உடையராய் அறிவழிகின்றனர்.

குறிப்புரை :

எனவே, `வாம மதத்தவரேயன்றி, யோகம் முற்றப் பெறாது இடைநிற்கும் சிலரும் வாம மதத்தவரோடு ஒத்து ஒழுகினும், அவர் ஒழுக்கம் கொள்ளத்தக்கது அன்று` என்றதாயிற்று.
இதனால், `கள்ளுண்பார் சிலர் சித்தியுடையராயும் இருத் தலைக் காண்கின்றோம் ஆகையால், அவர் ஒழுக்கம் இகழற்பாலது அன்று` என்பாரை நோக்கி, அவரது நிலையும் உயர்வுடையது ஆகாமை காட்டி, `எவ்வாற்றானும் கள்ளுண்டல் ஒழுக்கம் ஆகாது` என்பது வலியுறுத்தப்பட்டது.
பதிப்புக்களில் இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.
முதல் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. 

பொழிப்புரை :

ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் - உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.

குறிப்புரை :

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்
தாங்காது மன்னோ பொறை. -குறள், 990
என்றவாறு உலகம் சான்றாண்மை குன்றி, அழிவெய்தும் நிலை உண்டாகின்றபொழுது, தனது திருவருள் காரணமாகத் தக்காரை நிலவுலகில் விடுத்து அதனைச் செந்நெறி நிற்கச் செய்பவன் சிவபெருமானே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்க உண்மை என்பது நாயனாரது திருவுள்ளக்கிடை என்பது இதன்கண் இருபொருள் படவைத்த சொற்குறிப்புக்களால் அறியப்படும்.
எனவே, ஒருபொழுது இவ்வுலகம் நடுவு நிலைமை பிறழ்ந்து, மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நிலை யின்றித் (தி.11 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, 7) தமக்கும், தம்மைச் சார்ந்தவர்க்கும் உளவாகும் நன்மை ஒன்றே பற்றிப் பிறர்க்குக் கேடு சூழும் தன்மை உடையதாய்த் தீநெறிக் கண் சென்றதாக, அதனைப் பொறாது வேண்டிய நல்லோர் சிலரது தவம் முன்னிலையாகச் சிவபெருமான், உயர்ந்த சிவஞானத்தால் அந் நடுவுநிலை உடைய பெரியார் ஒருவரை விடுத்துச் செந்நெறி நிறுத் தினான் என திருமந்திரம் பிறிதொரு பொருளையே சிறப்பாகத் தோற்றுவித்தல் அறிந்து கொள்க. இதனானே, `உலகில் செந்நெறி பிறழுங்காலத்து அதனை நிலைநிறுத்துதற்குக் கடவுளே வந்து பிறக் கின்றான் என்றல் சிவ நெறிக்கு ஒவ்வாது; கடவுள் தனது திருவருள் வழி நிற்கும் பெரியோரை விடுத்தே செந்நெறி நிறுத்துகின்றான் என்பதே சிவநெறிக்கு ஒப்பது` என்பதும் கூறியவாறாயிற்று.
``எம்பெருமான்`` என்றது விளி. என்ன - என்று சொல்லி முறையிட. இதற்கு, `தேவர்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``நடுவுள அங்கி அகத்திய`` என்றதற்கு, `இருதயத்தின்கண் உள்ள ஒளியை உடைய அகத்திய` எனவும், `நடுவு நிலைமை உடைய, ஞானத்தை உடைய அகத்திய` எனவும் இரு பொருள் கொள்க. இரண்டாவது பொருட்கு, ``நடுவுள`` என்பது, `அகத்திய` என்பத னோடு இயையும். உடலின் நடுவிடத்து இருக்கும் இருதயத்தை ``நடு`` என்றது ஆகுபெயர். முன் - மேல்நிலம்; முதன்மை இடம்.
சிவபெருமான், மலைமகளை மலையரையனிடம் சென்று மணம் புரிந்த ஞான்று தேவர், முனிவர், கணங்கள் முதலிய பலரும் ஒருங்கு கூடினமையால் நிலம் தென்பால் எழுந்து, வடபால் வீழ்ந்து புரள்வதாகலும், தேவரது வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அகத்திய முனிவரைத் தென்பால் பொதிய மலையிற் சென்று இருக்கச் செய்து, நிலம் முன்போலச் சமனாகும்படி நிறுத்திய வரலாற்றின் விரிவைக் கந்த புராணத்துட் கண்டு கொள்க. `தேவர் முதலிய பலர்க்கு முனிவரொருவர் நிகர்ப்ப இருந்தார்` என்பதனால், சிவனடியாரது பெருமை தோற்றுவித்தவாறாயிற்று. இவ்வரலாற்றுள் நிலம் நிலை குலைந்தமைக்குரிய காரணத்தை நாயனார் எடுத்தோதாது, வரலாறு பற்றியே உணர வைத்தார் என்க.
புராண வரலாறுகள் பலவும், உண்மை நிகழ்ச்சியை மருட்கைச் சுவைபடப் பெரிதும் புனைந்துரைப்பனவும், உண்மைக் கருத்துக்களை உருவகமாக்கி உரைப்பனவும் என இருதிறப்படும். காலப் பழமையால் அவ் இருவேறு திறத்துள் `இஃது இத்திறத்தது` எனப் பகுத்துணர்த்தல் அரிது. ஆயினும் அவ் வரலாறுகளைப் புராணங்கள் பலவிடத்தும், பலகாலத்தும் வலியுறுத்திவருதல், அவற்றின் உண்மை மக்கள் உள்ளத்தில் மறவாது நிற்றற் பொருட்டே என்பது நாயனாரது திருவுள்ளம் என்பதனை இத் தந்திரம் பற்றி உணர்ந்துகொள்க. இத் தந்திரத்துள் குறிக்கப்படும் வரலாறுகளும், இவை போல்வனவுமான தொன்மையான வரலாறுகள் சிவபெரு மானையன்றிப் பிற கடவுளருக்கும் அவர்தம் அடியவர்க்கும் சொல்லப் படாமை கருதற்பாலது என்பது நாயனாரது கருத்து என்க.
இதனால் அகத்திய முனிவர் பொதிகை சென்ற வரலாற்றால் அவரது பெருமை கூறப்பட்டமை வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 

பொழிப்புரை :

`புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.

குறிப்புரை :

`அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியனாகிய, மேல்பால் அங்கி உதயம் செய் (தென்பால்) அவனொடு` எனக் கூட்டுக. `உதயத்தை வளர்க்கும்` என இரண்டாவதும், `அங்கிபோல உதயம் செய்` என உவம உருபும் விரிக்க. மேல்பால் என்றது, சையமலைப் பக்கத்தை. அகத்தியர் முதற்கண் இங்குத் தங்கியிருந்தமையைக் கந்த புராணம் அகத்தியப் படலத்தால் அறிக. மேற்குத் திசை, `குட திை\\\\u2970?` எனப்படுதலால், அகத்தியர் `குடமுனி` எனப்பட்டார். `குடமுனி` என்பதைப் புராணங்கள் `கும்பமுனி` எனப் புனைந்துரைத்தன. `மங்கிய` என்பது ஈறு குறைந்தது. மங்கிய உதயம் - அரிதில் காணப்படுதல். `மங்கி உதயம் செய்` என்பது பாடம் அன்று.
``வடபால்`` என்றதனால், `தென்பால்` என்பது பெறப் பட்டது. `வடக்கில் கயிலாய மலையில் சிவபெருமானும், தெற்கில் பொதிய மலையில் அகத்திய முனிவரும் வீற்றிருத்தலாலே இவ்வுலகம் வளப்பமும், ஞானமும் பெற்றுத் திகழ்கின்றது` என்பதாம். இது மேற்கூறிய வரலாற்றைப் பிறிதொரு வகையால் தொடர்புபடுத்து விளக்கியவாறு.
இதனால், அகத்திய முனிவரது பெருமை கூறும் முகத்தால் சிவபெருமானது மெய்யடியார், உண்மையாகவே சிவனோடு ஒப்பவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 

பொழிப்புரை :

அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது `திருக்கோவலூர் வீரட்டம்` என்னும் தலமாம்.
ஆணவமலம் அறிவை அழித்தல் பற்றி அதற்கு, `மிருத்தியு` என்ற ஒரு பெயர் உண்டு. `அந்தகன்` என்பதற்கு `இறுதியைச் செய்பவன்` என்பது பொருள். அதனால் இவ்விரு பெயர்களும் ஒரு பொருளவாதல் பற்றி, ``கருத்துறை அந்தகன்றன்போல் அசுரன்`` என்றார். கூற்றுவனுக்கு `அந்தகன்` என்ற பெயர் கூறப்படுதலும் இப் பொருள் பற்றியேயாம். அதனால், `மிருத்தியுவைக் கடத்தல்` என்பதற்கு, `ஆணவ மலத்தின் நீங்குதல்` என்பதே உண்மைப் பொருள் என்பர். உபநிடதங்கள் `இருளைக் கடந்து மேற் போகின் றான்` என்றலும் ஆணவ மலத்தின் நீங்கி இறைவனை அடை தலையே யாம். எனவே, சிவபெருமான் அந்தகாசுரனை மூவிலை வேலால் அழித்த வரலாறு, `அவன் ஆணவ மலத்தை இச்சா ஞானக் கிரியை வடி வாய்த் தொழிற்படும் தனது சத்தியைக் கொண்டு அழிப்பவனாவன் என்னும் உண்மையை விளக்கும்` என்பதும், `அப்பயன் கருதி அவனை வழிபடுதலே சிறந்தது` என்பதும் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் அறிக. குருத்து - நுனி. `குருத்தினால்` என உருபு விரிக்க. `உயர் சூலம் கைக்கொண்டு குருத் தினாற் கொன்றான்` எனக் கூட்டுக. இச் செயல் வைரவக் கடவுளைக் கொண்டு செய்வித்ததேயாயினும், `அரசன் ஆலயம் எடுத்தான்` என்பது போல, ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்வித்தமை பற்றிச் சிவபெருமான் தானே செய்ததாக வைத்து அருளிச் செய்தார். ``அந்தகனை அயிற் சூலத் தழுத்திக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.5) என்பது திருநாவுக்கரசர் திருமொழி.
`இரணியன், (இரணிய கசிபு) இரணியாட்சன்` என்னும் இரு வருள் இளையவனாகிய இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற வரத்தினால் வலிமை மிக்க வனாய்த் திருமால் முதலிய தேவரையெல்லாம் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது மகளிர் உருவங்கொண்டு ஓடிக் கயிலையில் அம்பிகையின் தோழியர் கூட்டத்துள் மறைந்திருந்தனர். அதை அறிந்த அந்தகாசுரன் அங்கும் சென்று போர் செய்ய நினைத்த பொழுது, தேவர்கள் முறையீட்டிற்கு இரங்கிச் சிவபெருமான் வைரவக் கடவுளை ஏவ, அவர் தமது சூலத்தலையில் அவனை ஏற்றிப் பலநாள் துன்புறச் செய்து பின் முத்தி பெற அருளிய வரலாற்றின் விரிவைக் காஞ்சிப் புராணம் அந்தகேசுரப் படலத்தில் காண்க. `சிவதீக்கை பெற்றோர் குற்றம் செய்யின், அவர் கூற்றுவனால் தண்டிக்கப்படார்; இவ்வாறு வைரவக் கடவுள் சூலத்தில் ஏற்றித் தண்டிக்கப்படுவர்` என்பது சிவாகம நூற் கருத்து என்பது இங்கு உணர்ந்து கொள்க.
இதனால், சிவபெருமான் அந்தகாசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொழிப்புரை :

தக்கன் சிவபெருமானை இகழ்ந்து செய்த வேள்வியை அப்பெருமானது அருளாணையின்வழி வீரபத்திரக் கடவுள் சென்று அழித்தபொழுது, தக்கனது இகழ்ச்சியை மறாது உடன் பட்டிருந்த தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தலோடு ஒழித்து, அவ் இகழ்ச்சியைச் செய்தவனாகிய தக்கனது தலையை வெட்டித் தீக்கு இரையாக்கி, `சிவனை இகழ்ந்தவர் பெறும் இழிநிலைக்கு இவன் தக்க சான்றாகற்பாலனாகலின், அதன் பொருட்டு இவன் உலகிற்கு இன்றியமையாத ஒருவன்` எனக் கருதி அவனை அழித்தொழியாது ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிரோடு இருக்கச் செய்தார்.

குறிப்புரை :

இவ்வீரச்செயலைக் குறிப்பது திருப்பறியலூர் வீரட்டம்.
கொலையில் - வேள்வியை அழித்தபொழுது. பிழைத்த - பிழை செய்த. பிரசாபதி - பிரமன்; இப்பெயர் அவன் மகனாகிய தக்கனுக்கும் வழங்கும். அதனால், அவனை, `தட்சப் பிரசாபதி` என்பர். பிரசாபதி, இங்கு, தட்சப் பிரசாபதியே. ``தான்`` என்றது வீரபத்திரக் கடவுளை. நிலை - இழிநிலை; இதில் நான்கனுருபு தொகுத்தல். ``தலையை அரிந்திட்டு`` என்பதில், ``ஆட்டுத் தலையை`` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. சந்தி செய்தல் - பொருத்துதல். இவ்வரலாறு கந்தபுராணத்துள் விரித்துக் கூறப்படுதல் காண்க. இவ்வரலாறும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் உணர்க.
இதனால் தக்கன் வேள்வியை அழித்த வரலாறும், சிவ நிந்தை உய்தியில் குற்றமாதலாகிய உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்கச் சுதனை உதிரங்கொண் டானே. 

பொழிப்புரை :

ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட் கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்தாகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுகற் பாலராய தேவர்கள், தம் அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து அவரைத் தெருட்டுதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்குற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திரு மாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கொழித் தருளினான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது திருக்கண்டியூர் வீரட்டம்.
ஒருமுறை பிரமனும் மாலும் மகாமேரு மலையின் சிகரம் ஒன்றில் சேர்ந்திருந்தபொழுது தேவர், முனிவர் முதலிய பலரும் அங்கு வந்து அவரை வணங்கி, `நீவிர் எங்களைப் படைத்துக்காக்கும் தலைவராதலின், அனைத்துலகிற்கும் முதல்வனாய், உயிர்க்குயிராய் நிற்கும் முதற்கடவுள் யாவன் என்னும் ஐயத்தினையும் நீக்கி உண்மையை உணர்த்தல் வேண்டும்` என வேண்டினர். அதுபொழுது பிரமனும், மாயோனும் தம் அதிகாரச் செருக்கால் மயங்கித் தாங்களே முதற்கடவுளாகத் தனித்தனிக் கூறி வாதிட்டனர். வேதங்களும், மந்திரங்களும் உருவாய் வெளிப்பட்டு, `நும்மில் ஒருவரும் முதல்வரல்லீர்; சிவபெருமானே அனைத்துயிர்க்கும் முதல்வன்` எனக் கூறவும் தெளிவு பெறாது வாதிட்டனர். அதனால், சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளியாய்த் தோன்றி, அதினின்றும் உமையொருபாகனாய் வெளிப்பட, திருமால் தெளிந்து அச்சுற்று, `எம் தந்தையே, பிழைபொறுத்தருள்க` என வணங்கினார். ஆயினும், பிரமன் செருக்கு நீங்காதவனாய், அன்று ஐந்து தலைகளோடு இருந்த அவன், தனது உச்சித் தலை வாயினால், `என் மகனே, வருக` என்று அழைத்து இகழ்ந்தான். அதனால், சிவபெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கி `நம்மை இகழ்ந்து பேசிய இப் பிரமனது நடுத்தலையைக் கிள்ளிக்கொண்டு, இப்பிரமனே யன்றிச் செருக்கால் மயங்கி நம்மை இகழ்ந்து நிற்போர் யாவராயினும் அவர்தம் உதிரத்தைப் பிச்சையாகப் பிரம கபாலத்தில் ஏற்று, அவரது செருக்கை நீக்கித் தெளிவுபெறச் செய்க` என்று அருளிச் செய்து மறைந்தார். திருமாலும் தம் உலகை அடைந்தார். வைரவக் கடவுள் அவ்வாறே தமது நகத்தால் பிரமனது உச்சித் தலையைக் கிள்ளி எடுத்த உடன் அவனது உதிரம் உலகை அழிக்கும் வெள்ளம்போல் பெருக, அவன் நினைவிழந்து வீழ்ந்தான். பின்பு வைரவக் கடவுள், தமது நெற்றிக் கண்ணால் உதிர வெள்ளத்தை வற்றச் செய்து, பிரமனையும் உயிர்ப்பிக்க, அவன் நல்லறிவு பெற்று வணங்கிப் பிழைபொறுக்க வேண்டினான். அப்பால் வைரவக் கடவுள் அவனை மன்னித்து, அவனை என்றும் நான்முகனாகவே இருக்கச் செய்து, தாம் ஏந்திய பிரம கபாலத்துடன் தேவர், முனிவர் முதலான வர்களில் செருக்குக் கொண்டவர்பால் சென்று, `எனது கபாலம் நிறைய உங்கள் உதிரத்தைத் தாருங்கள்` என்று கேட்க, அவர்கள் அனைவரும் அச்சத்தால், ஏற்ற பெற்றியில் தம் தம் உடம்பினின்றும் இரத்தத்தைப் பிரம கபாலத்தில் சொரிந்து சோர்வுறலாயினர். பின்பு வைரவக் கடவுள் அவர்களுக்கும் உயிர்ப்பிச்சை தந்து தெளிவை உண்டாக்கி, வைகுந்தம் சென்று, அங்குத் தம்மைத் தடுத்த சேனா முதலியாகிய விடுவச் சேனனைச் சூலத்தின்மேல் கோத்தெடுத்துக் கொண்டு செல்லத் திருமால் இதனை அறிந்து எதிர்வந்து வணங்கி, `எந்தையே நீ வேண்டுவது யாது` என, வைரவக் கடவுள், `உன் கபாலத்தின் வழி யாக எனது பிரம கபாலம் நிறைய உதிரம் தரல் வேண்டும்` என்றார். திருமால் தாமே தமது நகத்தால் தம் நெற்றியி னின்றும் ஒரு நரம்பைப் பிடுங்கிப் பிரம கபாலத்தில் விட, அது வழியாக உதிரம் பல்லாண்டு காறும் ஒழுகிற்று. திருமால் நினைவிழந்து வீழ்ந்தார். ஆயினும், வைர வரது கைக் கபாலம் பாதியாயினும் நிறைந்ததில்லை. அதனைக் கண்ட `சீதேவி, பூதேவி` என்னும் இருவரும் நடுக்கங் கொள்ள, வைரவக் கடவுள் அவர்கள்மீது இரக்கம் வைத்துத் திருமாலை உயிர்ப்பித்துத் தந்து, விடுவச் சேனனையும் சூலத்தினின்றும் இறக்கிவிட்டுச் சிவபெரு மான் முன்பே தமக்காகப் படைத்துக் கொடுத்த கணங்களுடன் தமது புவனத்தில் தங்கி, அண்டங்கள் பல வற்றைக் காத்து வருவாராயினார். இவ்வாறு கந்த புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத்துள்ளும் இவ்வரலாறு விரித்துப் பேசப்படுதல் காண்க.
``அவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற (பின்) அச்சுதனை உதிரங் கொண்டான்`` என்றதனால், `செல்வம், அதிகாரம்` முதலியவற்றால் எழும் செருக்குக் காரணமாக முதல்வனாகிய கடவுளை மறந்து `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கித் திரிவாரை அம்முதல்வனது திருவருள் ஒறுத்து அடக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தவே இவ்வரலாற்றைப் புராணங்கள் வலியுறுத்துகின்றன என்பது உணர்த்துதல் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் பெறப்படும். தக்கன் வரலாறு, என்றும் செருக்குடை யராய் இருப்பவரை ஒறுத்தலையும், இஃது, ஓரோவழிச் செருக்குறு வாரை ஒறுத்தலையும் குறிக்கும். இவையே இவற்றிடை உள்ள வேற்றுமை.
பரத்தல், `இடங்கொடுத்தல்` என்னும் பொருட்டு. இதனால், ஆகாயத்தையும் அடக்கி நிற்றல் பெறப்பட்டது. நிலத்தையும் தாங்குதல் கூறினமையால், அதற்கும் நிலைக்களமாதல் பெறப்பட்டது. `தங்கும் படித்தாகிய தாள்` என்க. அவன் பண்டறி சுட்டு. `உணர் தேவர்கள்` என்னும் முக்கால வினைத்தொகை, அஃது அவர்க்குரிய பண்பாதல் விளக்கி நின்றது. பொங்கும் சினம் - மிகக் கொண்ட சினம். `தேவர்கள் கொண்ட சினம்` என்க. சினம் - பகை. இஃது இங்கு மயக்கத்தால் கொள்ளும் மாறுபாட்டினைக் குறித்தது. ``சினத்துள்`` என்பது வினைசெய்யிடத்தில் வந்த ஏழாம் வேற்றுமை. எனவே, `சினங்கொண்ட பொழுது` என்பது பொருளாயிற்று. முன் - முதலில். ``முன் அயன் தலை அற`` என்றதனால், `பின் அச்சுதனை உதிரங் கொண்டான்` என்பது போந்தது. இதுவும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் அறிக.
இதனால், பிரமனது தலையை அரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

பொழிப்புரை :

எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவிற்குடி வீரட்டம்.
ஒருமுறை சிவபெருமான், தமது கயிலைக்கு வந்த இந்திரன் முன், ஒரு திருவிளையாடலால் வேற்றுருக் கொண்டபொழுது, உண்மையறியாத இந்திரன், அப்பெருமானை இகழ்ந்து நோக்க, அதனால் அவர் உருத்திர வடிவுடன் நின்று கொண்ட சினத்தைக் கண்டு இந்திரன் அஞ்சி வணங்கினான். அதனால், சிவபெருமான் தாம் கொண்ட சினத் தீயை மேற்றிசைக் கடலில் எறிய, அஃது ஓர் அசுரக் குழந்தையாயிற்று. அதனைக் கடல் அரசனாகிய `வருணன்` வளர்த்தான். சலத்தால் (நீரால்) தாங்கப்பெற்ற காரணத்தால் `சலந்தரன்` எனப் பெயர் பெற்ற அவ்வசுரன் மிக்க வன்மை உடைய வனாய்த் தேவரைத் துன்புறுத்தத் திருமால் முதலிய தேவர் பலரும் அவனுக்கு அஞ்சி ஓடிக் கயிலையில் வசித்தனர். அதனை அறிந்த சலந்தராசுரன் சிவபெருமானோடு போர் செய்யக் கருதிக் கயிலை நோக்கிச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட அப்பெருமான், அவன் தன்னாலே தான் அழிய வேண்டியவனாதலை உணர்ந்து, ஓர் அந்தண வடிவில் அவன்முன் சென்று, `சலந்தரனே, உனது ஆற்றலை அளந்து காணவே யாம் வந்தோம்; உன்னால் இயலுமாயின், இச்சக்கரத்தை எடுத்துச் சுமக்க` என்று சொல்லித் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறினார். சலந்தரன் செருக்குக் கொண்டு அதனை அரிதில் பெயர்த்து மிக முயன்று உயர எடுத்துத் தன் தலைமேல் வைத்துக்கொள்ள, அச்சக்கரம் சிறந்த படைக்கலமாய் அவன் உடலை இருகூறு செய்து, சிவபெருமானிடம் மீண்டது; தேவர் துன்பம் நீங்கி இன்புற்றனர். இவ்வாறு இவ்வரலாறு கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இது சிவபெருமான், தான் நேரே செய்த வீரச்செயலாதல் அறிக.
`அறம், மறம் அனைத்திற்கும் நிலைக்களமாய் உள்ளவன் இறைவன். அவன் உரிய காலத்தில் மறத்தினை வெளிப்படுத்தி, ஏற்கும் முறையால் அதனை அழித்து அறத்தினை வளர்த்தருளுவான் என்பது இதனால் அறியத் தக்க உண்மை` என்பது நாயனார் திருவுள்ளமாதல், ``எங்கும் கலந்தும் என் உள்ளத்தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதி`` என்ற குறிப்பால் அறியப்படும்.
இதனால், `சலந்தரன்` என்னும் அசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. 

பொழிப்புரை :

சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவதிகை வீரட்டம். ஏனைய பலவற்றினும் இது சிறப்புடையதாய்ப் பண்டைத் தமிழ் நூல்களிலும் பயின்று வருவதாகலின், இதன் உண்மையை நாயனார் கிளந்தோதினார் என்க.
``தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்னும் மூவர் அசுரர் சிவபத்தியிற் சிறந்தவராய் மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர். சிவபெருமான் `நம்பால் பத்தி பண்ணுவோரை அழித்தல் ஆகாது` என்று அருளிச் செய்யத் திருமால் புத்தனாக உருக்கொண்டு பிடக நூலைச் செய்து, நாரத முனிவரைத் துணைக்கொண்டு முப்புரத் தவர்பால் சென்று சிவநெறியை இகழ்ந்து, புத்த மதத்தையே சிறந்ததாகக் காட்டி மருட்டினார். அதனால் அம்மாயோன் மயக்கில் அகப்பட்ட முப்புரத் தசுரர் சிவநெறியைக் கைவிட்டுச் சிவனை இகழ்ந்து புத்தராயினர். அதன்பின் திருமால் முதலியோர் சிவபிரானிடம் சென்று வணங்கி, முப்புரத்தவர் சிவநிந்தகராயினமையை விண்ணப்பித்து, அவர்களை அழித்தருள வேண்டினர். சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியாயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கியபொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக் கூறப்பட்டது.
இதனுள் தேவர் பலரும் சிவபெருமானுக்குக் கருவியா யினமை, `அப்பெருமானே கருத்தா` என்பதை விளக்கும். பூட்டிய அம்பினை எய்யாமலே திரிபுரத்தைச் சிரித்து அழித்தமை, அவன் யாதொரு செயலையும் கருவியாலன்றி நினைவு மாத்திரத்தானே செய்பவனாதலை விளக்கும். மலையை வில்லாக வளைத்தமை அவன் எல்லாம் வல்லனாதலைக் குறிக்கும். இவ்வாறு இத்திரிபுரம் எரித்த வரலாறு பல அரிய உண்மைகளை விளக்குவதாம். அவற்றுள் சிறந்த தொன்றினை எடுத்தோதியதனானே ஏனையவற்றையும் தழுவிக் கொள்ள வைத்தார்.
இதனால், திரிபுரம் எரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே. 

பொழிப்புரை :

முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.

குறிப்புரை :

`அஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். சிவபெருமான் செய்த இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவழுவூர் வீரட்டம்.
சிவபெருமான் யானையை உரித்த வரலாறு கந்த புராணத்துட் சொல்லப்பட்டது. அதில் அவன் பிறப்பு வரலாறு சொல்லப்பட வில்லை. ஆயினும், நாரத முனிவர் செய்த வேள்வியுள் ஆட்டுக் கிடாய் ஒன்று தோன்றித்தேவர் முதலிய பலரையும் துன்புறுத்தினமை கந்த புராணத்தால் அறியக் கிடப்பதுபோல, முனிவர் சிலர் செய்த வேள்வியுள் கயாசுரனாகிய யானை தோன்றித் தேவர்களைத் துன்புறுத் தினமை இத்திருமந்திரத்தால் அறியக் கிடக்கின்றது. சிவபெருமான் யானையை உரித்த பொழுது அவர் கொண்டிருந்த உருத்திரத் திருமேனியின் ஒளியையும், வீரச் செயலையும் காணமாட்டாது உமாதேவியை உள்ளிட்ட பலரும் நடுக்கங் கொள்ளச் சிவபெருமான் யானையை உரித்து அத்தோலைப் போர்வையாக அணிந்து அவர் களது அச்சத்தைப் போக்கினமை கந்த புராணத்துட் கூறப்பட்டது.
ஐம்பொறிகளை யானையாகக் கூறுதல் மரபாகலின், ஏனைத் தேவர் பலரும் மதங்கொண்ட யானைபோலும் அவ்வைம்பொறிச் சூழலில் அகப்பட்டுச் சுழலும் பசுக்களேயாக, அவற்றை வென்று நிற்கும் பதி சிவபெருமான் ஒருவனே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்கது என்பதை நாயனார் உய்த்துணர வைத்திருத்தலை நுண்ணுணர்வால் நோக்கி உணர்க. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயலாம். இதனைக் காசியில் நிகழ்ந்ததாகவே கந்தபுராணம் கூறிற்று.
கொளுவுதற்கும், முழங்குதற்கும் ``முனிவர்`` என்னும் எழு வாய் வருவித்து, ``கொளுவி முழங்கு`` என இயைக்க. முழங்குதல் - மந்திரத்தை உரத்து உச்சரித்தல். வேள்வியுள் அத்தி - வேள்வியுள் எழுந்த யானை. ``உரி`` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகு பெயராய், ``உரித்தவன்`` எனப் பொருள் தந்தது. தாம், அசைநிலை. ``பல தேவர்தாமும்`` என்பது மாறிநின்றது. உம்மை, முற்றும்மை. ``தீயின்`` என்றதும், `தீச் சாலையின்` என ஆகுபெயராயிற்று. `அத்தி யினுள்` என்பதே பாடமாயின், `தீ` என்பது குறுக்கல் பெற்றது என்க. எழுந்து - சென்று தங்கி. ``கொலையே`` என்றதன்பின் `உண்டார்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், சிவபெருமான் யானையை உரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 

பொழிப்புரை :

சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.

குறிப்புரை :

இது காலசங்கார மூர்த்தியைத் திருக்கடவூரில் உள்ள ஓர் யோகிபோல வைத்துச் சிலேடையால் உவமித்தது. இதனை,
யோகிக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`மூலாதாரமாகிய இடத்தில் வைத்துக் கீழ்நோக்கித் துயில் கின்ற நாகராசனை அதன்மேல் உள்ள சுழுமுனைக்கு மேலதாகிய புருவ நடுவாகிய இலாடத் தானத்தை நோக்கி நிற்குமாறு எழுப்பி, அதன்பொருட்டு வாயுக்களுள் முதலாவதாகிய பிராண வாயுவைச் சுழுமுனை நாடியின் அடியில் அசைவற நிறுத்தி, அத்தகைய வாயுப் பயிற்சியாலே, தனக்கு அளந்த வாழ்நாள் எல்லைக்கண் கூற்றுவன் வந்து தன்னை அணுகாதவாறு தடுத்துத் திருக்கடவூரில் நலத்துடன் நீடு வாழ்கின்றமை `வியப்பு` எனவும்,
காலசங்கார மூர்த்திக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`முப்பத்தாறு தத்தவங்களுள் கீழ் நிற்பதாகிய நிலத்தின்கண் அமைந்த கோயிலிலே வழிபாட்டில் முனைந்து நின்ற மார்க்கண்டேய முனிவரை நாதமாகிய மேல்தத்துவ புவனத்தில் மேலான அபர முத்தராய்ச் சென்று வாழுமாறு கடைக்கணித்து, அவர் வழிபட்ட இலிங்கத் திருமேனியில் வெளிப்பட்டு அவர்மேல் வந்த காலனைக் காலால் உதைத்துத் தள்ளி, அருளோடு நீடு நிற்றல் வியப்பு` எனவும் உரைத்துக் கொள்க.
நாகராசன், குண்டலினி. இதனைப் பெண்பாலாகக் கூறுதல் மரபாயினும், `நாகராசன்` என்னும் வழக்குண்மை பற்றி ஆண்பாலாக ஓதினார். இரண்டாவது பொருட்கு, துவாரம் - வாயில்; கருவி. முதல் உரையுள் ``நோக்கி`` என்பது, அதன் காரியம் தோன்ற நிற்கும். `சிவபெருமான்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது. `அங் கியோகமாய்` என்பதில், யகரம் வருவழி இகரங் குறுகிற்று(தொல். எழுத்து, 411) `யோகியாய்` எனற்பாலதனை, ``யோகமாய்`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது. இறுதியில் `வியப்பு` என்பது சொல்லெச்சம். இங்ஙனம் சிலேடித்ததனானே, அட யோகம் செய்வார், வாழ்நாள் சிறிது நீட்டிக்கப் பெறுதலையும், சிவயோகம் செய்வார், ஞானம் பெற்று வீடு அடைதலையும் குறிப்பால் உணர்த்திச் சிவனது திருவருட் பெருமையை விளக்கினார் என்க. எனவே, சிவபெருமான் காலனைக் காலால் உதைத்த வரலாறு ` யோக மதத்தவர், சிவநெறியாளர்` என்னும் இருதிறத்தார்க்கும் ஏற்ற பெற்றியால் மேற்குறித்த இரண்டு உண்மை களையும் விளக்கி நிற்றல் பெறப்பட்டது.
மிருகண்டு முனிவர் புத்திரப்பேறு இன்மையால் தம் இல்லா ளோடும் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யச் சிவபெருமான் வெளிப்பட்டு `உங்கட்கு அறிவிலியாய் நூறாண்டு வாழும் மகன் வேண்டுமோ, அறிவுடையவனாய்ப் பதினாறாண்டு வாழும் மகன் வேண்டுமோ` என வினாவ, தவம் புரிந்த இருவரும், `அறிவுடைய மகனே வேண்டும்` என்றனர். அதன்படி கொடுத்து மறைந்த சிவபெரு மானது வரத்தின்படி அவர்கட்கு மார்க்கண்டேய முனிவர் பிறந்து, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பொழுது பதினாறா வது ஆண்டு வந்து அடைய, பெற்றோர் இருவரும் மகனைக் காணுந் தோறும் வருந்திக் கண்ணீர் விடுத்தனர். மார்க்கண்டேயர் அவர்களது வருத்தத்திற்குக் காரணத்தை அவர்பால் கேட்டறிந்து அவர்களிடம் விடைபெற்றுச் சென்று சிவபெருமானை இலிங்க வடிவில் பூசை செய் திருந்தார். அவருக்கு அளந்த நாள் முடிவில் கூற்றுவன் வந்து அவரை அழைக்க, அவர் சிவபெருமானையே தஞ்சமாக அடைந்து நின்றார். கூற்றுவன் அம்முனிவர் பற்றி யிருந்த இலிங்கத்தோடு அவரைப் பாசத் தாற் பிணித்து இழுத்தபொழுது, சிவபெருமான் அவ் இலிங்கத்தி னின்றும் வெளிப்பட்டுத் தமது இடக் காலால் கூற்றுவனை உதைத்துத் தள்ளி, மார்க்கண்டேயரை என்றும் பதினாறாண்டாக இருக்க அருள் புரிந்து மறைந்தார். இவ்வாறு இவ் வரலாறு கந்த புராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்கடவூர் வீரட்டம் என்பதை நாயனாரே அருளிச் செய்துள்ளார். இது காசியில் கங்கா நதியின் மணி கண்ணிகைத் துறையில் நிகழ்ந்ததாகவே கந்த புராணத்தில் சொல்லப் பட்டது. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால் சிவபெருமான் காலனை உதைத்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.

குறிப்புரை :

`இந்நிலை பல சமயத்தார்க்கும் பொது` என்பது பற்றி, `அருந்தவ யோகம்` எனப் பொதுப்படக் கூறிப் போந்தார். லிங்கம் - குறி. வழி - ஒழுக்கம். சிவபெருமான் காமனை எரித்த வரலாற்றால் அறியக் கிடக்கும் உண்மை வெளிப்படை என்பது பற்றி, இவ்வாறு இனிது விளங்க ஓதியொழிந்தார். ``அங்கண்`` என்றதன்பின் `நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. `குறுக்கை` என்பது, `கொறுக்கை` என மருவிற்று. `குறுக்கை என்பதே பாடம்` எனலுமாம். `சிவபெருமான் கொறுக்கை அமர்ந்தது, இருத்தி, போக்கி, அழித்து நிற்கும் யோகமே` என வினை முடிவு செய்க.
உமாதேவி, `தக்கன் மகள்` என்னும் நிலையை மாற்றிக் கொள்ள விரும்பிச் சிவபெருமானது அருளிப்பாட்டின்படி மலை யரையனுக்கு மகளாய்த் தோன்றி வளர்ந்து இமயமலையில் தவம் செய்துகொண்டிருக்க, சிவபெருமான் சனகாதி நால்வர் முனிவர்கட்கு உண்மை ஞானம் உணர்த்த வேண்டித் திருக்கயிலையில் தென்முகக் கடவுளாய் யோக நிலையில் இருந்த பொழுது, திருமாலின் சொற்படி, பிரமன் முதலிய தேவர்கள் தமக்குத் துயர் விளைத்த சூரபதுமனாதி அசுரரை அழித்தற்குச் சிவபெருமான் உமாதேவியாரைக் கூடி முருகப் பெருமானைத் தருதற் பொருட்டு அவருக்குக் காமத்தை விளைக் குமாறு காமவேளை ஏவினர். அவன் சென்று சிவபெருமான்மீது தனது மலர் அம்புகளை விடுத்தபொழுது, சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைச் சிறிதே திறக்க, அதினின்றும் புறப்பட்டுப் படர்ந்த தீயால் காமவேள் சாம்பராயினன். இவ்வரலாற்றைக் கந்த புராணம் விரித்துக் கூறும். இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்குறுக்கை வீரட்டம் என்பதையும் நாயனார் தாமே எடுத்தோதினார். இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால், சிவபெருமான் காமனை எரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.
சிவபெருமானது அட்ட வீரட்டங்களையும் அவை குறிக்கும் வீரச் செயல்களோடு கூறும் பழைய தனிப்பாட்டு ஒன்று வருமாறு:
பூமன் சிரம்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் கொறுக்கை, யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.
-தனிப்பாட்டு
(பூமன் - பிரமன். மாமன் - தக்கன். தேம் மன்னு - தேன் மிகுந்த. சேவகம் - வீரம்)
இவற்றுள் வழுவூர் ஒன்றும் வைப்புத்தலம்; ஏனைய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
இவ்வாறு நாயனார் ``வீரட்டம்`` எனச் சிறப்புப் பெற்றத் தலங்களைக் குறித்தருளினமையால், பிறவகையில் சிவபெருமானது அறக்கருணைச் செயல் மறக்கருணைச் செயல்களைக் குறிக்கும் தலங்களும், அவை பற்றிய வரலாறுகளும் சிவநெறி நிற்பார்க்கு இன்றியமை யாதனவாதல் அறியப்படும். இவ்வாற்றானே சமய குரவர் நால்வரும் தமது திருப்பாடல்களாலும், சென்று வணங்கிய திருநெறி ஒழுக்கத்தாலும், அதியற்புத விளைவுகளாலும் திருக்கோயில்களின் இன்றியமையாமையை இனிது விளக்கினமை கருத்திற் கொள்ளற் பாலது.

பண் :

பாடல் எண் : 1

அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே. 

பொழிப்புரை :

உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.

குறிப்புரை :

`அதனால் சிவபெருமான் யாவராலும் வழிபடத் தக்கவன் என்பது விளங்கும்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியை முதலிற்கொண்டு உரைக்க. ``அரசன்`` என்றற்கு ``முடிசேர் மலைமகனார்`` என்றார். ``உமையம்மை`` என்னும் எழுவாய் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உமையம்மையே சிவனை வழிபட்டமை கூறப் பட்டது. இத்தகைய தலங்கள் காஞ்சி முதலியனவாகச் சிறப்புற்று விளங்குதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே. 

பொழிப்புரை :

`முப்புரத்தை எரித்த முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மை போன்றார்க்கன்றி நம்மனோர்க்குக் கிடைத்தற்கரியன்` என்று தளர்ச்சி எய்த வேண்டா. அன்புடையார் யாவராயினும் அவர்க்கு அவன் எளியனே. அன்புடையார் பால் அருளுடையவ னாய் நின்று அவரவர்க்குத் தக்க வகையில் அவன் அருள் செய்வான்.

குறிப்புரை :

புரிவு - விருப்பம்; அன்பு, பொய், இங்கு அருமை. பரிவு - தன்மை; தகுதி. `அவரவர்க்குத் தக அருள்புரிவான்` என்றதனால்,`பயன் கருதியும் அவனை வழிபடலாம்` என்பது உணர்த்தப்பட்டதாம்.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ``யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை`` (தி.10 பா.251) என மேற்குறித்த வழிபாடு அவரவர்க்கு இயலுந் திறத்தால் சிவனுக்குச் செய்தல் தக்கது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. 

பொழிப்புரை :

மிக்க வலிமை பொருந்தித் தம்மில் போர்செய்த பிரமன், திருமால் என்னும் இருவரும் தம்முன் தீப்பிழம்பாய்த் தோன்றிய சிவபெருமானைப் பின்பு இலிங்கத் திருமேனியில் நெடுங் காலம் வழிபட, அவர்கட்குச் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரப் படையையும், பிரமனுக்குத் தண்டாயுதத்தையும் வழங்கி, முறையே, காத்தல் படைத்தல்களைச் செய்யுமாறு அருள்புரிந்தான்.

குறிப்புரை :

எனவே, குற்றம் செய்தலை இயல்பாக உடைய உயிர்கள் தாம் செய்த குற்றத்திற்குச் சிறந்த கழுவாய் (பிராயசித்தம்) ஆகச் செய்யத்தக்கதும் சிவ வழிபாடே என்றதாயிற்று. ஆழி இரண்டில் முதற்கண் உள்ளது `ஆழம்` எனப் பொருள்தந்து, மிகுதியை உணர்த் திற்று. வலம் இரண்டில் முன்னது வலிமை. அஃது அதனால் ஆகிய போரைக் குறித்ததது. `கொண்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வாள் - படைக்கலம். `வாள் பெற்றான்` என்றே கொள்ளுதலும் பொருந்தும்.
ஒருகற்பத்தில் பிரமனும், மாலும் தாம் தாமே உலகிற்கு முதல்வர் எனத் தருக்கிப் போர்புரிய, அவர்க்கு இடையே சிவ பெருமான் அடிமுடி அறியப்படாத அனற் பிழம்பாய்த் தோன்றியருள, அவ்விருவரும் `இதன் அடி முடிகளை அறிபவரே முதல்வர்` என வரையறுத்துக்கொண்டு அவற்றைக் காண முயன்றனர். திருமால் வராக வடிவங்கொண்டு நிலத்தைப் பிளந்து பல்லாயிரம் யாண்டு கீழ்சென்று அடியைக் காண முயன்று முடியாதவராய், `இது சிவ பெருமானது திருவிளையாடல்` என்று அறிந்து தருக்கொழிந்தார். பிரமன் அன்னப் பறவை உருவங்கொண்டு பல்லாயிரம் யாண்டு மேலே பறந்து சென்றும் முடியைக் காண இயலாதவனாய், திருமால் அடியைக் கண்டிருப்பார் என்னும் கருத்தினால் அவர்முன் வந்து `யான் முடியைக் கண்டேன்` என்று பொய் கூறினான். அவன் பொய்ம் மொழிக்குச் சான்றாகச் சிவபெருமானது முடியினின்றும் வீழ்ந்த தாழை மலர் நின்றது. பிரமன் பொய் கூறுதலைப் பொறாத சிவபெருமான் அக்கினித் தம்பத்தைப் பிளந்துகொண்டு உக்கிரவடிவத்துடன் காட்சி யளித்துப் பிரமதேவனுக்கு இவ்வுலகில் எங்கும் கோயில் உண்டா காதவாறு சபித்தும், தாழை மலரைத் தமக்கு ஆகாது என்று விலக்கியும் ஒறுத்தருளினார். பின்பு பிரமதேவன் அஞ்சி வணங்க, அவனுக்கு அந்தணர் இல்லமே கோயிலாகவும், அவரைப் பிறர் வழிபடும் வழி பாடே அவனுக்குச் செய்யும் வழிபாடாகவும் அருள் செய்தார். பின்பு, மால் அயன் இருவரும் வேண்டச் சிவ பெருமான் தம் வழிபாட்டிற் குரிய இலிங்கவடிவாயினார். அவ் வடிவில் இருவரும் சிவபெரு மானைப் பூசித்துப் பயன் பெற்றனர். இதுவே இலிங்கத் தோற்றத் திற்குப் புராணம் கூறும் வரலாறு. இவ் வரலாற்றை விரித்துக் கூறும் புராணமே இலிங்க புராணம். இதனைக் கந்த புராணம் ஓரளவில் கூறும். ``இலிங்க புராணம்`` என்பது ``சைவ புராணம்`` என்பதன் மறுபெயர்.
பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால்
பரமமியாம் பரமமியாம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
- தி.8 தோணோக்கம் , 12
என மாணிக்கவாசகர் இவ்வரலாற்றை எடுத்தோதியருளினார். ``திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி`` - தி.8 தெள்ளேனம், 1 என்று பிறவிடங் களிலும் குறித்தருளுவார். தேவாரத் திருமுறைகளுள் இவ்வரலாறு பயின்று வருதல் வெளிப்படை. திருநாவுக்கரசர் `இலிங்க புராணத் திருக்குறுந்தொகை` என ஒரு திருப்பதிகமே அருளிச்செய்தார்.
இதனால், சிவபெருமானே முதல்வனாதலை விளக்கும் இலிங்க வரலாறு கூறப்பட்டது. இதனானே அப்பெருமான், உயிர்கள் தன்னை வழிபடுதற்குக் கொண்ட வடிவங்களுள் இலிங்கத் திரு மேனியே சிறப்புடையதாதலும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது கயிலைப் பெருமலையைத் தூக்கி எறியக் கருதி இருபது தோள்களாலும் மேல் எழுமாறு தாங்கி எடுத்த இராவணனது நிகரில்லாத பேராற்றலைத் தனது கால் விரலால் விரைய ஊன்றி அவன், இறைவனே என்று அழைத்து அலறி முறை யிட்ட பின் அவனை விடுத்து, அழிவில்லாத வரத்தையும் கொடுத் தருளினான்.

குறிப்புரை :

இவ்வரலாறு இராமாயணம் உத்தர காண்டத்துள் சொல்லப்பட்டது.
இதனால், சிவபெருமான் இராவணனுக்கு மறக்கருணையும், அறக்கருணையும் செய்தமை கூறப்பட்டது. வழிபட்டவர்க்கே அறக்கருணை செய்வான் என்க.

பண் :

பாடல் எண் : 5

உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. 

பொழிப்புரை :

`செய்யத் தக்க செயல் இது` என்பதை முற்பிறப்பிற் செய்த தவமுதிர்ச்சியால் தெளிந்த தண்டீசநாயனார் மணலால் இலிங்கம் அமைத்து, வினை கெடும்வகையில் பசுவின் பாலையே எல்லாத் திருமஞ்சனப் பொருளுமாகக் கருதி ஆட்டி வழிபட, அவரைப் பெற்ற தந்தை தன்மகன் வேள்விக்குரிய பாலை வீணாக்கு வதாக நினைத்து வெகுண்டு ஒறுக்க வேண்டித் தண்டுகொண்டு அடித்து, அது பயன்படாமையால், இலிங்கத் திருமேனியைக் காலால் அழிக்க, நாயனார் சினந்து, தாம் ஆனிரை மேய்க்கும் கோலை எடுத்தபொழுது அதுவே மழுவாய் மறுவடிவங்கொள்ள, அதனாலே அவன் காலை வெட்டி, அதற்குப் பரிசிலாகச் சிவபெருமான் சண்டேசுர பதவியில் இருத்தித் தன் முடிமேல் இருந்து எடுத்துச் சூட்டிய கொன்றை மாலையைப் பெற்றார்.

குறிப்புரை :

எனவே, `சிவ வழிபாட்டின் மிக்க வழிபாடும் இல்லை; அதனை இகழ்தலின் மிக்க பாவமும் இல்லை` என்பதும், அங்ஙன மாகவே, `அவ்வழிபாட்டினை இகழ்வார் எவராயினும் அவரைப் பாவிகளாகக் கருதி ஒறுத்தல் பேரறமாம்` என்பதும் குறித்தவா றாயிற்று. தமிழ் நாட்டில் வரலாற்று முறையால் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வழங்கி வந்த இவ்வரலாற்றினை நாயனார் இத் திருமந்திரமாக ஆக்கியருளினார். இச்சிறப்புக் கருதித் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு, நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டு மன்றே.
-தி.3 ப.54 பா.7
என்று அருளிச் செய்தார்.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபரம் மணலால் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக்கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
-தி.4 ப.49 பா.3
என அப்பரும் இதனை வகுத்தோதியருளினார்.
இவையெல்லாம் பற்றித் தொகையாகவும், வகையாகவும் அவ்வக்காலத்தில் வெளிப்பட்ட திருத்தொண்டர் வரலாற்றினை விரிவாகச் செய்தருளிய சேக்கிழார் நாயனார் தமது திருத்தொண்டர் புராணத்துள் இவ்வரலாற்றை விரித்தருளியவாறு இது.
`சோழநாட்டில் திருச்சேய்ஞலூரில் வைதிக அந்தணர் குலத்தில் `எச்ச தத்தன்` என்னும் தந்தைக்கும், `பவித்திரை` என்னும் தாய்க்கும், `விசார சருமர்` என்னும் அரும்பெறற் புதல்வர் ஒருவர் தோன்றினார். அவர் முன்னைத் தவமுதிர்ச்சியால் கல்வியைச் சிறக்கக் கற்று, உபநயனம் பெற்று, வேதம் முதலிய கலைகளினும் வல்லவராய், `சிவபெருமானே முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து, அவனது திரு வடிக்கண் அன்பு மீதூர்ந்து நின்றார். அவர் ஒருநாள் பிற மாணாக் கருடன் வேதம் ஓதிச் செல்லுகையில் வழியில், அவ்வூர்ப் பசு மேய்க்கும் ஆயன், தன்னை முட்டிய பசு ஒன்றினைக் கோலால் நன்கு புடைத்ததைக் கண்டு வருத்தமும் சினமும் கொண்டு, `பசுக்களின் பெருமையை அறியாத நீ இனி இவற்றை மேய்த்தல் வேண்டா; இன்று முதல் யானே இவற்றை மேய்க்கின்றேன்` என்று அன்று முதல் அவ் ஆனிரைகளை அவரே மேய்த்து வருவாராயினார்.
அவர் அப்பசுக் களிடத்துக் கொண்ட உண்மை அன்பால் அப்பசுக்களும் அவரிடம் பேரன்பு கொண்டன. நல்ல மேய்ப்பினால் அவை தம்மை உடை யவர்க்கு முன்னையினும் மிகுதியாகப் பால் தந்தன. அதனால், `இம் மாணியின் மேய்ப்பே நல்ல மேய்ப்பு` என ஊர் அந்தணர் பலரும் மகிழ்ந்தனர்.
பசுக்கள் பலவும் விசார சருமரைக் காணும் பொழுது தம் கன்றினைக் கண்டாற்போல அன்பு பெருகி நின்றமையால், அவற்றின் மடியில் பால் தானாகவே விம்மிப் பெருகுவதாயிற்று. சிவ வழிபாடு ஒன்றற்கே உரிய பசுக்களின் பால் வீணாவதைக் கண்ட விசார சருமர், அதனைச் சிவபெருமானுக்கு ஆக்கக் கருதித் தாம் பசுமேய்க்கும் மண்ணியாற்றங்கரையில் மணல் இலிங்கம் அமைத்து அப்பாலைக் குடங்களில் ஏற்று ஆட்டி வழிபட்டார்.
இவ்வாறு நாள் பல செல்ல, இதனை அறிந்த ஒருவன், `பசுமேய்க்கின்ற சிறுவன் பாலைக் கறந்து மண்ணியாற்று மணலில் ஊற்றுகின்றான்` என்று அந்தணர்களிடம் சென்று கோள் உரைத்தான். அந்தணர்கள், தமக்குப் பால் குறைவறக் கிடைப்பினும், விசார சருமரது வழிபாட்டின் சிறப்பை அறியாத வர்களாய் அவர் தந்தையாகிய எச்ச தத்தனிடம் கூறினர். எச்ச தத்தன், `நாளைமுதல் இச்செயல் நிகழாதவாறு செய்கின்றேன்` என்று உறுதி கூறி, விசார சருமர் பசு மேய்க்கச் சென்றபின், அவர் அறியாதவாறு அவர் பின்னே சென்று மண்ணியாற்றங்கரையில் ஒரு குராமரத்தின் மேல் ஏறி மறைந்திருந்து, தன் மகனாரது செயல் பலவற்றையும் நோக்கி யிருந்தான்.
அவர் முன்புபோல மணலால் கோயிலும், இலிங்கமும் செய்து, பாலைக் கொணர்ந்து வைத்துப் பூ முதலியவைகளையும் சேர்த்துக் கொணர்ந்து வழிபாட்டில் அமர்ந்து அன்புடன் வழிபடுவா ராய்ப் பாலை எடுத்துக் குடம் குடமாக ஆட்டும்பொழுது எச்சதத்தன் சீற்றம் மிகுந்து இறங்கிச்சென்று மகனாரைவைது, கோல் ஒன்றினால் முதுகில் புடைத்தும் நின்றான்.
ஆயினும் அவற்றை விசார சருமர் பூசை நினைவால் அறிந்திலர். அதனால் எச்ச தத்தன் கோபம் மூண்டு சென்று, அவர் வழிபடும் மணல் இலிங்கத்தைக் (இலிங்கத்தை இடறினமையை வாயால் சொல்லுதலும் கூடாது என்று சேக்கிழார் பாற்குடத்தை இடறியதாகக் கூறினார்) காலால் சிதைத்தான். அதனால் மிக வெகுண்ட விசார சருமர், தம் பக்கத்திருந்த பசுமேய்க் கும் கோலை எடுக்க, திருவருளால் அது மழுவாயுதமாக மாறிற்று. அதனாலே அவர் எச்சத்தத்தனது இரண்டு கால்களையும் துணிந்து வீழுமாறு வெட்டினார். எச்சதத்தன் அலறித் துடித்து மண்ணில் விழுந்தான்.
விசார சருமர், `இனிச் சிவபூசைக்கு வரும் இடையூற்றை நீக்குவதற்குக் கருவியாக இம் மழுப்படை திருவருளால் கிடைத்தது` என்று மகிழ்ந்து மீளவும் சிவபூசைக்கு ஆவனவற்றைச் செய்ய முயன்றார்.
அப்பொழுது சிவபெருமான் தேவர், முனிவர், கணங்கள் புடைசூழத் தோன்றிக் காட்சியளித்து, `நம் பொருட்டு நின் தாதையைத் தடிந்த நினக்கு இனி நாமே தந்தை; நீ நம் மகன்` என்று திருவாய் மலர்ந்து, தம் கையால் அவரைத் தழுவி எடுத்து மார்போடு அணைத்து, உச்சிமோந்து சீராட்ட, விசார சருமர் முன்னை மாயா உடம்பு நீங்க, அருளுடம்பு பெற்றுச் சிவகுமாரர் ஆயினார்.
பின்பு சிவபெருமான், `நம்மை வழிபடுவோர் நமக்கு ஆக்கிப் பெறும் நின்மாலியப் பொருள்கள் உனக்கு மட்டுமே உரியனவாக` என அருளிச்செய்து, சிவனடியார் பலர்க்கும் தலைமையாய் அவர்கட்கு அவர் தம் திருத்தொண்டின் பயனை வழங்கும் சண்ட பதவியை அவருக்கு அளித்து, அதற்கு அடையாளமாகத் தமது திருமுடியில் உள்ள கொன்றை மாலையை எடுத்துச் சூட்டியருளினார்.
நாயனாரால் தண்டிக்கப் பெற்றமையால், எச்சதத்தனும், அவனைச் சார்ந்தோரும் சிவாபராதத்தால் `எரிவாய் நிரயம் புகாது நீங்கிச் சிவலோகத்தை எய்தினர்`.
`சண்டேசுரர்` என்பது இவரது பதவியாற் பெற்ற பெயர். கையில் தண்டு கொண்டு ஆனிரை மேய்த்து, அத்தண்டே மழுவாகப் பெற்றுப் பிழைசெய்தவனை ஒறுத்தமை பற்றி, `தண்டீசர்` எனவும் அழைக்கப்படுகின்றார். சிவகுமாரர் ஆயினமைபற்றி இவர், `பிள்ளையார் - சேய்ஞலூர்ப் பிள்ளையார்` எனப்படுகின்றார்.
திருத்தொண்டத் தொகை அடியவருள் ஒருவராயினமைபற்றி நாயன்மார்களுள் இவரும் அவருள் ஒருவராய் நின்று திருக்கூட்டத்து வழிபடப்படுதலே யன்றிச் சிவபெருமான் இவருக்கு அளித்த தனிச்சிறப்புக் காரணமாகச் சண்டேசுர நிலையில் நின்று தனி வழிபாடும் பெறு கின்றார்.
அதனால் இவரை நாயன்மார்களுள் ஒருவராகமட்டும் வைத்து வழிபட்டுச் சண்டேசுரராக வழிபடாது ஒழிபவர் சிவபெருமானது அருளாணையைக் கடந்தவராவர். அவர்கட்குச் சிவவழிபாட்டின் பயன் கிட்டுதல் அரிது.
இவ்வரலாற்றால் சிவவழிபாடு வீடுபேற்றைத் தரும் என்பது அறியப்படும். மற்றும், `சிவவழிபாட்டிற்கு இடையூறு விளைப்பாரை ஒறுத்தல் பெருஞ் சிவபுண்ணியமாம் என்பது இதனால் விளங்குவது` எனச் சேக்கிழார் திருப்பாசுரத் திருக்குறிப்பருளலில் குறித்தல் காண்க. (தி.12 திருஞான - 839)
`சிவனடியாரால் ஒறுக்கப்பெற்றவர் தம் குற்றம் முழுதும் நீங்கித் தூயராவர்` என்பது, நாயனாரால் தண்டிக்கப்பெற்ற எச்சதத்தன் குற்றம் நீங்கிச் சிவலோகம் புகுந்தமையால் அறியப்படும். `சிவ வழிபாடு நன்கு நடைபெறுதல் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் யாவும் சிறந்த சிவபுண்ணியங்களே` என்பதை மாணிக்கவாசகர்,
தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் சிவனருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.
-தி.8 தோணோக்கம் ,7
என நன்கு எடுத்து அருளிச்செய்தார்.
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்தசண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூ ருளானே. -தி.7 ப.55 பா.3
என்று நம்பியாரூரர் இனிது விளங்க எடுத்தருளிச்செய்தமை காண்க.
இதனால், சிவபெருமான் சண்டேசுர நாயனாருக்கு வியத்தகும் அறக்கருணை செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.

பொழிப்புரை :

தேவர் பலரும் பற்பல காலங்களில் பற்பல துன்பங்களை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டு அத்துன்பம் நீங்குதல் வேண்டி அப்பெருமானை அவன் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லி மலர்தூவிப் போற்றிசெய்து வழிபட, சிவபெருமான் அவர்களை அத்துன்பங்களினின்றும் நீங்கச் செய்தான்.

குறிப்புரை :

எனவே, `இங்கும், மேலேயும் கூறியவாறு தேவர், மூவர், முனிவர், அசுரர், இராக்கதர் முதலிய யாவரும் சிவபெரு மானை வழிபட்டே தாம் கருதிய பயனை அடைந்தனர்` என்பது முடித்துக் கூறியவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

பொழிப்புரை :

தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.

குறிப்புரை :

இது முதலாகக் கூறுவன பலவற்றையும் கந்த புராணத்துட் பரக்கக் காண்க. `வெந்தழல் ஊடே புறப்பட` என்பதை முதலிற் கொள்க. `குண்டத்தின்` என்பது வருவிக்க. `பிரானை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. வெகுண்டானாகிய தக்கன் என்க. `முந்திய பூசையால்` என உருபு விரிக்க. `முடியார்` என்றது முற்றெச்சம். `கெடுதலால்` என்பது, `கெட்டு` எனத் திரிந்து நின்றது.
இதனால், அச்சம் காரணமாகச் சிவநிந்தையைத் தடுக்க மாட்டாது உடன்பட்டிருந்த தேவரைச் சிவபெருமான் ஒறுத்து முறைப் படுத்தினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே. 

பொழிப்புரை :

வீரபத்திரர் தன்மேற்கொண்ட சினந்தணிந்து நின்றதை அறிந்து அச்சம் நீங்கி எழுந்த மாயோன் `எம் தந்தையே; நாங்கள் இத்தக்கன் போலச் சிவநிந்தை செய்பவர் அல்லேம்; (ஆதலின், எங்களைத் துன்புறுத்தாதீர்)` என்று சொல்லி மண்ணில் பதிந்த அவரது பாதங்களில் வீழ்ந்து துதிக்க, சிவனேயாயுள்ள அவரும் அவன்மேல் இரக்கங்கொண்டு ஒறுத்தலை ஒழிந்தார்.

குறிப்புரை :

வீரபத்திரர் மாயோனை வெகுளாது சினம் தணிந்தது, அவர் அவனை ஒறுக்கச் சென்றபொழுது சிவபெருமான், வான் மொழியாக, `சினம் தவிர்தி` என்று கூறினமையாலாம். `எழுகின்ற` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. தான், அசைநிலை. உம்மை, சிறப்பு. ``யாமே`` என்ற ஏகாரம் அசைநிலை. இதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது. பந்தம் - சம்பந்தம். `உலகினில் பந்தம்செய் பாதம்` என்றது, அவ்வாறாதலின் அருமை குறித்தவாறு. `பாசம்` என்பது பாடம் அன்று. ``தவம்`` என்பது துதியை.
இதனால், சிவபெருமான் மாயோனது பிழையைப் பொறுத்து அவனுக்கு அருள்செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே சிவ நிந்தை செய்பவனாகிய தக்கனது தலைமையான வேள்வியில் அக்கினி தேவன் ஏனையோர் வேள்வியிற் போலவே கிளர்ந்தெழுந்து தன் கடமையைச் செய்யமுற்பட்டது வியப்பு என்றாலும், தக்கனோ டேயன்றி ஏனைத் தேவரோடும் மாறுபடுதற்கு அஞ்சிய அவனது நிலைமையைத் திருவுளத்தடைத்து அவனுக்கு அளித்திருந்த ஆற்றலை மாற்றாது சிவபெருமான் வாளா இருந்தான்.

குறிப்புரை :

`அயன்` என்பது தக்கனுக்கும் பெயராய் வழங்கும். பதி - தலைமை. `அந்நீர்மை` எனற்பாலதனை, ``அது நீர்மை`` என்றார். `அப்பரிசாய அந்நீர்மை` என்க; ஆலித்தல் - மகிழ்தல்; இசைந்திருந்தல். இதனால், சிவபெருமான் அக்கினிதேவனை மன்னித் தருளினமை கூறப்பட்டது. அக்கினி தேவன் கையை வெட்டினமை திருவாசகத்துத் திருவுந்தியாரில் கூறப்பட்டது. `அது பெருந் தண்டம்` அன்று என்னும் கருத்தால் அவனது சுடும் சத்தியை மாற்றாதிருந்தமை கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 4

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே. 

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே அயன், மால் முதலிய தேவர் பலரும் சிவனை நிந்தியாதொழியினும், நிந்தித்த தக்கனைத் திருத்தமாட்டதவராயினர். அன்னராயினும், தக்கனது வேள்வியில் அவர் ஒருங்கு கூடியிருந்து அவனுக்கு ஊக்கம் மிகச் செய் தமைக்குக் காரணம், தானும் அவர்போலவே அச்சங் கொண்டவனா கிய அக்கினி தேவன், ஏனை இடங் காலங்களிற் போலவே தன் கடமை யுட்பட்டுத் தன் செயலைச் செய்யக் கிளர்ந்து நின்றமையேயாம்.

குறிப்புரை :

`காரணமாவது` என்று தொடங்கினமையால், `அலர்ந் திருந்தான்; அதுவே` என உரைக்க. உள நாள் - பிற இடங்களில் உள்ள காலம். ``நாளும்`` என்பது பாடமாயின், ``உள்ள பல நாள்களிலும் போல`` என உரைக்க.
இதனால், தக்கன் வேள்வியில், குற்றத்திற்கு ஆளானவருள் அக்கினி தேவன் முதல்வனாயினமை கூறி, அவ்வாறாகவும் மன்னித் தருளினமை குறிக்கப்பட்டது. அக்கினிதேவன் தன் காரியத்தைச் செய்யாதொழியின், வேள்வி நடத்தற்கே வழி இல்லையாதல் அறிக.
`தேவர் பலர்க்கும் இடும் அவியைத் தான் சுமக்கலாற்றாத அக்கினிதேவன் ஒருமுறை நீருள் ஒளிந்துகொள்ளத் தேவர் பலரும் வருந்தித் தேடியபொழுது மீன்கள் சில அவன் நீருள் ஒளிந்திருத்தலை அறிவிக்க, அறிந்து அவனைப் பிடித்துச் சென்றனர்` என்பதொரு வரலாறு காஞ்சிப் புராணச் சகோதர தீர்த்தப் படலத்துள் கூறப்படுதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே. 

பொழிப்புரை :

அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளி யாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.

குறிப்புரை :

வைதிகருள் கருமகாண்டிகள், தேவர் பலர்க்கும் அவரது அவியைச் சுமந்து சென்று கொடுத்தல்பற்றி அக்கினி தேவனை, `தேவர் பலர்க்கும் கீழ்ப்பட்டவன்` - விண்டு பரமன். அக்கினி அவமன்: அவ்விருவர்க்கும் இடையே எல்லாத் தேவரும் (சிவஞானபோத மாபாடியம் சூ.1 அதி.2) என்பர். அவர் கொள்கையே தக்கன் வேள்விக்குப் பொருந்தியது ஆதலின், ``குலந்தரும் கீழ் அங்கி`` என்றார். `குலத்தால் தரப்பட்ட கீழ்மையை உடைய அங்கி` என்க. கோள் - குற்றம். சிவந்த - கோபித்த. சிவத்தற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. சிவந்த இது - சினந்ததனால் வந்த இத் தீ. `அது` எனின், அக்கினி தேவனைச் சுட்டுமாகலின், `இது` என்றார். ``கீழ் அங்கி`` என்றதற்கு ஏற்ப, ``பரம் இது`` என்றார். கீழான தீ மேலான தீயின்முன் நிற்கலாற்றுமோ என்பது நயம். சிவபெருமானது சினத் தீயாவது, வீரபத்திரரே என்பது வெளிப்படை. ``தீ`` என்றதற்கு ஏற்ப, ``கதுவ`` என்றார்.
இதனால், தக்கன் வேள்வியுள் ஓட்டமெடுத்தவருள் முதல்வன் அக்கினிதேவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

பொழிப்புரை :

சிவபெருமானது கருணையைப் பெறாமையால், தலை, முகம், கை, தோள் என்பவற்றை இழந்த குற்றவாளிகள் முறையே, `மால், அயன், தக்கன்` என்பவரும், சூரிய சந்திரர் கலை மகளும், அக்கினிதேவனும், அழகிய இந்திரனும் ஆவர்.

குறிப்புரை :

``தலை`` என்றதைத் திருமாலுக்கு `தலைமை` என்ற வாறாகக் கொள்க. எண்ணொடுவின் பொருட்டாகிய ``உடனே`` என்ற தனால், `சூரிய சந்திரர்` என ஒரு தொகையாக்குக. வாலை - வெண் ணிறம் உடையவள். இதனைத் தக்கன் மனைவிதன் பெயர் என்பாரது உரைக்குச் சான்றில்லை. தக்கன் மனைவி பெயர், `வேதவல்லி` என்றே கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இதனுள்ளன்றித் திருவாசகத்தும்,
``நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகனெரித் துந்தீபற;
தொல்லை வினைகெட உந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 13.
என நாமகள் நாசி அறுபட்டமை கூறப்பட்டது. `முகம்` என்பது `வாய்` எனவும் பொருள்தருமாகலின், அதனை இரட்டுற மொழிந்து, `அருக்கன் (சூரியன்) பல்லிழந்தான்` என்க.
``சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற;
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 15
என்றருளினமை காண்க.
இந்திரன் போகியாதலைக் குறிக்க, `நல் இந்திரன்` என்றார். ``நல்லோர்`` என்றது இகழ்ச்சி பற்றி.
இதனால், தக்கன் வேள்வியில் தேவர் பலரும் பலவாற்றால் ஒறுக்கப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

பொழிப்புரை :

தம் ஆசிரியர் தம் செவியிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருளறியாது ஒப்புவிக்கின்ற அதனையே தவமாகக் கொண்ட நிலத்தேவர் (பூ சுரர்) ஆகிய அந்தணர்கள் அந்நிலை பிறழ்ந்து தக்கன் ஆணைவழியே யாகசாலை அமைத்து, அதில் நெருப்புக் குண்டம் விளைத்து, சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைப் பிறரைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களாக மாற்றும் முகத்தால் அப்பெருமானை இகழ்ந்து, தாங்கள் நலம் பெற நினைத்து மிகச் சொல்லிய மந்திரங்கள், அவரையே கொல்கின்ற மரண மந்திரங்களாய் விட்டன.

குறிப்புரை :

அவி மந்திரம் - அவிசை வழங்கும் இல்லம். யாக சாலை. அடுக்களை - அட்டில்; என்றது தீக் குண்டத்தை. சவித்தல் - சபித்தல்; இகழ்தல். மூன்றாம் அடியிலும், செவி மந்திரம் என ஓதுதல் பாடம் அன்று. குவி மந்திரம் - குவித்த மந்திரங்கள். ``கொடியது`` என்றது பன்மை மயக்கம். ``ஆம்`` என்றது, `அவை அன்னவாதல் இயல்பு`` என்றவாறு.
இதனால், சிவபெருமானை இகழ்ந்தவர்க்கு மந்திரங்கள் கேடு விளைத்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 

பொழிப்புரை :

நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.

குறிப்புரை :

அவ்வாறாக, அத்தேவர் தக்கன் வேள்வியில் அவியை உண்ண அப்பெருமானை விலக்கித் தாம் மட்டுமே சேர்ந்திருந்தது என்னை` என்பது குறிப்பெச்சம். மாணிக்கவாசகரும் இவ்வாறே,
``சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா இடும்நம் மவர் அவரே``
- தி.8 திருச்சதகம், 4
எனத் தேவரது இரங்கத்தக்க நிலையை எடுத்தோதியருளினார். `நல்லோர் இன்புற` என இயையும். `நவகுண்டம்` என்பது பாடம் அன்று. ``ஒன்பதும்`` என்றது, `முழுதும்` என்றவாறு. `ஒன்பதன் கண்ணும்` என உருபு விரிக்க. நாவலம்பொழில் ஒன்பது கண்டமாதல் பற்றி, உலகத்தை `நவகண்டம்` எனக் குறித்தல் வழக்கு. ஐ - தலைவன். `ஐயே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `பொன்றும்படிக்கு விளங்கு எரி கோத்தனன் வில்லார் வரை ஐ` எனக் கூட்டுக. மூன்றாம் அடியின் பாடம் பலபட ஓதப்படுகின்றன.
இதனால், தேவர்கள் தக்கன் வேள்வியில் சென்றமை நன்றி கோறலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே. 

பொழிப்புரை :

சிவபெருமானை இகழ்ந்தமையால் அப்பொழுதே செத்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு வைதும், பின்னர் அழிந்த அனைவரையும் மீள எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யாவர் தங்கள் மனத் திட்பத்தை இழந்து நிலைகலங்கிப் பிறரைச் சார்ந்தபோதிலும், நீ நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெரு மானையே யன்றோ!

குறிப்புரை :

படர்க்கையில் வைத்து வியக்கற்பாலளாய உமா தேவியை முன்னிலைப்படுத்து வியந்தார், அச்சுவை மிக்கு விளங்குதற் பொருட்டு, பின் இரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. நெளிதல் - நெகிழ்தல். `தெளிந்தார்` என்பது பாடம் அன்று. `ஆர் நெளிந்து கலங்கினும்` என மாற்றுக. அளிந்து - அன்பு மிக்கு. `ஆதிப் பிரானையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``விளிந்தான்`` என்றது துணிவு பற்றி எதிர்காலத்தை இறந்த கால மாகக் கூறியது. சுளிந்து - வெகுண்டு. `சுளிந்துகூறி` என ஒரு சொல் வரு விக்க. தக்கன் தனது வேள்வியைத் தொடங்கிய பொழுது, உமை அம்மை தன்னை அவன் அழையாதிருக்கவும் சென்று அவனுக்கு அறிவுரை கூறியும் கேளாமையால், அவனது வேள்வி அழியும்படி சபித்து மீண்டமையும், பின்னர் வீரபத்திரரால் யாவரும் அழிந்து கிடந் தமையைச் சிவபெருமானுடன் அங்கு அவள் எழுந்தருளியபொழுது கண்டு இரக்கம் உற்று அவர்களை உயிர்ப்பித்தருளுமாறு சிவபெரு மானை வேண்டினமையும் கந்தபுராணத்தால் அறிகின்றோம். அம்மையை வியக்கும் முகத்தால் தேவரது இழிபுணர்த்தியவாறு. இதனால், உமாதேவி தனது செயலால் ஏனையோர்க்கு உண்மை யுணர்த்தினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 

பொழிப்புரை :

கரிய மலைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு மேல் எழுந்து பரந்த பிரளய வெள்ளத்திடையே மால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே (தி.10 பா. 345) காட்டப்பட்டது. கோ - தலைவன். இது பன்மை ஒருமை மயக்கமாயிற்று. `ஆகிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், பிரளய காலத்தில் அயன் மால் இருவரும் இகலினமை இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிரளய வெள்ளத்தில் மேற்கூறிய வாறு அனற்பிழம்பாய்த் தோன்றியபொழுது அலைகின்ற கடலை ஊடறுத்துக் கீழ்ப்போகியும், வானத்தை ஊடறுத்து மேற்போகியும் அடி தலை தெரியாவகை நின்று, `தேவர்க்கும் முதல்வன்` என்னும் சிறப் பினைத் தான் உடையவனாய் இருத்தலின், உலகம் தான் கொண்ட தழல் வடிவைக் கண்டு வெருண்டு அதனுள் வீழ்ந்து ஒடுங்காதவாறும், அதனினின்றும் சேய்மையில் ஓடிப் பிரளய வெள்ளத்தில் வீழ்ந்து அழியாதவாறும் அவற்றிற்கு, ``அஞ்சல்`` என்று அபயந்தந்து காத்தருளினான்.

குறிப்புரை :

எனவே, `தெறலும், அளியும் அவ்வவர்க்கு ஏற்ற வாற்றாற் செய்யும் அவனது தலைமைப் பாடு இனிது விளங்கும்` என்றவாறு.
`கொள்ளுதலால்` என்பது `கொண்டு` எனத் திரிந்து நின்றது. தான் தலைவன் எனப்படுதலால் அவனுக்கு உளதாவது ஒரு பயன் இல்லை. அனைத்தையும் உய்விக்கும் சுமையே உளதாவது என்றற்கு, ``தலைவன் எனும் பெயர், தான் தலை மேற்கொண்டு`` என்றார். இதற்குக் காரணம் கைம்மாறு கருதாத கருணையே என்பதாம். ``எடுத்துச் சுமப்பான்`` என்றார் திருவருட்பயனில் (பா.65).
இதனால், சிவபெருமான் தெறலும் அளியும் அக்காலத்துச் செய்து நின்றமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :

தண்ணிய கடல் பொங்கி வந்து மலைகளை மூடிய நிலையின் நீங்கி அடங்கிற்று; எனவே, பிரளய வெள்ளம் வற்றிற்று. அதுபொழுது தேவர்கள், `ஏழ்கடலோடு பெரும்புறக் கடலும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் ஓங்கிய அழலாய் நின்றவன் எங்கள் சிவபெருமானே` என அவனைப் பலவாற்றால் துதித்து வணங்கினர். அதன்பின்பு அவர்கள் விண்ணுலகத்தைக் கடல்போலப் பரக்க அமைத்துக்கொண்டு, அங்குச் சென்று குடிபுகுந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் சுவர்க்க இன்பத்தில் திளைக்கின்றனரேயன்றிச் சிவபெருமானை நினைந்து காதலாகிக் கசிந்து, கண்ணீரால் கடலை உண்டாக்கும் எண்ணமே இலராயினர்.

குறிப்புரை :

`இறைஞ்சுவர்` என்பது பாடம் அன்று.
இதனால், ஊழிதோறும் உயிர்கள் சிவபெருமானது முதன்மையை மறந்து வினையிற் சுழலுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான். இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை ஏற்குமாற்றாற் கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் ஒருபெற்றியனாய் நிற்பவனும் ஆகிய அப்பெருமானை அத்தன்மையன் என்று அறிந்து துதித்து உளத்துள் இருத்த வல்லவர் இவ்வுலகத்து உளரோ! இல்லை.

குறிப்புரை :

பின் இரண்டு அடிகளை முதலிற்கொண்டு உரைக்க. சயம்பு `சுயம்பு` என்பதன் திரிபு. சுயம்பு - தானே தோன்றியவன். `உலகத்து உளாரே` என்னாது, `உலகத்துள் ஆரே` என்றலுமாம். அது மிகாமை அங்கி வைத்தான் என்க. இக்கருத்து முன்னேயும் (தி.10 பா.57) கூறப்பட்டது. இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், சிவபெருமான் ஊழி முதல்வனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளியபொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான் தாழ் வின்றிச் சிறந்து நிற்கின்ற இடமாகிய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக் கின்ற பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.

குறிப்புரை :

``பண் பழி`` என்றதற்கு, `பண்ணாற் பழிச்சுதல்` என உரைக்க. `இப் பழிச்சுதலாகிய வழிபாட்டினைச் செய்தவை வேதங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, ``பண்`` என்றதனை ஆகுபெயராக்கி, `வேதம்` என்று உரைப்பினும் ஆம். முதற்கண் `சென்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். கண் - இடம். சென்ற - கழிந்த. பழியாத - இகழப்படாத; என்றது, `புகழத் தக்க` என்றவாறு. இத்தகைய சிறந்த இடத்தில் இருப்பவன் அதற்கேற்ற அறிவுபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பு. நண்பழி, வினைத் தொகை. ஆளன் - அதனை உடையவன். ``சென்று`` என்றது, சென்று கொய்த தன் காரியம் தோன்ற நின்றது. `சிரத்தின்கண்` என உருபு விரிக்க. பழியாத விருத்தி - இகழாமைக்குக் காரணமான தொழில்.
இதனால், மேல், ``அயன்தலை முன் அற`` (தி.10 பா.337) என ஓதப்பட்ட வரலாறும் இப்பொழுதே நிகழ்ந்தது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே. 

பொழிப்புரை :

`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.

குறிப்புரை :

`சக்கரம் மேல்போக ஏழும் படைத்துள்ளான்` என்றாரேனும், `ஏழு பார் போகமும் படைத்து அவற்றை நிலை நிறுத்தச் சக்கரம் மேற்போக அளித்துள்ளான்` என்றல் கருத்து என்க. போதகன் - போதிப்பவன். இதற்கு `அறம்` என்னும் செயப் படுபொருள் வருவித்துக்கொள்க. திருமால் அறத்தைப் போதித்தல் சில நூல்களாலும், கொடியோரை அழிக்கும் செயலாலுமாம். கால் போது - வெளிப்படுத்தும்பொழுது: என்றது, `செருக்கினால் அறத்தை அழிவுசெய்து ஒழுகும்பொழுது` என்றதாம். ``அங்கையினோடு`` என்றது, `வறுங்கையால் போர் செய்யாது வலியதொரு கருவி கொண்டு போர் செய்தற்கு` என்றபடி. அம் - அழகு. தரம் - மேன்மை. `மேல் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுச் சிவபெருமான் உண்டாக்கியதாகக் கூறிய சக்கரத்தைத் திருமால் பெற விரும்பிச் சிவபெருமானை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச் சித்து வழிபட்டு வர, ஒருநாள் அவற்றுள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்தருளத் திருமால், அம்மலருக்கு ஈடாகத் தமது கண்ணைப் பறித்து அப்பெருமான் திருவடியில் சாத்தினார். அதனால் மகிழ்ச்சி யுற்ற சிவபெருமான் அவருக்கு அக்கண்ணை அளித்து, அவர் விரும்பிய அச் சக்கரப் படையையும் அளித்தருளினார்` என்பதும் கந்த புராணத்துள் அங்குத் தானே கூறப்பட்டது. கண்ணைத் தாமரை மலராகச் சாத்தினமையால், திருமாலுக்குச் சிவபெருமான், `பது மாட்சன்` (தாமரைக் கண்ணன்) என்னும் பெயரையும் அளித்தார் என்பது, காஞ்சிப் புராணத் திருமாற்பேற்றுப் படலத்துட் கூறப்பட்டது.
இவ்வரலாறு,
சலமுடைய சலந்தரன்ற னுடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ,
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
-தி.8 திருச்சாழல், 18
எனவும்,
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.
-தி.8 திருத்தோணோக்கம், 10
எனவும் திருவாசகத்து எடுத்தோதப்பட்டது.
இதனால், திருமால் தமது காத்தல் தொழிலை இனிது நடத்தற் பொருட்டு அவருக்குச் சிவபெருமான் சக்கரம் அளித்தருளினமை கூறப்பட்டது. இவ்வரலாற்றைக் குறிக்கும் தலங்கள் திருவீழி மிழலையும், திருமாற்பேறுமாம். இதனை ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்களால் அறிக.

பண் :

பாடல் எண் : 2

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே. 

பொழிப்புரை :

சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.

குறிப்புரை :

இவ்வரலாறு இந்நூலாலே அறிகின்றோம். `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``செய்தது`` என்றதன்பின், `வியப்பு` என்பது எஞ்சிநின்றது.
இதனால், சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரத்தை அளித்ததேயன்றி, அதனைத் தாங்கும் ஆற்றலையும் அளித்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

பொழிப்புரை :

சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத் தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற்பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.

குறிப்புரை :

`அவனது கருணைப்பெருக்கு அளவிடற்கரிது` என்பது குறிப்பெச்சம். `சிவபெருமான்` என்பதுதோன்றா எழுவாயாய் நின்றது. `சத்தி` என்பது மூன்றாம் அடி முதலிலும் சென்று இயைந்தது.
இதனால், இயைபு பற்றி சிவபெருமானது வள்ளன்மையின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 

பொழிப்புரை :

தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.

குறிப்புரை :

இவ்வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க. `வட்கி` என்பது திரிந்து நின்றது. உமிழ்தலுக்கு, `வலிமை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. வாய் உக்கிரம், உங்காரம்.
இதனால், சிவபெருமானது ஆற்றற் சிறப்பு அவ்வாற்றானே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. 

பொழிப்புரை :

இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.

குறிப்புரை :

``ஏந்தி`` என்பது பெயர். வினையெச்சமாகக் கொண்டு எழுவாய் வருவித்தலுமாம். வலம் - வெற்றிப்பாடு. `பல் வானவர்` என இயையும். ``வலம்`` என்ற எழுவாய், ``ஆதி`` என்றதன்பின் எஞ்சி நின்ற `என்னும்` என்பதனோடு முடிந்தது.
`சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், ஒருகாலத்தில் சேர இறக்கும் பிரம விட்டுணுக்களது கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான்` என்பது, `அவர் யாவரும் வினைவயத்தால் பல்காலும் பிறந்து இறக்கின்ற பசுக் கூட்டத்தினரேயாகத் தான் ஒருவனே பிறப்பு இறப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் நின்று அனைத்துயிர்கட்கும் பந்தம் வீடுதரும் பதியாகின்றான் என்பதை விளக்கும்` என்பது கூறியவாறு. மாணிக்க வாசகரும்,
நங்காய்இ தென்னதவம், நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ!
கங்காளம் ஆமாகேள்; காலாந் தரத்திருவர்
தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ
-தி.8 திருச்சாழல், 11
என்று அருளிச்செய்தார்.
`அரிபிரமேந்திராதி தேவர் பலரும் நிலையாமையுட்பட்ட பசுக்களேயாகச் சிவபெருமான் ஒருவனே என்றும் ஒருபெற்றியனாய பதி` என்பதனைத் திருநாவுக்கரசர்,
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. -தி.5 ப.100 பா.3
என விளக்கியருளினார்.
`எலும்பையும், தலையையும் அணிந்த கோலம் மேற்குறித்த உண்மையேயன்றி, அவன் காரியப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலையும் உணர்த்தும்` என்பது பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது. இதனானே, `சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்` என்பதும் கொள்ளப்படும்.
சிவபெருமான் கங்காளத்தை ஏந்தி நிற்றலைக் குறிக்கும் தலங்களே `காயாரோகணம்` எனப்படுகின்றன. காயாரோகணம், `காரோணம்` என மருவி வழங்கும்.
இதனால், `சிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன்` என்பதன் உண்மை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.345) `நானே பிரான்` என மாற்றித் தனித்தனிக் கூட்டி உரைக்க. பின்னும், ``பிரமன் மால்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. தங்கள் தம் பேதைமை - தம் தம் பேதைமை. `பேதைமையாலே நிற்க` என்றது, ``கள்வனால் திரண்டனர் மக்கள்` என்பதுபோல நின்றது. ``அரனடி தேடி`` என, அடியை மட்டுமே குறித்தது, அவ்வரலாற்றைத் தொகுத்துக் கூறியபடி. ``அரற்றுகின்றாரே`` என்பதே பாடமாக ஓது கின்றனர்.
இதனால், சிவபெருமான் பேதைமையாளர்க்கு அறிய ஒண்ணாதவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :

மாலும் பிரமனும் முறையே சிவசோதியின் அடியையும், முடியையும் காண முயன்று அவற்றின் உருவத்தைக் காணமாட்டாதவராய் மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து கூடிய பின்பு, திருமால், `நான் அடியைக் காணவில்லை` என்று உண்மையைச் சொல்ல, பிரமன், `நான் முடியைக் கண்டேன்` என்று பொய் சொன்னான்.

குறிப்புரை :

`அதனால் அவன் இவ்வுலகில் தனக்குக் கோயில் இலனாயினான்` என்பது குறிப்பெச்சம். `அடி, முடி` என்றவற்றை ``அயன் மால்`` என்பவற்றொடு எதிர்நிரனிறையாக இயைத்தல் வேண்டும் என்பது பின்னிரண்டடிகளில் விளங்கும். இத்திருமந்திரம் பாயிரத்ததாகாது, ஈண்டையதே என்பதுமேலே குறிக்கப்பட்டது.
இதனால், மால், அயன் என்னும் இருவரது தகுதி வேறு பாடுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே. 

பொழிப்புரை :

விரிந்த பரந்த அனைத்துலகிலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்ற சிவபெருமான், பிரம விட்டுணுக்களது போர் காரணமாக அவ்விடங்களிலெல்லாம் பெரிய அனற் பிழம்பாய் நின்ற ருளினான். நின்றும் அவனை அவ்விடங்களில் ஓரிடத்தும் ஒருவரும் கண்டிலர். ஆயினும், நான் அவனை எல்லா இடத்திலும் காண் கின்றேன்; அது நான் அவனுக்கு ஆட்செய்கின்ற முறைமையாலாம்.

குறிப்புரை :

`ஆம், தாம்` என ஓதுவன பாடம் அல்ல. ஆன் - அவ் விடம். இவ்வாறு சேய்மையாகச் சுட்டியது உலகத்தின் பரப்பு உணர்த் துதற்கு. ``யானே அறிந்தேன்`` என்றமையால், பிறர் அறிந்திலர் என்பது இனிது விளங்கிற்று. அடிமுடி காணாமையேயன்றி, `அது சிவ சோதி` என்பதனையும் அறியாது திகைத்தமையின், `பிறர் அறிந்திலர்` என்றும், எவ்விடத்தும் எப்பொருளையும் நாயனார் சிவமாகக் காணுதலால், ``யானே அறிந்தேன்`` என்றும், `சிவனை அறிதல் அவனுக்குத் தொண்டு புரிந்து நிற்பதனாலேயன்றிப் பிற ஆற்றல்களால் அன்று` என்பதற்கு, `அவன் ஆண்மையாலே` என்றும் கூறினார். இக்கருத்தையே திருநாவுக்கரசு நாயனார் தமது இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையிலும் (தி.5.100) பலபட வகுத்தோதினார். சேக்கிழாரும் இவ்வரலாற்று உண்மையை,
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாய கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்.
-தி.12 பெ.பு. திருஞான., 78
என விளக்கினார்.
தேடிக் கண்டு கொண்டேன்; - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன். -தி.4.ப.9.பா.12
என்று அருளிச்செய்ததும் இக்கருத்தினைப் புலப்படுத்துவதாம். ``அவன்`` என்பதில் தொக்குநின்ற ஆறாவது, நான்காவதன் பொருளது. ஆள்மை - ஆளாம்தன்மை.
இதனால், மாலும், அயனும் அடிமுடி காணமாட்டா ராயதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

பொழிப்புரை :

இயல்பாகவே பல உடம்புகளாயும், அவ்வுடம்பில் உள்ள உயிர்களாயும், அவ்வுயிர்களினுள் அறிவொளியாயும் எல்லை யற்ற தனது பேராற்றலால் நிறைந்து நின்ற வடிவமே, பிரம விட்டுணுக்களின்முன் அண்டத்தைத் தாங்குகின்ற தூண்போல்வதாய் நீண்டு, சூரியசந்திர மண்டலங்களைக் கடந்து, தன்னால் ஆளப் படுகின்ற அண்டம் முழுதும் ஊடுருவ நின்றான் அம் மணிகண்டன்.

குறிப்புரை :

`அதனால், அவனது வியாபகத்துள் ஒரு பகுதியிலே அடங்கிக் கிடப்பவராகிய பிரம விட்டுணுக்கள் அவனை அளவிடுதல் எங்ஙனம் கூடும்` என்பது குறிப்பெச்சம். முன்னம் - முன்பே. ``தாணுவும்`` என்புழி, `ஆய்` என்பது விரிக்க.
``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 10
``பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
என்றாற்போலும் திருமொழிகளும் சிவபெருமானது அளவிடப்படாத பெருநிலையை விளக்க எழுந்தனவாம். ``ஆகி`` என்றதனை, `ஆக` எனத் திரிக்க. இது முதலாக இவ்வதிகாரத்தில் உள்ள திருமந்திரங்கள், `சாருவோபாதாளம்` என வேறோர் அதிகாரமாகச் சில பிரதிகளில் உள்ளன என்பர். ``திருவுரு`` என்பதில் உரு, நிலை. முன்னை மந்திரத்தில் உள்ள `மணிகண்டன்` என்பதைச் சுட்டுவதாகிய `அவன்` என்பது தோன்றா எழுவாய்.
இதனால், சிவபெருமானது பெருமை கூறும் முகத்தால், பிரம விட்டுணுக்களது சிறுமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான், மண்ணும், விண்ணும் ஆகிய உலகம் முழுதும் நின்றும் வளர்ந்தும் நிற்பவன் அல்லனோ! அதனால், அவனது திருவுருவத்தைக் கண்டு பிரம விட்டுணுக்கள் இருவரும் அஞ்சுதலும், அறியாமையால் அதனை அளந்தறியச் சென்றவழி எய்த்து வருந்துதலும் இயல்பே.

குறிப்புரை :

``அவன்`` என்றதனைத் தாப்பிசையாக முதலிலும் கூட்டி எழுவாயாக்குக. நீளியன் - நீண்டிருப்பவன்; ``திருமுடி மேல் செல, கழலடி நாட ஒண்ணாது`` என்றது, திருமுடியை அறிந்தார் ஒரு வருமிலராயினும், ``திருவடியை அறிந்தார் பலர்; அதுவும் இவர்கட்கு அகப்படாதாயிற்று`` என்றபடி. `கழலடியும்` என்ற உம்மை தொகுத் தலாயிற்று. ஈற்றில் உள்ள ஏகாரமும் தேற்றப் பொருட்டு. திருமுடி முடிவையும், திருவடி தொடக்கத்தையும் குறிப்பனவாதலின், திருவடி சிலராலேனும் காணப்பட்டதாகும். `அவன் வடிவை அஞ்சினராய் அது ஆய்ந்து சென்றார் இருவர் நாட ஒண்ணாதே` என முடிக்க.
இதனால், பிரம விட்டுணுக்களது இயல்பாய சிறுமை, செருக்குக் காரணமாகப் பின்னும் மிகுதிப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 

பொழிப்புரை :

சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!

குறிப்புரை :

``முனிவர்`` என்றது, கருமகாண்டிகளை. அவர் தேவரைத் தெளியாராயினும், அவரை நோக்கிச் செய்யும் கருமங்கள் பயன் தரும் என்னும் தெளிவுடையர். இறுதிக்கண் கூறற்பாலராய அவரைச் செய்யுள்நோக்கி இடையே கூறினார். தா அடி, படைவீரர் போர்க்கு அணிவகுத்து நடக்கும் நடை. அஃது இங்குச் செருக்கினால் எதிரிட்டுக் காண முயலுதலைக் குறித்தது. தலைப்பெய்தல் - சந்தித்தல்; காணுதல். இறுதிக்கண், `கூடுமோ` என்பது சொல்லெச்சம். `வான வரும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இதனால், அயன், மால் என்பவரோடு இனம்பற்றிப் பிறரது சிறுமைகளும் தோன்றக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

தானக் கமலத் திருந்த சதுமுகன்
மானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே. 

பொழிப்புரை :

தாமரை மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும் தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி உள்கத்தக்க பெரும் பொருளாகிய சிவபெருமான், அவர்தம் புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!

குறிப்புரை :

`கமலத் தானம்` என மாற்றிக்கொள்க. `சதுமுகனும்` என்னும் உம்மை தொகுத்தல். மானம் - பெருமை. கருமை, இன அடை. `உணர்கின்றதான` என்பதன் பின் பகரமெய் விரித்தல். ``அண்மையதாமே`` என்புழி, ``அவர்க்கு`` என்பது அவாய் நிலையான் வந்தது. ஏகாரம், எதிர்மறை உணர்த்திற்று. ``தானக் கருங் கடல், ஊழித் தலைவன், தன்மையதாம்`` என்பன பாடம் அல்ல.
இதனால், மாலும் பிரமனும் ஆயினும் சிவபெருமானை உள்குவோரன்றி, அவனால் உள்கப்படுவோர் ஆகாமை கூறி, அவர் அடிமுடி அறியமாட்டாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

பொழிப்புரை :

அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி நின்ற சிவசோதி, அதன்பின் இவ்வாறு பிரம விட்டுணுக்களால் அடிமுடி அறியப்படாத நிலைமையைக் காட்டி நிலைபெறச் செய்த மேலான சிவநெறியை முன்னர் அறிந்து, உலகம் முழுதும் ஒருங்கே வழி படுகின்ற இலிங்க வடிவை வணங்கித் தம் குறையை எடுத்துக்கூறி முறையிட்டு, மக்கள் இவ்வுலகப் பயனையேயன்றி அவன் அருளைப் பெறுதலாகிய ஞானத்தையும் அடையலாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியிலும் முதலில் வந்தசொல் வருதலும், மோனை சிதைதலும் பொருந்தாமையால், அவ்விடத்து `ஆலிங்கனம் செய்து` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிக. ஓலம், `ஓல்` என வருதல் செய்யுட்கண் ஏற்றதேயாம். ஓலம் செய்தல் - முறையிடுதல். கோல் - தறி; இலிங்கம். `அமைந்து` `அமைஞ்சு` எனப் போலியாயிற்று. அமைதல் - மனம்பற்றி வணங்குதல். `அமைஞ்சு ஓல் இங்ஙனம் செய்து அருள்கூடலும் ஆம்` எனக் கூட்டுக.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியால் விளைந்த பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
 

பொழிப்புரை :

சிவபெருமான் திருமால் முதலிய தேவர்க்கும், இராவணன் முதலிய அரக்கர்க்கும் படைக்கலங்களை அளித் தருளிய செய்தியை அறிந்து அவ்வாறே தாமும் பலவற்றைப் பெற விரும்பி அவனை வழிபடுகின்ற தேவர்கள், எம்மைப் போல அவனுக்குத் தம்மை ஆளாகக் கொடுத்து அன்பினால் அவனை நினைப்பதில்லை. அதனால், தன் அடியார்களுக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்து, பின் பேரின்பத்தைத் தந்து, என்றும் புகலிட மாகத் தனது திருவடியை வழங்குகின்ற அவனது திருவடியை அத் தேவர்கள் காண்பதில்லை.

குறிப்புரை :

கோள் - கொள்ளப்படும் பொருள். மூன்றாம் அடியிலும் ``ஆள்கொடுத்து`` என ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``கோலிங்கு அமைஞ்சருள் கூடலுமாமே`` என்றவாறும், ``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை அற்சிப்பர்`` (சிவஞானசித்தி சூ. - 2.92) என்றவாறும் இவ்வுலகில் தேவர் பலர் வந்து சிவபெருமானை வழிபட்டமை அறியப்படுகின்ற தாயினும், அவர் தம் வழிபாடு பயன் கருதாத அன்பு வழிபாடாகாமையால், சிவபெருமான் அவர்கட்கு அரியனே ஆகின்றான் என, மால் அயன் என்பவரோடு, இனம்பற்றி ஏனைத் தேவரும் சிவபெருமானை வழிபட்டும் அவனை அறியாரா யினமைக்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 

பொழிப்புரை :

பிரளய வெள்ளத்தில் ஆலிலைமேல் மிதந்து எங்கும் திரிந்து, `இனி என்ன செய்வது` என்று ஆராய்கின்ற திரு மாலுக்கு மகனாக நான்முகன் தோன்றுவான். அதன்பின், ஊழிக் காலத்தில் எரிகின்ற சூரியனது ஒளியையும் வென்ற திருமேனி யனாகிய சிவபெருமான், `அழிந்த இவ்வுலகத்தை நீவிர் மீளப் படைத்துக் காமின்` என்று பணித்தருளுவான். அவ்வாற்றால் பின்பு படைப்பு முதலிய தொழில்கள் நிகழும்.

குறிப்புரை :

இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது. `காமின்` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. வாழி, அசைநிலை. `தாவென்` என்பது பாடம் அன்று. ``விதித்துக் காமின் எனும்`` என்றது, `சதுமுகன் விதித்தலையும், மாயோன் காத்தலையும் செய்க` என்பான் என்றவாறு.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியின் பின்விளைவு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருளைக் கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.

குறிப்புரை :

முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.
`பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி)
ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல.
பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß நாதம் நாத தத்துவம்.
`பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே. 

பொழிப்புரை :

இதன் பொருளையும் கீழ்வரும் குறிப்புரை பற்றி உரைத்துக்கொள்க.

குறிப்புரை :

மேற்கூறிய `நாதன்` என்னும் சிவன், பொதுவாய் நாத மாத்திரமாய்த் தோன்றிய எழுத்தோசையைச் சிறப்பாகத் தோற்றுவிக்க விரும்பிக் கிரியா சத்தியால் பொதுவாக முயல்வான். அவ்வாறு அவன் பால் எழும் முயற்சியே `விந்து` என்னும் சத்தியாவாள். அவள், மேற் குறித்த நாத தத்துவத்திலிருந்து `விந்து` என்னும் தத்துவத்தைத் தோற்று வித்து, அதன்கண் நிற்பாள். அதனால் ``நாதத்தில் விந்துவும்`` என்றார்.
பின்னர் ``நாத விந்துக்களின்`` என்றதில் இன் சாரியை யின்பின் `கீழ்` எனப் பொருள் தரும் கண்ணுருபு விரிக்கப்படும்.
``ஞானம், கிரியை`` என்றது சிவன் சத்திகளுக்கு நிரல் நிறை. ``சிவன் சத்தி என்ன`` என்றது, `சிவன் என்றும், சத்தி என்றும் இருவர் தோன்றுவர்` என்றவாறு. `பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்` என்றது, `ஆதி சத்தி தானே, ஞானம், கிரியை என்னும் வேறு பாட்டோடு தோன்றுதலால்` என்றவாறு. எனவே, `முதல்வன் ஞான சத்தியால் சிறப்பாக அறியும் நிலையிலே சிவன் என நிற்பான்` என்பதும், `அவன் கிரியாசத்தியால் சிறப்பாக முயலும் நிலையே சத்தி என்னும் நிலை` என்பதும் விளங்கும்.
`சிவன்` எனப் பெயர் பெற்று நின்ற சிவன் மேற்கூறிய விந்து தத்துவத்திலிருந்து `சிவம்` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பான். `சத்தி` எனப் பெயர்பெற்று நின்ற சத்தி, `சிவம்` என்னும் தத்துவத்திலிருந்து `சத்தி` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பாள். இவ்வாற்றால் இத்தோற்றம் பின்வருமாறு அமையும்.
ஆதிசத்தி சுத்தமாயை
ß ß (1) நாதன் நாதம்
ß ß (2) விந்து விந்து
ß ß (3) சிவன் சிவம்
ß ß (4) சத்தி சத்தி
இவற்றுள் சிவன் சத்திகட்கு உள்ள பெயர்களே, அவர்களால் தோற்று விக்கப்பட்டுத் தமக்கு இடமாகக் கொள்ளப்படுகின்ற தத்துவங்கட்கும் பெயராதல் விளங்கும்.
இங்கு இந்நாயனார் கூறிய இம்முறை சில ஆகமங்களுட் கூறியவாறாகும். வேறு சில ஆகமங்கள் இங்கு, `நாதம், விந்து` என்றவற்றை, `சிவம், சத்தி` என்றும், இங்கு, `சிவன், சத்தி` என்ற வற்றை, `நாதம் விந்து` என்றும் மாற்றிக் கூறும். அம்முறை பற்றியே சிவஞானசித்தி (சூ. 2-74),
``சிவம் சத்தி நாதம் விந்து ... ... ... ...
ஒன்றின் ஒன்றாய்ப் பவந்தரும்``
என்று கூறிற்று. எவ்வாறாயினும், `இந்நான்கும் முதல்வனது அருவத்திருமேனிகள்` என்பதில் மாறுபாடில்லை. இனி முன் இரண்டு நிலைகளை முறையே `பரநாதம், பரவிந்து` என்றும், பின் இரண்டு நிலைகளை `அபரநாதம், அபரவிந்து` என்றும் கூறுதல் எல்லா ஆகமங் களுக்கும் ஒப்ப முடிந்தது.
``வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே`` என்றது `சிவம் சத்திகள் தம்மில் தாம் வேறுபட்ட விருப்பம் காரணமாகச் சுத்த மாயை வேறு வேறு நிலைகளாக விருத்திப்பட்டு நிற்கும்` என்றவாறு. இச்சையில் - இச்சையின்படி.
``விந்து`` (பிந்து) என்பது `சுத்தமாயை, அதன் ஒருவகை நிலை, அதனை இடமாகக் கொள்ளும் சத்தி` என்னும் மூன்றற்கும் பெயராகும். அவற்றுள் ஒன்றைக் கொள்ளவேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொள்ளலாகாது. இவ்வாறே, `நாதம்` என்பதும், சிவனது நிலைகளில் ஒன்றற்கும், அவன் இடமாகக் கொள்ளுகின்ற தத்துவத்திற்கும் பெயராய் நிற்கும். நாயனார் சொற்சுருக்கம் கருதி ஏற்ற பெற்றியால் பொருள் கொள்ள ஓதினார். எனவே, முன் மந்திரத்தில் ``அதன் பால் திகழ் நாதமே`` என்றதற்கு நேர்பொருளாக, `ஆதி சத்தியினிடமாக நாதம் என்னும் சிவன் தோன்றுவன்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அச்சிவனால் நாத தத்துவம் தோன்றும்` எனவும் கொள்ளப்படும். அவ்வாறே இம் மந்திரத்தில் ``நாதத்தில் விந்துவும்`` என்றதற்கு, நேர் பொருளாக, `நாதம் என்னும் சிவனிடத்து விந்து என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அவளால் நாத தத்துவத்திலிருந்து விந்து என்னும் தத்துவம் தோன்றும்` எனவும், ``நாத விந்துக்களில் சிவன், சத்தி தோன்றும்`` என்றதற்கு நேர்பொருளாக, `நாத விந்துக்களின் கீழ் விந்து` என்னும் சத்தியினின்றும் சிவன் என்னும் சிவன் தோன்றுவான்; அவனிட மிருந்து சத்தி என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `விந்து என்னும் தத்துவத்திலிருந்து சிவம் என்னும் தத்துவமும், சிவம் என்னும் தத்துவத்திலிருந்து சத்தி என்னும் தத்துவ மும் தோன்றும்` எனவும் கொள்ளப்படும் என்க.
`மாயை` என்பது, குடத்திற்கு மண்போல, உலகமாகிய காரியப் பொருட்கு முதற்காரணமாவது, அது பல்வேறு வகைப்பட்ட சட (அறிவில்லாத) ஆற்றல்களின் தொகுதி (சத்திகளின் சமூகம்). அதனைச் சிவபெருமான் தனது இச்சைப்படி ஞானக் கிரியா சத்திகளால் தொழிற்படுத்துவான். அந்த மாயைதான் ஆணவ மலத்தின் தர தம நிலைகளோடு கலந்து தூய்மை இழந்தும் கலவாது தூய்மையாயும் இரு பகுதிப்பட்டு நிற்கும். தூய பகுதியே, `சுத்த மாயை` என்றும், தூய்மை இழந்த பகுதியே `அசுத்த மாயை` என்றும் சொல்லப்படும். `மாயை` என்றால் `மயக்குவது` எனக் கருதப் படுவதால், சுத்த மாயையை ஆகமங்கள் `மாயை` என்று குறிப்பதே இல்லை. `விந்து, குடிலை, குண்டலினி` என்றாற்போலவே குறிப் பிடும். மாயை எனக் கூறவேண்டின், `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் குறிப்பிடும். மகத்து - பெரிது. ஊர்த்துவம் - மேல் உள்ளது; வியாபகம் - எனவே, ``மாயை`` என வாளா கூறுமிடத் தெல்லாம், ``அசுத்த மாயை`` என்றே கொள்ளுதல் வேண்டும். சுத்த மாயையை ஆகமங்கள் ``விந்து`` எனக் கூறுதல்போல, அசுத்த மாயையை ``மோகினி`` என்று கூறும். மோகினி - மயக்கற் கருவி. எனவே, ``அசுத்த மாயையே மயக்கத்தைத் தரும்`` என்பதும், ``சுத்த மாயை மயக்கத்தைத் தராது`` என்பதும் அறிந்துகொள்ளப்படும். மயக்கமாவது, ஐம்புல இன்பங்களையே பெரியனவாகக் கருதி, அவற்றால் விளையும் துன்பங்களை அறியாதிருத்தல்.
இறைவன் உலகைத் தோற்றுவித்து நடத்தக் கருதும்பொழுது ``அருவம், அருவுருவம், உருவம்`` என்னும் மூவகைத் திரு மேனிகளைக் கொண்டு விளங்குவன். அங்ஙனம் விளங்குமிடத்துச் சுத்தமாயையினின்று தோற்றுவிக்கப்படுகின்ற தத்துவங்களையே தான் இடமாகக் கொண்டிருப்பன். அதனால் அத்தத்துவங்கள் அசுத்த மாயா தத்துவங்களைப் பெற்று நிற்கும் உயிர்களுக்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை.
முதற்காரணப்பொருள் காரியப்படும் முறைகள் பல. அவற்றுள் சிவாகமங்களிற் கொள்ளப்படுவன, `விருத்தி, பரிணாமம்` என்னும் இரண்டுமேயாம். அவற்றுள் விருத்தியாவது சுருங்கிக் கிடப்பது விரிவடைந்து நிற்றல். இதற்கு, `படம்குடிலானாற்போல` என உவமை கூறுவர். அஃதாவது கட்டிச்சுருட்டி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த துணி, பின், விரித்து அமைக்கும்பொழுது பெரிய கூடாரமாகக் காட்சியளிப்பது போல்வதாம். பரிணாமமாவது ஒரு பொருள் மற்றொரு பொருளாய் உருமாறி நிற்பது. மண் குடமாவதும், பால் தயிராவதும் போல்வன இதற்கு உதாரணமாகும். பரிணாமமும், `முழுவதும் பரிணமித்தல், ஒரு கூற்றிற் பரிணமித்தல்` என இருவகைப் படும். பால் தயிராவது முழுவதும் பரிணமித்தல். வெண்ணெயில் புழுத் தோன்றுதல் ஒருகூற்றிற் பரிணமித்தல். இவ்விரண்டனுள்ளும் சிவாகமங்களில் கொள்ளப்படும் பரிணாமம் ஒரு கூற்றிற் பரிண மித்தலே. ``விருத்தி, பரிணாமம்`` இரண்டனுள், சுத்தமாயை காரியப் படுவதெல்லாம் விருத்தி முறையிலாம். அசுத்தமாயை காரியப் படுவதெல்லாம் பரிணாம முறையிலாம். `பரிணாமம் ஒரு கூற்றிற் பரிணமித்தலே` என்பதை மறக்கலாகாது.
முதல்வன் உலகத்தைக் கருதாது பராபர சத்தியோடு கூடிப் பராபரனாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையே இயற்கை நிலை. அதுவே ``சொரூபம்`` எனப்படும். பிறவெல்லாம் உலகத்தைக் கருதி அதற்கேற்ப வேறுபட்டு நிற்கும் நிலையாதலின், அவையெல்லாம் செயற்கை நிலையே. இவை `தடத்தம்` எனப்படும். தடத்தம் - சார்பு பற்றியது. ``சொரூபம், உண்மை; தன்னிலை`` என்பன ஒருபொருட் சொற்கள். முதல்வனை, சொரூப நிலையில் வைத்துக் கூறும் பொழுது, ``சொரூப சிவன்`` என்றும், தடத்த நிலையில் வைத்துக் கூறும்பொழுது ``தடத்த சிவன்`` என்றும் கூறுவர். சொரூப சிவனுக்கு உருவம், பெயர், தொழில், ஒன்றும் இல்லை; தடத்த சிவனுக்கு அளவற்ற உருவம், பெயர் தொழில்கள் உள்ளன என்க. உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன், அவைகளை மேற்கொள்வது உயிர்களை உய்விக்கவேண்டும் என்னும் கருணையினாலேயாம். அதனால், அவ்வுருவம், பெயர், தொழில் யாவும் அருள்மயமானவையே; நம்மனோரது உருவம் முதலியன போல மாயாமயம் ஆனவை அல்ல; அருள் அவனது சத்தியே யாதலால், எல்லாம் வல்ல அச்சத்தியால் தனது இச்சைப் படியான உருவம் முதலியவற்றை அவன் தானே கொள்வன்; அதனால், அவைகளை அவனுக்குப் படைத்துத்தர வேறொருவர் வேண்டுவ தில்லை.
இதனால், படைப்புத் தொடர்ச்சி சிறிது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. 

பொழிப்புரை :

சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாத சத்தி, உலகம் செயற்படுதற்பொருட்டு இவ்வாறு அச்சிவத்தினிடமாகத் தோன்றி வேறு நிற்பது போலச் சொல்லப்பட்டாலும், சத்தி எஞ்ஞான்றும், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு ஒன்றி நிற்றலன்றித் தனித்து நிற்றல் இல்லை சிவமும் சத்தியைவிட்டுத் தனித்து நிற்றல் இல்லை. எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல், அறிவு, செயல் (ஞானம், கிரியை) என்னும் வேறுபாடுபற்றிக் கொள்ளப்படும் உருவு, பெயர், தொழில் என்பன பற்றியேயாம் என்பதாயிற்று. இவ்வாறு தன்னின் வேறாகாத சத்தியை அதுதானே எல்லாம் செய்யவல்லதாக வேறு நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளை (முதல்வனை) `இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்` (தி. 6 ப.97 பா.10) என்று சொல்லாற் சொல்லி விளக்கப்புகின், அஃது ஒருவாற்றானும் இயலாது. ஏனெனில், சொற்கும், அப்பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 4

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.

பொழிப்புரை :

சொல்லுக்கு எட்டாது நின்ற முதல்வனோடு நின்ற பராபரை அவனைத் தொடர்ந்து நின்றே `ஆதி` என்னும் பெயருடைய சத்தியாய்ப் பின்பு, நாதமாய் நின்ற அச்சிவனை அன்போடு கூடி, `விந்து` எனத் தோன்றி, பின் அச்சிவன்தானே சதாசிவன் முதலிய ஐவராய் நின்று நில முதலிய ஐந்து தத்துவங்கட்கும் தலைவனான பொழுது அவனது அந்நிலைகள் ஐந்தினும் உடன் கொள்ளப்படும் துணைவியாய் நிற்பாள்.

குறிப்புரை :

இங்கு `நாதம், விந்து` என்றது, அபர நாத விந்துக்களை. எனவே, பரநாத விந்துக்களை விதந்திலர் என்க. அபர விந்துவினின்றும் சதாசிவர் தோன்றுவர். அவரிடமிருந்து `மகேசுரர், உருத்திரர், மால், அயன்` என்பவர் முறையே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவரும் முறையே, `நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் பூதங்கட்குத் தலைவராவர். சதாசிவன் முதலிய ஐவர்க்கும் உரிய சத்திகள் முறையே மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் என்பவராவர். இச்சத்திகளெல்லாம் அபர விந்து முதலிய சத்தி பேதங்களினின்றே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். இங்குக் கூறப்பட்ட உருத்திரன், மால், அயன் என்னும் மூவரும் சிவனின் வேறானவர் அல்லர்; சிவன் தானே கொள்ளும் நிலைகளாம். இவ்வாறு சிவன் தானே பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவும், பெயரும், தொழிலும் கொண்டு நிற்றல் `சம்பு பட்சம்` எனப்படும். புண்ணிய மிகுதியால் இந்நிலைகளை ஆன்மவருக்கத்துட் பட்டவருக்கும் முதல் வன் வழங்குதல் உண்டு. அவை `அணுபட்சம்` எனப்படும். அணுபட்ச சம்புபட்சங்களைக் கூறுமிடத்து, `மகேசுரனுக்குக் கீழ் சம்புபட்சம் இல்லை; உருத்திரனுக்கு மேல் அணுபட்சம் இல்லை என்பவரும், சம்புபட்சம் எல்லா நிலைகளிலும் உண்டு என்பவரும், `எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு` என்பவருமாகப் பலதிறத்தர் ஆசிரியர். அவருள் எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு என்பவரது கொள்கையே இந்நாயனாரது கருத்தாகத் தெரிகின்றது.
சார் வத்து - சார்பாய பொருள்; தலைமைப் பொருள். இதன் பின் `ஆக` என்பது எஞ்சிநின்றது. சார்த்துமான் - துணையாக உடன்வைத்து எண்ணப்படுகின்ற பெண்; துணைவி.
சதாசிவமூர்த்தி ஞானம், கிரியை இரண்டும் சமமாய் நிற்கும் நிலையினர். இவர் தோற்றுவித்து இடமாகக் கொள்ளும் தத்துவம் சாதாக்கியம். இது மேற்கூறிய அபரவிந்துவிலிருந்து தோன்றுவதாம். ஞானம் குறைந்து, கிரியை மிகுந்திருப்பதே மகேசுர நிலை. மகேசுரன் சாதாக்கியத்திலிருந்து ஈசுர தத்துவத்தைத் தோற்றுவித்து அதனைத் தனக்கு இடமாகக் கொள்வான். கிரியை குறைந்து ஞானம் மிகுந்த நிலையில் சிவன் வித்தியேசுரன் என நின்று, ஈசுர தத்துவத்திலிருந்து `சுத்த வித்தை` என்ற தத்துவத்தைத் தோற்றுவித்து அதன்கண்ணே `உருத்திரன், மால், அயன்` என மூன்று நிலைகளில் நிற்பன். அதனால், வித்தியேசுரனை வேறு வைத்து எண்ணுதல் இல்லை.
இதுகாறும் கூறிவந்தவாற்றால், பரநாதம், அபரநாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சிவபேதம் ஏழும், `பரவிந்து, அபரவிந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` எனச் சத்திபேதம் ஏழும் ஆதல் விளங்கும். எனினும், பரநாதத்திலிருந்து அபரநாதம் தோன்றாமல், இடையே பரவிந்து தோன்ற, அதினின்றே அபரநாதம் தோன்றுதலானும், அவ்வாறே அபரநாதத்திலிருந்து சதாசிவன் தோன்றாமல், இடையே அபரவிந்து தோன்ற, அதினின்றே சதாசிவன் தோன்றுதலானும், பர அபர விந்துக்களாகிய சத்தி பேதங்களையும் சிவபேதமாகக் கூட்டி எண்ணி, `சிவபேதம் நவந்தருபேதம்` என்கின்றன ஆகமங்கள். அதனையே சிவஞானசித்தி (சூ. 2.74) நூல்,
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்திரன்றான், மால், அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; உருவம்நால்; இங்கருவம்நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.
எனக் கூறிற்று. இதனுள், `பரநாதம், பரவிந்து, அபரநாதம், அபரவிந்து, என மேலே உள்ள நான்கும் அருவத் திருமேனிகள்` என்பதும், `மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனக் கீழே உள்ள நான்கும் உருவத் திருமேனிகள்` என்பதும், `இடையே உள்ள சதாசிவமூர்த்தம் ஒன்றும் அருவுருவத்திருமேனி` என்பதும் கூறப்பட்டவாறு அறிக. அருவுருவத் திருமேனி என்பதே மேல் கூறப்பட்ட இலிங்க வடிவம். எனவே, சதாசிவ மூர்த்தமாவது இலிங்க வடிவமே என உணர்க.
இதனால், சுத்த மாயையில் நிகழும் படைப்புக் கூறி முடிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொழிப்புரை :

`மகத்து` எனப்படும் தத்துவத்தினின்றே ஐம் பூதங்கள் தோன்றுவனவாம். அவை தோன்றுமிடத்து, அவற்றின் சாரம் எனத் தக்கனவாய், `சூக்கும பூதம்` எனப் பெயர்பெற்று நிற்கும் தன்மாத்திரைகளினின்றே தோன்றும். அவை தோன்றுதல், `வானம், காற்று, தீ, நீர் நிலம்` என்னும் முறையிலாம். தன்மாத்திரை ஒவ்வொன்றிலும் இருந்தே மேற்கூறிய வானம் முதலிய ஒவ்வொரு பூதமும் தோன்றும். பூதங்கட்கு அவ்வவற்றிற்குரிய தன் மாத்திரை களே காரணமல்லது, ஒரு பூதத்திற்கு மற்றொரு பூதம் காரணம் அல்ல. அதனால் ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுவதில்லை. ஒரு தன்மாத்திரையிலிருந்து ஒரு பூதம் தோன்றியபின், மற்றொரு தன்மாத்திரையிலிருந்து மற்றொரு பூதந்தோன்றும். இவ்வாறே ஐந்து தன் மாத்திரைகளினின்றும் ஐந்து மாபூதங்களும் மேற்கூறிய அம்முறையிலே தோன்றுவனவாம். அவற்றுள் இறுதியில் உள்ள நிலம் என்னும் பூதத்துட்பட்டனவே நாம் காணும் இவ்வுலகம்.

குறிப்புரை :

எனவே, `வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றும்` எனக் கூறுதல் தூலாருந்ததி நியாயமாகப் பொதுப் படக்கூறுதலே; உண்மையாற் கூறுமிடங்களில் தன்மாத்திரையினின்று பூதங்கள் தோன்றும் என்றே கூறப்படும் என்பதாயிற்று.
`மகத்து` என்னும் வடசொல், தமிழில், ``மான்`` எனப்படும். நம்மனோர் உலகிற்கு இதுவே முதற்காரணமாதலால் இது, `மகத்து` எனப்படுகின்றது. `பிரகிருதி` எனவும், `மூலப் பிரகிருதி` எனவும் கூறப்படுவது இதுவே. சிவாகமங்கள் இதனை, `பிருகிருதி மாயை` எனவும் கூறும். பிற சமயங்கள், `இது பிறவற்றிற்குக் காரணமாவ தல்லது காரியம் ஆகாது` எனவும், `அதனால் இதுவே உலகிற்குப் பரம முதற்காரணம்` எனவும் கூறும். ஆயினும் சிவாகமங்கள், `இது அசுத் தமாயை யினின்றும் தோன்றுகின்ற, கலை என்னும் தத்துவத்தினின்றும் தோன்றும் காரியமே` எனக் கூறும்.
`சுத்த உலகம், மிச்சிர (கலப்பு) உலகம், அசுத்த உலகம்` என உலகம் மூவகைத்து என்பதும், `அதனால், அதற்கு முதற்காரணமும் மூன்றாதல் வேண்டும்` என்பதும், அம்மூன்றாவன, ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்பன என்பதும், ``அவற்றுள் சுத்த மாயையும், அசுத்த மாயையுமே எஞ்ஞான்றும் காரணமாயே நிற்பன; பிரகிருதி மாயை தன் காரியங்களை நோக்கக் காரணமாய் நிற்பினும், அசுத்தமாயையைின் காரியமேயாம்`` என்பதும் சிவாக மங்களின் துணிவு. சுத்த மாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் யாவும், `வைந்தவம்` என்றும், அசுத்த மாயையே `மாயை` எனப்படுதலால் அதன் காரியங்கள் யாவும் `மாயேயம்` எனவும், பிருகிருதியின் காரியங்கள் யாவும் `பிராகிருதம்` எனவும் கூறப்படும். பிராகிருதத்தையும், மாயேயமாக அடக்கிக் கூறுதல் உண்டு.
``மானின்கண் பூதங்கள் ஐந்தும் தோன்றும்`` என்று தொகுத்துக்கூறி ஒழியாது, வகுத்துக் கூறினார், அவற்றின் தோற்ற முறை உணர்த்தற்கு. ``கனலின்கண்`` என்பது திரிந்து நின்றது. `கான் - காடு. அஃது ஆகுபெயராய்த் தீயை உணர்த்திற்று` எனவும் உரைப்பர். ``நீரும்`` என்றதற்கு, `நீர் வெளிப்பட்டபின்` என்பது பொருள். ``கலந்து`` என்றது `அவற்றொடு கூடி, `பூதங்கள் நான்கு` என்று ஆகிய பின்` என்றபடி. ``கடினம்`` என்றது ஆகுபெயரால், அக்குணத்தை யுடைய ``நிலம்``என்னும் பூதத்தை உணர்த்திற்று. ``கடினமாய்`` என்பதில், ``ஆய்`` என்பதனை ``ஆக`` எனத் திரிக்க. ஆதல், தோன்றுதல்.
தேன் வடித்தெடுத்த தேறல் ஆதலின், அதுபோலப் பூதங்களின் நுண்ணிலையாய அவற்றின் காரண நிலையை, ``தேன்`` என்றார். இக்காரண நிலையே தன்மாத்திரையாதல் அறிக. இவற்றைத் தேன் என்றதனானே, காரணத்தன்மை காரியத்தினும் உளதாகும் முறைமை பற்றிச் சத்தம் முதலிய தன் மாத்திரைகளது தன்மை அவற்றின் காரியங்களாகிய வானம் முதலிய பூதங்களினும் காணப்படும் என்பது குறிப்பாற் கூறப்பட்டதாம். `தேனின்கண் செறிந்து பூதமாய்` என்று ஒழியாது, ``ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்`` என இருமுறை தொகை கொடுத்து ஓதினார், `ஒரு தன்மாத்திரையிலே ஐந்து பூதமும் தோன்றுதலும் ஒரு தன்மாத்திரையிலே ஒரு பூதந்தோன்ற, அதன்பின், ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுதலும் இன்றி, வேறு வேறாய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து, ஒரு தன்மாத்திரையில் ஒரு பூதமாக ஐந்து தன்மாத்திரையில் ஐந்து பூதமும் தோன்றும்` என்றற்கு ஐந்தும் தேனின்கண் செறிந்து ஐந்துமாம் என்றது, `ஐந்து பூதங்களும் முன்பு தனித்தனிக் காரணநிலையில் நின்று, பின் காரியமாகத் தோன்றும்` என்றவாறு. இவ்வாறு உரையாக்கால், இத்திருமந்திரத்துள் மூன்றாம் அடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``பூதமாய்`` என்பதில் ``ஆனபின்`` என்பது, ``ஆய்`` எனத் திரிந்து நின்றது. `இப்புவனம்` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. இப்புவனம், பிருதிவி தத்துவ புவனம். எனவே, ``இவ்வாறே ஏனைத் தத்துவங்களினும் புவனங்கள் உள`` என்பது குறித்துவாறு காண்க. இவ்வாற்றால் இங்குக் கூறிய தத்துவத்தோற்றம் பின் வருமாறாதல் காண்க.
மான் (பிரகிருதி)
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
(ஓசை) (ஊறு) (ஒளி) (சுவை) (நாற்றம்)
வானம் காற்று தீ நீர் நிலம்
(ஆகாயம்) (வாயு) (தேயு) (அப்பு) (பிருதிவி)
``சுவை ஒளி ஊறோசை நாற்றம்என் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு`` -குறள், 27
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்``
(தொல். பொருள்) என்றற்றொடக்கத்தனவாக இவ்வுலகம் பற்றிப் பெரும்பான்மையாக யாண்டும் யாவரும் அறியக் கூறப்படுவன தன்மாத்திரைகளும், ஐம்பெரும் பூதங்களும் ஆகிய தத்துவங் களேயாதலின், `சிறப்புடைப் பொருளைத் தான்இனிது கிளத்தல்`` என்னும் முறையால் அவற்றின் தோற்றத்தையே சிறந்தெடுத்துக் கூறினார்.
எனவே, மானின்கண் தோன்றுவனவாக (பிரகிருதியின் காரியங்களாக) வேறும் சில தத்துவங்கள் உள என்க. அவை அந்தக் கரணங்களும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுமாம். ஆகவே, மானின் காரியங்கள் அனைத்தையும் பின் வருமாறு கண்டு கொள்க.
மான் (பிரகிருதி)
குணம்

புத்தி
அகங்காரம்
(தைசதம் வைகாரிகம் பூதாதி)
மனம் - செவி, தோல், வாக்கு, பாதம், பாணி,
கண், நாக்கு, மூக்கு. பாயு, உபத்தம்
(ஞானேந்திரியம்) கன்மேந்திரியம்
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி
குணதத்துவமே `சித்தம்` என்னும் அந்தக்கரணமாம். ஆகவே, ``சித்தம், புத்தி, அகங்காரம், மனம்`` என்னும் அந்தக்கரணம் - 4, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5, தன்மாத்திரை - 5, பூதங்கள் - 5, ஆக 24 மானின் காரியங்கள் என உணர்க.
இதனால், பிரகிருதி மாயையில் உளவாகும் படைப்புக் கூறப் பட்டது. இடைநின்ற அசுத்த மாயைப் படைப்பினை நாயனார் இங்கு விதந்திலர். எனினும், அசுத்த மாயா காரியங்களை இங்கு ஒருங்கு இயையக் காட்டுதும்:-
அசுத்த மாயை
1. மாயை
2. காலம், 3. நியதி, 4. கலை,
5. வித்தை பிரகிருதி
6. அராகம்
7. புருடன்
காலம், `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என மூன்றாகி, முறையே ஒரு கன்மத்திற்கு எல்லையையும், மற்றொரு கன்மத்திற்குப் பயனையும், வேறொரு கன்மத்திற்குப் புதுமையையும் உண்டாக்கும். நியதி, அவரவர் செய்த கன்மத்தை அவரவரே நுகருமாறு நியமிக்கும். கலை, வித்தை, அராகம் என்பன முறையே ஆன்மாவின் ``கிரியை, ஞானம், இச்ை\\\\u2970?`` என்னும் சத்திகளை விளங்கச்செய்யும். காலம் முதலிய ஐந்தும் வந்து பொருந்திய பொழுதுதான், ஆணவமல மறைப்பால் சடம்போலக் கிடந்த ஆன்மா கன்ம நெறியில் நின்று ஒன்றை அறியவும், விரும்பவும், செய்யவும் உரியதாய், `புருடன்` எனப் பெயர்பெற்று நிற்கும். அதனால், `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. ஆன்மா காலம் முதலிய ஐந்தோடும் கூடி வினை நெறியில் செல்லும் நிலையே புருட தத்துவமாம். `மாயை` என்பது, காலம் முதலிய ஐந்தும் தோன்றுதற்கு ஏதுவாக அசுத்த மாயையில் பக்குவப்பட்ட ஒரு பகுதியேயாம். எனவே, இது மற்றவைபோலக் காரியமாகாது. காரணமேயாயினும், பக்குவப்பட்டமை பற்றி மற்றைய தத்துவங்களோடு ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது. எனவே, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் ஏழாதல் அறியப்படும். சுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஐந்து. அசுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஏழு, பிரகிருதி மாயையில் தோன்றும் தத்துவம் இருபத்து நான்கு ஆகத் தத்துவம் முப்பத்தாறு ஆதல் காண்க. ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என நின்ற இவை முறையே ``சிவதத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம்`` எனப் பெயர்பெறும். இவைகளில் இங்கு எடுத்தோதியவைபோக, ஏனையவற்றை நாயனார் பின்னர் ஆங்காங்கு இடம் வந்துழி வந்துழிக் குறித்தருளுவார்.

பண் :

பாடல் எண் : 6

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. 

பொழிப்புரை :

உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்ற வன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.

குறிப்புரை :

எனவே, `சிவபெருமான் தானே நேர்நின்றும், தக்கார் பிறரைக்கொண்டும் உலகத்தை நடத்துவான்` என்பதாம். தானே நின்று நடத்துதல் சுத்த மாயையில். ஏனை இருமாயைகளிலும் பிறரைக் கொண்டு நடத்துவன் என்க. தோற்றுவிக்கப் படுபவரை, ``புத்திரர்`` என்றார். `படைப்பானும்` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஆகவே, ஏனைநால்வரும் தத்தமக்கு ஏற்ற வகையில் நின்று காத்தல் முதலியவற்றைச் செய்வர் என்பது பெறப்பட்டது.
இதனால், சிவபெருமான் படைத்தல் முதலியவற்றைச் செய்யு மாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.

பொழிப்புரை :

புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.

குறிப்புரை :

``இயமானனை`` என்பது குறைந்து நின்றது. இயமானன் - ஆன்மா. ``கலவி`` என்றது, கலத்தலோடு கலந்து நின்று செய்யும் செயலையும் குறித்தது. ``உலகெங்கும் பொருந்தி`` என்றதனால் சிவபெருமான் ஐந்தொழில் செய்யுங்கால் உலகுயிர் களோடு அத்துவிதமாய் (கலப்பினால் ஒன்றாய்ப் பொருள் தன்மையால் வேறாய், உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாய்) நின்றுசெய்வன் என்பதும், ``இயமானனை வளர்த்திடும்`` என்றதனால், அவன் அவ்வாறு நின்று ஐந்தொழிலைச் செய்வது உயிர்கட்கு மலபாகம் வருவித்து அவைகளை வீடடையச் செய்தற் பொருட்டே என்பதும், ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, அவன்தான் செய்யும் தொழில்கள் பலவற்றையும் தனது சத்தியால் செய்வன் என்பதும், `பூவில் மணம்போல` என்றதனால், சத்தி அவனின் வேறாகாது, மரமும் காழ்ப்பும்போலக் குணகுணி பாவத்தால் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் நிற்கும் என்பதும் பெறப்பட்டன.
தண்மை, இங்கு எளிமை. ``தண்பதத்தால் தானே கெடும்`` (குறள், 548) என்பதிற்போல. ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, சிவமும் அத்தன்மையதாதல் பெறப்பட்டது. கண்ணுதல் - கருதுதல். கண் இயல்பாய் - கருதுதல் வடிவாய். எனவே, `சிவபெருமான் தான் செய்தனவற்றை நினைவு மாத்திரத்தால் செய்வதல்லது, சில கருவி களைக் கொண்டு செய்பவனல்லன்`` என்பது போந்தது. அக் கருதுதல் தானே அவனது சத்தி வடிவம் என்க. `மண்` என்னும் பூதத்தின் சிறப்புப் பண்பு நாற்றமாதல்பற்றி நாற்றத்தை, ``மண்ணியல்பு`` என்றார். `பூவில் மண் இயல்பாக மலர்ந்தெழும்` என மாற்றி உரைக்க. `மலர்ந்து எழுதல்` பல்வேறு வகைப்பட்ட நினைவுகளாய் விரிந்து, நினைந்தவாறே ஆக்குதல். இத்தகைய சத்தியானே அவன் எங்கும் நிறைந்தவன் ஆகின்றான் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு.
இதனால், ஐந்தொழில் செய்யுமிடத்துச் சிவபெருமான் உயிர்களோடு நிற்கும் முறைமையும், அம்முறைமைக்குத் துணை யாகின்ற அவனது சத்தியின் நிலைமையும், அச்சத்திக்கும், அவனுக் கும் இடையே உள்ள தொடர்பு வகையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. 

பொழிப்புரை :

சத்தி நீரின்கண் `சுவை` என்னும் பண்பாயும், நெருப்பின்கண் எரிகின்ற `ஒளி` என்னும் பண்பாயும், காற்றின்கண் `ஊறு` என்னும் பண்பாயும், வானின்கண் `ஒலி` என்னும் பண்பாயும் விளங்குவாள். நீரால் சூழப்பட்ட `மண்` என்னும் பூதத்தில்தான் பல்வேறு நிலைகளையுடைய உயிர்கள் தோன்றி வளரும்.

குறிப்புரை :

எனவே, `எஞ்சிய நாற்றம் அதன்கண் உள்ளது` என்றாராயிற்று. சுவையை, ``இன்பம்`` என்றார். உயிர்ப் பண்பாகிய உணர்தல் தன்மையில் முதலாவது ஊற்று உணர்வேயாகலின், அதனையே ``உயிர்`` என்றார். ஊற்று உணர்வு முதல் என்பதனை ``ஓரறிவுயிர்`` என்பவை பற்றி அறிக.
``ஓர்வுடை நல்லுயிர்`` எனச் சிறப்பித்தலும் அதுபற்றி. பாதம் - அடி; முதல். அது முதலாவதாகிய பூதத்தை உணர்த்திற்று. ``சத்தி`` என்னும் எழுவாய் இறுதிக்கண் நின்றது. உலகத்தோற்றம் முதலியவற்றை நம்மனோர் காணும் இவ்வுலகியல்பில் வைத்தே உணர்த்துகின்றாராதலின், ``நீரிடைமண்`` எனவும், ``மண்ணின் நிலைப்பிறப்பாம்`` எனவும் கூறினார். மேல், `பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே` (தி.10 பா.382) என்றாற்போல. ``இன்பம், சோதி, உயிர், ஒலி`` என்றவற்றில் `ஆய்` என்பது விரிக்க. மேல், `சிவசத்தியே உலகைப் பலவாறு ஆக்கி நடத்தும்` என்றதற்கு ஏற்ப இங்கு, `சத்தியே இவ்வாறு வெளிப்பட்டு நிற்கும்` என ஒற்றுமைபற்றிக் கூறினார்.
இதனால், மேல் தோற்றம் கூறப்பட்ட பூதங்களின் பயப்பாடு கூறப்பட்டது. இடைநின்ற இரண்டு திருமந்திரங்கள் இயைபுடைய வற்றை இடையே விதந்தனவாம்.

பண் :

பாடல் எண் : 9

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. 

பொழிப்புரை :

உலகம் முழுதுடையான் சிவபெருமானே யாயினும், `அயன், அரி, அரன்` என்னும் மூவர்தாமும் உலகிற்குக் காரணக் கடவுளராய் நின்று ஓரோவொரு தொழிலைச் செய்தல், தத்தம் புண்ணிய மிகுதிக்கு ஏற்ப அப்பெருமானால் தரப்பெற்று நடத்துதல் பற்றியேயாம்.

குறிப்புரை :

``அதற்குக் காரணம் அறியற்பாற்று`` என்பது குறிப் பெச்சம். பிரகிருதி புவனங்கட்குப் பதியாதல் பற்றித் திருமாலையே உலகினை ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் நிற்பவனாக வைத்து, ``உலகத்தை உண்டு உமிழ்ந்தவன்`` எனக் கூறுதல் வெளிப்படை. ``உடனாகி, ஓடு`` என்பன எண்ணின்கண் நின்றன. சிவபெரு மானுக்குரிய ``ஆதி`` என்னும் பெயரை அவனது உருவைப் பெற்ற உருத்திரனுக்கு ஆக்கிக் கூறினார். அதனால் அவனே தேவர் பலர்க்கும் மேலானவன் என்பது விளக்குதற்கு, ``அண்டத்தமரர் தலைவனாம்`` என்றார். கண்டம் - சிறுமை. இறுதியிற் கூறுதல் பற்றி, ``முன்னை இருவரினும் மேம்பட்டவன்`` என்பது படாமைப் பொருட்டு, ``கண்டச் சதுமுகன்`` என்றார்.
இதனால், உலக முதல்வனாகிய காரணனைப் பற்றி ஓர் உண்மை உணர்த்தற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது தொழில்களுள் ஒவ் வொன்றைத் திருமாலும், பிரமனும் ஏற்றுச் செய்யுமாறு திருவுளம் பற்றினான்.

குறிப்புரை :

`அதனால், அவரும் உலக காரணர் எனப்படுகின்றனர்` என்பது குறிப்பெச்சம். மாலும், அயனும் சிவபெருமானது ஆணையை ஏற்ற அதிகார மூர்த்திகளாதலின் அது பற்றி, ``உலக முதல்வன் சிவ பெருமானே`` என்றற்கு இழுக்கில்லை என்பது கருத்து. இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``தானும்`` என்பதில் தான், அசை நிலை. உம்மை, ``அவர் தவம் செய்யத் தானும் அதற்கு இசைந்தான்`` என இறந்தது தழுவிற்று. வீங்கு - மணம் மிக்க. ``உயிர் வைத்தல்`` என்றது, படைத்தல், காத்தல் இரண்டனையும் இரட்டுற மொழிதலால் குறித்ததாம். உணர்ந்தான் - எண்ணினான்; திருவுளம் பற்றினான். உருத்திரனை வேறாக எண்ணுவோர் சிவபெருமானை முதல்வன் என்பாரோடு மாறுபடாமை பற்றி இங்கு மால், அயன் இருவரைப் பற்றி மட்டுமே கூறினார் என்க. எனவே, உருத்திரனும் அத்தகையோனாதல் பெறப்பட்டது. ``அயன், மால், உருத்திரன்`` என்னும் மூவரும் முறையே ``படைப்பவன், காப்பவன், அழிப்பவன்`` என்பது வெளிப்படை.
இதனால், புராணங்களில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற காரணர் மூவர் பற்றிய உண்மை தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனே தனது பேரருளால் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிந்தும், செய்தும் நிற்பவன். திருமால், ``தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம்`` என்னும் ஐவகை உடம்புள் முதல் உடம்பாகிய தூலசரீரம் முதல் நடுவுடம்பாகிய குண சரீரங்காறும் நிறைந்து நின்று செயலாற்றுவன். பிரமன், முதல் உடம்பாகிய தூல சரீரத்துள்ளும் பிருதிவி தத்துவத்தளவிலே நிறைந்து சென்று செயலாற்றுவன். பிரமனை, `வேத முதல்வன், உலகத் தந்தை` என்றெல்லாம் சொல்வது இந்த அளவில்தான்.

குறிப்புரை :

இங்கு, ``முதல் உடம்பு`` என்றது, ஒடுக்கமுறை பற்றி என்க. மேற்கூறிய தத்துவம் முப்பத்தாறனுள், ``ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம் என்னும் பதினைந்தும் தூல சரீரமாம்`` எனவும், ``தன் மாத்திரை ஐந்தும், மனம் அகங்காரம் புத்தி என்னும் அந்தக்கரணங்களும் ஆகிய எட்டும் சூக்கும சரீரமாம் `` எனவும், ``சித்தம், குணம், பிரகிருதி என்று பலவகையாய் நிற்கும் ஒன்றே குண சரீரமாம்`` எனவும் `` வித்தியா தத்துவங்கள் ஏழனுள் மாயை தவிர ஏனைய ஆறுமே கஞ்சுக சரீரமாம்``, ``மாயை காரண சரீரமாம்`` அறிந்து கொள்க. இவற்றுள் நிலமுதல் பிரகிருதி அளவுமே திருமால் வியாபகன் ஆதலின், ``நாரணன் என்றும் நடுவுடலாய் நிற்கும்`` என்றும், நான்முகன் பிருதிவி அளவிலே வியாபகனாதலின், ``நான் முகன் பார் அண்ணல்`` என்றும் கூறினார். சிவபெருமானை விடுத்து இவ்விருவருள் ஒருவனை முதல்வன் எனச் சிலர் மயங்குதலன்றி, உருத்திரனைச் சிவபெருமானின் வேறாக எண்ணி மயங்குவார் இலராதல் பற்றி இவ்விருவரது வியாபக எல்லைகளை மட்டுமே உணர்த்தி அருளினார். சீகண்ட உருத்திரன் மாயாதத்துவங்காறும் வியாபகன் எனவும், மகேசுரன் ஈசுர தத்துவங்காறும் வியாபகன் எனவும், சதாசிவன் நாத தத்துவங்காறும் வியாபகன் எனவும் உணர்ந்துகொள்க.
``அன்பு`` இரண்டில் முன்னது அருள்; பின்னது ஆசை. `அன்பிற் செய்யும்` என இயையும். பதம் - உலகம். செய்தல் - படைத்தல்.
இதனால், சிவபெருமானது முதன்மைக்கண் நிகழும் ஐயத்தினை முற்ற நீக்குதற் பொருட்டு, அதிகார மூர்த்திகளது அதிகார எல்லைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. 

பொழிப்புரை :

பிரம தேவன் அறிவுடையவனாய் இருந்து, படைத் தல் தொழிலை வெற்றிபெறச் செய்கின்ற காரணத்தை நான் நன்கு அறிந்தேன். அஃது என்றும் நிலையாயுள்ள இன்பம் எளிதாகக் கிடைத்தற் பொருட்டுத் தன்னை விரும்பினால், அப்பயனை அவ் வாறே எளிதில் தருகின்ற பருத்த இரத்தினம் ஒன்று அவனிடம் உள்ளது என்பதே.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, அதன் பின், `நம்பப் பயன் எளிதாம் மணி ஒன்றுண்டு` என்பதைக் கூட்டி உரைக்க. பருமாமணி, சிவபெருமான். செம்மை - மாறுபாடின்மை. நயன் - இன்பம். ``ஆகிய`` என்பது ``செய்யிய`` என்னும் வினையெச்சம். நம்புதல் - விரும்புதல். ``நம்பன்`` என்பது பாடம் ஆகாமை வெளிப் படை. ``உண்டு`` என்னும் குற்றியலுகரத்தின்முன் உயிர் உடம்படு மெய் பெற்றது. அங்கே - அவ்வாறே; அறிந்தவாறே. வயன் - வெற்றி. வயணம் - காரணம். படைத்தலைச் செய்பவனையே முதல்வனாக உலகம் மயங்குதல் இயல்பு என்பது பற்றிச் சிவபெருமான் பிரமனுக்கு உள்ளொளியாய் நிற்றலையே விதந்தார்.
இதனால், படைத்தல் முதலியவற்றைச் சிவபெருமான் பிறரால் செய்விக்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்கள்மாட்டு அருள் கூர்தலால், உலகம் ஒடுங்கல், தோன்றல், நிற்றல் என்னும் செயல்கள் அவனது திருவுள்ளத்தில் எழுந்தபொழுது, எல்லையின்றிப் பரந்து நிற்கின்ற மாயையைத் தனது சிற்சத்தி வழியாகப் பொருந்தி அதனைக் காரியப்படுத்துபவன் அவனே.

குறிப்புரை :

எனவே, `அவனது அதிகார சத்தி பதிவால் அயன், அரி, அரன் என்போர் தமது படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்கின்றனரல்லது, தாங்களே தங்கள் விருப்பப்படி செய்கின்றா ரல்லர்` என்பதாம். ஆக்கம் - வளர்ச்சி. இதனை, ``வரவும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `புரிதலால்` என்றது `புரிந்து` எனத் திரிந்து நின்றது. மேக்கு - உயரம். மாயையை `மேக்கு மிகநின்ற எட்டுத்திை\\\\u2970?` என ஆகாயமாக உருவகம் செய்தார். தாக்குதல் - தோய்தல். கலக்குதல் - காரியப்படுத்துதல். இங்கு, `சத்தி வழியாக` என்பது ஆற்றலால் வந்தியைந்தது.
இதனால்,மேல், `ஒளியாய்` எனக் குறிக்கப்பட்ட ஒளியாவது, அதிகார சத்தி என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. 

பொழிப்புரை :

சிவன் முதல்வனாய் நின்று, உடலோடு கூடிய உயிர்களைப் படைக்கும்பொழுது, முதலில் அவைகட்கு வினைகளை வரையறுத்துக் கூட்டுவான். பின் அவற்றை அவை நுகர்தற்கு உடலுக்கும் துணையாய் நின்று அதனை இயக்குவான். ஏனெனில், அவன் அவரவர் செய்திக்குத் தக்க பயனை அவரவர்க்குத் தப்பாமல் ஊட்டுவித்து நிற்கும் நடுவுநிலைமையனாதலின்.

குறிப்புரை :

`உயிர்களைப் படைத்தல் என்பது, அவைகளை உடலொடு பொருந்தச் செய்தலாம்` என்பது விளக்குதற்கு. ``ஒன்றுயிர்`` என்றார். அளவை - கால வரையறை. ``துயர்`` என்றது அதற்கு ஏதுவான வினைகளை. `உயிர்ப்பிப்பான்` என்னாது `உயிர்ப் பான்` என்றார். அவையே தானாய் நிற்கும் ஒற்றுமை தோன்றற்கு. வினைகளைக் கூட்டுவிப்பவன் முதல்வனாயின், நல்வினை ஒன்றையே கூட்டுவியாது, தீ வினையையும் கூட்டுவித்தல் என்னை என்னும் வினாவை விடுத்தற்கு ``நடுவு நின்றான்`` என்றார். எனவே, படைப்பு ஒருபடித்தாகாது பலபடித்தாய்த் தோன்றுதற்கும், உலகில் நன்மையோடு தீமையும் உளதாதற்கும் காரணங்கூறியதாயிற்று.
இதனால், சிவபெருமான் உலகத்தைத் தொழிற்படுத்தும்வழி நெறியின்றித் தொழிற்படுத்தாது, உயிர்களின் வினைக்கேற்பவே தொழிற்படுத்துவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. 

பொழிப்புரை :

பிறக்கும் தன்மை இல்லாத சிவபெருமான், உயிர் ஓர் உடலை எடுக்கின்ற காலத்து அதற்கு அதனைக் கொடுக்கின்ற தலைவனும், பின்பு அவ்வுயிர் அவ்வுடலை விட்டு நீங்குகின்ற காலத்தில் பின்னர்ச் சென்று புகும் மற்றோர் உடலையும் அதற்குக் கொடுத்து, அங்கும் அதற்குத் துணையாய் நிற்பவனுமாவன்.

குறிப்புரை :

எனவே, `உயிர்களுக்கு வினைக்கீடாகத் தரப்படும் பிறப்பு ஒன்றன்று; பல` என்றவாறு. அக்கு - எலும்பு. செம்பொனின் மேலணி மேனியன் - செவ்விய பொன்னின்மேலே உள்ள அழகு (நிறம்) போலும் மேனியன். `புகுந்த` என்பதன் ஈறு தொகுத்தல்.
இதனால், சிவபெருமான் எண்ணற்ற உயிர்களுள் ஒவ்வொன்றற்கும் எண்ணற்ற உடலைக் கொடுத்துக் கூட்டியும், நிறுத்தியும், பிரித்தும் நடத்தும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. 

பொழிப்புரை :

ஒருவனும் ஒருத்தியுமான இருவர் (சிவனும், சத்தியும்) விளையாடலை மேற்கொண்டுள்ளார்கள். அவ் விளை யாடல் அவர்கட்குப் பொழுது போக்காகாது, எண்ணிலா உயிர்கட்கு எண்ணிலாப் பயனை விளைப்பது. அப்பயனும் உயிர்களின் பக்குவ நிலைதோறும் அதற்கேற்ப வேறு வேறாய் விளைவனவாம். உயிர்கள் வீடுபெறின், அவ்வொருவன் ஒருத்தியரது உலகத்தின் தொழிற்பாடு முற்றுப்பெறும்.

குறிப்புரை :

`சிவம், சத்திகட்கு உலகை மேற்கூறியவாறு பலபடச் செயற்படுத்தல் பெருஞ்செயலாய்த் துன்பம் விளைப்பதன்று; நினைத்த அளவிலே எளிதில் நிகழ்வனவாம்` என்றற்கு ``விளையாடல் உற்றார்`` என்றும், `விளையாட்டு` என்பதேபற்றி, `வீண்தொழில்` என்றாதல், `தம் நலம் கருதியது` என்றாதல் கருதலாகாது என்றற்கு, `எல்லாம் விளைக்கும்` என்றும், `எல்லாம்` எனப் பொதுப்படக் கூறினும், எல்லாப் பயனும், எல்லார்க்கும், எப்பொழுதும் ஆவனவல்ல என்றற்கு, ``பருவங்கள் தோறும் ஆன`` என்றும், `படைப்பின் குறிக்கோள் உயிர்களை வீடடைவித்தலே`` என்றற்கு, ``திரு ஒன்றின் செகம் செய்கை முற்றும்`` என்றும் கூறினார்.
``காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` (தி.8 திருவெம்பாவை, 12) என்றாற் போல, இறைவன் உலகை நடாத்துதலை `விளையாட்டு` என்றல் வழக் காதலும், ``ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் - உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்`` (தி.8 திருவெம்பாவை, 11) என்றாற் போல, அவனது செயல் உயிர்களை உய்வித்தற் பொருட்டு நிகழ்வ தாதலும் அறிந்துகொள்க. ``போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7ப.59 பா.1) என்பதனால் `திருவாவது வீடுபேறு` என்பது இனிது பெறப்படும். திரு - நன்மை. வீடுபேறே முடிந்த நன்மையாதல் அறிக. உயிர்கள் வீடு பெற்ற பின்பும் அவ்வின்பத்தை நுகர்தல் முதல்வனது அருட் செயலின்றி அமையாது என்பதனை, ``இன்பம் கொடுத்தல் இறை`` (உண்மை விளக்கம் , 50) எனவும்,
மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயமுடன்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம், 36
எனவும் கூறுமாற்றால் அறிந்து கொள்க. இக்கருத்துப்பற்றியே, ``முதல்வன் செயல் முற்றுப்பெறும்`` என்னாது, ``செகத்தின் செய்கை முற்றுப்பெறும்`` என்றார் என்க. இக்கருத்துணராதார், `உயிர்கள் வீடு பெற்ற பின்னை முதல்வற்குச் செயல் இல்லை போலும்` என மயங்குப.
இதனால், படைப்பு முதலியவைபற்றி அறியற்பாலன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே. 

பொழிப்புரை :

`உருத்திரன், மால், அயன்` என்னும் மூவரும் தம் தம் எல்லை யளவும் உயிர்க்குயிராய் நிறைந்து நின்று அங்குள்ள நிலைகளையெல்லாம் நன்குணர்வர். ஆயினும், அவரெல்லாம் எங்கும் அவ்வாறு நின்று உணரும் சிவபெருமானாகிய தலைவனுக்கு உரிய அடியரேயாவர்.

குறிப்புரை :

`ஆகவே, அவனை அடைதலே வீடுபெறுதலாம்; ஏனையோரை அடைதல் யாவும் பந்தமே` என்பது குறிப்பெச்சம். எனவே, சிவபெருமான் தனது படைத்தல் முதலிய தொழில்களின் பயனாக உயிர்கட்கு முடிவில் தன்னையே வழங்கியருள்வான் என்பது போந்தது. புவனாபதி - உலக காரணியாகிய உமைக்குத் தலைவன். முடி - தலைமை. அது தலைமையை உடையான் மேல் நின்றது.
இதனால், முடிந்த வீடுபேறு (பரமுத்தி) ஆவது இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங்
காணியர் காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே. 

பொழிப்புரை :

ஆணவ மலத் தொடக்கினுள் அகப்பட்டு நிற்கின்ற அந்நிலையில், அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிற்கின்ற அயன், மால், உருத்திரன், சீகண்டர், அனந்தர் என்னும் ஐவரும் பிறரால் கண்காணிக்கப்படும் காரியக் கடவுளரே. இனிக் காரணக் கடவுளராவார், மேற்சொல்லிய அந்நிலைக்குப் பின்னர்த் தாம் முன்னர் மேற்கொண்டிருந்த அத்தொழில்களாலே பக்குவம் முதிரப்பெற்று ஆணவம் நீங்கி அதன் வாதனை மாத்திரம் உடையராய்ச் சுத்த மாயையில் உடம்பு முதலியவற்றைப் பெற்று நிற்பவர்களே.

குறிப்புரை :

அவர், `அணுபட்ச அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவர் என்க. அதில் - அந்நிலையில். காணியர் - காணப்பட்டவர். `காரியர்` என்றேயும் ஓதுப. `கடைமுறை` என்றது, `பின்` என்றவாறு. பின்னர், ``விந்துவிற் பிறந்து`` என்ப தனால், முன்னர், மோகினி மான்களின் நிற்றலைக் கூறுதல் கருத்தாதல் அறிக. ``ஐந்தொழில்`` என்றதற்கு, காரியர் ஐவருள் சீகண்டரை மறைப் பவராகவும், அனந்தரை அருள்பவராகவும் கொள்க. `செலுத்துவோர் காரணர்` எனவும், `செலுத்தப்படுவோர் காரியர்` எனவும் உணர்க. ``பிறந்து நீங்காதவர்`` என்றாராயினும், `நீங்காது பிறந்தவர்` என்றலே கருத்து என்க. நீங்காமை, பற்றறக் கழியாமை. `காரியர் பக்குவம் முதிரப் பெற்றபின் ஞானத்தை அடைந்து வீடு பெறுவர்` என்பதும், `காரணர் ஞானம் முதிரப் பெற்று வாதனை நீங்கியபின் வீடு பெறுவர்` என்பதும் உய்த்துணர வைத்தமை காண்க. அனந்தர் சுத்தமாயையில் உள்ளவராயினும், தூல வாசனை உடையராய் அசுத்த மாயையைத் தொழிற்படுத்துதல் பற்றி ஆணவத் தொடக்குடையவராக ஓதினார்.
இதனால், மேல், `பந்த நிலையினர்` எனக் குறிக்கப்பட்டவரது பந்த நிலைகள் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே. 

பொழிப்புரை :

நிலமுதல் மாயை ஈறாக உள்ள முப்பத்தொரு தத்து வங்களும் அசுத்த மாயையின் காரியங்கள். அதற்கு மேல் உள்ள ``சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம்`` என்னும் மூன்றும் `மகாமாயை` எனப்படும் சுத்த மாயையின் காரியங்கள். சாதாக்கியத்திற்குமேல் உள்ளது விந்து. அவ்விந்துவைப் பெற்ற அந் `நாதம்` என்னும் தத்துவம், பரவிந்துவிற் பிறத்தலால், யாவும், எல்லாத் தத்துவங் களையும் தனது உடைமையாக உடைய பராசத்தியோடு கூடிய பரம சிவனது பழைய திருவிளையாடலேயாம்.

குறிப்புரை :

இங்குக் கூறிய தத்துவங்கள் இவை என்பதை மேலே காண்க. (தி.10 பா. 124)
இதனால், அனைத்தையும் தனது விபூதியாக (சிறந்த உடைமையாக) உடையவன் பரமசிவன் என்பது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே. 

பொழிப்புரை :

`வானம், காற்று, தீ, நீர், நிலம்` என்னும் பூதங்கள் ஐந்தற்கும் முறையே, `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்னும் ஐவரும் தலைவராவர் என்று உணர். இவர் அனைவரும், யாதொரு பொருளையும் விட்டு நீங்காது நிறைந்து நிற்கும் சிவசத்தி பதிய ஒருங்குதோன்றியவரே. இவருள் மகேசுரன் முதலிய நால்வரும் உருவம் உடையவர். (சதாசிவன் அருவுருவினன்) இவர் ஐவர் தொழிலும், மேற்கூறிய ஆகாயம் முதல் பூமி ஈறான பூதங்களைக் காரியப்படுத்தலாம்.

குறிப்புரை :

`ஆகாயமாதிக்குச் சதாசிவன் ஆதியோர் தலைவர்` எனத் தொகுத்தலாயும், சொல்லெச்சமாயும் நின்ற சொற்களை விரித்துரைத்துக்கொள்க. என் - என்று உணர். ``உட்போத`` என்பது, ``உட்போந்து`` எனத் திரிந்து நின்றது. மா காயம் - தூலவடிவம்; உருவம். ``அளித்தல்`` என்றது `ஆளுதல்` என்னும் பொருட்டாய் நின்றது. `அளித்தலே தொழில்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், மேல், தத்துவங்களை, `பரமசிவனது விபூதி` என்று கூறியபின், அத்தத்துவத் தலைவர்களும் அவனது விபூதியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே. 

பொழிப்புரை :

சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபர நாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களமாகத் தோன்றும் சாதாக்கிய தத்துவத்தினைத் தோற்றுவிக்கும். அருள் காரணமாக, `திரிபுரை` என்னும் சத்தி தோன்றுவாள். அவளே அத்தத்துவத்தின் தலைவனாகிய சதாசிவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று, அருளல் முதலிய ஐந்தொழிலையும் செய்வாள்.

குறிப்புரை :

இவளே மனோன்மனி என்பதனை அடுத்து வரும் திரு மந்திரத்துள் அறிக. இவளது சிறப்பை நாயனார் நாலாந் தந்திரத்துள் விரித்தோதுவார். அளி - அருள்.
இதனால், மேற்கூறிய தத்துவங்களும், தத்துவத் தலைவர் களும் பரமசிவனது விபூதியாதற்குக் காரணம் தோன்றுதற் பொருட்டு, அவனது சத்தியே எல்லாம் செய்யும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே. 

பொழிப்புரை :

அத்திரிபுரையே `மனோன்மனி` எனப்படுவாள். அவள் நித்திய சுமங்கலை. எல்லாவற்றிற்கும் காரணி. அதுவேயன்றிக் காரியப்பட்ட பொருள்களிலும் கலந்து நிற்பாள். `உமை, வாணி, திருமகள், மகேசுவரி` என்றும் பாகுபட்டு நிற்பாள். உயிர்கட்குச் சுட்டறிவையும், சுட்டிறந்த வியாபக அறிவையும் தருவாள்.

குறிப்புரை :

`வாரணி - யானைத் தோலைப் போர்த்தவள்` என உருத்திரனது சத்தியைக் குறித்தது. ஆரணி - வேதம் ஓதுபவள். வானவர் மோகினி - தேவர்களை மாயையால் மயக்குபவள். பூரணி - நிறைந்த தலைமை உடையவள். செய்யுள் நோக்கி இவர்களை முறை பிறழ வைத்தார்.

பண் :

பாடல் எண் : 23

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே. 

பொழிப்புரை :

மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.

குறிப்புரை :

என்றது, மகேசுரன் முதலாகக் கீழுள்ள நிலைகளே அதிகார நிலை எனக் கூறியவாறு. சதாசிவ நிலை, `போக நிலை` எனவும், அதற்குமேல் உள்ள நிலைகள் இலய நிலை எனவும் உணர்க. இறைவன் உலகத்தைத் தொழிற்படுத்தும் பொழுது இவ்வாறு, `இலயம், போகம், அதிகாரம்` என மூன்று நிலைகளில்நின்று தொழிற்படுத்துவன் என்பது முதல் திருமந்திரத்தே குறிக்கப்பட்டது. இதனை இங்குக் கூறியது, மேற் கூறியவாற்றால், `சத்தியே எல்லாம் செய்யச் சிவன் வாளாவிருப்பான் போலும்` எனவும், `அதனால் அவ்விருவரும் வேறு வேறு நிற்பவரே போலும்` எனவும் ஐயம் நிகழாது, `சத்தியும் சிவனும் யாண்டும் உடனாகியே நிற்பர்` என்பதும், `அதனால் சத்தி செய்வனவெல்லாம் சிவன் செய்வனவே` என்பதும் உணர்த்தற் பொருட்டாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. 

பொழிப்புரை :

முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.

குறிப்புரை :

`அவ் வொருவன் சிவபெருமானே` என்பது கருத்து.
இதனால், சிவபெருமானது முழுமுதற் றன்மை வலியுறுத்திக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே. 

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானே செந்தாமரை மலரில் உள்ள அழகிய பிரம தேவனும், மேகம்போலும் நிறத்தையுடைய திருமாலும், நெருப்புப் போலும் நிறத்தை யுடைய உருத்திரனுமாவான். ஆதலின், அவனே மாயை என்னும் முதற் காரணத்தினாலும், மகளிரை ஆடவர் கூடும் கூட்டமாகிய துணைக் காரணத்தினாலும் ஐந்து கூறாய்ப் பொருந்தும் உடம்புகளைத் தோற்று வித்து நிற்கின்றான்.

குறிப்புரை :

முதலில் உள்ள வண்ணம் - அழகு; பொன்னிறம். இறுதியிற் கூறத்தக்க தீவண்ணனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``எம் இறை`` என்றதனை முதலில் வைத்துப் பிரிநிலை ஏகாரம் விரிக்க. ``செந்தாமரை வண்ணன்`` முதலிய மூன்றும் `எம் இறையே` என்னும் எழுவாய்க்குப் பயனிலைகளாய் நின்றன. ``முகில் வண்ணன்`` என்பதன் பின், `அவனே` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `ஆடவர்` என்பது சொல்லெச்சம்.
உடம்பின் ஐந்து கூறுகளாவன, ஐங்கோசங்கள். அவை, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` என்பன. இவற்றின், விளக்கம் பின்னர்க் காணப்படும். இவற்றுள் அன்னமய கோசம் பிரம தேவனது ஆளுகைக்கும், பிராணமய கோசம் மாயோனது ஆளு கைக்கும், மனோமய கோசம் சீகண்ட உருத்திரரது ஆளுகைக்கும் ஏனை இரு கோசங்களும் அனந்த தேவரது ஆளுகைக்கும் உட்பட்டு இயங்குவனவாம். இவற்றுள், முதல் மூன்றும் பிரகிருதி மாயையின் காரியங்களும், ஏனை இரண்டும் அசுத்த மாயையின் காரியங்களு மாகும்.
இதனால், படைப்பு வேறுபாடு ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.
இவ்வாறாகவே, `படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் சிவபெருமான் சுத்தமாயையில் தான் நேரே செய்வன்` என்பதும், `அசுத்த மாயையில் அனந்த தேவரை வாயிலாகக் கொண்டு (அதிட்டித்து நின்று) செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழியாகச் சீகண்ட உருத்திரனை வாயிலாகக் கொண்டு செய்வன்` என்பது போதரல் காண்க.
இதனால், சிவபெருமான் மும்மாயையிலும் படைத்தல் முதலியவற்றைச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே. 

பொழிப்புரை :

பல்கோடி அண்டங்களிலும் தனக்காவதொரு புக்கிலை (நிலையான வீட்டைத்) தேடி அலைகின்ற சீவான்மாவின் பொருட்டு, உடலும், உயிரும் கன்மத்தால் தொடர்பு கொள்கின்ற பல பிறவிகளை அவ்வவ்வுயிர்க்கு ஏற்றவாறு மேற்கூறிய வாற்றால் மாயையினின்றும் தோற்றுவிக்கின்ற பரமான்மாவாகிய சிவபெரு மான், தான் தனது திவ்வியாகமங்களுள் கூறியுள்ள அப்படைப்பு முறைகளைத் தெளியமாட்டாது அவற்றொடு மாறுபடுகின்றவரது உள்ளத்துள்ளே நின்று, அவரது அறிவோடே ஒத்துக் கூறிய பல சமயக் கொள்கைகளையும் யான் அறிவேன்.

குறிப்புரை :

அக்கொள்கைகளாவன, `பூதங்கள் நான்கே; அவை தம்முட் கூடுதல் பிரிதல்களால் உலகம் தோன்றும்; அழியும். அதனால், அச்செயல்கட்கு முதல்வன் ஒருவன் வேண்டுவதில்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் உலகாயத மதத்தினர்) `வித்தின் கேட்டில் அங்குரம் (முளை) போல எல்லாப்பொருளும் ஒன்றன் கேட்டில் மற்றொன்றன் தோற்றமாக ஒரு கணத்தில் தோன்றி, மறுகணத்தில் அழிந்து செல்லும். இத்தொடர்ச்சி பொருட்பெற்றியானே நிகழும்; இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் புத்த மதத்தினர்) `உளதாதல், இலதாதல் என்னும் இரண்டு தன்மையும் ஒருங்கே உடைமையால் இத்தன்மைத்தென வரையறுத்துச் சொல்லொணாத இவ்வுலகம் உளதாதல் தன்மையால் தோன்றி, இலதாதல் தன்மையால் அழிதல் இயல்பாதலின், இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் சமணமதத்தினர்) `பிரகிருதிக்குமேல் மாயை இல்லை; அதனால், அதன் காரியமாகிய இருபத்து நான்கிற்கு மேல் தத்துவம் இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் ஏகான்மவாதிகள், யோகர், சாங்கியர் முதலிய பலருமாவார். இவருள் ஏகான்மவாதிகள் மாயை `அநிர்வசனம்` - இன்னதெனச் சொல்லொணாதது, எனக்கூறி, அதனுள் சக சீவ பரங்கள் விவர்த்தனமாய் - மயக்கக் காட்சியாய் - தோன்றும்` எனவும், ஏனையோர், `மாயையை உள்பொருள்` எனவும், `அதனால், அதன் காரியங்களும் உள்பொருளே` எனவும் கூறுவர். சாங்கியருள் ஒரு சாரார், `மாயை தானே தனது காரியத்தைத் தோற்றுவிக்கும்; இறைவன் வேண்டா` என்பர்.) இன்னோரன்ன பலவுமாம். மேல் ``பருவங்கள்தோறும் பயன் பலவாகும்`` (தி.10 பா.393) என்று அருளிச் செய்தபடி, சிவபெருமான் அவ்வவ்வுயிர்களின் பரிபாகத்திற்கேற்ப அவற்றின் வழி நின்று துணைபுரிவனாதலின், அதனை, `அவர்தமதுள்ளத்துள் நாடும் வழக்கம்` என்றார். வழக்கம் - மரபு; கொள்கை.
`திசை எட்டும் தேடும் சீவன்` என மாற்றி, `சீவனுக்கு` என நான்காவது விரிக்க. குணம் - பிரகிருதி.
இதனால், `பிறநெறிகளுட் கூறப்படும் முறைமைகள் பலவும் பூர்வபக்கம்` என்பது கூறும் முகத்தால், `சிவநெறியுட் கூறப் படும் முறைமையே சித்தாந்தம்` என மேலன பலவும் வலியுறுத்தப் பட்டன.

பண் :

பாடல் எண் : 27

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. 

பொழிப்புரை :

`படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.

குறிப்புரை :

`வேத சிவாகமங்களில் பூதம் முதலிய தத்துவங் கட்கும், பல்வேறு பிறவிகளில் நிற்கும் உயிர்கட்கும், அவற்றது உடம்பில் அமைந்த பல்வேறு உறுப்புக்களுக்கும், அவ்வுடம்புகட்கு நிலைக்களமாய் `அண்டம்` எனவும், `புவனம்` எனவும் பெயர் பெற்று நிற்கும் இடங்கட்கும் தலைமை தாங்கி அவ்வவற்றை ஏற்ற பெற்றி யான் இயக்கும் கடவுளர் எண்ணிறந்தோர் எனக் கூறி, அவர்க்கு உரிய உருவம், பெயர், தொழில் முதலியனவும், இடம் பொருள் ஏவல்களும், அவரை வழிபடும் முறைகளும் பலபட எடுத்துச் சொல்லப்பட்டாலும், அவர் பலரும் தாம் தாம் தம் இச்சைவழி நின்று செயல்புரிவோரல்லர்; சிவபெருமானது அடியவர் குழாங்களே எனத் தெளிவித்தவாறு, `அமைப்பால் வேறுபட்ட பல கூட்டமாயினும், ஒருவனது பணி யாளராம் முறைமையால் ஒரு கூட்டமே` என்றற்கு, ``ஓர் ஆயமே`` என்றார். ஆயம் - கூட்டம்.
இதனால், அனேகேசுர வாதம் பற்றி எழும் ஐயம் பொது வகையான் அகற்றி, மேலே வலியுறுத்தப்பட்டது. மேல் ``ஒருவனுமே`` (தி.10 பா.401) என்ற மந்திரம் ஒருவனே பலராய் நின்று காரியம் செய்தல் கூறியது. இது பலரும் ஒருவனது ஏவலரே எனக் கூறியது. இவை தம்முள் வேற்றுமை.

பண் :

பாடல் எண் : 28

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே. 

பொழிப்புரை :

தலைவனாகிய சிவபெருமான் ஒருவனும், அவனது அருட்கு உரியராயினமையின் நல்லோராகிய `மால், அயன்` என்னும் இருவரும் ஆக மூவரும் தீயது, நல்லதுமாகிய முக்குணங் களைக் கூட்டிக் குழைத்து உலகை ஆக்குகின்றனர். எனினும், ``அடியேங்கட்கு இடும் பணி யாது`` என்று விண்ணப்பித்து அவற்றைச் செய்ய இசைந்து நிற்கும் நல்ல இருவருக்கு நாதனாகிய சிவபெரு மானே அவர் செய்யத் தக்க பணியை அருளிச் செய்கின்றான்.

குறிப்புரை :

கோது - குற்றம்; தீமை. குலம் - நன்மை. இராசதமும், தாமதமும், ``கோது`` எனப்பட்டன. சாத்துவிகம், ``குலம்`` எனப் பட்டது. `ஏனைத் தேவர் பலரும் தலைவராகாதொழியினும், புராணங்களிலும், பிறவிடத்தும் தலைவராகச் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற மூவர் தலைவராகாமை இல்லை போலும்` எனப் பௌராணிக மதம்பற்றி மீளவும் எழும் மலைவை நீக்கியவாறு.
``முக்குணத்தால் உலகை ஆக்குகின்றனர்`` என்ற குறிப்பால் `குணாதீதனாகிய சிவன் முதல்வனாதலன்றிக் குணவயப்பட்ட ஏனையோர் முதல்வராமாறு இல்லை` என வழி வகை கூறித் தெளிவித் தவாறாயிற்று. உருத்திரனைச் சிவபெருமானின் மேம்பட்ட வனாக மயங்கிக் கூறுவார் இன்மையின், அழித்தல் தொழிலைப் பேறாக உடைய உருத்திரனைப் பற்றி விளக்கம் கூறிற்றிலர்.
இதனால், தலைமைபற்றி, `பௌராணிகம், ஐரணியகருப்பம், பாஞ்சராத்திரம்` என்னும் மதம் பற்றி எழும் ஐயத்தைச் சிறப்பு வகையான் அகற்றி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. 

பொழிப்புரை :

`எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப் படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங் களைப் பொருந்தி நின்று உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச் சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனா கின்றான்.

குறிப்புரை :

``உரைசேரும் எண்பத்து நான்குநூறாயிரமாம் யோனி பேதம்`` (தி.1 ப.132 பா.3) என்றற்றொடக்கத்தனவாகப் பலவிடத்தும் பிறப்பு வகை வேறுபாடுகள் எண்பத்துநான்கு நூறாயிரம் என்பது கூறப்படுதல் காண்க. இவை அனைத்தும், `அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம்` என்னும் நால்வகைத் தோற்றமும், `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுவகைப் பிறப்புமாய் அமைவனவாம். அண்டசம் - முட்டையில் பிறப்பன. சுவேதசம் - வியர்வையில் (அழுக்கில்) பிறப்பன. உற்பீசம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளைப் பிளந்து கொண்டு மேல்நோக்கி முளைப்பன. சராயுசம் - கருப்பப் பைக்குள் உரு நிரம்பிப் பிறப்பன. எண்பத்து நான்கு நூறாயிரமும் எழுவகைத் தோற்றத்துட் பொருந்துமாறு:-
தோற்றிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தாகும்;
ஊர்வபதி னைந்;தமரர் பதினொன்றோ;டுலவா
மாற்றருநீர் உறைவன,நற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து;மானுடர்ஒன் பதுமாம்;
ஏற்றியொரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
-சிவப்பிரகாசம் - 47
என்பதனால் விளங்கும். இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில்சீர்த் தாவரம்நா லைந்து.
-திருக்குறள், 62. பரிமேலழகர் உரை மேற்கோள்
எனச் சிறிது வேறுபடவும் கூறுவர். எவ்வாறாயினும், `எண்பத்து நான்கு நூறாயிரம்` என்பதில் மாறுபாடில்லை.
`இத்துணை வேறுபட்ட பிறவிகளில் ஏனையவற்றிற் செல்லாது மானுடப் பிறப்பினுள் வருதல் பெரிதும் அரிது` என்பதை,
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தால்
உண்டுபல் யோனி; எல்லாம் ஒழித்துமா னுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்.
எனச் சிவஞான சித்தி (சூ. 2.89) நூல் கூறிற்று.
``மூடி`` என்பது பெயர். `மூடியாய்` என ஆக்கச்சொல் விரிக்க. இனி, வினையெச்சமாகக்கொண்டு, `இருளால் மறைத்து நின்றான்` என உரைத்தலுமாம்.
இதனால், படைப்பு எண்பத்து நான்கு நூறாயிர வேறு பாடுகளை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 

பொழிப்புரை :

அசுத்த மாயையில் உளவாகின்ற தத்துவ தாத்து விகங்களோடு ஒத்த தத்துவ தாத்துவிகங்களும், பிறப்பு வகைகளும் சுத்த மாயையின்கண்ணும் உளவாவனவாம்.

குறிப்புரை :

பிறப்பு வகைகள் பலவற்றையும் உபலக்கணத்தாற் கொள்ளுதற்கு, `எண் பாலர்கள்` என்றார். எண் பாலர் - திசைக் காவலர். போதித்த - சிறப்பித்துச் சொல்லப்பட்ட. ஒளி - தேசசு; நெருப்பு. `ஒலி` என்பது பாடம் அன்று. வாதித்த - வாதத்தோடு கூடிய. வாதம் - காற்று. `கூடிய` என்றது, `சொல்லப்பட்ட ஐம்பூதங்களோடும் கூடிய` என்றவாறு. ``சத்தாதி`` என்றதை, `தன்மாத்திரை, விடயம்` என இரட்டுறமொழிந்து கொள்க. ``ஆதி`` என்றதனை, ``வாக்கு`` என்றதனோடும் கூட்டுக. வாக்காதி, `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள்; இவற்றைக் கூறவே `செவி, தோல், கண், மூக்கு, நாக்கு` என்னும் ஞானேந்திரியங்களும், சத்தாதி ஞானேந்திரிய விடயங்களைக் கூறவே, `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்` என்னும் கன்மேந்திரிய விடயங்களும் கொள்ளப்படும். மனாதி, `மனம், அகங்காரம், புத்தி, சித்தம்` என்னும் அந்தக்கரணங்கள். `ஆதித்தன், சந்திரன்` என்றது, உபலக்கணத்தால் தாத்துவிகங்களைக் கொள்ள வைத்ததாம்.
`தத்துவங்கள் முப்பத்தாறு` எனவும், `அவற்றுள், சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்தும் சுத்த மாயையில் உள்ளவை; ஏனைய அசுத்த மாயையில் உள்ளவை` எனவும் மேற்கூறியவாற்றால், `சுத்த மாயையில் உள்ள தத்துவங்கள் மேற்கூறிய ஐந்துமே; பிற இல்லை` என்பது பட்டமையின் அதனை விலக்கி, `மேற்கூறிய ஐந்தும் சுத்த மாயையின் சிறப்புத் தத்துவங்கள்; அவை அசுத்த மாயையில் இல்லை; ஏனைய முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தமாயை, அசுத்த மாயை இரண்டற்கும் பொதுத் தத்துவங்கள்; அதனால் அவை அவ் இருமாயையிலும் உள்ளன. சுத்த மாயையில் அவை மலகன்மங்களோடு கலவாமல் சுத்தமாய் உள்ளன; அசுத்த மாயையில் அவை அவற்றொடு கலந்து அசுத்தமாய் உள்ளன; அவ்வளவே வேறுபாடு` எனத் தெரித்துக் கூறியவாறு. `இதுவே சிவாகமங்களின் துணிபு` என்பது.
``காலம் முதல் நிலம் ஈறாகிய தத்துவங்கள் எல்லாம் அசுத்த மாயையிற்போலச் சுத்த மாயையினும் உள; அவை இவை போலன்றிச் சுத்தமாய் உள்ளன என்னும் பௌட்கர வசனத்தான் அசுத்த தத்துவ புவனங்களின் உள்ளன அனைத்தும் சுத்த தத்துவ புவனங்களினும் சுத்தமாய் உளவாம் என்பது போதருதலானும்``
எனச் சிவஞானபோத மாபாடியத்தும் (சூ.2 அதி.2) இனிது எடுத்து விளக்கப் பட்டமை காண்க. அசுத்த மாயா உலகத்தவராகிய அயன், மால், உருத்திரன் முதலியோர்போலச் சுத்த மாயையிலும் அப்பெயர் முதலியன உடையோர் உளர் என்றலும் இதுபற்றி என்க. இனி, பூலோக புவர்லோக சுவர்க்கலோகம் முதலிய உலகங்களில் கீழ் உலகத்துள்ளனபோல மேல் உலகத்தும் உள்ளன பொருள்கள் என்றலும் இவ்வாற்றானே அமைதல் அறிந்துகொள்க.
இனி, `சுத்த மாயை மேலே உள்ளது; அசுத்த மாயை கீழே உள்ளது` எனக் கூறுதல், சூக்கும தூல முறைமையால் வியாபக வியாப் பியமாதல் பற்றியல்லது, ஒருமரத்தில் அதன் அரையும், கிளையும் போல இட வேறுபாடு பற்றியன்றாதலால், சுத்த மாயையில் உள்ளன பலவும் அசுத்த மாயையில் தோய்வின்றி வியாபகமாய் நிற்கும் என்பதும் நுண்ணுணர்வால் உணர்ந்துகொள்க. அங்ஙனம் அல்லாக் கால் மந்திரங்களும், அவற்றிற்கு உரியராய கடவுளரும் அசுத்த மாயா புவனத்தில் உள்ளார்க்குப் பயன் தருமாறு இல்லை என்க.
`மாயையிற் போல` என ஒருசொல் வருவிக்க. ``உற்றது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. `உற்றவே` என ஓதுதலும் ஆம்.
இதனால், படைப்புப் பற்றியதொரு புறனடை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

பொழிப்புரை :

என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனாலே அவை நிலைத்து நிற்கின்றன` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. இதில் `நின்றான்` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்றெச்சம். ஒவ்வோர் அடியிலும் எச்சங்களை முதலிலே கூட்டி முடிக்க. `வெளி` எனினும் `ஒளி` எனினும் ஒக்கும். இங்கு, ``ஒளி`` என்றது, ஆன்ம அறிவை விளக்கும் மாயா காரியங்களை. ``இருள்`` ஆணவமாதல் வெளிப் படை. அதனுள்ளும் இறைவன் நிற்றல், அதன் சத்தியை இடையறாது தொழிற்படச் செய்து மெலிவித்தற்காம். புகழ்வு - புகழ்தல். இகழ்வு - இகழ்தல். இத்தொழிற் பெயர்கள் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளாய அவ்வச்சொன்மேல் நின்றன. இவற்றால் அவன் அச்சொற் கட்குப் பொருளாம் உயர்பொருள் இழிபொருள்களின் நிற்றல் குறிக்கப்பட்டது. ``உடல்`` என்றது சடப்பொருள்கட்கு உபலக்கணம்.

பண் :

பாடல் எண் : 2

தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தான் ஒருவனே பல பொருள் களினும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பித்தலுடன், அவற்றைத் தன் இச்சைவழி நடத்துபவனுமாகின்றான்.

குறிப்புரை :

`அதனால் அவை இயங்கிவருகின்றன` என்பது குறிப் பெச்சம். முதல் மூன்றடிகளும் அனுவாதம்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், `காத்தலாவது, அழியாது நிற்பித்தலும், நடத்துதலுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் இவ்வாறு எல்லாப்பொருளிலும் நிறைந்து நிற்றல், அவன் பிறபொருள்களால் அடைக்கப்படாத பெருவெளியாய் நிற்றலினாலாம்.

குறிப்புரை :

``உலகம்`` என்றது, விதந்தோதாதன பிறவற்றை. வான் - மேகம். இடை - வெளி; ஆகாயம். உலப்பிலி எங்கும் - அள வில்லாத இடம் எங்கணும். ``அடையாப் பெருவெளி அண்ணல்`` என்றது உடம்பொடு புணர்த்தல். அன்றி, `அண்ணல் ஆதலின்` எனச் சொல்லெச்சம் வருவித்துரைத்தலுமாம். அங்ஙனம் வருவிப்பின், இத்தொடர் முதலில் வைத்து உரைக்கப்படும்.
இதனால், `ஒருவன் பிற எல்லாப் பொருளிலும் நிற்றல் எவ்வாறு கூடும்` என்னும் ஐயத்தினை, இங்கும் நீக்குதற்கு அங்ஙனம் நிற்குமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் சிருட்டி அதிகாரத்தில் வந்த ``தேடுந்திசை எட்டும்`` என்னும் மந்திரம் இங்கு மீளவும் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 4

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயனு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்களது அறிவு நிலைக்கு ஏற்பக் கதிர்க்கடவுள், வளிக்கடவுள், மழைக்கடவுள், (இந்திரன்) முதலிய பல்வேறு கடவுளராய்த் தோன்றுவான். ஆதலின், அவன் திருமாலாய்த் தோன்றுதலில் வியப்பில்லை.

குறிப்புரை :

ஒருகால் - ஒருகாலத்தில்; என்றது, `உயிர்களின் பக்குவ நிலையில்` என்றவாறு. சுடர் முதலியன அவற்றை இயக்கும் கடவு ளரைக் குறித்தன. தண்மை, சத்துவகுணத்தைச் சுட்டியது. `பிறர் சத்துவ குணத்தை யுடையவனாகக் கூறும் மாயோன்` என்றவாறு. மாயோன் தொழிலால் மட்டுமே சத்துவன்; குணத்தால் தாமதனே. சிவபெருமான் பல்வேறு கடவுளராய்த் தோன்றலாவது, அவர் அவர் அறிவிற்கு ஏற்ப அவரையே முதற்கடவுளாக மயங்குமாறு அவர்பால் தனது ஆணையை வைத்துத் தத்தமக்கு இயலும் அளவு உலகத்தை நடத்தச் செய்தல். `அவ்வாற்றால் காக்கும் ஆணையைத் திருமாலிடத்து வைத்து நடத்துகின்றானாதலின், அத்திருமாலையே காத்தற் கடவுளாக உண்மை நூல்கள் ஓரோர் இடங்களிற் கூறுதலும், அங்ஙனம் கூறுதலின் உண்மையை உணரமாட்டாதார் அவனையே காத்தற் கடவுளாகவும், முதற்கடவுளாகவும் மயங்குதலும் இயல்பாகலின், அதுபற்றி ஐய மில்லை` என்பதாம். சண்டம் - வேகம். மாருதம் - காற்று. தளி - துளி.
இதனால், `காப்பவன் மாயனன்றோ` எனப் பௌராணிக மதம் பற்றி எழும் ஐயத்தினை நீக்கி, `காப்பவனும் சிவனே` என்பது இங்கும் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே. 

பொழிப்புரை :

திருவருளால் ஐம்பூதங்களிலும் நிற்கும் சிவ பெருமானே, குணங்கள் மூன்றாயும், காலங்கள் மூன்றாயும் நிற்பான்.

குறிப்புரை :

`அதனால் சத்துவ குணத் தொழிலாகிய காத்தலைச் செய்பவனும் அவனே` என்பதாம். அன்பு முதலாக இன்பம் ஈறாகக் கூறியவை சத்துவ குணத்தை விரித்தவாறும், இன்பக் கலவி தாமத குணத்தைக் குறித்தவாறுமாம். முன்புறு காலம் - உலகத்தது தோற்றக் காலம். ஊழி அதன் இறுதிக் காலம். இவை முறையே இறப்பும், எதிர்வும் குறித்தன. இராசத குணமும், நிகழ்காலமும் உபலக்கணத்தாற் கொள்ளநின்றன.
சிவபெருமான் எட்டுருவினன் (அட்ட மூர்த்தி) ஆதலும், அவற்றுள் ஐம்பூதங்கள் முக்குண வடிவினவாதலும் பலரும் அறிந்தன வாதலின், அவனை, `தாமத குணம் ஒன்றே உடையன்` எனவும், `அதனால், அழித்தலையே செய்வன்` எனவும் கூறுதல் அறியாதார் கூற்றேயாம் என்றபடி. இனி அவன் குணாதீதன் ஆதலும் நூல்களால் நன்குணர்த்தப்படுவது என்றற்குக் காலங்கள் மூன்றாதலையும் உடன் கூறினார்.
இதனால், `சிவபெருமான் காத்தற்கு உரியனல்லன்` எனப் பிணங்கிக் கூறும் பாஞ்சராத்திர மதத்தை மறுத்து, மேலது வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே. 

பொழிப்புரை :

முதற்கண் உலகுயிர்களை அவற்றிற்கு அம்மை அப்பனாய் நின்று படைப்பவனும் சிவபெருமானே. பின்பு அவற்றைத் தன் மக்களாகக் கொண்டு புரப்பவனும் அவனே. இவை `தேவர், மக்கள்` என்னும் சிறப்புடைப் பிறப்பினர்க்கு மட்டுமன்று; `விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் சின்னஞ்சிறிய பிறவிகட்குமாம்.

குறிப்புரை :

``வனைதல்`` மூன்றனுள் முன்னது `ஆக்குதல்` எனவும், இடையது `திருத்தல்` எனவும், ஈற்றது `இரண்டனையும் செய்தல்` எனவும் பொருள் தந்தன. ``உலகு, பிறவி`` என்பன சொல் வேறுபட்டுப் பொருட்பின்வருநிலை அணியாய் நின்றன. சால் முதலிய நான்கும் பெரியனவும், சிறியனவுமாய உடம்புகளை உணர்த்தி நின்றன. மற்றும் - ஏனைய கலங்களும். தூதையை, `மொந்தை` என்பர். `தூதையும்` என்னும் உம்மை தொகுத்தல். ``வனையவல்லான்`` என்றதனால், இது குறிப்புருவகம்.
இதனால், சிவபெருமானது ஆற்றலின் பெருமையை மீளவும் நினைப்பித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

`தூய உயிர்` எனப்படும் பரமான்மாவாகிய பெருவெளியாய், தூய்மையின்றி மாசுண்டு கிடக்கும் சீவான்மாவாகிய உயிரினுள் அறிவு தோன்றுதற்கு ஏதுவாய் நிற்பதாய இயற்கை அறிவே உயிரின் உடலையும் இடமாகக்கொண்டு நிற்கும் `பரம்பொருள்` எனப்படுவது. அதனை இழந்துநிற்கும் உயிர் அதுவாம் வண்ணம், அதன் உடலாயும், அவ்வுடல் வாழ்வுறுதற்கு அதனுள் நிற்கும் உயிர்ப் பாயும் உள்ள சிவபெருமானே அதனைக் காத்து நிற்கின்றான்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, ``தாங்கி நின்றான்`` என்பதை உள்ளவாறே நிறுத்தி முடிக்க. ``விளங்கொளி`` என்பதன்பின் `ஆய்` என்பது விரிக்க. `நிலங்கொளி` என்பது பாட மன்று. ``தள் உயிர்`` என்பதில் ``தள்ளுதல்``, தவறவிடுதல். இதன்பின் `அது` எனப் பரம்பொருளைச் சுட்டும் சுட்டுப்பெயர் எஞ்சி நின்றது. `பரம்பொருளை அறியாது நிற்கும் உயிர் அதனை அறியும் வண்ணம் பக்குவம் முதிர்தற் பொருட்டே அதனை உடலில் நிறுத்திப் புரக்கின்றான்` என்றவாறு. ``உயிர்ப்பாய்`` என்றதனால் உடலை நிற்பித்தலையும், ``உடலாய்`` என்றதனால் உயிரை அஃது எடுத்த பிறப்பில் நிறுத்துதலையும் குறித்தவாறு. இறைவன் உடலினுள் உயிர்ப்பாதலை,
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` -தி.5 ப.21 பா.1
என்பதனான் அறிக.
இதனால், காத்தல் தொழிலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் பல உயிர்களையும் அவற்றது உடலில் நிறுத்திக் காக்கின்ற காலத்தில் அக் காத்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவரும், அவைகளை அவற்றது உடம்பினின்றும் பிரிக்கின்ற காலத்தில் அப்பிரித்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவருமாக அவனுக்கு எதிராவார் பிறர் இல்லை. இனி விடாது வந்த எழுவகைப் பிறப்பிற்கும் முடிவாவது ஞானமே. அந்நெறியில் அவ்வுயிர்களைப் பிறழாது நிற்பிப்பவனும் அச் சிவபெருமானே.

குறிப்புரை :

தன்மையைச் செய்வாரை, ``தன்மை`` என்றது ஒற்றுமை வழக்கு. பின் முன் உள்ள சொற்குறிப்புக்களால், `தாங்கிய காலத்து` என்பது முன்னரும், `வாங்கருந் தன்மையும்` என்பது பின்னரும் வருவித்துக் கொள்ளக் கிடந்தன. அதனால், `தாங்கிய காலத்துத் தாங்கருந் தன்மை செய்வாரும், வாங்கிய காலத்து வாங் கருந்தன்மை செய்வாருமாக மாற்றோர் பிறரில்லை` என்பது முன் னிரண்டடிகளின் பொருளாயிற்று. மாற்றோர் - எதிராவார். ``அந்தம்`` என்றது, `எழுமைக்கும்` என்றதனோடும் இயையும். `ஓங்கிய` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று. யோகத்தின் அந்தத்தில் தோன்று வதனை ``யோகாந்தம்`` என்றார். `ஞானம்` என்னாது ``யோகாந்தம்`` என்றதனானே, `சரியை முதலிய தவங்களில் நிறுத்திக் காப்பவனும் அவனே` என்பது போந்தது. தார் - (கொன்றை) மாலையை. அணி - அணிந்தவன். `மற்றோர் பிறிதில்லை` என்பது பாடம் அன்று.
இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே. 

பொழிப்புரை :

அண்ணலாகிய சிவபெருமான், உயிர்களோடு உடனாய் நிற்பினும், அவற்றால் அறிதற்கரியனே. யோக முறையால் பிராண வாயுவை அடக்கி மூலாதாரத்தினின்றும் எழுப்பப்படும் அங்கியின்வழி மேல்நிலமாகிய புருவ நடுவை அடைந்து தியான சமாதிகளால் அவனை உணரினும், உண்மையில் ஞான முதிர்ச்சி ஒன்றுமே அவனைப் பெறுவிக்கும். அதனால், சரியை முதலிய மூன்றால் அவனை வழிபடும் தவநெறியில் நிற்பினும், அதனில் செல்லாது உலகரோடு கூடி அவநெறியில் தாழினும் அவன் பிறவியை அறுத்தல் இன்றி அதனைக் கூட்டவே செய்வான்.

குறிப்புரை :

`ஒன்றுமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `அவனை நல்கும்` எனச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. தணிதல் - தாழ்தல்; கீழ் நிலையை எய்தல். மன் உடல் - நீங்காது வரும் பிறப்பு. செய்வான் - உண்டாக்குவான். ``மண்ணுடல்`` என்பது பாடமன்று.
இதனால், அருளல் தொழிலது சிறப்பை உணர்த்துமுகத்தான், அதற்குச் சிறப்பு வகையால் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.

குறிப்புரை :

கடவுட் கொள்கை இல்லாதவருள் சிலர் (உலகாய தரும், மீமாஞ்சகரும்) `உலகம் தோன்றலும்,அழிதலும் இல்லாது என்றும் உள்ளதேயாகும்` என்பர். கடவுட் கொள்கை உடையவ ருள்ளும் சிலர் (பாஞ்சராத்திரிகள் முதலியோர்) `உலகத்தைக் கடவுள் அழிக்கமாட்டான்` என்பர். `அவரெல்லாரும் `நெருப்பு` என்ற ஒரு பொருள் இருப்பதை உற்று நோக்குவாராயின், தமது மயக்கம் நீங்குவர்` என்றற்கு நெருப்பு இறைவனுக்கு அழித்தற் கருவியாய்ப் பயன்படுமாற்றைக் கூறினார். ``அழிப்பு இளைப்பாற்றல்`` (சிவஞானசித்தி. சூ. 1.37) என்று இதனை முதற்கண் எடுத்துக் கூறியதும் இதுபற்றி என்க. உலகம் அழி பொருளாதலை உணர்வார் எவரும் அது தோற்றம் உடைத்து என்பதையும் உணர்வர் என்க. பூதங்கள் ஐந்தனுள் ஆகாயம் ஒழிந்த, காட்சிப் பொருளாய் நிற்கும் ஏனை நான்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் செய்யுமாயினும் நிலத்திற்கு உரிமைத் தொழில் படைத்தலும், நீருக்கு உரிமைத் தொழில் காத்தலும், நெருப்பிற்கு உரிமைத் தொழில் அழித்தலும் ஆதல் பற்றி அதனையே இறைவனுக்கு அழித்தற் கருவியாக அருளிச்செய்தார். `நிலம், நீர், தீ` என்ற மூன்றற்கும், `பிரமன், மால், உருத்திரன்` என்பவரை உரிமைக் கடவுளராகக் கூறலின், சிவாகமங்கட்கும் கருத்து இதுவாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், `இறைவன் உலகத்தைப் படைத்தல் காத்தல் களுடன் அழித்தலும் செய்வன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே. 

பொழிப்புரை :

மூவகைச் சங்காரங்களுள் `கற்ப சங்காரம்` என்பதும் ஒன்று. அதில் எல்லாப் பொருளும் சங்கரிக்கப் பட்டொழிந் தமையை ஏனைய இரண்டு சங்காரங்களில் நிற்குமாற்றால் நான் கருதியுணர்ந்துகொண்டேன். கால வயப்பட்டுநிற்கும் உலகம் உலை யில் இடப்பட்ட அரிசிபோல்வதாம். ஆகவே, என்றும் அழியாதன போல மலைவைத் தந்து நிற்கும் இப்பெரு நிலம் முடிவில் அழிந் தொழிந்தது.

குறிப்புரை :

`மூவகைச் சங்காரம் இவை` என்பது, வருகின்ற திரு மந்திரங்களுள் கூறப்படும். `நனவு நிலையில் நிற்பவன் அந்நிலையில் ஒருபெற்றியே நிற்கமாட்டாது காலவயத்தால் கனவு முதலியவற்றிற் சென்று அறிவு கெடுதலையும், பிறந்த உயிர் அந்நிலையிலே நிற்க மாட்டாது காலவயத்தால் அவ்வுடலைவிட்டு இறந்தொழி தலையும் உற்றுநோக்கினால், உலகம் முழுதும் இவ்வாறே காலவயப் பட்டு அழிந்து பின்பு தோன்றியதாகும் என்பது விளங்கும்` என்பார், ``கற்பாந்தம் நிலையன்றழிந்தமை நின்றுணர்ந்தேன்`` என்றார். நிலை - நிலைத்தொழிலை உடைய பொருள்கள்; ஆகுபெயர். இது, `நீவிரும் அவ்வாறு உணர்மின்` என்றவாறு. இவ்வாறே திருவள்ளுவரும்,
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என்று உடலின் அழிவுதோற்றங்களை அறிவின் அழிவின் தோற்றங் களில் வைத்துத் தெளிவித்தார். முன்பு இருவகை அழிப்பின் வைத்து உலக அழிவை வலியுறுத்தினாராகலின், ``உலை தந்த மெல்லரி போலும் உலகம்`` என அதன் நிலையாமையைப் பின்னர் வலியுறுத்தி, ``மாநிலம் தான் வெந்ததுவே`` என நிலவுலக அழிவை முடிவில் நிறுவினார். அரி - அரிசி. மலை - மலைவு; மயக்கம்; முதனிலைத் தொழிற்பெயர். பிரம கற்பம், விட்டுணு கற்பம் முதலாகக் கற்பங்கள் தாம் பல. அவற்றுள்ளும் அவரவர் உறங்கும் காலம் அவரவர்க்கு நித்திய கற்பமாகவும், இறக்குங் காலம் மகாகற்பமாகவும் சொல்லப் படும். கற்பம் - ஊழி. காணப்பட்ட உலகத்தை ``வெந்தது`` என்றது, முன்னை ஊழியிறுதி நோக்கியாம். எனவே, `பின் தோன்றியது` என்பதும் பெறப்படும். ஆகவே, `வெந்தது` என்பது இறந்தகால வினைப்பெயர்.
இதனால், உலக சங்காரம் இல்லை என மயங்குவார்க்கு, `அது உண்டு என்பத

பண் :

பாடல் எண் : 3

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே. 

பொழிப்புரை :

பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.

குறிப்புரை :

`உதகம், குரோதம்` என்பன இடைக் குறைந்து நின்றன. ஐம்பூதங்களுள் ஆகாசம் அருவப் பொருளாதலின், உருவழிந்த நிலையை அதன் வகையாக ஓதினார். விதம் - வகை. `விதமாக` என ஆக்கம் வருவிக்க. `நெஞ்சின் செய்யும்` என மாறுக. கிடந்தவாறே வைத்து, `நெஞ்சின் என, வேண்டா கூறி, வியப்பின்மையை வலியுறுத்தினார்` என்றலுமாம்.
இதனால், நிலமேயன்றிப் பிறவும் அழிதல் கூறுமாற்றால், மகாசங்காரம் உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே. 

பொழிப்புரை :

மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் அவ்விடத்ததாகிய குண்டத்தில் விளங்கும் மேலான நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.

குறிப்புரை :

`வானின்று உலகம் வழங்கி` வருதல்பற்றி காத்தற் சத்தியை, `மழை` என்றே கூறினார். நீரைப் பெண்ணாகக் கூறுதல் மரபாதல் அறிக. `நிற்ப` என்பது, ``நின்று`` எனத் திரிந்தது. மேகம், மலைமேல் தங்கியே மழை பொழிதல் வெளிப்படை. ``அண்டம்`` என்பது, `உலகம்` என்னும் அளவாய் நின்றது. திரை, ஆகுபெயர். பதம் - உணவு. செய்தல் - உண்டாக்குதல். `செய்ய` என்பது நிகழ்காலத்தின்கண் வந்தது. புறம் - இடம். `உலக நெருப்பன்று; தனது அழித்தற் சத்தியே` என்றற்கு, ``ஓம் என்ற ..... அங்கி`` என்றார்.
இதனால், `நிலைத் தொழில் அதன் கால எல்லையில் முற்றுப் பெறும்` என்பது கூறி, ஒடுக்கம் நிகழ்தல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

பொழிப்புரை :

மூவகைச் சங்காரத்துள் நித்திய சங்காரமாவது அன்றாடம் கீழாலவத்தையில் அறிவிழந்திருத்தல். பிறவி எடுத்த எல்லா உயிர்கட்கும் பொதுவாக வைக்கப்பட்ட ஆயுட் சங்காரமாவது விழித்தல் இல்லாத உறக்கமாகிய இறப்பாகும். சருவ சங்காரமாவது ஆன்மா செயலற்று ஆணவத்திலே அழுந்திச் சடம்போலக் கிடத்தல். அதனால், உயிரை நீங்கா இன்பத்தில் செலுத்துதலாகிய திருவருட் சங்காரமாகிய அருளலே இறைவனது உண்மை நிலையைப் பெறுதலாகும்.

குறிப்புரை :

மீளச் சாக்கிரம் எய்தாத நிலையை, ``சாக்கிராதீதம்`` என்றார். எனவே, இது விழியா உறக்கமாயிற்று. ``சுத்தம்`` என்றது, ஒன்றும் இன்மையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 6

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே. 

பொழிப்புரை :

இன்னும் வேறொருவகையாற் கூறுமிடத்து, `நித்திய சங்காரம், தூலம், சூக்குமம்` என்னும் இரண்டு உடம்புகள் உள்ளபொழுதும் அவற்றோடு ஒட்டாது நீங்கி நிற்றல்` எனவும், `ஆயுட் சங்காரம் தூல உடம்பு அழிந்தொழிதல்` எனவும், `சருவ சங்காரம் சூக்கும உடல் நீங்குதல்` எனவும் கூறுதற்குரியன. எனவே, திருவருட் சங்காரமாகிய அருளலே சிவப்பேறாகும்.

குறிப்புரை :

இரண்டுடலும் உள்ளபொழுதே ஒட்டாதிருத்தல் உறக்கத்திலாம். `சூக்கும சரீரம் முத்தி பெறுங்காறும் நீங்காது நிற்கும்` எனக் கூறுதல், ஆயுட் சங்காரத்தை நோக்கியாம். ``மாயா சங்காரம்`` என்றதில், ``மாயை`` என்றது பிரகிருதியை. சகல வருக்கத்தினருக்குப் பிரகிருதியளவு சங்கரித்தலே சருவ சங்காரமாதல் பற்றி ``சுத்த சங்காரம் மனாதீதம் தோய்வுறல்`` என்றார். ``மனம்`` என்றது பிற அந்தக் கரணங்கட்கும் உபலக்கணம். நீவுதல் - துடைத்தல்.

பண் :

பாடல் எண் : 7

நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.

பொழிப்புரை :

இனி, நித்திய சங்காரம் தூல உடம்பொடு நிற்கும் பொழுதே அதனொடு கூடாதிருக்கச் செய்வதென்றால், ஆயுட் சங்காரம் அதனை அடியோடு விடச் செய்வதாகும். சருவ சங்காரம் சூக்கும உடம்பையும் விடப்பண்ணுவது. ஆகவே, திருவருட் சங்கார மாகிய அருளலே சிவனை அடைதல் என்பது கடைப்பிடித்து உணரத்தக்கது.

குறிப்புரை :

``கரு`` என்றது, கருவாய்த் தோன்றி வளரும் தூல உடலை அதன் இடர் நீங்குதல் - அதனால் வரும் அனுபவம் இன்மை. ``நீக்கினால்`` என்னும் எச்சம் தெளிவின் கண் வந்து, பின் வருவதும் அத்தன்மையது என்பதனைத் தெரிதற்கு ஏதுவாய் நின்றது. ``நீரின்றமையா துலகெனின்`` (குறள் - 20) என்றாற்போல.

பண் :

பாடல் எண் : 8

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.

பொழிப்புரை :

நித்திய சங்காரம், அன்று உழைத்த உழைப்பினால் உண்டாகிய இளைப்பினை ஆற்றக் காண்டலால், ஆயுட் சங்காரமும் அப்பிறப்பில் உண்டான இளைப்பை ஆற்றுதற்பொருட்டு என்றும் உளதாய்நிற்கும். `சருவ சங்காரத்தில் எல்லாக் கருவிகளும் முற்ற அழிந் தொழிவதால், அதுவே சிவப்பேறு போலும்` எனின், அன்று; திருவருட் சங்காரம் உண்டாய வழியே `பிறத்தல், வாழ்தல், இறத்தல்` என்னும் மூன்றும் அற்ற நான்காம் நிலையாகி `வீடுபேறு` எனப்படும் சிவப்பேறாம்.

குறிப்புரை :

தோயா அருள் - அருள் தோயாதது. `உய்த்த சங்காரம் முன் உதிக்கில் நால் ஆம்` எனக் கூட்டுக. நான்கு, `நால்` என நின்றது. இவை நான்கு திருமந்திரங்களாலும், `இலயங்கள் (சங்காரங்கள்) மூன்று (தி.10 பா. 417) இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் பலவாற்றால் விளங்கக் கூறி, சங்காரத்தையே வீடுபேறு என மலைவார்க்கு அங்ஙனம் மலையாமைப்பொருட்டு அதனையும் ஒரு சங்காரமாக வைத்து அதன் இயல்பு உணர்த்தப்பட்டது.தத்துவம் முப்பத்தாறனுள் மா பூதம் - 5, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5 ஆகப் பதினைந்தும் தூல சரீரம். `அன்னமய கோசம்` என்பதும் இதுவே. தன்மாத்திரை - 5, சித்தம் ஒழிந்த அந்தக் கரணம் - 3 ஆக எட்டும் சூக்கும சரீரம். `பிராணமய கோசம்` என்பதும் இதுவே. எட்டுத் தத்துவம் கூடியதாதல் பற்றி இதனை `புரியட்டச் சரீரம்` எனவும் கூறுவர். இந்த 23 - க்கு மேல் 24 ஆவதாகிய குண தத்துவமே குண சரீரம். `மனோமய கோசம்` என்பதும் இதுவே. `குண தத்துவமே சித்தம்` என்பது மேலே ((தி.10 382ஆம் பாடலின் குறிப்புரை) சொல்லப்பட்டது. குண தத்துவத்திற்குமேல் உள்ள `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் - ஐந்தும் கூடியது கஞ்சுக சரீரம். விஞ்ஞானமய கோசம் என்பதும் இதுவே. `மாயை` என்னும் தத்துவமே காரண சரீரம். `ஆனந்தமய கோசம்` என்பதும் இதுவே. சிவ தத்துவங்கள் `நம்மனோர்க்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை` என்பது மேலே கூறப்பட்டது. (தி.10 பா. 379)

பண் :

பாடல் எண் : 9

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே. 

பொழிப்புரை :

மாயை வித்தாக, அதனினின்றும் முளைக்கின்ற பயிராய் உலகம் தோன்றும். பின்பு அப்பயிராகிய உலகம் வித்தாகிய அம்மாயையினிடத்தே ஒடுங்குவதாம். அவ்வாறு ஒடுங்கினும், என்றும் உளதாகிய மாயை ஒன்றிலும் ஒடுங்குதல் இல்லை. உலகம் மாயையின் ஒடுங்குதலாகிய சருவ சங்காரமின்றிப் பிரகிருதிகாறும் அழிவதாகிய அந்தச் சங்காரகாலத்திற்கு உட்பட்டே மால் அயன் செய்திகளாகிய காத்தல் படைத்தல்கள் நிகழும். ஆகவே, தத்தம் கால எல்லையில் மடிந்து போகின்ற பயிர்போல, உலகம் முழுவதும் ஒடுங்குவது மாயையிலல்லது பிரகிருதியில் அன்று.

குறிப்புரை :

``பாழ்`` என்பது முதற் காரணம் தனது காரியத்தைத் தோற்றுவியாத நிலை. இது பற்றியே பிரகிருதியையும் `பாழ்` என்ப (பரிபாடல் ... ... ``பாழெனக் காலெனப் பாகெனத் தொண்டென``) . இவ்வாறன்றி முதல்வனைப் `பாழ்` என்றல் பொருந்தாமை அறிக. உலகம் மாயையின் ஒடுங்காது பிரகிருதியின் ஒடுங்கிய பொழுது பரசரீரம் உளதாயினும் போகம் நிகழாதாகலின், அதனை, `வாழாச் சங்காரம்` என்றார். இச்சங்காரம் குணிருத்திரனால் செய்யப் படுவதாதல் அறிக. (சிவஞான மாபாடியம் - முதற் சூத்திரக் கருத்துரை விளக்கம்) குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் இம் மூன்றன் தொகுதியே பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரம். ``பயிராய்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது.
இதனால், `அசுத்தமும், சுத்தமும் ஆய மாயைகளில் அவ்வவ் வுலகம் ஒடுங்குவதே சருவ சங்காரம்` என்பதும், அவற்றிற்குக் கீழ்நடைபெறுவன எல்லாம் அவாந்தர (இடைநிகழ்) சங்காரம் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே. 

பொழிப்புரை :

நிலையில்லாததாகிய உலகத்தை உண்டாக்கி நிறுத்திய சிவன், அதனையே உயிர்களுக்கு என்றும் வாழிடமாக வையாது அழிய வைத்து, அழிவின்றி வைத்த வாழிடம் ஒன்று உள்ளது. அதனை அறிந்து அடைதற் பொருட்டே உடம்பையும், பல உட்கருவிகளையும், நூல்களையும் தந்தருளினான். அவற்றைக் கொண்டு, தற்போதத்தால் ஈண்டும் வினைகளை ஈண்டாதபடி அழித்து, அந்த வாழிடத்தை அடைந்து இன்பத்தை நுகர்மின்கள்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `சேரும் வினைகளைத் தீய வைத்து ஆர்மின்கள்` என மாற்றி முடிக்க. வன்மை - அழிவின்றி நிலைபெறுதல். பரமுத்தி நிலையை இவ்வாறு உருவகம் செய்தார் என்க. திருவள்ளுவர் ``புக்கில்`` என்றது காண்க. `ஒன்று உண்டு` என்ற குறிப்பால், பின் வருவன அதனை அடைதற் பொருட்டுக் கொடுக்கப்பட்டனவாதல் போந்தது. காயம், இடத்தால் வரையறை உடைய தூல சரீரம். ``எங்கும் கலந்து நினைப்பது`` என்றதனால், `அஃது அவ்வரையறையைக் கடந்த சூக்கும சரீரம் பர சரீரங்களைச் சுட்டிற்று` என்பதும், ``ஆயம்`` என்றதனால், `அவைதாம் தன்மாத்திரை அந்தக் கரணங்களும் வித்தியா தத்துவங்களும் ஆகியவற்றது தொகுதிகள்` என்பதும் போந்தன. ஆய் உணர்வு ஆர - ஆராய்ச்சி அறிவு நிரம்புதற்கு; என்றதனால் அதன்பொருட்டு வைக்கப்பட்டவை நூல்கள் என்பது இனிது விளங்கிற்று. இதனானே, அந்நூல் நுதலிய பொருளை ஒருசொல்லானும், நூற்பொருளைப் பல சொல்லானும் அறிவுறுத்தும் அருளாசிரியர்களை வைத்தமையும் பெறப்படும். ``நினைப்பது`` எனக் கருவி வினைமுதல் போலக் கூறப்பட்டது. இவ்வொருமை ஆயத்தின் மேல் நிற்றல் அறிக.
இதனால், `மேற்பல இடத்தும், `உய்த்த சங்காரம்` எனப்பட்ட திருவருட் சங்காரத்தையே பயனாக உடையன பிற சங்காரங்கள்` என அதன் சிறப்பு உணர்த்தப்பட்டது. இங்ஙனம் அருளலையும் சங்கார மாக வைத்துக் காட்டியது, இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்னாது மூன்று எனக் கூறும் வழியும் மறைத்தல் காத்தலுள்ளும், அருளல் அழித்தலுள்ளும் அடங்கி நிற்கும் என்பது உணர்த்துதற்கு என்க.

பண் :

பாடல் எண் : 1

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே. 

பொழிப்புரை :

சிவன், ஆன்ம அறிவேயாயும், அவ்வறிவுக்கு அறிவாயும், அதனில் சிறிதும் பிரிவின்றியும் அதனோடு யாண்டும் உடனாயே நிற்பினும் அவ்வறிவு மல மறைப்பால் அவனது இருப்பை அறியமாட்டது.

குறிப்புரை :

`அம்மறைப்பு நீங்குதற் பொருட்டே திரோபவம் (மறைத்தல்) செய்யப்படுகின்றது` என்பது குறிப்பெச்சம். `மலமறைப் பால்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. ``உள்ளம்`` என்றது ஆன்ம அறிவை. ``ஓரடி`` என்றது இடச்சிறுமை குறித்தது. இதனானே, காலச் சிறுமையும் கொள்ளப்பட்டது. உண்மை அளவாகப் பொதுப்பட உணரப்படுவதனை ``உரு`` என்றார். மறைத்தலைச் செய்வதாகிய மலத்தின் வழி நின்று அதனைச் செய்வித்தலால், அம்மலத்தின் ஆற்றல் தேய்ந்தொழியும் என்க. மாயை கன்மங்களால் பிறவியில் ஆழ்த்துதலே, `மறைத்தல்` எனச் சிறப்பாகக் குறிக்கப்படும். இதுவும் ஆணவத்தைத் தேய்த்தற் பொருட்டேயாம். மறைத்தலைச் செய் வதையே, `இறைவன் பந்தத்தையும் தருபவன்` என்பர்.
இதனால் திரோபவத்திற்குக் காரணம் கூறப்பட்டது.
இத்திருமந்திரத்துள் நாயனார் ஆன்ம அறிவை `உள்ளம்` என்னும் சொல்லாற் குறித்தருளினார். இவ்வாறே மெய்கண்ட தேவரும் குறித்தார். இவைகளால், திருவள்ளுவர், ``ஓர்த்துள்ளம் உள்ள துணரின்`` என்றதில் `உள்ளம்` என்றதும் ஆன்மாவையே யாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 2

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே. 

பொழிப்புரை :

பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.

குறிப்புரை :

இன்பப் பிறவி - இன்பத்திற்கு ஏதுவாம் பிறவி; இஃதுஇயைபின்மை நீக்கிய விசேடணம். உடம்பு துன்பமாகாது துன்பம் வெளிப்படுதற்கு வாயிலேயாக வினையே துன்பம் தருவது ஆகலின், ``துன்பஞ்செய் பாசம்`` என்றது வினையையேயாம். வினை இன்பமும் செய்வதாயினும், முன்னும் பின்னும் துன்பத்தோடே தொடர்புற்று நிற்றலின், துன்பம் செய்வதாகவே கூறினார். என்பு முதலியவற்றாலான உடம்பையே பெரும்பான்மையும், `உடம்பு` என வழங்குப ஆகலான். அவற்றையே எடுத்தோதினார். `கொழுவி இசைந்துறு தோல் தை\\\\u2970?` என்றது, அவ்வாறியன்ற உடம்பின்மேல் நின்றது. முன்பு - ஆணவமலம் நீங்குதற்கு முன்பு, ``முன்பில் கொளுவி`` என்பதில் கொளுவுதற்கு, `துன்பம்` என்னும் செயப்படு பொருள் வருவிக்க.
இதனால், திரோபவமும், அறுத்தும், சுட்டும் சிலநோயைத் தீர்க்கின்ற மருத்துவன் செய்கைபோல அருளே (மறக்கருணை) யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே. 

பொழிப்புரை :

`உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.

குறிப்புரை :

``இன்பம்`` என்றது ஆகுபெயராய் மேற்குறித்த பிறவியை உணர்த்திற்று. ``மூவரும்`` என்ற உம்மை சிறப்பு; முற்றன்று. `யாக்கை வந்து உடன் கூடி` என முன்னே கூட்டுக. ``இறையவன்`` என்பது உருத்திரன் மேலதாய், முன்னர்க் குணி ருத்திரனையும், பின்னர்ச் சீகண்டவுருத்திரரையும் குறித்தது. ``மறையவன்`` இரண்டில் பின்னது, `கள்வன்` என்னும் பொருட்டு. `மறைப்பறியாரே` என ஓதுதல் சிறக்கும்.
இதனால், மும்மூர்த்திகளும் திரோபவத்துட் பட்டவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கை செயலணை யாரே. 

பொழிப்புரை :

சிவபெருமானைப் பொருள்களைக் காண்கின்ற கண்ணினது ஒளியைக் காதலிப்பதுபோலக் காதலித்து, சுவையற்ற நாவினை உடைய மனத்தால் நினைந்து, நெடுங்காலமாக வருகின்ற பிறப்பு இறப்புக்களை விட்டொழிதற்கு ஏதுவான தவத்தில் தலைப்படுகின்றிலர் உலகர்.

குறிப்புரை :

`அது சிவபெருமானது மறைத்தல் தொழிலால், நிகழ்வதே` என்பது குறிப்பெச்சம். `சுவையை வெறுத்த உணர்வுடை நெஞ்சம்` என்பதனை ``ஊண்படு நாவுடை நெஞ்சம்`` என்று ஓதினார். முன்பு உண்ட அறுசுவையைப் பின்னும் நாடி நிற்பது மனமாகலின், அதனை எடுத்துக் கூறினார். ``நெஞ்சம் உணர்ந்து`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `பொய் + கை` எனப் பிரித்து நிலையைாமை உவர்த்துவிடுகின்ற எனப் பொருள் கூறுக. கை செயல் - கைத்து விடுதற்கு ஏதுவான செயல். `கண்ணொளியைப்போல` என விரிக்க.
இதனால், மறைத்தல் தொழிலால் இறைவன் உயிர்கள் தன்னை அறியாவாறு மறைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே. 

பொழிப்புரை :

ஆதிப் பிரானகிய சிவபெருமான், பரிபாகம் பெற்ற உயிர்கட்கும், பரிபாகத்தால் ஞானத்தை எய்தினோர்க்கும் தனது திருவருள் நன்கு புலப்படும் வகையில் விளக்கத்தைத் தருவான். ஏனையோர்க்குப் பகலவனும், நிலாவும் பகலிலும், இரவிலும் இருள் நீங்க எரிப்பினும் இருள் பொதிந்து நிற்கும் அறைபோல நின்று மறைத்தலையே செய்வன்.

குறிப்புரை :

`ஓளியுடையோர்` என்னும் பொருட்டாகிய `தேவர்` என்னும் பெயர், இங்கு இடுகுறியாகாது காரணமாய் நின்று, `ஞானிகள்` எனப் பொருள் தந்தது. இறைவன், பரிபாகிகட்கு அறிவா யும் ஞானிகட்கு இன்பமாயும் விளங்குவன். இவை இரண்டுமே, `அருளல்` எனப்படும் என்க. முன்னர், ``தெருளும் உலகிற்கும் தேவர்க்கும்`` என்றதனால், பின்னர், `ஏனையோர்க்கு` என்பது போந்தது. ``செய்யும்`` என்றது முற்று. சுருளும் சுடர் - எதிர்ப்பட்ட பொருள்கள் வெதும்பி மடிதற்கு ஏதுவாகிய ஒளி; ஞாயிறு. `நின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தல். `நிற்ப` என்பது ``நின்று`` எனத் திரிந்துநின்றது. ``இருட்டறை``, இறந்த கால வினைத்தொகை. இருளுதலை, `இருட்டுதல்` எனவும் வழங்குப. ``ஆம்``என்றது, ``போல்வான்`` என உவமமாய் நின்றது.
இதனால், மறைத்தல் பரிபாகம் இல்லாதார்மேலதாயே நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

பொழிப்புரை :

தான் ஒருவனே, நிலமுதல் நாதம் ஈறாய கருவிகள், நால்வகை வாக்குக்கள், நான்காகவும் எட்டாகவும் பத்தாகவும் மற்றும் பலவாகவும் சொல்லப்படுகின்ற திசைகள், ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பல்வேறு வகையினவாய் நிற்கின்ற உடம்புகளும் பிறவுமாகிய உருவங்கள், நிலவுலகம் முதலிய உலகங்கள் இவை அனைத்துமாய் நின்று, மெய்யுணர்வைத் தடுக்கின்ற அப்பொருள்களை ஆக்கிய, எல்லா உயிர்களாலும் அறிந்து அடையத்தக்க இறைவனே அத் தடையை நிகழ்விக்கின்ற மறக்கருணையைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`அரைக்கின்ற, கரக்கின்ற` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. அரைக்கின்ற அருள் - துன்புறுத்துகின்ற கருணை; மறக்கருணை; என்றது திரோபவத்தை. `அரிக்கின்றருள்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ``தரும்`` என்றது முற்று. தனித்து நில்லாது தொக்குநின்று காரியத்தைத் தோற்றுவித்தலின், நிலம் முதலிய கருவிகளை, ``அங்கங்கள்`` என்றார். அங்கங்கள் முதலாக வேண்டும் இடங்களில் தொகுக்கப்பட்ட எண்ணும்மைகளை விரித்துக் கொள்க. ``தான்`` என்பதனை முதலில் வைத்து உரைக்க.
இதனால், சிவபெருமான் உலகத்தை ஆக்கி, அதனுட்கரந்து நின்று திரோபவிக்குமாறு கூறப்பட்டது. ``அருள்`` என்றதனால், மறைத்தலும் அருளேயாதல் குறித்தார்.

பண் :

பாடல் எண் : 7

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.

பொழிப்புரை :

மறைத்தலைச் செய்கின்ற அவனை அவன் என்னேடு உடனாய் நிற்கின்ற அருட்டொடர்பை உணர்ந்து பிறர் அறி யாதவாறு என் உள்ளத்திலே மறைத்து வைத்தேன். அதனால், இனி அவன் எனக்கு வெளிப்படையாகத் தோன்றி அருள்புரிதல் திண்ணம். நீவிரும் என்னைப்போலவே அவனது அருட்டொடர்பை உணர்ந்து, அவ்வுணர்வினால் எழுகின்ற இன்பத்தோடு கூடிய `பேரன்பு` என்னும் சிறப்புத் தன்மை வெளிப்பட, அவனை அகத்தும், புறத்தும் வழிபடுவீர்களாயின், `அவன் எமக்கு எப்பொழுது வெளிநிற்பான்` என்று ஏக்கமுற்றிருக்கின்ற உங்கள் வேட்கை நிரம்புவதாகும்.

குறிப்புரை :

மெய்யுணர்வினால் உணர்பவர் உள்ளத்தில் இறைவன் இனிது வெளிப்பட்டுநிற்கவும், பிறர் அவனை `யாண்டுளன்` எனத் தேடி எய்க்கின்றாராதலின், மெய்யுணர் வுடையார், இறைவனைத் தங்கள் உள்ளத்தில் ஒளித்து வைத்திருப் பதாகவும், வெளியே புறப்பட ஒட்டாது தளையிட்டு வைத்ததாகவும் கூறுதலைப் பின்வரும் திரு மொழிகளாலும் உணரலாம்.
ஆர்வல்லார் காண அரனவனை! அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தலைநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. -தி.11 அம்மைத் திருவந்தாதி, 96
முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
றன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. -தி.5 ப.91 பா.2
`அவ் வீசனை` எனச் சுட்டு வருவித்து உரைக்க, வேட்சி - வேட்கை. உம்மை இறந்தது தழுவிற்று.
இதனால், மறைத்தலைச் செய்பவனாகிய இறைவனை அருளலைச் செய்பவனாகப் பெறும் முறை கூறப்பட்டது.
(இம் மந்திரத்தின்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `நின்றது தானாய்` என்னும் மந்திரம், மேல் 400 ஆவது திருமந்திரமாக வந்தது.)

பண் :

பாடல் எண் : 8

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கது வாமே. 

பொழிப்புரை :

கடலில் அகப்பட்டவன் அதன் கரையை அடைந்து இன்புறவேண்டி நீந்தும்பொழுது அக்கரை அருகில் வருவதை அறியாதிருத்தல் போலவும், கங்கைக்கரையில் நிற்பவன் அதனுள் மூழ்காமல் கரையிலே நிற்றல்போலவும் மேலான சித்தாகிய ஆன்மா, கீழான மலத்துள் நின்று மாசும் துன்பமும் உடையதாகின்றது.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `உத்தம சித்தன் பாசத்துள் அழுக்கதுவாம்` எனக் கூட்டி முடிக்க. சித்தாகிய உயிரை, `சித்தன்` என ஆண்பாலாக ஓதியது வடமொழி முறை. ``வருங் கரை`` என்றது, கடற் கரையை என்பது ஆற்றலால் விளங்கிற்று. பேண், முதனிலைத் தொழிற்பெயர். இல் இரண்டும் ஒப்புப் பொருளில் வந்த உருபுகள். ``அழுக்கு`` என்றது, துன்பம், மாசு இரண்டிற்கும் ஒப்பக் கூறியது. துன்பம் நீங்காமைக்கும், மாசு நீங்காமைக்குமாக வேறு வேறான இரண்டு உவமைகள் கூறினார். `நாடி` என்றது பெயர்.
இதனால், பரிபாகம் இல்லாத உயிர் மறைத்தலுட் படுமாறு கூறப்பட்டது.
இதனால், மலபரிபாகம் இல்லாத உயிர்கள் மறைத்தல் தொழிலுட்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே. 

பொழிப்புரை :

மண் ஓன்றே கலங்கள் (பாத்திரங்கள்) பலவற்றிலும் பொருந்தி நிற்கின்றது. அதுபோலச் சிவபெருமான் ஒருவனே உயிர் கள் அனைத்தினுள்ளும் நிற்பான். ஆயினும், கண் பிற பொருளைக் காணுமாயினும், தன்னையும், தன்னொடு பொருந்தியுள்ள உயிரையும் காணாததுபோல, உயிர்கள் பிறவற்றை அறியுமாயினும், தம்மையும், தம்மோடு உடனாய் நிற்கின்ற சிவனையும் அறிதல் இல்லை.

குறிப்புரை :

முதற்காரண நிமித்த காரணமாய வேறுபாடு உண்டா யினும், ஒன்று பலவற்றுள் நிற்றல் மாத்திரைக்கு மண்ணை உவமை கூறினார். பொருளால் உவமத்துள் கண் உயிரைக் காணாமையும், உவமத்தால் பொருட்கண் தம்மைக் காணாமையும் கொள்ள வைத்தார். ``இவ்வண்ணம்`` என்றது;` உயிர் கண்ணினது காட்சிக்கு அகப்படாது நிற்றல் போல` என்றவாறு. உயிர் காணாமையை இறைவன் மேல் வைத்து ஓதினார், இங்குக் கூறுகின்றது அவன் தொழிலாதல்பற்றி. இத்திருமந்திரப் பொருளே பற்றி மெய்கண்டதேவர்,
காட்டிய கண்ணே தனைக்காணா; கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்றான் உள்ளத்தின் கண். .
- சிவஞானபோதம் - சூ 9, அதி 1.
என ஓதினமை காண்க.
இதனால், மறைத்தல் தொழில் நிகழுமாற்றிற்கு உவமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 

பொழிப்புரை :

`காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம்` என்னும் ஐம்பெரும் பூதங்களும் ஒருங்கியைத்துப் பின்னிய `உயிருக்கு இடம்` எனச் சொல்லப்படுகின்ற இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.

குறிப்புரை :

``வட்டத் திரை``, கடல்; பின்மொழி ஆகுபெயர். இது நீரைக் குறித்தது. ``ஒட்டி`` என்பதன்பின் `ஆக்கிய` என ஒருசொல் வருவிக்க. `கட்டியவன் கட்டியவாறே விட்டொழிதல் இல்லை; அவிழ்க்கின்றான்` என அருளலாகிய அறக்கருணையது சிறப்பை உணர்த்தினார்.
இதனால், பந்தமாகிய மறைத்தலையேயன்றி, வீடாகிய அருளலைச் செய்பவனும் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கின் அல்ல
தெட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்``
-திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது - 9
என்று அருளியதும் இதனை.

பண் :

பாடல் எண் : 2

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.

பொழிப்புரை :

தம் தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேலாய் ஓங்கி, அறிவு வடிவாய் ஒலிக்கின்ற சிவபெருமானது திருவடிச் சிலம்பொலியையே விரும்பிக் கேட்டு அதனால், இன்பம் அடை பவர்கட்கு இறப்பு இல்லை. உலகமாகிய தேர்க்கு உறுப்புக்களாகிய நிலம் முதலிய பூதங்களும், முச்சுடர்களும் ஆகிய பொருள்களையும் படைத்து, அவற்றால் அத்தேரினைப் பண்ணி இயங்க விடுகின்ற தச்சராகிய வினைஞர்களைப் படைப்பவனும் அவனேயாகலின்.

குறிப்புரை :

`பிறப்பு இறப்புக்களைத் தந்து நிற்பவனாகிய தலைவனை அடைதலையன்றி, அவ்வல்லல் தீர்வதற்கு வழி வேறில்லை` என்றவாறு. இறப்பாவது, இப்பிறப்பிற்கு ஏதுவாக முகந்துகொண்ட வினை முடிவெய்த, மறு பிறப்பிற்கு ஏதுவாம் வினை வந்து நிற்றலின் இவ்வுடல் நீங்குதலாம். இந்த நீக்கத்தையே யமன் செய்வன். இறைவனது திருவருள் பெற்றார்க்கு அவர் பல பிறப்புக்களிலும் ஈட்டக் குவிந்து கிடக்கும் சஞ்சித வினை அவனது அருள்நோக்கத்தானே சுட்டெரிக்கப்படுதலின், அவர்க்கு மறுபிறப்பிற்கு ஏதுவாய் வரும் வினை இல்லையாம். ஆகவே, அவர்க்கு இவ்வுடம்பு நீங்கியபின் கிடைப்பது முத்தியேயாகும். இந்நீக்கத்தினை இவர்க்கு `நீலருத்திரர் செய்வார்` எனச் சிவாகமங்களும், `சிவகணத்தினர் செய்வர்` எனப் புராணங்களும் கூறும். ஆகவே, `இவர்கட்கு நமன் இல்லை` என்றார். எனவே, `சாவா நிலை` எனப்படுவது இதுவே என்பது இனிது விளங்கும். இஃது அறியாதார், `உடல் நீக்கம் யாவும் சாவே` என மயங்கி, `இறைவன் திருவருள் பெற்றாரும் சாவாதிருந்திலர்` என்று இகழ்தலும், `உடல் நீங்காது நிலைக்கப்பெறுதலே திருவருள் நிலை` எனக்கொண்டு அதனைப்பெறப் பெரிதும் விழைதலும், உழத்தலும் செய்வர். அவையெல்லாம் அருளாசிரியரது அருள்மொழிகளின் பொருளை உள்ளவாறு உணரும் ஆற்றல் இல்லாமையால் விளைவனவே என உணர்க. அருளாசிரியராயினார் ஒருவரும் உடலை நிலைக்கப்பண்ண எண்ணாமை அறிக. திருவருள் பெறாதார் எடுத்த உடலினின்று நீங்குதல், ஒருவர் குடியிருந்த வீட்டிற்கு உடையவர் அவரை அதினின்றும் போக்கப்போவது போல்வதும், திருவருள் பெற்றார் எடுத்த உடலின் நீங்குதல் பிறர் வீட்டில் குடியிருந்தவர் தமக்கென வீடு அமைந்தமையால் குடியிருந்த வீட்டை விடுத்துப்போதல் போல்வது மாம். ஆகவே, இருதிறத்தாரும் தாம் இருந்த வீட்டை விடுத்துச் செல்லுதல் காணப்படுமாயினும் அச்செலவு இரண்டினிடை உள்ள வேறுபாடு பெரிதாதல்போல, சாகின்றவரும், வீடுபெறுகின்றவரும் எடுத்த உடலின் நீங்குவாராயினும், அவ்விருவரது நீக்கத்திடை உள்ள வேறுபாடு பெரிது என்க.
வித்து, `விச்சு` என மருவிற்று, ``விச்சதின்றியே விளைவு செய்குவாய்`` (தி.8 திருச்சதகம், 96) ``விச்சின் றிநாறுசெய்வானும்`` (தி.4 ப.4 பா.2) என்பவற்றிற் போல. `உலகப் பகுதிகள் எட்டு` என்னும் வகைபற்றி ஓதுகின்றாராதலானும், மேலைத் திருமந்திரத் தொடர்பானும், உலகிற்கு வித்துப் பூதங்களாகவே உரைக்கப்பட்டது. தச்சனை, ``தச்சு`` என்றது, `அரசு, அமைச்சு` என்பனபோல ஒற்றுமை வழக்கு. இது குறிப்புருவகமாக லின், `வித்து, உலகு` என்பவற்றிற்கு உரிய உருவகங்களும் விரித்து உரைக்கப்பட்டன.
இதனால், பிற தொழில்களைப் பிறர்பால் வைத்துச் செய் யினும், அருளல் தொழிலை அவனன்றிச் செய்வார் இல்லை என்பது கூறப்பட்டது.
`பட்டிப் பசுவைக் கால்சேரக் கட்டியவனே அதற்கு அப் பட்டித்தன்மை நீங்கியபின்னர் அவிழ்த்தல்போல, இறைவனும் ஆணவம் உடைய உயிர்களைக் கன்மம் மாயைகளுட் படுத்து, ஆணவம் நீங்கியபின்னர் அவற்றினின்றும் விடுப்பன்` என்றற்கு, ``கட்டி அவிழ்ப்பன்`` என்று முதற்கண் அருளிச்செய்தவர், அவிழ்க் கின்ற அவ்வருளின் சிறப்புத் தோன்றுதற் பொருட்டு அவன் கட்டுங் காலத்துக் கட்டியவாற்றை எல்லாம் விரிக்கின்றார். இதுமேல் போந்த விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைத்தலின் விரிவாதல் உணர்க.

பண் :

பாடல் எண் : 3

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே. 

பொழிப்புரை :

மட்கலத்தை வனைகின்ற குயவன் மண்ணைக் கொண்டு ஒருவகைக் கலத்தையே வனையாது, குடம் சால் கரகம் முதலாகப் பல்வேறு வகைப்பட வனைவன். அதுபோலவே, எங்கள் சிவபெருமானது இச்சையால் தளர்வில்லாத உலகம் பல்வேறு வகைப்படத் தோன்றும்.

குறிப்புரை :

``அது இது ஆம்`` என்றது, `பல்வேறு வகையினவாம்` என்றவாறு. `அங்ஙனம் பல்வேறாகத் தோற்றுவிக்க விரும்புதல், உயிர்களது கன்மத்துக்கு ஏற்பவாம்` என்பது, குயவன் பல்வேறாக வனைதல், கொள்வார் விருப்பம் நோக்கியதாலாகிய உவமத்தால் பெற்றாம். உவமைக்கேற்ப, `வேண்டி உலகத்தை அது இதுவாக வனைவான்` என்று இறைவன் மேல் வைத்து ஓதாது. ``உலகம் அது இது ஆம்`` என உலகின்மேல் வைத்து ஓதினார், குயவன் கருவியால் செய்தல்போலச் செய்யாது இறைவன் நினைவு மாத்திரையானே செய்ய அவனது முன்பில் உலகம் தொழிற்படும் என்றற்கு.
இதனால், கட்டிய வகை ஒன்றன்றிப் பல என்பது பொது வகையால் கூறப்பட்டது. இதனானே, அவிழ்க்கும் காலத்து அவை அனைத்தையும் முற்ற நீக்குதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

பொழிப்புரை :

நன்மையே (மங்கலமே) வடிவாய் உள்ள சிவ பெருமான் உலகியிலின் வேறுபட்டவன்; அஃது அவன் இடபத்தையே ஊர்தியாகவும், பூதங்களையே உறுதிச் சுற்றமாகவும் கொண்டிருத்த லால் விளங்கும். அதனால், உயிர்களின் வினைகட்குத் தக்க பரிசாக உலகத்தைப் படைத்துக் கொடுக்கும் கொடையாளனும், கொடுத்து அவ்வுயிர்களின் அறிவிற்கறிவாய் நின்று வினைப் பயனைத் துய்ப்பித்து அவை செவ்வி முதிர்ந்த காலத்தில் வீடுபெறச் செய்கின்றவனும் அவனே.

குறிப்புரை :

``குணமே குணமாகும் சடையுடையான்`` என்பதனை முதற்கண் வைத்து, `விகிர்தன்` என்றதனை அதன் பின்னர்க்கூட்டி, அதன்பின்னும், `படையுடையான்` என்பதன் பின்னும் ``ஆதலின்`` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. ``குணம்`` இரண்டனுள் முன்னது `நன்மை` என்னும் பொருட்டு. ``குணம் நாடிக் குற்றமும் நாடி`` (குறள், 504) ``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` (தி.8 திருவம்மானை, 20) ``குன்றே யனைய குற்றங்கள் குணமாம் என்றே நீகொண்டால் - என்றான் கெட்டது`` (தி.8 குழைத்த பத்து, 3) ``குற்றம் செய்யினும் குணம்எனக் கருதும் கொள்கை கண்டு`` (தி.7 ப.55 பா.4) என்பவற்றிற் போல. `குணம் எண்குணமாம்` எனவும் பாடம் ஓதுப.
இதனால், சிவபெருமானே கட்டவும், அவிழ்க்கவும் வல்லனாதல் தெளிவிக்கப்பட்டது.
``கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடீ``
-தி.8 திருச்சாழல், 15
என்றருளியவாற்றால், இடப ஊர்தி உலகியலுக்கு ஒவ்வாமை பெறப் படும்.

பண் :

பாடல் எண் : 5

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் `சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்` எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்பு களை, தேவஉடம்பு, மக்கள்உடம்பு முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய வேண்டும் என்று விரும்பியேதான்.

குறிப்புரை :

எனவே, சிவன் குயவன் போலத் தன் நலம் கருதிப் பல படப் படையாது, உயிர்களின் நலம் கருதியே அவ்வாறு படைக் கின்றான் என்றதாம்.
இதனால், படைப்பினை இறைவன் பலபடப் படைத்தற்கண் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் மேற்கூறியவாறு பலவற்றையும் படைத்து, அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு, தான் தலைவனாய் நின்று, அவையனைத்தையும் ஆள்கின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டுங் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். ``பல சீவர்`` என்றது, தேவர் ஒழிந்த பிற உயிர்களை. தேவர், `அமரர்` (இறவாதவர்) எனப்படுதல்பற்றி அவர் பிறவாத வரோ என ஐயம் நிகழுமாதலின், அது நிகழாமைப் பொருட்டு அவரை வேறு கூறினார்.
இதனால் உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதல் அவனுக்குக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய பலவற்றையும் படைத்த சிவபெருமான், படைத்ததனோடு ஒழியாது, அவற்றைக் காத்தும் நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால், அருளலும் அவனது கடன்` என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகள் அனுவாதம்.
இதனால், ஏதுக் காட்டி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதமாமே. 

பொழிப்புரை :

ஆன்ம அறிவினுள் நிற்கின்ற அறிவாயும், ஆன்ம அறிவின்வழி உடலை இயக்குதலின் உடலாயும், தேவர்களும் விரும்பி அடையும் இன்பப் பொருளாயும், `மண்ணுலகத்தேவர்` (பூசுரர்) என்று சொல்லப்படுகின்ற அந்தணர்கள் வேதம் முதலிய வற்றால் புகழ்கின்ற அருட்கோலத்தை உடையவனாயும் உள்ள சிவபெருமானே, கண்ணில் உள்ள கருமணி, உடல் செல்லுதற்குரிய நன்னெறியைக் காட்டுதல்போல, உயிர் செல்லுதற்குரிய ஞான நெறியைக் காட்டுகின்ற பேராசிரியனாய் வருவன்.

குறிப்புரை :

`அவ்வாறு வந்து ஞானத்தை அருளுதலே அநுக்கிரகம் எனப்படுவது` என்பது குறிப்பெச்சம். `போதகன்` என்பது குறைந்து நின்றது. இனி, `ஆம்` என்பதனைச் சொல்லெச்சமாகக் குறைத்து `மாபோதகனே` என்றும் பாடம் ஓதுப.
இதனால், அநுக்கிரகமாவது, இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே. 

பொழிப்புரை :

ஒருவராலும் அறியப்படாத சிதாகாசத் திருமேனி யனாகிய சிவபெருமான், மண் முதலிய பூதக் கூட்டுறவாலாகிய மானுட உடம்பிலே நிற்கின்ற உயிரின்கண், நீரிற் கலந்த பால்போல வேறற நின்று, செவ்விபெற்ற உயிர்கட்கு அருள் புரிகின்ற செம்மையை அறியாமையால் மறந்தொழியாது, அறிவால் அறிந்துநின்று, அதனால் விளைகின்ற இன்பத்தையும் நான் பெற்றேன்.

குறிப்புரை :

`ஆரும் அறியா அகண்டத் திருவுரு` எனப்பாடம் ஓதுதலும் ஆம். கடம், சிறப்புருவகம். இதனால், ``நீர்`` என்றது உயிராதல் பெறப்பட்டது. இவ்வுயிர், மலம் நீங்கிய சுத்தான்ம சைதன்னியம் என்க. `இதனையே இறைவன் தானாக ஆவேசித்து நின்று பக்குவிகளுக்கு ஞானத்தை உணர்த்துவன்` என்பது,
``இனி இவ்வான்மாக்கட்குத் தமது முதல்தானே குருவுமாய் உணர்த்தும் என்றது, அவன் அந்நியமின்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்`` (சிவஞானபோத வார்த்திகம் - சூ. 8).
என்றதனானும், அதன் உரையானும் உணர்க. நேர்மை - செம்மை. திரோபவம் அவனுக்கு இயற்கையன்றாக அநுக்கிரகமே இயற்கையாதல்பற்றி ``நேர்மை`` என்றார். இனி `நேர்மை - நுட்பம்` எனினுமாம். இவ்வாறு சிவனே குருவாய் நிற்றலை அறிதலும், அறிந்தபின்னும் பயிற்சி வயத்தால் மறத்தலை ஒழிதலும் அரியவாதல் பற்றி ``சோராமல் காணும்`` என்றார். காணும் சுகம் - காண்பதனால் விளையும் இன்பம். அது அநுபவத்தாலன்றிக் காட்டப்படாமையின், `அறிந்தேன்` என்றார். இத்திருமந்திரப் பொருளையே மெய்கண்ட நூல்கள் பரக்க எடுத்து விரித்தல் அறிக.
இதனால், அநுக்கிரகத்தின்கண் படுவனவெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. 

பொழிப்புரை :

ஓர் உயிரைக் கருப்பையுள் தோற்றுவிக்கின்ற சிவ பெருமான் அதன் முன்னைத் தூல உடம்போடு ஒழிந்த ஐந்து ஞானேந் திரியம், ஐந்து கன்மேந்திரியம், ஐந்து பூதம், சத்தாதி ஐந்து விடயம், வச னாதி ஐந்து விடயம் என்னும் இருபத்தைந்தையும் மீள அதன் சூக்கும உடம்பினின்றும் தோற்றுவிப்பான். அங்ஙனம் தோற்றுவித்தல், அக் கருப்பையுள் அத்தோற்றத்திற்குத் தடையாகவரும் ஊறுபாடு களையறிந்து அவற்றை நீக்குதற்பொருட்டு அவ்விடத் திருந்தேயாம்.

குறிப்புரை :

முதற்கண் ``ஆக்குகின்றான்`` என்பது பெயர். ஏனைய, சொற்பொருட்பின்வருநிலையாய் நின்றன. `ஆதியும் எம் ஆருயிருமாகிய அவன்` என மாற்றியுரைக்க. கோளகை - வட்டம்; இங்குக் கருப்பை.
இதனால், சிவபெருமான், கருவைத் தோற்றுவித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்களினும் முதலாவதாக அறியப் படுகின்ற மூலதாராத்திற்குமேல் உதராக்கினியும், உணவாக உண்ணப் படும் நீரும் நிறைந்திருக்கின்ற சுவாதிட்டானத் தானத்தில், `பூதசார சரீரம், யாதனா சரீரம்` என்பவற்றிற்கேனும், அவை இரண்டுமின்றித் தனக்கேனும் (சிவனுக்கேனும்) சுமையாய் நின்ற உயிர் வந்து பொருந்துமாற்றை எண்ணி, முதற்கண் செந்நீராகிய நிலைக்களத்தை நிற்பித்து, அந்நிலையை அக்கரு வெளிப்போதுதற்குப் `பத்துத் திங்கள்` என்னும் சுமைக் காலத்தையும் சிவபிரான் ஆக்குகின்றான்.

குறிப்புரை :

செந்நீர் - தாயின் கருப் பையுள் நின்று கருவைத் தாங்கி வளர்ப்பது. நிலைக்களத்தை, ``தாள்`` என்றார். நிலவுலக உடலாகிய பூத உடம்பை விட்ட உயிர் நுண்ணுடம்போடு சென்று, நல்வினை, பயன்தருமாயின், அவ்வுடம்பு பூதசார சரீரத்தைத் தோற்றுவிக்கப் புத்தேள் (தேவ) உடம்பு பெற்றுத் துறக்கத்தை (சுவர்க்கத்தை) அடை யும். தீவினை, பயன் தருமாயின் நுண்ணுடம்பு யாதனா சரீரத்தைத் தோற்றுவிக்க அதனைப் பெற்று நிரயத்தை (நரகத்தை) அடையும். இரண்டும் இல்லையாயின், நுண்ணுடம்போடே கல்லுப்போல் அதற்குரிய புவனங்களுள் யாதானும் ஒன்றிற் செயலற்றுக் கிடக்கும். அம்மூன்று நிலைகளுமே முறையே பூதசார சரீரம், யாதனா சரீரம், இறைவன் திருவருள் என்பவற்றிற்குச் சுமையாகச் சொல்லப்பட்டன. உயிர் நுண்ணுடம்பைப் பற்றி நின்று கருவில் வந்து பொருந்தித் தூல உடம்போடு பிணிப்புண்டு, அதுவே தானாய் ஒற்றுமைப்பட்டு, அதற்கேற்ற உணர்வுகள் அனைத்தும் பொருந் துதற்குப் பத்துத் திங்கள் கால எல்லை வேண்டுவதாதலையறிந்து இறைவன் அத்துணைக் காலமும் அக்கருவைத் தாய்க்குச் சுமையாமாறு வைத்துக் காக்கின்றான் என்றபடி. இதனானே ஊழ் வேறுபடுமாயின், சில திங்களுக்குள்ளே அவ்வுயிர் `அந்நிலையினின்றும் நீங்கிப் பிறிது நிலையை அடையச் செய்வான்` என்பதும் பெறப் பட்டது. ``அங்கி அப்புச் செறிகின்ற தானத்து`` என்றதனால், `அவ் விரண்டாலும் அக்கரு அழிவுறாது காக்கின்றான்` என்பதும் கூறியவாறாயிற்று. `ஞானத்து` என்பது பாடம் அன்று.
இதனால், அப்பெருமான் கருவை வளர்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இன்புறு காலத் திருவர்முன்பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே. 

பொழிப்புரை :

முதற்கண் தந்தை தாயர் இன்பம் நுகர்கின்ற காலத்து அவர்தம் உடம்பினின்றும் வெளிப்படும் வெண்டுளி செந்துளிகளால் அமைந்த இல்லமாவது உடம்பு துன்பத்தைத் தருகின்ற வினையின்வழி அதனை நுகரும் அவ்வில்லமாகிய உடம்பின்கண் அதன் தலைவ னாகிய உயிர்க்கிழவன் பலவகைப் பண்புகள் பெற்று வாழும் காலத்தையும், அக் காலத்து அவனுக்கு உளவாகின்ற வாழ்க்கை முறைகளையும் கருவைத் தோற்றுவித்து வளர்க்கத் திருவுளம்பற்றிய அப்பொழுதே அதன்கண் அமையுமாறு சிவபெருமான் அமைத்து விடுகின்றான்.

குறிப்புரை :

`முன்பு இருவர் இன்புறு காலத்து ஊறிய மனை` என்க. காரணப் பொருளின் தன்மையைக் காரியப்பொருள்மேல் ஏற்றி, ``ஊறிய மனை`` என்றார். ``நூலாக்கலிங்கம்`` (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து 2) என்பதிற்போல. வான் - பெருமை; தலைமை. உளம் - ஆன்மா; அதனை, `உளன்` என ஆண்பாலாக ஓதினார். அன்றி, இறுதிப்போலியாகக் கொள்ளினும் ஆம். அருளை, ``அன்பு`` என்றார்.
இதனால், கருவில் உள்ள உயிர் பிறந்தபின் வாழ்தற்குரிய முறைகளைச் சிவபெருமான் முன்பே வகுத்தமைத்தல் கூறப்பட்டது.
``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்காடென்னும்
ஆறும்முன் கருவுட் பட்டது``
எனச் சிவஞானசித்தி (சூ. 2.9)கூறுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 4

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

பொழிப்புரை :

மெய்யுணர்வால் பிறப்பின் நீங்கிய அறிவர் கண்ட, நில முதல் புருடன் ஈறாக உள்ள இருபத்தைந்து கருவிகளும் (தத்துவங்களும்) தந்தை உடலிலே பொருந்தியிருந்து, பின் தாயது கருப்பைக்குள்ளே, ஆண், பெண் இரண்டில் யாதேனும் ஓர் உருவமாமாறு புகும். இதனை மெய்யுணர்வில்லார் அறியார்.

குறிப்புரை :

மற்று, அசைநிலை. ``ஓரார்`` என்றதனை ஈற்றில் வைத்து உரைக்க. `புகுந்த அது` என்பதில் அகரம் தொகுத்தல்; புகுதலை அனுவாத முகத்தாற் கூறினார் என்க.
இதனால், சிவபெருமான், தாயது கருப்பைக்குள் மட்டுமன்றி, அதிற் புகுமுன்பே தந்தையது உடம்பில் அதனை வைத்துக் காத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே. 

பொழிப்புரை :

தந்தையது உடலில் பொருந்தியிருந்த இருபத்தைந்து கருவிகளும் தாயின் கருவில் புகுதற்கு அவ்விருவரது கூட்டம் நிகழும். அப்பொழுது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, பூதம் ஐந்து ஆகிய பதினைந்து கருவிகளால் பருவுடம்பு வளருமாறு தந்தை உடம்பினின்றும் வெண்பால் (சுக்கிலம்) பொழியும். அதன்பின் பருவுடம்பு வளர ஏனைத் தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும் அவ்வுடம்பினுள் புருவ நடுவிலும், தலையிலும் பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

`தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும்` என்றது, `நுண்ணுடம்பு` என்றவாறு. அதனை இவ்வாறு கருவியாக வகுத் தோதியது, மேல், ( தி.10 பா.448) ``நால் மூவேழ்`` என்றதனோடு இயைதற் பொருட்டு. `பொழிந்தது` என்பது ஈறு குறைந்தது.
பூதத்தின் காரணத்தைப் ``பூதம்`` என்றார். `ஒழிந்த` இரண்டும், `நுண்ணுடம்பிற்கு வேறாய்` எனப் பொருள் தந்தன.
இதனால், தந்தை உடலில் தொகுத்து வைத்துக் காத்த இருபத்தைந்து கருவிகளைப் பின் தாயுடலில் வகுத்து வைத்துச் செயற்படுத்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே. 

பொழிப்புரை :

பூவின் மணத்தைக் காற்றே உலகிடை எங்கும் பரவச்செய்தல்போல, நுண்ணுடம்பின் செயல்களைத் தச வாயுக்களே பருவுடம்பில் கூவி அழுதல் முதலிய தொழில்களாக நிகழச் செய்யும், அவ்வாறு செய்விக்கச் சிவபெருமான் நினைந்தபொழுது.

குறிப்புரை :

தசவாயுக்கள், `பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பன. சீவன் - உடம்போடு கூடிய உயிர். அஃது இங்கு உடம்பையே குறித்தது. `பிராணன் முதலிய வாயுக்கள் இல்லையேல் நுதலிலும், உச்சியிலும் நிற்கும் அந்தக்கரணங்களின் ஆற்றல் பயன்படாது` என்பதாம். கூவி அழுதல் - அழைத்து அழுதல். `அவிழும்` என்பது பாடம் அன்று. பிறந்த குழவிக்கு முதற்செயல், வாய்விட்டு அழுதல். ஆதலின், அதனையே எடுத்தோதி ஏனைய வற்றை உடன்கொள்ள வைத்தார். நுண்ணுடம்பின் செயலாற்றலே தூல உடம்பில் செயலாக வெளிப்படும். அதற்குத் துணைசெய்வன தச வாயுக்கள் என்க.
இதனால், குழவி பிறந்தபின் அதனைச் சிவபெருமான் தச வாயுக்களின் வழிச் செயற்படுத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.

பொழிப்புரை :

குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாதுவிடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.

குறிப்புரை :

போகின்ற எட்டு, உயிரோடு ஒட்டிச் செல்கின்ற சூக்கும சரீரத் தத்துவங்கள். புகுகின்ற பத்து எட்டு, கருவில் வந்தபின் வருகின்ற மேற்சொன்ன (தி.10 பா. 449) பதினைந்துடன் `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` என்னும் முதல் நாடிகள். மூழ்கின்ற - ஆன்மா அழுந்துகின்ற. `முத்தனுவும்` என்பது குறைந்து நின்றது. முன்பு, `எட்டும், பதினெட்டும்` எனவும், பின்பு, `ஒன்பது வாய்தலும்` எனவும் கூறினாராயினும், `அனைத்துக் கருவிகளும் மூவுடம்பாய் அடங்கு கின்றன` என்றற்கு, ``முத்தனுவும்`` என்றார். குண்டலினி மூலாதாரம் முதலாகப் பிரமரந்திரம் ஈறாகத் தலைகீழாக நிற்கும் பாம்பு வடிவாய் இருத்தலின் அதனை, ``நாகம்`` என்றார். ``புரவி`` என்றது, இடைகலை பிங்கலை வழிச் செல்லும் பிராண வாயுவை. அஃது ஆகுபெயராய், அதற்கு இடமாகின்ற அந்நாடிகளைக் குறித்தது. விடுதல் - தூண்டுதல். ``பன்றி`` என்ற இழிவு வகையால் பயன்படாமை குறித்தவாறு.
இதனால், சிவபெருமான் உயிர்ப்பு வழியாகப் பருவுடம்பை நிலைப்பித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே. 

பொழிப்புரை :

தந்தையும் தாயும் கூடுங்காலத்துக் காமம் மிக்கிருப்பின், பிறக்கும் மகன் தாமத குணம் மிக்கிருப்பான். காமம் குறைந்திருப்பின், மகன் சத்துவகுணம் மிக்கிருப்பான். காமம் மிகுதலும் குறைதலும் இன்றி அளவிற்பட்டதாக இருப்பின், மகன் இராசதகுணம் மிக்கிருப்பான். இம்முத்திறத்து மைந்தருள் சத்துவ குணம் மிக்கவன் அரசனாதற்கும் உரியவனாவான்.

குறிப்புரை :

எதிர்த்தல் - கூடுதல். இறையவன் - உருத்திரன். ``அரியவன்`` என்பதில் அவன், பகுதிப்பொருள் விகுதி. `மைந்தன் அரசும் ஆளும்` என உம்மையை மாற்றி உரைக்க. உருத்திரன், மால், அயன் என்னும் குணமூர்த்திகள் மூவரும் தொழிலால் முறையே தாமதம், சாத்துவிகம், இராசதம் என்னும் குணத்தினராதலின், அக்குணம் மிக்க மைந்தரை அவர்களாகவே கூறினார். அதனானே, `அம்மைந்தர்க்கு அத்தேவர், இயக்கத் தேவராய் (அதிதேவராய்) நிற்பர்` என்பதும் கொள்ளப்படும். இருவரிடத்தும் காமம் ஒருவகையாய் நில்லாது மாறி நிற்பின், இங்குக் கூறிய பயன் தந்தையின்பால் வைத்துக் கொள்ளப்படும். என்னை வித்தின்கண் உள்ளதே விளைவின் கண்ணுமாம் ஆதலின், ``மகனறிவு தந்தை யறிவு`` (நாலடியார், 367) எனப் பிறவிடத்தும் கூறப்படுதல் காண்க.
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
என்னும் திருக்குறளும் (குறள், 114) இப்பொருள்மேல் நோக்குடையதேயாம். இதனால், `தோன்றும் கருவினது வினைக்கு ஏற்பச் சிவன் தந்தை தாயரது கூட்டத்தில் அவர்கட்கு இந்நிலையே விளைப்பன்` என்றவாறு. `பேர் ஒத்தமைந்தன்` என்பதில், ``பேர்`` என்றது, முன்னர்க் கூறிய மூன்றனுள் ``அரி`` என்பது, அரசனை மால் எனக் கூறும் வழக்குப்பற்றிக் கொள்ளப்படும். ஏறுதல் முதலியவற்றிற்குத் தந்தை உடற்பொருளாகிய வெண்டுளியையே வினை முதலாக உரைப்பர்; அது பொருளாயின் எடுத்தோதலே வேண்டும் என்க.
இதனால், ``பண்புறுகாலமும்`` என மேற்கூறப்பட்ட (தி.10 பா. 445) பண்புகளைச் சிவபெருமான் கருவில் அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

பொழிப்புரை :

காமம் பொருந்திய ஒருவனும் ஒருத்தியுமே பற்றுக் கோடாக நின்று அவரின் நீங்கிப் பாய்கின்ற கருமுதற் பொருள்கள், பின்பு கருப்பதிந்து உருவாதற் பொருட்டுப் பதிவிற்கு முன்பே அப்பொருள்களில் அவர் உடம்புகளிலே பல கூட்டுப்பொருள்கள் வந்துசேர, கருப் பதிந்தபின் அக்கருவிற்குக் குணங்கள் மேற்கூறிய முறையில் அமையும்.

குறிப்புரை :

`அதனால், மேற்கூறியவாறு நிகழும் கூட்டத்தினால் பிறக்கும் மைந்தர் மேற்கூறிய வகையினராய் இருப்பர்` என்பது குறிப்பெச்சம். ஏயம் - இழிவு; காமம். `தஞ்சம்` என்பது `தஞ்சு` எனக் கடைக்குறைந்து நின்றது. `நிறம்` என்னும் பொருட்டாகிய `சாயம்` என்னும் திசைச்சொல் நாயனார் காலத்து இன்மையின் `சாயத்து` என்பது பாடம் ஆகாது. கரு, ஆகுபெயர். உருவாம் என - உருவாய்த் தோன்றும் என்னும் காரணத்தால். காயம் - கூட்டுப் பொருள். கலந்து, `கலக்க` என்பதன் திரிபு. ``அது`` என்றது, `கரு` என்றதன் இயற் பெயர்ப்பொருளை. காண - உருத்தோன்றுமாறு. மாயம் - நிலை இல்லாது மாறிவருகின்ற. மனம் - அந்தக்கரணம். அவை ஒடுங்குதல் குணதத்துவத்திலாகலின், ``மனோலயம்`` என்றது ஆகுபெயரால், முக்குணத்தை உணர்த்திற்று. ஆனது - பொருந்திற்று.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது. இதனானே கருவில் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் `மனோமய கோசம்` எனப்படும் குண சரீரத்தைக் கூட்டுமாறும் பெறப்பட்டது. குண சரீரம், பர சரீரம் முத்திறத்தினுள் ஒன்று. பரசரீரத்தின் முத்திறம், `காரண சரீரம், கஞ்சுக சரீரம், குண சரீரம்` என்பன. இவைமுறையே `ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமய கோசம்` எனவும் பெயர்பெறும்.
இதனால், கருவினுள் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் சூக்கும தேகத்தையும் வாக்குகளையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே. 

பொழிப்புரை :

கருப்பையுள் முதற்கண் அதீத நிலையில் உள்ள குழவிக்குப் பின் `மாயை` (அசுத்த மாயை) என்பவள் தனது சுற்றமாகிய வித்தியா தத்துவங்களைச் சேர்ப்பிக்கத் துரிய நிலையைப் பெறும். பின்பு அத் துரிய நிலையும் நீக்கிச் சுழுத்தி சொப்பன சாக்கிரங்களாகிய நிலைகள் கூடுமாறு வலிமை மிக்க வினைப் பயன்களாகிய `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம்` என்னும் பாவங்கள் எட்டும் மாயேயமாய்ப் பொருந்தும். அதனால், குழவி தனது வினை நுகர்ச்சிக்குரிய தன்மைகள் யாவும் நிரம்பப் பெறும்.

குறிப்புரை :

``மாயாள்`` எனவும், `கிளை` எனவும் உருவகமாக்கிக் கூறியது, குழவியது அறிவைச் செவிலிபோல வளர்த்தல் தோன்றுதற்கு. `துரியமும்` என்பதும் பாடம். `கான்மிகம்` என்பது ``காமிகம்`` என நின்றது. தன்மம் முதலிய புத்தி குண பாவங்களைக் கூறியது குழவி நிரம்பிய வளர்ச்சி உடையதாதலைக் குறித்தவாறு. `பொருந்தும்` என்பது சொல்லெச்சமாய் நின்று ``எழ`` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று. `மாயேயம் எட்டாதல் பொருந்தும்` என மாற்றி உரைக்க. `மறை வாக்குப்போலச் சொல் உளதாம்` என்க. அஃதாவது `தெளிவான உணர்வுநிலை உளதாம்` என்றபடி. இதனால், சிவபெருமான் குழவிக்கு உணர்வு நிரம்பச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே. 

பொழிப்புரை :

எலும்புகளைக் கழிகளாகவும், நரம்புகளைக் கயிறுகளாகவும், குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண்ணைச் சுவர்களாகவும் பொருந்த அமைத்து, உயிர் இன்புற்று வாழ்தற் பொருட்டு இல்லம் ஒன்றை ஆக்கி, அளித்த, நீதி மிக்கவனாம் நல்லவனாகிய ஒருவனை (சிவபெருமானை) நான் நினைக்கின்றேன்.

குறிப்புரை :

`அவ் இல்லத்தில் வாழும் நீவிரும் அவனை நினைத்தல் வேண்டும்; நினையீராயின், நன்றிகொன்றீராவீர்` என்பது கருத்து. மிடைந்து - கழிகள் நெருங்க வைத்து. ``என்பால்`` என்றற்கேற்ப, `நரம்பால், செம்பாலால்` என உருபு விரிக்க. வரி - வரிய; இறுக. செம்பால் - இரத்தம். இறைச்சி திருந்த - ஊன் பதப்பட. ``இன்பால்`` என்பது ``நிலை`` என்னும் தொழிற்பெயர் கொண்டது. நிலை - நிற்றல்; இஃது ஆகுபெயராய், நிற்கும் இடத்தைக் குறித்தது. இறை - இறைமை; நடுவு நிலைமை. ``இறைபுரிந்து`` (குறள், 541) என்றார் திருவள்ளுவரும். நன்பால் ஒருவன் - நன்மைப் பகுதிக்கண் நிற்கின்ற ஒப்பற்றவன். இது தூலதேகத்தின் ஆக்கப்பாட்டினை விரித்தவாறு. இவ்வாறே,
``என்பினால் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் மில்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின்
மூழ்கி டாதே`` -தி.2 ப.79 பா.8
என ஞானசம்பந்தரும்,
``என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோ
ருருவ மாக்கி`` -தி.4 ப.5 பா.2
என நாவுக்கரசரும் அருளுமாறு அறிக.
இதனால், கருவுள் நின்ற உயிருக்குச் சிவபெருமான் தூல சரீரத்தைக் கூட்டுதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே. 

பொழிப்புரை :

கருவிற்குத் தூலதேகம் அமைந்த பின்னர் தாயது சந்திரகலையாகிய மூச்சுக் காற்றுச் சூரிய கலையொடு மாறு கொள்ளாமல் இயங்கிக் குழவியது தூலதேகம் முழுதும் பரவிக் குளிர்ச்சியைத் தந்து வளரப்பண்ணும். அவளது சூரிய கலையாகிய மூச்சுக் காற்றும் அவ்வாறே சென்று குழவியின் உடலில் வெப்பத்தை உண்டாக்கி அதனை அழியாதிருக்கச் செய்யும். இவ்வாறு அவ்விரு வகைக் காற்றினையும் சிவபெருமான் தாயது மூலத்தின்கண் உள்ள வெப்பம் மிக்கெழாது அளவில் நிற்குமாறு அமைக்கின்றான்.

குறிப்புரை :

`ஒத்து எங்கும் புகுந்து` என்பதை முன்னும் கூட்டி, `பால்வண்ணன் ஒத்து மேனி எங்கும் புகுந்து பதம் செய்யும்` எனவும், `பகலோன் ஒத்து உடல் எங்கும் புகுந்து இதம் செய்யும்` எனவும் உரைக்க. பால்வண்ணன் - சந்திரன். கருவில் நிற்கும் குழவிக்குத் தாயது மூச்சே மூச்சாவதன்றி வேறில்லையாகலின், பொதுப்பட வாளா ஓதினார். தேகத்தை அழியாமல் இருக்கச் செய்வது வெப்பமே யாகலின், அதனை, ``இதம்`` என்றார். பதம் குளிர்ச்சியாதல் வெளிப்படை.
இதனால், சிவபெருமான், கருவினுள் குழவியது தூல தேகத்தை வளர்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 

பொழிப்புரை :

கருவினுள் வீழ்ந்த உயிர் அவ்விடத்தே இறக்கும் ஊழ் உளதாயின், பதிந்த கருவைச் சிவபெருமான் பலநிலைகளில் பல்லாற்றான் அழிந்தொழியச் செய்வான். அவ்வாறின்றிப் பிறந்து வாழும் ஊழ் உளதாயின், இடையூறுகள் பலவற்றால் தாக்கப்படுகின்ற வினைக்கட்டுடைய அக்கருவைச் சிவபெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் சுழிகளில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோற் குவையிலிருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும், நெருப்பாலும் அழியாது காப்பான்.

குறிப்புரை :

ஒழி - ஒழிதல்; அழிதல். முதனிலைத் தொழிற்பெயர். ``செய்யும்`` என்பது முற்று. ``வினையுற்ற நாள்`` என்பது தாப்பிசையால் முன்னரும் சென்றியையும். மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. உயிர் மண்ணில் வாராது கருப்பையுள் நிற்கும் காலத்தை ``வழி`` என்றார். ``சுழிபல வாங்கி நீராட்டி, வைத்தழு வாங்கிச் சுடாமல் வைத்தான்` எனக் கூட்டுக. வை - வைக் கோல். வைக்கோற் குவையைத் `தழு` என்றல் வழக்கு.
இதனால், கருவைச் சிவபெருமான் வினைக்கேற்றவாறு அங்கே அழித்தல், காத்தல் இரண்டனையும் செய்தல் கூறப்பட்டது.
குழவி கருவினுள் அழியாது தப்புதலை மாணிக்க வாசகர் போற்றித் திருவகவலுள் பலபட விரித்தருளிச் செய்தார்.
``கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவதாயும்
பரிணமித் தழிவதாயும் பாலனாய் அழிவதாயும்``
எனச் சிவஞான சித்தி (சூ. 2.93) யும் கூறிற்று.

பண் :

பாடல் எண் : 14

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே. 

பொழிப்புரை :

தந்தையது வெண்டுளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த வெண்டுளியும், அவ்வாறே தாயது செந்துளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த செந்துளியும் கலந்து, பன்னிரண்டு அங்குலமாகிய தாயது மூச்சுக்காற்றில் நான்கு அங்குலம் புறத்தே போந்தொழிய, எட்டங்குலமே உட்புகுதலால், அக் கரு தனது கையால் எண்சாண் அளவினதாய் வளரும்.

குறிப்புரை :

யோனி, ஆகுபெயர். மூச்சுக் காற்று நான்கு அங்குலம் ஒழிய, எட்டு அங்குலம் உட்புகும் என்பது நன்கறியப்பட்டதாகலின், அக்காற்றினை எடுத்தோதாராயினார். புறப்பட்டு `புறப்பட` என்பதன் திரிபு. ``அக் கரம்`` என்றது, `அக்குழவியின் கரம்` என்றவாறு. எட்டும் - நீட்டியளக்கின்ற.
இதனால், உடம்பு எண்சாண் ஆகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே. 

பொழிப்புரை :

ஒருவன், ஒருத்தி ஆகிய இருவரது இன்பநுகர்ச்சிக் காலத்தில் கருவைத் தோற்றுவிக்கப் புகுந்த சிவபெருமான், அவ்வொருத்தியது கருப் பையினுள் ஓர் உடம்பைக் கொணர்ந்து வைத்த கொடைத் தொழிலாலே வெள்ளிய துளிகள் பலவற்றுள் ஒரு துளியின்கண்ணே முப்பத்தொரு கருவிகள் ஆகிய மாயா காரியங்கள் சேர, அவற்றால் முதற்கண் ஒரு பிண்டத்தை அமைக்கின்றான்.

குறிப்புரை :

மோகம் - மோகினி. ஆன்ம தத்துவத்திற்கும் இது வழிமுறையாற் காரணமாதல் பற்றி இதனையே கூறினார். `இரண்டெட்டும், மூவைந்துமாகிய மோகத்துள்` என்க. மோகம், கருவியாகுபெயர். ``கோசம்`` என்பது உயிரெதுகை.
இதனால், பரசரீரத்துள் குண சரீரமே யன்றிக் கஞ்சுக சரீர காரண சரீரங்களும் கூட்டப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. 

பொழிப்புரை :

உடம்பிலே பொருந்தியுள்ள மயக்கத்தை உடைய ஐம்பொறிகளும் அவ்வுடம்பையே என்றும் பற்றுக்கோடாகக் கொள்கின்றன. அதுபோலவே முட்டை வடிவாகத் தோன்றும் கருவைப் பற்றியுள்ள உயிரும் அக்கருவையே பற்றுக்கோடாகக் கொண்டு தாயின் கருப்பைக்குள் இருக்கும்.

குறிப்புரை :

இது, கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாத பிண்டமாகிய கருவில் உயிர் செயலற்றிருத்தல் எவ்வாறு என்பார்க்கு, `செயலின்றி, அறிதல் மாத்திரையாய் நிற்கும்` என ஐயம் அகற்றியவாறு. ``பிண்டம்`` என்றது உடம்பை. `மரித்தது` என்பது பாடம் ஆகாமை அறிக. விந்துவை அடக்கிக் கொள்ளுதலால் கருப்பை ``நாதம்`` எனப்பட்டது. `பிறவற்றை நோக்க அறிவாய் நிற்கின்ற ஐம்பொறிகள், அவ்வறிவுத் தன்மை யில்லாத உடம்பிலே நிற்றல் போல, சடம் போல்வதாகிய பிண்டத்தில் சித்தாகிய உயிர் நிற்கும்` என்பதாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன்
அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி
நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே. 

பொழிப்புரை :

எனது உடலில் நிற்கின்ற சிவபெருமான் ஒவ்வோர் உயிர்க்கும் கருவில் அதன் விதியாகிய எழுத்தோலையைத் தலையிலே வைத்து, தானே இயங்குதல் உடைய யந்திரம் போன்ற ஐந்து உடல்களை நிலைபெறச் செய்தளித்து, அவ் ஐந்துடல்களில் வேறு பட்ட, நிலையான முப்பது கருவிகளை அமைத்து, ஒன்பது வாய்களை உடைய ஒரு துருத்தியைச் செய்து தருகின்றான்.

குறிப்புரை :

ஓலையை ``இலை`` என்றது, `பத்திரம்` என்னும் வடநூல் முறை. அதன்கண் பொறிக்கப்படுவது எழுத்து. ``அலைப் பொறி`` என்பதில் அகரத்தைத் துகரமாக மயங்கினமையின், பாடம், ``துலைப் பொறி` எனப் பிழைபட்டது.
ஐந்து உடல், மேலே சொல்லப்பட்டன. (பாடல் - 402, 424) நிலைத்தல், தம் காரியம் அழியினும் தாம் அழியாது நிற்றல். முப்பது கருவிகள், ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவங்களில் புருடன் ஒழிந்தவை. புருடன் தனித் தத்துவம் அன்றாதலின் அதனை நீக்கி ஓதினார். `நீர்மையாக` என ஆக்கம் வருவித்து `அவற்றின் தன்மை தோன்ற` என உரைக்க.
உலைப் பொறி - துருத்தி. `ஒன்பதில் உலைப்பொறி ஒன்று செய்தான்` என மாறிக் கூட்டுக. ஒன்பது, எண் ஆகுபெயர். `ஒன்பதில்` என்பதில் இல், ஐந்தாம் உருபு. ``கரு`` என்றதை ``ஈசன்`` என்றதன் பின்னர்க் கூட்டி, இரண்டையும் முதற்கண் வைத்து உரைக்க. ஒன்பது வாயையுடைய துருத்தி, இல் பொருள் உவமை. இஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது. `ஒன்பது வாய்கள்` இவை என்பதை அடுத்துக் காண்க.
இதனால், துருத்திபோல் அமைந்த தூல உடம்போடே ஏனை நான்குடம்புகளும் ஒட்டிக்கிடக்கச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் வனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே. 

பொழிப்புரை :

ஒருவனும், ஒருத்தியும் ஆகிய இருவர் இன்பம் நுகர்தற்கண் பொருந்த வைக்கும் மண்ணால் துன்பத்திற்கு ஏதுவான கலங்கள் பலவற்றையும் செய்பவன் ஒருவனே. அப் பல கலங்கள் ஆவன, நீர்ச்சால்கள் ஒன்பதும், அவற்றில் நீரை முகந்து ஆள்கின்ற கலயங்கள் பதினெட்டுமாம். இவ்வாறு குயவனது சூளை கலங்களை உருவாக்கிற்று. அதனாலே கலங்கள் உளவாயின.

குறிப்புரை :

மண், கருப் பிண்டம். ``கலசம்`` என்றது, `கலம்` எனப் பொதுப்பட நின்றது. உடம்பு ஒன்றேயாயினும், அதன் உட்கூறுகளைப் பகுத்துணர்த்துதற்குப் பலவாகக் கூறினார். அணைவான், உயிர், ஒன்பது, ஒன்பான் துளை (நவத்துவாரம்). அவை, கண் இரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, வாய் ஒன்று, எருவாய் ஒன்று, கருவாய் ஒன்று. இவை நீர்வடிவாய்க் கழியும் கழிவுப் பொருள்கள் வெளிப் படும் பெருவாயில்களாதல் பற்றி ``நீர்ச் சால்`` என்றார். பதினெட்டா வன, நானூற்று ஐம்பதாம் திருமந்திரத்தில் குறிக்கப்பட்ட கருவிகள். அவை அருவப் பொருளாய் நின்று இவ்வாயில்கள் பயன்படச் செய்தலின், `கலயம்` என்றார். சூளை இறைவன் செயல். விளைந்தது, கிடைத்தது; இவ்வொருமை தொகுதி மேல் நின்றது. `தான், ஏ` அசைநிலைகள்.
இதனால், உயிர்களின் பொருட்டு உடம்பை அமைக்குமா றெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீரதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே. 

பொழிப்புரை :

உலகீர், வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகளாகிய ஆறும் கருவிலே அமைக்கப்பட்டன என்பதை அறியமாட்டீர். அதனால், அவற்றில் அழுந்துதலின்றி நீங்கமாட்டீர். அவ்வுடம் பிற்றானே நல்லன பல பெருகுமாற்றையும், சிவபெருமான் அந்நல்லனவற்றால் பல பயன்கள் விளைய வைத்திருத்தலையும் உணர்ந்து அடையமாட்டீர்; ஆயினும், நீவிர் அனைவீரும் பிண்ட மாகிய உங்கள் உடம்புகள் தாயர்தம் வயிற்றில் பத்துமாதம் தங்கி வளர்ந்து வந்ததை அறிவீர்கள்.

குறிப்புரை :

`அதனால் பயன் என்னை` என்பது குறிப்பெச்சம். வாழ்வில் நிகழும் ஆறு மேலே சொல்லப்பட்டன. (தி.10 பா.440) `அதனில்` என்பதில் சுட்டு, ஆக்கத்தைக் குறித்தது. குணங்கள் தன்மைகள். அவை அறவுணர்வும், இறையுணர்வும் பற்றி எழும் விருப்பமும், செயல்களும். சித்திகள் - அவற்றின் பயன்கள். `இட்டது, ஆனது` என்பன தொழிற் பெயர்கள். `ஏனையவற்றை அறியாவிடினும், பிண்டம் பத்து மாதம் தங்கிப் பிறந்ததை அறிவீர்` என இகழ்ந்தவாறு. இவ்விகழ்ச்சி, முற்கூறிய அறியாமைபற்றியதாதல் அறிய.
இதனால், சிவபெருமான், `வேம்பினோடு தீங்கரும்பும் விரவி ஊட்டுதல்போல` (தி.7 ப.46 பா.2) உயிர்கட்கு வினைப் போகத்தை நுகர் வித்தலோடு, மெய்யுணர்வைப் பெறுவித்தற்பொருட்டும் உடம்பைக் கருவினில் தோற்றுவித்துக் காத்துத் தருகின்றான் என அதன் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே. 

பொழிப்புரை :

சிவபெருமான், உடலை அமைத்து, அதில் உயிரைக் கூட்டிய குறிப்பை உணர்ந்து, அவ்வுடல் நிலை பெறுதற் பொருட்டு அதில் நீர்மடைபோல் உள்ள ஒன்பான் துளைகளையும் அமைத்து, உறுதிப்பாடுள்ள நெஞ்சத் தாமரையின் மேல் தனது உருவத்தைத் தீயின் முனைபோல வைத்துள்ள அவனையே கூடி நான் இன்புறுகின்றேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு அவற்றை உணர்ந்து அவனைக் கூடுதலே உடல் எடுத்ததன் பயன்` என்பது கருத்து. ``உயிர் வைத்தவாறும்`` என்பதன்பின், `உணர்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``மடைவைத்த`` என்பதில் வைத்த, உவம உருபு. திடம், உண்மை அன்பு. `இருதய கமலத்தின் மேல் இறைவன் தீக்கொழுந்து வடிவாய் உள்ளான்` என, உபநிடதங்களில் தகர வித்தை கூறும் வழிகூறப் பட்டது. யோகியர் அதனையே நினைத்தலின், ``தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசன்`` என்றார். ``சென்னி`` என்றது மேல் இடத்தை. உடம்பொடு நிற்குங்கால் தியானத்தாலும், பாவனையாலும் இறைவனைக் கூடும் இடம் இருதயமும், புருவ நடுவுமேயாக, அவற்றை யொழித்து `சென்னித் தாமரை` என மொழிமாற்றி, உடம்பை விட்டுப் போகுங்கால் பற்றும் இடமாகிய பிரம ரந்திரத்தைக் கொள்ள வேண்டாமை அறிக. ``கைகலந்தேன்`` என்பதில் கை, இடைச்சொல்.
இதனால், உடம்பினை அளித்த தலைவனது குறிப்பை உணர்ந்து, அதன்கண்ணே அவனைக் கூடும் முறையறிந்து கூடுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.

பொழிப்புரை :

நான்கு வேத சிவாகமங்கள் அனைத்திலும் கேட்டு நின்றது, `என்றும் அழிவில்லாத பேரொளியாகிய சிவபெருமானே உலகனைத்திற்கும் முதற்காரண வடிவாய் நின்று அவற்றைக் கோக்கின்றான்` என்பது. எனவே, தாயது வயிற்றில் நெகிழ்ந்து பட்ட கருவை உறுதிப்படுத்தி உருவாக அமைப்பவன் அவனே. ஆதலின், தந்தை தாயாரது உடற்கூட்டம் அவனது செய்கைக்கு ஒரு கருவியாய் அமையும் அளவேயாம்.

குறிப்புரை :

மூட்டுதல், தேர் உறுப்புக்களை ஒருங்கிணைத்துத் தேராக்குதல்போல, உலகுறுப்புக்கள் பலவற்றைத் தொகுத்து உலக மாக்குதல். `யோனி` என்பதற்கு `வாயில் அல்லது காரணம்` என்பதே பொருள். உலகிற்கு முதற்காரணம் மாயையாயினும், வித்திற்கு நிலம் போல இறைவன் அதற்கு நிலைக்களமாதல் பற்றி அவனையே, `முதற் காரண வடிவினன்` என்று நூல்கள் சில இடங்களிற் கூறும். அவ் வாற்றால், ``முதல் யோனி மயன் அவன்`` என்றார். `அவன் மூட்டு கின்றான்` என முன்னே கூட்டுக. ``கேட்டு நின்றேன்`` என்பதன்பின், `அது` என்னும் எழுவாயும், ``மூட்டுகின்றான்`` என்பதன்பின், `என்பது` என்னும் பயனிலையும் அவாய் நிலையாய் நின்றன. மூட்டு தற்கு, `உலகம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `கருவை உருவாக நீட்டி நின்று கூட்டுகின்றான்` என்க. `ஆகத்து உளவாதல்` என ஒருசொல் வருவிக்க. நேர்படுதல் - நினையாததொன்றாய் இடை வருதல். இவ்வாறு கூறியது, அதன் தலைமையின்மை உணர்த்தற்கு.
இதனால், கருவை உருப்படுத்துகின்றவன் சிவபெருமான் என்பதே உண்மை நூல் துணிபாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே. 

பொழிப்புரை :

தாய் தந்தையரது கூட்ட உறுப்புக்கள் தம்மிற் கூடிய காலத்து முன்பு தந்தையுடலில் நின்ற கரு, தாயது கருப்பையுட் சென்று கலந்து முட்டை (பிண்டம்) ஆகும். அம்முட்டையினுள் நீர்க்குமிழியில் நிழல்போல நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் பருவுடல் எங்கும் பரந்து அதனைத் தாங்கி நிற்கும்.

குறிப்புரை :

`இவ்வாறு தாங்கிநிற்றல், அவன் திருவுளக் குறிப்பால் அல்லது ஆகாது` என்பது கருத்து. காவுடை - சுமையாதல் உடைய. ``தீபம்`` என்றது, கருவை என்பதை 478 ஆம் திருமந்திரம் பற்றி அறிக. இவை இரண்டானும், `கரு, பருவுடம்பு` என்பது கூறினார். நுண்ணுடம்புண்மையை உணராதார், `இப்பருவுடம்பே உடம்பு` என மயங்குவராதலின், அவர், `கருவுற்பத்தியில் இறைவன் திருவருள் என்பது இல்லை` என்றலும் மயக்க உரையேயாம் என்றற்குப் பருவுடம்பிற்குப் பற்றுக்கோடு நுண்ணுடம்பாதலை ஓதினார். குமிழி யில் நிழல், நுண்ணிதாய் உள்நிற்றற்குக் கூறிய உவமை. பாருடல் - பருவுடல். இத்திருமந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், மேலதற்கு ஏதுக்கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 

பொழிப்புரை :

நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந் திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவ பெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.

குறிப்புரை :

நுண்ணுடம்பு இல்லையேல், பருவுடம்பு பயனிலதாம் என்பது கூறியவாறு. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் வான் முதலிய மாபூதங்கள் ஐந்தனையும் முறையே தோற்றுவித்துப் பின் அவற்றின் குணமாய்ச் செவி முதலிய ஞானேந்திரியங்கட்குப் புலனாய் வந்து பொருந்துதலால், `நிருவிகற்ப ஞானம்` எனப்படும் பொதுவுணர்வும், பின் அவற்றை மனம் முதலிய அந்தக் கரணங்கள் பற்றிக்கொள்ளுதலால் `சவிகற்ப ஞானம்` எனப்படும் சிறப்புணர்வும், தோன்றுதலின், `நுண்ணுடம்பு இல்வழி, யாதோர் உணர்வும் நிகழாது` என்பதனை,
``ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்கள் என்று
பேசுமாத் திரைகள் ஐந்தும் பிறக்கும்பூ தாதிகத்தின்;
நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்``
எனவும்,
``சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்
கேற்றமாம் ஓசை யாதி இருங்குணம் இயைந்து நிற்கும்``
-சிவஞானசித்தி சூ. 2.64.65
எனவும்,
அந்தக் கரணம் அடைவே உரைக்கக் கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - புந்தியிவை
பற்றிஅது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர். -உண்மைவிளக்கம் - 17
எனவும் கூறுமாற்றான் அறிக. மாயா காரியங்களாகிய இக்கருவிகளின் வழி வரும் உணர்வெல்லாம் புறவிடயமேயாகலின், அவையெல்லாம் பாசஞானமே என்க. ஒட்டிய பாசம் - அவையே தானாகப் பொருந்திய மாயாகாரியங்கள். ``உணர்வென்னும் காயம்`` எனக் காரணத்தைக் காரியமாக ஒற்றுமை வழக்காற் கூறினார். கட்டி அவிழ்த்தற்கு `உயிர்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. இது முதற் பதின்மூன்று திருமந்திரங்கள் அந்தாதியாய் வரும்.
இதனால், பருவுடற்கு நுண்ணுடம்பு இன்றியமையாததாதல் கூறுமுகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே. 

பொழிப்புரை :

உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

நூல்கள் என்றது சொற்பிரபஞ்சத்தை. அவை நிவிர்த்தி முதலிய கலைகளில் வைகரி முதலிய வாக்குக்களாய் நிற்றலை அறிந்துகொள்க. வாக்குகள் சுத்த மாயையின் காரியங்களாம். அதனால், அவை மயக்கத்தை நீக்கித் தெளிவுதரும் என்க. `பாச ஞானத்தால் மயங்கும்படி பொருட் பிரபஞ்சத்தால் உயிர்களைக் கட்டி வைத்த சிவபெருமான், பின்னர் அதினின்றும் நீங்கிப் பசுஞானமும், பதிஞானமும் முறையானே எய்தி வீடுபெறுதற்குச் சொற்பிரபஞ்சத்தை யும் அமைத்துள்ளான்` என்றவாறு. `வேதமொடு` என்ற எண்ணிடைச் சொல் தொகுத்தல்.
இதனால், மேல் ``கட்டி அவிழ்த்திடும்`` என்றவழி, `அவிழ்த் தற்கு வாயிலாவன எவை என்னும் அவாய்நிலை நிரப்பப்பட்டது`. சிவபெருமான் கருவினுள் வாக்குகளைக் கூட்டுதல் மேலே (தி.10 பா.454) கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

பொழிப்புரை :

அருளின்றிச் சிவன் இல்லை. சிவனின்றி அருள் இல்லை. ஆகவே, என்றும் அருளோடே நிற்கின்ற அவன், கருவில் வீழ்கின்ற அந்த ஒர் உயிரை வளர்க்கத் தருகின்றபொழுது திரோதான சத்தி, அதனை வளர்க்கின்ற செவிலித் தாய் என்னும் இரு தாயாரிடத்து அன்பை உண்டாக்கித் தருவான்.

குறிப்புரை :

அருளும், சிவனும் ஒன்றாதலைக் காட்டியது உயிரை வளர்த்தற்குக் காரணமும், வளர்க்கின்ற தாயும் அவனே ஆகின்றான் என்பதும் தோன்றுதற்கு. `அருட்சத்தியே உயிருக்கு நற்றாய்` என்னும் கருத்தால், திரோதான சத்தியையும் செவிலியாகக் கூறினார்.
இதனால், கருவைப் பிறப்பித்த பின்னர் வளர்ப்பவனும் சிவபெருமானேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

வகுத்த பிறவியை மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே. 

பொழிப்புரை :

பாசஞானத்தைத் தருகின்ற உடம்பை வளர்க்கின்ற அம்மையும், நூல்களை மிக உணர்த்திப் பாச ஞானத்தைப் போக்கிப் பசுஞான பதிஞானங்களைத் தருகின்ற அப்பனும் செய்யும் செயல்களாவன முறையே, ஐம்புலன்களைப் பகுத்துணரும் வகையில் உயிர்கட்குப் பலவகைப் பிறப்புக்களைத் தருதலும், அவற்றின் அறிவுக்கறிவாய் நிற்றலைப் புலப்படுத்துதலும் ஆகும்.

குறிப்புரை :

`பிறவியை வகுத்த` என மாற்றிக்கொள்க. தொகுத் தற்குச் செயப்படுபொருள் மேல் (தி.10 பா.468) `வேதம் முதலாக இசைந்த பரப்பினை` என்பதனால் பெறப்பட்டது. அருளை அம்மையாகவும், சிவனை அப்பனாகவும் கூறும் முறை பற்றியும் உடலை வளர்ப்பவள் தாயும், அறிவை வளர்ப்பவன் தந்தையுமாகச் சொல்லப்படும் வழக்குப்பற்றியும் `அருளே பிறப்பைத் தருவது` எனவும், `சிவனே வீடு தருபவன்` எனவும் இருபொருளும் வேறு வேறுபோலக் கூறினார். அங்ஙனம் கூறினாராயினும், `இருபொருளும் ஒன்றே` என்பது மேலைத் திருமந்திரத்தால் இனிது விளக்கப்பட்டது. ``வகுத்த, நீக்கிய`` என முன்னர் உடம்பொடு புணர்த்தலால் பொது வாகச் சுட்டிய வற்றைப் பின்னர்ச் சிறப்பாக இனிது விளக்கினார் என்க.
இதனால், கண்ணுதல்தானே உயிர்களைக் கட்டியும், அவிழ்த்தும் நிற்குமாறு (தி.10 பா.467) கூறப்பட்டது. அஃதாவது திரோதான சத்தி வழியே கட்டுப்படுத்தும், அருட் சத்தியால் வீடுபெறு வித்தும் நிற்பான் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 27

மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே. 

பொழிப்புரை :

மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப் பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.

குறிப்புரை :

தந்தை தாயரது வெண்டுளி செந்துளிகளை `வன்னி - நெருப்பு` என்றார், அவை அப்பூதத்தின் கூறாதல் பற்றி. அச்சு, வடிவை அமைப்பதாகலின் அதனைக் ``கற்பனை`` என்றார். `கற்பனையாக` என ஆக்கம் வருவிக்க. `பூண்பது` என்பது தொழிற்பெயர். வழி - வாயில்; காரணம். பதிவை ``பதி`` என்றது முதனிலைத் தொழிற்பெயர். ஆண்மை - ஆற்றல். ``ஆம்பதி`` என்றது இன எதுகை.
இதனால், கருவைச் சிவபெருமான் மூவகை அச்சுப்பொருந்த அமைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 

பொழிப்புரை :

கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப் பயனின்றி அழிந்தொழியும்.

குறிப்புரை :

வெண்டுளி கருவாதலும், செந்துளி அதனை வளர்ப்பதும் ஆகும். அதனால், அவை இரண்டின் தன்மைக்கும் ஏற்பக் கரு அமையும் என்க. பாழ் நவம், `பாணவம்` எனப் புணர்ந்தது. நவம் - புதிது புதிதாய்த் தோன்றும் பொருள். பாழ் நவம் - பாழாதற்கு ஏதுவாம் பொருள். ஆண், பெண் என்பவற்றுள் முன் வந்தவை ஆகுபெயர்கள்.
இதனால், முன்னை மந்திரத்துள் ``பூண்பது மாதா பிதாவழி போலவே`` என்றது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே. 

பொழிப்புரை :

துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.

குறிப்புரை :

வெளிக்காற்றை ஒருமுறை உள்ளே வாங்கிச் சிறிது நிறுத்திப் பின் வெளியே செல்லவிடுத்து மீண்டும் அவ்வழியே வாங்கி உள்ளே நிறுத்துதல் `ஒருமூச்சு` எனப்படும். இஃது எல்லா மக்கட்கும் இயல்பில் நிகழ்வதே. ஆழ்ந்த நினைவு இயற்கைக்கு மாறுபட்ட வழிச்செலவு, வருந்திச் செய்யும் தொழில் முதலியவற்றில் மூச்சின் இயக்கம் இயற்கை நிலையினின்றும் வேறுபடும். அவ்வாற்றால் கலவி முடிவின்கண்ணும் அது மாறுபடுதல் இயல்பே. அதனால், கலவிக்குப் பின்னும் கலந்தோர் இருவரும் தம் இயற்கை நிலையில் இருத்தல், கருக்குழவியது உடற்கட்டு முதல் நிலையிலே நன்கு அமைதற்கு வாயிலாய் அமைகின்றது என்க. மூக்கு, வாய் என்பவை வழியாக மூச்சு நிகழ்தலே வெளிப்படையாக விளங்கினும், உடம்பு முழுதும் உள்ள நுண்டுளைகள் அனைத்து வழியாகவும் அது நிகழ்வதேயாம். அதனால் தந்தை தாயரது - சிறப்பாகத் தந்தையது - மூச்சுக் காற்று, கருவுற்ற குழவிக்குப் பயன்தருவதாகும் என்க.
பாய்ந்திடும் யோகிக்கு - மூச்சு நெறிப்பட இயங்கி நிற்கும் யோகிக்கு - `பாய்ந்திடும் யோகிக்கு இவ்வகை பகுத்தறிந்து பாய்ச்சலும் ஆம்` எனக் கூட்டுக. ``பாய்ச்சல்`` என்றது, இங்கு மூச்சுக் காற்றினை.
இதனால், சிவபெருமான் குழவிக்கு வாழ்நாளை வரையறுக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே. 

பொழிப்புரை :

முன்னை மந்திரத்துள், `அஞ்சு, நாலு` எனக் குறிக்கப்பட்ட மூச்சுக்காற்று அங்ஙனம் இயங்கும்பொழுது இயல்பாக இயங்கும் அளவில் சிறிதே குறையுமாயின், குழவி குறளாய் (வளராது குட்டையாய்க் கிடப்பதாகப்) பிறக்கும். மிகக் குறையுமாயின் குழவி கைகால்கள் முடமாகப் பிறக்கும். இஃது ஆடவரது மூச்சுக் கணக்கேயன்றி மகளிரது மூச்சுக் கணக்கன்று.

குறிப்புரை :

எனவே, மகளிரது அப்போதைய மூச்சின் அளவு குழவி உடலைத் தாக்குதல் இல்லை என்பதாம்.

பண் :

பாடல் எண் : 31

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 

பொழிப்புரை :

கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.

குறிப்புரை :

`ஆதலின், கலவிக் காலத்தில் துணையர் மல சல உபாதிகள் இல்லாதவராய் இருத்தல் வேண்டும்` என்பதாம். இவ்வாறு இருத்தற்கு அவர் இயல்பிலே நல்லுடல் உடையராதல் வேண்டும். இந்நிலை குழவி வளர்ச்சிக் காலத்தில் எனவும் கருதுவர். நாயனார் முன்னும் பின்னும் கலவிக்காலத்தையே கூறி வருதல் நோக்கத் தக்கது.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் குழவியது வினைக் கீடாகச் சிவபெருமான் அதன் புற உறுப்புக்களையும், அகக் கருவிகளையும் அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே. 

பொழிப்புரை :

கலவிக் காலத்தில் கணவனுக்கு மூச்சுக்காற்று வலமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி ஆணாய் அமையும். இடமூக்கின் வழி இயங்கிக்கொண்டிருப்பின், குழவி பெண்ணாய் அமையும். இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண் டிருப்பின் குழவி அலியாய் அமையும். இவை நிற்க, கருத் தங்கும் காலத்தில் தாய் வயிற்றில் கீழ்ப்போகும் காற்றுப் போக்கப் படாமல் தடுக்கப்பட்டு மேலெழுந்து பாயுமாயின், இரண்டு கரு தங்கும்.

குறிப்புரை :

ஆண் பெண் அலியாதற்குத் தந்தையது கூறே முதற் காரணமாதலோடு, `பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை` என மேல் (பா. 474) எடுத்தோதியதனால், `வலத்தது` முதலியன தந்தையது மூச்சு என்பதும், குழவி ஒன்றும் பலவுமாய்க் கருக்கொண்டு பிறத்தற்குத் தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளே முதற்காரண மாதலோடு, ``மாதா உதரம் மலம்மிகில்`` என மேல் (பா.475) எடுத்தோதியதனால், ``அபானன் எதிர்க்கில்`` என்றது தாயது வயிற்றிலே என்பதும், பின்னர், ``கொண்ட கால் ஒக்கில்`` என்றதனால், ``வலத்தது, இடத்தது`` என்றதும் அக்காற்றையே யாதலும் அறியப்படும். மூன்றாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க. மேல், (பா. 472) ``ஆண்மிகில் ஆணாகும்`` என்றற் றொடக்கத்தனவாகக் கூறினமையின், இங்கு வலத்தது வாதல் முதலாகக் கூறப்பட்டவை, அவை அவ்வாறு மிகுதற்குக் காரணங்கள் ஆதல் பெறப்படும். அதனால் இவை துணைக்காரணமும், மேற் கூறியவை முதற்காரணமும் ஆதல், விளங்கும். அபானன் எதிர்த்தலும் துணைக்காரணமேயாம். அதனால், இவை, அவற்றிற்கு இவ்வாறு ஒருதலையாக வேண்டப்படாமையும் பெறப்படுவதாம். இவை எல்லாம் தந்தை, தாய், குழவி இவரது வினைக்கீடாகவே நிகழும் என்பது அறிக.
இதனால், குழவியது அச்சு அமைப்பிற்கும், எண் அமைப் பிற்கும் துணைக்காரணமாவன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே. 

பொழிப்புரை :

கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.

குறிப்புரை :

``ஒத்து`` என்றது, இடம், அளவு இரண்டற்கும் ஒப்பக் கூறியது. அதனானே, `அளவு ஒவ்வாதொழியின், அழகின்றி யிருக்கும்` என்பது பெறப்படும். `மாறிடில்` என்னாது, ``குழறிடில்`` என்றார், `பன்முறை மாறி நிகழின்` என்பது அறிவித்தற்கு.
குழவி ஆணும், பெண்ணும் ஆதற்குத் தந்தையது மூச்சுக் காற்றுத் துணைக்காரணம் என்பது மேற்கூறி, இதனால், `அதனோடு தாயது மூச்சுக்காற்று ஒத்தல் அழகிற்குக் காரணம்` என்பதும், தாயது மூச்சு ஒவ்வாமை கரு நிலைபெறாதொழிதற்குக் காரணம் என்பதும் கூறினார்.
``கொண்டதும்`` என்ற உம்மை, சிறப்பு. `கோல்வளை யாட்கு` என்பதனை, `கோல்வளையாள் கண்` எனத் திரித்து, `கோல்வளை யாள்கண் கொண்டதும் இல்லையாம்` என மாற்றுக. கொண்டது - கொண்ட கரு.

பண் :

பாடல் எண் : 34

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. 

பொழிப்புரை :

தாய் தனது கருப்பையில் ஏற்றுக்கொண்ட குழவி, முதற்கண் தந்தையது நடுநாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து, பின் தாயது கருப்பையினுள்ளே ஞாயிற்றின் நிறம்போலும் செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன்பின்னர், வகைபடத் தோன்றுகின்ற உறுப்புக்களை உடையதாகும்.

குறிப்புரை :

தால் - தாலு; நாக்கு. நாக்கின் முதலிடம் நடுநாடி (சுழுமுனை) ஆதல் பற்றி இவ்வாறு கூறினார். சோதி - தீ. பால் - பகுதி. `சோதியாம் பாலாய்` என ஆக்கம் கொடுக்க. இரண்டிடத்தும், `உள்ளே வளர்ந்து` என மாற்றுக. `தந்தையது, தாயது` என்பன ஆற்றலாற் பெறப்பட்டன. பொருந்துதல் - வளர்ந்து பொருந்துதல். கரு, தாயது செந்நீரால் முதற்கண் செந்நிறம் உடையதாயே இருக்கும் என்க.
தந்தையது வெண்டுளியை, `நீர்க் கூறு` என்பராயினும், அதன்கண் உள்ள உயிராற்றல் தீயின் கூறேயாதலை இந்நூலால் அறிகின்றோம். இவ்வுயிராற்றலை, இக்காலத்தார் `அணு` என்பர். `நீர்` என்னாது, `துளி` (விந்து) என வழங்குதலும் நுண்ணிதாதல் பற்றியும், கருவாகி நிலைபெறுதல் சிறிதளவேயாதல் பற்றியுமாம். தந்தையது உடற் கூற்றில் வளரும் உயிராற்றல், தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளினுள் புகுந்து கெடாது நிற்றலே கருத் தங்குதலாம். குழவி ஒன்றாதல் பலவாதற்கும் உயிராற்றல் புகப்பெறும் பூப்புப் பொருள்களின் எண்ணிக்கையே காரணம். இக் காரணங்கள் முதற் காரணங்கள் ஆதலின், பிறவாறு மேற்கூறியன பலவும் துணைக் காரணங்களேயாம் என்க. தாயது வயிற்றில் வந்தபின் வளருமாறு கூறுவார், அதற்கு முன்னர் வளர்ந்தவாறும் உடன் கூறினார். இதனால், கரு வளருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே. 

பொழிப்புரை :

தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள்காறும் கருப் பையிலே வளரும். பத்தாந்திங்களே பிறக்கும் பருவமாக, அப்பொழுது நிலத்தில் வந்து சேரும். வந்தபின் தாய் தந்தையரைப் புறந்தருபவராகப் பொருந்தி வளரும். அவ்வளர்ச்சி, சுவரெடுத்தல், ஆடைநெய்தல், மாலைதொடுத்தல் முதலியவற்றிற்போலக் கட்புலனாகாது, மாயையினாலே கணந்தோறும் நிகழ்தலை ஒருவரும் காணவல்லரல்லர்.

குறிப்புரை :

`வளர்ந்தபின் அவ்வளர்ச்சியைக் கண்டு வியப்ப தல்லது, வளர்ச்சி கட்புலனாகாது` என்றற்கு ``மாயையினாலே`` என எடுத்தோதினார். இதனால், மாயையின் ஆற்றலும் அறியப்படும் என்க. அருவம் - கட்புலனாகாமை. ஆவது - வளர்வது; என்றது தொழிற்பெயர். `அருவமதாகிய ஆவது` என்க.
இதனால், கரு, கருப்பையுள் வளர்ந்து குழவியாய்ப் பிறக்குமாறும், பிறந்து வளருமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 36

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே! 

பொழிப்புரை :

கருவை இட்டவனாகிய தந்தையும் அதனை இட்டமை இடாமைகளை அறிந்தானில்லை. ஏற்றவளாகிய தாயும் அதனை ஏற்றமை ஏலாமைகளை அறிந்தாளில்லை. அக்கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணியாக்குகின்ற பொற்கொல்லனாகிய பிரமன் அவற்றை அறிந்திருந்தும் அவருள் ஒருவர்க்கும் சொல்லிற் றிலன். வினை நிகழ்ச்சி இருந்தவாறே அப்பொற் கொல்லனுக்குப் பணிக்கின்ற தலைவனாகிய சிவனும் அவ்விருவரோடே இருக் கின்றான்; அவனும் அவர்க்கு அவ் வினையியல்பையே உரைத்திலன். அந்தோ! இம்மாயையின் வஞ்சனை எவ்வகையினதாய் உள்ளது!

குறிப்புரை :

`இதனினின்றும் உயிர்கள் உய்திபெறுதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ``பட்டாங்கு`` என்பதில் படுதற்கு வினை முதலாகிய `வினை` என்பது வருவிக்க. சொல்லுதல் - பணித்தல். ``பரமன்`` என்றது, `தலைவன்` என்னும் பொருட்டு. கெட்டேன், இரக்கக் குறிப்பு இடைச்சொல். தட்டானும், பரமனும் உரையாமை, இட்டானும் ஏற்றாளும் தம்மை எண்ணாமையாலாம்.
இதனால், கருவினது தோற்றம் முதலியவற்றிற்குத் தந்தை தாயரே உண்மை நிமித்த காரணர் அல்லாராதல், அவர் மாயையின் வலியைக் கடக்கமாட்டாமையின் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொண்புற நாடிநின் றோதலு மாமே  

பொழிப்புரை :

ஒருவன், ஒருத்தி ஆகிய இருவர் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப் பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின், அவ்வுயிர், தான் நிலத்தில் வந்து சேர்தற்கு முன்பு கருப்பையினுள் உள்ள துன்பத்தால் `விரைவில் வெளிப்படல் வேண்டும்` என்று விரும்பிப் பெரிதும் முயன்று வெளிப் பட்டுப் பிறந்த செய்தியைப் பின் அறிவுடையோர் அவ்வுயிரும் தம்போல அறிவைப் பெறுமாறு அதற்குச் சொல்லுதல் கூடுமோ!

குறிப்புரை :

`இருவரும் கூடினமை தம் இன்பம் கருதியல்லது, ஓர் உயிர் மக்கள் உடம்பைப்பெற்று உய்தல் வேண்டும் என்னும் கருத்தினால் அன்று` என்பார் ``இன்புற நாடி இருவரும் சந்தித்து`` என்றும், `அக்கூட்டத்தால் அவர் பின்பு குழந்தையை வளர்க்கக் கடமைப்பட்டவராய்த் துன்புறுகின்றனர்` என்பார், ``துன்புறு பாசத்தில் தோன்றி`` எனவும் கூறினார். இவையெல்லாம் பெரும்பாலராய் உலகியலின் நிற்பாரது செயல்பற்றிக் கூறியன. `உலகுய்ய மகப்பெறுவான்` (தி.12 பெ. பு. திருஞான - 59) சந்திப்பாரும் உளர் என்க. ``சந்தித்து`` என்றதனை, `சந்திக்க` எனத் திரிக்க. ``நிலத்தின்`` எனப்பின்னர் வருகின்றமையின், ``உற நாடி`` என்றொழிந்தார். ஒண்மை, `ஒண்பு` என வந்தது. ஒண்மை - அறிவு. `பிறத்தற்கு முன் தான் பட்ட துன்பத்தை உணரின், அவ்வுயிர் மீளப் பிறவி எய்தாது வீடடைய விரையும்; அறிவிப்பினும் அதனை அறியமாட்டாமையால், மேலும் அது பிறவிக்கே வழிதேடுகின்றது; இஃது அதன் வினையிருந்தவாறு` என்றதாம். நான்காம் அடி, இன எதுகை. `தொன்பு` என்பது பாடம் அன்று.
இதனால், இட்டான், ஏற்றாள் என்பவரேயன்றி இடப்பட்ட அது தானும் தனது நிலையைத் தான் அறியாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.

பொழிப்புரை :

குயிற்குஞ்சாகத் தக்கமுட்டையை அவ்வாறாதற் பொருட்டு அதன் தாய் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே கருதி அடை காத்தல்போல, சிவன் தனது மகவாகிய உயிர், உடல் பெற்றுச் செயற்படுதற் பொருட்டுக் கருவிலே இட, தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது, உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அதனைப் போக்கிவிட நினையாமலும், `ஏன் வந்தது` என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தாலாவதே.

குறிப்புரை :

குயில் தன் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிக்க அறியாமையால் காக்கையின் கூட்டில் அதனை இடும் என்பர். வளர்த்தல், இங்கு முட்டையை அடை காத்தல். ``குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட்டிட்டால்`` என்றது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அதற்கேற்ற பொருள் வருவிக்கப்பட்டது. அங்ஙனம் காக்கப்பட்ட கரு, தாயது விருப்பம்போல இல்லாமையும் காணப் படுதலால், அது, காக்கையது விருப்பத்திற்கு மாறாய்த் தோன்றும் குயிற்குஞ்சு போல்வதே என்றபடி ``இல்லை`` என்பவற்றை `இன்றி` எனத் திரிக்க. `வளர்க்கின்றவாறு மயக்கத்தாலாம்` என்க.
இதனால், `கருவாய்த் தோன்றும் குழவி, உண்மையில் சிவன் மகவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. 

பொழிப்புரை :

மரவகைகளுள் சில, கிழங்காய் நின்றே பயன் படும்; சில, முளையானபின் பயன்படும்; சில, முளைக்குப் பின் புதலாய் நின்று பயன்படும்; சில, காய்த்துப் பழமாய்ப் பயன்படும். அந்த அந்த மரவகைக்கு அந்த அந்தப் பொருளே உளதாகிப் பயன் தருதல்போலச் சிவபெருமான் மக்கள் உயிர்க்கேயன்றிப் பிற உயிர்கட்கும் அவ்வவற்றின் தோற்றத்திற்கு ஏற்ப அத்தோற்றப் பொருள்களாய் நின்று அவற்றைத் தோற்றுவிப்பன்.

குறிப்புரை :

`எல்லா மரங்களும் பழமாய்த்தான் பயன்படும் என்பதின்றிப் பல்வேறு வகையில் பயன்படுதல்போல, எல்லா உயிர்களும் மக்களேயாய் - அல்லது கருப் பையில் தோன்றுவனவேயாய் நின்று தோன்றும் என்பதின்றிப் பலவேறு வகையில் தோன்றும்` என்றற்கு இவ்வாறு உவமை கூறினார். `மரவகை` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. அதர் - வழி. இதனால், மக்கள் உயிர்களின் தோற்றத்தை இவ்வாறு செய்விக்கின்ற சிவபெருமான், பிற பிற உயிர்களையும் அவ்வவற்றிற்கு ஏற்ற பெற்றியால் தோற்றுவிப்பன் என்பது இதுபற்றி அறியப்படும் என ஒரு திருமந்திரத்தால் தொகுத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. 

பொழிப்புரை :

உலகம் ஒடுங்குங் காலத்து உடம்பும் பல தத்துவங்களாய் ஒடுங்கி, முடிவில் எல்லாவற்றுடனும் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடல் மீளவும் முன்போலத் தோன்றுதல் வேண்டும் எனச் சிவபெருமான் திருவுளம் கொள்ளின், கடல் நீரில் தோன்றாது நின்ற உவர்ப்புச் சுவை பின் தோன்றி நிற்கும் உப்பாகத் திரண்டு உருவெடுத்தல்போல, அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்போலத் தோன்றும்.

குறிப்புரை :

மாயையில் ஒடுங்கும் உலகத்தை, அதற்கு நிலைக்களமாதல் பற்றி முதல்வனிடத்தில் ஒடுங்குவதாகக் கூறினார். ``வேண்டில்`` என்றது இச்சையையும், ``திருவருளாலே`` என்றது கிரியையும் என்க. திரித்து - மீண்டு.
இதனால், உடம்பு ஒடுக்கமும், தோற்றமும் உடையதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 

பொழிப்புரை :

எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.

குறிப்புரை :

விஞ்ஞானம் - விசேட ஞானம்; மெய்யுணர்வு. `விஞ்ஞானாகலர்` என்பது `விஞ்ஞானகலர்` என மருவி வழங்கும். அகலர் - கலை நீங்கினவர் கலை - மாயாகாரியம் என்றல் முக்குண வடிவாகிய பிரகிருதியை. விஞ்ஞானத்தால் கலை நீங்கியவர் விஞ்ஞானாகலர். விஞ்ஞானமாவது, சிவனால் உணர்த்தப்படும் விசேட ஞானம். இது வருதற்கு ஆணவமலத்தின் சத்தி மெலிதாதல் வேண்டும். அஃது இயல்பாகவே அமையப் பெற்றோர், இயற்கை விஞ்ஞானகலர்; இயற்கையாகவன்றித் தவத்தால் இந்நிலை வாய்க்கப்பெற்றுச் சிவனால் உணர்த்தப்படும் ஞானத்தைப்பெற்றுக் கலை நீங்கினோரும் மேற்கூறியவரோடு ஒப்பர் ஆதலின், அவர் செயற்கை விஞ்ஞானகலராவர்.
பிரளயாகலர் - பிரளயத்தில் (உலகம், யாவும் ஒடுங்கிய காலத்தில்) கலை நீங்கப் பெற்றவர். எனவே, `இவர் உலகம் ஒடுங்கிய காலத்தில் ஆணவ மலத்தின் சத்தி மெலிவடையப் பெற்றவர்` என்பது விளங்கும். இவர் இயற்கைப் பிரளயாகலர்; உலக ஒடுக்கத்திற்கு முன் இந்நிலையைப் பெற்றோர் செயற்கைப் பிரளயாகலர்.
சகலர் - பாசப்பற்று நீங்காதவர்; அஃதாவது ஆணவமல சத்தி வலிதாகப் பற்றப்பட்டவர். இவ்வன்மை மென்மைகளை, `தூலதரம், தூலம், சூக்குமம்` எனப் பகுப்பர். ஆணவமலப் பிணிப்புத் தூல தரமாக (மிகவன்மையாக) உடையவர் சகலர்; தூலமாக (சிறிது வன்மையாக) உடையவர் பிரளயாகலர். சூக்குமமாக (மென்மையாக) உடையவர் விஞ்ஞானகலர். இவருள், `நால்வர்` மூவர், மூவர்` எனப்பட்டோர் இவர் என்பது வருகின்ற திருமந்திரத்தால் விளங்கும்.
தம் ஞானம் - பசுஞானம். அஞ்ஞானம் - பாசஞானம் ஒரு புடை ஒற்றுமைகொண்டு சகலர் பிரளயாகலர் விஞ்ஞானகலரது ஞானத்தைப் பாசஞான பசுஞான பதிஞானங்களாக ஒதினார் என்க. ``விஞ்ஞானராதியர் வேற்றுமை`` என்றது `அனைவரது வகையும்` என்றவாறு.
இதனால், `உயிர்கள் மூவகைப்படும்` என்பதும், `அவற்றின் உள்திறங்கள் பத்தாம்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. 

பொழிப்புரை :

மேற்கூறியோருள் விஞ்ஞானகலர் நால்வராவார், `ஆணவமலத்தில் அழுந்தாத அவ்வளவில் நிற்போரும், அட்ட வித்தியேசுரபதவி, சத்தகோடி மகாமந்திரங் கட்குத் தலைவராம் பதவி இவற்றைப் பெற்றோரும், ஞானம் முதிரப் பெற்றோரும், அம்முதிர்ச்சியால் ஆணவமலம் பெரிதும் நீங்கப்பெற்ற முத்தரும்` என இவராவர்.

குறிப்புரை :

மூவகை உயிர் வருக்கத்திலுள்ளாரும் `அபக்குவர், பக்குவர்` என இருதிறத்தினராய் இருப்பர். அபக்குவர், `சிவனைப் பெறவேண்டும் என்னும் ஆர்வம் இன்றித் தாம் உள்ள உலகத்துப்` போகங்களை நுகர்ந்திருப்போர். பக்குவர், சிவனைப்பெறவேண்டும் என்னும் ஆர்வத்தால் அவனை அடைந்திருப்பவர். ஆர்வம் உளதாய வழி அடைதற்கு இடையீடில்லை. இந்த ஆர்வம் சத்திநிபாதத்தால் உண்டாவதாகும். இவருள், ``கேவலத்து ஆராது விட்டவர்`` என்றது அபக்குவரை. கேவலமாவது ஆணவ மலத்தில் மூழ்கி அதுவேயாய்க் கிடத்தல், எனவே, இதுவே, `விஞ்ஞானகலர்` என்பவரது இயல்பாதல் பெறப்பட்டது. அவர் பக்குவம் எய்தியவழி ஞானத்தைப் பெற்று மூவகை நிலையில் நிற்பர். அஃதாவது, ஆணவ மலம் நீங்கிய தாயினும் அதன் வாசனை, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலையினதாய் நீங்காது நிற்கும். இவை ஓன்றின் ஒன்றுமிக்க வன்மையுடையன; அவற்றுள் இலயமல வாசனை உடையவரையே, ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றார். ``விட்டு`` என்றதனால் மலம் நீங்கப் பெற்றமையும், ``நின்றார்`` என்றதனால், இலய வாசனை யளவாய் நிற்கப்பெற்றமையும் பெறப்பட்டன. இவர் சாந்திய தீத கலையில் சத்தி சிவ தத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்ந்திருப்பர். `அபரமுத்தர்` எனப்படுவார் இவரே என்க. ஆணவம் விட்டபின் இவர்போல நில்லாது, சிவனோடு இரண்டறக் கலந்து சிவனது பேரின்பத்தையே நுகர்ந்திருப்பவர் பரமுத்தராவர். அவரை உயிர் வருக்கத்தினருள் வைத்து எண்ணுதல் கூடாமையின், அவரைக் குறித்திலர்.
இனிப் போகமல வாசனை உடையவரையே `ஆணவம் விட்டார்` என்னாது ``மெய்ஞ்ஞானர்`` என்று மட்டும் குறித்தார். இவர் சாந்தி கலையில் சதாசிவ தத்துவத்தில் உள்ள புவனங்களில் அமைந்த போகங்களை நுகர்ந்திருப்பர். ஆகமங்களைக் கேட்டவராகச் சொல்லப்படும் `பிரணவர்` முதலிய பதின்மரும் இந் நிலையினராகவே சொல்லப்படுகின்றனர். உயிர் வருக்கத்தினராய்ச் சதாசிவ புவனத்துள் சாலோகம் முதலிய நிலைகளைப் பெற்று நிற்றலின் இவர்கள், `அணு சதாசிவர்` எனப்படுகின்றனர்.
அட்ட வித்தியேசுரராவார், அனந்தர், `சூட்சுமர், சிவோத்தமர் ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர்` சிகண்டி என்போர். இவர்கள் சிவாகமங்களைப் பலர்க்கும் உணர்த்துபவராதலின் `வித்தியேசுரர்` எனப் பெயர் பெற்றனர்.
சத்த கோடி மகா மந்திரங்கள், `நம:, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வௌஷட், பட், ஹும் பட்` என்னும் ஏழுமுடிபுகளை உடையன. கோடி - முடிபு. இம் மந்திரங்களைக் கணிப்போருக்கு அவற்றின் பயனைத் தரும் தலைவராய் உள்ளோரே `மந்திர மகேசுரர்` எனப்படுவர். இவ்விருதிறத்தாரும் இப்பதவிகளைப் பெற்றுச் சாந்தி கலையில் ஈசுர தத்துவ புவனங்களில் வாழ்பவராவர். அதனால், இவ்விருவரும் ஒருவகையினரே என்க.
இவருள், அனந்த தேவர் சுத்த வித்தியா தத்துவத்திலும் சென்று அங்குள்ள பிரமனுக்கு வேதத்தையும், சீகண்டவுருத்திரருக்குச் சிவாகமத்தையும் அறிவுறுத்தி அங்குள்ள உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோர் வழியாக வித்தியா கலையுட்பட்ட புவனங் களையும், சீகண்ட உருத்திரர் வாயிலாகப் பிரதிட்டை நிவிர்த்தி கலைகளுட்பட்ட புவனங்களையும் நடத்துவர். இங்ஙனம், விஞ்ஞான கலர் நால்வரது இயல்பு ஒருவாறு கண்டுகொள்க.
எஞ்ஞானர் - எல்லா ஞானமும் உடையோர்; என்றது, `மந்திரம் கணிப்போர் அனைவரது செயலையும் உணர்வர்` என்றபடி. ``விஞ்ஞானர்`` என்றது, `விஞ்ஞான வகையினராவர்` என்றவாறு. இறுதியில் `இந்நால்வருமே` என்னும் தொகை எஞ்சி நின்றது. வித்தியேசுரர்களும் மந்திர மகேசுரர்களும் ஒருவகையினரேயாதல் வெளிப்படை.
இதனால், மேல், ``விஞ்ஞானர் நால்வர்`` எனப்பட்டார் இவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே. 

பொழிப்புரை :

இனிப் பிரளயாகலர் மூவராவார், `அபக்குவரும், பக்குவரும்` என இருதிறப்படும் நிலையில் பக்குவர், `சுத்தவித்தையில் நின்று அசுத்த மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், குண தத்துவத்தில் நின்று பிரகிருதி மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், எனத் தனித்தனி நூற்றெண்மராம் உருத்திரர்களாவர். எனவே, இவ்விருவரோடு, பெத்தராகிய அபக்குவரும் கூடப் பிரளயாகலர் மூவராகின்றனர். இனிச் சகலராவார் ` ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும் மலமும் உடையவரே.

குறிப்புரை :

``இரண்டாவதில் முத்தி எய்துவார்`` என்றது, `அடுத்த படைப்பில் முத்தி எய்துபவர்` என்றவாறு. எனவே, இது `பிரளயாகலர்` என்னும் பொருளதாயிற்று. எய்துவார்`` என்றது பெயர். அத்தனை - அத்துணையர், அஃதாவது `இரண்டாவது` என்பதில் அமைந்த `இரண்டு` என்னும் துணையினர். `அத்தனை யராவர் பெத்தரும், உருத்திரரும் என்பர்` என முடிக்க. மீள ``இரண்டாவதுள்ளே`` என்றது, பிரளயாகலர் என்னும் வகையுள்` என்றவாறு. ``உருத்திரர்`` என்பதன்பின் `உளர்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. முரண் - (ஆணவமலத்தின்) வலிமை. மேல் ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றதனால் `விஞ்ஞானகலர் ஆணவம் ஒன்றே உடையார்` என்பதும், `கலை, என்பது மாயையைக் குறிப்பதாகலின், `அகலராகிய பிரளயாகலர்க்கு அஃது இல்லை` என்பதும் போந்தன. ``பெத்தர்`` என்று ஒழியாது, `இருமல பெத்தர்` என்றது, அவரது இயல்பை விதந்தவாறு. ``நூற்றெட்டு`` என்னும் தொகைச் சொல் ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்க, ``இரண்டாகும்`` என்றது, அத்தொகை முழுவதையும் விசேடித்தது. `சகலராவார் இவர்` என்பதனையும் ஈற்றடியால் ஈண்டே கூறினார்.
இதனால், `பிரளயாகலர் மூவர் இவர்` என்பது கூறப்பட்டது. பன்மை பற்றி இவரையே எடுத்தோதி, சுத்தவித்தையில் நிற்கும் உருத்திரன், மால், அயன், இந்திரன், சீகண்ட உருத்திரர், நந்தி, கணங்கள் என்பவரையும் உபலக்கணத்தால் தழுவிக்கொள்ள வைத்தார் என்க. `பிரளயாகலர் மூவரும் தவத்தால் விஞ்ஞான கலரோடொத்து அவரது நிலைகளில் நிற்றல் உண்டு` என்பதுமேலே குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே. 

பொழிப்புரை :

சகலரும், `அபக்குவர், பக்குவர்` என இருதிறப் பட்ட நிலையில் பக்குவர், `சாதகரும், சீவன்முத்தரும்` என இரு வகையினர் ஆவர்.

குறிப்புரை :

எனவே, `அபக்குபவர்`, சாதகர், சீவன் முத்தர்` எனச் சகலரும் மூவராகின்றனர்.
பெத்தத்த சித்து, ஆன்மா. முத்தச் சித்து, சிவம். இவ் விரண்டும் ஒருமைப்பட இரண்டிலும் நிற்பவரே, `சீவன்முத்தர்` எனப்படுவர். சித்துமாய் (சிவமாயும்) மலமயக்கத்தை முற்றக் கழிக்கமாட்டாமல் அதனைக் கழித்தற்பொருட்டு முயல்பவரே `சாதகர்` எனப்படுவர். `சித்தாயும்` என உம்மையை மாற்றியுரைக்க. சத்தம் - உலக ஆரவாரம்.
ஈற்றடியினால் சகலருள் அபக்குவரது தன்மையை விளக்கினார். எனவே, அந்நிலையை உடையார் அபக்குவர் என்பது போந்தது. ஊடு, எழனுருபு. மத்தம் - மயக்கம். `சகலத் துளார் ஊடுற்றாரும், மாட்டாரும் ஆவர் என முடிக்க. `ஆவர்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `சகலர் மூவராவர் இவர்` என்பது கூறப்பட்டது. இவருள்ளும் தவத்தால் பிரளயாகலரோடு ஒப்பவும், விஞ்ஞான கலரோடு ஒப்பவும் அவ்வப்புவனங்களிற் செல்வார் உளர் என்பது மேலே குறிக்கப்பட்டது.
[இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் மந்திரம் இவ்வதிகாரத்தின் இறுதியதாம்.]

பண் :

பாடல் எண் : 5

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. 

பொழிப்புரை :

இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.

குறிப்புரை :

இங்கு, `வித்தியேசுரர், மகேசுரர்` இருவரையும் வெறெண்ணியும், உருத்திரராவர் அனைவரையும் ஒன்றாக வைத்து ஏனையோரை உடன்வைத்து எண்ணியும் தொகை கூறினார், `சகலரும் இவ்வாறெல்லாம் ஆவர்` என்பது உணர்த்துதற்கு.
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `சகலத்தர் அகலராம் ஒன்பானான வேறுயிர்களாவார்` என்று எடுத்துக்கொண்டு, கேவலம் மேவுவோரும், தங்கும் இருமலரும் ஆவர்` என முடிக்க. `விஞ்ஞானராகிய மேவுவோரும்` எனவும், `தஞ்ஞானராகிய இருமலரும்` எனவும் இயையும். `இருமலரும்` என்பதன் பின் `ஆவர்` என்பது எஞ்சிநின்றது. ``வேறுயிர்கள்`` என்றது, `இயற்கையாலன்றிச் செயற்கையால் உயரும் உயிர்கள்`` என்றதாம். சகலரை இவ்வாறு கூறவே, பிரளயாகலரும் விஞ்ஞானகலராதல் சொல்லாமே அமைந்தது.
இதனால், விஞ்ஞானாகலர், பிரளயாகலர்` என்னும் வகையைச் செயற்கையால் பெறுவோரும் உளர்` என்பது கூறப்பட்டது.
`கேவலம்` என்பது, இங்கு `ஒன்று என்னும் பொருள்பட நின்றது. இத்திருமந்திரத்தைப் பாடம் பலபட ஒதுவாரும், `விஞ்ஞானகலர் முதலிய ஒவ்வொரு வகையினருள்ளும் அங்ஙனமே விஞ்ஞானகலர் முதலிய மூவர் உட்பிரிவினராக உளர்` என இயற்கை நிலையினரே வேறோராற்றால் ஒன்பது வகையினராவர் என்பது இதற்குப் பொருளாக உரைப்பாருமாவர். அவ்வுரையால் சிறப்பு ஒன்றும் இல்லாமை அறிக.

பண் :

பாடல் எண் : 6

வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. 

பொழிப்புரை :

சகல வருக்கத்தினர் வெவ்விய ஞானமாகிய சீவ போதத்தால் செய்துகொண்ட வினைகளில் சில நல்வினை காரணமாக மக்களுடம்பைப் பெற்றுப் பூலோகத்தில் வாழ்ந்து, அங்கும் அந்தச் சீவபோதத்தால் செய்த கன்மங்களில் சில நல்வினை காரணமாகச் சுவர்க்கலோகத்தில் தேவராய் இன்பந்துய்த்துப் பின் எம் ஞானம் போல்வதாகிய மெய்ஞ்ஞானத்தைத் தலைப்பட்டு, அது முதி ராமையால் இடையீடுபட்டுப் பதமுத்தி அபரமுத்திகளில் நின்று, முடிவில் மெய்ஞ்ஞானம் முதிரப்பெற்றுச் சிவத்தோடு இரண்டறக் கலத்தல் உள்ளதே.

குறிப்புரை :

`அதனால் அவர் பிரளயாகலர் விஞ்ஞானகலராதற்குத் தடையில்லை` என்பது குறிப்பெச்சம். இதனானே, சகல வருக்கத்தினர் மேல் நிலையை எய்துமாறு கூறப்பட்டவாறு அறிக. சகலர்க்குக் கூறிய இம்முறைபற்றி ஏனை இருவகையினர் மேல் நிலை எய்துமாறும் அறியப்படும்.
`கூடி, புக்கு, போய், மேவல்` என்பதற்கு, `சகலத்தார்` என்னும் எழுவாய், மேலைத் திருமந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `விஞ்ஞான, அஞ்ஞான` என்பன பாடம் அல்ல.
இதனால், ஏதுக் கூறி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே

பொழிப்புரை :

ஆணவத்தால் மிகுவிக்கப்பட்ட அறியாமையில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளைக் கடந்தவர்க்கே, நாதம், விந்து முதலிய எல்லாத் தத்துவங்களும் தெளிவாய் விளங்கும். ஏனெனில், ஆணவமும், அதுவழியாகக் கன்ம மாயைகளும் ஆகிய அவற்றுட் கட்டுண்டு நின்றவர் பொருட்டன்றோ அவ் விந்து நாதம் முதலிய தத்துவங்கள் தோன்றுகின்றன!

குறிப்புரை :

துற்ற-செறிவித்த. `அவித்யா` என்னும் ஆரியச்சொல்; `அவித்தா` எனத் திரிந்தது. ``நனவு`, என்றது உபலக்கணம். அஞ்ஞானத்தில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகள், கேவல சாக்கிராதியும், சகல சாக்கிராதியுமாம். அவற்றை நீங்கினோர் சுத்த சாக்கிரம் முதலியவற்றை எய்துவர். அவர்கட்கே தத்துவங்கள் பலவும், `உருவம் தரிசனம், சுத்தி` என்னும் முறையில் படிப்படியாக விளங்கும். அங்ஙனம் விளங்கவே மாயா காரியங்களாகிய அத்தத்துவங்களும், அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு நிற்கும் கன்மங்களும் நீங்கும். இவற்றின் நீக்கத்திற்கு, மூலமலமாகிய ஆணவம் நீங்கியதே காரணமாகும். அதனால், ``ஆணவம் துற்ற ... ... சகலாதி`` என்றார்.
காணிய `செய்யிய` என்னும் வினையெச்சம். `காணிய ஆம் விந்து நாத சகலாதி` என மாற்றுக. சகலம் - எல்லாம். ``சகலாதி`` என்றதில் ஆதி, தத்துவம். இது தமிழ் வழக்காய்ப் பன்மை குறித்து நின்றது, ஈற்றடியையும் `சிவதத்துவம் சத்தியாம்` என மாறிக் கூட்டுக. `தத்வம்`, ஆரியமாயே நின்றது. `நாதம், விந்து முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியமாகிய தாத்துவிகங்களும் ஆணவமாதி அடைந் தோர் பொருட்டு` எனவே, ஆணவமாதி உள்ள துணையும் இவை இனிது காட்சிப்படா என்பது விளங்குதலின், ஆணவ முதலிய அகன்றோர்க்கு அவை காட்சிப்படுதல் அருத்தாபத்தியால் பெறப் படும் என்றவாறு. `அவர் அன்றே` என்பது பாடம் அன்று.
இதனால், `விஞ்ஞானகலரேயாயினும் மெய்ஞ்ஞானமின்றி வீடு அடையார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே. 

பொழிப்புரை :

ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர் பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.

குறிப்புரை :

நாடிக் காணுதலே, `தத்துவ தரிசனம்` எனப்படும். தெளியக் காணுதலே தத்துவ சுத்தியாம். தத்துவ சுத்தி எய்தினோர் ஆன்மதரிசனமும் சிவரூபமும் உடன் நிகழப்பெற்றுப் பின் சிவதரிசன சிவயோகங்களால் ஆன்மசுத்தி எய்தப் பெறுவராகலின் ``பசுபாசம் அற்றோர்`` என்றாற்போல இறந்த காலத்தாற் கூறாது, ``பவமான தீர்வோர்`` என எதிர்காலத்தாற்கூறினார். `பசு பாசம்` என்பன, அந்த அந்த ஞானத்தைக் குறித்த ஆகுபெயர்கள். `நாடிக்கண்டோர் அற்றோர், தீர்வோர்` எனக் கூட்டுக.
இதனால், `ஞானம் பெறினும் அது முதிராதவழிப் பரமுத்தி கூடாது` என்பது கூறப்பட்டது. இவ்விரு திருமந்திரங்களும், `விஞ்ஞானகலராதலே வீடுபேறு போலும்` என மலையாமைப் பொருட்டு அருளிச்செய்யப்பட்டமையின், இவ்வதிகாரத்தவாயின.

பண் :

பாடல் எண் : 1

திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. 

பொழிப்புரை :

கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னேயாயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெருஞ் சித்திகளையும், பதமுத்தி அபர முத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலமத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.

குறிப்புரை :

சிவஞானியர்க்குச் செய்யப்படுவதைச் சிவன் தனக்குச் செய்ததாக ஏற்றுக்கொள்ளுதலால், அது பெரும்பயன் தரவல்ல தாகின்றது. யாதும் அறியாதார்க்கு ஈவது வஞ்சரை வளர்க்கும் செய்கையாய் முடிவதால், அது, கருதிய பயன் தாராமையே யன்றிக் கெடுதற்கும் ஏதுவாம் என்க. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். - குறள், 87 எனவும், ``தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்`` -நாலடியார், 38 எனவும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலின் சிறப்பு இவ்வாறே யாண்டும் எடுத்தோதப்படுதல் அறிக. ஈண்டுக் கூறுவன தற்போதம் இறவாத நூனெறி பற்றியனவும், ``எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி`` (தி.6 ப.1பா.3) என்றற்றொடக்கத்தன தற்போதம் இறந்த பத்திநெறி பற்றியனவும் ஆகலான், இவை தம்முள் முரணா என்க. ஈதல், இங்கு, `கொடுத்தல்` என்னும் பொருளது. அறங்கருதித் தாழ்ந்தோர்க்கு அவர் வந்து இரந்தவழி ஈதல் ஈகையாகும். குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக்கொடுத்தல் கொடையாகும். இவற்றுள் கொடை செய்யும்வழிக் கொள்பவரையே, `பாத்திரம்` என்பர். அதனால், இவ்வதிகாரம் கொடை செய்வாரை நோக்கியதன்றி, ஈகை செய்வாரை நோக்கியது ஆகாமை அறிக. இதனானே, இது பயன் கருதிச் செய்யப்படுவதாதலின், பின்னர் (தி.10, 7ஆம் தந்திரம்) வருகின்ற, பயன்கருதாத `மாகேசுரபூசையின்` வேறாதல் அறிக. கொடை, `தானம்` என்றும், ஈகை, `தருமம்` என்றும் சொல்லப்படும். ஈகை, `ஐயம்` எனவும்படும். திருவள்ளுவர் கொடையை விருந்தோம்பலில் கூறினார். ஈகையை, ஈகை என்றே வைத்துக் கூறினார். ஔவையாரும், `ஐயம் இட்டுண்` `தானமது விரும்பு` (ஆத்திசூடி) என்றார். பயன்பெரிதாதலும், பயன் கெடுதலும் இனிது விளங்குதற்பொருட்டு அபாத்திரத்தையும் இங்கு உடன் வைத்துக் காட்டினார். இத்திருமந்திரப் பொருளே பற்றி, சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலமளவே செய்திடினும் நிலம்மலைபோல் திகழ்ந்து பவமாயக் கடலில் அழுந் தாதவகை எடுத்துப் பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுத்துத் தவமாரும் பிறப்பொன்றில் சாரப் பண்ணிச் சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே. எனச் சிவஞானசித்தி (சூ. 8 - 26) நூல் கூறுதல் காண்க. ``சித்தி`` என்றதை ``முத்தி`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. இதனால், கொடை செய்வோர் சற்பாத்திரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

பொழிப்புரை :

உலகத்தில் உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன் கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண் டவரது உயிரைத் தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக் கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களாதலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.

குறிப்புரை :

`அதனால், அவரே சற்பாத்திரர்` என்பது குறிப் பெச்சம். ``உயிர்கொள்ளும் குணத்தான்`` என்றதனை, தி.8 `உயிருண்ணிப் பத்து` என்பதனோடு வைத்து நோக்குக. `ஆம்` என்பதனை நாயனார் படர்க்கை ஐம்பாற்கும் உரித்தாகவே ஓதுவர். இதனால், சிவஞானிகள் சிலரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.

பொழிப்புரை :

நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.

குறிப்புரை :

`அவ்விளக்கினை அடைந்தோரே சற்பாத்திரர்` என்பது குறிப்பெச்சம். மெய் - உடம்பு. `விட்டிலேன்` என்றது, அதனொடு கூடி வாழ்தலைக் குறித்தது. இடிஞ்சில் - அகல். அஃது ஆகுபெயராய் விளக்கை உணர்த்திற்று. `இடிஞ்சிலும் ஆம்` என்ற உம்மை, `காணப்படு பொருளும் ஆம்` என ஆக்க உம்மை. ``அவனருளாலே அவன் தாள் வணங்கி`` (தி.8 சிவபுராணம், 18) என அருளிச் செய்தமை காண்க. ஈற்றடியை, `நெய் விட்டிலாத` என ஓதி, ``ஆமே`` என்பதற்கு, `பயன்தருமோ` என உரைத்து, சிவஞானம் இல்லாதவரால் பயன் இன்றாதலை ஒட்டணி வகையால் பெறுவாரும், `புரிசடையான் அடியாகிய நெய்` என உருவகமாக்கி அப்பொருள் பெறுவாரும் ஆவர். அவருள் முன்னையோர்க்கு `அடி` என்பதனை இருகாற் கூறவேண்டாமையும், பின்னை யோர்க்கு இடிஞ்சிலாதற்கு ஏற்புடைய பொருள் கூறப்படாமையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 4

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.

பொழிப்புரை :

விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமே யன்றி நில்லா; வருவன வருமே யன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.

குறிப்புரை :

`அவனும் சற்பாத்திரனே` என்பது குறிப்பெச்சம். காவலன் - அரசன்; முதல்வன். `கண்டு, அவன் ஏவின செய்யும்` என்க. இழை - நூல். ``இலங்குநூல்`` (குறள், 410) என்றார் திருவள்ளுவரும். `இளங் கிளையோன்` எனப் பாடம் ஓதி, `புத்தடியான்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். சிவன் காட்டிற்றையே கண்டு அவன் ஆணைவ ழியே நிற்றல் புத்தடியாற்குக் கூடாமை அறிக. அன்றியும் இத்திரு மந்திரம் பின்னர் ஓரிடத்தில் உள்ளவாற்றையும் நோக்குக. இதனால், சற்பாத்திரராய சிவஞானியருள் நூனெறியாளரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 

பொழிப்புரை :

சிவநெறி ஒழுக்கமும், தவமும் இன்மையால் உயர்வு பெறாத மக்களை வேடமாத்திரத்தால் வழிபட்டுத் தானம் செய்வது, வறட்டுப் பசுவைப் பிறவி மாத்திரத்தால் வணங்கி உணவளித்துப் பாலைக் கறந்து பருக நினைத்தலோடு ஒக்கும். இனித் தானத்தை உயர்ந்தோரை அறிந்து செய்யாமல் எவரிடத்தும் செய்தல், ஒரு பயிரைக் காலம் அறிந்து செய்யாது, எக்காலத்திலும் செய்தலையும் ஒக்கும்.

குறிப்புரை :

பசுவினது வறட்டுத் தன்மையை அறிதலினும், காலத்தை அறிதல் அரிதாதல் பற்றி, உயர்ந்தோரை அறிதலின் அருமையை விளக்கப் பின்னும் அவ்வுவமையைக் கூறினார். இரண்டு உவமைகளானும் `உயர்ந்தோர் எய்தியவழி இகழ்ந்திராது ஏற்று வழிபட்டுத் தானம் செய்க` என்பதும் பெற்றாம். ``குனிந்து`` என்பது பொருளினும் சென்று இயையும். ``ஈந்தது`` என்றே போயினா ராயினும், `ஈந்து பயன்பெற நினைப்பது` என்பது உவமையால் விளங்கும். `அது பயிரும் ஆகும்` என்க. உம்மை, தொகுத்தல். இதனால், அசற்பாத்திரத்தில் செய்த தானம் பயன்படாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே. 

பொழிப்புரை :

பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.

குறிப்புரை :

``ஈவது`` முதலிய நான்கும் தொழிற்பெயர்கள். `தவிர்வன செய்வன` என்னாது ``யோக இயம நியமங்கள்`` என்றார், `அறநெறியளவில் நில்லாது, கடவுள் நெறியினும் சென்றவராதல் வேண்டும்` என்றற்கு. `அன்பால் தங்கும்` என உருபு விரிக்க. பின்னர் வந்த, ``அறிந்து`` என்னும் எச்சம் ``தங்காதவர்`` என்பதன் எதிர் மறையோடு முடிந்தது. இத்தொடர், `அந்நிலையில் நில்லாதவர்` என்னும் சுட்டளவாய் நின்றது, `அவர்க்கே` என்னும் ஏகாரம் தொகுத் தலாயிற்று. ``அன்றி`` என்பது முதலியவற்றை வேறு தொடராக்குக. `தகாதார்க்குக் கொடுக்கப்படும் பொருள் தீய வழியிற் சென்று பலர்க்கும் தீங்கு விளைக்குமாகலின், அக்குற்றம் பொருளை ஈந்தாரையே முன்னர்ச் சாரும்` என்பது கருத்து. அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால் அலறு முந்நீர்த் தடங்கடல் நடுவுள் தீவு பலஉள அவற்றுள் தோன்றி உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வார் மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேல் மன்ன ரேறே. -சீவகசிந்தாமணி - முத்தியிலம்பகம் , 27 என்றதும் காண்க. இதனால், அசற்பாத்திரத்தில் இட்ட தானம் பயன்படா தொழிதன் மேலும், துன்பம் பயக்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.

பொழிப்புரை :

குற்றம் நீங்குதற்கு நிமித்தனாய சிவபிரானுக்கும், சிவகுரவர்க்கும், சிவயோகியர்க்கும் குற்றம் கற்பித்து இகழ்பவன் பின் விளைவதை அறியான். அவன் பஞ்ச மாபாதகனிலும் பெரும் பாதகன். அதனால், அவன் பின்னர்ப் பெரு நரகில் வீழ்வான். இகழ்ந்து நிற்கும் அவன் பின்னொரு ஞான்று நல்லறிவைப் பெற்று அவர்களைப் புகழ்ந்து வழிபடுவானாயின், முன் செய்த பாதகத்தினின்றும் நீங்கி நரகம் புகாதொழிவான்.

குறிப்புரை :

முதலடியை மூன்றாமடிக்குப் பின்னர் வைத்து `மா நரகில் போம்` எனவும், `போதம் கற்கப் புகான்` எனவும் கூட்டி உரைக்க. இதனால், சற்பாத்திரராய் உள்ளாரை அசற்பாத்திரராக இகழ்தலால் வரும் குற்றம் கூறப்பட்டது. இதுவும் தானம் செய்வார்க்கு ஆகாமை பற்றி இவ்வதிகாரத்திற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. 

பொழிப்புரை :

`தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.

குறிப்புரை :

``அத்தனை`` என்றதனை, `மண்` என்றதற்கும் கொள்க. `இறைஞ்சாதார்க்கு ஈயினும்` என மேலே கூட்டுக. தானம் வாங்கு வோர் அதனைத் தமக்கு உரியதாக நினையாது சிவனுடையதாக நினைந்து, `சிவனுக்கு ஆகுக` (சிவார்ப்பணமஸ்து) எனக் கூறியே ஏற்றல் வேண்டும். அவ்வாறு ஏலாதார் சிவனது பொருளைக் கவர்ந்த சிவத் துரோகிகளாவர். அதனால், `அவரும், அவருக்குக் கொடுத் தோரும் நரகுறுவர்` என்றார். தானம் வாங்காது தம் பொருளை நுகர்வோரும் அங்ஙனமே நினைத்தல் வேண்டுமாயினும், அவர், `அங்ஙனம் நினைக்கும் உயர்ந்தோர்` எனத் தம்மைக் கூறிக் கொள்ளாமையின் அவர்க்கும், அவரொடு பழகுவோர்க்கும் பெருங் குற்றம் இல்லை`. தானம் வாங்குவோர் அத்தன்மையுடைய உயர்ந் தோராகத் தம்மைக் கூறிக்கொண்டு, தானம் செய்வாரை வஞ்சித்தலின் குற்றமுடையராகின்றனர். இதனை உட்கொண்டே திருவள்ளுவரும், நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். - குறள் - 276 என்றார். இனிக் கொடுப்பாரும் அவ்வாறே சிவனை நினைந்து, ஏற்போரைச் சிவனாகவும், பொருளைச் சிவனுடையதாகவும் கருதி `சிவனுக்கு ஆகுக` என்று சொல்லிலே கொடுத்தல் வேண்டுமாதலின் ``இருவரும்`` என்றார். ``ஈந்த`` என்னும் பெயரெச்சம் வினைமுதற் பொருண்மையும், கோடற் பொருண்மையுமாக இருநிலைமை எய்திநின்றது. இதனால், மேல், ``பெரும்பிழை`` எனப்பட்ட, அசற் பாத்திரத்தில் இடும் குற்றத்தால் விளையும் துன்பம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

பொழிப்புரை :

உள்ளத்திற்றானே நற்புண்பகளாகிய பல தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்குமாறு அவற்றில் மூழ்குதலை மெல்லப் பயிலாத வஞ்ச மனம் உடைய அறிவிலிகள், புறத்தே பல தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும், மேடும் கடந்து நடந்து இளைக்கின்றனர்.

குறிப்புரை :

கல்வி, அத்தீர்த்தத்தில் மூழ்கக் கற்றல்.
இதனால், அகத்தூய்மையின்றிப் புறத்தே தீர்த்தத்தில் மூழ்குதலால் பயனில்லை என்பது கூறப்பட்டது.
கங்கை யாடிலென்! காவிரி யாடிலென்!
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்!
ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்!
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே. -தி.5 ப.99 பா.2
கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
என அப்பரும் அருளிச்செய்தல் காண்க. -தி.5 ப.99 பா.9

பண் :

பாடல் எண் : 2

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே. 

பொழிப்புரை :

தெளிந்த ஞானிகளது உள்ளத்தில் வீற்றிருப் பவனாகிய சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிக்கத் தெரிந் தவர்க்குக் குளிர்ச்சி உடையனாய் விளங்குவான். யோக நெறியில் மூச்சை அடக்க அறிந்தவர்க்கும் அவன் ஒருகால் விளங்குதல் கூடும். ஆயினும், ஞானம், அன்பு, யோகம் என்ற இவற்றுள் ஒன்றும் இன்றித் தீர்த்தத்திலே மட்டும் சென்று முழுகத் தெரிந்தவர்க்கு அவன் அடைதற்கு அரியன்.

குறிப்புரை :

நான்கு, இரண்டாம் அடிகளை ஒன்று நான்காம் அடிகளாக வைத்து உரைக்க. தளி - நீர்த்துளி. ``தண்ணிது`` என்பது பண்புப்பெயராய் நின்றது. குளி - குளித்தல், முதனிலைத் தொழிற் பெயர். ``கூடவும்`` என்ற உம்மை, சிறப்பு. தியான சமாதிகளிற் செல்லாது இயம நியம பிராணாயாமங்களில் நிற்பவர்க்கு எளிதன்மை கூறுவார், ``வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்`` என்றார்.
இதனால், ஞானமாகிய அன்பும் இல்லாதவர் தீர்த்ததில் சென்று முழுகின் பயன் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே. 

பொழிப்புரை :

அகத்தே உயிர்க்குயிராக உணரப்படும் ஒருவ னாகிய சிவபெருமானை அவ்வுள்ளத்துள் அன்பில்லாது ஆரவார மாத்திரையாகச் செய்யும் செயல்களால் ஒருவரும் அடைதல் இயலாது. ஆகவே, அன்புமிகும் வழியை நாடாமலே புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றை நாடிச்செல்பவர், தீவினையாகிய கிணற்றில் போகடப்பட்ட பத்தலேயாவர். அதனால், அவருள்ளத்தில் அவன் விளங்குவனோ!

குறிப்புரை :

``நாடிவிடும்`` என்பது ஒருசொல். `பத்தலாவர்` எனவும், `அவருள் உள்ளானே` எனவும் இருதொடராகக் கொள்க. பத்தல் - நீர்முகக்கும் கருவி. `அன்பின்றித் தீர்த்தத்தில் முழுகுதலாலே சிவனைப் பெறுதல் கூடுமாயின், நீர்ப்பத்தலும் சிவனை அடையும்` என நகையுண்டாகக் கூறியவாறு.
இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே. 

பொழிப்புரை :

சிவபெருமானை அறிவால் அறிகின்றவரே அமரர் (இறப்பும், பிறப்பும் இல்லாதவர்) ஆவர். அவரே சிவலோகத்தில் சென்று வீறு பெற்று வாழ்ந்து, பின் மீளாநிலையைப் பெறுவர். ஆகவே, சிலர் அவனை அங்ஙனம் அறிவால் அறிதலைச் செய்யாமலே, தன்னிடத்து மூழ்குவாரை ஈர்த்துச் செல்ல வருகின்ற கங்கையாற்றில் மரக்கலம் செல்லத்தக்கவாறு ஆழ்ந்தும் அகன்றும் ஓடும் நீரில் முழுகிய துணையானே அறிவராய் விடுவரோ!

குறிப்புரை :

`ஆதிப்பிரானை அறிவார்` என முன்னே கூட்டுக. செறிவான் - எங்கும் செறிந்தான்; (தி.8 திருவம்மானை, 13) சிவன். அவன் உறைபதம், சிவலோகம். `திருக்கோயில்கள்` என்பாரும் உளர். அவற்றிற்கு இங்கு இயைபின்மை அறிக. வலம் - வெற்றி; வீறு. ``கொள்`` என்னும் முதனிலை, `கொண்டு` என எச்சப்பொருள் தந்தது. ``மறியார்`` என்பதைப் பெயராக்கி, `வலங்கொள் மறியார்` என வினைத்தொகை யாக்கலுமாம். வளைத்தல் - ஈர்த்து ஆழ்த்தல். `வளைக்கைக் கங்கை` எனப்பாடம் ஓதி, உமையம்மையது கைவிரல்களினின்றும் கங்கை தோன்றிய புராண வரலாற்றை அதற்குப் பொருளாக உரைப்பாரும், பிற கூறுவாருமாவார். பொறி - எந்திரம். காற்றால் இயங்குதலின், பாய்மரக் கப்பலையே அக்காலத்தார் எந்திரமாகக் கருதினர். ``புண்ணியர்`` என்றது, `ஞானியர்` என்னும் பொருளது.
இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தெளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. சரியை முதலியன இறைவனை அறிவால் அறியும் முறையேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

பொழிப்புரை :

சிவபெருமானை, `எங்குளன்` என்று தீர்த்தங்களில் வருந்தி முழுகிக் காணச் செல்பவரது செயல், கடலில் போகடப்பட்ட பொருளைக் குளத்தில் எடுக்கச் செல்பவரது செயல்போல்வதாம். அவரை ஒத்த அறிவிலிகள் பிறர் இலர். ஏனெனின், என்றும் ஒருபெற்றியனாகிய சிவபெருமான், தனது திருவருள் காரணமாக யாவர் உடலிலும் புகுந்து நிற்றலைச் சிறிதும் உணராமையால்.

குறிப்புரை :

``தேடுவார்`` என்றது ஆகு பெயர். `உடலிலே நிற்பவனை அவ்வுடலைப் பெற்றிருந்தும் பிறவிடத்துக் காண முயன்று வருந்துதல் அறியாமைப்பாலது` என்பதாம். உயிருள் நிற்பவனை உடலில் நிற்பவனாக ஓதியது, அவனை அதனுள் நிற்பவனாக நினைத்து யோகநெறியில் முயல்வார்க்கு அவன் அங்கு வெளிப்படுதல் பற்றி.
இதனால், `தீர்த்தங்களில் முழுகுவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

பொழிப்புரை :

நீர்தான், `நிலம், காற்று` என்பவற்றில் கலப்பினும் அது அதுவாம் இயல்புடையது. ஆதலின், அஃது எவ்வுடம்பிற் கலந்ததாயினும் அவ்வுடம்பின் தன்மைக்கு ஏற்பக் கறுத்தும், சிவத்தும், வெளுத்தும் நிற்பதாம்.

குறிப்புரை :

`அதனால், சிவஞானமின்றி வாளா தீர்த்தத்தில் மூழ்கு வோர்க்கு அவரவர்க்கு உள்ள குணமே பின்னும் மிகுந்து நிற்கும்` என்றவாறு. நான்கிடத்தும், ``கலந்தது`` என்றதன்பின், `ஆயின்` என்பன சொல்லெச்சமாய் நின்றன. ``கலந்ததேல்`` என்றே பாடம் ஓதுதலும் ஆம். ஈற்றடி நீரின் தன்மையைக் கூறிற்று; நீர் காற்றாதல் ஆவியாய்க் கலந்தபொழுதாம். ஈற்றடியை முதலில் வைத்து, ``நிலம், காற்று`` என்றவற்றிலும் ``உடம்பில்`` என்பனபோல இல்லுருபு விரிக்க. ``நீரது`` நான்கிலும் அது, பகுதிப்பொருள் விகுதிகள். கறுத்தல் முதலிய மூன்றும் தாமத இராசத சாத்துவிக குணங்களை மிகுவித்தலைக் குறித்த குறிப்பு மொழிகள். `கலந்ததன் இயல்பாகும்` என்றதனால், ``உடம்பு`` என வாளா கூறினாரேனும், கறுத்தல் முதலிய மூன்றிலும், `அவ்வக் குணமுடைய உடம்பு` என்பது கொள்ளப்படும்.
இதனால், `தீர்த்தம் தெய்வ நீராதல், உள்ளத்துணர்வாலன்றி இல்லை` என்பது கூறப்பட்டது. அப்பரும், நீராண்ட புரோதாயம் ஆடுங்காலத்து, `மாதேவா மாதேவா என்று வாழ்த்தி ஆடப் பெற்றோம்` (தி.6 ப.93 பா.3) என்று அருளிச்செய்தமை அறியற்பாற்று.

பண் :

பாடல் எண் : 1

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 

பொழிப்புரை :

ஒரு திருக்கோயிலில் உள்ள அசையாத சிவக் குறியைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்; அச்செயலுக்கு உரியவன், தான் இறப்பதற்கு முன்பு தொழுநோய் கொண்டு துன்புற்று இறப்பான். இவ்வாறு எங்கள் தலைவராகிய நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.

குறிப்புரை :

எனவே, `அரசன் தனது நாட்டில் இச்செயல் எங்கும் நிகழாதவாறு காத்தல் வேண்டும்` எனவும், `அரசன் அறியாதவாறு இச்செயலை முடித்துவிட ஒருவரும் எண்ணலாகாது` எனவும் கூறியவாறாம். `இலிங்கம் இல்லாத கோயிலின் நலம் கருதி இலிங்கம் உள்ள கோயிலைப் பாழாக்கிவிடுதல் கூடாது` என்பதும், ஒரு கோயிலில் உள்ள இலிங்கம் எப்பொழுது யாரால் நிறுவப்பெற்றதோ அதனை அவர்களது கருத்திற்கு மாறாகப் பெயர்த்துக்கொண்டுபோய் வேறிடத்தில் வைத்தல் கூடாது என்பதும் கருத்து. `சிறந்து விளங்கும் கோயிலில் உள்ள இலிங்கத்தைக் கொண்டுபோய்ப் புதிய கோயிலில் நிறுவினால் அக்கோயிலுக்குச் சிறப்பு உண்டாகும்; இதனால் குற்றமில்லை` என்று எண்ணும் சிலரது அறியாமையைப் போக்குதற் பொருட்டு இத்திருமந்திரத்தை அருளிச்செய்தார். இதனானே, ஒரு கோயிலில் முன்பு உள்ள மூர்த்தியைத் தக்க காரணம் இல்லாமல் நீக்கி வேறொரு மூர்த்தியை நிறுவுதலும் குற்றம் என்பது பெறப்பட்டது.
இதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்திக்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

பொழிப்புரை :

திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக் குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக் குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.

குறிப்புரை :

`கட்டுவித்தவர்க்கே இவ்வாறாம் எனின், பிறர் அது செய்யக் கருதுவராயின் என்னாவார்` என்பது சொல்ல வேண்டா வாயிற்று. இதனானே, கோயில் மதில் முதலியவற்றிற்கே யன்றி அதன் உள்ளிடம், திருக்குளம், நந்தவனம் முதலியவற்றிற்கும் பழுதுண்டாக்க லாகாமை அறிந்துகொள்க. ``வாங்கிய`` என்பதன்பின், `அவரை` என்பது வருவிக்க.
இதனால், திருக்கோயில் முதலிய இறைவன் இடத்திற்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புநாள் விழாக்கள் முதலியவை இல்லாதொழியினும், ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி நடப்பினும், நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப்போக, சிற்றரசரால் வணங்கப்படுகின்ற பேரரசர்களும் பகைவரை வெல்லும் வலியிலராய்த் தம் நாட்டை இழப்பர்.

குறிப்புரை :

ஆதலால், அரசர் தம் நாட்டில் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் செவ்வனே நடைபெறச் செய்தலைத் தம் தலையாய கடமையாகக் கொள்ளல் வேண்டும் என்பதாயிற்று. ``அவனி`` என்றது, அக்கோயிலில் உள்ள நாட்டைக் குறித்தது. ``பூசை`` என்றது நைமித்திகத்தையும் அடக்கியேயாம். \"மழை குன்றும்\" என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 4

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானது திருக்கோயில்களில் மேற்கூறிய குறைகள் உளவாகுமாயின், அரசர்கள் வலிமை யிழத்தலேயன்றிப் பிற தீமைகளையும் அடைவர். நாட்டில் விளைவும், பிற வருவாய்களும் குறையும். மாளிகைகளில் கன்னம் இட்டுக் களவாடுதல், கொள்ளை முதலிய பிற களவுகள் மிகுதியாகும். எங்கள் அருளாசிரியராகிய நந்திபெருமான் எங்கட்கு இவ்வாறு எடுத்து அருளிச்செய்தார்.

குறிப்புரை :

முதலடி அனுவாதம். கன்னம் இடுதலை முன்னர்ப் பிரித்தமையின், ``களவு`` என்றது பிறவற்றையாயிற்று. `காசினிக்கு` என்பதும் பாடம்.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கட்குக் குறையுண்டாகச் செய்தல் விலக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை
அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா
வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. 

பொழிப்புரை :

பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.

குறிப்புரை :

``மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்``(குறள், 134) எனவும், ``அந்தணர் நூல்`` (குறள், 543) எனவும் கூறியவாற்றால், வேதம், `அரசரும், வணிகரும்` என்னும் ஏனையிருவர்க்கும் பொதுமையின் உரியதாயினும், அந்தணர்க்கே சிறந்ததாதல் அறியப்படும். படவே, `வேதம் ஓதுதலைத் தொழிலாக உடையோரே அந்தணர்` என்பதும் போதரும்.
திருவள்ளுவர், ``பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்`` (குறள், 134) என்று ஓதுதலானும், பிறப்புப் பற்றிவரும் பெயரைப் பெறாமல், வேதாகமங்களை ஓதும் தொழிலாகிய சிறப்பை மட்டும் பெற்ற அந்தணன் சிவபிரானைப் பிறர் பொருட்டு அர்ச்சித்தலை இங்கு நாயனார் விலக்காமையானும் பிறப்பைவிடச் சிறப்பே அர்ச்சனைக்கு யாண்டும் வேண்டப்படுதல் விளங்கும்.
பிறப்பாவது சில பல தலைமுறைகளில் உள்ளார், ஒழியாது ஒரு தொழிலே கடைப்பிடித்தமை பற்றி அவர் அந்தணர் முதலிய பெயரைப் பெற்று நிற்க, அவர்தம் வழித் தோன்றலாய்ப் பிறந்தோரும் அப்பிறப்புப் பற்றி அப்பெயரை உடையராதல். சிறப்பாவது அவரவர் அவ்வப்பொழுது தத்தமக்குரியதாகக் கொண்ட தொழில்.
சிறப்பு நிலையில் சிவபெருமானையே முதற் கடவுளாகக் கொண்டு திருநீறும் உருத்திராக்கமும் ஆகிய சிவசின்னங்களை அணிந்து அப்பெருமானை வழிபடுவோர் யாவரும் `சைவர்` எனப் படுவர். அவருள் சிவாகமத்தின்வழித் தீக்கை பெற்றோர் `சிறப்புச் சைவர்` எனவும், அவ்வாறு தீக்கை பெறாதோர், `பொதுச் சைவர்` எனவும் பெயர் பெறுவர். சிறப்புச் சைவருள் உபநயனமும் பெற்றுச் சிவாகமத்தைப் பொதுவாகவும், வேதத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு சிவபெருமானை வேத மந்திரங் களால் வேத விதிப்படி வழிபடுவோர் `மகா சைவர்` என்றும், வேதத்தைப் பொதுவாகவும், சிவாகமத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவாகம மந்திரங் களால், சிவாகம விதிப்படி வழிபடுவோர் `ஆதி சைவர்` எனவும் பெயர்பெறுவர். மகாசைவரும், ஆதிசைவரும் உபநயனமும் பெற்று வேதாகமங்களை ஓதுதலையே தொழிலாக உடைமையால், `அந்தணர்` எனவும் படுவர். ஆகவே, மகா சைவர் `மகாசைவ அந்தணர்` என்றும், ஆதி சைவர் `ஆதிசைவ அந்தணர்` என்றும் சொல் லப்படுவர். இவருள் மகாசைவ அந்தணர் சிவாகமவழி நில்லா மையால், அவருக்கு ஆசாரியாபிடேகமும், அதன்வழி வரும் ஆசிரியத் தன்மையும் இல்லை. அதனால், அவர் சைவரல்லாத பிறர்க்கே ஆசிரியராதற்கு உரியர். ஆதி சைவ அந்தணர் சிவா கமத்தையே சிறப்பாக ஓதி அவற்றின்வழி நிற்றலால், அவருக்கே அபி டேகமும், அதன்வழி ஆசிரியத் தன்மையும் பெறும் உரிமை உண்டு.
உபநயனம் இன்றி வேதத்தில் உரிமை கிட்டாததுபோலச் சிவ தீக்கையின்றிச் சிவாகமத்தில் உரிமை கிட்டாது. அதனால்; சிவ தீக்கையின்றி உபநயனம் மட்டுமே பெற்று வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேதத்தின்வழி வேட்டல், வேட்பித்தல்களைச் செய்து, சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொள்ளுதலில் வழுவாது நிற்போர், `வைதிக சைவர்` எனப் பெயர்பெறுவர். அதனால், இவர் `வைதிக சைவ அந்தணர்` எனப்படுவர். இவர் பொதுச் சைவரே. இவர் சிவாகமங்களை இகழார்.
வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், அவற்றின்வழி வேட்டல், வேட்பித்தல்களைச் செய்யினும், சிவபெருமானை முதல்வனாகக் கொள்ளாமல் பிறவாறு கொள்வோருள் சிவாகமங்களையும், அவற்றின் வழி நிகழும் தீக்கை முதலியவற்றையும் இகழ்வோர் ஒருவாற்றானும் `சைவர்` எனப்படாமையேயன்றி, அவர் அந்தணராதலும் இல்லை என்னும் கருத்தால், `துர்ப்பிராமணர்` எனச் சைவர்களாலும், சைவ நூல்களாலும் இகழப்படுவர். செந்நெறியில் நில்லாது கொடுநெறியில் செல்லுதலால் இவரை, `கொடுநெறி அந்தணர்` எனலாம்.
பிறப்பு மாத்திரத்தால் ஆதி சைவ அந்தணரும், மகாசைவ அந்தணருமாய்ப் பிறந்து, அவற்றிற்குரிய நெறியில் நில்லாதோர் `அப்பிராமணர்` எனப்படுவர். இவரை `ஒழுக்கமில் அந்தணர்` எனலாம். இன்னும் புறத்தே சிவவேடம் புனையினும், அகத்தே சிவபிரானை முதற் கடவுளாகக் கொண்டு சிறப்பு வகையில் அன்பு செய்யாத அந்தணரும் அப்பிராமணரேயாவர். இவர் யாவரும் `பார்ப்பார்` எனவே படுகின்றனர். அதனால், ஆதிசைவப் பார்ப்பார், மகாசைவப் பார்ப்பார், வைதிகசைவப் பார்ப்பார், கொடுநெறிப் பார்ப்பார், ஒழுக்கமில் பார்ப்பார் எனப் பெயரால், பார்ப்பார் ஐவகையராகின்றனர். `இவருள், ஆதிசைவப் பார்ப்பாரே தலை யாயவர்` என்பது மேற்கூறியவாற்றானே இனிது விளங்கிக் கிடத்தலால், அவரையே, `உண்மைப் பார்ப்பார்` என வைத்து, ஏனை நால்வரையும் நாயனார் பேர்கொண்ட பார்ப்பாராக ஓதினார் என்பது நன்கு பெறப்பட்டது.
``அர்ச்சிக்கில்`` என்பதில் அர்ச்சித்தல், `பிறர்பொருட்டு` என்பது, பின்னர்க் கூறிய தீய விளைவுகளை நாட்டிற்கு ஓதிய குறிப் பால் நன்கறியப்படும். பிறர்பொருட்டு வழிபடுதல், `பரார்த்த பூை\\\\u2970?` எனப்படும். ஆன்மார்த்த பூசையை அவரவரும் தமக்கென எழுந் தருளுவித்துக்கொள்ளும் விருப்பக் குறி (இட்டலிங்கம்) ஆகிய பெயர் வுடைக் குறியில் (சல லிங்கத்தில்) செய்தல், எளிதின் இயல வேண்டிய தேயன்றித் திருக்கோயிலில் உள்ள பெயராக் குறியில் (அசல லிங்கத்தில்) செய்தல் விலக்கப்பட்டதன்று. திருக்கோயிலில் சென்று ஆன்மார்த்த பூசையைச் செய்தல் அரிதாதலின், அது பண்டே அருகி விட்டது. ஆன்மார்த்த பூசையைச் சைவர்கள் திருக்கோயிலில் சென்று செய்து வந்தமைக்குத் தி.12 திருத்தொண்டர் புராணத்தில் உள்ள திரு நீலநக்க நாயனார், அரிவாட்ட நாயனார் இவர்களது வரலாறுகளே போதிய சான்றாகும். இவ்விருவரும் செய்த பூசை ஆன்மார்த்த பூசையே என்பது அவ்வரலாறுகளிலேயே தெற்றென விளங்கிக் கிடப்பது. திருக் கோயில்களில் மூல இலிங்கமேயன்றி, அதனைச் சூழ வேறும் சில இலிங்கங்கள் காணப்படுதல், அங்குச் சென்று ஆன்மார்த்த பூசை செய்வோர் அவைகளையே மூல இலிங்கமாகக் கருதிக் கொண்டு அவற்றில் அவ் வழிபாட்டினைச் செய்தற்பொருட்டேயாம். இனி, மூல இலிங்கங்கள்தாமும் ஓரொரு காலத்தில் ஓரோவொருவர் ஓரோஒரு பயன்கருதி நிறுவித் தம் பொருட்டாக வழிபட்டு அப்பயன்களைப் பெற்றுப் பின் நிலையாக வைத்துச் சென்றனவே எனத் தல புராணங்கள் பலவும் இனிதெடுத்து விளம்புதலும் கருதத்தக்கது.
`ஆன்மார்த்தம், பரார்த்தம்` என்னும் பகுப்புப் பூசையின் பயனைப் பெறுவாரை நோக்கியதன்றிப் பூசிக்கப்படும் மூர்த்தியை நோக்கியதன்றாதல் வெளிப்படை. அஃதாவது, பூசை செய்பவர், `அப் பூசையின் பயன் தமக்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் ஆன்மார்த்த பூசையும், `பிறர்க்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் பரார்த்த பூசையும் ஆகும். அதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்தியையே தம் பொருட்டாகப் பூசிக்கின் அஃது ஆன்மார்த்த பூசையாதலும், தாம் எழுந்தருளுவித்துக் கொண்ட மூர்த்தியையை பிறர் பொருட்டாகப் பூசிக்கின் பரார்த்த பூசையாதலும் தாமே விளங்கும். எனினும், பெரும்பான்மை பற்றித் திருக்கோயிற் பூசை பாரார்த்தமாகவும், தம் பொருட்டாய மூர்த்தி பூசை ஆன்மார்த் தமாகவும் சொல்லப் படுகின்றன. `இவற்றுள் திருக்கோயிலில் உள்ள மூர்த்தியைப் பிறர் பொருட்டாகப் பூசிக்கும் உரிமை சிறப்புச் சைவ அந்தணருக்கே சிறப் பாக உரியது` எனவும், `அவருள்ளும் ஆதிசைவ அந்தணர்க்கே சிறப் பாக உரியது` எனவும் வைத்து, ஏனைய அந் தணர்க்கு அஃது இல்லை என்பதையே நாயனார் இத்திரு மந்திரத்தால் அருளிச் செய்தமை அறிக. `மக்களுட் சிறந்தார் அந்தணர்` என்பதே பற்றி, சிறப்புச் சைவ ரல்லாத ஏனை அந்தணரையும் திருக் கோயிலிற் பரார்த்த பூசைக்கு உரியராக்குதலையே நாயனார் இத்திரு மந்திரத்தால் விலக்கினாரன்றிச் சிறப்புச் சைவருள் ஒருவரையும் விலக்கினாரல்லர் என்பது நுண்ணுணர்வான் நோக்கி உணர்ந்து கொள்க.
மேற்கூறிய ஆதிசைவர், மகாசைவரேயன்றிப் பிற சைவரும் உளர். அவர் `அனு சைவர், அவாந்தர சைவர், பிரவர சைவர், அந்திய சைவர்` என இவர். சிவபெருமானைப் பொதுநீக்கி வழிபடுவாருள் நாடாளும் தொழில் உடையவரும், வாணிகத் தொழில் உடையவரும் அனு சைவர். உழவுத் தொழில் செய்வோர் அவாந்தர சைவர். பிறதொழில் செய்வோர் பிரவர சைவர். இவரெல்லாரும் சுதந்திரர். யாதொரு தொழிலாயினும் அதனைப் பிறருக்கு அடியவராய் இருந்து செய்பவர் அந்திய சைவர். எனினும், அமைச்சர், படைத்தலைவர் போன்றோர் அரசரோடொப்ப மதிக்கப்படுதலால் அனுசைவரே யாவர். இங்குக் காட்டிய அறுவகைச் சைவரொடு சதாசிவக் கடவுளையும், `அனாதி சைவர்` என வைத்துச் சைவர் எழுவராகச் சொல்லப்படுதலை, `சைவ சமயநெறி, சிவதருமோத்தரம்` முதலிய நூல்களிற் கண்டுகொள்க.
ஆதிசைவரும், மகாசைவரும் சிறப்புச் சைவரேயன்றி, அவருள் பொதுச் சைவர் இல்லை. ஏனைய அனுசைவர் முதலிய நால்வரும் தீக்கை பெறாது இருப்பின் பொதுச் சைவரும், தீக்கை பெற்று இருப்பின் சிறப்புச் சைவரும் ஆவர். எவ்வாற்றானும் சிவனை வழிபடாதவரும், வழிபடினும் பொது நீக்கிச் சிறப்பாக வழிபடாதவரும் `சைவர்` எனப்படார்.
ஊன் உணவும், கட்குடியும் இல்லாதவரே சிவதீக்கை பெறுதற்கு உரியர். அவற்றை உடையோர் சிவதீக்கையைப் பெறின் அவரும், அவருக்கு அதனைப் பெறுவித்தோரும் நிரையம் புகுவர். அதனால், தீக்கைக்கு உரியரல்லாதார் பொதுச் சைவராயே இருந்து சிவநூலை ஓதல், கேட்டல், சிவாலயத்திற்கும், சிவனடியார்க்கும் ஏற்புடைத் தொண்டு செய்தல் என்னும் இவற்றையே மேற்கொண்டு வாழக்கடவர்.
இனிச் சிவதீக்கையும் அவரவர் ஆற்றலுக்கேற்ப, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நால்வகைத்தாகும். அவற்றால் அவற்றைப் பெற்றோரும் `சமயிகள், புத்திரர், சாதகர், ஆசிரியர்` என நால்வகைப்படுவர்.
சமய தீக்கையாவது, சிவ மூல மந்திரமாகிய திருவைந் தெழுத்தை முறையறிந்து கணித்தற்கும், `சிவாகமம், திருமுறை, சாத்திரம்` என்னும் சைவப் பெருநூல்களை ஓதுதற்கும், சரியை முறை யால் சிவபெருமானைச் சிறக்க வழிபடுதற்கும் உரிமைதந்து, சிறப்புச் சைவராகச் செய்வது. இச்சமய தீக்கை பெற்றோரே `சமயிகள்` எனப்படுவர்.
விசேட தீக்கையாவது, மேற்கூறியவற்றோடு கிரியை முறையாலும், யோக முறையாலும் சிவபெருமானை வழிபட்டு அவனுக்கு அணுக்கராயும், அவனோடு ஒப்பவும் இருக்கும் உரிமையைத் தருவது. இதனைப் பெற்றோரே `புத்திரர்` எனப்படுவர்.
நிருவாண தீக்கையாவது, சரியை கிரியா யோகங்களின் பயனாக மலம் பரிபாகமாயிட, இருவினையொப்பும், நாலாம் சத்தி நிபாதமும் வரப்பெற்று, அதனால் சிவனையே அடையும் அவா உண்டாகப் பெற்றவர்க்கு அவனை அடையுமாற்றை அறிந்து அடைதற் பொருட்டு முப்பொருளின் இயல்பை இனிதுணர்த்துவது. இங்ஙனம் உணர்த்தப் பெற்றவர் சிவபெருமானை அடையும் நெறிக்கண்ணே நிற்றலின், `சாதகர்` எனப்படுவர்.
சமயம் முதலிய தீக்கை மூன்றும் `சாதிகாரை, நிரதிகாரை` எனத் தனித்தனி இருவகைப்படும். அவற்றுள் சாதிகாரையாவது, நித்திய வழிபாட்டோடு, `நைமித்திகம், காமியம்` என்னும் இரு வழி பாடுகளையும் இயற்றுதற்கு உரிமை தருவது. நிரதிகாரையாவது, நித்திய வழிபாடு ஒழிந்த ஏனை இருவழிபாட்டிற்கும் உரிமை தாராதது.
நித்திய வழிபாடாவது அன்றாடம் காலை, மாலை என்னும் இருபொழுதினும் நீராலும், நீற்றாலும், மந்திரங்களாலும் தம்மைத் தூய்மை செய்துகொண்டு, தருப்பணம் செய்து, சிவபெருமானது திருவைந்தெழுத்தைக் கணித்தலும், வேத சிவாகம திருமுறை சிவ புராணங்களை ஓதுதலும், கேட்டலும், சிவாலய தரிசனம் செய்தலும், அழல் ஓம்பலும், சிவனடியார்களை வரவேற்று உணவு முதலியன அளித்தலுமாம்.
நைமித்திக வழிபாடாவது யாதானும் ஒரு சிறப்புப் பற்றிச் சில நாட்களில் செய்வது. அது, அட்டமி, பூரணை, பிரதோடம், சதுர்த்தசி, மாதப் பிறப்பு, அயனப் பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் முதலிய காலங்களில் மேற்கூறியவற்றைச் சிறப்பாகச் செய்யும் வழிபாடாகும். வேதமாதிய நூல்களைத் தக்கார்க்கு ஓதுவித்தலும் நைமித்திகமேயாம்.
காமியமாவது தான் செய்த தீவினை நீங்குதல் கருதிச் செய்யப்படும் கழுவாயும் (பிராயச்சித்தமும்) இம்மை மறுமைப் பயன்களில் ஒன்றையாயினும், பலவற்றையாயினும் வேண்டி அவ்வவற்றிற்கு ஏற்ற முறையில் செய்யும் வழிபாடுமாம்.
இவற்றுள் சாதிகார தீக்கை அதனைப் பெற்றபின்னர் நைமித் திகத்தையும், காமியத்தையும் தவறாது செய்யும் ஆற்றல் உடையார்க்கே செய்யப்படும். அவ் வாற்றல் இல்லாதார்க்கெல்லாம் நிரதிகார தீக்கையே செய்யப்படும். நிரதிகார தீக்கை பெற்றோர் ஓரோவொருகால் தம்பொருட்டாக நைமித்திகமும் காமியமும் செய்ய விரும்புவராயின், சாதிகார சாதகர் ஆசாரியர் என்போரால் செய்வித்துக் கொள்ளுதல் வேண்டும்.
சாதிகார சமய விசேட தீக்கைகளுக்குமேல், சாதிகார நிருவாண தீக்கை பெற்றோர், நைமித்திக காமியங்களைப் பிறர் பொருட்டாகச் செய்யும் உரிமையையே அபிடேகத்தாற் பெறுவர். அவ்வுரிமையும் `அங்க உரிமை, அங்கி உரிமை` என இருவகைத்து. அங்க உரிமையாவது, அங்கிக்கு இன்றியமையாத கழிப்பு (சாந்தி) மண்கோள் (மிருத்துசங்கிரகணம்) முளை தெளித்தல் (அங்குரார்ப் பணம்) குட நீர்க்கோள் (கலசாகருடணம்) முதலியவற்றைச் செய்யும் உரிமை. அங்கி உரிமையாவது தீக்கைசெய்தல், திருக்கோயில்களில் சிறப்புக் காலங்களில் விழா எடுத்தல், குடவழிபாடு செய்தல் (கலச பூசை செய்தல்) வேள்வி (யாகம்) செய்தல் முதலியவற்றில் பெறும் உரிமையாம். ஆன்மார்த்த மூர்த்தியைப் பிறருக்கு எழுந்தருளு வித்தலும் `விசேட தீக்கை` எனத் தீக்கை செய்தலுள் அடங்குவதாம்.
இவற்றுள், அங்க உரிமைமட்டும் பெற்றோர் `சதகாசாரியர்` எனவும், அங்கி உரிமையைப் பெற்றோர் `ஆசாரியர்` எனவும் சொல்லப்படுவர். சாதகாசாரியர், மணவினை, மாய்ந்தோர்வினை முதலியவற்றில் வேட்டல் முதலியவற்றைச் செய்வித்தற்கும், சிவன் கோயிலில் நித்திய பூசைக்கும் பிறகோயில்களில் நித்திய, நைமித்திக, காமியத்திற்கும் உரியராவர். அங்கி உரிமையைப் பெற்ற ஆசாரியர் எல்லாவற்றிலும் உரிமையுடையராதலின், அவரது உரிமை `பேரதிகாரம்` எனப்படும்.
ஆசிரியராதற்குச் சத்திநிபாதம், ஒழுக்கம் என்னும் இவை மட்டுமே போதா; சிறந்த பல நூற்கல்வியும், நல்லுடலும், செய்முறைப் பயிற்சியும் வேண்டும். அவற்றுடன் இரண்டு தலைமுறைக்குக் குறையாத முன்னோர், ஊனுங் கள்ளும் உண்டறி யாதவராயும், அவற்றை உண்பாரொடு உறவுகொள்ளாதவராயும் இருத்தல் வேண்டும். அதனால், அபிடேகத்திற்கு உரியவர் ஒருசிலரேயாவர். அவரும் முன்னர்ச் சாதகாசாரியராய் இருந்து பின்னர் ஆசிரியராதலே பெரும் பான்மை. பெரும்பான்மை ஆதிசைவ அந்தணருள்ளும் சிறு பான்மை ஏனைச் சைவருள்ளும் ஆசாரியராய் உள்ளவரே சிவன் கோயிலில் பிறர்பொருட்டுச் செய்யும் பூசையைச் செய்தற்கு உரியர் எனின், வைதிகப்பார்ப்பார் முதலிய பிற பார்ப்பனர் எங்ஙனம் திருக்கோயிற் பூசைக்கு உரியராவார். அதுபற்றியே நாயனார், `பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சிக்கில் ... ... பஞ்சமும் ஆமே` என்று விலக்கினார். அபிடேகம் பெற்றாருள் சாதகாசாரியர் சிறுபான்மை பிற பிழைப்புத் தொழில் செய்யினும், ஆசாரியர் ஒருபோதும் அவற்றைச் செய்யார்.
அபிடேகம் பெறாது நிருவாண தீக்கை பெற்றோரை, `சாதகர்` என்னாது `விசேடபுத்திரர்` என்றும், அபிடேகத்தால் அங்கவுரிமை பெற்றோரையே `சாதகர்` என்றும் கூறுப. ஆதிசைவருள் ஆசாரிய ராயினாரை, `சிவாசாரியர்` என்றும், பிற சைவருள் ஆசாரிய ராயினாரை `சைவாசாரியர்` என்றும் குறியிட்டு வழங்குவர்.
மாணாக்கர், (பிரமச்சாரிகள்) இல்வாழ்வார், (கிருகத்தர்) இல்லந்துறந்தார், (வானப்பிரத்தர்) முற்றத்துறந்தார் (சந்நியாசிகள்) என்னும் நால்வகை நிலையினருள் மாணாக்கர், `இற்புகா மாணாக்கர்` (நைட்டிகப் பிரமச்சாரிகள்) என்றும், `இற்புகு மாணாக்கர்` (பௌதிகப் பிரமச்சாரிகள்) என்றும் இருவகைப்படுவர். மணம்புரிந்து கொள்ளாது வாழ்நாளளவும் மாணாக்கர் நிலையில் நின்றே வீடு பெறுவோர் இற் புகா மாணாக்கராவர். அவ்வாறின்றி வாய்க்கும் காலத்தில் மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்த விரும்புவோர் இற்புகு மாணாக் கராவர். `இல்வாழ்வார் ஆசாரியராதல் ஆதிசைவருள்ளேயன்றிப் பிற சைவருள் இல்லை` என்றும், `பிறசைவர் ஆசிரியராதல் வேண்டின், அவர் இற்புகா மாணாக்கராயிருத்தல் வேண்டும்` என்றும் சில ஆகமங் களில் விதி காணப்படுகின்றது. எனினும் அதனை, `இவ் யுகத்திற்கு ஒவ்வா விதி` என விடுத்து, எல்லாச் சைவருள்ளும் அபிடேகத்திற்கு மேற்குறித்த தகுதியெல்லாம் உடையவர் உரியவர் என்னும் விதியே கொள்ளப்படுகின்றது. அதனால், சிவன்கோயிலில் பிறர்பொருட்டுச் செய்யப்படும் நித்திய நைமித்திக காமிய வழிபாடு கட்குப் பிற சைவா சாரியர்களும் மேற்குறித்த சாதக, ஆசாரிய முறையின்படி உரியவரே யாவர். ஆயினும், வழக்கில் ஆதிசைவ சாதக, ஆசாரியர்களே சிவன் கோயிலில் பரார்த்த பூசைக்கு உரியவராய் விளங்குகின்றனர். அங்குப் பூக்கொய்து கொடுத்தல், மாலை கட்டித் தருதல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றுதல் முதலிய புறத்தொழிலில் மட்டுமன்றித் திருவமுது அமைத்தல், திரு மஞ்சன நீர் நிரப்புதல், தூபம், தீபம் முதலிய பொருள்களை எடுத்துக் கொடுத்தல் முதலிய அகத்தொழிலுக்கும் எல்லாச் சைவரும் உரிமை பெறத்தக்கவரே. எனினும், வழக்கத்தில் ஆதிசைவ அந்தணர்க்கேற்ப, மகாசைவ அந்தணரேயன்றி வைதிக அந்தணரும் அத்தொழிலில் உரிமையுடை யாராய் உள்ளனர். `சிவ தீக்கை பெற்றவருள்ளும் சிலர் தாம் திருக் கோயிலில் அகத் தொழின்மைக்கு உரியர்` என்பது சொல்லப் படுமாயின், தீக்கையே இல்லாதவரை அதற்கு உரியராக்குதல் எத்துணை முறைகேடான செயல் என்பதை எடுத்துக்கூற வேண்டுவது இல்லை.
``செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலை
தெரிந்த அவரோ(டு)
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர்
கின்ற அரன்ஊர் ... ... ... ...வீழிநகரே`` -தி.3 ப.80 பா.4
தடங்கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதோர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.-தி.1 ப.32 பா.2
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.1
பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.5
என்றாற்போலும் அருட்டிருமொழிகளால் `வடமொழி, தென்மொழி` என்னும் மொழி வேறுபாடும், `ஆதிசைவர், பிற சைவர்` என்னும் இன வேறுபாடும் இன்றி இருமொழிகளாலும் அனைத்துச் சைவரும் திருக் கோயிலில் சிவபிரானைப் பல்வகையாலும் நாள்தோறும் முறை வகுத்துக்கொண்டு வழிபாடு செய்தல் வழக்கத்திலிருந்தமை நன் கறியப்படுதலால், அதற்கு மாறாக, ``ஆதிசைவர் ஒருவர்தாம் வட மொழியானே திருக்கோயிலில் வழிபாடு செய்தற்கு உரியர்`` எனக் கட்டளை வகுத்தல், விருத்திப் பொருட்டாகச் செய்யப்பட்டது என்றே கொள்ளப்படும். இன்னோரன்ன கட்டளைகள் கங்கைகொண்ட சோழன் (முதல் இராசேந்திர சோழன்) காலத்திற்குப் பிறகே தமிழ்நாட்டில் தோன்றினவாதல் வேண்டும். ஏனெனில், ``அச்சோழ மன்னன் கங்கைக் கரையிலிருந்து ஆதிசைவர் பலரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் ஆங்காங்குக் குடியேற்றினான்`` என்பது சித்தாந்த சாராவளி உரையிலேயே சொல்லப்பட்டுள்ளது.
இனி, ``முப்போதும் திருமேனி தீண்டுவார்`` (தி.7 ப.39 பா.10) என்ற சுந்தரர் வாக்கும், பிறப்பு வேறுபாடு மொழிவேறுபாடுகளைக் குறிக்கும் கடப்பாடுடையதன்று; என்னை? அஃது உடையதாயின், ``தில்லை வாழ்ந்தணர்`` எனவும், ``திருநீலகண்டத்துக் குயவனார்`` எனவும், ``திருநீலகண்டத்துப் பாணனார்`` எனவும் பிறப்பினை எடுத் தோதினாற்போல எடுத்தோதப்பட்டிருக்கும் என்க.
இனி, முப்போதுந் திருமேனி தீண்டுவாரைப் பற்றிக் கூறு மிடத்தில் நம்பியாண்டார் நம்பிகள்தாமும், ``நீடாகமத்தின் அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர்`` (தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 74) என்று, `சிவபெருமானிடத்து அன்பு உண்டாதற்குச் சிவாகம ஞானம் இன்றியமையாதது` என்னும் அளவே குறித்ததன்றி இன வரையறையும் மொழி வரையறையும் கூறினாரில்லை. எனவே, சேக்கிழார் நாயனார், ``முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்`` எனவும், `வருங் காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள்சிவ வேதியர்க்கே உரியன; அப் பெருந்தகையார் குலப் பெருமை யாம்புகழும் பெற்றியதோ`` (தி.12 முப்போதும் திருமேனிதீண்டுவார் புராணம்) எனவும், `முப்போதும் திருமேனி தீண்டுவார் ஆதிசைவரே`` என்றும், ``அவர்தாம் வழி வழிவரும் பிறப்புரிமையர்`` என்றும் வரையறுத்துக் கூறியது அஃது அங்ஙனம் அவர்க்குச் சிறப்புரிமையாதல் குறித்தேயாம். அங்ஙனம் கொள்ளாக்கால், மேற்காட்டிய ஞானசம்பந்தரது திருவாக்கோடும், அனுபவத்தோடும் முரணும் என்க. எனவே, இது, முந்நூலணிதலும், வேதம் ஓதுதலும அந்தணர்க்கேயன்றி அரசர் வணிகர்கட்கும் உரித்தாயினும் வேதத்தை ``அந்தணர் நூல்`` (குறள், 543) என்றும், ``அதற்குரியார் அநத்ணரே`` (திருவள்ளுவமாலை, 23) என்றும், பிறவாறும் கூறுதல் போல்வதும், அந்தனரையே ``முந்நூல் மார்பர்`` எனவும் ``இருபிறப்பாளர்`` எனவும் ``மறையவர், வேதியர்`` எனவும் குறிப்பிடல் போல்வதும் ஆம் என்பது ஓர்ந்துணர்ந்து கொள்ளப்படும்.
``குலவிச்சை கல்லாமல் பாகம் படும்`` (பழமொழி நானூறு, 6) ஆகலின், யாதொரு செயலும் அது வழிவழியாக இடையறாது வருவதொரு குடியிற் பிறந்தார்க்குச் சிறப்புரிமை உடைத்தாதல் இயல்பே. அஃதே பற்றிப் பிற குடியிற் பிறந்தாரும் தமது சிறப்பினால் பெறும் உரிமை விளக்கப்பட்டதாம். அது கருதியே பிறப்புரிமை கருதிய தமிழ் நூல்களில் யாண்டும் சிறப்புரிமை விலக்கப்பட்டிலது என்பது அறியற்பாலது. பிறப்பினாலன்றிச் சிறப்பினால் உரிமை பெற்றவராக வடநூல் முனிவருள்ளும் பலர் கேட்கப்படுகின்றனர். தமிழாசிரியருள்ளும் திருநாவுக்கரசரை அப்பூதியடிகளும் மெய்கண்ட தேவரைச் சகலாகம பண்டிதரும் தம்மின் மிக்கராய்த் தமக்கு நெறியருளவல்ல ஆசிரியராகக் கொண்டமை வெளிப்படை. ``இவ்வாறாகவும் பிறப்புரிமை ஒன்றே கொள்ளப்படுவது சிறப்புரிமை கொள்ளப்படாது`` என முரணிக் கூறுதல் விருத்தி வேண்டுவாரது கூற்றேயாய் முடியும் என்க.
இதனால் திருக்கோயிலில் நிகழும் பெருவழிபாடு பற்றிய குற்றம் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொழிப்புரை :

பிரகிருதி புவனத்தில் நிலவுலகத்தில் வாழ்ந்த சூரபதுமனாகிய அசுரனால் விளைந்த துன்பத்தை இயற்கை மணம் கமழும் மேனியராகிய தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று சொல்லி முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.

குறிப்புரை :

`ஆகவே, அவன் சுத்தமாயையில் உள்ளார்க்கு மட்டுமின்றி, ஏனை அசுத்தமாயை பிரகிருதி மாயைகளில் உள்ளார்க்கும் அருளி புரிபவனே; அதனால், எவ்விடத்து அவனை வழிபடினும் அவ்விடத்து அவன் ஏற்ற பெற்றியால் நின்று அருள் புரிவன்; எனவே, நிலவுலகத்துத் திருக்கோயில்களில் திருமேனிகளில் அவன் நின்று அருள் புரிதற்கு ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம்.
``தாபர சங்கமங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்`` என்ற சிவஞானசித்தி (சூ. 2,28) இங்குக் காணத்தக்கது.
வம்பு - மணம். ``வலி`` என்றது, அதனால் விளைந்த துன்பத்தைக் குறித்தது. `பவழம்` என்பது கடைக்குறைந்து நின்றது. `பவளம்` என்றேயும் பாடம் ஓதுப. ``பவழத் தன்ன மேனி`` (குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து) என, வேறிடத்தும் முருகனது மேனிக்கு பவழம் உவமையாகக் கூறப் பட்டது. பகைவனை `பகை` என்றது ஒற்றுமை வழக்கு.
பல்லாற்றானும் தீமையைத் தேய்த்து நன்மையை வளர்த்து நிலவுலகத்து உயிர்களைப் புரந்தருளுதல் கூறுவார், கந்தபுராண வரலாற்றை எடுத்தோதியருளினார். அதோ முகத்தது இயல்பு கூறுகின்றாராதலின், அது வெளிப்பட நின்ற இவ்வரலாற்றையே எடுத்தோதியருளினார்.
இதனால், சிவபெருமான், மேலுலகத்துள்ளார்க்கேயன்றிக் கீழுலகத்துள்ளார்க்கும் அருள்புரிதல் கூறப்பட்டது. இவர்க்கு அருளுதலே `அதோ முகம்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 2

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே. 

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகமே நிலவுலகத்தைப் புரப்பது. அதற்கு அறிகுறியாகவே அது கறுத்த கண்டத்தையுடைய வடிவினதாய்த் தோன்றுதலை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனால், பலரும், `அது நஞ்சுண்டது` என்று மட்டுமே கூறி யொழிகின்றனர். இனி அவ்வடிவாகிய கறைமிடற்றண்ணலுக்கு மார்பில் அணியும் மாலையும் இறந்தாரது வெள்ளிய தலைகளால் ஆயதே. அதனது உண்மையையும் அறிவாறில்லை.

குறிப்புரை :

``அண்டமொடு எண்டிை\\\\u2970?`` என்றது, `உலகம்` என்னும் பொருளது. `உலகம்` என வாளா கூறின், நிலவுலகத்தையே குறித்தல் வழக்கு. `அதோமுகம் தாங்கும்` என மாற்றி உரைக்க. `அதோமுகமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால் பிரிக்கப் பட்டன ஈசானம் முதலிய ஏனைத் திருமுகங்கள். ஆகவே, சுத்த மாயையில் ஐந்தொழில் செய்வனவாகச் சொல்லப்படுகின்ற அவை, நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் யாங்ஙனம்` என்பார்க்கு, `நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் ஆறாவதாகிய மற்றொரு திருமுகமாம் அதோ முகமே` என மலைவு நீக்கியவாறாயிற்று.
`அதோமுகம்` என்பதற்குப் பொருள், `கீழ்நோக்கி நிற்பது` என்பதேயாகலின், அது கீழ் உலகத்தார்க்கு அருளுதல் குறித்த கருணையே என்பது சொல்லாமே அமைந்தது. ``அது கண்டம் கறுத்த கருத்தறிவார் இல்லை`` என்றதனால், `அத்திருமுகமே நிலவுலகத் தார்க்குக் கறைமிடற்றண்ணல் வடிவினதாய்த் தோன்றும்` என்பது அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. இதனுள் `அது` என்பது தோன்றா எழுவாய். கருத்து என்றது, `அகலரையன்றிச் சகலரையும் ஏற்றுக் கொள்ளும் கருணையது` என்பதனை.
`அஃது எவ்வாறு பெறப்படும்` எனின், மூவகைச் சீவ வருக்கத்தார்க்கும் ஆணவமலம் உளதேயெனினும், சகல வருக்கத் தார்க்கே அது பெரிதும் உளது எனப்படுவதாலும், ஆணவ மலம், `இருள், மூர்ச்சை, மிருத்து` முதலிய பெயர்கட்கும் உரித்தாய் நிற்ற லானும் இறைவனது கண்டத்தில் உள்ள கறை (இருள் - நஞ்சு) ஆணவ மலத்தை அவன் நீக்கி யருளுதற்குச் சிறந்த அடையாளமாம் என்க. இனி, அக் கறைதானும் மார்பு, வயிறு முதலிய பிற இடங்களில் நில்லாது முகத்திற்குக் கீழ்க் கண்டத்திலே நிற்றல், அஃது ஆறாவதாகிய அதோ முகத்தின் வடிவாதல் குறிக்கும். ஆகவே, `இத்துணை உண்மை களும் உணரற் பாலனவாக, அவற்றைவிடுத்து நஞ்சுண்டதாகிய வரலாற்றை மட்டுமே கூறியொழிதல் கூடாது` என்றற்கு, ``கருத்தறி வார் இல்லை; உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்`` என்றார்.
``உண்டது`` என்றது முற்று. ``நஞ்சு`` என்றதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. இறுதிக்கண் வருவித்துரைத்த, `அதனையும் அறிவாரில்லை` என்பது இசையெச்சம். `கறைமிடற்றண்ணல் மார்பில் உள்ள மாலையாக அமைந்த வெண்டலைகள் அமரர் தலைகளே` எனப்படுதலால், `அவரும் ஏனை மக்கள் போலச் சகலரே என உணர்தல் வேண்டும்; அங்ஙனம் உணரவே, அவர் பொருட்டு நஞ்சுண்ட வரலாறு அனைத்துச் சகலர்க்கும் அருள் புரிதலைக் குறித்தல் விளங்கும்` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.
இனி, பரமசிவன் ஐந்தொழில் செய்யுங்கால் அவற்றைச் சுத்த மாயையில் தானே நேர்நின்று செய்வன்` என்பதும், `அசுத்தமாயையில் அனந்தேசுரர் வாயிலாகச் செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழிச் சீகண்ட உருத்திரர் வாயிலாகச் செய்வன்` என்பதும் ஆகமங்களின் முடிபு ஆதலால், சுத்த மாயைக்குச் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நின்று நேராகவும், அசுத்தமாயைக்குச் சுத்த வித்தியா தத்துவத்திலே வித்தியேசுரனாய் நின்று அநந்ததேவர் வாயிலாகவும் ஐந்தொழில் செய்தல் போலப் பிரகிருதி மாயைக்கும் சுத்த வித்தியா தத்துவத்திலேயே சீகண்டனாய் நின்று அனந்த தேவர் வழிச்சீகண்ட உருத்திரர் வாயிலாக ஐந்தொழில் செய்வன் என்பது பெறப்படும்; என்னை? அசுத்த மாயையில் நிகழும் காரியத்திற்கு `அனந்தர்` என்னும் வித்தியேசுரர் கர்த்திருத்துதவம் பெறுதற்குப் பரமசிவன் வித்தியேசுரனாய் நிற்றல் இன்றியமையாதவாறு போல, பிரகிருதி மாயையில் நிகழும் காரியத்திற்குச் சீகண்ட வுருத்திரன் கர்த்திருத்துவம் பெறுதற்கும் பரமசிவன் சீகண்டனாய் நிற்றல் இன்றி யமையாதாகலின். சுத்தமாயையில் போக ( பரிபாலன) மூர்த்தியாய் நிற்கும் பரமசிவனுக்கு உரித்தாய், நிற்றலின், போக தத்துவம் (சாதாக்கிய தத்துவம்) ஒன்றேயாக, அதற்குக்கீழ் அதிகார தத்துவம் அவ்வாறு ஒன்றாகாது, `ஈசுரம், வித்தை` என இரண்டாயினமை, ஒன்றுமேல் நின்று சுத்தமாயையில் அதிகாரம் புரிதற்கும், மற்றொன்று கீழ்நோக்கி நின்று அதிகாரம் புரிவித்தற்குமேயாம். முன்னையதில் கிரியாசத்தி மிக்கு நிற்றல் செயலாற்றுதற் பொருட்டு என்பதும், பின்னையதில் ஞானசத்தி மிக்கு நிற்றல் பிறரை ஏவுதல் மாத்திரையாய் நிற்றற் பொருட்டும் என்பதும் தெரிந்து கொள்ளப் படுமாறு அறிக.
பரமசிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளுள் அதிகாரம் ஒன்றாகாது `சூக்குமம், தூலம்` என இரண்டா யினமை, முறையே செய்தலும், செய்வித்தலும் பற்றியேயாம். அவற்றுள் தூலவதிகாரமாகிய செய்வித்தல் நிலையில் நிற்றற் பொருட்டே `சுத்த வித்தை` என்னும் சுத்த தத்துவம் உளதாயிற்று என உணர்க.
இனி, இலய தத்துவமும் ஒன்றாகாது இவ்வாறே தூலம், சூக்குமம் என இரண்டாவது, அபர முத்தருள்ளும் அதிகாரமல வாசனை நீங்குங்கால் தூல லயமாயும், சூக்குமலயமாயும் இவ்வாறு படி முறையானன்றி நீங்குதல் கூடாமையின், அவ்வந்திலையினின்று அவரவர்கட்கு அருளுதற்பொருட்டேயாம் என்பதும் உணர்ந்து கொள்க. இலய தத்துவம் இரண்டனுள் `சத்தி தத்துவம் தூல லயம்` என்பதும், `சிவ தத்துவம் சூக்கும லயம்` என்பதும் நன்கறியப் பட்டவை.
இனி அசுத்த மாயையிலும், பிரகிருதி மாயையிலும் பிறர்வழி நிகழ்த்தும் `ஐந்தொழில்களுள் ` அருளல்` என்பது அபர ஞானமாகிய சிவாகமங்களை அறிவுறுத்தலேயாம். பரஞானத்தை அசுத்த மாயையில் உள்ளார்க்கும் வித்தியேசுரனாயும், பிரகிருதி மாயையில் உள்ளார்க்குச் சீகண்டனாயும் நிற்கும் பரமசிவனே ஏற்றபெற்றியால் அருளுவான், என்னை? சீகண்ட உருத்திரனும், அனந்தேசுரனும் மலம் நீங்கப் பெற்ற முத்தரேயாயினும், அதிகார மலம் நீங்கப் பெறாதவரேயாதலின், மலம் முழுவதையும் பற்றறக் கழிக்கும் பரஞானத்தை அவரைப் பற்றி நின்று பரமசிவன் உணர்த்துதல் கூடாமையின், ``சகல ருக்குப் பரமசிவன் ஞானத்தை அருளுதல் சீகண்ட உருத்திரன் வழி`` என்னாது, ``ஆசான் மூர்த்தி வழியேயாம்`` என ஆகமங்கள் கூறுதலும் இது பற்றியே என்க. எனவே, பிரளயா கலருக்குப் பரமசிவன் பர ஞானத்தை அருளுதலும் இவ்வாறு ஏற்ற பெற்றியானேயாம் என்பது உணரப்படும்.
இங்ஙனமாகவே, ``அறுபான் மும்மை நாயன்மார் முதலியோர்க்குப் பற்றற்ற பரஞானத்தை அருளியவன் பரமசிவனே`` என்பதும், ஆகவே, `அவர் அடைந்த பதமுத்தி அபர முத்திகள் அவனுக்கு நேரே இடமாய சுத்த மாயையின்கண் உள்ள புவனங்கள்` என்பதும் தானே பெறப்படும். இவ்வாறு சீகண்டனாய் நிற்கும் பரமசிவனும், அவனது அருளால் அவனோடு ஒத்த உருவமும், பெயரும், பிறவும் பெற்று விளங்கும் சீகண்ட உருத்திரனும் வேறு வேறு என்பது உணரமாட்டாதார், ``அறுபான் மும்மை நாயனார் முதலாகப் பரஞானத்திற்கு உரியராய் நிற்போர்க்கு அருளுபவனும் சீகண்ட உருத்திரனே`` எனவும், ``அவர் அடைந்த முத்திப் பேறும் அவனது இடமே`` எனவும் மயங்கிப் பெறலரும் பேறு பெற்ற உயர் ஞானத்தின ராகிய பலரை ஏனைப் பொதுத் தவத்தாரோடு ஒப்ப வைத்து எண்ணுபவராவர்.
சமய தீக்கை பெற்றுச் சரியையில் நிற்போர்க்குச் சிவநூல்களை ஓதினும் தத்துவ ஞானம் விளங்காமையானும், விசேட தீக்கை பெற்றுக் கிரியையிலும், யோகத்திலும் நிற்பார்க்கு அவை விளங்குதல், ஒரு நாட்டினை நேரே சென்று காணாது அதன் படத்தைக் காண்பார்க்கு அந் நாட்டியல்பு விளங்குதல் போலப் பாவனையானன்றி உண்மையான் அன்றாகலானும் அவ்விருவர்க்கும் பரமசிவன் சீகண்ட உருத்திரர் வழியாகவே அருள் புரிபவன். நிருவாண தீக்கை பெற்றார்க்குத் தத்துவ ஞானம் உண்மையான் விளங்குமாகலின், அவர்க்குப் பரம சிவன் பற்றற்ற பரஞானத்தால் சீவன் முத்தராய் நிற்கும் ஆசான் மூர்த்தி களது சுத்தான்ம சைதன்னியத்தில் விளங்கி அவராய் நின்றே அருள் புரிவன். ஆகவே, சமய தீக்கையின்பின் விசேட தீக்கை பெற்றுக் கிரியை அனுபவமும், யோக அனுபவமும் பெற்றார்க்குச் செய்யப் படும் நிருவாண தீக்கையே உண்மை நிருவாண தீக்கையாம். ஏனை யோர்க்கு அதனைச் செய்தல் நாடக மாத்திரையேயாம். இன்னும் முன்னைப் பிறவியிலே ஆசான் அருள்பெற்று நிட்டைகூட மாட்டாத வராய் அது கூடுதற் பொருட்டு நிலவுலகில் பிறந்தார்க்கும் சீகண்ட னாய் நிற்கும் பரமசிவன் தானே நேர் நின்று அருள்புரிவன் என்க.
மேன்மேல் உள்ள தத்துவங்கள் கீழ்க்கீழ் உள்ள தத்துவங் களினும் வியாபகமாவன வேயன்றி, இயைபின்றி மேலே நிற்பன அல்ல என்பது மேலேயும் (388, 407 பாடல்கள்) காட்டினாம் ஆதலின், இங்குக் கூறப்பட்டன அனைத்தும் பொருந்துவனவாதல் அறிந்து கொள்க.
சமயம் முதலிய மூவகைத் தீக்கைகளைப் பெற்றச் சரியை முதலிய நான்கினும் நிற்போர் திருக்கோயில் வழிபாட்டினைச் செய் தும், செய்வித்தும் நிற்கும் பொழுது பரமசிவனைத் தத்தம் இயல்பிற்கு ஏற்பவே உணர்ந்து நிற்பராகலான், பரமசிவனும் அவர்தம் உணர் விற்கு ஏற்ப மேற்கூறிய முறையானே அங்கு நின்று அருள் புரிவன் என்பது,
``திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவன்எனவே கண்டவர்க்குச் சிவன் உறைவன் அங்கே;
`உருக்கோலி மந்திரத்தால்` என நினையும் அவர்க்கும்`
`உளன் எங்கும் இலன் இங்கும் உளன் என்பார்க்கும்`
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தில் வந்துதித்தும், மிகும்சுரபிக் கெங்கும் உருக்காண; ஒண்ணாத பால்; முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல் வெளிப்பட்டருளுவன் [அன்பர்க்கே
எனச் சிவஞான சித்தியுட் (சூ. 12.4) கூறப்படுதல் காண்க.
இதனால். சிவபெருமான் கீழுலகத்துள்ளார்க்கு அதோ முகத்தின் வழியாகவே அருள் புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே. 

பொழிப்புரை :

படைப்பவனாகிய பிரமதேவனது அண்டம் எனப்படும் நிலவட்டத்தின் கண் நின்றுகொண்டு அறியாமை காரணமாக வேறு வேறு தேவரை, `முதற்கடவுள்` என்று சொல்லிக் கொண்டாடுகின்ற மனிதர்கள், அறியாமை நீங்கிப் பரமசிவன் தமக்குக் கறைமிடற்றண்ணலாய் (சீகண்டனாய்) நின்று அருள் புரிதலை உணர்ந்து புகழவல்லாராயின், அவ்வண்ணல் அவர்களை முன்பு அவரால் புகழப்பட்ட தேவர்களே வந்து வணங்குமாறு உயர் நிலையில் வைத்தருளுவன்.

குறிப்புரை :

எனவே, நிலவுலகத்தார்க்குச் சீகண்ட உருத்திரன், மற்றும் குணிருத்திரன், மால், அயன், இந்திரன் முதலாகப் பலரிடத்தும் நின்று அருள்புரிவது பரமசிவனது அதோமுகமே என்பதாம்.
``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``
என்ற சிவஞானசித்தி (சூ. 2.25) க்கும் இதுவே கருத்தாகக் கொள்க.
இங்கு ``மெய்`` எனப்பட்டது, ``பொருள்சேர் புகழ்`` (குறள், 5) எனத் திருவள்ளுவர் கூறிய புகழையாம்.
மேல், `அதோமுகந்தானே கண்டங் கறுத்து நின்றது` எனக் கூறினமையால், இங்கு ``மைதாழ்ந்திலங்கு மணிமிடற்றோன்`` என்பது அம் முகத்தையே குறித்தல் இனிது விளங்கும்.
``தொழப்படுந் தேவர்தம் மால்தொழுவிக்குந்தன் தொண் டரையே`` (தி.4 ப.112 பா.5) என்ற அப்பர் திருமொழியை இங்கு, ``விண்ணோர் தொழச்செய்வன்`` என்றதனோடு வைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 4

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகம் வடதிசைத் தீ, (ஆகவநீயம் தென்றிசைத்தீ, (தக்கிணாக்கினி) என்னும் இரண்டற்கும் நடுவிலே இல்லத் தீ, (காருகபத்தியம்) எனப் பெயர்பெற்று வளர்ந்து எரிகின்ற தீயினுள் நின்று அதனைச் சிவாக்கினியாகச் செய்யும். இனி ஏனைய இரண்டு தீயினுள்ளும் சென்று கலந்து உலகம் முழுதும் பரவியும் நிற்கும்.

குறிப்புரை :

எனவே, ``நிலவுலகில் இல்லத்து வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும், திருக்கோயில்களில் வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும் சிவபெருமானது அதோ முகமே`` என அத்திருமுகம் நிலவுலகத்தார்க்கு அருள் புரியும் வகைகளைக் கூறியவாறாயிற்று. ``செந்தீ`` என்றே போயினாராயினும், அதன் வடிவாய்ப் பல பொருள்களால் அமைந்த இலிங்கங்களையும் கூறியதேயாம்.
``இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை``
-தி.8 திருவெம்பாவை, 17
``நின் அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே``
-தி.8 திருப்பள்ளியெழுச்சி
என்றாற் போலும் திருமொழிகள் இறைவன் தன் அடியவர் இல்லத்துக் கொண்ட குறியினுள் நின்று அருள்புரிதலைக் குறிப்பனவேயாம். அக்குறியை அந்தணரும், ஆசாரியரும் நித்தியாக்கினியாகவும், ஏனையோர் ஆன்மார்த்த லிங்கமாகவும் கொள்வர் என்க. ``செந்தீ`` என்பது குறுகிநின்றது.
இனி, ``நடுவுற ஓங்கிய செந்தீ`` என்றதும், ``உந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்`` என்றதும் முறையே அகத்தே இருதயத்துள் சுடர்வடிவில் நிற்றலையும், மூலாதாரத்தினின்று, சுவாதிட்டானம், மணிபூரகம் முதலாக மேலோங்கி உடல் முற்றும் பரவும் மூலாக்கினியையும் குறித்துப் பொதுமையில் நிற்பனவேயாம். அதனால், கிரியையாளர் செய்யும் அகவழி பாட்டிலும், யோகியர்கள் செய்யும் யோக பாவனைகளிலும் நின்று அவர்க்கு அருள்புரிவதும் அவ்வதோமுகமே என்பதும் பெறப்பட்டது. ``உலகம் வலம் வரும்`` என்று உடலையும் உலகம் போலவே கூறியொழிந்தது, சிவபெரு மானது அதோ முகத்துடன் தோன்றிய அறுமுகக் கடவுள் ``உலகத்தை யெல்லாம் ஒரு நொடியில் வலம் வந்தான்`` என்ற புராண வரலாறும் இவ்வுண்மையையே விளக்கும் என்பது தோன்றுதற்கு. அந்தி இறைவன் - அந்திச் செவ்வானம் போலும் நிறமுடைய சிவன். ``காலை, நண்பகல், அந்தி`` என்னும் காலங்களில் செய்யும் வழி பாடுகளில் அந்தியில் வழிபடப்படும் இறைவன் என்றலுமாம்.
இதனால், அதோமுகம் நிலவுலகத்தார்க்கு நின்று அருள் புரியுமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

அதோ முகத்தால் அதோ மாயையாகிய அசுத்த மாயையின் காரியங்களாகிய அண்டங்களில் நிறைந்து நிற்கும் பழையோனாகிய சிவபெருமான், அவ்வதோ முகத்தோடே எங்கும் பொருந்தி நின்று செயலாற்றுவான். அதனால், தாமரை மலர் மாலையை அணிந்த பிரமதேவனும், பிரம கற்பத்திற்குத் தலைவனும் அவனேயாவன்.

குறிப்புரை :

நூற்றிதழ்த் தாமரை, `சதோமுகம்` எனப் பட்டது. `நிவிர்த்தி கலைக்குத் தலைவன் எனப் படுகின்ற பிரமனாகி நிற்பதும் அதோமுகமே` என்றவாறு.
இதனால், அதோமுகமே கீழுலகத்தார்க்கு அருளுவது என்பது வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகம் பெரியதொரு தாமரை மலராய் நிற்கும் முறையினைக் கேண்மின்கள்; சுத்த மாயை யினின்றும் கீழ்நோக்கி வருகின்ற அவனுடைய அளவில்லாத சத்திகள் அதோமுகமாகி நூறிதழ்களை உடையதாய் விரிந்து நிற்க, அம்மலரின் கண்ணே சிவபெருமான் அமர்ந்திருக்கின்றான்.

குறிப்புரை :

``நூறு`` என்றது, பன்மை குறித்தற்கு ஓர் எண் கூறியவாறு. ஒன்றாகிய சிவனது சத்திதானே காரியங்களை நோக்கிப் பலவாய் நிற்குமாதலின், அதனை ஒரு மலரின்கண்ணே உள்ள பல இதழ்களாக உருவகித்தார். `அளவிறந்த காரியங்கள்` என்றவற்றை, `வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்னும் கலைகளோடே ஒன்றின் ஒன்று வியாப்பியமாய் நிற்கும் ஏனைத் தத்துவங்களையும் எண்ணாற்கூறி, அவற்றில் நிகழற்பாலனவாகிய காரியங்களின் விரியைக் கருதி உணர்ந்துகொள்க. சத்திமான் இன்றிச் சத்தி செயற் படாதாகலின், அவன் அவற்றோடெல்லாம் இயைந்து நிற்றலையும் உணர்த்தினார். ``ஆகி`` என்றது, `ஆக` என்பதன் திரிபு. மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னே கூட்டியுரைக்க.
இதனால், `சிவபிரானது அதோமுகம் எனப்படுவது, அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிறைந்து நின்று காரியங்களைச் செய்யும் அவனது சத்தியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே. 

பொழிப்புரை :

யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருக் கோலத்தின் உண்மைகளை நூல்களாலும், நாட்டில் அமைந்த திருக் கோயில்கள், அவற்றில் நிகழும் விழாவகைகள் முதலியவற்றாலும் ஓர்ந்துணர்ந்து, அதனால் தெளிவுபெற்ற ஞானத்தை உடையராய் உள்ளத்தில் அன்புமிகப் பெறுவோர் பின்னர்த் தேவராவர். அவ்வாறு ஓர்ந்துணரவும், தெளியவும் மாட்டாத கீழ்மக்கள் அப்பெருமானை, எலும்பு, தோல், சாம்பல், வெண்டலை முதலியவைகளை உடைய வனாய்ச் சுடுகாட்டில் ஆடுதல், தலையோடு ஏந்தி இரத்தல் முதலிய வைகளையே நோக்கிச் சிறுதெய்வமாகக் கருதி இகழ்வார்களாயின், அச்செயல், கிளி ஒன்று தானே பூனையின் அருகுசென்று அகப்பட்டு நின்றது போல்வதாய்விடும்.

குறிப்புரை :

``பதி நாடி`` என்றதனை முதலிற்கூட்டி உரைக்க. அளியுறுதல் - அன்பினால் நெகிழ்ந்து உருகுதல். `அமரராவர்` என்னும் ஆக்கம் விரித்துரைக்க. பதி - தலைவனாம் தன்மை. ``ஈசன்`` என்பது முன்னே ``பதி`` என்றதனோடும் ஆறாவதன் பொருள்படச் சென்று இயைந்தது. ``அமரர்`` என்றது பொதுப்பட உயர்நிலையைக் குறித்ததாகலின், பதமுத்த, அபர முத்தர் முதலிய பலரது நிலைகளும் கொள்ளப்படும். `அமராபதி` என்பது பாடம் அன்று. கீழது - கீழ்நின்றாற்போல்வதொரு செயல். கீழ் நிற்கும் நிலையை, ``கீழ்`` என்றார். இதற்குக் `கீழ்தல் - கிழித்தல்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். இங்குக்கூறிய உவமையை, `கூற்றத்தைக் கையால் விளித் தற்று` (குறள், 894) என்றாற் போல்வனவற்றோடு வைத்துக் காண்க. சிவபெரு மானது முதன்மையை அறியாது நிற்றல்தானே தீங்கு பயப்பதாக, அதன்மேலும் அப் பெருமானை இகழ்தல் விரையப் பெருங்கேடு எய்துவிப்பதாம் என்பது இவ்வுவமையாற் பெறப் படுவது. `இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு` என்பது முன்னர் கூறப்பட்டது (தி.10 பா.336 உரை).
நிந்தனை செய்வாரது இழிநிலை இனிது விளங்குதற்கு, துதித்தல் செய்வாரது உயர் நிலையையும் உடன் கூறிக்காட்டினார்.
இதனால், சிவநிந்தை உய்தியில் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே. 

பொழிப்புரை :

`தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப் படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.

குறிப்புரை :

`அமரர்` எனப் பெயர் பெற்றாராயினும் கற்ப காலங்களை வருணிக்கும் நூல்களில் அவர் இறந்தமை நன்கெடுத்துக் கூறப்படுதலாலும், அசுரர் பலர் தம் அகந்தையால் அழிந்தமை, பலராலும் நன்கறியப்பட்டதாகலானும், ``எல்லாம் விளிந்தவர்`` என்றும், இறப்பைக் கடக்க மாட்டாமையால் வினையின் நீங்காமை பெறப்படுதலால், ``முளிந்தவர்`` என்றும், வினையுள்ள துணையும் ஞானம் விளங்காதாகலின், ``மெய்ந்நின்ற ஞானம் உணரார்`` என்றும் கூறினார். மெய்ம்மை - திரிபின்மை. `மெய்யாய்` என ஆக்கம் விரிக்க. `தாமே ஞானத்தை எய்தாதார் பிறர்க்கு ஞானத்தைத் தருதல் எவ்வாறு` என்பது கருத்து. `உயிர்கட்குப் பெருந்துன்பந் தருவது அஞ்ஞானமும், பேரின்பம் தருவது மெய்ஞ்ஞானமுமேயாகலின், அவற்றை முறையே போக்குதலும், ஆக்குதலும் மாட்டாதாரைப் புகழ்தலும், அவை வல்லானை இகழ்தலும் பேதைமைப் பாலவாம்` என்றவாறு. அறிவுடையோர் பலர் தேவரைப் புகழ, அறிவிலார் சிலர் அசுரரையும், அவரொடு ஒத்த தீய தெய்வங்களையும் (துர்த்தேவதைகளையும்) புகழ்ந்து அடைதல் பற்றித் தானவரையும் எடுத்தோதினார். தளிதல் - குளிர்தல்; அன்பு செய்து மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.
இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே. 

பொழிப்புரை :

அசுரரும், தேவரும் அறியாமையாகிய பகை தம் உணர்விலே நின்று கெடுத்தலால் தம்முள் மிக்க பகைகொண்டு தம் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிந்தனர். ஆகவே, சிவபெருமானை உண்மையில் இகழும் கருத்தினரல்லாதவரும், அவனை இகழ்வார்க்கு அஞ்சித் தாமும் இகழ்வார் போல நிற்பினும் அவர் அழிவே எய்துவர்.

குறிப்புரை :

`பகையாகிய தீக்குணம் அழிவைத் தருதலல்லது ஆக்கத்தைத் தாராது` என்பது உணர்த்துதற்குத் தேவாசுரரது நிலைமையை எடுத்துக் காட்டினார். `இவ்வாறு எவ்விடத்தும் தீமையையே பயக்கும் பகை, சிலரது உள்ளத்தில் சிவபிரானைப் பற்றித் தோன்றின், அவர் பெருந்தீங்கிற்கு உள்ளாதல் சொல்ல வேண்டுமோ` என்பது பின்னிரண்டு அடிகளால் பெறப்படும் கருத்து.
தேவர்கட்கு இறப்பில்லையாயினும், இறந்தாரொடு ஒப்பக் கரந்துறைதலும், அசுரர்க்கு அடிமைசெய்து நிற்றலும் ஆகிய நிலையை இறத்தலாக வைத்துக் கூறினார். ``எப்பகையாகிலும் எய்தார்`` என்றது, `உள்ளத்தில் சிறிது பகையும் இல்லாதவர்` என்றவாறு. தமக்குப் பகையில்லையாயினும், பகைகொண்டாரைத் திருத்தும் வலியின் மையால் தாமும் பகைகொண்டு சிவபிரானை இகழ்வார்போல நிற்பார் அழிதற்கு, தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களே சான்றாவர். `எய்தாரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், எளியன் என்று எண்ணும் எண்ணத்தினாலன்றிப் பகையால் சிவநிந்தை செய்தலின் குற்றமும், அச்செயலுக்கு உடன் படுதலின் குற்றமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 

பொழிப்புரை :

வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர்பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங் களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.

குறிப்புரை :

``வேதியராயும்`` என்பதனை முதலிற் கொள்க. ``மாதர்`` என்பது தாப்பிசையாய் நின்றது. `மாதரது போகத்தையும் புல வியையும் நினைந்து தமது நெஞ்சேயன்றி உடம்பும் அவர் வசப்பட்டு கிடக்கின்றாராதலின், நினைப்பொழிவார்` என்க. விகிர்தனாம் நீதி - உலகியலுக்கு வேறுபட்ட முறைமை. அது, மணிமுடி சூடாது சடைமுடி தாங்குதல், பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகளை அணியாது எலும்பும் தலையும் பாம்பும் அணிதல், சந்தனம் குங்குமம் பூசாது சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், பட்டும் துகிலும் உடுத்தாது தோலை உடுத்தும் போர்த்தும் நிற்றல், யானை குதிரை சிவிகைகளில் ஏறாது எருதின்மேல் ஏறிவருதல் முதலிய ஒழுகலாறு. இதுபற்றி `அவன் இகமும் பரமுமாய செல்வம், இன்பம், வெற்றி என்பவற்றை அருள வல்லனல்லன்` என விடுத்து, அவற்றின் பொருட்டு அவனின் வேறாய ஒரு தெய்வத்தையோ, பல தெய்வங் களையோ அன்போடு வழிபடும் அறியாமையுடையார் வேதியருள்ளும் சிலர் உள்ளனர் என்பது பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. எனவே, ``இது கற்றறி வுடையார்க்குச் சிவநிந்தையாம்`` என்பதும், ``இந்நிந்தையால் அவர் விரும்பிய பயன் கைகூடாமையேயன்றி, அவற்றிற்கு நேர்மாறாய தீங்கு விளைதலும், ஒரோவொருகால் பயன் கைகூடினும் அது நிலை பெறாது இடையே நீங்குதலும் உளவாம்`` என்பதும் கூறியவா றாயிற்று. இவற்றிற்கு, அமுதம் வேண்டிக்கடலைக் கடைந்த தேவர்க்கு ஆலகால விடம் கிடைத்ததும், நூறுபரிமேத வேள்வி செய்து இந்திர பதவியை அடைந்த நகுடன் அதனை ஒருநொடியில் இழந்து மலைப் பாம்பாய் நெடுங்காலம் இன்னலுற்றதும் போல்வனவாகிய வரலாறுகள் சிறந்த எடுத்துக் காட்டாதல் அறிக. `வேதத்தை ஓதும் வேதியர் தாமே அதன் விழுப் பொருளை உணரமாட்டாது இன்ன ராவார் எனின், ஏனையோரைப் பற்றிச் சொல்லவேண்டுமோ` என்ற வாறு. இவ்வேதியர் சுமார்த்தரும், வைணவரும் போல்வார் என்க. ``நீதியுள் நின்று`` என ஒருசொல் வருவிக்க.
``சிவபெருமான் முத்தியைக் கொடுப்பவன்`` என்பது எங்கும் எடுத்துச் சொல்லப்படுதற்குக் கருத்து, ``முத்தியை அவனன்றிக் கொடுப்பவர் பிறரில்லை`` என்பதேயன்றி, அவன் அதனிற் பன் மடங்கு சிறுமையுடையனவாய இகபர நலங்களை அருளமாட்டான் என்பதன்று. இது செயற்கரியவற்றைச் செய்யவல்லார் செயற்கெளிய வற்றைச் செய்தல் தானே பெறப்படும் முறைமை பற்றி விளங்குவதாம். இம் முறைமையை விளக்குதற்கு, `தண்டா பூபிகா நியாயம்` (தண்டம் - கழி. அபூபம் - பணியாரம். `பணியாரத்தைப் பூனை வந்து விழுங்காதிருத்தற்கு அதனை ஒரு கழியில் கட்டி வைத்திருக்க, ஒரு பூனை அந்தக்கழியை விழுங்கிவிட்டது என்பது அறியப்பட்டால், பணியாரத்தை விழுங்கியது என்பது தானே அமைதல்போல` என்பதே தண்டா பூபிகா நியாயம். மற்றைப் பூனைகளால் விழுங்கமுடியாத கழியை ஒரு பூனை விழுங்குமாயின், அது மற்றைப் பூனைகளால் விழுங்கத்தக்க பணியாரத்தை எளிதின் விழுங்குதல் தானே பெறப்படுதல் போலப் பிற கடவுளால் தரமுடியாத முத்தியைச் சிவபெருமான் கொடுப்பன் என்றால், அவன் பிற தெய்வங்களால் தரப்படுகின்ற இகபர நலங்களை எளிதின் வழங்குதல் தானே பெறப்படும் என்பது இங்குக் கொள்ளத்தக்கது.) என்றொரு நியாயம் கூறுவர் நியாய நூலார்.
இக்கருத்துப்பற்றியே திருமுறைகளில்,
``சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே, செயமகள் தலைவரே, கலைமகள் தர நிகழ்வரே, எழில்உரு உடையவர்களே, சிவபுரம் நினைபவர் புகழ்மிகும் உலகிலே, குலன் நிலனிடை நிகழுமே, வழி புவிதிகழுமே`` -தி.1ப.21
``அன்பன்அணிஆரூர் - நன்பொன் மலர்தூவ -
இன்பம்ஆகுமே``

``ஐயன்அணிஆரூர் - செய்ய மலர்தூவ -
வையம் உமதாமே`` -தி.1ப.91
``நீலமாமிடற் - றாலவாயிலான் - பாலதாயினார் -
ஞாலம் ஆள்வரே``
``அண்ணல் ஆலவாய் - நண்ணினான்றனை - எண்ணியேதொழத் - திண்ணம்இன்பமே``
``அம்பொன் ஆலவாய் - நம்பனார்கழல் -
நம்பிவாழ்பவர் - துன்பம் வீடுமே`` -தி.1ப.94
``அண்ணல் மருதனைப் பண்ணின் மொழிசொல்ல விண்ணுந்தமதாமே``
``எரியார் மருதரைத் தரியா தேத்துவார்
பெரியார் உலகிலே``
``எந்தை மருதரைச் - சிந்தை செய்பவர் - புந்தி நல்லரே``
``மறையார் மருதரை - நிறையால் நினைபவர் -
குறையார் இன்பமே`` -தி.1ப.95
``அரவன் அன்னியூர் - பரவுவார் விண்ணுக் -கொருவ ராவரே`` -தி.1ப.96
என்றாற்போல்வன பலவும் ஆங்காங்குப் பலபட எடுத்துக் கூறப் படுகின்றன. எனினும் வேதியரேயாயினும், இன்னோரன்ன அருள் முழக்கங்கள் செவியில் ஏறப்பெறுதலும், அவற்றில் தெளிவுண் டாதலும் முன்னைத் தவத்தாலன்றி ஆகாவாம்.
இனி, முத்தி சிவபெருமானால் அன்றிப் பிறரால் தரப் படாமையை,
பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும் விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றுமுண்டோ.
-கந்த புராணம் - தட்ச காண்டம் - உபதேசப் படலம் , 25 மானுடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்ல னாயின் ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமே அறிதல்வேண்டும்.
-காஞ்சிப் புராணம், சனற்குமார படலம், 43
அவனவ ளதுவெனு மவைதொ றொன்றுமிச்
சிவனலால் முத்தியில் சேர்த்து வாரிலை;
துவளரும் இம்முறை சுருதி கூறுமால்;
இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்.
-காஞ்சிப்புராணம், திருநெறிக்காரைக் காட்டுப் படலம், 29
என்றாற்போல்வனவற்றால் நன்கறியப்படும். வீடாவது பிறவி யறுதலேயாகலின், `அதனைப் பிறவியுடைய வேறு சிலரும் தருவர்` என்றல் பேதைமைப்பாலதேயாம். இவற்றுள், `சுருதி என்றது அதர் வணவேதம்` என்பது காஞ்சிப் புராண வயிரவேசப் படலத்துள் கூறப்பட்டது.
இதனால், பேதைமையால் சிவபெருமானை இகழ்தலும் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

பொழிப்புரை :

கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமையேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!

குறிப்புரை :

``கற்றிருந்தார்`` என்றது ``கற்று வல்ல சான்றோர்`` என்றவாறு. ``உற்றிருந்தாரவர்`` என்றதில் அவர் பகுதிப் பொருள் விகுதி. ``நல்லன பலவும்`` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.
தாய், தந்தை, தமையன்மார் மாதுலன் முதலிய மூத்த உறவினர் இவரெல்லாம் ``குரவர்`` எனப்படுவராகலின், ``அவரை நிந்தித்தல் கூடாது`` என்பதனையும் இவ்வதிகாரத்துள் முதற்கண் வைத்துக் கூறினார். இனி ``கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குரவராதல்`` வெளிப்படை. அவரை, ``கற்றிருந்தார்`` என்பதனுள் அடக்கினார்; அவர்தாம் எழுத்தறிவிப்பவரும், நூற்பொருள் உணர்த்துபவரும், தொழில் கற்பிப்பவரும் முதலாகப் பல திறத்தராதலின்.

இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``ஓரெழுத்தொரு பொருள்`` என்னும் பாடல் முழுவதும் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், அது நாயனார் திருமொழியன்றாம். அதன் பொருளும், ``மந்திரம் ஒன்றை`` என வரும் திருமந்திரத்துட் பெறப்படுகின்றது.

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

பண் :

பாடல் எண் : 2

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.

குறிப்புரை :

``பத்தினிகள்`` என்பதில் விகுதி தொகுத்தலாயிற்று. தத்துவ ஞானம் நூலானும், அநுபவத்தானும் வருவது. பத்தினிகள் முதலிய மூவரும் நேரே குரவராகாவிடினும், தமது ஒழுக்கத்தால் உலகம் நன்னெறி நிற்கச் செய்தலால் உலக ஆசிரியராதல் பற்றி அவர்கட்குத் தீங்கு செய்வது உலகிற்கே தீங்கு செய்வதாய் முடிதலின், அதனால் விளையும் தீமை பெரிதாயிற்று. சதாநந்தி - சதா ஆநந்தி; எப்பொழுதும் இன்பம் உற்றிருப்பவர்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், உபதேச குரவரையே யன்றிப் பிற குரவரை இகழ்தலும் கூடா என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 

பொழிப்புரை :

மந்திரமாவனவற்றுள் ஒன்றையே உபதேசித்தவ ராயினும், அவரது மனம் நோவத் தீமைகளைச் செய்தவர்கள், இம் மண்ணுலகில் யாவரும் இகழ்ந்து ஒதுக்குகின்ற நாயாய் நூறுமுறை பிறந்து, பின்பு மக்களாய்ப் பிறக்கினும் புலையராய்ப் பிறந்து, இம்மை மறுமைகளில் யாதொரு பயனையும் எய்தாது வாளா இறந்தொழிவர்.

குறிப்புரை :

`ஒருபிறப்பில் குருவை இகழ்ந்தவர் பல பிறப்புக்களில் பலராலும் இகழும் நிலையை அடைவர்` என்பதாம். மந்திரத்தைப் பன்முறை கணித்துப் பயன் பெற்றவரை ``மாதவர்`` என்றார். `சுணங்கன்` என்பது கடைக்குறைந்தது. இத் திருமந்திரத்தின் பாடம் பெரிதும் வேறுபட்டுள்ளது.
இதனால், மந்திர குருவை (கிரியா குருவை) நிந்தித்தல் விலக்கப்பட்டது.
இதன்பின்னர் உள்ள, ``ஈசனடியார்`` என்னும் திருமந்திரம் அடுத்த அதிகாரத்ததாம்.

பண் :

பாடல் எண் : 4

சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே. 

பொழிப்புரை :

ஞான நெறியை உணர்த்துகின்ற ஞானகுருவின் திருமுன்பில், `பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்` என்னும் தீய சொற்கள் எவர் வாய்வழியாக நிகழினும் உலகில் நன்னெறி அழிந்து, மெய்யுணர்வும் இல்லாதொழியும். தொன்றுதொட்டு வரும் உலகியல் துறைகளும், மெய்ந்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுப் பல சமயங்களும் கெட, நாட்டில் பஞ்சமும் உண்டாகும்.

குறிப்புரை :

ஞானநெறி, `சன்மார்க்கம்` என வழங்கப்படுதலை அறிந்துகொள்க. ``பொய்`` என்றது உபலக்கணம்.
இதனால், ஞான குருவை இகழ்தல் பெரிதும் தீமை தருவதாம் என, அது விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே. 

பொழிப்புரை :

கன்மி ஞானிக்கு ஒப்பாதல் - அஃதாவது, ஞானிக்கு ஒப்பாகக் கருதி, ஞானகுரு இருக்கவும் அவனை விடுத்துக் கன்மியைக் குருவாகக் கொள்ளுதல், கையில் மாணிக்கம் கிடைத்திருக்கவும் அதனை எறிந்துவிட்டு, வெயிலால் வெதும்பிக் கிடக்கும் பரற்கல்லைக் கையில் எடுத்துச் சுமப்பவன் செயல்போலவும், கையில் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் இருக்க அவற்றை உண்ணாமல், பின்புதான் அழிதற்கு ஏதுவாகிய எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போலவும் ஆம்.

குறிப்புரை :

ஒப்பு - ஒத்தல். இஃது ஒப்பாகக் கருதிச் செய்யும் செயலின் மேல் நின்றது. கன்மி - `கன்மமே முத்தி தரும்; ஞானம் வேண்டுவதில்லை` என்பவன். இக்கொள்கையினரை, `கன்ம காண்டிகள்` என்பர். கன்மி ஞானிக்கு ஒத்தல், சுமப்பான் விதி போன்றும், கைப்பு இட்டு உண்பான் (செயல்) போன்றும் ஆம் என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், உண்மைக் குரவரது பெருமையை அறியாமையும் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. 

பொழிப்புரை :

சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே.

குறிப்புரை :

``சிவனடியாரை வெறுத்துப் பேசுதற்குக் காரணம், செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கும், சமயக் காழ்ப்பும் போல்வனவேயன்றிப் பிறிதில்லை`` என்றற்கு முதல் இரண்டடிகளைக் கூறினார். ``ஊர்கள்தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்`` (தி.6 ப.98 பா.2) என்றதும், ``சிவனடியார்க்கு உலகத் தாரோடு உறவினா லாதல், பகையினாலாதல் தொடர்பில்லை என்பது விளக்கியதேயாம்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான். -குறள், 1062
என்றதில், ``இரத்தல் இல்வாழ்வார் மேற்கொள்ளும் தொழில்களுள் ஒன்றன்று`` என்றதன்றி,
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. -குறள், 41
என்புழிக் கூறப்பட்ட இயல்புடைய மூவரை விலக்கியதன்று. இனி,
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -குறள், 42
என்புழித் ``துறந்தார்``என்றது கிளைஞரால் கைவிடப்பட்டவரை. இவரை, ``அனாதைகள்`` என்பர். இவர் சிறுமகாரும், கழிமூப்பினரும், ``காணார் கேளார் கால் முடம்பட்டார்`` (மணிமேகலை, காதை.13, வரி.111) முதலியோருமாய், முயற்சி செய்யமாட்டாதவராய் இருப்பவர். இவர் தாமே கிளைஞரால் கைவிடப்படாதவழி. அவரால் வயிறு நிரம்பப் பெறாராயின், ``துவ்வாதவர் வறியார்`` எனப்படுவர். ``இவர்க்கும் ``இல்வாழ்வான் துணை`` என்றமையால், இவரையும் மேற்காட்டிய ``இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்`` என்னும் குறள் விலக்கியதின்றாம். ஆகவே, இவரையெல்லாம் பொதுப் பட நோக்கியே, ``ஈகை`` (குறள் அதிகாரம், 23) என்னும் அதிகாரமும்,
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. -குறள், 1058
என்னும் குறளும் சொல்லப்பட்டனவாம். இவ்வாசிரியரும் ``யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி`` (பா. 51) என்றதும் இவரை நோக்கியேயாம்.
இங்ஙனம் நூல் முழுவதையும் முற்றநோக்கி உண்மை உணரமாட்டாதார். `இங்குக் காட்டியன பலவும் தம்முள் ஒன்றி நில்லாது ஒன்றை ஒன்று விலக்குவனவாய் முரணிநிற்கும்` என்று இகழ்வர். அவர் ``ஏற்பதிகழ்ச்சி, ஐயம் இட்டுண்`` (ஆத்திசூடி, 8,9) என்றாற் போல்வனவற்றையும் அன்னவாக வைத்து இகழ்தல் சொல்ல வேண்டுமோ என்பது.
சிவனடியாராகிய மாகேசுரரை நல்விருந்தினராக வரவேற்று ஓம்புவார் சத்திநிபாதர். அவர் உலகத்து அரியராக, இரவலராக வைத்து ஐயம் ஏற்று உண்டலையே கூறினார். ஐயம் இடுவோர் அவரின் மிக்குளதாதல் பற்றி இங்கு `ஆர்க்கும் விரோதிகள்` என்பது பாடமாயின், `ஆண்டான் அடியவராய யார்க்கும் விரோதிகளாய் ஐயம் ஏற்றும் உண்பவராய அவ்வடியவரை வேண்டாது பேசினார்` என உரைத்தலன்றிப் பிறவாறுரைத்தல் பொருந்தாமை அறிக. `தாந் தாம் விழுவது` என்பதில் இரண்டாவது `தாம்` அசைநிலை.
இதனால், மாகேசுர நிந்தை மாபாதகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே. 

பொழிப்புரை :

சிவனடியாரது உள்ளம் எவ்வாற்றாலேனும் நோகு மாயின். அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக நாடும், அதன் சிறப்புக்களும் அழிதலேயன்றி விண்ணுலக வேந்தன் ஆட்சி பீடத் துடன் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்தொழியும். இஃது எங்கள் நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.

குறிப்புரை :

இவ்வாறே,
தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும்; தாபதர்கள்
தாம்உணரில் இந்தத் தலம்உணரும் - தாம்முனியில்
பூமடந்தை தங்காள்; புகழ்மடந்தை போயகலும்;
நாமடந்தை நில்லாள் நயந்து.
எனத் திருக்களிற்றுப்படி(பா.68)யும் கூறிற்று. இதனால், சிவனடியாரது மனம் நோவாமைக் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் பெறப்படுதலின், அது பற்றியே நாயனார் முன்னர்,
ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன்; காவா தொழிவனேல்,
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. -தி.10 பா. 242
என விதித்தார்.
``மதுரையில் ஆளுடைய பிள்ளையாரோடு ஒட்டி வாதில் தோற்ற சமணரை நின்றசீர் நெடுமாறர் கழுவில் ஏற்றியது, அவர்தாமே, `வாதில் அழிந்தோமாகில் - வெங்கழு வேற்றுவான் இவ் வேந்தனே` (தி.12 பெ.பு ஞானசம், 798) என உடன்பட்டமையை முதன்மையாகக் கொண்டன்று; அதற்கு முன்பே பிள்ளையார் எழுந்தருளியிருந்த திருமடத்தில் இரவில் தீயிட்டுத் திருக்கூட்டத்தார் பலரை உளம் நடுங்கச் செய்த மாபாதகம் அவரையும், தன்னையும், பின்பு தொடராமைப் பொருட்டே`` என்பதையும் ``அஃது அன்னதாகலின் அதனை விலக்கின் தமக்கும் குற்றமாம் என்று கருதியே பிள்ளையார் அரசன் செயலைத் தடுத்திலர்`` என்பதையும் சேக்கிழார்,
மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால் அனுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற்றி முறைசெய்க என்று கூற.
-தி.12 பெ.பு ஞானசம். 853
எனவும்,
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனைக் கேட்டும்
இகல்இலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த எல்லை.
-தி.12 பெ.பு ஞானசம். 854
எனவும் இனிது விளங்க அருளிச்செய்தார். ஆயினும், அவற்றைச் செவிமடாது, `பிள்ளையார் வேந்தன் செய்கையை விலக்காதிருந்தமை அவர்க்கு அறமாதல் இல்லை` எனக் கூறிப் பிணங்குவார் உளராயின், அவர்க்கு நாம் கடவதொன்றில்லை. தண்டியடிகள் நாயனாரோடு ஒட்டித் தோற்ற சமணரைச் சோழ மன்னன் ஊரை விட்டு அகற்றியது அவர் செய்த தீமையை ஒப்பநாடி அத்தக ஒறுத்ததேயாதல் அறிக. (புறம், 10)
இச் சிவாகமப் பொருளை மணிமேகலைக் காப்பியத்துள் புத்தர்க்கு ஏற்றியுரைத்தார் அதன் ஆசிரியர். (காதை.14, 29, 29, 21, 22)
இதனால் மாகேசுர நிந்தையால் விளையும் கேடு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே. 

பொழிப்புரை :

`சிவஞானியை நிந்திப்பதே நலம்` என்று கருதி நிந்திப்பவனும், அவ்வாறன்றி, `வந்திப்பதே (வணங்குவதே) நலம்` என்று அறிந்து வந்திப்பவனும் முறையே நல்வினையின் நீங்கித் தீவினையை எய்துபவனும், தீவினையின் நீங்கி நல்வினையை எய்துபவனுமாவர். ஏனெனில், சிவஞானிகட்கு அடியவரான பின்பே எவர்க்கும் சிவபெருமானது திருவருள் கிடைப்பதாகலின்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது கிளைப்பெயர். ``நல்வினை தீவினை தீர்வார்`` என்றதனை, மேல் ``நிந்திப்பவன், வந்திப்பவன்`` என்றவற்றோடு நிரனிரையாக இயைக்க. `அவன்வயமாக` என ஆக்கம் வருவிக்க. போதல் - அடைதல். `ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கன்பில்லார் (சிவஞானசித்தி. சூ. 12 - 2) ஆதலின், ``அவன் வயமானபொழுதே புகும் சிவபோகம்`` என்றார். இவ் ஏகாரம் பிரிநிலை. சிவனது திருவருளால் கிடைப்பது சிவானந்தமாகலின், அத்திருவருள் புகுதலைச் சிவானந்தம் புகுதலாகவே கூறினார். இங்கு ``நல்வினை, தீவினை`` எனப்பட்டவை, சிவ நல்வினை தீவினைகளேயாதலின், சிவ ஞானிகளை வந்திப்பவர் சிவபுண்ணியச் சீலராய் சிவஞானம் பெற்று அதன் வழிச் சிவானந்தத்தை எய்துதலும், சிவஞானிகளை நிந்திப்பவர் சிவாபராதிகளாய் அருநரகும், இழிபிறப்பும் எய்துதலும் பெறப் பட்டன. இதனாலன்றோ,
``நமக்கு உண்டுகொலோ, தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே`` -தி.4 ப.101
என அப்பரும் திருவாய்மலர்ந்தருள்வாராயினர்.
இதனால், `சிவனடியாரை வந்தியாதொழியினும். நிந்தித்தல் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 

பொழிப்புரை :

சிவஞானம் கிடைக்கப்பெற்ற சிவனடியார்களை விரும்பி வழிபட்டால், எவ்விடத்தும் அரசர்கள் தம் படையுடன் வந்து வணங்க, சிறுபயன்களைத் தருகின்ற தேவர்க்கெல்லாம் முதல்வ னாகிய சிவபெருமானை அவன் அருளால் அடைந்து பேரின்பம் எய்துதல் கூடும்.

குறிப்புரை :

`விளைந்தவரை என்னும் இரண்டனுருபு தொகுத்த லாயிற்று. நம்புதல் - விரும்புதல்; அன்புசெய்தல், `ஊனம்` என்பதும், `ஏனையது` என்பதும் கடைக்குறைந்து நின்றன. ஊனம் -குறை யுடைது. `அருளால்` என உருபு விரிக்க. ஈற்றடியில் உள்ள சொற்களை, `அருளால் எட்டி, ஏனையது விளைதலும் ஆம்` எனப் பின்முன்னாக நிறுத்தி, விகுதிபிரித்துக் கூட்டி உரைக்க. விளைதல் - விளையப் பெறுதல். `வணங்குவார்க்கு இப்பயனெல்லாம் விளையும்` எனவே, `வணங்காது பிணங்குவார்க்கு இவற்றின் மறுதலையாய அரச தண்டமும், இருளுலகமும் கிடைக்கும்` என்பது பெறப்பட்டது.
இதனால், மாகேசுர நிந்தை செய்வார்க்கு வரும் குற்றம் மறுதலை முகத்தாற் கூறப்பட்டது.
இங்கு நிற்கத்தக்கதாய இத்திருமந்திரம், பதிப்புக்களில் அடுத்த அதிகாரத்தில் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 1

பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. 

பொழிப்புரை :

பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.

குறிப்புரை :

கடுஞ்சொற் பேசுதற்குக் காரணமான வெகுளியை, அடக்கமின்றிப் பலகாலும் படபடத்து ஒலிக்கின்ற பல்லியாக உரு வகித்தார். அது மூக்கையும் நாக்கையும் மூடிக்கிடப்பதாகக் கூறியது, அவை இரண்டுமே எழுத்தொலி புறப்படும் இடமாய் இருத்தல் பற்றி. வெகுளியால் முணுமுணுக்கின்றவர்கட்குப் பேச்சுப் பெரும் பான்மையும் மூக்கின் துணையோடே நிகழ்தல் அறிக. தெற்றுதல் - துடைத்தல். ``பற்றி நின்றார்`` என்றதற்குச் சொல்லெச்சத்தால் வந்தியைந்த `பற்று` என்பது தானே `தெற்றுதல், சிதைத்தல். என்ப வற்றிற்கும் செயப்படு பொருளாதல் காண்க. `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களுள் நடுவுநின்ற வெகுளியுளதாயின் ஏனை இரண்டும் நீங்கினவாகா ஆதலின், அவ்விரண்டையும் விட்ட மாகேசுரர் வெகுளியுடையராதல் கூடாது என்பதனை வலியுறுத்தற்கு, வெகுளி, காமமும், மயக்கமும் உடையாரையே பற்றிநின்று கடுஞ் சொற் பிறப்பித்தலை உடன் கூறினார். அதனானே, மாகேசுரர் கடுஞ் சொற் கூறலாகாமையும் பெறப்பட்டது. ஆளுடைய பிள்ளையார் சமணரால் இடப்பட்ட தீயைப் `பாண்டியன்பால் செல்க` என வெஞ் சொற் சொல்லியது` மாகேசுரராய அவர்க்குத் தகுவதோ` என ஐயுறாமைப் பொருட்டன்றே அவர், ``செல்க`` என வாளா கூறாது, ``பையவே செல்க`` எனப் பணித்தமையை எடுத்துக்காட்டி, ``பையவே `` என்றாராயினும் ``செல்க`` என்றது என்னை என்பார்க்கு.
``... ... ... அரசன்பால் அபராதம் உறுதலாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடையன் ஆத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்``
-தி.12 பெ.பு.ஞானசம். 705
என விளக்கியருளினார் சேக்கிழார். அப்பர் பெருமான், தம்மை நீற்றறையில் இடுதல் முதலியவற்றைச் செய்தும், செய்வித்தும் நின்றார் மாட்டு வெகுளுதலும், வெஞ்சொற் சொல்லுதலும் இன்றிவாளா அமைந்திருந்தமை, மாகேசுரரது பொறையுடைமைக்கு எல்லையாய் அமைந்ததோர் எடுத்துக்காட்டாதல் அறிக.
``வற்றாதெழுவது`` என்றது குறிப்புருவகம். `வற்றா தொழிவது` என்பது பாடம் அன்று. பயிர்வளர்வதற்கு நீர்போலச் சிவபத்தி வளர்வதற்குப் பொறை யுடைமை இன்றியமையாததாதலின் அதனை நீராக உருவகம் செய்தார்.
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி
விளையு மாறே. -தி.4 ப.76 பா.2
என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.
இதனால், `மாகேசுரர் பிறர் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``ஓலக்கம் சூழ்ந்த`` என்னும் திருமந்திரம் சிறிது வேறுபட முன்புவந்துள்ளதே. (பா. 91).

பண் :

பாடல் எண் : 2

வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.

பொழிப்புரை :

காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. செய்யும் - செய்யுங்கள். பயிற்றிப் பதஞ் செய்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. `கொல்லை, காடு` என்பன ஒருபொருட் சொற்கள். இலயம் - ஒடுக்கம்; பொறுமை. உண்டு ஆம் - உள்ளதாய் (பொருளாய்) நிற்கும். பொருண்மையாவது உளதாந் தன்மையாதலின், பொருளை `உள்ளது` என்றார். இங்ஙனம் அன்றிக் கிடந்தவாறேகொண்டு, `பதம் செய்தால் உம்மிடத்துக் கூத்தனுக்கு எல்லையில்லாத ஒற்றுமை (இரக்கம்) உண்டாகும்` என உரைத்தலும் ஆம். வெகுளியுடைய உள்ளத்தில் அன்பும், அருளும் தோன்றா ஆதலின், அன்பையும், அருளையும் பொருளாக விரும்பும் சிவ பெருமான் அதற்கு முதலாகிய பொறையைப் பொருளாக விரும்புவன் என்பது உணர்க.
இதனால், மகேசுரனுக்கு இனிதாவனவற்றுள் பொறை யுடைமை முதலதாதல் கூறப்பட்டது.
இவ்வாறு, பொறையுடைமையை விதிக்கவே, அதனடியாகப் பிறக்கும் இன்னா செய்யாமையும் விதிக்கப்பட்டதாம். புலால் உண்ணாமையாகிய இயைபு பற்றி, கொல்லாமை முன்பே விதிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே. 

பொழிப்புரை :

சிவபிரானை அடைய விரும்பிய யான், பத்தி காரணமாக, அவன் வெளிப்படும் இடங்கட்கெல்லாம் ஓடியும், அவனையே புகழ்ந்து பாடியும் இன்னோரன்னவற்றால் அவனை அடையவல்லாரது அடிநிழலைப் பிரியாது சேர்ந்திருப்பேன்.

குறிப்புரை :

எனவே, ``அச் சேர்ச்சிதானே அவனை அடை விக்கும்`` என்பதாம். ``ஓடவல்லார், பாடவல்லார்`` என்றதும் கூட வல்லார் கூடுமாற்றை விதந்தவாறேயாம். ஆகவே, `நடாவுவன், வாழ்குவன்` என்பனவும். ``கூடுவன்`` என்றதனை வகுத்தோதியவாறாம். `ஓட வல்லாராகிய தமர்` என்க. `சிவனையடைய விரும்புவார்க்கு அவனடியவரே உறவினர்` என்பதை`
`உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்``
-தி.6 ப.98 பா.4
என்பதனாலும் அறிக. `ஓலியொடு` என உருபு விரிக்க. ஒலியொடு வாழ்தலாவது தாமும் அவரொடு சேர்ந்து பாடுதல். பாடவல்லாரை. ``பரமனையே பாடுவார்``(தி.7 ப.39 பா.10) எனத் திருத்தொண்டத் தொகையுள் அருளிச் செய்தமை காண்க. `பாடவல்லாரொடு` என்றே பாடம் ஓதுதலும் ஆம். தேடுதல் - அடையுமாற்றாலெல்லாம் முயலுதலும். ``ஓட வல்லார்`` முதலிய நான்கும், பெரியாராவாரது இயல்பு இவை என்றவாறாம்.
பாடிற் றிலேன்;பணி யேன்; மணி நீயொளித்
தாய்க்குப்பச்சூன்
வீடிற் றிலேனை விடுதிகண் டாய்; வியந்
தாங்கலறித்
தேடிற் றிலேன், சிவன் எவ்விடத் தான் எவர்
கண்டனரென்
றோடிற் றிலேன்;கிடந்துள்ளுரு கேன்;நின்
றுழைத்தனனே. -தி.8 நீத்தல், 45
என்றதனையும் நோக்குக. இங்கு, கூடவல்லார் அடி கூடுவன் என்றாற் போலவே,
``கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே`` -தி.6 ப.96 பா.10
``... ... ... ... ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே`` -தி.7 ப.75 பா.1
என்றற்றொடக்கத்தனவாக வருவன பலவற்றுள்ளும் அடியார்க்கு அடியவராதலே சிறந்தெடுத்துப் பேசப்படுதல் அறிக. ``யான்`` என்றது இசையெச்சத்தால், ``சிவபிரானை அடைய விரும்பிய யான்`` எனப் பொருள் தருதல் காண்க.
இதனால், ``பெரியாரைத் துணைக்கோடலே இறைவனை அடைவிக்கும்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே. 

பொழிப்புரை :

நெஞ்சே, நீ உன்னை அகப்படுத்துகின்ற துன்பத்தில் அகப்பட்டுத் தீயில் வீழ்ந்த தளிர்போல் வாட்டமுற்றாலும் சிவபெரு மானிடத்து அன்பு வைத்திலை. இவ்வாறு அத்துன்பத்திலே இருந்து நீ என்ன செய்யப் போகின்றாய்? நான் போகின்ற இடத்திற்கு நீயும் என்னோடு வா.

குறிப்புரை :

`தாவும்` என்னும் பெயரெச்சத்து உகரம் கெட்டது. தாவுதல் - அகப்படுத்தல். ``தளிர்போல்`` என்றாராயினும், தீயில் வீழ்ந்த தளிர்போல்`` என்றல் கருத்தாதல் அறிக. நெஞ்சை முன்னிலைப் படுத்தமையின், அதற்கும் ஒரு மனம் இருப்பது போலக் கூறினார். ``என் செய்வாய்`` என்றது, ``வேறு பயன் என்ன பெறப் போகிறாய்`` என்றவாறு. ``பெறுவது ஒன்று இன்மையால் என்னொடு வருதலால் இழப்பில்லை`` என்பதாம். ``சிறியார் பெரியாரை அணுக வாரார்`` என்பது தோன்றுதற்குப் ``பெரியோரிடத்து`` என்னாது, ``போமிடத்து`` எனப் பொதுப்படக் கூறினார். `போந்தால் அத்துன்பம் நீங்கும் `என்பது குறிப்பெச்சம். ``கண்டாய்`` முன்னிலை அசை. இத் திருமந்திரத்துள் மூன்றாம் அடி உயிர் எதுகை பெற்றது.
இதனால், `பெரியாரைத் துணைக் கொள்வார்க்குத் துன்பம் நீங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.

பொழிப்புரை :

அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்.

குறிப்புரை :

`அறிவார் செறிவார்` எனவும், `நெறி நின்று` எனவும் இயையும். `ஆதலின்` என்பது சொல்லெச்சம். பேரின்பத்தைத் தருவதனைப் பேரின்பம் என்றார்.
இதனால், பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பத்தைத் தருதல் காரணத்துடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே. 

பொழிப்புரை :

நீண்ட சடையை உடைய சிவபெருமானுக்கு அடி யவராயினமையினால் உலகம் முழுதும் போர்த்த புகழை உடையவ ராய், அப்பெருமானது அழகிய திருவடியையன்றிப் பிறிதொன்றையும் அடைய விரும்பாதவராகிய அவரிடத்துச் சென்று சேர்ந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் சிவபெருமான் அருளுடையவனாவன். அதனால், அவன் அருள் புரியும் நெறி வாய்க்கப் பெற்று. அவனோடு ஒன்றுதலாகிய பேற்றினையும் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``தார் சடையான்`` என்பது பாடம் அன்று. ``போர் புகழ்``, வினைத்தொகை. ``வாய்`` என்றது ஏழனுருபு. ``கோ அருள் செய்யும்`` என மாற்றுக. ``அந்நெறி அடைந்து (அவனைக்) கூடலும் ஆம்`` என்க. இத்திருமந்திரத்துள் இன எதுகை வந்தது.
இதனால், பெரியாரைத் துணைக்கோடல், பிரானருளைப் பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே. 

பொழிப்புரை :

சிவபெருமான் அடியவர் யாவரும் தம்மைப் போலும் அடியாருடன் கூடியே சிவபுரத்தை அடைந்து அதன் வாயிலில் நின்றனர். அப்பொழுது அவ்வாயிலில் உள்ள கணங்கள் சிவபெருமானிடம் சென்று, `அடியவர் குழாமாக வந்துள்ளனர்` என்று விண்ணப்பிக்க, அப்பெருமான், `அவர்கள் உள்ளே வருவாராக` எனத் திருவாய் மலர்ந்தருள, அவ்வருளிப்பாட்டினை அக் கணங்களால் உணர்ந்து, `முறையோ` என்று ஓலமிட்டுச் சென்று தம் குறை தீர்ந்தனர்.

குறிப்புரை :

என்றது, ``சிவனடியார்கள் பலரும் பெரியாரைத் துணைக்கொண்டே அவனை அடைந்தார்கள்`` என்றபடி இதற்குச் சேரமான்பெருமாள் நாயனார் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டாகும். படை - சூலம். ``படையும், ஆரழலும் உடையவன்`` என்க. ``புக்கு, அறிவிப்ப`` என்னும் எச்சங்கள் இரண்டும், ``என்றார்`` என்பதனோடு முடிந்தன. அடியாருடன் புக்கே` என்ற ஏகாரம், தனித்துப் புகாமையை விளக்கி நின்றது.
இதனால், சிவனை அடைதற்கு அவனை அடைந்த பெரியாரைத் துணைக்கோடல் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 

பொழிப்புரை :

எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானை உணர்த் தும் நூலறிவினால் வருகின்ற பெருமையை உடைய கலைஞன், காலக் கழிவின்கண் பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமான் திருவடியை அடைவான். அந்நூலறிவைத் தன தாக்கிக் கொள்ளும் அனுபூதிமான், அப்பொழுதே சிவனைப் பெற்று, உலகம் உள்ளளவும் வாழ்வான். ஆகையால் சிவமே பெறும் திரு நெறியொழுக்கம் வல்ல சிவானுபூதிச் செல்வரோடேயான் சேர்ந்திருக்கின்றேன் (தி.8 திருச்சதகம்).

குறிப்புரை :

அருமை வல்லான் - பிறரால் ஆகாதவற்றையும் செய்ய வல்லவன்; சிவபெருமான். வல்லான் கலை என்னும் ஆறாவதன் தொகை ``வனைகலத்தது திகிரி`` என்பதுபோல, செயப்படுபொருள் ஆகிய காரகத்தின்கண் வந்தது. `ஞானத்துள்` என்றது வேற்றுமை மயக்கம். ``தோன்றும்`` என்றது எச்சம். ``நீந்தும், இருக்கும்`` என்ற செய்யுமென் முற்றுக்கள் எதிர்காலம் உணர்த்தி நின்றன. `ஆகையால்` என்பது சொல்லெச்சம். ``திருமை`` என்பதில் ``மை`` உடையராந் தன்மை குறித்து நின்றது. ``யானே`` என்ற பிரிநிலை ஏகாரம் ``வல்லாரொடு`` என்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டது. அதனால், ``அவரொடு சேர்தல் பெரும்பயன் உடைத்தாதல்`` விளங்கிற்று.
இதனால், ``பெரியாருள்ளும் மிகப் பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பெரும்பயன் தரும்`` என்பது கூறப்பட்டது.
இங்கு உரைத்தவாற்றானே இறுதியிரண்டு அதிகாரங்களும் பொது அறம் ஆகாது ஈண்டே கூறுதற்குரிய சிறப்பறம் ஆதல் அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 1

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

பொழிப்புரை :

கணிநூலில் (சோதிட நூலில்) சொல்லப்பட்ட வரிசையான பன்னிரண்டு இராசிகளையும் யாடும் (மேடமும்), அரிமாவும் (சிங்கமும்) முதலாய் நிற்பத் தொடங்கி முடியும் வகைகளில் முறையானே எண்ணி யோக உறுப்புக்கள் எட்டனையும் முன்பு உணர்த்தியருளிய நந்திபெருமான், அவைகளில் முறையான விலக்கு விதிகளை அருளிச் செய்தார்.

குறிப்புரை :

வற்கு - யாடு. பன்னிரண்டு இராசிகளை எண்ணும் பொழுது மேடம் முதலாக எண்ணுதலே யன்றி, சிலவற்றிற்குச் சிங்கம் முதலாக எண்ணுதலும் உளதாதலின், ``வற்கு அரி ஒன்று முடிய`` என்றார். ஒன்று முடிய - ஒன்றாகத் தொடங்கி முடிய. ``நிரைத்த இராசி`` என்றதனை, ``உரைத்தன`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``இராசியை எண்ணி`` என்றது, யோக நூற்குக் கணிநூல் துணையாக நிற்றல் கூறியவாறு. பிராசாதம் - யோகம்; அது, `பிரச்சதம்` என மருவி நின்றது. யோக உறுப்புக்கள் எட்டு, பின்னர்க் கூறப்படும். `இயமம், நியமம்` என்பன இங்கு யோக உறுப்புக்களைக் குறியாது `விலக்கு, விதி` என்னும் பொருளவாய் நின்றன.
இதனால், யோகப் பயிற்சி, கணிநூல் கூறும் கால இயல்பை நோக்கி அதற்கேற்பச் செய்யப்படுதலும், யோகத்தின் உறுப்புக்கள் எட்டாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நந்திபெருமான் அருளிச்செய்த விலக்கு விதிகளால் சமாதி நிலையை அடைந்து யாவரும் உய்தற் பொருட்டு, ஞானம் இறுதித் தந்திரங்களில் வர நிறுத்தி, முன்னே உள்ள சில தந்திரங்களில் கிரியைகளாகிய கவசம், நியாசம், முத்திரை முதலியவைகளுடன் யோக நெறியையும் கூறுவேன். `இயம நியமத்தால்` என உருபு விரிக்க.

குறிப்புரை :

`உத்தரம் பராசத்தி எய்த, பூருவம் கவசம் நியாசங்கள் முத்திரை இந்நெறி எய்த உரைசெய்வன்` எனக் கூட்டுக. ஞானமாவது திருவருளே யாதலின், ``பராசத்தி`` என்றார். `முத்திரையோடு` என உருபு விரிக்க. ``இந்நிலை`` என்றது, மேல் `பிரச்சதம்` எனக்கூறிய யோகத்தை.
இதனால், சரியை கிரியா யோகங்களாகிய தவங்கள் ஞானத்திற்குச் சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே. 

பொழிப்புரை :

`நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம்.

குறிப்புரை :

யோகம் மெய்ந்நெறியாளர் பலர்க்கும் வேண்டப் படுவது ஆதலின், அவர் அனைவர்க்கும் பொதுவாயிற்று. புறத்துச் சென்று அலமந்த மனம் அவ்வலமரல் நீங்கி ஒருக்கம் உற்றபின், பொரு ளியல்புகள் எளிதில் உள்ளவாறு விளங்குமாகலின், ``இந்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகல் ஆம்`` என்றார். ``ஆம்`` என்றது எளிதிற் கூடும் என்றவாறு. `பிற நெறிகளால் பொருளியல்பு உள்ள வாறு விளங்குதல் அரிது` என்பதை விளக்கவே, `இந்நெறி அந்நெறி என்னாது` என முதற்கண் கூறினார். `போலும்` என்பது ``போன்ம்`` என நிற்றல்போல், ``நில்லும்`` என்பது உம்மையுள் உகரங்கெட, ``நின்ம்`` என நின்றது. `நின்மின்` என்பது பாடமாயின், ``இந்நன்னெறி`` எனச் சுட்டு வருவிக்க. ஆகம் - உடம்பு.
இதனால், ஞானத்திற்குச் சிறந்த வழி யோகமாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 

பொழிப்புரை :

அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) ஆவன, `இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி` என்பன.

குறிப்புரை :

``எண்ணிலா ஆதனம்`` என்றதனால், `ஆதனங்கள் பல` என்பதும், ``நயமுறும் பிரணாயாமம்`` என்றதனால், `பிரணா யாமமே மனத்தின் அலமரலாகிய இன்பத்தைத் தரும்` என்பதும், ``சய மிகு தாரணை`` என்றதனால், `தாரணை கைவரப் பெற்றவரே மனத்தை அடக்குதலில் வெற்றிபெற்றவராவர்` என்பதும் பெறப்படும். நயம் - இன்பம். சயம் - வெற்றி. அயம் -குதிரை. அயம்உறும் - குதிரை அடங்கப்பெறுகின்ற. ``குதிரை`` என்பது, உவம ஆகுபெயராய் வேகம் மிக்க மனத்தைக் குறித்தல் யோகநூல் வழக்கு. குதிரைக்கு வடமொழி யில் ``வாசி`` என்பது பெயராகையால் அஃது அடங்குதற் பொருட்டுச் செய்யப்படும் யோகம் ``வாசி யோகம்`` எனப்படுகின்றது.
இதனால், யோகத்தின் எண்வகை உறுப்புக்களும் தொகுத்து உணர்த்தப்பட்டன. இவை எட்டும் இங்குக் கூறிய முறையானே முதற் படி, இரண்டாம்படி முதலியவாய் அமையும் என்பது உணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 1

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே. 

பொழிப்புரை :

கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

குறிப்புரை :

எனவே, `யோகியாக வேண்டுவான், முதற்கண் இந்நிலையை முற்றப்பெறுதல் வேண்டும்` என்பதும், `முற்றப் பெறாத வழி, முற்றுப்பெறுமாற்றின் முயலுதல் வேண்டும்` என்பதும் பெறப் பட்டன. செய்யுட்கு ஏற்பச் சிலவற்றை உடம்பாட்டு முகத்தாற் கூறினா ரேனும், எல்லாவற்றையும் எதிர்மறையாகக் கூறுதலே கருத்தாம்; என்னை? `இயமம்` என்பதற்கு `விலக்கியன ஒழிதல்` என்பதே பொருளாதலின்.
இவற்றுள், திருவள்ளுவர், `கொல்லாமை, பொய்யாமை, (வாய்மை) கள்ளாமை, வெகுளாமை, காமம் இன்மை, (கூடா ஒழுக்கம் இன்மை) என்னும் ஐந்தையே துறவறத்துள் எடுத்தோதி, கரவாமையை (ஈகையை) இல்லறத்துள்ளும், `நிரம்ப உண்ணாமை, (மருந்து) கள்ளுண்ணாமை` என்னும் இரண்டனையும் பொருட் பாலுள்ளும் எடுத்தோதினார். அவை முறையே பொருளுள்ள வழி யும், உடல் நலம் நோக்கியவழியும் வேண்டப்படுவனவாதல் பற்றி.
அவர் கூறிய `வெஃகாமை, கள்ளாமை` என்பவற்றுள் வெஃகாமை பொருள் பற்றியே நிற்பது. கள்ளாமை பொருளன்றியும் புகழ், நூற்பொருள், மெய்ப்பொருள் உணர்வு முதலியன பற்றியும் நிற்பது. புகழ் முதலியவற்றைத் தாமே தலைவராய் நின்றும், வழிபட்டுக் கொள்ளாது இகலுரை கூறியும் கொள்ளக் கருதுதலும், பிறவும் கள்ளல் எனப்பட்டன. இஃது உணரமாட்டாதார், `கள்ளாமை இல்லறத்துள்ளும், வெஃகாமை துறவறத்துள்ளுமாக மாறிக் கூறற்பாலன` எனத் தாம் வேண்டுமாறே கூறிக்கொள்வர்.
இனி, விருப்பு வெறுப்பின்மையை, `வேண்டுதல், வேண்டாமை இலானடிசேர்ந்தார்` (குறள், 4) என்பதனுள்ளும், மாசின்மையை, ``மாண்டார் நீராடி``(குறள், 278) என்பதனுள்ளும் அவர் உய்த்துணர வைத்தமை அறிக.
வரையறையின்றிக் கிடப்பனவற்றை யாதானுமோராற்றால் வரையறைப்படுத்துக் கூறுதலே நூல்கட்கு இயல்பாகலின், இங்குப் பத்தினையே எடுத்துக் கூறினாராயினும், இவற்றோடு எண்ணத்தக்க பிறவும் கொள்ளப்படும் என்க. வரையறை இல்லவற்றை வரையறைப் படுத்தலை, ``சிறப்புடைப்பொருளைத்தான் இனிது கிளத்தல்`` (தொல். சொல். சேனாவரையம் 33) என்பர். இவ்வாறே தொல்காப்பியனார் சிறப்புடையவற்றைக் கிளந்தோதி, ஏனையவற்றை, `பிறவும்` எனப்புறனடை தந்து போதலை அவர் நூலுள் ஆங்காங்குக் கண்டுணர்க. நாயனார் இங்குப் `பத்து` என்று தொகைகொடாமை கருதத்தக்கது.
எள்கு உணன் - மறுக்கின்ற உணவை உடையான். திருவள்ளுவரும் குறைய உண்டலை, ``மறுத்துண்டல்`` (குறள், 945) என்பர். எள் குதல் - மறுத்தல். ``உணன்`` என்பது, ``உண்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அடியாகப் பிறந்த பெயர். ``ஊணன்`` எனப் பாடம் ஓது தலும் ஆம். `எண்குணன்` என்பது பாடம் அன்று. ``நல்லான்`` என்றது, இங்கு, ``பொறுமை உடையான்`` என்னும் பொருட்டாயும் ``அடக்கம்`` என்றது, ``அடக்குதல்`` என்னும் பொருட்டாயும் நின்றன. ``நல்லனாய்`` என்னும் ஆக்கமும், ``வெகுளியை`` என்னும் செயப்படு பொருளும் வருவித்துக்கொள்க. நடு - நடுவு நிலைமை. இதனை, ``சமநிலை`` எனவும், ``சாந்தம்`` எனவும் கூறுப. செய்தல், தனதாகப் பெறுதல்.

பண் :

பாடல் எண் : 1

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே. 

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

பொழிப்புரை :

சிவபெருமானைச் சத்தியோடு உடனாய் நிற்பவனாக உணர்பவனே நியமத்தில் நிற்க வல்லவனாவான்.

குறிப்புரை :

`சிவபெருமானது ஒறுக்கும் ஆற்றலையும், அருளும் ஆற்றலையும் உணர்பவனே இயம நியமங்களில் நிற்க வல்லவ னாவான். ஆயினும், இயமத்தையும் அன்பின் வழிக்கொள்ளுதலே சிறப்பு என்பார் இதனை இங்குக் கூறினார். இயமம் இறைவனது ஒறுப்பிற்கு அஞ்சும் அச்சத்தினாலும், நியமம் அவனது அருளை விரும்பும் அன்பினாலும் ஆகற்பாலனவாதலை அறிந்துகொள்க.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச்செய்தார்.
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.
என்றார் குமரகுருபர அடிகள். அங்கி - அக்கினியாய் நிற்பவன். நீதி - நடுவுநிலைமை; அஃதாவது பொல்லார்க்கும், நல்லார்க்கும் தெறலும், அளியும் அவரவர் செயலுக்குத் தக்காங்கு செய்தல். உடன் நீதி - உடனாய் நின்று செய்யும் நீதி. ``அளி, தெறல் இரண்டும் கருணையே`` என்றற்கு, பராசத்தியோடு உடனாய் நிற்றலை எடுத்தோதினார்.
இதனால், இயம நியமங்கள் வருமாறு கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புகளில் காணப்படும், ``தூய்மை அருளூரண் சுருக்கம்`` என்ற பாடல் இயமத்தையே கூறுதலானும், அதன் பொருள் மேலே, ``கொல்லான் பொய் கூறான்`` என இயமத்துள் கூறப்பட்டமையானும், மூன்றாம் அடிப் பொருத்த மற்றதாகக் காண்கையிலும் அது பிறர் பாடலாதல் அறியப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

பொழிப்புரை :

தவம் முதலாக மதி ஈறாகச் சொல்லப்பட்ட பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.

குறிப்புரை :

தவம், நெறிப்பட்ட வாழ்க்கை. செபம், வாய்ப்புப் பெற்றுழி மந்திரங்களை மிகுதியாகக் கணித்தல், ஆத்திகம், நூல்களில் சொல்லப்படும் கடவுள், இருவினை, மறுபிறப்பு, துறக்க நிரையங்கள் உள்ளன என உணரும் உணர்வு. சந்தோடம், `உள்ளது போதும்` என்னும் உள்ள நிறைவு. தானம், பொருளை நல்வழியில் ஈட்டி, உயர்ந்தோர்க்குக் கொடுத்தல். சிவன் விரதம், சிவனுக்குரிய சிறப்பு நாள்களில் தவச்செயல்களை மிகச் செய்தல். சித்தாந்தக் கேள்வி, சிவாகமங்களின் ஞானபாதப் பொருளைக் கேட்டல். மகம், இயன்ற பொழுது தீ வேட்டலைச் செய்தலும், செய்வித்தலும். சிவபூசை, சிவலிங்க வழிபாட்டினை இன்றியமையாததாகக் கொண்டு, விடாது செய்து வருதல். ஒண்மதி, நற்பண்பு. நியமமும் இவ்வாறு ``பத்து`` என வரையறுத்து ஓதப்படினும், இவை போல்வன பிறவும் கொள்ளப்படும் என்க. நிவம் - நிபந்தம். மகம், உயிரெதுகை.
இதனால், நியமம் சிறப்பாகப் பத்தாதல் கூறப்பட்டது. இதனை,
பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பயன் ஆசாற் களித்தலொடு
நயனுடை மரபின் நியமம் ஐந்தே.
என்றார் நச்சினார்க்கினியர்

பண் :

பாடல் எண் : 1

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

``பதுமம்`` முதலியவற்றின் வடிவத்தால் அவ்வப் பெயரைப் பெற்று பரந்து நிற்கும் ஆதனங்கள் யோக முறையில் பல உள்ளன. அவற்றுள் எட்டு ஆதனங்கள் தாழ்வில்லாது உயர்ந்தனவாய் நிற்க, அவற்றுள்ளும், ``சுவத்தி`` ஆதனத்தில் ஒருவன் இருப்பனாயின் யோகத்தில் மிக்கவனாவான்.

குறிப்புரை :

எனவே, ``சுவத்தி ஆதனம் ஏனை எல்லாவற்றினும் மேலானது`` என்பது பெறப்பட்டது. பங்கயம் - பதுமம்; தாமரை. `அவற்றுள் இருநாலும் சொங்கில்லை` எனக்கூட்டுக. சொங்கு - இழிவு. ``இழிவில்லை`` என்றது, ``உயர்ந்தன - உத்தமம்`` என்றவாறு. உத்தமாதனங்களை வருகின்ற திருமந்திரங்களுட் காண்க.
இதனால், ஆதனங்களின் இயல்பு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 

பொழிப்புரை :

பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.

குறிப்புரை :

ஆதனங்களில் விலக்குண்ணாத இடங்களில், ``உடலை நேரே நிமிர நிறுத்தி, இருகண்களாலும் மூக்கு நுனியை நோக்கி நிற்றல்`` என்பது பொதுவாகச் சொல்லுதலை உடைத்து. இதனுள், உடலை நேராக நிறுத்துதலைப் பத்திராதனத்திலும், மூக்குநுனியை நோக்குதலைச் சிங்காதனத்திலும் எடுத்தோதுவார். ஓர் அணைய - ஒன்றாகச் சேர. ஊரு - துடை. ``அழகுற`` என்றது, ``மலர`` என்றவாறு. ``தன்`` என்றது, பாதத்தை. ``அதனை, தன்`` என்பன பன்மை ஒருமை மயக்கம்.
இதனால், உத்தமாதனங்கள் எட்டனுள் பதுமாதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே. 

பொழிப்புரை :

``பதுமாதனத்தைச் சிறிது வேறுபடுக்கப் பத்திராதனமாம்`` என்கின்றார். பத்திரம் - வாள்.
பதுமாதனத்தினின்றும், வலக்காலை எடுத்து இடமுழந்தாள் மேலாக ஊன்றி, இரண்டு கைகளையும் அவ்வலக்கால் முழந்தாளின்மேல் நீட்டி, உடலை நேர் நிற்க நிறுத்தினால், அந்நிலை வாளின் வடிவிற்றாய், `பத்திராதனம்` என்னும் பெயரைப் பெறும்.

குறிப்புரை :

``அது பத்திராசனப் பரிசு பெறும்`` என மாற்றுக. பரிசு - தன்மை; என்றது, பெயரை. இதனைப் பிற நூல்கள் பிறவாறும் கூறும்.
இதனால், பத்திராதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே. 

பொழிப்புரை :

``பதுமாதனத்தை வேறொரு வகையாக மாற்றக் குக்குடாதனமாம்`` என்கின்றார். குக்குடம் - கோழி.
பதுமாதனத்தில் மேல்வைக்கப்பட்ட கைகளை உள்ளே விடுத்து நிலத்தில் அழுந்த ஊன்றி, அவ்வாறே முயன்று முழங் கையளவாக மேலெழுந்து சுமைமுழுதும் கைகளில் நிற்றலை அறிந்து வீழாது நின்றால், அந்நிலை கோழி வடிவிற்றாய், ``குக்குடாதனம்`` எனக் கொள்ளத்தகுவதாம்.

குறிப்புரை :

முதல் அடி பதுமாதனத்தின் பகுதியைக் குறித்தது. ``கொள்ளலும்`` என்ற உம்மை சிறப்பு. பிருட்டங்கள் குதிகால்களின் மேல் நிற்க, கால் விரல்களை நிலத்தில் ஊன்றிக் குதிகால்கள் மேல்நிற்க எழுந்து முழங்கால்களின்மேல் கைகளை வைத்து எளிதின் இருத்தலும் ஒருவகைக் குக்குடாதனமாம். எனினும், சிறப்புடையதனையே கூறினார் என்க.
இதனால், குக்குடாதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

பொழிப்புரை :

`குக்குடாதனத்தை வேறுபடுக்கச் சிங்காதனமாம்` என்கின்றார்.
இருகைகளையும் இருமுழந்தாள்களின் இடையே புகச் செலுத்தி இருபாதங்களிலும் படுமாறு நீட்டி, வாயைத் திறந்து கொண்டு, இருகண்களும் மூக்கு நுனியை நோக்க இருக்கின், அவ் இருக்கை சிங்கவடிவிற்றாய், `சிங்காதனம்` என்று பெயர் சொல்லப் படும்.

குறிப்புரை :

`கோடி` என்பது குறுகிநின்றது. செப்பும் - செய்யப் படும்.
இதனால், சிங்காதனத்தின் இயல்பு கூறப்பட்டது.
பதுமாதனம் முதலியவற்றை முறையானே கூறிவந்த நாயனார் குன்றக் கூறார் ஆதலால், `கோமுகாதனம், வீராதனம், சுகாதனம், சுவத்திகாதனம்` என்பவற்றையும் கூறிய திருமந்திரங்கள் கிடையாதொழிந்தன என்றே கொள்க. இங்ஙனமாகவே அவற்றது இயல்பு பிற நூல்களின் வழிக் கொள்ளப்படுவனவாம்.

பண் :

பாடல் எண் : 6

பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே. 

பொழிப்புரை :

`பத்திரம், கோமுகம், பதுமம், சிங்கம், திரம், வீரம், சுகம்` எனப் பெயர் பெற்ற ஏழ் ஆதனங்களும் உத்தம ஆதனங்களாம். அவற்றொடு உத்தமோத்தம ஆதனமாக முதலிற் கூறப்பட்ட சுவத்திகாதனமும் கூடச் சிறப்புடைய ஆதனங்கள் எட்டாகும். ஆதனங்களை இவ்வாறு `எட்டு` என்பதேயன்றி, `பத்து` என்றும், `நூறு` என்றும், மற்றும் பலவாகவும் கூறுவர்.

குறிப்புரை :

`அவற்றுள் மிகச் சிறப்புடைய எட்டு ஆதனங்களையே யான் கூறினேன்` என்றவாறு. எனவே, இவையே சிவயோகத்திற்கு அமையும் என்பதும் `வேண்டுழிச் சிறுபான்மை பிறவும் கொள்ளத் தகும்` என்பதும் பெறப்பட்டன. சொல்லப்பட்ட ஆதனங்களுள் குக்குடாதனத்தை இங்குக் கூறாது, சொல்லப்படாத `திரம்` என்பதனைக் கூறியவாற்றால் `திராசனம்` என்பது குக்குடாதனமே யாதல் பெறுதும்.
இங்கு எடுத்துச் சொல்லப்படாத ஆதனங்களுள் சிறப்பு உடையன சில வருமாறு:-
மச்சம், (மீன்) கூர்மம், (ஆமை) மகரம், (முதலை) தனுசு, (வில்) பச்சிமோத்தானம், (பின்பாகம் மேல் எழுதல்) மயூரம், (மயில்) மண்டூகம், (தவளை) மற்கடம், (குரங்கு) ஏகபாதம், (ஒற்றைக்கால்) சிரசு, (தலை) அலம், (கலப்பை) நௌகம், (ஓடம்) சருவாங்கம், (முழுதுடல்) சவம் (பிணம்) முதலியன. மற்றும் இவற்றைப் பலவாகச் சிறிது சிறிது வேறுபடுத்துக் காட்டுவர்; அவற்றின் இயல்புகளை எல்லாம் இங்கு விரிக்கிற் பெருகும். வேண்டுவோர் அடயோக தீபிகை, பதஞ்சலி சூத்திரம் முதலிய யோக நூல்களுள்ளும், சில உபநிடதங்களினும் கண்டுகொள்க.
முது ஆதனம் - முன்னே சொல்லப்பட்ட ஆதனம்; சுவத்திகாதனம். `முது ஆதனத்தோடு எட்டு` என உருபு விரித்து முடிக்க. இனி, `எட்டு, எட்டு, பத்து, நூறு` எனக் கூறப்பட்ட தொகை களை ஒருங்கு கூட்டி, ஆதனங்கள் `நூற்றிருபத்தாறு` என வரையறை காண்பாரும் உளர்.
``நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல்என்
றொத்த நான்கின் ஒல்கா நிலையோ
டின்பம் பயக்கும் சமய முதலிய
அந்தமில் சிறப்பின் ஆதன மாகும்``
என நச்சினார்க்கினியரும் ஆதனங்களை வரையறாதே கூறினார். அவர் இதனுள் நடத்தலைக் கூறியதும், `சமயம்` என்றதும் அறியத் தக்கன.
இதனால், ஆதனங்கட்குப் புறனடை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 

பொழிப்புரை :

ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.

குறிப்புரை :

`ஆகவே, அதனை அடக்க வல்லராதலைப் பயிலுதலே ஆண்மையுடையோர்க்கு அழகாகும்` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம் பிசிச் செய்யுள். இதனை, `ஐவர், ஐம் பொறிகள்; நாயகன்; உயிர்க்கிழவன்; ஊர், ஐம்பொறியும் தங்கி யுள்ள உடம்பு; குதிரை பிராணவாயு; துள்ளி விழுத்தல், வாழ்நாள் முடிவில் அவரறியாதவாறு விட்டு நீங்குதல்` என விடுத்துக் கண்டுகொள்க. ``மெய்யர், பொய்யர்`` என்பன, வன்மை மென்மை பற்றி வந்தன. `பொய்யரை வீழ்த்திடும்` எனவே, `மெய்யரை வீழ்த்தாது செல்லும்` என்பது பட்டு, மெய்யர்க்கு வாழ்நாள் நெடிது செல்லுதலும், அவர் விடுத்து நீக்க நீங்குதலும் உளவாதலை உணர்த்தி நிற்கும்.
இதனால், பிராணாயாமம் செய்வார் மக்களுடம்பை நெடிது நிறுத்திப் பயனடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

பொழிப்புரை :

எல்லா மக்களிடத்தும் ``நல்லன்`` என்றும், ``அல்லன்`` என்றும் இரண்டு குதிரைகள் உள்ளன. அவைகளைக் கடிவாளம் இட்டு அடக்குதற்குரிய சூழ்ச்சியை அறிகின்றவர் அவருள் ஒருவரும் இல்லை. அறிவுத் தலைவனாகிய குருவின் அருளால் அச்சூழ்ச்சியை அறிந்து அதன்வழி அடக்கினால், அக்குதிரைகள் இரண்டும் அடங்குவனவாம்.

குறிப்புரை :

``ஆரியன்`` என்றது, `நல்லன்` என்னும் பொருளது. ``ஆரியன், அல்லன் என்பன`` இயற்பெயர்த் தன்மையவாய் விரவி, அஃறிணைக்கண் வந்தன. மேல், ``குதிரை ஒன்று உண்டு`` என்று கூறி, இங்கு, ``குதிரை இரண்டுள`` என்றது, `இடவகையால் இரண்டு` என்னும் குறிப்பினதே யாதலின், மாறு கொள்ளாது என்க. எனவே, `ஒன்று` எனப்பட்ட பிராணவாயு, `இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு நாடிகளின் வழி இரண்டாய் இயங்கும்` என்பது கூறப் பட்டதாம். இடைகலை நாடி, வலக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப்படரும். பிங்கலை நாடி இடக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப் படரும்; இவை இரண்டும் கொப்பூழில் பிணைந்து இடைகலை இடப்பக்கமாகவும், பிங்கலை வலப்பக்க மாகவும் மாறி, முதுகு, பிடர், தலை வழியாகச்சென்று, முறையே மூக்கின் இடத் துளை வலத் துளைகளில் முடியும். அதனால் இரு நாடிகளும் பிணையும் இடமாகிய உந்தியில் (கொப்பூழில்) மூக்கின் வழியே அந்நாடிகளின்வழி வந்து நின்ற காற்று, மீளவும் அவற்றின் வழி வெளிச்செல்லும். அதனால், பிராணவாயு ஒன்றே இரண்டாகச் சொல்லப்படுகின்றது என்க. கடிவாளம், உயிர்க்கிழவனது ஆற்றல். அதனை வீசி அக்குதிரைகளை அடக்க வேண்டும் என்றார். அது தன்னை முறையறிந்து செய்ய வேண்டுதலின், ``அறிவார் இல்லை`` எனவும், ``குருவின் அருளால் அறிந்து பிடிக்க`` எனவும் கூறினார். ``கூரிய`` என்றதில், ``கூர்ப்பது அறிவு`` என்க. இனி, `அம்முறைதான் அசபா மந்திரத்தால் ஆவது` என்பதை, நான்காந் தந்திரத்துட் கூறுவார். இதனுள், `வீசி` என்பது உயிரெதுகை.
இதனால், `பிராணாயாமம் செய்யும் முறையைக் குருவருளால் அறிந்து செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

பொழிப்புரை :

பறவையினும் விரைய ஓடுகின்ற பிராணனாகிய அக்குதிரையின்மேல் ஏறிக்கொண்டால், களிப்பிற்கு வேறு கள்ளுண்ண வேண்டுவதில்லை; அது தானே மிக்கக் களிப்பைத் தரும். அக்களிப்பினாலே துள்ளி நடக்கச் செய்யும்; சோம்பலை நீக்கச் செய்யும்; இவ்வுண்மையை, நாம் சொல்லியவாறே உணரவல்ல வர்க்கே சொன்னோம்.

குறிப்புரை :

மேற்கொள்ளுதல், ஏறிச்செலுத்துதல். அஃது இங்கு அடக்கி ஆளுதலைக் குறித்தது. உடலின் உள்ளுறுப்புக்கள் யாவும் - சிறப்பாக இருதயம் - நன்கு செயற்படுதலும், படாமையுமே உடலின் வலிமைக்கும், வலிமை இன்மைக்கும் காரணம். அவ்வுறுப்புக்களின் நன்மை, குருதி ஓட்டத்தின் தன்மையைச் சார்ந்தது. குருதி ஓட்டம் மூச்சுக் காற்றின் இயக்கத்தை ஒட்டியது. ஆகவே, அவ் இயக்கத்தை வழிப்படுத்தினால், உடல் வலிமை பெற்று, உள்ளமும் கிளர்ச்சி அடைவதாம்.
இதனால், பிராணாயாமம் உள்ளக் கிளர்ச்சியைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே. 

பொழிப்புரை :

பிராண வாயுவால் கிளர்ச்சியுற்று ஓடும் இயல் புடைய மனத்தை உடன்கொண்டு, அப்பிராண வாயு வெளியே ஓடாது உள்ளே அடங்கி இருக்குமாயின், பிறப்பு இறப்புக்கள் இல்லா தொழியும். ஆகவே, அந்தப் பிராண வாயுவை அதன் வழியினின்றும் மாற்றி வேறு வழியில் செல்லச் செலுத்தி, அதனால் மோனநிலையை எய்தி, பிராண வாயுவால் அடையத்தக்க பயனை அடைந்து இன்புற்றிருங்கள்.

குறிப்புரை :

மனம் செயற்பட்டுப் பயன் தருதற்பொருட்டு அமைந்ததே பிராண வாயுவாயினும், இங்கு நுதலிய பொருள் பிராண வாயு ஆதல் பற்றி அதனைத் தலைமைப் பொருளாக வைத்து, `மனத் தொடும் அடங்கிப் பிராணன் பேராது இருக்கின்` என்றார். ``மனத் தொடும்`` என்றதில் ஓடு, `கைப்பொருளொடு வந்தான்` என்றாற்போல உடைமைப் பொருட்கண் வந்தது. எனவே, பிராணாயாமத்தால் மனம் அடங்குதலாகிய பயன் கூறப்பட்டதாம். வழியை `மடை` என்றது, ஒப்புமை வழக்கு.
பிராண வாயு உலாவும் வழி இட நாடி (இட மூக்கு) ஆகிய இடைகலையும், வல நாடி (வல மூக்கு) ஆகிய பிங்கலையும், நடு நாடி (முதுகந்தண்டைச் சார்ந்துள்ள வழி) ஆகிய சுழுமுனையும் என மூன்று. அவற்றுள் பிராணவாயு இயல்பாக உலாவும் வழி இடைகலை பிங்கலைகளாம். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்து தலையே, ``மடை மாற்றி`` என்றார். `நடை மாற்றி` என்னாது, `மடை மாற்றி` என்றதனால், அதற்கு, `இடைகலை பிங்கலைகளுள் ஒன்றின் வழியாகவே விடுதலும் வாங்குதலும் செய்தல்` என உரைத்தல் கூடாமை அறிக. `பேச்சறுதல்` என்பது, `மோனம்` என்பது குறித்த வாறு. உண்மை மோனம், வாய் வாளாமையோடு ஒழியாது மனம் அடங்குதலேயாம் என்க. உண்ணுதல் இங்கு, துய்த்தல். இத்திருமந்திரம் சொற்பொருட் பின் வருநிலை.
இதனால், பிராணாயாமத்தால் மன அடக்கம் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

பொழிப்புரை :

இது முதல் பிராணாயாமம் செய்யும்முறை கூறுகின்றார்.
(பிரணாயாமம், ``பூரகம், கும்பகம், இரேசகம்`` என்னும் மூன்று வகையினை உடையது. அவற்றுள்,) `பூரகம்` என்பது வெளியே உள்ள தூயகாற்று உடலினுள் புகுதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் தனது முயற்சியால் அக்காற்றினை உள்ளாக இழுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு பதினாறு மாத்திரை. இஃது இடை நாடியால் இடமூக்கு வழியாகச் செய்யற்பாலது. ``கும்பகம்`` என்பது உள்ளே புகுந்த காற்று அங்கே அடங்கி நிற்றற்கு உரித்தாய செயல். (எனவே, அங்கே நில்லாது ஓடுகின்ற அதனை அங்ஙனம் ஓட வொட்டாது தடுத்து நிறுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு அறுபத்து நான்கு மாத்திரை. ``இரேசகம்`` என்பது, உள் நின்ற காற்று வெளிப் போதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் அதனை வெளிச் செல்ல உந்துதலாம்) இதன் உயர்ந்த அளவு முப்பத்திரண்டு மாத்திரை. இம்மூன்றும் ஒருமுறை இவ்வளவில் அமைவது ஒரு முழு நிலைப் பிராணாயாமமாகும். பூரகம் முதலிய மூன்றும் தம்முள் இவ்வாறு இவ்வளவில் ஒத்து நில்லாது ஒன்றில் மாறுபடுதலும், பிரணாயாமம் புரைபடுதற்கு ஏதுவாம்.

குறிப்புரை :

``பூரகம் வாமத்தால் ஈரெட்டாக ஏறுதல்; கும்பகம் அறுபத்து நாலாக அதில் ஆறுதல்; இரேசகம் முப்பத்திரண்டாக ஊறுதல், ஒன்றின்கண் மாறுதல் வஞ்சகமாம்`` எனக் கூட்டுக. `பூரகம் இடைநாடியால்` எனவே, `இரேசகம் பிங்கலையால்` என்பது சொல்லாமை அமைந்தது. `ஏறுதல்` முதலிய மூன்றும் காரிய ஆகு பெயராய், அவற்றிற்குரிய செயல்களை உணர்த்தின. மாத்திரைகள் மந்திரங்களின்வழி அறியப்படும். அம்மந்திரங்கள் அவரவர் தம் தம் குருமுகத்தால் பெறற்பாலர். அனைவர்க்கும் பொதுவாக நிற்பது ``பிரணவம்`` எனப்படும் ஓங்காரம். அதனை ஒரு மாத்திரை வேண்டும்பொழுது ``உம்`` என்றே கொள்வர். இது சமட்டியாகக் கொள்ளும் முறை. இதனையே, ``அம், உம்`` எனப் பகுத்து வியட்டியாகக் கொள்வர். சமட்டியாக ஓதுபவர் இரண்டு மாத்திரைக்கு `ஓம்` என்றும், அதனின் மிக்க மாத்திரைக்கு அவ்வளவான அள பெடை கூட்டியும் ஓதுவர். ``அம்`` என்பதன்பின் ``சம்`` என்பது கூட்டி, ``அம்ச மந்திரம்`` எனக் கொண்டு, ஓதுதலைப் பெருவழக்காகச் சொல்வர். `ஓம்` என்பது போலவே, ``ஆம், ஈம், ஊம், ஏம், ஐம், ஔம்`` என்பவனவும், ``அம், உம்`` என்பன போலவே, ``இம், எம், ஓம்`` என்பனவும் முதல் (மூல) மந்திரங்களாம் என்பதனை நாயனார் நாலாந் தந்திரத்துள் அருளிச் செய்வார். மந்திரங்களில் ஒற்றெழுத்தின் மாத்திரையைக் கணக்கிடுதல் இல்லை. மந்திரங்களைக் கணிக்கும் முறை ``வாசகம், உபாஞ்சு, மானதம்`` என மூன்று. வாசகம், தன் செவிக்கும், பிறர் செவிக்குங் கேட்குமாறு வெளிப்படக் கூறுதல். உபாஞ்சு, நாப்புடை பெயருமளவாக மெல்ல உச்சரித்தல். இதனை ``முணுமுணுத்தல்`` என்றல் வழக்கு. மானதம், நாவாற் கூறாது மனத்தால் நினைத்தல். இவற்றுள், ``வாசிகம் சரியையாளர்க்கும், உபாஞ்சு கிரியையாளர்க்கும், மானதம் யோகியர்க்கும் உரியன`` எனப் பெரும்பான்மை பற்றிக் கூறப்படும் என்க. மந்திரத்தில் பற்றில்லாதவர் செய்யும் பிரணாயாமம் பெரும்பயன் தாராது.
ஈரெட்டு முதலிய எண்கள், அவ்வவ்வளவினதாகிய மாத்திரையைக் குறித்தன. `ஊருதல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `ஊருதல்` என்பதே பாடம் எனினுமாம். ஊருதல் - மேலே (வெளியே) செல்லுதல். ``முப்பத்திரண்டது`` என்றதில், அது பகுதிப் பொருள் விகுதி. `மாறுதலும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. வஞ்சகம் - பொய்; போலி. பூரிக்கும் அளவில் நான்மடங்கு கும்பித்த வழியே அக் காற்று உடற்குப் பயன் படுவதாகும். எனினும், பூரித்த காற்று முன்னுள்ள காற்றுடன் பயன்பட்டபின் நிலை வேறு படுதலால், மேற்குறித்த கால அளவில் இரேசகம் வேண்டப்படுகிறது.
இதனால், பிரணாயாமத்தின் இயல்பு கூறப்பட்டது.
இதனுள், `கும்பக மாத்திரை பூரக மாத்திரையின் நான் மடங்காம்` என்பதும், `இரேசக மாத்திரை கும்பக மாத்திரையின் அரை மடங்காம்` என்பதும் உய்த்துணர வைக்கப்பட்டவாறு அறிந்து கொள்க. `இஃது உயரளவு` எனவே, `அவ்வளவை எட்டுதற்கு, முதற் கண் சிறிது சிறிதாக அம்முறையிற் பயிலுதல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. பிராண வாயுவை இவ்வாறு நெறிப்படச் செய்வதால், உடல் தூய்மை பெற்று, ஆற்றல் மிகுந்து, நற்பண்புகளுக்கு இடமாகும்.

பண் :

பாடல் எண் : 6

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே. 

பொழிப்புரை :

ஒருவன் தன் பிராண வாயுவை வளைத்துத் தன்வயப்படுத்தி ஆள வல்லனாயின், ஆண்டுகள் பல செல்லினும் அவனது உடல் முதுமை எய்தாது, பளிங்குபோல அழகிதாய் இளமை யுற்று விளங்கும். அந்நிலையில் அவனது உணர்வு தெளிவு பெறுதற்கு ஞான குருவின் அருளைப் பெறுவானாயின், அவன் சாந்தி, சாந்தி யதீத கலைகளில் உள்ள புவனங்களை அடையும் அபர முத்தி நிலைகளை அடைவான்.

குறிப்புரை :

எனவே, `யோக முதிர்ச்சி, ஞானத்தின் பயனை எளிதில் தரும்` என்றவாறாம். உடல் நெடுநாள் நிற்றற்குப் பயன், பிறிது பிறவி வேண்டாது, எடுத்த பிறவியிலே ஞானத்தைப் பெறுதலாம். இவ் வாறன்றி, அணிமாதி அட்ட சித்திகளையும், பிறவற்றையுமே யோகத் தின் பயனாகக் கொள்வோர், உபாய யோகிகளேயன்றி, உண்மை யோகிகள் அல்லர்; அவர்க்கு வினையும், அதன் விளைவாகிய பிறப்பும் நீங்கா என்க.
`யோக சாக்கிரம், யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம்` என்னும் யோகாவத்தை ஐந்தனுள் இயமம் முதல் பிராணாயாமம் ஈறாக உள்ளவை யோக சாக்கிரம். பிரத்தி யாகாரம் முதலாக உள்ள நான்கும் முறையே யோக சொப்பனம் முதலிய நான்குமாம். ஆகவே, `யோக சாக்கிரத்தின் முதிர்வாகிய பிரணாயாமம் கைவந்தோர் ஏனைய நான்கையும் அடைதல் தப்பாது` என்பது பற்றி இதனையே யோக முடிவுபோல வைத்துக் கூறுதல் வழக்கு. அம் முறையே பற்றி நாயனாரும் ஈண்டே யோகத்தின் பயனைக் குறித்தருளினார். `பழுக்கினும்` என்றது, `ஆண்டளவையால் முதுமை பெறினும்` என்றவாறு. `பழுக்கினும், காயம் பளிங்கொத்துப் பிஞ்சாம்` என மாறிக் கூட்டுக. `முதிரினும்` என்னாது ``பழுக்கிலும்`` என்றதனால், `முதுமை வந்தபின் இது செய்யினும் அது நீங்கும்` என்பது கொள்க. குரு, ஞான குரு ஆதல், யோகிகட்கு ஏனைக் குரு வேண்டாமை பற்றி அறியப்படும். ``வளி, வெளி`` என்பவை சாந்தி, சாந்தியதீத கலைகளைக் குறித்து நின்றன. இவ்வாறன்றி, வாயுத் தம்பனமும், ஆகாயத் தம்பனமும் வல்லராதற்கு ஞான குரு வேண்டாமை அறிக. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், பிரணாயாமம் யோகத்தின் சிறப்புறுப்பாய்ப் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

எந்த ஆசனத்தில் இருந்து பிராணாயாமம் செய்யினும், பூரகத்தைச் செய்தல் இடைநாடி வழியாகவே யாம். அவ்வாறு செய்தலால், உடலுக்கு ஊறு ஒன்றும் உண்டாகாது. அந்த ஆசனத்திலே பூரகம், கும்பகம், இரேசகம் என்பவற்றை மேற்கூறிய வாறு செய்யச் சங்கநாதம் முதலிய ஓசைகளை உள்ளே கேட்கும் நிலைமை உண்டாகும். அஃது உண்டாகப் பெற்றவன் பின்னர் யோகருள் தலைவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

``எங்கு`` என்னும் இடப்பெயர் இங்கு யோகா சனத்தைக் குறித்தது. பூரி, முதனிலைத் தொழிற்பெயர். இங்கும், `பூரித்தல் இடமூக்கு வழியாக` எனவே, `இரேசித்தல் வலமூக்கு வழியாக` என்பதும் கூறியதாயிற்று. இவ்வாறு வலியுறுத்து ஓதியதனால், ``மூக்குத் துளை இரண்டாகப் படைக்கப்பட்டது பூரக இரேசகங்களை இவ்வாறு செய்தற் பொருட்டே`` என்பது விளங்கும். விளங்கவே, வாய்வழியாக அவற்றைச் செய்தல் கூடாமையும் பெறப் படும். `அது` என்றது பிராண வாயுவை. பிடித்தல், பூரித்தல், விடுதல், இரேசித்தல், அளவும் - மேற்குறித்த உயரளவுகாறும். செல்ல - பிரணாயாமத்தில் பயில. சங்க நாதம் முதலிய தச நாதங்கள் (பத்து ஒலிகள்) இவை என்பது பின்னர்க் கூறப்படும்.
இதனால், `ஆசன வேறுபாட்டால் பிரணாயாம முறை வேறுபடுதல் இல்லை` என ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவை இடை நாடியால் உட்புகுத்திப் பூரிக்கும் கணக்கையும், பிங்கலை நாடியால் இரேசிக்கும் கணக்கையும் அறிந்து, அதனானே கும்பிக்கும் கணக்கையும் நன்கு அறிகின்றவர் இல்லை. அக்கணக்குகளை ஆசிரியன் அறிவுறுக்கும் யோக நூல் வழியாக மேற்கூறியவாறாக நன்கு உணர்பவர்கட்குக் கூற்றுவனை வெல்லும் பயன் அம்முறையிற் பயிலுதலேயாய் முடியும்.

குறிப்புரை :

இரு கால் - முதற் காற்று, (இடை நாடி வழியது) கடைக் காற்று (பிங்கலை வழியது) என்பன. இது தொகை நிரல்நிறை. ``பூரிக்கும்`` என்பதன்பின், `இரேசிக்கும்` என்பது எஞ்சி நின்றது. `பூரிக்கும், இரேசிக்கும், பிடிக்கும்` என்னும் எச்சங்கள், `கணக்கு` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``இரு கால்`` மேலே கூறப் பட்டமையின், பின்னர் ``காற்று`` என்றது இடைக்காற்றாதல் (நடுநாடி வழியது) விளங்கும். குறி - குறிக்கோள்; இலட்சியம். துணிவுபற்றி, வழியையே பயனாக அருளினார்.
இதனால், பிரணாயாமத்தைச் செம்மையாகச் செய்தலின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவை உடல் முழுதும் பரவுமாறு பூரகத்தையும், அந்த வாயுத் தூய்மையாயிருத்தற் பொருட்டு இரேசகத்தையும், நீண்ட வாழ்நாளையும், மிக்க ஆற்றலையும், பெறுதற் பொருட்டுக் கும்பகத்தையும் மேற்கூறிய முறையிற் செய்து பிராணவாயுவை வசப்படுத்தினால், இப்பிறப்பிற்றானே சிவபெரு மானது திருவருளைப் பெறலாம்.

குறிப்புரை :

``பாலாம்`` என்பதனை, ``பால்போல ஆகின்ற`` என விரிக்க. பால் தூய்மைக்கு உவமை. ``ஆம்`` என்ற பெயரெச்சம், ``இரேசகம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``இரேசகத்தால் உட் பதி வித்து`` என்றது, இரேசகம் இல்லாது ஒழியின் கும்பகம் தூய்மை யாகாது என்பதனைப் புலப்படுத்தி, இரேசகத்தின் இன்றியமை யாமையைக் குறித்தது. நெடுங்காலம் வாழ்தலால் `அமரர்` எனப்படும் தேவர் பலருள்ளும் வாழ்நாள் மிக்கவன் மாயோனாதலின், ``மாலாகி`` என்றது, நெடுங்காலம் வாழ்தலைக் குறித்தது. ``ஆகி`` என்னும் ஆக்கச்சொல் உவமை மேல் நின்றது. உலக காரணன் ஆகத்தக்க ஆற்ற லால் நான்முகனை உந்தி வழித்தோற்றுவித்தோனாதல்பற்றி, உந்தித் தானத்தில் கும்பகம் செய்து ஆற்றல் மிகுதற்கும் அவனையே உவமை யாகக் கூறினார். வாங்குதல் - வளைத்தல். ``இப்பிறப்பிலே`` என்பது ஆற்றலால் கொள்ளக்கிடந்தது. நெடுங்காலம் வாழ வேண்டுதற்குக் காரணம் கூறுவார், ``ஆலாலம் உண்டான் அருள்பெறலாமே`` என்றார்.
இதனால், பூரகம் முதலிய மூன்றின் பயன் வகுத்துணர்த்தப் பட்டது. கும்பகத் தானம் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. 

பொழிப்புரை :

பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். கும்பகத்தை ஓமத்தானமாகிய உந்தித் தானத்திற் செய்தலே முறையாம்.

குறிப்புரை :

`உண்மை` என்பது ``இவ்விரண்டு`` என்பதனோடும் இயையும். ``வாமத்தில் பூரித்து, பிங்கலைக்கண் இரேசித்து ஆக, இவ்விரண்டு உண்மை; ஓமத்தால் கும்பிக்க உண்மை`` என்க. ஆதல்- முடிதல். `இவ்விரண்டு` என்ற சுட்டு, பூரக இரேசகங்களைச் சுட்டிற்று. உண்மை - செம்மை. `ஓமம்` என்பது ஆகுபெயராய் அதற் குரிய இடத்தை உணர்த்திற்று. அகப் பூசையில் இருதயம் பூசைத் தானமாகவும், நாபி ஓமத்தானமாகவும், புருவ நடு தியானத் தானமாகவும் கொள்ளப்படுதல் அறிக. ``ஓமத்தால்`` என்பது உருபு மயக்கம். இதற்கு ``ஓம்`` என்னும் அம்மந்திரத்தால் எனவும் உரைப்பர். ``ஆக, கும்பிக்க`` என்ற எச்சங்கள். ``உண்மை` என்னும் குறிப்பு வினை கொண்டன. ``உண்மையது`` எனற்பாலதனை `உண்மை` என்றே கூறுதல் பிற்கால வழக்காயிற்று. ஆகவே, அப் பண்புச் சொல் பண்பிமேல் நின்றதாக உரைத்துக் கொள்ளப்படும். ``கும்பிக்க`` என்பதன்பின், ``அஃது`` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், மேல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது, எடுத்தோதி வலியுறுத்தப்பட்டது. முன்னவை இரண்டும் அனுவாதம்.

பண் :

பாடல் எண் : 11

இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே. 

பொழிப்புரை :

இறைவன் உயிரைக் குடிவைத்ததாகிய அந்த இல்லம் (உடம்பு) தளர்வுறா வண்ணம் வீணே போக்கப் படுவதாகிய பிராணவாயுவை அங்ஙனம் போகாதவாறு பிராணாயாமத்தால் பயன்படச் செய்யின் இறப்பு இல்லையாகும். (நீண்ட நாள் வாழலாம் என்பதாம்)

குறிப்புரை :

அவ்வீடு - அத்தன்மையதாகிய வீடு. எனவே, \\\"அஃதழியின் உயிர் தீங்கெய்தும்\\\" என்பதாம். புட்டி, வடசொல்; `நிறைவு\\\' என்பது பொருள். தச நாடிகளாவன, `இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, சங்குனி, வைரவன், குகுதை\\\' என்பன.
கொட்டி - கொட்டப்படுவது. இஃது யோகியரல்லாதாரது செயல் பற்றிக் கூறியது. பிராணன், மூக்கு வழியாக இயங்கும் காற்று. அபானன், எருவாய் வழியாக வெளிப்படும் காற்று. பிராணனை மூக்கு வழிப் புறப்படாது கும்பிக்கும்பொழுது, அஃது எருவாய்வழிப் புறப் பட முயலும். அதனை அடக்குதலையே, \\\"அபானனைக் கும்பித்தல்\\\" என்றார். எனவே, இயல்பாக வெளிச்செல்லும் அபானனைக் கும்பிக்கக் கூறினாரல்லர் என்க. \\\"அங்கு நட்டு இருக்க\\\" என மாற்றுக. அங்கு - உந்தித் தானத்தில். நடுதல் - நிலைபெறுத்தல். இக்கும் பகத்தால் முதுகெலும்பின் அடியில் உள்ள \\\"சுழுமுனை\\\" என்னும் நாடியுள் பிராணவாயுச் செல்வதாகும். அதனால் பல நலங்கள் விளையும். அது பற்றி \\\"நமன் இல்லை\\\" என்றார். \\\"நட்டம் இருக்க\\\" என்பது பாடம் அன்று.
இதனால், \\\"கும்பகம் ஓட்டைபோகாதவாறு காத்தல் வேண்டும்\\\" என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. 

பொழிப்புரை :

வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.

குறிப்புரை :

\\\"புறப்பட்டுப் போகான்\\\" என்றது `தியானம் சலியாது\\\' என்றவாறாம். எனவே, \\\"இதுவே பிராணாயாமமாகிய பேருழைப் பிற்குச் சிறந்த பயன்\\\" என்பது போந்தது.
இதனால், பிராணாயாமம் மேல் வரும் யோக உறுப்புக்கட்கு இன்றியமையாச் சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே. 

பொழிப்புரை :

ஆடரங்கு ஒன்றை அமைத்து, அதனுள் ஆடப் புகுந்த மங்கையர் இருவர் தாங்கள் ஆடும்பொழுது பன்னிரண்டங்குல தூரம் முன்னோக்கிச் செல்கின்றனர்; ஆயினும், பின்னோக்கி வரும் பொழுது எட்டங்குல தூரமே வருகின்றனர். ஆகவே, அவர் ஒவ்வொரு முறையிலும் நாலங்குல தூரம் கூடத்தை விட்டு நீங்கு பவராகின்றனர். (இவ்வாறே அவர்களது ஆட்டம் நடைபெறு மாயின் எப்பொழுதாவது அவர்கள் அவ்வாடரங்கை முழுதும் விட்டு அப்பாற் போதலும், மீள அதன்கண் வாராமையும் உளவாதல் தப்பா தன்றோ!) ஆகையால், ஒவ்வொரு முறையும் அந்த நாலங்குல தூரமும் அவர்கள் மீண்டு வருவராயின், அக் கூடத்தின் அழகு என்றும் அழியா அழகாய் நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

\\\"ஓடுவர் பன்னிரண்டங்குலம்; மீளுவர் எண்விரல்\\\" என நிரல்நிரையாக்கிப் பின், \\\"நீடு உவர் இவ்வாற்றால் நால் விரல் கண்டிப்பர்; (அதனையும் அவர்) கூடிக்கொளின், கோலம் அஞ் செழுத்தாம்\\\" எனக் கூட்டி உரைக்க. நீடு உவர் - ஆட்டத்தில் நீடு நிற்கின்ற இவர். கண்டிப்பர் - துணிப்பர். மந்திரங்களே அழிவில்லன; அவற்றுள்ளும் அஞ்செழுத்து மந்திரம் அழிவிலதாதலின், அழியாமை குறித்தற்கு, அஞ்செழுத்தாக்கி அருளிச்செய்தார். அஞ்செழுத்து, திருவைந்தெழுத்தும், வியட்டிப் பிரணவமுமாம். இனி, ஓவியத்தின் மறுபெயராகிய `எழுத்து\\\' என்பதும், \\\"கோலம்\\\" என்பதுபோலவே ஆகுபெயராய் அழகினைக் குறித்தது எனக் கொண்டு, ஏகாரத்தை எதிர்மறை வினாவாக்கி, `அழியுமோ என்று அஞ்சப்படும் அழகாகுமோ! ஆகாது\\\' என உரைத்தலுமாம். இனி, இதற்கு \\\"அஞ்செழுத்துருவமாதற்கு ஏற்றதாகும்\\\" என உரைத்தலுமாம். ஆடல் மங்கையர் அப்பாற்போய், மீளவும் அதனுள் வாராதொழியின், ஆடரங்கு அழிந்தொழியும் என்பதாம்.
கூடம், உடம்பு, ஆடல் மங்கையர், இரு மூக்கு வழியாக இயங்குகின்ற பிராண வாயு, \\\"மக்களது மூச்சுக் காற்று இயல்பாக வெளிச் செல்லும் பொழுது பன்னிரண்டங்குல அளவு செல்லும்\\\" என்பதும், \\\"மீண்டு அஃது உட்புகும்பொழுது, முன் சென்ற அளவு புகாது, இயல்பாக எட்டங்குல அளவே புகும்\\\" என்பதும் யோகநூல் வரையறை. எனவே, \\\"வெளிச் சென்ற காற்றில் மூன்றில் இரண்டு பங்கே உட்புக, ஒருபங்கு இழப்பாகின்றது\\\" என்பதும், `அவ் இழப்பினாலே நாள்தோறும் வாழ்நாள் அளவு குறைந்துகொண்டே வருகின்றது\\\' என்பதும், `அவ்வாறாகாது தடுப்பது பிராணாயாமம் என்பதும்\\\' கருத்தாதல் அறிந்துகொள்ளப்படும்.
இதனால், பிரணாயாமத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே. 

பொழிப்புரை :

பன்னிரு முழ உயரமுள்ள யானை ஒன்று பகலும், இரவுமாய் மாறிவரும் காலச் சுழலில் அகப்பட்டுள்ளது. அஃது அவ்வாறிருத்தலை அதன் பாகன் தனது பேதைமையால் அறிந்தானில்லை. அதனை அவன் அறிவானாயின், அந்த யானை அச் சுழலைக் கடந்து நின்று, அவனுக்கு உதவுவதாகும்.

குறிப்புரை :

ஆனை, மூச்சுக் காற்று. வசப்படுத்துதற்கு அருமை நோக்கி, அதனை யானையாக அருளிச்செய்தார். `சிறந்த யானை ஏழுயர் யானை\\\' என்பது யானை நூல் மரபு. அதனோடொப்ப, `பன்னிரண்டுயர்ந்த யானை\\\' என்றார். `முழம்\\\' எனவும், `உயர்ந்தது\\\' எனவும் கூறாது, பொதுமையில் நயம்பட `பன்னிரண்டு\\\' என்றது, மேல், `அங்குலம்\\\' என்றதனோடும், \\\"முன்னோக்கி ஓடும்\\\" எனக் கூறியவற்றோடும் மாறுகொள்ளாமைப் பொருட்டு. \\\"பகல் இரவு\\\" என்றது, பகல், இரவு, நாள், பக்கம், திங்கள், யாண்டு எனப் பலவாற்றாற் காலம் கழிதலைக் குறித்தவாறு. `பிராணாயாமம் செய்யின், அங்ஙனம் கழிதலாற் கெடுவதொன்றில்லை\\\' என்பதாம். பாகன் - உயிர்.
இதனால், `பிராணாயாமத்தில் மனவெழுச்சி செல்லாமை அறியாமையினாலாம்\\\' என்பது கூறப்பட்டது.
`பிராணாயாமத்துள் பூரகம், கும்பகம், இரேசகம் மூன்றும் தனித்தனியானவை அல்ல; மூன்றும் யாண்டும் கூடி நிற்பனவே; அவற்றுள் \\\"பூரகம், கும்பகம், இரேசகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது இரேசகம். \\\"பூரகம், இரேசகம், கும்பகம் மறித்தும் பூரகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது பூரகம். \\\"பூரகம், இரேசகம், கும்பகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது கும்பகம். எனவே, இவை இறுதியில் நிகழ்வனவற்றால் பூரகம் முதலிய பெயர்களைப் பெற்றன\\\' எனக்கொண்டு, அவ்வாறே, \\\"ஏறுதல் பூரகம், மேல்கீழ் நடுப்பக்கம், வாமத்தில் ஈரெட்டு\\\" என்னும் திரு மந்திரங்களை முறையே `இரேசகம், பூரகம், கும்பகம்\\\' என்பவற்றைக் கூறுவனவாக அரசஞ் சண்முகனார் தமது பாயிர விருத்தி (பக். 45,46) யுள் எழுதியுள்ளார். இன்னும் அவர் பிராணாயாமம் `இம்மூன்றல்லாது, `நிலை\\\' என்ற நான்காவதும் உடையது\\\' எனக் கொண்டு, \\\"இட்டதவ் வீடு கூடம் எடுத்து, பன்னிரண் டானைக்கு\\\" என்னும் திருமந்திரங்கள் அதனையே கூறுகின்றன என்கின்றார். ஆயினும், \\\"நிலை\\\" என்பதைக் குறிக்கும் வடமொழிப் பெயர் இது என்பதனை அவர் கூறவில்லை. `தாபித்தல்\\\' என்ற ஒருசொல் திருமந்திரத்திற் காணப்படுகின்றது; அதனையே கருதினாரோ, என்னவோ! இனி, கும்பகம் என்பது காற்றை உள்ளே நிறுத்துதலன்று; வெளியே நிறுத்துதல் என்கின்றார் விவேகானந்த அடிகள். இவையெல்லாம் முன்னை மரபிற்கு வேறானவையாய் உள்ளன.

பண் :

பாடல் எண் : 1

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

பொழிப்புரை :

மனத்தை அகநோக்கிலே காணத்தக்க ஆதார நிலைகளைக் கண்டு கண்டு நிற்குமாறு அடக்கினால், அங்குத்தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் பழைய வேதங்கள் எல்லாம் காண விரும்பிப் பண்டு தொட்டு எங்கும் சென்று தேடியும் காணாத சிவனை இன்றே, இவ்விடத்தே கண்டு, அமைதி யோடு இருத்தலும் கூடும்.

குறிப்புரை :

`கருத்தினை உள்ளே கண்டு கண்டு உறவாங்கிடின்` என மாறிக் கூட்டுக. காணுதல், கொள்ளுதல். இவற்றிற்குச் செயப்படு பொருள்கள் வருவிக்கப்பட்டன. ஆதார நிலைகள் இனிக் கூறப்படும். ``குணம்`` என்பது, ``கோளில் பொறியிற் குணமிலவே`` (குறள், 9) என்பதிற் போல, `பயன்` எனப் பொருள் தந்தது, தேடி - தேடப்பட்டவன்.
இதனால், பிரத்தியாகாரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 

பொழிப்புரை :

உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.

குறிப்புரை :

இதில் குறிக்கப்பட்ட இடம் `மூலம்` (அடிநிலை) எனப்படும். இது முதல் ஆதாரம், இஃது எருவாயுமன்று; கருவாயு மன்று; இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் என்பது பின்னர் இனிது விளங்கும். தாபித்தல் நிலைபெற வைத்தல். அவ்வாறு வைப் பதனையே ``மந்திரம்`` என்றாராகலின், ``தாபிக்கும்`` என்ற பெய ரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``மந்திரம்`` என்றது, `இரகசியம்` என்னும் அளவாய் நின்றது. இனி, `மந்திரம்` என்றே பொருள் உரைப்பின், ``அறிகிலர்`` எனப் பிறரை இகழ்கின்ற நாயனார், தம் மாணாக்கர்க்கு அதனை அறிவியாது வாளாபோதல் அடாதாம். அன்றியும், இஃதொன்றற்கே யன்றி ஏனைப் பலவற்றிற்கும் மந்திரம் உண்மையின் அவ்விடங்களிலும் அவற்றைக் கூறல் வேண்டும்; அவ்வாறு கூறிற்றிலர். இனி, மந்திரமே யன்றி அதிதேவர், அக்கரம், அடையாளம் முதலாக மற்றும் பல உள ஆகலின், அவற்றையும் குறியாது போதல் குன்றக் கூறலாம். அங்ஙனமாயின், அவையும் எடுத்தோதற் பாலனவாகலின் அவற்றை அவ்வாறு ஓதாதுபோதல் என்னை எனின், அவையெல்லாம் யோகத்துட் கிரியையேயாய், நூல்கள் தோறும், மரபு தோறும் வேறு வேறாகக் கொள்ளப்படும் வழி பாட்டு முறைகளேயாதலால், சிவநெறியாளர் அனைவர்க்கும் பொதுப் பட அருளிச் செய்யும் இந்நூலூல் அவற்றுட் பொதுவாவன சிலவற்றை யன்றி ஏனையவற்றை வரையறுத்தோதுதல் ஆகாமையின், ``அவற்றை அவரவர் தம் தம் வாய்ப்பிற்கு ஏற்பப் பெற்றுக் கடைப்பிடிக்க`` என்னும் கருத்தால் வாளா போகின்றார்; ஆதலின், அது நாயனார்க்குக் குற்றமாதல் எங்ஙனம் என்க. சைவாகமங் களுள்ளும் இவற்றுட் சிலவற்றை வேறு வேறாகக் கூறப்படுதற்கும் காரணம், `இவை யெல்லாம் சில வழிபாட்டு முறையே`` என்னும் கருத்தினாலேயாம்.
யோகமும், மன ஒருமைக்கும், ஆன்ம பரிபக்குவத்திற்கும் உரிய ஒரு சாதனமேயன்றிப் பொருளியல்பை உள்ளவாறுணரும் தத்துவ ஞானம் (மெய்யுணர்வு) அன்று` என்பது உணரமாட்டாதார், யோகத்தையே, ``ஞானம்`` என மயங்கி, ஒரு நெறியையே பற்றிப் பிற வற்றை இகழ்வர், இங்கு யோகத்தை உணர்த்தும் நாயனார், பின்னர் ஞானத்தையே முடிவாக உணர்த்துதல் காண்க.
இவ்வாறாயினும், இவ்வழிபாட்டு முறைகளுள் சிலவற்றை இவ்வதிகாரத்திறுதியில் சிறிது காண்போம். பிற அறங்களினும், பிற தெய்வ வழிபாட்டினும், சிவதன்மமும் சிவ வழிபாடும் வேறாதல் போலப் பிற யோகங்களினும் சிவயோகம் வேறு, சரியை முதலிய நான்கனுள் மூன்றாவதாகிய யோகம் சிவயோகமே என்பது உணர்க. முதல் மூன்று அடிகளிலும் வடவெழுத்துப் பகரம் தமிழில் வகரமாய்த் திரிந்தது.
இதனால், பிரத்தியாகாரத்தில், `மூலாதாரம்` என்னும் முதல் ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. 

பொழிப்புரை :

எருவாய்க்கு இருவிரற்கிடைமேலாகவும், வெளியே தோன்றி நின்று கருவைப் பயக்கும் கருவாய்க்கு இருவிரற்கிடை கீழாகவும் நிற்கின்ற வட்ட வடிவான குண்டலி சத்தியுள் தோன்றுகின்ற செவ்வொளியின் இடம், உந்திக்கு நான்கு விரற்கிடை கீழே உள்ளது.

குறிப்புரை :

இங்கு``மூலம்`` என்றது எருவாயை. எனவே, இஃது ஆதாரங்களுள் முதலாவதாகிய மூலாதாரத்தினை இனிது விளங்கக் கூறியதாயிற்று. ஞாலம் - பூமி; இடம். இதில் `அத்து` வேண்டாவழிச் சாரியை, ``குண்டலி`` எனப்படுவது சுத்த மாயையில் தோன்றும் எழுத் தோசையாகிய நாதமே. இதற்கு வட்டமே வடிவாகக் கொள்ளப்படு தலின், ``குண்டலி`` எனப் பெயர் பெற்றது. ``கோலித்த`` என்றதும் இதன் வடிவைக் குறித்ததேயாம். ``வட்டமாய் வளைந்து நிற்பது`` என்பது பற்றி, இது பாம்பாக வைத்துப் பாவிக்கப்படுகின்றது. இது பற்றியே உலகத்துப் பாம்பையும் வழிபாட்டிற்கு உரியதாகக் கருதும் வழக்கம் உளதாயிற்று. உண்மையாகச் செய்யும் வழிபாடு யாதா யினும், அதற்குப் பயன் தருபவன் சிவபெருமான் என்பதை நினைவு கூர்க.
``குண்டலி எனப்படும் பாம்பு ஐந்து தலைகளை உடையது`` என்றல், வாக்குகள் சுத்த மாயையின் பஞ்ச கலைகளில் விருத்திப் பட்டு நிற்றலைக் குறிப்பது. சிவாலயங்களில் சிவலிங்கத்திருமேனிக்கு ஐந்து தலைப்பாம்பைக் கவசமாகச் சாத்தி வழிபடுதலும் சிவபெருமான் தனது சத்தி நிவிர்த்தி முதலிய ஐந்தாகிச் சுத்தமாயையின் ஐந்து கலை களிலும் நிற்க, அவ்விடங்கள் எல்லாவற்றிலும் சிவன் நிற்றலையே குறிக்கும்.
மந்திரங்கள் அனைத்தும் நால்வகை வாக்கு வடிவமாகிய சுத்த மாயையின் காரியங்களே. அக் கருத்து விளங்குதற் பொருட்டு, `அனைத்து மந்திரங்கட்கும் மூலமாகிய ஓங்காரமே குண்டலி சத்தி`` என்பர். நால்வகை வாக்கினாலேயே யாவர்க்கும் பொருளுணர்வு உண்டாகின்றது. அவ்வுணர்வு ஆணவத்தின் சார்பால் உலகப் பொருள்களையே உணர்ந்து நிற்குங்காறும் ``அறிவு`` எனப்படாது ``அறியாமை`` என்றே சொல்லப்படும். அதனால், உலகர் எல்லாரிடத்தும் உள்ள குண்டலி சத்தியாகிய பாம்பு, கண்ணை விழியாது உறங்கிக் கிடப்பதாகின்றது.
உலக நடையிலும் அறிவு புருவ நடுவாகிய மேலிடத்திலும், அறியாமை மூலாதாரமாகிய கீழிடத்திலும் உள்ளன என்பதால், ``குண்டலிப் பாம்பு தனது அறிவுக்கு நிலைக்களமாகிய தலையை அறியாமைக்கு இடமாகிய மூலாதாரத்திலும், அறிவுக்கு நிலைக் களமாகாத வாலை அறிவுக்கு இடமாகிய நெற்றியிலும் வைத்துத் தலைகீழாகக் கிடந்து உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது`` எனவும், ``அர ணியில் அடங்கியுள்ள அக்கினி, கடைந்தபொழுது எரிந்து சுடுதல் போல, மூலாதாரத்தில் அடங்கியுள்ள அக்கினி, பிராணாயாம பிரத்தி யாகாரங்களால் மூண்டெழுந்து தாக்க, அக் குண்டலிப் பாம்பு கண் விழித்து எழுந்து தலைமேலாகவும், வால் கீழாகவும் சுழன்று, இயற்கை நிலையில் நிற்கும்`` எனவும் யோக நூல்கள் கூறும். இவற்றால் எல்லாம் பெறப்படுவது, ``யோக நெறியிற் பழகினால் உயிரினது உணர்வு புறப் பொருள்களாகிய உலகத்தைப் பற்றி நிற்றலை ஒழிந்து, உயிர்க் குயிராய் நிற்கின்ற இறைவனை உள்ளுணர்வாற் பற்றும்`` என்பதே. அதற்குச் சிறந்த துணையாவன பிரணவம் முதலிய மந்திரங்களும், பாவனைகளும், மனத்தால் அகத்தே செய்யும் வழிபாடுகளுமாகும். அவ்வழிபாடுகட்கு முதலாய் நிற்கும் திருமேனிகள் முன்பு உருவத் திருமேனியாய் நின்று, பின்பு அருவுருவத் திருமேனியாய், முடிவில் அருவத்திருமேனியாகும் என்க.
இதனுள்,``குண்டலியுள் எழும் செஞ்சுடர்`` என்றது, இறைவனது அருவுருவத் திருமேனியை, இது புறத்தே இலிங்கமாக வணங்கப்படுதல் போல, அகத்தே யோகத்தில் பேரொளிப் பிழம்பாகக் கொண்டு தியானிக்கப்படும். அதன் விளக்கம் எல்லா ஆதாரங்களிலும் நிறைந்து நிற்பதாயினும், இங்குக் குறிக்கப்பட்ட இடமே அஃது இருக்கும் இடம் என்பது இதனால் பெறப்பட்டது. இதுபற்றியே இவ்விடம் ``சுவாதிட்டானம்`` எனப் பெயர் பெற்றது. ``தனது இடம் `` என்பது இப்பெயரின் சொற்பொருள். தான், உள்ளெழும் சோதி. சோதியின் இயல்பு கீழிருந்து மேல் நோக்கி எழுவதாகலின், பிரத்தியாகாரப் பயிற்சியால் இது மேல் நோக்கி வளர்ந்து காட்டும். மூலாதாரம் குண்டலிக்கு இடமாயினமையின், அதற்கு மேலுள்ள இதுவே இச் சோதிக்கு இடமாயிற்று. இஃது இரண்டாவது ஆதாரம். இதன் இயல்பு கூறவே, ``மனத்தை மூலாதாரத்தில் நிறுத்திப் பயின்றபின், இவ்விடத்து நிறுத்திப் பயில்க`` என்றதாயிற்று.
இதனால், ``சுவாதிட்டானம்`` என்னும் இரண்டாவது ஆதார நிலை கூறப்பட்டது.
மூன்றாவது ஆதாரம் ``மணிபூரகம்`` என்பது; இஃது உந்தித்தானமே, ``மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்க`` என மேற் கூறியதனானே இதுவும் ஓர் ஆதாரமாதல் அறியப்படுதலின், இவ் விடத்தும் மனத்தை நிறுத்துதல் உய்த்துணர்வகையால் பெறப்படுதல் பற்றி எடுத்தோதாராயினார், வாயுவைக் கும்பிக்கும் சிறந்த இடமாதல் பற்றி, ``மணிபூரகம்`` எனப் பெயர் பெற்றது.

பண் :

பாடல் எண் : 4

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.

பொழிப்புரை :

மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடை கீழாக உள்ள இடத்தில் நீ மனத்தை நிறுத்தித் தியானிக்க வல்லையாயின், அட்டமா சித்திகளைத் தரும் சித்தியோகம் தானே வந்து உன்னை அடையும், உடம்பிற்கும் அழிவு இல்லையாகும்.

குறிப்புரை :

மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடைக்கீழ் உள்ளது இருதயத் தானம், இஃது `அனாகதம்` எனப்படும்; `வரவற்றது` என்பது இப் பெயரின் பொருள். மனத்தின் இடம் இதுவே` என்பது கருத்து. `இவ் வளவிலே சிவயோகமல்லாத பிற யோகங்கள் கைவரும்` என்பதையே பின்னிரண்டடிகள் உணர்த்தின. அட்டமாசித்திகளைப் பயனாக உடைய யோகம் `ஹட யோகம்` எனவும், உடம்பு நரை திரை மூப்பு இன்றி நெடுங்காலம் நிற்றலைப் பயனாக உடைய யோகம் `ராஜயோகம்` எனவும் சொல்லப்படும். இவையெல்லாம் ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றி, அதற்குத் தடையாவனவுமாம்; ஆதலின், ஞானத்தை விரும்புவோர் இவற்றை விரும்புதல் இல்லை. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்து எதுகை.
இதனால், `அனாகதம்` என்னும் நான்காவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே. 

பொழிப்புரை :

`சுவாதிட்டானத்தில் உள்ளது` என மேலே சொல்லப் பட்ட பேரொளி, உங்களுக்குக் கீற்றுப்போன்ற விளக்கொளியாகப் புலப்படுமாயின், `அப்பொழுதே பேரின்பம் கிடைத்து விட்டது` எனக்கொண்டு, அவ்வொளியை நோக்குதலையே குறியாகக் கொள்ளுங்கள். இருதயத்திற்கு அடுத்ததானமாய் விளங்குகின்ற கண்டத்தில் (மிடற்றில்) நிலைத்துள்ளதாகிய அவ்வொளியைத் தலைப் பட்டால், அதன் பயனாகச் சொல்லப்படுவது, அதுகாறும் கண்டறியாத ஒரு புதிய இன்ப அனுபவமாம்.

குறிப்புரை :

இங்ஙனங் கூறவே, `ஞான நாட்டம் உடையோரே முற்கூறிய நிலையின் மேலும் முயன்று இவ்வொளியைக் காண்பர்` என்பதும், `அந்த நாட்டம் இல்லாதோர் முற்கூறிய நிலையோடே நின் றொழிவர்` என்பதும் பெறப்பட்டன. கண்டம் `விசுத்தி` எனப்படும். `மிக்க தூய்மை` என்பது இதன் பொருள். ஞான நெறியிற், செல்லும் முதல் இடமாதல் பற்றி இப்பெயர் பெற்றது. `நிலவொளி` வினைத் தொகை. ``ஆம் அதுவே`` என்பதில் `அது` என்பது எஞ்சிநின்றது.
இதனால், `விசுத்தி` என்னும் ஐந்தாவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

பொழிப்புரை :

(மாணவனே! பிரத்தியாகாரத்தில் நீ விசுத்திக்கு மேலும் செல்ல விரும்புவையாயின், கும்பகத்தால் நின்ற வாயு கீழே போகாமல்) எருவாய்ப் புழையை இறுக அடைத்து, (அவ் வாயு மேல் அண்ணத்தில் உள்ள துளை வழியாக மூக்குத் துளையை அடைந்து புறப்படுமாறு) மனத்தை அவ் அண்ணத்தின் துளையிடத்தே வைத்துப் புருவ நடுவில் நில் - அந்நிலையில் (அக்காற்று, கண் காதுகள் வழியாகவும் பரவிப் புறப்படும் ஆதலின்), கண்களை இமையும் கொட்டாமல் விழித்திரு. இதுவே நீ காலத்தை வெல்லும் முறை.

குறிப்புரை :

தந்துரைத்தன எல்லாம் இசையெச்சங்கள், புருவ நடு வாகிய இடம், `ஆஞ்ஞை` (ஆக்ஞை) என்னும் பெயருடையது. `அறிவிற்கு நிலைக்களம் என்பது இதன்பொருள். இஃது `இலாடம்` என்றும் சொல்லப்படும். இயல்பாக மூக்கின் வழியே உட்புகுந்து மீண்டும் மூக்கின்வழியே வெளிச் செல்லுகின்ற காற்றை அவ்வாறு செல்லாமல் தடுத்து நிறுத்தி, மூலாதாரத்தின் மேல் உள்ள முது கெலும்பின் அடிப்பாகத்திலிருந்து அம் முதுகெலும்பின் உள்ளால் செல்லும்படி செலுத்தினால், அது சிறிது சிறிதாக அவ்வழியே அண்ணத்தில் உள்ள துளையை அடையும். அதனை வாய்வழி வாராது தடுத்தால், உச்சியை அடைந்து மூக்கு வழியாக வெளிவரும். இந்த மாற்று வழியால் உடலுக்குப் பல நன்மைகள் உண்டாதலுடன், தொழிற்படாமலே மடிந்து கிடக்கின்ற அறிவுக் கருவிகள் பலவும் எழுச்சியுற்றுத் தொழிற்படும். அதனால், உண்மைகள் பல எளிதிற் புலனாகும். இம்முறையைத் தான், `இருவழியை (இடைகலை பிங்கலைகளை) அடைத்து, ஒரு வழியை (சுழுமுனையை)த் திறத்தல் வேண்டும்` என்று யோக நூல்கள் கூறுகின்றன. ஞானசம்பந்தரும்,
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்(து)
ஏனை வழிதிறந்(து) ஏத்துவார்க்(கு), இட
ரான கெடுப்பன அஞ்செ ழுத்துமே. -தி.3 ப.22 பா.3
என்றும்
``ஐம்புலன், நாலாம் அந்தக் காரணம்,
முக்குணம், இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை`` -தி.1 ப.128
என்றும் அருளிச் செய்தார். இவ்வாறு மூச்சை அடக்கும்பொழுது இருதயத் துடிப்பும் நிற்கலாம். ஆயினும் அஃது இருதயம் கெட் டொழிந்ததாகாது. சிறிதுபொழுது அதன் செயலை நிறுத்திவைத்து, மீட்டும் தொடங்குவதேயாகும். இது, கடிகாரத்தில் ஊசலியை - பெண்டுலத்தைச் சிறிதுபொழுது நிறுத்திவைத்து, மீட்டும் அசைய விடுவது போன்றது. இவ்வாறாகவே, இது வாழ்நாள் நீட்டிப்பதற்கு ஏதுவாதல் விளங்கும். எவ்வாறாயினும், இவையெல்லாம் முறையறிந்து செய்யாத வழிப் பெருந்தீங்கு விளைப்பனவாகவே முடியும்.
`மூச்சைப்பிடிப்பது` என்றால், முருட்டுத்தனமாக, விடாமலே பிடித்துக் கொண்டிருப்பது என்பது பொருளன்று; முறையறிந்து சிறிது சிறிதாகப் பயின்று, இயன்ற ஒரு கால எல்லை அளவேதான் பிடிக்கத்தக்கது. `சிரசாசனத்தில் இருப்பது` என்றால், ``எப்பொழுதும் அப்படியே இருப்பது`` என்பது பொருளாகாதது போலத்தான், பிராணாயாமம், பிரத்தியாகாரம் முதலிய யாவும். சிறிது நேரம் செய்த சிரசாசனம், பின் பல நேரத்திற்குப் பயன் தருதல் போலத்தான் பிராணாயாமம் முதலியவைகளும் பயன்தரும்.
மூக்கு வழியாக உட்புகுந்த காற்று மீளவும் அவ்வழியே திரும்பிப் போகாதவாறு தடுத்து, அதனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி உச்சியினின்றும் மூக்கு வழியாக மீளச் செய்கின்ற யோகிகள், தங்கள் உடலை விட்டுப் போய்விடக் கருதுவார்களாயின், உச்சியை அடைந்த காற்று மூக்கு வழியாகப் புறப்பட ஒட்டாமல் மூக்கைப் பிடிப்பர்; அதனால், அக்காற்று உச்சியில் மென்மையாக மூடப் பட்டிருக்கும் பெருந்துளையை (பிரமரந்திரத்தை)த் திறந்துகொண்டு வெளியேறிவிடும். அதனுடன் `உடல்` என்னும் இயந்திரம் செயலற்று வீழ்ந்துவிடும். இது பற்றற்ற நிலைமையில் வீடுபெறும் விருப்பத்தால் இறை நினைவுடன் செயப்படுதலின், பாவமாதல் இல்லை. யோகியர் பலர் இவ்வாற்றால் உடல் விடுத்துச் சென்றதை நூல்களால் அறிகின்றோம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பெருமிழலைக் குறும்ப நாயனாரது செயலாகும். அதனைச் சேக்கிழார் பின் வருமாறு எடுத்தோதுவார்.
மண்ணில் திகழுந் திருநாவ லூரில் வந்த வன்றொண்டர் நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன் என்(று)
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத்தால்
என்பார்.
நாலு கரணங் களும்ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏலவே முன் பயின்றநெறி எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாத மடைவார் கயிலை முன்னணைந்தார்.
(மறை மூலம் - மூல மறை; மூல மந்திரம்; திருவைந்தெழுத்து. `கபால நடுவை மூல மந்திரம் திறக்க` என்க)
காலத்தை வெல்லுதல் - காலத்தால் தடைப்படாது, முக்காலப் பொருளையும் ஒருங்குணர்தல். இப்பேரறிவு பிறக்கவே, கருவி கரணங்களின் வழிச்செல்லும் ஏகதேச அறிவில் விருப்பம் நிகழாது என்க. `மேலைத் துவாரத்தில்` என்னாது, ``மேலைத் துவாரத்தின் மேல்`` என்றதனால், `நிற்றல் புருவ நடுவில்` என்பது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

பொழிப்புரை :

சுவாதிட்டானத்தில் நின்று மூலாதாரத்திலும் ஊடுருவி விளங்குகின்ற பேரொளியைப் புருவ நடுவில் நின்று தியானிக்க வல்லவர்கட்கு, பிறப்பை நீக்குகின்ற ஞான மயனாகிய இறைவன் இரண்டற நின்று, அவரே தானாகி விளங்குவான்.

குறிப்புரை :

`பிரத்தியாகாரத்தை ஆஞ்ஞையில் செய்ய வல்ல வர்க்குச் சிவோகம் பாவனை கைவர, அவரே சிவமாய் நின்று. எல்லாம் செய்ய வல்லராவர்` என்றவாறு. முதலிரண்டடிகள், ``மூலத் திருவிரல்`` என்னும் திருமந்திரத்திற்போல மூலாதாரத்தை வரையறுத் துணர்த்தின. ``உரு விடும்`` என்ற ``விடு`` துணைவினை, ``கருவிடும்`` என்றதில் விடுதல், நீக்குதல்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், `ஆஞ்ஞை` என்னும் ஆறாவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

பொழிப்புரை :

மனத்தை ஒருக்குதலால், கருவி கரணங்களின் தொடக்கையும், ஆன்ம அறிவையும் வேறு பிரித்துக் காணுதலும், அவ்வாறு காணும் காட்சியையும் மெல்ல மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய இறைவனை உணர்தலும், அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடக்க முயலுதலும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.

குறிப்புரை :

இதனானே, `பிரத்தியாகாரமாவது இது, என்பது விளங்கும். ``ஒருக்கு`` பிறவினையாய முதனிலைத் தொழிற்பெயர். உபாதி - குற்றச் சார்பு; அது மாயேயத்தொகுதி, சடமாய அவையும் ஒருவாற்றால் ``சோதி`` எனப் படுமாகலின், சித்தாய ஆன்ம அறிவை, ``ஒண்சோதி`` என்றார். உணர்வு, தொழிற்பெயர். பிரிவும், உணர்வும் ஆகுபெயர்கள். கரைத்தல் - அழித்தல். கரைதல் - இளகுதல். ``உள`` என்பதன்பின், ``ஆதல்`` என்பது வருவிக்க. `பயன்` என்னாது, `பெருமை` என்றார். `சித்தி, காயகற்பம் முதலியன சிறந்த பயன்கள் அல்ல` என்றற்கு.
இதனால், பிரத்தியாகாரத்தின் சிறப்புப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொழிப்புரை :

பிராணாயாமத்தை அறியாத முன்னெல்லாம் சிறிதும் நின்று பயன் தராமல் வெளியே போய்விடுகின்ற பிராணவாயு, பிராணாயாமத்தில் பூரகத்தால் உள்ளே புகுதலும் அது முன்போலப் போய்விடாதவாறு யோகி கும்பகம் செய்தலில் உறுதி பெற்று நிற்றலால் அவ்வாயு உண்மையாக அவனோடு ஒத்து நிற்குமாயின், மனமும் அவனால் அடையப்பட்ட பொருளாய், அவன், வழிப்பட்டு நின்றதே யாம். அதனால், இறைவன் அவ் யோகியினது உள்ளத்தினின்றும் புறம் போகான்; (சிவனை மறக்கும் நிலை உண்டாகாது என்றபடி.)

குறிப்புரை :

``புக`` என்பது, ``நின்றால்`` என்பதனோடு முடிந்தது. ``திறப்பட`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாகலின், ``திறப்பட்டு`` எனத் திரிந்து நின்றது. இதற்கு, ``யோகி`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `நின்றது` என்பது, துணிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாய் வந்த கால வழுவமைதி.
இதனால், பிரத்தியாகாரத்தினது இன்றியமையாமை கூறப்பட்டது. இது கூறுவார், இதற்குப் பிராணாயாமம் இன்றியமை யாமையும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 10

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே. 

பொழிப்புரை :

பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

குறிப்புரை :

மனத்தைக் குறித்த இடத்தில் செல்லச் செய்தலாதல் பற்றிப் பிரத்தியாகாரத்தை, ``குறிப்பு`` என்றார். வெறுப்பு இருள் - வெறுக்கப்படுவதாகிய அறியாமை. ``நாடும்`` என்பது எச்சம். சிக்கென்று உணர்தல் - உறுதியாகப் பற்றுதல். `அறிவிப்பு` என்பது இடைக்குறைந்து நின்றது. `பிறருக்கு உணர்த்தும் தன்மை` என்றது, குருவாகும் தன்மையை, எந்நிலையிலும் குரு இறைவனேயாதல் பற்றி, ``அமரன்`` என்றார்.
இதனால், பிரத்தியாகாரத்தின் கன்ம வகை ஞானவகைகளின் பயன்கள் கூறப்பட்டன. `தாரணை, தியானம், சமாதி` என்பவற்றையும் இங்ஙனம் பகுத்துக் கூறுதல் காண்க.
உயிருக்கு மாயாபந்தத்தின் அடிநிலை, மாயாகாரியங்களை மறவாது உணர்ந்து நிற்கும் பொருள் உணர்வேயாம். இவ்வுணர்வு சொல்லால் உண்டாகலின், அவ்வுணர்வு சொல் வடிவிலே அமைவ தாகின்றது. ஆகவே, அப்பந்தத்தினின்றும் நீங்குதற்குச் சொற்களைச் சுட்டி உணர வேண்டியுள்ளது.
சொற்கள் அளவில்லனவாயினும், அச் சொற்களுக்கு மூலமாய் உள்ள எழுத்துக்கள் அளவிற்கு உட்பட்டன. ஆகவே, எழுத்துக்களைச் சுட்டி உணரின், அது சொற்களை உணர்வதே ஆகும். அதனால், அனைத்து எழுத்துக்களையும் மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங் களில் ஏற்ற பெற்றியில் வைத்துச் சிந்திக்கும் முறை யோக நூல்களில் கூறப்படுகின்றது.
`அனைத்து மொழிகளில் உள்ள எழுத்துக்களும் வடமொழி எழுத்துக்களில் அடங்கிக் கிடக்கின்றன` என்பது வேத மதங்களின் கொள்கை. அதனால், அவற்றை அவை, `மாத்துருகாட்சரம்` (எல்லா மொழிக்கும் மூலமாய் உள்ள எழுத்துக்கள்) எனக் கூறும்.
வட மொழியில் உள்ள எழுத்துக்கள் ஐம்பத்தொன்று, க்ஷகாரத்திற்குப் பின்பும் வேறு இரண்டெழுத்தைச் (:க:வ!) சேர்த்து `ஐம்பத்து மூன்று` என்று ஒருசிலர் (நன்னூலார் முதலியோர்) கூறுவர். பாணினியார் முதலாகப் பலரது கொள்கையும் `ஐம்பத்தோரெழுத்து` என்பதே, அவற்றுள்ளும் `லகாரம் ளகாரங்கட்கும் தம்முள் வேற்றுமை இல்லை` என்று கொண்டு, ளகாரத்தை நீக்கி, `ஐம்பதெழுத்து` என்றே கூறுவர். க்ஷகாரமே நீக்கற்பாலது என்பது மற்றொரு கொள்கை. `ளகாரம் க்ஷகாரம்` இரண்டையுமே நீக்கி, `நாற்பத்தொன்பது எழுத்து` என்றே கொள்ளவேண்டும் என்பது வேறொரு கொள்கை. `ஆல வாய்க் கடவுள் அகாரத்திற்கு உரியவனாய் நிற்க, ஆகாரம் முதலிய ஏனை நாற்பத்தெட்டிற்கு நாற்பத்தெண்மர் புலவர்களாக, கடைச்சங்கப் புலவர் கண்ணுதற் கடவுளை உள்ளிட்டு நாற்பத்தொன்பதின்ம ராயினர்` எனத் திருவிளையாடற் புராணம் கூறுவது, இறுதியிற் கூறிய கொள்கையை வலியுறுத்துவதாய் உள்ளது. எனினும், இந்நாயனார் (திருமூலர்) பலவிடத்தும் ஐம்பதெழுத்தே கூறுகின்றார்.
வடமொழிக்குச் சிறப்பெழுத்தாகக் கூறப்படுவன பல இருப்பினும், அதற்குச் சிறப்பிற் சிறப்பாக உள்ள எழுத்து முப்பத்து மூன்றாவது மெய் (ஹ என்னும்) எழுத்தே, உயிரெழுத்தில் இறுதியில் உள்ள ஒன்றும், இம் மெய்யின் சார்புடையதே, `அ` என்றால் பிறமொழி; `ஹ` என்றால் வடமொழி; `ஆம் ஊம், ஓம்` என்றால் பிற மொழி; `ஹாம், ஹூம், ஹோம்` என்றால் வடமொழி எனக்கொள்ளப் படுகின்றது. வடமொழியைத் `தெய்வமொழி` என்றும், அதனால் `அதுவே மந்திர மொழி` என்றும் சொல்வதற்குச் சிறந்த காரணம், இம்முப்பத்து முன்றாம் மெய்யைச் சிறப்பாக ஆள்வதேயாகும்.
தமிழில் ஆய்த எழுத்திற்கு இத்தன்மை உண்டு. பிற மொழி களிலும் இந்த மெய்யெழுத்து உண்டு. என்றாலும், அம்மொழிகள் இவ்வெழுத்திற்குத் தனிச் சிறப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, இந்த முப்பத்து மூன்றாவது மெய்யை யோகநூல்கள் ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞையில் (புருவ நடுவில்) வைத்துத் தியா னிக்கும்படி கூறுகின்றன, அதனோடு கணக்கில் கொள்ள வேண்டாத க்ஷகாரமும் அங்குச் சேர்க்கப்படுகின்றது. ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள விசுத்தியில் (கண்டத்தில்) உயிரெழுத்துப் பதினாறும், அதற்குக் கீழுள்ள நான்கு ஆதாரங்களிலும் கீழிருந்து முறையே ககாரம் முதலாக, `பன்னிரண்டு, பத்து, ஆறு, நான்கு` என்னும் அளவிலான மெய் யெழுத்துக்கள் ஸகாரம் ஈறாக வைத்துத் தியானித்தல் கூறப் படுகின்றது. ஆகவே, 2+16+12+10+6+4= 50 எழுத்துக்களும் 6 ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை பெறப்படுகின்றது. இதில் ளகாரம் சேர்க்கப்படாமை குறிப்பிடத் தக்கது. எழுத்துக்களின் முறைவைப்பில் முன்முன் உள்ளவை சிறப் புடையன; பின் பின் உள்ளவை சிறப்பில்லன.
ஒவ்வோர் எழுத்தும் தாமரை மலரின் ஒவ்வோர் இதழின் மேல் உள்ளனவாகத் தியானித்தல் வேண்டும் எனப்படுகின்றது. எனவே, மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களும் முறையே நான்கு, ஆறு, பத்து, பன்னிரண்டு, பதினாறு, இரண்டு` என்னும் இதழ்களை உடைய தாமரை மலர்களாகச் சொல்லப்படுகின்றன. இருதய கமலம் எட்டிதழ்த் தாமரையாகக் கூறப்படுதல் தத்துவக் கோட்பாடு பற்றியது; ஆகவே, அதற்கும், இதற்கும் தொடர்பில்லை. உணர்வு, தொடக்கம் முடிவு இரண்டிலும் குவிந்தே இருக்கும். இடைநிலையில் விரிந் திருக்கும்; தொடக்கத்தில் உள்ள குவிவிற்குக் காரணம் அறியாமையும், முடிவில் உள்ள குவிவிற்குக் காரணம் அடக்கமும் ஆகும். ஆகவே, கீழே உள்ள மூலாதாரக் கமலமும், மேலே உள்ள ஆஞ்ஞைக் கமலமும் குறைந்த இதழ்களைக் கொண்டவையாகவும், இடையில் உள்ள ஆதாரங்கள் மிக்க இதழ்களைக் கொண்டவையாகவும் குறிக்கப் படுகின்றன.
இனி, ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞை `விந்துத் தானம்` எனப்படுதலால், அதற்குக் கீழ் உள்ள விசுத்தி முதல் நான்கு ஆதாரங்கட்கு அதிதேவராய் அங்குள்ள கமல மலராகிய ஆசனத்தின் மேல் வீற்றிருக்கின்ற கடவுளர் முறையே, `சதாசிவர், மகேசுரர், உருத்திரர், திருமால்` என்பவராவர். இந்த நால்வரும் முறையே, `ஆகாயம், வாயு, தேயு, அப்பு` என்னும் பூதங்கட்கு அதிதேவர் ஆதலால், அப் பூதங்களுக்குரிய பீச மந்திரங்களாகிய `ஹம், யம், ரம், வம்` என்பன அத் தாமரை மலர்ப் பொகுட்டின்கண் வைத்து எண்ணப் படுகின்றன. இவற்றிற்கேற்ப மூலாதாரத்தில் பிருதிவிக்கு அதி தேவராகிய பிரமாவையும், அதற்குரிய பீசமாகிய `லம்` என்பதையுமே வைத்துத் தியானித்தல், வேண்டுமாயினும், மூலாதாரம் `குண்டலிக்கு இடம்` எனப்படுதலால், அதற்குரிய விநாயகரையும், பிரணவத் தையுமே அங்கு வைத்துத் தியானித்தல் சொல்லப்படுகின்றது.
இனி, மந்திரத்தை மட்டும் `லம்` என்பதாகவே வைத்துத் தியானித்தலும் காணப்படுகின்றது. ஆகவே, உலகில் கோயிலைப் பெறாத பிரம தேவர், ஆதாரங்களிலும் பிரமசாரியாராகிய விநாயகர் இடத்தில், அல்லது தமது தோற்றத்திற்கு முதலாகிய திருமாலிடத்தில் அடங்கி நிற்பவராகின்றார். இனி, சுவாதிட்டானம் முதலாகப் பிரமா முதலிய தேவர்களை வைத்து, சதாசிவரை ஆஞ்ஞையில் கொள் வாரும் உளர். சதாசிவரை விசுத்தியில் கொள்ளும் நிலையில் ஆஞ்ஞையில் சதாசிவருக்கு மேல் உள்ள சத்தியே தியானிக்கப் படுவாள். இவ்வாறெல்லாம் மனத்தை அகமுகப்படுத்தி நோக்க, புற நோக்குக் குறைந்து, அகநோக்கு மிகுவதாம் என்க. இத்துணையும் பிரத்தியாகாரம் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 1

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. 

பொழிப்புரை :

கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.

குறிப்புரை :

கீழ் - கீழ்மையான வாயில்; அவை ஐம்பொறிகள் கட்டுதல், இங்கு, ``தடுத்தல்`` என்னும் பொருளது. விலா எலும்பு, நாடிகள் முதலியவைகளைக் கட்டியுள்ளமையால், முதுகெலும்பைத் தந்திகள் முதலியவற்றை உடைய வீணைத் தண்டோடு உவமித்தல் நூல் வழக்கு. ``சிவபெருமான் திரிவிக்கிரமரது முதுகெலும்பை வீணை யாகக் கொண்டார்`` என்பது புராணம். ஆஞ்ஞை ஆகாயமாகச் சொல்லப்படுதலின், ``வெளி`` என்றார். நோக்கப்படும் பொருள் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் அமைதலின், அதனைக் கூறாராயினர். ``கண், செவி`` என்பவை பிற பொறிகளையும் தழுவி நின்ற உப லக்கணம். `என்று`, என்னும் எண்ணிடைச் சொல்லின்பின் `இவற்றை உடையராய்` என்பது வருவிக்க. இனி, `காணா கண் கேளா செவி` என முற்றுத் தொடராகப் பாடம் ஓதுதலுமாம். ``வாணாள் வழி அடைக்கும் வழி`` என்பதனை, ``வாழ்நாள் வழியடைக்குங் கல்`` (குறள், 38) என்னும் திருக்குறளோடு ஒப்பிட்டு நோக்குக. `பிறவாமைக்கு வழியாதல், ஞானத்தின் வழியாக` என்க.
இதனால், `தாரணையாவது இது` என்பதும், அதனது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

பொழிப்புரை :

மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.

குறிப்புரை :

நீங்களும் இவற்றைக் காண முயலுதலேநன்று என்பது குறிப்பெச்சம். `மலை` என்பதனை உயர்வு பற்றி, ``மலையார்`` என உயர்திணையாககிக் கூறினார். `மலை` என்பது` தலைமை பற்றி மேருவைக் குறித்தது. முதுகெலும்பை `வீணைத் தண்டு` என்பது போல, `சந்திரசூரியர்` எனப்படுகின்ற இடைநாடி பிங்கலை நாடிகளால் சூழப்பட்டுள்ளமைபற்றி, `மேருமலை` எனக் கூறலும் யோகநூல் வழக்கு. `அதன் தலை` என்பது, `புருவநடு. தலை` என்பவற்றை ஏற்ற பெற்றியாற் குறிக்கும். இங்கு அது புருவநடுவைக் குறித்தது. `வானீர்` என்பது சிலேடையாய் `ஆகாய கங்கை` (வான் நீர்) என்றும், `விந்து` எனப்படும் வெண்பால் - சுக்கிலம்` (வால் நீர்) என்றும் இரு பொருள் குறித்து, உருவக நயத்திற்கு இயைந்து நின்றது.
`கருவிற்கு வித்தாகிய வெண்பால், நெற்றியில் தோன்றிப் புருவநடுவில் உருப்பட்டு நிற்கின்றது` என்பதும், `அஃது இயற்கை யாக இடைநாடி பிங்கலைநாடிகள் வழியாகக் கீழ் இறங்கிச் சுவாதிட் டானத்தை அடைவதனாற்றான் பால் உணர்ச்சியாகிய இழி நிலை உண்டாகின்றது` என்பதும், `அவ் இழிநிலை எவ்வாற்றானும் உடற்குக் கேடுபயப்பதே` என்பதும், அதனை அவ்வாறு அவ் இரு நாடிகள் வழியாக இறங்காது, யோகசாதனையால் நடுநாடியாகி சுழு முனை வழியாக இறங்கச்செய்தால், `அஃது உடலுக்கு வலுவூட்டி, நரை திரை மூப்புப் பிணிகள் வாராமற் காக்கும் அமுதமாய்ச் சிறந்து நிற்கும்` என்பதும் யோகநூற் கொள்கைகள். அதுபற்றியே அவை இவ் வெண்பாலை, `அமுதம்` என்றே குறிப்பிடுதலுடன், அவற்றை நடுநாடிவழியாக ஏற்பதை, `பருகுதல்` என்றேயும் கூறுகின்றன.
சிறப்புமுதலாய காரணங்கள் பற்றி இவற்றையெல்லாம் ஆடவரை நோக்கியே அவை கூறுகின்றனவாயினும், பெண்டிர்க்கும் இவை ஒத்தன என்பதே கருத்து. எவ்வாறெனில், யாதொரு சாதனையும் பெண்டிரை விலக்கி, ஆடவர்க்கு மட்டுமேயாகக் கூறுதல் வேதமதங்களின் கருத்தன்று ஆதலின். சாதனங்களை மேற்கொள்ளும் முறைகளில் சிறிது மாறுபடுதல் கூடும்; அவ்வளவே வேற்றுமை. அதனால், `புருவநடு விந்துத்தானம்` என்பது பெண்டிர்க்கும் பொதுப்படக் கூறுவதேயாம். ஆயினும், அவர்கட்குப் பால் உணர்ச்சிக் காரணமாய நீர் மணிபூரகத்தை அடையும்பொழுதே கருப்பையிற் கலந்து செம்பாலாக (சோணிதமாக) மாறிப் பின் சுவாதிட்டானத்தை அடைவதாகும்.
``பாயும், நாடும்`` என்பன முற்றுக்கள். ``நெடுநாடி ஊடு போய்`` என்பதனை, ``கண்டேன்`` என்பதற்கு முன்வைத்து உரைக்க. புருவ நடு பிறைவடிவிற்று ஆதலாலும், அங்கு இறைவனது நடனம் உளதாதலாலும் அதனை ``சிலைஆர் பொது`` என்றார். இஃது உயிர்கட்கு அறிவைப் பயக்கும் பர நடனம் - அதிசூக்கும நடனம் ` என்பதை ஞான நூல்களை நோக்கி அறிக. இருதயத்தில் செய்யும் நடனம் சூக்கும நடனமேயாம். இருதயம் அருள்வெளி - சிற்றம்பலம். புருவ நடு ஆனந்த வெளி - பேரம் பலம். `சோதி திருநடம் ஆடும்` என மேலே கூட்டி, ``ஆடும்`` என்பதன்பின், இவற்றை` என்னும் சொல்லெச்சம் வருவித்துக் கொள்க.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

கருவை ஏற்றுக் குழவியாக மாற்றித் தருகின்ற பெண், மேல் மாடத்தில் எதிர்நோக்கி இருக்கின்றாள். அவளுடன் சேர வேண்டிய ஆடவனோ அடித் தலத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றான். அவனை நன்றாக விழித்தெழச் செய்து அப் பெண்டுடன் கூடப்பண்ணினால், நல்ல பாலகன் பிறப்பான்; இதற்கு என் குருவின்மேல் ஆணை.

குறிப்புரை :

மேலை நிலம், ஆஞ்ஞை. வேதகம் - இரசவாதம்; இங்கு, பாசஞான பசுஞானங்களைப் பதி ஞானமாக மாற்றுதல். பெண் பிள்ளை, திரோதான சத்தி. இவளது செயல் உயிரின் உணர்வைப் பக்குவப்படுத்துதலின், ``வேதகப் பெண்பிள்ளை`` என்றார். எழுகின்ற - எழுப்பினால் எழத்தக்க; இஃது எதிர் காலத்தில் நிகழ் காலம். `துயில்கின்ற` எனப் பாடம் ஓதுதலே சிறக்கும். மூர்த்தி, உறங்கிக் கிடக்கின்ற குண்டலியோடு சேர்ந்து அதுவேயாய், அறியாமையாயுள்ள உயிரின் உணர்வு. இஃது எழுந்து மேலுள்ள ஆதாரங்களையும் கடந்து ஆஞ்ஞையை அடைந்து, அங்குநின்று அறிவைப் பயக்கின்ற திரோதான சத்தியை உணருமாயின், அவ் வுணர்வு `யான், எனது` என்னும் பற்றுக்களினின்றும் நீங்கித் தூய்மை பெறுவதாகும். அதனையே ``பாலன்`` என்றார். ``பாலனும்`` என்ற சிறப்பும்மையால், `அப் பாலன், இம்மை மறுமை நலங்களுடன், வீட்டையுந் தரத்தக்கவன்` என உரைக்க. இனி ``மூர்த்தி`` என்பதற்கு, `விநாயகர்` என்றாயினும், `பிரமன்` என்றாயினும் பொருள் கொள்ளின், ``பெண்பிள்ளை`` என்றவளை வல்லபை, வாணி` என ஏற்ற பெற்றியான் உரைத்துக்கொள்க. இவ்விருவர்க்கும் பிள்ளை இல்லையாயினும் `பிறப்பான்` என்பதனை உம்மையால் உரைத்துக் கொள்க. இவ்வாறு பொருள் உரைப்பினும், கருத்து மேற்கூறியதே யாம். `ஆதல்` - உண்டாதல்.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே. 

பொழிப்புரை :

பூரக இரேசகம் செய்து கும்பிக்கப்பட்ட பிராணவாயு கீழ்ப்போகாதவாறு எருவாயை அடைத்து அதனால் போகாது நின்ற வாயுவை மூலாதாரம், சுவாதிட்டானம் முதலாக மேல் நோக்கிப் போகச்செய்து, ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள இடை ஆதாரங்கள் ஒவ்வொன்றிலும் மனத்தை நன்றாகப் பொருந்த வைத்து, நீர் மடையில் கொக்கு, தான் வேண்டுகின்ற மீன் வரும் வரையில் அதனையே குறிக்கொன்டு நோக்கிச் செயலின்றியிருத்தல் போல, அங்குக் கருதப்படுகின்ற கடவுளரால் அவ்வாதாரயோகம் கைவருமளவும் அவரை வழிபட்டிருப்பவர்கட்கு, யோகநிலை முற்றும் கைவரும் காலம் வரையில் இறவாமலே இருத்தலும் கூடும்.

குறிப்புரை :

`மடை வாயிற்கொக்கு`, ``கொக்கொக்க கூம்பும் பருவத்து`` (குறள், 490) ``இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 5) மடைத்தலையில் - ஓடுமீனோட உறுமீன் வருமளவும் - வாடியிருக்குமாம் கொக்கு`` (மூதுரை, 16) எனப் பலவிடத்தும் கூறப்படுதல் காண்க.
யோகம் கைவருதல், ஆதார யோகங்கள் ஆறும் பெற்று, அதற்குமேல் நிராதார யோகத்தை அடைந்து, அப்பால் மீதானத்தை உணர்ந்து நிற்றலாம். `அந்நிலை கைகூடுதற்கு நெடுங்காலம் செல்ல வேண்டியிருப்பினும், `அதுகாறும் உடல் அழியாது நிற்கும் நிலையும் தாரணையாலே உளதாகும்` என்பார், ``உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே`` என்றார். உம்மை, யோகம் கைவருதலைத் தழுவிநின்ற எச்ச உம்மை. முதல் மூன்று அடிகள் தாரணையைச் செய்யும்முறை கூறின. வந்தித்தலுக்குச் செயப்படுபொருளாகிய `கடவுளர்` என்பது சொல்லெச்சமாக வந்து இயைந்தது. `சிவயோகம் பயில்வார்க்கு இக் கடவுளர் சம்பு பட்சத்தவர்` எனவும், `பிறயோகம் பயில்வார்க்கு இவர் அணுபட்சத்தினர்` எனவும் உணர்க.
இதனால், தாரணை செய்யுமாறு கூறப்பட்டது. ஒரு கருத்துப் பற்றித் தாரணை வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதலும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.

பொழிப்புரை :

காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.

குறிப்புரை :

``அஃதாவது வாழ்நாள் கழியாது`` என்பதாம். இஃது ஒருவாறு முன்னே கூறப்பட்டதாயினும், துணிவு பிறத்தற்பொருட்டு இங்கும் இனிது விளங்கக் கூறினார். இவ்வாறு இன்றியமையாத இடங்களில் சிலவற்றைப் பின்னரும் இவ்வாறு வலியுறுத்தி அருளிச் செய்வார்.
இதனால், ``தாரணை, வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாம்`` என மேற்கூறியதற்கு ஏதுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே. 

பொழிப்புரை :

யாவரிடத்திலும் உள்ளமாகிய கருவூலத்தில் ஒரு பெருஞ்செல்வம் உள்ளது. ஆயினும், அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் அச்செல்வத்தை எய்தப் பெறார். அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராண வாயுவை அங்குக் கும்பகம் செய்து திறந்து கும்பித்த அவ்வாயுவை உள்ளே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக் கருவூலத்தின் புறத்தே மோதவிட்டு அல்லற்படுவர். கருவூலத்தைத் திறவாமலே அதிலுள்ள செல்வத்தைப் பெற முயலுபவன் அதனைப் பெறாது பாழுக்கு உழைப்பவனாதலே யன்றி, `அறிவிலி` என அறிவுடையாரால் இகழவும் படுவான்.

குறிப்புரை :

``வாய்திறவார்`` என்பது யோகியரல்லாத பலரையும் குறித்தது. ``மனம்`` என்றது அதற்கு இடமாகிய ஆதாரங்களை ``வாய் திறத்தல்`` என்பதனை ``உரையாடல்`` எனக் கொண்டு, அதற்கு இயையவும் உரை உரைப்பர். அவர், ``மதி`` என்பதனைச் சந்திர மண்டலமாகக் கொள்வர். ``வளியிட்டுப் பாய்ச்சுவர்`` என்பதற்கு, ``பிராணவாயுவைப் பாழ்படுத்துவர்`` என்னும் பொருள் ஏலாமை யாலும், பிறவாற்றாலும் அஃது உரையாகாமையறிக. ``கோயில்`` என்பது கடைக் குறையாயிற்று. ``கோய், செப்பு; சிமிழ்`` எனவும் கொள்வர்.
இதனால், தாரணையது இன்றியமையாச் சிறப்புக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.

பொழிப்புரை :

சுழுமுனை வழியை ஊடறுத்துச் செல்ல வல்ல தாகிய பிராணவாயுவைப் புறத்துப் போகாதவாறு தடுத்து அச்சுழு முனை வழியுட் பாய்ச்சினால் ஏழு பலகணிகளையும், `தலைவாயில், கடைவாயில்` என்னும் இரண்டு பெரு வாயில்களையும் உடைய பாழ் வீடு இன்பமாகக் கிடந்து உறங்கத் தக்க நல்ல பள்ளியறை யாய்விடும். அப்பொழுது அதில் ஆதாரங்களாகிய கட்டிலிற் கிடந்து பல காலம் இன்புற்றிருக்கலாம்.

குறிப்புரை :

முதலடியை இறுதியில் வைத்துரைக்க. இங்கு, ``பாய்ச்சுதல்`` என்பது ``புறப்படாப் பாய்ச்சுதல்`` என விளக்கிக் கூறப்பட்டமை காண்க. ஏழு சாலேகம், கண், காது, மூக்கு இவற்றின் ஆறு துளைகளுடன், சிறுநீர் வழித்துளை, தலைவாயில், வாய் கடை வாயில், எரு வாய். பாழி - பாழை உடையது. இத் துணை அமைப்புக்கள் இருந்தும் ஆன்மா அதனைத் தூய்மைசெய்து, விளக் கேற்றி வைத்து இன்பமாக வாழாமல் வாளா இருத்தலால், உடம்பை, ``பாழ் வீடு`` என்றார். ``இயமம், நியமம், பிராணாயாமம் என்ப வற்றால் அவ்வீடு தூய்மையும், விளக்கமும் செய்யப்பட்டால், தாரணையில் பல காலம் நலம் பெற்று வாழலாம்`` என்பார் ``பெரிய தோர் பள்ளியறை; ``வாழலுமாம்பலகாலம் என்றார். பிற வற்றை உரு வகம் செய்து, ஆதாரங்களை வாளா கூறினமையால், இது வியநிலை யுருவகம். ``இரண்டுவாசல் - ஏலுடைத்தா அமைத்தங் கேழு சாலேகம் பண்ணி`` (தி.4 ப.33 பா.4) ``பாழறை உனக்குப் பள்ளி யறையாக`` (தி.11 கழுமல) என்னுந் திருமொழிகளை இங்கு நினைவு கூர்க.
யோக நெறியில் நிற்பவர் உடம்பு ஓங்கி நிற்பதொரு கோபுரம் போல்வதும், ஆதாரங்கள் அக்கோபுரங்களில் உள்ள நிலைகள் போல்வனவும், மனம் அக்கோபுரத்தினைப்பற்றி ஏறுதற்குரிய கை கால் முதலிய உறுப்புப் போல்வனவும், பிராண வாயு அவ்வுறுப்புக் களுக்குப் பற்றுக் கோடாய் உதவும் நூலேணி போல்வதும் ஆகும். ஆகவே, கோபுரத்தின்மேல் ஏறிச் செல்பவர்க்கு நூலேணி இன்றியமை யாததுபோல, யோகிகட்குப் பிராணாயாமம் இன்றியமையாததாம், அதனால், ``யோகம்`` என்றாலே, பிறவற்றை எல்லாம் விடுத்து, ``மூச்சை அடக்குதல்`` என்றே பொதுவாகக் கொள்கின்றனர். நாயனார் ``போழ்கின்ற வாயுப் புறப்படாப் பாய்ச்சுறில்`` என இங்கும், இவ்வாறே பல விடத்தும் பிராணயாமத்தை எடுத்தோதிப் போதல், அதன் இன்றியமையாமை பற்றியேயாம் என்க.
இதனால், ``பிரணாயாம பிரத்தியாகாரங்களைப் பயின்ற வர்க்குத் தாரணைக்கண் சலியாது நிற்றல் அரிதன்று`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

பொழிப்புரை :

ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில் இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என் செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.

குறிப்புரை :

அஃதாவது, ``தாரணையைப் பெறுதலும் கூடும்`` என்பதாம். ``ஈரைந்து, ஐந்து`` என்பவை அதிகார இயைபால் வாயுக்களைக் குறித்து நின்றன. ``இரங்கி`` என்பது பெயர். இதன்பின் ``ஆவாய்``என்பது எஞ்சிநின்றது. ``குரங்கு, கோட்டை`` என்பது குறிப்புருவகங்கள்.
உடம்பின்கண் உள்ள வாயு, ``இயங்குவதும், நிற்பதும்`` என இருவகைத்தாம். ``நிற்பது`` என்றல், இயங்குவதை நோக்கியாம். அவற்றுள் இயங்கும் வாயு மூக்கு வழியாக வெளிச் செல்லின் `பிராணன்` என்றும், வாய் வழியாக வெளிச்செல்லின் `உதானன்` என்றும், எரு வாய் வழியாக வெளிச் செல்லின், `அபானன்` என்றும், உடம்பெங்கும் பரவும்பொழுது `சமானன்` என்றும், உணவுப் பையுள் நின்று உணவைச் செரிப்பிக்கும் பொழுது `வியானன்` என்றும் இவ்வாறு ஐந்தாகி நிற்கும். இனி நிற்கும் வாயுவும், தும்மல் இருமல்களாக வலிதிற் புறப்பட்டு வேண்டாப் பொருளைப் புறத்திடும் பொழுது `நாகன்` என்றும், கண்ணைப் பல திசைகளிலும் நோக்குமாறு இயக்கும்பொழுது `கூர்மன்` என்றும், சோம்பல் காரணமாகப் பிராணவாயுவை இயல்பு திரிந்து கொட்டாவி முதலியனவாக ஆக்கும்பொழுது `கிரிகரன்` என்றும், கண் இமைத்தல் வாயசைத்தல் முதலியவற்றைச் செய்யும்பொழுது `தேவ தத்தன்` என்றும், குருதியில் உளதாகும் நோய் காரணமாக உடலை வேறுபடுத்தி நிற்கும்பொழுது `தனஞ்சயன்` என்றும் இவ்வாறு ஐந்தாகும். ஆகப், பத்து வாயுக்களில் முதலாவதாகிய பிராணனே ஏனை இயங்கும் காற்று நான்கிற்கும் ஆற்றல் தருவது; இயங்கும் காற்றுக்கள் ஆற்றல் கெட்டவிடத்து, நிற்கும் காற்றும் தம் தொழிலைச் செய்யமாட்டா. ஆகவே ``நிரம்பிய ஈரைந்தில் ஐந்து போனால் என் செய்வை`` என்றார். பிராண வாயு இங்கு அதிகாரப்பட்டமையால், அதன் வழியவாகிய அனைத்தையும், ``இவை`` எனச் சுட்டினார்.
`பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன்` என்பவற்றை முறையே, `உயிர்வளி, எழுவளி, விழு வளி, நிறை வளி, அறு வளி,` எனவும், `நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பவற்றை முறையே, `தும்மு வளி, நோக்கு வளி, சோம்பு வளி, நுண் வளி, பரு வளி` எனவும் தமிழிற் கூறலாம்.
இதனால், யோகத்திற்குச் சிறந்ததாகிய பிராண வாயுவின் சிறப்புக் கூறுமுகத்தால், பிராணாயாமம் அதற்கு மேல் உள்ள யோகங்கட்கு இன்றியமையாமை கூறப்பட்டது.
(இதன் பின்னர், ``முன்னம் வந்தனர்`` என்னும் பாடல் இடைச் செருகலாய் உள்ளது.)

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.

பண் :

பாடல் எண் : 9

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. 

பொழிப்புரை :

தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.

குறிப்புரை :

அரித்த உடல் - பசி பிணி மூப்புக்களால் அரிக்கப்பட்ட உடம்பு. இவ்வாறு கூறியது, `உதிரம் முதலிய தாதுக்களால் ஆகிய தாத்துவ தூல தேகம்` என்பது விளங்குதற்கு. பொருத்த - ஓன்றாக்க; `ஒடுக்க` என்றபடி. உதிரம் முதலிய தாதுக் களாலான தேகம் ஐம்பூதங்களின் காரியமாகலின், அஃது ஐம் பூதங்களில் ஒடுங்கு வதாயிற்று. ஒடுக்குதல், இங்கு, `அவற்றின் காரியம்` என்று உணர்தல். சத்தாதி - சத்தம் முதலிய தன்மாத்திரைகள். தன்மாத்திரைகளின் காரியங்களே பூதங்களாதலின், அவை தன்மாத்திரைகளுள் ஒடுங்கு வனவாம். மனாதி ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணங்கள். சித்த ஆதி - சித்தமாகிய முதல்; சித்தமாயும், குண தத்து வமாயும் நிற்பது மூலப் பிரகிருதியேயாகலின், ``சித்தாதியிற் செல்ல`` என்றது, ``மூலப்பிரகிருதியில் ஒடுங்க`` என்றதாம். மனம் அகங் காரத்திலும், அகங்காரம் புத்தியிலும், புத்தி சித்தத் திலும் ஒடுங்குமாயினும், சித்தம் முடிவாக நிற்றல் பற்றி, ``மனாதி சித்தாதியில் செல்ல`` என்றார். தத்துவ ஒடுக்கங்களை இங்கு ஒருவாறு சிறிது கூறினாரன்றி, முற்றும் விரித்துக் கூறிற்றிலர், இஃது அதற்கு இடமன்மையில், ``பொருத்த, செல்ல`` என்பனபோல, `போத` எனச் செயதவனைச்சமாக ஓதாது, திரித்து ஓதினார்; முன்னின்ற எச்சங்கள் இரண்டும் எண்ணின் கண் வந்தமை தோன்றுதற்கு, `ஆன்மா, தத்துவங்கள் அனைத்தினும் நீங்கின் சிவமே, அதற்குச் சார்பாய் விடுமாதலின், மனத்தை அவ்வகையிற் பயிற்றும் யோகம், அந்த ஞானத்தை நிலை பெறுவிக்கும்` என்பதாம்.
இதனால், ஞான தாரணையின் இயல்பும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. 

பொழிப்புரை :

தாரணை இறுதிக்கண் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று கூடப் பதினாறையும் தியான முறைப் படி அவ்வவ் வாதாரங்களில் வைத்துத் தியானித்தல், கருவி கரணங்களினின்று நீங்கிநிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய சத்தியையும், அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம். ஆகவே, தியான யோகம், சாதன சாத்திய வகையால் இங்ஙனம் இருகூறாய் நிற்கும் என்க.

குறிப்புரை :

வரும் - வந்த; தாரணையுள் சொல்லிப் போந்த. ஆதி - முதல்; தத்துவம். அவைகளை ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை, ``நிலம்`` என்னும் பூதத்தையும், அதற்குரிய ``கந்தம்`` என்னும் தன்மாத்திரையையும் மூலாதாரத்திலும், பின்னும் முறையே ஏனைய பூதங்களையும், தன்மாத்திரைகளையும் சுவாதிட்டானம் முதலிய வற்றிலும் வைத்தும், அந்தக்கரணங்களை ``மனம், அகங்காரம், புத்தி, சித்தம்`` என்னும் முறையில் சுவாதிட்டானம் முதலாக முறையே வைத்தும், சித்தமே பிரகிருதியாய் அடங்கப் புருடனை ஆஞ்ஞையில் வைத்தும் தியானித்தல். பொருவாத புந்தி புலன் போக மேவல் - ஆன்ம அறிவொடு மாறுபட்டு வாதிக்கின்ற பொறி புலன்களின் வாதனை அற்றுப்போக, அமைதியுற்று நிற்றற்குரிய சாதனையாம். புந்தி, மேவல் இவை ஆகுபெயர்கள். ஆஞ்ஞையில் புருடனை விழுங்கி நிற்கும் ஒளி வடிவாக இறைவனைத் தியானிப்பின், அது சத்தித் தியானமாகும். பரம் - மேலானது. ஒளி வடிவிற்கு மேலானது அருவம். இறைவனை நிராதாரமான உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இந்தச் சத்தி சிவத் தியானமே சாத்திய யோகத்தியானம் என்க. `பரத்தியானமாக` என ஆக்கம் வருவிக்க. குரு - திட்பம்.
இதனால், ஞான யோகத்தின் நிலைகள் இவை என்பது கூறப்பட்டது. இயமம் முதலிய எட்டனுள் `தியானம், சமாதி` என்னும் இறுதி இரண்டுமே யோகத்தில் சாத்தியக் கூறாதலின், இதனை, ஈண்டுப் போதந்து கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 

பொழிப்புரை :

கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.

குறிப்புரை :

ஞானக்கூட்டம் - ஞானத்தொடு கூடும் கூட்டம். கருவி கரணங்களாகிய மாயேயங்களோடு கூடுதலால் உயிர் பெறுவது அறிவு விளக்கமும், அவ்விளக்கத்தை அவ்வாற்றால் உயிர்கள் பெறச் செய்வது திருவருளும் ஆதலால், ``பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு`` என்றார். அப்பொருளை இங்ஙனம் சிறப்பித்துக் கூறவே, `அதனைக் காணுதலே உயிர் பெறத்தக்க பேறு` என்பது போந்தது. `இனி அப்பேற்றை அடைய வழியறியாது திகைக்கின்ற உயிர்க்கு வாசி யோகத்தின் வழிக் கிடைக்கும் குண்டலி சத்தியே அதனை அடைவித்து உதவி செய்வது` என்பார் ``அண்ணாக்கின் ... ... பிழைப்பித்தவாறே`` என்று அருளினார். `வியக்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். `கொல்லும் இயல்புடைய பாம்பு, பிழைக்கச் செய்தது வியப்பு` என்பது நயம். பிள் நாக்கி - பிளவுபட்ட நாவை யுடையது; பாம்பு. அண்ணாக்கினை அடுத்துள்ள துளைவழி உச்சியை அடைகின்ற பிராணவாயு, அவ்வுச்சி வழியாகப் புருவ நடுவை அடையும் சுழு முனை நாடியைத் தாக்குதலால், ஆஞ்ஞையில் அனுபவம் நிகழ்தல் பற்றி, ``அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி`` என்றார். ``நம்மைப் பிழைப்பித்தவாறே`` எனத் தமது அனுபவத்தைக் கூறிய வாற்றால், `அவ்வொளியைக் காண வேண்டுவார்க்கு வழி இதுவே` என்பது குறிப்பெச்சமாயிற்று. இங்ஙனம், சுருங்கக் கூறினாராயினும், `தாரணையில் மின்னல்போலத் தோன்றுகின்ற அவ்வொளியை இடைவிடாது உன்ன, அவ்வொளி மறைவின்றி நின்று பயன் தரும்` என விரித்துரைத்துக் கொள்ளப்படும்.
இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

பொழிப்புரை :

புறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத கண்ணில் (திறவாது மூடியிருக்கின்ற நெற்றிக் கண்ணில்) மின்னல் போலத் தோன்றிய ஒளியைப் பின் அக்கண் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து, அதனொடு உணர்வு ஒன்றியிருப்பின், பிற முயற்சிகளுள் யாதும் செய்யாமலே அந்த ஒளியை நன்கு தரிசித்திருக்கலாம்.

குறிப்புரை :

ஒண்ணா நயனம் - பிறர் `கண்` என்று உடன்படவே முடியாத கண். `அக் கண்ணார` எனச் சுட்டு வருவிக்க. விண் ஆறு - வான் வழி. `சென்று` எனற்பாலது, ``வந்து`` என இடவழுவமைதியாய் நின்றது. ``கண்டிட`` என்பது, `அளந்தறியுமாறு` என்றபடி. அஃதாவது, `வான் வெளி முழுதும் ஓடி` என்பதாம். `ஓடிப் பண்ணாமல்` என்றது, `இவ்வாறெல்லாம் உழல வேண்டாமல்` என்றவாறு `ஞான யோகம் செய்ய மாட்டாமையால் இறைவனைக் காணுதற்குச் சிலர் தாம் பெற்ற சித்தியால் ஆகாயத்தில் சென்று அவனைப் பல இடங்களில் தேடியும், பிரமன் முதலிய தேவர்கள் வானவெளியில் தேடி உழன்றும் எய்க்கின்றனர்; அவை வேண்டா` என்றபடி. `நின்று பார்க்கலும் ஆம்` என இயையும். உம்மை, சிறப்பு.
இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே. 

பொழிப்புரை :

உலகர் பலரும் அழிபொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே யன்றி, அதனோடு வேறறக் கலந்து நிற்கின்ற அழிவில் பொருளாகிய உயிரை அறிதல் இல்லை. இனி, ஒரு சிலர் உயிரை அறியினும், அவ்வுயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிகின்றார்களில்லை. இனிச் சிலர், `உயிர்க்குயிராய்ச் சிவன் ஒருவன் இருக்கின்றான்` என்று உணரினும், `அவன், ஆஞ்ஞைத் தியானத்தால் காணத்தக்கவன்` என்று உணரமாட்டாதவராகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, `அவ்வாறு காணத் தக்கவன்` என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அந்தத் தியானத்தைத் தலைப்பட எண்ணாமலே யிருந்தொழிவர்!

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். `தியானத்தின் சிறப்பை அறிந்திருந்தும் அதில் நில்லாதவர் அறியாதா ரோடு ஒப்ப அறிவிலிகளே` என்றற்கு இங்ஙனம் அறியாமையது நிலையைப் பலபட வகுத்துரைத்தருளினார். நான்கிடத்தும் `ஒரு பொழுதும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `சிந்தை` என்பது

பண் :

பாடல் எண் : 5

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே. 

பொழிப்புரை :

மேல் மாடத்தில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில் பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக் கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு மேல் மாடத்தில் ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.

குறிப்புரை :

`மனம்` என்பது இங்குச் செய்யும் உருவகத்திற்கு ஏற்ப, `மேல்மாடம்` எனப் பொருள் தருதலை, அதனை எடுத்தல் ஓசையாற் கூறிக் காண்க. அவ்வாறே ``அனைத்து விளக்கும்`` என்பதும் இங்கு உரைத்தவாறே பொருள் படுதலைப் படுத்தல் ஓசையாற் கூறியறிக. சினத்து விளக்கு, உருவகம். இதில் உள்ள ``விளக்கு`` என்பது காரண இடுகுறியாய் நில்லாது, காரண அளவில் நின்று, நெருப்பைக் குறித்தது. எருக்குதல் - அழித்தல். `நெருக்கி` என்பது பாடம் அன்று. ``அனைத்து விளக்கு`` என்றது, கருவி கரணங்களை. ``திரிதூண்ட`` என்பதில், சினை முதலொடு சார்த்தப்பட்டது. மனத்து விளக்கு அது - மனத்தில் ஏற்றத்தக்க விளக்காகிய அந்த விளக்கு, சிவ ஒளி. ``மாயா விளக்கு`` என்று, மனத்து விளக்கின் இயல்பைத் தெரிவித்துக் காட்டியது. இதன்பின் நின்ற தேற்றேகாரம், அஃது அத்தன்மைத்தாயே நிலைபெறுதல் காட்டி நின்றது. இங்கு, `ஆகும்` என்பது எஞ்சி நின்றது.
`தியானம்` என்பது, உலகர்கொள்ளும் உறக்கம் போல்வது அன்று என்பதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத்தூண்ட`` என்றார். எனவே, `யோகநிலையில் நிற்பவர்கட்குக் கருவி கரணங்கள் செயற்படாது நிற்குமேயன்றி, மடிதல் இல்லை` என்பது விளங்கும். இதனை விளக்கவே இந்நிலையே, `யோக நித்திரை, அறி துயில்` என்னும் பெயர்களால் கூறுவர். இவ்வாறன்றிக் கேவல சுழுத்தியாகிய உறக்கம் வருமாயின், இருள் மூடிக் கொள்வதல்லது விளக்கேற்றிய தாகாது; அதனைக் குறிக்கவே, பின்னிரண்டடிகளை அருளிச் செய்தார். இஃது அறியாது ஏகான்ம வாதிகள், `அன்றாடம் உலகர்க்கு வருகின்ற கேவல சுழுத்தியே பேரின்ப நிலை` எனக் கூறி மகிழ்வர். ``சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி`` என்று வெகுளி நீக்கம் கூறிய தனால், ஏனைக் காமம், மயக்கம் என்பவற்றது நீக்கமும் கொள்ளப் படும். `காம வெகுளி மயக்கங்கள் அற்றிருத்தல்` என்றால் `உறங்கிக் கிடப்பது என்பது பொருளன்று` என்றதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட`` என்றார்.
இதனால், தியானத்தில் செயற்பாலன, தவிரற்பாலன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

நெடுங்காலம் யோகம் செய்யினும், மேற்கூறிய தியான நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது விளங்குதல்போல, உயிர்க்குயிராய் நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.

குறிப்புரை :

``கண்`` என்றது, மேற்கூறிய அகக்கண்ணை. மூன்றாம் அடி, தியானத்தைப் பெறும் முறையை நினைப்பித்தது. ``உள்ளே`` என்றதை, `கண்ணாடி` என்பதன் பின்னும் கூட்டுக.
``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``(குறள், 706) என்பதையும் நோக்குக.
இதனால், ஆஞ்ஞைத் தியானம் இல்வழி யோகத்தால் பயன் இன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.

குறிப்புரை :

எனவே, ``இன்பமே உளதாகும்`` என்பதாம். ``நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்தல்`` என்பது, கிரியை நிலையில் செபம் முதலியவற்றில் இருவிழிகளையும் மூடி யொழியாமலும், அலர விழியாமலும் சிறிது திறந்த பார்வையுடன் மூக்கின் இருதுளைக்கும் மேலே உள்ள நுனிமூக்கை நோக்கி நிற்றலைக் குறிப்பது. அத்தொடரை இங்கு இயைபுபட எடுத்தோதி, ``நான், சிவன்`` என்னும் இரண்டு எண்ணத்தையும் புருவ நடுவிலே வைத்தல் என ``நாட்டம் இரண்டு`` என்பதற்கு உட்பொருள் கொள்ள வைத்தார். இங்ஙனம் உட்பொருள் கொள்ளாவிடில், இங்கு இது பயன் தாராமை அறிக. மனை, உடம்பு.
இதனால், மேற்கூறியதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

பொழிப்புரை :

ஆஞ்ஞைத் தியானத்தை முறைப்படி செய்து அதனால் இன்புற்றிருப்பவர்க்கு இவ்வுடம்பு தரும் பயன் இவ்வின்ப நிலையேயாம். ஆகவே, இப்பயனை இவ்வுடம்பு தாராதொழியின், அதனால் பயன் வேறில்லை.

குறிப்புரை :

உயர்வு எழா - வெளியே போகாமல், `துயர் அற` என்றதனால், `இன்புற்று` என்பது பெறப்பட்டது. `தூங்குதல்` என்பது, அமைதியுற்றிருத்தலைக் குறித்தது. `இந்நிலை கூடுதல் அரிது` என்றற்கு, `வல்லார்க்கு` என்றார். `வல்லார்க்குப் பயன்` எனவே, `பயம் இல்லை` என்றது மாட்டாதார்க்கு ஆயிற்று.
இதனால், `இந்நிலையைப் பெறாத வழி, யோகமேயன்றி, உடம்பும் பயன் இலதாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே. 

(இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

பொழிப்புரை :

`மணி நா ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் கட்கல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல் கூடாததாகும்.

குறிப்புரை :

எனவே, `கேட்கப்படுதல் தியானத்தில் நிலைத்து நின்றமைக்கு அறிகுறி` என்றவாறாயிற்று. இவ்வோசைகள், பிராண வாயு மேற்கூறிய பத்து நாடிகளிலும் நிற்றலால் உளவாவனவாம். `இந்த இந்த நாடியில் இன்ன இன்னவாறு ஓசை எழும்` என வரை யறுத்தும் சில நூல்கள் கூறும். வார் - நீண்ட. அணி - அழகு. தணிந்து எழுநாதம் - மெல்ல ஒலிக்கின்ற ஓசை. எனவே, ``மேக ஒலி`` என்றது ``இமயத்து ஈண்டு இன்குரல் பயிற்றி`` (புறம். 34) என்றாற்போல மழை பொழிய வரும் மேகம் மெல்லென முழங்கும் முழக்கத்தையாயிற்று. பணிந் தவர் - (தியானத்துள்) அடங்கியவர். ``அல்லது பார்க்க ஒண்ணாதே`` என எதிர்மறையாற் கூறினமையின், ``இஃது அறிகுறி`` என்பது பெறப் பட்டது. படவே, தியான நிலையில் நிற்போர் அவ்வோசையைக் கேட்டலிலும் செல்லுதல் கூடாமை அறிந்துகொள்ளப்படும்.
இதனால், தியான நிலையை உணர்தற்கு ஆவதோர் அடையாளம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. 

பொழிப்புரை :

தியான யோகத்தால் இறைவனை உணரமாட்டா தவர்க்கு அவனது இயல்பும், தேவர் கூட்டம் முதலிய பிற எல்லாப் பொருள்களும், அவரது உணர்வைத் தம்பால் ஈர்த்து அடக்கி அவரது உணர்வேயாய் நிற்கின்ற, மேற்கூறிய, ``மணி கடல் யானை`` முதலிய ஓசைகளாகவே தோன்றும். அவ்யோகத்தால் அவனை உணர வல்லவர்க்கு அவ்வாறின்றி, ஈசன் இயல்பு முதலிய யாவும், ``அவ் வோசையின் வாசனை`` எனச் சொல்லத்தக்கவாறு, அவ்வோசை நீங்கிய பின்னும் நிலைபெறுவதொரு நுண்ணிய ஓசையாய் விளங்கும்.

குறிப்புரை :

``பாசமாய்`` என ஆக்கச் சொல் வருவிக்க. பாசம், பிறவற்றிற் செல்லாதவாறு தடுத்துத் தம்பால் ஈர்ப்பவை. ``இயங்கும், நிற்கும்`` என்னும் எச்சங்கள், ``ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``உயிர்`` என்றது, அதன் உணர்வை. ஓசை நிகழ்ச்சியை, ``பாசம்`` என்றதற்கு ஏற்ப, அதன் நீக்கத்தை ``விடுவது`` என்றார். ``விடுவது`` என்றது விட்டபின் நிலை பெறுவதாகிய தன் காரியம் தோன்ற நின்றது. `ஈசனை` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. இதனால், சொல்லியவை, `மணி கடல் யானை முதலிய ஓசையின் வழி இறைவனை உணர்தல் தியான யோகத்தின் முதல் நிலை` என்பதும், `அவை அடங்கப்பெற்று அவனை உணர்தலே அவ் யோகத்தின் முடிவு நிலை` என்பதுமாம். ``ஓசையெலாம் அவற்றால் ஒலிக்கும் திருச் சிலம்பின் ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்றார் திருக்களிற்றுப் படியாரிலும் (வெண்பா, 33).
இதனால், தியான யோகத்தின் முதல் நிலை முடிவு நிலைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே. 

பொழிப்புரை :

தத்துவ நிலையிலும் சத்தியும் சிவமும் இருப்பது நாத தத்துவத்திற்கு அப்பாலாகலின், தியான யோகத்தின் முடிவு நிலையும் மேற்கூறிய பத்து வகை ஓசைகள் அடங்கிய இடமேயாம். அதனால், யோகியரது நோக்கம் அவ்விடத்திற் செல்வதே.

குறிப்புரை :

`தியான முதிர்ச்சியில் சிவாநுபவத்தைத் தலைப்படல் கூடும்` என்பதற்கு, ``நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டன்`` என்பதனை இறுதிக்கண் கூறினாராயினும், அதனை இரண்டாம் அடியாக வைத்து, அதன்பின், `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தென்க. நல்யோகம் - தியானம். ``இருப்பது`` எனவந்த எழுவாய்கள் மூன்றும், ``முடிவில்`` என்னும் பயனிலைகளை முதலிற் பெற்று நின்றன. ``நஞ்சுண்ட கண்டன்`` என்பதன் பின்னும் அவ் எழுவாய் எஞ்சிநின்றது.
இதனால், ஓசை அடங்கிய இடமே தியான யோகத்தின் முடிவு நிலையாதல் தத்துவத்தில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே. 

பொழிப்புரை :

ஆதார மூர்த்திகள் வெளிப்படும் இடமாகிய ஆறு ஆதாரங்களுள்ளும் உள்ளொளியாகிய பிரமன் முதலிய ஐவரையும் தியானிக்கும் தியானத்தால், புகழப்படுகின்ற ஒளியை உடைய, ஆயினும், சிவனைத் தலைப்பட ஒட்டாத - மயக்கம் நீங்க, அதன்பின், மேம்பட்டவராக மாயோனை முதலில் வைத்து இறுதிக்கண் நாதமூர்த்தியைக் கூட்டி எண்ணும் ஐவருள் நாதமூர்த்தியும் ஒடுங்கக் காணின், பரமசிவனது திருவடியை அடைதல் கூடும்.

குறிப்புரை :

`ஆறினுள்ளும்\\\' என உருபு விரிக்க. `ஆறினுள்\\\' எனப் பாடம் ஓதுதலும் ஆம். உம்மையுடைய இப்பாடத்திற்கு, முற்றும்மை எச்சப்பொருள் தந்ததாக உரைக்க. அங்கி - ஒளி. உள்ளே விளங்கு தலின் ஆதார மூர்த்திகளை `உள்ளொளி\\\' என்றார். ஆஞ்ஞையாகிய ஆறாவது ஆதாரத்தில் விந்துச் சத்தியுடன் விளங்குபவர் நாதமூர்த்தி. ஆகவே, அவருக்குக் கீழுள்ள ஐவராலும் பத்துவகை ஓசைகளைக் கேட்கும் தியானயோகம் முதிர்ந்து வருதலை இருள் நீங்குதலாகக் கூறினார். இங்கு \\\"இருள்\\\" என்பது, சிவாநுபவத்தைப் பெற ஒட்டாது தன்னையே கேட்டு நிற்கச் செய்யும் பத்து வகை ஓசை நிகழ்ச்சியே என்றற்கு, \\\"துதிக்கின்ற தேசுடை\\\" என்றும், ஆதார மூர்த்திகளுள் கீழுள்ளவன் மலரோன் ஆதலின், அவனுக்கு மேல் உள்ளவரை `அதிக் கின்ற ஐவர்\\\' என்றும் தெரித்துக் கூறினார். நாதம் - நாதமூர்த்தி. அவர் ஒடுங்கினமை கூறவே, ஓசை ஒடுங்கினமை தானே பெறப்பட்டது. கதி - புகலிடம். `கதியாகிய ஈசன்\\\' என்க. `கதியாகிய கழல்\\\' எனினு மாம். \\\"கதி\\\" எனவே, அஃது ஒன்றே அடையத் தக்கது என்றவாறு.

பண் :

பாடல் எண் : 13

பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே. 

பொழிப்புரை :

மேற் (பா. 568-573) கூறிவந்த இடங்களுள் முடிவாகிய பள்ளியறையில் பகலன்றி இரவே இல்லை. இவ்வொளி யிடத்தை அடைய நினைத்தால் இஃது ஓரு யோசனை தூரத்தில் உள்ளது. இதனை அடைந்துவிட்டால், வீட்டை எக்காலத்தும் தீப்பற்றிக் கொள்ளாமலும் காப்பாற்றலாம். இப்பள்ளியில் சென்றவர் விழித்தெழுந்து வெளிப்போத வேண்டுவதில்லை.

குறிப்புரை :

நாத மூர்த்தி விந்துச் சத்தியுடன் பிரிவின்றி நின்று அறிவைப் பிறப்பிக்கும் இடமாதல் பற்றியும், தியான யோகத்தின் முதிர்ச்சியில் ஆன்மா ``சமனை`` என்னும் சத்தியோடு கூடி நிற்கும் இடமாதல் பற்றியும் ஆஞ்ஞையை, ``பள்ளியறை`` என்றார். ``இதனை அடைந்துவிட்டால்`` என்பது இசையெச்சம். ``அறையில் கொள்ளி கொளுந்தாமற் காக்கலாம்`` என மாற்றி உரைக்க. அறை, உடம்பு. ``தியானம் முதிரப் பெற்றோர்க்கு வாழ்நாள் நீட்டிப்பும் உளதாகும்`` என்றபடி. `ஓர் ஓசனை நீள்` என்பது சிலேடை. ஓர் ஓசனை (யோசனை) ஒப்பற்ற தியானம். நீளம் - உயரம்; முடிவு. ``நீளம்`` என்பது கடைக்குறையாயிற்று. வெள்ளி அறை, சுவரும், நிலமும் வெள்ளியால் ஆக்கப்பட்ட அறை. ``ஒளியிடம்`` என்பது உண்மைப் பொருள். `அவ்வெள்ளி அறை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``விடிவில்லை`` என்றது, ``எழுந்து வர வேண்டுவதில்லை`` என்பதைக் குறித்த குறிப்பு மொழி.
இதனால், தியான யோகத்தின் முடிவு நிலையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே. 

பொழிப்புரை :

இயமம் முதலாகத் தான் மேற்கொண்ட நோன்புகள் சிறிதும் குறைவுறாதவாறு அவற்றில் உறைத்து நின்று, பிராணா யாமத்தால் சுழுமுனை நாடி வழியே சென்று ஆஞ்ஞையை அடைந்த யோகிக்கு, உடம்பு, `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` என்னும் மூன்று பகுதிகளிலும் செம்மையுற்று, நிற்க வேண்டிய முறையில் சிறிதும் பழுதின்றி நிற்கும் ஆதலால், அஃது ஊழிக் காலம் வரினும் நீங்காத தன்மையைப் பெற்றிருக்கும்.

குறிப்புரை :

``ஆறு ஆதாரங்களுள், மூலாதாரம், சுவாதிட்டானம் இரண்டும் அக்கினிமண்டலம்; மணிபூரகம், அனாகதம், விசுத்தி மூன்றும் சூரியமண்டலம்; ஆஞ்ஞையும் பிரமரந்திரமும் சந்திர மண்டலம்`` என்பது யோக நூற்கருத்து. இம்மூன்று மண்டலங்களிலும் உடல் செம்மையுற்றிருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் ஆங் காங்குப் பழுதுறுவதினாலே வாழ்நாள் குறைகின்றது. யோகப் பயிற்சி யால், உடற் செம்மை தானே அமைந்துவிடுதலின், யோகியர்க்கு வாழ்நாள் நீடுவதாம் என்க.
இதனால், மேல், ``கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்`` என்றது, ஏதுக்காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே. 

பொழிப்புரை :

(அக்கினி மண்டலம் முதலாகக் கூறிய மண்டலங்கள் மூன்றுக்கும் சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அறிந்து, எவ்விடத்தும் அவனையே தியானித்து அவனாகின்ற யோகமே உண்மை யோகம்; அது சத்தி நிபாதர்க்கல்லது கூடாது. அது நிற்க.) அம் மூன்று மண்டலங்கட்கும் அக்கினி முதலிய மூவரையே முதல்வராகக் கருதி ஆங்காங்கு அவ்வவரைத் தியானித்து அவரா கின்ற பொது முறைமையும் உண்டு. (அது சத்திநிபாதரல்லாதார்க்கு உரியதாம். மூன்று மண்டலங்கட்கும் மூவர் முதல்வராகிவிடின், கலாம் விளையுமன்றோ எனின்,) மூவரையும் முதல்வராக எண்ணுவோர், ஒருவர் மற்றை இருவர்க்கும் தோழமை யுடையவராக, மூவரிடை இணக்கமே கொள்ளுதலின், கலாம் விளையாதாம்.

குறிப்புரை :

``அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு`` என்றது, ``மூன்று மண்டலங்களையும் தனித்தனி மண்டலங்களாகக் கருதும் முறை`` எனவும், ``அவ்வவர் மண்டலத்து`` என்பது, ``அம்முறையுள்`` எனவும், ``அவ்வவர்க்கே வரில்`` என்றது, ``அவரவருக்கே உரிய தாய்விடின்`` எனவும் கூறியவாறாம். ``அவ்வவர் மண்டலம் மற்றோர்க்கு ஆயம்`` என மாறிக் கூட்டுக. ஆயம் - தோழமை.
இதனால், ``இறப்பில் தவம்`` (சிவஞானபோதம், சூ.8, அதி.1) எனப்பட்டு ஞானத்தைப் பயக்கும் சிவயோகத்தின் வேறான யோகமும், ``யோகம்`` எனச் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது எனமேல் (பா. 557) கூறியதனை
உளத்துட் கொண்டு, அம்முறை பற்றிய மும்மண்டலங்களின் இயல்பு ஈண்டுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே. 

பொழிப்புரை :

ஒவ்வொரு பயனைத் தருபவர் ஒரோவொரு தேவராக நினைந்து அவர் அனைவரிடத்தும் ஓடி இளைக்கின்ற நெஞ்சத்தைத் தனது சரக்காக உடைய இருட்டறையாகிய உடலி னுள்ளே தனித்தனி முதன்மை பெற்றுத் தோன்றுகின்ற மண்டலங்கள் மூன்றிலும் பொருந்தி ஊடுருவிச் செல்வதாகிய பெரிய நூல் அவ்வாறு அவற்றை ஒன்றுபடக் கோத்துச் செல்லுமாயின், உயிர் மேற்கூறிய இளைப்பை அகன்று, மார்கழி நீராட்டுப்போல இன்ப வெள்ளத்தில் மூழ்கிச் சிறக்கும்.

குறிப்புரை :

இருட்டறை, அறியாமைக்கு இடமாகிய உடம்பு. `நிட்டையிலா உடல்` (தி.9 திருப்பல்லாண்டு, 3) என்றாற்போல, ஞானத்திற்கு ஏதுவாகாத குறையை உடல்மேல் ஏற்றிக் கூறுதலும் மரபாதல் அறிக.
`அறியாமை காரணமாக மூன்றும் மூன்று தனி மண்டலங்களாய்த் தோன்றுகின்றன` என்பது உணர்த்துதற்கு, `இருட்டறை யுள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும்` என்றார். துளை, முதனிலைத் தொழிற் பெயர். `துளைத்தலை யுடைய பாசம்` என்க. துளைப்பது ஊசியேயாயினும், `இஃது ஊசியின்றியே உருவிச் செல்வதோர் அதிசய நூல்` என்றவாறு. இது குண்டலி சத்தி என உணர்க. சத்திநிபாதரல்லாதவர்க்கு இம் மண்ட லங்களைத் துளைத்துக் கோத்து ஒன்றாக்கமாட்டாது நிற்கும் இந்நூல், சத்தி நிபாதர்க்குத் துளைத்து ஒன்றாகக் கோக்கும் வன்மையுடையதாம் என்பார், `பெரும்பாசம்` என்றார்.
பாசம் - நூல்; கயிறு. நெளிவும், வளைவும் உடையதாதல் பற்றி, `பாம்பு` எனப்படுகின்ற இதனை, இங்கு, `பாசம்` என்றார். `பிறர்க்குப் பல தெய்வ உணர்வைத் தருகின்ற குண்டலிசத்தி, சத்திநிபாதர்க்குச் சிவனது தனிப்பெரு முதன்மையைத் தந்து நிற்கும்` என்பது கருத்து. சிவயோகம் அல்லாத யோகம் பிறவியைப் போக்காமையேயன்றி அதனை வருவித்தலும் செய்யு மாகலின், அது பவ யோகமாம்.
`மார்கழி` என்பது, அத்திங்களில் ஆடும் நீராட்டைக் குறித்தது. `மார்கழி போல` என உவம உருபு விரிக்க.
இதனால், சிவத்தியான யோகமே பேரின்பத்தைத் தருவது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே. 

பொழிப்புரை :

பிராணாயாமம் முதலியவற்றை முறைப்படி பயில வல்லவர்க்கு அவற்றின் பயனைத் தருபவன், தேவ தேவனாகிய சிவபெருமானே; (அவன் வழி நிற்போராகிய ஏனைய தேவர் அது மாட்டார்.)

குறிப்புரை :

`அதனால், அவனைத் தியானிப்பார்க்கல்லது துன்பம் நீங்காது` என்பதாம். முதல் மூன்று அடிகளும் பிராணாயாம முறையை அனுவதித்தவாறு. `முக்குணங்களாகிய பந்தத்தினின்று விடுபடுதற் பொருட்டு மேற்கொள்ளப்படுவதே யோகம்; அப்பயன் சிவயோகத் தாலன்றி எய்தாது` என்பதனை ``முக்குணம் மூடு அற வாயுவைப் பிடித்திட்டு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். `உயிரை அவ்வந் நிலையில் வைக்கும்` என்க.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே. 

பொழிப்புரை :

சிவயோகியரேயாயினும், அனாகதத்தளவிலே நிற்பவர் ஆன்ம நிலையையே உணர்வர்; சிவ நிலையை உணர மாட்டார்.

குறிப்புரை :

``ஈத்த`` என்பனவும், ``ஈத்து`` என்பதும் குறுக்க லாயின. அவற்றுள் இறுதியில் நின்றது உவம உருபு. நடல் - நடுதல்; நிலை நிறுத்தல். பிராண வாயுவைக் கும்பித்தல். நாபி - மணிபூரகம். மடல் - தாமரை இதழ். வாணி - வாக்கு. ஆகுபெயராய் மத்திமை வாக்குக்கு இடமான விசுத்தியைக் குறித்தது. ``உள்ளே`` என்றது, `கீழே` என்றவாறு. ``கீழே`` எனப் பாடம் ஓதுதலும் ஆம். மணி பூரகத் திற்கும், விசுத்திக்கும் இடையில் உள்ளது, ``அனாகதம்`` எனப்படும் இருதயம். கடல் - கடலின் தன்மை. அது கரை இன்மையும், ஆழம் அறியப்படாமையும், தெளிவுமாம். சடலம் - உடல். அதன் தலைவன், உயிர். ``தியான யோகத்தை இருதயமட்டாகச் செய்து, அப்பால் ஏறமாட்டாதவர், ஆன்ம இயல்பையே உணர்வர்`` என்பதாம்.
இதனால், ``தியான யோகத்தை முற்றப் பயிலல் வேண்டும்`` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 

பொழிப்புரை :

யோகத்தை முறைப்படி பயின்ற அடியவரே, அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.

குறிப்புரை :

யோகமும் வழிபாடேயாதலின், அதனைச் செய் வோரை, ``அன்பர்`` என்றார். ``அன்பரே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``நிலையாக`` என ஆக்கம் வருவித்துரைக்க. ``அறிந்தார்`` என்றதனை, ``அறிவறிந்த மக்கட் பேறு`` (குறள், 61) என்றாற் போல, ``அறிதற்கு உரிமையுடையார்`` எனக் கொள்க. `துணிவுபற்றி, எதிர்காலம் இறந்த காலம் ஆயிற்று` என்றலுமாம். ``நெறியான அன்பர்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், ``யோகம் முற்றியவர்க்கே ஞானம் கூடும்`` என, யோகத்தது இன்றியமையாமை கூறப்பட்டது. இதனைச் சமாதி இறுதியிற் கூறாது ஈண்டுக் கூறினார், தியானத்திற்கும், சமாதிக்கும் இடையே உள்ள வேற்றுமை சிறிதேயாகலின்.

பண் :

பாடல் எண் : 1

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

``சமாதி`` என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதி யேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!

குறிப்புரை :

``யமாதி`` என்பது ஆரியப்புணர்மொழி. ``இன்`` மூன்றும், ஏதுப் பொருளில் வந்த ஐந்தாம் உருபு. ``தான்`` என்பது பிரி நிலை ஏகாரப் பொருளது; இதனை, ``தங்கினோர்க்கு`` என்பதனுடன் கூட்டுக. செல்லல் - வாய்த்தல். இரண்டாம் அடியில், ``சமாதியோடு`` எனவும், மூன்றாம் அடியில், `சமாதிக்கண்` எனவும் ஏற்கும் உருபு விரித்துக் கொள்க. நான்காம் அடியை, ``யமாதியும், சமாதியும் தலைப்படும்`` என மாற்றி உம்மை விரித்து `யோகம்` என்பது அதன் கருத்தாக உரைக்க. ``சித்தி`` என்பதன்பின், ``உளவாம்`` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், சமாதியே யோகத்தின் முடிவு நிலை என்பதும், அஃது அதற்கு முன்னே செயற்பாலனவற்றால் அடையத் தக்கது என்பதும், அட்டமாசித்திகள் இயமம் முதலியவற்றின் இடைநிலைப் பயன் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. 

பொழிப்புரை :

கருவிற்கு வித்தாய வெண்பாலும் (சுக்கிலமும்) குண்டலி சத்தியும் ஆஞ்ஞைத் தானத்தில் சோர்வின்றி நிற்குமாயின், அவ்விடத்தில் ஆன்மா சமாதியைத் தலைப்படும். அத்தலைப்பாட்டில் ஏகதேச உணர்வு நீங்கிய வியாபக உணர்வு தோன்ற, அதன்கண் அடைதற்கரிய பொருளாகிய அழகிய சிவம் விளங்கும்.

குறிப்புரை :

வெண்பால் (சுக்கிலம்) சோராமை, ஆன்மா புறப் பொருளையும், தன்னையும் மறந்து தியானப் பொருளோடு ஒன்றுதலாம். குண்டலியாவது ``வாக்கு`` என்பதை மேலே குறித்தாம். அதுவும் மேற்குறித்த இரு பொருளையும் பற்றாது நிற்றலை, ``ஆஞ்ஞையில் நிற்றல்`` என்றார். இதனை நாவுக்கரசர் அரம்பையர் ஆடல் பாடலைக் கண்டு அகம் இளையாதிருந்த ஞானநிலையோடு ஒப்பிட்டு உணர்க. இவ்விரண்டும் உயிர், சமாதிநிலை கூடினமைக்கு அறிகுறி என்றவாறாயிற்று. ஆகவே, தியான நிலையில் இவ்விரண்டும் இந்நிலையினின்றும் சோர்தல் உண்டு என்பது பெறப்பட்டது. ``விந்து, நாதம்`` என்பவற்றிற்கு இங்குப் பிறவாறு உரைத்தல் ஏலாமை அறிக. சுழுமுனையாகிய நடுநாடியின் உச்சியாகிய புருவ நடுவை, ``மேரு`` என்றல் வழக்கு என்பது மேலேயும் கூறப்பட்டது. பின்னிரண்டடிகள் சமாதியில் சிவ நிலை அனுபவமாய் விளங்குதல் கூறப்பட்டது. தியான நிலையில் பாவனை மாத்திரமே உளதாம் என்க.
இதனால், சமாதி நிலையில் விளைவன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே. 

பொழிப்புரை :

புறப் பொருளிடத்தும், ஆன்மாவிடத்தும் நிற்கின்ற மனம் எப்பொழுது உண்டோ, அப்பொழுதெல்லாம் பிராண வாயுவின் இயக்கமும் உளதாகும்; அத்தன்மையான மனம் இல்லாத பொழுது, பிராணவாயுவின் இயக்கமும் இல்லையாம். மேற்கூறிய இரண்டையும் விடுத்து தேயப்பொருளில் (தியானிக்கப்படும் பொருளில்) நிலை பெற்ற மனத்தால் அல்லல் அற்று இன்புற்றிருப் பவர்க்கு, அத்தேயப் பொருளிடத்தே அவரது மனம் ஒடுங்கி நிற்கும்.

குறிப்புரை :

``மன் மனம்`` நான்கில் முதலன மூன்றும் வினைத் தொகை. மன்னும் இடங்கள் ஏற்ற பெற்றியாற் கொள்ளப்பட்டன. இறுதியது, `தலைமைப் பொருளது மனம்` என ஆறாவதன் தொகை. `மனம் மனத்தில் ஒடுங்கும்` என்னும் நயம் தோன்ற ``மன் மனத்துள்ளே மனோலயம் ஆம்`` என்றாரேனும், `மன்னுள்ளே` என்பதே கருத்தாம். மூன்றாம் அடியில், `மனத்தால்` என மூன்றாவது விரிக்க. `மனோலயம் உளதாம்` என்பதே சொற்பொருளாயினும், கருத்து நோக்கி மேற்கூறியவாறு உரைக்கப்பட்டது.
இதனால், `சமாதி நிலையில் உயிர்ப்புத் தானே அடங்கி நிற்கும்` என அந்நிலையில் உளதாகின்ற மற்றொன்று கூறப்பட்டது. இதற்குக் கீழ்ப்பட்ட நிலைகளில் உயிர்ப்பை யோகியர் தமது முயற்சியால் அடக்குவர். இவற்றை, தியான யோக துரியமும், சமாதி யோக துரியாதீதமுமாதல் பற்றி அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 4

விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தானே. 

பொழிப்புரை :

சமாதி நிலை எய்தினவரைப் பிறர், மனத்தைப் புற விடயங்களில் ஓடவிட்டிருப்பவராகக் கருதிக் கொண்டிருப்பார்கள். ஆயினும், அவர்களோ தமது மனத்தைத் தேயப் பொருளில் ஒடுக்கி விட்டிருப்பர்.

குறிப்புரை :

`குதிரையேற்றம் வல்லான் ஒருவனது குதிரை யேற்றத்தைக் காணவேண்டிச் செண்டு வெளியில் (குதிரையேறிக் காட்டும் இடம்; இதனை `வையாளி வீதி` எனவும் கூறுவர்) கூடியிருந் தோர் பலரும், `அவன் தனது குதிரையை, மலை, பாழ்ங்கிணறு முதலி யவை நிறைந்த காடுகளில் ஓட்டிக்காட்டி வருவான்` என்று நினைத் திருந்தார்கள். அவனோ அவ்வாறு ஒன்றும் செய்யாமல், அச்செண்டு வெளியில் உள்ள ஒரு பெரிய மலையின் பக்கத்தில் கொண்டுபோய் அக்குதிரையை எங்கும் போகவொட்டாமலே கட்டிவிட்டான் என்பது இத்திருமந்திரத்தின் சொற்பொருள். அஃது உள்ளுறை உவமமாய் நின்று, மேல் உரைத்த பொருளைத் தோற்று வித்தது என்க.
விண்டு - மலை. `விண்டுவும்` என உம்மை விரிக்க. அலர் கூபம் - வாய் விரிந்த கிணறு; பாழ்ங்கிணறு. `விண்டலர் கூபம்` என ஒன்றாக்கி உரைப்பினுமாம். இப்பொருட்கு, விண்டு அலர்தல், ஒரு பொருட் பன்மொழி. விந்தத்து அடவி - விந்த மலையைச் சூழ்ந்துள்ள காடு. `இதுவே மிக்க இன்னல் உடையது` என்றல் நம் நாட்டு வழக்கு.
``சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்`` -கந்தர் அநுபூதி, 33
என்றார் அருணகிரியாரும். `உயிர் பூத உடலைவிட்டுக் கூற்றுவன் உலகிற்குச் செல்லும்பொழுது இடையில் இத்தன்மைத்தான ஒரு காட்டினைக் கடக்கும்` எனப் புராணம் கூறும். கண்டு உணர்வாக - கண்டறிந்து வருவானாக. கருதி யிருத்தற்கும், குசை செறுத்தற்கும் எழுவாய்கள் வருவித்துக்கொள்க. குசை - கடிவாளம். செறுத்தல் - கட்டுதல். `குசையொடு செறுத்தான்` என்க. `கிரியத்திடை` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. இனி `கிரி உண்டு; அதனிடை` என உரைத்தலுமாம். குதிரை, மனம், குசை, பிராண வாயு, கிரி, தியானிக்கப்படும் பொருள்.
இதனால், சமாதி நிலை புறத்தாரால் அறிதற்கு அருமை கூறப் பட்டது.
இதன்பின், `மூலநாடி` எனக் காணப்படும் செய்யுள் நாயனார் திருமொழியன்று.

பண் :

பாடல் எண் : 5

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பொழிப்புரை :

நாடு சுற்றும் ஒருவன் அங்ஙனம் சுற்றி வரும் நாடுகள் ஐந்து; அவற்றில் உள்ள மலைகள் பன்னிரண்டு; அங்கு வாழும் குடிகள் நாற்பத்தெட்டு வகையினர். அவைகளை எல்லாம் முழுதும் காணவேண்டும் என்று விரும்பிய அவனது மனம் இடையே ஒரு பெரு வெள்ளத்தைக் கண்டு அதில் அழுந்திவிட, அவன் அதனையே குடித்தும், அதனுள்ளே மூழ்கியும் இன்புற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

மண்டலம் ஐந்து, பஞ்சபூதங்களின் எல்லைகள், வரைகள் பன்னிரண்டு, பிரணவ கலைகள். குடிகள் நாற்பத்தெட்டு, அக்கரங்கள் (ஐம்பதில் க்ஷகாரம், ளகாரம் என்னும் இரண்டும் ஒழித்து ஏனையவை. அடிநிலை எழுத்தாகிய அகரமும் இங்குக் குறிக்கப்பட வில்லை, அது சிவமாதல் பற்றி) இவை மூலாதாரம் முதல் விசுத்தி வரையில் உள்ள ஐந்து ஆதாரங்களிலும் மேலே காட்டப்பட்டவாறு நிற்றலின் ``குடிகள்`` என்றார். `இவற்றைக் கண்டிட விரும்பும் கருத்து` என்க. அஃதாவது, இவற்றையே நோக்கி நிற்கும் எண்ணம். ``நிலா விடும்`` என்ற செய்யுமென்முற்று ஆண்பாலில் வந்தது. இதற்கு, `சமாதி எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``ஓடும்`` என்னும் அடைமொழியால் `பதம்` வெள்ள நீரைக் குறித்தது. வெள்ளம், சிவானந்தம்.
இதனால், சமாதிநிலை எய்தினோர் பிறவற்றை எய்த விரும்பாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே. 

பொழிப்புரை :

கிணற்றில் உள்ள பூட்டைச் சுழல்போல, உடலில் முன்னும் பின்னுமாய் இயங்குதல் தன்மைபெற்று நிற்கும் பிராண வாயுவை, பிற பொருள்களைத் தேடித் திரியாது நிலைத்து நிற்கின்ற ஆஞ்ஞையில் சேர்ந்து அசையாதபடிநிறுத்தி, அதனாலே மனத்தையும் வெளிப்போகாதவாறு தடுத்துத் தியானப் பொருளில் நிலைத்து நிற்பவர்க்கு இன்பம் அங்குத் தானே கிடைக்கும்.

குறிப்புரை :

பொறி - இயங்குந் தன்மை. நாட்டம் - நாடுதல்; தொழிற்பெயர்; இது மனத்தின் தொழில். இதனை மீட்டல், மனத்தைத் தடுத்து நிறுத்துதலாம். நயனம் - கண். கண் போன்று உயிர்க்குயிராய் உள்ள பொருள். `மாம்பழம் தோட்டத்துத் தூங்கலும் ஆம்` என மாற்றிக் கொள்க. ஈற்றடி, ஒட்டணி.
இதனால், சமாதிநிலை தளர்வுறுதல் உளதாயின், பிராணாயாம தாரணை தியானங்களால் அத் தளர்ச்சியை நீக்கி அதன் கண் உறைத்து நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே. 

பொழிப்புரை :

அகத்தே ஆஞ்ஞையாகிய மலையின் உச்சியை அடைந்து அங்குள்ள அமுதத்தைத் தேவர்களும் உண்ண மாட்டாராய்ப் புறத்தே பெரிய மலையைப் பெயர்த்துக் கொணர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்து, அதினின்றும் தோன்றிய அமுதத்தையே உண்டார்கள். (ஆயினும், அதனால் அவர் இறவாதிருக்கின்றார் களில்லை; ஆகவே) இறவாமைக்குப் பொருளாக அறியும் வழி ஒன்றே உண்டு; அஃது ஐம்புல வேட்கையை முடிவின்றிக் கொள்ளும் மனம் முற்றும் ஒடுங்கிய நிலையேயாம்.

குறிப்புரை :

`ஆதலின், அதனையே பெற்றுப் பேணிக்காக்க` என்பது குறிப்பெச்சம். முதல் தொடரை இரண்டாம் அடியின் பின் வைத்து நான்காம் அடிக்கு முன்னே கூட்டி உரைக்க. உரு - பொருள்; மெய்ம்மை. `உருவாக` என ஆக்கம் வருவிக்க. `ஒன்றே` என்னும் தேற்றேகாரமும், `வானொடும்` என்னும் சிறப்பும்மையும் தொகுத் தலாயின. கருமை - பெருமை. ஏறுதற்கு அருமைபற்றி ``அருவரை`` என்றார். `மாட்டாராய் உண்டார்` என எச்சமாக்கி மேலே கூட்டி முடிக்க. `இது மாட்டாமையால் அதனை உண்டார்` என்றதனால், உண்டதனால் கருதிய பயன் விளையாமை பெறப்பட்டது. `திரு` என்பது, `முயற்சி திருவினையாக்கும்` (குறள், 616) என்பதிற்போல நின்றது.
இதனால் சமாதிநிலையது அருமையும், பெருமையும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 8

நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே. 

பொழிப்புரை :

சிவனது பெருமையை உணர்ந்தோர் அவன்பால் அன்பு செய்து, அவ்வன்பினாலே பிற ஆசைகளை ஒழித்து, அவனையே நோக்கி ஆஞ்ஞையை அடைந்து அவனை வணங்கி, அவனோடு ஒன்றாய்க் கலந்தார்கள்.

குறிப்புரை :

எனவே, `சிவனை அடைய விரும்புவோர் செய்யத் தக்கன அவையே` என்பதாம். `சிவனது பெருமையை உணர்ந்த வழியே அவனிடத்து அன்பு செல்லும்` என்றதற்கு அவனது பெருமைகளை உடம்பொடு புணர்த்துக் கூறினார். நம்பன் - விரும்பத் தக்கவன். நான்மறையை ஓதியது, அனைவரும் தன்னை அடையு மாற்றை அறிதற்கு. `பொன்னில் நின்று ஒளிர்கின்ற மாற்றுப்போல, உயிரில் நின்று ஒளிர்பவன்` என்பது இரண்டாம் அடியின் பொருள். ஆக்குதல் - பெருக்குதல். அருத்தி - ஆசை. ``கொம்பு`` என்றது, சுழுமுனையை. ``ஏறி`` என்றதனால், அதன் உச்சியை அடைதல் பெறப்பட்டது. கூட்டம் - கூடுதல், புணர்தல்; இரண்டறக் கலத்தல்.
இதனால், சமாதி கூடுதற்கு இயமம் முதலியவற்றில் நிற்கு மிடத்தும் அன்புடையராதலும், உலகப் பற்றை விடுதலும் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. 

பொழிப்புரை :

மூலாதாரத்திற்குமேல் முதற்கண் காணப்படுகின்ற நாற்கோண வடிவுள்ள இடத்தில் (சுவாதிட்டானத்தில்) நிற்பதாகிய பிராணவாயு அவ்விடத்தில் உள்நுழைகின்ற புழையின் (சுழுமுனை நாடிக்கு) மேலிடத்தில், வானத்தில் உள்ள பிறைபோன்ற புருவநடுவில் நிற்கின்ற பொருளின் வடிவங்கள் பலவாய்த் தோன்றும்.

குறிப்புரை :

இது தியான நிலையாம். `மேலதாகிய சதுரம்` எனவும், `சதுரத்ததாகிய கால்` எனவும் கொள்க. பிராணவாயு கும்பகத்தில் சுவாதிட்டானத்தில் நின்று, பின் சுழுமுனை வழிமேற்செல்லும் என்க. அத்திசை - அவ்விடம். `முச்சதுரத்தது` என்பது பாடம் அன்று. ஆஞ்ஞைத் தியானத்தில் மின்னல், விண்மீன், விளக்கு, பேரொளி முதலிய வடிவில் தியானப் பொருள் பலபடத்தோன்றும். `அவற்றுள் பேரொளித் தோற்றத்தில் ஒன்றுதல் சமாதி` என்றற்கு இதனை முன்னர்க் கூறினார்.
இதனால், சமாதியைத் தலைப்படுங்கால் இடைநிகழ் காட்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. 

பொழிப்புரை :

மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் செய்யும் பாவனைகளை விடுத்து, அவ்வாதார யோகங்களால் மூண்டெழுந்த கனலைமட்டும் துணையாகப் பற்றி ஆஞ்ஞையிற் சென்று, அங்குச் சிவனது பேரொளித் தோற்றம் ஒன்றையே எதிர்நோக்கி அதனுள் ஒடுங்கும் அவா மிக்கிருந்து, அவ்வொளி தோன்றிய காலத்து அதனையே தனக்கு வியாபகமாகக் கொண்டு அதன்கண் புகுந்து ஒடுங்கி நிற்றலே சமாதியாகும்.

குறிப்புரை :

``சிற்பி`` என்பதனை, `சிற்பன்` என்றார். `எல்லாம்` என்றது, முன்னை ஆதார மூர்த்திகளையும், ஆஞ்ஞையில் தியானத்தில் தோன்றும் பல வகை வடிவங்களையுமாம். ``சிருட்டித்த சிற்பன்`` என மாறுக. எனவே, ``யோகத்தின் தலையாய பொருள் பேரொளி ஒன்றே`` என்பது போந்தது. மதி - அறிவு. அஃது இங்கு ஆர்வத்தை உணர்த்திற்று. ``பரம்`` என்றது, ``வியாபகம்`` என்னும் பொருட்டு. ஆக - ஆகிவிட. தகும் - தக்கிருக்கும். தண்மை, இதுகாறும் உழன்ற உழப்பாகிய வெப்பம் நீங்கிய குளிர்ச்சி. ``தண் சமாதி தக்கிருக்கும்`` என்க.
இதனால், சிவ சமாதியைத் தலைப்படும் முறையும், அச்சமாதியது இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே. 

பொழிப்புரை :

துலை நாப்போல உள்ள ஆஞ்ஞையில் அசை வற்றிருக்க வல்லவர்க்கு, மெய்ப்பொருளைத் தலைப்பட்டிருக்குமாறு, அது, தானே கிடைக்கும். ஆணவமாகிய வலையில் தானே சென்று நின்று, அந்நிலை காரணமாகச் சினங்கொண்டவள்போல இருந்த அருட் சத்தியும் சினந்தணிந்து, பிறவிக் கடலுக்குக் கரையாகி நிற்பாள்.

குறிப்புரை :

தத்துவம் - மெய்ப்பொருள். அருட் சத்தியே பாசத்தின் வழி நின்று அதனை நடத்துங்கால் ``திரோதான சத்தி`` எனப்படுதலும், அது, ``சின மருவு திரோதாயி`` (சிவப்பிரகாசம், 48) எனக் கூறப்படுதலும் காண்க. குலை - கரை. குலைப்பட்டு - கரையின் தன்மை எய்தி. ``கோபம் அகலும்`` என்பதை, குலைப்பட்டிருத்தற்கு முன்னே கூட்டிப் பொருள் கொள்க. திரோதான சத்தி, சினந்தணிந்து அருட் சத்தியாய் ஆன்மாவிற் பதிதலே சத்தி நிபாதம் என்பது அறிக. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல்.
இதனால், சிவயோகத்தின் முடிவு நிலையாகிய சிவ சமாதியால் சத்திநிபாதம் முதிர்தல் கூறப்பட்டது. அது கூறவே, ``தத்துவம் கூடும்`` என்றது, ஞானத்தைப் பெறும் பக்குவம் எய்தலைக் குறித்ததாயிற்று.

பண் :

பாடல் எண் : 12

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே. 

பொழிப்புரை :

சிவசமாதி கைவரப் பெற்ற நிலையில் சீவனும், சிவம் சத்திகளாய் நிற்கும். அதனால், அத்தகைய யோகீசுரனைப் பிரம விட்டுணுக்களும் வணங்குவர்.

குறிப்புரை :

``ஆதி`` மூன்றும் முறையே சத்தி, முதல், முதல்வன் என்னும் பொருளன. உம்மை நான்கனுள் முன்னவை இரண்டும் எண்ணுப் பொருளிலும், இறுதியது உயர்வு சிறப்புப் பொருளிலும் வந்தன. ஏனையது இழிவு சிறப்பு. உள்நிற்றல் சமாதியில் நிற்றல். ``உள்நின்ற சீவனும்`` என்பதை முதலிற் கொள்க. `சிவமாம்` என்று ஒழியாது, ``சத்தியுமாம்`` என்றது, ``சிவன் செய்யும் செயலெல்லாம் இவ்யோகி செய்யவல்லன்`` என்பது உணர்த்துதற்கு.
``தாமடங்க இந்தத் தலமடங்கும்``
என்ற திருக்களிற்றுப்படி மேலேயும் (பா. 528) காட்டப்பட்டது. இறுதியில் உள்ள ``ஆதி`` என்பதற்கு ``அவ் ஆதி`` எனச் சுட்டு வருவிக்க.
இதனால், சமாதி எய்தினோரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
சமாதிதா னில்லை தானவ னாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 

பொழிப்புரை :

சமாதி யோகத்தைத் தலைப்பட்டவர்க்கு ``யோகம்`` எனப்படுவன பலவும் வாய்ப்புடையனவாய்ப் பயன் தரும். இனி, இறைவன் அருள்வழியே எச்செயலையும் செய்வார்க்கு இச் சமாதி யோகம் வேண்டுவதில்லை. சீவன் சிவமாய் நிற்கும் நிலையில் சமாதி என்னும் யோக நிலை இல்லை. (நிட்டை என்னும் ஞான நிலையே உளதாம்) சமாதி யோகத்தால் ஞானம் வருதலேயன்றி அறுபத்து நான்கு சித்திகளும் கிடைக்கும்.

குறிப்புரை :

``பல யோகம்`` என்றது, மனம் ஒன்றி நின்று செய்யப் படுதல் பற்றி, `மந்திரயோகம், கன்மயோகம், பத்தியோகம்` என வழங் கப்படுவனவற்றை. இடைநின்ற இரண்டடிகளாலும் ஞானம், யோகத் தின் வேறாய் மேம்பட்டு நிற்றல் குறித்தவாறு. இறையுடன் ஏகல், அவன் அருள்வழியே செயற்படல். தான் அவனாதல், ஆன்மா இறை வனது எண்குணங்களையும் பெற்று நிற்றல். இவை இரண்டும் யோகத் தில் எய்தாமை அறிக. ஈற்றடியால் யோகத்தின் இடைநிலைப் பயன் கூறப்பட்டது. `எட்டுச் சித்திகளும் கீழ் உலகம் ஒன்றோடு மேல் உலகம் ஏழினும் அவ்வவ்விடத்திற்கு ஏற்பப் பெறப்படுமாற்றால் அறுபத்து நான்காம்`. இது சிவஞானமாபாடியத்துட் (சூ.2 அதி.2) கண்டது.
இதனால், யோகத்தின் எல்லை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

பொழிப்புரை :

மலர்களை விரும்புதலால், அவை பொருந்தப் பெற்ற புரிந்த சடையினையுடைய சிவபெருமானது திருவடியை எத்துணைச் சிறிதளவு விரும்புவராயினும், அவர் சுவர்க்கத்தையே அடைவர்; நிரையம் புகார், இறைவியை ஒருபால் விரும்பிவைத்து நடனம் புரிகின்ற அப்பெருமான், தன்னை விரும்புபவன் எவனாயினும் அவனுக்கு `இவன் விரும்பியது யாது` என்று நினைந்து அதனை அருள்செய்பவன் ஆதலின்.

குறிப்புரை :

`ஆகவே, யோகத்தின் முதற்படியில் நின்றோர்க்கு அவன் இம்மையில் அவன் விரும்பிய பயனையும், மறுமையில் சுவர்க்கத்தையும் அருளுவன்` என்பதாம். ``யாது`` என்பது, `சிறிது` என்னும் பொருட்டாய், அல்லவை செய்தலை ஓம்புதலாகிய (புறம். 195) இயமத்தைக் குறித்தது. `உகந்தாரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பின்னிரண்டடிகளால் சிவபெருமான், `வேண்டுவார் வேண்டுவதை ஈயும்` (தி.6 ப.23 பா.1) கருணையாளனாதலைக் குறித்தவாறு மாதொரு பாகானாதலும், நடனம் ஆடுதலும் அக் கருணையைத் தெளிவிப்பனவாம். விடையூர்தியும் விரைந்து வந்து அருளுதலைக் குறிப்பதேயாம்.
`சுவர்க்கம்` என்பது பவ யோகியர்க்குத் தேவர் உலகமும், சிவயோகியர்க்கு உருத்திரர் உலகமுமாகக் கொள்க. பவயோகியர் சிவபெருமானைப் போற்றினும், பிற தேவரோடு ஒப்ப நினைந்து போற்றுபவரே என்க.
இதனால், இயமத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே. 

பொழிப்புரை :

சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``பரன்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, `பதத்து` என்றார். பரன்புகழ் கற்றல், பிற நியம ஒழுக்கங்கட்கு உபலக்கணம் ``ஆங்கே`` இரண்டில் முன்னது, `ஒருபெற்றியே` என நியமத்தைக் குறித்தது. பின்னது செய்யுளில் சுட்டு முன் வந்தவாறு. `முற்றும்` என்னும் உம்மை தொகுத்தல். தெற்றுதல் - விளங்குதல். ``முனிவர்`` என்பது சிவயோகியர்க்கு உருத்திர கணங்களையும், ``சிவபதம்`` என்பது பவயோகியர்க்கு, `இன்ப உலகம்` என்னும் பொதுப் பொருட்டாய்த் தேவருலகத்தையும் உணர்த்தி நிற்கும். `சேர்தலும்` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், நியமத்தின் பயன் கூறப்பட்டது. `உயர்ந்தோராய்ப் போற்றப்படுதல் இங்குக் குறிக்கப்பட்ட சிறப்பு` என்க.

பண் :

பாடல் எண் : 3

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

பொழிப்புரை :

மக்கள், மெய் வருத்தத்தைப் பெற்றுத் தவம் செய்தபின் சிவபெருமானது அருளால் விண்ணவர்க்குத் தலைவராய், `வானுலகச் செல்வத்திற்கு உரிமையுடையவர் இவரே` என்று பலரும் புகழும்படி, மத்தளம், குழல் முதலிய வாச்சியங்கள் ஒலிக்க வீற்றிருந்து, தலைவராம் இன்பத்தை அடைவர்.

குறிப்புரை :

வருந்துதல், இங்கு, மெய் வருந்தல், எனவே, இஃது ஆசனத்தைக் குறித்தது. ``தவம்`` என்பது ஏற்புழிக் கோடலால் யோகமாயிற்று. `செய்தபின்` என்பது `செய்து` எனத் திரிந்து நின்றது. ``வானவர்`` என்பது பவயோகியர்க்குத் தேவர்களையும், சிவயோகியர்க்கு உருத்திரர்களையும் குறிக்கும். எனவே, தேவர்க்குத் தலைவராதல் திசைகாவலர் ஆதலையும், உருத்திரர்களுக்குத் தலைவராதல் உருத்திர புவனங்கட்கு அதிபதிகள் ஆதலையும் குறிப்பனவாம். `கோ, செல்வன், இவன்` என்பன, பன்மை யொருமை மயக்கங்கள். `அருளால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், ஆசனத்தின் பயன்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவைக் கும்பகம் செய்ததன் பயனாக மக்கள் செம்பொன் மயமான இன்ப உலகத்தில் சென்று சேரும் பொழுது, விண்ணவர் குழாம் வந்து எதிர்கொள்ள, விண்ணுலக மகளிர் தாம் தாம் `எமக்கு அரிதிற் கிடைத்த தலைவன் இவனே` என மைய லுற்றுச் சொல்லுமாறு கலவி இன்பம் மிகப்பெற்று இருத்தல் கூடும்.

குறிப்புரை :

``கும்பத்து`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. `கும்பகத்து` என்பது குறைந்து நின்றது. `சிவகதி, அமரர்` என்ப வற்றிற்கும் மேல் உரைத்தவாறே உரைக்க. பொன்தலைவன், உவமத் தொகை. உவமை, பயன்பற்றி வந்தது. ``இன்பக் கலவி`` எனப் பின்னர் வருதலால், சொல்வோர் மகளிராதல் பெறப்பட்டது. மையலுற்றுக் கூறுவோர் ஆடல் மகளிர். அவர் அவ்வாறு கூறினும் சிவயோகியர் இன்புறுவது உரிமை மகளிரோடேயாம். ஐம்புல இன்பங்கள் பலவற்றையும் நிரம்பத் துய்த்தலை விளக்கும் குறிப்பு மொழியாக இன்பக் கலவி எய்துதலை எடுத்தோதினார். உருத்திரலோக இன்பம் சிவனை மறப்பியாது என்க.
இதனால், பிராணாயாமத்தின் பயன் கூறப்பட்டது. மேலது பதவிக்களிப்பும், இது துய்த்தற்பேறுமாகிய வேறுபாடு நுனித்துணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 5

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

பொழிப்புரை :

இம்பருள்ளாரை விடுத்து, உம்பருள்ளாரைப் பாவனையால் அடைந்தோர், அதன் பயனாக அவரை உண்மை யாகவே அடையுங் காலத்து, அவ்விடத்துள்ளார், `மக்களுள் இவ்வுயர் நிலையை அடைந்தோன் யாவன்` என்று வியப்புற்று வினாவ, (ஒரு சாரார் ஓர்ந்துணராது வடிவம் ஒன்றே பற்றி) `இவன் சிவபெருமான் தான்` என்று மயங்கிக் கூற, இவ்வாறு அமரர் பலரும் ஒருங்குவந்து எதிர்கொள்ளத் திருநீலகண்டப் பெருமானைக் கண்ட முறைமையே எங்கும் நிகழ்வதாகும்.

குறிப்புரை :

உம்பரைப் பாவனையால் அடைதலே பிரத்தியாகா ரமாம். சேர்தல் உண்மை வகையைக் குறித்தலால், அதற்கு வாயில் முன்னர்ச்செய்த பாவனையாதல் பெறப்பட்டது. சேர்தற்குச் செயப்படு பொருள் திசை என்ற குறிப்பாற் பெறப்பட்டது. திசை - இடம். மெய் - வடிவம். `கண்டனை மெய்யைக் கண்டவாறு` என, முதல், சினை இரண்டன்பாலும் ஐயுருபு வந்தது. `நிகழ்வது` என்பது சொல்லெச்சம். ``காருறு கண்டனை மெய்கண்டவாறே` என்றதனால், சீகண்ட உருத்திர வடிவம் பெறுதல் கூறப்பட்டது. இவர் பவயோகியராயின், ஈசான னாகிய திசைக்காவலனது சுற்றமாய் நிற்பர் என்க.
இதனால், பிரத்தியாகாரத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. 

பொழிப்புரை :

மக்கள் நல்வழி ஒழுகுமாற்றை ஆராய்ந்து, அவரைத் தீவழியினின்றும் நீக்குகின்ற நிறைமொழி யுடையராகிய முனிவர், பின் விண்ணுலகில் எவ்விடத்துச் செல்லினும், அவ்விடம் மண்ணுலகில் மிக்க கொடையுடைய இல்லறத்தவர் வாழ்கின்ற இடம்போலவே எதிர்கொண்டு பேணும் இடமாம்.

குறிப்புரை :

சொல்வழியாளர் - சொல்லால் வழிப்படுத்தும் ஆற்றல் உடையவர். எனவே, `அவரது சொல், அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயனைத் தப்பாது தருவது, என்பது பெறப்பட்டது. இதனையே ``நிறைமொழி`` எனத் தொல்காப்பியரும், (தொல். செய்யுளியல், 171) திருவள்ளுவரும் (குறள், 28) ஒருபடித்தாகக் கூறினர். இங்ஙனம் கூறவே, `அறமுதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறுணர்த்துவார் இவரே` என்பது போந்தது. இவர் இவ்வாறு நிறைமொழி யுடையராதல் தாரணை யோகத்தில் நிற்றலால்; அஃதாவது, மனத்தைப் பிறழவிடாது குறித்த பொருளிடத்தே நிறுத்தி நிற்றலாலாம். இவரே ஐம்புல ஆசையை முழுதும் வென்றவராவர்.
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. -குறள், 354
என்னும் குறளின் உரையில் பரிமேலழகரும், ``ஐயுணர்வு எய்து தலாவது, மனம் மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல்`` என்று உரைத்தார். எனவே, ``உரன் என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காத்தல்`` (குறள், 24) என்பதும் தாரணையே யாயிற்று. இந்நிலையைப் பெற்றோர் நிறைமொழியாளராதலை,
ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. -குறள், 25
என்பதனாலும் அறிக. இவையெல்லாம் பிரத்தியாகார நிலைக்கு ஏலாமையும், தியான சமாதிகளில் சிறுபான்மையன்றிப் பெரும் பான்மை நிகழாமையும் அறிந்துகொள்க. இமையவரது பல்வழி என இயையும். `பாரில் இல்வழியாளர் வழியாகும்` என மாறிக் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இத்தொடர் தாம் எய்திநின்ற உலகத்தேயன்றி அதற்குக் கீழுள்ள உலகங்களினும் வியாபகம் உடையராதலை உணர்த்திற்று.
இதனால், தாரணையின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே. 

பொழிப்புரை :

சமாதி, பிரத்தியாகாரம், தாரணை, தியானம் இவற்றில் நிற்பாற்கு அவரவரது தியானப் பொருளின் இடமே அடையுமிடமாகும்.

குறிப்புரை :

எனவே, தியானத்திற்குப் பயன் தியானிக்கப்பட்ட கடவுளது உலகத்தில் இருந்து இன்பம் நுகர்தல் ஒன்றேயாயிற்று. செய்யுள் நோக்கிச் சமாதி முதற்கண் கூறப்பட்டது. `புவனத்தினின்றும் மனத்தை வாங்க வல்லார்` என உருபு விரித்துச் செயப்படுபொருள் வருவிக்க. இது பிரத்தியாகாரமாதல் அறிக. `நின்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்ற இடத்தில் தேங்குதலே தாரணை` என்பதும், அமுதத்தை உண்டு தேக்குவார் தியான யோகிகள் என்பதும் வெளிப்படை. தான், தியானிக்கப்படும் கடவுள். `தன்தன்` என்பது அடுக்கு. தியானத்தின் பயனே கூறக்கருதினாராயினும், சிவயோகம், பிறயோகம் என யோகம் இருவகையாய் நிகழும் என்பதனை ஈண்டு உணர்த்துதற்குப் பிறவற்றின் பயனையும் உடன் கூறினார். பிரத்தி யாகாரத்திற்குக் கீழ்உள்ளவற்றில் சிறப்புப்பயன் இன்மை அறிக. இத்திருமந்திரத்திற்கு, `திருப்பாற் கடலில் தூங்க வல்லார்` என ஒரு சொல் வருவித்தும், `வாங்குதல்` என்பதற்குப் `படைத்தல்` எனவும் `தேங்குதல்` என்பதற்கு, தான் அழியாது நின்று பிறவற்றை அழித்தல், எனவும் பொருள் கூறியும் இடர்ப்பட்டுத் தாம் தாம் வேண்டியவாறே உரைத்தனர்.
இதனால், தியானத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

பொழிப்புரை :

தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.

குறிப்புரை :

`உபாதி` எனினும், `செயற்கை` எனினும் ஒக்கும். அது தாத்துவிகத்தின் மேல் ஆதற்கு, ``காரியமான உபாதி`` என அடை கொடுத்து ஓதினார். `கடந்தபின்` என்பது `கடந்து` எனத் திரிந்து நின்றது. ``ஆரிய`` என்பது, `ஆர்` என்பது அடியாகப் பிறந்த பெய ரெச்சம். ஆர்தல் - நிரம்புதல்; காரியத்தின் தோற்றத்திற்கு ஏற்புடைத் தாதல். தாத்துவிகங்கட்குக் காரணம் தத்துவமாதல் வெளிப்படை. ஏழென்னும் தொகையானே, இவை வித்தியா தத்துவமாதல் விளங்கும். இவற்றோடே அசுத்தம் நீங்குதல் பற்றி, இவற்றின் மேல் உள்ளவற்றைக் கூறிற்றிலர். ``வாரிய`` என்பது, `வாரி` என்பது அடியாகத் தோன்றிய பெயரெச்சம். வாரி - வருவாய். இது முடிவின்றி வருதலை உணர்த்திற்று. முடிவின்றிக் கிளைத்து வரும் காரணப் பொருள் வினையேயாதல் அறிக. `தாரியல் தவம்` என மாற்றுக. தார் - ஒழுங்கு. ``தற்பரம்`` என்பதில் தன் என்பது ஈறு திரிபெய்தி முடிந்தது. ``சமாதி`` என்றது, அதன் பயனை. உபாதியைக் கடத்தல் முதலிய மூன்றும் யோகத்தின் குறிக்கோள் என்பதை முன்னர் உணர்த்தி, மறுமையில் தான் தியானித்த பொருளோடு ஒப்ப நிற்றல் யோகத்தின் முடிந்தபயன் என்பதனை இறுதியிற் கூறினார். சித்தாந்த நெறி உணராதார், `உபாதி` என்பதே பற்றி இத்திருமந்திரத்திற்குச் சொற்களை வேண்டியவாறே நலிந்துரைத்து, மாயாவாதப்பொருள் கூறுவர்.
இதனால், சமாதியின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே. 

பொழிப்புரை :

யாவரும் அட்டமா சித்திகளைப் பெற்று, அவற்றை எட்டுத் திக்கிலும் சென்று விளங்கக் காட்டிப் பெருமை பெற்றது, சிவபெருமானைப் பல்லாற்றானும் வழிபட்டேயாம்.

குறிப்புரை :

பணிதல், நிலத்தில் வீழ்ந்து வணங்குதல், தொழுதல், கும்பிடுதல், அணிதல், ஒப்பனை செய்து மகிழ்தல், தணிதல், அடங் குதல். துணிதல் - நம்புதல். ``எண்திசை சென்று அட்டமா சித்தி தாபித் தவாறு, பரமனை நாடித் துணிந்து எண்திசையிலும் சென்று பணிந்து, தொழுது, அணிந்து, தணிந்து`` எனக் கூட்டுக. `சிவபெருமானை எவ்வகையிலேனும் நினையாமல் சித்தி பெறுதல் கூடாது` என்பதாம்.
இதனால், அட்டமா சித்திப் பேற்றிற்கு ஆவது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே. 

பொழிப்புரை :

``யான் பெறும் பரிசாவது சிவபெருமானது திரு வடிப் பேறு ஒன்றே`` எனக் குற்றமற உணர்ந்து அவனை யான் அகத்தே தியானித்தேன். ஆகவே, எனக்குப் பெறற்கரிதாய பேறு யாதும் இல்லை; (எல்லாப்பேறும் எளியனவே) அதனால், பிறர் அரியனவாக உணர்கின்ற அட்டமாசித்திகளை அவன் எனக்கு நிரம்பக் கொடுத்துப் பெரும்பயனாகிய பிறவி நீக்கத்தையும் அளித்தருளினான்.

குறிப்புரை :

அறிவானவர்; உருத்திர சிவகணத்தார். பண்பன் - அவருக்கு நல்லன். தூவெளி - சிறந்த ஒளி. இஃது ஆஞ்ஞையில் தியானிக்கப்படுவது.
இதனால், சிவயோகியர்க்கு அட்டமாசித்தி தாமே கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

பொழிப்புரை :

யோக குருவின் அருளால் அவன் குறித்த முறைப் படியே மூலாதாரத்தை நோக்கி ஓடப் பார்க்கும் வாயு, அவ்வாறு ஓடாது சத்தித் தானமாகிய இலாடத்திற் சென்று சேரும் அரிய நேரத்தைப் பார்த்து, அவ்வாறு சேரும் வாயுவே துணையாகச் சாம்பவி யோகம் கேசரி யோகங்களைச் செய்வார்க்குப் பெரிய சிவகதி போலக் கிடைப்பது, எட்டாம் சித்தியாகிய வசித்துவமாம்.

குறிப்புரை :

``குறிவழிசேர`` என இயையும். மூலத்தின் வழிச் செல்லுங்காற்றை, ``மூலன்`` என்றும், ``நாதம், விந்து`` என்பவற்றில் விந்து, சத்தி பேதமாகக் கூறப்படுதலின், விந்துத் தானத்தை ``பரை`` என்றும் கூறினார். மணம் - கூடுதல்; சேர்தல். ``சங்கடம்`` என்பது விரித்தலாயிற்று. சங்கடம் - சிறிதிடம். மந்திரத்தை உபாஞ்சுவாகக் கணித்தல் சாம்பவி யோகம். இதில் கண்கள் சிறிது திறந்திருக்கும். மந்திரத்தை மானதமாகக் கணித்தல் கேசரி யோகம். இதில் கண்கள் மூடியிருக்கும். இவையே இவை பற்றிக் கூறும் வாக்கியங்கட்குக் கருத்தாதல் அறிந்துகொள்க. சாம்பவி - அம்பாளோடு (சத்தியோடு) கூடியது. ``சாம்பவி தீக்கை, சாம்பவி முத்திரை`` என்னும் இடங்களிலும் சாம்பவி, இப்பொருட்டாதல் அறிக. சத்தி, உலகிற்கும், சிவத்திற்கும் இடைநிற்கும் நிலை. ``எட்டாவது சித்தி இவ் யோகங்களாற் கிடைக்கும்`` எனவே, இவை ஒழிந்த ஏனை யோகங்களால் சில சித்திகளே கிடைக்கும் என்பது பெறப்பட்டது.
இதனால், சித்திகளை முற்றப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :

ஆகாயம் முதலிய பூதங்களையும், கலை காலம் முதலிய உள்ளந்தக் கரணங்களையும் பற்றி நின்று ஒரு பொருளைச் சுட்டி யறியாமல் வியாபகமாக அறியும் அறிவால், ஒன்றாய், அனாதியே தனக்கு அறிவைத் தருதலை ஒழியாத பதிப்பொருளின் உண்மையை அடைய விரும்பினால், என்றும் அழியாத பரவெளியிற் சேரலாம்.

குறிப்புரை :

என்றது, `சித்திகளை விரும்பாது மெய்ஞ்ஞானத்தை விரும்பி யோகம் செய்தலே சிறந்தது` என்றவாறு. சிவத்தை விரும்புதல் வியாபக அறிவாதலும், பிறவற்றை விரும்புதல் ஏகதேச அறிவாதலும் உணர்க. ``அகலம்`` என்னும் பண்புப்பெயர் ஈறுகெட்டு, ``அறிவு`` என்பதனோடு புணர்ந்தது. அகலம் - விரிவு. ``அறிவு உண்மையைக் கூடினால்`` என்க. உண்மை - தன்னியல்பு. பர காயம் -மேலான வெளி. ``பராகாயம்`` எனவும் பாடம் ஓதுவர்.
இதனால், சித்தி காம யோகத்தினும், முத்தி காம யோகமே சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது. எனவே, ``பரகாயப் பிரவேசம்`` என்பது சித்தி காமத்திற்கு, ``பிறிதோர் உடம்பிற் புகுதல்`` எனவும், முத்திகாமத்திற்கு, ``சிதாகாசத்திற் புகுதல்`` எனவும் பொருள் தந்து நிற்றல் குறிக்கப்பட்டவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 5

இருபதி னாயிரத் தேழ்நூறு பேதம்
மருவிய கன்மமாம் மாபந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே. 

பொழிப்புரை :

கன்மத்தையே பொருந்தச் செய்கின்ற சித்தி காம யோகம், இருபதினாயிரத்து எழுநூறாய் விளங்கும். சித்திகளையே தருகின்ற இவை அனைத்தும் உடல் உழைப்பாவனவன்றி, உணர்வுப் பெருக்கமாதல் இல்லை. இவை இத்துணையாக விரிவன வாயினும், சித்திகளின் தொகை நோக்கி எட்டாய் அடங்கும்.

குறிப்புரை :

எனவே, அவ்வெட்டும் அவ்வச் சித்தியோகம் எனப்படும் என்க. சித்தி யோகம் இத்துணைத் தாய் விரியுமாறு பின்னர், ``முந்திய முந்நூற்றறுபது`` எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும். அதனானே ``எண்ணூறு`` என்பது பாடம் ஆகாமையும் விளங்கும். ``ஆரும்`` என்பது குறுகி நின்றது. ஆர்தல், நிரம்புதல். ``சித்திக்கு`` என்றது, ``சித்திக்குத் தக`` என்றவாறு.
இதனால், சித்தி யோகத்தின் அல்லற்பாடும், அதன் இழிபும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியஓ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே. 

பொழிப்புரை :

பன்னிரு கலையுடைய சில அதிசய நிலவுகள் முற்றும் மறைந்து பின் தோன்றும்பொழுது அக்கலைகளில் நான்கு ஒழிந்தேபோக, எட்டே நிலைபெறுகின்றன. அவ்வொழிவு நீங்கி அனைத்துக் கலைகளும் நிலைபெறும் செயலைப் பன்னிரண் டாண்டுகள் அயராது செய்தால், அவ்வாண்டெல்லைக்குள் சித்திகள் கைகூடும்.

குறிப்புரை :

பிராண வாயுவின் அளவான பன்னிரண்டங்குலத்தைக் கலையாக உருவகித்தற்கு, அவ்வாயுவைத் திங்களாக உருவகம் செய்தார். இவ்விரண்டு உருவகங்களும், தேய்தல், வளர்தலுக்கு ஏற்புடையவாயின. `உதயமதில்` எனவும், திதமான ஈராறில் எனவும் உருபு விரிக்க. ``பற்று`` என்பது, `செலவு` என்றவாறு. திதம் - நிலைபேறு. `அவ்வீராறில்` எனச் சுட்டு வருவிக்க. கன்ம யோகங்கள் யாவும் காய உழைப்பேயாதலின், `பிராணாயாமத்தால் காயம் செம்மையுற்றிருந்தாலன்றி, அவற்றின் பயனாகிய சித்திகள் எய்தா` என்க. `பிராண வாயு இயங்குங்கால் பன்னிரண்டங்குலமாக வெளிச் சென்று எட்டங்குலமாக உட்புகும்` என்பதும், அவ்வாறின்றி உட்புகும் பொழுதும் பன்னிரண்டங்குலமாகச் செய்யின் உடல் தளர்ச்சியுறாது என்பதும் முன்னே கூறப்பட்டன.
இதனால், சித்திகள் எய்துதற்கு யோக கால அளவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின்
நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே. 

பொழிப்புரை :

சுற்றத் தொடர்பு யோகத்திற்குத் தடையாகும். யோகமின்றி, நூலறிவு, உலகியலறிவு, இயற்கை நுண்ணறிவு முதலியவற்றுள் ஒன்றினாலும் சித்திகள் கிடைக்கமாட்டா. அவை வேறு வேறாகக் கிடைத்தற்குச் செல்லும் தீர்ந்த யோக கால எல்லையாக நூல்களில் கேட்கப்படுவது, மேற்குறித்த பன்னிரண்டாண்டுகளாம்.

குறிப்புரை :

ஆகவே, `சித்திகளைப் பெறவேண்டுவார் சுற்றத் தொடர்பு, நூலாராய்ச்சி முதலியவற்றிற் காலம் கழியாது, பன்னிரண் டாண்டு யோகத்தில் நிற்க` என்பதாம். கேட்டல், கேட்கப்படும் கால அளவு; ஆகுபெயர்.
இதனால், மேலது நன்கு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

பொழிப்புரை :

யோகத்தைக் குறைவின்றிப் பயின்றால், ஏழாவ தாண்டில், பிறர் உடன் தொடர இயலாதவாறு காற்றைப் போலக் கடிதிற் செல்லும் நடை உளதாகும். அந்நடையது வேகம் எத்துணைக் காவதம் நடந்தாலும் குறையாது. எட்டாவது ஆண்டில், நரை திரை இருப்பினும் மறைந்து இளமைத் தோற்றம் காணப்படும். ஒன்பதாவது ஆண்டில் உடம்பு தேவ சரீரம்போல ஒளிவிடும்.

குறிப்புரை :

``தோன்றா`` என்பது, `மறையும்` என்னும் பொருட்டு. திரை, தோல் சுருங்கி மடிந்து தொங்குதல். ``தான்`` என்றது, தன் உடம்பைக் குறித்த ஆகுபெயர். `பரம்` என்பது `தெய்வம்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், குறைவிலா யோகத்தின் அடையாளங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி
சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ்
வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே. 

பொழிப்புரை :

யோகத்தில் பத்தாவதாண்டில் முன்பு இளைத்த உடம்பு பருத்துக் காணப்படும். பதினொன்றாவது ஆண்டில் நெருப்புப்போன்ற உருவினை உடைய உருத்திரனைப் போன்ற செம்மேனியும், எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றலும் உளவாகும். மேல், `எட்டாவது சித்தி` எனக்குறித்த அது, மேல் ஏழ் உலகம், கீழ் ஏழ் உலகம் இவைகளிற் சென்று அங்குள்ளாரையும் தன்வசப்படுத்தி நிற்றலாம். அது பன்னிரண்டாவது ஆண்டில் எய்தும்.

குறிப்புரை :

பூரித்தலுக்கு `உடம்பு` என்னும் வினைமுதல் வரு வித்துக்கொள்க. ``பூரித்து`` என்னும் எச்சம் எண்ணின் கண் வந்தது. `தீயான` என்பது குறுகிநின்றது. `திருத்தார் நன்றென்றேன் தியேன்`` (யாப்பருங்கலக் காரிகை, 24, உதாரணம்) என்றாற்போல. `ஈராறில் எண் சித்தியாம்` என மாற்றிக்கொள்க. சீர் - தட்டு நிலை. ``வியாபி`` என்றது, தான் பணியப்படுதலை. மேல் (பா.627) ``எட்டாஞ் சித்தி`` எனப்பொதுப்படக் கூறியதனை, இதன் பிற்பகுதியால் விளங்கக் கூறினார். `ஓரொன்றிலும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அஃது ஈராறில் ஆம்` என முடிக்க.
இதனால், எஞ்சிய அடையாளங்களுடன், முடிந்தது முடித்துக் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. 

பொழிப்புரை :

எட்டுச் சித்திகளாவன, யோகி ஒருவனே தான் வேண்டியவாறு எட்டுத் தன்மையனாக நிற்றல். அவை அணுவி னுள்ளும் அணுவாய் நுழைதல், அண்டத்தினும் பெரியோனாய் அவற்றைக் கடந்து நிற்றல், காற்றினும் நொய்ம்மையனாய் வானத்தில் உலாவுதல், எத்துணை ஆடவர் கூடி எடுப்பினும் எடுக்கமாட்டாத வராம்படி மலை போலத் திண்மை யுடையனாயிருத்தல், நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் செல்லுதல், நினைத்ததை அடைதல், எல்லோராலும் ஏற்றுப் போற்றப்படுதல், யாவரையும் தன்வழிப் படுத்தி நிற்றல் என்பனவாம்.

குறிப்புரை :

இவை முறையே, `அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்` என்னும் காரணப்பெயர் உடையன என்க.
இம்முறைக்கு ஏற்ப இத்திருமந்திரத்தில் ``பரகாயம் சேர் தன்மை`` என்பதை ``மானாக் கனமும்`` என்பதற்கு முன்னும், `வியா பியும்` என்பதை ``ஆனாத உண்மையும்`` என்பதற்கு முன்னும் கூட்டி உரைக்க. ``சகத்து`` என்றது நில அண்டத்தை. நோன்மை - வலிமை; ஆற்றல். அஃதாவது எல்லாப் பொருளையும் உள்ளடக்கி நிற்றல். இங்கு அஃது அதுபோன்ற ஆற்றலைக் குறித்தது. மானா - ஒரு பொருளும் ஒப்பாகமாட்டாத. பரகாயத்து ஏகல் - பிற உயிரின் உடம்பிற் புகுதல். இஃது எவ்விடத்தும் எளிதிற் செல்லுமாற்றிற்குச் சிறந்து நின்ற உபலக்கணம். ஆவது - பொருட் பேற்றால் உயர்தல். பர காயம் - மேலான ஆகாயம்; என்றது பூதாகாசத்தையேயாம். `தன்மையும்` என்பதனை, `நொய்ம்மையும்` என ஓதுதல் சிறக்கும். ஆனாத உண்மை - பிறர் தன்னை விட்டு நீங்காத நிலை. ``வியாபி`` என்றதை மேலை மந்திரத்திற்போலவே கொள்க. இச்சித்திகளை ஞானியர் விரும்புதல் இல்லை; எனினும் அவர்களிடத்து இவை தாமே அடையும். அடையினும், இவற்றை அவர் பயன்படுத்துதல் இல்லை. இனி, ஞானசம்பந்தர் முதலியோரிடத்து நிகழ்ந்த அற்புதங்கள் இறைவனே நிகழ்த்தினவல்லது, இச்சித்திகளின்பால அல்ல என்பது உணர்க.
வீரவாகு தேவரிடத்தும், அநுமனிடத்தும் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, சித்திகள் விளங்கினமை அவரவர் வரலாற்றுட் கேட்கப்படுகின்றன. `மவுற்கல்லியர்` என்னும் முனிவர், வேண்டிய வடிவங்கொண்டார் என்பதும் `பிராத்தி`. வசிட்டர் முதலியோர் தாம் இருந்த இடத்தில் காமதேனு முதலியவற்றை வருவித்துப் பயன் கொண்டனர் என்பதும் `பிராகாமியம்` என்னும் சித்தியாம். முனிவர் பலரும் பலராலும் புறக்கணியாது பணியப்பட்டமை `ஈசத்துவம்` என்னும் சித்தியாம். நெருப்புச் சுடாதவாறு நின்று அதன்மேல் இருத்தல், நீர் ஆழ்த்தாதவாறு நின்று அதன்மேல் நடத்தல், கொடிய விலங்குகளையும் ஏவல் கேட்டு நடக்கச்செய்தல், மழையைப் பெய்வித்தல், நிறுத்தல் முதலியன `வசித்துவம்` என்னும் சித்தியாம். மற்றும் இவற்றின் இயல்புகளை ஓர்ந்துணர்ந்துகொள்க.
`கரி` என்பது யானை; அது திண்மையைக் குறித்து நின்றது. ஆயினும், அதற்கு, `சாட்சி` எனப்பொருள்கொண்டு, `விடயங்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணாமை கரிமா` என்கின்றார், சிவஞான போதப் பாடியம் உடையார். அஃது ஒருசார் நூல்களில் - அல்லது ஆகமங்களில் காணப்படும் சிறுபான்மை வழக்காதலன்றிப் பெரும் பான்மை வழக்காகத் தெரியவில்லை. மேலும், அணிமாவிற்கு மறுதலைப்பட மகிமா இருத்தல் போல, இலகிமாவிற்கு மறுதலைப் பட்ட தொன்று இருத்தலும் வேண்டப்படுவதே. அன்றியும், விடயத்தில் தொடக்குண்ணாதிருத்தல் முத்திப் பகுதியாவதன்றிச் சித்திப் பகுதியும் ஆகுமோ என்பது ஆராயத்தக்கது. இனிச் சித்திகளை ``உடம்பால் பெறுவனவும், மனம் முதலியவற்றாற் பெறுவனவும்`` என இருவகையவாகப் பகுத்துணர்த்துகின்ற அவர், ``இருவகையவும் தனித்தனி நந்நான்காய் உள்ளன`` என்னாது, ``உடம்பாற் பெறுவன அணிமா, மகிமா, இலகிமா`` என்னும் மூன்றே என்கின்றார். இவற்றுடன் கரிமாவையும் உடம்பாற் பெறுவனவாகக் கொள்ளின் சாலப் பொருந்தும். `கனமும்` என்பதை, ``ககனமும்`` என ஓதுவாரும் உளர்; அஃது யாப்பிற்கு ஒவ்வாமை அறிக.
இதனால், ``எட்டுச் சித்திகளாவன இவை`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்தோன் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே. 

பொழிப்புரை :

யோகி, அணிமாவால் தான் நினைத்த உயிருட் புகுந்தவிடத்தும் மகிமாவால் அவற்றைக் கடந்து நிற்கும் தன்மை குறைபடுதல் இல்லை. எவ்வாறெனில், மகிமா நிலையில் நின்ற அவனே அணிமாவால் அவ்வுயிர்களுள் செறிந்துவர, அவற்றைக் கடந்து நிற்கும் நிலை திரிபின்றி நிற்கும் ஆகலான்.

குறிப்புரை :

``தான் அணுவாய்ப் பல உயிர்களால் ஏற்கப்பட்ட காலத்தும் தாங்கிய தன்மை ஒர் குறையில்லையாய் நிற்கும்`` என்க. ``தன்மையும்`` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். எழுதல் - கடத்தல். ``எழுந்தோம்`` என்பது பாடமாயின், யோகியின் தன்மையைத் தம்மேல் வைத்து ஓதியதாக உரைக்க. அவற்றுள் - முற்கூறிய பல்லுயிர்களுள், ``ஆகலான்`` என்பது சொல்லெச்சம்.
இதனால், அணிமாவின் இயல்பறியாது ஐயுறும் மாணாக்கர்க்கு அவ்வையம் அகற்றப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம்
உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே. 

பொழிப்புரை :

``ஓர் ஆண்டு முந்நூற்றறுபது கூறுகளைக் கொண்டது`` எனத் தொன்றுதொட்டுக் கொள்ளப்பட்டு வருகின்ற அக் காலக் கூறு - அஃதாவது, ``ஒருநாள் என்பது, நாழிகைகளின் தொகுதியால் அமைந்தது. அந்த நாழிகைகளை ஐந்து கூறாகப் பகுத்து அப்பகுதி ஐந்தையும் ஐம்பூதங்கட்கும் உரிய பகுதிகளாகப் பாவனை செய்துகொள். பின்பு நிலம் முதலிய பூதங்களின் ஆற்றல் சுவாதிட்டானம் முதலாகத் தோன்றி நிலைபெறுவனவாகக் கொண்டு யோகம் செய்.

குறிப்புரை :

``நாள்`` என்னாது, ``காலம்`` என்றார். ``யாவும் காலத்தின் வழிப்பட்டு நடப்பன`` என்றற்கு. ``ஓர் ஆண்டிற்கு இத்துணை நாள்`` என்பதில் வேறுபாடுகள் பல உள. அவற்றுள் இங்குக் குறிக்கப்படுவது, ``முந்நூற்றறுபது நாள்களைக் கொண்டது`` என்பார், அதனை எடுத்தோதினார். இது கதிர்யாண்டு (சௌரமான வருடம்) இதற்கு முந்நூற்றறுபத்தைந்து நாள் சொல்லப்படுமாயினும், ஐந்து நாள்களை நாயனார் கொண்டிலர். இவ் யாண்டு ஒன்றே மக்கட்கு ஒரு வயது. இதன்படி மக்கள் வாழ்நாள் காலம் நூறு வயது. இனிக் கிரக தசா வருடங்கள். ``முந்நூறு நாள்கள் கொண்டது ஒரு வருடம்`` என்னும் கணக்கில் அமைந்தவை. அதன்படி, ``மக்கள் தாய் வயிற்றில் ஓர் ஆண்டுக் காலம் இருக்கின்றனர்`` என்பதும், ``பிறந்தபின் நூற்றிருப தாண்டு வாழ்வர்`` என்பதும், ``அந்நூற்றிருபதாண்டுகளும் ஒன்பது கோள்களுக்கு ஏற்ற பெற்றியால் அமைந்து நிற்கும்`` என்பதும் சோதிட நூற்கொள்கைகள். எனினும், இஞ்ஞான்று கிரகதசா வருடங்களும், முதற்கண் கூறிய கதிர்யாண்டின்படியே கொள்ளப்படுகின்றன.
``அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள்`` என்பதில் பரத கண்டத்தில் வேறுபாடின்மையால், அதனை விதந்தோதாது வாளா, ``வந்தது, நாழிகை`` என்றார். ``நாழிகையால்`` என உருபு விரித்து, ``நாழிகையால் வந்தது`` என மாறிக் கூட்டுக. ``அவற்றை வான் முதலாயிடச் சிந்தைசெய்`` என ஒருசொல் வருவித்துக் கொள்க. ``வலம் மண்முதல் உந்தியுள் நின்று உதித்தெழுமாறு தேர்ந்தறிவாய்`` எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. ``தேர்ந்தறிவார் வலர்`` என்பது பாடமாயின், இதனை, யோகியரது இயல்பாக்கி உரைக்க. ``உந்தி`` என்றது இங்கு அதற்குக் கீழ் உள்ள சுவாதிட்டானத்தை.
இதனாற் சொல்லியது, ``ஒரு நாளில் உள்ள நாழிகையை ஐந்து கூறிட்டு அக்கூறுகளை ஐந்து பூதங்கட்கு உரியவாக்கி, சுவாதிட்டானம் முதலிய ஆதார யோகங்களை அப்பூதங்கட்கு உரிய அந் நாழிகைகளில் செய்தல் வேண்டும்`` என்பதாம். ``ஒருநாளின் தொடக்கம் வைகறைப் போது`` எனக் கொள்ளப்படுதலால், பகலவன் தோற்றத்திற்கு முன் ஆறு நாழிகையை நிலம் என்னும் பூதத்தின் காலமாகக் கொண்டு முதலதாகிய சுவாதிட்டான யோகத்தைத் தொடங்கல் வேண்டும். பின் அவ் ஆறு நாழிகை நீர், நெருப்பு, காற்று, வானம் என்பவற்றுக்கு உரியனவாகக் கொண்டு மணிபூரகம் முதலாக ஆஞ்ஞை வரையில் செல்லுதல் வேண்டும். செல்லின், பகல் பதி னெட்டு நாழிகை முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் ஆஞ்ஞையில் நிற்கவேண்டி வரும். யோக நிலையில் இதனோடே பகற் காலம் முடிவுறும். பின்னும் இவ்வாறே சுவாதிட்டானம் முதலாகத் தொடங்கி, இரவு பதினெட்டு முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் உள்ள பகுதியில் ஆஞ்ஞை யோகத்தில் இருத்தல் வேண்டும். இவையெல்லாம் உய்த்துணர்ந்து உரையிற் கொள்ளப்படும். ``வான் முதலாயிட`` என்பதற்குச் ``சூரியோதயம் தொடங்கி`` எனவும், ``மண் முதல்`` என்பதற்கு ``அத்தமனம் தொடங்கி`` எனவும் தாம் வேண்டுமாறே அச்சொற்களை வருவித்துக்கொண்டு தமக்குத் தோன்றியவாறேயும் உரைப்பர். அஃது, `உந்தியுள் நின்று உதித்தல்` என்றதனோடு ஒவ்வாமை அறிக.
`இவ்வாறு இடைவிடாது யோகத்தில் இருப்பின், உண்டல், உறங்கல் முதலியவற்றிற்குக் காலம் எப்பொழுது` என ஐயுறல் வேண்டா; என்னை? இது, `ஆதார யோகத்திற் குரிய காலமுறை இவ்வாறு கொள்ளத்தக்கது` எனக் கூறியதன்றி, `அவற்றை இடையறாது செய்தல் வேண்டும்` எனக் கூறியதன்று ஆகலான். யோகமாகிய அறிதுயிலில் இருப்போர் அதனை விடுத்து உலகியலில் விழித்தல் எளிதாதலின் அஃது எந்த நேரத்திலும் இயல்வதேயாம். சிலர் சில நாள்காறும் ஊண் உறக்கம் இன்றி இடைவிடாது செய்ய வல்லராயும் இருப்பர். ஆகவே `இஃது அவரவரது ஆற்றலுக்கு ஏற்பக் கொள்ளப் படுவதே` என்க. எனினும், பொருள் ஈட்டலில் கருத்துடையவர் பொழுதை வீண்போக்குதலும், பொருட் பேற்றிற்கு மாறானவற்றைச் செய்தலும் இல்லாமை போல. யோகத்தில் கருத்துடையோரும் பொழுதை வீண்போக்குதலும், யோகத்திற்கு மாறானவற்றைச் செய்தலும் இலர் என்க.
இங்ஙனமாகவே, மேல் (பா.632) ``ஏழானதிற் சண்டவாயுவின் வேகியாம்`` என்பது முதலாகக் கூறிய ஆண்டுக் கணக்குகள் இங்குக் குறித்த முறையில் ஆதாரயோகம் நிகழும் நாழிகை யளவால் அமைவ தன்றி, ஏனையோர்க்குப் போலப் பகலவனது தோற்ற மறைவு மாத்திரையானே அமைவதன்று என்பது பெறப்படும். அந்த நாழிகைத் தொகையே, மேல், (பா.629) ``இருபதினாயிரத்தேழ்நூறு பேதம்`` எனக் குறிக்கப்பட்டது. ஒருநாளைக்கு அறுபது நாழிகையாக, முந்நூற்றறுபது நாள்களுக்குக் கணக்கிட வருவது. (360 x 60 = 21600) இருபத் தோராயிரத்து அறுநூறு நாழிகை. இதில் பதினைந்துநாள் குறையினும் ஓராண்டாகவே பயன்தரும் என்றற்கே, தொள்ளாயிர நாழிகை தள்ளி, (21600 - 900 = 20700) ``இருபதினாயிரத்து ஏழ் நூறு பேதம்`` எனக் கூறினார். எனவே, சுவாதிட்டானம் முதலிய ஐந்தில் ஒவ்வோர் ஆதார யோகமும் நாலாயிரத்து நூற்று நாற்பது (4,140) நாழிகையிற் குறையாது சம அளவில் நிகழின், அதுவே யோகத்தின் ஓராண்டு எனவும், `அவ் வகையில் பன்னிரண்டாண்டுகள் சென்ற பின்பே சித்திகள் எய்தப் பெறும்` எனவும் கொள்க. `இவ்வாறு சொல்லிய யோக காலத்தை, யோகிகள், மந்திரம் கணிப்பவர் தாம் கருதிய உருவளவை இடை விட்டாயினும், இடைவிடாதாயினும் கணித்து முடித்தல் போல முடிப்பர்` எனவும், அவ்வாறு முடிக்குங்கால் இங்குக் கூறியமுறை வழுவாது செய்து முடிப்பர் எனவும், `யோகப்பயிற்சி உடையவர் தாம் விரும்பும் ஆதார யோகத்தை விரும்பியவாறே செய்ய வல்லராய் இருப்பர்` எனவும் உணர்க. மூலாதாரயோகம், குண்டலியை எழுப்பு தல் மாத்திரையாய் அமைதலின், அது சுவாதிட்டான யோகத்தில் அடங்கிற்று. ``நின்று வுதித்து`` எனக் குற்றியலுகரம் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `பன்னிரண்டாண்டு யோகம் செய்க` என மேற்கூறிய ஆண்டின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. 

பொழிப்புரை :

(அட்டமா சித்திகளை அடைய விரும்பி அவற்றைப் பெறும் பவயோகம் செய்பவர் அதனிடையே மலபரி பாகம் காரணமாக) மனம் வேறுபட்டு, சிவனை அடையும் வேட்கை யராய் முத்திப்பேற்றிற்குரிய வழியை உணர்ந்து ஐம்புல ஆசையற்றுச் சிவஞான ஒழுக்கத்தில் நிற்கும் சிவயோகியராதலும் உண்டு. அவ் வாற்றால் தத்துவங்களின் நீங்கவேண்டி மேற்கூறிய ஐம்பூதங்களின் கட்டினின்றும் நீங்கினோர், உள்ளம் இறைவனது ஆனந்த நடனத்தில் ஒடுங்கப் பெறுவர்.

குறிப்புரை :

சிவமயமாதல் சிவனை அடைதலாகிய ஒன்றிலே குறியாய் இருத்தல். `முத்தி` `முத்தம்` எனத் திரிந்து நின்றது. முத்தி, என்றது, அதனை அடையும் நெறியாகிய ஞான ஒழுக்கத்தை. ``உற்ற`` என்ற அநுவாதம், உறுதல் உண்மைபற்றிக் கூறியது. ``முத்தர்`` என்றது யோகியரை. சுத்தமாவது, தத்துவங்களினின்று நீங்குதல். ``ஐந்து`` என்றது, மேல், ``வான்முதல்`` எனவும், ``மண்முதல்`` எனவும் கூறிய பூதங்களை. அவற்றின் தொடக்காவது, ஆதாரங்களையும், மேற் கூறியவாறு அப் பூதங்கட்கு உரியனவாக்கி அவற்றின்வழி நிற்றல். சித்திகளை வெறுத்தோர்க்கு அம்முறை வேண்டாமையின், அவரை, ``அத்தொடக்கு அற்றவர்`` என்றார். ``பரத்தின் திருநடம்``, ஆறாவதன் தொகை.
இதனால், ``சித்தியோகமாகிய பவயோகம் சிவயோகமாய் வேறுபடுதலும் உண்டு`` என்பது கூறப்பட்டது. கூறவே, ``இப்பயன் கருதியே ஞான நூல்களும் யோகத்தை விதிக்கின்றன`` என்பது அறியப்படும்.
இங்கு நின்றும் மேற்குறித்த சிவயோகம் பற்றியே கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 14

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. 

பொழிப்புரை :

சிறப்பால் தம்முள் ஒத்தனவாகிய, தனஞ்சயன் ஒழிந்த ஏனை வாயுக்கள் ஒன்பதும் வேறு வேறு நின்று செயற்படுவன. சிறப்பால் அவ்வொன்பதிலும் மேம்பட்டது `தனஞ்சயன்` என்னும் வாயு. அஃது ஏனை ஒன்பது வாயுக்களினும் ஒப்பக் கலந்து, அவற் றிற்கு வன்மையைத் தந்து நிற்கும். அஃது அவ்வாறு நிற்பதனாலே உயிரும், உடம்பும் இணங்கியிருக்கின்றன.

குறிப்புரை :

முதலடியில் ஈற்றில் நின்ற ``ஒத்தன`` என்பது, ஒன்றை யொன்று அவாவி நில்லாது தனித்து நிற்றலைக் குறித்தது. ``மிக்க`` என்றது அநுவாதம். ``ஏனை வாயுக்கள் ஒழிய இஃது ஒன்றும், ஏனையவற்றில் கலந்து நிற்றல் எவ்வாறு`` என்னும் ஐயத்தை நீக்குதற்கு அதனது இயல்பை விதந்தார். வாயுக்களில் பிராணனே சிறந்ததன்றித் தனஞ்சயன் சிறத்தல் எவ்வாறு எனின், பிராணனுக்கும் இயக்கத்தைத் தருவது தனஞ்சயன் ஆதலின் அது சிறந்தது என்க. மூர்ச்சையில் பிராணன் இயங்காது நின்றவிடத்தும் மீள அதனை இயங்கச் செய்வது இத்தனஞ்சயனேயாம். இது பற்றியே, ``இஃது இறப்புக்காலத்தில் பிராணனை உள்ளிட்ட ஒன்பது வாயுக்களும் நீங்கிய பின்பு தலைக்குள் இருந்து தலை ஓட்டை உடைத்துக்கொண்டு செல்லும்`` என்கின்றனர்.
பவயோகத்தை விடுத்துச் சிவயோகத்தில் நிற்பார் அதனை முற்றச் செய்தற்பொருட்டு வாழ்நாளை நீடித்துக் கொள்ளுதற்கு வழி கூறத்தொடங்கி, முதற்கண் இம்மந்திரத்தால் உடல் நிலைத்திருத்தற்குக் காரணம் இது என்பது இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 15

இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. 

பொழிப்புரை :

வாயுக்களுள் ஒன்றாய் இருக்கின்ற தனஞ்சயன், மேற்கூறியவாறு ஏனை ஒன்பது வாயுக்களிலும் கலந்திருக்கும். ``தனஞ்சயன்`` என்ற வாயு இல்லை என்றால், உடம்பே நிலைபெறாது பதங்கெட்டு அழியும்.

குறிப்புரை :

``இருக்கும்`` நான்கில் இரண்டாவது முற்று, ஏனை யவை எச்சம். ``இருநூற்றிருபத்து நான்காய் இருக்கும் உடல்`` என்றது, ``பிண்டம், அண்டம் அவை சமமாதல்`` (கோயிற் புராணம், பதஞ்சலி சருக்கம், 70) பற்றி, உடம்பில் இருநூற் றிருபத்து நான்கு புவனங்களும் உளவாக வைத்து நோக்கப்படுதல் பற்றியாம். ``இத்துணைச் சிறப்புடைய உடம்பு``, `தனஞ்சயன்` என்ற ஒரு காற்று இல்லையாயின் அழிந்துவிடும் என்றவாறு. ``வீங்கி வெடித்தது`` என்பது, `பதங்கெட்டு அழிந்தது` என்றபடி.
இதனால், மேற்கூறிய காரணம் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. 

பொழிப்புரை :

பலவகை நோய்களும், உறுப்புக் குறைகளும் தனஞ்சய வாயு, அளவில் செம்மையுற்று இராமையால் உளவாவன.

குறிப்புரை :

``தனஞ்சயன் செம்மையுற்றிராமையால்`` என்பது அதிகாரத்தால் கொள்ளக்கிடந்தது. இத்தீங்குகள் பிறப்பிலும், வாழ்வு இடையிலும் வருதல், இவ்வாயு, கருவிலும், இடையிலும் குறைபடுதலாலேயாம் என்க. கழலை - கட்டி. சிரங்கு - சொறிப் புண். `பலவதாய்` என்பதில் ``அது`` என்பது ``அத்தன்மை`` எனப் பொருள் தந்தது. வீங்குதல் நான்கில் முதல் ஒழிந்த மூன்றும், மிகுதற் பொருளன. ``ஆம்`` என்பதை இறுதியில் வைத்து, ``கண்ணில் மருவி வீங்கும் வியாதிகளும் ஆம்`` என மாற்றியும், உம்மை விரித்தும் உரைக்க.
இதனால், உடற்குறைக்குக் காரணம் கூறுமுகத்தால், மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. 

பொழிப்புரை :

(மேல், ``வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே`` என்றதனால், ``கண் அமைவதற்குத் தனஞ்சயனே காரணம் போலும்`` என மயங்கற்க.) கண்ணில் உளவாகும் நோய்கட்கு மட்டுமே தனஞ் சயனது செம்மையின்மை காரணமாகும். கண்ணில் பொருந்தியுள்ள நரம்புகளின் செயற்பாட்டிற்கும், அச் செயற்பாட்டினால் அமையும் கண்ணொளிக்கும் தனஞ்சயன் காரணமன்று; அவற்றிற்குக் ``கூர்மன்`` என்னும் வாயுவே காரணம்.

குறிப்புரை :

``கண்ணில்`` என்பன பலவும் சொற்பொருட் பின்வரு நிலை யணி. ``வியாதி, ஆணிகள், காசம்`` என்பன அவற்றின் காரணங்களை உணர்த்திய ஆகுபெயர்கள், அவற்றுள் ``ஆணிகள்`` என்பது முதற்கண் அவற்றின் செயற்பாட்டை உணர்த்தி இருமடி யாகு பெயராய் நின்றது. `தனஞ்சயன் உரோகம்` என மாற்றுக. `நோய்` எனப் பொருள்படும் `உரோகம்` என்னும் வடசொல் இங்கு, செப்பம் இன்மையைக் குறித்தது. பின்னிப் பிணைந்து ஒட்டி நிற்றல் பற்றி நரம்புகளை ``ஆணிகள்`` என்றார். `பிரகாசம்` என்னும் வடசொல், முதற்குறைந்து, `காசம்` என நின்றது. `தனஞ்சயன்` என்பதும், `கூர்மன்` என்பதும் சொல்லால் ஆண்பாலோடு ஒத்து நிற்றலின், `அவனல்லன்` என்றும், `கலந்திலன்` என்றும் கூறினார். ``கண்ணின் அமைப்பிற்குக் காரணம் `கூர்மன்` என்னும் வாயுவே`` என்பதனைப் பின்னிரண்டடிகளில் எதிர்மறை முகத்தாற் கூறினார்.
இதனால், மேலது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :

கடவுளருள் சிறந்தோராகிய உருத்திரன், மால், அயன் என்னும் மூவருங்கூட யோகத்தில் பத்து நாடிகளிற் கேட்கப் படுவனவாக மேலே சொல்லிய பத்து ஓசைகளாகிய முழக்கத்தைக் (பா.593) கேட்டலை விடுத்து, கண்ணிலும், இருதயத்திலும் நிலைபெற்று நின்று உடம்பில் துடிப்புள்ளளவும் `துஞ்சும்போதும் சுடர்விடு சோதி` (தி.5 ப.93 பா.8) யாகிய சிவனை அங்கே தியானம் செய்கின்றனர்.

குறிப்புரை :

`மூவரும், நயனம் இருதயம் நின்று, நாடியின் ஓசை ஓ அற, சோதியை அங்கு உணர்ந்திருந்தார்` எனக் கூட்டுக. `துடிப்பு` என்பதன் முதனிலைப் பெயராகிய `துடி` என்பது நீட்டல் பெற்றது. ``பிரமனும்`` என்ற உம்மைச் சிறப்பு. ``ஓ`` என்பது ஒலிக்குறிப்பு இடைச்சொல். `ஓவுற` எனப்பாடம் ஓதி, ஓவுதல் - ஒழிதல் என உரைத்தலுமாம். ``மூவரும் உணர்ந்திருந்தார்`` என்றதனால், ``சிவனை அடைய விரும்புவோர் அவ்வாறு நிற்க`` என்பது குறிப்பெச்ச மாயிற்று. ``நாடி ஓசைகளைக் கேட்டுக் களித்திருத்தல் சித்தி யோகி கட்கே பொருந்துவது`` என்றவாறு. சோதியை நயனத்திற் காண்டல், புறநோக்கு உளதாயவழிச் செய்யும் பாவனை. இருதயத்திற் காண்டல், தாரணை தியான சமாதிகளால் சிவனது ஒளி உருவை இருதயத்தில் காணுதல். அங்ஙனம் காணவே, பவ யோகம் ஒழியச் சிவயோகம் உண்டாகும் என்பதாம். இதனுள் இரண்டடி எதுகை வந்தது.
இதனால், சிவ யோகத்தைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே. 

பொழிப்புரை :

ஒன்பது வாயில்களை உடைய ஒரு வீடாகிய உடம்பில், ஒன்பது நாடிகளும் சுழுமுனை நாடியில் ஒவ்வோரிடத்தில் ஒருங்கு கூடுவனவாம். அவ்விடங்களை அறிந்து அந்த நாடிகளைத் தம்வசப்படுத்த வல்லவர்க்கு ஒன்பது துருத்திகளை உடைய ஓர் உலைபோல்வதாகிய உடம்பு ஞானத்தைத் தருவதாய் அமையும்.

குறிப்புரை :

நாடிகள் ஒன்பதும் தொகும் இடங்களே. நடுநாடி யாகிய சுழுமுனையில் உள்ள ஆறு ஆதாரங்கள். நாடிகள் பலவும் இணைதல் பற்றி இவற்றை ``கிரந்தி`` (முடிச்சு) எனவும் யோக நூல்கள் கூறும். நாடிகளைத் தம் வசப்படுத்துதலாவது, அவ்வவ்வாதாரத்திற் செய்யும் தியானம் முதலியவற்றிற்கு அவை இடையூறு செய்யாதவாறு அடக்குதல். இறுதியில் ``வாசல்`` என்றது காற்றைப் புகுத்துவதாகிய துருத்தியை. ``உலையில் உள்ள நெருப்பால் இரும்பு ஒரு துருத்திக் காற்றினால் வேகின்றது; உடம்பில் உள்ள வெப்பத்தால் உயிர் ஒன்பது துருத்திக் காற்றால் துன்புறுகின்றது`` என்றபடி. ``சிவயோகத்தைத் தலைப்பட்டால், இவ்வுடம்பே உயிர்க்கு இன்பம் தருவதாய் அமையும்`` என்பது கூறியவாறு.
இதனால், சிவயோகிகட்கு உடம்பு திருவருள் நெறிக்குத் துணையாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. 

பொழிப்புரை :

மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பிச் சுழு முனை நாடி வழியே தலையளவும் செல்லச் செலுத்துதல், பிங்கலை இடைகலை வழியாகப் பிராணனை முறையே வெளியே ஓடவிட்டும், உள்ளே செல்ல இழுத்தும் பயிலுதல், ஏழுலகங்களையும் சுமந்து நிற்றல் ஆகிய முறைகளை நாம் சொன்னது, சிவனது அருள்வழியில் நிற்க விரும்புபவரை நோக்கியேயாம்.

குறிப்புரை :

``ஆயினும், அவை மருள்வழியாகிய சித்தியை விரும்பி நிற்பவர்க்கும் பயன்படுகின்றன`` என்பது குறிப்பெச்சம். ``கீழங்கி`` என்பது, பின்முன்னாக மாறிநின்றது, ``கீழ் நீர்ச்செவ் வரும்பு`` (திருமுருகாற்றுப்படை, 29) என்பதுபோல. வாங்கி - மேல் ஏற்றி. ஓடவிடுதல், தாங்குதல்; இவற்றை இரவி மதி வழிகட்கு நிரனிறை வகையால் பொருத்துக. தாங்குதல் - தடுத்தல்; அஃது உள்ளிழுத்தலைக் குறித்தது. ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (பா.558) என்றதனான் இம்முறை கூறப்பட்டமை காண்க. ``இரவி மதி வழி ஓடிட`` என்றதனால், `மதி இரவிவழி ஓடிட` என்பது பெறப்பட்டதாக வைத்து, இதனை ``விபரீத கரணி`` என்னும் எதிரியக்கலாக உரைப்பாரும் உளர். ``உலகங்கள் ஏழு`` என்றது, ஆறு ஆதாரங்களுடன், உச்சியை. இவற்றைச் சுமத்தலாவது, இவற்றின் இயல்புகளை உணர்ந்து அவைகளில் நிற்கப்பழகுதல். இவை ஏழும் ஒவ்வொரு கடவுளின் உலகமாக மதிக்கப்படுதல் அறிக. இந்த ஆதார நிராதார யோகங்களின் அருமைப் பாட்டினை இவ்வாறு விளக்கி, ``இத்துணை அருமுயற்சிக்குப் பயன் அட்டமா சித்திகளே என்பது நூல்களின் கருத்தன்று`` என அறிவுறுத்தருளினார். ``அருவழியோர்க்கே, அறிவுடையோர்க்கே`` என்பவை பாடமாயினும், கருத்து இதுவே என்க. தரித்திட - தரிக்கும்படி. ``ஆங்கது`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
இதனால், ``யோகமாகிய அரு முயற்சியால், திருவருளாகிய பெரும்பயன் பெற விரும்புதலே அறிவுடைமை`` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 21

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

பொழிப்புரை :

இடைகலை பிங்கலை நாடிகட்கு நடுவே துலை நாப்போல நிற்கும் சுழுமுனை நாடியையே நல்வழியாகக் கொண்டு இயங்கத் தெரிந்தால், வலையில் அகப்பட்ட பெண் மானை வந்து அடையும் ஆண்மான்போல, அந் நாடியின் முடிவில் விளங்கும் சத்தியைத் தேடிச் சிவனும் வந்து பொருந்துவான். இந்நடு நாடி வழி, விலைக்கு விற்க வைத்திருந்த வித்துத் தனக்கே பயன்படுதல் போல்வதொரு தன்மையுடையது.

குறிப்புரை :

மூன்றாம் அடியைத் தாப்பிசையாக முன்னும், பின்னும் இயைத்துப் பொருள் கொள்க. `தலைப்படும் ஆறு` எனற்பாலதனை, துணிவு பற்றி, `தலைப்பட்ட ஆறு` என்றார். பாசத்துப் பிணை, அன்புக்குரிய பெண்மான், முன்னர், `பிணை` என்றதனால், பின்னர், ``மான்`` என்றது, ``கலை`` என்பது விளங்கிற்று. ``பிணை மான்`` என்னும் தொகைச் சொல்லை ``பிணையை அணையும் மான்`` என விரித்துக்கொள்க. `தூவழி செய்தால், பிணைமான்போல், அண்ணல் தையலை நாடித் தலைப்பட்டவாறு` எனவும், ``தூவழி செய்தால் அது விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்தாம்`` எனவும் இரு தொடராக இயைத்துரைக்க. சத்திவழியே சிவத்தைச் சார வேண்டுதலின், அதனை அண்ணல் தையலை நாடி வருவதாக ஓதினார்.
`விலைக்கு உண்ண` என்பது, ``பிறர், விலைக்குக் கொண்டு உண்ண`` என்றதாம். வைத்தது - வைக்கப்பட்ட நெல், ``ஓர்வித்தாம்`` என்றது வித்தாய்த் தனக்கே பயன்படுவதொரு தன்மையையுடையது என்னும் கருத்தினது. ``நெல்லை ஒருவன் அடுத்த ஆண்டிற்கு விதையாக வைத்துப் பெரும்பயன் கொள்ள நினையாமல் விலைக்கு விற்றுச் சிறிது பயன் கொள்ள இருக்கையில் அறிவு திருந்தினானாயின், அந்நெல்லே விதையாய் அவனுக்குப் பெரும் பயன்தருதல்போல, யோகமுயற்சியை ஒருவன் ஞானத்திற்கு வாயிலாகக் கொண்டு அதனை அடையக் கருதிச் செய்யாமல் சித்திகளைப் பெற விரும்பிச் செய்கையில் இடையே பக்குவம் அடைவானாயின், அவ்யோகமே அவனுக்கு ஞானத்திற்கு வாயிலாக அமையும்`` என்பது, ஈற்றடியிற் கூறப்பட்ட உவமையின் பொருள். `தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்` (மதுரைக் காஞ்சி, 11) அத்துணைப் பயன், விலைக்கு விற்றலால் எய்துதல் கூடாமை அறிக.
இதனால், `சித்தியோகந்தானே முத்தியோகமாய்ப் பயன்படும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. 

பொழிப்புரை :

பல இடங்களிலும் ஓடிச்சென்று அங்கெல்லாம் ஒவ்வொரு பொருளைக் கண்டவர், அக்காட்சியின் பயனாகப் பத்து நாடிகளிலும் வேறுபட்ட பத்து ஓசைகள் எழக் கேட்டு இன்புறுவர். நீவிர் அதனைச் செய்யாது, தேனை உண்ண விரும்பி அஃது இருக்கும் மலை உச்சியைத் தேடி அடைந்து அங்கே பொருந்தியுள்ள தேனை உண்டு களித்திருத்தலே யன்றி, உம்மை அழிக்கப் பாசறையில் தங்கிக் காலம் பார்த்திருக்கும் பகைவரைச் சிறைப்பிடித்தலையும் செய்யுங்கள்.

குறிப்புரை :

``ஓடிச்சென்று`` என்றதனால், `பல இடங்கள்` என்பதும், ``தேடிச்சென்று`` என்றதனால், `குறித்த பொருள் உள்ள இடம்` என்பதும் பெறப்பட்டன. ``தேன்`` என்றது, திருவருளை. விந்துவை, `அமிர்தம்` என்றலே வழக்கன்றி, `தேன்` என்றல் வழக்கன்று. `தேன்` என்றதற்கு ஏற்ப, `மலையுச்சி` என்பது கொள்ளப்பட்டது. மலையுச்சியாவது நாதாந்தம். அதனை இங்கே, தச நாதங்கள் அடங்கிய இடமாகக் கொள்க. பாடி - பாசறை; என்றது உடம்பை. பகைவர், காம வெகுளி மயக்கங்கள். சித்தியை விரும்புவோர் இவற்றை வெல்லமாட்டார் என்க. கட்டும், `கட்டுமின்` என்பதன் மரூஉ.
இதனால், `சிவயோகமே காம வெகுளி மயக்கங்களை அறுத்துப் பேரின்ப நுகர்ச்சிக்கு வழிசெய்யும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே. 

பொழிப்புரை :

ஓர் இல்லத்தில் உள்ள பல கட்டுக்களை ஒத்த ஆதாரத் தாமரை மலர்களில் அதன் தண்டினைப் பற்றி அங்கங்கு நின்று சிறிது சிறிது தேனைத் தெளித்த ஒன்பது மகளிர், அவ்விடங்களை விட்டுத் தேனை நிரம்ப முகர்ந்து வார்க்கின்ற அவ் இல்லத் தலைவியோடு சேர்ந்து விட்டார்கள். அவ்விடங்களில் நின்ற அவர்கள் அவற்றை விட்டு நீங்கித் திலகம் இட்டு நின்றதே தலைவியுடன் ஒன்றாய் நின்ற நிறைவு நிலையாயிற்று.

குறிப்புரை :

``கட்டு இட்ட`` என்பதில் `இட்ட` உவம உருபு. ஒன்பது கன்னியர் என இயையும். கன்னியரை, `கட்டுக்களில் நின்றவர்` என்றதனால், மாது, `அவ்வில்லம் முழுவதற்கும் தலைவி` என்பது பெறப்பட்டது. மட்டு - தேன்; இஃது சிறிதளவாகத் துளிக்கின்ற தேனுக்கே காரணப் பெயர். பின்னர் இது மிக்க தேனைக் குறித்தல் மரூஉ வழக்கே. இல்லத்தின் ஒவ்வொரு பகுதியில் இருப்பவர் தேனைச் சிறிது சிறிது வார்ப்பவர் என்பதனால், இல்லத் தலைவி தேனை நிரம்ப முகந்து வார்த்தல் அறியப்படும். `தளங்களி னூடு தட்டிட்டு நின்று பூரணமானது` என்க.
தட்டிடுதல் - தடைப்படுதல். முன்னர், ``தாமரை நாளத்தில்`` என்றதனால், `போனது, அதன்வழியாகவே` என்பதுபோந்தது. ஒன்பது கன்னியர், `வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவி கரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சருவபூததமனி, மனோன்மனி` என்னும் நவசத்திகள். இவர்களில் வாமை மூலாதாரத்திலும், சேட்டை சுவாதிட்டானத்திலும், இரௌத்திரியும் காளியும் மணிபூரகத்திலும், கலவிகரணி முதலிய நால்வரும் அனாகதத்திலும், மனோன்மனி விசுத்தியிலும் நிற்பர். ஆஞ்ஞையில் ஆதிசத்தி இருப்பள் என்க. `வாமை முதலிய ஒன்பதின்மரும் ஏகதேச சத்திகள்` எனவும், `ஆதி சத்தியே பூரணசத்தி` எனவும், `பவயோகியர்க்கு அனைத்துச் சித்தியும் தருகின்ற ஆதி சத்தியே, சிவயோகியர்க்கு அருட்சத்தியாய்ச் சிவானந் தத்தைத் தருவள்` எனவும், உணர்க. வாமை முதலிய சத்திகள் சித்தி களுள் ஓரோஒன்றையும், சிவானந்தத்தின் ஏகதேசத்தையும் தருவர். ஆகவே, சிவயோகியர் அவர்களை ஆஞ்ஞையில் அருட்சத்திபால் சேர்த்துச் சிவானந்தத்தை வேண்டிநிற்பர் என்பது உணர்த்தியவாறு. பொட்டிட்டு நிற்றல், ஆஞ்ஞையை அடைந்து நிற்றல்.
இதனால், சிவயோகமே நிறைவுடைய யோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. 

பொழிப்புரை :

பூரண சத்தியாகிய ஆதிசத்தி, `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாகி, குண்டலியில், `அகாரம், உகாரம், மகாரம், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம்` என்னும் ஏழு கலை களிலும் பொருந்தி இருபத்தொரு கூறாதலால், அவ் விருபத்தொரு கூறும் பிரமன் முதலிய ஐவரது தொழிற்கும் காரணமாய் அவரொடு பொருந்தி நிற்குமாறு ஏகதேச சத்திகள் அக் காரணப்பகுதிகளை (ஐ இருபத்தொன்று) நூற்றைந்தாக்கிக் கொண்டனர். (எனவே, அவை பிரம இச்சா அகாரம், பிரமஞான அகாரம், பிரமகிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாகப் பெயர்பெற்று நிற்பனவாம்.) இனி அந்த நூற்றைந்தையும் மூலாதாரம் முதலிய ஆறாதாரங்களோடும், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிராதாரத்தோடும் கூட்டி மூலாதாரப் பிரம இச்சா அகாரம், மூலாதாரப் பிரமஞான அகாரம், மூலாதாரப் பிரம கிரியா அகாரம் என்றற் றொடக்கத்தனவாக உறழ்ந்து கூற, ஏழடுக்கிய நூற்றைந்தாம் (ஏழு நூற்றைந்து - 7 x 105 = 735 ஆம்) ஆதலின், அங்ஙனமும் ஆக்கினர்.

குறிப்புரை :

அறை - பங்கு; கூறு. குண்டலி சத்தியைப் பிரமன் முதலியவரோடும் ஏழ் நிலத்தோடும் வைத்து இங்ஙனம் பலவாகப் பகுத்துக் கூறுதல், `உயிர்களின் உணர்வு அந்நிலங்களில் அதிதேவர் வழிவாக்கு வடிவாய் அளவற்றனவாகத் தோன்றும்` என்றற்கும், `அவை அனைத்தையும் ஒடுக்கித் திருவருளில் நிறுத்திப் பயன்பெற வேண்டும்` என்றற்குமாம். உணர்வுகள் அளவின்றித் தோன்றுதலையே,
ஒருபொழுதும் வாழ்வதறியார்; கருதுப
கோடியு மல்ல பல. குறள் - 337
எனக் கூறினார் திருவள்ளுவர். `எழு நூற்றஞ்சாக்கினர்; அவ் ஆக்கப் பாடு கலந்து விரிந்தது` என்க.
இதனால், `பலவகை உணர்வுகளையும், சிவயோக நெறியால் திருவருள் உணர்வில் ஒடுங்கச் செய்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 25

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே. 

பொழிப்புரை :

பல ஏகதேச சத்திகளாய் விரிந்தும் ஒன்றேயான பூரண சத்தியாய்க் குவிந்தும் சிவத்தினின்றும் புலப்பட்டுச் செயல் ஆற்றுகின்ற இவ் ஆதி சத்தி, சிவத்தில் ஒன்றாய் அடங்கியிருக்கும் நிலையினின்றும் வெளிப்பட்டுச் செயலாற்றினால் மண் முதலிய பூதங்கள் தூலமாய் வெளிப்பட்டு விரிந்தும், அவள் சிவத்தில் அடங்கி ஒன்றாய் இருப்பின், அவை (பூதங்கள்) சூக்குமமாய் ஒடுங்கியும் இருக்கும். (ஆகவே, எல்லாம் ஆதிசத்தியால் ஆவனவாகலின்) பூரக இரேசகங்களில் பாம்பு சீறினாற் போன்ற ஓசையை உடையதாய், கும்பகத்தில் சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எழுகின்ற பிராணவாயுவால் அவளிடத்தில் சென்று ஒடுங்குவாயாக.

குறிப்புரை :

`எழுந்து கரந்து இருக்கின், பரந்துகுவிந்தது` என நிரனிறையாகக் கொள்க. எழுதற்கு முன்னுள்ள நிலையை ``கரந்து உள் - உள் கரந்து`` என்றார். ``குவிந்தது`` என்பது பன்மை ஒருமை மயக்கம். `வாயுவால்` என உருபு விரித்து, `அவளிடத்தினில்` என வருவித்துரைக்க.
இதனால், திருவருளது ஆற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

பொழிப்புரை :

யோகத்தில் இடநாடி, வலநாடி இரண்டும் அடை பட, நடுநாடி வழியே செல்லும் பிராணவாயு தன் முரண் அவிந்து உனக்குத் துணையாகியே நிற்கும். அதனைப் பற்றிக்கொண்டு சென்று, ஆறு ஆதாரங்களின்மேல் எழுகின்ற சந்திரனுள்ளே பொருந்தி வளர்கின்ற மின்னற்கொடி போன்ற பூரண சத்தியில் நீ ஒடுங்கிவிடு.

குறிப்புரை :

`பின்பு உனக்குத் துன்பமில்லை` என்பது குறிப்பெச்சம். ``அடைபடும்`` என்பது, அடைபட வேறுவழியால் செல்கின்ற எனத் தன்காரியம் தோன்ற நின்றது. ``வாயுவும்`` என்னும் உம்மை, `மனம் திருந்தியகாலத்து` என இறந்தது தழுவிய எச்ச உம்மை. ஆறுதல் - இகல் நீங்குதல். இகலாவது தன்வழிப்படாமை. ``ஆறு`` என்பதன்பின், `மேல்` என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க. `மேல்` என்பது ஆறாவதனையும், அதன்மேல் உள்ள உச்சியையும் இவ் இரண்டிடங்களும் `சந்திர மண்டலம்` எனப்படும் என்க. `மிடை` என்னும் முதனிலை `மிடைந்து` என வினையெச்சப் பொருள் தந்தது.
இதனால், வாயுவை வயப்படுத்தியதனால் பெறத்தக்க பயன் திருவருட்பேறே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

பொழிப்புரை :

சந்திரமண்டலத்தில் ஒடுக்கி, மனம் ஒருங்கித் திருவருளையே உணர்ந்திருந்தால், பிராணவாயுவும் மெத்தென இயங்குதலும் ஒழிந்து, அடங்கியிருக்கும். இவ்வாறு மனமும், வாயுவும் அடங்குதலால், அவற்றின் வழிப் புறஉணர்வும், தன் உணர்வும் அற்றிருக்கும் உயிரின் உள்ளத்தையே ஐந்தொழிற் கூத்து இயற்றும் இறைவனும் தனக்குரிய இடமாக விரும்புகின்றான்.

குறிப்புரை :

``அதனுள்`` என்றது, `அதன்வழி` என்றவாறு. `உள்ளம்` என்பது, குறைந்து நின்றது. `உள்ளையே` என உருபு விரிக்க. `கூத்தனை நாடுகின்றேனே` என்பதும் பாடம்.
இதனால், `சிவயோகத்தால் சந்திர மண்டலத்தில் நிற்பவர் கட்குச் சிவனை அடைதல் வாய்க்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன்
தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.

பொழிப்புரை :

பத்து நாடிகளின் உள்ளே எழுகின்ற பத்து ஓசை களாகிய மங்கல முழக்கத்துடன் திருவருளாகிய நிதிக் குவியலைத் தேடிச் சென்று அடைந்து, அதனைக் கவர நினைக்கும் காமம் முதலிய குற்றங்களாகிய பகைவரைச் சிறைப்படுத்தி, அரண்மனையின் மேல் நிலமாகிய நிலாமுற்றத்தில் நந்தா மணிவிளக்கு (அணையாத இரத்தின தீபம்) ஆகிய சிவஞானத்தை ஏற்றிவைத்து இருத்தலே அதுவாம். (மேல், `ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கிருக்க` எனக் கூறிய சிவயோக சமாதியாம்.)

குறிப்புரை :

``திரு`` முதலாக வந்தவை இப்பொருளையுடைய சிறப்புருவகங்கள். ``தொனி`` என்றது மங்கல முழக்கத்தைக் குறித்தது. மங்கலமாவது பகைவரை அழித்து அவரது கோட்டையைக் கைப் பற்றிய வெற்றி விழா. இது தமிழ் நூல்களில் ``மண்ணு மங்கலம்`` எனக் கூறப்படும். இங்குப் பாசங்களை வென்று திருவருட் கோட்டையைப் பிடித்த வெற்றி குறிப்பிடப்பட்டது. மாடு இல் - செல்வ மனை; அரண் மனை. ஒரு கை - ஓரிடம்; மேல் மாடம். இஃது இங்கே சந்திர மண் டலத்தைக் குறித்தலின், ``நிலாமுற்றம்`` என்றற்கு ஏற்புடைமை அறிக.
``மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர்என் றுந்தீபற
தவத்தில் தலைவர்என் றுந்தீபற``
என்றார் திருவுந்தியாரினும் (பா.12)
இதனால், சிவயோகத்தது பெருமை கூறப்பட்டது.
(இதன்பின் உள்ள ``அணுமாதி சித்திகள்`` என்னும் பாடல் ``தானே அணுவும்`` என்ற திருமந்திரத்தின் பொருளையே மீள அரை குறையாகக் கூறலின், நாயனாரது திருமொழியன்றாம்.)

பண் :

பாடல் எண் : 29

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு
விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.

பொழிப்புரை :

வசப்படாத பிராணனை அட்டாங்க யோகத்தால் வசப்படுத்தினால் அட்டமாசித்தி உண்டாகும். இனி மூலாதாரத்தில் உள்ள அக்கினி, மொட்டுப்போல் மூடியுள்ள நடுநாடியைத் திறந்து கொண்டு சூரிய மண்டலத்தையும் கடந்து சென்று அப்பால் நின்ற சந்திர மண்டலத்தில் உள்ள அமுதை உண்ணுதலும் யோகத்தாலே உண்டாவ தாகும்.

குறிப்புரை :

``சித்தி கிடைத்திடும்`` என இயையும். ``கிட்டச் செய்தால்`` என ஒரு சொல் வருவிக்க. ``மதி உண்ணவும் வரும்`` என்றதனால், ``அவ்விடத்துத் திருவருளில் நிற்றலும் கூடுவதாம்`` என்பது பெறப்பட்டது. எனவே, ``அவ்வாறு நிற்கவே முயல்க`` என்ற தாயிற்று. ``மேலதாகிய மதி`` எனக் கூட்டுக. மதி, ஆகுபெயர்.
இதனால், ஆஞ்ஞைக்குக் கீழ், சித்தி பெறும் அளவில் நிற்றல் சிறப்பில்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

பொழிப்புரை :

அட்டாங்க யோகத்தால் அட்டமாசித்திகளே யன்றித் தத்துவ ஞானங்கள் பலவும் விளங்குவனவாம். ``சித்திகள்`` என்பவற்றைத் தமக்கே பெயராக உடைய அட்டமாசித்திகளும், திருவருளேயாய் நிற்கின்ற அந்தச் சித்திகள், மும்மாயைகளினும் நின்று செயல் செய்யும் ஆதிசத்தி அருள் புரிதலால் உளவாகும்.

குறிப்புரை :

திரிபுரம் - மூன்று நகர். ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்னும் மூன்று மாயையே இவ்வாறு உருவகிக்கப் படும். இம்மூன்றினும் நின்று செயலாற்றுதல் பற்றி ஆதிசத்தி, ``திரிபுரை`` எனப்படுகின்றாள். ``திரிபுர சுந்தரி`` எனக் கூறுதலும் உண்டு.
இதனால், ``அபர சித்திகள்`` எனத் தக்க மருட் சித்திகளாகிய அட்டமா சித்திகளினும் மேற்பட்டு, `பர சித்திகள்` எனத் தக்க அருட் சித்திகளும் உள்ளன`` என்பது கூறி, அவற்றிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.

பொழிப்புரை :

பர சித்தியாகிய இந்த அருட் சித்தி எட்டனையும் அடைந்து, இவற்றால் சிவப்பேறும் கைகூடப் பெற்றவரே பர லோகத்தை அடைவராதலால் அவரே ``சித்தர்`` (சித்திகளைப் பெற்றவர்) என்று சொல்லத் தக்கவர். அவர்கள் தங்கள் விருப்பம் எல்லாவற்றையும் சிவனது திருவருள் வியாபகத்துள் ஒடுக்கி அத்திரு வருளையே கண்டுகொண்டிருத்தலே உண்மை யோகக் காட்சியாம். மாயையைக் கடந்த இந்த அருட்சித்தியன்றி மாயைக்குட்பட்ட மருட்சித்திகள் அம்மாயைகளில் நின்று சிவத்தை அணுகுதல் கூடுமோ!

குறிப்புரை :

`அதனால், இந்தச் சித்தியையும் காட்சியையுமே பெற முயல்க` என்பது குறிப்பெச்சம். இங்குக் கூறியவை யெல்லாம் விசேட தீக்கை பெற்று யோக நெறியால் திருவருளையும் சிவத்தையும் மனத்தால் பாவித்து நிற்கின்ற யோகத்தில் ஞானமே யன்றி, நிருவாண தீக்கை பெற்றுக் கேட்டல் சிந்தித்தல் முதலியவற்றால் திருவருளையும், சிவத்தையும் அறிவால் உணர்ந்து நிற்கின்ற ஞானச் செய்திகள் அல்ல என்க. `பரலோகம்` என்றது, உருத்திர லோகத்தை.
இதனால், பரசித்தியது உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.

பொழிப்புரை :

``மேரு`` எனப் பெயர் பெற்ற சுழுமுனை நாடியைச் சூழ்ந்து இயங்குகின்ற, `சந்திர கலை, சூரிய கலை` என்னும் பெயரை உடைய இடைநாடி பிங்கலை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனை நாடியின் உள்ளே செல்லுமாறு மாற்றி யமைத்தபின், மூலாதாரம் முதலிய பள்ளங்களில் தறிபோல நில்லாது, அங்ஙனம் நிற்கும் குற்றத்தின் நீங்க வல்லவர்க்குப் பின் ஞானத்திற்கு ஏதுவாகிய விருப்பத்தைத் தரும் பரலோக இன்பம் இப்பொழுதே உண்டாகிப் பின்பு அவ்வுலகத்தைச் சார்தல் உண்டாகும். அத்தகை யோர்க்கு அந்த உலக இன்பங்களே அணிமாதி அட்டசித்திகளாம்.

குறிப்புரை :

மேருவை, `மந்தரம்` என்றார். `குழியில் நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. மூலாதாரம் முதல் விசுத்தி ஈறாக நின்று சித்தி களை அடைதலின் இழிபுணர்த்துகின்றாராகலின், அவ்வா தாரங்களை, ``குழி`` என்றார். தர, என்பது, ``தந்து`` எனத் திரிந்து நின்றது. `நிட்காமி யமாவது, உலகியலை விரும்பாது மெய்ந்நெறியை விரும்புதலே` என்றற்கு, அதனை, ``நற்காமியம்`` என்றார். `அக் கசடறு நற்காமிய லோகத்தை இன்றே தரப் பின் அதனைச் சார்வு ஆகும்` எனக் கூட்டுக.
இதனால், `சிவயோகிகட்குத் தவயோகப் பேறே அட்டமா சித்திகளாய் நிற்கும்` என, பரசித்தியாவது இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.

பொழிப்புரை :

கீழ் ஆதாரங்களில் இறங்காமல், ஆஞ்ஞையிலே தன்னைச் சத்தியுடன் ஓர் ஆண்டின் முடியிட்டு வைத்து, அவளுடன் நீக்கமின்றியிருந்தால், அச்சத்தி இவனுக்கு அணுவிலும் அணுவாகின்ற `அணிமா` என்னும் சித்தியாய் நிற்கும். அந்தச் சித்தியால் இவனும் அந்நிலையினனாவான். இந்த அருட்சித்தியைப் பெற்றவனை, மருட்சித்திகளால் வெல்ல இயலாது.

குறிப்புரை :

இவ் யாண்டு மேற்கூறிய யோக ஆண்டே என்க. ``அணிந்த`` என்பது, `அணுவாய் நின்ற` என்னும் பொருளது `அணி மாவாகை` என்பது குறைந்து நின்றது. அருள் நிலையில் அணுவாத லாவது, எல்லாப் பொருளிலும் நுண்ணிதாய் நிற்கின்ற திருவருளை. தானும் அங்ஙனம் நுண்ணியனாய் நின்று பாவித்தல். முன்னர், ``தான்`` என்றது, திருவருளை. தணிந்த - சிறிதாய. நொய்ம்மை, இங்கு சிறுமை மேல் நின்றது. நொய்யது - சிறிய பொருள்; ``நொய்யனாகி`` என ஓதில் சிறக்கும். ``இருந்திடும்`` என்னும் முற்று, ஆண்பாலில் வந்தது.
கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயின், கொண்டவனும் அப்பரிசே கூறுபடும்;-கொண்ட
இருபொருளு மன்றியே இன்னதிது என்னா(து)
ஒருபொருளே யாயிருக்கும் உற்று.
-திருக்களிற்றுப்படியார், 24
என வருதல் காணத்தக்கது. இதன் முதலடியும் ஈற்றடியும் உயிரெதுகை.
இதனால், பரசித்திகள் எட்டனுள், அணிமாவாவது, சிவ சத்தி எப்பொருளிலும் நிறைந்திருத்தலை உணர்தல் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.

பொழிப்புரை :

தான் காண்கின்ற எப்பொருளிலும், அணிமா வாகின்ற அந்த ஒப்பற்ற சத்தியுடனே சென்று, அச்சத்தியே தனக்கு நிலைக்களமாக, தனக்குக் கழிகின்ற காலம் முழுதும் அச்சத்திவழியே நிற்பானாயின், தற்போதங் கெடுதல் ஐந்தாண்டில் கூடும். அதுவே, பர லகிமாவாகும்.

குறிப்புரை :

``புகலது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. ``தன்`` என்றது சத்தியை. மாய்தலுக்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `அதுவே மா லகுவாகும்` என வேறு தொடராக்கி உரைக்க. தற்போதம் அறுதலால் உயிர் பொறை நீங்கி நிற்குமாகலின், இது, `இலகிமா` எனப்பட்டது. இது முதல் பல மந்திரங்கள் அந்தாதியாய் வருகின்றன.
இதனால், `பரசித்திகளுள் பர லகிமாவாவது தற்போதம் கெடுதல்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின்
சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொழிப்புரை :

பர லகிமாவாகிய தற்போதம் கெடுதல் உளதாயின் ஏகதேச உணர்வாய்ப் பொருள்களைப் பற்றுதல் விடுதல்களைச் செய்து நின்ற உயிர், நிறைந்த பேரொளியாம் திருவருளேயாய் நிற்கும்; அதன் பயனாகப் பரம்பொருளாகிய சிவத்தை அறியும்.

குறிப்புரை :

`மாயனை, தானொளி` என்பன பாடமல்ல. மூன்றாம் அடியை முதலடியின் பின்வைத்து உரைக்க. ``நின்றது`` என்பது வினையாலணையும் பெயர்.
இதனால், மேலதன் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.

பொழிப்புரை :

இலகிமா சித்திக்குப்பின் மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சத்தி உணர்த்தி நிற்பாள். அவ்வுணர்வினால் அதனை அடைதல் ஓராண்டில் கைப்பொருளாகக் கிடைக்கும். அதுவே, ஒன்றும் தோன்றாத சூனிய நிலையாகிய பர மகிமா வாகும்.

குறிப்புரை :

``சொல்லிய`` என்றனால், சொல்லுதல் அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. சொல்லுதல் - உணர்த்துதல். தத்பொருள் - அந்தப்பொருள்; என்பது பரம்பொருள். இதுவே மெய்யாதல் பற்றி மீள, ``தத்துவம்`` என்றார். சத்திவழிச் சிவம் வெளிப்படுங்கால் முதற் கண் அஃது இன்னதென அறிய வாராமையானும், பிறிதொரு பொருளும் அங்குப் புலனாகாமை யானும் வெறும் சூனியமாய்த் தோன்றுமாதலின் அதனை, ``மைப்பொருள்`` என்றார். மைப் பொருள் - விளங்காத பொருள். இது வியாபக நிலையின் தலைப் பாடாகலின், `மகிமா` எனப்பட்டது.
இதனால், `அருட்சித்தியாகிய பர மகிமா இது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் அடிநிலை ஒளியாகிய சிவத்தைக் கண்டபின், காலக் கழிவும் அங்ஙனம் கண்டவனது உணர்வில் தோன்றாது. இனி, எல்லாப் பொருள்கட்கும் மேலான தாகிய காலம், தன்னியல்பில் பொருள்களைத் தன்வழிப்படுத்து நடத்தி நிற்குமாயி னும், அவனது காலங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது அவன் வழியவேயாம்.

குறிப்புரை :

`போவதும் இல்லை` என்றது, அப்போக்கு உணர்வில் தட்டாமைபற்றி. மேல் நிற்றல், எல்லாப் பொருட்கும் மேலே நிற்றல். வெளி உறுதல், வேறிடத்தில் செயலாற்றுதல். ``தான் நின்ற`` என்றது, `தனக்கு நிலைக்களமான` என்றபடி. தன்வழியாதல், தனது மாற்றத்தை விளைக்கமாட்டாது நிற்றல். `எல்லாவற்றினும் பெரிதாகிய காலத்தையும் அருள்வழி நின்று கடத்தலால், இது மகிமாவாயிற்று` என்பது விளக்கியவாறு. இதில் இரண்டடி யெதுகை வந்தது.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.

பொழிப்புரை :

தற்போதம் இழந்து சிவத்தை உணர்ந்து நின்றால், ஞானம் மேன்மேல் பெருகும். அங்ஙனம் பெருகப் பெற்றவனால், உலகமும் நலம் பெறும். அங்ஙனம் நலம்பெற்ற உலகம் அவன் வழிப்படுமாயினும், அவன் அவற்றை ஆள நினையாது, சிவனது அருள்வழி நின்று அதுவேயாய் நிற்பன்.

குறிப்புரை :

``நின்றான்`` என்பது காலவழுவமைதி.
இதனால், சிவத்தை உணர்ந்தவன் உலகியலால் தாக்கப் படாமை கூறுமுகத்தால், `மகிமா` என்பதற்குப் பிறிதொரு காரணமும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

பொழிப்புரை :

தோன்றி நின்று தொழிற்படுவனவாகிய தத்துவங்கள் அனைத்திற்கும் தலைவியாகிய ஆதி சத்தியுடன் ஒற்றித்து நின்று கண்ட அத் தத்துவங்களை எல்லாம் யோகி தனக்குக் கீழ்ப்பட்ட வையாக உணர்ந்து ஓராண்டுக்காலம் அவற்றின் தொழிற்பாடுகளைத் தன்னின் வேறாகக் கண்டுகொண்டிருப்பானாயின், அத்தத்துவங் களால் உளவாகும் வாதனை ஒழிந்து அவ்வொழிவே அருட்சித்திப் பிராத்தியாகும்.

குறிப்புரை :

`நின்றன தத்துவம், கண்டன பூதப்படை` என்பன இருபெயரொட்டு. `தத்துவத்துக்கு நாயகி` என நான்காவது விரிக்க. தத்துவங்களை அவளுடன் நின்று காணுமாறு இலகிமாவில் சொல்லப்பட்டது. கண்டன - காணப்பட்டன. ``பூதம்`` என்பது, ஏனைத் தத்துவங்கட்கு உபலக்கணம். `எல்லாவற்றையும் கொண்டு` எனவும், `அவற்றொடு கூட இருந்திடில்` எனவும் உருபுகள் விரிக்க. கொள்ளுதல், அவைகளை வியாப்பியமாக உணர்தல். கூட இருத்தல், ஒட்டின்றிக் கண்டிருத்தல். தத்துவங்கள் தன்னின் வேறாய்த் தனக்குக் கீழ்ப்பட்ட வழி, அவை அனைத்தும் தான் நினைத்தவாறே செயற் படுதல் பற்றி இது பிராத்தி எனப்பட்டது.
இதனால், பர சித்திப் பிராத்தியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

பொழிப்புரை :

பிராத்தியில் குண்டலி சத்தியையும் தன் வழிப்படக் கண்ட பின்பு, சுத்த மாயையில் உள்ள சுத்த காலமும் அக்குண்டலிக் குள்ளே அடங்கிவிடும். அதனால், சுத்த தத்துவ நிகழ்ச்சிக்கு ஏதுவாக நிகழ் கின்ற சுத்த காலங்களும் நிகழா. ஆதலால், இந்நிலையில் பாகுபட்ட அனைத்துலகங்களில் உள்ள பொருள்களையும் தன் அறிவினுள்ளே காணுதல் கூடும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க. `பகுகின்ற` என்பது, `பாகின்ற` என மரூஉவாயிற்று. `பூ` என்றது `நிலம்` என்னும் பொருட்டாய்ப் புவனங்களை உணர்த்தி நின்றது. பூவிற் பரப்பவை - பல உலகங்களிலும் நிறைந்து கிடக்கின்ற பொருள்கள். இது வினையாலணையும் பெயர். `மேனின்ற காலம்` என மேல் (பா.661) அசுத்த காலம் குறிக்கப்பட்டமையின். இங்கு, ``மேவுகின்ற காலம்`` என்றது, அதற்கு `மேலே பொருந்தியுள்ள காலம்` எனப் பொருள்பட்டு, சுத்த காலத்தைக் குறித்தல் அறிக. `அசுத்த மாயையில்` உள்ள தத்துவங்கள் அனைத்தும் சுத்த மாயையிலும் உள்ளன என்பது மேலேயும் (பா.407) காட்டப்பட்டது. சிவயோகத்தால் குண்டலி சத்தியை இனிது கண்டவரைச் சுத்த மாயை பந்தியாது என்றவாறு.
இதனால், `சுத்த மாயா காரியங்களின் கட்டு நீங்கப் பெறுதலே பரசித்தி கரிமா` என்பது கூறப்பட்டது. இதனானே, மேல் `கண்டன பூதப் படையவை` என்றது, அசுத்த தத்துவங்களையே யாதல் அறிக. அவற்றை, ``பூதப்படை`` என்றதும் அதுபற்றி

பண் :

பாடல் எண் : 41

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

குண்டலி சத்தியை நன்கு காண வல்லவர்க்குப் பல்வேறு வகைப்பட்ட புவனங்களில் சித்திவழிப் போக்கு வரவு புரிதலும், எடுத்த உடம்பு இடையே வீழ்தலும், நுகர்ச்சிப் பொருள் களால் இன்புறுத்தலும், (மயக்கமுறுதலும்) துன்புறுதலும், யோகத்தில் நாடிகளில் பல இனிய ஓசைகளைக் கேட்டலும், மற்றும் ஆதாரக் காட்சிகளில் நிற்றலும், இவைபோல்வனவும் ஆகிய உலகியல்கள் சிறிதும் இல்லையாம்.

குறிப்புரை :

``இல்லை`` என்றது, `அவற்றால் உணர்வு திரிதல் இல்லை` என்றதாம். எனவே, `இந்நிலை கரிமாவாதல் பொருந்தும்` என்பது காட்டியவாறு. தழைத்தல், இன்புறுதல். தாமதம் - மயங்கல். இவை கூறவே துன்புறுதலும் பெறப்பட்டது. தமரம் - ஒலி; இது கடைக் குறைந்து நின்றது. `அகத்து இன்` என்பது தமரம் என்பதனோடும் இயைந்தது மூன்றாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை.

பண் :

பாடல் எண் : 42

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாம்
குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :

அணிமா முதலாகப் பல நிலைகளிலும் தன்னால் அறியப்பட்ட சிவசத்தி, பின் யோகியின் உள்ளத்தில் நீங்காதிருப்பின், தத்துவங்களின் குறும்புகள் முற்றிலும் நீங்கினவாம். அங்ஙனம் அவை நீங்கிய நிலையில் அந்தச் சத்தியுடன் அமைதியுற்று இருப்பின், ஓராண்டுக் காலத்தில் நாதத்திற்கு மேல் அளவின்றிக் கிடக்கின்ற அருள்வெளி வியாபகத்தை அவன் அடைதல் கூடுவதாம்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகளில் கரிமா நிலையை அனுவதித்த வாறு. `இந்நிலையில் அமைதிதோன்றும்` என்றற்கு, ``குவிந்தவை`` என்றார். அவை - அவைபற்றிய உணர்வுகள். `அவை குவிந்து` என மாற்றுக. `குவிய` என்பது ``குவிந்து`` எனத் திரிந்து நின்றது. பர காயம் - எல்லாப் பொருட்கும் மேலே உள்ள ஆகாயம். ``மேவலும்`` என்ற உம்மை, சிறப்பு. விரிந்த பர காயம் மேவலின் மிக்க பயனில்லை யாதலின். இது ``கரிமா`` எனப்படும். மூன்றாம் அடி உயிரெதுகையும், மூன்றாமெழுத்தெதுகையும் பெற்றது. அடிமுரண் ஆதலும் அறிக.
இதனால், பர சித்தியாகிய கரிமாவின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னேயு டையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே. 

பொழிப்புரை :

எல்லா ஒளிகட்கும் மூல ஒளியாகிய திருவருளை அனாதியே தம்மிடத்து உடைய அனைவரும் அது தமக்கு நலம் செய்யும் ஒளியாயிருத்தலை அறிந்திலர். அதனைச் சிவயோகப் பயிற்சியால் காட்டுத் தீப்போன்ற பேரொளியாகக் கண்டு மகிழ்பவர் கட்குப் பரஞ்சோதியாகிய சிவ பரம்பொருளில் ஒன்றுபடுகின்ற முத்தி எளிய பொருளாய் நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

``எல்லா விருப்பத்தினும் வீடு பெறும் விருப்பே உயர் வுடையதாகலின், அது கிடைக்கப் பெறுதலே பிராகாமியமாம்`` என்ற வாறு. ``எளிதாய் நிற்கும்`` என விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. இதன் கண் இடையிட்டு எதுகை வந்தது. ``கால விளக்கொளி`` என்பதும் பாட மாதலின், அதனையே கொண்டு, முதலடியை `ஆல விளக்கொளி` என ஓதினும் ஆம். ஆலம், ``அகலம்`` என்பதன் மரூஉமாம். காலம் - பக்குவம் எய்திய காலம்.
இதனால், பரசித்திப் பிராகாமியம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற்
பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே. 

பொழிப்புரை :

முன்னைச் சித்திகளில் பல்லாற்றானும் நீங்கிப் போன தத்துவங்களையெல்லாம் ஆஞ்ஞையில் யோகிக்குத் துணை யாய் நிற்கின்ற சிவசத்தி வழியவாகக் கொண்டு அவற்றோடு ஓராண்டுக் காலம் கூடியிருப்பானாயின், அவனுக்கு, எப்பொருட்கும் முன்னோனாகிய சிவனது இறைமைத் தன்மைகள் எல்லாம் கிடைப்பனவாகும்.

குறிப்புரை :

எனவே, ``இதுவே பர சித்தியுள் ஈசத்துவமாம்`` என்ற தாயிற்று. ஐந்தொழில் நிலையில் மேற்பட்டது சதாசிவ நிலையாதலின், அதனையே எடுத்துக் கூறினார். ``பூதம்`` என்றது இங்குத் தத்துவம் முப்பத்தாறனையும். ``எல்லாவற்றையும், அவற்றொடு`` என உருபுகள் விரிக்க. ``நாயகி, தன்னுடன் (யோகி) கண்டன எல்லா வற்றையும் கொண்டு அவற்றொடு கூடியிருந்திடில்`` என்க. தத்து வங்கள் எல்லாவற்றையும் சத்தியே கைக்கொண்டு அவற்றொடு கூடியிருத்தலாவது, ``இவன் செய்தியெலாம் என்செய்தி என்றும், செய்தது எனக்கு இவனுக்குச் செய்தது என்றும்`` (சிவஞானசித்தி. சூ. 10) யோகியின் செயல் அனைத்தையும் தன் செயலாக ஏற்று அனைத்துச் செயல்களையும் அவனுக்கு நலமாக அமையும் வகையிலே புரிதலாம். ``ஓராண்டுக் கூடி இருந்திடில்`` என்றது, ``யோகி தன் செயல்கள் அனைத்தையும் சத்தியின் செயலாக ஒப்புவித்து நிற்றல் வேண்டும்`` என்பதனைச் சத்திமேல் வைத்து ஓதியவாறு. `பண்டைய தத்துவம்` என இயையும். அவை சிவனது பரத்துவம், தன் வயத்தனாதல் முதலியவையாம். இவைகளைப் பெறுதல் ஈசத்துவமாதல் வெளிப்படை. ``தத்துவ மாகுமே`` என்பது பாடம் அன்று.
இதனால், பரசித்தியுள் ஈசத்துவத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. 

பொழிப்புரை :

ஆஞ்ஞையாகிய சந்திர மண்டலத்தை அடைந்த யோகி அங்கு நின்றும் மீளாது நிற்குமிடத்து முதற்கண் அம் மண்டலத்தின் ஒளியைப் பெற்றுப் பின்னர் அதன் குளிர்ச்சியைப் பெறு வான். அதன்பின் அம்மண்டலத்தின் பகுதிகளை ஒவ்வொன்றாக அடைவானாயின், இறுதியில் அச்சந்திர மண்டலமே தானாய் விடுவான்.

குறிப்புரை :

எனவே, ``இங்கு, சிவம்`` என்பது ஆஞ்ஞை யோகத்தில் விளங்குகின்ற தியானப் பொருள் என்பதும், ``சத்தி`` என்பது, அப்பொருளின் அருள் என்பதும் போந்தன. போதரவே, தன்வயத்தனாதல் முதலியனவும் அவ்வளவில் ஏற்புடைய குணங் களாதல் பெறப்படும். ஆகின்ற - உண்டாகின்ற; கிடைக்கின்ற. ``ஒளி யாயவன்`` எனவே, ஒளியாதலும் அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. கலை - கூறு. அவையாவன, ஆஞ்ஞைக்குமேல் உள்ள இடங்கள். அவை, `நெற்றி, தலையின் முற்பக்கம், பிற்பக்கம், வலப்பக்கம், இடப் பக்கம், பிரமரந்திரம்`` எனப் பலவாறு யோக நூல்கள் கூறும். இவ் அனைத்திடங்களிலும் தொடர்பு கொண்டு நிற்கும் ஆற்றலை, ``ஆயிர இதழ்த் தாமரை`` என உருவகித்தும் கூறும்.
இதனால், ஓராண்டில் மேலது கைவருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே. 

பொழிப்புரை :

ஈசத்துவத்தைப் பெற்ற யோகி இறைவன் செய்யும் செயலெல்லாம் தானே செய்ய வல்லவனாவான். இதனால், `சிவன் இவனே` என உலகத்தாரால் எண்ணப்படும் தன்மை உடையவனாய் இருப்பன்.

குறிப்புரை :

`படைத்திடும், அளித்திடும்` என்னாது, ``வல்லவ னாயிடும்`` என்றதனால், ``அத்தன்மையனாதலன்றி, அச்செயல் களைச் செய்ய அவன் முற்படான்` என்பது கூறப்பட்டதாம். பவ யோகியின் ஈசத்துவம் இதனின் மிகச் சிறியதாயினும் அதுகொண்டு அவன் பலவும் செய்ய முற்பட்டு, அச்செயல்களால் வினையைத் தேடிக்கொள்வான்; ``சிவயோகி பிறப்பிற்கு அஞ்சுதலின், இது கொண்டு யாதும் செய்ய முற்படான்`` என்க.
எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர் ஒன்(று)
அல்லா தறியார் அற. -திருவருட்பயன், 93
என்றது இங்கே நினைக்கத்தக்கது. இவ்வாறாகவே உலகத்தார் இவனை, ``சிவனே`` என்றும், ``சிவனது கூற்றின் அவதாரம்`` என்றும் கூறுவனவெல்லாம் மயக்க உரையேயன்றி, உண்மை யுரையாகா என்றற்கு, ``தானே சிவன்`` என்று ஒழியாது, ``தானே சிவன் எனும் தன்மைய னாமே`` என்றார். ``எவ்வாற்றானும் பிறப்பது உயிரே யன்றி, இறையாகாது`` என்பது கருத்து.
இதனால், ஈசத்துவத்தின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே. 

பொழிப்புரை :

ஈசத்துவத்தை அடைந்தோன், பலவாகப் பரந்து விரிந்து கிடக்கின்ற தத்துவங்களை, சத்தியின் தன்மையால் அமைந்த நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுள் அடங்கி நிற்பனவாக உணர்ந்து ஓராண்டு நிற்பானாயின், சூக்குமப் பொருளாகிய மெய்ப்பொருளைக் காண்பான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``பூதம்`` என்றது தத்துவத்திற்கு உபலக்கணமாய் பின் ஏனை நான்கு அத்துவாக்களுக்கும் உபலக்கணமாயிற்று. தத்துவங்களுள் மிகவும் தூலமாய்ப் பலராலும் அறிந்துரைக்கப் படுவன பூதங்களாதல் பற்றி அவற்றையே பலவிடத்தும் எடுத்தோதினார். உலகம் முழுதும் பஞ்ச பூதங்களுள் அடங்குவனவாகக்கொண்டு, அவற்றை அதிதேவர்கள் வழி வயப்படுத்தல் பொதுநெறியாகிய வேதநெறி; உலகம் அனைத்தும் சிவ சத்திக்கு நேரே தொடர்புடைய பஞ்ச கலைகளில் அடங்கி நிற்பனவாக வைத்து அவற்றின் அதிதேவர்வழி அனைத்துப் பொருள்களையும் வயப்படுத்துதல் உண்மை நெறியாகிய சைவநெறி. சிவசக்தியின் பெருமை உணரப்படுதல் சைவ நெறியில் உள்ள சிறப்பு. அதனால், ``தன்மையதாகத் தழைத்த கலை`` என்றார். பூதங்களை வயப்படுத்துதலால் மருட்சித்திகளன்றி, அருட்சித்திகள் சித்தியா. அதனால் அருட்சித்தி வேண்டுவோர் சைவ நெறியிலே நிற்றல் வேண்டும். அங்ஙனம் நின்று அருட்சித்தி பெற்றோர் சிவனை அடை தற்குத் தடையில்லையாகலின், `பூதத்தைக் கலையினுள் மறித்திடில் மெய்ப்பொருள் காணும்` என்றார். இதனானே, நிலம் முதலிய பூதங்கட்குச் சொல்லப்படும் முறைமைகள் எல்லாம், நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகட்கும் ஏற்புடையனவாதல் அறியப்படும். மென்மை இங்கு நுண்மையைக் குறித்தது.
இதனால், பரசித்தியுள் ஈசத்துவத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

பொழிப்புரை :

ஈசத்துவத்தால் மெய்ப்பொருட் காட்சி கிடைத்த பின், அதனால் விளையும் பயன் யாது எனின், சித்திகள் எல்லா வற்றுள்ளும் சிறந்த `வசித்துவம்` என்னும் சித்தி பெறுதலேயாம். வசித்துவ சித்தியைப் பெற்றோன், இறைவனுடையவாய்ப் பொருந்தி யுள்ள எல்லா உயிர்கட்கும் தானே மெய்ப்பொருள் போலும் தன்மையை உடையவனாவான்.

குறிப்புரை :

என்றது, `எல்லா உயிர்களும் அவனையே இறைவனாகக் கருதி அச்சமும் அன்பும் உடையவாய் அவன்வழி நிற்கும்` என்பதாம். கைப்பொருளாகக் கலந்த உயிர்களாவன ஈசத் துவத்தால் தனக்குக்கீழ்ப்பட்டு நின்ற உயிர்கள். பின்னிரண்டடிகள் வசித்துவமாவது இதுவென்பதை விளக்கின. முதல் அடியில் குற்றிய லுகரம் கெடாது நின்று உடம்படு மெய் பெற்றது. இம்மந்திரம் வல்லின எதுகை பெற்றமை காண்க.
இதனால், வசித்துவ சித்தியின் இயல்பும், அச்சித்தி கைவருமாறும் கூறப்பட்டன. மருட்சித்தி, மருளுடைய உயிரை யன்றி, அருளுடைய உயிரை வசம் செய்யாது. அருட்சித்தி, அனைத்து உயிரையும் வசம் செய்யும். இதுவே அவை தம்முள் வேற்றுமை என்க.

பண் :

பாடல் எண் : 49

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு பல்லுயிர்கட்கும் மெய்ப் பொருள் தன்மையனாய்ப் பெருமை பெற்று நிற்கின்ற அருளொளிக் கதிர வனாகிய சிவயோகி மெய்ப்பொருளைக் கண்டவனாதலின், ஐம்புல ஆசைகள் அருவருக்கத்தக்க பொருள்களாய்த் தலைகாட்டா தொழிய, ஞானஉருவான திருவருளையே நோக்கி நிற்பான்.

குறிப்புரை :

``கண்டிடின்`` என்னும், `செயின்` என்னும் எச்சம் காலம் உணர்த்தாது. காரண மாத்திரையில் நின்று, `அதனால் அதன் காரியம் நிகழ்தல் உறுதி` என்பதை விளக்கி நின்றது; ஒருவன் தான் மெலியனாயிருந்தும் தனது நிலையை அறியாது வலியவன் மேற் சென்றபொழுது, அதனைக் கண்டோர் `அவன்மேற் சென்றானாயின், இவன் விரையக் கெடுவான்` என்பதிற் போல. ``புன்மையது`` என்பது, பன்மை ஒருமை மயக்கம். நன்மை - ஞானம்; ``கொடி`` என்பது உருவகமாய் அஃறிணையாயினமையின், அதன்கண் இரண்டன் உருபு தொக்கது. `பகலவன் கண்டிடின் காணும்` என்க.
இதனால், அருட் சித்தியாகிய வசித்துவம் பெற்றோர், அதனால் உலகப் பயன் கொள்ள நினையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப்
பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே. 

பொழிப்புரை :

ஞான உருவான திருவருளோடு கூடி, அதனது இன்பத்தை யோகி ஒருவன் அறிவானாயின், அதன் பின் ஓராண்டுக் காலத்தில் பொன்மயமான கொடிகளும், தருக்களும் நிறைந்த விண்ணுலகங்களில் சென்று மீள வல்லவனாவான். ஆயினும், அவன், மேருவை அடைந்து பொன்னிறத்தைப் பெற விரும்புகின்ற காக்கையினது ஆசைபோன்ற அவ்வாசையை உடையனாவனோ!

குறிப்புரை :

அஃதாவது, `அச்சித்தியின் வழி விண்ணவர் உலகங்களிற் சென்று மீளுதலால் தானும் விண்ணவன் எனச் சொல்லப் படும் பெருமையை அடைய விரும்புவனோ! விரும்பான்` என்பதாம். ஆகம் - உரு; இயல்பு. ``வரும்`` என்றது, `வரத்தக்க ஆற்றல் பெறும்` என்றபடி. கல் - மலை; அஃது இங்கு, மேருவைக் குறித்தது. இதனை அடுத்துள்ள `கொடி` காகம். காகம் மேருவை அணுகியவிடத்து அதன் ஒளியால் தானும் பொன்னிறம் உடையதுபோலத் தோன்றுதலன்றி, உண்மையில் தன் நிறம் மாறப் பெறுதல் இல்லை. அதுபோல, மனித உடம்பு விடப்படுங்காறும் யோகி உண்மையில் தேவனாதல் இல்லை, ஆகவே, இவ்வுடம்பில் நின்றே, `தேவன்` எனப்பெறும் பொய்யான புகழைச் சிவயோகி விரும்பான் என்பதாம். ஏகாரவினா எதிர்மறைப் பொருள் உணர்த்திற்று. இனி ஏகாரத்தை ஈற்றசையாக்கின், ``கற்கொடி ஆகிய`` என்பதற்குக் `கல்லின்மேல் முளையாத கொடிபோலத் தனது உள்ளத்தில் தோன்றாத ஆசையையுடையவனாவன்` என உரைக்க. `தோன்றாத ஆசையை உடையவன்` என்பது, `ஆசை தோன்றாமை உடையவன்` என்னும் கருத்தினதாம்.
இதனால், `அட்டமா சித்திகளும் கைவந்தவர்கட்குப் பிற உலகங்களிலும் செல்லும் ஆற்றல் கூடும்` என்பதும், `அது கூடினும், சிவயோகி, அவ்வாறெல்லாம் உழலும் தன்மையன் அல்லன்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 51

காமரு தத்துவ மானது கண்டபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திய மானனாம்
நாமரு வும்ஒளி நாயக மானதே. 

பொழிப்புரை :

ஈசத்துவ சித்தியிற்றானே, விரும்பத் தக்க மெய்ப் பொருட்காட்சி கிடைத்து விடுதலால், அதன்பின் எல்லா உலகமும், பூவினுள் அடங்கித் தோன்றும் மணம்போல உன்னிடத்தே அடங்கித் தோன்றும். அதனால் அவ்வுலகங்கட்கெல்லாம் வியாபகமாம் தன்மையைப் பொருந்திய உன்னிடத்தில், அவற்றிற்கெல்லாம் நீயே உண்மைத் தலைவனாய்நிற்க, புகழ்பொருந்திய அருள் ஒளியே தலைமைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

`உலகங்கட்கும், சிவயோகிக்கும் இடையே உள்ள இழி வுயர்வுகள் மிகப் பெரியவாகலானும், அவனது இச்சா ஞானக் கிரியைகட்குத் திருவருளே முதலாய் நிற்றலானும் அவன் வசித்துவ சித்தியால் உலகப் பயனை நாடான்` என்றவாறாம். தத்துவம் - மெய்ப் பொருள். `புவனம் பூ மரு கந்தம் ஆயிடும்` என்க. இதனுள் ஆக்கம், உவமை குறித்து நின்றது. மா - பெருமை; ``அத்தகைய மா மருவு உன்னிடை`` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. மெய்த்தல் - உண்மையாகி நிற்றல். `மெய்த்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. ``இயமானன்`` என்பது இழிவழக்கில், ``எசமானன்`` என வழங்கும். `வேட்போன்` என்பது இச்சொல்லின் பொருளாயினும், இது ``தலைவன்`` என்னும் பொருளில் வழங்கும். நா - புகழ்; ஆகு பெயர். ``நாம் மருவும்`` எனப் பிரித்து, நாயனார் சிவயோகியைத் தம்மோடு உளப்படுத்துக் கூறியதாகவும் உரைக்கலாம்.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டுபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. 

பொழிப்புரை :

சிவயோகியானவன் எல்லாவற்றுக்கும் தலைமை யான நல்ல திருவருள் ஒளியைக் கண்டபின் அதனையே தனக்கு உறைவிடமாகக் கொண்டு அதனிடத்தே இருத்தலல்லது, அவரவரது புண்ணியங்கட்கு ஏற்ப அவரவருக்கு உரியவாய் உள்ள உலகங்களிலே சென்று, அவற்றைக் கண்டு, பின், அவைகளில், காவல் மிகுதியால் அச்சத்தைத் தரும் தலைமை இடத்தில் வீற்றிருக்கின்ற அவற்றின் தலைமைக் கடவுளரைக் காண்கின்ற அச்செயலை விரும்புவானோ! விரும்பான்.

குறிப்புரை :

``அகமான புவனங்கள் போய்க் கண்டு`` என்க. இதில், ``அகம்`` என்றது, ``உரிமையாய இடம்`` என்றவாறு. பே, ``அச்சம்`` எனப் பொருள்தரும் உரிச்சொல்.(தொல். சொல். 365) உரிச்சொல்லாதலின் யகர உடம்படுமெய் பெற்றது. அகத்துள்ளாரை ``அகம்`` என்றும், ஒளியுடையாரை ``ஒளி`` என்றும் பான்மை வழக்காற் கூறினார். ``பேரொளி`` என்பதில் பெருமை, தலைமை.
இதனால், `திருவருளை அடைந்த சிவயோகி, ஏனைப் பவயோகிகள் போலப் பல புவன இன்பங்களையும், புவனபதிகளது அருளையும் நாடுதல் இல்லை` என்பது கூறப்பட்டது. `கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு` (தி.8 திருச்சதகம், 2) என்றற் றொடக்கத்து அருட்டிரு மொழிகள் இங்கு நினைவுகூரத் தக்கன.

பண் :

பாடல் எண் : 53

பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே. 

பொழிப்புரை :

பவயோகியர்க்குப் பெரும் பேறாய்த் தோன்றி விரிந்து விளங்குகின்ற, மேற்சொல்லிய உலகங்கள் எட்டனையும் தான் இருக்கும் நிலவுலகத்தோடு ஒத்தனவாகவே உணர்ந்து, அவற்றின் மேல் மனம் செல்லாது அடங்கிய சிவயோகி, இந்நிலவுலகம் முழு தினும் பொருந்தியுள்ள ஒன்றான ஒளியாகிய பிராண வாயுவின்வழிக் காணத்தக்க குண்டலி ஒளியைப் படிமுறையில் பெருகக் காண்பான்.

குறிப்புரை :

`ஆகி` என்னும் எச்சம், `பெரிய` என்னும் பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது. மேல், `புவனங்கள்` என வாளா கூறியதனை, `எட்டு` என வரையறுத்துணர்தல் வேண்டும் என்பார், `அவ் எட்டையும்` எனச் சுட்டிக் கூறினார். அட்டமா சித்தி வகையில் உலகங்கள் எட்டாமாறு மேலே (பா.616) காட்டப்பட்டது.
``பாரொளியாக`` என்பதில், ``ஒளி`` என்பது `புலம்` என்னும் பொருட்டாய் நின்றது, இதனுள்ளும் ஆக்கம், உவமைப் பொருட்டு. பதைப்பு மனோவேகம்; அஃதாவது ஆசை. நிலவுலகத்தில் உயிர்களை நிலவச்செய்து அதற்கு விளக்கத்தைத் தருவது பிராணவாயுவாகலின், அதனை, ``தரணி முழுதுமாம் ஓரொளி`` என்றார். ``கால்ஒளி`` என்பதனை, ``காலால் அறியப்படும் ஒளி`` என விரிக்க. யோகத்தின் பயன், பிராணாயாமத்தால் குண்டலி ஒளியை அகத்துக் காணு தலாதலின், அங்ஙனம் காணப்படும் ஒளியை, ``காலொளி`` என்றார். `தாரொளியாக` என்பதனை, ``காரொளி`` என்பதன்பின் கூட்டுக. தார் - ஒழுங்கு; என்றது படிமுறையை. யோகியர்க்குக் குண்டலி ஒளி, `மின்னல், விண்மீன், விளக்கு, பகலவன், திங்கள்` என்னும் இவற்றின் ஒளிபோலப் படிமுறையாற் பெருகித் தோன்றும் என்பது மேலே (612) கூறப்பட்டது. இக்காட்சியை இங்குவந்து கூறியது, `பரசித்தி` எனத்தக்க வகையில் அருள் நிலை அனைத்தும் கைகூடிய பின்பே யோகத்தில் மனம் ஒருங்கி அதனை முற்றுப்பெறச் செய்யும் என்பது உணர்த்துதற்கு. இது, புதியதோர் அரண்மனையிற் புகுந்தவன் முதற்கண் அதனை முழுதும் சென்று கண்ட பின்னரே உரிய இடத்தில் அமர்ந்து இன்புறுதல் போல்வதாம்.
இதனால், பரசித்தி முழுதும் கைவரப் பெற்றபின்பே சிவயோகம் முற்ற முடிவதாதல் கூறப்பட்டது.
`உலகத்தை உணரும் பவயோகத்தினும், திரு வருளை உணரும் சிவயோகமே சிறந்தது` என்பதை உணர்த்துதற்கு அத்திருவருளே யோகத்திற்கு முதலாய் நிற்குமாற்றை இவ் வதிகாரத்துள் இங்கு நின்றும் பதினெட்டுத் திருமந்திரங்களால் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 54

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது வக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே. 

பொழிப்புரை :

பிராணவாயுவும், உயிரும் தம்முள் இயைந்த வாற்றைக் கூறுமிடத்து, பிராணவாயு, உடம்பில் உள்ள நாடிகள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சிவசத்தியுடன் முன்னர்ப் பொருந்திப் பின்னர், அஃது `ஐஞ்ஞூறு` என்றும், `பத்து` என்றும், `மூன்று` என்றும் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்ற நாடிகளில் நிறைந்து நிற்கும் வகையினாலேயாம்.

குறிப்புரை :

``கொடி`` என்றது, உடம்பிற் பொருந்தியுள்ள நாடியை. அந்நாடிகள் இவை என்பது நூல்களின்வழி நன்கறியப்பட்டது ஆதலின், ``அக்கொடி`` எனப் பண்டறி சுட்டாற் கூறினார். கொடி நாயகி - கொடிகளில் நிறைந்து நிற்கும் தலைவி. ``நாயகி தன்னுடன்`` என்பதன்பின், `ஆய்` என்பது எஞ்சிநின்றது. உடம்பில் உள்ள நாடிகள் `எழுபத்தீராயிரம்` என்பதுயோகநூல் துணிவு. அவற்றுள், ஐந்நூறு சிறந்தன. அவற்றுள்ளும் சிறந்தன பத்து. அவைமுன்னே (பா.562) சொல்லப்பட்டன. அவற்றுள்ளும் சிறப்புடையன மூன்று; அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பன. `ஐந்நூற் றொருபத்து மூன்று` என்றது உம்மைத் தொகையேயன்றி, அத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்று. மண்டுதல் - செறிந்து நிற்றல். கண்ட - காணப்பட்ட. இவ்வாறே - இவ்வாற்றினாலேயாம். இத்திரு மந்திரத்துள் சத்தியின் செயல்களை வாயுவின்மேல் வைத்துச் சொற் பொருட் பின்வருநிலையாக அருளிச்செய்தார். இதனுள் குற்றிய லுகரம் பலவிடத்தும் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `யோகத்திற்கு முதலாகிய பிராண வாயுவை யோகிக்குக் கூட்டுவித்துப் பின் காத்து நிற்பது திருவருளே` என்பது கூறப்பட்டது. எனவே, உடலில் உள்ள ஆற்றல்கள் பலவும் இயற்கையாய் அமைந்தன எனக் கருதும் பவயோகிகளது கருத்தை விலக்கி, உண்மை யுணர்த்தியவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 55

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

பொழிப்புரை :

யாறு போல உண்டாகின்ற விந்துவாகிய அமுதத்தை உடைய ஆஞ்ஞையில் அந்த யாறு பாய்கின்ற வாய்க்கால்கள் ``ஆயிரமும், முந்நூறும், ஐந்தும்`` என்று கூறத்தக்க அளவில் உள்ளன. அந்த அரிய வழியிலே அந்த அமிர்த யாறு பெருகிப் பாயச் செய்து உடம்பை வளர்ப்பன இடை நாடி பிங்கலை நாடி என்னும் இருநாடிகளில் நிற்கும் இரு சத்திகளே யாகும்.

குறிப்புரை :

ஆகும் - உண்டாகின்ற. ``ஆறு`` என்பது, ``யாறு, வழி`` என்னும் பொருள்களில் மாறி மாறி வந்தன. ஓடு, எண்ணிடைச்சொல். அஞ்சாவன, இடை, பிங்கலை, சுழுமுனைகளோடு, கண்ணில் நிற்கும் காந்தாரியும், உடம்பெங்கும் நிற்கும் அத்தியும் என்க. பின்னர் ``ஆயிரமாகும்`` என்றது, முன்னர்க் கூறிய முந்நூறு அஞ்சு என்பவற்றிற்கும் உபலக்கணமாய் நின்றது.
இதனால், ``சிவ சத்தி, இடை நாடி பிங்கலை நாடிகளில் நின்று பிராணனை இயக்குமாற்றால் உடல் உறுதிக்கு இன்றியமையாத விந்துவை உண்டாக்கிப் பெருக்குவது`` என்பது உணர்த்து முகத்தால், `யோகத்தில் பருகத் தக்க அமுதத்தை முன்பே தோற்றி வளர்ப்பது திருவருளே` என்பது கூறப்பட்டது. இதனுள்ளும், ``பிராண வாயு இடைகலை பிங்கலை வழியாக இயங்கி உடலை நிலைப்பித்தல் இயற்கை`` எனக் கருதுவாரது கருத்து விலக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 56

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே. 

பொழிப்புரை :

இடைகலை பிங்கலைகளின்மேல் சுழுமுனைத் தலையில் நிற்கும் சத்தி, இடையும், பிங்கலையுமாகிய இரண்டன் வழியாகப் பிராணனை இயக்கிச் செயல் புரிகின்ற முறையைச் சொல்லுமிடத்து, இரண்டாகிய அந்தப் பிராணன் ஆயிர நாடிகளோடும், ஐம்பத்தோர் அக்கரங்களோடும் கூடியுள்ள ஆறு ஆதாரங்களில் பொருந்தி, ஐந்து காலத்தைக் கொண்டிருக்கும் வகையிலேயாம்.

குறிப்புரை :

``ஆயிரம்`` என்றது, `பல` என்றவாறு. ஐம்பத்தோர் அக்கரங்களும், ஐந்து காலமும் முன்னே (பா.573, 627) கூறப்பட்டன. அவற்றை இங்கு மீளக் கூறியதன் கருத்து, `யோக நிலையில் வேண்டப் படும் அவற்றை எல்லாம் அவ்வாறாக அமைத்து நின்றது திருவருளே` என்பது உணர்த்துதலாம். `திரண்டது, எடுத்தது` என்னுந் தொழிற் பெயர்கள் `எழுவகை` என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றன. `காலம் அஞ்சு எடுத்தது` என்க.
இதனால், `ஆறு ஆதாரங்களை ஆக்கிக் காத்து நிற்பது திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. 

பொழிப்புரை :

சதாசிவ மூர்த்தியின் சத்தி, பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களை ஏந்தி இருப்பவளாகக் கிரியாவான்கள் கருதுவர். ஆயினும், யோகத்தில் அவளை இரண்டாயிரம் கைகளில் இரண்டா யிரம் ஆயுதங்களை ஏந்தி நிற்பவளாகக் கூறலாம். அவள் மேற்கூறிய ஐந்து காலங்களிலும் தங்கி நின்று அருளுதல், உயிர் ஒன்றையேயாம்.

குறிப்புரை :

சதாசிவமூர்த்தி, வேறுபட்ட ஐந்து நிறங்களை உடைய ஐந்து முகங்களையும், அவற்றிற்கு ஏற்ப அமைந்த பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களையும் உடையராயிருத்தல் பற்றி அவரது சத்தியையும் அத்தன்மையளாகவே கூறினார். எனவே, `அஞ்சுடன் அஞ்சு முகம்` என்றதில் முதலில் உள்ள ஐந்து, ஐந்து நிறங்களைக் குறிப்பதாம். மூன்றாம் அடியில் `அஞ்சுடன் அஞ்சு` என்பதனையே ``அஞ்சு`` எனச் சுருங்க ஓதினார். ``இரண்டது ஆயிரம்`` என்றது மேலைத் திருமந்திரத்தில் இரு பிராணனும் ஆயிர நாடிவழிச் செல்லுதலைக் குறித்ததாம். `அஞ்சு காலத்தும் ஒன்றையே எடுத்து உள்ளும்` என்க. உள்ளுதல் - நினைத்தல்; அருளுதல். `காலம்` என்னும் பொதுமைபற்றி, `அஞ்சது` என ஒருமையாற் கூறினார். எனவே, `அஞ்சாகிய அக்காலம்` என்பது பொருளாயிற்று. `காலத்தும்` என்பதில் அத்தும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. ``ஒன்று`` என்பதில், இரண்டன் உருபு இறுதிக்கண் தொக்கது.
இதனால், நாடிகள் பலவற்றையும் இயக்கி உயிரைத்தாங்கி நிற்பது திருவருளே என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே. 

பொழிப்புரை :

தன்னோடு ஒப்பது ஒன்று இல்லாது, தானே தனிப்பொருளாய் நிற்கும் சத்தி, பொதுவில் இரு நாடிகள் இயக்கி நின்ற பிராணனை யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன்வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற தன்மையைச் சொல்லுமிடத்து, அவ்வொரு வெற்றிச் செயலே அளவற்ற வெற்றிச் செயலாய் அமையும்படி ஒரு காலத்துள்ளே உயிரை உயர்த்தி, அருளுதலைச் செய்வாள். ஆதலின், அவளையே நினை.

குறிப்புரை :

`காலினை ஒன்றதன் வழியாகக் கொண்டு ஊர்வகை சொல்லிடின்` என்க. `ஒன்றது வாகிய வென்றி` என உரைக்க. கொள், முதனிலைத் தொழிற்பெயர். `ஆயிரம் ஆயிரம் ஆக` என்னும் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. இவ்வொரு வெற்றியே பல வெற்றியோடு ஒத்தலாவது, அபர சித்தி, பரசித்தி இரண்டாலும் அனைவரிலும் மேம்படல், ``ஒன்றது காலம்`` என்றது, `எடுத்த பிறப்பிலே` என்றவாறு. முன்னுதல் - நினைத்தல்.
இதனால், `யோகம் கைகூடச் செய்வதும் திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில்
முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. 

பொழிப்புரை :

உயிரோடு உடல் தொடர்பு பட்டபொழுதே தான் எழுந்து இயங்குகின்ற இடைகலை பிங்கலைகளின் தலைவியாகிய சத்தியைப் பற்றி நின்று இயங்குகின்ற பிராணவாயு, பின் முடிவுபெறும் வகையைச் சொல்லுமிடத்து, ஐம்பத்தோர் அக்கரங்களில், பிருதிவி காலம் முதலிய ஐவகைக் காலத்திலும் இயங்கி முடியும் வகையேயாம்.

குறிப்புரை :

`அக்கரங்கள் ஐம்பத்தொன்று` என்றது, குண்டலியின் வழி உணர்வு பலவகையாய் நிகழ்தலைக் கூறியவாறு. எனவே, பிராணவாயு உடல் நிற்குங்காறும் உயிருக்கு உணர்வுகள் பலவும் எழுதற்குக் காரணமாய் இயங்கியிருந்து முடிந்து விடும் என்றதாயிற்று.
இதனால், `வாழ்நாளளவும் உணர்வுகள் பலவும் நிகழுமாறு பிராணவாயுவை இயக்கி உயிரினது பக்குவத்தை முதிர்வித்து வருவது திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. 

பொழிப்புரை :

ஆய்ந்துணர்தற்கு அரியவாகிய மேற்சொல்லிய சிவசத்தி, தன்னுடனாய் இயங்கிவருகின்ற பிராண வாயுவை வரையறை செய்யும் வகையைக் கூறுமிடத்து, இயல்பாக இயக்குகின்ற மூச்சு (சுவாசக்) கணக்கிலிருந்து, ஆராயவருகின்ற ஐந்நூற்று நாற்பது மூச்சு அழிந்தொழிய எஞ்சியவை வலிமையுற்று உள்நிற்றலாம்.

குறிப்புரை :

இயல்பான மூச்சுக்கணக்கு, ஒரு விநாடிக்கு ஆறாக, ஒருநாளைக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு (6 x 60 x 60 என்பது நன்கறியப்பட்டது ஆகலின், அதனை எடுத்துக்கூறாது) வாளா, `வாயு அளப்பது` என்றார். அளப்பது - கணக்கிடுதல். ``மாய்தல்`` என்பது ஆற்றலை இழந்து பயனின்றிக் கழிதலாம். `மூச்சுக்கணக்கில் இயங்கி உடலை நிலைப்பிக்கின்ற பிராணவாயு, ஒவ்வொரு மூச்சிலும் நாற் பதில் ஒருகூறு தனது ஆற்றல் கெடுகின்றது` என்பதை இருபத்தோரா யிரத்து அறுநூற்றில் ஐந்நூற்று நாற்பது மாய்கின்றன, என்றார். எனவே, `மக்களது வாழ்நாள் அளவு நூறாண்டு` என்னும் பொதுக் கட்டளை, தொண்ணூற்றேழரையாண்டாகவே முடியும் என்பது கூறினாராயிற்று. இதனைக் கூறியது, `யோகிகளுக்குத் திருவருள் இம் மாய்வினை நீக்குதலே யன்றிப் பிராணாயாமத்தால், பிராணனின் புறக்கழிவு மூன்றில் ஒருபங்கை (பன்னிரண்டில் நான்கினை)க் கழியாது காத்தும், கும்பகத்தால், ஒரு நாளைக்கு `இருபத்தோரா யிரத்து அறுநூறு` என்னும் மூச்சுக் கணக்கினைக் குறைத்தும் வாழ் நாளை நீட்டிக்கச் செய்கின்றது என்பதும், யோகியரல்லாத பிறருள் நெறிப்பட்ட வாழ்க்கை இல்லாதார்க்குத் தீக்காரணங்கள் பலவற்றால் பிராணன் பல வகையிலும் வலிகுன்ற மேற்குறித்த, `தொண்ணூற் றேழரை` என்னும் அளவினும் குறையப் பண்ணும் என்பதும் உணர்த்துதற்காம்.
``ஆய்வரும்`` மூன்றில் முதலது, `ஆய்தற்கு அரிய` என்றும், பின்னது `ஆய்தல் வருகின்ற` என்றும், இடையது `பொருந்தி வருகின்ற` என்றும் பொருள் தந்தன. மாய் வருவாயு - மாய, எஞ்சுகின்ற வாயு. வளப்பு - வளமை. `வளப்பாக` என ஆக்கம் வருவிக்க. `முப்பதொடொன்பது` என்பது பாடம் அன்று.
இதனால், பிராண வாயுவின் இயக்க வேறுபாடு வாயிலாகத் திருவருள் மக்கள் உலகை நடத்தும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே. 

பொழிப்புரை :

உயிர்களின் வாழ்நாளுக்கு முதலாய் உள்ள பிராண வாயு உயிர்கட்கு இருநிதி (சங்க நிதி, பதும நிதி) போல உதவுகின்ற இறைவனது திருவருளிடத்து இயங்கும் நிலை உண்டாயின், அஃது, `இருபத்தோராயிரத்து அறுநூறு` என்னும் கணக்கினை விட்டு, `இருநூற்று முப்பத்து எட்டு` என்னும் நிலையை அடையும்.

குறிப்புரை :

இஃது இயற்கைக் கணக்கில் சிறிதுகூடத் தொண்ணூற்றில் ஒருபங்காதல் அறிக. மூச்சுக் கணக்கு இங்ஙனம், இயற்கையினின்றும் தொண்ணூற்றில் ஒருபங்காய்க் குறையவே, வாழ்நாள், சிறிது குறைய ஒன்பதினாயிரம் யாண்டாதல் பெறப்படும். மூச்சுக் கணக்கினை இதற்குமேல் குறைத்துக் கூறாமையால், இவ்யாண்டு மேல் எல்லையாதல் அறியப்படும். பிராணன் திருவருளிடத்து இயங்குதலாவது, ஆஞ்ஞை யோகத்திலே நிற்றல். `எழுத்தே` என்பது பாடம் ஆகாமையை, வருகின்ற மந்திரத்தின் தொடக்கச் சொல்பற்றியும் அறிக.
இதனால், பிறர்க்கு வாழ்நாளை வரையறுக்கின்ற திருவருள் சிவயோகியர்க்கு அதனை மிகுவிக்குமாறு கூறப்பட்டது. `பவ யோகியர்க்கு இந்நிலை கூடாது` என்க.

பண் :

பாடல் எண் : 62

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

பொழிப்புரை :

யோகக் காட்சியில் தோன்றுகின்ற ஒளியிடத்தில் அறியப்படும் சத்தியினது இடமாகிய ஆஞ்ஞையில் (சுழுமுனை வழியே) பிராணவாயு அடைவதனால் உளவாகும் நிலையைச் சொல் லுமிடத்து, மூலாதாரத்தில் உள்ள அக்கினி மேல் எழுந்து, எழுநூற் றிருபத்தொன்பது நாடிகள் இடையில் உள்ள நான்கு ஆதாரங்களிலும் தொடர்புபட்டு நிற்க, அவற்றின் வழி உடம்பெங்கும் பரவி நிற்கும்.

குறிப்புரை :

`இவ்வக்கினிப் பரப்பால் இங்கெல்லாம் குண்டலி சத்தி விளங்கி நிற்கும்` என்பது கருத்து.
இதனால், யோகியர்க்கு விளங்குகின்ற குண்டலி விளக்கத்திற்குத் திருவருளே முதல் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. 

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்கட்குமேல் ஏழாவதான உச்சி யளவும் பிராணவாயுவை ஏற்றியும் இறக்கியும் பயின்றால், ஆறு ஆதாரங்களிலும் தாரையாய்ப் பாயும்படி திருவருள் அமுதத்தை விளைத்து நிற்கும். இனி எட்டாந்தானமாகச் சொல்லப்படுகின்ற தலைக்குமேல் பன்னிரண்டங்குலம் பிராண வாயுவை நீக்கி நிற்றலால் ஆதார வேற்றுமைகள் நீங்கியபின், சுழுமுனையோடு மற்றை ஒன்பது நாடிகளிலும் பிராண வாயு ஒருதன்மைத்தாய் நிற்பதாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. `கால்` மூன்றனுள் முதலது, வாய்க்கால். ஏனைய இரண்டும், காற்று. `ஏழு, எட்டு` என்பவை அவ்வெண்ணு முறைக்கண் நின்ற இடத்தைக் குறித்தன. அமுதத்தை `இரதம்` (ரசம்) என்றார். விளைத்தற்கு வினை முதலாக மேற்சொன்ன நாயகியைக் கொள்க. இரட்டுதல் - மாறி மாறி வரச்செய்தல். யோகிகள் பிராண வாயுவைச் சுழுமுனை வழியில் மேல் ஏற்றவும், கீழ் இறக்கவும் வல்லராயிருப்பர். அவ்வன்மையைப் பிர மரந்திரம் வரையிலும் பெற்றவர்க்குச் சந்திர மண்டலத்திலுள்ள அமுதம் தாரையாய்க் கீழுள்ள ஆதாரங்களிலும் பாய்வதாம். துவா தசாங்குலத்தில் உணர்வு சென்றவர்க்கு வாயுப்பயிற்சி நீங்குவதால், அதனை, அந்த எட்டாந்தானம் வாங்கிக் கொண்டதாக ஓதினார். `அஃது அங்ஙனம் கொள்ள வைப்பவளும் நாயகியே` என்பது குறிப்பு. கொண்டு - கொள்ளுதலால். இடவகை - ஆதார நிலைகள். அவை ஒத்தலாவது, அவற்றில் வெவ்வேறு வகையாய் நிகழும் பிராணா யாமம் முதலிய உறுப்புக்கள் அங்ஙனம் நிகழாது துவாதசாங்குலத் தியானம் ஒன்றேயாக நிகழ்தல். `இந்நிலையில் பிராண வாயு, தானே தச நாடிகளிலும் நிறைந்து நிற்கும்` என்பார் ``ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே`` என்றார். சுழுமுனைப் பயிற்சியே சொல்லப்பட்டு வருதலின், அதனுடன் ஏனை நாடிகளிலும் ஒருபடித்தாய் நிற்கும் என்றவாறு. துவாதசாங்குலம் `நிராதாரம்` எனவும், அதனைக் கடந்த தாகிய துவாதசாந்தம், `மீதானம்` எனவும்படும். இத்திரு மந்திரத்தின் அடிகள் எண்ணலங்காரமாய், அடி முரண் பெற்று நின்றது.
இதனால், `ஆதார யோகம், நிராதார யோகம், மீதான யோகம் அனைத்தும் கைவரப் பெறுதல் திருவருளாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே. 

பொழிப்புரை :

`சந்திரகலை` எனப்படுகின்ற இடநாடிக் காற்றும், `சூரியகலை` எனப்படுகின்ற வலநாடிக் காற்றும் சிவனது திருமுடியில் உள்ள சந்திரகலை எனப்படுகின்ற பரஞானமாகிய திருவருளும் ஒன்றாய் நிற்கின்ற தன்மையை, அனைத்து நாடிகளும் கூடுகின்ற இடமாகிய ஆஞ்ஞையிலே விளங்கக் கண்டு அத்திருவருளேயாகி நிற்பான், உலகியலை அறவே ஒதுக்கித் தள்ளிச் சிவசமாதி ஒன்றையே உடைய சிவ ஞான யோகியே.

குறிப்புரை :

``தாணு`` என்றது, நீண்ட திருமேனியைக் குறித்தது. ``தாணுவின்`` என்றே போயினாராயினும், `தாணுவின்` தலையில் என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. சிவபெருமான் சந்திர கலையைத் திருமுடியில் அணிந்திருத்தல் ஞானத்தை உணர்த்தும் அடையாளமாம். திருவருளாகிய சிவனது சத்தி ஞானமாதல் வெளிப்படை. சிவபெருமான் தனது நெற்றிக்கு நேராகப் பிறையை அணிந்திருத்தல், இலாடத் தானத்தில் நின்று அறிவைத் தரும் குறிப்பினையும் உடையது. இடைநாடி வலநாடி வழிச்செல்லும் காற்றுச் சுழுமுனை வழிச் சென்று ஆஞ்ஞையை அடையத் திருவரு ளாகிய ஒளி விளங்குதலின், ஆஞ்ஞையை, சந்திரன் முதலிய மூன்றும் கூடும் இடம் என்றார். ஒளி யோகி - ஞான யோகி; என்றது சிவ யோகியை.
இதனால், ஆஞ்ஞையில் திருவருளைக் கண்டு தான் அதுவேயாய் நிற்றல் சிவயோகிக்கே கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

பொழிப்புரை :

மனைவியைத் துறத்தல், மக்கள் முதலிய பிற சுற்றத்தையும் துறத்தல், சிவனை வழிபடுகின்ற நூல் அறிவு மிகுதல், வாய்வாளாதிருக்கும் சிவயோகிகள் அடைந்துள்ள பர சித்திகளை அவரிடம் கேட்டல், உலகியலின் தாக்குதலால் உள்ளம் திரிவுபடா திருத்தல், பிராணாயாமத்தை எளிதாகச் செய்தல்.

குறிப்புரை :

இதனுடன், வருகின்ற திருமந்திரத்தையும் கூட்டி வினை முடிவு செய்க. அணங்கு - பெண்டு. அற்றம் - அறுதி. அருஞ் சனம் - சுற்றம். நீவல் - நீக்குதல். சிணுங்குதல் - முணுமுணுத்தல்.

பண் :

பாடல் எண் : 66

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே. 

பொழிப்புரை :

மூப்பு இறப்புக்கள் இன்மை, அருள் வெளியிற் கலந்திருத்தல், தன் முன்னோர்களைத் தனது நற்செய்கையால் நற்கதி பெறச் செய்தல், சிவனது திருவுருவைத் தான் பெறுதல் என்னும் பத்து இயல்புகளையும், கைப்பொருள் போன்ற கேள்வியால் யோகநூற் பொருளை நன்குணர்ந்தோன் பெறுவான்.

குறிப்புரை :

செய்யுள்நோக்கிச் சரை (மூப்பு) பின் நின்றது. `இரணியம்` என்பது `இரணம்` என மருவிற்று. இரணிய பூமி - பொன்னுலகம். முற்றத் துறந்தவற்கல்லது இல்வாழ்க்கைக் கடன் முற்றும் நீங்காமையின், சிவயோகியும் தென்புலத்தார் கடன் செயற்பாலன் என்பது கூறினார். `இல்வாழ்வாரினும் சிவயோகிக்கு இஃது எண்ணிய வாறே எளிதின் முற்றுப்பெறும்` என்பது கருத்து. சிவயோகத்தின் இடைநிலைப் பயன்களில் மேலானது சாரூப பதவி பெறுதலாதலின், அதனை இறுதிக்கண் கூறினார். நன் திருவுரு - நல்ல திருவுருவம். மூவேழ் - மூன்றுடன் கூடிய ஏழ்; பத்து. ``ஆம்`` என்றது, `பொருந் துவான்; அடைவான்` என்றவாறு. ``மூவேழனையும் ஆம்`` என இரண்டாவது விரித்துக்கொள்க. ``கரம்`` என்னும் வடசொல், இறுதிப் போலியாகிய தமிழ் முடிபு ஏற்றது. ``கேள்வியால்`` என மூன்றாவது விரிக்க. கணக்கு - நூல். ``அறிந்தோன்`` என்றது, அறிந்து அந்நெறி நின்ற, மேற்கூறிய ஒளி யோகியை. `அறிந்தோன் ஆம்` என மேலே கூட்டி முடிக்க.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், சிவயோகி பெறும் இடைநிலைப் பயன்களைக் கூறுமுகத்தால், அவனுக்குத் திருவருள் செய்யும் முதல் நலங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 67

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே.

பொழிப்புரை :

ஆர்வத்தால் சிவனைக் காணுதற்பொருட்டுக் கடல் சூழ்ந்த உலகம் முழுதும் கால்கள் நோவ நடந்து சுற்றி வரினும் பயன் இல்லை. அது நிற்க, சிவனுக்கு மிக இனியவராகிய சிவயோகியரே அவன் இருக்குமிடத்தை அறிந்து காண்பர்.

குறிப்புரை :

`காண, நடந்து வலம் வந்தும் பயனில்லை` என மாறிக் கூட்டுக. இது, சரியை கிரியைகளில் நின்று அன்பு முதிரப் பெற்றோரை நோக்கிக் கூறியதன்றிப் பிறரை நோக்கிக் கூறியதன்று என்பதை இடம் நோக்கி யுணர்க. ``நாதன் இருந்த நகர், ஆதார நிராதார மீதானங்களே`` என்பது குறிப்பு. ``இவற்றை அறிந்து அடைதல் சிவ யோகிக்கல்லது கூடாது`` என்பதாம்.
இதனால், திருவருட் காட்சிக்குச் சிவயோகம் இன்றி யமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 68

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே. 

பொழிப்புரை :

மகேசுரனுக்குக் கீழ் அயன், மால், உருத்திரன் என்னும் மூவரும் மூலாதாரம் முதலிய மூன்று ஆதாரங்களிலும் முறையே நிற்க, மகேசுரனுக்குமேல், `விசுத்தி, ஆஞ்ஞை, நா அடி, உச்சி, தலைக்குமேல் பன்னிரண்டங்குலம்` என்னும் இடங்களில் சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்போர் முறையே நின்று பயன் தருமாறு உயிர்களுக்கு அளித்த சத்தி, `பரை` எனப்படும் சிவனது திருவருளே.

குறிப்புரை :

இதனுள் ஒன்பது இடங்கள் குறிக்கப்பட்டமை புலனாகும். ``முன்`` எனவே, ``பின்`` என்பதும், அவ்விரண்டனாலும் `இடை` என்பதும் பெறப்பட்டன. `முன், பின்` என்பன `கீழ், மேல்` என்னும் பொருளவாய் நின்றன. கீழே உருத்திரன் ஈறாகவும், மேலே சதாசிவர் முதலாகவும் கூறினமையின் இடையே அனாகதத்தில் மகேசுரர் இருத்தல் பெறப்பட்டது. எனவே, நாயனாரது துணிபு இம்முறையே யாதல் பெறப்படும். பிற முறைகளில் சிறிது மேலே (பா. 575 உரை) காட்டப்பட்டது. அம்முறை பற்றி, நிற்பார், இங்கு, ``மூல முதல்`` என்பதற்கு, `கணபதி` எனவும், ``மூலாதாரத்திற்கு மேல்`` எனவும் பொருள் உரைப்பர். `பரவிந்து` முதலியவை செய்யுளுக்கு ஏற்ப வைக்கப்பட்டன. திருவருளை, இறைவன் பாதம் என்றல் மரபு.
இதனால், மேல், ``நாதன் இருந்த நகர்`` எனப்பட்டன இவை என்பது கூறி, இவ்வாறெல்லாம், திருவருள், யோகிகட்கு நலம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே. 

பொழிப்புரை :

மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களையும் அவற்றில் உள்ள கடவுளரைத் தியான சமாதிகளால் வழிபட்டுப் பயன்பெறுமாற்றால் கடந்து, அவற்றிற்கு மேல் நிராதாரமாகிய உச்சிமுதற் பன்னிரண்டங்குலத்தை அடைந்து பரவிந்து பரநாதங் களின் அருள்பெற்று இவ்வாற்றால், மேதை முதலிய பிரணவகலை பதினாறும் கடக்கப்பட்டனவாய்விட, அதற்கு மேல், சொல்லவும், நினைக்கவும் வாராத மீதானமாகிய துவாதசாந்தத்தில் (பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால்) பரமசிவனை அடைந்து நிற்றலே ஆனந்த யோகமாகும்.

குறிப்புரை :

``ஆனந்தயோகம் நிகழ் புதல்வா`` (உண்மை விளக்கம்) என்பது நினைக்கத்தக்கது. ``சிவயோகத்துள்ளும் மூலாதாரம் முதலிய ஐந்து ஆதாரங்களில் நிற்றல் தவயோகமும், ஆஞ்ஞை முதலியவைகளில் நிற்றல் அருள் யோகமும், துவா தசாந்தத்தை அடைதல் ஆனந்த யோகமும் ஆம்` என்றவாறு. ``மேதாதி ஈரெண் கலை செல்ல`` என்றது வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாய் செய்தவாறு. எனவே, ``அக் கலைகளாவன இவை`` என்பது அவ் வதிகாரத்திலே அறியற்பாலதாம்.

பண் :

பாடல் எண் : 70

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே. 

பொழிப்புரை :

சந்திர கலையாகிய இட நாடிக் காற்றும், சூரிய கலையாகிய வல நாடிக் காற்றும் ஒடுங்கிச் சுழுமுனையில் வந்து பொருந்தச் செய்து, வாசி யோகத்தில் நின்று, ஆதாரங்களில் உள்ள கடவுளரைப் போற்றுகின்ற பொது யோகிகள் மேலுலகத்தில் அவ்வக் கடவுளராய் நின்று இன்பம் நுகர்வர். சிவனை உணர்தலாகிய முறைமையில் வழுவாது நின்று, அருள் யோகம் ஆனந்த யோகங் களைச் செய்கின்ற உண்மை யோகிகட்கே, நிலையான வீடுபேற்றைக் காட்டும் பரமசிவன் முன்னிற்பான்.

குறிப்புரை :

`சந்திர சூரியரோடு கூடி நிற்பவர் வானவரே` என்னும் நயம் தோன்ற முதல் இரண்டடிகளை அவ்வாறு ஓதினார். கூடி - கூடிய பின். துதி செய்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. ``அவர்`` என் பதன்பின், `கொண்ட` என ஒருசொல் வருவிக்க. `வானவர்கள்` என் பதன் பின் `ஆவர்` என்பது எஞ்சிநின்றது. தொன்மை, முன்னே துதிக் கப்பட்டமையைக் குறித்தது. ``நின்றான்`` என்பதில் நிற்றல், வெளிப் பட்டு நிற்றல் என்னும் பொருளது. பதி - நிலைத்து வாழும் ஊர்.

பண் :

பாடல் எண் : 71

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே. 

பொழிப்புரை :

பிராண வாயுவைத் தம்வழியில் இயக்குமளவே வல்லராய்ப் பவயோகம் கைவந்தவர் மருட் சித்திகளையே பெறுவர். ஆஞ்ஞையில் அருள் இன்பத்தைத் தருகின்ற அருள் யோகத்தைத் தலைப்பட்டு, பின் சுழுமுனைத் தலையை அடைந்த பிராண வாயுவால் அவ்விடத்தில் வடு உண்டாகத் தாக்கிப் பின்பு, அவ்வாயுவை மண்டை ஓட்டில் தீப்பொறி உண்டாகுமாறு மோதி, உணர்வை அசையாது நிறுத்திச் சிவனை அறியும் ஆனந்த யோகத்தில் நின்று சிவயோகம் கைவந்தவர்க்கு இறப்பு உண்டாகாது. (எடுத்த பிறப்பிலே வீடு உண்டாகும் என்பதாம்)

குறிப்புரை :

கட்டுதற்கும் நடுதற்கும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. மணம் செய்தல் - கூடுதல். இது, `தாமரையுள்ளே மணம் போல நிற்றல்` என்னும் நயம் தோற்றி நின்றது. `கரந்தெங்கும் தாமாவர்` என்பது பிராத்தியைக் குறித்துப் பிற சித்திகட்கு உபலக் கணமாய் நின்றது. புருவநடுவில் தோன்றும் வடு, பொட்டுப்போலத் தோன்றுதல் பற்றி ``பொட்டெழ`` என்றார். யோகத்தால் இவ்வடுத் தோன்றுதல் பலநாள் பயிற்சியால் ஆதலின், தாமரையுள்ளே மணஞ் செய்தற்குப் பின்னர்க் கூறினார். பொறியெழத் தாக்குதல், வன்மையை மிகுத்துக் கூறியவாறு. தண்டு - சுழுமுனை. அஃது ஆகுபெயரால் அதன்வழிச் செல்லும் பிராண வாயுவைக் குறித்தது. `இறப்பில்லை` என்னும் பொருளதாகிய ``நமனில்லை`` என்பது, இறந்தவர் பின் பிறப்பராதலின், பிறவியற்ற நிலையை அடைதலை உணர்த்தி நின்றது. ``கட்ட வல்லார்கள் கரந்தெங்குந் தாமாவர்`` எனவும், ``நட்டறிவார்க்கு நமனில்லை`` எனவும் கூறியன, பவ யோக சிவ யோகங்களது இழிபு உயர்வுகளை உறழ்ந்து காட்டியவாறு.
இவ் இருமந்திரங்களாலும், இருவகை யோகங்களின் இழிபு உயர்வுகளை ஒருங்கு வைத்துக் காட்டிச் சிவயோகம் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
`பரகாயப் பிரவேசம்` என்பதை நாயனார் இங்ஙனம், `மேலான ஆற்றல் பெற்ற உடம்பு` எனவும், ``அருளுடம்பு`` எனவும் இரு பொருள்பட இரட்டுற மொழிதலாக வைத்து, ``சித்திகள் எட்டன்றி`` என்னும் திருமந்திரம் முதல் இது காறும் சிவயோகமாகிய பரயோகத்தையும், பரசித்தியாகிய அதன் பயனையுமே உணர்த்தினமை அறிக.

பண் :

பாடல் எண் : 1

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே. 

பொழிப்புரை :

தன்னை அடைவதற்கு அன்பு ஒன்றையே வழியாக அமைத்துள்ள முக்கட் கடவுளாகிய சிவபெருமானை, அவ் அன்பைத் தரும் வழியாகிய அறிவை உண்டாக்கி, அவ் அறிவு பொருந்த அவனை நோக்கினால், அன்பு பெருகி, அது வழியாக இன்ப வெள்ளம் பெருகும். அது பெருகியபின், அந்த அன்பையே பின்னும் துணையாகப் பற்றி, அந்த இன்ப வெள்ளம் வற்றிப் போகாதவாறு பாதுகாத்துக் கொள்ளுதலும் கூடும்.

குறிப்புரை :

``காதல் வழி`` நான்கனுள் இரண்டாவது, நான்காவதன் தொகை. முதலதும், ஈற்றதும் உருவகங்கள். மூன்றாம் அடியில் ``வழிசெய்து````வழிதரும்`` என்பன` ``வழியும் பெருகும்`` என்னும் பொருளன. ``கண்`` என்றது அறிவை. எனவே, `இது மந்திர யோகம்` என்பது விளங்கும். அறிந்தவிடத்தன்றி அன்பு நிகழாதாகலின், அன்பைத் தரும்வழி அறிவாதல் அறிந்துகொள்க. ``அறிவை உண்டாக்கி அறிவுற நோக்கி`` என்றது ``அறிவைச் செயற்படுத்தி, அதன் வழியே நோக்கி`` என்றவாறு.
இதனால், ``பிராசாத யோகம் வழி முறையில் வீடு தரும்`` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே

பொழிப்புரை :

மாணாக்கனே!; நீ பிரணவ கலைகளில் அறிவு பொருந்த நில், அங்ஙனம் நிற்பாயாகில், பிராண வாயுவையும், அக்கலைகள் பதினாறனையும், அவற்றின் வழி இயங்குகின்ற மனம் முதலிய அந்தக்கரணங்களையும் மருள் நெறியிற் செல்லாது தடுத்து, அருள் நெறியில் நிறுத்துதல் கூடும்.

குறிப்புரை :

`பிரணவ கலைகள் சந்திரனது கலைபோல்வன` என உவமை முகத்தான் உணர்த்தற்கு சோடச கலாப் பிராசா தத்தைக் கூறினார். இதனை, மேலேயும் (பா.692) காண்க. வாயுவைக் காத்தலால் மனம் ஒருங்குதல் முன்னே (பா.606) கூறப்பட்டது. `கரணங்கள்` முதலிய மூன்றும் காரிய காரண முறையில் வைக்கப்பட்டன.
இதனால், பிராசாத யோகத்தின் முதற்பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே. 

பொழிப்புரை :

வலமும், இடமும் செல்லாமல், நடுநாடி வழிச் செல்கின்ற பிராண வாயு. அத்தகைய செலவிற் பிறழாது நிற்றலே அசை வில்லாது நிற்கும் பிராணாயாம நிலையாம். அந்நிலையால் அறிவும், பிரணவ கலைகளில் நிலைபெற்று நின்று, முதல்வனது திருவருள் அக்கலைகளில் பல்வேறு வகையாய்க் கலந்து நிற்கின்ற கலப்பினை அறியுமாயின், அவ்வாறு அறிந்து நிற்கின்ற அந்நிலையே, அவ்வறிவு பின் பலதலைப்படாது ஒரு தலைப்படும் வழியாம்.

குறிப்புரை :

`ஆதலின், அவ்வாற்றால் அக்கலப்பினை அறிக` என்பது குறிப்பெச்சம். தொழிற் பெயராய் நின்ற ``நின்றது`` இரண்டனுள் முன்னது எழுவாய்; பின்னது பயனிலை. ``நேர்தரு வாயு`` என்பதனை முதலிற்கொள்க. சிலை, கல்; மலையுமாம். ``சிலை`` என்றது அதன் தன்மையை; அஃதாவது, அசை வின்மை. ``தீபம்`` என்றது, அறிவை. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். ஒத்தல், பிறழாது நிற்றல். ``கலை`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``ஒத்து`` என்றார். `அலை வற` என்பதும் பாடம்.
இதனால், பிராசாத யோகம், உணர்வு அருள் வழிப்படுவதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே. 

பொழிப்புரை :

எஞ்ஞான்றும் உடனாய் நீங்காது நிற்கின்ற சிவபெருமானைச் சாரமாட்டாது புறத்தே ஓடிய உணர்வு, அவ்வாறு ஓடாது மடங்கி அவனைச் சார்ந்து நிற்றற்குப் பொருந்திய பிராசாத யோக நெறிக்கண் அவன் இனிது விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

புடை ஒன்றி நிற்றல், அருகிலே நிற்றல், ஐம் பொறிகளைக் குறிப்பதாய `மடை` என்பது ஆகுபெயராய், அவற்றின் வழிச் செல்லும் உணர்வைக் குறித்தது. `பிரானை ஒன்றி நின்றிட` என இயையும் `அதற்கு வாய்த்த வழியாவது பிராசாத யோகமே` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று, ``விடை ஒன்றில் ஏறி`` என விதந்தது, `தடத்தமாய்க் காணப்படுவன்` என்றவாறு. ஏகாரங்கள் தேற்றம், இருத்தல், உண்மை குறியாது, அமர்தலைக் குறித்தலின், இறந்த காலம் ஆயிற்று. `வாய்த்த வழியும்` எனப் பாடம் ஓதியும், ``விடை`` என்றதனைப் பிற குறிப்பு மொழியாக்கியும் தமக்கு வேண்டியவாறே உரைத்துக்கொள்வர்.
இதனால், பிராசாத யோகத்தில் இறைவனது பொதுநிலை இனிது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே. 

பொழிப்புரை :

தாம் வாழும் நாளின் எல்லை இவ்வளவினது என்பதை அறியாதவர் அது நீட்டித்தற்பொருட்டு ஒரு வழிப்படுத்து கின்ற பிராணவாயு, அவ்வாறு கால நீட்டிப்பிற்கு மட்டும் ஏதுவா யொழியாது, மெய்யுணர்வைப் பெறுதற்கு ஏதுவாகுமாயின், அத்தகைய சாதனத்தைப் புரிந்த சாதகன், பின்னர்ப் பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்திருப்பான்.

குறிப்புரை :

எனவே, `வாயுவை அங்ஙனம் நிற்குமாறு நிறுத்துக` என்பது குறிப்பெச்சமாயிற்று. இருத்தல், உண்மை குறித்து நின்றது. ``அறியார்`` என்னும் எழுவாய் ``ஒருக்கின்ற`` என்பதனோடு முடிந்தது. `ஒருக்குகின்ற` பெருக்குகின்ற` என்பன குறைந்து நின்றன. பெருமை - சிறப்பு. `ஒளிபெற நிற்கும் வழி பிராசாத யோகம்` என்பது கருத்து. ``நின்றிடும்`` என்பது முற்று; ``ஆம்`` என்னும் அசை நிலையை இதனுடன் கூட்டுக.
இதனால், எடுத்த பிறப்பில் ஞானத்தைப் பெற விழைபவர் வாழ்நாள் நீட்டிப்பின் பொருட்டுப் பிராணாயாமத்தினை ஒரு தலையாகச் செய்தல் வேண்டும் என அநுவாத முகத்தான் வலியுறுத்தப்பட்டது. படவே, அடுத்து வருகின்ற `காயசித்தி, கால சக்கரம்` என்னும் அதிகாரங்கட்கு வழிவகுத்தது மாயிற்று.
இதனால், பிராசாத நெறியல்லாத பிற நெறி யோகங்கள் சிறப்பிலவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே. 

பொழிப்புரை :

`ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்குமாறு நிறுத்துதல்` என மேற்கூறிய செயலே சாதகன் சாதிக்கத்தக்க முறையாதலை உணர்ந்து, பெருந்தவமாகிய அவ்வழி பாட்டினை ஒருவன் செய்யும் பொழுது, பிரணவ கலைகளின் உள்ளீடாய திருவருளிலே தனது உணர்வு செல்லுமாறு செலுத்துவானாயின், அச்செயலே, அவனது புலன் உணர்வாகிய இரும்பினை மெய்யுணர்வாகிய பொன்னாக மாற்றுகின்ற இரச குளிகையாய் அமைந்து பயனைத் தந்துவிடும்.

குறிப்புரை :

அகத்தொழில் மாத்திரையாற் செய்யும் வழிபாடே யோகமாகலானும், சரியை, கிரியை யாகிய ஏனைத் தவங்களின் மேம்பட்ட யோகத்துள்ளும் பிராசாத யோகம் மிகச் சிறந்ததாகலானும், அதனை ``மாதவமான வழிபாடு`` என்றார். ``செய்திடும்போது`` என்பது ஒருசொல், அகம் கலைகளின் உள்ளிடம். அஃது, ஆகு பெயராய், அவ்விடத்துள்ள திருவருளைக் குறித்தது. `அகத்தாக` என வரற்பாலதாய சாரியை வாராது விகற்பித்தது. பாய்ச்சுதலுக்குச் செயப்படு பொருள் ஆற்றலால் கொள்ளப்பட்டது. துணை வினையாய் வந்த கிடத்தல், துணிவுணர்த்தி நின்றது.

பண் :

பாடல் எண் : 7

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே. 

பொழிப்புரை :

மேல், ``வேதகமாக விளைந்து கிடக்கும்`` எனப் பட்ட அச்சாதனைதான், மிகத் தருகின்ற பயன் மூன்றாகும். இனி, இயல்பாக இயங்கும் பிராண வாயுவின்வழி எப்பொழுதும் புறத்தே ஓடிய உணர்வுதானே, சாதனையால் சுழுமுனைவழிச் செலுத்தப்பட்ட வாயுவின்வழியே உள்நோக்கிப் படர்ந்து, பின்னும் உச்சிக் கண்ணதாகிய பெரிய தாமரை மலரிடத்து அவ்வாயுவின் வழியே படிமுறையாற் புக, அவ்விடத்து நன்கு விளங்கும் பேரொளியாகிய திருவருள், முன்பு கீழுள்ள ஆதாரங்களினின்று அவ்வுணர்விற்கு விடயமாய்த் தொடர்ந்து விளங்கிவருவதாம்.

குறிப்புரை :

பயன் மூன்றாவன புலன்களின்மேற் சென்ற அவா அறுதலும், திருவருள் தோற்றமும், திருவருட் பேறுமாம். இவை, மேல், (பா.700)`` ஒளிபெற`` என்றதனானே, `பொழுது புலர்தல், செவ்வொளி தோன்றல், ஞாயிற்றைக் காண்டல்` என்பவற்றில் வைத்து அறியக் கிடத்தலின், இவற்றைக் கிளந்தோதாது போயினார். திருவருட் பேறு, படிமுறையானன்றி முதற்கண்ணே முற்றக் கிடையாமையைப் பயன் வகையாலும் உணர்த்துதற்கு, `கிளர் பயன் மூன்று`` என்றார். ``கிளர் பயன்`` என்பது, `கிளர்த்தும் பயன்` என, பிறவினை வினைத்தொகை. `தான்` என்னும் அசை நிலை நான்கிடத்தும் பிரிநிலை ஏகாரத்தோடு வந்தது. `அச்சோதி தானே, உள்நின்று தொடர்ந்தது` என்க. `தொடர்ந்தது தானேயாம்` என்பதில், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. எனவே, ``தொடர்ந்தது`` என்றது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவ்விடத்து நிற்கும் சோதி` எனற் பாலதனை, ``அச் சோதி`` என்றார்.
இதனால், மேற்கூறிய சாதனை, வேதகமாக விளையும் முறை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே.

பொழிப்புரை :

உயிர் தனது முயற்சியால் அடையலா காமையின், தானாகவே அதற்குப் புலப்பட்டு நிற்கின்ற மெய்ப் பொருளாகிய தலைவி தன்னை நாம் அடைவதற்கு இவ்வுடம்பையே வழியாக அமைத்து நம்முள் இருக்கின்றாள். அவளையே பொருளாக நாம் கொள்ளின், இவ்வுடம்பு சிவானந்தமாகிய தேனைப் பருகி இன்புறுகின்ற இடமாய்விடும்.

குறிப்புரை :

``வானோர் உலகீன்ற அம்மை`` என்பது, `அவள்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. `அம்மையை` என்னும் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. `பருகி` என்பது பாடமன்று. சிவம், இங்கு, `இன்பம்` என்னும் பொருளது. ``ஆகும்`` என்பதற்கு எழுவாய் வருவிக்க.
இதனால், பிராசாத யோகத்தாற் பெறும் திருவருட்பேறு, பின், சிவப் பேற்றிற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.

பொழிப்புரை :

உடம்பு ஒளி பெற்று நெடுநாள் விளங்குதற் பொருட்டுப் பொருந்தியுள்ள பிராணவாயு, ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிதாக அழிந்துகொண்டு வருதலை யாரும் அறிந்து கவலைப் படுதல் இல்லை, அதனை அறிந்து கவலைப்பட்டு, அவ்வாயுவை அழியாமற் காப்பார் உளராயின், அவர்க்கு, எடுத்த பிறப்பிலே சிவனை அடைதற்கு ஏதுவான நீண்ட ஆயுளைப் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

`செறிதல், சிவனருளால்` என்க. அழிதல், பன்னிரண்டு அங்குலமாகப் புறப்பட்டது, பின், நாலங்குலம் அழிய, எட்டங் குலமாகவே புகுதல். நந்தி, சிவன் அவன் திகழ்தலாவது, காட்சிப் படுதல், ``திகழ்கின்ற`` என்னும் பெயரெச்சம், ``ஆயு`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. உம்மை, சிறப்பு, இடையிரண்டடிகள் மூன்றாம் எழுத்து எதுகை.
இதனால், `ஆசனம் முதலிய உறுப்புக்களால் யோக நெறி கைவரப் பெற்றுப் பின் பிராசாத நெறியைத் தலைப்பட்டு மெய் யுணர்வைப் பெறுதற்கு, வாழ்நாள் நீட்டித்தல் வேண்டும்` என்ப துணர்த்தி, `அதற்குப் பிராணாயாமம் இன்றியமையாதது` என வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே. 

பொழிப்புரை :

`சிவன், உடலைக் காக்கின்ற சத்தியினின்றும் பிரிகின்ற நாள் இது` என்பதைக் குறிகள் சிலவற்றால் ஐயமற உணரலாகும். `அக் குறிகள் இவை` என்பதை யோக குருவை வழிபட்டே பெற்று, அங்ஙனம் பெற்ற அறிவைப் பெரிய செல்வம் போல மதித்துப் போற்றிக்கொள்ளுங்கள்.

குறிப்புரை :

காக்கும் சத்தியை, ``ஆரணி`` என்பர். சிவன் காக்கும் சத்தியினின்றும் பிரிதலாவது. `நிலை பெறுக என நினைக்கும் நினைவைவிட்டொழிதல். அங்ஙனம் ஒழியின் உடல் ஒரு நொடியும் நிலைபெறாது அழியும். இதனையே,
``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்,
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே``
-தி.5 ப.90 பா.4
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசர். எனவே, ``நாதனும், நாயகி தன்னிற் பிரியும் நாள்`` என்றது, `உடல் அழியும் நாள்` என்றவாறாம். ஞான குரு, சாத்திய குருவாகலின், யோக குருவை, ``சாதனகுரு`` என்றார். எனவே, கிரியா குருவும் அத்தன்மையரே யாதல் அறியப்படும். இனி, `நாதன், உடம்பினை உடையதாகிய உயிர்; நாயகி குண்டலினி சத்தி` எனவும் உரைப்பர்.
இதனால், பிராணாயாமத்தில் உளஞ்செல்லுதற் பொருட்டு, வாழ்நாளின் எல்லையை உணருமாறு கூறி, பின் வருகின்ற ஆயுள் பரீட்சைக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. 

பொழிப்புரை :

பிராணாயாம வன்மையால் தலையில் உள்ள அமுதத்தைப் பெற்று மிகவும் நுகர வல்லீராயின், உமக்கு உடம்பாய் அமைந்த, நிலம், நீர் முதலிய தத்துவங்கள் பலவும் அவை யவை ஒடுங்கும் முறையில், வலிமை கெட்டு ஒடுங்குதற்குத் தனித்தனிப் பல்லாண்டுக் காலம் செல்லும்; அங்ஙனம் செல்லவே, உடம்பு கெட் டொழியாது, நெடுநாள் நிலைத்து நிற்கும்; இஃது எங்கள் அருளாசிரி யரான நந்தி தேவர்மேல் ஆணையாக நான் சொல்லும் உண்மை.

குறிப்புரை :

பிராணாயாமத்தின் அருமை உணர்த்தற்குப் பிராண வாயுவை நான்கு காலன்றிப் பன்னிரண்டுகால்கொண்டு அதிவேக மாய் ஓடும் குதிரையாக உருவகம் செய்து கூறினார். `பன்னிரண்டு கால்` என்றது. அது புறப்படும் அங்குல அளவை. முன் நிற்கற் பாலதாய நிலம், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. மூன்றாம் அடியின் இறுதியில் எஞ்சி நின்ற, `என இவ்வாறாக` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. மூன்றாம் அடிக்குப் பிறவாறு உரைப்பாரும் உளர்
இதனால், மேல் வலியுறுத்தப்பட்ட பிராணாயாமம் வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதல் இவ்வாற்றான் என்பது கூறி. அடுத்து வருகின்ற காய சித்திக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு சத்தி சிவங்கள் தம்மிற் பிரிந்து நீங்குகின்ற நாளின் எல்லையை, `சத்தம், உருவம் கந்தம், சுவை, பரிசம்` என்னும் புலன்களில் முறையே, `ஏழு, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று` என இவ்வாறாகப் பொது வகையில், இருளை அறுக்கும் ஒளியாகிய இறைவன் வகுத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

எனவே, ``இறப்பு நேருங் காலத்து இப் புலன் உணர்வுகள் இங்குக் கூறிய கால முறையில் கெடுவனவாம்` என்பது இத் திருமந்திரத்தின்வழி அறியப்படுகின்றது. இவ்வாற்றால், ``முதலில் பரிச உணர்வும், முடிவில் ஓசை உணர்வும், அவற்றிற்கு இடையே இங்குக் கூறிய முறையில் ஏனைய புலனுணர்வுகளும் கெடும்`` என்பது பெற்றாம். புலன்களை மேல்நின்றிழியும் கால முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் என்பது தானே விளங்குதலின், செய்யுள் நோக்கி அதனை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். `விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண், மூக்கு`` (சிவஞான போதம், சூ.5) எனப் பிறவிடத்தும் இவ்வாறு எஞ்ச வைத்தல் காண்க. புலன்களின் கேடு கூறவே, அவற்றிற்கு முதலாய பூதங்களும் இவ்வாற்றால் சத்தி கெடப் பௌதிகமாகிய உடம்பு அழியும் வகை பெறப்படுவதாம். செய்யுள் நோக்கிப் பொறியும், புலனும் விரவ ஓதினார். தேசி - ஒளியாயுள்ளவள். தேசன், அவ்வொளியை உடையவன். இவ்விருவரையும் மேல், (பா.705) ``நாதனும், நாயகி`` என்றதற்கு உரைத்தவாறே அவர் உரைப்பர். இத்திருமந்திரத்திற்குப் பிறர் பிறவாறு உரைத்த உரை பொருந்துவதாகாமையை அறிந்து கொள்க.
இதனால், யோகத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு கூறிய இயைபு பற்றி, யோகம் இல்லாதார்க்கு உள்ள வாழ்நாள் எல்லை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

பொழிப்புரை :

உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன்.

குறிப்புரை :

``ஆகவே, என்னை உடம்பையே பொருளெனக் கொண்டவனாகக் கருதி அறிவுடையோர் இகழார்` என்பது கருத்து. எனவே, ``நீவிரும் உடம்பை நிலை பெறுவிக்க முயலுங்கள்`` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உடம்பார், உயிரார்`` என்றவை, நிலையாமை யுடைய இழிவு பற்றி வந்த திணை வழுவமைதி. இதனை, ``உயர்வு பற்றி வந்தது`` என்பாரும் உளர்;, ``அழியின் `` எனவும், ``அழிவார்`` எனவும் அழிபொருளாகக் கூறப்பட்டவை, உயர்வுடையனவாதல் எவ்வாறு என எண்ணி ஒழிக. திடம்படல், உறுதி யுண்டாகப் பெறுதல், ``உயிர்க்கு உறுதி`` என்றது, இங்குத் தவத்தை, ``திடம்பட`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. இனி, ``சேரவும்`` என்னும் எண் ணும்மையைச் சிறப்பும்மையாக வைத்து, ``திடம்பட`` என்பதனைச் சேர்தற்கு அடையாக்கியே உரைப்பர் பலரும். உடம்பை வளர்க்கும் உபாயம், வருகின்ற திருமந்திரம் முதலாக உள்ளவற்றிற் கூறப்படுவன. ``வளர்த்தேன்`` இரண்டில் முன்னது வினைமுற்று. அதன்பின், ``அதனால்`` என்பதும் இறுதியில், ``ஆயினேன்`` என்பதும் எஞ்சி நின்றன.
இதனால், காயசித்தி இன்றியமையாமையாதற்குக் காரணம் உணர்த்து முகத்தால், அதன் சிறப்புக் கூறப்பட்டது. இதனானே, உடம்பை உயிர் நலத்திற்குக் கருவியாகக் கொள்ளுதலல்லது, அதனையே பயனாகக் கொள்ளுதலும், உடம்பு கருவியாதலை உணராது அதனைப் பகை எனக் கொண்டு வருத்துதலும் ஆகா என்பதும் பெறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. 

பொழிப்புரை :

சிவ நூல் கேட்பதற்கு முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். சிவநூல் கேட்ட பின்னர், அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.

குறிப்புரை :

`இத்தகைய அறிவையும் செயலையும் நீவிரும் பெறுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இழுக்கு, குற்றம்; மாசு. இழுக்குடையதனை, `இழுக்கு` என்றார், `சிவ நூல் கேட்கும் முன்னர், கேட்டபின்னர்` என்பன இயைபெச்சமாய் வந்து இயையும். உறுதல், பயனைப் பெறுதல். உறுபொருள், உறுதற்கு ஏதுவாய பொருள்; என்றது வழியை. செய்யுளின் இடைக்கண்நின்ற ஏகாரங்கள் தேற்றம். கோயில் - ஆதார, நிராதார, மீதானங்களாகிய இடங்கள். ``இருந்து`` என்றது `குறிக்கொண்டிருந்து` என்றவாறு.
இதனால். `உடம்பு, உயிர் நலத்திற்குக் கருவியாதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவை வாங்கியும், விட்டும் சுழலும்படி செய்ய, உடம்பில் உள்ள மாசுகளும் அதனோடே சுழன்று நீங்கும். அவ்வாற்றால் மாசுகளைப் போக்கித் தூய்தான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அவை வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியினுள்ளும் அவ்வாயுச் சென்று உலவும்படி செய்து, அதன் ஆற்றலை அந்நாடிகட்குத் தருகின்ற இவ்வுபாயத்தை முறை யறிந்து செய்ய வல்லவர்க்கு, உடம்பு நெருப்பிலிட்டுச் சுடப்படுதலினின்றும் நீங்கி, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் புலப்படக் காட்டும் மந்திர மையாய் அமையும்.

குறிப்புரை :

``சுழற்றிக் கொடுக்க`` என்பது ஒரு சொல் நீர்மைத்து. `கொடு` என்பது செயப்படுபொருள் குன்றாவினையில் இவ்வாறு துணைவினையாய் வருதலை, `கிண்டிக் கொடுத்தல், புரட்டிக் கொடுத்தல்` முதலாகவரும் வழக்குநோக்கி அறிக. `சுத்தி` என்பது பாடமன்று. ``மலம்`` எனப் பின்னர் வருதலின்` வாளா,``கழியும்`` என்றார், ``உழற்றிக் கொடுக்கும்`` என்பதில் உழலுதற்கு இடமும், கொடுத்தலுக்குச் செயப்படுபொருளும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. உழற்றிக் கொடுத்தலையே உபாயம் என்கிறாராதலின், ``கொடுக்கும் உபாயம்`` என்பதில், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். `அழற்றப்படுவது` என்னும் பொருளதாய ``அழற்றி`` என்பது இங்கு அன்னதாம் தன்மையைக் குறித்தது. மந்திர மை, புதையுண்டு கிடக்கும் பொருட்குவை முதலியவற்றைப் புலப்படக் காட்டுதல் நன்கறியப்பட்டது.
இதனால், காயசித்தி உபாயங்களுள் முதல் உபாயம் பிராணாயாமம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே. 

பொழிப்புரை :

மந்திரமைபோல நின்று பயன்தரத் தக்கதாகிய உடலை. அன்ன தாகாதவாறு, `ஐ, வளி, பித்து` என்னும் மூன்றானும் தோன்றிக் கெடுக்கின்ற நோய்கள், முறையே, `மாலை, நண்பகல், காலை` என்னும் பொழுதுகளில் செய்யும் பிராணாயாமத்தால் நீங்கும். அதுவேயன்றி, முப்பொழுதும் செய்யும் பிராணாயாமத்தாலும் நரை திரைகள் வாராதொழியும். இவ்வுபாயத்தை இங்கு, உடலைக் கொல்லும் நஞ்சுபோன்ற தீமைகள் நீங்குதல் நோக்கிக் கூறினோம்.

குறிப்புரை :

போல் உடல், வினைத்தொகை. `போன்றுடல்` என்பது பாடமன்று. `உடற்கண்`` என ஏழாவது விரிக்க. ``வஞ்சகம், செய்திடில்`` என்பவற்றை ஏனையவற்றிற்கும் கூட்டுக. ``ஐ, வாதம், பித்து`` என்ற மூன்றும் காரண வாகுபெயராய், அவற்றால் உளவாகும் நோய்களைக் குறித்தன; என்னை? அற்றொழியற்பாலன அந் நோய்களே யாதலின். காலைப் பொழுது எச் செயலுக்கும் சிறப்புடைய தாகலின். அதனை ``செஞ்சிறு காலை`` என்றார். செய்தலுக்குச் செயப்படுபொருள், அதிகாரத்தால் வந்தது. ``நஞ்சறச் சொன்னோம்`` என்பதனை ஈற்றில் வைத்து உரைக்க. ``நரை, திரை நாசம்`` என்றதனால், இளமைநீங்காமை குறிக்கப்பட்டது. இதனைக் காலம் வரையாது கூறினமையின் `எக்காலத்தும் செய்தலால்` என்றதாயிற்று.
இதனால், மேற்கூறிய உபாயத்தைச் செய்யுமாறும், அவற்றால் வரும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :

மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவினவாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்.

குறிப்புரை :

``பாம்பு`` என்றது குண்டலினியை; ``இயந்திரம்`` என்றது நடுநாடியை. `பதினாறு அங்குலக் கயிறு` என்றது, அந்நாடியுள் பதினாறு மாத்திரையளவு பூரிக்கப்படும். பிராணவாயுவை, `பன்னிரண்டு அங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டை`` என்றது, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பிலே பன்னிரண்டங்குலம் வெளிச் செல்லும் பிராண வாயுவை. `அம் மூட்டையை அவிழ்ந்து வீழாமல் கட்டுதல்` என்றது, அந்த இரு வழியையும் அடைத்தலை. எனவே, `இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பாக இயங்குகின்ற பிராண வாயுவை அடக்கிப் பதினாறு மாத்திரையளவு நடுநாடி வழிப் பூரித்துக் குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்தி யிருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது` என்பது இம் மந்திரத்தால் போதரும் பொருளாம்.
`மூன்று மடக்கு` என்றது, உடம்பில், `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` எனப் பகுக்கப்படும் மூன்று வட்டங்களை. அம்மூன்றிலும் குண்டலினி வியாபித்துள்ளமை அறிக. இனி, `அப் பாம்பு அவ் யந்திரத்தில் ஊன்றி யிருக்க` என்றது, பொது மக்களிடத்து உணர்வின்றித் தூங்குவது போல் இருக்கின்ற நிலையில் லாமல், விழித்திருப்பதுபோல் செயற்படும் நிலையில் நிற்க, என்றதாம். பிராண வாயுவால் சட ஆற்றல் மிக்கு நிற்கும் உடல் உறுப் புக்கள், பின் அறிவாற்றலால் தூண்டப்படுதலும் அவை செயற் பாடின்றிக் கெட்டொழியாமைக்கு ஏதுவாம் என்க. குண்டலியின் தன்மை மேலே பலவிடத்தும் விளக்கப்படது. ``கட்டியிட்டு`` என்பதில் `இட்டு` அசைநிலை. `பாம்பு, இரண்டு எட்டுள இயந்திரத்தில் நான்ற மூட்டை இரண்டையும் கட்டி ஊன்றியிருக்க உயிர் அழியாதே` என வினை முடிவு செய்க. ``இரண்டெட்டு`` என்பது எண்ணலளவை யாகுபெயர். `முட்டை` என்பது பாடம் அன்று.
இதனால், காய சித்தி உபாயங்களுள் குண்டலினி இயக்கம் இரண்டாவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. 

பொழிப்புரை :

நூறு மாத்திரை காலமேயாயினும், அறுபது மாத்திரை காலமேயாயினும், ஆறு மாத்திரை காலமேயாயினும் பிராண வாயு சுழுமுனை நாடியை வலமாகச் சூழ்ந்தும் இடமாகக் சூழ்ந்தும், அதன் உட்புகுந்து மேலேறியும் வருமாயின், அத்துணை ஆண்டுக்கால வாழ்நாளினை மக்கள் எய்துவர்.

குறிப்புரை :

நூறு முதலிய மூன்றினும் நான்கிடத்தும், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. `பிராண வாயுவைக் கும்பகம் செய்யும் ஆற்றலுக்கு ஏற்பவே வாழ்நாளின் அளவு அமையும்` என்றற்கு இங்ஙனம் நயம்படப் பலவாறு விகற்பித்துக் கூறினார். யோகநெறியிற் கொள்ளப்படும் மாத்திரை என்பது, கைவிரலை இயல்பான இயக்கத்தில் முழந்தாளை ஒருமுறை சுற்றச் செலுத்தி நொடித்தலைச் செய்யும் கால அளவாம். யோக முறையால் பெறப்படும் வாழ்நாள் நீட்டிப்பு, இயல்பாய் அமைந்த வாழ்நாளின் எல்லையோடு கூடிநிற்கும்; அதனால் `ஆறாண்டு` என்பதும் நீட்டிப்பே என்க.
இதனால், `மேற்கூறியவற்றுள் முதலதாகிய பிராணாயாமத் தால் பெறப்படும் ஆற்றல் காயசித்திக்குச் சிறந்தது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

மூன்று மடக்குடைப் பாம்புபோல உடம்பில் உள்ள குண்டலி சத்தி, மேற்கூறியவாறு ஊன்றியிருக்கும் இடமாகிய நடு நாடியைப் பிராண வாயு வலமும் இடமுமாகச் சுற்றிவருகின்ற சாதனையைப் புரிந்தால், உலக நோக்கில் இருக்கும்பொழுதே உடலில் உள்ள பத்து நாடிகளில் உண்டாவனவாக மேல் (பா.593) கூறிய ``மணி, கடல், யானை`` முதலியவற்றின் ஓசைபோலும் ஒலிகளைக் கேட்டல் கூடும். இனிச் சிவ பெருமான். தாள அறுதிக்கு இயைய ஆடும் ஆட்டத்தின் ஓசையும் கேட்கப்பட்டுப் பின் அப்பெருமானே விளங்கித் தோன்றுவான். மெய்யான இன்பமே வடிவமான எங்கள் ஆசிரியர் மேல் ஆணையாக, இவ்வாறு நாம் உண்மையையே உங்கட்குச் சொன்னோம்.

குறிப்புரை :

முதலடி, மேல், ``மூன்று மடக்குடை`` என்ற மந்திரத்துட் கூறியதனை அநுவதித்தது. எனவே, இச்சாதனையால் குண்டலியின் இயக்கம் மிகுதல் பெறப்பட்டது. சகல நிலை `பகல்` எனப்படுதலின், சகல சாக்கிர நிலையை, `மத்தியானம்` என்றார். யோகாவத்தை யிலன்றிச் சகலாவத்தையில் தச நாதங்களைக் கேட்டல் அரிதாகலின், ``மத்தியானத்திலே வாத்தியங்கேட்கலாம்`` எனச் சிறந்தெடுத் தோதினார். இஃது உடம்பு சட ஆற்றல் மிக்கிருத்தற்கு அறிகுறியாகும். `தித்தித் தா` என்னும் ஒலிக் குறிப்பினை, ``தித்தித்த`` எனக் குறுக்கி ஓதினார். அஃது இரட்டுற மொழிதலாய் நின்று, கூத்து, அருள் இன்பக் கூத்தாதலை உணர்த்திற்று. கூத்து, கருவியாகுபெயர்; என்னை? சிவனின் வேறாக ஓதப் பட்டமையின் சிவன், தடத்த சிவன். ``வெளி ப்படும்`` என்பதனைத் தனித் தனி இயைக்க. ``சொன்னேன்` என்பதும் பாடம்.
இதனால், இரண்டாவதாகிய குண்டலியின் இயக்கம் திருவருட் பேற்றிற்குச் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

பொழிப்புரை :

நாதத்தை முற்றப் பெறக் கருதிச் சொல்லப்படுகின்ற, முறையே மகர மெய்யையும் புள்ளி வடிவினதாய எழுத்தையும் உடன் கொண்டு விளங்கும் அகரமும், சகரமுமே பிராண வாயுவைத் தடுத்தற்குரிய மந்திரமாம்; ஏனெனில், நாதத்தை முற்றும் உணரப் பெறுதலே யோகம் கைவந்தவனுக்குரிய தன்மையாதலின்.

குறிப்புரை :

`உறப் பெறவே நினைந்து ஓதும்` என்பதை முதலிற் கொள்க. பிரணவ கலைகளுள் அகர உகரங்கள் பெருங்கூறாயும், மகர மெய் உட்கூறாயும் நிற்குமாதலின், மகர மெய்யை, ``திறத்திறம்`` என்றார், ``விந்து`` என்றது இங்கு, புள்ளி, வடிவத்தை, மகரத்தை உடன்கொண்ட அகரம் எனவே, `அம்` என்பதும், புள்ளி வடிவை உடன்கொண்ட சகரம் (ஸ) எனவே, `ஸ`என்பதும் விளங்கின. இவை இரண்டுங் கூட, `அம்ஸ:` என்றாகுமாகலின், அதுவே பிராணா யாமத்திற்கு உரிய மந்திரம் என்பது போந்தது. `அகரம்` என வாளா கூறினும், மகரம் தானே பெறப்படுமாயினும், சகரத்திற்கு வேறு கூறு கின்றாராகலின், அகரத்தின்கண் ஐயம் நிகழாமைப் பொருட்டு, அதனை எடுத்தோதினார். `அசபை` எனப்படுவது இவ் அம்ஸ மந்திரமே. உபதேசத்தாற் பெறற்பாலனவாய மந்திரங்களை வெளிப் படக் கூறாது, இங்ஙனம் மறைத்துக் கூறுதலே மந்திர நூல்கட்கு இயல்பென்க.
அம்ஸ மந்திரத்துள் `அம்` என்பது மூச்சினை உள் வாங்குதற்கும், `ஸ` என்பது மூச்சினை வெளிவிடுதற்கும் உரியன, இதனை அவற்றது ஓசை இயல்பாலும் உணரலாகும். இவ்வாறன்றி இவற்றை மாறிக் கூறுவாரும் உளர். உயிர் முதலாய மந்திரங்கள் அனைத்திற்கும் முதற்கண் ஹகாரத்தைச் சேர்த்தல் வடமொழி மரபாகலின், `அம்ஸ:` என்பது, `ஹம்ஸ:` என்றும் `அம்ச மந்திரம்` என்பது `ஹம்ஸ மந்திரம்` என்றும் அம்மொழியில் சொல்லப்படும். இனி, ஸகாரத்திற்கும் மகர மெய்யைச் சேர்த்து `அம்சம்` எனச் சொல்லப்படுவதே அம்ச மந்திரம் என்னும் கொள்கையும் உண்டு. `அதனையே மேற்கொண்டு, இதற்கு அவ்வாறு உரை கூறுவாரும் உளர்.
இது பிராணனின் இயல்பான இயக்கத்தாலே நடை பெறுதலின், `அசபை` எனப்பட்டது. அசபை, வாய்விட்டுச் செபிக்கப் படாதது, `அஜபா` என்பது வடமொழிப் பெண்பாற்சொல். `செபிக்கப் படாதது` எனவே, இதனை, `மானதமாகக் கணித்தலே சிறப்பு` என்பது பெறப்படும்.
`அம்` என்பதனை, `அஹம்` எனத் திரித்து, `ஸ:` என்பதன் பின் வைக்க, `ஸோஹம்` என்றாகி, `அவன் நான்` எனப் பொருள் தரும். அதனால், `ஸோஹம்` எனப் பாவிக்கும் மந்திரமும் அம்ஸ மந்திரத்தின் வேறுபாடே என்பர், அம்ஸ மந்திரத்தால் பாச நீக்கமும், ஸோஹம் பாவனையால் சிவப்பேறும் உளவாகும் என்க.
இதனால், `காயசித்தி முதலிய பலவற்றிற்கும் துணையாகிய பிராணாயாமத்திற்கு உரிய மந்திரம் இது` என்பது, காய சித்தி உபாய இயைபு பற்றிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

பொழிப்புரை :

பூரக ரேசகங்களை மேற்கூறியவாறு அம்ஸ மந்திரத்தாற் செய்தபின் கும்பகம் செய்யும் பொழுது `ஹாம்` என்னும் வித்தெழுத்தாலே (பீஜாட்சரத்தாலே) பிராணனைச் சுழுமுனை நாடி வழியே கண்டத்தளவும் செலுத்திப் பின், `ஹௌம்` என்னும் வித்தெழுத்தால் ஆஞ்ஞையை அடைவித்து, அங்கே மலவெழுத் துக்கள் நீங்கிய திருவைந்தெழுத்து, `தத்துவமசி` மகாவாக்கியப் பொருளையும், `சோஹம்` என்பதன் பொருளையும் தருமாற்றை உபதேச முறையான் உணர்ந்து அதனானே அவ்வாயுவை அசையாது நிறுத்திப் பின் அபானவாயு எழத் தொடங்குமாயின், அதனைப் பிரணவத்தால் அடக்கிப் பிராணனை முன்போலவே மேலெழச் செய்யின், அவ்வாறு செய்பவன் சிவமாந் தன்மையை அடைவான்.

குறிப்புரை :

``உந்திச் சுழியின் உடன் ஏர் பிராணன்`` என்றது, `பிராணனை அஃது எழுமிடத்திலிருந்தே இவ்வாறு எழுப்புக` என்றவாறு. உடன் - விரைவாக. ஏர்தல் - எழுதல். நிறுத்துதற்கு ``சிவமந்திரத்தினால்`` என விதந்தோதியது போலப் பிராணனையும், அபானனையும் எழுப்புதற்கு உரிய மந்திரங்களை விதவாமையானும், ``எழுப்பி`` என வாளாகூறி யொழியாது ``சிந்தித் தெழுப்புக`` என்றமையானும், பிராணனை உள்வாங்குதற்குரிய ``ஹம்`` என்பதனை மாத்திரை கூட்டி அது நெடிது செல்லுமாறு எழுப்பி, அப்பிராணன் நிற்றற்கு அம்மந்திரத்தை ஹௌகாரமாகத் திரித்து முடித்தல் வேண்டும் என்பதும், அபானனை மூலாதாரத்திற்குரிய பிரணவத்தால் எழுப்புதல் வேண்டும் என்பதும் பெறப்பட்டன.
மந்திரங்கள் வாயினால் சொல்லப்படும் சொற்களும், அவற்றொடு கூட்டப்படும் வித்தெழுத்துக்கள் (பீஜாட்சரங்கள்) மனத்தால் சிந்திக்கப்படும் எழுத்துக்களும் ஆம் என்க. `முந்தி நிறுத்தி`` என இயையும். ``முகடு`` என்றது, சுழுமுனையின் உச்சியாகிய ஆஞ்ஞையை. பிராணனை அவ்விடத்து நிறுத்தும் முன்னே அபான வாயு கீழ்ச் செல்லுதல் குற்றமாகாமையின், ``முந்தி முகட்டின் நிறுத்தி`` என்றார், எனவே, ``மூலத்துவாரத்தை முக்காரம் மிட்டிரு`` (பா.571) என மேற் கூறியதும் இதுவேயாதல் அறியப்படும். ``அவன் சிவனாம்`` என மாறுக. இனி `அவ்வாறு செல்பவன்` என்பதைத் தோன்றா எழுவாயாகக் கொள்ளின், ``அவன்`` என்பது பகுதிப் பொருள் விகுதியாம், ``ஆம்`` என்றது ``அப்பாவனையைத் தலைப்படுவன்` என்றவாறு.
இதனால், காயசித்தி பெற்றவன் அதனால் பெறற்பாலதாய பயனைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே. 

பொழிப்புரை :

அசுத்தத் தன்மை நீங்காதே எருவாய்க்கு இரண்டு விரற்கிடைமேலேயும், தன் சொல்லாற் சொல்லப்படாத குறிக்குக் கீழே யுமாய் உள்ள இடத்தில் தியானியுங்கள் `யாரை` எனின், உடம்பின் கண் ஆறு வகையில் உள்ள இறைவன் அங்கும் உளன். எனவே, அவனையே தியானியுங்கள் என்பதாம். அங்குத் தியானிக்குமிடத்து, ``ஊமை எழுத்து`` எனப்படும் பிரணவத்தால் தியானியுங்கள்.

குறிப்புரை :

இறைவனைத் தியானிக்கும் இடங்களில் ஒன்றாகிய ``மூலாதாரம் எனப்படுவது எருவாயுமன்று; கருவாயுமன்று`` என மேற் (பா.568) கூறியதனை நன்கு வலியுறுத்தற்கு, ``குதந்தன்மேல்`` எனவும், ``இலிங்கத்தின் கீழே`` எனவும், அங்கு இறைவன் இருக்கு மாறு உணர்த்து முகத்தான் ``யாரை`` என்னும் அவாய் நிலையை நிரப்புதற்கு, ``ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் ``எனவும் கூறினார். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் இறைவன் முறையே ``அதோ முகன், பிரமன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்`` என்பவராக வீற்றிருப்பான். ``அதோமுகம் கீழண்ட மான புராணன்`` ``அதோமுகமாகிய அந்தமில் சத்தி- அதோ முகமாகி அமர்ந்திருந் தானே`` என்பவற்றால், அதோமுக மூர்த்தியின் நிலை பற்றி அறிந்துகொள்க. பிற யோகநூல்கள் மூலாதாரத்தில் விநாயகராய் இருப்பன் எனக் கூறும். கீழ்நோக்கித் தொங்கும் தும்பிமுகத்தை யுடைய விநாயகர் அதோமுகரே. ஐந்து முகத்தோடு அதோ முகமுங் கூடிய அறுமுக மூர்த்தி முருகன். ``உடம்பிடை`` என்பதன்பின், ``உள்ள`` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``அண்ணல் அங்கும் உளன்`` என உம்மையை மாற்றி யுரைக்க.
இதனால், அபானனை எழுப்புதலும் இன்றியமையாத தென்ப துணர்த்த வேண்டி, அதனை எழுப்புமாறு கூறப்பட்டது. இதனுள், ``கூறா உபதேசம்`` என்றது ``அபானனைச் சிந்தித் தெழுப்பி`` என்றதனைத் தெரிந்துணர்த்தியவாறு. உபதேசிக்கப் படுவதனை, ``உபதேசம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

பிராணனை முந்தி முகட்டில் நிறுத்திய பின், அதற்கு மேலே உள்ள ஏழாந்தானமாகிய உச்சியில் திருவருளோடு நேரே கூடி, ``இத்திருவருளல்லது பிறிதொன்றும் நிலையுடையதன்று`` என்பதை எவரேனும் உணர்ந்திருப்பார்களாயின், அவர்கள் ஆன்ம லாபத்தைப் பெறுதலேயன்றி, நரை திரை அணுகாது, என்றும் இளமையோடு இருக்கும் நன்மையையும் அடைவர். இஃது எங்கள் ஆசிரியர் ஆணை யாகச் சொல்லப்படும் உண்மை.

குறிப்புரை :

``குண்டலி சத்தியன்றிச் சிவசத்தி`` என்பது உணர்த் துதற்கு, ``நீலநிறமுடை நேரிழையாள்`` என்றார். ஆறாந்தானமாகிய ஆஞ்ஞை விந்துத்தானமாகலின், அதற்கு மேலுள்ள உச்சி சத்தித் தானமாம். சத்தி அருவ நிலையது ஆகலானும், அதில் அருவுருவ நிலையாகிய ஆஞ்ஞையினும் மிக விளக்கமாகத் திருவருள் விளங்கு மாகலானும் அதனையே, ``நீல நிறமுடை நேரிழையாளொடும் சாலவும் புல்லி`` என்றார். ``பாலனும் ஆவர்`` என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். ``ஆவர்`` என்றது, ``ஆதலை மிகப் பெறுவர்` என்றவாறு. பராநந்தி - பரானந்தத்தை எய்தியவர், பரானந்தம் - மேலாய இன்பம்; சிவானந்தம்.
இதனால், `காய சித்தி பெற்றோன் அதனாலாம் பயனை மிகப் பெறுவானாயின், அதனானே, காய சித்திப் பயனும் மிகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே. 

பொழிப்புரை :

உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண்குழியுமாயினும், அதனால், உடலுக்கு அழிவு வந்து விடாது. மாறாக, உடம்பு இளைத்தால் பிராணவாயு வசப்பட்டு காய சித்தி கைகூடும். ஆகவே, உணவு குறையின், உயிர், நலம் பெறுதற்குரிய வழிகள் பலவும் அமையும். அதனால், உண்டி சுருக்கியவன், இறவாமையாலும், இன்ப நிறைவாலும் சிவனோடொத்து நிற்பான்.

குறிப்புரை :

``அண்டம்`` என்றது தலையை. ``அண்டம், பிண்டம்`` என்னும் நயம்பற்றி இவ்வாறு ஓதினார். வருகின்ற திருமந்திரத் துள்ளும்``அண்டத்துள் உற்று`` என்பார். மகளிர் இன்பத்தை விரும்புவோருள்ளும், அதனைக் கை விடின் உடல் கெடும்` என்று அஞ்சுவார் இல்லை. ஆகவே, `அவ்வின்பம் குறையின் உடற்கு அழிவில்லை` என விலக்குதல் வேண்டாமையின், அப்பொருள் பட ஈண்டு நலிந்துரைத்தல் வேண்டாமை அறிக. `உள` என்பதன்பின், `ஆம்` என்பது எஞ்சிநின்றது.
இதனால், ``காய சித்தியும், உயிர் நலமும் வேண்டுவோர் உண்டி சுருக்கல் இன்றியமையாதது`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை
அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே. 

பொழிப்புரை :

உடலில் பொருந்தியுள்ள, தவ ஓழுக்கத்திற்கு இழுக்குத் தருகின்ற கடைப்பட்ட வழியை. உச்சியில் விளங்குவதாகிய திருவருளைத் தலைப்படுமாற்றால் அடைத்தே விடின், உடம்பு, மகளிர் கண்ட உடன் விரும்பத் தக்க அழகைப் பெற்று விளங்கும் பயனையும் அடையலாகும்.

குறிப்புரை :

``புழைக் கடை`` என்பது திரிந்து வழங்கும் இழிவழக் கோடு ஒத்துத் தோன்ற, ``பிழைக் கடை` என நயம்பட ஓதினார். பிழை - குற்றம். எனவே, இஃது உண்மையில் புணர்ச்சி தவிர்தல் கூறியதேயாம். திருவருள் உணர்வும், சிவானந்தப் பேறும் உடையவர்க் கன்றி புணர்ச்சி தவிர்தல் இயல்பாக உண்டாகாது. ஆயினும், யோக முயற்சியால் தவிர்தல் கூடும்; அம்முயற்சி இது என்பதனை இதனுள் நாயனார் உணர்த்தியருளினார். ``பிழைக்கடை`` என்பதன் உட் பொருளை உணராமல் வெளிப்பொருளே பற்றி, ``எருவாய்`` எனப் பலரும் உரைத்தார். அப்பொருள் மேலே பலவிடத்தும் பெறப்பட்டது. நன்மை - அழகு. உம்மை, `மேற்கூறியவையேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``நற்காயமும் ஆம்`` என்றாராயினும், `காயம் நல்லது மாம்` என்றலே கருத்தாதல் அறிக. மகளிரை விரும்ப விரும்ப அவரால் வெறுக்கப்படும் நிலையும், அவரை விரும்பாது ஒழிய ஒழிய அவரால் விரும்பப்படும் நிலையும் உளவாகின்ற வியப்பினைக் குறித்தற்குப் பின்னிரண்டடிகளை அவ்வாறு ஓதினார். இம்மந்திரத்திற் பாடம், பலவிடத்துப் பிழைபட்டது.
இதனால், காய சித்திக்கு வேண்டப்படுவதாய மற்றும் ஓர் உபாயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான், எவ்வுயிரையும் அதன் உடலினின்றும் பிரித்துக் கொண்டுபோதற்குச் சுற்றிக் கொண்டிருக் கின்ற கூற்றுவனைத் தொன்றுதொட்டே சினந்து, முக்கோண வடிவான மூலாதாரத்தில் உள்ள அக்கினியில் காய்ந்து கொண்டிருக்கின்றான்; ஆகையால், அவ்விடத்தில் அவனது கழல் அணிந்த திருவடியைக் காணப்பெற்றால், பின்னர் நிழலில் நிற்பினும், வெயிலில் நிற்பினும் ஒன்றே; அஃதாவது, அவற்றால் வரும் கேடு ஒன்றுமில்லையாம்.

குறிப்புரை :

``ஈசன்; இரதத்துள் அங்கியுள் சீறி அழலும்` என மாறிக் கூட்டுக. `கூற்றுச் சீறி` என இரண்டாவதன் தொகையாய் இயையும், ``முன்`` என்பது, `முதலாக` எனப்பொருள் தந்தது, `தொன்மை` என்றது, உடம்பு தோன்றிய காலத்தை. முக்கோண வடிவை `இரதம் - தேர்` என்றார். இறைவன் உயிர்களின் உடம்பில் மூலாதாரத்தில் அக்கினியையும், அவ்வக்கினியுள் உடலை நிலைப்பிக்கின்ற ஆற்றலையும் படைத்து, அவற்றை நீங்காது நிறுத்தித் தானும் உடன் நிற்றலானும், அவற்றை அறிந்து, அவ்வக்கினியை எழுப்பி அவ் விடத்தில் அவனைத் தியானிப்பவர், காய சித்தியைப் பெறுவர் ஆகலானும் இவ்வாறு கூறினார். கூறவே, மேற்கூறியவாறு பிராணனையும், அபானனையும் மூலாதாரத்தினின்றும் மேல் எழச் செய்யுங்கால் முதல்வனது திரு வருளை நினைந்து செய்தல் வேண்டும் என்பது பெறப்பட்டது. `திருவருளை நினைந்து செய்யும் முயற்சியே வெற்றி பயக்குமல்லது, அதனை மறந்து செய்யும் முயற்சி ஒன்றொழிய ஒன்றாகும்` என்பது கருத்து.
இதனால் `காய சித்தி உபாயத்தை இறையருள் வழி நின்று` செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இவ்வாறன்றி, `உபாயந் தானே காய சித்தியைப் பயந்துவிடும்` என மயங்குவர் பவ யோகிகள் என்க.

பண் :

பாடல் எண் : 15

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 

பொழிப்புரை :

ஈசன் இருத்தலை மேல் நான் தெரிந்து சொல்லிய மூலாக்கினி, `அகார கலை, உகார கலை, மகார கலை, விந்துகலை` என்னும் நான்கு கலைகள், மூலாதாரம் முதல் பிரமரந்திரம் ஈறாக உள்ள ஏழு ஆதாரங்களைப் பொருந்திய பிராண வாயு, உடம்பு முழுதும் உள்ள ஊன் ஆகிய இவைகளையே தன் பசிப் பிணிக்கு மருந்தாக உண்டு, ஒரு மான் கன்று வளர்கின்றவாறு வியப்புடைத்து!

குறிப்புரை :

மான், மகான்` என்பதன் திரிபு. மகான் - பெரியோன்; சிவன். `மகான்` என்பதை மான் எனத் திரித்து அதற்கேற்ப, சிவனது மக்களாகிய உயிர்களை, `கன்றாக` உருவகித்து, `புல்லை உண்ணு தலால் `புல்வாய்` எனப் பெயர் பெற்ற மான் ஒன்று, புல்லை உண்டு வளராமல், நெருப்பு, நிலாவொளி, காற்று, ஊன் என்பவற்றை உண்டு வளர்தல் வியப்பாகின்றது` என நயம்படக் கூறினார். எனவே, மேலை மந்திரத்துட் கூறியவாறு மூலாக்கினியை எழுப்புதல் முதலிய யோகமுயற்சியால் வாழ்நாள் நீட்டித்தல் கூறியவாறாயிற்று. புல்லாவது, ஐம்புல இன்பம்.
இதனால், காயசித்தி உபாயங்களால் அப் பயன் வியக்கத்தக்க வகையில் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 

பொழிப்புரை :

மேன்மேல் வளரத்தக்கதாகிய காய சித்தி ஆற்றலைப் பெற நீ விரும்புவையாயின், அச்சத்தி ஒவ்வொரு நெல்லின் அளவாக மெல்ல மெல்ல வளர்கின்ற நுட்பத்தை உடலில் அளவற்ற இடங்களில் பாகுபடுத்திக் கண்டு. அவ்விடங்களில் எல்லாம், மேற்பலவகையாலும் முறைப்படச் சொல்லிய மந்திரங்களின்வழி அதனுள் ஒடுங்குவாயாக.

குறிப்புரை :

`சனனம்` என்பது இடைக்குறைந்து நின்றது. `சனனம்` என்றது காயத்தை. இவ்வாறன்றி, `ஆகுஞ்சன இருக்கை` எனவும் உரைப்பர். வேத சத்தி, உடம்பின் நிலையாமையைமாற்றி நெடிது வாழச் செய்கின்ற ஆற்றல். `அன்புறக் கொள்ளின்` என்பதை, `கொள்ள அன்புறின்` என மாற்றிக் கொள்க. தினை, எள், கடுகு முதலியன போல, சிறுமைக்குக் காட்டப்படுவனவற்றுள் நெல்லும் ஒன்றென்க. நெல்லின் - நெல்லின் அளவாக. இனி, `நெல் - நெற்பயிர்` எனக் கொண்டு, `நீர் கொளு நெல்லின்` எனவும் பாடம் ஓதுப. ``களத்தினால்`` என்றது வேற்றுமை மயக்கம்.
இதனால், காய சித்தி உபாயங்கள் மேற் சில வகையால் தொகுத்துணர்த்தப்பட்டதாயினும், உண்மையில் அது பரந்து கிடப்பது என்பது உணர்த்தி, `அவற்றை அறிந்து அனுபவமாகச் செய்க` என முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மதிவட்ட மாக வரையைந்தும் நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே. 

பொழிப்புரை :

திங்களினது சுற்றாக வரையறுக்கப்படுகின்ற ஐந்து பகுதிகளையும் முன்னே ஆராய்ந்து, பின்பு அதனை விடுத்து, ஞாயிறு பன்னிரண்டும் பொருந்திய அக் கூற்றினால் இறைவன் கால சக்கரத்துள் நின்று உடலைக் காக்கின்ற வகையையும், பின்பு அங்ஙனம் காக்கப்படுகின்ற உடலை விட்டு உயிர் போகின்ற வகையையும் இங்கு ஆராயத்தொடங்கினேன்.

குறிப்புரை :

சந்திரன் பன்னிரண்டு இராசிகளையும் ஒருமுறை சுற்றிவருகின்ற வட்டத்தில் ஓர் அரை வட்டம் - ஆறு இராசி அளவு - வளர் பிறையாயும், மற்றோர் அரைவட்டம் - ஆறு இராசியளவு தேய் பிறையாயும் தோன்றும். சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்திருக்கும் நாளே அமாவாசியை. அப்பொழுது சந்திரன் சூரிய ஒளியில் மறைந்து விடுவதால் காணப்படுதல் இல்லை. சூரியனை விட்டு விலகிச் செல்லச் செல்லச் சந்திரனது ஒளி சிறிது சிறிதாக மிகுந்து காணப்படும். இந்நிலையில் சந்திரன் சூரியனுக்கு முன்னே செல்வதாய் இருக்கும். அதனால், அந்நிலை `முற்பக்கம்` (பூர்வ பட்சம்) எனப்படும். இது சந்திரனது வெள்ளொளி மிகுந்துவரும் காலம் ஆதலின், `சுக்கில பட்சம்` என்றும் சொல்லப்படுகின்றது. சுக்கிலம் - வெண்மை. சந்திரன் சூரியனுக்கு ஆறாவது இராசியில் நிற்கும்பொழுதே முழு நிலவாய்க் காட்சியளிக்கும். அதுவே பூரணை (பௌர்ணிமை) யாகும். பின்பு சந்திரன் சூரியனுக்கு ஏழாவது இராசி முதலாக வரும்பொழுது சூரியனை நெருங்குவதால், அதன் ஒளி மறையத் தொடங்கும். அந் நிலையில் சந்திரன் சூரியனுக்குப் பின் செல்வதாய் இருக்கும். அதனால், அந்நிலை `பிற்பக்கம்` (அபர பட்சம்) எனப்படுகின்றது. ஒளி குறைய இருள் மிகுவதால் இந்நிலை `கிருஷ்ண பட்சம்` என்றும் சொல்லப் படுகின்றது. கிருஷ்ணம் - கறுப்பு. இந்த அரைவட்டம் ஒவ்வொன்றும் சூரியனது நாட்கணக்கில் ஏறக்குறையப் பதினைந்தாக அமைவதால், அப்பதினைந்திலும் உள்ள சந்திரனது நிலைகள் ஒன்று, இரண்டு என்று முறையாக எண்ணப்பட்டு `பிரதமை, துவிதியை` முதலிய பதினைந்து திதிகளாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கூற்றிலும் உள்ள ஐந்து திதிகள் நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை எனப் பெயர் பெறும். இவ்வைந்தையும் நன்கு உணர்வதே சந்திரகதியை நுண்ணி தாக அறிவது ஆதலின், ``மதி வட்டமாகவரை ஐந்தும் நாடி`` என்றார். ``வரை ஐந்து`` வினைத்தொகை. சந்திர கதியை முன்னே ஆராய்தல், அதுவே நிலவுலகின் உயிர்களது வினை நுகர்ச்சிக்குச் சிறந்த காரண மாதல் பற்றியாம். இதுபற்றியே திதியும், நட்சத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முன்னர் ``மதி`` என்றதனாலும், `சூரியர் பன்னிருவர்` என்பது பயின்ற வழக்கு ஆதலாலும், வாளா, ``ஈராறு`` என்றே போயினார். பின் வந்த `வட்டம்` கால சக்கரம் என்பது முன்னிரண்டடிகளாலும் விளங்கிக் கிடந்தது. காலம் இறைவனது ஆணைவழி நின்றே உலகத்தைத் தொழிற்படுத்தும் என்பது உணர்த்துதற்கு, `காலம், பாலிக்குமாறு` என்னாது ``பதி வட்டத்துள் நின்று பாலிக்கு மாறு`` என, இறைவனது செயலாகவே ஓதினார்.
\\\"காலமும் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண்``
என்பது சிவஞான சித்தி. (சூ. 1-10)
இதனால், `இவ்வதிகாரம் நுதலிய பொருள் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும்
கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே.

பொழிப்புரை :

உடற் கூற்றால் ஐம்புலன்களை ஐம்பொறிகள் பொருந்திப் பொதுவாக அறிகின்ற ஐந்தினாலும், பொறிகள் பொதுவாக அறிந்தவற்றை மனம் முதலிய உட்கருவினைப் பற்றி நின்று சிறப்பாக அறிகின்ற நிலையில் அந்த ஆறினாலும், மனம் சிறப்பாக அறிபவற்றில் உயிர் அழுந்தி நிற்கும் நிலையில் அந்த ஏழினாலும், உயிர்க்கு உறுதி தேட எண்ணி நூல்களைக் கற்கும் நிலையில் அந்த எட்டினாலும் கற்றவற்றை அநுபவமாக உணரும் நிலையில் அந்த ஒன்பதினாலும், அநுபவமாக உணர்ந்த நூற் பொருளைக் கடைப்பிடிக்கும் நிலையில் அந்தப் பத்தினாலும் இவ்வாறு பலவகைத் தொழிலால் உடலிற்கு அளந்த நாழிகை, கழிந்தது தெரியாமல் கழிந்து போவது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

புலனுணர்வில், ஒரு காலத்திலே ஒரு பொருளின்கண் ஐம்புலன்களையும் உணர்தல் சிறந்ததாகலின், காலக்கழிவை ஐந்தின் மேல் வைத்தே கூறினார். `ஒருகாலம்` என்றல் விரைவு பற்றியாதலின், ``ஐந்து`` என்றது மலைவாகாமை அறிக. ``ஐந்து`` முதலியவற்றில் ஆன் உருபு விரிக்க. `இப்பலவகை` என்னாது, ``பல வகை`` என்றே கூறினமையால், `இவ்வாறு பலவகையால்` என்பதே பொருளாயிற்று. ஆகவே, ஒன்றனையும் அறியாது அறியாமையுள் அழுந்துதலாலும் காலம் கழிதல் பெறப்படும்.
இதனால், உடலிற்கு அளந்த காலம் ஒழிவின்ற உருண்டோடு கின்றமையும், அவ்வோட்டந்தான் பல்வேறு வகையினதாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே. 

பொழிப்புரை :

உலகர்க்குப் பதின்மூன்றாண்டுகள் பயனின்றி இறக்கும் எல்லையாகவும், முப்பத்து மூன்று ஆண்டுகள், பலரும் இரங்கிப்பேச இறக்கும் எல்லையாகவும், அறுபத்திரண்டாண்டுகள் பயன்பெற்று இறக்கும் எல்லையாகவும் எண்பது ஆண்டுகளும், நூறாண்டுகளும் நிறைந்து முற்றிய எல்லையாகவும் கணக்கிடப்படுதல் கால சக்கரத்தின் முறையாகும்.

குறிப்புரை :

எல்லையே கூறினமையால், அவற்றுக்கு உட்பட்ட ஆண்டுகளும் அத்தகையனவாதல் தெளிவு. திருந்து - முதனிலைத் தொழிற்பெயர். இஃது அதனையுடைய முறைமையைக் குறித்தது.
இதனால், கால சக்கரம் அனைவரிடத்தும் ஒருவகையாற் சுழலாது பல்வேறு வகையால் சுழன்று செல்லுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே. 

பொழிப்புரை :

பிறந்த நட்சத்திரமும், அதனோடு ``இரண்டு, நான்கு, ஆறு`` என்பவற்றைக் கூட்ட வருகின்ற ``மூன்று, ஐந்து, ஏழு`` என்னும் எண்ணுமுறைக்கண் வருகின்ற நட்சத்திரங்களும் ஒழித்து மற்றைய நட்சத்திரங்களிலே, இல்வாழ்க்கைக்குரிய யாதொரு செயலையும் தொடங்குதல் பொருந்தும்.

குறிப்புரை :

பொருந்துதல், அச்செயல் பற்றி நிகழும் நாள்கள் பலவும் பயன் தரும் நாளாதற்கு ஏதுவாதல். எனவே, விலக்கப்பட்ட நட்சத்திரங்களில் தொடங்கினால் அந்நாள் வீணாகக் கழியும் என்க. இதனானே, யோகியர் யோகம் தொடங்குதற்கு உரியநாளும் இங்கு ``ஆம்`` எனப்பட்ட அவையே என்பதும் கூறியவாறாம். ஒன்று - கூடுகின்ற. ``இருமூன்று`` என்பதில் ``இரு`` என்பது முன்னும் சென்று இயையும். அதற்கேற்ப ``இரண்டு`` என்பதும் இருமுறை ஓதப்படும். ``எட்டு மூன்று`` என்பது பாடம் அன்று. ஒருவன் பிறந்த நட்சத்திரம் முதலாக இருபத்தேழு நட்சத்திரங்களையும் ஒன்பது ஒரு கூறுபடுத்து மூன்று கூறாக வகுக்க. மூன்று கூற்றிலும் முதலில் உள்ள நட்சத்திரங்கள் முறையே ``சென்ம நட்சத்திரம், அனுசென்ம நட்சத்திரம், திரிசென்ம நட்சத்திரம்`` எனப்படும். அவை மூன்றும் ஆகா என்பது வெளிப்படை மற்றும் அம்மூன்று கூறுகளிலும், `மூன்று ஐந்து ஏழு` என்னும் எண்ணு முறைமைக்கண் நிற்கும் நட்சத்திரங்களும் ஆகா என்பதும், ``இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது`` என்னும் எண்ணுமுறைமைக்கண் நின்ற நட்சத்திரங்கள் ஆகும் என்பதும் இங்குக் கூறப்பட்டன. நட்சத்திரங் களை இவ்வாறு அறிதலை, `தாரா பலன் பார்த்தல்`` எனச் சோதிட நூல்கள் கூறும். அதனை வாழ்நாள் பற்றிய ஆராய்ச்சியில் இங்கு நாயனார் கூறினார் என்க. `மனை` என்றது மனைவாழ்க்கைக்குரிய செயலைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், கால சக்கரத்துள் நன்மை தரும் பகுதிகள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே. 

பொழிப்புரை :

ஞாயிற்றின் வட்டத்துள், `முப்பது நாள் ஒரு கூறாகப் பன்னிரண்டு கூறு கூடியது ஒருவட்டம்` என்று அறிந்து, அவ் வட்டம் சிலபோது, பன்னிரண்டு கூறும் கூட வருகின்ற முந்நூற்றறுபது நாள்களுக்கு மேல் ஆறு நாளும், சில போது நான்கு நாளும் கூடி நிற்றலையும் உங்கள் மனத்தில் நன்கு ஆராய்ந்து மேற்சொல்லிய செயல்களில் புகுவீராக.

குறிப்புரை :

`நாள்` என்பது, `ஞாயிறு தோன்றி மறைந்து மீளத் தோன்றுமளவும் உள்ள காலம்` என்பதும், அக்காலத்துள் ஞாயிறு காணப்பட்டு நிற்பது, `பகல்` என்றும், காணப்படாது நிற்பது `இரவு` என்றும் சொல்லப்படுதலும் யாவரும் அறிந்தவை. அவ்வளவான நாள் முப்பது கூடியது, ஞாயிற்றின் பகுதி வட்டம். இதனை, மேடம் முதலிய ராசிகளின் தொடர்பு பற்றி, `மேடரவி, இடபரவி` முதலாக வழங்குவர். எனினும், இப்பகுதிகளில் சந்திரன் முழுநிலவாய்த் தோன்றும் நட்சத்திரத்தை ஒட்டி, இவற்றை, சித்திரைத்திங்கள் வைகாசித் திங்கள் முதலாக வழங்குதலே பெரும்பான்மை. இவ்வாற்றால், ஞாயிற்றின் வட்டப் பகுதியும் வேறே. திங்களின் வட்டப்பகுதியும் வேறே. ஞாயிற்றின் வட்டப்பகுதி பெரும்பான்மை என்றும் ஒருபடித்தாய் நிகழும். திங்களின் வட்டப்பகுதி அவ்வப்பொழுது வேறுபடும். ஞாயிற்றின் வட்டப்பகுதி ஒருபடித்தாய் நிகழ்தலின், அதனை உலகியல் நடை முறைக்கும், திங்களினது வட்டப்பகுதியால் உலகின் விளைவுகள் வேறுபடுதலின் அதனை நோன்புகள் முதலியவற்றிற்கும் வகுத்தனர் முன்னோர். கோள்களின் நிலைகளால் உலகில் விளைவுகள் வேறு படுதலை, நாவுக்கரசர், ஞானசம்பந்தர் பாண்டிநாடு செல்ல நினைத்த பொழுது, `நாளும் கோளும் வலியில` எனக் கூறியருளினமை யாலும், அதுபொழுது ஞானசம்பந்தர், `அவை அன்ன வாயினும் சிவனடி யாரை வாதியாது, நல்லனவாம்` என்பதை வலியுறுத்தித் திருப்பதிகம் அருளிச்செய்தமையானும், பின்னும் அவர் (ஞானசம்பந்தர்) புனல் வாதத்திற்கு அருளிச்செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
``கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க``
என்று அருளிச் செய்தமையானும் அறியலாம்.
``மகத்திடை நாடி`` என்பது பாடம் அன்று. பத்து அஞ்சு - பதினைந்து. இரு பதினைந்து - முப்பது. ``எனை முப்பதும்`` என்றது எந்த ஒரு முப்பதுநாள் கூடிய பகுதியும் ஞாயிற்றின் வட்டத்தில் பன் னிரண்டில் ஒருகூறாய் நிற்கும் என்றவாறு. இக் கூறு `மாதம்` எனவும், இம் மாதம் பன்னிரண்டு கூடிய ஒரு வட்டம் `யாண்டு அல்லது வருடம்` எனவும் படும். ஞாயிற்றின் ஒரு வட்டத்தில் முந்நூற்றறுபது நாள் களுக்கு மேலும் சில நாள் கூடுதல், சில மாதங்கள் முப்பதுக்கு மேலும் சில நாள்களைப் பெறுதலினாலாம். சில மாதங்கள் முப்பது நாளிற் குறைதலும் உண்டு. இவை எல்லாம் சூரியன் அந்த அந்த இராசியோடு தொடர்புகொண்டு நிற்கும் நிலையைப் பற்றியன. சில யாண்டுகளில் ஆறு நாளும், சில யாண்டுகளில் நான்கு நாளும் கூடுதலை, `யாண் டொன்றுக்கு முந்நூற்றறுபத்தைந்து நாள்` என்று அமைத்துப் போவர். இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது அறுதியிட்டுக் கூறுவர் அறிந்தோர். இவர் `கணிவர்` எனப்படுவர். ``தனை`` என்றதும், ``தற் குறி`` என்றதும் முறையே, ஞாயிற்றின் முழு வட்டத்தையும், அதன் பகுதி யாய நாளினையுமாம். `ஏற அட்டும்` என்பது குறைந்து நின்றது. ஏற அட்டுதல் - கூடச் சேர்த்தல். வினை அறி ஆறு - ஞாயிற்றின் செலவை அறியும் வழி. `எனை முப்பதும் ஈராறு என்னும் அடுக்காகக் கூட்டி ஞாயிற்றின் முழு வட்டத்தின் அளவை உணர்ந்து, தற்குறி ஆறு, விளங்கிய நால் இவற்றையும் உம் மனத்திடை நாடி மனை புகுவீர்` என முடிக்க. முப்பது முதலியன, அவ்வளவினவாகிய நாள்களைக் குறித்தன.
இதனால், கால சக்கரத்தின் பெரும்பான்மை இயல்பு இனிது விளங்கக் கூறப்பட்டது. `சிறுபான்மை இயல்புகளைக் கணி நூல்களில் கண்டுகொள்க` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 6

நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும்
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே. 

பொழிப்புரை :

ஒருவன் பிறந்து நான்கு ஆண்டுகளைக் கடந் தானாயின், பின்னும் நான்கு நான்கு ஆண்டாக இருமுறை கடத்தல் வேண்டும். இனி, ஐந்து ஆண்டுகளைக் கடந்தானாயின், அப்பால் பின்னும் பத்து, பதினைந்து என்னும் ஆண்டுகளைக் கடத்தல் வேண்டும். எனவே, நான்கு, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினைந்து என்னும் ஆண்டுகள் வாழ்நாள் இடையறும் காலமாகும் என்பது அறியப்படும். பதினைந்து யாண்டு வரையில் ஒருவன் யோகத்தைத் தொடங்க இயலாது. ஆகவே, அதுகாறும் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளுதலும் இயலாது. அதனால், இவ்வாறு, பிறந்து, ஆண்டுகள் பலவாக வளர்கின்ற உடம்பினை, உடம்பினை உடைய தாகாத தன்மையுடைய ஒரு பொருளால் அருள்புரியப்பட்டு மேற்சொல்லிய ஆறு இடையறவுகளையும் (கண்டங்களையும்) கடந்த ஓர் அருமையை அறிகின்றவர் உலகில் யார் உளர்!

குறிப்புரை :

``அறிவாராயின், பதினாறாவது வயது முதலாகவே அப்பொருளை அடைதற்கு யோகம் முயல்வர். அதனால், காலத்தைக் கடந்து, என்றும் பதினாறாண்டாகவே இருக்கும் பயனையும் பெறுவர்`` என்பதாம். மார்க்கண்டேயரது வரலாறு இங்கு நினைவு கூரத் தக்கது.
நான்கு முதலியன, அவ்வளவினவான ஆண்டுகளைக் குறித்தன. ``கடந்தது`` இரண்டும், ``கடந்ததேல்`` என்னும் பொருள தாகிய முற்றெச்சங்கள். `வரும்` என்றது, `கடத்தற்கு அரிதாய் வரும்` என்றவாறு. இதனைப் பின் வந்த, `நால், பத்து, பதினைந்து` என்பவற் றோடும் கூட்டுக. பாலனாம் தன்மை தமிழில், ``பாலம்`` என நின்றது. குணம் உடையதனை, குணமாகக் கூறினார். இனி, ``சிவன்`` எனத் தோன்றா எழுவாய் வருவித்து உரைத்தலும் ஆம். ஆண்டு - ஆளப் பட்டு. ஆலம் - நஞ்சு; என்றது நஞ்சு போலும் ஆண்டெல்லைகளை.
இதனால், காலசக்கரத்தின் கொடுமையை விதந்து, `அஃது உணர்ந்து, காலம்பெற, யோகத்தைத் தொடங்குக` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.

பொழிப்புரை :

முதல் ஆறு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபதும், அடுத்த மூன்று திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தைந்தும், அடுத்த இரண்டு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தாறும், இறுதி ஒருதிங்கட்கு நாள் இருபத்தேழும் என்று இவ்வாறு இறைவன் யோகத்திற்குரிய திங்களின் நாட்கணக்கை உலகியலுக்கு வேறாக வகுத்துள்ளான்.

குறிப்புரை :

உலகியலுக்கு வந்துள்ள கணக்கு, மேல், `மனை புகுவீர்` என்னும் மந்திரத்தும் கூறப்பட்டது. யோகத்தைத் தொடங்குவோர் இத்துணை நாளளவே யோகம் புரிந்து எஞ்சிய நாள்களில் ஓய்வு கொள்ளுதல் வேண்டும் என்பதாம். ஓய்வுகொள்ளும் நாள்கணக் கையும், பகிர்ந்து இடைஇடையே கொள்ளுதல் நலமாகும். ஓய்வுநாள் கணக்கை நாழிகையாகவும் பகுத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் ஓய்வு மிகுதியாகவும், போகப்போக ஓய்வு குறைந்தும் நிற்றல் அறியத் தக்கது. இவ்வகையில் ஓராண்டு சென்றபின் மீளத் தொடங்கும் பொழுதும் இக்கணக்கின்படியே செய்தல் வேண்டும் என்க.
ஆறுக்கு இருபதும் என உருபையும், உம்மையையும் மாற்றி யுரைக்க. ``மதி, நாள்`` என்றவை இறுதி விளக்காய், மேலான வற்றோடும் சென்று இயைந்தன. ``நாள்`` - ``வேறு விதித்தான்`` என இயையும். பதி - சிவன். அங்கண் - அவ்விடம். அஃது யோகத்தை ஆராயும் இடம்.
இதனால், `யோகம் புரிதற்குரிய நாள் முறை இத்தன்மையது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 

பொழிப்புரை :

யோகத்தில் நிற்க விரும்புகின்ற நீ! தத்துவங்களைச் சுருக்கி எண்ண வேண்டின், அசுத்த தத்துவங்களில் மூன்று நீங்கலாக ஏனைய இருபத்தெட்டோடு, சுத்த தத்துவம் ஐந்தனையும் அங்ஙனமே கொண்டு, ``தத்துவம் முப்பத்து மூன்று`` என வைத்துக்கொள். இனி அத்தத்துவங்களில் இந்திரியம் பத்து சூக்கும தேகமாய் உள்ள எட்டு இவைகளையும் நிலம் முதலிய பஞ்ச பூதங்களில் அடங்கி நிற்பன வாகவே பாவித்துக்கொள். இனி நிலம் முதலிய அப் பூதங்கள் ஐந்தும் ஒன்றின் ஒன்று - அஃதாவது, ஐந்தாவது பூதமாகிய நிலம் நான்காவது பூதமாகிய நீரிலும், நான்காவது பூதமாகிய நீர் மூன்றாவது பூதமாகிய தீயிலும் இவ்வாறு முறையே தோன்றின என்பதை உணர்.

குறிப்புரை :

நீக்கப்படுகின்ற தத்துவங்கள் ``பிரகிருதி, புருடன், மாயை`` என்க. என்னை? அவை தனி தத்துவமாதற் சிறப்பில ஆதலின். அறை - அறுக்கப்படுவன; அஃதாவது குறைக்கப்படுவன. ``மூன்று அறையாக இருபத்தெட்டொடு`` என மாறுக. ``இருபத் தெட்டொடு`` என்றது, இருபத்தெட்டு உளப்பட என்றவாறு. இருபத் தெட்டு உளப்பட முப்பத்து மூன்று எனவே, சுத்தத் தத்துவங்களில் ஒன்றையும் குறையாது ஐந்தையும் கொள்ளல் வேண்டும் என்பது விளங்கிற்று. ``தொகுமின்`` என்றது, ஒருமை, பன்மை மயக்கம். ``பத்து எட்டும் பாராதிகளில் பதித்து அறி`` என்க. எட்டு; தன்மாத்திரை ஐந்தும், ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணம் மூன்றுமாம். சித்தம் பிரகிருதியாய் ஒழியும். பத்து எட்டுப் பாரா திகளில் அடங்கவே, ஆன்ம தத்துவம் அனைத்தும் பஞ்ச பூதங்கள் அளவாய் நிற்றல் விளங்கும். இக்கருத்துப் பற்றியே, நாம் காணும் உலகம், ``பஞ்சபூத பரிணாமம்`` என்றே சொல்லப்படுகின்றது.
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்`` -தொல். மரபியல்
என்றார் தொல்காப்பியனாரும். மற்றும் திருமுறைகளிலும் பிற இடங்களிலும் உலகம் முழுவதும் பஞ்ச பூத பரிணாமம் என்னும் கருத்தே பெரும்பான்மையாகக் காணப்படுதல் தெளிவு. நான்கு முதலியன அவ்வவ் எண்ணு முறைக்கண் நின்ற பூதங்களை உணர்த்தின. `உதித்தது` என்னும் தொழிற் பெயர் இடைக்குறைந்து நின்றது. ``உதித்தது அறி`` என்பதனை இறுதிக்கண் கூட்டி, ``அப் பாராதிகள் உதித்தது அறி`` என எடுத்துக்கொண்டு முடிக்க. என்னை? ஏனைய எல்லாவற்றையும் பாராதிகளில் அடக்கவே, பின்னர் அறியற்பாலன அப் பாராதிகளே யாதலின். பூதங்களின் தோற்ற முறையை அறிதலால், அவற்றைக் கடக்குமாறு புலனாகும். ``தத்துவங்களை இவ்வாறு அறிக`` என்றது, மேற்கூறியவாறு காலத்தை அவற்றிற்கு அதிதேவர்க்கு உரிய பகுதிகளாக வைத்து அவ்வப்பொழுது அவரவரைத் தியானித்து அக்காலங்களால் வாதிக்கப்படாமல் இருத்தற்காம்.
இதனால், `காலத்தை யோகத்திற்கு உரிய வகையில் பகுத்துணர்கின்ற யோகி, அவற்றைக் கடத்தற்குத் தத்துவங்களின் முறைமையையும் உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே. 

பொழிப்புரை :

யோகம் முயலும்பொழுது இங்குச் சொல்லிய முறைகளை எல்லாம் முறையாக உணர்ந்து முயலாது, அவரவர் தாம் தாம் அறிந்தவாறே முயல்வார்களாயின், ஒருவர்க்கும் காலத்தைச் சிறிது வென்று நிலைபெறுதலும் இயலாது. இம்முறைகளைப் பெரியோர் வெளிப்படச் சொல்லாமல் மறைத்துச் சொல்லுதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; யோகத்தோடு சிறிதும் இயல்பில்லா தவரும் வாளா வாய்ப்பறை சாற்றிப் பெருமை பேசிக்கொள்ளாமல், விருப்பம் உடையவர்கள் தக்காரை அணுகிப் பணிந்து கேட்டு முயன்று கருத்தை முடிக்க வேண்டும் என்பது ஒன்றுதான் காரணம்.

குறிப்புரை :

இறை இரண்டில் முன்னது சிறிது; பின்னது தங்குதல்; வாழ்தல். இருத்தல் - உளதாதல். முடி, முதனிலைத் தொழிற் பெயர். அஃது, அதனைக் கருதுதலைக் குறித்தது. இறுதியில், `காரணம்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `காலத்தை வெல்லும் முறையைத் தக்கார் வாய்க் கேட்டுணராவழிப் பயனில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே. 

பொழிப்புரை :

அகல் இனித் தேட வேண்டாது முன்பே கிடைத் திருக்க, விளக்கெரியப் பண்ணி முன்னே இருளை நீக்கிப் பின் அதனானே நெருப்பை, மூண்டு எரியும்படி மூட்ட வல்லவர்க்கு, கால சக்கரம் சுழன்றவழியே சுழன்று செல்லும். இவ்வுலகத்தில் அச் சுழற்சியுட்படாமல், ஒரு நிலையாய் நிற்றலும் கூடும். இம் முறையால் பலருக்கு விளைந்த பயனை, வேறு வழியில் முயலும் மடவோர் அறியமாட்டார்.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. இடிஞ்சில், மூலாதாரம். விளக்கு, அவ்விடத்துள்ள அக்கினி. `எரியக்கொண்டு` என்பது குறைந்து நின்றது. கடிதலுக்கு `இருள்` என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. இருள், குண்டலியின் உறக்கம். அனல் மூளுதல், மூலாக்கினி எழுந்து உச்சி யளவும் செல்லுதல். வேறுவழி, சில பச்சிலை போன்ற மருந்துகளை உண்டலும், பிறவுமாம்.
இதனால், யோக நெறியே காலத்தை வெல்லுதற்கு உபாய மாதல் கூறப்பட்டது.
கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. -குறள், 269
என்புழித் திருவள்ளுவர், ``நோற்றல்`` என்றது பெரும் பான்மையும் இவ்யோக முயற்சியையே என்க.

பண் :

பாடல் எண் : 11

நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே. 

பொழிப்புரை :

உற்று நினைக்கத்தக்க இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் கையில் சிறுவிரலைப் பெருவிரலோடு சேர்த்து நாண்போல ஆக்க மேல் நிற்கும் ஏனை மூன்று விரல்களைப் போல, இருதயத்தில் வேறு வேறு நிற்கும். பின்பு தலையில், `புருவநடு, நெற்றிநடு, உச்சித் துளை` என்னும் மூன்றிடங்களிலும், அதன்பின், தலைக்குமேல் `சூரியன், சந்திரன், அக்கினி` எனப்படும் மூன்று மண்டலங்களிலும் வேறு வேறாய் நில்லாது ஒன்றியேவிடும்.

குறிப்புரை :

எனவே, அவற்றை உன்னி உணரும் உணர்வும் அவ்வாறாதல் போந்தது. இவ்வாறு உணர்வு அலையாது நிற்றலால் உடம்பும் நிலைக்கும் என்க. ``சிறுவிரல் நாணாக`` என்றது, ``காள கர்ணி`` என்றும், ``திரிசூலம்`` என்றும் சொல்லப்படும் முத்திரையைக் குறித்தவாறு. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடி களும் இருதயத்தில் அம்முத்திரைபோல நிற்கும் எனவும், ``சேரவே`` என்றதனால், `ஆஞ்ஞை முதலிய இடங்களில் ஏனை இரு நாடிகளின் ஆற்றலும் சுழுமுனையில் ஒன்றிவிடும்` எனவும் உணர்க. ``சென்னியில் மூன்று`` என்றது, `இரட்டுற மொழிதலாய்` நின்று இவ்வாறு பொருள் பயந்தது. ஓவியம் போல்வனவற்றை ஓவியம் என்றே ஆகுபெயராக ஓதினார். ``ஒத்திடும், நின்றிடும்`` என்பன முற்றுக்கள். உன்னி உணர்தல் - அறிவுடையதாதல். ``ஓவியமாய் விடும்`` என்றது, உடம்பை, இங்கு அதிகாரப்பட்டது அதுவே யாகலின். உடம்பு ஓவியமாதல், காலக் கழிவால் மாறுபடாது, என்றும் இளமையோடிருத்தல்.
இதனால், `யோகத்தின்வழி உணர்வு ஒருங்குதல் காலத்தை வெல்லும் வழியாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 

பொழிப்புரை :

ஓவியம்போல உணர்வு அலைவற நிற்றற்குரிய வழியை அறியுங்கள். இவ்வுணர்வினால் காலத்தை வெல்வதாகிய பயன் விளைதலை முன்னை நல்வினை இல்லாதோர் அறியமாட்டார்; (அதனால் அவர் வேறு உபாயங்களைத் தேடி அலைவர்.) இனி அவ்வழியாவது, பந்தமாய் நிற்கும் வினை காரணமாக வந்த இவ்வுடலில் உள்ள சூரிய சந்திர அக்கினி மண்டலங்கள் மூன்றிற்கும் ஓர் இணைப்பாகப் பல தாமரை மலர்களில் ஊடுருவி நிற்கும், யோகத்திற்கு ஏதுவாகிய தண்டேயாம்.

குறிப்புரை :

`அதன்வழி உணர்வைச் செலுத்தி நில்லுங்கள்` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளால் குறிக்கப்பட்டது சுழுமுனை நாடி. `யோகம் செய்யாத உடலால் பயனில்லை` என்றற்கு, `தீவினையாம் உடல்` என்றும், அதனைப் பயன்படச் செய்வது `சுழுமுனை` என்பார், ``புண்ணியத் தண்டு`` என்றும் கூறினார்.
இதனால், `காலத்தின், வாதனையைக் கடத்தற்கு யோக நெறியால் உணர்வொன்றியிருத்தலே சிறந்த உபாயம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே. 

பொழிப்புரை :

மேற்சொல்லியவாறு புண்ணியத்தண்டின்வழிச் சென்று உணர்வைப் பிரமரந்திரத்தில் வைத்த யோகிக்கு உடலில் `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் மூன்று மண்டலங்களும் தக்கவாறு அமைந்திருக்கும். ஆகவே, உடல், காலத்தால் வாதிக்கப் படாதாம். இந்நிலையைக் கண்டவர், உடல் கால வயப்படாது நிற்கும் பயனைக் கண்டனர். காணாது வேறு உபாயங்களில் சென்றோர், உடல் கால வயப்பட்டு நீங்க, அதனைக்கண்டு துன்புறுகின்றார்கள்.

குறிப்புரை :

மேல், ``பாவிகள் இத்தின் பயனறிவாரில்லை`` என்றதனால், `கண்டவர் கண்டனர்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``பிரிய`` என்றதும், `பிரியும் நிலையை எய்த` என்றதாம். இனி, ``பந்தல் பிரிந்தது`` (தி.10 பா.151) என்றாற்போல, `கட்டுக் குலைந்தது` என்றலுமாம்.
இதனால், `உணர்வு ஒன்றுதல் காலத்தை வெல்லும் உபாயம் ஆமாறு இவ்வாறு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. 

பொழிப்புரை :

யோகம் செய்யாது பிணங்குகின்றவனுக்கு அவன் அடையத்தக்கதாகிய பயன் கிட்டாது கெடும். அஃது அங்ஙனம் ஆகின்றவாற்றை நீ கேட்பாயாக; பெண்டுடன் கூடுகின்ற நாள் மிகு மாயின், முற்பிறப்பில் இறைவனை வணங்கிய புண்ணியத்தால் வந்த மானுடப் பிறப்பின் வாழ்நாள் அளவு தேய, தான் சிலநாள் வாழ்கின்ற வாழ்வும், நாய்க்காக உடம்பை வளர்க்க முயல்வதாய் முடியும்.

குறிப்புரை :

`பிணங்கிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்த லாயிற்று. `நான்` எனப்படுவது ஞாயிற்றின் வட்டப்பகுதியே என்றற்கு, ``ஆதித்தன் ஆறு`` என்றார். `ஆதித்தன் ஆறு அணங்குடனாய் விரியின்` என மாற்றியும், ஆக்கம் வருவித்தும் உரைக்க. ஆய், ஆகுமாற்றால். விரிதல் - மிகுதல். `சில வாயினும் குற்றமின்றாம்` என்றற்கு ``விரியின்`` என்றார். `வணங்கு` என்ற முதனிலைத் தொழிற்பெயர், அதன் பயனாகிய காரியத்தின்மேல் நின்றது. சிற்றின்பத்தை மிக விரும்புவோர்க்குக் கால சக்கரம் விரையச் சுழன்று நிற்கும் என்பதாம்.
இதனால், `காலத்தை வெல்ல வேண்டினோர் சிற்றின்பத்தைத் துறத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமல்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே. 

பொழிப்புரை :

`சக்கரம்` எனப்படுகின்ற ஆறு ஆதாரங்களிலும் சிவனது திருவடியாகிய திருவருளைக் காணாதவன், அத்திரு வருளினுள் புகாமல், நெருப்பில் புகுந்து அழிவான். அவற்றில் அத்திரு வருளைக் கண்டு அதனுட்புகும் உபாயத்தை அறிய வல்லவர்க்கு, ஐந்தொழிற் கூத்தினை இயற்றுகின்ற சிவன் அவ்வாதாரங்களில் விளங்கியே நிற்பன்.

குறிப்புரை :

``கூத்தன் நின்றிடும்`` என்றது, `காலத்தைக் கருவியாக வைத்து உலகத்தை நடாத்துகின்ற அப்பெருமானது அருளால் காலத்தை வென்று நிற்பர்` என்றவாறு. `சுழல்கின்ற` என்பது, `சுழல்வதனோடு ஒப்பிக்கின்ற` என்றதாம். துணைமலர் - இரண்டு மலர்போலும் திருவடிகள்; உவம ஆகுபெயர். ``கூத்தன்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``துணைமலர்`` என்று போயினார். திரு வருளை, `திருவடி` என்றார். உடல் தழலிடைப் புகுதலை, உயிர் தழ லிடைப் புகுவதாக அருளினார், உயிர் அதனால் பயனிழந்து கெடு தலின். ``தன்`` என்றது திருவருளை. `அதனுட் போம் வழி` என்க. குழல், சுழுமுனை நாடி. ஆதாரங்களை அவற்றிற்குப் பற்றுக் கோடாகிய சுழுமுனையாக உபசரித்தார்.
இதனால், யோகநெறி வேறோராற்றானும் காலத்தை வெல்லும் உபாயமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனு மாகி அமர்ந்திடும் ஒன்றே. 

பொழிப்புரை :

புறத்தில் சிவபெருமானது திருவுருவில் உண்மைகள் பலவற்றை உணர்ந்தவர், நூலுணர்வாகிய அபர ஞானத்தைப் பெற்றவராவர். அகத்தில் அவனைக் கண்டு, அதனால் விளையும் பயன்களை உணரின், அப்பெருமான் அங்ஙனம் உணர் பவர்க்கு உறவாயும் வேறாய் நில்லாது ஒன்றாயும் உடன் இருப்பான்.

குறிப்புரை :

`அதனால், அவ்வநுபவம் பெற்றவர்களும் அவனைப் போலவே காலத்தைக் கடந்து நிற்பர்` என்பது கருத்து. பின்னர் ``உள்ளே`` என்றலால், முன்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. குறி - வடிவம். ``குறிகளும் அடையாளமும் கோயிலும்`` என்ற ருளியது காண்க. வடமொழியில் `இலிங்கம்` எனப்படுதலையும் நினைக. குணம் - தன்மை; உண்மை. அவை ``தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில்`` (தி.5 ப.90 பா.6) என்றாற்போல்வன. `அகம்` என்றது ஆதார நிராதாரமீதானங்களை. அங்குப் பார்த் திருத்தல் பாவனையினாலாம். `பாவனை` என்பது பொய்யன்று என்பதற்கு, `அனு போகம்` என்றார். ``அனுபோகம் நோக்கிடில்`` எனவே `பார்த் திருப்பின், அனுபோகம் விளையும்` என்பது பெறப்பட்டது. அநுபவங் காரணமாகச் சமாதியில் நீங்காது நிற்றல் கூடுமாகலின், நோக்கிடில் `ஆத்தனும் ஒன்றாய் அமர்ந்திடும்` என்றார். ``ஆத்தன்`` என்றது, கூத்தனைச் சுட்டும் அளவாய் நின்றது. `ஆத்தனும்` என்ற உம்மை `அங்ஙனம் நோக்குவோனுக்கு இயைய` என இறந்தது தழுவிற்று. `ஆத்தனும் ஒன்றேயாகி அமர்ந்திடும்` என மாறிக் கூட்டுக. `யோகத்தாலன்றி ஏனைச் சரியை கிரியா மார்க்கங்களால் காலத்தைக் கடந்து நிற்றல் அரிது` என்றற்கு, அவற்றின் பயனை இங்கு எடுத்துக் கூறினார்.
இதனால், ``யோகம் மேற்கூறிய வகையில் உபாயமாதல் இவ்வாறு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடும் முப்பதுஞ் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு சிவன் வேறின்றி நிற்கப் பெறின். உளவாகும் நன்மைகள் அளவில. அதனைப் பெறும் முறையை, `நன்மை பயக்கத் தக்கது` என்று உணர்ந்து இப்பொழுது கேட்பாய். `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளிலும் ஒன்றில் பத்துநாள் பிராணன் இயங்குதல் யோக முறையாகும். மூன்று நாடிகளிலும் முப்பது நாள்கள் முறையாக அஃது அங்ஙனம் இயங்குமாறு ஒருவன் யோகத்தில் நின்றால்,மேரு மலையில் விளங்கும் சிவனாகவும் ஆய்விடுவான்.

குறிப்புரை :

மூன்றுக்கு - மூன்றின்வழி இயங்குதற்கு. செய்யுளில் சுட்டுப் பெயர் முன்வந்து, பின்னர் வரும் முப்பதைக் குறித்தது. ``சென்றிடும்`` என்றது, `செல்லுதல் இயல்பு` என்னும் பொருட்டாய், `அதுவே நெறி` என்பது உணர்த்திற்று. சேர - அம்முறையில் பொருந்த. `பொன்திகழ் குன்றிடை` என மாற்றிக்கொள்க. கயிலை, `மேரு` எனவும்படும். சுழுமுனை நாடியையும், `மேரு` எனக் கூறும் யோக நூல்கள். இங்கு, அதனையும் கொள்க.
இதனால், உள்ளே பார்த்திருத்தற்கு ஆவதொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாற்றிடு நூறு தலைப்பெய்ய லாமே. 

பொழிப்புரை :

சிவன் ஒன்றி நிற்றற்குரிய இம்முறையை அறிந்து இதன்படி, ஒன்றில் பத்து நாளாக மூன்று நாடிகளிலும் மாறி மாறிப் பிராணன் இயங்க, அம்முறை யானே அவனை ஆதார நிராதாரத் தாமரைகளில் வழிபட்டு நிற்பவர், அவ்வழிபாட்டினால் எட்டுத் திக்கும் தாம் இருந்த இடத்திலே விளங்க, அவைகளைப் பார்த்து (தமக்கு யோகம் கைவந்தமைக்கு) மகிழ்ச்சியுற்றுப் பின், அத்தாமரை களில் சிவனை முறையாகக் கண்டு நிற்பார்களாயின், நூல்களிற் சொல்லிய நூறாண்டுக் காலத்தை அவர்கள் குறையாது பெறுதல் கூடும்.

குறிப்புரை :

கூத்தவன் - கூத்தன். கூர்மை - நுட்பம். அஃது அன்னதாகிய முறையைக் குறித்தது. ``அங்கே`` என்றது, பின்வரும் பதுமங்களைச் சுட்டிற்று. ``ஏத்துவர்`` வினையாலணையும் பெயர். `பத்தினில் ஏத்துவர்` என மாற்றிக்கொள்க. எண்டிசை தோன்றுதலைக் கூறியது, யோகம் கைவந்தமை அறியும் குறி கூறியவாறு. பதுமர் - பதுமத்தில் இருப்பவர். `சாத்திடும்` என்பது பாடமன்று. இது, வருகின்ற திருமந்திரத்திற்குமாம்.
இதனால், நூறாண்டிற் குறையாது வாழ்தற்குரிய உபாயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே. 

பொழிப்புரை :

முதலில் யோகப் பயிற்சியால் நூறாண்டு வாழ்ந் தவர், பின்பு அம்முறை அவர்க்குக் கைவந்து நிற்றலால், அதனை எளிதாகச் செய்து, `ஆயிர ஆண்டு, (பின் பதினாயிரம், நூறாயிரம் என்று பல ஆயிர ஆண்டுக் காலம்) இருப்பர். பின்பு யுக முடிவு, அதன் பின் கோடிக் கணக்கான யுகம்` என்று இப்படிப் பலகாலமும் காலத்தை வென்றிருப்பர்.

குறிப்புரை :

`இவை, அவர்கள் விரும்பிய பொழுது` என்க. மூத்தல், உலகில் உள்ள பலர்க்கும் ஆண்டினால் முதியராதல், அறிவினால் முதியராதல் பிறவாற்றானும் கூடுமாகலின், ஈண்டு இவ்வுபாயத்தாற் பெறுவது ஆண்டின் முதிர்ச்சியேயாம். ஆயிரம் முதலியன பன்மை குறித்து நின்றன.
இதனால், மேற்கூறிய உபாயம் காலத்தை வெல்லுதற்கு எத்துணையும் பேருதவியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டங் குயருறு வாரே. 

பொழிப்புரை :

யோகத்தால் அளவற்ற காலம் வாழ்ந்தும் உடல் தளர்தல் இன்றி நின்று யோகக் காட்சியில் அளவற்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களைக் கண்டு, பின் `அகம், புறம்` என்னும் வேறுபாட்டைக் கடந்தவர், தாம் முன்பு கண்ட பொருள்களுள் ஒன்றையும் பொருளாக மதியாமல் விடுத்துச் சிவம் ஒன்றையே பொருளாகக் கொண்டு, அதனோடு ஒன்றும் நிலையைப் பெறுதற் பொருட்டு வாழ்ந்து, அவ் வாழ்வில், காலமும் முடிவு எய்துதலைக் கண்டு, அதனின்றும் அக் காலத்தைக் கடந்து மேற்போவர்.

குறிப்புரை :

``அகத்துக் கண்டு`` என்க. அயல் - வெளி. `கோடி விட்டுச் சிவம் செறிய` என மாறுக. இறுதியில் உள்ள ``கோடி``, ``முடிவு`` என்னும் பொருளது. ``சிவம்`` என்றது, உயிரெதுகை.
இதனால், காலத்தை முற்றக் கடப்பாரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

உயருறு வார்உல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே. 

பொழிப்புரை :

உலகத்தில் உடம்பையும், அது வழியாக வரும் பல பற்றுக்களையும் உடையவராய் இருந்தும் பலர் மேற்கூறியவாறு காலத்தை வென்று மேற்போகின்றார்கள். அதனால், உடம்பு எடுத்ததன் பயனையும் அவர்கள் அடைகின்றார்கள். ஆயினும், சிலர், அறிவில்லாமையால் காலச் சுழலைக் கடக்க மாட்டாது அதில் அகப்பட்டு அதன்வழியே வினையுட்படுகின்றனர். அவ்வறியாமை யானே அவர் இவ்வுடம்பு எடுத்ததன் பயனாகப் பெறவேண்டிய திருவருட்காட்சியைப் பெறமாட்டாதவராகின்றனர்.

குறிப்புரை :

`உயர்`, முதனிலைத் தொழிற் பெயர். `உலகத்தொடு கூடியும்` என உம்மையை மாற்றி யுரைக்க. ``பலர், சிலர்`` என்றது, பயனது அனுபவமும், அறியாமையாகிய இழிவும் குறித்தவாறு.
இதனால், காலத்தை வெல்லுதலும், அதனாற் பயன் பெறுதலும் அனுபவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமற் கழிகின்ற வாறே. 

பொழிப்புரை :

அறிவின்மையால் மேற்கூறியவாறு திருவருளை உணரமாட்டாதவர், கால வயப்பட்டு அழிகின்றவரேயாவர். இனிக் கல்வியால் அறிவு பெற்றவரும் ஊக்கம் இன்மையால் தாம் கற்றறி மூடராகின்ற நிலைக்கு நாணாமல், நூலறிவைப் பிறர்க்கு இனிமை உண்டாக (க் கிளிப்பிள்ளைகள் போல) விரித்துரைத்துப் போவார்கள். இவ்வாறு இருதிறத்தாரும் உயர்ந்த பொருள்கள் பலவற்றை அறியமாட்டாதவராய் அழிகின்றமை இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`இரங்கத் தக்கது` என்பது சொல்லெச்சம். `நாண கிலாதார்` என்றதனால், `கற்றவர்` என்பது பெறப்பட்டது. கழிந்த பொருள் - மிக்க பொருள்; உயர்ந்த பொருள்.
இதனால், காலத்தை வெல்லும் அறிவும், ஊக்கமும் இல்லாதவரது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களும் கால வயப்பட்டு நிலை யின்றி மறைந்துபோதலை உணர மாட்டாதவர், அதனை உணர்தல் கூடும். எப்பொழுதெனின், அவற்றை உளத்துட்கொண்டு ஊன்றி நோக்குவாராயின். இனி அந்நோக்கினாலே, கால வயப்படாது நிலைத்து நிற்கின்ற முதற்பொருளையும் காணலாம்.

குறிப்புரை :

``கழிகின்ற அப்பொருள்`` என்றாராயினும், `பொருள் கழிகின்ற அதனை` என்பதே கருத்தென்க. பின்னர் வந்த ``கழிகின்ற அப்பொருள்`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. மூன்றாம் அடியில் உள்ள ``கழிகின்ற`` என்பது வினையாலணையும் பெயர். அதனிடத்து, `கழிகின்றவற்றை நோக்கின்` என இரண்டாவது விரிக்க. ``நோக்கின் ஆகும்`` என மேலே கூட்டிமுடித்துப் பின் `அதனானே` என்பது வருவித்து உரைக்க.
இதனால், அவ்வறிவும், ஊக்கமும் பிறத்தற்கு வழி கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. 

பொழிப்புரை :

அருள் உடையவனும், பிறப்பில்லாதவனும் ஆகிய சிவன் உயிர்களின் அகத்தே அவர்கள் காண்கின்ற குருமூர்த்தி வடிவாயும், புறத்தே எட்டுத் திசைகளாயும், முடிவில் ஒருவனேயாயும் இருப்பான். அவனே நிலையான இன்ப வீடும் ஆவான். உண்மையை ஆய்ந்துணர வல்லவர்க்கு, அவர்கள் அடையத்தக்க, முடிந்த பயன் மேற்சொல்லியவற்றை உணர்தலேயாம்.

குறிப்புரை :

``கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண் ணுடையார் - கண்ணோட்டம் இன்மையும் இல்`` (குறள், 720) என்பவாகலின், கண்ணோட்டம் உடையவன் என்பதனைக் குறிக்க, ``கண்ணன்`` என்றார். பெயக் கண்டும் நஞ்சுண்டு அமையும் (குறள், 580) கண்ணோட்டத் திற்குச் சிவபிரான் ஒருவனே இலக்கியமாதல் வெளிப்படை. `சாதனை யாற் காலத்தை வெல்லும் யோகிக்கு இயல்பாகவே காலத்தைக் கடந்தவனே சார்பாவான்` என்றற்குப் பிறப்பின்மை கூறுவார், சார்ந்தாரைக் காக்கும் கண்ணோட்டத்தையும் உடன் எடுத்தோதினார். ``நந்தி`` என்றது பொதுப்படக் `குரு` என்றவாறு. முன்னர், ``உள்ளே`` என்றதனால், பின்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. ``சிவகதி`` என்றதில் சிவம், இன்பம், பதம், பதவி. பயனை, `பதவி` என்றார்.
இதனால், மேல், ``கழியாத அப் பொருள்`` எனப்பட்டதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே. 

பொழிப்புரை :

மேற்கூறிய உண்மையை ஓர்ந்துணர வல்லவர்க்குக் காலத் தாக்கு இல்லை. ஆகவே, அவர்கட்கு இறப்பும் இல்லை. அவர்கள் மக்கள் வடிவில் காணப்படுகின்ற கடவுளாய் விளங்குவர். நூல்களின் முடிந்த பொருளைத் தேடிக் கண்டவர்கள் கண்ட பொருள் இதுவே. இதனைப் பெறவல்ல ஆற்றல் உடையவர்கட்கே இஃது உணர்த்தத் தகும்.

குறிப்புரை :

காலத்தை அதற்குரிய நமன்மேல் வைத்துக் கூறினார். நமனது தாக்குதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். நரபதி - நரனாகிய பதி. அறிவும், காதலும் இல்லாதார்க்குக் கூறின், அங்கணத்துள் உக்க அமிழ்துபோலப் 1 பயனில் சொல்லாய் முடியும் ஆதலின், `கூட வல்லார்கட்குக் கூறலும் ஆம்` என்றார். உம்மை, `சிந்திப்பித்தலும், தெளிவித்தலும் ஆம்` என எதிரது தழுவிற்று.
இதனால், கழியாத அப்பொருள் காணவல்ல முயற்சியை உடையார் பெறும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே. 

பொழிப்புரை :

மத்திமையாயும், வைகரியாயும் வெளிப்படுகின்ற மந்திரங்கள் உணர்த்தும் பொருளும், அவை உணர்த்தியவாற்றானே உள்ளே உணர்ந்து பற்றத்தக்க பொருளும் மேற்கூறிய பிறப்பில் பொருளாகிய சிவமேயாம். அச்சிவம் சிந்தையுள் நிலைபெறாது நிற்றற்கு, `சூக்குமை வாக்கு` எனப்படும் நாதம் புறம்பற்றி நிகழாது, சுழுமுனைவழி அகம்பற்றி நிகழ்தல் வேண்டும். அவ்வாறு நிகழின், அங்ஙனம் நிகழப் பெறும் சாதகன், ஆறு ஆதாரங்களிலும் அவ்வவ் வாதாரங்கட்கு ஏற்ப நிற்கும் சிவனாகவும் ஆய்விடுவான்.

குறிப்புரை :

`அகார உகாரங்கள் கூறும் பொருள் இது` என மாற்றிக் கொள்க. `அகாரம், உகாரம்` என்பன மத்திமை வைகரியான மந்திரங் கட்குக் குறி. சிந்தையுள் நிற்றற்கு `இது` என மீண்டும் எழுவாய் வருவிக்க. ``நின்றிட`` என்ற காரியப் பொருட்டாய வினையெச்சம், ``ஓடிட`` என்னும் காரணப் பொருட்டாய வினையைக் கொண்டு முடிந்தது. இவ்வாறன்றி, ``நின்றிட`` என்பதனை உடனிகழ்ச்சியாக வைத்து உரைப்பின், மகாரம் குழல்வழி ஓடுதலைக் கூறுதல் வெற் றெனத் தொடுத்தலாய் முடியும். ஆதாரங்கள்தோறும் படிமுறையால் நின்று பயன்பெறுவான் என்றற்கு, ஆறும் அமர்ந்திடுதலைக் குறித்தார். `சாதகன் சிவனாய் விடுவன்` என்றது `காலத்தைக் கடப்பன்` என்றவாறு.
இதனால், நாட வல்லார்கட்கு நண்ணும் பதம் இதுவே யாதல் யோக நெறியில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே. 

பொழிப்புரை :

சிவனது இருப்பிடத்தை ஒருவரும் அறிய மாட்டாது அல்லல் உறுகின்றனர். அதனைக் குருவின் உபதேசப்படி சிந்தித்துத் தெளிகின்றவர்கட்கு, அவன் என்றும் அழியாது உயிர்க் குயிராய் இருத்தல் விளங்கும். அவ்விளக்கத்தின்வழி அவனைக் கண்டால், அவன் காணுகின்றவனுக்கு வேறாய் இராமல் இவனேயாகி விடுவான்.

குறிப்புரை :

இவனேயாகி விடுதலாவது, இவன் செயல்கள் எல்லா வற்றிற்கும் அவனே முதலாய தன்மை விளங்க நிற்றல். `அது விளங்கவே, பின்னர் இவன் தானாய் நில்லாது அவனேயாய் விடுவன்` என்பது கருத்து.
இதனால், சாதகன் ஆறும் அமர்ந்திடும் அண்ணல் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை
அவன்இவ னாகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம தாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் சீவனேயாய் நிற்கும் முறையை உள்ளவாறு உணர்கின்றவர் ஒருவரும் இல்லை. அதனை, மாணவனே, உனக்குச் சொல்கின்றோம்; கேள். சீவன் அறிகின்ற ஓசை, ஒளி முதலிய புலன்களையும் சிவன் அச்சீவனின் பொருட்டு அறிந்து நிற்கின்றான். அதனோடு, சீவனது சுட்டுணர்வை நிகழ்வித்தும் நிற்கின்றான்.

குறிப்புரை :

`இதுவே சிவன் சீவனேயாய் நிற்கும் முறைமை` என்பது குறிப்பெச்சம். `சிவன் சீவனுமாய் நிற்கின்றான்` என்பதற்கு, `பொன்னே பூடணமாய் நிற்றல்போல` எனவும், `மரந்தானே, கிளை, இலை, பூ, காய் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `மகா ஆகாயந் தானே கடாகாயம், மடாகாயம் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `நீர்தானே நுரை, குமிழி, திவலை முதலியனவாய் ஆதல் போல` எனவும் பலர் பலவாறு விளக்கங்கூறி மலைதல் பற்றி, ``அவன் இவனாகும் பரிசறிவார் இல்லை`` என்றார். ஓசை ஒளி, உபலக்கணம். ஒன்றுதல் அறிவினால் என்க. வரம்புபட்ட சுட்டுணர்வை வட்டமாக உருவகித்தார்.
இதனால், ஞாயிறு கண்ணுக்குப் பொருள்களைக் காட்டுதல் போலச் சிவன் சீவனுக்கு எல்லாவற்றையும் அறிவித்தும், ஆன்ம போதம் கண் ஒன்றைக் காணுதற்குத் தானும் உடன்சென்று காணுதல் போலச் சிவன், சீவன் ஒன்றை அறிதற்குத் தானும் உடன்நின்று அறிந்தும் ஒற்றுமைப்பட்டிருத்தலே `அவன் இவனாய் நிற்கும் முறை` என, மேலே சுட்டியதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே. 

பொழிப்புரை :

ஆதாரச் சக்கரம் ஆறு, அதற்குமேல் உள்ள மதி மண்டலச் சக்கரம் ஒன்று, இந்த ஏழு சக்கரங்களும் உங்கள் உடம் பினுள்ளே ஏழுவகைத் தாமரை மலர்களாய் மலர்ந்து நிற்கும். அவைகள் யாவும் சிவனது இருப்பிடங்களே. அங்ஙனமாகவும் அவனை அடையும் முறையை நீங்கள் அறியவில்லை. மேற்கூறிய வாறு அவன் உங்களோடு ஒன்றாய் ஒட்டியிருத்தலை அறிந்து, நீங்களும் அவனின் வேறாகாது, அவனோடு ஒன்றாய் ஒட்டி அவனையே நினையும் உபாயத்தை உணர்வீர்களாயின், அங்ஙனம் உணர்பவர்களுக்குக் கருப்பங்கட்டிபோல இனிக்கின்ற அவனைக் கண்டுவிடலாம்.

குறிப்புரை :

யோகக்காட்சி கைவருதலும், ஞானச்செய்தி முறையில் முயலும் பொழுதே கூடும் என்றற்கு இதனைக் கூறினார். கட்டி, உவமையாகுபெயர். `இருப்பிடம்` என்றே போயினாராயினும், `அவ்விடத்து உள்ள பொருளை` என்றலே கருத்தாதல் அறிக.
இதனால், கழியாத அப்பொருளைக் காணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றால் சிவனை உணர்வோர்க்கு, அவன், `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், சத்தி` என நிற்கின்ற நிலை வேறுபாடுகளும், தனது திருவருளை ஆன் மாக்களோடு ஒற்றித்து நிற்கவைத்து அவைகளை நடாத்துகின்ற முறைமைகளும் நன்குணர்தல் கூடும்.

குறிப்புரை :

எனவே, `ஆதார நிராதார தரிசனங்கள் எளிதில் கூடும்` என்பதாம். `இத்தகையோர்க்குக் காலத்தை வெல்லுதல் ஒரு பொருளன்று` என்பது கருத்து. ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின் பின், `அவரை` என்பது எஞ்சி நின்றது.
இதனால், காலத்தைக் கடந்தாரது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. 

பொழிப்புரை :

ஒருவனது வாழ்நாள் எல்லையை அளந்தறிகின்றவன் தனது கையை அளக்கப்படுபவனது தலையின்மேல் வைக்க, அஃது அவனுக்கு இயல்பான எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாளுக்குக் கேடில்லை. அவ்வாறன்றி, மிகுந்த எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாள் அதுமுதல் ஆறுதிங்கள் அளவின தாம். மேலும், அஃது இரட்டிப்பான எடையுள்ளதாய்த் தோன்றின், அவனது உயிர்க்கு ஒருதிங்களில் பிறக்கும் சொல் `இறப்பு` என்பதாம்.

குறிப்புரை :

``நீத்தல்`` என்பது குறுகி நின்றது. `பிறக்கும்` என்பது சொல்லெச்சம்.
இதனால், ஒருவகைப் பரீட்சை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.

பொழிப்புரை :

உணர்விற்கு முதலாய் நிற்றலில் சொல்லும், இறைவனும் ஒரு நிகரானவர். (ஆயினும் இஃது உலகியலிலாம். ஆதலால்,) சொல்லை விடுத்தவரே இறைவனை உணர்கின்றவாராவர். சொல்லை விடுத்தவரது உள்ளத்தில் இறைவனும் அச்சொல்லைத் தம்மின் வேறாக உணர்ந்த உணர்வு வடிவாய் நிற்பன்.

குறிப்புரை :

எனவே, `வாய் வாளாமை கடவுட்டன்மையை மிகு விக்கும்` என்றவாறு. `ஈசனை உள்காது வாய்வாளாமை மட்டுமே உடையவர் சொல்லை விடுத்தவர் ஆகார்` என்றற்கு, ``ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்`` என்றும், `நாத ஞானமும் பாச ஞானமே` எனவும், ஆதலின் `அதுவும் நீக்கற்பாலது` எனவும், `உணர்த்தற்கு ஓசை உணர்ந்த உணர்வது வாமே` என்றும் கூறினார்.
இதனால், வாய் வாளாமை இறையுணர்வோடு நிகழ்தல் வாழ்நாள் குறைபடாமைக்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

ஒவ்வொரு மூச்சிலும் பிராண வாயு அழிதலை அறியும் அறிவு உண்டாகுமாயின், அது பயனுடையதாகும். அஃதாவது, நாம் நெடுங்காலம் இவ்வுலகில் வாழ்கின்ற நன்மையைக் கொடுக்கும். அதனால், ஆதார கமலங்களில் நிலைத்து நிற்றற்குரிய ஞானமும் கைவரும். அந்த ஞானம் கைவரப் பெற்றோர் உலகில் கட் புலனாய் நிற்கின்ற இறைவனாகி நிற்கும் பெருமையையும் அடைவர்.

குறிப்புரை :

எனவே, `வாயுப் பயிற்சி உடையவரை அத்தன்மை உடையவராக அறிக` என்பது குறிப்பெச்சம். போதம் - ஞானம்.
இதனால், வாயுப்பயிற்சி ஒன்றேயும் வாழ்நாள் குறை படாமைக்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலந் தன்வழி நூறே. 

பொழிப்புரை :

இறைவன் கொடுத்த இடைநாடி பிங்கலை நாடி வழிகளைப் பயனுடையனவாகின்ற வகையில் சாதனை செய்பவர் உலகத்து அரியர். அந்நாடிகள் பயனுடையனவாய் விடின், அவற்றால் பஞ்சேந்திரியங்களும் தன்வழிப்படும். அவை தன்வழிப்பட்ட நிலையில் பின்னும் அச்சாதனையைச் செய்யின், அவ்வாறு செய் பவனது வாழ்நாள் நூறாண்டு அளவினதாய்க் குறைவின்றி நிற்கும்.

குறிப்புரை :

இடைநாடி பிங்கலை நாடிகள் பயனுடையன வாதல், அவை முறையே பிராண வாயுவை உள்வாங்குதற்கும், வெளி விடுதற்கும் உரியவாம் பொழுதாம். எனவே, அவற்றின் பொருட்டே அவை தரப்பட்டன என்க. ``ஆயிடில்`` எனப்பின்னர் வருதலின், வாளா, ``சாதிப்பார்`` என்றார். ஆதல், பயன்படுதல். `இடைநாடி பிங்கலை நாடிகள் இறைவனால் கொடுக்கப்பட்டனவாதலேயன்றி, அவை சத்தி சிவங்களாயும் நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``தையல் தலைவன் இடம் வலம்`` என்றார்; இது நிரல்நிறை. பின்னிரண்டி டத்திலும், `வலத்தால்` என உருபு விரிக்க. ``தன்வழி அஞ்சில்`` என அனுவாதகமாகக் கூறவே, அஞ்சும் தன்வழியவாதலும் பெறப்பட்டது. ``வழி`` இரண்டில் பின்னது, வாழ்நாளின் வழிமுறை.
இதனால், வாயுவசம், இந்திரியவசம், யோக அனுபவம் மூன்றன் கூட்டம் நிறை வாழ்நாட்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே. 

பொழிப்புரை :

பிராண வாயு வலநாடி இட நாடிகளில் முறையே, `ஒன்று, ஆறு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் எண்பதாண்டு வரையிற் செல்லும். அவ்வாறன்றி, `ஒன்று, ஏழு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் அறு பதாண்டாம். இவ்விரண்டையும் உணர்ந்து, இவ்வாறே இடை நாடியின் வழி இயங்கும் இயக்கம் மிக மிக, வாழ்நாளின் எல்லை குறையும் என்று மேற்கூறுவனவற்றையும் உணர்வாயாக.

குறிப்புரை :

இடை நாடி வழியால் பிராண வாயு உட்செல்லின் உடல் வலிமை மிகும். அவ்வாறன்றி அவ்வழியே வெளிச்செல்லுமாயின், உடல் வலிமை குன்றும். ஒவ்வொரு முறையும் மூச்சு வெளிச்சென்று உட்புகும்பொழுது குறைந்தே புகுகின்றது என்பதுமேலெல்லாம் சொல்லப்பட்டது. அக்குறைவு வல நாசியின்வழி நிகழின் தீங்குமிக இல்லை. இடநாடியின் வழி நிகழின், தீங்கு மிகுதியாம். ஆகவே, கன்மத்துக்கு ஈடாகச் சிலர்க்குப் பிராண வாயு நெடுநேரம் வல நாசியின்வழி வெளிப்போதலும், சிலர்க்கு இடநாசியின்வழி நெடுநேரம் வெளிப்பேதாலும் உளவாகின்றன. அந்நிகழ்ச்சியைச் சரவோட்டம் அறியும் முறையாற் காணின், அவரவரது வாழ்நாள் எல்லையை அறிந்துகொள்ளலாம் என்பது கருத்து. இடை நாடி சத்தியை மிகுவிக்கும் வாயிலாதல் பற்றியே `சத்தி நாடி` எனப்படு கின்றது. அறியாமையால், உலகர் பிராண வாயுவை அது போகின்ற போக்கிலே விட்டிருப்பர். யோகியர் அதனைத் தம் வழிப்படுத்து முறைப்படி இயங்கச்செய்வர். அம்முறை, ``ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்`` (தி.10 பா.556) ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (தி.10 பா.558) ``வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே`` (தி.10 பா.561) என மேற்கூறப்பட்டது. இங்கும் வருகின்ற திருமந்திரத்துள், ``இடம் பெற ஓடிடில்`` எனக் குறிக்கப் படும். அதனால், ஏறுதல் இடநாடியின் வழி என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. ``தெளி இவ்வகையே`` என்றது சரவோட்டத்தின் பயன் முறையை விளக்கியவாறு. ``ஆறொரு பத்து`` என்னும் பெயர்ப் பயனிலை வினையின் இயல்பினதாய், ``எண்ணில்`` என்னும் எச்சத் திற்கு முடிவாயிற்று. `இவ்வாறாய் அமர்ந்த இரண்டையும்` என்க.
இதனால், சர ஓட்டத்தால் வாழ்நாள் எல்லையை அறியும் முறை இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே. 

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, எட்டு` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் ஐம்பதாண்டே` என்று அறியலாம். இனி, `ஒன்று, ஒன்பது` என்ற முறையில் இயங்கினால் அது முப்பத்து மூன்றாண்டேயாம்.

குறிப்புரை :

முவ்வகையாம் - மூன்று கூற்றில் ஒரு கூறாகின்ற `அது, முவ்வகையாம் முப்பத்து மூன்றே` என மாற்றுக.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, பத்து` என்னும் முறையில் வெளிச்சென்றால், வாழ்நாள் இருபத்தெட்டு ஆண்டாகும். இனி, `ஒன்று, பதினைந்து` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் இருபத்தைந்து ஆண்டு` என்று அறியலாம்.

குறிப்புரை :

``இட வகை`` என்பதை, ``முடிவுற`` என்றதற்கு முன்னர்க் கூட்டுக. ``ஈராறு`` என்பதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது.
இதனால், அம்முறை, மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே. 

பொழிப்புரை :

பிராணவாயு பகல் முப்பது நாழிகையும் இடநாடி வழியே வெளிப்போதுமாயின், `வாழ்நாள் பன்னிரண்டாண்டு` என்று வரையறுத்துவிடலாம். அதனை அநுபவமாகவும் காண முடியும். இடையே மாற்றம் புகாதொழிய ஒருநாள் முழுதும், (அஃதாவது அறுபது நாழிகை) பிராணவாயு இடை நாடி வழியே உள்வந்து வெளிச் செல்லுமாயின், `வாழ்நாள் இனிப் பத்தாண்டு` என்று துணியலாம்.

குறிப்புரை :

`பகல் முப்பதும் ஆகில், ஆறிரண்டை ஆக்கலும் ஆகும்; பார்க்கலும் ஆகும்` என்க. `புகல் அற, ஒன்று உள்ளிட்டுப் போக்கலும் ஆகும் எனில்` என மாற்றுக. ஒன்று, ஒருநாள். தேக்கல் - நிலைநாட்டல்.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே.

பொழிப்புரை :

பிராண வாயு இரண்டு நாள் அளவு இடைநாடி வழியாக இயங்கின், உயிர் எட்டாண்டுகாறும் இடையூறுறின்றி உடலில் நிற்கும். மூன்றுநாள் இயங்கின், வாழ்நாளை, `ஆறு ஆண்டு` என்று அளந்து கூறிவிடலாம்.

குறிப்புரை :

``ஆயுரு`` என்பது வடநூல் முடிபு.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே. 

பொழிப்புரை :

வாழ்நாளை அளந்தறிகின்ற வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கின், நான்கு ஆண்டுகள் உயிர் உடலிற் பொருந்தி நிற்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கின், தெளிவாக மூன்றாண்டு அளவில் வாழ்நாள் எல்லையைக் காணலாம்.

குறிப்புரை :

`கலக்கம்` என்பது திரிந்து நின்றது.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே. 

பொழிப்புரை :

பிராண வாயு பத்து நாள் இடை நாடி வழியே இயங்கின், உயிர் உடலிற் கலந்து வாழும் ஆண்டு இரண்டு என்பதை அறியலாம். பதினைந்து நாள் அவ்வாறு இயங்கின், `வாழ்நாள் ஓர் ஆண்டு` என்பதை மனம் பொருந்தக் கொள்ளலாம்.

குறிப்புரை :

``இரண்டையும்`` என்னும் உம்மை இறந்தது தழுவிற்று.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயு இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால், வாழ்நாள் ஆறு திங்களாம். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று திங்களாம். இருபத்தாறுநாள் இயங்கினால் இரண்டு திங்களாம்.

குறிப்புரை :

ஆறு முதலியவை, `திங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், அம்முறை மற்றும் மூன்று கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே. 

பொழிப்புரை :

பிராண வாயு இருபத்தேழு நாள் இடைநாடி வழியே இயங்கின், அப்பால் ஒரு திங்களே வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டமுடியும். இருபத்தெட்டுநாள் இயங்கின், அப்பால் பத்து நாள்களே வாழ்நாள் என்று காட்டலாம்.

குறிப்புரை :

இயக்கம் இருபத்தேழு நாள் என்பது, ஒரு நாள் கூட இருபத்தெட்டு நாளாகுமாயின், எத்துணைத் தீங்கு மிகுகின்றது என்பது இங்கு ஊன்றி உணரத்தக்கது.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே. 

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறியவாறு இருபத்தொன்பது நாள் இயங்கினும் இருபத்தெட்டு நாள் இயங்குதலோடு ஒப்பதேயாம்; வேறுபாடில்லை. இனி, முப்பது நாள் இயங்கின், வாழ்நாள் அப்பால் ஏழு நாளாகவே நிற்கும்.

குறிப்புரை :

பார் அஞ்சி நின்ற பகை - உலகம் அஞ்சுகின்ற பெருந்தீங்கு; இறப்பு. வாரம் - கூறு. `நாள், ஓர் அஞ்சொடு, ஒன்று, ஒன்று என ஒன்றும்` எனக் கூட்டுக.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே. 

பொழிப்புரை :

பிராண வாயு இடை நாடி வழியே முப்பத்தொரு நாள் இயங்குமாயின், வாழ்நாள் அப்பால் மூன்று நாளே. முப்பத் திரண்டு நாள் இயங்கின், அப்பால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்ல, அது வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற மன்றத்தின் இயல்பு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

கன்றிய நாள் - உயிர் உடலில் அழுந்தியிருக்கும் நாள். ``சென்று`` என்பது, `செல்ல` என்பதன் திரிபு.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே. 

பொழிப்புரை :

உயிர் வளர்கின்ற மாதங்கள் முதற்கண் ஓர் அறை யில் ஒன்பதும், பின் நீர்க்குட்டத்தில் ஒன்றும் என்று எங்கள் நந்தி பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். (அஃதாவது தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து, பத்தாம் மாதம் நீரில் மிதந்து கிடக்கும் என்றவாறு) பத்தாம் மாதம் அவ்விடத்தை விட்டு அகன்று திருவருள் உணர்வோடு சிறப்புற்று வெளிவருமாயின், அது தன்னைப் பெறுதலாகிய பேற்றினால் உலகர்க்குத் தலைவனாதலும் கூடும்.

குறிப்புரை :

எனவே, `அவ்வாறின்றி வினைவயப்பட்டே வெளி வருமாயின், அளவற்ற உயிர்களுள் தானும் ஒன்றாய், மேற்கூறிய வாழ்நாள் எல்லைகளுள் ஒன்றைப் பெற்றுக் கழியும்` என்றதாயிற்று. ஒன்றாகும் - பொருந்துதல் உடையதாம்.
இதனால், யோக முயற்சி முன்னைத் தவம் உடையார்க்கே கூடும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
தவமும் தவமுடையார்க் காகும்; அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
-குறள், 262
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.

பண் :

பாடல் எண் : 17

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே. 

பொழிப்புரை :

வாழ்நாளை அளந்தறிதற்குக் கருவியாகிய (எனவே, உயிர் வாழ்தற்கு முதலாகிய) மூலாக்கினி, பிராண வாயு இவற்றின் பெருமைகளை அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. அதனால், அவற்றை ஒழுங்குபட நிறுத்தாமையால் விரைவில் நீங்குகின்ற உயிரினது பெருமையையும் அறிகின்றவர் இல்லை. யான் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.

குறிப்புரை :

எனவே, `யான் மேற்கூறியவை ஒருவரும் அறிந்திராத அருமறை` என்றவாறு.
இதனால், ஆயுள் பரீட்சை முறையின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழும் அதுவே. 

பொழிப்புரை :

அறியவேண்டுவது, பிராணவாயுவின் இயக்கமும், அதனால் நிலைபெறுகின்ற ஐம்பொறிகளாகிய அறிவும் ஆகிய வற்றையே, `அறிவு` என்று சொல்லப்படுவது எதுவோ அதுவே, உலகில் `உயிர்` என்று சுட்டப்படுவது. அவ்வுயிர் உலகினின்றும் பிரிந்து போகாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து, அறிந்த வழியிலே பேணிக் காப்பின், அது உடம்பில் அழுத்தம் உடையதாய் நிலைபெற்று விளங்கும்.

குறிப்புரை :

பின்னர் வரும், பிறிவு செய்யா வகையை அறிதற்கு, முதற்கண், ``அறிவது வாயுவொடு ஐந்தறிவாய`` என்றார். ``ஆய`` என்பது வினைப்பெயர். அதனிடத்து, `ஆயவற்றை` என உருபு விரித்துக்கொள்க. `அதனின்` என்பது, ``அத்தின்`` என மருவிற்று. ``அது`` என்றது, முற்போந்த உலகினை.
இதனால், `அறிவுடையார் ஆயுள் நீட்டிக்கும் முறையை அறிந்து அவ்வழியில் நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே. 

பொழிப்புரை :

`அது` என்று பொதுமையிற் சுட்டப்படும் முதற் பொருள் செய்கின்ற அருள் அனைத்துயிர்க்கும் பொதுவாக உலகின்பத்தையும், உயர்ந்தோர்க்குச் சிறப்பாகப் பேரின்பத்தையும் தரும். அவ்வருளும், செந்தாமரை வெண்டாமரை மலர்களில் வீற்றிருக்கின்ற திருமகள், கலைமகள் என்னும் இருவர்க்கும் தலைவியாகிய உமையே. அதனால், வாழ்நாளை நீட்டிக்கும் அருளைப்புரியும் இறைவன், அவ்வுமைக்குத் தலைவனாகிய சிவபெருமானே.

குறிப்புரை :

`அதனால் அப்பெருமானை நினைந்தே வாழ்நாள் நீட்டிப்பில் முயல்க` என்பது குறிப்பெச்சம். ``அருளும்`` மூன்றில் முன்னது எச்சம்; ஏனையவை முற்று. `உலகத்திற்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மது, சிவானந்தத் தேன்.
இதனால், வாழ்நாள் நீட்டிப்பின் முயற்சிக்கு இன்றியமை யாததொரு துணை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே. 

பொழிப்புரை :

`உயிர்கள் பிறத்தல் வேண்டும்` என்று கருதிய இறைவனது குறிப்பின்படி அவற்றிற்குக் கிடைத்த அழகிய உடம்பு, `பிஞ்சு, காய், செங்காய்` என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்துவிடும். அதற்குள் பாசங்கள் ஆழ்ந்து போம்படி அதற்குரிய முறைகளில் பழகினால், பாசம் விலகி, ஞானம் மிகும்.

குறிப்புரை :

`அவ்வாறு முயலுதற்பொருட்டே, இவ்வாயுள் பரீட்சை கூறப்பட்டது` என்பது குறிப்பெச்சம். `குறிப்பதனால்` என உருபு விரிக்க. உடம்பை, `குரம்பை, பதி` என்பனவாகக் குறித்தார். ``ஆவது, அறும்`` என்பன முற்றுக்கள். ``பற்றறும்`` என்பதை, `செய்வார்க்கு` என்பதன் பின் கூட்டுக. உரைக்க - `ஆழ` என்பது குறுகிநின்றது. படி - முறை.
இதனால், இவ்வதிகாரத்திற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

பொழிப்புரை :

கிழமைகள் ஏழனுள், `வெள்ளி, திங்கள், புதன்` என்னும் மூன்றில் இடநாடி வழியாகவும், `சனி, ஞாயிறு, செவ்வாய்` என்னும் மூன்றில் வலநாடி வழியாகவும், வியாழனில் வளர் பிறையாயின் இடநாடி வழியாகவும், தேய் பிறையாயின் வல நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண இயக்கமாகும்.

குறிப்புரை :

எனவே, மாறி இயங்குதல் உடல் நலத்திற்குப் பொருந்தாது என்பதாம்.
இதனால், சர ஓட்டத்தின் இயற்கைத் தன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 

பொழிப்புரை :

`பிராணன், மேற்கூறியவாறு, குறித்த கிழமைகளில், குறித்த நாடியின் வழியே இயங்குமாயின், ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு யாதொரு குறையும் உண்டாகாது` என்று, அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் எங்கட்குத் திருவுளம் உவந்து அருளிச்செய்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 3

செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

பொழிப்புரை :

பிராணன், மேற்கூறியவாறு செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வல நாடி வழியே இயங்குதல் வேண்டும் என்பதை அறிந்த யோகியை, `சிவன்` என்றே சொல்லலாம். அஃது அவ்வாறு இயங்காது மாறி நிகழும்பொழுது அதனை ஒத்த முறையில் இயங்கச்செய்து அதன் பயனை அறிபவர்க்கு, அப்பயன் சிவானந்தமாய் முடியும்.

குறிப்புரை :

மேலைத் திருமந்திரத்துள், ``காயத்துக்கு ஊனம் இல்லை`` என்றதனையும், இத்திருமந்திரத்துள், ``ஒவ்வாத வாயு வலத்து (ஒவ்வுமாறு) புரியவிட்டு`` என்றதனையும் இரண்டற்கும் பொதுவாமாறு கூட்டிப்பொருள் கொள்க. அங்ஙனங் கொள்ளவே, `பிராணன் முதலிற் கூறிய இயல்பில் இயங்காது மாறி இயங்கின், அஃது, உடல், இயற்கை நிலையில் இல்லாமைக்கு அறிகுறியாய், மேலும் உடலின் இயற்கை நிலையைக் கெடச்செய்யும்` என்பதும், `அதனால் யோகியானவன் தனது பிராணாயாம முறையால், ஒவ்வா இயக்கத்தை மாற்றி, ஒத்த இயக்கத்ததாக ஆக்குதல் வேண்டும்` என்பதும் போதரும். இத்திருமந்திரத்துள் வல நாடி இயக்கத்திற்குச் சொல்லியன யாவும் இடைநாடி இயக்கத்திற்கும் பொருந்துதல் எளிதின் அறியப்படும்.
`பிராணன் எஞ்ஞான்றும் ஒரு நாடி வழியாகவே இயங் குதலோ, அல்லது மாறி நிகழினும் அம்மாற்றம் முன்னை நிலையொடு பின்னை நிலை ஒத்த அளவினதாய் நில்லாது மிக்காதல் குறைந்தாதல் நிற்றலோ உளதாயின், உடல் தன் இயற்கை நிலைகெடும்` என்பது இம் மூன்று திருமந்திரங்களாலும் அறியப்படும். படவே, `அவ் இரு வகையும் ஆகாது ஒரு நிகரான மாற்றத்ததாமாறு கிழமைக் கணக்கில் வைத்து அமைக்கப்பட்டது` என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
இவ் விரண்டு திருமந்திரங்களாலும் சர ஓட்டத்தின் ஒத்த நிலையது பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே. 

பொழிப்புரை :

இடை நாடி பிங்கலை நாடிகளாகிய வழியால், முறையே, `சந்திர கலை` என்றும், `சூரிய கலை` என்றும் ஆகின்ற பிராணன், எஞ்ஞான்றும் அவ்வாறே இயங்கி அப்பெயரையே பெற்று நில்லாமல் மாறி வரும். (அஃதாவது, இடை நாடியில் இயங்கி, `சந்திர கலை` எனப் பெயர்பெற்று நின்ற பிராணனே அந்நிலையினின்றும் மாறிப் பிங்கலையில் இயங்கி, `சூரிய கலை` எனப் பெயர்பெற்று நிற்கும். பின்னும் அச் சூரிய கலைதானே சந்திர கலையாய் மாறும். இம் மாற்றத்திற்கு முடிவில்லை) இனி, பிராணன் மேற்கூறியவாறு, `சந்திர கலை, சூரிய கலை` எனப்பெயர் பெறும்பொழுது, அவ்வந் நாடியின் வழி முன்னர் வெளிச் செல்லுதலையும், பின்னர் உட்புகுதலையும் உடையதாய் இருக்கும். நீர் ஊற்றுப்போல இங்ஙனம் சுரந்து முடி வின்றிச் சர ஓட்டமாய் ஓடுகின்ற பிராணன், மேற்கூறிய இரு நாடிகளின் வழி ஓடாது, நடு நாடி (சுழுமுனை நாடி) வழியே இயங்குமாயின், (அஃதாவது, பிராணாயாமமாய் அமையுமாயின்,) அஃது உடற்கே யன்றி, உயிர்க்கும் வலிமை தருவதாம். ஆகவே, அதனை அறிந்து, உலகீர், பிராணனை நடு நாடியிற் செலுத்தும் முறையைக் குருமுகமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுங்கள்.

குறிப்புரை :

`மதி வெய்யவன் இரு பால் மாறி வரும்; அவை இடை பிங்கலையிடை ஏறி இழியும்` என்க. முதல் அடியால், `மதி, வெய்யவன்` என்பன பொருள் வேறாதலைக் குறியாது, ஒருபொருள் தானே இடம் பற்றிப்பெறும் நிலை வேறுபாட்டினையே குறிக்கும் என்பது உணர்த்தியவாறு. இரண்டாம் அடி, அஃது அவ்வப்பெயர் பெறுங் காலத்தை உணர்த்திற்று. பால் - இடமும், வலமும் ஆகிய பக்கங்கள். `இரு பாற்கண்` என உருபு விரிக்க. மாறுதல் - வேறிடம் செல்லுதல். வருதல் - முன்னையிடத்திற்கு மீளுதல். `இருபாற்கண் வரும்` என இயையும். எனவே, ஏழாவது இறுதிக்கண் தொக்கதாம். மதியும், வெய்யவனும் ஆகுபெயர்கள்.
``உயிர்`` இரண்டனுள் முன்னது பிராணன்; பின்னது ஆன்மா. ``நடுவே`` என்பதன் பின், `இயங்கின்` என்பதும், `உக்கிரம்` என்பதன்பின் `ஆம்` என்பதும் எஞ்சி நின்றன. `இதனைத் தேறி` என எடுத்துக்கொண்டு, `அறிமின்` என்பதற்கு, `நடுவே இயங்குதற்குரிய வழியை` என்னும் செயப்படுபொருள் வருவித்து முடிக்க. `குருமுகமாக` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.
இதனால், சரவோட்டம் இரு நிலையது ஆமாறும், பின்னும் அதுதானே பிராணாயாமமாய்ப் பயன் தருமாறும், அப்பயனை எய்துமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.

பொழிப்புரை :

பிராண வாயு வல நாடியால் நுழைந்து, இட நாடியால் வெளியேறுமாயின், அது, பிராணன் தனது நிலை கலங்கி இயங்குதலாம். ஏனெனில், அவ்வாறான ஓட்டத்தால் பிராணன் தனது வலிமையை மிக இழந்து நிற்கும். இனி, அதுதானே இட நாடியால் நுழைந்து வல நாடியால் வெளியேறுமாயின், `அது தன் இயற்கையில் உள்ளது` என அறிவாயாக.

குறிப்புரை :

`வலத்து உதித்து` என மாறுக. அகலுதல் - நீங்குதல். இதற்கு `வலிமையை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``ஆரும்`` என்பதன்பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. ``அதுவே`` என்ற தேற்றேகாரத்தால், உதித்தலும், ஓடுதலும் முற்கூறியதற்கு மாறாய் நிகழ்தல் பெறப்பட்டது. இராசி - இயல்பு.
இதனால், சரவோட்டம் பொதுவே நன்றாமாறும், தீதாமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

பொழிப்புரை :

சுழுமுனையில் நில்லாமல், ஏனை இருவழிகளிலும் ஓடி, அதனால் வாழ்நாளைத் தேய்க்கின்ற பிராண வாயுவை யோகி தன் வசமாக்கிக் கொள்ளும் வழியிலே சென்று, அதனால் குண்டலி சத்தியை உணர்ந்தபின், அவ்வுணர்வு வாயிலாக அணையும் விளக்குப் போல மிக ஒளிவிடுகின்ற திரோதான சத்தியை அனுபவமாகக் காண்பான்.

குறிப்புரை :

அந்தணன் - முனிவன்; யோகி. கூடுதல் - அடைதல்; ``கூடியிடுகின்ற`` என்பது ஒருசொல். பணி - பாம்பு; குண்டலினி. தீபத்தின் - தீபத்தைப்போல. இதன்பின், திரோதான சத்தியைக் குறிக்கின்ற. `ஒன்று` என்னும் சொல் எஞ்சி நின்றது. முன் - முன்பே. `என்பான்` என எதிர்காலத்தால் கூறற்பாலதனை, துணிவு பற்றி ``என்றான்`` என இறந்த காலத்தாற் கூறினார். `யோக முறையால் குண்டலினி சத்தியை உணரப் பெற்றவன், அதனால் திரோதான சத்தி உண்மையை இனிது உணர்வான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட பொருள். `உலகர்க்கு விளக்குப்போல நிற்கின்ற திரோதான சத்தி, யோகத்தில் ஞானத்தை எய்தினோர்க்கு அருட் சத்தியாய் மாறும் நிலையை அடையும்` என்றற்கு அணைகின்ற விளக்கை உவமையாகக் கூறினார். அதனானே, அஃது இனிது காட்சிப்படுதலும் பெறப்பட்டது.
இதனால், யோகப்பயிற்சி சத்திநிபாதத்திற்கு ஏதுவாதல் கூறும் முகத்தால், `அப்பயிற்சியை மேற்கொள்ளுதலே சரவோட்டத் தின் இயல்புணர்தற்குப் பயன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது சூலம் மாறி மாறி வருகின்ற திசை களைச் சொல்லுமிடத்து, திங்களும், சனியுமாகிய கிழமைகளில் கிழக்காம். செவ்வாயும், புதனுமாகிய கிழமைகளில் வடக்காம். ஞாயிறும், வெள்ளியுமாகிய கிழமைகளில் மேற்காம். இக்கிழமை களில் சூலம் இவ்வாறாக நிற்கும்.

குறிப்புரை :

எஞ்சிய கிழமையில் நிற்கும் திசையை அடுத்து வரும் திருமந்திரத்திற் காண்க. அத்திருமந்திரத்தில், ``அக்கணி சூலம்`` என வருமாறே, இத்திருமந்திரத்திலும், ``சூலம்`` என்பதுடன் ``அக்கணி`` என்பதனைக் கூட்டிப் பொருள்கொள்க. பார் ஒத்தல் - நிலத்திற்குப் பொருந்துதல். செவ்வாயை `நில மகன்` (நிலத்திற்கு உரிமை யுடையவன்) எனச் சோதிட நூல் கூறும்.

பண் :

பாடல் எண் : 2

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. 

பொழிப்புரை :

வியாழக்கிழமையில் சூலம் இருக்கும் திசை தெற்காகும். சிவபெருமானுடைய சூலம் (பயணம் செய்பவனுக்கும், யோகிக்கும்) இடப் பக்கத்திலும், பிற்பக்கத்திலும் இருப்பின் ஏற்புடையதாகும். ஆகவே, அப்பொழுது அவர்கட்குத் தீங்கு இல்லை. வலப் பக்கத்திலும், முற்பக்கத்திலும் இருப்பின் தீங்கு மிக விளையும்.

குறிப்புரை :

அக்கு அணி - எலும்பை அணிந்தவன். உம்மை இரண்டும் அசைநிலைகள். `சூலம் இடம் பின் ஆகில் ஆம்; துக்கம் இல்லை` எனவும், வலம் முன் தோன்றிடில் மிக்கதாகிய மேல்வினை மேன்மேல் விளையும் எனவும் கூட்டி வினை முடிவுசெய்க.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் கூறப்பட்ட பொருள்கள் சோதிட நூல்களிலும் இவ்வாறே கூறப்படுகின்றன.

பண் :

பாடல் எண் : 1

கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே.

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருள், மேல் ஆதனம் கூறிய விடத்துச் சிங்காதனம் கூறிய மந்திரத்தின் பொருளே மேலும் சிறிது உறுதிப்படக் கூறுதலாய் இருத்தல் கண்டுகொள்க. `கேசரி` என்பது சிங்கத்தின் மறுபெயராதல் வெளிப்படை.

குறிப்புரை :

``கட்டக் ... ... ... ... கட்டி`` என்பது, `கட்டவும் நில்லாது கழன்று கீழே நான்று விழுந்து பதுமாசனம்போல் ஆகிவிடுகின்ற முழங் காலை அவ்வாறு ஆகாதபடி கைகளால் துடைகளோடு சேரக் கட்டி` என்றவாறு. அட்டம் - முழங்கால். இதனை, முழங்கால்மேல் வைக்கும் காலை ``அட்டங்கால்`` என வழங்கும் வழக்குப் பற்றியும் அறிய லாகும். முழங் கால்களைக் கைகளால் துடைகளோடு சேரக்கட்டுத லாவது, கைகளை முழங்காலின் கீழ்ப்புகுத்தி வெளிக்கொணர்ந்து சுற்றி யிழுத்துச் சேர்த்தல். அடுப்பு, மூலாதாரம். முக்கோண வடிவிற்றாய் நெருப்பை உடைத்தாதல் பற்றி இஃது இவ்வாறு கூறப்பட்டது. மூலாதாரத்தை அணையால் தடுத்தல், மேலே நில்லாமல் தரையிற் பொருந்தவைத்தல். ``அணை`` என்பது, இருக்கும் ஆசனத்திற்குச் சிலேடை. `அணையாற் கோலி` என மூன்றாவது விரிக்க. கோலுதல் - தடுத்தல். விட்டம், குறி. `அதனைப் பூட்டி` என்றது, கோவணம் கட்டுதலை விதித்தவாறு. பின்னர், ``மேற்பையைத் தாட் கோத்து`` என்பார் ஆகலின், அதுபற்றி, `வெற்றரையுடன் இருத்தல் வேண்டும் போலும்` என ஐயுறாமைப் பொருட்டு இதனை எடுத்தோதினார். பை, விதை. தாள் - பாதம். `பையைத் தாள்மேற் கோத்து` என மாறிக் கூட்டுக. இதனால், பாதங்கள் விதைக்குக் கீழ்ப்பொருந்துதல் கூறப் பட்டது. நட்டு இருத்தல் - உடலை அசையாது நிமிர்த்திருத்தல். ``நமன் இல்லை`` என்றது, `யோகம் வாய்ப்புடையதாகும்` என்றபடி. இவ் ஆதனத்தை இங்கு முதற்கண் வலியுறுத்திக் கூறவே, `கேசரி யோகம்` என்பது ஆதனத்தாற் பெற்ற பெயர் என்பது போந்தது. பிற ஆதனங்களிலிருந்து செய்யும் யோகங்களினும் இது மேலானது ஆதலால் இதனையே நாயனார் சிறந்தெடுத்து உணர்த்துகின்றார். இதன் மேன்மை வருகின்ற திருமந்திரங்களுட் காணப்படும். இதனால், கேசரி யோகத்தின் இருக்கை நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே. 

பொழிப்புரை :

ஆடையை அழுக்கு நீக்க விரும்புகின்ற வண்ணான் முதலில் தனக்குப் பயன்படுகின்ற வாய்க்காலை ஓட்டை போகாமற் கட்டிப் பின் ஆடை ஒலிக்கின்ற கல்லிற்கும் உயரமான அளவில் கரை கட்டி, மழை நீரால் பெருகி வருகின்ற ஆற்று நீரை அவ்வாய்க்காலின் வழியால் புகவிட்டுப் பள்ளத்தை நிரப்பினாலே அதில் ஆடையைத் தோய்த்து எடுத்து உயரத்தில் விரித்து உலர்த்திப் பார்க்கும்பொழுது அவ் ஆடை அழுக்கு நீங்கி விளங்கும். அம்முறை போல்வதுதான், யோகத்தால் உயிர் மல மாசு நீங்கி விளங்கும் முறையும்.

குறிப்புரை :

எனவே, `இவ்வுவமையோடு யோக நிலையைப் பொருத்தி உணர்ந்துகொள்க` என்றதாயிற்று. அங்ஙனம் உணருமாறு:-
வண்ணான், யோகி, ஆடை, யோகியது ஆன்ம அறிவு. ஆடை ஒலிக்கும் பலகை, (கல்) நெற்றி. ``நெற்றி`` என்பது விளங்குதற் பொருட்டே `சதுரப் பலகை` என்றார். ஆன்ம அறிவு மாசு நீங்குதல் ஆஞ்ஞைத் தியானத்தால் ஆகலின், ஆஞ்ஞை இடமாகிய நெற்றியை ஆடை ஒலிக்கும் கல்லோடு உவமித்தார். கண் ஆறு - வாய்க்கால். அஃது அண்ணாவை அடுத்து மேற்செல்லும் துளைக்கு உவமை. உச்சித் துளையை மோழை படாமற் கட்டுதலாவது, அதனை நாவின் நுனியால் அடைத்தல். தலையினின்றும் வரும் அமுதம் இத் துளை வழிக் கீழே ஒழுகிப் போகாமைப் பொருட்டு இது வேண்டப்பட்டது. விண் ஆறு - விண்ணால் பெருகியெழும் யாறு. விண் - மழை, ``விண்ணின்று பொய்ப்பின்`` (குறள், 13) என்பதிற்போல. இது மேற் குறித்த அமுதத்திற்கு உவமை. ``குளம்`` என்றது சிலேடை. இஃது உவமை யில், ``நீர் நிலை`` எனவும், பொருளில், `நெற்றி` எனவும் பொருள் தரும். அண்ணாந்து பார்த்தல், புருவ நடுவை நோக்குதல். ``உயிர் தூய்மை பெறுதல் இவ்வாற்றால் ஆகலின் இவ்வாற்றானே முயல்க`` என்பது குறிப்பெச்சம்.
``வண்ணான் கட்டிப் பாய்ச்சி நிரப்பினால்`` என இயையும். ``தான் ஒலிக்கும்`` என்க. ``கட்டி`` என்பதனை, ``கண்ணாறு மோழை படாமல்`` என்பதனோடும் கூட்டி, அத்தொடரை, `வண்ணான்` என்பதன்பின் வைத்துரைக்க. ஆறு - முறை. இஃது உவமையாகு பெயராய் அது போல்வதொரு முறையைக் குறித்தது. ``நிரப்பினால்`` என்பதில், அழுக்கு அறுதற்கு. கட்டுதல் முதலியவை இன்றி அமை யாதனவாதலை விளக்கி நிற்கும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், கேசரி யோகத்தைப் புரியுமாறெல்லாம் தொகுத் துணர்த்தப்பட்டன. இவற்றால் ஆஞ்ஞை யோகம் ஒன்றே கேசரி யோகமாதல் அறியப்படும். சிங்காதனம் கூறியவழி ``அங்காந்து`` என்றதனை வலியுறுத்தியதே இதனுள் ``அண்ணாந்து பார்க்க`` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 3

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.

பொழிப்புரை :

இடநாடி. வலநாடி இரண்டையும் விடுத்து, நடு நாடியாகிய சுழுமுனை நாடியால் பிராணனைப் பயன்படுத்திக் கொள்ளும் யோகிகட்கு, உடல், நரை திரை மூப்புக்களால் தளர்தல் இல்லை. இதற்குமேல், உலக மயக்கத்தில் ஆழ்தலை ஒழித்துத் திருவருளை நினைந்திருக்க வல்லவர்க்கு அவர் தம் விருப்பத்திற்கு மாறாய் இறப்பு உண்டாகாது; அவர் விரும்புமளவும் இவ்வுலகில் வாழ்தல் கூடும்.

குறிப்புரை :

பவ யோகிகள் சித்திக் களிப்பாலும், சிவ யோகிகள் திரு வருட் களிப்பாலும் மத யானைபோலக் களித்திருப்பர் என்பதனைக் குறிப்பால் உணர்த்துவார், சுழுமுனை நாடியைத் தும்பிக்கையாக உருவகம் செய்தார். இதனானே, விநாயகர் யோக மூர்த்தி யாதலும் விளங்கும். சுழுமுனையை உருவகித்தற்கு ஏற்ப ஏனை இட நாடி வல நாடிகளை இடக் கை வலக் கைகளாகவும், பிராணனை உணவாகவும் உருவகித்தார். பவ யோகிகள், ``வெற்று யோகந்தானே காய சித்தியைப் பயக்கும்`` எனக் கூறுதலை மறுத்தற்குப் பின்னிரண்டு அடிகளைக் கூறினார். `திருவருள் உணர்வைப் பெறுவார் யோகியருள்ளும் அரியர்` என்றற்கு, ``உண்பார்க்கு`` என்றாற்போல `உணர்வார்க்கு` என்று ஒழியாது, ``உணர வல்லார்கட்கு`` என ஓதி யருளினார். மூன்றாம் அடிக்கு இங்கு உரைத்தவாறு உரையாதார்க்கு அவ்வடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``வேண்டா`` என்பன இரண்டும், `நீங்காது வருவன நீங்கும்` என்னும் பொருள் குறித்து நின்றன.
இதனால், கேசரி யோகத்துள் பிராணாயாமத்தது சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே. 

பொழிப்புரை :

யோக நூல்கள் ஆராய்ந்து கூறிய முறையை மேற் கொண்டு பிரத்தியாகாரம் முதலியவற்றைச் செய்தால், உடம்பினின்றே அமுதம் சுரக்கும். சுரக்கும் அவ்வமுதம் நாடிகளிற் பாய்கின்றபோது அதனை யோகி தனது அநுபவமாகப் பிறர்க்கும் சொல்லுவான். இனி, நரை திரை மூப்புப் பிணி சாக்காடுகளை யேயன்றிப் பிறவிக் கடலையும் யோகி கடக்கின்ற முறையைச் சொல்லுமிடத்து, மேற் சொல்லிய அமுதம் சந்திர மண்டலத்திலிருந்து பாய்ந்து உடலைக் காப்பாற்றுகின்ற அதுவேயாம்.

குறிப்புரை :

``ஆய்ந்துரை செய்யில்`` என்பதில் `உரை` என்பதும், மூன்றாம் அடியில் உள்ள ``நீந்து`` என்பதும் முதனிலைத் தொழிற் பெயர்கள். அவை முறையே செயப்படு பொருளையும், கருவியையும் உணர்த்தி நின்றன. `அது வருகின்ற காலத்து வாய்ந்துரை செய்யும்` எனச் சுட்டுப் பெயர் வருவித்து, முன்னே கூட்டி முடிக்க. `நீந்து உரை செய்யின் உரை செய்தது நிலாமண்டலமதாய்ப் பாய்ந்து பாலிக்குமாறு` எனக் கொண்டு கூட்டி உரைக்க. நிலாமண்டலத்தில் உள்ளதனை `நிலாமண்டலம்` என்றே பான்மைப்படுத்து ஓதினார். `நிலா மண்டலத்ததாய்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால், `யோகம் பிறவியைக் கடப்பிக்கும் சிறப்புடையது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே. 

பொழிப்புரை :

பிராண வாயு சுழுமுனை வழியே மேல் ஏறும் பொழுது அது மீளக் கீழ்ப் பாயாதபடி நாவின் நுனியால் அண்ணாக் கினை அடுத்துள்ள துளையை அடைத்தால், (அவ்வாயு தலையிலும், நெற்றியிலும் உள்ள நாடிகள் வழியாகப் பரவுதலால்) சீவனும், சிவனும் இருக்கும் இடம் தலையில் உள்ள அவ் ஆயிர இதழ்த் தாமரை யாகவே முடியும். (அஃதாவது, பாச ஞானங்கழல, பசு ஞான பதி ஞானங்கள் விளங்குவனவாம்.) ஆகவே, அப்பொழுது மூவர் காரணக் கடவுளரையும், ஏனை முப்பத்து மூவர் தேவரையும் காணும் ஒளிக்கண் கிடைக்கும். மற்றும் நூறு கோடி யுகங்கள் சென்றாலும் உடம்பு அழியாது நிலைபெற்றிருக்கும்.

குறிப்புரை :

`சிவிறுதல்` என்பது, `விசிறுதல்` என இக்காலத்து எழுத்து நிலைமாறி வழங்கும். நாவின் நுனியால் உச்சித் துளையை அடைக்க, அதன்வழி மேற்சென்ற பிராணன் மீளாமையும், அதனாற் பெருகும் அமுதம் கீழ்ப் போகாமையும் உளவாதலால் விளைகின்ற பயன்கள் பல என்றவாறு.
இதனுள், ``நாவின் நுனியை நடுவில் சிவிறிடில்` எனவும், பின் வருகின்ற திருமந்திரங்களிலும் இவ்வாறு இப் பொருளே படக் கூறுவனவும், மேல் சிங்காதனம் கூறியவழி, ``அங்காந்து`` என்றதனுள்ளே உய்த்துணர்ந்து கொள்ளக் கிடந்தன. ஆகவே, இது கேசரி யோகத்தைக் குறிக்கும் குறிப்பாதல் பெறப்படும். ``அங்கே`` என்பதன்பின், `உளதாம்` என்பதும், `உறைவிடம்` என்பதன்பின் `அதுவேயாம்` என்பதும் எஞ்சி நின்றன. ஆக்கங்கள் புதியனவாய் அறியப்படுதலைக் குறிக்கும்.
காரணக் கடவுளர் மூவர் ஆவார், `அயன், அரி, அரன்` என்போர். முப்பத்து மூவர் ஆவார், `உருத்திரர், சூரியர், அசுவினி தேவர், வசுக்கள்` என நால்வகைப்பட்டு, முறையே பதினொருவர், பன்னிருவர், இருவர், எண்மர் என்னும் தொகை பெற்று நிற்பவர். இவரை, ``நால்வே றியற்கைப் பதினொரு மூவர்`` (திருமுருகாற்றுப்படை, 167) என்றார் நக்கீர தேவர். இவர் ஒவ்வொருவரும் தம்மைப் போலும் `கோடி` என்னும் எண்ணுடையோரைச் சுற்றமாகக் கொண்டு நிற்றலால், `தேவர் முப்பத்து முக்கோடியர்` என்பர். பொதுவே ``மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்`` என்றாராயினும், சிவயோகியர்க்கு அவரது வரம்புபட்ட நிலைகளும் உடன் அகப்பட்டுத் தோன்றும், என்பது கருத்து என்க. இவ் விளக்கங்கள் தத்துவ விளக்கம் ஆதல் அறிக.
இதனால், கேசரி யோகத்தால் பாச பசு பதிகளின் காட்சி கிடைத்தல் கூறப்பட்டது. பாசக் காட்சியைக் கடைக்கண் ஓதினார், பாசங்களது இழிபு பற்றி. இதனுள், நாவின் நுனியை நடுவே சிவிறுதல் சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே.

பொழிப்புரை :

குருதி பாய்ந்து ஓடுகின்ற தலையிலிருந்தே தேவ ருலகத்து அமுதம் பாய்கின்ற வகை அறிகின்றவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனை அறிதல் உடையவர்க்கு அந்தத் தேன்போலும் அமுதத்தை உண்டு, அதன் சிறப்பை உணர்தலும் கூடும்.

குறிப்புரை :

ஊனின்கண் சுரப்பதனை ``ஊன் ஊறல்`` என்றும், வானின்கண் குறையாது நிற்பதனை, ``வான் ஊறல்`` என்றும் கூறினார். வான் ஊறல் என்பது ஒரு சொல்லாய்ப் பின் உவமையாகு பெயராயிற்று. வரை - மலை; அஃது அதன் உச்சியைக் குறித்தது. `வரைபோலும் உச்சி` என்க. முதனிலைத் தொழிற் பெயரும் பெய ராதலின், அதனை இரண்டாவதன் பொருள்பட, ``அறிவாளர்க்கு`` என ஓதினார். `தேன்` என்பதும் உவமையாகுபெயர். இதன் சிறப்பு வருகின்ற திருமந்திரத்திற் பெறப்படும்.
இதனால், கேசரி யோகத்தால் அண்டத்து அமுதம் பிண்டத்துட் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மேலைஅண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.

பொழிப்புரை :

அண்ணாக்கின் அருகில் உள்ள துளையில், `இடை கலை, பிங்கலை` என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் பிராணனைப் பொருத்தினால், யம பயம் இல்லை. மேலுலகத்து வாயிற் கதவும் திறக்கும். உளவாய் இருந்த நரை திரைகளும், உலகத்தார் கண்டு வியக்கும் வண்ணம் மாறிவிடும். அதன்பின் யோகி இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இஃது எங்கள் ஆசிரியர்மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.

குறிப்புரை :

`நாக்கில் இரு கால்களை இடுதல் எவ்வாறு` என வியக்கும் முறையில் நயம்பட ஓதினார், இச்செயல் செயற்கரிதாதல் தோன்றுதற்கு. `இரு காலால் உதைத்தால் கதவு திறந்துகொள்ளும்` என்பதும் ஓர் நயம். `கதவு` மேல் `உலகத்தது` என்பது ஏற்புழிக் கோடலால் விளங்கும். மேல் உலகத்தை, அண்டம், பிண்டம் இரண்டிலும் கொள்க. கட்டிளமை யுடையாரையும் `பாலியர்` என்றல் வழக்கு. இனி, `குழவிப் பருவத்துத் தோற்றம் உடையவராவர்` என உரைப்பினும் குற்றமின்று. என்னை? தோற்ற மாத்திரமேயன்றி அறிவு முதலியன அப்பருவத்தன ஆகாமையின்.
இதனால், கேசரியோகத்தால் இம்மை மறுமைப் பயன்கள் கிடைத்தல் கூறப்பட்டது. இவற்றுள், இம்மைப் பயன் மேற்கூறிய அமுதத்தின் பயனாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 8

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.

பொழிப்புரை :

கேசரி யோகத்தைச் சிவபெருமானையே முதல் வனாக உணரும் உணர்வில் நின்று செய்து, அதனானே, அவனைத் தலைப்படுகின்ற யோகி, உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அங்ஙனமாகவும், அவ்யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் பலவற்றை ஆக்க நினைத்துக்கொண்டிருப்போர், நல்வினை இல்லாதவரே யாவர்.

குறிப்புரை :

``முதலாக`` என்பது, `முதல்வனாக` எனப் பொருள் தந்து நின்றது. ஆளுதல் இங்கு, `அருள் வழியில்` என்பது வெளிப் படை. எனவே, யோகாசாரியனாதல் கூறியவாறாயிற்று. பந்தித்தல் - இருத்தற்குரிய. பகலோன், சூரியகலை. இது பொதுவாக வெளிச் செல்வது ஆதலின், ``பகலோன் வெளியாக`` என்றார். சிந்தித்தல், ``கருதுப கோடியும் அல்ல பல`` (குறள்) என்றாற்போல, நினைவு மாத் திரமாய்க் கழிவனவற்றை எண்ணுதல். இது பிராணன் வீணேகழிதலை உணராமையைக் குறித்து நின்றது. சூரியன் உதயமான பின்பும், `எப்பொழுது உதயமாகும்` எனக் கவலையுறுபவர் என்பது ஒரு நயம்.
இதனால், கேசரி யோகத்தால் யோகாசாரியனாதற் சிறப்புக் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை ஆடிய தீங்கரும் பாமே. 

பொழிப்புரை :

முன் செய்த தீவினை வந்து விளையாட, அவ் ஆடலைப் போக்க வழியறியாது நின்றவர், கேசரி யோகத்தைச் செய்யின், அவ் ஆடல் இல்லையாய்விடும். மேலும் அதனானே, அவர்க்குச் சிவனோடு கூடித் திளைத்தற்கு, இனிய கரும்புபோலும் திருவருளும் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

நா வினை - நாவால் உச்சித் துளையை அடைக்கும் செயல். பா வினை - பரவிய (மிக்க) வினை என்றது முன்னர், ``தீ வினை`` எனக் கூறியவற்றை. அவற்றோடு ஆடுதலாவது, அவற்றின் பயன்களில் அழுந்துதுதல். பயன், அவை அற்றொழிதல். இம் மூன்றாம் அடி, மேல், ``திகைத்து அங்கிருந்தவர்`` எனக் குறித்தவரைச் சுட்டும் அளவாய் நின்றது. இவ்வடியின் ஈற்றில் நான்காம் உருபு தொகுத்தலாயிற்று. தே - சிவம். இஃது இன் சாரியையோடு இரண்டாம் உருபு ஏற்று நின்றது. ``ஆடிய`` என்பது, ``செய்யிய`` என்னும் வினையெச்சம். ஆடுதல் - திளைத்தல்; அநுபவித்தல்.
இதனால், கேசரி யோகம் கீழ் நிலையில் உள்ளாரை எளிதில் மேல் ஏற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே. 

பொழிப்புரை :

மேற்சொல்லிய கரும்பைப் பயிரிட (திருவருளைப் பெற) விரும்புவோர் கேசரி யோகத்தால் குண்டலியை எழுப்பி நிராதாரத்திற் செலுத்துதல் வேண்டும். செலுத்தினால், அருவருக்கத் தக்க இவ்வுடம்பே ஆனந்தத்தைத் தரும் கரும்பாகி, நிராதாரத்தில் உள்ள திருவருள் வெள்ளம் பாய்ந்தோடி வரும்.

குறிப்புரை :

``தீங் கரும்பாக`` என்பதில், ஆதல், விளைதல். ஆக - ஆமாறு. ஆங்கு - அத்தொழிற்கண். ``நாவை அரும்பாக அடைய மேல் நிமிர்த்தி`` என உரைக்க. இதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. கோங்கின் அரும்பு, உறக்கத்தால் சுருங்கிக் கிடக்கும் பாம்பின் முகத்திற்கு உருவகம். ``அரும்பினதாகிய`` என்பதை ``அரும்பாகிய`` என்றார். குண்டலியை ``கோண்`` என்னும் தமிழ்ச் சொல்லாற் கூறினார். ``ஆகி`` என்னும் வினையெச்சம் எண்ணின்கண் வந்தது. ``ஊன் நீர்`` என்பதில் ஊன் - உவ்விடம்; மேலிடம்; என்றது நிராதாரத்தை. எனவே, குண்டலி நிமிர்தல் இதுகாறுமாயிற்று. ``நிராதாரத்தில் உள்ள நீர்`` எனவே, அது திருவருள் வெள்ளமாயிற்று.
இதனால், கேசரி யோகத்தை நிராதாரமாகச் செய்தவழித் திருவருட் பேறு கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே. 

பொழிப்புரை :

மேற்கூறிய திருவருள் வெள்ளம் பெருகுதல் உண்டாகும் முறையிலே கேசரி யோகத்தைச் செய்து, அதனால், தேன்போல இனிய அந்த வெள்ளத்தைப் பருகி, திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதியிருக்க, காற்றும், நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அவ்வாறு அக்கங்கை வரும் வழியை அமைந்துணர்ந்து, முயலுங்கள்.

குறிப்புரை :

``ஊன் நீர்`` என்பதற்கு, மேல் உரைத்தவாறே உரைக்க. ``உள் நாவை ஏறிட்டு`` என்றது கேசரியோகத்தைக் குறித்தவாறு. இதனை, `நாவை உள் ஏறிட்டு` என மாற்றி யுரைக்க. ``உள்`` `அண்ணத் துளையினுள்` என்றவாறு. தேன் நீர், இல்பொருள் உருவகம். இஃது அணிநூலில் புறனடையாற் கொள்ளப்படும். ``என்று`` என்பதன்பின், `இருக்க` என ஒருசொல் வருவிக்க. ``வான் நீர்`` என்பது, முன்வந்த `கங்கை` என்றதனைச் சுட்டும் அளவாய் நின்றது. ``ஊன் நீர்`` என்றாற் போலப் பொதுப்பட `நீர்` என்றொழியாது, ``கங்கை`` என உயர்த்துக் கூறினமையின், அதனைச் சிவானந்த வெள்ளமாகக் கொள்க.
இதனால், நிராதார கேசரி யோகத்தால் சிவானந்த அனுபவம் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே. 

பொழிப்புரை :

நிராதார கேசரி யோகம் சிவானந்தத்தைத் தருமாற்றை அறிந்து அதன்கண் நின்றவர், அவ் யோகத்தானே பாசங்களை வென்று அறிவே வடிவாய் இருக்குமாறு சிவன் தனது திருவருளைப் பொழிவான். மேலும், அவரை அவன் தனது வியாபகத்துள் அடக்கிக் காப்பவனும் ஆவான்.

குறிப்புரை :

``வழிபாடு`` என்றது மேற்கூறிய நிராதார யோகத் தையே என்பது இயைபுபற்றி இனிது விளங்கும். மூன்றாம் அடியும் அதனை மீள அநுவதித்ததேயாம். `உள்ளே பாய்ந்து` என முன்னே கூட்டுக. உள் - பிரம ரந்திரம்; அறிதல், நிராதாரத்தில் உள்ள சமனை உன்மனை சத்திகளை. படி - வாயில். வாயிலில் கதவு இடுதல், நாவின் நுனியால் அண்ணத் துளையை அடைத்தல். `குவிந்து` என்பது எதுகை நோக்கி, ``கூய்ந்து`` எனத் திரிக்கப்பட்டது. குவிவது மனம். இறுதியில் உள்ள ``அறிந்து`` என்பதனை, `அறிய` எனத் திரிக்க. உள் உறைபவன் யோகியும், கோயில் ஆகின்றவன் சிவனும் என்க.
இதனால், நிராதார கேசரி யோகம் முதிருந்தோறும் விளையும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே. 

பொழிப்புரை :

சிவனது வியாபகத்துள்ளே ஒடுங்கிப் புறம் போகாது நிற்கும் நிராதார கேசரி யோகிகள், எல்லா உயிரிடத்தும் தாயினும் மிக்க அருளுடையராய் இருப்பர். அறியாமையால் சிலர் அவர்க்கு ஊறு செய்யினும், அவரிடத்தும் அவர் அவ்வருள் நீங்குதல் இலர். ஆயினும், அவர்க்கு ஊறு செய்தவர் அத்தீவினையால் தம்மால் தாம் கேடுறுவர் ஆதலின், அது பற்றி அவர்க்கு அவ்யோகிகள் தீயினும் கொடியராகவும் சொல்லத்தக்கவர்.

குறிப்புரை :

``தீயினும் தீயர்`` என்றதனை,
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். -குறள், 77
என்றதுபோலக் கொள்க. `ஈசன் அடியார் இதயம் கலங்கிட` (பா.528) `தானே படைத்திட வல்லவ னாயிடும்` (பா.670) என்னும் திருமந்திரங் களையும் இங்கு நினைவு கூர்க. `தம்முளும்` என்னும் உம்மையைப் பிரித்து, ``தீயரும் ஆவர்`` எனக் கூட்டி யுரைக்க.
இதனால், கேசரி யோகம் முற்றி நின்றாரது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 14

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர் மதியிலுள் ளானே. 

பொழிப்புரை :

தன்னை வழிபடும் நல்லூழ் இல்லாதவர்க்கு அவர் தலைக்கு அப்பால் மறைந்தே நிற்கின்றவனும், தன்னை யாதானும் ஒரு குறியில் புறத்தே வைத்து வழிபடுகின்றவர்கட்கு அக்குறியேயாய் நின்று அருள் செய்கின்றவனும், தன்னை அகத்தே ஆதாரங்களில் வைத்துப் பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே விளங்கு கின்றவனும் ஆகிய சிவன், பெருஞ்செயலாகிய நிராதார யோகத்தைச் செய்கின்றவர்கட்கு அவர்களது உணர்வு வடிவாய் நிற்கின்றான்.

குறிப்புரை :

`சென்னியில்` என்றது, ``உச்சிக் கூப்பிய கையினர்`` (திருமுருகாற்றுப்படை, 185), `சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்` (தி.8 திருப்பள்ளியெழுச்சி, 4) என்பனபோல `துவாத சாந்தத்தில்` என்றவாறு. சிவன் யாவரையும் விடாதே தொடர்ந்து நிற்பவன் ஆகலின், அவ்வாறு அவன் நிற்கும் இடம் துவாதசாந்தமே. அவனை வழிபடுவார் புறத்தே பல குறிகளிலும், அகத்தே ஆதார நிரா தாரங்களிலும் அவனைத் தலைப்பட்டுப் பின் துவாதசாந்தத்திலும் தலைப்படுவர். வழிபடாதார் ஓரிடத்தும் அவனைச் சாராமையின், அவர்க்கு அவன் துவாதசாந்தத்தில் தோன்றாது நிற்கும் அவ்வளவிலே யிருப்பன். அதனால், ``தீவினையாளர்தம் சென்னியில் உள்ளவன்`` என்றார். பூ வினை - பூவைக்கொண்டு செய்யும் செயல்; வழிபாடு. பொற்பதி - அழகிய தலம்; அது தானியாகு பெயராய் அதன்கண் உள்ள குறியை உணர்த்திற்று. இங்குச் சரியையும் கிரியையுள் அடக்கப் பட்டது. பா வினை - பரவுகின்ற செயல். பரவுவது மனம் என்க. பாவகம் - பாவனை.
இதனால், நிராதார யோகம் முதிரப் பெற்றோர் உண்மை ஞானத்தைப் பெறுதற்குரியராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே. 

பொழிப்புரை :

மாவினையாளர் மதியில் உள்ள சிவன், அதில், சந்திரனது கலைகள் போல்வனவாகிய பிராசாத கலைகள் பதினாறாய் நின்றும், புவன பதிகளின் இடமாகிய புவனங்கள் இருநூற்றிருபத்து நான் காய் நின்றும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகள் ஆகிய பகைவர் அவ்யோகியர் எதிர்சென்று போர்புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.

குறிப்புரை :

பிராசாத கலைகள் பலவற்றுள் சிறப்புடையன சோடச கலைகளாதலின் அவற்றையே கூறுவார். அவை யோகியின் உணர் விற்கு உரியவாதல் இனிது விளங்குதற்கு ``மதியின் எழுங்கலை போல`` எனச் சிலேடித்துக் கூறினார். `பதிகள்` என்னாது `பதி` என்றது பன்மையொருமை மயக்கம், `ஏவல் இளையர் தாய் வயிறு கரிப்ப` என்பதிற்போல. ``நூறுநூற்`` றென்னும் சீரில் குற்றியலுகரம் அலகு பெறாது நின்றது. அத்துவாக்களுள் புவனங்களே பருப்பொருளாய் இனிது விளங்கலின், அவற்றைக் கூறவே, அவற்றொடு பிரிப்பின்றி நிற்கும் ஏனையவும் கொள்ளப்படும். ஆறு அத்துவாக்களுடன் நால் வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதங்களாகிய சராசரங்கள் யாவும் நெறியில் பிண்டத்துள்ளே நிற்கும் முறையைப் பிராசாத நூல்கள் இனிது விளங்கக் கூறுதலை அந்நூல்களுட் காண்க; ஈண்டு விரிப்பிற் பெருகும். கதி - நடை. யோகிகளது உணர்வில் அத்துவாக்கள் பலவும் தானேயாய் நின்று அவர்களது, உலகியல் உணர்வைத் தடுக்கும் முகத்தால் சஞ்சித பிராரத்த கன்மங்களின் வலியைக் கெடுத்தலின், ``கணைகள் பரப்பி - எதிர் மலையாமல் இருந்தனன்`` என்றார். மலைதற்கு வினைமுதல் வருவித்துக் கொள்க.
இதனால், கேசரி யோகத்தை நிராதாரமாகச் செய்தலின் மேல், பிராசாதமாகச் செய்தல் பெரும்பயன் உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்ஏர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே. 

பொழிப்புரை :

மதியின் எழுங்கதிர்போல நிற்கும் பிராசாத கலைகள் பதினாறும் தன்னைச் சூழ்ந்து நிற்க, அவற்றின் நடுவே திரோதான சத்தி, தனது அழகிய முகமாகிய சந்திரன் நிறைந்த ஒளியுடன் விளங்க, அந்தப் பிராசாத கலைகளின் வழி அமுதத்தைப் பொழிந்துகொண்டு, அவற்றோடு தானும் இருக்கின்றாள்.

குறிப்புரை :

``அதனால், அன்ன சிறப்பினதாகிய அந்தப் பிராசாத யோகத்தையை முயலுங்கள்`` என்பது குறிப்பெச்சம். சத்தி, கன்னி, மான் என்பன ஒருத்தியையே குறித்தன. அந்நடு - அவற்றின் நடு. ``சூழ நடுவாக இருந்தனள்`` என்றது, ``ஆட்சி செய்திருக்கின்றாள்`` என்ற வாறு. திரோதான சத்தி தன் நிலைமாறி அருட் சத்தியாகும் நிலை மையைக் குறிக்க, ``முக நிலவு ஆர அமுதம் பொழிந்து இருந்தனள்`` என்றும், அஞ்ஞானம், ``மிருத்தியு`` எனப்படுதலால், அதனைப் போக்குகின்ற மெய்ஞ்ஞானத்தை ``அமுதம்`` என்றும் கூறினார்.
இதனால், மேற்கூறிய அவ்யோகம் அங்ஙனம் பெரும்பயன் உடைத்தாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகும் குணமது தானே.

பொழிப்புரை :

பிராசாத கலைகளின் வழிச் சத்தியால் பொழியப் பட்டு விளங்குகின்ற அந்த ஞானம், அகார கலை முதலிய கலைகளின் அளவில் சுவாதிட்டானம் முதலிய கீழ் இடங்களோடு நில்லாது, அருத்த சந்திர கலை முதலிய கலைகளின் வழி ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களை அடையுமாயின், அவ்விடத்தே அந்த ஞானத்திற்கு முத லாகிய சிவம் வியாபகப் பொருளாய் விளங்கித் தோன்றும். அதன்பின் அந்த அருத்த சந்திராதி கலைகளின் ஞானங்கள் மறைந்து முன் போலக்கீழே போய்விடாமல் காக்க வல்லவர்கட்கு அந்த ஞானம் முடி நிலை வளர்ச்சியை எய்தும். அதுவே, அந்தக் கலா யோகத்தின் பயனாம்.

குறிப்புரை :

`புறத்துப் பொன்மன்றுபோல, அகத்தே விளங்குவது ஆஞ்ஞை` என்றற்கு அதனை, ``பொன் மன்று`` எனக் கூறுகின்றவர், அதனோடு இயைந்து ஓர் நயத்தைத் தோற்றுவித்தற்கு, பிராசாத ஞானத்தை, வெள்ளியாக உருவகம் செய்து கூறினார். ``வெள்ளி`` எனப்பட்டது இந்த ஞானமே என்பது, ``பொழிந்தவிரும் வெள்ளி`` என மேற்கூறியதனையே அனுவதித்துக் காட்டியதனானே இனிது உணரப்படும். இதனையும், ``பொன் மண்`` என்பது பாடம் ஆகாமையையும் உணராது `வெள்ளி, பொன்` என்றவற்றைச் சுக்கில சோணிதங்களாகக் கொண்டு உரைப்பின், அஃது இவ்விடத்திற்கு யாதோர் இயைபுமின்றிப் போதல் அறிந்து கொள்க.
இதனால், பிராசாத யோகத்தின் முடிநிலையும், அதன் பயனும் கூறப்பட்டன. குணம் - பயன்.

பண் :

பாடல் எண் : 18

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே. 

பொழிப்புரை :

சத்தி, பிறர்க்குப் பிறவித் துன்பத்தைத் தருபவள் போலாது வீட்டின்பத்தைத் தருபவளாய் மாறுகின்ற அந்நிலை யிலேயே நிற்கும்படி யோகி மேற்கூறிய மேல் நிலையினின்றும் தாழாது நிற்பானாயின், அச்சத்தியால் நிதிபோலக் கிடைக்கின்ற உண்மை ஞானத்தின் வழியாகச் சிவனும் அவனிடத்தினின்றும் நீங்காதிருப்பான்.

குறிப்புரை :

குணம் - நன்மை. நன்மை யுடையவளை, `நன்மை` என்றார். மணம் - பொருந்துதல்; அந்நிலையிலே நிற்றல். ஆக - உண்டாகும்படி. `அங்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. `யோகி` என்பது பொருட்டொடர்பால் வந்தது. இனம் - பொதுத்தன்மை; அஃது இயைபின்மேல் நின்றது. தான், சிவன்; இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், `பிராசாத யோகத்தின் முடிநிலையை எய்தினார் அந்நிலையிலே உறைத்து நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

இருந்த பிராணனும் உள்ளே எழுமா
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே. 

பொழிப்புரை :

சுவாதிட்டானத்தில் இருந்த பிராண வாயு வெளிப் புறமாக அன்றி உட்புறமாக எழுமாறு திறக்கப்பட்ட சுழுமுனை நாடி வழியே சென்று, ஆஞ்ஞையும் திறக்க, அதற்குமேல் விரிந்து விளங்கு கின்ற ஆயிர இதழ்த் தாமரை மலரின்மேல் பின்னும் மேல் எழும் வகையில் பொருந்தச் செய்தால், ஞான மண்டலமாகிய நிராதாரமும், அதற்குமேல் உள்ள பரமண்டலமாகிய மீதானமும் இனிது விளங்கு வனவாம். அதுவன்றி, நெடுங்காலம் வாழ்தலும் கூடும்.

குறிப்புரை :

`எழுமாறு` என்பது செய்யுளிடத்துக் கடைக் குறைந்து நின்றது. பரிதல் - உடைதல்; திறத்தல். அண்டம் - ஆகாயம். ஆஞ்ஞை முதலாக உள்ளவை ஆகாயமண்டலம் என்க. `நெடுங்காலம்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `கேசரி யோகத்தை வாசி வகையிற் செய்யினும், பிராசாத வகையிற் செய்யினும் ஆதாரங்களைக் கடந்து, நிராதாரமாகச் செய்தல் நன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே. 

பொழிப்புரை :

ஞானமண்டலமாகிய நிராதாரத்தில், மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து, தியானத்தை அவ்விடத்தே செய்து, அதனாலே மனம் கீழ்ப் போகாதவாறு தளைத்து, உடம்பில் எக்காலத்தும் இருள் இன்றி ஒளியே வீசப் பண்ணினால், சிவன், ஆடும் பெருமானாய் அசைந்து கொண்டிராமல், ஏக பாதனாய் அசையாது நிற்பான்.

குறிப்புரை :

மனம் நிராதாரத்திற்செல்லின் ஒடுக்கம் பெறுதலால், அங்குள்ள ஆற்றலை மனத்தை வளைக்கும் ஒட்டியாணமாகக் கூறினார். ஒட்டியாணம் - இடைப்பூண். பண்டம் - உடம்பு. மகரங் கெட்டபின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `பகல் ஒளியே ஆக` என, ஏகாரத்தை மாற்றி யுரைக்க. கூத்து, இங்கு அதி சூக்கும ஊன நடனம். இது புலனுணர்வைத் தந்து மனத்தை அலைப்பதாகலின், `அதனை ஒழிவான்` என்றார். ``ஒழிந்தான்`` என்பது துணிவுபற்றி வந்த கால வழுவமைதி. `கூத்து ஒழிந்தான்` எனவே அசையாது நிற்றல் பெறப்பட்டது. அதனால், மனம் ஒடுங்குதல் கூறப்பட்டதாம். உடம்பில் எப்பொழுதும் ஒளியே விளங்குதல், கருவி கரணங்களும் ஞானமயமாய் நிற்றல். இதுவும் அனுவாத முகத்தால் இடையே கூறப்பட்டமை காண்க.
இதனால், நிராதார யோகத்தின் பயன் கூறும் முகத்தால், அதன் சிறப்பிற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே. 

பொழிப்புரை :

யோகி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடினானாயினும், அவனது மனம் பிரமந்திரத்திலே நிற்கும் ஆதலின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும்.)

குறிப்புரை :

`புலர்த்திய, சாத்திய` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `காசக்குழலி` என்னும் ஒரு பெயர் கொண்டன. காசம் - மயிர்ச்சாந்து. `கலந்தும்` என உம்மையை மாற்றியுரைக்க. ஊசித் துளை, பிரம ரந்திரம். தூங்குதல், மேலிடல்.
இதனால், பரியங்க யோகம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே. 

பொழிப்புரை :

போகத்தில் மனம் சென்றவழிப் பிராணன் சுழு முனை வழியில் செல்லமாட்டாது. காமத்தை விளைக்கின்ற வெண்பாலும் செம்பாலில் வீழ்ந்தொழியும், ஆகவே, துணைவியும், துணைவனும் ஆகிய இருவரும் தங்கள் செம்பால் வெண்பால்களால் மன வலி இழந்து தாழ்தலைப் பின்னர் உணர்ந்து வருந்துவதுதான் போகத்தால் அவர்கள் எய்தும் பயன்.

குறிப்புரை :

`அதனால், போகத்தை மேற்கொள்ளா திருத்தலும், மேற்கொள்ளினும் அதில் அழுந்தாதிருத்தலுமே அறிவுடைமை` என்பது குறிப்பெச்சம். இதனை உணர்த்துதற் பொருட்டே போகத்தின் இயல்பையெல்லாம் விரித்தார் ஆதலின், அது மிகை யாகாமை அறிக. போகத்தில் ஈடுபடினும் அதன் கண் அழுந்தா திருக்கும் நிலை முன்னை மந்திரத்திற் கூறப்பட்டது. சூது - சூதாடு கருவி, சூதன் - அக் கருவியைப் பயன்படுத்துகின்றவன். தலைக்காண்டல் என்பது ஒரு சொல். இதன்கண் ஈரடி எதுகை வந்தது.
இதனால், இல்லறத்துள் நிற்கும் யோகிக்குப் பரியங்கயோகம் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.

பொழிப்புரை :

ஒருவர் மற்றொருவர் வரைக்கண் நிற்பவராகிய கணவனும், மனைவியும் அவருள் ஒருவராயினும், இரு வருமாயினும் விரும்புவதாகிய போகத்தின்கண், வல, இட நாசிகளின்வழி ஏறியும், இறங்கியும் சுழன்று வீணாகின்ற சரவோட்டமாகிய தேரினில் ஏறி, அதனையே ஏழாந்தானமாகிய வானத்தில் அமுதமாகிய வெள்ளத்தில் ஓட்டினால், போகமாகிய, பகையை வெல்கின்ற யோகமாகிய படை தனது சதுரங்கம் (நான்கு உறுப்பு - யானை, தேர், குதிரை, காலாள்) ஆகிய பிரத்தியாகாரம் முதலியவை ஒருபோதும் தளர்ச்சியடையா திருக்கும்.

குறிப்புரை :

``இருபால்`` எனவும், ``வெளிநிற்கும்`` எனவும் கூறியதனால் அவை பிராணாயாமத்தைக் குறியாது சரவோட் டத்தையே குறித்தல் தெளிவு. பிராணாயாமத்தால் ஏழாந் தானத்தில் செல்வோர் வானவூர்தியின்வழி வானத்திற் செல்பவர். `அவ்வாறன்றிச் சரவோட்டத்தில் நின்றே அதனை அடைதல், தேரில் நின்றே வானத்திற் செல்லுதல் போல்வது` என அதன் அருமை கூறியவாறு. `தேர் வானத் திற் செல்லுதலேயன்றி, அவ்விடத்து நீரிலும் செல்ல` என மேலும் ஓர் வியப்புத் தோன்றக் கூறினார். `தண்டு, அங்கம்` என்பன சிலேடை யாய், `சுழுமுனை, படை` எனவும், `படையின் உறுப்பு, யோகத்தின் உறுப்பு` எனவும் இவ்விரண்டு பொருள் பயந்தன. `சுழுமுனை` என்றது அதன்வழிச் செய்யும் யோகத்தினை. போகமும், யோகமும் தம்முள் மாறாவன ஆகலின், அவற்றை முறையே பகையாவும், படையாகவும் உருவகம் செய்தார். ``தண்டு`` என்றது குறிப்புருவகம்.
இதனால், பரியங்க யோகத்தின் அருமைப்பாடும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தன்னைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

கணவனும், மனைவியும் மெய்யுறுகின்ற செய் கையும் யோகத்தால் விளைகின்ற மெய்யுணர்வை மழுங்கச் செய்வதே யாம். அச்செய்கையில் வெண்பால் வெளிப்படுகின்ற இன்ப நிலைக் கண் யோகி அது வெளிப்பட்டுக் கெடாதவாறு காத்துக் கொண்ட அச்செயலில் நின்று தன்னைத் தன் மனைவிக்கு இன்பந்தருபவனாகக் கொடுத்தால், தனது யோகம் கெடாமையே யன்றி, யோகிகட்குத் தலைவனாயும் விளங்குவான்,

குறிப்புரை :

யோகியின் உணர்வைத் தாக்குவனவாகிய பசி, பிணி முதலியவற்றுள் இணை விழைச்சும் ஒன்று என்பார். `அங்கப் புணர்ச் சியும்` என உம்மை கொடுத்து ஓதினார். `மங்கு` என்னும் முதனிலைத் தொழிற்பெயர், மங்குதற்கு ஏதுவாவதன் மேல் நின்றது. `புணர்ச்சியுள்` எனப்பாடம் ஓதி, `தத்துவம் மங்குதலையுடைய தாம்` என உரைத் தலும் ஆம். `அதில்` என்பது `அத்தில்` என விரித்தலாயிற்று. `தம்மை` என்பது பாடம் அன்று. மேலெல்லாம் உணர்வு மாத்திரத்தால் யோகமாமாறு கூறி, இதனுள் உடலாலும் யோகமாமாறு கூறினார். இதனை, வேறோர் இயைபு பற்றி, `விந்துசயம்` எனப் பின்னர் விரிப்பார், (தி.10 ஏழாந் தந்திரம்) விந்து சயம் பெறுதலாவது, விந்து கீழே வீழ்ந்து கெடாது, சுழுமுனைவழி மேலேசென்று ஒளியாகப் பெறுதல்.
இதனால், விந்து சய பரியங்கயோகம் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது. இதனானே, பரியங்க யோகத்து `விந்து சயம்` என்பது ஒன்று உண்டு என்பதும் பெறப்பட்டது,

பண் :

பாடல் எண் : 5

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானம்
தலைவனு மாயிடுந் தன்வழி போகம்
தலைவனு மாயிடுந் தன்வழி உள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே. 

பொழிப்புரை :

பரியங்க யோகத்தால் உணர்வும், விந்துவும், அந்தக் கரணமும், ஐம்பொறியும் தன்வழிப்பட்டு நிற்க, யோகி அவை அனைத்தையும் தன் விருப்பப்படி ஆளும் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

``ஆயிடும்`` நான்கும் முற்றுக்கள். உம்மைகள், ஞானம் முதலியவற்றிற்குத் தலைவனாதலைத் தழுவும் எச்ச உம்மை<கள், அடி தோறும் ஈற்றில் ஆ உருபு தொகுத்தலாயிற்று ``தன்வழி`` நான்கும், `குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி` - என்பனபோல நின்றன. இரண்டாம் அடியில் ``போகம்`` என்பது வடசொல்லாதலின், நிலை மொழியோடு ஒற்று மிகாது புணர்ந்தது. போகம், காரியவாகுபெயர். உள் நிற்பனவற்றை ``உள்`` என்றார். `உள்ளம்` என்பது குறைந்தது எனினுமாம். `தீயதின் நீங்கி நல்லதின் நிற்றல் உணர்வு` எனவும், `முக்குண வடிவாய் நிற்பன அந்தக்கரணம்`` எனவும், `` ஐம்புல வடிவாய் நின்பன ஐம்பொறிகள்`` எனவும், உணர்க. ``உள்ளே`` என்னும் ஏகாரமும், ``வாடா வள்ளியங் காடிறந் தோரே`` (குறுந்தொகை, 216) என்பதிற் போலச் செய்யுள் இடைக்கண் வந்த அசைநிலை.
இதனால், பரியங்க யோகி போகத்தால் தனது நிலையி னின்றும் தாழாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகைப் பரியங்க யோகமே. 

பொழிப்புரை :

யோகி தன் மனைவியுடன் ஐந்து நாழிகை கலவியில் ஈடுபட்ட பின், மனைவி அவன் பக்கலில் அமைதியாய் உறங்குதல் ஒன்றே பரியங்க யோகத்தின் பயன். அதனால், ``நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது`` என்னும் இன்பமுறை, ஐந்து நாழிகையை எல்லை யாக உடைய பரியங்கயோகத்தின் கண்ணே மிகப் பொருந்துவதாம்.

குறிப்புரை :

``அஞ்சு கடிகைமேல்`` எனவும், ``பஞ்ச கடிகை`` எனவும் போந்தவற்றால் பரியங்க யோகத்திற்குக் கொள்ளத்தக்க காலம் வரையறுக்கப்பட்டது. `அத் துணைவி துணைவன் பால் துஞ்சுவது ஒன்று` என மாற்றியுரைக்க. ``ஒன்று`` என்பது, ஒன்றாம் பயனைக் குறித்தது. `ஒன்றே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. அதனை விரிக்கவே, `ஒன்றே பயனாம்` என்பது பொருளாம். `இஃது ஒன்றே பயன்` என்றதனால், `துறவு பூண மாட்டாது இல்லறத்தில் நிற்கும் யோகிக்கு இப்பரியங்க யோகம் ஆண் கடன் இறுத்தற் பொருட்டு உடன்படப்பட்டது` என்பது போந்தது. இனி, அவ் ஆண் கடன் இறுத்தலும், விலக்கிய காலத்துக் கூடாமை அறிந்து கொள்க. `விலக்கப்பட்ட காலங்கள் இவை` என்பதை,
``மிகத் தெளிந்தார் ஓதி விதிநிசித்தம் எல்லாம்
பகற்பொழுது பாரார் பகம்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 224
``அட்டமி சட்டி பதினான்கைம் மூன்றினும்
தொட்டிடேல் இல்லவள்வேய்த் தோள்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 235
``சென்மமொரு மூன்றும் திருவா திரைஓணம்
என்னுமிவை தம்மினுந்தீண் டேல்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 226
என்பன முதலியவற்றான் அறிக. சென்மம் மூன்றாவன:- சென்மம், அனுசென்மம், திரிசென்மம். இவை தான் பிறந்த நட்சத்திரமும், அதனைச் சேர்ந்து எண்ண ஒன்று பத்தாவதும், அவ்வாறே அதற்குப் பத்தாவதுமான நட்சத்திரங்களுமாகும்.
``பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்`` என உலக நூலாகிய வைதிக நூல்கள் பொதுவாகக் கூறும் நால் வகை நிலைகளையே மெய்ந்நூல்களாகிய சைவ நூல்கள், `சரியை கிரியை, யோகம், ஞானம்` என ஓராற்றால் சிறப்பாகக் கூறும். அதனால், யோகி இல்லறத்தவனாயும், ஞானி துறவறத்தவனாயும் நிற்றலே பெரும் பான்மையாதலின், யோகியைப் பற்றிக் கூறும் இப்பகுதியுள் இப் பரியங்க யோகம் கூறப்படுகின்றது. அகத்தியர், கௌதமர் முதலியோர் போல ஞானியராயும் இல்லறத்தில் நிற்றல் சிறுபான்மை, அவர்க்கும் இப்பரியங்கயோகம் உரித்து என்க. ``யோகம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. நெஞ்சு நிறைந்தது. வாய்கொளாமையாவது, உள்ளத்தில் நிறைந்த இன்பம் வாயால் சொல்ல வாராமை
இதனால், பரியங்க யோகத்திற்கு நாழிகை வரையறை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே. 

பொழிப்புரை :

பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகையளவு நிலை யின் திரியாது நிற்பதாகிய இவ் அரிய செயலைப் பொருந்தினவர்க் கல்லது வேறொருவனுக்கும் இணை விழைச்சு கொள்ளத் தகாததே.

குறிப்புரை :

பின் வந்த ``யோகம்`` ``செயல்`` என்னும் அளவாய் நின்றது. சரி வளை, இருபெய ரொட்டு. ``உருவி`` என்பதனை, `உருவ` எனத் திரிக்க. ``வேறு ஒருவற்கும்`` என ஒரு சொல் வருவித்தும், உம்மை விரித்தும் உரைக்கப்பட்டது. `ஒருவன், யோகியருள் ஒருவன்`` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று. ஒண்ணாததாதல், தவநெறி ஒழியப் பவநெறியாதல் பற்றி.
இதனால், இல்லறத் தவருள் யோகியர் பரியங்க யோகத்தைக் கொள்ளாதவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மென்றெண்ணி இருந்தார் இருந்ததே. 

பொழிப்புரை :

செய்தற்கரிய இப்பரியங்க யோகத்தைப் பொருந் தினவர் எத்தகைய பெருமையுடையவர் என்றால் ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவ `` னாயும் (தி.6 ப.50 பா.3) ``மங்கை யோடிருந்தே யோகு செய்பவ `` னாயும் (தி.9 ப.13 பா.11) உள்ள சிவபெருமானே எனத் தக்க பெருமை யுடையவர். ஏனெனில், தாம் பெற்ற அரிய அமுதத்தை அதனை நுகர்தற்குரிய ஐந்து நாழிகை யளவிலும் ``உளத்தால் நுகரேம்`` என உறுதிபூண்டு, முன்பு இருந்த ஏழாந் தானத்திலே இருப்பர் ஆதலால்.

குறிப்புரை :

பண்ணுதல் - தேடிக்கொள்ளுதல், இங்குத் துணைவியை மணந்துகொள்ளுதல். ``ஆரமுது`` என்றது வாயூறலை. என்னை? இன்பத்தை விரும்புவார்க்கு அது பாலொடு தேன் கலந்தாற் போல (குறள், 1121) இனிதாகலின். `கடிகையினும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``இருந்தது`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. அதன்பின், ``ஆதலால்`` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. பின்னிரண்டு அடிகளால் பரியங்க யோகத் திருத்தலின் அருமை கூறியவாறு.
இதனால், பரியங்க யோகத்தில் நிற்பாரது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னற்கும் ஆனந்தம்
ஆய்ந்த குழலியோ டைந்தும் மலர்ந்திடச்
சோர்ந்தனன் சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே. 

பொழிப்புரை :

பெண்மகளுக்கும், ஆண்மகனுக்கும் வேட்கை மிக்கிருக்கின்ற அகவையளவு முறையே இருபது ஆண்டும், முப்பது ஆண்டுமாம். முப்பது ஆண்டிற்குமேல் ஆண்மகன் ஐம்புலன்களையும் ஒருங்கு நுகரும் வேட்கை மிகுவனாயின், விந்து சயம் பெற்று நிற்கற்பாலன்.

குறிப்புரை :

`இதுவும் யோகியைக் குறித்ததே` என்பதை மறவற்க. ``சோர்ந்தனன்`` என்பதன் பின், ``ஆயினும்`` என்பது எஞ்சி நின்றது. ``சித்தமும்`` என்ற உம்மை, சிறப்பு. ``சோர்வில்லையாகுக`` என ஆணையாக ஓதற்பாலதனை, ``இல்லை`` என இயல்பாக வைத்து ஓதினார்.
``பன்னீராட்டைப் பிராயமும், பதினாறாட்டைப் பிராயமும் முறையே பெண்டிர்க்குப் பெண்மையும், ஆடவர்க்கு ஆண்மையும் உளதாம் காலம்`` (இறையனார் அகப்பொருள் உரை. தொல்காப்பிய உரைகள்) என்பர் ஆதலின், ``அதுமுதல் எட்டாண்டுக் காலமே பெண்டிர்க்கு வேட்கை மிக்கிருக்கும் காலம்`` என்று கூறியவர், ``ஆடவர்க்குப் பதினான்கு ஆண்டுக் காலம் வேட்கை மிக்கிருக்கும்`` என்று கூறியதனால், ஆடவர் வழிமுறைக் கிழத்தியரோடும் வேட்கை மிக்கிருத்தல் பெறப்பட்டது.
இதனால், பரியங்க யோகி விந்து சயம் பெற முயலுதற்குக் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வெள்ளி யுருகிப்பின் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
அள்ளிஉண் ணாவில் அடக்கிவைத் தாரே. 

பொழிப்புரை :

பரியங்க யோகம் செய்பவர்க்கு வெண்பால் உருகிச் செம்பாலில் வீழாதபடி, அவரது உள்ளத்துள்ளே ஒளிந்து நிற்கும் சிவபெருமான், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் நிற்கும் தனது திருவருளைக் கொண்டு தடுப்பான். அதுவன்றி, அந்த யோகியர் தமது மூலாக்கினி மூண்டெரியச் சுழுமுனை வழியே சென்று அள்ளி உண்ணும்படி அமுதத்தை அவர் நாவடியில், பொருந்த வைத்தும் உள்ளான்.

குறிப்புரை :

`குழல்` என்பது `வெளிப்பொருளில் நெருப்பூதும் குழலைக் குறிக்கும். ``உண்ண`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. உண்ணுதற்கும், அடக்குதற்கும் செயப்படுபொருள் மேலெல் லாம் விளங்கிக் கிடந்தது. உண்ண அமுதத்தை வைத்தமை கூறியது, பின் யோகம் முதிர்ந்து பயன் தருமாறு தோன்றுதற்பொருட்டு.
இதனால், ``விந்து சயமும் திருவருளாற் பெறற்பாலது`` என்பதும், அச் சயம் யோகம் முற்றுதற்குத் துணையாதலும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 11

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே. 

பொழிப்புரை :

இன்பம் தூய்த்தற்குச் சிவனால் அமைக்கப்பட்ட துணைவன், துணைவி என்னும் இருவரும் அவ்வின்பத்தில் திளைப் பினும், உள்ளம் திரியாது நின்றே செய்கின்ற கலவித் தொழிலால் யோகி, பத்துத் திக்கினர்க்கும், பதினெண்கணத்தவர்க்கும் ஞான சூரியனாய் நிற்கும் திறப்பாடுடையவனாவான்.

குறிப்புரை :

``ஆனந்தம்`` என்றது, அதற்கு ஏதுவாய செயலை, ``ஆனந்தத்தால்`` என உருபு விரித்து, ``வெங்கதிரோன் ஆவன்`` என முடிக்க. ``வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே`` என்றாராயினும், ``வெங்கதிரோனாம் வித்தகனாம்`` என்றலே கருத்து. நிற்றற்கு, ``யோகி`` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், பரியங்க யோகி கலவிக் காலத்திலும் உணர்வு திரியாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தம்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே. 

பொழிப்புரை :

அறிதுயிலுக்கும், அறியாத் துயிலுக்கும் இடையே நிற்கின்ற துணைவியைத் துணைவன் புல்லுமிடத்து இருவரும் அவ்வின்பம் முற்றுங்காறும் திங்கள் போன்ற முகத்தில் உள்ள சிவந்த வாயைப் பொத்தியேயிருந்தாராயினும், துணைவனுக்கு வேறோர் இன்பமும் அவ்விடத்து உளது.

குறிப்புரை :

சூரியன் ஒளிப்பொருளாகலின் ஞானத்திற்கும், சனி`மைம்மீன்` (புறம். 117) ஆகலின், அஃது அஞ்ஞானத்திற்கும் உவமை யாயின. அறிதுயில், யோகம். அறியாத் துயில், உறக்கம், புணர்ச்சி இவ் விரண்டிற்கும் இடைநிகழ்வதேயாகலின், அதற்கு உரியவளாகிய துணைவியை, அவ்விடத்து நிற்பவளாகக் கூறினார். ``ஓர் ஆனந்தம்`` என்றது, `வேறோர் ஆனந்தம்` என்னும் குறிப்பினது. அவ்வானந்தம் சிவானந்தமாதல் வெளிப்படை. `தங்களில் புதைத்திருந்தார்` என இயையும். `பொன், (வியாழன்) வெள்ளி, சனி, வெங்கதிர், திங்கள், செவ்வாய்` என்பன சில சொல் நயங்கள். `பொன், வெள்ளி` என்ப வற்றின் உட்பொருள் மேல் (818) உரைக்கப்பட்டன. ``புதைத்தல்`` என்பது இரட்டுற மொழிதலாய், செய்தல், செய்யப்படுதல் என்னும் இரு பொருளையும் தந்தது. ``திங்களிற் செவ்வாய் புதைத்திருந்தாரே`` என்பது, ``வளி இடை போழப்படாதவாறு முயங்கினாரே`` (குறள், 1108) எனப் பொருள் தந்தது. ஏகாரம், தேற்றம். இதன்பின், ``ஆயினும்`` என்னும் சொல்லெச்சம் விரித்து, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பொருள் உரைக்க.
இதனால், பரியங்க யோகி சிற்றின்பத்திலும் பேரின்பத்தினை இழவாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே. 

பொழிப்புரை :

இன்பத்தில் வேட்கை கொண்ட மனம் கலவியால் நிறைவு பெற்றபின், மேலும் அவ்வேட்கையை உற்றுக் குறைபடாத வாறு திருத்துகின்ற `சிவன் சத்தி` என்னும் இருவரிடத்தும் தனது மனம் பொலிவோடு பொருந்தி அவ்விடத்தே நிற்கப்பெற்றால் துணைவியை யுடைய யோகிக்கும் அவளையுடைமையால் உலகியல் துன்பமும் உண்டாகாது. விந்துவும், கீழ் விழுவதாகாது, மேல் எழுவது (ஊர்த்துவ ரேதசு) ஆகும்.

குறிப்புரை :

``திருத்தி`` என்பது, ``நிறைவு`` என்னும் பொருட்டாய வடமொழிப் பெயர்ச்சொல். புதன் - புத்தி; மனம். ``யோகி, தன்மனத்தை நல்வழிப்படுத்துவர் சிவனும், சத்தியுமே என உணரின், அவன் மனம் அவரிடத்தே பதிந்து நிற்கும்`` என்றற்கு, ``மனத்தைத் திருத்தல் செய்வார்க்கு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார்.
``திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை
இடங்கொள் கயிலாயா`` -தி.7 ப. 47 பா. 8
``நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ`` -தி.4 ப. 23 பா.9
என்பவற்றால் இறைவன் தன் அடியவர் மனத்தைத் திருத்துபவனாதல் அறிக. ``செய்வார்க்கு`` என ஒருமையாக ஓதாது, ``செய்வார்க்கு`` எனச் சத்தியை வேறாக வைத்து ஓதினார், இங்குக் கூறப்படுவன திரோதான சத்தியின் செயலாதல் பற்றி இனி, ஒருமையாகவே பாடம் ஓதுதலும் ஆம். ``செய்வார்க்கு`` என்றது உருபு மயக்கம். இவ்வா றெல்லாம் இன்றி, ``செய்வார்`` என்பதனை யோகியர்க்கு ஆக்கி, ``அங்கு`` என்பதனைப் பண்டறி சுட்டாக வைத்து, ``இருக்கில்`` என்பதற்கு, `இருக்கும் நிலை வாய்க்கப் பெற்றால்` என உரைத்தலும் ஆம். இப்பொருட்கு, `மங்கை பங்கர்க்கும்` என்பது பாடமாதல் வேண்டும். பிறவாறு கூறாது, யோகியை `மங்கை பங்கன்` என்றார், `ஊர்த்துவ ரேதசுடையானாய்ச் சிவனோடு ஒப்பன்` என்றற்கு. ``பங்கன்`` என்பதில் உள்ள பங்கு, வாழ்க்கைக் கண்ணது. இவ்வா றாயினும், `முற்றத் துறந்த யோகி சிறப்புடையன்` என்றற்கு, `மங்கை பங்கற்கும்` என இழிவு சிறப்பும்மை கொடுத்தார். ஏனை இரண்டு உம்மைகளும் எச்சங்கள். துருத்தி - உடம்பு.
இதனால், பரியங்க யோகி உலகியலால் தாக்குண்ணாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே. 

பொழிப்புரை :

இம் மந்திரம் ஒட்டணி. ஆகவே, இதன் பொருள் வருமாறு:-
மூலாக்கினியைத் தலையளவும் கொண்டு செலுத்தினால், அங்குள்ள அறிவாற்றல் சிவனை அறிந்து அவனிடத்துத் தோயும் அன்பாக மாறுவது உண்மை. இவ்வாற்றால் ஏழாந்தானத்திற் சென்று சத்தியை உணர்ந்தவர்கள். பின் உலகியலில் கிடந்து தடுமாறுதல் இல்லை. அதற்குமேல் நிராதாரத்திற் சென்றவர்கள் சுவாதிட்டானத்தில் நிகழும் காமத்தில் வீழ்தல் இல்லை.

குறிப்புரை :

`மெழுகு எய்திடும்` என இயையும். உருகும் பரிசு - உருகுதலாகிய தன்மை. உழுதல் காலாலும் கையாலும் வழியைத் தடவுதல். வெளி - வான். இது வானில் இயங்கும் முறையைக் குறித்தது. `இம்முறையை உணர்ந்தோர் நிலத்தில் வீழ்ந்து நடந்து இளைத்தல் இல்லை` என்க. இம்மந்திரத்துள் அடியோடு அடிக் கூட்டத்து நிரையொன் றாசிரியத்தளை சிறுபான்மை மயங்கிற்று.
இதனால், ``வருத்தமும் இல்லை``, ``வெள்ளியும் சோராது எழும்`` என மேற் கூறப்பட்டவை உவம வாயிலாகத் தெளிவிக்கப் பட்டன.

பண் :

பாடல் எண் : 15

வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறிவின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே. 

பொழிப்புரை :

யான் என் ஆசிரியர் நந்தி பெருமானது அருளால் வான மண்டலமாகிய நிராதாரத்தையும், அதில் விளங்குகின்ற அருளொளியையும், அவ்வொளியால் தெளியப்படுகின்ற மெய்ப் பொருளையும் உணர்ந்து, அவ்வுணர்வு கெடாதிருக்க விந்து சயம் பெறும் முறையையும் உணர்ந்தேன். யோகத்தில் இதற்குமேல் அறியத் தக்கது ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

குறிப்புரை :

``அறிந்து`` என்பதனை, ``ஒளியை`` என்பதற்கும் கூட்டுக. ``அறிவின் உளி`` என்பதில் இன் வேண்டா வழிச் சாரியை. ``உளி`` என்றது, ``கருவி`` என்றவாறு. இஃது உருவக அணி. ``உளி - கூர்மை`` எனின், ``அறிவின் உளி`` என்பது ஆறாவதன் தொகையாம். ``அறியின்`` என்பது பாடம் அன்று, ``அறிவின் உளி முறியாமே`` என்ற தனை, நான்காமடியின் முன்னே கூட்டி உரைக்க. நான்காம் அடியில், ``வெளி`` என்பது, ``வெள்ளி`` என்பதன் இடைக்குறை அஃது அதனை வசப்படுத்தும் முறையைக் குறித்தது. விந்து சயம் துறவிகளும் கொள் ளத் தக்கதாகலின், நாயனார் அஃது உடையராய் இருந்தார் என்க.
இதனால், விந்து சயம் அநுபவ நிகழ்ச்சியால் கூறும் முகத்தால், பரியங்க யோகி அஃது உடையனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.

பொழிப்புரை :

``இல்லறத்தவருள் நிராதார யோகத்தில் நின்று அதனால் வியாபக உணர்வைப் பெற்றிருந்தோர் எவரேனும் உளரோ`` எனின், அயன், மால், நந்தி கணங்கள், ஆகிய யாவரும் அத்தகை யோரே. இவரெல்லாம் துரிய மூர்த்தியாகிய சிவனை உணர்ந்து, அவனையே பரம்பொருளாகத் தம் துணைவியருக்கு உணர்த்தினர்.

குறிப்புரை :

எனவே, ``அத் துணைவியரும் தம் துணைவர் செயலை உவந்திருந்தினர்`` என்பது போந்தது. ``இல்லறத்தவருள்` என்பது அதிகாரத்தால் வந்தது. ``ஆர்`` என்பதன்பின், ``உளர்`` என்பது எஞ்சி நின்றது. `நந்திகள்` என்னாது, ``நந்தி`` என்றது பன்மை ஒருமை மயக்கம். `மாலும் திசைமுகனும் மாநந்தியாயவரும் ஆவர்`` என்க. துரியம், இங்கு, யோக துரியம். சாக்கிரம் முதலிய நான்கும் யோகத்தில் முறையே இருதயம், கண்டம், உச்சி நிராதாரம் என்பவை இடமாக நிகழும். ``மின்னிடையாளுக்கு`` என்றதும் பன்மை ஒருமை மயக்கம். `மின்னிடையாருக்கு`` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால், உயர்நிலை வானவர் பரியங்க யோகத்தால் அந்நிலை இழவாது நிற்றல் கூறும் முகத்தால், அவ்யோகப் பயன் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே. 

பொழிப்புரை :

துணைவனும், துணைவியும் தாம் கூடுகின்ற காலத்துத் தங்கள் உள்ளத்தை ஆஞ்ஞை முதலிய மேலிடங்களில் பொருந்த வைத்து, அங்கு விளங்குகின்ற சிவனுடன் தங்களை ஒன்று படுத்த வல்லவராயின், இவ்வுலகத்திலும் பல்லூழி காலம் வாழ்தல் கூடும்.

குறிப்புரை :

``மின்னாளன்`` என்பதில் மின் - பெண்டு. பொன் இடை வட்டம், பொன்னை உள்ளிட்ட இடம்; பொன்னம் பலத்தை, ``பொன்`` என்றார், அதனை உள்ளிட்ட இடம். ஆஞ்ஞை முதலாக மேலே உள்ளவை. புகப் பெய்தலுக்கு, ``உள்ளம்`` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. ``தன்னொடு`` என்பதில் தான், சிவன். ``தன்னை`` என்பது `மின்னிடையாள், மின்னாளன்`` என்பவற்றோடு தனித்தனி சென்று இயையும். விண்ணிடைப் பல்லூழி வாழ்தல் இயல்பாகவே பெறப்பட்டுக் கிடத்தலின் மண்ணிடைப் பல்லூழி வாழ்தலும்`` என் னும் உம்மை இறந்தது தழுவிற்று. இதன்கண் இனவெதுகை வந்தது.
இம்மந்திரத்தினை நாயனார், துணைவி, துணைவன் இருவர்க்கும் ஒப்பக் கூறியதனால், பரியங்க யோகம் பெண்டிர்க்கும் உரித்தாதல் பெறப்பட்டது. இதனால், சிவநெறி, மெய்ந்நெறியை இருபாலார்க்கும் ஒப்ப உரித்தாகக் கூறுதல் அறியப்படும். காரைக்கால் அம்மையார் தாம் கணவனோடு வாழ்ந்த காலத்தில் தம் உடம்பை அவனுக்காகவே தசைப் பொதியாகச் சுமந்து நின்றமை தி.12 திருத் தொண்டர் புராணத்தால் அறியப்படுதலின், அக்காலத்து அவர் பரியங்க யோகம் உடையராய் இருந்தமை உய்த்துணர்ந்து கொள்ளப் படும்.
இதனால், பரியங்க யோகம் காயசித்தியையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே. 

பொழிப்புரை :

துணைவி வாங்கிக் கொள்ளத் துணைவனிட மிருந்து நீங்குவதாகிய விந்துவை அங்ஙனம் நீங்காமல் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் வாங்கி, பின் அஃது உடம்பினுள் ஆற்றலாய் மிகுமாறு உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (`அரியர்` - என்றபடி.) இனி, அவ்வழியை அறிந்தவர் யோகத்தில் மிக்கு விளங்கும் தம்மைப் போகத்திற்கும் தகுதியுடையவராகச் செய்து கொண்டவராவர்.

குறிப்புரை :

முதற்கண் நின்ற வாங்குதலுக்கு, `துணைவி` என்னும் எழுவாய் வருவிக்க. இறுதல் - அழிதல்; அஃது இங்கு, நீங்குதலைக் குறித்தது. ``வாங்கல்`` என்பது அதற்குரிய முறையை உணர்த்திற்று. முதற் சீரினையும் ``வாங்கல்`` என்றே பாடம் ஓதின், ``வாங்கலால் `` என உருபு விரிக்க. ``வலித்தல் - திட்பம் செய்தல். ``யுக்தம்`` என்னும் ஆரியச் சொல்லின் திரிபாகிய ``உத்தம்`` என்பது இடைக் குறைந்து நின்றது. இது வருகின்ற திருமந்திரத்திற்கும் ஆம். ``போகத்திற்கு`` என்பது அதிகாரத்தால் வந்தது. உத்தராவாரை. ``உத்தம்`` என்றது. ஆகுபெயர். ``போகத்திற்குத் தகுதி`` என்றது, அதனால், ஆற்றலும், மனப் பண்பும் கெடாமையை. மேலேயும், (பா.815) அரிய இவ்யோகம் அடைந்தவர்க்கல்லது ... ... ... ஒருவற்கு ஓண்ணாதே`` எனக் கூறினார். இம்மந்திரம் பலவிடத்துப் பாடம் திரிந்துள்ளது.
இதனால், பரியங்க யோகத்துள் விந்து சயத்துடன் நிற்றலின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டால்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே. 

பொழிப்புரை :

போகத்தை நுகர்தற்குத் தகுதியான வழியை அறிந்து அவ்வெள்ளத்தில் மூழ்கினால், அவ்வழி உம்மால் நன்கு பயிலப்பட்டு அந்நிலையிற்றானே நரை வாராதொழியும். எக் காலத்தும் உமது நன்மையையே நினைத்திருப்பவளாகிய சத்தியும், உமது பக்குவ காலத்தை அறிந்து உங்கள் உணர்வில் உலகியலைப் போக்கி யருள்வாள்.

குறிப்புரை :

``உதம்`` (உத்தம் என்றது, அதற்குரிய வழியை. கதம் - அடையப்பட்டது. அது, முதற்கண் கூறிய வழியேயாம். அறிந்து - அறியப்பட்டு. இது, காரணப் பொருட்டாய்ப் பின் வரும் கபாலம் கறுத்தற்கு ஏதுவாதலை உணர்த்திற்று. கபாலம், ஆகுபெயர். பார் - உலகம், என்றது உலகியலை. இறுதிக்கண் இங்ஙனம் பொதுப் படக் கூறவே, உலகியலுள் தலையாயதான காம இன்பம் பற்றிப் ``பரியங்க யோகம்`` எனக் கூறப்பட்டதாயினும், அந்நிலை யோகியர்க்குப் பிற உலகியலிலும் உளதாதல் குறிக்கப்பட்டதாம்.
இதனால், பரியங்க யோகியர்க்கு நல்வாழ்வும், வீடு பேறும் கேடுறாமை கூறப்பட்டது. ``இவை அனைத்திற்கும் திருவருளே காரணம்`` என அறிவுறுத்தப்பட்டவாற்றைக் கடைப்பிடிக்க.

பண் :

பாடல் எண் : 20

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 

பொழிப்புரை :

இது பிசிச் செய்யுள் ஆதலின், இதனை விடுத்துக் காணுமாறு:- பங்கயம் - தாமரைக் கொடி. ``இது, மண்ணும், தண்ணீரும் இல்லாமலே முளைத்து வளர்ந்தது`` என்றதனால், சுழுமுனைத் தண்டைக் குறித்தது. ``அக்கொடிக்குச் சல்லிவேர், ஆணிவேர் முதலியன இல்லாமலே பூப் பூத்தது`` என்றதனால், அஃது அத்தண்டு ஆதார பங்கயங்களை உடைத்தாதலைக் குறித்தது. தார் - இழை போன்றவை. ``ஊர்`` என்றது ஊரின்கண் வாழ்வாரை. ``அவர் (ஏற்றுவார்) ஒருவரும் இல்லாமலே காணப்படுகின்ற விளக்கு ஒன்று உண்டு`` என்றதனால், அஃது, அவ்வாதார நிராதாரங்களில் ஏற்ற பெற்றியால் விளங்கும் அருளுருவத்தைக் குறித்தது. பூ - நிலம்; உலகம் ``காட்சிக்கு வாராது, ஆசிரியர் தம் அருள் மொழிக் கேள்வி யால் அறியப்படுகின்ற உலகம்`` என்றதனால், அஃது அண்டத்தைப் போலவே பிண்டத்திற்குக் கொள்ளப்படும் உலகங்களைக் குறித்தது. கீழ்மேல் இல்லை என்றதனால் அவை பாவனைப் பொருளாதல் குறிக்கப்பட்டது. ``பூவிற்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தல் ஆயிற்று.

குறிப்புரை :

``யோக நெறியில் உள்ள பொருள்கள் இத்துணை வியப்புடையன`` என்றவாறு. இதனை இவ்விடத்திற் கூறினார். ``மான் தோல், புலித்தோல, தருப்பை முதலிய ஆசனங்களின் மேல் இருத்தலும் காடு, மலை, முழை முதலிய இடங்களில் தனித்திருத்தலும் போல்வன இல்லாமல், கட்டிலிற் பஞ்சணையின் மேல் துணைவியுடன் கிடந்தும் முனிவராய் நிற்கும் வியத்தகு நிலையும் யோகத்தால் கூடும் என்பது தோன்றுதற்கு.
இதனால், ``பரியங்க யோகம் வியப்புடையதொன்று`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே. 

பொழிப்புரை :

உடம்பில் இயல்பிலே பொருந்தியுள்ள ஆற்றல் மிக்க, குடிக்கத் தகும் நீர், கடலில் சிறிய கிணற்றுக்கு இடப்படும் ஏற்றத்தை இட்டு இறைத்துக் கொள்ளுதலோடு ஒத்திருக்கும். (அஃதாவது, ``மிகுதியாய் வெளிப் போகும் சிறுநீரில் சிறிதளவு உளதாகும்`` என்பதாம்) அதனை உடலினின்று வெளிப்போதும் முன்பே வேறொரு வழியால் அவ்வுடலுக்கே ஆகுமாறு பாய்ச்சினால், உயிர் துன்பப் படாது நெடுங்காலம் நிற்கும்படி நிறுத்துதல் கூடும்.

குறிப்புரை :

``அமுரி`` என்றாயினும், ``நீர்`` என்றாயினும் ஒரு பெயர்ச் சொல்லால் ஓதின், ``அது சிறுநீரே போலும்`` என மலைய வரினும் வரும் என்னும் கருத்தால், அங்ஙனம் மலையாமைப் பொருட்டு, ``உறுதிக் குடி நீர்`` எனத் தொடர்மொழியால் பொருள் இனிது விளங்க ஓதினார். சிறுநீர் தீப்பொருளாய்க் கழிக்கப்படுவது ஆதலின், அஃது உறுதியைத் தருவதாய்க் குடிக்கத் தக்கதாகாமை வெளிப்படை.
``உடலில் இறைக்கில்`` என்றது, ``உடலினுள் இருக்கும் பொழுதே இறைத்தால்`` என்றவாறு. வேறொரு வழி, சுழுமுனைத் தண்டு; உடலில் உள்ள பல நாடிகளும் இதனைச் சுற்றிக்கிடத்தலால், அவற்றின்வழி அமுரியைப் பிராண இயக்கத்தால் உடல் எங்கும் செல்லுமாறு பாய்ச்சுதல் கூடும் என்க. யோக முயற்சி இல்லாதார்க்குப் பிராணன் அபானனாதல் பெரும்பான்மையாய்க் கீழ்ப்போய் ஒழிய, யோக முயற்சி உடையார்க்கு அஃது அவ்வாறாகாமல் சுழுமுனைவழிச் சென்று உடற்குப் பயன் தருதல்போல, அமுரியும் பிறர்க்குச் சிறுநீரோடு ஒன்றாய் வெளிப்போந்து ஒழிய, யோகியர்க்கு அவ்வாறாகாமல் உடற்கண் சென்று பயன்படுவதாம். அதனை அங்ஙனம் பயன்படச் செய்யும் முறையையே, ``உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்`` என்றார். ஒன்று - ஒன்றாய் நிற்கும் உடல். நடலை - துன்பம். ``உயிர் நாட்டலும் ஆம்`` என்றது, அமுரியின் பயன் கூறும் முகத்தால் பெயர்க் காரணத்தை விளக்கியவாறு.
இதனால், ``அமுரியாவது இது`` என்பதும், அதனைத் தரிக்கும் முறையும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

பொழிப்புரை :

யோக முறையால் வடித்துக்கொள்ளப்படுதலால் ``சிவ நீர்`` எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இந்த அமுரியைப் பருகுதலை மேற்கொண்டால், ஓராண்டுக் காலத்தில் அறிவு மிக விளக்கம் பெறும். உடலுக்கு உள்ள நோய், இளைப்பு முதலிய குறைகள் நீங்கும். எட்டாண்டில் வாசி யோகம் கைவரும். அதனால், மன ஒருமை உளதாகும். அதனால் அமைதியான ஓர் இன்பம் தோன்றும். உடம்பு பொன் போல அழகு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

``தெளி தரும்`` என்றது, ``தெளித்துத் தரப்படும்`` என்னும் பொருளது. இதனானும், சிறுநீரே அமுரி அல்லது சிவ நீர் ஆகாமை அறியப்படும். ``பருகில்`` எனப் பொதுவகையாற் கூறினாரேனும், மேல், ``உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்`` என்றதே பொருளாம். ``ஓராண்டில் எட்டில்`` என்பவற்றை அவ்வவ் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், அமுரி தாரணையின் பயன்கள் பலவும் எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே. 

பொழிப்புரை :

யோகியர்களே, நீவிர் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு மருந்து ஒன்றும் வேண்டுவதில்லை. மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெளிந்து அறிவிற்கு நிலைக்களமான உச்சியில் அதனை அப்பினாலும் அவ்வாறாம். இன்னும் இதனாலே நரையும் மாறும்.

குறிப்புரை :

நூறுதல் - பொடித்தல். ``நூறு மிளகு`` எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாமை அறிக. நுகரும், பன்மை ஏவல். ``மாந்தர்கள்`` என்பது பாடமாக ஓதின், இதனை, ``நுகர`` எனச் செயவென் எச்சமாக ஓதுக. ``நீர் சிவத்தின் மாறும்`` என மாற்றி யுரைக்க. சிவத்தின் - சிவமாக. ``மருந்தில்லை`` என்றதனால் இங்குக் கூறப்பட்டவை யோகியர்தம் ஒழுக்கப் பகுதியாய், அமுரி தாரணை யாய யோகத்திற்குத் துணையாவனவாயின. கப்புதல் - மூடுதல் `கப்பஇடின்` என்பதில் அகரமும், ``கப்பிடினும்`` என்னும் எச்ச உம்மையும் தொகுத்தல் பெற்றன. `உச்சிக்கு அப்பிடின்` எனப் பாடம் ஓதி, `உச்சிக்கு என்பது உருபு மயக்கம்` என்றலும் ஆம். ``இதற்கு`` என்பது உருபு மயக்கம்.
இதனால், அமுரி தாரணைக்குத் துணையாவன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.

 அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

பொழிப்புரை :

உண்ணத் தகுவதனையும், தகாததனையும் அறிய மாட்டாத சிலர், தம்வழி நிற்பாரை, கடற்கரையின் அருகில் கானலிலே உள்ள உப்பங்கழியின் நீரை அப்படியே முகந்து உண்ணுமாறு பணிப்பர். அந்நீரை நுரையையும், பிற மாசுகளையும் நீக்கி உண்ண வல்லவர்க்கே பயன் உளதாம்.

குறிப்புரை :

இது ஒட்டணி. இதனுள் ``உவரி`` என்பது அடை பொதுவாக்கி மொழிதலும், ஈற்றடி அடை விரவத்தொடுத்தலும் ஆம்.(தண்டியலங்காரம், 51) இதனாற் பெறப்படும் பொருள் வருமாறு:- சுவாதிட்டானத்திற்கு அருகில் நின்று குறிவழியே வெளிப்போதுகின்ற சிறு நீரையே சிலர் `அமுரி` எனச் சொல்லிப் பிறரை உண்பிக்கின்றனர்; அஃது அறியாமைப்பாலது. அச் சிறுநீரைக் குற்றம் களையும் முறையறிந்து களைந்து உண்ண வல்லவர்க்கே அமுரியால் விளையும் பயன் உளதாகும்.
கானல் - கடற்கரையை அடுத்த இடம். `கானல்` எனவே, கரை, கடற்கரையாயிற்று. `உவரி` என்பது காரணக் குறியாய் உப்பங்கழி நீரைக் குறித்துச் சிறுநீர் மேலும் நோக்குடைத்தாயிற்று. வரைதல் - கொள்ளுதல். ``வரை வரை`` என ஏவல் முற்று, வலியுறுத்தற்கண் அடுக்கி வந்தது. இது பன்மை ஒருமை மயக்கம். முதற்கண் நின்ற திரை, அலை. அஃது ஆகுபெயராய் அதன்மேல் மிதக்கும் மாசுகளைக் குறித்தது. ``நரை திரை மாறும்`` என்றது, `மூப்பு நீங்கி இளமை உண்டாகும்` எனவும், ``நமனும் அங்கு இல்லை`` என்றது கூற்றுவன் வருதலும் அவரிடம் இல்லை எனவும் கூறியவாறு. ``நமன்`` என்பது அவனது வருகைமேல் நின்ற ஆகுபெயர். வரைதலைத் தள்ளுதலாக்கி, அதற்கியைய உரைப்பாரும் உளர்.
இதனால், `அமுரி` என்பதனை உள்ளவாறு உணராத வழிப் பயன் இன்மை கூறப்பட்டது.
இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் ``அளக நன்னு தலாய்`` என்னும் செய்யுள் நாயனார் திருமொழி அன்று என்பது, யாப்பமைதியானே எளிதின் விளங்கும். அன்றியும், மகடூஉ முன்னிலையாக நாயனார் மந்திரம் செய்யாமையும் நோக்கற்பாற்று. யாப்பமைதியைச் சீர்செய்தற்கு நிகழ்ந்த சிறு முயற்சி, ``அழகிய நன்னுத லாயோ ரதிசயம்`` எனவும், ``இளகிடும் மேனி`` எனவும் காணப்படுகின்ற பாட வேற்றுமைகளால் அறியப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 5

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

பொழிப்புரை :

அமுரியை, `வீரத்தைத் தரும் மருந்து` என்றும், `தேவர் உண்கின்ற அமுதம்` என்றும், `மகளிரோடு மெலிவின்றிக் கூடுதற்குரிய மருந்து` என்றும் எங்கள் நந்தி பெருமான் அருளிச் செய்தார். `இஃது இறைவனே மக்கட்குப் படைத்துத்தந்த இயற்கை மருந்து` என்று குருமொழியால் அறிகின்றவர்கள், இதன் பயனை இவ்வுலகத்தில் கண்கூடாகக் காணும் மருந்து இது. இதன் பெருமையைப் பொதுமக்கட்குச் சொல்லுதல் கூடாது.

குறிப்புரை :

`சொன்னால் இதனைப் பெறும் முறை அறியாமையால் சிறுநீரையே உண்பவராவர்` என்பது கருத்து. நாரி, பன்மை ஒருமை மயக்கம். ஆதி - இறைவன். சோதி மருந்து, வினைத்தொகை. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், அமுரியின் சிறப்பு விரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. 

பொழிப்புரை :

சந்திரனிடத்துப் பொருந்தியுள்ள கலைகள் நுண்மை யினின்று வளர்ந்து பருமையாக நிறைவெய்தும், (பின் பருமை யினின்றும் தேய்ந்து நுண்மையாக ஒடுங்கும்) வளர்பிறை தேய்பிறை என்னும் இருவகைப் பக்கத்திலும் அவை அவ்வாறாதல் போல உடம்பில் உள்ள சந்திர மண்டலத்தின் ஆற்றல்களும் நுண்மை யினின்றும் வளர்ந்து பருவுடம்பில் நிறைதலும், பருவுடம்பினின்றும் தேய்ந்து நுண்ணுடம்பில் ஒடுங்குதலும் உடையவாம்.

குறிப்புரை :

`சூக்குமம்` என்பது, ``சூக்கம்`` என மருவிற்று. உவமையில் வளர்தல் கூறியதனானே தேய்தலும் பெறப்பட்டது. அஃது, ``இருவகைப் பக்கத்துள்`` என்பதனானும் அறியப்படும் `அவ்வாறு எய்தும் கலைபோல` என்க. ஆம், அசைநிலை. ``துய்யது`` என்றது, சந்திரமண்டலத்தை, என்னை? சந்திரனோடு ஒப்பிக்கத் தக்கது அதுவேயாகலின், உவமையிற்போலப் பொருளிலும் `சூக்கத்தில், தூலத்தில்` என நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு விரிக்க. ``காயம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `துய்யது காயத்தில் சூக்கத்தினின்றும் தூலத்தினின்றும் ஏறி இறங்கும்` எனக் கூட்டி உரைக்க. சந்திர மண்டலத்தின் ஆற்றலைத் தனக்கேற்ற வகையில் பெற்ற நுண்ணுடம்பையே நாயனார்மேல் (பா.625) `பரகாயம்` எனக் கூறியிருத்தல் இங்கு நினைவு கூரத்தக்கது.
இதனால், பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் அண்டத்தில் உள்ள சந்திர மண்டலத்தோடு ஒத்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே. 

பொழிப்புரை :

யோகத்திற்கு உரியனவாகின்ற சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை என்பவை முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்து என்னும் எண்ணிக்கையை உடையன. இயங்குகின்ற அவ் எல்லாக் கலைகளும் யோகி தனது அறிவால் அறிந்து அமைக்க அமைவனவே; அண்டத்தில் உள்ள சந்திரன் முதலியவற்றின் கலைகள் போல இயல்பாக அமைந்தன அல்ல.

குறிப்புரை :

யோகியால் அறிந்து அமைக்கப்படுதலாவது, ஒரு முறை பூரித்துக் கும்பித்து இரேசித்து முடிப்பது `ஒருகலை` எனப் படுதல். ``உள்`` என்னும் முதனிலை, `உள்ளன` எனப் பொருள் தந்தது. இடைவழி - நடு நாடி. ``இடைவழி ஆகின்ற யோகி`` என்றது, யோகியின் தன்மையை விதந்தவாறு. யோகத்தில் கொள்ளப்படும் `சந்திரன், சூரியன், அக்கினி` என்பன, இடை பிங்கலை சுழுமுனை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுக்கள் என்பது மேலே பலவிடத்தும் பெறப்பட்டது. உலகச் சந்திரனுக்குக் கலைகள் பதினாறாதலும், சூரியர் பன்னிருவர் எனப் படுதலும் ஆகிய ஒற்றுமைபற்றி இங்குச் சொல்லப்படும் கலைகளும் இயல்பாய் அமைந்தவை போலும் என மலையாமைப் பொருட்டுப் பின்னிரண்டு அடிகளைக் கூறினார்.
இதனால், யோகத்திற்குரிய சந்திரன் முதலிய மூன்றற்கும் உரியகலை யளவுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.

பொழிப்புரை :

சூரியன் பன்னிரண்டு கலைகளையே உடைய தாயினும் அது சந்திரனது பதினாறு கலைகளையும், அதற்கு ஏதுவாய் நிற்கும் பதினாறு மாத்திரைப் பிராண வாயுவையும் உட்கொள்ளும் ஆற்றல் படைத்தது. அஃது அன்னதாவது, தான் அக்கினி கலையோடு சேரும்பொழுதேயாம்.

குறிப்புரை :

எனவே, `சந்திரனிலும் சூரியன் ஆற்றல் மிக்கது` என்றவாறு. இஃது உலகியல்பானே அறியப்படுமாயினும், `யோக முறையில் வேறாங்கொல்லோ` என ஐயுற நிற்குமாதலின், அது நீக்க வேண்டி எடுத்தோதினார். அன்றியும், ஒப்பினாற் பெற்ற பெயர் உடைமை பற்றியே உவமைக்கு உள்ளன வெல்லாம் பொருட்கும் கொள்ளல்வேண்டும் என்னும் கட்டளை இன்மையால் `இது கொள்க` என்றற்கும் ஓதினார். இனி `சூரியன் அக்கினியோடு சேர்ந்தே ஆற்றல் மிக்கு நிற்கும்` என்பது இங்கு இன்றியமையாது ஓதற்பால தாயினமையும் அறிக.
``ஆறாறு`` என்பதனை `ஆறோடு கூடிய ஆறு` என விரிக்க. `ஆதித்தன் ஆறாறதாயினும் கொள்ளும்` என ஒருசொல் வருவித்து இயைக்க. `சந்திரன் நாறாமலும், ஞாலம் கவர் கொளவும் கதிர் கலை களையும், காலினையும் கொள்ளும்` எனக் கூட்டி வினை முடிவு செய்க. நாறுதல் - தோன்றுதல். கவர் - கவர்த்தல்; ஐயுறல். அஃது இங்கு மருட்கை எய்தலின் மேற்று. பேறாங் கலை - சந்திரனுக்கு இயல்பாய் உள்ள கலை. பேர்தல் - இயங்குதல். மாறாக் கதிர் - என்றும் மறையாத கதிர்; சூரியன். இது, `மாறாக் கதிராகிய அது` எனப் பொருள் தந்தது. `மற்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `அங்கியோடு` என மூன்றாவது விரிக்க. ஏகாரம் பிரிநிலை. இம் மந்திரம் பெரிதும் பாடம் வேறுபட்டுள்ளது.
இதனால், மேற்கூறிய சந்திரன் முதலிய மூன்றனுள் சூரியனது ஆற்றல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே. 

பொழிப்புரை :

`சூரியன், சந்திரன்` என்னும் இரண்டற்கும் மேற் சொல்லிய கலையளவில் வேறுபாடில்லை. ஆயினும், அக்கினிக்கு மேற்சொல்லப்பட்ட கலையளவு இழிபளவாக, உயர்பளவு அறுபத்து நான்காம். இதனை யோக முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

அக்கினி கலைக்குத் திரிபு கூறுவார், பிறவற்றின் கலைகளில் ஐயம் வாராமைப் பொருட்டு அவற்றின் அளவுகளைப் பெயர்த்துங் கூறி வலியுறுத்தினார். `அடங்கு தீ, அழலுந் தீ` என அக்கினி இரு நிலைமை உடைத்தாதலின், அதற்கேற்ப அதன் கலை களும் இழிபு உயர்வுகளை உடையவாயின. இது பற்றியே அக் கினியைச் சில இடங்களில் இரண்டாக வைத்து எண்ணுவார் ஆசிரியர்.
இதனால், சந்திரன் முதலிய மூன்றனுள் அக்கினியின் கலைக்கு எய்தியதன்மேல் சிறப்புணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே. 

பொழிப்புரை :

அக்கினி முதலிய மூன்றற்கும் சொல்லப்பட்ட கலை அளவுகளை ஒன்றற்கு உரியது மற்றொன்றற்கு ஆகுமாறு பொருத் துதல் கூடாது.

குறிப்புரை :

என்றது, `அதனதன் அளவில் கூட்டுதல் - அல்லது குறைத்தல் கூடாது` என்றவாறு. இங்ஙனம் வலியுறுத்தி ஓதியதனால், மேற்கூறிய அளவை மாற்றின் தீங்கு பயக்கும் என்பது பெறுதும். மேற்கூறிப் போந்த அளவுகளை எல்லாம் மீளவும் வகுத்தோதியது வரையறையை வலியுறுத்தற் பொருட்டாதல் அறிக. சுட்டப்படுதல் - சிறப்பித்துச் சொல்லப்படுதல். கட்டப்படுதல் - வரையறுக்கப்படுதல்.
இதனால், கலைகளின் அளவு வரையறையே அவற்றால் விளையும் நன்மைக்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே. 

பொழிப்புரை :

அக்கினிக்கு அறுபத்து நான்கு, சூரியனுக்குப் பன்னிரண்டு, சந்திரனுக்குப் பதினாறு எனக் கலைகள் மேற்கூறியவாறு வரையறுக்கப்படும் பொழுது அவற்றிற்கு மேலும் நட்சத்திரக் கலை என நான்கு சொல்லப்படும். ஆகவே, அவையும் கூடக் கலைகள் தொண்ணூற்றாறாம். இத்தொண்ணூற்றாறு கலைகளையும் தத்துவ தாத்துவிகங்களாகிய தொண்ணூற்று ஆறுமாகக் கொள்க.

குறிப்புரை :

அங்ஙனம் கொள்ளுதலால் வரும் பயனும், ``நட்சத்திரக் கலையாவன இவை`` என்பதும் வருகின்ற மந்திரத்துட் பெறப்படும். நட்சத்திரக் கலை நான்கு உளவென்பது உணர்த்து தலேயன்றி, அனைத்தையும் எண்ணித் தொகை கொள்ளுதலும் செய்கின்றாராதலின், அதன் பொருட்டு மேற்கூறிய அவ்வளவு களையும் உடன் கூட்டி எண்ணினார். `சுட்டியிட்ட, கட்டியிட்ட` என்பவை குறைந்து நின்றன. ``கலாதி`` என்றது கலையைத் தோற்ற முறையிலும், ஒடுக்க முறையிலும் முதலாக வைத்துக் கூறியவாறு.
இதனால், கலையளவிற்கு எய்தாதது எய்துவித்து முற்ற முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே. 

பொழிப்புரை :

தொண்ணூற்றாறு கலைகளும், `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பவற்றுடன், நடுநாடி வழியாகக் கீழ்ப் போய்த் தொடர்கின்ற, இதுகாறும் சொல்லப்படாத மூலாதாரத்திலும் ``பூரகம், கும்பகம்`` என்பவற்றில் ஏற்ற பெற்றியால் பொருந்திப் பின் மேல் எழுந்து தலையிலே சேர்தலால், யோகிகள் சிவனது திருவடியை அடைய வல்லவராவர்.

குறிப்புரை :

``இடை, பிங்கலை`` என்பவற்றில் பூரகத்தாலும், சுழுமுனையில் கும்பகத்தாலும் பொருந்துவன முறையே சந்திர கலை சூரிய கலை அக்கினி கலைகளாதல் மேலெல்லாம் இனிது பெறப் பட்டமையின் ``மூலம்`` என்றது நட்சத்திரக் கலை பொருந்தும் இடத்தையே குறித்தது என்பது நன்கு பெறப்படும். ``அவ்விடத்துத் தொடர்தலும் கும்பகத்தாலே`` என்றற்கு ``நடுநாடி யூடே தொடர் மூலம்`` என்றார். ``சொல்லா மூலம் தொடர் மூலம்`` எனத் தனித்தனி கூட்டி யுரைக்க. எல்லாக் கலையும் உடன் சிரத்துச் சேர்தலால், ``பெத்தத்தில் தத்துவ வன்னரூபனாய் (சிவப்பிரகாசம், 64) உள்ள சீவன் அவ்வுருவத் தோடே சிவனடியைச் சேர்பவனாவன்`` என்பது மேல் தொண்ணூற் றாறு கலைகளையும் தொண்ணூற்றாறு தத்துவங்களாகக் கொள்க என்றதனால் பெறப் பட்டது. `சிவனது திருவடி சீவர்களது தலைமேல் உள்ளது` என்பது யோக நெறி. `இறைவன் அடியை அவன் அடியவர் தம் முடிமேற் கொள்வர்` என்பதனைச் சரியையாளரும், கிரியையாளரும், தாம் வழிபடும் மூர்த்தியின் திருவடி தம் சென்னி மேல் பொருந்துமாறு வீழ்ந்து வணங்குதலாகவும், யோகியர், சகத்திராரத்தும், நிராதாரத்தும் இறைவன் திருவடியைத் தியானித்தலாகவும், ஞானியர், தமது ஞான சத்தி கிரியா சத்தி இரண்டனையும் இறைவனது ஞான சத்தி கிரியா சத்திகளில் அடங்கப்பண்ணி அவனது அருள்வழி நிற்றலாகவும் கொண்டு ஒழுகுவர் என்க.
இனி, ``எல்லாக் கலையும் எழும்பிச் சிரத்துடன் சேர்தலால் திருவடி நண்ணி நிற்பார்`` என்றதனால், அங்ஙனம் சேரும் நிலையை அக்கலைகள் படிமுறையால் பெற்று நிறைவுறுதலே சந்திரயோகம் என்பதும் விளங்கும்.
இதனால், மேற்கூறிய கலைகள் பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே. 

பொழிப்புரை :

`அக்கினிகலையில் சந்திரன், சூரியன்` என்னும் இரண்டன் கலைகள் தாக்குதலால் அவற்றொடு வைத்து எண்ணப் படுகின்ற நட்சத்திரக் கலைகள் தோன்றும். இங்கு, `சந்திரன், சூரியன், அவற்றின் கூறுகளாகிய நட்சத்திரம்` என்று சொல்லப்படுவன வெல்லாம் சத்தியது ஒளிப்பகுதிகளே. அதனால், இவை பிரணவ யோகிகட்கு நவமண்டலமாயும் நிற்கும்.

குறிப்புரை :

இம்மந்திரத்துச் சொல்லப்பட்ட பொருள்களுள் முதலது ``அங்கி மதிகூட`` (பா.847) என்னும் மந்திரத்திலும், ஈற்றது வருகின்ற மந்திரத்திலும் விளங்கும். சின்னம் - துண்டம்; என்றது கலையை. `கதிர் இரண்டு` என்பது ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்க, `சின்னக்கதிர் இரண்டு` என்பது, பின் முன்னாகத் தொக்க ஆறாவதன் தொகை யாயிற்று. `பங்கு` என்பதன் அடியாகப் பிறந்த `பங்கிய` என்பது, `பக்கு நின்ற` எனப் பொருள் தந்தது. திரோதான சத்தியையே இங்கு, `பரா சத்தி` என்றார். யோகியர்க்கு அஃது அவ்வாறு சிறந்து நிற்றலின். அதன் ஒளியாவது குண்டலி சத்தி. சந்திர கலை முதலியவாய் நிற்கும் வாயுக்களையே `குண்டலி சத்தி` என்றது, அவை அச்சத்தியை விளக்கி அதனோடு ஒற்றித்து நிற்றல்பற்றி. இவ்வாற்றால், இவை குண்டலி சத்தியாதல் இனிது விளங்குதற் பொருட்டே பிரணவ யோகிகட்கு இவை நவமண்டலமாய் நிற்றலும் உடன் கூறினார். தொண்ணூற்றாறு கலைகளையும் முன்னர்த் தொண்ணூற்றாறு தத்துவமாகக் கூறிப் பின் அவற்றைக் குண்டலி சத்தியாகக் கூறியவதனால், தத்துவ வன்ன ரூபியாகிய சீவன் சந்திர யோகத்தால் குண்டலி சத்தி வடிவாய்ச் சந்திர மண்டலத்தை அடைந்து சிவனது திருவடியைச் சேர்வான் என்பது போந்தது. `பரையொளியாகும்` என மாறிக்கூட்டுக.
இதனால், கலைகளுக்கு எய்தியதன் மேற் சில சிறப்பு இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே. 

பொழிப்புரை :

`பிரணவயோகம்` எனப்படுகின்ற பெரிய நெறி, `பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், அக்கினி, நட்சத்திரம்` என்னும் நவமண்டலங்களை (ஒன்பான் வட்டங்களை) உடையது.

குறிப்புரை :

இங்கு, `பிரணவம்` என்றது பிராசாதத்தினை. மண்டலம் அல்லது வட்டமாவது பகுதி. ஒன்பான் வட்டங்களுள், தீயைப் பஞ்ச பூதங்களிடை, ``கனல்`` என்றும், முச்சுடரில் இறுதிக்கண் ``அங்கி`` என்றும் இருகால் ஓதியதனாலும், மேலேயும் (பா.835, 837) அக்கினிக்கு இருவகைக் கலையளவு கூறினமையாலும் `அடங்கு தீ, அழலுந் தீ` எனத் தீயை இரண்டாகக் கொள்ளுதலும், பூதத் தீ அடங்கு தீயும், சுடர்த் தீ அழலுந் தீயும் ஆதலும் பெறப்படும்.
பிருதிவி வட்டம் முதலிய ஒன்பான் வட்டங்களை, ``பிரணவ மாகும் பெருநெறி`` என்றமையால், அவை பிராசாத கலைகளின் தானங்களேயாயின. அத் தானங்கள் பன்னிரண்டனுள் இறுதி நான்கும் நிராதாரமாதலின், சந்திர கலை முதலிய நால்வகை கலைகளும் அவ் விடத்துச் சொல்லமாட்டா. எனவே, எஞ்சிய எட்டுத் தானங்களோடு சோடசகலைத் தானங்கள் இரண்டு கூடத்தானங்கள் பத்தாம். ஆயினும், `அருத்த சந்திரன், நிரோதினி` என்னும் இருகலைகட்கு இடையேயும், அவற்றின் தானங்கட்கிடையேயும் உள்ள வேற்றுமை சிறிதாகலின் அத்தானங்கள் இரண்டையும் ஒன்றாகக் கொள்ளத் தானங்கள் ஒன்பதாய், அவை இங்குக் கூறிய ஒன்பான் வட்டங்களாயும் அமையும். இவற்றுள், அழலுந் தீயை மரபுபற்றிச் சுடர்களோடு வைத்து எண்ணினாரேனும், `அது மூலாதாரத்தில் உள்ளது` என்பதே யோக நூல் துணிபாதலின், அதனை அங்ஙனமே வைக்க, `மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, நெற்றி, தலை, தலையின் பின்புறம்` என்னும் இடங்கள் முறையே, `அங்கி, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம்` என்பவற்றின் வட்டங்களாம் என அறிக. பிராசாத கலைத் தானங்களை இவ்வாறான ஒன்பான் வட்டங்களாகக் கூறியது, ``மேற்கூறிய சந்திர கலை முதலிய நால்வகைக் கலைகளும் இப்பிராசாத கலைத் தானவகையினால் இங்குக் கூறிய பிருதிவி கலை முதலிய ஒன்பான் கலைகளாயும் நிற்கும்`` என்பது உணர்த்துதற்கு என்க. அரணியம் - காடு; என்றது ஒளிக்கற்றையை. முரணிய - தம்முள் மாறுபட்டு விளங்குகின்ற.
இதனால், மேல் தோற்றுவாய் செய்யப்பட்ட நவ மண்டலங்கள் (ஒன்பான் வட்டங்கள்) இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாம் சொரூபமே. 

பொழிப்புரை :

நட்சத்திரங்கள் சந்திரன் தேயும் பக்கத்தில் விளங்கு தலன்றி, அது வளரும் பக்கத்தில் தனியே விளங்கா; சந்திரனது ஒளியிலே ஒன்றி அதுவாய்விடும். யோகத்தில் ``நட்சத்திரங்கள்`` எனப்படுபவை, பூமியில் உள்ள பலவகை உயிர்கள். எனவே, யோகியின் சந்திர மண்டலம் விளங்கி நிற்கும்பொழுது உலகப் பொருள் பற்றிய உணர்வுகள் முன்னை மந்திரத்துட் கூறிய நட்சத்திர மண்டலத்தில் வேறு நின்று விளங்காது, சிவ உணர்விலே ஒன்றிவிடும்.

குறிப்புரை :

பூ - பூமி. ``சகலத்து யோனிகள்`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை. சிறப்புப் பற்றி உயிர்களையே கூறினா ராயினும், பிற உலகப் பொருள்களும் கொள்ளப்படும். சொரூபம் - மெய்யுணர்வு; என்றது சிவ உணர்வை. உலகுணர்வை ``நட்சத்திரம்`` என்றதற்கு ஏற்பச் சிவ உணர்வை, ``சந்திரன்`` என்னாமையால், இஃது ஏகதேச உருவகம். இதனானே ``சந்திர மண்டலத்தின் ஆற்றலாவது சிவ உணர்வே`` என்பது அறியப்படும். ``சொரூபத்துக்கண்`` என இறுதிக்கண் ஏழாவது விரிக்க. ``தாரகை தாரகைக்கண் சொரூபத்தின் கண் தானாம்`` எனக் கூட்டுக. தாரகை இரண்டில் முன்னது நட்சத்திர மண்டலமாகிய இடம்; பின்னது நட்சத்திரம். தான், பன்மை ஒருமை மயக்கம். மூன்றாம் அடி இடைநிலையாய் நிற்க, ஏனையடிகள் தொக்கு எடுத்துக்காட்டுவமையாயின.
இதனால், சந்திர யோகத்தில் நிகழ்வன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே. 

பொழிப்புரை :

பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலமும், அண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் போலவே தனது முற்பக்க நாள் பதினைந்தில் தோன்றி வளர்ந்து, பிற்பக்க நாள் பதினைந்தில் நிறை வினின்றும் தேய்ந்துவிடும். அதனால், அவ்விருவகைப் பதினைந்து நாள்களையும் அறிந்து முற்பக்க நாளில் யோகம் புரிய வல்லவர்கட்கு, சொல்லுதற்கரிய சிவனது திருவடியைச் சேர்தலும் கூடும்.

குறிப்புரை :

``அப்பதினைஞ்சும்`` என்பதில், `பதினைஞ்சு` என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் பன்மையாய் நின்றது. `அறிய வல்லார்` என்றதனால், இங்கு, ``முற்பக்கம், பிற்பக்கம்`` எனப்பட்டவை உலகில் காணப்படும் பக்கங்கள் அல்ல; யோக நிலையில் உள்ளவையே என்பது விளங்கும். ``அவை இவை`` என்பது வருகின்ற மந்திரத்தால் பெறப்படும்.
இதனால், பிண்ட, சந்திரனுக்கும் அண்ட, சந்திரன்போல இருவகைப் பக்கங்கள் உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே. 

பொழிப்புரை :

முதற்கண் மூலாக்கினியை எழுப்பிப் பின் அவ்வக் கினியோடே சூரிய வட்டத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயு அங்ஙனம் ஓடித் தங்குதற்கு நாள்கள் பத்தாகிவிடப் பின் அவ்வக்கினி, நட்சத்திரங்களாகிய புலன் உணர்வு ஒழியும்படி சந்திர மண்டலத்தில் சென்று சேர்கின்ற யோக நாள்களே முற்பக்க நாள்களாம்.

குறிப்புரை :

சூரிய வட்டம், இங்கு மும்மண்டலங்களுள் ஒன்றாய அது. தாமம் - வரிசை; இது நாளின் அடைவைக் குறித்தது. ``ஆகி`` என்பதனை `ஆக` எனத் திரிக்க. கதிர் அங்கி - சூரிய வட்டத்தில் உள்ள அக்கினி. இது திங்களைச் சேர்கின்ற யோகம் `முற்பக்கம்` என்க. மந்திரத்து இறுதியில் `முற்பக்கம்` என்பது எஞ்சி நின்றது. இதனானே, `யோகம்` என்பது அது நிகழ்கின்ற காலத்தைக் குறித்தமை தெளிவு.
இதனால், பிண்ட சந்திரனுக்கு உரிய முற்பக்க நாள் இவை என்பது கூறப்பட்டது.
`சந்திர கலையாகிய வாயு இவ்வாறு வளர்ந்து செல்வது முற் பக்கம்` என்றதனானே, `சூரிய கலையாகிய வாயு இவ்வாறாதல் பிற் பக்கமாம்` என்பதும் உய்த்துணர வைக்கப்பட்டவாறு அறிக. முற்பக்க நாள்கள் முடிந்தபின் பிற்பக்க நாள் தொடங்குதல் ஒருதலையாதல் பொருட் பெற்றியாகலின், யோகத்திலும் முற்பக்கம் முடிந்தபின் யோகியால் பிற்பக்க யோகம் ஒருதலையாகச் செய்யப்படும். அவ்வாறு செய்யாதொழியின், விளைவுகள் வேறு வேறாம் என்க.

பண் :

பாடல் எண் : 13

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 

பொழிப்புரை :

இங்குக் கூறிய இருவகைப் பக்கங்களின் படி வளர்ந்தும், தேய்ந்தும் நிற்கின்ற சந்திர கலை பதினாறும் அண்டத்தில் உள்ளது போலவே பிண்டத்திலும் பொருந்தி உள்ளதை உயர் நெறியில் வேட்கையில்லாதோர் நினைப்பதில்லை. அதனால், வாழ்நாளை வீணாளாக்கிய குற்றம்பற்றி அவர்கள்மேல் சீற்றங் கொள்கின்ற கூற்று வன் அவர்களை இழிபிறப்பில் தள்ளியபின், அதிலே சென்று வீழ்ந்து மேல் ஏற வழியறியாது திகைத்தலையே அவர்கள் உடையராவார்கள்.

குறிப்புரை :

கரு - பிறப்பு. ``குழி`` என்றதனால் அஃது இழிபிறப் பாயிற்று. `வீழ்த்தபின்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
இதனால், பிண்ட, சந்திரனை நினையாதவரது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமு மாமே. 

பொழிப்புரை :

இடை நாடி வழியாகப் பூரிக்கப்படும் சந்திர கலை யாகிய வாயு அக்கினி கலையாகிய சுவாதிட்டான கும்பகத்தில் முன்னர்ப் பொருந்தி நிற்பின், பின்னர் வல நாடி வழியாகப் பூரிக்கப் படும் சூரிய கலையாகிய வாயுவே அவ்வக்கினி கலையில் சென்று பொருந்துவதாகும். அவ்வாறே, சூரிய கலையாகிய வாயு முன்னர்ச் சென்று அக்கினி கலையில் பொருந்தின், பின்னர்ச் சந்திரகலையே அதன் கண் சென்று பொருந்துவதாகும். இவ்வாறு அக்கினி கலையில் சந்திர கலை, சூரிய கலை என்னும் இரண்டும் பொருந்திய பின்னரே, அதனை மூலா தாரத்திற் செலுத்துதலாகிய அந்த நட்சத்திர, கலை மூலா தாரத்தில் சென்று தங்கி, அதுவே அனைத்துக் கலைகளுமாய் அங்கு நிரம்பி நிற்கும்.

குறிப்புரை :

என்றது, ``சந்திர கலையைச் சுவாதிட்டானத்தில் பூரித்த பின்னரே சூரிய கலையை அங்குப் பூரித்தல் வேண்டும்`` எனவும், `இரண்டையும் அங்குப் பூரித்த பின்னரே நட்சத்திர கலையை அங்கு நின்றும் மூலாதாரத்தில் பூரித்தல் வேண்டும்` எனவும் மேற்சொல்லிய கலைகளைத் தொகுக்கும்முறை கூறியவாறு. ``அங்கியிற் சின்னக் கதிரிரண்டாட்டத்துத் - தங்கிய தாரகை யாகும்`` என மேலேயும் (பா.841) கூறினார். `இதுவே முறை` என்றதனால், `மூலாக்கினி இவ்வாற்றானே எழுப்பப்படும்` என்பதும் அறியப்படும். படவே, மேல் (பா.845) ``அங்கி யெழுப்பி`` என்றது, `இவ்வாற்றால் எழுப்பி` என்றதாயிற்று. ஆகவே, அவ்விடத்தில், `சசியால்` எனச் சந்திரகலை ஒன்றையே கூறியது தலைமை பற்றியாதல் விளங்கும்.
மூன்றிடத்தும், ``அங்கி`` என்பதன் பின் ஏழாவது விரிக்க. சசி கதிர், உம்மைத் தொகை. அகரச்சுட்டு, நட்சத்திர கலையது இயல்பாக மேற்கூறியதனைச் (பா.841) சுட்டிற்று. ``அது`` என்றது, தங்குதலாகிய அத்தொழிலை உணர்த்திற்று. ``சகலமும் ஆம்`` என்றது, `எல்லாக் கலைகளும் ஒருங்கு தொக்க தொகை நிலையாம்` என்றபடி.
இதனால், சந்திர கலை முதலிய கலைகளை ஆக்கி மூல அங்கியை எழுப்புமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. 

பொழிப்புரை :

``பன்னிரண்டு`` என வரையறுக்கப்பட்ட சூரிய கலைகள் பெண் கலைகள். ``பதினாறு`` என வரையறுக்கப்பட்ட சந்திர கலைகள் ஆண் கலைகள். இவைகளை இந்த அளவுகளில் குறையாமல் பூரித்து, மூலாக்கினி விளங்கும் இடமாகிய சுவாதிட்டானத்தில் கும்பித்தால், அவ்விடத்துத் தெவிட்டாது தோன்றுகின்ற இன்பம் பேரின்பமே.

குறிப்புரை :

சூரிய சந்திரர்களை முறையே ஆண்மையும், பெண்மையும் உடையவராகக் கூறுதல் மரபாயிருக்க, இங்குச் சூரிய கலை சந்திர கலைகளை மாறிக் கூறியது என்னை யெனின், சந்திர கலையே சந்திர மண்டல ஆற்றலை மிகுவித்தல் பற்றி என்க. இது பற்றியே யோகத்தில் சந்திர கலையை முன்னர் வைத்துக் கூறுதல் பெரு வழக்காயிற்று. ``பன்னிரண்டு, பதினாறு`` என்பவைகளை எடுத்தோதி யதனால், முன்னை மந்திரத்தில் ``கூட`` என்றது, `இந்த அளவில் குறையாது கூடியபின்` என்பது பெறப்பட்டது.
`ஒரு கலை` எனப்படுவது, ஒரு முறை பூரித்துக் கும்பித்து, இரேசித்தலாம், என்பது மேலேயும் (பா. 835) கூறப்பட்டது. `பூரக, கும்பகம்` என்னும் முறையில் நிகழும். இரேசகங்களுக்கு மேல் (பா.556) சொல்லப்பட்ட மாத்திரை அளவுகள் சந்திர கலைக்கு உரியன. பதினாறு கலைகளையுடைய சந்திர கலைக்கு மாத்திரை அளவு சொல்லப்பட்டதனானே, பன்னிரண்டும் பத்தும் நான்கும் ஆகிய கலைகளை உடைய சூரியகலை அக்கினி கலை நட்சத்திர கலைகட் குரிய மாத்திரை அளவுகள் கணக்கிட்டுக் கொள்ளப்படும் என்க. அக்கினி கலைக்குப் பூரித்தலாவது சுவாதிட்டானத்தில் கும்பிக்கப் பட்ட வாயுவை மணி பூரகம் முதலிய ஆதாரங்களில் செல்ல மேற் செலுத்தல். கும்பித்தலாவது, ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களில் அவ்வாயுவை நிறுத்துதல். இரேசகமாவது அவ்விடங்களிற் சென்ற வாயுவை இரு மூக்கு வழியாகவும் வெளிச் செலுத்துதல்.
`பேராமல் பெய்யில்` என இயையும். புக்கு - முயன்று. மூலாதாரத்தில் உள்ளது காரண நிலையில் நிற்றலால், அஃது எழுந்து செல்லும் நிலையை, ``நேராகத் தோன்றும் நெருப்பு`` என்றார். இங்கு, `நெருப்பு` என்றது அஃது அடையும் இடத்தைக்குறித்தது. கும்பித்த பின் சந்திர மண்டலத்தில் உளதாம் இன்பத்தை, கும்பித்ததனானே உளதாகக் கூறினார். இஃது உடற்கண்ணே தோன்றுவதாயினும் வீட்டின்பமே என்றற்கு, ``ஆனந்தம் ஆனந்தம் ஆனதே`` என்றார். ஆணும், பெண்ணும் கூடியவழி இன்ப நுகர்ச்சியும், அவ்விருவரும் ஒருங்கே தீப்புக்கவழித் துறக்க இன்பமும் உளவாம் என வேறு பொருளும் இதன்கண் தோன்றிற்று.
இதனால், ``அங்கி கதிர் கூட, அங்கி மதி கூட`` என்றவற்றின் அளவுபற்றி ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே. 

பொழிப்புரை :

சூரிய கலையைப் பூரித்துப் பின் இடநாடி வழி இரேசித்தும், சந்திர கலையைப் பூரித்துப் பின் வலநாடி வழி இரேசித்தும் பிராணாயாமத்தை இவ்வாறு பன்முறை தவறாமல் போற்றிச் செய்வீராயின், ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உம் உடல் தளர்ச்சி யடையாமலே யிருக்கும்.

குறிப்புரை :

`சந்திர கலை சூரிய கலைகளைப் பூரித்தவழியே இரேசித்தலே முறை` என்பது, மேலே (பா.777) கூறப்பட்டமையின், இது பூரித்தவழியாலன்றி வேறு வழியால் இரேசித்தலும் வேறொரு முறையாதல் கூறியதாயிற்று. ``பேணி`` எனவும், ``பிழையாமல்`` எனவும் கூறியவாற்றால், `இம்முறையை மேற்கொண்டு செய்யு மிடத்துப் பிழைபடாதவாறு குறிக்கொண்டிருத்தல் வேண்டும்` என்பது அறியப்படுகின்றது. ஆணி - இணைப்புக் கருவிகள். `வலக் கால் இடக் கால்களை எதிர்ப் பக்கங்களில் மடக்கிப் பின்னி, இருக்கையில் இருந்தால், அசைவின்றி யிருக்கலாம்` என வேறொரு பொருளும் இதன்கண் தோன்றிற்று.
இதனால், சந்திர கலை சூரிய கலைகளை இயக்குதற்குரிய பிறிதொருமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே. 

பொழிப்புரை :

சிவன், யோகிகளது உள்ளத்திற்குத் தோன்றும்படி தருகின்ற தச நாதங்களில் சங்கொலி ஒழிந்த ஒன்பது நாதங்களாய் முதற்கண் அவர்கட்கு அநுபவப் படுவான். பின்பு மேலிடமாகிய ஆஞ்ஞையில் விளக்கொளி போலக் காட்சியளிப்பான். அஞ்ஞானம் ஆகிய இருள் நீங்கி ஞான ஒளி வெளிப்படுகின்ற நான்காம் சத்தி நிபாதமாகிய காலைப் பொழுதில் காலைச் சங்கொலியாயும், காலைக் கதிரொளியாயும் கேள்வியிலும், காட்சியிலும் அனுபவமாவான்.

குறிப்புரை :

``பாலிக்கும்`` என்பது எச்சம்; ``ஆலிக்கும்`` என்பது முற்று. ``நெஞ்சம்`` என்பதை முதற்கண் வைத்து, நான்காவது விரிக்க. ஆலித்தல் - மகிழ்தல், ஒலித்தலுமாம். தச நாதங்கள் மேலே (பா.593) கூறப்பட்டன. ``மேலைக்கு, காலைக்கு`` என்பவற்றைத் தொல் காப்பியர், `இக்குச்சாரியை` என்பர்; பிற்காலத்தார், `உருபு மயக்கம்` என்பர். `முன்னே ஆலிக்கும்` என மேலே கூட்டி முடிக்க. `காலைச் சங்கும், காலைக் கதிரவனும் ஆவான்` எனப் படிமுறையை வகுத்துக் கூறவே, சந்திர யோகத்தால் சந்திர மண்டலம் இவ்வாறு படிமுறையான் வளர்தல் பெறப்பட்டது.
இதனால், சந்திர மண்டல வளர்ச்சியின் படிமுறை தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.

பொழிப்புரை :

சூரிய கலை சந்திர கலைகள் சரவோட்டத்தில் மக்களது வாழ்நாளைப் படிமுறையாகக் குறைத்து நிற்பன. உடல் அழியாது நிலைபெறும்படி பொழிகின்ற அமுத மழை, யோகத்தால் ஆற்றல் மிகுகின்றவனது உடலினுள்ளே நீங்காது நிலைபெற்றுள்ளது. பிராணாயாமத்தால் நாடிகள் மாற்றத்தை எய்தப்பெறுகின்ற யோகி, `அண்டம்` எனப்படுகின்ற தலைக்கு அப்பால் நிராதாரத்திற் சென்று அதனை ஒளி மண்டலமாகச் செய்ய, அவன் அங்குக் காண்பது சிவனது இருப்பிடத்தையே.

குறிப்புரை :

அளத்தல். இங்குப் படிமுறையால் கழித்தல். பொதிர்த்தல் - பெருத்தல். ``பொதிர் அவன், அதிர் அவன்`` என்பன வினைத்தொகைகள். `அவன் எதிர் காண்பது ஈசன் இடமே` என ஒருசொல் வருவிக்க. அது, பகுதிப் பொருள் விகுதி. தான், அசை நிலை. வாழ்நாள் கழிதலை முன்னே விதந்து, பின் யோக முறை யையும், பயனையும் விதந்தமையால், `காலம்பெற அம்முறையை மேற்கொண்டு அப்பயனையே பெறுக` எனக் குறித்ததாயிற்று.
இதனால், `சந்திரயோகத்தை வாழ்நாள் கழியுமுன்னே மேற்கொண்டு, அதன் பயனைப் பெறல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே. 

பொழிப்புரை :

நாபித் தானத்தில் தோன்றிப் பின் மேல் ஓங்குகின்ற குண்டலி சத்தியைத் தலைப்படுதற்குரிய மந்திரத்தை அறிபவர் அரியர். அதனை அறிந்தால், தந்தைக்கு முன்னே மகன் பிறத்தலாகிய புதுமை காணப்படும்.

குறிப்புரை :

``கனல்`` என்னாது, ``சோதி`` என்றதனால் அது குண்டலியேயாதல் அறிக. மூலாதாரம் குண்டலிக்குத் துயிலிடமாக, அது விழித்தெழுந்து செயற்படும் இடம் மணிபூரகம் முதலிய ஆதாரங்களேயாதல் பற்றி, மணிபூரகத்தினையே குண்டலி தோன்றும் இடமாகக் கூறினார். அந்தித்தல் - சந்தித்தல். ``மந்திரம்`` என்றது அசபையை. சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களுள் கீழ்க்கீழ் உள்ள ஆதாரங்களில் நிற்கும் கடவுளர், மேன்மேல் உள்ள ஆதாரங்களில் நிற்கும் கடவுளருக்கு மைந்தர் ஆதலாலும், ஆதாரங்களைக் கீழ்நின்று மேற்சொல்லும் முறையானே அடைந்து நீங்க வேண்டுதலானும் ``தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான்`` என மருட்கை விளையக் கூறினார். ``மகன் இருந்தான்`` என்பதும் பாடம். `பிராணாயாமத்தை வறிதே செய்யாது, அசபா மந்திரத்துடன் செய்து, அதனால் குண்டலி சத்தியை மணிபூரகத்திலே அடையப்பெற்று, அச்சத்தி யோடே மேல் ஏறிச் சென்று சந்திர மண்டலத்தை அடைந்த வழியே யோகம், சந்திர யோகமாம்` என்றபடி. மந்திரமின்றியும், குண்டலியைத் தலைப் படாமலும் செய்யப்படுவது அட யோகம் என்க.
இதனால், ``உண்மைச் சந்திர யோகமாவது இது`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

பொழிப்புரை :

நூல்களைக் கற்பினும் அவற்றின் பயனைச் சிறிதும் உணரமாட்டாத அறிவிலிகள், அவற்றைப் பிறர் உரைப்பினும் உணர் வாரல்லர். ஆதலின், அவர் நிற்க. நீவிர் யாம் கூறிய முறையால் குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் சந்தித்தலோடு ஒழியாது, அதன் முடிவிடமாகிய சந்திர மண்டலத்திலும் விடாது பொருந்தி நிற்றல் வேண்டும். அவ்வாறு நிற்க வல்லிராயின், அவ்விடத்தில் சிவன் வெளிப்பட்டுத் தோன்றுவான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் கூட்டி உரைக்க. ``ஆதியும் அந்தமும்`` என்னும் உம்மைகள் எச்ச உம்மைகள் ஆதலின், அதற்கு, மேல் உரைத்தவாறு உரைக்கப்பட்டது. ``ஆதி, அந்தம்`` என்பவை ஆதாரங்களை முறையாற் குறித்தன.
இதனால், அசபா யோகமும் சந்திர மண்டலங்காறும் சென்று முற்றிய வழியே சந்திர யோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகை யானே. 

பொழிப்புரை :

குண்டலினியாகிய பாம்பு சந்திரகலை, சூரியகலை என்னும் இருகலை வாயுவையும் ஒருங்கே உட்கொண்டு சிறந்து எழும். பின் பெருந்தகையோனாகிய சிவபிரான் அந்தப் பாம் பினையும், சகத்திராரத்தில் உள்ள சந்திரனையும் மாறிநிற்க விடாமல் ஒன்றியிருக்கச் செய்து, அவ்வொன்றுதலில் தானும் நீங்காது நிற்பான்.

குறிப்புரை :

குண்டலியைப் பாம்பாகக் கூறுதல் வடிவுபற்றியன்றியும் சந்திர சூரிய கலைகளையும், அப்பெயர்த்தாகிய காற்றினையும் உண்ணும் செயல் பற்றியுமாம் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு. மதியைத் தினல் உறுதலை வேறாக முன் வைத்துக் கதிரைத் தினல் உறுதலை உம்மை கொடுத்துப் பின் வைத்தமையால், சந்திர கலையே சிறப்புடைத்தாதல் பெறப்பட்டது. இராகு கேதுக்களாகிய பாம்புகள் சந்திரன், சூரியன் என்னும் இரு கோள்களையும் விழுங்குகின்றன எனக் கூறும் உலக வழக்காகிய நயம்தோன்ற நின்றது இம்மந்திரம்.
குண்டலிப் பாம்பும் சகத்திராரத்தில் உள்ள சந்திரனும் மாறி நிற்றலாவது, குண்டலிப் பாம்பு சந்திரனுடன் தனது முகத்தைப் பொருந்தவையாது, வாலைப் பொருந்த வைத்திருத்தல். சந்திர யோகத்தால் அப்பாம்பு கீழ்மேலாகச் சுழன்று முகத்தை அச்சந்திர னிடத்து வைத்து விளையாடுவதாம். அவ்விளையாட்டில் சிவபிரான் நீங்காது நிற்றலாவது, சிவ உணர்வு மறையாது விளங்குதல். சிவபெரு மான், ``பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகைதீர்த்து உடன் வைத்த பண்பன்`` (தி.6 ப.5பா.4) ஆதல் அறிக.
`சந்திர சூரியரை விழுங்கிய பாம்பு பின், சந்திரனோடு நட்புக் கொண்டு சிவபிரானிடம் விளையாடுகின்ற சிறப்புடையது, சந்திர யோகம்` என ஓர் வியப்புத் தோன்றக் கூறியவாறு; இதனுள் இன வெதுகை வந்தது. இம்மந்திரம் பாட வேறுபாடு மிகக் கொண்டுள்ளது.
இதனால், சந்திர யோகம் சந்திர மண்டலத்தில் சிவபிரானை அடையச்செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின்
வியந்தரு பூரணை மேவும் சசியே. 

பொழிப்புரை :

சர நிலையில் சந்திர கலை இயங்கும்பொழுது உறங்காமல் விழித்திருந்து, சந்திர கலை நின்று சூரிய கலை இயங்கும் பொழுது உறங்கி, இரண்டு கலையும் சேர இயங்கும்பொழுது யோகத்திற் சென்றால், சந்திர மண்டலம், விரிவடைதலாகிய பௌர்ணிமை நிலையை எய்தும்.

குறிப்புரை :

அயின்றது - அயிலப்பட்டது. யோகத்தில் பதினாறு கலையாகப் பூரிக்கப்படும் சிறப்புப்பற்றி, ``அயின்றது, பயின்றது`` என்பன சந்திர கலையையே குறித்தன. சந்திர கலை வீழ்தலைக் கூறி யொழிந்ததனானே, சூரிய கலை இயங்குதல் பெறப்பட்டது. இரு கலைகளும் சேர இயங்குதலை, ``பூரணை`` என்றார். அஃது யோகத்திற்குரிய காலமாதல் பற்றி, ``நயந்தரு பூரணை`` எனச் சிறப்பித்தார். உள்ளத்தை நடத்துதல், மனோலயம் செய்தல். எனவே, யோகம் புரிதலாயிற்று. `நடத்தி` என்பது பாடம் அன்று.
`யோகி சரவோட்டத்தில் சந்திர கலை இயங்கும் பொழுது உறங்குதல் கூடாது` என்பதும், `சந்திர கலை, சூரிய கலை இரண்டும் சேர இயங்கும் பொழுது யோகத்திற் செல்லுதல் வேண்டும்` என்பதும் இங்குக் கூறப்பட்டவை. இதனால், யோகிகட்குச் சர நிலையில் சந்திர கலை இயங்குதல் முற்பக்கமும், சூரிய கலை இயங்குதல் பிற்பக்கமும், இரண்டும் இயங்குதல் பூரணையும் ஆயின. உலகர் இவற்றை மறுதலைத்துக் கொள்வர்.
இதனால், சந்திர யோகம் செய்வார்க்குரிய சில கால முறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே. 

பொழிப்புரை :

சந்திர யோகத்தில் சந்திர மண்டலம் தோன்று மளவும் சோம்பல் இன்றி யோகத்தில் முயன்று, அது தோன்றியபின் அதினின்றும் பெருகும் அமுதத்தைப் பருகிச் சரவோட்டத்தில் சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் தக்கது.

குறிப்புரை :

``துயில்`` இரண்டனுள் முன்னது சோம்பல். ``சரிப் பின் கண்`` என்பதில் சரி - சரித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `பின்` என்பது இங்குப் பெயராய் நின்று, சரிப்பிற்குப் `பிற்கண்` என ஏழன் உருபு ஏற்றது. ``கொண்டது`` என்பது கால மயக்கம். இதன்பின், `முறை` என்பது சொல்லெச்சமாய் நின்றது. முன்னை மந்திரத்தின் முன் இரண்டடிகளில் கூறியவற்றையே இம் மந்திரத்தின் பின்னிரண் டடிகளில் கூறினார்; முன்னை மந்திரத்தின் பின் இரண்டடிகளில் கூறிய வற்றை இம் மந்திரத்து விளங்கக் கூறினமை பற்றி அவை நெகிழ்ந் தொழியாது நிற்றற்பொருட்டு.
இதனால், முன்னை மந்திரப் பொருள் இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே. 

பொழிப்புரை :

ஊழிகள் பல சென்றாலும் உலகிலே வாழ்கின்ற காய சித்த யோகிகள், தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே முழம் அளக்கும் கையாகக் கொண்டு எமனது ஆற்றலை அளப் பார்கள். ஆயினும், இங்குக் கூறப்படுகின்ற சந்திர யோகிகள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள சிவனேயாகின்ற உயர்நிலையை அடைவர்; உலகியலில் தாழ்தற்கு உரியரல்லராவர்.

குறிப்புரை :

``நாழிகை`` என்பது கடைக்குறைந்து நின்று, ``நாழி என்னும் முகத்தல் அளவைக் கருவி கையிடத்ததாக`` என வேறோர் பொருளையும் தோற்றுவித்தது. நமன், ஆகுபெயர். அளத்தல், உட்படக் கொள்ளுதல். ``இச் சசிவன்னர்`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், காய சித்தரினும் சந்திர யோகிகள் மேம்பட்டு நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
கண்மதி வீழ்வள விற்கண மின்றே.

பொழிப்புரை :

மக்களது உணர்வு அவர்களது தலையில் உள்ள சந்திர மண்டலம் உருப்பெற்றுத் தோன்றிய பின் அவர்களது சந்திர கலை சூரிய கலைகளாகிய வாயுக்கள் இயங்கும் வழியிலே விளங்கி, உலகம் மதிக்கின்ற இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங் களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை முறையே கண்டு விளங்கிய பின், முடிவில் அச்சந்திர மண்டலம் வீழ்ச்சி அடையும்பொழுது ஒரு நொடி நேரமும் இல்லாதொழியும்.

குறிப்புரை :

``ஆகவே, உணர்வின் விளக்கமாகிய மெய்யுணர்வைப் பெற வேண்டுவார் மேற்கூறியவாறு சந்திர யோகத்தால் சந்திர மண்டலத்தை விளக்கம் பெறச் செய்தல் வேண்டும்`` என்பது குறிப் பெச்சம். ``உணர்வு`` என்னும் பொருட்டாகிய ``கண்`` என்பதனை ``வெண்மதி தோன்றிய நாளில்`` என்பதற்கு முன்னே கூட்டி, அனைத்தையும் முதற்கண் வைத்து உரைக்க. நான்காம் அடியில் ``தண்மதி`` என்பது பாடம் அன்று. `கணமும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
இதனால், சந்திர யோகம் மெய்யுணர்விற்கு இன்றியமை யாததாமாறு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 

பொழிப்புரை :

சந்திரனிலும் ஆற்றல் மிகுகின்ற சூரியனது கலைகள் ஆறும், சூரியனும் ஆற்றல் மெலிகின்ற சந்திரனது கலைகள் ஆறும் தனித்தனி இருதயத்திற்குமேல் பன்னிரண்டங்குலம் சென்று சந்திர மண்டலத்தில் பரவி நின்றதன் பயனை அறிகின்றவர் உலகத்து அரியர்.

குறிப்புரை :

வாயு சுழுமுனை வழியாக மேற்செல்லும் பொழுது இருதயத் தானத்தை அடைந்தபின் வலிமிகுமாகலின் அவ்வாறு மிக்குச் செல்வதை, ``மலர்ந்தெழுதல்`` என்றும் சந்திர மண்டலத்தை அடைந்த வாயு பயனுடைத்தாகலின், அதனை, ``அலர்ந்து விழுதல்`` என்றும் கூறினார்.
``சந்திர கலை சூரிய கலையினும் மிக்கிருத்தல் உடல் உயிர்கட்கு முற்பக்கத்து முதிர்ச்சியும், அது சூரிய கலையினும் குறைந்திருத்தல் பிற்பக்கத்து முதிர்ச்சியுமாம் ஆதலின், இரண்டும் சமமாதல் அட்டமியாம். ஆகவே, முற்பக்கத்தை முதிரச் செய்யா விடினும் பிற் பக்கத்தை முதிரச் செய்யாமலேனும் இருத்தல் வேண்டும்`` என்றவாறு.
இதனால், சூரிய கலை சந்திர கலைகளைச் சமமாகச் செய்கின்ற சமநிலை யோகம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே. 

பொழிப்புரை :

யோகிக்கு உணர்வு பெருகுகின்ற உயிர் போல் வதாகிய சந்திர கலை குறைகின்ற நாளே விந்து இழப்பாகின்ற காலம் என்க. ஆகவே, முன்னை மந்திரத்திற் கூறியவாறு சந்திர கலையைக் குறைவுறாதபடி செய்கின்ற சமநிலை யோகத்தையுடைய யோகிக்கு எக்காலத்தும் விந்து இழப்பாகாது. ஏனெனில், மூலாதாரத்தில் உள்ள ஓங்கார உணர்வு நுண்ணிய நாதமாத்திரையாய்ச் சந்திர மண்டலத்துட் சேர்க்கப்பட்டதனால் ஆகிய உரை உணர்வுகளால் காமம் மீதூரா தொழிய, விந்து தனக்கு மூலமாகிய சுவாதிட்டானத்தில் கட்டுண்டு நிற்கும் ஆதலால்.

குறிப்புரை :

``உயிர் மதி`` எனக் கொண்டு கூட்டி, உவமத் தொகை யாக்குக. ``எனல்`` என்னும் வியங்கோட்சொல்லை, ``போம் வழி`` என்பதன் பின் கூட்டுக. ``போம் வழி`` என்பதும், `எங்கணும்` என்பதும் காலத்தை உணர்த்தின. ``யோகி`` என்றே போயினார், முன்னை மந்திரத்துட் கூறிய யோகம் இடையறாது நிற்றலின், ``அது போகாது`` எனச் சுட்டுப் பெயர் வருவித்துக்கொள்க. இறுதியடியை மூன்றாம் அடிக்கு முன்னே கூட்டியுரைக்க. ``மூலம்`` என்பது, ``விந்துவுக்கு மூல மான இடம்`` எனவே பொருள் தந்தது. ``மூலத்திற் கட்டுண்ணும்`` என மாற்றி, ``ஆதலால்`` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. `விட்ட` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. விட்ட - விட்டதனால் ஆகிய.
`சமநிலை யோகத்தை உடைய யோகிக்குச் சந்திர மண்டல உணர்வு குறைவுபடாது நிற்பக் காமம் மீதூராது ஒழியும்` என்றதனால், அவ்யோகம் யோகிக்கு இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே.

பொழிப்புரை :

மேல் சூரிய கலை பன்னிரண்டினின்று வேறாகத் தோன்றக் கூறிய ஆறனுடன், சுவாதிட்டானத்தினின்றும் கீழ்ச் சென்று மூலாதாரத்தைத் தாக்குவதாகிய அக்கினி கலை நான்கு தொடர்ந்து பொருந்தி நிற்கும் இயல்புடையன. அவற்றால் பத்தாகின்ற சூரிய கலைகளோடு சந்திரனது அடக்கமான கலை ஆறு கூடின், அந்நிலை யோகிக்கு மேற்கூறிய உரை உணர்வுகள் முழுதும் அற்றொழிகின்ற அமாவாசியை நாளாம்.

குறிப்புரை :

``ஆதலின், மேலே (பா.859) கூறிய அட்டமி நிலையில் அக்கினி கலை எழாதவாறு காக்க`` என்பது குறிப்பெச்சம். சூறுதல் - அகழ்தல். `மதித்து` என்னும் குறிப்பு வினைப்பெயர், பன்மை யொருமை மயக்கம். ``மதித்து உட்கலை ஆறுள்`` என மாற்றுக. உட் கலை - அடங்கும் கலை. ஆறுள் - ஆறு கூடிய காலத்தில். அகலுதல் - நீங்குதல். இதற்கு `உரை உணர்வு` என்னும் எழுவாய் முன்னை மந்திரத்தினின்றும் வந்தது. `சந்திர மண்டலத்து உரை யுணர்வு முற்றும் அகல்உவா` என்றதனால், அப்பொழுது காம இச்சை மிக்கு, விந்து சயம் சிறிதும் இலதாதல் பெறப்பட்டது. சூரியனது பேரொளியுள் சந்திரன் அடங்கி நிற்றலே உவா (அமாவாசியை) ஆதல் உலகியல்பும் ஆதல் அறிந்துகொள்க.
இதனால், மேற்கூறப்பட்ட சமநிலை யோகத்தின் இன்றியமை யாமை எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உணர்விந்து சோணி உறஇனன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. 

பொழிப்புரை :

புணர்ச்சிக் காலத்துச் சந்திர கலை குறையுமாயின், சூரிய கலை உணர்விற்கு முதலாகிய வெண்பாலினையும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலினையும் மிக இழக்குமாறு தனது ஆற்றலைச் செயற்படுத்தி நிற்கும். ஆகவே, உணர்வும், உடம்பும் போல்வன வாகிய சூரிய கலை, சந்திர கலைகளாகிய அவை தம்மில் ஒத்து நிற்பின், உணர்விற்கு முதலாகிய வெண்பாலும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலும் ஒருபோதும் மிக இழக்கப்படா.

குறிப்புரை :

எனவே, ``அப்பயன் கருதியே மேல் (பா.859) இருகலையும் சமமாதல் வேண்டும் எனக் கூறப்பட்டது`` என்றவாறு. இரண்டாம் அடியை முதற்கண் கூட்டி உரைக்க. முதற்கண் நின்ற உணர், முதனிலைத் தொழிற் பெயர். `சோணிதம்` என்பது குறைந்து நின்றது. வெண்பாலினை ``உணர்வு`` என்றதனால், செம்பால் உடம் பாதல் பெறப்பட்டது. உற - மிகுதியாய்க் கழிய. புணர்வு - புணர்ச்சி. இந்து - சந்திரன். `இந்து தான் வீசும் கதிரிற் குறையில்` என்க. `உணர்வும் உடம்பும்` என்னும் தொடர் இருமுறை வந்து, மேற்கூறிய வாறு வேறு வேறு பொருளைக் குறித்தன. ``உற`` என்பததை ``விடா`` என்பதனோடும் கூட்டுக.
இதனால், `மெய்யுணர்வில் விருப்பமுடையவர்க்குச் சமநிலை யோகம் புணர்ச்சிக் காலத்து மிக இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது. இதனை ஆடவர், மகளிர் இருபாலார்க்கும் ஒப்ப வைத்துக் கூறினமை குறிக்கொண்டு நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 30

அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. 

பொழிப்புரை :

சந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதம், தான் பாய்கின்ற யாறாகிய புருவ நடுவின் எல்லையைக் கடந்து வழிந்து கொண்டிருக்க, அப்புருவ நடுவினின்றும் மேன்மேல் சுடர்விட்டு விளங்குகின்ற ஒளிகள் ஐந்தையும் ஒன்று படுத்தி, அவற்றிற்கு ஏற்பு டையதான அந்தத் தண்டின் முனையில் அவைகளை ஓங்கி எரியச் செய்து, அவற்றைச் சுமக்க வல்லவர்கட்கு, நமனது வருகையும், கலை, நாள் முதலாகச் சொல்லப்படுகின்ற காலப்பகுதிகளும் இல்லையாகும்.

குறிப்புரை :

`குமிழி` என்னும் பெயர்ச்சொல்லடியாக, ``குமிழிக்க`` என்னும் செயவெனெச்சம் பிறந்தது. இவ்வெச்சம் நிகழ்காலத்தின்கண் வந்தது. `தன்` என்றது முன்னர்ப்போந்த யாற்றினை. தற்சுடர் ஐந்து, தற்சுடரை முதலாக உடைய ஐந்து. ``கூட்டி, ஒட்டி`` என்னும் எச்சங்கள், அடுக்கி, ``தரிக்க`` என்னும் ஒருவினை கொண்டன. `சமைந்த அத்தண்டு` என்க. சமைதல் - அமைதல். ``அத்தண்டு`` என்றது, சுழுமுனையை. அது மேற் பலவிடத்தும் பெறப்பட்ட மையின், இவ்வாறு சுட்டி யொழிந்தார். ``தண்டு`` என்பதன்பின், `மேல்` என்னும் பொருளதாகிய கண்ணுருபு விரிக்க. ஓட்டுதல், இங்கே ஒளியைப் பரவச் செய்தல். `விளக்கைத் தண்டின்மேல் வைத்து ஓங்கி எரியச் செய்தல்` என்னும் நயமும் இங்குத் தோற்றுவிக்கப்பட்டது. புருவ நடு முதலாக மேன்மேல் விளங்கும் ஒளிகள் ஐந்தாவன:- `விந்து, அருத்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம்` என்பன. ``நமன் இல்லை; நற்கலை நாள் இல்லை`` என்றது, `இறப்பும், பிறப்பும் அற்ற வீட்டு நிலை உளதாம்` என்றவாறு.
இதனால், சந்திர யோகம், பிராசாத முறையில் முதிர்ந்து ஞானயோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. 

பொழிப்புரை :

உலகீர், அமுதம் நிறைந்துள்ள ஊற்றின் மடையைத் திறந்து, அவ்வமுதம் பெருகிவர, அதனை உண்ணுங்கள். அதனை உண்டதன் பயனாக இவ்வுலகிலே நெடுங்காலம் வாழ நினையாமல், ஞான சமாதியில் அமர்ந்து சிவனது இரண்டு திருவடிகளாகிய தாமரை மலரின்கீழ்ச் சென்று இருக்கவே நினையுங்கள். அங்ஙனம் இருத்தலாகிய அழியா இன்பத்தின் பொருட்டு முதற்கண் உங்கள் மூச்சுக் காற்றினை இருமூக்காகிய வழிகளை மாற்றிக் கண்வழியாகச் செலுத்துங்கள்.

குறிப்புரை :

`அமுதம் உறும் ஊறலைத் திறந்து உண்ணீர்` எனவும், `தெள்நீர்ச் சமாதி அமர்ந்து இணையடித் தாமரைக்கே செல எண்ணீர்` எனவும், எச்சங்களை முன்னே கூட்டி முடிக்க. ``நலம் மாறும்`` என்பது, `இப்பெற்றங்கள் அறங் கறக்கும்` என்பதுபோல நான்காவதன் தொகை. `சென்று மாறும்` என்பதை, `மாறிச் செல்லும்` என விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. `உம்முடைய கால்கள் குருட்டு வழியை விட்டுக் கண் தெரிந்த வழியில் செல்வனவாகும்` எனவும், `உம்முடைய சந்ததிகளும் நீவிர் சென்ற வழியிற் சென்று திருந்தும்` எனவும் வரும் நயங்களும் ஈற்றடியில் தோன்றுதல் காண்க.
இதனால், உலகர்க்கு உறுதியுரைக்கும் முகத்தால், சந்திர யோகத்தினது சிறப்பு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித்
தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே. 

பொழிப்புரை :

இடநாடி வழியாகவும், வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பினின்றும் மாறுகின்ற சந்திர கலையும், சூரியகலையும் பின், யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும், குறைவுறாமலும் சுழுமுனை வழியே சென்று சந்திர மண்டலம் உள்ள தலையை அடையுமாயின், உடல், தனது நலத்திற்கு வேண்டுகின்ற வழிகளில் சிறிதும் சிதைவு உண்டாகாது. என்றும் அழிவில்லாத வீட்டின்பமும் இவ்வுலகில் மிகுவதாகும்.

குறிப்புரை :

தாறு - குலை. இது, சொல்லொற்றுமையால் குலைதலை (சிதைதலை) உணர்த்திற்று. இதனை, `புத்தி சேனன்` என்பவனை, ``திங்கள் விரவிய பெயரினான்`` (சீவகசிந்தாமணி - காந்தருவ தத்தையார் இலம்பகம் - 181) என்றது போலக் கொள்க.
``உபாயமும் ஊறுபடாது`` என முன்னே கூட்டுக. பாறு படுதல் - அழிவெய்துதல். ``பொங்குமே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதனால், யோக முறையும், அதன் பயனும் இறுதிக்கண் ஒரு திருமந்திரத்தால் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 33

விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்க நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே. 

பொழிப்புரை :

ஓடுதலை விடாத மனம் பிராணாயாமத்தால் ஒருவழிப்பட்டுச் சிவநாத ஒலியைக் கேட்பிக்கும். மதம் நீங்காத ஐம்பொறிகளாகிய யானைகளும் உரிய இடத்தில் கட்டுப்படும். அதனால், பருகப்படுகின்ற சந்திர மண்டலத்து அரிய அமிர்தமே பெத்த காலத்தில் விளையாத பேரின்பமாய் நிற்கும்.

குறிப்புரை :

`ஓடுதலை` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ``சங்கம்`` என்பது பொதுப்பட நாதத்தை உணர்த்தி நிற்ப, ``சிவசங்க நாதம்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `கொளுவுதலால்` என்பது, ``கொளுவி`` எனத் திரிந்து நின்றது. ``வீடு`` என்றது சிலேடை. படாத னவாகிய இன்பம், பேரின்பம். இஃது ஒன்றேயாயினும் எல்லை யின்றிப் புதிது புதிதாய் விளைதல் பற்றிப் பன்மையாக ஓதப்பட்டது. `பருகு ஆரமுதமே படாதனவாகிய இன்பங்களாய் நிற்கும்` என்க.
இதனால், சந்திர யோகம் வாசி முறையில் முதிர்ந்து ஞான யோகமாய் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

பொழிப்புரை :

நமக்கெல்லாம் தலைவனாகிய சிவனுக்குரிய ஓரெழுத்து மந்திரமாம் பிரணவத்தின் சிறப்பே, ஏனை எல்லா மந்திரங்களினும் உயர்வுடையதாதலை இத்தந்திரத்துள் யான் கூறுவேன். அதனானே, ஞானங்கள் பலவற்றினும் மேலானதாக உயர்ந்தோர் சொல்கின்ற சிவஞானத்தைப் புகழ்ந்து பாதுகாப்பவனும், யாவருடைய உள்ளத்திலும், `சிவனது திருவடியே பொருள்` எனத்தெளிவிப்பவனும், சிவயோகத்தையும் சுருங்கக் கூறுபவனும் ஆவேன். பிரணவத்தினை அறிய விரும்புபவர்களே! இதனைச் செவிக்கொண்மின்.

குறிப்புரை :

`நம் பிரான் ஓர் எழுத்தே ஏற்றுகின்றேன்; (அதனால்) புகல் ஞானத்தைப் புகழ்ந்தும் போற்றுகின்றேன்; சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக்கூட்டுக. சிந்தை நாயகன் சேவடி தேற்றுகின்றேன்; சிவயோகத்தைச் சாற்றுகின்றேன்; அறையோ` எனக் கூட்டுக.
``புகழ்ந்தும்`` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஏற்றுதல் - உயர்த்துதல்; என்றது உயர்வை உணர்த்துதலை.
`ஓர் எழுத்து` என்பது ஓகாரத்தைக் குறித்தல் மந்திர நூல் மரபு. `ஏகாட்சரம்` என்பர். யாதொரு மந்திர எழுத்தும் இறுதியில் மகர மெய்யைப் பெற்று நிற்றலும் மந்திர மரபு. அதனால், ஓகாரம் `ஓம்` என நின்று, `ஓங்காரம்` என வழங்கப்படும். மெய்யெழுத்து எண்ணப்படுவ தில்லையாகையால், `ஓம்` என நிற்பினும் ஓரெழுத்தேயாம். `மந்திரம்` என்பது ஓரெழுத்தாலாய மந்திரத்திற்கே சிறப்பாக உரிய பெயராதல் மந்திர நூல்களால் அறியப்படுவது. அவற்றின் இறுதியில் நிற்கும் மகர மெய் `விந்து` (பிந்து) எனப்படும்.
சொல்லுவோன், தனது கருத்தைப் பிறர்க்கு இனிது விளங்க வெளிப்படக் கிளந்து சொல்லுங்கால், புறத்து நிகழ்கின்ற இசையோசையையே ஒற்றுமை பற்றி எழுத்தோசையாக ஆசிரியர் கூறுவராயினும், `உண்மையில் எழுத்தோசை அவ் இசையோசையின் வேறே` என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார், ``அகத்தெழு வளியிசை`` எனவும், `அதனை யான் இங்குக் கூறிற்றிலேன்` எனவும் கூறியுணர்த்தினார். மேற்குறித்த இசையோசையை, ``எழுந்து புறத்திசைக்கும் -மெய் தெரி வளியசை என்றார்.
`நாதம்` என்பது, எழுத்தோசைக்கே பெயராக மெய்யுணர்வு நூல்கள் (தத்துவ சாத்திரங்கள்) கூறும். இசையோசையை `ஓசை` எனவும், எழுத்தோசையை `ஒலி` எனவும் குறியிட்டு, ``ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே`` 2 எனத் திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்தார்.
இசையோசை கருவியாக அன்றி எழுத்தோசையை நேரே உணரும் ஆற்றல் உலகர்க்கு இல்லை.
`ஓ` என்பது இசையோசையைக் குறிக்கும் குறிப்பிடைச் சொல் என்பது, `ஓ` என அரற்றினான்` என்பது முதலிய வழக்குக் களால் நன்கு அறியப்படும். அதுபற்றி இசையோசைக்கு முதல் `ஓ` என்பது பட்டு நிற்றலின், இசையோசையானே அறியப்படுகின்ற எழுத்தோசைக்கும், `ஓகாரமே முதல்` எனப்பட்டது. படவே, சொல்லுலகம் முழுவதற்கும் ஓங்காரமே முதலாயிற்று. அதனால், எல்லா மந்திரங்கட்கும் முன்னும், பின்னும் ஓங்காரத்தைக் கூட்டிக் கூறுதல் இன்றியமையாததாயிற்று. இவ்வாற்றால், சொல்லுலகம் முழு வதற்கும் முதலாய் நிற்கும் ஓங்காரத்திற்கு, எல்லாவற்றிற்கும் முதல் வனாகிய சிவபெருமானே முதல்வனாதலும் இயல்பான் அமைந்தது. அதனால், நாயனார் ஓங்காரத்தை, ``நம்பிரான் ஓரெழுத்து`` என்றார். மொழிகளில் உள்ள எழுத்துக்கள் போலச் சொற்கு உறுப்பாய் நின்று பொருள்விளக்காமையால் இதனை `ஊமையெழுத்து` என்பர்.
சொல்லுலகத்திற்கு முதலாய் இதனை நிற்றல்பற்றி ஓங்காரம் `தாரக மந்திரம்` எனவும்படும். பற்றுக் காரணமாகத் தேவர் பிறரை முதற்கடவுளராக எண்ணும் சமயத்தவர் இத்தாரக மந்திரத்திற்கும் தாம்தாம் கொள்ளும் கடவுளரையே முதல்வராகக் கூறி மகிழ்வர். அவையெல்லாம் வெறும் முகமனேயாதல் அக்கடவுளரது இயல் புகளை உள்ளவாறு உணர்வார்க்குத் தெற்றெனவிளங்கும்.
எழுத்தோசையைப் பற்றுக்கோடாகக்கொண்டே மக்கட்கு எண்ணங்கள் பலவும் தோன்றும். புதிது புதிதாகத் தோன்றி வரும் எண்ணங்கட்குக் கடலில் புதிது புதிதாகத் தோன்றிவருகின்ற அலையை உவமையாகக் கூறும் சிவஞானபோதம்.
புதிது புதிதாய்த் தோன்றிவரும் எண்ணங்கட்கு மேற்கூறிய வாற்றால் முதலாதல்பற்றி ஓங்காரம், `பிரணவம்` எனப் பெயர் பெற்றது. நவம் - புதுமை.
சொல்லுலகம் அனைத்திற்கும் முதல் ஓங்காரம் எனப்படுதல் பற்றி, `அனைத்து மந்திரங்களும் ஓங்காரத்தின் சூக்கும பரிணாமமே` என்பர். எனினும், அதன் கருத்து மந்திரங்கள்,
நாதமாய் நிற்கும் சுத்த மாயையின் காரியம் என்பதே. அதனால், `ஓங்காரம்` `ஓரெழுத்து` என்னும் சொற்கள் `ஓம்` என ஒலிக்கும் இசையோசையைக் குறித்தலேயன்றி. சங்கேதத்தால் நாதத்தையும் குறிக்கும்.
அவ்வாறான மந்திரங்களுள் `அம், சம்` என்னும் இரண் டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற மந்திரம் `அம்ச (ஹம்ஸ) மந்திரம்` எனப்படும். அவ்இரண்டெழுத்தும் பிராணாயாமத்துள் இரேசக பூரகங்கட்கு உரியனவாம். இரேசக பூரகங்கள் யோக முறைப்படி அறிந்து செய்யப்படும்பொழுது அம்மந்திரச் சேர்க்கைகளோடு செய்யப்படுதல் சிறப்பு. அது பிற மந்திரங்கள் போலாது பிராணனின் இயக்கமாகவே கொள்ளப்படுதலால், `அசபை` (செபிக்கப்படாமல் தானாகவே இயல்வது) எனப் பெயர்பெற்றது. எனவே, பிராண இயக்கத்தை உடைய ஒவ்வோர் உயிரிடத்தும் இஃது உளதாகக் கொள்ளப்படும்.
திருப்பாற்கடலில் திருமால் கொள்கின்ற அறிதுயிலிலும் இம்மந்திரம் இயல்பாக விளங்கினமையால், `அவரது இதயத்தில் வீற்றிருந்த தியாகேசப்பெருமான் அங்கு அசபா நடனம் புரிந்தனர்` எனவும், அப்பெருமானே முசுகுந்தச் சக்கரவர்த்தியால் திருவாரூரில் கொணர்ந்து எழுந்தருள்விக்கப்பெற்றமையால் `திருவாரூர்த் தியாகேசரது நடனம் அசபா நடனம்` எனவும் கூறுவர்.
அம்ச மந்திரத்துள் `சம்` என்பதை விசர்க்கத்துடன் கூடியதாக ஆக்கி `ச:` என முன்னும், `அம்` என்பதை `அஹம்` என வேறுபடுத்திப் பின்னும் வைத்து உச்சரிக்க வருவதே `சோஹம்` என்பது. `அவன் நான்` என்பது இதன் பொருள். எண் வகை யோகமும் கைவந்த நிலையில் தியானத்தானமாகிய ஆஞ்ஞையில் யோகி இச் சோஹம் பாவனையைச் செய்வானாயின், `அவன்` எனக் கருதுதல் இறைவனையே யாகலின், சாத்திய மந்திரங்களால் மந்திரான்மாவாய் நிற்கின்ற அவ்யோகி பசுத்துவம் நீங்கிப் பதிநிலையை எய்திப் பரமா காச வடிவாக ஆவான். சிவயோகி, `சோஹம்` எனப் பொதுப்படப் பாவியாது, `சிவோஹம்` எனச் சிறப்பாகப் பாவிப்பான். அதனால், அவன் சிவமாய் நின்று சிவானந்தத்தை நுகர்வான். ஞானத்தை எய்தினோரும் நிட்டையில் நிற்கமாட்டாதபொழுது அம்மாட் டாமைக்குக் காரணமாகிய வாசனா மலம் நீங்குதற் பொருட்டுத் திருவைந்தெழுத்தை அதற்குரிய முறையில் சுத்தமானதமாகக் கணிக்கும் போது சிவோகம் பாவனையை உடையவராயே இருந்து கணிப்பர். தத்துவமசி முதலிய மகா வாக்கியங்களும் `சோஹம்` என்னும் பொருளையே வேறுவேறு வகையில் கூறுவனவாம். `அம்சம்` என்ப தேயன்றி, இச் `சோஹம்` என்பதும் அசபையாகச் சொல்லப் படும். `சோஹம்`` என்பதன் பொருள் திருவைந்தெழுத்தில் இன்னும் விரிவாக அமைந்துள்ளது. ஆகவே, பிரணவத்தின் காரியங் களுள் அம்சம், சோஹம், திருவைந் தெழுத்து ஆகிய மந்திரங்கள் முதன்மை யுடையன. ஆகவே, அவை யெல்லாம் குறிப்பால் உணரக் கூறுகின்ற இவ்வதிகாரத்தை நம்பிரான் ஓர் எழுத்தைக் கூறுவதாக நாயனார் அருளிச்செய்தார்.
இதனால், `இவ்வதிகாரம் நுதலிய பொருள் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

பொழிப்புரை :

`ஓம்` என்று ஓரெழுத்தாகச்சொல்லப்படுகின்ற சமட்டிப் பிரணவத்தின் பொருளாகிய `இலய சிவன்` என்னும் அருவ நிலையால் உலகெங்கும் வரம்பின்றி நிறைந்து நின்று பின், `அ, உ` என்று, மகாரம் இன்றி இரண்டெழுத்தாகச் சொல்லப்படுகின்ற சூக்கும வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக்களின் பொரு ளாகிய சிவமும், சக்தியும் செம்பாதியான ஒளிவடிவாயுள்ள `போக சிவன்` என்னும் அருவுருவ மூர்த்தியாய் உலகத்தைத் தொழிற் படுத்த நினைந்து, பின், மேற்கூறிய இரண்டெழுத்துடன் மகாரத்தையும் கூட்டி `அ,உ,ம்` என மூன்றெழுத்தாகச் சொல்லப் படுகின்ற தூல வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக் களின் பொருளாகிய `அயன், அரி, அரன்` என்னும் மூவராம் `அதிகார சிவன்` என்னும் உருவ மூர்த்தியாய்ப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களில் தலைப்பட்டு நிற்கின்ற சிவனை அவனது திருவைந்தெழுத்தில் மகாரத்தின் பொருளாகிய மலத்தின் மறைப்பினால் அறியமாட்டாது உலகம் திகைக்கின்றது.

குறிப்புரை :

எனவே, `பிரணவத்தினை அதன் முறைகளை யெல்லாம் உணர்ந்து ஓதின் அவனைப்படிமுறையால் உணர்ந்து உய்யலாம்` என்பது கருத்தாயிற்று. உணரப்படுபொருளாகிய சிவனது சிறப்பினை உணர்த்தும் முகத்தால் அவனை உணர வேண்டுவதன் இன்றியமையாமையை உணர்த்தவேண்டி இவ்வாறு சிவன்மேல் வைத்து ஓதினாரேனும், பிரணவத்தை ஓதும் முறைமைகளையும், அவற்றது பயனையும் உணர்த்தலே கருத்தென்க.
`இருவராய் இசைந்து` என மாற்றியுரைக்க. ``இசைந்து`` என்ற தனால், அஃது அவ்விருவரும் வேறு நில்லாது ஒன்றாய் இயைந்து நிற்கும் அருவுருவ நிலையைக் குறித்ததாயிற்று. முளைத்தல், உருவாய்த்தோன்றித் தொழில் இயற்றல், `சோதியை` என்பதன்பின், `அறியாது` என்னும் சொல்லெச்சமும், மயக்கம் உறுதற்கு, `உலகம்` என்னும் எழுவாயும் வருவித்துக் கொள்க. இதன்கண் ஈரடி எதுகைவந்தது. உயிரெதுகையுமாம். `மவ்வெழுத்து` என்பது இத்தொடை நோக்கி விகாரமாயிற்று.
இதனால், அசபை சிவபெருமானுக்கு அருள்வாயிலாய் நின்று அவனை உணர்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமானார் தாம் இயல்பாக என்றும் எழுந் தருளியிருக்கின்ற சிதாகாசமாகவே திருவுளத்துக் கொண்டு வெளிநின் றருள்கின்ற தில்லையம்பலமும் மேற்கூறிய ஓரெழுத்தேயாகும்.

குறிப்புரை :

``தேவர்`` என்றது சிவபிரானையே. முதல் மூன்று அடிகளிலும் ```தேவர்`` என்பவற்றின்பின் `தாம்` என்பது வருவிக்க. ``சிற்றம்பலம்`` என்பதில் உள்ள சிறுமை, `நுண்மை` என்னும் பொருளதாய், ``சிதம்பரம்`` என்பதில் உள்ள `சித்து` என்னும் பொருளையே குறிக்கும். உபநிடதத்துள் `தகராகாசம்` எனப்படுவதில் உள்ள `தகரம்` என்பதற்கும் `சிறுமை` என்பதே பொருளாதல் அறிக. ``திருவம்பலம்`` என்பதிலுள்ள `திரு` என்பதும் அருளையே குறிப்பது. `சித்து, அருள்` என்னும் வெளிப்படைச் சொற்களாலும்., `சிறுமை, தகரம்` என்னும் குறிப்புச் சொற்களாலும் உணர்த்தப் படுவது சிவனது சக்தியே. அதனால் ``சிற்றம்பலம், சிதம்பரம், திருவம்பலம், தென்பொது`` என்னும் இந்நான்கும் சிவன் இயல்பாய் இருக்கின்ற பரவெளியாய் நிற்பது அவனது சத்தியே என்பது போந்தது. எனவே, சிவன் நிலவுலகத்தார்க்கு அருள் புரிதல் காரணமாகத் தில்லையம் பலத்தையே தனது பரவெளியாக ஏற்று எழுந்தருளியுள்ளான் என்பதை நாயனார் இம்மந்திரத்துள் முதற்கண் உடம்பொடு புணர்த் தலாற் கூறியருளினாராயிற்று. என்று - என்றுகொண்டு. ஊரின் திசை அதன்கண் உள்ள அம்பலத்திற்குப் புணர்த்துரைக்கப்பட்டது. `பொது வும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதனால் `அசபை மேற் கூறியவாறு, இலய சிவன் முதலியோர் வடிவாதலேயன்றி` என்னும் பொருள் தோன்றிற்று. ``ஆம்` என்பதற்கு `அசபை` என்னும் எழுவாய், அதிகராத்தால் வந்தியைந்தது.
இதனால், அசபை மேற்கூறியாவறு இலயசிவன் முதலியோர் வடிவாதலே யன்றி, இந்நிலவுலகில் அதிகார சிவன் வெளிநிற்கின்ற தில்லையம்பலமாயும் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்றுள்ளதாகிய மேற்கூறிய தென்போது, மேற்கூறியவாறு ஞானமாய் நிற்க. அதன் கண் நின்று சிவபிரான் நிகழ்த்துகின்ற திருக்கூத்து, அந்த ஞானத்தின் வழியே விளையும் ஆனந்தமாய் நிகழும். மேலும், அத்திருக்கூத்து இடை யறாது நிகழ்ந்து, ஊழிக்காலம் முழுவதும் உலகைத் தொழிற் படுத்துதலாகிய தூல ஐந்தொழிலை இயற்றுவதுமாம். அதுவேயன்றிச், சருவ சங்காரத்தின்பின், உலகத்தை மீளத் தோற்றுவித்தற்பொருட்டுச் செய்யப்படுகின்ற செயல்களாகிய சூக்கும ஐந்தொழில்களை இயற்றும் திருக்கூத்தும் அதுவேயாம்.

குறிப்புரை :

``பொன்னம்பலம் அற்புதம் ஆமே; திருக்கூத்து ஆனந்தம் ஆமே; அத்தாண்டவமே பிரளயம் ஆகும்`` எனக்கூட்டுக. அற்புதம் - ஞானம். ``பொன்னம்பலம் அற்புதம் ஆமே`` என்றது, திருக்கூத்து ஆனந்தமாதற்குரிய இயைபுணர்த்தற்குக்கூறிய அனு வாதம். அவ்வியைபால் திருக்கூத்து ஆனந்தமாதலை உணர்த்தியவர், அதுதானே தூல ஐந்தொழில் நடன மாதலின் இயைபு உணர்த்தற்கு, அனவரத தாண்டவமாதலை, முன்னர்க் கூறினார். மூன்றாம் அடியில் ``ஆமே`` என்பதன்பின் ``அதனால்`` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ``பிரளயம்`` என்றது ``ஊழி`` என்னும் பொருளதாய், ஆகுபெயரால் அதன் கண் நிகழும் தூல ஐந்தொழிலை உணர்த்திற்று. ``ஆம்`` என்பதன்பின் எல்லா இடத்தும் தேற்றேகாரம்புணர்த் தோதினார், அங்ஙனம் ஆகிநின்றதன் அருமை புலப்படுத்தற்கு. ``சங்காரம்`` என்றது அதன் முடிவை. அருமை, காண்டல் கூடாமையை உணர்த்திற்று. ``சூக்குமம்`` என்றவாறு. இச்சூக்கும நடனத்தைக் காண்பவள் அம்மை ஒருத்தியே, அவ்விடத்துப் பிறர் ஒருவரும் இல்லாமையால் தாண்டவம் ஒன்றேயாயினும், அதன் பகுதிகள் பலவாதல் பற்றி, ``தாண்டவங்கள்`` எனப்பன்மையாகக் கூறினார். ஈற்றில் நின்ற ஏகாரம் பிரிநிலையாய், ``அத்தாண்டவம்`` என்றதனோடு இயைவதாய் நின்றது.
அசபை தென்பொதுவாதலின் சிறப்புணர்த்தற்கு அப்பொது வின் சிறப்பை மேலைத்திருமந்திரத்துள் வகுத்தோதிய நாயனார், அசபை அப்பொதுவில் நிகழும் திருக்கூத்துமாய் நிற்றலின் சிறப்பை வருகின்ற திருமந்திரத்தால் உணர்த்தற்கு, அத்திருக்கூத்தின் சிறப்பை இதனால் வகுத்தோதினார் என்க.

பண் :

பாடல் எண் : 5

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.

பொழிப்புரை :

மேற்குறித்த அனவரத தாண்டவ உருவாய் நிற்கின்ற ஒப்பற்ற திருவைந்தெழுத் தாவதும் ``ஓர் எழுத்து`` எனப்பட்ட அசபையேயாம். அத்தாண்டவம் உயிர்கட்கு அருள்புரியும் செயலே, அதனால், அஃது ஒப்பற்ற பரம் பொருளால் செய்யப்படுகின்றது. இப்பெருமையை உணர்த்தும் குறிப்பே அத்தாண்டவம் நிகழும் அம்பலம் பொன்மயமாய் நிற்றல்.

குறிப்புரை :

கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தாதல் நன்கறியப்பட்டதாகலின், அதனை அனுவாதமாகக்கூறி, அத்தகைய ஐந்தெழுத்தாய் நிற்பதும் அசபையே என்றார். அதனானே, அசபை கூத்தப்பெருமானது வடிவாதலும் தானே அமைந்தது. ```தனி யெழுத்தும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது. இங்ஙனம் உணர்த்திய பின்னர் இயைபு பற்றியும், மேல் வகுத்துக் காட்டிய தாண்டவத்தின் சிறப்பும், அதுநிகழிடம் ஆகிய அம்பலத்தின் சிறப்பும் உணர்த்தினார் என்க.
கூத்தப் பெருமானது வடிவம் ஐந்தெழுத்தால் அமைந் திருத்தலை உண்மைவிளக்கம் முதலியவற்றான் அறிக. மேல் ``அன வரத தாண்டவம்`` என்றதனையே இதனுள்``தாண்டவம்`` எனச் சுருங்கக் கூறினாராதலின், ``தாண்டவக் கூத்து`` என்பது இருபெய ரொட்டாம். ``பொன்போற் பொதிந்து`.1 ``பொன்போற் புதல்வர்`` 2 ``பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரை`` 3 என்றாற் போல்வன வற்றால் பொன்னினது சிறப்பினை உணர்க. தற்பரத்தால் செய்யப் படுவதனை, ``தற்பரம்`` என்றார். `ஓரெழுத்` எனத் தகரவுகரமின்றி ஓதுதல் பாடம் அன்று.
இதனால், அசபை கூத்தப்பெருமானது வடிவாதற் சிறப்புடைய திருவைந்தெழுத்தாயும் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமான் ஒருவனே தத்துவம் எல்லா வற்றையும் கடந்து நிற்கும் பேரொளிப் பொருளாயும், தத்துவம் எல்லா வற்றிலும் அவையேயாய்க் கலந்துநிற்பவனாயும், பிரணவ மாயும், மூவகை ஐந்தொழிற் கூத்திற்கும் முதல்வனாயும், அக்கூத்து இயற்றுங் கால் தன்னைத் தாங்கி நிற்கின்ற அம்பலமாயும் உள்ளான்.

குறிப்புரை :

``அதனால், பிரணவமாகிய அசபை மேற்கூறிய வாறெல்லாம் நிற்றல் அவனது திருவருட் சங்கற்பத்தாலல்லது தானாக அன்று`` என்பது குறிப்பெச்சம். ``அகார உகாரம்`` என்பது ``பிரணவம்`` என்னும் பொருளதாயும், ``பரஞ்சுடர்`` இரண்டில் பின்னது, ``முதல்வன்`` என்னும் பொருளதாயும் நின்றன. தராதலம் - தாங்குகின்ற இடம். தத்துவக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து.
``அசபை மேற்கூறியவாறெல்லாம் நிற்றல் தானாகவே போலும்`` என மலையாமைப்பொருட்டு ``எல்லா முதன்மையும் உடையவன் சிவன் ஒருவனேயாதலின், அசபையின் காரியமும் அவனன்றி ஆகாது`` என இதனால் ஓர் ஐயம் அறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 7

தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
தராதல வெப்பு நமவா சியஆம்
தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
தராதல யோகம் தயாவாசி ஆமே.

பொழிப்புரை :

ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடி யாகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந்தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும். அதற்குமேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன்நின்றவாறே நிற்க இருக்கும். அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும்.

குறிப்புரை :

``அதனை யறிந்து சிவயோகி தனது சிவயோகத்தைச் செய்க`` என்பது குறிப்பெச்சம்.
திருவைந்தெழுத்து,
மூலாதார மண்டலத்தில் - நமசிவாய - என்றும்,
அதற்குமேல் அக்கினி மண்டலத்தில் - நமவாசிய - என்றும்,
அதற்குமேல் சூரிய மண்டலத்தில் - வாசிய - என்றும்,
அதற்குமேல் சந்திர மண்டலத்தில் - வாசி - என்றும்
நிற்கும் என்பது இதன் தெளிபொருளாதல் காண்க. ``பிற யோகிகள் யோகத்தை அமந்திரமாகவும், பிரணவமாகவும் செய்வாராயினும், சிவயோகி இவ்வாறு திருவைந்தெழுத்து மந்திரத்தால் யோகம் செய்யக்கடவன்`` என்பது குறிப்பால் உணர்த்தியவாறு, இச் சிவயோக நெறியால் பாசமும், அதன்வாதனையால் நிற்கும் பசுத்துவமும் நீங்கச் சிவமாம் தன்மையைப் பெறுவன் என்க.
மூலாதாரத்தை, ``மூலை`` என மறைபொருளாகக் கூறுதல் சித்தமுறை. அது பற்றி,
``மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர்என் றுந்தீபற;
தவத்தில் தலைவர்என் றுந்தீபற``
என்ற திருவுந்தியாரையும் (பா.12) நோக்குக. தற்பரம் - அதிதெய்வம். மாபரன் - பதியாய் (முழுமுதல் தலைவனாய்) நிற்கும் சிவன். ``தற்பரம், மாபரன்`` என்ற இரண்டும் ஆகுபெயராய் அவர்க்குரிய மந்திரத்தைக் குறித்தது, வாளா, ``தரா தலம்`` என்றாரேனும், `அதற்கு மேல் உள்ள தராதலம் என்றல் கருத்தாதல் அறிக. வெப்பு, இடை நின்ற இரு தராதலம், யோகம் இவையும் ஆகுபெயராய் அவ்விடத்து நிற்கும் மந்திரங்களைக் குறித்தன. யோகம் - கூடுதல். வெப்பு, இருமடியாகு பெயர்.
இதனால், `சிவயோகம் செய்வார் அறிதற்குரிய நான் மண்டல மந்திரங்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

பொழிப்புரை :

பிரணவ யோகிகட்கு அகார உகாரமாய் நிற்கின்ற பிரணவ கலைகள் சிவயோகிகட்கு முறையே திருவைந் தெழுத்தில் சிகார வகாரங்களாய் நிற்கும். (எனவே சிகார வகாரங்களின் பொருள்களாகிய அபர சிவனும், ஆதி சத்தியும் சொல்லால் உணரப் படுபவர் என்பதாம்.) சொல்லால் உணரப்படாத நிலையில் நிற்பவர் பரசிவனும், பராசத்தியுமே. அவர்களது நிலை ஐந்தொழிற்கூத்தொழிய ஞான மாத்திரமாய், மேல் நிற்பதாம். `சிவ கதி` எனவும், ``சிவானந்த மயம்` எனவும் சொல்லப்படுகின்ற பரநிலை அவர்களது நிலையேயாம்.

குறிப்புரை :

`பிரணவ யோகத்தோடு நில்லாது, சிவமந்திர யோகத்தில் செல்வோரே நாதத்தைக் கடந்து, பரநிலையை எய்துவர்` என்பதை உணர்த்துவார், அவர்க்கும் பிரணவம் பயனளிக்குமாற்றை முதற்கண் கூறினார். `அகார உகாரங்கள் சிவங்கள் ஆமே` எனக் கூட்டுக.
சிவங்கள் என்றது, `சிம், வம்` என்னும் எழுத்துக்கள் என்றவாறு. சிகார வகாரங்களைத் தனிப்பட எடுத்துக் கூறுமிடத்து இவ்வாறு விந்துவுடனாகக் கூறுதலும் உண்டு. `அறியா இடம் பரங்களே ஆம்` என்க. இடத்தில் உள்ளவர்களை ``இடம்`` எனவும், பரமாய் நிற்பவர்களை, ``பரம்`` எனவும் கூறினார். சிவனையும், சத்தியையும் வேறுவேறாக வைத்து எண்ணுதலின், ``பரங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். இரண்டாம் அடியின் இறுதியில், `அவையே` என்னும் எழுவாய் வருவிக்க. `இவை அறியா இடம்` எனவே முன்னர்க் கூறியன அறியும் இடமாதல் பெறப்பட்டது.
இதனால், அசபை சிவ யோகிகட்குச் சிவமந்திரமாய்ப் பயன்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தில் துன்பத்தைத் தரும் பாச எழுத்துக்களாகிய நகாரம் மகாரம் இரண்டும் நீங்க, எஞ்சிய மூன்றும் நின்றவழி உளதாவது இன்பமே. அம் மூன்றெழுத்துக்களில் சிகாரமும், வகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்கள் அறிவெழுத்துக்களாம். (சிகாரம் அறிவைச் செலுத்துவதும், வகாரம் செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆம்.) அவற்றுள்ளும் அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்துவதாகிய சிகாரத்திலே அடங்க, சிகாரமும் வகாரமும் ஆகிய இரண்டெழுத்தும் சிகாரமாகிய ஓர் எழுத்தேயாய் விடும். (அதுவே ஆனந்தாதீத நிலையாம்.) இவ்வாறு, `சிவாய` என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தப்பேற்றினை வழங்குவனவாதலை அறிபவர் மிகச் சிலரே. அவற்றை அன்போடு அறிய வல்லவர்கட்கு ஆனந்தம், அம்பலத்தில் கண்கூடாகக் காணப்படும் அருள்நடனத்திலேயே எளிதில் உண்டாகும்.

குறிப்புரை :

``சிவாய`` எனப்பின்னர் வருதலின், முன்னர் வாளா, ``மூன்று`` என்றார். `இரண்டு அறிவு; அவை ஒன்றும் ஆகும்` என்க. `ஒன்றும்` என்னும் எதிர்மறை உம்மையும், `ஆனந்தக்கூத்தாயே` என்னும் பிரிநிலை ஏகாரமும் தொகுத்தல்பெற்றன. `இரண்டு, ஒன்று` என்பன அவ்வவ்வெழுத்துக்களைத் தொகைக் குறிப்பால் உணர்த்தின. ``சிவாய`` என்பதன்பின், என்பதை என்பது எஞ்சி நின்றது. `சிவாய` என்னும் மூன்றெழுத்தில் சிகாரம் பேறும், வகாரம் பெறுவிப்பதும், யகாரம் பெறுவானும் ஆக நிற்கும் நுட்பமும், அம் மூன்றும் உள்ளவழியே ஆனந்தானுபவம் நிகழ்தலும் நல்லாசிரியர் வழி மரபில் நின்று உணர்பவர்க்கல்லது உணர வாராமையின் ``அறிவார் பலர் இல்லை`` என்றார். மூன்றாவதாக வந்த `ஆனந்தம்` அன்பின்மேல் நின்றது, சிவயோகிகட்குத் திருவம்பலக் கூத்து ஆனந்த நடனமாதல் அனுபவமாய் விளங்கலின், ``ஆனந்தக் கூத்தாய் அகப்படும்`` என்றார்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும்`` ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை`` 1
என்ற அனுபவத்தினை இங்கு நினைவு கூர்க.
இதனால், அசபா யோகத்தின் முதிர்ந்த நிலையாகிய சிவ மந்திர யோகத்தினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

படுவ திரண்டு பலகலை வல்லார்
படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

பொழிப்புரை :

யோக நூல்களிலும், ஞானநூல்களிலும் வல்ல வர்கள் பொருந்துவது ``அம், சம்`` என்னும் இரண்டெழுத்திலும், ஓங் காரத்திலும் திருவைந்தெழுத்திலும் சிவனது அருளல் நடனத்தின் அன்பிலும், அவையெல்லாம் பலவகைச் சக்கரங்களில் பரவி விளங்குகின்ற முறைமைகளிலுமாம்.

குறிப்புரை :

``படுவது`` என்பன தொழிற்பெயர்கள். அவை சொற் பொருட்பின்வருநிலையாய் வந்தன. முத்தொழிலாகக் கூறுமிடத்தில் அருளல் அழிப்பில் அடங்குகின்ற முறை பற்றி, ஐந்தொழிலில் இறுதிக்கண்ணதை, ``சங்காரம்`` என்றார். ``கோணம்`` என்றது பலவகையாக வரையப்படும் சக்கரங்களை, ``இரண்டு, பஞ்சாக்கரம், பத்தி, கோணம், வாறு`` - இவைகளில் ஏழாம் உருபு விரித்துக் கொள்க. ``ஆறு`` என்பது சில இடங்களில் முதற்கண் வகரமெய் பெற்றும் வருதல் உண்டு. சங்கச் செய்யுட்களில் மகரமெய் பெற்று, ``மாறு`` என வருதல் அறியத்தக்கது. ஆறு - வழி; முறை. ``ஓங்கார பஞ்சாக் கரங்கள்`` என அஃறிணை உம்மைத்தொகை பன்மையீற்றொடு வந்தது.
இதனால், மேற்கூறிய மந்திரங்கள், தாண்டவம் இவை யோகத்திற்கும், ஞானத்திற்கும் வாயிலாதல் கூறப்பட்டது. புற வழிபாட்டிற்கும் உரியதாகப் பின்னர்க் கூறப்படும் சக்கரங்களும் இங்கு எதிரதுபோற்றிக் குறிப்பிடப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்துறை பின்னையும்
வாறே திருக்கூத்தா கமவ சனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.

பொழிப்புரை :

மேற்கூறிய மூன்று மந்திரங்களும் சதா சிவ மூர்த்தியால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்களின் ஞானப் பகுதி களும், அவற்றால் அடையப்படும் சிவகதியாகிய வளப்பமான கடல் துறையும், அத்துறையில் மூழ்கினோர்க்கு ஐம்பொறி வழியிலும் அவ் வானந்தத்தைத் தருகின்ற திருநடனமும், மற்றும், ஆகமங்களின் கிரியைப் பகுதிகளும், ஞானிகட்கேயன்றிப் பிறர் அனைவர்க்கும் பொதுவாகச் செய்யப்படுகின்ற அம்பலக்கூத்தும் ஆகிய அனைத்து மாய் நிற்கும்.

குறிப்புரை :

``இவ்வாறே`` எனச் சுட்டியுரைத்தல் கருத்தாகலின், ``வாறு`` என்பன மேற்கூறிய மந்திரங்களைச் சுட்டி நின்றன. ``சதாசிவம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகையில் ஈறு கெட்டுப் புணர்ந்தது. ஞானப் பகுதிகள் தம்முள் முரணுதல் இன்மையின், ``மாறிலா ஆகமம்`` என்றது அவற்றை யாயிற்று, ``பின்னையும்`` என்பது ``மற்றும்`` எனப் பொருள் தந்து, ஞானத்தின் வேறாகிய கிரியை முதலியவற்றைக்கூறும் குறிப்புணர்த்தி நின்றது. ``புன்னையும்`` என்பது பாடம் அன்று. இதனை, `திருக்கூத்து` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``அமலம்`` என்பது ஆகுபெயரால் அதனையுடைய கூத்தினைக் குறித்தது.
இதனால், மேலானவற்றின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி ஆகும்ஆ னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாம்மாயை காமியம்
அமலம் திருக்கூத்தங் காமிடந் தானே.

பொழிப்புரை :

``அமலம்`` எனப்பட்ட நடனமே முப் பொருள்களாயும், ஆகமங்களாயும், திரோதான சத்தி அருட் சத்திகளாயும், முப்பாசங்களாயும் நிற்கும். அந்நடனம் நிகழ்கின்ற அம்பலம் அருளே.

குறிப்புரை :

இப்பொருள்களின் இயக்கங்களாய் நிற்றல் பற்றித் திருக்கூத்தினை இப்பொருள்களாகவே கூறினார். `இயக்கம்` என்பதைப் பதியொழிந்தவற்றில் காரியம் காரணமாக உபசரிக்கப் பட்டது என்க. பதி - ஐந்தொழில் செய்பவன். `இத்தகைய கூத்து நிகழ் தற்கு இடமும் தக்கதாயுள்ளது` என்றற்கு அதனது சிறப்பினை இறுதிக் கட்கூறினார். ``ஆமிடந் தானும்`` எனற்பாலதாய எச்சவும்மை தொகுத் தலாயிற்று.
``ஆம்`` இரண்டில் முன்னது முற்று; அதனை, ``காமியம்`` என்பதன்பின்னர்க் கூட்டுக. பின்னதும், ``ஆகும்`` என்பதும் எச்சங்கள். ``ஆகும்`` என்பதில் ஆதல், எல்லையின்றிப்பெருகுதல். மூன்றாம் அடியை ``ஆம்`` என்பதை ஒழித்து ஓதின் தளை சிதைதல் அறிக.
இதனால், மேல் ``திருக்கூத்து`` எனவும், ``அமலம்`` எனவும் முறையே குறிக்கப்பட்ட ஞான நடன ஊன நடனங்களுள் ஊன நடனமும் சிறுமையுடைத்தாகாது பெருமையுடைத்தாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தனமய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

``திருக்கூத்து ஆமிடம்`` என மேற்குறிக்கப் பட்ட அருளாகிய சத்தி தனக்கு ஒரு தலைவியை வேண்டாது தானே தனக்குத் தலைவியாய் நிற்பாள்; மேலும், தானே தனக்கு இன்றியமையாத பொருள்களாயும், தன்னுள்ளே சூக்குமமாயும் நிற்பாள். இனி, தனக்குத் தலைவனாகிய சிவனும் அவளே.

குறிப்புரை :

முதல் அடியில் ``தலைவனுமாய்`` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தன மலை - செல்வமாகிய மலை; இதனை `விபூதி` என்பர், பின்வந்த ``தனம்``, `தன்னம்` என்பதன் இடைக் குறை.
இதனால், மேல். `அருள்` எனப்பட்ட சத்தியது சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

பொழிப்புரை :

யாதொரு தொழிலுமின்றிச் சிவனாய் நிற்றலே யன்றி ஐந்தொழில் செய்யும் பதியாயும் நிற்கின்ற முதல்வனது தன்மையையும், அம்முதல்வனது தொழில்களில் பிறவற்றின் பயனையன்றி, இறுதித் தொழிலாகிய அருளலின் பயனையும் ஏற்கும் நல்ல கொள்கலமாகிய பக்குவம் வாய்ந்த உயிரினது தன்மையையும் மகரந்தங்களாக உதிர்த்து மலர்கின்ற திருவாய்மலரையுடைய சிறந்த ஞானாசிரியனாயும் நிற்பன சிவனது இரண்டு திருவடிகளே.

குறிப்புரை :

தற் பரம் - தனக்கு (ஆன்மாவிற்கு) மேலானவன். ஆசிரியன் தன்னைச் சிவமாகப் பாவிக்கும் பாவனையில் நின்றே உபதேசித்தல் பற்றி இங்கு, ``தன்`` என்று ஆசிரியனையே சுட்டி, `அவனுக்கு மேலானவன்` என்றார். அபக்குவிகட்கு மேலாய் நிற்றல் பற்றிப் பக்குவியை, ``தலைவன்`` என்றார். ``தாதவிழ்`` என்றதை அவ்வடியின் முதற்கண்வைத்து உரைக்க. அது, ``ஞானத்தலைவன்`` என்னும் முதற்பெயரோடே முடியும். மூன்றாவதாக வந்த ``தலைவன்`` என்பது, ``ஞானாசிரியருள் மேம்பட்டவன்`` எனப் பொருள் தந்தது. இறுதியில் உள்ள `நின்ற` என்பது முற்று. ``தானே`` என்பது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், தடத்த நிலையில் உள்ள சிவனுக்குத் திருவடிகளாய் உள்ளது அவனது `அருள்` எனப்படும் சத்தியே என்பது குறிக்கப் பட்டது. இதனது பயன், வருகின்ற மந்திரம் முதலியவற்றுள், ``இணையார் திருவடி`` என்பனபோலக் கூறும் வழக்கினது உண்மையை உணர்தல்.

பண் :

பாடல் எண் : 15

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

பொழிப்புரை :

சிவனது, இணைதல் பொருந்திய திருவடிகளே வித்தெழுத்துக்கள் மூன்றோடு கூடி எட்டெழுத்தாய் நிற்கும் பஞ்சாக்கரமும், பத்துக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு நிற்கும் பிரணவமும், மூல எழுத்துக்களாகிய (மாதுருகாட்சரங்களாகிய) அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள ஐம்பத்தோரெழுத்துக்களும், ஏழு கோடிகளையுடைய பல மந்திரங்களுமாய் நிற்கும்.

குறிப்புரை :

இணை, முதனிலைத் தொழிற்பெயர். `இணையாகப் பொருந்திய` என்றும் ஆம், `இறைவனது ஞான சத்திகிரியா சத்திகளே அவனது இரண்டு திருவடிகள்` என்பது உணர்த்துதற்கு, ``இணையார் திருவடி`` என்றார். ``இணையார் கழல்`` மூன்றும் அடையடுத்த ஆகுபெயர்களாய் நின்றன. எனவே, இணைதல், கழல் என்னும் அணியைச் சிறப்பித்து நின்றனவாம். அங்கு இணைதல், அறியப் படுதல். ``ஏழு`` என்பதும் ஆகுபெயராய் அத்துணைக் கோடியை உணர்த்திற்று. ஆயிரம், பன்மை குறித்தது.
இதனால், எல்லாவற்றிலும் நீக்கம் அற நிறைந்து நிற்கின்ற சிவ சக்திக்குச் சிறப்பிடம் மந்திரங்கள் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.

பொழிப்புரை :

மந்திரங்கள் அளவற்றனவாய் நின்று அளவற்ற உயிர்களில் நிற்பினும் அவை அனைத்தும் ஐம்பதெழுத்திற்குள்ளும், `ஏழு கோடி` என்னும் வகைக்குள்ளும், `ஏழு, இரண்டு` என்னும் வடிவத்துள்ளும், அடங்கி நிற்கும் முறைமை அறியத் தக்கது.

குறிப்புரை :

``எண்ணிலா மந்திரம் ஏழாயிரத்துயிர் ஏழாயிரமாய்`` எனக் கூட்டுக. `எழுவகைப் பிறப்பிலும் பலவாய் உள்ள உயிர்`` என்றற்கு ``ஏழாயிரத்துயிர்`` என்றார். ஏழாயிரத்துயிர்க்கும்` என்னும் நான்கனுருபும், முற்றும்மையும் தொகுத்தல் பெற்றன. ``இருபதாய் முப்பதாய்`` என்றது, `ஐம்பதாய்` என்றவாறு. மாதுருகாட்சரங்களை ஈற்றிலுள்ள க்ஷகாரத்தைக் கூட்டி `ஐம்பத்தொன்று` என்றல், கூட்டாது விடுத்து `ஐம்பது` என்றல் ஆகிய இருமரபுகளும் உள்ளன என்க. உயிர்களைக் குறிப்பதாய் இரண்டாம் அடியில் வந்த ``ஏழாயிரத்தும்`` என்பது சொற்பொருட் பின்வருநிலை. `எல்லாப் பொருள்கட்கும் மந்திரம் உண்டு` என்பதைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தின் இரண்டாவது அதிகரண பாடியத்திற் காண்க.
கோடி - இறுதி. மந்திரங்கள் அனைத்தும் எழுவகை இறுதி உடையனவாம். அவை:- `நம:, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வௌஷட், பட், ஹும்` என்பன. (ஹும், பட்` - இரண்டும் ஓரிடத்தே இணைந்தும் வரும். அவ்விடத்து, `ஹும் பண்` என நிற்றலும் உண்டு.) `ஏழு, இரண்டு` எனப்பட்டவை பஞ்சாக்கர பேதங்கள். மேல் ``எட்டெழுத்து`` என்றதில் வித்தெழுத்து மூன்றனுள் இறுதி நின்றதை நீக்கி, இங்கு ``ஏழு`` என்றார். அவ்வாறு நிற்றலும் உண்மை பற்றி. இரண்டு, சிகார வகாரங்கள். `அறியத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், மந்திரங்கள் விரிந்தும், ஒடுங்கியும் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

பொழிப்புரை :

உண்மையில் உள்ள மந்திரங்கள் அளவற்றன. எந்தப் பொருட்கு மந்திரம் இல்லை! அனைத்து மந்திரங்களும் சிவனது திருமேனியே. அவற்றின் உண்மை இதுவே.

குறிப்புரை :

முன்னிரண்டடிகள், ``கற்றது கைமண்ணளவு; கல் லாதது உலகளவு`` 1 என்பதுபோல, அறியப்படாது பல மந்திரங்கள் உள என்பது உணர்த்தின. சிவனுக்குத் திருமேனியாவது அவனது சத்தியேயாகலின், மூன்றாம் அடி மந்திரங்கள் சத்தியின் வடிவமாதல் குறித்ததாம். அதனானே, மந்திரங்கள் அவனது உறுப்புக்களில் நியசிக்கப்படுவதற்குக் காரணமும் கூறியதாயிற்று. `மந்திரங்கள் சிவ சத்தியே` என்பதனை ஈற்றடி உணர்த்திற்று. மூன்றாம் அடியில், `மந்திரம்` என்னும் வட சொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.
இதனால், மேல் `சத்தி மந்திரமாய் நிற்கும்` எனச் சத்திமேல் வைத்துக் கூறியது, `மந்திரங்கள் சத்தியாம்` என மந்திரங்களின்மேல் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

பொழிப்புரை :

சிவன், தானே தான் ஆடத்தக்க கூத்து வகைகளை வகுத்துக்கொள்வான்; பின்பு அக்கூத்துக்களை மந்திரங்களையே வடிவாகக்கொண்டு ஆடுவான். அக்கூத்து வகைகளுள் சத்தியின் கூத்திலும் தான் நிறைந்து நிற்பான். சில கூத்துக்களைத் தன்னுடையன வாகவே ஆடி நிற்பான்.

குறிப்புரை :

`அவனது நிலையை அறிபவர் யார்` என்பது குறிப் பெச்சம். ``அகார, உகாரம்`` என்றது அவற்றை அடியாகக் கொண்டு எழும் மந்திரங்களை உணர்த்திற்று. `ஹ்ரீம்` என்பது சத்தி பீஜம் ஆதலின் அத்தத்துவக் கூத்து சத்தியினுடையதாயிற்று. ``ரீங்காரம்`` என்றது, `அக்கூத்திற்கு மூலம்` என்றவாறு. ``தனி நடம்`` என்றது, தன்னுடை யவற்றை. மூன்றாம் அடியை அகரச்சுட்டின்றி ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``சிவன் திருமேனி`` எனக் கூறப்பட்டதில் இடம்பெற்றுநின்ற சிவனது பெருமை கூறப்பட்டது. சத்தியின் பெருமை மேலெல்லாம் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும்
நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

பொழிப்புரை :

``தனிநடம்`` என மேற்குறிக்கப்பட்ட சிவ நடனம் இரு வகைத்து. ஒன்று இன்பத்தையே தரும்; மற்றொன்று துன்பத்தையே தரும். துன்பத்தைத்தருவது மறைத்தலைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும்; இன்பத்தைத் தருவது விளக்கத்தைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும். பின்னதனால் விளைகின்ற நலம் செம்பு பொன்னானது போல அதியற்புதம் உடையதாகும்.

குறிப்புரை :

பிரிநிலை ஏகாரங்கள் பிரித்துக் கூட்டப்பட்டன. நளினம்- இன்பம். நமனது செயலாகிய கொல்லுதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். அதனின் மிக்க துன்பச்செயல் இன்மையின் அதனைக் கூறினார். இன்பம் வீடும், துன்பம் பந்தமும் ஆதல் வெளிப்படை. இக் கூத்து இரண்டும் முறையே, `ஞான நடனம், ஊன நடனம்` எனப்படும். மறைத்தலைச் செய்யும் எழுத்துக்கள்நகார மகாரங்கள். அவை திரோதான சத்தியும், மலமுமாய் நிற்பனவாம். விளக்கத்தைச் செய்யும் எழுத்துக்கள் சிகார வகாரங்களாம். அவை முறையே சிவமும், அருட்சத்தியுமாய் நிற்பன. இவற்றான் அமையும் இரு வேறு வடிவங்களை ``ஆடும் படி கேள்``, ``சேர்க்கும் துடி சிகரம்`` என்னும் உண்மைவிளக்க வெண்பாக்களால் அறிக. `நகை செய்யும் மந்திரம்` என ஓதுதல் பாடம் அன்று.
செய்யுட்கு ஏற்ப ``மந்திரம், லிங்கம்`` என்றவற்றை வேறு வேறிடத்து வைத்து ஓதினாராயினும், இரண்டையும் ஈரிடத்தும் ஒருங்கோதுதல் கருத்தென்க. உருவத் திருமேனியும் `வியத்தலிங்கம்` எனப்படுதல் அறிந்துகொள்க. `ஒன்று நகை செயா மந்திரம்` எனவே, `மற்றொன்று நகை செயும் மந்திரம்` என்பது தானே விளங்கிற்று. ``இரண்டு`` என வந்தவை மூன்றில் முதலது பயனிலையாயும், ஏனையவை ஏழன் உருபேற்ற பெயராயும் நின்றன. உருபேற்றுத் தொடர்ந்த பெயர்களை நான்காம் அடியிலும் கூட்டிப் பொருள் கொள்க. `செம்பு, பொன்` என்னும் உவமைகள் முறையே உயிர்க்கும், சிவத்திற்கும் ஆயின.
இதனால், ``வாறே சதாசிவம்`` என்ற மந்திரத்துள் குறிக்கப் பட்ட இருவகை நடனத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

பொழிப்புரை :

மேற்கூறிய, செம்பு பொன்னாவது போன்ற அதிசயப்பயன் மேற்கூறிய ஞானநடனத்தின் வடிவாய் அமைந்த `சிவாயநம` என்பதை ஓதினால் கிடைக்கும். அப்பயன் உயிர்கட்குக் கிடைத்தற்பொருட்டே சிவன் அம்மந்திர வடிவைக் கொண்டான். இனி, `ஷ்ரீம், ஹ்ரீம்` என்பன அவ்வடிவம் நிற்கும் செம்பொன் மய மான திருவம்பலமாகிய சத்தியின் எழுத்துக்களாதலின், அவற்றை ஓதினாலும் மேலை மந்திரத்திற் சொல்லிய பயன் விளைவதாம்.

குறிப்புரை :

இறுதியில் உள்ள ``செம்பு`` `செம்மை` என்றவாறு, `ஷ்ரீயும், கிரீயும் எனச் செம்பு பொன்னாகும், அது திருவம்பலம் ஆதலால்` என்க. `எனவும்` என்னும் எச்சவும்மை தொகுத்தல். `ஆதலால்` என்பது சொல்லெச்சம்.
இதனால், மேற்கூறிய ஞானநடனத்தின் பயனை எய்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமா இருபத்தஞ் சாக்கித்
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

சக்கர வழிபாட்டில் திருவம்பலம் அமைதற்கு அச்சிறப்பினதாகிய சக்கரத்தை நெடுக்கில் ஆறு கீற்றும், குறுக்கில் ஆறு கீற்றும் கீறி இருபத்தைந்து அறைகளாகத் தோற்றுவித்து மந்திர எழுத்துக்களை உரிய முறையால் அவ்வறைகளில் பொறித்து வழிபட்டுச் செபிக்க.

குறிப்புரை :

`மந்திரமாவது இது` என்பது வருகின்ற பாட்டிற் கூறப்படும். ``திருவம்பலமாக`` என்பன சொற் பொருட் பின்வரு நிலை. `பொறித்து வழிபடுக` என்பது சொல்லெச்சம். `பொறிக்க` என்றே ஒழிதலும் ஆம்.
இதனால், நடனம் நிகழும் அகண்டமான திருவம்பலத்தைக் கண்டமாகக் கண்டு வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வாறே சிவாய நமச்சிவா யந்நம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறையால் ஞான நடனத்தின் வடிவமாகிய, `சிவாயநம` என்னும் மந்திரத்தைப் பலகாலும், தொடரஓதிப் பயின்றால் இறப்பும், பிறப்பும் இல்லையாகும். அதற்குமுன்னே அவ்வோதுதலானே ஞானநடனத்தை நேரே காணுதல் கூடும். முன்னே சொன்ன செம்பு பொன்னானது போன்ற பயனாகிய சிவமாந்தன்மைப் பெரு வாழ்வும் கிடைக்கும்.

குறிப்புரை :

அடுக்கு, பன்முறை கூறுதலை உணர்த்திற்று. பேர், முதனிலைத் தொழிற்பெயர். பேர்தல், உயிர் ஓருடலை விட்டுப் பிறிதோர் உடலைத் தேடிச் செல்லுதல். அஃது இல்லை என்றது, `வீடடையும்` என்னும் பொருட்டாய் நின்றது. `பிறப்பில்லை` என்று மேற்கூறியதனை எதிர்மறை முகத்தான் வலியுறுத்தவாறு.
இதனால், மேற்கூறிய சக்கரத்தில் பொறித்தற்கு உரிய மந்திரமும், அதன் சிறப்பும் பயனும் கூறப்பட்டன. இவ் விரு மந்திரங்களால் சக்கர வழிபாடு பொதுவாக விதிக்கப்பட்டது; விளக்கம் வருகின்ற அதிகாரத்துட் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 23

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும்
பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

பொழிப்புரை :

பொன்போலச் சிறந்ததாகிய மேற் சொன்ன மந்திரம் வாயாற் சொல்லப்படாது. அதனால், அது மேற்கூறிய சக்கரத்துள் குங்குமத்தால் பொறிக்கப்படும். அங்ஙனம் பொறிக்கப் பட்ட அது தூப தீபங்களை ஏற்று மகிழுமாயின், அவ்வாறு மகிழ்விப் போரது உடம்பு பொன்போல ஒளிவிட்டு விளங்கும். மேலும், அதனை நன்கு வழிபட வல்லவர்க்கு அதனால் விளையும் பெரும் பயன், சிவபெருமானது பொன்போலும் திருவடியை அடைதலாகும்; அஃதாவது, `சிவனது அருள் கைவரப்பெறுதல் கூடும்` என்பதாம்.

குறிப்புரை :

பொறி, முதனிலைத் தொழிற் பெயர். கிஞ்சுகம் - முள்முருக்கு. அஃது அதனோடு நிறத்தால் ஒத்த குங்குமத்திற்கு உவம ஆகுபெயராயிற்று. குங்குமத்தால் எழுதுதல் வெட்டுவாயின்மேல் என்க. ``உடம்பு`` என்பதை, ``பொன்னாகும்`` என்பதன்பின்னர்க் கூட்டி வேறு தொடராக முடிக்க. `பயன்` என்பது சொல்லெச்சமாக எஞ்சிநின்றது.
இதனால், மேலதன் வழிபாட்டுமுறை சிலவும், அதன் பயன்களுள் முதலதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 24

பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

பொழிப்புரை :

திருவருள் கைவரப் பெறுதலால் சிவனுக்கு மைந்தராம் தன்மை உளதாகும்; `செம்பு பொன்னாதல் போல்வது` என மேலெல்லாம் சொல்லிவந்த சிவமாம் தன்மையும் கிடைக்கும். அதனால், மாயாகாரிய உடம்பும் சிவனது அருள்மயமான உடம்பாய்விடும். ஞான நடனத்தின் உண்மை தெளிவாகும்.

குறிப்புரை :

இதனுள்ளும் பொருட் பின்வருநிலையணி வந்தமையின், முதலடியில் `காணலாம்` என ஓதுதல் பாடம் அன்று. ``புத்திரர்`` என்பது பொருளாகுபெயராய் அவரது பண்பின்மேல் நின்றது. அங்ஙனமன்றாயின், `உண்டாகும்` என்பதனோடு இயை யாமை அறிக. `ஆணையாலே` என உருபு விரிக்க. ஈண்டும் ``செம்பு பொன்னாயிடும்`` என ஒட்டணியாக ஓதியது, `இவ்வுலகில் உண்மை யாகவே செம்பைப் பொன்னாக்குதல் முதலிய சித்திகளாகிய இடை நிலைப் பயனும் கூடும்` என்பதும் தோன்றுதற்பொருட்டு. புத்திரராந் தன்மை பெறுதற்கு முத்தினாலான சிவிகை, சின்னம் முதலிய சிறப்புக்களைப் பெற்று ஞானாசிரியத் தன்மைபெற்று விளங்கிய ஆளுடைய பிள்ளையாரிடத்தும், செம்பு பொன்னாவதற்குச் செங்கல் பொன்னாகவும், ஆற்றிலிட்ட பொன் குளத்திற் கிடைக்கவும், தம்மை வழிபட்ட பெருமிழலைக் குறும்பர்க்குச் சிவயோகம் எளிதில் கூடவும் பெற்று விளங்கிய ஆளுடைய நம்பிகளிடத்தும் எடுத்துக்காட்டுக் கண்டுகொள்க. அவ்விருவரையும் திருவருள் கைவரப் பெற்றமை மாத்திரத்திற்கு ஒப்புமைகொள்க. நான்காம் அடியில், `பொற்பாதம் சொல்லும்` என இயையும். ``நடஞ் சிந்தனை`` என்பது தொழிற் பெயரொடு தொக்க இரண்டாவதன் தொகை. ``சிந்தனை`` என்பது அதன் முடிவின்மேல் நின்றது.
இதனால், திருவருளால் மக்கள் எய்தும் பயன்கள் வகுத்தோதப்பட்டன.

பண் :

பாடல் எண் : 25

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவாள் நயந்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் இருபொருள் கொள்ள நிற்பது) ஓர் உரை:- தான் நிற்கும் உடல் துன்பம் உடையதாயும், மற்றோர் உடம்பு இன்பம் உடையதாயும் எவ்வகையாலேனும் தோன்றினால் நிற்கும் உடம்பை விட்டுத் தான்விரும்பிய வேறோர் உடம்பில் புகுந்து இன்புறலாம்; இல்லறத்தில் நிற்க விரும்பினால் நல்ல மனையாள், தன்னை விரும்பி விரைவில் வந்து அடைவாள்; மாணிக்கத்தைக் கொண்டு விளங்கும் கொடிய நாகமும் தான் சொல்லிய அளவில் கட்டுண்டு அகலும். மேற்சொல்லிய திரு வம்பலச் சக்கரத்து வழிபாட்டின் மறைபொருள் (இரகசியம்) இது.

குறிப்புரை :

``ஒரு கூடு`` என்பதை எடுத்தல் ஓசையாற் கூறி இப்பொருள் காண்க. இப்பயனுக்கு எடுத்துக்காட்டாக இந் நாயனாரையே கொள்ளலாம். `மனம் சொல்லும் ஒரு கூடு` என்க. ``பாசம்`` என்பது `கட்டு` என்னும் பொருளதாய் `கட்டுட்பட்டு` எனப் பொருள் தந்துநின்றது. சுடர், ஆகுபெயர். ``திருக்கூத்து`` என்றது தானியாகு பெயராய் அது நிகழும் இடத்தின்மேல் நின்று, இடஇயை பால் மேற்குறித்த சக்கரத்தைக் குறித்தது. சூக்குமம் - மறைப் பொருள்.
மற்றோர் உரை:- சிறப்பித்துச் சொல்லப்படும் திருவருளாகிய அவ்வுறைக்குள்ளே தனது சீவபோதமாகிய வாள் புகுந்து அடங்கி நிற்றலால், சிவானந்தத்தைத் துய்க்கலாம். அப்பயன் உண்டாகும்படி திரோதான சத்தி நீங்க அருட்சத்தி தன்னை விரும்பி வந்து விரைவில் தன்னிடத்தில் பதியும். திருவைந் தெழுத்தை ஓதுதலானே கொடிய நாகம் போல்வதாகிய ஆணவம் வாதனையும் கெட்டுப் பற்றறக் கழியும். (நான்காம் அடிக்கு மேற்கூறியவாறே உரைக்க.)
இங்கு, ``கூடு`` என்றதை, ``கூட்டில் வாள் சார்த்தி நின்றுந் தீபற`` என்னும் திருவுந்தியார் (30) பகுதியொடு வைத்து உணர்க. தனது போதம் புகுதலை ஒற்றுமை பற்றித் தானே புகுதலாகக் கூறினார். அருட்சத்தி என்பது விளங்குதற்கே, ``நல்ல மடாவள்`` என்றார். பாசப் பாம்பு, உருவகம். இவ்விருவகைப் பயனையும் அவரவர் தகுதிக்கு ஏற்பக் கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாடு புத்தி, முத்தி இரண்டனையும் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல்
சூக்கும மான வழிஇடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதா னந்தமே.

பொழிப்புரை :

மறைவாகச் சொல்லப்படும் மொழியாகிய மேற் சொன்ன மந்திரத்தை இடைவிடாது செபித்தால் உங்கள் தலைமேல் உள்ள நுண்ணிய வழியை அச் செபத்திற்கு இடையே காணுதல் கூடும். அதனால், முன்னே முகந்து கொண்டதனால் நுண்ணியதாய்ப் பொருந்தி நிற்கின்ற பிராரத்த வினையையும் அழிக்க இயலும். அதனை அழிக்கவே, உயிரிடத்து விளைவதாகிய சிவானந்தம் வெளிப்படும்.

குறிப்புரை :

வழி, பிரமரந்திரம். இது ஆதார யோகத் தினின்றும் நிராதாரத்திற்குச் செல்லும் வழியாதல் பற்றி ``வழி`` எனப் பட்டது. சஞ்சிதம் ஞானிகட்கு முன்பே கெடுக்கப்பட்டமையானும், யோகி யர்க்கு இனி வேறோராற்றால் கெடுக்கப்படுமாகலானும் இங்கு ``வினை`` என்றது பிராரத்தத்தையே. அது முகந்துகொள்ளப்பட்ட நிலையில் சூக்குமமாய் நின்று, பயன் தருங்கால் தூலமாய் வந்து பொருந்தும். ஆதலின், ``சூக்குமமான வினை`` என்றார். இம் மந்திரம் ஞானியர்க்கும், யோகியர்க்கும் பொதுப்பட ஓதப்பட்டமையின், `வழி காணுதல், வினையைக் கெடுத்தல்` என்பவற்றை உடனே வீடுபெற விரும்புவார்க்கு, தலையைப் பிளந்துகொண்டு உடலை விட்டு நீங்கும் வழியாகவும், பிராரத்தத்தை நசிக்கச் செய்தலாகவும், சீவன் முத்தர்க்கும், யோகியர்க்கும் முறையே ஆதார யோகத்திலிருந்து நிராதார யோகத்திற் செல்லும் வழியாகவும், பிராரத்தத்தை மெலி வித்து உடல்ஊழாய் ஒழியவும், யோகத்தைத் தடுக்காது நீங்கவும் செய் தலாகவும் விளக்க. சிவானந்த வெளிப்பாடும் முறையே பரமுத்தி யிலும் சீவன் முத்தியிலும், யோக சமாதியிலும் நிகழ் வனவாகவும் கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாடு வீட்டு நெறி நிற்பார்க்கும் உதவுவதாதல் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட
ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும்
ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.

பொழிப்புரை :

`சிவானந்தம் ஒன்றே ஆனந்தம்` என்று உணர, அவ்வானந்தம் விளைவதாம். `ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் என்னும் ஐந்தெழுத்துக்களை அச்சக்கரத்தில் இட்டுச் செபிக்க அவ்வானந்தம் மிக விளையும். அந்த ஐந்தெழுத்துத் தொடரே` திருவைந்தெழுத்துத் தொடருமாம். இனி, அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம்` என்னும் ஐந்தைத்தாமும் மேற்கூறிய `ஆ` முதலிய ஐந்திற்கு ஈடாகவும், திருவைந்தெழுத்திற்கு ஈடாகவும் கொள்ளலாம்.

குறிப்புரை :

முதலடியில் இரண்டாவதாக நின்ற ஆனந்தம்`, சிவானந்தத்தைச் சிறப்பு வகையாற் குறித்தது. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. மூன்றாம். அடியில் பெயர்ப் பயனிலையாய் நின்ற அடுக்கு, மிகுதி குறித்து நின்றது. `ஆ` முதலிய ஐந்தும் மகாரத்தைக் கூட்டியும், கூட்டாதும் ஓதப்படும் என்பது உணர்த்துதற்கு முதல்நான்கனை மகாரம் இன்றியும், இறுதியதை மகாரம் கூட்டியும் ஓதினார் `அது அஞ்சும் ஆயிடும்` என மாற்றிக்கொள்க. ஈற்றடியில் நின்ற ``ஆனந்தம்` அதனைத் தருவதாய மந்திரத்திற்கு ஆகி, எழுவாயாய் நின்றது. இவ்வடியில் மூன்றாவதாக நிற்கும் எழுத்தையும் `அம்` என ஓதுதலும், இரண்டாம் நான்காம் அடிகளிலும் அடுக்கிவர ஓதுதலும் பாடமாகா.
இதனால், மேற்கூறிய வழிபாட்டில் செபித்தற்கு உரிய மந்திரங்கள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

மேனி யிரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி யிரண்டும்மிக் கார்அவி காரியாம்
மேனி யிரண்டும்ஊ ஆஈஏ ஓ என்னும்
மேனி யிரண்டும்ஈ ஓஊஆ ஏகூத்தே.

பொழிப்புரை :

மேலை மந்திரத்தில் உயிரெழுத்துக்களாகவும், திருவைந்தெழுத்தாகவும் சொல்லப்பட்ட இருவகை மந்திரங்களும் சிவனது திருமேனிகளாய் நிற்றற்கு உரியனவாம். அவற்றைப் பிழை யின்றி ஓதுதலைச் செய்தால், சிவனது திருமேனி திரிபின்றி அமையும். இனி அவ்விருவகை மந்திரங்களையும் இருவேறு வகையாக மாற்றி உச்சரிக்க, இறைவனது இருவகை நடனங்களும் அமைவனவாம்.

குறிப்புரை :

``அவிகாரி`` என்றது பன்மை ஒருமை மயக்கம். மேலை மந்திரத்தில் தமிழ் உயிர் நெட்டெழுத்து ஏழில் `ஐ, ஔ` என்னும் இரண்டை ஒழித்து ஏனைய ஐந்தும் முறைப்படியே கூறப் பட்டன. அதனால், அவை மேல், ``வாறே சிவாய நம`` (888) எனக் குறித்த முறையில் அமைந்த மந்திரத்தில் முறையே சிகாரம் முதலிய ஐந்திற்கும் ஈடாக அமைதல் அறியப்படும். அதனானே, மேலை மந்திரத்து இறுதி அடியிற் சொல்லிய `அம்` முதலிய ஐந்தும் அம் முறையில் அமைதலும் பெறப்படும். படவே, இம்மந்திரத்து மூன்றாம் அடியில் ஓதியவாறு உச்சரிக்க ஞான நடனமும், நான்காம் அடியில் ஓதியவாறு உச்சரிக்க ஊன நடனமும் நிகழ்வனவாம் என்க.
மேலை மந்திரத்துள் இரண்டாம் அடியிற் கூறியன தமிழ் கூறுவார்க்காகவும், நான்காம் அடியில் கூறியன ஆரியங் கூறுவார்க் காகவும் என்க. பரதகண்டத்தில் இவ்விரண்டல்லாத பிறமொழிகள் சிறப்பிலவாதல் அறிக. இவை இருதிற எழுத்துக்களும் சங்கேத மாத்திரமாய் நிற்பனவன்றிச் சொற்கு உறுப்பாய் எழுத்தாந் தன்மை யிலவாகலின், இருதிறத்தாரும் `சிவாய நம` என்பதை ஓதுதலே சிறப்பு என்பது கருத்து.
இதனுள், ஞானநடன மந்திரத்தில் ஆன்மஎழுத்தை முன்னர் எடுத்து அது இறையெழுத்தோடு புணரவும் இறை அருளோடு புணரவும், அருள் திரோதானத்தோடு புணரவும், திரோதானம் மலத்தோடு புணரவும் வைத்தல் அறிக. இறுதியில் நின்ற மல எழுத்து, பின் ஆன்மாவோடு புணரும்நிலை உள்ளதாயினும், அது வேறு உருவாகலானும், ஆன்மா இறையை நோக்கிச் செல்லுதலானும் அவ்விடத்து மலம் ஆன்மாவைப் பற்ற மாட்டாமை அறிக.
இனி ஊன நடன மந்திரத்தில் அருளை முன்னர் எடுத்து அது மலத்தோடு புணர்ந்து தோன்றாது நிற்கவும், அந்த மலம் ஆன்மா வோடு புணரவும், ஆன்மா சிவத்தோடு புணரினும் அந்தச் சிவம் அருளோடு புணராது திரோதானத்தோடு புணர்ந்து பந்தத்தை நிகழ்த்துவதாகவும் வைத்தல் அறிக. இவ்இருமுறையும் மேலை மந்திரத்துட் கூறிய மூவகை எழுத்திற்கும் கொள்க. ``என்னும்`` என்பதும், ``கூத்தாம்`` என்பதும் ஏனை இடங்களிலும் சென்று இயையும்.
இதனால், மேற்சொல்லிய மந்திரங்கள் இருவகை நடனத் திலும் நிற்குமாறு கூறப்பட்டது. `சுத்த மானதம்` என்னும் அறிவாற் கணித்தலாகிய ஞானநிலைக்குத் திருவைந்தெழுத்து ஒன்றே மந்திர மாகவும் அஃது ஒன்றே அந்த ஞானத்தின் படிநிலைக்கு ஏற்ப வேறு வேறு நிலையில் நிற்பதாகவும் சொல்லப்படுமாகலின், இங்குக்கூறிய இம்முறைகள் வழிபாட்டு நிலையில் நின்று பயன்பெறுதற்கு உரியன என உணர்க.

பண் :

பாடல் எண் : 29

கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய இருவகை நடனங்களுள் ஞான நடனம், `சிவாயநம` என்பதனாலேயும் அமையும். அம் மந்திரம் இவ்வாறு தனியாக உச்சரிக்கப் படுதலேயன்றி ஈம், ஊம், ஆம், ஏம், ஓம் என்னும் வித்தெழுத்துக்களுள் ஒன்றேனும் பலவேனும் கூட்டியும் உச்சரிக்கப்படலாம். இனி, மேற்கூறிய அவ்வெழுத்துக்கள் நெடிலாய் இல்லாமல் குறிலாய் நிற்கவும் கொண்டு உச்சரித்தற்கு உரியன. `சிவாய நம` என்னும் சூக்கும பஞ்சாக்கரமே நகாரம் முதலாய தூல பஞ்சாக்கரமாய் நிற்குமாதலின் அது ஊன நடனத்திற்கு உரியதாய் மேற்கூறியவாறே வித்துக்களைக் கூட்டாதும், கூட்டியும் உச்சரிக்கப் படும்.

குறிப்புரை :

தேற்றேகாரங்களைப் பிரித்துத் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ஏற்புழிக் கோடலால் ஈற்றில் உள்ள கூத்து ஊன நடனமாகவும் ஏனைய மூன்றும் ஞான நடனமாகவும் கொள்ள நிற்றல் அறிக. கூறியது கூறலாகவும், பின்னர்த் திருவைந்தெழுத்துக் குறிலாக வருவதனோடு இயையாதனவாகவும் மூன்றாம் அடியிலும் உயிரெழுத்துக்களை நெட்டெழுத்தாக ஓதுதலும், நான்காம் அடியில் முதல் உயிரைக் குற்றெழுத்தாக ஓதுதலும் பாடம் ஆகாமை அறிந்து கொள்க. `சிவாயநம` என்பதைத் திரும்பத் திரும்ப ஓதினால் மகாரம் சிகராத்தோடு புணரும் நிலை உண்டாகும், உண்டாயினும் அதனால் தீங்கில்லை என்றற்கு `மசி` என்பதையும் முதலடிக்கண் கூறினார். `வாயிடும்` என்பது பாடம் அன்று.
திருவைந்தெழுத்தைப் பீசங்களோடு கூட்டாதது `நிர்ப்பீசம்` என்றும், கூட்டுவது `சபீசம்` என்றும் சொல்லப்படும். சபீசம் உயர்ந் தோர்க்கே உரியன; நிர்ப்பீசம் பிறர்க்கும் உரியன. இப் பீசங்களை மேலை மந்திரத்திற் கூறிய முறையாற் கூறாது வேறுபட ஓதினார், அவை திருவைந்தெழுத்தோடு கூட்டப்படுங்கால் முன்னவை இரண்டினும் பார்க்கப் பின்னவை மூன்றும் திருவைந்தெழுத்தோடு இயையக் கூட்டுதல் பெரும்பான்மை என்பது உணர்த்துதற்கு. உகார ஊகாரங்கள் `ஔ` என்னும் நெட்டெழுத்தாய்ப் பரிணமிக்கின், அதுவும் பெரும்பான்மையதாம் என்க. கோள் ஒன்றும் - பீசங்களைத் திருவைந்தெழுத்துக் கொள்ளுதளைப் பொருந்தும். முதலடி ஒழிந்த அடிகளில் ``கூத்தே`` என்பன கூனாகி நின்றன.
இதனால், திருவைந்தெழுத்தைச் சபீசமாகக் கூறும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட
ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே.

பொழிப்புரை :

ஒன்று முதலாவது; சிவதத்துவம், இரண்டு இரண்டாவது; சத்தி தத்துவம், ஓர் ஒன்று, சத்தி தத்துவத்தின்பின் அடுத்தடுத்து நிற்கின்ற ஒன்றும், ஒன்றும்; சாதாக்கிய தத்துவமும், ஈசுர தத்துவமும். ஒன்றினில் மூன்று. ஈசுர தத்துவத்தை அடுத்துள்ள சுத்த வித்தியா தத்துவத்தில் `அரன், அரி, அயன்` என்பவரது அதிட்டானங் களாகிய மூன்று. ஓர் ஏழு, இந்த ஏழும். ஒன்பது, இவற்றுடன் இவற்றிற் கெல்லாம் மேலே உள்ள நாத விந்துக்கள் கூடிய அனைத்துத் தத்து வங்களும். ஒன்றினால் ஆட - அவை அனைத்தும் அங்ஙனம் ஆடல் மூர்த்தமாகிய ஒன்றினாலே ஆடும்படி இறைவன் மன்றினில் மாணிக்கக் கூத்து ஆடினான்.

குறிப்புரை :

``ஒன்பது உடனாட`` என்பதை, ``ஒன்றினால் ஆட`` என்றதற்கு முன்னே கூட்டுக. `இறைவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. மாணிக்கக் கூத்து - மாணிக்கம் போல வரம்பறிய லாகாத தாண்டவம். ஒன்பது தத்துவங்களும் ஆடுதல், (செயற்படுதல்) சம்புபட்சமாயாதல், அணுபட்சமாயாதல் அவ்வப்பெயர் பெற்று நிற்கும் முதல்வராகலாம் ஆதலின், ``ஆட, ஆட`` என வந்தன பலவும் அவர்கள் ஆடலின் வழியாடலேயாம் என்க. எனவே, அனைத்து முதல்வர்களது ஆடற்கும் இவ் ஒரு மூர்த்தத்தின் ஆடலே முதலாதல் அறியப்படும். `மாகேசுர மூர்த்தங்களில் ஒன்றாக எண்ணப்பட்ட வடிவத்தையுடைய கூத்தப்பிரானின் வேறாய்ச் சிவதத்துவத்தில் இலய நிலையில் நிற்கும் கூத்தப் பிரான் ஒருவர் உளர்` என மகுடாகமம் கூறுகின்றது.
தத்பரம் சிவதத்வம் ச பூஜயேத் ஞான மூர்திகம்
ஸர்வகாரண தேவேசம் த்யாத்வா தாண்டவ மீச்வரம்
ஆவாஹயேத் ததோ தேவம் புஷ்பஹஸ்தம் ஸுகாஸந:
இவர் இருக்கும் இடமே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட பரம வியோமம் என்பதும், பிருகதாரணியத்தில் சொல்லப்பட்ட இருதய ஆகாசம் என்பதுமாம் எனவும், இதுவே தமிழில் திருச்சிற்றம்பலம் எனப்படுகின்றது எனவும் இதனால், மேற்கூறிய இடங்களில் முறையே `பிரபஞ்ச அத்தியட்சகர்` என்றும்; `ஈசானர்` என்றும் சொல்லப் பட்டவர் சிவதத்துவத் தாண்டவேசுரரே எனவும் கொள்ளப் படுகின்றன. ஆதலால், இங்கு ``மன்று`` (திருச்சிற்றம்பலம்) எனப் பட்டது பரமவியோமமும் அதன்கண் ஆடுவார் சிவதத்துவத் தாண்டவேசுரரும் எனவே கொள்க. ``அருமறைச் சிரத்தின் மேலாம் - சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம்`` 1 என்ற சேக்கிழார் வாக்கும் இங்கு நினைவுகூரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 1

இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

பொழிப்புரை :

மந்திரங்களைச் செபிக்கும் முறைகளுள் ஒன்றாதல் பற்றி மேலையதிகாரத்துள் பொது வகையாகக் கூறப்பட்ட திருவம்பலச் சக்கரத்தின் இயல்புகளை இனி இவ்வதிகாரத்துள் எண்பத்தொன்பது திருமந்திரங்களால் கூறுகின்றார்.
சக்கரங்கள் பலவற்றில், நெடுக்கும், குறுக்குமாகப் பன்னிரு, பன்னிரு கீற்றுக்கள் கீற, நூற்றிருபத்தோர் அறைகளாக அமைகின்ற சக்கரத்தில் கூத்தப் பெருமான் விளங்கித் தோன்றுவான்.

குறிப்புரை :

`வட்டங்களுள்` என ஏழாவது விரித்து, அதனை, ``ஒன்றில் எய்துவன்`` என்பதனோடு முடிக்க. ``தான்`` என்றது மேலை மந்திரத்தில் ``ஆடினான்`` எனப்பட்டவனைக் குறித்தல் வெளிப்படை. ``இருத்தி`` என்பதை முதலடியின் இறுதியிலும் கூட்டி பின், `அவ்வாறிருந்த` என உரைக்க. ஈராறு - பன்னிரண்டு; பன்னிருபத்து - நூற்றிருபது; அதனுடன் ஒன்று சேர்க்க நூற்றிருபத்தொன்றாகும்.
இதனால், திருவம்பலச் சக்கரத்துள் ஒன்றனை வரையுமாறு கூறப்பட்டது. பிறவற்றை வருகின்ற மந்திரங்களுள் கூறியருளுவார்.

பண் :

பாடல் எண் : 2

தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.

பொழிப்புரை :

தான்மேலே குறிக்கப்பட்ட பெருமான், ஒன்றி வாழ்தல், நடுவிடத்தை ஒட்டியிருத்தல். தன் எழுத்து சிகாரம். தன்பேர் எழுத்து, தனது திருப்பெயராகிய மூல மந்திர எழுத்துக்கள். அவற்றுள் சிகாரமாகிய ஒன்று முன்னே கூறப்பட்டமையின், இவை ஏனைய நான் கெழுத்துக்களாம். நாற்கோணம், நான்கு திசைகளிலும் இடை வெளி யாய் நீண்டு, நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு சக்கரத்தைப் பிரித்து நிற்கும் நேர்க்கோட்டு அறைகள். அவைகளில் ஐந்தெழுத்துக் களும் சிகாரம் முதலாக அமையும். ஒன்றிலே ஒன்றுதல், நடுவண தாகிய ஓர் அறையிலே பொருந்துதல். அரன், `ஹர`: என்னும் மந்திரம். இஃது `ஓம்` என்பதனை முன்னர்க்கொண்டு நிற்கும் என்பது ஆற்ற லால் விளங்கும்.

குறிப்புரை :

இடத்தில் நிற்பவற்றை ``இடம்`` என்றார். ``அந்நான்கு`` என்றதும், `எஞ்சிய நான்கிடங்களில் நிற்கும் எழுத்துக்கள்` என்றதேயாம். ``அவ்வரன்`` என்பதில் அகரம் பண்டறிசுட்டு. ``அரன்`` என்னும் சொல் இங்குத்தன்னையே குறித்து நின்றது. ஈற்றில் நின்ற `தான்`, அசை. ஏகாரம், `அரனாகிய` எனத் தேற்றமாயிற்று. இனி இச்சக்கரத்தைப் புலப்படக் காணுமாறு கீழே காண்க.
பெருந்திசை நான்கில் நான்கு சிகாரங்களும், கோணத்திசை (மூலை கள்) நான்கில் நான்கு சிகாரங்களும் உள்ளன. அவற்றை முதலாகத் தொடங்கி, `சிவாயநம` என ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் பெருந்திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் இருமுகமாகத் தொடர் தலும், கோணத் திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் மூன்று முகமாகத் தொடர்தலும் காணலாம். ஆகவே, அவற்றைக் கிழக்கு முதலாகத் தொடங்கி வட கிழக்கில் மூன்று முகமும் ஓதி முடித்தால், இருபது (20) உருச் செபித்தலாகும். அவ்வாறு ஐந்து முறை திரும்பத் திரும்ப ஓதி, அதன் பின்னர்ப் பெருந்திசை முதலாக மட்டும் தொடங்கி ஓதி முடித்தால், நூற்றெட்டு (108) உருச் செபிக்கப்பட்டு முடியும். ஐம்பது முறை முற்ற ஓதி, இறுதியில் மேற்சொன்னவாறு பெருந் திசையில் தொடங்கிமட்டும் ஓதி முடித்தால், ஆயிரத்தெட்டு (1008) உருச் செபிக்கப்பட்டு முடியும். சித்தி பெறும் வரையில் இவ்வாறே இச்சக்கரத்தை வழிபட்டுப் பலமுறை ஓதுதல் செய்யத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 3

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை

குறிப்புரை :

இதனால், மேற்குறித்த சக்கரத்தின் நடுவண் நிற்கும் `ஹர`: என்னும் மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது. சிவனுக்கு இப்பெயர் பாசங்களைப் போக்குபவனாதல் பற்றி வந்தது. மெய்கண்ட தேவரும் தமது நூலுள் 1 இப்பெயரையே சிறந்தெடுத்தோதினார். `சிவன்` என்னும் பெயரது சிறப்பே இதுகாறும் கூறிவந்தமையின், இதனை இங்குக் கூறல் வேண்டினார்.

பண் :

பாடல் எண் : 4

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.

பொழிப்புரை :

எட்டுநிலை, மேற்காட்டிய சக்கரத்துள் நடு அறையைச் சுற்றியுள்ள அறைகள். அவற்றில் சிகாரம் நிற்றல் மேலே கூறப்பட்டது.
அவ்வெட்டில் கோணத்திசை (மூலைகள்) நான்கும் ஒழித்து எஞ்சிய நான்கிற்கும் நேர் நேராக நடு அறையுள் மேலைச் சக்கரத்தில் உள்ள `ஹர`: என்பதை நீக்கி ஹும், ஹௌம், ஹம், ஹ: என்பவற்றைப் பிரணவத்திற்கு மேலே பொறிக்கப் பெருமானோடு, பெருமாட்டிக்கும் உரிய சக்கரமாய் விளங்கும்.

குறிப்புரை :

இருமூன்று, ஆறாவது உயிரெழுத்து; ஊ. ஈரேழு, பதினான்காவது உயிரெழுத்து; ஔ. இவை தனியாய் நிற்றலேயன்றி, மேற்காட்டியவாறும் நின்று பீசங்களாம். விந்து, அம். நாதம், அஃபான்மொழி, சத்தி. `ஓங்கிட மந்திரம்பான்மொழி பாலேபட்டது` என வேறு தொடராக்குக.
இதனால், மேற்காட்டிய சிவ சக்கரம் சிவம் சக்திகளது சக்கரம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.

பொழிப்புரை :

தேனோடு மலர்கின்ற இதயத் தாமரையுள் சிவன் அருட் சத்தியுடன் எழுந்தருளியிருக்கும் முறையை மக்கள் அறி கின்றார்களில்லை. அதனை அறிந்து பாசங்களை நீக்கி விட்ட ஆன்ம எழுத்தைச் சிவத்தை ஒருபோதும் விட்டு நீங்காத அருளெழுத்துடன் பிணைக்கவல்லவர் உளராயின், அவரே தம்மைப் பிறவிக்கடலில் வீழ்ந்து அழியாமல் காத்துக்கொள்ள வல்லவராவர்.

குறிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் நடுவண் நிற்கும் ஓர் அறை இதயத் தாமரையாக அறியத்தக்கது என்பது முதலிரண்டடிகளில் குறிப்பாற் கூறப்பட்டது. அவ்வறையைச்சூழ எல்லா இடத்தும் சிகாரம் நிற்றலைச் சிவன் சத்தியோடு ஒட்டியிருத்தலாகக் கூறினார். பின் இரண்டடிகளால் மேல், ``தானொன்றும் அந்நான்கும் தன்பேரெழுத் தாகும்`` (898) எனக் குறித்ததை, `வாயநம` என, எழுத்து இவை என்ப தும், அவை பொறிக்கப்படும் முறையும் இனிது விளங்கக் கூறினார். இச்சக்கரத்தில் உள்வட்டம் மூன்றும் அக வட்டங்களும், வெளி வட்டங்கள் இரண்டும் புறவட்டங்களும், ஆதலின், பாச எழுத்துக்கள் புறவட்டத்திலும், அவற்றுள்ளும் மல எழுத்து விளிம்பு வட்டத்திலும் நிற்பவாயின என்க. தேன், இதயத்தாமரையில் சிவானந்தமாம்.

பண் :

பாடல் எண் : 6

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

இறைவன் தனக்கு இடமாக விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற திருவைந்தெழுத்து, முதற்கண் அவன் அங்ஙனம் எழுந் தருளியிருந்த தூல நிலை போகப் பின்பு அவனுக்கு மிக உவப்பான இடமாக அறியப்படுகின்ற சூக்கும நிலையைத் தனக்கு இடமாகும்படி கொண்டு அதன்கண் மிக விரும்பி எழுந்தருளியிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், இந்தச் சூக்கும பஞ்சாக்கரமே திருவம் பலச் சக்கரத்துள் கொள்ளப்படுவதாயிற்று` என்பது குறிப்பெச்சம்.
எனவே, இதனால், `மேற்கூறிய சக்கரத்தில் தூல பஞ்சாக் கரமும் கொள்ளத் தக்கதோ, அன்றோ` என எழும் ஐயத்தினை அறுத்த தாம். இதனானே, இது சூக்கும திருவம்பலச் சக்கரம் ஆதலும் பெறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை
இருந்த அதனுள் இரேகைஐந் தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.

பொழிப்புரை :

இறைவன் அமர்ந்திருக்கின்ற மேற்சொல்லிய சக்கரத்தில் இருபத்தைந்து அறைகள் அமைந்துள்ள ஒரு பகுதியைத் தனியாக வாங்கித் தனிச்சக்கரமாகக் கொண்டு, அதன் நடுவிடத்தில் மகாரத்தைப் பொறிக்க.

குறிப்புரை :

எஞ்சிய அமைப்பு முறைகளை அடுத்த மந்திரத்தில் கூறி முடிப்பார். நூற்றிருபத்தொன்றாகக் காணப்படும் மேற் சொல்லிய சக்கர அறைகள் ஒன்று இருபத்தைந்து அறைகளாக அமைந்த நான்கு சக்கரங்களின் கூட்டாக அமைந்திருத்தலின் `அவற்றுள் ஒன்றை மட்டும் கொள்க` என்பார், அதுதானே பிறிதொரு சக்கரமாதலை உணர்த்தற்பொருட்டுச் செய்முறையை விரித்துக் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 8

மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி
யகாரம் தலையா இருகண் சிகாரமா
நகார அகாரம்நற் காலது வாமே.

பொழிப்புரை :

மேற்சொல்லியவாறு நடுவே பொறிக்கப்பட்ட மகாரத்தைச் சூழ வகாரத்தைப் பொறியுங்கள்; பின்பு அவ்விரண் டையும் ஒகாரத்தால் வளைத்து, அவ் ஒகாரத்துள் உகாரத்தைத் தொடங்கி அடுத்த அறைகள் இரண்டிரண்டாகும்படி பிளந்து ஏறக் கீறிப் புறவட்டத்தில் இருபக்கத்து அறைகளைத் தலைகளாகவும், மற்றைய இருபக்கத்து அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு, தலைகளாகின்ற அறைகளில் யகாரத்தையும், கால்களாகின்ற அறைகளில் ஒன்றில் நகாரத்தையும், மற்றொன்றில் அகாரத்தையும் பொறித்து வழிபடுதலையும், செபித்தலையும் செய்யுங்கள்.

குறிப்புரை :

இதன் வடிவத்தைக் கீழே காண்க.
இதனால், உருவாகும் மந்திரங்கள், `அ உ ம வ சி ய` என்பதும், ` ந ம உ வ சி ய` என்பதும் ஆகும். இரண்டற்கும் முன்னே `ஓ` கொள்ளப்படும். அகாரம் முதலாகவும், நகாரம் முதலாகவும் தொடங்கும்பொழுது உள் வட்டத்திலிருந்தே தொடங்கிப் பலமுக மாகவும் செல்ல ஓதுதல் கூடுமாற்றை அறிந்து கொள்க. விளிம்பு வட்ட தலைக்குப் பக்கங்களில் உள்ள அறைகள் நடனத்தில் இறை வனது தலைசெல்லும் பக்கங்களாகவும், கால்களுக்கு நேரே உள்ள ஓர் அறை, நிற்கும் நிலை இட மாகவும், அவற்றின் பக்கத்தில் ஒற் றித்தும் இரட்டித்தும் உள்ள இடங்கள் நடனத்தில் தலை, கை, கால்கள் பெயர்ந்து செல்லும் இடங்களாகவும் கருதிக்கொள்க. இங்ஙனமெல்லாம் கருதிக்கொள்ளுதற்காகவே` தலை, கண், கால்` என உருவகித்து ஓதினார். சமட்டி, வியட்டிப் பிரணவங் களோடு தூல பஞ்சாக்கரம் அமைந்திருத்தலால், இது தூலத் திருவம்பலச் சக்கரம் ஆதல் அறியப்படும்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் மற்றொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய தூலசக்கரத்தில்தானே முன் சொன்ன எழுத்துக்களை நீக்கி நடுவிடத்தில் நடுவிலே பிரணவத் தையும், (நடுவிடத்தை இருமுக்கோணத்தின் கூட்டாகக் கருதி) மேல் முக் கோணப் பகுதியில் சிகாரம் நான்கும், கீழ் முக்கோணப் பகுதியில் வகாரம் நான்கும், நடுவிடத்தைச் சூழ்ந்துள்ள உள்வட்டக் கட்டங்கள் எட்டினையும் முன்சொன்ன வாறே பகுதிப்படக் கருதி மேற் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `நம` என்பதனையும், கீழ்ப் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `ய` என்பதனையும், சுற்று வட்டத் தின் (விளிம்பு வட்டத்தில்) மேற் புறத்து இடப்பக்க மூலையிலும், கீழ்ப்புறத்து வலப்பக்க மூலையிலும், `சி` என்பதை நிறுத்தி, அவற்றின் இருபக்கக் கட்டங் களிலும் முறையே, `வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களையும் பொறித்து வழிபட்டுச் செபிக்க.

குறிப்புரை :

இதன் வடிவம் வருமாறு:-
இதனுள், பிரணவத்தை முதலிற் கொண்டு, `நமசிவாய` என்பதை நான்கு முறையாலும், `சிவாயநம` என்பதை நான்கு முறையாலும் செபிக்க ஒரு வட்டமாம். ஐம்பத்து நான்குவட்டம் செபிக்க தூல சூக்கும பஞ்சாக்கரங்கள் தனித்தனி நூற்றெட்டு உருவாக முடியும். இருநூற்று ஐம்பத்து நான்கு வட்டம் செபிக்கின் அவை தனித்தனி ஆயிரத்தெட்டு உருவாக முடியும்.
இவற்றுள், தூல பஞ்சாக்கரத்தில் பாச எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும், பதி எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும் ஆன்ம எழுத்து அருளெழுத்தோடும், திரோதான எழுத்தோடும் தொடர்புற்றும் நிற்றல் அறிந்துகொள்க.
சமட்டிப் பிரணவத்தோடு `தூலம், சூக்குமம்` என்னும் இருபஞ்சாக்கரங்களும் செபிக்கப்பட நிற்றலால் இது சூக்குமா சூக்கும திருவம்பலச் சக்கரமாகும். சூக்கும சக்கரம் தவிரப் பிற்கூறிய இரண்டிற்கும் தலை, கால் பக்கங்கள் உளவாதலை அறிக.
இதுகாறும் விளக்கப்பட்டு வந்தவற்றுள் சூக்கும சக்கரம் வீடுபேற்றினை விரும்புவோர்க்கும், தூல சக்கரம் உலக இன்பத்தை விரும்புவோர்க்கும், சூக்குமா சூக்கும சக்கரம் இரண்டனையும் விரும்புவோர்க்கும் உரியனவாம் என்க.
இதனால், வேறொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசி வயய நமசிவா
ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.

பொழிப்புரை :

`சிவாயநம` என்பதை ஒன்று, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டாம் எழுத்துக்களை முறையே முதலில் வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே மேற்கூறிய சக்கர அறைகளில் பொறிக்கச் சிகாரமே முதலாகத் தொடங்கி, முடிவாகவும் முடியும்.

குறிப்புரை :

`இதுவும் ஒருவகைத் திருவம்பலச் சக்கரமாம்` என்பது கருத்து. அச்சக்கரம் ஆமாறு:-
மேற்கூறிய சக்கரங்களைக் கொள்ளமாட்டாதவர் பொருட்டுக் கூறப்பட்டது. ஐந்தெழுத்தின் பேதங்கள் பலவும் இதில் அடங்கி யுள்ளன என்பது உட்கிடை. இரண்டாம் அடியில் வகர ஆகாரம் செய்யுள் நோக்கிக் குறுக்கலாயிற்று. இவ்வடியின் இறுதியை வேறு வகையாக ஓதுதல் கூடாமையறிக.
இதனால், மற்றும் ஒருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி
அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.

பொழிப்புரை :

இதுமுதல் ஐந்து மந்திரங்களால் பெரியதொரு திருவம்பலச் சக்கரம் கூறுகின்றார். எனவே, இது பேரம்பலச் சக்கர மாம். பெருமை, எல்லா மந்திரங்களும், எல்லா எழுத்துக்களையும் கொண்டிருத்தல். இதனால், முன்னவை சிற்றம்பலச் சக்கரங்களாய் நிற்பனவாம். சிறுமை, சிலமந்திரங்களையே கொண்டிருத்தல்.
மேற் சொல்லிய வகையில் நெடுக்கில் ஐந்தும், குறுக்கில் ஐந்துமாக இருபத்தைந்து அறைகள் உள்ள சக்கரத்தில் மாதுரு காட்சரங்கள் (மூல எழுத்துக்கள்) ஐம்பதும் அடங்கி நிற்கும். அம் முறையில் உயிரெழுத்துப் பதினாறு, உடலெழுத்து முப்பத்தைந்து (வட மொழி எழுத்துக்கள்) ஆக ஐம்பத்தொன்றினையும் `அ, ஆ` முதலாக முறையே ஓர் அறைக்கு இரண்டாக வைத்துப் பொறித்துவர, ளகாரம் ஈறாக மேற்கூறியவாறு ஐம்பது எழுத்துக்களும் நிரம்பும். அதற்குமேல் ஐம்பத்தொன்றாவது எழுத்தாக நிற்பது க்ஷகாரம். அதனை எல்லா எழுத்திற்கும் பொதுவாகிய `ஹ` என்பதுடன் கீழ்வரிசை அறை ஐந்தில் நடு அறையின் கீழ் வெளியில் பொறித்துவிடல் வேண்டும்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், ``அகாரம்`` என்றது ஹகாரத்தை யேயாம். அடைவு, நெடுங்கணக்குமுறை. `அமர்ந்தது` என, இடம் வினைமுதல்போலச் சொல்லப்பட்டது. `அமர்ந்தது சக்கரம்` எனச் சொல்லெச்சம் வருவித்துமுடிக்க.

பண் :

பாடல் எண் : 12

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம்
அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.

பொழிப்புரை :

சதுரத்தில் அமைந்த மேற்கூறிய சக்கரத்திற்கு வெளியே அதனை உள்ளடக்கி `புறம், நடு, உள்` என மூன்று வட்டங்களை வரைந்து, சதுர சக்கரத்தில் அறைகள் உண்டாதற் பொருட்டுக் கீறியுள்ள கீற்றுக்களை வெளியே நிற்கும் புற வட்டம் வரையில் நீட்டி, மேலும் வெற்றவெளியிலும் செல்ல நீட்டி, அக்கீற்றுக்களின் முனைகளைச் சூலவடிவாக ஆக்குதல் வேண்டும். பின்னர் வெற்ற வெளியை ஒட்டிநிற்கும் புறவட்டத்தில் உள்ள அறை களில் ஒவ்வொன்றிலும் `ஹர` என்பதையும், நடுவட்ட அறைகளில் `ஹரி` என்பதையும், சதுரத்தை அடுத்து நிற்கும் உள்வட்டத்தில் `ஹம்ஸம்` என்பதையும் பொறித்தல் வேண்டும்.

குறிப்புரை :

`ஹர` என்பதும், `ஹரி` என்பதும் தமிழ் முறையில் அடுக்கிக் கூறப்பட்டன. அடுக்குக்கள், பன்மைபற்றி வந்தன. அசபை யாவது, அம்ஸ மந்திரமாதல் வெளிப்படை. `ஆகின்ற` என்றது முற்று.

பண் :

பாடல் எண் : 13

சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சூலங்கள் ஒவ்வொன்றின் முனை யிலும் சத்தி பீசம் (ஹ்ரீம்) காணப்படும்; அங்ஙனம் காணப்படுதல் தன்னைச் சூழ நிற்கும் ஓங்காரத்துடனாம்.
இனி ஒரு சூலத்திற்கும், மற்றொரு சூலத்திற்கும் இடையே யுள்ள வெற்றிடங்கள் ஐந்திலும் இடத்திற்கு ஒன்றாக ஐந்தெழுத்துக்கள் பொறிக்கப்படும். இதுவும் மேற்கூறிய சக்கரத்தின் முறையாம்.

குறிப்புரை :

`இடைவெளி அஞ்செழுத்தால் தோற்றிடும்` என்க. ஆல் உருபு இரண்டும் உடனிகழ்ச்சிக்கண் வந்தன. அடைவது - அடையும் இடம். இடமாவது அவ் இடைவெளி என்க. ஐந்தெழுத்து இவை என்பது வருகின்ற மந்திரத்தில் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 14

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

பொழிப்புரை :

அகார, இகார, உகார, எகார, ஒகாரங்களே மேற் கூறிய அவ் ஐந்தெழுத்துக்களாம். அவ் வெழுத்துக்களையுடைய ஐந்து ஓங்காரங்களே புறவட்டத்திற்குமேல் மற்றொரு வட்டமாய் நிற்கும். இனி, அறைகளாய் நில்லாது சதுரத்தின் மேல் பொதுவாய் நிற்கும் இடைவெளிகளில் பஞ்சாக்கர பேதங்களுள் ஒன்று எழுதப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

``அது`` என்றது, மேற்சொன்ன அஞ்செழுத்தைத் தொகுதி வகையாற் சுட்டிற்று. முன்னிரண்டடி சொற்பொருட் பின்வருநிலை.

பண் :

பாடல் எண் : 15

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

பொழிப்புரை :

மேல் ``நம் பேர்`` என்றது சிவமூல மந்திரத்தை யாம். அதன் பேதங்களில் இறுதியானதாகிய சிகார வகாரங்கள் இணைந்துநிற்கும் மந்திரம், வளைந்து நிற்கும் வட்டங்கட்கு உள்ளே சதுரத்திற்கும் அவற்றிற்கும் இடையே உள்ள சந்தி அறைகளில் நிற்பதாம். இங்கு எடுத்துக்கொண்ட சக்கரத்தின் இயல்பு இவ்வாறாம்.

குறிப்புரை :

இதனுள், சதுரத்திற்கு மேல் உள்ள சந்தி அறை ஒவ் வொன்றிலும் `சிவ` என்பது பொறிக்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டமை காண்க. ``சக்கரம் ... ... இயல்பிது வாமே` என்றது முடித்துக்கூறி முற்றுவித்தது. சோர்வு, பொதுவாய் நிற்றல். `சோர்வுற்ற சந்தி` என இயையும். இதனுள், எல்லா மந்திரங்களும், எல்லா மூல எழுத்துக்களும் அடங்கியுள்ளன என்பது கருத்து. வடமொழி நோக்கில் எழுத்துக்கள் மிகப் பலவாதல் பற்றி அவையும் அடங்குதற் பொருட்டு அறை ஒன்றில் இரண்டெழுத்துக்களை அமைக்குமாறு விதித்தார். எனவே, இதனைத் தமிழ் முறையில், மேல்வரிசையில் உள்ள ஐந்து அறைகளில் மட்டும் `அ, இ, உ, எ, ஒ` என்னும் ஐந்து குற்றெழுத்துக்களோடு அவற்றிற்கு இனமான ஆ, ஈ, முதலிய ஐந்து நெட்டெழுத்துக்களையும் சேர்த்து இரண்டிரண்டெழுத்தாக முறையே எழுத, எஞ்சி நிற்பவை இருபது அறைகளாம். அவற்றில் முதல் இரண்டு அறைகளில் `ஐ, ஔ` என்னும் இரு நெட்டெழுத்துக்களை யும், அவற்றின்பின் `க,ங` முதல் `ன` ஈறான பதினெட்டெழுத்துக் களையும் எழுத, இருபத்தைந்து அறைகளும் எழுத்துக்களால் நிரம்பி நிற்கும்; வடமொழி வகையில் அமைந்த சக்கரத்தில் `க்ஷகாரம்` எழுதப் பட்ட இடத்தில் `அஃகேனம்` என்பதை எழுதலாம். `ஓம், ஹ்ரீம், ஹர, ஹரி, ஹம்ஸ:, ஸோஹம், ‹ிவ`என்பவற்றை, `ஓம், க்ரீம், அர, அரி, அம்ச, சோகம், சிவ` என எழுதிக் கொள்ளலாம். அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களைத் தமிழில் எழுதுவதில் தடையொன்றும் இல்லை. ஆதலின், இச்சக்கரம் வடமொழி கூறுவார்க்கேயன்றித் தமிழ் கூறுவார்க்கும் உரியதாதல் பெறப்படுதலின், அதனை, இவ்வாற்றால் அறிந்து செய்து கொள்க.
வடமொழியில், `எ, ஒ` என்னும் குற்றெழுத்துக்கள் இல்லை; ஆயினும், அவை மந்திரங்கட்கு வேண்டப்படுகின்றன. அதனால், தமிழிலிருந்து அவை அவற்றில் கொள்ளப்படுகின்றன. வடவெழுத் துக்களில் பல தமிழில் இல்லையாயினும் மந்திரங்களைத் தமிழாகக் கூறுமிடத்தில் தமிழ் முறையிலே அவை சொல்லப்படலாம். அது குற்றமாகாது. `குற்றமாம்` எனின், இந்நாயனாரும், பிற அருளா ளர்களும் அவற்றைத் தமிழ் முறைப்படியே கூறியிருத்தல் குற்றமாய் விடும். அம்முறை செய்யுட்களிற் கொள்ளப்பட்டது எனின், செய் யுளில் குற்றம் ஆகாத ஒன்று வழக்கில் குற்றமாய்விடும் என்றல் ஏற்கத் தக்கதாகாது. நாயனார் தம்மை, இறைவன் தன்னைப் பலபடியாலும் தமிழால் போற்றும் முறையை அருளிச் செய்யவே மூலன் உடம்பில் இருக்கவைத்தான் எனப் பாயிரத்துட் கூறியிருத்தல் 1 பொருட்படுத்தி உணரத்தக்கது.
பஞ்சப் பிரம மந்திரத்தின் பீசங்களுள் ஈசானம், தற்புருடம் இரண்டற்கும் முறையே `ஒ, எ` என்னும் குறில்களே கொள்ளற்பாலன என்பது ஏனைய மூன்றன் பீசங்களையும் நோக்கினால் நன்கு தெரியவரும். ஆயினும், அங்கு நெடிலே கொள்ளப்படுகின்றன. `பிரம மந்திரத்திற்குக் குறில்களும், கலா மந்திரம், அங்க மந்திரங்கட்கு நெடில்களும் பீசங்களாகும்` என்பதே அம் மந்திரங்களைக் கூறிய நூற்குக் கருத்தாகலின், பிரம மந்திரங்கள் இரண்டற்கு நெடிலைக் கொள்ளுதல் ஏற்புடைத்தாகாமை அறிக.
இவ் ஐந்து மந்திரங்களாலும் பெரியதொரு திருவம்பலச் சக்கரத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய சக்கரத்தில் உள்ள மந்திரங்கள் பொறிக்கப்படும் வழியையும், பொறித்து வழிபட வேண்டிய முறை களையும் அறிந்தால் அவ்வாறு அறிபவர்கட்கு இறைவன் அவர்களது உணர்வு தெளிவுபெறும்படி செய்வான். இனி, அம்மந்திரங்களில் ஒவ் வொன்றும் நிலம் முதலிய மா பூதங்களை வழிபடுவதற்கு அமைந்த வித்துக்களில் (பீசாக்கரங்களில்) ஒவ்வொன்றின் முன்னதாயிருக்கும். அதுவும் அவை எய்தும் வழிகளில் ஒன்றாகும்.

குறிப்புரை :

இதனுட் சிறப்பாகச் சொல்லியது, நிலம் முதலிய பூதங்கட்கு உரிய `ஹ்லாம், ஹ்வீம், ஹ்ரீம், ஹ்யைம், ஹ:` என்னும் வித்தெழுத்துக்கள் மேற்கூறிய சக்கரத்திலுள்ள `ஹம்ஸ:, ஹரி, ஹர, ஹ்ரீம், ‹ிவ` என்னும் மந்திரங்கட்கு முன்னே சேர்த்துச் சொல்லப் படும் என்பது. `இவ் வித்தெழுத்துக்கள் இம்முறையே நிவிர்த்தி முதலிய கலைகட்கும் உரியன. என்பது` சிவஞான சித்தியாரிலும் (சூ. 2 - 67, 68) சொல்லப்பட்டது. `இது பற்றியேமேலைச் சக்கரத்தில் சூலங் கட்கு இடையே அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களும் பொறிக்கப் பட்டன` என்பது கருத்து.
நிலம் முதலிய பூதங்களைச் செய்யுள்பற்றி முறை பிறழக் கூறினார். முயலுதல் - வழிபடுதல். இங்கு ``முன்`` என்றதை எழுத்திலக்கணத்துள் புணர்ச்சி விதிகளில் `முன்` என்பது போல இடமுன்னாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்திற்கு எய்தியதன்மேல் மற்றொரு செய்தி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்துடன் (`ஸ்` என்பதுடன்) ஆறாம் எழுத்தையும், (`உ` என்பதையும்) பதினான்காம் எழுத்தையும் (`ஔ` என்பதையும்) ஏறச்செய்து, (`ஸு` என்றும், `ஸௌ` என்றும் ஆக்கி,) அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் மூன்று மலங்களும் அலறி ஓடிவிடும்.

குறிப்புரை :

`ஏற இட்டு, சீற இட்டு` என்பவற்றில் அகரங்கள் தொகுத்தலாயின. ``கூறிட்டு`` என்பது கூறிட என்பதன் மரூஉ. கூப்பிட்டு என்றது. இலக்கணை. இதனுட் கூறப்பட்டது, `திருவைந் தெழுத்தை, `ஓம் ஸும் ஸௌ: சிவாயநம` எனச் செபித்தல் மிகச் சிறந்ததாகும்` என்பதும் `அதன் பயன் வீடுபேறே` என்பதுமாம்.
இதனால், மேலெல்லாம் பலவகைப்படக் கூறிவந்த திருவைந் தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

பொழிப்புரை :

சிவனும், சத்தியும் தம்முள் வேறல்லர். ஆதலால், அவருள் ஒருவர்க்கு உரிய பீசங்களிலும், மந்திரங்களிலும் மற் றொருவர் பொருந்தியே நிற்பர். என்றாலும் இருவரையும் வேறுபோல எண்ணி, இருதிறத்து மந்திரங்களையும் செபிக்கின்ற செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.

குறிப்புரை :

`உண்மையில் இருவரும் வேறல்லராயினும் வழி பாட்டில் வேறுபோல நின்றே பயன் தருவர்; ஆதலின், அவ்வாறே வழி படல் வேண்டும்` என்பதாம். வழிபாட்டில் அவ்வாறு நிற்றல் வழிபடு வோரது இயல்புபற்றி என்க.
`உள்ளே` என்பவற்றுள் இரண்டாவதன் இறுதியில், `இருக்கும்` என்பது எஞ்சிநின்றது. `எனினும் வேறுபோல எண்ணி` என்க. இப்பொருட்கு, ``அக்கரம்`` என்பன ஒருமருங்கு ஆகு பெயராம். ``இருந்திட`` என்பது ``ஆளர்`` என்பதில் ஆளுதல் தொழிலோடு முடிந்தது.
இனி, இதற்கு மற்றோர் உரை:- சிவனது எழுத்தும், சக்தியின் எழுத்திற்கு இடையில் நிற்கும். அவ்வாறே, சக்தியின் எழுத்தும் சிவன் எழுத்திற்கு இடையில் நிற்கும். இந்நிலைமையை ஓர்ந்துணர்ந்து, இருவரது எழுத்துக்களும் இணைந்திருக்கச் செபிக்கும் செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.
கு-ரை: இவ்வுரையாற் பெறப்படுவது, `சிவ` என்னும் மந்திரமே யாதலும், அதனைத் தொடர்பாக ஓத, சிவசத்தியரது எழுத்துக்கள் மேற்கூறியவாறு நிற்றலும் அறிந்துகொள்க. இப் பொருட்கு, ``அண்ணல், நல்லாள்`` என்பன ஆகுபெயர்கள். இவ் இரண்டனையும் இதற்கு உரையாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்துள், பொறிக்கத்தக்க மந்திரங்களுள் தலையாயதன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் சந்திகளில் உள்ள குற்றெழுத்துக்களில் முதலாவதாகிய அகாரத்தை வாங்கி அடியிலும், இகாரத்தைவாங்கி முடியிலும் வைத்து இடையில் `ஹர` என்னும் மந்திரத்தை வாங்கியிட்டு நோக்கினால் இலிங்கமாய்த் தோன்றும். ஆதலின் அவற்றை அம்முறைப்படி மூலாதாரம், இருதயம், புருவநடு என்பவற்றில் வைத்துத் தியானித்து மகாரத்துடன் கூட்டிப் பிராணா யாமத்துடன் செபித்தால், கூத்தப்பிரானது ஒளிவடிவு காட்சிப்படும்.

குறிப்புரை :

இங்குக் கூறிய முறையில் இலிங்க வடிவம் அமையுமாறு:-
இவற்றை மகாரத்துடன் கூட்டி செபிக்குமாறு, `அம் இம் ஹரோம்` என செபித்தலாம். `அம், இம்` என்பன அம்ச மந்திரம் போல வாயுப்பயிற்சியைத்தரும். ``தொம்`` என்பது நடனக் குறிப்பு.
இதனால், மேலைச் சக்கரத்துள் நின்ற சில எழுத்துக்கள் மந்திரம் என்பவற்றது சிறப்புணர்த்தும் முகத்தால் அவை தம்முட் கூடிநின்று பயன் விளைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.

பொழிப்புரை :

எங்கே அகாரமும், சகாரமும் உள்ளனவோ அங்கே அனைத்துப் பொருள்களும் உள்ளனவாம். இவ்வாறு, இந்த இரண் டெழுத்துக்களில் எல்லாப் பொருளும் அடங்கிநிற்கின்ற நுட்பத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறியவல்லவர்க்குச் சத்தி வடி வாகிய சிவன் சகாரத்திலே உளனாய்த் தோன்றுவான்.

குறிப்புரை :

`அ, ச` என்பவை விந்துவோடு கூடியன என்பதும், அவ்வாறே, ஈற்றில் உள்ள `\\\\u2970?` என்பது நாதமாகிய விசர்க்கத்தோடு கூடியது என்பதும் கருத்துக்களாம். எனவே `அம்ச மந்திரத்தின் வழி சோகம்பாவனை செய்யச் சிவம் விளங்கும்` என்றதாயிற்று. `அம்ச மந்திரம் உயிர்ப்பு மந்திரம் ஆதலின், அஃது எல்லா மந்திரத்திற்கும் மூலமாம்; ஆகவே, அதனுள் அனைத்துப் பொருளும் அடங்குவன வாம்` என்றவாறு. பின்னர் ``அங்கு`` என வருதலால், முன்னர் `எங்கு` என்பது கொள்ளப்படும். கவ்வுண்டு நிற்றல் - அகப்பட்டு நிற்றல்.
இதனால், மேற்கூறியவற்றில் இரு மந்திரங்களின் சிறப்புக் கூறப்பட்டது. இம் மந்திரம் ஹௌம், ஸௌம்` என்னும் பீசங்களது சிறப்புணர்த்துதல் மேலும் நோக்குடையதாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 21

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

மேல், ``அதுவாம் அகார`` என்னும் மந்திரத்தில் (910) கூறப்பட்ட ஐந்தெழுத்து வழியாகவே சிவபிரான் வந்து அமர் கின்றான். அந்த ஐந்தெழுத்தினாலே அவனது பஞ்சாக்கர மந்திர எழுத் துக்களும் அமைகின்றன. ஆகவே, அவ் இருதிற எழுத்துக்களாலும் அமைகின்ற சக்கரங்களிலே அவன் தங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`அக்கர சக்கரம் அஞ்செழுத்தாலே ஆகிய` என்க.
இதனால், மேலைச் சக்கரங்களில் உள்ள அகாரம் முதலிய வற்றின் சிறப்பும், திருவைந்தெழுத்தின் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 22

கூத்தனைக் காணும் குறிபல பேசிடின்
கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால்
கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாகுமே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமானைப் பருவடிவிற்காண நிற்கும் பொருள்கள் பலவாம். அவற்றுள் மந்திரம் சிறந்தது ஆதலின், அவற்றுள் தலையானதாகிய மந்திரத்தை முதலெழுத்தளவில் ஓதி னாலும் அப்பெருமானோடு ஒற்றித்து நிற்கும் உணர்வை மக்கள் பெறு வார்கள். ஆகவே, இதுகாறும் சக்கர வடிவில் மந்திரங்களைக் கூறி வந்ததன் குறிக்கோள் அப்பெருமானை அடைவிப்பதேயாம்.

குறிப்புரை :

``பேசிடில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், மேல் பலபடக் கூறியதன் பயன் இது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 23

அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.

பொழிப்புரை :

மேற்காட்டிய சக்கரங்களில் யாதானும் ஒன்றில் உணர்வை நிறுத்திப் பிராணாயாமத்தால் மூலாதாரத்தில் உள்ள அனலை ஓங்கி எழச் செய்து, சக்கரத்தில் உள்ள எழுத்துக்களில் நகாரத்தைச் செபித்தால், அச்சக்கரத்தில் மறைந்து நிற்கும் கூத்தப் பெருமானை அந்த நகாரத்திற்கு உரியவளாகிய திரோதன சக்தி அச்சக்கரத்திலே பொருந்தச் செய்வாள்.

குறிப்புரை :

திசை - பகுக்கப்பட்ட இடம். உறுதல் இங்கே உலகப் பயனைப் பெற்று மகிழ்தலாம். ஆகவே ``நின்ற``, என்பதும், போகியாய் நின்றதனையாதல் அறிக. `ஆக்கினன்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தான், திரோதான சக்தி.
இதுமுதல் நான்கு மந்திரங்களால், மேலை மந்திரத்துள் ஓதியவாறு ஒவ்வோர் எழுத்தே பயனளித்தலை வகுத்தோதப் புகுந்து, இதனால் நகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதினால்
தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.

பொழிப்புரை :

தானாகவே முன் வந்து காக்கின்ற அருட் சத்தியின் எழுத்தாகிய வகாரத்தை ஓதினால், அவள் தானே முன்வந்து சிவ ஞானத்தை அளித்துப் பரமுத்தியை அடையச் செய்வாள். இனி, அவளாலே உபதேசிக்கப்பட்ட மல எழுத்தாகிய மகாரத்தை ஓதினால், அவ்வருட் சக்தியால் வழங்கப்பட்ட மாணிக்கமாகிய உயிர் மாசுநீங்கி ஒளியுடையதாய் விளங்கும்.

குறிப்புரை :

`குரு சிவமேயாதலின், தானே உபதேசித்த` என்றார். கல், உவம ஆகுபெயர். ஒளியுடையதனை ``ஒளி`` என்றார்.
இதனால், வகார மகாரங்களை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

கல்லொளி யேஎன நின்ற வடதிசைக்
கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.

பொழிப்புரை :

வெள்ளியேயானும் மாணிக்கத்தைப் போலச் சிறப் புற்று நிற்கின்ற, வடதிசைக்கண் உள்ள மலை ஆகிய கயிலாயத்தின் கண் தழல்போன்ற உருவினையுடையவனாய் உள்ள சிவபெரு மான், திருவைந்தெழுத்தில் மாணிக்கம் போலச் சிறந்து நிற்பதாகிய சிகாரத் தையே தானாக உணரும்படி, மாணிக்கமாகக் காட்டி நிற்கின்றான்.

குறிப்புரை :

இந்திரன் - தலைவன். பிறதலைவரினின்றும் பிரித்தற்கு ``நல்லிந்திரன்`` என்றார். இனி, `இந்தீரன்` என்பது குறுகியது எனக் கொண்டு, `சந்திரனை அணிந்து காத்த அருளுடையவன்` என உரைத்த லுமாம். ``மாணிக்கமாகக் காட்டிநின்றான்`` என்றதனால், `அதனின் மிக்கது பிறிதில்லை` என்பது பெறப்பட்டது. படவே, `அதனால் சிவானந்த விளைவு உண்டாகும்` என்றவாறாயிற்று. இரண்டாம் அடியில் உள்ள ``ஒளி`` ஆகுபெயர். ஏனைய அடிகளில், `ஒளிக்கல்` என்பது பின் முன்னாக நின்றது.
இதனால், சிகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவ னாமே.

பொழிப்புரை :

ஆன்மா சீவ நிலையினின்றும் ஏழு மடங்கு உயர்ந்து தண்ணிய சந்திரனைப் போல விளங்கி நிற்றலும், நூலறிவை உடைய தாதலும், நல்லியல்பைப் பெறுதலும் தனது எழுத்தை ஓதுவதனாலாம். தனது எழுத்தாவது ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள `ய` என்பதாம்.

குறிப்புரை :

``தான்`` நான்கும் ஓதுபவனைக் குறித்தன. குணம் - மடங்கு. ஏழு, மிகுதி குறித்து நின்றது. ``தண்சுடராய் நிற்கும்`` என்றது வாலிதாய் (தூய்மை பெற்று) நிற்கும் என்றதாம். வேதத்தால் பெறும் அறிவை ``வேதம்`` என்றார். நல்லியல்பு, சீவத்தன்மை நீங்குதல். மறை - மந்திர எழுத்து. யவன் - யகரத்தை உடையவன். `தானே யவன் ஆம்` என்க. `நிற்கும், நிற்கும்` என்று ஓதினாராயினும் பின்னர் வரும் `ஆவதும்` என்பதனோடு இயைய `நிற்பதும், நிற்பதும்` என ஓதுதலே கருத்து என்க. `நிற்பது, ஆவது` என்பன தொழிற் பெயர்கள்.
இதனால், யகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.

பொழிப்புரை :

ஆன்மா மந்திர ஆன்மாவாய் விளங்கிச் சிவமாக வேண்டியே சிவபிரானால் கொடுக்கப்பட்டது மக்கட்பிறவி. ஆகவே, அதில் நிற்கும் ஆன்மா அங்ஙனமே மந்திர ஆன்மாவாய் விளங் குதலை அறிந்து அப்பெருமான் மகிழ்வதைக் காணக்கூடியவர்கள், எல்லா மந்திர வடிவினனுமாயினும் சிறப்பாகத் திருவைந்தெழுத்துள் மறைந்து நிற்கும் கள்வனாகிய அப்பெருமானது திருவைந்தெழுத்தே தாமாய் நிற்பவரே; பிறரல்லர்.

குறிப்புரை :

`ஆகையால், அப்பயனைப் பெற விரும்புவோர் அம்மந்திரத்தையே செபிக்க` என்பது குறிப்பெச்சம். சிவபெருமான் பின்னர்க் குறிக்கப்படுதலின், ``மதித்த`` என்றும், ``மதித்திட`` என்றுமே கூறிப்போயினார். மதித்தல், இங்கு அதன் காரியம் தோன்ற நின்றது. பிறவியைப் பெற்றவனை, ``பிறவி`` என்றார், `அவன் ஒரு தெய்வப் பிறவி, அதிசயப்பிறவி` என்பன போல. மூன்றாம் அடியில் ``மறையவன்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. நான்காம் அடியில் அச்சொல்லின்பின் ஆறாவது விரிக்க.
இதனால், மேற்கூறிய ஐந்து எழுத்துக்களின் சிறப்பும் தொகுத்துக் கூறி, அவை ஒருங்கு தொடர்ந்து நின்ற மந்திரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம்
ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தில் நகாரம் கூத்தப் பெரு மானுக்குத் திருவடியாயும், மகாரம் வயிறாயும், சிகாரம் தோள் களாயும், வகாரம் முகமாயும், யகாரம் சென்னியாயும் நிற்கும்.

குறிப்புரை :

இவ்வாறே உண்மை விளக்க நூலிலும் கூறப்படுதல் காண்க. (வெண்பா - 33). ஆதல் - மந்திரமேயாதல். மூன்றாம் அடி யிலும், `ஆகின்ற இருதோள், ஆகின்ற வாய்` எனக் கூட்டிக் கொள்க. `இரு தோள் வாய் சீ வவ்வாகக் கண்டபின்` என, ஆக்கம் வருவிக்க. `சி` என்பது நீட்டல் பெற்றது. சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய் அதனையுடைய தலைக்கு ஆயிற்று. ஒளி சடையினால் உளதாவது. `அவ்வியல்பாமே` என்பது, பாடம் அன்றாதல் அறிக. அடுத்த மந்திரம், `அவ்வியல்பு` எனத் தொடங்குவதாயினும், இதனுள், ``அவ் விய`` என்பதே அதற்கு அமையும். மேலை மந்திரத்துள் ``ஆம்`` என்ற அதனைக் கொண்டே இம்மந்திரம் ``ஆகின்ற`` எனத் தொடங்கிற்று. `அவ்ய` என்பது இடையே இகரம் விரித்தல் பெறநின்றது.
திருவைந்தெழுத்து இம்முறையால் இறைவனுக்குத் திருமேனி யாதல் கூறவே, அவனை வழிபடுபவரும் தம் உடல் உறுப்புக்களில் அதனை இம்முறையில் நியாசம், திருநீற்றுத் திரிபுண்டரம் இடல் முதலியவற்றால் பொருந்தக் கொள்ளல் முறையாதலும் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரம் இறைவனுக்குத் திரு மேனியாய் நிற்கும் முறை வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு தனக்குத் திருமேனியாய் அமைகின்ற, பிரணவத்தோடுகூடி ஆறெழுத்தாய் நிற்கின்ற நகாரம் முதலிய ஐந்தெழுத்தினாலும் ஆகிய மந்திரத்தையே சிவபெருமான் தனக்கு நேர் வாயிலாகக் கொண்டு நிற்கின்றான். ஆகையால், அவனை அந்தப் பிரணவத்தின் காரியங்களாகிய ஏனை எழுத்துக் களையும் அவனது ஒளிக்கதிர்களாகப் பொருந்தக் கொண்டு தியானித்தால், அவன் தனது ஆனந்தக் கடலாய் அளவின்றி நிற்பான்.

குறிப்புரை :

பிரணவம் இயல்பாகவே எல்லாமந்திரத்தின் முன்னும் நிற்குமாதலின், அதனை, ``இருமூன் றெழுத்தையும்`` என அனுவாத முகத்தாற் கூறினார். ``செவ்வியல்பாக`` என்றதன்பின், `கொண்டு` என ஒரு சொல் வருவிக்க. `ஓ` என்பது தொடை நோக்கிக் குறுகி நின்றது. அதனது காரியத்தை ``இயல்பு`` என்றார், பரிணாமமாகாது, விருத்தி யாதல் பற்றி. `ஒளியாக உறநோக்கிடில்` என மாற்றிக்கொள்க. `அனு வாதத்தாற் கூறிய ஓங்காரம் ஒளிப் பிழம்பாகிய திருவாசியாயும், அதனது விருத்தியாகிய அகாரம் முதலிய எல்லா எழுத்துக்களும், அத்திருவாசியின் மேல் விளங்கும் சுடர்களாயும் நிற்கும் என்பது மூன்றாம் அடியாற் குறித்தவாறு.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``
என்னும் உண்மை விளக்க வெண்பாவை (35) நோக்குக. `பவ்வம்` என்பது கடைக்குறைந்து நின்றது.
இதனால், மேலைச் சக்கரத்தில் கூறிய ஓங்காரமும், பிற எழுத்துக்களும் கூத்தப்பெருமானுக்குத் துணை உறுப்புக்களாய் (உபாங்கங்களாய்) நின்று பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

பொழிப்புரை :

மந்திரம் வகையாலும், விரியாலும், பலவாய்ப் பரந்து கிடப்பது. அதனால், அவை பலதிறத்து எல்லா உயிர்கட்கும் அவை விரும்பிய பயனைத்தரும் தன்மையன ஆதலின், உனக்கு உன் குரு வினது அருளால் மந்திரம் கிடைக்குமாயின் அதனைப் பெற்று அதன் துணையால் உன்னைச் சூழ்ந்துள்ள வினையாகிய பகை தொலையும் படி ஓட்டு. ஓட்டுமாறு எங்ஙனம் எனின், அதற்குரிய வலிமையை உனக்குத் தருகின்ற மந்திரத்தை முதற்கண் பிரணவத்தை வைத்து உச்சரி.

குறிப்புரை :

பல திறமாவன, பிறப்புவகைகள். மூன்றாம் அடியில் உள்ள `மந்திரம்` என்பதை மேலே, ``வாய்த்திட`` என்பதற்கு முன்னே கூட்டுக. முதல் மூன்றடிகள் சொற்பொருட் பின்வருநிலை. மக்கள் உடம்பில் நின்ற உயிர் சில தீவினை காரணமாகக் கீழ்ப்பிறப்பை எடுக்குமாயின், அப்பிறப்பிலே அவை எவ்வகையாலேனும் மந்திரங் களை அறிந்து எண்ணிப் பயன்பெறும் என்பது உண்மை நூல் துணி பாகலின், ``பல்லுயிர்க்கெல்லாம் வரந்தரும்`` என்றார். அஃறிணை உயிர்கள் பல இறைவனை வழிபட்டுப் பயன்பெற்றமை புராணங் களில் பெரும்பான் மையது. இனி, `இங்கு உயிர்` என்றது, `மக்கள் உயிரையே` எனக் கொள் ளினும் கொள்க. `மந்திரங்கள் மேற்கூறிய ஆற்றலை உடையதாதல் அவற்றை இறைவன் தனக்கு வாயிலாகக் கொள்ளுதலாலே என்பது மேலை மந்திரத்தால் அறியக்கிடந்தது.
இதனால், இறைவன் உயிர்கட்குத் தனது அருளை வழங்கு தற்கு வாயிலாக மந்திரங்களை அமைத்துள்ள சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

மந்திரங்கட்கெல்லாம் தலையானதாகிய சிவமூல மந்திரமாம் திருவைந்தெழுத்தை முதற்கண் பிரணவமும், நகார மகா ரங்களும் முற்பட்டு நிற்க ஓதிப் பின்னர், அவ் ஐந்தெழுத்தில் நடுவண் விளக்குப்போல எழுச்சிபெற்று விளங்குகின்ற சிகாரம் முதலிய மூன் றெழுத்துக்களையும் அம்ச மந்திரத்தாற் செய்யப்படும் பிராணா யாமத்தால் இதய வெளியில் உள்ள ஒளி விளக்கமுறும்படி செய்து, தியானிக்கப்படும் பொருளை மேற்கூறிய சிகாரம் முதலிய மூன் றெழுத்தின் முறைமையதாகவே அறிந்து நிற்பவர்கள், திருவம் பலத்தை உள்ளவாறு தரிசித்து மகிழ்ந்திருப்பார்கள்.

குறிப்புரை :

``நந்தி`` என்பது ஆகுபெயராய் அவனது மந்திரத்தை உணர்த்திற்று. ``உத்தமம்`` என்பது ஆகுபெயர்ப் பொருளைச் சிறப் பித்து நின்றமையால், ``உத்தம நந்தி`` என்பது இருபெயரொட்டாகு பெயர். இத் தொடரை முதலில் வைத்து உரைக்க. `நம என்று` என்பது ``நாம என்று`` எனவும் `அம் என்று`, என்பது ``ஆம்`` எனவும் தொடைக் கேற்ப வேண்டுந்திரிபு பெற்று நின்றன. ``நடுவெழு தீபம்`` என்பது இரட்டுற மொழிதலாய், சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையும், இருதய ஒளி யையும் குறித்து நின்றது. மூன்றெழுத்து நின்ற முறைமை யாவது, உயிர் பாசத்தை விடுத்து அருளைச் சார்ந்து அதுவழியாகச் சிவத்திற்கு அடிமையாதலாம். இவ் எழுத்துக்கள் இருதயத்தில் வைத்து எண்ணவும், புருவ நடுவில் வைத்துத் தியானிக்கவும் படும் என்க. இவை ``தத்துவமசி`` என்னும் வேதாந்த மகாவாக்கியப் பொருள், ``சிவத்துவமசி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருள் என்ப வற்றையும் தந்து நிற்குமாறு அறிந்துகொள்க. `உண்மைத் திருவம் பலம்` என்றதற்கு ``மாமன்று`` என்றார். இது இதய வெளியும், புருவ நடுவுமாகும்.
``சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும் என்
சிந்தையுள்ளும் உறைவான்`` ( திருக்கோவையார் - 20)
எனப் புறத்தும், அகத்தும் விளங்கும் மன்றுகளைக் குறிப்பால் அருளிச் செய்தவாறு அறிக. இதனால், மேல் பலவாய்ப் பரந்து நிற்பவனவாகக் கூறிய மந்திரங்களுள், சிறந்து நிற்பதும் மிகச் சிறந்து நிற்பதும் இவை எனக்கூறி, அவற்றை ஓதுமாறும் அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 32

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் பாகுபட்டு நின்ற அறை களில் வழங்கப்படுகின்ற ஐம்பத்தோரெழுத்துக்களின் இடையே திருவைந்தெழுத்து நிற்குமாயின், கூத்தப்பெருமான் அந்தச் சக்கரத்தில் பாகுபோல இனிதாய ஆனந்த நடனத்தைப் பொருத்தி நிற்பன்.

குறிப்புரை :

``எழுத்தைந்தும்`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``வர்த்திக்கும், ஆகின்ற`` என்னும் பெயரெச்சங்கள், ``ஐம்பத்தொரு எழுத்து`` என்னும் தொகைநிலைப் பெயர் கொண்டு முடிந்தது. இறுதி யிலுள்ள பாகு, உவம ஆகுபெயர். `ஐந்தெழுத்து நிற்க ஆனந்த நடனத்தைப் பொருந்தி நிற்பவன்` எனவே `அவை நில்லாதபொழுது அருள் நடனமாத்திரையே பொருந்தி நிற்பான்` என்பது போந்தது. பதங்கள் - இடங்கள்; அறைகள். `ஐம்பத்தோரெழுத்து` என நிற்கற் பாலது, செய்யுள் நோக்கி, `ஐம்பத்தொரு எழுத்து` எனத் திரிந்து நின்றது.
இதனால், மேற்கூறிய சக்கரம் சிறந்து நின்று பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
பரமா யசியநம வாபரத் தோதில்
பரமாய வாசி மயநவாய் நின்றதே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்து மேற்கூறியவாறு ஐம்பத் தோரெழுத்துக்களின் இடை நிற்குங்கால் நெடுக்காயினும் குறுக் காயினும் நடுவரிசை யுள்ளே நிற்கும். ஆகவே, அதன்பொருட்டு ஏனைய இடங்களில் எழுத்துக்கள் நடுவரிசைக்கு மேல் வரிசையில் (2) `ய ந வா சி ம`` என்றும், அதற்கு மேல் வரிசையில் (3) `ம வா ய ந சி` என்றும், அடி வரிசையில் (4) `சி ய ந ம வா` என்றும் அதற்கு மேல் வரிசையில் (5) `வா சி ம ய ந` என்றும், மாறி நிற்பனவாம்.

குறிப்புரை :

அஃது ஆமாறு:-
இதனால், நடுவரிசையை இடமிருந்து வலமாகவும், கீழிருந்து மேலாகவும் ஓதத் திருவைந்தெழுத்து நகாரம் முதலாக அமைதலும், சிகாரங்கள் முக்கோணக் கூட்டிரேகையில் முழுதும் நின்று சிகாரம் முதலாக ஏற்ற பெற்றியால் ஓதிக் கொள்ளுமாறு அமைதலும் காண்க. மேற்கூறிய சக்கரத்தில் வடமொழி எழுத்துக்களோடு இவற்றை எழுது வதாயின் இரண்டெழுத்திற்கும் இடைநிற்கவும், தமிழ் எழுத்துக் களோடு எழுதுவதாயின் அவ் எழுத்திற்கு மேல் நிற்கவும் எழுதுதல் வேண்டும் என்க. `மிகவும் உள்ளிடம்` என்பார் ``உள்நடு`` என்றார்.
பரம் - மேன்மை, மேல். நடுவரிசை தொடங்கி மேன்மேற் செல்லுங்கால் அடிவரிசைக்குத் திரும்பிப் பின் நடுவரிசையை அணுக வருதல் அறிக. வகார ஆகாரத்தைச் செய்யுள் நோக்கிச் சில இடங்களில் வகரமாக ஓதினார்.
இதனால், மேற்கூறிய பேரம்பலச் சக்கரத்திற்கு மேலை மந்திரத்திற் கூறிய ஒரு சிறப்பு முறை விளக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

பொழிப்புரை :

மேலை மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு பொறிக்கப் பட்டபின் செங்குத்தாய் நின்ற வரிசைகளில் முதல் வரிசையிலுள்ள எழுத்துக்களை மேல்நின்று நோக்கினால், `ம ய ந வா சி` என வரும். அவை முறையே, `நிலம், நீர், தீ, வளி, வான்` என்னும் பூதங்களாய் நிற்கும். ஆதலால், அவற்றை முதலாகக் கொண்டு வலம் நோக்கிச் செல்லும் தொடராகிய மந்திரங்களும் அப்பூதங்கள் ஆதலை யுடையவாம். அதனால், அவ்வெழுத்துக்களும், தொடர் களும் அப்பூதங்கட்கு உரிய `பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகைமை` என்னும் நிறங்களாயும் நிற்பனவாம். அவை இவ்வாறு நிற்றலால், அவை அடங்கி நின்ற சக்கரத்தைக் கூத்தப்பெருமான் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்றான்.

குறிப்புரை :

முதலிரண்டடிகளில், `ஆம்` என்பன எஞ்சி நின்றன. மூன்றாம் அடியில், ``நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்`` என்பது, முன்னும் பின்னும் உள்ள அடிகளுடன் சென்று இயையும், நேர்தர நிற்றல் - செம்மையுண்டாக நிற்றல். நின்ற எழுத்துக்கள்நேர்தர நின்றிடில்`` என்றதனால், முதல் எழுத்துக்கள் மட்டிலே முதன்மை யாகக் கொண்டு, பின்னர் அவற்றைத் தொடர்ந்த வல எழுத்துக்கள் அவற்றின் வழியவாக்கப்படும். உம்மை, `பிறவிடத்து நிற்றலேயன்றி` என எச்சம். பொது நெறிபற்றிப் பூதங்களையே கூறினாராயினும், சிவநெறியின் வழி அவை பஞ்ச கலைகளாயும் நிற்கும் என்க.
இதனால், திருவைந்தெழுத்தை மேலைமந்திரத்திற் கூறிய வாறு பொறித்தால் உண்டாகும் சிறப்புக் கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 35

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வா நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய பேரம்பலச் சக்கரம் மேலை மந்திரத்திற் கூறியவாறு அமைந்த பெருமையுடையது ஆகலின், அதன்கண் எல்லா உலகங்களும் அடங்குவனவாம். அதனால், அந்தச் சக்கரத்தையே திருவம்பலமாகக் கொண்டு விளங்கும், சிதாகாய வெளியனாகிய சிவபெருமானாகிய பசுவை, அந்தச் சக்கரத்தையே கன்றாகக் கொண்டு , அவனது திருவருளாகிய பாலைத்தருமாறு எம் ஆசிரியர் நந்தி பெருமான் கறந்து கொண்டார். அதன் பயனாகக் குன்றின் உச்சியில் ஏறி நின்றவர் போன்ற உயர்வை அவர் பெற்றவரானார்.

குறிப்புரை :

உலகரால் அறியவராத நுண்பொருளாய் இருத்தல் பற்றிச் சிதாகாசத்தை, ``மாய நாடு`` என்றும், ஆயினும் அது மாயம் (வஞ்சனை) உடையதன்று என்றற்கு, ``நன்னாடு`` என்றும் கூறினார். நடு இரண்டடிகள் ஏகதேச உருவகம். மெய்யுணர்வின் மிக்காரை, ``குன்றேறி நின்றார்``1 என்பவாகலின், ``குன்றிடை நின்றிடுங் கொள்கையன்`` என்றார். ``ஆம்`` என்றது. ``முந்நிலைக் காலம் தோன்றும் இயற்கை மெய்நிலைச் சொல்லாய்`` 2 நின்றது. ஈற்றடி, நந்தி பெருமான் கயிலையைக்காக்கும் அதிகாரம் பெற்று நின்றதையும் உட்கிடையாகக் கொண்டது. நந்தி பெருமான் பயன்பெற்றவாற்றைக் கூறி, `பிறரையும் அவ்வாறு பெறுக` என அருளிச் செய்தவாறு.
இதனால், மேற்கூறிய சக்கரம் பயன்தருதற்கு அனுபவம் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமானது பஞ்சாக்கர பேதங்கள் அனைத்தும் இச்சக்கரத்தை இடமாகக் கொண்டன. அதனால், இதன்கண் அமைந்த நலங்கள் இன்னும்பல. அவை அத்திருவைந் தெழுத்தால் குறிக்கப்படும், `சிவன், அருள், ஆன்மா, திரோதாயி, ஆணவம்` என்பனவும், அவற்றுள் சிவன் ஆன்மாக்களின் பொருட்டுச் செய்யும் அளவிறந்த கூத்துக்களும், பிறவுமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை, `கூத்தன் எழுத்தைந்தும் இச்சக்கரம் கொண்ட` என மாற்றி, முதற்கண் வைத்து உரைக்க. ஏனை இடங்களில் ``கொண்ட`` என்பது, செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப் பட்டதாம். குணம் - நன்மை. ``பல`` என்றதை எடுத்தல் ஓசையாற் கூறி, இப்பொருள் காண்க. குறி - குறிக்கோள்; குறிக்கப்பட்ட பொருள். நின்ற - நின்றன. ``பல, ஐந்து`` என்பவற்றின்பின் `உள்ளன` என்பது எஞ்சி நின்றது. கூத்து, `ஞான நடனம், ஊன நடனம்` என இருவகைப் பட்டு, அவை ஒவ்வொன்றும் ஐவைந்தாதலேயன்றி, `தூல நடனம், சூக்கும நடனம், பர நடனம்` என்று ஆதலும், அனைத்து நடனங்களும் சிறப்புவகையால் தத்துவந்தோறும், ஆன்மாக்கள்தோறும் வேறு வேறாதலும் ஆகிய பலவும் அடங்கப் பொதுமையில் ``கூத்து`` என்றார்.
இதனால், மேற்கூறிய சக்கரத்தது சிறப்பின் மிகுதி கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச்
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

பொழிப்புரை :

வெறுவெளியாய் யாதும் எழுதப் படாத பரப்பு ஒன்றில் ஒரு நேர்க்கோடு இழுத்து, அக்கோட்டின் தலையில் ஒரு சுழியை இட்டால் அஃது உகாரவடிவாய்த் தோன்றும். அதில் `கொம்பு` எனப்படுகின்ற சுழியும், நேர்க்கோடும் முறையே விந்துவிற்கும், நாதத்திற்கும் உரிய வரிவடிவமாகும். இனி அவையே `தீ, காற்று` என்னும் பூதத்திற்கு உரிய குறிகளாயும் நிற்கும். இவற்றை இவ்வாறு தெளிவதே சிவ மந்திரத்தை உணர்தலாகும்.

குறிப்புரை :

இதில் சொல்லப்பட்ட வடிவம் - ``ƒ`` - என்பது. இதனைப் `பிள்ளையார் சுழி` என்பர். இதனைச் சுழி கீழாக ஆக்கினால் - `` `` - இவ்வாறாம். இதனையே ஏழாந் தந்திரத்துள் `ஆன்மலிங்கம்` என்னும் அதிகாரத்தில்,
``விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்;
விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்``.
எனக் கூறுவார். பூதங்களுள் தேயு (தீ) இலிங்கவடிவாய் நிற்றலாலும், அது கீழே சுழித்துக் கொண்டு மேலே கொழுந்துவிட்டு ஓங்குவது ஆதலாலும் சுழியை, `தீ` என்றும், செங்குத்து நேர்க்கோட்டினை, `காற்று` என்றும் கூறினார். தீ கொழுந்து விட்டு எரிதல் காற்றினால் என்பது வெளிப்படை. விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆதலின், இச்சுழியை இவ்வாறு தெளியும் உணர்வே சிகார வகாரங்கள் கூடிய சிவ மந்திரத்தைத் தெளிதலாய் முடியும் என்றார் என்க. எனவே, `மேற்கூறிய சக்கரங்களை யாதானும் ஒரு பரப்பில் பொறிப்பதற்கு முன்னே. மேலிடத்தில் இச்சுழியைப் பொறிக்க` என்பது குறிப்பு ஆயிற்று. `சுழி` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. சுளியில் - சுழித்தால் - `வெளியில் இரேகை உளதாக, இரேகையில் அத்தலைச் சுளியில்` என்க. அத்தலை - அதன் தலை. சுற்றிய - சுழித்தெழுந்த` ``கொம்பு, நேர்` என்பன, ``வன்னி, நேர்`` என்பவற்றுடன். எதிர் நிரல் நிறையாயும் ``விந்து, நாதம்`` `என்பவற்றுடன் முறை நிரல்நிறையாயும் இயையும். நெளிதரல் - நில்லாது இயங்குதல். பிரகாரம் - வகை. இதில் ``பிரகாரம்`` என்ற வடசொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.
ஓங்காரம் உச்சரிக்கப்படுவதாய் நாதத்தை உணர்த்தி, மந்திரங்கட்கெல்லாம் முன்னிற்கும். `நாதம்` என்பதனானே அதனை, `ஊமை யெழுத்து` என்பர். எனினும், இங்குக் கூறிய இவ்வடிவம் யாதோர் உச்சரிப்பையும் உடையதாகாமையால், உண்மை ஊமை எழுத்தாய், விந்து நாதங்களாய் நிற்கும். அதனானே, எவற்றையேனும் வரிவடிவு எழுத்தால் எழுதத் தொடங்குமுன் முதலில் இவ்வடிவினை எழுதுதல் மரபாயிற்று. `அம்மரபினை இங்குக் கூறிய சக்கரங்கட்கும் கொள்க` என்பது இதனால் உணர்த்தினார். எனவே, இம்மந்திரம் மேற்கூறிய சக்கரங்களைப் புறத்தில் புலப்பட அமைக்கும்பொழுது முதற்கண் செயற்பாலது ஒரு மரபு செயலினைக் கூறியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 38

அகார உகார சிகாரம் நடுவா
வகாரமொ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

பொழிப்புரை :

சிகாரம் அகார உகாரங்களின் நடுவே நிற்கக் கொண்டு செய்கின்ற பிராணாயாமத்தில் கும்பிக்கப்பட்ட பிராணவாயு வோடே ஆறு ஆதாரங்களில் பொருந்தி, `சிவ என்னும் மந்திரத்தை ஓதிச் சிவனைத் தியானித்தால், பிரணவ முதல்வனாகிய அப்பெரு மான் மகிழ்ந்து சக்கரங்களில் நின்று அருள் செய்வான்.

குறிப்புரை :

`சிகாரம் அகார உகார நடுவாக` என்க, இது, `சிம்` என்பது நடுவேவர, முன்னே `அம்` என்பதையும், பின்னே ``உம்`` என்பதனையும் ஓதல் வேண்டும் என்றதாம். அஃதாவது, பிராணனை ``அம்`` என்று பூரித்து, `உம்` என்று இரேசித்து, `சிம்` என்றுகும்பித்தல் வேண்டும் என்றவாறு. இதுவும் ஒருவகைப் பிராணாயாம முறை. ``வகாரமோடு சிகாரமுடனே`` என எண்ணிடைச்சொல் எண்ணப் படும் பெயர் தோறும் வந்தது. அதனால், அப்பெயர்களை ஒருங்கு இணைய வைத்து உரைக்க. `ஓகாரம்` என்பது குறுக்கலாயிற்று.
இதனால், மேற்கூறிய சக்கரங்களின் வழிபாட்டிற்குரிய, சிறந்ததொரு செபம், அதற்குரிய பிராணாயாமத்துடன் சொல்லப் பட்டது.

பண் :

பாடல் எண் : 39

அற்ற இடத்தே அகாரம தாவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு அகாரம் முதலியவற்றால் ஆயாமம் (தடுத்தல்) செய்யப்பட்ட பிராண வாயு நிராதாரமாகிய உச்சியை அடைந்தபொழுது, அடைதற்குரிய பொருளாகிய சிவனைக் காணலாம். அப்பொழுது முன்பெல்லாம் மறக்கருணை உடையனாய் இருந்த சிவன் அந்நிலை நீங்கி அறக்கருணை உடையனாய், வளவிய ஒளியாயும், உண்மையாயும் நின்று, செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாகச் செய்யும் குளிகைத் தன்மையைப் பொருந்தி நிற்பன்.

குறிப்புரை :

அற்ற இடம் - `ஆதாரம்` எனப்பட்டவைகளைக் கடந்த இடம். ``அகாரம்`` என்றது உபலக்கணம். `அகாரமதனால்` என உருபு விரித்துக் கொள்க. ஆவது - உண்டாவது. `அகாரமதனால் ஆவது அற்ற இடத்தே உற்றவிடத்து` என்க. ``செற்றம் அறுத்த செழுஞ்சுடர்`` என்றது அனுவாதமாய் நின்று பொருள் பயந்தது. `செழுஞ்சுடர் குளிகை போலும்` என இயையும். ஈற்றடி, `பொன்னினது குற்றத்தை அறுத்த குளிகைபோலும்` என்னும் பொருளது.
இதனால், `மேற்கூறிய ஆதார யோக செபங்களிலும் நிராதாரயோக செபம் சிறந்தது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

பொழிப்புரை :

அகாரத்தை உச்சரித்த உடனே உகாரத்தை உச்சரித்தால், மேலிடத்ததாக அறியப்படுகின்ற வீட்டின்பம் பொங்கி வழிந்து உயிரின்கண் கலக்கும். அந்த இரண்டெழுத்தையும் மகாரத்துடன் சேர்த்து உச்சரித்து என் உடலகத்தே நான் சிவனை வழிபட்ட செயலால் விளைந்த அவனது இன்பத்தை நான் எவ்வாறு பிறர்க்குச் சொல்லுவேன்! அவ்வின்பம் அத்தகையதாய் இருந்தது.

குறிப்புரை :

முதலடி, மேற்கூறிய பிராணாயாம முறையை அனுவதித்தது. மேல் எடுத்துக் கூறாத மகாரத்தை இதனுள் எடுத்துக் கூறினார். உ என்ற - உகரச்சுட்டால் சுட்டப்பட்ட. `முத்தி, நந்தி` என்பன ஆகுபெயர்கள். `அருள் வழியே ஆனந்தம் பிறக்கும்` என்பதை விளக்க, `பெருகிக் கலக்கும்` என்னாது, `உருகிக் கலக்கும்` என்றார். ``இயற்கை`` என்றது, அவனுக்கு இயல்பாய் உள்ள இன்பத்தையேயாம். இதன்பின், `அன்னது` என்னும் பயனிலை வருவித்துக் கொள்க.
இதனால், மேற்கூறிய பிரணவயோக செபம் வீட்டின்பத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே
ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.

பொழிப்புரை :

இவ்வுலகத்தில் உள்ள பலரும் அறிதல் நீர்மேல் எழுத்துப் போலும் அழியும் எழுத்துக்களையேயாம். மேலை வெளியில் அழியாத எழுத்து ஒன்று உள்ளது. அதனை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனை அறிபவர் எவரோ அவரே உடம்பில் நின்று அறியும் நிலையில்லாத எழுத்தை அறியாதவர் ஆவர்.

குறிப்புரை :

`நீர்மேல் எழுத்துப்போல பிற எழுத்துக்கள் நிலையில் லாதன அல்ல எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் அவையும் நிலையில்லாத எழுத்துக்களே` என்பது முதலடியில் உணர்த் தப்பட்டது. ``வான்`` என்றது, ஏற்புழிக் கோடலால் மேலை வெளி யாயிற்று. மேலை வெளியாவது விந்து. அதன்கண் உள்ள எழுத்துப் பிரணவம். வழக்கிடத்தும், செய்யுளிடத்துமாக அறியப்படும் எழுத் துக்கள் உடம்பில் இயல்பாக நின்று அறியப்படுவனவாதல் அறிக. ``ஊனில் எழுத்து`` என்றது, உலகப் பொருளைக் குறித்த குறிப்பு மொழி. ``உணர்கிலர்`` என்றது, `அவற்றை உணர்ந்து அவற்றில் தொடக்குறுதலினின்றும் நீங்குவர்` என்றவாறு. இதனுள் இடையீட்டெதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய பிரணவ யோக செபம் பாசத்தின் நீங்குதற்கு வாயிலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்திதந் தானே.

பொழிப்புரை :

பிராண வாயுவை உடம்பில் நடு நாடியாகிய சுழுமுனையில் பொருந்தும்படி செலுத்தினால், அந்நாடியில் நிற்கின்ற ஆதார மலர்களில் ஐம்பத்தோர் எழுத்துக்களும் முறையானே விளங்கி நிற்கும். அவ்வாறு நிறைவிடத்து முதற்காலத்திலே யாவர்க்கும் பொதுவாக வேதத்தை அருளிச்செய்த முதற்பொருளாகிய சிவன் தன் அடியார் நடுவில் இருக்கும் வீடுபேற்றைத் தருதல் திண்ணம்.

குறிப்புரை :

முதலடியில், `நடுவுறச் செய்ய` என ஒருசொல்லும், இரண்டாம் அடியில் `மாலையாக` என ஆக்கமும் வருவிக்க. `காலைக் காயத்தில் நடுவுறச் செய்ய` என்க. கால் - காற்று. `காலை உடம்பின் நடுவிடத்தில் கொணர்ந்து ஊன்ற` என்பது நயம். ஆதல் - தோன்றுதல். `தோன்றவே, அவற்றைச் சுட்டியறிந்து நீங்குதல் கூடும்` என்பது கருத்து. அடியார் நடுவுறும் முத்தி, அபரமுத்தியாம். துணிபுபற்றி, எதிர் காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், மேற்கூறிய செபத்திற்குப் பிராணாயாமம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியஒண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

பொழிப்புரை :

உந்தியின் கீழ் மூலாதாரத்தில் சிறப்புடைய ஓர் எழுத்து உள்ளது. அதன்மேலேதான் சிவன் தானும், தன் துணைவி யுமாக எழுந்தருளியிருக்கின்றான். அதனைத் துறவுபூண்ட முனிவ ராலும் அறிதல் இயலாது. எனவே, துறவுள்ளம் தோன்ற ஒட்டாது மயக்கி நிற்கின்ற வினைக்கட்டில் அகப்பட்டுள்ளவர் அறிய மாட்டாதவராதல் சொல்லவேண்டுமோ!.

குறிப்புரை :

``ஓர் எழுத்து`` என்றது, ஓங்காரத்தை. `தவத்தால் அதனைக் காண முயலுதலே செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம். ஓவியர் - ஓவினவர்; பற்று நீங்கினவர். பொருளுக்கு ஏற்ப அடிகளை மாற்றி உரைக்க. `அறிவாரில்லை` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய எதிர்மறை முற்று, `அது அறிய ஒண்ணாது` என்க. இதனால், மேற்கூறிய அகார உகார மகாரங்களது சமட்டியாகிய அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

பொழிப்புரை :

சிவனை, `ஔ` என்றும், `சௌ` என்றும் பிறந்து பொருந்திய மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் அமைந்த மறை பொருளை ஒருவரும் அறியவில்லை. அறிந்தார்களாயின் `அம்சம்` எனப்படுகின்ற அந்த மந்திரந்தானே அனாதியான சிவமாய் நிற்கும்.

குறிப்புரை :

`அரனை` என்னும் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. ``அவ், சவ்`` நான்கில் முதலது, `ஔ, சௌ` என்பவற்றின் போலி. ஏனை யவை, ஈற்றில் மகாரத்தோடு கூடிய மந்திரங்கள். ``சவ்வும், அனாதியும்`` என்ற உம்மைகள் முறையே இழிவு சிறப்பும், உயர்வு சிறப்புமாம்.
இதனால், `அம்சமந்திரம் சிவ மந்திரமாம் சிறப்பினை யுடையது` என்பது உணர்த்து முகத்தால், மேல், ``அகார உகார``, (934) ``அவ்வென்ற போதில்`` (936) என்னும் மந்திரங்களிற் கூறிய உகாரத்திற்கு ஈடாக `சம்` என்பதனை வைத்து அம்ச மந்திரத்தால் பிராணாயாமத்தைச் செய்தலும் பொருந்தும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.

பொழிப்புரை :

மேல், ``நல்ல எழுத்து`` எனப்பட்ட அந்த ஓர் எழுத்தே, அக மலர்களாகிய ஆதார பங்ககயதந்தோறும் பலவகை யாகக் காட்சிப்படும். அது மூலாதாரத்தில் நிற்பதாயினும், சுவாதிட் டானத்தில் கும்பிக்கப்பட்ட பிராண வாயுவாய் மேலெழுந்து மணி பூரகம் முதலாக விளங்கத் தொடங்கும். சந்திக்காலங்களில் சந்திவழி பாட்டினைத் தவறாது செய்பவர்களுங்கூட, `அவ்வழிபாடு இக் காட்சியை எய்துதற்கு வழி` என்பதை அறிவதில்லை. ஏதோவோர் ஒழுக்கமாகக் கருதி அந்தியிலுங்கூடத் தவறாமல் அவ்வழிபாட்டினை முடித்து, வேறு செயல் செய்யச் சென்றுவிடுகிறார்கள்.

குறிப்புரை :

`ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. ``மலரில்`` என்பதில், `ஆல்` உருபு, `தொறுப்` பொருளில் வந்தது. ஆர்த்தல் - நிரப்புதல். பிரணவம் பல்வேறு கலைகளாய் ஆதாரந் தோறும் நிற்குமாறு, மூன்றாம் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத்துட் குறிக்கப்பட்டது.
இதனால், சந்திவழிபாடு முதலியவை வாயிலாக, மேற்கூறிய பிரணவக் காட்சியைப் பெற முயலுதல் வேண்டும் என்பதும் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 46

சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

பொழிப்புரை :

மக்கட் பிறப்பு எடுத்தோர் ஒருதலையாக வணங் குதற்குரிய இத்தந்திரத்தில் தொடக்கம் முதலாகப் பலவிடத்தும் கூறி, இங்கும் கூறப்பட்ட ஓரெழுத்தாகிய பிரணவம், மேற்கூறியவாறு விளங்கி நிற்கும் நிலையைப் பெறுவதற்கு, உயிர்ப்புக்கு இன்றியமை யாததாகிய அம்சமந்திரம் முதலிய பிராணாயாம மந்திரங்களே பற்றுக் கோடாகும். ஆகவே, ஆதார பங்கயங்களில் பிரணவத்தை மேற்கூறிய வாறு குற்றமறக் காணவேண்டின், அந்தப் பிராணாயாம மந்திரங்களே ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசமாய் நின்று, மனத்தை ஒருவழிப்படுத்துவனவாகும்.

குறிப்புரை :

`அதனால், அம்மந்திரங்களுடன் பிராணாயாமத்தை முன்னர்ச் செய்க` என்பது குறிப்பெச்சம். செல்லுதல், முறையாக விளங்குதல். திசை - இடம். ``செல்லும் திசைபெற`` என்றாராயினும், `திசைகளில் செல்லும் நிலையினைப் பெற` என்றலே கருத்து. காற்றை, `ஆவி` என்றலும் ஒரு வழக்கு. காற்று, இங்கே நெறிப்படுத்தப்படும் காற்று. `ஆவிக்கு` என்னும் நான்கனுருபு. `கூலிக்கு வேலை செய்தான்` என்பது போல் நிமித்தப் பொருளில் வந்தது. உள் மந்திரம் - நினைக்கப் படுகின்ற மந்திரம். ``அங்குசம்`` என்றது, குறிப்பு உருவகம்.
இதனால், பிரணவக் காட்சிக்கு இன்றியமையாத பிராணா யாமம். மந்திரத்தோடுகூடச் செய்தலின் இன்றியமையாமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 47

அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகாரம் நடுவாய்
உருவிட ஆறும் உறுமந் திரமே.

பொழிப்புரை :

சிவம் சூக்குமமான நிலையில் பரவெளியாய் நிற்க, அதன்கண் நாதம் தோன்றும். பின்பு சத்தி அச்சிவத்தைவிட தூலமாய் அவ்வெளியினுள் தோன்ற, அதனிடத்து விந்து தோன்றும். ஆகவே, அப்பெற்றியவாய நாத விந்துக்களின் நடுவில் சிகார யகாரங்கள் பொருந்தி நிற்க நின்ற ஆறு எழுத்துக்களும் உயர்ந்த மந்திரமாய் விளங்கும்.

குறிப்புரை :

`அதனால், அம்மந்திரத்தை மேற்கொண்டு செபிக்க` என்பது குறிப்பெச்சம். இங்குக் கூறியவாறு ஆறு எழுத்தாய் நிற்கும் மந்திரம், `ஓம் நமச்சிவாயம்` என்பது. முன்னர் நின்ற விந்துவை அடுத்து நிற்பது யகாரமாதலின் அதனை முன்னர்க் கூறினார். நாதம் சகாரமோடு புணருமிடத்து சகார மெய்யாய் நிற்கும்.
`ஓoநம‹‹ிவாய` என்னும் மந்திரம், தமிழில் `ஓநமச் சிவாய` என்றும், `ஓநமச்சிவாயம்` என்றும் நிற்கும் என்பதை,
``போற்றியோ நமச்சிவாய`` 1
என்னும் திருவாசகத்தாலும்,
``நமச்சிவா யம்சொல்ல வல்லோம்`` 2
என்னும் திருத்தாண்டகத்தாலும் அறிக. இங்ஙனமாகவே, `தமிழ் கூறுவார்க்கு இஃது ஆம்` என்றதாயிற்று. ஆக்கங்கள் வருவித்துக் கொள்க. பெருகுதல் - தூலமாதல், உருவிட - ஊடே நிற்க. `ஆறும் மந்திரமாய் உறும்` என்க.
இதனால், மூலமந்திரம் தமிழில் நிற்பதொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடின்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

பொழிப்புரை :

விந்துவும், நாதமும் திருவைந்தெழுத்து மந்திரத் தோடு ஒருசேரப் பொருந்திச் சந்திர மண்டலமாகிய ஆயிர இதழ்த் தாமரையுள்ள தலையை அடையுமாயின் நிராதாரத்தில் உள்ள தேவாமிர்தமாகிய சிவன் இன்ப ஊற்றாய் வெளிப்படுவான். அவனுக்கு அவ்விடத்து நினைக்கப்படுகிற அந்த மந்திர செபமே வேள்வியாய் அமையும்.

குறிப்புரை :

`திருவைந்தெழுத்து மந்திரம்` என்பது மேலை மந்திரத் தினின்றும் வந்து இயைந்தது. அல்லாவிடில், விந்து நாதங்கள் மட்டில் மந்திரம் ஆகாமை அறிக. இப்பயனை விதந்து கூறியது, `மேற் சொல்லிய முறையால் இழுக்கொன்றும் இல்லை` என்றவாறு.
இதனால், `திருவைந்தெழுத்தை விந்து இறுதியாகச் சொல்லு தலால் அதனது தன்மை சிறிதும் குறைவுறாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு சேர்த்து ஆறெழுத்தாக ஓதி உணரும் உணர்வின் பயனை அறிபவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனால், அந்த மந்திரத்தை ஒப்பற்ற ஒன்றாகக் கொண்டு ஓதிப் பெறும் உணர்வையும் யாரும் அடைவதில்லை. வேறு மந்திரத்தை அதற்கு நிகரானதாக நினையாமல் அந்த மந்திரம் ஒன்றையே ஓத வல்லவர்கட்கு அதன்கண் உள்ள ஓர் எழுத்தாலே ஆன்ம லாபத்தைப் பெறுதல் இயையும்.

குறிப்புரை :

ஈரிடத்தும் ``ஆறெழுத்து`` என்றே ஓதினாராயினும், `அவ் ஆறெழுத்து` எனச் சுட்டி ஓதுதலே கருத்து. ``இன்றி`` என்றதும், `இணையில்லையாக` என்றவாறு. ``ஓரேழுத்து`` என்றது பொதுப்பட நின்று, சிகாரமாகிய அவ்வொன்றின்மேல் நோக்குடையதாய் நின்றது. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், மேற்சொல்லப்பட்ட மந்திரங்கள் பலவற்றுள் திருவைந்தெழுத்து இன்றியமையாச் சிறப்பினதாய் ஆன்ம லாபத்தைத் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

பொழிப்புரை :

உச்சரிக்கும் எழுத்தாகிய அகாரத்தோடு ஏனைய பதினைந்தும் உயிரெழுத்துக்களாம்; ஆயினும், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` என்று மந்திர நூலார் கூறுவர். அவையெல்லாம் எவ் வாறாயினும், முதல்வனுக்குரிய முதன்மை மந்திரத்தில் மேற் சொல்லிய ஆறெழுத்துக்களே உள்ளன. அவற்றை நால்வகை வாக்கிலும் வைத்து ஆராய்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

``அகரம், ஒலிப்பின் முதல் முயற்சியிலே தோன்றி எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் சிறப்பினது; அதனால், அஃது உயிரெழுத்திற்கும் உயிராய் நிற்பது`` என்பார், ``ஓதும் எழுத்தோடு`` என அதனது இயல்பும், உயர்வும் தோன்ற ஒடுஉருபு கொடுத்து, வேறுவைத்து ஓதினார். இது பற்றியே இறைவன் அகரவடிவினன் எனக் கூறப்படுகின்றான். ``ஓதும் எழுத்து`` என்றது, `ஓதப்படும் - உச்சரித்தல் உண்டான பொழுதே தோன்றுகின்ற - எழுத்து` என்றவாறு, கலை - கூறு. `சொற்களது உறுப்பு` என்பதாம். `மூவைஞ்சும் உயிர்க்கலை` என மாறிக்கூட்டுக` ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. சோதி, இறைவன், நாத எழுத்து - நாதத்தின் காரியமாகிய எழுத்து; `பூதகாரியமாகிய எழுத்தாகக் கொள்ளுதலோடு ஒழியாது` என்றவாறு. `நாத எழுத்தில் இட்டு` என்க. `திருவைந்தெழுத்தை யோகமுறையால் நாத எழுத்தாக உணர்ந்து சுத்தமானதாகக் கணிக்க, சுத்த தத்துவத்தில் விளங்கிநிற்கும் தடத்த சிவனைத் தலைப்பட்டு அபரமுத்தியை எய்திப் பின் பரமுத்தியை எளிதிற்பெறலாம்` என்பது கருத்து.
இதனால், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று என்றாலும், அவற்றுள் உயிரெழுத்தாவன பதினாறே` என்பதும், `அவற்றுள்ளும் அகரம் உயிர்க்குயிராய எழுத்து` என்பதும், `எனினும், மேற்கூறிய ஆறெழுத்துக்கள் அவை எல்லாவற்றினும் மேம்பட்டன` என்பதும் கூறி, மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.
`ஐம்பத்தோரெழுத்து இவை` என்பதை மேற்காட்டிய பேரம்பலச் சக்கரத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 51

 விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும் ஓங்காரமாய் நாதம் தோன்ற, அந்த நாதத்தின் தலைவியாகிய குண்டலினி சக்தி, பதினாறு கலைகளையுடைய பிரணவமே தானாகி மக்களது உடம்பில் `தலை, கால், உடல்` என்னும் உறுப்புக்களில் நிற்கின்றாள். அவள் ஒன்றி நிற்கப் பெறுதலே பிரணவம் அழிவின்றி மேற்கூறிய ஐம்பத்தோரெழுத் தாயிற்று.

குறிப்புரை :

``சுழி`` என்றது ஒங்காரத்தின் வடிவத்தை. `சுழியாய்` என, ஆக்கம் வருவித்துக்கொள்க. நாதமாவது வாக்கு. உயிர்களைப் பிணித்துள்ள பந்தங்களில் நீக்குதற்கரிய பரமபந்தமாய் நிற்பது வாக்காதலின், அதனையே ``பந்தம்`` என்றார். `பதினாறுகலைகள் இவை` என்பதும், அவை உடம்பில் நிற்கும் இடங்களும் மேல் மூன்றாம் தந்திரத்துள் `கலைநிலை` அதிகாரத்திற் காட்டப்பட்டன. கந்தரம் - கழுத்து. ஆகாரம் என்பது குறுகி நின்றது. ஆகாரம் - வடிவம். கழுத்தோடு கூடிநிற்கும் வடிவம் தலை. ``அந்தம் இன்றி ஆயது`` என்றது `அக்கரம்` (அட்சரம்) எனப்பட்டது என்றவாறு. இதனால், `உண்மை அக்கரம் குண்டலினிசத்தியே என்பதும், அவட்கு இடமாதல் பற்றியே வாக்கின் வடிவாக எழுத்துக்கள், `அக்கரம்` என உபசரித்துக் கூறப்படுகின்றன` என்பதும் பெறப்பட்டன. உண்மை விளக்கத்துள், `திருவைந்தெழுத்து ஏனையெழுத்துக்கள் போல அழியும் எழுத்துக்கள் அல்ல` (40, 41) எனக் கூறியதையும் இவ்விடத்து நினைவுகூர்க. ``அந்தமும்`` என்ற உம்மை `ஆதியின்றி` என இறந்தது தழுவிய எச்சம். ``ஆயது`` என்பதற்கு, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. அச்சுட்டுப் பெயர், முன்னர், ``பதினாறு கலைய`` என்ற பிரணவத்தைக் குறிக்கும்.
இதனால், `மேற்கூறிய ஆறெழுத்தின் பொருளாகிய சிவனுடைய சத்தியினது சார்பு காரணமாகவே பிரணவமும், அதன் காரியமாகிய எழுத்துக்களும் சிறப்புற்றன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

மேற் சொல்லிய ஐம்பத்தோரெழுத்துக்களே வேதம், ஆகமம் அனைத்துமாய் நிற்கும். அவ் உண்மையை உணர்ந்த பின் `ஐம்பதெழுத்து அல்லது ஐம்பத்தோரெழுத்து` என்றெல்லாம் எண்ணுகின்ற அலைவு நீங்கி, `ஐந்தெழுத்து` என்று உணர்ந்து நிற்கின்ற அடக்கம் உண்டாகும்.

குறிப்புரை :

`ஐம்பதெழுத்துமே` என்பதில் உம்மையும், ஏகாரமும் மாறிநின்றன. ஆவது, அனைத்தும் ஆவது. ``ஐம்பதெழுத்தும்`` என்றது, எல்லா வகையான எழுத்துக்களும்` என்றவாறு. எழுத்துக் களை, `ஐம்பத்தொன்று`என்பதனோடு, `ஐம்பது` என்றலும் வழக்கு என்பது உணர்தற்கு, மேல், ``ஐம்பத்தோரெழுத்து`` என்றவர், இங்கு, `ஐம்பதெழுத்து` என்றார். இது மூன்றாம் தந்திரத்திலும் விளக்கப் பட்டது. வேதம், ஆகமம் முதலிய பல நூல்களையும் கற்றோர், `அவை அனைத்திலும் சொல்லப்படுவது திருவைந்தெழுத்தின் பொருளே` என்பதை நன்குணர்வர் ஆதலின், ``ஐம்பதெழுத்தும் போய் அஞ்செழுத்தாமே`` என்றார்.
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``
என்னும் திருவருட்பயனையும் காண்க. மூன்றாம் அடியில் ஏகாரம் பிரிநிலையும், உம்மை முற்றும்மையுமாம். ஆகவே, `ஐம்பதெழுத் துமே அனைத்துமாவது` என்பது பொருளாயிற்று.
இதனால், அனைத்தெழுத்துக்களும் மேற்கூறிய ஆறெழுத்தின் விரிவேயாதல் கூறப்பட்டது.
இது முதலாக, இருபத்தொரு மந்திரங்களால் திருவைந் தெழுத்தின் பெருமையே கூறி வலியுறுத்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 53

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தத்துவங்களைப் படைத்தும், அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப்பிறவி களான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும், அவைகளைக் காத்தும், அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப் பதும் ஆகிய எல்லாம் திருவைந்தெழுத்தாலேயாம்.

குறிப்புரை :

``ஐந்து பூதம்`` என்றது உபலக்கணம். ஐந்தொழில்களில் இங்கு வேண்டற்பாலனவாகிய இரண்டையே கூறினார். ஐந் தொழிலையும் சிவபெருமான் ஏவுதல் வகையானும், இயற்றுதல் வகையானும் செய்தருளுவன்.
``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாயின் விளங்கிய ஞானம் இன்றாம்``1
என்றவாறு, நாதம் இன்றி ஒருவர்க்கும் சிறப்புணர்வு கூடாது ஆதலால், `ஏவுதல் ஐந்தெழுத்தாலே` என்பது தெளிவாகும். இனி, அத் தொழில்களைத் தானே இயற்றுமிடத்தும் அவற்றால் உயிர்கள் பயன் கொள்ளுதற்கு நாதம் இன்றியமையாமை பற்றி அதனையும் ஐந்தெழுத் தாலே ஆவனமாகக் கூறுதல் அமைவுடைத்தாம். ஐந்தெழுத்தாலே திருமேனி கொள்ளுதல் எவ்விடத்தும் ஒத்ததாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 54

வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

பொழிப்புரை :

சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைத் தளர்ச்சியின்றி ஓத உறுதிபூண்டு நிற்பவர்கட்கு, வினைக்குழியில் வீழ்ந்து கிடந்தாலும் எழுந்து கரையேறுதல் கூடுவதாம். மேலும் அப்பெருமான் அவர்களை வினைத்துன்பம் விட்டொழியுமாறு தன்மாட்டு அழைத்து ஆண்டுகொள்வான்.

குறிப்புரை :

`வீழ்ந்தும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. போந்திடும் என்னும் - `வாருங்கள்` என்று அழைப்பான். `புரிசடையோனாகிய தலைவனும்` என மேலே கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 55

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான், தேவர்கள் தன்னை விண்ணுலகத் தில் விருப்பத்தோடு அடிபணிய, அவர்கட்கு அவர்கள் உண்ணுகின்ற அமுதமாயும், அதன் பயனாகிய நீண்ட வாழ்நாளாயும், அவர்கட்கு விருப்பத்தைத் தருகின்ற இசையாயும், பாட்டாயும் நிற்றலேயன்றி, அவர்களது கருத்தில் நிற்கும் திருவைந்தெழுத்தாயும் நின்று மேலை மந்திரத்திற்கூறிய பயன்களை அளிப்பன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து, இரண்டாம் அடியிறுதியில், `அதுவன்றி` என்பது வருவித்து உரைக்க. ``நிற்கும்`` என முன்னவற்றை முடித்தமையால், பின்னதற்குப் பயன் மேற்கூறிய தாயிற்று. `எண்ணின்ற` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``அஞ்சும்`` என்ற உம்மை, `அவ்வாறு நின்றதன்றியும்` என, இறந்தது தழுவிநின்றது. `தேவர்களும் தாம் விரும்பிய பயனைப் பெறுதல் திருவைந்தெழுத்தை ஓதியே` என்பது இங்குக் கூறப்பட்டது.
``மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றுஅவர் தம்மை ஆள்வன
... ... ... அஞ்செழுத்தும்மே`` 1
என்ற திருஞானசம்பந்தர் திருமொழியும் காண்க. `தலைவன்` என்னும் எழுவாய் இயைபினால் வந்து இயையும்.

பண் :

பாடல் எண் : 56

ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

பொழிப்புரை :

உலகம் நிலைபெற்றிருத்தலும் கல் முதலியவற்றால் கட்டப்பட்டு அமைந்த இடங்கள் சிவபெருமானது அருள் நிலையங் களாதலும், அந்நிலையங்களில் அவன் விளங்கி நின்று, வேண்டு வார்க்கு வேண்டுவன வழங்குதலும் திருவைந்தெழுத்தாலேயாகும். இனி, அதனை அதன் வகை பலவற்றையும் அறிந்து ஓத, அப்பெருமான் அங்ஙனம் ஓதுவாரது பக்கத்திலே எப்பொழுதும் இருப்பவனாவான்.

குறிப்புரை :

அகலிடம் - உலகம்; என்றது உயிர்களை. `அவை நிலைபெறுதல்` என்பதனை,
``வானின் றுலகம் வழங்கி வருதலால்`` 1
என்பது போலக் கொள்க. ``ஆலயம் ஆவது`` என்றது `ஆலயம் ஆலயமாவது` என்றவாறு. `சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்` என்னும் முறைமையிற் சிறிதும் வழுவாதவன் என்பார், `சிவபெருமானை, `அறவோன்` என்றார். செய்தல், இங்கே ஓதுதல். பால் - பக்கம். பாலன் ஆதலை,
``இவன்எனைப் பன்னாள் அழைப்பொழி யான்என்
றெதிர்ப்படுமே`` 1
``எங்குற்றாய் என்றபோதில்
இங்குற்றேன் என்கண்டாயே`` 2
``தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்னடியோங்களுக்கே`` 3
``ஆரூரர்தம் - அருகிருக்கும் விதியன்றி அறம் இருக்க
மறம்விலைக்குக் கொண்டவாறே`` 4
என்பன முதலிய திருமொழிகளை நோக்கி அறிக.
``சிவனே சிவனே சிவனேஎன் பார்பின்
சிவன்உமையா ளோடுந் திரிவன்``
என்பதொரு வெண்பாவையும் காண்க. இதன் முதலடி மூன்றாம் அடிகளில் னகர ஒற்றுக்கள் அலகு பெறாது நின்றன.

பண் :

பாடல் எண் : 57

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்
தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நாத எழுத்தாகிய பிரணவமாய் அதன் வழியே வானத்தில் பொருந்தி எல்லாப் பொருட்கும் வியாபக மாய் நிற்பான். நீரெழுத்தாகிய நகாரமாய் அதன்வழியே நீரில் பொருந்தி அதன்வழியே பொருள்களைப் பதம் செய்வான். நில வெழுத்தாகிய மகாரமாய் அதன்வழியே நிலத்திற் பொருந்தி எல்லா வற்றையும் தாங்குவான். நெருப்பெழுத்தாகிய சிகாரமாய் அதன் வழியே நெருப்பில் பொருந்திப் பொருள்களைச் சுட்டுப் பக்குவப் படுத்துவான். காற்றெழுத்தாகிய வகாரமாய் அதன்வழியே காற்றிற் பொருந்திப் பரந்து சலித்துப் பொருள்களைத் திரட்டுவான். எஞ்சிய ஓரெழுத்தாய யகாரமாய் அதன்வழியே ஆன்மாவிலும், இருசுடரிலும் பொருந்தி அறிதலும், ஒளிவீசலும் செய்வான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி, வேண்டும் சொற்கள் பலவற்றைத் தொகுத்து அவை குறிப்பால் தோன்றக் கூறினாராகலின், அவற்றை இவ்வாறு விரித்துரைத்துக்கொள்க. பூதம் முதலியவற்றைத் திருவைந் தெழுத்தில் எழுத்துக்கள் நிற்கும் முறைபற்றிக் கூறினமை அறிக. இங்குக் கூறிய ஐந்தெழுத்துப் பிரணவத்தோடுகூடிய தூல ஐந்தெழுத் தாதல் வெளிப்படை. ``ஒண் சுடர்`` என்பது அகத்தொளியாகிய அறி வையும், புறத்தொளியாகிய சூரிய சந்திரர்களையும் குறித்தது. அப்புற மாதல், வியாபகமாய் நிற்றல். ``ஓரெழுத்து`` என்பதன் பின்னும் ஆக்கம் வருவிக்க. ``ஈசனும்`` என்ற உம்மை சிறப்பு. இவ்வெழு வாயை முதலிற்கொண்டு உரைக்க. மேலை மந்திரத்தில், ``ஐந்தின் பெருமையே அகலிட மாவது`` என்றது இனிது விளங்குதற்பொருட்டு, அஃது ஆமாற்றை இதனுள் வகுத்துக் கூறினார். ஆகவே, நீரெழுத்து முதலியவற்றைப் பூதங்கட்குரிய பீசாக்கரங்களாகக் கொள்ளல் வேண்டாமை அறிக. இங்குக் கூறிய எழுத்துக்கள், அவ்வப்பொருட்கு உரியனவாதலை ஆணையாற்கொள்க.

பண் :

பாடல் எண் : 58

நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

பொழிப்புரை :

மேற்கூறிய எழுத்துக்களில் பிரணவம் நீங்க நகாரம் முதலாக முறையானே நின்ற ஐந்தெழுத்துக்களில் இறுதிநின்ற யகாரம் ஒழித்து நான்காய்நின்ற எழுத்துக்களது ஓசையே உலகெங்கும் வியாபிப்பது. அதனால், எல்லா உலகமும் அவ்வெழுத்திற்குள்ளே அடங்கியுள்ளன. அதனால், அவற்றாலாய அவ்வோசையின் பெருமை அறிந்து அதனையே ஓதவல்லவர்கட்கு அதுவே நன்னெறி யாய் நன்மை பயக்கும்.

குறிப்புரை :

கடவுளரைப் போற்றுமிடத்து அவர்தம் பெயரோடு பெரும்பான்மையும் நான்காம் வேற்றுமையைப் புணர்த்து அவரைப் படர்க்கையில் வைத்துப் போற்றுதல் வடமொழி வழக்கு. அப்பெயர் களைப் பெரும்பான்மையும் எட்டாம் வேற்றுமையாக்கி அவரை முன்னிலைப் படுத்திப் போற்றுதல் தமிழ் வழக்கு. அதனால், ``சிவாய`` என்பது தமிழ் முறையில் `சிவ` என்றே நிற்குமாதலின், `சிவமூல மந்திரம், மேல், ``ஆறெழுத்தோதும்`` என்ற மந்திரத்துட் கூறியவாறு பிரணவத்தோடு கூடி ஆறெழுத்தாலேயன்றி, யகாரம் நீங்க ஐந்தெழுத் தாயும் நிற்றலுடையது` என்பது உணர்த்துவார் ஐந்தெழுத்தின் பெருமையெல்லாம் எடுத்தோதினார். எனவே, யகாரம் அவற்றுள் அடங்கி நிற்பதாயிற்று. `இம் மந்திரத்திற்கு இதுவே பொருள்` என்பதை வருகின்ற மந்திரங்களால் அறிக.
நால் ஆம் எழுத்து - `நான்கு` என்னும் தொகையை உடைய வாகின்ற எழுத்து. `அவற்றால் ஆய ஓசை` என்றது, `மந்திரம்` என்ற வாறு. ``உருவுவது`` என்பது குறைந்து நின்றது. எழுத்து அது - எழுத்தாய் நின்ற அம்மந்திரம். `அதுவேயும்` என்னும் பிரிநிலை ஏகாரமும், இறந்தது தழுவிய எச்ச உம்மையும் விரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 59

இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு யான் அந்நான்கு எழுத்தையே ஓதினமையால் சிவசத்தி என்னிடத்து வந்து பொருந்தி, எனது உள்ளத்தை இடமாகக் கொள்ள விரும்பி, அங்ஙனம் அதன்கண்ணே அமர்ந்தாள். அதனால், யான் எனது சீவநிலையினின்று நீங்கினேன். பிறமந்திரங்களைப் பல்வேறு பயன் குறித்துப் பிதற்றுதலையும் ஒழித்தேன். ஆகவே, நீவிரும் `நமசிவ` என்று ஓதுதலின் பயனை ஆய்ந்து உணர்மின்; உணர்ந்து அம்மந்திரத்தைப் பற்றுமின்.

குறிப்புரை :

`அந்நான்கெழுத்தையே ஓதினால்` என்பது இயைபு பற்றிக் கொள்ளக் கிடந்தது. ``நமசிவ என்னும்`` என்பது தொடங்கி மூன்றாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 60

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

பொழிப்புரை :

அரிசி முதலியவற்றில் உடலுக்கு நலந்தரும் பொருளாய் நின்று, அவை சோறு முதலியனவாய்ப் பக்குவப்பட்ட பின்பு அவற்றை, வயிற்றுத்தீ வேள்வித்தீயாகுமாறு அதில்நின்று அவிசாகச் சீரணிப்பிக்கின்ற அத்தன்மையளான திரோதான சத்திக் குரிய நகாரம் முதலாக நின்ற அந்நான்கெழுத்தே துணை என்று இருப் பவர்கட்குச் சிவசத்தி அவர்களது வழிபாட்டின் பயனைத் தரும் முதல் வியாய் நீங்காது நிற்பாள்.

குறிப்புரை :

ஆமம் - அரிசி. அன்னம் - சோறு. இவை உபலக்கணம். `ஓமம், உதம்` என்பன உருவகங்கள். உதம் - அவிசு. ``இருந்து பண்ணும்`` என்னும் அடைமொழியால், ``ஒருத்தி`` என்றது திரோதான சத்தியையாயிற்று. நகாரம் திரோதான சத்தி எழுத்தாகலின், அதனை முதலாக உடைய மந்திரமும் அவளதாயிற்று. நேமம், `நியமம்` என்பதன் மரூஉ. `இனிதாய், உதமாக, தலைவியாய்` என ஆக்கங்கள் வருவிக்க. `உலகப் பயனை வேண்டுவார்க்குத் தூல பஞ்சாக்கரம் உரியது` என்பதை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 61

பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின்
இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர
நட்டம தாடும் நடுவே நிலயங்கொண்
டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `ஐம்பூதம், இருசுடர், ஆன்மா` என்னும் உலகப் பொருள் எட்டுமாய் நிற்பவன் ஆதலால், அவரவர் விருப் பத்தை உணர்ந்து அவரவர் மேற்கொள்ளப்பட்ட வகையிலே அமைந்த அஞ்செழுத்தின் உள் நின்று இரவும் பகலும் ஆகிய காலங்கள் மாறிமாறித் தொடர்ந்துவர இடையறாது நடம் புரிந்து நிற்பான்.

குறிப்புரை :

`பட்ட பரிசே அஞ்செழுத்தின் நடுவே நிலயங்கொண்டு ஆடும்` என்க. பட்டபரிசே ஆடுதலாவது, தூல பஞ்சாக்கரத்தின் நடுவில் ஊன நடனத்தையும், சூக்கும பஞ்சாக்கரத்தின் நடுவில் ஞான நடனத்தையும் செய்தல். ஈற்றில் `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது. ஈற்றடி, வேண்டுவோர் வேண்டுவனவற்றை அறிதல் கூறி, `அங்ஙனம் அறிதலால், அவரவர்க்கு உரிய பயனை அளித்தல் அல்லது நியதியின்றி அளியான்` என்பது உணர்த்தப் பட்டது. தூலமும், சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்கள் தத்தம் பயனையே தருதலன்றிப் பிறிது பயன் தாராமையைக் காரணங்காட்டி விளக்கியவாறு. ``நம`` ஊன நடனத்தையும், ``சிவ`` ஞான, நடனத்தையும் குறித்தலை 955, 956 இல் உணர்த்தியுள்ளார் எனக் கோடல் பொருத்தம்.

பண் :

பாடல் எண் : 62

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில்
சிகாரம் சிவமா வகாரம் வடிவா
யகாரம் உயிரென் றறையலும் ஆமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அகாரத்தைப் பற்றியும், சிவ தத்துவம் ஐந்தும் உகாரத்தைப் பற்றியும், வித்தியா தத்துவம் ஏழும் மகாரத்தைப் பற்றியும் நிற்கும். இனித் திருவைந்தெழுத்தில் சிறப்புடைய மூன்றில் அவ்வாறின்றிச் சிகாரம் சிவமும், வகாரம் சத்தியுமேயாக, யகாரம் ஆன்மாவேயாம் என்று சொல்லுதலும் கூடும்.

குறிப்புரை :

மேல் பிரணவ கலைகளையும், திருவைந்தெழுத்தை யும் ஒப்ப வைத்துக் கூறிவந்தமைபற்றி மயங்காமைப் பொருட்டு இவ்வாறு கூறி அக்கலைகளினும் திருவைந்தெழுத்துக்கள் உயர்ந்தன வாதலை விளக்கினார்.
``முப்பத்தாறில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``முப்பத்தாறில்`` என்றதனால், `உயிர், பரம், மலம்` என்பன அவை பற்றிய தத்துவங்களே ஆதல் விளங்கும். `மலம்` என்றது, `அசுத்தம்` என்னும் பொருட்டாய், அசுத்தமாயா தத்துவங்களை உணர்த்திற்று. வடிவு - சிவனது உருவம்; அது சத்தியாதல் அறிக. `சிவம், வடிவு, உயிர்` என்பவற்றில் தேற்றேகாரங்கள் தொகுத்தலாயின. அவற்றால், அவற்றின் பொருள்கள் சடமாகாது சித்தாதலும் அப்பொருள்களோடு அவ்வெழுத்திற்கு உள்ள பேருரிமையும் தோன்றுவனவாம். அவை பற்றியே ``அறையலும் ஆம்`` என உயர்வு சிறப்பும்மை கொடுத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 63

நகார மகார சிகாரம் நடுவா
வகாரம் இரண்டு வளியுடன் கூடி
ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

பொழிப்புரை :

நகார மகாரங்களை முன்னர் உடைய சிகாரம் நடுவணதாய் நிற்க, அவற்றின் பின்னதாகிய வகாரம் இடைகலை, பிங்கலை என்னும் இரு வாயுக்களுடன் பொருந்தி, ஓங்காரத்தை முதற்கண்ணே பெற்று ஓதப்படின், மேற்கூறிய எழுத்துக்களில் மகாரத்திற்கு முதல்வனாய் நின்று அதனைப் பரிபாகப்படுத்திவரும் சிவன், அங்ஙனம் ஓதுவாரது உள்ளத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான்.

குறிப்புரை :

``நடுவாய்`` என்றமையால், நகார, மகாரங்களை உடைமை முதற்கண்ணதாயிற்று. `நடுவாய் நிற்க` என ஒரு சொல் வருவிக்க. உரைக்க - உரைக்கப்பட. தூல பஞ்சாக்கரமாதலின் ஊன நடனப் பிரானையே கூறினார். மேல் இரண்டிடங்களில் (955, 56) எடுத்தோதிய `நமசிவ` என்பதனை முதலில் பிரணவத்தோடு கூட்டிப் பிராணாயமத்துடன் ஓதல் வேண்டும் என்பது உணர்த்தியவாறு.
``நாலாம் எழுத்தோசை`` (954) என்பது முதல், இதுகாறும் அஞ்செழுத்து நாலெழுத்தாயும் நிற்கும் முறைமையே கூறினார்.

பண் :

பாடல் எண் : 64

அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.

பொழிப்புரை :

ஒரு காட்டில் வாழ்வனவாகிய ஓர் ஐந்து யானைகள் உள்ளன. அவைகளை அடக்குதற்குச் சிவ நாமத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே அங்குசங்களாய் உதவும். அந்த அங்குசத்தைக் கொண்டு அவைகளை முழுதும் அடக்கவல்லவர்கட்கே ஐந்து பூதம் முதலிய தத்துவங்கட்கு முதல்வனும், முதற்கடவுளுமாகிய சிவனது இடத்தில் புகுதல் கூடும்.

குறிப்புரை :

``அஞ்சு ஆனை`` என்றதும் `அடவி` என்றதும், `தாம் குறித்த அவை` என்னும் பொருளவாய் நின்றன. அவை ஐம்பொறி களும், தத்துவதாத்துவிகக் கூட்டங்களுமாம். ``அஞ்சுக்கும் அஞ்செழுத்து`` என்றது நயம் தோற்றி நின்றது. நகாரம் முதலியவற்றை மூக்கு, நாக்கு, கண், மெய், செவி என்பவற்றோடு முறையே இயைத்துக் காட்ட முயல்வாரும் உளர். கூட - ஒருசேர, `அஞ்சாதி யாகிய ஆதி` என்க. அகம் திருவடி நிழல்.

பண் :

பாடல் எண் : 65

ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகாராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் உள்ள அகரம் முதலிய எழுத்துக்களில் சிலவாயுள்ள நகாரம் முதலிய ஐந்தெழுத் துக்களை அம்முறையில் நில்லாது பிரணவம் முதலாக மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் முறையே நிற்க மாற்றி வைத்து, தடத்த சிவனை மூலாதாரம் முதலாகவே திரோதன சத்தியோடுகூடத் தியானித்து, இவ்வாறு சந்தியா காலங்களில் வழிபடுபவர்க்கு வேறு சந்தியாவந்தனம் முதலிய சடங்குகள் வேண்டுவதில்லை.

குறிப்புரை :

``ஐந்து கலையில் அகராதி`` என்பதில், ஏழனுருபு பெயரோடு முடிந்தது. ``தன்னில்`` என்பது பன்மையொருமை மயக்கம். ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதிமாற்றி`` என்றது, `பிற எழுத்துக்களுள் சிலவாய அவையாக நிலையாமல், வேறாக மதிக்க` என்பது உணர்த்தற்கு. மேல் (959) ``மகார முதல்வன்`` என்றவாறே இங்கு ``மகாராதி`` என்றார். இங்குக் கூறுகின்றதும் தூல பஞ்சாக்கரமாதல் பற்றி. தூல பஞ்சாக்கரத்தை இறைவன் திருவடி முதலாகக் கொண்டு நிற்கும் முறையிலே ஆதாரங்களில் அமைத்தல் வேண்டும் என்பது கருத்து. `` மூலத்தே `` என்றது, ``மூலத்தில் தொடங்கியே`` என்றவாறு. மூலாதாரம் முதலிய எல்லா ஆதாரங் களிலும் `சிவனையே அவனது சத்தியோடு தியானிக்க` என்றது, `ஆதார மூர்த்திகளைச் சம்பு பட்சத் தினராகத் தியானிக்க` என்றதாம். சிறப்புப் பற்றிச் சந்தியாகாலத்தையே வரைந்தோதினார். அதனால், பிற காலங்கள் தவிர்க்கப்பட்டன அல்ல வாம். ``சடங்கு`` என்றது, `பிறிது சடங்கு` என்னும் குறிப்பினது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்றது.
பேரம்பலச் சக்கரத்தில் நிற்கும் ஐம்பத்தோரெழுத்துக்களை அகாரம் முதலாகத் தொடங்கி எண்ணுதல் அவற்றின் தோற்ற முறையாகும். அம்முறையில் முதல் தொடங்கிப் பதினாறு (உயிர்) எழுத்துக்கள் சாந்தியதீத கலையில் நிற்கும் (மெய்யெழுத்துக்களில்) ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய மூன்றெழுத்துக்கள் சாந்தி கலையில் நிற்கும். அடுத்த ஏழெழுத்துக்கள் வித்தியா கலையில் நிற்கும். அடுத்த இருபத்து நான்கு எழுத்துக்கள் பிரதிட்டா கலையில் நிற்கும். இறுதி எழுத்தாகிய க்ஷகாரம் ஒன்றும் நிவிர்த்தி கலையில் நிற்கும் என்க.

பண் :

பாடல் எண் : 66

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகும்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.

பொழிப்புரை :

உயிர்கள் சிவனை அடைவதற்கு வாயிலாகப் பொருந்திய, `சிவாய` என்னும் மூன்றெழுத்துக்களே உயிர்கட்கு உயிரும், கிடைத்தற்கரிய யோகமும், ஞானமுமாய்ச் சிறந்து நிற்பன. இவ்வுண்மையைப் பரிபாகம் வரப்பெற்றமையால் நகர மகரங்களின் நீங்கி யகரமாய் நின்ற உயிர், வகரமாகிய அருளிலே தங்கிப் பின் சிகரமாகிய சிவத்தை அடைந்து அதுவாய் விடுதலே வீடுபேறாம்.

குறிப்புரை :

வருவித்துரைத்தவை ஆற்றலால் வந்தன. அரு மருந்து - தேவாமுதம். அருமந்த, ``அருமருந்தன்ன என்பதன் மரூஉ. `சிவயோகம்` என்றற்கு, ``அருமருந்தன்ன யோகம்`` என்றார். இவ் அடை ஞானத்திற்கும் உரியதாதலின், அதுவும் சிவஞானமாயிற்று. சிவயோக சிவஞானங்களன்றிப் பிற யோக ஞானங்கள் வீடு பய வாமை அறிக. ``வீடே`` என்னும் ஏகாரம், பிரிநிலையாய்ப் பிறவாறு கூறப்படும் வீடுகள் வீடல்ல` என்பது உணர்த்தி நின்றது. மேல், `பல எழுத்துக்களுள் நின்ற சில எழுத்தாகாது அவற்றின் வேறாய் உயர்ந்து நிற்பன` எனக்கூறப்பட்ட ஐந்தெழுத்துக்களுள் மூன்றெழுத்து முத்தி மந்திரமாய்ச் சிறந்து நிற்பன என்பது உணர்த்தியவாறு. இங்கு, ``சிவாயமே`` என ஓதிய இதனாலும், அஞ்செழுத்து இறுதியில் மகாரத்தோடு நிற்றலும் உண்டு என்பது அறியப்படும். `சிவாயவே` எனப் பாடம் ஓதினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 67

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.

பொழிப்புரை :

ஐந்து மலங்களும் நீங்கிப் போகும்படி அஞ் செழுத்தின் பொருளை எவரேனும் அறிந்தபின், இறைவன் அவர்களது நெஞ்சத்தில் நிரம்பி விளங்குவான். அவர்களது உறைவிடத்திற்கும் `அழிவு` என்பது உண்டாகாது. ஆகையால், இந்த மந்திரமே யாவர்க்கும் புகலிடமாகும். நான் உண்மையாகவே சொல்லுகின்றேன்; இதில் சிறிதும் பொய்யில்லை.

குறிப்புரை :

ஐந்து மலங்களாவன; `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்பன.
``மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான்`` 1
என்றதேயன்றி
``மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்தெனவே`` 2
எனவும் அருளிச் செய்தமை காண்க. உகுதல் - சிந்திப்போதல். ``உண்மை`` என்றது பொருளை. அஞ்செழுத்தின் பொருள்கள் மேலே பலவிடத்தும் கூறப்பட்டன. `உண்மை விளக்கம், திருவருட்பயன்` என்னும் நூல்களிலும் தெளியக் காண்க. `பொருளை அறிதல்` மேற்கூறிய மூன்றெழுத்துக்களின் சிறப்பு உணர்தலைப் பயக்குமாதலின், ``அறிந்த பின், நெஞ்சகத்து உள்ளே நிறையும் பராபரம்`` என்றார், மனை, பெத்தத்தில் உடம்பும், முத்தியில் அருளுமாம். `மனைக்கு அழிவில்லை` எனவே, `அருளே நிலைக்களமாய்விடும்` என்றதாயிற்று. ஆகவே, மேற் கூறிய மூன்றெழுத்தின் பெருமை இதனால் வலியுறுத்தப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 68

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

பொழிப்புரை :

மேற்கூறிய ``சிவாய`` என்னும் மூன்றெழுத்தை `ஔ` என்னும் வித்தெழுத்தோடு ஒரு மந்திரமாகத் தெளிந்து, அங்ஙனமே ஓதினால், அம்மந்திரமே சிவனது வடிவாய் விளங்கும். அதனால், அத்தெளிவை உடையவர்கள் பிற மந்திரங்களைத் தெளிதல் இல்லை.

குறிப்புரை :

இதனால் மேற்கூறிய மந்திரம் `ஔ` என்னும் பீசாக்கரத்தை உடைமை கூறப்பட்டது. `ஔ` என்றே விதிப்பினும், `ஔம்` என்பதே கருத்து என்பது மேலே கூறப்பட்டதைக் கடை பிடிக்க. இது, `ஹௌம்` எனப்படுதலும் இயல்பு. `ஓம்` என்பது முதற் கண் நிற்றலை எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. `ஔ` என்பதைச் செய்யுளின்பம் நோக்கி, `அவ்` என்றே ஓதினார். இவ்வாறன்றி, வகர ஈற்றுச் சுட்டுப் பெயராக உரைப்பின் பொருள்படாமை அறிக.

பண் :

பாடல் எண் : 69

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

பொழிப்புரை :

மேல், ``நகார மகார சிகார நடுவாய்`` (959) என்ற மந்திரத்தின் பொருளே இதன் பொருளாகும்.

குறிப்புரை :

அங்கு, நகார முதலாக நிற்கும் மந்திரத்தை ஓதும் முறை கூறுதல் கருத்து; இங்கு அம்மந்திரத்தின் பயனையும் மேலை மந்திரங்களிற் கூறிய மூன்றெழுத்து மந்திரத்தின் பயனையும் புடைபட வைத்து உணர்த்து முகத்தால் பின்னதன் சிறப்பை வலியுறுத்துதல் கருத்து. இவையே இரண்டற்கும் வேற்றுமை. இது, வருகின்ற மந்திரத்திற்கும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 70

நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகும் சதாசிவன் றானே.

பொழிப்புரை :

நகாரம் முதலாக நின்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் நினைத்த செயல் கைகூடும்; எவ்வாறெனில், ஆன்மாக்களுக்குப் பயனை விளைக்கின்ற வினைகள் அதன்கண் அடங்கியிருத்தலால். சிகாரம் முதலாக நின்ற மேற்கூறிய மூன்றெழுத்து மந்திரத்தில் அவையின்மையால், அதனைத் தெளிந்து ஓத வல்லவர்கட்கு உண்மை முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே தலைவனாய் நிற்பான்; என்றது, `அபரமுத்திப் பெரும் பயன் உளதாகும்` என்றவாறு.

குறிப்புரை :

முதலடியின் இறுதியில், `கூடும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதன்பின், `என்னை` என எடுத்துக் கொண்டு உரைக்க. ``அடங்கிய`` என்பது முற்று. `வல்வினை அடங்கிய` என மாற்றி. `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. அடங்கியது நகாரத்திலாம். ``சிம் முதல்`` என்பது அதனை முதலாக உடைய மேற் கூறிய மந்திரத்தைக் குறித்தது. ``தானே`` என்னும் பிரிநிலை உயர்வு சிறப்பு உணர்த்தி நின்றது. மந்திரங்களை ஓதும் நிலை நாதத்தைக் கடவாத நிலையாதலின், அதற்கு அபரமுத்தியே பயனாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 71

நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும்
சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

பொழிப்புரை :

பிரணவமும், சிவமந்திரமும் என்னும் இரண்டுமே உயிர் சிவமாதற்குரிய சாதனமாகும். அவற்றோடே நில்லாமல் பிறவற்றோடு பொருந்தி நிற்பனவெல்லாம் கருவிக் கூட்டத்துள்ளே நிறுத்துவனவே. சிவத்தோடு ஒன்றிய நிலையில் எல்லாவற்றையும் காண்கின்ற அனுபூதிச் செல்வர்களும் தமக்குத் தாம் சிவமேயாய் நிற்கும் தெளிவு உண்டானது அச்சிவமந்திரத்தால் என்றே ஆர்வத்துடன் கூறுவர்.

குறிப்புரை :

`பிரணவம்` என்பதை `நவம்` என்றே கூறினார். ``சிவம்`` மூன்றில் முதலதும், இறுதியதும் அதன் மந்திரத்தின்மேல் நின்றன. சிவ மந்திரம், `சிவ` என்பது. `நவமும் சிவமும்` என்றதனால், `ஓம் சிவ` என்பதைக் குறித்ததாயிற்று. ஈற்றில் மகாரத்தைக்கூட்டி `ஓம் சிவம்` என்றலும் பொருந்துவதாதல், `சிவ` என்னாது, ``சிவம்`` என்ற தனால் பெறப்படும், `ஒன்றிலாதன` என்பது பிறவற்றோடும் கூடி நிற்றலைக் குறித்தது. அதனால்,, இங்கு நகர மகரங்களேயன்றி யகரமும் விலக்கப்பட்டது. ``தானாம்`` என்பது, `தாம் தானாம்` எனப் பொருள் தந்தது ஆற்றலால். தான், சிவம். ஈற்றடி முதலில், `சிவத்தால் என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மேற் கூறிவந்த மூன்றெழுத்து மந்திரத்தினும் இவ் இரண்டெழுத்து மந்திரம் சிறப்புடைத்தாதல் இதனுள் கூறப்பட்டதாம். ``ஐம்பதெழுத்தே`` (948) என்பது முதலாக இதுகாறும் திருவைந்தெழுத்தின் பெருமையே விரித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 72

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி யதனைத் தெளிந்தறி யீரே.

பொழிப்புரை :

அறிவுடையோர் நாடி நிற்கின்ற சிவனை அறிவின் கண் உள்ளவனாக உணர்ந்து, அவ்வறிவைப் பெறுதற்கு அகார உகாரங்களின் கூட்டாகிய ஓகாரத்தையாவது அல்லது யகாரத்தை யாவது நீயாக மனம் ஒருங்கித் தியானி. அங்ஙனம் தியானித்தால் இது காறும் உன்னோடு மாறுபட்டுப் போராடி வந்த பஞ்சேந்திரியங்களும் உன் வயத்தனவாய் உனக்குத் துணைசெய்து நிற்கும். ஆதலால், அவ் இந்திரியங்களை வயப்படுத்த நீ தேடிக்கொண்டிருந்த வழியை இவ்வாறு தெளிந்தறிக.

குறிப்புரை :

`எட்டு` என்னும் எண்ணின் வடிவம் `அ` என்பதும், `இரண்டு` என்னும் எண்ணின் வடிவம் `உ` என்பதும் ஆதலால், அவற்றைக் குறிக்கும் குறிப்பு மொழியாக முறையே, `எட்டு` என்பதும், `இரண்டு` என்பதும் குழூஉக்குறியாகச் சொல்லப்படுதல் வழக்கம். `கூடிய அ, உ` என்றதனால், `ஓகாரம்` என்பது விளங்கிற்று.
இனி, இஃது, எட்டும், இரண்டும் கூடிய வழி ஆவது பத்தாத லின், `பத்தின் வடிவமாகிய யகரம்` என்பதும் பொருளாகும். ஆகவே, ஆன்மா தன்னை அசுத்த தத்துவங்களினின்றும் வேறாகக் காணுதற்குத் தன்னைப் பிரணவ வடிவாகவேனும், திருவைந்தெழுத்தில் யகார வடிவாகவேனும் உணர்தல் வேண்டும் என்பது இதனால் உணர்த்தப் பட்டதாம். ``எட்டினோடிரண்டும் அறியே னையே`` (திருச்சதகம் - 53) என்ற திருவாசகத் தொடரும் இங்கு நினைக்கத் தக்கது.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. தேடியது - தேடப்பட்டது. ஈற்றில், ``அறியீர்`` என்றது, உயர்த்தற்கண் வந்த பால் வழுவமைதி. திருவம்பலச் சக்கரத்தில் அமைந்த மந்திரங்களுள், திருவைந் தெழுத்தின் சிறப்பினைப் பல்லாற்றானும் வலியுறுத்தி ஓதியபின், இதுமுதலாகப் பிறவற்றின் சிறப்பை வலியுறுத்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 73

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொழிப்புரை :

மேல், ``எட்டும் இரண்டும்`` என்னும் குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட அப்பொருள்களை அனுபவமாக உணராதவர், `அ, உ` என்று எழுத்தை அறியத் தொடங்கும் அத் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். இன்னும், எட்டு என்னும் எண்ணை யும் இரண்டு என்னும் எண்ணையும் கூட்டுத்தொகை காணும் அறிவும் இல்லாதவரே யாவர். இனி, ``எட்டும், இரண்டும்`` என்பதற்கு, மேற் சொல்லப்பட்ட இருபொருள்களில் பின்னதாகிய `பத்து` எனக் கொண்டு யகாரத்தைக் கொள்ளுதலே சிவாகமங்களின் ஞானபாதக் கருத்தாகும்.

குறிப்புரை :

கல்வியறிவு மிக்கிருந்தும் அதனாற் பயன் கொள் ளாமைபற்றி அவரை இத்துணை அறிவிலிகளாகக் கூறினார். ஆகவே, இரண்டாம் அடிக்கு இந்த இருபொருளும் கொள்க.
அவ் இருபொருள்களில் ஒன்றை,
``அ உ அறியா அறிவில் இடைமகனே`` 1
என்பதிலும் காணலாம். மேற் காட்டிய திருவாசகத்தொடர் மேற்போக் கில் இங்குக் கூறியவாறே இவ் இருபொருளையும் குறித்தல் வெளிப் படை. இரு மூன்று நான்கு - பத்து. சிவாகமங்களே சித்தாந்தமாதல் நன்கறியப்பட்டது.
இவ் இரண்டு மந்திரங்களாலும் முன்னர்க் கூறிப் போந்த மந்திர எழுத்துக்களுள் சிலவற்றின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது. `தமிழில் மந்திரம் உண்டோ` என ஐயுறுவார்க்கு `உண்டு` என இம்மரபு தெளிவுறுத்துதல் காண்க.

பண் :

பாடல் எண் : 74

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.

பொழிப்புரை :

செங்குத்தாக எட்டு நேர்க்கோடு கிழித்து, அவற்றின் மேல் குறுக்காக எட்டுக் கோடுகளை இழுக்க நாற்பத்தொன்பது அறைகள் உண்டாகும்; அவற்றுள் நடு அறையில் இறைவன் எழுத் தாகிய சிகாரம் அமையுமாறு மேல் (906) மேற்கூறியபடி திருவைந் தெழுத்தை ஐந்து வகையாக மாற்றி முறையே இருபத்தைந்து அறைகளில் பொறித்தபின், நடு அறையொழிந்த நாற்பத்தெட்டு அறைகளிலும் எழுத்துக்கள் இருக்கச்செய்ய வேண்டும்; அஃதாவது எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பிற எழுத்துக்களைப் பொறிக்க வேண்டும். அவ்வாறு செய்தவுடன் சக்கரத்தை வழிபட்டுத் திருவைந்தெழுத்தைச் செபிக்கத் தொடங்கலாம்.

குறிப்புரை :

``கீறியிட்ட`` என்பது ஒருசொல். கீறியிட்ட நடுவு - கீறிய தனால் உண்டான நடு அறை. `ஒன்றியபின்` என்பது, ``ஒன்றில்`` எனத் திரிந்து நின்றது. வட்டம் - சக்கரம். `நாற்பத்தெட்டிலும் எழுத்தை இட்டு` எனச் செயப் படுபொருள் வருவித்துக் கொள்க. `சிட்ட` என்பதில் அகரம் தொகுத்த லாயிற்று. சிட்டம் - மேன்மை. எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பொறித்தற்கு உரிய எழுத்துக்கள் வருகின்ற மந்திரத்திற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 75

தானவர் சிட்டர் சதுரர் இருவர்
ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

பொழிப்புரை :

தானம் - இடம். தானவர் -இடங்காவலர்; (கே்ஷத் திர பாலகர்) பைரவர். சட்டர் - செப்பம் செய்பவர்; குற்றம் செய் தோரை ஒறுத்துத் திருத்துபவர்; வீரபத்திரர். சதுரர் இருவர் - திற முடைய மகார் இருவர்; பிள்ளையாரும், முருகரும். ஆன இம் மூவர் - இவ்வாறு மூன்று வகையாகச் சொல்ல நின்றவர். ஆற்ற அராதிகள் - நெறியில் உள்ள உருத்திரர் முதலியோர்; உருத்திரர் முதலாகக் கீழ் நோக்கி எண்ண வருகின்ற மாலும், அயனும், உருத்திரர் முதலாக மேல் நோக்கி எண்ணவருகின்ற மகேசுரர், சதாசிவரும் ஆக ஐவர். ஏனைப் பதினைந்தும் - மேற்சொல்லிய ஒன்பதின்மரது எழுத்துக்களையும் பொறித்தபின் எஞ்சி நிற்கின்ற பதினைந்து அறைகளிலும், விந்து, நாதம், சூழ்படை (பரிவாரங்கள்) என்ப வற்றது எழுத்துக்களைப் பொறிக்கச் சிவசக்கரம் அமையும்.

குறிப்புரை :

இச்சக்கரத்தின் வடிவம் ஆமாறு:
`கள்` விகுதி உயர்திணைப் பன்மையையும் உணர்த்தி நிற்றல் பிற்கால வழக்காதல் வெளிப்படை. ``ஏனைப் பதினைந்து`` என்ற தனால்,, `முன்னர்க் கூறப்பட்டன ஒன்பது` என்பது பெறப்பட்டது. பதினைந்தில் விந்து நாதங்களைப் பிரித்தமையால். சேனை பதின் மூன்றாயிற்று. ``சேனை`` எனப்பட்ட பதின்மூவராவார் திசை காவலர் எண்மரும், `நந்தி, மாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் ஐவரும் ஆவர். ஈற்றில், `அமையும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
விளிம்பு அறை இருபத்து நான்கிலும் உள்ள எழுத்துக்களின் விளக்கம் வருமாறு:-
1. ளம் - இந்திரன், 2. ரம் - அக்கினி, 3. யம் - யமன். 4. ந்ரூம்- நிருதி, 5. வம் - வருணன், 6. ஹ்யம் - வாயு, 7. கம் - குபேரன், 8. ஈம் - ஈசானன்.
9. ஹ்லாம் - பிரமன், 10. ஹ்வீம் - திருமால், 11. ஹ்ரூம் - உருத்திரன், 12. ஹ்யைம் - மகேசுவரன், 13. ஹ - சதாசிவன், 14. அம்- விந்து, 15. அ - நாதம்.
16. கம் - கணபதி, 17. ஸம் - கந்தன், 18. நம் - நந்தி, 19. ரும்- இடபன், 20. ஸம் - மகாகாளன், 21. ப்ரும் - பிருங்கி, 22. ஹ்வம் - வீரபத்திரன். 23. சம் - சண்டன், 24. பம் - பைரவன்.
மையக் கட்டத்தில் இறைவன் எழுத்தாகிய சிகாரம் நிற்றலைக் காண்க
இவ் வரிசை எண் வழிபாட்டு முறை பற்றியது. நாயனார் சொல் சுருங்கிச் செய்யுளாமாறு பற்றியே கூறினார்; வழிபாட்டு முறை பற்றிக் கூறினாரல்லர், அஃது ஆசிரியன்மார் அறிவுறுக்க அறிந்து கொள்ளப்படும் ஆதலின்.
சக்கரத்தின் மேற்பக்கம் வடக்காகும். ஆன்மார்த்த வழி பாட்டில், வழிபடுவோர் வடக்குநோக்கி அமர்ந்திருக்க, வழி பாட்டிடம் மேற்குநோக்கிய நுழைவாயிலைக் கொண்டிருக்கும். அதனால், சக்கரத்தின் நுழைவாயிலும் மேற்கு நோக்கியே நிற்கும்.
அம்முறையில் இருத்தப்பட்ட இச்சக்கரத்தில் முதற்கண் திசை காவலரை இந்திரன் முதலாக ஈசானன் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, அதன்பின் பிரமன் முதலாக நாதம் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, மூன்றாவது கணபதி முதலாகப் பைரவர் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, வழிபாடு முடிந்த பின்னர் அம்முறையே ஒவ்வொரு மந்திரத்தையும் பத்து பத்து உருச் செபித்துப் பின் திரு வைந்தெழுத்தை நூற்றெட்டு முதலாக வேண்டும் அளவு செபிக்கலாம். இது, போக சாதன முறை.
முத்தி சாதன முறைக்குத் திசை காவலரைவழிபட்ட பின்னர்க் கணபதி முதலாகத் தொடங்கி நேரே வலமாகச் சென்று பைரவனோடு ஒரே வழிபாடாக முடிக்கப்படும். திருவைந்தெழுத்தும் இவ் இருமுறை கட்கும் ஏற்றவாறு செபிக்கப்படுதல், மேற் பலவிடத்தும் கூறப்பட்டது.
இச்சக்கரத்தை மேற்கூறியவாறு வைத்து நோக்கின், வலப் பாதி காரணக் கடவுளர் பகுதியாயும், இடப்பாதி காரியக் கடவுளர் பகுதியாயும் நிற்றல் காணலாம். இவையெல்லாம் மரபு வழி அறிய வைத்தார் என்க.
இவ்விரண்டு மந்திரங்களாலும் மேற்கூறிய சிற்றம்பலச் சக்கரத்தைச் சிவசக்கரமாகச் செய்து வழிபடுமாறு கூறப்பட்டது.
இதனுள், இந்திரதிசையில் சூரியனும், குபேரதிசையில் சந்திரனும் அடங்குவர். சூரியனிடத்து அங்காரகன் முதலிய ஐங்கோ ளினரும் அடங்குவர். உருத்திரனிடத்தில் உருத்திரர் யாவரும் அடங் குவர். வித்தியேசுரர்களும், மந்திர மகேசுரர்களும் மகேசுரனிடத்தில் அடங்குவர். அணு சதாசிவர்கள் சதா சிவனிடத்தில் அடங்குவர். நந்தி யிடத்துச் சிவகணங்கள் பலரும் அடங்குவர். பிருங்கியினிடத்து முனிவர்கள் அடங்குவர். இன்னும் பிற தேவர்களும் இந்திரனிடத்தே அடங்குவர். இங்குக்கூறிய தலைவர் பலர்க்கும் பரிவாரங்களாய் உள்ளவர்கள் அவ்வத் தலைவரிடத்தே அடங்கி நிற்றல் சொல்ல வேண்டா. இதனால், இச்சக்கரம் கடவுளர் பலரையும் புறஞ் சூழக் கொண்ட சிவசக்கரமாய் அமைந்து நிற்றல் அறிக.

பண் :

பாடல் எண் : 76

பட்டன மாதவம் ஆற்றும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

பொழிப்புரை :

இயன்ற அளவு செய்யப்பட்ட சிவன் பணியே, மேலானவற்றிற்கெல்லாம் மேலான வீட்டினைப் பெறுவிப்பதாகும். அதனால், தற்போதத்தை விட்டவர்கள் சிவனையே புகலிடமாக அடைவர். ஆகலின், யானும் அவனது பணி வகைகள் பலவற்றில் ஏதேனும் ஒன்றில் எள்ளளவாயினும் மேற்கொள்வேன்; போற்றுங் கால் அவனது திருநாமத்தையன்றி வேறொன்றைச் சொல்ல அறியேன்.

குறிப்புரை :

`இறப்பில்தவம்` 1 என்பார். ``மாதவம்`` என்றார். `பராபரம் ஆற்றும்` என மாறிக் கூட்டுக. ஆற்றுதல் - தருதல். `பராற்பரம்` என்பது `பராபரம்` என மருவிற்று.
இதனால், `சிவசக்கரத்தை அமைத்து அதன் வழி இயன்றளவு சிவழிபாடு செய்யுங்கள்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 77

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் மேலே 89 ஆம் மந்திரமாகவும் வந்திருத்தலால் இதன் பொருளை அவ்விடத்தே கண்டு கொள்க].

குறிப்புரை :

இது முன்னே வந்திருப்பினும், அங்கு, `எல்லாப் பேத மும் சிவபேதமே` என்பதை விளக்குதற் பொருட்டும், இங்கு, எல்லா மந்திரங்களும் சிவனது மந்திரமே` என்பதை விளக்குதற் பொருட்டும் வந்தன. எனவே, இரண்டிடத்தும் கருத்து வேறுபடுதல் அறிக. தொல்காப்பியத்திலும் சூத்திர வடிவம் பல இடங்களில் ஒன்றாய் இருப்பினும், பொருளால் அவை வேறு வேறு சூத்திரங்களாய் நிற்றல் காண்க. இதனால், ``சவை`` என்பது, மேல், `தொகுதி` என்றும், இங்கு, `திருவம் பலம்` என்றும் பொருள்படுதல் அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 78

வித்தாஞ் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

பொழிப்புரை :

உலகத்திற்குக் காரணமாகிய தத்துவங்களின் எண்ணிக்கை (முப்பத்தாறு) அளவில் அறைகள் கீறி, அவற்றுள் இடப் பால் பதினாறு அறைகளைச் சந்திரன் கூறாகக் கொண்டு ஐம்பத்தோ ரெழுத்துக்களில் ஐவருக்கத்தில் இடைநின்ற பதினைந்தும் நீக்கி ஒடுக்க முறையில் க்ஷகாரம் முதலாக டகாரம் ஈறாக உள்ள பதினாறு எழுத்துக் களையும் சந்திரனது பதினாறு கலைகளாகப் பாவித்தும், வலப்பால் பன்னிரண்டு அறையில் ஞகாரம் முதலாக உயிரெழுத்துக்களில் எகர ஒகரக் குறில்களையும் சேர்த்து எகரம் ஈறாகப் பன்னிரண்டெழுத்துக் களையும் சூரியனது கலைகளாகப் பாவித்தும், எஞ்சி நின்ற எட்டு அறைகளோடு மேற்பக்கத்தில் கொடு முடிபோல நடுவிரண்டு அறைக்கு நேராக இரண்டு அறைகள் நிராதார மாகப் பரசிவன் பராசத் திகளுக்குக் கீறி, ஆகப் பத்து அறைகளில் எஞ்சிய, ளுகாரம் (ளு) முதலிய பத்து உயிரெழுத்துக்களையும் அக்கினி கலைகளாகப் பாவித்தும் பொறித்துக் காயத்திரியை முறைப்படி செபித்தபின், இவ்வெழுத்துக்களை விந்து ஈறாக ஓதுக.

குறிப்புரை :

`செக வித்தாம் அவை மயமாக` என்க. `வித்துக் கூறவே அவற்றின் நிலமாய பரையும், அந்நிலத்தைப் பக்குவப்படுத்து வோனாகிய பரசிவனும் கொள்ளப்படுவர்` என்பது பின்னர் முப்பத் தெட்டு இடங்களைக் குறித்தலால் அறியப்படும். யோகத்திலும், சிவனது கூற்றிலும், `இடப்பால், வலப்பால், நடு` என்னும் மூன்று பகுதியும் சந்திர சூரிய அக்கினிகளின் கூறாதல் தெளிவாதலின், சக்கர அறைகளிலும் அவ்வாறு கொள்ளுதல் பெறப்பட்டது. இம்முறையில் இச்சக்கரம் அமையும் முறை வருமாறு:-
சிவனது அதிட்டானங்களில் (இடங்களில்) சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் சிறந்தனவாகலின் அம்மண்டல வடிவில் அமைவது இச்சக்கரம். இதனால், இது திரிமண்டலச் சக்கரமாகும். இறைவனது அதிட்டானங்களுள் திருவம்பலமாகும் என்பது கருத்து. `நந்து` என்பது வலித்தல் பெற்றது. நந்துதல் - வளர்தல். உத்தாரம் - பின்பு. ஆதி - ஆதித்தன். அவன் கலையொடு தொகுவது அக்கினிகலை.
இதனால், இது மற்றொருவகைத் திருவம்பலமாகிய திரிமண்டலச் சக்கரம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமஎன லாமே.

பொழிப்புரை :

யான் சிவனை இச்சக்கரத்தின் வழியே கண்டு உயர்வு பெற்றேன்; அதனால், பின்பு அவனை நான் எனது உள்ளத் தாமரையிலே அடங்கக் கொண்டு மேலும் உயர்வு பெற்றேன்; ஆகவே, இனித் தன் இயல்பு கெடாத பதிஞானத்தின் வழியே சென்று அழியாத அன்புடன் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் பேற்றினைப் பெறுதல் திண்ணம்.

குறிப்புரை :

`அதனால், நீவிரும் இவ்வாறு அப்பேற்றினைப் பெறு மின்` என்பது குறிப்பெச்சம். பதி, ஆகுபெயர். ``நம`` என்றது, `நம சிவாய` என்பதை முதற் குறிப்பாற் கூறியவாறு. இங்குக் கூறிய பஞ் சாட்சரம் அதன் பேதங்கள் அனைத்தையும் கொள்ள நின்றது.
இதனால், மேற்கூறிய திரிமண்டலச் சக்கரம் அதற்கு முன்னர்க் கூறப்பட்ட சிவசக்கரத்திற் செலுத்துவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 80

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்
றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

பொழிப்புரை :

தேவர்களுக்குள் பக்குவம் எய்தினோர் பூக்களை மழைபோலத் தூவிச் சிவசக்கரத்தில் உள்ள திருவைந்தெழுத்து வாயிலாகச் சிவபெருமானது இரண்டு திருவடிகளைத் தியானிப் பார்கள். பின்னும் அம்மந்திரத்தையே துணையாகப் பற்றி அத்திருவடி களைக் கண்போலச் சிறந்தனவாக உணர்ந்து அவற்றில் இரண்டறக் கலந்து நிற்பார்கள்.

குறிப்புரை :

இதனால், சிவசக்கரம் திரிமண்டலச் சக்கரத்தின் பயனாதல் கூறி, அதன் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 81

ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

பொழிப்புரை :

பிரணவத்தோடு கூடிய ஆறாகிநிற்கும் திருவைந் தெழுத்து மந்திரத்தையே ஆறு சமயங்களும் பற்றி நிற்றல் வெளிப் படை. ஆயினும், சிலர் `அந்த ஆறெழுத்து மந்திரத்தினும் இருபத்து நான்கு எழுத்தாகிய காயத்திரி மந்திரமே சிறந்தது` என மயங்குவர். `ஆறு` என்னும் எண்ணினது நான்மடங்கே இருபத்து நான்கு என்னும் எண் ணியல்பை நோக்கினாலே, `திருவைந்தெழுத்தில் அடங்குவது காயத்திரி` என்பது புலனாய் விடும். இன்னும் காயத்திரியின் முதலிலே `ஓம்` என்ற ஓர் எழுத்து உள்ளது. அதனைப் பகுத்தறிய வல்லவர் திரு வைந்தெழுத்தின் உண்மையையும் உணர்ந்து பிறவி நீங்கவல்லவராவர்.

குறிப்புரை :

`எனவே, அங்ஙனம் அறியமாட்டாதவரே, `திருவைந் தெழுத்திற்கு மேற்பட்டது காயத்திரி` எனக் கூறிப்பிறவியில் அழுந்துவர்` என்பது பெறப்பட்டது. `இருபத்து நான்கு` என்னும் எண்ணிற்குக் காரண எண் ஆறேயன்றி, `நான்கு, மூன்று, இரண்டு` என் பனவும் ஆதலின், `திருவைந்தெழுத்தும் அவ்வெண்களின் அளவாக நின்று மேன்மேல் உயர்ந்த பயன்களைத் தருதல் மேலெல்லாம் கூறி வந்தவாறு பற்றி அறிந்து கொள்க` என்பது குறிப்பாற் கூறியதாயிற்று. `சாவித்திரி, காயத்திரி` என்பார் வேறு வேறு தேவியாராயினும், ஒற்றுமைபற்றி ஒருவராகச் சொல்லும் வழக்கும் உண்மை பற்றி இங்குக் காயத்திரி மந்திரத்தை, ``சாவித்திரி`` என்றார். தலை - முதல்.
பிரணவமாகிய ஓங்காரம், `அ, உ, ம்` எனப் பிரிக்கப்படும் என்பது மேல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அப்பிரிவு மூன்றனுள் அகாரம் தோற்றத்தையும், உகாரம் நிலையையும், மகாரம் இறுதியை யும் குறிக்கும். அதனால், அவை பிரமன் முதலிய மூவரைக் குறிப்பனவுமாம். வியட்டி நிலையில் பிரணவம் இவ்வாறாதலை உணர்வார், சமட்டி நிலையில் முத்தொழிற்கும் முதல்வனாகிய சிவபெருமானையே குறிக்கும் என்பதை ஐயம் அற உணர்வர். பிரணவத்தின் பின் பூ: முதலிய வியாகிருதியைச் சேர்த்தால் காயத்திரி; சேர்க்காதது சாவித்திரி எனப்படும்.
இனிச் சடப்பொருள்களாகிய தனு கரண புவன போகங் களினது தோற்றம் முதலிய மூன்றனைக் குறிக்கின்ற அவ் அகாரம் முதலிய மூன்றும் சித்துப் பொருளாகிய உயிரினது அறிவின் தோற்றம், நிலை, ஒடுக்கம் என்னும் மூன்றனையும் கூடக் குறிப்பனவாம். ஆகவே, அகார உகாரங்கள் சகல நிலையில் புருவ நடுவில் நிகழும் சகலசாக்கிரம் முதலிய ஐந்திலும் உயிர்கட்குப் பாசஞான பசுஞானங் களைத் தோற்றுவித்து நிறுத்தலாகிய நினைப்பினையும் ஒடுக்கு தலாகிய மறப்பினையும் குறித்தலும், சுத்தநிலையில் அவை சுத்தாவத் தைகளில் பதிஞானத்தினைத் தோற்றுவித்து நிறுத்துதலாகிய அருள் நிலையையும் பின் பசுபேத ஒடுக்கமாகிய ஆனந்த நிலையையும் குறித்தலும் பெறப்பட்டன. படவே, பிரணவம் வியட்டிநிலையில் பிரமன் முதலிய மூவரையும் இயைபுபற்றி ஓர் ஓர் எல்லையளவும் உபசாரத்தாற் குறிப்பதாயினும், உண்மையில் அஃது எந்நிலையிலும் சிவபெருமானையே உணர்த்தி நிற்றல் இனிது பெறப்படும். அதனால், பிரணவத்தின் பொருளும் திருவைந்தெழுத்தால் உணர்த்தப்படும் சிவபெருமானே யாதல் நன்கு அறியப்படும்.
இன்னும் காயத்திரி மந்திரம் மூன்று பிரிவுகளாய் (வியாகிருதி களாய்) நிற்றலைப் பலரும் எடுத்துக் கூறுவர். அவற்றுள், முதற்பிரிவு சிவசத்தியையும், இரண்டாவது பிரிவு சிவத்தையும், மூன்றாவது பிரிவு உயிரையும் முதன்மையாக நோக்கி நிற்பன. ஆகவே, அம்மூன்றையும் குறித்து நிற்கின்ற திருவைந்தெழுத்தின் பொருளே காயத்திரியின் பொருளு மாதல் தெளிவாம். இன்னோரன்ன காரணங்கள் பற்றியே நாயனார், இங்கு,
``சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள;
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே``
என அறுதியிட்டு அருளிச் செய்தார்.
காயத்திரி மந்திரத்துள் அமைந்த `சவிதா, பர்க்கஸ்` என்னும் சொற்களுக்கு முறையே, `சூரியன்` என்றும், `சூரியனது ஒளி` என்றுமே வைதிகர் பொருள் கொள்வர். ஆனால், சைவர் அவ்வாறன்றி அவற்றிற்கு முறையே `சிவன்` என்றும், `அவனது சத்தி` என்றுமே பொருள்கொள்வர். `வேதம் ஓரோர் இடத்தில் ஓரொரு தேவரைப் புகழ்ந்து கூறினாலும் உண்மை முதற்கடவுளாவான் சிவபெருமானே என்பதே அதற்குக் கருத்து` எனவும், `ஆகவே, காயத்திரிக்கும் மேற் கூறியவாறு சைவர் கூறும் பொருளே பொருள்` எனவும் உணர்ந்து, அதனானே, திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்து மந்திரங்களினும் தலையானதாகக்கொண்டு அவ்வுணர்வோடே முத்தீவேட்டல், சந்தியா வந்தனம் செய்தல் முதலிய செயல்களைச் செய்வோரே சிறப்புடைய வேதியர் ஆவார் என்பதனைத் திருஞானசம்பந்தர் தமக்கு வேதியர்கள் உபநயனச் சடங்குசெய்து பூணூல் அணிவித்தல், பிரமோபதேசம் செய்தல், வேதம் ஓதுவித்தல் என்பவற்றைச் செய்த பொழுது அவர்கட்குத் தாம் கூறும் அறிவுரையாக,
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே`` 1
என அருளிச் செய்தமையும், திருநாவுக்கரசரும் தமது ஆதி புராணத் திருக்குறுந்தொகையில்
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரனுரு அல்லனோ!
இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைஅறி யார்கல் மனவரே`` 2
என அருளிச் செய்தமையும் இங்கு இன்றியமையாது நோக்கற் பாலன. திருஞானசம்பந்தர் குறிப்பிட்டருளிய செம்மை வேதியரை இக்காலத்துக் காண்டல் அரிது.
``ஆறு சமயங்கள்`` என்றது `காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சைவம், ஸொரம், ஸௌமியம்`` என்பவற்றை. இவற்றில் நிற்போர் தம் தம் விருப்பக் கடவுளர் (இஷ்டதேவர்) ஆகிய கணபதி முதலியோரிடத்து அன்பு பூண்டு அவர்தம் மந்திரங்களை அன்பினால் ஓதினாராயினும், `சிவபெருமானே முதற் கடவுள்` என்பதிலும், `அதனால், அவனது திருவைந்தெழுத்தே முதல் (மூல) மந்திரம்` என்பதிலும் மாறுகொள்ளாதவராய் உடம்பட்டு ஒழுகுதல்பற்றி, ``ஆறெழுத்தாகுவ ஆறு சமயங்கள்` என்றார். ``சமயத்தில் உள்ளது நீறு`` என்ற திருநீற்றுப் பதிகத் தொடரும் இங்கு உடன் வைத்து உணரத்தக்கது. இதனானே, இவை `அகச் சமயம்` எனப்பட்டன.
இவற்றோடு ஒரு காலத்தில் ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வைணவம், பிற்காலத்தில், சிவபெருமானது ஆற்றலைத் தெளிய மாட்டாது தக்கனது ஆற்றலுக்கு அஞ்சி அவனது வேள்வியிற் சென்றிருந்து, அதனால், அவ்வேள்வியை ஒதுக்கிநின்ற சில திண்ணிய பேரிருடிகளது சாபத்திற்கு உட்பட்டோரால் மேற்கூறிய கருத்துக் களோடு மாறுகொண்டு வேறு நிற்பதாயிற்று. அதுபற்றி அதுவும் புறச் சமயமாக எண்ணப்படுகின்றது. இது,
``தாயி னும்நல்ல சங்கர னுக்கன்ப
ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துட் பட்ட மனத்தரே`` 1
என்னும், மேற்குறித்த திருக்குறுந்தொகைப் பதிகத் திருப்பாடலால் நன்கறியப்படும். இதனுள் ``மாயன்`` என்றது, `மாயம் செய்யும் இயல்பினன்` என்பதையும், ``பேய் முலை உண்டு உயிர் போக்கிய`` என்றது, `நல்லோரை வஞ்சனையாற் கெடுக்க என்னும் தீயோரைக் தானும் வஞ்சனையாற் கெடுப்பவன்` என்பதையும், வெளிப்படை யினாலும், குறிப்பினாலும் உணர்த்தி நின்றன. ``மாயன் மாயம்`` என்றது, அவன் இவ்வாறான கருத்துப் பற்றிச் செய்த நூல்களை.
இதனால், ஆறெழுத்தின் பெருமை கூறும் முகத்தால் சிவசக்கரத்தினது சிறப்பே வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டே
ஒட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

பொழிப்புரை :

வெளியில் நான்கு கோடுகளும், உள்ளால் நான்கு கோடுகளும் ஆக எட்டுக் கோடுகளால் சுற்றிலும் எட்டு அறைகள் உண்டாக்கி, அவற்றின் நடுவில் உள்ள ஓர் அறை எட்டின் வடிவமாகிய அகாரத்தைப் பெற்று எட்டு முகமாய் அந்த எட்டு அறைகளையும் நோக்கும்படி அவற்றைப் பிரணவ கலைகளால் நிரப்பிப் பின்பு எல்லா அறைகளையும் உட்படுத்துச் சூழும்படி ஓங்காரத்தைப் பொறித்து அவற்றைப் பொருந்திச் செபிப்போர்க்குச் சிவன் உமா சகாயனாய் வெளிப்படுவான்.

குறிப்புரை :

எனவே, `இஃது உமாபதி சக்கரம்` என்பது பெறப் பட்டது. `மேற்கூறிய சிவ சக்கரத்தால் சிவன் அனைத்துக் கடவுளர் அதிபதியாய்த் தோன்றுவன்` என்பதும், இதனால், `உமையோடு மட்டும் கூடியே தோன்றுவான்` என்பதும், அறிந்து கொள்ளப்படும். இச்சக்கரத்தைக் காணுமாறு.
இதனால், மற்றொருவகைத் திருவம்பலச் சக்கரமாகிய உமாபதி சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாக உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தின்படியே சமட்டிப் பிரண வத்தை முன்வைத்து வியட்டிப் பிரணவத்தைச் செபிக்குங்கால் இடையே நகார முதலும் யகார ஈறுமான தூல பஞ்சாக்கரத்தை ஓதுதலையும் முறையாகக் கொண்டு, `இச்செபம் உகாரத்தை முதலிற் கொண்ட மந்திரத்திற்குரிய உமாதேவியின் தலைவனாகிய சிவனுக்கு உரியது` என்பதனை ஐயம் அறத் தெளிந்து செபிப்பவர் சென்னிமேல் அந்த உமாபதியாகிய சிவன் எழுந்தருளியிருப்பன்.

குறிப்புரை :

``நம்முதல் அவ்வொடு`` என்றதில், `அ` என்றது, யகரத்தையே, `யவ்வொடு` என்றே பாடம் ஓதினுமாம். ``அவ்வொடு`` என்றது அகர ஈற்றோடு என்றவாறு. அவ்வொடு என்றதன் பின் `பொருந்திய` என்பது எஞ்சி நின்றது. `நம்முதலொடும் அவ்வீற் றொடும் பொருந்திய நாவினர் ஆகி` என்க. ``எட்டு`` என்றது, எட்டு முகமாகவும் செபிக்கப்படும் எட்டு உருக்களை. `நாவினராகியே எட்டிடை உற்று` என்ற தனால், வியட்டிப் பிரணவத்திற்கு முன்னே தூல பஞ்சாக்கரத்தை வைத்து ஓதுதல் பெறப்பட்டது. உகாரம் முதலாகிய மந்திரம், `உம` என்பது,
இதனால், மேற்கூறிய சக்கரத்திற்கு, முன்னர்க் கூறிய முறைகளின்மேல் மற்றொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத்
தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.

பொழிப்புரை :

மாந்திரிக முறையில் `அட்ட கன்மவித்தை` என்ற ஒரு முறை சிறப்பாகச் சொல்லப்படுவது. `அவற்றுள் சிறந்தன ஆறே` என்பர். அந்த ஆறனையும் இது முதலாக ஆறு மந்திரங்களும் கூறுகின்றன. இவை வாம மார்க்கமாய் உயர்ந்தோர்கட்குரியன அல்ல ஆகையால், திவ்வியாகமப் பொருளாதல் அமையாது. அதனால், இவை பிறரால் சேர்க்கப் பட்டனவோ என எண்ண வேண்டியுள்ளது.
அட்ட கன்ம வித்தையுள் இது தம்பனம் கூறுகின்றது தம்பன மாவது பிறபொருள்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துதல். நீரை அமிழ்த்தவொட்டாது தரைபோலநின்று தாங்கச்செய்வது `ஜலத்தம் பனம்` என்றும், நெருப்பைச் சுடவொட்டாது தடுத்து அதன்கண் இருத்தல், அதனைக் கையிற் கொள்ளுதல் முதலியவற்றைச் செய்தல் `அக்கினித்தம்பனம்` என்றும், காற்றை மோதி அலைக்கவொட்டாது தடுத்தலும், மூச்சுக்காற்றினை இயங்காது உள்நிறுத்தி உடம்பை மேலெழுப்பப் பண்ணுதலும் `வாயுத்தம்பனம்` என்றும் இவ்வாறு பல தம்பனங்கள் சொல்லப்படுகின்றன. மக்களை அசைய வொட்டாது தூண்கள் போல நிற்கச் செய்வதும், ஓடுகின்ற ஊர்திகளை ஓடவொட் டாமல் நிறுத்திவிடுதலும் போல்வனவும் இத் தம்பன வித்தையேயாம்.
தம்பனம் முதலிய ஒவ்வொன்றிற்கும் வேண்டப் படுவன மரப்பலகை, அதில் பொறிக்கப்படும் மந்திரம், ஓலையின் மேல் பூசத்தக்க பூச்சுப்பொருள், அவ்வோலையை இடும் இடம் முதலியன.
அவற்றுள் தம்பனத்திற்குப் பலகை, அரசமரப் பலகை. அதில், மேல் தொள்ளாயிரத்து ஆறாம் (906 ஆம்) மந்திரத்துள் சொல்லப்பட்ட ஐந்தெழுத்து மாற்றுமுறைகளில் இரண்டாவதனை முதலாகக் கொண்டு ஐயைந்து இருபத்தைந்தாகிய சதுரச் சக்கர அறைகளில் பொறித்து, அம்மந்திரம் முயற்சியால் பயனளித்தற்பொருட்டு ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் எந்த மெழுகையேனும் பூசி, விளக்கிலே அதன் வெப்பம் தாக்கும்படி அவ்வோலையைக் காய்ச்சி, யந்திரத்தை வழிபட்டு, மந்திரத்தை அம்முறையிலே செபித்து வர, `தம்பனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

``நேராக ஒன்றிட`` என்றது, ``சக்கரத்தின் மேல்வரிசை யாகிய வடக்கு விளிம்பில்`` என்றவாறு. `ம இட்டு` `மகாரத்தை முதலிலே பொருந்த எழுதி` என்றதாம். இம்மந்திரம் `மசி` எனத் தொடங்குவதால், தம் பனத்திற்கு உரியதாம்; ``தன் தன்`` என்றதில் இரண்டாவது `தன்`, சாரியை, `வெதுப்பில் இட` என்க. இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-
இதனுள் மேல் விளிம்பில் உள்ள மந்திர எழுத்துக்கள் ஈசான மூலை தொடங்கி நிருதி மூலையில் முடியும் ஒரு கோடு தொடங்கி முன்னோக்கி அமைந்திருத்தல் காண்க.
இது `மோகனம்` என்னும் வித்தை கூறுகின்றது. மோகனம் - மயக்குதல். பொதுமக்கள், அரசர், செல்வர், மாதர், பகைவர், தெய்வம், பேய், பூதம், விலங்கு முதலிய அனைத்துயிர்களையும் தம்மிடத்து மயங்கித் தம்வழி நிற்கப்பண்ணுதலே மோகனம் என்க.

பண் :

பாடல் எண் : 85

கரண இறலிப் பலகை யமன்திசை
மரணமிட் டேட்டில் மகார எழுத்திட்டு
அரணமில் ஐங்காயம் பூசி அடுப்பில்
முரணப் புதைத்திட மோகனம் ஆகுமே.

பொழிப்புரை :

இதற்குப் பலகை கொன்றை மரப்பலகை. மந்திரம் மேற்சொல்லியவாறேயாம். மகாரத்தை முதலிற் கொண்டு நிற்றலால் இதுவே மாரண மந்திரமுமாம். (மலம். `மிருத்தியு` எனவும், `மூர்ச்ை\\\\u2970?` எனவும் சொல்லப்படுதலால், அதனைக் குறிக்கும் எழுத்தை முதலில் உடைய இம் மந்திரமே அவற்றை யெல்லாம் தருவதாம். இவ்வாறன்றி, `நசி என மாறித்தொடர்வதே மாரண மந்திரம்` என்னும் கருத்திற்கு இங்கு ஆசிரியர் நேர்ச்சி காணப்படவில்லை). மந்திரம் மேற்கூறிய வாறே யாயினும், அவற்றைச் சக்கரத்திலும், ஏட்டிலும் யமன் திசையாகிய தெற்கில் உள்ள வரிசையை முதலாகவும், வடக்கில் உள்ள வரிசையை இரண்டாவதாகவும் கொண்டு முறையே எழுதி ஓலையில் ஐங்காயத்தை அரைத்துப் பூசி அதனை அடுப்பு வாயில் அழுந்தப் புதைத்துச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தைக் கீழ் விளிம்பு தொடங்கி மேற்கூறிய முறையிலே செபித்து வர, `மோகனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

கரணம் - உபகரணம்; கருவி. அரணம் - பாதுகாவல். அரணம் இல் ஐங்காயம் - பிறரை பாதுகாவல் நீக்கி மயங்கச் செய்யும் ஐங்காயம். சுக்கு, மிளகு, கடுகு, ஈருள்ளி, வெள்ளுள்ளி என்பனவே ஐங்காயமாம். முரண் - வலிமை.
இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-
இதனுள், மாரண மந்திர எழுத்துக்கள் வாயுமூலை தொடங்கி அக்கினி மூலையில் முடியும் ஒரு கோடு தொடங்கி முன்னோக்கி அமைந்திருத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 86

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.

பொழிப்புரை :

இஃது உச்சாடனம் என்னும் வித்தை கூறுகின்றது. உச்சாடனம் - ஓட்டுதல். மேல்மயங்கிப் பண்ணின உயிர்களையே விலகி ஓடப் பண்ணுதல் உச்சாடனம் என்க.
இதற்குப் பலகை புரசம் (பூவரசம்) பலகை. சக்கரத்திலும், ஏட்டிலும் எழுத வேண்டிய மந்திரம் மேற்கூறிய வாறேயாம். ஓலையில் கரியும், நஞ்சும் பூசி, ஓங்காரத்தில் மகாரத்தை நீக்கி ஓகாரம் மட்டும் பலகையிலும், ஓலையிலும் சக்கரத்தைச் சுற்றி வளைத்து எழுதி, அதை ஒருமுறை பலகையோடு வழிபட்டு ஓலையைக் கொண்டுபோய் ஐயனார் கோவிலில் வடமேற்கு மூலையில் பாதுகாப்பாகப் புதைத்து விட்டுச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தை மேற்கூறியவாறே செபித்து வர, `உச்சாடனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

``ஐயனார் கோட்டத்தில்`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. பாங்கு பட - பாதுகாப்பு உண்டாகும்படி. `காரேடு` என வரற்பாலது, `கருவேடு` என வந்தது. இதில் இன எதுகை வந்தது. இதற்குரிய சக்கரம் மேற் காட்டியதே ஆயினும், சக்கரத்தை ஓகாரத்தால் வளைத்தல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 87

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு
வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.

பொழிப்புரை :

இது `மாரணம்` என்னும் வித்தை கூறுகின்றது. மாரணம் - மரணத்துன்பம். `அழிக்கப்படற்பாலன` என்று எண்ணும் உயிர்களை அழித்தொழிப்பதே மாரணம் என்க. உச்சாடனத்திற்குமேல் மாரணம் செய்ய விரும் பினால், மேலே சொல்லியவாறு செய்தபின் மற்றோர் ஓலை அதுபோல எழுதி, ஐங்காயம் பூசி உச்சி வேளையில் (நண்பகற்போதில்) சுடு காட்டிற் கொண்டுபோய் அக்கினிமூலையில் ஒன்றின்மேல் ஒன்றாய் எட்டு மூலை உண்டாக இரண்டு சதுரங்களையும் அவற்றின் உள்ளே ஒரு சதுரத் தையும் வரைந்து உள்ளே புதைத்துவிட்டு வந்து வழிபாட்டினையும், செபத்தையும் முன்போலச் செய்துவர, `மாரணம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு உரைக்க. ``பச்சோலை`` என்றது, `எழுதுவதற்குப் பதமாயுள்ள ஓலை` என்றவாறு. முச்சதுரம் வரையும் முறை:-

பண் :

பாடல் எண் : 88

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகார உகார எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

பொழிப்புரை :

இது, `வசியம்` என்னும் வித்தை கூறுகின்றது. மோகனம் செய்யப்பட்டேனும், அது செய்யப்படாது இயல்பாகவேனும் தம்வழி நிற்கும் உயிர்களை எவ்வாற்றானும் பிரிந்து போகாதபடி தம்வசப் படுத்தி வைப்பதே வசியம் என்க. இதற்குப் பலகை, வில்வமரப் பலகை. மந்திரம் அகார உகாரங்கள், அகார உகாரங்கள் விந்துவோடு கூடினவையாக மேற் சொல்லிய சக்கரத்தில் ஈசான மூலையிலிருந்து தொடங்கிப் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் அரிதாரத்தை (மஞ்சள் நிறமுடைய ஒன்றை)ப் பூசி, அதனை அந்தப் பலகைமேலே வைத்து வழிபட்டு அம்மந்திரத்தை எண்பதினாயிரம் உருச் செபித்தால், `வசியம்` என்னும் வித்தை கைகூடுவதாகும்.

குறிப்புரை :

ஈற்றடியில் `ஏய்ந்தது` என்பது ஈறு குறைந்து, `ஏய்ந் ததில்` என ஏழாவதன் தொகைபட நின்றது. வேண்டில் - விரும்பிச் செபித்தல், இதன்பின் `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-

பண் :

பாடல் எண் : 89

எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்
டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்
கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே.

பொழிப்புரை :

இஃது, `ஆகருடணம்` என்னும் வித்தை கூறுகின்றது. உயிர்ப் பொருளாயினும், உயிரல் பொருளாயினும் தொலைவில் உள்ளவற்றைத் தான் இருந்த இடத்தில் இருந்தே வரவழைத்தல் `ஆகருடணம்` என்னும் வித்தையாம். இதற்குப் பலகை வெண்ணாவல் மரப்பலகை. மந்திரம் மேற்கூறிய ஐந்தெழுத்து மாறலில் யகராம் முதலாக அமைவது யகாரம் முதலாக உள்ளது முதல் ஐந்து தொடர்களையும் முறையே ஐந்து வரிசை அறைகளில் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் யாதேனும் ஒரு வெண்பூச்சினைப் பூசி வியாழக் கிழமையில் மேற் சொன்ன பலகை மேல்வைத்து வழிபட்டு அன்று முதலாக மேற்கு நோக்கி அமர்ந்து அம் மந்திரங்களை அசபாமந்திரத்தோடே எண் ஆயிர உரு விரும்பிச் செபித்தால், `ஆகருடணம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

`உகாரம் இட்டு` என்பதும் பாடமாதலால், மேல் வசியத்திற்குச் சொல்லிய அம் மந்திரத்தை உகாரம் முதலாக மாற்றிக் கொள்ளுதலும் இதற்குப் பொருந்துவதே. `ஆகருடணை` என்பது, `ஆக்கருடணை` என மருவி நின்றது. இங்குக்கூறிய சக்கர அமைப்பு வருமாறு:- இதனுள் மந்திரங்கள் குறுக்கு வரிசையிலும், நெடுக்கு வரிசையிலும் ஒரே வகையாக அமைந்திருத்தலும், `நமசிவாயநமசி`, சிவாயநம சி` என மூலை நோக்கில் அமைந்திருத்தலும் காண்க. மேற்கூறியவாறு இச்சக்கரத்தில் ஈசான மூலை தொடங்கி முறையே `அம், உம்` என்பவற்றை `உம், அம்` என மாறி மாறி எழுதுதலும் பொருந்தும் என்க. இரண்டாம் அடியில், ``எண்ணா`` என்பதற்கு, `நாள்களை எண்ணி` என உரைக்க. எண்ணா எழுத்து - செபியாத மந்திரம்; அசபை. ``வேண்டி நோக்கு`` என்றாராயினும், `நோக்கி வேண்டு` என்றலே கருத்தாதல் அறிக. இதனுள், மூன்று, நான்காம் அடிகளைப் பிறவாறு ஓதுவன பாடம் ஆகாமை அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 1

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

பொழிப்புரை :

தாமரை முதல் செவ்வந்தி ஈறாக இங்குக் கூறப்பட்ட பூக்கள் வழிபாட்டிற்குக் கொள்ளத் தக்கனவாம்.

குறிப்புரை :

அம்புயம் - தாமரை. நீலம் - நீலோற்பலம்; குவளை, கழுநீர் - செங்கழுநீர்; இதுவும் குவளையின் வகை. நெய்தல் - ஒரு வகை ஆம்பல். வம்பு அவிழ் - வாசனையோடு மலர்கின்ற. பூகம் - கமுகு; இஃது இதன் பாளையில் உள்ள அரும்புகளாம். மாதவி - குருக் கத்தி; இதுவும் ஒருவகை மல்லிகை. மந்தாரம் - மந்தாரை. வகுளம் - மகிழ்.
வழிபாட்டிற்கு வேண்டும் பொருள்களுள் முதன்மை யானதாகிய பூவின் வகைகள் இதனால் எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.

பொழிப்புரை :

சந்தனத் தேய்வையைக் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம், அகிற் சாந்து இவை சேர்த்துப் பனிநீராற் குழம்பாக்கிச் சாத்தி நீரால் ஆட்டி அன்போடு வழிபடுங்கள்.

குறிப்புரை :

சாங்கமதாக - திருமேனியில் படத்தக்கதாக. சாந்து - தேய்வை. தேம் கமழ் - இனிதாக மணக்கின்ற. பாங்கு - நன்மை. `பாங்காகப் பட` (பொருந்த) என்க ``வைத்து`` என்றார், `முன்னே ஆட்ட வேண்டிய பொருள்களை ஆட்டியபின்` என்றற்கு. `அர்ச்சித்தல்` என்னும் பொதுச் சொல், இங்கு, ஆட்டுதல்மேல் நின்றது, இனி, ``நீர்`` என்பதை முன்னிலைப் பெயராக்கி உரைத்தலும் ஆம்.
இதனால், சிறப்புடைய ஒன்றை எடுத்துக் கூறும் முகத்தால் அபிடேகம் விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால்
இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.

பொழிப்புரை :

நிவேதனம், தீபம், தூபம் என்பவைகளால், எட்டுத் திக்கிலும் வரற்பாலனாவாகிய தடைகளை அகற்றி வழிபாடு செய்பவர், தாம் விரும்பும் பொழுது முத்திநிலை இன்பமே வடிவாய் வந்து எய்தப் பெறுவர்.

குறிப்புரை :

ஏற்றுதல் - ஏற்பித்தல். பொன் - உலோகம். `பொன் னால் செய்த` என்க. அமுதம் முதலிய மூன்றிலும் மூன்றாம் உருபு விரிக்க. முதலிரண்டடிகளை வேறாக ஓதுவன பாடம் அல்ல. திசை தொறும் வரும் துன்பங்கள் தீத் தெய்வங்களால் ஆவன. அவற்றைத் திக்குப் பந்தனம் முதலியவற்றால் நீக்கல் வேண்டும் என்க.

பண் :

பாடல் எண் : 4

எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண்
டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே

பொழிப்புரை :

வழிபாட்டினை அன்போடு மனம் பற்றிச் செய்தால், கிடைக்காதன இல்லை. எண்வகைச் சித்திகளும், இந்திராதி போகங்கள் மட்டுமன்று; முக்தியும் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

`வழிப்படில்` என்பன பாடமல்ல.

பண் :

பாடல் எண் : 5

நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார்
அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும்
மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.

பொழிப்புரை :

பிறருக்கு உரியராய மனைவியரை விரும்புதலை விட்டவர்களும், புலனடக்கம் உள்ளவர்களும் ஆகிய அவர்களது நிவேதனம், தோத்திரம், வணக்கம், செபம், ஓமம் என்னும் இவையே வழிபாட்டிற்கு உரியனவாம். அவ்விடத்தில் காற்றும் தூய்மை யுள்ளதாய் இருக்கும்.

குறிப்புரை :

மேற்கூறியவையன்றி மேலும் உள்ள பொருள்களைக் கூறுவார், `அவற்றை ஈட்டிக் கொண்டு வழிபடுவோர் முதற்கண் நல்லொழுக்கத்தில் நிற்பவராய் இருத்தல் வேண்டும்` என்பதனை அஃது இயல்பென்பது தோன்ற, அனுவாத முகத்தாற் கூறினார். கூறவே, `வழிபாடு சிறந்த ஓர் ஒழுக்கமாதலின் அது செய்வார் பிற ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தல் வேண்டும் என்னும் கட்டளை யில்லை` என்று எண்ணுதல் மடமையாகும் என்பது இனிது விளங்கிற்று. புலனடக்கம், நாச் சுவை, வேட்கை முதலியவற்றை அடக்குதல் யோக நெறியிலும் இயம நியமங்கள் அடிநிலையாகக் கூறப்படுதல் இங்கு நினைக்கத்தக்கது.
`தாரம்` என்பது தமிழில் அஃறிணை இயற்பெயர் போலவே வருதலை அறிக. `நீத்தாருடையனவும், அவித்தாருடையனவும்` என உரைக்க. அண்ணிய - இனிய. அனுசந்தானம் - இடைவிடாது தொடர்ந்து செய்தல். பஞ்சாங்கம் - ஐந்துறுப்புக்கள் நிலத்திற் பொருந்த வணங்கும் வணக்கம். ஐந்துறுப்புக்களாவன; தோள் இரண்டு, முழந்தாள் இரண்டு, முகம் ஒன்று, இவற்றோடு காது இரண்டு, மார்பு ஒன்று இவையும் நிலத்திற் பொருந்த வணங்குதல் அட்டாங்க வணக்கமாம். இதனை `சாஷ்டாங்கம்` என்பார்கள். இனம் பற்றி இதனையும் இங்குக் கொள்க. மகளிர்க்குப் பஞ்சாங்க வணக்கம் ஒன்றே உரியது. மண்ணும் அனல் - சிவாக்கினியாகச் செய்யப்பட்ட நெருப்பு. பவனம் - காற்று.
இதனுள்ளும் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல
இதனால், மேற்கூறப்பட்டவற்றிற்குப்பின் எஞ்சி நின்ற பொருள்கள் கூறப்பட்டன்.

பண் :

பாடல் எண் : 6

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு அடியவராகத் தம்மை ஒப்படைத்துவிட்டவர்களும், பசு புண்ணியத்தால் விளையும் சிறு பயன்களில் விருப்பம் இல்லாதவர்களும். உயர்ந்த சிவயோகத்தில் நிற்பவர்களும், பயன் கருதிச் செய்யும் காமிய வழிபாடுகளை மேற்கொள்ளாது, ஆய்ந்துணர்ந்த உணர்வினால் மிக்க அன்பு ஒன்றே காரணமாக வழிபாட்டினை மேற்கொள்வர்.

குறிப்புரை :

ஈற்றடியை, `கன்மம் வேண்டார்களாய், ஆய்ந்து அன்பே மிகுதியோராவர்` எனக் கூட்டி முடிக்க. ``கன்மம்`` என்பதற்கு இங்கு இதுவே பொருளாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

பொழிப்புரை :

அறிவுருவாகிய இறைவனை எவரும் அவனறி வாலே அறிய முயலாமல் தம் அறிவால் ஐம்பொறிகளாலும், மனம் முதலிய உட்கருவிகளாலும் ஆராய்ந்து துன்புறுகின்றார்கள். ஆயினும், முறைப்படி, மேற்கூறிய சக்கரம் முதலியவற்றின் வழி மனம் ஒருங்கிநினைத்தால், ஒளி வீசுகின்ற மாணிக்கம் போல்பவனாகிய இறைவனது அருளில் மூழ்கியிருத்தல் கூடும்.

குறிப்புரை :

`அறிவு அறியார்` என இயையும். `ஞானம்` என்பது சிறப்புப்பற்றிப் பதி ஞானத்தையே குறித்தல் வழக்கு முறைமை. `நெறி யால் நோக்கில்` என்க. மனை, இங்குச் சக்கரத்தில் உள்ள அறைகள். இனம் பற்றிக் கும்ப விம்ப தம்பங்களும் கொள்க.
இதனால் `வழிபாடுகள் பதிஞானத்தைத் தந்து, அது வழி யாகப் பதியை அடைவிக்கும்` என்று அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம்
மருள்அறி யாமையும் மன்னும் அறிவும்
அருள் இவை விட்டறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.

பொழிப்புரை :

ஆன்ம அறிவு இருளே போன்றும், ஒளியே போன்றும் இருதன்மையதாய் நிற்கும் இயல்புடையது. அதனால் அதனிடத்தே மயக்கத்தைத் தரும் அறியாமையும், தெளிவைத்தரும் அறிவும் என்னும் இரண்டுமே என்றும் நிலை பெற்றிருக்கும், எனினும், அறிவால் இருதன்மையை நீக்கி ஒரு தன்மையாகிய அறிவேயாய் நிற்பவரே, அழிவற்ற அறியாமையை அழியப் பண்ணினவராகவும் சொல்லப்படுவர்.

குறிப்புரை :

`ஆதலால், மேற்கூறிய முறையால், அறிவாய் நிற்கும் நிலையைப் பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம் ``போல்`` என்றது `அவையே போலத் திரிந்து` என்றவாறு. ஆன்ம அறிவை `இதயம்` என்றல் பொருந்துமாறு,
``சிந்தையைச் சீவன் என்றும்
சீவனைச் சிந்தை என்றும் ... ... ... வந்திடும்`` 1
என்னும் சிவஞான சித்தியால் அறிக. `அறிவும் மன்னும்` என முன்னே கூட்டி முடிக்க. ``அறியாமை`` என்றது அதனைச் செய்யும் ஆணவ மலத்தையும், ``அறிவு`` என்றது இறைவனது திருவருளையும் ஆதல் அறிக. `இரண்டும் அழிவுற்ற பொருளாயினும், மலம் திருவருளை வெல்லமாட்டாமையால் அதனைக் கொண்டு அறியாமையைப் போக்க வேண்டும்` என்பார், ``அருளால் இவை விட்டு`` என்றார். உருபு தொகுத்தலாயிற்று. `இது பக்குவம் எய்திய வழிக்கூடும்` என்பது கருத்து.
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்; ஒன்றுமேலிடின், ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது; உள் உயிர்க்குயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே`` 2
என்பதிலும் இவ்வாறு கூறப்படுதல் காண்க.
இதனால், மேற்கூறியவாற்றால் பதிஞானத்தைப் பெற்றோரது சிறப்புக் கூறப்பட்டது. அறியாமை மயங்கும் மருள் - உண்மையை உணராமல் திரிய உணர்வதற்கு ஏதுவாகிய மலம்.

பண் :

பாடல் எண் : 9

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.

பொழிப்புரை :

சிவம் தான் தோன்றாது ஆன்மாவேயாய் நிற்றலும், ஆன்மா தான்தோன்றாது சிவமேயாய் நிற்றலும் என்னும் இருநிலைகளுள், அறிபவனாகிய ஆன்மா அறியப்படுபொருளாகிய சிவமேயாகி விடுகின்ற இரண்டாம் நிலையை எய்தினவன் பின்பு `அறிபவன்` என்பதோடு நில்லாது, அன்பு செய்பவனாயும் நிற்பான். இந்நிலையே, `சிவ ரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவ போகம்` என்னும் நான்கனுள் இறுதிக்கண்ணதாகிய சிவபோகத்தை அடையச் சிவமாம் தன்மையை எய்தும் வழியாம்.

குறிப்புரை :

இரண்டு: பெத்தமும், முத்தியும். ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏக னாகி`` என்னும் சிவஞானபோதத்தை இங்கு உடன் வைத்துக் காண்க. அன்பு வடிவானவனை,``அன்பு`` என்றார். ஈற்றடியை` தான் ஆசித்ததேவனாகிய அவனாகும் ஓர் நிலை` எனக் கொண்டு கூட்டிக் கொள்க. `ஆசிரயித்த` என்பது ``ஆசித்த`` எனச் சிதைந்து நின்றது. `யாசித்த` எனப் பாடம் ஓதலுமாம். யாசித்தல் - வேண்டுதல்.
இதனால், பதி ஞானம் முதிர்ந்து முற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.

பொழிப்புரை :

பிரணவத் தியானத்தில் ஓங்காரம் மூலாதாரத்திலும், மகாரம் உந்தியிலும், அகாரம் இருதயம்,கண்டம் என்ப வற்றிலும், உகாரம் புருவ நடுவிலும், விந்துவும் நாதமும் அதற்குமேல் நெற்றியில் உள்ள வேறு வேறு இடங்களிலும் வைத்துத் தியானிக்கப்படும் என்க.

குறிப்புரை :

மகாரம் நிற்கும் இடம் குறிப்பினாற் கொள்ள வைத்தார். `பாங்கார் நகாரம்` என்பது பாடம் ஆகாமை யறிக.
இதனால், வழிபாட்டில் பிரணவத்தைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நமஅது ஆசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவ தன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.

பொழிப்புரை :

`நம` என்பதை அடிநிலையாகக் கொண்டு பசுவாய் நிற்கின்ற உயிரே. `சிவ` என்பதனை அடிநிலையாகக் கொள்ளும் நிலை கிடைக்கப்பெறுமாயின், சிவத்தோடு ஒன்றிப் பதியாய்விடும். ஆதலால், நகார மகாரங்களால் குறிக்கப் பெறுகின்ற திரோதாயியும், மலமும் அறுவதற்கு வழி அவற்றை முதலாகக் கொண்டு ஓதுவதன்று; மற்று, சிகார வகாரங்களை முதலாகக் கொண்டு ஓதுதலேயாகும். அவ்வாறு செபித்தல் பரமுத்திக்கு வாயிலாம்.

குறிப்புரை :

`பசுவே சிவமாய்ப் பதியாம்` என்க. `சித்தி` என்னும் முதனிலையே `சித்திக்க` என வினையெச்சப் பொருள் தந்தது. `ஆதி யாவது` என ஆக்கம் வருவித்து, அதனை, `சிவம் ஆதி ஆவதாகும்` என ஈற்றிலும் கூட்டுக. மோனம் சேர்தல் - செபித்தல். இவ்வாறே,
``நம்முதலா ஓதில் அருள் நாடாது; நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று`` (வெண்பா - 14)
என்னும் உண்மை விளக்கம் முதலிய சித்தாந்த நூன்மொழிகளையும் இங்கு நோக்குக. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், நிட்காமிய வழிபாட்டில் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தெளிவரும் நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.

பொழிப்புரை :

`சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.

குறிப்புரை :

எட்டு - அகாரம். அது நாதத்தைக் குறித்தல் வழக்கு. `பசுபோதம் தலையெடுத்தும் வழி வாக்காகிய பாச ஞானமும் விரையத் தோன்றி அலைவை உண்டு பண்ணும், என்பார், ``எட்டிலே உகளும்`` என்றார். `இவ்வாறு ஓரிரண்டாகில்` என அனுவாத மாக்கியுரைக்க. ``வெளி`` இரண்டில், முன்னது புறம்; பின்னது வெளிப்படை. திரிபுடி நீங்காதாயின் அருள் நிலையன்றி, ஆனந்த நிலை எய்தாமை பற்றி `நாதன் வெளியாய் இருந்தே வெளிதரும்` என்றார். வெளிதருதல் - ஆன்மாவிற்குத் தன்னின் வேறான இடத்தைத் தருதல். திரிபுடி - காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்பனவாம். `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்றும் சொல்லப்படும்.
இதனால், `திரிபுடி நீங்கும் தெளிவைப் பெறமுயல வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

பொழிப்புரை :

அழலோம்புதற்குரிய குண்டங்கள் ஒன்பது வகையின. அவற்றின் சிறப்பை நான் சொல்லுமிடத்து, சிவபெருமானது சிறந்த உருவமாகிய ஒளிப்பிழம்பு ஓங்கி விளங்குவது அக்குண்டங்களிலே தான். அதனால், அப்பெருமானை அம்முறையில் வழிபடும் வழி பாட்டினால் எல்லா நன்மைகளும் விளையும். அது பற்றி அவற்றின் முறையை நான் இங்குக் கூறுகின்றேன்.

குறிப்புரை :

``நல்தீபம்`` என்றது சிவனது ஒளி உருவத்தையாம். ``தானும்`` என்பதில் தான், அசை. உம்மை, சிறப்பு.
இதனால், அதிகாரம் நுதலியது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

பொழிப்புரை :

மேற் சொல்லப்பட்ட குண்டங்களிலே முக்காலங் களையும், ஐம்பெரும் பூதங்களையும், மும்மல நீக்கத்தையும் `அக்கினி` என்ற ஒன்றன் வழியாகவே காணுதல் கூடும். ஆதலின், அக் குண்டங்கட்கு மேலான தெய்வ இடங்களாக நான் வேறொன்றை அறிந்திலேன்.

குறிப்புரை :

``முக்காலம்`` என்றது, அவற்றின்கண் உள்ள நிகழ்ச்சிகளை. அவற்றுள், இறந்தோரை நற்கதி எய்துவித்தல் முதலியன இறந்தகாலம் பற்றியன, பகைவரை அழித்தல் முதலியவை நிகழ்காலம் பற்றியன, மகப் பேறு முதலியவை எதிர்காலம் பற்றியன. ஐம்பெரும் பூதங்களைக் காணுதல் அவற்றின் வடிவாய் அமைந்த குண்டங்களை வழிபட்டுப் பயனடைதல். `நிலம், நீர், தீ, வளி, வானம்` என்னும் பூதங்கட்கு வடிவம் முறையே, `நாற்கோணம், பிறை, முக்கோணம், அறுகோணம், வட்டம்` என்பனவாதல் நன்கு அறியப் பட்டது. 1 இதனுள் பிறை வடிவம் சந்திரனுக்கு ஆகும். சூரியனுக்கு வட்டத்தின் வகையாகிய தாமரை ஆகும். முக்கோணத்தைச் சிறிது வேறுபடுத்தி யோனி வடிவாக்கச் சத்திக்கு ஆகும். ஒரு சதுரத்தின் மேல் மற்றொரு சதுரம் வடக்கு முதலிய திசைகளை நோக்கி அமைந்த மூலைகளை உடையன போல அமைக்க அட்டகோணம் அட்டமூர்த்தி வடிவினனாகிய சிவபிரானுக்கு ஆகும். பஞ்சமுகம், பஞ்சாக்கரம், பஞ்சக்கிருத்தியம், பஞ்ச மூர்த்திகள் முதலியன பலவற்றிற்கும் இயைபுடைய பஞ்சமுக குண்டமும் பதும குண்டத்தின் வேறுபாடாய் அமைவதாம். இவ்வாறாக நவகுண்டமும் காண்க. இவற்றை நாயனார் பின்னர் (1027) விதித்தல் அறியத் தக்கது. குண்டங்கள் வழிபாட்டிற்கு ஏற்பப் பல வகையாக அமைத்தல் சொல்லப்படினும், எல்லாவற்றிற் கும் பெரும் பான்மை நாற்கோண குண்டமே அமைத்தல் காணப்படு கின்றது. அது பிருதிவியின் அடையாளமாதல் பற்றிப் போலும்.
இதனால், நவகுண்ட வடிவுகள் குறிப்பாற் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டம் சிறகற நின்றது
நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.

பொழிப்புரை :

பிராணாயாம முறையை அறிந்து அதன்வழியே தியானிக்கப்பட்ட சிவந்த ஒளிப்பிழம்பே புறத்திலும் குண்டத்தின் அழலாய் அறியப்பட்டுக் காட்சிப்பட நின்ற பொருளாய், நிலவுலகத் தாரல் நன்கறியப்பட்டு, அண்டங்களின் திசைவரம்பைக் கடந்த பெரும் பொருளாய் நிற்கும். அவ்வுண்மையை நான் நன்கறிந் திருத்தலால். அப்பொருளை அகத்தே தியானத்தினாலும், புறத்தே அழலோம்பலாலும் பெற்றேன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து, ``அப் பொரு ளாய்`` என ஆக்கம் வருவித்துரைக்க. முதலடி மூன்றாம் அடிகளில் உள்ள, `அறிந்து` என்பன, `அறியப்பட்டு` என்னும் பொருளன.
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி`` 1
என்னும் திருப்பாசுரத் திருமொழிக்குச் சேக்கிழார் இவ்வாறே.
``தோன்று காட்சிச் ``சுடர்விட் டுளன்`` என்பது
ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய், அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்;
ஏன்று காண்பார்க் கிதுபொருள் என்றதாம்`` 2
எனக் கருத்துரைத்தல் காண்க. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `நவகுண்டத் துள்ளெழும் நல்தீபத்தது` உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

பொழிப்புரை :

நான் மெய்ப்பொருளைப் பெற்ற வகைகளுள் ஒன்றாகிய குண்டத்தீயால் பதினான்கு உலகங்களை ஆக்கவும் முடியும்; பழமையாய் அவற்றுப் பரந்து கிடந்த மறைகளின் விரிந்த பொருள்களை நான் இன்று செய்கின்ற இந்தச் சிறிய ஒரு நூலின் பகுதியிலே எடுத்துக் கூறினேன்.

குறிப்புரை :

``உள் வேதம்`` என்பதை, `வேதத்துள்` என மாற்றிக் கொள்க. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய தீபத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

பொழிப்புரை :

புறத்தே அமைக்கப்பட்ட குண்டத்தினில் எழுகின்ற தீயினிடத்தும் உடம்பில் சொல்லப்பட்ட பதினாறு இடங்களைக் கற்பித்து வழிபட அவ்விடங்களில் உள்ளே தியானிக்கப்பட்ட பிராசாத கலைகள் பதினாறும் இனிது அருள் வழங்கி நிற்கும். இவ்வாறு அகவழி பாட்டோடு ஒன்றி நிற்கும் வகையில் குண்டத் தீயைக் காண்பவர் களுக்கே அவர்கள் மேல் சீற்றங்கொண்டு எழுகின்ற வினைகள் அவரைச் சாரமாட்டாவாய் ஒழியும்.

குறிப்புரை :

எனவே, `பிறவாறு காண்பார்க்கு அவையொழியாது பற்றுவனவாம்` என்றதாயிற்று. உலகில் நிகழுந் தீமைகட்குக் காரணம் அவரவர் முன்செய்த வினையே. அவையொழிந்தாலல்லது, துன்பங்கள் முற்ற ஒழியா. மாற்று முறைகளால் (பரிகாரங்களால்) ஓரளவே ஒழியும் என்க.
வேள்வித்தீயின் வழியாகத் தேவர் பலரை வழிபடுதலினும், பிராசாத கலையின் அதிதேவர்களை இவ்வாறு வழிபடுதல் சிறப் புடைத்து என்றவாறு. பிராசாத கலை பற்றி முன்னைத் தந்திரக் குறிப்பில் விரித்துக் கூறப்பட்டது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், மேற்கூறிய குண்ட வழிபாட்டில் மிக்கதொன்றன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

பொழிப்புரை :

ஒன்பது வகைக் குண்டங்களுள் அறுகோணமாய் அமைந்த குண்டத்தில் ஐம்பெரும் பூதங்களும் அக்குண்டத் தீயின் அக மாயும், அதன் புறமாயும் நிற்கும். அதனையும் நினைந்து நிலவுலகத் தின் பகுதிகளாகிய மேடம் முதலிய பன்னிரண்டு ராசிகளையும் அக் குண்டத்திலே பாவித்து வழிபடுவார்க்கு அதனின்றும் எழுகின்ற தீ எல்லாத் தேவரையும், கோள்களையும் மகிழ்விக்கின்ற நல்ல தீயாய் அமையும்.

குறிப்புரை :

``கூட முக்கூடம்`` என்றது, `அறுகோணம்`` என்றவாறு, ஆடிய - காரியங்களைத் தோற்றுவித்த. பாடிய - நூல்கள் சொல்லிய. அறுகோண குண்டத்துள் பன்னிரண்டு ராசிகளைப் பாவிக்குமாறு, கோணம் ஒன்றிற்கு இரண்டிரண்டு ராசியாகக் கிழக்கு முதல் வலமாகச் சென்று வடக்கில் முடிய வைத்துப் பாவித்தல் என்க. குண்டம், இடவாகு பெயர். ``தான்`` என்றது, மேற்குறித்த குண்டத் தீயை.
இதனால், பொதுவகை வழிபாடு ஒன்றன் முறை கூறப்பட்டது. இதன்கண் அறுகோண குண்டம் பயன்படுமாறும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில்
பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும்
நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.

பொழிப்புரை :

அங்கியங் கடவுட்குச் சிரசும், முகமும், கொழுந் தாகிய சுடர்களாம். பக்கங்களில் படர்ந்து தாவுகின்ற சுடர்கள் கைகளாம், கீழ்நின்று பசிய நிறத்தை உள்ளே உடையதாய் எழுகின்ற இடை ஒளிப் பிழம்பே மேனியாம், இவ்வாறாதலின் வேள்வித் தீயே சிவனது வடிவமாகவும் எண்ணப்படுகின்ற நன்மையை உடைய தாகின்றது என்று சிவசக்தி கூறினாள்.

குறிப்புரை :

முதல் `நற் சுடர்` - சிறந்த சுடர்; அவை கொழுந்தாகி மேலே உள்ளன. சிரம் கூறவே சிகையும் கொள்ளப்படுவதாம். `நற் சுடர் சிரமாகும்; முக வட்டமாம்` என்க. `கைகளில் ஆகும் சுடர் கை,` எனக் கொண்டு கூட்டி உரைக்க, `கை` இரண்டில் பின்னது பக்கம் `பைஞ்சுடர்` என்பது வலிந்து நின்றது. பதைப்பு அறுதலாவது, சாந்தம் உறுதல். எழவே, `சிவலிங்கம்` என்றதாயிற்று. ஈற்றடியை `நற்சுடர் பதைப்பற்ற லிங்கமுமாய் எழும் நல்லது` எனக் கூட்டி உரைக்க. சிவ சத்தி கூறியதாக அருளிச் செய்தது, அவளே வேள்விக்குரிய மந்திரங் களைப் பிரேரிப்பவளாதல் பற்றி. தீயின் வடிவத்தை இவ்வாறு அங் கியங் கடவுள் வடிவாகக் கற்பித்துக் காட்டினார், மேற்கூறிய பிராசாத கலா நியாசத்தையும், பிறவற்றையும் செய்தற் பொருட்டு. ``லிங்கம்`` என்றது, வியத்த லிங்கத்தை என்பது மேல் உறுப்புகளைக் கற்பித்துக் காட்டியதனால் கொள்க. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், வேள்வித் தீ தீக் கடவுளாய் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.

பொழிப்புரை :

வேள்வித் தீயினது சிறப்பைக் கூறிய அந்தச் சிவ சக்தியே, `நம்மைச் செலுத்தி நிற்பன மந்திரங்களே` என அருளிச் செய் தாள். அம் மந்திரங்களையே தனக்கு முடி முதல் அடிவரையும் உள்ள உறுப்புக்களாகக் கொண்டு அருளோடு நிற்கின்ற அவளது உண்மை யை உணராதவர்கள், எல்லாக் கல்விகளையும் அடி தொடங்கி முறையாகக் கற்றும் அக்கல்விகள் பகலில் காணப்படுகின்ற வான வில்போல வெறுந்தோற்ற மாத்திரையாய்ப் பயன்படாதொழியும்.

குறிப்புரை :

சொல், இங்கு மந்திரம். மென்மை - அருள். கல், கல்வி; முதனிலைத் தொழிற் பெயர். நாள் - பகல்.
இதனால்,` அங்கியங் கடவுட்கு மந்திரமும் வடிவாம்` என்பது பெறுதற் பொருட்டு யாவர்க்கும் மந்திரம் வடிவாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச்
சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

பொழிப்புரை :

வில்லின் நுனி போன்ற இரண்டு நுனிகளுடன் விளங்கும் இளம்பிறை வடிவாகப் பொருந்திய குண்டத்தில் அந்த இரு நுனிகளிலும் எழுகின்ற தீ இரண்டு பாம்புகளாய் எங்கும் ஒளி வீசும். அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பற்கள் நான்கு. இந்த நாகங்களுடன் பரந்தெழுகின்ற தீ எனது உடம்பினுள்ளும் இடங் கொண்டிருத்தல் வியப்பு.

குறிப்புரை :

`வில் நாப்போலும் நாவினையுடைய இளம் பிறை போல் மேவிய குண்டம்` என்க. `சொல் நால்` என்பது பாடமன்று. சுடர் நாகம், வினைத்தொகை. `திக்கெங்கும் தாவும்` என்க. இவ்வாறு உடம் பினுள் அமையுமாறு:- நாபித்தானம் குண்டமாகவும், இட நாடி வல நாடிகள் பாம்பாகவும், மூலாக்கினி மேல் எழுந்து நடு நாடிவழிச் செல்லுதல் குண்டத்தீ ஓங்குவதாகவும் அமைதலாம். `பல் நாலு` என்றது, அவ் வாயுவிற்கு வலுவூட்டுகின்ற அம்ச மந்திரத்தை. அம்ச மந்திரத்துள் ஈரிடத்தும் இங்கு விந்துவை வேறெண்ணித் தொகை கூறப்பட்டது.
இதனால், ஒளி நிலை அகத்தும், புறத்தும் ஒரு படித்தாய் நிற்குமாறு கூறப்பட்டது. இதனுள் பிறைக் குண்டம் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக
நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச்
சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

பொழிப்புரை :

சிவபிரானது அகத்தொளி வடிவில் ஊன்றிய திருவடி அக்கினி மண்டலமாகிய மூலாதாரமும், சுவாதிட்டானமும் ஆம். தூக்கி யாடுந் திருவடி நீர் மண்டலமாகிய மணிபூரகமும், அனா கதமுமாகும். திசைகளை அளக்கும் எட்டுக் கைகள் உடலகம் எங்கு மாகும். முகமும், அதன்கண் உள்ள முச்சுடர்களாகிய மூன்று கண்களும் விசுத்தியும், ஆஞ்ஞையுமாகிய இடங்களாகும்.

குறிப்புரை :

இடங் கொள்ளுதல் - நிலத்தை இடமாகக் கொள்ளுதல், சுடர் - நெருப்பு. சகம், இங்குத் திசை. இரண்டு ஆறு - எட்டு. இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், இறைவனது அகத்தொளியுருவம் உடம்பினுள் இடங்கொண்டு நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன்
எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.

பொழிப்புரை :

மூன்று கண்களை உடையவனாகிய சிவபெரு மானே அனைத்துத் தேவர்க்கும் வாயிலாகும் நிறைவான ஓமாக்கினி. அஃது எவ்வாறெனில், மண்ணை உண்டு உமிழும் அந்த மாயோனும், உலகங்களைப் படைக்கும் எண்கணனாகிய பிரமனும் தானேயாய் நிற்றலால். இதனானே, எங்கு யாவன் ஒருவன் தேவன் இருப்பினும் அவனுக்குப் பற்றுக்கோடாகின்றவன் சிவனே என்பது விளங்கும்.

குறிப்புரை :

எனவே, `ஓமாக்கினியில் அவன் ஒருவனையே மந்திர நியாசங்களுடன் வழிபடின் அஃது எல்லாத் தேவர்க்கும் உவப்பாகும்` என்பது கருத்தாயிற்று. இவ்வுணர்வு தோன்றி நிலைபெறுதற் பொருட்டே, வைதிக வேள்வியில் ஓமாக்கினியை அங்கியங் கட வுளாகக் கொள்ளுதல் போலல்லாது, சிவவேள்வியில் வாகீசுவரியது பூப்பு நீராட்டு, கர்ப்பாதானம் முதலிய சடங்குகளால் அக்கினியை வாகீசுவரனால் பிறப்பித்து, அவனுக்குப் பிறப்புச் சடங்கு இயற்றி, `சிவாக்கினி` என நாம கரணம் செய்து சிவாக்கினியாக்கிக் கொள்ளும் முறை சைவாகமங்களில் விரிவாகக் கூறப்பட்டது என்க.
`அகிலமும் உண்ட அக்கண்ணனும் தானே; திசை எட்டும் கண்டவனாகிய திக்குக் கண்ணனும் ஆகி` என்க. எச்ச உம்மைகள் தொகுத்தலாயின. ``ஆகி`` என்பது பெயர். இறுதியில் `பற்றுக்கோடு` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வித் தீ சிவாக்கினியாதலின் சிறப்புக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 12

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.

பொழிப்புரை :

சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறு முகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க அதுவும் கூடி ஆறுமுகம் வெளிப்படையாய்த் தோன்றும்படி முருகன் உமையிடத்து உதியாது சிவபிரானது, முகங்களினின்றே தோன்றினமையாலும், பின்னும் சிவனும், சத்தியுமாகிய தந்தை தாயரது இடையிலே முருகன் குழவியாய் என்றும் நீங்காதிருத்தலாலும் `மைந்தன் தந்தையின் மறுவடிவமே` என்னும் ஒற்றுமை பற்றி, மேற்கூறிய ஓமாக்கினியை, `சிவாக்கினி` என்றலேயன்றி, `குகாக்கினி` எனவும் ஆகமங்கள் கூறுதலின் பொருத்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

இஃது ``ஈசானஸ் ஸர்வ வித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வ பூதா நாம் I பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர் பிரஹ்மாசிவோமே அஸ்து சதாசிவோம் II `` எனச் சதாசிவனையே `ஓம்` மொழிப் பொருளாகக் கூறிய வேதம்.
``சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்``
எனக் கூறுதல் பற்றி ஐயம் நிகழாமைப் பொருட்டு அறுமுகன் ஐம்முக னின் வேறாகாமை விளக்கப்பட்டது. இதனானே, சிவாக்கினி எல்லாத் தேவர்க்கும் வாயிலாதலே யன்றிச் சிறப்புடைய முருகனுக்கும் உரித் தாதல் கூறப்பட்டதாம்.
வட்டம், இங்கு முகம். `வட்டமாயும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஏகாரம், உமையினின்றும் பிரித்த பிரிநிலை, அதனால், சிவனின் வேறன்மை இனிது விளக்கப்பட்டதாம். `கந்தனும், சுவாமியும்` என்க. `சுவாமி` என்பது சிவனுக்கே உரிய பெயராதலை, `சுவாமி நாதன்` என்னும் முருகனது பெயருள்ளும் காண்க. மாட்டு - பொருத்தம். அஃதாவது, வேத மொழியின் பொருத்தம். திருவுருத் திரத்துள் ``யாதே சிவாதநூ:`` எனத் தொடங்கும் மந்திரத்தின் தியான உருவம் அறுமுகனாகச் சொல்லப்படுதலும் இங்கு நினைக்கத்தக்கது. சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணம் குமரகோட்டப் படலத்துள், மேற்காட்டிய வேத மந்திரங்களை,
``எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும்
ஈசன் என்னத்
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன்ஓம் எனவேதாம்
சாற்றும் அல்லால்
முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணியன் ஓமெனவும்
முக்காற் கூறும்
இக்கருத்தை யறியானை எவ்வாறு விடுவிப்ப
தியம்பு மின்னோ``
என மொழி பெயர்த்துக் கூறினார். முருகன் அறுமுகச் சிவனாதலை நாயனார் இரண்டாம் தந்திரத்துள் `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள்ளும் கூறினார்.
இதனால், `வேள்வித் தீ சிவாக்கினியே` என்பது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.

பொழிப்புரை :

அகமும், புறமும் ஒற்றுமைப்படக் காட்டிய குண்டங்களில் எழுகின்ற தீயினுள்ளே, `காற்று` என்னும் ஒன்று, `இடைகலை, பிங்கலை` என இரண்டாய் இயங்கும். அவ் இயக்கத் திற்கு உரிய வழி மூன்றில் இரண்டு தடுக்கப்பட, ஒன்றில் மட்டுமே இயங்கச் செய்வோர் மேற்கூறிய ஒளியால் தேவராக மதிக்கப்படுவர்.

குறிப்புரை :

வேத மந்திரத்தின் வடிவாதல் பற்றி வேள்வித் தீயை, ``வேதம்`` என்றே கூறினார். ஆட்டிய - பொருள்களைச் சலிப்பிக் கின்ற. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. `இரண்டு மாய்` எனவும், `கையிரண்டு வாட்டியவாக` எனவும் ஆக்கம் வருவித்துக் கொள்க. கை - பக்கம்; என்றது வழியை. `ஒன்றில் பதைத்து எழ` என உருபு விரிக்க. `எழ நாட்டும் இவர் நல்லொளி யானே சுரராவர்` என்க. `சிவபுத்திரனாய் நிற்கும் அக்கினியையும் யோகியாக்கித் தாமும் யோகராயிருந்து வேட்பார் பெரும் பயன் எய்துவர்` என்றவாறு.
இதனால், அழல் ஓம்புதற்கு ஒரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

பொழிப்புரை :

மொழியையே அறிவாகப் பெற்று இயங்கிவரும் மக்களுயிர்க்கெல்லாம் மாணிக்க ஒளிபோல உள்நின்று, கண்மணி போல உதவி வருகின்ற சிவன், இவ்வுலக முழுதிலும் வேள்வித் தீயாக விளங்கியே திருக்கோயிற் படிமங்களில் உள்ளொளியாய்க் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``கல்`` இரண்டில் முன்னது அதனாலாகிய படிமம். பின்னது மாணிக்கம். ``ஆகி`` என்பதை அதன்முன் உள்ள ``கல்லொளி`` என்பதனோடும் கூட்டுக.
இதனால், அழலோம்பல் திருக்கோயிற் சிறப்பிற்கு இன்றி யமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு சிவன் திருக்கோயிலில் விளங்கி நிற்றற்கு உரியது, சிறப்பாக அறுகோணக் குண்டமே. அவற்றோடு முன்னே சொன்ன பிறவும் இருத்தல் சிறப்பே இதனுள், விளங்கு கின்ற சிவாக்கினியையும், தம்மையும் முன்போல யோகியராகச் செய்தலேயன்றி, முப்பத்தாறாய தத்துவ ரூபிகளாகவும் செய்தால், எவ் வுலகத்தில் உள்ளார்க்கும், எப்பொருளையும் அவன் வாயிலாகக் கொடுத்தல் கூடும்.

குறிப்புரை :

`குண்டநிலை ஆறுகோணமாக, வட்டமும் பதைத் தெழும்` என முடிக்க. `கொண்ட தத்துவம் ஆறாறும்` என மாறிக் கூட்டுக. ``உள்ளே`` எனப் பொதுப்படக் கூறியதனால், இருவருள்ளும் கொள்க. `வட்டமும், என்னவும்` என்னும் உம்மைகள் தொகுத்தல் ஆயின. `எடுக்கலுமாமே` என்பது பாடமாகாமை அறிக. இதனுள் ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், அழலோம்புதற்கண் உள்ள மற்றொரு சிறப்பு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக்
கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு
அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.

பொழிப்புரை :

குண்டத்தில் தீயாய் விளங்கும் சிவனுக்கு, (சிவாக்கினிக்கு) நடக்கின்ற பாதங்கள் மூன்று; `ஐ` என்னும் எழுத்தின் வடிவை ஒத்த முகம் இரண்டு; அம்முகங்களில் உள்ள கண்கள் ஆறு; நாக்கு ஏழு; தலையிரண்டிலும் கொம்புகள் நான்கு; கை ஏழு; இவ்வாறு அமைந்துள்ளன.

குறிப்புரை :

`இவ்வாறு ஆகமங்களுட் சொல்லப் பட்டது` என்பதாம். மூன்றது - மூன்று என்னும் எண்ணினையுடையது. படித்து - ஒரு படித்தாக. ``அடுத்து`` என்றது, `மற்று` என்னும் பொருளது. ``ஆனது`` என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி, ஏற்ற பெற்றியால் முடிக்க. `எழுகண்ணானது` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சிவாக்கினியது உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.

பொழிப்புரை :

அழிவில்லாத சிவாக்கினியைத் தன்னுள் வியாப் பியமாகக் கொள்வதோர் இடமில்லை. (அவனே எல்லாவற்றிலும் வியா பகன்.) அவனுக்குத் தோற்றமும், முடிவுமாகிய கால எல்லையும் இல்லை. (என்றும் உள்ளவன்.) அவனது இயல்பை முற்றக் கூறச் சொல்லில்லை. ஆகவே, அவனைத் திருவைந்தெழுந்துள் யகர வாச்சியமாகிய ஆன்மாவினுள்ளே காண்பதே அறிவுடைமையாம்.

குறிப்புரை :

`சிவாக்கினியாவான் சிவனே` என்பதனை இவ்வாற்றால் உணர்த்தினார். `பத்தின் கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
இதனால், `சிவாக்கினியாவான் சிவனே` என்பது கூறி, அதன் சிறப்புணர்த்தப்பட்டது, இதனானே, சிவன் அவ்வக்கினியாய் யாண்டும் நின்று அருள்புரிதலும் பெறப்பட்டது படவே, ``பொங்கழல் உருவன்``1 என்ற திருஞானசம்பந்தர் திரு மொழி, - `அழல்போலும் உருவத்தை உடையவன்` என உவமத் தொகையாயும், `அழலை உருவாக உடையவன்` என இரண்டாம் வேற்றுமைத் தொகையாயும் நிற்றலேயன்றி, `அழலாகிய உருவத்தை உடையவன்` எனப் பண்புத்தொகையாயும் நின்று பொருள்படுதல் கொள்ளப்படும். உவமத் தொகையை நிறமும், வடிவும் பற்றிக் கொள்க. வடிவு இலிங்கத் திருமேனி.

பண் :

பாடல் எண் : 18

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பொழிப்புரை :

பத்தும், எட்டும், ஆறும், நான்குமாகிய கோணங்களால் வரையறுக்கப்பட்ட குண்டமாகிய பொய்கையில் வளர்ந்து மலர்கின்ற தீயாகிய தாமரை மலரில் அடங்கிக் கலந்து நிற்கின்ற முப்பத்தாறு தத்துவங்களும், அவற்றின் காரியமாகிய உடம்பும் சத்தியிடமே அடங்கிநிற்பனவாம்.

குறிப்புரை :

நவ குண்டங்களுள் சிறப்புடையவற்றை எடுத்துக் கூறியவாறு. தீயைத் தாமரையாக உருவகித்தது, அகத்தும், புறத்தும் தத்துவங்களைச் சிவனுக்குக் கமலாசனமாகக் கற்பிக்கும் முறையோடு மாட்டேற்றுதற்கு. ஆசனமாய் அடங்கும் தத்துவங்கள் யாவும் மூர்த்தியாகிய சத்திக்குக் கீழே அடங்கிவிடுதல் பற்றி, ``மெய்யும், ஆகமும் பார்ப்பதிபாலே பட்டிட்டுநின்றது`` என்றார். மெய் - தத்துவம்; இதனிடத்து எண்ணும்மை தொகுத்தல் பெற்றது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், மேல் (1012) ``ஆறாறும் கொண்ட இத்தத்துவம்`` எனக் குறிக்கப்பட்ட தத்துவங்கள் அகத்தொளி, புறத்தொளிகளில் கலந்து நிற்கச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.

பொழிப்புரை :

மேற் கூறிய கமலாசனத்தில் எழுந்தருளியிருப்பவ ராகிய, மனோன்மனி மணாளராகிய சதாசிவ மூர்த்திக்கு முகம் ஐந்தாக லின், உச்சி முகம் நீங்க ஏனைய நாற்றிசையில் உள்ள நான்கு முகங் கட்கும் முகம் ஒன்றிற்கு நான்காகக் கைகள் இருபதும், எல்லா முகங் கட்குமாக வாய் ஐந்தும், கண்கள் ஐம்மூன்று பதினைந்தும், காதுகள் பத்துமாய் உள்ளன.

குறிப்புரை :

`கால் பத்துப் பத்து (இருபதில் காற்பங்கு) முகம்` எனவும், `கால் பதி - காற்பங்கு குறைந்த - பத்துப் பத்து (இருபது) கண்கள்` எனவும் கொள்க. பூப்பதி பாதம் - கமலாசனத்தில் பொருந்தி யுள்ள திருவடி` `நாற்பத்து` என்பது முதல் நீண்டது, `இருப்பு` என்னும் குற்றுகர ஈற்றுச் சொல், அத்துச் சாரியை பெற்றது. `சுடர் முடி பத்துச் சோத்திரம் இருப்பத்து அஞ்ே\\\\u2970?` என இயைந்து நிற்கும். இதனை, முதற் கண் எடுத்துக் கொண்டு உரைக்க. இங்ஙனங் கூறவே, மேல், ``எடுக் கின்ற பாதங்கள்`` என்னும் மந்திரத்துட் கூறியாங்குச் சிவாக்கினியை வேறு வடிவில் தியானித்தலே யன்றிச் சதாசிவ மூர்த்தியாகவே தியானித்தலும் முறை என்பது பெறப்பட்டது. இஃது இன எதுகை.

பண் :

பாடல் எண் : 20

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

பொழிப்புரை :

ஐந்து முகங்களால் ஐந்து வேறுபட்ட நிலைகள் போலக் காணப்படுகின்ற சதாசிவரால் அளவிட்டறிந்து ஆளப்படும் மகேசுவரரது நிலைகள் இருபத்தைந்தும் புகை பொருந்திய ஓம குண்டத்தில் பொருத்தி விளங்குதலால், சதாசிவர் முதல் ஐவராக விரிந்து நிற்கின்ற சிவன் மகிழ்ந்து தோன்றுகின்ற ஓமாக்கினியை நல்ல வகையில் ஓம்பி வாழ்தலே முத்தி நிலையாகும்.

குறிப்புரை :

மஞ்சு - மேகம்; என்றது புகையை. `மஞ்சம்` என்பது கடைக் குறைந்து நின்றது. `சிவபிரான் அவ்வப்பொழுது அடியவர்க்கு அருளக் கொண்ட பழைய உருவத் திருமேனிகள் இருபத்தைந்து` என ஒரு வரம்பு செய்யப்பட்டுள்ளன. அவையாவன:- 1. விக்கினப் பிரசாதர், (விநாயகரை அளித்தவர் - கஜமுகானுக்கிரகர்) 2. பிரமசிரச் சேதர், (நகமுக நிக்கிரகர்) 3. பிட்சாடனர், 4. வீரபத்திரர், 5.கஜசம்மாரர், (யானையுரித்த பெருமான்) 6. சிராதர், (வேடர் -அருச்சுனனுக்கு அருள்புரிந்தவர்) 7. காளகண்டர், (விஷாப ஹரணர் - நஞ்சுண்ட பெருமான்) 8. கங்காளர், (கங்காளம் - பரம விட்டுணுக் களது எலும்புக்கூடு) 9. சக்கரப் பிரதானர், (திருமாலுக்குச் சக்கரம் அருளியவர்) 10. சண்டேசானுக்கிரகர், 11. சுகாசனர், (யோக மூர்த்தி) 12. ஏகபாதர், (உலகைத் தோற்றுவித்தவர்) 13. நடராஜர், 14. சலந்தராரி (சலந்தரனை அழித்தவர்) 15. திரிபுராரி, (திரிபுரத்தை எரித்தவர்.) 16. காலாரி, (காலனை உதைத்தவர்) 17. காமாரி, (மன்மதனை எரித்தவர்) 18. இலிங்கோற்பவர், 19. சந்திரசேகரர், (பிறைமுடிப் பெருமான்) 20. சோமாஸ்கந்தர், 21. இடபாரூடர், 22. உமாமகேசர், 23. கல்யாணசுந்தரர், 24. அர்த்தநாரீசுரர், 25. அரியர்த்தர் (திருமாலை இடப்பாதியில் உடையவர்)என்னும் மூர்த்தங்களாம்.
இவை சிறிது மாறுபடவும் கூறப்படும். அவ்விடத்தில் தட்சிணாமூர்த்தி, யக்ஞேஸ்வரர், உக்கிரர், கங்காதரர், ஆபற்சகாயர், மச்ச கூர்மவராக நரசிங்க சங்காரர்கள், அந்தகாரி (அந்தகாசுரனை அழித்தவர்) என்னும் மூர்த்தங்கள் சொல்லப் படும். வீரபத்திரரையும், பைரவரையும் மாகேசுர மூர்த்தங்களுள் வையாது சிவகுமாரர்களாகக் கொள்ளுதலே மரபு.-
ப்ரதமம் ஸோம தாரீச த்விதீய முமயாசகம் I
த்ருதீயம்து வ்ருஷாரூடம் சதுர்த்தம் ந்ருத்தரூபகம் II
வைவாஹை்யம்பஞ்சமம் வித்யாது ஷஷ்டம்பிக்ஷாடனம்பவேது I
காமாரிம் ஸப்தமம் வித்யாது காலகால மதாஷ்டமம் II
நவமம் த்ரிபுராரிஸ்யாது ஜலந்தர வதோதச I
ஏகாதசம் தஜாரிஸ்யாது த்வாதசம் வீரபத்ரகம் II
த்ரயோதசம் ஹரேரர்த்தம் அர்த்தநாரீ சதுர்தசம் I
பஞ்சாதசம் கிராதம்ஸ்யாது கங்காளம் ஷோடசம்பவேது II
சண்டேசானுக்கிரஹம்சைவ ததஸ்ஸப்த தசோபவேது I
விஷாபஹரணஞ்சைவ த்வஷ்டாதச மிதிஸ்ம்ருதம் II
சக்ரதானஸ்வரூபந்து ஏகோநவிம்சமீரிதம் I
விக்னப்ரஸாதம் விம்சஸ்யாது ஸோமாஸ்கந்தமத:பரம் II
த்வாவிம்ஸதேக பாதந்து த்ரயோவிம்சத்ஸுகாஸநம் I
தக்ஷிணாமூர்த்திரூபந்து சதுர்விம்சத்ப்ரகீர்த்திதம் II
லிங்கோத்பவஸ்வரூபந்து பஞ்சவிம்சத்ப்ரகீர்த்திதம் I
ஏதந்மஹேசரூபாணாம் மூர்த்தி பேதா: ப்ரகீர்த்திதா: II
இதனால்,`ஓமாக்கினியே அனைத்துச் சிவமூர்த்திகளாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

வீடு பேற்றைத் தருகின்ற ஞானவடிவினனும், வேள்வியில் நிறைவுடைய தீயாய் நிற்பவனுமாகிய சிவன், வேதங்களைக் கற்று அவ்வொழுக்க நெறியில் குற்றமின்றி நிற்பவரது உள்ளத்திலே விளங்கி நிற்பான். உலகப் பற்றுக்களைவிடுத்து அவனை யே நாடி, படர்ந்து எரிகின்ற அத்தீயிடமாக அவனை அணுகி வெகுளி முதலிய குற்றம் நீங்கி நின்றவர் அவனைப் பெற்று நின்றார்கள்.

குறிப்புரை :

வேத ஒழுக்க நெறியாவது முத்தீ வேட்டல். `செற்றம்` என்பது குறைந்து நின்றது, வெகுளி முதலிய குற்றமாவன, வெகுளி, காமம், மயக்கம் என்பன. இக்குற்றங்கள் நீங்கினோர் உலக நலத்தின் பொருட்டே வேள்வி வேட்பர்; அவ்விடத்தில் அவர் சிவனைத் தாம் அன்பால் வழிபடுவர்; அவ்வழிபாடு ஞானம் வாயிலாக வீட்டைத் தரும் என்க. இதனுள்ளும் முதலடி இன எதுகை பெற்றது.
இதனால், வேள்வி வீடும் பயக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் வியாபித்து நிற்கின்ற நிவிர்த்தி யாதி பஞ்சகலைகளும், ஓமத் தீயும் ஒன்றாய் இயைந்து நிற்கும், அதனால், எல்லா உலகங்களும் அத்தீயினிடத்து அடங்கி நிற்பன வாம். ஆகையால், அந்தத் தீயை நிவிர்த்திக்குமேல் பிரதிட்டையில் சிறிது எல்லையளவிலே நிற்கின்ற ஐம்பூதங்களின் ஒன்றாகிய தீயாக எண்ணும் எண்ணத்தை வெறுத்தவரே மேற் சொல்லியவாறு சிவ னோடு என்றும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

வேள்வித் தீயைப் பூதாக்கினியாக நினைப்பவர் வைதி கரும், அந்நினைப்பை விடுத்துச் சிவாக்கினியாக நினைப்பவர் சைவரும் ஆவர் என்க. `கலை அஞ்சும் இக்குண்டமும் சேரும் எனக் கூட்டுக. இதனுள்ளும் ஈரடி எதுகைவந்தது.
இதனால், `வீடுபயக்கும் வேள்வி சிவவேள்வியே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த நிலவுலகின் ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) உயிர் உய்தி பெறுதற்கு உரிய உலகமாக அமைத்த ஒருவனாகிய சிவனை அவ்விடங்களில் பிறந்துள்ள நீங்கள் வழிபாட்டினால் அடையுங்கள், அவனால் படைக்கப்பட்ட அவ் வுலகம் முழுதையும் அறியும் அறிவைப் பெற்ற தேவர்களும் அதன்கண் சென்று அவனை வழிபட்டே மெய்ப் பொருளைப் பெற்றார்கள் ஆதலால்.

குறிப்புரை :

`மெய்க்கண்டம், பொய்க்கண்டம்` என்பவற்றின் ஒற்று எதுகை நோக்கித் தொகுத்தலாயிற்று. `விரிநீர் உலகு ஏழையும் மெய்க்கண்டமாகவும், உய்கண்டமாகவும் செய்த ஒருவன்` என்க. ``கண்டம்`` நான்கில் இறுதி ஒன்றும் தடை; அஃதாவது பாசம். ஏனைய, உலகம். `மெய்யுணர்வு பெறுதற்கு ஏற்ற இடம் நிலவுலகமே` என்பது சிவநூல் துணிபு. அதனுள்ளும், பரத கண்டமும், அதனுள்ளும் குமரிக் கண்டமும் சிறந்தன என அவை கூறும் என்க. ``இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு`` எனவும், 1 ``வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அற்சிப்பர்`` 2 எனவும் போந்தன காண்க.
இதனால், வழிபாட்டுலகமாகிய இவ்வுலகத்தின் சிறப்பு உணர்த்தும் முகத்தால் இதன்கண் செயற்பாலாகிய முத்தீ வழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கலந்திரு பாதம் இருகர மாகும்
அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.

பொழிப்புரை :

சிவாக்கினியது உருவத்தை மேல் ``எடுக்கின்ற பாதம்` (1013) என்னும் மந்திரத்திலும், ``பார்ப்பதி பாகன்`` (1016) என்ற மந்திரத்திலும் கூறியவாறன்றி வேள்வி வேட்பார் தம் வடிவு போன்ற வடிவமாகவும் தியானிக்கலாம். அவ்விடத்திடல் நெற்றிக்கண் ஒன்று மட்டுமே சிறப்புருவமாகக் கொள்ளத்தக்கது.

குறிப்புரை :

`கலந்த, அலர்ந்த, உலர்ந்த` என்பவற்றின் அகரங்கள் தொகுத்தலாயின. கலத்தல் - இணைதல்; அஃதாவது ஒன்றுபோலவே மற்றொன்றும் இருத்தல். ``குண்டலம்` என்பது இடைக்குறைந்து நின்றது. ``அகாரம்`` என்றது நாதத்தை. அஃது அதனைக்கேட்கும் செவியை உணர்த்திற்று, `அகாரத்து அலர்ந்த இரு குண்டலம்` என்க. ``உலர்ந்த`` என்றது, `விரிக்கப்பட்டும், சிவந்தும் உள்ள` என்றவாறு. எனவே, `சடை` என்றதாயிற்று. பாதம் முதலியவற்றில் `உள்ளன, உள்ளது` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன.
இதனால், சிவாக்கினியின் மற்றொரு வகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வாகீசுவரிக்கு நாயகனாய் இன் புற்று மகிழ்ந்ததனால் உண்டாகிய ஓமத்தீ குண்டத்தின் கீழ்ப்பாதியோடு நில்லாமல் மேற்பாதியிலும் பரத்தலால், அங்கு உள்ள இடங்களும் வேறுபடும். அந்நிலையில் அச்சிவனே அந்தத் தீயுருவில் முதலிலே குழவிப் பருவத்தனாயும், பின்பு காளைப் பருவத்தனாயும் இருப்பான்.

குறிப்புரை :

இதன்கண் உள்ள அடிகளை `ஈறு, ஈற்றயல், முதல், இரண்டு` என்னும் முறையிற் கொண்டு உரைக்க. `ஒரு சோதிப் பாலனாய் உளன்; சோதி மத்திமனாய் இருந்திடும்` என்க. வடக்கில் தோற்றுவிக்கப்பட்ட தீ வலமாக எழுந்து மேற்கில் பரந்து ஓங்கும் என்பார் ``பச்சிம திக்கும்`` என்றார். இதனால், `வடக்கில் பாலனாய்த் தோன்றி வளர்ந்த சிவாக்கினி மேற்கில் காளையாய் நிற்பன்`` என்பது பெறப்பட்டது. ``சத்திமானாக`` என்பதற்கு எழுவாய் `உத்தமன்` என்பதேயாம். தழைத்த கொடி - உண்டாய கொடி; கொடி, தீயின் சுடர். சிவவேள்வியில் தீயை வாகீசுவர வாகீசுவரியர்தம் புதல்வனாகத் தோற்றுவிக்கும் முறை சிவாகமங்களுட் கூறப்படுதல் மேலும் (1008) குறிப்பிடப்பட்டது. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், சிவசத்திகளது கூறாகிய ஓமாக்கினியது நிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏ ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நிற்கும் சிவாக்கினிக்கு இரு முக்கோணங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் இட்டது போல அமைக்கும் அறுகோண குண்டமே சிறந்தது. அதன் கண் சிவசோதியை அவியாத வாறு கண்டவர்க்குப் பெரிய செல்வம் உண்டாகும்.

குறிப்புரை :

``கொடி`` என்பதற்குப் பொருள் மேற்கூறப்பட்டது. `ஆறு பக்கம் சென்று குலாவிய குண்டம்` என்க. `இருகோணமாய் அடியும் அந்தமும் (மேலும்) ஒக்கும்` எனக் கூட்டுக. `ஆறு பக்கம்` எனவே, இரண்டும் முக்கோணமாதல் பெறப்பட்டது `கண்டவர்க்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மாதனம் - பெரிய செல்வம். இது அருட் செல்வத்தையும் குறிப்பதாம்.
அறுகோணம் சிறந்த குண்டமாதல், சிவனது முகத்தோடும், குணத்தோடும் ஒத்து நிற்றலாலும், உடம்பினுள் ஆதாரங்களும் ஆறாத லாலும் என்க. இதனானே, இஃது ஆறுமுகனுக்கும் மிக ஏற்புடைய தாதல் அறியப்படும். இதன் பயனும் சிறப்பாகப் போகமாதல் கூறப் பட்டமை காண்க.
இதனால், அறுகோண குண்டத்தின் சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.

பொழிப்புரை :

தன்னைக் காண்பவர்க்குப் பெரிய செல்வமாய் வளர்கின்ற ஓமத்தீயைத் தனக்குப் பயன் தரும் சாதனமாகக் கொண்ட ஆசாரியன், எப்பொழுதும் மாணவர்களது சத்திநிபாத வகையைத் தெரிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு அதனை அறிவித்தலை மேற் கொள்வானாயின், அவன் உலகம் முழுதிற்கும் குருவாய்ப் பலரை ஆட்கொள்ள வல்லவனாவன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. `போதனம், பாதனம்` என்பன, `போதித்தல், வீழ்தல்` எனத் தொழிற் பெயராய் நின்றன. நான்காம் அடியில், `ஆக` `உண்டாக` என்னும் பொருட்டு.
இதனால், அழலோம்பல் ஆசாரியர்கட்குச் சிறப்புக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

பொழிப்புரை :

உருவத்தால் ஓம குண்டத்தளவிலே நின்ற தாயினும், ஆற்றலால் எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் ஓமாக்கினியைத் தமக்கு எல்லா நலனையுந் தரும் அருந்துணையாக ஆராய்ந்தறிபவர் ஒருவரும் இல்லை, அவ்வாறு அறிந்து அதனை முறைப்படி ஓம்பி, மனத்திலும் தியானிப்பவர் உடல், ஆண்டுகள் பல சென்றாலும் அழிவின்றிப் பல யுகங்களைக் கண்டு கொண்டிருந்தவாறு பல இடங்களில் கேட்கப் படுகின்றது.

குறிப்புரை :

`பார்த்த` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `கேட்கப் படுகின்றது` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வி வேட்டல் காய சித்தியையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

பொழிப்புரை :

அக வழிபாடாகிய யோகத்தை நன்கறிந்த யோகி, மேற்கூறியவாறு பல யுகங்கள் அழியாதிருத்தற்கு ஏதுவாகிய நவ குண்ட வேள்வியையும் ஒருங்கே தன் உடலகத்துள் முறையறிந்து வளர்ப்பான். தாய் வயிற்றினுள் தங்கிப் பிறக்கின்ற கருவிற்கு அவளது குறிபோல எல்லாப் பயன்களது விளைவிற்கும் இன்றியமையாச் சாதனமாக உலகம் கண்டது வேள்வியே.

குறிப்புரை :

``அகங் கண்ட யோகி``, என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `பகத்தைச் சாதனமாகக் கண்டு கொண்ட கரு`` என்க. இவ்வாறு உவமை கூரியதனால். காய சித்தி முதலிய சிவ பயன்களுக்கு யோனி குண்டம் சிறந்ததாதல் பெறுதும்.
இதனால், யோகிகள் வேள்வியை அகத்து ஓம்பியே பயன் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளைவாறு பூநிலை
போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம்
நாதனை நாடும் நவகோடி தானே.

பொழிப்புரை :

பயன்களில் சரியை முதலிய நான்கிற்கும் நாற்கோண குண்டமும், வேள்விக் கடன் முற்றுதற்கு முக்கோண குண்டமும், வெற்றிக்கு வில்லை ஒத்த பிறைக் குண்டமும், துன்ப நீக்கத்திற்கு விருத்த குண்டமும், எல்லாப் பயன்கட்கும் அறுகோண குண்டமும், நிலைபேற்றிற்கு அட்டகோண குண்டமும், ஆசிரியத் தன்மைக்குப் பதும குண்டமும், அழகிய கையையுடைய யானைமேற் செல்லும் அரசச் செல்வத்திற்குப் பஞ்சகோண குண்டமும் சிறப்பாக உரியனவாம். நவகுண்டங்களை இவ்வாறு பெரும்பான்மை பகுத்துணர்ந்து கொள்க.

குறிப்புரை :

யோனி குண்டம் மேலே குறிக்கப்பட்டமையால், அதனை உளப்படுத்து இங்கு, `நவ குண்டம்` என்றார். சாதனை முதலிய எல்லாவற்றிலும் நான்கனுருபு விரித்துக் கொள்க. ``வேதனைக்கு`` என்பதனை, ``துன்பத்திற்கியாரே துணையாவார்`` 1 என்பது போலக் கொள்க. `கைய` என்பது போலியாயிற்று. பூ - பூமி; என்றது அதன் திசைகளை கோடி - கோடுதலை உடையது; குண்டம்.
இதனால், நவ குண்டங்கட்குப் பெரும்பான்மை உரிய பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.

பொழிப்புரை :

மாமாயை முதலாகச் சொல்லப்படும் பொருள்கள் யாவும் தானேயாயும், அல்லவாயும் சிவ சத்தி நிற்பாள்.

குறிப்புரை :

மா மாயை - சுத்த மாயை. இதுவே வியாபகமாய்ப் பெரிதாதலின் இப்பெயர் பெற்றது. `மாயை` என வாளா கூறும் வழியெல்லாம் அஃது அசுத்த மாயையையே குறிக்கும். வயிந்தவம் - விந்துவின் காரியம்; சுத்ததத்துவங்கள். சுத்த மாயைக்கு `விந்து` என்பது பெயராகலின், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனப்படும். அசுத்த மாயையின் காரியங்கள் `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும் என்பதும் இங்கு உணர்ந்து கொள்க. வைகரி - வைகரி, முதலிய நால்வகை வாக்குகள். அவை, `வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்பன. சூக்குமை, `பரை` எனவும்படும். இது காரணநிலையாய், நுண்ணிதாய் நிற்பது. `நாதம்` எனப்படுவதும் இதுவே. இதன் விருத்தி (வளர்ச்சி) வகைகளே பைசந்தி முதலிய ஏனைய மூன்றும். ஓ மாயை - அசுத்த மாயை யினின்றும் தோன்றிய, ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை. `மூலப் பிரகிருதி` எனப்படுவது இதுவே. ஓவுதல் - நீங்குதல்; வெளிப்படுதல். உள்ளொளி - குண்டலி சத்தி. மந்திரங் களின் கோடி (முடிவு) ஏழனுள், `ஹும், பட்` என்னும் இரண்டும் சிலவிடத்து ஒன்றாக எண்ணப்படும். அம்முறை பற்றி இங்கு ``ஓராறு கோடியில் தாமான மந்திரம்`` என்றார். ஏழு கோடிகள் முன் தந்திரத்தில் கூறப்பட்டன. சத்தி தன் மூர்த்திகள் - சத்தியின் வேறுபாடுகள்தாம் பல. அவை, `ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி` என்பனவும், `ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி` என்பனவும், `வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி,` எனவும், `சத்தி, விந்து, மனோனமனி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும், மற்றும் பலவுமாம். `ஆம் ஆய்` `` என்பதில், `ஆம்` அசை நிலை. `அன்று, அல்ல` என்பன வற்றைப் பொதுவினை போலக்கூறுதல் சிலவிடத்துக் காணப்படு கின்றது. ஆங்கு - சிவன் நினைத்தவிடத்து.
இதனால், `சிவனது சத்தியே பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.
``பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள் அத்துவித மாதல்`` 1
என்ற சிவஞான போதத்தைக் காண்க. இதனுள் `தான்` என்றது சத்தியாதல் அறிக. ஒன்றாதலும் வேறாதலும் கூறவே உடனாதலும் பெறப்பட்டது.
``பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை`` 2
என்பது அப்பர் திருமொழி. இங்ஙனமாகவே சிவனுக்குப் பிற பொருள்களோடு தொடர்பு உண்டாதல் அவனது சத்திவழியேயாதல் அறியப்படும்.
இதனால், `எல்லாப் பொருளும் சத்தியே` என அவளது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

பொழிப்புரை :

மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, அவ்வகையிலெல்லாம் விளங்குவாள்.

குறிப்புரை :

`திரிபுரை` என்பதன் காரணம் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறப்பட்டது. சுந்தரி - மிக்க அழகுடையவள். அந்தரி - ஆகாயத்தில் விளங்குபவள். சிந்துரம் - திலகம். இது நீட்டல் பெற்றது. `சிந்துரத்தை அணிந்த பரிபுரை` என்க. `சிந்துரை` என வேறோதற்பாலதனைச் செய்யுள் நோக்கித் தொகுத்தோதினார். பரிபுரை - சிலம்பணிந்தவள். நாரணி - `நாரணன் தங்கை` எனப் படுபவள். நாரணன் சிவனுக்குப் புருட ரூப சத்தியாதல் பற்றிப் பெண்ணாகச் சொல்லப்படுகின்ற இவள், `அவனுக்குத் தங்கை` எனப் படுகின்றாள். ஆம் - பொருந்திய, பல வன்னத்தி - பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள். அந்நிறங்களுள் சிறப்பாக நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி,மனோன்மனி` என்னும் பெயர்களைப் பெற்று நிற்பாள் என்பது மூன்றாம் அடியின் பொருள். இவ்வாறு வருகின்ற பல்வேறு நிலைகளில் நிற்பாள் என்க.
இதனால், மேலை மந்திரத்து இறுதியிற் கூறப்பட்ட சத்திதன் மூர்த்தி வேறுபாடுகள் பல விரித்துக் கூறப்பட்டன. அதிகாரமும் சத்திபேதம் ஆதல் நினைவு கூரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொழிப்புரை :

சத்தி, தனது வியாபகத்தைப் பெற்றுள்ள, `உருத்திர லோகம், விட்டுணுலோகம், பிரமலோகம்` என்னும் மூன்று உலகங்களில் தலைமை பூண்டு நிற்கின்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் மூவரையும் தோற்றி ஒடுக்கும் நான்காவது பொருளாய் நிற்பாள். அவள் ஓருத்தியே பொன்னிறம் உடைய சத்தியாய் நின்று முத்தியையும், செந்நிறம் உடைய திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் உடைய கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.

குறிப்புரை :

`உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் மூவரும் ஒற்றுமை பற்றி, `சிவன்` என ஒருவராக அடக்கப்பட்டனர். மூவுரு ஓர் உரு - மூவுருவையும் அடக்கி உள்ள ஓர் உரு. எனவே, பிரேரக தத்துவங்களில் பலவாகி நிற்கும் ஆதிசத்தியைக் குறித்ததாயிற்று. சத்தி, `நீல நிறம் உடையள்` என்பது பற்றி `நீலி` எனப்படுதலேயன்றி, `கௌர நிறம் உடையள்` என்பது பற்றி, `கௌரி` எனவும் படுவளாதலின், இங்கு அவளுக்குப் பொன்னிறம் கூறினார்.
இதனால், ஒருத்தியே மூவராய் முத்தொழில் இயற்றியும், ஐவராய் ஐந்தொழில் இயற்றியும் நிற்கும் தலைவர் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.

பொழிப்புரை :

ஐந்தொழில் முதல்வரைத் தருகின்ற திரிபுரை நாதம், நாதாந்தம், பலவாய் விரியும் பரவிந்து, நிலம், வானம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள். அதனால், அவள் அனை வர்க்கும் மேலானவள்; பலரையும் இன்புறச் செய்பவள்; மன வாக்குகளுக்கு அகப் படாதவள். பக்குவம் வந்த நிலையில் அருட் சத்தியாயும் பதிவாள். பின்பு ஞானத்தைக் கொடுத்துத் தன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்வாள்.

குறிப்புரை :

நல்குதல் இரண்டில் முன்னது அருளல்; பின்னது படைத்தல். நாதம் முதலியன, காரியப் பொருள்கள் பலவற்றுள் சிலவற்றை விதந்தவாறு. பரை முதலிய மூன்றும் காரணப்பெயர்களாய் நின்றன. புல்குதல் - பதிதல். ``அருளும்`` என்னும் உம்மை சிறப்பு. `மெய்யுணர்வு` என்றற்கு. `அப்போதம்` எனச் சிறப்பித்துக் கூறினார். `போதமும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று.
இதனால், சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

பொழிப்புரை :

திருவடிகளில் சிலம்பு, இடையில் சிவந்த பட்டுடை, மார்பில் கச்சு, நான்கு கைகளிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடி, காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் - இவைகளே திரிபுரைக்கு உள்ள அடையாளங்களாம்.

குறிப்புரை :

``குண்டலக் காதிக்கு`` என்றது உடம்பொடு புணர்த்ததாகலின் அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாயிற்று.
``பனிமலர்ப்பூங் - கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் [குசமும் கையில்
அணையுந் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே`` 1
எனப் பின்வந்த அடியார் ஒருவரும் அம்மைதன் திருவடிவை இங்ஙனமே கூறினார். இவ்வடிவத்தை `இராசேசுவரி கோலம்` என்பர். முதலடி இனஎதுகையாய் நின்றது.
இதனால், திரிபுரையது ஒருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

பொழிப்புரை :

குண்டலம் அணிந்த காதினை உடையவள்; கொலை செய்கின்ற வில்லை ஒத்த புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறை அணிந்தவள்; `சண்டிகை` என்னும் பெயர் உடையவள்; இவள் உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருள்கின்றாள்.

குறிப்புரை :

தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்று கின்றாள்` என்றபடி. இவளுக்குச் சிவந்த நிறம் - நெருப்புப் போன்ற காட்சி கூறினமை அறியத் தக்கது. `முடியில் மதியை உடைய சண்டிகை` என்க.
இதனால், திரிபுரையது மற்றொருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

பொழிப்புரை :

நித்தியளாகிய திரிபுரை கால எல்லையைக் கடந்த பழமை உடையவள். மாயை வழியாக உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள் ; நன்கு விளங்குகின்ற உருத்திராக்க மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.

குறிப்புரை :

தாமரை, திருமேனி என்பவற்றது நிறத்தோடு ஒப்ப யானையின் நிறத்தையும் வெண்மையென உணர்க. வெண்மை, ஞானத்தின் அடையாளம். `பின்னர் ஞானத்தை வழங்கும் இவளே முன்னர் மயக்கத்தைச் செய்பவள்` என்பார், ``குன்றலில் மோகினி`` என முன்னே கூறினார். மாது - அழகு. கூந்தலை, `சிகை` என்றது வழு வமைதி. சுத்தமாவது வெண்மை. `சுத்தை` என்பது பெண்பாற் பெயர்.
இதனால், திரிபுரையது முதல் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.

பொழிப்புரை :

திரிபுரை இன்னும் தூய, அழகிய, திண்ணிய கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றத்திலே விளங்கு பவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள். எல்லாச் சத்திகளினும் பெரியளாய் மேலான சத்தி; அப்பொழுதே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியளுமாய் எண்ணப்பட்டு அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளுமாவாள்.

குறிப்புரை :

ஞானம் நிறைந்து நிற்றலைக் குறிக்க, ``சுத்த, அம், பாரத்தனம்`` என்றார். வத்து - பொருள்; மெய்ப்பொருள். அதன் தன்மை, ``வத்துவம்`` எனப்பட்டது. வத்துவம் உடையதனை, ``வத்துவம்`` என்றார். `வாஸ்துவம்` என்னும் வழக்குண்மை காண்க. எழுவாய், மேலை மந்திரத்தினின்றும் வந்தது. ``கோலம் மதியவள்`` எனப் பண்புப் பெயர் பண்பி வினையொடு முடிந்தது.
இதனால், திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியத் தக்க பெருமைகள் கூறப்பட்டன. தனமும், ஒளியும் உருவவழியாக ஞானத்தை உணர்த்தின.

பண் :

பாடல் எண் : 9

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

ஐவர், படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் தலைவர். ஊர், முத்தி. சிவ பரத்துவம் உணர்த்திய. ``அவனை ஒழிய அமரரும் இல்லை`` என்ற மந்திரத்தினை (41) இதனுடன் வைத்து நோக்குக.
இதனாலும், அவளது பெருமை பிற சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

பொழிப்புரை :

திரிபுரையை அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை, `ஆனந்தமாய் இருப்பவள்` என்றும், `அருவமாயும், உருவ மாயும் விளங்குபவள்` என்றும் `நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையினள்` என்றும் கூறுவர். அதனால், அறிவுருவின னாகிய சிவனும் அவள் வழியாகவே தோன்றுவான்.

குறிப்புரை :

அருவமும், உருவமும் கூறவே, அருவுருவம் கொள்ளப்படும். மூன்றாமடி நான்காமடிகளில் ``அறிவார்`` என்ற வற்றை, `அறிவு ஆர்` எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` முதலியன வாகவும், `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் உரைக்க. இரண்டாம் அடியை `அறிவுரு` எனப்பாடம் ஓதுவாரும் உளர். அவர்க்கு அவள் அருவம் முதலியன ஆதல் கிடையாமை அறிக. மூன்றாம் அடியிலும் `அவள்` என்பதை ``இச்ை\\\\u2970?`` என்பதன் பின் கூட்டுக. ``இடம்`` என்றது, `வழி` என்றவாறு.
இதனாலும், வேறும் சில பெருமையே கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.

பொழிப்புரை :

உடம்புகள் எங்கு உள்ளனவோ அங்கெல்லாம் உள்ள உயிர்களைக் காப்பவனாகிய சிவன், தான் எங்கு இருப்பவனாக அறியப்படுகின்றானோ அங்கெல்லாம் சத்தியும் உடன் இருக் கின்றாள். அதனால், ஆகாயம் உள்ள இடங்களில் எல்லாம் இருக்கின்ற எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நின்றும், அப்பொருள்களையும், அவற்றிற்கு இடம் தந்து நிற்கின்ற ஆகாயத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் எங்கும் விளங்குகின்ற எந்த உருவமும் சத்தி என்றே அறிவாயாக.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. இரண்டாம் அடி உயிர்கள் உடம்பையின்றி அமையாமையும், மூன்றாம் அடி எப்பொருள்களும் வானத்தையின்றி அமையாமையும் கூறியவாறு. வந்தும் அப்பாலாதற்கு `அவள்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. குறி, வடிவம்.
இதனால், சிவனது வடிவங்கள் யாவும் சத்தியே யாதல் கூறப்பட்டது.
``தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்`` 1
என்றாற் போலவரும் திருமொழிகளும், தென்முகக் கடவுள் முதலிய கோலங்களும் அம்மையோடு உடனாய உருவமாகக் கூறப்படுதலும், பிறவும் இக்கருத்தே பற்றியனவாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 12

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

பொழிப்புரை :

`திரிபுரை` என்னும் சத்தியே மேலானவளும், பெரியவளும் ஆவள். அதனால், அவளே பல்வேறு வகையான காப்புச் சத்தியாய் நிற்றலை, மாணவனே, நீ அறிவாயாக. இனி, அக் காப்புத்தான், திரிவுபடுகின்ற ஊழிகள் தோறும் உடனாய் நின்று புண்ணியத்தின் பயனாகிய உலகின்பத்தைத் தருதலேயாம்.

குறிப்புரை :

``புரா சத்தி`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. தரா சத்தி - தாங்கும் சத்தி. தாங்குதல், காத்தல், உராவுதல், திரிவு படுதல். புண்ணியத்தின் பயனை, `புண்ணியம்` என்றே கூறினார். பெத்தத்தின் வகையாகிய முத்தொழில்களுள் கன்மத்தை நுகர்விப்பது காத்தலேயாகலின், அஃது ஒன்றனையே திரோதானசத்தியது தொழிலாகக் கூறினார். பாவத்தின் பயனாகிய துன்பத்தைத் தருதல் விருப்பின்றிச் செய்யப்படுவதாதலின், அதனையொழித்துப் புண்ணியத்தின் பயனாகிய இன்பத்தைத் தருதல் ஒன்றையே கூறினார். `முன்னர்த் திரோதான சத்தியாய் உலகின்பத்தையும், பின்னர் அருட் சத்தியாய் வீட்டின்பத்தையும் தருபவள் திரிபுரை` என்பது குறிப்பு. பிற்பகுதியில் `அச்சத்தி` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், திரிபுரை ஒருத்தியே திரோதான நிலையில் பல்வேறு வகையினளாய் நின்று உயிர்களைப் புரத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

பொழிப்புரை :

அடியார்கள் நாள்தோறும் தங்கள் உள்ளத்தில் தியானிக்க, அங்ஙனம் தியானிக்குந்தோறும் அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படர்தற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தியே, முன்பு ஒரு கூற்றில் அவ் விடத்துத் திரோதான சத்தியாய் நின்று, பின் அருட் சத்தியாயே விளங்குவாள்.

குறிப்புரை :

``அடியவர் நாள்தொறும் ஆகம் செய்தாங்கே`` என மாற்றி, அது முதலாகத் தொடங்கி உரைக்க. `அகம் செய்தல்` என்பது முதல் நீண்டது. அங்கு, ``செய்து`` என்றது, `செய` என்பதன் திரிபு. `பாகம் செய் கொம்பு` என இயையும். இங்கு, பாகம் செய்தல், பக்குவப்படுத்தல். முன் வந்த `பாகம் செய்தல்`, பங்கில் கொள்ளுதல். போகம்செய் சத்தி, திரோதான சத்தி. `போகம் செய் சத்தியாகிய புரிகுழலாள்` என்க.
இதனால், திரோதான சத்தி அருட் சத்தியின் வேறாகாமை கூறப்பட்டது. அருட் சத்தியது இயல்பும், திரோதான சத்தியால் உளதாகும் பயனும் என்னும் இவைகளும் அனுவாத முகத்தால் ஈண்டே கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்றவள். வம்பு அவிழ்கோதை - வாசனையோடு மலர்கின்ற பூக்களையுடைய மாலையை அணிந்தவள். நாடி - நாடப்பட்டவள். சிறுமி - கன்னி. நம்பி - தெளிந்து. நயந்து - விரும்பி. இதனுள்ளும் அம்மைக்குச் செம்மை நிறம் கூறப்பட்டமை அறியத் தக்கது.
``மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி [அபிராமி`` 1
எனப் பின்வந்த அடியவரும் கூறினார்.
இதனால், திரிபுரையது தியானச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.

பொழிப்புரை :

பலவகை வழிபாட்டிலும் விளங்கும் தலைவி யாகிய திரிபுரையே, உலகத்தில் வைக்கப்பட்டுள்ள பல சடப்பொருள் களும், அளவிறந்த உயிர்களாகிய சித்துப்பொருள்களும், உலகின் பத்துத் திசைகளும், சூக்குமை முதலிய நால்வகை வாக்குகளும் அந்தக் கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாற்றல்களுமாய் நிற்பாள்.

குறிப்புரை :

``பரை`` என்றது உபலக்கணம். `வித்தைத் தலைவியள் வைத்த பொருள் முதலிய பலவும் ஆம்` என்க.
இதனால், திரிபுரையே வழிபாடுகள் பலவற்றிலும் விளங்கிப் பல பயன்களையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொழிப்புரை :

`வழிபாடுகளின் தலைவி` என மேற்கூறப்பட்ட திரிபுரை கொங்கைகள் விம்ம நிற்பவள்; அழிவில்லாத தவத்தைச் செய்யும் தூய நெறியை உடையவள்; நூல்கள் பலவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பவள் ; என்றும் கன்னியாய் இருப்பவள். அவள் இவ்வுலகில் என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

``தலைவி`` என்றது அனுவாதம். கொங்கைகள் பால் சுரந்து விம்ம நிற்றல் அருட் பெருக்கையும், தவம் செய்தலும், நூல்களை அடக்கி நிற்றலும் ஆசிரியத் தன்மையையும், கன்னிமை பற்றின்மையையும் விளக்குவனவாம்.
இதனால், திரிபுரை ஒன்றொடொன்றொவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.

குறிப்புரை :

`நின்றவளாகிய நேரிழை` என்க. கலை - கூறு. ``அகம் படிந்து`` எனவும், ``மன்றது ஒன்றி`` எனவும் கூறியன, அகத்தும் புறத்தும் விளங்குபவளாதலைத் தெரித்தனவாம். `அவளொடு ஒன்றுகின்ற என்னோடு அவளும் ஒன்றி நின்றாள்`` என்றதனை,
``அற்றவர்க்கு அற்ற சிவன்`` 1
எனவும்,
``தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்பன்`` 2
எனவும் வருவனவற்றோடு வைத்துக் காண்க ``ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்`` என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்`` எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளம் ஒத்தல்; இசைதல்.
இதனால், திரிபுரை அன்பர்களையே அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பொழிப்புரை :

அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத் தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார் களில்லை.

குறிப்புரை :

`கமலத்திடை அடங்கும் ஆயிழை` என மாற்றிக் கொள்க. `பதியோடு` என உருபு விரிக்க. `மத்து` என்பது, நிறைவை உணர்த்தும் வடசொல். ``சித்து`` என்றது `அதிசயச் செயல்கள்` என்றபடி. ``வழி`` என்றது தான் சிவத்தொடு நின்றே எதனையும் செய்பவளாதலை. இதனால், திரிபுரை எதனையும் சிவத்தொடு நின்றே செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

பொழிப்புரை :

உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள் ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்ற வர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.

குறிப்புரை :

`உணர்ந்தவழி` என்பது `உணர்ந்து` எனத் திரிந்து நின்றது, நிற்றல் - விளங்கி நிற்றல். `ஆகி` என்பது பெயர். மூன்றாம் அடியில் ``உடனே`` என்றது, `உடனாகியே` என்றவாறு. `கணித்து` என்பது மெலிந்து, நின்றது. அளித்தலுக்கு எழுவாய், அதிகாரத்தால் வந்தது.
இதனால், சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டது. மேல் (1038) சிவனைச் சத்தியோ டன்றித் தனித்து நிற்பவனாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டதையும் இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 20

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.

பொழிப்புரை :

அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற் பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப் படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.

குறிப்புரை :

புளி - புளிய மரம். புன்மை, இங்கு முற்றி முதிர்ந்து வீழும் மென்மை நிலையைக் குறித்தது. போல - போல ஆகும்படி; அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளம் புளியம் பழம்போல ஆதலாவது, புளியம் பழத்தின் உள்ளேயிருக்கின்ற புளி அங்ஙனம் உள்ளே யிருப்பினும் ஓட்டில் பற்றுவிட்டுத் தனித்து நிற்றல்போல், உலகியலோடு உடனாய் இருப்பினும், பற்று நீங்கியதாதல். கதி - ஞானம். ஒளியுடையதனை, ``ஒளி`` என்றார்.
இதனால், திரிபுரை மேற்கூறியபடி கதியளிக்குமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 21

உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

பொழிப்புரை :

காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரி புரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமய வாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவியதில்லை யின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.

குறிப்புரை :

``காரண காரணி`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. ``நின்றது`` முதலிய மூன்றும் தொழிற் பெயராய்ச் செவ் வெண்ணாக எண்ணப்பட்டன. காரணமாவன, தத்துவங்களும், அவற்றின் தலைமைக் கடவுள்களுமாம். முன்னர் அக்கடவுள்களைப் படைத்து, அவர்கள் வாயிலாகத் தத்துவங்களைத் தோற்றி, நிறுத்தி, ஒடுக்கச் செய்து, பின்பு அக்கடவுள்களையும் ஒடுக்குதல் பற்றி, ``காரண காரணி`` என்றார். இது நான்காவதன் தொகை. காரணி - காரணமாய் நிற்பவள், `தான்` என்பது சிவத்தைக் குறிக்கும் குறியீட்டுச் சொல். மண்டிலம் - வட்டம்; `உலகம்` என்றவாறு. `உடம்பில் உள்ள அக்கினி சூரிய சந்திர மண்டலங்கள்` என்றலும் ஆம். ஈற்றில், `அதனையும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், திரிபுரை மெய்ப் பொருளேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பொழிப்புரை :

சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.

குறிப்புரை :

``அவன்`` எனச் சுட்டுப்பெயர் செய்யுளில் முன்னர் வந்தது. `சிவன்` என்னும் உயர்திணைப்பெயர் இங்குத் திரிபு புணர்ச்சி எய்தியது. கதி - நடை; செயல். ``சிவகதி`` என்பது, `அரச தண்டம்` என்பதுபோல ஆறாவதன் தொகை, `சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்`` எனக் கூட்டி உரைக்க. ``உணர்வு`` என்பது அனுபவ ஞானத்தை. அதனால், இன்பமும் பெறப்பட்டது. ``ஏடு அங்கையாள்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின், அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாதல் அறிக. ``ஏன்றாள்`` என்பது குறுகிநின்றது. நான்காம் அடியில் `நின்றாள்` என ஓதுதல் பாடமன்று.
இதனால், திரிபுரை ஞானத்தைப் படிமுறையால் அளித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தி யிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.

குறிப்புரை :

`இறை` என்பது தொழிலாகு பெயராதலின், பெண் பாற்கும் உரியதாம். `இறைவி` என்பது குறைந்து நின்றது எனினுமாம். `எங்கள் இறை` என மாறிக் கூட்டுக. ``பாடுந் திருமுறை` என்றது, வீணையுடைமையையும் குறித்தவாறு. `திருமுறையைப் பாடும்` என்ற லுமாம். ``பார்ப்பதி`` என்றது `பார்ப்பதியேயான அவள்` என்றபடி.
இதனால், முதற்கண்ணதாகிய நூலறிவைத் தரும் அவளது வடிவியல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

பொழிப்புரை :

காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்க ளாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற்காகவே உலகில் வாழ்வீராக.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``வழிபடுமாறு`` என்பது, வினையெச்சப்பொருட்டாய் நின்றது. ``பின்னை`` என்பது, `மற்று` என்னும் பொருளது. `பிள்ளை` என்பது பாடமன்று. ``ஆகுமாம்`` என்பதில் ஆம், அசைநிலை. `ஆம் ஆதி` என இயைத்து, `நன்மையை அடைதற்கு நிமித்தமாகிய ஆதிசத்தி` என உரைப்பினும் ஆம்.
இதனால், திரிபுரையை இராசேசுவரியாகக் கண்டு வழிபடுக என்பது கூறப்பட்டது. அதன் பொருட்டு, அவளது வடிவம் மறித்தும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

பொழிப்புரை :

ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படு பவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப் பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.

குறிப்புரை :

``அண்ணுதல்`` என்பது ``அண்டுதல்`` என மருவி வழங்கும். நீதி - நடுவு நிலைமை. `நீதியாளரது மனத்தாமரை என்றற்கு, ``நீதி மலர்`` என்றார். திரிபுரையது மந்திரம், ``ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் த்ரிபுராயை நம;`` என்பது. இது நவாக்கரியாதலை நோக்குக. மூலாதாரம் முதலிய ஏழ் நிலையுள் நடுவணதாகிய அனாகதத்தை, ``பாதி`` என்றார். `ஆறாதாரங்களில் மேற்பாதியில் முன் உள்ளது` என்றலுமாம்.
இதனால், திரிபுரையது ஆசனமும், மந்திரமும், அவ்வாற்றாற் செய்யும் வழிபாட்டின் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொழிப்புரை :

திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள் கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.

குறிப்புரை :

`அவளது பெருமையை இவ்வாறு அறிந்து கொள் ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். எழுவாய் மேலை மந்திரத்தினின்றும் வந்தது. `பிரசாத கலைகள் பதினாறு இவை` என்பது முன்னைத் தந்திரத்திற் காட்டப்பட்டது.
இதனால், திரிபுரையது மிக்க பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

பொழிப்புரை :

மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மை யான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவரா யுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.

குறிப்புரை :

`பொருள் பெற்ற சிந்தையில் உற்ற புவனாபதியார் சேவடி` என இயைத்துக் கொள்க. `சத்தி வழிபாடு சிவனை நீக்கிச் செய்யப்படுவதன்று` என்பது உணர்த்தியவாறு.
இதனால், சத்தி வழிபாட்டின் கண்ணது ஓர் ஐயம் அறுக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.

பொழிப்புரை :

திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்ற வராக முகத்தை உடை யவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.

குறிப்புரை :

`இறைவன் போகி, யோகி, வேகி - என்னும் மூன்று நிலையில் நிற்குங்கால் சத்தியும் அவற்றிற்கு ஏற்பவே நிற்பாள்` என்பது,
``எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்`` 1
என்பதனால் அறியப்படும். அற்றுள் சத்தியது வேகவடிவத்தில் `வராகி` - என்பவள் மிகக் கடுமையானவளாகக் குறிக்கப்படுதலால் அவளது நிலையை இங்குச் சிறப்பாக எடுத்துக் கூறினார். இதனானே, ஏனை வேகவடிவங்களும் கொள்ளப்படும்.
இதனால், சத்தியது மறக்கருணை நிலையாகிய வேகவடி வத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

பரவிந்துவாய் நிற்கின்ற சிவ சத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனி யளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.

குறிப்புரை :

`உயிர்களின் வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவ சத்தி அவற்றிற்கு அகப்படுதற் பொருட்டுக் கருணையால் இவ்வாறு உருவும், பெயரும்கொண்டு நின்று, உயிர்களை உய்வித்தற்குரிய செயல்களைச் செய்கின்றது` என்பதாம். அகங்காரம் - `யான் இது செய்வேன்` என முனைதல். இது தனக்கு ஏலாததன்கண் தோன்றின் குற்றமாகும். ஆகவே, தமக்கெனச் சுதந்திரம் இல்லாத உயிர்கட்கு இது குற்றமாகின்றது. சிவசத்திக்குச் சிறப்பாகின்றது. அகங்காரம், `ஆங்காரம்` என மருவி வழங்கும்.
``ஓருரு வாயினை; மான் ஆங்காரத்து
ஈரியல்பாய், ஒரு விண்முதல் பூதலம்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை`` 1
என்பது காண்க. சதாசிவன் முதலிய ஐவராவார், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்போர். இவர் சம்பு பட்சத் தினர் என்க. ஈற்றடி அவள் தன் அடியார்க்குப் பயன் தரும் முறையைக் கூறியவாறு. `ஹ்ரீம்` என்பதில் முதற்கண் உள்ள மெய்யின் சிதை வாகிய இகரம், அம்மெய்போலவே வேறெண்ணப் படாது நின்றது.
இதனால், திரிபுரையது கருணைச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :

உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான் கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியன வுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.

குறிப்புரை :

தத் + பரை = தற்பரை; `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்ற மேலிடத்தவள். உயர் வித்து - பிரகிருதிக்கு மேலே உள்ள முதனிலைகள்; அவை சுத்த மாயையும், அசுத்த மாயையுமாம். அவற்றுள் சுத்த மாயையின் காரியம் ஏழு. அவை, பரநாதம், அபர நாதம், சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தையின் ஊர்த்துவ பாகம், மத்திய பாகம், அதோ பாகம்` என்பன. ஊர்த்துவபாகம் உருத்திர னுக்கும், மத்திய பாகம் திருமாலுக்கும், அதோபாகம் அயனுக்கும் இடமாய் இருக்கும். அசுத்த மாயையின் காரியம் ஏழு வித்தியா தத்துவங்கள். மான் - பிரகிருதி. `மானாகிய ஓர் தலம்` என்க. இது பிரகிருதியாதல் பற்றி, `தலம் - இடம்` என்றார். ``மனமும், நற்புத்தியும்`` என்றது ஆன்ம தத்துவம் அனைத்திற்கும் உபலக்கணம். தன்மை - ஈகைக் குணம். தன்மை உடையவளை, ``தன்மை`` என்றார்.
இதனால், திரிபுரையது முழுமுதல் தன்மை இனிது விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.

பொழிப்புரை :

பன்னிரு கலைகளை உடையதாகச் சொல்லப்படு கின்ற ஓங்காரத்தில் நாத விந்துக்களைப் பாவித்து, அதன் பின் ஆதி யாகிய வயிரவியது மந்திரத்தில் முதல்எழுத்து அகாரம் முதலிய வற்றில் பன்னிரண்டாம் எழுத்தாகிய `ஐ` எனவும், ஈற்றெழுத்து அவற்றில் பதினான்காம் எழுத்தாகிய `ஔ` என்பது பதினாறாம் எழுத்தாகிய விசர்க்கத்தோடு கூடியது எனவும் அறிந்து அவ்வாறே ஓதிப் பயன் பெறுக.

குறிப்புரை :

``பன்னிரண்டாம் கலை`` என்பதில் `கலை` சினையாகு பெயராய் அவற்றையுடைய ஓங்காரத்தைக் குறித்தது. ஓங்காரமே பிராசாத கலைகளாய் விரிந்து நிற்பதாதல் அறிக. `கலையின்கண்` என ஏழாவது விரித்து, அதனை, ``கற்பித்து`` என்பதனோடு முடிக்க. அகாரம் - நாதம். எனவே, மாயை சுத்த மாயையாயிற்று. ``ஆதி பயிரவிதன்னில்`` என்பதை மூன்றாம் அடியில் முதலிற் கூட்டுக. பயிரவியது மந்திரத்தையே ஒற்றுமை பற்றி, `பயிரவி` என்றார். `பயிரவி தன்னில் ஆதி பன்னிரண்டோடு, அந்தம் அந்தப் பதினாலு சோடசமும் சொல்நிலை என்று ஓதிடு` எனக் கூட்டி வினைமுடிவு செய்க. `ஓடு` `உம்` என்பன எண்ணிடைச் சொற்கள். இங்ஙனம் கூறியதனால், `ஹோம் ஹைம் ஹௌ: பைரவ்யே நம:` என்பதே வயிரவி மந்திரமாதல் பெறப்பட்டது. தொடக்கத்தில் கூறப்பட்ட பொருளாகிய இது பற்றியே இவ்வதிகாரம், `வயிரவி மந்திரம்` எனப் பெயர் பெற்றது என்க. `பைரவ்யே நம:` என்பது `பயிரவிதன்னில்` என்பதனானே விளங்கிக் கிடந்தது. `வயிரவி` என ஓதாது, ``பயிரவி`` என ஓதியதும் இதன் பொருட்டு.
இதனால், வயிரவியது முதனிலை (மூல) மந்திரம் உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு விசர்க்கத்தோடு கூடி இறுதியில் நிற்கின்ற `ஔ` என்னும் எழுத்தே வயிரவி மந்திரமாகிய சொல் தொடருக்கு முன்னும், ஏனைய `ஐ, ஓம்` என்பவை முறையே அந்த ஔகாரத்திற்கு முன்னே நடுவணதாயும், முதற்கண்ணதாயும் உள்ள பீசங்கள் முன்னே நிற்க. அவ்வாற்றால் உள்ளக்கமலத்தில் விளங்கு கின்ற பராசத்தியாகிய வயிரவி, உலகிற்கு முடிவும் முதலுமாய் உள்ளாள்.

குறிப்புரை :

``அந்தம் பதினாலதுவே முந்து`` என அனுவதித்து ஓதினமையால், ஏனையிரண்டும் சொல்லாமே விளங்கிக்கிடந்தன. எனவே, இதன் முதல்மூன்று அடிகளாலும், `ஹோம் ஹைம் ஹௌ: பைரவ்யே நம:` எனபதே வயிரவி மூலமந்திரம் என்பதை வலியுறுத் தியதாயிற்று. ஈற்றடி அவளது முதன்மை உணர்த்திற்று. அது, பகுதிப் பொருள் விகுதி. இதனால், வயிரவியது முதன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

உலகிற்குக் காரணர்களாகின்ற `அயன், அரி, அரன்` என்னும் மூவரும் வயிரவியது அழிப்பும், காப்பும், படைப்பும் ஆகிய செயல்களில் ஒரு கூற்றிலே அடங்குபவர் ஆதலின், வீடாகிய பெரும் பயனைப்பெற விரும்பி அவளை வழிபடுகின்ற சிறந்த புண்ணியத்தை உடையவர்கள், நிலையற்ற அம்மூவர் பதவிகளுள் ஒன்றனையும் விரும்பார்.

குறிப்புரை :

முதலடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்ச மாய் நின்றது. போகின்ற - அழிகின்ற. `பூதத்தில்` என உருபுவிரிக்க. ``புரம்`` என்றது புவனத்தை. ஆதரர் - விரும்புபவர். என்றது, முன்னர்க் கூறிய மூவரையே. எனவே, `புராதரர் ஆகிய அவர்` என்றதாயிற்று. ``சார்வுழி`` என்பதில் சார்தல், வாளா அடையாயிற்று. போகும் - அவ் வழியில் ஒழுகுகின்ற. `போகும் புண்ணியத்தோர்` என இயையும்.
இதனால், `வயிரவியை வினைநீக்கம் வேண்டி நிட்காமிய மாக வழிபடுதலே சிறந்தது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

பொழிப்புரை :

இருபத்தேழு நாட்களைக் கொண்ட மதியளவை (சாந்தரமான) மாதம் ஒன்றுகாறும் அகத்தும், புறத்தும் வளர்க்கப் படுகின்ற ஓமாக்கினியே வயிரவி வடிவமாகும். அதனைப் பகல் இரவு இடைவிடாது ஓம்புகின்ற மன உறுதியுடையவன் `சிவனே` என எண்ணத்தக்கபெருமை யுடையவனாவன்.

குறிப்புரை :

``புண்ணிய நந்தி, புனிதன்`` என்றவை, ``சிவன்`` என்ற வாறு. அவனது திரு, சத்தி. இங்கு வயிரவி ``எண்ணிய ... ... வன்னி, புண்ணிய ... ... ... திரு ஆகும்`` எனக் கூட்டியுரைக்க. ``பகலோன், மதி`` என்றது அவர்கள் விளங்கி நிற்கும் பகலும், இரவுமாகிய காலத்தைக் குறித்தன. ``நாளின் தொடக்கம் பகலவன் தோற்றமும், இறுதி மதியின் மறைவும்` என்னும் பொது முறை பற்றி ``மதியீறு`` என்றார். `மதியீறாக அதனை (அவ்வன்னியை)ப் பண்ணும் திண் ணியன்` என்றார். ``பண்ணிய வன்னி`` எனப்பொதுப்படக் கூறி யதனால், அகத்தும், புறத்தும் பண்ணுதல் கொள்ளப்பட்டது. அவ்வாறு பண்ணும் முறை மேலெல்லாம் சொல்லப்பட்டது. வடக்கில் கயிலைச் சிகரமாகிய ஓரிடத்தில் அரிதிற்காண இருக்கின்ற சிவன், தென்னாட்டில் அளவற்ற கோயில்களில் எளிதிற் காண இருத்தலால் அவனை, `தென்னன்` எனத் தமிழாகமம் கூறிற்று என்க. வாதவூரடிகளும் சிவனை இவ்வாறு கூறுதல் இது பற்றியே எனக் கொள்ளலுமாம்.
இதனால், வயிரவி வழிபாட்டில் சிறப்புடையது ஒன்று கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

பொழிப்புரை :

உள்ளத்தில் பொருள் வடிவாக எண்ணப்படுகின்ற திரிபுரை மந்திரத்தை, உயர்த்துச் சொல்லப்படுகின்ற அன்பினாலாகிய மேற்கோளோடு வாழ்நாளின் இறுதிவரை சிவனொடு வைத்து, சொல் வடிவிலும் ஓதிவரும் அன்பன் பொருட்டாக அவளை நிலவுலகம் கயிலாய மலைபோலவே சிவனோடு தன்னகத்து வைத்துப் போற்று கின்றது.

குறிப்புரை :

சேவகன் - வீரன். கிரியினில் - கிரியைப் போல. பரிதல் - அன்பு செய்தல். `கட்டு, ஒட்டு` முதலியன போல, ``பிடி`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். ``பரி பிடி`` நிகழ்கால வினைத் தொகை. `பிடியொடு` என உருபு விரிக்க. ``திரிபுரை`` என்றது அவளது நாமத்தை. ஓதி நின்றானுக்காக அவள் கயிலையிற் போல சிவனோடு வெளிநிற்றலை, ``பூதலம் போற்றிடும்`` என உலகின்மேல் வைத்துக் கூறினார். `ஓதி நின்றான் அவனைச் சிவனோடு இங்குத்தானே காண்பான்` என்றவாறு.
இதனால், `மேற்கூறிய வழிபாடு இம்மையிற்றானே பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

பொழிப்புரை :

நூல்களால் சொல்லப்படுகின்ற சிவனுடையதும், உணர்வுடையோரால் உணரப்படுவதும் ஆகிய திருவருட்சத்தியும், வேதத்தின்வழி வழுவாது ஒழுகிவருவோரால் வழிவழியாக உபதேசிக் கப்பட்டு வருகின்ற ஞானமும், மேற்கூறியவாறு இருபத்தேழு நாள்களை உடைய ஒரு மதி வட்டங்காறும் விளங்கி நிற்கின்ற ஓமாக்கினியை வயி ரவிதேவி தன் அடியார்களின்முன் சூலத்தோடு வந்து அருள்புரிவாள்.

குறிப்புரை :

`நந்தி அருள், உணரும் அருள்` எனத் தனித்தனி முடிக்க. `நீதி -முறை, நீதியில்வந்து` என இயையும். சோதி, ஆகு பெயர். திரு வருள், போதம், சோதி என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயராய் வயிரவியையே குறித்தன. `சூலத்தோடு` என உருபு விரிக்க. `சூலம் அவட்குச் சிறப்படையாளம்` என்பது தோன்றுதற் பொருட்டு அதனை விதந்தவாறு.வருகின்ற மந்திரத்துள் மறித்தும் `சூலி` என்றலும் இது பற்றி.
இதனால், மேற்கூறிய வழிபாட்டினது சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

பொழிப்புரை :

வயிரவிக்கு அழகிய கைகள் நான்கு. அவைகளில் சூலம், கபாலம், நாகபாசம், அங்குசம் என்பவற்றை ஏந்தியிருப்பாள். இவள், மாலாலும், அயனாலும் அறியப்படாத அழல் வடிவத்தை உடைய சிவனுக்குச் சிறந்த திருமேனியாகின்ற அருளேயன்றி, வேறல்லள்.

குறிப்புரை :

``சூலம் கபாலம் கையேந்திய சூலி`` என்றது உடம் பொடு புணர்த்தல். வலக்கையிரண்டில் மேலதிற் சூலமும், கீழதில் அங்குசமும் இடக்கை யிரண்டில் மேலதில் கபாலமும், கீழதில் நாகபாச மும் உள எனக் கொள்க. `இவள் சிவனது அருளே` என்றது, `சாந்த ரூபி` என்பதன்கண் ஐயம் அறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 8

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.

பொழிப்புரை :

மேலும் இவள், மென்மையான இயல்பை உடையவள்; வஞ்சிக் கொடிபோலும் வடிவினை யுடையவள்; சிறிது சினங்கொண்ட மனத்தினள்; பலகலையும் உணர்ந்தவள் ; தோன்றுகின்ற வாய் முள்முருக்க மலர்போலச் சிவந்திருப்பவள்; நீல மணி போன்ற நிறத்தை உடையவள்; பல நிறத்தோடும், பல மணிகளோடும் கூடிய உடையை அணிந்தவள்.

குறிப்புரை :

``சொல் இயல்`` என்பதில் இயலுதல், அதற்குரிய இடத்தின் மேல் நின்றது. கிஞ்சுகம் `கிஞ்சம்` என மருவிற்று. `காணும் திருமேனி கல் இயல் ஒப்பது` எனக் கூட்டுக. ``ஆடையும்`` என்னும் உம்மை, சிறப்பு. மணியை உடையதனை ``மணி`` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

பொழிப்புரை :

இன்னும் இவள், பல வயிரங்கள் இழைத்த கோடி சந்திரன்போலும் அழகிய முடியை அணிந்தவள்; சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரத்தின குணடலத்தை அணிந்த காதினை உடையவள்; மான் போல மருண்டு பார்க்கும் பார்வையை உடையவள்; சிறந்த ஒளிகளாகிய சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவள்; பொன்னாலாகிய மணி போலும் நெருப்புக் கண்ணையும் நிரம்ப உடையவள்.

குறிப்புரை :

திருமுடி, அன்மொழித்தொகை. `கன்மணி குண்டலக் காதி` எனப் பாடம் ஓதி, இங்கும், `மணி` என்பதற்கு `அழகு` எனப் பொருள் கொள்ளுதல் சிறக்கும், ``வன்னி`` என்றது அதனையுடைய கண்ணினை. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். நிரம்புவது சிவசத்தித் தன்மை என்க.
இவை மூன்று மந்திரங்களாலும் வயிரவியது தியானவடிவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

பொழிப்புரை :

விரிந்துநின்ற ஒரு தாமரை மலரின் எட்டிதழின் நடுவில் (பொகுட்டில்) மேலான சத்தி ஒருத்தி இருக்கின்றாள். அவ் எட்டிதழ்களில் கன்னியர் எண்மரும், அவருள் ஒருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் பணிமகளிரும் அங்குச்சூழ்ந்து பணிபுரிந்து அந்தச் சத்தியைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

குறிப்புரை :

இவளே `மனோன்மனி` எனப்படுபவள். நான்கு திசை யிலும் திசைக்கு இரண்டாக உள்ள எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக முறையே `வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத தமனி` எனச் சொல்லி, எண்மர் கன்னியரை அறிக. பாரித்தல் - சூழ்தல். `சரித்து` என்பது முதல் நீண்டது. இதன்கண் கூறப்பட்ட தாமரை மலர் வடிவத்தையும், அதன்கண் இருக்கும் முதற்சத்தி ஒருத்தி பரிவாரசத்தி எண்மர் ஆகியோரைக் கீழ் உள்ளவாறு கண்டுகொள்க.
சிவனைப் பூசித்தற்குரிய பதுமாசனத்தின் அமைப்பு ஆகமங் களில் ஆங்காங்கு வேறு வேறுவகையாகச் சொல்லப் படுகின்றது. அவற்றுள் இங்குக் கூறிய எட்டிதழ்களும் சுத்த வித்தை ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் கூடியவையாம். ஆகவே, இதன் பொகுட்டு முதலியன ஏனைச் சிவத்தத்துவங்களும், இதன் தண்டு ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம். இதனை, அகத்தே பாவிக்கும் பொழுது தண்டினைக் கொப்பூழ் அடி முதலாகவும், மலரை இருதயத் திலும் கொள்ள வேண்டும். மனோன்மனியே இங்குப் பூசிக்கப் படுவள். ஏனையோர் அவளுக்குப் பரிவாரமும், பரிவாரங்கட்குப் பரி வாரங்களும் ஆவர். சிவ வழிபாட்டு முறையே சத்திக்கும் ஆதலின், அதனை இங்குக் கூறினார். இதனானே, எந்தச் சத்தியை யார் வழி படினும் வழிபடப்படுபவளைத் தலைவியாகப் பொகுட்டில் வைத்துப் பரிவாரங்களை இதழ்களில் நிறுத்திப் பூசித்தல் வேண்டும் என்பது கொள்ளப்படும்.
இதனால், சத்தியை அகத்தும், புறத்தும் ஆசனத்தில் வைத்து வழிபடுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

பொழிப்புரை :

இறைவியாகிய பராசத்தி மேற்கூறிய மனோன் மனியாய்ப் பூசிக்கப்படும் பொழுது கன்னித் தன்மையைக் குறிக்கச் சிலம்பும், வளையலும் அணிந்தவளாகவும், உலகத்தைக் காக்கின்ற செயலைக் குறிக்கச் சங்கு சக்கரங்களை ஏந்தியவளாகவும், எட்டுத் திசையும் நிறைந்தவளாதலைக் குறிக்க எட்டிதழ்த் தாமரையின் நடுவில் உள்ளவளாகவும் கருதப்படுவாள்.

குறிப்புரை :

``எண்டிசை யோகி``, ``எண்டிசை தாங்கும் அருட் செல்வி`` என்பன உடம்பொடு புணர்த்தலாய் நின்றமையின், இதற்கு இவ்வாறுரைத்தல் கருத்தாதல் அறிக. யோகி - பொருத்தி யிருப்பவள்.
மேற்கூறிய மனோன்மனியைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவளாகிய சத்திக்கு உரிய பூசைப் பொருள்களாவன. சந்தனம் குங்குமம் பனிநீர் முதலிய நறுமணப் பொருள்கள். சூடத்தக்க மிக்க பல மலர்கள், ஐவகை வாத்தியங்கள், ஒலிக்காத மணிபோல வாய்க்குள்ளே சொல்லப்படும் மந்திரங்கள் முதலியனவாம்.

குறிப்புரை :

பூசனைப் பொருள்களில் சிறந்தன சிலவற்றை எடுத்தோதி, ஏனையவற்றை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். வழக்கம் பற்றி அவற்றை உணர்தல் எளிதாதலின், ``தேசந் திகழும் திரிபுரை` என்பதனை முதற்கண் வைத்து, `திரிபுரைக்கு` என உருபு விரித்துக்கொள்க. காண். முன்னிலையசை.
இதனால், சத்தி வழிபாட்டிற்குரிய பொருட்படை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.

பொழிப்புரை :

உலகில் காணப்படுகின்ற பலப்பல தெய்வங் களும், வேறு வேறு வகையாய் அணியப்படுகின்ற அணிகலங்கள் பலப்பலவும் ஒரு பொன்னின் வேறுபாடேயாதல் போலத் தோன்று வனவாம். அவைகளுள் முதல்வராகப் போற்றப்படுகின்ற மும் மூர்த்தி களாயும் காணப்படுந்தலைவி உலக காரணியாகிய ஆதி சத்தியே.

குறிப்புரை :

`வெவ்வேறாய், மாயனுமாய்` என ஆக்கம் வருவிக்க. ``பூணும் பல பலவும்`` என்னும் முற்றும்மை தொகுத்தல் பெற்றது. ``பொன்`` என்றது அதன் காரிய வேறுபாட்டினை. `தெய்வங்கள் தோற்றத்தில் பலப் பல வாய்க் காணப்படினும் பொருளால் ஒன்றே` என்பது முன் இரண்டடிகளால் கூறப்பட்டது. இதனை எடுத்தோதியது, `சத்தி ஒருத்தியே முதல்வி` எனப் பின்னர் வருவதனை நிறுவுதற் பொருட்டு. வேறுபட்டுக் காணப்படுகின்ற பல தெய்வங்களும், `சம்பு பட்சமும், அணுபட்சமும்` என இருதிறத்தன என்பது முதல் தந்திரத்தில் (90) காட்டப்பட்டது. சிவபுண்ணிய மிகுதியால் உருத்திரன் மாலும், அயனும் ஆகிய ஏனை இருவர்போல ஒரோவழியும் மயக்கம் எய்துதல் இலனாயினமையின் அவனைச் சிவனாகவே கூறுதல் உண்டு என்க. ``சிவன்`` முதலிய மூன்றிலும் உள்ள உம்மைகள் எண்ணோடு உயர்வு சிறப்பு. `மும்மூர்த்திகட்கும் முதல்வி யாதல் கூறவே, ஏனையோர்க்கு முதல்வியாதல் கூற வேண்டா` என்பது கருத்து. சத்தியது முதன்மையை விதந்தது. அவளை வழிபட்டால் அனைத்துத் தேவரையும் வழிபட்டதாம் என்பது உணர்த்துதற்கு என்க.
இதனால், மேற்கூறிய வழிபாட்டின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.

பொழிப்புரை :

தூலம், சூக்குமம் முதலாக வகுத்துச் சொல்லப் படுகின்ற மந்திரங்களுள் காரண மந்திரத்தை ஓதுவோரது உள்ளக் கமலத்தில், பூரக கும்பக இரேசகங்களாகின்ற பிராணாயாமத்தால் விளங்கி நிற்கின்ற சத்தி, சத்தனாகிய சிவனது நடுவில் உள்ளவளாய் இருப்பாள். இவ்வாறு சொல்லுகின்ற வேதப் பகுதி வேதத்தின் முடிவாய் விளங்குவதாம்.

குறிப்புரை :

`பூரகம், கும்பகம், இரேசகம்` என்பன திரிவுபெற்று நின்றன. `இரேசகத்தால்` என உருபு விரிக்க. ``நடு`` என்பதன்பின், ``இருப்பாள்`` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதனுள், ``மந்திரம்`` என்றது பஞ்சாக்கரத்தை. ``காரணம்`` என்றதும், மகா காரணமாம். அஃது ஒன்பதாந் தந்திரத்தில் பஞ்சாக்கர பேதங்களைக் கூறுமிடத்து ஈரெழுத்தின் ஈரடுக்காக எடுத்தோதப்படுதல் காண்க. அதன்கண் சத்தி சிவத்தின் நடுவிலும், சிவம் சத்தியின் நடுவிலும் இருப்பினும் இங்கு இயைபு பற்றிச் சத்தி சிவத்தின் நடுவில் இருத்தலையே குறித்தார். ஓதுபவரது வினை அவரது உள்ளத்தின்மேல் ஏற்றப்பட்டது.
``உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீஇருத்தி`` 1
என்பது இம் மகாகாரண பஞ்சாக்கரத்தின் மேலும்,
``அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்``
என்பது மூன்றெழுத்தாய் நின்று அடுக்கிவரும் காரண பஞ்சாக் கரத்தின்மேலும் நோக்குடையன என்றல் மரபு. இதனின் மிக்க மந்திரம் இன்மையின் இதனைக் கூறும் உபநிடதமே வேத முடிவாகும் என்றார். மகாகாரண பஞ்சாக்கரத்தைச் சத்தி பரமா ஓதுங்கால் சத்தியெழுத்தை நெடிலாக ஓதுதல்வேண்டும் என்பது உய்த்துணர்ந்து கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாட்டின் மந்திரங்களுள் தலையாயது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.

பொழிப்புரை :

கைகளில் மோதிரவிரல், சிறுவிரல் முதலாகத் தொடங்கி வலமாகப் பெருவிரலின் நுனியால் வரைகளைத்தொட்டு உருவை எண்ணி நடுவிரலில் முடிக்கும் வகையால் மீள மீள உருவேற்றப்படும் தமிழ்மந்திரம் முதலிய மந்திரங்களை அவ்வவற்றிற் குரிய தெய்வங்களாகவே தெளிந்து வழிபடுங்கள்; (பயன் விளையும்.) இதனை எங்கள் நந்திபெருமான் நான் உணரும் வண்ணம் உரைத்தருளினார்.

குறிப்புரை :

நடுவிரலிற் சிறியவாதல்பற்றி மோதிரவிரலையும் `சிறுவிரல்` எனப் பொதுப்படக் கூறினார். எனவே, `தீரச் சிறியவிரல்` எனக் கூறவில்லை என்க. கையில் உள்ள ஐந்து விரல்களில் பெருவிரல் எண்ணுவதும், ஏனை நான்கு விரல்களும் எண்ணப்படுவனவுமாய். நிற்கும். ஒவ்வொரு விரலிலும் மும்முன்று கீற்றுக்கள் உள; எண்ணப் படும் விரலின் வரைகள் பன்னிரண்டில் நடுவிரலிலும், மோதிர விரலிலும் உள்ள நடுக்கீற்று இரண்டும் எப்பொழுதும் தீண்டப்படா. `அவையிரண்டும் சிவமும், சத்தியும்` என்பர். அவை ஒழிய ஏனைப் பத்துக் கீற்றுக்களை மோதிரவிரலின் அடிக்கீற்று முதலாகத் தொடங்கி வலமாகச் சுற்றிவந்து நடுவிரலின் அடிக் கீற்றில் முடிக்க உளவாகின்ற உருக்கள் பத்தாம். இவ்வாறு பெருவிரலின் நுனியால் மீள மீளச் சுழன்று எண்ண உருக்கள் பலவாக ஏறும். `எட்டு` என்னும் உருவும் உண்மையில் பத்தாகவே எண்ணப்படும். அவ்வாறு எண்ணப்படுத லால் இடையில் நிகழ்ந்த குறை நிரம்பும் என்பது கருத்து. இனி எட்டு வேண்டியவிடத்துச் சிறுவிரலின் அடி தொடங்கிச் சென்று சுட்டு விரலின் அடிக்கண் முடித்தல் வேண்டும் என்பாரும் உளர்.
செபமணியிலன்றிக் கைவிரல்களால் மந்திரங்களைக் கணிக்கும் வகையில் பலவேறுமுறைகள் பலவிடத்து உள்ளன. அவற்றுள் ஒன்றனை நாயனார் விதந்தார்.
`மேற்கூறிய பத்துக் கீற்றுக்களோடு பெருவிரலில் இரண்டு கீற்றுக்களைக் கூட்டிப் பன்னிரண்டு பன்னிரண்டாக ஒன்பது முறை கணிக்க நூற்றெட்டு உருவாகும் என்பாரும், `சிறு விரலின் அடி தொடங்கிப் பெருவிரலின் ஒரு கீற்றேகொண்டு நடுவிரல் அடிமுடியப் பத்தாகும்` என்பாரும் இங்ஙனம் பலதிறத்தர் கிரியையாளர் என்க.
தமிழ் மொழியிலும் மந்திரம் உண்மையை வலியுறுத்துபவர் இந் நாயனார் ஆதலின் ``செந்தமிழாதி`` என்றார். ``செந்தமிழாதி மந்திரங் களை` என்க. ``தமிழ்`` என்பது அதனாலாகிய மந்திரத்தைக் குறித்தது.
தமிழ்ச் செய்யுட்கே இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர் அதன் செய்யுட்களை ஏழாகவகுத்து, `அவற்றுள் ஒன்று மந்திரம்` எனக்கூறி,
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப`` 1
என நூற்பாச் செய்வாராயின், அந்நூற்பாவினுள் ``மந்திரம்`` என்றது வடமொழி மந்திரமே என உரைத்தல் உரையாதல் எங்ஙனம்? இந்நூற் பாக் கூறும் மந்திரம் தமிழ் மந்திரமே என்பதில் உரையாளர் யாவரும் ஒத்த கருத்தினர் ஆதலை அவர் உரைநோக்கி உணர்ந்து கொள்க. நவம் - புதுமை; அஃதாவது முன்னர் அறியாதிருந்து பின்னர் அறிதல்.
இதனால், மந்திரங்களைக் கணிக்கும் முறைகளுள் எளிதான ஒன்று இயைபு பற்றிக் கூறப்பட்டது.
இதற்குப் பிறர் இவ்வாறன்றி, வயிரவி மந்திரங்களால் கர நியாசம் செய்யுமாறு கூறியதாகக்கொண்டு, அம்மந்திரங்களை இங்குத் தந்துரைப்பாரும், பஞ்சாக்கரத்தால் இருவைகப்படக் கரநியாசம் செய்யுமாறு கூறியதாகக் கொண்டு, அம்மந்திரத்தைத் தந்துரைப் பாரும் ஆவர். அவரெல்லாம், ``செந்தமிழாதி`` என்பதற்கு, `தமிழுக்கு முதல்வியாகிய வயிரவி` என இயைபின்றியும், `செந்தமிழாவது ஆகமம்` எனவும் `செந்தமிழ் மந்திரமாவது திருவைந்தெழுத்தே` எனவும் தத்தமக்கு வேண்டியவாறே உரைத்துக் கொள்வர். அவ் வுரைகளது தன்மை ஓர்ந்துணர்க.

பண் :

பாடல் எண் : 16

உரைத்த நவசக்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

பொழிப்புரை :

``மேல்,`` ``பூரித்த பூவிதழ்`` (1067) என்னும் மந்திரத் திற் சொல்லப்பட்ட ஒன்பது சத்திகளுள் இறுதியதாகிய `மனோன்மனி` என்ற ஒன்று முடிவாய் நிற்க. மற்றைய எட்டினையும், வரிசைப்பட்ட எட்டு இடங்களில் வைத்துஒன்றன்பின் ஒன்றாக முறையே எண்ணிப் பிராசாத கலைகள் பன்னிரண்டில் இறுதி எட்டோடும் அவற்றை முன்னே கூறிய நந்திபெருமான், அவ்வாற்றானே வரிசைப்பட நியமிக்கப்பட்ட முறையில் வழிபாட்டு முறையை ஆக்கியருளினார்.

குறிப்புரை :

`ஆதலின் அங்ஙனமே அச்சத்திகளை வழிபடுக` என்பது குறிப்பெச்சம். இராசி - இடம். `இராசிக்கண்` என ஏழாவது விரிக்க. ``நெடுமுறை` என்பது, `நெடுங்கணக்கு` என்பது போல இடை யில் ஒன்று விடாது கூறுதலைக் குறித்தது. `பிராசாதம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `பிரைச்சதம்` என்பதும் பாடம். `பிராசாதம்` என்றது அதன் கலைகளை, இங்குக் குறிக்கப்பட்டது, துவாதச கலாப் பிராசாதமே, அதன் இறுதி எட்டுக்கலைகளாவன உன்மனைக்குக்கீழே உள்ளனவாம். அவை, `விந்து, அருத்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, சமனை என்பன. `இவற்றிற்கு உரிய இடங்கள் ஆஞ்ஞை முதலாக மேலே உள்ளவை` என்பதை முன்னைத் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத் தொடக்கத்தே விளங்கக் கூறினோம். கிழக்கு முதலாக ஒரு திக்கிற்கு இரண்டாக உள்ளன என மேற்காட்டிய எட்டிதழ்களில் வாமை முதலிய எட்டுச் சத்திகளையும், பொகுட்டில் மனோன்மனியையும் வைத்து எண்ணுங்கால் விந்து, முதலிய பிராசாத கலைகளோடு ஒன்றுபட வைத்து எண்ணுதல் வேண்டும் என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இவ்வாறு எண்ணு தலால் சத்தி வழிபாடு பிராசாத யோகமாயும் அமையும் என்பது கருத்து. `எட்டோடும் நிரைத்து` என்க. நியதி - நியமிக்கப்பட்டமுறை. நியமம் - வழிபாட்டுமுறை, செய்தான் - ஆக்கினான். சத்தியை அஃறி ணையாகக் கூறுதலும் உண்மையின் இங்கு அவ்வாறு கூறப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாட்டினைப் பிராசாத முறையிற் செய்யின் சிறப்பாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.

பொழிப்புரை :

மாலையையணிந்த கூந்தலை உடையவளும், அருள் பொழியும் கண்களை உடையவளும், உயிரின் அறிவில் பொருந்திய வலிய ஆணவ இருள்போகும்படி ஞான ஒளியைப் பரப்பு கின்ற இளமையான கொடிபோல்பவளும் ஆகிய வயிரவி, வெளியில் ஓமத்தீ வடிவாயும், உள்ளே மூலாக்கினி வடிவாயும் பொருந்தி, விந்துத் தானத்து அமுதத்தோடு இருதயத்தில் வந்து நின்றதை, நீ காண்பாயாக.

குறிப்புரை :

பின்னர், உள்ளெழுதல் கூறப்பட்டமையால், முன்னர் வெளியில் எழுதல் பெறப்பட்டது. மூலாக்கினி கருத்துப் பொருளா தலின், அதனை நுண்ணிதாகக் கூறியதோடு `புகை` எனவும் கூறினார். `மேவி` என்பது ஈறுகெட்டு நின்றது, `விந்து` என்பது வலித்தல் பெற்றது.
இதனால், சத்தி வழிபாட்டினைப் புறத்தும், அகத்தும் அழலோம்பல் முறையால் செய்க என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.

பொழிப்புரை :

இருதய மந்திரமும், சிரோமந்திரமும் `நம:` என்னும் முடிபினை உடையன. சிகா மந்திரமும் `வஷட்; என்னும் முடிபினை உடையது.

குறிப்புரை :

`இருதய மந்திரமும் `நம` என்று கண்டு பேசும்; தலை மேல் ``மந்திரமும்`` `நம` என்று கண்டு பேசும், சிகை `வம்சம்` என முடிவு கொள்க. ``மந்திரமும்`` என்பது, ``தலைமேல்`` என்பதனோடும் சென்று இயையும். `வம்,சம்` என்பன வகாரத்தையும், ஷகாரத்தையும் குறித்து `வஷட்` என்பதை உணர்த்தின. ``பேசும்`` என்பது, `பேசப் படும்` என்னும் பொருளது. ``வேணு நடுவு மிக நின்ற ஆகுதி பூணும் நடு என்ற`` என்றது, `மூங்கிற் குழல்போலும் சுழுமுனை நாடியின் உள்ளே ஓங்குகின்ற மூலாக்கினியை எதிரேற்றுக்கொள்கின்ற நடுவிடமாகிய உச்சிக்கு உரியது எனப்பட்ட சிகை வம்சம், என்றவாறு.

பண் :

பாடல் எண் : 19

சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி
பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.

பொழிப்புரை :

சிகா மந்திரத்தில் உள்ள `வஷட், என்னும் முடிபு சிறிது வேறுபட்ட `வௌஷட்` என்பது கவச மந்திரத்திற்கும், `பட்` என்பது அத்திர மந்திரத்திற்கும் முடிபாகும். நேத்திரங்கட்குரிய மந்திரத்திற்கு, பொதுவாயுள்ள, `நம:` என்பதே முடிபாம். நேத்திர நியாசத்தில் திரிசூல முத்திரை காட்டல் வேண்டும். சத்தி வழிபாட்டில் யோனி முத்திரை காட்டலும் பொருந்தும்.

குறிப்புரை :

இவ் இரண்டு மந்திரங்களிலும் எடுத்துச் சொல்லப் பட்டவை, `இருதயாய நம:, சிரசே நம:, சிகாயை வஷட், கவசாய, வௌஷட், அஸ்த்ராய பட், நேத்ரோப்யோந் நம:` என்னும் அங்க மந்திரங்கள் ஆறுமாம். ``கொண்டு`` என்பதை, `கொள்ள` எனத் திரிக்க ``பகை நின்ற`` என்பது, `பகைக்கு - பகையை அழித்தற்கு - நின்ற, என்றவாறு, ஆதி - வயிரவி. `ஆதியிடத்து நின்ற` என்க, `பாரென்று` என்பது பாடம் அன்று. தொகை - பொது `நேத்திரம் தொகையோடு நின்றன` என மாறிக் கூட்டுக. ``நின்றன`` எனப் பன்மை கூறியதனால் அது பன்மை வாசகமாகச் சொல்லப்படுதல் கொள்க. `வருவித்தல்` என்பது இடைக் குறைந்து, `வருத்தல்` என நின்றது. `சிரோ மந்திரம் சுவஹாந்த மானது`, என்பாரும் உளர். `நம:` பொதுவாக எல்லாவற்றிற்கும் உரியதே. அஃது ஒன்றே பட இம்மந்திரங்கட்குப் பொருளுரைப் பாரும் உளர். அவர், `வம்சம்` என்பதையும், `அந்தம்` என ஓதித் தமக்கு வேண்டியவாறு உரைத்துப் போவர்.
இவ் இரண்டு மந்திரங்களாலும் அங்க மந்திரங்கள் கூறப்பட்டன, வழிபாட்டில் இவை அங்க நியாசத்திற்கும், பிறவற்றிற் கும் பயன்படுதல் கருதி.
சம்மிதா மந்திரங்களுள் பிரம மந்திரம் ஐந்தும் சத்தி வழிபாட்டில் சத்திக்கு ஏற்பச்சொல்லப்படும். அங்கமந்திரங்கள் அவ்வாறன்றி எவ்விடத்தும் ஒருபெற்றியவாயே வரும் என்க.

பண் :

பாடல் எண் : 20

வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.

பொழிப்புரை :

கைகளை உள்முகமாகக் கொண்டு முயற்சியோடு சிறுவிரல் இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக மாறி வைத்து அணிவிரல்களையும் அவ்வாறே சுட்டு விரல்களால் மாறிப்பிடித்து மோதிர விரல்களின் மேல் நீண்டதாகிய நடுவிரல் ஒவ்வொன்றையும் நிமிர்த்திப் பொருந்த வைத்துப் பெருவிரல் இரண்டையும் மாற்றமின்றி உள்ளே புகச் செய்தபின், நேத்திர மந்திரத்தைச் சொல்லுக.

குறிப்புரை :

இவ்வாறு அமைப்பது யோனிமுத்திரையாம். இது பஞ்சமுக முத்திரையினின்றும் சிறிதே வேறுபடுதல் அறிக. மாறி வைக்கப்பட்ட சிறு விரல்களைப் பின் நடு விரல்களின் மேல் சார்த்த வேண்டுதல் காண்க. மேற்கூறிய இரண்டில், `திரிசூல முத்திரை நன்கு அறியப்பட்டது` என்னும் கருத்தால். ஏனை ஒன்றன் அமைப்பையே கூறினார். சிலர் வலக்கையில் உள்ள சிறுவிரலைப் பெருவிரலால் வளைத்துப்பிடித்து அவற்றின் நடுவில் உள்ள மூன்று விரல்களை நிமிர்த்திக் காட்டும். ஆக்ரகண்ட முத்திரையையே `நேத்ர முத்திரை` என்றும், `திரிசூல முத்திரை` என்றும் கொள்வர். எனினும், இரு கை விரல்களையும் நன்கு கோத்துப் பிடித்துச் சிறுவிரல்கள், நடுவிரல்கள், பெருவிரல்கள் என்பவற்றை நிமிர்த்தித் தம்முள் பொருந்த வைத்துக் காட்டுவதே திரிசூல முத்திரை என்க.
`வருத்தத்தோடு சிறுவிரல் இரண்டும் மாறிப் பொருந்தி` எனவும், `நெடிதாகிய நடுவை நெரித்து ஒன்ற வைத்து` எனவும் கூட்டுக. `புக்கபின்` என்பது, `புக்கு` எனத் திரிந்தது.
இதனால், அரிதில் அறியப்படுவதொரு முத்திரையை அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

பொழிப்புரை :

சத்தி வழிபாட்டில் பிராண வாயு வசப்படுதற்கு உரியதாகிய உபதேசத்திற்குச் சொல்லப்பட்ட மந்திரமாவது, இகர உயிர், அம்ச மந்திரத்தினின்று பிரித்துத் தனியே தயக்கம் இல்லாமல் சொல்லப்படுகின்ற சகர மெய்யை முன்னர்க் கொண்டு, இறுதியில், முடித்துச் சொல்லப்படும் விந்துவாகிய மகாரத்தையும் ஏற்று நிற்கச் சொல்லப்படுவதாம்.

குறிப்புரை :

எனவே, `சிம்` என்பதே அம்மந்திரமாதல் அறிக. மூன்றாம் அடியை முதற்கண்வைத்து உரைக்க. `மந்திரம்` என்னும் வட சொல்லில் `இகரம் சகாரத்தை முன்கொண்டு` என்க. இங்கு, `முன்` என்பது, புணர்ச்சிவிதிகளின் முறைப்படி, `இடமுன்` என்க. வாசிப் பிராணன் - யோக நூல்களில் `வாசி` எனவழங்கும் பிராணன். `பிராணனுக்கு` என்னும் நான்காவது தொகுத்தலாயிற்று, கூசுதல், இங்கு, அடங்கு தலின் மேற்று. ``கூவு`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய்ச் செயப்படுபொருள் மேல் நின்றது. இனி ஏவல் முற்றாக்கி, அது கருத்து வகையால் பெயர்ப் பயனிலையாய் நின்றதாக உரைத்தலுமாம்.
இதனால், சத்தி வழிபாட்டில் கொள்ளப்படும் பிராணாயாம மந்திரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய பிராணாயாம மந்திரத்தைச் சொல்லிப் பிராணாயாமம் செய்த அடியவன், பின்பு மாயையின் அடையாளமாகக் காட்டுகின்ற சங்க முத்திரையின் நடுவில் சத்தி விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகள் அனுவாதம். கையை நிமிர்த்திப் பெருவிரல் தவிர மற்றைய நான்கு விரல்களையும் சேர்த்து நீட்டிச் சிறிது வளைத்துப் பெருவிரலை வளைத்து அதன் நுனி சுட்டுவிரலின் அடியில் பொருந்த வைப்பதே சங்க முத்திரையாம். `இது மாயையின் விரிவைக் குறிக்கும்` என்பது இங்குக் கூறப்பட்டது. இம்முத்திரை தேவர்கட்கும், தேவகணங்கட்கும் செய்யும் தர்ப்பணத்திற்குக் கொள்ளப் படுவது. இதனால் விரல் நுனிகளின்வழிச் செல்லும் நீர் `தேவதீர்த் தம்` எனப்படும். `கணபதி, கந்தர், தேவர், நந்தி, மகாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் இவர்களுக்கும் இவ்வாறே தர்ப்பணம் செய்யப்படும் ஆகையால், `சங்க முத்திரையின் நடுவில் தேவி விளங்கு வாள்` என்றார். எனவே, `பிராணாயாமத்தின் வழியான தியானம், செபம் இவைகளோடு தேவிக்குத் தர்ப்பணமும் செய்க என்றாராயிற்று.
``கூவிய சீவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து, `மாயையாக விரிக்கின்ற சங்க முத்திரை நடுவுள் தேவி திகழ்ந்துநின்றாள்` என முடிவுசெய்க.
இதனால், சத்தியது தர்ப்பணம் விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

பொழிப்புரை :

துன்பத்தை நீக்க முன்னிற்கும் வயிரவி நீல நிறத்தை உடையவள்; இரவில் உலாவுபவள்; மனமாகிய ஒன்றும், வாக்கும் காயமுமாகிய ஏனை இரண்டும் ஒருவழிபட்டோரது உள்ளத்தில், தானே விளங்கி அருள்புரிபவள்; சிவபிரானுக்கே உரியசத்தி; அவளைத் துதித்து, அவளது நல்ல திருவருளை இவ்வுலகத்தில் பெற விரும்புங்கள்.

குறிப்புரை :

இரவில் உலாவுதல் தீயவரை ஒறுத்தற்கு. `மனம்` என்பதும், `உள்ளம்` என்பதும் வேறு வேறாதலை அறிக. ``தேவர் பிரானுக்கு நாயகி`` என்றது, `வயிரவி சிவசத்தியே`` என்பதனை வலி யுறுத்தியதாம். இத்தொடர் ஒருபெயர்த்தன்மைப்பட்டு, `சென்றருள்` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. `நன்றாகிய அருள்` என்க. ``ஞாலத்து நாடிடும்`` என்றது, `உலகில் பகை முதலிய துன்பங்கள் நீங்கி வாழலாம்` என்றவாறு.
இதனால், வயிரவி வழிபாடு உலகில் வரும் துன்பங்களை நீக்குவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.

பொழிப்புரை :

முக்கண்ணியும், சோதி (ஒளி) வடிவானவளும், பராபரையும், `ஆதி` என்னும் பெயரொடு முதல்வியாய் நிற்பவளும் ஆகிய வயிரவி தனது ஆற்றலால் வேதம் சராசரப் பொருள்கள், ஐம்பூதம், நான்குதிசை, இருள், ஒளி, பலவகை உடம்புகளாய்த் தோன்றுகின்ற பல உயிர்கள் முதலிய எல்லாமாய் நிற்கின்றாள்.

குறிப்புரை :

மேல், `திரிபுரை` எனப்பட்ட அவளே இங்கு, `வயிரவி` எனப்படுகின்றாள் என்பது உணர்த்துதற்கு முன்னை யதிகாரத்தில், ``வைத்த பொருளும்`` (1042) என்னும் மந்திரத்திற் கூறியதனையே இங்கும் கூறினார். பர+ அபரை = பராபரை; மேலாய பொருளும், கீழாய பொருளுமாய் நிற்பவள். ஒடு உருபு ஆனுருபின் பொருளில் வந்தது.
இதனால், வயிரவி உலகப் பயனைத் தருதற்கு உரியவள் ஆமாறு குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.

பொழிப்புரை :

தென்கோடியாகிய குமரித்துறையில் நிலைபெற் றிருப்பவளும் எப்பொருட்கும் ஆதியுமாகிய வயிரவியைத் துதித்தும், தியானித்தும் நின்றால், உடலில் உள்ள உயிர் சிவமாகும். அறியாமை பொருந்திய இவ்வுலகில் பலவாறு பிறக்கும் பிறவிகள் ஒழியும். அவளது வடிவு எண்ணிறந்த வகையினது ஆகலின், அஃது ஒன்றாயே இருத்தல் கூடுமோ!

குறிப்புரை :

எவ்விடத்தும் சிவமும், சத்தியும் பிரிப்பின்றியிருப் பினும், சிலவிடத்துச் சிவத் தன்மையும், சிலவிடத்துச் சத்தித் தன்மை யும் முனைந்து தோற்றும். அவ்வாற்றால் வடக்கில் கயிலைமலை, சிவ மலையாகின்றது. அதுபோலத் தெற்கில் `குமரி` என்னும் மலை சத்தி மலையாய் இருந்தது. காலவேறுபாட்டால் அம்மலையைக் கடல் தன்னுள்ளே அகப்படுத்து வடக்கில் மிகப்பரந்து நின்றமையின், அதன் வடகரையில் சத்திகுமரியாய் எழுந்தருளியிருக்க, அக் கடல் முனை யும் `குமரி முனை` எனப் படுவதாயிற்று. அவ்விடம் சிவனுக்குக் கயிலைபோல, உமைக்கு மிகச் சிறந்த இடமாதலை உணர்த்தற்கு வயிரவியை, ``கன்னித் துறைமன்னி`` என்றார். இறையன்புடையோர் யாவரும் கயிலையை அணுகிக் காணலையும், குமரி தீர்த்தத்தில் (கடலில்) முழுகுதலையும் ஒருபெற்றியவாக மேற்கொள்ளல் இன்றும் நிகழ்வது. இதனால், ஒரு கருத்துப் பற்றிச் சிவனை, மேல், (1061, 62) ``தென்னன்`` எனக் குறித்த நாயனார், தேவியை இங்கு, ``கன்னித் துறை மன்னி`` என்றார். பின்னரும், (1088) ``இனிய தென்மூலை இருக்கும் குமரி`` என்பார். ``நல் ஆவடு தண்டுறை ஆவின் கிழத்தி`` (1105) எனவும் கூறுவார். பாயிரத்திலும், ``சிவன் ஆவடு தண்டுறை சீருடையாள்`` (17) என்றார். ``மன்னி`` என்பது பெயர். இதில் ஐயுருபு தொகுத்தலாயிற்று. கன்னித் துறையைப் பிறரெல்லாம் உருவகமாக்கித் தாம் தாம் வேண்டும் பொருளை உரைப்பர். `சத்தியது வடிவு ஒன்றாகாது பலவாதல் செயல் வேறுபாடு நோக்கியாதலின், அவற்றை அவ்வாறே கொள்க` என்பார், ``ஓத உலவாத கோலம் ஒன்றாகுமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை வினா. இதனால், வயிரவி சிவ சத்தியேயாதல் இங்கும் தெளிவிக்கப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாடு வீடுபேற்றினையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

பொழிப்புரை :

`அழகிய கூந்தல், வளைந்த புருவம்` நீல நிறத்தை உடைய குவளை மலர்போலும் கண்கள்` களிப்பைத் தருகின்ற இனிய அமுதம் போன்ற ஆனந்தமே உருவான அழகிய வடிவம், இவைகளை உடைய வயிரவியே எப்பொருட்கும் மேலான சிவத்தை உயிர்கட்கு வெளிப்பட்டுத் தோன்றச் செய்தாள்.

குறிப்புரை :

`சத்தி வழியாக அன்றிச் சிவத்தை நேரே காணுதல் இயலாது` என்பது தோன்ற, நேரே சென்று காணுதலினின்றும் பிரித்த, `சுந்தரியே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. அவ் ஏகாரத்தை இரட்டுற மொழிந்து தேற்றேகாரமாக்கி, `உலகப் பயனைத் தருகின்ற வயிரவியே மெய்ப் பயனையும் தருகின்றாள்` என்பது கொள்க. மெய்ப்பயன் கருதி வழிபடுவோர் அவளைச்சாந்த ரூபியாகக் கண்டு வழிபடுக என்பார், ``கோலக் குழலி`` என்பது முதலாக உடம் பொடு புணர்த்துக் கூறினார்.
இதனால், வயிரவியையே சாந்த ரூபியாகக் கண்டு வழி பட்டுப் பேரின்பத்தினைப் பெறுதல் கூடுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.

பொழிப்புரை :

முன்னே சிவத்தை வெளிப்படுவித்துக் காணச் செய்து, பின் அக்காட்சியின் பயனாக முற்றறிவையும், முற்றறிவின் பய னாகத்தெளிவையும், தெளிவின், பயனாக இன்ப அனுபவத்தையும், அவ்வனுபவத்தின் பயனாக, சிவத்தைவிட்டு நீங்காது அதனுள்ளே அடங்கியிருத்தலையும் முறையே பெறச் செய்து என்னை உய்யக் கொண்டாள் வயிரவி.

குறிப்புரை :

இதனால் சத்தி மெய்ப்பயனைத் தரும் முறை, நிரல்படக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

பொழிப்புரை :

வணங்குவாரது உச்சிமேல் நிற்பவளாகிய `வயிரவி` என்னும் நல்ல சத்தி, அளவிறந்த வடிவுகளைக் கொண்டாள், கொண்டு, அக இருளை நீக்குதற்கு `அறுபத்து நான்கு` எனப்படும் கலைத்துறைகள் அனைத்திலும் நூல்களை ஆக்கினாள். புற இருளைப் போக்குதற்கு வானத்தில் விளங்கும் ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் படைத்தாள்.

குறிப்புரை :

`உயிர்களின் பொருட்டு அவள் அளித்தன தாம் பல, என்றவாறு. `அதனால், அவளை மறாவது வழிபடுதல் உயிர்கட்குக் கடன், என்பது குறிப்பெச்சம். மாலை, மொழிமாலை. விண்டனள் - தோற்றுவித்தாள். தண்மை - தணிவு; வணக்கம். வணங்குவாரது தணிவு, அவரது தலைமேல் ஏற்றிச் சொல்லப்பட்டது.
இதனால், சத்தியது உதவியை உயிர்கள் மறக்கலாகாமை கூறப்பட்டது.
``அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம்`` 1
எனச் சிவஞானச்சித்தி கூறும்.

பண் :

பாடல் எண் : 29

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

``பைய`` என்றது, `இயன்ற அளவு` என்றவாறு, அவளது பெருமை முழுவதையும் அறிந்து துதித்தலும், அப்பெருமை யளவிற்குத் தக வழிபடுதலும் ஒருவர்க்கும் கூடாமையின் ``பைய`` என்றார். ``மலையளவு சுவாமிக்குக் கடுகளவு கர்ப்பூரம்`` என்பது பழமொழி.
``ஏழை அடியார் அவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசன்`` 2
என்பதில் ஞானசம்பந்தர். அடியார்களை, `ஏழை அடியார்`` என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றி,
``யானறி யளவையின் ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்`` 3
என்றார் முருகாற்றுப்படையிலும், நூக்குதல் - போக்குதல். பவம் - பிறப்பு.
இதனால், சத்தியது பெருமையும், உயிர்களது சிறுமையும் கூறுமுகத்தால், உயிர்கள் அவளை வழிபடும் கடப்பாடுடையன வாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

வேய் - மூங்கில். விரை - நறுமணம். ஏய - பொருந்திய. குழல் - கூந்தல். `பிறையைச் சூடிய ஏந்திழை` என்க. பிறைசடையில் உள்ளது. சூலினி - சூலத்தை ஏந்தியவள். ஏய் உள்ளம் - தான் இருத் தற்குப் பொருந்திய உள்ளம்; அஃதாவது, அறிவும், அன்பும் நிரம்பிய உள்ளம். ``சுந்தரி`` என்பதை ``குழலி`` என்பதன் பின்னர்க் கூட்டி, அது காறும் ஒருவகைக் கோலமும், பின், ``சூலினி`` என்பது காறும் வேறொரு வகைக் கோலமும் ஆக இருவேறு வடிவங்களைக் கூறினமை கொள்க. முன்னது அமைதிக்கோலமும், பின்னது கடுமைக் கோலமுமாதல் அறிக. எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இது முதல் ஐந்து மந்திரங்களால் சத்தி தமக்கு அருள் புரிந்த வாறு கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 31

இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

பொழிப்புரை :

தென்கோடியில் உள்ள இனிய கடற்கரையில் எழுந் தருளியிருக்கும் குமரியாகிய வயிரவி, தன்னோடு இணை ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவி; அதனால், அவள் ஒருத்தியே உலகத்திற்கு முதல்வி. அவள் என்னை உலகச் சார்பினின்றும் நீக்கித் தனியனாகச் செய்து, பின் தனது துணைமையில் இருக்கவைத்து, இன்பத்தை மிக உண்டாக்கி, இவ்வாறு என் உள்ளத்தில் நின்று பயனளித்தாள்.

குறிப்புரை :

மேல் (1082) ``கன்னித்துறை`` என்பதனை உருவக மாக்கி உரைத்தாரும், இங்கு, ``தென் மூலை`` என்றதற்கு அவ்வாறு உரைத்தலில் திட்பங் கொள்ளாது நெகிழ்ந்து, இப்பொருளையே கருதுவாராயினார். ``நனிபடுவித்து`` என்பதில் பகர மெய் விரித்தல். படுவித்தலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின் றேனே.

பொழிப்புரை :

`இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளுள் நடுவிலே ஓங்குகின்ற நாளம் போல்வதாகிய சுழுமுனை நாடியுள்ளே பொருந்தி நின்ற, இளையவளும், கன்னிகையும் ஆகிய சத்தியது பாடகம் அணிந்த சிறிய பாதத்திலே உள்ள பசிய பொன்னா லாகிய சிலம்பினது ஒலி அந்த நாடிக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக் கவும் அதனைக் கேட்கமாட்டாமல் உறங்குகின்றேன் என்றால், எனது அறியாமையை என்னென்பது.

குறிப்புரை :

``ஊடகம்`` என்பதை, `அகத்தூடு` என மாற்றிக் கொள்க. ``மேவி`` என்பது `மேவ` என்பதன் திரிபு. `மேவியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `உறங்குகின்றாளே` என்பது பாடம் ஆகாமை. அடுத்த மந்திரத்தின் முதலடியால் விளங்கும். `உயிரின் உறக்கத்திற்குக் காரணம் குண்டலியின் உறக்கமே` என்பது மேல் பலவிடத்தும் கூறியவாற்றால் அறியக் கிடத்தலின், அதனை இங்கு உய்த்துணர்ந்து கொள்ள வைத்தார். எனவே, `யோக முயற்சியால் மூலாக்கினியை எழுப்பி, அதனால் குண்டலியைத் துயில் உணரச் செய்தவழியே அச்சிலம்பொலியைக் கேட்டல் கூடும்` என்பது போந்தது. அங்ஙனம் கேட்குமாறு நடு நாடியிற் பொருந்தியிருத்தலே சத்தியானவள் உயிருக்கு அளிக்கும் கருணையாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 33

உறங்கு மளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு யான் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனோன்மனியாகிய சத்தி வந்து, ஒலிக்கின்ற வளையணிந்த தனது கைகள் என் கழுத்திற் பொருந்தும்படிக் கட்டிக்கொண்டு, விளங் குகின்ற ஒளியை உடைய தம்பலத்தை என் வாயில் உமிழ்ந்து உடனே `யான் சிறிது விழித்தபொழுது, ஐயா உறங்கியே காலத்தைக் கழிக் காதே` என்று சொல்லி, உறக்கம் வாராதிருத்தற்கு வழியும் செய்தாள்.

குறிப்புரை :

`கழுத்தாரப் புல்லியது, உலக உணர்வை மாற்றி அருட் சத்தியாய்ப் பதிந்தமை` எனவும், `தம்பலத்தை வாயில் உமிழ்ந்தது, உணர்வின்கண் விழிப்பை உண்டாக்கியது` எனவும் `உபாயத்தைச் செய்தது யோக முயற்சியை உண்டாக்கியது` எனவும் ஒட்டணி வகையால் உணர்ந்துகொள்க.
``கறங்கு வளைக் கை`` என்றதும் விழிப்பைத் தரும் செயலை மேற்கொண்ட ஆற்றலையேயாம். `யோகத்திற் செலுத்தும் சத்தி நிபாத நிலையை இங்ஙனம் நயம்படக் கூறுதல் சித்தர்மரபு` என்பது இதனாற் பெறுதும். பெறவே, இம்மரபுணராது, வாம மார்க்கத்தார் இதற்குச் சிற்றின்பப் பொருளே கொண்டு, குழியை வழியாக மயங்கி வீழ்வர் என்பது விளங்குவதாம்.


பண் :

பாடல் எண் : 34

உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.

பொழிப்புரை :

எல்லாவற்றுக்கும் வழியைத் தருகின்ற ஒப்பற்றவள் ஆகிய சத்தி எனது மனத்தில் உண்டாகின்ற தீங்குளையெல்லாம் அறவே போக்கி, அவ்விடத்தில் அன்புவிளையச் செய்து, நல்லாள் ஆகிய குண்டலியை விளங்கச் செய்கின்ற சுழுமுனை நாடியினுள்ளே எனது மனத்தை ஒடுங்கப் பண்ணி `இனி நீ எதற்கும் அஞ்சவேண்டா` என்று என் அச்சத்தை நீக்கியருளினாள்.

குறிப்புரை :

`சுபா` என்பது `சுவா` எனத் திரிந்தது. சுபா - சுபை; நல்லவள். துயிலுணர்ந்தாளாயின் எல்லா நலன்களையும் தருதல் பற்றிக் குண்டலியை `நல்லாள்` என்றார். அவாவுதலைச் செய்து அதனால் தீங்கு விளைக்கின்ற மனத்தை ``அவா`` என்றார், ஆகு பெயரால். இதன்கண் ஈரடி எதுகை வந்தது. இது வருதற்பொருட்டே `சுபா` என்பதை, ``சுவா`` எனத் திரித்து ஓதினார்.

பண் :

பாடல் எண் : 35

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

பொழிப்புரை :

`சத்தி தனது திருவடியையே தஞ்சமாகக் கருதிப் போற்றுபவர்க்கே அருள்புரியும் இறைவியாவாள்` என்று அறிந்தோர் சொல்லுவர்.

குறிப்புரை :

முதல் இரண்டு அடிகள் சத்தியின் இயல்புகளை விரித்தவாறு. ``அஞ்சொல் மொழி, செஞ்சொல் மொழி`` என்பவற்றை, ``இடைச்சொற் கிளவி, உரிச் சொற்கிளவி`` 1 என்றாற்போலக் கொள்க. சத்தி தவம் செய்தல், ஆட்டுவான் ஆடிக்காட்டுதல் போல்வதாம். செஞ்சொல் - என்றும் செவ்வே நிற்கின்ற (மாறுபடாத) சொல். மடப்பம் - இளமை; இது பெண்மையியல்பு. சீர் - அழகு. சேயிழை - நன்கமைந்த ஆபரணம். மடமொழி, சேயிழை என்பன அன்மொழித் தொகைகள். இன்சொல், அருளின் அடையாளம். `போற்றுவார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. போற்றுவார்க்கு அருளல் கடனாதலின், பிறர்க்கு அருளாமை கோட்டமன்றாம்.
``சலமிலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` 2
எனவும்,
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்`` 3
எனவும் போந்தவற்றையும் காண்க.
இதனால், `சத்தியைப் போற்றுகின்றவரே, அவளது அருளைப் பெறுதற்கு உரியர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.

பொழிப்புரை :

சத்தியானவள், அரிய உயிர்களின் பக்குவங் களையே எப்பொழுதும் நோக்கி நிற்பவளாதலின், இயல்பிலே அவள் ஞானத்தைத் தருகின்ற சாந்த ரூபியாயினும், உயிர்களது அபக்குவ நிலைபற்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் துன்பத்திற்கு ஏதுவான தொழில்களைச் செய்பவளாகின்றாள். எனினும், என் உள்ளத்தில் அவள் சாந்தரூபியாயே விளங்கு கின்றாள்.

குறிப்புரை :

``அருந்தவம்`` என்பது அதன் பயனாகிய ஞானத்தின் மேல் நின்றது. காரியல் - மேகம் போன்ற. கோதை, அதனை அணிந்த கூந்தலை உணர்த்திற்று. இது சாந்த வடிவத்தைக் குறித்தவாறு. காரணி - தோற்றத் திற்குக் காரணமாய் இருப்பவள்; படைப்பவள், ``நாரணி`` என்றது, `காப்பவள்` என்றவாறு, ஊர்தல் - உலாவுதல். `ஊர் - உடம்பு` என்பாரும் உளர். ``ஊரும் உயிரும் உலகும்`` என்றது தாப்பிசையாய் முன்னும் சென்று இயையும். கோரி - கோரம் உடையவள். கோரம் - கொடுமை.
இதனால், சத்தி உயிர்களின் பொருட்டு முத்தொழில் செய்தலைக் கூறுமுகத்தால், வயிரவி அச்சத்தியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு என் உள்ளத்திலே மகிழ்ச்சியோடு இருக்கின்ற அந்தச் சத்தி அவ்வாறு அளவற்ற காலங்கள் இருந்தும் நீங்குதல் இல்லாதவளாய், நான் பிராசாத யோகத்திலே உழன்று நின்ற பொழுது அதன் கலைகளில் முடிவானதற்கு இடமாகிய துவாத சாந்தத்தில் பொருந்தி நிற்பவளாயினாள்.

குறிப்புரை :

`இஃது அவளது கருணையிருந்தவாறு` - என்பது குறிப்பெச்சம். `உணர்ந்தவழி` என்பது ``உணர்ந்து`` எனத் திரிந்து நின்றது. பிராசாத கலையில் முடிவாயுள்ளது உன்மனை. தலை - முடிவில் உள்ளது. இதனால், அவளது பேரருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.

பொழிப்புரை :

மேற் கூறிய அச்சத்தி, உன்மனாகலையின் இடமாகிய அந்தத் துவாதசாந்தத்தில் தான் தனியே இராது சிவத்தோடு கூடியே விளங்குவாள். அவ்வாறு விளங்குதல், பிராசாத யோகிகட்கு அவ்யோகத்தால் புருவ நடுவில் அவ்வப்பொழுது புதிது புதிதாகத் தோன்றுகின்ற உணர்வைக் கண்டுகொண்டேயாம்.

குறிப்புரை :

``முலைத்தலை மங்கை`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `முலையையுடைய தலை மங்கை` என்க. `முலையை உடைய` என்னும் விதப்பு. அபர ஞான பரஞானங்களைத் தருபவ ளாதலைக் குறித்து நின்றது. தலை மங்கை - தலைவி. `அக்கலைத் தலைக்கண்` எனச் சுட்டு வருவித்தும், உருபு விரித்தும் ``இருக்கும்`` என்பதனோடு முடிக்க. ``கலைத் தலை, சிலைத் தலை`` என்பவற்றில் தலை, இடம். ``கண்`` இரண்டனுள், பின்னது, `உயிர்கட்குக் கண் போலச் சிறந்தவன்` எனப் பொருள் தந்து, சிவபிரானைக் குறித்தது. ``உள் முயங்கி`` என்றது. `இரண்டறக் கலந்து` என்றவாறு. `முயங்கியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. சிலை - வில். அஃது உவமையாகுபெயராய்ப் புருவத்தை உணர்த்திற்று. தெரிவு - அறிவு. அலைதல் - அசைதல். `அலைந்த` என்பது வலிந்துநின்றது கொம்பினள் - கொம்புபோல்பவள். `அலைத்த பூங்கொம்பினள்` என்பது, சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இதனால், சத்தி துவாதசாந்தத்தில் விளங்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

பொழிப்புரை :

என் இருதயத்தில் இருப்பவளாகிய அந்தச் சத்தி, மேற்கூறியவாறு சிவனுடன் துவாதசாந்தத்தில் விளங்குதல், பிராசாத யோகத்தைப் பற்றி இருதயத்தினின்றும் எழுந்து கண்டத் தானத்தை அடைந்து, அதன்பின்னர் அங்கு நின்றும் துவாதசாந்தத்தில் சென்றே யாம். அந்நிலையும் பழமையானதேயன்றிப் புதியதன்று.

குறிப்புரை :

`என்னுள்ளம் மேவி இருந்தனளாகிய ஏந்திழை, பொருந்து இருநால் விரல் கடந்து புக்கனளாய்ப் புல்லியபின், தாணுவில் சேர்ந்து உடன்ஒன்றி, ஆதியின் நாளே அருந்தவம் எய்தினள்` என முடிவு செய்க. தவம் எய்துதல், ஞானத்தைக் கொடுத்தலில் குறிக்கோளாய் இருத்தல். `அந்நிலை யோகத்தால் புலனாவதன்றிப் புதிதாக உளதாவதன்று` என்பார், ``ஆதியின் நாளே` என்றார். இவ்விடத்து இன், வேண்டாவழிச் சாரியை.
இதனால், மேற்கூறிய நிலை பிராசாத யோகத்தானே அறியற் பாலதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

ஆதி அனாதி அகாரணி காரணி
சோதி அசோதி சுகபர சுந்தரி
மாது சாமாதி மனோன்மனி மங்கலி
ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் இருந்துகொண்டு எனக்கு எல்லா வற்றையும் அறிவித்துக்கொண்டு என்னோடு உடனாய் இயைந்திருக் கின்ற சத்தி, ஆதியாதல் முதலிய பல பெருமைகளை உடையவள்.

குறிப்புரை :

ஆதி - தானே எல்லாவற்றிற்கும் முதல்வி. அனாதி - தனக்கு ஒரு முதற்பொருள் இல்லாதவள். காரணி - தானே எல்லா வற்றுக்கும் காரணமாய் இருப்பவள். அகாரணி - தனக்கு ஒரு காரணம் இல்லாதவள். சோதி - ஒளியாய் இருப்பவள். அசோதி - இருளாயும் இருப்பவள். சோதி, `அசோதி` என்பன முறையே அறிவையும், அறி யாமையையும் உணர்த்தி நின்றன. அறியாமையைச் செய்வது மலமே. எனினும், அதன் சத்தியைத் தூண்டி அதனைத் தொழிற்படச் செய்தல் பற்றிச் சத்தி, இருளாயும் இருக்கின்றாள். ``சுகபரம்`` என்பதை, `பரசுகம்` என முன்பின்னாக வைத்து, `மேலான இன்பம்` என உரைக்க. `மேலான இன்பத்தை (சிவானந்தத்தை)த் தரும் சுந்தரி` என்க. `சுந்தரி` என்பது இயற்பெயரளவாய் நின்றது. `சமாதியில் மனோன்மனி மாது` எனக்கூட்டி, `சமாதி நிலையில் மனோன்மனி என்னும் சத்தியாய் விளங்குபவள்` என்க. சமாதி, இங்கு மேற்கூறிய துவாதசாந்தத்தில் உணர்வை நிறுத்தி ஒன்றச்செய்தல். மங்கலி - என்றும் நன்மையே உடையவள்; `சிவை` என்றவாறு.
இதனால், ``கலைத்தலை இருக்கும்`` என மேற்கூறிய அவளது பெருமைகள் பலவும் விரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 41

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.

பொழிப்புரை :

சத்தி எனது உள்ளத்தில் பொருந்தியதனோடு அதனை விரும்பியும் இருக்கின்றாள். அவள், நான் அஞ்செழுத்தை ஓதி உணரும் பொழுது அவ்விடத்தைப் பற்றியிருக்கின்றாள். அதனை ஓதாத பொழுது நீங்கிவிடுகின்றாள். ஆயினும், பிற மந்திரங்களையும், பயனில்லாத சொற்களைப் பேசுதலையும் என்னிடத்தினின்றும் நீக்கிவிட்டாள்.

குறிப்புரை :

``நயந்தனள் மேவி`` என்பதனை `நயந்து மேவினள்` என மாற்றி யுரைக்க. அஞ்செழுத்தில் யகாரம் தொகுத்தலாயிற்று. பதம் - காலம். பற்றும் - பற்றுவாள். `பதத்தில் அங்கே பற்றும்` எனக் கூட்டுக. மற்று. வினை மாற்றின்கண் வந்தது. பிதற்றுதலுக்குச் செயப் படுபொருள் ஆற்றலால் வந்தது.
இதனால், `சத்தியது விளக்கம் உள்ளத்தில் இடையறாது நிற்றற்குத் திருவைந்தெழுத்தை மானதமாக ஓதுதலை ஒழியாது செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.

பொழிப்புரை :

ஞானத்தைக் கொடுத்துப் பின் அது வழியாக முத்தியைத் தருகின்ற முதல்வியாகிய சத்தியது கயல்போலும் மூன்று கண்களும், அறைகூவி அருள்செய்கின்ற சிவந்த வாயும், முகத்திலே உள்ளதாகிய திருவருட் பார்வையும் அடியார்களுக்குத் கண்முன் னாகவே நிற்பனவாயிருக்க, அவைகளை எண்ணித் துதியாமல் அறிவில்லாதமக்கள் எதைஎதையோ பிதற்றிவிட்டுப் போய்விடுகின் றார்கள்; அவர்தம் அறியாமை இருந்தவாறு என்!

குறிப்புரை :

முயற்று, `முயற்சி` என நின்றது. `முயற்சி` என்பதே பொருள் - முயற்சி, இங்கு ஞானச் செய்திகள். இது மேற்கூறிய அஞ் செழுத்தோதலைச் சிறப்பாகக் குறித்தது. `அதுவழியாக முத்தியைத் தருபவள்` என்பதனால், முன்னே அம்முயற்சியைத் தருதல் பெறப் பட்டது. கயலாகிய உவமை இனம் பற்றி நெற்றிக் கண்ணிற்கும் சொல்லப்பட்டது.
இதனால், திருவைந்தெழுத்தை ஓதுபவர்க்குச் சத்தி நேரே எளிவந்தருளுதல் கூறப்பட்டது. இதனுள் உயிரெதுகையும், மூன்றாமெழுத் தெதுகையும் வந்தன.

பண் :

பாடல் எண் : 43

உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

பொழிப்புரை :

பரசிவத்தினது சத்தியாகிய பராசத்தியது வயிற்றில் உள்ள சுத்த மாயையின் தோன்றி மறையும் ஒளியாகிய கருவினுள் நிற்பவளாகிய ஆதி சத்தி, பிள்ளையாய்ப் பிறந்து தவழும் இடமும் அகத்து உள்ளதாகவே சொல்லும்படி அங்குப் பிறந்தது, `சித்தம், புத்தி, மனம்` என்னும் மூன்றனிடத்துமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, இரண்டாம் அடியை முதலடியின் முன் வைத்து உரைக்க. சித்தம் முதலிய மூன்றனையும் நாயனார் உள்ளம் முதலிய மூன்றாக அருளினமை காண்க. ஆதி சத்தி உயிர்கட்குப் புலனாதல் வாக்கு அல்லது மொழி வடிவிலேயாதலானும், சுத்தமாயையின் காரியமாகிய வாக்குகள் அசுத்த மாயையின் காரியங்கள்போல மயக்கத்தைச் செய்யாது அறிவைத் தருவதேயாயினும், அவ்வறிவும் வினைக்கீடாக நிகழ்வதே யாகலானும் ஆதிசத்தியை ``மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகும் கன்னி`` என்றார். மாமாயைக்கு ஆதிசத்தி ஆதி வியாபகமேயாக. அனாதி வியாபகம் பராசத்தியே யாதல் பற்றி அதனைப் பராசத்தியின் வயிற்றில் உள்ள கருவாகக் கூறினார். ஆதி சத்தி பராசத்தியின் கூறாதலை, ``வள்ளல் திருவின் வயிற்றினுள் கருத்து`` என்பதனால் விளக்கினார். கருத்து - கருவினுள் இருப்பது. இருப்பது - இருப் பதாகிய பொருள். `வயிறு, கரு, கருவினுள் இருப்பது` என்பன உரு வகங்கள். தடம் - வழி; இங்கு இயங்கும் இடத்தைக் குறித்தது. வாக்கு வடிவில் பொருள்கள் தோன்றும் பொழுது மனத்தில் பொதுவாயும், புத்தியில் சிறப்பாயும், சித்தத்தில் பல்காலும் எண்ணி உணரும் உணர்வாயும் தோன்றுமாதலின், ஆதி சத்தியும் உயிர்கட்கு அவ்வாறே புலனாம் என்பார். `பிறந்தது உள்ளம் மூதலிய மூன்றிடத்திலும்` என்றார். ``பிறந்தது`` என்பது தொழிற்பெயர். ஆதிசத்தி தோன்றும் முறையை இங்ஙனம் விளக்கியது திருவைந்தெழுத்து உணர்வின் வழியே அவள் விளங்குதலை வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், மேலது இனிது விளங்க வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
என்னேஇம் மாயை இருளது தானே.

பொழிப்புரை :

பராசக்தியின் வயிற்றினின்றும் பிறந்த ஆதி சத்தி யாகிய பெண் தனது கன்னித்தன்மை அழியாமலே ஒருவனுக்கு மனைவியாய்ப் பொருந்தி ஐவர்மக்களைப் பெற்றாள். அவர்கள்பால் நல்ல நூல்களைக் கேட்டுணர்ந்த அறிவரும் பலர் உளர். இவ்வியப்பு தான் என்னே!

குறிப்புரை :

`கன்னியும் அழிந்திலள்` எனச்சிறப்பும்மையை மாற்றி யுரைக்க கன்னித்தன்மை அழியாமையாவது, படைத்தலைக் கரணத்தால் செய்து திரிபு எய்தாது, சங்கற்ப மாத்திரையாற் செய்து, என்றும் ஒருபெற்றியளாய் இருத்தலாம். `காதலியாய்த் துன்னி` என ஆக்கம் வருவித்துக்கொள்க. துன்னப்பட்டவனாகிய ஒருவன் ஆதி சிவனாதல் வெளிப்படை. ஐவராவார். `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்போர். இவர் யாவரும் சுத்த தத்துவத்தில் உள்ளோர். மொழி - நூல்; என்றது ஆகமங்களையும், அவற்றிற் சொல்லப்பட்ட மந்திரங்களையும். ``பன்னிய`` என்னும் பெயரெச்சம் ``பகவர்`` என்னும் கோடற்பொருட் பெயர் கொண்டது. ஆகமங் களைப் பிரணவர் முதலியோர் சதாசிவ மூர்த்தியிடத்துக் கேட்டமை முதல் தந்திரத்துள் `ஆகமச்சிறப்பு` என்னும் அதிகாரத்துள் விளக்கப் பட்டது. மந்திரத்தைச் செலுத்தி நிற்போர் மந்திரமகேசுரர். இவர்களும் மகேசுரரைச் சூழ்ந்திருப்பவர். ஆகவே, ``அங்கு`` என்றது சதாசிவ புவனத்தையும், மகேசுர புவனத்தையும் ஆயிற்று. அரிதற்கரிய பொருளாய் வியப்பைத் தருதல் பற்றியே, இதனை ``மாயை`` என்றும், ``இருள்`` என்றும் கூறினார்.
இதனால், ஆதிசத்தி தனது சங்கற்பத்தானே சதாசிவர் முதலிய முதல்வர்களைப் படைப்பவளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

சிவம் வெளிப்படாது நிற்க நிகழும் செயல் களெல்லாம் ஆதிசக்தியுடையன. அவற்றின் பயனாகப் பின்னர்ச் சிவம் வெளிப்படுவதாகும். அவ்வெளிப்பாட்டினைப் பெற்ற புண்ணியர்கள் இம்மையிலும் பொருளாகத் தெளிவது சிவானந்தம் ஒன்றையே. அத்தகைய தெளிவைப் பெற்ற உள்ளமே சிவனுக்கு இருப்பிடம் என்று அறிந்தால், சிவன் முன்னின்று அருள்செய்வான்.

குறிப்புரை :

`அது` என்பன பலவும் பகுதிப் பொருள் விகுதி. ``வெளியது`` என்பதில், `வெளியதாம்` என ஆக்கம் வருவித்துக் கொள்க. `புண்ணியர் பொருளது போகத்துள் இன்பம்` எனக் கூட்டுக. போகம் - இம்மை நுகர்ச்சி. தெய்வத்தின் இடத்தை, ``தெய்வம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.
இதனால், மேற் கூறிய படைத்தல் முதலிய செயல்களின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.

பொழிப்புரை :

உலகத்தைத் தோற்றுவிக்க நினைப்பவளும், அத்தோற்றத்திற்கு முன்னே உள்ளவளும், சிவத்தில் செம்பாதியாய் நிற்பவளும் ஆகிய பராசத்தி, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவற்றிற்கு அப்பாலும் உள்ளவளாய்ப் பின்பு சமாதியில் மேற் கூறிய வாறு மனோன்மனியாயும், நன்மையையே உடையவளாயும் உள்ள அவளைத் துதிக்கின்ற எனது உள்ளத்தில் விரையத் தோன்றினாள்.

குறிப்புரை :

``பராபரை`` என்பது எல்லாப் பொருளிலும் உள்ளன வளாதலைக் குறித்தது. இதுமுதலாக, ``மங்கலி`` என்பது காறும் வருவனவற்றில் `ஆய்` என்பது வருவித்துக்கொள்க.
இதனால், சத்தி, `பரை, ஆதி, அருள்வல்லி` என்னும் மூன்று நிலைகளை உடையவளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

பொழிப்புரை :

`பிறப்புக்கள் பலவும், பலவேறு வகைப்பட்ட ஏனைப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய தத்துவங் களுமாய் ஆதி சத்தி ஒருத்தியே நிற்பாள்` என்று ஆவுருவாய் நிற்கும் பெரு மாட்டி எனக்கு அறிவித்தாள். எல்லா நூல்களிலும் மேம்பட்டதும், தனக்கு ஒரு முதல்நூல் இன்றித் தானே முதல் நூலாய் நிற்பதுமாகிய வேதம் சொல்லிய முறையும் இதுவே என்பதைப் பலர் அறிந்திலர்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `வேதம் ஓதிய வண்ணமேயாம் என்று அறிகிலர்` என முடிக்க. வேதப் பொருளின் சிறப்பை உணர்தற்கு, ``கலையின் உயர்கலை, ஆதி இல்` என்பவற்றை விதந்து ஓதினார். `சாதி, பிறப்பு` என்பன ஒருபொருட் சொற்கள். இவை இங்கு உடம்பைக் குறித்தன. ``தத்துவம்`` என்பதில் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. ``ஆவின் கிழத்தி`` என்பதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. நாயனார் எழுந்தருளியிருந்த ஆவடுதுறையில் அம்மை ஆவுருவாய் வந்தமை வெளிப்படை. இத்தொடர்க்கு இதுவே பொருளாதல், வருகின்ற மந்திரத்தாலும் அறியப்படும்.
இதனால், `சத்தி மேற்கூறிய மூன்று நிலைகளில் `ஆதி` என்னும் நிலை ஒன்றில் நின்றே அனைத்துக் காரியங்களையும் செய்வள் என்பதே வேதம் முடிபாதலை அறிதல் திருவருளானே கூடும்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பல தெய்வக் கொள்கை. பக்குவம் இல்லாதாரை நோக்கி அமைந்தன என்பதாம்.

பண் :

பாடல் எண் : 48

ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

பொழிப்புரை :

ஆவுருவாய் நின்ற பெருமாட்டி திருவாவடு துறையில் பக்குவர்களுக்கு உண்மையை யுணர்த்துபவளும், தனது நன்மைகளை உயர்ந்தோர் பலரும் எடுத்துக் கூறித் துதிக்கின்ற கடவுள் தன்மை உடையவளும், முத்திச் செல்வத்தை உயிர்கள் அடைதற்கு ஏதுவான சிவசத்தியாய் நிற்பவளுமாய் இருந்து, உயிர்களின் சஞ்சித வினையை நீக்குகின்றாள்.

குறிப்புரை :

`அவளை யடைந்த எனக்கு வினை நீங்காது நிற்குமோ` என்பது கருத்து. தேவின் கிழத்தி - தேவினையுடைய கிழத்தி. கிழத்தி - எப்பொருளையும் தன்னுடையனவாக உடைய தலைவி. `முத்தியை அளிப்பவன் சிவன் ஒருவனேயாதலின், அவனது சத்தியாய் நின்று முத்தியையளிப்பாள்` என்றவாறு `சிவமங்கையாய்` என ஆக்கம் வருவிக்க.
இதனால், தமக்கு உண்மையை உணர்த்திய சத்தியது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

பொழிப்புரை :

என்னை அடிமையாகக் கொண்ட அந்தத் தலைவி, வினை நீங்கியவரது உள்ளத்தில் ஞானமாய் நின்று, தன்னைப் புகலிட மாக அடைந்தவர்க்கெல்லாம் மெய்ப்பொருளாய் (சத்தாகி) நிற்பாள். இனி அவள், சிவனிடத்தில் அவனைத் தலைப்பட்டுணரும் பொழுது அவனோடு இயற்கையாயுள்ள எண் குணங்களாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`உள்ளொளியாய்` என ஆக்கம் வருவிக்க. ``ஈசன் கண்`` என்றதில் ஏழாம் உருபு வகையுளியாய் அடுத்த அடிமுதற்கண் நின்றது. இவ்வாறன்றி, `ஈசன் அவளுக்குக் கணவன்` என்பாரும் உளர். அனாதியானவற்றை ``அனாதி`` என்றார். ``காண`` என்னும் செயவெனெச்சம், தனக்குரிய நிகழ்காலத்தில் வந்தது. சிவனது எண்குணங்களில் `வரம்பில் இன்பம்` எனப்படும் நிரதிசயானந்தம் இங்குச் சிறப்பாகக் கருதப்பட்டது.
இதனால், தமக்கு அருள்புரிந்த சத்தி சத்துச் சித்து ஆனந்தமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

பொழிப்புரை :

சத்தியே வேதியர்கள் பொருட்டு வேதத்தை நுட்பமாக ஓதியும், உணர்த்தியும் நின்றாள். ஒளி வடிவினனாகிய சிவனுக்கு அவ்வுருவமும் ஆவாள். பன்னிரு கலையை உடைய பிரணவ ரூபியாகிய குண்டலியாயும் விளங்குவாள்.

குறிப்புரை :

முதலடியில் உள்ளவை, பாதி, பராபரை இவற்றிற்குப் பொருள் மேலே கூறப்பட்டது. ஆய்தல் - நுணுகி நிற்றல். வேதியர், `சொல் நயம், ஓசை நயம்` என்பவற்றைச் சிறப்பாக விரும்புபவர் ஆகலின், அவர்கட்கு வேதத்தை அவ்வாறெல்லாம் அருளிச்செய்து, அடியார் கட்கு அருட்டிருமேனியாய் நின்றாள் என்க.
இதனால், சத்தி அவரவர்க்கு ஏற்ப அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

பொழிப்புரை :

சத்தியது அருட் பெருமையை நான் சிந்தித்து தெளிந்தேன். அதனானே, உலகத்திற்கு ஆதியும், அந்தமும் ஆன பொருளினையும், உலகத்தார் பலபடக் கூறுகின்ற முதற்கடவுளையும், உலகில் உள்ள உயிர்களின் இயல்பையும் என் அறிவின்கண் அகப்படும்படி நன்கு உணர்ந்தேன்.

குறிப்புரை :

என்றது, `சத்தியை விட்டு வேறாய் யாதொரு பொருளும் இல்லை` என்றவாறு. ஈற்றடியை முதலில் வைத்து, அதன் பின், `அதனானே` என்பது வருவித்துரைக்க. `முன்னும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. அவன் - சிவன். அருள் - சத்தி; என்றது அவளது இயல்பை. ``அந்த முன்`` என்பதில் சுட்டு, `அந்தத்தை உணர்தலினும் ஆதியை உணர்தல் அரிது` என்பதை விளக்கி நின்றது.
இதனால், சத்தியை முற்ற உணர்தலே முற்றறிவாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

பொழிப்புரை :

பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படும் முற்றுணர்வாகும். இதனை உணராதவர் சிவனையும் உணராதவரே. தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, அங்ஙனம் பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனைக் கும்பிப்பதே.

குறிப்புரை :

``உணர்ந்திலர் ஈசனை`` என்றது, சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோரை நோக்கி யாதலின் அதனை, ``பூரணம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கொண்டு`` என்பதை, ``கொள்ள`` எனத்திரிக்க. ``உணர்ந்திலர் ஈசனை, ஊழி செய் சத்திபுணர்ந்தது பூரணம்`` என்றது, மேலதனை வலியுறுத்தியவாறு.
இதனால், சத்தியைப் பெறுதற்குரிய வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.

பொழிப்புரை :

மத்தகத்தை யுடைய களிற்றியானைகளாகிய ஐந்து புலன்களும், அவற்றை மனமாகிய கோலால் செலுத்துகின்ற பாகனாகிய உயிரும், அவ்யானைகட்கும், பாகனுக்கும் தலைவனும், அரசனாகிய சிவனும், அச்சிவனோடு இன்பக் கலவி செய்து இனிதே உறையும் அரசியாகிய சத்தியும் இனிதாகிய கூட்டத்தில் இன்ப முற்றிருக்கின்றனர்.

குறிப்புரை :

என்று, `மாயா காரியமாகிய கருவி கரணங்களுள், அவற்றைக் கொண்டு செயலில் ஈடுபடுகின்ற ஆன்மாவும், சிவனும், சத்தியும் ஒருங்குகூடி நிற்றலாலே உலகியல் நடைபெறுகின்றது` என்ற வாறு. இங்ஙனங் கூறினும், சத்தியது இன்றியமையாமையே இங்குக் கருதப்பட்டது என்க. ஐம்புலன்களே உலகியலாம். ஐம்புல அவா வையே `யானை` என்றல் மரபாயினும், அவ் அவாவினோடு காரண காரியத் தொடர்ச்சிகளை யுடையனவாதல் பற்றி இங்கு அப்புலன் களையே ``களிறு`` என்றார். வம்பு - வாசனை. அஃது அதனையுடைய மாலையை உணர்த்திற்று. இன்பக் கலவி`` இரண்டில் முன்னது காமக் கூட்டம் ; பின்னது இனிய நட்பு, நட்டாரை, ``கலந்தார்`` என்றல் வழக்காதைல,
``கலந்தாரைக் கைவிடு தல் கானக நாட,
விலங்கிற்கும் விள்ள லரிது`` (நாலடி - 76.)
என்பது முதலியவற்றால் அறிக. ஈற்றடியை, `அன்பிற் கலவியுளா யொழிந்தாரே` என ஓதுதல் பாடமாகாமை, அந்தாதிக்கு ஒவ்வாமை யான் அறிக. இதனுள் இனவெதுகை வந்தது.
இதனால், மெய்ந்நெறியே யன்றி உலகியலும் சத்தியின்றி அமையாமை கூறப்பட்டது. இந்நிலையில் சத்தி, `திரோதாயி` எனப் படுவாள் என்பது பலவிடத்தும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

பொழிப்புரை :

எங்கள் தந்தையாகிய சிவன் ஆணும், பெண்ணு மாய உயிர்களைக் காமக் கூட்டத்தில் செலுத்தி, அதுகாரணமாக எழுகின்ற அன்பினையே வாயிலாகக்கொண்டு அவ்வுயிர்களின் உள்ளத்தில் புகுந்து நலம்செய்யும் தன்மையை உடையவன். என் தாயாகிய சத்தி, உயிர்கள் துன்ப மயமாகிய கருப்பைக் குழம்பில் அகப் பட்டுத் துன்புறுகின்ற அவ்வுடம்பில் தானே அவற்றின் சுழுமுனை நாடியிற் பொருந்தி நலம் புரிகின்றவளாவள்.

குறிப்புரை :

``பாசம்`` என்றது, இங்கு உடம்பினை, என்பு முதுகந் தண்டு. அஃது அதன்கண் உள்ள சுழுமுனை நாடியைக் குறித்தது. அப்பனுக்குக் கூறிய புகல் வன்மை, அம்மைக்கும் ``என்பில்`` என்பதன்பின் வந்து இயைந்தது.
இதனால், சத்தி பெத்த நிலையிலும் முதற்றொட்டு உயிர் களைப் புரந்து வருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று
உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன்
மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

பொழிப்புரை :

உடல்வழிப்பட்டு, `என் தாய், என் தந்தை` எனக் கூறி உலகியலில் மயங்குகின்ற மயக்கத்தை விடுத்து நினைத்தவழி, உண்மைத் தாயாய் ஊழிக் காலத்தும் அழியாத உயிர்த் தலைவன் அவ் விடத்தே உளனாவன். இனி, `அத் தலைவனாவான் யாவன்` எனின், முதலிலே திரோதான சத்தியாய்ப் பொருந்தி, உண்மையை மறைத்து நின்று, பின் அருட் சத்தியாகிய உண்மையை விளக்குகின்ற சிவனேயாம்.

குறிப்புரை :

உம்மை, சிறப்பு. உரை செய்தல் - உபதேசித்தல், உண்மை ஞானத்தை விளக்குதல். ``உரை செய்யும்`` எனவும், ``பின்`` எனவும் பின்னர் வருகின்றமையால் முன்னர் அவற்றின் மறுதலைகள் கொள்ளப் பட்டன. `பின் உரைசெய்யும் அம்மையாய் நின்ற நந்தி` என இயைக்க. ``பேர் நந்தி`` என்பது அடையடுத்த சொல்லாகுபெயர். சிவனே சத்தியாதலன்றி வேறின்மை இங்குத் தோன்றும்படி இவ்வாறு ஓதினார்.
இதனால், திரோதான சத்தி அருட் சத்திகளும், ஆதி சிவன், அநாதிசிவன் இவர்களுமே உலகிற்கு உண்மைத் தாயும் தந்தையும் ஆதல் கூறப்பட்டது. ``அம்மையப்பரே உலகுக்கம்மையப்பர்`` என்பது திருக்களிற்றுப்படியார்.

பண் :

பாடல் எண் : 6

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொருநூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகி வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

பொழிப்புரை :

காரணக் கடவுளர்களது வரிசையில் முதற்கண் பிருதிவி அண்டத்தின்மேல் இருக்கின்ற பிரமன் அவ்வாறிருப்பது நூற்றிதழ்த் தாமரை மலரின் மேலேயாம். அவனுக்குத் துணைவியாய் வெண்டாமரைமேல் வாணி அமர்ந்திருக்கின்றாள். இவையெல்லாம் வாகீசுவரியாய் நிற்கின்ற திரோதான சத்தியது ஆணையாலேயாம்.

குறிப்புரை :

தார் - மாலை; அது வரிசையைக் குறித்தது. ``உள`` என்னும் வினைக்குறிப்புப் பெயர், உண்மைக்கு இடமாய மலரினைக் குறித்தது. ``தான்`` என்பது பன்மை யொருமை மயக்கம். ``நூறு`` என்பது மலரின் இதழாதல் விளங்குதற்கு முதற்கண், ``தண்மலர் நான் முகன்`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். ஈற்றடியின் முதலில், `எல்லாம்` என்னும் எழுவாய் வருவிக்க. இதனுள் ஆசெதுகை வந்தது.
இதனால், படைப்புத் தொழிலும் திரோதான சத்தியதாதல் கூறப்பட்டது. பொதுமக்களாய் உள்ளவர், உலகத்தைப் படைக்கும் தொழில் ஒன்றையே இறைவனது அதிசயத் தொழிலாக எண்ணுவர். ஆதலின், அஃதொன்றனையே இங்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

பொழிப்புரை :

திரோதான சத்தியின் வசமாய் வருந்தாது பற்றற்றுத் திருவருளில் இருப்பவர். அதன் மேலும், எப்பொழுதும் பெரிய ஐயத்தையே கொண்டு அலைவதாகிய மனத்தை அவ்வாறு அலையாமல் ஒருவழிப்படுத்தி எல்லாம் அற்ற இடத்தில் விளங்குவ தாகிய பரம் பொருளை உணர்வார்களாயின், அப்பொருளாகிய சிவன் அப்பொழுது தனது அருட்சத்தியாகிய இயற்கை ஆசனத்தில் விளங்கி நின்று அருள் புரிவான்.

குறிப்புரை :

ஆணை, திரோதானசத்தி, `அகமாய்` என்பது இடைக் குறைந்து நின்றது. திரோதான சத்தியின் வசமாய் நிற்றலாவது வினைப் பயனை நுகர்வதிலும், ஈட்டுவதிலும் முனைந்து நிற்றல், அதனால் வருவது அல்லலே யாதலாலும், அதனின் நீங்கினார்க்கு அருளே தாரகம் ஆதலாலும் ``வருந்தாது உள் இருந்தார்`` என்றார். ``மாண் ஐயம்`` என்பதில் மாண்பு, பெரிது. ``பாழ் நயம், தாள் நயம்`` என்ப வற்றில், நயம் `நையம்` எனப் போலியாயிற்று. `பாணயம், தாணயம்` என்பனவும் பாடம். தத்துவம் அனைத்தும் கடந்த இடத்தை, ``பாழ்`` என்றார். அவ்விடத்துள்ள நயம், இன்பம். பின் வந்த நயம் விருப்பம் `தாள் ஆய நய ஆதனம்` என மாற்றிக் கொள்க.
இதனால், படைப்பு முதலியவற்றைச் செய்யும் திரோதான சத்தி செயற்கையேயாக, அருட்சத்தியே இயற்கையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

பொழிப்புரை :

உயிர்களின் முயற்சியாலன்றித்தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச்செய்தாள். இனி, இனிமையைத் தருவ தாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.

குறிப்புரை :

தத்துவம் - மெய்ப் பொருள். `போல` என்பது `போல்` என வருதல்போல, `நேரே` என்பது இரண்டிடத்தும், `நேர்` என வந்தது. ``மானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் `ஞான நடம் புரிகின்ற பெருமான்` என்பது உணர்த்தி நின்றது. ``நடம் உடை மன்று`` என்பதை, `மன்று உடை நடம்` என மாற்றிக்கொள்க. இஃது அருள் பெற்றுநின்ற ஞானியரை நோக்கிக் கூறியவாறாக அருளிச் செய்யப் பட்டது.
இதனால், அருட் சத்தி பக்குவ நிலையில்தானே தோன்று தலும், அத் தோற்றத்தின் பயன் முறையே அறிவும், ஆனந்தமும் ஆதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரின்
பிறியா அறிவறி வாருளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.

பொழிப்புரை :

அருள்வழி நிற்கும் அறிவேயன்றி, மாயா கருவிகளின் வழி நிற்கும் அறிவும்தான் ஐம்புலன்களை நுகர்கின்ற பொழுது அறிவே வடிவான அருட் சத்தியோடு கூடியிருக்கப் பெறு மாயின், உயிர்க்குயிராய் உள்ள சிவத்தையே நினைக்கின்றவருடைய உள்ளத்தையே விரும்பியிருக்கும் தனது முறைமையை அவர்கள் இடத்தும் அருட்சத்தி கொண்டிருப்பாள்.

குறிப்புரை :

அஃதாவது, `அவர்கள் உள்ளத்திலும் விரும்பியிருந்து, அவர்கள் செயலெல்லாம் தன் செயலாகச் செய்வள்` என்பதாம். `மாயையேயான அறிவு` எனற்பாலதனை, ``அறிவான மாயை`` என ஓதினார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம். கூட்டம் - கூடி நுகர்தல். ``கூட்டத்துச் சேரின்` என இயையும். ``சித்தம்`` என்பது அதன்கண் கொள்ளப்படும் பொருளை உணர்த்திற்று. ``சேரின்`` என்பதன்பின், `அவள்` என்பது வருவிக்க.
இதனால், அருட்சத்தி ஞானிகட்கு உலகியலால் பழுதுண்து ஆகாதவாறு காத்தல் கூறப்பட்டது. இந்நிலையே, ``பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்`` 1 நிலை என்க.

பண் :

பாடல் எண் : 10

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.

பொழிப்புரை :

`இரவு, பகல்` என்னும் வேறுபாடுகள் இல்லாத ஓர் அதிசய இடத்திலே சென்று அங்கே உள்ளவளாகிய அருட் சத்தி யையே நினைந்து, பிறிதொன்றும் செய்யாமல் அவளது அருளுடனே கூடித் தன்னை மறந்திருப்பவன், என்றும் இளையவனாய் இருக்கும் அவள்தன் மகனாய் விளங்குவான்.

குறிப்புரை :

நினைப்பும் மறப்பும் ஆக மாறிமாறி நிகழும் மாயா உணர்வுகளை, `இரவு, பகல்` எனக் குறித்தல் மரபு. அவை அற்ற இடம் என்றும் ஒரு பெற்றியாய அருளுணர்வு. மகளிரது கூந்தலில் குராமலர் முடிக்கப்படுதலை ஒரு சிறப்பாகக் கூறும் இலக்கிய மரபு பற்றி,`` குரவம் செய்கின்ற குழலி`` என்றார். அரவம் செய்யாமை, மௌனமாய் இருத்தல்; என்றது செயலற்றிருத்தலை, பருவம் செய்தல், `காளை, முதியன்` என்னும் நிலைகளை அடைதல், `அவை இல்லாமை` என்றது, என்றும் ஒரு பெற்றியனாய் இருத்தல். எனவே, உலகியலால் வேறுபட்டு வருந்தாமை பெறப்பட்டது.
இதனால், அருட் சத்தியால் பாதுகாக்கப்பட்டவர்களது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

பொழிப்புரை :

`முத்திக்கு மூலம்` என்றும், எல்லாவற்றிற்கும் மேலான பொருள்` என்றும் சொல்லப்படுகின்ற அருட்சத்தி, சிவ புண்ணிய மிகுதியால் தனக்குக் கிடைக்க அவளோடு கூடி நின்றவன். அதன் பயனாக மாயா காரியங்கள் பலவும் தன்னை அணுகமாட்டாது நீங்க, இதுகாறும் மாயையின் மகனாய் நின்ற நிலைநீங்கி, அவ்வருட் சத்தியின் மகனாகின்ற பேற்றைப் பெற்று விளங்குவான்.

குறிப்புரை :

உம்மைகள், சிறப்பு. ``பராசத்தி`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது, ``நேர்பட`` என்பதை ஈற்றடியின் பின் வைத்து, ``முத்திக்கு மூலமதாம் எனும் ... ... தற்பரத்தாள் நேர்பட, பராசத்தி தன்னொடு கூடி மேலணுகா ... ... விட்டிடப் பாலனும் ஆகும்`` எனக் கூட்டி உரைக்க.
இதனால், அருட் சத்தியைச் சார்ந்தவழி மாயை அணுக மாட்டாமை கூறி, அவளை அடைந்தவர் துன்புறாதிருத்தற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.

பொழிப்புரை :

`முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய் விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர் களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப் படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திக ளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.

குறிப்புரை :

நீள் பரன் - தன்னிலையினின்றும் உயிர்களை உய் விக்கும் நிலைக்குச் செல்லும் சிவன். இங்ஙனம் செல்லும் நிலையே `ஆதி சிவன்` என்னும் நிலையாகும். எனவே, இந் நிலையில் அவனது சத்தியும் `ஆதி சத்தி` எனப்படுவாள் என்பது விளங்கும். `திரோதான சத்தி, திரோதானகரி, திரோதாயி` என்னும் பெயர்களால் குறிக்கப் படுபவளும் இந்த ஆதி சத்தியே. இவளே, `இச்சை, ஞானம், கிரியை` என முதற்கண் மூன்றாய் நின்று, பின், பற்பல காரணங்கள் பற்றிப் பல்வேறு வகையாய், அளவிறந்து நிற்பாள். ஆதிக்கு முன் உள்ள நிலை அநாதி. அந்நிலையில் சிவனும், சத்தியும் முறையே `பரசிவன்` என்றும், `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர்.
மன்றன் - மன்றில் (சபையில்) நிற்பவன் என்றது. `ஐந் தொழில் செய்து நிற்பவன்` என்றதாம். செயலே உயிர்களால் அறியப் படுதலின், அதனையே ``நன்றறி கிரியா சத்தி`` என்றார். `நன்றாக, கிரியா சத்தியாய், மன்றனாய்` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத் தலாயின. ``மன்றனாய் அவற்றுள் மருவிடும்`` என்றாராயினும், `அவற்றுள் மருவி மன்றனாயிடும்` என்பதே கருத்தாதல் அறிக.
இதனால், அருட்சத்தியே முதற்கண் ஆதிசத்தியாய் இறைவனது செயல்கள் எல்லாவற்றிற்கும் நீங்காத் துணையாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

பொழிப்புரை :

சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.

குறிப்புரை :

``மருவொத்த`` என்றதனால், `மலரொத்த` என்பது கொள்ளப்பட்டது. உரு - பொருள். உருஒத்து நிற்றல் - பொருள் ஒன்றேயாய் நிற்றல். கரு - அடிநிலை உண்மை. `கருவை ஒத்து (உடம்பட்டு) நின்று` என்க. திரு - அருட்சத்தி. `திருவுக்கு ஒத்த` என்க.
இதனால், `சத்தியைச் சிவனின் வேறாக உணர்தல், அறியாமையின் காரியமாய், அல்லற்படுத்தும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.

பொழிப்புரை :

மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.

குறிப்புரை :

``விரிந்தனள்`` என இறந்த காலத்தாற் கூறியதும், `விரி யும் இயல்பினை உடையவள்` என்றதேயாம். இடைநின்ற ஏகாரம், பிரித்து, ``சத்தி` என்பதனோடு கூட்டப்பட்டது. ``பூமி`` என்பதன்பின் வினைமுதற் பொருண்மை உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்டது. `ஆதியதோடு அந்தமாம் வன்னம்` எனற்பாலதனைச் செய்யுள் நோக்கிப் பிறழக் கூறினார். அது, பகுதிப் பொருள் விகுதி.
இதனால், சத்தி, ஆதியாய் நின்று செய்யும் செயல்களெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

பொழிப்புரை :

தோன்றாது அடங்கியிருந்த, ஞான உருவின ளாகிய அருட் சத்தி, அந்நிலைமாறி வெளிப்பட்டுநின்ற நிலையை அறிபவர் உலகருள் ஒருவரும் இல்லை, ஆயினும் புற நோக்கத்தை விடுத்து அக நோக்கத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு அவள் வெளிப் பட்டு, அவர்களைத் தன் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஞான ஒளியின்வழிப் பேரின்பப் பெருக்காய்ச் சுரந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

அமுத பயம் - அமிர்தமாய் (ஆணவத்தைப் போக்கு கின்ற மருந்தாய்) உள்ள பால். `அதனைக் கொண்ட தனங்களை யுடையவள்` என்க. அருட்சத்தியாதல் தெளிவு. தேறுதல் - தெளிதல்; ஏற்றுக்கொள்ளுதல். `சத்தி ஆறியிருத்தல், சிவத்தில் அடங்கித் திருவைந்தெழுத்தில் சிகாரத்தின் பின்னிற்றல்` எனவும், `மாறி இருத்தல், சிகாரம் பின்னாகத் தான் முன்னே நின்று `வசி` என்பதாக நிற்றல்` எனவும், `அவ்வாறு மாறிநிற்கும் வழியை அறிவார் இல்லை` எனவும் முதலிரண்டடிகட்குக் குறிப்புப் பொருள் கொள்வாரும் உளர். அக நோக்காவது அருட்கண்.
இதனால், அருட்கண்ணைப்பெறும் பக்குவம் உடையார்க்கே அருட்சத்தி பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களையும் அடிமையும், உடை மையுமாக உடையவனும், அக்கினியைச் சிறப்பு வடிவமாகக் கொண்டவனும், `உருத்திர மூர்த்தி` எனப்படுபவனும், இடப வாகனத்தை ஊர்பவனும் ஆகிய சிவன் இனிது விளங்கியிருக்கும் இடமே, மேற்கூறிய அக நோக்குடையவர் சென்று சேரும் இடமாகும். ஆகவே, அவ்விடத்திற் சென்று சிவனை நேர்படக் கண்டவர்களே உள்ளமாகிய வாயில் வாயிலாகப் பயன்படப் பெற்ற சாதகராவர்.

குறிப்புரை :

`விடை ஏறியாகிய அவன்` என மாற்றிக் கொள்க. கடை - இடம், போதல், இங்குச் சேர்தலைக் குறித்தது. ``போயிடும்`` என்பது இங்குச் செயப்பாட்டு வினையாய் ``கடை`` என்றதற்கு முடிபாயிற்று. அறிவை `நெஞ்சம், உள்ளம்` முதலியனவாகக் கூறுதல் வழக்கு. தடை - வாயில். அதுவாதல் - வாயிலாகவே நின்று பயன்தருதல். `நெஞ்சத்து அடையதுவாகிய` எனப் பிரித்தல் மோனை நயத்திற்கு ஏலாமையும், ``அடை`` என்பதற்கு `அடயோகம்` எனப் பொருளுரைத்தலும், `அடயோகமே சிவனை விளங்கக் காணுதற்குச் சாதகம்` என்றலும் ஒவ்வாமையும் அறிந்துகொள்க.
இதனால், அருட்சத்தி விளக்கத்திற்கு உரியவர் ஆயினோர், பின் சிவப்பேறாகிய முடிந்தபயனைப் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தாமேல் உறைவிடம் ஆறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியை வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

பொழிப்புரை :

மேற் கூறிய சாதகர் உலகரின் மேம்பட்டுத் தங்கு கின்ற இடம் ஆறு. அவற்றுள் ஒவ்வொன்றும் தாமரைகளாய் விளங்கும். அவர்கட்குப் பிருதிவி `முதலாக மேல்நோக்கி எண்ணு கின்ற தத்துவம் முப்பத்தாறினையும் இதழ்களாகக் கொண்ட மாயை யாகிய தாமரையிலும், உண்மையாகவே நூறிதழ் உள்ள தாமரையிலும் உள்ளவளாய்க் காட்சியளிக்கின்ற அச்சத்தி, உலகர் பொருட்டுப் பூமியில் தேவியாயும் விளங்குகின்றாள்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள இதழ், சினையாகுபெயர். ஆறு தாமரைகளாகிய இடம் ஆறு ஆதாரங்கள். `இரு பதினெட்டு` என மாறிக் கூட்டுக. `இதழ் இருபதினெட்டு உள பூ, நூறுள பூ` எனத் தனி இயைக்க. வழிபாட்டிற்குச் சிறந்த ஆசனம் தாமரை மலரும், அதனுட் சிறப்புடையது நூறிதழ் உடையதும் ஆதலின், தேவியை அதன்மேற் கண்டு அன்பர்கள் வழிபடுதல் மரபு. ``பார்`` இரண்டில் முன்னது பிருதிவி தத்துவம்; பின்னது பூவுலகம். `பைந்தொடியாளாய் வந்தனள்` என மேலே கூட்டுக. இதனுள்ளும் ஆசெதுகை வந்தது. `புண்ணியம்` என்பது பாடமாயின், அதனை ஆகுபெயராகக் கொள்க.
இதனால், ஆறாதாரங்களின்வழி அகநோக்கிற் செல்ல மாட்டாத உலகர் பொருட்டு அச்சத்தியே திருக்கோயில்களில் உருக்கொண்டு எழுந்தருளியிருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகித் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்த துலகே.

பொழிப்புரை :

சிவன் யாதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது, சத்தியும் அசைதல் இல்லாத கொடிபோல ஞானமாத்திரையாய் நிற்பாள். சிவன் மேகத்தில் உண்டாகின்ற மின்னலைப்போல உலகை நோக்கித் தெய்வ நாயகனாய் வருதலினால், சத்தி தெய்வநாயகியாய் அவனுக்குத் துணை நிற்கின்றாள். அதனாலே உலகம் நடைபெற்று வருகின்றது.

குறிப்புரை :

``பரமன் இருந்திட`` என்பதை முதற்கண் வைத்து உரைக்க. `திண்கொடி` இல்பொருள் உவமை. ``ஆக`` இரண்டில் முன்னது உவம உருபு., ``பெண்கொடியாக`` என்ற அனுவாதத்தால், பெண்கொடியாதலும் பெறப்பட்டது. `பரமன், பைந்தொடியாள்` என்பன பின்னும் சென்று இயைந்தன.
இதனால், சத்தி சிவங்களது சொரூப தடத்த நிலைகள் கூறப்பட்டன. சொரூபம் அநாதி; பரம். தடத்தம் ஆதி; அபரம்.

பண் :

பாடல் எண் : 19

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்
படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழிச் சோதி அடுத்தே.

பொழிப்புரை :

உலகம் நடைபெறுவது ஒன்பது இதழ்த்தாமரை வடிவாகியாம். அதனால், சத்தியின் பேதங்களாய் உள்ள கன்னியரும் வாமை முதலிய எண்மரும், முதல்வியாகிய மனோன்மனியும் என ஒன்பதின்மராயினர். அவர் அனைவரும் இயங்குவது ஆதி சத்தியின் வழியேயாம். அவர்களை உலகத்தார் தொடர்வது மேற்கூறிய தாமரை மலரிலே. இவையெல்லாம். இங்ஙனம் இருத்தல் சிவனைச் சார்ந்தேயாம்.

குறிப்புரை :

1067 - ஆம் மந்திரத்தின் உரை பார்க்க. இரண்டாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை.
இதனால், சத்தியின் நிலைகளை வழிபாட்டு முறையிற் காணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அடுக்கின்ற தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கின்ற தாமரை இல்லகத் துள்ளது
மடுக்கின்ற தாமரை மத்தகத் தேசெல
முடுக்கின்ற தாமரை முற்சது ரத்ததே.

பொழிப்புரை :

பிராணன் எளிதில் சென்று பொருந்துகின்ற ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள தாமரையே ஆதிசத்தி நின்று உயிர்களுக்கு அறிவிக்கின்ற இடமாகும். ஆன்மாவைக் கீழே செல்லாது தியானம் முதலியவற்றால் மேலெழச் செய்கின்ற ஆசனமாகிய தாமரை மலர் உடலின் நடுவிடத்தில் உள்ளது. (அனாகதம் - இருதயம் என்றவாறு.) வழிபடுவோன் சந்திரனது அமுதத்தைப் பருகும் இடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மலர் உள்ள தலையிலே உயிருணர்வு செல்லும்படி ஓட்டுகின்ற தாமரை மலர், மேற்சொல்லிய அனைத்திற்கும் முதலிலே நாற்கோண நிலையினதாய் உள்ளது. (மூலாதாரத்திலே உள்ளது என்பதாம்.)

குறிப்புரை :

`அம்முறையறிந்து சத்தியை அங்கெல்லாம் வழிபடுக` என்பது குறிப்பெச்சம். `அடுக்கும்` என்பது முதலாகவும், `முச்சதுரத்து` எனவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக.
இதனால், `சத்தியை யோக முறையில் வழிபடுதல் மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முற்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.

பொழிப்புரை :

முதல் ஆதாரமாகிய மூலத்தினின்றும் எழுகின்ற தீக் கொழுந்து ஏனை ஆதாரங்களிலும் சென்று பரவுதற்பொருட்டும், அங்ஙனம் பரவுதலின் பயனாகிய உள்ளொளியைத் தரிசித்தற் பொருட்டும் சத்தி அந்த ஆதராங்களாகிய சிறிய இடங்களில் அடங்கு பவள் அல்லளாய் இருந்தும் அவைகளில் எழுந்தருளியிருக்கின்றாள்.

குறிப்புரை :

`அதற்குக் காரணம் கருணையே` என்பது கருத்து. முன்னது, ``சதுரம்`` எனக் கூறினமையால், ஏனைய ஆதாரங்களையும் பொதுப்பட, ``சதுரம்`` என்றார். மந்திரக் கட்டங்கள் சதுர வடிவாயினும், `சக்கரம்` என வழங்கப்படுதல் போல, `சக்கரம்` எனப்படுபவற்றை `சதுரம்` என்றார். `கடந்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. முதலடி இன எதுகை.
இதனால், `எங்கும் வியாபியாய் உள்ளவளைச் சக்கரங்கட் குள்ளே காணுதல் எவ்வாறு` என்னும் ஐயம் நீக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை தோறும்
குவிந்தன முத்தின் முகம்ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

பொழிப்புரை :

சத்தி பத்துத்திருமுகங்களைக்கொண்டு பத்துத் திசைகளையும் நோக்கியிருக்கின்றாள். அதனாலே, காற்று எங்கும் சென்று அசைதலும், நெருப்பு மேல்நோக்கி எரிதலும், நீர் கீழ்நோக்கிப் பாய்தலும் உடையனவாய்த் தம்தம் செயலைச்செய்கின்றன.

குறிப்புரை :

``திசை திசைதோறும்`` என்றமையால் பத்துத் திசையையும் நோக்குதற் பொருட்டுப் பத்து திருமுகங்களையுடைய ளாயினமை பெறப்பட்டது. சிறப்புடைய மூன்றனை எடுத்துக்கூறிப் பிறபிற பொருள்களும் சத்தியின் பார்வையாலே செயற்பட்டு நிற்றலைக் கொள்ளவைத்தார். வாயு ஒன்றேயாயினும் திசைநோக்குப் பற்றிப் பலவாக வழங்கப்படுதல் நோக்கிப் பன்மையாகக் கூறினார். ``ஒளி`` என்றது சுடரை. தீயின் சுடர்கள் பலவாதல் வெளிப்படை. ``முத்து`` என்றது நகைப்பினை. `ஒளிமுத்தின் முகம் நோக்கிக் குவிந்தன` எனக் கூட்டுக. குவிதல், மேல்நோக்கி எழுதல். தேறல் - தேன். `அம்பு தேறல்போல அதோமுகம் நடந்தது` என்க. தேன் போறல், இனிமையை உண்டாக்கல். இதனுள் பின்னிரண்டடிகள் மூன்றாம் எழுத்தெதுகை.
இதனால், பொருள்தன்மை பலவும் சத்தியது அருள் நோக்காலே நிலைபெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி
கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

பொழிப்புரை :

சத்தி, சிவனது சிவந்த பொன் போலும் திரு மேனியில் நிறைந்த நறுமணம் கமழும்படி அவனையே நாள்தோறும் பற்றிப் பயில்கின்றாள்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகளின் பொருள் வெளிப்படை. ``செறி கமழ்`` என்பது, `செறிந்து கமழ` எனப்பொருள் தந்தது. நவிலுதல் - பயிலுதல். முதலடி உயிரெழுத்தெதுகை.
இதனால், சத்தி மேற்கூறிய செயல்கள் அனைத்தையும் சிவனிடத்தில் நின்றே செய்தலன்றித் தனித்து நின்று செய்யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுழை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும்செம் மாந்து
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களும் சொல்கின்ற பெருந்தெய்வம் (முதற்கடவுள்) ஆகிய பூரணசத்தி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு, பாதம் பூமியைக் கடந்தும், முடி வானத்தைக் கடந்தும் இருக்க, `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் முச்சுடர்களே மணிகள் இழைத்த அணிகளாய் அழகுபடுத்த நிற்பாள்.

குறிப்புரை :

`உலகம் முழுவதையும் தனக்குத் திருமேனியாகக் கொண்டு விளங்குவாள்` என்றபடி. இதனையே `விசுவரூபம்` என்பர். விசுவம் - உலகம்.
`நான்மறை நவிலும் பெருந் தெய்வசத்தி` என மாறிக் கூட்டுக. உழை - பக்கம்; திசை. துகில் - உயர்வகைப்புடைவை. புலித்தோலே யல்லது மான்தோல் உடையாகச் சொல்லப்படாமையால், ``உழை`` என்பதற்கு `மான்` என உரைத்தல் பொருந்தாமை அறிக. நிலம் பொதி - பூமியை உள்ளடக்கிய. செம்மாந்து - நிமிர்ந்து; கடந்து.
``நிலமுதற்கீழ் அண்டம் உள நிமிர்ந்தது`` என்றல் காண்க. முதலடி உயிரெதுகை.
இதனால், `சில பொருள் அளவிலே வியாபகமாகாது, எல்லா உலகத்திற்கும் வியாபகமாகின்ற சத்தியே பூரண சத்தியாம்` என அவளது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

புனையவல் லாள்புவ னத்திறை எங்கள்
வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்புவ னத்தொளி தன்னை
புனையவல் லாளையே போற்றியென் பேனே.

பொழிப்புரை :

உலகத் தலைவனாகிய சிவனையும், உயிர்களாகிய எங்களையும் தாங்க வல்லவள்; உலகங்கள் அனைத்தையும் ஆக்க வல்லவள்; அவைகளைத் தனக்குள்ளே அடக்கிக் காக்க வல்லவள்; உலகத்து ஒளிகள் அனைத்தையும் தனது திருமேனியின் ஒளியாகச் செய்ய வல்லவள்; அத்தகைய பேராற்றல் உடையவளாகிய பூரண சத்தியையே நான் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள புனைதல் - தரித்தல். ``இறை`` என்பதில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது. ``எங்கள்`` என்பதில் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. சத்தி இறைவனைத் தாங்குதல் ஆவது, உற்ற துணையாய் இருத்தல். ``மண்டலம்`` என்பது `அண்டம்` என்னும் பொருளதாய் நின்றது. `அப்புனைய வல்லாளையே` எனச் சுட்டு வருவிக்க.
இதனால், பூரண சத்தியது ஆற்றலின் பெருமை வகுத்துரைத்து, `சத்தி` எனப்படுவாள் அவளேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

போற்றிஎன் பேன் புவனாபதி அம்மை என்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கோட்பைந் தொடியே.

பொழிப்புரை :

எனது இச்சா ஞானக்கிரியைகளாகிய ஆற்றலில் இயைந்து நின்று அவற்றை இயக்குகின்ற, அரியதவத்தால் அடையப் படுபவளும், `சாந்த ரூபம், யமனையும் வெல்லும் வேக ரூபம்` என்னும் இரு நிலைகளையும் உடையவளும் ஆகிய அந்த உலகத் தலைவியாம் பூரண சத்தியையே நான் வணங்குதல், வாழ்த்துதல் முதலியவற்றைத் தெரிவிக்கும் சொற்களைச் சொல்லி வழிபடுகின்றேன்.

குறிப்புரை :

புவனாபதி அம்மை - உலகத்தோடு இயைந்து நின்று அதனைச் செயற்படுத்திகின்ற சத்தியும், அச்சத்தியோடு கூடி நிற்பவ னாகிய `பதி` என்னும் சிவனும் என்னும் இருவராகவும் அறியப் படுகின்ற அம்மை. `சத்தியும், சிவமும் தம்மில் வேறல்லவாகலின், இங்குக் கூறிவருகின்ற பெருமைகளை அவ்விருவரில் எவருக்கு உரியதாகக் கூறினும் குற்றம் இன்று` என்பதை விளக்க. `அம்மை` என்றாயினும் கூறாது புவனாபதி அம்மை`` எனக் கூறினார். `இங்ஙனமாயினும், அவரவர்க்கு அன்பு செல்லும் வழியாற் கூறுதலே முறை` என்பது பற்றி இந்நூலுள் இத்தன்மைகளைச் சில விடத்துச் சிவனுக்குரியவாகவும், சிலவிடத்துச் சத்திக்குரியவாகவும் கூறப்படு கின்றன` என்பது பெறப் பட்டமை காண்க. `புவனாபதி அம்மை என்பதன் பொருள் விளங்கினமையின், `புவனாபதி` என்னும் அளவாகவே பின்னர்க் கூறுமிடத்து, அச்சொற்பொருளும் இதுபற்றி அறிந்துகொள்ளப்படும். அஃதாவது, `அம்மை என்பது ஆற்றலால் விளங்க வைத்துக் கூறப்படுதல் அறியப்படும்` என்க.
சீற்றங் கடிதல், சாந்தமாய் இருத்தல். கோள் - கருத்து. கூற்றந் துரக்கின்ற கோள் - பகையை அழிக்கும் கருத்து. ``அம்மை`` முதலியவற்றில் இரண்டனுருபுகள் தொகுத்தலாயின.
இதனால், பூரண சத்தி, `அமைதி, சீற்றம்` என்னும் இரு நிலையிலும் நின்று நலம் செய்தல் கூறப்பட்டது. வேகநிலை துன்பத்தைப் போக்குவது. சாந்த நிலை இன்பத்தை ஆக்குவது.

பண் :

பாடல் எண் : 27

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தர
வடிவார் திரிபுரையாம் மங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத் தாதியு மாமே.

பொழிப்புரை :

வளையல் அணிந்த கைகளையுடையவளும், இன்பத் தோற்றத்திற்குக் காரணமாயிருப்பவளும், அழகிய வடிவத்தை யுடைய `திரிபுரை` என்னும் தேவியும் ஆகிய சத்தி, ஐயத்திற்குக் காரண மாயுள்ள கீழான முன்னை வினைகள் கெடுதலினால் தன்னை உணர்ந்து வந்து அடைபவர்களை, `என் அடியார்கள்` என்று சொல்லி ஏற்று, அவர்கட்கு, மேல் வினை வாராமல் காக்கின்ற தலைவியாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`சுந்தரி` என்பது பாடமாகாமை அறிக. `சேர்வாரை` என்பது குறுகிநின்றது. `என் அடியார் என்று வினை கெடுத்து` எனக் கூட்டுக. ``ஆதியும் ஆம்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், பூரணசத்தியைத் தெளிந்து அடைந்தோர் வினைக்கட்டு நீங்கி வீடுபெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.

பொழிப்புரை :

மென்மைத்தன்மையோடு பொருந்து தலை யுடைய பெண்மகளாகக் காட்சியளிப்பவளும், ஆகாயத்தில் தோன்றும் மின்னலை ஒப்பவளும், பலவாகிய புகழையுடைய தேவியாய் நின்று பல பயன்களைத் தருகின்ற, பசிய கொடி போன்றவளும் ஆகிய சத்தி, கீழ்மையோடு இசைதலையுடைய அக இருளாகிய பெண்டினை என் மனமாகிய வீட்டினின்றும் ஓட்டிவிட்டுத் தான் வலிமையோடு கூடிய பெண்டாய் அதனுள் குடிபுகுந்தாள்.

குறிப்புரை :

``இசை`` நான்கில் இரண்டாவது, புகழ். ஏனையவை முதனிலைத் தொழிற் பெயர்.
இதனால், பூரணசத்தி, மேற்கூறிய வினைகட்குக் காரணமாய் நின்று அக இருளையும் போக்கியருள்கின்ற ஆற்றலுடையளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

தாவித்த அப்பொருள் தான் அவன் எம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொரு ளானது தானே.

பொழிப்புரை :

சத்தி மேற்கூறியவாறு மனம் புகுந்தபின் அவளால் அங்கு நிறுவப்பட்ட (நிலைப்பிக்கப்பட்ட) அப்பொருள் எம் இறைவனாகிய சிவனேயாகும். எதனால் எனின், அவன் உலகைப் படைக்க நினைக்கும்பொழுது சத்தியும் அதனையே விரும்பி, மாயையின், மேல் கீழ் ஆகிய இரு பகுதிகளையும் சார்ந்து நின்று பல்வேறு வகையாகப் புலனாகின்ற அப்பொருளாய் நிற்கின்ற அச்செயலையே தான் செய்வாள் ஆதலின்.

குறிப்புரை :

``தாவித்த அப்பொருள்`` என்ற அனுவாதத்தால், தாவித்தலும் பெறப்பட்டது. படவே, சத்தி தான் மனம் புகுந்தபின் சிவனை அங்கு நிலைப்பிக்கச் செய்தலும் ஒருதலையாக நிகழ்தல் அறியப்படும். இதனை, சிவனே முதல்வனாக, சத்தி துணைவியாய் நிற்றலாகிய உண்மைபற்றித் தெளிந்து கொள்ளுதற்குப் பின்மூன்று அடிகளைக் கூறினார். `அவன்தான்` என மாற்றியுரைக்க. ``பாவித்துப் படைக்கின்ற காலத்து`` என்றாராயினும் `படைக்கப் பாவிக்கின்ற காலத்து` என்றலே கருத்தென்க. தொடர்தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.` ஆவித்தல் - உயிர்த்தல் புலனாதல். `ஆனதே செய்தாள்` எனவும், `ஆதலின்` எனவும் சொல்லெச்சங்கள் வருவித்துக் கொள்க. `தானது தானே` என்பது பாடமன்று.
இதனால், பூரணசத்தி, பின் சிவத்தைத்தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

அதுஇது என்பார் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :

`அதற்குக் காரணம் அதற்கு முன்னுள்ள அந்த ஒன்று; இதற்குக் காரணம் இதற்கு முன்னுள்ள இன்னொன்று` என்று இப்படிக் காரியப்பொருள்கள் பலவற்றிற்கும் பல காரணப் பொருள்களையே முடிந்த காரணப் பொருளாக மயங்கி, அனைத்துக் காரணங்கட்கும் காரணமாய் உள்ள பொருளை உணரமாட்டாதவர் சிவனை அறியுமாறில்லை. அதனால், முத்திக்கு வழியை அவர் அறியாதவரே யாகின்றனர். அவர் அன்னராதல் சத்தியின் இயல்பை முற்பட உணராமை யாலேயாம். ஆதலின், அவர் உண்மைச் சிந்தனையாளர் அல்லர்.

குறிப்புரை :

ஓர் காரணம் - பிறிதுகாரணம் இல்லையாகத் தான் ஒன்றேயாய் உள்ள காரணம். திதம் - நிலைமை; இயல்பு. அது, முன்னே திரோதாயியாய் நின்று பக்குவத்தை வருவித்துப் பின் அருட் சத்தியாய்ப் பதிதல்.
இதனால், பூரண சத்தியது இயல்பை உணர்தலின் இன்றி யமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
நாலித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.

பொழிப்புரை :

நான்கு இதழ்களையுடைய தாமரையாகிய மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் சுத்த
தத்துவம் ஐந்தும், புருடன் ஒன்றும் தவிர, ஏனையதத்துவ தாத்துவிகங்கள் தொண்ணூறும் அடங்கி நிற் கின்றன. இடைநான்கு ஆதாரத்தின் தாமரைகளில் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. இரண்டிதழ்களையுடைய அந்த ஆஞ்ஞைத் தாமரைக்கு அடியாயுள்ள ஏனைய ஆதாரத் தாமரைகளாய் நின்று அந்த ஆஞ்ஞையைத் தாங்கியும், அவ் ஆஞ்ஞைத் தாமரையாய் நின்று அதன்கண் விளங்கும் தியானப்பொருளைத் தாங்கியும் அருள் புரிகின்றாள் சத்தி.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களும், அவற்றின் அமைப்புக்களும், அவற்றில் உள்ளனவும் முன்னைத் தந்திரத்தில் விளங்கக் கூறப் பட்டன. ``இதழ்`` நான்கில் முதலதும், ஈற்றதும் ஆகுபெயர். முத லடியில் ``நாலிதழ்`` என்பதன்பின் `முதலிய` என்பது எஞ்சி நின்றது. சுத்த தத்து வங்கள் ஏழாந் தானத்தில் நிற்றல் பற்றியும், புருடன் ஆஞ் ஞையைக் கடந்தும் செல்லுதல் பற்றியும் அவை ஒழிந்தன ஆறா தாரங்களில் நிற்கும் என்க. ``நாலிதழானவை`` என்பதில் ``நாலின்கண் இதழானவை`` என ஏழன் உருபு விரித்துக்கொள்க. ``அவிர்ந்தது`` என்பது `நவின்றது` என இருந்தது போலும். பால் - பகுப்பு. எனவே, `இரண்டு` என்றதாயிற்று. தரித்தல் - தாங்குதல்; இதற்குச் செயப்படு பொருள் வருவித்துக்கொள்க. உயர்ந்ததாகிய ஆஞ்ஞையின் ஆதார ஆதேயங்களாதல் கூறவே, கீழுள்ளவற்றிற்கும் அவ்வாறாதல் பெறப் பட்டது. மூலாதாரத்திற்கு ஆதார மாதல் நேரேயாம். `சத்தி` என்பது முன்னை அதிகாரத்தினின்றும் வந்து இயைந்தது. ஈற்றடி உயிரெதுகை.
இதனால், சத்தி ஆதார பங்கயங்களின் ஆதார ஆதேயமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.

பொழிப்புரை :

சத்தி அனைத்துயிர்க்கும் தாயாகலின் அவள் மேற் கூறியவாறு ஆதார பங்கயங்களின் ஆதாரமும், ஆதேயமுமாய் நிற்றல் தனது ஒளியுருவை யோகியர் காணுதல் குறித்தும், கலைஞானத்தை மிகத்தந்தும், ஐம்புல ஆசைகளின் கொடுமையைக் கண்டு அதனைத் தடுத்துக் கொண்டுமாம்.

குறிப்புரை :

`மாதுரு` என்னும் வடசொல் ஈறுதொகுத்தல் பெற்று நின்றது. இதன்பின் `ஆதலின்` என்பது எஞ்சி நின்றது. `மாதுரு நல்லா ளாகலின்` என எடுத்துக்கொண்டு உரைக்க. ``தன்னொளி நோக்கி`` என்பது, `தன்னொளியை அடியவர் காணுதல் குறித்து` எனப் பொருள் தந்தது. ``கூறிய ஐந்தும்`` என்பது, இடைநிலைத் தீவகமாய் நின்றது. பின்னிரண்டடிகள் ஒப்பெதுகை.
இதனால், சத்தி ஆதார பங்கயங்களின் ஆதார ஆதேயமாய் நின்று செய்வன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

பொழிப்புரை :

சத்தி தனது மணாளனாகிய சிவன் ஒருபோதும் தன்னைவிட்டு நீங்காதிருத்தலினாலே ஒரு பாதியேதானாய், மற்றொரு பாதி அச்சிவனாய் இருக்கின்றாள். (இந்நிலை எக்காலத்தும் வேறு படுதல் இல்லை என்றபடி) அத்தன்மையை உடைய ஒளி வடிவி னளாகிய அவளைத் துணையாக உங்கள் உள்ளத்தில் இருத்த வல்லீ ராயின், எல்லாத் துன்பமும் நீங்கும்; வெளுக்கப்பட்ட ஆடைபோல் ஆன்மா மும்மலங்களும் நீங்கத் தூயதாய் விளங்கும்.

குறிப்புரை :

``மாது நல்லாளும்`` என்னும் உம்மை சிறப்பு. `மாது நல்லாளும் ஆனது இருந்திட` என இயையும். சொல்லமைதி இங்ஙன மாயினும், கருத்து நோக்கி மேற்கண்டவாறு உரைக்கப்பட்டது. `துணை யாக` என ஆக்கம் வருவிக்க. வெள்ளாடை என்பது குறுகி நின்றது. இயல்பாகவே கொண்டு, `உயிர் தூய்மையை அடைதல் உண்டாகும்` என உரைத்தலுமாம். வெள்ளாடையாதற்கு வினைமுதல் வருவிக்க.
இதனால், `சத்தியை, சிவனை ஒரு பாதியில் உடையவ ளாகவே தியானித்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.

பொழிப்புரை :

கருவி கரணங்கள் சென்று பற்றும் வகையில் வெளி நில்லாதவனும், கரிய வண்டுகள் மொய்க்கின்ற மலர்களின் தேன் பொருந்தி நிரம்புதலால் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிரால் மனம் வருந்துதல் இல்லாதவனும் ஆகிய சிவன், அத் தன்மையனாயினும், சிலபொழுது தனது கூறேயான ஒரு பெண்ணைத் தன் உடம்பில் ஒருபாதியில் கொண்டவனாய்க் காணப்படுதலும், சிலபொழுது பெண்ணேயாய்க் காணப்படுதலும் உடையன்.

குறிப்புரை :

``மா`` இரண்டில் முன்னது வண்டு, ``கள் அடை`` என்பதில் ``அடை`` என்னும் பகுதி `அடைந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `குழலாரால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மள் - மள்கல்; முதனிலைத் தொழிற் பெயர். `மழுங்குதல்` என்பது பொருள். `வெள்ளடையானாகிய மள்ளடையானாயினும்` என்பது சொல் அமைதி. ``ஆம்`` என்பதை, ``பாகன்`` என்பதனோடும் கூட்டுக. `பிறவியே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `சிவன் உண்மையில் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அதனால், வேடங்கட்டி ஆடுவார் போன்று பொது நிலையில் எவ்வகையாயும் தோன்றுவன்` என்பது ஈற்றடியின் கருத்து. எனவே, சிவனது ஆண் தோற்றம் ஒன்றையே கொண்டு `அதுவே அவனது உண்மையியல்பு` என வழக் கிடுதலும், பெண் தோற்றம் ஒன்றையே கொண்டு, `அதுவே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும், மாதொரு கூறாய தோற்றம் ஒன்றையே கொண்டு `இரண்டும் கூடியுள்ளதே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும் பேதைமைப் பாலவாதல் விளங்கும். இவ்வியல்பு சிவன், சத்தி இருவர்க்கும் உரியதென்க. எனவே, கடவுளது ஆண் தோற்றம் முதலிய மூவகைத் தோற்றங்களுள் எதனைக் காணினும், `இஃது உயிர்கள் பொருட்டு ஏற்ற பெற்றியாற் கொண்ட பொதுவியல்பாம்` என உணர்தலல்லது, `சிவன், சத்தி இவர்களது உண்மை யியல்பு என மயங்குதல் பொருந்தாதாயிற்று. இவ்வியல்பினை,
``ஒன்றொடொன் றொவ்வா வேடம்ஒருவனே தரித்துக்
[கொண்டு
நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் என்றும் ஓரார்`` 1
என விளக்கிற்றுச் சிவஞான சித்தி. இன்னும்,
``எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் தமையன்`` 2
எனவும்,
``சிவம் சத்தி தன்னை யீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும் புணர்ந்திங் குலகுயி ரெல்லாம் ஈன்றும்
பவன்பிரம சாரி யாகும்; பால்மொழி கன்னி யாகும்;
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே`` 3
எனவும் வருவன போல்வன பலவும், இவையெல்லாம் கடவுள் தனது அருள் நாடகத்திற்கொள்ளும் பொதுவியல்பாதலன்றி உண்மை யியல்பாகாமையை விளக்க எழுந்தனவேயாம். ஆகவே,
``கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகு மாபோல்`` 4
என்ற பெரியவர் ஒருவர் வாக்கின்படி ஆடவர் போலவும், மகளிர் போலவும் வேடங்கட்டியாடுவார். அவ்வேடத்திற்கு ஏற்பவே நடித்து நிற்பினும் அவரது உண்மைத் தன்மை அவ்வேடத்திற்கு வேறாயினாற் போலவே, ஆணாயும், பெண்ணாயும் தோன்றும் கடவுளின் உண்மையியல்பு அவற்றின் வேறேயாம் என்பது இனிது விளங்கும்.
``சத்திதான் நாத மாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதான் ஆதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமும் ஆகும்`` 1
என்ற சிவஞான சித்தியையும் அதற்கு மாபாடியம் உடையார் உரைத்த உரையும் இங்கு இனிது நோக்கி உணர்க. இங்ஙனம், உணரமாட்டாது தம்முள் மாறுபட்டு வழக்கிடுவாரை நோக்கியேயன்றோ தாயுமான அடிகள்,
``அன்னே அனே எனும் சிலசமயம் நின்னையே;
ஐயா ஐயா என்னவே
அலறிடும் சிலசமயம்``
என முதற்கண் நகையாடியும், பின்னர்,
``என்னே எனேகருணை விளையாட் டிருந்தவாறு`` 2
என வியந்தும் கூறியருளினார். ஈற்றடி இனவெதுகை.
இதனால், `சிவம் சத்தி இவர்களிடையே சொல்லப்படும் நாயக நாயகித் தன்மை குணியும், குணமுமாய் நிற்கும். அதனை விளக்கும் அத்துணையதேயல்லது முழுவதுமாகின்ற உண்மையியல்பு அன்று` என்பதும், `அதனால் அத்தன்மைக்கு ஏற்ப அவர்கள் கொள்ளும் கோலம் அவர்களது பொதுவியல்பேயாம்` என்பதும் குறிப்பு மொழியாற் கூறப்பட்டன. இது பற்றியன்றே ஞானசம்பந்தரும், இறைவனை ``ஒருமை பெண்மை யுடையனாக`` 3 முன்னரே கண்டு வைத்திருந்தும், வையைக் கரையில் பாண்டியன் கேட்க அருளிச் செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்தில்
``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ`` 4
என அருளிச் செய்தார்! அதனால், இறைவனது உண்மையியல்பு உயிர் களால் `இன்னதுதான்` என வரையறுத்துணரப் படாததாதல் தெற்றென விளங்கும். இதனை விளக்கும் முகத்தானே ஆதார ஆதேயங்களாய் நிற்றல் சத்தி, சிவம் இருவர்க்கும் பொதுவேயாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

பொழிப்புரை :

ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு புணர்தலால் பயனின்மையின் அங்ஙனம் புணர்தல் பேதமைச் செயலாதல் தெளியப் பட்டதாயினும், அச்செயலால் ஆண் ஒன்று பிறந்த பயன் ஓரிடத்தில் காணப்படுகின்றது (இஃது அதிசயம்) இனி, புணரப்பட்ட அப் பெண்ணிடத்தினின்றும் பிறந்த அந்த ஆணின் உண்மையை உணர்ந்து, யாவரையும் அந்த ஆணினிடத்தே ஈர்த்து வைக்கின்ற அந்தப் பெண்ணைத் துணைவியாக உடைய அந்த ஆணின் பக்கல் அந்தப் பெண் ஈர்த்தவாறே சென்று அடைவதே, `இஃது இயற்கைக்கு மாறாய் இயலாததொன்றாம்` என்று பேசும் பேச்சு அற்றொழிதற்கு வழியாம்.

குறிப்புரை :

முதலில் உள்ள `பெண்` பராசத்தி. அடுத்த வந்த பெண் ஆதிசத்தி. பராசத்தி ஆதிசத்தியோடு புணர்தலாவது அந்நிலையில் கலந்து நிற்றல். ஆதிசத்தியினின்றும பிறந்த ஆண் சதாசிவ மூர்த்தி. `இவ் வுண்மையை அறிதல் வேண்டும்` என்றவாறு. `பேதைமையால்` என உருபு விரிக்க. ஈர்க்கின்ற பெண், அனுக்கிரக மூர்த்தியாகிய சதாசிவர் பால் உயிர்களை ஈர்த்துச் சேர்க்கின்ற மனோன்மனிசத்தி, `ஆணிடைப் பேச்சறும்` என்றது, ஆணிடை அடைந்தால் பேச்சறும் என்றதாம்.
இதனால், ``தவந்தரும் ஞானத்தோர்க்கு இத்தன்மைதான் தெரியும்`` என மேற்காட்டியவாறு. மேற்கூறிய உண்மைகள் எல்லாம் திருவருள் கிடைக்கப்பெற்ற பின்பு இனிது விளங்கும், என்பது நகைச்சுவை படக்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.

பொழிப்புரை :

சொல்லற்ற இடத்தில் நிற்கும் தலைவனாகிய சிவன் குற்றம் அற்ற ஒளிப்பொருள். துணைவியாகிய சத்தியும் அங்ஙனம் குற்றம் அற்ற ஒளிப்பொருளே. ஆயினும் சத்தியே சிவத்துடன் வந்து குற்றம் அற்ற என்உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்றாள்.

குறிப்புரை :

அஃதாவது, `சிவமும் சத்தியும் ஒரு பொருளே யாயினும், அப்பொருள் உயிர்களோடு தொடர்புகொள்ளும் நிலையில் `சத்தி` எனப்படுகின்றது` என்பதாம். பெருந்தகை - தலைவன். காண், உம் அசைகள். `குற்றம்` என்னும் பொருளைத் தருகின்ற, `மாசு, காசு, ஆசு` என்பன எதுகை நோக்கி விரிதல் பெற்றன. இறுதியடியில், `அற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மங்கையாம் மனோன்மனி என மாறுக. இங்கு உம்மை தொகுக்கப்பட்டது `மங்கையும்` என்றே ஓதுதலுமாம். `அவள் புணர்ந்து புகுந்து ஆலிக்கும்` என வேறு தொடராக்கி முடிக்க. ``கடவுளுடன் புணர்ந்து`` என்றது. தனித்து நில்லாமையை வலியுறுத்தியதாம்.
இதனால், `முதற்பொருள் இரண்டில்லையாயினும், செய லிடத்துச் சத்தியாய் நிற்கும்` என்பதுணர்த்தி, மேல், `சத்தியே ஆதார ஆதேயமாய் நிற்கின்றாள்` எனக் கூறியதன்கண் ஐயம் அறுக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித் துலகில் பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஓலித் தொருவன் உகந்துநின் றானே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்ற கன்னிப் பெண்ணாகிய சத்தி பெண் தன்மையை உடையளாய் உலகெங்கும் நிறைந்து உலகினைப் பாதுகாத்து நிற்பாள். உலகத்தலைவியும், வேதங்களால் குறிப்பிடப்படும் முதல்வியுமாகிய அவளை வேதங்களும் காணமாட்டாது ஓலமிட்டு நிற்கின்ற சிவன் யாண்டும் பிரியாதே கூடி நிற்கின்றான்.

குறிப்புரை :

`பாலித்துப் பரந்து பெண்ணாகும்` என்பதை, `பெண் ணாகிப் பரந்து பாலிக்கும்` எனப் பின் முன்னாகவைத்து, விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. ஓலித்தல் - ஓலம் இடுல். `ஓலித்த` என்னும் அகரம் தொகுத்தல். வேலை - கடல். அஃது அதனாற் சூழப்பட்ட உல கிற்கு ஆயிற்று. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் ஆகாமை அறிக.
இதனால், மேற்கூறியவாறு சத்தி சிவனோடு கூடியே நிற்றல் போல, சிவனும் சத்தியோடுகூடியே நிற்றலைக் கூறி, இருமையின் ஒருமை வலியுறுத்தப்பட்டது.
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான்`` 1
என்றார் திருக்களிற்றுப்படியாரினும்.

பண் :

பாடல் எண் : 8

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.

பொழிப்புரை :

நம்பியாகிய சிவன் காமனை எரித்த நெற்றிக் கண்ணோடு நின்றே மேற்கூறிய நங்கையாகிய வேத முதல்வியை விரும்பி நின்றான். பின்பு அவளது தோள்களைத் தன் தோளோடு ஒன்றாகும்படிச் சேர்த்து மகிழ்ந்து நின்றான். இவை முறையே அவன் உயிர்களாகிய நம்மிடம் வருதல் குறித்தும் அனைத்து உயிர்களுக்கும் போகத்தைத் தருதல் குறித்துமாம்.

குறிப்புரை :

`இல்லையேல் அவை இயலா` என்பது கருத்து. மூன்றாம் அடிக்கு, `இவ்வுலகங்கள் எல்லாம் போகத்தை எய்த உகந்து நின்றான் ஆதலின்` என உரைக்க.
இதனால், `சிவன் தனது உண்மை நிலையில் அணியனல்ல னாயினும், உயிர்களின் பொருட்டு அணியனாதற்கும், போகியல்ல னாயினும் உயிர்கள் போகத்தை எய்துதற் பொருட்டும் சத்தியோடு மணந்து நிற்பன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்தது சொல்லகி லேனே.

பொழிப்புரை :

சத்தி பெண்ணியல்புகள் பலவும் தோன்ற நின்று சிவனை மணந்ததில் உள்ள கருத்து சொல்லுதற்கரிதாம்.

குறிப்புரை :

துத்தி - பாம்பின் படப்பொறி. விரிதல் - பரத்தல். `துத்தி போல விரிந்து சுணங்கு` எனவும், `புத்தகம் போலும் சீறடி` எனவும் விரித்துக்கொள்க. தொத்தல் - பற்றுதல் `தொகுத்த` என்பதன் விகார மாகக் கொண்டு, `உள்ளீடான` என்று உரைப்பினும் அமையும். சத்தி சிவங்களது குறிப்பு முழுதும் உயிர்களால் அறிதல் கூடாது என்பதாம். ``புணர்வினை`` என்பது இரண்டாவதன் விரியாக முன்னர்க் கூறிய பொருளும், வினைத் தொகையாகப் பின்னர்க் கூறிய பொருளும் அமைவனவாம்.
இதனால், சிவம் சத்திகளது ஆதார ஆதேயங்களாய் நிற்கும் அருட்பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே.

பொழிப்புரை :

அருள் ஒளி மண்டலம் உயிர்களது சொல்லுக்கு எட்டாதது. அதனால், அங்குச் செல்லமாட்டாது பலரும் திகைத்து நிற் கின்றார்கள். அம்மண்டலமாவாள் பிறரால் கடத்தற்கரிய செயல்களை உடையவளும், வலிந்து பற்றிக் கொள்ளவாராதவளும் ஆகிய சத்தியே.

குறிப்புரை :

``அங்கு`` என்றது, அவரவர் இருக்கும் இடத்தை. `வலிமை` எனப் பொருள்தரும் `மல்` என்னும் உரிச் சொல்லடியாக ``மல்ல`` என்னும் செயவெனச்சம் பிறந்தது.
இதனால், சத்தி ஒளி மண்டலமாய் நின்று அனைத்திற்கும் ஆதாரமாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண்கடற் கண்ணே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

``தான்`` என்றது சத்தியை. தாங்குதல், இடந்தருதல். மழை பொழி தையல், கங்காதேவி. எனவே, கங்கையை உமைக்கு மாற்றாள்போல வைத்துச் சொல்வனவெல்லாம் செய்யுளின்பம் படக்கூறும் கூற்றேயாதல் தெளியப்படும். வடவரை - மேருமலை. தலைமை பற்றி இதனைக் கூறவே பிறமலைகளும் கொள்ளப்படும். ``கண்`` என்பது, `இடம்` எனப் பொருள்தரும் பெயர்ச்சொல். எனவே, ``கடற்கண்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `தண்கடலாகுமே` என்பதும் பாடம்.
இதனால், சத்தி ஆதராமாய் நிற்கும் வகைகள் சில கூறப் பட்டன. மழை பொழி தையலாய் நிற்றல் உயிர்கள் அழியாதவாறு நிறுத்தலாம். இதனுள் ``தான்`` என்றதனைச் சிவத்திற்கு ஆக்கி, சிவ பரத்துவ அதிகாரத்திலும் இம் மந்திரத்தை, ``பொன்னாற் புரிந்திட்ட`` என்னும் மந்திரத்தின்பின் ஒருமுறை ஓதுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 12

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

பொழிப்புரை :

எவ்விடத்தையும் தனதாக உடைய சத்தியைக் கூடி அவளுடன் எங்கும் வியாபகமாய் நின்ற அறிவர் சிவத்தன்மை பெற்றவர்; சீவத் தன்மையாகிய முனைப்பு நீங்கியவர். அதனால் பர வெளியில் நிற்பவராகிய அவரை மிக்க மேன்மை உடையவராக அறிந்து, மண்ணில், வாழ்பவராகிய மனிதரில் வைத்து எண்ணா தொழிதல் வேண்டும். (`விண்ணில் வாழும் கடவுளரில் வைத்து எண்ணல் வேண்டும்` என்றபடி).

குறிப்புரை :

``கண்`` என்பது மேலை மந்திரத்தில் வந்தவாறே வந்தது. இதற்கு, `விழி - நெற்றிக்கண்` என உரைத்தற்கு ஓர் இயை பின்மை அறிக. இரண்டாம் அடியில் நின்ற ஐகாரம் சாரியை. `மண் ணுடையாராகிய மனிதர்` என்க. பண் - பண்ணப்படுதல்; செம்மை யாக்கப்படுதல். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.
இதனால், சத்தியது ஆதாரமாய் நிற்கும் நிலையை உலகில் வைத்து உணர்பவர் ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வைப் பெறுதல் கூறப்பட்டது. சத்தியது ஆதார ஆதேயமாம் நிலையை உலகில் வைத்து உணர்தலை, `பாரயோகம்` என்பர்.

பண் :

பாடல் எண் : 13

கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களையும் நினைவு மாத்திரத்தாலே உண்டாக்கி, அவை அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சத்தி, அதற்கு முன்னே அவ்வுலகங்களைக் கடந்து நின்ற ஒரு சத்தியாய் இருப்பாள். அதனால், எட்டுத்திக்கில் உள்ளாரும் தாம் தாம் தமக்கு ஏற்ற பெற்றியால் மணம் பொருந்திய மலர்களைக் கையிலே கொண்டு தோத்திரங்களைச் சொல்லித் தொண்டுபட்டு அம்மலர்களைத் தூவித் தொழுகின்ற தேவி அப்பராசத்தியே யாவாள்.

குறிப்புரை :

கு-ரை: `அந்நிலையை அறியாதவர் வேறு வேறு தேவியராகக் கருதிச்செய்யும் வழிபாடுகளையும் ஏற்று அவர்கட்கு ஏற்ற பெற்றியால் அருள் புரிபவளும் அவளன்றி வேறில்லை` என்றபடி,
``யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``1
என்னும் சிவஞான சித்தியை நோக்குக. காணல் - கருத்தாற் படைத்தல். `எண்திசையும் கண்டு` எனக் கூட்டுக. ``நிற்கும்`` என்பது இறந்த காலத்தில் நிகழ்காலம். இதன்பின் `அதனால்` என்பதும், இறுதியில் `அவளே` என்பதும் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `தொழநின்ற கன்னி கலந்து வருங் கன்னியாம். அவள், பண்டு பராசத்தியாய் நிற்கும்` என உரைத்தலும் ஆம். இவ்வுரையில் மேற்கூறிய கருத்து உடம்பொடு புணர்த்தலாய் அமையும். மூன்றாம் அடியில் ``தசை`` ஆகுபெயர். ஈற்றடியில், `எண்டிசையிலும்` என்னும் உருபு விரித்துக் கொள்க. இதனால், சத்தி ஆதார ஆதேயமாய் நிற்றலின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

பொழிப்புரை :

இறைவி அழியாத ஒளி வடிவாய் நிற்கும் இடம் இது போலும் பிறைவடிவம் பொருந்தியிருக்கின்ற ஆஞ்ஞைத் தானமாம். அது சிவந்த நிறத்தை உடைய தாமரை மலர் வடிவும் உடையது. அவள் தலையாகிய இருப்பிடத்தில், நிரம்பிய பதினாறு கலைகளை யுடைய சந்திரனோடு கூடியிருக்கும் பொழுது பராசத்தியாய் விளங்குவாள்.

குறிப்புரை :

என்றது, `சத்தி, ஆதாரயோகத்தில் ஒளியுருவாயும், நிராதார யோகத்தில் உருவம் அற்ற அருவப் பொருளாயும் நிற்பாள்` என்றதாம். கன்னி - அழியாமை, ``இச்சந்திரன்`` என்றது, `இவ்வாறு கன்னி ஒளியாயுள்ள சந்திரன்` என்றவாறு. இதில் கன்னிமை இளமையைக் குறித்தது. ``சந்திரன்`` என்றது அவனது வடிவைக் குறித்த ஆகுபெயர். `சென்னியாகிய இருப்பிடத்தில் இருப்ப` என இயையும். `இருப்பிடத்தில்` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முன்னர் `சந்திரன்` என வந்தமையால், ``பதினாறு`` என்பது அவனது கலைகளைக் குறித்தது. நிரம்பிய சந்திரன் போல்வதாய், `சந்திர மண்டலம்` எனப்படுவது, நெற்றிக்கு மேலிடத்துள்ள ஆயிர இதழ்த் தாமரை மலராகும். ``பன்னி`` என்பது, `பத்நி` என்னும் ஆரியச் சொல்லின் சிதைவு. இதனையே முதற்கண் கொண்டு உரைக்க. ``பராசத்தி`` என்பது, `உருவத்தைக் கடந்தவள்` என்னும் அளவினதாய் நின்றது.
இதனால், சத்தியது ஆதார ஆதேயமாய் நிற்கும்நிலை உடலில் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங்
குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.

பொழிப்புரை :

`பராசத்தி` என்றே பல வகையிலும் பன்முறை துதிக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் ஆதார சத்தியாய் நிற்கின்ற, வேதத் தின் வழி அறியப்படுகின்ற அவளே முழுமுதற் சத்தியாம். அவளை யாமள ஆகமம் பலபடக் கூற, அவ்வாறும் பல்கி நின்ற அவளது பல கோலங்களையும் யான் அவளது அருளாலே அறிந்தேன்.

குறிப்புரை :

``என்று`` என்பது, `எனப்பட்டு` எனப் பொருள் தந்தது. `பல்வகையானும் பராசத்தி என்றென்று` என மாற்றி உரைக்க. அடுக்கு, பன்மை குறித்தது. தலைப்பிரமாணம் - தலையாய நூல். அது வாயிலாக அறியப்படுபவளை, ``தலைப்பிரமாணி`` என்றார். `இரா சாத்தி` என்பது குறுகிநின்றது. இராணியை `இராசாத்தி` என்றல் நாட்டு வழக்கு. யாமள ஆகமம் வாம மார்க்கத்ததாய்ச் சத்தியின் வடி வங்களைப் பலப்படக் கூறி, அவற்றிற்குரிய வழிபாடுகளையும் பலபட விதிக்கும். அந்நிலையில் நிற்பாரையும் உய்வித்தல் சத்திக்குக் கடப்பாடாதலின், அவ்வாறு நின்று அவர்கட்கும் அருள்புரிதல் பற்றி, ஆங்கு ``உரா சத்திகோலம் பல உணர்ந்தேன்`` என்றார். உராவுதல் பரந்து தோன்றல். `உராவு` என்பது குறைந்து நின்றது, `உராவு கோலம்` என இயையும். முருகனும் இவ்வாறு தாழ் நிலையில் நின்று செய்வாரது வழிபாட்டினையும் ஏற்று, அவர்க்கு ஏற்றவாறு அருள் புரிதலைத் திரு முருகாற்றுப்படை ``சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து`` என்பது முதலாகப் பல அடிகளால் உணர்த்துதல் காண்க. `ஆகமத் தாளாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சத்தி தன்னை அறிவார் அறிந்த வாற்றான் வழி படும் இடங்களில் எல்லாம் ஆதார ஆதேயங்களாய் நின்று அவர வர்க்குத் தக அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி
இணைந்து பரமென் றிசைந்திது தானே.

பொழிப்புரை :

சிவன் தனது சங்கற்ப மாத்திரையானே தோற்று வித்த ஏழு உலகங்களையும், அவ்வுலகத்தோடே பொருந்துவதாகிய சத்தி, தான் அறிந்து, அவற்றிற்கு உயிராய், அவைகளோடு கலந்து நிற்கும். அங்ஙனம் நிற்கின்ற அச்சத்திக்குச் சத்தனாய் நிற்கின்ற இறைவன் அச் சத்தியை மணந்த பொழுதே உயிர்கட்குப் போகம் அமையும். அச் சிவத்தோடு இணைந்து நின்ற இச்சத்தியே உலகிற்குத் தலைமையாவது.

குறிப்புரை :

`என்றது, சத்தி படைப்புக் காலத்தில் இறைவனது சங்கற்பரூப ஆதி சத்தியாய் நின்று உலகைத் தோற்றுவித்துப் பின் யோகினி சத்தியாய் உலகெங்கும் வியாபித்துப் பின் இறைவனோடு இணைந்து நின்று போக சத்தியாகி உலகிற்குப் போகத்தைத் தந்து, உலகிற்குத் தலைமை பூண்டு நிற்கின்றது` என்றவாறு. முதலடி மூன்றாம் அடிகளில் `உணர்ந்த, புணர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரங்களும் தொகுத்தலாயின. `இசைந்த` என்பதன் அகரமும் அன்னது. `யோக சத்தி` எனின் பிறிது பொருள் படுமாகலின் `யோகினி` என்றார். எனவே, இதனை யாமள தந்திரங் கூறும் யோகினிகளாகக் கொள்ளுதல் பொருந்தாமை அறிக. `அதனோடு` என உருபு விரிக்க. ஆதி, பரம் இவை இங்குத் தலைமை. `இதுதானே ஆதி` என மேலே கூட்டி முடிக்க.
இதனால், `சத்தி `யோகினி` என நின்று ஆதார ஆதேயங் களாய்ப் போகத்தைப் பயப்பித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்
பொதுவக் கலவியுள் போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மனி மங்கை
அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

பொழிப்புரை :

`போகத்தைத் தருவது` என மேற்கூறப்பட்ட இம் மறைப்புச் சத்தி சிவனுடன் உயிர்கட்கெல்லாம் பொதுவாயுள்ள போகக் கலப்பில் நின்று போகத்தைத் தந்து `அருட்சத்தி` என்னும் அந்தச் சத்தியாய் அச்சத்திக்கும் சிவத்திற்குமே சிறப்பாய் உள்ள அந்த அருட்கலவியுள் நின்றவழி உயிர்கட்கு யோகம் உளதாகும்.

குறிப்புரை :

`போகமும்` என்னும் உம்மை இழிவு சிறப்பு. அனுக் கிரக மூர்த்திதன் சத்தியின் பெயராகிய `மனோன்மனி` என்பது, இங்கு `அருட்சத்தி` எனப் பொருள் தந்தது. அது - அந்நிலை. `அதுவாய்` என ஆக்கம் வருவிக்க. `அக்கலவி` என்னும் சுட்டு, அவர்கட்கே உரித்தாகி, சிறப்புணர நின்றது. `பொதுவக் கலவி, மதுவக் குழல்` என்பவற்றில் அகரம் விரித்தல். ``பொதுக்கலவி`` என்றது, `பொதுக்கலவி போலும் படிக் கலக்கும் கலவி`` என்றவாறு. இதனுள் முன்னிரண்டடி அனு வாதம். ``ஆயுழி`` என்பது முன்னரும் சென்று இயைந்தது.
இதனால், சத்தி ஆதார ஆதேயங்களாய் நின்று உயிர்கட்கு யோகத்தைப் பயக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதரம் நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.

பொழிப்புரை :

`போகசத்தி, யோகசத்தி` என்னும் இருசத்திகளில் யோக சத்திக்கு வானத்தில் சூரியனும், பூமியில் வேள்வித்தீயும் ஆசனமாகும். அவ்வாசனங்களின்மேல் அவள் தெற்கு நோக்கிய முகத்துடன் உடம்பை நடுவில் வைத்துக் கால்களைப் பாதங்கள் வடக்குநோக்க மடக்கி நீட்டிக்கிடந்த கோலமாய் இருப்பாள். இதனை அறிந்து வழிபடுக.

குறிப்புரை :

தெற்கு நோக்குதல், வழிபடுவோர்க்கு அருளுதற் பொருட்டு. கிடத்தல், தாயாகிய தான் தன்னை வழிபடுவோராகிய மகவுகளை யோகத்தில் ஆழ்த்தற்பொருட்டு. யோகம் வேண்டுவோர் இச்சத்தியை இங்ஙனம் சூரிய மண்டிலத்திலும், வேள்வித்தீயிலும் கண்டு வழிபடின் பயன்பெறலாம் என்றமை அறிக. முதலடியில், `சத்திக்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், சத்தி யோகியர்க்குச் சில ஆதாரங்களில் நின்று பயன்தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற
ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

பொழிப்புரை :

யோக சத்தி யோகத்தை விரும்புவர்க்கு அதனை அருளுமாற்றை யறிந்து சிவாக்கினியோடு பொருந்தி நிற்பின், பல்வேறு வகையாய்ப் பரிணமித்து நின்று பந்திக்கின்ற மாயை அங் ஙனம் பந்தத்தைச் செய்தலைத் தவிர்ந்து, ஞானத்திற்குத் துணையாய் நிற்கும். அதன்பின் விந்து நாதங்களின் வடிவாய் உள்ள குண்டலி சத்தி துயிலெழுந்து மேலோங்கிச் செல்லுமாறு யோகசத்தி மேலும் அருள் மிகுந்து நிற்பாள்.

குறிப்புரை :

அக்கினியைச் `சிவாக்கினி` என்று கூறவே, சூரியனும் `சிவசூரியன்` என்பது பெறப்பட்டது. ``கோல் வளைதான்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், யோகசத்தி மேற்கூறியவாறு நிற்றலால் வரும் பயன் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை
தானான வாறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

பொழிப்புரை :

சத்திக்குத்தானே அதுவாய் நின்று அருள்செய் கின்ற சிறந்த ஆதாரம், உள்ளே எட்டாயும் வெளியே பதினான்காயும், இடையில், `இரண்டு பத்து` என்னும் சம அளவினவாயும் உள்ள கோணங்களை உடைய சக்கரமாகும். இச்சக்கரம் சொல்லும், பொரு ளும் ஆகிய இருவகை உலகங்களாயும், அவற்றைச் செயற்படுத்து கின்ற கடவுளராயும், அக்கடவுளரது செயல்களாயும் விளங்கும்.

குறிப்புரை :

`ஆதலின் அச்சக்கரத்தில் சத்தியை வழிபடுதல் தக்கது` என்பது குறிப்பெச்சம். இங்குக் குறிக்கப்பட்ட சக்கரம் ஷ்ரீசக்கரமாகும். இது மேல்நோக்கிய முனைகளையுடைய முக்கோணம் நான்கு, கீழ் நோக்கிய முனைகளையுடைய முக்கோணம், நான்கு, நடுமுக்கோணம் ஒன்று இவை ஒன்பதும் வேறு வேறாய்த் தோன்றாது ஒன்றினுள் ஒன்று கோத்து நிற்கும் வண்ணம் உபதேச முறையால் வரையப்பட்டு, நடுக் கோணத்தில் விந்துப்புள்ளி இடப்படும். மேலும், பதினான்காய் உள்ள வெளிக் கோணங்களைச் சுற்றி எட்டிதழ்த் தாமரையும், அதனைச் சுற்றி ஒருவட்டமும், அதற்குமேல் பதினாறு இதழ்த்தாமரையும், அதற்கு மேல், மேல் மூன்று வட்டங்களும் வரைந்து, எல்லாம் ஒரு நாற் கோணத்தின்மேல் அமைந்துள்ளதாக வரையப்படும். நாற்கோண மேடையை, `பூ புரம்` என்பர். 1
இவற்றுள் மேல் நோக்கிய முனைகளையுடைய முக் கோணங்கள் சிவ கோணங்களும் கீழ்நோக்கிய முனைகளையுடைய முக்கோணங்கள் சத்தி கோணங்களுமாகும். இவற்றுள் நடு முக் கோணம் மேல் நோக்கியிருப்பது, சிருட்டிக்கிரம சக்கரமும், கீழ் நோக்கி யிருப்பது சங்காரக் கிரம சக்கரமும் ஆகும்.
இப்பாட்டில் நாயனார் நடுக்கோணம் ஒழிந்த நாற்பத்திரண் டினைக் குறித்தார். எனவே, `நடுக்கோணத்தையும் கூட்ட இச் சக்கரத்தில் அமையும் முக்கோணம் நாற்பத்து மூன்றாம், என்பது தெளி வாகும். சத்திக்குரிய சக்கரங்கள் அனைத்தும் இதனுள் அடங்கும் என்பதுபற்றி இது `ஷ்ரீசக்கரம்` எனப்படுகின்றது.
இதில் எழுதப்பட வேண்டிய எழுத்துக்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், சத்திக்குரிய பொதுச் சக்கரம் ஆதலின், பின்வருமாறு கொள்ளுதல் பொருந்தும்.
பூ புரமாகிய நாற்கோணத்தில் மேற்பக்கம் தொடங்கி வலமாக `ஓம், ஐம், க்லீம், ஸௌ`: என்பனவும், பதினாறு இதழ்களில் ஓம் என்ப தன் கீழ் `ஷ்ரீம்` என்பதும், அதனையடுத்து வலமாக, ககாராதி பஞ்சத சாட்சரங்களும், எட்டிதழ்களில் `ஷ்ரீம்` என்பதன் கீழ்முதல் வலமாக வும், அங்ஙனமே பதினான்கு கோணம், வெளிப்பத்துக் கோணம், உட்பத்துக் கோணம், உள் எட்டுக் கோணம் என்னும் ஐம்பது கோணங் களிலும் ளகாரம் நீக்கி ஏனை அகராதி ஐம்பதெழுத்தும், நடுக்கோணத் தில் பிரணவமும், விந்துவில், `ஹ்ரீம்` என்பதும் எழுதப் படலாம். பிறவகை சொல்லப்படின் ஏற்பது கொள்க. `பஞ்சத சாட்சரங்களில் சிவாட்சரங்களும் உள` எனவும், ஷ்ரீசக்கர கோணங்களில் சில கோணங்களும், விந்துவும் சிவாம்சங்கள் எனவும் கூறப்படுதல் அறிக. இன்னும் பஞ்சதசாட்சர அம்சங்கள் முப்பத்தேழும் முப்பத்தாறு தத்துவமும், தத்துவாதீதப் பொருளும் ஆகும் எனப் படுதலும் காண்க.
இங்ஙனம் இச்சக்கரம் அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்டிருத்தல் பற்றி, ``விந்து, சகம், பரம்`` எனவும், ``பரவாதனை`` எனவும் சொல்லத் தக்கது என்றார். விந்து - வாக்கு; சொற்பிரபஞ்சம். பரவாதனை - கடவுளர்தம் அதிகாரம். ``பரைக்கு`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``தானானவாறும்`` என்னும் உம்மையை, ``சமகலை`` என்பதனோடு கூட்டுக.
இதனால், சத்தி தன்னை வழிபடுவார் பொருட்டுக் கொள்ளும் ஆதார ஆதேயங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

தக்க பராவித்தை தான்இரு பானேழில்
தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.

பொழிப்புரை :

ஷ்ரீசக்கரத்தில் சத்தியை வழிபட்டு, அவளுக்கு உரிய மந்திரங்களில் எந்த ஒரு மந்திரத்தையேனும் திரும்பத்திரும்பச் சொல்லி உருவேற்றினால், வெண்ணிறமும், மூன்று கண்களும், திரு மேனி அழகும், அபய வரத முத்திரைகளும் உடையவளாகிய ஞான சத்தியாகிய மனோன்மனியே ஏனை வாமாதி எண் சத்திகளாயும் மிகத்தோன்றி அருள்புரிவாள்.

குறிப்புரை :

சக்கரத்தையே ``வித்தை`` என்றார். இருபத்தேழு, ஒன்பது முக்கோணங்களிலும் உள்ள கீற்றுகள். இஃது ஆகுபெயராய் அவற்றாலாகிய சக்கரத்தை உணர்த்திற்று. காரணக் குறியாக மந்திரத் தினையே ``ருத்திரம்`` என்றார். ஷ்ரீசக்கர வழிபாட்டிற்குரிய ஷ்ரீவித் தியா மந்திரம், ``யாம் - ராம் - லாம் - வாம் - ஸாம் - த்ராம் - த்ரீம் - க்லீம், - ப்லூம் - ஸ: ஸர்வ ஜம்பநேப்யோ காமேஸ்வரீ காமேஸ்வர பாணேப்யோநம: பாண சக்தி பாதுகாம் பூஜயாமி`` என்பது.
இனி, ``ஓர் ருத்திரம்`` என்பதற்கு `தேவிக்குரிய யாதேனும் ஒரு மந்திரத்தை` எனப் பொருள் உரைத்தலுமாம். தொக்கு - மெய்; உடம்பு. ஐ - அழகு.
இதனால், ஷ்ரீசக்கர வழிபாடாகிய ஷ்ரீவித்தை சத்தியின் எல்லா வழிபாட்டுப் பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.

பொழிப்புரை :

மலரில் மணம் போலச் சிவத்தில் வேறாகாது நிற்பவளாகிய சத்தி மூன்று பிரிவுகளாய் அமைந்த பஞ்ச தசாட்சரி (பதினைந் தெழுத்து) மந்திரத்தில் முற்ற விளங்குகின்ற மெய்ஞ்ஞான வடிவினள்; தத்துவங்களாயும், அவை யல்லவாயும் எல்லாமாய் இருப்பவள்; வேதம் முதலிய நூல்கள் பலவும் முடித்துக் கூறுகின்ற சிவனோடு ஒன்றான சிவையாய் விளங்குபவள்; அருட் சத்தியும், ஆனந்த சத்தியுமானவள்.

குறிப்புரை :

கொங்கு - மணம்; உவமை யாகுபெயர். இதனை முதலிற் கொண்டு உரைக்க. பஞ்சதசாட்சரத்தின் உட்கூறுகளே தத்துவ மாயும், தத்துவாதீதப் பொருளாயும் நிற்றல்மேலே கூறப்பட்டது. `முத்திரை மூன்று` என்பதற்கு வேறு பொருள் உரைப்போர், இரண்டாம் அடிஈற்றில் `ச-க-ல` என்று பிரித்து, அதனைப் பஞ்ச தசாட்சரியின் மூன்றாம் பிரிவாகக் கொள்வர். பஞ்ச தசாட்சரங்களை நாயனார் புவனாபதி சக்கர அதிகாரத்தின் முதலிற் குறிப்பிடுவார்.
இதனால், ஷ்ரீசக்கரத்தில் விளங்கும் சத்தியது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாசம்எனும் அகி லம்களி
தங்கும் அவள்மனை தானறி வாயே.

பொழிப்புரை :

`நறுமணத்தை வெளிப்படுத்துகின்ற பூங்கொம்பில் தென்னங்குரும்பைகள் விளங்குவது போலும் தோற்றத்தையுடைய கன்னிகையாகிய சத்தி, குங்குமம், பூசப்பட்ட தோள்களை உடை யவள்` என்றும், அங்குச பாசங்களை ஏந்தியவள்` என்றும், `அவளது மகிழ்ச்சியுள்ள கோயில் அகில உலகங்களும்` என்றும் உண்மை நூல்கள் கூறும். இதனை அறிந்து போற்றுவாயாக.

குறிப்புரை :

உடம்பு பூங்கொம்பு போலவும், தனங்கள் குரும்பை போலவும் இருத்தலை முதலடியில் இல்பொருள் உவமையாகக் குறித்தார். `அங்குச பாசம் பொருந்தினள்` என்க. ``எனும்`` என்பதை ``அவள் மனை`` என்பதன்பின் கூட்டியுரைக்க. அறிதல், இங்கு அதன் காரியமும் உடன் தோன்ற நின்றது.
இதனால், ஷ்ரீசக்கரத்தில் விளங்கும் தேவியது வடிவம் கூறப்பட்டது. எனவே, அகிலமாவது, இச்சக்கரத்தில் பூபுரமாம்.

பண் :

பாடல் எண் : 24

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை).

குறிப்புரை :

இப்பொருள் மேலேயும் குறிக்கப்பட்டது. ``தாய்`` எனல், சத்தி தத்துவ சத்தியினின்று சதாசிவன் தோன்றுதல் பற்றி. ``மகள்`` எனல், சிவ தத்துவ சிவத்தினின்று மேற்கூறிய சத்தி தத்துவ சத்தி தோன்றுதல் பற்றி. ``தாரம்`` எனல், யாண்டும் சத்தனுக்குச் சத்தியாய் நிற்றல் பற்றி. வாய் - வாக்கு. கணம் - பூதக் குழாம்.
இதனால், சத்தி சிவனுடன் பல்வேறு வகையில் இயைந்து நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

பொழிப்புரை :

(இதன் பொருளும் வெளிப்படை).

குறிப்புரை :

தத்துவம் - முதற்பொருள். தாய் நிலை காரணமும், மகள் நிலை காரியமும் ஆதல் அறிக. கலப்புச் சிவனோடென்பது வெளிப் படை. பூரணம் - பெரு வியாபகம். விந்து - சுத்த மாயை. `விந்துவிற் பொதிந்த` என்க. புராதனி - பழமையானவள். பார் - உலகம். அளவு - எல்லை. உடையாள் - தன்னுடையனவாக உடையவள்.
இதனால், மேலதனை வேறோராற்றால் விளக்கி, சத்தி உலக நாயகியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

பத்து முகமுடை யாள்நம் பராசக்தி
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.

பொழிப்புரை :

பத்துத் திசைகளையும் நோக்கிய பத்து முகங்களை உடையவளாகிய, நமக்குத் தலைவியாம் பராசத்தி நம் பொருட்டு நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் ஆக்கி வைத்து, அவற்றிற் கூறப்பட்ட பொருளாகியும் நின்றாள். அத்தகைமைய ளாகிய அவள் ஒப்பற்ற ஓர் ஆதாரமாகிய ஷ்ரீசக்கரத்தில் நீங்காது நிற்கின்றாள். அவளை அந்நூல்களின் வழிப்போற்றுக.

குறிப்புரை :

`வேதம் நாலுடன் தான்வைத்தனள்` என இயைக்க. ஒத்தல் - தான் வைத்தற்கு ஏற்ப இருத்தல். முன்னர், ``வைத்தனள்`` என்றும், ``ஒத்தனள்`` என்றும் கூறிப்போந்தமையின், கூறுதல் அவற்றின் வழியதாயிற்று. ``நேரிழை`` என்பதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.
இதனால், `ஷ்ரீசக்கரத்தில் தேவியை வேத நெறியான் வழிபடுக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

கூறிய கன்னி குலாய பருவத்தள்
சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள்
ஆறிய நங்கை அமுத பயோதரி
பேறுயி ராளி பிறிவறுத் தாளே.

பொழிப்புரை :

மேற் சொல்லப்பட்ட சத்தி இளமையான தோற்றத்தையுடையவள்; ஏழுலகிலும் நுண்ணியளாய் நிறைந்தவள்; அடக்கமான பெண்மை இயல்புடையவள்; அமுதமயமாம் பால் நிறைந்த தனங்களை உடையவள்; வீடு பெறுதற்குரிய உயிர்களை ஆட்கொண்டு, அவை தன்னை விட்டுப் பிரிதலை நீக்குபவள்.

குறிப்புரை :

`சிறியள்` என்பது நீட்டலாயிற்று. இம் மந்திரத்தின் எல்லா அடிகளையும் ரகர எதுகைப் படவும், ஒன்றிரண்டு அடிகளை அவ் எதுகைப் படவும் பாடம் ஓதி, அவற்றிற்கேற்ப உரைப்பாரும் உளர். அவர், மேலைமந்திரத்தின் இறுதிச் சீரினையும் `கூரே` எனப்பாடம் ஓதுவர். அவையெல்லாம் சிறவாமை அறிந்துகொள்க.
இளமைப் பருவ சத்தி, `வாலை, வாலாம்பிகை` (பாலை, பாலாம்பிகை) எனப்படுவாள்.
இதனால், சத்தி பக்குவிகளுக்குச் சிறந்த தலைவியாய் வீடு பேறளித்தல் கூறப்பட்டது. இதனானே, ஷ்ரீவித்தை வீடுபேற்றையும் தருதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.

பொழிப்புரை :

சிவத்தோடு வேற்றுமையின்றி நிற்பவளாகிய சத்தி அடியவரது தியானத்திலே பொருந்தி விளங்குகின்ற அழகிய பூங் கொம்பு போன்றவள்; அதனால், முன்னர் மனம் முதலிய அந்தக் கரணங்களின் வழியே தலைப்பட்டுப் பின்னர் உயிர்களினது அறிவுக் கறிவாய் விளங்குவாள்.

குறிப்புரை :

குறி - இலட்சியம்; தியானம். பொறி - அந்தக்கரணம்.
இதனால், சத்தி முதற்கண் தியானத்தில் விளங்கிப் பின் அறிவினுள் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.

பொழிப்புரை :

தன்னைக் கூடியதனால் விளைகின்ற இன்பத்தை யுடைய வள்ளலாகிய சிவனுக்குத் தேவியாய் உள்ள சத்தி அடி யேனைத் தன்வசப்படுத்தித் தவநெறியை அடையச்செய்தது, என் உள்ளத்திலே நின்று ஐம்புலக்கள்வர் தம் கள்ளத்தைப் போக்கி இரண்டறக் கலந்து, என்றும் உடனாய் இருந்ததாம்.

குறிப்புரை :

தலைவி என்னை மருட்டி, யான் தவநெறி கொள்ளப் புரிந்தது, இருந்து, நீக்கி, கலந்து, புல்கி, எனக் கூட்டி முடிக்க. `இஃது அவளை வழிபட்டதன் பயன்` என்பது குறிப்பெச்சம். எதுகை நோக்கி, ``வள்ளல்`` என்பதன் ஈறு கெடாது திரிந்து நின்றது.
இதனால், சத்தி தன்னை வழிபடுபவரை மலத்தின்வழிச் செல் லாது தடுத்துத் தன்வழிப்படுத்தித் தவநெறியருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்
திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு நலம் செய்ய விரும்பி அங்ஙனமே செய்துவருகின்ற போக சத்தி, உயிர்களிடத்துத் தான் தங்கியிருந்து ஆக்க இருக்கின்ற இன்பம் இது என்பதனை உலகர் ஒருவரும் அறிய மாட்டார். பூவில் நிறம்போல உயிர்களிடத்தில் பொருந்தியிருக்கின்ற அவள், தான் அவ்வாறிருக்கின்ற குறிக்கோளினின்றும் சிறிதும் மாறுபடாமலே இருக்கின்றாள்.

குறிப்புரை :

`இருந்தருள் செய்கின்ற இன்பம் வீட்டின்பமே; உலக இன்பம் அன்று` என்றதாம். இருந்த இலக்கும் அதனைத் தருதலேயாம். ``புதல்வி`` என்பது முறை சுட்டாது, இளமை குறித்து நின்றது. `பூவில் வண்ணம்போல` என்பது ஒன்றாய்க் கலந்திருத்தற்கு உவமை.
``பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தான்`` 1
என்றது காண்க.
இதனால், சத்தியது குறிக்கோள் வீட்டின்பத்தைத் தருதலே யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை ஓடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

பொழிப்புரை :

சத்தி, யான் உள்ளம் திருந்தித் தன்னை அடைய விரும்பிய நிலையில் அந்நிலையை நன்குணர்ந்து அவளும் எனது உள்ளத்தை விரும்பி, அதன்கண் இருப்பாளாயினாள். அவ் இருப்பு, இடையறாது ஓடும் நீர், தான் ஓடுகின்ற திசையை நோக்கி ஓடும் ஓட்டத்தை ஒப்ப இடையறாது இருக்கும் இருப்பாம்.

குறிப்புரை :

``திருந்து புணர்ச்சியில்`` என்பதில், `புணர்ச்சி` என்பது அதனை விரும்பி நின்ற காலத்தைக் குறித்தது.
இதனால், சத்தி பக்குவான்மாக்களது உள்ளத்தையே விரும்பி அவற்றில் இடையறாது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

பொழிப்புரை :

`எனக்கு அது வேண்டும், இது வேண்டும்` என்று அவாவுகின்ற அவாவை விடுத்து, சந்திர மண்டலத்தில் உள்ள ஆயிர இதழ்த்தாமரையில் விளங்குபவளாகிய சத்தி விளக்கியருளிய மூன்று மண்டலங்களில் உள்ள பொருள்களைப் போற்றி செய்து சுழுமுனை யில் நின்று பொருந்த நோக்கினால் விதியையும் வெல்லுதல் கூடும்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டியுரைக்க. சுழு முனையை, ``சுழி`` என்றார். மண்டலம் மூன்றாவன அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம். இவை `உடம்பில் உள்ளன` என்பது அடுத்த மந்திரத்தில் கூறப்படும். ``மூன்று`` என்பது இடவாகுபெயர்.
இதனால், சத்தியது குறிக்கோள் நிறைவுறுதற்கு யோக சாதனை வேண்டப்படுதல் கூறப்பட்டது. இதன்கண் மண்டலமாகிய ஆதாரமும், அவற்றின்கண் உள்ள ஆதேயமும் கூறப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 33

மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

பொழிப்புரை :

மேற்கூறிய மூன்று மண்டலங்களும் அசுத்த மாயையின் காரியங்களாய் நிற்கும் உடம்பில் உள்ள இடங்களே. எனினும், உச்சிக்கு மேல் பன்னிரண்டங்குலத்தில் உணர்வு செல்லின் அது சுத்த மாயையைப் பொருந்தியதாகும். அங்ஙனம் உணர்வு செல்லும்பொழுது சத்தி, பிராசாத கலைகள் பதினாறில் ஒன்பதை ஏற்றுச் சந்திர மண்டலத்தைக் கீழ்படுத்தி நிற்பாள்.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களில் மூலாதாரம் முதல் சுவாதிட்டானம் முடிய அக்கினி மண்டலமும், சுவாதிட்டானத்திற்குமேல் விசுத்தி முடியச் சூரிய மண்டலமும், விசுத்திக்கு மேல் பிரமரந்திரம் முடியச் சந்திர மண்டலமும் ஆதலின், `மூன்று மண்டலங்களும் உடம்பினுட் பட்டன` என்றார். `உச்சியின் ஈராறாய் எழுதலையில் தோன்றும் இலக்கு` என்க. கலை - கூறு; அங்குலம். இவ்வாறன்றி, `பிராசாதகலை பன்னிரண்டு, என உரைப்பின், அதற்கு அப்பால் உள்ளது பரசிவம் ஆதலின்` அதனை, ``மாமாயை`` என்றல் கூடாமை அறிக. ஆதார யோகத்தில் சவிகற்ப உணர்வு உடம்பைப் பற்றாது விடுதல் இன்றி, நிராதார யோகத்திலே அதனை விட்டு நீங்குதலின், அது நாத மாத்திரை யாம் மாமாயை ஆயிற்று. பிராசாத கலைகளில் ஒன்பதாவதாகிய சத்தி கலையே ஆதாரத்தைக் கடந்த முதற்கலையாதலின், ``ஏழிரண்டில், இந்துவொடு ஈறாக ஏன்றனள்`` என்றார். ஒடு, எண்ணொடு. `முன்னர் இந்துவை ஏன்று, பின் அஃது ஈறாதலை ஏன்றனள்` என்க. ஈறாதல், கீழ்ப்படுதல். பிராசாத ககைளின் விளக்கம் மேல், 696 ஆம் மந்திர உரையில் தரப்பட்டது.
இதனால், சத்தி ஆதார நிராதாரத்தானங்களில் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

பொழிப்புரை :

பிறை வடிவாயுள்ள ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழுந்து நுணுகிச் செல்கின்ற நாதம், (வாக்கு) கீழே வந்து, நாவினால் பிராணவாயு அலைக்கப்படும் பொழுது பரு வடிவினதாய்ச் செவிக்குப் புலனாகிக் கேட்போருக்கும் பொருளை இனிது விளங்கச் செய்யும் முடிவு மொழியாம். ஆகவே, கண்டத் தானத்தில் உதான வாயுவால் உந்தப்பட்டுச் சொல்வோனுக்கு மட்டும் பொருள் விளங்க நிற்கின்ற இடைமொழியும், அங்ஙனம் உதான வாயுவாலும் உந்தப் படாமல் இதயத்தானத்தில் பொதுமையில் விளங்கியும் விளங்காதும் நிற்கும் முதல்மொழியும், ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழும், எனப்பட்ட, ஒடுக்கமாகிய அந்த நாதத்தின் விரிவேயாகும்.

குறிப்புரை :

முடிவுமொழி `வைகரி வாக்கு` என்றும், இடைமொழி மத்திமை வாக்கு என்றும், முதல் மொழி `பைசந்தி வாக்கு` என்றும் சொல்லப்படும். `நாதம்` எனப்படுகின்ற அதுவே இவ்வாறு `பைசந்தி, மத்திமை, வைகரி` என மூவகை நிலையாய் விரியும் என்பது இங்குக் கூறப்பட்ட பொருளாகும். இம்மூவகை வாக்குகளும் இங்ஙனம் தோன்றவும், ஒடுங்கவும் உள்ள சுத்த மாயையின் பகுதியே `நாதம்` எனப்படுவது என்பார், ``நாதம் நாக்கின்மதித்தெழும்`` எனவும், ``கண்டத்தின் உந்திய சோதியும், இதயத்தெழும் ஒலியும் இந்துவின் மேல் உற்ற ஈறு அதுவே`` எனவும், கூறினார்.
பொருளை விளங்கச் செய்தல்பற்றி வாக்குகளை இரவிபோல் எழுவதாகவும் சோதியாகவும் கூறினார். இவை பற்றிப் பிறிது பொருள் தோன்றி மயக்காமைப் பொருட்டு, ``ஒலி`` என்று வெளிப்படக் கூறினார். ``இரவிபோல்வது`` எனவும் ``சோதி`` எனவும் கூறப் பட்டவை இனிது பொருள் விளங்க நிற்பனவும், ``ஒலி`` எனப்பட்டது அங்ஙனம் விளங்க நில்லாததும் ஆதல் தெரிந்துணரற்பாலது. `இரவிபோல் எழும்` என இயையும். ``பின்`` என்றது கீழிடத்தை. `பின்வந்து` என மாறுக. மதித்தல் - கடைதல்; அலைத்தல். ``மதித்து`` என்பதனை, `மதிக்க` எனத் திரிக்க. ``எழும்`` என்பது முற்று. மதித் தற்குச் செயப்படு பொருளும், உந்துதற்கு வினைமுதலும் வருவிக்கப் பட்டன. ``சோதி, ஒலி`` என்பன செவ்வெண். `ஈறாகிய அது` என்க. தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், மேற்கூறப்பட்ட இரு மாயைகளில் சுத்த மாயையின் சிறப்புக் காரியமாகிய சொல்லுலகம் ஆதார நிராதார யோகங்களில் காட்சிப் படுமாறு கூறப்பட்டது. இதனானே, `அவ் வுலகத் தொடக்கு அவ் யோகங்களால் முறையே ஒரளவிலும், பெரிய அளவிலும் மெலிவடையும்` என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.

பண் :

பாடல் எண் : 35

ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

பொழிப்புரை :

மேல், ``இந்துவின் மேல் உற்ற ஈறு`` எனப்பட்ட அந்த நாதமே சொல்லுலகங்கள் எல்லாவற்றிற்கும் (வேதம், வேதாங்கம், ஆகமம், புராணம், இதிகாசம், மிருதி முதலிய எல்லா நூல் கட்கும், பலவாய் வழங்கும் மொழிகட்கும்) முதல். சில சுழிக் கூட்டத்தால் பூங்கொத்துப் போல்வதாய வடிவினையுடைய அது நிராதார யோகத்தில் பிராசாத கலைபதினாறில் முடிவாயுள்ள உன்மனா கலையிலும், ஆதாரயோகத்தில் ஆயிர இதழ்த் தாமரை யிலும் மனம் யாதோர் அசைவுமின்றி நின்று வசமாகும்படி உயிரினது ஆற்றலை மிகக் குவிப்பதாகும். அதனால், அதனைக் காணுதலையே சத்தி தன் அடியவர்க்குப் பெரும்பேறாக அளித்துத் தானும் அவ்விடத்தே அவர்கட்குக் காட்சியளித்து நிற்பாள்.

குறிப்புரை :

ஈறு அதுதான் - `ஈறு` எனப்பட்ட அதுவே. `எண்ணிரண் டிலும், ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக` எனக் கூட்டுக. எண்ணுப் பெயர்கள் முறையே அவ் எண்ணு முறைக்கண் நிற்கும் கலையையும், அத்துணை இதழ்களையுடைய மலரையும் குறித்தன. இவைகளில் ஏழன் உருபுகள் தொக்கு நின்றன. ஆக - ஆகும்படி. இதன் ஈறு குறைந்து நின்றது. `எழில் - எழுச்சி; ஆற்றல். தூறு - குவியல். இதன் பின் நின்ற `அது`, பகுதிப் பொருள் விகுதி. சுகந்தம், முன்னர்ப் பூவையும், பின்னர் அதன் கொத்தினையும் குறித்த இருமடி ஆகுபெயர். `சுகந்தம் போலும் சுழியாகிய அது` என்க. `சுகந்தச் சுழி யாகிய அது, எண்ணிரண்டிலும் ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக, எழிலைத் தூறு செய்யும்` எனவும், `அதுபேறு செய்து பிறந் திருந்தாள்` எனவும் கூட்டி முடிக்க. பூங்கொத்துப் போலும் வடிவுடை யது விந்து வின் பகுதியாகிய நிரோதினி கலையே யாயினும், அவ் விடத்துச் சத்தி உருவப் பொருளாய் விளங்குதல் கூறுவார், விந்துவின் நுண்ணிலையாகிய அதனையே `நாதம்` என உபசரித்துக் கூறினார்.
இதனால், சத்தி விந்துத் தானத்தில் உருவப் பொருளாய்க் காட்சியளித்துப் பின் அடியவரை ஆதாரயோக முடிவிலும், நிராதார யோக முடிவிலும் மனோலயம் பெற்றவராக ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

பொழிப்புரை :

சத்தி மேற்கூறிய அவ்விடத்தே இனிது விளங்கி யிருக்கின்றாள்; பல புவனங்களில் உள்ளோரும் தாம் பேரானந்தத்தை அடைதற்குரிய செவ்விய வழியைப் பொருந்தித் தன்னை, `போற்றி` என்று சொல்லித் துதித்துப் பெருமுயற்சி செய்யவும் சத்தி அவர்கள் முன் வெளிப்படாமல், மேற்கூறிய இடத்தே அந்த ஆனந்தம் விளையும்படி அங்கே விளங்கி நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஏந்திழை ஈறு இருந்தனள்` எனவும், `மங்கை நல்லாள், புவனங்கள் வருந்த, திருந்திய ஆனந்தம் அதில் ஆக இருந்தனள்` எனவும் கூட்டி முடிக்க. ``ஈறு`` என்பது ஏழாவதன் தொகையில் ஒற்றிரட்டாமை, இரண்டாவதற்குத் திரிபு ஓதிய இடத்து நின்ற இலேசினால் அமையும். (தொல் - எழுத்து. 158)
இதனால், மேற்கூறிய ஆதாரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

பொழிப்புரை :

சத்தியும், சிவனும் தம்மிற் கூடிநின்று, தம்மைப் போலவே மங்கையர் ஐவரையும், அவர்கட்கு ஏற்ற காளையர் ஐவரையும் கை கோத்துவிட்டு, அவர்களது கருத்தையும் செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தம்பதியர் தங்களுள் அன்பு செய்து கூடித் தங்கள் தொழிலைக் கடமையாக நன்கு நடாத்தி வருகின்றார்கள்.

குறிப்புரை :

சத்தியும், சிவனும் இங்குக் குறிக்கப்பட்ட நிலை, வாகீசு வரியும், வாகீசுவரனுமாய் நிற்கின்ற நிலையாம். கொங்கை நல்லார் ஐவர், `மனோன்மனி, மகேசுவரி, உருத்திராணி, திரு, வாணி` என்பவரும், அவருக்கு ஏற்ற காளையர் ஐவர் முறையே, `சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன்` என்பவரும் ஆவர். இவர் செய்யும் செயல், முறையே, `அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல்` என்பவையாம். இவர்களை இங்குக் குறித்தது, முறையே, `ஆஞ்ஞை, விசுத்தி, அனாகதம், மணிபூரகம், சுவாதிட்டானம்` என்னும் ஆதாரங்களில் வைத்து. எனவே, சத்தியும், சிவனும் வாகீவரியும், வாகீசுவரனுமாய், நிற்றல், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள தானங்களிலாம். ஆகவே, `சத்தி சிவங்கள் இங்ஙனம் நிற்றலால், யோக நெறி, நின்று பயன் தருகின்றது` என்பது பெறப்பட்டது.
``மாரன்`` என்பது `அழகன்` என்னும் அளவினதாய் நின்றது. அங்குலி - கை விரல்கள். கூட்டுதல் - இருவர் கைகளையும் கோத்து விடுதல். `மணம் செய்வித்தனர்` என்றபடி. ``அகம், புறம்`` என்பன ஆகுபெயராய், கருத்தையும் செயலையும், ``பார்த்தனர்`` என்பது அவர்கள் அவ் ஐவருடனும் உடனாய் நிற்றலையும் குறித்தன. `கொங்கை நல்லாள்` என்பது பாடம் அன்று. ``குமாரர்கள்`` என்பது பருவம் குறித்து நின்றது. இலய நிலையின் கீழ்வந்து அதிகார நிலையில் நிற்பவர் என்பது தோன்ற, இவ்வாறு கூறினார். ``சடங்கு`` என்றது, திருமணச் சடங்கையும், தங்கட்கு உரிய கடமைகளையும்.
இதனால், சத்தியும், சிவனும் மேல் ஆதாரத்தினின்று, கீழ் ஆதாரங்களைப் புரந்தருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி னுள்ளே கருதுவ ராயின்
தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி
அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

பொழிப்புரை :

புறத் தொழிலைச் செய்யும் அளவில் தவத்தில் நிற்போர், உடம்பில் அகமுகத் தியானித்தலில் பழகுவார்களாயின், அந்தத் தியான உணர்வு தொடர்ந்து முதிர்ந்து, சுழுமுனை பற்றுக் கோடாக மேல் ஏறிச் சென்று, உயிர்களின் அன்பிற்குச் சார்பாகிய சத்தியிடத்தில் மேற்கூறிய இடத்தில் சென்று அடங்கும்.

குறிப்புரை :

`அதனால், அங்ஙனம் தியானிக்க என்பது குறிப் பெச்சம். ``உள்ளே கருதுவராகில்`` எனப் பின்னர்க் கூறியதனால், முன்னர், சடங்கது செய்தல் புறத்தின்கண்ணதாயிற்று. கடம் - குடம்; என்றது, மண்ணாற் செய்யப்படும் குடம் போல்வதாகிய உடம்பைக் குறித்தது. அதன் உள்ளே கருதுதல், ஆதார பங்கயங்களிலாம். எனவே, புறமாவதும் உடம்பின் கண்ணதேயாய், சடங்காவன கர நியாசம், அங்க நியாசம் முதலியனவாம்.
இதனால், மேற்கூறிய குமாரர்கள் ஐவரையும் அவர்தம் தேவி யரோடு முறையாகத் தியானித்துச் செல்வோர், விந்துத் தானத்தில் மங்கை நல்லாளை மாரனோடு தலைப்படுபவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்தின் மேலது முத்தது வாமே.

பொழிப்புரை :

துணைவழி ஏறுதற்குத் துணையாகின்ற மந்திரம் முதல் நிலையாகிய மூலாதாரத்திலே உள்ளது. அதுவே இரண்டாவது முதல் ஏழாவது முடிய உள்ள ஆறு நிலங்களின் தாமரைகளிலும் ஏற்ற பெற்றியிற் பொருந்தி, அவற்றைக் காத்து நிற்கும். அதனால், அம் மந்திரம் ஒன்றே அந்நிலங்களில் அழுந்தி விடுவதாகிய நிலையினை விடுத்து மேன்மேற் செல்லுதற்குச் சிறந்த துணையாம்.

குறிப்புரை :

`திகழ்ந்தெழு மந்திரம் மூலத்துமேலது; பனி மலர் ஆறினும் பாலித்திருக்கும்; `ஆலித்திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்க அதுவே முத்தாம்` எனக்கொண்டு கூட்டி முடிக்க. ஆலித் திருக்கும் அவை - மகிழ்ந்து அழுந்தியிருத்தற்கு இடமாகிய அவை. அகம்படி சீலம் - ஆதாரங்களினுள்ளே அழுந்தியிருக்கும் நிலை.
மந்திரம், பிரணவம். அது பிராசாதமாய்ப் பரிணமித்து ஆறு ஆதாரங்களிலும், அவற்றிற்குமேலும் பல கூறுகளாய் விளங்கி நிற்பதாம். ``முத்து`` என்றது, உயர்வுணர்த்தியவாறு, இதற்கு ஈண்டைக்கு இயைபில்லாத ஒரு பொருளையும் கூறுவார் உளர்.
இதனால், கடந்தனின் உள்ளே கருதித் துணைவழி ஏறுதற் குரிய மந்திரத் துணை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதுரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.

பொழிப்புரை :

மேல் (1155 - ல்) கூறப்பட்ட யோக நற்சத்தி முத்து வதனம் முதலியவைகளை உடையவளாய், என் உள்ளத்தில் விரும்பி இருக்கின்றாள்.

குறிப்புரை :

எனவே, `அவளை அவ்வாறு தியானித்தல் வேண்டும்` என்பதாம். ``சத்தி`` என்பதை முதலிற்கொள்க. முத்து, பற்களைக் குறித்து உவமையாகுபெயர். வதனம் - முகம்; என்றது வாயினை, சதுரி - திறமை உடையவள். சகளி - உருவத் திருமேனி கொண்டவள். ``பைந்தொடி`` என்பது, `தேவி` எனப் பொருள் தந்தது. ஏனையவை வெளிப்படை. பத்துக்கரம் கூறப்படுதலால் ஐம்முகம் உடையளாதல் பெறப்பட்டது.
இதனால் யோக சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.

பொழிப்புரை :

அக்கினி மண்டலம் முதலிய மூன்று மண்டலங் களுடன் அவற்றிற்குரியோராகிய, `அக்கினிதேவன், நிலவோன், கதிரோன்` என்னும் மூவரும் கலந்து, அவரே சத்தியாய் முன்னிற்பர். அவர்களுக்கு உள்ளீடாக ஓங்காரத்தினின்றும் மேலெழுந்து செல்கின்ற மந்திர ஒளி உளதாகும்.

குறிப்புரை :

`மேவிய மண்டலம் மூன்றுடன்` என்பதை, ``கூடி`` என்பதற்கு முன் கூட்டியுரைக்க. ``கீழ், தாவியநற்பதம்`` என்பவற்றால் முறையே எரியும், மதியும் பிண்டத்தில் நிற்குமிடம் குறிக்கப்பட்டன. அதனால், கதிருக்குரிய இடம் இடைப்பட்டது என்பதுதானே பெறப்படும். தாவிய நற்பதம் - உயரநிற்கும் இடம்; எனவே, அக்கினி அடியிலும், கதிர் இடையிலும், மதி முடியிலும் நிற்பனவாதல் அறிக. எரி முதலிய மூன்றும் அவ்வவற்றிற்குரிய தேவரைக் குறித்தன. அவரே சத்தியாய் முன்னிற்றலாவது, சத்தியது கலப்பால் அவனேயாக அறிய நிற்றல். அவர்களை `அங்ஙனம் அறிந்து நோக்க உள்ளொளி மேலிடும்` என்பது ஈற்றடியிற் கூறப்பட்ட பொருள்.
இதனால், மும்மண்டலங்களில் உள்ள மூவராகிய ஆதாரங்களைச் சத்தியின் வடிவாகக் கண்டு வழிபடுதலும் உள்ளொளியைப் பெறுதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய உள்ளொளி உயர்ந்து செல்கின்ற ஆறு ஆதாரங்களாகிய உறுப்புக்கள் வெண்மையான வேள்வித் தீயிலும் அவற்றின் அதிதேவர் வழியாகச் சத்தியைப் பொருந்தி விளங்கும். அதனால், அத்தீயின் வழியாகத் தேவர்கள் ஏற்கின்ற அவிசுகளும், யாவர்க்கும், எல்லாப் பயனையும் தருகின்ற சத்தியே யாய் நிற்கும்.

குறிப்புரை :

ஆகையால், `ஆதார தேவர்களும், ஏனைத் தேவர் களும் சத்தியால் நிலை பெறுகின்றவர்களேயாவர்` என்பதாம். ``உள் ளொளி யோங்கிய மூவிரண்டு அங்கங்கள்`` எனக்கூட்டுக. ``வெள் ளொளி அங்கி`` என்றது, `இனிது வளர்க்கப்பட்டு விளங்குகின்ற தீ` எனப் பொருள்தந்து, வேள்வித் தீயைக் குறித்தது. `மூவிரண்டு அங்கங்கள்` என்றதனால், அவற்றின் அதிதேவரை, ``அவர்`` எனச் சுட்டியொழிந்தார். ``கள்ளவிழ் கோதை`` என்னும் உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்குநின்றது. `மூவிரண்டு அங்கங்கள் அங்கியில் அவரொடு மேவிக் கோதையைக் கலந்து உடனே நிற்கும்` என இயைத்து முடிக்க, சித்திக் கொடி சத்தி. `சித்திக்கொடியாகிய அமுதம்` என உருவகங் காண்க. `அவி அமுதேயாம்` என்க. `சுத்திக் கொடி` என ஓதிப் பிறிது பொருளுரைத்தல் பொருந்தாமை அறிக.
இதனால், சத்தி யோகியர்க்கு உள்ளமுதாதல் போலத் தேவர்க்கு வெளியமுதாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

கொடிய திரேகை குருவுள் ளிருப்பப்
படிவது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

பொழிப்புரை :

``சிந்திக்கொடி`` என மேற் கூறப்பட்ட சத்தியது உருவம் ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் வெளிப்படாது மறைந்து நிற்கும் நிலையில் யாவரும் மூழ்குவது சிற்றின்பத்திலேயாம். ஆகவே, சிவனது வடிவாய் உள்ள ஆனந்தத்தை (சிவானந்தத்தை,ஆறு ஆதாரங் களிலும் முறையே வந்து வழங்குகின்ற முதல்வி யோக சத்தியே.

குறிப்புரை :

இரேகை - மின்னல்போலத் தோன்றுகின்ற ஒளி யுருவம். குரு - திண்மை; என்றது உயர்வினை. அது மேல் நிலமாகிய ஆஞ்ஞை முதலியவைகளை உணர்த்திற்று. அந்நிலங்களில் சத்தி உருவம் எப்பொழுதும் இருப்பினும், அந்நிலங்களில் சத்தியைக் காணு மளவு யோகம் முதிரப் பெற்றவர்கட்கே அது காட்சிப் படுவதாகும். அந்நிலையில்தான் சிவானந்தம் தோன்றும். அதனை அந்நிலையில் எங்கும் ஏற்ற பெற்றியால் வழங்குபவள் யோக சத்தி. ஆகவே, அவளை அங்ஙனம் அடையாத பொழுது யோகியரும் சிற்றின்ப வேட்கையைக் கடக்கமாட்டார் என்பது இதனுள் கூறப்பட்டது.
வாருணை - நீர்ச்சத்தி. இவள் சிற்றின்ப வேட்கையை உண்டாக்கி இன்புறுத்துபவள். `வாருணைக்கண்` என உருபு விரிக்க. `ஈசன் வடிவதுவாகிய ஆனந்தத்தை ஆறங்கங்களிலும் வந்து முறையே இடும் முதல் ஏந்திழையாள்` எனக் கூட்டுக. `அவ் ஏந்திழை யாளே` எனச் சுட்டு வருவித்துக் கொள்க. `படியது` என்பது பாடம் அன்று.
இதனால், சத்தி, சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் மறைந்து நின்று சிற்றின்பத்தையும், ஆஞ்ஞை முதலிய மேல் நிலங் களில் வெளிப்பட்டு நின்று சிவானந்தத்தையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

பொழிப்புரை :

மேற் கூறப்பட்ட யோக சத்தி `அயன், மால், உருத்திரர்` என்னும் மும்மூர்த்திகளும், அவர்களுக்குத் தேவியராய் உள்ளோரும், ஒளியை உடைய ஆதாரங்கள் ஆறுமாய் உள்ள ஆதார சத்தியும், `கலை` என்னும் பொருளாகச் சொல்லப்படுகின்ற மேதை முதல் உன்மனை ஈறாக உள்ள பதினாறு நிலைகளையுடைய குண்ட லினியும், மக்கள் அறிவில் பொருந்திப் புலன்களை அறிவிக்கின்ற திரோதாயியும், மந்திர மகேசுவர மகேசுவரிகளாய் உள்ள கூட்டத் தினரும் தன்னையடைந்து துதிக்கும்படி மேற்கூறிய மேல் நிலங்களில் எழுந்தருளியிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஏந்திழையாளும்` என்பது பாடமன்று. ``மூவர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``ஏந்திழையார்`` என்றார். காந்துதல் - ஒளி வீசுதல். ஆரம் - சக்கரம். `கலையாகிய முதல்` என்க. மூதல் பொருள், பராசத்தியின் சிறுகூறாதல் பற்றித் திரோதாயியை வேறுபோலக் கூறினார். (ஆயம் - மகளிர் கூட்டம்) திணை விராய் எண்ணிய விடத்துப் பெரும்பான்மைபற்றி, ``சார்ந்தனர்`` என உயர்திணை முடிபு கொடுக்கப்பட்டன. இது முற்றெச்சம். `அச்சத்தி` எனச் சுட்டு வருவித்துக்கொள்க.
இதனால், யோக சத்தியது உயர்வு இனிது விளங்கக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 45

சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

பொழிப்புரை :

`சத்தி` என்று யாவராலும் போற்றப்படுகின்ற தேவி, வேண்டுவார் வேண்டும் பயனைப் பெறுதற்குத் துணைபுரிகின்ற ஒரு கன்னிகை. ஆயினும், வீடு பேற்றைத் தரும் முதல்வி அவளே என்பதைப் பலர் அறியமாட்டாதவராய் அவளிடத்துத் தாம் செய்கின்ற அன்புக்கு உலக வாழ்வே பயனாக எண்ணி அந்த அன்பினை வீணாக்கி யொழிகின்ற அறிவிலிகள் அவளை உலக வாழ்வை அளிப் பவளாகவே சொல்லிப் புகழ்ந்து, அறிவுடையோரால் நாய் போன்ற வராக வைத்து இகழப்படுகின்றது.

குறிப்புரை :

`இவரது நிலை இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம். பொன்னும், மணியும் போல்வனவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை யுடையவரிடத்துக் கூழும், காடியும் இரந்து பெறுவாரை யொத்தலின், ``அப்பாவிகள்`` என்றும்` அவர், தாம் எல்லாம் அறிந்தவர்போலக் கூறுதலை, நாய் விருந்தினரையும் கள்வர்போலக் கருதிக் குரைத்த லோடு உவமித்தும் கூறினார். `பாவிகள் - புத்தியுடையோர்` ஆதலின், அப்பாவிகள், புத்தியில்லாதவர் என்க. இனி, `அந்தத் தீவினை யுடையோர்` என உரைத்து, இரக்க மிகுதியால் அவ்வாறு கூறியதாகக் கொள்ளலுமாம்.
இதனால், சத்தியை யோக சத்தியாகக் கண்டு வழிபட்டு முத்திப் பயன் பெறுதலே அறிவுடைமை யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஆரே திருவின் திருவடி காண்பர்கள்!
நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக்
காரேய் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

பொழிப்புரை :

பிறிது பயனை வேண்டாது தன்னைப் பெறு தலையே பயனாகக் கருதி, மந்திரங்களைச் சொல்லி, மறவாது தன்னை நினைக்கவும் வல்லவர்களுக்கே அம்மை தனது தாமரை மலர் போன்ற அழகு பொருந்திய சிவந்த திருவடிகளை அவர்களது உள்ளக் கம லத்தில் பதிய வைத்துக் காட்சி வழங்குகின்றாள். ஆகவே, அந்நிலை யில் நின்று அவளது திருவடிகளைக் காண வல்லார் உலகருள் எவர்!.

குறிப்புரை :

முதலடியை இறுதியில் வைத்து உரைக்க. பிற பயன் கருதுவார் கோடுதல் (வளைதல்) உடையராகலின், அவரது நிலை நேரியதன்றாதல் தோன்ற, ``நேரே நின்று`` என்றார். சேவடி சிந்தை வைத்தல், அவ்விடத்துக் காட்சி தருதலை உணர்த்திற்று.
இதனால், மேலை மந்திரத்துக் கூறிய நிலையது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

பொழிப்புரை :

தேவியை முதலில் உங்கள் உடம்பில் சிரம் முதலிய இடங்களிலே வைத்தும், பின்பு இருதயம் முதலிய உறுப்புக்களிலே வைத்தும், அதன்பின் உங்கள்முன் உள்ள திருவுருவத்தில் வைத்தும், அதன்பின் மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்தும் வழிபட்டு அவளோடு ஒன்றாகி நில்லுங்கள். அங்ஙனம் வழிபடும் பொழுது பிற வற்றை நினைத்தலாகிய குற்றத்தில் அகப்படுத்தப்படாத மனத்தை அவ் விடங்களிலே பிறழாது நிறுத்துதலையும், அவ்வவற்றிற்கு ஏற்ற மந்திரங்களில் அவளை எண்ணுதலையும் இன்றியமையாததாகக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`மந்திரம், கிரியை, பாவனை` என்னும் வழிபாட்டுப் பகுதி மூன்றனுள், ``சந்தையில் வைத்து`` என்பதனால் மந்திரமும், ``நினைவு வைத்து`` என்பதனால் பாவனையும், ஏனையவற்றால் கிரியையும் கூறப்பட்டன. சிராதிகளாவன, `தலை, முகம், மார்பு, குய்யம், பாதம், முதலாக எஞ்சியவை` என்னும் ஐந்துமாம். இவ்விடங்களில் அம்மையின் தலை முதலியன முறையே பஞ்சப் பிரம மந்திரங்களால் வைத்து எண்ணப்படும். இருதயம் முதலியவை யாவன, `இருதயம், சிரசு, கூந்தல், கவசம், நேத்திரம், அஸ்திரம்` என்னும் ஆறுமாம். இவற்றில் அம்மையின் அங்கங்கள் அவ்வம் மந்திரங்களால் முறைப்படி வைத்து எண்ணப்படும். முந்தை - முன்னுள்ள இடம்; இஃது ஆகுபெயராய் அங்கு உள்ள திருவுரு வத்தைக் குறித்தது. திருவுருவத்தில் மேற்கூறிய இருவகை மந்திரங் களால் மேற்கூறிய இருவகையாகவும், வேறு பல மந்திரங்களால் விரிவாகவும் வைத்து அம்மை வழிபடப்படுவாள். `இருதயம், மூலம்` என்பன உபலக்கணமாய் நின்றன. மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்து வழிபடுதலே யோகம் என்பது வெளிப்படை. யோகத்திலும் கிரியை உளதாதலை நினைக்க. சந்தை - ஓசை; அஃது அதனையுடைய மந்திரத்தை உணர்த்திற்று. இங்ஙனம் செய்யும் வழிபாடுகளால் தேவியது காட்சியை நாளடைவில் பெறுதல் கூடும் என்பதாம்.
இதனால், சத்தி தன் அடியார்களது உடம்பும், அவர்கள் முன் நிற்கும் படிவங்களும் ஆகிய ஆதாரங்களில் நின்று அருள் புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை
நவாதியில் ஆக நயந்தது ஓதில்
உவாதி அவளுக் குறைவில தாமே.

பொழிப்புரை :

தன்னைத் தியானித்துத் தன்னிடத்து வேறற ஒன்றி நிற்கும் உணர்வுடையவர்கட்குத் தலைவியாய், `சிவா` என்பதை முதலாகக் கொண்ட மந்திரத்தில் பொருந்தி நிற்பவளாகிய சத்தியை, `நவாக்கரி` எனப்படும் ஒன்பது பீஜங்களில் பொருந்த வைத்து அந்த மந்திரத்தை விருப்பத்துடன் ஓதினால், செயற்கையாய் நிற்கின்ற நிலைமை அவளிடத்துப் பொருந்துதல் இல்லையாம்.

குறிப்புரை :

``நவாதி`` என்பதில், `பீஜம்` `ஆதி` எனப் பட்டது, வித்து, `முதல்` எனப்படுமாதலின். ``அது`` என்றது, ``சிவாதி`` என முன்னே கூறப்பட்ட மந்திரத்தை, உவாதி - உபாதி; செயற்கை. சத்திக்குச் செயற்கை நிலையாவது, மலத்தின்வழி நின்று மறைத்தலைச் செய்தல். `அஃது இலதாம்` எனவே, `இயற்கையான தனது விளக்க நிலையை உடையவளாய் நிற்பாள்` என்பது போந்தது. முதலடி உயிரெதுைக.
இதனால், `சத்தியை நவாக்கரியோடு கூடிய அஞ்செழுத்து மந்திரத்தால் வழிபடின் மருள்நிலை நீங்க, அருள்நிலையைப் பெறலாம்` என்பது கூறப்பட்டது. நவ பீஜம் `நவாக்கரிசக்கரம்` என்னும் அதிகாரத்திற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 49

உறைபதி தோறும் உறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.

பொழிப்புரை :

சத்தி இந்நிலவுலகத்தில் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்களில் அவள் எழுந்தருளியிருக் கின்ற வகைகளை விருப்பத்துடன் உணர்ந்து, நாள்தோறும் அவ்விடங் களை அடைந்து, அவளுக்குரிய மந்திரத்தோடு நீங்காது நிற்கின்ற `பிர ணவம், பீஜம், சக்தி, கீலகம்` என்னும் நான்கினையும் தெய்வத் தன்மை மிகும்படி ஓதி வழிபட்டால், பயன்கள் பலவற்றை அடையலாம்.

குறிப்புரை :

உறை முறையாவன: காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அன்னபூரணி, அபிராமி முதலாகப் பலவாம். ஆங்காங்கு உள்ள அவ்வகைகளை அறிந்து அன்புடன் வணங்கின், அவ்வவற்றால் அடையும் பலன்கள். கைகூடும் என்பதாம். இறை - இறைமை, தெய்வத் தன்மை, திளைத்தல் - மிகுதல், `திளைப்ப` என்னும் செய வென் எச்சத்தது அகரம் தொகுத்தலாயிற்று. எய்துதலும், `அவ்வப் பயன்கள்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. தலங்கள் பலவற்றில் சத்தி பீடங்களாய் உள்ளவை அம்மைக்குச் சிறந்தனவாம்.

பண் :

பாடல் எண் : 50

எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

பொழிப்புரை :

ஞானிகட்கு உரிய இருவினைப் பயனாவன, அம்மையிடத்தில் அன்பு செய்தலும் `செய்யாமையுமாகிய அவற்றால் வருவனவாம்.

குறிப்புரை :

``ஆகும்`` என்பது எச்சம். குலாம் - விளங்குகின்ற, மாதுரிகை - இனிமையைச் செய்பவள். கைதவம் - வஞ்சனை; அஃது அவளை ஐய உணர்வுடன் எண்ணுதல். `கை தவமும் அஃது இன்றிக் கருத்துறு மாறும்` என்க. இவற்றால் விளையும் பயனை இவையேயாக உபசரித்துக் கூறினார். `இருவினைப் பயன் மாதுரிகையோடு கைதவ மும், அஃது இன்றிக் கருத்துறுமாறுமாம்` என இயையும். `கருத்து அவள்பால் உறுமாறு` என்க. `பிறரெல்லாம் எண்ணும் புண்ணிய பாவங்கள் போலாது ஞானியர் எண்ணும் புண்ணிய பாவங்கள் அம்மையை நினைதலும், நினையாமையு மேயாம்` என்றவாறு. எனவே, `அவரது எண்ணமே உண்மை` என்பது அறியப்படும். ஒடு உருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. அன்றி, ஒடு `அதனொடு மயங்கற்` பொருளது எனினுமாம்.
இதனால், உயர்ந்தோர்க்குச் சத்தியது வழிபாடு இன்றியமை யாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

சத்தியிடத்து மனம் செல்லும் பொழுது அதனை நன் மனமாகச் செய்து, அதன்கண் உள்ள எண்ணங்களெல்லாம் குவிகின்ற இடமாகிய இருதயத்தில் ஒப்பற்றவளாகிய அவளையே முதல்வியாக உணர்ந்து தியானி. அங்ஙனம் தியானித்தால், அவள் உன்னை மேன் மேல் உயரச் செய்வாள். அதனால், நீ முடிவில் சிவனது எண்குணங் களையும் பெற்று விளங்கலாம்.

குறிப்புரை :

மனம் திருந்தியபொழுது உண்டாகின்ற எண்ணம், `எல்லாம் சத்தியின் செயலே` என்பதும், `அவளையின்றி நமக்குச் சுதந்திரம் இல்லை` என்பதும், மற்றும் இவை போல்வனவுமாம். சிவனது எண்குணங்களாளாவன: `தன்வயம், தூய உடம்பு, இயற்கை யுணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் இன்மை, முடிவிலாற்றல், பேரருள், வரம்பில் இன்பம்` என்பன. ``எண்குணத்துளோம்`` 1 என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தமையால், திருவருள் பெற்றோர் இவ் எண் குணங்களையும் பெறுதல் அறியப்படும்.
இதனால், சத்தியது வழிபாடு உயிர்களை மேன்மேல் உயரச் செய்து, முடிவில் சிவமாகச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

ஆமைஒன் றேறி அகம்படி யான்என
ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.

பொழிப்புரை :

யான் ஆமையைப்போல ஐம்புல ஆசைகளைத் திருவருளுக்குள்ளே அடக்கி, மெல்லென மேலேறிச் சென்று, புறத்தே செல்லாது அகத்தே நிற்பவனாகி, ஓங்காரத்தை உச்சரித்து, எம்போல் வார்க்கு உள்ளொளியாய் விளங்குகின்ற யோக சத்தியைத் தரிசித்த பின்பு, அவள் சந்திரமண்டலத்தில் உள்ள நறுமணம் பொருந்திய தாமரை மலரைச் சூடி வெளிநின்றாள்.

குறிப்புரை :

ஐம்புல ஆசையை அடக்குவோர்க்கு ஐந்துறுப்புக் களையும் ஓட்டிற்குள் அடக்கிக்கொள்ளும் ஆமை உவமையாதல்,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து`` (குறள் - 126)
எனவும்,
``புலன் அடக்கித் தம்முதற்கண் புக்குறுவார்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
எனவும் போந்தவற்றால் நன்கறியப்பட்டது. `ஒன்ற` என்னும் உவம உருபின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அகம்படி - அகத்தேபடிந்து நிற்பவன். `என` - என்று ஆகி. `ஓம்` என்பது அகரச் சாரியை பெற்று வந்தது. சந்திரமண்டலம், சென்னி. அங்குள்ளது ஆயிர இதழ்த் தாமரை மலர். அதனைச் சூடிநிற்றல். ஆஞ்ஞை முதலாக வெளிப்பட்டு நிற்றல்.
இதனால், ஐம்புலன்களை அடக்கிப் பிரணவ யோகம் செய்தால் யோக சத்தியைத் தரிசித்தல் கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

சூடிடும் அங்குச பாசத்துளை வழி
கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம்
ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.

பொழிப்புரை :

யோக சத்தியை அணுகும் வழி சுழுமுனா நாடி. அவளது இருகைகளில் காணப்படுவன சங்கமும், குண்டிகையும். அவளுக்குரிய சீருத்திர மந்திரம் சிகாரமும், வகர ஆகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்களால் ஆகிய சொல். அவள் நடனம் புரிகின்ற அரங்கு `புகழை உடைய பொன்மன்று` எனப்படும் புருவநடு.

குறிப்புரை :

அங்குசம்போல மேலே வளைந்து நிற்கும் முதுகந் தண்டினைச் சூழ்ந்து செல்லும் கயிறு போன்றுள்ளது பற்றிச், சுழுமுனை நாடியை, ``அங்குச பாசத் துளை`` என்றார். அங்குச பாசங்கள் அம்மைதன் ஆயுதமுமாதல் பற்றி, `சூடிடும்` என்றார். `இரு கோலக் கையில் வளை குண்டிகை` எனக் கூட்டுக. ருத்திரம், சீருத்திரப் பிரச்சினம். அஃது ஆகுபெயராய் அதன்கண் உள்ள மந்திரத்தைக் குறித்தது. `வேத பாகங்களில் சிறந்தது சீருத்திரமே` என்பதைக் குறிக்க, வாளா, `மந்திரம்` என்னாது, `ருத்திரம்` என்றார். `சிவா` என்னும் பதம் சீருத்திரத்துள் பலவிடத்து வருதல் அறிக. எழுத்தை, `பதம்` என்றது, ``வகரக் கிளவி`` 2 என்பது போல ஆகுபெயர். ``ஆடிடும்`` என்பது பாடமன்று, `சீர்` என்பது மிகுத்துக் கூறப்படுதலை உணர்த்திற்று.
இதனால், யோகசத்தியை அணுகுதற்குரிய வழி முதலியன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 54

ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன்
தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.

பொழிப்புரை :

உலகிற்கு முதல்வராம் `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்` என்னும் ஐவர்தாமும் சத்தியை வழிபட்டே தங்கள் பதவியைப் பெற்றார்கள். மற்றும் காமன், சாமன், சூரியன், அங்கி, சந்திரன் என்னும் இவர்களும் வந்து வணங்க அவள் வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட அயன் முதலிய ஐவர் அணுபட்சத் தினர் என்க. `சாமன்` என்பான் காமனுக்குத் தம்பி என்ப.
இதனால், `சத்தியே கடவுளர் பலர்க்கும் தலைவி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞாளம் உருவநின்
றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.

பொழிப்புரை :

உலக முதல்வியாகிய சத்தி இளம் பிறையைச் சூடிக் கொண்டும், சூலத்தையும் கபாலத்தையும் ஏந்திக் கொண்டும், என்றும் மாறாத கொடிபோல்பவளாய் இருப்பாள்; இயல்பாகவே மலம் நீங்கியவள்; நேரிய (நுண்ணிய வேலைப்பாடமைந்த) அணி கலங்களை யணிந்தவள். அவள் நடு நாடியாகிய சுழுமுனையிடத்து அதன் உள்துளையில் பிராணவாயு ஊடுருவிச் செல்லும்பொழுது அவ்வாயுவின் வழியே நின்று நடனம் புரிவாள்.

குறிப்புரை :

``சூடும்`` என்பது முற்று. ``இளம்பிறை`` என்பதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. `நடுநாடியிடை` என மாற்றி யுரைக்க. `நாளம்` என்பது ``ஞாளம்`` எனப் போலியாயிற்று. உரு வுதலுக்கு வினைமுதல் வருவிக்க. `அதன்வழி நின்று ஆடும்` என்க. `ஆடுதல்` இங்கு விளங்கித் தோன்றுதல்.
இதனால், யோகிகட்கு அவரது அகக்காட்சியில் சத்தி விளங்கி நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

அண்ட முதலா அவனி பரியந்தம்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனும் கண்டியு மாகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

பொழிப்புரை :

ஆகாயம் முதல் பூமி ஈறாகப் பார்த்தால் நாம் கண்டது சத்தியைத் தவிர வேறொரு பொருளும் இல்லை. சத்தி தான் மாத்திரமாய் நின்று உலகிற்கு முதற்பொருளாகாது சிவத்தொடு கூடி நின்றே முதற்பொருளாயிருத்தல், உலகம், `ஆண், பெண்` என்னும் இரு பகுதிப்பட்டே நிற்றலைக் காண்கின்ற அதனானே அறியப்படும்.

குறிப்புரை :

``கனங்குழை யல்லது கண்டதொன்றில்லை`` என்றது, `சத்தியது கலப்பில்லாமல் எதுவும் இல்லை` என்றவாறு. ``கண்டன், கண்டி`` என்பன, `சிவம்` என்றும் `சத்தி` என்றும் வரையறுக்கப்படும் தன்மை யுடையவர்களாய் இருத்தலைக் குறித்தது. காரணம் - காரணத் தன்மை. ``குண்டிகை, கோளிகை`` என்பன ஆடவர் பெண்டிர் அவயவங்களை, `குண்டு` எனவும் `குழி` எனவும் மறைத்து வழங்கும் வழக்குப்பற்றி வந்தன. கோளிகை - கொள்வது. `கோளகை` என ஓதலுமாம், ஈற்றில், `அறியப்படும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இதனால், சத்தியே உலக முதல்வியாயினும், அவள் சிவனைப் பற்றி நின்றே முதலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.

பொழிப்புரை :

சத்தி, எல்லா உலகங்களையும் கடந்து சென்று எய்தப்படுவதாகிய சிவலோகத்திற்குத் தலைவனாகிய சிவனுடனே மிக அணிமையில் வந்து யோகியர்தம் உச்சியிலே இருக்கின்றாள். அவளை அடைதலாலே, சிவன் நஞ்சை உண்டதனால் அமுதத்தை உண்ணப் பெற்ற அந்தத் தேவர்கள் பதவிகள் மிகக் கிடைக்கும்; அதுவேயன்றிச் சரியை முதலிய தவங்களால் வருகின்ற சிவலோகத்து இன்பமும் கிடைக்கும்.

குறிப்புரை :

`ஆலம் உண்டானால் ஆங்கு அமுதுண்ட அவர்` என உருபும், ஒருசொல்லும் விரித்துக் கொள்க. கோலுதல் - விலக்குதல். ``கோலி வந்து`` என்பதில் ``வந்து`` என்பது இட வழுவமைதி, ``குவிந்த`` என்றது, `முடிந்த` என்றவாறு. ஐ - தலைவன். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் பின் `அவளால்` என்பது வருவித்துக் கொண்டு உரைக்க.
இதனால், சத்தியது அருளால் எல்லா இன்பமும் எய்தப் படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.

பொழிப்புரை :

உணவுப் பொருளாய் நின்று உடம்பையும், அது வழியாக உயிரையும் வளப்பவளாகிய சத்தி, நாலிதழ்த் தாமரையாகிய மூலாதாரத்திலிருந்து மேலேற்றிப் பல ஆதாரங்களில் ஊன்றப்பட்டு முடிவில் தலைக்குமேல் உள்ள துவாதசாந்தத்தில் முடிகின்ற பிரணவ வடிவாய் இருந்து அருள் புரிகின்றாள். இதனை யறியாது, பலர் மேலாகிய ஞானயோகம் முதிர்தற்பொருட்டு மலை, காடு, தீர்த்தக்கரை முதலிய இடங்களை அடைந்து துன்புற்று விரைய இறந்தொழி கின்றார்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``ஏத்தி`` என்பது பாடமாயின், `ஓதி` என உரைக்க. நட்டு, நடப்பட்டு, ஆமம் - உணவுப் பொருள். `பிறர் கணத்திடைக் கழிவர்` என்றதனால், யோகத்தினர் நீண்ட நாள் வாழ்தல் பெறப்படும்.
இதனால், `சத்தியைப் பிரணவ யோகத்தினாலே தலைப்படல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

பொழிப்புரை :

அடப்படாத உணவுப் பொருளாயிருந்து பின் அடப்பட்ட உணவாகவும் ஆகின்ற சத்தி, வயிற்றுத் தீயும், குண்டத் தீயு மாகிய ஓமத் தீக்களிலும் ஒப்பற்ற ஒருத்தியாய் இருந்து அவற்றை அடையும் பொருள்களைச் செரிப்பித்தும், அவியாக்கியும் உதவு கின்றாள். அவளது பெயராகிய திருவைந்தெழுத்தையே துணையாகப் பற்றி அமைதியுற்று இருப்பவர்கட்கு, தவத்தின் முதல்வியாகிய அவள் இனிது விளங்கி அருள்புரிவாள்.

குறிப்புரை :

``இருந்து`` என்னும் எச்சம் ``அன்ன மயத்தினள்`` என்பதில் தொக்குநின்ற `ஆவாள்` என்பதனோடு முடிந்தது. உணவு கொள்ளுங்கால் வயிற்றுத்தீயும் ஓமாக்கினியாகக் கருதப்படுதலை நினைக. வயிற்றுத் தீயில் நின்று மண்ணுலகத்தவர்க்கும், வேள்வித் தீயில் நின்று விண்ணுலகத்தவர்கட்கும் உதவுதலைக் குறித்தவாறு. இவ்வாறு யாவர்க்கும் உதவுபவளாகிய அவளை அஞ்செழுத்து வழியாக அடைந்து பயன்பெற வேண்டும் என்பதாம். `நமசிவ` எனப் பாடம் ஓதின் யாப்புக் கெடுதலை நோக்குக. சத்தி சிவங்கட்கு இடையே வேற்றுமையின்மையின், சிவனது நாமத்தைச் சத்தியது நாமமாகவே அருளிச் செய்தார். `நமச்சிவாயை என்று` எனப் பாடம் ஓதலுமாம். நியமம், ``நேமம்`` என மருவிற்று.
இதனால், சத்தி உயிர்களைச் சில ஆதாரங்களில் நின்று காக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

நிலாமய மாகிய நீள்படி கத்தி
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

பொழிப்புரை :

நிலவைப் போன்ற ஒளியையுடைய படிகத்தின் நிறத்தையும், ஒளிக் கல்லாகிய முத்தின் நிறத்தையும் உடையவளும், செறிந்த சுரிந்த கூந்தலை உடையவளும் ஆகிய சத்தி பிரணவ கலைகளின் வடிவாய் யோகிகளிடத்தில் கலந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஆதலின், அவளை அக்கலை வழியாகக் காணுதலே சிறந்தது` என்பது குறிப்பெச்சம். படிகமும் தரளமும் அவற்றின் நிறத்தை உணர்த்தின. `படிகத்தின், தரளத்தின்` என்பன பாடம் ஆகாமை அறிக.
இதனால், சத்தி யோகிகளிடத்தில் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.

பொழிப்புரை :

சத்தி சிவனோடு தாதான்மியமாய் ஒன்றுபட்டு நின்றே, உயிர்களின் அறிவு. வேதம் முதலிய எண்ணிறந்த நூல்கள், காலம் முதலிய தத்துவங்கள் ஆகிய எல்லாப் பொருளிலும் அத்து விதமாய் ஒன்று பட்டிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஆகவே, அவளைச் சிவனது பண்பாகவே உணர்தல் வேண்டும்; தனித்த ஒருத்தியாக எண்ணுதல் கூடாது, என்பதாம். `கற்பனை` - எண்ணம்; என்றது அறிவை. ``கலைஞானங்கள்`` என்பதை `ஞானக்கலைகள்` எனமாற்றிக் கொள்க. இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலை.
இதனால், ``அண்ட முதலா அவனி பரியந்தம்`` (1193) அனைத்தும் சத்தி மயமாமாறு இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 62

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாகுமே.

பொழிப்புரை :

காலமாய் இருப்பவளும், எல்லா இடமுமாய் இருப் பவளும், உயிர்களின் எண்ணமும், விருப்பமும் கைகூட உதவியாய் இருப்பவளும், எல்லாப்பொருளிலும் தான் ஒன்றாயிருக்கும் கலப்பினைச் செய்தவளும், உயிர்களை மயக்குகின்றவளும், அம்மயக்கம் நீங்கத் தெளிவைத் தருகின்ற மேன்மை வாய்ந்தவளும், மந்திரங்களின் ஆற்றலாய் நிற்பவளும், உயிர்களைக் காக்கின்றவளும் ஆகிய சத்தி தன்னில் ஒரு கூறாய் நிற்கின்ற சிவனிடத்துத் தான் அவனிடத்தில் ஒரு கூறாய் இருப்பாள்.

குறிப்புரை :

`காலத்தி, கூலத்தி` என்பவை அத்துச் சாரியை தொக வந்தன. அனுகூலத்தை, ``கூலம்`` என முதற் குறைத்துக் கூறினார். ``எங்கு`` என்பது பெயர்த்தன்மைப்பட்டது. மாகுலம் - உயர்குலம்; அஃதாவது தெளிவிக்கும் தன்மை. சண்டிகை - வேகம் (மந்திரத்தினது ஆற்றல்) ஆகின்ற தன்மையுடையவள். பாலினி - பாலனம் செய் பவள். `சத்தியும், சிவனும் தம்மில் தாம் கூறாய் இருப்பர்` என்பதை விளக்க, ``பாலவன்`` என்றும், ``பாகமதாம்`` என்றும் கூறினார்.
இதனால், பல்வகைப் பெருமைகளும் உடையவளாகிய சத்தி சிவனது கூறாயே நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி
ஏக இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.

பொழிப்புரை :

பசிய பொன்போலும் சடைமுடியையும், ஒரே எண்ணத்தையும். திண்ணிய பத்துத்தோள்களையும், விருப்பத்தைத் தருகின்ற ஐந்து முகங்களையும், முகந்தோறும் மும்மூன்று கண் களையும் கொண்டு, யானையை உரித்துப் போர்த்து நடனம் புரிபவ னாகிய சிவபெருமானுக்கு அவனது ஒரு கூறாய் இருப்பாள் பராசத்தி.

குறிப்புரை :

`சிவபிரானது பல்வகை உருவும், குணமும், செயலும் ஆகிய எல்லாம் சத்தியால் அமைவனவே` என்பதை விளக்க, அவனது உருவம் முதலியவற்றை வகுத்துரைத்து, `அவனுக்குப் பாகம் பராசத்தி` என முடித்தார். ஆகவே, ``பைம்பொற் சடைமுடி`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இதனால், `சிவனின்றிச் சத்தி யில்லாமைபோலச் சத்தியின்றி யும் சிவனில்லை` என்பதுணர்த்தி, இருவரும் யாண்டும் பிரிந்து நில்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.

பொழிப்புரை :

தலைவனாகிய இறைவனும், அவனால் செயற் படுத்தப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் ஏற்ற பெற்றியால் பொருந்தி நிற்பவனவாகச் சொல்லப்படுகின்ற நிலையங்கள் ஐந்து உள்ளன. அவைகளில் பிரமன் முதலியோரும், பதினெண், கணங்களும், வந்து வணங்கச் சத்தி அவற்றிற்கு முதலும், முடிவுமாகி நிற்கின்றாள்.

குறிப்புரை :

ஐந்து நிலையங்கள் என்றது. `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்து கலைகளை. இவைகளிலே முப்பத்தாறு தத்துவங்கள் முதலிய பிற அத்துவாக்கள் ஐந்தும் அவற்றிற்கு ஏற்ற பெற்றியால் அடங்கி நிற்க, இறைவனும் பெற்றியால் ஆதியும் அந்தமுமாம் தலைவனாய் நிற்றலின், சத்தியும் அங்கு அவ்வாறு நிற்கின்றாள் என்க. ``வேதனும் ஈரொன்பதின்மரும் மேவ நின்று`` என்றது, அவளது பெருமை கூறியவாறு. `அவை மேவ` என இயையும். `பதினெண் கணத்தவர் இவர்` என்பதை
``விரவுசா ரணரே, சித்தர், விஞ்சையர், பசாசர், பூதர்,
கருடர்,கின் னரர், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர் ஆகாச வாசர் உத்தர குருவோர் யோகர்
நிருதர்,கிம் புருடர், விண்மீன் நிறைகணம், மூவா றாமே`` 1
என்பதனான் அறிக. தைத்தியர் - அசுரர். நிருதர் - இராக்கதர். உத்தர குரு - போக பூமி. யோகர் - முனிவர். ``விண்மீன்`` என்றதும் அவற்றிற்குத் தலைவரை.
இதனால், சத்தி பஞ்சகலைகளிலும் ஏற்ற பெற்றியால் அனைத்திற்கும் ஆதியும், அந்தமுமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத்
தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.

பொழிப்புரை :

உலகம் தோன்றும்பொழுது பஞ்ச கலைகளிலும் நிற்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் முதலில் முறையானேதோன்ற, அவற்றிற்கு முதல்வர் ஐம்பத்தொருவரும் உடன்தோன்றி நிற்பர். அங்ஙனம் நிற்கும் அவர் எல்லார்க்கும் சத்தி உயிராய் உள் நிற்பாள். ஆகவே, அவ் எழுத்துக்களைப் பல்வேறு முறையில் தம்முட்கொண்ட சக்கரங்களில் எல்லாம் அச்சத்தி உயிராய் நிற்றல் பெறப்படுதலின், சிவனும் அவளிடத்து நீக்கமின்றி அச்சக்கரங்களில் நிற்பவனாவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை, `அங்ஙனம் ஆகிநின்ற அவள் நீங்காது நிற்கின்ற சக்கரம்` என எடுத்துக்கொண்டு உரைக்க. பின் னிரண்டடிகளில், ``ஆகிநின்றாருடன் நாயகி சக்கரத் - தாகிநின்றான் அவன் ஆயிழை யோடே`` என்பதும் பாடமாய் உள்ளது.
இதனால், `சக்கரங்களாக அமைக்கப்படுவனயாவும் சத்தி சிவமயமேயன்றித் தனியில்லை` என்பது கூறி, தனிப்பட்ட வேறு ஆற்றல் உடையனவாகக் கருதுதல் அறியாமையாதல் விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 66

ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
றேய குழலி இனிதுநின் றாளே.

பொழிப்புரை :

சத்தி, சிவன் இருவருக்கும் உரிய இடம், உலக முதல்களுக்கு மேலாய், எட்டாய் அமைந்த இதழ்களையுடைய தாமரை மலராகும். அதுவன்றியும் தியான வகையால் வேறுபடுகின்ற ஆறு இடங்களும் உள. எல்லாவற்றிலும் சத்தி இனிது வீற்றிருக் கின்றாள்.

குறிப்புரை :

அண்டகம் - உலகம்; ஐ - முதல்; என்றது தத்து வங்களை. `தத்துவங்கள்` எனப் பொதுப்படக் கூறினும் சகலர்க்கே உரிய ஆன்ம தத்துவங்களே குறிக்கப்பட்டன. அவற்றின் மேல் உள்ள எட்டிதழ்க் கமலம், இருதய கமலமாம். இதனிடத்திலும், ஆறாதாரங்களிலும் சத்தியும், சிவமும் கலந்து நிற்பினும், தன்னை இவ்விடங்களில் நினைபவர்க்குச் சத்தி இனிது விளங்குவாள் என்றவாறு. பின்னிரண்டடிகளில் பாடம்பெரிதும் திரிபுபட்டுள்ளது.
இதனால், சத்தி தியான இடங்களில் விளங்குதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 67

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

யான் சத்தியோடு ஒன்றிச் செவ்வியனாகும்படி அவள் எனக்கு இனிது வெளிநிற்கின்றாள். எதனால் எனின், இப் பொழுது என் உடலுள்ளே உயிர்ப்புக் காற்று என் வசமாய் ஆறு ஆதாரங் களிலும், அவற்றின்மேல் உள்ள ஏழாந்தானமாகிய சிரசிலும் செல் கின்றது. பத்து வாயுக்களும் நெருங்கி நின்று சுழலுகின்ற உடம்பினுள் ஏனை ஒன்பதினும் உயர்வுடையது. உயிர்ப்புக் காற்று ஒன்றே என்பதை எனக்கு அவள் அறிவித்து, என்பொருட்டு அறிந்தும் நின்றாள்.

குறிப்புரை :

`ஏழிலும்` என உருபு விரிக்க. இதனுள் வந்த மூன்று தொடர்களும் முறையே ஒன்றற்கொன்று காரணமாம் பொருள்களை உணர்த்தி நின்றன.
இதனால், வாசி யோகம் சத்தியைக் காணுதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 68

உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழு மாகதி யாகிய தாகும்
கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.

பொழிப்புரை :

உயிர் உணர்ந்து உணர்ந்து மேன்மேல் உயர்தற் குரிய மந்திரம் `ஓம்` என்பது எனச்சொல்லப்படும். உணர்வால் இறையொடு கூடி மேன்மையுறுகின்ற முடிந்த பேறாகிய வீடுபேறும், பிறவும் அதனாலே கிடைக்கும். உயிரை இவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டு செல்கின்ற கள்வனும், கள்வியுமாகிய சிவனும், சத்தியும் இணைந்து நிற்றலும், அதனால் விரைய விளங்கும். அங்கு முன்னர்க் காணப்படுபவள் சிவனிடத்துப் பெருவிருப்புடையளாகிய சத்தியே.

குறிப்புரை :

``எனும்`` என்பது செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தி நின்றது. ``உள்`` என்றது உணர்வை, `கணத்து` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. இறுதியில் உள்ள ``எழும்`` என்பதில், செய்யும் என்முற்று பலர்பாலில் வந்தது. ஆரிடவமைதி ``காணும்`` என்றது முன்னர்த் தோன்றுதலை.
இதனால், `வாசியோகம் பிரணவயோகமாயவழிச் சத்தியை எளிதில் அடைவிக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டலம் மாருத மாதியும்
ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.

பொழிப்புரை :

`ஆதி` எனப்படுபவளாகிய சத்தியும், `ஈசன்` எனப் படுபவனாகிய சிவனும் வழிபாட்டிற்கு மிகச்சிறந்ததாகச் சொல்லப் படுகின்ற வேள்வித்தீ, யோகத்தில் சிறப்பிடம் பெற்று நிற்கும் சந்திர மண்டலம், வாயு முதலிய பூதங்கள் என்னும் இவைகளாய் நின்று உயிருக்கு நலம் செய்கின்றனர். அவ்விடத்தில், சத்தி, யோகியரது உடம்பில் தோன்றுகின்ற நரை முதலியவை அங்ஙனம் தோன்றாது அகலச் சிகை கறுத்தல் முதலிய இளமைத் தன்மைகள் தோன்றும்படி அவரது ஆஞ்ஞைத் தானத்தில் விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

``ஆதியும், ஈசனும்`` என்பவற்றை முதலில் எழுவாயாக வைத்து, `மாருதம், ஆதியுமாய்` என ஆக்கம் வருவித்து, `ஏமம் ஆகின்றனர்` என முடிக்க. `ஆம் அதுவாகிய அங்கி` என்க. இதனுள் ``அது`` என்றது வேள்வித் தீயைக் குறித்த பண்டறி சுட்டு. `மா மண்டலம், மது மண்டலம்` எனத் தனித்தனிச் சென்று இயையும். மது, இங்கே அமுதம். பூதங்களில் மாருதத்தை ஆதியாகக் கூறினார். யோகத்திற்கு அது சிறந்ததாதல் பற்றி. `ஏமம்` என்பது இடைக் குறைந்து நின்றது. இதன்பின் உள்ள ``அது``, பகுதிப் பொருள் விகுதி. ``சீவன்`` என்பது, சொல்லுவாரது குறிப்பால், யோகத்தில் நிற்கும் சீவனைக் குறித்தது. `சீவனது சிகை` என்க. கோ - தலைமை; இஃது ஒரு சொல் தன்மை எய்தி நின்ற, `மலர்க் கோதை` என்பதனுடன் இரண்டாவதன் பொருள்படத் தொக்குநின்றது. கோதண்டத்தில்` என உருபு விரித்துக் கொள்க.
இதனால், அனைத்துமாய் நின்று காத்துவருகின்ற சத்தி சிவன் என்பாருள் சத்தி யோகத்தில் விளங்கிநின்று நலம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 70

ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரைஅவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

பொழிப்புரை :

`மேன்மைத் தானம்` எனப்படுவதாகிய ஆஞ்ஞை யில் சத்தி விளக்கமுற்றுத் திகழும் நிலையில் அது முதல் மூலாதாரம் ஈறாக நிற்கின்ற ஐம்பது எழுத்துக்களும் அவளிடத்தே செயலற்று அடங்கிவிடும். அஃது எவ்வாறெனின், சுத்த மாயையினின்றும் விருத்திப்படுகின்ற நால்வகை வாக்குகளில் அவ் எழுத்துக்களுக்கு முதல் நிலைகளாகிய `பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குகளாய் நிற்றலோடு, ஐந்தொழிலையும் தன்னுடையனவாக உடையவள் அவளேயாதலின்.

குறிப்புரை :

`மனோன்மனி` என்பது, `சத்தி` என்னும் அளவாய் நின்றது. `மனோன்மனிபால்` என ஏழாவது விரிக்க. `ஐம்பதும்` என்னும் முற்றும்மை தொகுத்தல் பெற்றது. உடனே - ஒருசேர. பைசந்தி சூக்குமை வாக்குகளை முறையே `பராபரை, பரை` என்றல் வழக்கு. பராபரை - பரை அபரை இருதன்மையும் உடையது. எழுத்துக்கள் அடங்கவே. உயிரினது பல தலைப்பட்ட உணர்வு அடங்கிச் சத்தியையே உணர்ந்து நிற்றல் பெறப்பட்டது. ஆஞ்ஞையில் விளங்கி நிற்கும் சத்தியது விருப்பம், அவ்வுயிரினது உணர்வைத் தன்பால் அடக்கிக் கொள்ளுதலே யாதலின், அவளது விருப்பத்திற்கு மாறாகப் பிறி தொன்று நிகழ மாட்டாமை பின்னிரண்டடிகளால் விளக்கப்பட்டது.
இதனால், (கோமலர்க் கோதை கோதண்டம்) ஆதலின் (முன்னை மந்திரம்) பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 71

தானிகழ் மோகினி சார்வான யோகி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந்
தானாம் பரசிவம் மேலது தானே.

பொழிப்புரை :

சிவசத்தி தனக்கு இடமாகக் கொள்கின்ற குண்டலினி சத்தி, அவளைச் சார்பாகக் கொண்டு விளங்கும் யோகினி சத்தி என்னும் இவர்கள் நீங்கத் தாம் தூயராய் நிற்போரே ஆதி சத்தியைத் தலைப் படுவர். அவரது உணர்வில் அவையேயாய்க் கலந்து நிற்கின்ற ஆதி சிவமாம் நிலையை அடைகின்ற பரசிவம் அந்நிலைக்கு மேலுள்ளது.

குறிப்புரை :

எனவே, `அந்தப் பரசிவத்தின் சத்தியாகிய பராசத்தியும் மேற்சொல்லிய அனைத்திற்கும் மேல் உள்ளது` என்றவாறு. முதற்கண் ``தான்`` என்றது, முன்னை மந்திரத்திற்கூறிய மனோன்மனியை. குண்டலியும் பந்தமாதல் பற்றி ``மோகினி`` என்றார். யோகினி - யோகத்தைப் பயப்பிக்கின்றவள். அடி, சிவனடி. ஆதி சத்தியை இங் ஙனம் கூறுதல் வழக்கு. `முன்னர்க் கூறப்பட்ட ஆதி சத்திக்கு முதலாகிய சிவம், என்பது தோன்ற, ``அச்சிவம்`` எனச் சுட்டிக் கூறினார். பரசிவ பராசத்திகளின் இயல்பை இவ்வாறு எடுத்துக் கூறியது, அவர்களை அடைதலின் அருமை யுணர்த்தற்கு. ஈற்றில் உள்ள தான், ஏ அசைகள்.
இதனால், சத்தி சிவங்களின் உண்மை நிலையின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 72

தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.

பொழிப்புரை :

ஆதி சத்தி, யோகியரது உச்சியிலும், அதற்கு மேலுள்ள பன்னிரண்டு அங்குலமாகிய நிராதாரத்திலும் குண்டலி சத்தியோடு அவட்கு முன்னவளாம்படி வைத்துச் சொல்லப்படும் வியட்டிப் பிரணவநிலைகளே பிரணவ யோக நெறியாகும்.

குறிப்புரை :

``தான்`` என்றது மேலே போந்த ஆதி சத்தியை. அந்தம்- முடி; தலை. தலைக்குமேல் உள்ள நிராதாரத்தையே இங்கு, ``சிகை`` என்றார். `அந்தமும் அதன்மேலே தரும் சிகையும் ஆகிய இவற்றுடன் ஆனந்த மோகினியாம் திருவோடு மோனையில் ஆக வைத்து மொழிதரு கூறு` என்க. தரும் - சொல்லப்படுகின்ற. அசுத்த மாயையாகிய மோகினியினின்று பிரித்தற்குக் குண்டலினியை ``ஆனந்த மோகினி`` என்றார். பொன் திரு - பொன்போலச் சிறந்த சத்தி. `மோனை` எனினும், `முதல்` எனினும் ஒக்கும். `கூறு` என்பது தொகையால் ஒன்றாகலின், ``கூறது`` என்றார்; `அது`, பகுதிப்பொருள் விகுதி. உயிர் மார்க்கம் - உயிர்ப்பு நெறி; யோக நெறி. யோக நெறி களுள் குண்டலினியைப் பொதுவே செயற்படுத்தலும், அவளைப் பிராசாத முறையாற் காணுதலும் ஒன்றின் ஒன்று ஏற்றமாவன என மேலெல்லாம் கூறிவந்தவற்றோடு, பிராசாத கலைகளை ஆதி சத்திக்குப் பொருந்திய இடமாக வைத்துச் செய்யப்படுதல் மிகச் சிறந்ததாதல் இதனுட் கூறப்பட்டதாம்.
இதனால், சத்தியை அடைதற்கும் பிரணவகலைகளில் அவை யேயாய்க் கலந்து அவற்றைச் செயற்படுத்துபவள் சத்தி என்பதை உணர்ந்து செய்யும் சத்தி யோகமே மிக மேலானதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 73

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

பொழிப்புரை :

ஆதி சத்தி, பலவகைப்பட்ட யோக நெறிகளையும் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அமைத்து வைத்தவள்; நிலையான மங்கலத்தை உடையவள்; ஆதலின், அவள் யார்க்கும் அறிதற்கரிய வளாவாள். ஆயினும் பாச ஞானம், பசுஞானம் என்னும் இரண்டும் ஒருசேர நீங்கும்படி விட்டுப் பதிஞானத்தால் அறிகின்ற பெரியோர்க்கு அவரது அறிவுக் கறிவாய் அவள் விளங்குவாள்.

குறிப்புரை :

``மார்க்கம்`` என்பதற்கு, `சமயங்கள்` என உரைத்தல் இவ்விடத்திற்கு இயைபற்றதாம். `மனோன்மனி, மங்கலி` என்னும் பயனிலைகட்கு, மேல்நின்ற ``தான்`` என்பது எழுவாயாய்வந்து இயைந்தது. அறிவரிதாவதும், நுண்ணறிவாவதும் அவளது உண்மை இயல்பாம். ஆகவே, தடத்த நிலையில் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அறியப்படுவாள் என்பது ``மார்க்கங்கள் ஈன்ற`` என்பதனால் பெறுதும். `வாக்கு, மனம்` என்பன முறையே பாச ஞானமும், பசு ஞானமும் ஆதலைச் சிவ ஞானபோத ஆறாம் சூத்திர உரையான் அறிக. `ஒன்றாய் விட்ட` என்பதும் பாடம் அன்று. ``பெருமை`` என்றது அதனையுடைய பதிஞானத்தை. பதிஞானமே வியாபக ஞானமாதல் அறிக. பெருமையுடைய ஞானத்தைப் பெற்றோரே பெரியராதல் உணர்க.
இதனால், பல்வகையான யோகங்களாலும் அடையப்படுவது சத்தியின் தடத்த நிலையேயாதல் கூறி, `அவைவாயிலாக ஞான நெறியை அடைய முயல்க` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 74

நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு
பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.

பொழிப்புரை :

மக்கட்கு ஐம்புலன்களில் செல்லுகின்ற அறிவு சுதந்திர அறிவாகவே தோன்றும்; ஆயினும், சிவனுடைய அறிவு அவர் தம் அறிவை அவற்றின் பின்னே இருந்து செலுத்துகின்ற அறிவாய் நிற்கும். (அஃது இல்லையாயின், எவரது அறிவும் ஒன்றிலும் நுழைய மாட்டாது. ஆகவே, உயிர்களின் அறிவு இறைவனது அறிவின் வழி யவேயன்றிச் சுதந்திரம் உடையன அல்ல). இங்ஙனம் சிவனது அறிவாய காட்டினை (காட்சிக்குத் துணையாவதை) அறிவதே செந்நெறியாம். இனிச் சிவனை அடைய விரும்புவோர்க்கு அவனது அறிவாலே அவனை அறிதலே தக்க நெறியாம்.

குறிப்புரை :

``நுண்ணறிவு`` என்பது, `இயற்கையில் நுண்ணிதாய்ப் புலன்களில் நுழையும் அறிவு` எனப்பொருள் தந்து நின்றது. இவ்விடத்து நின்ற ``ஆகும்`` என்பது `போலும்` என்னும் பொருளது. நுழை புல மாந்தர்க்கு அவர்தம் அறிவு நுண்ணறிவாகும்; ஆயினும் பிரான் அறிவு பின்னறிவாகும்` எனக்கூட்டி, வேண்டும் சொற்கள் வருவித்து உரைக்க. தடம் - வழி. அத்தடம் - அவ்வாறு உணரும் நெறி. தன் நெறி - தன்னாலே தன்னை அறியும் நெறி. `தன்னெறியாவது` என்பது பாடம் அன்று. சன்மார்க்கம் - நல்ல வழி; நன்மையைத் தரும்வழி. எனவே, பிறவெல்லாம் தீமையைத் தருவனவாயின. தீமையாவது பாசங்களையும், உயிரையும் இன்பப் பொருளாக அடைவித்தல். இங்ஙனமாகவே, `பாசஞான பசுஞானங்களை நீக்கிப் பதிஞானத்தால் உணரவரினும்` அது கொண்டு பதியாகிய சிவனை உணராது, பாசங்களையும், உயிரையும் உணர்தல் துன்பந் தரும் நெறியாதல் வலியுறுத்தப்பட்டதாம். இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய பதிஞானத்தது சிறப்பும், அதனால், பயன் எய்துமாறும் கூறி, மேற்குறித்த ஞானநெறி பற்றி அறியற் பாலவை இனிதுணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 75

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.

பொழிப்புரை :

ஒன்றாக அமைந்த நன்னெறி ஏனை தீநெறிகள் பலவற்றையும் போக்கிவிடும்; அந்நன்னெறிக்கு முதல்வராய கடவுள ராயும், அவரால் தோற்றுவித்துக் காக்கப்படும் அந்நன்னெறியாயும், அந்நன்னெறியால் அடையப்படும் அருட் சத்தியாயும் உள்ளவள், தலைமை பற்றி, `சத்தி` என்று, அடைகொடாது யாவராலும் சொல்லப்படுகின்ற சிவசத்தியேயாவாள்.

குறிப்புரை :

``சன்மார்க்கமாக`` என்றது, ``தான் ஒன்றே முழு நன் னெறியாக` என்னும் குறிப்பினதும், `சமைதரு` என்றது, `இயற்கையில் அமைந்த` என்னும் குறிப்பினதுமாயின, ``சமைதரு மார்க்கமும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``துன்மார்க்கமானவை`` என்றது, முழுத் தீமை முதலாகச் சிறிதே தீமையுடையது ஈறாக உள்ள ஏனை எல்லா நெறிகளையும், `மேற்குறித்த முழு நன்னெறி முதலியவாகக் கூறிய மூன்றுமாயிருப்பவள் சிவசத்தியே எனக் கூறிய அதனால், `அவ்வொன்றாய நன்னெறி சிவநெறியே` என்பது பெறப்பட்டது.
``முன்னெறி யாகிய முதல்வன், முக்கணன்
றன்னெறி யேசர ணாதல் திண்ணமே``
(திருமுறை - 4)
என அப்பரும் அருளிச் செய்தார். நன்னெறியாவது சிவநெறி` எனவே, அதற்கு முதல்வராவார் சதாசிவர், மகேசுவரர், உருத்திரர் முதலியோ ராதல் பெறப்பட்டது. அவர் சிவநெறியைத் தோற்றுவித்தலாவது, தம்பால் கேட்டற்கு உரியவர்கட்கு அதனை அறிவுறுத்தல். அதனைக் காத்தலாவது, ஆசிரிய மாணாக்கர் முறையால் வழிவழியாக விளங்கி வரச் செய்தல். சிவசத்தி நன்மார்க்கத் தேவர் முதலாக நிற்றல் கூறுவார், அந் நன்மார்க்கத்துச் சிறப்பினை முதற்கண் எடுத்துக் கூறினார்.
இதனால், சத்தி, மேற்கூறிய செந்நெறி முதலியனவாய் நின்று உயிர்கட்கு அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை
அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.

பொழிப்புரை :

`சத்தியும், யானும், சிவமும்` என்னும் மூவர் தவிர, வீடுபேற்றினை அதன் முதல் பற்றி அறிபவர் ஒருவரும் இல்லை. முதுகந் தண்டாகிய எலும்பின்கண் பிராண வாயுவைக் கும்பித்தால், அவ் எலும்பு பக்குவப்பட்டு, அந்தப் பிராணவாயு சுழுமுனையூடே மேல் ஏறிச் செல்லுதற்கு ஏற்றதாகும்.

குறிப்புரை :

`இதுவே முத்தி முதல்` என்பது குறிப்பெச்சம். `திருவருள் பெற்றோர்க்கு இது விளங்கும்` என்பார், அப்பேறு பெற்ற தமது பெருமை தோன்ற, ``யானும்`` என்றார்.
``முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப`` 1
என்பதனால், `முதற்கண் அறிவாரில்லை` என ஏழாவது விரிக்க. முதல் - வேர். வியப்புச் சுவை நயம் பற்றி, ``அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்`` என ஓதினாராதலின், ``அத்தி`` என்பதற்கு, `எலும்பு` என்பதும், ``மேல்`` என்பதற்கு, `கண்` என்பதும், `பழுத்து அக்கால்` என்பதும் பொருளாதல் விளங்கும். வித்திடுதல் நிலத்திலாதலின், ``அத்திமேல்`` என்றது, `அத்தியது அடிக்கண்` என்றதாம். ``அக்கால்`` எனப்பின்னர் சுட்டிக்கூறலின், வித்து என்றது அக்காலினை (பிராணவாயுவை) யாயிற்று. யோகத்திற்கு முதலாவது பிராணன் ஆதலின், அதனை `வித்து` என்றார். ``மத்தி`` என்பது ஆகுபெயராய் நடுநாடியாகிய சுழுமுனையைக் குறித்தது.
இதனால், முன்னர்ச் சத்தியை அடைந்து, பின் அவள் வழியாகச் சிவத்தை அடைவதாகிய முத்திக்கு வழி யோகம் என்பது கூறப்பட்டது. முத்திக்கு முடிநிலை வழியாகிய ஞானம் சத்தியேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 77

அதுஇது என்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

பொழிப்புரை :

வீடுபேற்றைத் தரும் வழியாவது `அது` என்றும் `இது` என்றும், சொல்லும் வழியில் எல்லாம் சென்று வாழ்நாளை வீணே கழிக்காமல், ஒருநெறியாய் உறுதிப்பட்ட மனத்துடன் சிவ சத்தியையே முத்தியைத் தரும் முதல்வியாகத் துணிந்து அவளை யோக நெறியால் சந்திர மண்டலத்திற் சென்று வணங்க வல்லவர்க்கு, வினை வழியாகிய பிறப்பு நெறியைக் கடக்கும் அப்பயனும் கூடும்.

குறிப்புரை :

பதி - இடம். மது, இங்கே அமுதம்; அஃது அதனை யுடைய சந்திரனை உணர்த்திற்று. `மதுப்பதி` எனப் பின்முன்னோக்கி உரைக்க. ``விதி`` என்றது வினையை. வினை வழி - வினையால் உளதாகும் வழி.
இதனால், சத்தி யோகமே வீடுபேற்றைத் தருவதாதல் கூறப்பட்டது சத்தியும், சிவமும் வேறல்ல ஆதலின், `சத்தியோகம், சிவயோகம்` என்பன வேறு வேறாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 78

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

பொழிப்புரை :

யாவரது ஆற்றலையும், எப்பொருளது ஆற்றலை யும் வெல்லும் பேராற்றலை உடையவளாகிய சிவ சத்தியினது உண்மை நிலையைத் தவத்தால் உணர வல்லவர்க்கு` விதியின் வழி யாகிய பிறப்பு, அப்பிறப்பிற்கு முதலாகிய `வினை, எனப்படுகின்ற அந்தப் பெரியகட்டு, அதனால், வந்து சார்ந்து மயக்குகின்ற ஐம் புலன்கள் என்னும் இவ்வனைத்துத் தீமைகளையும் வெல்லுதல் கூடும்.

குறிப்புரை :

இது சொற்பொருட் பின்வருநிலை, ``விழைபுலன்`` என்றது, `ஆசையை விளைத்து மயக்குகின்ற புலன்` என்னும் குறிப்பினதான உடம்பொடு புணர்த்தல். ``தன்னை`` என ஒருமையாற் கூறியது, `ஒருகாலத்து வருவது ஒன்றேயாயினும், ஒவ்வொன்றும் அத்தன்மையது` என்றற்கு. காம இன்பத்தை, ஒருகாலத்தே ஐம்புலனும் நுகரப்படுவதாகக் கூறுதல் விரைவு பற்றியாதலின், அதனிடத்தும், ஐம்புலன்கள் நுகரப்படுதல் ஒரு காலத்து ஒன்றேயாம் என்க. மங்கை தன் மெய்யுணர்வார்க்கும் அவளது ஆற்றல் உளதாம் ஆதலின் மேற்கூறிய எல்லாம் அவர்க்குக் கூடும் என்பார், ``வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே`` என்றார்.
இதனால், மெய்யுணர்வே தீமை அனைத்தையும் முற்றப் போக்குவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமது
தாரங் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம்இது சத்திய மாமே.

பொழிப்புரை :

தொன்று தொட்டு வழிவழியாகச் சத்தி சிவர்களைப் போற்றிவருகின்ற மரபு, ஐம்பதெழுத்துக்களின் அதிதேவரிடத்து அவர்கள் நிற்கின்ற முறைமையில் வைத்தேயாம். சத்தியும், சிவமும் முதற்கண்ணே சார்ந்திருக்கும் இடம் அவ் எழுத்துக் களும், அவற்றின் அதிதேவருமாம். இஃது உண்மையான ஒன்று.

குறிப்புரை :

`ஆதலின் இது மரபாயிற்று` என்பது குறிப்பெச்சம். எழுத்துக்களை வழிபடுமிடத்துச் சத்தியும், சிவமும் அவற்றின் அதி தேவர் வழியாய்ப் பயன்தருதலை உணர்தற்கு, ``ஓர் ஐம்பதின்மரும்`` என அருளினார். எழுத்துக்கள் அவற்றின் அதிதேவர் வழியாகவே பயன்தருதலை,
``எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவராம்
நண்ணிய விந்துவோடு நாதத்துக் - கண்ணிற்
பகர்அயன்மா லோடு பரமனதி தெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம்`` 1
என்பதனானும் உணர்க. சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை சிறந்ததாதல் பற்றி அகாரம் முதலிய எழுத்துக்கள் முறையானே தொடர்ந்து வர அமையும் மந்திரங்களை, ``மாலா மந்திரம்`` எனச் சிறந்தெடுத்துப் போற்றுவர். பரம் - கடன்.
இதனால், சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை (பீஜாக்கர மரபு) சிறந்ததாதல் கூறப்பட்டது. சத்தி வழிபாடு பற்றிக்கூறுவார், ஒப்புமை பற்றிச் சிவ வழிபாட்டினையும் உடன்வைத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 80

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

பொழிப்புரை :

சத்தியும், சிவமும் ஒருவர்க்கு உண்மையாற் கிடைப்பார்களாயின், எல்லாப் பயன்களும் அவற்றுக்கு உரிய காரணங்கள் இல்லாமலேயும் விளைந்து விடும். ஆதலால், அப் பொழுது ஐம்பத்தோர் அக்கரங்களின் அதிதேவர்களும் அச் சத்தி சிவங்களின் வழிபட்டபொழுது அவர்கள் உயிரினிடத்தும் கொடுமை நெறியின் நீங்கிச் செம்மையின் நிற்பவராவர்.

குறிப்புரை :

சத்தி சிவங்கள் எப்பொருளிலும் எக்காலத்தும் நீங்கி நிற்றல் இல்லையாகலின், ``நேர்படில்`` என்றது, பொதுமையானன்றி, உண்மையாற் கிடைத்தலையாயிற்று. ஆகவே, ``அத்தகையாகிய`` என்றதும், உண்மையால் நிற்கும் சத்தி சிவங்கட்கு ஆதாரமாதலை யாயிற்று. `தகையர் ஆகிய` எனற்பாலதனை ஆகுபெயரால், `தகையாகிய` என்றார். ``அத்தகையராய் மேவித் திருந்திடுவார்` என்பது கருத்தாயிற்று. மேல், ``ஓரைம்பதின்மருள்`` எனக்கூறி, இங்கு, ``ஐம்பத்தொருவரும்`` என்றது இரண்டும் மரபாதல் பற்றியாதலின், மலைவின்மை அறிக. ``சித்து`` என்றது உயிரை. ``வித்தது, சித்தது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. அத்தகையராய்த் திருந்துத லாவது, உலகியல் உணர்வை எழுப்பாது, மெய்ந்நெறி உணர்வை எழுப்புதல். இவர் இங்ஙனம் திருந்துதலை வலியுறுத்தற்கே முதலிரண் டடிகள் கூறப்பட்டன. வித்தின்றியே விளைதல், வினை முதலிய பிற நிமித்தங்கள் இன்றி அருளே நிமித்தமாக விளைதல். தெளிவு பற்றி எதிர்காலத்தை ``விளைந்தன`` என இறந்தகாலமாக்கிக் கூறினார்.
இதனால் எழுத்து முறை வழிபாட்டால் மேற் (1215) கூறிய மங்கைதன் மெய்யுணர்வு பிறத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 81

திருந்து சிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.

பொழிப்புரை :

மெய்நெறியில் விளங்குகின்ற சத்தியும், வந்து பொருந்திய வானவர்கள் தம்மை வணங்கித் துதிக்க, அவர்கள் பருகுதற்கு அந்த இடம் அரிய அமுதம் சுரக்கும்படி சந்திரமண்டலமே தமக்கு இடம் என்று சொல்லி, அங்கு வீற்றிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`வந்து பொருந்திய` என்பது, `தாம் இருக்கின்ற அந்தச் சந்திரமண்டலத்தில் வந்து பொருந்திய` என்பதாம் அவ்வாறு பொருந்துவோர் யோகியர். அவர்யோகத்தால் அவ்விடத்தில் உயர்ந்து செல்லுதலின், அவரை வானவரோடு ஒப்பித்து, அப்பெயராற் கூறினார். `அவர் அருந்திட` எனத் தோன்றா எழுவாய் வருவித்து, அத் தொடரை, ``அமுது ஆக`` என்பதனோடு முடிக்க. ஆக - உண்டாக. ``அவ்விடம்`` ``அங்கு`` எனச் சுட்டுச் சொற்கள் செய்யுளில் முன் வந்தன `அவ் இடம் ஆக` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. இடையிரண்டடிகள் சிவனும் சத்தியும் தேவர்கள் போற்ற அவர்கள் பொருட்டு ஆலகால விடத்தை உண்டவர்` என, மற்றும் ஒரு நயம் தோன்ற வைக்கப்பட்டன. `இருந்தனள் தான் அங்கு` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சிவனும், சத்தியும், ஞானயோகிக்குச் சந்திர மண்டலமாகிய ஏழாந்தானத்திருந்து மெய்யுணர்வைத் தந்து, அது வழியாகச் சிவானந்தத்தை நுகர்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர்
தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

பொழிப்புரை :

என்றும் யோக நெறியால் குண்டலி வழி மேல் ஏறும் முயற்சியில் இடைவிடாது நிற்பவர், சத்தியைத் தலைப்பட்டு, முடிவில் அவளது உடைமையேயாய்விடுவர். இனி அச்சத்திதான் யோகியர்க்கு அவர் பொருந்தும் தானந்தோறும் விளக்கொளி, விண்மீன், திங்கள், கங்கை என்னும் இவைகளாய் ஏற்ற பெற்றியில் விளங்குவாள்.

குறிப்புரை :

ஏர் - எழுச்சி; எழுகின்ற முயற்சி. `தனது` என்பது எதுகை நோக்கி விரிந்தும், திரிந்தும் நின்றது. தனது - அவளது உடைமை. `சிவானந்த வெள்ளம்` என்பது தோன்ற ``மன் தரு கங்கை`` என்றார். மன் தருநிலைபேற்றைத் தருகின்ற (புலப்படுத்துகின்ற) [மாதவர்க்கு, என்னும் நான்கனுருபு தொகுத்தல் பெற்றது.] விளக் கொளி முதலிய நான்காய் விளங்குதல் முறையே இருதயம் நெற்றி, உச்சி, உச்சிக்குமேல் பன்னிரண்டங்குலம் என்னும் இடங்களிலாம். `சோதியாய்` என ஆக்கம் வருவித்துக்கொள்க.
இதனால், ஞான யோகியர்க்குச் சத்தி படிமுறையால் விளங்கும் காட்சி வகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஏற்ற பெற்றியில் விளங்குகின்றவ ளாகிய சத்தியை உண்மையாகத் தலைப்பட்டு அவளோடு ஒன்றுதலாவது, உள்ளொளியாகிய பதிஞானத்தால் உணர்தலேயாம். அவ்வாறு உணர்ந்தோர், இனத்தால் பசுக்களேயாயினும், அவர் வேண்டிய யாவும் வந்து நிறையும், மற்றும் மெய்யுணர்வு வகைகளும் விளங்கும்.

குறிப்புரை :

`நின்றவளாகிய நேரிழை` என்க. அருள்பெறாத மருள் நிலையது எளிமையும், பின்னர் அவர்பெறும் அருள்நிலையின் அருமையுமாகிய நயம்தோன்ற, ``பிராணிகள்`` என்றாராயினும் `பிராணனை வழிப்படுத்திய யோகியர்` என்பதே பொருளாகக் கொள்க. கேட்டல், சிந்தித்தல் முதலிய வகையானும், அவற்றின் விரியானும் ஞானங்கள் பலவாதல் அறிக.
இதனால், சத்தியின் உண்மைக் காட்சி முறையும், அக்காட்சியும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 84

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஞானங்கள் தோன்றும்பொழுது; சிவமும், சத்தியுமே அவரவர் விரும்பித் தொழுகின்ற தெய்வங்களாய் நின்று அருள்புரிகின்ற உண்மை விளங்கும். சிவசத்தியே அவரவரது பக்குவ நிலைக்கு ஏற்ப மேற்கூறிய தெய்வங்களையே முதற் பொருளாகக் கூறும் பற்பல சமய நூல்களைப் படைத்தவாறும் புலப் படும். தாம் (மேற்கூறிய ஞானங்களைப் பெற்றோர்) சத்தியும் சிவ முமேயாய்விட்ட அந்நிலையிலும் அவ்விருவரும் தமக்கு இன்றி யமையாத உயிர்த் துணைவராய் நின்று உதவுதலும் காணப்படும்.

குறிப்புரை :

`ஞானங்கள் தோன்றும் பொழுது` என்பது இயை பினால் கொள்ள நின்றது. வேண்டுருவாதலில், வேண்டுதல் பிறர் உடையதும், உருவாதல் பின்வரும் சத்தி சிவங்களுடையது மாயின. ``ஈன்றிடும்`` என்றது, `ஈன்றமை புலனாகும்` என்றவாறு. எய்திய - மேற்சொல்லிய உருவங்களைப் பொருந்திய. ``பல்கலை`` என்பதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. `எதிர்வந்து சான்றாகுவர்` என்பது, `உதவி புரிந்து நிற்றல் இனிது காணப்படும்` என்பதாம். முத்தி யின்பத்தையும் சத்தியும், சிவனும் அம்மை அப்பராய் நின்று நுகர் விக்கவே உயிர் நுகர்வதாக, `அறியாதார் சிலர்க்கு முத்தி நிலையில் சத்தி சிவரது உதவி வேண்டாத ஒன்று` என்னும் மயக்கம் உண்டாதல் போல, உண்மை ஞானிகட்கு உண்டாதல் இல்லை` என்பதை இறுதி யடியிற் கூறினார். இதனால், ஞானத்தின் பயன்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 85

ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி
மாயம தாகி மதோமகி ஆயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.

பொழிப்புரை :

பொருள்களை அறிதலில் மனத்தினும் நுண்ணிய தாகிய அறிவையும் கடந்து, சிறுமையில் அணுவுக்கு அணுவாயும், பெருமையில் மகத்துக்கு மகத்தாயும் நிற்கின்றவளும், உயிர்களால் எட்ட ஒண்ணாதவளும் ஆகிய சிவசத்தி, உயிர்கள் விரும்புகின்ற எல்லா நெறிகளுமாய் நின்று அருள் புரிகின்றாள்.

குறிப்புரை :

``அணோ ரணீ, மகதோ மகி`` (கடோபநிடதம்) என்னும் வடசொற்றொடர்கள் தற்பவமாயின; மாயம், இங்கு, வியப்பு. `ஆயிடும் அரிவை` என இயையும்.
இதனால், `சிவசத்தி அணுவுக்கு அணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் நிற்க வல்லளாதலின், வேண்டுருவாகிய தூய்நெறி ஈன்றிடுகின்றாள்` என மேலதன்கண் ஐயமறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 86

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு பலப்பல நெறிகளாய் நின்று உயிர்களுக்கு அருள்புரிகின்ற சத்தியை ஒருவனாகிய சிவனின் வேறாகாதவளாக அறிந்து அவளை அச்சிவனோடு ஒன்றவைத்தே அவரையே பொருளாகப் பொருந்திக் குறிக்கொண்டு எண்ணும் அறிவுத்திறன் படைத்தவரே, அவ்வறிவால் அம்மை யப்பராகிய அவ்விருவரிடையே அடங்கி ஆனந்தம் எய்துவர்.

குறிப்புரை :

குறி, குறிக்கப்பட்ட பொருள். `குறியதுவாக` என ஆக்கம் வருவித்துக்கொள்க. குறிக்கொண்டு நோக்குலாவது அயராது எண்ணுதல்.
இதனால், சிவ சத்தியது உண்மை நிலையை அறிந்து அழுந்தி நிற்பவரே உண்மை ஞானியராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 87

ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

பொழிப்புரை :

சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் முறையே பொருந்தியிருக்கும் அயன், மால், உருத்திரன், மகேசுவரன் என்னும் இவர்கட்கு மேல் உள்ள `விந்து` நாதம்` என்பவற்றுக்குரிய சதா சிவனும், அவனுக்கு மேற்பட்ட சத்தி, வியாபினி, சமனை, உன்மனை என்னும் நால்வரும் ஆகிய ஒன்பதுபேர் நிலைகளிலும் யோக நெறி யால் பொருந்தியவழி ஆன்மா இன்ப மயனாய்த் தேனுண்ட வண்டு அக்களிப்பினால் இசைபாடித் திரிவதுபோலுந் தன்மையை அடைவான்.

குறிப்புரை :

`மாலாங் கதி` என்பது பாடம் அன்று. கதி - தானம்: இடம். `ஒன்பதும்` எனத் தொகை கூறவே, `மேலாங்கதி நான்கு` என்பது பெறப்பட்டது. `தேமயனாய்` என ஆக்கம் வருவிக்க. மா - வண்டு. எய்தல், எய்தப்பெறுதல்.
இதனால், சிவ, `சத்தியைப் பிரணவ யோகத்தால் தலைப் படுதல் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 88

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

பொழிப்புரை :

சத்தியையும், சிவனையும் அடைய விரும்புவர் யாராயினும் அவர்களை வழிபட்டு அடைதல் அல்லது, பிறிதொரு வழியாலும் அடைய வல்லுநரல்லர். ஆதலின், மக்களில் அவர்களை அடைய விரும்பும் நல்லீர், நீவிரும் அதன் பொருட்டு அவர்களை வழிபடுதலையே நெறியாகக் கொண்டு பயிலுங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலிற் கொண்டு, ``வந்தடி போற்றுவர்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி, அதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க. இந்து - சந்திரன்; இவனும் வடக்கிற்குத் தலைவன். வந்தனை செய்தலையே `வழி` என்றார் ஆகலின், அவ்விடத்துப் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். நவிலுதல் - பயிலுதல்.
இதனால், சிவன், சத்தி இவர்களை வழிபாட்டினால் அல்லது அடையலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை யாமே.

பொழிப்புரை :

சத்தியைச் சிவனது ஆற்றலாக அறியும் அறிவில்லா தவர் சத்தியை வேறாகவும், சிவனிற் பெரியவளாகவும் கருதி அவளையே வழிபடினும், அவ்வழிபாடு தூய முறையில் அமைந் திருப்பின், சத்தியையேயன்றிச் சிவனையும் உவப்பிக்கும்.

குறிப்புரை :

`கள், ஊன் முதலியன கொண்டு செய்யும் வாம முறை வழிபாடு சத்தி சிவரை உவப்பியாது` என்பார், நன் மந்திரம் முதலிய நற்பொருள்களை எடுத்தோதிப் பிறிதொன்றையும் கூறாதொழிந்தார். கவற்றுதல், விருப்பத்தை மிகுவித்து மனத்தை மறுகச் செய்தல். கவர்தல், நெய்யை உண்ணுதல்,. `பயிற்றுதல்` என்பது, ``தேற்றா ஒழுக்கம்`` என்பதுபோல இங்குத் தன்வினையாயிற்று. `பயிற்றும் பூை\\\\u2970?` என இயையும். அவி - படையற் பொருள். ``சோதி`` என்றது, சிவனை. `சோதிக்கும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இதனுள், உயிரெதுகை வந்தது.
இதனால், `சத்தி வழிபாடும் தூயதாய வழிச்சிவ வழிபாடாய்ப் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 90

தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

பொழிப்புரை :

உலகத் தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் ஒருவனேயாய் உள்ள சிவன், உலகைத் தொழிற்படுத்தி நிற்குங் காலத்தில், சத்தியை ஒருபாற் கொண்டு அவளோடு உடனாய் இருவராயே நிற்கின்றான், ஆதலின், மாணவகனே, நீ சிவனோடு சத்தியையும் உடன் வைத்தே வழிபடு.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. தாங்குதலும் உவகை என்க. தரித்தல், நிலைபெறுதல், `தன்னைத் தாங்குவார் பிறரின்றித் தானே நிலைபெறுகின்றான்` என்றற்கு, ``தரித்த`` என்றார். ``பராபரன்`` என்றது, ``பராபரன் ஆயது`` எனக் குறிப்பு வினைப்பெயராய், ``பாங்குடன் ஏற்ப`` என்பதனோடு முடிந்தது. ஓங்கிய காலம், உலகம் விரிந்த காலம்; இஃது அதன் தொடக்க நிலையைக் குறித்தது. ``ஒருவன்`` என்பது பின்னும் சென்று இயையும். ``உலப்பிலி`` எனவே, உலகம் உலந்தமை பெறப்பட்டது. சிவன் `பூங்கிளி தங்கும்` என்பது பாடமன்று. சத்தியோடு கூடினவனாய் நின்றே உலகைச் செயற்படுத்தலின், அவனை அவ்வாற்றானே வழிபடுதல் வேண்டும் என விளக்கியவாறு, `சத்தியோடு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. `சத்தியோடே போற்று` என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி உரைக்க.
இதனால், சிவனைச் சிலர் சத்தியை நீக்கி வழிபடுதலும் கூடாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 91

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

பொழிப்புரை :

மாணவனே, நீ, துவண்ட தோற்றத்தால் கொடி போலுதல் கொண்டு, நிறம் பற்றி, `பசுங்கொடி` என்றும், பயன் பற்றி, `நற்கொடி` என்றும், அழகு பற்றி `ஒளிக்கொடி` என்றும், புகழப் படுபவளும், மெய்யுணர்ந்தோரது அன்பிற்குத் தலைவியும், மூன்று கண்களை உடையவளும் ஆகிய பராசத்திக்கு அன்பு செய்து மேம்படு; அழகிய கொடிபோல்பவராகிய கலைமகளும், திருமகளும் உன் பாதங்களைப் போற்றுவார்.

குறிப்புரை :

முதலடியை ஈற்றிற் கூட்டி உரைக்க. `பொற்கொடி மாதர்` என்பது பின்னர்க் கூறப்பட்ட மாதோடு உடன் எண்ணப்படு வாரைக் குறித்தது. இவ்வாறன்றி இயைபில்லாத மக்கட் பெண்டினர் எண்ணுதல் கூடாமையானும்` அங்ஙனங் கொண்டுரைப்பின் வாம நெறியாமாகலானும் அது பொருந்தாமை யறிக. `பராசத்தியை வழிபடினும் கல்வியின் பொருட்டும், செல்வத்தின் பொருட்டும் கலைமகளையும், திருமகளையும் வழிபடுதல் இன்றியமையாது போலும்` என ஐயுற்றமாணாக்கனை, `பேரன்புடைப் பெருமக்கட்குப் பராசத்தியே அனைத்தையும் தருவாள்` எனத் தெளிவித்தவாறு.
இதனால், சிவசத்தி வழிபாடு ஒன்றே அனைத்துப் பயன்களையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.

பொழிப்புரை :

விளங்குகின்ற விளக்குப் போல்பவளும், மிக்க ஒளியுடைய மணி மாலைகள் அசையும் மார்பினை உடையவளும் ஆகிய பராசத்தி, செறிந்த இருள் மறையும்படி கண்டத்தில் நீல மணியைக் கொண்டு விளங்கும் சிவனுடன் இன்ப விளையாடலைக் கருதுகின்ற, நாணம் பொருந்திய ஒரு தோற்றத்தையும் நினைத்து வழிபடு.

குறிப்புரை :

`வழிபடின் இன்பத்தைப் பெறுவாய்` என்பது குறிப் பெச்சம். இன்பத்திற்காகவும் பிறதேவியரை வழிபட வேண்டுவ தில்லை என்றபடி. மணியையுடையவனை, ``மணி`` என்றார். இலம்பியம், நாணத்தால் தலை இறைஞ்சிய தோற்றம்.
இதனால், சத்தி வழிபாடு இன்பத்தையும் அளித்தல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 93

தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.

பொழிப்புரை :

பாம்பை அணிந்த விரிந்த சடையில் பெரிய கங்கை நீர் ஒரு புல்நுனியில் நீர்போல் அடங்கியிருக்கச் சிவன் சத்தியோடு இரு திறமும் ஒருவடிவிலே அமைய நிற்கின்றான். உலகில் பிறந்து அறிவு தொடங்க நின்ற நாள் முதலாக அவனது அழகிய அந்த மணக் கோலத்திலே அடங்கி நிற்பதே எனது அன்பின் பெருமையாகும்.

குறிப்புரை :

`அதனால், இன்பம் முதலிய எந்த உறுதிப்பொருளிலும் எனக்குக் குறை இல்லை; உலகீர், நீவிரும் அவ்வாறு அடங்கி நின்று அனைத்துப் பயனையும் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம். `மணாளன் பால்` எனத்தொகுக்கப்பட்ட உருபை விரித்துக்கொள்க. `கங்கை பாம்பணிந்த சடையில் ஒடுங்க` என்றது ஓர் இன்ப நயம். `பாம்பையும், கங்கையையும் அடக்கின ஆற்றலுடையவன்` என்பது உண்மைப் பொருள். விடம், ஆகுபெயர். `ஒடுங்கி` என்பது பாடம் அன்று.
இதனால், சிவனைச் சத்தியோடு உடனாகக் கண்டு வழிபடுவார் எய்தாத பயன் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 94

உருவம் பலஉயி ராவல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடின்
புரிவளைக் கைச்சினம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

பொழிப்புரை :

பல உடம்புகளும், அவற்றில் உள்ள பல உயிர் களுமாய் நிறைந்து நிற்கின்ற சிவன் உயிர்களுக்குப் பல வேறு வடிவினனாய்க் காட்சியளித்தலை ஆராயின், அவையெல்லாம் அவன் தனது சத்தியோடு மணந்து மகிழ்கின்ற அருள் நாடகமே.

குறிப்புரை :

``பல`` என்பது ``உருவம்`` என்பதற்கு முன்னும் சென்று இயைந்தது. எளியனாய்க் காட்சிப்படுதலை, தெருவம் புகுதலாகக் கூறினார். ``இறைவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. `மகிழ்வனவாகிய மாயம்` என்க, அருவனாய் நிற்கின்ற சிவன் உருவனாய் விளங்குதல் சத்தியினாலே என்றவாறு.
இதனால், சிவன் உருவங் கொள்ளுதல் சத்தியால் என்பது கூறுமுகத்தால், சத்தியை மறத்தல் கூடாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 95

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.

பொழிப்புரை :

உயிர்களின் பொருட்டுப் பலப்பல நாடகங்களைத் திருவுளத்துக் கொள்கின்ற சிவனது திருவடியாகிய உரிமைப் பொருளை உயிர்களுக்கு கூட்டுவிக்கின்ற நடிகையாகிய சிவசத்தி அச்சிவனை உருவம் உடையவனாகச் செய்தற்கு, அவனோடு கூடுகின்ற கூட்டத்திலே அவனுக்கு உருவத்தைக் கொடுத்தலேயன்றிப் பல்வேறு இனங்களாக அமைக்கின்ற பிறப்பு வகைகளாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`மாயம் புணர்ப்பவனுக்கு ஏற்ற மாயா வல்லபை` என்பார், சத்தியை, ``சலதி`` என்றார். `சல நதி` என்பது பாடம் ஆகாமையறிக. ``அமலன், மாசத்தி`` என்பன சுட்டுப் பெயரளவாய் நின்றன. சத்தி சிவனை மணத்தலால் சிவனுக்கு உருவம் உண்டாதலே யன்றிப் பல்வேறு பிறப்பு வகைகளும் அமைகின்றன என்பதாம். `அவ்வியோனி` என்னும் தற்பவ மொழியில் இடைநின்ற இகரம் குற்றியலிகரத்தின் இயல்பினதாய் அலகு பெறாமல் நின்றது.
இதனால், சத்தி சிவனை மணத்தலால் உளதாகும் மற்றொரு பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 96

உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை
அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்களால், `அவன்` என்று சேய்மைச் சுட்டாகப் பொதுவே உணரப்படுபவனாகிய எங்கள் தலைவனாகிய சிவனை நான், `அவன் அன்ன அருமையினன்` என முதற்கண் உணர்ந்தேன். பின்னர் அவன் உலக முதல்வியாகிய சத்தியை யுடைய சத்திமா னாதலை அறிந்து அவனை அணுகினேன். அதன்பின்னர் அவனோடு ஒன்றினேன். முடிவாக ஒருஞான்றும் அவனை விட்டு விலகாத நிலைமையனாயினேன். இவையே நான் சிவனது திருவருளைப் பெற்ற முறைமை.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறே பெற்றுய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். ``புவனாபதியார்`` என்னும் உயர்வுப்பன்மை ஒருமையோடு மயங்கிற்று. `ஈசற் புணர்ந்தொழிந்தேன்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
இதனால், `சிவனைச் சத்தி வழியாகவே பெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 97

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

பொழிப்புரை :

இறைவனைப் போற்றுபவர், `நல்ல திருவடிகளை உடைய இறைவனே` என்றும், `அடியார்கட்கு மிக நல்ல பயனாய் உள்ளவனே` என்றும் அழைத்துப் போற்றுவர். அந்தத் திருவடிகளும், பயனுமாய் இருக்கின்ற பெருமையைப் பெற்றுள்ளவள் உயர்பெருந் தேவியாம் சத்தியே, இறைவனைப் பற்றிக்கூறும் நூல்களைக் கற்றுணர்ந்தவன் அறியும் பொருளாகிய இதனை அறிய வல்லவர்கட்கு இறைவனது அருளுலகத்தை அடைதல் சிறப்புப் பயனாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்தும், `அப் பெருமை பெற்றாள்` எனமாற்றியும் உரைக்க. நல்தாள், துன்பம் துடைத்து இன்பத்தைப் பொழியும்தாள். கற்றான் அறியும் கருத்தும் இதுவேயாதலை வேறுபோலக் கூறினார், அதனது அருமை தோன்று தற்கு, திருவருளை, `சிவன்தாள்` என்றல் வழக்கு. அருளுலகம், சுத்தமாயா புவனமாகிய அபரமுத்தித் தானங்கள். சிறப்புப் பயனாவது, அவருக்கே உரியதாய்ப் பிறருக்கு உரித்தாகாதது.
இதனால், சத்தியை உணரவல்லவரே உண்மை ஞானத்தைப் பெறுபவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 98

தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி
இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியா நினைவதென் காரண அம்மையே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாகிய சிவனோடே எனது நெஞ்சத்தை விரும்பி இனியவளாய் இருக்கின்ற சத்தி ஏழுலகத்திலும் நிறைந்திருப்பவளே. ஆயினும், எனக்குத் தாயாகிய அவளை நான் நல்ல புதுமலர்களைக் கையில் கொண்டு உண்ணுவது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே.

குறிப்புரை :

`இனியார்` என்பது பாடம் அன்று. ``பனியால்`` என்றது, `குளிர்ச்சியோடு` என்றவாறு. காரண அம்மை - ஈன்ற தாய். `அம்மையை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. `அம்மையைப் போது கை ஏந்தி நினைவது கனியா`` எனக் கூட்டுக.
இதனால், சத்தி பெரியவளும், அரியவளுமாயினும், வழி படுவார்க்கு எளியளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 99

அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும்
இம்மனை செய்த இருநில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

சிவனுக்கு அழகிய மனைவியும், உயிர்களுக்குத் தாயும் ஆகிய சத்தி, உயிர்களின் பல்வேறு நிலைகளிலும் அவற்றிற்கு ஆதாரமாய் நின்று, வேண்டுவனவற்றை வழங்குபவளாயும் இருப்பாள். அதனால், இன்று நமக்கு ஆதாரமாய் நிற்கின்ற நிலமகளும் அந்தச் சிவசத்தியாகவே எனக்குத் தோன்றுகின்றாள்.

குறிப்புரை :

``செம்மனை, இம்மனை`` என்பவற்றில், நிலைக்களம் ``மனை`` எனப்பட்டது. ஈற்றில் உள்ள அம்மனை, அனைவர்க்கும் தாயாகிய சத்தியைக் குறித்தது.
``பரஞானத் தால்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்``. 1
என்னும் முறைபற்றி, ``இருநில மங்கையும் அம்மனையாகியமர்ந்து நின்றாள்`` என்றாள்.
இதனால், சத்தி அனைத்து ஆதார ஆதேயங்களுமாய் நிற்றல் முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 100

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை
அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.

பொழிப்புரை :

உலகத்தாயும், தந்தையுமாகிய சத்தியும், சிவனும் என்பால் அன்புவைத்து எனக்கு ஆவன செய்தலல்லது, என்னைப் பெற்ற தாய் தந்தையர்தாம் என்னை எந்த அளவில் அறிந்து எனக்கு என்ன செய்யவல்லுவர்! ஆகையால், உண்மைத் தாயாகிய சத்தியும், தந்தையாகிய சிவனும், மகனாகிய யானும் மட்டும் ஒன்றி யிருந்த காலத்து யான் அவ்விருவரையே விரும்பி அவரிடம் அயரா அன்பு உடையவனாயினேன்.

குறிப்புரை :

`அதனால், அளவிலா ஆனந்தத்தையும் பெற்றேன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடிக்கு, `அம்மையும் அத்தனுந் தாம் என்னை யாராக அறிவர்?` என உரைக்க. `உயிர்களே தம்மில் ஒன்றற்கு ஒன்று யாதும் செய்து கொள்ளல் இயலாது` என்பது முதல் இரண்டடிகளில் விளக்கப்பட்டது. அதனானே, உயிர்கட்குப் பெத்தம், முத்தி ஆகிய எக்காலத்தும் சத்தியும், சிவனுமே பரம ஆதாரமாதல் விளக்கப்பட்டதாம். இம்மந்திரம் முத்தி பஞ்சாக்கரப் பொருளதாய் நிற்றலை நுனித்துணர்ந்து கொள்க.
இதனால், உயிர்கட்குப் பரம ஆதாரம் இது என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

பொழிப்புரை :

தன்னுள்ளே ஏரொளி எழப்பெறுவதாகிய தாமரை மலர் நான்கிதழ்களை யுடையது. அவ் ஏரொளியாவது, சுத்த மாயையினின்றும் தோன்றும் வாக்கேயாம். அவ்வொளி பல கூறுகளாய் வளர்ந்து உடம்பெங்கும் குறைவின்றி நிறையப் பெற்ற பின், உடலாகிய சக்கரம் (யந்திரம்) ஏரொளிச் சக்கரமாய்விடும். அப்பொழுது ஐம்பூதங்களில் ஒளிப் பொருளாகிய தீ, அச்சக்கரத்தின் நடுவிலே அணையாது நின்று ஒளிர்வதாம்.

குறிப்புரை :

`எழப்பெறுவதாகிய தாமரை` எனவே, `அதுவே ஏரொளி தோன்றுவதாகிய முதலிடம்` என்பது பெறப்பட்டது. இது `மூலாதாரம்` என்பதும், இதன் இயல்பும் முன்னையதிகாரத்தில் விளக்கப்பட்டன. இவற்றைத் தோற்றுவாய் செய்யவே, `பிற ஆதாரங்களின் இயல்பையும் ஈண்டு நினைவு கூர்க` என்றதாயிற்று. விந்துவினால் - `விந்து` என்னும் காரணப் பொருளால், `அவ் ஏரொளிக் கலை`எனச் சுட்டினை மாற்றி யுரைக்க. ``எங்கும்`` என்றது, `உடலெங்கும்` என்னும் பொருளதே யாதலின், `ஏரொளிச் சக்கரமாய் அமைவது உடம்பே` என்பதுபோந்தது. போதரவே, அஃது அங்ஙனம் அமையுமாற்றைப் புறத்துக் கண்டு வழிபடும் முறை இனி இங்குக் கூறப்படுவது என்பது விளங்கும். ``அந்நடு`` என்றது `அதன் நடு` என்றவாறு. `உடலாகிய சக்கரத்தின் நடுவே தீ நிற்கும்` எனவே, `புறத்து வரையப்படும் சக்கரத்தின் நடுவில் அக்கினிக்குரிய `ஹ்ரூம்` என்னும் பீசாக்கரம் அடைக்கப்படும் என்பது புலனாம்.
இதனால், இவ்வதிகாரப் பொருள்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.

பொழிப்புரை :

தீயின் பீசாக்கரங்களே ஏனைய பூத அக்கரங்கள் எல்லாவற்றினும் சிறந்து நிற்கும். அதனால், அவை வானத்தையும் அளாவி நிற்கும். அவற்றையே `சக்கரம்` என்று கூடச் சொல்லி விடலாம்; அவற்றைச் சக்கரத்துள் இடும் முறை இங்குச் சொல்லப்படும்.

குறிப்புரை :

பிரணவத்தோடு கூடி நிற்றல் பற்றிப் பன்மையாக ஓதப் பட்டது. மூன்றிடத்தும் `அவையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல் பெற்றது. ``சொல்லும்`` என்றது `சொல்லப்படும்` என்றவாறு.
இதனால், மேல், ``அந்நடு வன்னி`` என்றதன் சிறப்புக் கூறப்பட்டது. இச்சிறப்பு, ஒளிச் சக்கரமாகிய இயைபு பற்றிக் கொள்ளப்படுவது என்க.

பண் :

பாடல் எண் : 3

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :

``விந்துவினால் எழும் நாதம்`` என்புழிச் சொல்லப் பட்ட சுத்த மாயை வாக்காக விருத்திப்படுமிடத்துப் பன்னிரு பிராசாத கலைகளாயும் விருத்திப்படுவதாம். அக்கலைகளே சிவமாயும் விளங்கும். அவைகளை, நூற்று நாற்பத்து நான்கு அறைகளில் அமைக்க, மேற்கூறிய ஏரொளிச் சக்கரம் தோன்றுவதாம்.

குறிப்புரை :

நாதம் - வாக்கு. அதன் கலைகளையும் நாதம் என்னும் பெயராற் கூறினார். ``எழுத்து`` என்றதும் அதனை. பிராசாத கலைகள் முன்னைத் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `அவ்வெழுத்து அப் பதியாவன` என மாறிக் கூட்டுக. `பதியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. சிவசத்தியால் நேரே இயக்கப்படுதலால், `சிவமும் ஆவன` என்றார். நூற்று நாற்பது அறைகள் அமையுமாறு பின்னர்க் காட்டப்படும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் வடிவு பொதுமையிற் கூறி, அது திருவருளைப் பெறுதற்கு வாயிலாதற் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :

உயிரெழுத்துக்களின் ஈற்றில் ஓதப்படும் விந்து வாகிய `அம்` என்பது தனிஓர் எழுத்தாய் நிற்பினும், அகரம் முதலிய பிற உயிர்களோடு கூடி நிற்றலும் உடைத்து, முடிவில் உள்ள நாதமாகிய `அ;` என்பதும் அத்தன்மையது. சக்கரங்களில் முதற்கண் உள்ள அறையில் எந்த எழுத்து உள்ளதோ, அந்த எழுத்துக்குரிய கலையின் சக்கரம் அதுவாகும். அவ்விடத்து அச்சக்கரம் அக்கலைக்குரிய பிண்டமாதலேயன்றி அண்டமாயும் விளங்கும்.

குறிப்புரை :

``அவ்வெழுத்து`` மேற்சொல்லப்பட்ட கலைக்குரிய எழுத்து, அவை பின்னர் அறியப்படும். `சக்கரமே ஞாலமாய் வரும்` என மாற்றிக் கொள்க.
இதனால், ஏரொளிச்சக்கர எழுத்துக்கள் சிலவற்றின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரம் பல உலகங்களாயும் அமையும் பெருமையது. அதில் உள்ள விந்து நாதங்களும் அன்ன. அதனால் அச்சக்கரத்தில் இருக்கும் எழுத்துக்களை அறிவுடையோர் சிவமேயாக எண்ணுதலில் தலைப்படுவர்.

குறிப்புரை :

`எழுத்தை அப்பதியாக யோசித்தலில் ஞாலம் ஆயிடும்` என்க. மூன்றாம் அடியில் ``ஞாலம்`` என்றது அறிவுடையோரை. இதனால், ஏரொளிச் சக்கரத்தின் எழுத்துக்களைச் சிவமாக எண்ணுதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும், விருத்திப் பட்ட எழுத்துக்கள் முதற்கண் `நாதமும், விந்துவும்` என்னும் சூக்கும, சூக்குமாசூக்கும நிலைகளாய் நின்று, பின்னரே தூலமாயினவாம். அந்த எழுத்துக்களால் சக்கரங்கள் அமையுமிடத்து ஒடுக்க முறையில் முதற்கண் பிருதிவி சக்கரமும், அதன்மேல் அப்பு சக்கரமும் நிற்கும்.

குறிப்புரை :

`விந்துவும் நாதமும் ஆய்` என ஆக்கம் வருவித்து முடிக்க. ``விந்துவும், நாதமும்`` என்றது ஒடுக்கமுறை. விந்துவே, `பைசந்தி` எனவும், நாதமே `சூக்குமை அல்லது பரை` எனவும் சொல்லப்படும். விரிந்தநிலை மத்திமையும், வைகரியும், இச் சக்கரங்கள் அமையுமாற்றைப் பின்னர்க் காண்க. இதனால், ஏரொளிச் சக்கரத்தின் பகுதிகள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய அப்புசக்கரத்தின்மேல் தேயுசக்கரம், அதன்மேல் வாயுசக்கரமும், அதன்மேல் ஆகாய சக்கரமும் அமையும்.

குறிப்புரை :

முதலடி அனுவாதம், இம் மந்திரத்தில் அப்புவை அடியாக எடுத்தமையின்யாவும் அதன்மேல் உள்ளனவாக ஓதினார்.
இதனால், அவை மற்றும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.

பொழிப்புரை :

ஆகாய பீசத்தைச் சொல்வதனால், ஆகாய சக்கரத்தில் அமைந்த எழுத்துக்கள் யாவும் அந்த ஆகாய பீசமாகவே ஆய்விடும். அதனால், ஆகாய சக்கரம் சிவானந்தத்தைப் பயக்கும் ஆற்றலுடையதாம்.

குறிப்புரை :

``சொல்லிடில்`` என்பது காரணப்பொருளில் வந்தது. இறுதிக்கண் இவ்வாறு கூறவே, ஏனைய பூத எழுத்துக்களைச் சொல் வதனால், அவ்வச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்களும் அவ்வாறாய்ப் பயன் தருதல் கொள்ளப்படும்.
இதனால், முன்னை இருமந்திரங்களில் எய்திவற்றிற்கு மேலும் ஒரு சிறப்புநிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.

பொழிப்புரை :

இங்கு அறியப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரம், வரிசைக்கு ஐந்தாக ஐந்துவரியில் இடப்படும், இருபத்தைந்து புள்ளி களால் அமைவது. (எனவே அப்புள்ளிகளை நேர்க் கோடுகளால் இணைக்கத் தோன்றும் நானான்கு (4X4=16) பதினாறு அறை களால் அமைதல் பெறப்பட்டது.) அவ் அறைகளில் உயிரெழுத்துப் பதினாறும் நாதம் முதலாக அடைக்கப்படும். இவ்வாறாக அமையும் இச்சக்கரம் பொதுவே சிவசூரியனால் விளக்கப்படுவது.

குறிப்புரை :

``நாதம் முதலா`` என்றது ஒடுக்கமுறைபற்றி. உயிரெழுத் தின் ஈற்றில் நிற்கும் விசர்க்கத்தை `நாதம்` என்றும், அதன் அயலில் நிற்கும் அநுசுவாரத்தை `விந்து` என்றும் குறிப்பிடுதல் வழக்கு. பதி - பதம்; அறை. ஓர்க்கும் - பதிகளில் வைத்து நினைக்கப்படும். இருபத் தைந்து புள்ளிகளால் பதினாறு அறையுள்ள சக்கரம் அமைக்குமாறு:-
இதனால் ஏரொளிச்சக்கரத்தின் பகுதி வடிவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

பொழிப்புரை :

மாதுருகாட்சரங்களில் அகாரம் முதலிய ஆறு எழுத்துக்களும் சிவன் எழுத்துக்களும் ஏகாரம் முதலிய ஆறு எழுத் துக்கள் சத்தி எழுத்துக்களும், இவற்றுக்கு இடையே உள்ள நான்கு எழுத்துக்கள் அங்கி எழுத்துக்களும் ஆகும். ஆதலின், உடலெழுத் துக்கள் பலவும் இந்த உயிரெழுத்துப் பதினாறனுள்ளே அடங்கிநிற்கும்.

குறிப்புரை :

உயிரெழுத்துக்களில் ஆறாவது எழுத்தினையே `இரு` எனத் தமிழ்முறையாற் குறித்தார். இதில் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது. நான்காம் அடியில், ``முதல்`` என்று, `முதன்மையான எழுத்து` என்றதாம். இரண்டாம் அடியின் முதற்சீரை முதலடியின் முதற்சீரே போலவும், மூன்றாம் அடியின் முதற்சீரை நான்காமடியின் முதற்சீரே போலவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக. உடலெழுத்துக்கள் பலவும் உயிரெழுத்துக்களில் அடங்கும் எனவே, அவ்வுயிரெழுத்துப் பதினாறினாற்றானே ஏரொளிச் சக்கரம் ஆக்கப்படும் என்றதாயிற்று, அங்ஙனம், அச்சக்கரம் அமையுமாறு:-

எழுத்துக்களின் வைப்பு முறையில் ஏழாவது முதலாகப் பத்தாவது முடிவாக உள்ள அந்நான்கு எழுத்துக்களை அம்முறை யானே அடைத்தல் வேண்டுமாயினும், நாயனார் அவற்றை அங்கி எழுத்துக்களாக ஈற்றில் வைத்து ஓதினமையின் அவைகளை மேற் காட்டிய முறையானே அடைத்தல் வேண்டும். மேல் (1240) ``சொல்லிடு விந்துவும் ஈராறு நாதமாம்`` என்றமையால், ஆதி எழுத்தாய அம்முதல் ஆறும், அம்மை எழுத்தாய ஏமுதல் ஆறும் ஆகிய பன்னீரெழுத்துக்களையும் முறையானே அகார கலை முதலிய பிராசாத கலை பன்னிரண்டிற்குரிய பன்னிரு கலைக்கும் உரிய எழுத்துக்களாகக் கொள்ளல் வேண்டும்` ``மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கரமாய்வரும்`` (1241) என்றமையால், மேற்காட்டியவாறு இருபத்தைந்து புள்ளிகளால் பிறந்த பதினாறு அறைகளையுடைய சக்கரம் பன்னிரண்டு வரைந்து, அவை ஒவ்வொன்றின் முதல் அறையிலும் அ ஆ முதலிய பன்னிரண்டு எழுத்துக்களையும் முறையானே வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே அடைத்து, எல்லாச் சக்கரங்களிலும் இங்குக் காட்டிய வாறே நான்காம் வரிசையில் ஏழாம் உயிர் முதலிய நான்கனையும் அடைத்து முடிக்க. அகாரம் முதற்கண் நின்றது முதலிய சக்கரங்கள் பன்னிரண்டும், முறையானே அகார கலா சக்கரம், உகார கலா சக்கரம் முதலாக உன்மனா கலாசக்கரம் இறுவாய்ப் பன்னிரு பிராசாத கலா சக்கரங்களாய் விளங்கும். பிராசாத கலைகள் பன்னிரண்டில் வியாபினிக்கும், சமனைக்கும் இடையே வியோம ரூபினி முதலிய நான்கு கலைகள் அடங்கி நிற்கும். ஆதலால், எல்லாச் சக்கரங்களிலும் நான்காம் வரிசையில் உள்ள ஏழாம் உயிர் முதலிய நான்கு கலைகட்கும் உரிய எழுத்துக்களாகக் கருதிக்கொள்க.
பன்னிரண்டு சக்கரங்களிலும் உள்ள அறைகள் அனைத்தும் கூடி, (12X16=192)நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆயினும், ஏழாம் உயிர் முதலிய நான்கெழுத்துக்கள் உள்ள(4X12=48) நாற்பத் தெட்டு அறைகளை எண்ணாது விடுப்ப, எஞ்சிய அறைகள் (12X12 =144)நூற்று நாற்பத்து நான்காய் வரையறைப்படும். அதனையே மேல் (1240)``சொல்லிய நூறொடு நாற்பத்து நால்உரு`` என்றார்.
இன்னும், ``விரிந்த எழுத்து, அப்பதுவாக`` என்னும் மந்திரங்களில் (1243, 44) அகார கலை முதலிய பன்னிரு கலைகளும் பிருதிவி முதலிய ஐம்பூதங்களில் நிற்கும் எனக் கூறினமையாலும், பிருதிவி முதலிய பூதங்கள் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாகவும் கருதப்படும் ஆதலாலும், அகார கலை முதலிய நான்கு கலைகளும் நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளிலும், அர்த்த சந்திரன் முதலிய நான்கு கலைகளும் சாந்தியதீத கலையிலும் நிற்க, சத்தி முதலிய நான்கு கலைகள் சாந்தியதீத கலைக்கு மேல் உள்ள மந்திர கலையில் நிற்கும் ஆதலாலும் அவற்றின்மேல் முறையானே அப்பன்னிரு சக்கரங் களையும் அமைத்தல் வேண்டும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் களது தொகையும், முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் கள் நூற்று நாற்பத்து நான்கும் மந்திர கலை உளப்பட ஆறு வட்டங் களில் நிற்பனவாம். அவ் ஆறுவட்டங்களின் நடுவே அமைந்த இடமே ஏரொளிச் சக்கரத்தின் நடுவிடமாக, அவ்விடத்திலே முதற்கண் (1238) கூறிய வன்னி பீசமாகிய `ஓம் ரம்` என்பதுபொறிக்கப்படும். அவ் விடத்து நிற்கும் பிரணவமும், பீசமுமாகிய அவையே சிவசோதி சொரூபமாய் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக் களிலும் தனது ஆற்றலால் வியாபித்து நிற்கும்.

குறிப்புரை :

முதற்றொட்டு இதுகாறும் கூறிவந்த ஏரொளிச் சக்கரத் தின் முழு வடிவம் இங்குத் தனியாகக் கொடுக்கப் பட்டிருத்தல் காண்க.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் ஒளி எழுத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அந்தமும் ஈறும் முதலா னவைஅற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருட மானதே.

பொழிப்புரை :

உடலெழுத்துக்களில் கவர்க்கமாதி ஐவருக்கத்தின் ஈற்றெழுத்துக்களும், யகாராதி சகாராதி (‹) வருக்கங்களின் ஈற்றெழுத்துக்களும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத்துக்களோடு கூடி அனாகத சக்கரத்தோடே நீங்கி யொழிய, விசுத்தி, ஆஞ்ஞை என்னும் இறுதி இரண்டாதாரங்களிலே உயிரெழுத்துப் பதினாறனோடு மற்றிரண்டெழுத்துக் கூடப் பதினெட்டெழுத்தே நிற்றலால், எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய பரசிவனும் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரண்டு எழுத்துக் கடந்து நிற்பவனாகவே எண்ணப்படுகின்றான். அதனால், யோகத்தின் முடிவும் சந்திர மண்டலத்தையும் கடந்து துவாதசாந்தத்தை அடைவதே யாகின்றது.

குறிப்புரை :

`முதலானவற்றொடு` என உருபு விரிக்க. முன்னை மந்திரத்தில் `எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்`` என்றதனானே, ``அப்பதினெட்டு`` எனப்பட்டவை எழுத்துக்களாதல் பெறப்பட்டது. இறுதி ``அந்தம்`` இரண்டு முறையே சிவனையும், யோகத்தின் முடிவை யும் உணர்த்தின. பன்னிரண்டைக் கடந்தவனை, பதின் மூன்றாவதில் நிற்பவனாகக்கூறினார். கை - பக்கம்; இடம். நாத காரியமாவன் ஐம்ப தெழுத்துக்களாக, அவற்றுட் சிலவற்றானே ஏரொளிச் சக்கரம் அமை யும் என்றது என்னை? என்னும் ஐயத்தினை, முன்னிரண்டடிகளால் காரணங் காட்டி அறுத்தருளினார். பதின்மூன்றாந் தானமே துவாத சாந்தம்; அங்கே உள்ள பரவெளியே பரசிவன் விளங்கும் இடம்.
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 1
என்றார் திருவுந்தியாரிலும். பதின்மூன்றாந் தானத்தில் நிற்றலை எடுத்தோதியது பன்னிரண்டு எழுத்துக்களைக் கடந்தவனாக எண்ணப் படுதலை உணர்த்தற்கு. ஈற்றடியால். ஆதார யோகத்தோடு நின்றொழி யாது, நிராதாரத்தின்வழி மீதானத்துச் செல்லுதலின் இன்றியமை யாமையைக் குறித்தார்.
இதனால், இவ்வதிகாரத்தின் கண்ணது, ஓர் ஐயம் அறுக்கப் பட்டது. முதற்றொட்டு இதுகாறும் வந்த மந்திரங்களின் வழி, அமையும் சக்கர வடிம் தனியாகக் காட்டப்பட்டிருத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 13

ஆஇன மானவை முந்நூற் றறுபதும்
ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும்
ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும்
ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.

பொழிப்புரை :

ஐம்பதெழுத்துக்களில் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அவ்வுயிரெழுத்துக்கள் பன்னிரண்டுமே முந்நூற்றறுபது நாள்களாகிய ஆண்டும், பதினைந்து நாள்களாகிய பக்கமும், ஆறும், பன்னிரண்டும் ஆகிய இருதுக்களும், மாதங்களும் என்று இவை அனைத்துமாய் நிற்கும். அவற்றிற்கு அச்சிறப்பு, சிவ சூரியனது தோற்றத்தால் ஆனதாம்.

குறிப்புரை :

அ இனம் - அகரம் முதலிய உயிரெழுத்துக்கள் தொடை நோக்கி அகரம் நீட்டல் பெற்றது. எனவே, மேல் (1246) ``அறிந்திடும் அப்பகலோன் நிலையாமே`` என்றதனை வலியுறுத்தியவாறாயிற்று. வலியுறுத்தவே, பிராசாத யோகிகட்கு இச்சக்கர பாவனா முதிர்ச்சியே காலக் கணக்காய் அமைதல் கொள்க.
இதனால், ஏரொளிச்சக்கர எழுத்துக்கள் பற்றியதோர் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

வந்திடும் ஆகாச ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்ப திராசியும்
வந்திடும் நாளது முந்நூற் றறுபதும்
வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரமே மேற்கூறிய சிவசூரியன் தோன்றும் ஆகாச வழியாகும். அதனால், அதன்கண் உள்ள எழுத்துக் களே அச்சூரியன் இயக்கத்தால் அமைகின்ற நாழிகைகளும், அந் நாழிகையால் ஆம் நாட்களும், அந்நாட்களால் ஆம் மாதங்களும், அம் மாதங்களின் நாள் முந்நூற்றறுபதால் அமைகின்ற ஆண்டும் ஆகும்.

குறிப்புரை :

``அது`` என்றது ஏரொளிச் சக்கரத்தை. செய்யுள் நோக்கி, நாழிகைக்குரிய `அறுபது` என்பதும், இராசிக்குரிய `பன்னிரண்டு` என்பதும் ஆகிய எண்ணுப் பெயர்கள் தொகுக்கப் பட்டன. ``இராசி`` என்றது மாதத்தை. `அக்கரமே வந்திடும் நாழிகை அறுபதும், வந்திடும் நாளது முப்பதும். இராசிபன்னிரண்டும் வந்திடும் நாளது முந் நூற்றறுபது வந்திடும் ஆண்டுமாகிய அவ் வில்லாக வகுத்துரை` எனச் சொற்களை விரித்தும் மாறிக் கூட்டியும் பொருள் உரைத்துக்கொள்க. வில் - ஒளி; என்றது, `சோதிட வகை` என்றவாறு.
இதனால், மேற்கூறிய சிறப்புப்படும் வகையெலாம் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 15

அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம்
தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.

பொழிப்புரை :

இராசிகள் பன்னிரண்டில் இடபம் முதல் நான் கினை முதற் கூறாகவும், விருச்சிகம் முதல் நான்கினைக் கடைக் கூறாகவும், எஞ்சிய நான்கையும் இடைக் கூறாகவும் பகுத்து, அக்கூறுகளை முறையே `மேட வீதி, மிதுன வீதி, இடப வீதி` எனக் கொள்க. இராசிகள் பன்னிரண்டும் இங்ஙனம் இம் மூன்று வீதிகளாய் அமைவனவாம்.

குறிப்புரை :

``அவ்வினம்`` - முதலாய்சிறந்து நிற்கும் அக்கூட்டம். `கவ்வினம்` என்பது விகாரமாயிற்று. கவ்வுதல், தனை அடுத்திருத்தல். தவ்வினம் - தவிர்ந்தன; எஞ்சியன, `இனம்` என்றது தமக்கு ஒரு முதல் உடையவற்றை. எனவே, அம் முதலோடு கூட நான்கிராசி ஒரு கூறுபடும் என்க. `வீதி` என்பது, `சூரியன் செல்லும் வழி` என்பர்.
இதனால், மேலவை பற்றியதொரு முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு சக்கரங் களும் முறையே மேடம் முதலிய பன்னிரண்டு இராசியுள் நிற்பன வாகக் கருதித் தியானிக்கப்படும். அத்தியானம் பன்னிரண்டாம் ராசி முடியச்சென்று முற்றின், தியானிப்பவன் விந்து வெளியைப் பெற்ற வனாய்த் திகழ்வான். அவன் பின்னும் அந்தத் தியானத்திலே அழுந்தி நிற்பின், நாத ஒலியைக் கேட்பவனாகவும் ஆவான். பன்னிரு சக்கரங் களும் பன்னிரண்டு இராசிக்குள் நிற்பனவாகக் கருதும் கருத்திற்கு இதுவே பயனாகும்.

குறிப்புரை :

``எங்கும் நிறைந்தபின்`` எனவும் ``ஒத்தபின்`` எனவும் போந்த அனுவாதத்தால், அங்ஙனம் நிறைவுறும்படித்தியானித்தலும், ஒத்தலும் பெறப்பட்டன. `விந்துவாம் என்றறி` எனமாற்றிக் கொள்க. பிராசாத கலைகள் பலவாயினும், இடைநிற்கும் விந்து நாத கலைகளையே சிறந்தனவாகக் கூறுவர். அக்கலைகள் அனுபவத்தில் முறையே ஒளியாயும், ஒலியாயும், தோன்றும் என்க.
இதனால், ஏரொளிச் சக்கரத் தியான முறையும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

பொழிப்புரை :

தம்மை அடுத்து நிற்கும் எழுத்துக் காரணமாகத் தாமும் விந்துவாய் நிற்கின்ற, ஏரொளிச் சக்கர எழுத்துக்கள், அன்ன காரணத்தானே நாதமாயும் நிற்கும். அவ்வெழுத்துக்களை அங்ஙனம் தியானித்தலில் சிறிதும் திரியாது நிற்பின், அந்நிலையின்பின் மேற்கூறிய ஒளிக்காட்சி விண்மீன்போலப் புலப்படும்.

குறிப்புரை :

`உயிரெழுத்துப் பதினாறனுள் ஈற்றில் நிற்கும் இரண் டெழுத்துக்கள் முறையே விந்து நாதங்களாய் நிற்கும்` என்பது முன்பே கூறப்பட்டது. அவற்றைத் தங்கீழ்ப் பெற்றவழி ஏனை உயிரெழுத் துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் எல்லாம் அங்ஙனமே விந்துவும், நாதமுமாய் நிற்கும் என்பதை இங்கு முதல் இரண்டு அடிகளில் எடுத் தோதினார். இரண்டாம் அடியின் பொருள், `நாதம் ஓங்கும் எழுத்துடன் (கூடி) அதுவாயும் நின்றிடும்` என்பதாம். நின்றிடும் அப்பதி - மனம் நிலைபெற்று நிற்கின்ற அந்த அறைகளில். அவ் வெழுத்தே வருதல், அந்த எழுத்தே தியானிக்கப்படுவனவாய் நிகழ்தல். நின்றிடும் அப்புறம் - நிற்கும் அந்நிலைக்குப்பின் `ஆகும்` எனற்பாலது, தெளிவு பற்றி, ``ஆனது`` எனப்பட்டது. ஒலியனுபவம், ஒளியனுபவம் இரண்டுமே நிகழுமாயினும் பரியதாய் முதற்கண் நிகழும் ஒளி யனுபவத்தையே சிறந்தெடுத்து ஓதினாராதலின், ஒலி யனுபவத்தை விலக்கிற்றிலர் என்க.
இதனால், மேற்கூறிய பயன்களுள் ஒன்றன் நிலை வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

பொழிப்புரை :

மேற் கூறியது காரணமாக ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு கலா சக்கரங்களைப் பன்னிரு விண்மீன்கள் என்று கூறலாம். ஆயினும் அவற்றின் தியான முதிர்ச்சியில் விண்மீனினும் மிக்க பேரொளி ஒன்று மேலே உள்ளமை புலனாகும். ஆதலால், அந்த விண்மீன்போல நிற்கும் ஒளிக்காட்சியை இடைவிடாது காணுதல் அப்பேரொளி சிறிதுசிறிதாக மிக்கு விளங்குதற் பொருட்டாம்.

குறிப்புரை :

``சமைந்தது`` என்றது ஒப்புமை வழக்கு. `ஓர் பேரொளி தழைத்தது` என மாற்றிக்கொள்க. ``மேலே தழைத்ததோர் பேரொளி`` என்றே பாடம் ஓதலுமாம். `சந்திரனும், பகலோனுமாய்` என ஆக்கம் விரிக்க. வருதல் - புலனாதல். அடுக்கு, இடைவிடாமைப்பொருட்டு. `கண்டது வர` என மேலே கூட்டி முடிக்க.
இதனால், ஒளிக் காட்சி முதிர்வு தியான முதிர்ச்சியாதலால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றாற் கண்டு தியானிக்கின்ற சக்கரத்தின் பயன் விந்துவாகிய ஒளிக்காட்சியின் வளர்ச்சியே. அவ்வளர்ச்சியோடுகூட அதற்குத் தக நாத ஒலியும் மிக மிகக் கேட்கப்படும், அவ்விரண்டனாலும் ஆன்மாவின் உள்ளொளியாய் அதனுட் கரந்து நின்ற சிவமும் அனுபவப் பட்டுவரும். அன்னதொரு சிவானுபூதிக்குப்பின் ஆன்மாவைத் தன்னுள் அடங்கக்கொண்டு விரிந்துள்ள சத்தி ஒளியாகிய நீல ஒளி காட்சிப்படுவதாம்.

குறிப்புரை :

`வளர்வது` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. கண்டிடும் நான்கில் இடை இரண்டும் `அனுபவித்திடும்` என்னும் பொருளன. இறுதியது, `கண்டிடப்படும்` என்னும் பொருளது. இஃதொன்றும் முற்று; ஏனையவை எச்சம். ``வன்னி`` என்றது `ஒளி` என்றவாறு. `காரொளியானது கண்டிடப்படும்` என்க. ``எழுந்திட, ஒத்தபின்`` என்ற அனுவாதங்களால், எழுதலும், ஒத்தலும் பெறப் பட்டமை அறிக. ஒத்தல், விந்து நாதங்களின் வெளிப்பாட்டுக்குச் சமமாதல். `அப்புறக்காரொளி` என்பது மெலிந்து நின்றது. விந்து ஒளியை வளர்த்தலேயன்றிச் சிவஒளி சத்தி ஒளிகளையும் முறை யானே பயக்கும். இதனானும் இச்சக்கரம் ஏரொளிச் சக்கரமாதல் காண்க.
இதனால், ஒளிக் காட்சி முதிர்வின்பின் நிகழ்வன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

பொழிப்புரை :

யோக முதிர்ச்சியில் நீல ஒளியாய்க் காணப்படும் சத்திஒளி பூதாகாயத்தின் மேற்பட்ட பராகாயமாய் உலகத்தைத் தன்னுட் கொண்டு பரந்து நிற்றலாலே ஐம்பெரும் பூதங்கள் முதலிய பொருள்கள் பலவும் பயன் தரும் பொருளாய்ச் சிறந்து விளங்கு கின்றன. அச்சத்தி ஒளியூடே அதனினும் நுண்ணிய சிவமாகிய மெய்ப் பொருள் ஒன்றுபட்டு அச்சத்தி ஒளி உள்ள பொருள்களில் எல்லாம் தானும் உடன் நிறைந்து நிற்கின்றது.

குறிப்புரை :

`அதனை மறத்தல் கூடாது` என்பது குறிப்பெச்சம். அண்டம் - ஆகாயம். `அண்டமாய்` என ஆக்கம் விரிக்க. பொதிந்து - பொதிதலால். `உலகெங்கும் பொதிந்து` என மாற்றுக. விளக்கத்தையே இங்கு, `ஒளி` எனப் பன்முறையும் ஓதினார். சார் - யாதானும் ஒன்றைப் பற்றியே நிற்பதாகிய நெருப்பு. நேர்மை - நுண்மை. மூன்றாம் அடி உயி ரெதுகை.
இதனால், மேற்கூறிய சத்தி ஒளியது சிறப்பும், அதனோடு உடனிலையாய் நிற்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு சத்தியாகிய பராகாயம் பல அண்டங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிப் பரந்து நிற்பது, அவை நிலைபெறுதலைச் செய்தற் பொருட்டாம். இனி அவ்வண்டம் முதலிய பொருள்கள் மாயையின் விளைவுகளாய் உயிர்கட்குச் சிவத்தை மறைத்துத் தம்மையே காட்டி நிற்றலால், அவற்றை அவ்வாற்றாற் செயற் படச் செய்யும் சத்தியும் ஓராற்றால் ஆணவ மலத்தோடு ஒப்பதாம்.

குறிப்புரை :

உம்மை இரண்டனுள் முன்னது சிறப்பு; பின்னது இறந்தது தழுவிய எச்சம். அவற்றுள் சிறப்பும்மையைப் பிரித்து, `நின்றதும்` எனக்கூட்டி உரைக்க. `அண்டம் நின்றதும் நிலைபெறக் கண்டிட` என முடியும். ``இவ்வண்டம்`` மூன்றனுள் இடையது ஒன்றும் பராகாயம்; ஏனையவை பௌதிக அண்டங்கள். பலம் - பயன்; விளைவு; `காரியம்` என்றவாறு. ``விந்து பலமதே; ஆதலின் சத்தியும் மூல மலம் ஒக்கும்` எனக் கூட்டி முடிக்க. இச்சத்தி இவ்வாற்றால் திரோ தானகரி எனப்படுதலும் அங்ஙனமாதற்குப் பயன் மூல மலத்தைப் போக்குதலும் ஆதல் வெளிப்படை. மாயையையும் இங்கு ``விந்து`` என்றே போயினார். அதனுள் வியாப்பியமாம் ஒற்றுமை பற்றி.
இதனால், சத்தியது வியாபகத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம்
விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

பொழிப்புரை :

`ஏரொளிச் சக்கரம் எல்லா உலகங்களையும் அடக்கி நிற்கும்` என்பது விளக்குதற்கு இது முதல் நான்கு மந்திரங்களால் உலக உற்பத்தி முறையை உணர்த்துகின்றார்.
`விந்து, நாதம்` என்ற இரண்டு தத்துவங்கள் உலகிற்கு அடி நிலையாய் உள்ளன. அவை யிரண்டும் முதற்கண் நிற்றல் போலத் தனித்து நில்லாது சமமாய்க் கலந்து கீழ்வருமாயின், அங்ஙனம் கலந்த அக்கலப்பே உலகத்திற்கு முதலாய் நிற்கும். பின்பு விந்து மிகுதியாக நாதம் குறைந்து நிற்க வேண்டில், அங்ஙனம் நிற்றற்கும் நாதத்தினும் விந்துவை எண்மடங்கு மிகுதியாகக் கொண்ட ஒருநிலை முதலாக அமையும்.

குறிப்புரை :

ஒப்பற்ற தனிப்பெரும் பொருளாகிய சிவம் உலகத்தை எண்ணாது இயல்யாய் நிற்கும் நிலையில் `சிவம்` என்னும் ஒரு பொருளேயாய் நிற்கும். பின் அது உலகத்தைத் தோற்றுவிக்க எண்ணும் பொழுது` தானும், தன் சக்தியும்` என இருகூறுபட்டு நிற்கும். அவ் இரு கூற்றுள் சிவத்திற்கும், சத்திக்கும் முறையே `நாதம், விந்து` என்பனவும் பெயராம். ஆகவே, நாதத்தினின்றே விந்து தோன்றுவ தாம். அத் தோற்றத்தின்கண் நாதமும், விந்துவும் முறையே தனித்தனி நின்று, பின் இரண்டும் சமமாய்க் கூடி நிற்கும். அந்நிலைக்குச் `சதாசிவம்` அல்லது `சாதாக்கியம்` என்பது பெயர். பின்னர், விந்துக் கூறு மிகுதியாக நாதக் கூறு குறைந்த ஒரு நிலை உளதாம். அதற்கு, `ஈசுரம்` அல்லது `மகேசுரம்` என்பது பெயர். அம் மகேசுரத்திலிருந்து விந்து குறைய நாதம் மிகுந்த ஒரு நிலை தோன்றும். அதற்கு `வித்தை` என்பது பெயர். இங்ஙனம் `நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், வித்தை` என்னும் ஐந்து நிலைகள் அமைந்த பின்னரே, உலகம் பலப் பல வகையில் வியத்தகத் தோன்றுவனவாம். ஆகவே, அவ் அனைத்துத் தோற்றங்கட்கும் முதலாய் அமையும் ஐந்து நிலைகளையே இம்மந்திரத்திற் கூறினார் என்க.
``ஒக்க விழுந்திடில்`` என்றதனால் அவை இரண்டும் முன்னர்த் தனித் தனி நின்றமை பெற்றாம். ``எழுந்திடில்`` என்பது `எழுந்திடல் வேண்டுமாயின்` எனப் பொருள் தந்தது. ``எண்மடி`` என்றது, மிகுதி கூறியவாறு. மூன்று, நான்காம் அடிகள் முறையே வித்தை மகேச்சுரங்களைக் குறித்தமையும், ஐந்து நிலைகளையும் சொற் பல்காது செய்யுட்கேற்பச் சுருங்கி வர ஓதி முடித்தமையும் அறிக. விந்துவை முற்கூறியது ஒடுக்க முறைபற்றி. `விதை, வீசம், (பீசம்) என்னும் பொருட்சொற்கள் `முதனிலை` என்னும் பொருளவாய் நின்றன. இங்கும் இனி வருகின்றவற்றுள்ளும், `விதை` என்னும் இடங்களில் எல்லாம் `விரை` என்றே பாடம் ஓதுவாரும் உளர்.
இதனால், உலகத்திற்கு முதல் முதனிலையாகிய ஐந்து பொருள்கள் கூறப்பட்டன. இவை ஐந்தும் இறைவனாகிய சிவ னுக்கும், அவனுக்கு அவ்வந் நிலைகளில் இடமாய் நிற்கும் சுத்த மாயையின் விரிவுகட்கும் பொது என உணர்க. நாத விந்து நிலை வேறு பாட்டிற்குக் காரணம் முறையே சிவனது சத்தியின் `ஞானம், கிரியை` என்னும் வேறுபாடேயாம். உலகில் ஆண் பெண் கூறுகளாய சுக்கில சோணிதங்களையும் `விந்து, நாதம்` என்னும் பெயர்களால் கூறுப. ஆதலின் இம்மந்திரம் கருவுற்பத்தியாகிய வேறொரு பொருளையும் நயம்படக் தோற்றுவித்து இப்பொருட்குப் பின்னிரண்டடிகள் கருவுற்பத்திக்குச் சோணிதம் குறைதல் நலமாதலைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 23

வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற
வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

பொழிப்புரை :

சிவத்தினின்றும் தோன்றும் உலக முதல்கள் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று மேலாய் நிற்கும். (எனவே, மற்றொன்று கீழாய் நிற்பதாம். ) சிவத்தினின்றும் தோன்றும் அவ் இரு முதல்களும் முதற்கண் தனித்து நின்றவாறு நில்லாது சமமாய்க் கூடி நின்ற, பின்பே சுத்தமாயை பல உலகங்கட்கு முதலாய் நின்று, அவையாய் விரியும்.

குறிப்புரை :

``இரண்டு`` என்றது நாதவிந்துக்களையும், `மேலுற விரிந்திடும்` என்றது நாதத்தையும் என்க. இங்கு, ``நாதம்`` இரண்டும் `சிவம்` என்னும் பொருளவாய் நின்றன, ``வீசமும்`` என்னும் உம்மைகள் சிறப்பு. இறுதியதைப் பிரித்து விந்துவும்` எனக் கூட்டுக. ``விந்து`` இங்கு, சுத்த மாயை `விந்துவும் வீசமாய் விரிந்தது` என ஆக்கம் விரிக்க. காண் உம் அசைகள். `விரைந்திடும், நாதமும்` என்பன பாடம் அல்ல.
இதனால், மேற்கூறிய ஐந்தனுள் சிலவற்றது இயல்பு வகுத்துக் கூறப்பட்டது. அவற்றுள் சாதாக்கியத்தது இன்றியமையாமை வலியுறுத்தப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 24

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவு
விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விதையது வாமே.

பொழிப்புரை :

சுத்த மாயையே அனைத்தையும் வியாபித்து நிற்ப தாகலின், அதனை அறியாதார், `முக்குண வடிவான பிரகிருதி ஒன்றே உலகிற்கு முதனிலை` எனக் கூறும் கூற்று உண்மையன்றாய் ஒழிந்தது. சுத்த மாயை வித்தை முதலாக நாதம் முடிய விரிந்துநின்று அறுபத்து நான்கு கலைகளாகச் சொல்லப்படுகின்ற நூல்களையும் தன்னுட் கொண்டு நிற்குமாயின், சுத்த மாயையே வியாபகமானது; அதுவே உலகிற்குப் பெரு முதல்நிலை.

குறிப்புரை :

உம்மைகள் சிறப்பு. முதலில் உள்ள ``விந்துவும்`` என்பதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. இதனுள், ``வீசம்`` (பீசம்) என்றது, சாங்கியர் முதலிய பலருங் கூறும் முதனிலையைக் குறித்தது. அதுபற்றிக் கூறுவோரது கூற்று வீழ்தலை, அதுவே வீழ்தலாகக் கூறினார். `உட்பட்ட எட்டெட்டுமாய் விரிந்ததாகில்` எனவும், `அதுவே விதையாம்` எனவும் மாற்றுக. `எட்டெட்டுமாய்` என ஆக்கம் வருவிக்க. `உட்கட்ட` என்பதும், `அளவினில்` என்பதும் பாடம் அல்ல. ``அறுபத்துநான்கு கலைகளும்`` என்றது. `சொல்லுலகம் அனைத்தும்` என்றவாறு. இதனாலும், `சொல்லுலகம் ஆகாய பூதத்தின் காரியமே` என்றொழியும் சாங்கியர் முதலியோரது கூற்றுக்களை மறுத்தார். ``ஆகில்`` என்பது, ``நீரின் றமையா துலகெனின்`` 1 என்பதிற்போலத் தெளிவுப் பொருள்தந்தது.
இதனானே, பிற மதத்தார் கூறும் கூற்றுக்களை மறுத்து மேற் கூறியவை வலியுறுத்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 25

விதையது விந்து விளைந்தன எல்லாம்
விதையது விந்து விளைந்த உயிரும்
விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
விதையது விந்து விளைந்தவன் தாளே.

பொழிப்புரை :

சுத்த மாயை முதனிலையாக நிற்பவே பலவகை உலகங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், சவிகற்ப ஞானமும் உளவாவன. ஆயினும் அவை அங்ஙனம் உளவாதல் அம்மாயை சிவசத்தியை நிலைக்களமாகக் கொள்ளுதலாலேயாம்.

குறிப்புரை :

நான்கிடத்தும், `விந்து விதையதுவாகவே` என மாற்றி ஆக்கமும், தேற்றேகாரமும் விரித்துரைக்க. ``உயிர்`` என்றது அவற்றின் பிறப்பாகிய உடம்பை. சவிகற்ப ஞானம் உண்டாதல் சொல்லுலகத்தாலாம். ஈற்றடியில், `விளைந்த` என்னும் வினைப்பெயர் அகரம் தொகுத்தலாயிற்று. அப்பெயர் அத்தொழில் மேல் நின்றது. `அவன் தாட்கண்ணேயாய்` என இறுதியில் உருபும், ஆக்கமும் விரிக்க.
இதனால், மேலவற்றைப் பிறவாற்றால் வலியுறுத்தி, சுத்த மாயை முதனிலையாதல் சுதந்திரமாய் அன்று; சிவசத்தியின் வழியே யாம் என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம்
விளைந்த எழுத்தவை சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

பொழிப்புரை :

காரணகாரியங்கட்கு உள்ள ஒற்றுமையால் விந்து நாதங்களின் காரியமாகிய எழுத்துக்கள் பலவும் விந்து நாதங் களாகவே கொள்ளப்படும். அத்தன்மையவான எழுத்துக்களாலே எல்லாச் சக்கரங்களும் அமைதலின், அச்சக்கரத் தியானத்தால் அவை உடம்பினுள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நின்று உடம்பை யும் விந்து நாதமயமாக்கி, ஆன்மாவையும் மந்திரான்மாவாகச் செய்யும்; அஃது எவ்வாறெனில் எழுத்துக்கள்தாமே மந்திரமாய் உருப் பெறுதலின்.

குறிப்புரை :

`நாதமும்` என்னும் எண்ணும்மையைத் தொகாது வைத்தோதுதல் பாடம் அன்று. ``ஆக`` என்ற வினையெச்சம் காரணப்பொருளில் வந்தது. `தியானத்தால்` என்பது ஆற்றலால் வந்தது. ``நிற்கும்`` என்பது, தன் காரியத்தையும் தோற்றுவித்துநின்றது. ஈற்றில் `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. சக்கரங்களின் இயல்பாகப் பொதுப்படக் கூறினாராயினும், சிறப்புடைய இவ் ஏரொளிச் சக்கரத்தின் இயல்பு உணர்த்துதலே கருத்து.
இதனால், இச்சக்கரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

பொழிப்புரை :

`மந்திரம், சக்கரம்` என்பவற்றின் உண்மையைச் சொல்லுமிடத்து, அவைகளைக்கூறும் நூல்களின் கருத்து, `நாதமாகிய உண்மை எழுத்து ஒன்றே சோதி மண்டலமாம்` என்பதே. ஆகையால், அவ்வுண்மை எழுத்துக்களை உணர்த்தும் கருவிகளாகிய ஆகாய ஒலியையும், அதற்கு அறிகுறியாய் உள்ள வரிவடிவத்தையும் மிகச் சிறப்பித்துக் கூறும் அந்நூன்மொழிகள் முகமனாய் (உபசாரமாய்) அமைவனவே. இதனை, உணர்ந்து பரமபந்தமாய் உள்ள பிரணவத்தைத் தியானிப்பாயாக.

குறிப்புரை :

`தியானிப்பின் அது வேறாய்ப் புலப்பட்டுப் பந்தியா தொழியும்` என்பது கருத்து. உள் எழுத்து - உண்மையெழுத்து. அதனை ``ஒன்று`` என்றது வகைபற்றி. ``ஒன்றே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. வரிவடிவைக் கூறவே, அவற்றால் அறியப்படும் ஒலிவடிவும் பெறப்பட்டது. ``ஒன்றில்லை`` என்றது, `உண்மை ஒன்றில்லை` என்றதாய், உபசாரமாதலை உணர்த்திற்று. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தல் பெற்றது. ``இல்லை`` என்பதன்பின் `ஆதலின்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், மந்திரம், சக்கரம் என்பவற்றது உண்மை கூறிப் பிரணவத் தியானம் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

பொழிப்புரை :

தியானத்தின் பொருட்டு வரையப்பட்ட அறை களில் பொருந்தி விளங்கும் எழுத்துக்கள் அவ் அறைகளின் எல்லைக் கோடுகளைக் கடந்து ஒன்று மற்றொன்றிற் செல்வதில்லை. ஆகை யால், தியானிப்பவன் அவைகளைத் தனக்கு இயல்பாயுள்ள மறதி யாகிய தடை அற்றொழிய, அவ் அறைகளின் வழியே நின்று நினைக்கும் நிலையுடையனாயின், மேற்சொல்லிய உண்மை மந்திரத்தை நேரே காணுதல் கூடும்.

குறிப்புரை :

`உன்ன` என்பதன் ஈற்று அகரமும், `பின்னி, பன்னி` என்பவற்றின் ஈற்று இகரமும் தொகுத்தலாயின. `உன் வட்டம்` என இயைத்து வினைத்தொகை யாக்கலுமாம். தன் இட்டு - தன்னைக் கீழ்ப்படுத்தி.
இதனால், வரிவடிவங்கள் உபசாரத்தால் `மந்திரம்` எனவும், `சக்கரம்` எனவும் கூறப்படுகின்றன என்றமை பற்றி, அதன் கண் உறுதி நெகிழலாகாது என்பது கூறப்பட்டது. நெகிழின் பயன் விளையாது; நெகிழாத வழியே பயன் விளையும் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 29

பார்க்கலு மாகும் பகையறு சக்கரம்
காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறைகளை அறிய வல்லவர்க்கு மந்திரங்களின் உண்மைக் காட்சியைக் காணுதலும், புறப்பகை அகப் பகைகளை நீக்குவதாய சக்கரத்தை நழுவ விடாது பற்றி அதனாற் பயன் அடைதலும், இருந்த இடத்திலிருந்தே எவ்விடப் பொருளையும் அகத்தில் காண்டலும், நுண்ணியவற்றிலும் நுண்ணிதாகிய சிவத்தைக் தன்னிடத்திலே பெறுதலும் கூடும்.

குறிப்புரை :

பார்த்தலுக்குச் செயப்படு பொருள் மேல் நின்று வந்தது. `கருத்தில் நோக்கல்` என இயையும். தடம் - வழி; இடம் ஆகு பெயர். நுணுக்கற்ற நுண்பொருள் - தன்னினும் நுணுகியது ஒன்றில்லாத நனி நுண்பொருள்.
இதனால், மேலதன்கண் நெகிழ்வின்றி நிற்றலால் வரும் பயன்கள் பல கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.

பொழிப்புரை :

ஏரொளிச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்கள் மேல் ``அம் முதல் ஆறும்`` என்னும் மந்திரத்தில் (1247) கூறியபடி முதலில் ஆறும், ஈற்றில் ஆறும், இடையில் நான்கும் ஆகிய எழுத்துக்கள் முறையே `சிவன், சத்தி, அக்கினி` என்னும் மூவருக்கும் உரியன ஆதலின், அவை முத்திறமும் கூடிநிற்கும் இச்சக்கரத்தின் பெருமை சொல்லில் அடங்குவதோ!

குறிப்புரை :

`நாலும் அங்கி; பார்` என மாற்றி இருதொடராக்கி உரைக்க. ``நாலும்`` என்றது `மேற்கூறியவாறு` என நினைவுறுத்திய வாறு.
இதனால், இச்சக்கரத்தின் பெருஞ்சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

கூறிய சக்கரத் துள்எழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் உள்ள எழுத்துக்களாகிய மந்திரங்கள், சிற்றறிவினார் மதித்து விரும்பும் `தம்பனம், வசியம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம்` என்னும் ஐந்தோடு `மாரணம்` என்பதும் கூட ஆறாகின்ற மாறுபட்ட செயல்களை நல்லனவாக மதித்து விரும்புகின்றவர்கட்கு அவ்வாறே வேறுபட்டனவாகவும் அமைந்து விரிந்துநிற்கும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை இறுதியில் வைத்துரைக்க. `அவ் ஆறியல்பாகவும்` என்னும் சுட்டும் எச்ச உம்மையும் தொகுத்தலாயின. தம்பனம் முதலியவற்றின் இயல்புகள் முன்னைத் தந்திரத்திற் சொல்லப்பட்டன. `மாறு மதித்து` என இயையும். மாறுபட்டனவற்றை, ``மாறு` என்றார்.

பண் :

பாடல் எண் : 32

மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

பொழிப்புரை :

மேற்கூறிய அம் மந்திரங்கள் அவரவரது பக்குவத் திற்கு ஏற்ப, ஒருத்தியே ஆய அருட்சத்தியாயும், அளவற்றவளாய திரோதான சத்தியாயும் நிற்கும். அச்சத்திகள் பலவுமாகின்ற பராசத்தி நீறுபூத்த நெருப்பு போல்பவள். ஆதலின், அம்மந்திரங் களால் உலகப் பயன்கள் கைகூடுமாயினும், பிறரை நலிய எண்ணு கின்ற தம்பனம் முதலியவைகளைச் சிறப்பாக மாரணத்தைப் பெரிதாக மதித்து அவற்றைச் செபித்தால் அவை சீற்றம் அடையும்; அதனால், அவ் இழி பயன்கள் கைகூட மாட்டா.

குறிப்புரை :

அருட்சத்தி, பராசத்தி இவர்களையே ``அம்மை`` என்றார், சிறப்பு நோக்கி. மாமாது - பெரியவள்; என்றது எண் பற்றி. ``ஆகும்`` என்பது எச்சம். மங்கி உள்ள அனல் அதன் இயல்பு அறியாது தீண்டினாரைச் சுடுமாதலின், அது அம்மையின் இயல்பறியாது தீங்கிற்குத் துணைபுரிய வேண்டி அணுகுவாரை ஒறுக்கின்ற பராசக்திக்குத் தொழில் உவமையாயிற்று. ``ஆகில்`` என்பதை, ``மதித்தங் கெழுந்தவை`` என்றதனோடும் கூட்டுக. ``காரணமாகில்`` என்பது பாடம் அன்று. கொதித்து அங்கு எழுந்து - அவ்விடத்துக் கொதித்து எழுதலால். பின்னர், ``கூடகிலா`` என்றே ஒழிந்தாராயினும், அவற்றிற்கு எதிரானவை விளைதல் இதனால் பெற்றாம். இங்ஙனமாயினும் சிறுபான்மை அப்பயன்கள் அப்பொழுதைக்கு நலமாய் விளைதலும், மேல், ``ஆறியல்பாக அமைந்து விரிந்திடும்`` என்றதனாற் பெறுதும்,

பண் :

பாடல் எண் : 33

கூடிய தம்பனம் மாரணம் வச்சியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்தடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தின் சிறப்பை ஆராய்ந்து அதனை, `இம்மை மறுமை நலங்களைப் பயக்கும் திருவருளின் வாயில்` என்பதாக உள்ளத்திலே தெளிந்து, அவ்வாற்றால் அதனை மேற்கொள்பவர்க்கு, மேலே கூறிய தம்பனம் முதலிய ஆற்றல்கள் விளையாட்டின் தன்மையாக அவர்களிடம் தாமேவந்து பொருந்தி நிற்கும். அதனால், அவர்களைக் கெடுக்க எண்ணுகின்ற பகைவரும் அவர் இருக்கும் திருவருளாகிய பாசறைக்குள் புகமாட்டாதவராவர்.

குறிப்புரை :

`ஆதலின், அவர் அவைபற்றி இச்சக்கர வழி பாட்டினைச் செய்யார்` என்பது குறிப்பெச்சம். தம்பனம் முதலிய ஆறனுள் மூன்றை எடுத்தோதிப் பிறவற்றை உபலக்கணத்தால் தழு வினார், வச்சியம் - வசியம்; ஆரியச்சிதைவு, ``ஆடியல்பாக அமைந்து செறிந்திடும்`` என்றதனால், உயர்ந்தோரும் சிலவிடத்து உலகரை மகிழ்வித்தற்கு மாரணம் ஒழிந்தவற்றைப் பிறர்க்குத் தீங்கு பயவாத வகையில் சிறுபான்மை செய்தல் பெறப்படும். ``பகைவரும் வந்துறார்`` என்றேபோயினாரேனும், `பகைவரது மந்திர வலிகளும், அவரால் ஏவப்படும் தீய தெய்வங்களும் புகமாட்டா` என்பதும் கொள்க.

``ஆதி மந்திரம் அஞ்செழுத் தோதுவார் நோக்கும் மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே`` 1
என்ற சேக்கிழார் திருமொழி இங்கு ஆழ்ந்து உணர்தற்கு உரியது. இம் மூன்று மந்திரங்களாலும், ``ஏரொளிச் சக்கர வழிபாடு தம்பனம் முதலிய இழி பயன்களையும் பயப்பதாயினும், அஃது உயர்ந்தோர்க்கு ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே
அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து
அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்துள் அகார கலா சக்கரத்தை மூலா தாரத்தில் கருதிக் குண்டலினியோடு பொருந்த வைத்துத் தியானத்தைத் தொடங்க, கலா சக்கரங்கள் பலவும் பிராணாயாமத்தால் முறையே அருளுருவாய் முதிர்ந்து பயன் தரும்.

குறிப்புரை :

`சக்கர அகாரத்தை` எனக் கூட்டுக. அளித்தல் இரண்டிடத்தும் அருளுருவாதல். ஆடுதல், அசைதல், இயங்கல். `நாடிய கால்` என்பது பாடமாயின் `நளிந்தவை` எனப்பாடம் ஓதுக. நளிதல் - செறிதல். குளிர்ச்சி, உறக்கத்தைக் குறித்தது. ``வைத்து`` என்றதனை, `வைக்க` எனத் திரிக்க. ``வைக்க`` என்றே போயினா ராயினும், `வைத்துத் தொடங்க` என்றலே கருத்தாதல், பின்னர் ``எழும்`` என்பதனால் பெறப்படும். `காலால்` என்னும் மூன்றனுருபு தொகுத்தலாயிற்று. `காலால் எழும்` என உடம்பொடுபுணர்த்து ஓதியதனால், `பிராணாயாமம் செய்ய` என்பது கூறியதாம்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் தியான முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :

கால், அரை, முக்கால், ஒன்று என இங்ஙனம் பல வகையால் வரையறுக்கப்பட்ட மாத்திரைகளின் படி அகாரம் முதலிய கலைகள் மந்திரங்களாக உச்சரிக்கப்பட்டுத் தோன்றிப் பொருந்தி அழுந்தி நின்று வளர்ந்து தம் தம் பயனைத் தந்து மேற்போய் பிறவி யாகிய பகை நீங்கும்படி முற்றி நிற்குமாயின், ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அம்மந்திரங்களை அம் முறையானே மாறி நிற்கக் கொண்டு செபிக்கின்ற அவர்களுக்கு அம்மந்திரங்கள் அவர்களை மிகவும் விரும்புகின்றனவாய் அமையும்; `அஃதாவது அவர்க்குக் கைவந்து நிற்கும்` என்பதாம்.

குறிப்புரை :

``காலரை முக்கால் முழுது`` என்றது, `பல்வேறு வரையறையானவை` என்றவாறு. பிராசாதகலைகளின் மாத்திரை யளவை `பிராசாத சட்கம்` முதலிய நூல்களிற் காண்க. ஆலித்து - ஒலித்து; ஒலிக்கப்பட்டு, ஒலிக்கப்படுதல் சக்கரத்தில் உள்ள எழுத்துக் களின் வழியாம். ``மாலுற்ற`` என்றது முற்று. `மந்திரம் மாறிக்கொள் வார்க்கு மாலுற்ற` என்க.
இதனால், `ஏரொளிச் சக்கர மந்திரங்களை மாத்திரை பிறழாது உச்சரித்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டைஉள் நாவில் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி
என்றும் இதயத் தெழுந்து நமவே.

பொழிப்புரை :

பிராசாத கலைகளுக்குரிய மந்திரங்களாகக் கொள்ளப்பட்ட ஏரொளிச் சக்கர எழுத்துக்கள் இறைவன் எழுத் தாகவே ஆகி, யோக முறைப்படி உள்நாக்கில் மாறுபாடு நீங்க ஒலிக்கப் பட்ட பின்னர், முத்திக்கு நேரே வாயிலாகிய திருவைந்தெழுத்து இருதயத்திலே தோன்றி, அவ்வம்பலத்தில் நிறைந்து நிற்கின்ற, சிவமாகிய தூண்டாவிளக்காய் என்றும் ஒளிவிட்டு விளங்கும்.

குறிப்புரை :

பண்டை - பண்டை நெறி. `பண்டையின்` என ஐந்தன் உருபு விரிக்க. பகை - மாறுபாடு. `இன்றும்` என்பது பாடம் அன்று. `விண்டபின் நம எழுந்து ஆயிடும்` என முடிக்க. ``நம`` என்பது, திருவைந்தெழுத்தை முதற்குறிப்பாற் கூறியவாறு. பிராசாத யோகம் முதிர்ந்தவர்க்குத் திருவைந்தெழுத்து மந்திரம் எளிதில் பயன்தரும் என்றவாறு.
இதனால், ஏரொளிச்சக்கரத்தின் முடிந்த பயன் கூறப்பட்டு.

பண் :

பாடல் எண் : 1

அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.

பொழிப்புரை :

முற்பக்கம் (பூர்வ பக்கம்) பிற்பக்கம் (அபர பக்கம்) என்னும் இருபக்கங்களில் உள்ள பதினைந்து திதிகளையும் அவ்ஆறு திதிகளாகப் பிரிக்கும் முறையில் சக்கரத்தை அமைத்து, உவாக்களோடு கூடப் பதினாறு திதிகட்கும் பதினாறு உயிரெழுத்துக்களில் அகாரத்தைக் கடையுவாவிற்கும், (அமாவாசைக்கும்) பதினாறாவது உயிரெழுத்தைத் தலையுவாவிற்கும் (பௌர்ணிமைக்கும்) உரியவாக வைத்து, ஏனையவற்றை ஆகாரம் முதலாக நேர்முறையில் முற்பக்க பிரதமை முதலியவற்றிற்கு உரியவாக எண்ணியும், பதினைந்தாம் உயிர் முதலாக எதிர்முறையில் பிற்பக்கப் பிரதமை முதலியவற்றிற்கு உரியவாகவும் கொண்டு, முதல் அறை ஒன்றில் மட்டும் அகாரத்தை யும், அடுத்து உள்ள அறைகளில் முறையே வலமாக ஆகாரம் முதல் பதினைந்தாம் உயிர்முடிய ஓர் எழுத்தை இவ்விரண்டு அறைகளிலும், பதினாறாம் உயிரெழுத்தை மட்டும் ஓர் அறையிலும் அடைக்க, (14X2) இருபத்தெட்டும், இரண்டும் ஆக முப்பது அறைகள் நிரம்ப, ஆறு அறைகள் நடுவில் வெற்றிடங்களாய் நிற்கும். அவற்றிற்கு நடுவில் `ஓம் பம்` என்னும் பிரணவ பீசங்களையும், அவற்றின் கீழ்த் தொடங்கி, `பைரவாய நம` என்னும் ஆறெழுத்துக்களை ஆறு அறைகளிலும் எழுதச்சக்கரம் நிரம்பியதாம். இரண்டிரண்டாய் உள்ள ஆகாரம் முதலியவற்றை அமாவாசை தொடங்கி அகரத்தை அடுத்த ஆகாரம் முதலியவற்றை ஒன்றுவிட்டு ஒன்றான அறைகளில் நேரே முற்பக்கப்பிரதமை முதலியவாக ஓர் எழுத்தைப்பத்துருச் செபித்துப் பௌர்ணிமை முடிவில் நடுவில் உள்ள பிரணவ பீசங்களோடு மூலமந்திரத்தைப் பத்துருச்செபித்து அமாவாசை முதல் பௌர்ணிமை முடிய ஒவ்வொரு நாளும் இவ்வாறு வழிபாடு செய்தல் வேண்டும். பின்பு பௌர்ணிமை தொடங்கிப் பிற்பக்கப் பிரதமை முதல் ஒவ்வொருநாளும் பதினைந்தாம் உயிர் முதலாக எதிர் முறையில் அவ்வாறே ஒன்றுவிட்டொன்றாக ஒவ்வோர் எழுத்தையும் பத்துருச் செபித்து, முடிவில் மேற்கூறியவாறு நடுவில் உள்ள மந்திரத்தைச் செபித்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபடும் நாளில் அன்றைய திதிக்குரிய எழுத்து முதலாகத் தொடங்கி அதற்கு முன்னுள்ள எழுத்தில் வந்து முடியவே செபித்தல் வேண்டும். எழுத்துக்களை முதலில் பிரணவத்தையும், ஈற்றில் மகாரத்தையும் கூட்டி உச்சரித்தலேமுறை. பதினைந்தாம் உயிரைமட்டும் ஹகாரத்தின் மேல் ஏற்றி `ஹம்` எனக்கூறல் வேண்டும். அகாரம் ஒழிந்த பிற உயிர்களையும் ஹகாரத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் வடமொழி வழக்கு.

குறிப்புரை :

வயிரவர் எந்நாளும் பாதுகாப்பவராதல் பற்றி, ``கால பைரவர்`` எனப்படுதலின், கதிரளவை, (சௌரமானம்) மதியளவை (சாந்திரமானம்) இரண்டிற்கும் பொதுவான திதிக்காலத்தை ஒட்டி வழிபடுதல் வேண்டும் என்பது இம் முறையால் அறிந்து கொள்ளப் படும். ``வலமாக`` என்றாரேனும் அது முற்பக்கத்தில் என்பது எழுத்து முறையாற் பெறப்படுதலின், பிற்பக்கத்தில் எதிர் முறையால் இடமாகச் செல்ல வேண்டும் என்பது உணர்ந்து கொள்ளப்படும். நடுவில் பிரணவம், பீசம், மூலமந்திரம் இவற்றை எழுதுதல் பொது முறையானே கொள்ளப்படும். `நடவே` என்பது பாடம் அன்று. இங்ஙனம் கூறப்பட்ட இச்சக்கர அமைப்பினைக் காண்க.
மேல் வை குற்ற - பின்னர்ப் பொருந்தியுள்ள எழுத்துக்கள். இவற்றை `சத்தமி முதலாக` என்றமையின், ஒரு வரிசையில் ஆறு எழுத்துக்கள் உள்ளமை விளங்கும்.
இதனால், வயிரவச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் விளங்கும் வயிரவ மூர்த்தி, சிறப்பாகச் சூல கபாலங்களை ஏந்திய வேக வடிவத்தினர். அதனால், அவர் தம் அடியவரை வென்ற பகைவரைத் தாம் போர்ச்சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்தம் உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக அவர்களது உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவார்.

குறிப்புரை :

கண், இங்கே, அறிவு. ``பகைவர்`` என்றது அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை.
``ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்`` 1
என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகரும், ``ஒன்னார், உவந்தார்`` எனப்பட்டவரை, ``தம் அறத்&#

பண் :

பாடல் எண் : 3

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.

பொழிப்புரை :

நரசிங்கன், திரிவிக்கிரமன் இவர்களது தோலைப் போர்த்துள்ள ஆதி வயிரவர் மேற்கூறிய சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். இனித் தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.

குறிப்புரை :

`ஆகம் மேவ\\\" என்பது குறைந்து நின்றது. ஆகம் - உடம்பு; தோல்; ஆகுபெயர். \\\"ஆகம்\\\" என்றதனை வயிரவருடைய தாக்கி, திருமேனியில் எலும்பு முதலியவைகளை விரும்பிப்பூண்ட என உரைத்தலுமாம். இதில் பூணுதற்குச் செயப்படுபொருள் ஆற்றலால் கொள்ளப்படும். இரண்டாம் அடி முதலிய மூன்றனையும் \\\"ஆமே\\\" என்பவற்றோடு முன்னே கூட்டி முடிக்க. அவ்விடத்து முதற்கண் நின்றது வயிரவரது செயலாம்.
இதனால், வயிரவரது கையில் உள்ள படைக்கலம் முதலியவை கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பொழிப்புரை :

ஆறுகைகளும் நெஞ்சில் விளங்கும் படி நினைக்கப் படுகின்ற திருமேனி செந்நிறம் உடையதாக விளங்குகின்ற வயிரவ மூர்த்தியினது, தூயவர் உள்ளத்தில் துலங்கி நிற்பதாகிய வடிவம், உனது நெஞ்சிலும் உள்ளதாகக் கருதி, மாணவகனே, நீ வஞ்சனை யற்ற, மெய்யான அன்போடு அக்கடவுளை வழிபடுதலைச் செய்.

குறிப்புரை :

`செய்தால் பகைவரை அழிக்கும் பயன் உனக்குக் கிட்டுவதாகும்` என்பது குறிப்பெச்சம். பொய் - வஞ்சனை. அஃதாவது உறுதிப்பாடு இன்மை. மேலே குறிப்பால் உணர்த்திய வயிரவ மூர்த்தி ஆறு கைகளை உடையவர் என்பது இங்கு வெளிப்படையாக உணர்த்தப்பட்டது. இதனை, இந்நூலாற் பெறுதும். பெறவே, மேற்கூறிய படைக்கலம் முதலியவைகளில் சூலம், தமருகம், வாள் என்பன வலக்கைகளிலும், பாசம், கபாலம், வெட்டப்பட்ட தலை என்பன இடக்கைகளிலும் இருத்தல் புலனாகும்; தலையும், கபாலமும் பிரமனுடையனவே. அவை முறையே தலையைக் கிள்ளினமையை யும், அதன் ஓட்டில் எங்கும் சென்று குருதிப்பலி ஏற்றமையையும் நினைப்பிக்கும். நோக்கிடு மெய், வினைத்தொகை. `செம்மையாக` என ஆக்கம் வருவிக்க. `வயிரவன் மெய்` என இயையும்.
இதனால், வயிரவத் தியான முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

பொழிப்புரை :

வயிரவ வழிபாட்டினைச் செய்ய விரும்பினால், மேற்கூறிய வயிரவச் சக்கரத்தினை மேற்கூறிய வகையில் ஓர் ஆயிரம் நாள் வழிபடல் வேண்டும். வழிபடின் அச்சக்கர வழிபாட்டின் பயன் கூடுவதாகும். அவ்வழிபாட்டினை, சந்தனம், சவ்வாது, புனுகு, நெய் என்னும் இவைகளைச் சிறப்பாகக் கொண்டு செய்து. அது நிறை வெய்திய பின் பகைவர்பால் உங்கள் பகையைப் புலப்படுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்தால் வெற்றி கிடைக்கும்` என்பது குறிப்பெச்சம். வாம மார்க்கத்தை விரும்புவார் இதன் இரண்டாம் அடியை `மதுவுடன் ஆகுமால்` எனப் பாடம் ஓதுவர்.
இதனால், வயிரவ வழிபாட்டு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய ஆறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.

பொழிப்புரை :

ஒரு வரிசையில் ஆறு அறைகளை உடைய சக்கர வழிபாட்டின் பயன் கிடைக்கப்பெறின் பகைவர்பால் நீ கருதிய மாறுபாட்டுச் செயல் நீ நினைத்தவாறே முடியும். இனித்தம்பனம் முதலிய அறு செயல் ஆற்றலை அடைய விரும்பி இவ்வழிபாட்டினைச் செய்யின் அவ்விருப்பமும் இதனால் நிறைவுறும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. `கலகமும் வேண்டியவாறு ஆயிடும்` என்க. மெய் - சித்தி. `ஏரொளிச் சக்கரத்திற் கூறப்பட்ட ஆறுபயன்கள் இதனாலும் கிடைக்கும்` என்றற்கு அதனையும் இறுதிக்கண் கூட்டிக் கூறினார்.
இதனால், இச்சக்கரத்தின் பயன் பலவும் முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.

பொழிப்புரை :

`சாம்பவி மண்டலம்` என்னும் பெயரினதாகிய சக்கரத்தின் அமைப்பினை யாம் சொல்லின், வரிசைக்கு எட்டு அறைகளாக எட்டு வரிசையில் அறுபத்து நான்கு அறைகளைக் கீறி, அவற்றின் நடுவில் நான்கு அறைகளை, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்னும் நான்கும் அருவத் திருமேனிகளாகக் கருதி, அவற்றையே அச்சக்கரத்தின் கண்களாக வைத்து, அனைத்தையும் முற்ற நோக்குதல் வேண்டும். அப்பொழுதே அச்சக்கர வழிபாட்டினை நாம் அறிந்தவராவோம்.

குறிப்புரை :

`மண்டலம், சக்கரம்` என்பன ஒருபொருட் சொற் களாதலின், `சாம்பவி மண்டலச் சக்கரம்` என்பது இருபெயரொட்டு. `இட்டிடின் காண்பதம்` என இயையும். மேல் என்றது இரட்டுற மொழிதலாய், உள்ளிடத்தையும், மேலிடத்தையும் உணர்த்தி, இரண்டாவது பொருளில் `தத்துவம்` என்பதனோடு இயைய, \\\"நால்\\\" என்பது காண்பதம் என்பதனோடும் சென்றியைந்தது. தத்துவம் நாலாக என ஆக்கம் வருவிக்க. `உள்ளே நயனமும் கண்டு` எனக் காணுதலை நயனத்திற்குங் கொள்க. நாடு - நாடுதல்; வழிபடுதல்; முதனிலைத் தொழிற்பெயர்.

பண் :

பாடல் எண் : 2

நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே.

பொழிப்புரை :

நாடறிந்த மண்டலமான இந்த நல்ல சக்கரத்தில் வளைதல் இல்லாது நேராய்ச் செல்லும் வீதிகளை நாற்புறத்தும் அமைத்து, அவற்றில் ஒவ்வொரு வீதிக் குள்ளாலும் நடுவில் இரண்டிரண்டு அறைகளை இடைவெளியாகவிடுக. `நெடிய வீதி` எனப்பட்டவைகளில் உள்ள அறைகள் பதினாறாகும். இங்ஙனம் ஆனபின் வீதிக்குள் அமைந்த அறைகளின் எண்ணிக்கையும், உட்சுற்றில் உள்ள அறைகளின் எண்ணிக்கையும் தனித்தனி இருபதாம்.

குறிப்புரை :

பாடு அறி - படுதல் (உண்டாதல்) அறியப்பட்ட. பத்து, ஆறு என்பன அறைகள். ஈடேறுதல் - இடையீடின்றி வலம் செல்லல். `நடுவீதி` என்பதும். `ஏடற என்பதும் பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 3

நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.

பொழிப்புரை :

இருபது அறைகளை உடைய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவட்டமாய் நிற்கும். நல்ல வீதிகள் நான்கிலும் திசைக்கு நான் காகப் பதினாறு இலிங்க உருவங்கள் இருக்க, நடுவில் உள்ள நான்கு அறை களிலும் அவ்வாறே நான்கு இலிங்கங்கள் நடுவில் உள்ள ஓர் இலிங்கத் துடன் நான்கு தாமரை மலர்களோடு நடுவொரு தாமரை மலரில் இருக்கும்.

குறிப்புரை :

பெருந்திசை பற்றிப் பதினாறே கூறினும், கோணத்திசை நான்கிலும் நான்கு இலிங்கங்கள் கொள்க. நள் - நடு; இதனைக் கோணத்திற்கும் கூட்டி, `நள் நாலு கோணமும் நள் நால் இலிங்கமா` என்க. இதனானே, நடுவிலும் ஓர் இலிங்கம் இருத்தல் கொள்ளப்படும். இதனால், இலிங்கங்கள் அனைத்தும் இருபத்தைந்தாகும். இது சதாசிவமூர்த்தியே மாகேசுர மூர்த்தி தம் இருபத்தைந்து ஆதலை விளக்கும். \\\"அவ்வாறே\\\" என்பதனை, \\\"கோணமும்\\\" என்றதன் பின்னர்க் கூட்டுக. கோணமும் அவ்வாறே `நண்ணலையுடையது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 4

ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

பொழிப்புரை :

எட்டு எட்டு(8X8) அறுபத்து நான்கு அறைகள் உள்ள இச்சக்கரத்தில் சுற்று வீதியில் உள்ளவை இருபத்தெட்டு, நடு வில் உள்ளவை நான்கு ஆக முப்பத்திரண்டுடன் திசைக்கு இரண்டாக நான்கு திசைகளிலும் இடைவெளியாக நிற்கும் அறைகள் எட்டுக் கூட அறைகள் நாற்பது. நடுவு நான்கு அறைகளின் நடுவையும் ஓர் அறை யாகக் கொள்ள, கூடிய அறைகள் நாற்பத் தொன்று இவைகளில்.
உடலெழுத்துக்களில் ஐவருக்கத்து இருபத்தைந்தையும் இருபத்தைந்து இலிங்கங்கட்கும் உரிய எழுத்துக்களாக நடுவண் ஐந்தில் தென்கிழக்கு முதலாகத் தொடங்கிப் பின் மேற்கு முதலாக வலஞ்சென்று இலிங்கங்கட்கு அணியவான கீழ் அறைகளில் அடைத்தல் வேண்டும். பின்னர் யகரமாதி நான்கு, ‹ கரமாதி நான்கு ஆக எட்டினையும் சுற்று வீதியில், இடைவெளியாக உள்ள எட்டு அறைகளில் மேற்கு முதல் வலமாக அடைத்து, உட்சென்று வெற்றிடமாய் உள்ள எட்டு அறைகளில் முறையே, `ள, க்ஷ, ஓம், சி, வா, ய, ந, ம` என்னும் எட்டு எழுத்துக்களையும் அடைத்து நிரப்பிச் செபித்தல் வேண்டும். செபிக்கின் குறையின்றி வாழலாம்.

குறிப்புரை :

ஆறு + இருபது + நால் + அஞ்சு = முப்பத்தைந்து. இரண்டாவது அஞ்சு, திருவைந்தெழுத்து, `வேறு உருவாகக் கொண்டு` என ஒருசொல் வருவிக்க. உம்மில் கூறுமின் - வாய்க்குள் மெல்லெனச் செபியுங்கள். அஞ்செழுத்துக்களையே எடுத்துக்கூறினாராயினும் ஓங்காரமும் இயல்பாகக் கொள்ளப்படும்.
ஐவருக்கத்தது இருபத்தைந்து எழுத்துக்களும் மகேசுர எழுத்துக் களாய் நிற்றல் வெளிப்படையாக அறியப்படவே, பிரணவத் தோடு கூடிய திருவைந்தெழுத்து, சதாசிவ எழுத்தாதல் குறிப்பால் அறியப்படும். இவை இருதிறத்தனவும் இங்ஙனமாகவே, இவற்றிற்கு இடைநிற்கும் யகாராதி பத்தும் ஆன்ம எழுத்துக்களாய் ஆன்மாவை மகேசுரர், சதா சிவர் இருவர்களிடை வைத்துக் கீழ் நின்று மேல் ஏற்றுவனவாம் என்க.
ஏரொளிச் சக்கரம் பிரணவயோக சக்கரமாய் முழுவதும் உயிரெழுத்துக்களாலே அமைதலும், இது சாம்பவ யோக சக்கரமாய் முழுவதும் உடலெழுத்துக்களாலும் திருவைந்தெழுத்தாலும் அமைதலும் கண்டு கொள்க.
இவை நான்கு மந்திரங்களாலும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது. இவ்வாற்றால் அமைந்த இச்சக்கர வடிவைக் காண்க.
இதில் உள்ள எழுத்துக்களைக் ககாரம் முதலாக ஒவ்வொன் றனையும் பத்துப் பத்து உருச் செபித்து, முடிவில் திருவைந் தெழுத்தையும் அவ்வாறு செபித்தல் ஒருவட்டமாகும் என்பது மேலை அதிகாரத் தொடர்ச்சியால் விளங்கும். ஏரொளிச் சக்கர வழிபாடு ஞானசாதனமும், இது போக சாதனமும் ஆகும் என்க. இம் மந்திரத்துள், \\\"குறைகளும் இல்லையே\\\" என்றது போகம் பற்றிய குறிப்பேயாம்.

பண் :

பாடல் எண் : 5

குறைவதும் இல்லை குரைகழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
திறம்அது வாகத் தெளியவல் லாருக்
கிறவில்லை என்றென் றியம்பினர் காண.

பொழிப்புரை :

வேதத்தால் மூலமந்திரமாகச் சொல்லப்படுவதும் திருவைந்தெழுத்தேயாதலின், அதனை அவ்வாறே தெளிய வல்லவர்கட்கு உலகப் பயன்களிலும் யாதும் குறைதல் இல்லை. வழிநிலைக் காலத்தில் `இறப்பு` என்பது இல்லாமல், சிவபெருமானது ஒலிக்கும் வீரக்கழலை யணிந்த திருவடியும் கிடைக்கும் என்று, அறிந்தோர் பன்முறையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

குறிப்புரை :

இரண்டு, மூன்றாம் அடிகளை முதலிற் கொண்டு, \\\"இறவில்லை` என்பதனைக் \\\"குறைவதும் இல்லை\\\" என்பதன் பின் கூட்டி உரைக்க. `குரைகழலும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. அடுக்குப்பன்மைப்பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.

பொழிப்புரை :

ஐம்புல நுகர்ச்சியவாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்களும், நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடுகின்ற நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் ஆகியவற்றால் வரும் பயன்களும் நுகர்ச்சியும் நல்ல அறிவும், கவலையற்ற உறக்கமும், எல்லாம் தானேயாய் நிற்கும் பொன்னும் ஆகிய எல்லாம் இச் சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.

குறிப்புரை :

\\\"தெய்வம்\\\" முதலிய மூன்றும் அவற்றால் ஆம் பயனைக் குறித்தன. பொன் உண்டாயின் எல்லாம் உளவாம்` என்பது பற்றி \\\"தானாகக்காணும் கனகம்\\\" என்றார். காரிகை - சாம்பவி; என்றது அவளுக்குரிய இச்சக்கரத்தை. `காரிகையால் ` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இவை இரண்டு மந்திரங்களாலும் சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்து எஞ்ஞான்றும் நன்மைக்கு ஏதுவாம் வழி உண்டாகவே செய்யும். அதனையே தெளிந்து வல்லாராதல் யாருக்குக்கூடும்! கூடுமாயின், நினைத்தவற்றை முடித்தல்கூடும். உலகில் நமக்குப் பகைவரும் இலாரவர்.

குறிப்புரை :

`ஆம் வழியே ஆக ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. போதல், மூன்றிடத்தும் `கைவருதல்` என்னும் பொருட்டு \\\"போமே\\\" என்பதில் ஏகாரம் வினாப் பொருளது. `தாமே` எனற்பாலதனை, \\\"நாமே\\\" எனத் தன்மையில் வைத்து ஓதினார். `ஒருவரது பகை` என ஆறாவது விரிக்க. `பகையும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 8

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் பகை, பெரியோர் இகழும் இகழ்ச்சி, இருவினை, பொருந்தாச் செயல்கள், இடையூறு என்பவை இல்லையாம். நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றக் கழுவித் தூய்மையைத் தரும் நீராம்.

குறிப்புரை :

பணிந்தவர் - பணியப்பட்டவர். `தம்மால்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். \\\"நாணாளும் நன்மைகள் ஆகும்\\\" என்பதை, \\\"தகையில்லை\\\" என்பதன்பின் கூட்டி உரைக்க. மூன்றாம் அடி உயிரெதுகை.
இவை இரண்டு மந்திரங்களாலும், `முத்தியைத் தருவதாகிய திருவைந்தெழுத்து மந்திரத்தைப் போகம் வேண்டுவார் கணித்தல் பொருந்துமோ` எனப் பேரறிவில்லாதார்க்கு இச்சக்கரம் பற்றி எழும் ஐயம், `திருவைந்தெழுத்து எல்லாவற்றையும் தரும்` எனக் கூறி நீக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.

பொழிப்புரை :

மண்ணும், விண்ணுமாகிய எல்லா இடத்திலும், பகலும், இரவுமாகிய எல்லாக் காலத்திலும் வாழ்தலை யுடைய எல்லா உயிரும், அவற்றின் உணர்வுமாய் இருப்பது திருவைந்தெழுத்து. அதனால், எதனை வேண்டுவோரும் அந்த மந்திரத்தை ஓதலாம். ஓதுவதால் உலகில் பிறர் அறிந்திலாத விடய இன்பமும், இறை இன்பமும் மிகவும் உளவாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. \\\"அஞ்செழுத்து\\\" என்பது தாப்பிசையாய் இடைநின்றது. ஆனந்த ரூபம் - இன்பமே உருவாம் நிலை. இன்பம் இருவகை இன்பத்திற்கும் பொதுவாய் நின்றது. \\\"மதியதில்\\\" என்பதிலும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க. ஊர்தல் - உலாவுதல்; வாழ்தல்.
இதனால், மேலதனை முடிந்தது முடித்தலாகக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.
இம்மந்திரத்தின் பின் முன்பு \\\"ஆதார ஆதேயம்\\\" என்னும் அதிகாரத்துட் போந்த. \\\"உணர்ந்தெழு மந்திரம்\\\" என்னும் மந்திரம் சிறிது வேறுபடப் பதிப்புக்களில் காணப்படுதல் மிகையாகும்.

பண் :

பாடல் எண் : 1

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

பொழிப்புரை :

மேல் (1158) \\\"தக்க பராவித்தை\\\" என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட `ஷ்ரீவித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள மாட்டாத மெலியோர்க்கு அமைந்தது இச்சக்கரம் என்பது உணர்த்துதற்கு முதல் நான்கு மந்திரங்களால் ஷ்ரீ வித்தையின் இயல்பே கூறுகின்றார். ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக் களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.

குறிப்புரை :

ககாரத்தை முதலில் உடைமை பற்றி இவ்வித்தை (ஷ்ரீவித்தை) `காதி வித்தை` என்றும் சொல்லப்படுகின்றது.
ககாரதி ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்` என்பன. ஹகாரத்தையே தமிழ் முறையால், \\\"அகாரம்\\\" என ஓதினார். ஹகாராதி ஆறாவன; `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்` என்பன. ஸகாரத்தையே அவ்வாறு \\\"சகாராதி\\\" என்றார். ஸகாராதி நான்காவன; `ஸ, க, ல, ஹரீம்` என்பன. இப்பதினைந்தெழுத்தின் தொகுதி, `பஞ்ச தசாட்சரி` எனப்படும்.
சத்திக்குரிய மந்திரங்களில் தலையானதாகக் கொள்ளப் படுவது, `லலிதா திரிசதி தோத்திரம்` என்னும் முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15X20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்ட வாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம், `வரிவஸ்யாரகசியம்` என்னும் நூல் முதலியவற்றில், பலவாகச் சொல்லப்படுகின்றன. இவற்றிற்கு முதல் நூல், `திரிபுரை` என்னும் சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதமாம்.
`இப் பஞ்ச தசாட்சரி மந்திரம் காயத்திரியின் மற்றொரு வடிவம்` எனவும், இன்னும், `பொதுவாக யாவராலும் அறிந்து சொல்லப்பட்டு வரும் காயத்திரியினும் இது மிக மேலானது` எனவும், `காயத்திரியை வெளிப்படையாகக் கூறும் வேதம், இதனை அவ்வாறு கூறாமல், மிக மறை பொருளாகச் சில சங்கேத (குறியீட்டு)ச் சொற் களால் கூறுகின்றது எனவும், இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது எனவும் கூறுவர். இம்மந்திர வழிபாட்டிற்குரிய ஷ்ரீ சக்கரம் பற்றி மேற்குறித்த பரா வித்தை கூறிய இடத்தில் சொல்லப்பட்டது. `ஷ்ரீ0` என்பது இலக்குமி பீசம் எனவும், இதனை இவற்றோடு கூட்டி சோடசாட்சரியாகக் கொள்வது மிக உயர்ந்தோர்க்கு உரியது எனவும் கூறுவர். இவ் அக்கரத்தை நாயனார் புவனாபதி சக்கரத்திற்குக் கூறுகின்றார்.
`வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதிகளில் நிறங்கள் வரிவஸ்யரகசியத்தில் முறையே, `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்` எனச் சொல்லப்பட்டன. அவற்றை நாயனார் இங்குக் கூறியவாற்றோடு இயைவனவாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து, `கண்ட` என்பது இங்கு, `காணிய` எனத்திரிந்து நின்றது. காமிய முத்தி, உம்மைத் தொகை. `போலும்` என்பது உரையசை. இவற்றைத் தருவனவற்றை ஒற்றுமை பற்றி இவையாகவே கூறினார்.
இதனால், சத்தி வழிபாடாகிய ஷ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

பொழிப்புரை :

மாணவகனே, யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே மந்திரங்களில் தலையாயது. இம்மந்திரத் திற்குரிய தேவிதன் பெருமையை ஆராயின் இவளையன்றித் தெய்வம் வேறில்லையாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஷ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின்பக் கடலாயும் விளங்கும். இன்னும் ஆழ்ந்து நோக்கின், ஷ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் வடிவாகிய சிதாகாசமாம்.

குறிப்புரை :

\\\"யானொன்று செப்பக் கேள்\\\" என்பதை முதலிற் கொள்க. \\\"இதுவே\\\" என்றது, மேற்கூறிய ககாராதி பதினைந்தெழுத்துக் கூடிய மந்திரத்தை, \\\"இத்தெய்வம்\\\" என்றது, `இதன் தெய்வம்\\\" என்றவாறு. பிறிது - பிறிது தெய்வம். வாரி - கடல் `திரிகோணம் மா இன்ப வாரியாம் முத்தியும்` எனக்கூட்டுக. `மனமின்ப` என்பது பாடம் ஆகாமை அறிக.
உம்மை, சிறப்பு, காயம் - சரீரம், சிவனுக்குச் சரீரமாவது சிதாகாசமேயாதலை அறிக. `சிதாகாயம்` எனப்பாடம் ஓதினுமாம். திரிகோணங்களால் ஆகின்ற ஷ்ரீசக்கரம் ஆதார ஆதேயம், என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

பொழிப்புரை :

பராசத்தியாய் உள்ளது ஒன்றே; அதுவே பரசிவத்திற்கு வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஷ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் உளவாம். இனிப் பராசத்தி ஒன்றேயாயினும் சிவன் அங்கியாய் நிற்கச் சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்றல் உண்மையால், எட்டாய்ப் பிரிந்து நிற்றல் உண்டாகின்றது.

குறிப்புரை :

\\\"ஏக பராசத்தி\\\" என்றது உடம்பொடு புணர்த்தல், \\\"அங்கமே\\\" என்னும் ஏகாரம் பிரித்துக் கூறப்பட்டது, எட்டுப் பிரிவாவன; பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` என்னும் நிலைகளாம். `சிவன் அங்கியாகத் தான் அங்கமாதல் உண்மையின்` என்றமையால், `சிவனது சங்கற்பமே இங்ஙனம் பிரிதற்குக் காரணம்` என்பது பெறப்பட்டது.
\\\"எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்\\\" 1
என்ற சிவஞானசித்தியை நோக்குக. `சிவன் உருவாம் யோகம் பராசத்திக்கு உண்மையில் எட்டாம` என்க. `சிவகுரு` என்பது பாடம் அன்று. யோகம் - தொடர்பு. `பராசத்தியே ஏனை ஏழுமாம்` என்றற்கு அதனையும் உடன் கூட்டி எண்ணினார்.
இதனால், ஷ்ரீவித்தைக்குரிய தெய்வமாகிய சத்தியது இயல்பு தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

பொழிப்புரை :

பராசத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய மேற்கூறிய எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்றொழியும். (ஒழியவே பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம்.) இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.

குறிப்புரை :

கட்டு - நிலை. அவை எட்டாவன; ஆறு ஆதாரம், சகத்திரதாரம், நிராதாரம் என்பன, `யோகத்தால் கட்டாகும் எட்டும் கலப்பித்தது நாதாந்தத்துக் கலப்பித்தது` என்க. `சத்தி யோகத்துக் கலப்பித்தது` எனவே, பராவித்தையைக் கிரியையளவில் மட்டுமின்றி, யோக நிலையில் கொண்டு செய்தவழியே பெரும்பயன் உளதாதல் கூறப்பட்டதாம். `அப்பெரும்பயனும் முத்தியே` என்பார், \\\"ஒட்டாத விந்துவும் தான் அற்றொழிந்தது\\\" என்றார். நாதத்தால் வரும் ஞானத்தை \\\"வைந்தவ ஞானம்\\\" என்றே கூறுவராகலின், `நாதமும் அற்றொழிந்தது` என்னாது, `விந்துவும் அற்றொழிந்தது` என்றார்.
\\\"ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே\\\" 1
என்னும் சிவஞான சித்தியை இங்கு நினைவு கூர்க.
\\\"ஒழிந்தது\\\" என்பது வினைப்பெயர். அது, \\\"கிட்டா தொழிந்தது\\\" என்பதனோடு முடிந்தது. ஷ்ரீசக்கர வழிபாட்டின் முறையும், பயனும் கூறும்முகத்தால் அதனது சிறப்புணர்த்தி, அது மெலியோர்க்குக் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.

பொழிப்புரை :

இதுமுதலாகவே புவனாபதிசக்கரம் கூறுகின்றார். வழிபடுவோர்க்கு எப்பயனையும் தருவதாய், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை எந்தத் துதியினாலேனும் துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து. நீ இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச்செய்து, பிறவி நீக்கத்தைச் சிறப்பாக விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.

குறிப்புரை :

பலம் ஆம் - பயன் விளைதற்கு ஏதுவாய, `இயந்திர ராசன்` என ஆண்பாலாகக்கூறியது வடமொழி மதம். `இதனைப் புவனாபதியாகவே கருதுக` என்றற்கு, \\\"அடி ஓதி\\\" என்றார். அங்க நியாசமே கூறினாராயினும் கரநியாசமுங் கூறுதல் கருத்தாம். `அவைகளை இதற்கேற்பச் செய்க` என்றது, `இச் சக்கரத்தில் அடைக்கப்படும் பீசங்களாலே செய்க` என்றபடி. அவற்றை வருகின்ற மந்திரங்களில் காண்க.

பண் :

பாடல் எண் : 6

சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேலும், `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளி யில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அவ் இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயி ரெழுத்துப் பதினாறனையும் அகாரம் முதலாக முறையானே எழுதுக.

குறிப்புரை :

\\\"சட்கோணந் தன்னில்\\\" என்ற ஒருமையால், \\\"சட் கோணம்\\\" என்பது ஆகுபெயராய், அவற்றாலாய சக்கரத்தைக் குறித்த தாம். \\\"இட்ட இதழ்கள்\\\" எனப் பின்னர் அனுவதித்துக் கூறலால், அவற்றை இடுதல் இங்குக் கொள்ளப்பட்டது. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. மிகுதல் உயர்தலாதலின், அஃது உயி ரெழுத்தை உணர்த்தி நின்றது. உயிரெழுத்து என்றே கூறினாராயினும், விந்துவொடு கூட்டியே கொள்க. முதலடியில் இனவெதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 7

இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.

பொழிப்புரை :

சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடைநிலம் எட்டிலும் எட்டு ஹகார மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம், என்னும் பீசங்களை எழுதுக.

குறிப்புரை :

\\\"அதன் மேலே\\\" என ஒருமையாற் கூறியது, ஒற்றுமை நயங்கொண்டு. இங்ஙனம் கூறுதலை, `சாதியொருமை` என்பர். \\\"மேலே விட்டு\\\" என்றது, `மேலே ஏற்றி` என்றவாறு. `இதழ்களின் மேலே கிட்டும் படி இட்டு` என்க. `மேவ` என்பது ஈறு குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 8

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

பொழிப்புரை :

பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடு.

குறிப்புரை :

\\\"பின்\\\" என்பதனை, \\\"சூழ்ந்து\\\" என்றதன் பின்னர்க் கூட்டுக. இச்சக்கரத்திற்குச் சொல்லப்பட்ட பீசாட்சரங்கள், `ஷ்ரீம், ஹரீம், ஹு 0, க்ஷோம், ஸ்ரோம், ஆம்` என்னும் ஆறுமேயாதலால், கர நியாச அங்க நியாசங்களும் இவற்றானே செய்யப்படும் என்க. அங்ஙனம் செய்யுங்கால் கரநியாசத்தைக் தர்ச்சனி (பெருவிரல்) முதலாக முறையே ஐந்து விரல்களிலும், ஆறாவதாக அகங்கை புறங்கைகளிலும் நியசிக்க. அங்க நியாசம் இருதயம் முதலாகச் செய்யப்படுதல் இயல்பு.
இவை நான்கு மந்திரங்களாலும் புவனாபதி சக்கரத்தை அமைக்கும் முறை கூறப்பட்டது. இங்ஙனம் அமைந்த சக்கர வடிவைக் காண்க.

பண் :

பாடல் எண் : 9

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

பொழிப்புரை :

புவனாபதி யம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தைக் காமாதி குற்றங்களின் நீங்கித் தூய்மையுடை யதாகப் பண்ணி, அகத்தில் அவளது உருவத்தை நினைவுகூர்ந்து, பின்பு வெளியில் கும்பம், (நிறை குடம்) விம்பம், (திருவுருவம்) இச் சக்கரம் என்பவைகளில், அவ்வம் மறைமொழிகளால், (மந்திரங் களால்) ஆவாகனம், (வரவழைத்தல்) தாபனம், (இருத்துதல்) சந்நிதானம், (முகநோக்கம்) சந்நிரோதனம், (வேண்டிக்கோடல்) என்பவை களால் விளக்கம் பெற நிறுத்திப்பின் உபசாரங்கள், (முகமன்கள்) பலவும் செய்து முடித்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நில்.

குறிப்புரை :

\\\"அகத்தில்\\\" என்பது தாப்பிசையாய் இடை நின்றது. அகத்தினில் ஆவாகனம் - நினைவுகூர்தல். புறத்தினில் ஆவாகனம் - வரைவழைத்தல். பிராணப் பிரதிட்டை - உயிர் கொடுத்து நிலைப் பித்தல். என்று, ஆவாகனம் முதலிய நான்கையும் உணர்த் திற்று. இவை புறத்திலாதல் வெளிப்படை. அதனால், இவை செய்யப்படும். இடங்களாகிய கும்பம் முதலியனவும் பெறப்பட்டன. \\\"பேசி\\\" என்பதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. \\\"பிரதிட்டை செய்து\\\" என்றே போயினாராயினும், பின்னர்ச் செய்யப் படும் உபசாரங்கள் ஆற்றலால் விளங்கும். அவை அபிடேகம், (திருமுழுக்கு) அலங்காரம், (ஒப்பனை. இஃது ஆடை, அணிகலம், சந்தனம், பூமாலை, இவைகளை அணிந்து அழகுசெய்தலாம்.) தூபம், (நறும்புகையிடுதல்) தீபம், (பல விளக்குவகை காட்டல்) நிவேதனம், (நைவேத்தியம் - படையல்கள்) அருச்சனை, (மலரிடல்) நிருத்தம், (ஆடல்) கீதம், (பாடல்) வாத்தியம், (பல்லியம்) பிரதட்சிணம், (வலம் வரல்) நமஸ்காரம், (அடிபணிதல்) பிரார்த்தனை, (வேண்டுகோள்) என்பன. `செபம்` (மந்திரம் கணித்தல்) என்பது இவற்றுடனே கொள்க. தேசு, ஆகுபெயர்.
இதனால், புவனாபதி அம்மையது வழிபாட்டு முறை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 10

செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

பொழிப்புரை :

புவனாபதி யம்மைதன் வடிவில் விளங்குவன செம்மை நிறம், செம்பட்டு உடை , கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும், அவயங்களில் அவ்வவற் றிற்கு ஏற்ற அணிகலன்கள் தலையில் இரத்தின கிரீடம் என்பவாம்.

குறிப்புரை :

\\\"அபயம்\\\" என்றதனால், வரதமும் உடன் கொள்ளப் படும். மெய், அவயவம் இவை ஆகுபெயர்கள். \\\"இரத்தினமாம் மேனி\\\" என்றது \\\"இரத்தினஉருவான` என்றவாறு. தோற்றம் உடைய வற்றை, \\\"தோற்றம்` என்றார்.
இதனால், புவனாபதி தியானத்திற்கு அவளது வடிவு கூறப் பட்டது. மேல் பராவித்தை கூறியவிடத்தில் (1158) அம்மைதன் வடிவம் வேறாகக் கூறப்பட்டிருத்தலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 11

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால \\\"நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.

பொழிப்புரை :

புவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். நிவேதனம் பால் அடிசிலேயாம். நிவே திக்கும் மந்திரம் `ஓம் நாரதாயை சுவா:\\\" என்பது, இம் மந்திரத்தால் நான்கு திசைகளிலும் நிவேதனம் செய்தல் வேண்டும். வழிபாடுயாவும் முடிந்தபின்பு பாரங்முக அர்க்கியத்தால் அம்மையை முகம் மாற்றிய பின்பே நிர்மாலிய நிவேதனத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.

குறிப்புரை :

தோல் - உடம்பு; ஆகுபெயர். \\\"பால் போனகம்\\\" என்ற மையால், வாம மார்க்க நிவேதனங்கள் கூடாவாயின. \\\"மந்திரத்தால் பயின்றேத்தி\\\" என்பதை, துதித்து என்பதன்பின் கூட்டுக. நான்கு திசைகளிலும் நிவேதித்தல் கூறினமையால், விம்பத்திலும் அம்மையை நான்கு முகம் உடையவளாகக் கொள்ளுதல் பெறப்பட்டது. பாகம் - சமைக்கப்பட்ட பொருள். நிர்மாலியத்தையே \\\"சேடம்\\\" (எஞ்சியது) என்றார். அதனைக் கொள்ளுதலைச் சேவித்தலாகக் கூறியது மரபு பற்றி.
இதனால், புவனாபதி வழிபாட்டிற்கு, முன்னர் எய்திய வற்றின் மேல் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.

பொழிப்புரை :

`சேடம்` எனப்படுகின்ற நிவேதப் பொருளைக் கைக்கொள்வதற்குமுன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை ஒடுக்கிக் கொள்ளுதற்குரிய மந்திரம் கிரியை பாவனை களால் இருதயத்தில் ஒடுக்கி, யாவர்க்கும் அணுகுதற்கரிய மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வை; பின்பு இது நினைத்தவற்றை யெல்லாம் உனக்குக் கொடுக்கும்.

குறிப்புரை :

`பராங்முக அர்க்கியத்திற்குப் பின் இதுவும் செய்க` என்றற்கு, `சேவிப்பதன்முன்` என மீட்டுங் கூறினார். உத்வாபனம் - மீட்டுக் கொள்ளுதல். இதனை, `உத்வாகனம்` என்றல் பிழை. இஃது இதற்குரிய மந்திரம் முதலியவற்றைக் குறித்த ஆகுபெயர். \\\"பாவித்து\\\" என்றது, `இருதயத்துள் ஒடுக்கி` என்றவாறு, \\\"இதய கமலம் பதிவித்து\\\" என்றது, பின்னர் மறவாது ஊன்றிக்கொள்ளுதலை. `தேவியைப் பதிவித்து, இயந்திர ராசனைச் சேமி` என்க. \\\"நினைந்த\\\" என்பது அஃறிணைப் பன்மை வினைப்பெயர். `நினைந்தது` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், இச்சக்கர வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை கூறி முடிக்கப்பட்டது. பலர்க்குப் பயன்படுதல் பற்றி, \\\"இயந்திர ராசன்\\\" எனப்பட்ட இதன் வழிபாட்டில் இதனைக் கூறியதனால், ஏனைச் சக்கரங்களின் வழிபாட்டிற்கும் இஃது உரியதாதல் அறியப் படும்.

பண் :

பாடல் எண் : 1

நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தின் இயல்பை நான் உனக்குச் சொல்லுமிடத்து, ஒன்பதெழுத்துத் தொகுதியில் ஒவ்வொன்றும் ஒன்பதெழுத்தாகின்ற முறையால் ஒன்பதெழுத்துக்கள், `எண்பத்தோ ரெழுத்து` என்னும் தொகை பெறும்படி ஒன்பதெழுத்தாய் நிற்கும் அத் தொகுதியாவது `ஸௌம்` என்னும் முதலினையும், `க்லீம்` என்னும் இறுதியையும் உடையது.

குறிப்புரை :

இம் முதல் ஈறுகளை உடைய எழுத்து அனைத்தையும் வருகின்ற மந்திரத்தால் அறிக. தொகுதியைச் சுட்டுதற்கு, `நவாக்கரம்` என்னாது \\\"நவாக்கரி\\\" என்றார். \\\"முதல் ஈறே\\\" என்றது எதிர் நிரனிறையாதல் வருகின்ற மந்திரத்தாற் பெறப்படும்.
இதனால், நவாக்கரி சக்கரம் அமையுமாறு தொகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

பொழிப்புரை :

`ஸௌம்` என்பது `முதல்` என மேற்கூறிய அவற்றோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ‹்ரீம்` என்பவை முறையே தொடர்ந்தபின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடி வெழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று சொல்; நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.

குறிப்புரை :

``அவ்`` என்பது வகர ஈற்றுச் சுட்டுப் பெயர். விந்துவை நோக்கிப் பன்மையாகக் கூறினார். `ஔம்` என்பதை இங்கு `ஹௌம்` என ஓதல் வேண்டாமை அறிக. `கௌம், ஐம்` என்பவற்றில் செய்யுள் நோக்கி விந்துவிற்கு முன் ஓர் உகரம் தந்தும், எண்ணும்மை கொடுத்தும் ஓதினார். `கலந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ஒவ்வில் - பொருந்தில்; என்றது, `பொருந்தியபின்` என்றவாறு. முதற்கண் உள்ள எழுத்துத் தலையாய் நிற்றலின் ஈற்றெழுத்தை, ``பாதம்`` என்றார். செவ்வுள் எழுந்து - செம்மையான நெறியில் முயன்று. `நவமே` எனற்பாலது, `நவே` எனக் குறைந்து நின்றது. நவம் - நவாக்கரமாம். `நமஎன்னே` என்றே பாடம் ஓதுதல் அந்தாதிக்கு ஒவ்வாமை அறிக.
இதனால், நவாக்கரி சக்கரத்திற்குரிய. நவாக்கரங்கள் முழுதும் எடுத்தோதப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நவாக் கரியாவதும் நானறி வித்தை
நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வழிபாடும் நான் சிறந்த ஒன்றாக அறிந்த வழிபாடாம். அதனால், நலங்கள் பல விளையும். ஆதலின், நவாக்கரி மந்திரத்தை நாம் புடைபெயரும் அளவாகக் கணித்தால், அம்மந்திரத்திற்குரிய சத்தி எல்லா நன்மைகளையும் தருவாள்.

குறிப்புரை :

`நவாக்கரியின் உள்நின்று எழும்` என்க. அஃதாவது `நவாக்கரி வழிபாடு ஏதுவாக` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 4

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வழிபாட்டினால் பெருநன்மை யைத் தருவதாகிய அனுபவ ஞானமும் அதற்கு ஏதுவாகிய கலா ஞானமும் வலியுற்று நிலைபெறும். அதற்கு முன்னே உம்முடைய வலிய வினைகள் உம்மை நோக்காது விட்டு ஓடிவிடும். `அஃது எவ்வாறு` எனில், இவ்வழிபாட்டினால், வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து, உமக்குத் துன்பத்தைத் தரஇருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டும் ஆதலால்,

குறிப்புரை :

`சிரமம்` என்பது, இடைக்குறைந்து, `சிரம்` என நின்றது. செய்வது, இனிச் செய்யக்கடவது; இது சாதி யொருமை. உம்மை, சிறப்பு. ``அகற்றி வாய்த்திடும்`` என்பதை, `வாய்த்து அகற்றிடும்` என மாற்றி முடித்து, இறுதியில் `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. முதல் அடி இன எதுகை.
இவை இரண்டும் மந்திரங்களாலும் நவாக்கரி வித்தையும் ஷ்ரீவித்தையோடு ஒத்த சிறப்புடையதாய்ப் பயன்தருதல் பொது வகையிலும், சிறப்பு வகையிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தை வெள்ளி, பொன், செம்பு என்னும் இவற்றுள் ஒன்றாலான தகட்டிலே அமையுங்கள்; பின்பு மனத்திலும் அதனை ஊன்றி நினையுங்கள். அங்ஙனம் நினைத்தலால் உள்ளத்தில் நிலைபெறுகின்ற அச்சக்கரம் உம்மை நோக்கி வருகின்ற வினைகளை வெல்லவும், உலகத்தை வெற்றிகொள்ளவும் நீவிர் நினைப்பீராயின் நினைத்த அளவிலே அப்பயன்களை உங்களுக்குத் தரும்.

குறிப்புரை :

`சக்கரத்தை வெள்ளி முதலியவற்றில் கண்டிடும்; உள்ளே கொண்டிடும்; நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே வென் றிடும்; தருவிக்கும்` எனக் கூட்டிமுடிக்க. இதில் இனவெதுகை வந்தது.
இதனால், நவாக்கரி சக்கரத்தை அமைத்தற்காம் பொருள் களும், அவற்றால் ஆம் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.

பொழிப்புரை :

உன்னத் தக்க க்லீம் என்பவற்றை ஈறாக உடைய நவாக்கரங்களை அங்ஙனமே வைத்து உன்னப்படுகின்ற சக்கரத்தின் முதலெழுத்துமுதல் ஈற்றெழுத்து முடிய, இச்சக்கர சத்தி தன்னுள்ளே விரும்புகின்ற செந்நெல், அறுகம் புல் என்பவற்றை நீயும் மனத்திலே கொண்டு அவற்றைக்கொண்டு அருச்சனை செய். அப்பொழுது உனது அருச்சனையை அச்சத்தி ஏற்றுக்கொள்வாள்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் ``நினைத்திடும்`` என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க. `நேர்தருவாள்`` என்பது, `நேர்ந்து மேற்குறித்த பயன்களைத் தருவாள்` என்றவாறு.
இதனால், இச்சக்கர வழிபாட்டிற்கு ஆவதொரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

பொழிப்புரை :

வழிபடுவார்க்கு நேர் வந்து அருள் புரிகின்ற அந்தச் சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள்? அழகிய தேவியாகிய அவள் மேகம்போலும் நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பு செல்லும் வண்ணம் நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை யெல்லாம் உனக்குக் கைகூடும்.

குறிப்புரை :

`திரிகை` என்பது கடைக்குறைந்து நின்றது. திரிகை - சக்கரம். ``யாதொரு வண்ணம், கார்தரு வண்ணம்`` என வினாவும், விடையும் தாமே கூறினார். `யாதொரு வண்ணம்` என வினாவி அறிந் திடு` என்று உரைப்பினும் ஆம். ``கார்தரு`` என்பதில் தரு உவம உருபு.
இதனால் இச்சக்கரசத்தியது தியானவண்ணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.

பொழிப்புரை :

இச்சக்கர சத்திபால் நீ அன்புசெய்து ஒழுகினால் நீ இவ்வுலகில் நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; கூற்றுவன் உன்னைக் கொண்டுபோவதற்குக் குறித்துவைத்த நாளும் அங்ஙனம் கொண்டுபோகாமலே கடந்துவிடும். உனது பெயர் உலகெங்கும் பரவும்; உனது உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல விளங்குவதாகும். இப்பயன்களை யெல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.

குறிப்புரை :

``கண்ணிய`` என்பதனை, `எண்ணிய` எனவும் ஓதுவர். `வண்ணம் கதிர்போல அடைந்திடும்` எனக்கூட்டுக.
இதனால். இச்சக்கர வழிபாட்டின் இம்மைப் பயன் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

பொழிப்புரை :

பொன், வெள்ளி, நவமணிகள் ஆகிய பொருள்கள் யாவும் குறைவின்றி உன்பால் வந்துசேரும்; நல்வினை யாலன்றிச் சிவனது அருளால் ஆம் செல்வங்கள் கிடைக்கும். தேவர்கள் பதவியும் தாமாகவே வரும்; இவையெல்லாம் இங்ஙனம் ஆமாற்றை அறிந்து இச்சக்கர வழிபாட்டினை நீ செய்.

குறிப்புரை :

``அருளும்`` என்பது எச்சம். அருளால் வரும் செல்வம் வினையால் வரும் செல்வம் போல மயக்கம் செய்யாமையால் `அச்செல்வமே இதனால் கிடைக்கும்` என்றார். ``அறிந்திடு`` என்றது, தன் காரியம் தோன்ற நின்றது.
இதனால், இவ்வழிபாட்டின் இம்மை மறுமைப் பயன் இரண்டும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.

பொழிப்புரை :

மெய்யறிவுடையோர் உண்மை அமரர்களாதல் பொருட்டு அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் பிளந்துகொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையைச் சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் பணிகின்ற சத்தியை நீவிர் வழிபட்டு மேற்கூறிய பயன்களைப் பெறுங்கள்.

குறிப்புரை :

அமரர் - இறவாதவர், இப்பெயர் மார்க்கண்டேயர் போலும் சிவனடியார்கட்கே உண்மையில் பொருந்தும் ஆதலின், சிவபெருமானை, ``அறிந்திடுவார்கள் அமரர்களாகத் தெரிந்திடு தேவன்`` என்றார். வானோர் - வானுலகில் உள்ளவர். `வானோராகிய தேவர்கள்` என்க. `வானத்து வன்புனல்` என்றவாறு. சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போலும்படி எளிதில் ஏற்றமை தோன்ற, ``சூடி`` என்றார். முரிதல் - வளைதல்; இங்கு, பணிதலைக் குறித்தது. நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமைதன் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாகப் புனைந்துரை கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்திதன் பெருமை புலப்படுதற்கு எடுத்தாண்டார். ``முரிந்திடுவானை`` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சத்திதன் பெருமை கூறும் முகத்தால், மேற்கூறிய பயன்கள் உளவாதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம்
தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.

பொழிப்புரை :

நீங்கள் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்பதில் \\\"ஹ்ரீம்\\\" என்பது முதலாகவும், `ஷ்ரீம்` என்பது இறுதி யாகவும் அமையும் வகை சிறந்ததாகும்.

குறிப்புரை :

இதனைப் பின்னர்க் காட்டப்படும் சக்கரத்தில் கண்டு கொள்க. \\\"சக்கரம்\\\" என்பதில் ஏழனுருபு விரிக்க, வண்ணங்கள் - எழுத்துக்கள். பார் - நிலம், என்றது சக்கரம் அமைந்த தகட்டினை. அணிதல் - அழகு செய்தல். `இவ்வகைச் சக்கரம் மிக அழகாக அலங் கரிக்கப்படும்\\\" என்பது இதனால் விளங்கும். உம்மை, முற்றுப் பொருட்டாய் நிலமுழுதும் எனப்பொருள் தந்தது. `பொழிலின்` என ஒப்புப் பொருளில் வந்த ஐந்தன் உருபு விரிக்க. பொழில் போலுதல், தண்ணிய திருவருளைத் தந்து இன்புறுவித்தல்.
இதனால், இச்சக்கர வகைகளுள் ஒன்று சிறந்ததாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.

பொழிப்புரை :

மேற்கூறிய வகைச் சக்கரத்தின் வழியே ஒப்பற்ற அச்சத்தியைக் காணுங்கள். கண்டால், முகந்து கொள்ளலாம் போலும் முக வசீகரம் உங்கட்கு உண்டாகலாம். அநாதி பரஞ்சுடராகிய சிவபெருமானும் நீவீர் காணநின்று, அழிவற்ற அவளைத் தன்பால் எடுத்து வைத்துக்கொள்வான்.

குறிப்புரை :

பண்டு கொள்ளுதல் - அநாதியாம் தன்மையைக் கொண்டிருத்தல். பரமாய பரஞ்சுடர் - மேலானவற்றிற்கெல்லாம் மேலான சுடர். ஈற்றடி இன எதுகை.
இதனால், மேற்கூறிய வகையின் வழிபாட்டினால் சிவபரஞ்சுடரது காட்சியும் எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.

பொழிப்புரை :

நீங்கள் பெறத் தக்க பேறுகட்கெல்லாம் உரிய வளாகிய சத்தியின் பெருமையை அறிந்து வழிபட்டால் மன்னரும் நம் வசப்படுவர்; பகைவர்கள் சீவித்திரார். ஆதலின், சிவனது ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீவிர் துதியுங்கள். இரண்டாம் அடி உயிரெதுகை.

குறிப்புரை :

எண்ணுதல் - ஆய்ந்தளித்தல். இது தன் காரியம் தோன்ற நின்றது.
இதனால், அனைத்துப் பேற்றையும் சத்திதர வல்லளாதல் தெரிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

பொழிப்புரை :

சத்தி எல்லா உலகங்களையும் உடையளாதலை அறிந்து துதியுங்கள்; அதனால், உலகின் சில பகுதிகட்குத் தலைவ ராயுள்ள தேவர்களது வாழ்வுவேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; பின்னும், மீள மீள இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்குங்கள். முடிவாக அச்சத்தியது திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.

குறிப்புரை :

`அமரர்களது அண்டத்து வாழ்வு` எனக் கூட்டுக. ஆறுதல் - தணிதல்; நீங்குதல். வாழ்வு எனல் - வாழ்வு வேண்டும் என விரும்புதல்.
இதனால், இவ் வழிபாட்டினை முத்தியை விரும்பிச் செய்தல் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

பொழிப்புரை :

சத்தி தன் திருவடியில் சேர்ந்து நீங்காது இருக்க எண்ணினவர் அவளது மந்திரத்தை நாவிற்குள்ளே சொல்லித் துதிப்பர். புறத்திலே மலர்களை அவளது திருவடியிலே தூவி விளக்கம் பெற்றிருப்பவர், அவளது பெருமை பொருந்திய திருவடிகளைத் தரிசிக்கும் வழியை அறிந்தவராவர்.

குறிப்புரை :

`சேர` என்பது பாடம் அன்று.
இதனால், அருச்சனையிலும் செபம் சிறந்ததாதல் கூறப் பட்டது. சக்கர வழிபாட்டில் செபமே முதன்மையாதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 16

ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற சக்கரம் அந்த `ஐம்` என்பது முதலாகப் பொருந்திப் பின்பு, `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் உடைய தாகும். அந்த `ஐம்` என்பதை முதலாகக் கொண்ட அனைத் தெழுத்துக்களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.

குறிப்புரை :

`துதித்தால், உனது அறியாமை நீங்கி மெய்யறிவு பிறக் கும்` என்பது கருத்து. மை - இருள்; மலம். `அதற்கு முதல்வி` என்றது, `அதனை ஏற்றவழியால் கழுவுபவள்` என்றவாறு. மேலை மந்திரத்தில் \\\"வகை\\\" என்பதில் உள்ள ஐகாரமே இதில் ஆதியாகக் கொள்ளப் பட்டது. `அவர்க்குடையாளை` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், `இச்சக்கர வழிபாடு அஞ்ஞானத்தைப் போக்கும்` என்பது உணர்த்தி, மற்றொரு வகையின் சிறப்பு வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 17

வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப்
பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கர சத்தி சிவாகமங்கள் கூறும் வாகீசுவரியாம், `வேதம்` என்றும், `ஆகமம்` என்றும் இவ்வாறு பலவாகப் பகுத்துச் சொல்லப்படும் நூல்கள் அனைத்தையும் தனது ஒரு நாவினாலே எளிதிற் சொல்ல வல்லவளாகிய இச்சத்தியை நீங்கள் உங்கள் வாக்கிலும் விரையத் தோன்றும் வண்ணம் வணங்குங்கள்.

குறிப்புரை :

`வணங்கினால் கலா ஞானமும் நிரம்பவரும்` என்பது கருத்து. `உங்கள் முகத்துளும்` என்பது ஆற்றலால் வந்தது. வாயை `முகம்` என்றல் வடமொழி வழக்கு. \\\"முன்\\\" என்றது, `விரைய` என்ற வாறு. முதலடி உயிரெதுகை. இவ்விரு மந்திரங்களிலும் `வகுத்திடும்` என்றேயும் பாடம் ஓதுப.
இதனால், மேற்கூறிய மலநீக்கத்தோடு கலாஞான நிறைவும் மேலைச் சக்கர வழிபாட்டால் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய வகையில் அறியப்பட்ட இச்சக்கரத்தினை நாவில் பதித்துக்கொண்டால், இதற்குக் கொள்ளப் பட்ட இந்த எழுத்துக்களேசிவனது எழுத்துக்களாய் விடும். அதனால், திருவம்பலத் தியானமாகிய தகர வித்தையும் மக்களுக்குக் கைவர, ஞானசத்தி பதிதலால், இவ்வழிபாட்டைச் செய்பவனும் உலக மாயையை வெல்லுபவனாவான்.

குறிப்புரை :

``மானுடர்`` என்பது வேறு முடிபு கொண்டு பொதுமை யுணர்த்தி நிற்றலின், ``வென்றிடும்`` என்பது பால்வழு ஆகாதாயிற்று. வெல்லுதற்கு `இவன்` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க. சத்தி சிவத்தின் வேறன்மை, `கொண்ட இம்மந்திரம் கூத்தன் எழுத்தாம்`` என்ற இதனானும் நன்கறியப்படும். இஃது அறியாதார் சத்தியை வேறு நிற்பவளாக மயங்கி, ஏற்றங் கூறி மகிழ்வர். இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், இச்சக்கரவித்தையே தகர வித்தையின் பயனையும் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லிய லாக நடந்திடுந் தானே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளாம் இயல்பினளாகிய இச்சத்தியை இங்குக் கூறிய இம்மந்திரத்தின் வழியே பற்றி அவ்வழிபாட்டில் நில்லுங்கள். பல்வேறு வகையினவாய் மிக்குச் செல்லுகின்ற உங்கள் நாள்கள் பலவும் நல்ல நாள்களேயாய்ச் செல்லும்.

குறிப்புரை :

முதலடியை, `மெய்ப்பொருளாகிய மெல்லியலாள் தனை` என மாற்றிக்கொள்க. பல்லியல்பு, இருவினைகளுக்கு ஈடாகப் பல்வேறான எண்ணமும், செயலும், நுகர்ச்சியும். நல்லியல்பு, எல்லாம் திருவருட் செயலாகத் தோன்றுதல் அங்ஙனம் தோன்றின் வினைப் பயன்கள் வாதியாமையோடு, தீமை தானும் நன்மையாச் சிறக்கும்.1
இதனால், இவ்வழிபாட்டினால்வினைப்பயன்களால் தாக்குண்ணாமை கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பொழிப்புரை :

இச்சக்கர சத்தி வாகீசுவரி யாதலின், இவளது அருள் கிடைக்கப் பெற்றவனுக்கு அவன் வேண்டிய நன்மைகள் யாவும் அவன் சொன்ன அளவிலே அங்ஙனமே முடியும். வழக்கும் செய்யுளுமாய்த் தொடர்கின்ற சொற்கள் அனைத்தையும், அவற்றின் பொருளோடு அவன் முற்ற உணர்ந்தவனாவான். விரிந்துகிடக்கின்ற இவ்வுலகில் ஓரிடத்தும் அவனுக்குப் பகையாவர் இல்லை. (நண்பரும் உறவினருமே உளராவர் என்பதாம்.)

குறிப்புரை :

``கல்விக் கரசிவ ளாக`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. `அரசி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ``படர்ந்திடும் பார்`` என்றது, `பிரபஞ்சம்` என்பதன் பொருள்பற்றிக் கூறியவாறு. கூறவே ஓரிடத்தும் பகையில்லாமை கூறியதாயிற்று. கல்வியைக் கரை கண்டவர்க்கு, `யாதானும் நாடாம் ஊராம்` 1 என்பது ஈற்றடியாற் கூறியவாறு.
இதனால், வாகீசுவரி வழிபாட்டினால், மேன்மைச் சொல்லும், நிறைபுலமையும் உளவாதல் கூறப்பட்டது. மேன்மைச் சொல்லை, `நாவசைத்தால் நாடசையும்` என்று குறிப்பர்.

பண் :

பாடல் எண் : 21

பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம்
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

பொழிப்புரை :

இனி, `கௌம்` என்பதை முதலாகவும், `ஐம்` என்பதை இறுதியாகவும் கொண்ட சக்கரத்தின் பெருமையை நன்கு அறிந்து வழிபடுகின்றவர்கட்கு இவ்வுலகில் வெளிப்படையாய் வருகின்ற பகைவரும், மறைவாக நின்று புறங்கூறுபவரும் இலராவர். (நண்பரும், உறவினருமாய் நெஞ்சாரப் புகழ்கின்றவரே உளராவர் என்றபடி.) மேலும் பல்வேறு வகையினவாய உயிர்களும் இவனை எதிர்க்க வழியில்லாமல் பணிந்து நடக்கும். யான் சொல்லிய இவை மிகையாதல் இல்லை; உண்மையேயாம்.

குறிப்புரை :

`ஐம் அது ஈறாம் சக்கரம் நன்றறிவார்க்கு` என்பதனை முதலிற் கொள்க. `சொல்லிய மிகை இல்லை` என் மாற்றி, இறுதிக்கண் வைத்து உரைக்க. ``உரு`` என்றது, அவற்றோடு கூடிய உயிரை. அரிமா, புலி முதலிய கொடு விலங்குகள் பாம்பு முதலிய நச்சுயிர்கள் முதலிய பலவும் அடங்குதற்கு, ``பல் உரு`` என்றார். இவை `பணிந்து நடக்கும்` என்பதனால், தம் கட்டளைப்படியே நடத்தல் பெறப்பட்டது.
இதனால், மற்றொரு வகைச் சக்கர வழிபாட்டின் சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.

பொழிப்புரை :

மும்மலங்களால் வருந்துகின்ற பல உயிர்களுள் பக்குவம் எய்தப் பெற்ற உயிர்கள் சத்திதன் பெருமையை உணர்ந்து அவளை வணங்கும். அவ்வணக்கத்தின் பயனாக அவைகளைப் பற்றியுள்ள, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களும் நீங்கும். அவை நீங்கவே `அவற்றால் உண்டாகும்` என நூல்கள் சொல்லிய வினைகளும் இல்லையாம்.

குறிப்புரை :

``நலங்கிடும்`` என்றது உயிர்களின் பொது வியல்பு உணர்த்தியது. `காமம் முதலியவை கலங்கிடும்` எனவும், `வினை துளங்கிடும்` எனவும் முன்னே கூட்டி முடிக்க. முதலடி உயிரெதுகை; ஈற்றடி இனவெதுகை. `துலங்கிடும்` என்பது பாடமாயின், அதனை நேரே காமம் முதலியவற்றிற்கு முடிபாக்கி, `வினை கலங்கிடும்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், `சத்தியை இச்சக்கர வழியாக வழிபடுதல் பக்குவர்க்கே உண்டாம்` என்பதும் அதனால் அவர்க்கு உளவாம் பயனும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

பக்குவ முதிர்ச்சியால் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றைத் தானே திருத்தியமையவும், தான் ஆய்ந்துணர்ந்த வற்றைப் பிறருக்குச் செவியறிவுறுக்கவும் வல்லனாய், இறைவனது ஒப்பற்ற நடனத்தை எஞ்ஞான்றும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டுச் சமயத் தலைவனாயும் விளங்குவான்.

குறிப்புரை :

கழறுதல் - இடித்துத் திருத்தல். தணிதல் - அடங்குதல். நினைத்தல், இங்கு அதன் காரியம் தோன்ற நின்றது. எஞ்ஞான்று மாவது படைப்பிற்கு முன்னும், காப்புக் காலத்தும், அழிப்பிற்குப் பின்னும் எனவும், இடையறாமை எனவும் வரும் இரண்டுமாம். அவ்வாறு காண்பவள் சத்தியன்றிப் பிறர் இன்மையின் அவளை, `தனி நடம் தானே கண்டவள்` என்றார். எனவே, அவள், நடிப்பவனின் வேறல்லளாதல் உணரப்படும். படவே, அவளை வணங்குதலால் இப்பயன்கள் உளவாதல் தெளிவு. தானே வணங்குதல், பிறர் வலிசெய்ய வேண்டாது, தானே இயல்பால் வணங்குதல்.

பண் :

பாடல் எண் : 24

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

பொழிப்புரை :

தானே எல்லாமாய் நிற்கின்ற சத்தி, அனைத்துயி ராகியும் நிற்கின்றாள். எல்லாப் பொருள்களும் தம் தன்மையில் தாமேயாயும், சத்தியின் வியாபகத்தால் தம்மை ஈன்ற அவளாகியும் நிற்கும். ஆகையால் பக்குவன் அவளை வணங்கிய வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆகிய பயன்களை எய்துவான்.

குறிப்புரை :

`அம்மையும்` என்னும் உம்மையைப் பிரித்து ``அனைத் துயிர்`` என்பதனோடு கூட்டி, `ஆகிய அம்மை அனைத்துயிரும் ஆம்` எனவும், `சகலமும் தாமே ஆம், ஈன்ற அத் தையலும் ஆம்` எனவும், `ஆதலின் அவள் அடிபோற்றி வணங்கிடினே வினைகளும் போம்; புண்ணியன் ஆகும்` எனவும் கூட்டி உரைக்க. புண்ணியம், இங்கு தவம்.

பண் :

பாடல் எண் : 25

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் உலக முழுவதும், தவமிகுதியால் வரும் பெருமையுடையவானகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவர்க்கும் உரியவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

`பெருமை, தவத்தினாலாயது` என்பதும், `இனிமை அருளால் ஆயது` என்பதும் தோன்றுதற்கு வேறு வேறு தொடராக வைத்து ஓதினார். அமர்தல் - அமைதல். அமர்ந்திருத்தல், ஒரு சொல் நீர்மையது.
இவை மூன்று மந்திரங்களாலும் அவர்க்கு வரும் பயன்களே வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

தானது கம்இரீம் கௌமது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்திக்
கேனது! வையம் கிளரொளி யானதே.

பொழிப்புரை :

தானே சக்கரமாகின்ற முதலெழுத்து `க்ரீம்` என்பதும், ஈற்றெழுத்து `கௌம்` என்பதுமாக அமைகின்ற அந்தச் சக்கரமே ஞானத்தை விரும்புவார்க்கு நான் சொல்வது. அது சத்திக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற நல்ல சோலையாய் விளங்கும். ஆயினும், அதில் வேறறக் கலந்து நிற்கின்ற அவளுக்கு அஃது எதன்பொருட்டு வேண்டும்! உலகம் ஒளி பெற்று விளங்குவதே அதன்பயன்.

குறிப்புரை :

பல அக்கரங்கள் உள்ள சக்கரங்கள் முதற்கண் உள்ள எழுத்தின் சக்கரமாகவே கூறப்படுதலின், முதலெழுத்தை, `தான் அதுவாவது` என்றார். `க்ரீம்` என்பதை, `கம்` என்வும், `இரீம்` எனவும் செய்யுள் நோக்கிப் பிரித்து ஓதினார். `நான் சொல்வது` என ஒருசொல் வருவிக்க. `கன்னிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தலாயிற்று. `அது கன்னிக்குக் கான்` என்க. ஆதலுக்கு `அதனால்` என்னும் வினை முதல் வருவிக்க. ஒளியாவதும் ஞானமே. ``ஆனதே`` என்பதன் பின், `பயன்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்றனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின்
களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

இச்சக்கத்தில் நின்று ஞானத்தை வழங்குகின்ற சத்தி ஒருவனது உள்ளத்தில் நிலைபெறுவாளாயின், அவனது உள்ளம் அவனையும் அறியாமல் ஒரு களிப்பினை யுடையதாகும். தன் அடியவரைப் பல்லாற்றானும் நன்னிலையில் வைத்துக் காக்கின்ற இச்சத்தியது பெருமையை அறிந்து இவளை அடைகின்றவர்கட்கு இது பற்றிய ஆராய்ச்சியில் இதனைக் காரணங் காட்டித் தெளிவிப்ப தாகிய அருள்மழையுடன், பொருட் செல்வத்தையும் இவள் உண்டாக்குவாள்.

குறிப்புரை :

ஒளிக்கும் - ஒளியைச் செய்யும். களித்தலுக்கு, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றடியை இதன் பின் கூட்டுக. இச் சிந்தை - இது பற்றிய சிந்தனை. தெளிக்கும் மழை, கருணை மழை.

பண் :

பாடல் எண் : 28

அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே
எறிந்திடும் வையத் திடரவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.

பொழிப்புரை :

உண்மையை நோக்குமிடத்து, இங்கு அறியப் படுகின்ற இச்சக்கர வழிபாட்டினால் உலகத்துன்பங்கள் அழிக்கப் படும். பிணங்குகின்ற அரசனும் இணங்கி வணங்குதல் செய்வான். தீக்குணத்தை உடைய உள்ளம் அஃது இன்றித் திருந்தும்.

குறிப்புரை :

``எறிந்திடும்`` என்பது செயப்பாட்டு வினைப் பொருட்டாய் நின்றது. ``காணின்`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொறிதல், பொறியோடு கூடியதாய் இருத்தல். பொறி, தீப்பொறி. `புகையில்லையாம்` அஃதாவது, `தணிந்து குளிரும்` என்க. `அருச்சனை` என்பது பாடம் ஆகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 29

புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.

பொழிப்புரை :

மேற் சொல்லியவாறு தீக்குணம் அகலும்; முன்பு யோக நிலையிற் சொல்லிய பொன்போலும் உடல் ஒளியும் உண்டாகும். பகை யாதும் இல்லாமையால், அரண்தேட வேண்டுவ தில்லை. இப்பயன்களைப்பெற உலகருக்கு வகை இல்லை. தனக்கு மேல் ஒன்றில்லாத இச்சக்கர வழிபாட்டினை மேற்கொண்டவர்க்கே இவை கிடைப்பனவாம்.

குறிப்புரை :

தொடர்பு தோன்ற, ``புகையில்லை`` என அனு வதித்தார். ``குகை`` என்றது, `கரந்துறையும் இடம்` என்றவாறு. அஃறிணையும் அடங்க, ``கொல்வது`` எனப் பொருளாக வைத்துப் பொதுப்பட ஓதினார். கொல்வது, சாதி யொருமை. இதனைத் தொழிற் பெயராக வைத்து, `பாவம் இன்மையால் நரகம் இல்லையாம்` எனவும் உரைப்ப. ``சிகை`` என்று, மேல் உள்ளதனைக் குறித்ததாம். சிகை யில்லையாகிய சக்கரம் என்க. `சேர்ந்தவர்தாமே` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 30

சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

பொழிப்புரை :

இச் சக்கர வழிபாட்டினை மேற் கொண்ட வரிடத்தில் மிக விரைந்து எழுகின்ற உள்ளொளியாகிய ஞானம் உலகில் பலராலும் அறியப்படும். ஆதலின், ஆணவத்தால் விளையும் அறியாமையும், திரிபுணர்வும் கெடும். அதனால் இவர்கள் எட்டுத் திசைக்கும் விளக்குப்போல்பவரும், தம்மை வந்து வருத்துகின்ற ஆகாமிய வினை தோன்றப்பெறாதவரும் ஆவர்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `திசைக்கு` என நான்காவது விரிக்க. மாறுஒளி - திரிந்த உணர்வு. ``மாய்ந்தது`` என்பதை இதனோடும் கூட்டுக. முதலடி இனவெதுகை.
இவை நான்கு மந்திரத்தாலும் இச்சக்கர வழிபாட்டின் பயனே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளியது ஞானமும் சிந்தையும் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.

பொழிப்புரை :

ஒளியை உடையதாகிய `ஹௌம்` என்னும் பீசத்தை முதலிலும், `க்ரீம்` என்னும் பீசத்தை இறுதியிலும் கொண்ட, களிப்பைத் தருவதாகிய அச்சக்கரத்தின் உண்மையை நன்குணர்ந்த வர்கட்குத் தெளிவாகிய ஞானமும் தோன்ற, அதனை உள்ளமும் பற்ற, அதனால், அச்சக்கரம் எல்லா ஞானத்திற்கும் இடமாயுள்ள திருவைந்தெழுத்துமாய் விடும்.

குறிப்புரை :

கண்டறிதல், ஒருபொருட் பன்மொழி. தெளி, முதனிலைத் தொழிற்பெயர். \\\"தேற\\\" என்பது \\\"ஞானம்\\\" என்பத னோடு இயையுங்கால் `உண்டாக` எனப் பொதுமையில் நிற்பதாம். `பள்ளி` என்பது இடைக் குறைந்து நின்றது. பள்ளி - இடம். `பள்ளி யாகிய பஞ்சாக்கரம்` என்க. `பஞ்சாக்கரமதுவும்` என்னும் சிறப்பு உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் மற்றொரு வகையினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.

பொழிப்புரை :

`சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் மூன்று மாயைகளினின்றும் மூவகைக் கருவிகளைத் தருபவளாகிய சத்தி, அக்கருவிகளைப்பெறும் உயிர்களாய் நிற்றலே யன்றி, இச் சக்கரத்துள்ளும் இதுவேயாய் நிற்பாள்.

குறிப்புரை :

``ஆமே`` ஐந்தில் முதல் மூன்றும், இறுதி ஒன்றும் இச்சக்கரத்துள் நிற்றலையும், ஏனையது அது அதுவாதலையும், குறித்தன. சதாசிவ நாயகி - சதாசிவனுக்கு நாயகி; மனோன்மனி. அறிவானவள், வித்தியேசுரனுக்கு நாயகியானவள், வித்தியேசுவரி. சுவையொளி ஊறோசை கண்டவள், சீகண்டனுக்கு நாயகியாகிய உமை. அதோமுகம் - கீழிடம். இஃது இடவாகுபெயராய் அசுத்த மாயையை உணர்த்திற்று. இதனைக் கூறவே முன்னர்ச் சுத்த மாயையும், பின்னர்ப் பிரகிருதி மாயையும் கொள்ளக் கிடந்தன. ``சுவையொளி ஊறோசை``, ஆன்ம தத்துவம் அனைத்திற்கும் உபலக்கணம். பிரகிருதி மாயையில் ஆன்ம தத்துவத்தைக் கண்டமை கூறவே, அசுத்த மாயையில் வித்தியா தத்துவத்தைக் கண்டமையும், சுத்த மாயையில் சிவ தத்துவத்தைக் கண்டமையும் பெறப்பட்டன. காணுதல் - தோற்றுவித்தல் ஈற்றடியில், ``தன்னுள்`` என்றது, சக்கரத்துள் என்றவாறு. ``சட சித்துக்கள் அனைத்திற்கும் முதல்வியாய் நிற்கும் சத்தி இச்சக்கரத்தில் விளங்குவள்` என்றவாறு.
இதனால், `இச்சக்கரத்தின் தெய்வம் இது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 33

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் நின்றும், உலக முழுதையும் தன்னுடையதாகக் கொண்டும், என் உள்ளத்திலும் இருந்தும் எல்லாப் பொருளும் தன்னிடத்தில் அடங்க நிற்கின்ற சத்தி, பஞ்ச பூதங்களின் உள்ளும், என் கண்ணின் உள்ளும், உடம்பின் உள்ளும் காணக் கூடியவளாகின்றாள்.

குறிப்புரை :

கண்ணுட் காணப்படுதல் புறக்காட்சியாலும், உடம்புட் காணப்படுதல் அகக் காட்சியாலுமாம். ஆகவே `உயிர்களின் அகத்தும், புறத்தும் காணப்படுகின்ற இவளை நீவிரும் இவ்வழிபாட்டி னால் காண்பீராக` என்றதாயிற்று. பின்னிரண்டடிகள் இனவெதுகை.
இதனால் அத்தெய்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

காணலு மாகும் கலந்துயிர் செய்வன
காணலு மாகும் கருத்துள் இருந்திடில்
காணலு மாகும் கலந்து வழிசெயல்
காணலு மாகும் கருத்துற நில்லே.

பொழிப்புரை :

சத்தியின் துணையாலே உயிர்கள் செயற்பட்டு வரும் முறைகளை உணரலாம். `எப்பொழுது` எனின், அவள் உனது உள்ளத்தில் விளங்கும்பொழுது. அப்பொழுதே அவள் உயிர்களுக்கு உய்யும் வழியைச்செய்து வருதலையும் உணரலாம். ஆதலின், இவ்வுணர்வுகளைப் பெற நீ உனது உள்ளம் அவளிடத்திற்பொருந்தும் வகையில் நிற்பாயாக.

குறிப்புரை :

இரண்டாம் அடி நான்காம் அடிகளில் ``காணலுமாகும்`` என்றவை அனுவாதம். ``உயிர் செய்வன`` என்றது வினைவழி ஒழுகு தலையும், ``வழிசெயல்`` என்று பக்குவம் வருவித்தலையுமாம். கலக்கப்படுதல், கருத்துள் இருத்தல் முதலியவற்றிற்கு வேண்டும் `சத்தி` என்பது முன்னை மந்திரத்தினின்றும் வந்தியைந்தது.
இதனால், `அச்சத்தியை ஒருதலையாகத் தியானிக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

பொழிப்புரை :

சத்தியது தியானத்தால் ஏழுலகங்களில் ஒன்றைச் சுட்டியறியும் ஏகதேச உணர்வு நீங்கப்பெற்று, அனைத்தையும் ஒன்றாகக் காண்கின்ற வியாபக உணர்வு வரப் பெற்ற உயிர் அவ்வுணர்வானே தனது வியாபகத்தையும் உணர்வதாகும். அதனால், முக்குண வயப்படுதலும், வினைத் தொடக்கும் ஒழியும். அஃது ஒழியவே, அவ்வுயிர் மெய்ப்பொருளைத் தலைப்படும்.

குறிப்புரை :

`உள்ளம் - உயிர். வையம் எங்கும் கலந்து தானாகக் கொண்டிடும்` எனக் கூட்டுக. கொள்ளுதல் - அகப்படுதல்; என்றது அகப்பட்டிருத்தலை உணர்தலை. முக்குண வயப்படுதலினின்றும் நீங்குதலாவது, பிராரத்துவத்தை நுகர்தலும், அதனால் ஆகாமியத்தைச் செய்யாமையுமாம். ``வல்வினை`` என்று சஞ்சிதத்தை. `மூவினைத் தொடக்கும் அறச் சீவன் முத்தனாம்` என்றபடி, முதலடி இனவெதுகை.
இதனால், அந்தத் தியானத்தால் வரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

பொழிப்புரை :

சத்தி `அமுதேசுவரி` என்னும் பெயருடன், மெய்ப் பொருளை உணர்த்தும் `ஔம்` என்னும் பீசம் முதலாகவும், `ஹௌம்` என்னும் பீசத்தை ஈறாகவும் பொருந்திக் கைப்பொருள்போலத் தப்பாது பயன்தருகின்ற சக்கரத்தைத் தனது பொருளாகக் கொண்டு நன்மையைத் தருகின்ற ஒருபொருளாய் அதன் நடுவில் இருக்கின்றாள்.

குறிப்புரை :

நன்மை - பயன். இனவெதுகையும், ஆசெதுகையும் வந்தன.
இதனால், நவாக்கரி சக்கரத்தின் மற்றொரு வகையும், அதற்குரிய தெய்வமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 37

தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்திலே தனது திருவடி பொருந்த நிற்கின்ற அமுதேசுவரி வாசி யோகத்தால் வெளிப்படத் தோன்றும்படி பிராண வாயுவை அவள்பாற் கலக்கச் செய்யின், ஒவ்வொரு நாளும் புதுமைகள் பல தோன்றும். உடம்பும் அழிதலை யொழிந்து நிலை நிற்கும். ஆதலின், அங்ஙனம் செய்யப்படும் யோக முறையை வல்லார் வாய்க் கேட்டு, அதனை மேற்கொள்வாயாக.

குறிப்புரை :

`சமைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அமுதேசுவரி` என்னும் பெயரானே, அவள் `சகத்திராரம்` எனப்படு கின்ற சந்திர மண்டலத்தில் வீற்றிருந்து அமுதத்தைப் பொழிபவள் என்பது பெறப்பட்டமையின், வாளா, ``வீசிடில்`` என்றொழிந்தார். `அமுதேசுவரி கலந்துற, காலதுகொண்டு வீசிடில்` எனக் கூட்டுக. ``கேள் அது`` என்பதனை இறுதியில் வைத்து உரைக்க. காண், உம் அசைகள்.
இதனால், `அச் சக்கர தெய்வத்தை யோக நெறியாலே தலைப்படுக` என்பது கூறப்பட்டது. இரண்டாமடி உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 38

கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.

பொழிப்புரை :

பேரொளிப் பொருளாகிய அமுதேசுவரியை மேற்கூறியவாறு கண்டபின் காண விரும்பவேண்டுவது ஒன்றும் இல்லை; உடம்பிற்கு அழிவும் இல்லை. அழிவு இல்லாமையால், நாள் முதலிய பாகுபாடுகளையுடைய காலம் நீங்கினமையின், காலத்தோடு கூடியே தம் பயனைத் தருகின்ற இடப்பாகு பாடுகளும் இல்லையாம். இனி முற்கூறிய பேரொளியால் உயிரினது குறிக்கோள் பொருந்திய இடத்திற்குச் செல்லும் வழி நன்கு காணப்படுதலின், அதன்பின் அவ்வழியை மூடி மறைக்கும் வினைக்காடு இல்லையாம்.

குறிப்புரை :

``கிளரொளி கண்டபின்`` என்பது தாப்பிசையாய் இடை நின்றது. நாடு, முதனிலைத் தொழிற்பெயர். ``அற்றபின், கண்டபின்`` என்ற அனுவாதத்தால், அறுதலும், காணுதலும் தாமே பெறப்பட்டன. மாடு - பக்கம்; இட வேறுபாடு. செல்லுதலை ``வருதல்`` என்றது, இட வழுவமைதி. கருத்து - குறிக்கோள். `உற்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `உற்ற இடத்துக்கு வரும் வழி` என மேலே கூட்டுக. இதனுள்ளும் `காண், உம்` என்பன அசைநிலைகள்.
இதனால், மேற்கூறிய யோகக் காட்சியால் உளவாம் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 39

உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக்
கற்றிடமெல்லாம் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.

பொழிப்புரை :

கிளரொளியாகிய அமுதேசுவரியைக் கண்டபின் அக்காட்சி சலித்தற்குச் சிறிதும் இடனில்லாதபடி உறைத்து நில். நின் றால், காணப்பட்ட இடங்கள் யாவும் அழிவற்ற பாழாய், கற்ற நூல்கள் தாமும் வெற்ற வெளியாய் அவ்விடத்திற்குப் பயன் செய்யாதவை யாய்விடும். அங்ஙனம் ஆகாத இடங்களும், நூல்களும் இல்லை யாம். அதனால், அவளிடத்தினின்றும் விலகிச் செல்லுதற்கு ஏதுவே யில்லை. இனி, விலகிச்செல்ல, `தான்` என்று ஒரு முதலும் இல்லையாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில்வைத்து உரைக்க. `உற்ற, கற்ற` என்பவற்றது ஈற்று அகரம் தொகுத்தலாயின. உறுதல் - எதிர்ப்படுதல். பாழாதல், காட்சிப்படாதொழிதல். நூலை. `புலம்` என்பவாகலின், அதனை இங்கு ``இடம்`` என்றார். கடுமை - மிகுதி. கடு வெளி - வெளியாந் தன்மையை மிக உடையவெளி. `ஆகும்` என்னும் எதிர்காலம் துணிவுபற்றி இறந்தகாலமாயிற்று. ``மற்றிடம் இல்லை`` என எதிர்மறுத்தும் கூறினார், வலியுறுத்தற் பொருட்டு. ``வழியில்லை`` என்ற காரண மொழிக்கு, விலகுதலாகிய காரிய மொழி ``சலிப்பற`` என்பதனால் பெறப்பட்டது. தான் இலனாதலும், தன்னை உணரும் நிலை நீங்குதலேயாம்` சத்தியை ஒழித்துத் தன்னையும், பிறவற்றையும் உணரின் துன்பமாம் ஆதலின், வரம்பில் இன்பத்தில் அவை இலவாயின. `சற்றிடம் இல்லையாக` என ஆக்கம் வருவித்து உரைக்க.
இதனால், `மேற்கூறிய காட்சியில் அசைவற நின்று, பெரும் பயன் எய்துக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

பொழிப்புரை :

அமுதேசுவரியைச் சலிப்பின்றிக் காணின், நிலை பெற்றுள்ள ஏழ் கடல், ஏழ் நிலம் முதலியயாவும், அலைவின்றி நிலைத்த அவ்வுள்ளத்தில் நினைத்தவாறே ஆகும். முடிவாக கிளரொளி யாகிய அச்சத்தி ஒழிவின்றித் தன்னிடத்தில் நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி தாப்பிசையாய் முன்னும். பின்னும் சென்று இயைந்தது. ``புவி`` என்றது தீவுகளை. `நினைத்தவாறே ஆம்` என்றது, `அவற்றைக் காக்கவும், அழிக்கவும் அவற்றைத் தன் விருப்பப்படி பயன்படுத்தவும் வல்லனாம்` என்றவாறு. மேலை விளக்கொளி - மேற் கூறப்பட்ட விளக்கொளி; `மேலிடமாகிய சந்திர மண்டலத்தில் விளங்கும் விளக்கொளி` என்றுமாம்.
இதனால், அக் காட்சியின் பயன் வேறும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 41

விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

பொழிப்புரை :

விளக்கொளி போல்வதாகிய `ஸௌம்` என்னும் பீசம் முதலும், `ஔம்` என்னும் பீசம் ஈறும் ஆகி நிற்பின் அச் சக்கரம் விளக்கொளிச் சக்கரமாம். அது மெய்ப்பொருளாயே நிற்கும். எல்லா வற்றையும் விளக்கியருள்கின்ற ஒளியாகிய சத்தியை அச்சக்கரத்தில் விளக்கொளி வடிவமாகவே நீ கருதி வழிபடு.

குறிப்புரை :

காரணப் பொருளில் வந்த \\\"ஈறாக` என்பது \\\"ஆகும்\\\" என்பதனோடு முடிந்தது. மூன்றாம் அடியில் உள்ள விளக்கொளி, வினைத்தொகை. விளங்கிடு - அறிந்திடு. இங்ஙனங் கூறவே, இச்சக்கரத்தின்மேல் விளக்கை வைத்தலும் பொருந்துவதாயிற்று.
இதனால், நவாக்கரி சக்கரத்துள் ஒன்றன் முறைமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 42

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

பொழிப்புரை :

விளங்கி நிற்பதாக மேலைமந்திரத்திற் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை இன்னதெனக் கூறின், அது சிவ சத்தியேயாம். தானே விளங்குந் தன்மையுடையதும், மெய்ம்மையானதும், அறிவே வடிவாய் உள்ளதும் ஆகிய அந்தப்பொருளை உணர்பவர்களே ஞானம்பெற்றவராவர்.

குறிப்புரை :

மேலை மந்திரத்துள், \\\"மெய்ப்பொருள்\\\" எனவும், \\\"மின்கொடியாள்\\\" எனவும் வேறுவேறு போலக் கூறப்பட்டவை அங்ஙனமாகாது ஒன்றேயாதலை முன்னிரண்டடிகளில் விளக்கிப் பின் னிரண்டடிகளில் அப்பொருளின் சிறப்புணர்த்தினார். \\\"விளங்கிடும், வரும்\\\" என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, \\\"மெய்ப் பொருள்\\\" என்னும் ஒருபெயர் கொண்டன. \\\"மேல்\\\" என்றது மேல் நின்ற இடத்தை. `வந்த` எனற்பாலதனை, \\\"வரும்\\\" என்றதும், `தாமே` எனற்பாலதனை \\\"தானே\\\" என்றதும் வழுவமைதி. மெய்ம்மையும். ஞானமும் ஆதல் கூறவே. ஆனந்தம் ஆதலும் கொள்ளப்படும். சத்தி அஃறிணையாகவும் கூறப்படுதல் பற்றி எழுவாயை, `ஆனது` எனக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 43

தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகளமே.

பொழிப்புரை :

மேற்கூறிய மெய்ப்பொருளாகிய ச்ததி, தான் ஒருத்தியே பூதாகாயமாகி எங்கும் நிறைந்தும், பராகாயமாகி எல்லா வற்றிற்கும் மேலாகியும் நிற்பாள். தானே எல்லாப் பொருளையும் தோற்றுவித்து அழிப்பவளாவாள். தானே பலவாயுள்ள அண்டங் களையும் தனது வடிவமாக உடையவளாவாள்.

குறிப்புரை :

பூதாகாயமாய் நிற்கும் நிலைமை கூறவே, பராகாய மாய் நிற்கும் நிலையும் கொள்ளப்பட்டது. சகளமாய் நிற்பவளை, \\\"சகளம்\\\" என்றார்.
இவை இரண்டு மந்திரங்களாலும் அச்சக்கர தெய்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.

பொழிப்புரை :

அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சத்தியது தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில் பலர் மந்திரம் கிரியை பாவனைகளால் காண்பார்களாயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்கும் நிலையை அவர் அறிதல் இல்லை.

குறிப்புரை :

பரவெளியை அமைத்தமையாவது, தியானத்தானங் களாகிய ஆதார நிராதாரங்களை நிறுவினமை. `கண்டவள் குணம்` என இயைக்க. கண்டம் - வரையறைப்பட்டது. இங்கு, உடம்பு சத்தியைக் கிரியை முறையால் உணரும் உணர்வோடே அமைந்து, யோக முறையால் உணர்தலை மேற்கொள்ளாது ஒழிவாரை நோக்கி இவ்வாறு இரங்கிக் கூறினார் என்க.
இதனால், அச்சத்தியைக் கிரியை முறையால் வழிபடுதலோடு ஒழியாது, யோக முறையால் தலைப்படுதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார் சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

பொழிப்புரை :

சிவ சத்தி இருக்க அவளை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.

குறிப்புரை :

``கலப்பு`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், கலக்கப்படும் பொருளை உணர்த்திற்று. சிலைப்பு - ஒலிப்பு. செயற் படாதிருத்தலை, `பேசாதிருத்தல்` எனக் கூறும் வழக்குப் பற்றிச் செயற் படுதலை `ஒலிப்பு` என்றார். நாடுதல். அதன் காரியம் தோற்றி நின்றது. தலைப் பறி - தலையது நீக்கத்தை உடையது.
``கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணஙகோத் தலை`` 1
என்றதனை நினைவு கூர்க.
இதனால், சத்தியை அணுகாதவர் எய்தும் குற்றம் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.

பொழிப்புரை :

ஒன்ப தெழுத்துக்களால் இயல்பாக அமைந்த சக்கரத்தின் இயல்பைக் கூறின், நெடுக்காகப் பத்துக் கோடும், குறுக்காகப் பத்துக்கோடும் இட்டு, ஒன்பதிற்றொன்பது (9X9) எண்பத்தொன்றா கின்ற அறைகளை அறிவாயாக.

குறிப்புரை :

``மானே, தேனே`` என்பன மகடூஉ முன்னிலை. இதுவும் நூல் வழக்கு. ``மதி`` என்பதனை இறுதிக்கண் கூட்டுக. ``வரை, இரேகை`` என இருகாற்கூறி, நெடுக்கும் குறுக்கும் கொள்ள வைத்தார். ஈற்றடியில், `வானே கலந்த` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். இங்ஙனம் இச்சக்கரம் அமையுமாறு காண்க:-

பண் :

பாடல் எண் : 47

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே.

பொழிப்புரை :

மேற்கூறிய சகக்ரத்தின் இயல்பை இன்னும் சொல்லும்பொழுது, வெற்றியைக் கொண்ட அதன் வடிவமாகிய அறைகளின் நிறம் பொன்மை; அழுந்த இடப்பட்ட கோடுகளின் நிறம் செம்மை. ஞாயிற்றைப் போல ஒளிவிட்டு விளங்கும் சத்தி வடிவ மாகிய எழுத்துக்களின் நிறம் பச்சை.

குறிப்புரை :

அறைகள் சதுர வடிவினவாயினும் `சக்கரம்` எனப் படுதல் பற்றி, ``வட்டம்`` என்றார். மதி வட்டம், வினைத்தொகை. செம்மையில் -செம்மை நிறத்தில். என்று - சூரியன்.
இவை இரண்டு மந்திரங்களாலும் சக்கரவடிவு கூறப்பட்டது.
இவ்வடிவினைக் காண்க.

பண் :

பாடல் எண் : 48

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.

பொழிப்புரை :

பொருந்திய மர உரியில் (மரப் பட்டையில்) எழுதப்பட்டுப் பொருந்திய எழுத்துக்களை மேற்சொல்லிய எண்பத் தோர் அறைகளில் அடைத்த பின்பு, வெண்ணெய் அப்பொழுது காய்ந்து அடங்கியதனால் உண்டான நெய்யில் நன்கு ஆய்ந்த அரிசியால் முறைப்படி அடப்பட்ட சோற்றைக் கலந்து ஆயிரமுறை ஆகுதியால் ஓமம் பண்ணி வழிபடுங்கள்.

குறிப்புரை :

``ஏய்ந்த`` என்பது, ``மரம்`` என்பதனோடு முடிந்தது. `உரித்தற்குப் பொருந்திய மரம்` என்றபடி. `எழுதிய வாய் வாய்ந்த` என்க. ``பெண்`` என்றது சத்தியை. அது மேலை மந்திரத்திற் கூறிய வாறு அவளது வடிவாய் நிற்கும் எழுத்திற்கு ஆகுபெயர். `ஆய்ந்த` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. ``நூலாக் கலிங்கம்`` என்பதிற் போல, ``ஆய்ந்த`` என்னும் பெயரெச்சம் அவிக்குக் காரணமாகிய அரிசிக்கு உரித்தாய், ஒற்றுமை பற்றி அவிக்குப் புணர்க்கப்பட்டது. `ஆய்ந்த அவியை, காய்ந்து அவிந்த நெய்யுள் உடன் கலந்து ஆகுதி ஆயிரத்தால் ஓமம் பண்ணும்` எனக் கூட்டுக.
இதனால், இச்சக்கரத்தை வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென மேயநற் சொக்கனு மாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறையில் ஓமம் செய்து அச்சத்தியை நீ மெல்லப் பிடித்தால், கணக்கிட்டுக் கூறப்பட்ட நாள்களுக்குள்ளே நன்மை உண்டாகும். ஒமத்தைச் செம்மையாக வளர்த்தமையால், `பிரமனுக்கு நிகரான பிராமணனாயினான்` என்ற புகழை உலகத்தார் சொல்லும் அளவிற்கு இவ்வழிபாட்டில் சிறந்து நின்றபின், விரைவில் அவன் மிக உடல் அழகு பெற்றும் விளங்குவான்.

குறிப்புரை :

`பண்ணிய பொன்னை` என்பதும், `துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே` என்பதும் பாடம் அல்ல. எண்ணிய நாள், ஒருமண்டலம்; நாற்பத்தெட்டுநாள். இதனை வழக்குப் பற்றிக் கொள்ள வைத்தார். `நான்முகனோடு` என உருபு விரிக்க. சொக்கு - அழகன்.
இதனால், இவ்வழிபாடு பயன் தரும் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்திற்கு ஆகும் பொருள்கள், `சந்தனம், குங்குமப்பூ, மான்மதம், கண்ணேறு போதற்கு ஏதுவான கருஞ்சாந்து, சவ்வாது, புனுகுசட்டம், நெய், கோரோசனை, நீர்` என்னும் ஒன்பதுமாம். இவற்றை ஒருங்கு கூட்டி வைத்துக்கொண்டு வழிபாட்டினைத் தொடங்குவாயாக.

குறிப்புரை :

இவை ஆட்டுதல், பூசுதல், அணிவித்தல் முதலாக ஏற்ற பெற்றியாற் பயன்படுவன என்க.
இதனால், `இவ்வழிபாட்டிற்குச் சிறப்பாகவேண்டும் பொருள்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் வைத்துத் தியானிக்கப்படும் பொன் போன்றவளாகிய சத்தியுடன் பொருந்தத்தக்க சிறந்த வழிபாடு யாது என ஆராயின், சத்தியை மிக இளைவளாகவும், அவளுக்கு உரிய மந்திரம் இவ் எழுத்துக்களேயாகவும் கொண்டு, தேவிதன் ஆயிர நாமங்களால் ஆயிரமுறை அருச்சனை செய்தல் என அறிவாயாக.

குறிப்புரை :

`பொன்னுடன் பொருந்தும் மாதவம்` என ஒருசொல் வருவிக்க. `தைத்து` என்பது \\\"தச்சு\\\" எனப் போலியாயிற்று. கைச் சிறு - மிகச் சிறிய. தைத்தல் - உள்ளத்தில் பொருத்துதல். `சமைந்த இம் மந்திரம் இதுவாக` என மாற்றிக் கொள்க. இது, இந்நிலை; தேவி இளை யளாய் விளங்கும்கோலம். `ஆயிரம் ஆயிரம் எனச் சிந்தி` என்க. சிந்தி - சிந்தித்து உணர். இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.
இதனால், `இச்சக்கரத்தைத் தேவியது ஆயிர நாமத்தால் ஆயிர முறை அருச்சிக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன
பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு
முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.

பொழிப்புரை :

வழிபடுவோரது உள்ளத்திலே ஒளி விட்டு விளங்கு பவளாய், `க்லீம்` என்னும் பீசத்தை முதலில் வைத்துக் கணிக்க அங்ஙனம் கணிப்பவர்களது கண்முன் தோன்றிநின்று அருளுகின்ற சத்தியாகிய எம் தாயது ஆறு கைகளிலும் உள்ளவைகளில் படைகள் ஆவன, விடாது பறறிய `சூலம், பாசம், வில், அம்பு` என்பன.

குறிப்புரை :

ஏனை இருகரங்கள் அபயமும், வரதமுமாதல் நன் கறியப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. `எந்தை` என்பதும், `உள்ளது` என்பதும் பாடம் அல்ல. `இருமூன்றிலும்` என உருபு விரித்து, \\\"படை\\\" என்பதை அதன் பின்னர்க் கூட்டி உரைக்க.
இதனால், நவாக்கரிசக்கரத்துள் ஒன்றில் விளங்கும் சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.

பொழிப்புரை :

வழிபடுவோனுக்கு எதிரே மேற்கூறிய சக்கரத்தில் சக்கர தேவியைச் சூழ்ந்து ஒவ்வொருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் சூழ எண்மர் சத்திகள் இருப்பர். அவர்கள், கையில் வில்லும் அம்பும் கொண்டிருப்பர்.

குறிப்புரை :

அவ் எண்மர் வாமை முதலியோராவர். `அறுபத்து நால்வரும் எண் வகையாய் உள்ள எண்மர்கன்னிகள் இருந்தனர்`1 என்க. `இருந்த கரம் இரண்டில் வில் அம்பு கொண்டு` என்றவாறு. இருந்த அனைத்துக் கரம் நான்கு, `எதிர் சக்கரத்தே` என்பது முதலாகத் தொடங்கி, மேற்கூறியவாறு முடித்து, \\\"இருந்தனர் சூழ\\\" என்பதனை வேறு தொடராக்கியுரைக்க.
இதனால், மேற்கூறிய சத்தியது பரிவாரங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 54

கொண்ட கனங்குழை கோமுடி ஆடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவை
உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

பொழிப்புரை :

மணிகளால் கனமான குழை, அரசு முடி நல்ல ஆடை இவைகளை உடையதாய்க் காணப்படுகின்ற இவ்வடிவம் நெருப்புப் போன்றதாய் இருக்க, இயல்பாகவே பல இதழ்களை யுடைய விளக்கம் மிக்க தாமரைமலர் இருக்கையில் எழுந்தருளியிருக் கின்ற ஒருத்தி, தன்னை உணரவல்லவர்க்குத் தன் இருப்புத் தோன்ற நிற்பாள்.

குறிப்புரை :

படர்தல் - பலவாய் விரிதல்.
இதனால், அச்சத்தியது உருவச் சிறப்பு சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 55

உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
தணந்தெழும் சக்கரம் தான்தரு வாளே.

பொழிப்புரை :

உணர வல்லார்க்கு உள்ளவள் ஆகின்ற அச் சத்தியை உள்ளே உணர்ந்து காணின், அவள் எங்கும் தானாய்க் கலந்து அருள்மழையைப் பொழிவாள்; (எவ்விடத்திலும் அவ் அடியவ னுக்குத் தடையின்றி அருளுவாள் என்றபடி.) அவள் அங்ஙனம் அருளும்பொழுது அவளோடு கூடி இனிய ஓசையும், அழகிய ஒளியும் தோன்றும். அவளும் அச்சக்கரத்தினின்றும் வெளிப்பட்டு வருவாள்; வந்து, வேண்டும் வரங்களைத் தருவாள்.

குறிப்புரை :

ஓசையாவன தோத்திரங்களாலும், வாக்கியங்களாலும் ஆவன. இரண்டாம் அடி உயிரெதுகை.
இதனால், அச்சத்தி வழிபடுவார்க்கு முன்னின்று அருளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை அறுத்துப்
பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.

பொழிப்புரை :

மேலெல்லாம் `பேரொளி` எனச் சொல்லப்பட்ட சத்தி, வீடுபேற்றைத் தரும் வழியாகிய உண்மை ஞானம் ஆசிரியர் வழியாகப் பெருகும் செயலிடமாக விளங்கி நின்று, பிறவிக்கு ஏது வாகும் அவை தோன்றுகின்ற முறைமையை அழித்து, மேலான நெறி யாகிய அருளை வழங்குவாள்.

குறிப்புரை :

செயலை, \\\"குணம்\\\" என்றார். கணக்கு - வரையறை; நியதி.
இதனால் அவளால் ஞானமும் எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

பொழிப்புரை :

பொதுவாக, `பேரொளி` எனக் குறிக்கப்படுகின்ற, பெரிய ஒளிகட்கெல்லாம் பெரிய ஒளியாகிய சிவனது சிறப்புப் பொருந்திய ஒளியாய்த் திகழ்கின்றமையால் அவனுக்கு நாயகியாய், இயல்பிலே நீல நிறம் உடையவளாகிய சத்தி, பூமியின் நிறமாகிய பொன்னிறம் உடையவளாய்ப் பூமியில் எங்கும் நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஆகையால், அவளை இச்சக்கரத்தில் பொன்னிறம் உடையவளாகக் கருதுதலும் பொருந்தும்` என்பதாம்.
இதனால், அச்சத்தியது தியானத்திற்கு ஆவதொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

பொழிப்புரை :

உடம்பிற்கு வெளியே நீட்டியுள்ள இருகைகள் இரு தாமரை மலர்களை ஏந்தியிருக்க, உடம்பிற்கு உள்ளே அடக்கியுள்ள இரு கைகள் யாதும் ஏந்தாதே விளங்க, உயிர்கட்குத் தாயாகி அருளு கின்ற தனங்கள் முத்து மாலையும், பவழ மாலையும் உடையனவாக, உடுத்தியுள்ள ஆடை மிகச் சிறந்த ஆடையாய் மணிகளால் பொதியப்பட்டு அவள் மாட்டு இருந்தது.

குறிப்புரை :

``ஏந்தி`` என்பதனை, `ஏந்த` எனத் திரிக்க. `யாதும் ஏந்தாதவை` என்பதை விளக்க, ``கொய்தளிர்ப்பாணி`` என இயல்பு கூறி யொழிந்தார். அவை அபய வரதங்களாதல் இயல்பாக அறியப் பட்டது. ``பாணி, பவளம்`` என்பவற்றின் பின் `ஆக` என்பன வரு விக்க. பின்வரும் `ஆக` என்பதற்கு, `பொருந்த` என்பது பொருள். பொதிந்தன்று - பொதிந்தது. இதனுள் உயிரெதுகை வருக்க எதுகை களுடன் மூன்றாமெழுத்தெதுகை வந்தது.
இதனால், அவளது வடிவச் சிறப்பு வேறு சிலவும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 59

மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவ ளன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப்
பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.

பொழிப்புரை :

தலையில் இரத்தின கிரீடத்தை அணிபவளும் பாதத்தில் சிலம்பை அணிபவளும் ஆகிய இச்சத்தியையன்றித் `திருவருள்` என்பது வேறில்லை. ஆகவே, பிற தெய்வங்களின் மேல் செல்லும் அவா அடங்கித் தன்னை நினைப்பவர் நெஞ்சினுள்ளே தான் தனது இயல்பாகிய அருளோடு விளங்கிப் பின்னும் பலவாற்றால் தன்னை வழிபடுவார்க்கு அன்றோ இவள் மேலான கதியாயும் நிற்பாள்!

குறிப்புரை :

`தலையில்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. ``அணிபவள்`` என்பதை ``மணிமுடி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. தணிதலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``அணிபவள்`` முதலிய மூன்றனையும், `அணிந்தவர்` என்பது முதலாகப் பிறிது பொருள்படப் பாடம் ஓதுவாரும் உளர்.
இதனால், அவளது வடிவச் சிறப்புச் சில கூறி, அவளே பரகதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.

பொழிப்புரை :

இச்சத்தி, தன்னை வழிபடுவோனது உள்ளத்திலே நிறைந்திருந்து, அறுபத்து நால்வரும், எண்மரும் ஆகிய சத்திகள் மேற்கூறப்பட்டவாறு (1353) தன்னைச் சூழ்ந்திருக்க, பரந்த இரு கைகளில் இருதாமரை மலர்களையும் மேற்கூறியவாறு (1358) ஏந்தி, உயர்ந்தவர்கள் துதிக்கின்ற `ஷ்ரீம்` என்னும் பீசத்திற்குரிய திருமகளாய் நின்று செல்வத்தையும் அளிப்பாள்.

குறிப்புரை :

அறுபத்து நான்கில், `அறுபது` என்னும் பேரெண் ணினை மட்டுமே கூறி நினைவுறுத்தார். மேற்கூறியவைகளை மீளவும் நினைவுகொள்ளச் செய்தது, அவற்றை நன்கு தியானிப்பித்தற்கு. கரத்தல் - அடங்குதல்; கீழ்ப்படிதல். `கிரீம் ஆகிய தனம்` என்க. ``தனம்`` என்றது அதனைத்தரும் திருமகளை உணர்த்திற்று. இங்ஙனம் உணர்த்தி நிற்கக் கூறியது, வழிபடுபவனக்குச் செல்வத்தைத் தருதலை உணர்த்தற்கு. இச்சக்கரத் தலைவியாகின்ற சத்தி, இதன் ஒரு பகுதியாகிய ஷ்ரீம் ஆகிநின்று அருளுதற்கு ஐயமில்லை என்றவாறு. உயிரெதுகையும்,மூன்றாமெழுத்தெதுகையும் வந்தன.
இதனால், பரகதியாய் நிற்கும் அவள் செல்வத்தையும் தருதல் கூறி, ஐயமறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

தனமது வாகிய தையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கில்ஓ ராண்டில்
கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகர னாரிடச் செய்திய தாமே.

பொழிப்புரை :

சத்தியை `ஷ்ரீம்\\\' பீச வழிச் செல்வத் தலைவியாக வைத்து, மனம் பற்றித் தியானித்து வந்தால், ஓராண்டிற்குள் அம்மனம் செல்வத்தில் உள்ள பற்றாகிய சுமை நீங்கப்பெற்று, ஞான சூரியனாகிய சிவனிடத்திற் செல்லும் செயலை உடையதாகும்.

குறிப்புரை :

`ஸ்மரிக்கில்\\\' என்பது, \\\"மரிக்கில்\\\" எனத்தற்பவ மாயிற்று. `சுமை\\\' என்றது, வேண்டாததாதல் பற்றி. நேரே திருமகளை வழிபடுவார்க்கு மேலும் மேலும் அச்செல்வத்தில் பற்று மிகுமாகலின், அதனை விட வேண்டுவார் செல்வத்தின் பொருட்டும் சிவ சத்தியையே திருமகளாக வைத்து வழிபடல் வேண்டும் என்றவாறு.
இதனால், இச்சத்தி தரும் செல்வத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 62

ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

பொழிப்புரை :

பக்குவம் முதிர்தற்கு முதலாய் உள்ள மூலாதாரத் தாமரையினின்றும் வளர்ந்து செல்கின்ற மூலாக்கினி, சுவாதிட்டானம் முதலியமற்றை ஆதாரங்களில் உள்ள தாமரை மலர்களில் பொருந்திச் சென்று, அவற்றிற்கு மேலும் போகின்ற பூரண ஒளியாய் நிறைந்த பின்பு, அவ்வக்கினி யோகியின் உடம்பு முழுதுமான மண்டலமாய் நிற்கும்.

குறிப்புரை :

`அப்பொழுது மனம் பற்றற்றதாகும் ஆதலின், அம்முறையானே சத்தியைத் தியானிக்க\\\' என்பது குறிப்பெச்சம். `போகின்ற பேரொளி\\\' என்பது பாடம் அன்று.
இதனால், பற்றறுதியை விரும்புவார் சிவ சத்தியை வழிபட வேண்டுதல், மேலும், யோக நெறியால் வழிபடின், விரையப் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும்
ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.

பொழிப்புரை :

வழிபடுவோன் ஆக்கம் பெறுதற்கு ஏதுவாகிய இச் சக்கரத்தில் வீற்றிருக்கும் சிவசத்தி, மாதுருகாட்சரம் ஐம்பத்தொன்றும், வியட்டிப் பிரணவமாகிய சூக்கும அக்கரம் ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு அட்சரங்கட்கும் தலைவியாகிய முழுமுதல்வி. பிற சத்திகள் யாவரும் தனித்தனி இடங்களையுடைய அவற்றுள் ஒவ்வொன்றற்கே முதல்வியராவர்.

குறிப்புரை :

`ஆகவே, இச்சத்தியை வழிபட எல்லாப் பயன்களும் எய்தும்\\\' என்பதாம். `ஐம்பத்தாறு\\\' என்பது தொகைக் குறிப்பாய் அக்கரங்களை உணர்த்திற்று. ஐம்பத்தாறும் வகையேயாக, அவற்றின்வழி விரியாய்ப் பிறக்கும் எழுத்துக்கள் அளவில ஆதலின், \\\"ஐம்பத்தறு வகை\\\" என்றார். \\\"சத்தி\\\" என்பது அஃறிணையாய் ஒரு கால் பன்மையும் உணர்த்துமாதலின், \\\"ஐம்பத்தறு சத்தி\\\" என ஓதினார். நேர்தரல்,பொருந்துதல். சூழல் - இடம்; என்றது, சக்கர அறைகளை.
இதனால், சிவ சத்தியது முழுமுதல் தன்மையை விளக்கி மேலது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்க்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.

பொழிப்புரை :

அவளது அழகிய மேனி சுற்றிலும் ஒளி வீசி விளங்குவது. அதில் கேசாதி பாதம் அணியப்பட்ட அணிகள் முத்தாலாகியன. கீழ் இரண்டு கைகளில் கிளியும், ஞான முத்திரையும், உயர எடுத்த இரண்டு கைகளில் பாச அங்குசங்களும் விளங்கும்.

குறிப்புரை :

``மேனியும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``அழகிய மேனி`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பாசத்தைக் கூறவே, அங்குசமும் பெறப்பட்டது.
இதனால், வருகின்ற மந்திரத்திற் கூறப்படும் பயனுக்கு ஏற்புடைய வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

பாசம தாகிய வேரை அறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உம்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.

பொழிப்புரை :

சத்தியை மேற்கூறிய வடிவினளாக உங்கள் உள்ளத்தில் அன்போடு தியானியுங்கள்; துன்பங்கள் யாவும் ஒழியும்; ஐந்தாண்டிற்குள்ளே, பிறவிக்கு முதலாகிய மலங்களைப் போக்கி, `பூமியிலே காணப்படும் சிவன்\\\' என்னும் நிலையை நீங்கள் அடையச் செய்வாள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொள்க. வேராதல் பிறவிக்கு. `கண்ணுதலாகுமே\\\' என்பது பாடம் அன்று. மேல், (1361) `ஓராண்டில் தினகரனாரிடச் செய்தியதாம்\\\' என்பது சிவயோக சித்தியைக் கூறியதும் இது சிவமாந் தன்மைப் பெருவாழ்வைக் கூறியதும் என்க.
இதனால், பிறிதொரு பயன் பற்றிய வழிபாடு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

பொழிப்புரை :

அருட் சத்தியின் அருள் கிடைத்தற்குரிய வழியில் நாதமும் ஒத்து நிற்கும்படி நிற்க வேண்டில், சிவசோதி விளங்கும்படி சத்தியை வழிபடுதற்குரிய சக்கரம் ஹ்ரீங்கார சக்கரமேயாம்.

குறிப்புரை :

இச்சக்கரம் முன்னை யதிகாரத்திற் கூறிய புவனாபதி சக்கரமே. அதிகாரம் வேறாய வழியும் அதனைக் கூறியது, அதன்வழி நின்று அருளாகிப் பின் இங்குக் கூறிய சிவமாதலை எய்துக என்றற்கு. கண் - கண்ணோட்டம்; அருள்.
இதனால், ஒரு பயன்கருதி மேற்போந்ததொன்று மறித் துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 67

மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலால்
தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்துள் விளக்குப் போல ஒளி விட்டுத் தோன்றுகின்ற சத்தியை உள்ளத்திலே கண்டு, பின் இடை யறாது தியானித்திருங்கள். அத்தியானத்தில் அவள் மேலும் விளக்கு முற்று வருதலால், சுழுமுனையில் உள்ள ஆதாரங்களில் நிகழும் அனுபவங்களை நீங்கள் முறையானே பெற்று உயரலாம்.

குறிப்புரை :

விண்டு - தனது இயல்பைப் புலப்படுத்தி. தண்டு - முதுகந்தண்டு; அஃது ஆகுபெயராய்ச் சுழுமுனை நாடியை உணர்த்திற்று. `நவாக்கரி சக்கரங்களை முறையாக வழிபட யோகம் படிமுறையால் முதிர்ந்து பயன்தரும்\\\' என்றவாறு.
இதனால், நவாக்கரி சக்கர வழிபாட்டின் பயன் ஒன்று கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 68

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்
தோங்கி யெழுங்கலைக் குள்உணர் வானவள்
ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய நாதம் வலியுட னாகுமே.

பொழிப்புரை :

உந்தித் தானம் தாங்கியுள்ள தாமரை மலராகிய ஆதார சக்கரத்தினின்றும் வளர்ந்தெழுவதாகிய பிராசாத கலை களுக்குள் அறிவு வடிவாய் நிற்கின்ற சத்தி, பிராசாத யோகி வருந்தும் படி வருகின்ற அவனது பிறப்பை நீக்க எண்ணி, அங்ஙனமே நீக்குத லால், அவனைத் தன்வழிப்படுத்திவந்த நாதம் அவனது வழிக்குத் துணையாய் அவன் வயமாகும்.

குறிப்புரை :

உந்தித் தானச் சக்கரம், மணிபூரகம். அது மேதா கலைத் தொடக்கமாதலின் அதனையே பிராசாத கலை ஓங்கி எழும் இடமாகக் கூறினார். ஈற்றடியிற் கூறியது. மேல் (1366) ``நாதம் பகையற`` என்றதேயாதலை நோக்குக.
இதனால், மேற்கூறிய வழிபாட்டினால் வாசியோக மேயன்றிப் பிராசாத யோகமும் கைவருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம்
பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.

பொழிப்புரை :

நாதத்திற்குத் தலைவியாகிய வாகீசுவரி நல்ல மாணிக்கத்தால் ஆகிய ஆபரணத்தையும், ஆரத்தையும் அணிந்தவள். செந்தாமரை மலராம் இல்லத்திற்குத் தலைவியாகிய திருமகள் பொன் னாலாகிய முடியையும், ஆடையையும் கொண்டவள். பாடல் களுக்குத் தலைவியாகிய கலைமகள் பால்போலும் வெண்ணிறம் பெற்றவள். பசுக்களாகிய உயிர்கள் அனைத்திற்கும் தலைவியாகிய சிவசத்தி படைப்புக் காலந்தொட்டே இவரிடத்து இருந்து அருள் புரிகின்றாள்.

குறிப்புரை :

அவரவர் தோற்றப் பொலிவுகளை எடுத்துக் கூறியது, அவர்க்கிடையே உள்ள தார தம்மியங்களைக் குறிப்பாற் கூறி, சிவசத்தி அவர் எல்லாரிடத்தும் உள்நின்று பல செயல்களையும் ஏற்ற பெற்றி யால் அவர்வழி நிகழ்வித்தலை உணர்த்தற்கு. `அங்கமர்ந் தாளே\\\' என்பது பாடம் ஆகாமை அந்தாதிக்கு ஏலாமையான் அறியப்படும்.
இதனால், வேறு வேறு தேவியர் வழி பெறப்படும் பயன்களும் சிவ சத்தியால் தரப்படுவவேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 70

அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்தவர்க் காரணி காணுமே.

பொழிப்புரை :

பிரமசாரியாய் இருந்தபொழுது இரு கைகளிலும் இருந்தது பொருள்களின் இயல்பை அளந்து காணும் நூல் எழுதப்பட்ட சுவடி. யோகியாய்விட்ட இன்று இரு கைகளிலும் இருப்பது தூய கமண்டலம். இவ்வாறு படி முறையான ஆச்சிரம ஒழுக்கத்தில் நிற் பதையே இறைவன் நடனம் புரியும் அம்பலத்தை உள்ளபடி காணும் முறையாகக் கொண்டு, அங்ஙனமே கண்டு அங்கு இருப்பவரை அனைத்துக்கும் காரணியாகிய சத்திதான் கடைக் கணித்திருப்பாள்.

குறிப்புரை :

இருகைகளிலும் இருப்பனவாகக் கூறியது. அதனைப் போற்றிக் கொண்டமையைக் குறித்தவாறு. அம்பலத்தை உள்ளபடிக் காணுதலாவது, புருவ நடுவில் உணர்ந்திருத்தல்.
இதனால், சக்கரம் முதலிய சத்தி வழிபாட்டிற்கு ஒழுக்க முறை துணையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 71

காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் காரணியாகிய சிவ சத்தி, பிற சத்திகளாய்க் கன்னியராய் உள்ள ஐம்பத்திருவராய்ச் சக்கரங்களுள் மறைந்து தனது இயல்பான அருள் வெளிப்பட நிற்கின்றாள்.

குறிப்புரை :

``காரணி`` என்பன பலவும் சொற்பொருட் பின்வரு நிலையாய் நின்றன. சத்திகள் ஐம்பத்திருவராவார், ஐம்பத்தோர் அச்சக்கரங்கட்கும், ஓங்காரத்திற்கும் உரியவர் என்க.
இதனால், எந்த அக்கரங்கள் எந்த வகையில் அமைந்த சக்கர மாயினும் அதில் நின்று அருள்புரிபவள் சிவ சத்தியே என்பது உணர்த்து முகத்தால், நவாக்கரி சக்கரங்களும் அன்னவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 72

நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரத்தில் நிற்கின்ற சத்தி உங்கள் உள்ளத்தில் நிலைபெறும் வகையில் நீங்கள் ஒழுகினால், உங்களைக் கண்டுகொண்டிருந்த ஒளியாகிய சத்தி ஓராண்டில் உங்கட்கு வெளிப் படுவாள். அதற்குப் பின்னும் நீங்கள் அவ்வொழுக்கம் சிறிதும் குறையாதபடி கடைப்பிடித்து நின்றால், மேற்கூறிய அம்பலத்தில் நடிப்பவன் உங்கட்குக் காணப்படுவான்.

குறிப்புரை :

இதன்கண் இனவெதுகை வந்தது.
இதனால், உறுதியான ஒழுக்கம் படிமுறையில் பயனை மேன் மேலாகத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 73

கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டை அவாவுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.

பொழிப்புரை :

எல்லா உயிரையும் காண்கின்றவளும், எனது உள்ளத் தாமரையை இடமாகக் கொண்டு இருக்கின்ற மெய்ப் பொருளானவளும் ஆகிய இச்சத்தி, தொன்று தொட்டு வருகின்ற எனது `அவா` என்கின்ற பகையை அறுத்து அருள் செய்தற் பொருட்டே என் உள்ளத்தில் இனிது வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஆதலின், அவளை நீங்களும் உங்கள் உள்ளத்துள் இருக்கச் செய்தால் உங்கட்கும் அவ்வாறு அருள் செய்வாள்` என்பது குறிப்பெச்சம்.
``இன்பம் இடையறா தீண்டும் அவாஎன்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்`` 1
என்ப ஆகலின், அவாவே பெரும்பகையும், அதனைப் போக்குதல் முதற்பயனும் ஆயின. `அவா` என்பதன் ஈற்றில் ஓர் உகரம் கூட்டி ஓதினார். இதனை, `பண்டைய ஆயு` எனவும், `பண்டைய வாயு` எனவும் தாம் வேண்டுமாறே ஓதி, அவற்றிற்கு ஏற்ப உரைப்ப. இதனுள்லும் இனவெதுகை வந்தது.
இதனால், இச்சத்தி வழிபாடு ஆசையை அறச்செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 74

இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள்
கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் இருக்கின்ற இவளே எட்டுக் கைகளை உடையவளாயும், அக்கைகளில், `தாமரை மலர், கிளி, பாசம், மழு, வாள், எதிர்வரும் கருவியைத் தடுக்கின்ற கேடகம், வில், அம்பு` என்ற இவைகளை ஏந்தி வீரநடனம் புரிபவளாயும் விளங்குவாள்.

குறிப்புரை :

கைகளின் பரப்பை அவற்றில் உள்ள படைக்கலங்கள் மேல்வைத்து ஓதினார். `பரந்த இருநாலுகையில்` எனக் கூட்டினும் ஆம். உரம் இங்கு, வீரம். இதன்பின் உள்ள `தங்க` என்பதன்ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இவ் அடியில் மோனை ஈற்றயற்சீரின் இறுதி அசைக்கண் வந்தது.
இதனால், நவாக்கரி சக்கர சத்தியது மற்றொரு வடிவு வேறுபாடு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 75

உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய வீர சத்தி பச்சை நிறங்கொண்டவள்; பொன்முடியை விரும்பிக் கவித்தவள்; ஆரமாகப் பரந்த முத்துக் களையும், பவளங்களையும் அணிந்து, பட்டாடை உடுத்து, புடை பரந்த கொங்கைகளின்மேல் இரத்தினக் கச்சு அணிந்து, மிகவும் பொலிவுடன் விளங்குவாள்.

குறிப்புரை :

`தான் பச்சையாம்` என்பதை முதலிற் கொள்க. அவ்வாறின்றி முதற்கண் எழுவாய் வருவித்துரைத்தலுமாம். தான், மேற்கூறப்பட்டவள். `பச்சையம்மன்` என ஒரு தேவி தமிழ்நாட்டில் இருத்தல் இங்கு நினைக்கத்தக்கது. `பச்சையம்மாள், பச்சையப்பன்` என்னும் பெயர்கள் இவளை ஒட்டியே மக்களுக்கும் இடப்படுகின்றன. இது மூன்றாமெழுத்தெதுகை பெற்றது.
இதனால், மேற்கூறிய சத்தியது வடிவழகு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

பச்சை இவளுக்குப் பங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிருங் காப்பதாய்
எய்ச்ச இடைச்சி இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

பச்சை நிறம் உடைய இச்சத்திக்குப் பொதுமைப் பாங்கியர் நாற்பத்தெண்மரும், அணுக்கப்பாங்கியர் எண்மரும் சேர்ந்து பணிவிடை புரிந்து வருதலால், அவர்கள் எம்மருங்கும் பெரிய காவலாய் இருக்க இவள் பெருமையோடு வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

மேல் (1363) `ஐம்பத்தறு சத்திகள்` எனப்பட்டார் இங்ஙனம் நாற்பத்தெண்மரும், எண்மருமாய்ப் பிரிந்து நிற்கின்றார் என்க. எண்மர், முதற்கண்நிற்கும் அகாரத்திற்கும். இறுதி இரண்டெழுத் திற்கும் சூக்கும பஞ்சாக்கரத்திற்கும் உரியவராகக் கொள்ளுதல் பொருந்தும். கொச்சையார் - கொஞ்சிப் பேசும் சொற்களை யுடையவர். இப்பெயரும், ``கச்சணி கொங்கைகள்`` என்றதும் பாங்கிமார்களையே. ``கொங்கைகள்`` என்ற பன்மை மகளிர் மேலது. கை - பக்கம்; என்றது திசைகளை எனவே, எட்டுத் திசைக்கும் எண்மர் உளர் எனவும், ``ஆறெட்டு`` என்றதனால், `அவருள் ஒருத்திக்கு அறுவர் துணை, யாவர்` எனவும் கொள்க. `எய்த்த` என்பது ``எச்சை`` எனப்போலியாயிற்று.
இதனால், இச்சத்தி தனது முதன்மை தோன்ற வீற்றிருக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 77

தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

பொழிப்புரை :

நாவடியில் பொருந்திய ஒளிவடிவாய் விளங்கு கின்ற சத்தியைப் பிராண வாயுத் துணையாக, `கம், ஜம்` என்று செபிக்கும் செபத்தால் தலைப்பட்டு அன்போடு வழிபட்டு, அதன் பயனாக மிக்க ஒளியுடைய உடம்போடு வானத்தில் இயங்கும் (ஆகாய கமனம் செய்யும்) ஆற்றலைப் பெறுவாயாக.

குறிப்புரை :

அந்தாதி நயம் வேண்டி, சிறுபான்மை லகரத்திற்கு ளகரம் போலியாகும் முறைமையை மேற்கொண்டு. `தாலது` எனற் பாலதனை, ``தாளது`` என ஓதினார். `கம்` என்பதும் ஆகாயத்திற்குரிய பீசமாகும். `ஜம்` என்பது ஜகத்துக்குத் தலைவியாம் ஜகதா தேவிதன் பீசம். இவற்றைச் செபித்து இவளை வழிபடவே வான்வழி இயங்கும் ஆற்றல் உண்டாவதாம். `ஜம்` என்னாது, `ஐம்` என்ப பொதுப்பட ஓதுதல் பாடமாகாது. இனி, `கம்ஜம்` என்பதன் கருத்து அறியாதார். `கலந்து கொள்` எனப் பாடம் வேறாக ஓதுவர். மிக்க ஒளியது நிறம் வெண்மையாகலின், ``பாலதுபோலப் பரந்து`` என்றார். முதலடி இனவெதுகை.
இதனால், இச்சத்தியை ஒரு சிறப்புப் பயன் கருதி வழிபடும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 78

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக் கண்ணமர் கூபம் கலந்து வருதலால் பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.

பொழிப்புரை :

நன்கமைந்த சூரிய மண்டலமானது பிராணவாயு கும்பிக்கப்பட்டுத் தங்கியிருக்கின்ற, கொப்பூழின் அடியாகிய சுவாதிட் டானத்திற்கும், இருதயத்திற்கும் இடைக்கண் உள்ள மணிபூரகத்திலும் கலந்து நிற்றலால், குளிர்ச்சியுடைய அந்த மணிபூரகமும் சிறந்து நிற்கின்றது.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. ``ஆங்கு`` என்றது, `அவ்விடங்கட்கு` எனப் பொருள்தந்தது. சூரியமண்டல மாவது, `மணிபூரகம், அநாகதம்` என்னும் இரண்டு ஆதார எல்லைக் குட்பட்ட பகுதி. அஃது அன்னதாதலாலே நீர்மண்டலமாய் உள்ள மணி பூரகமும் சிறப்பதாயிற்று` என்றவாறு. நீர்மண்டலமே இன்னதாயிற்று என்றதனால், பிற மண்டலம் அதனால் சிறப்படைதல் கூறவேண்டா வாயிற்று. `ஞாயிற்று மண்டலத்தாலே யாவும் நலமுறுகின்றன` என்றவாறு. இங்ஙனமாகவே மேற்கூறியவாறு வானில் இயங்கும் வன்மை பெற்றவர் நலம்பல எய்துவர் என்பதாம். நீர்மண்டலமாயதை, ``கூபம்`` என்றார்.
இதனால், மேற்கூறிய பயனைப் பெற்றாரது சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாபத் தறுக்கப் பரந்தன சூலமே.

பொழிப்புரை :

சூரிய மண்டலத்துச் சத்தியின் கூறு மணிபூரக சத்தி யோடு கலந்து நிற்றலால், மணிபூரக சத்திக்குப் பத்து முகங்கள் உள்ளன வாம். பத்து முகங்கள் உளவாகவே கைகள் இருபது உள்ளன. பாபத்தை அறுப்பது சூலம் ஆதலால், சூலங்கள் பல கைகளில் உள்ளன.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. `ஆபத்தைப் போக்குகின்ற கைகள்` என்க. `பாபத்தை` என்னும் ஐகாரம் தொகுத்தலாயிற்று. `பாசம் அறுக்க` என்பது பாடம் அன்று.
இதனால், ``தழைத்தது`` என மேற்கூறிப்பட்ட ஆதாரத்தில் விளங்கும் சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 80

சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம்
வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

பொழிப்புரை :

மேற்கூறிய சத்திதன் கைகள் இருபதில் மேற்கூறிய வாறு பல சூலங்களுடன், `தண்டு, வாள், நெருப்பு, மேலான ஞான மாகிய வேல், அம்பு, தமருகம், கிளி` வில், செண்டு, தாமரை மலர், பாசம், மழு, கத்தி, சங்கு என்பன உள.

குறிப்புரை :

சுடர், ஆகுபெயர். குவிந்த - குவிந்தன; சேர்ந்தன. `கை எண்ணதில் சேர்ந்தன` என்க. எண் - தொகை. சூலமல்லாது இங்குக் கூறப்பட்டவை பதினான்கு. அபயமும், வரதமும் இயல்பாக உள்ளன. ஆகவே, எஞ்சிய நான்கு கைகளிலும் சூலமே உளவாதல் மேலை மந்திரத்தால் பெறப்பட்டது. செண்டு, ஓர் ஆயுதம். `கொண்டு` என்பது பாடம் அன்று. இரண்டாமடியில் முதல் இரு சீர்களை வகையுளி செய்து கொள்க.
இதனால், மேற்கூறிய சத்தியின் கைகளில் உள்ளவை கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 81

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராய்
எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.

பொழிப்புரை :

தியானத்திற்குப் பொருந்திய சுவாதிட்டானம் முதலிய நான்கு ஆதாரங்களில் உள்ள தாமரையிதழ்கள் நாற்பத்து நான்கில் அமர்ந்திருக்கும் நாற்பத்து நான்கு சத்திகளோடும் தானும் நாற்பத்து நான்கு சத்தியாய் அந்த நாற்பத்து நான்கு இதழ்களிலும் வீற்றிருக்கின்ற சிவ சத்தி, அவ்வாதாரங்களில் வைத்துத் தியானிக் கின்ற தியானத்தைக் கடந்தவளாவாள்.

குறிப்புரை :

`அஃதாவது, ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் இருப்பவள்\\\' என்பதாம், எண் - எண்ணம்; முதனிலைத் தொழிற் பெயர். அஃது எண்ணத்திற்கு உரிய இடத்தை உணர்த்திற்று. \\\"சத்திகள்\\\" இரண்டில் முன்னது, சத்திகளைப் பெற்று நின்றவரைக் குறித்த முகமனுரை. அவர்களை அஃறிணை போலவே கூறியதும் இதுபற்றி. மேல் நிலத்தில் உள்ள சத்தி, கீழ்நிலங்களில் உள்ள தெய்வங்களிடமாக நின்று அருள்புரியும் முறை கூறியவாறு.
இதனால், இச்சக்கர வழிபாட்டில் நிகழும் பல தியானங் கட்குப் பயன் தருபவள் சிவசத்தியாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப்
படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

பொழிப்புரை :

கீழ் நிலங்களைக் கடந்து மேல் நிலத்தில் இருப் பவளாகிய அச் சத்தி அடியவர் பொருட்டு, தலையிற் கவிக்கும் முடி பொன்னால் இயன்றதும், காதில் அணியும் தோடு மாணிக்கத்தால் இயன்றதும், கழுத்து முதலியவற்றில் தொடரப் பொருந்திய அணிகள் முத்துக்களால் இயன்றனவும், கச்சுப் பவளத்தால் இயன்றதும், அரையில் உடுத்திய உடை பட்டினால் இயன்றதும், பாதத்தில் அணிவது சிலம்புமாக, இளம் பெண்ணாய்க் கீழ் நிலங்களிலும் வந்த நிற்கின்றாள்.

குறிப்புரை :

``பொன் முடி, மாணிக்கத்தோடு`` முதலியவற்றை. `முடி பொன், தோடு மாணிக்கம்` முதலியனவாக மொழிமாற்றி, எல்லா இடங்களிலும் `ஆக` என்பதை இயைத்துக் கொள்க. `அல்குல் ஆடைபட்டு` எனக் கூட்டுக. பாதம் ஆகுபெயர். ``மடந்தை சிறியவள்`` என்பது இருபெயரொட்டு. `சிறியவளாய்` என ஆக்கம் வருவிக்க. சிறியவள், வாலை. ``சிறியவளாய்`` என்பதை, `சிறீயினில், குமீறியில், கமீறியில்` என்பனவாக வேறு வேறு ஓதி, `அவ்வப் பீசாக்கரத்தில் வந்து நின்றாள்` எனவும் பொருள்கொள்வர். கும் - க்ரோம்.
இதனால், மேலைச்சத்தி கீழ் நிலங்களில் இளையவளாய் நிற்றலும், அவளது வடிவமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 83

நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.

பொழிப்புரை :

படிமுறையால் மேருவின்மேல் ஏறிச் சென்று, முடிவாகப் பார்க்கின்ற அதன் உச்சியில் அணிமா ஆதி அட்ட சித்திகளும் கைவந்தவனாய் நின்று, பழைய வெளியிடத்தில் உள்ள புறக் கவர்ச்சிகளை ஒதுக்கித் தள்ளி அவ்விடத்தில் பொருந்திய ஒளியை உணர்ந்து நிற்பவனுக்கு, மேற் சொல்லிய சத்தி இடையறாது உடன் நிற்றல் உளதாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகச் சென்று, ``உண்டாம்`` என்பதனை முதலடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. இதன்கண் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய சத்தி, என்றும் உடனாகப்பெறும் பயனைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.

பொழிப்புரை :

சதாசிவனது சத்தியாகிய சதாசிவைக்கு (அவனைப் போலவே) யாவரும் காண உள்ள முகங்கள் ஐந்து. எனினும், ஆறாவதாக அதோமுகம் ஒன்றும் (அங்ஙனமே) உண்டு. மேலான அந்தமுகமே, மேல் ``சிறியள்`` (வாலை - 1382) எனப்பட்ட சத்தி. இனிச் சதாசிவைக்கு முகம் ஆறானதற்கு ஏற்பக் கரங்களும் ஒருமுகத்துக்கு இரண்டாகப் பன்னிரண்டு ஆயின.

குறிப்புரை :

``சதாசிவ நாயகி கொண்ட முகம் ஐந்து`` என்பதனை முதலில்வைத்து. அதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. `உத்தம மான அது` என்பதில் ஓர் அகரமும், `அதுவே` என்னும் ஏகாரமும் தொகுத்தல் பெற்றன. ``கொண்ட`` என்பதற்கு. `யாவரும் அறியக் கொண்ட` என்பது ஆற்றலால் வந்தது. `ஒன்றுக்கு` என நான்கவாது விரிக்க.
மூன்று நால் - பன்னிரண்டு ஈற்றடி எண்ணலங்காரமாயும் நின்றது. இரண்டாம் தந்திரத்துள், `சிவனுக்கு அதோமுகம் ஒன்று உண்டு` என்பதும், `அதுவே நிலவுலகத்தார்க்கு முருகன் முதலாக வந்து அருள் புரிவது` எனவும் கூறியவாறே 1 இங்கும் கூறப்பட்டமை நோக்கத் தக்கது. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், மேல் நிலச் சத்தியது முழு நிலையின் பகுதியே கீழ் நிலத்திற்கு வந்து அருளுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 85

நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.

பொழிப்புரை :

சதாசிவையின் கைகளில், `நல்ல ஒலியை எழுப்பு கின்ற மணி, சூலம், கபாலம், கிளி, பாம்பு, மழு, கத்தி, பந்து, தாமரை மலர், தமருகம்` என்னும் இவைகள் இருத்தலாலும், பொன்னாலும், மணியாலும் ஆகிய அணிகலன்கள், மாலைகள் என்பவற்றை அவள் அணிந்திருத்தலாலும் அவனது கூறாகிய சத்திகளது வழிபாட்டிலும் இவை கொள்ளப்படும் பொருள்களாயின.

குறிப்புரை :

``பன் மணி`` என்றது நாகத்திற்கு அடை. `ஆகும் தாமரை` என இயையும். ஆகும் - ஏந்துதற்குப் பொருந்திய, கன்மணி தாமரை - மாணிக்கக் கல்போலும் செந்தாமரை மலர். மணி முதலிய பத்துடன், அபயமும், வரதமும் கூடக் கைகள் பன்னிரண்டாதல் அறிக. பூணும், ஆரமும் மேனியில் அணியப்படுவன. `பூசனை யானதே` என்பது பாடம் அன்று.
இதனால், மேற்கூறிய சத்திகள் பலரது வடிவுகள் அவ்வாறானமைக்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 86

பூசனைக் கன்னிகள் எண்ணைவர் சூழவே
நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவர்
மாசடை யாமல் மகிழந்திருந் தார்களே.

பொழிப்புரை :

நவாக்கரி சக்கரங்களின் அடியில் சதுரமாய் உள்ள `பூபுரம்` என்பதின் நான்கு மூலைகளிலும் ஒரு மூலைக்குப் பதின் மராக, வழிபடுதற்குறிய நாற்பதின்மர் தேவியர் சூழப் பொருந்தி யிருப்பவர்கள், அருள்வடிவாகிய சிவசத்திக் கூறுகள் தங்களிடம் சேர்ந்திருத்தலாலே, இடையூறின்றி, மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`கன்னிகள், சத்திகள்` என்பவற்றை அடிமாற்றி ஓதுதல் பாடமன்று. ``காசினிச் சக்கரத்துள்ளே`` என்பதை முதலில் வைத்தும், ``கலந்தவர்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டியும் உரைக்க.
இதனால், நவாக்கரி சக்கரங்களின் பூபுரத்தில் தேவியர் பலர் இருத்தல் கூறப்பட்டது. ``நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதா - மாசடையாமல் மகிழ்ந்திருந்தார்களே`` என்றது, இவர்கட்கும் சிவசத்தியது அருள் இன்றியமையாததனை நினைவுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 87

தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட
ஏரது ஒன்றி எழுந்த மனோமயம்
காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.

பொழிப்புரை :

மேற்கூறிய பூபுர தேவியர்பால் விளங்குகின்ற ஒளிவடிவான சிவசத்தியை உடன்பின் அகத்திலே ஆதாரங்களில் தியானிக்கின். எழுச்சி பெற்றுப் புற விடயங்களின் மேல் செல்லுகின்ற மனம், நிலத்திற் கலந்த நீர் அந்நிலத்தின் தன்மையதே ஆனாற் போலத்தியானிப்போனது தன்மைக்கு மாறாகாமல் அவனோடே பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

தாரம் - ஆதாரம், இது மேற்கூறிய சக்கரங்களுக்கு உரியதாயப் பூபுரத்தைக் குறித்துப் பின் அவற்றில் உள்ள தேவியர்களைக் குறித்தது. பாரம் - பருவுடல். ``பரந்து`` என்பதை, `பரக்க` எனத் திரிக்க. `மண்ணிலே காரது போலக் கலந்தெழும்` என மாற்றிக் கொள்க. கார் - மேகம்; அது நீருக்கு ஆயிற்று. `தாரம் மூலாதாரம்` எனவும், `சோதி அதன் கண் உள்ள தீ` எனவும் கொண்டு, `யோகமுயற்சியால் மனோலயம் உளதாம்` என்பதே இம்மந்திரத்திற்குப் பொருளாக உரைப்பாரும் உளர். அது, மேல் பலவிடத்துங் கூறப்பட்டதன் மேலும், இவ்விடத்திற்குச் சிறிதும் பயனுடைத் தாகாமை அறிக.
இதனால், இச்சக்கர வழிபாட்டில் சிவ சத்தியை மறவாமை வேண்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 88

மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

பொழிப்புரை :

பிருதிவி மண்டலமாகிய மூலாதரத்தினின்று பிரணவமாகிய சூக்கும எழுத்தாய்ப் புறப்பட்ட நாதம், பின் வளர்ச்சி யுற்று ஆகாச மண்டலமாகிய ஆஞ்ஞையில் `சிவாய நம` என்னும் தூல எழுத்தாய் வெளிப்பட்டு, அதற்குப் பின் கண்ணில் ஒளி வடிவாயும் என்னிடத்துப் பதிந்து நின்றது. ஆதலின் ஒளிக்காட்சி ஒருவராலும் காணப்படாதது அன்று; மற்றும் அது தன்னைக் காணுலுறுவார்க்குக் காட்சி தரவேண்டும் என்றே முன் வரும் இயல்புடையது.

குறிப்புரை :

`விண்ணில் சிவாய நம என்று எழுந்து கண்ணில் எழுந்தது` என்க. பூபுர சத்திகட்கு உள்ளாயிருக்கும் சிவ சத்தியது காட்சி நாத தரிசனத்தின் வழிக் கூடும் என உணர்த்தியவாறு. தோற்ற முறைபற்றி, `அகார உகார மகாரம்` என்றலேயன்றி, ஒடுக்கமுறை பற்றி `மகார உகார அகாரம்` என்றலும் கூடுமாதலின், `மகாரம் உகாரங்கள்` என்றார். மோனை நயம் வேண்டாது, `அகார உகாரங்கள் ` என்றேயும் பாடம் ஓதுப. கொல், அசை.
இதனால், மேல், ``தாரத்தினுள்ளே தயங்கிய சோதி`` எனப் பட்ட சத்தியைத் தரிசிக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

என்றங் கிருந்த அமுத கலையிடைச்
சென்றங் கிருந்த அமுத பயோதரி
கண்ட கரம்இரு வெள்ளிபொன் மண்டைவாய்க்
கொண்டங் கிருந்தது வண்ண அமுதே.

பொழிப்புரை :

சூரிய மண்டலமாகிய விந்துத் தானத்தில் உள்ள சிவசத்தி, தன்னிடத்தில் காணப்படும் கரங்களில் இரண்டில் வெள்ளி யாலான மண்டையிலும், பொன்னாலான மண்டையிலும் வைத் திருப்பது அழகிய அமுதமே.

குறிப்புரை :

`அதனை அவள் அடியவர்க்கு அள்ளிவழங்குவாள்` என்பது குறிப்பு. விந்துத் தானத்தில் அமுதம் உளதாதல் பற்றி அதனை ``அமுத கலை`` என்றார். `தானம் அமுதம்; தானும் அமுத பயோதரி; அவற்றுக்குமேல் அவள் இரு கைகளில் அமுத பாத்திரத்தைக் கொண்டுள்ளாள்; அவள் தன் அடியவர்க்கு அமுதத்தை வழங்கத் தடை என்னை` என்பது நயம். `கரத்தில்` என உருபுவிரிக்க. `இரு மண்டைவாய்` என இயையும். அமுதத்திற்கு அழகு வெண்மை. இஃது இன எதுகை பெற்றது.
இதனால், ஆஞ்ஞையில் உள்ள சத்தியை அடைவோர் அமுதுண்ணப் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 90

அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுமும தாகிய கேடிலி தானே.

பொழிப்புரை :

ஆம்பல் போலும் வாயிடத்துக் குளிர்ந்த முத்துப் போலும் நகைபொருந்தி விளங்கும் அந்நிலையினளான, அழிவற்ற அச்சத்தி, தன் அடியவர்க்குச் சந்திர மண்டலத்து அமுதம் உளதாகும் படி தனது அழகிய மேனி படிகம்போல்வதாகக் கொண்டு அவர்தம் அகத்தே நிறைந்து விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. குமுதமும், முத்தும் உவம ஆகுபெயர்கள். கெழுமுதல் - பொருந்துதல். ``அது`` நான்கில், முன்னைய மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள்; இறுதியது `அந்நிலை` என்னும் பொருட்டு. `கெமுதமுது` என்பது பாடம் அன்று. நான்காமடி மூன்றாமெழுத்தெதுகை பெற்றது. இரண்டாமடியும் அன்னதுபோலும்!
இதனால், அச்சத்தி அவர்க்கு அமுதம் வழங்குமாறு கூறப் பட்டது. இதனுள் அவளது திருக்கோலமும் உடம்பொடு புணர்த்தலால் கொள்க.

பண் :

பாடல் எண் : 91

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
பூவிலி பூவித ழுள்ளே யிருந்திவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

பொழிப்புரை :

வியட்டியாய் நின்ற சிவ சத்திகள் முப்பத்தறுவரும், அவரைத் தேட வேண்டாது தம்மிடத்தே பொருந்தப் பெற்ற தேவியர் முப்பத்தறுவரும் ஆகப் பூபுரத்தை யிடமாகக் கொண்டு விளங்கும் தாமரைமலர்களின் இதழ்களில் உள்ள இவர்கள் நாள் வரையறையின்றி எந்நாளும் வழிபடுகின்ற அடியவன்பால் பொருந்தி நிற்பார்கள்.

குறிப்புரை :

``முப்பத்தறுவர்`` எனவே, இவர்கள் தத்துவங்களைச் செலுத்துவோராதல் பெறப்படும். படவே, இவர்களது விளக்கத்தைப் பெற்றோன் தத்துவத் தொடக்கின் நீங்குதல் விளங்கும். பின்னிரண் டடிகளில் உயிரெதுகை வந்தது.
இதனால், நவாக்கரி சக்கர வழிபாட்டை வாழ்நாளளவும் செய்ய, மாயைத் தொடக்கு நீங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.

பொழிப்புரை :

இயல்பாக உள்ளத்தில் உள்ள, நிரம்பிய விளக் கொளியாகிய சத்தி, நவாக்கரி சக்கரத்தில் கட்புலனாம் விளக்கொளி யாய் விட்டது. இனி அவ்வொளி உள்ளத்திலும் தோன்றி விளங்குதற்கு வேண்டப்பட்ட காலம் ஓராண்டு. அப்பயன் கைக்கூடுதற்குத் துணை யாகவே மேற்கூறப்பட்ட ஔகாரம் முதலிய பீசாக்கரங்கள் அச் சக்கரத்தில் விளங்கி நிற்கின்றன.

குறிப்புரை :

`நின்றதாகிய வன்னி` என இயையும். வன்னி, ஆகுபெயர். `கண்டதாகிய சோதியாயிற்று` என்க. கொண்டது. வேண்டப்பட்டது. `ஔகாரம்`` என்றது, `அது முதலாகிய அக்கரங்கள்` எனப் பொருள் தந்தது. `கூடி வருகைக்கு அவை விளங்கின` எனவே, ஓராண்டுக் காலம் அவற்றைக்கணிக்க` என்றதாயிற்று. முதலடி இனவெதுகை.
இதனால், அவ்வழிபாட்டினை ஓராண்டுச் செய்வார் பெரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 93

விளங்கிடு வானிடை நின்றவ ரெல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.

பொழிப்புரை :

ஒளிவிட்டு விளங்குகின்ற வானுலகத்தில் உள்ள தேவர் யாவரும் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரம் மக்கள் உள்ளத்தில் நிலைபெற்ற பின் அதனால் உண்டாகும் இன்பம் மிகுகின்ற நன்மைகள் பரம பதத்தில் இருக்கும் மாயோனுக்கு உள்ள நன்மைகளை ஒக்குமாயின், அவற்றின் பெருமைகளை வினைத்துன்பத்தில் நின்று கொண்டு சொல்ல இயலுமோ!

குறிப்புரை :

``மன்னுயிர்`` என்றது தலைமை பற்றி மக்களுயிரைக் குறித்தது. ``ஆக`` என்பதை `ஆனபின்` எனவும் ``ஒத்து`` என்பதை. `ஒக்கின்` என்வும் திரித்துக் கொள்க. ``நாரணன்`` ஆகுபெயர். சுணங்கு - நலிவு. ஒன்று, மூன்று அடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், இச்சக்கர வழிபாடு போகத்தை மிகத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 94

ஆமே அதோமுகம் மேலே அமுதமாய்த்
தானே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

பொழிப்புரை :

பிரணவ கலைகளுள் உகாரகலை மிகுந்து ஓங்கி முற்றுகின்ற சந்திர மண்டலம் நெற்றிநடு முதலாகிய மேல் நிலங்களில் அமுதமாய், கீழ்நோக்கியுள்ள ஆயிர இதழ்த் தாமரையாய் விளங்கும். சோலைகளில் வெளிநிற்கின்ற கற்பகத் தருபோலும் சிவசத்தி, அச்சந்திர மண்டலத்தின் கீழுள்ள தாமரை மலர்களில் தேவியர் பலராய் விளங்குவாள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து, ``மேலே அமுதமாய் அதோமுகம் ஆம்` எனக் கூட்டி உரைக்க. `தானேயாய்` என ஆக்கம் வருவிக்க. தானேயாதல், மிகுந்திருத்தல், அகார கலை பிரணவத்தின் தொடக்கமாக உகாரகலையே அதன் எழுச்சியாதல் அறிக.
சத்தி எழுந்தருளியிருத்தற்குச் சிறந்தது சோலையாதலின், அவளை அவ்விடத்து வெளிநிற்பவளாகக் கூறினார். இது சிறப்பாகக் கடம்பாடவியைக் குறிக்கும் என்பர். ``கற்பகம்`` என்றது உருவகம். சந்திர மண்டலத்தில் நேரே விளங்குகின்ற சிவசத்தி. கீழ் ஆதாரங்களில் தேவியர் பலரிடமாக விளங்குவாள் என்றபடி. முதலிரண்டடிகளில் இது குறிப்பால் உணர்த்தப்பட்டது. இரண்டாமடி இன எதுகைபெற்றது. `தாமே` என்பது பாடமன்று.
இதனால், `ஆதார யோக முறையால் சத்தியை அடைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 95

பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

பொழிப்புரை :

ஆதாரங்களில் விளங்கும் சாதன தேவியரைச் சிவச் சத்தியுடன் கூட வழிபடின், போக்குதற்கரிதாகிய அகங்காரம் நீங்கும். அங்ஙனம் வழிபட்டவன் அகங்காரத்தினின்று நீங்கி, நிறைந்த அமுதக்குடம்போலும் சந்திர மண்டலத்தில் சாத்திய தேவியாகிய சிவசத்தியைத் தலைப்படுவான்.

குறிப்புரை :

``பொற்கொடியாளுடன்`` என மேற்போந்ததனை அனு வதித்ததனால், பூசிக்கப்படுவார் சாதன தேவியராதல் பெறப்பட்டது. அகரம், பண்டறிசுட்டு. ``அக்களியாகிய ஆங்காரம்``, இருபெய ரொட்டு. மத் கடமாகிய மண்டலம், சந்திர மண்டலம் சத்தியத்தை, ``பின்`` என்றார்.
இதனால், ஆதார தேவியரது வழிபாட்டின் இன்றியமை யாமை கூறிப்பட்டது. இரண்டாம் அடி இன எதுகை.

பண் :

பாடல் எண் : 96

பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை இவளுக்கு மன்னும் திலகமாக்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

பொழிப்புரை :

பெண்ணாகக் காணப்படுகின்ற இச் சத்திக்கு அங்ஙனம் காணப்படுதலே ஏற்புடைத்து. இவளுக்குத் தலைவனாய் உள்ள சிவன் அங்ஙனம் தலைவனாதலேயன்றித் தந்தையாயும் நிற்கும் இயல்புடையவனாவான். அழகியாய் உள்ள இச்சத்திக்கு இப்பூ மண்டலமே நெற்றித் திலகமாய் நிற்க, எண்ணிறந்த சத்திகள் சூழ்ந்து பணி செய்ய, இவள் உயரிய ஆசனத்தில் வீற்றிருக்கும் பெருமையுடையள்.

குறிப்புரை :

`அப்பெண்மையே` எனச் சுட்டுவருவித்துத் தேற்றே காரம் விரிக்க. `பெண்மையே ஏற்புடைத்தாம்` என்றது, சிவத்தின் வழிநிற்பவளாதல் குறித்து. எனினும், இவளும், சிவனும் உலகத்துப் பெண்டிரும் ஆடவரும்போல இருவேறுபட்டவர்கள் அல்லர்` என்றற்கு, ``தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்`` என்றார். தாணு - தலைவன். தாணு தாதையுமாய் நிற்கும்` என மாறிக் கூட்டுக. மாது - அழகு. ஐகாரம் சாரியை. அழகு இயற்கையாலும், செயற்கையாலும் உள்ளது. அவற்றுள் செயற்கை `அழகில் பூமியே திலகமாகின்ற அத்துணைப் பெரியாள்` என்பதை மூன்றாம் அடியிலும், பிறர் யாவரும் இவளுக்குக் கீழ்பட்டவர்களே` என்பதை நான்காம் அடியிலும் குறித்தார். குவிதல் - இங்கு, உயர்தல், `குவிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 97

குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம்பல கொண்டே.

பொழிப்புரை :

சிவ சத்தியின் கூறாகிய முப்பத்திருவர் சத்திகள் தலைமை பெற்று நிற்கின்றனர். அவர்கள் வழிப்பட்டு முப்பத்திருவர் தேவியர் ஒழுகுகின்றார்கள். இவ்இருதிறத்தாரும் ஒரு தாமரை மலரில் சூழ விரிந்தபல இதழ்களில் இடம் பெற்று இருக்கின்றனர்.

குறிப்புரை :

இங்குக் கூறிய தாமரை மலர் மேற்காட்டிய சக்கரங் களில் உள்ளனவாம். அவற்றின் இதழ்கள் எட்டாகும். அவற்றில் அகம், நுனி, இருபுறம் என்பவற்றால் இடங்கள் முப்பத்திரண்டாம். அம் முப்பத்திரண்டிலும் தேவியர் முப்பத்திருவர் இருக்க, அவர் களிடமாகச் சத்திகள் முப்பத்திருவரும் உளர் என்க. இம்முறை ஆதார பங்கயங்கட்கும் பொருந்துவதாம். `பரந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இதன் கண் மூன்றாமெழுத்தெதுகை வந்தது.
இதனால், சிவசத்திகளும், அவர்கள் வழியொழுகும் தேவியரும் சக்கரங்களிலும், உடம்பகத்து ஆதாரங்களிலும் நின்று பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 98

கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே.

பொழிப்புரை :

சிவனது விளக்கமாம் சத்திகளையும், அவள்வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதார பங்கயங்களிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்று.

குறிப்புரை :

``கூத்தன் ஒளியினை`` என்பதையும், காரணத்துள்ளது` என்பதையும் அவ்வவ் வடியின் முதலிற் கூட்டி யுரைக்க. காரணத்து - காரணமாகின்ற நிலையில், நான்காமடி இன எதுகை பெற்றது.

பண் :

பாடல் எண் : 99

இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
இல்லடைந் தானுக்கில் லாததில் லானையே.

பொழிப்புரை :

இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணை வியைப் பெற்றால், அவளுக்கேயன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. (எல்லா நன்மைகளும் குறைவின்றி உள வாம்.) அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராகார். ஆதலின், `இல்லாதது` என்பது யாதும் இல்லாதவனாகிய சிவனையே அவனுக்கு உவமிக்க.

குறிப்புரை :

இல் - இல்லாள். `மனமாகிய இல்லத்தை நன்முறையில் ஆண்டு துணைபுரியும் அளவில் சிவ சத்தி தன் அடியவனுக்கு வாழ்க்கைத் துணைவிபோல்வாள்` என்பது பற்றி, ``இல்லதென் இல்லவள் மாண்பானால்`` எனவும், ``இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றில்லை`` எனவும் போந்த உலகியல் முறையை எடுத்தோதி, சத்தியது அருள் கிடைக்கப் பெறுதல் பெரும்பேறாதலை விளக்கினார். ஈற்றில் வருவித்து உரைத்த `உவமிக்க` என்பது சொல்லெச்சம்.
இவை இரண்டு மந்திரங்களாலும் மேற்கூறியோரை, மேற் கூறிய இடங்களில் வழிடுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 100

ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

பொழிப்புரை :

ஐம்புலன்களாகிய யானைகளையும் மயங்கி அடங்கச் செய்து கட்டி வைக்கும் அறுபத்து நான்கு தறிகளாயும், இடப வாகனத்தில்மேல் வருகின்ற தலைவனாகிய சிவபிரானிடத்தில் உள்ள அறுபத்து நான்கு சத்திகளாயும் விளங்குவன. பிரணவத்தை முதலாகக் கொண்ட பிராசாத மந்திரத்தின் அக்கரங்கள் அடங்கிய சக்கரத்தில் உள்ள அறுபத்து நான்கு அறைகள். அவ் அறைகளை யுடைய சக்கரத்தை வழிபட்டால், மத யானையும் வணங்கும் கடவுள் தன்மையைப் பெறலாம்.

குறிப்புரை :

``ஆனை`` நான்கில் இரண்டாவதை, `ஆன்+ஐ` எனப் பிரித்துப் பொருள்கொள்க. ஏனைய மூன்றும் சொல் ஒன்றாயினும் வேறு வேறு பொருளைக் குறித்தலின் சொற்பின் வருநிலை. இரண்டாம் அடி, மடக்கு. முதலடியில், உள்ள ஆனை. உருவகம். மூன்றாம் அடியில் உள்ள ஆனை உவம ஆகுபெயராய் அதனோ டொத்த ஓங்காரத்தைக் குறித்தது. நான்காம் அடியில் உள்ளது அஃறிணை இயற்பெயராய், ஆற்றலால், மதங்கொண்ட யானையைக் குறித்தது. கோடுதல் - வளைதல்; வணங்குதல். `ஆனையும், அதன் கொம்பும் அறுபத்து நாலு அறைகளில் அடங்கிவிடும்` என்பது நயம். ``அறுபத்து நால்`` என்பது அதன் வழிபாட்டின்மேல் நின்றது. அதில் உள்ள `இல்` ஏதுப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. அறுபத்து நான்கு அறைகளும் அறுபத்து நான்கு சத்திகளாதல் இரண்டாமடியில் கூறப்பட்டது. இச்சக்கரம் எட்டெழுத்துக்களால் ஆவதாகலின், `அட்டாட்சரி சக்கரம்` எனவும் அவை பிராசாத அட்சரங்கள் ஆதலின், `பிராசாத சக்கரம்` எனவும் சொல்லப்படும். அஃது, கீழே தனியே தரப்பெற்றுள்ளது.
இதனுள், அக்கரங்கள் இடந் தொட்டு வலமாகச் செல்லும் வரிகளை முறையே நோக்கினும், மேற்றொட்டுக் கீழாக வரும் வரிகளை முறையே நோக்கினும் ஒருவகையாகவே இருத்தல் அறியத் தக்கது. அதனால், அவ் அக்கரங்களை ஒருமுறை இடமிருந்து வலமாகவும், மறுமுறை மேற்றொட்டுக் கீழாகவும் மாறிமாறி நோக்கிக் கணித்து வழிபடின் பயன் கூடும்.
இதனை, இத்தந்திரத்தின் முடிவாக இறுதிக்கண் அனைத்தும் அடங்கக் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 1

ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

பொழிப்புரை :

பல உலகங்களையும், அவை அடங்கியுள்ள பல அண்டங்களையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவினையுடையவ னாகிய சிவனது பெருமையைக் கூறுமிடத்து, எழுச்சியை உடைய இந்த உலகங்கள் மூன்றினையும் தன்னடிப் படுத்து ஆள்கின்ற தலைவனாம் அவன், விளங்கத் தோன்றும் நிலைக்களம் நால்வகைச் சைவமுமாகும்.

குறிப்புரை :

`ஊர், உலகம் என்பன அவற்றிற்கு இடமான உலகத்தை யும், அண்டத்தையும் ஆகுபெயரால் உணர்த்தின, ஏர்தல் - எழுச்சி யுறுதல். `மேருவும்` என்பது பாடமன்று. `இலங்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``தாரணி`` என்றது, `நிலைக்களம்` என்ற வாறு. சைவ சமயத்தின் பெருமை கூறுவார். அதன் முதல்வனாகிய சிவனது பெருமையை முன்னர்க் கூறினார்.
இதனால், `முழுமுதற் கடவுளாகிய சிவன் விளங்கித் தோன்றும் சமயம் சைவசமயமே` என்பதும், `அது நால்வகைப்படும்` என்பதும் கூறப்பட்டன, அந்நால்வகையும் வருகின்ற மந்திரங்களிலும் அதிகாரங்களிலும் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 2

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.

பொழிப்புரை :

சுத்த சைவர்க்கு, சத்தாகிய பதியின் இயல்பையும், அசத்தாகிய பாசத்தின் இயல்பையும், இவற்றிற்கு இடைப்பட்டுச் சதசத்தாய் நிற்கின்ற பசுவின் இயல்பையும் உணர்ந்தபின், அறிவுடைப் பொருளாகிய உயிர்களுள்ளும், அறிவில் பொருளாகிய பாசங்களுள் ஒன்றாகாது வேறுபட்ட பொருளாய், சுத்தமாயுள்ள வைந்தவங்க ளிலும் அசுத்தமாயுள்ள மாயேயங்களிலும் தோய்ந்தும் தோயாமலி ருக்கின்ற நித்தியப் பொருளாகிய பரசிவம் ஒன்றே குறிப் பொருளாம்.

குறிப்புரை :

எனவே, தத்துவ ஞானத்தை விரும்புவது `சுத்த சைவம்` என்றதாம். ஆகவே, சிவஞான பாடியம் முதலியவற்றில் `சுத்த சைவம்` என்னும் பெயராற் குறிக்கப்படும் சுத்த சைவம் அன்று இது என்பது விளங்கும்.
சத்து - மாற்றமின்றி என்றும் ஒரு படித்தாய் இருப்பது. அசத்து - மாற்றத்தை உடையது, சதசத்து - இவ்விரண்டில் எதனோடும் சார்தற்கு உரியதாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது. ``சத்து`` முதலிய ஐந்தும் ஆகுபெயராய் முன்னர் அத்தன்மையுடைய பொருளையுணர்த்திப் பின் அவற்றது இயல்பை உணர்த்தின. `கண்டபின்` என்பது `கண்டு` எனத் திரிந்தது. ``நீத்த, நின்ற`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``பரம்`` என்னும் ஒரு பெயர் கொண்டன, அச்சித்தும், நின்று` என்பன பாடமல்ல. ``சுத்தம், அசுத்தம்`` என்பன அவற்றையுடைய பொருள்களைக் குறித்தன. வைந்தவம் - விந்துவின் காரியம். விந்து - சுத்தமாயை, மாயேயம் - மாயையின் காரியம், மாயை - அசுத்த மாயை, `நித்தப் பரம்` என்பது தொடைநோக்கி மெலிந்து நின்றது. `ஞேயம்` என்பது `நேயம்` என மருவிற்று. `அறியப்படுபொருள்` என்பது இதன் பொருள்.
இதனால், நால்வகைச் சைவத்துள் `சுத்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

பொழிப்புரை :

கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்திகளையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிரபரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத் திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர்.

குறிப்புரை :

``சை சித்தாந்தர்`` என்றது `சித்தாந்த சைவர்` என்றவாறு. எனவே, `சைவாகம நெறிகளின் வழி ஒழுகி, அதனால், பதமுத்தி, பரமுத்திகளை அடைவதே சித்தாந்த சைவம்` என்றதா யிற்று. ஆகவே, சித்தாந்த சைவமே மேற்கூறிய சுத்த சைவமாதல் பெறப்பட்டது. ``மெய்யோகம்`` என்றது, `பொருளுணர்வுக்குக் காரணமான நாதத்தையுணரும் யோகம்` என்றவாறு. முற்பதம் - முதற்சொல்: பிரணவம்.
இதனால், `சித்தாந்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர்.

குறிப்புரை :

`சுத்தமாய்` என ஆக்கம்வருவிக்க. `சித்தாந்தத்துக்கண் நின்று கண்டோர்` என்பதில் இடைநின்றன தொக்கன. ``பூதம்``, ஏனைத் தத்துவங்கள் பலவற்றிற்கும் உபலக்கணம். தத்துவங்களின் அந்தத்தில் உள்ள போதம், `நான்` என்னும் பசுபோதம். அஃது அந்தமாதலாவது, நீங்குதல். புனம்செய்தல் - புனத்தைத் திருந்தச் செய்தல் போலச் செய்தல். ஞான நேயம் - ஞானத்தினால் பற்றப்படும் ஞேயம் `வேதாந்தம் தெளிவாதல் சைவ சித்தாந்தத்திலே` என்பதை, ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` 1 என்பதனால் அறிக.
இதனால், சித்தாந்த சைவத்தின் சிறப்பும், அதன்கண் நின்றாரது பயனும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத்
திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

பொழிப்புரை :

சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர்க்குச் சிவனது இரண்டு திருவடிகளைத் தாம் வணங்குதற்குரிய கோலமாக உடம்பில் ஒன்று இரண்டாய்ப் பிணைந்த இருகுழைகள். இரண்டாகப் பொருந்திய முத்திரைகள், இரட்டை வடமாக அமைந்த கண்ட சரமும் ஆகியவை குறையாது பொருந்துதற்கு உரியன.

குறிப்புரை :

சீர் - அழகு. அஃது அதனைத் தருவதாகிய கோலத்தைக் குறித்தது. இணையார் குழையை, `ஆறுகட்டியும், சுந்தரவேடமும்` என்றும், இவை `ஆசிரியர்க்கு உரியன` என்றும் கூறுவர். `இவ்வாசிரியர் கிரியா குரவரே` என்பது இம் மந்திரத்தாற் பெறுதும். இருமுத்திரைகளா வனவற்றை, `இடபக்குறியும் சூலக் குறியும்` எனத் திருநாவுக் கரசரது வரலாறு பற்றிக் கூறுதல் கூடும். அவன் சமண் சமயஞ் சார்ந்திருந்த மாசு தீரவே அவற்றை வேண்டிப் பெற்றமையால், அவை சமய விசேட தீக்கைகட்கு உரியனவாக இங்குக் கூறப்பட்டன எனலாம். ``குன்றாது அணைவாம்`` என்றது, `தவறாது பொருந்துவது` என்றபடி. எனவே, சுத்த சைவர்க்கு அவை இலவாயினும் குற்றமின் றாதல் அறியப்படும்.
இதனால், `அசுத்த சைவருள் ஒருசாரார் இவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.

பொழிப்புரை :

காதில் பொன்னாற் செய்யப்பட்டுப் பொருந்திய கடுக்கன் இரண்டை அணிந்து, சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற `தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்று உடம்புகளையும் சோதித்துத் தூய்மை செய்யப் பெற்று, துவாதச கலாப் பிராசாதயோக நெறியில்நின்று, அந்நிலைக்கு ஏற்பத் தாம் உபதேச முறையாற் பெற்ற திருவைந்தெழுத்தையும் ஓதுபவர் மேற்கூறியவரின் வேறுபட்ட ஒருசார் சைவராவர்.

குறிப்புரை :

தூல உடம்பையே ``திருமேனி`` என்றார். சமய விசேட தீக்கைகளால் தூய்மை பெற்றமை தோன்ற அவ்வாறு கூறினார். சூக்குமம் பர உடம்புகளை ``உட்கட்டு`` எனக் குறித்தார். ``செய்து`` என்றது, `செய்வித்துக் கொண்டு` என்றபடி. ஒருசைவர் - மற்றொருசைவர்; என்றது `ஞானச்சைவர்` என்றவாறு. மேலை மந்திரத்துள் சரியை கிரியையினுள்ளும், இதன்கண் யோகம் ஞானத்துள்ளும் அடக்கப்பட்டன. இங்குக் குறிக்கப்பட்ட ஞானம் கேள்வியளவினது. இவற்றை ``சோதனை செய்து`` எனவும், துவாதெச மார்க்கராய்`` எனவும் போந்த குறிப்புக்களால் அறிக.
இதனால், அவருள் மற்றொருசாராரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

பொழிப்புரை :

பாரத வருடத்தின் ஒன்பது பகுதிகளையும் சென்று கண்டவரே அவைகளில் உள்ள சான்றோர் ஆராய்ந்துகண்ட அரிய உண்மையைக் கண்டவராவர். அதனால், அவர் எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனது நவந்தரு பேதங்களையும் உணர்ந்தோரும், பின்னர்க் கூறப்படும் கடுஞ்சுத்த சைவருக்கு நிகரானவரும் ஆவர்.

குறிப்புரை :

பாரத வருடத்தின் ஒன்பது கண்டங்களாவன:- `இந்திரம், கசேரு, தாமிரவர்ணி, கபத்தி, நாகம், சாந்திரம் காந்தருவம், வாருணம், குமரி` என்னும் பெயருடையவாகச் சொல்லப்படுகின்றன.
`பரத கண்டமே `கடவுள் நிலம்` (புண்ணிய பூமி)` என்றும், `அது மேற் குறித்த ஒன்பது கண்டங்களையுடையது` என்றும் `அக் கண்டங்கள் அனைத்திலும் அரும்பொருளை - மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த `அறிவர்` பலர் நிரம்ப உளர்` என்றும் ஆகமங்கள் கூறுதலால், `அவை அனைத்திலும் தொண்டரொடு கூடிச் சென்று தூநீராடியும், தொழுதகு படிவங்களை வணங்கியும், அறிவரை அடி பணிந்து அரும் பொருள் கேட்டும் வருவோர் அசுத்த சைவராயினும் மெய்ப்பொருளைக் கண்ட சுத்த சைவர் எனச் சொல்லத்தக்க பெருமை யுடையவர்` என்றவாறு `பரத கண்டத்துக் கண்டங்கள் ஒன்பதுள்ளும் குமரிக் கண்டமே சிறந்தது` என்பதும் சிவாகம நூல் துணிபு. இரண் டாவதாய் நின்ற ``கண்டங்கள்``, இடவாகு பெயர். ``கண்ட`` எனப் பொதுப்படக்கூறிய அதனால், அது முழுதுங்கண்டதாயிற்று. இறைவனது பேதங்களை ``மாகண்டம்`` என்றார். அப்பேதங்கள் ஒன்பதும் மேலே கூறப்பட்டன.
இதனால், `சுத்த சைவரல்லாதார் தீர்த்த யாத்திரை தல யாத்திரைகளை இன்றியமையாது மேற்கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது, இதன் பயன் ஞானத்தைப் பெறுதலாகும்.
``மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே`` 1
என்ற தாயுமானவர் மொழி இங்கே நினைக்கத் தக்கது.

பண் :

பாடல் எண் : 4

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

பொழிப்புரை :

`ஞானத்தை விரும்புபவன்` என்று சொல்லப் படுவோன், உலகில் விளங்கித் தோன்றுகின்ற சமய நூல்கள் அனைத்தையும் உணர்ந்த உணர்வோடு, மன ஒடுக்கம் வரும் நிலையையும், முழுமையாக எண்ணப்படுகின்ற `எட்டு` என்னும் தொகையைப் பெற்றுள்ள சித்திகளையும், இவ்வுலகமேயன்றி, ஏனை மேல் கீழ் உலகங்களின் இயல்புகளையும், இருக்கு முதலிய நான்கு வேதங்களின் முடிவாகிய `ஆரணியகங்கள், உபநிடதங்கள்` என்பவற்றின் பொருள்களையும், எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவனது இயல்பையும், அவனுக்கு என்றும் அடிமையாகின்ற தனது இயல்பையும் உணரும் பண்புடையவனேயாவன்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது மேற்கூறியவாறு பொருள் படு மாற்றைப் பின் வருவனவற்றால் அறிக. நன்நூல் - ஞானநூல். இங்ஙனம் பல நூலும் கண்டபின்பே, பொய் பொய்யாய் ஒழிய மெய் மெய்யாய்த் தோன்றும் என்பது பற்றி, இங்ஙனம் ஓதினார். ``நூல் பல கல்`` 1 என்று ஔவையாரும் கூறினார். ``கல்லார் நெஞ்சில் - நில்லான் ஈசன்`` 2 என்று அருளிச்செய்ததும் இது பற்றி. ``கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்`` என்பது பழமொழி. இதில் ``கண்டது`` என்பது கொள்கை வேறுபட்ட அறிஞர் பலரும், `இதுவே நன்னூல்`` எனக் கண்டது என்பதாம். சைவ சந்தான குரவர் நால்வருள் ஒருவர் அருட் குரவரது அருளுரையைப் பெறுதற்குமுன் `சகலாகம பண்டிதர்` எனப் பலராலும் புகழப்பெற்றிருந்தமை அறியத்தக்கது.
இதனால், சுத்த சைவராக வேண்டுவார் கேள்வி ஞானத்திற்குப் பின் சிந்தனையால் முதிர்ச்சி பெறவேண்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.

பொழிப்புரை :

சுத்த சைவநிலையை அடைய வேண்டுவார் கொள்ளத்தக்க முதற் சாதனங்கள், பொன்னாற் பொதியப்பட்ட உருத்திராக்கங்களின் மாலை, விபூதி என்னும் இரண்டுமாம். இவை நன்மையைத் தருகின்ற பெரிய ஞான சாதனமும், தீமை தோன்றாவாறு செய்கின்ற பெரிய காப்புச் சாதனமுமாம். ஆதலால், அவர்கட்கு இவை இன்றியமையாச் சாதனங்களாகும்.

குறிப்புரை :

எனவே, `இச்சாதனத்தளவில் நிற்போர் ஒரு கூற்று மார்க்க சைவர்` என்றதாயிற்று. முதற்கண் ``சாதனம்`` என்றது உருத்திராக்கத்தை, இதனை ``எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால்``1 என்பதிலும் காண்க.
இதனால், மார்க்க சைவத்துள் ஒரு பகுதி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி
னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.

பொழிப்புரை :

பின்னர்க் கெட்டொழியாது நிலை பெற்று நிற்கும் ஞானத்தை உணர்ந்தவனும், அதனால் `ஞான வேந்தன்` எனப் புகழப்படுபவனும், அழிவில்லாத வேத முடிவில் தொடங்கி விரிந்த சிவாகமங்களின் நாற்பாதங்களினுள்ளும் பொருந்தி விளங்கும் பொருள்கள் விளங்கப்பெற்ற அறிவையுடையவனும், அவற்றால் உண்மை முத்தியாகிய பரமுத்தியைப் பெறும் தகுதியை அடைந்தோனு மாகிய பெருமை பொருந்திய சுத்த சைவனுக்குத் தொண்டு பூண்டவன் பிறவிப் பயனைப் பெற்றவனாவன்.

குறிப்புரை :

எனவே, `இவன், மார்க்க சைவத்துள் மற்றொரு பகுதியினன்` என்பது பெறப்பட்டது. இதனுள் சுத்த சைவனது பெருமையை யே விரித்து, `அவன்பால் பத்தி பூண்டவன் சித்தன்` எனக் கூறப் பட்டது. சித்தன் - சித்திக்கப் பெற்றவன். பெறுதலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``சித்தாந்தம்`` என்றது சிவாகமங்களை.
இதனால், சுத்த சைவர்க்குத் தொண்டு பூண்டொழுகுதலும் மார்க்க சைவத்தின் ஒரு பகுதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.

பொழிப்புரை :

தொல் ஆகமங்கள் ஒன்பதே, `இருபத்தெட்டு` என்பன அவற்றினின்றும் விரிந்தனவாம். `சிவபேதம், உருத்திர பேதம், தேவ பேதம்` என்னும் முப்பேதங்களும் `இருபத்தெட்டு` என்னும் அவற்றில் சொல்லப்படுவனவே. ஆகமங்கள் எத்துணையாக விரிந்து, எத்துணைப் பேதப்பட்டிருப்பினும் தற்போதத்தைப் போக்க வல்ல, வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த மாகிய அவற்றின் துணிபு ஒன்றேயாக முடிந்ததே சுத்த சைவநிலை வாய்ப்பதாகும்.

குறிப்புரை :

எனவே, `அங்ஙனம் பல ஆகமங்களின் பொருள்களை யும் ஒருமைப்பட உணர்தலும் மார்க்க சைவப் பகுதியாம்` என்ற தாயிற்று. இங்குக் கூறப்பட்ட ஆகமம் பற்றிய செய்திகளை முதல் தந்திரம் - ஆகமச் சிறப்பு அதிகாரத்தில் காண்க. ஆன - ஆனவை. மெய்ம்மை - முடிந்த பொருள்.
இதனால், சைவாகமங்களின் பொருள்களை ஒன்றோடு ஒன்று முரணாதவாறு ஒருமைப்படக் காண்டலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.

பொழிப்புரை :

`சுத்தம், அசுத்தம், மிச்சிரம்` என்னும் மூவகைப் பல்வேறு நிலைகளையும், மாயை கன்மங்களின் காரண காரிய நிலை களையும் கடந்து, பரையாவும், அபரையாதற்குரியவளாயும் உள்ள, சிவனது அருளாகிய சத்தி, எல்லாப் பொருள்களையும் நடத்து பவளாய், அவற்றின் உட்பொருளாகி எவ்விடத்திலும் நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

``துரியங்கள்`` என்றதனால், ``சுத்தம், அசுத்தம்`` எனப் பட்டனவும் அவற்றில் நிகழும் சாக்கரம் முதலியனவும் அவத்தையாதல் அறியப்படும். இங்கு, `சுத்தம்` என்றது, கேவலமல்லாத சகலத்தை, அசுத்தம், கேவல சாக்கிரம் முதலியன. இவற்றின்பின் வாளா ``துரியங்கள்`` என்றதனால் அவை முன் இரண்டைக் கடந்த சுத்த சாக்கிரம் முதலியவாயின. இவ்வைந்தோடு சுத்த அசுத்தங்களை ஒவ் வொன்றாக்கி, `ஏழு என்றார், காரண காரியங்களையே சத்து, அசத்து என ஓதினார், அவை அங்ஙனம் சொல்லப்படுதற்கு உரியன வாகலின். உய்த்தல் - நடத்துதல், இதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. பின்வந்த ``பராபரை`` இரண்டும், `சத்தி` என்னும் அளவாய் நின்றன. ``அத்தன் அருட் சத்தி`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. ``அத்தன் அருட் சத்தி எங்குமாம்`` என்றது, `அந்நிலையை உணர்ந்து அதில் அடங்கி நிற்போர் மார்க்க சைவர்` என்றதாம்.
இதனால், அத்தனது அருள்நிலையை அடைந்தோர் மார்க்க சைவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.

பொழிப்புரை :

எங்குமாய் நிற்கும் அருட் சத்தியை அடைந்து நிற்கும் நிலைக்குமேலே, எல்லாப் பொருளையும் கடந்த பராசத்தியை அடைந்தவர், அச்சத்திக்கு முதலாய பரசிவமேயாய், சித்தும் சடமு மாய உலகங்களுள் யாதும் தோன்றாது சிவோகம் பாவனையில் அழுந்தி, பரமுத்தி நிலையில் விளையும் பேரின்பமாகிய ஆனந்த சத்தியில் மூழ்கி யிருப்பர். அவரது பேறே ஏனை எல்லார் பேற்றினும் சிறந்த பேறாகும்.

குறிப்புரை :

``தணந்தவர்`` என்று மேற்கூறிய ``தணந்தபரையை`` அடைந்தவர் என்றவாறு. எல்லாமாய் நிற்பவள் அருட் சத்தியும், எல்லாவற்றையும் கடந்து நிற்பவள் ஆனந்த சத்தியும் ஆதலின் அந் நிலையே முடிந்த பேறாயிற்று. `உளது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `உளதாமே` எனப் பாடம் ஓதலுமாம்.
இதனால், `மேற் கூறப்பட்டவர் மார்க்க சைவரேயாயின், அவருக்கு மேலேயுள்ள சுத்தசைவாராவார் யாவர்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு. `அருள் நிலையைக் கடந்து ஆனந்த நிலையை எய்தினோர் சுத்த சைவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.

பொழிப்புரை :

ஆன்மா, `யாதும் செய்யாது அமைதியாயுள்ள பரசிவன், `சதாசிவன்` எனப்படுகின்ற ஐந்தொழில் முதல்வன், அப்பதியோடு ஏனைப் பசு பாசங்கள், அநாதி தொட்டே உள்ள ஆணவப் பிணிப்பாகிய முதற்பந்தம், அது நீங்கி நின்ற வீடு` என்னும் இவற்றை ஐயந்திரிபு அற ஆராய்ந்துணர்தல் என்பர். இவை சுத்த சைவராவார் தமக்கு உரிய உபாயமாகும்.

குறிப்புரை :

`மாசற்ற வீட்டினை` எனக் கூட்டியுரைக்க. `சுத்த சைவராவார் உபாயம்` என ஆக்கம் வருவித்து உரைக்க.
இதனால், `தத்துவ ஆராய்ச்சி மார்க்க சைவமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

பொழிப்புரை :

சுத்த சைவராய் உள்ளார்க்கு உளதாகின்ற அனு பவத்திற்கு, எங்கும் நிறைந்த பொருளாகிய சிவனிடத்தே வைக்கப் பட்டதனால் பிற பற்றுக்கள் நீங்கிய ஆன்ம போதத்தில், வேதாந்தம், சித்தாந்தத்தோடு ஒற்றுமைப் பட்டுத் தோன்றப்பெற்ற உணர்வோடு, பிராசாத கலைகள் பன்னிரண்டும் காட்சிப்பட, அதனால் இடையறாது விளங்கும் பேரின்பமே காரணமாம்.

குறிப்புரை :

அதனால், அத்தகைய பிராசாத யோகத்தில் நிற்பவர் மார்க்க சைவராதல் பெறப்பட்டது. இம்மந்திரத்தில் பாடங்கள் மிகத் திரிந்துள்ளன. `காட்சிக்கு` என்னும் நான்கனுருபு இன்னோசை நோக்கித் தொகுக்கப்பட்டது.
இதனால், பிராசாத யோக நெறியும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மாறாத ஞானம் மதிப்பற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.

பொழிப்புரை :

சித்தாந்த சைவத்தின் அங்கமாகும் மார்க்க சைவரது ஒழுக்கத்தைச் சொல்லுமிடத்து,தொன்று தொட்டுத் தொலையாது நிற்கின்ற தற்போதத்தைப் பெரிதாக எண்ணாமல், அஞ்ஞானத்தி னின்றும் நீங்கமாட்டாத அறிவை மேற்கூறிய உயர்ந்த யோகமாகிய பிராசாத யோகத்தால் அஞ்ஞானத்தினின்றும் நீங்கித் தெளிவடையும் படிச் செய்து, அதனைச் சிவனது அறிவேயாக ஆக்கிப் பெறற்கரிய பேறாகிய சிவோகம் பாவனையைத் தலைப்பட்டு அதனைப் போற்றி அந்தப் பதிஞான நெறியில் நிற்றலேயாகும்.

குறிப்புரை :

`யோகத்தால்` என உருபு விரிக்க. சிவம், ஆகுபெயர். ``பேறான`` என்பது, `சிறந்த பேறாகிய` என்னும் பொருளைக் குறித்தது. ``கூறாகும்`` என்னும் பெயரெச்சம். ``ஞானி`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. ஞானமாவது, சித்தாந்த ஞானமே யாதல் அறிந்து கொள்க.
இதனால், மார்க்க சைவரது ஞான ஒழுக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.

பொழிப்புரை :

சிவாகமங்களை உணராது வேதாந்தத்தை மட்டும் உணர்ந்தோர் முதற் பொருளை உண்மை மாத்திரையான் உணர்ந் தவரே. அதன் இயல்பையும், அதனைப் பெறுமாற்றையும் பெற்றவழி உளதாகும் பயனையும் அறிந்தவரல்லர். பிராசாத நெறியால் நாத முடிவைக் கண்டவர் அசைவில்லாத யோகிகளோயவர்; ஞானிகள் அல்லர். சைவாகமங்களை வேதாந்தத்தோடு ஒற்றுமைப்படவைத்து உணராது தனிப்ப வைத்து உணர்ந்தோர் பொதுச் சைவரே; உண்மைச் சைவர் அல்லர். ஆதலால், அவர் மார்க்க சைவரே; சுத்த சைவர் அல்லர்.

குறிப்புரை :

இதன் ஈற்றடியின் பாடம், ``சாதாரணர்; அன்ன சைவர் உபாயரே`` என இங்குள்ளபடியாவது, ``சாதாரணர் அன்னர்சைவம் உபாயமே`` என்றாவது ஓதப்படல் வேண்டும். மார்க்க சைவருள் இங்குக் கூறப்பட்ட சாதாரண சைவர் பாசுபதர் முதலிய அகப்புறச் சமயிகள் என்க. இவரைக் கூறுவார், மேற்கூறிய மார்க்க சைவரை அனுவதித்தும், புறச் சமயத்தாராகிய ஏகான்மவாதரைப் புடைபட வைத்தும் கூறினார்.
இதனால், சிவாகமத்தைப் பொதுவாக உணர்தலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

பொழிப்புரை :

பரந்துஎழும் மேகக் கூட்டம் அருவமாகிய ஆகாயத்தைப் பற்றமாட்டாது, பல காட்சிப் பொருள்களும் கண்ணொளியைத் தமக்கு இடமாகக் கொண்டு நிற்க மாட்டா. அவை போல, எண் வரையறை யில்லையாம்படி முடிவின்றி எண்ணப் படுவனவாகிய பசுக்களைப் பற்றிநிற்கின்ற பாசங்கள், தலைவனாகிய சிவனைச் சென்று அணுகமாட்டா.

குறிப்புரை :

இதனுள் இரண்டு எடுத்துக்காட்டுவமைகள் கூறப் பட்டன. `பாசம்` என்னாது ``பசு பாசம்`` என்றதனால், `பசுக்களைப் பற்றுகின்ற அவை பதியாகிய இறைவனைப் பற்ற மாட்டா` என்ற தாயிற்று. ஆகவே, அப்பாசங்களால் தோற்றுவிக்கப் பட்ட அறிவைக் கொண்டோ, அவற்றின் நீங்கியவழி எதனையும் அறியமாட்டாத தனது அறிவைக்கொண்டோ உயிர் இறைவனை அறியமாட்டா` என உணர்த்துதல் இம்மந்திரத்தின் கருத்தாதல் விளங்கும். அதனால், `பதி ஞானத்தால் பதியைத் தலைப்பட்டு உணர்வோரே சுத்தசைவர்` என்பதும், `அவ்வாறன்றி, பாசஞான பசுஞானங்களால் உணர்வோர் மார்க்க சைவரே` என்பதும் கூறியவாறாம். ``அண்ணலைச் சென்றணுகா`` என்பதை இறுதியிற் கூட்டி உரைக்க.
இதனால், மேற்கூறியவர் எல்லாரும் சுத்த சைவராகாது மார்க்க சைவராதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை :

மேற் கூறிய, `சிவனும், சீவனும் ஒருபொருளே` என்றுகூறும் `பிரம வித்தியாவாதமும், இருவரும் வேறுவேறானவர் களே` எனக் கூறும் வேதாந்தம் அல்லாத அசுரௌத வாதமும் இன்றி, `இருவரும் கலப்பினால் ஒன்றாய் பொருள் தன்மையால் வேறாய் இருப்பவர்` என்னும் சித்தாந்த அத்துவித ஞானத்தில் நிலைபெற்று நின்று, பொருளில்லாத சூனியம்` எனத்தக்க பல சமயத் தொடக்கி னின்றும் நீங்கி, அந்தச் சமயங்கள் அனைத்திற்கும் மேலே உள்ள முதற் பொருளாகிய, அறியப்படுபொருளாம் சிவனை, அவனது திருவடி ஞானத்தின்வழியே சென்று பொருந்திப் பின் அவனேயாகி விடுதலே சித்தாந்த ஞானத்தின் பயனாகும்.

குறிப்புரை :

நிராகாரம் - உருவின்மை; என்றது பொருள் யாதும் இல்லாத சூனியத்தை. மூன்றாம் அடியில் `நின்று` என்பது பாடம் அன்று `பராபரை` என்பது பாடமாயின், ``பாதம்`` என்பதற்கு `நிபாதம்` எனப் பொருள் உரைத்து, ``நேயத்தை`` என்பதை அதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``சென்று`` என்பதன்பின், `தலைப்பட்டு` என்பது எஞ்சிநின்றது.
இதனால், அசுத்த சைவம். மார்க்க சைவம் என்பவற்றது நிலை இனிது விளங்குவதற்குச் சுத்தசைவத்தினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

பொழிப்புரை :

துறவுக் கோலம் இன்றியே, ஆசையாகிய தளையையும் அறுத்தெறிந்து, துன்பத்தொடு படுதற்கு ஏதுவாகிய மலங்களாகின்ற பசுத்துவம் இல்லையாம்படி அடித்துப் போக்குகின்ற சிவஞானச் செயலரே கடுஞ்சுத்த சைவராவர்.

குறிப்புரை :

இல்லம் துறந்து, எங்கும் செல்பவரே துறவுக் கோலத்தை உடையராவர் ஆகலின், ``வேடங் கடந்து`` என்றது இல்லந்துறத் தலாகிய புறத்துறவு இன்றி, அகத் துறவு மாத்திரம். உடையராதலைக் குறித்தது. இவர் சிவனிடத்தே அடங்கியிருத்தல், அலை ஒழியாத கடலில் அலைவின்றி மூழ்குதலோடு ஒக்கும் அருமை யுடைத்தாதல் அறிக. ஆடம்பரம் - ஆரவாரம். வேடங்கடந்தமை முன்னே கூறப்பட்டமையின், இது தமது நிலையைப் பிறர் அறிதற்கு ஏதுவாம் பேச்சினைக் குறிக்கும். இது முற்கூறியதினும் அருமை யுடையதாம். போதகர் - போதத்தை விடாதே செயற்படுவோர். ``சுத்தசைவர்`` என்றது, அதிகாரத்தால் கடுஞ்சுத்த சைவரையாயிற்று.
இதனால், `கடுஞ் சுத்த சைவ நிலை இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.

பொழிப்புரை :

தூல சூக்கும பர உடம்புகளாய் நிற்கும் முப்பத் தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிவான நிலையை யுடைய பெரிய மாயையாம். அவற்றை ஆன்மா நீக்கின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தைக் கழுவித் தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும். அவ்வாறு எய்துவதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.

குறிப்புரை :

``உடலான`` என்பது ``ஐந்தும், ஓராறும்`` என்னும் இரண்டோடே பொருந்தி நின்றது. அவற்றிற்கு மேல் உள்ள ஐந்தும் சுத்த தத்துவங்கள். அவை ஆன்மாக்களுக்கு உடம்பாய் வருதல் இல்லை. மடல் - விரிவு. `படலம்` என்பது. அம் குறைந்து நின்றது. கேவல பாசம் - ஆன்மாவோடு இயல்பாக ஒட்டி ஒன்றாய் நிற்கும் பாசம்; ஆணவ மலம், உள்ளம் - ஆன்மா. ஆன்மா என்றும் சிவ வியா பகத்தில் உள்ளதே யாகலின், அந்நிலை தோன்றாதவாறு மறைத்துள்ள ஆணவம் நீங்கியவுடன் தனது இயற்கை நிலையை எய்தலாவது சிவ வியாபகத்தில் இருத்தலை உணர்ந்து இன்புறுதலேயாதல் அறிக. ``சித்தாந்தம்`` என்பதே சுத்த சைவம் ஆதலின், `அந்த நெறியில் கடுஞ்சுத்தசைவர் இவ்வாறு நிற்பர்` எனக் கூறியவாறு.
இதனால், மேற்கூறிய அரு நெறியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சுத்தச் சிவனுறை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.

பொழிப்புரை :

தடத்த சிவன் எழுந்தருளியிருக்கின்ற சுத்தமாகிய சிவலோகத்தை அடையினும் அங்குப் பற்றுக் கொள்ளாமல் `முத்தர்` என்னும் சொல்லுக்குப் பொருளும் முத்தியாகிய நிலத்திற்கு வித்தும் ஆகியிருக்கின்ற அந்தத் தகுதியையுடைய முத்தான்மா ஆகின்றவர் அவ்வாற்றால் சிவனைச் சார்ந்து, அதனால், மூலமலம் பற்றறக் கழிந்தவழிச் சொரூப சிவனோடு இரண்டறக் கலப்பர். அங்ஙனம் கலப்பவரே உண்மைச் சுத்த சைவராவர்.

குறிப்புரை :

`அதனால்` வேடம் முதலியவற்றை மேற்கொள்ளாமலே அத்தகுதியையுடையராய் இருப்பர் கடுஞ்சுத்த சைவர்` என்பது குறிப்பெச்சம் `சுத்தத்தானம்` என இயையும். `சிவனுரை` என்பது பாடமன்று. ``மூலம்`` என்பதை, அற்றால் என்பதற்கு முன் கூட்டி உரைக்க. அத்தகைய ஆன்மா நிலையை அடைந்தவரை ``ஆன்ம`` என்றே கூறியது ஆகுபெயர். இஃது இயற்கையில் அஃறிணை இயற் பெயராய்ப் பன்மைகுறித்து நின்று பின் ஆகுபெயர் ஆயிற்று. `சுத்த சிவமாவர்; அவரே சுத்த சைவர்` என இருசொல் நீர்மைப்படுத்து உரைக்க. `சிவலோகத்தை அடைந்தாரும் பற்று நீங்காதவழி மீள நிலத் திற்பிறப்பர்` என்பதும், `பற்றற்றிருப்பின், அவ் விடத்திற்றானே சிவன் மூன்னின்று அவரை முத்தியிற் சேர்த்துவன் என்பதும் சிவாகம உண்மையாதலின் 1 அவரையே ``முத்தர் பதப் பொருள்`` என்றும் ``முத்திக்கு வித்து`` என்றுங் கூறினார். திருவள்ளுவநாயனாரும் இத்தகையோரை, ``வரன் என்னும் வைப்பிற் கோர் வித்து`` 2 என அருளிச்செய்தார்.
இதனால், கடுஞ் சுத்தசைவரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.

பொழிப்புரை :

`நான் எங்கே யிருக்கின்றேன், `தத்` பதப் பொருளாகிய பரம் எங்கே உள்ளது` என்று நான் தேடி அலையும் நிலையில், `தான் அதோ உள்ளது, நான் இதோ உள்ளேன்` என வேறு வேறு கண்டு எண்ணுமாறு `இரண்டு` என்னும் எண்ணிற்கே இடம் இல்லாது, என்னுள் ஒன்றாயே நிற்கின்ற அது எனது அலைவுக்கு இரங்கி வெளிப்பட்டு வந்து, தான் என்றுமே நானாய் - என் உயிருக் குயிராய் - ஒன்றியிருக்கிற உண்மையை உணர்த்தினமையால், நான் இப்பொழுது `தான்` என்று அதனைத் தனியாகவும், `நான்` என்று என்னைத் தனியாகவும் எண்ணிச் சொல்லும் தன்மை இலேனாயினேன்.

குறிப்புரை :

`தற்பதம்` என்பது பாடமாயின், ``பதம்`` என்பதைச் சொல்லாகு பெயராகக் கொண்டு உரைக்க.
``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்`` 3
என்றதும் இங்கு நினைக்கத் தக்கது.
இதனால், புறக்காட்சியற்று அகக் காட்சியில் உறைத்து நிற்றல் கடுஞ் சுத்த சைவமாதல், தம்நிலை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

பொழிப்புரை :

சொல்ல இயலாத மேற்குறித்த உண்மை நிலை கிடைக்கப்பெற்றால், பொறுத்தற்கரிய ஐம்புலன்களும் தம் குறும்புகள் நீங்கி அடங்கிவிடும். பாசஞான பசு ஞானங்களைக் கடந்து மேலாய் விளங்கும் பதிஞானம் நொந்தா விளக்குபோல நிலைபெற்று ஒளிரும். அதன் பயனாகப் பின்னர்ப் பதிப்பொருள், மேலான சாயுச்சியமாய்க் கிடைக்கும்.

குறிப்புரை :

`அத் தத்துவம்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. பால் -அப்பால்.
இதனால், கடுஞ் சுத்த சைவத்தின் அருமையும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.

பொழிப்புரை :

`மூலன் உடன்பட்டுக் கூறிய சரியை நெறி யாது` என்று ஆராய்கின்ற கஞ்சமலையமானே, கந்துருவே` `பூமியில் உண்மையை ஓர்ந்து உணரச் செய்வதாகிய சுத்த சைவத்தின் உயிர் நாடியாம் நெறிகள் இவை` எனக் கூறுகின்றேன்; கேண்மின்கள்.

குறிப்புரை :

`மூலன் நேர்ந்திடும் சரியை` என மாற்றிக் கொள்க. `கஞ்சன் முதலியோர் நாயனார்க்கு மாணாக்கர் என்பது பாயிரத் துள்ளே அறியப்பட்டது, அவர் பெயரை ஒரோவழி நாயனார் எடுத் தோதுதல் செய்வர். ``சரியை நெறி எது`` என்று எடுத்துக்கொண்டு, ``சைவத்துக்கு உயிர் கேண்மின்`` எனப் பொதுப்படக் கூறியது, `சரியையோடு பிறவற்றையும் கூறுவன்` என்றவாறு. இதனானே இவ்வதிகாரத்துள் பிறவும் பொதுப்பட உடன் வைத்துக் கூறுதல் பெறப்படும். இதனுள் பொருட்பின் நிலையும் வந்தது.
இதனால், இனிவரும் அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை
செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் உள்ள பொருளை ஆராய்ந் தறிவது ஞானபூசை. உயிர்க்கு உணர்வுண்டாக்குகின்ற பிரணவத்தைப் பல வகையாலும் காணுதல் பெரியயோக பூசை. புறத்தில் விளங்கும் மூர்த்தி உயிருடையதாகும்படி மூர்த்திமானை அதன்கண் வருவித்துச் செய்தல் புறப் பூசை. இனிக் குற்றந் தீர்ந்த அன்புடன் செய்வனயாவும் சிவனுக்குச் செய்யப்படும் பூசையாம்.

குறிப்புரை :

அதனால், `அன்பின்றி நிகழின் இங்கு எடுத்தோதப் பட்டனவும் பூசை யாதலில்லை` என்றதாம்.
``நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே`` 1
எனவும்,
``அன்பேஎன் அன்பேஎன் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தந் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாத்தும் பழமன்றே தான்`` 2
எனவும் போந்தன காண்க. இதனுள் யாவற்றையும் ``பூை\\\\u2970?`` என்றே குறித்தலின், `பசுக்களாகிய உயிர்கள் பதியாகிய இறைவன் எவ்வாற்றாலும் வழிபட்டு நிற்றலே சைவத்தில் உள்ள உய்யும் நெறி` என்பது விளங்கும். `அவ்வழிபாடுதான், `ஞான யோகக் கிரியா சரியைகள்` என நான்காய் நிற்கும்` என்பது அம்முறையானே கூறப்பட்டது. முதல் மூன்று அடிகளிலும் முறையே ஞானம் முதலிய மூன்றனையும் கூறி, `அவையல்லாத பிறவெல்லாம் சரியையாம்` எனப் பொதுப்படக் கூறினார் என்க. `பிராசாத யோகம்` என்பார், ``மகா யோகம்`` என்றார். ``ஆய் நிற்றல்`` என்பது, `ஆய்` என்னும் முதனிலை, `ஆய்ந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `உயிர்ப் பெறும்` என்பது பாடமாயின், `பகரஒற்று விரித்தல்` என்க. செயிர் - குற்றம். `அறன்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்தல் போல, `செயிர்க்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்து.
இதனால், சைவத்தின் ஒழுகலாறு நால்வகைத்தாதலும், அவற்றின் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``நன்மை`` என்றது அருள் விளக்கத்தை. இதனை முன் உள்ள ``நாடு, நகரம்`` என்பவற்றிற்கும் கூட்டி, `நல்ல நாட்டையும், அதனுள் நல்ல நகரத்தையும், அதனுள் நல்ல திருக்கோயிலையும் கருதித் தேடித் திரிந்து` என உரைக்க.
``தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்`` 1
என அருளிச்செய்ததும் அறிக. நெஞ்சத்தை உடையாரது தொழிலை நெஞ்சத்தின் மேல் ஏற்றி, ``கூடிய நெஞ்சம்`` என்றார். கொள்ளுதற்கு எழுவாய், முன்னர் வந்த சிவபெருமானைச் சுட்டும். `அவன்` என்பது வருவிக்க. இங்ஙனம் விரித்துக்கூறிய இவை, `சரியை` என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது. `நெஞ்சத்து` என்பது பாடம் அன்று.
இதனால், சரியை ஓழுக்கமாவன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பத்தர் சரியை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த இயமாதி தூயோகர் சாதகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.

பொழிப்புரை :

சரியையில் நிற்போர் பத்தியையுடைய `பத்தர்` என்றும், கிரியையில் நிற்போர் அணுக்கத் தொண்டு செய்யும் அத்தகுதியை யுடைய `தொண்டர்` என்றும், இயமம் முதலிய யோக நிலைகளில் நிற்போர் `சாதகர்` என்றும் ஞானத்தில் நிற்போர் `சித்தர்` என்றும் பெயர் பெறுவர். இவருள் முதல் இருவரும் திருவேடத்தைத் தவிராது பூண்பர்.

குறிப்புரை :

எனவே, பின்னை யிருவரும் பெரும்பான்மையும் புறக் காட்சி யிலராகலின், திருவேடம் இன்றியும் காணப்படுவர் என்பது போந்தது. பத்தர் - பத்தியுடையவர். அணுக்கத்தொண்டே `தொண்டு` எனப்படுமாதலின், இவர் `தொண்டர்` எனச்சிறப்பித்துக் கூறப் பட்டாராயினர். அணுக்கத்தொண்டினை `பணிவிடை` என்பர். சித்தர் - பேறு பெற்றவர். `சாதகர் தூயோகர்` என்பது பாடமாயினும் இதுவே பொருள் என்க.
இதனால், காரணப்பெயர் கூறும் முகத்தால், சரியை முதலிய நான்கிலும் நிற்போரது தராதரம் உணர்த்துப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே

பொழிப்புரை :

சிவமாந் தன்மையை எய்தினோரே மெய்ஞ் ஞானம் முற்றினவராவர். மனம் சமாதிநிலையில் அடங்கப் பெற்றவரே அட் டாங்கயோகம் முற்றினவராவர். ஒருநாளேனும் அர்ச்சனை தவறி யொழி யாதபடி செய்தவரே நுணுகியதான கிரியை முற்றினவராவர். நெடுந் தொலைவான நாட்டிலும் சென்று மூர்த்தி தலம் தீர்த்தங்களை முறைப்படி வணங்கினவரே தாம் ஏற்றுக்கொண்ட சரியை முற்றின வராவர்.

குறிப்புரை :

``தான்`` என்றது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், `சரியை முதலியவற்றில் நிற்பவர் அவற்றைக் கடைப்பிடியாகக் கொண்டு முதிர்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கிரியையோ கங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.

பொழிப்புரை :

கிரியை வழிபாட்டிலும், யோக வழி பாட்டிலும் சிவனது அருள் உருவம் நிற்கும். ஞானவழிபாட்டில் உருவம் அற்ற அருவ நிலை தோன்றும். இவ்வழிபாடுகள் சத்தி நிபாத நிலைக்கு ஏற்பக் குருவின் வழி நூல் நெறியாற் செய்யப்படுவன. இவ்வாறன்றி அன்பு காரணமாகத் தத்தமக்கு இயலும் வகையிற் செய்யப்படுவன இவற்றினும் உயர்ந்த வழிபாடாய் அமையும்.

குறிப்புரை :

நிரல் நிறையில் கிரியை, யோகம் இரண்டும் `உரு` என வரும் ஒன்றனோடே இயைதற் பொருட்டு, ``கிரியை யோகங்கள்`` எனத் தொகைப்படுத்து ஓதினார். `உரு` என்பதன் ஈற்று முற்றியலுகரம் உயிர்வரச் சிறுபான்மை கெட்டது. இவை, பருவத்துத் தேர்ந்திடும் பூசை எனச் சுட்டுப் பெயர் வருவித்து முடிக்க. தேர்தல், கேட்டல் சிந்தித்தல்களால் மெல்ல உணர்தல். உரியன, இயலுந் திறம்பற்றிக் கொள்ளுதற்கு உரியன. இவை திருநீலகண்டத்துக் குயவனார். அதி பத்தர் முதலியோரால் கொள்ளப்பட்ட செயல்கள் போல்வன. இவை யெல்லாம் உலகத்தார்க்குச் சரியை போலவும், பொதுச் சிவபுண் ணியங்கள் போலவும் தோன்றுதலின், இவ்வதிகாரத்துட் கூறினார். `நேயத்து உரியன` என மாற்றிக்கொள்க. எடுத்த எடுப்பில் இதன்கண் நெறிகள் பலவும் தொகுத்துக் கூறப்படுதலும் நோக்கத்தக்கது.
இதனால், நூன்முறை வழிபாடு, அன்பு முறைவழிபாடு` என வழிபாடு இருவகைத்தாதல் உணர்த்தப்பட்டது. இவற்றை முறையே, `விதி மார்க்கம், பத்தி மார்க்கம்` என்பர்.

பண் :

பாடல் எண் : 7

சரியாதி நான்கும் தகும்ஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.

பொழிப்புரை :

`சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நான்கு நெறிகளும், அவற்றில் முடிவாக உள்ள தகுதி பெற்ற ஞானம் ஒன்றிலே `ஞானத்திற் சரியை` முதலிய நான்கும் விரிந்துள்ள இவையே வேதத்தின் தெளிவாய் அமைந்த சிவாகம நெறி. அரனையே பொருளாகின்ற நிலையைச் சிவபெருமான், அறியாமை யுடைய மக்கள் அதனினும் நீங்கித் தனது ஒளி யுலகத்தை யடைந்து தன்னை வணங்கி வாழ்தற் பொருட்டு` வைத்துள்ளான்.

குறிப்புரை :

`அதனால், இவையே வீட்டு நெறிகளாம்` என்பது கருத்து. ஏனை வேத நெறிகள் இம்மை, மறுமை என்னும் உலக நெறிகளாம் என்க. ``சித்தாந்தம்`` என்பது இங்குச் சிவாகமத்திற்குப் பெயராய், அது பற்றிக் கொள்ளப்படும் நெறிகளைக் குறித்தது. அந்நெறிகள் ஆறாவன, `பாடாண வாத சைவம், பேதவாத சைவம், சிவ சமவாத சைவம், சிவ சங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாமவாத சைவம்` என்னும் அகச் சமயங்கள், இவற்றுள், இறுதியில் உள்ளது `சிவாத்துவித சைவம்` எனவும் படும். ஐக்கியவாத சைவமும் சிவாகம நெறியே யாயினும். அது அவ் ஆகமங்கள் முதன்மையாகக் கூறும் ஆணவ மலத்தைக் கொள்ளாமை யால், வேதாந்தத் தெளிவாகாது. அகப்புறச் சமயங் களோடு கூட்டி எண்ணப்படுகின்றது. சிவலோகத்தை அடைந்து வாழும் வாழ்வுகள் யாவும் பதமுத்திகளே. அகச் சமயங்கட்குப் பதமுத்திகளே பயன் என்றதனால், பரமுத்தி சித்தாந்த சைவத்தினன்றி எய்தலாகாமை அறியப் படும்.
இதனால், `சரியை முதலியவைகளே வீட்டு நெறிகள் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சமையம் பலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி
சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.

பொழிப்புரை :

வீட்டு நெறிளாகிய சரியை முதலியவைகளில் நிற்க விரும்புவோர், ஆசிரியரை அடைந்து தீக்கை பெற்று நின்ற வழியே அவை உண்மைச் சரியை முதலியனவாய்ப் பயன்தரும். அத்தீக்கை, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நான்கு வகைப்படும்.
சமய தீக்கை தூல உடம்பைப் பல வகையில் தூய்மைப் படுத்து வதாகும். அதன் பயனாக, மாணவன், இது காறும் எல்லாச் செயல் களையும் தன்னால் ஆகின்றனவாகவேயாக மயங்கியிருந்த மயக்கம் நீங்குமாறு. `எல்லாம் அவன் செயல் (சிவன் செயல்)` ஆதலை உணரும் வாய்ப்பினைப் பெறுவான். அதனை அடுத்துச் செய்யப்படும் விசேட தீக்கை சிவமந்திரங்களைப் பீசங்களோடு கூட்டி உபதேசித்து, அதனால் பெரும்பயன் அடையச் செய்வதாகும். சாந்தத்தை உடைய நிருவாண தீக்கை, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தி யாதீதை` என்னும் கலைகள் ஐந்தில் ஏனைய பொருட் பிரபஞ்சம், சொற்பிரபஞ்சங்களாய் அடங்கியுள்ள அத்துவாக்களிடமாக நிற்கும் சஞ்சித கன்மங்களை ஆகுதிகளால் அழித்து, மாணவனது ஆன்மாவை நின்மலம் (மாசற்றது) ஆக்குவதாம். அதற்குமேல் உள்ள அபிடேகம்` ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்கும் தீக்கை செய்தற்கு உரிய பெரிய ஞானத் தகுதியுடையவர்க்கு அவ் ஆசிரியத்தன்மையை அபிடேகம் செய்து அளிப்பது.

குறிப்புரை :

சமய தீக்கை பெற்றவன், `சமயி` எனப் பட்டுச் சரியையில் நிற்றற்கு உரியன், `இந்நிலையில் கணிக்கப்படும் மந்திரங்கள் நிர்ப்பீசம்` என்னும் கொள்கை பற்றி இதனை நாயனார் `மந்திரசுத்தி` என்னாராயினார். எனினும், இங்கும் மந்திரங்களைச் சபீசமாகச் சொல்லும் வழக்கமும் காணப்படுகிறது. விசேட தீக்கையில் மந்திரங்கள் சபீஜமாகச் சொல்லும் அதிகாரத்தைத் தந்து, கிரியையிலும் யோகத்திலும் நிற்பித்தலால் இதனையே ``மந்திர சுத்தி`` என்றார். மந்திரம் ஆறத்துவாக்களில் ஓரத்துவாவேயாம். நிருவாண தீக்கையில் மட்டுமே ஏனை ஐந்தத்துவாக்களையும் அடக்கியுள்ள கலைகளைச் சுத்தி செய்து சஞ்சித கன்மம் துடைக்கப்படுதலால், அதனையே ``கலா சுத்தி`` என்றார். நிர்ப்பீசம் - பீசாக்கரங்களோடு கூடாதது - சபீசம் - பீசாக்கரத்தோடு கூடியது. `சமயம், விசேடம், நிருவாணம்` என்னும் மூன்றிலும் `நிர்ப்பீசம், சபீசம்` என்னும் இரண்டும் உள என்றலும், சமயம் நிர்ப்பீசமே; ஏனைய இரண்டும் சபீசமே, என்றலும் ஆகிய இருவேறு கொள்கைகளும் ஆகமங்களில் உள என்பர். `சபீச தீக்கை உயர்ந்தோர்க்கே செய்யப்படும்` என்பது ஒரு படித்தான கொள்கை யாகையால், `விசேடமும், நிருவாணமும் சபீசமே` என்னும் கொள்கை யில் `அவ் இரு தீக்கையும் உயர்ந்தோர்க்கே செய்யப்படுவன` என்பது விதியாய் அமையும். ``அமை மன்னும்`` என்பதற்கு. `அமைந்து நிலைபெறும்` எனப் பொருள் உரைக்க.
இதனால், சரியை முதலியவற்றைக் கூற எடுத்துக் கொண்ட நிலையில் அவற்றிற்கு உரிமையைத் தரும் தீக்கை வகைகள் இம்முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வமுண்டு
எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

பொழிப்புரை :

எல்லாத் தெய்வங்கட்கும் மேலான ஒரு தெய்வ மாகிய சிவபிரான் பத்துத் திசைகளிலும் நிறைந்திருக்கின்றான். அவனை எந்தத் திசையில் `இல்லை` என்று கூறமுடியும்! ஆதலால், பலவகை மலர்க் கூட்டத்தைக் கொண்டு அவனது திருவடியையே புகலிடமாகக் கருதி வழி பட்டால், பொங்கிப் புரண்டு வருகின்ற வினையாகிய கடல் வந்து மோத மாட்டாது ஒழியும்.

குறிப்புரை :

`ஆதலின், அதனைச் செய்க, என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில், ``எத்திக் கினிலில்லை`` என்பதைப் பிறவாறு ஓதுவன பாடமாகா என அறிந்து கொள்க. `கொத்தோடு` என மூன்றாவது விரிக்க.
இதனால், `கிரியையாவது சிவபெருமானை மலர்தூவி வழி பகுதலேயாம்` என்பது கூறப்பட்டது.
இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``கானுறு கோடி`` என்னும் மந்திரம் பின்னர் ஏழாம் தந்திரத்தில் `குருபூஜை` அதிகாரத்தில் வருவது.

பண் :

பாடல் எண் : 2

கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.

பொழிப்புரை :

தலைவனாகிய சிவபெருமானது நடனம் புரிகின்ற திருவடிகளைத் துதியுங்கள். ஏனெனில், `ஞானக்கன்றுகளின் கூட்டம்` எனத் தக்க அடியார் கூட்டத்தின் நடுவே திரிந்துகொண்டிருப்பவனும், வானத்தில் வாழும் பசுக்கன்றுகளாகிய தேவர்களால் தொழப் படுபவனும் ஆகிய சிறப்பால் யானையை ஒத்த அடியவனுக்கே மறுமையில் சிவனது திருவருட் பெருக்கு உளதாகும்.

குறிப்புரை :

`கோன் நக்கன் தாய குரை கழல்` எனவும் `ஞானக் கன்று ஆய நடுவே` எனவும், `ஆனைக்கு அன்று` எனவும் கண்ணழித்து உரைக்க, ``உழிதரும், கைதொழும்` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆனை`` என்னும் ஒருபெயர் கொண்டன. ``ஆனைக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல் பெற்றது. `அருள் பள்ளமாமே` எனவும் பாடம் ஓதுவர். `வள்ளமாமே` என்பது பாடமன்று.
இதனால், கிரியையுள் தோத்திரம் சிறந்ததோர் உறுப்பாதல் கூறப்பட்டது. ``பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி`` 1 என்றார் நாவுக்கரசரும்.

பண் :

பாடல் எண் : 3

இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
எதுபணி மானுடர் செய்பணி? ஈசன்
பதிபணி செய்வது பத்திமை யாமே.

பொழிப்புரை :

உலகங்கள் அனைத்தையும் செயற்படுத்தலாகிய அச்செயலைச் செய்பவளாகிய அம்மையும் அதனைச் செய்தல் அவளை ஒரு கூற்றிலே உடைய சிவனிடத்து இக்கிரியைத் தொண்டைச் செய்தேயாம். அங்ஙனமாயின், `மக்கள் செய்யத் தக்க பணி` யாது என்பார்க்கு, பதியாகிய அவனிடத்துச் செய்யுங் கிரியையே` என்பது கூற வேண்டுமே! இனி, `பத்திமை` எனக் கூறப்படுவது இக்கிரியையேயாம்.

குறிப்புரை :

``பணிந்த`` என்பது, `பணியைச் செய்து` என இருசொல் நிலைமைத்தாய் நின்றது. `எண்டிசை மண்டலம் எல்லாம் செய் கின்றவள் அது பணி அவளொடு கூறன்பால் இது பணிந்து` எனக் கூட்டியுரைக்க. அம்மையும் இறைவனை வழிபட்டு வரம்பெற்றமை பல இடங்களில் வெளிப்படை. ``கூறன்`` என்பதில் ஏழாவது இறுதிக் கண்தொக்கது. மூன்றாம் அடியிலும் `இது பணி` என ஓதுதல் பாட மாகாது. `பதியாகிய ஈசன் பணி` எனக் கூட்டுக. `இது செய்வதே பத்திமை` என வேறு தொடராக்கியுரைக்க. சரியை முதலிய நான்கனுள் முன்னிரண்டும் `பத்திச் செயல்கள்` எனவும், பின்னிரண்டும், `ஞானச் செயல்கள்` எனவும் பொதுவாக வழங்கப்படுமாறு அறிக. இது வருகின்ற திருமந்திரத்தாலும் பெறப்படும்.
இதனால், கிரியையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.

பொழிப்புரை :

பத்தியை வேண்டுபவன், முன்னே சரியை கிரியை களிற் பழகிப் பின்பு சத்திநிபாத முதிர்வால் குற்றம் அற்ற சிவயோகத் தில் மனத்தை செலுத்தும் வழியிலே பொருந்தி, அதனால், முதிர்ந்து வருகின்ற ஞானத்தால் குருவருள் வாய்க்கப் பெற்றுப் பின்பு அவ்வருளானே சிவத்தை அடைந்து சிவமேயாவான்.

குறிப்புரை :

அதிகார இயைபுபற்றி, கிரியை முற்கூறப்பட்டது ``சுத்தம்`` என்றது பிறவற்றைக் கீழ்ப்படுத்துத் தான்மிக்குத் தோன்று தலை. அடயோகம் முதலியவற்றால் மலம் நீங்காமையின் அது நீங்குத லாகிய சிவயோகத்தை, ``துரிசற்ற யோகம்`` என்றார். உய்த்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. ``சித்தம்`` என்றது அறிவை ``குரு வருளால்``என்ற அனுவாதத்தால், குருவருள் ஆதலும் பெறப் பட்டது. `சரியை கிரியைகளாகிய பத்தி நெறியில் நின்றோன் பின்பு யோக ஞானங்களாகிய ஞான நெறியைத் தலைப்பட்டுப் பின் அது வழியாகச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வு எய்துவன்` என்றவாறு.
இதனால், மேற் கூறிய பத்தி நெறி, ஞானம் வாயிலாக வீட்டைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள்
என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே.

பொழிப்புரை :

செம்பொன்போலும் திருமேனியும், அதனுட் சிறப்பாகக் குறிக்கத் தக்க தாமரை மலர்போலும் திருவடிகளும் என் கண்முன் தோன்றினாற்போல, என் உடம்பகத்து இருதய கமலத்தில் ஒளியாய் விளங்குகின்ற சிவன், புறத்தில் இலிங்க மூர்த்தியிடமாக எனக்கு விளங்கிநிற்கின்றான். அதனால், அடியேன் அவன்மேல் வைத்த அன்பினால் மனம் நெகிழ்ந்து உருகுகின்றேன்; அவன் இடும் பணிகளைச் செய்கின்றேன்; எல்லாம் செய்து அவனை வேண்டுவது அவனது அருள் ஒன்றையே.

குறிப்புரை :

``மொழிவது எனக்கருள்`` என்பதை முதலடியின் இறுதி யிற் கூட்டி அஃது ஈறாக அனைத்தையும் ஈற்றில் வைத்து உரைக்க. ``செய்`` உவம உருபு. `இலிங்கு நின்றானே. இலங்குகின்றானே` என்பன பாடமல்ல. இடும்பணி, ஆகமத்தின் வழியாகப் பணித்த பணிகள். மோனை நயம் கருதாது, `நாளும் பணி செய்வன்` என்றலுமாம். இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், இலிங்க மூர்த்தியில் சிவனை முடிமுதல் அடிகாறும் தோன்ற வெளிநிற்கப் பாவித்து வழிபடுதலே கிரியையாதலும், அது பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யப்பட்ட வழியே உண்மை யாதலும் கூறப்பட்டன, ``என்பினுட் சோதி இலிங்கம் நின்றான்`` என்பதனால், கிரியையாளன் அவ்வாறு அகத்தும் புறத்தும் வழிபடல் வேண்டும் என்பதும் கூறியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.

பொழிப்புரை :

வளி நிலை (பிராணாயாம) முறைப்படியே மூலாதார முதலிய ஆறு ஆதாரங்களிலும் உணர்வாய் ஏறிச்சென்று இறுதியில் சிவனது அருவத் திருமேனியில் நிலைத்து நின்று, ஊன்றி நிறுத்தப்பட்ட தூண்போலும்படி தமது உடலை நேராக நிமிர்த்துச் சிறிதும் அசைவற நிறுத்தி, அதனைப் பிறர் கீறினாலும், தாக்கினாலும் அவற்றால் உணர்வு பிறழ்ந்து விரைய அவரை நோக்குதல் இல்லாது, தியானப்பொருள் ஒன்றையே உணர்ந்திருக்க வல்ல மாயோகிகட்கே அந்தத் தியானப் பொருளாகிய சிவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

நேர்மை - நுண்மை. அஃது அருவத்தை யுணர்த்திற்று. ``தாம்`` ஆகுபெயர். `இவ்வாறிருப்பார் யோகிகளே` என்பது வெளிப்படையாதலின், `யோகியர்` என்பதனை எடுத்தோதாதே போயினார்.
இதனால், `யோகத்தினது இயல்பு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

பொழிப்புரை :

யோகப் பயிற்சியால், பல ஊழிகள் செல்லவும் எடுத்த உடம்பு நீங்காது நிற்க, அதன்கண் நின்று அவ்வூழிகளைக் காண வல்லவர்க்கல்லது, ஊழிகள்தோறும் காரணக் கடவுளர்களது தொழிலிற்பட்டுப் பிறந்து இறந்து உழல்பவர்கட்கு அப்பிறப்புக்களில் பல்லூழிகள் சென்றாலும் அவர் தன்னை உணர நில்லான் சிவன். பாற் கடலில் பள்ளி கொள்பவனாகிய மாயோனும், பிரமனும்` என்று சொல்லப்பட்ட தலைமைத் தேவர்களே பல்லூழிக்காலம் தேடியும் காணவராமல் அவர்களது ஆற்றலுக்கு அப்பாற்பட்டு அவன் நின்றதே அதற்குச் சான்று.

குறிப்புரை :

``உச்சி`` என்றது, மேல் உள்ள இடத்தை.
இதனால், இறைவன் `சரியை, கிரியை` என்பவற்றிற் போலன்றி யோகத்தில் வெளிப்பட்டு விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணரவல் லார்கட்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.

பொழிப்புரை :

பூ மலர்தற்குமுன் அதன் மணம் அதனுள் அடங்கி யிருத்தல் போல, உயிர் பக்குவப்படுதற்கு முன் அதன் அறிவுக்கு அறிவாய் அதனுள்ளே தோன்றாதிருந்த சிவம், பக்குவத்தால் உள்ளமும், உடலும், எழுதப்பட்ட ஓவியம் போல அசைவற்று நிற்கப் பெற்ற யோக உணர்வினர்க்கு வெளிப்பட்டு விளங்கும். அப்பொழுது அவர்களது உள்ளமும், உடலும் புனுகு பூனையால் கூடப்பட்ட மூங்கில் தறி அதன் மதநீரால் மணம்பெற்றுத் திகழ்ந்தது போலச் சிவமணம்கமழப் பெற்றுச் சிவதனுவும், சிவகரணமுமாய் விளங்கும்.

குறிப்புரை :

``பூத்தது`` என்பதனை மூன்றாம் அடியில் இறுதியிற் கூட்டி,அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சமும், ``ஆம்`` என்பதற்கு வினைமுதலும் வருவித்து உரைக்க. புனுகு பூனையே, `கத்தூரி மான்` எனப்படுகின்றது. இதன் மதமே மிக்க நறுமணம் கமழ்வதாகிய கத்தூரி, கத்தூரியே `மான் மதம்` என்றும், ``மிருக மதம்`` என்றும் சொல்லப்படுவது. இவ்விலங்கினிடமிருந்து இதன் மதத்தைக் கொள்ள வேண்டுவோர் இதனைக் கூட்டில் அடைத்து நல்லுணவு கொடுத்து, இதற்கு இன்ப வேட்கை மிகும்படி செய்வர். அதுபொழுது இஃது அக்கூட்டினுள் முன்பே பொருத்தப்பட்டுள்ள மூங்கிற் குழாயை அணைந்து தனது மதத்தை வெளிப்படுத்த, அதனை அம்மக்கள் எடுத்துக்கொள்வர். அம்மதம் உள்ள பொழுதும், எடுக்கப்பட்ட பின்பும் அம் மூங்கிற் குழாய் தன்னுள்ளே அம்மணம் கமழப் பெறுவதாயே இருக்கும். அதனையே, ``நாவி அணைந்த நடு தறியாமே`` என உவமித்தார். ஆக்கம், உவமை குறித்து நின்றது.
``நாவியின்கண் - போதுறு மதம் விடுத்துப்
புன்மலங் கொள்ளு மாபோல்`` 1
என்ற சிவப்பிரகாசர் மொழியிலும் இம் மான்மதம் குறிப்பிடப்படுதல் காணலாம்.
இதனால், மேற்கூறிய சிவ விளக்கம் உவமையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.

பொழிப்புரை :

உலகீர்! நீவீர், உய்திக்குக் காரணமாய்ப் பொருந்தியுள்ள பொருளை அறியவில்லை. ஆயினும், `யாம் உய்ந்தோம், உய்ந்தோம்` என்று மயங்கி உரைக்கின்றீர். மலரில் மணம்போல உம்மிடத்து உள்நின்று தோன்றக்கூடிய சிவனை, யோக நெறியால் உள்ளத்தில் பொருந்தக்கண்டு, அதனால் உம் மயக்கம் நீங்கப் பெற்றால், தொன்று தொட்டு வருகின்ற பிறவிக்கு மூல காரணமாய் உள்ள ஆணவ மலம், கீழ்ப்பட்டு அடங்கிவிடும்.

குறிப்புரை :

`உறுபொருள் காண்கிலீர், உய்ந்தமை என்பீர்` எனவும், `மலரிற் கந்தம்` எனவும் மாற்றியுரைக்க. `யோக நெறியால்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஆணவம் ஆழ்தலாவது தனது சத்தி மடங்கிக் கிடத்தல். மூலவித்தாமே, மூலவித்தாகுமே` என்பன பாடம் அல்ல.
இதனால், யோகத்தால் ஆணவ சத்தி மெலிவடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா
அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.

பொழிப்புரை :

இயல்நூற் கல்வி, பாடல்களை ஓதுதல், மற்றும் அறுபத்து நான்கு கலைகளையும் பயிலல் இவையெல்லாம் இகழ்ச்சிக் குரிய பாசத்தால் விளையும் பிறவியை நீக்கமாட்டா. அதனால், நான் அப்பிறவியை அழிக்கும் முறையை. `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` எனப் பெயர்பெறும் மூச்சின் இயக்கங்களை நெறிப்படச் செய்யும் வகையால் அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

பழித்தலைப் பாசம் - பழியின்கண் நிற்கும் பாசம். `பிறவியும் நீங்கா` என்பது பாடம் அன்று. `அழித்தலை உணர்ந்தேன்` என இயையும். இதற்குமுன், `அதனை` என்பது வருவிக்க. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் நாடிவழி இயங்கும் பிராணன் `சந்திர கலை` முதலிய பெயர்களைப் பெறுதல் அறிக. ``வழித்தலை`` என்பதன்பின், `பட` என்பது எஞ்சி நின்றது. `வகையால்` என உருபு விரிக்க. நூலறிவு ஒன்றே பிறவியை நீக்கமாட்டாது; அதற்கு யோக முயற்சி வேண்டும்` என்றதாம்.
இதனால், யோகம் பிறவி நீக்கத்திற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.

பொழிப்புரை :

யோகத்தைத் தியானப் பொருளிடத்து வைக்கும் பேரன்புடன் செய்த வழியே அதனால் விளையத்தக்க பயன்கள் யாவும் விளையும்.

குறிப்புரை :

`இல்லையேல், ஒரு பயனும் விளையாது` என்பதாம். நான்கிடத்தும், `செயினே` என ஏகாரத்தை மாற்றியுரைக்க. மெய்த் தவன் - மெய்ப்பொருளைத் தலைப்பட்டு அதுவானவன். இது, `மெய்` என்னும் பெயரடியாகப் பிறந்த வினைப்பெயர். இதன்பின், ``ஆகும்`` என்ற செய்யுமென் முற்று. உயர்திணை ஆண்பாலில் வந்தது. ஈற்றில் வருவதும் அன்னது. இடை நின்ற இரண்டும் `உண்டாகும்` என்னும் பொருளன. விண் - சிவலோகம். ``மெய்த்தவனாகும்`` முதலிய நான்கும் சிறப்புடைப் பொருளை முற்படக் கிளக்கும் முறையிற் கூறப் பட்டன. முதலடியில் `மெய்த்தவராகும்` என்பது பாடமன்று. இரண்டாம் அடியில் `மெய்யுரையாகும்` எனப்பாடம் ஓதி, `குருமொழி கிடைக்கும்` எனவும் பொருளுரைப்பர்.
இதனால், `யோகம் பயன் தருதலும் அன்புள்ள வழியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
காணில் தனது கலவியு ளேநிற்கும்.
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடும்அங்கி உத்தமன் றானே.

பொழிப்புரை :

உடம்பினுள் நின்று வெப்பத்தைத் தருகின்ற மூலாக் கினியாய் உள்ள சிவன், அவ்வக்கினியை அணையாது ஓம்பி நின்றால் வீட்டுலகத்தை அளித்தருள்வான். அவ்வக்கினியை எழுப்பிக் காணும் அளவில் நின்றால், அங்ஙனம் நிற்கும் யோகிக்கு அவன் உறவான பொருளாய்ப் பல நலங்களைச் செய்தருள்வான். இவ் இரண்டும் இன்றி, உலகரது பழிப்பு நோக்கி அந்நெறியிற் செல்ல ஒருவன் கூசுவனாயின், அவன் நரகத்தை நோக்கிப் போகும் வழிக்கே வகையைச் சிவன் உண்டாக்குவான்.

குறிப்புரை :

`ஆதலின், மூலாக்கினியை எழுப்பிப் பயனடையும் விருப்பமும், ஆற்றலும் உடையோர் உலகரது இகழ்தல் புகழ்தல்களை நோக்காது, அதன்கண் முயல்க` என்பது குறிப்பெச்சம். ``கலவியுள்`` என்பதில், `உள்` என்பது ஏழனுருபு. ஈற்றடி இனவெதுகை பெற்றது.
இதனால், யோகத்திற்குத் தகுதியுடையோர் தப்பாது அதன் கண் முயலல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.

பொழிப்புரை :

யோகத்தில் விருப்பங்கொண்டு, மேற்கூறியவாறு மூலாக்கினியை ஓம்பி நின்றவனைத் தனது பூத உடலை விட்டுப் போவதற்குள், நீதிக்கு ஒத்த செங்கோல் அரசராயும், அமர முனிவ ராயும் உள்ளோர் எத்தனை ஆயிரவர் இறந்தார்கள்! எண்ணில்லாதவர் இறந்தார்கள். அதனால், சித்தர், தேவர், மும்மூர்த்திகள் ஆகியோரும் மேற்கூறிய யோகியை, `இவனே சிவன்` என்று பெருமையாகப் பேசி, அவனிடத்து அன்புடையராவர்.

குறிப்புரை :

``விரும்பி நின்றே செயின்`` எனவும் பேணின் எனவும், மேற்போந்த அதிகாரம் அறாது வருதலின், இம்மந்திரமும் அவனது சிறப்புக்கூறுவதேயாய், ``இவன்`` எனப்பட்டவனும் அவனேயாயினான் என்க. `தேவ இருடியர், முனிவர்` என்பார், ``உலப்பிலி மாதவர்`` என்றார். அவர் அவ் இருடியரும், முனிவரும் ஆயது முன்னைப்பசு புண்ணியத்தால் ஆதலின், அப்புண்ணியந் தீர்ந்தவழி அவரும் அப்பதவியின் நீங்குதல் பற்றி, அவரையும் வீழ்வாருள் ஒரு சாராராக ஓதினார். இங்குக் கூறும் யோகம் சிவயோகமாதலின், இவன் இறவாது வீட்டுலகம் புகுவன் என்க. `எண்ணிலி, உலப்பிலி` என்பவற்றை ஓர் எண்ணுப் பெயர்போலவும் வைத்து ஓதுவார் இந்நாயனார்.
இதனால், சிவனிடத்துச் செய்யும் அன்போடு கூடிய யோகத்தை உடையவனது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற்
காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள்
ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

பொழிப்புரை :

யோக நெறியில் நிற்பவனுக்கு, `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்றும் செய்ய உரிமை உண்டு. கிரியை நெறியில் நிற்பவனுக்கு, `கிரியை, சரியை` என்னும் இரண்டும் செய்ய உரிமை உண்டு. உலகியல் அவாவை விட்டுச் சரியையில் நிற்பவனுக்கு அஃது ஒன்றற்குமட்டுமே உரிமை உண்டு. அங்ஙனமாயினும் எந்த ஒன்றில் அன்புடையவனாயினும் அவனது அன்பை நான் விரும்புகின்றேன்.

குறிப்புரை :

`சரியை முதலியவற்றுள் எந்த ஒன்றில் நின்றோரும் பின்னர் உலகியலில் வீழாது வீடு பெறுதல் உறுதி` என்பதாம். இம் மந்திரத்துள் திரிவுபட்ட பாடங்கள் பற்றி இடர்ப்பட்டுப் பொரு ளுரைப்பர். ஆதிசரியை - முதற்படியாகிய சரியை. மூன்றாம் அடியில் `சரியையில் ஒன்றேயாம்` என விரிக்க. ஈற்றடியில் ``ஆகி`` என்பது பெயர். அதன்பின் ஒற்றுமிக்கது செய்யுள் விகாரம்.
``... ... ... ... ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரியா வான்தான் ஒண்கிரியை யாதி
ஆனஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேயுரியன்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், யோகி, `சரியை, கிரியை` என்னும் இரண்டில் நிற்பாரின் உயர்ந்தவனாதல் கூறப்பட்டது. அங்ஙனமாயினும் `அவை பசு புண்ணியங்கள் போல மலத்தின் வழிப்பட்டன ஆகா` என்றற்கு. ``ஒன்றுள் ஆகித்தன் பத்தியுள் அன்புவைத்தேனே`` என்றருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 10

யோகச் சமயமே யோகம் பலஉன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே.

பொழிப்புரை :

யோக நூல் பற்றி யோக வகைகள் பலவற்றையும் உணர்தல் `யோகத்தில் சரியை` எனப்படும். இயமம் நியமம் முதலிய எட்டுநிலைகளிலும் நிற்றல் `யோகத்தில் கிரியை` எனப்படும். உள்ளொளிக் காட்சி கிடைக்கப் பெற்று நிற்றல். `யோகத்தில் யோகம்` எனப்படும். மூன்றாம் தந்திரத்தில் `பரசித்தி` எனக் கூறப்பட்ட அவற்றைப் பெறுதல் `யோகத்தில் ஞானம்` எனப்படும்.

குறிப்புரை :

சரியை முதலியவற்றை அவற்றிற்குரிய தீக்கைப் பெயர் களாற் கூறினார், `யோக நிலையில் அவ் அவ்யோகப் பகுதிகளே அவ்வத் தீக்கைகளாயும் அமையும்` என்றற்கு நிர்வாண தீக்கை ஞான தீக்கையாயினும் சாதகருக்கு ஞானத்தை முதிர்விக்கப் பிராசாத யோகம் உண்மை பற்றி யோகப் பகுதியாகக் கூறினார். அதற்கேற்ப ஞானத்தின் மிக்க ஆசாரிய நிலையையே `ஞானம்` என்றார், வருகின்ற அதிகாரத்து இறுதியிலும் இவ்வாறே கூறுதல் காணத்தக்கது. யோகத்தில் சரியை முதலியன பிறவாறுகூறப்படினும், `இவ்வாறு கூறுதலும் உண்டு` என்பது இதனால் பெறப்படுகின்றது, ``உற்றல்`` என்பதில் றகர ஒற்று விரித்தல்.
இதனால், யோகத்தின் படிநிலைகள் பல கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

பொழிப்புரை :

ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை. இருப்பதாகக் கருதும் சமயம் யாதேனும் உண்டாகுமானால், அது நல்ல சமயம் ஆகாது. ஞானத்தின் நீங்கிய எந்தச் சாதனங்களும் முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே மக்களுட் சிறந்தவராவர்.

குறிப்புரை :

மேற் சரியை முதலியவற்றின் சிறப்புக்களை இதுபோல மிக உயர்த்துக் கூறாமையால், `அவையெல்லாம் ஞானம் வாயிலாக வீட்டிற்குச் சாதன மாதலல்லது நேரேசாதனமாவன அல்ல` என்பதும், `ஞானம் ஒன்றே வீட்டிற்கு நேர்ச்சாதனம்` என்பதும் பெறப்பட்டது.
``ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமம்சொல்ல, `அல்லவாம்` என்னும்
ஊனத்தார் என்கடவர்! அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான்
ஆனத்தால் அதுபோவ தலர்கதிர்முன் இருள்போல்
அஞ்ஞானம் விடப் பந்தம் அறும்; முத்தி ஆகும்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே வலியுறுத்தி ஓதினமை காண்க.
ஞானம் - மெய்யுணர்வு. அஃதாவது, `பொருளல்லவற்றைப் பொருள் என்று உணராது` 2மெய்ப்பொருளை உணர்தல். இது `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பை அளவைகளாலும், பொருந்துமாற்றானும் நன்கு சிந்தித்துத் தெளிதலே உளதாவதாம். இதனையே, வடமொழியில் `தத்துவ ஞானம்` என்பர். இம்மெய்யுணர் வாவது சிவஞானமே என்பதையும் சித்தியார் மேற்குறித்த செய்யுளின் இறுதியில்,
``ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்;
இறைவனடி ஞானமே ஞானம் என்பர்``
எனக் கூறி முடித்தது. உண்டி சுருக்கல், கொல்லாமை, புலால் உண் ணாமை, ஐம்பொறி யடக்கல், உயிர்கள்மாட்டு இரக்கம் முதலிய பொது அறங்களும், நித்திய நைமித்திக கன்மங்களாகிய சிறப்பறங்களும் ஞானத்தை உணரும் பக்குவத்தை உண்டாக்குவன வன்றி, அவை தாமே ஞானமாய் நின்று வீட்டினைப் பயவா. ஆதலின், அவற்றையே `ஞானம்` என்றாயினும், `ஞானத்தினும் மேம்பட்டன` என்றாயினும் கூறுவார் உளராயின், அவர் கூற்று அறியாமையின்பாற் பட்டதாகும் என்ப தனையே முதலிரண்டு அடிகளில் குறித்தார். அங்ஙனம் கூறுவோர் சமணரும் பௌத்தரும் ஆகிய அவைதிகரும், வைதிகருள் மீமாஞ்சகரும் ஆவர். ஆகவே, அவரது மதங்களை உளத்திற் கொண்டே இதனைக் கூறினார் என்க. அவருள் மீமாஞ் சகரையே மாணிக்கவாசகரும்,
``விரத மேபர மாக வேதியரும்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்`` 1
என்று அருளிச் செய்தார். இடை இரண்டு அடிகளில் வந்த மிகுதி,
``மிகுதியான் மிக்கவை செய்தாரை`` 2
என்பதிற்போலப் புறம்பாதலை உணர்த்திற்று.
இதனால், ஞானத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சத்தமும் சத்த மனமும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஓசை முதலிய புலன் வகைகளும், அவற்றைப் பொறிகளின் வழிச்சென்று பற்றுகின்ற மனமும், பின்பு அம்மனம் பொதுப்படப்பற்றி ஐயுற்றதை ஒருதலையாகத் துணியும் புத்தியும், எவ்விடத்தும் எழுச்சியுற்று எவ்வுணர்வையும் உணரத் தூண்டுகின்ற அகங்காரமும். அம்மூன்றானும் பெற்ற தெளிவுணர்வைப் பதியக் கொண்டு பின்னும் நினைப்பதாகிய சித்தமும் என்னும் இவற்றினது இயல்பை நன்குணர்தலே ஓசை முதலிய ஐம்புலன்களையும் கடந்த ஞானிகள் பெற்ற ஞானமாகும்.

குறிப்புரை :

ஓசை முதலிய புலன்களே காரண நிலையில் தன் மாத்திரைகளாய் நின்று ஆகாயம் முதலிய பூதங்களைத் தோற்று வித்தலாலும், பின்னும் தன்மாத்திரையாய் ஐம்பூதங்களோடும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுக்குத் துணையாய் நின்று அவை தத்தம் காரியங்களைச் செய்ய உதவுதலாலும், `ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம்` என்பவற்றையும் `புலன்வகை` என அடக்கினார். எவ்விடத்தும் ``சத்தம்`` என்றது, ஏனைப் பரிசம் முதலிய வற்றிற்கு உபலக்கணம். அஃது அதன் வகையை உணர்த்திற்று. ஆகவே, `புலன் வகை` என்றதனால், `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து` ஆக இருபது கூறப் பட்டனவாம். இவற்றோடே மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும் கூறப்பட்டமையால், சிவாகமங்களில் `ஆன்ம தத்துவம்` என எண்ணப்படும் இருபத்து நான்கு தத்துவங்களும் கூறப்பட்டதாயிற்று. சிறிது சிறிது வேறுபாட்டோடே இவை வைதிக சமயங்கள் எல்லா வற்றாலும் உணரப்பட்டன. ஆதலின், இவற்றது இயல்பை உணரும் ஞானத்தையே தத்துவஞானமாக ஓதினார். ``சுவைஒளி ஊறோசை`` என்னும் திருக்குறளையும் நோக்குக. வைதிக சமயங்களின்வழியும், அவற்றிற்கு ஒத்த அளவில் சைவாகமங்களின் வழியும் இவற்றின் இயல்பை உணர்ந்த பின்பு, சைவாகமம் பற்றியே சிறப்பாக உணரத் தக்க வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் இயல்பை விரைய உணர்வர் என்பது கருத்து. வித்தியா தத்துவம், `காலம், நியதி` கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என ஏழு. சிவதத்துவம், `சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்` என ஐந்து, ஆக, `தத்துவம் முப்பத்தாறு` என்பது சைவாகமங்களின் முடிபு. இவற்றின் இயல்பெல்லாம் அவ் ஆகமங்களிலும், அவற்றை முதலாகக் கொண்டெழுந்த பிரகரணங்களிலும், மெய்கண்ட சாத்திரம் முதலிய சித்தாந்த நூல்களிலும் காணப்படுகின்றன.
சிவ தத்துவம் ஐந்தும் ஏனைத் தத்துவங்களை இயக்கிநிற்கும் முறையால் ஆன்மாவிற்கு உதவுவன அன்றி, அவை ஏனைத் தத்துவங்கள்போல் ஆன்மாவிற்குநேரே உடம்பாய்ப்பொருந்தி நின்று உதவுவன அல்ல. வித்தியா தத்துவங்கள் ஆன்மாவின் அறி விச்சை செயல்கள் வெளிப்படுதற்குக் காரணமாய், அதனோடு ஒட்டி ஒன்றாய் நின்று ஆன்மாவை ஆன்மாவாகச் செய்யும் இயல்புடைமையால் அவை அனைத்தையுமே `புருடன்` என ஒன்றாக வைத்து, தத்துவங்களை, `இருபத்தைந்து` என்றே கூறுதலும் உண்டு.
``ஐயஞ்சின் அப்புறத் தானும், ஆரூ ரமர்ந்தஅம் மானே``
என்ற திருநாவுக்கரசர் திருமொழி இம்முறைபற்றி எழுந்ததே. தத்துவங்கள் மாயையின் காரியங்களாம். அவற்றின் இயல்பை ஆராய்ந்து உணரவே அவற்றினின்றும் நீங்குதல் உளதாம் என்க. தொகுத்தல் பெற்ற அகரத்தை விரித்து, `சித்தம் என்ற செய்கையும்` என இயைக்க. செய்கையுடையதனை, ``செய்கை`` என்றார்.
இதனால், தத்துவங்களை ஆராய்ந்து உணர்தல் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தன்பால் உலகம் தனக்கரு காவதும்
அன்பால் எனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

பொழிப்புரை :

சிவனது வியாபகத்தில் உள்ள உலகம் சிவனது உடைமையும், அடிமையுமாய் அவனுக்கு உரித்தாதலை உணர் தலையே `ஞானம்` என்றும், சிவனிடத்து வைத்த அன்பு காரணமாக அவனது திருவருள் தமக்குக் கிடைக்கப் பெறுதலையே `சிவோகம் பாவனை` என்றும் ஞானிகள் கூறுவார்கள். அவ் இரண்டையும் பெற்றோர், அவற்றின் பயனாகப் பின்பு, அறியத்தக்க பொருளையே அறிந்து, அதில் அழுந்துவார்கள்.

குறிப்புரை :

`ஆவதும், ஆவதும் - ஞானமும், சிவோகமும்` என்றது நிரல்நிறை. ``என்பார்கள்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. ``தன்`` என்றது சிவனாதல் விளங்குதற்கே, பின்னர், ``எனக்கு`` எனத் தம்மேல் வைத்துக் கூறினார். ``பெற்றிடும்`` என்பதற்கு, `அந்நிலையை எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. சடமும், சித்துமாகிய இருவகை உலகத்துள் சடம் சிவனது உடைமையும், சித்து சிவனது அடிமையும் ஆம் என்க.
இதனால், தத்துவ ஆராய்ச்சியால், `யான்` எனத் தன்னையே முதல்வனாக மதிக்கும் அகமயக்கமும், பலவற்றையும் தனித்தனி `எனது` எனப் பற்றும் புற மயக்கமும் நீங்கி. எல்லாம் சிவனது அடிமை யும், உடைமையுமாகின்ற உண்மையை உணர்தலே ஞானமாதல் கூறப்பட்டது. இதனையே, `தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்`` 1 என்றார் மெய்கண்ட தேவநாயனார்.

பண் :

பாடல் எண் : 4

இருக்குஞ் சேம இடம்பிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை :

மாறுபாடில்லாத ஞானத்தை ஓர்ந்துணர்ந்தவர்க்கு அவர் இருத்தற்குரிய பாதுகாவலான இடம் `பிரமம்` எனப்படுகின்ற சிவமே. ஏனெனில், உலகம் `இயங்கியற்பொருளும், நிலையியற் பொருளும்` என்னும் ஈரினமாய் நின்று உணர்வை அலைப்பனவாம். (ஆதலின் அவை அவர்க்கு இருத்தற்குரிய இடமாகா என்பதாம்.) ஆதலின், சிவ வியாபகத்தில் நிற்கின்ற பெருமகிழ்வோடு செய்கின்ற செயல்களே, எல்லா இன்பங்களையும் தருவனவாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்தும், `உலகம் சராசர வருக்க மாகும்` என மாற்றியும் உரைக்க. முதல் இரண்டடிகள் காரிய காரணப் பொருளவாய் நின்றன. தருக்குதலோடு நிகழ்கின்ற ஆசாரத்தை, ``தருக்கிய ஆசாரம்`` என்றார். ஆசாரம் - நடை; செயல்கள் ``எல்லாம்`` என்றது, `உலகர்க்கு `நன்மை, தீமை` என இருவகையாய்த் தோன்றி நிகழும் பலவும்` என்றவாறு. `அருள்வழி நின்று செய்யின், தீயசெயல்களும் நல்ல செயல்களாய் இன்பம் பயக்கும்` என்றதனால், `அருளை மறந்துசெய்யின், நல்லசெயல்களும் தீயசெயல்களாய்த் துன்பம் பயக்கும்` என்பது போந்தது.
``அரனடிக் கன்பர் செய்யு ம் பாவமும் அறமதாகும்;
பரனடிக் கன்பி லார்செய் புண்ணியம் பாவ மாகும்;
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளும், திருமுறைகளிலும் இத்தக்கன் வரலாறு சண்டேசுர நாயனார் வரலாறுகள் சிறந்தெடுத்தோதப்படுத லும் நன்குணரத்தக்கன. `சிவவியாபகத்தின்நீங்கி உலகிடைப்புகின் தீங்கு வருதலையுணர்ந்து ஞானிகள் அதனின் நீங்காது அதனுட்டானே நிற்பர்` என்பதை உமாபதிதேவர்,
``புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவர்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
என்று அருளிச் செய்தார். இதனானே,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து``2
என்னும் திருவள்ளுவர் திருமொழியும் இப்பொருட் குறிப்புடைய தாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், தன் பணியறுத்து அருள்வழி யொழுகுதல் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.

பொழிப்புரை :

தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாதலை உணரும் உணர்வும், அவ்வுணர்வால் அதற்குட்டானே அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி, அதனைமறவாதுஉணர்கின்ற உணர்வால் பெருகுகின்ற அன்பும் என்னும் இவை ஒரு சேரக் கூடி நீங்கா திருக்கின்ற அந்த உள்ளமாகிய கோயிலிலே நீங்காதிருக்கின்ற பேரரு ளாளனாகிய சிவனது அருட்டிரு மேனி, அருட்குணம், ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடி இவைகளை மறவாதிருக்கின்ற முறையை உணர்ந்த ஞானிகட்கு இவ்வுலகமாகிய இருள் நீங்கி, ஞானமாகிய ஒளி பிரகாசிக்கும்.

குறிப்புரை :

`குரை கழலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஈற்றடியில் `இது நீர்த்தொனி யாமே, நீர்த் தோணி யாமே` என்பன பாடம் அல்ல. ` `அறிவும் ... ... ... ... பிறியா நகர்``,
இதனால், அருளது உபகாரத்தை உணர்தல் முதலிய மூன்றும் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.

பொழிப்புரை :

ஞானத்தை விரும்பி எழுச்சி பெற்ற உள்ளத்தில், பிராணவாயுவாகிய ஊர்தியை விரும்பி ஏறி மேலே செல்லும்பொழுது வழியில் எதிர்ப்படுகின்ற இடந்தோறும், சந்திர மண்டலத்திலிருந்து பெருகும் அமுத தாரை நிரம்பியிருக்கக் கண்டு, அதனால் உடற்கும், உள்ளத்திற்கும் வருவனவாகிய குறைகளைப்போக்கி நிலைபெற்று ஒளிமயமாக ஆகுங்கள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியில் `ஏனம்` என்பது பாடம் அன்று. உடற்கு வரும் குறைகள், `நரை, திரை, மூப்பு, சாக்காடு` என்பன. உள்ளத்திற்கு வரும் குறை, ஒருவழி நில்லாமை. இவை யோகத்தால் நீங்குதல் அறிக. ஒளி, உடற்பொலிவும், ஞானமும் என்க.
இதனால், ஞானவேட்கை யுடையோர் யோகத்தால் உள்ளமும் உடலும் நிலையுடையதாகப் பெறின், இப்பிறப்பிலே அதனைத் தப்பாது அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொழிப்புரை :

ஞானத்தைத் தலைப்பட்டவனுக்கு, ஞானத்திற் சரியை முதலிய நான்கு படிகள் உள்ளன. நான்காவது படியிற் சென்று முற்றிய மௌன எல்லையை அடைந்தவனுக்குப் பின் இவை என்றும் வேண்டாவாம். ஞானத்தைத் தலைப்படுதற்குமுன் யோகத்தையே `ஞானம்` என மயங்கிச் சத்தி மண்டலத்திலே நின்று, அங்குள்ள சத்தியைத் தரிசித்தோர்க்கு அந்தச்சத்தி ஞானத்தைத் தருதலாகிய பயனைத்தரும். அதற்குக் கீழ் உள்ள ஆறு ஆதார சத்திகளை அடைந்தவர்கட்குக் கிடைக்கும் பயன் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை என்பனவேயாம்.

குறிப்புரை :

`ஆறு ஆதாரங்களிற் பெறுவன யோகத்தில் சரியையும், யோகத்தில் கிரியையும்` எனவே, `ஏழாந் தானமாகிய சகத்திராரத்தில் நிற்போர்க்கு விளைவது யோகத்தில் `யோகம்` என்பதுபோந்தது. குணம் - இயல்பு. வித்தை - ஞானம். தானி - ஆதாரசத்தி `குலத் தோர்க்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தல் பல ஆதாரங்களிலும் விளங்குவது ஒரு சத்தியேயாதல்பற்றி ஒருமையாற் கூறினார். `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்குமே ஞானத்திற் சரியை முதலிய நான்கு என்க. நிட்டை கூடினவனையே ``மோனி`` என்றார்.
இதனால், யோக முதிர்ச்சி யுடையோன், பின் ஞானத்தில் சென்று அதன் நான்கு படிகளில் ஏறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

பொழிப்புரை :

ஞானத்தில் ஞானத்தை அடைந்தவனுக்கு, அந்த ஞானத்திற்குக் கீழுள்ள மூன்றும் முன்பே கைவந்தனவாம். ஞானத்தில் ஞானமாவது `யான், எனது` என்னும் ஞாதுரு ஞானங்கள் தோன்றாது, ஞேயம் ஒன்றேயாக அதனுள் அழுந்துதல். ஞானத்தில் யோகமாவது தத்துவாதீதத்தில் எல்லையற்ற சிவ ஒளியில் சேர்தல். ஞானத்தில் கிரியையாவது தத்துவக் கூட்டத்தினின்றும் விடுபடுமாற்றைச் சிந்தித்தல்.

குறிப்புரை :

சிந்தித்தல் கூறியதனானே, தான் தத்துவங்களின் வேறாதலைக் கேள்வியுறுதல் ஞானத்தில் சரியை என்பது அறியப் படும். ``ஞானி`` என்றது இவ்வாறே பொருள்படுதல் அறிந்துகொள்க.
இதனால், `மேற் குறித்த நான்கு படிகள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

பொழிப்புரை :

ஞானத்தில் ஞானம் முதலியவற்றை அடைவோன், முதற்கண் வினைக்கட்டு அற்றவனாயும், இரண்டாவது சிவஞானத் தால் ஞேயமாகிய சிவத்தைத் தரிசித்தவனாயும், மூன்றாவது மும் மலங்களின் வாசனையும் நீங்கிய நின்மலனாயும், முடிவில் சிவனை அனுபவமாய்ப் பெறுதலாகிய முத்தியை அடைந்த, முடிந்த பேறுடையவனாயும் விளங்குவன்.

குறிப்புரை :

ஞானாதி நண்ணுவோனது தன்மையைக் கீழிருந்து கூறும் முறையாற் கூறினார். இந்நான்கு அனுபவங்களும் கேட்டல் முதலிய நான்கினாலும் நிகழ்வனவாதல் அறிக. வினைக்கட்டு நீங்கினமைகூறவே, அதற்குப் பற்றுக்கோடாகிய மாயைக்கட்டு நீங்கினமையும் தானே பெறப்பட்டது. கண்ணல் - கருதல். கரை ஞானம் - மேல் எல்லையாகிய ஞானம். `கரை ஞானத்தால்` என உருபு விரிக்க. திண்மை வாதனை காரணமாக அசைதல் இன்மை. `உறைப்பு` என்றபடி. சித்தன் - சித்திக்கப் பெற்றவன்.
இதனால், மேற்கூறிய நான்கு படிகளிலும் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே.

பொழிப்புரை :

ஞானத்திற் சரியை முதலிய நான்கையும் பெற்றோர் முறையே ஞான சமயி, ஞான புத்திரன், ஞான சாதகன், ஞான ஆசாரியன் என்பவராயும் நிற்பர்.

குறிப்புரை :

நாடும் தனைக்காண்டல் `நான் யார்` என்று ஆராய் கின்றவன் தன்னை `இன்னான்` என அறிதல், பர உதயம் - பரம் பொருட்காட்சி. நன்றறிவான் - எல்லாவற்றையும் நன்கு அறிகின்ற சிவன். அருள் - அவனது அருளைப் பெறுதல். இங்கு, `நற்சிவோகம் பாவம்` என்ற பாடமும் காணப்படுகின்றது. குரு பாதம் - குருவாம் நிலை.
இதனால், மேற்கூறிய நால்வரும் உலகில் விளங்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

எல்லாவற்றினும் மேலானதாகச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற சொரூப சிவத்தின் உண்மை இயல்பை விளக்குவனவாகிய வேத சிவாகமங்களில் ஞானப் பகுதியின் பொருளை உள்ளவாறு உணர்ந்து, அதனால் `வெகுளி, காமம், மயக்கம்` என்னும் முக்குற்றங் களும் நீங்கிச் சிவத்தோடு ஒன்று படும் நிலை சித்திக்கப் பெற்றுக் காலனை வென்றவரே குறிப்பொருளை (இலட்சியப் பொருளை) அறிந்து அடைந்தோராவர்.

குறிப்புரை :

`சன்மார்க்கமாம் சுடர்` என இயையும். இயல்பினை, ``தோற்றம்`` என வைத்து, காரணத்தைக் காரியமாகக் கூறினார். சிவா கமங்களும் சுருதியாதல் அறிக. `சுருதியில் கண்டு` என உருபு விரித்து முடிக்க. சுடர் - ஞானம்; அஃது அதனை உணர்த்தும் பகுதியைக் குறித்தது. ``சீற்றம்`` என்றது உபலக்கணம். கூற்றத்தை வெல்லுத லாவது, தூல உடம்பை விட்டு எமலோகம்போகாது, தூல, சூக்கும, பர உடம்புகளாகிய அனைத்தையும் விடுத்து இறைவனை அடைதல். `வெல்வார்` எனறப்பாலது, துணிபு பற்றி `வென்றார்` எனப்பட்டது.
இதனால், சரியை முதலிய நான்கனுள் முடிவாகச் சொல்லப் படுகின்ற உண்மை ஞானம், பிறவியாகிய பெருந்துன்பத்தை நீக்கிச் சிவானந்தமாகிய எல்லையில் இன்பத்தைத் தருதலால், `சன்மார்க்கம் - நன்னெறி` எனப்படுவதாயிற்று என்பது கூறப்பட்டது. `இதனின் மிக்க நன்னெறி பிறிதில்லை` என்பதாம்.
[இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``சைவப்பெருமை`` என்னும் மந்திரம் இத்தந்திரத்தின் இறுதி யதிகாரத்தில் வருவது.]

பண் :

பாடல் எண் : 2

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத் தோர்க்குத்
தரும்முத்தி சார்பூட்டும் சன்மார்க்கந் தானே.

பொழிப்புரை :

குருபத்தி செய்யும் நன்மாணாக்கர் கண்ணால் காணுதல், திருமுழுக்கு, ஒப்பனை, புகை, ஒளி, படையல், மலரிடல் முதலாக முறைப்படி வழிபடுதல், தியானித்தல், தீண்டி அடிவருடல் முதலியன செய்தல், துதித்தல், பாதுகையைத் தலைமேல் தாங்குதல் முதலியவற்றால் குருவை வழிபட்ட வழியே சன்மார்க்கமாகிய ஞானம் கைகொடுத்து, முத்தி நிலையைத் தரும்.

குறிப்புரை :

`குருபத்தி செய்யும் குவலயத்தோர்` என்று எடுத்துக் கொண்டு, ``சூட`` என்பதன்பின், `அவர்க்கு` என ஓதற்பாலதனை இவ்வாறு ஓதினார். ``கீர்த்திக்க`` என்பது வடநூல் மதமுடிபு. `குவலயத் தோர்க்கே சன்மார்க்கம் சார்பு ஊட்டும்; முத்தி தரும்` எனக் கூட்டுக. சார்பு ஊட்டுதல், தன்னோடு இயைபினை உண்டாக்குதல். தான், அசை.
இதனால், `ஞானம், நல்லாசிரியரானே (சற்குருவாலே) தரப் படும் நன்னெறி - சன்மார்க்கமாம்` என்பது கூறப்பட்டது. அந்நெறி ஞானமேயாதல் அறிக. இதனுள் குருபத்தி செய்யும் வகையும் கூறப் பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 3

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

பொழிப்புரை :

குருவருளால் பெறப்படும் உண்மை ஞானத்தைப் பெறாதவர் சிவனது இயல்பை உணரமாட்டார், அதனால், அவர் ஆன்மலாபத்தை அடைதற்குரிய ஆன்மாவும் ஆகார். (`சடத்தோ டொப்பர்` என்பதாம்.) ஆதலின், அவர் சிவமாம் நிலையைப் பெறுதலும், அப்பேற்றால் பிறவி யற்றவராதலும் இல்லை.

குறிப்புரை :

கேட்டுச் சிந்தித்துத் தெளிவதனையே ``தெளிவு`` என்றார். உம்மை, எச்சப்பொருட்டு.
இதனால், குருவருளாலன்றிப் பிறவாற்றாற் பெறும் ஞானங்கள் உண்மை ஞானம் அல்லவாய், நன்னெறி சன்மார்க்க மாகாதொழிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானவவ னாகித்தான் ஐந்தாம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தானவ னாய்உற லானசன் மார்க்கமே.

பொழிப்புரை :

சீவன் சிவனேயாய் நிற்கும் முறையால் அஃது ஐந்து மலங்களை அழித்து, மௌனோபதேசத்தின் வழி முத்தி நிலையைப் பெறுதலும், பின் குறையில்லாத ஞானத்தால் உண்டாகும் அனுபவத் தில் விளைகின்ற இன்பமும் ஆகிய இவையே சீவன் சிவனேயாய் விடுகின்ற சன்மார்க்கமாகும்.

குறிப்புரை :

``தான் அவனாதல்`` இரண்டனுள் முன்னது அவ்வாறு உணர்தலாகிய சாதனையையும், பின்னது, அங்ஙனமேயாதலாகிய பயனையும் குறித்தன. ஐந்து மலங்களாவன. `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம்` என்பன. ``மலங்கள் ஐந்தாற் சுழல் வேன் தயிரிற் பொரு மத்துறவே`` 1 என மணிவாசகரும் அருளிச் செய்தார். மௌனோபதேசம், சின்முத்திரையால் உணர்த்தல். இனி, `மௌன நிலையைத்தரும் மொழி` என்றும் ஆம்.
இதனால், ஞானமே சன்மார்க்க மாதல், ஏதுக்காட்டி விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

பொழிப்புரை :

எந்நிலையில் நிற்போர்க்கும் நோக்கும் திசை, இருக்கும் இருக்கை, உறையும் இடம், தியானிக்கப்படுகின்ற தெய்வம், இணங்கும் கூட்டம், வழிபடப்படும் குறி முதலிய எல்லாம் சன் மார்க்கத்தார்க்குப் போலவே குருவருளால் கொள்ளத் தக்கனவாம்.

குறிப்புரை :

`அங்ஙனம் கொண்டவழியே அவை சன்மார்க்கத்திற் குரிய மார்க்கமாய் தாமும் சன்மார்க்கமாம் தன்மையைப் பெறும்; இன்றேல் துன்மார்க்கமாய்விடும்` என்றவாறு. `சற்குருவே இங்குக் கூறிய திசை முதலியவற்றைச் சிவனையடையும் முறையில் உணர்த் துவர்; பிறர் அதுமாட்டாது பிறவற்றை உணர்த்துவர்` என்பதாம். ``சன்மார்க்கத் தார்க்கு`` என்றது, `சன்மார்க்த்தார்க்கு உள்ள` என்ற வாறு. ``சன்மார்க்கத் தார்க்கும்`` என்னும் உம்மை அசைநிலை. `எம் மார்க்கத்தார்க்கும் ஆம்` என ஒருசொல் வருவிக்க. ``இயம்புவன் கேண்மின்`` என்றது `என் சொல்லைக் கேளுங்கள்` என வலியுறுத்தவாறு.
இதனால், சன்மார்க்கம் அல்லாதன நல்லன ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தானவ னாகும்சன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஞானம் ஒன்றே சன்மார்க்கத்தில் கொள்ளப்படும் சாதனமாகும். அந்தச் சாதனம் பின் ஞேயமாகிய சாத்தியத்தை அடை விக்கும். சகமார்க்கம் முதலியவைகளில் ஞானமல்லாத பிறவே சாதனங்களாம். பிற மார்க்கங்களைக் கடந்து சன்மார்க்கத்தில் நிற்போர் அதில் துரியத்தைக் கடந்தபொழுது விரும்புகின்ற சன்மார்க்கம் சீவன் சிவமாம் தன்மையாகிய சன்மார்க்கமே.

குறிப்புரை :

`ஞானந்தான் சன்மார்க்க சாதனம்` என மாற்றி, `அதனால், ஞேயம் ஆம்` என வேறு தொடராக்கியுரைக்க. பிறவற்றை, `பேதை - பேதைமை` என்றது, ஞானமல்லவாதல் பற்றி. `ஞான மாவது, தத்துவ ஞானமே` என்பது மேலே கூறப்பட்டது. சன்மார்க் கத்தில் நிகழ்வதை, ``துன்மார்க்கம் விட்டது`` என்றார். துரிய நிலை யிலும் திரிபுடி ஞானம் அற்றொழியாமையால் ``துரிசு`` என்றார்.
இதனால், அதீதமாகிய ஆனந்த நிலையே சன்மார்க்கத்தில் சன்மார்க்கமாதல், துரிசறுதலாகிய ஏதுக்காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொழிப்புரை :

சன்மார்க்கம் கைவரப்பெறும் தகுதியை அடைய விரும்பும் அரிய மாணாக்கர்க்கு, அதற்கு முன்னே ஏனை, யோகம் முதலிய மூன்றும் முற்ற வேண்டுதலே முறையாகுமாயின், வீடடையும் நெறியாவது, தன்னைச் சிவனுக்கு உரிய பொருளாக உரிமைப்படுத்து அறிதலேயாகின்றது, `இதுதான் ஆசிரியன்மார் தம் மாணாக்கர்க்கு அறிவுறுத்தத்தக்க நெறி` என்று உண்மை வேதம் தனது துணிவாகக் கொண்டு கூறுகின்றது.

குறிப்புரை :

அருமை, பக்குவ நிலை. ``என்றால்`` என்பது, `என்பதே முறை என்றால்` எனத் தெளிதற் பொருள் உணர்த்தி, ஏனைப் பசுபுண்ணியத்தளவில் அத்தகுதி வாராமை யுணர்த்திற்று. நன்மை - வீடு. அதனை அடையும் மார்க்கம். ``நன்மார்க்கம்`` எனப்பட்டது. `சிவனொடு படுத்து` என ஒரு சொல் வருவித்து, படுத்தல், நாடல் இரண்டற்கும் `தன்னை` என்னும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. இம்மந்திரம், `சிவ ஞானமாகிய சிறப்புணர்வின்றி, பிரம்ம ஞானமாகிய பொதுவுணர்வே வீடு பயக்கும் என்பதே வேதத்தின் முடிபு, என்பாரை மறுத்துக் கூறியது.
இதனால், உண்மைச் சன்மார்க்கம் சிவஞானமேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொழிப்புரை :

பூர்வபக்க மதங்களின் உணர்வுக்கு அப்பால் உள்ள பிரதி பந்தமாகிய ஆணவ மலத்தை, முன்னர் உணர்ந்து பின்னர் ஏனைய கன்மம், மூலப்பகுதி, அம்மதங்களால் உணரப்பட்ட சாக்கிரம் முதலிய அவத்தைகள், அவைகளில் தொடக்குண்டு நிற்கின்ற அறிவின் நிலைகள், பொருள்களிடையே உள்ள சிறியனவும், பெரியனவுமாகிய வேறுபாடுகள் என்பவற்றோடு தலைவனாகிய இறைவனையும் உணரும் சித்தாந்த ஞானம் வாய்க்கப் பெற்றவரே `சன்மார்க்கத்தோர்` எனப்படுவர்.

குறிப்புரை :

`சித்தாந்த ஞானம் கைவரப்பெற்றவர்க்கே பிற வெல்லாம் பூர்வ பக்கமாதல் இனிது விளங்கும்` என்றவாறு. ``முன்னும் அவத்தையும்`` என்பதனை, ``மூலப்பகுதியும்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. அதிபேதம் - பெரியவேற்றுமை. ``தன்`` என்றது ஒருவனான இறைவனை. இது, ``கண்டவர்`` என்பதனோடு இயைதல் கூடாமையின், கண்டவரை உணர்த்தாமை அறிக.
இதனால், பிற ஞானங்கள் `சன்மார்க்கம்` எனப்படாது, சித்தாந்த ஞானமே `சன்மார்க்கம்` எனப்படுதல் பொருந்துமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆனசன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஆன்மாவின் பசுத்துவம் காரணமாக வந்து பொருந் திய சம்பந்தங்களாகிய கருவி கரணங்கள் அனைத்தையும், `தன்னின் வேறானவை` எனக்கண்டு கழித்துத் தன்னைப் பதியாகிய சிவனுடன் பொருத்தி, அங்ஙனம் முன்பு பொருந்தாதிருந்த நிலையில் மறந்திருந்த அவனது உபகாரத்தை இடைவிடாது உணர்தலால், முன்பு அன்பினால் நெகிழ்தல் இன்றி வன்மையுற்றிருந்த மனத்தை இப்பொழுது நெகிழ்ந்து உருகும்படி உருகப்பண்ணி, அவ்வன்பினாலே, என்றும் மாற்றம் இன்றி நிற்கும் மெய்ம்மையாகிய சிவனது தன்னியல்பு வெளிப் பாட்டில் அசைவின்றி நிற்றலே முற்ற முதிர்ந்த சன்மார்க்கமாகும்.

குறிப்புரை :

``பசு பாசம் நீக்கி`` என்றது, ஆன்ம தரிசனத்தில் நிகழும் தத்துவ சுத்தியாகிய சுத்த சுழுத்தியையும், ``பதியுடன் கூட்டி`` என்றது, சிவயோகத்தில் நிகழும் ஆன்ம சுத்தியாகிய சுத்த துரியத்தையும், ஏனையவெல்லாம் சிவபோகமாகிய அதீதத்தையும், குறித்தனவாம். இரண்டாம் அடி முதலாயவற்றில் கூறியவற்றை மெய்கண்ட தேவரும்,
``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` 1
என அருளிச்செய்தல் காண்க.
இதனால், முற்ற முதிர்ந்த சித்தாந்த ஞானத்தின் சிறப்புணர்த்து முகத்தால், அது சிறந்த சன்மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர்
மார்க்கம்சன் மார்க்க மதுசித்த யோகமே.

பொழிப்புரை :

இங்குக் கூறிய சன்மார்க்கம் இதனைப் பெறுதற் குரியோர் பெறுதற் பொருட்டு வகுக்கப்படுவது. தலை சிறந்த நெறி. இந்தச் சன்மார்க்கமன்றி வேறொன்று இல்லை ஆயினும், இந்தச் சன் மார்க்கத்தை அடைந்து இன்புற்றிருக்க மாட்டாதவர்க்குரிய சன் மார்க்கம், மன ஒடுக்கத்தைப் பயனாக உடைய யோக நெறியேயாம்.

குறிப்புரை :

முதலடியில், `இம் மார்க்கம்` எனச்சுட்டு வருவித்து உரைக்க. இரண்டாம் அடி, `இஃது ஒருதலையாக அடையத் தக்கது` என்பதனை நிலைபெறுத்தியது. மூன்றாம் அடியில் உள்ள தொடர், `இந்நெறி` என்னும் சுட்டளவாய் நின்றது. ``வைகாதோர்`` என்றது, ``சென்று வைக்காதோர்`` எனப் பொருள் தந்தது. `வைகாதோர் சன்மார்க்கம் சித்தயோக மார்க்கமாம்` எனக்கூட்டுக. சித்த யோக மார்க்கம் - மனம் ஒடுங்கும் நெறி.
இதனால், சன்மார்க்கத்தை அடையமாட்டாதார்க்கு அதனை அடையும் வழி கூறும் முகத்தால், வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாய் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.

பொழிப்புரை :

சிவநெறியில் யோகத்தை, `சகமார்க்கம்` - ஒத்துடன் நிற்கும் தோழமை நெறி - எனக் கூறுதல், சன்மார்க்கமாகிய ஞானத்தின் தன்மையையே கொண்டு விளங்குதல் பற்றியாம். அதனால், சிவநெறியோகம், உண்மை ஞானத்தால் உளதாகின்ற முத்திப் பேற்றுள் உய்க்கும். ஏனையோர் கூறும் யோகங்கள் ஓயாது பிறந்து இறத்தலை வெறாது விரும்பிக் கொள்வனவேயாகும். அவற்றால் ஞானமாகிய உறுதிப் பொருள் கிடைத்தலும் கூடுமோ!

குறிப்புரை :

சிவமாந்தன்மையைப் பெறுதற்கு அணித்தாம் நிலையை எய்துவித்தல் பற்றியே யோகம், `சகமார்க்கம் தோழமை நெறி` எனப்படுகின்றது என்பதும், அதனால், அந்நிலையை எய்து விக்கமாட்டாத பிற யோகங்கள் `சகமார்க்கம்` என்பதற்குப் பொரு ளாகா என்பதும் கூறியவாறு. எனவே, பிற யோகங்களைச் சிவ நூல்கள் யோகமாகச் கொள்ளுதல் இல்லை என்பது பெறப்பட்டது. யோகத்திலும் ஞானத்தன்மையே உளதாதல், ஆதார பங்கயங்களை ஆறு அத்துவாக்களாகவும், நிராதார சத்தி மண்டலம் கொள்ளப்படுத லும் அதற்கும் மேலான மீதானம் கூறப்படுதலும் பிறவுமாம். இவை அடயோகம், பாதஞ்சலி யோகம் முதலியவற்றில் இல்லாமை அறிக.
``சன்மார்க்க ஞானமதின் பொருளும், வீறு
சமயசங்கே தப்பொருளுந் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை`` 1
என்றார் தாயுமான அடிகளும்.
``மெய்ம்மைச் - சிவயோக மேயோகம்; அல்லாத எல்லாம்
அவயோகம் என்றே அறி`` 1
என்ற திருக்களிற்றுப்படி இங்கு நினைக்கத் தக்கது. ``பிறந்து, இறந்து உன்மார்க்கம்`` என்றது, `பிறந்து இறந்து உழன்றும் அதனையே விரும்புகின்ற மார்க்கமாம்` என்றவாறு. எனவே, அவை மல நடையே யாய் பிறவியை அறுக்கமாட்டா என்பது போந்தது. `ஆனது` என்றது, பிறவற்றுள் ஒவ்வொன்றையும் தனித்தனி நோக்கிற்று. ``இறந்தும்`` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அதனையே உன்னும் மார்க்கமாம்` என்க. ``உறுதியும்`` என்னும் உம்மை சிறப்பு. ``ஆமே`` என்பது எதிர்மறைப் பொருட்டு.
இதனால், சிவயோகத்தது சிறப்புக் கூறும் முகத்தால், அது `சகமார்க்கம்` எனப்படுதற்கு ஏது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீடில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.

பொழிப்புரை :

சிரசிற்குமேல் பன்னிரண்டங்குலமாகச் சொல்லப் படுகின்ற நிராதாரத்தைப் பொருந்துகின்ற யோகநெறி யில்லாது, பிற வற்றையே யோகமாக மயங்குவோர், ஞான குருவையும், சிவனை யும், உண்மைச் சமயத்தையும் அடையமாட்டார். அவர் அணி மாதியாக விரும்பும் சித்திகளாகிய செல்வத்தைத் தரும் திருமகளும் அவர்பால் அணுக அஞ்சுவாள்; மோட்சமும் அவருக்கு இல்லை. உடம்பையும், சுற்றத் தொடர்பையும் வீணே இழப்பர்.

குறிப்புரை :

துவாதச மார்க்கம், பிராசாத யோகமுமாம். மேற் காட்டிய திருக்களிற்றுப்படியின்படி, சிவயோகம் அல்லாதன அவ யோகமாதலை வலியுறுத்துக் கூறியவாறு, சுற்றமும் பயன் செய்யாமை கூறவே, இறைவன் தோழன்போல அணியனாய் நின்று அருளுதல் இன்மையும் தானே பெறப்பட்டது. அதனால், அவை சகமார்க்கம் ஆகாமை அறிக. ``சிவனும்`` என்பதில் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.
இதனால், சிவயோகமே சிவனை அணியனாக்கும் சகமார்க்க மாதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

யோகச் சமாதியி னுள்ளே அகலிடம்
யோகச் சமாதியி னுள்ளே உளரொளி
யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

பொழிப்புரை :

சிவயோக சமாதியுள்ளே உலக முழுதும் அடங்கித் தோன்றும். உள்நிற்கும் ஒளியும் விளங்கும். அருட்சத்தியும் விளங்கு வாள். ஆதலால், சிவயோக சமாதி பெற்றவரே எல்லாம் சித்திக்கப் பெற்றவராவர்.

குறிப்புரை :

``இடம், ஒளி`` என்பவற்றின்பின், `விளங்கும்` என்பது எஞ்சி நின்றது. உளர்தல் - அசைதல்; ஒளிவிடல். இவ்வொளி திரோ தான சத்தியாம். `அகலிடமும், இவ்வொளியும் உள்ளன` என்றது, கால இடங்களைக் கடந்த பொருள்கள் விளங்குதல் கூறியதாம். அருட்சத்தி விளங்குதலாவது, சத்திநிபாதம் முதிர்தல்.
இதனால், சிவயோகத்தால் உலகம் கடந்த வியாபகம் பெற்றுச் சிவனோடு ஒக்கும் நிலைவாய்த்தலால் அது சகமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

பொழிப்புரை :

சிவயோகிகட்கு யோகத்தோடு உலக போகமும் சுத்தபோகமாய் வரும். சிவயோகத்தால் சிவசாரூபம் கிடைக்கும். ஆகவே, இம்மை, மறுமை இரண்டையும் இழவாது பெறும் சிவ யோகிக்கு அவன் உலகில் விரும்புகின்ற புருடார்த்தம் உளதாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியில், `யோகத்தால்` என உருபு விரிக்க. `உள்ளத்தின்கண் ஓர்கின்ற போகமாகிய புருடார்த்தம் சித்தியாகும்` என்க. அது, பகுதிப் பொருள்விகுதி.
இதனால், சிவரூபம் உற்றிடுதல் பற்றிச் சிவயோகம் சக மார்க்கம் ஆதல் தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.

பொழிப்புரை :

சிவயோகத்தில் ஆறு ஆதாரங்களிலும் சிவனது நிலைகளையே காணுதலால் உணர்வை உண்டாக்கும் நாடிகள் நல்லனவாகும். மேதாகலை முதலிய பதினாறுகலைகளின் முடிவில் பர வெளியில் விளங்கும் ஒளியாகிய சிவம் தோன்றும். சீவ போதம் ஒடுங்கிப் பஞ்சேந்திரியங்கள், அந்தக்கரணம் இவையும் சீவத் தன்மை கெடச் சிவத்தன்மையைப் பெறும். அதனால், அவ்யோகம் சகமார்க்கம் ஆதற்குத் தடையில்லை.

குறிப்புரை :

சுத்திப்பட்டனவற்றை, ``சுத்தி`` என்றார். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலையும், ``விண்ணொளி`` என்பதன்பின், `தோன்றும்` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றன. `ஆலயம்` என்பதும் `ஒடுக்கம்` எனப்பொருள்தரும். சாதாரணம் - பொதுமை. ``சகமார்க்கத்தே`` என்பதனை, முதலில் வைத்து உரைக்க. `சகமார்க்கமே` என்பது பாடமன்று.
இதனால், சிவயோகத்தின் பயன்கள் பலவும் கூறி, அது சகமார்க்கமாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயில்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவயோகம் வல்லானது சிந்தையிடமாகப் பதினெண் கணங்களும் வணங்குகின்ற தனித்தலைவனாகிய சிவன் வந்து நிலைத்து நிற்பானாயின், பின்பு அவன் தன்னோடு இகலி நிற்கின்ற ஐம்பொறிகளாகிய பகைவர்களைத் தனது மனமாகிய கூரிய வாளால் தாக்கி வெட்டி யொழிப்பான்.

குறிப்புரை :

`பிணங்கி நிற்கின்றவையாகிய ஐந்தையும்` என்க. `பிணங்கி நிற்கின்ற ஐயைந்தையும்` எனப் பிரித்து, `இருபத்தைந்து தத்துவங்களையும்` எனவும் உரைப்பர். அணங்குதல் - வருத்துதல். `அணங்க` எனப்பாடம் ஓதுதலுமாம். `அயில்மனம்` என்பது, `இன்பதுன்பங்களை நுகர்கின்ற மனம்` என்னும் பொருட்டாய், `சிலேடை வகையால் கூர்மையான மனம்` எனப் பொருள் தந்தது. இனி, `மனத்துக்குக் கூர்மை நுண்ணிதாக நோக்கல்` எனலுமாம். `அயிர்மனம்` என்பது பாடம் அன்று. யோகமாகிய அக வழிபாட்டினையே இங்கு, ``வணங்குதல்`` என்றார். `நின்றானேல்` என்பதில், `எனில்` என்பதன் மரூவாகிய `ஏல்` என்பது எஞ்சி நின்றது, `நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தால், பின் நீ என் செய்வை` என்பதிற்போல. `சிந்தை சிவன் வந்து நின்றானேல்` `பின்னை ஐந்தையும் எறிவன்` என்றது, `சிவன் வந்து நிற்கும் சிந்தை யில்லாதார் அது மாட்டார்` என்பதைத் தோற்றுவித்து நின்றது.
இதனால், சிவயோகமே ஐம்பொறிகளை வென்று, சிவனோடு சிந்தையால் கூடி நிற்கின்ற சகமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

பொழிப்புரை :

மேற் கூறிய சிவன், வேடத்தால் வளப்பமானகனி (சிவப் பழம்) போன்ற பொலிவையுடையராய் உள்ள சரியை கிரியா மார்க்கத்தார்க்கும் வளப்பமான கனி கிடைத்தாற்போலும் உண்மையையே உடையனாவன். ஆயினும், யோகத்தால் உள்ளம் பழுத்து அவனை உள்ளத்தே விரும்பிக் கண்டுகொண்டிருப்பவர்க்குப் பழம் அளிந்து கிழிந்து சாற்றைப் பொழிதல் போல மிக்க இன்பத்தைத் தருபவனாய் இருப்பன்.

குறிப்புரை :

வளங்கனி - வளவிதாகிய கனி. பகுதல் - கிழிதல். ``பகுந்து`` என்றது, `கிழிந்து பொழிந்தாற் போன்று` எனப் பொருள் தந்தது. ஈற்றடி இனவெதுகை பெற்று நின்றது.
இதனால், சரியை கிரியைகள் சகமார்க்கமாகாது, யோகமே சகமார்க்கமாயினவாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.

பொழிப்புரை :

விரும்பப்படுகின்ற சற்புத்திர மார்க்கமாகிய கிரியை யாவது, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் ஒளிவடிவில் சிவனை நிறுத்தி முகம் முதலிய உறுப்புக்களை நினைவால் (பாவனை யால்) கண்டு பல முகமன்களும் (உபசாரங்களும்) செய்து வழி படுதலாம். சகமார்க்கமாகிய யோகமாவது, உலகத்தோடு ஒட்டி நிகழும் முகமன் நிகழ்ச்சிகள் `அகம், புறம்` என்னும் இரண்டிடத்தும் நிகழ்தலாகிய அத்தன்மை இன்றி, யோகத்தில் வெளிப்படும் யோக சத்தியை அகத்தில் கண்டு, அதனோடு ஒன்றாதலாம். அனைத்தினும் மேலான சன்மார்க்கமாவது, தெளிவான ஞானமேயாகும்.

குறிப்புரை :

`உண்மை ஞானம் சன்மார்க்கமாய் நிற்க, உடனாய் நிகழும் திருவருளோடு கூடுமாற்றால் யோகம் சகமார்க்கமாதலின், அவ் இரண்டிற்கும் முன்னே நிகழும் ஒளியுருவ வழிபாடு சற்புத்திர மார்க்கமா யிற்று` என்பதாம். ஆகவே, இக்கருத்து இனிது விளங்குதற் பொருட்டே சகமார்க்க சன்மார்க்கங்களின் இயல்புகள் இங்கு எடுத்துக் காட்டப் பட்டன என்பது விளங்கும். சற்புத்திரமார்க்கம் - மகன்மை நெறி - அல்லது - மைந்தர்நெறி. மகன் தந்தைக்கு வேண்டும் உபசாரங் களை அணுக்கமாயிருந்து அவனது மெய்யைத்தீண்டி அன்புடன் செய்தல் போலச் செய்தலே கிரியையாதல் அறிக. `அகல நின்று செய்யும் புறம்படித் தொழில்கள் சரியையாக, அணுகி நின்று செய்யும் அகம்படித் தொழில்களே கிரியை` என உணரலாம். `கிரியைக்கு உரியது அருவுருவத்திருமேனி` என்பது ``தாவிப்பது`` என்றதனால் பெறப்படும்; என்னை? உருவத் திருமேனியாயின், வழிபடும் பொழுதெல்லாம் தாவித்து வழிபடல் வேண்டாமையின். இங்ஙனம் செய்யும் அருவுருவ வழிபாடு பின்னர் அருவ வழிபாடாகிய யோகத்தில் செலுத்த வல்லதாகும். அதனானே, கிரியையில் அக வழிபாடும் ஒரு பகுதியாய் நிகழ்கின்றது. அருவுருவத்திருமேனி அல்லது ஒளியுருவமாவது இலிங்க வடிவாம்.
``மெய்த்தொழில்`` என்றது `கிரியை` என்றவாறு, ``சகத் தொழில்`` என்பது, `உலகியலோடு ஒத்த மார்க்கம்` என்னும் பொருட் டாய்ப் பல முகமன் செயல்களை உணர்த்திற்று. இரண்டு - அகம், புறம். `இரண்டினும் ஆவது அகன்று` என்க. `சகமார்க்கம் ... ... ... இரண்டும் அகன்று ... ... ... தேவியோடு ஒன்றல்` என இயையும்.
இதனால், கிரியை சற்புத்திர மார்க்கம் ஆமாறு ஏனைய வற்றோடு வைத்துக் காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

பொழிப்புரை :

அருக்கிய. பாத்திய. ஆசமனாதி முகமன்களைச் செய்தலும், தோத்திரம் சொல்லலும், திருமேனியைக் கண்ணை இமை காத்தல்போலப் பேணிக் காத்தலும், வழிபாட்டு முடிவில் மந்திரத்தைப் பலமுறை கணித்தலும், பசி தாகம் முதலியவற்றைப் பொறுத்துக் கொண்டு, செயல்களை விரையாது அமைந்து செய்தலும், உண்மையே பேசலும், காம வெகுளிகளாகிய மனக் குற்றங்கள் இல்லா திருத்தலும், அன்போடு படைக்கப்படுகின்ற அன்னம், பெரிதும் உதவு கின்ற நீர் என்பவற்றையும் செயலாலும், பாவனையாலும் மிகத் தூயன ஆக்குதலும், மற்றும் இன்னோரன்ன செயல்கள் பலவும் அன்போடும், ஆர்வத்தோடும் செய்யப்படுதலால், கிரியை குற்றம் அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகின்றது.

குறிப்புரை :

``உற்றநோய் நோன்றல்`` (திருக்குறள் - 291) முதலிய வற்றை வாளா செய்யாது வழிபாடு பற்றிச் செய்தலை, ``நற்றவம்`` என்றார். `இட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `இடுதல்` என்பது `படைத்தல்` என்னும் பொருட்டாய் ``அன்னம்`` என்பத னோடும், `உதவுதல்` என்னும் பொருட்டாய் ``நீர்`` என்பதனோடும் இயைந்தது. சிறப்புடைய இவ் இரண்டற்கும் நேசித்தல் கூறவே, பிறவற்றிற்கும் அஃது உண்மை தானே பெறப்பட்டது. ``அன்னமும்`` என்னும் சிறப்பும்மை ``நீர்`` என்பதனோடும் இயையும். அதனால், பிறவும் சுத்தி செய்யப் படுதல் தானே அமைந்தது. சுத்திகளை ஐந்தாகக் கிரியாபாதம் கூறும். அவை: `பூத சுத்தி, தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி` என்பன. இவற்றின் இயல்பெல்லாம் கிரியை பற்றிய நூல்களிற் கண்டு கொள்க.
இதனால், இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடாக நிகழ்தலால், கிரியை சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரைஅன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.

பொழிப்புரை :

`அறுகாற் பறவை` எனப்படுகின்ற வண்டுகள் தேன் உள்ள மலர்களையே தேடித் திரியும்; வெறும் மலர்களை அணுக மாட்டா. வெண்ணிறத்தையுடைய அன்னப் பறவைகள் தாமரை மலரையே விரும்பியடையும்; நீலப் பூவை அடையமாட்டா. அவை போலச் சிவ வழிபாடு செய்வோர் சிவனுக்கு உவப்பாகின்ற நல்ல மலர்களையே பறிப்பர்; பிற மலர்களைப் பறியார். இவற்றையெல்லாம் நேரிற் கண்டும் நல்லறிவில்லாதார் இளமைக்காலத்திற்றானே சிவனை வழிபட்டு சிவபுத்திரராய் விளங்கும் வழியை அறிகின்றிலர்.

குறிப்புரை :

``அலர்`` என்பது, இசையெச்சத்தால், `தேன் நிறைந்த மலர்` எனப்பொருள் தந்தது. `அன்னம் தாமரையைக் கண்டு மறுகா; நீலம் குறுகா` எனக் கூட்டுக. மறுகுதல் - வருந்துதல்; வெறுத்தல். அஃது இன்மை விரும்புதலை உணர்த்திற்று. ``அரன் நெறி சேரகிலார்`` எனப் பின் வருதலின், நறுமலர் கொய்வார் அந்நெறியைச் சேர்ந்தோராதல் அறியப்படும். ``சிறுகால்`` என்பது `முன் நேரம்` எனப் பொருள் தந்து இளமைப் பருவத்தைக் குறிக்கும்.
``கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார்`` 1
என்பதனானும் அறிக. `சிவ புத்திரராதற்கு இளமைப் பருவம் மிக ஏற்புடைத்து` என்றற்கு, `சிறுகால் சேரகிலார்`` என்றார்.
``முன்னடைந்தான் சம்பந்தன்`` 2 என ஞான சம்பந்தர் தாமே அருளியவாறும், சேய்ஞலூர் பிள்ளையாரும் அங்ஙனமே ஆயின வாறும், ``முன் இளங் காலத்திலே பற்றினேன்`` 3 எனப்பிறரும் அருளியவாறும் இங்கு நினைவு கூரத்தக்கன.
இதனால், கிரியை இளமைக் காலத்தேயும் கொள்ளத் தக்கதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அருங்கரை யாவ தரனடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.

பொழிப்புரை :

பிறவிக் கடலுக்கு காணுதற்கு அரிய கரையாய் உள்ளது அரனது திருவடி நிழலே. உலகில் உயிர்கள் ஒழுக வேண்டிய நெறிமுறையாகச் சொல்லப்படுவது அவனது ஆணையே. அவ் வாணையின்வழி அவனது திருவடி நிழலாகிய கரையை நோக்கிச் செல்கின்ற உயிர்கள் பலவற்றிற்கும் தொகை நிலையாய் அமைந்த ஒரு பேரரசினை உடையவனாய், அனைத்துலகின் மேலும் கோட்டம் இன்றி ஒருபடித்தான கருணையையே யுடையவனாய் அரன் இருக்கின்றான்.

குறிப்புரை :

ஆகவே, `உயிர்கள் யாவும் அவ்வரசன் மைந்தரே யாய் இருந்தும், அதனை அறியாமல் மயங்குகின்றன` என்பதாம்.
``மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்தவனை யறியாது`` 1
என்றமை காணத்தக்கது. `உயிர்களாகிய மைந்தர்க்கெல்லாம் பெரு நிலையையும், பெருநலத்தையும் தருகின்ற பேரரசத் தந்தை அரன்` என்பது கூறுவார், `அவனது திருவடி நிழலே உயிர்கள் அடையும் இடம்` என்பதும் அதனை அடையுமாறும் உடன் கூறினார். `அவ்வடி நீழல்` என்பது பாடமன்று. `பெருங்கரை` என்பதில் கரை. `வரம்பு` என்னும் பொருளாய், ஒழுகும் நெறியைக் குறித்தது. அந்நெறியை இறைவன் தன் ஆணையாக வகுத்து வைத்திருத்தலை இரண்டாம் அடியிற் குறித்தார்.
``பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி` 2 எனத் திருவள்ளுவரும் கூறினார். `அரசாய்` என்பது, `அரைசாய்` எனப் போலியாய்ப் பின், `அரையாய்` என நின்றது.
இதனால், எஞ்ஞான்றும் உயிர்கள் இறைவன் மைந்தராய் இருக்கும் உரிமையுடைமையின் கிரியை இளமைக் காலத்தில் மறந் தொழியினும் பின்னராயினும் அறிந்து மேற்கொள்ளுதற்கு உரித்தாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயன்அது வாகும்
பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.

பொழிப்புரை :

அரனது திருவடிகளின் நேரேநின்றும், வீழ்ந்தும், மனம் விரும்பியும், கைகளால் பிடித்தும், புகழ்ந்தும் முறைப்படி வழிபாடு செய்யுங்கள். அம்முறையீடு உலகப் பயனையும் தருவதா யினும், மானுடப் பிறப்பின் பயனாகிய வீடு பேற்றைத் தருவது அஃது ஒன்றே, ஆதலின், அதனை மேற்கொள்ள அஞ்சி ஒழிவாரிடத்தில் குற்றம் வந்துதங்குவதாம்.

குறிப்புரை :

``தழுவி`` என்புழியும் எண்ணும்மை விரிக்க. ``முறை`` என்பது அதன் வழிபட்ட செயலைக் குறித்து. `விதி` என ஓதினுமாம். பிறவற்றைப் பயந்தும், என்பது ``பிறவிப் பயன்`` என்றதனால் போந்தது. ஈற்றடியைப் பிறவாறும் பாடம் ஓதுவர்.
இதனால், கிரியை இறைவன் மைந்தராகிய மக்கட் பிறப்பினர் யாவரும் தவறாது மேற்கொள்ளற்பாலதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.
``யாவர்க் குமாம்இறை வற்கொரு பச்சிலை`` 1
என இந்நாயனாரும்,
``உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணாராகில் ... ... ... ...
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே`` 2
என்று திருநாவுக்கரசு நாயனாரும் அருளினமை அறிந்து போற்றற் குரியது.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத்தருள`` 1
என்றே சேக்கிழாரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 6

நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

பொழிப்புரை :

எம் பெருமானாகிய சிவனை யான் அவன் முன்னே, நின்றும், கீழே வீழ்ந்தும் மிகுந்த மலர்களைத் தூவி வணங்குவேன். இஃது ஒருகாலத்தில் மட்டுமன்று; எக்காலத்துமாம். இவ்வாறு தொழு வாரிடத்தில் அவர் தொழுந்தோறும் தேவர் தலைவனாகிய சிவபிரான் சென்று வெளிப்பட்டு நிற்பான். அதனால், நீங்களும் அவனை அவ்வாறு வணங்குங்கள்.

குறிப்புரை :

தம்மை அடுத்தார்க்கு மலர் தூவித்தொழுமாறு பணித் தமையால், தாமும் அவ்வாறு தொழுதல் பெறப்பட்டது. ``என்றும்`` என்றது, `யோக ஞானங்கள் கைவந்த பின்னும்` என்றவாறு.
இதனால், கிரியை சிவனை வெளிப்படக் காணும் பயனைத் தருவதாய்ச் சகமார்க்க சன்மார்க்கங்களை அடைந்தோர்க்கும் ஒழியலாகாத சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது. இந்நாயனார் இம் மந்திரத்தில் தம் செய்கையை எடுத்துக் கூறினமையே இதற்குப் போதிய சான்றாகும். மற்றும் ``புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க`` 2 என்றற் றொடக்கத்தனவாகச் சாத்திரங்களிலும், வரும் உரையளவை களும், நால்வர் ஆசிரியர் முதலியோரது ஒழுகலாறுகளுமாகிய சான்றுகள் பலவும் நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 7

திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே.

பொழிப்புரை :

மக்கள் உடம்பிற் பொருந்தி வாழ்கின்ற உலகத் தவரே! சிவனாகிய தந்தைதன் செல்வத்தில் பொருந்தி வாழ்தற்குரிய சற்புத்திர மார்க்கத்தின் மரபினைக் கூறுகின்றேன்; கேளுங்கள். பிறவிக்கு ஏதுவாய் நிலைபெற்றிருக்கின்ற ஆணவ மலம் தனது செயல் மடங்கி நிற்குமாறு உங்கள் இருகைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து குவியும் படி சிவனைத் தொழுது, என்றும் இன்பத்திலே பொருந்தியிருங்கள்.

குறிப்புரை :

``கைகூம்ப`` என்பதனை இரட்டுற மொழிந்து பாசத்திற்குச் `செயல் மடங்க` எனவும், தொழுவார்க்கு, `கைகள் குவிய` எனவும் உரைத்துக் கொள்க. கை செயலாதல், `கையறுதல்` என்னும் சொற் பற்றியும் அறியப்படும். ஆணவம் செயல் மடங்குதல் ஆவது, தன் சத்தி மடங்கி நிற்றல். தொழுதல், மலர் தூவித் தொழுதலாம். இதனை, ``கைகாள் கூப்பித் தொழீர்;- கடி - மாமலர் தூவி நின்று``1 என்பதனாலும் அறிக. `இது செய்யாதார் வாளா பொழுது போக்குபவராவார்` என்பதை,
``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே`` 2
என்னும் நாவக்கரசர் திருமொழியால் உணர்க. ஈற்றடியில் உள்ள `மன், உம்` அசைகள். ``உற்றிருந்து`` என்பது ஒரு சொல்.
இதனால், சற்புத்திர மார்க்கத்தது முறையும், பயனும் சுருங்கக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

பொழிப்புரை :

திருக்கோயிலில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்து கொடுத்தல், தொடுத்துக் கொடுத்தல், அலகிடல் மெழுகல், துதி பாடல், ஊர்தி சுமத்தல், பலவகைத் திருமஞ்சனப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தல் முதலிய எளிய பணிகளைச் செய்தல், தாச மார்க்கம், தொண்டர் நெறியாகும்.

குறிப்புரை :

``எளியன`` என்பதை ஈற்றடியின் முதலிற் கூட்டி உரைக்க. எளிமையாவது, மன ஒருக்கம், பொறியடக்கம் முதலியன செய்ய வேண்டாமை. தளி - கோயில். இதனைக் குறிக்கும் ``அது`` என்னும் சுட்டுப்பெயர் செய்யுளில் முன் வந்தது. தூர்த்தல் - குப்பைகளைப் போக்கல்; அஃதாவது அலகிடல். பள்ளி - இருக்கை. சிவிகை முதலிய ஊர்திகள்; இஃது இடைக் குறைந்து நின்றது. அதற் குரிய பணியாவது சுமத்தல். `தளித்தொழில்` என்பதில் தகரவொற்றுத் தொகுத்தல் பெற்றது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்று, `புறத்தொழில் மாத்திரையால் சேய்மையில் நின்று செய்தலால் சரியை தாச மார்க்கமாயிற்று` என்பது விளக்கி நின்றது.
இதனால், `சரியைத் தொண்டாவன இவை` என விளக்கும் முகத்தால், சரியை தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அதுவிது ஆதிப் பரமென் றகல்வர்
இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே

பொழிப்புரை :

`அந்தத் தெய்வம் முதற்கடவுள், இந்தத் தெய்வம் முதற்கடவுள்` என்று பலவான எண்ணங்களைக் கொண்டு பலர் சிவனை அடையாது நீங்குவர். அதனால், `சிவனை அடைவதே உய்யும் நெறி` என்று தெரிந்து, அவனை வணங்குவார் அரியர். `எல்லாத் தேவர்க்கும் தலைவன் சிவபெருமான்` என்பது வேதாகமங் களை உணரின் தெளிவாம். ஆதலால், அம்முறையே சென்று அவனையே விரும்பி அடையுங்கள். அவ்வாறு அடையும் முறையே மக்கள் உள்ளத்தில் பொருந்தி நிற்கும்படி ஆன்றோர் உணர்த்துகின்ற நெறியாகும்.

குறிப்புரை :

``வேந்தனை`` என்பது பின்னர் வருதலால், வாளா, ``இறைஞ்சினரில்லை`` என்றார். ``வேந்தன்`` என்று, முன் `அது, இது` எனச்சுட்டிய தெய்வங்கட்கு வேந்தனை என்றவாறு. ``விதி`` என்றது, சிறப்புப்பற்றி வேதாகம விதியையே குறித்தது. `அதன் வழியே சென்று நாடும்` என்றதனால், அது சிவனே வேந்தனாதலை இனிது விளக்கி நிற்றல் பெறப்பட்டது. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், `சிவனுக்குரிய தொண்டுகளைச் செய்தலே, தொண்டர் நெறி` என்பது ஆன்றோர் துணிபாதலை விளக்கும் முகத்தால், சரியையே தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

பொழிப்புரை :

நான் முதலில் இடநாடியின் வழியும், பின்பு வல நாடியின் வழியும் பிராண வாயுவை அடக்கியும், விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் இயன்றன.

குறிப்புரை :

அந்தித்தல் - அடக்குதல். இதனை, ``ஞாயிறு`` என்ப தற்கும் கூட்டுக. திங்கள் - சந்திர கலை. ஞாயிறு - சூரிய கலை. `மந்திர செபம், தியானம்` என்பவையும் பிராணாயாமத்தோடு கூடியவழிச் சிறந்து நிற்றலை முதல் இரண்டடிகளில் கூறியவாறு. புறத்தே சிவனை வழிபடும் இடங்களில் ஞாயிற்று மண்டலம் இங்கு முதற்கண் கொள்ளத் தக்கது. வகை, தாசமார்க்கமாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. சரியை யாகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்வராயின், அவரது சரியைத் தொண்டு பொதுவாய் ஒழியாது சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.
இதனால், தாச மார்க்கம் சிறப்பு நிலை எய்துமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

பொழிப்புரை :

சிவனைத் தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லி உளம் மகிழ்ந்து போற்றித் தியானிப்பர். அவர் அவன்பாலே நின்று அங்ஙனம் செய்யினும் அவன் தன்னைத் தமக்குக் கண்போலச் சிறந்தவன் எனக் கருதி, அன்பும், ஆர்வமும் கொண்டு வழிபடுகின்ற அடியவரது உள்ளத்தில் நீங்காது நின்று, அவர்கள்பாலே பேரருள் உடையவனாகின்றான்.

குறிப்புரை :

தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லிப் போற்றுதலை,
``பேரா யிரம் பரவி வானோர் ஏத்தும் - பெம்மானை`` 1
என அப்பரும் எடுத்தோதியருளினார். தேவர்கள் எத்துணைப் பணி வுடையராயினும், `யாம் தேவர்` என்னும் செருக்கு முற்றிலும் நீங்கப் பெறாமையின், அச் செருக்குச் சிறிதும் இல்லாத அடியார்களிடத்தே சிவன் மிக்க கருணையுடையவனாய் இருக்கின்றான் என்பதாம்.
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி`` 2
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்`` 3
என்பவனவற்றையும் நோக்குக. `உள்மகிழ்ந்து உன்னுவர்` என மாற்றிக்கொள்க. `தொழவும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. தேவ இனத்தராய் அருகணைதல் பற்றி ``உள் நின்று`` என்றார். ``பண்ணவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிறப்பு நிலைத் தாச மார்க்கமும் செருக்கு நீங்கி அன்போடு கூடியவழியே பெரும் பயன் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருந்த நினைவறி யாரே.

பொழிப்புரை :

சிவபெருமானது புகழைக் கூறும் நூல்களை ஓதுதல், இயன்ற வகையில் சிவனை வழிபடுதல், மலர் கொய்து கொடுத்தல் முதலிய தொண்டுகளைச் செய்தல் என்னும் இவை போல்வனவற்றைச் செய்யினும், கல் வந்து விழப்பட்ட பாசிக் குளம் அக் கல்வீழ்ச்சியின் வேகம் உள்ள துணையும் பாசி நீங்கி நின்று, பின் பாசியுடையதாய் விடுதல் போல, மனத்தின் இயல்பை ஆராயுமிடத்து அத் தொண்டு களில் ஈடுபடும் துணையும் அஃது ஐம்புல ஆசையின் நீங்கி நின்று, பின் அதனை உடைத்தாய்விடும். அப்பொழுது மக்கள் சிவன்பால் அன்பு கொண்டிருக்கும் நிலை இல்லாதவராவர்.

குறிப்புரை :

`ஆதலின், புறத்தொண்டு இல்லாதபொழுதும், செபம், தியானம் என்ற இவற்றை யுடையராதல் யாவர்க்கும் நன்று` என்பது குறிப்பெச்சம். ``பாசிக் குளத்தில் வீழ் கல்லாம் மனம்`` என்றா ராயினும், `கல்வீழ் பாசிக் குளமாம் மனம்` என மாற்றியுரைத்தல் கருத்தென்க.
``பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதிற் பரக்கும்`` 1
என்றார் சிவஞான சித்தியிலும். இரண்டாம் அடி யிறுதியில் `அவ்விடத்து` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இம்மந்திரம் பின்வருமாறும் ஓதப்படுகின்றது:-
``வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசக் கிணற்றினில் வீழ்கின்ற பாவிகாள்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருக்க நினைவறி யீரே.``
இது கொள்ளப்படுமாயின், இரண்டாம் அடியை முதல் அடியாகக் கொண்டு ஓதிக் கொள்ளுதல் நன்று.
இதனால், `சிவனை எஞ்ஞான்றும் மறவாதிருக்க முயலல் வேண்டும்` என்பது, இறுதிக்கண், நான்குமார்க்கத்திற்கும் பொதுமை யாக வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுறு ஆமே.

பொழிப்புரை :

சாலோகம் முதற் பயன் அது சரியையாகிய முதல் நெறியாற் பெறப்படுவதாகும். கிரியையாகிய நெறியால் அந்தச் சாலோகப் பயனில் சாமீபப்பயன் உண்டாகும். சாலோகத்தில் சாமீபம் கிடைத்தால் அதன் பின் சாரூபம் வரும். முடிவாக விரிந்த பல உலகங்களில் யாதொன்றிலும் இல்லாது பரசிவத்தோடே ஒன்றாகின்ற பயன் கிடைப்பதாம்.

குறிப்புரை :

`லோகம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவலோகத்தையே உணர்த்தலின், `சாலோகம்` என்பது சிவலோகத்தை அடைந்து அங்கு எவ்விடத்தும் செல்லும் உரிமையைப் பெறுதலாம். ``பெறும்`` என்றது, `பெறப்படும்` என்றதாம். ஏனைச் சாமீப சாரூபங்களும் அவ்வுலகத்தில் பெறும் பயனே யாதலின், அவற்றை, ``சாலோகம் தங்கும்`` எனவும், ``மாலோகம் சேரில் ஆகும்`` எனவும் கூறினார். இரண்டாம் அடியில், `சாலோகத்துக்கண்` என உருபு விரிக்க. இவ்வடியில், `சரியையால்` என்பது பாடம் அன்று. மூன்றாம் அடியிலும் அவ்வாறே `மாலோகத்துக்கண்` என உருபு விரித்துக் கொள்க. மாலோகம் - பெரிய உலகம்; சிவலோகம் ``சேரில்`` என்பதற்கு, `சாமீபம்` என்னும் வினைமுதல் மேலையடியினின்றும் வருவிக்க. வழி - பின்பு. பரன் - பரசிவன். அவன் உரு ஆதல், அவனோடு ஒன்றாதலாம். இதுவே சாயுச்சம். ``வழி ஆகும்`` என்றதனால் `அஃது யோகத்தால் வரும்` என்பது பெறப்பட்டது. படவே எஞ்சி நின்ற ஞானத்தின் பயனே சாயுச்சமாதல் விளங்கிற்று` சாயுச்சம் - இரண்டறக் கலத்தல். சாலோக முதலிய பயன்கள் மூன்றும் முறையே பணியாளர், மைந்தர், தோழர் என்னும் இவர்கட்கு உள்ள உரிமையோடொத்தலின், சரியை முதலிய மூன்றும் முறையே `தாசமார்க்கம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்` எனவும் சாயுச்சமே சிறந்தபயனாகலின் ஞானம் `சன்மார்க்கம்` எனவும் பயன் பற்றிப் பெயர் பெற்றன என்றார் சிவஞான போத மாபாடியம் உடையார்.
இதனால், சரியை முதலிய நானெறியின் பயன் சாலோகம் முதலிய நான்குமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.

பொழிப்புரை :

தீக்கைகளில் சமயதீக்கை சிவனை மனத்தால் நினைக்கப் பண்ணும். விசேடதீக்கை சைவ சமய மந்திரங்கள் பல வற்றை பல முறையில் பயிலப் பண்ணும். மூன்றாவதாகிய நிருவாண தீக்கை சைவ சமயத்தின் முதற் பொருளுளாகிய சிவனது பெருமையை உள்ளவாறுணர்ந்து, `அவனே முதற்கடவுள்` எனத் தெளியப் பண்ணும். சைவ அபிடேகம் தான் சிவமாயே நின்று பிறர் சிவனது திருவருளைப் பெறும் வாயிலாய் விளங்குப் பண்ணும்.

குறிப்புரை :

இங்கு, ``கிரியை`` என்றது, சிவனது கிரியா சத்தியின் செயற் பாடாகிய தீக்கையை. இதனை முதலில் வைத்து, எல்லா வற்றோடும் கூட்டி உரைக்க. மனத்தைக் கோயிலாக்குதலாவது, சிவனைப் புறத்தில் பல வடிவங்களில் கண்டு தொழுதல் மாத்திரையான் அன்றி, தியானிக்கும் நெறியைத் தருதல். இதனை `அனுட்டானம்` எனப. பல மந்திரங்களைப் பல வகையில் பயிலல் எனவே, `கிரியை, யோகம்` என்னும் இரண்டும் அடங்கின. தான் சிவமாய் நின்று பிறரும் திருவருள் பெறுதற்கு வாயிலாவது ஞானா சிரியனாய் விளங்குதலாம். `சரியை முதலிய நான்கும் சமயம் முதலிய தீக்கைகளால் இங்ஙனம் ஒன்றின் ஒன்று உயர்ந்த நிலையை உடைய ஆதலின், பின்னர் அவற்றால் விளையும் பயனும் அன்னவாயின` என்றவாறு.
இதனால், மேற்கூறிய நெறிகட்கும், அவற்றின் பயன்கட்கும் உளவாய இயைபு கூறப்பட்டது. அபிடேகம் பெறாதோரும் ஞானியராய்ச் சாயுச்சம் பெறுவராயினும், அவரினும் ஆசிரியராய் விளங்கினோர் பிறரையும் உய்விக்கும் சிறப்புடையர் என்றற்கு அவரையே சாயுச்சம் பெறுவார்போலக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாசம் அருளான தாகும்இச் சாமீபம்
பாசம் சிவமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே.

பொழிப்புரை :

சாலோகம், மாயா கருவிகள், தாமே உயிர் என்று உயிரை மருட்டி அதனைத் தம் வயப்படுத்தியிருந்த நிலை நீங்கித் தாம் அதனின் வேறாய சடங்களாதலைத்தோற்றி, அதன்வயப்பட்ட நிலையை உடையது. சாமீபம், அக்கருவிகள் அருள்வயப்பட்டதாய் உயிர் இறைவனை அணுகுதற்குத்துணை செய்து நிற்கும் நிலையை உடையது. சாரூபம், அக்கருவிகள் சிவமயமாய் உயிருக்குச் சிவானந்தத்தைத் தரும் நிலையை உடையது. சாயுச்சம், அக்கருவிகள் யாவும் கழிய, உயிர் தான் நேரே சிவனைக் கூடியிருக்கும் நிலையை உடையது.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், `சிரமானது` என்பது பாடம் அன்று. ``பதி`` என்பது, `பதியோடு ஒன்றாய் இருக்கும் நிலை` எனப் பொருள் பட்டு, `பழம் உதிர்ந்த கோடு` என்பது போல நீக்கப் பொருட்டாய வினைத் தொகையாய்க் ``கரை`` என்பதனோடு தொக்கது. ``ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள``1 என்ற அனுபவநிலை. பாசம் அருளானதாதலை ஓர்ந்துணர்ந்துகொள்க.
இதனால், சரியை முதலியவற்றின் பயனாய சாலோகம் முதலிய நான்கின் இயல்பு வேற்றுமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது
அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக இழிவற்ற யோகரே.

பொழிப்புரை :

சாலோக சாமீபங்கட்கு மேலே பொருந்தியுள்ள சாரூபம் அட்டாங்க யோகங்களுள் எட்டாம் நிலையாகிய சிவ சமாதி கைவரப் பெற்றோர்க்கே கிடைப்பதாம். அந்தச் சாரூப நிலையினராய முதிர்ந்த யோகியர்க்கு அல்லது அதற்கு மேலே உள்ள சன்மார்க்க மாகிய ஞானம் உண்டாக மாட்டாது. மேலும் அட்ட அங்கங்களும் நிரம்பிய இந்த யோகத்தாலே காய சித்தியும் உண்டாகும். அதனால், இம்மையில் காய சித்தியும், மறுமையில் சாரூபமும் பெறுபவரே குறைவற்ற யோகத்தைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`எட்டாம் யோகத்தால்` எனவும், `அங்கத்தால்` எனவும் உருபு விரித்துக் கொள்க. ``அங்கம்`` என்றது அவற்றை முற்ற உடைய யோகத்தை குறித்த ஆகுபெயர். ``தனில்`` என்றது, யோகத்தையே குறித்தது, `ஆவர்` என ஓதற்பாலதனை,``ஆக`` என விதியாக ஓதினார். அன்றி `ஆவர்` என்றே பாடம் ஓதலுமாம்.
இதனால், சாரூபம் வருமாறும், அவ்வாற்றானே பிற பயன்கள் கிடைத்தலும் கூறப்பட்டன. ``சன்மார்க்கம் தனில் அன்றிக் கை கூடாது`` என்றதனால், `சரியை முதலிய மூன்றற்கும் உண்மைப் பயன் ஞானமே` என்பதும், `சாலோகம் முதலியவை இடைநிலைப் பயன்களே` என்பதும் போந்தவாறு அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 2

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலமா தாகும் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

பொழிப்புரை :

பொன்மலையைச் சார்ந்த சராசரங்கள் யாவும் பொன்னேயாய் விளங்குதல்போல், திருக்கயிலாய மலையில் கல்லால் நிழலில் தென்முகக் கடவுளாய் நீங்காதிருந்து ஞான நெறியைத் தக்கார் வழியாக உலகிற்கு என்றும் அளித்து வரும் சிவபிரான் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானது உலகத்தை அடைந்த யோகிகளது உருவம் கயிலையில் மேற்கூறியவாறு வீற்றிருந்தருள்கின்ற பெரு மானது ஒளி பொருந்திய உருவத்தோடு ஒத்த உருவமேயாகிவிடும்.

குறிப்புரை :

உவமை, ``கதிர்வடிவாம்`` என்பது. அதனோடு ஒன்றேயாய் அதுவாகிவிடாது, அதனோடு ஒத்த தாம் என்பது விளக்கி நின்றது `லோக சயிலத்தினை` என மாற்றி உரைக்க. `அச்சயிலம தாகும்` எனச் சுட்டியுரைக்க, உலோகம், இங்கு,பொன். முன்னர், ``பொற் சயிலம்`` என்றதனால், பின்னர், `அச்சயிலம்` என்பது, `பொன்` என்னும் பொருட்டாய் நின்றது. பொன் மலையைச் சார்ந்தன யாவும் பொன்னாய் விளங்குதலை,
``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே`` 1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியானும் அறிக. ``புக்க போதே`` எனப் பொதுப்படக் கூறினாரேனும், யோகத்தால் ஒன்றிப் புக்க பொழுது` என்பது, ``சார்ந்த பொழுதே`` என்ற உவமையிற் போந்த சார்ச்சி வகை யால் பெறப்பட்டது. படவே, கதிர்வடிவாதல் அவரது உருவமேயாதல் விளங்கிற்று. இவ்வுலகரும் தன் உலகத்தை அடைதற் பொருட்டுச் சிவபெருமான் அருள்புரியுமாற்றை உணர்த்தற்கு, ``பயிலுங்குருவின் பதி`` எனவும், ``கயிலை இறைவன்`` எனவும் அருளிச் செய்தார்.
``மண்ணுல கிற்பிறந்து - நுமை - வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறுதல் - தொண்ட - னேன்இன்று [கண்டொழிந்தேன்`` 2
என்று அருளிச்செய்ததும் காண்க.
இதனால், சாரூபத்தினது இயல்பு உவமையின் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

பொழிப்புரை :

`சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறை வான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனை யன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறை வுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறி யின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், `சிவந் தன்னை` என ஓதுதல் பாடம் அன்று. இவ்வடியை, `சைவம் பசுபாசம் சாராமல் நீங்குதல் - (அல்லது) நீவுதல்` எனவும் ஓதுவர்.
இதனால், `சிவநெறியின் முடிந்த பயன் சாயுச்சமே` என்பது பல்லாற்றானும் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே.

பொழிப்புரை :

சாயுச்சம், சீவன் முத்தி நிலையில் சாக்கிராதீதமாய் அமைதியிற்படுத்தி, சிவம் அன்றிப்பிறிதொன்றும் தோன்றாமல் சிவம் ஒன்றையே தோற்றுவித்து, அறிவின்கண் சிவனது குணமான எல்லையில் இன்ப வெள்ளத்தைத் தந்து நிற்கும்.

குறிப்புரை :

இவற்றைப் படிமுறையால் வேறு வேறு தொடராக ஓதினாரேனும் அவற்றை ஒருங்கெண்ணித் தொகுத்தல் கருத்து என்க. ``முடிவிலா`` என்பதனை ``ஆனந்தம்`` என்பதற்கு முன் கூட்டுக. மனம், கருவியாகுபெயர். குணத்தை ``சத்தி`` என்றார்.
இதனால், சிவநெறியின் முடிந்த பயன் இம்மையிற்றானே பெறப்படுதல் கூறப்பட்டது.
``மூதறிவார்க்கு - அம்மையும் இம்மையே யாம்`` 1
என்பது திருவருட்பயன். இந்நிலை எய்தினாரையே, `சீவன்மூத்தர்`, எனவும், `அணைந்தோர்` எனவும் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 1

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.

பொழிப்புரை :

இதன் சொற்பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

இஃது ஒட்டணியாய், ``இருட்டறை`` என்பது ஆணவ பந்தத்தையும் ``மூலையிருந்த`` என்றது, தன் இயல்பு தோன்றாது மறைந்திருந்ததையும், ``கிழவி`` என்றது அநாதியாய அருட் சத்தியை யும், ``குருடு`` என்றது அஞ்ஞானத்தையும்,``கிழவன்`` என்பது ஆன்மாவையும், ``குணம் பல`` என்றது நிலையாமை உணர்வு, துற வுள்ளம் முதலியவற்றையும், ``மருட்டுதல் என்பது மேற்கூறியவாறு உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கு தலையும், ``மணம் புணர்தல்`` என்பது ஆன்ம அறிவிற் பதிதலையும் உணர்த்தி நின்றன. இருட்டறை மூலையிருத்தல் முதலாகக் கூறிய பலவற்றானும் இது சத்திநிபாதத்தின் முதற்படியின் இயல்பாதல் இனிது விளங்கும். ``கிழவி`` என்பதனை, `குமரி` எனவும் பாடம் ஓதுப.
இதனால், சத்திநிபாதம் முதற்கண் நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.

பொழிப்புரை :

`உண்மையில் இன்பப் பொருளாய் உள்ள சிவனை அறிந்து அவனை அடையும் வழியை நாடினால், அங்ஙனம் அறிந்து நாடுவோர்க்கு அவன் தான் ஒருவனே இன்பப் பொருளாய்த் தோன்றித் தேவாமுதம்போலத் தித்தித்து நிற்பான். அவ்வாற்றால் அதற்குமேல் அவனது உண்மை நிலையைத் தெளிந்தவர்கட்கு அவன், தனக்கு நல்ல புல்லும், நீரும், நிழலும் உள்ள இடம் யாது என நோக்கிய பசுவிற்கு அங்ஙனமே உள்ளதாய்க் கிடைத்த புனம்போல நின்று எல்லையில் இன்பத்தை அளிப்பான்.

குறிப்புரை :

``புலன்`` என்பதனை நான்கிடத்தும் `புனல்` எனப் பாடம் ஓதுவாரும் உளர். கோ - பசு. `கோப்புலன்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
இதனால், இச்சத்திநிபாதம் வரப் பெற்றார்க்குச் சிவானந்த வேட்கை விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.

பொழிப்புரை :

`ஆதி` எனப்படும் சத்தி (முற்பக்கத்து நிலவுபோல) ஆணவ இருளை நாள்தோறும் படிமுறையாகப் பல பிறவிகளிலும் நின்று கழித்து, அம்மலம் பரிபாகம் உற்ற காலத்து அருளாகிய தனது இயற்கை தன்னைவிட்டு நீங்கியது போலக் காட்டிய அதனைவிடுத்து அருளேயாதலில் மாறாது நின்று, தனது மறைத்தலினின்றும் நீங்கமாட்டாத தேவர்களை அவரவர்க்கு ஏற்ற நிலையில் வைத்து ஆள்பவனாகிய சிவனோடு நீங்காதுநின்று அழிவில்லாத இன்பத்தை நுகர்தலாகிய நிலையை ஆன்மாவுக்கு அருளுவாள்.

குறிப்புரை :

``ஆதி`` என்பதனை முதலில் வைத்து ``எண்ணில் பிறவி கடத்தி`` என்பதனை அதன்பின்னரும்,. ``அருளும்`` என் பதனை இறுதியிலும் கூட்டி உரைக்க. ``அருள்`` என்பது ``அருளாகிய இயல்பு`` என்றவாறு. `நீங்காவண்ணமாய்` என ஆக்கம் வருவிக்க. மருள் - மயக்கம். இது மலங்களின் காரியம். இக்காரியமும் சிவனது சத்தியின்றி நிகழாது. அதனால், அச்சத்தி இதனை நிகழ்த்து விக்கும் நிலையில் `திரோதானசத்தி` எனப் படுகின்றது. இங்கு, ``ஆதி`` என்றது திரோதான சத்தியையே. ஓரிடத்தினின்றும் நீங்கிப் பிறிதோ ரிடத்துச் செல்லுதலினின்றும் நீக்கி, நசித்தலை உணர்த்தற்கு, ``பொருள் நீங்கா`` என்றார். புலம் - அறிவு. அஃது ஆகுபெயராய் ஆன்மாவைக் குறித்தது. பயில் - பயிலல். நுகர்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
இதனால், சிவனது சத்தி மலபரிபாகம் வருதற்கு முன்பு திரோ தானமாய் நின்று உபகரித்து, பரிபாகம் வந்தபின் அருட்சத்தியாய்ப் பதிந்து உபகரித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.

பொழிப்புரை :

இருள் சூழ்ந்திருந்த அறையில் உள்ள பொருளைக் காணலுறும்பொழுது ஒளிமிக்க விளக்குச் சென்று எரிந்தாற்போல, அறியாமை சூழ்தலால் மயக்கம் பொருந்தி நின்ற உள்ளத்தாமரை யின்கண் சிவன், அருள் மிகுந்து, அப்பனும், அம்மையுமாய் நிற்பான்.

குறிப்புரை :

எனவே, விளக்குச் சென்று எரிந்தபொழுது அந்த அறையில் இருள் நீங்கினாற்போல, இறைவன் அருள் மிகுந்து நின்ற பொழுது உள்ளம் மருள் நீங்கி உண்மையை உணர்தல் பெறப்பட்டது. இது பயன் பற்றிய சுட்டிக்கூறா உவமை. பொருளாவது, இங்கு ஒளி `மயக்கத்து மலர்` எனவும் `நந்தி ஆம்` எனவும் இயையும். ``மலரின் கண்` என உருபுவிரித்து, அதனையும், ``ஆம்`` என்பத னோடு முடிக்க.
இதனால், முதற் சத்திநிபாதத்தின் இயல்பு உவமையில் வைத்து விளக்கப்பட்டது. முதற் சத்திநிபாதத்தில் சத்தி நிவிர்த்தியாய்ப் பதிந்து, நிலை, நிலையாமை உணர்வைத் தோற்றுவித்து, `உலகப் பற்றை நீக்கும்` என்பர் சிவாக்கிர யோகிகள்.
1498. இனி ஐந்து மந்திரங்களால் இரண்டாம் சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 5

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.

பொழிப்புரை :

``இருட்டறை மூலை`` என்னும் மந்திரத்திற் கூறியவாறு, ஆன்மாவைத் தன் வயமாக்கிப் பதிந்த சத்தி, பின்பு, ஆன்மாவின் மயக்க உணர்வை முற்றிலும் போக்கி, வினைகளை வெருண்டோட ஓட்டி, அவ்வினைகளால் உளவாகிய அலமரல் நீங்கியதனால் உண்டாகும் அமைதியை உணர்த்தி, சிவனை உணரமாட்டாதிருந்த அந்நிலையை நீக்கி, அவனது அருட்குணங்கள் பலவற்றை உணரப் பண்ணி, அவனது அருளில் விளங்கி நிற்கும் உணர்வைத் தருவாள்.

குறிப்புரை :

அருட் சத்தி தனது முதற் பதிவில் உலகப் பற்று நீங்கச் செய்தபின், ``ஊசல் கயிறற்றால் தாய் தரையே யாந் துணையான்`` 1 என்றவாறு, தனது இரண்டாம் பதிவில் சிவனது திருவடியை நோக்கிச் செலச் செய்தலை இவ்வாறு விரித்தார் என்க. `இரண்டாம் முறையில் சத்தி பிரதிட்டையாய்ப் பதிந்து, மேற்கூறிய நிவிர்த்தி நிலையை நிலை பெறுத்தும்` என்பர் சிவாக்கிர யோகிகள். ``புணர்ந்து`` என்றது, `புணர்ந்தபின்` என்றவாறு. ``குணம்``, இங்கு சிவனுடையன. புரிதலுக்கு, `சத்தி` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்து இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

பொழிப்புரை :

கன்னியாகுமரிக் கடல் துறையில் மூழ்கி விளை யாடும் மாந்தர் அந்நீர் வடிவாய் நிற்கும் சத்தியின் பதிவில் மூழ்கி விளையாடும் எண்ணத்தினைக் கொள்கின்றாரில்லை. அக்கருத்து அவருக்கு உண்டாகுமாயின், அடுத்து ஒரு பிறவிதானும் உண்டாக மாட்டாது; வீடு பெறுவர்.

குறிப்புரை :

``ஆடிய, ஆடுங் கருத்திலர்`` என்ற குறிப்புக்களால், `கன்னித் துறை` என்பது சொற்பின் வருநிலையாய், இரண்டிடத்தும் வேறு வேறு பொருளைக் குறித்தது.
இதனால், சத்திநிபாதம் வரப்பெற்றார்க்குப் பிறவியறுதல் கூறப்பட்டது. இதுபோல்பவை இவ்வதிகாரத்தின் எப்பகுதியிலும் இயையுடையனவாம்.

பண் :

பாடல் எண் : 7

செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

பொழிப்புரை :

சிவனை யடையும் வேட்கை யுண்டாயினோரே, அவனை, `சிவப்பன்` என்றோ, `கறுப்பன்` என்றோ. `வெளுப்பன்` என்றோ, `பச்சையன்` என்றோ நன்கு உணரவல்லவராவர். ஆதலால், அவனை, `நெருப்புமிழுங் கண்களையுடைய பெரிய கொலை யானையை யாவரும் வியக்கும் வண்ணம் உரித்து அத்தோலைப் போர்த்த வெவ்விய கையை உடையவன்` என்று அறிந்து அவனை அடையும் வேட்கையுடையீராகுங்கள்.

குறிப்புரை :

முதலடியின் ஈற்றில் நின்று, முன் வந்த எல்லாவற் றோடும் இயைந்த ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல் விகற்பத் தின்கண் வந்தது. எய்த உணர்தல், அடைய விரும்புதல். எய்வர் - அறிவார். ``ஐ`` வியப்பு `ஐயெனெப் போர்த்த` என்க. கரி, ஆகுபெயர். `மைவென் றகன்ற பகடுரி போர்த்தவன்` என்பது பாடமாகவும் ஓதுப. யானையை உரித்துப் போத்தமை அவனது எல்லாம் வல்ல தன்மையை வெளிப்படையினாலும், ஐம்புல ஆசையை அறுக்கும் தன்மையைக் குறிப்பினாலும் உணர்த்தி, அவற்றை உணர்தல் அவன் மாட்டு அன்பு நிகழ்தற்கு ஏதுவாதலைக் கொள்ள நின்றது. `சிவனை அடையும் காதல் உடையவரே அவனை அடைதல் கூடும்; ஆதலின், அக்காதல் உண்டாதற்கு ஏதுவாய அறிவைப் பெறுங்கள்` என்றவாறு. `அவ்வறிவும், அதன் வழியான இக்காதலும் சத்திநிபாதத்தால் உண்டாம்` என்பது கருத்து. இரண்டாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், சத்திநிபாதம் சிவஞானத்திற்கும், சிவ பக்திக்கும் ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.

பொழிப்புரை :

`பிறந்து இறந்து உழன்ற காலங்கள் எத்துணையன கழியினும், அவ்வுழலலை நீக்கி நிலைபெறச் செய்யும் தலைவர் சத்தியும், சிவனுமாய அவரன்றிப் பிறர் இலர்` என, அனுபவம் வந்தோர் அறுதியிட்டுரைப்பர். இனித் தன்னை நாள்தோறும் தப்பாது வழிபடுவோர்க்குச் சிவன் கைமேல் பயனைப் பெறுவிக்கின்ற துணைவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

எய்திய காலங்கள் - சென்ற காலங்கள். யாண்டும், உகமும், கற்பமும் என்னும் இப்பகுதிகள் பற்றி, ``காலங்கள்`` எனப் பன்மைப்படுத்து ஓதினார். தனி - ஒப்பின்மை; `தம்மோடொப்பர் பிறரை இவர்` என்றவாறு. நாயகம் - தலைமை; தலைமை யுடையாரை, `தலைமை` என்றே உபசரித்து ஓதினார். முன்னர், `சிவனும்` என்னாது ``தானும்` என்றமையால், பின்னர், ``தன்னை`` என்றது சிவனையே யாயிற்று. கருமம் - பயன். காட்டு - காட்டாய் நிற்கும் பொருள். ``அது`` பகுதிப் பொருள் விகுதி. காட்டாதற்கு. ``தான்`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `சத்திநிபாதம்` என்றே கூறப்படினும், சத்தி தனித்து நில்லாமை உணர்த்துவார். ``தையலும் தானும்`` என முன்னர்க் கூறிப்பின்னர்க் காட்டாதலைச் சிவன்மேல் வைத்தே கூறினார். சிவாக்கிர யோகிகளும் `சத்தி தனது பதிவில் நிவிர்த்தி முதலியவளாய் உள்ள பொழுது, சிவனும் நிவிர்த்தீசன், பிரதிட்டேசன், வித்தியேசன் முதலியவனாய் நிற்பன்` என்பர். ``வணங்கும் அவர்கட்குக் காட்டாம்`` என்றதனால், இச்சத்திநிபாதம் கிரியையின்வழி மலத்தைப் பாகம் அடைவித்துத் தானும் முதிருதல் பெறப்பட்டது.
இதனால், இரண்டாம் சத்திநிபாதம் கிரியையால் ஆன்மாவை உய்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.

பொழிப்புரை :

`சந்திர கலை, சூரியகலை` என்னும் இரு வாயுக்களை முறைப்படி தொடருமாற்றால் அவை ஒரு வழிப்பட்டு முடியும் அவ்விடத்தை அடைந்து, அங்குள்ள ஒளியை நாங்கள் கண்டு பற்றிக்கொண்டோம். அவ்வொளியே முன்னே முன்னே பலர் காண முயன்று காணாது இளைத்த பெரியோன்; எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப்பவன்; (சிவன்) அவன் அவ்விடத்தில் நிலைத்து நின்று தன்னைக் காண்பவர்க்கு அஞ்ஞான இருளைப்போக்குவான்.

குறிப்புரை :

``ஆங்கு`` எனப்பண்டறி சுட்டாற் குறித்து, ஒளிக் காட்சியைக் கூறினமையால் இஃது யோகத்தை உணர்த்தியதாதலின், ``இரண்டு`` என்று இப்பொருட்டாயிற்று. ஆங்கு என்றது, ஆஞ்ஞைத் தானத்தை. மூன்றாம் அடி, `சிவன்` என்பது உணர்த்தி நின்றது. இரண்டாம் சத்திநிபாதம் தனது முதிர்வில் யோகத்தையும் தருதல் கூறியவாறு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்தால் யோகமும் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற களியது வாமே.

பொழிப்புரை :

இனி, நான்கு மந்திரங்களால் மூன்றாவதாகிய சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.
முன் துன்பமாய் நின்ற நிலை மாறி இப்பொழுது இன்பமாய் நிற்கின்ற சத்தி, சிவனால் கட்டிக்கொடுக்கப்பட்ட குடிலாகிய ஓர் உடம்பினுள் நின்று, `ஏழ்` என்னும் வகையுட்டானே மாறி மாறி வருகின்ற பலவாகிய பிறப்புக்களிலும் உளவாகின்ற துன்பங்களை யெல்லாம் உணரச்செய்வாள். பின் அவ்வுணர்ச்சி காரணமாக உயிரின் அகத்தே யுள்ள பல வகையான விருப்பு வெறுப்புக்களும் ஒழிந்துபோக, முதல்வனாகிய சிவனைக் கண்டு களிக்கும் களிப்புமாவாள்.

குறிப்புரை :

அண்ணித்தல் - இனித்தல். `எண்ணுவிக்கும்` என்பது திரிபெய்தி நின்றது. ``ஏழ் ஏழ்`` ஒருசொல் அடுக்கு. அறிவு உடம்பிட மாக நிகழ்தலின், அறிவின்கண் நிற்றலை உடம்பின்கண் நிற்பதாகக் கூறினார். ``நிலவாத புலால் உடம்பே புகுந்து நின்ற - கற்பகமே``1 என்ற அப்பர் திருமொழியையும் காண்க. ``பிறவி`` என்பது, விடாத ஆகுபெயர். ``கண்ணுற்று நின்ற`` என்பது ஒருசொல் நீர்மைத்து. அப் பெயரெச்சம் `ஆறு சென்ற வெயர்` என்பதுபோல, ``களி`` என்னும் காரியப்பெயர் கொண்டது. ``உணர்விக்கும்`` ``கண்ணுற்ற நின்ற களியாகும்`` என்றதனால், தீவிர சத்திநிபாதம் ஞானத்தைத் தருதல் பெறப்பட்டது. சிவாக்கிர யோகிகளும், ``தீவிர சத்திநிபாதம் சிவஞானம் பிரகாசம்`` என்றார். `இதில் சத்தி வித்தையாய்ப் பதியும்` என்பதும் அவர் கூறுவது. இந்த ஞானம் சிவநூல்களைக் கற்றல் கேட்டல்களால் வரும் கருவி ஞானமே (அபர ஞானமே) என்க.
``ஞானநூல் தனைஓதல், ஓது வித்தல்,
நற்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை`` 1
என்பதில், முதலில் உள்ள மூன்றும் இந்த ஞானமேயாதல் அறிக.
``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` 2
என்று அருளிச்செய்ததும் இந்நிலையினரை நோக்கியே என்க.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

பொழிப்புரை :

இமய மலையில் தோன்றி வளர்ந்த மகளும், அபர ஞான பரஞானங்களையே இருதனங்களாகக் கொண்டு உயிர்கட்கு அந்த ஞானமாகிய பாலை ஊட்டி வளர்ப்பவளும் ஆகிய சத்தி, மேற் கூறியவாறு முதல்வனைக் கண்ணுற்று நிற்கும் ஞானத்தால் வழிபடு கின்றவர்கட்குத் தவங்கள் எல்லாவற்றினும் சிறந்த தவமாகிய சிவ புண்ணியத்தை வழங்குவாள்; அதனால் பிறப்பை ஒழிப்பாள்; சிவனை மறக்கும் மறதியாகிய அஞ்ஞானத்தை நீக்குவாள்; யாவரும் அவரை வழிபடும் நிலையில் உயர்த்து வைப்பாள்.

குறிப்புரை :

காரண காரிய முறையால் முன் நிற்கற்பாலதாய பெருந் தவம் நல்கல், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. குறச்சாதியாகக் கூறியது, மலைமகளாதலை நயம்படக் குறித்தவாறு. சிறப்பு, இங்கு ஞானம், ஒடு உருபு, ``வேலொடு நின்றான், கோலொடு நின்றான்`` 1 என்பவற்றிற் போலச் சிறப்பித்தற் பொருளில் வந்தது. நின்றார் - உரியராயினார்.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.

பொழிப்புரை :

எட்டுத் திசைக்கும் தலைவனாகிய சிவனை அவன் துணைவியோடும் அறிவினுள் அறிந்து மறவாதிருங்கள். ஏனெனில், அவ்வாறு இருக்கும் அறிவை உடையவர்கட்கே சத்திநிபாதம் தொடர்ந்து முதிர்வதாகும்.

குறிப்புரை :

தாங்குதல் - சுமத்தல்; இங்கு அறிவினுள் அறிதலைக் குறித்தது. `தலைமகனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. தூங்குதல் - மிகுதல். ``ஒளி நீலம்`` என்பதில் பொதுப்பெயர் முன்னும், சிறப்புப்பெயர் பின்னுமாய் நின்றன. சிவ ஒளி செம்மையும் சத்தி ஒளி நீலமும் ஆதல் அறிக. `தலைமகனைப் புரிகுழ லாளொடும் தாங்குமின்` எனக் கூட்டுக.
இதனால், `சத்தநிபாதக் குறி தோன்றப் பெற்றோர் பின்னர் அந்நிலையை நெகிழாது பற்றி நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.

பொழிப்புரை :

தனு காரணங்களின் வழிவருபவற்றுள் ஒன்றையும் நோக்குதல் இல்லாத சத்திநிபாதன், தன்னை யார் அணுகினாலும் அவர்கட்கு முதிர்ந்த ஞானம் ஒன்றையே உணர்த்துவன். சிவனைப் புறத்தில் மலர் தூவி வழிபடினும் படுவான். தான் அடையும் எவ்விடத் திலும் அங்கு உள்ளார்க்கு உயிர்போலச் சிறந்து விளங்குவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலிற் கொள்க. சத்தி நிபாதர் தம்மை அணுகினவர்க்கு ஞானம் ஒன்றையே உணர்த்துவர், ``அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்துதவார் ஆகலான்`` 1 என்பதில் எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது. ``பணிகினும்`` என்பதை ``பணிவன்`` என்பதற்கு முன்னே கூட்டுக. உம்மை, அஃது ஒருதலை யாகாமை குறித்தது. ``உலகெங்கும்`` என்பதின்பின், `அவ்விடத் தார்க்கு` என்பது எஞ்சி நின்றது.
இதனால், தீவர சத்திநிபாதம் வந்தோரது இயல்பு கூறப் பட்டது.
இனி மூன்று மந்திரங்களால் தீவிரதர சத்திநிபாதம் உணர்த்து கின்றார். இஃது `அதிதீவிரம்` எனவும் சொல்லப்படும்.

பண் :

பாடல் எண் : 14

இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணமல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

பொழிப்புரை :

இருவகை வினைகளும் ஒரு தன்மையவாக ஒத்து நிற்குங் காலத்தில் உண்டாவதே இனிய அருட்சத்தியது பதிவு. `அஃது உண்டானபொழுது சிவன் குருமூர்த்தியாய் வந்து குற்றங்கள் யாவற்றையும் நீக்கி வழங்குவான்` எனப்படுகின்ற அந்த ஞானத்தாலே புருடன் தன் செயல் அற்று அருள் வழியில் நிற்பானாயின், மும்மலங்களும் பற்றற்று ஒழிய, அந்தச் சிவனே தானாவான்.

குறிப்புரை :

சத்திநிபாதமாவது சிறப்புடைய இந்நான்காஞ் சத்தி நிபாதத்தின் இயல்புகளை இங்கே முற்ற எடுத்தோதினார். இரு வினைகளும் நேரொத்தலாவது அவற்றது பயன்களாகிய உலகியல் இன்பம், துன்பம் இரண்டனையும் ஒரு பெற்றியவாகவே உணர்ந்து, அவற்றில் விருப்பு வெறுப்புக்கள் இல்லாதிருக்கும் நிலையாம். இதுவே ஆணவ மலம் பரிபாகமானதற்கு அறிகுறியாகும். ஆகவே, `இருவினை யொப்பும், மலபரிபாகமும் வந்தால், சத்திநிபாதம் வரும்` என்பர். ஞானத்தைப் பரிபாகம் வருமுன் உணர்த்துதல், வந்தபின் உணர்த்தாதிருத்தல் இரண்டுமேகூடா ஆகலின், சத்தி நிபாதம் வரப்பெற்றார்க்குச் சிவன் குருவாய் வந்து ஞானத்தை உணர்த்துதல் ஒருதலையாம். இது பற்றிய செய்திகள் பலவற்றையும் சிவஞானபோத எட்டாம் சூத்திரத்திலும், அதன் உரைகளிலும் விளங்கக் காண்க. சத்தி நிபாதத்தின் வழிச் சிவன் வந்து செய்தலை அச்சத்தியே செய்வதாகக் கூறினார்.
இதனால், சத்திநிபாதத்து இயல்பெல்லாம் இதனுள் வைத்து முற்ற உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி
அரவசெய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி யாளும் பராபரை தானே.

பொழிப்புரை :

உயிர் தனு கரணாதிகளைப் பெறாது ஆணவத் தோடு மட்டுமே கூடிச் சடம்போலக் கிடந்த இராக்காலமாகிய கேவல நிலையும், பின் தனு கரணாதிகளைப் பெற்றுப் பிறப்பு இறப்புக்களில் உழன்ற பகற் காலமாகிய சகல நிலையும் பின் ஒருபோதும் உண்டாகாது ஒழிந்த சுத்தநிலையாகிய முத்திக் காலத்திலே, சத்தி யாகிய திருவருள் ஒன்றையே நோக்கித் தற்போதத்தைச் சிறிதும் எழாத படி அடக்கி அவ்வருளோடே ஒன்றியிருக்க, அவ் அருளாகிய சத்தி யும் இவன்பால் இரக்கம் மிக்கவளாய் இவனைத் தன் அடியவனாக ஏற்றுக்கொள்வாள்.

குறிப்புரை :

`அதன்பின் துன்பம் ஏதும் இல்லை` என்பது குறிப் பெச்சம். கேவல சகலங்களை `இரவு, பகல்` என்றல் மெய்ந்நூல் வழக்கு, ``இரவும்பகலும் இறந்த இடம்`` என்றதனால் `அழிப்புக் கேவலம், படைப்புச்சகலம்` என்பனவும், `உறக்கக் கேவலம், விழிப்புச் சகலம்` என்பனவும், `மறப்புக் கேவலம், நினைப்புச் சகலம்` என்பனவுமாகிய இடைநிலை மாற்றங்களும் எய்தாது ஒழிந்த நிலை என்பது போந்தது. இதனை இவ்வாறே,
``இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே``
என்றும்,
``கங்குல் பகல் அற நின்ற எல்லையுளது எது`` 1
என்றும் பிறவிடங்களிலும் குறித்தல் காண்க. குரவம் செய்கின்ற - குராமலர் அழகைச் செய்கின்ற. அரவம் - ஓசை; பேச்சு; என்றது, தற்போதம் தலையெடுத்தலை. `பரிவொன்றிலாளும்` என்பது பாடமன்று.
இதனால், சத்திநிபாத நிலையது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்
தூனை விளக்கி உடனிருந் தானே.

பொழிப்புரை :

என்னுள் விளங்காது மறைந்து கிடைந்த ஞானத்தை அம்மறைவு நீக்கி விளங்கி எழச்செய்த என் குருநாதன் `மாலை, இரவு, பகல்` ஆகியவற்றில் ஒரோவொரு காலத்தில் விளக்கத்தைத் தருகின்ற `விளக்கு, சந்திரன், சூரியன்,` என்னும் ஒளிகளுக்கும் ஒளியைத் தருகின்ற ஒப்பற்றபேரொளி` அவன் என் உள்ளே புகுந்து உயிரை மட்டுமின்றி உடலையும் ஒளியாய் விளங்கச் செய்து, பின் என்னைவிட்டு அகலாது உடனாயே இருக்கின்றான்.

குறிப்புரை :

விளக்கு விளக்கந்தரும் காலத்தைக்கூறவே, ஏனை இரண்டும் விளக்கந்தரும் காலத்தையும் எடுத்துக்கூறுதல் கருத்தா யிற்று. `விளக்கு முதலிய மூன்றும் காலத்தாலும், இடத்தாலும் வரை யறுக்கப்படும் ஒளிகள்` என்பதை எடுத்தோதி, `அவற்றுக்கும் விளக்கம் தரும் ஒளி` எனவும், `ஒப்பற்றது` எனவும் கூறியவற்றால் அக இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞான ஒளியாய் விளங்குதலும், அது பிறிதொன்றால் ஆகாமையும் குறிக்கப்பட்டன, மாயையும் கன்மமும் ஆன்மா மருள்நிலையில் உள்ளபொழுது மருளாயும், அருள்நிலையை எய்தியபொழுது அருளாயும் நிற்கும் இயல்புடையனவாதல் பற்றி, `ஊனையும் விளக்கினான்` என்றார். மாயையும், கன்மமும் இவ்வியல்பின் ஆதலை,
``மாயைமா யேயம் மாயா வரும் இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின்மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்`` 1
என்னும் `சிவப்பிரகாசத்தால்` அறிக. `தீவிரதர சத்தநிபாதத்தால் அனுபவ ஞானமாகிய நிட்டை கைவந்து, ஆன்மா சிவமாம் தன்மையைப் பெறும்` என்றவாறு. சிவாக்கிர யோகிகளும் இங்கு சத்தி சாந்தியாய்ப்பதிந்து, உபசாந்தத்தைத்தரும் என்றார். இப்பாட்டு இருவிகற்பம் பெற்றது.
இதனால், சத்திநிபாதத்தின் நிறைந்த இயல்பும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந் துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள்தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்ம்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.

குறிப்புரை :

`அறுசமயத்தவர் காண்கிலர், விழுவர்` என்பனவும் பாடம். `அதனுள்` என்பதில் அன்சாரியை தொகுத்தல் பெற்றது, அறிவுள் நிற்பவனை ஒற்றுமைபற்றி உடலுள் நிற்பவனாக ஓதினார். முன்னும், பின்னும் பல இடங்களில் இவ்வாறே ஓதுதல் காண்க. மாயம் - பொய்; இங்கு மயக்கத்தைக் குறித்தது. ``பதைக்கின்ற ஆறே`` என்னும் பயனிலைக்கு, `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனுள் `ஆய்தல்` என்பது `சிவனே முதற்கடவுள்` என்னும் சைவத்தின் துணிபை முற்றாகவும், ஒருவாறாகவும் மறுத்துக் கூறுதலை ஆதலின், அச்செயலையுடையன மேற்கூறிய மதங்களேயாதல் அறிக. ஈற்றடியில் சகரமும் போலிவகையால் இன எதுகையாம். அன்றி, `உயிரெதுகை பெற்றது எனினும் அமையும்`.
இதனால், புறச் சமயங்கள் சிவனது முதன்மையைச் சிறிதும் உணராதனவும், முற்ற உணராதனவுமாய்க் கேடுபயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் அவற்றின் அறிவில் பொருந்தி யிருத்தலை விரும்பி, அண்டத்தில் உலகெங்கும் நிறைந்தும், பிண்டத்தில் உள்ளக்கமலத்தில் தியானப்பொருளாய் விளங்கியும் நிற்பவனும், அருள் வள்ளலும், அனைத்துலகிற்கும் தலைவனும், பொள்ளல் நிறைந்த உடலில் உயிர்ப்பாய், உட்புகுதல் வெளிவருதல் களைச் செய்தும் உயிர்களால் அறியப்படாது மறைந்து நிற்பவனும் ஆகிய முதற்பெருங்கடவுளாம் சிவபெருமானைப் புறச் சமயிகள் தங்கள் கருத்தில் கொள்ளமாட்டாதவர்களாகின்றனர்.

குறிப்புரை :

`இஃது அவர் வினை யிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `எங்கும் நிற்றல் முதலிய பலவற்றிற்கும் உயிர்கள்மீது வைத்த கருணையே காரணம்` என்றற்கு, உள்ளத்துள்ளே நிற்றலை விரும் பினமையை முதற்கண் தனிப்பட எடுத்து ஓதினார். ``உள்ளம்`` என்பது அறிவைக் குறித்தது என்னை? ``மலர்`` எனப் பின்னர் இதயத்தைக் குறித்தலின். ``தவம்`` என்றது தியானத்தை. தவன் - தவத்தால் அடையப்படுபவன். புகுதல் புறப்படுதல்களைக் கூறினமையின், அஃது உயிர்ப்பாதல் விளங்கிற்று.
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` 1
என்று அருளினமையும் இங்கு நோக்கத்தக்கது. இறைவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றல். அவை உடலொடு நிலைத்து நின்று, அந்தக் கரணங்களின்வழி வினைகளை நுகர்ந்தும், ஈட்டியும் வருதற் பொருட்டாம். உயிர்ப்பு இதயத்துடிப்பின் வழித்தாதலையும், இறைவன் இதய வெளியில் ஆடுபவனாகக் கூறப்படுதலையும் இங்கு நினைக்க. இங்ஙனம் உயிர்ப்பாய் உள்ளவனை அறியமாட்டாதவர் தங்களை அறிவராக (ஞானியராக)ச் சொல்லிக்கொள்ளுதல் நகை விளைப்பது என்பதாம். `தலைவனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.
இதனால், புறச்சமயிகள் உண்மை ஏதுக்கள் பல இருப்பவும் அவற்றைக்கொண்டு உண்மையைக் கருதியேனும் உணர மாட்டாதவ ராயிருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானை அகச் சமயிகள் பொதுவாகவும், சிறப்பாகவும், `அகம், புறம்` என்னும் இரண்டிடங்களிலும் உள்ளவனாக அறிந்து, இயன்ற அளவில் அவனை அணுக முயல்கின்றனர். அவர்கட்கு அவன் அவர்களது தகுதிக்கு ஏற்ப அவ்விடங்களில் ஏற்ற பெற்றியால் அகப்படுகின்றான். புறச்சமயிகள் அவனை `எவ்விடத்திலும் இலன்` எனக் கூறிப் பிணங்கு கின்றார்கள், அவர்கட்கு அவன் அவற்றுள் ஓரிடத்தும் காணப்படுதல் இல்லை.

குறிப்புரை :

``உண்மையுமாய் இன்மையுமாய்``1 என்ற திரு வாசகத்திற்கும் இதுவே கருத்தாதல் அறிக. நான்கிடத்தும் ``புறத்தும்`` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. தான், அசைநிலை, ஏகாரம், தேற்றம்.
இதனால், புறச்சமயிகள் அச்சமயத்தை விட்டு அகச்சமயம் புகுந்தன்றி உய்யமாட்டாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

புறச்சமயங்கள் ஆறனையும் தோற்றுவித்தவர்கள் மெய்ப் பொருளைக்கண்டு அதனைப் பிறருங் காணவழி கூறினா ரல்லர். அதனால் சிவன் அந்த ஆறுசமயப்பொருளில் ஒன்றேனும் ஆயிற்றிலன். இந்த உண்மையை, உலகீர், தெளிமின்கள்! நன்கு தெளி மின்கள்!! தெளிந்தீர்களாயின், அதன்பின் தவற்றின் நீங்கி, நேர் வழியை அடைந்து, வீடு பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``சமயம்`` என்றது இங்குப் புறச் சமயத்தையே யாதல் வெளிப்படை. காணுதல் - உணர்தல். அதுபின் பிறர்க்கு உணர்த்தி யதனைக் குறித்தது. இனி, ``சமயம்`` என்றதனை ஆகுபெயராக்கி, `அவற்றை உணர்ந்தும்நூலை ஆக்கியவர்` என்று உரைப்பினும் ஆம். இச் சமயத்தவரும். இவர்தம் நூல்களும் பசுக்களும், பசு வாக்கியங் களும் ஆதலின், அவராலும் அவர்தம் நூலாலும் மெய்ப்பொருள் பற்றப்படாதாயிற்று.
``இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வோடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன`` 2
எனவும்,
``சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கிஓர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்`` 1
எனவும் போந்த திருவாக்குகளும் புறச்சமயங்கள் மயக்க உரைக ளாதலை விளக்குதல் காண்க.
``அவன்`` என்றது, மேல், ``எம் இறை`` என்றதனைச் சுட்டிற்று. ``தேறித் தெளிமின்`` என்றது ஒருபொருட் பன்மொழி மறித்தும் இவ்வாறு கூறியது வற்புறுத்தற் பொருட்டு. மாறுதல் - நெறியின் நீங்குதல். `அஃது இன்றி` எனவே, நேர்வழியைப் பற்றுதல் பெறப்பட்டது. `வீடு` என்பது இல்லத்திற்கும் பெயராய் வழங்குதலின், அச் சொல் நயம் பற்றி ``மனைபுகலாமே`` என்றார். `வழி தவறிச் சென்று காடு மேடுகளில் அலையாமல், நேர்வழியைக் கண்டு, அதன் வழி விரைவில் இல்லத்தை அடைந்து இன்பறலாம்` என்பது நயம். இங்கு, ``அவன் அலன்`` என்று, சிவமாய் விளங்காமையை ஆதலின், ``அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`` 2என்றாற் போல்வன இதனொடு மாறுகொள்ளாமை அறிக.
இதனால், புறச் சமயங்கள் வீடாகிய பேரின்பத்தைப் பயவாமையே யன்றிப் பிறவியாகிய பெருந்துன்பத்தை மிகுவித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சிவமல்ல தில்லை இறையே சிவமாம்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
கவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொழிப்புரை :

சிவம் அல்லது வேறு பதிப்பொருளும், சிவமாம் பயனைத் தருகின்ற தவம் அல்லது வேறு தவமும் இல்லை. ஆறாகக் கூறப்படுகின்ற புறச்சமயங்கள் தம்மை அடைந்தவர்க்கு இவ்வுலகில் வீண் முயற்சியாவதன்றி வேறு இல்லை. அதனால், அவை தவமாதல் இல்லை. ஆகையால் மெய்ப்பொருளை அடைய விரும்புகின்ற வர்களே, நீங்கள் சிவபெருமானது திருவடியைச் சார்ந்து பிழை மின்கள்.

குறிப்புரை :

`சிவம் அல்லதில்லை அறையே` என்பது பாடமாயின், `சிவம்` என்பதன்றிப் `பொருள் பொதிந்த சொல் வேறில்லை` என உரைத்து, `சிவமன்றி வேறு மெய்ப்பொருள் இல்லை` என்பது அதனாற் போந்த பொருளாகக் கொள்க. ``சிவமாந் தவம்`` என்பதில், பெயரெச்சம், `நோய் தீரும் மருந்து` என்பது போலத் `தவமல்லது இல்லை தவம்` என ஒருசொல் வருவிக்க, ``அவம்`` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சிநின்ற கருவிப் பெயர் கொண்டது. `அவை தவமல்ல` என எழுவாய் வருவித்துக்கொள்க. ``நீர்`` என்றது உண்மையைத் தலைப்பட விரும்பினோரையாதலின், அவரே விளிக்கப்படுவாராயினர். ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு`` 1 என்றார் ஔவையாரும்.
இதனால், புறச் சமயம் வேறு முயற்சியைப் பயத்தலல்லது` பயன் தாராமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அண்ணலை நாடிய ஆறு சமயரும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியும் முயற்றில ராதலின்
மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.

பொழிப்புரை :

சிவபிரானை இகழாது போற்றுகின்ற அகச் சமயங்கள் ஆறிலும் நிற்போர் அவ்வச்சமயக் கடவுளரது உலகத்தை அடைந்து இன்புற்றிருக்க, புறச் சமயிகள் அவற்றை விடுவித்துப் பிற விண்ணுலகங்களை அடைதலை மிகவும் விரும்பி, வினைக்கட்டி னின்றும் வெளிப்படமாட்டாது, அதனுள் நின்றே அழிகின்ற அவச் செயலாதலால், அவர்கள் பிரகிருதிக்கு மேல் செல்லும் வழியை அறியாதவர்களேயாவர்.

குறிப்புரை :

`ஆறு சமயமும்` என்பது இரட்டுற மொழிதலாய், `வேறு விண்ணவர் ஆக` எனப்பொருள் தந்து, ``மிகவும் விரும்பியே`` என்பத னோடும் இயைந்தது. ``முள்`` என்றது முட்புதரை. `வினையைக் காடாக உருவகித்துக் கூறலும் மரபு` என்பது, ``நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் ... ... ... 2 என இதனுட் பின் வருதலும், ``இருவினை மாமரம்``3 என்றமையும் போல்வன பற்றி உணர்க. முயற்று - முயற்சி; என்றது தவத்தை யாகலின், `அதனை யிலர்` என்றது. அவச்செயலை உடையாராதலைக் குறித்தது. ``மண்`` என்றது அது முதல் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்கட்கு உபலக்கணமாய், அவ்வத் தத்துவ புவனங்களின் மேல் நின்றது.
அகச்சமயம் ஆறாவன:- பாசுபதம், மாவிரதம், வைரவம்` சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்பன. காபாலமும், காளா முகமும், பாசுபதம், மாவிரதம் என்பவற்றுள்ளே அடங்கும். `சாத்தம்` என்றது சுத்த சாத்தத்தையே; வாம மதத்தையன்று. இம்மதங்களில் நிற்போர் சிவதீக்கை பெறுதலில்லையாயினும், உருத்திரன் முதலி யோரைச் சிவனது மூர்த்தி பேதங்களாகக்கருதி வழிபடுதலும், சிவனைத் தேவருள் ஒருவனாக வைத்து இகழ்தல் இன்மையும் உடைய ராகலின். இவரை ``அண்ணலை நாடியசமயர்`` என்றும், இவர் பிர கிருதிக்கு மேல் உள்ள சீகண்ட வுருத்திரர் முதலிய உருத்திரலோகங் களை அடைவர் ஆகலின் பிறரை ``மண்ணின் றொழியும் வகையறி வார்களாய், விண்ணவராவர்`` என்றும் அருளிச் செய்தார். இவருள் பாசுபதர் மதம் முதலியவற்றையே பொதுமையில் `சைவம்` என வைத்து, `சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` எனச் சமயங்கள் ஆறு என்பாரும் உளராயினர். சைவத்தை நீக்கி, `சௌமியம்` என்பது கூட்டி, `ஆறு` என்பாரும் ஒருசாரார்.
`உலகாயதர் விண்ணவராக விரும்புதல் இன்மையின்` அங்ஙனம் விரும்புபவராகக் கூறியது புத்தர் முதலிய பிறரையேயாம். அவரெல்லாம் தாம் தாம் ஓர் உலகத்தை முத்தியுலகமாகக் கற்பித்துக் கொண்டு அவற்றின்கண் செல்ல விரும்பினாராயினும், அவர் அடைவது பிரகிருதிக்குக் கீழ் உள்ள தத்துவ புவனங்களையே என்பது நாயனாரது திருவுள்ளமாதலின் அவரை, `மண்ணின்றொழியும் வகையறியாதவர்` என்று அருளிச்செய்தார்.
இதனால், புறச்சமயங்கள் பிரகிருதியைக் கடப்பிக்க மாட்டாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை ஆமே.

பொழிப்புரை :

சிவனது உலகத்தையும், சிவனையும் அடைவதே பிறவியற்ற முத்தியாம். அவையன்றி, `முத்தி` எனப் பிறராற் கூறப் படுவன எல்லாம் முத்தியல்லாத பிறப்பு நிலையேயாம். அதனால், அவைகளில் எல்லாம் பாசத்தால் வருகின்ற பிறவியாகிய ஒரு பெருந் துன்பம் இருக்கவே செய்யும். அதனால், சிவனை நோக்கிச் செய்யப் படுவனவாகிய சரியை முதலிய நெறிகள் ஒருவனுக்குக் கிடைக்கு மாயின், முத்தியுலகம் அல்லவாய்ப் பிறவி யுலகங்களாகிய `அயன், அரி, அரன்` என்னும் குணமூர்த்திகள் மூவரது பதவிகளும் அத் தன்மையவாய்ப் போம்.

குறிப்புரை :

அஃதாவது, `அவன் அப்பதவிகளை எய்தாது, மேற்கூறிய சாலோகம் முதலியவற்றையே அடைவான்` என்பதாம். ``கதி`` என்றது பத முத்தி பரமுத்திகளை. பத முத்தியடைந்தோரும், ``நாதனே முன் நிற்கின்``1 பரமுத்தியை அடைவர் ஆதலின், அதுவும் `பிறவியற்ற நிலை` எனப்பட்டது.
ஒன்று - ஒன்றாய் பெரிய துன்பம். `உண்டே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல். தவகதி - தவமாகிய நெறி. தவமாவது சரியை முதலியனவே யாதல் அறிக. `அதனொடு நேர்தலாகிய ஒரு பேறு வாய்க்குமாயின்` என்க. ``மூவர்`` என்றது ஆகுபெயர்.
இதனால், அகச் சமயங்களை மேல்; `அண்ணலை நாடிய` சமயங்களாகக் கூறினமை பற்றி, அவையும் தவநெறிபோலும்` எனவும், அவற்றால் அடையும் நிலைகளும் `முத்திபோலும்` எனவும் நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்
ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.

பொழிப்புரை :

சமயங்களைப் பற்றிச் சொல்லுமிடத்துச் சிறி யனவும், பெரியனவும் ஆகிய பல வேறுபாடுகளால் சமயங்கள் மிகப் பலவாய் உள்ளன. `அகம், புறம்` என்பவற்றுள் `ஆறு` என ஒருவாறு வரையறுத்துக் கூறப்படும் சமயங்கள் மேற்கூறிய பலவற்றுள்ளே உள் ளனவாம். அங்ஙனம் சொல்லப்படும் சமயங்கள் பலவும் `உண்மை` எனக் கொண்ட நெறிகளிலே மக்கள் நின்று இறுதியாக அடையும் மேலான் நெறி, மேற் கூறிய அவற்றுள் ஒன்றிலும் இல்லாத நெறியாம்.

குறிப்புரை :

`அந்நெறி சித்தாந்த சைவமாம்` என்பதே நாயனாரது திருவுள்ளமாதலும், அந்நெறி பிற சமயங்களில் இல்லாமையும் இத் தந்திரத்தின் தொடக்கத்திலே அருளிப் போந்த மந்திரங்களான் அறிக. ``நூறு`` என்றது, `மிகப் பல` என்றவாறு. ``ஆறு`` எனப் பொதுப்பட அருளிச் செய்ததனால், அகம், புறம் இரண்டும் கொள்ளப்படுவ ஆயின. பின் வந்த ஆறு, நெறி. `ஆற்றுள்`, `ஈற்று` என்னும் ஒற்றுக்கள் தொகுத்தல் பெற்றன. நில்லா - நின்று. `அவற்றுள் இல்லா நெறி` என்க.
இதனால், `சித்தாந்த சைவத்துக்கு நிகராகாமை பற்றி இங்கு இகழ்ந்து கூறினும், பிற சமயங்கள் அதற்குப் படிகளாய் உள்ளன` எனக் கூறி, ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.

பொழிப்புரை :

தம் குரல் பிற உயிர்கட் கெல்லாம் கடியனவாய் வெறுக்கப்படுதலை அறியாது உவகையால் உரத்துக் கத்துகின்ற கழுதைகள்போலப் பாழ்நெறி நூல்களை உரத்து ஓதுகின்ற கன்மிகள், தம் குற்றத்தை உணர மாட்டார்கள். தூயனவாகிய சிவன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நின்றும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்கின்ற சிறப்பை அறிவு நூல்களைக் கற்கும் முகத்தால் உணர்ந்து பாராட்ட மாட்டார்கள். மற்று, மயக்கம் மிகுந்து, வீணே பிறந்தும், இறந்தும் உழல்வார்கள்.

குறிப்புரை :

``கத்தும்`` என உடம்பொடு புணர்த்ததனால் பயனில் லாத நூல்களாம். உவமை அதுபற்றியதாகலின் உவமிக்கப்பட்டார் பயனில்லாத நூல்களை ஓதுபவராயினர். பாராட்டிக் கற்கின்றவர் களைக் குறித்து.
``அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஉந் துணையறிவா ரில்``
(நாலடி)
என்றார் பிறரும். கலதி - முகடி; ``கலதிகள்`` என்றது, `நல்வினை யில்லார்` என்றதாம். ``சுத்த சிவன்`` என்றது, `பிறவற்றிற் கலந்தும் அந் நிலை கெடான்` என்றற்கு `தோய்வுற்று` என்பது பாடமன்று. ``குற்றந் தெரியார்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. `குற்றந் தெரியார்`` என்பது பாடமாயின், அஞ்ஞானமாகிய குற்றம் நீங்கப் பெறார்; அதனால், குணங்கொண்டு கோதாட்டார்` என்க. `அக்குணங் கொண்டு` எனச் சுட்டு வருவித்து உரைக்க. கோதாட்டல் - பாராட்டல்.
``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` 1
என்று அருளிச் செய்தார் வாதவூரடிகளும். மூன்றாம் அடி இன வெதுகை பெற்றது.
இதனால், பிற சமயங்களின் நிற்பாரது கல்வியின் இழிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை
முயங்கி இருவினை மூழை முகப்பா
இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.

பொழிப்புரை :

புறச் சமயங்களில் நின்று அறிவு மயங்குகின்றவர் களும் சைவசமயத்தை அடைந்து அறிவு தெளிந்தவர்கள்பால் சென்று கூடி, இருவினைப்பயன்கள் அகப்பையால் முகக்கும் அளவில், உடலூழாய்க் கழியும்படி ஒழுக வல்லவராயின், அவர்கட்கு அவ்வுடல் வாழ்க்கை முடிகின்ற நிலை தோன்றும்பொழுது யம பயம் இல்லாது ஒழிய, ஒப்பற்ற பரமுத்தி நிலை கிடைக்கும்.

குறிப்புரை :

``மயங்குகின்றாரும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு `தெளிந்தாரும்` என்பது பாடமன்று. மூழை - அகப்பை. மூழை முகப் பதாவது உணவை முகக்கின்ற அகப்பை அதனை முகந்தொழிதல் அல்லது உண்ணுதல் இன்றி வாளா புறத்தே ஊற்றிவிடுதல் போல இருவினைகளின் பயனாகிய இன்பத்துன்பங்களை விருப்பு வெறுப் பின்றி உடலூழாக்கிக் கழியவிடுதல். இந்நிலை திருவருள் நெறியில் நிற்பார்க்கல்லது கூடாமையானும், திருவருள் நெறி சைவ சமயத்தில் அல்லது இல்லாமையானும் `புறச் சமயத்தவர் சைவ சமயிகள்பால் பகை பாராட்டாது நட்புக்கொண்டு பழகுவாராயின், பேரின்பமாகிய நலத்தைப் பெறுவர்` என்றார்.
``நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு`` 1
எனவும்,
``கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்`` 2
எனவும் கூறப்படுதல் அறியத்தக்கது. ``காட்டில்`` என்பது `தோன்றில்` எனத் தன் தன்வினையாய் நின்றது. ``கெட்டு`` என்பதனை, `கெட` எனத் திரிக்க. ``அவர்க்கு`` என்பதனை, ``பெறுவரேல்`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. ``ஈறது... ... ஆமே`` என்பதற்குப் பிறவாறும் உரைப்ப.
இதனால், புறச் சமயத்தவரும் சைவ சமயிகளை அடையின் பயன் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

சேயர்க்குச் சேயனாயும், அணியர்க்கு அணிய னாயும் நின்று, ஒன்றிலும் தொடக்குண்ணாதிருக்கின்ற அவனதுபெயர் `நந்தி` என்பதாகும். அவன்தன்னை அலைவின்றி ஒரு பெற்றியே நோக்கி நிற்பார்க்குத் தெளிவைத் தருபவனாயும், அங்ஙனம் நோக்கா தார்க்கு மயக்கத்தைத் தருபவனாயும் இருக்கின்றான். அவனது மாயத்தால் மயங்கிய மக்களாகிய புறச்சமயிகள் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் உடம்பு தரும் பயனை அறியும் அறிவிலராய் அப்பயனை இழப்பர்.

குறிப்புரை :

`சேயன் அணியன் ஆகிய பிணியிலனது பேர் நந்தி` என்க. பிணி - பிணிப்பு; முதனிலைத் தொழிற்பெயர். சேயன் முதலிய மூன்றும் எதிர்மறை வினைக்குறிப்புப் பெயர். பின்னர், ``மாயன்`` என்றலின், ``தூயன்`` என்பது அதன் மறுதலையை உணர்த்திற்று. மாயன் - மாயத்தை - மயக்கத்தை - செய்பவன். `துளக்கற நோக்கு வார்க்குத் தூயன்` எனவே. மாயனாதல், அங்ஙனம் நோக்காதார்க் காயிற்று. ஐந்தொழிலில் அருளலையே `தெளிவித்தல்` எனவும், மறைத்தலையே `மயக்குதல்` எனவும் கூறினார். இவை இரண்டும் அவரவரது பக்குவம் பற்றியாம். அதனால், பக்குவம் இல்லாதார் புறச் சமயங்களையே `மெய்ச்சமயம்` என மயங்கி, மக்கட் பிறப்பின் பயனை எய்தா தொழிவர் என்பதாம்.
``பரசம யங்கட் கெல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே`` 1
என்ற சிவஞான சித்தியையும் நோக்குக.
இதனால், புறச் சமயங்களின் நீங்குதல் பக்குவம் இல்லா தார்க்குக் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

பொழிப்புரை :

`பிறப்பு, வீடு` என்னும் இருவழிகட்கும் வித்தாய் உள்ளது, நிலவுலகில் வாழ்தலாகிய ஒரே வழியாம். அதனால், இவ்வுலகில் வாழ்பவர் யாவராலும் அடையப்படுவது, பிறவிச் சூழலின் நிலையை அறிந்து, அதனை அகற்ற வல்ல ஆசிரியனது உப தேசமாகிய வழியே. ஆயினும், அத்தகைய ஆசிரியன் உளனாதலைக் கண்டு வைத்தும், தாம் கெடும் நெறியை அறிந்து அந்நெறியிலே செல்வோர் அவ்வாசிரியன் அறிவுறுத்தும் நெறியைப் பெற விரும்புதல் இலர்.

குறிப்புரை :

``உறுதல்`` என்றது, அதன் செயப்படுபொருள் மேல் நின்ற ஆகுபெயர். ``சுழி`` என்பதற்கு, `தலைப்பொறி` என உரைப்பினும் ஆம். `சொல்லாகிய வழி` என்க. `முன்னின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அந்நெறி` எனச் சுட்டு வருவித்து உரைக்க.
இதனால், புறச் சமயிகள் நல்லாசிரியரை யடுத்து நன் னெறியை உணர அறியாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப் படும்நந்தி
பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

பொழிப்புரை :

பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன் பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறிய வாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.

குறிப்புரை :

நாதம் - தலைமை. பிரான், அண்மை விளி பயனிலைப் பெயராகக் கொண்டுரைப்பின். அது முன்னரே கூறப்பட்டதாதல் அறிக. ``நந்தியை`` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. ``அந்நெறி`` என்பதே, `அம் நெறி` எனப் பிரித்துப் பொருள் கூறுக. அம் - அழகு; நன்று. `அந்நெறி` எனச் சுட்டாகவே கொள்ளின், `தானே பிரானாம் நெறி` என உரைக்க.
இதனால், `சிவ நெறி யல்லாதன பலவும் அறியாதார் கொள்ளும் மயக்க நெறியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
உரநெறி யாகி உளம்புகுந் தானை
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

பொழிப்புரை :

`உலகியலின் மேம்பட்ட வீட்டு நெறியாது` என்று ஆராய்கின்ற அன்பர்களது உள்ளம், சிவ நெறித் தந்தையும், முதற் கடவுளும், ஞான நெறியாய் ஞானிகளது உள்ளத்து விளங்கு பவனும் ஆகிய சிவனை அறியா தொழியுமாயின், அவ்வுள்ளங்கள் பலவகையாலும் வீட்டு நெறிக்கு மிகச் சேய்மைப்பட்டனவே யாகும்.

குறிப்புரை :

``யதா சர்மவ தாகாசம் வேஷ்ட இஷ்யந்தி மானவா;I
ததாசிவ மவிக்ஞாய துக்க ஸ்யாந்தோ பவிஷ்யதி II``
என்னும் உபநிடத வாக்கியத்தையும்,
``பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும்
விரவிய துயர்க்கீ றெய்திவீடுபே றடைது மென்றல்
உருவமில் விசும்பின்தோலை உரித்துடுப்பதற் கொப்பென்றே
பெருமறைபேசிற்றென் னின்பின்னுமோர்சான்று முண்டோ`` 1
எனவும்,
``மானிடன் விசும்பைத்தோல்போல் சுருட்டுதல் வல்லனாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடு மெய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமேயறிதல் வேண்டும்`` 2
எனவும் இதனை மொழிபெயர்த்துக் கூறியவற்றையும் இங்குக் காண்க. உரம் - அறிவு. ``உரனென்னும் தோட்டி`` 3 என்பதும் காணத்தக்கது. ``பரன்`` என்பதை அவ்விடத்துத் தொகுக்கப்பட்ட இரண்ட னுருபை விரித்து, ``புகுந்தானை`` என்பதன்பின் கூட்டி உரைக்க.
இதனால், புறச்சமயங்கள் வீட்டுநெறி ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொழிப்புரை :

மாணவனே, உயிர்களது வினையின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அவைகளைப் படைப்புத் தொழிலிற் படுத்துகின்ற பிரமன், உயர்குணமாகிய `சத்துவ குணத்தை உடையன்` எனக் கூறப்படுகின்ற மாயோன். பகலவன், மக்களோடு படுத்து நோக்குங்கால் உயர்ந் தோராக எண்ணப்படுகின்ற இந்திரன் முதலிய தேவர்கள் இவர்களது பதவியில் விளங்க விருப்பும் உனது விருப்பம் அறும்படி நீதூய மாணிக்கம் போலும் நிறத்தை உடைய சிவனைநினை; ஏனெனில் அவன் அருளிச்செய்த சிவநெறி ஒன்றே அடைதற்கு அரிய நல்ல நெறியாகும்.

குறிப்புரை :

பெரிது, `பெரிசு` என மருவிற்று. அப்பண்புகொள் பெயர். `பெரும்பொருள்` என நின்று, உயர்வை யுடையாரைக் குறித்தது. அன்றி ஆகுபெயராய் நின்ற பண்புப் பெயர்` என்றலுமாம். `பெரிசாக` என ஆக்கம், வருவிக்க. ``திகழும்`` என்பது திகழ விரும்பும் காரணத்தின்மேல் நின்றது. `வண்ணனை, என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. அருமை, நிலையுடையதாதல் பற்றிக் கூறப்படுவது.
இதனால், புறச்சமயங்கள் பிற தேவர்களது பதவிகளை நிலை யுடையனவாகக் கருதும் குற்றத்தைப் பயப்பனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆன சமயம் அது இதுநன் றெனும்
மான மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே.

பொழிப்புரை :

`அதுவே பொருத்தமான சமயம், இதுவே நன்றான சமயம்` என ஓரோர் காரணம் பற்றிப் பற்றுக் கொண்டு பிதற்றுகின்ற மக்களது பிதற்றலால் உண்டாகின்ற மயக்கம் உம்மை விட்டு நீங்க, நீவிர் நாதம் கடந்த கடவுளாகிய சிவனை நினையுங்கள்; ஏனெனில், அந்த நினைவே குற்றமற்ற வகைமையைத் தருவதாம்.

குறிப்புரை :

மானம் - அபிமானம். `மாயம்` என்பது பாடமன்று. ``மனிதர் மயக்கம்`` என்னும் ஆறாவதன் தொகை `வாளது வெட்டு` என்பதுபோல நின்றது. ``மயக்கமது`` என்னும் அது, பகுதிப்பொருள் விகுதி. `ஒழிய` என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது. அன்றி வினைத்தொகை யாக்கி, `ஒழிக்கின்ற கடவுளை` எனலுமாம். ``கானம்`` என்னும் இசையின் பெயர் சொல்லொற்றுமையால் நாத தத்துவத்தைக் குறித்தது. ``உரு`` என்பது `வண்ணம்` என்னும் பொருட் டன்மையை உணர்த்திற்று. உருவைத் தருவதனை ``உரு`` என்றார்.
இதனால், புறச்சமயிகள் தம்மில் ஒற்றுமையிலாராய் மாறுபட்டுப் பலதலைப்பட்ட கருத்துக்களைக் கூறிமக்களை அலைக்கழிப்பவராதல் கூறப்பட்டது.
``தம்மை - உணரார்; உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்`` 1
என்றார் சிவஞான போதத்திலும்.

பண் :

பாடல் எண் : 17

அந்நெறி நாடி அமரர் முனிவரும்
சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

தேவர்களும், முனிவர்களும் `சிறப்புடைய நெறி யாது` என ஆராய்ந்து உணர்ந்து சென்ற நெறியையே நேரிய நெறியாகக் கொண்டு ஒழுகி, அதனால், சிவனேயாய் நின்ற பேற்றினைப் பெற்றார் சத்திநிபாதர். மற்றுச் சத்திநிபாதம் இல்லாதவர் தம் மனம் சென்ற நெறியையே நேரிய நெறியாக்கொண்டு முற்கூறிய நேரிய நெறியிற் செல்லமாட்டாது, பிறவிக் கடலுட் கிடந்து கலங்கு கின்றது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

`இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். அம்நெறி - அழகியநெறி. ``முதல்வன் அருள்`` என்றது சத்திநிபாதத்தை, பின்னதில். ``அருளிலார்`` என்பதனால், முன்னதில் ``அஃது உடையார்`` என்பது பெறப்பட்டது. முன்நெறி வினைத்தொகை.
இதனால், புறச்சமயங்கள் சத்திநிபாதம் வாயாத உலகர்க்கே உரியனவாய்ப் பிறவிக் கடலைக் கடப்பியாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

பொழிப்புரை :

அடையத்தக்க நல்ல நெறியை அறிய எழுகின்ற அறிவைச் சாருமாற்றை அறிந்துவிடுமாயின், பிழை யாதும் இல்லையாகும். ஆனால், அறிவில்லாத மக்கள், குற்றங்கள் யாவும் எரிந் தொழிதற்கு ஏதுவாம் நெருப்பாகிய அந்த அறிவினுள் புகுந்து தம் அல்லலை ஒழியுமாற்றை அறிகின்றார்களில்லை.

குறிப்புரை :

`அதனால், அவர்கள் புறநெறிகளிற் சென்று அல்லல் உறுகின்றார்கள்` என்பது குறிப்பெச்சம். ``அறிவது`` என்றது அறிவை. உம்மை சிறப்பு. அறுதற்கும், இறுதற்கும் வினை முதல்கள் வருவிக்கப்பட்டன.
இதனால், புறச் சமயங்கள் மயக்க அறிவினை யுடையார்க்கு ஆவன ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

பொழிப்புரை :

பிறவிச்சுழலிலே கிடந்து எய்துகின்ற துன்பங்களை யெல்லாம் போக்கி, அதனால், அறிவுடையவர் பழிக்கும் பழியையும் போக்கிக்கொள்ள விரும்புவார்க்கு நிலத்திலே பயணம் செய்தல் போன்ற நல்லவழி ஒன்று உண்டு. அதைப் போற்றி அடைதல் அத்துன்பங்கள் நீங்கும் காலம் வரப்பெறாதோ ரெல்லாம் சுழிவழியே பயணம் செய்வோர் போலப் புறச் சமயிகள் கூறும் கற்பனை உரைகளை `மெய்` என்று கேட்டு அவற்றின்படியே நடப்பர்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதலடியில், ``வையம்`` என்பதனை முன் வைத்து, ``பரவலும் ஆம்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``வையத்தின்கண் வழி நடக்கும்`` என்க. தரை வழியாகப் பயணம் செய்வோர் துன்பம் இன்றிக்குறித்த இடத்தை அடைதலும், சுழிவழியாகப் பயணம் செய்வோர் ஓரிடத்தும் தரையை அடையாவிடின் சுழன்று கொண்டே இருப்பவராதலும் அறிக. காலம், சத்தி நிபாதம் காலம், ``ஒன்று உண்டு`` எனக்கூறியொழிந்தமையால், `அஃது அருமறையாய், (அரிய இரகசியமாய்) தக்கார்க்கே உணர்த்தப் படுவது` என்னும் குறிப்பினதாயிற்று. அவ் ஒன்றாவது, சித்தாந்த சைவமாம்.
இதனால், புறச் சமயங்கள் வெறும் சுழற்சியாய்ப் பயன் தாராது உலகரை மயக்கி நிற்பனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.

பொழிப்புரை :

``வையத்தின் கண் வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு`` என மேற்கூறப்பட்ட வழியிலே சென்றதாகிய பெரிய தவம் தனது பயனைக் கொடுக்கின்ற காலத்தில் மக்கள் தங்கட்குப் பழிவரக் கூடியதான வலிய வினைக்கட்டினை அறுத்தொழித்து, அது காரணமாக, முன்பெல்லாம் அழிவு வழியில் சென்று கொண்டிருந்த அச்செயலில் பொருந்துதலாகிய தன்மையை விடுத்து நல்ல இடத்தை அடைவர். அங்ஙனம் அடைந்தால், தேவர் பிரானாகிய சிவன் வெளிநின்று அருள் புரிவான்.

குறிப்புரை :

`வைக்கின்ற` என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. `வாய்க்கின்ற` எனப்பாடம் ஓதலுமாம். பழி, அறிவுடையோர் பழித்துச் சொல்லும் சொல். ``அழி`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அதனைத்தரும் வழியை உணர்த்திற்று. `அழிவில் செல்லும் அவ்வினை` என்க. ஆர்தல் - பொருந்துதல். ``உழி`` என வாளா கூறினமையின், சிறந்த இடமாயிற்று. அது, ஞானமாகிய நிலம் என்க. ``செல்லில் என்ற அனுவாதத்தால், `செல்லுவர்` என்பதும் பெறப்பட்டது.
இதனால், தவம் உடையார்க்கே புறச்சமய மயக்கம் நீங்கிப் பயன் உண்டாதல் கூறப்பட்டது. தவமாவது, மேற் கூறிய சரியை முதலிய மூன்றுமே யாதலை நினைக. இங்கு, ``மாதவம்`` என்றதும் அதனைக் குறித்தற் பொருட்டேயாம்.

பண் :

பாடல் எண் : 1

சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

மலைபோன்றவர்களாக மதிக்கப்படுகின்ற தேவர் பலருக்குரிய புறச்சமயங்களைத் தமக்கு உரியனவாகக் கொண்டோர் அவற்றின் நூல்களை ஓதி, `அதனால், நிறை நிலையை அறிந்து விட்டோம்` என்று பெருமை பேசிக்கொள்வார்கள். ஆயினும், முதற் கடவுளாகிய சிவபெருமான் அவர்களது உள்ளத்தில் தோன்றாது மறைந்து, பொறையுடைமை, வெகுளாமை முதலிய ஒழுக்கங்களை உடையவரது உள்ளத்திலே விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

சிமயம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. `மலைபோல்வாராக மதிக்கப்படுதல் அறிவு நிரம்பாதாரால்` என்க. `இமையங்கள்` என்பது பாடமன்று. ``சிமையம், சமையம்`` என்ப வற்றில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. அமை, முதனிலைத் தொழிற் பெயர். அமைதல் - நிரம்புதல். கமை - பொறை. இது மற்றைய ஒழுக்கங்கட்கு உபலக்கணம். `புறச்சமய நூல்களையே உண்மை நூல்கள் என மயங்கினாராயினும், அவை பற்றிப் பிற சமயங்களைப் பழித்து நிற்றலை விடுத்து, அவை கூறும் ஒழுக்கத்தை உடைய ராயினார்க்குச் சிவன் அருள்புரிவன்` என்றவாறு. இதனானே சிவ நூலை ஓதினார்க்கும் இது குறிப்பாற் கூறப்பட்டவாறு அறிக.
இதனால், நூல்களை ஓதியவழியும் ஒழுக்கம் இல்வழிப் பயன் இன்றாதல் கூறப்பட்டது. இதனை,
``ஓதலின் நன்றே வேதியர்க் கொழுக்கம்`` 1
``மறப்பினும் ஓத்துக்கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` 2
என உயர்குலத்தார்மேல் வைத்தும்,
``ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை`` 3
`ஓதியுண்ர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்`
எனப் பொதுப்பட வைத்தும் பிறவிடங்களிலும் கூறுமாறு அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 2

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொழிப்புரை :

நன்மை அமைந்த சிவபெருமானது திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கின்ற மனத்தை உடையவர் இப்பூமியில் தமக்குத் தாமே ஒப்பாகும் பெருமையை உடையவராவார். அவ்வாறின்றி அவற்றை எஞ்ஞான்றும் நீங்கி நின்ற வண்ணமாய் ஒருபோதும் நினையாதவர் உலகில் விரும்பியது ஒன்றனையும் பெறாது வாளா இருந்து துன்புறுவார்கள்.

குறிப்புரை :

`தமக்கு நேர் தாமேயாவர்` என்பதனை, ``நேர் ஒப்பர்`` என்றார். இது, செல்வம் முதலிய எல்லாவற்றாலுமாம். ஏங்குதல் - விருப்பம் நிறைவுறாமையால் அதனையே நினைத்துக் குறையுறுதல். இதனை `ஏக்கறுதல்` எனவும் கூறுவர். `இரந்தழுவார்` எனப்பாடம் ஓதி, ``இரத்தலை மேற்கொண்டு அதனானும் நிரம்பப் பெறாது துன்புறுவர்`` என்று உரைப்பினுமாம்.
``வானகம் ஆண்டுமந் தாகினி ஆடினந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும், சிதவல் சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் - கனகவண்ணப்
பானிற நீற்றற் கடியரும், அல்லாப் படிறருமே`` 1
என்றாற்போல்வனவற்றையும் இங்கு நினைக.
இதனால், சிவனடியை நினைதல் நினையாமைகளே ஒழுக்கமும், இழுக்கமுமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

வாழும் வழி யாதும் அறியாது திகைத்திருந்து அழுகின்றவர்களும், முன்னர் வாழ்வுடையராய் இருந்து பின்னர்க் கேடு எய்தினவர்களும் (தாம் முழுத் தீவினையும், அரைத் தீவினையும் உடையராய் இருத்தலை அறிந்து அவை ஒழிதற்பொருட்டு) அந்நிலை யில் அரிய தவம் செய்தலை மேற்கொண்டு சிவபிரானை நினைவரா யின், தேவ தேவனாகிய அவன் அவர்களது தாழ்நிலையை நீக்கி, உயர் நிலையைத் தருவன் - அதுவே யன்றி அவர்கட்குப் பிறப்பற்ற வீடுபேறும் உண்டாகும்.

குறிப்புரை :

`சிவபிரானை நினைத்தலே மேலான தவமாம் என்றற்கு, ``அருந்தவம் மேற்கொண்டு`` என்றார்.
இதனால், சிவ பத்தியாகிய தவ ஒழுக்கம் உடையோர் தீவினையின் நீங்கி நலம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
நீரறி வாளர் நெடுமுகி லாமே.

பொழிப்புரை :

தூர்ந்த அறிவினை உடையோர் தோன்றாத் துணை யாயுள்ள இறைவனை நினைக்கமாட்டாது யாதொரு பயனையும் எய்தார். தூல அறிவினை உடையோர் வருவதை அனுபவித்துக் கொண்டிருப்பர். மயக்க அறிவினை உடையோர் உள்ளதை `இல்லை` என்று சொல்லி மறைத்து, அதனால், பின் வறியராய்ப் பிறப்பர். அறத்தின் தன்மையை அறிந்த அறிவினை உடையோர் பெரிய மேகம் போலப் பலர்க்கும் கைம்மாறு கருதாது உதவி, அதனால், பின் செல்வராய்ப் பிறப்பர்.

குறிப்புரை :

தூரறிவு, படுபயன் என்பன வினைத்தொகை. பாரறிவு, காரறிவு என்பன பண்புத்தொகை. தூர்ந்த அறிவாவது அறிவின்மை; பேதைமை. `துணைவனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தல் பெற்றது. ``நினைப்பிலர்`` என்றது தன் காரியமும் உடன் தோன்ற நின்றது. `நாகரது பலி` என்பது போலும் ஆறாவதன் தொகை எனினுமாம். `காரறிவு, மயக்க அறிவு` என்பதனை, ``களவென்னும் காரறிவாண்மை``1 என்பது பற்றியும் உணர்க. நீர் - நீர்மை. நீர்மையை அறியும் அறிவினை ஆளுதல் உடையார்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆவரே` என்னாது `ஆமே` என்றது ஆரிட அமைதி. ``கரந்து`` என்றதனால், `வறியவராய்ப் பிறப்பர்` என்பது பெறப் பட்டது. படவே, முகில்போல்வார் செல்வராய்ப் பிறத்தல் கூறப்பட்டதாம்.
இதனால், அவரவர் அறிவு நிலைக்கு ஏற்பவே அவரவரது ஒழுக்கம் உண்டாமாறு கூறுமுகத்தால், மெய்யறிவினை யுடையோர் சிவ பத்தி யுடையராய் ஒழுகல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொழிப்புரை :

சிவனது திருவடியாகிய, ஞானத்தொடு பொருந்தி வருவித்துஏறிய ஒப்பற்ற ஓர் தோணி, வினையாகிய சரக்கினை அது நின்ற உடலாகிய மூடையோடு சிவலோகமாகிய பழைய நகரத்தை அடைந்து, இறக்கிவிடுகின்ற அறிகுறிகளை அறிந்தும், தீவினை யுடையோர் அத்திருவடிகளைப் பொருந்தி நிற்க எண்ணுவதில்லை.

குறிப்புரை :

``அறிவுடன் கூடி அழைத்தது`` என்றது `நல்ல தோணியை அறிந்து அழைத்து அதில் ஏறுதல் அறிவுடையோர்கன்றி ஆகாமைபோலச் சிவனடியை வேண்டிப்பெறுதல் ஞானிகட்கு அல்லது ஆகாது` எனக் கூறியதாம். பறி - கூடை, அது சரக்குப் பொதிந்த மூடையைக் குறித்தது. தோணி, பறி, பழம்பதி என்பன சிறப் புருவகங்கள். அறிகுறிகள், அவ் அடியைப்பற்றினோர் மாட்டுக் காணப்படும் ஏமாப்பு, நமனையும் அஞ்சாத அச்சமின்மை 1 முதலியன.
இதனால், அறிவேயன்றி, ஒழுக்கமும் நல்வினையுடையார்க் கன்றி வாயாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொழிப்புரை :

அழிவிலனாகிய இறைவன் தன்னை நினைப்ப வரது நினைவே வடிவாய் விளங்குபவன் என்று வேதாகமங்கள் சொல்லவும் அதனை அறியாது இவ்வுலகத்தில் உள்ள அறிவிலிகள் அவனை நினையாது இகழ்ந்தொழிவார்கள். நீவிர் அங்ஙனம் செய்யாது மனம் பொருந்தி அவனை வணங்குங்கள். வணங்கினால், அப்பொழுதே ஒப்பற்ற ஒருவனாகிய அவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``என்னில்`` என்பது, அதனை உணர்ந்து நினைதலே அவனைத் தலைப்படுதற்குக் காரணமாதலைக் குறித்தது. `மனிதர்` என்னும் விதப்பு, `மனிதத்தன்மை இலர்` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினது.
இதனால், அறிவிலும் ஒழுக்கமே சிறந்த சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.

பொழிப்புரை :

பிரணவத்தின் உள்ளே விளங்குவதாகிய ஒளியை அறிவினுள்ளே வெளிப்படுதலால் உண்டாகின்ற அனுபவத்தை அடையப் பெறார்; இறப்பு என்றாயினும் ஒருநாள் உளதாதலை நினையார்; அதனை நினைந்து, மேலும் பிறந்து இறத்தலை ஒழியும் நெறியைப் பற்றார்; வாளா சமயத்தை மட்டும் பற்றிக்கொண்டு அதன் பயனைப் பெறாதொழிகின்றார்கள் மக்கள்.

குறிப்புரை :

சமயத்தில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை எதிர்மறை முகத்தான் உணர்த்தி, அவற்றையுடை யோரே சமயத்தின் பயனைப் பெறுவர் எனக் கூறியவாறு. `உறுதலான்` என்பதன் திரிபாகிய ``உற்று`` என்பது ``கைகூடார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
இதனால், சமய ஒழுக்கம் இல்லாத சமயிகள் சமயத்தின் பயனை எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

தேவர்களையும், மக்களாகிய எம்மையும் உய்தி பெறுதற்குப் பொருந்தும் வகையினராகப் படைத்த அனாதியான பழையோன், அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியையே நாடி நிற்கும்படி அமைய, அவற்றைக் கடந்து நிற்கும் முதல்வனாகின்றான்.

குறிப்புரை :

எழுவகைப் பிறப்பினுள் தெய்வப் பிறப்பும், மக்கட் பிறப்பும் ஒழிந்தவை பெரும்பாலும் வீடு பெறுதற்கு வாயிலாதல் இல்லையாக, இவ்விரு பிறப்புக்களுமே அதற்கு வாயிலாதல் வெளிப் படை. `அவை அங்ஙனமாதலும் இறைவனது திருக்குறிப்பின் வழியது` என்பதும், `அவ் இருவகைப் பிறப்பின் உயிர்களும் உய்தி பெறுதல் அகச் சமயங்களின் வழியே` என்பதும், `அங்ஙனமாயினும் இறைவனது உண்மை நிலை சமயங்களைக் கடந்தது` என்பதும் கூறிய வாறு. ``சமையம்`` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. `தன் தாளினை நாட அமைந்தன` என்பதனால், ``சமயங்கள்`` எனப் பட்டன உட்சமயங்களே ஆயின. `அமையக் கழல்கின்ற` என்னும் ககர ஒற்று மெலிந்து நின்றது. இவ்வாறன்றி, `அச்சமயங்களது (செவ் வழிகளை) நிலைகளைக் கடந்து நிற்கின்ற எனலுமாம்.
இதனால், வீடுபெறும் உயிர்கட்கு அதற்குரிய வழிகளாய் நிற்பன அகச் சமயங்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள
என்றது போலும் இருமுச் சமயமும்
நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``உள`` என்பதனை, ``இருமுச் சமயமும்`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியாற்போந்த பொருள், `கலாய்ப்பவர்` என்பது. ஆதர்கள் - அறிவில்லாதவர்கள். `மலையைப் பார்த்து நாய் குரைத்தல் போல` என்பது பழமொழி. ``ஒத்தார்கள்`` என்றது, அகச் சமயத்தவருள் ஒரு சமயத்துள் நின்றுபிற சமயங்களை இகழ்பவரை. `அங்ஙனம் இகழ்தல் அவையும் பிறவாற்றால் உண்மையை உணர் தற்கு வழியாதலை அறியாமையாலாம்` என்பது கருத்து. இறுதியிற் போந்த உவமை, அகச் சமயிகளிடைப் பூசல் விளைப்பார்க்கே ஆதல், வெளிப்படை. இதன் முதல் அடியோடு ஒப்ப,
``சுத்தவடி வியல்பாக உடைய சோதி
சொல்லியஆ கமங்களெலாம் சூழப் போயும்
ஒருபதிக்குப் பலநெறிகள் உளவா னாற்போல்``1
எனச் சிவஞானசித்தியும் கூறுதல் காண்க. `ஒரு பதிபோல்வது` கருத்து என்பதும், `பல நெறிகள் போல்வன சொற்கள் என்பதும் சித்தியுள் தோன்றுதல் காண்க.
இதனால், அகச் சமயங்கள் சொல் வகையாலும், செயல்வகை யாலும் வேறுபடினும், கருத்து வகையால் ஒன்றாதலைக் கூறி, அஃது அறியாது அவற்றிடை நிற்போர் தம்மிடைக் கலாய்த்தலும், சைவரை இகழ்தலும் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

பொழிப்புரை :

அகச் சமயங்கள் அறிந்தோ, அறியாமலோ கருத்து வகையால் சைவத்தோடு ஒன்றி நிற்றலை அவருள் அறியாதாரை நோக்கி அதனையே இதுமுதலாக அறிவுறுத்துகின்றார். இதனை, சைவ சமயச் சிறப்பு என்பதொரு தனி அதிகாரமாகக் கொள்ளினும் பொருந்தும்,
சைவ சமயத்தால் கொள்ளப்படும் ஒப்பற்ற தலைவனும், மக்கள் உயிர் நெடிது வாழ்ந்து உய்தி பெறுதற் பொருட்டு உயிர்ப்பாய் இயங்கு கின்றவனும், சிறந்த ஞான வடிவானவனும், தன்னை உணரும் பெருமை யுடையவரிடத்துத் தானும் அன்பு செய்கின்றவனும், அனைத்துயிர்க்கும் முடிவில் அவை விரும்பும் பேரின்பத்தைத் தருபவனும், இவ்வியல்புகளால் உண்மைத் தலைவன் தானே ஆகின்றவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் நீங்கி நிற்றலை விடுத்து, அணுக வந்து அடைந்து பிழையுங்கள்.

குறிப்புரை :

`சைவ சமயமே தலையாய சமயம்` என்பது, மேல் பல விடத்தும், பலவகையானும் விளக்கப்பட்டமையின், அச்சமயத்தாற் கடவுளாகக் கொள்ளப்படுதலும் பெருமையாயிற்று. இறைவன் உயிர்ப்பாய் இயங்குதல் மேலேயும் (1512) கூறப்பட்டது. எய் - எய்தல்; அறிதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எய்ய`` என்பது இதனடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு. ``வையம்`` என்றது உயிர்களை, ``வந்தடைந்து உய்மின்கள்`` என்றது, அவர்மாட்டு எழுந்த கருணைபற்றி.
இதனால், சைவக் கடவுளாகிய சிவபிரானது பெருமையை வகுத்துணர்த்தி, அவனைச் சார, அழைத்தல் செய்யப்பட்டது, அகச்சமயிகளாதலின் அவர்தாம் உணர்த்தியவாறே உணர்ந்து ஒழுகுவார்கள் ஆதலின், இனி வருவனவும் இவைபற்றி என்க.

பண் :

பாடல் எண் : 4

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.

பொழிப்புரை :

தெய்வந் தெளிந்து அதன் இயல்பை ஆராயும் எல்லாச் சமயங்களையும் உலகில் ஆக்கி வைத்தவன் சிவபெருமானே எனினும் அவற்றுள் முற்பட்டதாகிய சமயம் சைவமே. அதனை அடைந்தோர் `இச்சமயக் கடவுளாகிய சிவனே ஏனைச் சமயங் களினும் நின்று பயன் தருகின்றான்` என்பதை உணர்வர். அங்ஙனம் உணர்ந்தவர்க்கு அவன் அச்சமயங்களில் ஏற்ற பெற்றியால் நின்று அருள்புரிதலும் விளங்கும்.

குறிப்புரை :

ஓர்தல் - ஆராய்தல் `ஓர் நெறி` என இயையும். `பவன்` என்பது சிவனது நாமங்களில் சிறந்ததொன்று. ``பழவழி`` என்றது, `முன்னர்த் தோன்றியநெறி` என்றவாறு.
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி`` 1 என அப்பரும் அருளிச்செய்தார். மூன்று, நான்காம் அடிகளில் வந்த ``அவன்`` என்பன, பிற சமயக் கடவுளரைத் தனித்தனிச் சுட்டிற்று. ஈற்றடியில் நின்ற ``அவன் அவன்`` என்பது ஒரு சொல் அடுக்கு `அவன் அவனாய் உளது` என ஆக்கம் வருவிக்க. ``உளது`` என்பது அப்பண்பு குறித்துநின்றது. கடன்முறைமை. `உள்ள முறைமை` என்பதனை ``உளதாங் கடன்`` என்றார். இறுதிக்கண் ``ஆம்`` என்றது `விளங்கும்` என்றவாறு.
இதனால், `அகச் சமயத் தோர்களிடமாக நின்று அருள் பவனும் சிவனே` என்பது கூறப்பட்டது.
``யாதொரு சமயங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்`` 2
என்ற சிவஞான சித்தியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

பொழிப்புரை :

பொருந்தும் வழியையே கூறுகின்ற அகச் சமயங்கள் ஆறுக்கும் தலைவனாகிய சிவபெருமானை நேரே சென்று அடைதற்குப் புண்ணியம் தவிர வேறில்லை. சைவத்தில் நிற்பவர்க்கேயன்றி பிறசமயங்களில் நிற்கும் அனைத்துயிர்கட்கும் மேற்செல்லும் வழியாகிய அந்தச் சிவசத்தியாகிய முதல்வியே அவ்வுயிர்கட்கு அச்சமயங்களைப் பொருந்தும் வழியாகக் கூட்டு விப்பாள்.

குறிப்புரை :

``சமயாதி`` நான்காவதன்தொகை `ஆதிக்கு` என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரித்துக்கொள்க `ஆம் ஆம்` என்னும் அடுக்கு, `அவ்வவற்றிகுப் பொருந்துகின்ற, என்னும் பொருட்டு. வழி ஆக்கும் - வழியாகக் கூட்டுவிக்கும். ``ஆமாம் வழி ஆக்கும்`` என்பதனை இறுதியிற் கூட்டி உரைக்க. `போமாறாகிய கொடி` என்க. ஆதாரம் - அனைத்திற்கும்` நிலைக்களம். அங்ஙனம் ஆவது சிவ சத்தியே யாதல் அறிக.
இதனால், `அகச் சமயங்களும் சிவசத்தியின் செயலால் அமைந்தனவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரனெறி யாவ தறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொழிப்புரை :

அகமாகிய சிவநெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்திலும் ஞான நெறியால், அளவற்ற எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுதற்குரிய உயர்ந்த நெறியாய் உள்ள ஒப்பற்ற ஒளி நெறி யாவது சிவனது நெறியே யாதலை அறிந்தவனு மாயினேன் நானும்.

குறிப்புரை :

ஆகவே, `அகநெறியில் (உட்சமயங்களில்) நிற்போர் சிவநெறியை அடைந்து உய்யும் நிலையைப் பெறுவர்` என்றவாறு. உம்மைகள் இரண்டனுள் முன்னது உயர்வு சிறப்பும், ஏனைய இழிவு சிறப்புமாம். ``அறிந்தேனும்`` என்பதன்பின் `ஆயினேன்` என்பது எஞ்சிநின்றது. முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. உரம் - ஞானம். ``உள்ளம்`` என்றது, அதன்கண் தோன்றும் எண்ணத்தை,
``கருதுப - கோடியும் அல்ல பல``1
என்ப ஆகலின், அவற்றைக் கடலாக உருவகித்தார். `அவற்றைக் கடத்தல் ஞானம் துணையாய வழிக் கூடும்` என்பதையும், அத் துணையைத் தருவதே உயரிய நெறி என்பதையும், அதனால், அஃது `ஒளிநெறி` எனப்படுகின்றது என்பதையும் எடுத்தோதி, `அவ் ஒளி நெறி அரன் நெறியே` என்பது உணர்த்தினார். `இதனை அடைதல் உட் சமயிகளுக்கல்லது இயலாது` என்றவாறு. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், உட்சமயங்கள் சிவநெறிக்குத் தடையாகாது துணையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.

பொழிப்புரை :

அறிவுடையோர் ஆராய்ந்து கண்டு பற்றிச் சிவனை அடைந்து உய்ந்த சைவநெறி, முன்னர் ஆராய்தல் இன்றி நீங்கினோர் பலர் பின்னர் ஆராய்ந்து மீண்டு வந்தடைந்த பெருமை யுடையதும், பொருந்தி நின்றோர் மேற்கதியைப் பெற்றதுமாகும். அதனால், அதுவே, யாவரும் புறநோக்கை விட்டுத் திரும்பிப் புகழ்ந்து அடைதற்குரிய நெறியாகும்.

குறிப்புரை :

``சிவன்`` எனப் பின்னர் வருதலின்` முன்னர், ``தன்னை`` என்றார். பெயர்ந்து வந்தவர் அப்பரைப் போல்வார். பொருந்தினோர் மேற்கதியிற் சென்றமை கூறவே, பொருந்தாது இகழ்ந்து நீங்கினோர் தாழ்கதியிற் சென்றமை பெறப்பட்டது.
``வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூர்அரன் பொன்னடி
யுள்ளி ருக்கும் உணர்ச்சி யிலாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே`` 1
என அப்பரும் அருளிச் செய்தார். புகழை, `புனைந்துரை` என்ப ஆகலின், புனைதல் புகழ்தலாயிற்று.
இதனால், அகச் சமயங்கள் மேற்கூறியவற்றால் தாழ்கதியிற் செலுத்தாதனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
தூரும் சுடரொளி தோன்றலு மாமே.

பொழிப்புரை :

இருதலைப் படுகின்ற மனத்தை அவ்வாறு இரண்டாதலினின்றும் நீங்க நீங்குங்கள்; நீக்கி, இகரம் ஊர்ந்த சகர எழுத்தை ஓதுங்கள். ஓதி, சிவனது நெறியில் எம்முடன் வாருங்கள்; வந்து அதில் நிலையாக நின்று அவனை நினைத்தால், உம்முள் மறைந்து நிற்கின்ற விளக்கொளி உங்கட்கு வெளிப்படுதல் கூடும்.

குறிப்புரை :

இருதலைப் படுதல் - ஐயமாய் நிற்றல். `இரண்டின் அற` என ஐந்தாவது விரிக்க. வீசுதல் நீக்குதல். `வீசுமின்` என்பது பாடமாகாமை, பின்னர், ``வாரும்`` என வருதலானும் அறியப்படும். இகரம் ஊர்ந்த சகரம், சி. திருவைந்தெழுத்தில் ஏனையவை இதன்கண் அடங்குதல் அறிந்துகொள்க. `முன்னியத்` தென்பதும் பாடமன்று. முன்னுதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
இதனால், சிவநெறி திருவைந்தெழுத்தால் பல்லாற்றானும் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.

பொழிப்புரை :

பெண்ணாகச் சொல்லப்படுகின்ற சத்தியாகிய நல்ல வடிவினையும், அந்தணர்கள் வேதத்தின்வழி வளர்க்கின்ற அக்கினி யாகிய வடிவினையும், அன்பர்கள் நினையும் நினைவாகிய வடிவினையும் உடைய சிவபெருமானை ஞானத்தின் முடிநிலை யாகிய அந்த வழியாற் காணுதல் உண்டாகுமாயின், அப்பொழுது சிவநெறி கைவந்ததாம்.

குறிப்புரை :

`மின்னாகிய நற்குறி` என்க. பின்னர்க் கூறப்படும் வடிவங்கள் பலவற்றினும் சிறப்புடையது இதுவேயாதல் பற்றி இதனை, ``நற்குறி`` என்றார். `சிவன்` என்னும் பொருட்டாய் நின்ற, ``ஆதிப்பிரான்`` என்பதை, `நினைக் குறியாளனை` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நினை` முதனிலைத் தொழிற்பெயர். `அஃது` என்னும் பொருட்டாகிய `அனைத்து` என்பது ஈறுகுறைந்துநின்றது. `அயக்குறி, நயக்குறி` என்பன பாடமல்ல. ஆதல், இங்கு கைவருதல்.
இதனால், சிவநெறி முதல்வன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பலவகையில் நின்று தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.

பொழிப்புரை :

உண்மை நூல்களை ஆராய்ந்து உணர மாட்டாதவர் களது, ஏனைய பல திறமைகளும் பொருந்தி உணராதபடி நிற்பது சிவநெறி, அஃது, உண்மை நூல்களில் நுழைந்து அவற்றின் பொருளை உணர்கின்றவர்கள், அவ்வுணர்வின் வழியே சிவனது திருவடியை முதற்கண் அவற்றின் வேறாய் நின்று வழிபட்டுப் பின்னர், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நுகர்கின்ற இன்பமாய் உள்ளது.

குறிப்புரை :

நான்காம் அடியில், உரை என்பது பாடமன்று.
இதனால், சிவநெறி புறச்சமயிகட்கு உணர ஒண்ணாததாய்ச் சிவநெறியாளர்க்கு முன்னர்க் கரணத்தாற் பெறும் இன்பமாயும், பின்னர்க் கரணங் கடந்த இன்பமாயும் விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

`சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவன்` எனப் பலராலும் அறியப்பட்ட சிவன் ஆன்மாக்கள் உய்தற்பொருட்டு அமைத்த ஞானநெறி ஒன்றே உள்ளது. அது, தெய்வத் தன்மை பொருந்திய சிவநெறியே. உலகத்தில் ஞானத்திற்குத் தகுதியுடையராய் உள்ளார் அதனை அடைந்து உய்தற்கு அந்த ஒன்றையே அவன் அமைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

``சைவ சமயத் தனி நாயகன்`` என்பது எழுவாயும், ``நந்தி`` என்பது பயனிலையாயும் நின்று ஒரு பெயர்த் தன்மைப் பட்டது. ``சன்மார்க்கம் சேர்ந்துய்ய`` என்பது முதலாக மறித்தும் கூறியது, நன்கு வலியுறுத்தற்பொருட்டு.
இதனால், உண்மை உய்யும் நெறி சிவநெறியேயல்லது வேறின்மை வலியுறுத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும்
பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி
எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்!
ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.

பொழிப்புரை :

`இத்தவம், அத்தவம்` என்று தவங்கள் பல இருப்பனபோலச் சுட்டிப் பேசும் பித்தர்களைக் காணும்போதெல்லாம் எங்கள் பெரும்பெருமானாகிய சிவன் நகைப்பான். ஏனெனில், எந்தச் செயலாய் இருந்தால் என்ன? எந்தச் சமயத்தில் பிறந்தால் என்ன? தவத்தையும், அதனால் அடையப்படும் இறைவனையும் சிவநெறி யாளரோடு ஒத்த உணர்வினராய் உணர்பவர்கட்கு விரைவில் வீடு பெறுதல் கூடுவதாகும்.

குறிப்புரை :

``எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்`` 1
என்னும் முடிபுரையையும், அதற்கு இலக்கியமான சாக்கிய நாயனாரது வரலாற்றையும் உணர்க. `பெருநந்தி` என்பது செய்யுள் முடிபெய்தி நின்றது.
தவம், தவச் செயல். ``எங்கு`` எனச் சமயத்தை இடமாக வைத்து ஓதினார். இனி ``எந்நாட்டில்`` எனப் பொருள்கொண்டு, `நாடு களது வேறுபாட்டால் இங்குப் பெறப்படுவது சமயவேறுபாடு` என்றலு மாம். ஒத்தற்கும், உணர்தற்கும் செயப்படுபொருள்கள் வருவிக்கப் பட்டன. வீடு பெறுதலை, ``ஊர் புகல்`` என்றது ஒப்புமை வழக்கு.
இதனால், பிறப்பின் சார்பால் அதன் சமயத் தொடக்கி னின்றும் நீங்கமாட்டாதோரும் சிவநெறிப் பற்றுடையராயின் உய்தி பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க்
காமே பிரானுக் கதோமுகம் ஆறுள
தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்குத் தனது நிலைக்கு உரியன வான ஐந்து முகங்களோடு, கீழ்நிலையில் உள்ள உயிர்களுக்கு உரிய அதோமுகமும் உண்டு. இவ்வாறாக உள்ள ஆறுமுகங் கட்கும், அவன் அணிந்திருக்கின்ற தலைமாலைக்கும் உயிர்கள் அச்சத்தைப் பொருந்துகின்ற அப்பெருமானுக்கு அருள் இயல்பாய் உள்ளது.

குறிப்புரை :

`பிரான் முகம ஐந்தொடு ஆருயிர்க்கு ஆம் அதோ முகம் பிரானுக்கு ஆம்` எனக் கூட்டி உரைக்க. `ஆறாய் உள்ள தாம்` என ஆக்கம் வருவிக்க. ``அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்`` அன்றி நான் காவதும் வரும் பிற்கால வழக்குப்பற்றி, ``பிரானுக்கும் மாலைக்கும்`` என்றார். நாம் - அச்சம். நார் - அருள். முன் இரண்டடிகள் சிவனது முழுமுதல் தன்மையையும், பின் இரண்டடிகள் அவனது வடிவை அஞ்சத்தக்கதாக எண்ணி மருள்வாரைத் தேற்றுதலையும் குறித்தன. யாவரும் அறியும் ஐம்முகம் அவன் தனது உலகத்தில் நின்று தானே ஐந்தொழில் செய்வதற்கும், ஞானியரே உணரத்தக்க அதோமுகம் அனந்த தேவர் சீகண்டர் வழி. உருத்திர லோக தேவ மானுட லோகங்களில் ஐந்தொழில் நிகழ் வித்தற்கும் அமைந்தன என்பது, மேல் இரண்டாம் தந்திரத்து, அதோ முக தரிசன அதிகாரத்துட் கூறப்பட்டதனை இங்குச் சிறப்புணர்த்துதற் பயன் நோக்கிக் கூறினார். எனவே, ``ஆருயிர்`` என்றது `நிறைந்த உயிர்` என்னும் பொருட்டாய்ப் பிரளயாகலர் சகலரைக்குறித்த தாயிற்று. இம்மந்திரத்துள் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், சிவநெறியே மெய்ப்பொருளை முதலாக உடையது` என்பதும், `அம் முதலது தன்மை யறியாது வெருளுதல் மயக்க உணர்வாம்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொழிப்புரை :

முதற் கடவுளாகிய சிவபெருமான், நிலவுலகத் தில் உள்ள ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) சூழ்ந்த ஏழு கடலாயும், அப்பொழில்களில் வாழ்கின்ற அனைத்து உயிர்களாயும் நிற்பான். அவனின் வேறுபடாநிற்கின்ற சத்தி, ஆக்கல் அழித்தல்களைச் செய்யும் கடவுளரிடத்துப் பொருந்தி அவர்கள் வழியாக அத்தொழில்களை நிகழ்த்துவாள்.

குறிப்புரை :

அளத்தல் - இங்கு உள்ளடக்கல். `அளந்தவன்` என்பது பாடமாயின், அதன்பின், `ஆதலான்` என்பது வருவிக்க. சிவனது பெருமையையும், ஏனையோரது சிறுமையையும் உணர்த்தற்குக் கடலும் உயிருமாய் நிற்றலைச் சிவன் மேல் வைத்தும், பிற கடவுளராய் நிற்றலைச்சத்திமேல் வைத்தும் கூறினார். ``அந்தம்`` என்பதும் ஆகுபெயராய் `அந்தத்தின் கண் தெய்வம்` எனப் பொருள் தந்தது.
இதனால், சிவநெறி முதல்வராகிய சிவனும், சத்தியுமே அனைத்துச் சமய முதல்வராயும் நின்று அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் ஆய்ந்து அறிபவர்களாகிய தேவர்கள், வித்தியாதரர் முதலியோர் ஆய்ந்து அறிய இயலாதவாறு உள்ள சிவனது நெறியை, நான் ஆய்ந்தறிந்தேன். அதன்பின் அச் சிவனது திருவடிகளை வழிபடும் முறைமையையும் ஆய்ந்தறிந்தேன். அதனால், இம்மை அம்மை இரண்டின் இயல்புகளையும் நன்குணர்ந்தேன்.

குறிப்புரை :

ஆய்ந்து அறிதலாவது ஆய்தலைச் செய்து, உண்மையை உணர்தல். பிற பொருள்களின் உண்மையை உணர் வோர்க்கும் முன்னைத் தவம் இல்வழி, `சிவநெறியே நெறி` என்பது உணர்தல் கூடாமையை முதல் இரண்டடிகளிலும், முன்னைத் தவம் உடையார்க்கு அஃது எளிதில் கூடுதலை மூன்றாம் அடியில், உள்ள ``ஆய்ந்தறிந்தேன்`` என்பதிலும், `சிவநெறியே நெறி` என உணர்ந் தார்க்கும் அதிற் சொல்லப்படும் சாதனமும், பயனும் வாய்த்தல் அரிதாதலை ஏனைப் பகுதியிலும் கூறினார்.
இதனால், சிவநெறியைச் சார்தல் சார்ந்து பயன்கொள்ளுதல் இவற்றது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அறியஒண் ணாத உடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை ஆக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்
தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொழிப்புரை :

அறிதற்கு அரிதாகிய மானுட உடம்பின் பயனை அறிதற்குத் தடையாக ஆறுசமயங்களைப் படைத்து, அறிதற்கு அரிய ஆறு ஆதாரங்களை உடைய உடம்பாகிய பிண்டத்தில், அறிதற்கு அரிதாகிய ஓர் அண்டம் பொருந்தியுள்ளது.

குறிப்புரை :

`அதனை அறிந்தால் மானுட உடம்பின் பயனைப் பெற்றுவிடலாம்` என்பது குறிப்பெச்சம். ``அரிய ஒண்ணாத` எனவந்த நான்கினுள் இரண்டாவ தொழித்து, ஏனையவற்றில் ஒண்ணாமை, அருமை குறித்து நின்றது. ``அறிய ஒண்ணாததோர் அண்டம், ஆக்கிக் கோசத்துப் பதிந்தது`` எனக் கூட்டி முடிக்க. ``உடம்பு`` என்றது சிறப்புப் பற்றி மக்கள் உடம்பைக் குறித்தது. அதன் பயன், வீடு பெறுதல். பொதுப்பட ``அறுவகை`` என்றதனால், பிறசமயங்கள் யாவற்றையும் கொள்க. அவைபடிகளே யாயினும் தாம் தாமே மெய்யெனக் காட்டி நிற்றல் பற்றி அவற்றைத் தடையாகக் கூறினார். `அவற்றை ஆக்கியது படிகளாய் உதவுதற்பொருட்டு` என்பது மேல் பலவிடத்தும் கூறப்பட்டது. ஓர் அண்டம்`` என்றது, `பர வெளி` என்றவாறு. அது `சத்தி` என்பதையும் அதனையே தனக்குக் குணமாக உடையது சிவம் என்பதையும் நினைக்க. ``அறு வகையை உடைய கோசத்துப் பதிந்தது`` என்றதனால், அதனை யோக சாதனையால் அறிதல் கூடுவது பெறப்பட்டது.
இதனால், `சிவநெறியை அடைந்து சிவயோக ஞானங்களால் சிவனைத் தலைப்படுதலே மக்கட் பிறப்பின் பயன்` என முடித்துக் கூறப்பட்டது.
முன்னைத் தந்திரத்தில் சமயங்கள் பலவற்றையும் ஒருங்கு வைத்து அவற்றது நிலைகளை உணர்த்துமுகத்தால் சிவநெறியது சிறப்பினை உணர்த்திய நாயனார், இதன்கண் அந்நெறியில் நிற்றற்குரியாரது நிலைகளை உணர்த்துகின்றார்.
ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

பொழிப்புரை :

மெய்யாயபொருளிடத்து அன்பை உண்டாக்கி யாவராலும் துதிக்கப்படுகின்ற திருவடியைப் பற்றிக்கொள்ளக் கொடுத்து, தூயசொல்லாலே ஐயமும், திரிபும் ஆய குற்றம் முழுதும் போக நீக்கி, `சத்து, அசத்து, சதசத்து` என்னும் மூவகைப் பொருளின் இயல்பையும் நன்கு உணர உணர்த்தலால், அப்பயனைச் சிவநெறி ஆசிரியர்பால் பெற்ற மாணாக்கர் அனைவரது உள்ளமும் அவரை, `சிவன்` எனவே தெளிவன ஆகின்றன.

குறிப்புரை :

சுத்தம் - வாய்மை, சோதித்தல் - துடைத்தல். சத்து - நிலையுடையது, அசத்து - நிலையில்லாதது, சதசத்து - மேற்கூறிய அவற்றோடு கூடி அது அதுவாய் நிற்பது. இவை முறையே, `பதி, பசு, பாசம்` என்பனவே யாதலும், இவையொழிய அறிதற்கு வேறுபொருள் இன்மையும் அறிக. `இங்குக் கூறியவற்றைச் செய்வது சிவமன்றி வேறின்மையால், சிவகுருவைச் சிவம் என உணர்தலே மெய்யுணர்வாம்` என்றவாறு. எனவே, `மேற்கூறிய செயலைச் செய்யச் சிவமாம் தன்மை எய்தி நின்ற அருளாளரே சிவகுரு ஆவர்` என்பதும் போந்தது. சிவகுரு - சிவத்தை உணர்த்தும் குரு. சித்தம், மாணாக்க ருடையதாதல் ஆற்றலால் விளங்கிற்று. `சிவ குரு இறையே ஆம்` என மொழி மாற்றியுரைக்க. `சிவகுரு இறையே` என்றது. அவ்வாறு உணரும் உணர்வை.

பண் :

பாடல் எண் : 2

பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.

பொழிப்புரை :

நாட்டவருள் உள்ள ஒருவன்போலத் தோன்றுகின்ற, குற்றமற்ற ஞானாசிரியன், உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய தளை களின் இயல்பைத் தெளிவித்து, அதனானே அவற்றால் உளதாய கட்டினை அறுத்து, உடம்பின் மேல் உள்ள ஆசையாகிய தொடக்கி னின்றும் ஆன்மாவை விடுவித்து, உலகவரது போலியாகிய இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை இவ்விடத்தே பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அந்தப் பரமசிவனே யாவான்.

குறிப்புரை :

மெய்யுணர்வு வந்தவிடத்து நீங்குவன உலக பாசமே யாகலான், ``பாசம்`` என்றது இங்கு அதனையேயாயிற்று. அதன் இயல் பாவது அழிவுடைமையும், உள்ளபொழுதும் திரிபுடைமையு மாம். ``நேர் நேர்`` என்னும் அடுக்கு வலியுறுத்தற் பொருளது. `நேரே கூட்டலால்` என இயையும். `உலகவர் இகழ்ச்சி இகழ்ச்சியன்றாம்` என்பதை,
``சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றி``1
எனவும்,
``நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப``2
எனவும் மணிவாசகரும் அருளிச்செய்தார். இம்மந்திரம் பலவிடத்துப் பாடம் திரிய ஓதப்படுகின்றது.
இவ்இரண்டு மந்திரங்களாலும் சிவகுருவினது பெருமை ஏதுவுடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

பொழிப்புரை :

இறை அன்பும், அதன்வழி ஓதப்படும் பலவகை மந்திரங்களின் சித்திகளும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அந்த யோகத்தால் அடையப்படும் அட்டமா சித்திகளும், வாமை முதல் எட்டாய் விரிந்து நிற்கின்ற திரோதான சத்தி அங்ஙனம் நில்லாது, அருட் சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத் தின்வழி விளங்கிய சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைப்பனவாம்.

குறிப்புரை :

``சித்திகள் எட்டு`` முதலியவற்றைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். திண்மை - நிலைபேறு. இதனால், சிவமாகி விட்ட உயிர் மீளப் பிறிதாகாமை குறிக்கப்பட்டது. சுத்தம் - சுத்தநிலை. `ஒடுக்கமுறையில் இறுதிக்கண் நிற்கும் மனோன்மணியே அருட் சத்தியாய் மாறியருளுவது` என்னும் கருத்தால், ஏனை எட்டையுமே திரோதாயிகளாகக் கூறினார். தூய்மை - பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாதல், அங்ஙனம் ஆகின்ற அதுவே சிவஞானம் ஆதலை அறிக. சாதக போதம் - சாதித்தவனது அறிவு நிலை. குருவை `நாதன்` என்றலை இந்நூற் பாயிரம் முதலியவற்றினும் காண்க.
இதனால், சிவகுருவால் சிவஞானமேயன்றிப் பிறபயன் களும் கைகூடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால்
சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே.

பொழிப்புரை :

உலகங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சுத்த சிவன், தனது அருள் காரணமாக, மலம் நீங்கியோரது சுத்தான்ம சைதன் னியத்தில் தயிரில் நெய்போல இனிது விளங்கிநின்று, பக்குவி களுக்கு உண்மை ஞானத்தை அருளுதலாலும், ஏனைய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் அருள்புரிந்து ஆட்கொண்டு இவ் விடத்தே நலம் செய் தலாலும் சொல்லுதல் நிறைந்த ஞானகுரு அந்தச் சுத்த சிவனேயாவன்.

குறிப்புரை :

சுத்தசிவன் தற்போதம் அற்று அருள்வழியே நிற்கும் அருளாளரது உள்ளத்திலே இனிது விளங்கி நிற்றலை
``அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்``1
என்னும் திருவாசகத்தாலும், `இத்தகையோரே` `சாக்கிரத்தே அதீதத்தைப் புரிபவர்` என்பதையும், `இவரிடத்தே சிவன் அவராய் நின்று உலகிற்குச் செயத் தக்கனவற்றைச் செய்வன்` என்பதையும்,
``துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்``2
என விளக்கி, இதற்கு எடுத்துக் காட்டாக ஆளுடை நால்வரது அருட் செயல்களைக் குறித்தருளிய திருக்களிற்றுப்படி முதலியவற்றாலும் அறிக. மிக்கு - மிக விளங்கி ``நல்கலால், அளித்தலால்`` என்பவற்றில் எண்ணும்மை தொகுத்தலாயின. சொல் - சொல்லுதல்; முதனிலைத் தொழிற் பெயர். ஐயம் திரிபு அற அனைத்தையும் இனிது விளங்கச் சொல்லுதல் என்க.
இதனால், ஞானகுரு எல்லாம் வல்ல சிவனேயாதல் அனுபவத்தின் வைத்து உணர்த்தப்பட்டது. இஃது இனிது விளங்கு தற்கே முன்னை மந்திரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

பொழிப்புரை :

சிவன் தான் நேரே அருளுதல், குருமூர்த்தியிடமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் குருவாய் அருளுமிடத்து அக்குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அவ்வுணர்வினால், அநாதியே பசுத்துவப்படுத்தி நின்ற பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் உளவாகின்ற எல்லா நலங்களையும் அருளுவார்.

குறிப்புரை :

அஞ்ஞானம் அசுத்தமாதலின், சுத்தம் - ஞானம். `சுத்த சைதன்னியம்` எனினும் ஆம். ``குருவும்`` என்பதன் பின், `ஆம்` என்பது வருவிக்க. சிவன் உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தும் வகை `நிராதாரம், சாதாரம்` என இரண்டாம். முன்னையது தான் நேரே அருளுதல். அது விஞ்ஞானகலர் பிரளயாகலர்கட்கு. குருமூர்த்தி யிடமாக நின்று அருளுதலே சாதாரம் அது சகலர்க்கு அவற்றுள் குருவிடமாக நின்று `அருளும் முறை இஃது ஒன்றே அன்று` என்றற்கு ஏனையதையும் குறித்தார். காணுதல் - இங்குச் செய்தல். முத்திக் காலத்தில் உளவாகின்ற நலங்கள், ``நாமார்க்கும் குடியல்லோம்``1 என்பது முதலாகவும், ``எங்கெழில் என் ஞாயிறு`` 2 என்பது போலவும் அருளிச்செய்யப்பட்டன.
இதனால், சிவகுருவினது ஆற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணி வாரே.

பொழிப்புரை :

சுத்த சிவனே குருவாய் எழுந்தருளி வந்து மலங்களைப் போக்கித் தூய்மைப் படுத்தி, அங்ஙனம் தூய்மைப் படுத்தப்பட்ட உயிர் ஐம்புலன்களாகிய வேடர் கூட்டத்தினின்றும் நீங்கி3 அரசனாகிய தன் தந்தையை அடையச் செய்கின்ற அருட் சிறப்பைக் கூறும் ஞானக்கண் இல்லாத பெரும் பேதையர் தமது ஊனக் கண்ணால் மட்டும் கண்டு அக்குருவையும் நம்மில் ஒருவனாக எண்ணுவர். ஆயினும் ஞானக்கண்ணை அடைந்த புண்ணியர் அக்குருவை, `இவன் சிவனே` என்று அறிந்து அவனது பாதங்களை வணங்கி நிற்பர்.

குறிப்புரை :

``அத்தன்`` என்றது முறை உணர்த்தி நிற்றலின், வேறொருவன்போலக் கூறினார். அடையப்படுபவனைக் கூறிய தனாலே, நீக்கப்படுபவர் பெறப்பட்டனர். பொய்த் தகு - பொய்ம்மையாம் இயல்பைக் கொண்ட பொய்த்தகு கண்ணாரை இகழ்ந் தமையால் ``புண்ணியர்`` என்னும் புகழுரை, மெய்த் தகு கண்ணை உடைமை பற்றியதாயிற்று.
``பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வைஎனக் காணா புவி``1
என்றார் திருவருட்பயனிலும்.
இதனால், சிவ குருவின் பெருமை உணரமாட்டாதவரது இழிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பால்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்த மயக்கமும்
அண்ணல் அருளன்றி ஆரறி வாரே.

பொழிப்புரை :

மெய்ப்பொருள் இன்னது என்பதையும், அதனை உணர ஒட்டாது பொய்ப்பொருள்கள் மறைத்து நிற்கும் தன்மையை யும், அப் பொய்ப் பொருள்களினின்றும் நீங்கி, மெய்ப்பொருள் களில் நிலைத்து நிற்கும் முறையையும் அறிவுப் பொருளாம் சிவமாகிய நல்ல மேன்மையை உடைய இறைவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி என்னும் இருநிலையிலும் உடனாய் நின்று செய்து உதவி வருதலையும், பெத்த காலத்தில் புத்தியின் அலைவுகளாகிய அறுபத்து நான்கினையும் குருவருளால் அன்றி யார் அறிந்து கொள்ள இயலும்!.

குறிப்புரை :

புத்தி மயக்கம் அறுபத்து நான்காவன, புத்திகுண பாவகங்களாகிய தன்மம் முதலிய எட்டனுள் அஞ்ஞானத்தின் விரியாகிய அவையாம். அவற்றைச் சிவஞான மாபாடியம் முதலிய விரிவுகளிற் கண்டுகொள்க. பாவகங்களுள் ஏனையவற்றைக் கூறாது அஞ்ஞானம் ஒன்றையே கூறியது. அதன் கொடுமை மிகுதி பற்றி `குருவருளால் அன்றி இவற்றை ஒருவராலும் அறிய இயலாது` என்பதை,
``நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானும்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்``1
எனவும்
``நானார்என் உள்ளம்ஆர் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல்``2
எனவும்,
``ஆகமங்கள் எங்கே! அறுசமயந் தானெங்கே!
யோகங்கள் எங்கே! உணர்வெங்கே! - பாகத்
தருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு``3
எனவும்,
``ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேரறிவான் வாராத பின்`` 3
எனவும் வருவனவற்றாலும், பிறவற்றாலும் அறிக.
இதனால், குருவருளாலன்றி ஒருவராலும் உண்மை உணரலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நலமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சிவஞானி சிவனே ஆதலால்` என மாற்றி அதன்பின் `அவனை` என்பது வருவித்துக் கொள்க. சிவஞானியே சிவகுரு வாவன் என்றற்குச்சிவகுருவை அவ்வாறு கூறினார், நவமான தத்துவம் - புதிய பொருள் அது கருவிகளைக் கடந்த `இன்பம் அதனை யுடைய முத்தி` என்க. நண்ணும் - கிடைக்கும் ``ஆம்`` என்றதும் அது, பவம் - பிறப்பு. ``லோகம்`` என்றது. ஆகாயம் என்றவாறு. ``நன் முத்தி`` என்றது முத்தியின்` பயனையும், ``பரலோகம்`` என்றது அதன் மேன்மையையும் கூறியவாறு.
இதனால், சிவகுருவின் உண்மையை உணர்ந்து அடை வார்க்கு உளதாம் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

``நந்தி கூறினன்`` என்றது தாம் அறிந்தவாற்றைக் கூறியது. என்பது - என்று வேதாகமங்களிற் சொல்லப்படும் பொருள். குறித்தல் - உளங் கொள்ளுதல். ``சிவனுமாய் நிற்கும்`` என்றது, சிவனை வேறு வழிபட வேண்டாமைக் கூறியதாம். ``கோனுமாய் நிற்கும்`` என்றதும் இவனது ஆணையே சிவனது ஆணையாக. அதன் வழி நிற்றலே அறமாதலை உணர்த்திற்று. ஈற்றடி, குரு உருவுடைய னாயினும், உருவிலனாகிய சிவனே எனச் சிவனோடு இவனிடை வேற்றுமை இன்மையை வலியுறுத்தவாறு.
இதனால், சிவகுருவை அணுகி நிற்கும் முறை பலவும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்த மியாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.

பொழிப்புரை :

உயிரின் அறிவு அறிவன அனைத்தும் சிவன் தனது அருளால் அறிவிப்பனவேயாகும். அந்நிலையில் உயிரின் அறிவு அறிவன யாவையும் உறுதியான சிவனேயாய் முடிந்துவிட்டால், சிவனும் அவ்வறிவில் பிறவற்றைத் தோற்றுவியாது தன்னைமட்டுமே தோற்றுவித்து நிற்பான்.

குறிப்புரை :

``சித்தம்`` என்றது அறிவை. `சித்தம் சிந்தித் திருந்திடும் யாவையும் அத்தன் அருளால் உணர்த்துபவதாகும்` என மாற்றுக. முதலடியை மாற்றாது ஆற்றொழுக்காகவே உரைப்பின், அது சித்தத்தின் இயல்பு கூறியதாக்கி அதன் இறுதியில் `அவை` என்பது வருவித்துக்கொள்க. `உணர்த்துவது` என்னும் ஒருமை அத்தொழில் மேல் நின்றது. `உயிரின் அறிவு பக்குவம் எய்தாத பொழுது சிவன் அதன்கண் வினைக்கீடானவற்றை உணர்த்துவன். பக்குவம் எய்திய வழி அவற்றை ஒழித்துத் தன்னையே உணர்த்தி நிற்பான்` என்பது இதன் திரண்டபொருள். `ஞானாசிரியர் சிவன் தன்னையே உணர்த்தி நின்ற அறிவையுடையராதலின், அவர் அச்சிவனேயாவார்` என்பது இதனால், உணர்த்தப்படும் பொருள். எனவே, ``குருவே சிவம்`` என்பது முதலியன அமையுமாறு காட்டியதாயிற்று.
இதனால், சிவகுரு சிவமேயாதல் அதன் உண்மையுணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி என்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி அங்கித் தனிச்சுட ராகுமே.

பொழிப்புரை :

`ஞானத்தைப் பெற்றவன் சிவனது இயல்பைத் தனது அறிவில் காணும்படி வைத்த ஆசிரியன் அந்தச் சிவனே என்க` என்னும் சிவனது திருவுள்ளத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறிய வல்ல ஒருவனுக்கு அச்சிவன் மாலைக் காலத்தில் ஏற்றப்பட்ட புறவிளக்குப் போன்று ஒப்பற்ற அக விளக்காய் நிற்பன்.

குறிப்புரை :

`நந்தியது சீர்மையை உள்ளே சந்தித்த சீர்` என்க. இச் சீரினைப் பெற்றவன் ஞானியாகையால் ``தான்`` என்றது அவனையே யாயிற்று. `கோன் நந்தி என்னும் குறிப்பு` என்க. மகிழ்தற்கு `அக் கோனை` என்னும் செய்யப்படுபொருள் வருவிக்க. ``அந்தி அங்கி`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது.
இதனால், சிவகுருவைச் `சிவன்` என உணர்தலே சிவனது திருவுளத்திற்கு உவப்பாவது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.

பொழிப்புரை :

ஞானமாகிய பேறும், முத்திப்பயனும், மெய்ம் மையை மறவாத அருள்நிலையும், மயக்கம் நீங்குதற்கு ஏதுவாகிய உண்மைப் பொருளையுடைய வேதத்தின் விளக்கமும் சிவனே குருவாய் வாராவிடில் ஒருவற்கும் அறிய இயலாது.

குறிப்புரை :

``சீர்மை`` என்றது மெய்மையை. `மருளாதருளும்` என்பது பாடமாயின் மருளாத என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது என்க. ``பொருளாய வேதாந்தம்`` எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார். `வாராவிடில்` என்பது முதல் குறுகி நின்றது.
இதனால், சிவன் உருவாய் வரவேண்டுதலின் இன்றியமை யாமை கூறப்பட்டது. ``உண்மையும் பொய்ம்மை`` என்னும் மந்திரம் (1560) குருவருளின் இன்றியமையாமை கூறியது.

பண் :

பாடல் எண் : 13

பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள்தரின் தான்எளி தாமே.

பொழிப்புரை :

சிவபுண்ணியமும், அதன் பயனாகிய மல பரிபாக இருவினை ஒப்புக்களும் ஆகிய இவற்றால் பரமுத்திக்கு ஏதுவாகிய சிவோகம் பாவனையைத் தலைப்படும் நிலையே உண்டாதலாலும், அந்தப் பாவனையாலே அஞ்ஞானம் வாசனையும் இன்றிப்போக, முத்திக்கு நேரே வாயிலாகிய சிவஞானம் தோன்றி நிற்றலாலும் அத் தோற்றம் சிவனது அருள் அவ்விடத்து முன்னின்று அருளியவழியே உண்டாவதாம்.

குறிப்புரை :

``பத்தி`` என்பது அதனாற் செய்யப்படும் சரியை, கிரியா யோகங்களைக் குறித்தது. ``ஞான வைராக்கியம்`` என ஒருங்கு தொகுத்து ஓதினமையால், அவ்விடத்து ``ஞானம்`` என்றது, ஞானத்தை யுணரும் பக்குவத்தையாம். இருவினை ஒப்பினையே ``வைராக்கியம்`` என்றார். ``சிவோகம்`` என்றதும் அதற்குரிய தகுதியையே. `பத்தியாலும், வைராக்கியத்தாலும்` என அவ்விடங் களில் மூன்றாவது விரிக்க. அவ்வாறன்றி எழுவாயாகவே வைத்து `சேர்த்தலால்` எனப்பாடம் ஓதுதலுமாம் ``சேர்தலால்`` என்பது, ``முளைத்தலால்`` என்பதனோடே முடிந்தது. ``முத்தியின் ஞானம்`` என்புழித் தொக்கு நின்ற ஆறாவது` `வனைகலத்து திகிரி` என்றாற் போலக் கருவிக் காரகத்தின்கண் வந்தது. அதனால், அது முத்திக்கு நேரே வாயிலாய் ஒருதலையாகத் தருதல் பெறப்பட்டது. ``அருள் தரின்`` என்பதில் தருதல் துணைவினையாய் நின்றது. `முன் இரண்டு அடிகளால் சரியை முதலிய மூன்றையும் `ஏனைக் குருமார்கள் வழி யாகவும் பெறுதல் கூடும்` என்பதும் பின்னிரண்டடிகளால் `ஞானம் ஞான குரு வழியாலன்றி ஏனையோர் வழியால் பெறுதல் இயலாது` என்பதும் கூறியவாறு. சத்தி அருள்செய்தல், இங்குக் குருவாய் நின்று அருளுதல் என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.
இதனால், ஞானகுரு ஏனைக் குருமார்களினும் மேம்பட்ட வராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.

பொழிப்புரை :

இவ்வுடம்பு நீங்கிய பின்பு அடையுமாறு வைத்துள்ள இன்பத் தோற்றத்தை அதற்கு முன்பே அடையும்படிச் செய்த ஞானகுரு எங்கள் சிவபெருமானே. அவன் தன்னை நிலை பேறாக அடைதற்கு வைத்த மனம் அங்ஙனம் அடையும் காலத்துத் தானே குருவாய் வெளிவந்து அருள் செய்வான்.

குறிப்புரை :

``பிறப்பு`` என்றது தோற்றத்தை. ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டி, `முதல்வன் எம் இறையே` என மாற்றி யுரைக்க. மனம் தன் எய்தும் காலம், பக்குவ காலம். `அம்மன்னை` எனச் சுட்டு வருவித்தும், தொகுக்கப்பட்ட இரண்டாவதை விரித்தும் உரைக்க.
இதனால், இறைவன் குருவாய் வந்தருளும் காலம் இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

 சிவமான ஞானந் தெளியஒண் சித்தி
சிவமான ஞானந் தெளியஒண் முத்தி
சிவமான ஞானம் சிவபர தேகம்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

பொழிப்புரை :

சிவஞானத்தைத் தெளிய உணர்தலாலே (மூன்றாம் தந்திரத்திற் சொல்லப்பட்ட) பரசித்திகளும், பின் பரமுத்தியும் உளவாகும். அவை முறையே அருளேதனுவாய் நிற்றலும், ஆனந்தத்து அழுந்தலுமாம்.

குறிப்புரை :

சிவஞானம் சிவகுருவால் அன்றி எய்தாமை மேற் பல்லாற்றானும் கூறிவந்தமையால், அந்தச் சிவஞானத்தால் விளைவன இவை என்பதனை இதன்கண் கூறினார். `சிவபரதேகம், சிவானந்தம் இரண்டும் நல்கும்` எனச் செவ்வெண் தொகை வருவிக்க.
இதனால், குருவருளின் நேர் பயனும், அதன் வழிநிலைப் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அறிந்துணர்ந தேன்இவ் வகலிடம் முற்றும்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

16 தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

குருவின் அருளால் நான் இப்பெரிய பூமி முழுவதன் இயல்பையும் முன்னர்ப் பொதுவாகவும், பின்னர் உண்மை யாகவும் உணர்ந்தேன். அவ்வாறே அவரது அருளையடைந்து சிவனது இயல்பையும் முன்னர்க் கேள்வியளவில் உணர்ந்து, பின்பு நூல்களை ஓதி உணர்ந்து, அவனது திருவருள் கிடைக்கப்பெற்றேன். அதனால், அறிவையிழந்துள்ள உலகவரது வாழ்க்கையில் பற்றுச் சிறிதும் இல்லாதவனானேன். அதனால், இவ்வுடம்பில் இருந்தும் அதனில் நீங்கி நிற்கும் நிலையை உடையவனாயினேன்.

குறிப்புரை :

முதல் அடியால் தத்துவ சுத்தியும், இரண்டாம் அடியால் கேட்டல் சிந்தித்தல்களும், ஏனைய அடிகளால் முறையே தெளிதலும், நிட்டை கூடலும் கூறியவாறு. `குருவருளால்` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனானே, ``செறிந்து`` என்பது, அவரது அருளையடைத லாயிற்று.
இதனால், சிவகுருவால் அடையும் பயன்கள் பலவும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டன.
[பதிப்புக்களில் இதன்பின் ``தரிக்கின்ற பல்லுயிர்`` என வரும் மந்திரம் அடுத்த தந்திரத்தில் வருவதாகும்].

பண் :

பாடல் எண் : 1

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.

பொழிப்புரை :

வினையின்வழி மனம் சென்றவாறே செல்லுதலால், உலகவர்மேற் செல்கின்ற அன்பின்வழியே மனம் நெகிழ்ந்து செல்லுகின்ற கீழோரைப் பாசத்தினின்றும் விடுபடச் செய்தற்கு ஞானகுரு வந்து அவர்களது தலையின்மேல் தனது கையை வைத்த வுடன் அவர்களது உள்ளமாகிய பொய்கையில் அவனது திருவடிகளா கிய தாமரை மலர்கள் மலர்ந்து பொருந்தி மலர்வனவாம்.

குறிப்புரை :

`ஈசரை` என்பது பாடம் ஆகாமைக்குப் பன்மை யாயதே சான்றாகும். `பாசத்தின்` என்பதும் பாடமன்று. ``ஏக`` என் பதன்பின், `செய்ய` என ஒருசொல் வருவிக்க. சிவத்தல் - தழல் போலும் ஒளியையுடையனாதல். சென்னியில் கையை வைத்தலே `பரிச தீக்கை` எனப்படுவது. அதன் இயல்பைக் கிரியை நூல்களிற் காண்க. ``உவந்த`` என்னும் அஃறிணைப் பன்மை முற்றினை இறுதி யிற் கூட்டியுரைக்க. உவத்தல் மகிழ்தல். இங்கே மலர்தலின் மேற்று. இது குறிப்புருவகம். மாணவன் ஆசிரியனது திருவடியைப் பற்றாகப் பற்றி இன்புறுதல் மெய்ஞ்ஞானத்தின் விளைவாதலும், மெய்ஞ்ஞானம் தீக்கையான் உளவாதலும் கூறியவாறு.
இதனால், சிவகுரு சிவஞானத்தையும், அதுவழியாகச் சிவானந்தத்தையும் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாடந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

பொழிப்புரை :

தனது சத்தியை உலகுக்கு உதவ வைத்தபொழுதே, அவ்வுதவியைப்பெறும் உயிரை அந்நிலையில் வைத்த எங்கள் சிவ பிரான், பின்பு இப்பூமியில் குருவாகி வந்து பலருக்கு அருள் புரிந்தது, அஞ்ஞானமாகிய மரத்தை வெட்டி வீழ்த்தும் வாள்போல்வதாகிய ஞானத்தின் உறுதிப்பாட்டைத் தந்து, `வீட்டுலகத்தை எல்லையில் காலம் ஆள்க` என அளித்தற் பொருட்டு, மும்மலக் கட்டினின்றும் வெளிப்படுத்தி அருள் தோற்றமாகிய தனது திருவடிகளை அவரது இனிய தலையிற் சூட்டியேயாம்.

குறிப்புரை :

சத்தியை, `தாள்` எனவும், உயிரை, `தலை` எனவும் உருவகித்துக் கூறுதல் மரபு. `சத்தி, திரோதான சத்தி` என்பதும், `உயிர்கள், சகல நிலையில் உள்ள உயிர்கள்` என்பதும், ``தந்த`` என்ப தனால் பெறப்பட்டன. ``வாள் தந்த`` என்பதில், ``தந்த`` என உவம உருபு. ``தந்திட்டு`` என்னும் செய்தென் எச்சம், எதிர்காலத்ததாய் நின்ற ``என`` என்னும் செயவெனச்சத்தோடு முடிந்து, எதிர்காலத்தில் இறந்த காலமாய் நின்றது, என்னை?
``செய்தெ னெச்சத் திறந்த கால ம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்``1
என்பது கட்டளை யாகலின். விடுதல் - கட்டறுத்து இனிதியங்கச் செய்தல். பாடு - தோற்றம். அஃது அதற்கு இடமாகிய திருவடியைக் குறித்தது. ``தந்தது`` எனத் தொழிற்பெயர் எழுவாய் நின்றமையின், ``வைத்து`` என்னும் வினையெச்சம் பயனிலையாதல் பொருந்திற்று. `எம் இறை பார் வந்து தந்தது, விட்டு, வைத்து` என வினை முடிபு கொள்க. அவ்விடத்து, `தந்திட்டு ஆள்கெனற்கு` என்னும் தொடர் பயனிலையைச் சிறப்பித்து நின்றது.
இதனால், சிவகுருவினது திருவடியே பிறவிக்கு ஏதுவாகிய பாசத்தை அறுத்து, வீட்டிற்கு ஏதுவாகிய ஞானத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

பொழிப்புரை :

ஆன்மா சிவனாகி, அச்சிவனது உண்மை இயல்பில் தனது உண்மை இயல்பு பொருந்துதலால் இன்புற்று, முன்னே செயற்கையாய் வந்து பற்றிய `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்` என்னும் நான்கின் இயல்புகளையும் நீக்கிநின்ற சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்ட சிவன், ஆங்ஙனம் ஆட்கொள்வதற்கு முன் தான் குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்டவனது உள்ளத்திலே நிலைபெறச் செய்தது உண்மை.

குறிப்புரை :

எனவே, ``திருவடியை அங்ஙனம் சூட்டித் தாபியாத வழி, முன்னர்க் கூறிய பயன்களை ஆன்மா எய்த மாட்டாது` என்பது போந்தது. ஆக்கம் கூறினமையால், செயற்கையாதல் அறியப்பட்டது. ஐம்மலங்களில் உண்மையில் மலங்களாவன திரோதாயி ஒழிந்தவை யேயாகலின், அவற்றையே கூறினார். `மலங்களது சொரூபமே அகற்றப்பட்டது` என்றதனால், அவைபற்றறக் கழிந்தமை தெளிவா யிற்று. ``ஏனைய முத்திரை`` என வேறு வைத்துக் கூறினமையின், அது தலையாய சின்முத்திரையையே குறித்தது. ``முத்திரை`` என்பது காரிய ஆகுபெயராய் அதனால் உணர்த்தப்படும் நிலையை உணர்த்திற்று. சின்முத்திரையின் இயல்பும், அஃது இங்குக் குறிக்கப் பட்ட நிலையை உணர்த்துமாறும் அறிந்துகொள்க. உயிர்வரக் குற்றியலுகர ஈறு உகரம்பெறுதல் செய்யுள்முடிபு.
இதனால், குருவின் திருவடியைப் பெறுதல் ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

பொழிப்புரை :

`இஃது இவ்வாறிருந்தது` எனச் சொல்லும் சொல்லும், `இவ்வாறிருக்கின்றது` என உணரும் உணர்வும் அற்றமை யால் உயிர் தன் பசுத்துவம் முற்றும் நீங்கி, அலையில்லாத நிலைநீர் போல அசைவற நிற்கும் சிவமாம் தன்மையை எம் குருநாதன் எமக்கு முற்றத்தந்து, நாத காரியமாகிய நால்வகை வாக்குக்களையும் கடந்த இயற்கை நிலையில் எம்மை இருக்கச் செய்தான்; அதனால் யாம் பேச்சற்று நிற்கின்றோம்.

குறிப்புரை :

`இஃது அவனது திருவடியை யாம் பெற்ற பேற்றின் பயன்` என்பது குறிப்பெச்சம். உரை அறுதல் முதலிய மூன்றும் ஒன்றற்கு ஒன்று காரண நிலையாம் முறையில் வைத்துக் கூறப்பட்டன. படவே மலவாசனை படிமுறையான் நீங்கினமை பெறப்பட்டது. பரம் - முதன்மை. உயிரது முதன்மை `யான்` என முனைந்து நிற்றல். `நீரின்கண் எழுகின்ற அலை காற்றின் செய்கை யாதல்போல, உயிரினது தன் முனைப்பு ஆணவமலத்தின் செய்கையாய் உயிர்க்கு அல்லலை விளைவிக்கும்` என்பது, ``திரையற்ற நீர் போல்`` என்னும் உவமையாற் பெறப்படும் குறிப்புப் பொருள். உவமை, இல்பொருள் உவமை. தீர்த்தல் - முடித்தல், முற்றச்செய்தல், சத்தாதி - சத்தத்தை ஆதியாக உடையன. நாதத்தை, ``சத்தம்`` என்றார். நாதமே சூக்குமை வாக்காயினும் அதுவும் கடக்கப் பட்டமைதோன்ற ``நான்கும்`` என்றார். ``கரையற்ற`` என்றது, `கடத்தற்கு அரிய` என்றவாறு.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``1
என இவ்வாக்குகள் கடத்தற்கு அரிய பரம பந்தமாதல் கூறப்பட்டமை காண்க. உரை உணர்வு, ஆறுதலை,
``உரையுணர் வுணர்ந்துநின் றுணர்வதோர் உணர்வே``2
``உணர்ந்தார்க் குணர்வரியோன்``3
எனவும்,
``இங்ங னிருந்தென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ங னிருந்தென் றுந்தீ பற;
அறியும் அறிவதன் றுந்தீ பற``4
எனவும், மற்றும் இவ்வாறும் போதவற்றால் அறிக.
சொரூபம் - இயற்கைநிலை, இந்நிலை ஆணவ மலமாகிய செயற்கையால் மாறுவதாயிற்று என்க.
இதனால், திருவடிப்பேறு பரமுத்தியாகிய முடிந்த பயனைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற்
றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.

பொழிப்புரை :

சிவகுரவன் உயிர்களுக்கு உள்ள மூன்று இயல்பு களையும் தான் கைக்கொண்டு, அவன் காட்டிய சின்முத்திரையையே அறியத் தகும் அரிய பொருளாக யான் கொண்டு, `நந்தி` என்னும் பெயருடைய பெரிய பெருமானாகிய சிவனது திருவடிக்கண் உள்ளம் உருகும்படி என்னை அப்போழுதே உய்யக்கொண்டருளினான்.

குறிப்புரை :

`என் உள்ளம் பெரிய பிரானடிக்கண் உருகிடத் தனது திருவடி சூட்டலால் செய்து உய்யக்கொண்டான்` என்றவாறு. உயிரின் மூன்றியல்பாவன, `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் நிலைகளில் காணும் இயல்புகள் முதலிய மூன்றும் முறையே இருள்நிலை, மருள் நிலை, அருள்நிலை என்க. எனவே, சுத்தம் என்றது அதன்கண் துரி யம் ஈறாயவற்றையே யாயிற்று. `முத்திரை பொருளாகக் கொண்டு` என மாற்றிக்கொள்க. ``பேர்`` என்பது அதனை உடையவனைக் குறித்தது. வாளா `நந்தி` என ஓதல் பாடம் அன்று. ``அங்கு`` என்றது, திருவடி சூட்டிய அப்பொழுது என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய பயன் நிகழும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற அறிவுருவனாகிய சிவகுரவன் மல பரிபாகம் வாய்க்கப் பெற்ற என்னைத் தன் திருவடியைச் சூட்டி, மலம் காரணமாக எனக்கு நியதியாக வந்து பொருந்திய `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இனி நிகழாவாறு தான் கைக் கொண்டு சிவமாகச் செய்து, பேச்சற்றதும், எல்லையில்லாததுமாகிய இன்பத்திலே என்னையே யான் அறியாதபடி மூழ்குவித்து, அதனால் எனக்கு வருகின்ற புகழையும் யான் எண்ணாதபடி என்னோடு உடன் இருந்து அருளுகின்றான்.

குறிப்புரை :

`சோதி, என்னை, தந்து, கொண்டு, ஆக்கி, ஆனந்தத் திலே மாள்வித்து, புகழ்மாள மன்னும்` என வைக்கற்பாலன, செய்யுள் நோக்கி முறைபிறழ வைக்கப்பட்டன. `மாசு காசு` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. ``மாசு அற்ற`` என்பதில் அறுதல், அறும் நிலையைப் பெற்றமையைக் குறித்தது. `துணிவு பற்றி எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று` என்றலுமாம். மாள்வித்தல் - வெளிப்படா திருக்கச் செய்தல். ``மாள`` என்றதும் எண்ணப்படாமை பற்றியாம்.
``எனைநான் என்ப தறியேன் பக லிரவாவது மறியேன்
மனவாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கி``1
என ஓதுதல் காண்க. ``தாள்தந்து`` என எடுத்தோதினமையால். `இவை தாள் தந்தமையான் விளைந்தன` என்றவாறாம், ``இன்பம், ஆனந்தம்`` என்பன அடையொடு வந்து ஒருபொருட் பல பெயர் ஆயின.
இதனால், தான் திருவடி சூட்டப் பெற்றவர்க்குச் சிவகுரு பின்னும் நீங்காது உடன் இருந்து பயன்விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

பொழிப்புரை :

சிவன் குருவாகி வந்து, தனது திருவடிகளை எனது இதயத்திலும், கண்ணிலும், மனத்திலும் நீங்காது பொருந்தியிருக்கச் செய்து, அதனானே ஞானத்தை உணர்த்திய வகையும், அந்த ஞானத் தினால் மெய்ப்பொருளைத் தலைப்படுவித்த வகையையும், பின் அம் மெய்ப்பொருளை நீங்காதிருத்தற்குரிய முறைகளை உணர்த்திய வகையும் யான் சொல்லும் தரத்தன அல்ல.

குறிப்புரை :

``பதி வித்த பாத நந்தி`` என உடம்போடு புணர்த்தமை பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது முதலடியோடு,
``மனத்தான் கண்ணி னகத்தான் மறு மாற்றத்திடையானே``1
``சிந்தையி னுள்ளுமென் சென்னியி னும்சேர
வந்தவர் வாழ்கஎன் றுந்தீ பற``2
என்பன முதலியவற்றை வைத்துக் காண்க. ``கதி என்பது ஞானத்தை உணர்தல் வடமொழி மதம்``3 என்பர் சிவஞான யோகிகள். `ஒண்ணாது` என்பது பன்மை யொருமை மயக்கம். `ஒண்ணாவே` எனப் பாடம் ஓதினுமாம்.
இதனால், திருவடி சூட்டி அருள் செய்யும் முறைமையது பெருமை அளவிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

எனது சென்னிமேல் தனது திருவடிகளைச்சூட்டி, அருளே எனக்கு வடிவாம்படிப்பார்த்து, அதனால், பின்பு பரம் பொருளை யான் பெறும்படி தந்தவரும், குருவடிவில் பலராலும் காணப் பட்ட ஞானத்தலைவரும், எங்கள் தலைவரும் ஆகிய நந்தி பெருமானை நான் எனது பிறவியின் வேர் அற்றொழியுமாறு அடைந்தேன்.

குறிப்புரை :

`அருள் ஆக நோக்கி` என ஆக்கம் வருவிக்க. ``பெரு வடிவு`` என்பதில் வடிவு - பொருள்;
``அந்தப் - பெருவடிவை யாரறிவார் பேசு``4
என்றதும் காண்க. ``பேர் நந்தி`` என்னும் இரு பெயரொட்டு அதனை உடையானைக் குறித்தது. ``கண்ட`` என்றது ``காணப்பட்ட`` என்றவாறு. ``எம்`` என்றது, ``நந்திகள் நால்வர்`` முதலியோரை உளப்படுத்து. ``அற்றிட`` என்பது காரியப் பொருளில் வந்தது கண்டுகொள்ளுதல், உணர்ந்துகொள்ளல் அஃது அடைக்கலமாக அடைதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. நான்காம் அடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், தம் ஆசிரியர் தமக்குத் திருவடி சூட்டி அருள் செய்த முறையும், அதனால் விளைந்த பயனும் கூறுமுகத்தால் தம் அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

``திருவடி ஞானம்`` நான்கையும் இரட்டுற மொழிந் து, `திருவடியால் விளைந்த ஞானம், திருவடியால் விளங்கிய ஞானம்` என உரைத்துக் கொள்க. முதற் பொருளில் திருவடியும், இரண்டாவது பொருளில் திருவடி திருவருளும் ஆம். மூன்றாம் அடியில், `மீட்கும்` என்பது பாடமாயின், `மலமாகிய சிறையினின்றும் மீட்கும்` என உரைக்க. இப்பொருட்டு, `மலச் சிறை` என்பது பின் முன்னாய் நின்றது என்க. திண் சித்தி - அழியாப் பேறு. முத்தி தருவதனை ``முத்தி`` எனப் பாற்பகுத்து ஓதினார்.
இதனால், திருவடி ஞானத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

பொழிப்புரை :

எம் குரவர் எம் தலைமேல் தம் திருவடியைச் சூட்டிய அந்த முறைமையைச் செய்யாவிடில் அவர் அருள்செய்த பின்பும் வினைகள் தோன்றி, முன்பு மயங்கியிருந்த உள்ளத்தை மீளவும் அப்பழக்கம் பற்றி மயக்கம் உறச்செய்யும். அதனால், பிறை முடித்த, பேரொளி வடிவினனாகிய சிவபெருமான், குருவாகி வந்து தனது திருவடியைச் சென்னி மேல் வைத்துததுபோலச் சிந்தையிலும் நீங்காது தங்குவித்தான்.

குறிப்புரை :

`சஞ்சிதம் தீக்கையாலும், பிராரத்தம் நுகர்ச்சியாலும் கெட, ஆகாமியம் ஞானத்தாலே கெட வேண்டுதலின், இவ்வாறு செய்தான்` என அருளிச்செய்தவாறு.

``என்ற வினைஉடலோ டேகும்; இடை ஏறுவினை தோன்றில் அருளே சுடும்`` 1
என்றது காண்க. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், திருவடி சூட்டல் தரிப்பித்தல்களின் இன்றியமை யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கழலார் கமலத் திருவடி யென்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.

பொழிப்புரை :

வெற்றியை யுடையனவும், தாமரை மலர்போல் வனவும் ஆகிய குருவின் திருவடி என்னும் நிழலை யான் அடையப் பெற்றேன். அதனால், நெடியோனாகிய மாயோனாலும் அறியப்படா தவனும், ஓங்கி வளர்கின்ற வேள்வித் தீயில் விளங்குபவனுமாகிய சிவபிரான், எனது உயிர்க் கூடாகிய உடம்பின் தன்மையையும் மாற்றி, எனது இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்குகின்றான்.

குறிப்புரை :

அஞ்ஞானத்தைப் போக்கும் வெற்றியைக் குறிக்க, ``கழல் ஆர்`` என்றும், ``அனைத்தெலும்புள் நெக ஆனந்தத் தேன் சொரிதலைக்3 குறிக்க, ``கமலம்`` என்றும், பிறவி வெப்பம் நீங்க அடையும் இடமாதல் தோன்ற ``நிழல்`` என்றும் கூறினார். `அறியாப் பிரான், அங்கியுட் பிரான்` எனத் தனித்தனி முடிக்க. அழல், `அழலுதல்` என முதனிலைத் தொழிற்பெயர். `அழலுதல்` என்பது முறைப்படி வளர்க்கப்பட்டு வளர்தலைக் குறித்தது. ``குழல்`` என்பது `நாளம்` என்னும் பொருட்டாய், அதன்மேல் உள்ள மலரைக்குறித்தது. `சேரும்` என்பது முற்று உடம்பின் தன்மையாவது மாயையின் காரியமாய் மயக்குதல்.
இதனால், திருவடிப் பேற்றால் சீவன் முத்தநிலை வருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

பொழிப்புரை :

ஆராயுமிடத்து, சிவனது திருவடியில் அறிவால் நிலைத்திருப்பவர் இந்நிலவுலகத்தில் மூவுலகையும் ஆளும் மன் னராய் இருந்து யாவர்க்கும் பெருந்தலைவராய் உள்ள மூம்மூர்த்திகள் தாமும் சிவனது ஏவலைச் செய்யும் சிற்றரசராய் நின்றே குற்றம் அற்று விளங்குகின்றனர். அதனால், சிவனடியைச் சேர்ந்தவர் அடையும் இன்பத்திற்கு அளவில்லை.

குறிப்புரை :

``அடிமன்னர்`` என்பதை முதலிலும் ``இன்பத்து அள வில்லை`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. ``அடிமன்னர்`` என்பதில் ``மன்னர்`` என்பது, `மன்னுதல் உடையவர்` எனப் பொருள் தந்து. மூன்றாம் அடியில் உள்ள ``முடிமன்னர்`` என்பது வினைத் தொகையாய், `மிகமேலே உள்ள தலைவர்` என்னும் பொருட் டாயிற்று. `தேவர்கள்` என்பது பாடம் அன்று. ``குற்றம்`` என்பது அதனால் விளையும் துன்பத்தின் மேல் நின்றது. இறுதியில் ஆதலால், என்பது எஞ்சிநின்றது. `இன்பத்துக்கு` என்பதில் குகரம் தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 13

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.

பொழிப்புரை :

என்னை, மயக்குவனவாயும் கொடியனவாயும் உள்ள ஐம்பொறி களின் வழிப்போகாமல், என் மனத்துள்ளே சிவனது திருவடிகளை வைத்தேன். அதனால், இணைத்து உழலுதற்கு ஏதுவாகிய இரு வினைகள் என்னும் புதரை அழித்து வேதமாகிய மரத்தின் உச்சிக் கொம்பில் உள்ள மெய்ப் பொருளாகிய தேனை அறிவினால் அடைந்து இன்புறுகின்றேன்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``புலன்`` என்றது பொறிகளை ``எய்த்தேன்`` என்பது முற்றெச்சம். ``மாற்றிட்டு`` என்பதில் இடு, துணைவினை. ``மெய்த்தேன்`` என்பது ஏகதேச உருவகம், ஈற்றடி இறுதியில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

பண் :

பாடல் எண் : 14

அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

பொழிப்புரை :

முற்காலத்து ஞானிகள் பலரும் இறைவன் திரு வடியை அடையவேண்டியே குருவின் திருவடியைத் தம் தலையில் வைத்து அங்ஙனம் நலம் பெற்றனர். அதனால், உலக இன்பத்தையே தருவதாகிய இந்தப் பழைய பௌதிக உடம்பை இகழ்ந்து ஒதுக்கும் அந்த உயர்ந்தோர் கூட்டத்தை யடைதற்குரிய நெறியைப் பற்றினவர்களது கொள்கையும் இதுவே.

குறிப்புரை :

``அடி சாரலாம்`` என்பதின் ஈற்றில் `என` என்பது எஞ்சி நின்றது. அண்ணல் - தலைவன்; ஞானத்தலைவன் ஞானாசிரியன். படி - உலகம். `பழ வடிவை எள்ளும் அக்குடியைச் சாரும் நெறி` என்க. அந்நெறி, மெய்ந்நெறியே. குடி, `குலம்` எனப்படும் அச் சொற்பற்றி, கூட்டத்தை, ``குடி`` என்றார். ``கொள்கை`` என்னும் எழுவாய்க்குரிய `இது` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றது, ஏகாரம், தேற்றம்.

பண் :

பாடல் எண் : 15

மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

தந்திரம் - நூல். ``தானம்`` என்றது அறத்தை. சுந்தரம் - அழகு. உடல் அழகும் ஒருபேறே என்பதை அது பேறுகள் பதினாறனுள் ஒன்றாகக் கூறப்படுதலோடு, ``திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்``1 என்பதனுள், ``உருவாக்கும்`` என்பதும் கூறப்பட் டமையான் அறிக. ``ஆவது`` என்பன பலவும் ஒற்றுமை பற்றி வந்த ஒருமை.
இறுதி நான்கு மந்திரங்களாலும், இவ்வதிகாரத்தில் `திருவடி எனப்பட்ட பொதுமையால் சிவனது திருவடிப் பேற்றினது சிறப்புக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே.

பொழிப்புரை :

ஞானம் கைவரப் பெற்றவன் அந்த ஞானத்தால் அறியும் பொருள் சிவமே யாகையால், அஃது ஒன்றே அவனுக்கு ஞேயப் பொருளாம். அந்தப் பொருள் ஆனந்தமே வடிவினது ஆகையால், என்றும் நீங்குதல் இல்லாத சிவானந்தத்தையுடைய அந்த ஞேயப்பொருளிலே ஞானி ஒரு பொழுதும் நீங்காதே நிற்பானாயின், அநாதி தொட்டு அவனைவிடாது சூழ்ந்து நிற்கமாட்டாவாய் அகன் றொழியும். அவை முற்ற அகன்றொழியாது ஒரோவொருகால் சிறிய வாய் வந்து சூழுமாயினும் அச்சூழல், அவனை முன்போல அஞ் ஞேயப் பொருளை மறந்தொழியும் நிலையை எய்துவிக்கமாட்டா. (ஏனெனில், சிவகுருவின் அருளைப் பெற்ற சிவஞானியின் ஞானத்தை அப்பாசங்கள் முன்போலத் திரிவு படுத்தி, `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கு விக்கமாட்டா ஆகலான்.) அவ்வாற்றால் பழக்கம்பற்றிச்சிறிதே தலைப்படுகின்ற அந்தச் செருக்கு ஞானத்தால் முற்றாது கழிய, ஞேயத்தில் நிலைத்து நிற்றல் உண்டாகும். அதனால் அத்தகைய சிவஞானிக்கு, அளவிற்பட்டு நீங்குதல் இல்லாது என்றும் உளதாகிய சிவானந்தம் நிலை பெற்றிருத்தல் கூடுவதாம்.

குறிப்புரை :

``நீங்காச் சிவானந்த ஞேயம்`` என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலான், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``நிற்க`` என்னும் எச்சம், விதித்தற் கருத்தன்று இயல்பு கூறியதே. `ஆங்காரம் நீக்கி` எனப் பிறவினையாகக் கூறாது. ``நீங்கி`` எனத் தன்வினையாகக் கூறியது அது பற்றியே. `நீங்கி`` என்பதை `நீங்க` எனத் திரிக்க. `அதன்கண் நிலை நிற்க` என உருபு விரித்துக் கொள்க. ``நீங்கா அமுதம்`` வெளிப்படை.
``சிவானந்த ஞேயம்`` என்றதனால், ``ஞேயமாவது சிவம்` என்பது போந்தது. போதரவே, ``நின்றிட, நிற்க`` என்பவற்றால், `நிற்றல் சிவஞானத்தால்` என ஞானமும், `நிற்பவன் அந்த ஞானத்தை யுடையவன்` என ஞாதுருவும் பெறப்பட்டு, `ஞாதுருதன்னையும், தனது ஞானத்தையும் சிறிதும் எண்ணாது` ஞேயம் ஒன்றையே அறிந்து அதனால் `அதனை அறிகின்றோம் என்ற அறிவும் நீங்கிய நிலையே ஆனந்த நிலையாம் என்பது விளங்கிற்று. இதனையே, `அதீத நிலை` என்றும், `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். இந்நிலையில் ஞாதுரு ஞானஞேயங்கள் இருந்தும் அவை அவற்றை அறிபவனுக்குப் புலனாகாமையால், இந்நிலையை, `திரிபுடி நீங்கிய நிலை` என்பர். அஃது அறியாது, `ஞாதுரு ஞானங்களை ஞேயத்தின் வேறுபட்ட பொருளாக உணர்தலே மயக்க உணர்வாகிய அஞ்ஞானம்` என்றும், `அங்ஙனம் உணராது அவை அவிச்சையால் ஞேயத்தின் வேறுபட்ட பொருள்போலத் தோன்றுகின்றன அவை உண்மையில் ஞேயமாகிய அதுவேயாம் என்று உணரப்பெறுதலே மெய்ஞ்ஞானம்` என்றும் கூறித் தமது அறிவின் நிலையைப் புலப்படுத்திக்கொள்வர் மாயாவாதிகள், அவர் தமது கூற்றால், பெறுவானையும், பேற்றையும் இழத்தல்தெளிவு. இனி, `ஞாதுரு ஞானங்களைப் பெத்தத்திற்போலவே முத்தியிலும் உணர்ந்து நிற்றலே ஆனந்தானுபவம்` என்போரும் இடையீடில்லாத முத்தி யின்பத்தினராகாது, இடையிடையே பெத்தத் துன்பத்தை உடையவராவர். இவற்றையே உமாபதி தேவர் தமது வினா வெண்பாவில், 1.
``காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``
என அருளிச்செய்தார். இதனுள் காட்டுவது, ஞானம். காண்பது - காணப்படுவது.
இதனால், அதீத நிலையாகிய முடிந்தநிலையில் உளவாகும் ஞாதுரு முதலிய மூன்றன் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.

பொழிப்புரை :

சிவஞானத்தால் சிவமாகிய ஞேயப் பொருளிலே அன்பையும், பின் அந்த ஞேயப்பொருளையும் அடைந்தோர் தம்மையும், தமது அறிவையும் ஆராய்கின்ற அச்செயலில் நிற்கும் அறிவை உடையவராகார். அதனால், அவர் ஞேயத்தை அடைந்து நிற்கும் நிலையில் ஞானம், ஞாதுரு, ஞேயம் என்னும் முப்பகுப்பு அவர்க்கு நீங்குவதாம். அது நீங்கவே, ஞேயம் ஒன்றிலேநிற்கும் ஞாதுருவுக்கு அந்த ஞேயப் பொருளிலே வீட்டின்பம் எய்துவதாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் இறுதியில், `அதனால், என்பது, `பறம்பிற் பாரி` என்பது போல நின்றது. `ஞாதுருவுக்கு` என்னும் நான்கனுருபும், அதன் பின், `அஞ் ஞேயத்திலே` என்னும் சுட்டும், தேற்றேகாரமும் தொகுத்தல் பெற்றன. மூன்றாம் அடியில் இடைநின்ற ஞேயம், `நேயம்` என்பதன் போலி அதுவும், பின்வந்த ஞேயஞம் இரண்டாவதன் செல்வெண்ணாய் நின்றன.
சிவஞானமாவது, சிவம் ஒன்றே மெய்ப்பொருள்` என உணரும் ஞானம், அதனானே சிவம் அறியப்பட. அவ் அறிவின் வழி அச்சிவத்தின் மாட்டு அவ்வறிவனுக்கு அன்பு மீதூரும். அது மீதூர்ந்தவழி அச் சிவத்தை யன்றி அவன் வேறொன்றையும் அறியானாவன். அங்ஙனம் ஆய வழி அச் சிவத்தினது ஆனந்தம் இடையீடின்றி எல்லையில்லாமல் பெருகிநிற்கும்` என்பதனை இம்மந்திரத்தில் வகுத்துக்கூறியவாறு,
``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``1 என்றார் மெய் கண்டதேவரும். `ஆய் அதனில்` என்பதில் `அதனில்` என்பது ``அத்தில்`` என மருவிநின்று. `அறிவறிவாரே` என்பது பாடமன்று.
இதனால், மேற்கூறிய, ``நீங்கா அமுதம் நிலைபெறும்`` நிலை கைவரும் முறைவகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்
தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடிச் சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

பொழிப்புரை :

`ஆன்மாவும், சிவமும்` எனப்பொருள் இரண்டாம். அவ்விரண்டையும் ஆன்மாவாகிய ஞாதா தனது ஞானத்தின்கண் வைத்து நன்கு காணுதல் வேண்டும். பின் அங்ஙனம் கண்டதன் பயனாக ஞாதா தானாகிய மலரைச் சிவனுக்கு அவனது அருபளாகிய திருவடியிலே சாத்திவிடுவானாயின், முதலில், `ஆன்மா, சிவம் எனப் பொருள் இரண்டுள்ளன` என உணர்ந்த உணர்வு நல்லதோர் உணர்வாய்ப் பயன் தரும்.

குறிப்புரை :

`பரமான்மாவை யன்றிச் சீவான்மா என்பதொன்று வேறில்லை` என்பாரை மறுத்தற்கும், `முத்தி நிலையில் பாசம் செயலற்று இருந்தும் இல்லாதனவாம்` என்பது உணர்த்தற்கும், ``தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்`` என்றாராகலின், இது, மேல், (... ... ...)
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்றதனோடு மாறுகொள்ளாமை அறிக. ஞாதா தன்னையும், சிவத்தையும் தன் அறிவில் வைத்துக் காணுதலாவது, சிவம் தானே விளங்கும் அறிவினதாய் அறிந்தும், தனது அறிவினுள் நின்று அறி வித்தும் நிற்றலையும், தான் அச்சிவம் அறிவித்தாலன்றி அறிய மாட்டாமையையும் உணர்ந்து, அதனானே, தான் அடிமையும், சிவம் தன்னை உடைப்பொருளாதலையும் தெளிதல். அத் தெளிவு உள தாகவே, ஞாதா தனக்கெனச் செயல் இன்மையை உணர்ந்து, தான் சிவனது உடைமையாயே நிற்பனாகலின், அதனை உருவக வகையால், ``தானென்ற பூவை அவனடி சாத்துதல்`` என்றார். இதனை, ``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்``1 என வேறோர் உருவகத்தால் உணர்த்தினார் திருவுந்தியார் ஆசிரியர். ``என்று, என்கை`` என்பன எண்ணிச் சொல்லுதலைக் குறித்தன. ``அன்றே`` என்பது தேற்றத்தின் கண் வந்தது. இங்ஙனமன்றி, ஏகாரத்தை ஈற்றசை யாக்கி, `திரிபுடி ஞானம் நில்லாது போவதாம்` எனவும் உரைப்பர்.
இதனால், ஞாதாவும் ஞேயம்போல என்றும் உள்பொருளே யாயினும், அவன் ஞேயத்தில் அடங்கியவழியே இன்பம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை :

எம் குரவராகிய நந்திபெருமான் என் மேல் வைத்த தமது அருளினால், முன்னே என்னைக் கட்டுட் படுத்து வைத்த முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி என்னை அவற்றினின்று வேறாக்கி வைத்து, என்னை யாவரும் `பெரியோன்` என்று புகழும் படிச் சிவ வியாபகத்தை என்பால் மேலிடுவித்துப் பின் உறுதியாக என்னைச் சிவமேயாகச் செய்து பிறவிக்கு அஞ்சும் எனது அச்சத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளினார்.

குறிப்புரை :

`அதனால், யான் இதுபொழுது ஞேயமேயாய் நிற்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். ஞேயமேயானபின் சொல்நிகழ வழியில்லையாதலின், இங்ஙனம் சொல் நிகழ்ந்தவாறு என்னை யெனின், அதுவும் அந்த ஞேயத்தது இயல்பாகிய அருளால், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``1 என்று எழுந்த உணர்வினா லேயாம் என்க. `வியாபகத்துவம்` என்பது ``வியாத்துவம்`` என மருவிற்று. `மேலிடுவித்து` என்பது தொகுத்தல் பெற்றது.
இதனால், ஞாதா ஞானத்தைப் பெற்று ஞேயத்து அழுந்தும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

பொழிப்புரை :

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

குறிப்புரை :

`போல` என்னும் செயவெனெச்சத்தது ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. அவ் எச்சத்திற்கு, `யான்` என்னும் எழுவாய் வருவிக்க. ``அறிவறியாமை`` என்பது முன்னர்ப் போந்ததனைச் சுட்டும் அளவாய் நின்றது. பேதித்தல் - வேறுபடுத்தல், நீக்குதல். தன்னை - சிவத்தை. ``சிவம்`` என்பது, சிவமாய் நின்ற நிலையைக் குறித்தது. அறிவித்தல், இங்கு அறியாமை புகாதவாறு காத்தல். `அங்ஙனம் காத்தலாலே யான் ஞேயத்தின் நீங்காதவனாயினேன்` என்பது கருத்து.
இதனால், `குருவருளில் உறைத்து நிற்றலாலே ஞேயத்தழுந்து தல் உண்டாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே.

பொழிப்புரை :

`எங்கள் குரவராகிய நந்தி பெருமான், கண் இன்றியே காண்கின்ற காட்சியையும், காது இன்றியே கேட்கின்ற கேள் வியையும், சித்தம் திரியாதே நுகர்கின்ற நுகர்ச்சியையும், கூடாமலே கூடி நிற்கின்ற கூட்டத்தையும், நாணாமலே நாணுகின்ற நாணத்தையும், நாதம் இன்றியே உணரும் உணர்வையும் காண்பாயாக`` என அணுகி வந்து காட்டி யருளினார்.

குறிப்புரை :

கண் முதலிய கருவிகளின் துணையின்றியே காட்சி முதலிய புணலுணர்வுகளையும் நாதத்தின் துணையின்றியே சவிகற்ப உணர்வையும், முன்பு வேறாய் நின்று பின்பு கூடாது இயல்பிலே இரண்டற நிற்கும் நிலை விளங்கப் பெறுதலாகிய புணர்ச்சியையும், முக்குணங்களும் மாறி மாறி வருதலால் சித்தம் திரிபெய்துதல் இன்றி என்றும் ஒருபடித்தாய் நின்று நுகரும் சிவானுபவத்தையும், பிறர்முன் இளிவந்து நின்று நாணுதலாகிய நாணமின்றி, முன்னை அறியா மையை நினைந்து வெள்கி விலாஇறச் சிரித்தலாகிய 1 நாணத்தையும் பெறுதல் சிவஞானம் பற்றுக்கோடாயவழிக் கிடைப்ப தாகலின், `அதனை அவ்வாற்றால் தந்தருளினார்` என்றவாறு. ``கேளாதே எல்லாம் கேட்டான்``2 என்னும் சிவனது இயல்பு அவனைச் சார்ந்தார்க்கும் உளதாதல் அறிக.
இதனால், சிவகுருவால் சிவஞானத்தைப் பெற்ற ஞாதுரு அந்த ஞானத்தால் ஞேயத்தை உணரும் முறை கூறப்பட்டது. இது துரிய நிலை.

பண் :

பாடல் எண் : 7

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.

பொழிப்புரை :

மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதிய தாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப் பட்டு முடியும்.,

குறிப்புரை :

மௌன நிலையாவது தற்போதம் சிறிதும் எழாத அதீத நிலையாம். திரிபுடி அற்ற நிலையும் இதுவேயாதல் அறிக.
``மோனம் என்பது ஞான வரம்பு``3 என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. பரசித்திகள் மூன்றாம் தந்திரத்திற் கூறப் பட்டன. ஊமை மொழி, பிரணவம். காரண நிலையது ஆதல் தோன்ற அஃது, `ஊமை மொழி` எனப்படுகின்றது. அதுவே நாதமாதல் அறிக. முற்றுதல் - முடிவுற்று நீங்குதல். இதுவும் பாச ஞானமாய்ப் பந்தமாத லின் நீங்குதற்குரியதாயிற்று. முன்னுதல் - நினைத்தல் சங்கற்பித்தல். தன்காரியம் தோன்ற நின்ற இதற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வரு விக்க. இவ்வாறன்றி, `முன்னப் படும்` எனச் செயப்பாட்டு வினை யாக்கி உரைத்தலுமாம். பின்னிரண்டடிகளில் ``வந்து`` என்பவற்றை `வர` எனத் திரிக்க.
இதனால், திரிபுடி நீங்கிய நிலையினது இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

பொழிப்புரை :

சிவ குருவின் திருவடிப் பேற்றால் எல்லாப் பொருள் களும் அற்றுச் `சிவஞாதா, சிவஞானம், சிவஞேயம்` என்னும் மூன்று பொருளிலே வந்து முடிந்த தன்மையை, `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` என்னும் மூன்று வகையில் இயங்கும் பிரணவாயுவை முறைப்படி அடக்குமாற்றால் ஞேயமாகிய ஒன்றில் அடங்கச் செய்தலால் விளைந்த ஆனந்தத்தால் திரிபுடியாகிய கட்டினை அறுத்தோர் அதன்பின் பிறந்தும், இறந்தும் வருதலைச் செய்யார் முத்தி பெறுவர் என்றதாம்.

குறிப்புரை :

`ஒண்குரு பாதத்தால்` என உருபு விரித்து. அத் தொடரை முதலிற் கூட்டி, `முடிந்ததை உய்த்த வத்து ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் பிறந்திறவார்`` என வினை முடிவு செய்க. முத்திரை - குறி பொருள். ``மூன்று`` இரண்டில் முன்னது ஞாதுரு முதலிய மூன்றையும், பின்னது இடைகலை முதலிய மூன்றையும் குறித்தன. நான்மடங்கா - ஒன்று நான்காக. அஃதாவது, பதினாறு மாத்திரையளவாகப் பூரித்ததை அறுபத்து நான்கு மாத்திரை யளவாகக் கும்பித்தல். இம்முறையில் ஞாதுரு முதலிய மூன்றையும் வத்துவின் கண் உய்த்தலாவது, இப்பிராணாயாமத்தால் ஞேயப் பொருளாகிய சிவத்தையே தியானித்து அதனில் ஒன்றி யிருத்தலாகிய சமாதி நிலையைப் பெறுதல். ``உய்த்த`` என்னும் பெயரெச்சம், ``வத்து`` என்னும் இடப்பெயர் கொண்டது. வத்து, பரவத்து பரம்பொருள். வத்துவினது ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் - பரம்பொருளாகிய சிவனது ஆனந்த மேலீட்டார் திரிபுடி ஞானத்தை அறுத்தோர். திரிபுடி ஞானமும் ஆனந்தானுபவத்திற்குத் தடையாகலின், ``பெத்தம்`` எனப்பட்டது. ``பிறந்திறவார்`` என்றது, `ஏனையோர் போலப் பிறப்பில் மீளாது, எவ்வாற்றானும் முத்தியைப் பெறுவர்` என்றதாம்.
இதனால், ஞாதுரு ஞான ஞேய வேறுபாடு நீங்குதற்கு யோகமும் தக்கதொரு சாதனமாதல் கூறப்பட்டது. `இவ்யோகம் உபாய நிட்டை` என்க.

பண் :

பாடல் எண் : 9

மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானம்
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

பொழிப்புரை :

மேலே கூறிவந்த ஞாதுரு முதலிய மூன்றன் இயல் புகளையும் சிவசத்தி இனிது விளங்கக் காட்ட அங்ஙனம் கண்ட உணர்வே ஞேயத்தைப் பற்றுதற்குரிய மேலானஞானம். அந்த ஞானத்தில் ஆரவாரித்து திருநடனத்தையுடைய சிவனே ஞேயம். அந்த ஞேயத்தில் அழுந்தித்தானும், தனது ஞானமும் தோன்றாது. முதற்பொருளின் இயல்பு முற்றும் தனது இயல்பாக விளங்கப் பெற்ற ஆன்மாவே ஞாதுரு.

குறிப்புரை :

`இங்ஙனம் முத்தி நிலையிலும் இம்மூன்றும் உண்மை யால், முத்தி என்பது பெறுவானும், பேறும் இல்லாத ஒன்றாகப் பிறர் கூறும் நிலைகள் அல்ல` என்றவாறு. எனவே திரிபுடி அற்ற நிலை என்பது, `அவை அறியப்படாதநிலை` எனப் பொருள்படுதலன்றி, `அவை இல்லாதொழியும் நிலை` என்றதாயிற்று. இஃது இவ்வதிகாரத்து முதற்கண் காட்டிய வினா வெண்பாவாலும் நன் கறியப்படும். சொரூபம் - இயல்பு. சிவசத்தியை, ``மிகு சத்தி`` என்றார். `மூன்றையும் மிகுசத்தி பாலித்த` என்க. ``பாலித்த`` என்னும் பெயரெச்சம், ``முத்திரை`` என்னும் செயப்படு பொருட் பெயர் கொண்டது. முத்திரை - குறி உணர்வு. `முத்திரையே பரஞானம்` என ஏகாரம் விரித்துமுடிக்க. `நட்டம்` என்றது அதனை உடைய பொருளை. `சொரூபனே ஞாதுருவன்` என ஏகாரத்தை மாற்றிக் கூட்டியுரைக்க. `ஞாதுரு` என்னும் வடசொல்லை. `ஞாதுரு வாம் தன்மை யுடையவன்` எனத் தமிழ் முறைப்பட ஓதினார்.
இதனால், ஞாதுரு ஞான ஞேயங்களது இயல்புகளும், அம் மூன்றும் என்றும் உள்ள பொருள்களாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.

பொழிப்புரை :

இறப்பும், பிறப்பும் ஆகிய இரண்டினின்றும் இயல் பாகவே நீங்கி, உயிர்களும் அவற்றினின்றும் நீங்குதற்குத் துறத்த லாகிய தவநெறியின் முறைமையைச் சொல்லியருளிய சுயஞ்சோதி யாகிய சிவனை ஒரு ஞான்றும் மறத்தல் இல்லாதவராய், வாயாலும் வாழ்த்தி நிற்பவர்கட்கு அவன் இன்ப உலகமாகிய தனது உலகத்தை வாழும் இடமாகக் காட்டியருளுவான்.

குறிப்புரை :

சிவன் பிறவாமை உரையாலும் கருதலாலும் அறியப் படுதலின் அதனையே முன்னர்க் கூறினார். செவ்வெண்ணே யன்றி உம்மை யெண்ணும் தொகை பெறுமாதலின், இனிது விளங்க, ``இருமையும் நீங்கி`` எனத் தொகைகொடுத்து ஓதினார். எனவே, ``இருமை`` என்பது எண்ணின்கண் வந்தது. `இருமையினும்` என ஐந்தாவது விரிக்க. சிவன் இருமையினும் நீங்கினமையை எடுத்தோதி யதனால், `உயிர்களும் அவற்றின் நீங்குதற்கு` என்பது பெறப்பட்டது. தவம் - தவமாகிய நெறி. உயிர்கள் வினைவழியே இயங்குவது அவ நெறியும், வினை நீங்குதற்குரிய வகையில் இயங்குவது தவநெறியு மாதலின், அவற்றுள் துறவு தவநெறியாதல் உணர்த்துவார், `துறக்கும் தவம்` என்றார். எனவே, துறத்தலையே `தவம்` என்றமையால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``கண்ட`` என்றது `தானே கண்ட` என்னும் பொருட்டாய், `பிறர்க்குச் சொன்ன` எனத்தன் காரியம் தோன்ற நின்றது. சொல்லியது வேதாகமங்கள் வாயிலாக என்க. `சோதிப் பிரான்` என்றதும் அவ்விரண்டும் பற்றி. எனவே, அவனல் லது பிறர் அதனை அறிவாரும், அறிவிப்பாரும் இல்லை என்க. மறப் பின்மை பிற பொருளை நினையாமே யாதலின், அது பற்றறுத்தலைக் குறித்தல் அறிக. வாய்மொழிதல் நினைவின் வழித்தாதல் வெளிப் படை. அறப் பதிபுண்ணியலோகம்; என்றது, சிவபுண்ணிய லோகத்தை என்னை?
``யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்`` 1
என்றமையால், துறந்தார் அடைவது பசு புண்ணியம் செய்வார். அடைதற்குரிய துறக்க லோகம் ஆகாமையின். ``அமரர் பிரான்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இதன்கண் ``பிரான்`` என்பது, ``அமரர்`` என்பார் முகமகனாக அங்ஙனம் கூறப்பட, உண்மை அமரன் சிவனேயாதல் விளக்கிநின்றது.
``அச்சுதன் அயன் அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமகனே. 2
என்ற கந்தபுராணத்தை நோக்குக.
இதனால், பிறவி நீங்கும் நெறி துறவேயாதலும், அதுவும் சிவநெறியின் பொதுவும், சிறப்பும் ஆகிய நூல்களிற் சொல்லப்பட்ட தேயாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்த மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

பொழிப்புரை :

ஆணவ மலம் பரிபாகம் எய்தாத பொழுது சத்தி நிபாதமும் வாராமையால் அம்மலம் பலமாயப் பொருள்களின்வழிப் பலவகை மயக்கத்தைச் செய்தலால் பிறந்தும், இறந்தும் உயிர்கள் தன்னை மறந்து நின்ற பொழுது அவற்றது அறிவினுள்ளே மறைந்து நின்றும், பின் அம் மலம் பரிபாகம் எய்தியபொழுது சத்திநிபாதம் வரு தலால் உயிர்கள் தன்னை நினைந்தவழி அச்சத்திநிபாத நிலை கட்கு ஏற்ப வெளி யிடத்தும், உள்ளே இதயத்தும் உருவம், அருவுருவம், அருவம் என்னும் தடத்தநிலைகளிலும், அறிவின்கண் சொரூப நிலை யிலும் முறையானே விளங்கிநிற்கின்ற சிவன் அச்சத்தி நிபாத நிலை கட்கு ஏற்பத்தோன்றும் துறவுணர்வின் அளவாக, முன்னர்ச் சிறிதாய்த் தோன்றிப் பின் பெரிதாய்ச் சுடர்விட்டு ஒளிர்கின்ற பேரொளி போல விளங்கிநிற்பன்.

குறிப்புரை :

பேதைமை, இங்கு மயக்க உணர்வு. இதனைத்தரும் ஆணவ சத்தி, `அதோநியாமிகாசத்தி` எனப்படும். இஃது உயிர் தோறும் ஒவ்வொன்றேயாயினும் அதற்கு வாயிலாய் உள்ள பொருள் களது பன்மை பற்றிப் பலவாயிற்று. ``பல்பேதைமையாலே`` என்பதை முதற்கண்வைத்து உரைக்க. ``மறந்த`` என்னும் பெயரெச்சம், ``இருள்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. `நீங்கச் சிறந்த` என்க. ``மறைந்து சிறந்த`` என்பதற்கு, `முன்னர் மறைந்து பின்னர்ச் சிறந்த` என உரைக்க, முன்னைநிலை மறத்தலாகவே, பின்னைநிலை நினைத்தலாயிற்று. ``சிறந்த`` என்றது, `படிமுறையான் ஓங்கி நின்ற` என்றவாறு. அருள் - அருட்சத்தி. ``அருள்சேர் பருவத்து`` என்பதை ``மறைந்து`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இதனானே, `முன்னைநிலை அருள்சேராப்பருவம்` என்பது போந்தது. `பருவத்து ஆம்` என இயையும். `ஆதல் துறந்த உயிர்க்கு` என்றதனால், அவ்விடத்துத் துறவுதானே உண்டாதல் பெறப் பட்டது. சிவன் மறைந்து நின்ற காலத்துப் பிறப்பிறப்பாய பெருந் துன்பம் உளதாதல் கூறவே, அவன் விளங்கிநின்ற காலத்துப் பேரின்பம் உளதாதல் விளங்கிற்று. `அது துறவால் வருவது` என்பதே இங்குக் கருதப்பட்டபொருள்.
``ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்;
ஆசை விடவிட ஆனந்த மாமே`` 1
என நாயனார் முதற்கண் அருளிச்செய்தமை காண்க.
இதனால் பற்றுள்ளம் - மலத்தாலும், சத்திநிபாதம் இன்மை யாலும் உளதாதலும், துறவுள்ளம் - மலபரிபாக சத்திநிபாதங்களால் உளதாதலும், அவ்விரண்டானும் முறையே பிறவித்துன்பமும், வீட்டின்பமும் உளவாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

பொழிப்புரை :

``அறவாழி யந்தணன்``1 என்றற் றொடக்கத் தனவாக நூல்களில், `பல வகை அறங்களையும் தனக்கு வடிவாக உடையன்` எனக் கூறப்படுகின்ற கடவுள், பிறப்பு இல்லாதவனும், அதனால், பற்றுச் செய்தற்குக் கிளைஞர் ஒருவரும் இல்லாதவனும், வாழும் இடம் காடாகவும், உண்ணும் உண் பிச்சையாகவும் உடைய வனுமாதலால் சிறந்த துறவியாய் உள்ள சிவனேயாவன். அதனால், அவன் துறவு பூண்டவர்களையே பிறவியைக் கடப்பித்து உய்விக் கின்ற பேரருளாளனுமாய் உள்ளான். இவற்றை அறிமின்கள்.

குறிப்புரை :

`அறவடிவானவன்` என்னும் பொருட்டாய்க் கடவுட்கு யாவரும் உடன்பட்டுக்கூறும் பொதுக் காரணப்பெயராய் ``அறவன்`` என்பது எழுவாயாய் நின்று சிவனைக் குறித்த ``துறவன்`` என்னும் சிறப்புக் காரணப் பெயராய பயனிலையைக் கொண்டது. பிறப்பிலி முதலிய நான்கும் சிவன் சிவன் சிறந்த துறவியாமாற்றை விளக்கி நின்றன. `சிவன் சிறந்ததுறவி யாதலின், சிறந்த துறவியரிடத்தே அருள் மிக உடையனாய் அவர்களை உய்விக்கின்றான்` என்றவாறு. இல்லறத் தவரும் அன்பு, பொறை, ஒப்புரவு, ஈகை முதலியவற்றை உடையரா யினும் பற்றறாமையின், எல்லா உயிர்கள்மேலும் அருளுடையராய்த் `தன்னுயிர் நீப்பினும் தான் பிறிது இன்னுயுர் நீக்காது`2 ஒழுகுதல் முதலியவற்றை உடையராக மாட்டாமையின், `அறவோர்` எனப் பெயர் பெறமாட்டார்கள். துறவியரே அந்நிலைக் கண் நிற்கவல்லராய் ``அற வோர்`` எனப் பெயர் பெற்று நிற்றலின், அவரே அறவாழியந்தணனாகிய இறைவனது அருட்குப் பெரிதும் உரியராகின்றனர் என்பது தோன்ற, இறைவனை, ``அறவன்`` எனப் பொதுவகையானும், ``துறவன்`` எனச் சிறப்பு வகையானும் கூறினார். ``உறைவது காட்டகம், உண்பது பிச்ை\\\\u2970?`` என்றவை, `உடுப்பது தோல், முடிப்பது சடை, பூசுவது சாம்பல்` முதலிய வற்றிற்குத் தோற்றுவாயாய் நின்றன. நிற்கவே, இவை பற்றிச் சிவனை இகழ்வோர் துறவாது பெருமையை அறியும் அறிவிலார் என்பது அறியப்படும். அறிவுடையார் இன்னோரன்னவற்றைப் புகழ்ந்து போற்றுதல் அறியத் தக்கது. ``துறவனும்`` என்னும் உம்மையை, ``பித்தன்`` என்பதனோடு கூட்டுக. ``பிறவி யறுத்திடும்`` என்னும் தொகைச்சொல் `உய்விக்கும்` என்னும் ஒருசொற் பொருட்டாய் , ``துறந் தவர்தம்மை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. பித்துப் போறலின் பேரருள். ``பித்து`` எனப்பட்டது. உய்வித்தற்குக் காரணத்தைக் குறித்து நிற்றலின், இது துறந்தார் மேலதாதல் அறியப்படும்.
இதனால், துறந்தோரே சிவனருட்கு உரியராதல் கூறப்பட்டது. இத்துறவு, ``தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணரும்``1 உணர்வால் வரும் அகத்துறவாதல் அன்றி, வாளா, மனை துறந்து. 2
``நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் 3
வருந்துதலாகிய புறத்துறவாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் பிறிது மொழிதல். இதன் நேர்பொருள் வெளிப்படை.)
இதன் குறிப்புப்பொருள்:- அறநெறியை வகுத்துணர்த்திய இறைவனே மறநெறியையும் வகுத்துணர்த்தினான். அதனால், அறநெறியின் வழுவியவழி மறநெறி உளதாய்த் துன்பம் விளைக்கும். ஆகவே, அறநெறியின் வழுவாது ஒழுக வல்லவர்கட்கு அந்நிலையில் மறநெறி தோன்றித் துன்பம் விளைக்க மாட்டாது.

குறிப்புரை :

`அந்நிலை துறவோர்க்கே முற்ற முடியும்; அதனால், துறவைப் பெறுக` என்பது கருத்து ``படைத்தான்`` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்று. முன்னதில் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது.
இதனால், துறவே துன்பம் துடைப்பாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.

பொழிப்புரை :

`தீயன ஆவனவும், நல்லன ஆவனவும் இவை இவை` எனக் குருவினிடத்துக் கேட்டுணர்ந்து` தீயவற்றினின்றும் விலகி வந்து சிவனது திருவடியைச் சேர்தற்குரிய தவத்தைச் செய்த நல்ல கோட் பாட்டை யுடையேன். அதனால் நான் ஐம்புல வேடர்கள் நினைத்து வந்து என்னைச் சூழ்ந்து நின்ற செயலுக்கு யாதும் கடவேனல்லேன்.

குறிப்புரை :

முதலடியை ``ஐவரும்`` என்பதொழித்து மூன்றாமடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. `குருவின்பால்` என்பது ஆற்றலால் வந்தது. ஐவர், குறிப்புருவகம், ``வளைந்தது`` என்பது, அச்செயற்கு நிமித்த மாயதன்மேல் நின்றது. அதுதான் துறவு வாராது பற்றினை மிகுவித்தல். ``அதற்கு யாதும் கடவேனலேன்`` என்றதனால், `அவரை வென் றொழிப்பேன்` என்றதாயிற்று. ``யானேதும் பிறப்பஞ்சேன் இறப்ப தனுக் கென்கடவேன்``1 என்றார் ஆளுடைய அடிகளும், கூடும் தவம் - கூடுதற்கு ஏதுவாகிய தவம். ஈற்றடியின் இறுதியில், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. `குருவின்பால் கேட்டு வந்து தவம் செய்த கொள்கையேன் ஆகலான் நான் கடவேனலேன்` என்றதனால், நிரம்பிய துறவுக்குத் தவமும், அத்தவத்திற்குக் குருவருளும் காரண மாதல் பெறப்பட்டது. இக்குரு கிரியாகுரு என்க.
இதனால் துறவு வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே.

பொழிப்புரை :

உழவன் உழவைச் செயதற் பொருட்டு மழை பெய்ய, அதன்பின் அவன் செய்த உழவினால் தோன்றி வளர்ந்து பூத்த குவளை மலரை அது களையாதலின் களைய வேண்டுவதாய் இருக்க, உழவன் தன் மனைவி முதலிய பெண்டிரது கண் போல உள்ளது என்று அதன்மேல் அன்புகொண்டு களையாமலே விடுகின்றான்.

குறிப்புரை :

`உலகப் பற்று அத்துணை வலிதாகின்றது` என்பது கருத்து. இங்ஙனங் கூறுதல் இலக்கிய வழக்காதலால், `உலகப் பற்றின் வலிமையை இலக்கியங்களும் இன்னோரன்னவாற்றால் விளக்கி, அதனை விடுமாறு உணர்த்துகின்றன. என்பதும் குறிப்பாயின. ``உழவு உழ`` என்பது `உழுதலைச் செய்ய` என்றவாறு. `உழவன் உழவு` என்பது காரகப்பொருட்டாய ஆறாவதன் தொகை. ``உழவினில்`` என ஐந்தனுருபாகிய இன் இல்லெனத் திரிந்தமை பிற்கால வழக்கு. ``உழவொழிந்தான்`` என்பதில், உழவு - களைதல்.
இதனால், `கற்றோராயின் உலகப் பற்றினை விடுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இம்மந்திரத்தினையும் பிறிது மொழிதலாகக் கொண்டு இடர்ப்பட்டுரைப்பர்.

பண் :

பாடல் எண் : 7

மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

பொழிப்புரை :

அநாதியே துறவனாய் நிற்கும் இறைவன் அத் தன்மையாலே ஒருவர் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளான். உலகருள் கூற்றுவன் வரும் நாளை யிலராயினா ர்க்கு அவன் தோழனாய் விளங்குகின்றான். ஒரு பொருளிலும் பற்று இல்லாதவனாகிய அவன் `அஞ்ஞானம்` என்னும் இருளின் நீங்கி னவர்க்கு அவன் சிவனாய் வெளிநிற்கின்றான். அதனால், உலகப் பற்றின் நீங்கினவர்க்கே தம்மை அவனது நிலையைப் பெறுதற்குத் தக்கவராகச் செய்து கொள்ளுதல் கூடும்.

குறிப்புரை :

``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``1 என்பதிற்போல, ``மேல்`` என்பது, `முற்காலத்தில் என்னும் பொருட்டாய், அநாதி நிலையை உணர்த்திற்று. `துறந்த அண்ணல்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது. `மேல் துறந்த` என உடம்பொடு புணர்த்ததனால், அதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `கூற்றுவன் வரும் நாள்` என்றது. `இறப்பு` என்ற வாறு, `தவத்தால் கூற்றங் குதித்தலும் கைகூடும்`2 ஆதலின், கூற்றுவன் நாள் துறந்தார். தவத்தவராயினர். இத்தவம் யோகம். இது ``கூற்றை யுதைக்கும் குறிப்பாதலும்``, இதனை யுடையார்க்குச் சிவன் தோழனா தலும் நினைக. `கருமை` என்பதன் திரிபாகிய `கார்` என்பது இருளைக் குறித்தது. யோகிகட்குத் தோழனாகின்ற சிவன் ஞானிகட்கு உண்மைச் சிவனாதல் அறிக. பார் - பூமி; உலகம் இஃது இதன்மேற் செய்யப்படும் பற்றின்மேல் நின்றது. கார்த்துறந்தார், பார்த்துறந்தார் என்பன ஐந்தா வதன் தொகை. பதம் - பக்குவம். இது, கூற்றுவன் நாள் துறத்தற்கும், சிவனை நண்பனாகவும், சிவனாகவும் பெறுதற்கும் ஏற்கு மாற்றால் பல திறத்ததாம். `இவை அனைத்திற்கும் துறவே காரணம்` என்றவாறு. இதனுள் இன எதுகை, மூன்றாமெழுத் தெதுகைவந்தன.
இதனால், துறவே வீட்டு நெறியின் பல நிலைகட்கும் முதலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது
போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.

பொழிப்புரை :

(இது பிசிச்செய்யுள்) நாகம், உயிர் ஐந்துபடம், ஐம் பொறிகள். போகம் - உணவு. நான்கு உணவு. அந்தக் கரணம் நான் கினும் நால்வகையாய்ப் புலப்படும் பொருள், முட்புற்று, துன்பம் நிறைந்த உடல். நிறைந்தது, மனநிறைவுபெற்றிருந்தது. ஆகம் - உடம்பு. பாம்பு தோலுரிப்பது ஆதலால், இரண்டுடம்பு உடையதாம். அவை இங்குத் தூலமும், சூக்குமமுமாகிய இரண்டுடம்புகளைக் குறித்தன. அவை படம்விரித்து ஆடல், ஐம்பொறிகளின்வழி ஐம்புலன் களையும் பொதுப்படக் கவர்தலும், பின் சிறப்பு வகையில் உணர்ந்து திரிபு எய்தலுமாம். அவ் ஆடலை ஒழிதல் ஐம்புல அவாவை அறுத் தலாம். ஐந்து படங்கள் இன்றி ஒருபடத்தையே எடுத்தலாவது, மெய்ப் பொருள் ஒன்றையே நோக்குதல். உடம்பே இடமாதல் - புற்றைவிட்டு நீங்கி அருள் தாரமாக நிற்றல்.

குறிப்புரை :

`நாகம் ஒன்று; அதற்குப் படம் ஐந்து; உணவு நான்காய் உள்ளது; முட்புற்றிலே பொருந்தி நிறைவு பெற்றிருந்தது. ஆயினும், பின்பு அது தனக்கு இயல்பாய் உள்ள இரண்டு உடம்புகளோடும் முன் சொன்ன ஐந்து படங்களையும் விரித்து ஆடுதலை ஒழிந்து ஒரு படத்தை எடுத்து வேறோர் உடம்பிடமாக நின்றது` எனப் பிசி வகைக்கு வினைமுடிவு காண்க.
`பசுத்துவம் உடைய உயிர் ஐம்பொறிகளின்வழி அலமந்து துன்பம் நிறைந்த உடம்பினுள் தங்கி வினைப்பயன்களை நுகர்ந்து களித்திருந்தது; ஆயினும், அஃது ஐம்புல அவாவை நீத்த பொழுது திருவருள் நாட்டம் ஒன்றே உடையதாய் அத் திருவருளே தாரமாகநின்று இன்புற்று` என்பது இதனுட் கூறப்பட்ட பொருள்.
``நாகமும்``என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``நாலது`` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. `இரண்டோடும்` என உருபு விரிக்க. `உடம்பே இடமாம்` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றி உரைக்க. அங்ஙனம் உரைக்கவே, `உடம்பு, அருளுடம்பு` என்பது பெறப்படும்.
இதனால், ஐம்புலப் பற்று அற்றவழியே துன்பம் நீங்கி, இன்பம் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றான் எனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

பொழிப்புரை :

துறந்தவரது குடிக்குத் தானே முதல் என நிற்கின்ற சிவபெருமான், `இன்ன வகையினன்` என ஒருவராலும் இனங்கண்டு கூறற்கு எளியனாய் நிற்பானல்லன். அதனால், அவன் அளவற்ற உயிர்களில் நிறைந்து அவையேயாயும் நிற்பன்; அவனது அருள் எவ்வாற்றால்வரும் என்பதையும் நாம் அறியமாட்டோம்.

குறிப்புரை :

குடிக்கு முதலாதலாவது, ``குடிமுழுதாண்டு, வாழ்வற வாழ்வித்து``1 அதனை `சிவக்குடி` என யாவரும் கூற வைத்தல் `சிவன் யாதொரு கூற்றினும் படாதவன்` என்பதை, ``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ``3 என்பது முதலியவற்றான் அறிக. ``சிவன்தான்`` என்பதில் ``தான்`` என்பது தேற்றப்பொருட்டாய், அனுவதித்தலை உணர்த்திற்று. `உயிர்கள் அளவற்றன ஆதலின், அவற்றிற்கு அவன் அருளும் முறைமைகளும் அளவில்லனவாய். நம்மால் அறியவாரா` என்பார் அவன் அளவற்ற உயிர்களில் அவை யேயாய்க் கலந்துநிற்றலை எடுத்தோதினார். இவ்விடத்து, `சிவன் தாள்` எனச் சத்திமேல் வைத்து ஓதுதற்கு இயைபின்மையின், அது பாட மாகாமை அறிக. நயம், `நயன்` எனப் போலியாற்று. `அருள்` என்பது இதன் பொருள். `சிவனது அருள் உயிர்கட்கு வருமாறு இவையே` என வரையறுக்க ஒண்ணாமையை,
``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா`` 1
எனத் திருஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். இங்ஙனம் கூறவே, `இல்லம் துறந்து, வேடம்பூண்டு ஓரிடத்தில் நில்லாது செல்வோரே துறந்தாராவர்` எனக்கொண்டு, `அவ்வாறில்லாத சிலரும் சிவனது அருள்பெற்றமை கேட்கப்படுதல் என்னை` என ஐயுற்றவர்க்கு, `புறத் துறவு இல்லாது அகத்துறவே உணராய்ப் பல்வேறு நிலையில் நிற்பார்க்கும் சிவன் பல்வேறு வகையாய் அருள்புரிதல் உண்டு; ஆயினும் அதுபற்றுதல் இன்றியாகாது` என ஐயம் அறுத்தவாறாயிற்று. `பற்றறாதவழிச் சிவனருள் கூடாது` என்றற்கே முதற்கண், ``அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரான்`` என அருளிச்செய்தார்.
``... ... ... ... அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்று விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றி``2
என்றது, நிறைவான துறவு நிலையை உணர்த்தியருளியவாறு. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், திருவருளுக்குரிய துறவு நிலை தோற்றத்தால் பல வகையினதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும்
ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஓர் ஆம்பற் குழலினுள்ளே, அங்கணத்தை (சலதாரையைத்) திறந்தாற்போலக் காணப்படும், ஒன்பது புழைகளும் அடங்கி அடைபட்டன. அதனால், மாலுமி வெளியே பார்ப்பதற்கு வேறு வழியில்லாமல், வேம்பினால் ஆகிய தன் மரக்கலத்தின்மேலே ஏறியபொழுது பாய்மரத்தைச் சுற்றிய தாமரைக்கொடி ஒன்று அம்மரக் கலத்தின் கூரையில் பூத்தலைக் கண்டான்.

குறிப்புரை :

``ஆம்பற் குழல்`` என்பதும், ``கூம்பு`` என்பதும் முதுகந் தண்டினையும், `ஒன்பது புழைகள்` என்பது உடம்பின் நவத் துவாரங் களையும், ``மீகாமன்`` என்பது உடம்மை நடத்தும் உயிரையும், `தாமரைக் கொடி` என்பது முதுகந்தண்டைச் சூழ்ந்துசெல்லும் சுழு முனா நாடியையும், `அதன்மலர்` என்பது ஆயிரஇதழ் மலரையும் கொள்ள நிற்றலின், இதுவும் பிசிச்செய்யுளாம். `பிராணாயாமத்தால் பிராணன் சுழுமுனையடியில் கும்பிக்கப்பட்ட பின் உடம்பின் நவத் துவாரங்களாலும் காற்றும், அதன்வழி மன உணர்வும் புறப்படா தொழிய அவ்வுணர்வு ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று, ஆயிர இதழில் சத்தியைக் கண்டது` என்பது இம்மந் திரத்தாற் குறிக்கப்பட்ட பொருள். இந்நிலை துறவர்க்கல்லது ஆகாது` என்பது உணர்த்தற் பொருட்டு இஃது இவ்வதிகாரத்துட் கூறப்பட்டது.
``பட்டது`` என்பது பன்மை ஒருமை மயக்கம். ``வேம்பு`` என்பது கருவியாகுபெயராய், `அம்மரத்தாற் செய்யப்பட்ட மரக்கலம்` எனப் பொருள்தந்தது. `உடல் வெறுக்கத்தக்கது` என்பதை உணர்த்த, சந்தனத்தாலாகிய மரக்கலம்` என்னாமல், `வேம்பினால் ஆகிய மரக்கலம்` என்றார்.
இதனால், துறவறம் யோகத்தைப் பயந்து, அது வழியாக ஞானத்தையும், பின் வீட்டையும், தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

பொழிப்புரை :

உலகப் பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழிந்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஒடுங்கி நிலைப்பெற்ற உயர்ந்தோரதுஉள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை ; அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை; எல்லாப் பற்றுக்களை யும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு துன்பமும் இல்லை; இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவ தொரு பயனும் இல்லை.

குறிப்புரை :

`உலகப் பற்றினின்றும் மீட்ட உள்ளத்தைப் பின் இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியே தவம்` என்பதனை, ``பற்றுவிட்டார்க்கு`` எனவும், ``ஒடுங்கி நிலை பெற்றஉள்ளம்`` எனவும் உடம்பொடு புணர்த்து, உணர்த்தினார். இதனானே மேலையதிகாரத்தோடு இதற்கு உளதாய இயைபு இனிது விளங்கும். உள்ளத்தைப் பற்றுக்களினின்றும் மீட்டு இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிற்கச்செய்யும் முயற்சி, தோன்றி நிகழும் காலத்தே `தவம்` எனவும், இனிது முற்றிய காலத்தே `ஞானம்` எனவும் நிற்கும். தவநிலையையே சிவநூல்கள், `சரியை, கிரியை, யோகம்` என மூன்றாகவும், `சிவ தன்மம், சிவ யோகம்` என ஓராற்றல் இரண்டாக வும் பகுத்துக்கூறுதல் வெளிப்படை. அவற்றின் இயல்பையெல்லாம் நாயனார் முன்னைத்தந்திரத்தில் இனிது விளங்க அருளிச் செய்தார். இங்கு அவை சிவகுருவைத் தலைப்பட வேண்டினார்க்கு இன்றி யமையாச் சிறப்பின் ஆதலையே குறிக்கின்றார்.
``நடுங்குவது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. ``இராப் பகல்`` என்றது உபலக்கணம். `நடுக்கமும், நமனும் இல்லாமை ஒடுங்கி நிலைபெற்றமையால்` என்பதும், `இடும்பை முதலியன இல்லாமை பற்று விட்டமையால்` என்பதும் குறிப்பால் தோன்ற வைத்தவாறு உணர்க.
இவற்றை, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ... ...
... ... உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவ தியாதொன்று மில்லை;
அஞ்ச வருவதும் இல்லை`` 3
``வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்
தண்கடலும்
மீனம் படிலென் இருசுடர் வீழிலென்
வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட
உத்தமர்க்கே`` l
``நாமர்க்குங் குடியல்லோம்; நமனை யஞ்சோம்``8 என்றாற் போலும் அனுபவமொழிகளான் அறிக. இம்மந்திரத்தின் ஈற்றடி.
`படும்பழி பாவம் பயமில்லை தானே` எனவும், `கடும்பசி யில்லை கற்றுணர்ந்தார்க்கே` எனவும் பாடம் வேறு வேறாகவும் ஓதப் படுகின்றது.
இதனால், `தவமாவது இது` என்பதும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

பொழிப்புரை :

நமது அரிய உயிருணர்வும், அவ்வுணர்விற்கு இன்றியமையாததாய் உள்ள உலகம் உண்டாகி நிற்பதும், அங்ஙனம் நிற்குங்கால் அதன்கண் நிகழற்பாலதாய செவ்விய பெரிய தவச் செய லின் சிறப்பும் ஆகிய யாவும் இறைவன் திருவருளை அடிநிலையாகக் கொண்டனவேயாம். அதனால், `இத்தவத்தன் இயல்பு இது` என்பதை யும் அவ்வருளைப் பெற்றவரல்லது பிறர் அறிய மாட்டார்.

குறிப்புரை :

``உயிர்`` என்றது அதன் உணர்வையேயாதல் அறிக. ``தோற்றம்`` என்றது, அதனபின்னதாகிய நிலையையும் உணர நின்றது. செவ்விய பெரிய தவமாவது வீடுபயக்கும் தவம். அஃது இறைவனை வழிபடுதலேயாம். `உண்மைத் தவமாவது இறை வழி பாடே என்பதை உணர்தலும் திருவருளின்றியாகாது` என்பது உணர்த்துகின்றவர், அதற்கு ஏதுவாக அனைத்தும் திருவருளை திருவருளை முதலாகக் கொண்டமையை முன்னர் உணர்த்தினார். திருவருளை முதலாகக் கொண்டவற்றை ஒற்றுமை பற்றி, ``திருவருள்`` என்றே கூறினார். `அது பெற்றவரே யல்லால்` என வேறு தொடராக்கி யுரைக்க. திருவருள் பெறாதவர் பிறவற்றையே `தவம்` என மயங்கி அல்லலுறுதலை நினைக.
இதனால், உண்மைத் தவம் உணர்தற்கரிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகியே மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

பொழிப்புரை :

உலகப் பித்துப் பலவற்றையும் கொண்டு உழலு கின்ற மக்கள் பிறவித் துன்பத்தைச் சிறிதும் எண்ணுதல் இல்லை; (அதனால் அவர் அதனை நீககிக் கொள்ள முயல்வதும் இல்லை) வீடு பேற்றோடு தாம் விரும்பும் இம்மை மறுமைச் செல்வங்களையும் பெறுவார். இறைவனை ஒருஞான்றும் மறவாது பெரிய தவச்செயலைச் செய்பவரே யாதலின், அவரே பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் பெருமையைப் பெற்றாருமாவர்.

குறிப்புரை :

இரண்டிடத்தும், ``பிறப்பு`` என்பது அதனால், விளையும் துன்பத்தைக் குறித்தது. `பித்து` என்பது `பிச்சு` எனப் போலி யாயிற்று. சிறப்பு - வீடு. மறத்தற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `மாதவமாவது இது` என்பது மேலே சொல்லப்பட்டது.
இதனால், `தவம் எல்லாப் பயனையும் தரும்` என்பதும், அதனை யொழிதல் மயக்கத்தினால் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

பொழிப்புரை :

பொறி புலன்களை அடக்கியிருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரி யோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத்தேவரேயாக எதிர் வரினும் அப் பெரி யோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.

குறிப்புரை :

`அத்தகையோர்க்கே தவம் முற்றுவது` என்றவாறு.
``தவமும் தவமுடையார்க் காகும்; அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது``*
எனத் திருவள்ளுவரும் கூறினாராகலின், இப் பெருந்தன்மை யாளர், முற்பிறப்பில் தவம்செய்து பயின்றவர் என்க. தவத்தில் நின்றோர் பலரை இந்திரன், மாயோன் முதலியோர் மயக்கத்துட்படுத்து அவரது தவங்களை நிலைகுலையச் செய்தமை புராண இதிகாசங்களுட் கேட்கப் படுதலை உட்கொண்டு இவ்வாறு கூறினாராயினும், `தவத்தை இடையறு விப்பது உண்மையில் அவரது முன்னை வினையே` என்பதும், `அத் தன்மையாவனவினை, பல பிறப்புக்களில் முதிர்ந்து வரும் தவத்தின்முன் தன் வலிமைகெட்டொழியும்` என்பதுமே கருத்தென்க.
இதனால், தவம் பல பிறவிகளில் தொடர்ந்து நிகழ்ந்தே முற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

பொழிப்புரை :

அறிவரால் சிறிதும் தாழ்த்தலின்றி மிகவிரைந்து சார்ந்து தொழப்படுவோனாகியசிவன், கண்ணுக்கும் புலனாகாது மறைந்திருப்போனாயினும் சிலருக்கு வெளிநிற் பவனாகின்றான். அச்சிலராவார் அரிய தவத்தவரே யாகலான், அவருக்கல்லது அவன் அணுகலாகாதவனாம்.

குறிப்புரை :

`ஆகவே, அத்தவத்தையே ஒருதலையாகச் செய்க` என்பது குறிப்பெச்சம் இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, அதன் பின் ஈற்றடியைக் கூட்டி, அதன்பின் முதலடியை, ``கண்ணுக்கும்`` என்னும் உம்மை சிறப்பு பலனைச் சென்று பற்றுதல் கண்ணுக்குள்ள சிறப்பாம்.
இதனால், தவமே இறைவனைக் காட்டுவதாதல் கூறப் பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் உள்ள, ``பின்னெய்த வைத்தோர்`` என்னும் மந்திரம் மேல், சிவ குரு தரிசன அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 6

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

பொழிப்புரை :

உலகில் நுண்ணறிவுமிக்க அமைச்சராய் விளங்கி னோரும், போரில் வலிமிக்கு விளங்கிய யானைகளது கூட்டமும், ஆணையால் உயர்ந்து அரசராய்ப் பொலிந்தோரும் பிறர்மேல் பகைத்துச் சென்ற போரில் இறந்தாராய் ஒழிய, அவர்கள் நடுவிலே, தவத்தவராயினார், சிவன் உயிர்கட்குப் பொருந்த வைத்துச் சொல்லிய ஒப்பற்ற உண்மை ஞானத்தையும், அதனால் அடையப்படும் வீடு பேறாகிய உறுதிப்பொருளையுமே பொருளாக நோக்கி, கண் இமைத்தலும், அழிதலும், இல்லாத அமரராய் விளங்கினார்.

குறிப்புரை :

திணை விராய் எண்ணிய வழி, ``பட்டார்``, என உயர் திணையான் முடிந்தது. `பட்டாராக அவர் நடுவே என ஒரு தொடர் படுத்துக. `தவம் ஒழிந்த பிற யாவும் அழிதலுடையனவே` என்பது முன்னிரண்டடிகளில் விளக்கப்பட்டது. இரண்டாமடி உயிரெதுகை.
இதனால், தவம் நிலைபேற்றைத் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.

பொழிப்புரை :

`நூல்களை ஓதுவதே பெருமை` எனக் கருதும் கருத்தை விடுத்து, நீவிர் ஒரு மாத்திரை காலமாயினும் அறிவை அக முகப்படுத்தி அறிவினுள் நிற்கும் அறிவை நோக்குங்கள்; அந்நோக்கம் பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணி அதனுள் நன்கு பதிந்தாற்போல நும் அறிவுனுள்ளே நன்கு பதிய தொன்று தொட்டு உடம்பைப் பிணித்து வருகின்ற பிறப்புச் சேயதாக உம்மை விட்டு ஓடிவிடும்.

குறிப்புரை :

``சதுர்`` என்றது, ஓதுவாரது கருத்தினைக் கொண்டு கூறியது. கல்விக்குப் பயன் ஒழுக்கமேயாதலின், அஃது இல்லாத கல்வியை விடுக என்றார். மறித்தல் - வெளிச்செல்லுதலைத் தடுத்தல். உள் - அறிவினுள். நோக்குதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது `போல்வதாக` எனப்பொருள்தரும் `போல` என்னும் செய வெனெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது இவ்வாறு உரையாது, `அகலவிட்டோட்டுமே` எனப்பாடம் ஓதிக்கொள்ளலுமாம். `தொன்று தொட்டு விடாது வரும் பிறவிக்குக் காரணம் அறிவைப் பண்டே பற்றியுள்ள இருள்மலமாகலின், அஃது அப்பார்வையால் அகலப் பிறவியும் அகலும்` என்றவாறு.
இதனால், தவம் மலத்தை நீக்குதல் வாயிலாகப் பிறவியை அறுத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெறுதற்பொருட்டே தவம் வேண்டப் படுகின்றதாதலின், அந்த ஞானப்பேறு கிடைத்துவிடின், அதன்பின் தவம் வேண்டாததாகும். ஆகவே, சிவயோக சிவபோக நிலையை எய்தினார்க்குத் தவம் கடப்பாடன்றாம். அதனால் சிலவிடத்து, `தவம் வேண்டா` எனச் சொல்லப்படும் சொல்லினது பொருளைப் பலர் அறியமாட்டார்.

குறிப்புரை :

``சமாதி`` என்றது பேற்றை. ``அச் சகமார்க்கம்`` எனச் சிறப்பித்துக் கூறினமையின், அது ஞானகுருவின் அருள்பெற்றபின் நிற்கும் சிவயோகமேயாயிற்று. இதற்குமுன் ``வேண்டா`` என்றது, ``நியதமன்று`` என்றவாறு. அஃதாவது சிவயோக சிவபோக நிலையிற் சென்றார்க்கு உலகியல் உணர்வு தோன்றாது மறைதலின், அவரது தவச் செயல்களும் ``உறங்கினோன்கை வெறும்பாக்கெனத் * தாமே தவிரு மாயின், அஃது அவர்க்குக் குற்றமாகாது என்பதாம். அங்ஙன மாகவே, `அத்தகை யோர் அந்நிலைகளில் நீங்காது நிற்கவே முயலல் வேண்டு மன்றி, மீளத் தவநிலையில் நிற்க முயலுதல் கூடாது` என்பதும், `மீட்சி தானே உள தாயபொழுதே மீள முன்போல உலகியல் வந்து சூழாத வாறு தவ நிலையில் நிற்றல் வேண்டும்` என்பதும் பெறப்பட்டன. இவையெல்லாம் குருவருள் பெற்றார்க்கன்றி அறியலாகாமையின், ``தவம் வேண்டா மாற்றந் தனையறியாரே`` எனக்கூறி, `அதனைக் குரு முகமாக அறிந்துகொள்க` எனக் குறிப்பால் முடித்தார். இறுதியிலுள்ள ``தவம் வேண்டா`` என்னும் தொடர் தன்னையே குறித்துநின்றது.
இதனால், தவம் ஞானத்திற்குச் சாதனமாவதன்றிச் சாத்திய மாகாமை கூறி, அதனது நிலை இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால்
காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால்
சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்
போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.

பொழிப்புரை :

அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாகிய சிவத்தைத் தன் அறிவினுள்ளே ஒருவன் தலைப்பட்டு விடுவானாயின் அதன்பின் அவன் ஞானநூல்களை ஓதவேண்டுவதில்லை. `பர காயம்` எனப்படும் திருவருளையே ஒருவன் தனக்கு நிலைக்களமாகக் கண்டுவிட்டால், பின்பு அவன் தான் அதனின், வேறாய் நின்று அதனைப் பெற அவாவ வேண்டுவதில்லை திருவருள் கண்ணாகச் சிவத்தை அறிந்து அதிலே அழுந்தி நிற்கும் நிலை ஒருவனுக்கு இப்பொழுது கூடுமாயின், அவன் இவ்வுடல் வீழ்ந்தொழிய வேண்டும் என இதனை வெறுக்க வேண்டுவதில்லை. சிவயோக நிலையினின்று மீளுதல் இல்லாதார்க்குப் புலன்கள் வந்து பற்றும் வழிகளாகிய பொறிகள் செயற்படாது கெட வேண்டுவதில்லை.

குறிப்புரை :

`சாத்தியம் கைவந்தபின் சாதனம்வேண்டா என்பதனைப் பல்லாற்றானும் வகுத்துக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 3

கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டா துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டா செயலற் றிருக்கிலே.

பொழிப்புரை :

உண்மை நூல்களின் கருத்தையறிந்து அதன்வழியே அடங்கி விட்டால் பின்பு அந்நூல்களைக் குரல் கம்ம ஓதவேண்டுவ தில்லை. சமாதி நிலை கைகூடிவிட்டால், துதித்தல் வேண்டுவதில்லை. அகத்தூய்மையாகிய பற்றறுதி உண்டாகி விட்டால், நீர் பலகால் மூழ்கல்l முதலிய புறத்தூய்மைக்குப் பெரிதும் முயலவேண்டுவ தில்லை. தன் முனைப்பு அற்று, எல்லாம் சிவச்செயலாக இருந்து விட்டால், ஒரு குறியைத் தியானிக்கும் தியானம் வேண்டுவதில்லை.

குறிப்புரை :

சத்தம் - இசை; பாட்டு; துதி.
இவ் இரு மந்திரங்களாலும் சாதனம் வேண்டாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார்
விளைவறி வார்விண் ணின்மிக் காரே.

பொழிப்புரை :

தொன்று தொட்டு அடிபட்டு வரும் தவம் வாய்மை, அறம் என்பவற்றைச் செய்வார் யாவரும், `அவற்றால் விளையும் பயன் இவை` என உணர்ந்தே செய்வர். அங்ஙனம் அறிந்து அவற்றைக் கடை போகச் செய்து அப்பயனைப் பெற்றவர்கள் விண், மண் என்னும் இரண்டுலகத்து உள்ளாரினும் மேம்பட்டவராவர்.

குறிப்புரை :

மெய்த்தவம் - நிட்காமியத்தவம் எனவும், மெய்யறம் - புகழ், கைம்மாறு முதலியவற்றை நோக்காது அன்பும், அருளும் பற்றியே செய்யப்படுவது எனவும் அறிக. `விளைவறிந்தே செய்வார், விளைவுபெற்று உய்வார்` என்றதனால்` அவ்விளைவை அறிந்து செய்து பெறமாட்டாதாரது சாதனங்கள் தவம் முதலியன ஆகாவாயின.
இதனால், சாத்தியத்தைத் தருவனவே சாதனங்களாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே.

பொழிப்புரை :

சிவனடியார்களோடுகூடி, அவர்கள் செய்யும் தவத்தையே நானும் செய்து, அதன் பயனாகச் சிவனது திருவடியைத் தரிசித்தேன்; பின் அத்திருவடியின்கீழ் இருத்தலாகிய வீடுபேற்றை அடைய விரும்பியே பின்னும் தவத்தைச் செய்து அதனை அடைந்தேன். இவ் இருதன்மைகளையும் நீக்கி வாளா மெய்வருந்தச் செய்யும் தவம் தவமாகாது, அவமாம். ஆகவே, உலகோர் பலர் இவ்இரண்டையும் விரும்பாது பிணங்குவாராயின், அவரை எத்தவத்தோர் என்பது!.

குறிப்புரை :

``சிவகதி கண்டேன்`` என்றதனால் குரை கழலும் அவனுடையதாயிற்று. அவ்விரண்டாலும் கூடுதற்கும், தேடுதற்கும் செயப்படுபொருள் இவையென்பது விளங்கிற்று. `இவை களைந்து செய்வது ஏதம்` என மாற்றுக. பிணங்குதல், இந்நெறியொடு மாறுபட்டுப் பிறவாறு செய்தல். ``எத் தவத்தோர்`` என்பது, `யாதொரு தவத்தையும் உடையரல்லர்` என்பது குறித்து நின்றது.
இதனால், `சிவநெறி வழிபடாது செய்வன தவமாகா` என அவைகளது இகழ்ச்சி கூறப்பட்டது. ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு``3 என்றார் ஔவையாரும்.

பண் :

பாடல் எண் : 6

மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

பொழிப்புரை :

மனத்தின்கண் நிறைந்து நிற்கின்ற ஆசையாகிய பெரிய எழுகடல்களைக் கையாலே நீந்திக் கடந்து தவத்தில் நிற்பவரே தமக்கு என்றும் சார்பாகும் மெய்ப்பொருளை அடைவர். அது மாட்டாதே தவம்செய்து பிறவியில் அழுந்துவோர் மேற்குறிய அத் தவத்தோரை வழிபடுவாராயின், அவர் சிவனைத் தம் கண்முன் னாகவே காணுதலும் கூடும்.

குறிப்புரை :

``மனத்துறை மாகடல் ஏழ்`` என்பது அற்புத உருவகமாய் ஆசையைக் குறித்தது. அதனை முற்றும் விடுத்த அருமை தோன்ற, ``கை நீந்தி`` என்றார். தவம் இன்னதென்பது மேற்கூறப்பட்ட மையின், வாளா, ``தவத்திடையாளர்`` எனவும் அஃதல்லாத பிற செயலாளரை ``பவத்திடையாளர்`` எனவும் கூறினார். ``அவர் பணி கேட்கின் முந்தலும் ஆம்`` என்றது, `கேளாதவழி முந்துதல் கூடாது` என வலியுறுத்தவாறு. இதனானும், முன்னை மந்திரத்தில் ``கூடி`` என்றது, `சிவனடியாரோடு கூடி` என்றதே எனல் விளங்கும். இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `மேற்கூறியதவமும் ஆசையறாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து
புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.

பொழிப்புரை :

உள்ளமாகிய உறையிலே உள்ள ஞானமாகிய வாளை உருவி ஐம்பொறிகளாகிய பசுக்களைப் பிணித்துள்ள ஆசை யாகிய கயிற்றை இரண்டு துண்டாய் அறும்படி அறுத்து அவைகளை ஏனைப் பசுக் கூட்டத்தினின்றும் நீக்கி, அப்பசுக்களோடு தாமும் கொல்லையிற் சென்று மேயாதபடி அவற்றை மடக்கி வைத்தல் ஒருவனுக்கு கூடுமாயின், தவத்தில் தோன்றுவனவாகிய ஆறு ஒளிகளும் அவனுக்கு உரிய ஒளிகளாகிப் பயன் தரும்.

குறிப்புரை :

`அது கூடாதபொழுது அவனது தவம் ஒளியில்லாது, இருளேயாம்` என்றபடி, ``மதிவாள்``, ஏகதேச உருவகம். ``புனத் திடைப் போகாமல்`` என்றதனால், ``அஞ்சு`` எனப்பட்டவை `பசு` என்பது விளங்கிற்று.
`பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐத்துண்டு``l என ஐம்பொறிகளைப் பசுக் களாகப் பின்னும் கூறுதல் காண்க. ஆறு ஒளி - ஆறு ஆதாரங்களில் தோன்று இறையொளி. `ஐம்புல ஆசையை அறுத்தவர்க்கே யோகமும் தவமாய்ப் பயன்படும்` என்பது உணர்த்தி, `அது செய்யாதாரது யோகம் தவமன்றாம்` என இகழ்ந்தவாறு.
இதனால், `மேற்கூறிய எழுகடல் போலும் ஆசை ஐம்பொறி களின்வழிப் பெருகித் துன்புறுத்துமாகலின், அவற்றை அடக்காதாரது தவம் தவமன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது. இதன் பின்னிரண்டடிகள்,
``நினைத்த இடத்தே நிலைபெறுமாகில்
அனைத்துயிர்க் கெல்லாம் அதிபதி யாமே``
என்பது பாடமாகவும் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 8

ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

பொழிப்புரை :

அவரவரது பரிபாகநிலைக்கு ஏற்ப அவரோடு இயைந்து நீங்காது நின்று அருளுபவனாகிய இறைவனை அவனுக்கு அடியராய் நின்று வாயார வாழ்த்துதல் அவன்பால் பக்தியை மிகுவிக்கும். ஐம்பொறி யடக்கல் முதலிய நோன்புச் செயல்கள் அவர் முனிவராம் நிலையை நிலைபெறுவிக்கும். இறைவனை அடிபணிந்து தொண்டுகள் பலவும் செய்து நிற்றல் முத்தியைத் தரும்.

குறிப்புரை :

அவை முத்திதரும் `என்றால், அவற்றுள் ஒன்றும் அன் றாகிய தவம் என்னதவம்` என்பது குறிப்பு. `அடியாராய்` என ஆக்கம் வருவிக்க. அடியாராதலாவது, ``பாரம் ஈசன் பணியலது ஒன்றிலர்`` 8 ஆதல், இறுதிக்கண் வைக்கற்பாலதாகிய இது செய்யுள் நோக்கி இடையில் வைக்கப்பட்டது. சத்து - நிலைபேறு ``தான்`` இரண்டும் அசை நிலைகள் `சத்தானவையாகவேச் செய்வது` என ஆக்கம் விரித்து உரைக்க. முனிவர் நிலை பலவாதல் பற்றி, ``சத்தானவையாக`` என்றார். தவம், இங்கு நோன்பு. அதுதான் செயல் வகையாற் பலவாயினும், `நோன்பு` என ஒன்றாய் அடங்கல் பற்றி ஒருமையாற் கூறினார்.
இதனால், `ஒத்து நின்றானை ஒருவாற்றானும் அணுகாத தவம் தவம் அன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

பொழிப்புரை :

தலையாய நூல்களை அறியும் முன் நான் சிவனுக் கென்று கருதியே பச்சிலையைக் கிள்ளியும், பூவைப் பறித்தும், சில மலர்களைத் தொடுத்தும் பணிபுரிந்தேன். ஆயினும் அவற்றால் யாதொரு பயனும் விளையக் காணவில்லை. அந்நூல்களை அறிந்த பின் சிவனிடத்தே என் உள்ளம் குழைந்து நின்றது அதனால், சிவத்தைத் தலைப்பட்ட அனுபவத்தை அடைந்தேன். ஆகவே, நான் தவத்தை உணர்ந்தவாறு அதுவேயாயிற்று.

குறிப்புரை :

`பச்சிலையும், பூவும் முதலியன கொண்டு வழி படுதலும் அறிவின்வழிப் பட்டபொழுதே உண்மைத் தவமாம்` என்பது இதனுட் கூறப்பட்டது.
``கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடையார்`` l
எனவும்
``பன்னும் பனுவற் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே`` 8
எனவும் வந்தனபோல்வன காண்க. இரண்டாம் அடியில், `தொடுத்து` என்பது, ``தொட்டு`` என மருவிநின்றது. `வளைத்துக்கட்டி` எனினுமாம். கொள்ளுதல் மேற்கொள்ளுதல். அதற்கு, `பணி` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. பலன், உலகியலின் வேறானதோர் அனுபவம். அஃது அறிவில்வழி உளதாகாது என்பதாம். தலைதொட்ட - தலை யாய இடத்தில் பொருந்திய. ஈற்றில் நின்ற தலை, சிவம். `அதுவே தவங்கண்டவாறு` என எழுவாய் வருவித்து முடிக்க.
இதனால், `மேற்குறித்த தவந்தானும் அறிவோடு கூடாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.

பொழிப்புரை :

விரிந்த சடைமுடியோடு பெரிய தவத்தை மேற் கொண்ட அடியவர்க்கு யாதொரு துன்பமும் வாராதவாறு இறைவன் தனது அருளை வழங்குவன். அவ்வருளைத் தெளியாது தமக்குத் துன்பம் வராமல் மணி மந்திர ஔடதங்களால் காப்புச் செய்து கொள்வ தில் காலம் போக்குவாரது தவ நிலையை நோக்கின் அது, துன்பம் வந்து அடையும் வழியைத் தாமே ஆக்கிக்கொள்வதோர் பித்தச் செயலாகவே முடியும்.

குறிப்புரை :

தவ ஒழுக்கத்தோடு தவவேடமும்பூண்டாரது நிலை சிறப்புடையதாகலின், அநநிலையுடையாரை, ``மாதவம் பற்றிய பத்தர்`` என்றார். இதனானே, ``சடை` என்பதில் தொக்குநின்ற உருபு, `அன்போடு வரவேற்றான்` என்பதுபோலத் தவம் மேற்கொள்ளு தலைச் சிறப்பித்து நின்றமை விளங்கும். மாதவம் பற்றிய பத்தர்க்கு இடர் அடையா வண்ணம் ஈசன் அருளுதலை, அருச்சுனற்குப் பன்றி யால் இடர் வாராவண்ணம் காக்கச் சென்றமை முதலிய வரலாறுகளும், நாவுக்கரசருக்குச் சமணர்கள் விளைத்த இடர்கள் அவரை யாதும் செய்யாதொழிந்தமைமுதலிய அனுபவங்களும் இனிது விளங்கும். விடர் - பிறப்பு; அது தவத்தின் வேறாய செயல்களை குறித்தது. ``அடை`` இரண்டும், `குடல் - குடர்` என்பதுபோல லகரத்திற்கு ரகரம் போலியாய் வந்தன. ``உடர்`` என்பதும் முதனிலைத் தொழிற் பெயர்கள், ``உடம்போடுயிரிடை நட்பு`` l என்பதில், நட்பு அல்லாத கூட்டத்திளை `நட்பு` என்றதுபோல, மெய்த்தவம் அல்லாத தவத் தினை ``மெய்த்தவம்`` என நகை உள்ளுறுத்துக் கூறினார். உன்மத்தம் போல்வதனை ``உன்மத்தம்`` என்றார்.
இதனால், `திருவருளைத் தெளியாது மணிமந்திர ஔடதங்களால் நலனடைய முயல்வாரது தவம் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :

நூல்முறைமையை அறியாதவர் பசி, வெயில், மழை முதலியவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு தவத்தைச் செய்யமாட்டாராய், இல்லறத்தார் இடும் சோறு முதலிய வற்றைப் பெற்றுப் பிழைத்தற்பொருட்டுத் துறவு நிலையிற்புகுந்து தவத்தவர்போல வேடம்பூண்டு திரிதல், யாற்றில் ஒருதுறைக்கண் முதலை இருத்தலைக் கண்டு அஞ்சி அதனைவிட்டு நீங்கி, மற்றொரு துறைக்கண் குட்டிகளை ஈன்ற கரடி அக்குட்டிகளோடு குளித்துக் கொண்டிருத்தலை யறியாது அதன்கண் இறங்கி அக்கரடியினிடத்து அகப்பட்டாற்போல்வதாம்.

குறிப்புரை :

யாறு வாழ்க்கைக்கும், முதலை உள்ள துறை தொழில் முயற்சியோடு கூடிய இல்லறத்திக்கும், ஈற்றுக் கரடியுள்ள துறை நோன்றலோடு கூடிய துறவு நிலைக்கும் உவமையாயினவாறு அறிக. நோற்றல் - நோன்றல்; பொறுத்தல்.
இதனால், `உள்ளத்தால் தவத்தவராகாது, புறத்தே வேட மாத்திரையால் தவத்தவர்போல நிற்பாரது போலித்தவம் முடிவில் துன்பமே பயத்தலல்லது, சிறிதும் இன்பம் பயலாது\\\' என அதனது இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும்
குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

பொழிப்புரை :

தவ உணர்வாகிய பழம் பழுத்தற்பொருட்டும், பின் அத்தவத்தால் அனுபவம் பெறுதலாம் அப்பழத்தை உண்ணுதலைச் செய்தற் பொருட்டும், பிராணவாயுவாகிய இளங்கன்று துள்ளிச் சென்று அப்பழம் வைக்கப்பட்டுள்ள மனமாகிய அந்தக்கோணியில் புகுந்து அப்பழத்தைத் தின்றுவிடாதபடி - அஃதாவது தவ உணர்வைப் போக்கிவிடாதபடி - அதனைப் புருவ நடுவாகிய கொட்டிலில் கட்டி வைக்க வல்லவர்க்கு யாதொரு மனக் குற்றமும் உண்டாகாது; உள்ள மாகிய வயலில் ஊன்றுதற்கு ஞானமாகிய ஒப்பற்ற வித்தும் கிடைக்கும்.

குறிப்புரை :

`பழம் பழுக்கின்றவாறும்\\\' என மாற்றி உரைக்க. \\\"ஆறு\\\" இரண்டிலும், `ஆற்றுக்கும்\\\' என நான்காவது விரிக்க. `புல்காது\\\' என்னும் எதிர்மறைவினையெச்சம் ஈறுகெட்டு நின்றது. \\\"இட\\\" என்றதனால், \\\"நெஞ்சம்\\\" என்பது நெஞ்சமாகிய வயல்\\\' எனக் குறிப் புருவகம் ஆயிற்று. ஆகவே, \\\"ஒன்று\\\" என்றது விதை யாயிற்று. `விதை யாவது ஞானமே\\\' என்பது ஆற்றலால் பெறப்பட்டது. \\\"ஒன்றும்\\\" என்னும் உம்மை சிறப்பும்மை. வீடுபெற உணரும் உணர்வு ஒன்றே சாதனநிலையில் `தவம்\\\' எனவும், சாத்திய நிலையில் `ஞானம்\\\' எனவும் நிற்கும் என்பது மேலும் குறிக்கப்பட்டது அதனால் தவம்பழமாகவும், ஞானம் அதனாற் கிடைக்கும் வித்தாகவும் உருவகிக்கப்பட்டன.
இதனால், பிராண வாயுவை அடக்கிப் புருவ நடுவில் நிறுத்தி மனோலயம் பெறமாட்டாது அவ்வாயுவும், மனமும் சென்றவாறே செலவிடுவாரது தவம் நிலையாது\\\' என அதனது இகழ்ச்சி அதன் எதிர்மறைக்கண் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

பொழிப்புரை :

ஒருவர்க்கு அவரது உள்ளம் சிவமேயானபொழுது அவருக்குச் செய்யக் கடவ தவம் யாதும் இல்லையாம். அவரைப் போல உள்ளம் சிவமாய்ச் சிவானந்தத்திலே திளைத்திருக்கப் பெற்றோரது உறவே அவருக்கு உண்டாகும்; பிறரது உறவுகள் யாவும் அற்றொழியும். சித்தியும், வீடுபேறும் அவர்க்கு எளிதின் உளவாம். ஆகையால், உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகும்.

குறிப்புரை :

\\\"ஆக\\\" என்னும் செயவெனெச்சம், `உண்ணப் பசி தீரும்\\\' என்பதுபோலக் காரணப் பொருளில் வந்தது. எனவே, அஃது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவர்க்கு உண்டாம்\\\' எனக் கோடற் பொருள் வருவிக்க. \\\"உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்\\\' 3 என்று அருளிச் செய்ததும் காண்க. \\\"சித்தி முத்தி\\\", உம்மைத் தொகை. மூன்றாம் அடியின் இறுதியில், `ஆகலான்\\\' என்பது எஞ்சி நின்றது. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை \\\"சிவமாதல்\\\" என்பதனோடு கூட்டியுரைக்க. அங்ஙனம் உரைக்கவே `அப்பயனைத் தாராத பிற தவங்கள் தவமல்ல\\\' என்பது போந்து, அதிகாரப் பொருளை உணர்த்துவதாம்.
இதனால், `சித்தத்தைச் சிவமாகச் செய்யம் பெருந் தவம் அல்லாத சிறு தவங்கள் தவமாகா\\\' என அவற்றது இகழ்ச்சி கூறப்பட்டது. இதனானே சித்தத்தைச் சிவமாகச் செய்வனயாவும் தவமாம் என்பதும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 1

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

பிரான் - சிவபிரான். நற்செல்வம் - அறத்தாற்றின் வரும் செல்வம். நன்ஞானம் - ஐயமும், திரிபும் இல்லாத மெய்ஞ் ஞானம். பெருந்தன்மை - வியாபக நிலை `தெய்வம்` என்றது, தெய்வ நிலையை. பெருந்தெய்வ நிலைகளாவன அயன் மால் உருத்திரரது நிலைகள். இதனானே, `மந்திகேசுரர், அணுசதாசிவர்` என்போரது நிலைகளும் உளவாதலை இனம் பற்றிக்கொள்க. ``அருளின்`` இரண்டும், `அருள் பண்ணினால்` என்றவாறு. ``அருள் உண்டெனின் உண்டு`` எனவும், ``அருள் பண்ணினால் உண்டு`` எனவும் கூறியதனால், `அவை இல்லையாயின் யாதும் இல்லையாம்` என்பது போந்தது,
``அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு``
-அற்புதத் திருவந்தாதி - 9
அம்மை திருமொழியும் காண்க.
இதனால், சிவன் அருள் செய்தவழியல்லது யாதும் உளதாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகர் திரிவார்
அவிழும் மனமும் ஆதி யருளும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.

பொழிப்புரை :

`சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் தமிழ்வழங்கும் மண்டலம் ஐந்திலும், மிகப் பரந்த ஞானத்தை உணர்த்துவார்போலப் பிற நாட்டவர் புகுந்து திரிவார்கள். ஆயினும், அம்மண்டலம் ஐந்திலும், `உயிர்களின் அன்பு, இறைவனது அருள்` என்னும் அவ்இரண்டுமே பொருளாக விளங்குகின்றன.

குறிப்புரை :

`ஆதலின், அவற்றை அறியாத பிறர் தமிழ் மண்டலத் தின் உள்ளார்க்கு உணர்த்தும் சீரிய ஞானம் யாது மில்லை` என்றபடி, பிறநாட்டில் காசுமீரம் போன்ற சிறிதிடத்தில் சைவ சித்தாந்தம் ஓரளவு வழங்கப்படுகின்றதாயினும், அது தொன்று தொட்டு இன்றும் இனிதே விளக்கமுற்று நிற்பது தமிழ்நாட்டிலேயாகலானும், சைவ சித்தாந்தம், உயிர்கள் தம் பரிபாகத்திற்கு ஏற்பச் செய்யும் அன்பிற்குத் தகச் சிவன் அவைகள் மாட்டு அருளுடையனாய் ஞானத்தை வழங் குவன்` என்பதை முடிநிலைப் பொருளாகக் கூறுத லானும், `அதனை யறியாத பிறநாட்டவர் தமிழ் நாட்டவர்க்கு உணர்த்த இருக்கும் தத்துவம் யாதுளது? என்றார். ``வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு`` l என்பது முதலிய பண்டை நிலைக்குப் பின் நாயனார் காலத்தில் தமிழ் மண்டலம் ஐந்தாயிற்று என்க.
இரண்டிடத்தும் ``ஐந்தும்`` என்பதில் ஐந்தன்கண்ணும் என உருபு விரித்து, ``திரிவார்`` என்பதனோடும் ``ஆம்`` என்பதனோடும் முடிக்க. அறிவு - ஞானம்; அஃது அருளேயாதல் அறிக. `ஆதி அருளும்` என்றே பாடம் ஓதுதலுமாம் ஈற்றடியையும், `தமிழ்மண் டலம் ஐந்தின் தத்துவ மாமே` ஓதுதல் சிறக்கும்.
இதனால், `இவ் அதிகாரப் பொருள் தமிழ் நாட்டிலே உள்ள இணையிலா உயர்பொருள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.

பொழிப்புரை :

உலக வாழ்க்கையில் `நல்வினை, தீவினை` என்று இருவினைகளின் தோற்றமும், பயனுமே உள்ளன. அத்தோற்றம், பயன் என்பவற்றை அவை நிகழுங்காலத்தே தெளிய அறிபவர் சில ஞானியரே, அதனால், நீவிர் அந்த ஞானியர் வழிநின்று அவற்றைக் கருதியுணர்ந்து, அவ்வினைகளையும் அடியோடு போக்கி, அவற் றிற்கு அப்பால் இறைவன் இருக்கின்ற இடத்தை ஆராய்ந்தறியுங்கள்.

குறிப்புரை :

`அப்பொழுது ஞானம் வரும்` என்பது குறிப்பெச்சம். [``புண்ணிய பாவம்`` எனத் தொகையாக ஓதுதல் பாடமாகாமை அறிக.] `வினை உளதாய்ப் பயன் தருதலை உலகர் உணரார்; ஆதலின், நீவிர் உலகர் வழியிற் செல்லாது, அறிவர் வழியிற் செல்க` என்பார், ``நண்ணும் பொழுதறிவார் சில ஞானிகள்`` என்றார். ``பொழு தறிவார்`` என்றது, `பொழுதிடத்தே நேர்பட அறிவார்` என்றவாறு.
``நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்`` 3
என்றவாறு, உலகியல் வினைவழிப்பட்டதேயாக, மெய்ந்நெறி அவ் வினை வழிக்கு அப்பாற்பட்டதாகலின் அதனை, ``அப்புறத்து அண்ணல் இருந்திடம்`` எனவும் ``அவ்விடமாவது அருளேயாகலின், அதனை ஆய்ந்துணர்ந்து அடைய ஞானம் வரும் என்பார், ஆய்ந்து கொளீரே`` எனவும் கூறினார். `இருந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. `இருப்பிடம்` என்பதும் பாடம். வினையை அடி யோடு அறுத்தலாவது. அதற்கு முதலாகிய விருப்பு வெறுப்புக்களை விடுதல். விருப்பு நல்வினைக்கண்ணும், வெறுப்பு, தீவினைக்கண்ணும் நிகழ்வன. அவ்விரண்டையும் விடுத்து இரண்டன் கண்ணும் ஒப்ப நிற்றலையே `இருவினை ஒப்பு` என்பர், இதனை,
``ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்``l என்றாற் போலும் இயல்புகளால் விளக்குவர். இருவினையொப்பின்றி இறைவனது அருளைப் பெறுதல் கூடாமை யின், ``இரண்டையும் வேரறுத்து - அண்ணல் இருந்திடம் ஆய்ந்து கொளீரே`` என்றார்.
இதனால், அருளுடைமை வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

பொழிப்புரை :

அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன், இருவினை நீங்கிய காலத்து அங்ஙனம் நீங்கப் பெற்றார்க்கு யாதானுமோராற்றல் கண்முன் நின்றே அருளை வழங் குவன். வினையில்லாத நன்மை பொருந்திய குழாத்தினர்க்கு உயிர்க் குயிராய் இருந்தே அருளை வழங்குவன். யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்அருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பன்; அப்பாதுகாப்பின் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.

குறிப்புரை :

நாற்றோள் முதலிய தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவை களைச் செய்தல் இரண்டையும், `முன்னின்று அருளுதல்` என ஒன்றாக அடக்கினார். இவை இரண்டும் முறையே `பிரளயாகலர், சகலர்` என்பவர்க்கு அருளும் முறையாக ஆகமங்கள் வரையறுக்கும். முடி தலுக்கு, `இருவினை` என்னும் எழுவாய் முன்னை மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `நன்மை` என்னும் பண்புப் பெயர் ஈறு குறைந்து நின்றது. மேல்வினை முடிகின்ற காலத்து என, அருளுக்கு வினை தடையாய் நிற்றலைக் கூறினமையின், நன்மை, அத்தடையில்லாமை யாயிற்று. `நன்னின்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. உலகு - உயிர்தொகுதி. `வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்` என்பது வெளிப்படை. நடுவுயிர் - உள்ளுயிர். `மூவகை உயிர்கட்கும் மூவகையாக அருளுதலை நியதமாக ஆகமங்கள் கூறுதல் பெரும்பான்மை பற்றி` என்பதையும் `சிறு பான்மை` கீழுள்ளார்க்கும் மேலுள்ளார்க்கு அருளுதல்போலவே அருளுதல் பரிபாக முதிர்ச்சியான் உண்டு` என்பதையும்,
``பண்டைநல் தவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன்`` *
என்னும் சிவஞான சித்தியாலும், அதற்குச் சிவாக்கிர யோகிகள், சிவஞான யோகிகள் இருவரும் உரைத்த உரைகளாலும் உணர்க.
``ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே``l எனச் சிறப்புப் பற்றிக் கூறப்பட்டதாயினும், உடலைப்புறந்தந்து காத்தல், உறுதி கூறி நிற்றல் என்னும் இரண்டும் முறையே தாயர்க்கும், தந்தையர்க்கும் எஞ்ஞான்றும் கடனாயிருத்தல் கண்கூடு. ஆயினும், `உடல் தாய் தந்தையர்க்கு அவற்றைக் கடைபோகச் செய்தல் கூடாதாயினும், உயிர்த்தாய் தந்தையாகிய இறைவன் தான் ஆட்கொண்ட உயிரைக் காத்தலை எஞ்ஞான்றும் கடனாகக் கொண்டிருக்கின்றான்` என்பார், ``பின்னின்று அருளும்`` என்றார். `பின்னும், என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
``அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதிஎனப் பெற்ற அணுவை - அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ டெவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்``
எனவும்,
``உடனா யிருக்கும் உருவுடைமை என்றும்
கடனாயிருக்கின்றான் காண்``3
எனவும் அருளிச்செய்தன காண்க. `முடிவில் பிறவியை நீக்கும்` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் உயிர்கட்கு அருள் செய்யுமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடிற் சிவலோக மாமே.

பொழிப்புரை :

சிவனது அருளாலே சிலர், தேவர் பதவியை வேண்டின் அவற்றையும் பெறுவர். சிலர் அதனால் மக்களுடம்பில் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர். எனினும், சிவனது அருளால் சிறப்பாக வினை நீக்கம் உண்டாதலால், சிவனது அருள் ஒருவர்க்கு உண்மையாகக் கூடிற்றுஎன்றால், அதன் பயனாக அவர்க்குச் சிவலோகமே கிடைக்கும்.

குறிப்புரை :

உம்மை சிறப்பும்மை. `சேரகிலாமையால்` என உருபு விரிக்க. `சிவனருள் கூரின்` என்பதும்பாடமாகலாம். ``கூறின்`` என்பது பாடமன்று.
இதனால், சிவனருளின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

பொழிப்புரை :

அற வடிவினனும், எம் தந்தையுமாகிய சிவபிரானது இரு திருவடிகளை அடைந்ததனாலே, இருளை நீக்கி ஒளிரும் விளக்குப்போல்வதாகிய ஞானம்எனக்கு உண்டாயிற்று. இல்லையேல் உண்டாக மாட்டாது. யாவராயினும் மக்களாய்ப் பிறப்பதோ அல்லது தேவராய்ப் பிறப்பதோ சிவனருள் வாய்க்கப் பெற்றபோதேயாம்.

குறிப்புரை :

`அவ்வாறான பொழுது ஞானியாதல் அவனது அருளின்றி எங்ஙனம் ஆகும்` என்பது கருத்து. `சிவன்` என்னும் சொல்தரும் பொருள்களுள், `தூயதன்மையன்* என்பதும் ஒன்றாக லால், ``புனிதன்`` என்றது `சிவன்` என்றவாறு. ``நண்ணி`` என்னும் செய்தெனெச்சத்தை, `நண்ண` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. விளக்கு, பயன் பற்றிவந்த உவமை. பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பொழிப்புரை :

`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.

குறிப்புரை :

காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

பொழிப்புரை :

`சரியை, கிரியை, யோகம்` என்னும் இவற்றின் பயனாகச் சிவலோகவாசிகளாய் அங்குத்தோன்றினும் அங்ஙனம் தோன்றினோர் ஞானத்தைப் பெறுதற்கு அவ்வுடம்பொடு நின்று அங்கே அரிய தவத்தைச் செய்ய விரும்புவர். அத்தவத்தின் பயனாக ஞானத்தைப் பெற்றுச் சிவனடியையும் சேர்வர், அதற்குச் சிவனது அருளை அவர் முன்னர்ப் பெறுதலுடையவரேயாவர்.

குறிப்புரை :

``ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
ஒடுங்குமபோ தான்முனிவா தொழியினுற்பவித்து
ஞானநெறியடைந்தவர் சிவனை``
எனவும்,
``அங்கு நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற்றாளே`` 8
எனவும் உணர்த்தினமை காண்க.
இதனால், `எத்தகையோரும் தவத்தால் சிவனருளைப் பெற்றே ஞானத்தைப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.

பொழிப்புரை :

சூரியனைக் கண்ட சூரியகாத்தக்கல் நெருப்பு வடிவாய் நெருப்பை உமிழும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போலும் நீர் வடிவாய் நீரை உமிழும். பெருமைபொருந்திய கண் ஆடி எதிர்ப்பட்ட வழியின் வடிவாம். சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவேயாம்.

குறிப்புரை :

`கண்ணோடு கூடியது` என்னும் பொருட்டாகிய `சாக்ஷி` என்னும் வடசொல், இங்கு `சாக்கி` எனத்தற்பவமாயிற்று. கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடியை `உபநேத்திரம்` என்பர், அது வழியை நன்கு தெரிவிப்பதாய் அவ்வழிவடிவாய் நிற்கும், சரி - வழி, `எரியின் வடிவாம்` என்பது பாடமன்று. ``எதிர் கொண்ட`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பலவறி சொல், அஃது உயிர்களைக் குறித்து நின்றது. ``ஈசன்`` எனப் பின்னர் வருகின்றமை யின், வாளா, `எதிர்கொண்டன` என்றார். இங்கும், `எரிகொண்ட` என்பது பாடமன்று. ஈசன் வடிவு அவன் அருளேயாதல் அறிக. இறைவனை உணரும் உயிர் அவனது அருள்வடிவாதல் இனிது விளங்குதற்குக் கதிரவனை எதிரேற்ற சூரிய காந்தக்கல் முதலியவற்றை ஒப்புமைக் கூட்டமாக உடன் வைத்து விளக்கினார்.
இதனால், இறைவனை அருளைப் பெற்ற உயிர் அடையும் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
வீடு மளவும் விடுகின் றிலேனே.

பொழிப்புரை :

நாட்டில் உள்ளார் பலரோடும், மற்றும் எனக்கு உற்றாராய அவரோடும் அளவளாவி, `எங்கள் சிவபெருமான் யாண்டுளன்` என்று தேடுவேன்; அத்தேடுதலுக்கு அவன் அகப்படா தொழியான் ஆதலின், அவன் அகப்பட்ட இடத்தில் `சிவபெருமான் கிடைத்தான்` என்று மகிழ்ந்து அவனோடு சேர்வன். சேர்ந்தபின் என் உயிர் பிறவிடத்தன்றி அவனது திருவடியிலே சென்று சேர்தற் பொருட்டு இந்த உடம்பு அழியும் வரையில் அவனை விடாதே பற்றிக்கிடப்பேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு செய்ம்மின்` என்பது குறிப்பெச்சம். ``நாடு`` என்றது அதில் உள்ளாரையும், ``உறவு`` என்றது அதனை உடையாரையும் குறித்தன. `நாட்டோடும், உறவோடும்` என உருபு விரிக்க. அளவளாவுதல் சிவன் இருக்குமிடத்தை அறிதற்கு.
``தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை`` **திருவாசகம் - திருச்சதகம் 31
எனவும்,
``வியந்தாங்கலறித் - தேடிற்றிலேன்
சிவன் எவ்விடத்தான் எவர்கண்டனர் என்று`` 3
எனவும் ஆளுடைய அடிகள் அருளிச்செய்தமையும் காண்க. ``சிவபெருமான்`` என்பதற்கு முன்னும், பின்னும் `கிடைப்பின், கிடைத்தான்` என்னும் சொற்கள் எஞ்சிநின்றன வீடுதற்கு வினைமுதல் உடலாதல் வெளிப்படை. உடம்பு உள்ள காலத்து அதன்வழிப்பட்டு வேறொன்றைப் பற்றியிருப்பின் அதுநீங்குங்காலத்து உயிர்முன் பற்றியிருந்த பொருளையே அடையுமாகலானும், அவ்வாறன்றி அக்காலத்தில் இறைவனையே பற்றியிருப்பின் அது நீங்கியபொழுது உயிர் அவனையே அடைந்து விடும் ஆகலானும், ``வீடு மளவும் விடுகின்ற லேனே`` என்றார். நாயனார் சிவனை விடாது பற்றி நின்றவரேயாதலின், ``தேடுவன்`` என்றும், ``தேடிக்கூடுவன்`` என்றும் கூறியது, `விட்டொழிவேமோ` என்னும் அச்சத்தால், `ஒருகால் விடநேரினும் மீளவும் விரையப் பற்றுவேன்` என்றதாக உரைக்க. என்னை?
``பெறாஅமை அஞ்சும்; பெறிற்பிரி வஞ்சும்;
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு``*
என்பது காதலர் இயல்பாதலின்.
இதனால், `சிவபிரானது திருவருளை வேண்டுவார் அஃது ஒன்றையே நாடி முயலுதலும், முயன்று பெறின் பின்னர் விடாமையும் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

பொழிப்புரை :

முயலாது வைத்து வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதித் தவத்தவரது பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகாள், உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீவிர் அதற்கியைய உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நிற்குமாற்றால் சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடைத்தாம்.

குறிப்புரை :

``ஆடம்பரங் கொண்டு`` என்பதை, ``வேடங்கள் கொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. `உண்பான்` என்பது தொழிற் பெயராய் நின்றது, `உண்பான் ஏன்` என்பது முதலிய வற்றிற்போல. `பயனாக` என்னும் ஆக்கச் சொல் எஞ்சி நின்றது. `பாடியும்` என உம்மையைத் தொகாது. ஓதுதல் கூடாமை அறிக.
இதனால், அகத்துணர்வோடு கூடாத வேடத்திற்குப் பயன் புறத்தாரை வெருட்டுதலல்லது பிறிதில்லை என்பதும், அதனால், அத்தன்மையான வேடத்தைக் கொள்ளுதல் அறியாமையாம் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``ஞானமில்லார் பூண்டு`` என்றதனால், வேடம் ஞான முடையர்க்குரிய வேடமாயிற்று. ``இந்த நாட்டிடை ஈனம் செய்து`` என்றது, `இழிசெயலுக்கு நாணுதலுடைய ஞானியர் மிக்கு வாழும் இந்தநாட்டின்கண் நாணுதல் சிறிதும் இன்றி இழிசெயல்கின்றவர்` எனப் பொருள் தந்தது. ``இந்தநாடு`` என்றது நமது பரத கண்டத்தை. `எப்புவியிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்` என ஒருசொல் வருவித்தே உரைக்க. புவி - நாடு. இஃது, ``இந்த நாட்டை`` எனச் சுட்டியதன் உட்பகுதியைக் குறித்தது. ஆன நலம் - உண்டான. நன்மை `ஈனர்` என்பதில், ஓர் அகரம் விரித்தல் பெற்றது. ``எப்புவி யிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்`` என்றதனால், `ஈனரது வேடத்தை அகற்றுவிக்கற்பாலார் அந்நாட்டில் வாழ்பவர்` என்பது போந்தது. இன்பம் தருவதனை, ``இன்பம்`` என்றார்.
``எவரேனும் தாமாக இலாடத் திட்ட`` என்னும் திருத் தாண்டகம் இதனோடு முரணாமை மேல் ``வேட நெறியில்லார்`` என்னும் மந்திரத்து உரையில் விளக்கப்பட்டது. இதன் மூன்றாம் அடியில், `மான நலங்கெடும்; வையகம் பஞ்சமாம்` என்பதும் பாடம்,
இதனால், போலி வேடத்தாரை அறிந்து அகற்றுதல் அறிவுடையார்க்குக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

பொழிப்புரை :

`ஒருநாட்டில் வாழும் மக்களிடத்துள்ள நற்செயல் தீச்செயல்களாற்றானே அந்த நாட்டிற்கு இன்பமும், துன்பமும் உளவாவன` என்று அறிந்தோர் கூறவர். ஆதலால், அரசனாவான் தனது நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல்களை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து தீச்செயல் செய்யாதவாறு மக்களைத் திருத்து வானாயின், அவனது நாடு துன்பமின்றி, இன்புற்று வாழும்.

குறிப்புரை :

`ஆதலால் அரசன் அதனை ஒருதலையாகக் செய்க` என்பது குறிப்பெச்சம். போலி வேடத்தாரை அகற்றுதல் சிறப்பாக அரசற்குக் கடமை என வலியுறுத்துவார். அரசு முறைமையைப் பொதுப்பட எடுத்தோதினார். முதல் தந்திரத்துள் இதனையே அரசு முறை பற்றிக் கூறுதற்கண் பல மந்திரங்களால் நாயனார் விரித் துரைத்தமை காண்க.
`நாடு நன்றாவதும், தீதாவதும் அதன்கண் வாழும் மக்களது இயல்பானே` என்பதை,
``நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே`` *
எனச் சங்கத்துச் சான்றோராய ஔவையாரும் கூறினார்.
இதனால், `போலி வேடம் தலைகாட்டாதபடி செய்தல் சிறப்பாக அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த
அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

பொழிப்புரை :

தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலர், ஒழுக்கத்தால் உயர்வெய்த நினையாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடை யராய் நிற்கமாட்டாமையின் அக்குலத்தன்மை அழியப்பெற்று அந்நிலை நீங்கிக் கடவுளராக வைத்துப் போற்றப்படும் மிக உயரந்த நிலையைப் பெறுதற் பொருட்டுத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். இவ் இரு சாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களையுச் செயது பாழ்பட்டுவரும் கொடியராயினார் நாட்டுவாழ் குலத்தோரி னின்றும் நீக்கப்பட்ட குலத்தராயினாற் போலவே அரசு முறைமையுள் நாட்டு வாழ்க்கையினின்றும் நீக்கப்பட்டனர்.

குறிப்புரை :

`வழிகுலத்தோர்` எனின் மோனை சிதைதலானும், பொருள் படாமையானும் அது பாடமாகாமை அறிக. ``தேவாக`` என்ற தனால், இது `பூசுரர்` எனப்படுவாரை உட்கொண்டு கூறிய தாயிற்று. பழிகுலம் - பழிக்கப்பட்டு வரும் குலம். இப்பழி, அருள் வடிவின வாகிய ஆக்களை அஞ்சாது கொல்லும் தொழிலுடைமை பற்றிப் பழிக்கப்படும் பழியாம். இக்குலத்தவரை, `சண்டாளர்` என்றலும் இது பற்றி `இவர் நாட்டில் ஏனையோரோடு கூடிவாழ்தற்கு உரியரல்லர்` என்பது பண்டை அரசுமுறை. அதனால், `அம்முறையே போலி வேடத்தார்க்கும் உரித்தாகற்பாலது` எனக் கூறுமுத்தால், போலி வேடம் பூண்பாரது கொடுமையை விளக்கினார்.
``நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்`` 3
என்றார் திருவள்ளுவ நாயனாரும், `கழிகுலத்தோர்கள் போல` என உவமஉருபு விரிக்க போலி வேடத்தால் உளவாகும்
தீமைகள் பல. அவற்றுள் உண்மை வேடத்தாரையும் உலகம் ஐயுறச் செய்தலும் அது காரணமாக உண்மை வேடம் தோன்றாது போதலும் தலையாய தீமைகள், `அதனால் அது குறிக்கொண்டு களையற்பாலது` என நாயனார் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றார்.
``இவ்வேடர் - கொத்துக் கெலாமோர்
கொடும்பழியைச் செய்தீரே``*
என்னும் கந்தபுராணச் செய்யுளில், ``இவ்வேடர் கொத்து`` என்றதற்கு, `இத் தவவேடம் உடையராது கூட்டம்` என்பதே உட்பொருளாக உரைப்பர். அதனானும் போலி வேடத்தது கொடுமையை உணர்ந்து கொள்க.
மூன்றாம் அடியை, `பாசண்டாரனார்` எனப்பாடம் ஓதி, `சமயத் தலைவர்போல வேடம் பூண்டும் அத்தலைமைக் குணம் இல ராய்ப் பழிக்கப்படும் கூட்டத்தினர் மக்களால் விலக்கப்பட்ட கூட்டத் தினராய், அரசனாலும் களையப்பட்டார்` என்று உரைத்தலும் ஆம்.
இதனால், `அரசன் தன் குடிகளில் உள்ளாரை இங்ஙனம் கழித்தல் கூடுமோ` என்னும் ஐயத்தையகற்றி, அது முறையாமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

பொழிப்புரை :

அகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. மூன்றாம் அடியை, `போகத்துட் போக்கியம்` என ஓதுதல் பாடமன்று. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை, ``ஞானத்தால்`` என்பதனோடு கூட்டுக. ``ஞானம்`` என்று இங்குத் தவ உணர்வை,
இதனால், போலி வேடம் மறுமையில் நரகம் பயத்தல் கூறப்பட்டது.
``தவம்மறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று`` l
என்றதனால், `போலி வேடம் புனைதல் உயிர்க்கொலை செய்த லோடொத்த தீவினைச் செயல்` எனத் திருவள்ளுவரும் குறிப்பால் உணர்த்தினார். அதனால், `அவர் நரகம் புகுதல் அவர்க்கும் உடன் பாடு` என்பது பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 6

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே.

பொழிப்புரை :

சிலர் தொழில் செய்யாது மடிந்திருந்து வயிறு வளர்க்கக் கருதியே பொய்யாகத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். (`அவர் இல்வாழ்வாரை மருட்டியும், வெருட்டியும், ழிந்த பிச்சையை, நீக்காது ஏற்று உண்டு வாழ்வர்.) மெய்யாகவே தவ வேடத்தைப் பூண்பவர் இல்வாழ்வார் அன்போடு அழைத்து இடும் உயரிய பிச்சையையே ஏற்பர். (இவையும் அவ்இருசாராரையும் அறிதற்குக் குறியாம்.) தோற்றத்தில் பொய்வேடமும் மெய்வேடம் போலவே பூணப்பட்டாலும், உணர்வோடு கூடாத பொய் வேடம் அவர்க்கு உய்தற்கு ஏதுவாய வேடமாகாது கெடுதற்கு ஏதுவாய வேடமாக,) தவத்தினது பெருமையை உணர்ந்து அதனைப் பூண்டு நிற்போர்க்கே அஃது அவர் உய்தற்கு ஏதுவான வேடமாகும்.

குறிப்புரை :

மிகு பிச்சை - உயர்வுடையதாய பிச்சை உயர்வு அன்பொடு கூடிநிற்றல். `மெய்வேடம் பூண்பார் கொள்ளும் பிசை உயர் பிச்ை\\\\u2970?` எனவே, `பொய் வேடம் பூண்பார் கொள்ளும் பிச்சை இழி பிச்ை\\\\u2970?` என்பது போந்தது. `மெய் வேடம் பூண்டார் இல்வாழ்வார் வருந்தாது மகிழ்ந்து இடக் கொள்ளும் பிச்சை. வண்டு, மலர் வருந்தாது அதனிடத்துள்ள தேனை உண்டல் போல்வது` என்றற்கு அதனை, `மாதூகரி பிச்ை\\\\u2970?` என்பர் வடநூலார். ``பூணினும்`` என்பது `பூணப்பட்டாலும்` எனச்செயப்பாட்டு வினைப்பொருள் தந்தது. இனி, `பொய்வேடத்தை` என இரண்டாவது விரிப்பினுமாம். `அறிந்தோர்க்கே உய்வேடமாம்` என்றதனால், `அறியாத பொய் வேடத்தார்க்கு அஃது உய்வேடமாகாது, கெடுவேடமாம்` என்பது விளங்கிற்று. ``உய்வேடம்`` என்பதற்கு, `அப்பொய்வேடம் ஒழிதற் குரிய வேடமாம்` என்றுரைப்பினுமாம். ``உணர்ந்தறிந்தோர்`` என்ற ஒருபொருட் பன்மொழிகள் அவற்றதுகாரியமாகிய மெய் வேடத்தினையும், அதற்கேற்ற ஒழுக்கத்தையும் குறித்தன.
இதனால், `போலிவேடமும் உண்மை வேடத்தோடு ஒத்துத் தோன்றினும், செயலாலும், பயனாலும் அவை தம்மில் பெரிதும் வேறுபட்டனவாம்` என்பது கூறுமுகத்தால், போலிவேடம் தவ வேடமாகாது அவவேடமாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தவமிக் கவரே தலையாய வேடர்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.

பொழிப்புரை :

அகத்துத் தவ உணர்வு மிகுந்தவரே புற வேடத்தால் உயர்த்துக் கூறப்படுவர். அகத்து அவ்வுணர்வில்லாது உலகியல் உணர்வு மிகுந்தோர் தவவேடம் புனையின் `உயிர் கொலையை மிகச் செய்யும் வேடர்` எனப் பொருள் படுமாறு இருபொருட் சொல்லாக `வேடர்` எனச் சொல்லப்படுவர். அவர் வேட மாத்திரையால் தவத்தோர் ஆகார் ஆதலின், தவ உணர்வுமிகுந்தவர்க்கல்லது, தவ வேடத்தைத் தாங்கிநிற்றல் பொருந்தாது,

குறிப்புரை :

``தலையான வேடர்`` என்றாராயினும், `வேடத்தால் தலையானவர்` என்றலே கருத்தாதல் அறிக.`தவ உணர்வு இல்லாதார் தவ வேடம் புனையின் இகழப்படுவர்` என்பது இரண்டாம் அடியில் கூறப்பட்டது, மூன்றாம் அடியில், `வேடத்தால்` என உருபு விரிக்க. ``ஆகார்`` என்பதற்குமுன் `தவத்தோர்` என்பதும், பின் `ஆகலான்` என்பதும் எஞ்சிநின்றன.
இதனால், `தவவேடம் தவ உணர்வு உடையோர்க்கே உரியது` என்பது, `அதனைத் தாங்குதல் அவர்க்கு மிக்க சிறப்பைத்தரும்` என்பதும் கூறப்பட்டன. இதனுள் ஈரிடத்தும் `தவத்தோர்` என்னாது, ``தவம்மிக்கவர்`` என்றே அருளிச் செய்த குறிப்பு நோக்கற்பாலது.

பண் :

பாடல் எண் : 2

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்காம் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

பொழிப்புரை :

தவவேட்கையோர் யாவர்க்கும் முதற்சாதனமாவது திருநீறணிதல். சிவநூல் கற்பிக்கும் ஆசிரியர்க்கு அதனோடு காதில் அணியப்படுகின்ற செப்புக் குழையும், செம்பை இடையிட்டுக் கோத்த உருத்திராக்க மாலையும் வேடங்களாம். சிவயோகிக்குரிய வேடத்தை ஆராயுமிடத்துச் சிவனிடத்துக் காணப்படும்` கோலங்கள் பலவுமாம்.

குறிப்புரை :

அவை வருகின்ற மந்திரத்தில் கூறப்படும். `ஆதியில் சாதனம் பூதி அணிவது` என மாற்றி யுரைக்க. `ஓதியவர்`` என்பது, `பிறரை ஓதுவிக்கும் ஆற்றலுடையார்` என்பது உணர்த்திநின்றது, ``சிவயோகி சாதனம் தேரில் உருத்திர சாதனம்` என்க.
இதனால், `பொதுத் தவ வேடமும், ஒருசார்ச் சிறப்புத் தவ வேடமும் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாகற்றுச் சுற்றம் சடையதொன்
றாகத்து நீறணி அங்கம் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

பொழிப்புரை :

சிவயோகிக்கு அணியப்படும் பொருள்களாவன, அரையிற் கட்டும் கீளோடு கூடிய கோவணம் உமைக்குப் பாகம் இல்லாமல் ஒரு சடையால் சுற்றிக் கட்டப்படும் சடைமுடி, உடம்பு முழுவதும் முற்றுப் பூசிய திருநீறு, வேண்டும் பொழுது எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொள்ளுதற்கும், தன்னை வனங்கினார்க்குக் கொடுத்தற்கும் திருநீறு வைக்கப்பட்ட பொக்கணம் அல்லது பை, பிரம கபாலத்தை நினைப்பிக்கும் பிச்சைப் பாத்திரம், திருக்கையில் பிடிக்கும் மாத்திரைக் கோல் அல்லது பிரம்பு என்னும் இவைகளாம்.

குறிப்புரை :

அது - அவ்வேடம். பின்வரும் பொருள்கள் பலவும் `வேடம்` என ஒன்றாக வைத்துச் சுட்டப்பட்டன. `பாகம் அற்று` என்பது, `பாகற்று` எனக் குறைந்து நின்றது, மேல், ``உருத்திர சாதனம்`` என்றது பற்றிச் சிவன், ``மதுவிரிக் கொன்றை துன்று சடைபாகம், மாதர் குழல் பாகம்`` ஆதல்3 கொள்ளப்படாது, சடை ஒன்றுமே கொள்ளப் படும் என்றற்கு, `தோகைக்குப் பாகமற்றுச் சுற்றும் சடை ஒன்று` என்றார். இதனானே, சிவயோகி ஏனை உலக யோகிபோலத் துணைவி யோடிருத்தல் கூடாமை குறிக்கப்பட்டது. ``ஆகத்து நீறு`` என முன்னர்ப் போந்ததனைப் பெயர்த்தும் கூறினமையின் உடம்பு முழுதும் பூசிய நீறு என்பது போந்தது.``அணி`` என்பது, `அணிகின்ற, அணி விக்கின்ற` என, ``இருவயினிலையும் பொருட்டாய்`` 8 நின்றது, `அதனை அணி அங்கம்` என்க. சாங்கமாகிய பொக்கணம், திருநீற்றுப் பை இவற்றை ``அங்கம்`` என்றது பான்மை வழக்கு. `ஷ்ரீஹஸ்தம்` என்னும் ஆரியச்சொல், `சீகத்தம்` எனத் தற்பவமாயிற்று.
இதனால், `சிவயோகிக்குரிய தவ வேடம் இவை` என்பது கூறப்பட்டது. இதனை,
``சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம்சூழ் சடைவெண் பொத்திய கோலத்தினீர்`` l
என்பதனோடு வைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 4

காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.

பொழிப்புரை :

காதில் அணியப்படும் குண்டலம், உருத்திராக்க மாலை, நல்ல ஒலி உண்டாக வாய்வைத்து ஊதுகின்ற திருச்சங்கு, குண்டலத்தினும் உயர்ந்ததாகிய ஆறு கட்டி, திருவோடு, சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தவச் சாலை, பாதுகை, யோகம் முடிதற்குரிய இருக்கை, குற்றமற்ற யோக பட்டம், யோக தண்டம் என்னும் பத்தும் தவத்தோர்க்குரிய வேடங்களாம்.

குறிப்புரை :

பொதுப்படக் கூறியதனால், `இவைகளை அவரவர் ஏற்ற பெற்றியாற் கொள்வர்` என்பது கருத்து. தவச்சாலையும் உபாங்கமாய்த் தவவேடமாதல் குறிக்கப்பட்டது.
இதனால், தவ வேடமாவன பலவும் தொகுத்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 1

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

பொழிப்புரை :

யாவரேனும் எலும்புக் கூட்டைத் தோளிலே கொள்ளும் சிவபெருமான் பூசுவதும், அணிந்தோர் யாவர்க்கும் கவசமாய் நிற்பதும் ஆகிய திருநீற்றை அதன் வெள்ளொளி மிக விளங் குமாறு பூசி மகிழ்ச்சியுறுவராயின், அவரிடத்து வினைகள் தங்கியிரா. சிவகதி கூடும். சிவனது அழகிய திருவடியையும் அவர் அடைவர்.

குறிப்புரை :

``கங்காளன் பூசும்`` என்றது, `எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பினது. சிவநெறியாளர்க்குத் திருநீறே கவசமும், திருவைந் தெழுத்தே அதிதிரமுமாதலை,
``வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே`` *
என ஞானசம்பந்தரும் குறிப்பால் அருளிச் செய்தமை காண்க. இக் கவசமும், அத்திரமும் வினையாகிய பகை வந்து தாக்காமற் காப்பதும், அப்பகையை அழிப்பதும் ஆதலை இம்மந்திரத்தாலும் இங்குக் காட்டிய தேவாரத்தாலும் அறிக. அவை பிற கவசங்களாலும், அத் திரங்களாலும் இயலாமையும் உணர்க. ``சிவகதி`` என்றது பத முத்தி அபர முத்திகளையும், `திருவடி சேர்தல்` என்பது பர முத்தியையும் குறித்தனவாம். `மகிழ்விரேயாமாகில் சேர்விரே` என்பதும் பாடம்.
இதனால், திருநீற்றது சிறப்பு வகுத்துணர்த்தப் பட்டது. இம்மந்திரம் சிவ பிரதிகளில் இவ்வதிகாரத்த்து இரண்டாம் மந்திர மாகக் காணப்படுதல் பொருந்தவில்லை.

பண் :

பாடல் எண் : 2

நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.

பொழிப்புரை :

அந்தண வேடத்துள் முதன்மை பெற்று விளங்கும் முப்புரிநூல், சிகை என்பவற்றது உண்மை இன்ன என்பதை முழு மூடராயுள்ளோர் சிறிதும் அறியமாட்டார். அவற்றின் உண்மையாவன யாவை எனின், `முப்புரிநூல்` என்பது வேதத்தின் முடிநிலைப் பகுதியாகிய உபநிடதங்களும், `சிகை` என்பது அவற்றின் பொரு ளுணர்வுமாம், நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந் தணர்கள், `பரமான்மா, சீவான்மா` என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதேயாம். வாளாநூலையும், சிகையையும் பொருந்த வைத்துக் கொள்வதனால் மட்டுமன்று.

குறிப்புரை :

இதனை இங்குக் கூறவே, `வேத வேதாந்தங்களை நன்கு ஓதி உணர்ந்தவர் திருநீற்றின் பெருமையை உணர்வாராகலான், அதனை அணிதலை ஒழியார்` என்பது குறிப்பாயிற்று. ``வேதத்தில் உள்ளது நீறு``l என ஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் முன் பலரும் அறிய அருளிச் செய்தமை இங்கு ஒரு தலையாக உணரற் பாற்று. `சபாலம்` என்னும் உபநிடதம் சிறப்பாகத் திருநீற்றின் பெருமை உணர்த்துவதாயுள்ளது. இவற்றால் `திருநீறு அல்லது விபூதி` என நீவிர் புகழ்ந்துரைக்கும் பொருள் நறுமணம் முதலிய நலம் யாதுமில்லாத வெறும் சாம்பல்தானே என இகழ்தல் பேதமைப் பலது என்பது போந்தது. அதனால், ``நூலும், சிகையும் அறியார் நின்மூடர்கள்`` என்றது போலவே, `நீற்றது உண்மையும் அறியார் நின்மூடர்கள்` என ஓதுதலும் கருத்தால் பெறப்படும். நீற்றது உண்மையை இவர். மேல் ``கவசத் திருநீறு`` என்பனால் குறித்தார். திருஞானசம்பந்தர் ``பராவண மாவது நீறு``l என இனிது விளங்க அருளிச் செய்தார். இருவரும் முறையே, ``பூசி மகிழ்வரே யாமாயின் தங்கா வினைகளும்`` எனவும்``பாவம் அறுப்பது நீறு``l எனவும் ஓதியருளினார். இவ்விடங்களில், `திருநீறாவது இறைவனது திருவருளே` என்பது தெற்றென விளங்கி நிற்கின்றது` இங்ஙனம்.
``தலைகல னாகஉண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்;
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்`` 3
என்றாற்போலவரும் சுருதிகளை யுணராமையால்,
``பூசுவதும் வெண்ணீறு; பூண்பதுவும் பொங்கரவம்`` l
``கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை`` 8
என்று புறச்சமயத்தார் இகழ்தலேயன்றி, `வேதத்தை ஓதுதலால் வேதியர் எனப்படுகின்றேம்` எனக் கூறிக் கொள்வாருள்ளும் சிலர் திருநீற்றை `சாம்பல்` என்று இகழ்ந்தொக்குதல் அவருக்குண்டான சாபக்கேடே என்பது,
``பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ எனவணங்கிப்
பெரிது போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண் டிகையினையும்
இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந்நாளும் பிறந்திறந்து
கதியு றாது
பாசமதி னிடைப்பட்டு மறையுரையா நெறியதனிற்
படுதி ரென்றான்``*
என்னும் கந்தபுராணத்தால் அறியப்படும். படவே, `அந்தணர்` என்பாருள்ளும் சிலர் இத்தன்மையராய் இருத்தலைத் திருவுளத்துட் கொண்டு அவரது இயல்பினை விளக்குதற்கே இம்மந்திரத்தை இவ்வதிகாரத்தில் நாயனார் அருளிச் செய்தார் என்பது விளங்கும். சிவபிரானது விகிர்த வேடத்தின் பெருமைகள் பலவும் அறிதற்கு மிக அரியன என்பதை உணர்த்தவே,
``சடையும் பிறையும சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்தொலோ``*
என்றார் போலப் பலவிடத்தும் அருளிச் செய்தார். இன்னோரன்ன திரு வருண்மொழிகட்குப் பின்னும் திருநீற்றிற்கு வேறாகச் சிலர் சில சமயக் குறிகளைப் படைத்துக் கொண்டது, மேற்காட்டிய சாபத்தின் வலி யெனவே வேண்டும் என்க.
அந்தணர் பரம், உயிர் இரண்டும் ஓர் ஒன்றாகப் பார்ப்பார் எனில், அஃது ஓங்காரம் ஓதிலேயாம்` என உம்மையும் ஆக்கமும் விரித்து மாற்றிமுடிக்க. பார்த்தல் - ஆராய்ந்துணர்தல். ``ஓர் ஒன்றாக`` என்றது `நுனித்து` என்றவாறு ``ஓங்காரம்`` என்றது, வேதத்தில் அது முதலாகத் தொடங்கிச் செல்லும் மந்திரங்கள் அமைந்த பாகத்தைக் குறித்தது. மந்திர பாகத்தின் உண்மையை உணர்த்துவனவே உப நிடதங்களாதலின், அம்மந்திர பாகத்தை முன்னர் நன்கு ஓதிப் பின்னர் அவற்றின் உண்மைகளை உபநிடதங்களில் உணர்தல் வேண்டும் என்றற்கு, ``ஓங்காரம் ஓதிலே`` என்றார். எனவே, ``ஓதி அவற்றை உப நிடதங்களில் உணரிலே` என்க. கூறுதலும் கருத்தாயிற்று. ``நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்`` என மேல் அந்தணர் ஒழுக்கத்தில் (229) கூறிய நாயனார் அதனை இங்கும் மறித்தும் கூறியது பெரிதும் வலியுறுத்தற் பொருட்டாயிற்று. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், `பிறப்பால் உயர்ந்தோர்` எனப்படுகின்ற அந்தண ராயினும் அவர் உயர்வெய்துதல் திருநீற்றாலே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியன்உரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம உயர்குல மாமே.

பொழிப்புரை :

பசுவின் சாணம் அரசு முதலிய சமித்துக்கள் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முன்னைப் பருவுரு மாறி அமைந்த அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாம்.

குறிப்புரை :

ஆலத்தி - ஆப்பி.
``மறைக்குங் காலை மரீஇய தொரால்` *
என்பதனான் இஃது அவையல்கிளவி யாகாதாயிற்று. அன்றியும் ஒலி வகையால் `ஆல் அத்தி` என்பது போலத் தோன்ற வைத்தமையானும் அன்னதாகாதாயிற்று. `ஆல் அத்தி` என்றே பொருள் உரைப்பினும் திருநீற்றுக்கு முதலாகிய பசுச்சாணம் பெறப்படாமை அறிக. ``அரசு`` என்றது பிற சமித்துக்களுக்கு உபலக்கணம். `ஆலத்தி அரசுடன் விரிவு கனலில் வியன் உருமாறி ஆகும் அக் காரம்` எனக் கூட்டுக. திருநீற்றின் வேறு பெயர்களும் ஒன்றாகிய `க்ஷாரம்` என்னும் ஆரியச் சொல், ``காரம்`` எனத் தற்பவமாய் அகரச் சுட்டேற்று. ``அக்காரம்` என வந்தது. ``அக்காரம் நிரவிய`` எனச் சுட்டிக், கூறவே, திருநீற்றை, `சாம்பல், சுடலைப் பொடி` முதலாகப் பொதுவில் பலவகையாகக் கூறினும் `தக்க பசுவின் சாணத்தைத் தக்க வகையில் பெற்று மந்திரத்தால் கோசலங்கொண்டு பிசைந்து உலர்த்திச் சிவவேள்வியில் இட்டுப் பெற்றதே உண்மைத் திருநீறாம்` என்பதனை முதல் இரண்டடி களாற்கூறினார். நிரவுதல் - நிரம்பப்பூசுதல். `பிறப்பால் அந்தண ராதலே பிரமகுலமாகாது; திருநீற்றை நிரம்ப அணிந்தவழியே ஆகும்`` என்றற்கு `சிவனுருவாம்` என்னாது ``பிரம உயர்குலமாம்`` என்றார்.
இதனால், `திருநீற்றை இல்லாதவர் கடவுளை உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.

பொழிப்புரை :

ஞானம் இல்லாதவர் ஞானிகட்குரிய வேடத்தைப் பூண்டிருப்பினும் நரகத்திற்கு உரியவரேயாவர். ஞானம் உள்ளவர்கள் தம்மிடத்தில் ஞானிகட்குரிய வேடம் இல்லாதொழியினும் பரமுத்திக்கு உரியவரே. அதனால், ஞானம் உண்டான பின்னர் அதற்குரிய வேடத்தை விரும்புவோர் சிவபிரானைப் போலவே அந்த வேடத்தைப் பூண்டிருப்பர்.

குறிப்புரை :

`இன்றெனிலும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. ``உளதாக`` என்னும் செயவெனெச்சம், ``கைப்பொருள் ஒன்றுண்டாகச் செய்வான் வினை``* என்பதிற் போல இறந்த காலத் தின்கண் வந்தது. இவ்வாறன்றி, எதிர் காலத்ததாகக் கொண்டுரைப் பின், அது முன்னை யதிகாரத்துத் தவ வேடமாயே முடிதல் அறிக. ``வேடம் நண்ணி நிற்பார்`` எனப் பின்னர்க் கூறுதலின், வேண்டுதல் வேடத்தையே ஆயிற்று. `ஞானிகட்குரிய வேடவாவது இது` என்பது உணர்த்துதற்கு ``நக்கன்போல்`` எனவும், `அவ்வேடம் காண்பார்க்கும் ஞானத்தை உண்டாக்கும்` என்றற்கு ``ஞானம் உள வேடம்`` எனவும் கூறினார். `நக்கன்பால்` என்பது பாடமன்று. நக்கன் - உடையில் லாதவன். ``அணியெல்லாம் ஆடையின்பின் என்பதை விடுத்தலின், `நகப்படுவன்` என்பது இதன் பொருளாம். சிவபிரானை இப் பெயராற் கூறுதல் பட்டும், துகிலும் உடாது, தோலையே ஆடையாக உடுத்தல் பற்றியாம். இனிக் `கீள், கோவணம்` என்னும் இவற்றளவே கொண்டு நிற்றலும் உடையின்மையாகவே கூறப்படும். இவ்வாறன்றி, `திகம்பரன்` என்பதே வெற்றரையாய் நிற்றலைக் குறிக்கும், எனவே, `நக்கன்` என்பதை `நக்நன்` என்னும் ஆரியச் சொல்லின் திரிபாகக் கொள்ளின் அது `திகம்பரன்` எனவே பொருள்படும். சிவபிரானை, `திகம்பரன்` என்றல் அவனது வியாபக நிலையைக் குறிக்குமல்லது வேடத்தைக் குறியாது. `சிவபிரான் பிச்சைக் கோலம் கொண்டு சென்ற பொழுது வெற்றரையாகச் சென்றனன்` என்பது உளதாயினும், கீள் கோவணத்தோடு சென்றனன் என்ற கருத்தும் உண்டு.
``உறைவது காடுபோலும்; உரிதோல் உடுப்பர்;
விடைஊர்வது ஓடு கலனா`` l
என்றொடக்கத்தனவாய் வரும் திருமொழிகள் சிவபிரானது வேடங்கள் உலகரால் நகப்படுவனவாயிருத்தலையே உணர்த்தும். அவ்வாறிருப்பினும்,
``இறைஇவர் வாழும் வண்ணம் இதுவேலும்
... ... ... ... ... ,..
அறைகழல் வண்டுபாடும் அடிநீழல் ஆணை
கடவா தமர ருலகே`` 3
என்றற்றொடக்கத்தனவாய் வரும், திருமொழிகள் அவ்வேடங்கள் சிறிதும் பற்றுடபடாத தூய உணர்வைத் தெரிவிப்பனவாய்ப் பற்றுட் பட்டு மயங்கும் மயக்க உணர்வையுடைய தேவர் முதலிய பலரையும் ஆளும் தலைமைக் கோலங்களாய் இருத்தலை விளக்குமாகலின், அவை ஞானவேடங்களாதல் நன்கறியப்படும். அவ்வேடங்கள் காண்பார்க்கும் ஞானத்தைத் தோற்றுவித்தலை,
``ஓதிஓர்க் கப்படாப் பொருளை ஓர்விப்பன
... ... ... ... ... ...
ஆதிஅந் தம் இலா அடிகள் வேடங்களே`` 8
என்றற்றொடக்கத்தனவற்றால் அறிக. `நக்கன்பால்` என்பது பாடம் அன்று.
இதனால், `ஞானிகட்குரிய வேடத்தை ஞானம் இல்லாதார் புனைந்து வஞ்சிப்பின் நரகம் புகுவர்` என்பதும், `ஞானிகட்குரிய வேடம் இது; இதனை ஞானியர் விரும்பிற் பூண்பார்; பூணாது விடினும் அவர்க்குத் தாழ்வில்லை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.

பொழிப்புரை :

இழிந்த ஞானத்தை உடையவர்கள் உயர்ந்த ஞானத்தை உடையவரது வேடத்தைப் பூண்பாராயினும், அதனால் அவர்க்கு வருவதொரு நன்மை இல்லை. உயர்ந்த ஞானத்தை உடை யவர் இறைவனது அருளாகிய பயனைப் பெற்றுவிட்டமையால், `குறித்ததொரு வேடத்தைப் பூணவேண்டும்` என்னும் விருப்பமும் இலராவர். தமது ஞானத்தையே பெரிதாக மதிக்கும் குற்றத்தை உடையவர் ``தத்தம் மதங்களே அமைவதாக அரற்றிமலையும்`` 3 சமயப் பூசலை உடையராவர். மற்று, உண்மை ஞானம் உடையோர் அதற்குத் தகுதியில்லாதாரைக்காணின் ஒன்றும் பேசாது வாளாதே போவர்.

குறிப்புரை :

இழிவு, உலகியலுள் அழுந்தலும், உயர்வு அதனின் நீங்கி மேற்போதலுமாம். ``பூணார்`` என்பது `பூணுதலில் கருந் தூன்றார்`` என்றதாம். ``வேண்டுமாறு விருப்புறு வேடத்தர்`` l எனச் சேக்கிழாரும் கூறினார். ``சமயம்`` சமயவாதத்தைக் குறித்தலின் ஆகு பெயர். ``பின்`` என்பது, வினைமாற்றாய `மற்று` என்னும் பொருளில் வந்தது. ``ஒன்றும் பேசகில்லார்`` என்பது, `தமது நிலையைப் பிறர்க்கு வெளிப்படுத்திப் புகழ்பெற விரும்புதல் இலர்` என்பது உணர்த்தி, `அத்தகையோர் ஞானவேடத்தைப் புனைந்து கொள்ளுதலையும் ஒருதலையாக விரும்புதல் இல்லை` என்பதை வலியுறுத்தி நின்று. இதனுள் `` பூணார்`` என்பதை, `பூண்பர்` எனவும், முன்னை மந்திரத்தில், ``இன்றெனில்`` என்பதை `உண்டெனில்` எனவும் ஓதுவன திரிக்கப்பட்ட பாடங்களாதல் விளங்கும்.
இதனால், உண்மை ஞானியர் சாத்தியமாகிய திருவருளை யன்றிச் சாதனமாகிய வேடத்தைப் பெரிதாகக் கொள்ளாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

பொழிப்புரை :

பயனில்லாத வேடம் சிவஞானிகட்கும், சிவ யோகிகட்கும், ஆகாது. ஆராயுமிடத்து அது வேதாகமங்களாகிய தொன்னெறியல்லாத புதுநெறியில் நிற்போர்க்கு ஆவதாம். அது நிற்க, சரியை முதலிய நான்கு நெறிகட்குரிய வேடங்களே ஒருதனிச் செம்பொருளாகிய சிவம் உள்நிற்கும் வேடங்களாம்.

குறிப்புரை :

ஆகவே, `அவையே சிவஞானிகட்கும், சிவயோ கட்கும் உரியன` என்பதாம். பயனில்லாத வேடங்கள் பாயுடுத்தல், தலைமுடியயைப் பறித்துக்கொள்ளல், மயிற்பீலி பிடித்தல், துவராடை அணிதல், வெற்றரையாய் இருத்தல் முதலியனவாம். இவை பரம் பொருள் வடிவாகாது, வாளா உடம்பை வருத்துதலாய் முடிதலின், பயனிலவாயின. இவை முதனூல்களாகிய வேதாகமங்களை இகழ்ந்து, புதியனவாய்ப் படைக்கப்பட்ட எதிர்நூல்களின் வழிநிற்பர் கொள்வன வாதல் வெளிப்படையாதலின், ``நவமாம் அவர்க்கு`` என்றார். வேடம் வகையானும், விரியானும் பலவாயினும், தொகையால் ஒன்றே யாகலின், ``ஆகாது`` எனவும், ``அது`` எனவும் ஒருமையாற் கூறினார். ``நான்கு`` என்றது ஆகமங்களின் வழி யவாதலின், `சரியை முதலிய நான்கு` என்பது விளங்கிற்று. சரியை முதலிய நான்கில் நிற்போர் தாம் தாம் செய்யும் பணிகட்கு ஏற்ற வேடங்களை யுடையராய் இருத்தல் பற்றி, அவைகளை வகுத்தோ தினார். இங்கு எடுத்துக் கொண்டது ஞானவேடமேயாயினும், சரியை முதலிய மூன்றும் ``அரும்பு, மலர், காய்`` l என்பனபோல ஞானத்தின் படிகிளைகளேயாதல் பற்றி, அவற்றது வேடங்களையும் உடன் ஓதினார். `சாதனமாவது இங்குவேடமே` என்பது அதிகாரத்தால் விளங்கும். உவமானம் இப்பொருள், இரண்டாவதில்லாத தனிப் பொருள். இதனை ``ஏகம்`` என்றல் உபநிடத வழக்கு ``ஒன்ற வன்றானே`` என நாயனாரும் தொடக்கத்தே உணர்த்திப் போந்தார்.
இதனால், பிறவேடங்கள் கடுந்துறவை விளக்குவனபோல உலகரை மருட்டுவவாயினும், அவை சிவநெறியாளர்க்கு ஆகாமை கூறப்பட்டது. ஆகாதவற்றை. `ஆகா` எனக் கண்ணோட்டமின்றி அறுதி யாக விலக்கி ஒழித்தலும் உண்மை நூல்கட்கு இயல்பு என்பதை ஊன்றி யுணர்க.

பண் :

பாடல் எண் : 4

கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல்
கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும்
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

பொழிப்புரை :

அனுபவத்தால் இன்பம் உறாது, பேச்சினாலே இன்ப மடையும் நூலறிவுடைய சிலர், கழுமரத்தடியில் நின்று அதன் உச்சியில் உள்ள உடல் எட்டாதபொழுது குரைத்தலையும், சிறிது எட்டிய பொழுது அதனைக் கடித்தலையும் செய்கின்ற நாய்களைப் போலத் தாம் அறிந்தவற்றைக் காலம், இடம், தகுதி முதலியவற்றை நோக் காமலே உரக்க எடுத்துப் பேசுதலும், காலம் முதலியன சிறிது வாய்த்த வழிக் கேட்பாரது உள்ளத்தை அலைத்தலும் செய்து திரிவார்கள். சிவஞானத்தை அனுபவமாக அடைந்தோர் வாக்கும், காயமும் வன்மைபெற்றிருப்பினும் செத்தவரைப்போலயாதும் உரையாதே, எவ்விடமும் இடமாக உலாவிவருவர்.

குறிப்புரை :

``கழுவடி நாய்கள்போல்`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்து. குரல் களி - குரலால் களிக்கின்ற இதுவே பாடம்; `குரக்களி` என்பது பாடமன்று என்பது உவமையால் இனி துணரப்படும். `பொறியும், உடலும் ஒத்து இருக்க` என மாற்றுக. `மூப்பொறி` என்னும் வழக்குப் பற்றி, `வாக்கு` என்னும் தொழிற் கருவியை, `பொறி` என்றார். வாக்கு வன்மைபெற்றிருத்தலாவது சொல்வன்மை வாய்த்திருத்தல். உடல்வன்மை உரத்தும், நீட்டித்தும் பேசுற்குத் துணையாகும். குரற்களி ஞானிகள் உரத்துப் பேசுதல் பயனில் செயலாம் என்பதை விளக்கவே, ``கத்தித் திரிவர்`` என்றார். வைதுரை `சொல்லம்பு` எனப்படுக் கேட்போர் உள்ளதைப் புண் படுத்தல் போல, இவரது பேச்சும் அலைவால் புண்படச் செய்யும் என்பதனை, ``கொத்தி`` என்பதனாற் குறித்தார். மனம் இன்னல் உறுதலை, `நெஞ்சு புண்ணாதல்` என்னும் வழக்குண்மையறிக. செத்து - செத்தாற் போன்று. ``திரிவர்`` மூன்றில் இறுதியது பற்றின்றி இருத் தலையும், ஏனையவை பயனின்றி வாழ்தலையும் குறித்தன. இவர்களை நாயனார் முன்பு ``சோம்பர்`` எனவும், ``தூங்குபவர்`` எனவும் குறித்தமை காண்க.
இதனால், `வாய்வாளாமையும் சிறந்ததொரு ஞானவேடப் பகுதியாம்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அடியா ரவரே அடியா ரலாதார்?
அடியாரு மாகாதவ் வேடமு மாகா
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.

பொழிப்புரை :

குணத்தால் அடியவரல்லாதவர் பிறவாற்றால் அடியவராவரோ? ஆகார். அடியார் ஆகாதபொழது அவர்கட்கு அந் நிலைக்குரிய வேடங்களும் கூடா. அடியராவார் சிவஞானத்தை அடைந் தோர். ஆதலால், அத்தன்மையில்லாதவர் ஒருவாற்றானும் அடியரல்லர்.

குறிப்புரை :

``அடியாரவரே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், அடியவாரகாமையைக் குறித்தது. `ஆகாதவழி` என்பது ``ஆகாது`` எனத் திரிந்து நின்றது. மூன்றாம் அடி, அடியாராகும் முறைமையைக் குறித்தது.
இதனால், ஞானவேடம் மட்டுமே ஞானியராகச் செய்யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற்றவனுக்கு உலகர் கொள்ளும் அழகிய வேடமும், ஞானவேடமேயாய்ச் சிறந்து நிற்கும். அதனால், அவன் எந்த வேடத்தோடு இருப்பினும் அது பரம சிவனோடு ஒன்றி யிருத்தற்குரிய வேடமாயே அமையும். இனி, ஞானவேடமாகச் சொல்லப்பட்ட அவ்வேடம் ஞானம் சிறிதும் இல்லாதவனுக்கு ஏற்புடையதாதலும் உலகியலாய் உள்ளது.

குறிப்புரை :

சுந்தர வேடமாவது உலகத்தார் விரும்பி யணியும் வேடமாதலை,
``சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை`` - திருமுறை - 7.100.3.
என அருளிச் செய்தவாற்றால் அறிக. நன்மை - ஞானம். நல்ல - ஞானத்தையுடையன. சரியை முதலிய மூன்றில் நிற்போர் தடத்த சிவத்தையே சாரந்து நிற்க, ஞானி சொரூப சிவத்தைச் சார்ந்திருப்பன் ஆதலின், ``தற்சிவ யோகம்`` என்றார். யோகம் - ஒன்றுதல். ஒன்று தலைத் தருவதனை `ஒன்றுதல் என்றே கூறினார். `அருள்ஞான சாதனம் அவ்வேடம்` என மாற்றிக்கொள்க. ஒன்றும் - சிறிதும். ஆகாதவன் இதற்கு `ஞானம்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `உலகியல் அவ்வாறிருப்பினும், அதனால் பயன் என்னை` என்பது கருத்து.
இதனால், ஞானம் இல்லதார் ஞான வேடம் புனையினும் பயன்பெறுதல் இல்லை; ஞானம் உடையவர் ஞானவேடம் புனையா தொழியினும் பயன் இழத்தல் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே

பொழிப்புரை :

சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தால் முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத் தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப் பிடத்தை உடையனாய் இருப்பன். சொல்லேயன்றி மனமும் அடங்கி விட்ட நிலையை உடையனாதலின் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனே யாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முற்றப் பெற்றவனாம். சிவஞானத்தைப் பெறாது சிவான வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.

குறிப்புரை :

`ஏனைத் தவசி சிவஞானியாகான்` எனவே, இத்தவசி (சிவஞானம் பெற்றவன்) வேடம் இன்றியும் சிவ ஞானியே என்பது பெறப்பட்டது. `அதனில்` என்பது `அத்தில்` எனமருவிற்று. ``அது`` என்றது சிவன் பாதத்தை. `இருப்பிடம்` சிவனுக்கு என்க. அஃது உயிரேயாம். மோனம் - மௌனம். அஃது இங்கு வாய் வாளாமை யோடு மனம் அடங்கியதையும் குறித்தது. `தவசியை` என்னும் இரண்டாவது தொகுத்தல் பெற்றது.
இதனால், அகத்தில் ஞானம் உடையவன் புறத்தில் வேடம் இலனாயினும் சீவன்முத்தனாய் விளங்குவன்; ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் அத்தன்மையன் ஆகான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானற்ற தன்மையும் தான் அவ னாதலும்
ஏனைய அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே.

பொழிப்புரை :

தற்போதம் அற்றிருத்தல், தான் சிவமேயாய் நிற்றல், சிவனல்லாத ஏனை எல்லாப் பொருள்களிலும் சிவம் நிறைந்து நிற்றலை உணர்ந்து, அவற்றைச் சிவமாகவே காணுதல், ஞானத்தை நழுவாது நிலை நிறுத்தற்குத் துணையாய் உள்ள வேடங்களைப் பூணுதல் வாய்வாளாமை ஆகிய இவை யாவும் சிவனது திருவடிப்பேறாகிய முத்தியைப் பெற்ற நிலையின் இயல்புகளாம்.

குறிப்புரை :

ஏனைய - மற்றையவை. எல்லாவற்றையும் சிவமாகக் காணுதலை.
``மரத்தை மறைத்தது மாமத யானை``1
என்னும் மந்திரத்துள் நாயனார் பின்னர் இனிது விளங்க அருளிச் செய்வார்.
``காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்`` 2
என்பது முதலாக நாவுக்கரசரும் பலபட அருளிச் செய்தமை காண்க.
``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்`` 3
என்பதும் காண்க. பெற்றதன்கண் உள்ளவற்றைப் `பெற்றது` வேடத்தின் கால ஆகுபெயர்.
இதனால், ஞானம் பெற்றவழி நிகழ்வன பலவும் ஞான வேடத்தின் பாற் பகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :

சிவனது சத்திபதிவால் தாம் அவனுக்கு அடிமை யாதலை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகும் ஒழுக்கம் உடையவராய்த் தமது உடம்பும் ஏனைய பொருள்கள்போலச் சிவனது உடைமயாம் சிறப்பை உணர்ந்து, அவ் இரண்டுணர்வையும் தடுத்து நிற்கும் இருள் நீங்கப்பெற்றுத் தம்செயல் அற்றிருப்போர் வேடமே, `சிவவேடம்` எனக் கொள்ளப்படும் சிறப்புடைய வேடமாம்.

குறிப்புரை :

`சிவவேடம் யாரிடத்துக் காணப்படினும் சிவவேடமே யாயினும், இத்தன்மை யாரிடத்துக் காணப்படும் சிவவேடமே உண்மைச் சிவவேடமாம் சிறப்புடையது` என்றவாறு. இதனானே இவர் சிவவேடத்தை மிகப்பூணாது சிறிதே பூண்டிருப்பினும் அது சிறந்த வேடமேயாதலும் பெறப்படும். `அடிமையாதல் செயலா னன்றித் தெருட்சியாலே` என்றற்கு, ``தெருளாம் அடிமை`` என்றார். `அடிமை வேடத்தார்` என இயையும். அடிமை சிவனுக்கு ஆதல் ``சிவ வேடம்`` என்றதனாற் பெறப்பட்டது. ``அன்றோர் வேடத்தார்`` என்றா ராயினும் இவ்வாறு உரைத்தலே கருத்து என்க. `பொற்பதி` என்பது பாடமன்று.
இதனால், `உண்மைச்சிவவேடம் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.

பொழிப்புரை :

உடம்பில் பொருத்தப்பட்ட வேடங்கள் உயிர்க்கு உரியன ஆகமாட்டா. அதனால், உடம்பு நீங்கினால் வேடமும் அத னோடே நீங்கிப் போதலன்றி உயிரோடு உடன் செல்லுதல் இல்லை. `உடம்பு, உயிர் சிறிது காலம் தங்கியிருக்கும் ஓர் இடமே` என்னும் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர் கடலில் அகப்பட்ட மரத்துண்டு அதன் அலைகள் பலவற்றாலும் அலைக்கப்படுதல் போலப் பிறவியிற் பட்டு பல்வேறு உடம்புகளால் அலைக்கப்படுவர்.

குறிப்புரை :

``உண்மை``, `உளதாதல்` எனத் தொழிலாய் நின்று அதற்குரிய இடத்தைக் குறித்தது.l ``உடம்பில் - துச்சில் இருந்த உயிர்க்கு`` என்ற வாறு, சிறிது காலம் இருத்தலையே இங்கு, ``உண்மை`` என்றார். ``கடலில் அகப்பட்ட கட்டை`` என்பது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அஃது இங்ஙனம் விரிக்கப்பட்டது. இது, `வேடம் மாத்திரமே உயிர் உய்தற்கு வழியாம்` என மயங்கி, ஞானத்தைப் பெறும் வேட்கை இன்றி இருப்போரை நோக்கிக் கூறியது. எனவே, மேற்கூறியவாறு அரசனுக்கு அடிமையாதல் முதலியன உளவாய வழியே வேடம் சிவவேடமாதலைத் தெளிவித்தவாறாயிற்று.
இதனால், உடல் உயிர்த் தன்மைகளை இனிதுணர்த்து மாற்றால், மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மயலற் றிருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்
தயலற் றவரோடுந் தாமேதா மாகிச்
செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :

யாதும் அறியாமையும், மயங்கி யறிதலும் ஆகிய இரண்டும் நீங்கி, அதனானே புலன்மேற் செல்லும் மனம் அடங்கி, அவ் அடக்கத்தானே மகளிர் ஆசை முதலிய ஆசைகளும் அற்று, தமக்கு முன்னே அங்ஙனம் அற்று நின்றாரை அடைந்து `அவர், தாம்` என்னும் வேற்றுமை யின்றி அவரே தாமாய் ஒன்றியியங்கித் தம் செயல் அற்றிருப்பர் உண்மைச் சிவவேடத்தார்.

குறிப்புரை :

முன்னிற்கற்பாலதாகிய ``இருள்``, செய்யுள் நோக்கிப் பின்னின்றது. `கண்ணியரோடு` என உருபு விரிக்க. கை, இடைச் சொல். இணக்கு - இணங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். தையல், `தயல்` எனப் போலியாயிற்று. `தையலற்றவர்` என்றது, `மேற்கூறிய நிலையை யெல்லாம் அடைந்தவர்` என்றவாறு. ``தாம்`` இரண்டில் முன்னது, `அவர்` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், அரனுக் கடிமையாதல் முதலியவற்றால் உண்மைச் சிவவேடத்தராயினாரது இயல்பு கூறும் முகத்தால், அவ்வேடத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.

பொழிப்புரை :

மனிதர்காள், வேடமாத்திரத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்! அந்த நிலை வேண்டுவதில்லை. ஓடுகின்ற குதிரை போல உள்ள பிராணவாயுவை அதன் கடிவாளத்தை இறுகப் பிடித்து ஓட்டுதல் போல இரேசக பூரக கும்பக முறைகளை ஒழுங்காகக் கடைப் பிடித்தலால் அடக்குங்குள் அதனால், மனம் உம் வசப்பட, அது கொண்டு நம் பெருமானாகிய சிவபெருமானை அடைய விரும் புங்கள். அவ்விருப்பம் நிறைவுறுதற்குரிய வழியில் செல்லுங்கள். பின்பு பேரின்பப் பொருளாகிய முதற்பொருளைச் சென்று அடையலாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``குதிரை, குசை`` என்பன யோகநூற் குறிச்சொற்கள். `திண்ணமாக` என ஆக்கம் வருவிக்க.
இதனால், யோக நெறியில் நிற்பின் மனம் அடங்கச் சிவபத்தியும், சிவப்பணியும் வாய்க்க, வேடமும் உண்மைச் சிவ வேடமாய் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.

பொழிப்புரை :

குருடாய இரண்டு குழந்தைகள் தம்மிற் கூடிக் கண்ணைமூடி ஆடும் ஒருவகை விளையாட்டை விளையாடி, அதனால் இரண்டும் பாழுங் குழியில் விழுந்து அழுந்தினாற்போலப் பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ் ஆற்றல் இல்லாத போலிக் குருவைக் குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்க பெறுதலைச் செய்யின், இருவரும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. முதற் கண் நின்ற `குருடு` இரண்டும் சிறப்புருவகமாய். மல மறைப்பால் உண்டான அறியாமையைக் குறித்தன. இதனானே, நல்லாசிரியர் குருட்டினை நீக்கும் மருத்துவம் வல்ல மருத்துவராலும், போலி ஆசிரியர் அம் மருத்துவம் உணராத போலி மருத்துவராலும் பெறப் பட்டன. கண்ணுள்ள குழந்தைகள் கண்ணை மூடி ஆடினாலும் முன்னைப் பழக்கத்தால் தீங்கின்றி ஆடி மகிழ்வடையும். கண்ணில் லாத குழந்தைகள் பிற விளையாட்டு விளையாடினாலும் தீங்கடையா. குருட்டாட்டம் ஆடின் வழியறியாது குழியில் வீழ்ந்தொழியும். அதுபோல நல்லாசிரியர் மாணவரது பக்குவத்திற்கு ஏற்ப எவ்வாறு அருளினும் பயன் உண்டாம். ஆசிரியரல்லாதார் கிரியா மார்க்கத்தை உணர்த்தினும், அவர்பால் அதனைச் சிலர் பெறினும் பயன் ஓரளவேனும் உளதாகும். அவர் ஞானத்தை உணர்த்தினும், அதனைச் சிலர் பெறினும், `பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது` என்னும் பழமொழியோடொப்ப இருவரும் முன்னையினும் பார்க்கப் பெரிய தோர் அறியாமையில் வீழ்ந்து அழுந்துபவர் என்பது உவமையால் பெறப்பட்டது. `கண் குருடுபோல அறியாமையும் அகக்கண் இன்மை யாகிய ஒருவகைக் குருடே` என்பது தோன்ற, மல மறைப்பினையும் இங்குக் குருடாகவே உருவகித்து ஓதினார்.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உண்டாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதற்றொட்டு அவற்றின் அறிவாகிய கண்ணிற்கு அமைந்த மாயையாகிய கண்ணாடி ஆணவமாகிய குற்றங் காரணமாகப் பொருளியல்பைத் திரித்துக் காட்டும் வாஞ்சனைக் கண்ணாடியாய் உள்ளது. கல்வி கேள்விகளால் பெற்ற அறிவுகொண்டு இதன் இயல்பை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர் நல்லாசிரியர் அவர்களது வினை நீங்கும் வழியை விளக்கிக் கூறினாலும் விளங்கிக்கொள்ள மாட்டார். அவர் இயல்பு தலைவாயில் வழியைக் காட்டினாலும் புறக்கடை வாயிலை விரும்பி அதன்வழி நுழையும் இயல்பு போல்வதாம்.

குறிப்புரை :

அறிவை `மனம்` என்றலும் வழக்கு. ``எழுந்தது`` என்னும் வினைப்பெயர். `தோன்றியதாகிய கண்ணாடி` என்பதைக் குறித்து எழுவாயாய் நின்று, ``மாயக்கண்ணாடி`` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது. மாயம் - பொய்; திரிபு. இங்ஙனம் கூறவே, `அக்கண்ணாடியாவது மாயையே` என்பது விளங்கிற்று. ``நினைப்பு`` என்று சிந்தனை அறிவை. `அதனில் அதன் நிழலையும் காணார்` என்க. ``நிழலையும் காணார்`` என்று, `அதன் இயல்பைச் சிறிதும் அறியார்` என்றவாறு. ``காணார்`` என்பதும் எதிர்மறை வினைப்பெயர். காணாமை பக்குவம் இன்மையினாலாம். `விளக்கவும்` என்பது திரிந்து நின்றது `விளக்கினும்` எனப் பாடம் ஓதலுமாம். `விளக்குவார் நல்லாசிரியர்` என்பது ஆற்றலால் பெறப்பட்டது. ஓர் இல்லத்தில் தலை வாயிலால் நுழையாது புறக்கடை வாயிலால் நுழைவார் இன்னல் பலவும் உறுதல் வெளிப்படை. இதனுள் ஒருவாற்றான் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உளதாயினும் அது பயன்படாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே.

பொழிப்புரை :

உலக மக்கள், அறிவுடையரோ `ஏ` என அழைத்தால் அவர்க்கு, `ஏன்` என மறுகுரல் கொடுக்கும் அத்துணைப் பக்குவமும் இலர். அவர் தாயின் முலை அவர் பெற்ற குழவி தன்வாயில் வைத்த பொழுதே பால் சுரத்தலல்லது, எப்பொழுதும் பால் சுரவாத தன்மையை உணர்தல் இயலாததே. அவ்வியல்புடைய இனத்தவரது உள்ளத்திலும் உருவமற்றவனாகிய சிவபெருமான் அங்ஙனம் உருவமற்றவனாகவே நிலை பெற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஏ` என்பது வடமொழியில் திரிபு. வரையறை யின்மை யின் இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. முதற்கண் நின்ற ``முலை`` என்பது பின்னர் வரும் அதனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. பெய்தலுக்கு வினைமுதலாகிய `குழவி` என்பது வருவிக்க. மதுரம் - இனிமை. அஃது ஆகு பெயராய்ப் பாலை யுணர்த்திற்று. `குழவி வாய்வைத்த பொழுதே தாயின் முலை பால்சுரக்கும் இயல்பினை அறியார்` என்றது, `இறைவனது அருள் அவனை உணர்ந்து போற்றுவார்க்கே விளங்கி நின்று நலம் செய்யும் என்பதனை அறிந்து அவனை உணர முயலார்` என்றதாம். `அதற்குக் காரணம் பக்குவம் இன்மையே` என்பது கருத்து. `அன்னோர்க்குத் தமராய் உள்ளோரது ஊனின்கண்ணும் உருவிலி நிலை செய்யும்` என்க. தமர் - சுற்றத்தார். இஃது இங்குப் பிறப்புப் பற்றியதாகாது, இயல்பு பற்றியதாய் நின்று. இதன் ஈற்றடி இரண்டாம் அசை எதுகையாய் நின்றது.
இதனால், பக்குவம் இல்லாதார் இறைவனை உணர்ந்து அவனது அருளால் நலம்பெறுந் தன்மை இலராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

 வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.

பொழிப்புரை :

பெருந் தகுதியாகிய பக்குவத்தை எய்திய மாணவனே, நீ யாதொரு செயலிலும் `மனம், மொழி மெய்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது. அங்ஙனம் அவை ஒருவழிப்பட நிற்றலே உனக்கு நன்மையைப் பயப்பதாகும். அவை வேறு வேறு வழிப்படல் இழந்தோரது இயல்பாதலின், நீ அவை அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாராய உலகர் அது பற்றி என்னைப் பின் வெகுளி மிகுதியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.

குறிப்புரை :

`அதுபற்றி எனக்கு வருவதோர் இழுக்கில்லை` என்பதாம். `அங்ஙனம் செய்யாமையாகிய அதுவே உறுதி` என்க. அங்ஙனம் செய்யாமை, அவை ஒருவழிப்பட்டு நிற்கச் செய்தலை உணர்திற்று. `தீயை` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. தீமை, இங்கு இழிவு. தன் ஈற்றடிக்கு இவ்வாறன்றி ``என்று`` என்பது ``தெளியார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தாக வைத்து, `அது பற்றி என்னைப் பிறர் பழியார்` என்று உணர்த்தலுமாம். இங்கும் `உன்னை` என்றே பாடம் ஓதி அதற்கு இயைய உரைப்பாரும் உளர்.
இதனால், பக்குவம் எய்திய மாணாக்கற்கு அபக்குவ நெறியிற் செல்லாதவாறு விழிப்பூட்டு முகத்தால் அபக்குவிகளது போலி ஒழுக்கத்தின் இயல்பும், அவர்க்கு நல்லாசிரியரது அருள் கூடாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும்
அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின்
பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.

பொழிப்புரை :

பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப் பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச் செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.

குறிப்புரை :

பாதகத்தை இங்கு, `துரோகம்` என்றார். `மாபாதம் ஐந்து இவை` என்பது மேற் கூறப்பட்டது. l ``துரோகத்து`` என்னும் உவமம் ``பாதகர்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. `துரோகத்திப் பாதகர் தம்மை` என்றாராயினும், `துரோகத்துப் பாதகர் இவர்தம்மை` என்றலே கருத்தென்க. உம்மை, மேல் முதல் தந்திரத்தில் `அரசாட்சி முறை` அதிகாரத்தில் அரசனால் தண்டிக்கப்படத் தக்கவராகக் கூறப் பட்டவரைத் தழுவி நின்று. ``விஞ்சை`` என்றது, செயலால் நல்லராய்த் தோன்றுதல் பற்றிக் கண்ணோடி அளவிற் குறையச் செய்யாது என்றதாம். வேறுசெய்தல் - திருத்துதல்.
இதனால், அபக்குவராயுள்ளார் பக்குவர்போல ஓழுகுதல் பல தீமைக்கு ஏதுவாதல் நோக்கிக் கடியப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

பொழிப்புரை :

தவத்தில் நிற்கும் பக்குவிகளுக்கு நுகர்ச்சியாய் நிற்கின்ற கன்மங்கள் அனைத்தும் அவற்றை ஊட்டுவிக்கின்ற முதல்வ னுடையனவேயாய், அவர்க்கு நுகர்ச்சி யாகாயையைத் தேவரும் அறியாமாட்டார். அதனால், கன்மங்கள், எடுத்த பிறப்பில் நுகர்ச்சி யாதல், பக்குவம் இன்மையால் தவத்தில் நிற்குமாற்றை உணராதவர் கட்கேயாம்.

குறிப்புரை :

``தவம்`` என்றது இங்கு ``அவன் அருளாலல்லது ஒன்றும் செய்யாமை``3 ஆகிய இறை பணியை. இதன் கண் நின்றார்க்குப் பிராரத்தம் நுகர்ச்சி யாகாமையை,
``நாமல்ல இந்திரியம்; நம்வழியின் அல்ல; வழி
நாமல்ல; நாமும் அரனுடைமை - யாம்என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்`` 3
என்பதனானும் அறிக. `தேவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. பவம் - பிறப்புய பாடு - நிகழ்ச்சி. நுகர்வு. கன்மங்கள் வகை யானும், விரியானும் பவவாயினும் தொகையான் ஒன்றே யாதல் பற்றி `அது` என ஒருமையாற் கூறினார். `அறியாதவர் எல்லாம்` என்பது பாடமன்று.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு வினை நீங்காமை கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் `கன்றலும் கருதலும்`` என்னும் பாடல் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், நாயனார் திருமொழி யன்றாம்.

பண் :

பாடல் எண் : 7

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.

பொழிப்புரை :

ஒளியைக் காணும் கண் இல்லாதவர் இருள் புலர்ந்தாலும் புலர்ந்ததனை அறியமாட்டார். அதனால், விடிந்தபின் ஒளியில் பொருள்களை நன்கு கண்டு பயன் கொள்ளவும் மாட்டார். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர் தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டார். அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரமாட்டார். அதனால் நீவிர் அவ்வாறின்றிப் பரியதாகிய ஊனக் கண்ணை மூடி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காணுங்கள்; அத்திருவருளே அறியாமை யாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகும்.

குறிப்புரை :

முதலிரண்டடிகள் ஒட்டணி `விடியிலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. கடுமை பருமையை உணர்த்திற்று. ``இமை`` என்றது ஆகுபெயர். கட்டுதல் - தடுத்தல். காணுதற்குச் செயப்படுபொருள். முதற்கட் கூறியவாற்றால் `திருவருள்` என்பது பெறப்பட்டது. ``விடியாமை`` என்பது `இரவு` என்னும் பொருட்டாய் இருளைக் குறித்தது. ``காக்கும்`` என்பது, ``குற்றமே காக்க பொருளாக`` l என்பதிற் போல நின்றது. `திருவருளே விளக்கு` என்றதனால் `நீவிர் அவ்விளக்கையே நுமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` என்பதும் கூறினாராயிற்று.
இதனால், `இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப்
பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

பொழிப்புரை :

`உயிர்களையே பற்றுதற்கு உரியன` என நூல்களில் சொல்லிவைக்கப்பட்ட, பசுத்துவத்தைத் தரும் பாசத்தை அகற்றுவ தாகிய தவநெறியில்நின்று, அதனால் அப்பாசங்களின் கட்டு நெகிழ, வீடு பெறும் பக்குவத்தை எய்தி, முன் சென்ற உலகியலினின் றும் மாறி மெய்ந்நெறியைப் பற்றி, மெய்ப் பொருளையே அடைய விரும்பி அதற்கேற்ற முயற்சியால் அதனை அடையாது, மேற்கூறியவாறு விடிவதறியாப் பேதைமை மிக்கார்க்கு மேற்கூறிய விளக்கு நல்லாசிரியரால் ஈயப்படா.

குறிப்புரை :

``வைகி`` என்பது முதலாகப் போந்த எச்சங்கள் பக்குவம் படிமுறையான் முதிர்ந்து வருமாற்றை உணர்த்தி நின்றன. முன்னை மந்திரத்தில் ஒட்டணி வகையாற் கூறியதனையே இங்கு, ``அவ்வாறு`` எனச் சுட்டினார். பித்துப் போலுதல் பற்றிப் பேதைமையை, ``பித்து`` என்றார். பெறுவாரது பன்மையால் விளக்கும் பலவாம் ஆதலின் ``ஈயப்பெறா`` எனப் பன்மையாக ஓதினார். `தானே` என்பது பாடமன்று.
இதனால், அபக்குவர்க்கு ஞானமும், ஞானத்தின் பயனும் கிடையாமை கூறப்பட்டது. ``ஈயப் பெறா`` என்பது ஆசிரிய ராயினார்க்கும் அறிவித்தாம்.

பண் :

பாடல் எண் : 9

மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவான் அதற்சீட னாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``ஓரான்`` என்றது, `ஓரும் முயற்சியிலன்` என்றவாறு, காமாதி `காமம், வெகுளி மயக்கம்` என்பன. `இவற்றில் தோயும் தொழில்` என்க. தோய்தல் - மூழ்குதல். பின்னுதல் - கட்டிச் சொல்லுதல். அன்னியன் - ஞானத்திற்கு அயலானவன் என்க. ``ஓரான்`` முதலிய நான்கும் முற்றெச்சங்களாய் நின்று ``அன்னிய னாவன்`` என்னும் வினைப்பெயர் பயனிலை கொள்ள, அஃது எழுவா யாயிற்று. `ஓராமை முதலிய நான்கனுள் ஒன்றேயே உடையோனும், பலவற்றையுடையோனும் அன்னியனாவன்` என்க.
இதனால், அபக்குவிகளது இயல்புகள் கூறப்பட்டன. இறுதிக் கண் ``அசற்சீடனாம்`` என்றதனால் இஃது ஆசிரியராயினாரை நோக் கிற்றாய், `பக்குவம் எய்தாதாரையும், எய்தினாரையும் அறியுமாறு கூறிப்பக்குவம் எய்தாதார்க்கு ஞானத்தை உணர்த்துதலும், எய்தினார்க்கு அதனை உணர்த்தாது ஒழிதலும் செய்யற்க` என உணர்த்தியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தாரே.

பொழிப்புரை :

குற்றத்தைப் பொருந்துதல் சிறிதும் அறியாத மேலான் ஆசிரியரை நூல்முறை வழியே வழிபட்டு அவர்பால் உய்யும் வழியை அறிபவரே நல்வழியை அறிபவராவர். அல்லாதா ரெல்லாம் ஏனைக்கெடும் வழியை அறிபவரேயாவர்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொண்டும், முதலடியை மொழி மாற்றியும் உரைக்க. ஈற்றடியிலும், `அல்லாதவர் மற்றை அழிவறிவார்` எனக் கூட்டுக. குற்றம், காம வெகுளி மயக்கங்கள் அவற்றைச் சிறிதும் பொருந்தாமை சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுதலால் அமைவதாகலின், அவரே மேலான ஆசிரியாரதல் அறிய `அத்தகையோரை அறிந்து அடைந்து வழிபடப்பெறுதல் பக்குவிகட்கேகூடும்` என்பது, `அறிவாளர்` எனவும், ``அறிவார்`` எனவும் மறித்து மறுத்து வலியுறுத்தவாற்றால் பெறப்பட்டது.
இதனால், `அதிபக்குவரே பரம ஆசிரியரை அடைந்து வழிபட்டு உய்வர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும் பியே அடியேன் துடித்தேன்; அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவரது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழி யும் படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.

குறிப்புரை :

`என்று பக்குவிகள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர்` என்றவாறு. எனவே, இம்மந்திரம் அவர்களது கூற்றாம். ``ஒழிந்தேன்`` என்பவற்றில் ஒழிதல் துணிவுப் பொருள்மைக் கண் வந்தன. அகைதல் - அறுத்தல். இங்கு உயிரெதுகையும், மூன்றாம் எழுத்தெதுகையும் வந்தன. ``சிந்தின`` என்பது முற்றெச்சம் `அதைத்து`, `சிந்தனை` என்பன பாடமல்ல. அறக் கருணைசெய்து ஆளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்றற்கு, `திருவடி சூட்டி` என உயர் சொற்கூறாது, `உதைத்து` எனத் தாழ்சொற் கூறப்பட்டது.
இதனால், அதிபக்குவர்கள் அருட்பேராசிரியரைக் கண்டவழி அவரை அடையும் வகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

பொழிப்புரை :

உள்ளமாகிய நிலத்தில் ஆசிரியராகிய உழவர் விதைக்கின்ற விதையை முளைத்து வளர ஒட்டாது தின்றொழிக்கின்ற ஐம்புல ஆசையாகிய கிருமியை உடைய மனமாகிய மேல்மண்ணை யோக முயர்ச்சியால் ஆஞ்ஞையும், அதனைக்கடந்த ஏழந்தானமும் ஆகிய வானத்தில் நின்று நோக்கும் மெய்யுணர்வாகிய வெயிலால் அக் கிருமிகளை அழித்துச்செம்மை படுத்தி அம்மனத்தைத் தம்மோடு ஓத்துவரச் செய்கின்ற அடியவருக்குச் `சிவஞானம்` என்னும் விதையை உள்ளத்தில் ஊன்றக் கொடுத்தல் தக்கது.

குறிப்புரை :

இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கி, ``மேல் நின்று நோக்கி`` என்பதனை ``சிந்தையை`` என்பதன் பின்னும் ஈயலும் `ஆம்` என்பதனை முதலடியின் இறுதியிலும் கூட்டி அவ்வித்தினை எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``பதைக்கின்ற போதே`` என்னும் ஏகார இடைச்சொல் இரட்டுற மொழிதலாய் `பதையாமுன் ஈயற்க` எனப் பிரிநிலைப் பொருளும், பதைத்த பொழுது சிறிதும் தாழாதே ஈக` எனத் தேற்றப் பொருளும் தந்தது. பரம் - சிவம். இஃது ஆகுபெயராய் அதனை உணரும் ஞானத்தைக் குறித்தது. ஞானத்தை `வித்து` என ஏகதேச உருவகமாகக் கூறியதனால், ஏனையவும் ஏற்றபெற்றியால் ஆகும் உருவகமாதல் பெறப்பட்டது.
``மெய்ய்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் திருநேரிசையும் இங்கு அறியத் தக்கது. ``ஈயலும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், பக்குவிகள் ஆசிரியன் அருளைப் பெற்றபின், அதனைப் போற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டது. இதனைப் பயன் நோக்கி, `ஆசிரியராவார் போற்றுந்தன்மை யில்லார்க்கு விரைந்து அருளுதலும், கூடா` என்னும் முகத்தாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

``கொள்ளின்`` என்பது, நல்லாசிரியரை அடையும் பக்குவத்தினது அருமையுணர நின்றது. உம்மை உயர்வு சிறப்பு. உள்ள பொருள் - தம்மிடம் உள்ள அனைத்துப் பொருளும். உடலையும், உயிரையும் நோக்க இப்பொருள் மிகச் சிறிதாகலின், ``உடல் ஆவி யுடன்`` என உயர்பின்வழித்தாய* மூன்றாவதன் ஒருவினை ஒடுஉருபுசொல் கொடுத்துக் கூறினார். `இப்போது நுகர்வனவும், நுகருங்காற் செய்வனவுமாய வினைகளும் பொருளேயாம்` என்பது சித்தாந்தமாதலை இவ்விடத்து நினைக. இடைவிடாமை ஆசிரியரை. தெள்ளுதல் - சிந்தித்தல். அறிதல் - தெளிதல். இவை உபதேச மொழியினை இடைவிடாமை, இவர்றின் பொருட்டேயாம். ``சிவபதம்`` என்பதன் `உளதாம்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``தான்`` என்பது தேற்றப்பொருள் தந்தது.
இதனால், ஆசிரியரை அடையும் பக்குவர் அவரை அடையுமாறும், அடைந்து பயன் கொள்ளுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது.
ஆதியும் ஏதும் அறியகில் லானே.

பொழிப்புரை :

`விரிச்சிகமும், கற்கடகமும் என்னும் இரண்டு ஓரைகளையுடைய `சுவாதி, விசாகம்` என்னும் இரு நட்சத்திங்கள் பொருந்திய, முன்னோர் சொல்லிய இருநாட்களே குருமொழியை உணர்தற்கு உரிய நாள்கள்` என்று மரபு நெறியின் சிறப்பை எண்ணுவாருள் அங்ஙனம் உணர்ந்து ஒழுகுவார்க்குக் கூறியதல்லது, இறைவனும் அதற்குரிய காரணம் எதனையும் எங்கும் சொல்லி வைக்கவில்லை.

குறிப்புரை :

`அதனால், இன்றியமையாத பொழுது ஆசிரியர் எந்த நாளையும் நாளாக, எந்த ஓரையையும் ஓரையாகக் கொள்ளலாம்` என்பதாம். `தேள், நண்டு தொடர்ந்த சோதி விசாகம் ஓதிய இருநாளே உணர்வது` எனக் கூட்டுக. `தொடர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. உபதேசித்தற்கு ஆசிரியர் தாம் கொள்ளும் ஓரைதேளும், நண்டும் ஆதல் வேண்டும்` என்றமையால் அவற்றிற்கு ஏற்ற மாதம் தாமே அமையுமாதலின், அது கூற வேண்டாதாயிற்று. நீர்மை, ஆசிரியர் ஆணைவழியே நிற்றல் ``நினைந்தவர்க்கு`` என்பதனஅபின், `உணர்த்தியது` என ஒருசொல் வருவிக்க. ஆதி - முதல்வன், இறைவன். உயிர்வர மூன்றாமடியிறுதியில் குற்றுகரம் கெடாது நின்றது. `அவ்வாதியும், என ஓதலுமாம். `அறிவிக்கிலான்` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
இதனால், பக்குவிகட்குப் பயன்படுவன சிலகால மரபுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

பொழிப்புரை :

சரியை முதலிய பணிகள் நிரம்பிவர, அதனால், சிறந்த முத்துப்பேலும் தூயதான மனத்தில் உண்டாகும் எழுச்சி காரணமாக இறைவன் அதனைத் தனக்கு இடமாகக் கொண் டருளுவான். அப்பொழுது வீணரது வெற்றிப்பாடாம் வினை நீங்கிப் போக, அப்பணிகளில் நின்றோன் சிவனது வீரக்கழலை அணிந்த திருவடியை நேரே கண்டு, அவனது அருளேயாய் நிற்பன்.

குறிப்புரை :

தொழில், இங்கு இறைவன் பணி, மணி, இங்கு முத்து. வெண்மை தூய்மையைக் குறிக்குமாதலின், தூய்மை பெற்ற மனத்திற்கு முத்து உவமையாயிற்று. `சிந்தை தூய்தாதல் பணி நிரம்புதலாம்` என்றதனால், சரியை முதலிய பணிகளால் பக்குவம் முதிர்தல் கூறப்பட்டதாம். `பக்குவ முதிர்ந்தவழித் திருவடிப்பேறு கிடைக்கும்` என்றதனால், `பக்குவ முதிர்ச்சி வேண்டுவோர் மேற்கூறிய இறைவன் பணியை மேற்கொண்டு செய்க, என்றதாயிற்று.
இதனால், பக்குவம் வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி

சாத்தவல் லானவன் சற்சீட னாமே.

பொழிப்புரை :

சத்துவ குணம் மிக்கவனாய், பரம்பொருளை அடைய எண்ணி, அப்பரம் பொருள் முதலிய நுண்பொருள்களின் உண்மையை அடியாகக்கொண்ட சமயங்களே `சமயங்கள்` என்னும் உணர்வு உள்ளத்தில் தோன்றப்பெற்று, தொன்று தொட்டு விடாது கட்டியுள்ள பிறவிக்கட்டிற்கு அஞ்சி அறநெறியைத் தளராது மேற்கொள்ள வல்லவனே சற்சீடன் - நன்மாணாக்கன் ஆவான்.

குறிப்புரை :

`சாத்துவிகன்` என்பது மருவி நின்றது. ஆத்திகம் - உண்மைப்பொருள்களை உண்டென்று உடம்படும் நெறி அவற்றை உண்டென உடம்படாது `இல்லை` எனப்பிணங்குவது `நாத்திகம்` எனப்படும். முன்னையது பொது வகையில் ஒன்றாயினும், சிறப்பு வகையில் பலவாதலை, ``பேதநெறி`` என்றார். தோற்றம் - உள்ளத்தில் தோன்றுதல் இதனையே,
``தெய்வ என்பதோர் சித்தம் உண்டாகி``
என அருளிச்செய்தார் ஆளுடைய அடிகள். இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேலாகிய ``தோற்றமாகி`` என்னும் சினை வினை, ``அஞ்சி`` என்னும் முதல் வினையோடு முடிந்தது. இவ்வாறன்றி, ``ஆகி`` என்பதனை `ஆக` எனகத் திரித்துக்கொள்லுமாம். சாத்தல் - தரித்தல்; தாங்கல்; மேற்கொள்ளுதல். ஆத்திக புத்தி உடையவனே அறநெறியை உள்ளவாறு மேற்கொள்வானாகலானும், அவனே மாணாக்கன் ஆதற்கு உரியவன் ஆகலானும், ``ஆத்திக பேத நெறி தோற்ற மாகியே ... ... ... அறநெறி சாத்த வல்லானவன் சற்சீடனாமே`` என்றார். `நூல்கேட்கும் மாணாக்கர்க்கும் இந்நிலை வேண்டும்` எனக் கல்வியாசிரியர் வேண்டுதலை இங்கு நினைக.3 `ஆத்திகம் அடியாக வரும் அறஉள்ளமே பக்குவத்தை வருவிக்கும்` என்பது கருத்து.
இதனால், நன்மாணாக்கராம் பக்குவத்தை எய்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த
சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.

பொழிப்புரை :

சிவனது திருவருள் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி நன்னெறியை அடைவித்தமையால், `நிலை யுடைய பொருள் நிலை யாமையுடைய பொருள்களின் இயல்புகள் யாவை` என்னும் ஆராய்ச் சியைத் தலைப்பட்டு அவற்றை உள்ளவா றுணரும் உணர்வைப் பெறுதல்பொருட்டு ஆசாரியரை அன்போடு வழிபட்டு, சிவனது ஆனந்தசத்தியில் மூழ்குதற்கண் வேட்கை மிக்கவனே சற்சீடனாவன்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து அதனுள், ``சிவனருள்`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. ``ஆறு`` என்பது அதன்கண் நிற்கும் பொருளைக் குறித்தன, `ஞானம் பெறப் பத்தியின் பணிந்து` என இயைக்க. சிவனது சக்தி ஆன்மாக்களுக்கு முதற்கண் அறிவாயும், முடிவில் ஆனந்தமாயும் நின்று பயன் தருமாதலின், அவற்றை முறையே ``ஞானம்பெற`` எனவும், ``ஆனந்தசத்தியில் இச்சைதகுவோன்`` எனவும் கூறினார்.
இதனால் பக்குவர்க்கு ஞான வேட்கை முதிரும் - படிநிலைவகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.

பொழிப்புரை :

என்றும் சிவனது திருவடியைத் தாங்கி நிற்கின்ற தனது சீரியதலை, நிலையாமை யுடைய பிறவித் தொடர்ச்சியின் மூலங்களைக் காய்ந்தபின் அருட் சத்தியால் ஆசாரியரை அடைந்து, `ஆசாரியரே, இன்றே அடியேனுக்கு உமது திருவடியைச் சூட்டி அருள்செய்ய வேண்டும்` என வேண்டி நின்று, அவ்வாறே திருவடி சூட்டி அருளப்பட்ட ஞானத்தால் அசைவற நிற்பவனே மலம் நீங்கிய முத்தனாவான்.

குறிப்புரை :

முதலடியை மூன்றாம் அடியின்பின் கூட்டி யுரைக்க முடிவில் வைத்த அடியினது தொழிலை அம்முடியின் மேல் ஏற்றி கூறினார். அவ்வடியாவது திரோதான சத்தி. அதுவே பிறவியின் மூலமாகிய ஆணவாதி பாசங்களைக் காய்ந்தொழிப்பது. திரோதான சத்தி அருட்சத்தியாவதன்றிப் பிறிதில்லையாயினும் மாறுதலைப்பட்டு நிற்றல் பற்றி வேறுபோல ஓதினார். இந்நிலையே `சத்திநிபாதம்` எனப்படுவது, ``ஆசான்`` அண்மை விளி. பின்னின்ற ``வைத்த`` என்பது அஃறிணைப் பன்மை வினைப் பெயர். அஃது இரண்டாவதன் தொகை பட வந்தது.
இதனால், சிவனது அருள் ஆன்மாவிற்கு இருநிலையிலும் உபகரிக்குமாற்றால் ஆன்மாப் பக்குவம் எய்திப்பயன் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல
ஆராத காதல் குருபரன் பால் ஆகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய ஞானத்தின் கண் விருப்பம் மிக மிக, அது காரணமாகர ஞானாசிரியன்பால் அடங்காத அன்பு உளதாக, அதனால், அவ்வாசிரியன் அவன் மேல் தனது திருவடியைச் சூட்டி அருள்செய்ய, அவ்வாற்றானே, `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்கு சாதனங்களையும் முற்றி உலகியலில் நீங்கினவனே அறிவுடையோரால் `ஞானி` என ஆராய்ந்து கூறப்படும் முதிர்ந்த ஞானியாவான்.

குறிப்புரை :

சீராரும் ஞானம், சிவஞானம். இதில் இச்சை மிகுதல் தீவிரதர சத்திநிபாதத்தினாலாம். `சாராத சாதகம் நான்கும் உற்றேன்` என்றாராயினும், `சாதகம் நான்கினாலும் சாராமை உற்றேன்` எனறலே கருத்தென்க. சார்தற்குச் செயப்படுபொருளாகிய `உலகியல்` என்பது வருவிக்கப்பட்டது ஈற்றடியில் உள்ள ``அடிவைக்கவே`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டி உரைக்க.
இதனால், முதிர்ந்த பக்குவத்தில் உளதாம் தீவிரதர சத்திநிபாதத்தில் நிகழும் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

பொழிப்புரை :

உண்மை ஞானாசிரியனாயுள்ளவன் சிவ ஞானத்தை உணரத்தத்தக்க அதிபர்குவர்கட்கே அதனை முன்பு கேள்வியளவான் உணர்த்தி, அதன்பின் அவர்கள் அதனைச் சிந்தித்துத் தெளிந்த தெளிவு நிலையில் சிவனது வியாபகத்துள் அவர்களை வியாப்பியமாகச் செய்தலாகிய நிட்டையை எய்துவித்து, அந்நிட்டை நிலைபெற்ற வழி கிழக்கு முதலிய திசைப் பாகுபாடுகளுள் யாதும் இல்லாதவாறு சிவனது வியாபகத்தை முற்றுமாகத் தலைப் படுவிப்பன். அங்ஙனம் அச்செயல் அனைத்தையும் அவன் செய்வது, அனைத் துயிர்களையும் உடைய அருட் சத்தியைத் தியானித்தே.

குறிப்புரை :

மின் - மின்போலும் பெண். `மின்னாகிய ஆவுடையாள்` என்க. அவளை உன்னுதலாவது. தனது ஞானேச் சாக்கிரியைகள் யாவும் அவளாகவே நிற்றல். `ஆவுடையான்` எனப் பாடம் ஓதுவோர், `மின்னையுடைய ஆவுடையான்` என உரைப்பர். `ஆவுடையாள்` என்பதே வழக்கின்கண் மரபுப்பெயராய் வழங்கும். எவ்வாறு ஓதினும், அத்தொடர் சிவோகம் பாவனையைக் குறிப்பதே. துரியமாகிய அருள் நிலையுள் நிறுத்தலை, ``எல்லையுள் இட்டு`` எனவும் அதீதமாகிய ஆனந்தநிலையுள் நிறுத்தலை, `திசைப் பாகு பாடு நீக்கி` எனவும் கூறினார். குணக்கு - கிழக்கு. உத்தரம் - வடக்கு. பச்சிமம் - மேற்கு. கொண்டு - தான் கைக்கொண்டு. என்றது `அவனுக்குத் தோன்றாவகை செய்து` என்றதாம்.
இதனால், அதிபக்குவம் உடையார் குருவருளால் முத்தி நிலையை விரையப் பெறுதல் கூறப்பட்டது. இதனானே, ஞானாசிரியராவார். அதிபக்குவர்க்கு விரைய அருளல் வேண்டும் என்பதும் குறிப்பாற் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

பொழிப்புரை :

குருவருளை விரும்பும் மாணவனே, உன்முன் குருவாய் வந்து நிற்கும் சிவனை அங்ஙனமான சிவனாகவே கண்டு அவனது திருவடிகளில் வீழ்ந்து, ஏகாங்க திரியங்க பஞ்சாங்க சடங்க அட்டாங்கங்களாகிய ஐந்து வணக்கங்களையும் செய்து, பிறவித் துயரால் வருந்தும் உனது குறையை விண்ணப்பித்து, அச்சிவனது அருட்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் புகழ்ந்தபொழுது, நீயிருக்கும் சிறைக்கூடமாகிய உடம்பையே நீ என மயங்கியிருக்கும் உனது மயக்கத்தைப் போக்கி உனது உண்மையை உனக்குத் தெரிவித்து, நீ சிவத்தோடு ஒன்றாகும் நிலையை உன் அறிவு அறியும்படிச் செய்பவனே உண்மை ஞானாசிரியனாவான்.

குறிப்புரை :

``இறை``, குருவாய் வந்து நிற்கும் இறை என்பது அதிகாரத்தால் விளங்கிற்று. ஏகாங்க வணக்கமாவது கைகட்டித் தலையால் மட்டும் வணங்குவது. திரியங்க வணக்கமாவது, இரு கைகளையும் தலைமேற் குவித்துக் கும்பிட்டுத் தலை தாழ்த்து வணங்குதல். பஞ்சாங்க வணக்கமாவது மோவாய் இரு தோள் இரு முழந்தாள் இவ் ஐந்துறுப்பும் நிலத்தில் தோய வணங்குதல். சடங்க வணக்கமாவது, மோவாய் இரு கைகள், மார்பு, இரு கால்கள் இவ் ஆறுறுப்பும் நிலத்தில தோய வணங்குதல், அட்டாங்க வணக்கமாவது, மேற்கூறிய ஆறுறுப்புக்களுடன், இருகாதுகளும் நிலத்தில் தோய வணங்குதல். வணக்கம் நமஸ்காரம் எனப்படும். எட்டுறுப்போடு கூடிய வணக்கத்தை `சாட்டாங்க நமற்காரம்` என்பர். பல `வகையாலும் வணங்கி` என்றவாறு, ``நீ`` என்பதன்பின் `ஒன்றாக` என்பதும், ``அறிவுக்கு`` என்பதன்முன் `உனது` என்பதும், எஞ்சி நின்றன. அறிவித்தல் அறியும் தன்மையை உளதாக்கல்.
இதனால், பக்குவி நல்லாசிரியனை அனுபவத்தில் தெளியுமாறு கூறப்பட்டது. பக்குவம் இன்மையால் நல்லாசிரியனைத் தலைப்படாது, ஆசிரியன் அல்லாதானைத் தலைப்பட்டவழி அதனை அனுபவத்தால் உணர்ந்து நீங்குமாறும் இதுவேயாதல் அறிக. ஆசிரியன் அல்லாதானை அடைந்து பயன் பெறாது எய்த்த மாணவன் அவனை வருத்தத்தோடு விட்டு நீங்கி நல்லாசிரியனை நாடிச் செல்லு தற்கு. தேன் இல்லாத மலரை அடைந்த தேனீ பின்னர் அதனைவிட்டுத் தேன் உள்ள மலரை நாடிச்செல்லுதலை உவமையாகக் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 13

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.

பொழிப்புரை :

காமியத்தை நிரப்பும் நெறி வேத நெறியாக, அதனை விடுத்து நிட்காமியமாவது சிவனிடத்துச் செய்யும் பத்தியே யாதலாலும், ஒழுக்கமாகிய நீரை உலகியலாகிய மடையினின்றும் மாற்றிச் சித்தாந்த நெறியாகிய மடையிற் பாய்ச்சி ஆசையை ஒழிக்கும் உண்மை வேதாந்தியே குருவாகத்தெளிந்து அவன் திருவடிகளில் தாழ்ந்து வணங்கி, அவன் வழி நிற்பவனே சற்சீடனாவன்.

குறிப்புரை :

`வேதத்தை வேட்கைவிடும் நெறி` என்றமை யால், `வேத நெறி அதனையுடையது` என்பது பெறப்பட்டது. அஃதாவது, பலவகை வேள்விகளால் இம்மை மறுமை உலகங்களில் உள்ள இன்பத்தை அடையும் நெறியாம். ``வாழ்க்கை`` என்றது ஒழுக லாற்றை. `புனலைச் சித்தாந்தத்து ஆக வழிமாற்றி என்க. வழி, இயல் பாய் அமைந்த உலகியல் `ஆக` என்பது தொகுத்தப்பட்டது. முதல் மூன்று அடிகளால், `உண்மை வேதாந்தியாவன் சித்தாந்தியே` என்பது உணர்த்தப்பட்டதாம். இதன்கண் மூன்றாமெழுத் தெதுகை வந்தது.
இதனால், சற்குரு (நல்லாசிரியன்) கிடைக்கப் பெற்றோனே பக்குவியான சற்சீடன் (நன்மாணாக்கன்) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

பொழிப்புரை :

சற்குணம் முதல் அற்புதம் ஈறாக உள்ள ஏழியல்பும் உடையவனே சற்சீடனாவான்.

குறிப்புரை :

சற்குணம் - நற்பண்பு. அது மனம், மொழி, மெய் என்னும் மூன்றனுள் யாதொன்றானும் பிறவுயிர்க்குத் தீங்கு தேடாது இயன்ற அளவு நன்மை தேடுதல். விவேகம் - நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து, தீமையை விலக்கி, நன்மையைக் கொள்ளல். தண்மை - யாவர் மாட்டும். எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடைமை. சிற்பர ஞானம் - பேறறிவாகிய பரம்பொருளை அறியும் அறிவு. அதனைத் தெளிதற் பொருட்டு அதற்குரிய வாற்றால் ஓர்தலாவது. நூல்களாலும், பொருந்துமாற்றானும் ஆராய்ந்து ஒருமைபெற உணர்தல். அற்புதம் தோன்றலாவது! உலகியலில் நின்றபொழுது தோன்றாத புதுமைகள் தோன்றப் பெறுதல். அஃதாவது, ``பேரா, ஒழியாப், பிரிவில்லா, மறவா, நினையா, அளவிலா, மாளா இன்ப மாக்கடல்`` l போலப் புதிது புதிதாக எல்லையின்றி விளையக் காண்டல். `சற்சீடன்கண் ஆகும்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `சற்சீடன்கண் ஆகும்` எனவே, `அது` பக்குவத்தின் பயன்` என்றதாயிற்று. `சற்சீடற்கே` எனப் பாடம் ஓதலுமாம்.b
இதனால், பக்குவ மிகுதியது பெரும்பயன் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்களுள் மூலாதாரம் முதலிய ஐந்தனையும் முதலில் நன்கு தரிசித்து, அதன்பின் ஆறாவதாய் உள்ள ஆஞ்ஞையைத் தரிசிக்கும் பொழுது சிவனது திருவடியைத் தரிசித்தல் கூடும்.

குறிப்புரை :

``நாலு`` முதலாகக் கூறப்பட்டவை ஆதார தாமரைகளை அவற்றின் இதழ் எண்ணாற் கூறியனவாம். ``முதல்`` என்பது `தலைமை` என்னும் பொருட்டாய் ஆஞ்ஞை ஆதாரத்தை உணர்த்திற்று. `முதல் இரண்டும்`` - என்பதன்பின் `காண` என ஒரு சொல் வருவித்து, அதனை ``மூலம் கண்டாங்கே`` என்பதற்கு முடிவாக் குக. `மூலம் கண்டவாறே காண்க` என்பதனால் மூலாதாரத்தை முதலில் கண்டமை அநுவாத முகத்தாற் கூறப்பட்டது. கோல், முதுகந் தண்டு. அதன்மேல் உள்ளது விசுத்தி.
இதனால் ஆதார யோகத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தின்
போதா லயத்து அவிகாரந் தனில்போதம்
மேதாதி ஆதார மீதான உண்மையே.

பொழிப்புரை :

பிரணவ கலைகளில் பன்னிரண்டளவும் ஏறிக் காணின், நாதத்தளவும் செல்லலாம். பதினாறளவும் ஏறிக் காணின், நாதத்தைக் கடக்கலாம். மேதை முதலாக நாதாந்தம் ஈறாக உள்ள கலை களுக்கு மேல் உள்ளது பராசத்தியே. அந்த சத்தி ஞானமயமானது; விகாரம் அற்றது. அதுவே ஞானத்தைப் பெறும் இடமாகும். மேதை முதலாகச் சொல்லப்படுகின்ற பிராசாதகலா யோகத்தின் உண்மை இதுவாகும்.

குறிப்புரை :

இதன் விளக்கங்களை மூன்றாம் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத்திற் காண்க. `போத ஆலயத்து அவிகாரந்தனில் போதம் உளது` என்க. பிராசாத யோகத்தின் பயன் ஆதார நிராதாரங்களைக் கடக்கும் முறையால் பராசத்தியே வடிவமாகப் பரசிவன் நிற்கும் இடமாகிய மீதானத்தை அடைதலும், அங்ஙனம் அடைதலாலே பரமபந்தமாகிய நாதத்தையும் கடந்து ``சேவுயர் கொடியினான்றன் சேவடி சேர்தலும்`` (சிவஞான சித்தியார், சூ.1) ஆகும் என்றபடி. இதன் முதல் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால் பிராசாத யோகத்தின் முடிநிலை இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேலென்றும் கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்றும் நானென்றும் தன்மைகள் ஓராறும்
பாரெங்கு மாகிப் பரந்த பராபரன்
காரொன்று கற்பக மாகிநின் றானே.

பொழிப்புரை :

நிராதாரத்தையும் கடந்து மீதானத்தில் பாரசத்தியைத் தலைப்பட்ட வழி ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வு எய்தப் பெறும். அவ்வுணர்விலே சருவ வியாபகனாகி சிவன் இனிது விளங்கித் தனது எல்லையில் இன்பத்தை இனிது வழங்கி நிற்பன்.

குறிப்புரை :

``கீழென்று`` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. ``இரண்டறக் காணுங்கால்`` - என்பதை ``நானென்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ``தன்மைகள்`` - என்றது, ஆதார நிராதாரங்களில் நிகழ்ந்த அனுபவங்களை, ``கார் ஒன்று`` - என்பதில் `ஒன்று` உவம உருபு. கார் - மேகம். கற்பகத் தருவை, `கார் போலும் கற்பகம்` எனச் சிறப்பிக்கும் முகத்தால் `கார்போலவும், கற்பகம் போலவும் நிற்பான்` - எனக் குறித்தார். ``கார் ஒன்றோ` - எனப் பாடம் ஓதி, `ஒன்றோ` - என்பதை `எண்ணிடைச் சொல்` என உரைப்பினும் பொருந்தும், ``ஆகி நின்றான்`` - என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆள்வாரிலி மா டாவேனோ``(தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 7) - என்பதிற் போல `நின்றான்`` - என எதிர்காலம் தெளிவு பற்றி இறந்தகாலமாகக் கூறப்பட்டது. இம்மந்திரமும் மேல் உள்ள மந்திரம் போல உயிரெதுகை பெற்று வந்தது.
இதனால் பிராசாத யோக முடிநிலைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கரணம் புந்தி
சாதா ரணம்கெட்டாற் றான்சக மார்க்கமே.

பொழிப்புரை :

ஆதார யோகத்தால் எய்தும் பயன் நாடிகள் சுத்தியாகி, அமுதம் நிரம்பப் பெறுதலே, (அதனால் மனம் ஒருங்கிய தியான சமாதிகளே உண்டாகும்,) ஆகவே, பிராசாத யோகத்தில் பதினாறாவது கலைக்கு அப்பால் உள்ள மீதானத்திற்றான் மேல் உள்ள மந்திரத்தில் கூறியவாறு `சிதாகாசம்` எனப்படுகின்ற பராசத்தியின் விளக்கம் உள்ளது. ``போதாலயம்`` என மேற் கூறப்பட்ட அதனை அடைந்து ஐம்புலன்களும், நாற்கரணங்களும், சீவ போதமும் என்னும் இவற்றின் குறும்புகளாகிய பெத்தம் நீங்கினால் தான் `சகமார்க்கம்` - என்னும் யோகம் முற்றியதாகும்.

குறிப்புரை :

எனவே, `பிறவாறாக வரும் யோகங்கள் எல்லாம் நிறைவு பெறாத யோகங்களே` என்றபடி. ``சுத்திகள்`` - என்பதன் பின், `எய்தும்` என்னும் பயனிலையும் ``விண்ணொளி`` என்பதன்பின் `உளது` - பயனிலையும் அவாய் நிலையாய் நின்றன. `அப் போதா லயத்து` எனச் சுட்டு வருவித்துக் கொள்க. `ஆலயத்துக் கெட்டால்` என இயையும், அஃது ஏழாம் வேற்றுமைத் தொகை. சாதாரணம் - பொதுவியல்பு. உயிர்கட்குப் பெத்த நிலை பொதுவியல்பும், முத்திநிலை உண்மை யியல்பும் ஆதலை நினைவு கூர்க.
இதனால் பிராசாத யோக முடிநிலைப் பயனது சிறப்பு ஏனை யோகப் பயன்களின் சிறப்பின்மையோடு ஒருங்கு வைத்து உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதார மாகவே தான்எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போக மாவது காயமே.

பொழிப்புரை :

மோதாதி கலைகளின் வழியே பிரணவ நினைவை இடைவிடாது வளர்த்து, அதனாலே ஆதார சோதனை அத்துவ சோதனைகளைச் செய்தால், உணர்வு மிகுதலே யன்றி, உடம்பும் விரைவில் வீழ்ந்தொழியாது சீவபோகத்தைத் தலைப்படுதற்குத் துணையாய் நெடிது நிற்கும்.

குறிப்புரை :

`சோதனை` எனினும், `சுத்தி` எனினும் ஒக்கும். பிராசாத யோகத் தானங்களில் ஆறத்துவாக்களும் அடங்கி நிற்கும் முறையைப் பிராசாத நூல்களிற் காண்க. தாதாரம் ஆக - அதுவே பற்றுக் கோடாக, தான் - ஆன்மா. அஃது எழுச்சி பெறுதல் உணர்வினாலேயாகலின் அவ்வுணர்வினது எழுச்சியை ஆன்மாவின் எழுச்சியாகக் கூறினார். `காயம் போகம் செய் ஆதாரம் ஆவது` - என மாற்றிக் கொள்க. போகம் - சிவபோகம்.
இதனால், `பிராசாத யோகம் ஏனை யோகப் பயன்களையும் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆறந் தமும்கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத் தோரெழுத் தாமே.

பொழிப்புரை :

`உடம்பு ஆறாதாரங்களோடே அமைந்தது` - எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் மேற் கூறிய ஏழாந் தானமும், அதற்குமேல் உள்ள நிராதாரமும் ஆகிய அவைகளையும் தரிசிக்கக் கடவீர். ஏனெனில், ஆறாதாரங்களில் அடங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் காரிய எழுத்துக்களேயாக, காரண எழுத்தாகிய பிரணவம் அந்தக் காரண நிலையிலே நிற்கும் இடம் அவைகளே யாகலின்.

குறிப்புரை :

எனவே அதனை உணராதவழி உயிருணர்வு பாச ஞானம் ஆகாது பதிஞானமாய் நிற்றல் கூடாது` என்றபடி. ``ஆதாரம்` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க, ஆறுதல், அடங்குதல். ஊறுதல் - அடிநிலையாய் நிற்றல். ``ஆதாரத்து`` என்பதனை ``மேல்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
இதனால் பிராசாத யோகத்தின் மேல்நிலையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆகும் உடம்பும் அகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :

தூலதேகம் தோன்றுதற்கு முதலாயுள்ள சூக்கும தேகமும் இறுதியில் அழிவதேயாம். இனிக் காரியமாதல் பற்றி அநித்திய மாதல் தெளிவுற நிற்கின்ற தூல தேகம் சூக்கும தேகத்தோடு இயைந்து நின்று அறிவும் செயலும் உடையதாதல் காரிய எழுத்துக்களாகிய ஐம்பதனாலேயாகும். ஆகவே சூக்குமதேகத்திற்கும் ஆறாதாரங்களின் இயைபு உள்ளதே.

குறிப்புரை :

`அதனால், ஆதார யோகத்தை இகழற்க` - என்பது குறிப்பெச்சம். `காரணமாதல் பற்றியே - நித்தியம் - என மலையற்க` என்றற்கு அழிகின்ற அவ்வுடல்` என்பதனைக் கூறினார். `உடலே` என்னும் தேற்றேகாரம் தொகுக்கப்பட்டது. தத்துவம்` - என்பது இங்கு எழுத்தின்மேல் நின்றது. இதன்பின் `ஆதலின்` என்பது வருவிக்க. ``ஆம்`` என்றது, `உரியன` என்றவாறு.
இதனால், ஆதார யோகத்தின் இன்றியமையாமை வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆய மலர்இன் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

பொழிப்புரை :

ஆராய்ச்சிக் கருவியாகிய மனத்திற்கு இடமாய் உள்ள இருதய தாமரையாகிய இனிய அழகிய மலரின் மேல் உள்ள தாகிய ஓர் ஆதாரமாய் நிற்கும் இதழ்கள் பதினாறும் அவ்விடத்திலே உள்ளன. அதனை அடைந்த அறிவே மாசு நீங்கிச் சிவத்தோடு கூடி அதன் ஆனந்தத்தைப் பெற்று பின் அந்தச் சிவத்தின் வேறாய் நில்லாது ஒன்றாய் நிற்கும் முடிநிலையை எய்தும்.

குறிப்புரை :

இருதயத்திற்குமேல் உள்ள ஆதாரம் விசுத்தி. அதனை அடையும் யோகமே ஆதார யோகத்தின் முடிநிலைக்கு அணித்தாவது ஆதலின், அதற்குக் கீழ் நிற்கும் யோகமெல்லாம் `யோகம்` எனப் படாது என்றற்கு இவ்வாறு கூறினார். விசுத்தி பற்றிய விளக்கத்தைத் தந்து, அதன் பின்னர், ``தூய அறிவு`` என்றமையால், அதனை அடைந்த அறிவு` என்பது பெறப்பட்டது. முடிநிலையை அடைதலை `விளைதல்` - எனக் கூறினார். ``மேலது`` என்பதன் ஈற்றுக் குற்றிய லுகரம் கெடாது நின்று உடம்படு மெய்பெற்றது. உம்மை இரண்டனுள் முன்னது இறந்தது தழுவிய எச்சம். பின்னது முற்று.
இதனால், `யோகத்தைக் கடைபோகச் செய்யாவிடின் அஃது யோகமாய்ப் பயன் தராது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.

பொழிப்புரை :

[ஏதோ ஒன்றை மட்டுமே `இலிங்கம்` என உலகவர் நினைத்தால்,] இலிங்கம் - என்பதன் உண்மையை உணர்ந்தவர் அரியர். எட்டுத் திசைகளாய் விரிந்து காணப்படும் உலகம் முழுதுமே இலிங்கம். அறுபத்து நான்காகச் சொல்லப்படுகின்ற கலைகளும் இலிங்கம். இறைவன் உலகத்தைத் தனது அருட்குறியாகவே உண்டாக்கினான்.

குறிப்புரை :

``ஆவது`` என்பன இரண்டும் தொழிற் பெயராய் நின்றன. ``எண்டிசை`` என்றதனால் பொருளுலகமும் ``எண்ணெண் கலை`` என்றதனால் சொல்லுலகமும் குறிக்கப்பட்டன.
இதனால் எல்லாம் இலிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே.

பொழிப்புரை :

உலகத்தைத் தோற்றுவித்த இறைவன் உலகில் அனைத்துப் பொருள்களையும் ஆக்கியது தனது சத்தியே பொருளாக வும், பொருளின் வடிவமைப்பாகவும், குணமாகவும் அமைத்தேயாம்.

குறிப்புரை :

`அதனால் உலகமே இலிங்கம் ஆதலில் ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம். `எல்லாம் சிவமயம்` என்றல், சிவன் சத்தியாய் நிற்கும் நிலைபற்றியே என்பது தெளிவாகலின், இவ்வாறு கூறினார். கூறவே, `சிவனது திருமேனி சத்தியாதல் பற்றி உலகமே இலிங்கமாதல் தெளிவாகும்` என்பதாம். ``பொருள்`` என்றது செயலாற்றலும், பயன் தருதலுமாகிய இவைபற்றி. `முதல்` எனினும் `பொருள்` எனினும் ஒக்கும். ஈற்றடியை முதலிற் கொள்க.
இதனால், உலகமே இலிங்கமாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.

பொழிப்புரை :

ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களினின்றும் நீங்கித் தான் தனித்து நிற்கும் நிலையையும், அதன்பின் அது தன்னைப் பெற்று நிற்கும் நிலையையும், அந்நிலைக்கண் விளைகின்ற தனது பரபோகத்தையும் தருதலேயன்றி, உடம்பும், அதனால் உண்டாகின்ற புலன் உணர்வும் அதனால் வரும் புலன் இன்பமும் என்னும் இவற்றையும் தந்து நிற்பான் சிவன் ஆதலின் அவன், சிவாகமங்களில் பாசக் கூட்டமாகச் சொல்லப்படுகின்ற ஆறத்துவாக்களாயும் விளங்குவான்.

குறிப்புரை :

`ஏகமும், முத்தியும், போகமும் - ஆகமும், புத்தியும், சித்தியும், என ஓதற்பாலதனைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். சிவன் தன்னையடையச் செய்தலே முத்தியாதலை நினைக. யோகம், ஏற்புழிக் கோடலால் பரபோகமாயிற்று. எண்ணிய எண்ணியாங் கெய்தும் உலகபோகத்தை, ``சித்தி`` என்றார். உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் உடன் வைத்துக் கூறிய குறிப்பால், `உயர்ந்தவற்றையேயன்றித் தாழ்ந்தவற்றைத் தருபவனும் சிவனே` என்பது போந்தது. தாழ்ந்தவற்றைத் தருதல் அவற்றின்கண் உவர்ப்புத் தோன்றுதற் பொருட்டு,
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப்பகுதி, 52
என்றாற்போலும் திருமொழிகளை நினைக.
`பாசமாகிய அண்டங்கள் அனைத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் பாசங்களாகிய அண்டமாய் நிற்றல் எவ்வாறு என்னும் ஐயத்தை நீக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
``அண்டமாய், ஆதியாய், அருமறையோ டைம்பூதப் பிண்டமாய் உலகுக்கோர் மெய்ப்பொருளாம் பிஞ்ஞகனை``
-தி.4 ப.7 பா,4
என நாவுக்கரசரும் அருளிச்செய்தார். இதனானே பிண்டமும் இலிங்க மாதற்கு ஐயமின்று என்பது பெறப்படும்.
இதனால் அண்டம் இலிங்கமாதல் பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.

பொழிப்புரை :

தேவர் பலரும் தாம்செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவன் உருவத்திருமேனி கொண்டு வெளிப்படக் கண்டு புகழ்ந்தும், வாழ்த்தியும், இன்பப் பொருளாக உணர்ந்தும், வேண் டுவார் வேண்டுவதை அருளப்பெற்று, `வரையாது வழங்கும் வள்ளல்` என ஆரவாரித்தும் நின்றாராயினும், `அவன் உண்மையில் உலகங் கடந்தவனே` என்னும் உண்மையை உணர்கின்றிலர்.

குறிப்புரை :

`அஃது அவர்கள் அவனைத் தம்மில் ஒருவனாக எண்ணும் அதனால் விளங்கும்` என்பது கருத்து. எனவே, `அவன் அண்டலிங்கமாய் நின்று வழிபடுவார் செய்யும் வழிபாட்டினை ஏற்றுப் பயன் தருவானாயினும் உண்மையில் அவன் உலகங்கடந்தவன் என்பதை அறியாமை குற்றமாம்` என்றபடி. அவனது உண்மை நிலையை அறிந்த பொழுதே, `அவன் நமக்காக இறங்கி வந்து அருள் செய்கின்றான்` என்பது விளங்க, அதனால் அவன்மாட்டு அன்பு நிகழ் தலும், அதனை அறியாத பொழுது அங்ஙனம் அன்பு நிகழாமையும். அன்பு நிகழாது செய்யும் வழிபாடு, வழிபாடு ஆகாமையும் உளவாதல் பற்றி, `அவனது உண்மையை உணராமை குற்றம்` எனக் கூறினார்.
இதனால் `அண்டலிங்கம் முதலிய இலிங்கங்களாய்ச் சிவன் நிற்றல் உயிர்கள் மாட்டுவைத்த அருள் காரணமாக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.

பொழிப்புரை :

அந்தப் பரம்பொருளாகிய சிவம் தீக் கடவுள், அயன், மால், உபப்பிரமா, சூரியன், சந்திரன் ஆகியோரது கண்களுக்கு அவரவர் வழிபடும் இலிங்கமாகியும், அவ்விலிங்கங்களை வழிபடும் பொழுது அவர்கள் விரும்பியவற்றை வழங்க எங்கும் வெளிப்படும் அழகிய மூர்த்திகளாயும் விளங்கினும் எங்கும் கலந்து நிற்கும் பெரும்பொருளேயாகும்.

குறிப்புரை :

``தற்பரம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. பிரமனால் அவனது படைத்தற்றொழிலை இயற்றப் படைக்கப் படுபவர், `உபப்பிரமாக்கள்` எனப்பட்டு, `பிரசாபதிகள்` எனவும் கூறப் படுவர். `தட்சப் பிரசாபதி` என்பது காண்க. தேவருள் சிறப்புடைய சிலரை எடுத்துக் கூறியவாறு. செவ்வேள் ஈற்றில் `இவர்தம்` என்பது தொகுத்தலாயிற்று. `கட்சுடர்` என்னும் நான்காவதன் தொகை எதுகை நோக்கி மெலிந்து நின்றது. அதன்கண் ``சுடர்`` என்றது இலிங்க வடிவினை. தேவர் யாவரும் லிங்க வடிவில் சிவனை வழிபடுதல் வெளிப்படை. ``கலந்தெங்கும்`` என்பதை இறுதியில் ``ஆம்`` என்பதனோடு இயைத்து முடிக்க. `அத்தேவர்கள்` எனச் சுட்டுவருவித்துக் கொள்க. சிவனது மூர்த்தம் நிறத்தால் பொங்கழலோடு ஒப்பதாயினும், வெப்பம் இன்றித் தட்பக் குணமேயுடைத்தாய் இருத்தல் பற்றி, `தண்சுடராய்` என்றும், வழிபடுவார் வழிபடும் இடங்கள்தோறும் அவர்க்கு அருள்புரியத் தோன்றுதலால், ``எங்கும் தண்சுடராய்`` என்றும் கூறினார். ``எங்கும் கலந்து ஆம்`` என்பதில் ஆதல் உளதாதல்.
இதனால், `அவன் இலிங்கம் முதலிய கண்டப் பொருளாய்த் தோன்றினும் அகண்டப் பொருளேயாதலை நினைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. ``எங்கும் தண்சுடராய்`` என்றதனால் இலிங்க வடிவில் வழிபடுவார்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிதல் குறிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.

பொழிப்புரை :

சிவனது மிக மேலான உண்மை நிலையை உணர்ந்து அவனை வழிபடுவோர் மிக அரியர். அதனை உணர்ந்து வழிபடுகின்ற அவர்கட்கும் பூவைத் தன்னுள்ளே அடக்கியுள்ள அழகிய கொடி அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போலத் தனது உண்மை நிலையை வெளிப்படுத்துவான். ஆகவே அவனது பொது நிலையாகிய இலிங்க வடிவிலும் அவன் நின்று படிமுறையால் மேல் நிலையை அருளுவான்.

குறிப்புரை :

`ஆகவே இலிங்க வடிவம் அவனது அகண்ட நிலையோ, உண்மை நிலையோ அன்று என இகழாது கொள்க` என்பது குறிப்பெச்சம். ``தாபரத் துள்நின்று அருளவல்லான்`` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க. தாபரம் - பெயர்ப்பொருளாகிய திருவுருப் படிமங்கள். ``வழிபடுவாளர்க்கும்`` - என்பது பாடம் அன்று. ``ஆகும்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. சுட்டிக் கூறா உவமம் ஆகலின் பொதுத் தன்மை வருவிக்கப்பட்டது.
இதனால், இலிங்க வழிபாட்டின் சிறப்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :

கருவறையின்மேல் உயர்ந்து விளங்கும் விமானங்கள், `தூல லிங்கம்` என்பதும், கருவறையில் மூலமாய் விளங்கும் இலிங்கம் `சூக்கும லிங்கம்` என்பதும், திருவாயிலின் முன் விரிந்து காணப்படும் பலிபீடம், `பத்திரலிங்கம்` என்பதும் சிவா லயங்களின் உண்மையைச் சிவாகம நெறியால் ஆராய்ந்துணர்வார்க்கு விளங்குவனவாகும்.

குறிப்புரை :

``விமானமும்`` என்னும் உம்மை, `சதாசிவ மூர்த்தியே யன்றி` என இறந்தது தழுவி நின்றது. அண்டத்தின் உள்ளாய் விளங்கும் பொருள்களும் இலிங்கங்களாதல் இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.

பொழிப்புரை :

முத்து முதலிய இவை பலவும் இலிங்கமாகச் செய்து கொள்ளுதற்குரிய பொருள்களாகும்.

குறிப்புரை :

மொய்த்த - ஒளிமிகுந்த. கொம்பு - மரக்கழி. ``கொத்தும்`` என்றதனால், அது செதுக்கி உருவாக்கப்படுதல்` விளங்கிற்று. கோமளம் - அழகு. அஃது ஆகுபெயராய் இரத்தினத்தை உணர்த்திற்று. இதனால், படிகம், மரகதம் முதலாக எஞ்சிய இரத்தினங்களைக் கொள்க. சிலை - கருங்கல் வகைகள். `மாக்கல் கூடாது` - என்பர். ஆகமம் - சிவாகமம் எழுதப்பட்ட சுவடி. திருமுறைச் சுவடி களும் இதனானே பெறப்படும். அன்னம் - சோற்றுருண்டை. அரிசி - அரிசித்திரள். பூ - தனி மலரும், கோத்த மலரும். இனி இதனை இரட்டுற மொழிந்து, `மண்` எனவும் கொண்டு, `பிசைந்து பச்சையாக வைக்கும் மண்ணும், சுட்டுக் கொள்ளும் மண்ணும்` என உரைக்க. `இலிங்கம் உய்த்து அதன் சாதனம் ஆம்` என மொழிமாற்றி, `இலிங்க மாகச் செயப்பட்டு அதற்கு மூலப்பொருளாம்` என உரைக்க. சாதனம் ஆதல் முக்காலத்தினும் ஒக்கும் ஆதலின். அதனை இங்கு இறந்த காலத்தில் வைத்துக் கூறினார். ஏகாரம் ஈற்றசை.
சிவவழிபாடு `ஆன்மார்த்தம், பரார்ரத்தம்` என இரு வகைப் படும். ஆன்மார்த்தம் - தன்பொருட்டு. பரார்த்தம் - பிறர் பொருட்டு. அவரவரும் தம் தம் இல்லத்திலாயினும், பூசைப் பெட்டகத்திலாயினும், இலிங்கத்தை எழுந்தருள்வித்துக் கொண்டு வழிபடுவது ஆன்மார்த்த வழிபாடு. வீரசைவர், `இலிங்கம் அங்கத்திலே (உடம்பிலே) ஒன்றாய் நீங்காதிருக்கத் தக்கது` எனக் கொண்டு வழிபாட்டுக் காலத்தில் இலிங்கத்தை இடக்கையிலே வைத்து, வலக்கையால் வழிபடுவர்.
உலகம் முழுவதற்குமாகத் திருக்கோயில்களில் இலிங்கம் எழுந்தருள்வித்துச் சிவாசாரியர்களால் செய்யப்படுவது பரார்த்த வழிபாடு.
இவ்விரண்டனுன் மேலை மந்திரம் பரார்த்த லிங்கம் ஆவன வற்றைக் கூற இம்மந்திரம் ஆன்மார்த்த லிங்கம் ஆவனவற்றைக் கூறிற்று.
பரார்த்த லிங்கம் இடம் விட்டுப் பெயராதிருத்தலால், `அசல லிங்கம்` என்றும், ஆன்மார்த்த லிங்கம் வேண்டும் இடங்களில் கொண்டு செல்லப் படுதலாலும், வழிபாட்டின் பொழுதும், அதற்குப் பின்னும் இடம் மாற்றி வைக்கப்படுதலாலும் `சல லிங்கம்` என்றும் சொல்லப்படும். சலம் - அசைவுடையது, அசலம் - அசைவில்லது. இவற்றுள் மேலைமந்திரம் அசல லிங்கமாவனவற்றைக் கூற, இம் மந்திரம் சவலிங்கமாவனவற்றைக் கூறிற்று. இவற்றுள் அசலல லிங்கம் ஆதற்கு உரியனவும் உள; அவற்றை அறிந்து கொள்க.
இனி சல லிங்கமும், `கணிகம், திரம்` - என இரண்டு வகைப்படும். கணிகம் - நிலையில்லாதது; அவ்வப்பொழுது ஆக்கி அமைத்து, வழிபட்டவுடன் விட்டு விடப்படுவது.
திரம் - நிலையுள்ளது, அஃது ஒருமுறை எழுந்தருள்வித்துக் கொண்டு, வாழ்நாளளவும் விடாமல் வழிபடப்படுவது.
`இவற்றுள் இங்குக் கூறப்பட்டவை இன்ன இன்ன இலிங்கமாதற்கு உரியன` என்பது அந்த அந்தப் பொருள் இயல்பு பற்றியும் அவரவரது கருத்துப் பற்றியும் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம்
வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முத்து முதலியனவேயன்றித் தயிர் முதலியனவும் இலிங்கம் ஆதற்குரிய மூலப்பொருள்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிந்தெடுத்துக்கொள்க.

குறிப்புரை :

``துய்ய`` என்றது, `பசுவினின்றும் தோன்றுவது` என்ற தாம். இதனை தயிர் முதலிய நான்கிற்கும் கொள்க. மெழுகு - மெழு குதல்; முதனிலைத் தொழிற்பெயர். இஃது ஆகுபெயராய், அதற்குக் கருவி யாகிய சாணத்தைக் குறித்தது. ஆனைந்தில் (பஞ்ச கௌவியத்துள்) கோ நீர் தவிர ஏனை நான்கும் இங்குக் கூறப்பட்டன. தயிர் பால் நெய்கள் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளப்பட்டும், சாணம் பிடித்து வைக்கப் பட்டும் ஆவில் ஐந்தும் கலந்து நிறைகுட வடிவில் இலிங்கமாகும். நெய், சிறப்பாக வெண்ணெயே ஆகும். கன்றிய செம்பு - உருக்கி வார்க்கப் பட்ட தாமிரம். கனல் - எரியும் நெருப்பு; இது வேள்வித் தீ. பெரிதாய் எரியும் விளக்கும் ஆகும். வேள்வித் தீயில் குண்டமும், விளக்கில் தகழியும் பீடமாய் இருக்கும். ஒரு தகழியில் பல சுடர்கள் ஏற்றப்பட்டால் அவை முகங்களாகும். இரதம் - சித்த மருத்துவ முறையில் பண்ணப் படும் இரசக் கல். சந்தம் - சந்தனம். வில்வம் - வில்வக் காயும், பழமும். பொன் செம்பொன்னும், வெண் பொன்னும். இவை உருக்கி வார்க்கப் பட்டு இலிங்கமாம். `தேன்` என்பது எதுகை நோக்கிக் குறுகி நின்றது. தேனும் பாத்திரத்தில் கொள்ளப்படும். `தென்`, அழகுமாம். திருக் கொட்டை - உருத்திராக்கம்.
இதனால் கணிக லிங்கம் ஆம் ஆவனவே கூறப்பட்டன. `சலம் தென்தியங்கொன்றை` என்பனவும் பாடம்.
இரத்தினத்தால் ஆயவை `இரத்தினசம்` என்றும், பொன்னால் ஆயவை `உலோகசம்` என்றும் கல்லால் ஆயவை `சைலசம்` என்றும் பொதுப் பெயர் பெறும். ஏனைய ஒவ்வொன்றேயாம்.
இவ்விலிங்க வகையால் பயன் வகைகள் ஆகமங்களில் சொல்லப்படுகின்றன. எனினும் நாயனார் பொதுவாகவே கொள்ளவைத்தார்.

பண் :

பாடல் எண் : 10

மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

அந்தணர் முதலிய வருணங்களை ஒழுக்கம் பற்றிக் கொள்ளுதலே தமிழ்நெறி, வாணம் - பாணம். இதுகல்லால் ஆகியது; கோமளம் - இரத்தினம்` என்பதும் ``முத்துடன் மாணிக்கம்`` என்னும் மந்திரத்தில் (பா.1696) கூறப்பட்டது.
[பதிப்புகளில் இதன்பின் காணப்படுகின்ற இரண்டு மந்திரங்களும் இவ்வதிகார இறுதியில் நிற்றற்கு உரியன.]

பண் :

பாடல் எண் : 11

போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.

பொழிப்புரை :

அண்டமாகிய இலிங்கத்தில் பூமி சிவனது திருவடி களாயும், அண்ட முகடு திருமுடியாயும், வானம் திருமேனியாயும் அமையும், ஆகவே, அண்டமாகிய இலிங்கத்துடன் சிவன் நிற்றல் மேற்கூறியவாறாகும்.

குறிப்புரை :

மாது - கங்கை, ``உள், ஈசன்``, `உளனாகிய ஈசன்` எனப் பண்புத் தொகை, இது மேல் நின்ற `கழல், முடி` என்பவற் றோடும் இயைந்தது.
இதனால் அண்டலிங்கம் சிவனது திருவடி முதலிய உண்மை உறுப்புக்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.

பொழிப்புரை :

இன்னும் அண்டலிங்கத்தில் பூமி பீடமாயும், வானம் பீடத்தின் மேல் உள்ள இலிங்கமாயும், கடல் நீர் திருமஞ்சனக் குட நீராயும், மேகம் அந்த நீரை முகக்கின்ற கலமாயும், திசைகள் எல்லையற்ற சிவனது உந்தியின்மேல் உடுக்கப்படும் உடையாயும் நிற்கும்.

குறிப்புரை :

`தரை, சத்தி` என இயையும். உள்ள - இலிங்கம் பொருந்தி நிற்கின்ற - பீடம் சத்தி வடிவாதல் பற்றி, ``சத்தி`` என்றார். நீர் - சால், குடம். `ஐ` `அழகிய நீர்` என்க. ``மஞ்சு நீர்`` என்பதில் உள்ள ``நீர்``, தானியாகு பெயர். கரை - எல்லை; என்றது திசையை. ``கரை`` என முன் வந்தமையின் ``அற்ற`` என்றே போயினார். `அற்ற நந்தி உந்திக்குக் கலை ஆம்` என மாற்றிக்கொள்க. உந்திக்கு - உந்திக்கண், வேற்றுமை மயக்கம்.
இதனாலும் அண்டலிங்கம் சிவனது உபசார அங்க உபாங்கங்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.

பொழிப்புரை :

உபநிடதங்களின் வழி தன்னை `அது` என்னும் அளவில் தன்னைப் பொதுவாக உணர்ந்தவன் பின்பு தனது ஒப்பற்ற இயல்புகளைச் சிறப்பாக உணர வேண்டி ஆராயும்பொழுது அவன் அவ்வியல்புகளுள் ஒன்றையேனும் உணராதபடி மறைந்து நிற்கின்ற சிவன், வேதாந்திகட்கு மிகவும் புதுமையாய்த் தோன்றுகின்ற அண்டலிங்கமாகிய இந்தத் தன்மையை உணர்ந்த என் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குகின்றான்.

குறிப்புரை :

``அது`` என்றது வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள - தற்பதத்தினை. அப்பதத்தின் பொருளை அப்பதமாகக் காரியத்தைக் காரணமாக உபசரித்துக் கூறினார். ``நாடி`` என்னும் எச்சம் ``உணரா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தது. `தேடி யறிந்திலர்` என்பது போல `எதுவும்` என்னும் இழிவுசிறப்பும்மை தொகுக்கப்பட்டது; `அண்டமே இலிங்கம்` என்னும் சைவாகமப் பொருள் வேதாந்திகட்குப் புதுமையாய்த் தோன்றுதல் பற்றி அதனை, ``புது உணர்வு`` என்றார். அசுத்த மாயா புவனங்கள் பூதபுவனம், தன் மாத்திரைப் புவனம், மனோ புவனம், அகங்கார புவனம், புத்தி புவனம், பிரகிருதி புவனம், புருட புவனம், மாயா புவனம் என ஓராற்றால் எட்டு வகைப்படுதல் பற்றி அவற்றை, ``புவனங்கள் எட்டும்`` என்றார். ``எட்டும்`` என்றது அதிகார இயைபால், எட்டும் இலிங்கம் ஆதலைக் குறித்தது. `இது உணர்ந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அண்டலிங்கத்தின் உண்மையை உணர்ந்ததனால் தாம் எய்திய பயனைக் கூறவே, `பிறரும் அதனை உணர்வாராயின் அப்பயனைப் பெறுவர்` என்பது தானே அமைந்தது.
ஈசன் உடலைக் கோயிலாகக் கொள்ளுதல் உள்ளத்தில் வீற்றிருத்த லாலேயாம். இஃது இவ்வாறு கூறப்படும் பிற இடங்கட்கும் ஒக்கும். இதனை இட்டலிங்கமாக உடம்பில் பொருந்தியிருத்தலாக உரைப்பாரும் உளர்; முன்னைத் தந்திரத்தில் நாயனார் `தவ வேடம்` கூறிய இடத்திலாதல், பிறிதோர் இடத்திலாதல் தூல உடலில் சிவன் வேறோர் இலிங்கமாய்ப் பொருந்தியிருத்தலைக் கூறிற்றிலர். ஆதலால், அது பொருளாகாமை அறிக.
இதனால், அண்டலிங்கத்தினை உணராதாரது தாழ்வும், அதனை உணர்ந்தாரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

பொழிப்புரை :

அடியவரது பாவத்தை ஒழிப்பவனாகிய சிவன் அண்டமே இலிங்கமாகக் கொண்டு அமர்ந்திருத்தல் அன்றியும் உண்மையை உணராமையால் வீணாய் ஒழிகின்ற ஒரு நிலையில் பொருளாகிய உடம்பினுள்ளே அதன் நடுவிடமாகிய இருதய தாமரையைத் தான் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்டு விளங்குகின்ற புண்ணிய மூர்த்தியாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அகலிடமாயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அறியாமையாவது, ஊனுடம்பே சிவனுக்கு ஆலய மாயும் இருத்தலை அறியாமை. ``அறியாமல்`` என்பதன் பின், `இருத் தலால்` என்பது எஞ்சி நின்றது. `அறியாமை` எனப் பாடம் ஓதி, `அறியா மையால்` என உருபு விரித்தலும் ஆம். ``அறியாமல் அடங்கும்`` என்ற தனால், ``பயனின்றி`` என்பது பெறப்பட்டது. உகல் - உகுதல்; அழிதல். பகல் - நடுவிடம். `நுகத்திற் பகல் ஆணிபோல நடுவு நிலைமையை உடையர்` என்றல் வழக்காதல் அறிக. (``நெடு நுகத்துப் பகல்போல - நடுவு நின்ற நன்நெஞ்சினர்`` - பட்டினப் பாலை - 106, 27. ``பகலன்ன வாய்மொழி`` - புறப்பொருள் வெண்பா மாலை - வாகைப்படலம் - அரச வாகைக்கொளு) `முனம்` என்பது பாடம் அன்று. புண்ணியம், சிவபுண்ணியம், `அப்புண்ணியத்திற்கு ஏற்புடைய மூர்த்தி` என்றபடி. உள்ளக் கோயிலில் வழிபடுதல், `கிரியை, யோகம்` என்னும் சிவ புண்ணியங்களாதலை நினைக. சிவனை, ``பாவ வினாசன்`` என்றதனால் `இவ்வழிபாட்டில் நின்றாரது வினையைப் போக்குபவன் அவன்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது. சிவபுண்ணியத்தை நோக்க உலக வினைகளுள் நல்வினையும் பாவமேயாகும்.
இதனால், முன்னை மந்திரத்தில் ``உடல் கோயில் கொண்டான்`` எனப் பொது வகையாற் கூறியது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.
இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் ஆயின.

பண் :

பாடல் எண் : 1

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

பொழிப்புரை :

மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.

குறிப்புரை :

``வடிவு`` என்பவற்றை எல்லா அடிகளிலும் ஈற்றில் வைத்து உரைக்க. ``வடிவு`` என்றது, `அதன் மயம்` என்றபடி. இலிங்க மாதல் கூறுவார் பிறவாதலையும் உடன் கூறினார். அங்ஙனம் கூறவே, `ஊன் மயமாய்ச் சிறிதாய் நிற்கும் மானுட யாக்கை அருள் மயமான இலிங்கமாதல் எவ்வாறு` என்னும் ஐயத்திற்கு இடமில்லையாயிற்று. `இறைவன் எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாய் நிற்றலால், மானுட யாக்கை அவனது பொருள்கள் எல்லாமாய் விளங்கும்` என்பது கருத்து.
வந்தி - வந்தித்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
இதனால், அண்டம்போலப் பிண்டமும் இலிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உலந்திலிர் பின்னும் `உளர் என நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி ஊன்நவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

பொழிப்புரை :

உடம்பில் பொருந்தியுள்ள அழுக்கினை மண் குழைத்த நீர் போக்கித் தூய்மை செய்து, சிவனை அந்த உடம்பாகிய இலிங்கத்திலே வழிபடுங்கள்; இறந்த பின்னும் இறந்தவராக மாட்டீர்; என்றும் ஒரு பெற்றியை உடையிராய் வாழ்வீர்.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டி, `பின்னும் உலந்திலிர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உலந்திலிர்`` எனப் பின் வருவதனால், ``உலந்த பின்னும்`` என்பது பெறப்பட்டது. `என்றும்` என்பது, ஆற்றலால் வந்தியைந்தது.
`உடம்பையே இலிங்கமாக வைத்து வழிபடப் புகும்பொழுது உடம்பை மாசு போக மண்ணாற் கழுவிக் குளித்தல் தவறாமற் செய்யத் தக்கது` என்பது உணர்த்துதற்கு அதனை எடுத்தோதினார், `ஊன்நவை நிலந்தரு நீர் தெளி செய்ய` என்க. பூதங்கள் ஐந்திலும் தனித் தனியே இறைவனை எண்ணி வழிபடுதல் உண்டு ஆகலின், ``அவை ஐந்தும் ஒன்றாக வந்தி செய்யீர்`` என்றது, `அவை ஒருங்கு கூடி ஒன்றாய்ப் பரிணமித்த உடம்பிலே அவனை எண்ணி வழிபடுக` என்றதாயிற்று, வலம் - வெற்றி. சிவன் தன்னை வழிபடுபவர்க்கு வெற்றியைத் தருதலாவது, அவர் நினைத்தவற்றை நினைத்தவாறே கைகூடச் செய்தல். இதனால், இவ்வழிபாட்டின் இடைநிலைப் பயனாகச் சிலவற்றைப் பெறுதல் குறிக்கப்பட்டது. `பிற பயன்கள் இடைநிலையாகக் கிடைப்பினும் முடிநிலைப் பயனாகிய வீடுபேறு உளதாம்` என்பது முதலடியில் கூறப்பட்டது. இறந்த பின்னும் இறந்தவர் ஆகாமையாவது, மீளப் பிறவாமை. என்னை? இறந்தவர் பிறத்தல் ஒருதலையாகலின்.
இதனால் பிண்டலிங்க வழிபாடு எல்லாப் பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக
ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.

பொழிப்புரை :

உடம்பை இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டு அதன்கண் எழுந்தருளியவுடன், அதனைத் தங்கள் இல்லமாகக் கொண்டு வாழ்ந்து அதில் உள்ள உயிரை அலைக்கழித்து வந்த ஐம்புல வேடர், தம் நிலைமாறி, அந்த உடம்பு தானே அதில் உள்ள உயிர்க்கு உய்யும் வழியாக உடன்பட்டு, அவ்வுயிரின் வழிநின்று அதற்குத் துணைபுரிவர். அந்த முறையில்தான் அந்த ஐம்புல வேடரை அவர் குறும்பை அடக்கி ஆளுதற்குரிய தலைவனாகிய மனம் அவர் வழிப்படுதலை விட்டு என்வழிப்பட்டது. அதனால், `அந்த உடம்பாகிய இல்லத்தைச் சிவன் தன் இல்லமாக ஏற்றுக்கொண்டு என்னை ஆட்கொள்ளுதற்கு அதன்கண் வந்து வீற்றிருக்கின்றான்` என்று உணர்கின்றேன்.

குறிப்புரை :

முன் இரண்டடிகளில் பொது முறைமையைக் கூறி, அஃதே பற்றித் தாம் எய்திய பயனைப் பின் இரண்டடிகளில் விளக்கினார்.
`கோயில் கொண்ட` - என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. இதில் உள்ள இறந்த காலம் எதிர்காலத்தது, `நாளைக் கூற்றுவன் வந்தான், என் செய்வை` என்பது போல ``வாயில்`` என்பதன் பின் ஆக்கச் சொல் வருவிக்க. இதன் பின் உள்ள கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல்; உடன்படுதல்.
``தாய் இல் கொண்டாற்போல்`` என்றது, `அயலார் மனைகளில் மாறி மாறிச் சென்று ஒதுக்கிருந்தவன், தன் முன்னோர் கட்டி வைத்துத் தனக்கு உரித்தாகிய இல்லத்தை அடைந்து நிலைத்தாற் போல` என்றபடி. அகரச் சுட்டுச் செய்யுளில் நீண்டு நின்றது; `அவ்வில்` என்றது, உடம்பாகிய இல்லத்தை.
இதனால், பிண்டலிங்க வழிபாட்டினால் புலன் அடக்கம் உண்டாக, இறையருள் கைகூடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.

பொழிப்புரை :

எங்கள் பெரும்பெருமான் மக்கள் உடம்பைக் கோயிலாக் கொண்ட நிலையில் புழைக்கடையாகிய மூலாதாரத்தை யும், அதற்குமேல் குய்யத்திற்கு அணித்தாயுள்ள சுவாதிட்டானத்தை யும் தன்னை அக்கோயிலிலே காண்பதற்குரிய வழிகளாகக் கொண்டும், உடம்பின் உள்ளே உள்ள நாடிகளில் தலையானவையாம் பத்து நாடிகளின் செயற்பாடுகளை அக்கோயிலில் நிகழும் வழி பாட்டுச் செயல்களாக ஏற்றும் விளங்குதல் செய்து, அதனால் புலன்கள் ஐந்தனையும் அடங்கப் பண்ணி, அவ்வுடம்பையே தான் மக்கள் உயிர்க்கு அருள் பண்ணும் வாயிலாகக் கொண்டிருக்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் மக்கள் உடம்பு அவன் விளங்கி நிற்கின்ற இலிங்கமும் ஆகின்றது` என்பது குறிப்பெச்சம். ``அடி`` இரண்டும் `மூலம்` என்னும் பொருளைத் தந்தன.
பிறகிடுதல் - புறங்காட்டுதல்; தோல்வியுறுதல். `பிறகிடு வித்து` என்பதில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது.
யோக முறையில் சிவனை உடம்பினுள்ளே காணுதல் அநுபவமாதல் பற்றி, மக்கள் உடம்பு அவனது இலிங்கமாதற்குத் தடையின்மை இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

பொழிப்புரை :

சதாசிவ வடிவம் இரண்டு திருவடி, பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றற்கு மூன்று கண்களாகப் பதினைந்துகண் இவற்றை உடையதாகும்.

குறிப்புரை :

கூடிய பாதம் - இணைந்து காணப்படும் பாதம். படி மிசை பாடிய - உலகத்தில் புகழ்ந்து போற்றப்படுகின்ற. கண் அருளைப் பொழிதலால் சத்தியாதல் பற்றி ``கயல்`` என்றார். `சதாசிவமாகிய நல்ல ஒளியும், முத்துமாய தன் வடிவம்` என்க. ஒளியும், முத்தும் ஆகு பெயர்கள். நல் ஒளி` என்றதனால் இம்மூர்த்தம் ஒளியுருவே யாதல் விளங்கும். முத்து, மாணிக்கம், வயிரம் என்பன உயர்த்துக் கூறும் சொற்களாதல் வழக்கு, நோக்கியறிக.
இதனால் சதாசிவ லிங்கத்தின் வடிவு கூறப்பட்டது.
``நாலுகொ லாம்அவர் தம்முக மாவன`` -தி.4 ப.18 பா.4
எனவும்,
``அஞ்சினாற் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னீரே``
-தி.4 ப.26 பா.5
எனவும் அப்பர் அருளிச் செய்தன இச் சதாசிவ மூர்த்தத்தை நோக்கியேயாம்.
``சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி`` -தி.6 ப.32 பா.6
``மனோன்மனியைப் பெற்ற - தாயிலான்`` -தி.5 ப.91 பா.1
என்ற அவரது திருமொழிகளையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 2

வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.

குறிப்புரை :

ஆகவே, சதாசிவ மூர்த்தத்தை வழிபடவே சிவபேதம் அனைத்தையும் வழிபட்டதாம் என்பது பெறப்பட்டது.
சிவபேதம் ஒன்பது. அவை `நவந்தரு பேதம்` எனப்படும். அவை அனைத்தும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
விந்துவும், நாதமும், `விந்து, பரவிந்து - நாதம், பரநாதம்` எனத் தனித்தனி இரண்டாகும். அவற்றுள் சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை, `சத்தி, சிவம்` என்றும், சில இடங்களில் விந்து நாதங்களை, `சத்தி, சிவம்` என்றும் கூறும் வழக்கம் சிவாகமங்களில் உள்ளது. இங்குப் பரவிந்து பரநாதங்களே அவ்வாறு கூறப்பட்டன.
சதாசிவத்திற்கு மேல் உள்ள நான்கும் அருவம். கீழ் உள்ள நான்கும் உருவம். நடுவில் உள்ள சதாசிவம் அருவுருவம், அருவம், உருவம் என்னும் இருதன்மையையும் உடைமையால் சதாசிவ மூர்த்தம் அனைத்து மூர்த்தமாயும் உள்ளது. இஃதே பற்றிச் சேக்கிழார் நாயனார்,
``காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்``
-தி.12 சாக்கிய நாயனார் 8
என அருளிச் செய்தார். சாதாரணம் - பொது.
இதனால், சதாசிவ லிங்கமே அனைத்து லிங்கமும் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

பொழிப்புரை :

அறிவு மாத்திரமாய் நிற்கின்ற சிவத்தினின்றும் செயல் வடிவாய்த் தோன்றுகின்ற சத்தியின் ஒருகூறு தோற்றமுறையில் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளாகின்ற ஆதார சத்திகளாய் நிற்கும். அந்தச் சத்திகளினின்றும் `இலயம், போகம், அதிகாரம்`, என்னும் ஆதேய சத்திகள் ஏற்ற பெற்றியால் தோன்ற, அந்தச் சத்திகளிலே சிவம் அதுவதற்கு ஏற்றவாற்றால் பொருந்தி நிற்க, அதன்பின் அந்த இலயம் முதலிய சத்திகளாலே அனைத்துலகங்களும் தோன்றும்.

குறிப்புரை :

முதலடிக்கண் வருவித்துரைத்தன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.
சாந்தியதீதை முதலிய ஐந்து சத்திகளாவன, `சாந்தியதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்பன. இவற்றுள் முதல் இரண்டு கலைகளில் இலயசத்தி தோன்றும். நடுவில் உள்ள ஒன்றின் முற்கூற்றில் போகசத்தி தோன்றும். அதன் பிற்கூற்றிலும், ஏனை இரு கலைகளிலும் அதிகார சத்தி தோன்றும். சத்தியை, ``கதிர்`` என்றார். அவற்றுள் சிவன் இலய சத்தியில் `சத்தன்` எனவும், போக சத்தியில் `உத்தியுத்தன்` எனவும், அதிகார சத்தியில், `பிரவிருத்தன்` எனவும் பொருந்தி நிற்பான். அங்ஙனம் பொருந்தி நின்று அச்சத்திகளை அவன் தூண்டுதலினாலே உலகங்கள் தோன்றி நின்று விளங்கும். அனைத்துத் திசைகளையும் எண்ணியவழி அவை பத்தாம் ஆதலின் ``அத்திசை பத்து`` என்றார் `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அதன்பின் `ஆகும்` என்பது அவாய்நிலையாய் நின்றது, அமர்தலுக்கு, `சிவம்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.
இதனால், சதாசிவமே உலகிற்கு முதலாதல் கூறப்பட்டது. அஃதே சிவபேதம் அனைத்தும் ஆதலை முன்னை மந்திரத்துட் கூறியதனைக் கருதுக.

பண் :

பாடல் எண் : 4

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

பொழிப்புரை :

பத்துத் திசைகளாய் அமைந்த அந்த உலகத்துள்ளே தான் வேதங்களின் ஆறு அங்கங்களும், அந்த அங்கங்கட்கு முதலாகிய நான்கு வேதங்களும், அந்த வேதங்களின் பொருளைச் சரியை முதலிய நான்கு பாதங்களாய் நின்று தெளிய உணர்த்துகின்ற சிவாகமங்களும் பொருந்தி நிற்கின்றன.

குறிப்புரை :

``திசை`` என்றதனால் அவற்றை உடைய உலகம் பொருளுலகமாதல் விளங்கும். ஆறங்கம் முதலியன சொல்லுலகம் ஆதல் வெளிப்படை. எனவே உலகம் இங்ஙனம் இருவகைத்தாதல் விளங்கும். இவை முறையே `அத்தப் பிரபஞ்சம், சத்தப் பிரபஞ்சம்` என வடமொழியில் சொல்லப்படும். `முன்னர்க் கூறிய உலகத்துள் பின்னர்க் கூறிய உலகம் விளங்குகின்றது` என்றதனால் அதனையும் சிவனே சத்தி வாயிலாகத் தோற்றுவித்தல் பெறப்பட்டது.
கீழ் நின்றும் கூறும் முறையால் ஆறங்கம் முதற்கண் கூறப் பட்டன. அவையாவை `சிட்சை, வியாகரணம், கற்பம், நிருத்தம், சோதிடம், சந்தோ விசிதி` - என்பன.
அவற்றுள் சிட்சை வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறையை விளக்கும். வியாகரணம் - வேத மொழிகளின் இலக்கணத்தைக் கூறும். நிருத்தம் - வேத மொழிபற்றிய பல விளக்கங்களைத் தரும். சோதிடம் - வேதத்திற் சொல்லப்பட்ட கருமங்களை இயற்றுதற்குரிய கால வகைகளைக் கூறும். கற்பம் - சூத்திர வடிவில் அமைந்து வேதத்தில் சொல்லப்பட்ட கருமங்களைச் செய்யும் முறைகளை விவரிக்கும். அவை ஆசுவலாயனர், போதாயனர், ஆபத்தம்பர் முதலிய முனி வர்களால் செய்யப்பட்டன. சந்தோவிசிதி - வேத மந்திரங்களுக்கு எழுத்துக் கணக்கில் சொல்லப்படுகின்ற சந்த வகைகளை விளக்கும். இவை வேதங்களை நன்கு உணர்தற்குக் கருவி நூல்கள் ஆகையால் இவற்றை உணராவிடில் வேதங்களால் பயனடைய இயலாது.
`சரியையாதியோடு கூடிய சமயம் அத்திசைக்குள்ளே அமர்ந்தன` என்க. இடை நின்ற சில பதங்கள் தொகுத்தலாயின, ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவத்தின் மேல் நின்று. ஆகு பெயராய் அதனை உணர்த்தும் ஆகமங்களைக் குறித்தன. `அவ் ஆகமங்களில் சொல்லப்பட்ட சரியை முதலிய நான்கும் மேற்கூறிய உலகத்திலே நிகழ்வன` என்பதை ``அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார்.
இதனால், சதாசிவமே மேற்கூறிய பொருளுலகம் போலச் சொல்லுலகங்களையும் தோற்றுவித்து உயிர்கட்குப் பயன்பட வைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்தில் தலைமை பற்றி, `சமயம்` என்றே சொல்லப்பட்ட சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. (அவத்தை - நிலை, அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கொழிய ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டாவனவாம்.)
உலகத்தில் சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன. (அவை பிராசாத கலைகள் இருக்கும் இடங்களாம்.)
சைவத்தில், `இறைவனுக்குத் திருமேனிகள் ஆறு` என்றும், `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. (அவை முறையே ஆறு அத்துவாக்களும், அட்ட மூர்த்தங்களுமாகும்.)
இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.

குறிப்புரை :

சைவ சமயத்தில் சொல்லப்படுவன சைவாகமங் களில் சொல்லப்பட்டனவே யாதலின், `இவ்வாறெல்லாம் சைவா கமத்துள் சொல்லப்பட்டன` என்றபடி `இலிங்க மூர்த்தத்தில் இதனுட் கூறிய வாறெல்லாம் சிவன் நிற்றல் கருதி வழிபாடு செய்யப்படும்` என்பது உணர்த்தியவாறு.
இதனால் சைவ சமயத்தில், எல்லாம் சதாசிவ லிங்கமாகக் கொள்ளப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துள், `சதாசிவ லிங்கத்திற்கு ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறிய முகங்கள் ஒரு வரிசையில் இல்லாமல், நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்தியுள்ளன.
அவற்றுள் நடுவண் உள்ள முகம் படிகம் போன்ற நிறத்தையும், கிழக்கில் உள்ள முகம் குங்குமம் போன்ற நிறத்தையும், வடக்கில் உள்ள முகம் செவ்வரத்தம் பூப்போன்ற நிறத்தையும் மேற்கில் உள்ள முகம் பால்போன்ற நிறத்தையும் உடையன.
(கிழக்கில் உள்ள முகம் பொன் போன்ற நிறத்தை யுடையதாகச் சொல்லப்படுதலால், இங்கு, ``குங்குமம்`` என்பதற்கு, `கலவைச்சாந்து` எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.)
இந்த ஐந்து முகங்களுடன் தோன்றியே சிவன் அடியேனுக்கு அருள்புரிந்தான்.

குறிப்புரை :

சைவாகமங்களில் சொல்லப்பட்டதனை நாயனார் தாம் அனுபவமாக உணர்ந்தமையை இங்கும் எடுத்துக் கூறினார். இதனானே பிறவும் உண்மையாதல் தெளிவித்ததாம், முதற்கண் கூறியவாறே ``நடுவு`` எனத் தொடங்கினமையால். ஏனை முகங்களும் மேற்கூறிய அம்முறையவாயின.
இதனால் சதாசிவ லிங்கத்து முகங்களின் இடமும், நிறமும் கூறப்பட்டன. ``நிறங்கள் ஓர் ஐந்துடையாய்`` எனத் திருவாசகத்துள் கூறப்பட்டது இங்குக் கூறிய முகங்களின் நிறம் நோக்கியேயாம். (தி.8 சிவபுராணம் - 49)

பண் :

பாடல் எண் : 7

அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துட் கூறிய வற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக்கலங்களையுடைய சதாசிவ லிங்கமாய்ச் சிவன் என் இருதயத்துள் வந்து புகுந்து நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

சதாசிவ லிங்கமே தமது தியானப் பொருளாதலைக் கூறுவார் மேற்கூறிய அவற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக் கலங்கள் இருத்தலை இங்குக் குறித்தருளினார். ``உள`` என்னும் பெய ரெச்சக் குறிப்புக்கள், `உடைய என்னும் பொருளவாய் அடுக்கி, `நம்பி` என்னும் ஒருபெயர்கொண்டன. அப்படைகள் பத்தாவன வலக் கைகள் ஐந்திலும், `சூலம், வச்சிரம், வாள், மழு, அபயம்` என்பனவும், இடக்கைகள் ஐந்திலும் பாம்பு, பாசம், அங்குசம், நெருப்பு, வரதம்` - என்பனவுமாம். அபய வரதங்கள் ஆயுதம் அல்லவாயினும் பெரும் பான்மை பற்றி ``ஆயுதம்`` என்றார். புதிதாய்ப் புகுந்தது போலக் கூறினாராயினும், `முன்பு விளங்கா திருந்தது விளங்கிற்று` என்பதே கருத்தென்க. மக்களுட் சிறப்புடையாரைக் குறிக்கும் `நம்பி` என்பது, தேவர்கட்குத் தலைவனாகிய சிவபிரானுக்கும் சொல்லப் படுதல் நம்பி என்னும் திருப்பதிகத்தாலும் அறிக. (தி.7 ப.63)
இதனால் தமது தியானப்பொருள் சதாசிவ லிங்கமாதல் கூறப்பட்டது. அதனால், `பிறரும் அதுகொள்க` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 8

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.

பொழிப்புரை :

அண்டலிங்கத்துள் பூமி பீடமாயும், வானம் பீடத்தின்மேல் உள்ள இலிங்கமாயும் அமையும். (எனவே, சதாசிவ லிங்கத்துள் பீடத்தில் பூமியும், இலிங்கத்துள் வானமும் அடங்கு வனவாம்.)
இனி இறைவன் உயிர்கள் பொருட்டுக் கொள்கின்ற `தாபரம், சங்கமம்` என்னும் இருவகை வடிவங்களுள் தாபரம் சிவக்கூறும், சங்கமம் சத்திக்கூறும் ஆகும். (தாபரம் - பெயர்ந்து நிற்பன; திருவுருப் படிமங்கள். சங்கமம் - உலாவுவன; அடியார்கள்.)
இறைவன் கொள்கின்ற திருமேனிகளில் உருவத் திரு மேனிகள் சத்திக் கூறும், அருவத் திருமேனிகள் சிவக்கூறும் ஆகும்.

குறிப்புரை :

`சிவக்கூறும், சத்திக் கூறும் சமமாக விரவியதே, சதாசிவம் ஆகையால், அது மேற்கூறிய அனைத்துமாய் நிற்கும்` என்றவாறு, `தத்துவம் முப்பத்தாறு` எனப் பொதுவகையால் சதாசிவ தத்துவமும் அடங்கக் கூறினாராயினும் அதனைச் சிறப்பு வகையால் வேறு வைத்து உணர்த்துதலே கருத்தென்க. ``சதாசிவம்`` - இரண்டில் முன்னது இலிங்கத்தைக் குறித்தது. பின்னது, சிவம்` என்னும் அளவாய் நின்றது.
`பருமை, நுண்மை என்னும் இருவகைப் பொருள்களில் பருமை யெல்லாம் சத்திக் கூறும், நுண்மை எல்லாம் சிவக்கூறும் ஆகும்` என்பது இதனால் உய்த்துணரக் கூறினமை காண்க.
``தாபர சங்கமம்`` - என்றது எதிர்நிரல் நிறை. `சங்கம தாபரம்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால் சதாசிவ லிங்கத்தினது சிறப்புக் காரண வகையால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

 தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

`தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.

குறிப்புரை :

``அருவம், உருவம்`` என்பன இங்கு, `காரணம், காரியம்` என்னும் பொருளவாய் நின்றன. ``ஆவது`` இரண்டும் எழுவாய் உருபாய் வந்தன. அவை இனம் பற்றி வந்த ஒருமை. ``சராசரம், சுகோதயம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.
``தத்துவ ரூப மாகும் தரும்அரு உருவ மெல்லாம்;
... ... ... சகலமும் தத்துவங்காண்``
எனவும்,
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக்கென்னில், தொல்லாய கன்ம மெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின் நில்லாமை முற்று வித்து நீக்கவும், கூடி நின்ற
பொல்லாத ஆண வத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. -சிவஞான சித்தி சூ. 2. 71, 79
எனவும் போந்த சிவஞான சித்தி இங்கு நினைக்கத் தக்கது. ``ஆகும்`` என்பது முற்று.
இதனால், `சதாசிவ லிங்கம் சிறப்புடைத் தாதற்குக் காரணம் அஃது அனைத்துத் தத்துவமுமாய் நிற்றலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :

சதாசிவனாய் நிற்பவனைத் துதியாது வேறு சொற்களைச் சொல்லிக் காலம் போக்குபவரும், அந்தச் சதாசிவமூர்த்தி அவரவர்க்கு ஏற்புடைத்தாக அளித்து ஏவுகின்ற தொழில்களைச் செய் பவரும் ஆகிய வானவரது நெறியோடு எனது நெறிமாறுகொளச் செய்தற் பொருட்டு அவன் எனது நெஞ்சத்தில் புகுந்தான். ஆதலின் அவனே நாம் வழிபடும் கடவுளாயினான். (என்வழி நிற்பீராயின்) நீங்களும் அவனது திருப்பெயர்கள் பலவற்றையும் கூறி அவனை வழிபடுங்கள்.

குறிப்புரை :

`சதாசிவன் எம் இறை; கூறுமின் நூறு எனமாற்றி இறுதிக்கண் வைத்துரைக்க, ``கூறுமின்`` என்றதனால், ``நூறு`` என்பது பெயர்களாயிற்று, `அவற்றைக் கூறுமின்` என வருதலால், ``வேறு`` அவையல்லாத பிறவாயிற்று. ``உரை செய்தல்`` இரண்டினுள் முன்னது `சொல்லுதல்` எனவும், பின்னது `ஏவுதல்` எனவும் பொருள் தந்தன. ``மிகைப் பொருள்`` என்றது, `பயனில் பொருள்` என்றவாறு. சிவனது திருநாமங்களைச் சொல்லாது பிறவற்றையே சொல்லுதலால் ஆன்ம லாபத்தையிழத்தல் பற்றி வானவரை, ``மிகைப்பொருள்`` என்றார். `நிற்கும் வானவர், தொழில் வானவர்` எனத் தனித்தனி இயையும், ஏறு - ஏறுதற்குரியன; பொருந்துவன. `உரை செய்த தொழிலைச் செய்யும் வானவர்` என்க. அவரது நெறியெல்லாம் பிறவி நெறியாகலின் வீட்டு நெறி அதனின் மாறும் நெறியாயிற்று. அதனைச் செய்தலாவது, தருதல். ``செய்வான்``, வானீற்று வினையெச்சம். மனம் புகுதலால் அந்நெறி எய்தினமை பற்றி, செய்வான் புகுந்தான் என்றார். பிறரெல்லாம் வந்த நெறியையே தருவாராக, சிவன் ஒருவனே வீட்டு நெறியைத் தருவோனாதல் பற்றி, ``சதாசிவன் எம் இறை`` என்றார்.
இதனால், `சதாசிவ வழிபாடொழிந்த செயல்களைச் செய்தலால் தேவரும் பந்தத்தின் நீங்காமையால், அதனின் நீங்க விரும்புவோர் சதாசிவ வழிபாடே செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.

பொழிப்புரை :

அருளே நிறைந்த உள்ளத்தை உடையவனாகிய கடவுளை யான் எனது உள்ளத்திலே, கறுத்த கண்டத்தையும், மழு ஏந்திய கையையும், சுருண்ட சடையாகிய முடியையும், ஒளியை யுடைய பிறையாகிய கண்ணியையும் உடையவனாக நன்கு காண்கின்றேன்.

குறிப்புரை :

`அருவுருவனாகிய சதாசிவன் உருவனாய் விளங்கும் பொழுது இத்தன்மையனாய் விளங்குதலை யான் அநுபவத்தில் காண்கின்றேன்` என்பதாம். அதனால், `கடவுளை இவ்வுருவத்தில் கண்டு வழிபடுதலும் சதாசிவ வழிபாடேயாகும்` என்பது உணர்த்தியவாறு. `கடவுள் உருவத்திருமேனியனாய் விளங்கும் பொழுது இவ்வாறே நிற்பன்` என்பதை,
அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என்னும் அப்பர் திருமொழியாலும் அறிக.
சந்திரசேகரர், பிட்சாடனர் முதலிய திருமேனிகள் அவ்வப் பொழுது கொண்டு விடப்பட்ட வடிவங்களாக அவற்றை `மாகேசுர பேதங்கள்` எனவும், இங்குக் கூறிய இவ்வடிவமே `மகேசுர இயற்கை வடிவம்` எனவும் எங்கும் கூறப்படுதலையும், `பிரளயாகலருக்கு ஞானத்தை முன்னின்று உணர்த்தும் பொழுது இவ் வடிவத்தில் நின்றே சிவன் உணர்த்துவன்` எனவும் எங்கும் கூறப் படுதல் காண்க.
கறைக் கண்டம், மழுப்படை, சடைமுடி, பிறைக் கண்ணி இவற்றைக் கூறியதனானே நாற்றோள், முக்கண் முதலிய பிறவும் கொள்ளப்படும். ``பிறையும்`` என்பதன் பின் `உடையவனாக` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், அருவுருவமாகிய சதாசிவ லிங்கம் உருவமாய் விளங்குமாறு கூறப்பட்டது. `அனைத்தும் சதாசிவ லிங்கமே` என மேற் கூறியதனை நினைக.

பண் :

பாடல் எண் : 12

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.

பொழிப்புரை :

சிவனது சத்தி ஒன்றே ஐந்தாகி அவனுக்கு மேற் கூறிய பக்கங்கள் ஐந்திலும் உள்ள ஐந்து முகங்களாய் நிற்கும். அதனால் அம்முகங்களின் பெயரானே அச்சத்திகளும் குறிக்கப்படும்.

குறிப்புரை :

முகங்களின் பெயர்களை ஈண்டே கூறுகின்றார் ஆதலின், அவற்றது திசையை மறித்து ஈண்டும் கூறினார். இதனால், `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம், என்பன முறையே மேலே, ``நடுவு கிழக்குத் தாம்மேற்கு`` என்னும் திசைகளில் உள்ளனவாகக் கூறப்பட்ட முகங்களின் பெயராதல் விளங்கிற்று.
சத்தி ஐந்தாதல், படைத்தல் முதலிய தொழில் ஐந்தனையும் செய்தற் பொருட்டு. படைத்தல் முதலிய தொழில்களைக் கீழே சத்தியோசாதம் முதலாக வைத்து, `சத்தியோசாதம், வாம தேவம், அகோரம், தற்புருடம், ஈசானம்` என எண்ணிப் பொருத்திக் கொள்க. சத்தி, `திருவடி` எனப்படுமாதலின். ``போற்றி யெல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்`` என்பன முதலிய ஐந்தும் இவ்வைந்து சத்திகளையே குறித்தல் அறிக.
இதனால், சதாசிவ லிங்கத்தின் ஐந்து முகங்களின் பெயர்களும் அவற்றது உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.

பொழிப்புரை :

கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவேயுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்க ளாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.

குறிப்புரை :

சத்தி சிவனுக்கு ஐந்து முகங்களாயும் `உச்சி, முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் உறுப்புக்களாயும் நிற்றல் மந்திர ரூபமாயும் என்க. அதனால் ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும், இன்னும் அடுத்த மந்திரத்துக் கூறப்படுகின்ற சிகை முதலிய உறுப்புக்களும் கருதுகோள் (பாவனை) வகையால் அமைதல் விளங்கும்.
சதாசிவலிங்க வழிபாட்டில் வாய் மந்திரத்தைச் சொல்ல, மனம் அவற்றிற்கு ஏற்ற பாவனையைக் கொள்ள, கை கிரியையினைச் செய்ய, இவ்வாறு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றானும் அது நிகழ்வதாகும்.
இதனுள் உயிரெதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 14

நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.

பொழிப்புரை :

பச்சை நிறத்தை உடையவளாய்ச் சிவனாகிய கதிரவனுக்கு அவனது மிகச் செப்பமாகப் பொருந்திய கதிராய் விளங்குகின்ற பராசத்தியாகிய பெண்டு சதாசிவனுக்கு மந்திர வகையால் (மேற்கூறிய ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களுமாய் நிற்றலேயன்றி,) இருதயம், சிகை, சிரம், கவசம், நேத்திரம், அத்திரம் என்னும் உறுப்புக்களாயும், அம்மூர்த்தியின் பத்துக் கைகளிலும் உள்ளனவாக மேற்கூறப்பட்ட பகலவன் போலும் ஒளியினையுடைய பத்துப் படைக்கலங்களாயும் நிற்பள்.

குறிப்புரை :

``பச்சையாம் ... ... மின்`` என்பதனை முதலிற் கொண்டு, ``ஆகும்`` என்பதனை ``தெசாயுதத்திற்``கும் கூட்டி, `மின், விந்து ஆகும்: தெசாயுதம் ஆகும்` என உரைக்க.
விந்து - சுத்த மாயை, அஃது ஆகுபெயராய் அதன் காரியமாகிய மந்திரத்தைக் குறித்தது. இவற்றை ``மந்திரம்`` எனக் கூறிய இதனானே மேற்போந்த ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும் மந்திரங்களே ஆயின. அவற்றைக் குறிக்கும் மந்திரங்கள் `பஞ்சப் பிரம மந்திரம்` என்றும், இங்குக்கூறிய மந்திரங்கள் `சடங்க மந்திரம்` என்றும் சொல்லப்படும். இப் பதினொன்றும் கூடிய தொகுதி. `சங்கிதா மந்திரம்` எனப்படும். சைவத்தில் சிவ மூல மந்திரம் தலையானதாய் நிற்க இப்பதினொரு மந்திரங்களும் இன்றியமையாத் துணை மந்திரங்களாய் நிற்கும். இவற்றுள் பிரம மந்திரங்கள் ஐந்தும் `நம` என்னும் முடிவினதாக, சடங்க மந்திரங்கள் `நம` என்பதனோடு வேறு முடிவுகளையும் ஏற்ற பெற்றியால் உடையனவாகும்.
பஞ்சப் பிரம மந்திரங்கள் ஐந்தொழிற் சத்திகளேயாதல் போலச் சடங்க மந்திரங்கள் சிவனது எண்குணங்களில் தூய உடம்பின னாதல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதலிலும், இயற்கையுணர்வு முற்றுணர்விலும் அடங்க ஆறாய் நிற்கும் குணங்களேயாகும். எண் குணங்களில் ஆறினைச் சிறப்பாக எடுத்து இறைவனை, `சுத்த சாட் குண்ணியன்` என்று கூறுவர்.
`செஞ்செவ்வுறு` என்பது குறைந்து நின்றது. செஞ்செவ் - மிக்க செப்பம். சேகரி மின் - தலைவியாய பெண்டு.
இவை இரண்டு மந்திரங்களாலும் முகமாய் நிற்கின்ற சத்திகள் பிறவாயும் நிற்றல் கூறப்பட்டது. இவற்றானே பிரம மந்திரம், அங்க மந்திரங்களது உண்மையும் கூறப்பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 15

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.

பொழிப்புரை :

இருதயம் முதலாகக் கூறிய சடங்க மந்திரங்கள் ஆறனுள் அத்திரம் ஒழிந்த ஏனைய ஐந்தில் சிவனது ஞான சத்தியே இருதய மந்திரமாயும், பராசத்தியே சிர மந்திரமாயும், ஆதி சத்தியே சிகா மந்திரமாயும், இச்சா சத்தியே கவச மந்திரமாயும், கிரியா சத்தியே நேத்திர மந்திரமாயும் நிற்கும்.

குறிப்புரை :

அத்திர மந்திரம் மேற்கூறிய குணங்களுள் ஒன்றேயாம். எண்ணில் - ஆராய்ந்து உணரின்.
இதனால் அங்க மந்திரங்களாய் நிற்கும் சத்தியின் வகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

சத்தி நாற்கோணம் சலம்உற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்திநல் வட்டம் சலம்அற் றிருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் றானே.

பொழிப்புரை :

இலிங்கத்தின் பீடம் நாற்கோணமாயிருப்பின் அது சிவனது இயக்கச் சத்தியாகும். அறுகோணமாய் இருப்பின் அது கிடத்தற் சத்தியாகும். வட்டமாய் இருப்பின் அது இருத்தற் சத்தியாகும். இதனால் சதாசிவன் சத்தி வடிவாய் நின்றே அருள்புரிவான் ஆகலின், சதாசிவ லிங்கமும் அத்தன்மையதேயாம்.

குறிப்புரை :

இலிங்கத்தில் சத்தியே பீடமாதல் பற்றி அதனை வேறு கூறாது ``சத்தி`` என்றே போயினார். கிடத்தல், இருத்தல், இயங்கல் என்னும் மூன்றும் இலயம், போகம், அதிகாரம் என்க. சலம் - அசைவு.
இதனால், சதாசிவலிங்கத்து வேறுபாடுகளும், அவற்றது உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

மானந்தி எத்தனை காலம் அழைப்பினும்
தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும்
கானந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

பொழிப்புரை :

பெரியோனாகிய சிவனைக் கிரியையாளர்கள் எத்தனை முறை தம்பால் வருமாறு அழைப்பினும் அத்தனை முறையும் அவன் ஐந்து முகங்களையுடைய சதாசிவ லிங்கத்திடத்தே வந்து, ஒப்பற்ற ஒளிவடிவாய் நிற்பான். யோகிகள் சுவாதிட்டானத்தினின்றும் பிராண வாயுவை மேல் எழத்தூண்டி, மேலும் உள்ள ஆதாரங்களைக் கடந்தவழி, ஏழாந்தானமாகிய ஆயிர இதழ்த் தாமரையிடத்தும், அதற்குமேல் எட்டாந் தானமாகிய நிராதாரத்திடத்தும், அதனையும் கடந்த ஒன்பதாவதாகிய மீதானத்திடத்தும் விளங்குவான்.

குறிப்புரை :

`யோகிகட்கே சிவன் அகத்தில் விளங்கி, ஏனைக் கிரியையாளர்க்குச் சதாசிவலிங்கத்திலே விளங்குவான்` என்பதாம். எனவே, `கிரியையாளர்கள் சதாசிவ லிங்கத்திலே வழிபடுமாற்றால் அவனைக் காண்க` என்றதாயிற்று. ``நந்தி`` நான்கில் முன்னது பெயராயும், ஏனைய வினையெச்சமாயும் நின்றன. நந்துதல், இங்கு ஆக்கத்தின் மேற்று. கால் - காற்று, `கடந்தவழி` என்பது, ``கடந்து`` எனத் திரிந்து நின்றது. ``மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றான்`` என்றதனால், கமலம், ஆயிர இதழ்க் கமலமே ஆயிற்று.
இதனால், சதாசிவ லிங்கம் கிரியை யாளர்க்கு இன்றி யமையாததால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்றலைக் கேறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான் தக்க முறையில் உங்களுடைய உடலின் உள்ளே பொருந்தி என்றும் விளங்குகின்ற முறை முன்னை மந்திரத்தின் பிற்பகுதியிற் கூறியவாறாகும். அதனால் நான் சிவனது திருத்தமான பாதங்கள் எனது அழகிய தலையிலே பொருந்துதற் பொருட்டு உள்ளத்துள் நின்றே வணங்கினேன்.

குறிப்புரை :

நீவிர் அது மாட்டீர் ஆகலின், மேற்கூறியவாறு சதாசிவ லிங்கத்தில் சிவனைக் கண்டு வழிபடுங்கள்` என்பதும், `அவ்வாறு வழிபட்டுவரின் என்னைப் போல நெஞ்சத்தினுள்ளே நின்று தொழும் நிலையை எய்துவீர்` என்பது குறிப்பெச்சம். ஒன்றியவாறு - தக்கவாறு. `அந்த அந்த ஆதாரங்கட்கு ஏற்ப` என்றபடி. யோகத்தால் `தூய்மை பெற்ற தலை` என்பர், ``தென்தலை`` என்றார். தென் - அழகு. `சிவனது திருவடி தலைமேல் ஏற` என்றது, `ஞானம் உண்டாக` என்றபடி.
இதனால், `சதாசிவலிங்க வழிபாடு பின்னர் உளதாகும் ஆன்மலிங்க வழிபாட்டைத் தரும்` என்பது கூறப்பட்டது. இனி இங்கு நின்றும் ஆன்மலிங்க வழிபாட்டின் சிறப்பையே கூறுகின்றார். `அதனைப் பெறுதற்குச் சதாசிவலிங்க வழிபாட்டைக் கடைப்பிடிக்க` என வலியுறுத்தற் பொருட்டு. இவ்வாற்றால் இனிவரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் அமைகின்றது.

பண் :

பாடல் எண் : 19

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம்
புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே
பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.

பொழிப்புரை :

ஒளிப் பொருளாகிய சிவனை நான் அத் தன்மையனாக இவ்வுலகிற்றானே உணர்ந்தேன். பின்பு அவனை இவ்வுலகத்திற்கே வருமாறு கொணர்ந்தேன். பின் என் மனமே கோயிலாக அவனைக் கூடினேன். அதனால் அவன் இல்லாதவன் அல்லன்; உண்மையாக உள்ளவனே. நாளெல்லாம் நான் பாட்டும், ஒலியுமாக அவனைப் பணிதலையே செய்கின்றேன்.

குறிப்புரை :

உணர்ந்தது, ஆசிரியர் மொழியாற் கேள்வியினால் ஆகும். பின்பு முன் உணர்ந்தவாறு உள்ளத்தே வைத்து நினைக்க, அவன் நினைவிலே விளங்கிநிற்றலால், ``குவலயம் கொணர்ந்தேன்`` எனவும், ``என் நெஞ்சம் கோயிலாகப் புணர்ந்தேன்`` எனவும், `இங்ஙனம் அவன் எனக்கு அனுபவப் பொருளாகவே இருத்தலால் ``பொய்யல்லன் மெய்யே`` எனவும் கூறினார். ``பொய்யல்லன்; மெய்யே`` என்றது, `இறைவன் என்று ஒருவன் உளனோ` என ஐயுறுவாரை நோக்கிக் கூறியது. ``நெஞ்சம்`` என்பதன் பின் `ஆக` என்பதும், ``ஒலி`` என்பதன்பின் உம்மையும், `ஆக` என்பதும் விரிக்க. ``பகல்`` என்பதன்பின் `எல்லாம்` என்பது எஞ்சி நின்கின்றது.

பண் :

பாடல் எண் : 20

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

பொழிப்புரை :

உடம்பின்கண் ஒன்றின்மேல் ஒன்றாய் உள்ள அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றிலும் நெருப்புப் போன்ற ஒளி வீச, `சிவனது பேதம் ஒன்பதுள் நடுவணதாகிய சதாசிவ மூர்த்தத்தில் உலகத் தோற்றமும், ஒடுக்கமும் நிகழ்வன` என்று உணர்ந்து நின்றால், அந்தச் சதாசிவ மூர்த்தமும், உலகத்தோற்றமும், ஒடுக்கமுமாய் நிற்கின்ற சத்தி, அவ்வுணர்ச்சியை உடையவனது உடலில் சந்திரன் போல ஒளிவிட்டு நிற்கும்.

குறிப்புரை :

``உடல்`` எனப் பின்னர் வருதலின் ``ஆங்கு`` என்னும் சுட்டுச் செய்யுளின் முதற்கண் நின்றது தாங்குதலுக்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``வீசிட`` என்னும் எதிர்கால வினை யெச்சம். ``என`` என்பதின் சொல்லெச்சமாய் நிற்கும் `உணர` என் பதனோடு முடிந்தது. உணர்தல், இங்கு, தியானித்தல். இவற்றை உடைய சத்தியை ``இவை`` என்றது பான்மை வழக்கு. `இவற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. ``இந்துவும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 21

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன்மேனி தானாகும் தற்பரன் றானே.

பொழிப்புரை :

அகவழிபாடு செய்பவனுக்கு அவனது உடம்பே சதா சிவமூர்த்தியாயும், அம்மூர்த்தி மானாயும் நிற்கும். இன்னும் அது சுத்த சிவனாயும், அச்சிவனது ஆனந்தமாயும் நிற்கும். அஃது இவ் வாறெல்லாம் ஆகும்படி சிவன் அவனது உடம்பே தானாய் விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

`அகவழிபாடு செய்வான்` என்பது அதிகாரத்தால் கொள்ளப்பட்டது. சதாசிவனையும், சுத்த சிவனையும் உணர்ந்து, அவ் வுணர்வானே சுத்த சிவனது ஆனந்தத்தைப் பெறுதற்கு வாயிலாதல் பற்றி உடம்பை அவையெல்லாமாகப் பாற்படுத்து அருளிச் செய்தார். மானுடராக்கை வடிவு சிவலிங்கம்`` என்னும் மந்திரத்துட் கூறியன பிண்டம் இலிங்கமாதலைக் குறித்தற்கும் இங்குக் கூறியன அகவழி பாட்டின் சிறப்பினை உணர்த்துதற்கு கூறப்பட்டன ஆகலின், இவை கூறியது கூறல் ஆகாமை அறிக. தற்பரன் - தனக்கு மேலே உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 22

ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.

பொழிப்புரை :

சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம் உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.

குறிப்புரை :

`அதனால் அந்த ஒகாரத்தை உன்னலே சிறப்புடைய வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். `பீசாக்கரங்கள் அனைத்திலும் மகாரம் சேர்ந்து வருதல் இயல்பாகலின், அனைத்து மந்திரங்கட்கும் பொதுப் பீசமாகிய ஓகாரத்தோடு அது சேர்ந்து நிற்றல் சொல்ல வேண்டா` என்று போயினார். பாரும் - அறிமின். இதனை ``நாயகி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `தாரகம்` என்பது இடைக் குறைந்து நின்றது. தாங்குவது, என்னும் பொருட்டாய்ப் பிறமந்திரங்கள் அனைத்திற்கும் அடிநிலையாவது` என்னும் கருத்தினைத் தருவது `இரண்டும் தாரகம்` என மாற்றியுரைக்க. `எழுத்து` என்பது, `எழுது` என்பது அடியாகப் பிறக்குமாயினும் உள்நின்று, `எழு` என்பது அடியாகப் பிறப்பது - என்றலும் பொருந்தும் ஆகலின், ``எழுந்திடும்`` என்றது எழுத்துக்களின் பிறப்பைக் குறித்து நின்றதாம். ``மாறி எழுந்திடும்`` என்பது பாடம் அன்று. இதனுள் ரகரத்திற்கு றகரம் ஓராற்றால் இன எதுகையாயிற்று.

பண் :

பாடல் எண் : 23

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

பொழிப்புரை :

(முன்னை மந்திரத்தில், `ஓங்காரத்துள் சிவமும், சத்தியும் முறையே அகாரமும், உகாரமுமாய் நிற்பர், என்றதனால், அவ்விருவரது வடிவமுமாகிய இலிங்கம் ஓங்காரமாய் நிற்றல் எவ்வாறு` எனின்,) பீடம் சமட்டியான ஓங்கார வடிவேயாய் இருக்கும் இலிங்கம். ஒவ்வொரு கூற்றில் ஒவ்வோர் எழுத்தாய் வியட்டியாய் இருக்கும். அவற்றுள் பீடத்தின் உள்ளே மறைந்து நிற்கும் பகுதி மகாரமாயும், பீடத்தோடு இணைந்து வெளியே புலனாகி நிற்கின்ற பொருத்துவாயாகின்ற வட்டம் உகாரமாயும், இலிங்கம் கீழ் நின்று முக்கூறுபட்டு முறையே அகாரமும், விந்துவும், நாதமுமாய் இருக்கும்.

குறிப்புரை :

`இலிங்க நற் கண்டம் மகாரமாய் நிறையும்; இலிங்கத்து உள்வட்டம் உகாரமாய் நிறையும்` என ஆக்கச் சொல்லை ஏனையிரண்டிற்கும் கூட்டி, மொழிமாற்றி உரைக்க. பின்பு, `இலிங்கம் அகாரம், நிறைந்து விந்து, நாதம் ஆம்` என்க. கண்டம் - கூறு, பீடத்துள் மறைந்து நிற்பது தனி ஒருபகுதியாய்ப் புலனாகாது நிற்றல் பற்றி அதனை, ``கண்டம்`` என்றும், பீடத்தின் விளிம்பு வெளிவட்டம் ஆதலின், அதன் நடுவில் இலிங்கம் பொருந்தி நிற்கின்ற பொருத்து வாயை ``உள்வட்டம்`` என்றும் கூறினார்.
இறைவனது உபசார வடிவங்களில் மந்திர வடிவம் சிறந்த தாதல் பற்றி அதனை முன்னை மந்திரத்துட் கூறி, அவ்வாற்றானே இலிங்கமும் மந்திர வடிவாதலை இம்மந்திரத்துட் கூறினார். புறத்து உள்ள இலிங்கம் இவ்வாறு மந்திர வடிவாதலைக் கூறியதனானே அகத்திலும் இலிங்கம் அவ்வாறே கொள்ளப்படுதல் பெறப்பட்டது. படவே, இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குச் சிறந்த தோற்றுவாய் ஆயினமை காண்க.

பண் :

பாடல் எண் : 1

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.

பொழிப்புரை :

சிவன் அகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அனைத்துப் பொருளுமாய் நிற்பான். உகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அப்பொருள்களைச் செயற்படுத்தி நிற்பான். அதனால் அந்த இருகலைகளை உணரின் அந்த உணர்வுதானே சிவனது வடிவமாகும்.

குறிப்புரை :

பிரணவ கலைகளில் பருநிலையை உடையன அகார கலை, உகார கலைகளேயாதலின், அவற்றை உணரும் உணர்வே முதற்கண் இலிங்கமாய் நிற்கும்` எனக் கூறினார், ``நிற்கும்`` என்பவற்றிற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க. உயிர்ப்பு - செயற்பாடு. எய்தல் - நிகழ்த்தல். சொல்லோடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி, மந்திர கலையையே பொருளாக ஓதினார்.
இதனால் மந்திர உணர்வே இலிங்கமாமாமறு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற தெய்வமும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதிபீடம் நாதமே
போதா இலிங்கப் புணர்ச்சிய தாமே.

பொழிப்புரை :

தனக்குக் கீழ் உள்ள அகாரம் முதலிய எழுத்துக்களை நோக்க அவற்றைத் தாங்கிநிற்கின்ற ஆதாரமாயும், தனக்கு மேல் உள்ள நாதத்தை நோக்க அதன்கண் பொருந்தியுள்ள ஆதேயமாயும் உள்ள விந்துவும், மேதை முதலிய அனைத்துக் கலைகட்கும் முதலாய் உள்ள நாதமும் முறையே ஒன்றின்மேல் ஒன்றாய் விளங்கி நிற்கும். அதனால், அவற்றுள் விந்துவே ஆதாரமாகின்ற பீடமாயும் நாதமே அந்தப் பீடத்தின்பால், வந்து இலிங்கத்தின் சேர்க்கையாயும் இயைந்து நிற்கும்.

குறிப்புரை :

மேதாதி நாதம், `மேதை முதலியவற்றிற்கு முதலாகிய நாதம்` என நான்காவதன் தொகையாய் நின்றது. `விந்து அதி ஆதார பீடம்` என மொழிமாற்றிக் கொள்க. ``விந்து, நாதம்`` - என்றது, அவற்றால் உளவாகும் உணர்வுகளையே என்க.
இதனால், மந்திர உணர்வே இலிங்கமாமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரந் தானே.

பொழிப்புரை :

(மேற்கூறிய விந்து நாதங்கள் முறையே சத்தி சிவவடிவாகும் ஆதலால்,) அவ்விரண்டும் ஒன்றாய் இயைந்த நிலையே புறத்தில் உள்ள தாபர சங்கமங்களும், சாதாக்கிய தத்துவத்தில் விளங்கும் சதாசிவ மூர்த்தியும் ஆகும். இனி சிவ வடிவம் யாதாயினும் அது சத்தி, சிவம் இரண்டும் இயைந்த வடிவமேயாகும்.

குறிப்புரை :

தாபரம் - திருக்கோயிலில் உள்ள திருவுருவங்கள். சங்கமம், அடியார்கள். ஈற்றில் நின்ற ``தாபரம்`` என்பது இலிங்கத்தின் பரியாயப் பெயராய்ச் சிவவடிவை உணர்த்திற்று. எவ்வடிவமும் `சத்தி சிவக்கூட்டே` என்றதனால், உணர்வாகிய வடிவமும் அன்னதேயாதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம்
பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தான்நேர் எழுந்த அகாரம தாமே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்ற, பூவொடு கூடிய கொடிபோலும் சத்தியுடன் சிவன் ஆன்ம சிற்சத்தியை நேரே பற்றி அதற்குப் பொருள் தருகின்ற நாதமே தன் வடிவாகக் கொண்டு ஆன் மாவின் உணர்வில் விளங்குவான். அதனால் அந்த நாதத்தின் காரிய மாய் ஆகாயத்தின் ஒலியால் விளங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் பொருந்தியுள்ள இடத்தில் அடியவன் அடியார்களுக்கு நேரே விளங்கி நிற்கும் சிவசோதியைக் காண இயலும்.

குறிப்புரை :

`ஆதலால் அந்த ஐம்பது எழுத்துக்களையும் இலிங்கமாக வைத்துத் தியானிக்க` என்பது குறிப்பெச்சம். அத்து வாக்களுள் ஏனை ஐந்து கலைகளில் அடக்கம் ஆதல் வெளிப்படை ஆதலின், அவற்றுள் மந்திராத்துவா அக்கலைகளில் அடங்கி நிற்கும் முறையும் வெளிப்படை. ஆகவே நிவிர்த்தி பிரதிட்டா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் ஆதார பீடமாகவும், வித்தியா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் நடுக்கண்டமாகவும் சாந்தி கலையில் உள்ள எழுத்துக்கள் பீடமாகவும், சாந்திய தீத கலையில் உள்ள எழுத்துக்கள் இலிங்கமாகவும் நிற்றல் போதரும்.
இம்மந்திரத்தை மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``அமர்ந்திடம்`` - என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. ``தான்`` இரண்டில் முன்னது வழிபடுபவனையும், பின்னது வழிபடப்பட்டு சிவனையும் குறித்தன. நாதத்தை, `அகாரம்` என்றலும், விந்துவை உகாரம் என்றலும் வழக்கு. அதனால், `சத்தி உகாரமாய் நிற்க` என்பது இங்கு ஆற்றலால் பெறப்படும்.
நிவிர்த்தி கலையுட்பட்ட நம்மனோர்க்கு எழுத்தோசைகள் ஆகாயத்தின் குணமாகிய இசையோசையாம் உபாதியோடு கூடியன்றிப் புலனாகாமையின் அவற்றை, ``வான் நேர் எழுகின்ற ஐம்பது`` என்றார்.
இதனால் அக்கர உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.

பொழிப்புரை :

சத்தி சிவங்கட்கு வடிவமாய் நிற்கின்ற விந்து நாதங்களின் வடிவமே இலிங்க வடிவம். அவற்றுள் விந்துவே பீடமாயும், நாதமே இலிங்கமாயும் நிற்கும். அந்த விந்து நாதங்களை முதலாகக் கொண்டு தோன்றிய `சிவன் சத்தி, சதாசிவன், மகேசுரன், வித்தியேசுர` என்னும் முதல்வர் ஐவரும் முறையே, சிவம், சத்தி, சதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் சுத்த தத்துவம் ஐந்தையும் தோற்றுவிப்பார்கள்.

குறிப்புரை :

சிவன் முதலிய ஐவரே உண்மைக் கருத்தாக்களாக ஏனை, `அனந்த தேவர், சீகண்டர், மால், அயன்` முதலியோர் உபசார கருத்தாக்களேயாதலின், `அவரும், அவர்தம் செயல்களும் இவ் வுண்மைக் கருத்தாக்களாலே உள ஆவன` என்பது பெறப்படும். படவே, `அக்கருத்தாக்கள் ஐவரும் விந்து நாதங்களை முதலாகக் கொண்டவர் ஆதலின், அவ்விந்து நாதங்கள் இன்றி உலகம் இல்லை` என்றதனால், அவ்விந்து நாதங்களின் வடிவாகிய இலிங்கம் உலக முதலாகும்` என்றதாயிற்று `இவ்வாறு இலிங்க வடிவின் உண்மையை உணரும் உணர்வே ஆத்தும லிங்கம்` என்பது கூறப்பட்டது.
`விந்து; நாதம்` என்பன பரவிந்து பரநாதங்களையும் அபர விந்து அபர நாதங்களையும் ஏற்ற பெற்றியான் உணர்த்தி நிற்கும் ஆதலின், இங்கு அவை பரவிந்து பரநாதங்களை உணர்த்தின. அவை முடிநிலை முதலாய் நிற்றலின் அவற்றை ஒழித்து, அபர நாதம் முதலாகவே தத்துவங்கள் எண்ணப்படுகின்றன. அபர நாத மூர்த்தியே, `சிவன்` என்றும், அபர விந்து மூர்த்தியே `சத்தி` என்றும் சொல்லப் படுகின்றனர். அம்மூர்த்திகட்கு இடமாய் நிற்கும் தத்துவங்களே, `சிவதத்துவம், சத்தி தத்துவம்` - எனப்படுகின்றன. ``இலிங்கம்`` இரண்டினில் முன்னது பொதுவாக இலிங்க வடிவினையும், பின்னது சிறப்பாகப் பிழம்பினையும் குறித்தன.
முதல்வர் ஐவரையும் ``கரு ஐந்து`` என அஃறிணை வாய்பாட்டாற் கூறினார். கடவுளரை எத்திணை வாய்பாட்டிலும் கூறுதல் வழக்காதலின் ``தெய்வமாய்`` என்பதன்பின், `கொண்டு` என ஒருசொல் எஞ்சிநின்றது.
இதனால், `இலிங்க வடிவம் உலக முதலின் வடிவம் என உணரும் உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

அருளே திருமேனியாகக் கொள்ளும் சிவனது திருவடியாகிய இலிங்கத்தில் பீடம் ஆன்மதத்துவமும், நடுக் கண்டம் வித்தியா தத்துவமும், கண்டத்திற்குமேல் உள்ள பகுதி சிவதத்துவமும் ஆகும். அந்த வகையினதாகிய இலிங்க மூர்த்திமான் சதாசிவராவர்.

குறிப்புரை :

இதனுள் ``சத்தி`` என்றது, `அருள்` என்றபடி. முன்னர் ``ஆன்மா`` என்றது ஆன்ம தத்துவத்தையும், பின்னர் ``ஆன்மா`` என்றது மூர்த்திமானையுமாகும். முப்பத்தாறு `தத்துவங்களும் கூடிய கூட்டம் இலிங்க வடிவாம்` என்றதனால் அத்தத்துவங்களால் விளங்குகின்ற ஆன்ம உணர்வும் சிவனுக்கு இலிங்கத் திருமேனியாய் நிற்றல் கூறப்பட்டது. படவே, அவ்வுண்மையை உணராதவர்க்கு அவரது உணர்வு பாசமாயும், உணர்வார்க்கு அவரது உணர்வு சிவமாயும் நிற்கும் என்க.

பண் :

பாடல் எண் : 7

மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந் தின்பம் பொகின்ற போது
நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும்
இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.

பொழிப்புரை :

மனத்தின் தொழிற்பாடு நிகழ்தலால் நடை பெறுகின்ற என்னுடைய உயிர் வாழ்க்கையில் அந்த மனம் உலக இன்பத்தையே மிகுவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையின் இடையே சிவனது திருவருள் புகுந்து செயலாற்றத் தொடங்கின மையால், அந்த மனமும் முன்னை நிலையை விடுத்து, என்னையும், என் தலைவனையும் நினைவதாயிற்று. சிவன் எனது உடம்பையே தனது இல்லமாகக் கொண்டு என்னை ஆட்கொண்டது இம் முறைமையினாலாம்.

குறிப்புரை :

எனவே, `எனது உயிர் ஆத்தும லிங்கமானது இவ் வாற்றால்` என்றபடி. ``புகுந்து`` நான்கில் முதலாவதும், மூன்றாவதும் `புகுதலால்` என்பதன் திரிபு. ``நலம்`` என்றது. திருவருளை, ``நாடும்`` என்னும் பயனிலைக்கு எழுவாய், `அம்மனம்` என வருவிக்க. இல்லம், ``இலம்`` என இடைக் குறைந்து நின்றது. `இல்லமாகப் புகுந்து` என ஆக்கம் வருவிக்க.
இதன் பின்னிரண்டு அடிகள் உயிர் எதுகை பெற்றன.

பண் :

பாடல் எண் : 8

பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்அடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்துறைந் தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு என்னை ஆட்கொண்டபின் இறை யியல்பு அனைத்தையும் உடைய சிவன் எனது உயிரையேதான் இருக்கும் இடமாகக் கொண்டான்.

குறிப்புரை :

`அதனால் எனது உயிர் ஆத்தும லிங்கமாயிற்று` என்பது குறிப்பெச்சம். பரன் + அபரன் = பராபரன். `மேலும், கீழுமாய் நிற்பவன்` என்பது பொருள். ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க`` - எனத் திருவாசகத்துள்ளும் வந்தது. (தி.8 திருவண்டப்பகுதி, 50) `இவ்வாற்றால் என் உயிரையும் இடமாகக் கொள்ளுதல் அவனுக்கு இயல்பாயிற்று` என்றபடி. எந்தை - அடைந்தவர் மேல் தந்தை போலும் அருள் உடையவன். மதி சூடுதல் சார்ந்தாரைக் காப்பவன் ஆதலைக் குறிப்பது. ``தராபரன்`` என்றது மக்களை ஆட்கொள்ளுதலையும், ``தேவர்கள் மன்னும்`` என்றது தேவர்களை ஆட்கொள்ளுதலையும் குறித்தவாறு. `அடியார்களது மனத்திலும், சிரத்திலும் வீற்றிருப்பவன் எனது மனத்திலும் நீங்காது இருப்பவன் ஆயினான்` என்பது அவனது பேரருளை வியந்தவாறு. `சிரபரன்` என்பது எதுகை நோக்கி நீண்டது. இங்கு உள்ள ``பரன்`` என்பதை, ``கோயில்`` என்பதனோடும் கூட்டுக. ``மன்னும்`` என்பது முற்று. `மராமரன் போல மன்னி உறைந்தான்` என்க. மரன் - மரம். மரங்களில் மிக்க வயிரம் உடையது மராமரம் ஆதலின், அஃது அகலாது இருத்தற்கு உவமையாயிற்று.

பண் :

பாடல் எண் : 9

பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம்
குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.

பொழிப்புரை :

`பசு` எனப்படுகின்ற எனது மனத்தைப் பசுமனமாய் இல்லாது திருந்தப்பண்ணி அதனைத் தனக்குக் கோயிலாகக் கொண்ட தலைவன் சிவனேயாகும். அவனை, அங்ஙனம் பசுக்களைத் திருத்தி ஆட்கொள்கின்ற தலைவன் அல்லன்` என்றும், `ஆம்` என்றும் இங்ஙனம் ஐயுற்று உலகம் பிணங்குமாயின் அது பேதையுலகமேயாகும்.

குறிப்புரை :

பின்னிரண்டடிடகள், சிவனைச் சிறப்பு வகையால் விளக்குகின்றன. அதனால், முன்னர் ``ஈசன்`` என்று பொதுமையிற் குறித்ததாம். `செஞ்சடைப் புண்ணியன்` என இயையும். `புண்ணியன் - புண்ணியத்தை வடிவாக உடையவனும், அதன் பயனாகின்றவனும்` என்க. தவம் செய்வார் கோடைக் காலத்தில் ஐந்தீ நாப்பண் நிற்றலும், மாரிக்காலத்தில் நீர்நிலையுள் நிற்றலும் செய்வர் ஆதலின் ``அங்கியும் நீரும் பொரா நின்றவர்`` - என்றார். பொருதல், தாக்கப்படுதலும், பொறுத்து நிற்றலும் என்னும் இரண்டனையும் குறித்தது. ``செய் அப் புண்ணியம்`` என விதத்து ஓதினமையால் இங்கு, ``புண்ணியம்`` என்றது இறைவனை நோக்கிச் செய்யும் தவத்தையாயிற்று. பேதைமை உடையவனைப் `பேதை` என்றல் பான்மை வழக்கு. அஃது இங்கு அஃறிணைக்கண் வந்தது. குரால் - பசு.
இதனால், உயிர் சிவனுக்கு வடிவாய் நிற்றலன்றிப் பிற தேவர்க்கு வடிவாய் நில்லாமை கூறும் முகத்தால், ஆத்தும லிங்கத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று
சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை
ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே.

பொழிப்புரை :

உலகர் ஏனைத் தேவர்களை முதல்வராக நினைந்து தாம்கொண்ட கடவுளை `அவன் ஓரிடத்தில் நின்றான், இருந்தான்` என இவ்வாறான வடிவங்களைப் பல இடங்களில் சென்று கண்டு துதிப்பார்கள். நான் சிவபெருமானை, `என் உயிராகிய வடிவத்தில் என்றும் இருக்கின்றான்` என்று நிலையாக நின்று துதிப்பேன்.

குறிப்புரை :

`தேவர்களை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. சிவபெருமானுக்குக் கிடந்த கோலம் ஓரிடத்தும் கூறப் படாமையால், ``தேவர்கள்`` என்பதனை எழுவாய் வேற்றுமையாகக் கொள்ளுதல் பொருந்துவதன்று. சிவபெருமானைச் சுட்டி நின்ற அவன் என்பது `முதற்கடவுள்` எனப் பொருள் தந்து நின்றது. முதற்கண் நின்ற ``என்று என்று`` என்றது, `இங்ஙனம் பலவாறாக` என்றபடி. `என்று` என ஒரு சொல்லாகப் பாடம் ஓதின் வெண்டளை பிழைத்தலை அறிக.
ஏனைத் தேவர்கள் உருவ மேனியைத் தவிர, `அருவுருவம், அருவம்` என்னும் மேனிகளை உடையர் ஆகாமையால், இலிங்க வடிவினராகக் கூறப்பட்டிலர். அதனால் அவர் ஆத்தும லிங்கத்தில் நிற்றலும் இல்லை` என இவ்வழிபாடு சிவநெறி நிற்பார்க்கே உரித்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உருவும் அருவும் உருவோ டருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

பொழிப்புரை :

யாதோர் உருவும் இலனாகிய பரமசிவன், தன்னைப் போலவே நிலைபெற்ற பொருளாய் உள்ள பல உயிர்களின் பொருட்டு, `உருவம், அருவம், உருஅருவம்` என்னும் திரு மேனிகளைப் பொருந்தி நிற்பான். அஃதேயன்றிப் பக்குவான்மாக்கள் பொருட்டுக் குருவாகி வந்து அவர்களோடு உடன் உறையும் கொள்கையையுடைய, கற்பகத் தருவைப்போல அவர்கள் வேண்டியவற்றை வழங்குகினஅற சதாசிவ மூர்த்தியும் ஆவான்.

குறிப்புரை :

`பதிப்பொருளாகிய சிவனை இவ்வியல்பினனாக உணர்தலே சிவஞானம்` என அதன் இயல்பு உணர்த்தும் முகத்தால் ஞானலிங்கத்தின் இயல்பைத் தொகுத்துக் கூறியவாறு.
``குருவும்`` - என்னும் உம்மை இறந்தது தழுவியதனோடு உயர்வு சிறப்பு. இதனை, ``சதாசிவன்`` என்பதனோடு கூட்டுக. ``ஆகும், நல்கும்`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``சதாசிவன்`` என்னும் ஒருபெயரைக் கொண்டமையால், ``ஆகும்`` என்பதை வினையெச்சமாக்கி உரைக்கப்பட்டது. ஐந்தொழில்களில் அருளலைச் செய்தல் சதாசிவ மூர்த்தியாகியேயாதலால், ``குருவென நிற்கும் கொள்கையனாகும் சதாசிவன்`` என்றார். இதன்பின் `ஆம்` என்பது எஞ்சி நின்றது. தான், ஏ அசைகள்.

பண் :

பாடல் எண் : 2

நாலான கீழ உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகநாப்பண்
நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தனே.

பொழிப்புரை :

கீழும், மேலும் நான்கு நான்கு திருமேனிகளாய் உள்ள அவற்றிற்கு மிக நடுவிலே உள்ள ஒரு திருமேனி மட்டும் அருவுருவமும், அஃதொழிய அதற்குக் கீழ் உள்ள திருமேனிகள் நான்கும் உருவமும், மேல் உள்ள திருமேனிகள் நான்கு அருவமும் ஆக இவ்வாறு பொருந்துதலால், இவையாய் நிற்கின்ற பரமசிவன் ஒருவனேயாயினும் ஒன்பது பேதங்களாய் நிற்பன்.

குறிப்புரை :

இவற்றை `நவந்தரு பேதம்` - என்பர். மூன்றாம் அடியில் ``நாலான`` என்றது, முன்னர், கீழே. மேல் - எனக் குறித்த இடம் ஒவ்வொன்றிலும் நாலான` - என்றதாம். அதனை முதற்கண் எடுத்து, நாலானவற்றின் மிகநாப்பண் ஒன்றும் அருவுரு, என இயைத்துரைத்து வைத்து, அதன்பின் ``நடுநிற்க`` என்பதனை வைத்து, அதன்பின் முதற்றொட்டு உரை்க. நடுண் நிற்கும் திருமேனி, ``நடு`` எனப்பட்டது. ``நிற்க`` என்றது, `ஒழிய` என்றபடி ``நண்ணலால்`` என்பதற்குமுன், `இவ்வாறு` என்பது எஞ்சி நின்றது, ``நாலான கீழ், மேலான நான்கும், மிகநாப்பண் ஒன்றும்`` என்றதனானே `ஒன்பது` என்னும் தொகை பெறப்படுதலால் வாளா, ``பாலாம்`` என்றார். `இவையாம் பரசிவன்தான் ஒருவனே` பாலாம்` என இயைத்துக் கொள்க.
மேல் நான்கு, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்பன. நாப்பண் ஒன்று சதாசிவ மூர்த்தம். கீழ்நான்கு, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` - எனப்படும் மூர்த்தங்கள். இவற்றின் இயல்பு சிவஞான சித்தியார் இரண்டாம் சூத்திரத்தில் கூறுமாற்றாண் அறிக.
உருவத் திருமேனிகளை இவ்வாற்றால் உணரும் ஞானமே சரியை` என்றும், அருவுருவத் திருமேனியை இவ்வாறு உணரும், ஞானமே `கிரியை` என்றும், அருவத் திருமேனிகளை இவ்வாறு உணரும் ஞானமே `யோகம்` என்றும், `இம்மூவகைத் திருமேனிகளுள் யாதொன்றும் இன்றி அறிவுத் திருமேனியே பரசிவம்` - என உணரும் ஞானமே `ஞானம்` என்றும் சொல்லப்படுகின்றன. `இந்த நான்கும் ஞானத்தின் அரும்பு, மலர், காய், கனிபோலும் நிலையவாம்` என்பதை,
``விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே``
என்னும் தாயுமானவர் பாடலால் அறியலாம்.
இதனால், ஞான லிங்கங்கள் நால்வகையின ஆதலும், அவற்றின் படிநிலை உயர்வுகளும் ஞானத்தால் உணரப்படுகின்ற ஞேயங்களைக் கூறும்முகத்தால் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 3

தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய நவந்தரு பேதங்களில் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் பேதங்களை ஏனைத் தேவர்போல எண்ணுதல் கூடாது` என்றற்கு அவற்றது சிறப்புணர்த்துவார், `அருவுருவத் திருமேனியும் தனியொரு நிலையது ஆனமை பற்றி இகழ்தல் கூடாது` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.

குறிப்புரை :

``தேவர்பிரான்`` என்றது உருத்திரனை. என்னை? அவனோடு ஒத்த உருவும், பெயரும், தொழிலும் உடையவன் தேவர்கட்குப் பிரானாய் நிற்றல் வெளிப்படையாதலின், திசைமுகம் - திக்கின் பகுதி. அவை எட்டாதலின் அவை போல எண்மராய் நிற்கும் வித்தியேசுரரை, ``திசைமுகர்`` என்றார். இவருக்குத் தலைவன் மகேசுரன். சதாசிவ மூர்த்தி தனக்குக் கீழ் உள்ள நால்வர்க்கும் மேலானவன் ஆதல் பற்றி ``நால்வர் பிரான்`` என்றும், அவன் காணாத அருவினர்க்கும், காணப்பட்டே நிற்கும் உருவினர்க்கும் நடுநிற்கும் சிறப்புப் பற்றி ``நடுஉற்ற நந்தி`` என்றும் கூறினார்.
`அவ்வழியால்` என `ஆல்` உருபும், `அடிக்கண்` எனக் `கண்` உருபும் விரிக்க. `அண்ணலும் அவர் ஆம்` என ஒரு சொல் வருவிக்க. `பிரான் என்று யாவர் இறைஞ்சுவார்` என்பதனை முன் இரண்டோடும் தனித் தனிக் கூட்டிப் பின்பு, நேரே உரைக்க.
இதனால் `ஆன்மாவினது ஞானம் உண்மைப் பதிஞானம் ஆமாறு கூறும் முகத்தால், அஃதே உண்மை ஞான லிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கண்ணி யுணரினும்
ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.

பொழிப்புரை :

யாண்டும், திங்களும், நாளும் என்று இன்ன வகையாகக் காலத்தை வரையறை செய்கின்ற, ஒவ்வொரு வரும் காலை, நண்பகல், மாலை என்னும் காலங்களில் தவறாது கண்டு வணங்கத் தக்க பகலவனிடத்துக் கருதியுணரினும், உணவு முதலிய உலகியல் ஒழுக்கத்தின் நீங்கி யோகத்தின் நின்று உணரினும் அவ்விடங்களில் உணரப்படும் பொருள் ஒப்பற்றதாகிய அந்தத் தனிமுதற் பொருளே யாகும். அதனால் நான் எனது வினைக்கட்டு நீங்கி அழியுமாறு எவ் விடத்தும் அந்தத் தனிமுதற் பொருளையே விரும்பித் தொழுகின்றேன்.

குறிப்புரை :

`கன்னி யுணரினும்` - என்பது பாடமன்று. முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. கண்ணல் - கருதல். பாவித்தல். ``மாறினும்`` என்றது, `மாறி யோக ஒழுக்கத்தில் நிற்பினும்` என்றவாறு. ``காண் தகையானொடும்`` - என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத் திரிக்க. ஒன்று - ஒப்பற்றது. முதற் பொருளை `அது` என்றல் உபநிடத வழக்கு.
`யார் எவ்விடத்து எவ்வாறு வணங்கினும் அவ்வணக்கம் தனி முதலாகிய பரசிவத்தையே சாரும் - என உணரும் உணர்வே ஞான லிங்கமாய்ப் பயன்தரும்` என்பது இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

பொழிப்புரை :

மெய்யுணர்வினை உடைய அடியவர்களால், `யாவர்க்கும் முன்னே மேலே உள்ளவன்` எனவும், அனைத்து உலகங்கட்கும் முதல்வனாகிய முழுமுதற் றன்மை உடையவன்` எனவும், `நீதியின் உள்ளே விளங்குகின்ற பெரியோன்` எனவும், `இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன்` எனவும் கொண்டு வழிநின்று போற்றுகின்ற பெருமையை உடையவன் எங்கள் கடவுள். அவனை அறிதற்கு உரிய அடையாளம் மாதொரு பாகனாய் இருத்தல்.

குறிப்புரை :

`இவ்வாறு உணரும் உணர்வே ஞான லிங்கமாம்` என்றவாறு. ``சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்`` என்பதை அதற்குரிய காரணங்களுடன் விளக்கி, `அத்தெய்வமாவான் சிவபெருமானே` எனக் கூறுதலே கருத்தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
``அண்டம்`` என்றது, `அகிலாண்டம்` என்றவாறு ``அண்டத்துக்கு`` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. ஓரிடத்தும், `தெய்வம்` என வாளா கூறாது, ``பரதெய்வம், நற்றெய்வம், பெருந்தெய்வம், மாத்தெய்வம்`` - எனச்சிறப்பித்தே ஓதியது `தெய்வம்` என்பது முதற் கடவுளையே உணர்த்தி நிற்றற் பொருட்டு. ஈற்றடியில் உள்ள சொற்களை, `தன்பாதியுள் பராசத்தி மன்னும் ஆம்` என இயைத்து `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. ஆம், அசை.

பண் :

பாடல் எண் : 6

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபேதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.

பொழிப்புரை :

ஆதிசத்திக்குமேல் உள்ளதாகிய பராசத்தியில் விளங்குவதே வாக்கும், மனமும் எட்டாது நிற்கும் தூய ஒளியாகிய சுத்தசிவ நிலை. அதனால், சிவன் பிறிதொன்றோடும் படாது தானேயாய் நிற்கின்ற அவனது உண்மைநிலை, ஞானசத்தி கிரியா சத்திகட்கு முதலாய் உள்ள ஆதி சத்திக்கு அப்பால் உள்ள பராசத்தியின்கண் நிற்பதே யாகும். எனினும் அவனது நிலைகள் ஆதிசத்தி. ஞானசத்தி, கிரியா சத்திகள் ஆகிய அவைகளோடும் இயைந்து நிற்பனவேயாம்.

குறிப்புரை :

`அஃது அவனது பொதுநிலை` என்றபடி. `அந்தப் பொதுநிலையை அவன் அடைதற்குக் காரணம் உயிர்களிடத்து வைத்த கைம்மாறு கருதாத கருணையே` என்பது கருத்து. ``ஈசன்`` எனப் பின் வருதலால், ``அத்தன்`` என்றது, `தன்` என்னும் அளவாய் நின்றது.
``தோயாத தூவொளி`` என்பதை, ``சுத்த சிவபதம்`` என்பதற்கு முன்னேயும், ``ஒத்தவும் ஆம்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. `தடத்த நிலைகள் பல` என்பது உணர்த்துதற்கு அதனைப் பன்மையாக ஓதினார்.
இதனால், முதற்பொருளை இவ்வியல்பினதாக உணரும் உணர்வே ஞானலிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும்
எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும்
பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.

பொழிப்புரை :

`எல்லாப் பொருள்களின் முடிவுக்கும் முடிவாய் உள்ள` ``போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``3 பரமசிவனது உண்மையை உணரின் `அவனே உலகம் அனைத்திற்கும் முதல்` என உலகத்தின் முடிநிலைக் காரணம் விளங்கும். பின் அந்தப் பரமசிவன் முதற்பொருளாய் எழுதற்கு காரணமான அவனது குணமாம் பராசத்தியை உணரின் அஃதே எல்லையில் இன்ப வெள்ள மாய் விலைதலால், அப்பால் அலைவுயாதும் இன்றி, அந்த இன்ப வெள்ளத்திலே அமைதியுடன் இருத்தல்கூடும். எப்பொருள் எத் தன்மைத்தாயினும் அப்பொருளில் மெய்ப்பொருளாகிய பரம சிவனைl அலைவின்றிக் காணும் மெய்யுணர்வைப் பெற்றால் அவ் வுணர்விலே முன்னே அருள்நிலை தோன்ற, அதன்பின் அதற்கு மேலாகப் பொருள் நிலையாகச் சிவன் விளங்குவான். அங்ஙனம் விளங்கக் கண்டவனது உள்ளத்தில்தான் அந்தச் சிவன் என்றும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, அங்ஙனம் காணுதலாகிய உணர்வே ஞான லிங்கமாம்` என்பது கருத்து. முடிவில் உள்ளதை, `கொழுந்து` என்றல் வழக்கு. குவலயம் - குவலயத்தின் உண்மை, `எழுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ``இருக்கலும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. பரம் - மேல். மேல் உள்ளவனை `மேல் என்றது ஆகுபெயர்; திடமாக என ஆக்கம் விரித்துரைக்க. ``பார்ப்பதி`` - என்றது `சிவ சத்தி` என்னும் பொருளதாய்த் திருவருளைக் குறித்தது. ``திரண்டு எழ`` என்றதனாலே, திரண்டு எழுதலும் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. உளனாதற்கு `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், சொரூப ஞானமாகிய ஞானலிங்கம் உளதாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.

பொழிப்புரை :

தன்னையே அடைக்கலமாக அடைந்த எனக்குத் தந்தையாய் நிற்கும் பரமசிவனையும் அவன் எனக்குத் தாயாய் நிற்கும் சத்தியோடு கூடிய கூட்டு நிலையையும், ஞானாசிரியர் தம் மாணாக் கர்க்கு முதற்கண் சுட்டளவாக உணர்த்திப் பின்பு அவ்விருவரது முறைமையை எல்லாம் விளங்க உணர்த்துவாராயின், மாணாக்கர்க்கு உண்மை ஞானம் பிறக்கும். எனவே, (`அதுவே அவர்க்கு ஞானலிங்கமாய்ப் பயன் தரும்` என்றபடி) இனி என் அப்பன் என் அம்மையை மக்களது இருதய கமலத்தில் இருக்க வைத்துத் தானும் அந்த இடத்தையே விரும்பி அவளோடு கூடி யிருக்கின்றான். ஆகவே, அவ்விருவரும் வீற்றிருக்கின்ற இடம் அதுவே.

குறிப்புரை :

`ஆதலின் மக்கள் அவ்விடத்து அவனை ஞான லிங்கத்தில் காண்க` என்பது குறிப்பெச்சம். `பரமனையும், கூட்டத்தையும்` என இரண்டாவது விரித்துரைக்க. ``என் அம்மை கூட்டம்`` எனப்பின்னர் வருதலால், முன்னர் ``பரமன்`` என்றது அவன் தனித்து நிற்கும் நிலையையாயிற்று. அஃது அவனது சொரூப நிலையும், அம்மையோடு கூடிய கூட்டம் அவனது தடத்த நிலையும் ஆகும் சொரூப சிவனே `பரசிவன்` என்றும் சொல்லப்படுவான். தடத்த சிவன் `சிவன்` என்றும், `ஆதிசிவன்` என்றும் சொல்லப்படுவான். சத்தியை விட்டுச் சிவன் ஒருபோதும் தனித்து நிற்றல் இல்லை யாயினும், செயல்யாதும் நிகழாதபோது சத்தி இருந்து இல்லாதது போல நிற்றலின் அந்நிலை `சிவனது தனிநிலை` என்றும், செயல் நிகழும் போது சிவன் செய்பவனும், சத்தி அவன் செயலுக்குத் துணையுமாய்ப் பிரிப்பின்றி நிற்றலின் அந்நிலை, `சிவனும், சத்தியும் கூடிய கூட்டு நிலை` என்றும் சொல்லப்படுகின்றன.
``ஓருரு வாயினை; மானாங் காரத்(து) ஈரியல் பாய்`` *
என்று அருளிச் செய்தது இவை பற்றியே.
சிவன் பரசிவனாய் நிற்கும் பொழுது சத்தி பராசத்தியாய் நிற்பாள். அவளே அருட்சத்தி. சிவன் ஆதிசிவனாய் நிற்கும்பொழுது சத்தி ஆதிசத்தியாய் நிற்பாள். அவளே திரோதான சத்தி. அவள் வழியாகவே இறைவனது ஐந்தொழில்கள் நிகழும். இதுபற்றி அருணந்தி தேவர்,
``அவளால் வந்த ஆக்கம் இல்வாழ்க்கை யெல்லாம்`` l
என அருளிச் செய்தார். இவற்றையெல்லாம் இனிதுணர்த்தலே ஞானோபதேசமும், அங்ஙனம் உணர்த்தியவாறே உணர்தலுமே ஞானம் ஆகலின், ``முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்`` என்றார். உரைத்தற்கும் சொல்லுதற்கும் உரியவராகிய `ஞானாசிரியர்` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. ``சந்தித்திருந்த இடம்`` என்பதற்கு, எஞ்சிநின்ற `அது` என்னும் பயனிலையை வருவித்து இறுதியில் கூட்டியுரைக்க. ``உந்திக்கு மேல் என்றது இருதயத்தை. இதனை மூன்றாம் தந்திரத்துள்,
``நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்`` 3
என்றார். `உந்தியின் மேல்` என்பது பாடம் அன்று.
இதனால் ஞான லிங்கத்தின் இயல்பும், அந்த இலிங்கத்தைப் பெறும் முறையும், பெற்றுப் பயன் அடையும் முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில்
ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

பொழிப்புரை :

`உயிரின் இருப்பு, சத்தயோடு கூடிய சிவனது விளையாட்டே` என்றால், அச்சிவன் அவ்வுயிரை யாதாக்குவான் எனில், ஆணவத்தைப் போகக்தற்கண் தம்மில் ஒரு தன்மைப்பட்ட, `சுத்தம், அசுத்தம்` என்னும் இருமாயையால் ஆகிய கருவிக் கூட்டத்துள் அவ்வுயிரை முதற்கண் புகுவித்து அந்நிலையில் அவற்றின் வினைகளை அவை நுகரச் செய்து, அக்கருவிகள் கூடுதல் குறைதல்களால் உளவாகின்ற கேவல ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை கட்குப் பின் திருவருளால் உளவாகின்ற சுத்த ஐந்தவத்தையை அடை வித்து இறுதியாகத் துரியத்தையும் நீக்கித் துரியாதீதத்தில் சேர்த்து, அங்ஙனம் சேர்க்கப்பட்ட அந்நிலையில் அதன் அறிவினிடமாகத் தான் விளங்கி, அதனாலே, தனது இன்ப வெள்ளமே அவ்வுயிர்க்கு என்றும் உறைவிடமாகச் செய்வான்.

குறிப்புரை :

`சத்தியோடு கூடிய சிவன்` என்றதனால், ஆதிசிவன்` என்பது பெறப்பட்டது. உயிரினது நிலைபேற்றை `உயிர்` என்றது ஆகு பெயர். விளையாட்டால் ஆவதனை, ``விளையாட்டு`` எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. ``ஆகில்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின்கண் வந்தது. `சுத்தம், அசுத்தம்` என்பவற்றால் தம்மில் வேறுபாடு உடையவேனும், ஆணவத்தை நீக்குதற்கண் ஒரு தன்மைய ஆதல் பற்றி இரு மாயைகளையும் ``ஒத்த இரு மாயை`` என்றார். மாயை, ஆகுபெயராய் அதன் காரியத்தை உணர்த்திற்று. ``இடை`` என்பதன்பின், `புகுவித்து` என்பது எஞ்சிநின்றது. இறுதி யாதல் பற்றி, சுத்த துரியத்தினின்றும் பிரிவித்தலை மட்டுமே கூறினாராயினும், அதற்கு முன் நிகழ்வனவாகிய அனைத்து அவத்தைகளினின்றும் பிரிவித்தல் ஆற்றலால் விளங்கிற்று. அறிவை, `சித்தம்` என்றல் வழக்கு. `சிவம்` என்பது, இங்கு, `இன்பம்` என்னும் பொருளதாய் நின்றது. `சிவத்தை` என இரண்டாவது விரிக்க.
இதனால், மேலை மந்திரத்தில் ``முறைசொல்லின்`` எனக் குறிக்கப்பட்ட `முறை` இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும்
சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.

பொழிப்புரை :

உலகமே ஆதி சிவனது விளையாட்டாம். அவன் ஆதி சத்தியைக் கொண்டே அனைத்தையும் செய்வனாயினும் அச் சத்தியும், அவனும் உலகத்துத் தலைவியரும், தலைவரும் போல வேறு வேறானவர் அல்லர். சத்தியே `சிவனும்` சிவனே சத்தியும் ஆவர். எனினும் சில வேறுபாடு பற்றி, சத்தி எனவும், `சிவன்` எனவும் பிரத்து வழங்கப்படுகின்றார்கள். அதனாலே இலிங்கத்திலும் அவ்வேறுபாடு காணப்படுகின்றது. அஃதே பற்றி, அதனை, `உலகத்தாரது உருவம் போல இருவேறு பொருள்களின் கலப்பு` என மயங்கற்க. இனி உண்யைாக உணர்ந்தால், சத்தியே அனைத்துத் திருமேனிகளுமாய் நிற்கும்.

குறிப்புரை :

`தாரணி` என்பது `தாங்குவது` என்னும் பொருட்டாய் நிலத்திற்கு, பெயராகும். அத்தகைய நிலமாவது மண்ணிலம் மட்டு மின்றிப் பொன்நிலம் முதலியனவும் நிலமேயாதலின், ``தாரணி`` என்றது எல்லா உலகங்களையும் குறித்தது. அவற்றைச் சிவனது விளையாட்டு என்று, மேலைமந்திரத்திற் கூறியவாறே உபசாரமாம், ``விளையாட்டாம்`` என மேற்கூறியதனையே இங்கு மீட்டுங் கூறியது, மேற்கூறிய உயிரேயன்றி, `ஏனைப் பொருள்கள் பலவும் அத்தகை யனவே` என்பது உணர்த்துதற்கு. மேல், சிவனை, ``எந்தை`` எனவும், சத்தியை, ``என்னம்மை`` எனவும் கூறியதனால், அவ்விருவரும் `உலகத்துத் தந்தை தாயரைப் போல வேறுவேறானவர் போலும்` என மலையாமைப் பொருட்டு, சத்தியே சிவனும் ஆவாள்; சிவனே சத்தியும் ஆவான்` என விளக்கிக் கூறினார். `விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்`` என ஆத்துமலிங்க அதிகாரத்தில் கூறிய குறிப்பின்படி இலிங்கமும் ஒருபெற்றித்தாய் இராமல் இருவேறு வகையாய்க் காணப் படுதலால் அதுபற்றியும் மேற்கூறியவாறு மலையாமைப்` பொருட்டு, ``தாபரம் வேறில்லை`` என்றார். `இச்சத்தி சிவனன்றி` எனச்சுட்டு வரு வித்து, `தாபராம் இத்தன்மையராகிய சத்தியும் சிவனுமேயன்றி வேறில்லை` என உரைக்க. `தாபரமும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `திருமேனிகள் எல்லாவற்றிலும் சத்தி மூர்த்தியாய் நிற்கச் சிவன் மூர்த்திமானாய் நிற்பன்` என்றற்கு, `திரு மேனிகளில் சில சிவனது வடிவமே` என்றும், சில இருவரும் ஒன்றாய் இயைந்த வடிவம் என்றும் எண்ணுமாறு நிற்றல், கடவுட் பொருள் ஒன்றேயாயினும், அஃது இருதன்மையை உடையது` என்பதைக் குறித்து நிற்கும் அடையாளம் ஆதலேயனஅறிப் பிறிதில்லை` என்றதாயிற்று.
``வேர்த்து வெகுளார்`` * என்பதனை, `வெகுண்டு வேரார்` என முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்ளுதல் போல, ``சமைந்துருவாகும்`` என்றதை, `உருவாகிச் சமையும்` என மாற்றிக் கொள்க. இதற்குப் பகலவன் ஒருவனே `கதிரவனும், கதிரும்` என இருதன்மையை உடையனாய் இருத்தலை உவமையாகக் கூறுவர்.
சத்தி சிவனது இயல்பினை இங்குக் கூறியவாறே,
``அருளுண்டாம் ஈசற்(கு) அதுசத்தி, அன்றே;
அருளும் அவனன்றி யில்லை - அருளின்(று)
அவன்அன்றே யில்லை; அருட்கண்ணார் கண்ணுக்(கு)
இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து`` *
எனவும்
``அருளது சத்தியாகும் அரன்றனக்(கு) அருளையின்றித்
தெருள்சிவம் இல்லை; சிவம்இன்றிச் சத்தி யில்லை``
``சத்திதான் நாதமாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதா னாதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமுமாகும்`` l
எனவும் கூறப்பட்டன.
இதனால், மெய்ப்பொருளது தன்மையினை இங்ஙனம் உள்ளவாறுணர்தலே ஞானலிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறறி யேனே.

பொழிப்புரை :

ஒலிக்கினஅற கடலை ஆடையாக உடைய நிலவட்டம், நீர், பல செயல்கட்கும் பயன்பட்டு நிற்கின்ற நெருப்பு, எங்கும் பரந்து செல்கின்ற காற்று, அனைத்தையும் தன்னுள் முறைப்பட அடக்கி நிற்கின்ற வானம் இவை அனைத்துமாய் அவற்றில் நிறைந்து நிற்கும் வகையில் உயர்ந்து சென்று, முடிவில் வானத்தையும் கடந்து உயர்ந்தோனாகிய சிவனை யான் உய்தி பெறுதற்கு, `ஒரு சிறு வடிவினனாகக் கண்டு வலம் வருதல் முதலிய வகையால் வழிபடுதல் எவ்வாறு` என அறிகின்றிலேன்.

குறிப்புரை :

வருகின்ற திருமந்திரத்துள் அங்ஙனம் வழிபடுமாற்றை அருளுகின்றார் ஆகலின், இங்கு, ``ஆறு அறியேன்`` என யாதுமத் அறியார்போலக் கூறினாராயினும், கீழ் உரைக்கப் படுகின்ற அதுவன்றிப் பிறிதோர் ஆறு அறியேன்` என்பதே கருத்தாகும். செய்யுள் நோக்கித் தீயைக் காற்றுக்குப் பின்னர் வைத்தார். `குவலயமும், வானும்` என்னும் எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. `வாறிவை` என்பது பாடமன்று. பூதங்களைக் கீழத் தொடங்கிக் கூறினா ராதலின், `நீண்டு`` என்றார். `வரைந்து` எதுகை நோக்கி வலித்தல் பெற்றது. வரைதல், எல்லை வகுத்தல். `அகண்ட மானவனைக் கண்டனாக்குதல் இயலாது` என்பதாம். இதனை, ``அசிந்தினாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு`` (சிவஞான போதம் - சூ. 12. கருத்துரை.)என்றார் மெய்கண்ட தேவர்.
இதனால் இலிங்கத்தாலன்றி இறைவனை அணுகலாகாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நீண்டகன்று வரம்பிலனாகிய சிவனை வரம்புட்படுத்து வழிபடும் வழி ஒன்று இந்நிலவுலகில் உண்டு. அஃது யாதெனின், அலைகளை வரிசையாக்கி அதனாலே கரையை அடைகின்ற கங்கையாற்றின் நீரையும், பூக்களையும் கையிலே கொண்டு, அவனது பெயர்கள் பலவற்றையும் சொல்லி ஆட்டியும், சாத்தியும் வழிபட்டு அவனை அங்ஙனம் வழிபடப்பட்ட அவ்வடிவத்தில் வைத்து உணர்தலேயாகும். அங்ஙனம் உணரவல்லார் உளராயின் அவ்வடிவைப் பொள்ளல் செய்து அதனை விட்டு அவன் வேறு எங்கும் போய்விட மாட்டான்.

குறிப்புரை :

`அதனுள் தானே இருந்து அருள் செய்வான்` என்பதாம். `இவ்வாறு அவன் தான் அருளிச் செய்த ஆகமங்களில் உரைத்துள்ளான்` என்பது கருத்து.
``தாபர சங்க மங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொன்டு மன்னுயிர்க் கருளை வைப்பான்`` *
என்றதும் இக்கருத்தினாலேயாகும்.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத் தருள`` *
என்று அருளிச் செய்தமை காண்க. `இஃதொழிய உயிர்கள் அவனை வழிபட்டு உய்யுமாறு வேறில்லையாதலின். அவற்றை இவ்வாற்றால் உய்வித்தல் வேண்டும் - என்னும் கருணை மிகுதியாலே அகண்டித னாகிய சிவன் இவ்வாறு கண்டிதனாய் நின்று அருள் புரிகின்றான்` என்னும் உண்மையைத் தெளிந்து கடைப்பிடிக்க - என்பதாம்.
``இங்கு`` என்றதனால், `இம்முறையைச் சிவன் நிலவுலகிலே தான் வைத்துள்ளான்` என்பது போந்தது.
இதனால், `அசிந்திதனாகிய இறைவனைச் சிந்தித்தனாகக் கண்டு வழிபடும் ஒரே முறையாவது இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றெனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
நன்றென் றடியிணை நான்அவ னைத்தொழ
வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற
அன்றென் றருள்செயும் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

`சிவபிரான் ஒருவனே ஒப்பற்ற தனிமுதற் பொருள்` என நான் உணர்ந்தேன். அதனால் `அவனை மேற்கூறியவாற்றால் `வழிபடுதல் ஒன்றே நன்னெறி` என உணர்ந்து வழிபடுந்தோறும் வழி படுந்தோறும் அவன் தனது பேரின்ப வெள்ளம் எனது ஐம்புலன்களில் அடங்காததாய் மிக்கெழுந்து என்பால் விளையப் பண்ணுதலை அப்பொழுது அப்பொழுதே செய்கின்றான்.

குறிப்புரை :

``எம் ஈசன்`` என்றது `சிவபிரான்` என்றவாறு. `ஒருவனையே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அடியிணை தொழுதல்` என்பது `வழிபடுதல்` என்னும் பொருளதாய் ஒரு சொல் நீர்மைப்பட்டு ``அவனை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. ஆதலின், `அவனை நான் அடியிணை தொழ` என மொழி மாற்றி யுரைக்க. வெல்லுதல், கிடத்தல், உறுதல் என்னும் தொழில்கட்கு இன்பமே வினைமுதல் என்க. `என்பால் உற அருள் செய்யும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `சிவனைப் பொது நீக்கி உணர்ந்து இலிங்கத்தில் கண்டு வழிபடல் வேண்டும்` என்பதும், அங்ஙனம் வழிபடுதலால் விளையும் பயன் இது என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன் தனது தடத்த நிலையில் `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சத்தி, சிவன், விந்து, நாதம் - என்னும் ஒன்பது நிலைகளில் நின்று உயிர்கட்கு அவன் நிலைகேற்ற பயனைத் தருவன் ஆகலின் அவை அனைத்துக்கும் பொதுக் குறி யாவது இலிங்கத் திருமேனியே. அதனால் அதனைப் பராசத்தியோடே நிற்கும் பரசிவனாகிய சொரூப சிவனது குறியாகவும் உணர்ந்து வழிபடல் வேண்டும்.

குறிப்புரை :

``மலர்ந்த`` என்றதனை இசை யெச்சத்தால் மாயோனது உந்திக் கமலம் மலர்ந்த` என விரித்துக் கொள்க. `மலர்ந்த` என்னும் பெயரெச்சம் `மலர்ந்ததனால் வெளிப்பட்ட` எனப் பொருள் தந்தது.
அயன், மால் முதலிய ஒன்பது நிலைகளும் ``நவந்தரு பேதம்`` எனப்படும். அதனை
``சிவம்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்றான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்
பவ்தரும்; அருவம்நால்; இங்(கு) உருவம்நால்; உபயம்ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்`` l
என்னும் சிவஞானசித்திச் செய்யுளால் உணரலாம். இவற்றை ``இங்ஙனம் ஒன்றின் ஒன்றாய்ப் பவம்தரும்`` - என்றமையால், `இம்முறை தோற்றமுறை` என்பது விளங்கிற்று. எனவே, இம்மந்திரத்தில் நாயனார் அயன் முதலாகக் கூறியது ஒடுக்க முறையாதல் வெளிப்படை.
``பரநாதம்`` - என்பதில் உள்ள ``பரம்`` என்பதை விந்துவிற்கும் கூட்டுக. பரநாத பரவிந்துக்களையே `சிவம், சத்தி` எனவும், சிவம் சத்திகளையே `நாதம், விந்து` எனவும் வழங்கும் வழக்கம் ஆகமங்களில் உண்மையால் மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அவ்வாறு கூறப்பட்டது.
நவந்தரு பேதங்களாய் நிற்கின்ற சிவன் தனது ஞானத்தால் தன்னை அவ்வந் நிலைகளில் உணர்ந்து வழிபடுவோரையும் அந் நிலையினராகச் செய்வன். அங்ஙனம் செய்யப்பட்ட அவர் அணுபக்க அயன், மால் முதலியோராவர். சிவன் அவ்வாறு நிற்கின்ற நிலைகள் சம்பு பக்கமாகும். `இம்மந்திரத்திற் கூறப்பட்டவை சம்பு பக்கம்` என்பது உணர்க.
மேற்கூறிய நவந்தரு பேதங்களில் மகேசுரனது பேதங்களாக இருபத்தைந்து வடிவங்களும், மற்றும் பல வடிவங்களும் உள. அவை யெல்லாம் `மாகேசுவர மூர்த்தங்கள்` எனப்பட்டு `மகேசுரன்` என்னும் ஒன்றிலே அடங்குவனவாம். ஆகவே, `மாகேசுர வடிவங்கள் ஒவ் வொன்றும் அவ்வவ் வடிவத்திற்கு மட்டுமே உரிய சிறப்புக் குறிகளாய் அவ்வளவில் மட்டுமே பயன் தருவனவாய் நிற்க, இலிங்க மூர்த்தம் ஒன்றே நவந்தரு பேதங்கட்கும் பொதுக் குறியாய் நின்று எல்லாப் பயன்களையும் தருவது` என்பது இம்மந்திரத்தால் உணர்த்தப் பட்டதாம். எப்பயன் கருதிச் சிவனை வழிபட்டோரும் அவனை இவ்விலிங்கத் திருமேனியிற்றானே வழிபட்டு அவ்வப் பயன்களைப் பெற்றமையைப் புராணங்கள் பலவாக விரித்து கூறும்.
இங்குக் கூறிய அயன், மால் முதலிய பலரும் சம்பு பக்கம் ஆதலால் சிவலிங்கத்தில் `இது பிரம பாகம், இது விட்டுணு பாகம்` என்றாற் போலச் சில இடங்களில் கூறப்படுவதும் சம்பு பக்கத்தை நோக்கியே என்பது உளங்கொளத் தக்கது.
இதனால் சிவலிங்கம் அனைத்து மூர்த்திகளாயும் நிற்கும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று)
ஆவி யெழுமள வன்றே உடல்உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகதி தானே.

பொழிப்புரை :

உயிரை உடம்பில் நிறுத்திச் செயற்பட்ச் செய்ய எழுந்த விருப்பத்தால் கீழ்நோக்கிக் கிடந்தும் மேல் நோக்கி எழுந்தும் விளங்குகின்ற குண்டலினி சத்தியோடு உயிர் பொருந்தி செயற்படும் வரையிலுமே உடல் நிலைபெற்றிருக்கும். அச்செயற்பாடு நின்றவுடன் உடல் நீங்கிவிடும். ஆகவே, உடல் உள்ளவரையும் உள்ளே விரும்பி ஈர்க்கப்படுவதும், வெளியே விடப்படுவதால் நீங்கிச் செல்வதும் ஆகிய மூச்சுக் காற்றினை அவ்வாற்றின் அடக்கி நடுநாடி வழியே செலுத்துமாற்றால் இதுகாறும் கூறிவந்த அண்ட லிங்கம் முதலிய அனைத்து இலிங்கங்களிலும் சிவனைப் பாவனை செய்து வழிபட்டால் மேலான கதி கிடைப்பதாகும்.

குறிப்புரை :

குண்டலினி சத்தி ஒடுங்கிக் கீழ்நோக்கிக் கிடத்தலால் உயிருக்குக் கீழான உணர்வுகளும், அஃது எழுச்சியுற்று மேல்நோக்கி இயங்குதலால் உயிருக்கு மேலான உணர்வுகளும் உடல் வழியாக நிகழும். அவற்றுள் சிறந்தது மேலான உணர்வேயாதலால் அஃதொன்றையே நாயனார் குறித்தருளினஆர். குண்டலினி சத்தி பொதுவாக எல்லோரிடத்திலும் உடம்பினுள் கீழ்நோக்கிக் கிடந்து துயில்வதாகச் சொல்லப்படுதல், அதனால் உண்டாக்கப்படும் உலகியல் உணர்வு உணர்வாகாமை பற்றியேயாம். துயிலுதல், இறத்தல் அன்று ஆதலின் அந்நிலையிலும் அஃது உயிருக்கு ஓர் உணர்வைத் தந்துகொணஅடுதான் இருக்கும். அங்ஙனம் தருகின்ற அதனையும் அந்தச் சத்தி கைவிடும்பொழுது உயிர் உடம்பைச் செயற் படுத்த மாட்டாது. அதனால் உடல் விழுந்துவிடும். அதுவே, `இறப்பு` எனப்படுகின்றது. `அத்தகைய இறப்பு நேர்வதற்குள் உயிர் சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்றற்கு, ``பாவித்து அடக்கிற் பரகதிதானே`` என்றார்.
``அன்றே`` என்பது, `அந்நாள் வரையிலுமே` எனப்பொருள் தந்தது. ``உடல் உற`` என அனுவாதமாகக் கூறிய அதனால், `உடல் உறும்` என்பதை முதலில் உரைத்துக்கொள்க.
``பாவித்து அடக்கின்`` என்பதை, `அடக்கிப் பாவிக்கின்` என முன்பின்னாக மாற்றி உரைக்க. பாவித்தற்குச் செயப்படுபொருள் அதிகார முறைமையால் வந்தியைந்தது.
`இலிங்க வழிபாட்டினையும் பிராணாயாமம் செய்து செய்தல் சிறப்புடையது` என்றற்கு, ``மேவப்படுவதும், விட்டு நிகழ்வதும் அடக்கிப் பாவிக்கின்`` என்றார். ``விட்டு`` என்பது, `விடுதலால்` எனப் பொருள் தந்தது.
இதனால், `சிவனை இதுகாறும் கூறிவந்த அனைத்து இலிங்கங்களிலும் வைத்து யோக முயற்சியுடன் வழிபடுதலே வீடடைதற்கு வழியாகும்` என முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்
கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.

பொழிப்புரை :

எம் அருட்குரவராகிய நந்திபெருமான் எம் உடல், பொருள், ஆவி என்பவற்றை யாம் நீர் வார்த்து ஒப்புக் கொடுக்கச் செய்து அவை முழுவதையும் தம்முடையனவாக ஏற்றுக்கொண்டு, அதனால் விரிந்து கிடந்த எமது வினைப்பரப்பு முழுவதையும் ஒரு நொடியில் பற்றற்றொழியப்பண்ணி, அதன்பின் தமது திருக்கையை எம் தலைமேல் வைத்துத் தீண்டிப் பின்னும் தமது திருவடிகளை எம் தலைமேற் சூட்டி, இவ்வாற்றால் யாராலும் உரைப்படாதவற்றை யெல்லாம் உணரும் பேரறிவை எமக்குத் தந்து, வலிமை வாய்ந்த பிறவித் தொடக்கு அற்றொழியும்படி அருள்புரிந்தார்.

குறிப்புரை :

இதனால், `மக்கட்கு ஞானம் கிடைக்குமாறு இவ்வாறு` என்பது உணர்த்தப்பட்டது. நூல் சகலருக்கேயாதலால், இங்குக் கூறிய முறையும் சகலர்க்கேயாதல் தெளிவு.
ஞானம் இறைவனாலல்லது தரப்படாது. `அதனை அவன் சகலர்க்கு ஆசான் மூர்த்தியாய் நின்றே அருளுவான்` என்க. பிரளயா கலர்க்கு ஒருகால் தனது இயற்கை வடிவில் முன்தோன்றியும், விஞ்ஞான கலர்க்கு உயிர்க்குயிராய் உள்நின்றேயும் உணர்த்துவான்.
ஞான நெறியில் நிற்பவர் தமது உடல், பொருள், ஆவி மூன்றனையும் சிவனுடையனவாகவே உணர்ந்து அவற்றைக் குருவினிடத்தில் நீர் வார்த்து ஒப்புவிக்குமிடத்து, `பொருள்` எனப்படுவன பொன், மணிமுதல் பல்வேறு வகையான செல்வங்கள் மட்டும் அல்ல; `யான் இதனைச் செய்தேன்; என் செயல்கள் இவை` எனப் பற்றி நிற்கும் வினைகளும் `பொருள்` எனப்பட்டு, அவைகளும் நீர்வார்த்து ஒப்புவிக்கப்படும். முதல் நாள் ஒப்புவித்த அந்த உணர்வு எந்நாளும் நீங்காது நிலைத்திருத்தற்குச் சிவனை நாடோறும் வழிபடும் போதெல்லாம் வழிபாட்டின் முடிவில் அந்த வழிபாட்டின் பயனையும் ``சிவோதாதா, சிவோபோக்தா`` என்னும் மந்திரத்தை ஓதி நீர்வார்த்து அவனிடமே ஒப்புவிப்பர். அதுவும் இங்குச் `சம்பிரதாயம்` என்றதனால் பெறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியலார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே
உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

பொழிப்புரை :

சிவனை அடைய வேண்டினார்க்கு உடல் பொருள், ஆவிகளை அவனுடையனவாக ஒப்புவித்த பின்பும் மூச்சுக் காற்றினை இயக்கம் இடைவிடாது இயங்கியே நிற்கும் ஆதலின் அதுவும் அவர்கட்குச் சுமையாகும். அதனால், அதனையும் `ஆசிவன், ஆதிசத்தி` என்பவர்க்கு உரியன ஆகும்படி சிவகுரு நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்வார்.

குறிப்புரை :

``பரமும்`` என்னும் உம்மையை, ``பிராணன்`` என்பதன்பின் கூட்டி, ``பரம்`` என்பதை அதற்கும் கூட்டுக. வியல் - பரப்பு. அஃது இங்குப் பெரிதாதலைக் குறித்தது. பரம் - பாரம்; சுமை.
பிராரத்த வினை உள்ள வரையில் உடம்பு நீங்காது ஆகையால் உடம்பு நிற்றற்பொருட்டுப் பிராணவாயு இயங்கியே நிற்கும். அஃது இயங்கி உடம்பும் நிற்கவே, உடலோம்புதற் பொருட்டுச் சிறிதளவாயினும் உணவு தேடுதல், வெயில் பனி மழை முதலியவற்றால் வாட்டமும், மகிழ்ச்சியும் கொள்ளுதல் முதலியன நிகழும் ஆதலின் அவை ஆகாமியமாகி விடுதல் பற்றி, ``பின் பிராணனும் பரம்`` என்றார். `ஆயினும் மேற்கூறியன நிகழுங்கால் அவற்றைத் தம் செயலாகக் கொள்ளாது சிவன், சத்தி இவர்களது செயலாக உணரின் அவை ஆகாமியமாய் முடியா ஆதலின் அவற்றை அங்ஙனம் உணர்தற்பொருட்டு, குருமூர்த்திகள் நாள்தோறும் வழி பாட்டில் அவற்றையும் நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்ளுதல் மரபு` என்றற்கு, ``உய்ய, உயல் ஆர் குருபரன் சிவன் சிற்சத்தி ஆதிக்கே கொண்டான்`` என்றார். ஆர் குருபரன் = ஆர்க்கின்ற - நிறைக்கின்ற குருபரன். `சிவகுரு` என்றற்கு, `குரு` என்று ஒழியாது, ``குருபரன்`` என்றார். சிவனும், சத்தியும் தொழில் செய்யாது வாளா இருக்குங்கால் `அனாதி` என்று சொல்லப்பட, ஐந்தொழில் செய்யுங் கால் `ஆதி` என்று சொல்லப்படுதல் பற்றி ``ஆதி`` என்பதன் பின், `ஆக` எந்பது வருவிக்க.
முன்னை மந்திரத்தில் சஞ்சிதத்தை ஒப்புவித்தல் கூறி, இம்மந்திரத்தில் ஆகாமியத்தை ஒப்புவித்தல் கூறினார்.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே`` *
எனவும்,
``இடை ஏறும்வினை - தோன்றில் அருளே சுடும்`` l
எனவும் கூறுதல் காண்க.
ஞானம் பெறுமாற்றினைத் தாம் பெற்றவாற்றில் வைத்து விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 3

பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன்
`நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதம்இது வாய்திற வாதே.

பொழிப்புரை :

தான் வடக்கு நோக்கி அமர்ந்திருந்து, என்னைக் கிழக்கு நோக்கிச் சிவனை தியானித்து இருக்கும்படி பணித்த என் ஞானாசிரியர், பின்பு, `சிவன் உன் சிந்தனைக்கு அகப்படவில்லை யாகையால் நீ என்னையே சிவனாகத் தியானம்செய்` என்று அருளிச்செய்தார். அவர் அங்ஙனம் அருளிச்செய்த அந்தத் தியானம் எனது உச்சிக்குக் கீழும், உள்நாக்கிற்கும் மேலும் ஆகிய புருவ நடுவில் நிகழ்வது. அவ்விடத்து நிகழ்வதாகிய அந்தத் தியானமானது சொல் நிகழ்ச்சியோடு கூடாது, மனத்தொழில் மாத்திரையாய் நிற்பதாகும்.

குறிப்புரை :

``பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியான்`` என்ற ஞானத்தை உணர்த்தும் முறை மரபினை எடுத்துக் கூறியவாறு, `வைச்ச இது பதம்` என மொழி மாற்றி யுரைக்க. இது பதம் - இந்த இடம். இஃது ஆகுபெயராய், இதன்கண் நிகழும் தியானத்தைக் குறித்தது. ``திறவாது`` என்பது, `திறக்கப் படாது` எனச் செயப்பாட்டு வினையாய் நின்றது. சொல் நிகழ்த்துதலை, `வாய் திறத்தல்` என்றது பான்மை வழக்கு.
மனத்தின் தொழில் சொல் நிகழ்ச்சியோடு கூடியும் நிகழும் ஆகலின் அவ்வாறு நிகழ்வது `தியானம்` எனப்படாது, - சொல் நிகழ்ச்சியின்றி நிகழ்வதே தியானமாம் - என்றற்கு ``வாய்திறாது`` என்றார். அசிந்திதனாகிய சிவனைச் சிந்திதனாகக் காண்பதற்கு உரிய குரு, லிங்கம், சங்கமம் என்னும் மூன்றனுள் குரு சிறந்து நிற்றல் இங்குப் பெறப்பட்டது.
இதனால், ஞானத்தைப் பெறு முறையும், பின் அதனை நிலை பெறுத்திக் கொள்ளும் முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

பொழிப்புரை :

`இவ்விடம், அவ்விடம்` என்பதில்லாமல் எங்கும் சென்று, எனது பிடிவாதக் கொள்கையையே வலிந்து கூறி வாயில் வந்தவற்றைப் பிதற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருந்த என்னைச் சிவகுரு எதிர்ப்பட்டு, எனது அகக்குற்றங்கள் எல்லாவற்றையும் ஒட்டடையை அடித்து நீக்குவது போல நீக்கி, அவைகளைத் தன் பக்கமாக எடுத்துக்கொண்டு, தன்னையும், என்னையும் ஒரு நிகராக வைத்துக் கொடுத்தும், கொண்டும் மாற்றிக்கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை முற்ற நீக்கினமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளாயினோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.

குறிப்புரை :

பெள்+டு=பெட்டு. `விரும்பப் பட்டது என்பது பொருள். அது விரும்பப்பட்ட கொள்கையைக் குறித்தது வலியுறுத்திப் பேசுதலை `அடித்தல்` என்பர். `அடித்து` என்றது `அடித்தது போன்று` எனப் பொருள்தந்தது. `ஒட்டு` என்னும் முதனிலைத் தொழிற்பெயர், அதனையுடைய பொருளைக் குறித்தது. வாங்குதல் - தனது ஆற்றலால் தன்னைக் கடந்து செல்லாது தன்பக்கமே நிறுத்துதல். மல மாயா கன்மங்கள் நீக்கப்படுமேயன்றி, அழிக்கப்படா ஆதலால், `வாங்கி` என்றார். தட்டு - துலைத்தட்டு. ஒதத்ல், நிறையால் ஒத்து நேர் நிற்றல். `மாறினன்` என்றொழியாது ``ஒக்க மாறினன்`` என்றது, ஒவ்வாததனை ஒக்கப்பண் மாறினன்` என்பது தோற்றுதற் பொருட்டு. மாறுதல் - விற்றல். ``தன்னை மாறி யிறுக்க உள்ள கடனஅகள்``l என்றாற் போல்வன காண்க. விற்றமை கூறவே, வாங்கினமை தானே பெறப்பட்டது. தன்னை விற்றமை, தன் தன்மையை சீவனிடத்துப் பதிவித்தமை. என்னை வாங்கினமை, சீவபோதத்தைத் தன்னிடத்து ஒடுக்கினமை - ``வாணிபம் வாய்த்து`` என்றதனால், `அது பொருந்தா வாணிபம்` என்பதும், `வட்டமதொத்தது`` என்றதனால், `அஃது அங்ஙனமாயினும் அதன்கண் உள்ள பொருந்தாமை நீங்கினமையால் அது தக்கதாயிற்று` என்பதும் போந்தன.
``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்`` 3
என்பதிலும், `சிவன் மேற்கொண்ட வாணிபம் பொருந்தா வாணிபம்` என்பது குறிக்கப்பட்டது. `வட்டம், வாசி` என்பன, தரக்குறைவை உணர்த்தும் ஒருபொருட் சொற்கள். `வட்டம தொத்தது`` என்றது `தரம் குறைவு நீங்கி நேரியதாயிற்று` என்றபடி. ``ஒத்தது`` என்பதன்பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், இறைவன் தானே குருவாய் நின்று உயிரைச் சீவத்தன்மை நீக்கித் தன்மையை எய்துவித்துத் தானாக்கிக் கொள்ளுதலாகிய ஞானச் செய்தி இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.

பொழிப்புரை :

உலகத்தார் உலக உணர்வைத் தருகின்ற நாதத்தின் புறப்போக்கினை நீக்கமாட்டாமையால் தன்னால் தாங்கப்படுகின்ற அனைத்துயிர்கட்கும் தலைவனாய் அவற்றின் உள்ளும் புறம்புமாய் உள்ள இறைவனது இருப்பையும், அவனது பெருந்தன்மையையும் சிறிதும் உணராது அல்லற்படுவர். யான் அவன் வந்து உண்மையை உணர்ந்தமையால் அந்த நாதத்தின் மாறுபாடாகிய புறநோக்கைப் போக்கி அவனது அருளையே கண்ணாகக் கொண்டு காணும் அக நோக்கினை எய்தினமையால் அவனது இருப்பையும், இயல்பையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.

குறிப்புரை :

`இஃதே ஞானமாவது` என்பதாம். ஞானத்தினது இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு அஞ்ஞானத்தினது இயல்பை யும் உடன் எடுத்து ஓதினார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள்.
விந்து - சுத்த மாயை. அதுவே நாதமாய் நின்று புறப்பொருள் உணர்வைத் தருதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்துப் பிணக்கு`` என்றார். அகநோக்கால் சிவனைச் சார்தலும், புறநோக்கால் அவனின் நீங்கி உலகைச் சார்தலும் உயிர்க்கு உளவாதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்து`` என்றார். `விந்துவால் விளையும் ஞானம் பாசஞானம் என்பதையும், `அந்த ஞானம் பதிஞானத்திற்குத் தடையாய் நிற்கும்` என்பதையும்,
``வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்தறங்கள் மேலாம்
நாதமுடி வானவெலாம் பாசஞானம்`` *
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியினான்றன் சேவடி சேர லாமே`` *
எனவும் ஓதியவாற்றான் அறிக. `கருக்கொள்ளுதல்` என்பது, உயிர்களைத் தனது வியாபகத்துள் அடக்கி நிற்றல், உயிர்களுக்கு உயிராய் அவற்றின் உள்நிற்றல் ஆகிய இரண்டினையும் குறித்து. `தலைவன்` என்பதன்பின் `தலைவனாய்` என ஆக்கச் சொல் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வாளா, `தலைவனாய் இருக்கின்ற தன்மையை` என்றார். `கண்டேன்`, என்னாது, ``கண்டு கொண்டேன்`` என்றது நன்குணர்ந்தமை பற்றி.
இதனால், `ஞானம் ஒன்றே அஞ்ஞானத்தை நீக்குவது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு
நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.

பொழிப்புரை :

சிவன் தன்னை அடையும் செவ்வி வாய்ந்த உயிரையும், அதனது உடல் பொருள்களையும் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளுதலையே குறிக்கோளாகக் கொண்டு, அவ்வுயிர் வாழும் இடத்தை நாடி அடைந்து, தனது திருவடிகளை அதனது திரு வடிகளை அதனது முடிமேற் சூட்டி, அதன்பின் வழங்கிய ஞானத்தின் துணையால் அவ்வுயிர் இழிவுடைய உடலில் முன்பு கொண்டிருந்த பற்றை அறவே விடுத்து, அச்சிவன் ஒருவனையே குறிக்களோகக் கொண்டு அவனை அடைந்து, தான் அவனேயாகிவிடும்.

குறிப்புரை :

``ஆவி`` என்பதை, ``கூடும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அருள் ஞானம்`` இறந்தகால வினைத்தொகை. `தனது ஞானம்` என்பது உணர்த்தற்கு. `ஞானம்` என்று ஒழியாது, ``ஞான சத்தி`` என்றார். பாடு - மேன்மை. அதனை, `பாடு பெறுதியோ நெஞ்ே\\\\u2970?`` l என்பத னானும் உணர்க. மேன்மையன்மை கீழ்மையை உணர்த்திற்று. `கூடிய` என்பதும், `குளிக்கொண்டு` என்பது பாடம் அல்ல.
இதனால், `ஞானம் பெற்றவரே வீடுபெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை
கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.

பொழிப்புரை :

சிவன், யான் அவனுக்கு அடிமையாதலை உண்மையாக உணரும்படி அவன் நேர் வந்து என்னை ஆட் கொண்டான். அதனால் என் ஆவி, உடல், பொருள் அனைத்தையும் தன்னுடையனவாக ஏன்று கொண்டான். அவையேயன்றி, யான் செய்யும் செயலால் விளையும் பயனையும் தன்னுடையனவாகக் கொண்டான். இங்ஙனம் அவைகளை அவன் கொண்டது புதிதாகாது முன்பே அவன் என்பால் கொடுத்து வைத்தவறஅறைத் திரும்பப் பெற்றுக்கொண்டதே யாகலின், `என்னுடையவைகளை அவன் கொண்டு போய்விட்டான்` என்று யான் எங்ஙனம் முறையிட முடியும்? முடியாது ஆகையால் யான் பேசாதிருந்துவிட்டேன்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளிலும் இரண்டாம் வேற்றுமை, தொடர்களின் இறுதிகளில் இறுதிகளில் தொக்கும். விரிந்தும் நின்றது. `அடியேன் குறிக்கொள்ள` என மாற்றி வைத்து உரைக்க.
இதனால், `ஞானமாவது, உள்ளதாய், முன்பு உணரப்படாது இருந்ததனை உணர்தலேயன்றிப் புதுவதாய் விளைகின்ற ஒன்றை உணர்தல் அன்றஉ` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில்
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

பொழிப்புரை :

வினைக்கீடாகக் குறிக்கப்பட்ட உடம்பும், அவ் வுடம்பைத் தன்னுடையதாகக் கொள்ளும் உயிரும் ஒன்று சேர்ந்தவுடன், பிராணவாயுவும் நெறிப்பட்டு இயங்கத் தொடங்கும். (அங்ஙனம் இயங்குதல் உயிர் அவ்வுடம்பில் நிலைத்திருத்தற்குத் துணையாகவேயாம்) ஆகவே, அந்தப் பிராணவாயுவின் இயக்கத்தால் அந்த உடம்பில் நிலைபெற்றிருக்கின்ற அந்த உயிரிட மிருந்து அந்த உடம்பு ஒருகாலத்தில் பறிக்கவேபடும். அதனால், உயிர் உடம்பின் வேறாயினும், அஃது அதனைப்பற்றி நிற்றற்குரிய காரணத்தை உணர்ந்து அவ்வுணர்வால், தம்மை உடம்பின் வேறாக உணராது, உடம்பாகவே மயங்கி உலக வாழ்வில் இச்சை கொண்டு அலைபவர் பேயோடு ஒப்பர்.

குறிப்புரை :

`இவாவுயிருக்கு இஞ்ஞான்று இவ்வுடம்பு உரியது` எனக்குறிப்பதும், இவ்வுடம்பில் பிராணவாயுவை இயங்கச் செய்த அதனால் அவ்வுயிரை அவ்வுடம்பில் சிலகாலம் நிலைப்பிப்பதும், பின்பு அவ்வுடம்பை அவ்வுயிரிடமிருந்து பறித்துவிடுவதும் எல்லாம் இறைவனது ஆணையேயாதலும், அந்த ஆணை அவ்வாறெல்லாம் செய்தற்குக் காரணம் உயிர்களின் வினையே ஆதலும் ஆகிய வற்றையே இங்கு ``நேர்மை`` என்றார். `நீர்மை` எனப்பாடம் கொள்ளுதலும் பொருந்தும்.
`பிராணன், நேர்மை` - என்பவற்றில், `ஆல்` உருபு விரித்துக் கொள்க. ``நேர்மையால்`` என்றது, `நேர்மையை உணருமாற்றால்` என்றபடி, பேய்க்கு வயிற்றுக்குத் தேடுதல் ஒன்றன்றிப் பிறிது குறிகோள் இல்லாமை பற்றி அத்தன்மையரைப் போயோடு ஒப்பிட்டார்.
இதனால், `ஞானம் பெறாதார் தம்மையும், தமக்கு உறுதியானவற்றையும் உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.

பொழிப்புரை :

குருவருளால் ஞானத்தை உணர்வாட்கு உலகத்தின் இயல்பும் தோன்றும். (உம்மையால், உலகத்தைச் செயற்படுத்தி நிற்கின்ற முதல்வனது இயல்பும் தோன்றும்) ஆகவே, உலகத்தைப் பற்றாது விடுத்து முதல்வனையே பற்றி நிற்பர் ஆகையால் அவர்கட்கு உலகத்தால் ழிளக்கப்படும் துன்பம் இல்லையாகும். (முதல்வனால் தரப்படும் இன்பமே விளயும்.) குருவருளால் ஞானம் பெற்றவர்கள் அதனை முதற்கண் கேள்வியளவாகவே உணர்ந்தாராயினும், பின்பு சிந்தித்துத் தெளிந்து கொள்வார்கள்.

குறிப்புரை :

எனவே, `கேட்டல் அடிப்படை` என்பதாம். உயிர்கள் ஞானத்தைப் பெறும் முறைமையை இவ்வதிகாரத்து முன் மந்திரத்திற்கு முன்மந்திரங்காறும் விரித்தருளிச் செய்தமையால் மீட்டும் அதனை எடுத்துக் கூறாராயினார்.
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், ஞானம் படிநிலையான் முற்றுமாறும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

காயப் பரத்தின் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத்
தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

பொழிப்புரை :

உடம்பாகிய சுமையைச் சுமந்து கொண்டே உலகெங்கும் திரிந்து, அவ்வுடம்பால் துரிய நிலையில் உணர்வு ஒடுங்கியும், சகல நிலையில் உணர்வு மிகவிரிந்தும் கருவிகள் முப்பத்தாறின் சேர்க்கையால் இவ்வாறெல்லாம் அலமந்து கிடந்த அடியேனுக்கு அக்கருவிகளில் ஒன்றோடும் படாது தூய்தாய் உள்ள திருவருளை வழங்கி அமைதியைக் கொடுத்தருளிய நந்தி பெருமானது கருணைக்கு நான் நன்று சொல்வது எவ்வாறு!

குறிப்புரை :

பரம் - சுமை. `இன்` ஒடுவின் பொருளில் வந்த `ஆள்` உருபின் மயக்கம். இனி இதனைச் சாரியையாக்கி `ஒடு` உருபு விரிக்கினும் ஆம். `துரியத்துக் குவிந்து` எனக் கூட்டுக. `சாக்கிரம்` என்னின் கேவல சாக்கிரமும் ஆம் ஆதலின் அதனை விலக்கிச் சகல சாக்கிரத்தைக் குறித்தற்கு, ``சகலத்தில்`` என்றார் துரியத்தை அங்ஙனம் கூறாது வாளா ``துரியம்`` என்றமையால் அது கேவல துரியமே யாயிற்று. மக்களுடம்பையே பெற்றபோதிலும் உணர்வு இவ்வா றெல்லாம் கணந்தோறும் மாறி மாறஇ நிகழ்தலால் உயிர்க்கு உளதாகும் அலமரலைக் குறித்தவாறு. இவ்வலமரலையே நாயனார் முதல் தந்திரத்தில் ``உயிர் நிலையாமை`` - என அருளிச் செய்தார்.
இதனால், அஞ்ஞானம் காரணமாக அலமரும் உயிர்கட்குக் குருவாகி வந்து ஞானத்தை அருளி அமைதியைத் தரும் சிவபெரு மானது பேரருட்கு அவ்வுயிர்கள் செய்யும் கைம்மாறு யாதும் இன்மை கூறப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 11

நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

குருவருளால் ஞானத்தைப் பெற்ற சகல வருக்கத் தினர் பின்பு சிவன் ஆகாயம் போல வியாபகனாய் விளங்குதலை உணர்ந்து அதனால் சுட்டறிவை விட்டு எங்கும் வியாபகமாய் அவனை உணருமாற்றால் தேன் சுவையை நுகர்தல் போல அவனது தூய இன்பத்தை நுகருங்கால் அந்தச் சிவன் இவர்கட்குக் காட்சிப் படுதல், `நான் இன்பத்தைத் தருகின்றாய்` என இவ்வாறு வேறு நின்று நுகருமாறு அவன் இவரின் வேறாய் நிற்றல் அன்று. மற்று, இவர் உடம்பு போலவும், அவன் அவ்வுடம்பினுள் உள்ள உயிர் போலவும் உடனாய் நிற்கவேயாம்.

குறிப்புரை :

``மனிதர்கள்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் சுட்டி, அது முதலாகத் தொடங்கி ``நண்ணுதல்`` என்பதன் முதற்கண் வைத்து உரைக்க. ``வானவர்`` என்றது சிவனை உயர்வுப் பன்மையாற் குறித்தவாறு. ``நின்று`` இரண்டில் பின்னது `நிற்றலால்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. முன்னது அப்பொருளில் வந்த செயவென் எச்சத் திரிபு. `நண்ணுதல், நின்று` இவற்றிற்கும் வினைமுதல் பின்னர் வந்த ``வானவர்`` என்பதே. `திளைக்கின்ற வாற்றில்` என ஏழாவது விரிக்க.
``ஊன்`` என்றது. `உடம்பு` எனப் பொதுப்படவே அருளிச் செய்தாராயினும் அஃது அறிவுக்கருவிகளாகிய, உடம்பின் புறத்தில் உள்ள ஞானேந்திரியங்களையும், அகத்தில் உள்ள அந்தக் கரணங்களையுமே சுட்டி நின்றது. இவ் அறிவுக் கருவிகள் அறியுந் தன்மை யுடையனவாயினும் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தாலன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவுடையன வாயினும் சிவன் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தா லன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவடையனவாயினும் சிவன் அவற்றோடு உடனாய் நின்று அறிந்தாலன்றி அவை அறியமாட்டா. இந்நிலை பெத்தத்தில் மட்டுமின்றி முத்தியிலும் ஆதலை, ``ஊன் என, (வானவர்) ஊன் உயிர் என்ன உடன் நின்று`` என்றார். குருவருளை நினைப்பித்தற்கு மனித உயிரையே குறித்தார்.
இதனால், ஞானத்தின் முடிநிலைப் பயனாகிய பரமுத்தியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை :

உயிர்க்கு உறுதியறியாமை பற்றி மெய்ந்நெறி யாளனால் `அவன்` என அயலவனாகக் குறிக்கப்படுபவனும், தன்போன்றாரால் அடையலாகாத மேல் நிலையை அடைந்தமை பற்றி உலகியலாளனால் `அவன்` என உயர்த்துக் கூறப்படும் மெய்ந்நெறி யாளனும் ஆகிய இருவருமே சிவனை அறிந்திலர், அஃது எவ்வா றெனில், சிவனை ஆன்மா உண்மையாகவே அறிவுமாயின் அதன் அறிவில், அறிபவனும், (உம்மையால் அறியும் அறிவும்) இல்லை யாகும். (மேற்கூறிய இருவர் அறிவிலும் அறிபவராகிய தம்மை அறியும் `யான்` என்னும், தமது அறிவை அறிகின்ற `எனது` என்னும் அறிவும் இருத்தலால் அவர் சிவனை அறிந்தாராதல் எங்ஙனம்?) அவ் விருவரும் `யான், எனது` என்பன முற்றும் அறும்படி சிவனை அறிந்தா ராயின் அவருள் ஒவ்வொருவனும் ஒவ்வொருகாரணம் பற்றி மற்ற வனை, `அவன்` என வேற்று நிலையில் வைத்து எண்ணும் நிலைநீங்கி, `இவன்` என ஒருநிலையில் வைத்து எண்ணும் நிலை உண்டாய்விடும்.

குறிப்புரை :

``அவனை`` என இரண்டன் உருபேற்று நின்றவை மூன்றும் பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்து நின்றன. ஏனையவை, `அவன்` என்று சுட்டப்படுபவன் எனப்பொருள் தந்தன. ``அவனும், அவனும்`` என இருவரைக் கூறி, `அவர் இருவரும் சிவனை அறியார்` என்றமையால் `அவர் இருவரும் வேறு வேறு நிலையினர்` என்பதும், `ஆயினும் அவர் அறியாராயினமைக்குக் காரணம் ஒன்றே என்பதும் போந்தன ஆதலின், `அவ்இருநிலை` இவை என்பதும், `ஒன்றாகிய காரணம் இது` என்பதும் ஆற்றலால் கொள்ளப்பட்டன.
`உலகியலான் சிவனை அறியான் - என்பது வெளிப்படை; ஆயினும் மெய்ந்நெறியாளன் சிவனை அறியானாதல் எவ்வாறு என வியக்கத் தோன்றும், அங்ஙனம் வியப்புத் தோன்றக் கூறியது சொல் நயமாகும். முத்தி நிலையிலும் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகள் உள; அவற்றுள் துரியம், துரியாதீதம் என்பவையே சிறந்தவை. அவற்றுள் துரியாதீதமே முடிநிலை. அதன்கண் அறிவானும், அவனது அறிவும் உணரப்படாமல் அறியப்படும். பொருள் ஒன்றே உணரப் படும். அவ்வாறன்றி, மூன்று பொருள்களும் உணரப்படுதல் துரிய நிலையேயாதல் பற்றி, அந்நிலையில் நின்றானையும் சிவனை யறியாதவனாகக் கூறினார். துரிய நிலை அருள் விளக்க நிலையும், துரியாதீதநிலை ஆனந்த விளக்கமும் ஆதல் அறிக. இம்மந்திரத்திலும் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால் ஞானத்தின் பயனாகிய முத்தியின் முடிநிலை இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நான்இது தான்என நின்றவன் நாடொறும்
ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன்
வான்இரு மாமழை போற்பொழி வான்உளன்
நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.

பொழிப்புரை :

உயிர் என்றும் உடம்பு போல இருக்க அதன்கண் உயிர்போல நின்று அறிகின்ற ஒருவன் இருக்கின்றான். அவன், `இவ்வுயிர் நானே` எனத் திருவுளம் செய்து, அவ்வுயிரின் உள்ளத்தில் தனது கருணையை வானத்தில் உள்ள கரிய, பெரிய மேகம் மழையைப் பொழிவது போலப் பொழிவான். `இவ்வுயிர் யான்` எனத் திருவுளம் செய்கின்ற அவன் குருவுமாய் வந்து அருள்பவனாவான்.

குறிப்புரை :

``தான்`` இரண்டில் முன்னுத தேற்றப் பொருளிலும், பின்னது எழுவாய்ப் பொருளிலும் வந்தன. ``இதுதான்`` என்றது, `இந்த உயிர்தான்` என்றபடி. ``ஊன்`` என்பதன்பன் `ஆக` என்பது தொகுத்தலாயிற்று.
`இதுதான் ஊன் ஆக, உயிர்போல் உணர்வான் உளன்; அவன், - இது நான்தான் - என நின்று, உளன், வான் இருமாமழை போல் பொழிவான்` - எனக் கூட்டியுரைக்க.
உளன் - உளம்; போலி. `உளனில் பொழிவான்` என்க. ஈற்றடியில், ``நான் இதுவாம்`` என்றது, முதல் அடியில் கூறியதனை மீட்டும் அனுவதித்ததாம். ``நாதன்`` என்பது குருவை உணர்த்துவதொரு பெயர்.
``இது நானே`` - என்றது ``சிவோதயம் அஸ்தி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருளைக் கூறியவாறு, ஆசிரியன் மாணவனது உயிரை இவ்வாறு பாவிக்கும் பாவனையால் அவனைச் சிவமாகச் செய்வன் என்க. `குரு சிவனே` என்றற்கு, ``நான் இது வாம் பரன் நாதனும் ஆமே`` என்றார்.
இதனால் ஆசாரியனால் சீவன் சிவன் ஆதலாகிய ஞானச் செய்தி மரபு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய்
இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

பொழிப்புரை :

உண்மையை உண்மையாக உணர்ந்து உயிர்கள் செம்மை எய்தும் வண்ணம் செய்கின்ற சிவன், `தீர உயர்ந்த பெருந் தன்மையை உடைய தான் அங்கே` எனவும், `தீர இழிந்த சிறு தன்மையை உடையயான் இங்கே` எனவும் இவ்வாறு வேறு வேறாய் முன்பு இருந்ததும் இல்லை. (உம்மையால், இனி இருக்கப் போவதும் இல்லை) மற்று, உடலில் உயிர் வேறறக் கலந்திருப்பது போல அவன் என்றும் என்னுள் ஒன்றாய்க் கலந்தேயிருக்கின்றான்; ஆயினும் அவன் அறிவான்; யான் அறிந்திலேன்.

குறிப்புரை :

`இது பொழுது அவன் அருளால் யானும் அதனை அறிந்தேன்` என்பது குறிப்பெச்சம். `இவ்வாறு அறிந்த இதுவே ஞானம்` என்றபடி.
இதனால், படலத்தால் மறைக்கப்பட்டிருந்த கண்ணை யுடையவன் அப்படலம் நீங்கியவுடன் முன் தான் காணாதிருந்த பொருள்களைக் காண்பது போன்றதே ஞானத்தைப் பெறுதல்` என்பதும், அங்ஙனம் கண்பெற்றவன் தன்முன் உள்ள பொருள்களைக் கண்டு மகிழ்தல் போன்றதே முத்திநிலையை எய்துதல்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

இருபத மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

பொழிப்புரை :

`நாள்` என்பது, `இரவு, பகல்` என்னும் இரு நிலைகளை உடையது. `பிறப்பு` என்பது, `உயிர், உடல்` என்னும் இரண்டின் கூட்டம். அவைபோலச் சிவனது திருவருட்பேறாவது, துறவும், நோன்பும் ஆகிய இரண்டின் நிகழ்ச்சியாகும். இனி அந் நிகழ்ச்சிக்குப் பயனாவது உயிர்க்குயிராய் உள்ள அந்த இன்பத்தை அறிந்து நுகர்தலேயாம்.

குறிப்புரை :

``இருபதமாவது`` என்னும் பயனிலைக்கு `நள், என்னும் எழுவாய் தோன்றாது நின்றது. ``இரவும் பகலும்`` என்பதனைப் பயனிலையாக்கின் `இருபதமாவன` என்பது பாடமாதல் வேண்டும். ``ஆவது`` என்பது முன், பின் இரண்டிடத்தும் இயையாது.
``அது`` நான்கும் பகுதிப் பொருள் விகுதிகள். காட்சிப் பொருளாதல் பற்றிப் பிறப்பை ``உரு`` என்றார். முதல் இரண்டு அடிகளும் எடுத்துக் காட்டுவமையாய் நின்றன.
அருட்கு அடையாளமாவதனை, `அருள்` என்று உபசரித்தார். துறவறமே சிறப்புடை அறமாதல் பற்றி ``அந்தணர் என்போர் அறவோர்``l எனத் துறவறத்தோரே ``அறவோர்`` எனப்பட்டாற் போலத் துறவறத்தையே நாயனார் இங்கு `அறம்` என்றார். அஃதாவது, `உயிர்ச் சார்பு, பொருட் சார்பு` என்பவற்றுள் யாதொன்றின் மேலும் பற்றுச் செய்யாமை. தவமாவன சரியை கிரியா யோகம் இவை பலவும் நிகழ் தலை `நிகழ்ச்சி` என ஒன்றாய் அடக்கி, ``அருளதுவாவது`` என்றார். பயன் ``பொருள்`` எனப்பட்டது. `சத்திநிபாதம் வரப்பெற்றோரது நிலை இவ்வாறாம்` என்பது கூறமுகத்தானே அது பெற்றோரும், பெறாதோரும் தம் தம் நிலையை உணர்ந்து மகிழ்ச்சியும் வருத்தமும் கொண்டு. மேல் செய்யத்தக்கதின் முயலுமாறு கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 2

காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.

பொழிப்புரை :

(சிவனை உயிர்கள் அனாதியில் ஒராற்றானும் உணர்தல் இல்லை.) பின்பு உலகியல் உணர்வானே ஏனைப் பொருள்களைக் காண்டல், கருதல், தீண்டல், பற்றுதல் இவற்றைச் செய்தல் செய்து பெறுதல் போல அவனை அவ்வுயிர் பெற முயன்றால், அவனும் அவ்வகையினால் எல்லாம் அவற்றால் எய்துதற்கு அறி யனாய், அவற்றிற்கு மிகத் தொலைவில் உள்ளவனாகியே நிற்பான். பின்பு ஒரு காலத்தில் அவனே விருப்பத்தை உடையவனாகிப் புறத்தே விளங்கும் இல்லக விளக்குப்போலும் 3 தன்மையுடன் அகத்தில் தானே நல்லக விளக்காய் நீங்காது நிற்றலால், அவ்விடத்துள்ள அறியாமையாகிய இருள் அற்றொழியா நின்றது.

குறிப்புரை :

என இதனையும், இனி வருகின்ற மந்திரங்களையும் திருவருள் வாய்க்கப் பெற்றார் அதனை உணர்ந்து மகிழ்ந்தெடுத்துக் கூறுவனவாக வைத்துரைக்க.
``நந்தியும்`` என்னும் உம்மை இறந்தது தழுவி நிற்றலால், அதனால் தழுவப்பட்ட பொருள் வருவிக்கப்பட்டது. `விளக்கொளி` என்றது அதுபோலும் தன்மையை. ஆன் உருபு `கைப்பொருளொடு வந்தான்` என்பதில் உள்ளது போலும் ஒடு உருபின் பொருளில் வந்தது. `நெஞ்சத்துக்கண்` என ஏழாவது விரிக்க. ஈண்டுதல் - செறிதல். அது நீங்காது நிற்றலைக் குறித்தது. ``கிடந்து`` இரண்டில் பின்னது, `கிடத்தலால்` எனப்பொருள் தந்து நின்றது. ஆம். ஏ அசைகள்,
இதனால், சிவன் அனாதியில் உயிர்கள் பக்குவமின்றி நிற்றலால் அரியனாயினும் பக்குவம் எய்தி காலத்தில் எளியனாய் விளங்கும் அவனது அருள் நிலை போற்றியுரைக்கப்பட்டது. `அவ்வருட் பதிவானே முன்னை மந்திரத்துக் கூறிய அறமும், தவமும் தாமே நிகழும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு நிற்கும் நல்லக விளக்கை நோக்கும் நோக்கத்தால் முதற்கண் `யான்` என்றும், `எனது` என்றும் உயிர்மயங்குமாறு அதனோடு ஒற்றுமைப் பட்டு நின்ற உலகம், உண்மையில் அன்னவாகாது அதனின் வேறாய் அதன் அறிவினுள்ளே தோன்றும் அதன்பின் எல்லாவற்றிற்கும் தன்னையும், பிறரையுமே முதல்வராகக் கருதும் சீவபோதத்திற்குக் காரணமான மல இருள் நீங்க, `எல்லாம் அவனே` என்னும் சிவபோதம் நிலைத்து நிற்கும். அச்சிவபோதத்தின் வழிச் சிவனையே நாடுதல் ஒழிந்து மீட்டும் தனது அறிவாற்றலைப் பற்றாக நாடின், பெத்தான்மாக்களை அவர்களது அறிவிச்சை செயல்களைச் செயற்படுத்தி ஆள்கின்ற காரணக் கடவுளராம் நிலை எய்துவதாகும்.

குறிப்புரை :

`அந்நிலை எய்தும்படி சிந்தையை நாடச் செய்வது மலத்தின் வாசனை` என்பது கருத்து, எனவே, அவ்வாசனையும் நீங்கின் சிவானந்தானுபூதி உண்டாதல் பெறப்படும். `சிவானந்தானு பூதி நிலையே பரமுத்தி` எனவும், காரணக் கடவுளராய் நிற்றல் இலய போக அதிகார முத்திகள் எனவும் உணர்க.
குறிப்பு: நோக்கு, அஃது அதிகார இயைபால் அகவிளக்கை நோக்கும் நோக்கின்மேல் நின்றது, ``குறிப்பினின்`` எனச் சிறுபான்மை `இன்` என் உருபு இன் சாரியை பெற்றது. வெறுப்பு இருளாவது உண்மைத் தலைவனை விரும்பாது விடுத்துத் தம் கள்ளத் தலைமையையே விரும்புதற்குக் காரணமாகிய அறியாமை. விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன்; இறைவன். விகிர்தனது போதத்தை ``விகிர்தன்`` என உபசரித்தார். உம்மை, உயர்வு சிறப்பு. செறிப்புறு சிந்தை - சார்ந்த பொருள்தோறும் அது அதுவாய் அழுந்தி நிற்கின்ற ஆன்ம அறிவு. சிக்கென - உறுதியாக. `அறிவிப்பு` என்பது இடைக் குறைந்து ``அறிப்பு`` என நின்றது. அறிவித்தலையே கூறினாராயினும் இனம் பற்றி இச் சிறப்பித்தலும், செய்வித்தலும் கொள்ளப்படும். காரணக் கடவுள ராவார்க்கு அவர் செய்த புண்ணியத்தானே ஆன்மாக்களது அறி விச்சை செயல்ளைச் செயற்படுத்தும் ஆற்றலைச் சிவன் அளித் தருள்வன் என்க. பரமுத்தியை விரும்புவோர் இதனை விரும்பாமையை,
``ஐந்தொழிலும் காரணர்க ளாத்தொழிலும் போகம்நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக`` *
என்பதனான் அறிக.
இதனால் திருவருட் பேற்றினை முற்றப் பெறவே மேலோருள் மேலோர் விரும்புதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி யான்எங்கள் பிஞ்ஞகன் எம்மிறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாம்எனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவன் எம்மை விட்டு ஒரு போதும் நீங்கியதில்லை. அதனை அனுபவமாக உணர்ந்த அனுபூதி மான்களது அறிவுரையை `இதுவே மநக்குத்துணையாவது` என்று பற்றி உணரவல்லவன் எவனோ அவனே பொரும்பொருள் தன்மையைத் தான் பெற வல்லவனாவன். அதனை முன்பே உணர்ந்து ஒழுகாமையால் பல காலங்கள் வீணாகவே கழிந்தன.

குறிப்புரை :

`என்றாலும் இப்பொழுதாயினும் அவ்வாறு உணர்ந்து ஒழுகத் திருவருள் கிடைத்தது தவப் பயன்` என்பது குறிப்பெச்சம்.
பிஞ்ஞகம் - தலைக்கோலம். பிறை, பாம்பு, கங்கை, கொன்றை மாலை முதலிய பலவகைப்பட்ட தலைக்கோலமும், சடை முடியும் சிவபிரானுக் கல்லது பிறர்க்கு இன்மையால் சிவபிரான் `பிஞ்ஞகன்` எனப்படுகின்றான். அவனே இறைவனாதலைக் குறித்தற்கு, ``பிஞ்ஞகன் எம்மிறை`` என்றார். முதல் அடியை ஈற்றில் வைத்துரைக்க.
இதனால், `சிவனை அவனது அருளைத் துணையாகப் பற்றியே அறிய இயலும்` என்பதும், `அதனை அவ்வாறு அவனை அடைந்தோரது அருளுரையே உணர்த்தும்` என்பதும், `அவ்வருளுரையைத் தெளிதற்கும் சிவனது அருள் வேண்டும்` என்பதும் கூறப்பட்டன. அடைந்தோரது அருளுரைகள் அங்ஙனம் உண்ர்த்துதலை,
``அவன் அருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வணத்தன்
இவன் இறைவன் என்றெழுத்திக் காட்டொணாதே`` *
என்பது முதலியவற்றான் உணர்க.

பண் :

பாடல் எண் : 5

தானே அழியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல்
ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே அனையன்நம் தேவர் பிரானே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியபடி ஆர்ந்தறிந்தார் அறிவை துணையாகச் சார்ந்தறிந்தமையால் உள்ளமேயன்றி உடம்பும் உருகுமாறு ஞானமே வடிவாய் நிற்கும். சிவமுதற்பொருளை உணர்ந்த பின் அம் முதல்வன் தேன்போல இனியனாய்த் தெவிட்டாது நின்றான். இந் நிலையில் சஞ்சித வினைகள் கெட்டொழிதலன்றி அவற்றிற்கு வேறு வழியில்லை. அங்ஙனம் அவை கெட்ட பின்பு யான் அவற்றை நுகர் வோனாதலும், சிவன் அவற்றை எனக்குக் கூட்டி நுகர்விப்போ னாதலும் ஆகிய நிலைமைகள் எங்ஙனம் உளவாகும்! உளவதால் இல்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி யுரைக்க. தம்மியல் பால் தாம் அழியற்பாலனவாதல் பற்றி, ``தானே அழியும்`` என்றார். எனினும், `அவை பயனிலவாயினமை பற்றி முதல்வன் அழித் தொழிப்பன்` என்பதே கருத்து. `பக்குவம் எய்திய உயிரை அவைகளால் முன்னர்ச் செய்யப்பட்டுக் குவிந்து கிடந்த சஞ்சித வினைகள் சென்று பற்றமாட்டா` என்பதைத் திருவள்ளுவரும்,
``சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்`` *
என அருளிச் செய்தார். உணர்வுடையதனை, உணர்வு என்றே உபசரித்தார். அது தேவர் பிரானேயாயினும், `மெய்ப்பொருளது `இயல்பு அது` என்றற்கு வேறு போலக் கூறினார்.
``தானே`` என்றது பன்மை யொருமை மயக்கம். பக்குவம் வந்த உயிர்களது சஞ்சித வினைகள் வாளா அழிக்கப்படுதல், துறவு பூண்டோர் சந்ததியும் இலராயின் அவர், முன்பு எழுதித் தந்த கடன் பத்திரம் அழிக்கப்படுதல் போல்வது என்க.
``யானேதும் பிறப்பஞ்சேன்; இறப்பதனுக் கென்கடவேன்!`` *
என்றதும் இந்நிலையில் நின்றேயாம்.
``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை, எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்``l
என்றது காண்க.
``நானே`` என்னும் ஏகாரம், `இன்றியமையாது அறியற் பாலன் யானே; பிறரல்லர்` என்பது உணர்த்தி நின்றது. `அங்ஙனமாக, நந்தி அரியுங்கொல்` என்க. ``கொல்``, இங்கு எதிர் மறைப் பொருட்டாய் நின்றது. ஊட்டுவித்தலும், உண்டலும் அறிந்தன்றி யாகாமையின் அவற்றை அறிதலின் மேல்வைத்துக் கூறினார்.
இதனால், திருவருட் பேற்றால் இன்பமாகிய பயன் விளைந்தபின் மீட்டும் துன்பம் இன்றாதல் கூறப்பட்டது. அதனால், இவ்வின்பம் நிலையான இன்பமாதல் விளங்கிற்று.

பண் :

பாடல் எண் : 6

நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை
வானறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறி யான்பின்னை யார்அறி வாரே

பொழிப்புரை :

என்னுள் இருக்கின்ற இறைவனை அறிய வேண்டி யவன் யானே யன்றோ! (அந்நிலை இன்று யான் கைவரப் பெற்றேன்.) வானுலகம் ஒன்றையே அறிந்து நிற்கும் வானவர் அந்த அறிவால் தம்முள் இருக்கும் இறைவனை அறியாது மயங்குவாராயினர். ஒவ்வொருவனும் தனது உடம்பின் இயல்பையும், அந்த உடம்பினுள் உள்ள உயிரையும், அந்த உயிருக்குள் உயிராய் நின்று அதற்கு அறிவைத் தருகின்ற உள்ளொளியாகிய இறைவனையும் அறிந்து அவ்வாற்றால் பயன்பெற வேண்டியவன் அவனேயாய் இருக்க அவனவனும் அதனைச் செய்யாது கிடப்பானாயின் அவனுக்காக மேற்கூறியவைகளை யார் அறிவார்!

குறிப்புரை :

`திருவருட் பேறில்லாமையால் அவரெல்லாம் அங்ஙனம் மயங்கிக் கிடப்பர்` என்பது கருத்து.
`ஈசனை அறிந்து இருக்கின்ற நானன்றே` என மாற்றியுரைக்க. இருக்கின்றது - `இருக்க வேண்டுவது` இது தொழிற்பெயராய், அத்தொழிலுடையதனை உணர்த்திற்று. ஊன் - உடம்பு; ஆகுபெயர். அதனைக் கூறவே, அதனுள் நின்ற உயிரும் கொள்ளப்பட்டது.
இதனால், திருவருட் பெறில்லாதாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார்
அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.

பொழிப்புரை :

திருவருளின் பெருவியாபகம், அஃது அதனைப் பெற்றார்க்குப் பேரின்பம் விளைத்தல், காரணக் கடவுளது தொழில்கள் எல்லாவற்றிற்கும் அதுவே முதலாதல், அனைத்தையும் அது முற்றுற அறிதல் ஆகியவற்றை எல்லாம் அதனைப் பெற்றோர் அறிதலன்றிப் பெறாதார் சிறிதும் அறியமாட்டார்.

குறிப்புரை :

`பெற்றார், பெறாதார்` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தின. `இவ்வுண்மையை யாமும் இப்பொழுதுதான் அறிந்தோம்` என்பது குறிப்பு. `நுகர` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அமுதானத்திற்கு, `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. அடிநிலையை, ``அதிசூக்கம்`` என்றார்.
இதனால், திருருட் பேற்றின் பின் அதனது இயல்பு விளங்குமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்(டு)
அறிவது வாக்கி அடியருள் நல்கும்
செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.

பொழிப்புரை :

உயிர் அறிவுடையதாயினும் அவ்வறிவு ஆணவத்தால் தடுக்கப்பட்டமையின் அத்தடையை நீக்கி அஃது அறிவை அடையும்படி தொடுத்துப் பின்பு அவ்வறிவு பொறிகளின் வழிச் சென்று புலன்களை விரும்பிப் பாச அறிவாகும்படி செய்து, அவ்விடத்து அவ்வறிவு தான் விரும்பும் புலன்களை நுகர்தற்கு உடனாய் நின்று, பின்பு பாச அறிவாய் நின்ற அதனைப் பதியறிவாகச் செய்து, அவ்வாற்றால் பதிநிலையை எய்திய அடியார் குழாத்துள் இருக்க அருளுவதாகிய திருவருளை எய்தி அதுவே பற்றாக நின்றவரே சிவமாம் தன்மைப் பெருவாழ்வை எய்தினார்.

குறிப்புரை :

`பிறரெல்லாம் யாதும் இல்லா ஏழையராய் அலமரு கின்றார்` என்றபடி. `திருவருளே கேவல நிலையிற் கிடந்த ஆன் மாக் களைச் சகல நிலையிற் கொணர்ந்து, பின்பு சுத்த நிலையில் சேர்ப்பது` என அதனது உதவியை வகுத்தருளிச் செய்துமுகந்தான் அதனை உணரும் உணர்விலார் பயன் பெறாராதலை வலியுறுத்தியவாறு.
`அறிவில் அறிவு நணுக நல்கி` என்க. இரண்டிடத்திலும், ``அறிவது`` என்னும் அது, பகுதிப் பொருள் விகுதி. செறிவு - எப்பொருளிலும் நிறைதல். அஃது ஆகுபெயராய் அதனையுடைய திருவருளைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு)
அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு)
அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி அகம்புகுந் தானே

பொழிப்புரை :

யான் எம்பெருமானது திருவருளாற்றான் பிறந்தேன்; வளர்ந்தேன்; இறந்தேன். உலகம் ஒடுங்கிக் கிடந்த பொழுது யான் ஓய்வாக இருந்தேன்; மீட்டும் உலகம் தோன்றிய பொழுதும் பிறந்து வாழவே விரும்பினேன். இவ்வாறு முடிவின்றிச் சுழன்று வந்த யான் அவனது அருளே வடிவாகி நின்ற அந்த இறுதிக்காலத்தில் அப்பெருமான் எனக்கு எல்லையில் இன்பத்தை வழங்கி என் உள்ளத்தில் நீங்காது நின்றான் எல்லாம் அவனது அருளாலேதான் நிகழ்ந்தன.

குறிப்புரை :

`எல்லா உயிர்கட்கும் இவ்வாறுதான்; ஆயினும் அவ்வுயிர்கள் இவற்றை `என்னைப்போல முடிவில்தான் உணரும்` என்பது கருத்து. ``அருள்`` என யாண்டும் பொதுப்படவே ஓதினா ராயினும், `முதற்றொட்டு` ``மறைந்திட்டு`` என்பது காறும் கூறிய அருள் திருகுநிலை அருள் எனவும், `ஏனைய நேர்நிலை அருள் அறக் கருணை. முன்னது `திரோதான சத்தி` எனப்பட, பின்னதே `அருட் சத்தி` எனப்படும். `அருளின்` என்பதைப் பிறவற்றிற்கும் கூட்டுக.
`அருளான ஆனந்தத்து` என்பது பாடம் அன்று.
இதன் பின்னர்ப் பதிப்புக்களில் காணப்படும். ``அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி`` என்னும் பாடல் இடைச்செருகல்.

பண் :

பாடல் எண் : 10

பாசத்தில் இட்ட(து) அருள் அந்தப் பாசத்தில்
நேசத்தை விட்ட(து) அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே.

பொழிப்புரை :

என்னை எனது இயற்கைப் பாசம் தனது சத்தி கெடுதற்பொருட்டுச் செயற்கைப் பாகத்தில் இட்டுத் துன்புறுத்தியதும் திருவருளே (இது திரோதனகரியாய் நின்ற நிலை) இயற்பாசம் சத்தி கெட்ட பின்னர் யான் அச்செயற் கைப்பாசங்களையே மேலும், மேலும் விரும்பிய விருப்பத்தை விடச்செய்ததும் திருவருளே. பாசத் தொடர்பினால் மெய்ப்பொருளை அணுகக் கூசிய கூச்சம் நீங்கி அம் மெய்ப்பொருளை அடைந்து, அதனானே துன்பக் கடலினின்றும் கரை யேற்றுவித்ததும் திருவருளே, துன்பக் கடலினின்றும் கரையேறிய பொழுது விளைந்த எல்லையில்லாத இன்பத்தில் அவ்வின்பம் ஒன்றுமே தோன்றத்தான் தோன்றாது மறைந்ததும் திருவருளே.

குறிப்புரை :

`அதற்கு யான் செய்யும் கைம்மாறு யாதுளது` என்பது குறிப்பெச்சம். அதனைப் புலப்படுத்தற்கே மேற்போந்தவற்றை மீள அனுவதித்தார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். `விடுவித்தது` என்பதில் விவ்விகுதி தொகுத்தலாயிற்று. கூச, முதனிலைத் தொழிற் பெயர். ``முத்தி`` என்பதன்பின், `கூட்டுவித்தது` என்பது சொல் லெச்சமாய் எஞ்சிநின்றது. நேசம் - அன்பு. அன்பினால் விளை வதாகிய இன்பத்தை `அன்பு` என உபசரித்துக் கூறினார். `நேசத்துக் கண்` என ஏழாவது விரிக்க. இன்பத்திற் சேர்த்தது அருளேயாயினும் அது புலப்படினும் அனுபவம் நிகழாமைபற்றி அது தோன்றாது மறைந்து நின்றது என்க. அருள்நிலை துரியமேயாக, ஆனந்த நிலை துரியாதீதம் ஆதல் அறிக.
இதனால், திருவருள் பெற்றார் அத்திருவருளின் நன்றியை உணருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் l அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்.

குறிப்புரை :

`எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. ``நந்தி``, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.
``மாதவன்`` என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.
``இறைவனாவான் அறவாழி அந்தணன்`` 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் - மேலே உள்ளவன்; அபரன் - கீழே உள்ளவன்.
இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயஹ்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.

பண் :

பாடல் எண் : 12

அகம்புகுந் தான்அடி யேற்கரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அரு ளில்லோர்க்(கு)
அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தால்நந்தி ஆனந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன் உயிர்களது அறிவினுள்ளே அருளை நிறைவித்து, அதனால் இன்பத்தைப் பெருக்கி விளக்கமுற்று நின்றால் இன்பப் பொருளாய் அனுபவப்படுவான். அதனால் அடியேனுக்கு அவன் அங்ஙனம் அருளை வழங்கினமையால் கருவிகளின் வழியாக அன்றி, நேரே தலைப்பட்டுணரும் பொருளாயினான். ஆகவே, அருள் வழங்கப் பெறாதாரது அறிவினுள்ளும் இருப்பினும் அவர்கட்கு அவன் அங்ஙனம் உணரும் பொருளாதல் இல்லை.

குறிப்புரை :

`அருளில்லார்க்குத் தெரியான்` என்றமையால், `அருள் பெற்ற எனக்குத் தெரிந்தான்` என்பது பெறப்பட்டது. அதனால் முதற்கண் ``புகுந்தான்`` என்றதற்கு, `புகுந்து தெரிந்தான்` என்பது பொருளாயிற்று.
`நந்தி அகம்புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாய் அகம்புகுந்தால் ஆனந்தியாம்; அதனால் அடியேற்கு அருளால் அகம்புகுந்து அருளில்லோர்க்கு அகம்புகுந்தும் தெரியான்` எனக் கொண்டு கூட்டி யுரைக்க.
`சிவம்` என்பதற்குப் பல பொருள் உண்டு, இங்கு அது `தூய தன்மை` என்னும் பொருட்டாய், `மறையாது விளங்கி நிற்பது` எனப் பொருள் தந்தது. எல்லா உயிர்களிலும் சிவன் கலந்திருப்பினும் உலகரது அறிவில் அவரவர் துணியும் பொருளாயும், சரியை முதலிய மூன்றில் நின்றார்க்கு உருவம், அருவுருவம், அருவம் என்னும் திரு மேனியனாயும், ஞானத்தில் கேள்வி முதலிய மூன்றில் நின்றார்க்கு ஆசிரியர் அறிவுறுத்த சொற்பொருள் அளவாயும் விளங்கி, நிட்டையில் நின்றார்க்கே தான் உண்மையாய் விளங்குவன். உண்மையாய் விளங்கும்பொழுதே இன்பமாய் விளைவான். அதனையே, ``நந்தி, அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கிச் சிவமாய் அகம் புந்தால் ஆனந்தியாம்`` என்றார். ஆகவே முன்னர் அகம்புகுதல் தொடக்கமும், பின்னர் அகம் புகுதல் முடிவும் ஆயின. புகுதல் புது வதன்றாயினும் விளங்குதல் புதிதாதல் பற்றி. ``புகுந்து`` எனவும், ``புகுந்தால்`` எனவும் கூறினார், ஆனந்தி - இன்ப வடிவினன். `முன்னை நிலை பெத்தம்` எனவும் `பின்னை நிலை முத்தி` எனவும் உணர்க.
இதனால், திருவருட் பேற்றின் முடிநிலை இயல்பு விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆயும் அறிவோ டறியாத மாமாயை
ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள்
ஆய பலஇந் திரிய மவற்றுடன்
ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.

பொழிப்புரை :

`பெத்த நிலையில் உள்ள உயிர்களிடத்தும் திரு வருள் உளதாயினும் அது நேர்நிலை யன்று` என மேற்கூறிய இயை பானே, அஃது அத்திருகல் நிலையில் நின்று செய்வனவற்றை இங்கு நின்றும் விரிக்கின்றார்.
மாயா காரியங்களைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து அறிந்து வரும் அறிவும், அக்கருவிகளும், அக்கருவிகளின் வழிப் புலன்களை ஆன்ம அறிவை அடையச் செய்கின்ற ஐந்து பூதங்களும் அப்புலன்களை நேராகவும், பிறவற்றின் வழியாகவும் கவர்கின்ற புற, அகப் பொறிகளும் ஆகிய அனைத்தும் திருவருளின் செயலால் ஆவனவேயாம்.

குறிப்புரை :

``ஆயும் அறிவு`` என்றே ஓதினாராயினும் `அறிவு ஆராயும் ஆராய்ச்சியும்` என்பதே கருத்து. `கருவிகள் தலைக்கூடிய வழியும் திருவருள் இன்றி ஆன்ம அறிவு தனித்து நின்று ஒன்றையும் அறியமாட்டாது` என்பதனைச் சிவஞானபோத ஐந்தாம் சூத்திரத்தால் அறிக. `கருவிகள் சடம்` என்றற்கு அதனை அவற்றது முதல்மேல் வைத்து ``அறியாத மாமாயை`` என்றார். இதனுள் `மா` என்னும் அடை பிறிதின் இயைபு நீங்காது பொதுவில் இயைபின்மை மாத்திரை நீக்கி, மாயையின் வியாபகத்தை உணர்த்தி நின்றது. ஞானேந்திரிய விடயங்கள் பூதங்களின் குணமும், கன்மேந்திரிய விடயங்கள் அவற்றின் செயலும் ஆதல் பற்றி ``அடைக்குகம் ஐம்பூதங்கள்`` என்றும் கூறினார். `அனைத்தும் அவ்வருட் செய்கையே ஆம்` என மாற்றியுரைக்க. அவ்வருள் - மேற்கூறிய திருவருள்.
இதனால், திருவருள் திரோதனகரியாய் நின்றே அனைத்துலகையும் ஆக்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அருளே சகலமும் ஆய பௌதிகம்
அருளே சராசரம் ஆய மலமே
இருளே வெளியே எனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் சகல நிலையை எய்துதற்குக் காரண மான பூதகாரியமாகிய சடப்பொருள்களும், சரமும் அசரமுமாய் உள்ள உயிர் வகைகளும் ஆகிய எல்லாம் திருவருளாலே ஆவனதாம். சிவனும் உயிர்களின் பொருட்டுத் திருமேனி கொள்ளுங்கால் திருவருளால் தான் அவற்றை உடையவன் ஆவான். இன்னும் அவன் ஆன்மாக்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்குதலும், பின்பு அதனை நீக்கி மெய்யுணர்வைத் தருதலும் திருவருளாலேதான். ஆகவே, திருவருள் இல்லையேல் ஒன்றும் இல்லையாம்.

குறிப்புரை :

`அங்ஙனம் ஆனபொழுது சிவனை வழிபட்டுப் பயன் பெறுதல் என்பது திருவருள் இன்றி எங்ஙனம் இயலும்` என்பது குறிப்பெச்சம். இக்குறிப்புப் பொருளை உணர்த்துதற் பொருட்டே இம்மந்திரத்திற் போந்த அனைத்தையும் அனுவதித்துக் கூறினார்.
இருள் - அஞ்ஞானம்; அதன் காரணம் மலம். வெளி - ஒளி; மெய்ஞ் ஞானம். `ஈசன், எங்கும் மலமே, இருளே, வெளியே எனும்` என மாற்றி, ``சகளத்தன்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. இத் தொடரில் உள்ள ஏகாரங்கள் எண்ணிடைச் சொல். எனும் - என நிற்கும். சகளம் - உருவத்திருமேனி. ``இன்று`` என்னும் பயனிலைக்கு `ஒன்றும்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
முதல் அடியிலும், `பவுதிகமாய சகலமும் அருளே` என மாற்றிக்கொள்க. சகலத்திற்குக் காரணமாவனவற்றை, ``சகலம்`` என்றார். சகல நிலையில் வலுப்பெற்று நிற்பன பூதகாரியங்களே யாதலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். `சகளத்தன்` என்றது அந்நிலைமையை. நிட்களம், நிட்கள சகளம் ஆகியவையும் இங்கும் பொதுப்பட, ``சகளம்`` எனப்பட்டன.
இதனால் திருவருள் இன்றி ஒன்றும் இயலாமை வலியுறுத்தப்பட்டது,

பண் :

பாடல் எண் : 15

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவமசை யாகி நடிப்பவன் தானே.

பொழிப்புரை :

சிவம் முதலாக உள்ள நவந்தரு பேதங்களாய் நிற்கும் சிவன் அங்ஙனம் நிற்றலும் திருவருளாலேதான்.

குறிப்புரை :

நவந்தரு பேதங்களாவன இவை என்பது மேல் `சிவலிங்கம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டது. அவ்விடத்தில் சிவலிங்கம் அனைத்துத் திருமேனிகளாயும் நிற்றலை விளக்குதற்கும், இங்குத் திருமேனி நிலைகள் அவை என்பதை விளக்குதற்கும் இவை கூறப்பட்டன. பின்னரும் ஓரோர்காரணம் பற்றி இவற்றை எடுத்துக் கூறுவார்.
இவை `சொரூபமன்றித் தடத்தமே` என்றற்கு `நடிப்பவன்` என்றார். சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், சிவன் அருளாற் கொள்ளும் திருமேனிகளின் வகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.

பொழிப்புரை :

திருவருளாகிய கண் வாய்க்கப்பெறாதார்க்கு சிவமாகிய நுண்பொருளின் இருப்புத் தோன்றாது. உலகமாகிய பருப் பொருள்களின் விசித்திரங்களே தோன்றும். திருவருளாகிய கண் வாய்க்கப் பெற்றோர்க்கு, சிவனது இருப்பு மட்டுமன்றி அவனேயும் புலப்பட்டுத் தோன்றுவான். இவை எவைபோலும் எனின், ஒளி யில்லாத கண்ணை உடையவர்க்குப் பகலவனது ஒளிதானும் தோன்றாது இருள் மட்டுமே தோன்றுதலும், ஒளியுடைய கண் ணுடையார்க்கு அவனது ஒளிப்பரப்பேயன்றி அவனேயும் தோன்றுதல் போல்வனவாம்.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை. `இருப்புத் தானும் அறிய வாராது` என்றற்கு, ``அரும் பொருள்`` என்றார். சிவனது இருப்பும், இரவியினது ஒளியும் அவை பற்றி நிற்கும் பொருள்களின் பன்மை பற்றிப் பன்மையாக ஓதப்பட்டன. அதனானே எண்பொருள், இருள் இவை மட்டுமே தோன்றுதல் பெறப்பட்டது. இருட்கண் - இருளை மட்டுமே உணரும் கண். ``இரவியும்`` என்னும் உம்மை இழிவு சிறப் பாகலின், ``இரவி`` என்றது ஆகுபெயராய் அதன் ஒளியைக் குறித்தது. தெருள் - ஒளி. எங்கும் உள்ள ஒளி முழுதும் தோன்றுதலால் அதனானே அவ்வொளிக்கு முதலாகிய இரவியும் தோன்றுதல் பெறப்பட்டது.
இதனால், அருளில்லார்க்கு சிவம் தோன்றாது உலகமே தோன்றுதல் உவமையில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமானே எங்கணும் வியாபகனாய், ஐந் தொழிலையும் செய்யும் முதல்வனாயினும் அவன் அவன் அத்தன்மையனாய் நிற்றற்குக் காரணமாயிருப்பது அருளாயும், எல்லையின்றி விரிவதாயும், அனைத்தும் வல்லதாயும் அவனிடத்து உள்ள ஆற்றலேயாம்.

குறிப்புரை :

இங்கு, ``தான்`` எனப் பன்முறையானும் கூறியது இங்கு அதிகாரப்பட்டுள்ள அருளையேயாம். வியாபித்தலைவன் - வியாபி யாய தலைவன். படைத்தல் முதல் வியாபித்தல், தலைவனாதல் ஈறாக உள்ள அவை அனைத்திற்கும் ஏதுவாய் நிற்பதனை அவையாகவே உபசரித்துக் கூறினார். இதுவும் சொற்பொருட் பின் வருநிலையணி.
இதனால் `திருவருளாவது` இங்குக் கூறிய அனைத்துத் தன்மைகளையும் உடைய சத்தியே, என்பது கூறப்பட்டது. ``அருள் உண்டாம் ஈசற்கு; அது சத்தி; அன்றே`` என்பது சிவஞான போதமும்,* ``அருளது சத்தியாகும் அரன்றனக்கு`` என்பது சிவஞான சித்தியும் சூ. 5. 9. ஆகும்.

பண் :

பாடல் எண் : 18

தலையான நான்கும் தனதரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும்
தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.

பொழிப்புரை :

(மேல், `ஞான லிங்க` அதிகாரத்தில் ``நாலன கீழ`` என்னும் மந்திரத்தில் சிவன்மேல் வைத்துக் கூறிய மூவகைத் தடத்தத் திருமேனிகளையும், அவற்றைக் கடந்த சொரூப நிலையையும் இம்மந்திரத்தில் திருவருளாகிய சத்திமேல் வைத்துக் கூறினார் என்க.)

குறிப்புரை :

`திருவருளாகிய சத்திதானே சிவன்` என்பதை உணர்த்துதல் இதற்குப் பயன் என்க. அங்கு, ``பரசிவன்`` என உயர்திணை வாய்பாட்டானும், இங்கு, `அல்லது ஒன்றே` என அஃறிணை வாய்பாட்டானும் வாய்பாடு வேறு படுத்து ஓதிய நுட்பம் ஓர்ந்துணரற்பாற்று.

பண் :

பாடல் எண் : 19

ஒன்றது பாலே உலப்பிலி தான்ஆகி
நின்றது தன்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல தாகும் துணையென்ன
நின்றது தான்விளையாட்(டு) என்னுள் நேயமே.

பொழிப்புரை :

எனது உள்ளத்தில் என் அன்பேயாய் நிற்கின்ற சிவம் தன்போல்வது பிறிதுபொருள் இல்லாது தனி ஓர் அறிவுப் பொருளாய் இருத்தலால் அழிவற்று, என்றும் உள்ளதாகின்றது. அஃது அங்ஙனம் ஒன்றேயாயினும் தன்னைப்போல் அறிவுடையனவாயும், அழிவில்லன வாயும் உள்ள எண்ணற்ற உயிர்க்கும் உள்ளுயிராய் நிற்றலால் பலவாகவும் ஆகின்றது, அங்ஙனம் ஆயினும் அவ்வுயிரின் தன்மயைத் தான் அடையாமல் தான் வேறு பொருளாகவே உள்ளது. இனி, ``அதன் விளையாட்டு`` எனப்படுவது, அஃது உயிர்களோடு பெத்தம், முத்தி இருநிலையிலும் உடனாய் நின்று, எஞ்ஞான்றும் அவற்றிற்கு அவ்வப்பொழுது ஆவனவற்றைச் செய்து உதுவுவதே யாகும்.

குறிப்புரை :

``தானே படைத்திடும்`` என மேல் வந்த மந்திரத்தில் ``வியாபி`` என்ற நிலையில் சுத்தி, ``சத்தி`` என்றே பொதுவாகச் சொல்லப் படும் அது படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் பொழுது ஆரணி, செனனி, இரோதயத்திரி - முதலியனவாகச் சொல்லப்படும். அவற்றுள் ``உயிர்க்குயிராய் நிலைதுன்றி`` என்றதனால், `சத்தி` என்னும் பொதுநிலையையும் ``துணை என்ன நின்றது`` என்றதனால் ஆரணி முதலாக நிற்கும், சிறப்பு நிலையையும் கூறினார். முதல்வன் செய்யும் தொழில்களை `விளையாட்டு` எனக் கூறுதற்குப் பொருள் `ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு விளை யாட்டு` என்பது போல, `வருத்த மின்றி எளிதில் செய்தல்` என்பதே யன்றி, `சிறியார் விளையாடும் விளையாட்டுப் போலக் குறிக்கோள் யாதும் இல்லது` என்பதன்று.
``முதற்பொருள், முதலில் ஒன்றாய் இருந்தது; பின்பு அஃது யான் பலவாக ஆவேனாக எனக் கருதியது`` எனவரும் உபநிடதப் பொருளும் திருவருளைப் பற்றியதேயாதலை இங்கு இவற்றால் உணர்த்தியவாறு. இனி முதல்வன் செயலை `விளையாட்டு` எனச் சில இடங்களில் கூறப்படுதலையும் இங்குக் குறித்தார் என்க.
அன்பே சிவமாதல் பற்றி அதனை, ``என்னுள் நேயம்`` என்றார். `என்னுள் நேயம்தான் உலப்பிலியாகி நின்றது; உயிர்க் குயிராய் நிலைதுன்றி, அவை யல்லதாகும்` எனவும், `விளையாட்டுத் துணை என்ன நின்றதுதான்` எனவும் இருதொடராக இயைத்து முடிக்க. சடமாயும், பலவாயும் உள்ள பொருள்கள் யாவும் அழிவன ஆதலின் அத்தன்மைக்கு முழுதும் வேறுபட்டதென்றற்கு, `ஒன்று அதுவாலே` என்றார் ஆகலின், அஃது அறிவாய் நிற்றலும், உடன் கொள்ளப் பட்டது. `அதனாலே` என ஓதற்பாலதனை, ``அதுவாலே`` என ஓதினார்; `ஒன்றாய் நிற்கும் அத்தன்மையினாலே` என்க.
`முதற்பொருள் இவ்வாறெல்லாம் சிறந்து நிற்றற்குக் காரணம் திருவருளாகிய அத்தன்மையினாலே` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 20

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ(டு)
ஆய்அக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போய்அக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

பொழிப்புரை :

முழுதும் திருவருளிலே பொருந்தி நிற்கின்ற சுத்த சிவன் அந்தத் திருவருள் காரணமாகச் சத்தியோடு கூடிச் சத்தனாய் நின்று, பின்பு சுத்தமாயையுள் பொருந்தி முதற்கண் நாத தத்துவத்தைத் தோற்றுவித்து, அத்தத்துவம் பற்றுக்கோடாக சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும், அந்த வாக்கு முதலிய அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்கும் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளையும் தோற்றுவித்துப் பின்பு விந்து தத்துவத்தைத் தோற்றுவித்த பின்னரே உலகம் முழுதும் முறைப்படி தோன்றும்.

குறிப்புரை :

`இங்ஙனமான அனைத்திற்கும் திருவருளே காரணம்` என்பது குறிப்பெச்சம். ``நேயம்`` என்றது திருவருளை. `சுத்த சிவன்` என்பார் ``நின்மலன்`` என்றார். அவன் சொரூப சிவன். அவனே உலகத்தை நோக்க விரும்பும்பொழுது சத்தியாலே நோக்குவன் ஆதலின், ``சத்தியோடு ஆய்`` என்றார். ``அடைந்திட்டு`` எனவும் ``புணர்ந்திட்டு`` எனவும் கூறினார். `விந்து தத்துவம் காரியமே யாயினும் பிற எல்லாவற்றிற்கும் அது காரணம்` என்பார். ``வீயத்தகா விந்து`` என்றார். வீதல் - அழிதல். விளைதலுக்கு `உலகம்` என்னும் வினைமுதல் வருவித்துக்கொள்க. `பல்வேறு வகைப்பட்ட உலகங் களின் பல்வேறு வகையான தோற்றமும், ஒடுக்கமும் திருவருள் காரணமாகவே நிகழும். என்றற்கு, உலகத் தோற்ற முறையைச் சிறிது வகுத்துக் கூறினார்.
இதனால், திருவருளின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.

பொழிப்புரை :

எல்லாக் காரியங்களின் தோற்றத்திற்கும் முதலாய் நிற்கின்ற பரவிந்துவே, பிற எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி வியாபகமாய் நிற்கும். அது மல கன்மங்களோடு விரவுதல் இன்றித் தூயதாயும் உள்ளது. அதனால் அது `மகாமாயை` எனவும் படுகின்றது. அஃது அபர முத்தர்களாகிய மந்திர மகேசுரர், அணுசதா சிவர் முதலியோருடைய தனு கரணங்களாகவும், சத்த கோடி மகா மந்திரங்களாகவும், வேத சிவாகமங்களாகவும் மேற்கூறியோருடன் மற்றும் விஞ்ஞான கலர்களும் வாழும் அளவற்ற அண்டங்களாயும் விளைந்து பயன்படும்.

குறிப்புரை :

``பரவிந்து என்பது, `காரிய விந்துக்களுக்கு மேலாய் நிற்கும் விந்து`` எனப் பொருள் தந்து காரணப் பெயராய்ச் சுத்த மாயையைக் குறித்தது. அதனையே சிவன் தான் நேரே தொழிற் படுத்துதலின் அதன் இயல்பை விரித்தார். `அதனால் சத்தியது பெருமை விளங்கும்` என்பது பற்றி, சுத்த மாயைக்குக் கீழ் உள்ள அசுத்த மாயையைச் சிவன் தனது ஏவல் வழி நிற்கும் அனந்தேசுரரைக் கொண்டும், பிரகிருதி மாயையை அவரது ஏவல்வழிச் சீகண்ட ருத்திரரைக் கொண்டும் செயர்படுத்துவன்.
``தேவர்`` என்றது ஏற்புழிக் கோடலால் மேற்கூயோரைக் குறித்து, ஆகுபெயராய் அவரது தனு கரணங்களை உணர்த்திற்று. சிவாகமமும் வேதம் எனப்படும்.
இதனால் சுத்த மாயையினது சிறப்புக் கூறும் முகத்தால் திருவருளது ஆற்றற் பெருமை கூறப்பட்டது.
முன் அதிகாரத்தில் திருவருளின் இயல்பினை அதனைப் பெற்றார் உணருமாறெல்லாம் கூறிய நாயனார், அதனுள் திருவருள் மறைத்தலைச் செய்து இருளாயும் நிற்றல் கூறப்பட்டமையால் அஃது அதற்குச் செயற்கையேயாக, அதன் இயல்பு ஒளியேயாதலை அச்சிறப்புப் பற்றி இவ்வதிகாரத்தில் வேறெடுத்து ஒன்பது மந்திரங்களால் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 1

அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.

பொழிப்புரை :

திருவருளைப் பெற்று அதனானே அதன் இயல்பை உணர்ந்து அதிலே அழுந்தாதவர்கள் அத்திரு வருளோடு இயைந்து ஒழுகும் ஒழுக்கத்தில் நில்லார், அங்ஙனம் நில்லாமையால் அவர் ஐம் பாசங்களினின்றும் நீங்கதலும் இல்லை. பாசங்களின் நீங்காமையால் அவர் திருவருளின் பெருமையை அறிந்து அதனை அடைய முயல மாட்டார். திருவருளைப் பெற்றோர் தமது வினைப்பிறப்பே அருட் பிறப்பாகப் பெற்று, திருவருளின் பெருமை அறிந்து அதில் அழுந்துதலும் செய்வர்.

குறிப்புரை :

எனவே, திருவருள் ஒளியேயாதல் உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் விளங்கும் என்பதாம்.
`அருளின் வேறு பிறப்பாகப் பிறந்திட்டு` என்க. இறைவன் குருவாய் நின்று திருவருளை வழங்கப் பெற்றோர் முன்னைப் பிறப்பை மாற்றி வேறு பிறப்பாய்ப் பிறந்தவர் எனச் சொல்லப் படுதல் பலரும் அறிந்தது. முன்னர் ``அறிந்து, என்றமையால் பின்னர் ``அறிவார்`` என்றது அழுந்தியறிதலைக் குறித்தது.
இதனால், திருவருள் ஒளியேயாதல் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

பொழிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடைய சிவன், இனிப் பிறந்து உலகின்கண் வாராது என்றும் ஒருபடித்தாய் இருத்தற்குரிய வழியை எனக்குத் தந்தமையால் பெரியரிற் பெரியன் ஆகின்றான்; அந்நிலையில் அதுவெறும் வறுநிலையாய் இல்லாது உண்ண உண்ணத் தெவிட்டாத இனிக்கின்ற இன்பத்தை வழங்கினமையால் அவன் ஆனந்தமயன் ஆகின்றன். அவன் தனது அளவில்லாத பெருமை காரணமாக அளவற்ற பெயர்களை உடையன். அவற்றுள் எந்தப் பெயரையேனும் சொல்லி அதன் பொருளை உணரும் முகத்தால் அவனது திருவருளால் விளைகின் மேற்கூறிய இன்பக்கடலில் எஞ்ஞான்றும் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள்செய்தான்.

குறிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடையவனை `நந்தி` என்னும் பெயராகக் கூறியது ஆகுபெயர். அதனைப் பின்னும் கூறியது சொற் பொருட் பின்வருநிலை. `தந்தான்; அதனால் மாநந்தி` எனக் கூறற்பால வற்றை இவ்வாறு கூறியது உடம்பொடு புணர்த்தல். ``பேர் நந்தி`` என்னும் எழுவாய்கட்கு, ``மாநந்தி ஆனந்தி`` என்பன பயனிலையாயின.
``ஆயிரம்`` என்பது அளவின்மை குறித்தது. எல்லாப் பெயரும் அவனது திருவருளின் பெருமையையே உணர்த்தலின் `எந்தப் பெயரினாலும் அருட்கடலில் ஆடலாம்` என்றார். அப் பெயர்கள் சிவன், சங்கரன், சம்பு, மயற்கரன், மயோபு, உருத்திரன் முதலியன. அவற்றது பொருள்களை அறிந்துகொள்க. ``பேர் ஒன்று`` என்பது, தலைமை பற்றி, சிவன் - என்பதையே குறித்தது எனவும் உரைப்பர்.
இதனால், `திருவருள் இருளாய்த் துன்பத்தைத் தருவதாகாது ஒளியாய், இருளை நீக்கி எல்லையில் இன்பத்தை வழங்குவதே` என்பது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.

பொழிப்புரை :

திருவருளை நிரம்பப் பெறாத நிலையில் யான் அவனது உண்மை நிலையை எனக்கு இயன்றவகையில் ஆடுதல், பாடுதல் முதலியன செய்து அறிய முயன்றேன். அதன் பயனாக அவனது அருளை நிரம்பப் பெற்றமையால், அவன் என் அறிவால் நோக்காது அவன் அருளால் நோக்கும் முறையை உணர்த்தி, அவ்வாறு நோக்கிய பொழுது அவன் என்னின் வேறாகாது என்னுள்ளே விளங்கினான்.

குறிப்புரை :

எனவே, `உயிர் இறைவனைத் தன்னின் வேறாகப் புறத்தே காண முயலும் நிலையெல்லாம் திருவருளை முற்றப் பெறாத நிலை` என்பதும், `முற்றப் பெற்ற நிலையில் அஃது இறைவனைத் தன்னுள்ளே கண்டு களிக்கும்` என்பதும் விளக்கியவாறு. காண முயன்ற முயற்சியைக் கண்டதாகக் கூறியது, `அம்மி துணையாக ஆற்றைக் கடந்தான் மூழ்கினான்` என்பது போலக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறிய, உபசார வழக்கு. முதல் தொடரில் செயப்படு பொருளும் கருவியும் பயனிலைக்குப் பின்னே நின்றன. `கூடிய வாற்றால்` என உருபு விரிக்க. உற்று - உற்றதனால். `தன் அருளை உற்றதனால் அவன் வந்து நின்றான்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், திருவருள் முதற்கண் சிற்றொளியாய்த் தோன்றிப் பின் பேரொளியைத் திகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயா படலம் எனப்பண்ணி
`அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

பொழிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடையவனாகிய சிவன், யான் தொன்று தொட்டு என்னைப் பொருந்தி வந்தனு கரண புவன போகங்களும், அவற்றிற்கு நிமித்தமாய் அநாதியே என்னைப் பற்றி நின்ற ஆணவமும் என்னோடு என்றும் இயற்கையாய் நீங்காது நிற்கும் குணங்களாகாது, ஒரு காலத்தில் விட்டு நீங்கும் குற்றத் தொகுதியே ஆதலை உணரச் செய்து, `அக்குற்றங்கள் அனைத்தினின்றும் நீங்கி இது பொழுது நீ தூயையாய் நிற்றலையும் பார்` என்று காட்டினான். அதனால் நான் மாயா காரியங்களால் பெற்ற பாச அறிவை நீக்கினேன்; அவனது அருள் வழியிலே நின்றேன்.

குறிப்புரை :

`இங்ஙனம் ஆதலின், திருவருள் இருளாய்க் குற்றங்களின் வீழ்த்துவதாவது, ஒளியாய் அவற்றினின்றும் மீட்பதே என்பது தெளிவாகின்றதன்றோ` என்பது கருத்து. ``மாயை`` என்பது இங்கு, நீடு நில்லாது விரைய மறைதலைக் குறித்தது. ஒரு பொருட்கு அதனை விட்டு என்றும் நீங்காததே `அதன் குணம்` என்றும், ஒரு காலத்தில் அதனை விட்டு நீங்குவது `அதற்குக் குற்றம்` என்றும் சொல்லப்படும். ``என`` என்பது `என்று உணர` என்றவாறு.
``என்று அடி வைத்தான், என்பதை, `அடி வைத்து என்றான்`` எனப் பின் முன்னாக மாற்றி வைத்து உரைக்க. அடியைச் சென்னி மேல் வைத்தல் அருளை வழங்குதற்கு அடையாளம். திருவடி அருளே யாதலின், அதனைப் பணிதலாவது அதன்வழி நிற்றலேயாம்.
இதனால், திருவருள் ஒளியேயாதல் வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.

பொழிப்புரை :

பாசஞான பசுஞானங்களாய்த் திரிபு கொள்கின்ற மருளில் பொருந்திய உயிரின் உணர்வாகிய திரியில் பதிஞானமாகிய திருவருள் என்னும் சுடரைக் கொளுத்தி அஃது எரிந்து வீசுகின்ற ஒளியினால் எல்லாப் பொருட்கும் இடம் தந்து வியாபகமாய் நிற்கின்ற ஆகாயம் போன்று எல்லையற்று நிற்கும் சிவத்தைத் தரிசியுங்கள். அப்பொழுது அந்தத் திருவருளின் ஒளியில் பாசம் காரணமாக முன்பு உளவாகிய துன்பங்கள் யாவும் முழுதுமாக அற்றொழியும். இவ்வாறு பசுஞானமாகிய அறிவைப் பதிஞானமாய் விளங்கச் செய்கின்ற திருவருளாகிய விளக்கைப் பெற்றவர்களே அந்த விளக்கினுள்ளே விளங்கும் மற்றொரு விளக்காய் விளங்குவார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரத்தின் பொருள்,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிர்எனும் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பர் காளை தாதை கழலடி காண லாமே``
- திருமுறை - 4-75-4.
என்னும் அப்பர் திருமொழியில் அமைந்து விளங்குதல் காண்க. இதனுள், \\\"விளக்கு`` என்பனவும், \\\"வெளி`` என்பதும் உருவகங்கள். விளக்கில் விளங்கும் விளக்காவது, பெருவிளக்கின் ஒளியினுள் தனது ஒளிவேறு தோன்றாது அடங்கி விளங்க இருக்கும் சிறுவிளக்கு. இதனை, `பகலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு` எனவும் கூறலாம். தாம், ஏ அசைகள்.
இதனால், `திருவருள் ஒளியாய் நின்று பயன் தருமாறெல்லாம் உணர்ந்து அதனாற் பயன்கொள்க` என்பது விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள்
ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.

பொழிப்புரை :

`ஒளி, இருள்` என்றும் இரண்டில் எதுவும் எக் காலத்திலும் அழிந்தொழிவதில்லை. (ஒளி வரும் பொழுது இருள் அடங்கியிருக்குமேயன்றி அழிந்து போவதில்லை. அஃது ஒளி நீங்கியபொழுது மீட்டும் இருள் வருதலைக் கொண்டு அறிந்துக் கொள்ளப்படும். இந்நிலையில்,) நீங்காது நிற்கும் ஒளியோடு கூடிய கண்ணிற்கே ஒருஞான்றும் இருளோடு கூடும் நிலை வாராது ஒளி யாகவே விளங்கும் நிலை உளதாகும். ஆகவே, ஒளியோடு கூடும் பொழுது ஒளியாயும், இருளோடு கூடும்பொழுது இருளாயும் நிற்கின்ற கண்போல்வது ஆன்மா. அஃதாவது கண் ஒளிப் பொருளுமன்று; இருட்பொருளுமன்று; அவ்விரண்டினும் வேறு. ஆயினும் ஒளியோடு கூடியபொழுது ஒளியாயும், இருளோடு கூடி யிருளாயும் நிற்கும். அது போல ஆன்மாப் பதியும் அன்று; பாசமும் அன்று. அவ்விரண்டினும் வேறு. ஆயினும் பதியோடு கூடிய பொழுது பதியாயும், பாசத்தோடு கூடியபொழுது பாசமாயும் நிற்கும். ஒளிவந்தபொழுதும் இருள் அழிவ தில்லை. ஆயினும் ஒளியின்முன் இருள்தோன்றாது அடங்கியிருக்கும். ஒளிவருவதும், போவதுமாய் இருப்பின்கண் ஒளியாயும், இருளாயும் வேறு வேறு நிலைகளை அடையும். வந்த ஒளி பின் நீங்காது நிற்பின் கண் அவ்வொளியேயாய்ப் பின் இருளாக மாறாது. அதுபோல, மாயா கருவிகள் வந்து கூடுவனவும், பிரிவனவுமாகிய புற ஒளிகளாகும். அதனால் அவற்றோடு கூடிய உயர் அறிவாயும், அறியாமையாயும் மாறி மாறி நிற்கும். திருவருளாகிய ஒளிவந்த பின் நீங்காதே நிற்கும் அகவொளியாகும். அதனால் அதனோடு கூடிய உயிர் பின்பு ஒரு ஞான்றும் இருளாகாது ஒளியேயாய்ச் சிவமாய் விளங்கும்.

குறிப்புரை :

இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகள் ஒட்டணியாய் நிற்றலின், இதன் பொருள் இவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. ``ஒளியும் ஒழியாது`` என இறந்து தழுவிய எச்ச உம்மை கொடுத்துக் கூறியதனால், இரண்டாம் அடியின் முதலில் உள்ள ஒளி, `ஒழியா ஒளி` என்பது பெறப்பட்டது. ஒழியா ஒளியாவது இயற்கைப் பேரொளி யாகிய ஞாயிற்றின் ஒளி. திருவருளின் இயல்பிற்கு அதனினும் சிறந்த உவமையின்மையால் அஃது அழியா ஒளியாக உபசரிக்கப் படுகின்றது. ஒழியும் ஒளி பல இல்லங்களிற் பலரால் ஏற்றியும், அணைத்தும் வைக்கும் விளக்கொளி. திருவருள் ஞாயிறு போன்றதும், மாயா கருவிகள் விளக்குப் போல்வனவுமாகும். மாயா கருவிகளால் பெறும் அறிவு பாச அறிவே ஆகையால், அது நீக்கத்தக்கதாயிற்று. ``அறியாமை அறிவகற்றி``l என்னும் சித்தியாரிலும், ``செறி வற்றுலகோ டுரைசிந் தையுமற்று - அறிவற்று அறியா மையும் அற்றதுவே``3 என்னும் கந்தர் அனுபூதியிலும் ``அறிவு`` என்றது, நீக்கத் தக்கதாகிய பாச அறிவையேயாகும்.
ஒளியில் நின்றோரது கண்ணின் இயல்பை அதனையுடையார் மேல் ஏற்றிக் கூறினார். ``உயிர்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டி, ``உள்`` என்பதை ஒளியோடு இயைத்து, உயிர் ஒளி இருள் கண்ட கண்போல வேறாய், உள் ஒளியால் உள் இருள் நீங்கிச் சிவமாம்` என முடிக்க. திருவருளை ``உள் ஒளி`` என்றதனால் கருவிகளாகி ஒளிவெளி ஒளியாயிற்று. வெளியாவது உயிருக்கு வேறாய் நிற்பது.
இதனால், திருவருள் பாச ஒளிபோலப் புறமாய் நிலையாத தாகாது, அகமாய் நிலைபெற்று நிற்கும் சிறப்புடைய ஒளியாதல் கூறப்பட்டது. இம்மந்திரத்தின் முதலடிப் பொருள், ``ஒளிக்கும், இருளுக்கும் ஒன்றேயிடம்; ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும்; எனினும் இருள் அடராது`` * எனக் கொடிக்கவியிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த
திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.

பொழிப்புரை :

சிவன் தனது திருவுளப் பாங்கிற்கு மாறான வழியில் சென்று உழன்று கொண்டிருந்த என்னை அதற்குக் காரணமான அறியாமையைத் தனது திருவடிகளை என் சென்னி மேல் சூட்டு மாற்றால் போக்கி ஆட்கொண்டு, அதனால் தூய்மை பெற்ற எனது உள்ளத்திலே அவன் நீங்காது புகுந்து நிற்குமாற்றால் யான் அவனது அருளேயாய் நிற்கச் செய்து, அதனால், எனது இயற்கையை எய்திய எனக்கு அவனது அரிய இன்பத்தை அவன் தந்தவாறு எவ்வாறு என எண்ணி யான் ஒன்றும் தோன்றாது நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஏகாரங்கள் மூன்றும் அவற்றுக்கு எதிரானவற்றி னின்றும் பிரித்து நிற்றலால் பிரிநிலைகள். ``சூட்டி`` என்பதன் பின் `ஆட்கொண்டு` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. நிறம் - மார்பு; அஃது ஆகுபெயராய் நெஞ்சத்தைக் குறித்தது. அறிவை நெஞ்சமாக - உள்ளமாகக் கூறுதல் வழக்கு. ``நின்மலர்`` என்றது அதன் பயனாகிய ஞானத்தை உணர்த்தி நின்றது. இயற்கையை `தருமம்` என வழங்கும் வடமொழி வழக்கே பற்றி இவரும் ``அறம்`` என்றார். தித்திப்பதாகிய பால் அதன் இயற்கைக்கு மாறாகக் கசப்பது, நாவில் சேர்ந்த `பித்தம்` என்னும் செயற்கையாலேயாம். அந்தச் செயற்கை நீங்கிய பொழுது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல உறவுப் பொருளாகிய திருவருள் பகைப்பொருளாக உயிருக்குத் தோன்றுதல், அவ்வுயிரை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையாலேயாம். அச்செயற்கை நீங்கியபொழுது திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும் இதனை உமாபதி தேவர்,
``தித்திக்கும் பால்தானும் கைக்கும்; திருந்திடும்நாப்
பித்தத்தில் தான்தவிர்ந்த பின்``*
என விளக்கினார். அம்முறையிலே இங்கு நாயனார் ``அறமே புகுந்த எனக்கு`` என்றார். `புகுந்க` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பால் தித்தித்தலும், திருவருள் உறவுப் பொரு ளாதலும், செயற்கை காரணமாக முன்பு வேறுபட்டிருந்து, பின்பு விளங்குதலால் செயற்கைபோலச் சொல்லப்படுதல் பற்றி, ``புகுந்த என்னை`` என்றார். இயற்கைத் தன்மையே `குணம்` என்றும், செயற்கைத் தன்மை `குற்றம்` என்றும் சொல்லப்படும். குற்றத்தை வடமொழியாளர், `உபாதி` என்பர்.
திறம் - வகை. அது காரணத்தின்மேல் நின்றது. உயிர்களைச் சிவன் தானாகச் செய்தற்குக் காரணம் அவனுக்குள்ள அருளேயன்றிப் பிறிதின்மையை விளக்குவார், ``திறம் ஏது என்று எண்ணித் திகைத் திருந்தேன்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாய் நின்று செய்வன எல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

பொழிப்புரை :

பக்குவம் எய்தியபொழுது ஆணவ மலம் நீங்கத் திருவருட் பதிவு உயிரினிடத்து நிகழும். அப்பொழுது தான் உயிர் தன்னையும், தலைவனையும் உணரும் நிலையைப் பெறும். அப்பேற்றால் அது திருவருளாகிய பரவெளியிற் சென்று, அதன்கண் விளங்குகின்ற சிவத்தைப் புகலாக அடையும். அவ்வாறு அடைந்து நிற்றலே உயிர்பெறும் முடிநிலப் பேறாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``பின்னைச் சிவகதியாம்`` என்பதை இறுதியில் வைக்க. மருள் - மயக்க உணர்வு. அஃது ஆணவ மலத்தால் நிகழ்வன. ``நீங்க`` என்னும் செயவெனெச்சம் நிகழ்காலத்தில் வந்து உடனிலையாய் நின்றது. ``புகுந்தானை`` என்ற அனுவாதத்தால் அவன் புகுந்தமை முன்பே பெறப்பட்டது. சிவன் தனது அருளி வழியே புகுவன் ஆகலின் அவன் புகுந்தமை கூறவே அவனது அருள் புகுந்தமைதானே பெறப்பட்டது. தன்னை உணர்ந்த வழியே தலைவனை உணர்தல் கூடுமாகலின் தலைவனை உணர்தல் கூறவே தன்னை உணர்தலும் பெறப்பட்டது. உறு, துணைவினை. ``தெருளும், ஒன்றும், ஒன்றும்`` என்னும் பயனிலைகட்கு `உயிர்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. ஒன்றுதல் - பொருந்துதல். செய்யுள் நோக்கி, ``பொருளது என்ற புகலிடம்`` என்றாராயினும், `புகலிடம் என்ற பொருள்` என்றலே கருத்தென்க. எல்லாம் பொருளேயாயினும் உண்மையில் `பொருள்` எனப்படுவது மெய்ப்பொருளேயாதல் பற்றி அதனையே இங்கு, ``பொருள்`` என்றார். ``அது`` மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள். `அதுவே சிவகதி` என்றற்கு, ``பின்னைச் சிவகதியாம்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாதல், அதனைப் பெற்றார் பெறும் பேறுபற்றி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை
வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர்
தேறணி யாம்இது செப்பவல் லீரே.

பொழிப்புரை :

உலகீர், திருவருளை உள்ளவாறு நீர் உணர்ந்தீ ராயின், சிவனை யொழித்து ஒழிந்த தெய்வங்களுள் எதுவாயினும் அது பல்கால் பிறந்து வாழ்ந்து இறந்தமையை வேதாகம புராணங்களைச் சான்று காட்டிப் பலர்க்கும் விளக்கிக் கூறுங்கள். அங்ஙனம் கூறுமாற்றால் அவர்கள் வேறு எந்தத் தெய்வத்தையும் அதனிடத்து மெய்ப்பொருள் தன்மையை ஏற்றி மயங்கும் மயக்கத்தை நீக்குங்கள். இவ்வாறு செய்தலே பருந்துகள் கூட்டமாகக் கூடி உண்ணத்தகும் இவ்வுடல் அங்ஙனம் ஆகும்படி கீழே வீழ்ந்த காலத்தில் அரிய உயிர்தான் தனது உண்மை நிலையைத் தெரிந்து உய்யும் வழியாகும். ஆயினும், இவ்வாறு செய்ய நீர் மாட்டுவீரோ?

குறிப்புரை :

``செய்ய மாட்டுதல் அரிது`` என்றபடி,
``நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்;
ஈறி லாலதவன் ஈசன் ஒருவனே`` *
``எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேம்; நம் சோணேசா - இல்லில்
பிறந்தகதை யும்கேளேம்; பேருலகில் வாழ்ந்து,(உ)ண்டு
இறந்தகதை யும்கேட் டிலேம்`` *
``தாமோ தரன் முதலோர் சாதல்நூல் சாற்றுவதும்
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே`` 8
ஏனைய தேவர் பலரும் பிறத்தல், பின்பு உண்டு வளர்ந்து வாழ்தல், பின்பு இறத்தல் ஆகிய இவைகளை உடையவராதற்கு வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவை அனைத்தும் சான்றா இருக்கவும் அவரது அருள்களை, `திருவருள்` என்றல் மயக்க உணர்வேயாம் என்பதும், உண்மையுணர்வைப் பெற்றார் தாம் `சிவனது அருளே திருவருள்` என உணர்தலோடு பிறர்க்கும் அதனை உணர்த்தற்பாலர் என்பதும் கருத்து.
இதனால் `ஒளியாகிய திருவருளாவது சிவனது அருளே` என்பது முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

பொழிப்புரை :

ஞானம் முதிரப் பெற்றவர்க்கு இலிங்க பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கரு வறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.

குறிப்புரை :

எனவே, `அவர்க்கு இங்குக் கூறிய கருவறை முதலியன வேறு வேண்டா` என்பதாம் இங்ஙனமாகவே அவர் எஞ்ஞான்றும் இவற்றால் பூசை செய்து கொண்டேயிருப்பர் என்பதாம். வேறு கருவறை முதலியன புறத்தே நேரினும் அவற்றை அவர் இவ்வாறு பாவித்தே வழிபடுவர் என்பது உணர்க. \\\"தெள்ளத் தெளிந்தார்க்கு\\\" என்றதனால் இவ்வியல்பு ஞானியர்க்கு என்பது வெளிப்படை. பிறரெல்லாம் புறத்துக் காணப்படும் கருவறை முதலியவற்றையே அகத்தில் கற்பித்துக் கொண்டு வழிபட்டுப் பின்பு புறத்தே வழிபடுவர் என்க. அகத்தும், புறத்தும் ஞானியர் செய்யும் சிவபூசை `ஞான பூை\\\\u2970?` என்றும், ஏனையோர் செய்யும் சிவபூசை `கிரியா பூை\\\\u2970?` என்றும் சொல்லப்படும்.
\\\"ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்\\\" *
என்று அருளிச் செய்து இக்கருத்துப் பற்றியேயாகும்.
\\\"வள்ளற் பிரானார்க்கு\\\" என்றது `வள்ளற் பிரானாரைப் பூசித்தற்கு` என்றபடி. \\\"புலன்\\\" என்றது புலன் உணர்வை, அஃது இயல் பிலே மயக்கத்தைச் செய்வதாதல் பற்றி, \\\"கள்ளப் புலன்\\\" எனவும், `அஃது அங்ஙனமாயினும் ஞானியர்க்கு அது தெளிவையே தருவ தாகும்` என்றற்கு, \\\"காளா மணிவிளக்கே\\\" என்றும் கூறினார். `கலா` என்பது `களா` என்றாகிப் பின், \\\"காளா\\\" என நீண்டது. கலா - கதிர்.
இதனால், சிவபூசையின் ஞானப் பகுதியின் இயல்பு கூறப்பட்டது. இனி அடுத்து வருகின்ற மந்திரமும் இதனையே கூறும். சிறப்புப் பற்றி இதுவே முன்னர்க் கூறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

பொழிப்புரை :

வேள்வித் தீயில் சிவனை வழிபடுவோர் அவனை நோக்கி அத்தீயில் இடும் உணவை அவன் உண்டு மகிழ்வதாகவே கருதுகின்றனர். ஆயினும் அவர் கருத்தை அவன் உடன் பட்டு நின்றே அவர்கட்கு அருள் புரிகின்றான். இனி இலிங்கத்தில் அவனை வழிபடுவோர் அவ்விலிங்கத்தின் முன் வைத்துக் கையை அசைத்துக் காட்டுகின்ற பொருளை அவன் காணும் அளவிலே மகிழ்வதாகக் கருதுகின்றனர். அவர்கட்கும் அவர் கருத்தை உடன்பட்டே அவன் அருள் புரிகின்றான். அம்முறையில் அவனை உள்ளத்தலே உயிராகிய இலிங்கத்தில் வழிபடுகின்ற நாம் புறத்திலே வழிபடுவாரைப்போலப் பூசாகாலங்கலில் காட்டுதற்கு அங்கு எதனையுடையோம்? ஒன்றையும் உடையேமல்லோம். அதனால் அங்கு அவனுக்குக் காட்டும் உணவாவன அவனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற தோத்திரப் பாடல்களே யாகும். அதனால் அந்த உணவையே அங்கு நாம் காட்டுவோம். அஃது உண்மையில் சொல் வடிவாகவே யிருப்பினும் நமது கருத்து வகையால் அவனுக்கு அது பாலடி சிலேயாய் மகிழ்ச்சியைத் தரும்.

குறிப்புரை :

`ஊட்டி மகிழ்வித்தலும், காட்டி மகிழ்வித்தலும், எனச்சிவனுக்கு உணவைத் தரும் முறை இரண்டு என்றற்கும், அவ்விரண்டில் எந்த முறையையும் அவன் உணவைப் படைப்பார் கருத்து நோக்கி அதற்கிசைந்து அருள்புரிதலன்றி அவரது செயலால் தன் குறை நிரம்புதல் பற்றி அருள்புரிகின்றிலன் என்றற்கும் வேள்வி செய்வாரது செயலினையும் இங்கு உடன் குறிப்பித்தார். உண்பிப் பாரது கருத்தை உடன் படுதலையே \\\"உண்ணும்\\\" என உபசரித்துக் கூறினார். ஞான நெறியினது சிறப்புணரமாட்டாதார் புறத்தே பொருள்களைக் கொண்டு செய்யும் வழிபாட்டினையே சிறந்ததாகக் கருதுவர் என்பது தோன்றச் சிவபிரானை, \\\"வேட்டவி உண்ணும் விரி சடை நந்தி\\\" எனவும், `அங்ஙனமாயினும் ஞானபூசையே சிறப் புடையது என்றற்கு, \\\"காலையும், மாலையும் ஊட்டு அவியாவன பாட்டு\\\" எனவும், `அதுவே அவனுக்கு மிக விருப்பத்தைத் தருவது` என்றற்கு, \\\"உள்ளம் குளிர்விக்கும் பாட்டு\\\" எனவும் கூறினார்.
\\\"பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே\\\" *
என்று அருளிச் செய்ததும் காண்க.
\\\"வேட்ட\\\" என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவ்வவி காட்டுதும்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. \\\"காலையும், மாலையும்\\\" என்றதனால் காலை நேரம், மாலை நேரம் என்னும் இருநேரமாவது சிவபூசை செய்யத்தக்கது என்பது உணத்தப்பட்டது.
\\\"காலையும் மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம் ஆரூர் அரனெறி யார்க்கே,\\\"*
என்று அருளிச் செய்தமை காண்க.
`நிவேதித்தல்` என்னும் வடசொற்குப் பொருள் `நன்றாக அறிவித்தல்` என்பது. அதுவே தமிழில் `காட்டுதல்` எனப்படுகின்றது
இதனால், ஞான பூசையின் இயல்பு மேற்கூறப்பட்டவற்றிற்கு மேல் இன்றியமையாது கூறற்பாலதொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.

பொழிப்புரை :

பெருமையுடைய சதாசிவ மூர்த்தி அருவுருவத் திருமேனியனாயினும் அவன் அருவருமுங் கடந்த பரசிவனே என்பது தேற்றம், ஆதலால் இலிங்க வழிபாட்டில் சதாசிவ மூர்த்தியையே முறைப்படி ஆவாகனம் முதலியன செய்து ஒருவன் வழிபடு வானாயின், அவன் சிவனாம் தன்மைப் பெரும் பயனைப் பெறுவான்.

குறிப்புரை :

`வடிவம் யாதும் இன்மையால் அசிந்திதனாய் உள்ள சிவன் ஆன்மாக்களின் பொருட்டு வடிவங்கொண்டே சிந்திதனாய் நிற்றலால் பரசிவனைச் சதாசிவனாகக் கொண்டே வழிபட்டுப் பயன்பெறுதலே முறை என்றற்கு, \\\"பராபரன் ஆகும் சதாசிவன் றன்னை\\\" என்றார். \\\"ஆவாகித்து\\\" என்றது உபலக்கணம் ஆதலின், `ஆவாகணம் முதலியவற்றைச் செய்து` என்றதாம். ஆவாகனம் முதலியவாவன ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், நியாசம், அர்க்கியம், பாத்தியம், ஆசமனம், அபிடேகம், அலங்காரம், தூபம், தீபமம், நைவேத்தியம், ஆராத்திரிகம், பிரதட்சிணம், நமஸ்காரம், தோத்திரம், பிரார்த்தனை என்பன. இவற்றின் இயல்பெல்லாம் பத்ததிகளிலும், சிவபூசா விதி நூல்களிலும் அறிக; இங்கு விரிப்பின் பெருகும்.
\\\"மேன்முகம் ஈசானமாகவே கைக்கொண்டு\\\" என்றது, `மேல் சதாசிவலிங்கத்தின் இயல்பாகக் கூறியவற்றை அவ்வாறே உணர்ந்து செய்க` என அவற்றை இங்கு மீள நினைவுறுத்தியவாறு. `சீலம்` என்பது கடைக் குறைந்து, \\\"சீல்\\\" என நின்றது. சீலத்தை முகம் செய்தலாவது விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல்.
இம்மந்திரம் முதலாக வருவன எல்லாம் ஞானபூசை கிரியா பூசை இரண்டற்கும் பொதுவாவனவாம்.

பண் :

பாடல் எண் : 4

நினைவதும் வாய்மை மொழிவது மல்லால்
கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும்
கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

பொழிப்புரை :

சிவனை இலிங்கத்தின்கண் சதாசிவ வடிவில் வைத்து மேற்கூறியவாரெல்லாம் நினைதலும், அந்நினைவுகட்கு ஏற்ற மறை மொழிகளை அவ்வப்பொழுது முறையாகச் சொல்லுதலும், அவற்றோடு அவ்வவ்வுறுப்புக்களைப் பூவும், நீரும் கொண்டு போற்றுதலும் தவிர அவனைக் காண்பதற்கு வழி வேறில்லை. ஆகையால் அவனைக் காண வேண்டுவோர் பலரும் அவற்றையே செய்வர்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் அவற்றையே செய்மின்` என்பது குறிப்பெச்சம். சொல் சுருங்க வேண்டி வேறு வேறாக ஓதினாரேனும் இவ்வாறு ஒன்றாக வைத்துரைத்தலே கருத்தென்க. `இலிங்கத்தில்` என்பதும், `சதாசிவவடிவில்` என்பதும் அதிகாரத்தால் வந்தியைந்தன. தாம் தம் பயனைத் தப்பாது தருதல் பற்றி மந்திரங்களை \\\"வாய்மை\\\" என்றார். நினைதல் முதலிய மூன்றும் முறையே மனம், மொழி, மெய் இவற்றின் செயலாதல் தெளிவு. எனவே முப்பொறிகளும் பூசையில் ஒருங்கு இயைதல் வேண்டும் என்பது பெறப்பட்டது. ஞான பூசையில் மொழி மெய் இவற்றின் செயல்களும் அவ்வாறே பாவிக்கப்படும் என்க.
இதனால், சிவபூசை முப்பொறிகளாலும் இயற்றற்பாலதாதல் கூறப்பட்டது. இடையே சிவபூசையின் சிறப்பும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்தற்சித் தார்களே.

பொழிப்புரை :

தத்துவங்களில் ஒவ்வொன்றன் எல்லை காறும் அவற்றிற்குத் தலைவராக வைத்துப் பலராலும் திருமஞ்சனம் ஆட்டித் திருமாலை சூட்டி வழிபடப்படும் கடவுளர்களது உள்ளங்களில் சிவன் நிலைபெற்று நின்று அவ்வழிபாட்டின் பயன்களை அவரவர்க்கு வழங்கி நிற்றற்குக் காரணம் அவரெல்லாம் முன்பு சிவனைப் பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிடேகித்துப் பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து, கைகூப்பிக் கும்பிட்டு மனம் பொருந்தி வழிபட்டார்கள் என்பதே.

குறிப்புரை :

`என்பதே\' என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. அங்ஙனம் வழிபடப்படுவார் பிரமன், விட்டுணு என்னும் காரணக் கடவுளரும், பிறரும் ஆவர்.
\"அயன்றனை யாதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்\"
என்னும் சிவஞான சித்தியை இங்கு உடன் நோக்குக. இங்குக் கூறப்பட்ட மஞ்னம், மாலை, அஞ்சமுது என்பன உபலக்கணம். அவற்றால் சிவபூசைக்கு வேண்டப்படும் பொருள்கள் குறிக்கப்பட்டன. இதனால், சிவபூசையால் பெறப்படும் பயன்களுள் சிறப்புடையது ஒன்று எடுத்துக்கூறப்பட்டது. அதனானே `வழிபடப் படுபவன் சிவன் ஒருவனே\' என்பதும் `ஏனையோர் யாவரும் அவனை வழிபடுபவரே\' என்பதும் உடன் உணர்த்தப்பட்டன. வேதம், சிவன் ஒருவனையே \"விசுவ சேவியன்\" என்றும், \"தேயப் பொருள்\" என்றும் கூறும்.

பண் :

பாடல் எண் : 6

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே

பொழிப்புரை :

`சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவவிடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

\\\"இஃது அவர் வினையிருந்தவாறு\\\" என்பது குறிப் பெச்சம். \\\"உண்டு, உண்டு\\\" என்றது, அவற்றின் எளிமையும், முட்டின்மையும் கூறியவாறு.
\\\"கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள; நீருள;
கற்றைச் செஞ்சடை யானுளன்; நாமுளோம்;
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே\\\"l #
என்றதிலும் `எம் வினையே காரணம்` என்பதே குறிப்பு.
இதனால், சிவபூசை செயலால் எளிதாய்ப் பயனாற் பெரிதாயினும் அது நல்லூழ் உடையார்க்கன்றி ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

பொழிப்புரை :

(இங்கு இருக்க வேண்டிய இப்பாடல் பதிப்புக் களில் `மாகேசுர பூை\\\\u2970?` என்னும் அதிகாரத்திலும் அங்கு இருக்க வேண்டிய பாடல் இங்குமாக மாறியுள்ளன.)
புகழ்மிக்க நந்தி பெருமானாகிய எம் ஆசிரியர் எம்மை ஆளாக ஏற்றுக் கொண்டுபோய்த் திருமுன்பு சேர்ந்த, `நந்தி` என்பதையே தன் பெயராக உடைய சிவபெருமானை என்னால் ஆம் அளவும் துதிப்பதற்கு அந்த `நந்தி` என்னும் பெயரையே எப்பொழுதும் சொல்வேன்.

குறிப்புரை :

`இஃது எம் ஆசிரியர் ஆணை` என்றபடி, சிவபெரு மானுக்கு அவனது மூலமந்திரத்தில் உள்ள `சிவன்` என்பதே மெய்ப் பெயராயினும், அஃது அவனை வழிபடுவோர் யாவர்க்கும் பொதுவாய் நிற்க, அவரவரும் தம் தாம் தனித் தனிச் செய்யும் வழிபாட்டில் தம் பெருமானது மெய்ப்பெயராக ஒரு பெயரைக் கொள்ளுமாறு ஆசிரியர் பணிப்பர். அம்முறையில் நாயனார்க்கு அவர் வழிபடும் பெருமானது பெயராக `நந்தி` என்பதையே நந்தி பெருமான் அருளிச் செய்தார் என்க. இதனை நாயனார் எடுத்துக் கூறியதனால் சிவனைச் சிறப்பு வகையில் தமக்கே உரிய பெருமானாகக் கொண்டு வழிபடும்பொழுது அவனுக்கென்று ஒரு பெயரை அவரவரும் கொண்டு வழிபடல் வேண்டும் என்பது பெறப்பட்டது.
\\\"விட்ட\\\" என்பது, `அரசன் ஆக்கொடுத்த பார்ப்பான்` என்பதிற்போல, `சடையன்` என்னும் கோடற் பொருட் பெயர் கொண்டது. வருமளவும், ஆமளவும், \\\"நொந்து\\\" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `வருந்தியேனும் செய்வேன்` என்றதாம். `நந்தி யென்னும்பேர் பிதற்றொழியேன்` என்க.
இதனால், சிவபூசையில் இன்றியமையாது கொளற்பால தொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

பொழிப்புரை :

தேவர்கட்கெல்லாம் தேவனாகிய சிவபெருமானே! யான் இப்பிறப்பினின்று நீங்கி எப்பிறப்பை அடைந்து எங்கேயிருந்து எதனை மறந்து போனாலும் திருத்தமான பூ, நீர் முதலியவற்றைக் கொண்டு உன்னைச் சிறப்புடன் பூசிக்கின்ற இந்த வழக்கத்தை மட்டும் மறவாமல் கடைப்பிடித்து நிற்கும் வரத்தை அடியேன் முற்றாகப் பெறும்படி அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

`அஃது ஒன்றே யான் உன்பால் வேண்டுவது` என்பது குறிப்பெச்சம். தம் அன்பு மீதூர்வால் இவ்விண்ணப்பத்தினை நாயனார் சிவபிரானிடம் செய்து நின்றைமையால், `சிவபூசை செய்வார் அப்பூசையில் இதனையே அவன்பால் வேண்டுக எனக் கூறி, அதனானே, சிவபூசையை மேற்கொண்டவர் அதனை ஒரு ஞான்றும் கைவிடுதல் கூடாது` என்பதனையும் உணர்த்தியவாறு. சொற்கிடக்கை முறை வேறாயினும் கருத்து நோக்கி இதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது. `நின்னை வழிபடும் வண்ணம் மறப்பின்மை பெறவேண்டும் என்க.
\\\"புழுவாய்ப் பிறக்கீனும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\\\"l
என வேண்டினமையை நினைக.

பண் :

பாடல் எண் : 9

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமே
ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

தெய்வ வழிபாடுகளும், வழிபடப்படும் தேவர் கூட்டங்களும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நிலத்தில் எங்கும் அளவின்றி உள்ளன. உண்மையாக ஆராய்ந்தால், அவ்வழிபாடுகளில் வேறு வேறாகச் சொல்லப்படுகின்ற அளவற்ற பெயர்களும் சிவன் பெயர்களே என்பதும், `அனைத்துத் தெய்வங்களும் சிவனே` என்பதும் விளங்கும்.

குறிப்புரை :

`அதனால், சிவனையே நேராகப் பெரியோர் வழிபடுவர்` என்பதாம்.
\\\\\\\"காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம்; அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல்\\\\\\\"
எனவும்,
\\\\\\\"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்;மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும்; பிறக்கும்; இறக்கும்; மேல் வினையும் செய்யும்;
ஆதலால் அவையிலாதான் அறிந்தருள் செய்வனன்றே\\\\\\\"
எனவும்,
\\\\\\\"இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவர்? அன்றேல், அத்தெய்வம் அத்தனைக்காண்\\\\\\\" 8
எனவும் விளக்குதல் காண்க. (தெய்வப் பெயராய் வரும்) \\\\\\\"எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர் என்பதே வேதநூல் துணிபு என்பது ஆண்டுக் (சுவேதாச் சுவத உபநிடதத்தில்) காண்க\\\\\\\" என்னும் சிவஞான மாபாடியமும் 3 இங்கு நினைக்கத் தக்கது.
இவ்வாறெல்லாம் கூறுதல், `சிவபிரான் தவிர ஏனைத்தேவர் பலரும் பசு வருக்கத்தினரே` என்பதும், `சிவபிரான் ஒருவனே பதி` என்பதும் விளங்குதற் பொருட்டாம். ஆகவே, `பசு வருக்கத்தினரைப் பதியாகக் கருதிச் செய்தும் வழிபாடுகள் யாவும் நல்வினைகளாய்ப் பிறவியைத் தருதல் அன்றிப் பிறவியை நீக்கமாட்டா` எனவும், `சிவபிரானைப் பதியாக உணர்ந்து செய்யும் வழிபாடே தவமாய் ஞானத்தைப் பயந்து, அது வழியாக வீட்டைத் தரும்` எனவும் உணர்ந்து கொள்க. இம்மந்திரத்தல் பலவிடத்துப் பாடங்கள் திரிபெய்தன.
இதனால் சிவ பூசையின் தனிச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.

பொழிப்புரை :

பசுவினின்றும் பெறப்படுகின்ற அரிய பொருள் ஐந்தினாலும் திருமுழுக்காட்டித் தேவர் கூட்டம் வழிபட, ஆதியும், அந்தமும் இல்லாதவனாகிய சிவனது திருவருள் அவர்கள் உள்ளங்களில் மலர்ந்த தாமரை மலரில் தோன்பேல வெளிப்பட்ட விளங்கிற்று. (அதனால் அவர்கள் பேரின்பம் பெற்றனர் என்றபடி.) இங்ஙனம் தன்னை வழிபட்டு உய்தற்காகவே ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப் பத்து இந்திரியங்களையும் அவை செயற்படுதற்கு ஆற்றலைத் தருகின்ற தன்மாத்திரைகள் ஐந்தினையும் சிவன் உயிர்கட்குப் படைத்துக் கொடுத்தான்.

குறிப்புரை :

`அதனை உணர்ந்து அக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்` என்பதாம். பசுவினின்றும் பெறப்படும் அரும் பொருள் ஐந்தும், `பஞ்ச கௌவியம்` எனப்படும். அவை பால், தயிர், நெய் கோசலம், கோமயம் என்பன. இவை ஐந்தும் ஒன்றாகக் கலந்த பொழுதே `பஞ்ச கௌவியம்` எனப் பெயர்பெறும். அவற்றைக் கலத்தற்கு அளவுகள் உண்டு. கோசலம் - பசுவின் நீர். கோமயம் - சாணம். இவை தூய்மையின் பொருட்டு மிகச் சிறிதளவிலே சேர்க்கப் படும். இவற்றது சிறப்புணராது இக்காலத்துப் புத்தறிஞர் சிலர், இவற்றை நீக்கி, வெண்ணெய், மோர் இவற்றைக் கொள்ளல் வேண்டும்` என்பர். வெண்ணெய், நெய் இவற்றை வேறு வேறாகவும், தயிர், மோர் என்ப வற்றை வேறு வேறாகவும் வைத்து எண்ணிக்கை காட்டும் இவரது செயல் வியப்பிற்குரியதே. இவர்க்குச் சாத்திரமும் வேண்டா; சம்பிரதாயமும் வேண்டா ஆகலின் இழரைத் தெருட்டல் அரிது.
\\\"இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலம் அனைத்து நீக்குவது\\\"l
என்பன முதலிய மெய்ம் மொழிகளை இவர்கட்குக் காட்டிப் பெருவதென்?
தனித்தனியாக ஆட்டும்பொழுது பால், தயிர், நெய் என்னும் மூன்றுமே ஆட்டப்படும். அவைகளை எவ்வளவும் ஆட்டலாம். அதனால் சிறிதளவே கொள்ளுதற்குரிய கோசல கோமயங்கள் தனித் தனியாக ஆட்டப்படா.\\\"ஓர் பான் ஐங்குணனும்\\\" என்பதை ஓர்பானும், ஐங்குணனும்` என்க. பூதங்களின் குணமாகிப் புலப்படுத்தல் பற்றித் தன்மாத்திரைகளை, `குணம்` என்றார்.
இதனால், சிவபூசையில் கொள்ளத்தக்க ஒன்று கூறப்பட்டது. சிவபூசை செய்த மானுடப் பிறப்பின் பயன் என்பதை இடம் வாய்த்துழி உடன் கூறினார்.
\\\"மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காகஅன்றோ!
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ\\\" 3
என்றது காண்க. இச்செய்யுளிலும்.
\\\"பாவமும் பழி பற்றற வேண்டுவீர்,
ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்
மேவ ராய்மிக வும்நினைந் துள்குமின்\\\" *
என்னும் திருமொழியிலும் `சிவன் ஆவிவ் அஞ்சினை உகந்து ஆடுபவன்` என்பது உணர்த்தப்பட்டது. அஃதே, \\\"ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்\\\" * என்று அருளிச்செய்யப் பட்டது. \\\"அரன் அஞ்சு ஆடுதல்\\\" என்பதை, `அரன் ஆடும் அஞ்சு` என மாற்றிப் பொருள் கொள்க.

பண் :

பாடல் எண் : 11

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

பொழிப்புரை :

`தேவர்` என்பார் யாவரும் ஒவ்வொரு பொருட்கு அதன் எல்லையளவும் உரிமை பூண்டு நிற்பவரே. அவ்வுரிமையை அவரெல்லாம் நல்ல இடத்திலிருந் எடுக்கப்பட்ட பூவையும், அவ்வாறே நல்ல இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரையும் கையில் ஏந்திக் கொண்டு நீரை முகந்து வரும் கரிய மேகங்கள் போல ஓரோர் தலத்தில் சென்று மிக்க அன்புடன் சிவபெருமானைப் பூசித்து அவன் பெரிதும் அருள் செய்யவே பெற்றனர்.

குறிப்புரை :

`அதனால் நற்பேறுகள் யாவும் சிவபூசையின் வழிப்பெறும் பயனேயாம் என்றபடி, `முன் செய் பூசா பலம்` என்னும் வழக்கினை நினைக.
``வண்டுளரும் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்உரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்`` *
எனவும் ஆன்றோர் அருளினமை அறிக. இன்னும்,
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண் ஆள்வீர், பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனோ டொன்ற லுற்றீர்,
நல்காமலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும்
அல காமுறுவீர், அரனடி யரை அலைமின்களே`` 3
என்றற்றொடக்கத்தனவும் காணத் தக்கன. `பிழைப் பின்றிப் பெற்ற பேரருள்` என்க. அருளால் பெற்றவற்றை ``அருள்`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், `சிவபூசையே யாவராலும் செயற்பாலது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :

உள்ளே ஓட்டத்தையுடைய கடலாகிய கங்கை விரியப்பெறுகின்ற சடைமுடியை உடைய சிவபெருமான் பொருட்டு உள்ளத்திலே நிறைவதாகிய அன்பு என்னும் கடலுள் மூழ்கிப் பூவை நிறையப் பறித்துச் சுமந்துகொண்டு போய் போலியாகிய நற் குணங்களை ஒழித்து உண்மை நற்குணங்களை உடையவராய் வழிபட நினையாதவர்கள் துன்பமாகிய கடலுள் மூழ்குகின்றனர்.

குறிப்புரை :

இதனை மேற்காட்டிய `கால் நகம் தேயத் திரிந்திரப் போர்`` என்றது திருமொழிகளில் அறிக. ``வெள்ளம்`` பெருக்கெடுத்து ஓடுதலைக் குறித்தது கடலுக்கு ஓட்டம் இன்மையால் ஓடுகின்ற கடல் கங்கா நதியாயிற்று. நீர்க்கடல் புறத்தே உளதாகலின், உள்ளக் கடல்`` என்றது பேரன்பினையாயிற்று. ``ஓர்சுமை`` என்றது மிகுதியைக் குறித்தது. கள்ளம் - பொய்மை. `கள்ளக் கடல், அள்ளற் கடல்` என்பன உருவகங்கள், `அல்லல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. இனி, ``அள்ளல், ஒருவகை நாகம்`` என்றலும் ஆம்.
மேல் சிவபூசை செய்தார் எய்தும் பயன்களைக் கூறியதனால், இதனால் அது செய்யாதார் எய்தும் துன்பங்களைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 13

கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.

பொழிப்புரை :

`தம் பிறவியை கழிக்கின்றார்கள்` எனக் கூறப் படும் பழியைப் பொருட்படுத்தாது அதனுள் அகப்பட்டு நிற்கின்ற உலகர் பலரும், கழி பொருந்திய கடலின் ஆரவாரம் போலும் உலகியல் ஆரவாரங்களை ஒழித்துச் சிவனை வழிபடுகின்றவர்கள் இட்ட பூக்களும், போதுகளும் நிரம்பக் கிடத்தைப் பலகால் கண்டா ராயினும் அவை விளைக்கும் பயனை அறியமாட்டார்கள். ஆயினும், அப்பழி நீங்க அவரது கூட்டத்தினின்றும் வேறுபட்டு நின்று வழிபடுவோரைத்தான் சிவன் தனது திருவருள் வியாபகத்துள் வைத்துப் பாதுக்காக்கின்றான்.

குறிப்புரை :

`கடற் கௌவைபோலும் கௌவை` என்க. கௌவை - ஆரவாரம் உடைத்தல் - அழித்தல். வழிபடுவார்` என்பது எதுகை நோக்கி விரித்தல் பெற்றது `வழிபடுவார்` என்புழி, `சிவனை` என்பதும், ``மேவி நின்றான்`` என்புழி, `சிவன்` என்பதும் அதிகாரத்தால் வந்தன. வழிபடுவாரது மலரும் மொட்டும்` என ஆறன் உருபும், எண்ணும்மையும் விரித்துக் கொள்க பலரும் அறியார்கள்` என்க. இனி, `பலரும் அறியார்களாய்ப் பழிப்படுவார்` என முடிப்பினும் ஆம். வெளிப்படுதல் - விட்டு நீங்குதல் - தனது திருவடி வியாபகத்துள் அடக்குதலே `உச்சி மேவுதல்` எனப்படுகின்றது.
இதனால், சிவபூசை செய்வாரது உயர்வு, செய்யாதாரது இழிவும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

பொழிப்புரை :

`பயனுடைய செயலாவது இது` என அறியும் அறிவு ஒன்றே ஒன்றுதான் இவ்வுலகில் உள்ளது. அஃது யாதெனின், பலவகை மலர்களைத் தூவி வழிபட்டு, அதனால் விளையும் பயனை அறிந்து அதனையே மேலும் மேலும் செய்பவர்க்குச் சிவன் தானே பலகாலும் வலியவந்து அருள் செய்தலை அறிதலேயாகும். ஆகையால் அவ்வறிவின்வழி ஒழுகுவார்க்குச் சிவன் அவர் சொல்லியவாறெல்லாம் என்றும் எளிவந்து அருளுவன்.

குறிப்புரை :

அவ்வாறு அருளுதலை, பொதிசோறு சுமந்து வந்தளித்தமை, இரந்துவந்து சோறிட்டமை, வற்கடம் வருத்தாது படிக்காசு தந்தமை, காசி வாசி தீர்த்து வழங்கினமை, துணைவிபால் தூது சென்று ஊடல் தீர்த்தமை முதலிய பலவற்றிலும் வைத்து உணர்க.
`பயனை அறியும் அறிவு` என்க பயன் தரும் செயலை, `பயன் என்றார் இரண்டாம் அடியின் இறுதியில் `அதனை யறிதல்` என்பது எஞ்சி நின்றது. ``அரன்`` என முன்னர்க் கூறினமையால், ``நயனங்கள் மூன்றுடையான்`` என்றது, `அவன்` என்னும் சுட்டளவாய் நின்றது. `வசனம்` என்பது `வயனம்` எனத் திரிந்தது.
இதனால், சிவன் தன்னை வழிபடுவார்க்கு இம்மையிலும் இனிதருள் செய்தல் கூறப்பட்டது.
``வேதன் நாரணன் ஆரணம் அறியா விழுப்பொருள்
பேதைபால்
தூதனாய் இருகால் நடந்திடு தோழன்
வன்மைசெய் தொண்டனுக்(கு)
ஆதலால் அடியார்களுக் கெளியான்
அடிக் கமலங்கள் நீ
காதலால் அணை; ஈண்டன வேண்டின
இம்மையே தரும கண்டிடே`` l
என அறிவுறுத்தினமை காண்க.

பண் :

பாடல் எண் : 15

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.

பொழிப்புரை :

சிவனைக் காணலுறுவார் யாவரும் அவனது திருவருள் வடிவாகிய அவனது திருவடியின் கீழ்த்தம்மைத் தாமே கட்டி வைத்து, அவனை மிக்க மலர்களைத் தொழுது துதித்தலையே செய்வர். அங்ஙனமன்றி, எனக்கு எதிர் தோன்றிக் காட்சி வழங்கியவனும், என்றும் கெடுதல் இல்லாத முதற்பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனை யாரும் தாம் இருந்த நிலையிலேயிருந்து காணமாட்டார்கள்.

குறிப்புரை :

பின்னர், ``யாரும் உணரார்`` என்றதனால், முன்னர் ஏத்துதல் முதலியவற்றைச் செய்பவர் உணர்வோராதல் பெறப்பட்டது. ஆர்த்தல் - பிணித்தல். ``அருட் சேவடி`` என்பதன் பின் `கீழ்` என்னும் பொருள்பட வந்த கண்ணுரு இறுதிக்கண் தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு பட்டு என்றபடி. துதித்தல் நிலை பெற்றிருத்தல்; என்றது, ஆட்படாது தனிநிற்றலைக் குறித்தது.
``தொழுவார்க்கே யருளுவது சிவபெருமான்`` 3
என்று அருளிச் செய்தமை காண்க.
இதனால், `சிவனை இலிங்கத் திருமேனியில் மலர்தூவி வழிபடாதார் காணமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

பொழிப்புரை :

தேவர்கள் தத்தமக்கு வாய்ப்பான ஓரோர் இடத்தை அடைந்து நிலத்தல் நால்வகையாகத் தோன்றுகின்ற பூக்களையும், நீரையும் சுமந்து சென்று சிவனைத் திருவுருவங்களில் வழிபட்டு, அதனாலே மூவரில் ஓரோரொருவராயும், அவர் தவிர ஏனைத் தேவரில் ஓரொருவராயும் தலைமை பெற்ற அத்திருவருட் சிறப்பினை யறிந்து அவ்வாறு அவனை வழிபட வல்லார் யாவர்!

குறிப்புரை :

`அத்தன்மையோர் மிக அரியர்` என்றபடி, `திசை` என்பது `இடம்` என்னும் பொருட்டாய் நின்றது. நால்வகைப் பூக்களாவன - `கோட்டுப் பூ, கொடிப்பூ, நீர்ப்பு, புதர்ப்பூ` என்பன. இவை யாவும் நிலத்திலே தோன்றுதலின் அவை யாவும் அடங்க, `மண்ணோடுறும் பூ`` என்றார். ``மூவரிலும் பன்மையிலும் முதல்வராய்`` என்க. `பலர்` எனற்பாலதனை, ``பன்மை`` என எண்ணின்மேல் வைத்துக் கூறினார். ``நின்ற`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
மேல், `உழைக்கொண்ட பூநீர்`` என்னும் மந்திரத்துள் `எல்லா நலங்களும் சிவ பூசையின் பயனேயாதலை விளக்குதற்குக் கூறிய அதனை, அஃதுணர்ந்து பயன் பெறுபவர் உலகத்து அரியர்` என்ப துணர்த்துதற்கு இங்குக் கூறினார் என்க. இதன் ஈற்றடி எதுகை பெறாது வந்தது.

பண் :

பாடல் எண் : 17

உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

பொழிப்புரை :

நீரும், பூவும் சுமந்து சென்று நோற்க வல்லவர் நடுவிலே நீவிரும் அமர்ந்திருந்து அவரைப்போல நீவிரும் சிவனிடத்தும் பெரிய தவத்தைச் சிறிதும் குற்றமறச் செய்தலில் கருத்துடையீராய் அவனது திருவடிகளில் பலவகைப் பட்ட மலர்களைத் தூவி, அன்புக் கண்ணீரைப் பொழிதலால் மழையைப் பெய்யும் மேகத்திற்கு ஒப்பாகும்படி அச்செயலில் நிலைத்து நில்லுங்கள்.

குறிப்புரை :

`மலர் ஏந்தி, மலர் தூவி`` என இருகாற் கூறினமையால் இதற்கு இவ்வாறுரைத்தலே கருத்தென்க. மெய்யன்பர் மெய்யன் பரையே ஏற்றுக்கொள்ளுதல் பற்றி, அவர் நடுவில் இருந்து பூசை செய்க` என்றார். அணிகலத்தை உணர்த்தும் `இழை` என்பது இங்குச் சிலம்பினைக் குறித்து நின்றது.
இதனால் `மெய்த் தொண்டரின் உடன்படும் பூசையே பூசையாம்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வென்று விரைந்து விரைபணி என்றனர்
நின்று பொருந்த நிறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.

பொழிப்புரை :

உலகியலை அது மயக்காதவாறு வென்று போக்கி, `இனியாம் விரைந்து செய்யத்தக்க பணியாது` என எண்ணி நின்றவர் யவரும், என்றும் நல்லதொரு பணியில் நின்று சிவனை அடை வதற்கும், சிவனுக்கு மன நிறைவான பண தமக்குக் கிடைத்தற்கும் மிகுந்த நீலையும், பூவையும் கொண்டு ஆட்டியும், தூவியும் வழி பட்டால், சிவன் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வான். இது படைப்புக் காலத்திற்றானே அப்பெருமானால் சொல்லப்பட்டது.

குறிப்புரை :

``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை`` 8
என உரைத்தருளினமையை நோக்குக.
``என்றனர்`` என்பது வினையாலணையும் பெயர். `என்றனர் தொழுதிடில் நித்தனும் கொண்டிடும். இஃது அன்றே கூறியது` என முடிக்க மலருக்குரிய தூவுதல் கூறினமையின், சலத்திற்குரிய சுட்டுதல் வருவிக்கப்பட்டது. `நித்தலும்` என்பது பாடமாயின் `சிவன்` என்பது வருவிததுக் கொள்க. ``கூறியது`` என்னும் பயனிலைக்கு `அவன்` என்னும் எழுவாய் தோன்றாது கூறியது சிவாகமங்களில்` என்க.
இதனால், துறந்தார் சிவபூசையைக் குறவின்றி நிறைவாகச் செய்து சிறந்த பயனைப் பெறற் பாலர்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.

பொழிப்புரை :

சிவனை நாள்தோறும் இலிங்கததில் வைத்து, `சுயம்பு` முதலிய பெயர்களை மிகவும் சொல்லி மலர்களைச் சாத்தியும். திருப்பாடல்கள் பலவற்றால் மிகத் துதித்தும் நின்றால் காணுதல் கூடும். அஃது இயல்வதொன்றுறாய் இருக்கவும் அதனைச் செய்யாது புறக்கணித்துப் போவதால் உலகத்தார் சிவனைக் காண்கிலர். ஆயினும் இங்குக் கூறியவாறு ஆத்தி முதலிய மலர்களைத் தூவி அருச்சித்தலே அக அழுக்காகிய மும்மலங்களும் நீங்குதற்குரிய வழி. மும்மலங்களும் நீங்கினால் பெருந்திசையாகிய வீட்டு நிலையிற் செல்லுதல் எளிதாகும்.

குறிப்புரை :

``வைத்தும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. வைத்தல் - தாபித்தல். `இலிங்கத்தில்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஏற்றுதல் - மிகுவித்தல். சிவனுக்கு ஆத்தியும், கொன்றையும் சிறப்பாக உரியன ஆதலின் அவற்றுள் ஒன்றை விதந்து கூறினார்.
இதனால், `மலம் நீங்கி வீடு எய்துதற்கு வழி சிவ பூசையே` என்பதும்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம்
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.

பொழிப்புரை :

உடம்பில் கீழாக உள்ள மூலம் முதலிய ஆறும், அதற்குமேல் ஏழாவதாக உச்சியில் உள்ளதும் ஆக ஏழு உறுப்புக்களும் தாமலை மலர் வடிவின அவை, ``ஆதாரங்கள்`` எனப்படும். ஏழாம் தானத்திற்குமேல் பன்னிரண்டங்குல அளவு அருவமாய் நிற்றலால் அது `நிராதாரம்` எனப்படும். அந்த நிராதாரத்தையே, ``ஆவிக் கமலத்தின் அப்புறம்`` என்றார் இனி, அப்பன்னிரண்டங்குலத்திற்கு அப்பால் உள்ளது ``மீதானம்`` எனப்படும். `துவாதசாந்தம்` என்பதும் இதுவே. இதனையே, ``அப்புறத்தின் புறம்`` `மீதானமே பரமசிவனுக்கு இடமாவது` எனக் கூறப்படுதலால், அவ்விடத்தில், ``மேவித் திரியும் விரிசடை நந்தியை`` என்றார்.
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 3
என்றது காண்க. கூவி - அழைத்து. ஆதாரங்களையும், நிராதாரங் களையும், அதற்கு மேலேயுள்ள மீதானத்துயம் கடந்து அப்பால் உள்ள பரமசிவனை அழைக்க வேண்டுதலால், அதன் பொருட்டடு மலர்களை இருகைகளையும் தாமரைப் போது வடிவமாகக் குவித்தலும், மலர்த்தலும் இன்றி இடைப்பட்ட வடிவமாக வைத்து அதனுட் கொண்டு, இருதயம் முதலாக மேலுள்ள ஆதாரங்களில் பிராசாத மந்திர உச்சாரணத்துடன் முறையே மீதானம் மட்டும் உயர்த்துவர். அதன்பின்பு அங்கு இருகைகளையும் மலர்த்தி அவற்றுள் பரமசிவன் அளவிடற்கரிய ஒளிவடிவாய் வந்ததாகக் கருதி, கைகளை உயர்த்திய முறையிலே மீள இறக்கிக் கொணர்ந்து சிவலிங்கத்தின் உச்சியில் அம் மலர்களைச் சொரிந்து முன்னமே சதாசிவ மூர்த்தமாகப் பாவித்து நிறுத்தப்பட்ட அம்மூர்த்தியின் இருதயத்தில் இருகைகளையும் கவிழ்த்து அமைக்கும் முறையால் இருக்கப் பண்ணுவர். அழைத்தல், அல்லது கொணர்தல் `ஆவாகனம்` எனவும், இருத்துதல் `தாபனம்` எனவும் சொல்லப் படும். அவற்றையே, ``கூவிக் கருதி`` எனவும் ``கொடுபோய்ச் சிவத்திடைத் தாபித்தல்`` எனவும் கூறினார்.

குறிப்புரை :

``தாவிக்கும் மந்திரம் தாம் அறியார்`` என்றாரியினும், `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றலே கருத்தென்க. ``கூவிக் கருதிக் கொடுபோய்த் தாவித்தலை அறியார்`` என்றதனால், `இவற்றுள் ஒன்றையும் அறியார்` என்தாயிற்று. இனி, `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றதனால், `சிலர் சிவ பூசை செய்யினும் முறைப்படி ஆசிரியரை அணுகி அவர் அருளிச்செய்தபடி செய்தலை அறியார்` என்றதும் ஆயிற்று. ஆவி - உயிர். அஃது ஆகுபெயராய் அஃது இருக்கும் இடமாகிய உடம்பைக் குறித்தது. ``ஆவி`` குளமுமாம் ஆதலின், குளத்தின் கண் உள்ள தாமரை` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது.
இதனால், சிவபூசை செய்யத்தக்கது` என்பதும், `செய்யுங்கால் முறைப்படி செய்தலே சிறப்பு` என்பதும் கூறப்பட்டன.
இம்மந்திரத்தின் பின் சில பிரதிகளில் காணப்படுகின்ற ``சாணகத் துள்ளே`` என்னும் பாடல் சில பிரதிகளில் இல்லை. அது நாயனார் வாக்காகத் தெரியவில்லை.

சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணு மளவும் கருத்தறிவா ரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

அதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``பெருந்தன்மை நந்தி`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்கு உரியது.

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றோரே.

அதனை அடுத்துக் காணப்படும் ``சமைய மலசுத்தி`` என்பது ஐந்தாம் தந்திரத்தில் ``சரியை`` என்னும் அதிகாரத்தில் வந்தது.

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆமந் திரசுத்தி
சமையுநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமா னார்க்கபி டேகமே.


பண் :

பாடல் எண் : 21

ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே.

பொழிப்புரை :

பாற்கடலில் பள்ளி கொள்பவனாகிய திருமாலும், மற்றும் பிரமனும் எத்துணையோ யுகங்கள் வாழ்பவராயினும் சிவபெருமான் அவர்கட்கு எட்டாதவனாகவே யிருக்கின்றான். அதனால், அளவற்ற பிறவிகளில் அளவற்ற யுகங்களில் சிவனைப் பொது நீக்கியுணர்ந்து வழிபடுபவர்கட்கல்லது ஏனையோர்க்கு அவரது வினை அவனை அடைய ஒட்டாது.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. யாதொரு பிறப்பும் நிலையாததே ஆகையால், `ஊழிதோறும் உணர்தல் வேறு வேறு பிறப்பை எடுத்து` என்பது வெளிப்படை. உணர்தற்குச் செயப்படு பொருளாகிய `சிவனை` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனால், ``உணர்தல்`` என்றது சிவனை உணர்தலேயாகையால், பொது நீக்கி உணர்தலாயிற்று. ``உணர்வும்`` என்ற உம்மையால் பின்னின்ற உணர்தல், உணர்ந்து அடைதலைக் குறித்தது.
``பல்லூழி காலம் பயன்றரனை அற்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இவ்வுயிர் - இவ்வுலகத்துயிர்.
இதனால், `சிவனை உரை அடைதல் சிவஞானிகட்கே கூடும்` என்பதும், `சிவஞானம் சிவபூசையாலன்றி வாராது` என்பதும் முடித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.

பொழிப்புரை :

எனக்கு இனி வேறொரு துணையின்றாகத் தாம் ஒருவரே துணையாய் நிற்கின்ற நந்தி பெருமானது திருவடிகளைப் பற்றி நின்றே உயிர்கள் பற்றி ஒழுகுதற்குரிய இறைநூல், அவற்றின்வழி இறைவனை வழிபடும் வழிபாடு, அகக்கோயில்களாகிய ஆதாரங்கள், முப்பத்தாறு தத்துவங்கள், அத்தத்துவங்களைக் கடந்து அவையனைத் திற்கும் மேலே செல்கின்ற தூய்மை ஆகிய இவைகளை நான் கருத்தாக உணர்ந்து, உலகர்க்கும் உரைப்பேனாயினேன்.

குறிப்புரை :

`இது குருவருளால் கிடைத்த பேறு` என்பதாம். இறைவன் உயிர்களின் பொருட்டு அருளிச்செய்தன ஆதலான், அவனது நூலாகிய வேத சிவாகமங்களை ``உபதேசம்`` என்றார். ``போதம்`` இரண்டில், முன்னது நடத்தல்; அஃதாவது ஒழுகுதல். பின்னது, கடந்து செல்லுதல். வேதச் சிறப்பு. ஆகமச் சிறப்பு முதலி யவைகளை நாயனார் முதற்றொட்டுக் கூறிவருதல் வெளிப்படை. தமது வரலாற்றை உணர்த்துதற் பொருட்டுப் பாயிரத்துள், ``நந்தி யருளாலே நாதனார் பேர்பெற்றோம்`` எனக் கூறிய அதனை இங்குக் குருவருளின் பெருமையை உணர்த்துதற் பொருட்டுக் கூறினார். குருவருளால் தாம்பெற்ற பேற்றினையும், குருவை மறவாமையும் கூறியதனால், `நீவிரும் குருவை அடையின் இப்பேற்றினைப் பெறலாம். பெற்றபின் குருவருளை மறக்கலாகாது` என்பது குறிப் பாயிற்று, ``போகின்ற`` இரண்டில் முன்னதில் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. தூய்மையை, ``பொற்பு`` என்றார். வீட்டு நிலை, சுத்தநிலையாதலை அறிக.
இதனால், குருவருளின் சிறப்பும், அதனைப் பெற்றோர் அவரை நினைந்தே எதனையும் செயற்பாலர்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.

பொழிப்புரை :

சிவனது திருவருளை மிகப்பெற்ற நந்தி பெருமான், அப்பேறுடைமை பற்றியேயன்றிச் சிவனோடு மாறுபட்டுப் பகைச் செயலையே புரிகின்ற ஆணவ இருளுக்குப் பகலவனாய் இருத்தல் பற்றியும் அவரை முனிவரும், தேவரும் தம் இதயத்திலே எப்பொழுதும் வைத்துத் தியானிக்கின்றனர்.

குறிப்புரை :

சிவனது திருவருளினும் பெரியது வேறொன்றின் மையால் அதனையே, ``பெருந்தன்மை`` என்றார். ``பெருந்தன் மையை உடைய நந்தி`` என்க. நேமி சக்கரம் ஆதலின் அது `பரிதி` என்னும் பெயரைத் தோற்றுவித்துப் பகலவனை உணர்த்திற்று. `நேமியாம் இருந்தன்மை` என்க. இருந்தன்மை - சிறப்பு. உம்மை இறந்தது தழுவிற்றாகலின் அதற்கேற்ற பொருள் முன்பு வருவிக்கப் பட்டது. ``என் சித்தத்தே தன்னை வைத்தருளிய குருமூர்த்தி * ``என்னையிப் பவத்திற் சேராவகை`` என்றபடி ``வானவர்`` என்பதில், ``வான்`` என்பது, `உயர்வு` என்னும் பொருட்டாய் நிற்க. ``வானவர்`` என்பது, `உயர்ந்தோர்` எனப் பொருள் தந்தது. ``வானவர் தேவர்`` உம்மைத்தொகை. இதனை, ``தாங்கி நின்றார்`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. `தாங்குதல் அறிவினால்` ஆகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
இதனால் `முனிவர், தேவர் என்பவரும் குருவின் வழியே ஞானம் பெறுகின்றனர்` எனக் குருவருளின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.

பொழிப்புரை :

காட்டில் பொருந்தியுள்ள கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தெடுக்கப்பட்ட நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தையும், அதுபோலவே ஆகாயம் அளாவக் குவிக்கபப்ட்ட பெருமை மிக்க மலர்கலையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் உடம்பைத் தம்மின் வேறாக உணர்ந்து அதன்கண் உள்ள பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்பவர்க்கல்லது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

குறிப்புரை :

`அவனை அவ்வாறு உணரும் உணர்வைக் குருவினால் அன்றி அடைய இயலாது` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `மேற்கூறிய சிவபூசையும் குருவருள் பெற்றே செயற்பாலது ஆகலின், சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

பொழிப்புரை :

குருவருளால் கேள்வியாகப் பெற்ற ஞானத்தைப் பின் சிந்திதத்ல, தெளிதல் என்பவற்றின்பின் நிட்டையாக முதிரப் பெறின் அவ்விடத்தில் அந்த நிட்டையில் நிற்றலே பரசிவ பூசை யாகும். (ஆகவே அந்நிலையை அடைந்தவர்க்கு ஏனையோர்க்குக் கூறப்பட்ட சிவபூசைகள் வேண்டாவாம்) அந்நிலையை அடையாது கேள்வி முதலிய மூன்றில் நிற்போர்க்கு, ``உள்ளம் பெருங்கோயில்`` என்னும் மந்திரத்துட் கூறியவாறு செய்யும் ஞான பூசையே சாதனமும், அப்பூசையின் பயனாகத் தற்போதம் கழன்றிருத்தலே பயனும் ஆகும்.

குறிப்புரை :

`ஞானம் குருவருளாயன்றி வாராது` என்பது மேற் கூறப்பட்டமையால், இங்கு ``மேவிய ஞானம்`` என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``மெய்ப்பரன்`` என்பது `உண்மைச் சிவன்` என்பதாய், பரவசிவனைக் குறித்தது. ஞானமாவது, அவனையறியும் அறிவேயாதல் அறிக. `நிட்டையே ஞானத்தின் நிறை நிலை` என்றற்கு அதனை `ஞானத்தில் ஞானம்` என்றும், ஏனைக்கேள்வி முதலிய மூன்றனையும், `ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம்` என்றும் சிவாகமங்கள் கூறுதல் காண்க.
இனி நிட்டை நிலையை அடைந்தோரும் அந்நிலையிலே மீட்சியின்றி நிற்கமாட்டாது மீள்வாராயின் ஞானத்திற் சரியை முதலிய வற்றில் உள்ளோர்க்குக் கூறப்பட்ட நெறியிற்றானே நிற்பர். அப் பொழுது அவையெல்லாம் `உபாயநிட்டைகள்` என, `நிட்டை` என்றே சொல்லப்படும். ஏனையோர் செய்வன எல்லாம் எவ்வகையாலும் `சரியை, கிரியை, யோகம்` என்றே சொல்லப்படும். நிட்டைக்குப் பயனே ஆனந்தமாக, உபாய நிட்டைக்குப் பயன் அருள்மயம் ஆதலே என்பதுபற்றி, `செயலறல் தானே சேவடி சேரல்` என்றார்.
இதனால், `நிட்டை நிலையை எய்தினோரும் அதனில் நிற்க மாட்டாது மீள்வாராயின் பின்னும் கிழ்நிலையை எய்தாமைப் பொருட்டு, குருபூசை சிவபூசைகளைச் செயற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.

பொழிப்புரை :

உலகீர், `காலை, நண்பகல், மாலை` - என்னும் மூன்று போதிலும் சிவனை வழிபட விரும்புங்கள். அவ்வழிபாட்டில் `நம` என்பதை இறுதியில் உடைய மந்திரம் சிறப்புடையனவாகும் ஆதலால் அவற்றையே மிகுதியாக உங்கட்குப் பயனை விளைக்கும் வித்துக்களாக விதையுங்கள். அவ்வாறு விதைப்பதற்குரிய நிலமாய் விளங்குவன `கதிர், மதி, தீ` - என்னும் முச்சுடர்களுமாம். (ஆகவே, அவ்விடத்து அவற்றை விதையுங்கள்) அச்சிவன் `நந்தி` என்னும் பெயருடைய குருமூர்த்தியாயும் விளங்குவன்.

குறிப்புரை :

தமக்கு நந்திபெருமான் குருவாயினமை பற்றி, ``நந்தி நாயகனாகும்`` என்றருளிச் செய்தாரேனும், `அவரவர்க்கு அருள் செய்த அவ்வக் குருமார்களாயும் அவன் விளங்குவான்` என்பதே கருத்தென்க. எனவே, `இங்கு விதிக்கப்பட்ட முறையிலே குருவை வழிபடுக` என்றதாம். `குருவருள் பெற்றோர்க்குக் குருவே சிவனாதல் பற்றி, முச்சுடர் முதலிய எவ்விடத்தும் அவர் குருவையே காண்பர்` என்பதாம். ``நாயகன்`` என்பது இங்குக் குருவைக் குறித்தது.
செய்யுள் நோக்கி ``உச்சி`` முதற்கண் வைக்கப்பட்டது. ஆன்மார்த்த வழிபாட்டிற்கு முப்போதே அமையும் ஆதலின் அவற்றையே கூறினார். காலையின் விரிவு விடியலும், மாலையின் விரிவு எற்பாடுமாக நள்ளிரவுங் கூட்டி ஆறுகாலம் பரார்த்த வழிபாட்டில் கொள்ளப்படுகின்றன. அவை முறையே உஷத்காலம், பிராதக் காலம், மாத்தியானிக காலம், சாயங்கால உபசந்தி (பிரதோஷகாலம்) சாயங்கால மகாசந்தி (இரண்டாம் காலம்) அர்த்த ஜாமம் எனப்படுகின்றன. மலர் தூவி அருச்சித்தல் முதலாகப் பெரும் பாலானவற்றிற்கு உரியவாகும் சிறப்புப் பற்றி, `நம` என்னும் மந்திரங்களையே குறித்தார்.
இதனால், குருவழிபாடு முப்போதும் செய்தற்குரியதாதல் கூறப்பட்டது.
இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``புண்ணிய மண்டலம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்திற்கு உரியது.

பண் :

பாடல் எண் : 6

இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

பொழிப்புரை :

`சந்திர கலை` எனவும், `சூரிய கலை` எனவும் சொல்லப்படுகின்ற இடநாடி மூச்சும், வலநாடி மூச்சுக் காற்று இயங்கின் மனம் புறத்தே ஓடுதலல்லது அகத்தே அடங்கி நில்லாது. ஆகவே, அது பொழுது செய்யும் வழிபாடு குற்றம் உடைத்தாம் ஆதலின், ``அஃது அசுரர்க்கு வாரியாம்`` என்றும், மூச்சுக்காற்று இயங்காது அடங்கின் மனமும் புறத்தே ஓடாது அகத்தே அடங்கி நிற்கும். ஆகவே, அதுபொழுது செய்யும் வழிபாடு குற்றமில்லாதாம் ஆதலின், ``அது நந்திக்கு மாபூசையாம்`` என்றும் கூறினார். சிவ பூசையே பெரிய பூசையாதல் பற்றி, ``மாபூசை`` என்றார். மூச்சுக் காற்றை மேற்கூறிய இருவழிகளிலும் செல்லாது அடக்குதலே பிராணாயாமமாம். அம்முறையால் பிராணனை அடக்கியவழி கும்பகமாம். அப்பொழுது மூச்சுக் காற்று நடுநாடியிற் செல்லும். அங்ஙனம் செல்லும்பொழுது தியானங்கள் இனிது கைகூடும். ``எந்நிலையில் நிற்போரும் `வழிபாடு` என்பதை மேற்கொள்ளும்பொழுது பிராணாயாமம் செய்து செய்க`` என்றபடி. வாரி - வருவாய் அறவே விலக்குதற் பொருட்டு ``அசுரர்க்கு வாரியாம்`` என்றாரேனும், `பயன் அற்பமாம்` என்றலே கருத்து என்க.

குறிப்புரை :

இதனால், எவ்வகை வழிபாடும் பெரும்பயன் தருதற்கு ஆவதொரு வழி கூறப்பட்டது இதனை எந்த வழிபாடு கூறுமிடத்திலும் கூறலாமாயினும் குருவழிபாடு சிறந்தமை பற்றி இங்கே கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

பொழிப்புரை :

சந்திர கலையும், சூரிய கலையுமாகச் சொல்லப் படுகின்ற மூச்சுக்காற்று அடக்கப்பட்டபொழுது நடுநாடி வழியாக மேல் ஏறி விந்துத்தானமாகிய ஆஞ்ஞையையும், நாதத்தானமாகிய ஏழாந்தானத்தையும் கடந்து அதற்குமேல் பிரம ரந்திரம் வழியாகப் பன்னிரண்டங்குல அளவுள்ள நிராதாரத்தே செல்லின் அந்நிலை `சாக்கிரத்தில் துரியம்` எனப்படும். அதனையும் கடந்திருப்பது மீதானம். அது சாக்கிரத்தில் அதீதத்தானம். அந்நிலையில் சிந்தனையைச் செலுத்திச் சிவனை வழிபடுதலே எல்லாவற்றிலும் மேலான வழிபாடாம்.

குறிப்புரை :

``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` *
என்னும் திருவுந்தியார் இங்கு நோக்கத் தக்கது.
மீதானமே, ``துவாதசாந்தப் பெருவெளி`` என்றும், துரியங் கடந்த பரநாத மூலத்தலம்`` * என்றும் சொல்லப்படுகின்றது. ``சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் இந்நிலையினரே`` எனச் சேக்கிழார் விளக்குதல் காண்க. 8
என்று - எனப்பட்டு. எழுகின்றது - எழுகின்ற மூச்சுக் காற்று. ஓர் - சிந்திக்கின்ற; வினைத்தொகை. ஆகி - இடத்தால் அவையேயாய். ``சென்றிட்டு`` என்பதை ``மீதானத்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `அதீதத்ததே` என்பது இடைக் குறைந்து ``அதீதத்தே`` என நின்றது.
இதனால், `எல்லா வழிபாட்டிலும் மேலான வழிபாடு இது` என அதன் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மனபவ னங்களை மூலத்தின் மாற்றி
அநித உடல்பூத மாக்கி யகற்றிப்
புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத்
தனிஉறு பூசை சதாசிவற் காமே.

பொழிப்புரை :

மனத்தின் ஓட்டத்திற்குக் காரணமாயுள்ள இட ஓட்ட வல ஓட்ட மூச்சுக் காற்றுக்களை அவ்வழியே ஓட விடாது தடுத்து நடு நாடி வழியாக ஓடும்படி மாற்றி, பூத காரியமாய் நின்று அழிகின்ற உடலை அவ்வாறு அழியாது நிலைத்திருக்கின்ற உடலாகச் செய்தற் பொருட்டு அதன் காரணமாகிய பூதங்களில் ஒடுக்கி அவையாகச் செய்யுமாற்றால் போக்கி, மீண்டு அது திருவருளினின்றும் தோன்றச் செய்யுமாற்றால் திருவருள் உடம்பாக ஆக்கி அதனுள் தான் புகுந்து சிவமாகி அதனானே சிவானந்தம் மேலிட நின்ற வழிபடும் வழிபாடே ஒப்பற்ற வழிபாடாகும். அதனையே சதாசிவ மூர்த்தி ஏற்பர்.

குறிப்புரை :

``மூலம்`` என்பது ஆகுபெயராய் அதற்கு மேலுள்ள சுவாதிட்டானத்தையும், பின் அங்குள்ள சுழுமுனை நாடியையும் குறித்தது. ``மூலத்தான்`` என்பது பாடமாயின், `மூலமாகிட அவ் விடத்து` என உரைக்க. `அநித்தம்` என்பது, ``அநிதம்`` என இடைக் குறைந்து நின்றது. ``புக்கு`` என்றதனால் முன்பு வெளியே சென்றிருந் தமை பெறப் பட்டது. சிவபூசையைத் தொடங்குதற்கு முன்னே யோக பாவனையால் பூதசுத்தி செய்யுமாற்றால் பௌதிக உடலை அழித்துத் திருவருள் உடம்பை உண்டாக்கி அதில் தான் புகுந்து சிவோகம் பாவனையால் சிவமாகியே பூசையைத் தொடங்குதலும், அதன் பொருட்டு பூத சத்திக்கு முன்னே தன்னைப் பௌதிக உடம்பினின்றும் பிரித்துத் துவாத சாந்தமாகிய மீதானத்திலுள்ள சிவத்தின்பால் சேர்த்து நிறுத்திப் பின்பு மீட்டும் முன்ரே் கொணர்ந்து திருவருள் உடம்பிற் சேர்த்துச் சிவமாகின்ற முறை இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்தலே உண்மைச் சிவபூசையாகலானும், இதனைக் குரு முகமாக அன்றி அறிதல் கூடாமையால் `அவ்வாறு அறியாது தாம் தம் அறிந்தவாறே செய்யும் பூசைகள் எல்லாம் பொதுச் சிவ பூசைகளே` என்று சிவாகமங்கள் கூறுகின்றன. அதனையே இங்கு நாயனார் உணர்த்தினார் என்க.
இதனால், சிவபூசை உண்மைப் பூசையாக அமையுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பகலு மிரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசற் கிணைமல ராகா
பகலு மிரவும் பயிலாத பூசை
சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

பொழிப்புரை :

பகலும், இரவும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றுகின்ற பூசைகள் காலத்தைக் கடந்தவனாகிய சிவனுக்கு முற்றிலும் நேர்படும் பூசைகள் ஆகா. மற்று, அவ்வேறுபாடு தோன்றாத பூசைகளையே சிவன் முழுமையாக ஏற்பான்.

குறிப்புரை :

`உலகியல் முற்றும் மறக்கப்படாத வரையில் பகலும், இரவுமாகிய காலவேறுபாடுகள் தோன்றாமற் போகமாட்டா. அதனால் அவை சிவன் ஒருவனையே நினைந்து செய்யும் பூசைகள் ஆதல் இல்லை. உலகியல் முற்றும் மறக்கப்பட்ட பொழுது மேற்கூறிய வேறுபாடுகள் தோன்றமாட்டா ஆதலால் அந்நிலையில் நின்று செய்யும் பூசைகளே சிவனேயன்றி வேறொன்றையும் நினையாத பூசையாம்` என்றபடி.
சண்டேசுர நாயனார் சிவபூசை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்தம் தந்தை வந்து அவரை வைததையும் தண்டால் பலமுறை முதுகிற் புடைத்ததையும் அவர் சிறிதேனும் அறியா திருந்ததையும், பின்பு அவன் சிவபூசைக்கு அழிவை உண்டாக்கியதை உடனே அறிந்ததையும் இங்கு நினைவு கூர்க. அதுபோலும் சிவபூசையே முழுமையான சிவபூசை யாகும்.
``கையொன்று செய்ய விழியொன்று நாடக்
கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப்
புலால்கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே``l
எனப் பிற்காலப் பெரியார் அருளிச் செய்தது இக்கருத்துப் பற்றியேயாம். மலரால் செய்யப்படுவதனை ``மலர்`` என்று உபசரித்தார். சகலமும் - முற்றிலும்.
இதனால், சிவபூசை நிரம்பாவாறும், நிரம்புமாறு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

இராப்பக லற்ற இடத்தே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்(து)
இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.

பொழிப்புரை :

இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையேயிருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி தேனை வேறுநினைவின்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.

குறிப்புரை :

``தேறல்`` என்றது `தேன் துளி` என்னும், பொருட்டாய்ச் சிவானந்தத்தை ஓரளவே சுவைத்ததையும், ``இன்பம்`` என்றது `இன்ப வெள்ளம்` என்னும் பொருட்டாய் அதில் மூழ்கித் திளைத்ததையும் குறித்தன. யோகாவத்தையில் தியானம் துரியமும், சமாதி துரியாதீதமும் ஆதலை விளக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
இதனால், சிவ பூசையைத் தாம் நிரம்பச் செய்து பெற்ற அனுபவத்தை விளக்கி முடித்தவாறு.

பண் :

பாடல் எண் : 1

படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.

பொழிப்புரை :

கொடித் துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது எங்கும் இயங்குகின்ற உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கின்ற சிவனுக்குச் சேரமாட்டாது; அங்கேயே இருந்துவிடும். ஆனால், எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது அந்தச் சிவனுக்கு ஆதலுடன், கொடித்துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற சிவனுக்கும் போய்ச் சேர்வதாகும்.

குறிப்புரை :

`ஆகவே, இருவரையும் வழிபடல் வேண்டுமாயினும், இயங்கும் கோயிலினுள் இருக்கும் சிவனை வழிபடுதல் தவிரத் தக்கதன்று` என்றபடி.
படம் - சீலை. ``ஆடும்`` என்றதனால், அது கொடிச் சீலையைக் குறித்தது. ``கட்டடமாக மக்களால் அமைக்கப்பட்ட கோயில்` என்பதை விளக்க. ``படம் ஆடு அக்கோயில்`` எனவும், ``உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்`` என்றபடி, ``உடம்பாகிய கோயில்`` என்பதை விளக்க. ``நடமாடு அக்கோயில்`` எனவும் கூறினார். நடமாடுதல் - உலாவுதல். நடம் ஆடுதல்` என்பது, `நடனம் ஆடுதல்` எனப் பொருள்தருமாயினும் உலகவழக்கில் `உலாவுதல்` என்னும் அளவாய் நிற்றலின் அஃதேபற்றி ``நடமாடும் அக்கோயில்`` என்றார்.
`திருக்கோயிலினுள் இருக்கும் திருமேனிகள் மந்திர சாந்நியத் தால் சிவனேயாய் விளங்குதல் போல, அடியார்களது ஆன்ம சைதன் னியமும் ஆழ்நிலைத் தியான சமாதிகளாலும், அருள்ஞான உணர் வாலும் சிவனேயாம் ஆதலின், இடவேறுபாடு பற்றி வேற்றுமை யில்லை` என்றற்கு இரண்டினையும், ``பகவன், நம்பன்`` என்றே குறித் தருளினார். இதனால் `மாகேசுரர் மகேசுரனே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. ``ஒன்று`` என்றது, `எடுத்துக்காட்டிற்கு ஒன்று` என்றவாறு.
இதனால், `இலிங்க பூசை இயலாதாயினும் சங்கமபூசை ஒழியாது செய்யத்தக்கது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

பொழிப்புரை :

`சிவனிடத்தினின்று பிறிதொன்றால் நீக்கப்படாத உள்ளத்தினையுடைய மாகேசுரர்கள் மனமகிழ்ந்து உண்ட பொருள் மூன்றுலகங்களும் உண்ட பொருளாகும்; (அவற்றிற்கு அது பயனாகும்` என்பதாம்) அதுபோலவே அவர்கள் பெற்றுக்கொண்ட பொருளும் மூன்றுலகங்களும் பெற்றுக்கொண்ட பொருளாம், என்று நந்தி பெருமான் எங்கட்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.

குறிப்புரை :

`சிவன் இலிங்க பூசையை ஏற்று மகிழ்தலினும் தன் அடியவர் பூசையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி எய்துவன் ஆதலின், அம்மகிழ்ச்சியால் அவனை உயிராக உடைய உலகம் அனைத்தும் மகிழ்வெய்தும்` என்றபடி. `அத்துணை மகிழ்ச்சிக்குக் காரணம் அவரது உணர்வின் சிறப்பு` என்பதை உணர்த்த, ``தண்டறு சிந்தைத் தபோதனர்`` என்றார். தண்டல் - நீக்குதல். ``எண்டிசை`` என்பதன் பின் `புகழும்` என ஒரு சொல் வருவிக்க. ``மகிழ்ந்து உண்டது`` என்றதனால், `அவர் மகிழும்படி வழிபடல் வேண்டும்` என்றதாயிற்று. இனைத்துணைத் தென்பதொன்றில்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -திருக்குறள், 97
என்னும் பொதுமறையை இது முதலாக வருகின்ற மந்திரங்களோடு ஒப்பிட்டுணர்க.

பண் :

பாடல் எண் : 3

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :

இப்பாடலின் பொருள் பின்வரும் குறிப்புரையால் இனிது விளங்கும்.

குறிப்புரை :

`சீவன்` என்னும் பெயரின் முதலெழுத்து இரு மாத்திரையுடையதும், `சிவன்` என்னும் பெயரின் முதலெழுத்து ஒரு மாத்திரையுடையதும் ஆதல் பற்றி, `சீவன்` என்னும் நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைத்து நின்று அவனேயான அடியவனை. `மாத்திரை யொன்றின் மன்னியமர்ந்துறை - ஆத்தன்` என்றார். சிவனடியார்கள் மாகேசுரன் எனப்படும் காரணத்தை விளக்கியவாறு. `மகேசுரனுக்குள் அடங்கிநிற்பவன் மாகேசுரன்` என்றபடி. ஆத்தன் - நம்புதற்குரியவன். `தன்னை நம்பினவர்க்கு உறுதியையே சொல்லுதலும், செய்தலும் உடையவன்` என்பதாம். எனவே, `மாகேசுரர் அத்தகையினர்` என்பது பெறப்பட்டது. சிறப் புணர்த்த வேண்டிச் சாதியொருமையாற் கூறினார். `இப்பெயர் ஆசாரி யனையே குறிக்கும், என்பாரும் உளர். அங்ஙனமாயின் இம்மந்திரம் `குருபூசை` என்னும் அதிகாரத்தில் உளதாக வேண்டும் என்க.
மூர்த்திகள் மூவர் - அயன், அரி, அரன். குரவர் - முன்னோர். ஏழ்குரவர், தந்தை முதலாக முறையானே முன் முன் நோக்க வரும் எழுவர். மூவெழுவராவார், தந்தைவழி தாய் வழி மனைவி வழி என்னும் மூவழியிலும் உள்ள முன்னோர் ஓரோர் எழுவர். ``தீர்த்தம்`` என்றது, `நீர்` என்னும் பொருட்டாய் நின்றது. அஃது ஆகுபெயராய் நீர்வழியாகக் கொடுக்கும் பொருளை உணர்த்திற்று. முன்னோர்க்குப் பாவனையாற் கொடுப்பன யாவும் நீர் இறைக்குமாற்றால் கொடுக்கப் படுதலை நினைக. இதனைத் திருவள்ளுவர், `தென்புலத்தார் கடன்` (திருக்குறள், 53) என்றார்.
மாகேசுர பூசை பெரும்பான்மையும் இல்லறத்தாராலே செய்யப்படும் ஆதலின், `அவர்க்கே சிறப்பாக உரிய விருந் தோம்பலில் மாகேசுர பூசையே சிறப்புடையது` எனக் கூறுபவர், `தென்புலத்தார் கடனும் அதுவே` என்பதை இதனாற் கூறினார். இனி, `அவர்க்குத் தெய்வ வழிபாடாவதும் இதுவே என்பதை, ``மூர்த்திகள் மூவர்க்கும்`` எனத் தேவருள் தலையாயினாரைக் கூறினார்.
`விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பவற்றை அந்தணரை வழிபடுதலானே செய்தல் வேண்டும்` என்பது வைதிக நெறியே; அவைகளை மாகேசுரர் வழியாகச் செய்தலே சைவநெறி` என்பது இவ்வதிகாரத்துள் உணர்த்தப்படுதல் அறிக. இதனானே, `அந்தணர் பூசுரராயினும், மாகேசுரர் பூசிவர்` என்றதூஉமாயிற்று. இவர்களை, ``பராவுசிவர்`` (சிவஞான சித்தியார், சூ. 8. 35) என்றார் அருணந்தி தேவர்.

பண் :

பாடல் எண் : 4

அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்தே முடிக்கில்லென்
பகரு ஞானி பகலுண்பலத் துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே.

பொழிப்புரை :

அந்தணர் வாழும் வீதிகள் பலவற்றை அவர்கட்குத் தானம் செய்தலும், அவ்வீதிகளில் அவர்கட்கு உயர்ந்த மாட மாளிகைகள் பல கட்டித் தருதலும் ஆகிய இவற்றால் விளையும் பயன்கள் யாவும் மாகேசுரன் ஒருவனை வழிபட அவன் உண்டதனால் விளையும் பயனளவிற்கு ஒவ்வாது குறைவனவே என்பது உறுதி.

குறிப்புரை :

``அகரம்`` என்பது `அக்கிரகாரம்` என்பதன் மரூஉ. `முதற் சுற்று` என்பது அதன் பொருள். `கோயிலைச் சூழ்ந்த முதற் சுற்று வீதிகளே அந்தணர் இருத்தற்குரிய இடம்` என்பது வைதிக முறைமையாதலின் அம்முறைமைபற்றி அவர்கள் வீதி எங்கிருப்பினும் அஃது `அக்கிரகாரம்` எனப்பட்டது. `அந்தணர்களை மாட மாளிகை களில்தான் வாழவைத்தல் வேண்டும், என்பதும் வைதிக நெறி யாகலின், அவர்கள் வாழும் முதற்சுற்று வீதி, `மாடவீதி` எனப்பட்டது.
`திருக்கோயிலை நடுவாக வைத்து அதனைச் சூழ ஏழு சுற்று அமைய மதில்களை எழுப்ப அவைகளில் அமையும் வீதிகள் யாவும் மாடவீதிகள்` எனவும், `அவ்வீதிகளில் பரத்தையர் தவிர மற்றையோர் யாவரும் கலந்தே வாழ்தல் வேண்டும்` எனவும், `அந்த வீதிகளைச் சுற்றிக் கடைத் தெருக்கள் இருத்தல் வேண்டும்` எனவும், `ஆக எல்லா வீதிகட்கும் புறத்திலே பரத்தையர் வீதி அமைதல் வேண்டும்` எனவும் சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணத்தில் `நகர வருணனை` வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்.
பகரும் ஞானி - இவ்விடத்தில் சொல்லப்படும் ஞானி; மாகேசுரன். ``பகல்`` என்றது `ஒரு பகல்` என்றபடி. இம்மந்திரத்தில் பாடம் திரிபு பட்டுள்ளது.
இதனால், அந்தணர்க்குச் செய்யும் தானங்களினும் மாகேசுரருக்குச் செய்யப்படும் தானம் பன்மடங்கு உயர்ந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆறிடு வேள்வி அருமறை சாலவர்
கூறிடு மந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறீடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும், வேதமாகிய நூலை ஓதுகின்றவரும், முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர்கள் கோடிபேர் உண்டு மகிழ் வதனால் உண்டாகின்ற பயனோடு திருநீற்றை யணிகின்ற சிவ னடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளைந்து நிலைக்கின்ற பயனை வைத்து எண்ணிப் பார்க்குமிடத்து, முன்னர்க் கூறிய பயன் பின்னர்க் கூறிய உணவில் ஒரு பிடியினால் விளையும் பயனளவேயாகும்.

குறிப்புரை :

`அருமறை கூறிடும் நூலவர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உண்பது`` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் பயனைக் குறித்தது. ``உண்பதில்`` என்றது உருபு மயக்கம்.
இதனால், `தானங்களில் தலையாயதாய அன்னதானமும் அந்தணர்க்குச் செய்தலினும் மாகேசுரர்க்குச் செய்தலே கோடானு கோடி மடங்கு மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :

`இடபத்தை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனே! இறைவா! எங்கள் பெருமானே` என்று சிவனை எப் பொழுதும் துதித்து அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனுக்கு அடியராவார்கள், அவர்களை `இவர்களே நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள்` என்றும், `சிவபெருமான்` என்றும் கருதி அவரை மக்களின் வேறாக வைத்து வழிபடுகின்றவர்கட்கு அவரால் முன்பு செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கின்ற வினைகள் கெட்டொழிதல் உறுதி.

குறிப்புரை :

தீவிர சத்தி நிபாதர்க்கன்றி ஏனையோர்க்குச் சிவனை யொழித்தொழிந்த தேவரை வழிபடாத நிலை உண்டாகாதாகலின் அவரை நோக்கி, `இவரே தேவருமாவர்` என்றார். முன்பு ``மூர்த்திகள் மூவர்க்கும் ஆம்`` என்றதும் அவரை நோக்கி. மந்த சத்தி நிபாதத்திற் செய்யும் வழிபாடு தீவிர சத்தி நிபாதத்தைத் தந்து அதன்வழி நிகழும் வழிபாட்டினால் வினையை ஒழிக்குமாதலின் `அவருக்கும் வினையில்லையாம்` என்றார். ``தேவர்கள், அண்ணல்`` என்பன செவ்வெண்.
இதனால், மாகேசுர பூசையும் சிவபூசையேயாய்ப் பிறப்பையறுத்தல் கூறப்பட்டன.
இங்கு இருக்கவேண்டிய இப்பாடல் `சிவபூை\\\\\\\\\\\\\\\\u2970?` அதிகாரத்திலும், அங்கு இருக்கவேண்டிய பாடல் இவ்வதிகாரத் திலுமாகப் பதிப்புக்களில் மாறியுள்ளன. எனினும் இப்பாடல் நாயனார் வழிவந்த ஒருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. சில பிரதிகளில் இது காணப்படவும் இல்லை.
மிகைப் பாடல் தெ-ரை: சிவன் உயிர்கள் பொருட்டாக உண்டாக்கிய நவ தீர்த்தங்களில் சென்று முழுகும் பயன்பற்றிச் சொல்லுவோம் கேள்; `உயர்ந்தோர் யாவர்க்கும் ஒத்ததாகிய மெய்ஞ்ஞானத்தினாலே உயர்ந்து நிற்கின்ற மாகேசுரரது திருவடிகளைத் தூய்மையாக விளக்கி, அந்த நீரை உடல் முழுதும் படும்படி தெளித்துக் கொண்டாலே முத்தி கிடைக்கும் என்பது நமக்கெல்லாம் குருவாகிய திருமூலர் அருளிச் செய்தது.
கு-ரை: `எனவே, அது நவதீர்த்தங்களில் மூழ்குதலாம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

அழிதக வில்லா அரன்அடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

பொழிப்புரை :

இறைமைக் குணங்களையுடைய சிவபெரு மானை விரும்பி அவனை நாள்தோறும் தொழுது துயிலெழுதலை மட்டும் செய்தால், இவ்வுலகத்தில் உலகின்பத்தோடு சிறிது இறையின்பமும் உண்டாகும். ஆனால், தம் நிலையில் கெடுதல் இல்லாத மாகேசுரரை வழிபடுதலால், இவ்வுலகத்தில் நீங்குதற்கரிய அஞ்ஞானம் நீங்கி இறையின்பமே மிகக் கிடைக்கும்.

குறிப்புரை :

எனவே, `மாகேசுர பூசையைப் புறக்கணிப்பார் செய்யும் மகேசுர பூசையும் சிறிதளவே பயன் தரும்` என்பதாம். ``அடியவர்க்கன் பில்லார் ஈசனுக்கன் பில்லார்`` (சிவஞான சித்தயார், சூ.12-2) என்றார் அருணந்தி தேவரும். மாகேசுரபூசை செய்யாத வழி மகேசுர பூசை நிரம்பாமை நோக்கியன்றோ பெரியார் பலரும் அடியார்க்கடிமை செய்தலை ஆண்டவனை வேண்டியும் பெற்றனர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. `தொழுதைகையால்` என உருபு விரிக்க. பழுதுபடாமைக்கு `நாள்` என்னும் வினைமுதல் வருவிக்க.
இதனால், `எத்தகையோர்க்கும் மாகேசுர பூசை இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :

சிலர் மாகேசுரரிடத்துச் சிறிதளவும் அன்பில்லா தவராய் மாகேசுரனிடத்துச் சரண் புகுகின்ற பித்துக் கொள்ளிகளாய் அவனை மட்டும் பூசித்தலாகிய அந்த வழியிலே நெடுங்காலம் நின்று, அவனது அருள் மிகக் கிடையாத காரணம் யாதென்று ஆராய்ந்து, முடிபு காணாது இளைத்து விட்டார்கள்.

குறிப்புரை :

``முக்கோற் பகவர்`` (அகப்பொருள் விளக்கம்) என்பது போல, ``பகவர்`` என்பது மாகேசுரரைக் குறித்தது. பண்பு - அன்பு. `பண்பு ஏதாகிலும் இலராகி` என்க. ``பூசனை`` என்றது சிறப்புப் பற்றி சிவபூசையையே குறித்தலின், புகுதல் அவனிடத்தேயாயிற்று. மத்தர் - உன்மத்தர். உண்மையை உணராது செய்தலின் ``மத்தர்`` என்றார். ``முகம்``, `வாயில்` எனப்பொருள் தந்தது. `அதனோடு` என்பது, ``அத்தோடு`` என மருவிநின்றது. `ஆகமத்தர்` என்பது, ``அகமத்தர்`` எனக் குறுகி நின்றது. ``ஒழிந்தார்`` என்றதனால் முடிவு காணாமை பெறப்பட்டது.
இதனால், `மகேசுரனை அடையவேண்டுவார் மாகேசுரரை வழிபடல் இன்றியமையாதது என்பதே ஆகமங்களின் கருத்து` என்பது கூறப்பட்டது.
இதனை அடுத்து நிற்கும் ``வித்தகமாகிய`` என்னும் பாடலும் மேற்காட்டிய, ``அத்தன் நவதீர்த்தம்`` என்னும் பாடல்போலப் பிற ரொருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. இதுவும் ஒரு பிரதி யில் இல்லை. இதன் பொருள் வெளிப்படை. இது மாகேசுரர் உண்ட பின் எஞ்சிய சேடத்தை யுண்ணுதலின் சிறப்பை உணர்த்துகின்றது.

பண் :

பாடல் எண் : 9

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

பொழிப்புரை :

உலகீர், பின்னும், பின்னும் நீர் மிக அழுந்த வருகின்ற எதிர் வினைகள் தோன்றாமல் ஆழ்ந்தே போகும்படி, பாசக் கட்டாகிய இழிநிலையினின்றும் நீங்கி உயர்நிலையை எய்தினா ராயினும், மீட்டும் அந்த இழிநிலையில் பாசங்கள் வந்து வீழ்த்தாதபடி முன்பு செய்துபோந்த அந்தச் சரியை முதலிய அரிய தவங்களைப் பின்னும் மாகேசுரர் விடாது செய்வர். அத்தகையோர்க்கே நீவிர் தானத்தையும், தருமத்தையும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அச்செயல்கள் உங்களுடைய எதிர்வினை, பழவினை, பயன்வினை என்னும் மூவகை வினைகளையும் அறவே அழிக்கும். அவ்வினைகள் அழியவே, மீளப் பந்த உலகில் வரும் பிறப்பு இன்றி, வீட்டுலகமே கிடைப்பதாகும்.

குறிப்புரை :

எதிர் வினை - ஆகாமியம். ``ஆழ்ந்தவினை`` - எதிர் கால வினைத்தொகை. பழவினை - சஞ்சிதம். அதனை அழித்தல் அரிது ஆதலின் ``அருவினை`` என்றார். போழ்தல் - இப்பொழுது வந்து தாக்குதல். அங்ஙனம் தாக்கும் வினை பிராரத்தமாம். ``பொன்னுலகம்`` என்றது `உயர்நிலை` என்னும் அளவாய் நின்றது. ``ஆழ்வினை ஆழ`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், மாகேசுர பூசை வீடு பயத்தல் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

பொழிப்புரை :

`இடம்` என்று சொல்லப்படுவன எவையாயினும் அவை எல்லாவற்றையும் தனது உடைமையாக உடைய ஒப்பற்ற ஒரு தனிமுதற் கடவுளை உணருமாறெல்லாம் உணர்ந்து, அவ்வுணர்வினை மயக்கத்தால் குறைத்துப் பேசுபவரது மயக்கத்தை தனது அனுபவ மொழிகளாற் போக்குகின்ற சீரடியான் ஒருவனே ஒரு நாட்டில் இருப்பினும் அந்த நாட்டின்மேல் பகைமை கொள்வார் எவரும் இலராவர். அங்குப் பருவமழை பொய்யாது பெய்யும். எந்த ஓர் இல்லத்திலும் செல்வம் குறைதலோ, அல்லது செல்வம் தீர்ந்து வறுமை உண்டாதலோ நிகழாது.

குறிப்புரை :

ஏனைத் தேவரெல்லாம் சில உலகத்தளவிலே அதிகாரம் உடையராக, ``எல்லா உலகமும் ஆனாய் நீயே`` (தி.6) என்றருளிச் செய்தபடி அனைத்துலகங்களிலும் நிறைந்து அவற்றைத் தான் விரும்பியபடி இயக்குபவன் சிவன் ஒருவனே யாகலின், அவனை, ``திகைக்குரியான் ஒரு தேவன்`` எனவும், காரண காரிய முறையில் உறுதிப்பட விளக்குதல் பற்றி ``வாதி`` எனவும் கூறினார். திகை - திசை; இடம். ஒருவாதியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்த லாயிற்று. ``பார்`` என்றது இங்கு விளைநிலத்தை. நாட்டினை ``உலகு`` என்றார். ``அவ்வுலகுக்கு`` என்பதை மூன்றாம் அடியின் முதலில் கூட்டியுரைக்க.
இதனால், `சிவனடியார் உள்ள நாடு யாதொரு குறையும் இன்றி நலம் மிக்கதாகும்` என்பது கூறப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``அவ்வுலகத்தே`` என்னும் பாடல், தந்திரம 6இல், ``அருளுடைமையின் ஞானம் வருதல்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 2

கொண்ட குழியும் குலவரை யுச்சியும்
அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும்
உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.

பொழிப்புரை :

நிலத்தைத் தன்னகத்துக் கொண்ட கடல்களும், நிலத்தை நிலைபெறுத்துகின்ற எட்டுக் குலமலைகளின் சிகரங்களும், வானுலகமும், வானுலகத்திலுள்ள தேவர்களும், அத்தேவர்களுக்கு முதல்வனாகிய இந்திரனும் மற்றும் திசைக்காவலரும் ஆகிய அனைத்தும், அனைவரும் வந்து எனது கையிலும் அடங்கியுள்ளன, உள்ளனர் என்றால், இனி நாங்கள் எந்த இடர்ப்பாட்டிலும் அகப்படாமல் அவற்றினின்றும் தப்பிவிட்டோமன்றோ!

குறிப்புரை :

`கொண்ட குறி` என்பது பாடமன்று. கடலுக்கு `ஆழி` என்னும் பெயருண்மை பற்றி, ``குழி`` என்றார். `நாங்கள்` என்றது அடியார் அனைவரையும். ``என் கைத்தலத்திலும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `அடியவருள் கடைப்பட்ட என்கையிலும் உள்ளன என்றால் பிற அடியவர் கையில் இருத்தல் சொல்ல வேண்டுமோ` என்பதாம். அவை எம் வசத்தன அல்லது, யாம் அவற்றது வசத்தினேம் அல்லேம்` என்றபடி. `எல்லாப் பொருள்களும் சிவன் வசத்தின ஆதலின் அவை அவன் அடியார் வசத்தினவாம் என்றபடி.
தாமடங்க இந்தத் தலமடங்கும்; தாபதர்கள்
தாமுணரின் இந்தத் தலமுணரும் - தாமுனியின்
பூமடந்தை நில்லாள்; புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து. -திருக்களிற்றுப்படியார், 68
எனவும்,
அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகம் ஆளற் குரியர். -தி.12 திருக்கூட்டச்சிறப்பு, 3
எனவும் அருளிச் செய்தல் காண்க.
இதனால், `சிவனடியாரை உலகம் வாதியாமையே யன்றி அவர் வேண்டியவாறுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

இதனால், `மேற்சொல்லியவாறு எல்லாப் பொருள்களும் சிவனடியார் வசத்தன ஆதற்குக் காரணம் சிவன் அவர்கள் உள்ளத்தில் வீற்றிருத்தலேயாகும்` என மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.
``தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன்; நாம்தொழும் தன்மையான்``
-தி.12 திருமலைச் சிறப்பு, 19
என்றது காண்க. காரணங் கூறுவார் மேற்கூறிய காரியங்களையும் அனுவதித்து உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

பொழிப்புரை :

இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

குறிப்புரை :

`அத்தகைய பேரறிவை உடையவர்கள் சிவனடியார்கள்` என்றபடி. ``பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன்`` என்பதை ``அண்ணல்`` என்பதன் பின்னர்க்கூட்டி, `அப்பெருமையை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்`` என்றது, `விளக்கும் துணையுள்ள பொழுதன்றித் தானே விளங்கமாட்டாத உயிரினது அறிவு போலாது, தானே விளங்கி நிற்கும் அறிவை யுடையவன்` என்பதைக் குறித்தவாறு.
ஒருவராலும் அறியொணாதவனை அடியராயினார் மட்டும் அறிந்தது எவ்வாறெனின், ``ஒருவர்`` என்றது, பதியாகிய அவனது ஞானத்தைப் பெறாது, பாசஞான பசுஞானங்களை மட்டுமே யுடையவருள் ஒருவரையே ஆதலானும், அவருள் ஒருவராய் நில்லாது பதி ஞானத்தைப் பெற்றவரே அடியவராகலானும் அவை தம்முள் முரணாகா என்க. மூடம் உடையதனை ``மூடம்`` என்றது பான்மை வழக்கு. ``அறியொணா`` என்னும் பெயரெச்ச மறையும், ``காணும்`` ``கேட்டிடும்`` என்னும் பெயரெச்சங்களும் அடுக்கி, ``அண்ணல்`` என்னும் ஒருபெயர் கொண்டன. மூப்பு - முதிர்ச்சி; உயர்வு.
இதனால், `உண்டு, பூசி, உடுக்குமாற்றால் அடியவர் உலகரோடு ஒத்தாராயினும், அவர் உலகரின் வேறாய உயர் நிலையினர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாளம்
மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் பிறரைப் போலவே தாமும் மயக்க உலகத்தில் வாழ்வராயினும் அவ்வுலகம் மயக்குகின்ற மயக்கத்துட் படாது தெளிந்த உணர்வோடே வாழ்வர். உடம்பு நீங்கிய பின்னும் பிறரைப் போல மயக்க உலகங்களில் உழலாமல் சிவன் உலகத்தை அடைந்து அதன்கண் சில புவனங்கட்குத் தலைவராயும் விளங்குவர். அவையேயன்றித் தாமும் சிவனைப் போலவே எல்லா உலகங்களும் தம்முள் வியாப்பியமாய் அடங்கத் தாம் அவற்றைத் தம்முள் அடக்கி வியாபகமாயும் நிற்பர்.

குறிப்புரை :

`ஆகவே அவர்களை எளியராக எண்ணற்க` என்பதாம். ``இயங்கும்`` என்பதனை, `தாம் இயங்கும்` எனக் கொள்க. ``செல்வர்`` என்றது `வாழ்வர்` என்றபடி, ``வான்`` இங்குச் சுத்த மாயா வெளியைக் குறித்தது. அவ்வெளியே தடத்த சிவனுக்கு இடமாதல் அறிக. பின்னிரண்டடிகள், `சிவனது இயல்பாக நன்கறியப்பட்ட வற்றை இவர்களும் உடையர்` என்பதைக் குறித்தது. சிவனது இயல்பு.
``பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 17
எனவும்,
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவிற் பாதளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
எனவும் விளங்கிக் கிடந்தமை காண்க. போது - திருவடி மலர். ``பகிரண்டம்`` என்றது, `அண்டங்கள் அனைத்திற்கும் வெளியே உள்ள இடம்` என்றபடி. அதுவெற்ற வெளியாகலின், ``மயங்காப் பகிரண்டம்`` என்றார். மயங்குதல், பல பொருள்கள் ஒன்றோடொன்று விரவுதல்.
இதனால், சிவனடியாரை நம்மனோருள் சிலராக வைத்து எளியராக மதித்தல் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

பொழிப்புரை :

புறநிலையிற் செல்லாது அகநிலையிற் சென்று அங்குள்ள இறைவனை அறிகின்ற அறிவு `நான்` என்னும் முனைப்பு அடங்கி நிற்றலை அனுபவத்தில் யாம் கண்டோம். அதனால் அந்த அறிவு மாயா காரியங்கைள ஒழித்து அவற்றினின்றும் நீங்கித் தூய்மை யுறுகின்றது. ஆகவே, அகநிலையிலே நிற்கின்ற நம் பெருமானை அவ்விடத்திற் காண்கின்ற அகநிலையறிவைப் பெற்றவர்கள் துன்பத்தை அடைய மாட்டார்கள்.

குறிப்புரை :

மூன்றாம்அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``நெஞ்சம்`` என்றது அறிவை. அறிவது அறிவேயன்றி நெஞ்சம் ஆகாமை யறிக. ``அகம்படி`` மூன்றனுள் முதல் இரண்டும் `அகநிலை` எனப் பொருள் தந்தன. முதற்கண் நின்ற ``அகம்`` `உள்` என்னும் பொருளையும், ஈற்றில் நின்ற ``அகம்``, `நான்` என்னும் பொருளையும் உடையன. முதற்கண் நின்ற `படிதல்`, பொருந்துதல். ஈற்றில் நின்ற `படிதல்`, ஆழ்தல். ``கண்டாம்`` தன்மைப் பன்மை வினைமுற்று. ``கண்டவர்`` என்றது `அறிந்தவர்` என்றபடி.
``அழிக்கல்``, இங்கு வெல்லுதல். அஃதாவது அவற்றின் நீங்குதல், அசுத்த மாயா காரியங்களை, `பூதம், தன்மாத்திரை, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், புருடன், கஞ்சுகம், மாயை` - என இங்ஙனம் தொகுத்தெண்ணி, எட்டாதல் அறிக. இனி ``எட்டுத் தத்துவங்களால் ஆகிய நுண்ணுடம்பு`` எனவும் ஆம். இவற்றின் நீங்கினோரே முத்தராதல் அறிக. எனவே, `இந்நிலை அடைந்தோர் பிறவித் துன்பத்தை எய்துமாறு இல்லையாகலின், சிவனடியாராவார் இத்தன்மையுடைய முத்தரே` எனக் கூறினார்.
இதனால், சிவனடியார் பெத்தருட் சிலராகாது, முத்தரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.

பொழிப்புரை :

கடந்த காலத்தில் நிகழ்ந்துபோன அந்தச் செயல் களும், இப்பொழுது கடந்து கொண்டிருக்கின்ற காலத்தில் நிகழ்கின்ற இந்தச் செயல்களும், இவற்றைச் செய்விக்கின்ற முதல்வனும், அவன் செய்விக்கின்றபடி யான் செய்யும் பொழுது அதற்குத் துணையாய் உடன் நிற்கின்ற அன்புள்ள துணைவனும் ஆகிய எல்லாமாய் உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவனை நான் எனக்கு வருகின்ற பழியாயும், புகழாயும் விளைகின்ற அனைத்துப் பொருள்களுமாக உணர்கின்ற உணர்ச்சியோடே எனது உயிர் போய்க்கொண்டிருக்கின்றது. அதனால், எனது உடல் வழியாக நிகழும் முயற்சிகள் அனைத்தையும் அப்பெருமான் தனது முயற்சியாகவே ஏற்றுக் கொள்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் அறம் பாவங்கட்கு யான் யாதும் கடமைப் பட்டவனல்லேன்` என்பதாம். ``கழிவு, அழிவு`` என்னும் தொழிற் பெயர்கள் முறையே இறந்தகால நிகழ்கால நிகழ்ச்சிகளின் மேல் நின்றன. அந்நிகழ்ச்சிகள் அக்காலத்துப் பிறப்பின் வழியன என்பது வெளிப்படை. `இனி அடுத்து வருவதொரு பிறவி தமக்கு இல்லை` என்பது நாயனாரது துணிபாகலின் எதிர்காலம் பற்றிக் கூறாராயினார், முதல்வனை ``முதல்`` என்றது பான்மை வழக்கு. ``அழிவும்`` என்பதனை, ``கழிவும்`` என்பதன் பின் கூட்டியுரைக்க. ``அது`` என்னும் பகுதிப்பொருள் விகுதியை, `அழிவதுவும்` என மாற்றி வைத்து உரைக்க. `புகழுமாய், முற்றுமாக` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத்தலாயின, `முற்றுமாகக் கொண்டு` `எனது உழவு` என வருவித்துக் கொள்க. சீவன் முத்தராயினார் `எல்லாம் அவனே` என்று எதனைச் செய்யினும் தம் செயலற்று அவன் செயலாகச் செய்வர் ஆதலின், அவர், ``பாதகத்தைச் செய்திடினும் சிவன் அதனைப் பணியாக்கி விடுவன்`` (சிவஞானசித்தியார், சூ. 10-1) ஆதலின், ``உழவு கொண்டான்`` என்றார். இத்தகைய சீவன் முத்தரே `அடியார்` எனப்படுகின்றனர் என்க.
இதனால், அடியாரது சீவன் முத்திநிலை தம்மேல் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

பொழிப்புரை :

எனக்குத் தாயாகியவளும், தந்தையாகியவனும் நான் பிறப்பதற்கு முன்பே தங்களைச் சிவனுக்கு அடிமை` என்று எழுதிக் கொடுத்த ஆளோலையை வைத்துத்தான் ஈரேழுலகங்களை யும் ஒக்கப் படைத்தவனாகிய பிரமதேவன் என்னைப் படைக்கும் பொழுது எனது தலையில், `இவன் சிவனுக்கு அடிமை` என்று எழுதினான். `அந்த எழுத்துப் பொய்யானதன்று, மெய்யானதே` என நிலை நாட்டுபவனாகவே காப்போனாகிய திருமால் அமைந்தான்.

குறிப்புரை :

`என் தாயொடு ஆவணம்` என்றது, `யான் பிறந்த குடியில் யான் மட்டுமே சிவனடியானல்லேன்; என்தந்தை தாய் ஆகியோரே சிவனடியார்தாம்` என்றும், `அதனால் யான் பிறப்பிலே சிவனடியான்` என்றும் கூறியவாறு. இவ்வாறான வாய்ப்புடையவர் களையே `பழவடியார்` என்றும், தாம் மட்டுமே தொடக்கத்திலே யாதல், இடையிலேயாதல் அடியாராயினாரை, `புத்தடியார்` என்றும் கூறுவர். நம்பியாரூரர் பழவடியாரேயாயினும் `யான் ஆளல்லேன்` என வன்மை பேசினமை பற்றி அவரை ஏயர்கோன்கலிக்காமர்,
எம்பிரான் எந்தை தந்தை தந்தைஎன் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னைநின் றீருஞ்சூலை
வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து.
-தி.12 ஏயர்கோன். 392
எனப் புத்தடியாராகக் கூறினமை காண்க. வம்பு - புதுமை.
நாயனார் தம் தாய் தந்தையரையே குறித்தாராயினும் `இருமரபும் சிவனுக்கு ஏழேழ் பிறவியும் ஆட்பட்ட மரபு` என்பதைக் குறித்தமை காண்க. ``ஏழ் ஏழ் பிறவி`` என்பது, `எழுவகைப் பிறப்பில் வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பு` என்றவாறு,
புத்தடியாரினும் பழவடியார்க்கு ஒரு சிறப்புண்மையை இதனாற் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 9

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.

பொழிப்புரை :

`சிவனே நமக்கு எல்லாப் பொருளும்` எனத் துணிந்தவரது உள்ளத்தில் ஒன்றி உறைபவனும், அங்ஙனம் துணிந்த படியே மனமொழி மெய்களால் தன்னை வழிபட்டு ஒழுகு வசத்தனாய் நின்று அருள்புரிகின்றவனும் ஆகிய, அழகிதாய் அருள் நிறைந்த திரு வுள்ளத்தினையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானைப் பல் காலும் நினைக்கின்ற ஒருவர்க்கு அவனை விடுதல் கூடுமோ! (கூடாது)

குறிப்புரை :

`அகம் படி` என்பது `அகத்துப் பொருந்துதல்` என்னும் பொருட்டாய் அகமாகிய இடத்தைக் குறித்தது. `சிவன் தன் அடியவர் வசத்தனாய் அவர் வேண்டியவாறெல்லாம் அருளுதல் அருள் காரணமாக அன்றி வேறில்லை` என்றற்கு ``அணிந்து ஆர்அகம்படி ஆதிப்பிரான்`` என்றார். ``உறையும், ஒழுகும்`` என்னும் பெய ரெச்சங்கள், ``அணிந்தா ரகம்படி ஆதிப்பிரான்`` என்னும் தொகைச் சொல்லில், ``ஆதிப்பிரான்`` என்பதனோடு முடிந்தன. `தேனை உண்டறியாதவர் அதனை உண்டு சுவை கண்டபின் விடாமைபோலச் சிவனது அருளின்பத்தை அறியாதார் அதனை அறிந்து நுகர்ந்தபின் விடமாட்டார்` என்பார், ``கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே`` என்றார். `கணித்தார்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``
தி.12 கண்ணப்பர்., 174
என்ற திருத்தொண்டர் புராணத்தையும் காண்க. கணித்தல், பலகால் நினைத்தல்.
இதனால், `சிவனடியார் சிவானந்தத்தைத் தெவிட்டாது நுகர்ந்து திளைப்பவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

பொழிப்புரை :

தேவர்கள் தம் தலையால் தனது திருவடிமேல் வணங்குகின்ற, தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தனக்கு உண்மையான தொண்டினைச் சிலர் செய்ய அதற்குப் பயனாக அவரைத் தேவர்கள் தம் தலைமேல் வைத்துப் போற்றும்படி வைத்தான். அதற்குமேல் அவன் அவரை முக்குணங்களும், கன்மமும், ஆணவமும் இல்லாத ஒளிமயமான மேல் உலகத்தை ஆள்கின்ற பயனையும் கூட்டுவிப்பான்.

குறிப்புரை :

எனவே, `சிவனடியார்கள் அத்துணை உயர்ந்தவர்கள்` என்பதாம். `தலையால்` என உருபு விரித்து, ``மிை\\\\u2970?`` என்பதற்கு, `திருவடி மிை\\\\u2970?` என உரைக்க. `மிலைய, இசைய` என்னும் செயவெனெச்ச ஈறுகள் தொகுத்தலாயின. `மிலைய` எனவே, `தலைமேல்` என்பது தானே விளங்கிற்று. ``மெய்ப் பணி செய்ய`` என்பதை, ``நந்தி`` என்பதன் பின்னர்க்கூட்டி யுரைக்க. புலை - கீழ்மை. அஃது அவற்றை உடையவற்றைக் குறித்தது. `புலை நீங்கிய மிசையுலகு` என்க. ``பொன்`` என்றது ஒளியென்றவாறு. மேலே உள்ள ஒளியுலகாவது சிவனுலகு. பலம் - பயன். வேறு தொடராய் நிற்றலின் மீட்டும் ``படர்சடையோன்`` என்றார்.
இதனால், `சிவனடியார்கள் தேவரால் வணங்கப்படுபவராய்ச் சிவலோகத்தை ஆளும் பெருமையுடையவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கூட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.

பொழிப்புரை :

ஒன்றும் அறியாத இளமைப் பருவத்திற்றானே சிவனடியார்களை அவரது வேடத்தால் அறிந்து மகிழ்ச்சியுற்றதே சிவனுக்கு உண்மை அடிமைத் தன்மையாகும். அதன் பின் அவர்கள் செல்லும் செலவைத் தவிர்ந்த அவர்களது திருவடிகளை விளக்கிய நீரினைத் தலையில் தெளித்துக் கொள்ளுதலே அங்ஙனம் செய்வார்க்குப் பெரிய தவமாகும்.

குறிப்புரை :

இளமையிலே அடியார் பத்தி தோன்றுதல் முன்னைத் தவத்தினாலாம். காரைக்காலம்மையார் வண்டல் பயிலும் பொழுதே தொண்டர் வரின் தொழுதமையை (தி.12 காரைக்காலம்யார்., 5) நினைக. ``நடப்பார் மறிந்த புனல்`` என்றதனால், `திருவடிகளை விளக்கிய நீர்` என்பது விளங்கிற்று. மறி - மறிதல்; தவிர்தல். முதனிலைத் தொழிற் பெயர். `மறிதலில் பொருந்திய நீர்` என்க.
இதனால், அடியவரை வழிபடுவாரது சிறப்புணர்த்து முகத்தால் அவரது பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பாற் பெருமை இலயம தாமே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்திற் கூறியவாறு இளமையிலே அடியார் பத்தியிற் சிறந்த ஒருவனை அடைந்து அன்பு செய்பவர்கள் சிவனையே அடையவும் வல்லாராவர். இன்னும் அவரிடத்தில் சிவனையே வழிபடும் ஒருவனது பெருமை அடங்கி விடுவதாகும்.

குறிப்புரை :

`சிவனுக்கு அடியாராயினாரும் அவன் அடியார்க்கு அடியாராகாவிடின் சிறந்தவராகார்` என்பதாம். அதனாலன்றோ, சிவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட நம்பியாரூரர் பின்பு அடியாரது திருக்கூட்டத்தைக் கண்டு, ``இவர்க்கு யான் அடியேனாகப் - பண்ணு நாள் எந்நாள்`` (தி.12 தடுத்தாட் கொண்டது., 189) என இறைவனை நினைத்து எண்ணினார். முன்னை மந் திரத்திற் கூறினமை பற்றி அடியார்க்கடியனை ``அவன்`` என்றமையால், பின்னர் ``இவன்`` என்றது, பின்னர்க் கூறிய சிவன் பால் அணுகுதல் செய்தவனைக் குறித்தது. `நாடும் அடியார்கண்` என ஏழாவது விரிக்க.
இதனால், `சிவனுக்கு அடியாராயினாரும் அவன் அடியார்க்கு அடியாராதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது. திருத்தொண்டத் தொகை அடியார்க்கு அடியாராதலையேயன்றி, அடியார்க்கு அடியாராதலையும் குறித்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 13

முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

பொழிப்புரை :

பதினெண்கணங்களாக வகுத்துச் சொல்லப் படுகின்ற தேவ சாதியர் பலரும் முன்னே நல்வினைகள் பலவற்றைச் செய்து அந்நிலையை அடைந்தார்கள். அதன்பின்பு அந்நிலையில் இருக்க விரும்பாமல் சிவன்பால் அன்பு செலுத்தியுய்தற்கு இந் நிலவுலகத்தில் வருவார்கள். அவ்வாறு வந்து அவர் சிவனை வழி படுகின்ற இடம் எட்டுத் திசையிலும் பன்னிரு காதப் பரப்பிற்குச் சிவ லோகமாகும்படி அவர்களது ஞானம் செய்யும்.

குறிப்புரை :

`பதினெண்கணம்` என்பதை முதற் குறையாக ``எண் கணம்`` என்றார். `பதினெண் கணங்களாவார் இவர்` என்பதைப் புற நானூற்றுக் கடவுள் வாழ்த்தின் பழைய உரையிற் காண்க. `எண்கணங் களும் முன் இருந்தார்` என மாற்றியுரைக்க. ``இருந்தார்`` என்றது அந் நிலையினராய் இருந்தார் என்றபடி. ``முன்`` என்றதனால் `பின்` என்பது பெறப்பட்டது. எண் - எண்ணம்; விருப்பம். இறந்து - நீங்கி, எனவே, `சுவர்க்கலோக இன்பம் அபக்குவர்க்கே இனிக்கும் என்பதும், `அவர்க்கும் பக்குவம் வந்தபொழுது உவர்த்துவிடும்` என்பதும் பெறப்படும். ``கொன்றைத் - தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொரு ளலவே`` (தி.2 ப.41 பா.7) என்றருளியமை காண்க. ``பன்னிரு காதம்`` என்றது மிகுதி கூறியவாறு. சிவலோகமாகச் செய்தலாவது, மக்களைச் சிவபத்தியிற் சிறந்தவராக்கல்.
இதனால், தேவரியல்பு கூறும் முகத்தால் அடியாரது பெருமை உணர்த்தப்பட்டது. இதனானே, `அடியாருள் முற்பிறப்பில் தேவராய் இருந்தோரும் உளர் என அறிக` என்றதுமாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோக மின்றி அறிவோருண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோக மின்றிப் பரகதி யாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``சிவம்`` என்பதை ஞானிக்கும் கூட்டுக. யோகமாவது `ஒன்றுதல்` ஆதலால், அவயோகம், பயனில் பொருளோடு ஒன்று தலாம். அறிவோர் - ஞானிகள். `அறிவோர் வருகை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்துக் கொள்க. வருகை, அவதாரத்தையும் குறிக்கும். நவம் - புதுமை; அதிசயம். `அதிசயங்களை நிகழ்த்துதல் பலர்க்குக் கூடும்` என்க. காணும் - காணப்படும். பவயோகம் - பிறப்பில் சேர்தல்.
இதனால் அடியாரது பெருமைகளுள் மிக்கன சில எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

பொழிப்புரை :

பிரமன், விட்டுணு, பிறதேவர் ஆகியோ ரெல்லாம் தாம் தாம் செய்யும் அதிகாரத்தைத் தமது ஆற்றலால் அமைந் தனவாகவே கருதி மயங்குவாரல்லது, `இவை பரம்பொருளாகிய சிவனது ஆணையின்வழி நமக்கு அமைந்தன, என்று உணர மாட்டார்கள் (அதனால் அவர்கள் மெய்யடியாராதல் இல்லை) அந் நிலையில், `நமக்குக் கிடைத்த நலங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவனது அருளால் கிடைத்தன` எனச் சிவனுக்கு மெய்யடியா ராயினாரே உணர்வார்கள்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளில் `உணர்வான், உணர்வார்` என்பன பாடம் ஆகாமை அறிந்துகொள்க. மேல் - மேலான பொருள், என்றது அதன் அருளை. மிகு ஞாலம் - வானுலகம். பிரமனாதியோர் சில வேளைகளில். `எமக்கு உள்ள நலம் சிவனருளால் வந்தது எனக் கூறினாராயினும் அது முகமனுரையேயன்றி, மெய்யுரையன்று` என்க.
இதனால், அயன் மால் முதலியோரினும் அடியார் உயர்ந்தோராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.

பொழிப்புரை :

ஒரு வயலையே தங்களுடையதாகக் கொண்டிருப் பவர் அது தரிசாய்க் கிடந்தால் விளைவு ஒன்றையும் பெறமாட்டார். அது போலச் சிவனடியார்கள் `அடியார்களுக்கு` என்று நினைத்துச் சமைத்த உணவையே, `இஃது எட்டுத் திக்கினையும் நிறைவு செய்யும் அமுத மாகும்` என விரும்பி உண்பதன்றி, `தமக்கும் தம் கேளிர் கிளைஞர் கட்குமே` என்று நினைத்துச் சமைத்த உணவை உண்ணமாட்டார்கள்.

குறிப்புரை :

அவ்வாறு சமைத்து அடியவர் வரின் மகிழ்வுடன் வரவேற்று உண்பிப்பவர் உலகில் மிகச் சிலரே யாகையால் அவரை ஒருவனுக்கு அமைந்த ஒரே வயலாகவும், அவரிடத்தன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணார் சிவனடியார் ஆகலின் அவரை ஒரு வயலையே உடைய நிலக்கிழாராகவும் கூறினார். `அந்த ஒரு சிலர் இல்லையேல் சிவனடியார்க்கு உணவில்லை` என்பது பின்னிரண் டடிகளில் ஒட்டணி வகையால் கூறினமையின் இங்கு இவ்வாறு உரை கூறப்பட்டது.
`இறைவன் அடியவர்க்கு (என்று) அட்ட அடிசிலை அவ்வடியார் எட்டுத் திசையும் (விரும்பும்) அமுது என்று எதிர் கொள்வர்` என்க. அடியவரது இயல்பிற்கு ஏற்ப விளைவை ஆகு பெயரால் ``விருப்பு`` என்றார். அன்பில்லாதார் அறஞ்செய்தலை விரும்பார் ஆகலின் அறவோர் அவர்பால் உண்ணார் என்க.
அதனால், `சிவனடியார் தம்பால் அன்புடையாரிடத்தே யன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணலாகாது` என்பது அவரது இயல்பின்மேல் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அச்சிவ னுள்நின் றருளை யறிபவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோஇற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.

பொழிப்புரை :

தம்முள் நிற்கின்ற சிவனுக்குள்ளே தாம் நின்று அவனது திருவருள் இயல்பை அநுபவமாக உணர்ந்த அடியார்கள் பசிமிகுந்த போது தம்முள்ளே அமர்ந்திருக்கின்ற தலைவனது இல்லமாகிய உடலில் உயிர் நின்றாங்கு நிற்றற் பொருட்டு, பிச்சையேற்று உண்டு சிவனைத் தம்மின் வேறாக நினையாது தாமேயாக நினைந்து உலகப் பற்று அற்று ஒன்றாகிய சிவ நிலையிலே உயர்ந்திருப்பார்கள்.

குறிப்புரை :

அகரச் சுட்டுப் பின்னர் வருகின்ற உள்நிற்குந் தன்மையைச் சுட்டிற்று. சிவனுள் தாம் நிற்றலாவது அவனது இச்சா ஞானக் கிரியையகளின் வியாபகத்தில் தமது இச்சா ஞானக் கிரியைகள் வியாப்பியமாய் அடங்கி நிற்க நிற்றல். ஏகாந்தத்தேயிருப்பவர்க்குக் கால வேறுபாடு இல்லையாகலின் ``உச்சியம் போதாக`` என்பது பசி மிகுகின்ற காலத்தையே குறிக்கும். அவரினும் கீழ் நிற்பார் கால வேறுபாடுணர்ந்து உச்சியம் போதாகிய ஒருவேளை உண்டு. ஏகாந்தத்தில் ஏறியிருக்க முயல்வர். `அவரினும் கீழ் நிற்பார் உச்சியம் போதுடன் இரவு ஒருவேளையும் உண்பர்` என்பது
``பரம னடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும்
பறை நிகழ்த்தி`` -தி.12 திருநாவுக்கரசர்., 259
என்றமையான் அறியப்படும். `தம்மை இறைவன் உடைமையாகக் கருதுவர்` என்றற்கு ``கோ இற்கு`` என்றார். பிச்சை - தானம். அடியவர் தானம் ஏற்பரே யன்றித் தருமம் ஏலார். பிடித்தல் - ஏற்றல். ``பேதம் அற நினைந்து`` என்பது முதலாகக் கூறியன, அவையெல்லாம் வாய்த்தற் பொருட்டே அடியவர் உணவை நாடுவர் என்றற்கு.
இதனால் முன் மந்திரத்திற் கூறியவாறு அடியவர் அன்புடையார்பால் சென்று அவர் அளிக்கும் உணவை ஏற்று உண்டலும், உயர்நிலைபெற்று ஞானத்தையும் அதன் பயனையும், எய்துதற் பொருட்டு எனக்கருதி உண்ணல் வேண்டுமன்றி, வாளா, `உடலோம்புதற் பொருட்டு` எனக்கருதி உண்ணலாகாது என்பது கூறப்பட்டது. முன்பு நாயனார், மூன்றாம் தந்திரத்தில்
`உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த் தேனே``
என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றியேயாகும்.

பண் :

பாடல் எண் : 1

விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

பொழிப்புரை :

அடியவர்கட்கு உலக உழவரின் வேறான விதைக் கூடை உண்டு; வேலி நிலம் உண்டு. அதனால் அவர் பசிக்குமுன்பே அவரது உழவுத்தொழில் அவர்கட்குப் பயனைத் தந்து விடுகின்றது. ஆகவே, `பசி வந்து வருத்துமோ` என்னும் அச்சம் இல்லாமல் அதற்கு முன்பே அவர்கள் அறுவடை செய்து பசியின்றி உண்கின்றார்கள். அது மாட்டாதவர்களே வயிறு வளர்க்கும் விருப்பத்தால் பலரிடம் சென்று இரந்து உயிர் வாழ்கின்றனர்.

குறிப்புரை :

ஆகவே, `அவர் அன்பர் விரும்பியளிக்கும் தானத்தை யேற்று உண்ணுதல் சோம்பலால் மானங்கெடாது வாழமாட்டாது மானம் இழந்து பிறரிடம் சென்று இரப்பவரது இரவன்று` என்பதாம்.
உருவக வகையால் ``விதைக்கூடை`` என்பது சுழுமுனை நாடியையும், `வேலி நிலம்` என்பது சந்திர மண்டலத்தையும் அதில் உண்டாகும் விளைவு விந்துத்தானத்து அமிழ்தத்தையும் உணர்த்தின. விச்சுக் கலம் - விதைக் கூடை. ``உச்சிக்கு முன்னே`` என்பது சிலேடை வகையால் `பசிக்கும் முன்னே` என்றும், சந்திர மண்டலத்துக்கு முன்னே உள்ள விந்துத் தானமாகிய ஆஞ்ஞையையும் குறித்தன. ``மாட்டாதார்`` என்றதால் அடியவர் மாட்டுவராதல் விளங்கிற்று. `யோகத்தால் காயசித்தி பெற்று நெடுங்காலம் வாழ வல்லவர் அன்பர் செய்யும் வழிபாட்டினை ஏற்றலைச் சோம்பலால் வறுமை யுற்று இரப்பவர் செயலோடு ஒத்ததாக எண்ணுதல் அறியாமை` என்றபடி.
இதனால், `அடியவர் பிச்சை யேற்றல் இரத்தலன்று` என்பது காரணத்துடன் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிரமனது தலை ஓட்டினையே கலமாகக் கொண்டு எங்கும் சென்று பிச்சையேற்றான். ஏன்? இயல்பாக அறம் செய்யாதவரும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலாகிய செயல் வாய்த்து அறம் பெறுதற் பொருட்டு. இன்னும் அஃதேயன்றி, `தானே பரம்பொருள்` என்பதை விளக்குதற்கும்.

குறிப்புரை :

`எனவே, அவன் அடியார் பிச்சையேற்றலும் அத் தன்மைத்தேயாம்` என்பது குறிப்பெச்சம். தாருகாவன இருடிகள் கருமப்பிரம வாதிகளாய், `கடவுள் இல்லை` என்னும் மயக்க உணர்வினராய்த் தம்மனைவியர்க்கும் அக்கொள்கையினையே போதித்துவர அவர்கட்கு அம்மயக்கத்தப் போக்கி, `பரம்பொருள் ஒன்று உண்டு` என்பதையும், `அப்பரம்பொருள் தானே` என்பதையும், அவர்கட்குத் தெளிவிக்கவே சிவபிரான் திருமாலை மோகினியாகச் செய்து இருடியர்பால் அனுப்பித் தான் பிச்சைப்பெருமானாய் இருடியர்தம் பத்தினிமார் முன் சென்றான். ஆகலின் அதனையே இம்மந்திரத்தின் பின்னிரண்டடிகளில் குறித்தார். பிச்சைப் பெருமானாய்ச் சென்றது, `பரம் பொருள் ஒன்று உண்டு` என்பதை உணர்த்துதற்கும், பிரம கபாலத்தை ஏந்திச்சென்றது, `அப்பரம் பொருள் தானே` என்பதை உணர்த்தற்கும் ஆதலின் ``பிரமன் சிரங்காட்டி`` என மீளவும் அனுவதித்துக் கூறினார். முதற்கண் ``பிரமன் தலைதன்னில்`` என்றது, `தானை பரம்பொருள்` என அகங்கரித்துப் பேசிய பிரமன் தலையிழந்தான் என்பதை உணர்த்து முகத்தால், `சீவர்கள் தாங்களே எல்லாவற்றுக்கும் தலைவர் என எண்ணுதல் பிழை என்பதைக் குறித்தற்கு. இரண்டாவது அடியை, `பிரியாள் அறம் செய்ய` எனவும் பாடம் ஓதுவர். அது முன்னிரண்டடிகளை வெற்றெனத் தொடுத்தல் ஆக்குமாறு அறிக.
இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. `அது` நான்கும் பகுதிப் பொருள் விகுதி. ``பிரான்`` என்பதை முன்னும் கூட்டுக. பிரிதல் - மேற்கொள்ளாதொழிதல்.
இதனால், சிவன் அடியார்கள் பிச்சை யேற்றல் சிவன் பிச்சையேற்றலை நினைப்பித்து, அதன் பயனை யெல்லாம் விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

பொழிப்புரை :

சிவபெருமானை உலக முதல்வனாக உணரா தவர்கள் அவன் இரத்தலை மட்டுமே நோக்கி அது பற்றி இகழ்ந் தொழிவர். அவர்கள் போலன்றி அவனை உலக முதல்வனாக உணர் பவர், `சிவன் ஏன் இரக்கவேண்டும்`என ஆழ்ந்து நோக்குவர். அங் ஙனம் நோக்குவார்க்கு, `அவன் அடியவர் உலகியலில் ஈடுபடாது பசி நீங்குதல் மாத்திரைக்குத்தன் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் நோக்குத் தப்பாது நிறைவெய்துதற் பொருட்டாம்` என்பது விளங்கும்.

குறிப்புரை :

எனவே, `சிவனடியார் இரத்தலைச் செய்தல் திருவருள் வழி நிகழ்வதாம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான் புகலே புகலாக
அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே

பொழிப்புரை :

அடியவர்களே! கருடனுக்கு அஞ்சிய பாம்புகளே சிவனையே அடைக்கலமாக அடைந்து அதனால், ஏன் கருடா சுகமா? என்று கேட்கும் அளவிற்கு அச்சமின்றி யிருக்கின்றன என்றால், `சிவன் தன்னை அடைந்தவர்களது இன்னலை எண்ணுவ தில்லை` என்றல் கூடுமோ! கூடாது. உண்மையில் அவன் நல்லவர் கட்கு இன்பத்தை அலைவீசும் கடலைப்போல மிகத்தருவதற் காகவே இருக்கின்றான். இன்னும் அவர்கட்கு அவன் தன்னையே கொடுத்துவிடுவான். ஆகையால், அவன் ஒரு காலத்தில் தலையோட்டிலே எங்கும் சென்று இரந்தானாயினும், எப்பொழுதும் தேவரும், மூவரும், யாவரும் தன்பால் வந்து வணங்கி நலம்பெற இருத்தல்போலவே நீங்களும் பலரது இல்லங்களைத் தேடிச்சென்று இரவாது இருங்கள்.

குறிப்புரை :

`அவன் உங்களைத் தேடி உணவு வரும்படிச் செய்வான்` என்பது குறிப்பெச்சம். ``புகலே புகலாக`` என்பது முதலியவற்றை ஈசன் என்பதற்கு முன்னர்க்கூட்டி, ``வர இருந்தான் வழிநின்றிடும்`` என்பதனை இறுதியில் வைத்துரைக்க. `இன்பம் அலைபொர என, பொருதற்கு வினைமுதல் வருவிக்க. அவ்வாறே ``வர`` என்பதற்கும் வினைமுதல் வருவித்துக் கொள்க. ``வழி நின்றிடும்`` என்றது, `அவனைப் போலவே இரும்` என்றபடி.
இதனால், `முன்மந்திரங்களிற் கூறியவாறு அடியவர் பிச்சையேற்றல் ஏற்புடைத்தாயினும், இருந்த இடத்திலிருந்தே ஏற்றல் சிறப்புடைத்து` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 5

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் தாம் எடுத்த உடம்பிலே உள்ளா ராயினும் அதன்கண் இல்லாதவரேயாவர். அஃது எங்ஙனம் எனின் அவ்வுடம்பில் உளதாகின்ற பசி, அவா, சினம் என்பவை தம்மை வெல்லும் அளவிற்கு மிகார். ஆதலின், இன்னும் அவர்கள் இந்திரன், மால், பிரமன் முதலியோர் உலகத்திலும், சிவலோகத்திலுங்கூட அங்குள்ள போகங்களை நுகர்ந்து வாழார். மற்றுச் சிவனது திருவடி நிழலில் தலைக்கூடுதல் ஒன்றனையே செய்வார்கள்.

குறிப்புரை :

`அதனால் பிச்சை ஏற்றலையும் செய்யார்` என்பது குறிப்பெச்சம். `சிவனடியார் சரீரத்திடைத் தங்கார்` என மாற்றி முதலில் வைத்துரைக்க. ``தங்கார்`` என்றது, எதிர்மறை வினைப்பெயர். ``பொங்கார்``, என்பதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இதனால், `சிவனடியார்கட்குப் பிச்சையும் மிகையேயாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார்
ஐயம் புகாமல் இருந்த தவசியர்
வையக மெல்லாம் வரஇருந் தாரே.

பொழிப்புரை :

இருந்த இடத்திலேயிருக்கும் யோகிகள் வறியவர் இரக்கும் இரவிற்குத் தாம் செல்லாமல், உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தம்பால் வந்து தம்மை வழிபடும்படி இருப்பார்கள். அங்ஙனமாயின், `ஞானத்தில் மிகுந்தவர் இரத்தலைச் செய்யார்` என்பது சொல்ல வேண்டுமோ!

குறிப்புரை :

`கையகம் நீண்டார் கடைத்தலைக்கே செல்வர்` என்பது பாடமன்று. மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `அகங்கை` எனப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய் வருவது இங்கு நேரே ``கையகம்`` என்றே வந்தது. மௌனம் உடையாரை, `வாய் திறவார்` என்றல்போல, இரவாத வரை. ``கையகம் நீட்டார்`` என்றார், `வாயிற்படி` எனப் பொருள் தரும், கடைத்தலை என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப் பன்மையாய் நின்றது. ஐயம் வறியோர் இரவும், பிச்சை உயர்ந்தோர் ஏற்கும் தானமும் ஆதல் அறிக.
இதனால், சிவனடியார் எஞ்ஞான்றும் இரவார் என்பது கூறி முடிக்கப்பட்டது. இறுதி மூன்று மந்திரங்களும் சிவனடியாருள் அதிதீவிர நிலை உடையாரது செயலே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.

பொழிப்புரை :

நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பும் நீங்குதற் பொருட்டு நல்லோர் தங்கள் உள்ளங்களை அவற்றிற்கு ஏற்பப் பொருந்திய முத்திரைகளாகிய பல வகைப்பட்ட மொழிகளிலே பொருத்தி, அவ்வாற்றால் பரம்பொருளாகிய சிவனடிமேல் செல்லும் படி செலுத்தினால், உலக ஆரவாரங்கள் அடங்கி, மேலான வீடுபேறு உண்டாகும்.

குறிப்புரை :

``நால், ஆறு`` என்பன தொகைக் குறிப்பாய் அத்துணையான தோற்றங்களையும், பிறப்புக்களையும் குறித்தன. `நாலாகிய ஏழ்` எனவும், `முத்திரையாகிய மோன மொழி` எனவும் விரிக்க. முத்திரைகள் வாய்திறந்து பேசாமலே கருத்தை விளக்குதலால் அவற்றை ``மோன மொழி`` என்றார். பதிவித்து உய்த்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``உள்ளம்`` என்றது, அதன் கண் எழும் கருத்துக்களை. ``பதிவித்து`` என்றது, `வாய்திறவாமல்` எனவும், கருத்துக்கள் `அவத்தின் பாலவாகாது, சிவத்தின் பாலவே ஆகல் வேண்டும்` எனவும் கூறியவாறு. மேலான வடு பரமுத்தி.
இதனால், முத்திரைகளது பயன் கூறுமுகத்தால் அவை அடியவர்க்கு வேண்டப்படுதல் கூறப்பட்டது. வாய்திறவாமையை வேண்டியது, `அதனால் உலகியல் தொடர்பு குன்றுதல் பற்றி` என்பதனை, ``கோலாகலம் கெட்டு`` என்பதனால் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி,
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி, கேசரி உண்மை
பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.

பொழிப்புரை :

அரிய சொற்களையே உரைப்பதாயினும் அதனையும் துரிய நிலையில் நிற்குங்கால் எழாமல் அடங்கியிருக்கச் செய்து நின்ற `சாம்பவி, கேசரி` என்னும் இரண்டு முத்தரைகளே முத்துரியங்களும் செறிந்திருக்கும் இடமாய்` உலகியலினின்றும் நீங்குதற்கும், உண்மை ஞானம் பெருகுதற்கும் ஏதுவாய முத்திரைகளாம்.

குறிப்புரை :

முத்துரியங்களை அடுத்த தந்திரத்தில் காண்க. அரிய உரை ... ... கேசரி`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. தாரம் - நாக்கு. ``அங்கே`` என்றது முன்னர்ப்போந்த துரிய நிலையை. பிறழ்தல் - நீங்குதல் உலகியலினின்று.
இதனால், `முத்திரைகள் பலவற்றுள் சிறப்புடையன இரண்டு` என அவை எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம்
ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை;
ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி;
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.

பொழிப்புரை :

சாம்பவி முத்திரையாவது தனது கண்களைச் சிவனது கண்களாகப் பாவித்துக்கொண்டு, நோக்குவன எவற்றையும் அந்தப் பாவனையோடே நோக்குதலாம். இதனால் உலகப் பொருள்கள் மாயையாகாது அருள்மயமாக, தனது ஞானேச்சாக் கிரியைகளும் சிவனது ஞானேச்சாக் கிரியைகளில் அடங்கி நிற்கும். இனித் தன்னைச் சிவனாகப் பாவித்து வணங்குவோரையும் அருளே தனுவாய் நின்று சிவமாகச் செய்யும்.
இனிக் கேசரி முத்திரையாவது, பிறப்பில்லாமைக்கு ஏது வாகிய சின்முத்திரைக் கையுடன் பிரணவ யோகத்தில் பயில்வதாகிய ஞானயோக நிலையாம். இவை இரண்டுமே நாம் நாள்தோறும் பயில்கின்ற சிவஞான முத்திரைகளாகும்.

குறிப்புரை :

பிறவியை அறுப்பது திருவடி ஞானமேயாகையால் அதனை, ``ஆம் பவம் இல்லா அருள்`` என்றார். அருட்பாணி - அருளைக் குறிக்கின்ற கை. `முத்திரையோடு` என உருபு விரிக்க. திருவடியுணர்வைக் குறிப்பது சின்முத்திரை ஒன்றேயாதல் அறிக.
இதனால், மேல் பெயர் கூறப்பட்ட இரு முத்திரைகளின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்;
ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால்
ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

பொழிப்புரை :

`ஆதாரம், நிராதாரம், மீதானம்` என்பன எல்லாம் வரையறைப்பட்ட இடங்களேயாதலின் அவ்விடங்களில் எல்லாம் விளங்குபவன் தடத்த சிவனே. (ஆகவே யோகம் முழுவதிலும் விளங்குபவன் தடத்த சிவனே. அதனால் யோக முத்திரைகள் யாவும் பதமுத்தி அபரமுத்திகளையே தரும்.) ஞானத்தில் சொரூப சிவன் விளங்குதலால் தடத்த சிவனின் வேறாகிய சொரூப சிவனைக் குறிக்கின்ற சின்முத்திரையே முத்திகளிலெல்லாம் முடிந்த முத்தியாகிய பரமுத்தியைத் தரும் முத்திரையாகும்.

குறிப்புரை :

போக சிவனாகிய சதாசிவனுக்குமேல் இலய சிவ னாகிய அருவ சிவன் உளனாயினும், `தடத்த சிவன்` என்பது இனிது விளங்குதற்பொருட்டுச் சதாசிவனையே குறித்தார். ``நற்சிவம்`` என்றது, `சொரூப சிவன்` என்றபடி. மோன முத்திரை - ஞான முத்திரை. அஃதாவது சின்முத்திரை. முத்த அந்த முத்தி - முத்திகளில் இறுதியான முத்தி, முத்தியைத் தருவதை ``முத்தி`` எனப் பான்மை வழக்காற் கூறினார். யோகத்தில் கைச்செய்கையேயன்றி, உடல் அமைப்புக்களும், அஃதாவது ஆசன வகைகளும் முத்திரை எனப்படும்.
இதனால், `யோகிகளினினும் சிறந்த ஞானிகளாகிய அடியவர் கொள்ளத் தக்கது சின்முத்திரையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்;
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்;
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே
ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.

பொழிப்புரை :

வாக்கு, மனம் என்னும் இரண்டும் வாளா இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அதைவிடுத்து, மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது வாளா இருத்தல்தான் மௌனம்` எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன விரதிகளாகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற அந்த வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?

குறிப்புரை :

`அறிந்து வாக்கும், மனமும் மௌனமாய், மோன முத்திரையுடன் இருப்போர் அரியர்` என்பது குறிப்பெச்சம். ``இரண்டும்`` என்றது, `இரண்டன் மௌனமும்` என்றபடி.
இதனால், `மோன முத்திரையுடையார் இன்ன நிலையின ராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்;
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை :

யோகம் கைவந்தமைக்கு அடையாளம் அட்டமா சித்திகள் வாய்ந்தமையாகும். அதுபோல இறைவனின் வேறாகது ஒன்றாகிய அனுபவ ஞானம் கைவந்தமைக்கு அடையாளத்தை ஆராயுமிடத்து மிக்க தகுதி வாய்ந்ததான வேதத்திற் சொல்லப்பட்ட கேசரியாகிய சாம்பவி முத்தரை யோடு கூடிய கேசரி முத்திரையே யாகும். யோக நூலினும் கேசரி முத்திரை சொல்லப்பட்டதாயினும் அஃது யோக கேசரி முத்திரையாம் .

குறிப்புரை :

ஆக்கம், இங்கு மிகுதி குறித்து நின்றது `மிக்க தகுதி யுடைய வேதம்` என்றது. ஞான காண்டமாகிய உபநிடதங்களை. அவற்றுட் கூறப்படும் கேசரி முத்திரை. `சாம்பவி முத்திரையோடு கூடிய கேசரி முத்திரை` என்றும், `யோக நாலுட் கூறப்படும் கேசரி முத்திரை தனியாகச் சொல்லப்படும் கேசரி முத்திரை` என்றும் உணர்த்தற் பொருட்டு முறையே ``கேசரி சாம்பவி`` என்றும் ``கேசரி`` என்றும் கூறினார். ஆகவே, ``சாம்பவி`` என்றது, சாம்பவியோடு கூடியது` என்றதாம். யோக கேசரி மூன்றாம் தந்திரத்துள் கேசரி யோகம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாம். இதனானே, `உபநிடதங்களிற் கூறப்படும் யோகம் ஞானயோகமே` என்பதும் பெறப்படும்.
இதனால், கேசரி முத்திரை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

யோகிஎண் சித்தி அருளொளி வாதனை;
போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி;
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை :

யோகி பெறும் அட்டமா சித்திகள் தருவருளால் கிடைப்பனவாயினும் அதுவும் ஒருவகைப் பந்தமே இனிப் போகியாய் இருப்பவன். `நல்ல புத்திமான்` என மதிக்கப்படுவானாயின் அவன் அறம் முதலிய மூன்று புருடார்த்தத்தைப் பெறும் நன்னெறியில் நிற் பவனேயாவான். ஆறு ஆதாரங்களையும் நன்கு தரிசித்தவன் திருவருள் நெறியைத் தலைப்பட்டவனாவன். ஆகவே ஞானி ஒருவனே ஒப்பற்ற முதற்பொருளை உணர்ந்து அதன்பால் உள்ள பேரின்பத்தவனைப் பெற்றவனாவன்.

குறிப்புரை :

`அத்தகையோனுக்கு உரியனவே சாம்பவியோடு, கூடிய கேசரி முத்திரை என்பது முன்மந்திரத்தினின்றும் வந்தியையும் ஞானியது பெருமையை விளக்குவார் ஏனையோர் நிலைகளை உடன் வைத்துக் கூறினார்.
இதனால், ஞானகேசரி முத்திரையின் சிறப்புப் பிற வற்றோடு ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்;
அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே.

பொழிப்புரை :

பன்னிரு கலைப் பிராசாதமே பதினாறு கலைப் பிராசாதமாய் விரியும். அதனால் அவை இரண்டும் தம்மில் வேறாவன அல்ல. விரிவில் பதினாறாகின்ற அந்தப் பிராசாத யோகமே உலகியலிற் செல்லும் அவாவை அடியோடு அறுக்கும். அதனால் அந்தப் பிராசாத யோகங்களே அவா முற்ற நீங்குதற்கு ஏதுவாகிய `வேதாந்த யோகம்` சித்தாந்த யோகம்` என்றும் சொல்லப்படும். அவற்றை மிக விருப்பத் தோடு செய்தலே சைவத்துள்ளும் மேலான சைவ நெறியாம்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட பிராசாத வகைகள் மூன்றாம் தந்திரத்து, `கலைநிலை` என்னும் அதிகார விளக்கத்தில்* விரித்து விளக்கப்பட்டிருத்தல் காண்க. ``என்``, `எனல்` என்னும் பொருட்டாய முதனிலைத் தொழிற்பெயர். `அவா அறு வகை ஈரை ஆறு அங்கமும்` என மாற்றிவைத்து உரைக்க. `தவாது` என்னும் எதிர்மறை வினை யெச்சத்தின் இறுதி எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. ``தன்மை`` என்றது அதிகாரப்பட்டுவருகின்ற யோகத்தினைப் `பிற யோகங்கள் எல்லாம் வேத யோகமாக இவை வேதாந்த யோகமாம்` எனவும், வேதாந்தத் தெளிவே சித்தாந்தம் ஆகையால், `அதுவே சித்தாந்த யோகமாம்` எனவும் கூறினமை காண்க. `நவ` என்பதன் இறுதி எதுகை நோக்கி நீட்டல் பெற்றது. நவம் புதுமை. அது புதுமை மேற் செல்லும் விருப்பத்தைக் குறித்தது. அவ்விடத்து ``அகம்`` என்றது மனத்தை.
இதனால், `ஞான கேசரி முத்திரையைக் கொள்ளதற்கு உரியவர் ஞானயோகமாகிய பிராசாத யோகம் செய்பவரே` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை;
ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை;
தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை;
காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.

பொழிப்புரை :

`மோன முத்திரை` எனப்படுவதாகிய ஞான கேசரி முத்திரையே உணர்வைச் சிவத்தில் நிறுத்தும் முத்திரையும், சிவா னந்தத்தைப் பெருகச் செய்யும் முத்திரையும் சித்தாந்த முத்திரையும், சிவன் சீவனைச் சதா நோக்கிக் கொண்டிருக்கும் முத்திரையும் ஆகும். அதனால் அதுவே சீவன் முத்தர்க்கும், சீவன் முத்தராய் ஆசிரியத் தன்மையை உடையவர்க்கும் ஏற்புடைய முத்திரையாம். அதுபற்றிப் பல சைவங்களும் அதனையே சிறந்த முத்திரையாகக் கண்டன.

குறிப்புரை :

``முத்தர்க்கு முத்திரை, நாதர்க்கு முத்திரை` என்ப வற்றை, ``கண்ட சமயமே`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``முத்திரை`` பலவற்றுள் முதற்கண் நின்றது எழுவாய்; ஏனைய பயனிலை. `தேன்` என்னும் பெயர், `இனிமை` என்னும் பொருட்டாக, அதனடியாக, `தேனித்தல்` என்னும் வினைச்சொல் பிறந்தது. மேற் பார்வை பார்த்தலை, `கண்காணித்தல்` என்பர். அதனை முதற் குறைத்து, ``காணிக்கும்`` என்றார். அடியவரைக் கண்காணிப்பவன் சிவனேயாதல் வெளிப்படை. ``காணிக்கும்`` என்து இன எதுகை யாயிற்று. `கண்டன` என்னும் முற்றுச்சொல் `அன்` பெறாது ``கண்ட`` என நின்றது. ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவ சமயத்தையே குறித்தது. சைவத்தை நாயனாரே ஐந்தாம் தந்திரத்தில் பல வகையாகப் பிரித்துணர்த்தினமை அறிக.
இதனால், ஞான கேசரி முத்திரையே, முத்திரைகளுள் தலையாவது என்பது பலவற்றாலும் வலியுறுத்தி, ஒருவாறு முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்;
மேனெறி கண்டது வெண்மதி மேதினி,
நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே.

பொழிப்புரை :

தூய நெறியாகிய யோக முறை கைவந்து உண்மையைக் கண்ட அடையாளம், புருவ நடுவில் தோன்றுகின்ற முடி நிலை ஆதாரமாய்க் காணப்பட்டு, மேருமலையின் உச்சியை அடைந்தது போலத் தோன்றும். எனினும் அதுவே முடிநிலையாகாது, அதற்கு மேலேயுள்ள ஏழாந்தானத்திற் சென்றவர் கண்டது சந்திர மண்டலமாம். ஒருவன் அதற்குமேலும் செல்வானாயின், சத்தி சிவ நெறிகளைக் கண்டு மலம் நீங்கிய தூய உணர்வினனாவன்.

குறிப்புரை :

`அந்நிலையை அடைவிப்பது மேற்கூறிய பிராசாத யோக நெறியாகிய ஞான கேசரி முத்திரையேயாம்` என்பது குறிப்பெச்சம்.
``நெறி`` நான்கனுள் ஈற்றில் உள்ளதில் இரண்டனுருபும், ஏனையவற்றில் மூன்றனுருபும் விரிக்க. பூ - பூமி; நிலம் - ஆதாரம். நகம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. மேதினி - மண்டலம். நீள் நெறி - உயர் நெறி. ``நீணெறி`` என்பது இன எதுகை.
இதனால், கேசரி முத்திரைபற்றிக் கூறப்பட்ட ஞான யோகத்தின் சிறப்புணர்த்து முகத்தானே அம்முத்திரையினது சிறப்புணர்த்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.

பொழிப்புரை :

இயன்ற அளவு யோக நெறியில் நின்ற யோகி அந்நிலையிலே தனது புற உடலை விட்டு நீங்கினால் நீங்கின காலம வளர்பிறைக் காலமாய் இருப்பின் முன்னர்த் தேவருலகை அடைந்து சில காலம் இருந்து, பின் சூரிய மண்டலத்தில் நுட்பமாய்ப் புகுந்து, அப்பால் பிதிரர்கள் உலகத்தில் தங்கி, இறுதியில் சந்திர மண்டலத்துள் தஹ்கி அங்குள்ள இன்பத்தை நுகர்வான்.

குறிப்புரை :

ஈற்றடியில் உள்ள ``யோகி உடல் விட்டால்`` என்பதனை முதலிற்கொண்டு உரைக்க. தான், ஏ அசைகள். ``வளர் பிறையில்`` என்றதனால், யோகி வளர்பிறையிற்றான் புற உடலை விட்டு நீங்குவான்` என்பது அமைந்து கிடந்தது. உளர் ஒளி - அசைகின்ற ஒளிக்கதிர். பிதிரராவார் மக்களுள் சிறந்தோரைத் தம்பால் வைத்துப் புரக்கும் கடவுளர். இவரே ``தென்புலத்தார்`` (திருக்குறள் - 43.) ஆவர்.
இதனால், யோக நிலைமுற்றப் பெறாத யோகிகளது வாழ்வின் நிறைவிற்குப் பின் உளதாம் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானிவை யொக்கும் சமாதிகை கூடாது
போனவி யோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.

பொழிப்புரை :

யோக நிலை முற்றப்பெறாது உடல்விட்ட யோகிக்கு மேற்சொல்லியன எல்லாம் பொருந்தும். அவன் அவ்வாறு மேற்சொல்லிய இடங்களிலெல்லாம் தங்கிப் பயன்களை நுகர்ந்தபின் அங்கு நின்றும் பூமியில் வந்து பிறந்து விட்ட குறையாகிய வினையைப் புசித்துத் தீர்ந்தபி திருவருளின் துணையைப் பெற்று இடைவிடாது யோகத்தின் முதிர்ந்த நிலைகளை எய்துவர்.

குறிப்புரை :

யோகத்தின் முடிநிலை சமாதி நிலையாகலின் யோகம் முற்றப் பெறாது உடல் விட்ட யோகியை, ``சமாதி கை கூடாது போன வியோகி`` என்றார். முதற்கண் ``தான்`` என்றது அவனையே யாகலின், அதனை, `தனக்கு` எனத் திரித்துக் கொள்க. `புகலிடத்தினின்றும்` என ஐந்தாவது விரிக்க.
இதனால், `யோக நிலை முற்றப் பெறாது உடல் விட்ட யோகிகள், மீண்டும் பிறந்து அது முற்றப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன்
ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய யோகி மேற்கூறியவாறு உலக மக்கள் நெறியிலே தானும் நின்று, அதற்கு இடையிலே யோகம் முதிரப் பெற்றுச் சிவயோகியாவான். அங்ஙனம் அவன் சிவயோகி ஆவதற்கு வழி பிராசாத மந்திரம். அந்த மந்தித்தில் நின்று சிவயோகி ஆவதற்கு முன்பு அவன் பொதுவான யோகப் பயிற்சியால் கிடைக்கும் காய சித்தியைப் பெறுதலும் உண்டு.

குறிப்புரை :

``விந்து`` என்றது உபலக்கணமாய் ஏனைக் கலைகளோடு கூடிய பிராசாத மந்திரத்தைக் குறித்தது. `இம்மந்திர வழிச் செய்யப்படும் யோகமே சிவயோகம்` என்பது இங்கு இனிது விளக்கப் பட்டது. எனவே, முன் மந்திரத்தில் ``மாயோகம்`` என்றதும் இதுவேயாயிற்று. `வந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
`காயமும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், `முன்மந்திரத்திற் கூறியவாறு மாயோகத்தைப் பெறுதற்குமுன் சிலர் காய சித்தியைப் பெற்று நெடுங்காலம் மண்ணிலே இருத்தலும் உண்டு` என்பது கூறப்பட்டது. காய சித்தியைக் கூறவே ஏனைச் சித்திகளையும் பெற்றிருத்தல் பெறப்பட்டது.
``தவமும் தவமுடையார்க் காகும்`` * என்றபடி, யோகம் முதிரப் பெறுதலும், சிவயோகம் கூடலும் முற்பிறவியில் பழகினோர்க் கேயாம் என்பதும் இதனால் பெறப்படுமாறு அறிக.

பண் :

பாடல் எண் : 4

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன்
புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

பிராசாத யோகமாகிய சிவயோகத்தில் நின்றவன் ஞானம் பெற்றவனோடு ஒத்தவனேயாவன். அவன் ஞானம் பெறுதற்கு முன் உடலை விட்டு நீங்கினானாயினி நேரே சிவலோகத்தையே அடைந்து அங்கு இன்பம் துய்த்தபின் மீளப் பிறந்து அந்தச் சிவ யோகத்தின் வழியே பெற்ற ஞானத்தால் மேன்மை எய்தி அத்தன்மை யாரோடே இருப்பன். அவ்வாறன்றிச் சிவலோகம் முதலியவற்றிற் செல்வோர் பசு புண்ணியம் செய்தவரே யாகையால் சிவயோகி ஆங்கெல்லாம் புகான்.

குறிப்புரை :

சிவயோக ஞானம் - சிவயோகத்தால் பெற்ற ஞானம். `பெற்ற ஞானம்` எனவே, பெறுதல் தானே பெறப்பட்டது. `பெற்ற ஞானம்` எனவே பெறுதல் தானே பெறப்பட்டது. சேர்தற்குச் செயப்படுபொருள் வருவிக்க. `நிற்பர்` என்பது பாடம் ஆகாமை அறிக. `அவரொடு` என உருபு விரிக்க.
இதனால், மாயோகத்தைப் பெற்றவரது வாழ்வு நிறைவின் பின் நிகழ்வது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவ னாகும் பரகாயஞ் சாராதே
ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.

பொழிப்புரை :

குறைவில்லாத ஞானத்தைப் பெற்றவன் `குறை வற்ற யோகி` என்றும் சொல்லப்படுவான். (அதற்குக் காரணம், உடம்புள்ள வரையில் அவன் உடலை விட்டு நீங்கியபின் வேறோர் உடலை எடுத்தல் இன்றியே, உடம்பில் மோன சமாதி நிலையில் தான் வேறின்றி இருந்தவாறே உடனே தான் சிவமேயாவன் ஆகவே, அவன் பரமுத்த னாதலன்றி, உலகியல் உணர்வைப் பொருந்திப் பிறப்பில் மீளான்.

குறிப்புரை :

`தங்கி ஆகும்` என்பதில் செய்தெனெச்சம், `ஓடி வந்தான்` என்பது போல முடிக்கும் சொற்கு அடையாய் நின்றது. ``பரகாயம் சாராதே`` என்பதை முதலடியின் இறுதியில் கூட்டியுரைக்க. இவ்வேகாரம் பிரிநிலை `முத்தராய்` எனவும், `மீளார்` எனவும் பன்மைச் சொல்லாக ஓதுவன பாடம் ஆகாமையறிக. `உணர்வுற்று மீளான்` என்க.
இதனால் ஞானம் முற்றப் பெற்றோர் தம் வாழ்வின் பின்னர் எய்தும் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.

பொழிப்புரை :

`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறை யிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம்முறை யில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை. (என்றதில், `அவர் சிறப்பாக அடையும் பயன் வேறில்லை` என்றபடி) இனிப் பொதுவான யோகத்தைச் செய்து அதன் பயனாகச் சித்திகளைப் பெற்றவர் இறந்தாரானால், அவரது புகழ் உலகில் இறவாதிருக்கும். ஆகவே, மும்மலங்களும் கெடப்பெற்றோரே வாழ்விலும், வாழ் விற்குப் பின்னரும் சிவமாய் நிற்கும் சிறந்த பேற்றை உடையராவர்.

குறிப்புரை :

``செத்தார்`` என அமங்கலமாகவே கூறியதனால், அது பிறந்த பல உயிரும் இறக்கும் இறப்பினை எய்திநின்றோரையே குறித்தது. வினாவியவருக்கு இறுக்கப்படும் விடையை வெகுளியால் அவர்மீதே வைத்து, ``நீர்`` என முன்னிலையாற் கூறினார். வெகுளி, வாளாதே பயன்பெற விழைதல் பற்றி எழுந்தது. சேர்வு+அது` என்க, சேரப்படும் பயனைச் சோர்வு என்றார். `அதுவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. சித்தி, `சித்து` எனவும் படும். புகழுடம்பு நிலைத்து நிற்க இறத்தலை, ``உளதாகும் சாக்காடு``l என்ப ஆதலின், ``இருந்தார்`` என்றார். `இருந்தாரே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயிற்று. `செகத்தில் இருந்தாரே` என்க. `வாளா இறந்தார் பெறும் பயன் யாது` என வினாவினார்க்கு, `பிறந்தோர் யாவரும் புகழோ, ஞானமோ இரண்டில் எதனையாவது எய்தல் வேண்டும்` என்றற்கு, யோகியரும், ஞானியரும் பெறும் பயனை உடன் எடுத்துக் கூறினார். சிறந்த சித்தியாவது முத்தியே யாதல் பற்றி, முத்தியும் சில விடத்து, `சித்தி` எனப்படுதல் பற்றி, முத்தி எய்துவோரை, `சித்தர்` எனக் கூறுகின்றவர் ``திண்சித்தர்`` எனச் சிறப்பித்துக் கூறினார்.
இதனால், வாளா வாழ்ந்து நாள் கழிப்பவர் வாழ்வு முடிந்த பின்னர் யாதொரு பயனும் எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள்
பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி
தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற விரும்பும் உறுதியுடையவன், `சிவனையன்றி வேறொன்றையும் நினைத்தல் கூடாது` என்னும் எண்ணமாகிய விதையை முதலிலே தனது உள்ளமாகிய நிலத்தில் ஊன்றி, (அந்த எண்ணம் சத்திநிபாதத்தால் உண்டாகும்) அங்ஙனமே சிவனையே பலகாலும் நினைத்தும், போற்றியும் வருவானாயின், அந்தச் சிவனே அவனுக்கு ஞானியர் குழாத்தை அவனுக்கு அருள் புரியும் வண்ணம் கூட்டுவிப்பான். (சேரமான் பெருமாளுக்கு வன் றொண்டரைக் கூட்டுவித்ததுபோல.) அங்ஙனம் கூட்டுவிக்கப்பட்ட பின் அவன் தானும் அக்குழாத்து ஞானியர் போல உலகத்தார் அனைவரையும் தன் மக்கள் போலக் கருதி, `அவர்களும் தான் பெற்ற பேற்றைப் பெற வேண்டும்` என விரும்புவான். அத்தகையோனுக்குச் சிவன் அவன் விரும்பியவாறெல்லாம் காட்சி தருவான்.

குறிப்புரை :

`அவ்வாறு நீவிரும் செய்து ஞானத்தோர் பெறும் பயனைப் பெறுவீராக` என்பது குறிப்பெச்சம். `வாளா செத்தார் பெறும் பயன் யாது` என வானாவியவரை வெறுத்து, `அவர் பெறும் பயன் யாதுமில்லை` எனவும், `பயன்பெறும் வழிகள் இவை` எனவும் கூறிய நாயனார், `அவற்றுள் சிறந்ததாகிய ஞானத்தைப் பெறுதல் எவ்வாறு` என அறிய விரும்புவார்க்கு அதனை இம்மந்திரத்தாற் கூறினார்.
``கரு`` என்றது எண்ணத்தை. உரவோன் - திட்பம் உடையவன். குலம் - குழாம். `என்ன புதல்வர்க்கும்` என வரற்பாலது எதுகை நோக்கி, ``என்னப் புதல்வர்க்கும்`` என வந்தது. வேண்டுதல், தான்பெற்ற இன்பத்தை அவரும் பெறுதலை. ``ஞானி`` என்றது முன்பு உரவோனாய் இருந்து பின்பு ஞானம் பெற்றவனை. `இம்மையிலும் தான் வேண்டியவாறே ஈசனைப் பெற்று நிற்பான்` எனவே, உடல் விட்டபின் அவன் ஈசனைப் பெறுதல் சொல்லவேண்டாவாயிற்று.
இதனால், முன் மந்திரத்து வினாவியவர்க்குப் பயன்பெறும் வழி காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம்
அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல்
இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.

பொழிப்புரை :

ஓரோரிடத்தில் மட்டுமே உள்ளது போலக் கட்டடங் களுக்கு உள்ளதுபோலக் காணப்படுகின்ற ஆகாயம் உண்மையில் அவ்வாறின்றி எங்கும் நிறைந்திருத்தல் போல இறைவன் ஓரோ ரிடத்தில் மட்டும் இருப்பவன் போல அங்கங்குள்ள குருலிங்க சங்க மங்களிலே இருப்பினும் உண்மையில் அவன் அந்த இடங்களை யெல்லாம் கடந்து எங்கும் இருக்கின்றான். இந்த உண்மையைத் திருவருளால் உணர்ந்து அந்தத் திருவருள் வியாபகத்திலே நிற்பவனே சிவஞானியாவான். அவன் உடல் விட்டால் அவனுக்கு சிவன் தனது எங்கும நிறைந்த நிறைவு நிலையை அனுபவமாகச் செய்து எல்லை யில்லாத இன்பத்தையும் அருளுவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `தோய்தல் போல` என உவம உருபு விரிக்க. `சிவஞானிகளுக்குத் தற்பரம் எங்குமாய்` என்பதில் `உடல் விட்டபின்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இவ்வுலகிற்றானே சீவன் முத்தி நிலையைப் பெற்றவன் உடலை விட்டபின் பரமுத்தனாய் விளக்குதல் கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

அந்தம் இன்மை ஞானத்தைச் சிறப்பித்தது. வருகின்ற மந்திரத்தில் எண்ணின்மையும் அன்னது. நோதல் பசியினால். செரு - போர். செருச்செய்வாரது நுட்பமாகிய திறமை செருவின்மேல் ஏற்றப்பட்டது. ``வந்து`` என்றதனில் `வேற்று நாட்டிலிருந்து` என்பது பெறப்பட்டது. இவ்வெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. தளை சிதைய ஓதப்படுவன பாடமல்ல.
இதனால் யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், வாளா விடுதலும் குற்றமாதல் கூறப்பட்டது. அடுத்து வரும் மந்திரமும் எரிப்படுத்தல் கூடாமையைக் கூறும்.

பண் :

பாடல் எண் : 2

எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

அண்ணல் - இறைவன். ``ஆங்கு`` அசை. இதனுள் ஞானியின் உடல் இறைவன் கோயிலுக்கு ஒப்பாதல் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.

பொழிப்புரை :

மலங்கு ஆர - மனங்கலங்குதல் மிகும்படி, மண்ணில் அழிதல் - கேட்பாரின்றிக் கிடநத் அழிதல். ஏனையவை வெளிப்படை.

குறிப்புரை :

`பங்கமாம்` என்பது பாடம் அன்று. ``அவர்`` என்றது ஆகுபெயர். இதனால் குகைக்குள் அடக்கும் புண்ணியத்தைப் பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

இதனால் ஞானியின் உடலைச் சமாதி செய்தலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

பொழிப்புரை :

குகையை (நில அறையை) ஒன்பது சாண் ஆழமும் ஒரு பக்கத்திற்கு ஐந்து சாண் சதுரமும் ஆகச் செய்து அடியில் திருமேனி தவநிலையில் அமர்கின்ற ஆசனம் பக்கத்திற்கு மூன்றாக முக் கோணமாக அமைத்து, அதன் மேல் திருமேனியைப் பதுமாசனமாக இருத்துக.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் `உட்குகை` என்னாது `குகை` என்றே ஓதின் தளை சிதைதலை நோக்குக. உட்குகை - குகைக்கீழ். `பத்மாசனமாக இருத்துக` என இறுதியில் ஆக்கத்துடன் ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால் நிலக்குகை அமைத்து அதன்கண் திருமேனியை இருத்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

``தன்`` என்றது உடலை விட்டு நீங்கிய ஞானியை ``மனை`` என்றது ஆச்சிரமத்தையும், தங்கியிருந்த இடத்தையும் பொது வாகக் குறிக்கின்றது. சாலை - பெருவழி. `குளக்கரை, குளங்கரை` - விகற்பப் புணர்ச்சி. `யாற்றிடைத்திடல்` என்க. நற்பூமி - புனிதமான நிலம்.
இதனால் நிலக்குகை அமைத்தற்குரிய இடங்கள் வரையறுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.

பொழிப்புரை :

நில அறையின் மேலே அழகிய கோயில் ஐந்து அடிக்கு ஐந்து அடிச் சதுரமாய், உயரம் ஒன்பதடியாக மும்மூன்று அடி உயரத்தில் ஒவ்வொரு நிலையாய் மூன்று நிலைகள் தோன்றும்படி அமைத்தல் முறையாகும்.

குறிப்புரை :

``குகை`` என்பதன் பின், `மேல்` என்னும் பொருட் டாகிய கண்ணுருபு விரிக்க. ``வட்டம்`` என்றது. `சுற்றுப் பக்கம்` என்ற படி. `பாதம்` என்பது பலபொருள் தருமாதலின் `அடிக்கால்` என்பது உணர்த்துதற்கு ``அங்கபாதம்`` என்றார். அங்கம் - உடல் உறுப்பு. நில அறை இரண்டரை முழச் சதுரம் ஆதலின் அதன்மேல், `ஐந்தடிச் சதுரம்` என்பது அந்த நில அறையை உள்ளடக்கியிருப்பதாகும். நிற்கின்ற பாதம் - நிலத்தினின்றும் எழுந்து நிற்கும் வடிவையுடையது. ஓசம் - ஒளி. அஃது பெயராய் யாவரும் காண விளங்கி நிற்கும் கோயிலைக் குறித்தது. `அண்ணி என்பது இடைக் குறைந்து, ``அணி`` என நின்றது. அண்ணி நிற்பவர், ஞானியை அடுத்திருப்பவர்; மாணாக்கர் முதலாயினோர். ``செய்யும்`` என்னும் பெயரெச்சம் ``நேர்மை`` என்பதனோடு முடிந்தது.
இதனால், நில அறையின்மேல் கட்டப்படும் சமாதி கோயிலின் அமைப்பு முறை கூறப்பட்டது. நில அறை அமைப்பு முறை கூறினமையின் அதனோடு இயையக் கோயில் அமைப்பு முறையும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.

பொழிப்புரை :

நில அறையின் அடியில் ஐம்பொன்களும், ஒன்பான் மணிகளும் நிரம்ப இட்டு மூடி, அதன்மேல் மேற்கூறிய முக்கோண பீடத்தை அமைத்து, அதன்மேல் தருப்பையைப் பரப்பி, திருவெண்ணீற்றைத் திருமேனிக்கு அடியிலும், சுற்றிலும், மேலேயும் நிரம்ப இட்டு, அதன்மேல் பொன்னிறமாய் உள்ள நறுமணப் பொடியை மிகுதியாகத் தூவுதலும் சிறப்புடையதாகும்.

குறிப்புரை :

``ஐம்பொன்`` என்றது பெரும்பான்மை பற்றியே யாகலின். கரும்பொன் ஒழிந்தனவே கொள்க. பொன் செய் - பொன்னினது ஒளியைத் தருகின்ற.
இது முதல் நான்கு மந்திரங்களால் திருமேனியை் பொதியுமாறே கூறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 9

நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

பொழிப்புரை :

நடுவில் நில அறை இருக்க, நாற்புறத்திலும் மேலே வரம்பு அமைத்தபின், அதற்கு மேற்கு பக்கத்தில் நிலத்தின்மேல் ஆசனத் தின்மேல் திருமேனியை எழுந்தருளப் பண்ணி, சந்தனத்தின் கருப்பூரம் முதலியவை கலந்த குழம்பு, தனியாக இழைத்த சந்தனம், புனுகு, பனிநீர் முதலியவை களால் திருமுழுக்குச் செய்வித்து, தேன் துளிக்க மலரும் பூவால் ஆகிய மாலையைச் சார்த்தி, தூப தீபம் காட்டுக.

குறிப்புரை :

``அதன்மேற்காக`` என்றமையால், `நிலத்தின் மேல்` என்பது பெறப்பட்டது. வழிபாடுகளை மிகச் சுருங்கக் கூறினாராயிலும் உபலக்கணத்தால் இங்குக் கூறாதனவும் கொள்ளப்படும்.

பண் :

பாடல் எண் : 10

ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

பொழிப்புரை :

தூப தீபம் காட்டுதல் முதலியவற்றைச் செய்தபின் திருநீற்றைத் திருமேனிமேல் குப்பாயம் போல மிகுதியாகப் பூசி, நில அறையில் அமைத்துள்ள பீடத்தின் மேல் மலர்கள், நறுமணப்பொடி, திருநீறு இவைகளை இட்டு, மேலே திருமேனியை எடுத்து இருத்திச் சுற்றிலும் ஆடையைச் சூழ வையுங்கள்.

குறிப்புரை :

``வைத்து`` என்பதை, ``பொலிவித்து`` என்பதற்கு முன்னே கூட்டுக. விரித்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.

பொழிப்புரை :

குகையில் திருமேனியைச் சுற்றி ஆடையால் மூடியபின் குகையின் மேல நான்கு பக்கங்களிலும் பல வகையான படையற் பொருள்களை வாழைக் குருத்தின்மேல் மேல் இட்டு நிவேதித்த பின்பு திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிவிடுங்கள்.

குறிப்புரை :

படையற் பொருள்களை மேலே நிலத்தில் வாழைக் குருத்தின் மேல் நான்கு பக்கமும் இட்டு நிவேதித்தல் சூழ்ந்துள்ளோர் பலரும் கண்டு வணங்குதற்பொருட்டு. மற்றும் வானவரும் அப் பொழுது ஞானியை வணங்குவர் என்பது கருத்து. அலம் வைத்து - நிரம்ப இட்டு. குழை முகம் - அருள்புரிகின்ற ஞானியின் முகம். பார்வை தரித்தல் - நிவேதனங்களை ஞானி தான் பார்வை செய்து ஏற்றல். பரிவட்டம், ``வட்டம்`` என நின்றது.

பண் :

பாடல் எண் : 12

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.

பொழிப்புரை :

திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிய பின்பு திருவெண்ணீறு, மணப்பொடி, பலவகை மலர்கள், தருப்பைப்புல், வில்வ இலை முதலியவைகளை நிரம்பச் சொரியுங்கள்; பின் அருக்கியம் முதலியவைகளைக் கொடுத்துக் கோயில் எடுத்தற்குரிய தொடக்கத்தைச் செய்து விடுங்கள்.

குறிப்புரை :

`தொடக்கத்தைச் செய்யுங்கள்` என்றதனால், `திரு மேனியை மண்ணால் மூடி மறையுங்கள்` என்பது தானே பெறப் பட்டது. இவ்விடத்தில் கூறுதற்கு உரிய கோயில் எடுத்தலை ஒரு காரணம் பற்றி, ``பொற்பமர் ஓசம்`` என முன்னே கூறினார் ஆகலின், `அதனை இங்குக்கொள்க` என்றற்கு அங்குக் கூறியதனை இம்மந்திரத்து ஈற்றடியில் அனுவதித்துக் கூறினார். மீது `சொரிந்திடும்` என்பதை `வில்வமும்` என்பதன்பின் கூட்டுக. இங்கு மஞ்சனமாவது அருக்கியபாத்திய ஆசமனங்களைக் கொடுத்தல்.

பண் :

பாடல் எண் : 13

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`குகையின் மேல் கோயில் எடுத்தபின் கருவறையில் ஒரு பீடத்தின்மேல் அரச மரமாயினும், இலிங்கமாயினும் இவற்றுள் ஒன்றை நிறுவி, நாள்தோறும் பதினாறு வகையான உபசாரங்களுடன் வழிபாடு செய்க` என்பதும், `கோயிலை வடக்கு நோக்கியதாக வேனும், கிழக்கு நோக்கியதாகவேனும் அமைக்க` என்பதும் இதனால் கூறப்பட்டன. `இன்னதை` நிறுவலாம்` என்பது குரு ஆணை பற்றியும், திருவருட் குறிப்பு நோக்கியும் அறியப்படும் எனக் கொள்க.
`வாயிலை வடக்கு நோக்கியேனும், கிழக்கு நோக்கியேனும் அமைக்க` என்றதனால். `அதற்குமுன் திருமேனியும் அவ்வாறு இருத்தப் படும்` என்பதும், திருமேனி இருத்தப்பட்ட வகையிலே வாயிலும் அமைக்கப்படும்` என்பதும் உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.
கோயிலின் கருவறையிலே வில்வ மரம். பாத பீடிகை இவைகளை அமைத்தலும் மரபாக உள்ளது.
இங்ஙனம் இறுதியில் சமாதிக் கோயில்முறை சொல்லி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
கதியிற் கரணம் கலைவை கரியே.

பொழிப்புரை :

முழுப்படைப்புக் காலத்தில் முதற்கண் சுத்த மாயா காரியங்களே தோன்றும். அக்காரியம் வாக்குகளும், இறைவனது நவந்தரு பேதங்கட்கும் இடமாய் நிற்கும் சுத்த தத்துவங்களும் ஆகும். நவந்தரு பேதங்களை ஒடுக்க முறையில் வைத்து எண்ணினால் பிரமன் முதலியனவாக அமையும். புண்ணியம் காரணமாக இறைவனது அதிகார சத்தி பதிதலால் அப்பெயர் பெற்று நிற்கும் அணுபக்கத் தினரும் உளர். அது நிற்க. வேறு பிரமனாதியர்க்கும், மற்றும் நால்வகை வாக்கிற்கும், அனைத்துப் பொருள்கட்கும் இடமாய் நிற்பன பஞ்சகலைகள்.

குறிப்புரை :

`அந்தப் பஞ்ச கலைகளும் சுத்த மாயையினின்றே தோன்றும்` என்பது கருத்து. குண்டலியாவது எழுத்தோசையாகிய நாதமேயாம். குடிலையில்` என்பது, ``குடிலில் எனக் குறைந்து நின்றது. `விந்து, குடிலை என்பன ஒருபொருட் சொற்கள் எனினும் சில இடங்களில் குடிலை என்பது ஆகுபெயராய் அதன் காரியமாகிய வாக்குகளை உணர்த்தும். கதி - காரிய நிகழ்ச்சி. அதிகரணம் என்பது `கரணம்` எனக் குறைந்து நின்றது. அதிகரணம் - நிலைக்களம், குண்டலி` என்றது சூக்குமமாகிய காரண நிலையாகலின் பின்னர்த் தூல மாகிய வைகரியை வேறு கூறினார். ``வைகரி`` என்றது உபலக்கணம் ஆதலின் ஏனை மத்திமை பைசந்திகளும் கொள்ளப்படும். `கரணம் கலை` என்றதின் பின் `அவற்றில் வைகரி முதலியன நிற்கும் என உரைக்க. இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகளில் தோன்றும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. சுத்த தத்துவங்கள் ஐந்து எனப்படினும் அவை அனைத்தும் சிவ சத்தி பேதங்கட்கு இடமாகு மாற்றானே ஐந்தாய் நிற்றலின் நவந்தரு பேதங்களுள் பரநாத பரவிந்துக்கள், `அரன் அரி அயன்` என்பன ஆகிய பேதங்கட்கு உரிய அதிகரணங் களையும் வேறு வைத்து எண்ணி `வயிந்தவம் ஒன்பான்` என்றார். வயிந்தவம் - விந்துவின் காரியம். `அரன், அரி, அயன்` என்பவர் கட்குச் சுத்த வித்தையிலும், பரநாத பரவிந்துக்களுக்கு அபரநாத அபர விந்துக்களிலும் களம் உண்டு என்க. ``விதியிற் பிரமாதிகள் மிகு சத்தி`` என்றது பிராகிருதராய் நிற்கும் மூர்த்திகளை மேற்கூறப்பட்டவரோடு வைத்து மயங்காமைப் பொருட்டு, இடைப்பிறவரலாகக் கூறினார். `விதியின், மிகு சத்தியால் பிரமாதிகள் ஆவர்` என்க. விதி - புண்ணியம்.
``விரைக்கம லத்தோன் மாலும் ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே``
எனவும்,
``அயன்றனை ஆதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்``
எனவும் சிவஞான சித்தி (சூத்திரம் -2-34,60) கூறுதல் காண்க.
நவந்தரு பேதங்கள் `திருவருள் வைப்பு` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டன.
இதனால் சுத்த மாயையாகிய விந்துவின் காரியங்கள் ஓராற்றல் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும்
செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும்
செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம்
செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.

பொழிப்புரை :

நவந்தரு பேதங்களில் நாதங்களும், விந்துக்களும் முறையே சிவமும், சத்தியும் ஆதலால் சிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூற்று நிலைகளுள் அதிகார நிலையாகிய மகேசுரனது பேதங்கள் இருபத்தைந்தினையும் `சத்தியின் காரியங்கள்` என்றும், நவந்தரு பேதங்களில் விந்து, சத்தி இவை யொழிந்த ஏழும், குணமூர்த்திகள் மூவரும் ஆகப் பதின்மரும் நாயக, நாயகி பாவத்தில் நாயகர்கள் ஆதலால் அவர்களையே, `சிவ பேதங்கள்` என்றும் ஒருவாறு கூறலாம். இனி அந்தச் சத்தி சிவங்கள் ``சகுணம், சமலம், நின்மலம், ஆனந்தம்`` என்னும் காரணத்தால் நான்காகின்ற மாயையின் வகை மூன்றினின்றும் முப்பத்தாறு தத்துவங்களையும் வகைப்படத் தோற்றுவிக்கும்.

குறிப்புரை :

``செய்திடும்`` நான்கில் முதல் இரண்டையும் `அங்ஙன மாகச் செய்யும்` என்னும் பொருளையுடைய முற்றாக்கி, திறன் என்னும் எழுவாய்கட்குப் பயனிலைகளாக்குக. மூன்றாவதனைப் பெயரெச்சமாக்கி, அதனை ``அவை`` என்பதனோடு முடிக்க. மற்று - வினை மாற்று. `அவை, ஈரிரண்டினின்றும் தத்துவங்களைத் திறம் செய்திடும்` என இயைக்க.
இதனால், சுத்த மாயையாகிய விந்துவில் நிற்கும் சத்தி சிவங்களின் செயல்கள் ஒருவாறு வகுத்துரைக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

வந்திடு பேத மெலாம் பரவிந்து
தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை
உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

பொழிப்புரை :

மாயா காரியங்களாய் உள்ள பலவற்றிற்கும் காரணமாய் நிற்பது `பரவிந்து` என்னும் தத்துவம். அது சுத்த மாயையின் காரியமே எனினும் அதன்கண்ணே `அபர வாகீசுவரி, பரவாகீசுவரி`, அனைத்து மந்திரங்களையும் செலுத்துகின்ற பிரணவம், அதன வடிவமாகிய குண்டலி என்னும் நான்கும் பொருந்தி விளங்கும்.

குறிப்புரை :

பரவிந்து `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளது. அதற்குமேல் பரநாதம் இருக்கும். அஃது இங்குக் குறிப்பிடப்பட வில்லை. `பரை` என்றது பரவாகீசுவரியை ஆகையால், வாளா, ``வாகீசி`` என்றது அபர வாகீசுவரியையாயிற்று. `பிரணவந்தானே குண்டலியாம்` என்றற்கு ``ஓமுறு குண்டலி`` என்றார். அங்ஙன மாயினும் அஃது அப்பெயரால் யோகத்தில் சிறப்பாக உன்னப்படுதல் பற்றி அதனை வேறாகக் கூறினார். அபர வாகீசுவரியும், பிரணவமும் அபர விந்துவில் விளங்குமாயினும் அவையும் காரண நிலையில் சூக் குமமாய்ப் பரவிந்துவில் விளங்குதலை, ``மேவா விளங்கும்`` என்றார். முன்னர், `பரவிந்து` என்றதனால், பின்னர் ``விந்து`` என்றதும் அதுவேயாயிற்று. ஆகவே பின்னர் ``விந்து`` என்றது, `அவ்விந்து` என்றதாயிற்று.
இதனாலும் விந்துற்பனங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதி உளமந்த மாமே.

பொழிப்புரை :

நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் பஞ்சகலைகளில் முறையே பொருந்தி நிற்கின்ற அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் - என்னும் சூக்கும பஞ்சாக்கரங்கள் முறையே மனம் முதலாகப் புருடன் ஈறாக உள்ள கருவிகளைச் செலுத்தி நிற்கும்.

குறிப்புரை :

``நிவிர்த்தாதி மேவு`` என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை. ``அகராதி, நாதாந்தம்`` என்பவற்றையும் அகரமாகிய ஆதியும், நாதமாகிய அந்தமும் எனச் செவ்வெண்ணாக்குக. உளம் - புருடன், அகாரம் முதலிய ஐந்தும் முறையே தூல வைகரி, சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் ஐவகை வாக்குக்களைக் குறிப்பன. அவை முறையே, அகங்காரம், புத்தி, மனம், சித்தம் என்னும் அந்தத் கரணங்கைளயும், புருடனையும் செலுத்தும் - என்பதையும், அதனாலேதான் உயிர்கட்குச் சவிகற்ப உணர்வு உண்டா கின்றது - என்பதையும் சிவஞான போதத்து முதலதி கரணத்தில் காண்க. ``மனாதி`` என்றது `அந்தக் கரணம் எனப் பொதுப் பொருள் தந்தது. அவற்றைச் செலுத்துவனவற்றை அவையேயாக உபசரித்தார்.
பிரதிட்டையாதி கலைகளில் இயற்கையாய் நிற்கின்ற உகாரம் முதலிய நான்கும் உபாதி (கலப்பு) வசத்தால் கீழ்க்கீழ்க் கலைகளிலும் பொருந்தும் என்க.
அகரம் முதலிய ஐந்தும் பிரணவத்தின் கூறுகள் (கலைகள்) ஆகும்.
இதனால் சுத்தமாயை தனது காரியமாகிய நாதம் முதலியவை வாயிலாக உயிர்கட்குச் சவிகற்ப உணர்வைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அந்தமு மாதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாகு மந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.

பொழிப்புரை :

முதல்வன் உலகத்திற்கு முதலும், முடிவுமாகி, அதனுள் எங்கும் நிறைந்து நிற்கும் முறைமையால் பல தொகுதிகளாய் நிற்கும் காரண காரியப் பொருள்களைத் தோற்றுவித்து, அவன் ஐந் தொழில் செய்ய முதற்கருவியாய் நிற்பது விந்துவாகிய சுத்த மாயையே.

குறிப்புரை :

மாயையினின்றும் தோன்றும் தத்துவங்களில் சில தம்மினின்றும் பிற தத்துவ தாத்துவிகங்கள் தோன்றுதற்குக் காரண மாகவும், அவ்வாறன்றிக் காரியமேயாகவும் நிற்றல் பற்றி, ``கந்தம தாகிய காரண காரியம்`` என்றார். கந்தம் - கூட்டம்; தொகுதி. மாயை காரியப் படுதல் முதல்வனது சந்நிதியின்றி அமையாமை பற்றி, `வியா பியாய நெறியால் செய்யும் வீயம்` என்றார். `நெறியால்` என உருபு விரிக்க. முதற்கருவியாகும் சிறப்பு நோக்கி,``ஐங்கருமமும்தான் செய்யும்`` என அதனையே வினைமுதல்போலக் கூறினார். வீயம், `பீசம்` என்பதன் திரிபு. பீசம் - விதை; என்றது முதற்காரணத்தை.
இதனால் முதற்காரணமாகிய விந்து முதல்வனது சந்நிதி யானே காரியப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புற மாகுமே.

பொழிப்புரை :

அனைத்திற்கும் முதற் காரணமாகிய சுத்த மாயை யின் ஆற்றலால் அனைத்திற்கும் வியாபகமாகிய நிவிர்த்தி முதலிய கலைகளும், அவற்றுள் அடங்கி நிற்கும் புவனங்களும் விரிந்து நிற்க, காரிய மாயையாகிய மூலப் பிரகிருதியினின்றும் பௌதிக சரீரத்திற்குக் காரணமாகிய ஐம்பூதங்களும் தோன்ற, சுத்தமாயை அவை அனைத்திலும் உள்ளும், புறம்புமாய் நிறைந்து நிற்கும்.

குறிப்புரை :

நிவிர்த்தி முதலிய கலைகள் பிறவற்றிற்கு வியாபக மாதலல்லது தாம் வேறொன்றில் வியாப்பியம் ஆகாமை பற்றி அவற்றை, `அகண்டம்` என்றார். ``பாரிப்ப`` என்பது இங்குத் தன் வினையாய் நின்றது. சாங்கியர், `காரணம்` எனக்கூறும் மூலப் பிரகிருதி உண்மையில் `கலை` என்னும் தத்துவத்தின் காரியமேயாதல் தோன்ற அதனை, ``காரிய மாயை`` என்றார். பிரகிருதி காரியங்களில் சிறப்பாக அறியப்படுவன ஐம்பூதங்களேயாதல் பற்றி அவற்றையே எடுத்துக்கூறினார்.
இதனால், சுத்த மாயை அனைத்துலகங்களிலும் வியாபித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புறமக மெங்கும் புகுந்தொளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாத மாய்உள்
திறனொடு வீடளிக் கும்செயல் கொண்டே.

பொழிப்புரை :

பிண்டத்தில் கரு உற்பத்திக் காரணமாய் ஆண் உடலில் வெண்ணிறம் உடைமை பற்றி, `சுக்கிலம்` எனப்படுகின்ற தாது `விந்து` எனப்பெயர் பெற்றதனை அண்டத்தில் புறம், அகம் என்னும் வேறுபாடின்றி எவ்விடத்தும் வியாபகமாய் நிற்கும் காரணப் பொருளாகிய `சுத்த மாயை` என்றே கொள்ளுதல் வேண்டும். (நாதத்தின் காரியத்தை `விந்து` என்னும் தத்துவமாகக் கொள்ள லாகாது` - என்பதாம்.) இனப் பெண்ணுடலில் செந்நிறம் உடைமை பற்றி, சோணிதம்` எனப்படுகின்ற தாது, காரியப் பொருளாகிய நாதம்` எனத் தக்கதாகும். ஆகவே அவை முறையே முதல்வனாகிய சிவனது கூறும், அவனுக்குத் துணைவியாகிய சத்தியது கூறுமேயாகும், (அவ்வாறில்லை யேல் அவை உயிர்க்கு இன்றியமையாக் கருவிகளாகிய தனு கரணங் களைத் தோற்றுவித்தல் இயலாது என்பதாம்.) அவை அங்ஙனமாய்த் தனுகரணங்களைத் தோற்றுவித்து உயிர்கட்கு மன உறுதியுடன் செய்யும் ஞானச் செய்தி வாயிலாக வீட்டைத் தருவனவாம்.

குறிப்புரை :

சுக்கில சோணிதங்கள் காரண காரியங்கள் அல்ல வாயினும் முதல்நிலையும், வழிநிலையும் ஆதல்பற்றி அவ்வாறு கூறினார். ``பாதம்`` என்றது, `கூறு என்றபடி, `பாகம்` எனப்பாடம் கொள்ளுதலும் பொருந்தும். `வெண்மை நிறமது விந்து; செம்மை நாதம்` என மாற்றிவைத்துரைக்க, நிறம், செம்மை இவை ஆகுபெயர்கள்.
இதனால், `விந்து நாதங்கள் அண்டத்திற்கன்றிப் பிண்டத் திற்குக் காரணம் அல்ல என மயங்கற்க; சிவம் சத்திகளது கூறுகளின் தொடர்பால் அவை பிண்டத்திற்கும் காரணமாதல் தெளிவு` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற
நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின்
கண்ட கலாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.

பொழிப்புரை :

உயிர்களை மேற்கூறியவாறு அண்டத்தையே யன்றிப் பிண்டத்தையும் ஆட்கொள்கின்ற விந்து பரம்பொருளைப் போலவே மல கன்மங்களோடு விரவுதலின்றித் தூயதாய், ஆயினும் நூலும் மண்ணும், ஆடையும் குடமுமாய்க் காரியப்படுதல் போலக் காரியப்படுவதாய், காரண ரூபத்தில் என்றும் அழிவின்றி, கலை முதலிய தத்துவங்களின் காரியமாய் உள்ள அனைத்து அண்டங் களிலும் அவையேயாய்க் கலந்து பெருமாயையாய் உள்ளது.

குறிப்புரை :

பெருமையாவது அனைத்துப் பொருட்கும் வியாபகமாய் அவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றல், அதுபற்றியே சுத்த மாயை `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் சொல்லப்படுகின்றது என்பதாம். ஊர்த்துவம், மேல். அசுத்த மாயை `அதோ மாயை` எனப்படும்.
`சுத்த மாயையின் காரியம் விருத்தியேயன்றிப் பரிணாம மன்று` என்பது, ``படம் குடிலாய் நிலை நிற்றலின்`` என்பதனால் கூறப்பட்டது. ``செயல் பரிணாமமன்று; புகழ்ந்திடும் விருத்தியாகும், படம் குடிலானாற் போல`` எனச் சிவஞான சித்தியிலும் (முதற் சூத்திரம், 24) சொல்லப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.
இதனால் சுத்த மாயையினது பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேயுள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.

பொழிப்புரை :

`அது` எனச் சேய்மையாதாகச் சுட்டிச் சொல்லப் படுகின்ற மகாமாயையாகிய அந்த விந்துவிலே நின்று, அதனை அடைந்தவர்க்கு இனிப்பவனாகிய சிவன், `இது` என அண்மையாகச் சுட்டிச் சொல்லப்படுகின்ற சுக்கிலமாகிய இந்த விந்துவிலும் நின்று உயிர்களைப் பிறப்பித்துப் பின் வீடடையச் செய்தலை உணரும் உணர்வுடையார் உலகத்து அரியர், ஆயினும், மகாமாயையையே தனக்கு உடமாகக் கொண்டு விளங்குகின்ற அந்தப்பெருமான், நீரால் உண்டாக்கின்ற உணவுப்பொருளில் தங்கிப் பின் கருவுற்பத்திக்கு யாவரிடத்தும் பொதுவாய் உள்ள காரணமாகின்ற விந்துவிலும் இருக்கும் புண்ணியன் ஆகின்றான்.

குறிப்புரை :

இதனுள் ``விந்து`` என்றன `முதற்காரணம்` என்றவாறு. ``தானே`` என்பதை, ``உணரார்`` என்பதற்குப் பின் எடுத்துக்கொண்டு உரைக்க. சுவையைச் சிறப்புக் குணமாக உடைமை பற்றி நீரை ``மது`` என்றார். மலர்தல், விருத்திப்படுதல். சூக்கும தேகியாய் நிற்கும் உயிர் முதற்கண் பயிர்களில் தங்கியே பின்னர் உணவாய் ஆண் உடம்பிற் செல்லுதலைப் பஞ்சாகினி வித்தை பற்றி அறிக. தாவரங்களிலிருந்து உண்டாகும் உணவுப் பொருளால் ஆனதே தூலசரீரம். (பருவுடம்பு) அதனால் அஃது `அன்னமய கோசம்` எனப்படுகின்றது. அதன் சிறப்பு, `தைத்திரீயம்` என்னும் உபநிடதத்தில் சொல்லப்பட்டது. சிவனுக்கு இடமான சிவதத்துவங்கள் சுத்த மாயாகாரியம் ஆதல் பற்றியும், அதன்கண் உள்ள புவனங்கள் முத்தியுலகங்கள் ஆதல் பற்றியும் சிவனை, ``அதுவித்திலே நின்று அங்கு அண்ணிக்கும் நந்தி`` என்றார்.
இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து அண்டத்திற்குக் காரணமாயுள்ள விந்துவோடொப்பதாய், சிவனுக்கு இடமாகும் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.

பொழிப்புரை :

முளை விதையில்தான் உள்ளது. என்றாலும் அது விதை தனியேயிருக்கும்பொழுது தோன்றாது. நிலத்தில் விதைத்தால் தான் தோன்றும். `வித்தில் முளை உள்ளது` என்றால், அது `குடத்தில் நீர் உள்ளது` என்பது போல்வதன்று. அஃதாவது இடமும், இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியின் உடம்பும், அதினின்றும் வெளிவருகின்ற நூலும் போலக் காரண காரிய இயைபுடையனவாம். அது போன்றதே சிவன் உலகத்தைத் தோற்றுவிக்கின்ற முறையும்.

குறிப்புரை :

`அதனை அறிந்துகொள்` என்பது குறிப்பெச்சம். எனவே, இம்மந்திரத்தை ஒட்டணியாகக் கொண்டு பொருளை உய்த் துணர்ந்து கொள்ளல் செயற்பாலதாம். அங்ஙனம் கொள்ளுமாறு:- `மாயையில்தான் உலகம் உள்ளது. என்றாலும் அந்த மாயை சிவனது சங்கற்பத்தில் பொருந்தினால் அதினின்றும் உலகம் தோன்றும். `மாயையில் உலகம் உள்ளது` என்றால் அஃது இடமும் இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியினது உடம்பும், அதனுள்ளியிருந்து வெளிப்படுகின்ற நூலும் போலக் காரணகாரிய இயைபுடையனவாம்` என்பது. இங்ஙனம் கூறியதனால், சிலந்தியினது உடம்பினுள் நூல் உள்ளதாயினும் அவ்வுடம்பைத் தாங்கி நிற்கின்ற உயிர் அந்நூலை வெளிப்படுத்தினாலன்றி வெளிப்படாமை போல் மாயையைத் தாங்கி நிற்கின்ற சிவசத்தி அதினின்றும் உலகத்தைத் தோற்றுவித்தாலன்றித் தோன்றாது என்பது விளங்கும்.
``வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்``
என்னும் சிவஞான போதமும் (சூத்திரம், 1 அதிகரணம், 2) இங்கு நினைக்கத்தக்கது.
இரண்டாம் அடியில் உள்ள ``வித்தினில்`` என்பது வேண்டா வழிப் பெற்ற இன்சாரியையுடன் வந்த, `செயின்` என்னும் வினை யெச்சம். `வித்தினில் முளை குடத்துள் நீர்போல நிற்பின் யாவரும் எளிதில் வெளிப்படுத்துதல் கூடும். இஃது அன்னதன்று ஆகலின் நிலத்தாலன்றி இயலாது` என உவமைக்கண் பொருளிலும் அவ்வாறு கொள்க. `மாயையாகிய விந்துவிற்குச் சொல்லியது சுக்கிலமாகிய விந்துவிற்கும் பொருந்தும்` என்பது கருத்து.
இதனால், அண்டபிண்டங்களாகிய உலகம் சிவனது சங்கற்பத்தாலன்றி உற்பத்தி கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

பொழிப்புரை :

பலவகையாக உண்ணப்பட்ட உணவுகள் மூன்று கூறுபடும். ஒரு கூறு உடம்பாய்ப் பரிணமிக்கும். மற்றொரு கூறு மனத்தின் தன்மையாய் அமையும். இன்னொரு கூறு மலமாகிக் கழிந்தொழியும். உணவால் திருத்தம் உறுகின்ற உடம்பும், மனமும் சேர்ந்து முன்னாட்களில் காரண நிலையில் `சாரம்` என்பதாய் இருக்கும்.

குறிப்புரை :

``உடம்பு`` என்றது அதன்கண் உள்ள குருதி, முதலிய தாதுக்களையும், ``மனம்`` என்றது அதனது நினைவையுமாகும். தாயின் முலைப்பாலுக்கு அவளது உடம்பில் உள்ள குருதி முதலி யனவும், குழவியிடத்துள்ள அன்பும் காரணமாதல் போல்வதே உடம்பில் உள்ள குருதி, ஊன், நிணம் முதலிய தாதுக்கள் சாரமாதற்குக் காரணம் ஆதல்.
இதனால், மேல், ``மது வித்திலே மலர் அன்னமதாகி`` என்றது இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இரதம் முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளருங்கா யத்திலே.

பொழிப்புரை :

மேல் சொல்லப்பட்ட `சாரம்` என்பது உட்பட ஏழ் தாதுக்களில் மூன்றிலிருந்து சில நாட்களில் புல் நுனியிற் பனியளவான துளிகள் பல உருவாகும். அந்தத் துளிகளே பிண்ட உற்பத்திக்குக் காரணமான `விந்து` எனக் குறிப்பிட்டுக் கூறப்படுகின்றன. அவை இருபத்தொரு நாள் வரையில் உடம்பினுள் அந்த நிலையிலே முதிர்ந்து வரும்.

குறிப்புரை :

தாது - மூலப்பொருள் `ஏழ் தாதுக்களில்` - என ஏழாம் உருபு விரித்துரைக்க. உடம்பிற்கு மூலமான ஏழு பொருள்களாவன மேற்கூறிய சாரம், குருதி, என்பு, தோல், ஊன், நிணம், சுக்கிலம் - என்பன. இவற்றின் நிலைபேற்றிற்கு ஒன்றிற்கு மற்றொன்று காரண மாகவேயிருக்கும். காரண நிலையில் `சுக்கிலம்` எனப்படுவதே காரிய நிலையில் `விந்து` என வேறுபட்டு நிற்கும் என்பது இங்கு அறிதற் குரியது இருபத்தொரு நாட்களுக்குப் பின் விந்து வேறொன்றாய் மாறும் என்பதும் இங்கு உணரத்தக்கது.
இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து உண்டாகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக்
காயத்து டன்மன மாகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு முன் இருபத்தொரு நாள் வரையில் முதிர்ந்து வந்த விந்துக்கள் பின் இருபத்தொரு நாட்கள் வரையில் மனத்தின் வழிப்பட்டு நிற்கும். `சத்தி நிபாதரும், உலகரும்` எனமக்கள் இருதிறத்ததராதலின் அவருள் சத்திநிபாதர் மனம் சிவன் பஞ்சமூர்த்திகளாய் விளங்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலா ரூபமாய் நிற்கும் சுத்த மாயையை நோக்கிச் செல்லுமாகலின் அவர் காம வசப்பட்டு விந்துவை வெளியே வீழ்ந்தொழிய விடாமையின் அவை அவரை விட்டு நீங்கா. (அவரது மனம் பஞ்ச கலைகளை நோக்கிச் செல்கின்ற செலவிற்கு அவை வலிமை தந்து நிற்கும் என்பதாம். அவரொழிந்த ஏனை உலகர் சிறிதுபோதிலே நிலையின்றி ஒழிவதாகிய காம இன்பத்திலே செல்பவர் ஆதலின் அவர் மனம் அங்ஙனம் சென்ற பொழுது அவரது விந்துக்களும் அதனுடன் சென்று வெளியே வீழ்ந்து அழிந்தொழியும்.

குறிப்புரை :

`கலந்திட்டு ஆகும்` `நீங்கா அழியும்` என்னும் பயனிலைகட்கு மேலை மந்திரத்தில் உள்ள ``மருவிய விந்து`` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``ஏழ் மூன்று நாளில்`` என்பதைப் பின்னும் `காயத்துடன்` என்பதோடும் கூட்டுக. ``கலா விந்து நேயம்`` என்றதை, `சிவ பத்தி, அடியார் பத்தி` என்பன போலக் கொள்க. ``விடாமையின்`` என்பதற்குமுன் `அவர்` என்பது வருவித்து `விடாமையின்`` என முடிக்க. மாயம், நிலையாமை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய இன்பத்தைக் குறித்தது. `தலைவி தலைவனோடிறந்தாள்` என்பதிற்போல, ``மனத்தோடழியும்`` என்பதில் ஓடுருபு உயர்பொருளொடு வந்தது. மனம் அழிதலாவது, தமது செலவால் விளையும் துன்பத்தால் வருந்ததுதல்.
இதனால், பிண்டத்திற்குக் காரணமாகிய விந்து அதனையுடைய மக்களது இயல்பிற்கேற்ப நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.

பொழிப்புரை :

உலகர் தாம் செல்கின்ற போக நெறியால் அழிந் தொழிகின்ற விந்துவினது ஆற்றலை, `இவ்வளவினது` என்று அறிய மாட்டார்கள். அதனால் கீழ்நோக்கி வீழும் இயல்புடைய அந்த விந்துவை அவ்வாறு வீழாது உள்ளே நிறுத்திக் காக்கும் வழியைப்பற்றி அவர்கள் எண்ணுவதும் இல்லை. அழிவைத் தனது இயல்பாக உடைய உடம்பினுள்ளே தங்கியிருந்து, அவ்வுடம்பால் உண்டாகின்ற பல இடுக்கண்களால் துன்பமுற்று மெலிகின்றவர்கள் தாம் பெற்றுள்ள பொருள்கள் அழியுந்தன்மை உடையவாதலை அறிந்து, அவ்வழியுந் தன்மையை நீக்கிக்கொள்ள மாட்டார்கள்.

குறிப்புரை :

எனவே, `அதனை நீக்கிக் கொள்ள வழி உண்டு` என வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``அளவு`` என்றது ஆற்றலின் அளவை. ஒரு துளிவிந்துவிற்குப் பல துளி சுக்கிலத்தின் ஆற்றலும் ஒரு துளிச் சுக்கிலத்திற்குப் பல துளிக் குருதியின் ஆற்றலும், ஒரு துளிக் குருதிக்குப் பல துளி இரதத்தின் (சாரத்தின்) ஆற்றலும் உள்ளன என்பர். அதனால் அத்துணை ஆற்றலையுடைய விந்துவை இழப்பவர் தமது பேராற்றலை இழந்தவ ராகின்றனர். `உயிர்கள் கீழ் நோக்கி வீழும் விந்துவை உடையன; இறைவன் அவ்வாறன்றி மேல் நோக்கிச் செல்லும் விந்துவை உடையன்; அதனால்தான் அவன் தனது நெற்றிக்கண் வழியாக முருகனைத் தரமுடிந்தது` என்றும், `உயிர்களின் விந்துக்கள் நீர்த் தன்மையையுடையன; இறைவனது விந்து அவ்வாறன்றி நெருப்புத் தன்மையையுடையது; அதனால் தான் ஒருமுறை அவனது விந்துவை உண்ட தேவர்கள் ஆற்றமாட்டாத வெப்பு நோயை உடையராய் அலமந்தனர்` என்றும் கூறுவர்.
``ஊர்த்துவ ரேதம் விரூபாக்ஷம்``,
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மபுருஷம் க்ருஷ்ண பிங்கலம் I
ஊர்த்வ ரேதம் விரூபாக்ஷம் விச்வ ரூபாய வை நமோ நம: II
எனப் புருஷ சூக்தத்தில் வந்துள்ளது. சிவபிரானது விந்துவை உண்ட தேவர்கள் வெப்பு நோயால் வருந்தினமை காஞ்சிப் புராண சுரகரேசப் படலத்தில் சொல்லப்பட்டது. போகத்தை விட்டு யோகியராயினோரும் இந்நிலையை எய்துவர் என்பது யோக நூற் கொள்கை. இதனால் அவர்க்கு இளமையும், யாக்கையும் நிலையாமையின் நீங்கி நிலைபேறுடையனவாதலோடு, உடம்பு புதியதோர் ஒளியும், அழகும் பெற்று விளங்கும் என்பதும் அந்நூற் கொள்கை.
இவ்வாறு இவ்வதிகாரம் முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

பொழிப்புரை :

தன்னைக் காதலோடு பார்க்கின்ற மகளிரைத் தான் அவர்க்கு இசைந்து பாராமல் விலகிச் சென்று யோகத்தில் நின்று புறப்பொருளைக் கண்ணால் பார்க்க எழுகின்ற ஆசையை மூலக் கனலை வளரப்பதில் சேர்த்து, மாதரைச் சிந்திக்கின்ற மனம் மாதேவனைச் சிந்தித்து உருகும்படி செய்கின்ற யோகியே சிவயோகியாதல் கூடும்.

குறிப்புரை :

`மனத்தில் எழுகின்ற மாதர் ஆசையை இங்ஙனம் யோக முயற்சியால் நீக்குதலே விந்து சயம் பெறுதற்குச் சிறந்த வழி யாகும்` என்பதாம். ``மூலத்தே சேர்க்கின்ற யோகி`` என்றமையால், அழல் என்றது மூலாக்கினியாயிற்று. `பொதுவான யோகத்தால் விந்து சயம் பெற்றவன் பின்பு சிவயோகியாய் விளங்குவன்` என்றபடி.
``மடவா ரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக
மாற்றி ... ... தனை நினைய வல்லோர்க்கென்றும் பெருந்துணையை`` l
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், விந்துயத்திற்கான சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம்கெடும்
ஊனே அவத்துற் றுயிரோம்பா மாயுமே.

பொழிப்புரை :

தன்னியல்பால் திருவருள் வழியில் சென்று சிவயோகத்தில் நில்லாது காமம் முதலியவற்றிலே நிற்கின்ற கீழ் மகனும் அஞ்சும் அளவிற்கு `யோகி` எனப்படுவன் காம நெறியில் மிக்குச் செல்வானாயின் விந்து மிக அழிந்தொழியும். உடம்பும் உயிரைக் காக்க மாட்டாது வீணே கெட்டொழியும்.

குறிப்புரை :

``தான்`` மூன்றில் முதல் இரண்டும் நன்னெறியிற் செல்லாதவனையும், இறுதியொன்று அடயோகியையும் குறித்தன. காமம் முதலியனவாவன காமம், குரோதம் முதலிய அறு பகைகள். அதி காரம் - அதிகரித்தல்; மிகுதல். `காமநெறியில்` என்பது அதிகாரத்தால் வந்தது. `உட்கும் அதிகாரத்தில் தானே தங்கில்` என மாற்றியுரைக்க.
இதனால், விந்து சயம் பெறாத யோகியினது இயல்புகூறும் முகத்தால் மேற்கூறிய எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு)
ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.

பொழிப்புரை :

மாமை நிறத்தால் வசீகரிக்கின்ற பெண்ணின் வசப் பட்டோராகிய இவர் அவளொடு கூட வேண்டின், என்றும் ஒழியாது மாறி மாறி வருகின்ற பூர்வ பக்க அபர பக்கங்களில் வளர் பிறையாகிய பூர்வ பக்கத்தில் முதல் எட்டு நாட்கள் போகத்திற்குப் பொருந்தா. (`விந்து சயத்தை விரும்புவோர் அந்நாட்களில் அதனைப் பெருதல் அரிது` என்பதாம்.) சோதிட நூலோரால் சிறப்பித்துச் சொல்லப்படாத அபர பக்கத்தில் முதல் ஆறு நாட்கள் வளர்பிறையின் இறுதி ஆறு நாட்களோடு ஒப்பனவாம்.

குறிப்புரை :

இவ் `வளர்பிறை, தேய்பிறை` என்பவற்றை மாதரது பூப்பிற்குப் பின்னர்ப் பதினைந்து நாளும், முன்னர்ப் பதினைந்து நாளுமாகக் கூறுதல் காம நூல் முறை. ஆகவே அம்முப்பது நாட்களில் இடைப்பட்ட பன்னிரண்டு நாட்கள் கலவிக் குரியனவாக அமைதல் காண்க. ``பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் - நீத்தகன்றுறையார் என்மனார் புலவர்``3 என்னும் தொல்காப்பியக் கட்டளையும் இதனோடு இயைந்து நிற்றல் காண்க.
இதனால், விந்து சயம் கைகூடும் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவார் பூவரின் பின்னைந்தோ(டு)
ஏறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்கவே.

பொழிப்புரை :

`பூப்பிற்குப் பின்னாட்களாகிய வளர்பிறையில் முதல் எட்டு நாட்கள் கூடதற்கு உரியன அல்ல` என மேல் விலக்கப்பட்டவற்றில் ஐந்தாம் நாளும், ஆறாம் நாளும் யோகியர்க்கு முற்றிலும் விலக்கத்தக்கன. (எனவே, `ஏனையோர்க்கு அந்நாட்கள் ஒருகாற் பொருந்தினும் பொருந்தலாம்` என்பதாம். பதினொன்றாம் நாள் யோகியர் அல்லார்க்கு ஆம்.) சக மார்க்கம் - யோக நெறி. வேறன்பு - மகளிரை விரும்புதல். ``சகமார்க்கத்தினிடையே வேறு அன்பை ஐந்து, ஆறு பதினொன்று அல்லாத நாட்களில் வேண்டுவர் நல்லோர்`` என்க. பூப்பிற்குப் பின் ஐந்து நாட்களில் அக்குற்றம் நீங்கியொழியும். (ஆயினும், `மேலும் `மூன்று நாட்கள் ஆகா` என முன் மந்திரத்தில் விலக்கப்பட்டன. அந்த ஐந்து நாட்களுக்கு மேல் இருபத்தொரு நாளில் பெண்மை சிறிது சிறிதாக மிகுந்து வரும் அந்த நாட்களில் இறுதி ஆறு நாட்களில் மிகவும் மிகுந்து நிற்கும். அதனால் இல்லறத்தில் நிற்கும் ஆடவர் அந்நாட்களில் கலவி செய்க.

குறிப்புரை :

இவ்வாற்றால் முப்பது நாட்களில் இறுதிமூன்று நாள் பெண்மையில்லா நாட்களாயின. இவையெல்லாம் நெறி பிறழா தோரை வைத்துக் கூறியனவாம். ``ஏறும், ஓங்கும்`` என்னும் பயனிலை கட்கு, `குற்றம், பெண்மை` என்னும் எழுவாய்கள் ``பூவரின்`` என்ற குறிப்பாலும், அதிகார இயைபாலும் வந்தியைந்தன. இடைத்து = இடையதாய். ``ஐந்து`` என்பது செய்யுள் நோக்கிப் பின் வைக்கப்பட்டது.
இதனால், யோகியர்க்கும், பிறர்க்கும் உரிய சில வரையறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.

பொழிப்புரை :

கலவி செய்தற்குப் பொருந்திய காலம் இரவில் முதல் யாமமும், கடையாமமும் ஒழிந்த இடையிரு யாமமேயாம். அதனுள்ளும் காலத்தை, `சூரியகலைக் காலம், சந்திரகலைக் காலம்` என வரையறுத்தற்கு ஏதுவாகிய பிராண வாயுவின் இயக்கம் சந்திர கலையாகின்ற இடநாடியின் நீங்கிச் சூரிய கலையாகின்ற வலநாடிவழியே இயங்கும்பொழுது காமநூல் முறைப்படி கலவி செய்த பின்பு சூரிய கலையும், சந்திர கலையும் அல்லாத அமுத கலையாகிய நடுநாடியில் பிராணவாயு செல்லுங்கால் விந்துவை விடுக்க.

குறிப்புரை :

`இவ்வாறு செய்யின் விந்து சயம் கூடும்` என்பதாம். ``திரு`` என்றது `சிறப்பு` சிறப்புடையதனை, `சிறப்பு` என்றார். இரு முகூர்த்தம் ஓர் யாமமாகும். பகற்காலம் இயல்பாகவே விலக்கப் பட்டமையின், ``இருநான் முகூர்த்தம்`` என்றது இராக் காலத்திலே யாயிற்று. ``கலை காலம்`` என்பதில் ஒற்று மிகாமை வடநூல் முடிபு. `காலத்துள்` என ஏழாவது விரிக்க. `இந்து பருதி காலுள் நையுமிடத்து` என்க. ``கால்`` என்பது ``இந்து`` என்பதனோடும் கூட்டிக் கொள்ளப் படும். பிராண வாயு இங்குக் கூறிய முறையில் இயங்காவிடினும் யோகம் வல்லார் தாம் வேண்டுமாற்றால் அதனை இயக்கிக்கொள்வர். இனிப் பிராண வாயு நடுநாடி வழியிற் செல்லுதல் யோகத்தாலன்றிக் கூடாது.
இதனால், மேல் நாள் வரையறுத்த பின் அந்நாள்களில் காலம் வரையறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.

பொழிப்புரை :

மண் முதல் புருடன்காறும் உள்ள இருபத்தைந்து கருவிகளும் தன்னை வந்து வாதிக்கும் பொழுது அவற்றால் சலனம் உறுதல் இன்றி இருக்கின்ற யோகியும் ஒரோ ஒருகால் பெண்ணின்பால் காதல் கொள்கின்றவனாவான் ஆயினும் அப்பொழுதும் அவன் அவள் மேல் பற்றுக்கொள்ளாது, போக காலத்தில் மிகுதியாய் இயங்குகின்ற பிராண வாயுவின் இயக்கத்தால் மெலிவடைகின்ற அந்தக் கரணங்களை அகமுகப் படுத்தி, முன் பஞ்சேந்திரியங்களைத் தன் வசப்படுத்தியது போலவே விந்துவையும் தன் வசப்படுத்தியே விடுவான்.

குறிப்புரை :

`தன் வசப்படுத்தியே விடுவான்` என்றதனால், `விடாது நிறுத்தவும் செய்வான்` என்பது பெறப்பட்டது. விடுதல் மாதின் இன்ப நிறைவின் பொருட்டாம். பஞ்சேந்திரியங்களை வெல்லுதலாவது அவற்றைத் தன் வசப்படுத்தலேயாதல் போல, `விந்து சயம்` என்பதும் அதனைத்தன் விருப்பப்படி ஆளுதல் என்பதேயாம் என்றபடி. காண், முன்னிலையசை. ``ஐயைந்தும் நண்ண`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து அங்கு நின்றும் நேரே சென்றுரைக்க. மெய்வருந்தித் தொழில் செய்யுங் கால் மூச்சுப் பெருமூச்சாய் இயங்குதல் போலக் கலவிக் காலத்திலும் அவ்வாறியங்குதல் பற்றி, ``கடுங்கால்`` - என்றார். உயிர்ப்பு நெட்டுயிர்ப்பாய காலத்தில் அந்தக்கரணங்கள் சோர்வடைதல் இயற்கை. அது பொழுது அவற்றை உலகர் செயலற்றனவாகவே இருக்கச் செய்வர். யோகியர் அது பொழுது அவற்றைத் தம் தியானப் பொருளிலே ஒடுங்கச் செய்தல் பற்றி, ``கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டு`` என்றார். `காலால் என உருபு விரிக்க. கருத்து - தியானப்பொருள்.
இதனால், யோகிகள் விந்து சயம் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொண்ட குணனே நலனேநற் கோமளம்
பண்டை யுருவே பகர்வாய்ப் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும்போதில்
கண்ட கரணம்உட் செல்லக்கண் டேவிடே.

பொழிப்புரை :

மாதர்பால் ஆடவரது மனத்தை ஈர்ப்பனவாய் உள்ளன அவருக்கு இயல்பாக அமைந்த நாணம், மடம், அச்சம், பயிப்பு` - என்னும் குணங்களும், மேனியழகும், இளமையும், வடிவமைப்பும், பேசுகின்ற வாயாகிய பவளமும், ஒன்றை ஒன்று நெருக்கும் வகையில் புடைபரந்து எழுகின்ற கொங்கைகளும் ஆகிய இவையாம். `இவை நேற்றுக் கண்டனதாம் இன்று காணப்படுகின்றன` என்னும் வகையிலே இருப்பன அல்லது அவ்வப்பொழுது புதிது புதிதாய்த் தோன்றுவன அல்ல ஆயினும் அவை அவ்வாறிருந்தே ஆடவரை வசீகரித்தல் வியப்பு. அம்முறையில், மாணவகனே, அவை உன்னைப் பற்றி நெருங்கியிருக்கும் பொழுது நீ விந்து சயம் பெற வேண்டினால் யோகியர் போல அவைகளைப் பொறிகளாற் பற்றி, அப்பற்றுதலானே திரிபெய்துகின்ற அந்தக் கரணங்களை அகமார்க்கத்தில் செலுத்தி அதனால் விந்துவை உன் வசப்படுத்தி விடு.

குறிப்புரை :

``பண்டை உருவே`` என உருவிற்குக் கூறப்பட்ட பழைமை ஏனையவற்றிற்கும் கொள்ளப்படுமாகலின் அதற்கு இவ்வாறு விரித்துரை கூறப்பட்டது. ஏகாரங்கள் எண்ணுப் பொருள. மிண்டுதல், மிடைதல், இவை `நெருங்குதல்` எனப் பொருள்தரும்.
இதனால், `விந்து சயத்திற் அந்தக்கரணங்களைத் தம் வசப்படுத்தல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.
`வாசி யோகத்தால் பிராணன் வசப்படும்; பிராணன் வசப்பட்டால் அந்தக்கரணம் வசப்படும்; அந்தக்கரணம் வசப்பட்டால் விந்து வசப்படும்,` என்பது யோக நூல் முடிவு.

பண் :

பாடல் எண் : 8

விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே
தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.

பொழிப்புரை :

ஆடவன் பெண்டினிடத்து விந்துவை விட்டபின் கலவிக் காலத்துச் சரவோட்டம் முதலியவை பற்றி அவ்விந்து கருவாகித் தோன்றும் முறையில் அதன் தொடக்கம் முதலியவை களையும், பின்பு அதன் வாழ்நாள் சாநாள்களையும், பின்பு அதன் இழி குணம், உயர்குணம் என்பவற்றையும் `தனித்தனி இவ்வியல்பினது` என்று ஆராய்ந்தறிதலையும் செய்வானாக.

குறிப்புரை :

`அவை யாவும் நல்லனவாய் அமைதலும் ஒரு வகை விந்து சயமும் அவை தீயனவாதலும் ஒரு வகை விந்து அப செயமும் ஆம்` என்பது கருத்து. எனவே, யோகி தனது யோக வன்மையால் அவற்றையெல்லாம் நல்லனவாகச் செய்வான்` என்பதாம். ``காலங்கள்`` என்றது கரு முற்றும் பத்துத் திங்களை. ஒவ்வொரு திங்களிலும் புறத்தே ஒவ்வொரு சடங்கு செய்தலும் கருமேற்கூறிய எல்லா வகையிலும் நன்மையை எய்துதற் பொருட்டேயாம். ``வாழ் நாள் சாநாள்`` எனப் பட்டன, கரு வயிற்றிலிருக்குங் காலமாகிய பத்துத் திங்களுக் குள்ளேயும் அமைவனவாம். காலத்தில் நிகழ்வனவற்றை, ``காலங்கள்`` என்றார். தோன்றுதல் - ஆராய்பவனுக்குப் புலனாதல். ``தோன்ற`` என்னும் செயவெனச்சம். ``தோன்றியபின்`` என இறந்த காலப் பொருட்டாய் நின்றது. ``கருதிய, கட்டிய`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `வாழ்நாள், சாநாள்` என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்தன. ``கருவிற்பட்ட உயிரினது வினையை நோக்கிக் கட்டிய` என்றவாறு. கட்டுதல் - நியமித்தல், கருவிற் பட்ட உயிருக்கு அக்கருவில் தானே அஃது அடைதற்குரிய அனைத்தும் அமைக்கப்படுதல் என்பதை,
``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்க டென்னும் ஆறும்முன் கருவுட் பட்டது``
-சிவஞான சித்தியார் - சூ. 2. 9.
என்பதனானும் அறிக. கருதுதல், கட்டுதல் ஆகிய வினைகட்கு `பால் வரை தெய்வம்` என்னும் வினைமுதல் வருவிக்க. ``எண்ணியும்`` என்னும் உம்மை சிறப்பும்மை, அதனால் அஃது அங்ஙனம் எண்ணிப் பார்க்க வல்லாரை நோக்கிக் கூறியதாயிற்று. ஆகவே, `சர ஓட்டம் முதலியவற்றை அறிய வல்லார்க்கு இங்குக் கூறியவெல்லாம் புலனாகும்` என்பது விளங்கும்.
இதனால், கலவி செய்வோர் அக்காலத்து மேற்கொள்ளும் முறை முறையின்மையால் மக்கள் நல்லராயும், தீயராயும் - வாழ்நாள் மிக்கராயும், குறைந்தவராயும் தோன்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பார்த்திட்டு வையப் பரப்பற் றுருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.

பொழிப்புரை :

மேற்கூறியபடி கருவைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து உலகத்தில் பொதுவாக நிகழும் புலன் அடக்கம் இன்மையைத் தந்தை, தாயர் தவிர்த்து இருத்தலால் கரு மக உருப் பெற்று வளர்ந்து முதிர்ந்து பின்பு விதி அம்மகவைத் தாயின் வயிற்றிலிருந்து நீக்கி நிலத்தைச் சேரும்படி சேர்த்து, (தாய் தந்தையர் குழவிமாட்டுள்ள அன்பால் ஊக்கம் மிகுந்து செய்விக்கும் தெய்வக் காப்புக்களால்) மேல் கருவுட் பட்டனவாகக் கூறிய அவ்வினைப் பயன்கள் குழவியை வந்து பற்றதொழியினும் அதன்பின் குழவி வளர்ந்து வரும் பிற்காலத்தில் அவையெல்லாம் வந்து பற்றுவனவேயாகும். ஆகையால், மேற் கூறியவற்றையெல்லாம் ஆடவன் எண்ணிப் பார்ப்பானாக.

குறிப்புரை :

``அகலினும்`` - என்ற உம்மையால், `அகலுதல் அரிது` என்பதும், `மிகச் செய்தவழி ஒருவாற்றால் நீங்கும்` - என்பதும் பெறப் படும். `பரப்பற` என்பது ``பரப்பற்று`` எனவும், `உருப்பெற்றபின்` என்பது, `உருப்பெற்று` எனவும் திரிந்து நின்றன. ``சேர்த்தல், அகலுதல்`` என்னும் வினைகட்கு `வினைப் பயன்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது. இதன் ஈற்றடி இனவகையால் மூன்றாம் எழுத்து எதுகையாயிற்று.
இதனால், மேல், ``எண்ணியும் பார்க்க`` என்றது பயனில் செயலாகாமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தின்இல் வித்தை விதற உணர்வோர்க்கு
மத்தில் இருந்ததோர் மாங்கனி ஆமே.

பொழிப்புரை :

உலகில் விதையை நிலத்தில் விதைப்பவர்க் கல்லது விளைவு ஏதும் கிடைக்க மாட்டாது. விதையை நன்முறையில் விதைப்பவர்க்கல்லது சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும். (அதுபோல விந்துவாகிய வித்தினை நன்முறையில் இடாதார்கக்ம் நன்மகப் பேறாகிய விளைவும் கிடைக்கமாட்டாது; அவர்க்குச் சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும்.) விந்துவாகிய வித்தினது இல்லற வித்தையை அமைந்து நோக்கி உணர்வாராயின், மரத்தில் தூங்கும் மாங்கனி போலும் பயன் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையின் அவற்றிற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. `மிக்க` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. மூன்றாம் அடியில் வந்த ``வித்தை`` என்பது `கல்வி` என்றவாறு. இல்லறத்தை ``இல்`` என்றார். விரைவினை உணர்த்தும் `விதுப்பு` என்பது முதனிலையளவாய், `விது` என நின்றது `வேதின வெரிநின் ஓதிமுது போத்து`` - என்பதில் `ஓந்தி` என்பது ``ஓதி`` என இடைக்குறைந்து நின்றது போல, `மரத்தின்` என்பது எதுகை நோக்கி, ``மத்தின்`` என இடைக் குறைந்து நின்றது. வாளா, `மாங்கனி ஆம்` எனின் குறித்த பொருள் விளங்கா தாகலின், ``மரத்திலிருந்தோர் மாங்கனி ஆம்`` என்றார். அதனால், வித்தினது விளைவே மாங்கனியாதல்போல், `விந்துவின் விளைவாக நன்மகவு உண்டாகும்` என்பது பெறப்பட்டது. இதுவும் ஒட்டணியே.
மாதொருத்தியை மணந்தவர்க்கு உளவாகிய இல்லறக் கடமைகளில் குடிவழியை நற்றவம் செய்தாயினும் நன்முறையில் தொடரச் செய்தலும் ஒன்றாகலின், `அது விந்து சயத்தால் கைகூடும்` என்றற்கு இவையெல்லாம் கூறினார்.
இதனால், விந்து சயத்தால் விளைவதோர் இம்மைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருவுயி ரோடும்
கருதத்து வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறிவை கற்பனை தானே.

பொழிப்புரை :

இறைவன் கருவிற்பட்ட உயிரோடு அதன் அறிவுக் கறிவாய்க் கலந்து நிற்கின்றான். அதனால் அவ்வறிவிற்குப் பொருள்களை அறியும் ஆற்றலையும், ஆயுள் முதலானவற்றையும் அப்பொழுதே அமைக்கின்றான். அவன் அவ்வாறமைத்தற்கும் தந்தை தாயரது எண்ணமே காரணமாய் நிற்க, அவ்வமைப்பு அக்காரணத்தின் காரியமாகின்றது. ஆகவே, குழவியின் அறிவு, ஆயுள் முதலியவை தந்தை தாயரது எண்ணத்தினால் அமைவனவேயாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொண்டு, அதனுள்ளும் ``கருவுயிரோடும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``கருத்து`` நான்கில் முதல் இரண்டு ஆகுபெயராய் அறிவைக் குறித்தன. பொரு ளுணர்வு அக்கர வடிவாதல் பற்றி, அதனை `அக்கரம்` என்றார். `நாதம்` என்றபடி. ``வித்தாய்`` என்றதனால், அவ்விடத்து, ``கருத்து`` என்றது, கருவின் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் காரணமான தந்தை, தாயருடை யனவாயின. கற்பனை - நினைவு. இவையும் அவ்வாற்றால் அவருடை யவாயின. ``மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும்`` (திருக்குறள் - 456.) எனத் திருவள்ளுவரும் குழவியது அறிவு குணங்கட்குத் தந்தை தாயரது அறிவு குணங்கள் காரணமாதல் கூறினார்.
இதனால், `கலவிக் காலத்து இருவரும் நற்கருத்துடையராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றாதலும் ஒரு வகை விந்து சயமேயாம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 12

ஒழியாத விந்து உடல்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
ஒழியாத புத்திதபம் செபம் மோனம்
அழியாத சித்திஉண் டாம்விந்து வற்றிலே.

பொழிப்புரை :

யோக முயற்சியால் விந்து வீழ்தலின் நீங்கி உடற் குள்ளே நிற்குமாயின் பிராணனும், உடலின் மிக்க வலிமையும், அறிவின் ஆற்றலும் அழியாது நிலைபெறும். இனி விந்து மூலாக் கினியால் தன் இயல்பு வேறுபட்டு உடம்பினுள் ஒன்றாய்க் கலந்து விடுமாயின் இடைவிடாத ஞானம், தவம், செபம், மௌன நிலை, எட்டுச் சித்திகள் ஆகிய எல்லாம் உளவாகும்.

குறிப்புரை :

`அழியாது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `பிராணன் முதலியவை அழியாது நிற்கும்` என முடிக்க. உடல் வலியிழந்து மெலியுமாயின் அறிவும் சோர்ந்து, பிராணனும் வலிமை குன்றி நீங்கும். பிராணன் நீங்கவே உடல் சிறிதுபோதும் நிலைக்கமாட்டாது நீங்கியொழியும். எனவே விந்து சயத்தால் வாழ்நாள் நீட்டிப்பு உளதாதல் கூறப்பட்டதாம். வாழ்நாள் நீட்டித்தலால் உயிர் தான் எடுத்த உடம்பினால் ஆகிய பயனைப் பெறுதல் கூடும் என்பது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்டது. ஒழியாத ஞானமாவது, அறியாமையால் தவிர்க்கப்படாத மெய்யுணர்வு. ``அழியாத சித்தி`` என்றது சித்தியின் பெருமை கூறியவாறு.
விந்துவின் வாளா வலிந்து நிறுத்தின் அஃது உபாதியாய், உடற்குத் தீங்கு தரும். யோக முயற்சியால் நிறுத்தின் அது, தன்னியல்பு வேறுபட்டு நிற்கும் ஆதலின் அதனால் உடல் வலிமை முதலிய நலன்கள் உண்டாகும். ஆகவே, யோக முயற்சியால் நிறுத்துதலே இங்குக் கூறப்பட்டது. இனி அவ்வாற்றானே அதனை மேலும் திரிவுபடச் செய்த வழி அஃது உடம்பினுட் சுவறியோக நெறிக்கு மேலும் உதவும் என்பது பிற்பகுதியாற் கூறப்பட்டது.
இவ்வாறு இதனால் உண்மையான விந்து சயத்தால் விளையும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழுனைச் சொருகிச் சுடருற்று
முற்று மதியத் தமுதை முறைமுறைச்
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

பொழிப்புரை :

விந்து வறளும்படி யோக முயற்சியால் மூல அனலை அதன்பால் சேர்த்து, அதனால் அது கீழ்நோக்கி வீழும் இயல்பை விட்டு மேல்நோக்கி ஏறும் இயல்பினதாகச் செய்து அவ்வாறு சுழுமுனை வழியாக மேல் ஏறி ஆஞ்ஞையை முட்டி அடையப் பண்ணி, அஃது அவ்விடத்துள்ள ஒளியோடு கலந்தபின்னர், மேலும் செல்கின்ற மூலக்கனலால் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிறைமதி மண்டலத்திலிருந்து ஊறி வழிகின்ற அமுதத்தை முறை முறையாகத் தமது பண்டை இயல்பு கெட உண்கின்றவர்களே சிவயோகியர் ஆவார்கள்.

குறிப்புரை :

`துற்ற அனலால் சுழியில் சொருகி` என்க. ``துற்ற சுழுமுனை`` என்பதில் சுழுனை ஆகுபெயராய் அதன் எல்லையைக் குறித்தது. விந்து ஆஞ்ஞை வரையிற் சென்று அங்குள்ள ஒளியோடு கலத்தலால் தானும் ஒளியாகி உடல் எங்கும் பரவும் என்க. உற்றபின், என்பது, ``உற்று`` எனத் திரிந்து நின்றது, பண்டையியல்பாவது, உலகருட் சிலராய் மனஞ்சென்றவாறே சென்று விந்துவை வீழ்ந்து அழிதல். மதிமண்டலத்து அமுது தச நாடிகளில் பாய்தலால் அதுவே உணவாயிட, வேறு உணவு வேண்டாமையை `உண்ணுதல்` என்றார். அது பலமுறையாக நிகழும் ஆதலின், `முறை முறை உண்டல்` என்றார்.
இதனால், உண்மை விந்து சயத்தின் மேல்நிலைப் பயனும், அதனை அடைவோரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தர னாவோனும்
மோக முறினும் முறைஅமிர் துண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

பொழிப்புரை :

மாதர்மேல் மையலை உற்றபோதிலும் அதனால் உண்டாகிய விந்து அவர்பால் சென்று வீழாத நிலைமையை எய்திய பெரியோன், யோகியும், மேலான சித்திகளைப் பெற்றவனும், அதே நிலையில் போகத்தை இழக்காதவனும், ஞான வேந்தனாய் விளங்குபவனும், யோக முறையில் உண்ணும் மதி மண்டலத்து அமுதத்தைப் பெற்று உண்பவனுமாவான்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது பொதுவும், ``ஞான புரந்தரன்`` என்றது அதன்கண் உயர்ந்து நிற்கும் சிறப்பும் பற்றியாம். உம்மை பெற்றுவந்த பெயர்களை எல்லாம் வேறுவேறு எழுவாயாக வைத்து உரைப்பவர்க்கு அவை, ``அண்ணல்`` என்னும் ஒருமைப் பயனிலை யோடு இயையாமை அறிக. இயைய வேண்டின், அப்பெயர்கள் யாவும் ஒருவனையே குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும்.
கு-ரை: இதனால், விந்து சயத்தால் விளையும் பயன்கள் அதனைப் பெற்றவனது சிறப்பை வகுத்துக் கூறும் முகத்தால் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து)
உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

பொழிப்புரை :

சிவோகம் பாவனையால் உயிர் சிவனாதலால், அது நின்ற உடம்பும் சிவனது உடம்பாகியபின், அவ்யோகியது விந்தும் நீர்த்தன்மை நீங்கிச் சிவனது விந்துபோல நெருப்புத் தன்மை எய்த அதனையும், உலகில் நாள்தோறும் வெளிவிடுத்துச் சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்ற பிராணவாயுவாகிய மூலப்பொருளையும் ஒற்றுமைப்பட ஒன்றாகக் கலந்து மூலாக்கினியால் சமைத்து உண்ணும் முறையை ஓர் யோகி வல்லனாயின், அவனுத விந்து தேவாமிர்தமாய் உடல் நலங்கள் பலவற்றைத் தருதலுடன், ஞானமும் நன்கு சிறந்து பிரகாசிக்கச் செய்யும்.

குறிப்புரை :

அண்ணல் - தலைவன்; சிவபிரான். `ஆகிய பின்` என்பது ``ஆகி`` எனத் திரிந்து நின்றது. அனல் விந்து - அனல் தன்மைத் தாகிய விந்து. ``அவ்வனல் விந்து`` என்னும் சுட்டு, `அது சிவவிந்து வின் தன்மை` என்பதைச் சுட்டிற்று. ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிது பிராண வாயு அழிந்தொழிதலை ``மாய்க்கும் பிராணன்`` - என்றார். ``பிராணனாம் விந்து`` என்பதில் ``விந்து`` என்பது `மூலப் பொருள்` எனப் பொருள் தந்தது. கட்புலனாகாது கருதியுணருமாறு அகத்தே நிற்றல் பற்றி மூலாக்கினியை, ``கண்ணும் கனல்`` என்றார். கண்ணல், கருதல். ``எரித்து`` என்றது, `அவ்வாற்றால் பாகம் (பக்குவம்) செய்து` என்றபடி. ``உண்ணில்`` என்பது அவ்வாறு செய்து உண்ணுதலின் அருமை தோற்றி நின்றது.
இதனால், உண்மை விந்து சயம் பெறுமாறும், அதனால், உயர் ஞானமாகிய பயன் விளைதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அறியா தழிகின்ற ஆதலால் நாளும்
பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருவிந்து சேரவே மாயுமே.

பொழிப்புரை :

உலக மாந்தரது விந்துக்கள் அவரது அறியாமை யாலேதான் வீழ்ந் தொழிகின்றன ஆதலால், அவ்வீழ்ச்சிக்கண் நாள்தோறும் அவர்ஐம்பொறி வழியில் அகப்பட்டுத்துயர் உறு கின்றனர். ஆகையால், பெரியோர் அறிவுடையராய்ச் சாக்கிரத்தில் தானே அதீத நிலையை அடைந்திருக்க, பிண்டத்திற்கு முதலாயுள்ள விந்துவாகிய சுக்கிலமேயன்றி, அண்டத்திற்கு முதலாயுள்ள விந்து வாகிய சுத்த மாயையும் ஒரு சேர அவர்க்கு அடங்கித் தம்மியல்பு கெட்டு நிற்கும்.

குறிப்புரை :

அறிவாவது, இங்கு விந்து சயம் பெறும் முறையை அறிதல். அதீதமாவது, சித்தத்தை வேறிடத்தில் வையாது, சிவன்பாலே வைத்திருத்தல். அது ஞானியர்க்கு இயல்பிலும், யோகியர்க்கு யோகமுயற்சினாலும் வாய்ப்பதாகும். ஆகவே, ஏனையோர்க்கு அது கூடாமை யறிக. செறிவு - அடக்கம். அதனை ``செறிவறிந்து சீர்மை பயக்கும்``* என்பதனாலும் உணர்க. தம்மியல்பாவது பிண்ட விந்துவிற்கு விரைய வீழ்ந்தொழிதலும், அண்ட விந்துவிற்குச் சொல்வடிவாய் நின்று, தன்னின் நீங்கித் தனித்து நிற்கவொட்டாது தளைத்து நிற்றலுமாகும்.
இதனால், விந்து சயத்திற்குச் சாக்கிராதீதம் புரிதல் வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக்
காதல தாகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி யாண்டினும்
சோதியி னுள்ளே துரிசறும் காலமே.

பொழிப்புரை :

விந்து இழப்பிற்குக் காரணம் பால் உணர்ச்சியே யாகலின், அதனை மகளிரை அந்தப் பாலினராகக் கருதாமல், அங்ஙனம் கருதுபவர்க்கு அதனால் வரும் அழிவுபற்றி அவரைக் கொல்ல வரும் கூற்றுவனாகவே கருதின் அவர்மேல் செல்கின்ற ஆசையும், அதனால் எழும் பால் உணர்ச்சியும் நீங்கிவிடும். அவை நீங்கவே விந்து இழக்கப் படாதாகலின், அதனால் மனித ஆயுள் அளவேயன்றி, மேலும் பல்லாண்டு செல்லினும் இறப்பு வாராது. இனி அந்நாட்கள் எல்லாம் பரம்பொருளின் உள்ளே குற்றமற்றிருக்கும் நாட்களாயும் அமையும்.

குறிப்புரை :

`மாய வரும்` என இயையாது, `மாயக் கூற்றம்` என்றியைத்து, `இஃது உண்மை வடிவில் வாராது, வேறொரு வஞ்ச வடிவில் வருகின்ற கூற்றம்` என்று உரைத்தலும் பொருந்தும். காதலது - காதலின்கண் உண்டாவது. ``காலமே`` என்பதன்பின் `உளதாகும்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், `விந்து சயம் பெற விரும்புபவன் மாதர் ஆசையை வெறுத்தலே சிறப்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

பொழிப்புரை :

விந்து சயம்பெற்றவன் பல்லாண்டுகள் வாழ்தலால் காலத்தைக் கடந்து நிற்பவனாவன். விந்துவை அழித்துவிட்டவன் குறிப்பிட்ட சிலகாலம் வரையில் எவ்வகையிலோ வாழ்ந்து மறைந்தவனாவான். இவ்விருவரும் முறையே கலவிக் காலம் உட்பட எந்தக் காலத்திலும் விந்துவைத் தன் உடலில் வற்றியிருக்கச் செய்தவனும், மாதி னொடு பிராணாயாம முறையில் அமைந்த கலவியை அறியா தவனும் ஆவர்.

குறிப்புரை :

செறுதல் தடுத்தலும், அழித்தலும் ஆகிய இரு பொருளும் தருவதாகலின் அதனை இங்ஙனம் `பொருட்பின் வருநிலையணி` என்னும் நயம் தோன்ற இவ்வாறு கூறினார். ``காலங்கள்`` என்ற பன்மையால் எல்லாக் காலங்களும் கொள்ளப் பட்டன. `காரிகையொடு` என ஒடு உருபு விரிக்க. ஐயுருபு விரிப்பினும் ஆம். ``காலின்கண் வந்த கலப்பு`` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றபடி.
இதனால், விந்து சயம் பெற்றாரது உயர்வும், பெறாதாரது இழிவும் ஒருங்கு தொகுத்தக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

கலக்குநாள் முன்னாள் தன்னடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாளி உதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேல்அணை வீரே.

பொழிப்புரை :

மாதினொடு கூடுவீர், நீவிர் அக்காதல் வாழக்கை இருவரிடத்தும் நலமாக அமைய வேண்டின் மேலெல்லாம் கூறிவந்த முறையில் குறித்த நாட்கு முன்னாளே அவளது உடம்பில் மலமும், சலமும் ஆகிய உபாதிகளும், வாதம், பித்தம், ஐ என்னும் அவற்றின் மிகை குறைகளும் இல்லாதபடி நீக்குதற்கு உரியவற்றைச் செய்து அதன்பின்னர்க் கூடுவீராக.

குறிப்புரை :

`உடல் நலம் கெட்டிருப்பவளொடு கூடுதல் கேடு பயக்கும்` என்பதாம். ``மலம்`` என்றதனால் சலமும், `சீதம், பித்தம்` என்பவற்றைக் கூறியதனால் ஏனை வாதமும் கொள்ளப்பட்டது. இரண்டாம் தந்திரத்தில், ``மாதா உதரம் மலம்மிகில்`` என்னும் மந்திரம் கரு உற்பத்தி யின் வகையுணர்த்தற்குக் கூறினார்; இதனை விந்து சயம் பெறுவார்க்கு ஆவதுணர்த்தக் கூறினார் என்க. எனவே, இதன் கருத்து வகையும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

மேலாம் நிலத்தெழும் விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமுதுண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.

பொழிப்புரை :

விந்து ஆறு ஆதாரங்களில் மேல் ஆதாரமாகிய ஆஞ்ஞையில் தோன்றும்; அதற்கு மூலமாகிய பொருள் ஏழாம் தானமாகிய மதி மண்டலத்தில் தோன்றும். ஆகையால், பிராண வாயுவையும், அதனால் எழும் மூலாக்கினியையும் சுழுமுனை வழியாகச் செலுத்தி ஒவ்வோர் ஆதாரமாகக் கடந்து மதி மண்டலத்தை அடைந்து அங்கே உண்டாகின்ற அமிர்தத்தை உண்டு கொண்டே மாதினை ஆசையின்றித் தழுவினால், மையல் உண்டாகாது. அஃது உண்டாகாதாகவே விந்துவும் வெளிப்படாது அகத்திலே நிற்கும்.

குறிப்புரை :

விந்துவிற்கு மூலமாதல் பற்றி அங்ஙனம் ஆகின்ற அப்பொருளை ``நாதம்`` என்றார். சுழுமுனையை, `தண்டு` என்னும் வழக்குப்பற்றி, ``கோல்`` என்றார். நடத்துதற்குச் செயப்படுபொருள் மேலெல்லாம் கூறியவாற்றால் வந்தியைந்தன. பால் - இடம். `உரிய இடத்தில்` என்றபடி. ``உண்டு`` என்னும் வினையெச்சம் `நோக்கிச் சென்றான்` என்பது போல உடன் நிகழ்ச்சிகண் வந்தது. பற்றுதற்குச் செயப்படுபொருள் முன்னை மந்திரத் தொடர்பால் வந்து இயைந்தது.
இதனால், மேல், ``காலின்கண் வந்த கலப்பறியாரே`` எனக்கூறிய கலப்பு இத்தன்மையது என்பது அறிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

விந்து விளையும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழியும் அடக்கத்தின் ஆக்கமும்
நந்திய நாசமும் நாசத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

பொழிப்புரை :

விந்து உண்டாகும் முறையும், அஃது உண்டாகி முதிர்வதனால் விளைகின்ற பயனும், அதனை வீண்போகாது அடக்குதற்குரிய வழியும், அவ்வழிப்படி அதனை அடக்குதலால் வரும் ஆக்கங்களும், விந்து கெடுவதாகிய கேடும், அக்கேட்டினால் விளையும் விளைவுகளின் வகையும் ஆகிய இவற்றையெல்லாம் முறையாக மனத்திற் கொணர்ந்து, ஆய்ந்து உணர்பவர்க்கு விந்து சயம் உண்டாக வழி ஏற்படும்.

குறிப்புரை :

``அந்த`` என்பது பின்வரும் அடக்கத்தைச் சுட்டிற்று. ``நாசத்தால்`` என்பதன்பின் `விளையும்` என ஒரு சொல் வருவிக்க. பேதம் உடையவற்றை, ``பேதம்`` என்றார். காரணம் உண்டாய விடத்துக் காரியம் நிகழ்தல் எளிதாதல் பற்றி, ``சயமாகும் விந்துவே`` என்றாராகலின், அதற்கு இதுவே பொருளாயிற்று.
விந்து உண்டாகும் முறை முதலிய பலவும் மேலெல்லாம் கூறப்பட்டமை காண்க.
இதனால், `அறிவுடையோர், பிண்டத்திற்குக் காரணமான விந்துவைப் பற்றி அறியற்பாலனவற்றை எல்லாம் அறிதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரிந்(து)
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

பொழிப்புரை :

[இமந்திரத்திலும் மேல், ``அண்ணல் உடலாகி`` என்னும் மந்திரத்துட் கூறப்பட்ட பொருளே, `அண்ணல் உடலாதல்` ஆகிய அவ்வொன்றொழியக் கூறப்பட்டது.]

குறிப்புரை :

அது சிவயோகியர்க்கு ஆகும் சிறப்புமுறை. இது யோகியர் எல்லோர்க்கும் ஆகும் பொதுமுறை. அதனால் `அறிவாதல்` நீக்கி, `அமுதாதல்` மட்டும் கூறப்பட்டது. வீசம் - (பீசம்) வித்து. நந்திய - வளர்ந்த.
யோக முறையில் மூலாதாரம் முதல், கொப்பூழ் வரையுள்ள பகுதி அக்கினி கண்டமாகவும், கொப்பூழ் முதல் இருதயம் முதல் கண்டம் வரையுள்ள பகுதி சூரிய கண்டமாகவும், அதற்குமேல் உள்ள பகுதி சந்திர கண்டமாகவும் சொல்லப்படும். அதிகண்டர் - அக்கினி கண்டத்திற்கு மேல் உள்ள கண்டம். ``சந்திரன்`` என்றதும் சந்திர கண்டத்தை.

பண் :

பாடல் எண் : 23

அமுதச் சசிவிந்து ஆம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவபோகம் ஆதலால் சித்தி
அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

பொழிப்புரை :

சந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதமாகிய துளிகளில், யோகியினது உடம்பில் உண்டாகின்ற விந்து முன் மந்திரத்தில் கூறிய முறையில் சென்று ஒடுங்க, மற்று உடம்பைக் காக்கின்ற அமுதமாய் நீர்க்கூறுகள் விரையச் சுழன்று மூலாக்கினியால் வற்ற, அவ்வாற்றால் அமுதம் போலும் இனிய சிவபோகம் விளையும் ஆதலால், அவ்யோகிக்கு அப்பொழுதுதான் அடைந்தபேறு அமுத மழை பொழிதல் போல அமையும்.

குறிப்புரை :

`சசி அமுத விந்து` என மாற்றி, `உள்` என்னும் உருபு விரிக்க. ``அமுதப் புனல், அமுதச் சிவபோகம்`` என்பன உவமத் தொகை. பிலாவனம் - ஒழுகுதல். அது மழைத்தாரை வீழ்தலைக் குறித்தது.
இதனால், `மகளிர் இன்பமாகிய குளப்படி நீரை விடுத்து விந்து சயம் பெற்றார் சிவயோகியாராயின் சிவபோகமாகிய பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து)
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.

பொழிப்புரை :

மாதும், ஆடவனும் ஒருங்கு கூடி, இருவர் உடலும் `ஓர் உடலே` எனும்படி இறுகப் புல்லிய விடத்தும் ஆடவனுக்கு அப்புல்லுதல் காரணமாக வெளிப்படுதற்குரிய விந்து வெளிப்படா திருக்கப் பெறுதலே உண்மை யோகமாகும். ஆயினும் அவ்விடத்து இன்ப நுகர்ச்சி இல்லா தொழியாது; உள்ளதேயாகும். அவ்வின்ப நுகர்ச்சி உடலின்ப நுகர்ச்சியாகாது சிவ இன்ப நுகர்ச்சியாகவே அமையும். அதுவே இன்ப நுகர்ச்சியை உடையவனுக்குத் தீங்கினை விளையாது, நன்மையையே விளைக்கும் இன்ப நுகர்ச்சியாம். இந்நுகர்ச்சியைப் பெறும் வகையில் மாதரைப் புணர அறியாதார் புணர்ச்சிக் காலத்தில் அவரை உடல் இன்ப மயக்கமின்றிப் புணர மாட்டார்.

குறிப்புரை :

`அம்மயக்கத்தில் மூழ்கிப் புணர்ந்து கெடுவர்` என்பதாம். `புணர்ந்து ... ... கலந்தாலும் அவ்விந்து ஒழியா வகை யோகம்` எனக் கூட்டியுரைக்க. `போகிக்கு` என நான்கண் உருபு விரிக்க. ``நற்போகமாம்`` என்னும் பயனிலைக்கு, `அதுவே` என்னும் எழுவாய் வருவிக்க. தீங்காவது, போகம் வினைப்போகமாய், மேலும் வினையைப் பெருக்குதல். நன்மையாவது இன்பப்பேற்றைப் பலவாகத் தருகின்ற திருவருளை நினைத்தலால் அதனிடத்து மேலும், மேலும் அன்பு மீதூர்தல்.
``மாழை ஒண்கண் பாவையைத் தந்து ஆண்டானை`` எனவும், ``நொய்யேனைப் பொருட்படுத்துச் - சங்கிலியோடு எனைப்புணர்த்த தத்துவனை`` (திருமுறை - 7. 51-10, 11. )எனவும், ``மான் திகழும் சங்கிலியைத் தந்து வருபயன்களெலாம் - தோன்ற அருள் செய்தளித்தாய்`` l எனவும், ``பண்மயத்த மொழிப் பரவே சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே`` 3 எனவும் நினைந்து, நினைந்து உருகியவாறும்,
``ஓர்ந்தனன், ஓர்ந்தனன் உள்ளத் துள்ளே உள்ள ஒண்பொருள்;
சேர்ந்தனன், சேர்ந்தனன்; சென்று திருவெற்றி யூர்புக்குச்
சார்ந்தனன், சார்ந்தனன் சங்கிலி மென்தோள்; தடமுலை
ஆர்ந்தனன்; ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே`` 8
என அருளிச்செய்தவாறும் அறிக. ``மோகங் கெட`` எனப் பொதுப்பட அருளினமையால் இவ் யோகம் வல்லார் தம்மால் கூடப்பெறும் மகளிரையும் மோகம் இலராகச் செய்வர் என்பதும் பெறப்படும். விந்து ஒழியா வகை புணரும் யோகம் வச்சிர `குலியோகம�%8

பண் :

பாடல் எண் : 25

மாத ரிடத்தே செலுத்தினால் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாகுவார்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

பொழிப்புரை :

யோகத்தைப் பொருந்தியவர் மாதரிடத்தே அவர் விழைவு நோக்கி விந்துவை விடுத்தாராயினும் அவர்மேல் கொண்ட மோகத்தால் விடுத்தாரல்லர். ஏனெனின், அவர் மாதர்பால் காட்டுகின்ற மோகத்தைச் சொல்லுமிடத்து ஏனையோர் மோகம் போன்றதாயிருப்பினும் அது வேறேயாம். (`பொதுவாக யாவர்மீதும் உளதாகிய அருளேயாம்` என்பதாம்.) இனி, யோகத்தில் பொருந்தாதவர் மாதர்மேல் தம் உயிர்மேல் வைத்திருக்கும் ஆசையைப்போலும் ஆசையை வைத்து அதனால் மெலிவெய்துவர்.

குறிப்புரை :

காதல், இங்கு மோகத்தைக் குறித்து நின்றது. `யோகியர் மோகம் இன்மையால் அப்பொழுது விந்து சயம் பெறுதலும், பின்னரும் பல இன்னலுக்கு ஆளாகாது உய்தலும் உடையர்` என்பதும், `ஏனையோர் அவற்றிற்கு மாறான நிலைலையுடையராவர்` என்பதும் கருத்து. மூன்றாம் அடியை இறுதிக்கண் வைத்து உரைக்க. ``யோகம் கலந்தவர்`` என்றதனால். ``அதனைக் கலவாதவர்`` என்பது பெறப்பட்டது. ஈற்றடி. `அங்ஙனம் காதலைச் சாற்றில், காதலர் காதல் போன்றதாம் என மாற்றியும். ஒரு சொல் வருவித்தும் உரைத்தற்கு உரியது ``அங்ஙன்`` என்றது, `அவரிடத்து` என்றபடி.
இதனால், யோகம் வல்லவரும், அல்லவரும் இன்பம் நுகருமாறு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோ(டு)
ஆற்றி அமுதம் அருந்தவிந் தாருமே.

பொழிப்புரை :

[இம்மந்திரத்திலும் மேல் ``வற்ற அனலை`` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட முறையே ``சுழி அனல் சொருகிச் சுடருற்று`` என்பதொழியச் சொல்லப்பட்டது.]

குறிப்புரை :

விந்து ஆரும் - விந்து பெருகும், பின்பு, ``சத்தியால் சயமாகும்`` என முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. ``சத்தியால்`` என்பது இரட்டுற மொழிதலாய், `திருவருளாகிய சத்தியின் வழிச் செயற்படும் தனது சத்தியால்` எனப்பொருள் தந்தது. `செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போத்வதாகிய திருவருள்`* யோக முயற்சியுடையார்க்கு அதற்கு ஏற்றவாறு அருள்செய்யும் என்பதற்கு. திருவருட் சத்தியும் உடன் கூறப்பட்டது. `ஓடாது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று நாதம் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள இடத்தில் தோன்றுவது என்பது மேல் ``மேலாம் நிலத்து எழு`` என்னும் மந்திரத்து உரையிலும் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் கூறியபடி யோகியர்க்கு விந்து சயம் கூடுதல் திருவருட் குறிப்பால் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

விந்துவும் நாதமும் மேவக் கனல்மூலம்
அந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடைச்
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு செய்யும் யோகத்தால் மூலாக் கினியால் விந்துவும், நாதமும் கலந்த ஒன்றாதலும், அவ்வக் கினியின் வெம்மை உடம்பின் மயிக்கால்தோறும் பரவி நிற்றலும் நிகழ, அவ் வாற்றால் உள்ளம் உலகை வெறுத்துச் சிவத்தினிடத்தே செல்ல, பின்பு, `சிவம் நான்` என்பதாகிய சிவோகம் பாவனை உண்டாக, அதனால் விந்து அழியா உடம்பில் அதற்கு வித்தாய், அதனுள்ளே சுவறி நிற்கும்.

குறிப்புரை :

அகம் - நான். `விந்து, உடம்பு அழியாமைக்கு வித்தாய் அதனுள்ளே மாளும்` எனக் கூறற்பாலதனை இங்ஙனம் கூறினார். ``வித்தில்`` - வித்துப்போல.
இதனால், விந்து சயத்தின் பொருட்டுச் செய்யப்படும் யோகம் சிவ யோகத்தையும், காய சித்தியையும் உண்டாக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வித்தக்குற் றுண்பான் விளைவறி யாதவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்தச்சுட் டுண்பவன்
வித்துக்குற் றுண்பானில் வேறலன் நீற்றவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்துவிற் றானன்றே.

பொழிப்புரை :

விதைக்கு வைத்திருக்கும் நெல்லைக்குற்றி உண வாக்கிக் கொள்பவன் வித்தினால் விளையக் கூடிய பெரும்பயனை இழந்தவனாவன். இனி, விதை நெல்லைக்குற்றி உண்ணாமல், பொரி யாக வறுத்து உண்பவனும் முன் சொல்லப்பட்டவனைவிட அறிவுடை யவன் ஆகமாட்டான். (ஏனெனில், அவனும் விளைவை இழக்கின்றா னன்றோ!) ஆகையால் சிவயோகி விதையைக் குற்றி, அல்லது வறுத்து உண்ணாமலும், பலரும் செய்கிறபடி நிலத்தில் விதைத்தலைச் செய்யா மலும் பொன்னுக்கு விற்பவனைப் போன்றவன் ஆவான்.

குறிப்புரை :

நீற்றவன் - முழுநீறு பூசியவன். சிவயோகி இம்மந்திரம் ஒட்டணியாகச் செய்யப்பட்டமையால், இதன் பொருள் வருமாறு:-
`விந்துவை உபாதியாக்கிக் கொண்டு அதனை எவ்வாற்றா லேனும் போக்குபவன் அதனால் எந்தப் பயனையும் பெறாமல் இழப்பவனாவன். இனி யோகத்தால் விந்துவை உடம்பினுள் வற்றச் செய்பவனும் விந்துவால் பெறக்கூடிய பெரும்பயனைப் பெற்றவன் ஆகமாட்டான். ஆகையால் சிவயோகி இந்த இரண்டு வகையிலும் இல்லாமலும் பெரும்பாலோர்போல விந்துவை மாதர்பால் விடாமலும் விந்து சயத்தால் சிவோகம் பாவனையை அடைந்து நலம்பெறுவான்`
விதை நெல் மிக்க விலையுடையது. அதனைப் பொன்னுக்கு விற்றால், அந்த அளவு உணவு நெல்லை மலிவான விலைக்கு வாங்கி உண்ணவும் செய்யலாம்; பொன்னும் இலாபமாகும். அதனால், `அதனை ஒப்பது சிவயோகியின் செயல்` என்றார்.
இதனால், `விந்து சயத்தால் பெறத்தக்க சிறந்த பயன் சிவோகம் பாவனையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.

பொழிப்புரை :

உணவிலே விந்து காரண ரூபமாய் அடங்கி யிருத்தலை அறிந்து உணவை நன்முறையில் ஒழுங்காக உண்டு வருதலாலும், பின்பு பிராணனின் அவ்வாறுள்ள விந்துவை அந்தப் பிராணனை ஒழுங்கான முறை இயக்குதலால் ஒளிவடிவாக எழச் செய்து ஒலிவடிவாகிய விந்துநாதத் தானங்களில் ஏற்றி அதற்கு மேலும் செலுத்துதலாலும் அக்கர வடிவாய் நின்று அறிவைத் தோற்றுவிக்கின்ற பெரிய சுத்த மாயையும் உடம்பினுள்ளே அடங்கி நேரிதாம்.

குறிப்புரை :

`உணவையும், பிராண வாயுவையும் ஒழுங்கான முறையில் கொண்டிருக்கும் யோகிக்கு வாக்குகள் நேரியவாக, அதனால் மனம் தன்வழிப்பட்டுச் சிவ சிந்தனை உண்டாகும்` என்பது கருத்து. மறித்தல் - அடக்குதல். `மறித்தலால் மின் ஒத்த விந்து` என் றதனால், விந்து மின்னல் போல ஒளிவடிவாதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. வன்னம் - சக்கரம். வன்னத்து இருவித்து`` என்பது, `கடிசூத்திரப் பொன்` என்பதுபோலக் கரும காரகத்தின்கண் வந்த ஆறாவதன் தொகை. நான்காவதன் தொகை` எனினுமாம்.
இதனால், விந்து சயத்தால் மேற்கூறியவாறு சிந்தனை மாறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம்
அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

பொழிப்புரை :

ஆடவர் எல்லோர்க்கும் அன்ன விந்து, பிராண விந்து` என இரு விந்துக்கள் உள்ளன. அந்த உண்மையை உணர்ந்து, அன்னத்தையும், பிராணனையும் நெறிபடுத்தி நிற்க வல்லவர்க்கு மேனி பொன்போல விளங்கும். அட்டமா சித்திகள் கூடும். மேலும் அத்தன்மை யுள்ள யோகிகள் யாவரும் நீண்ட காலம் வாழ்ந்தமை வெளிப்படை.

குறிப்புரை :

பிராண விந்துவாவது பிராணன் நெறிப்பட்டு இயங்கு தலால் விந்து வலுப்படுதலும், நெறிப்பட்டு இயங்காமையால் விந்து மெலிவடைதலும் ஆகும். ``தன்னை`` என்றது. அந்த உண்மையைச் சாதிக்க வல்லார் அடையும் பயன்களாக இங்குக் கூறப்பட்டவை மூன்றாந் தந்திரத்திலும் கூறப்பட்டன `இரு விந்து` என்பதன் பின் `உள` என்பதும், ஈற்றில் `வெளிப்படை` என்பதும் எஞ்சி நின்றன. `உருவும் சொன்னமாம்` என உம்மையை மாற்றி வைத்து உரைக்க.
இதனால், `விந்து சயம் வேண்டினார் உணவையும், பிராணனையும் நெறிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை
சென்று பராசத்தி விந்துசயந் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசந் தானே.

பொழிப்புரை :

(நீயே விந்து சயத்தைப் பெற்று விடலாம் என்று நினையாமல்) திருவருளும் அம்முயற்சியில் தலைப்பட்டு உடன் நிற்றற்பொருட்டுத் திருவைந்தெழுத்தில் உயிராய் உள்ள சிகாரத்தின் பொருளாகிய சிவனை அகார உகார மகாரங்களோடு உடன் வைத்துத் தியானிக்க விந்து சய மார்க்கத்தைப் பிறருக்கு உபதேசிக்கும் பொழுதும் இவ்வாறே உபதேசிப்பாயாக.

குறிப்புரை :

`பிரணவ யோக முறையால் விந்து சயம் எளிதில் பெறலாம்` எனக்கூற வந்தவர் `அதனைச் சிவத்தியானத்தோடு செய்யல் வேண்டும்` என்பதை இவ்வாற்றால் கூறினஆர். ``சிகாரம்`` என்றது அதனால் குறிக்கப்படும் பொருளை. ``நினைக்கும்`` என்றது `நினைக்கப் படும்` என்றபடி. `பிராணனாய் நினைக்கும்` என முடிந்து, அதன்பின் `அதனை` என்பது வருவித்து `ஒன்றவை` என முடிக்க. `பராசத்தி சென்று விந்து சயந்தன்னை ஒன்ற` என முதலிற்கூட்டியும், உபதேசம் ஒன்று உரைக்க` என இறுதியில் மாற்றியும் பொருள் கொள்க.
இதனால், சிவத்தியானத்தோடு கூடிய பிரணவயோகம் விந்து சயத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை
வானேய் உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :

முன்மந்திரத்தில், `அகாரம் முதலிய மூன்றோடு உடன் வைத்துத் தியானிக்க` எனக் கூறிய கூற்றில் சுட்டப்பட்ட சிவத்தை உபதேசிக்கும் உபதேசமே உண்மை உபதேசமாகும். ஏனெனில், சிவம் இன்றி யாதொரு பொருளும் இல்லை. இனி ஆகாயம் போல் எப்பொருட்கும் வியாபகமாய் உள்ள சுத்தமாயை யினின்றும் பிரணவ வடிவாய்த் தோன்றுகின்ற வாக்குக்கள் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கப்படும்பொழுது ஆதார யோகத்தில் ஏழாம் தானத்துடன் உலகியல் உணர்வோடு நிகழும் முதற் பதினான்கு கலைகள் ஆதார சத்திகளோடு அடங்கிவிடும். உலகியல் நீங்க சிவ உணர்வோடே நிகழும் எஞ்சிய ஏனை இருகலைகள் நிராதார யோகத்தில் நிராதார சத்திகளோடு அடங்கிவிடும். அந்நிலையே சிவத்துவ நிலையாம்.

குறிப்புரை :

`பிராசாத யோகத்தால் விந்து சயம் பெறுவார்க்குச் சிவோகம் பாவனை கைவரும் வகையில் யோகம் சிவயோகமாய் நிகழும்` என மேல், `விந்துவும் நாதமும் மேவக்கனல்மூலம்`` என்னும் மந்திரத்திற் கூறியதை அஃது இவ்வாற்றால் நிகழும் என்பது இதனுட் கூறப்பட்டது. உபதேசப் பொருள், ``உபதேசம்`` எனப்பட்டது.
`பிரணவத்தைப் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கு மிடத்து அவை எவ்வாறு அமையும்` என்பது மூன்றாம் தந்திரத்தில், ``கலைநிலை`` என்னும் அதிகாரத்தில் விரிவாக விளக்கப்பட்டது.
பூதாகாயம் ஏனை எல்லாப் பொருள்கட்கும் வியாபகமாய் நிற்றல் யாவராலும் அறியப்பட்டதாகலின் அதனைச் சுத்த மாயையின் வியாபகத்திற்கு உவமையாகக் கூறி விளக்கினார். ``வான் ஏய்`` என்பதில் `ஏய்` உவம உருபு. ``விந்துவின் வந்த`` என ஐந்தன் உருபு விரிக்க. புத்தி - ஞானம்; சிவஞானம். இந்த ஞானம் சிவத்தைத் தன்னின் வேறாக உணரும் ஞானம். இது, நீங்கினால் ஆன்மாச் சிவத்தைத் தன்னுள்ளே உணர்ந்து சிவமாம் ஆகலின் அதனை, ``சிவகதித் தன்மை`` என்றார்.
இதனால் விந்து சய உபாயங்களில் பிராசாத யோகம் சிறப்புடையதாதல் அது நிகழுமாறு கூறிய முகத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

விந்துவுள் நாதம் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும் தூலமாகவும், சூக்கும மாகவும் தோன்றுகின்ற வாக்குக்களால்தான் இங்குக் காணப்படுகின்ற பலவாகிய உயிர்களும் உளவாயின. அதனால், மந்திரங்களின் தோற்ற முடிவுகளே உயிர்களின் தோற்ற முடிவுகளாய் அமைகின்றன. ஆகவே அவ்வாக்குக்கள் பிராசாத யோகத்தால் தம் சத்திகள் அடங்கப் பெறுமாயின், சிவோகம் பாவனை உண்மையாய்ப் பயன் தரும்.

குறிப்புரை :

பயன் வகையில் இவ்வுலகத்தார்க்குத் தூலம் சிறந்த தாகலின் அதனை முன்னர்க் கூறினார். உடலினிடத்து உயிர் உளதாதல் அதன் உணர்வு பற்றியே அறியப்படுதலாலும், அவ்வுணர்வு வாக்குகளாலன்றி நிகழாமையாலும் `அவற்றது தோற்றத்தினாலே உயிர்களின் தோற்றம் உளதாயிற்று` என்றார். தோற்றத்திற்கு உள்ளது முடிவிற்கும் ஒக்கும் ஆதலின் `மந்திரங்களின் தோற்றமும் முடிவுமே உயிர்களின் தோற்றமும், முடிவுமாம்` என்பது பெறப்படும். மந்திர மொழியால் உண்டாகும் உணர்வே இறையுணர்வு ஆதலின் அதனது தோற்ற முடிவுகளையே உணர்வினது தோற்றமுடிவுகளாகக் கூறியது பொருந்துவதாயிற்று. இவற்றால் வாக்குக்களின் நீங்குதலே பந்தத்தின் நீங்குதலாம் ஆதலின், `விந்து அடங்கச் சிவோகம் விளையும்` என்றார்.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே`` l
என்னும் சிவஞான சித்தி இங்கு நினைக்கத்தக்கது. எனவே வாக்குச் சயமும் ஒரு வகை விந்து சயம் ஆயிற்று.
இதனால், சிறப்புடைய ஒரு விந்து சயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும்அந் நீள்வரை யெட்டில்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்தப் பழமே.

பொழிப்புரை :

விந்துவை வற்றச் செய்யும் முறையும், மனம் எங்கும் உலாவருவதில் அடைகின்ற வெற்றியைத் தடுத்து நிறுத்தும் முறையும், அந்த வெற்றியை எட்டுத் திக்கிலும் உயர்ந்து நிற்கின்ற மலைகளில் எழுதிப் புகழ் பெறுதலும் ஆகிய எல்லாம் உடம்பு வினைத் தொடர்பை அறுத்துக்கொள்கின்ற காலத்திலேதான் ஒருவனுக்குக் கைவரும்.

குறிப்புரை :

வறுத்தலுக்குச் செயப்படு பொருளாகிய `விந்து` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. மனோலயம் எய்தப் பெற்றாரது புகழ் எட்டுத்திக்கும் பரவுதல்.
``இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு`` 3
என்பதனாலும் விளங்கும். `அஸ்தி` என்னும் வடசொல் தமிழில் `அத்தி` எனத்திரிந்து வரும் ஆதலின் அதனை நாயனார் உடம்பைக் குறித்தற்குச் சிலேடை நயம்தோன்ற வழங்குவர். `அத்திப் பழமும், அறைக்கீரை நல்வித்தும்`` என்னும் மந்திரஉரை பார்க்க உடம்பை எடுத்து உழல்கின்ற உயிரினது செயலை உடம்பின்மேல் ஏற்றி, ``அத்திப்பழம் வினையை அறுக்கின்ற நாள்`` என்றார்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய விழுப் பயன் வினை நீங்கப் பெற்றார்க்கே கூடுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம்அக் காமத்தை நாடிலே.

பொழிப்புரை :

மேல், ``மேலாம் நிலத்தெழும் விந்துவும்`` என்னும் மந்திரத்திலும், ``விந்துவின் வீசத்தை`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டபடி விந்துவும், நாதமும் ஒன்றாகிச் சந்திர மண்டலத்தை அடைந்த பொழுது அங்கு நின்றும் அமுதம் ஒழுகும் காலத்தில் அதனுடன் கலக்கத்தக்க அவிசு `நின்ற சிகாரம்` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட பிரணவ மந்திரமேயாகும்.

குறிப்புரை :

என்றது, `பிரணவ கலைகளை அவ்வவற்றிற்கு உரிய அதிதேவர்கள் ஏற்ற மகிழ்ந்து, அவற்றின் வலியை அடக்குவர்` என்றபடி. மேற்குறிக்கப்பட்ட மந்திரங்களில் சொல்லியவற்றை மீட்டும் அனுவதித்தது வாக்குச் சயமாகிய விந்து சயம் இவ்வாற்றால் உளதாம் என்பதை உணர்த்துதற் பொருட்டு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், ``விந்துவுள் நாதம் விளைய விளைந்தது` என்னும் மந்திரத்துள் கூறப்பட்ட அவ்விந்து சயம் அமையுமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் இம்மந்திரத்தை அடுத்துக் காணப்படும், ``மனத்தொடு சத்து`` என்னும் பாடல் அதனை அடுத்து வரும் மந்திரத் திற்கு முன்னோடி போன்றுள்ளது. ஆயினும் பொருளற்றதாய் உள்ளது. அதனால் அதனை, `நாயனார் வாக்கு` எனக் கொள்ளுதற்கில்லை.

பண் :

பாடல் எண் : 36

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து)
ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.

பொழிப்புரை :

சூக்குமை முதலிய வாக்குக்களும், அவ்வாக்குக் களால் இயக்கப்படுகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களும், அந்த அந்தக்கரணங்களால் உண்டாகின்ற உணர்வுகளும் ஆகிய இவை ஒருங்கு தொக்க நிலையாகிய அறிவின் நிலையை உலகர் அறிய மாட்டார். அதனை உள்ளவாறு அறிய வல்லவர் ஆசான்ம மூர்த்தியின் அருள் பெற்றவரே ஆவர். அவர்க்கு அந்த நிலையே சிவனது இருப்பிடமாதல் விளங்கும்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட மூன்றனுள் முதலாவதாகிய வாக்கும் இறைவன் இயக்கவே இயங்கும் ஆகவே இறைவன் வாக்கினை நேராகவும், அந்தக் கரணங்களை வாக்கு வழியாகவும் இயக்கவே உயிர்கட்கு உணர்வுகள் உண்டாகின்றன. ஆகவே, `இவ்வுண்மை உணருமிடத்து வாக்கே இறைவனுக்கு இடம்` என்பது விளங்கும். வாக்குப் பிரணவ வடிவாகலின் பிரணவம் இறைவனுக்கு இடமாதல் விளங்கும். அது விளங்கவே விந்து சயம் பெறுதற் பொருட்டு, பிரணவ யோகத்தில் மனம் செல்லும் என்பதாம்.
``மனம்`` என்றது உபலக்கணம் ஆதலின், ஏனைக்காரணங்களும் கொள்ளப்படும்.
இதனால், `சுத்தமாயை யாகிய விந்துவின் சயத்திற்குப் பிரணவ யோகத்தை விரும்பிச் செய்தல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

உரவடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய நன்முலை மேவியகீழ் அங்கி
கருமுலை மீமிசைக் ககை்கீழிற் காலாம்
விரவிய கந்தர மேல்வெளி யாமே.

பொழிப்புரை :

மனித உடம்பில் எல்லாவற்றையும் தாங்கும் வலிமையுடைய கலில் (இடைக்குக் கீழ் உள்ள பகுதியில்) `நிலம்` என்னும் பூதமும், அதற்கு மேல் கொப்பூழ்வரை உள்ள பகுதியில் `நீர்` என்னும் பூதமும், கொப்பூழ் முதல் முலையிருக்கும் பரந்த இடமாகிய மார்பு பகுதியில் `தீ` என்னும் பூதமும் (இதனுள் முலையும் அடங்குதல் அறிக.) மார்பிற்குமேல் கைகளுக்கு ஆதாரமாய்க் கழுத்து வரையில் உள்ள பகுதியில் `வளி` என்னும் பூதமும், (இதனுள் கைகளும் அடங்குதல் அறிக.) கழுத்திற்கு மேல் உள்ள பகுதியில் `வெளி` என்னும் பூதமும் நிற்கும்.

குறிப்புரை :

`இஃது அறிந்து, பிண்டமும் அண்டத்தோடு ஒத்தலை உணர்ந்து கொள்க` என்பது குறிப்பெச்சம். இவ்வாறு உணர்தல் விந்து சயம் முதலியவற்றைத் தரும் யோகத்திற்கு வேண்டப்படுதல் பற்றி இதனை இங்குக் கூறினார்.
இதனானே வருகின்ற அதிகாரத்திற்கும் இயைபு தோற்று விக்கப்பட்டது. ஏனையவற்றோடு ஒப்ப, `அடியில் கீழில்` என உருபு விரிக்க. `மிசையும் கீழும் ஆகிய இடத்தில் கால்ஆம்` என்க. இவ்வதிகாரம் பெரும்பான்மை அந்தாதியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 1

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே.

பொழிப்புரை :

(சூரியன் முதலாகக் காணப்படுகின்ற அனைத்து ஒளிப் பொருள்களின் ஒளியும் சிவனது ஒளியேயன்றி, அவற்றினுடையன அல்ல. அஃது எங்ஙனம் எனின்,) சூரியன் நாள்தோறும் மகாமேரு மலையை வலம் வருதல் தெளிவு. ஏனைத் தேவர்கள் அவ்வாறு வலம் வருதலைப் பலர் அறியாராயினும் யோகியரும், ஞானியரும் அதனை நன்கறிவர். `அவர் வலம்வருதல் எதன்பொருட்டு` எனின், எங்கட்கு விள்ககாகி நின்று பயன் தருகின்ற சிவனாகிய கடவுளின் திருவடி ஒளிகள் தங்களிடத்துப் பொருந்தி விளங்குதற் பொருட்டேயாம். வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் தவத்தால்l ஆகலின் அவர் அதனைச் செய்கின்றனர்.

குறிப்புரை :

பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `தேவர்` என்பதற்கு `ஒளியுடம் புடையவர்` என்பதே பொருள். அது சூரியனிடத்தே இனிது விளங்கு தலால், `அவன் முதலாக` என்றார். தேவர் அனைவரையும் கூறினமையால், திங்கள், வியாழன், வெள்ளி முதலிய கோள்களை யும், மற்றும் நாண்மீன் விண்மீன்களையும் வேறு வேறெடுத்துக் கூறல் வேண்டாதாயிற்று. மஞ்சு - மேகம். ``காரணம்``, `நிமித்தம்` என்னும் பொருட்டாய் நின்றது. ``எம் சுடர்`` என்றது, நாயனார் தம்கூற்றாக் கூறியது. திருவடி சத்தியாகலின் அதனையே சிவன் ஒளியாகக் கூறினார். மகாமேருமலை சிவன் எழுந்தருளியிருக்கின்ற கயிலையைத் தன்னிடத்தில் உடையது. வணங்குதலையே ``தவம்`` என்றமையால் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பதிற்போல்,
``நாயகன் கண்ண யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றிக்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பின்
தேயமார் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசது`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக.
இதனால் ஆதித்தன் சிவனொளியைப் பெற்று விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம்
புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற ஓங்கும்
பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.

பொழிப்புரை :

ஆதித்தனாலே உலகுயிர்கள் இறைவாது வாழ்தலால், அவன் காத்தற் கடவுளாகிய மாயோனாக ``சூரிய நாராயணன்`` என்று சொல்லப்படுகின்றான். அதனால் அவனே எல்லா உயிர்கட்கும் புகலிடமாகின்ற முதற்கடவுளும் ஆகின்றான். இன்னும் உயிர்கள் நால்வகை யோனிகளுள் கருவாகித் தோன்றுதலும் ஆதித்த னாலே யாகலின் அவனே அனைத்துயிர்கட்கும் முதலுமாவான்.

குறிப்புரை :

``ஏழுலகும் உற`` என்றது, `நால்வகை யோனியுட் பட்ட அனைத்துயிர்களும் தோன்ற` என்றபடி. ஏழுலகும் இகலற ஓங்குதலாவது, ``ஆதித்தனாலேதான் அனைத்து உயிர்களின் பிறப்பும், வாழ்வும் அமைகின்றன` என்பதை யாவரும் ஒருமுகமாக உடன்பட்டுப் போற்றப்படுதல். ஆதித்தனை, ``பலர்புகழ் ஞாயிறு``3 என ஆன்றோர் புகழ்ந்தவை அறிக. ``ஆதியும்`` - என்னும் உம்மை உயர்வு சிறப்பும்மை. `அனைத்துலகங்களிலும் ஆதித்தர் உளர்` என்பதை இங்கு நினைக்க.
இதனால், ஆதித்தன் உயிர்கட்குத் தோற்றமும், நிலையுமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஆதித்தனை ஆயிர நாமங்கள் விண்ணவர் சொல்லி வேண்டினாலும், வேதியர்சொல்லி வேண்டினாலும் அவையெல்லாம் சிவபிரானிடத்தில் அன்புதோன்றி முதிர்வதற்கு வழியாகவே அமையும். ஏனெனில், ஆதித்த மண்டலத்தின் ஒளிக்குள் ஒளியாய்ச் சிவபிரானே நிற்றலால்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``நிற்கும்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க. அப்பயனிலையின் பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. சிவபிரானது அட்ட மூர்த்தங்களில் ஆதித்தனும் ஒன்றாகலின் ``சோதியினுள்ளே சுடரொளியாய் நிற்கும்`` என்றும், அதனை அறியாது ஆதித்தனையே வழிபடுபவர்க்கும்,
``யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்`` l
என்றடி பயன் தருபவன் சிவபெருமானே யாகலின், `அவன் அவர்க்குத் தன்னை உணரும் உணர்வைச் சிறிது சிறிதாக விளங்கச் செய்வன்` என்பது பற்றி, ``ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே`` என்றும் கூறினார்.
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரன்உரு அல்லனோ`` *
என்று அருளிச் செய்ததை காண்க. சிவநெறியாளர் சூரியனை நேரே கண்டு வணங்கும்பொழுது அவனது ஒளிமண்டலத்தில் சதாசிவ மூர்த்தி எழுந்தருளி யிருத்தலை நினைன்தே வணங்குவர். சிவபிரானே ஆதித்தனாய் நின்றும் உலகிற்கு உதவுதல் பற்றியும், அவ்வுதவியின் முதன்மை பற்றியும் சிவபூசையில் முதற்கண் சூரியபூசை விதிக்கப் பட்டுள்ளது. அவ்விடத்துச் சூரியன் சிவ சூரியனாகவே பூசிக்கப் படுவான்.
``காண்பவன் சிவனே யானால்
அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்``l
என்றது காண்க. `ஆதித்தனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. வேதியர் பூதராய்க் காட்சிப்படுதல் பற்றி முன்னர்க் கூறினார். ``நாமங்கள்`` என்பதனோடு இனிதியைய, ``விண்ணவர் சொல்லினும்`` என்பது முன்னர்க் கூட்டியுரைக்கப்பட்டது. `வேண்டுதல், சொல்லுதல்` என்பவற்றை ஏனையோர்க்கும் கூட்டுக.
இதனால், ஆதித்த வழிபாடும் ஓராற்றால் சிவ வழிபாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

பொழிப்புரை :

ஆதித்தனே உலகிற்கு அப்பனாய் இருப்பன்; அம்மையாய் இருப்பன். சுகத்தைத் தருபவனாய் இருப்பன். இனிச் சந்திரனாய்க் குளிர்ந்த ஒளியைத் தருகின்றவனும் இவனே.

குறிப்புரை :

இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இப்பனாய் நிற்றல் கதிரவனாய் நின்றும் என்க. இந்த இருநிலைகளும் சிவம் சத்தி நிலைகட்கு உவமையாகச் சொல்லப்படுமாறு உணர்க. தத்துவம் அடிநிலை உண்மையாதலின் அது தோற்றத்திற்கு முதலாகிய அப்பனைக் குறித்தது. அதனால், ``தையல்`` என்றதும், `அம்மை` என்றதாயிற்று. ``சம்பு`` என்பது `இன்பத்தைத் தோற்றுவிப்பவன்` எனக் காரணக் குறியாய் நின்றது. சூரியனது ஒளியையே சந்திரன் பெற்றுத் தண்சுடராய் நிற்குமாறு அறிக.
இதனால், அண்டாதித்தனது பெருமை பலபடியாக வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வலயம்முக் கோணம்வட் டம்அறு கோணம்
துலைஇரு வட்டம்துய் யவ்வித ழெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா
மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.

பொழிப்புரை :

சதுரம், வட்டம், முக்கோணம் அறுகோணம், துலாக் கோல், இருவட்டம் - என இவ்வாறு மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களில் அமைந்த பீடங்களில் ஒவ்வொன்றின் மேலும் எட்டிதழ்த் தாமரையில் ஆதித்தன் அசையும் வட்டமாய் உள்ள பதினாறிதழ்களையுடைய தாமரை மலர்போல மாறுபாடின்றி விளங்கினான்.

குறிப்புரை :

`ஆகவே, அவனை அவ்விடங்களிலெல்லாம் அவ்வாறு கண்டு வழிபடுக` என்பது குறிப்பெச்சம். அசைதல் ஒளிவீசுதலைப் புலப்படுத்துக. ``வட்டம்`` எனப்பின்னர் வருதலால், முன்னர் `வலயம்` என்றது சதுரமேயாயிற்று. செய்யுள் நோக்கி முக்கோணம் முன் வைக்கப்பட்டது. ``இரு வட்டம்`` என்பதன்பின் `இவற்றின் மேல்` என்பது வருவிக்க. வட்டத்தில் - வட்டம் போல, `ஈரெட்டிதழாக` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. இவ்விதழ்கள் கதிர்வடிவினைக் காட்டும்.
இதனால், ஆதித்தனை அகத்தும், புறத்தும் வழிபடும் முறைகளுள் அகத்து வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில்
சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங்
கேத மறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.

பொழிப்புரை :

ஆதித்தனுக்கு மிகச்சிறந்த இடமாகிய முக்கோண மண்டலத்தில் அவன் மிக்க ஒளியுடையவனாய் விளங்குவான். அவன் மூலாதாரத்தினின்றும் நான்காவதாகிய இருதயத்தை அளாவி ஓங்குவானாயின் முன் மந்திரத்தில் சொல்லப்பட்ட பதினாறு இதழ் வடிவம் அப்பால் விசுத்தியை அடைந்து அங்குள்ள பதினாறு இதழ்களில் ஒன்றி ஒளிர்வான்.

குறிப்புரை :

`அவன் அவ்வாறாகும் வரையில் அவனை வழிபடல் வேண்டும்` என்பது கருத்து. சோதித்து - ஒளியை உடைத்தாய பொருளாய், ஆக்கம் வருவிக்க. குணத்தை, ``கேணி`` என்றார். `தாமரை பூத்தற்கு இடமாகிய குளம் போல்வது` என்பதாம். பின்வந்த ``சூரியன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது; எட்டுதல் - அளாவுதல் ``தன்`` என்றது முன்னர்க் கூறிய கேணியை, ஈரெட்டு, அங்குள்ள தாமரையிதழ். சோடகம் ஆதித்தனது கதிர்நிலை. தான், அசை. `தன் ஈரெட்டில் சோடசம் சோதியே` என இயைத்துக்கொள்க.
இதனால், `ஆதித்தனை அகத்தில் மிக வழிபடல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்ககி லீரே.

பொழிப்புரை :

ஆதித்தன் இருண்ட பொழுது அவனோடு உலகமும் இருண்டுவிட்டது. வேறுபட்ட நான்கு வேதங்களின் மொழிகளும் வெறும் பிதற்றலாய்ப் பயனற்றுப்போயின. அவ் வாறாகவும் `ஆதித்தனுக்குள்ளே சிவசத்தி நின்றே உலகிற்கு ஒளியைத் தருகின்றாள்` எனக் கூறுகின்ற வேத மொழியின் பொருளை, நீவிர் உணரமாட்டீர்.

குறிப்புரை :

`ஆதித்தன் இருண்டது சத்தி சிவனது கண்ணைப் புதைத்த பொழுது` என்பது வெளிப்படையாகலின் அதனைக் கூறா தொழிந்தார். `கழிந்தது` என்பது பன்மை யொருமை மயக்கம். வேதமொழி பயன்படாமை அதன்படியான செயல்கள் நிகழாமை யாலாம். ``சோதி`` என்றது ஆதித்தனை.
இதனால், `ஆதித்தனை வழிபடுதல் சிவ சத்தியை வழி படுதலேயாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

பொழிப்புரை :

ஆதித்தன்மேல் எழுந்துவருகின்ற வழி நிலத்திற்குக் கீழே யாருக்கும் அறிய ஒண்ணாத அரும்பொருளாய் உள்ளது. (ஆதலின் அதனை அறிய முயல வேண்டுவதின்று.) இனிக் கண்ணிற்கு நன்கு புலனாயினும் யாராலும் அணுகிப் பற்ற இயலாத ஆதித்தன் புறப்பட்டுத் தோன்றுதல் நீருக்கும், தீக்கும் நடுவேயாகும்.

குறிப்புரை :

ஆதலின் அது முதலாக அவனைக் காண்க என்பதாம். இஃது ஆதித்தன் புறத்தும், அகத்தும் நிற்றலாகிய இரண்டிற்கும் பொருந்தக் கூறியதாம். மாலையில் மறைந்த ஆதித்தன் காலையில் புறப்படும்பொழுது நிலத்திற்குக் கீழ் நின்று புறப்படுதலால் அவ்விடம் நிலத்தின்கண் உள்ளவரால் அறிய இயலாதாம். இனி அவன் புறப்படும்பொழுது கடல் நீரைக் கிழித்துக்கொண்டு வடவா முகாக்கினி உள்ள இடத்திற்கு வேறான இடத்திற் புறப்படுவான். அப்பொழுதும் அவனை யாரும் கண்ணால் காணலாமன்றி, அருகில் சென்று கையால் பற்ற இயலாது. இஃது அவன் புறத்து நிற்கும் நிலை. இனி அகத்தில் ``பார்`` என்றது, பூமியின் அடையாள வடிவமாகிய சதுரத்தைத் தனது வடிவமாக உடைய மூலாதாரத்தை. அதற்கும் கீழே ஆதித்தன் முக நுண்ணிலையில் நிற்றலால் அஃது யாராலும் அறியப் படாதாம். ``நீர்`` என்றது சிறுநீர் தங்கும் இடமாகிய மணிபூரகத்தை. ``தீ`` என்றது; பிராணவாயுவின் கும்பகத்தால் மூளத்தக்க அக்கினியை உடைய மூலாதாரத்தை - இவ்விரண்டிற்கும் நடுவாவது சுவாதிட் டானம். அங்கு நுண்ணியனாய்ப் புலப்படுதலின் அதனை அவன் உதிக்கும் இடமாகக் கூறினார் எனினும் அவனை நன்கு புலப்படக் காணுதல் மேல், ``ஆன முக்கோணத்தில்`` எனக் கூறியது முதலிய இடங்களிலேயாம். `இவ்விரு நிலையிலும் ஆதித்தனைப் பிடிக்க முயலாமல் கண்ணால் கண்டு வணங்குங்கள்` என்றபடி.
இதனால், ஆதித்தனால் பயன்பெறும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.

பொழிப்புரை :

ஆதித்தன் நிலத்தைப் பிளந்து கொண்டு அதன் கீழேயும் ஓடுகின்றான். பின்பு மேலே வந்து ஆகாயத்தைப் பிளந்துகொண்டு எங்கும் ஒளிமயமாகவும் செய்கின்றான். மற்றும் உயிர்களின் கண்களைத் துளைத்து அவற்றுள்ளேயும் புகுந்து இருளை ஓட்டி மகிழ்ச்சியைத் தருகின்றான். அந்த இன்பத்தை நினைத்தல் கடமையாகலின் அக்கடமையில் வழுவாது நின்று அவனைத் தியானித்தற்கும் அவன் உடன்பட்டு நிற்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், அவனை வழிபடாதொழியின் அஃது உயிர்கட்குக் குற்றமாம்` என்பது கருத்து. `ஆதித்தனது உதவியை முதலிற் பெற்றே பின்பு உயிர்கள் எந்தச் செயலையும் செய்ய இயலும் ஆதலின், அதுபற்றி அவனை வழிபடுதல் முதற்கண் செய்யத் தக்கது` என்றற்கு அவனது செயலை இங்ஙனம் வகுத்துக் கூறினார். இதுவும் ஆதித்தனது புறநிலை அகநிலை இரண்டிற்கும் பொருந்தக் கூறியதேயாம். அவற்றுள் புறநிலைப் பொருள் வெளிப்படை. அதனுள் ``விண்``, வெட்டவெளி. அகநிலையில் மண், மேற்கூறிய வாறு மூலாதாரம். விண், அது முதலாக மேன்மேல் உள்ள ஆதாரங்கள். கண், மனக்கண். ``களி தந்த`` என்றதனால், களி தருதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. ``ஆனந்தம் எண்ணும்`` என்றது, அது பற்றி அவனை எண்ணும் காரியத்தை உணர்த்தி நின்றது.
இதனால், ஆதித்தனது உதவி இன்றியமையா முதல் உதவியாதல் கூறும் முகத்தால், அவனை முதற்கண் வழிபடுதல் கடப்பாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பாரை யிடந்து பகலோன் வரும்வழி
யாரு மறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்று
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

ஆதித்தன் நிலத்திற்குக் கீழிருந்து அதனைப் பிளந்து கொண்டு மேலே எழுவது போலத் தோற்றுகின்ற அந்த வழியின் உண்மையை, தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கு உரிய நூலை மட்டுமே உணர்ந்தவர்களில் ஒருவரும் அறியமாட்டார். (அதனை அவ்வாறே கொள்வர். உண்மையில் அது புறநிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு மூலா தாரத்திற்குக் கீழ் நின்றுமேல் எழுதலும் ஆகும்.) இனி அவ்வாதித்தின் விண்ணில் காணப்படும் பொழுது அவன் சிவபிரான் எழுந்தருளி யிருக்கின்ற மகாமேரு மலையை வலம் வருகின்றான் என்றே கொள்வர். (உண்மையில் அதுவும் புற நிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு வீணாத் தண்டைச் சூழ்ந்து ஒளிர்வதுமேயாகும்.) கோள்களின் இயக்கம் பற்றியும், பிராணா யாமம் பற்றியும் இனிது விளங்கக் கூறும் நூல்களின் வழி அவற்றை உணர்ந்த ஒரு சிலரே மேற்கூறிய உண்மைகளை உணர்ந்திருந்தனர்.

குறிப்புரை :

தீரன் - உலகை ஆக்கவும், அழிக்கவும் வல்ல ஆற்ற லுடையவன்; சிவபிரான், ஊர் - ஊர்தல், முதனிலைத் தொழிற்பெயர். கிணற்றுத் தவளைபோல் இல்லாமல் வெளியே பல ஊர்களையும் சுற்றினவர்` என்பது நயம். கிணறு போல்வன பருப்பொருளைக் கூறும் நூல்கள். ஆதித்தனது புறநிலையையும் உண்மையாக ஒரு சில பேரறிவாளரே அறிந்திருந்தமை இம்மந்திரத்தால் விளங்குகின்றது.
இதனால், ஆதித்தனது நிலையின் அருமையை உணர்த்தும் முகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

பொழிப்புரை :

உயிர்கள் உடம்போடு கூடிநிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் அவ் வுயிர்களில் அழுந்தப் பொருந்தியுள்ள சிவன் அவற்றின் உடம்பில் உள்ள ஆதாரங்களில் நீக்கமின்றி நிற்கின்றான். பிராணவாயு இடநாடி வல நாடிகளை ஒழித்து நடுநாடி வழியாக ஓடினால் அஃது ஆதித்தனைப் போல ஒளியுடையதாய்க் காணப்படும். அந்த ஒளியில் சிவன் மும்மலங்களை ஒழித்து, உயிர்களின் தற்போதத்தையும் அடக்கி, அவற்றின் அறிவுக்கறிவாய் விளங்குவான்.

குறிப்புரை :

`ஆகவே, நடு நாடி வழியே ஓடும் பிராணனே பிண்டாதித்தனாம்` - என்றபடி. `வல நாடி வழியாக ஓடும் பிராணனைப் பொதுவாக `ஆதித்தன்` என வழங்குதல் மரபாயினும் அஃது உண்மையில் ஆதித்தனாய்ப் பயன் தருதல் நடுநாடி வழியே ஓடும் பொழுதுதான்` என்பது கருத்து. உலகப் பொருள் உள் புறத்தல் புலப்பட்டு விளங்குதல் அண்டாதித்தனால் ஆதல் போல, உயிர்ப்பொருளாகிய சிவம் அக்தில் புலப்பட்டு விளங்குதல் நடு நாடி வழியாக ஓடும் பிராணனால் ஆதலின் அது பிண்டாதித்தனாதல் விளங்கும்` என்றற்குச் சிவனது அகநிலையை இங்கு வகுத்துக் கூறினார். `நின்றால்` முதலியன ``நின்று`` முதலியவாகத் திரிந்தன. ``கருத்து`` என்றது ஆதாரங்களை. மலங்கள் கொன்று வென்று விளங்கும்` என்பதை இறுதியிற் கூட்டி, அதற்கு `அந்நந்தி` என்னும் எழுவாயையும், ஓடுதற்கு. `பிராணன்` என்னும் வினைமுதலையும் வருவிக்க. `சுடராய்` என்பதில் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. ``காணும்`` என்றது, `காணப்படும்` என்றபடி.
இதனால், `பிண்டாதித்தனாவது இது` என்பது உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதித்தன் ஓடி அடங்கும் இடம்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே அடங்குகின் றாரே.

பொழிப்புரை :

`பிண்டாதித்தன்` என மேற்கூறிய பிராணன் ஓடுமளவும் ஓடி ஒடுங்கி நிற்கும் இடத்தை `இது` என உணர்ந்து அவ்விடத்திலே நின்று பயன்பெற வல்லவரே தம்மை அண்டாதித்தன் இயக்கத்திற்கு வேறாய்ப் பிண்டாதித்தன் இயக்கத்தின் வழிபட்டவராக உணர்ந்து அவ்வியக்கத்தால் நீண்டகாலம் இவ்வுலகில் வாழ்வர். உலகம் இவ்வியல்பின் வேறுபட்டுத் தான் அறிந்ததையே அறிவாக நாட்டித் தான் வல்ல வற்றை ஓயாது கூறும். அக்கூற்றினைத் தெளிந்தோர் எல்லாம் அந்த அண்ட ஆதித்தனது இயக்கத்திற்கு உட்பட்டு விரைவில் மாய்பவரேயாவர்.

குறிப்புரை :

முதல் ஆதித்தன் `பிண்டாவதித்தன்` என்பது ``ஓடி யடங்கும்`` என்றதனால் விளங்கிற்று. அடங்கும் இடம் ஆஞ்ஞை அவ் விடத்திலே நின்று சாதிக்கலாவது. மேல் சந்திர மண்டலத்தினின்றும் அமுதம் ஊற்றெழப்பண்ணுதல். ``உணர்ந்தவர்`` என்றது அதன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ``எல்லாம்`` என்பதன்பின் `கேட்கின்றவர்` என ஒரு சொல்லைச் சொல்லெச்சமாக வருவிக்க. முன்னை ஆதித்தன் `பிண்டாதித்தன்` ஆயினமையின் பின்னது அண்டாதித்தன் ஆயிற்று.
இதனால், பிண்டாதித்தனை உணர்ந்து சாதித்தலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்(கு)
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை :

[இம் மந்திரம் அண்டாதித்தன், பிண்டாதித்தன் இருவர்க்கும் பொருந்தக் கூறியது.]
அண்டாதித்தன் கீழ் நின்றும் ஊடுருவி மேலே புறப்பட்டு உலகைச் சுற்றிச் சென்று, முடிவில் ஒடுங்கி நிற்பது உலக முதல்வ னாகிய சிவனிடத்திலாகும். அவ்வாறே பிண்டாதித்தனும் மூலா தாரத்திற்குக் கீழ் நின்றும் உருவி மூலாதாரத்திலே வெளிப்பட்டு மேலே ஏனை ஆதாரங்களையும் கடந்து, முடிவில் ஒடுங்கி நிற்பது ஆஞ்ஞை யில் உள்ள சதாசிவ மூர்த்தியினடத்தி லாகும். ஆகவே எவ்வகை யிலும் உயிர்கட்குப் புகலிடமாகின்றவன் சிவனேயாவன். ஆயினும் இவ்வுண்மையை அறிபவர் உலகில் இல்லை. அறிபவர் எவரேனும் இருப்பின், எனது உள்ளத்தில் உள்ள அன்பு அவரிடமே சென்று உருகி நிற்கும்.

குறிப்புரை :

`ஆதித்தன்` என்பது முதற்கண் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உருவிப் புறப்படுதல் மேல், ``பாரையிடந்து`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டது.
இதனால், ஆதித்த ஞானத்தால் விளையும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
ஒருகதி ராகில் உவாவது தானே.

பொழிப்புரை :

பூர்ணிமை நாளில் மிக விளங்குகின்ற சந்திரன், தெறும் இயல்பினையுடைய கதிர்களையுடைய சூரியனுக்கு எதிரே நின்று தன் கதிர்களை வீசும் இயல்பு அமைந்திருக்குமாயின், அந்தச் சூரியனும் குளிர்ந்த கதிர்களை வீசுவோன் ஆகிவிடுவான். (அந்த அமைப்புத்தான் இல்லையே!) பிண்டாதித்தனுக்குள்ளே விளங்கு கின்ற எனது மனம் அவனால் ஓர் ஆதித்தனாயின், அது பின்பு பிண்டத் துள்ளே விளங்கும் சந்திர மண்டல்தினது அமுத தாரையால் பூர்ணிமை நாளில் தோன்றுகின்ற சந்திரனாகிவிடும்.

குறிப்புரை :

`அப்பொழுது எனதுமனம் அந்தப் பிண்டாதித் தனையும் வென்றுவிடும்` என்பதாம். `மனம் ஆதித்தனால் தூய்மை பெற்றதற்குப் பின் சந்திர மண்டலத்து அமுதத்தினாலும் தூய்மை பெறல் வேண்டும்; %E

பண் :

பாடல் எண் : 2

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.

பொழிப்புரை :

`சந்திர கலை` எனப்படும் இட நாடியில், `சூரிய கலை` எனப்படும் வல நாடிக் காற்று ஒடுங்கி இட நாடிக் காற்றே இயங்கினும் பின்னர் மாறி இயங்கும் காலமே சிவனைப் பூசித்தற்கு உரிய காலமும். (`ஆகவே, பூசை செய்வோர் அவ்வாறு செய்து கொள்க` என்பதாம்.) இனி அந்த இருவழியிலும் யோகம் ஆதலின், அவ்வாறு யோகம் செய்பவரே அந்தக்கரணம் தூய்மையாகப் பெற்றவர் ஆவர். அவரே பின்பு சிவயோகத்தால் சிவமாகி நிற்பர்.

குறிப்புரை :

பின்னர், ``பானுவில்`` என்றதனால் முன்னர், `சந்திரனில்` என அவ்விடத்தே ஏழாவது விரிக்கப்படும். `வரினும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று. அவ்வும்மையால், `சிவபூசையின்பொழுது பிராணன் அவ்வாறு இயங்குதல் கூடாது` என்பது பெறப்பட்டது. `ஏய் முறையில் ஆகும்` என இரண்டாம் அடி இறுதியில் உருபும் பயனிலையும் விரிக்க, ``உபய நிலம்`` என்றது, `இரண்டற்கும் பொதுவான இடம்` என நடு நாடியைக் குறித்தது. வருதல் வினையை மூன்றாம் அடியின் ஈற்றிலும் `வரின்` எனக் கூட்டுக. ``சிந்தை`` என்ற உபலக்கணம்.
இதனால், மனம் ஆதித்தன் ஆகும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.

பொழிப்புரை :

யோக முறையில், சூரியன், அக்கினி, சந்திரன்` எனச் சொல்லப்படுகின்ற கலைகளோடு, அக்கினி செல்லும் வழியாகிய நடு நாடியும் `கலை` என்று சொல்லப்படும். ஆகவே, கலைகளாவன நான்காம். அவற்றுள் சூரிய கலை, நடு நாடி வழியாக மேற்செல்கின்ற அக்கினியோடு சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையின் அந்நிலையே யோகியர்க்கு, மேல், `உவா` எனக்குறித்த பூரணையாகும் என்று அறிமின்கள்.

குறிப்புரை :

அருக்கன் அனல் மதி ஆகும் கலையோடு இடை ஆகும். ஆகவே, `கலை நான்கு` எனலாம் என்பர்` என இயைத்துக் கொள்க. `அனலோடு கூடி` என உருபும் பயனும் உடன் விரிக்க. `மேற்கூறிய உலாவாம்` என்றதனால், `அந்நிலையை அடைந்தோரது மனம் ஆதித்தனாய்ப் பிண்டாதித்தனை வெல்லும்` என்பதுதானே பெறப், பட்டது, ``அறியும்`` என்பது முன்னிலைப் பன்மை ஏவல் வினை முற்று.
இதனால், மேல் `உவா` எனப்பட்ட நிலை உளதாகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி
ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது
பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற
ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.

பொழிப்புரை :

கீழ்ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும், மேல் ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும் ஆகிய இரண்டு அண்டங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் விளங்குகின்ற ஓர் ஒளி பரமசிவன். அவ்வொளி எந்த உலகத்தார்க்கும் உணர இயலாத உணர் வாய் இருப்பது. எனினும் அஃது எல்லா உலகங்களிலும் விளங்குகின்ற எல்லா வகையான ஒளிகளிலும் உள்ளொளியாய் நிற்றலை அறியத் தக்கவர் யார்? அணுகத்தக்கவர் யார்? ஒருவரும் இலர்.

குறிப்புரை :

`இலங்கொளியாகிய அவ்வொளி` என்க. இரண்டாம் அடியிறுதியில் உள்ள `அது` என்பதை வேறுபிரித்து, ``நின்றது`` என்னும் பயனிலைக்கு எழுவாயாக்குக. ``நின்றது`` என்பது அத்தொழில்மேல் நின்றது. அண்டுதல் - அணுகுதல். முடிவில், மனம் ஆதித்தன் `ஆகப் பெற்றவரே அறியத் தக்கார்; அணுகத் தக்கார்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
``அண்டம் ஆரிரு ளூடு கலந்தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்`` l
என அருளிச் செய்ததையும் இங்கு நினைவு கூர்க.
இதனால், பரமசிவனது அருமையும், மன ஆதித்தனுக்கு ஆகின்ற அவனது எளிமையும் உணர்த்து முகத்தால் மன ஆதித்தனது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஒன்பதின் மேவி உலகம் அலம்வரும்;
ஒன்பதும் ஈசன் இயல்பறி வார்இல்லை;
முன்பதின் மேவி முதல்வன் அருள்இலார்
இன்பம் இலார்; இருள் சூழநின் றாரே.

பொழிப்புரை :

உலகம் ஒன்பது கோள்களில் உளம்பொருந்தி, அதனால் அமை காணாது அலமருகின்றது. (``வேரண்டத் துள்ளே பிறங்கொளியாய் நின்றது`` என மேற்கூறியபடி) `ஒன்பது கோள்களின் ஆற்றலும் சிவனது ஆற்றலே` என்னும் உண்மையை உணர்ந்து அவனையடைந்து அமைதிகாண்பவர் ஒருவரும் இல்லை. முதலில் அந்நிலையில் நிற்பினும் பின்பாவது அருளாளரது அருள் மொழிகளைக் கேட்டுச் சிவனது அருளைப் பெறாதவர் ஒரு ஞான்றும் இன்பம் இல்லாதவரேயாய்த் துன்பத்தையே உடையவராய் இருப்பர்.

குறிப்புரை :

`வலம் வரும்` - என்பது பாடமன்று. இருள், இங்குத் துன்பம். இதனுட் கூறப்பட்டாரெல்லாம் அண்டாதித் பிண்டாதித் தர்களால் மனம் ஆதித்தனாகப் பெறாதவர் என்க.
இதனால், மனம் ஆதித்தனாகப் பெறாதவர் எய்தும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து)
அந்த அபர பரநாத மாகியே
வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து)
உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.

பொழிப்புரை :

சுத்த மாயையின் ஒருகூறு சிவனது சத்தியால் உலகத் தோற்றம் நிகழத்ற்குக் காரணமாகப் பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் பக்குவப்படுத்தப்பட்ட பகுதி, `மேற்பகுதியும் கீழ்ப் பகுதியும்` என இரண்டு பகுதியாய் விரியும். அவை முறையே `பரவிந்து` என்றும், `அபரவிந்து` என்றும் பெயர் பெறும். அவற்றினின்றும் முறையே சொல்லுலகத்தின் அதிசூக்கும நிலையாகிய பரநாதமும், சூக்கும நிலையாகிய அபர நாதமும் தோன்றும். (இவையே அதிசூக்குமை வாக்கும், சூக்குமை வாக்கும் ஆகும்.) பின்பு அவற்றினின்றும் வைகரி முதலிய வாக்கு வடிவமான சொல்லுலகத்தையும், `கலை, தத்துவம், புவனம்` என்னும் அத்துவாக்களையும் சிவன் தோற்றுவித்து, அவை வழியாக ஆன்ம அறிவினிடத்தே அருணோதயம் போன்ற ஒளியை விளங்கச் செய்வான்.

குறிப்புரை :

கலை, `சாந்திய தீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என முறையே ஒன்றன்பின் ஒன்றாய் ஐந்தாகி விரியும். ஏனை ஐந்து அத்துவாக்களும் இந்த, `கலை` என்னும் அத்துவாவில் அடங்கும். அவையாவன `வன்னம், பதம், மந்திரம்` என்னும் சொல் வகையும். `தத்துவம், புவனம்` என்னும் பொருள் வகையுமாம். பரம் - சிவன், `பரம் கலையாதி வைத்து உள்ளத்து அருணோதயம் என உந்தும்` என முடிக்க. செய்யுள் நோக்கி அபரங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால், உலகத்தோற்ற முறை ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு)
உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.

பொழிப்புரை :

ஆன்ம அறிவில் அருணோதயம் போலத் தோன்று வதாக முன் மந்திரத்திற் குறித்த விளக்கத்திற்குக் காரணமான எழுத் தோசை, `பர நாதத்தின் காரியம்` என ஆகமங்களில் சொல்லப் படுதலால், அந்தப் பரநாதத்திற்குக் காரணமாக மேற்குறிக்கப்பட்ட அந்தப் பரவிந்துவிலிருந்தே வைகரி முதலியவாக்குக்களால் நிவிர்த்தி முதலிய ஐங்கலைகளிலும் அறிவு விளக்கம் சிவனால் உண்டாவதாகும்.

குறிப்புரை :

உள்ளம் - ஆன்ம அறிவு. `அருணோதயத்திற்கு` என நான்காவது விரிக்க. `வள்ளலால்` என மூன்றாவது விரித்து, அதனை ``ஒன்றும்`` என்பதனோடு முடிக்க. ``பர விந்து வாக்கு`` என்பது, பர விந்துவினின்றும் தோன்றும் வாக்கு` என ஐந்தாம் வேற்றுமைத் தொகை. இங்கும், `வாக்கால்` என உருபு விரிக்க. `ஐங்கலைக்கும் ஒன்றும் உதயம் உள்ளன` என மாறிக்கூட்டுக. உதயம் - ஒளித் தோற்றம். கலைகளின் பன்மைபற்றி உயத்தையும் பன்மையாகக் கூறினார். ``வைகரி யாதி`` என்றது ஒடுக்கமுறை பற்றி. இவற்றிற்குப் பரவிந்து பரம்பரையால் காரணமாகும் என்க.
`தூல வைகரி` சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குக்கள் முறையே `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் நின்று ஆங்காங்குள்ள உயிர்கட்கு உணர்வைப் பிறப்பிக்கும் என்பதை,
``நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாக`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளானும் உணர்க.
இதனால், சொல்லுலகம் அனைத்திற்கும் `விந்து` எனப்படும் சுத்த மாயையே காரணமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.

பொழிப்புரை :

`தேவர்கள் தம் தம் பதவி விருப்பத்தால் விரும்பு கின்ற முழுமுதற் கடவுளாவான் பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற நூற்றெட்டு உருத்திரர்கட்கும் தலைவன்` என்றும், `பொது வாக - மும்மூர்த்திகள் என்று யாவராலும் சொல்லப்படுகின்ற - அயன், அரி, அரன் - என்பவர்கட்குத் தலைவன்` என்றும் தொன்மையாக பலர் சொல்லிவர, `முதற்கடவுள் அவ்வளவில் நில்லாது மேற்குறித்த மூவர்க்கும் மேலாய் நான்காமவனாய் உள்ள மகேசுரனை உள்ளிட்ட நால்வர்க்கும் தலைவனாவான்` எனச் சமயக் கணக்குக்களைக் கடந்து நிற்கின்ற உண்மை நூல்கள் உண்மையைச் சொல்லா நிற்கும் என உயர்ந்தோர் கூறுவர்.

குறிப்புரை :

இஃது, `ஐந்தொழிற்கும் முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே பரம்பொருள் எனக்கூறியது. `பத்துத் திசை உதயம் செய்யும் தேவர்` என மாற்றி வைத்து உரைக்க. பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற உருத்திரர் இவர். இவர் என்பதைச் சிவஞான போதம் பேருரையிலும் காணலாம். 3 ``முன்னொரு காலத்து`` என்றது பழைமை குறித்தவாறு. அப்பழைமையாவது சைவாகமங்களை உணராத உலகரது காலங்களாம். `முன் ஒரு காலத்து என` என முன்னே கூட்டிமுடிக்க. ``நடு`` என்றது அப்பாற்பட்ட நிலை அஃது ஆகு பெயராய் அந்நூல்களைக் குறித்தது; வாய் - உண்மை. ``விண்ணவர் மேவு பிரான்`` என்பதை முதலில் எழுவாயாக வைத்து, அதனை, ``பிரான், பிரான்`` என்னும் பயனிலைகளோடு முடிக்க.
இதனால், `முன் மந்திரங்களில், ``பரம்`` என்றும், ``வள்ளல்`` என்றும் குறிக்கப்பட்ட முதற் கடவுளாவான் இவன்`` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.

பொழிப்புரை :

முன்மந்திரத்திற் கூறியவாறு சதாசிவ மூர்த்தியாய் நின்று ஐந்தொழில் நடாத்தும் முதல்வன் அவ்வாறு தொழில்புரிய நிற்பதற்கு முன்பே என்னை இயல்பாகவே பற்றி நிற்கின்ற, வெறுக்கத் தக்க அக இருளை நீக்குதற் பொருட்டு என் உயிருக்கு உயிராய்க் கலந்து நின்று, அதன் பின்பு தொழில் புரிய எழுந்தான்.

குறிப்புரை :

நந்தி - சிவபெருமான். ``பொய்யிலன்`` முதலிய குறிப்பு வினைப் பெயர்கள் பலவும் அவனையே குறித்து நின்றன. பொய் - பொய்போலத் தோன்றுகின்ற அறியாமை. மெய். உள்ளதாய்த் தோன்றுகின்ற அறிவு. புவனங்கள் ``புவனா`` எனப் பெண்பாலாகச் சொல்லப்பட்டன. மையிருள் - மை போல்வதாகிய இருள். கண்ணிற்குப் புலனாவது போலத் தோற்றுகின்ற இருள். இஃது உலகை மறைக்கும் புற இருள் மனமொழி மெய்களால் செய்யப்படும் இருள்; வினை இருளாகிய மலம் காரணமாக விளைவதனை ``இருள்`` என்றார். ``இருள்சேர் இருவினை`` * என்றது காண்க. `இவ்விருளை நீக்கும் திருமுச்சுடர்கட்கு இல்லை` என்பதை நினைவூட்டுதற்கு அவற்றின் இயல்பை எடுத்துக் கூறினார். திரு - மேன்மை; சத்தி கைத்தல் - வெறுத்தல், பின்பு ``எழுந்தான்`` எனக் கூறியதனால், `கலந்தமை அதற்கு முன்னே` என்பது பெறப்பட்டது இந்நிலை, `அனாதி` எனப்படும். ``என்`` என நாயனார் தம் நிலையையே கூறினா ராயினும் அஃது அனைத்துயிர்களின் நிலையையும் பற்றியதேயாகும்.
இதனால், முதல்வன் அனாதியே உயிர்களில் உள்ளுயிராய்க் கலந்து நிற்றல் கூறப்பட்டது. அவ்வாறு கலந்து நிற்றலானே, `அவை களின் இருளை நீக்குதல் வேண்டும்` என்னும் இரக்கமும், அது பற்றிச் செய்யப்படும் தொழில்களும் முதல்வனுக்கு உளவாயின என்க.

பண் :

பாடல் எண் : 5

தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி யூறல்
கனிச்சுட ராய கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி உயிர்களது இருளை நீக்கவேண்டி அவற்றினுள்ளே உள்ள சிவனது, `திரு` எனப்பட்ட ஒப்பற்ற ஒளி தாக்கிப் பரவுதலால் அவ்விடத்துள்ள இருளாகிய மலம் நீங்கும். அது நீங்கினால் அந்த ஒளிக்கு மேலே உள்ள சிவமாகிய அரிய கனியின் சாறு அக்கனியினின்று வெளிப்பட்டு ஒழுகி இனிக்கும் அப்பொழுது ஊழிக் காலத்தும் அழியாத ஒளியினதாய் விளங்கும் கயிலாய மலைமேல் சிவன் நண்ணிப் பேரொளியுடன் திருமேனி கொண்டு வீற்றிருக்கும் காரணமும் விளங்கும்.

குறிப்புரை :

எற்றுதல் - தாக்குதல். தாவுதல் - பரவுதல் `தாய்` என்பது, `தாவ` என்பதன் திரிபு. இவ்வாறன்றி, `நீக்க`, எனப் பாடம் கொள்ளுதலும் ஆம். ``அண்ணித்திடும்`` என்பது திரிந்ததும், `கன்னி` என்பது இடைக் குறைந்ததும் எதுகை நோக்கியாம். சிவத்தை, `ஈசன் எனுங்கனி`` * என அப்பர் அருளிச்செய்ததும் இங்கு நோக்கத்தக்கது. கன்னி - அழியாமை. ``ஊழிதோறூழி மற்றும் உயர் பொன்னொடித் தான் மலை``* என அருளினமை காண்க. வண்ணம் - வகை; காரணம் ``ஆம்`` என்றது, `விளங்கும்` என்றபடி. `கயிலையில் ஈசன் உருவத் திருமேனியுடன் வீற்றிருத்தல் நிலவுலகத்து உயிர்களை உய்வித்தற் பொருட்டு என்னும் உண்மை அனுபவமாய்த் தோன்றும்` என்பதாம்.
இதனால், முதல்வன் உயிர்க்குயிராய்க் கலந்து நின்று செய்யும் பேருதவி விளக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசைஒளி யாயிடும்
ஆரறி வார்அது நாயகம் ஆமே.

பொழிப்புரை :

உயிர்களது அறிவினுள்ளே நுண்ணறிவாய் நிறைந்து நிற்கின்ற ஒரு பெரிய ஒளி, தடையின்றி எங்கும் போய் வருகின்ற பகலவனது தேர் செல்லாத இடத்தில் அங்குள்ள இருளை நீக்குகின்ற ஒளியாய் இருக்கும். இம்மறை பொருளை உணரும் அறிவுடையோர் யாவர்? எவரேனும் இருப்பாராயின் அவரது அறிவே தலைமை சான்ற அறிவாகும்.

குறிப்புரை :

நேர்மை - நுண்மை. ``அவர் நின்றதோர் நேர்மையும்`` என்று அருளியது காண்க. திசை - இடம். பகலவன் தேர் செல்லாத இடம் உயிரினது அறிவு. மேலேயும், ``மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு`` என்றது காண்க.
இதனால் முன் மந்திரங்களில் கூறப்பட்ட சிவனது நுண்ணிலை அறிதற்கரிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும்
சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

பொழிப்புரை :

அண்டத்தில் ஒரு வட்ட வடிவினனாய்க் காணப் படுகின்ற ஆதித்தன் உலகில் எட்டுத் திக்கிலும் சென்று அலமருவார்க்கு அவர் சென்ற இடத்தில் எல்லாம் காணப்பட்டு ஒளியை வழங்குவான். வெளியில் அங்ஙனம் அலமரும் நிலையை விட்டு முன் மந்திரத்தில் கூறிய நுண்ணிறிவை அறிந்து அகத்தே நோக்குபவர்க்கு அவன் உட்பினுள் காண்கின்ற பல இடத்திலும் விளங்கி ஒளிதருகின்றவன் ஆவான்.

குறிப்புரை :

`புறநோக்கு உடையவர்க்கு அண்ட ஆதித்தனே ஆதித்தன் ஆவதுபோல அகநோக்கு உடையவர்கட்குச் சிவனே ஆதித்தனாய்த் தோன்றுவான்` என்றபடி. `என் தாய் என் சிற்றன்னை யாயினாள்` என்று ஒருவன் சொல்வானாயின் அச்சொல்லில் `ஆயினாள்` என்பது `தாய்க்கு உரிய இடத்தைச் சிற்றன்னை பற்றி நிற்கின்றாள்` என்பதே பொருள் ஆதல் போலவே `ஆதித்தன் கதிரொளியான்` என்பதற்குப் பொருள் கொள்க. `கண்ட இடம், சென்ற இடம், நின்ற இடம்`` என்பவற்றில் பெயரெச்சத்து அகரங்கள் தொகுத் தலாயின. ``கண்ட இடம்`` என்றது ஆறு ஆதாரங்களை. ``உள்ளே`` என்பதன் பின் `காணப்படும்` என ஒரு சொல் வருவிக்க. ``உள்ளே காணப்படும் கதிரொளி`` என்றதுமுன் மந்திரத்திற் கூறப்பட்ட நேரறிவை, ``சென்றிடத்து`` என்பதனை முதலிலும், ``நிலை`` என் பதனை ``வரும்`` என்பதன் பின்னும் கூட்டுக. `மழை நின்றது` என்றல் போல `நிற்றல்` இங்கு ஒழிதலைக் குறித்தது. ``நின்றிடத்துக் கதிரொளி யாயிடும்`` என்றதனால், `சென்ற இடத்தே மகிழ்ந்தெழுதல் நில்லா தவர்க்கு` என்பது பெறப்பட்டது. முதலடி இன எதுகை.
இதனால், அகநோக்குடையார்க்குச் சிவன் உள்ளொலியாய் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாவிகண் நாசி நயன நடுவினும்
தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

கொப்பூழ், கண், மூக்கு, புருவநடு, தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேல் என்னும் ஐந்திடங்களிலும் தோன்றி ஒளி வீசுகின்ற அந்த ஆதித்தனைத் தேவர்கள், `உருத்திரன், மால், அயன்` என்னும் மும்மூர்த்திகளாக அறிந்து இன்புற்றிருக்கின்றனர்.

குறிப்புரை :

`சிவனே தனது திகார சத்தியால் மும்மூர்த்திகளைக் காரணக் கடவுளராகச் செய்து உலகை நடத்துவிக்கின்றான்` என்றபடி. தொடக்கத்திலும்,
``அவனை யொழிய அமரரும் இல்லை,
... ... ... அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை``
என்று அருளிச்செய்தார். மூலாதார சுவாதிட்டானங்களில் ஒளி சிறிதாய் விளங்கலின் அவற்றிற்கு, மேற்பட்ட இடங்களையே கூறினார். எல்லாவற்றிற்கும் முதலான பிராணன் இயங்குவது மூக்கு வழியாக ஆதலின் அதனையும் கூறினார். ``நயனம்`` என்றது ஆகு பெயராய்ப் புருவங்களை உணர்த்திற்று.
இதனால், சிவாதித் தனது சிறப்புணர்த்தி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
`இவ்வதிகாரத்தில் சொல்லப்பட்ட உண்மைகளை உணரும் உணர்வே ஞானித்தனாம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 1

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

பொழிப்புரை :

உயிர் அடைந்த ஞான ஒளியினுள்ளே வந்து எழு கின்ற சிவத்தினது ஒளியால் அக ஒளியாகிய அறிவை மறைந் திருந்த அக இருளாகிய ஆணவ மலமும், அதனால் விளைந்த அறியாமையும் இராக்காலத்திலே பொருந்தி எழுகின்ற அருணோதயத்தால் அதற்கு முன் திணிந்திருந்த இருள் நீங்குதல் போல நீங்கியொழியும்.

குறிப்புரை :

``சென்றிடும்`` என்பது பெயரெச்சம். `ஞானத்துள் சென்றிடும் சிவத்தின் பிரகாசத்தால்` எனக் கூட்டியுரைக்க. `அருணோ தயத்தால்` என உருபு விரிக்க. தெளிவு பற்றி எதிர்காலத்தை இறந்த காலமாக்கி, ``தொலைந்தது`` என்றார். ஏகாரம் தேற்றம். பொருளில் ``அஞ்ஞானமும்`` என்றதற்கு ஏற்ப உவமையிலும் `குருட்டுத் தன்மையும்` என்பது வருவிக்க.
இதனால், அக இருளாகிய ஆணவ மலம் சிவாதித்தனது ஒளியாகிய அக ஒளியாலல்லது நீங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்(து)
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

பொழிப்புரை :

நில உலகின்கண் நீர் நிரம்பிய குடங்களில் ஆதித்தனை நோக்கி வாயைத் திறந்துள்ள குடங்களில் தான் ஆதித்தன் விளங்குவான். அவ்வாறின்றி ஆதித்தனை நோக்காதவாறு மூடி வைக்கப்பட்ட குடங்களில் யாதொன்றன் நீரிலும் ஆதித்தன் விளங் குதல் இல்லை. சிவன் உடல்தோறும் உள்ள உயிர்களில் விளங்குதலும் ஆதித்தன் குடத்து நீரில் விளங்குதல் போல்வதுதான்.

குறிப்புரை :

`அஃதாவது, `சிவன், அவனை உணரும் பக்குவம் வாய்ந்த உயிர்களினுள்ளே விளங்குதல்லது, அவனை உணரமாட்டாது மூடமாய்க் கிடக்கின்ற அபக்குவமான உயிரினுள்ளே விளங்கான்` என்பதாம்.
ஆதித்தனது கதிரில் இருதன்மைகள் உள்ளன. ஒன்று வெம்மை; மற்றொன்று ஒண்மை. அதுபோல, சிவனது சத்தியிலும் இரு தன்மைகள் உள்ளன. ஒன்று மறைத்தல்; மற்றொன்று விளக்கல், இத்தன்மை பற்றி, சத்தி இரண்டாகச் சொல்லப்படும். ஒன்று திரோதான சத்தி; மற்றொன்று அருட்சத்தி. மூடி வைக்கப்பட்ட குடத்து நீரிலும் ஆதித்தனது வெம்மைச் சத்தி விளங்குவதேயாகும். ஆயினும் அந்நீரில் ஆதித்தனது ஒளிச்சத்தி விளங்காது. அதுபோலவே எல்லா உயிர்களிடத்தும் சிவனது திரோதான சத்தி விளங்கவே செய்யும், ஆயினும் அருட் சத்தி பக்குவம் வாய்ந்த உயிர்களில் மட்டுமே விளங்கும் என உணர்க.
இங்குக் கூறிய உவமையால் குடத்து நீருள் ஆதித்தன் தோன்றும்பொழுது அந்த ஆதித்தனுக்கும், வானத்தில் உள்ள ஆதித் தனுக்கும் இடையே தன்மை வேற்றுமை யாதும் இன்மையும், மூடி வைக்கப்பட்ட குடத்து நீருள் ஆதித்தன் சிறிதும் தோன்றாமையும் பெறப்படுதலால், பல வகையில் வேறுபட்ட தன்மையை உடைய உயிர்களையும் `சிவனது கூறுகளே; அல்லது சிவனது பிரதி பிம்பங்களே` என்பாரது கூற்றுப் பொருந்தாமையும் இங்குக் குறிக்கப் பட்டதாம். அடுக்குப் பன்மை தோற்றி நின்றது.
இதனால், சிவாதித்தன் ஞானாதித்தனுள்ளே விளங்குதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.

பொழிப்புரை :

இங்குக் கூறிவரும் சிவாதித்தன் தான் ஒருவனே யாயினும் சுடர்களை எங்கும் வீசுகின்ற ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களும் ஒன்று கூடினாற் போன்ற பேரொளியாய் இருப்பான்; தன்னை அழிப்பவனாகப் பலர் கருதினானுலும் அயனாய் நின்று படைப் பவனும், அரியாய் நின்று காப்பவனும் தானேயாகும். மேலும் அவன் உயிர்களில் மட்டுமன்றி, உடல்களிலும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்றான். இன்னும் தான் ஒருவனே ஆகாயமாயும், அதன் கண் விளங்குகின்ற ஒளிகளாயும் நிற்றலேயன்றி இருளாகவும் ஆகின்றான்.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பது குறிப்பெச்சம். `சிவாதித்தன் உலகில் காணப்படுகின்ற ஒளிப்பொருள்களோடு ஒத்த ஒளியுடைய னல்லன்; அவற்றினும் பலமடங்கு மேம்பட்ட ஒளியினை உடையன்` என்பது கூறுமுகந்தான், `அவன் உதயஞ் செய்யப்பெற்ற உயிர்க்கு வேறு வேண்டத்தக்க பயன் யாதுமில்லை` என்பது முதலடியில் குறிக்கப் பட்டது. தாபித்தல் - நிலை நிறுத்தல். `நடாத்துதல்` என்றபடி. இதற்கு `உலகத்தை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `உடல் உயிரின்கண்` என உருபு விரிக்க. இருள் முக்குணங்களும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் நிறைந்து நிற்றல் பற்றிச் சிவனை ``இருட்டுமாம்`` - என்றார்.
இதனால், சிவாதித்தனது ஒப்புயர்வில்லாத அதிசய நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறுந் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க் கிடம்மிடை ஆறங்க மாமே.

பொழிப்புரை :

தெய்வச் சுடர் அங்கி, வேள்வித் தீ ஞாயிறுமுதல் வானகம் ஈறாயினவும் ``பல்லுயிர்`` என்றதும் வெளிப்படை. ஐவர், பிரமன் முதல் சதாசிவன் ஈறானவர். அவர்க்கு இடம் ஆவன சுவாதிட்டானம் முதல் ஆஞ்ஞை ஈறாய் உள்ள ஐந்து ஆதாரங்கள். ஆறு அங்கம் ஆஞ்ஞையிலிருந்து கீழ்நோக்கி எண்ண ஆறாவதாகும் மூலாதாரம். சைவப் பெரும்பதி - இவை யாவும் சிவத் தலங்களாகும்.

குறிப்புரை :

``சைவப் பெரும்பதி`` என்றதை ``ஆம்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `இவை சிவத்தலங்கள்` என்றது, `இவ்விடங்கள் சிவனைக் கண்டு வழிபடுதற்குரிய இடங்கள்` என்றபடி எனவே, இவ்விடங்களில் சிவனைக் கண்டு வழிபட அவன் ஆதித்தனாய் உயிரினுள் விளங்குவான்` என்பது கருத்து. மிடை ஆறு அங்கம் - அவ்வைந்தோடு சேர்ந்து ஆறாவதாகின்ற உறுப்பு.
இதனால், சிவாதித்தன் உதயம் செய்தற்கு வாயில் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உன்னு மளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

சிவன் தன்னை நினைப்பவரையே தான் நினைப் பான். பல பொருள்களையும் சொல்லுகின்ற வேதங்கள் பிறரைப்போல அல்லது தன்னைப் பலவிடத்தும் பெரும்பான்மை எடுத்துச் சொல்ல நிற்பவன். என் உள்ளே என்றும் ஒளிகுறையாத விளக்காய் உள்ளவன். `அவன் உயிர்களிடத்து அன்னப் புள்ளாய் இருக்கின்றான்` என்னும் அரிய உண்மையினை நான் திருவருளால் அறியப்பெற்றேன்.

குறிப்புரை :

அன்னப் பறவைக்கு, `அம்சம்` என்பதும் ஒரு பெயர் அதனால் அம்ச மந்திரத்தை `அன்னம்` எனக் குழூஉக்குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்ச மந்திரமே பிராணனை இயக்குவது. அஃது `அசபை எனப்படும். அதனை நாயனார் நான்காந் தந்திரத் தொடக்கத்திலே கூறினார். சிவனது சத்தியே அம்ச மந்திரத்தை இடமாகக் கொண்டிருந்து பிராணனை இயக்குகின்றது ஆதலின் அவ்வுண்மையைத் திருவருளால் உணர்ந்த நான் பிராணனோடு கூடிப் பிராணமயனாய் நிற்கும்பொழுதும் சிவனை மறக்கிலேன் என்றபடி,
``என்னில் ஆரும் எனக்கினி யார்இலை;
என்னி லும்இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` *
என்றருளிச் செய்ததும் காண்க. புறம்போந்து பின் உட்புகுதல் பிராணனின் இயல்பாதலை நினைக்க. முதல் மூன்று அடிகளிற் கூறியன அவன் அன்னமயன் ஆதலை வலியுறுத்தும் குறிப்பின. ``அறிந்துகொண்டேனே`` என்னும் சொல்லியல்பால், `திருவருளால்` என்னும் இசையெச்சம் பெறப்பட்டது.
இதனால், பசு பிராணனாம் முறைமை கூறுங்கால் அந் நிலையும் சிவனருளால் உளதாதலை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.

பொழிப்புரை :

இங்கு ``ஆறு`` என்றது பிராணன் இயங்கும் வழி யினை. ``அதன் கரையில் உள்ள இரு அன்னங்கள்`` என்றது, அந்தப் பிராணனை ஒட்டி நிற்கின்ற `சிவன், சீவன்` என்னும் இருவரையும். அவ்வன்னம் இரண்டும் என்றும் இணைந்து நிற்றலி னின்றும் நீங்கித் தனித்தனியே பிரிதல் இல்லை. அவற்றுள் ஒன்று அறிவுமிக்கது. ஆதலின் அது தனியே பிரிந்து நிற்பினும் யாதொன் றினை இழத்தல் இன்றி, இனிது வாழும். மற்றொன்று அறிவு குறைந்தது ஆதலால் அது பிரிந்து தனி நிற்பின் எந்தப் பயனையும் பெறாது துன்பத்தில் ஆழும் என்றது சிவ சீவர்களது இயல்பினை விளக்கியதாம்.

குறிப்புரை :

``அழகிய சிறகையுடைய இரு பறவைகள் இணை பிரியாதவை; ஒரு மரத்தில் வாழ்கின்றன. அவற்றுள் ஒன்று அம் மரத்தின் பழத்தை உண்கின்றது. மற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கின்றது`` என்னும் உபநிடதப் பொருள் இங்கு ஒப்பிடத்தக்கது. l
மூன்றாம் அடியில், `தனி நிலை` என்பது எதுகை நோக்கி, ``தன்னிலை`` என விகாரமாயிற்று. ``தன்னந் தனிநிலை தனி ஒன்று`` என்றதனை, `தனி ஒன்று தன்னந் தனி நிலையையுடையது` என மாற்றிப் பயனிலை வருவித்து உரைக்க. `உடையது` என்பது `உடையதாதல் இயலும்` என்பதாம். ``பின்னர்`` என்பது, `மற்றொன்று` என்றபடி. மற்றொன்றாகிய மட அன்னம் அது என்றக்கால் பேறு அணுகாது` என இயைக்க. மடமை - அறியாமை; `சிற்றறிவு` என்பதாம். அது என்றல் - வேறொன்றாகிய `அந்த அன்னத்தைப் போல நானும் தனித்திருப்பேன்` என்று நினைத்தல்.
இதனால், பிராணனாய் நிற்கும் பசு தான் பதியை விட்டுத் தனிநிற்றல் ஆகாமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

பொழிப்புரை :

தோன்றியழிகின்ற வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல்லுலகங்களையும். மற்றும் பொருளுலகங்களையும், அவைகளைப் பற்றி நின்று `புருடன், உருத்திரன், சிவன்` என உயிர்கள் அடையும் நிலையற்ற வேறுபாடுகளையும் தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான முதல்வன் சிவபெருமானே. இவ்வமைப்பு அனாதியே அமைந்த அமைப்பாகும்.

குறிப்புரை :

`மாய், ஆ` என்னும் முதனிலைகள் அடுக்கி, `மலம்` என்னும் பெயரோடு வினைத்தொகையாய்த் தொக்கன. அந்நிலைமை தாப்பிசைவாய், முன்னர் ``வைகரியாதி`` என்பதனோடும் இயையும். மாய்ந்து ஆகின்ற மலங்களாவன மாயேயங்கள். ``ஆதி`` என்றதனால் கன்மமும் தழுவப்பட்டது. கருவியின்றிக் கன்மம் நிகழாது ஆகையால் அக்கருவியைப் படைத்துக் கொடுத்தல் பற்றி, `கன்மத்தைச் செய்பவனும் சிவனே` எனக் கூறினார்.
உயிர் முப்பத்தாறு தத்துவங்களையும் பற்றி நிற்கும்பொழுது `புருடன்` என்னும் நிலையையும், ஆன்ம தத்துவத்தை ஒழித்து, ஏனைப் பன்னிரண்டு தத்துவத்தளவில் நிற்குமிடத்து `உருத்திரன்` என்னும் நிலையையும், அவற்றுள்ளும் வித்தியா தத்துவங்களை ஒழித்து, ஏனைச் சிவ தத்துவத்தளவில் பற்றி நிற்கும் பொவுது `சிவன்` என்னும் நிலையையும் அடையும். இவ்வாற்றானே `மூவுலகம்` என்பன சிவநெறியில் புருடலோகம், உருத்திர லோகம், சிவலோகம்` என்பனவே யாகின்றன. அட்ட வித்தியேசுரர், சுத்த கோடி மகா மந்திரேசுரர். அணு சதாசிவர் என்போர் யாவரும் `சிவர்` என்னும் வகையினரேயாவர்.
கரி - சான்று; இங்கு வினை முதலாந் தன்மையைக் குறித்தது. பொய் கரி - பொய்க்கும் கரி, மெய்கரி - மெய்க்கும் கரி, `பொய், மெய்` என்பன நிலையாமை, நிலைத்தல் இவற்றைக் குறித்தன. நடுவண் நின்ற ``கரி`` என்பது கருவியை வினைமுதல் போலக் கூறியது. விசேடம் - சிறப்பியல்பு. சிவனது சிறப்பியல்பு அவனது சத்தி. இங்கு அமைப்பாவது செய்வோனும், செய்யப்படுவனவுமாய் நின்ற இயல்பு `செய்தது` என்பது, `செய்யப்பட்டது` என்னும் பொருட்டாய்ச் செய்யாததைச் செய்ததுபோலக் கூறும் இலக்கணை வழக்காய் நின்றது.
இதனால், உயிர், `தான் புருடனாய் நிற்றல் முதலிய நிலைமை களும் சிவனால் ஆவன்` என்பதை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு)
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு)
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

பொழிப்புரை :

ஆணவ பந்தத்தால் தனது வியாபக நிலையை இழந்து அணுத்தன்மை எய்த நிற்கின்ற உயிரை அணுவிலும் பல கூற்றில் ஒரு கூற்றளவினதாகப் பாவித்து, `அணுவுக்கும் அணு` எனப்படுகின்ற நுண்ணியனாகிய சிவனை அணுக வல்லவர்கட்கே அவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

இரண்டாம் அடி ஒழிந்த ஏனைய அடிகளில் உள்ள ``இல்`` உறழ் பொருளின்கண் வந்த ஐந்தனுருபுகள். `அணோ ரணியாந்`` என்னும் கடோபநிடத வாக்கியம் இங்கு நினைக்கத்தக்கது. இவ்வடிகளில் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இரண்டாம் அடியை `அணுவை அணுவில் ஆயிரங் கூறிட்டு` என மாற்றி, முதலில் வைத்து உரைக்க. `நுண் பொருளாய் உள்ள சிவனைத் தம்மை நுண் பொருளாகப் பாவிக்கும் பாவனையாலே தான் அடைய முடியும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
``கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயின் கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட
இருபொருளு மன்றியே இன்னதிது என்னா(து)
ஒருபொருளே யாய்இருக்கும் உற்று``
- திருக்களிற்றுப்படியார் - 24
என்பதிலும் இம்முறை கூறப்பட்டது அறிக.
இது முன் மந்திரத்து உரையிற் கூறிய எல்லா நிலைகட்கும் பொதுவாதலை அறிந்து கொள்க.
இதனால், மேற்கூறிய `புருடன்` முதலிய அனைத்து நிலைகளிலும் உயிர் சிவனைப் பொருந்தி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.

பொழிப்புரை :

சிவனது திருவருளாகிய ஒளியினை ஆன்மா, பல கிளைகளும் விழுதுகளுமாய் விரிவடையும் ஆற்றலைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆலம் விதைபோலத் தன்னுள் அடக்குமாற்றால் தன்னை அச்சிவத்திற்கு ஏற்ற தூய இடமாகச் செய்யுமானால், அந்தத் திருவருள் ஒளி துணையாக, துன்பத்தையே தனது இயல்பாகக் கொண்ட ஆணவமாகிய இருளை ஓட்டி, அம்பலத்தில் ஞான நடனத்தைச் செய்கின்ற அப்பெருமான் தரக் கருதும் நல்வழியைத் தான் உணரும் வாய்ப்பு உண்டாகும்.

குறிப்புரை :

படர் - படர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். அணு - ஆன்மா. ``அணுவினை`` எனப்பின்னர்க் கூறினாராயினும், `சுடரை அணு தன்னுட் கொண்டு தன்னைத் தூவழி செய்ய` எனக்கூறுதலே கருத்தாதல் உணர்க. `ஓட்டி, நாடல்` என்னும் பயனிலைகட்கு, `தான்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது.
இதனால், மேற்கூறிய முறை உவமை காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்ற கலப்ப துணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்
தணிவற நின்றனன் சராசரந் தானே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், `உயிர் ஆலம் விதைபோலவும், சிவன் அவ்விதையில் அடங்கியுள்ள கிளை முதலியன போலவும் ஆதல் வேண்டும்` என்றது ஒருபுடை உவமையேயன்றி, முற்றுவமை யன்று. மற்று, உண்மை நிலையாது` எனின், `உயிர் மேல்; சிவன் உள்` என்றாயினும், `சிவன்மேல்; உயிர் உள்` என்றாயினும் ஒருபடித்தாக வரையறுத்தல் கூடாதபடி, புறவேற்றுமையே யன்றி, அகவேற்றுமை தானும் இன்றி ஒன்றி நிற்கின்ற கலப்பே உண்மை நிலையாகும். இவ்வுண்மையை உணர்வார் ஒருவரும் இல்லை. இனித் தன்னொப் பில்லாத் தனிப்பெரும் பொருளாகிய சிவன் எல்லாப்பொருளிலும் ஒரு படித்தாக நீக்கமின்றி நிறைந்து நிற்கின் இயங்குவனவும், நிற்பனவு மாய்க் காணப்படுகின்ற உயிர்கள் பலவும் அவனிடத்தில் தத்தமக்கு இயலும் முறையில் கலந்து நிற்கின்றன.

குறிப்புரை :

முதல் அடியின் ஈற்றில், `போல` என்பது விரிக்க. கணு - மூங்கிற் கணுவும், கரும்புக் கணுவும். அவை அக வேற்றுமைக்கு உவமையாகக் கூறப்பட்டன. ``இணையிலி`` என்றதனால் அவனது பெருநிலை குறிக்கப்பட்டது. `ஈசன் இணையிலி` என வேறு தொடராக்கி, அதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. தணிவு - நீக்கம். சிவனது பெருநிலை கூறியதனானே உயிர்களது சிறு நிலை பெறுவிக்கப்பட்டது. `இல்லம் முறையில்` என்பது இசையெச்சமாய் நின்றது. தான் - சிவன். `தான் ஆம்` - என்க.
இதனால், மேற்கூறிய உவமையால் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.

பொழிப்புரை :

உயிர் பருப்பொருளாகக் கருதிக்கொண்டு, `அதன் அகல, நீர், கன அளவுகள் எத்துணையன` என வினாவுவார்க்கு விடை கூறின், `பசுவின் மயிர்களில் ஒன்றை எடுத்து அதனைப் பல நூறாயிரங் கூறு செய்தால் அவற்றுள் ஒரு கூற்றின் அகல, நீள, கன அளவுகளே உயிரின் அகல, நீள, கன அளவுகள்` எனக் கூறலாம்.

குறிப்புரை :

இது, ``வன்பாற்கண் - வற்றல் மரம் தறித்தற்று`` * என்பது போல, வடிவு கூறலாகாமையைக் குறித்து நின்றது. `வடிவு` என்பது அகல நீள கனங்களையுடையதாகும். அது கண்ணில்லா தவராலும் தடவி அறிந்து கொள்ளப்படும். `உருவம்` என்பது நிறம். அது கண்ணாலன்றி அறிய இயலாது. எனவே, உயிர்க்கு `அணு` முதலாக வடிவு கூறுவோர் உயிரை, `பருப் பொருள்`, அஃதாவது, `தூலப் பொருள்` என்போராவர். உயிர் பருப்பொருளாகாது `நுண் பொருள்`, அஃதாவது, `சூக்குமப் பொருள்` என்றற்கே இவ்வாறு கூறினார். `பிராணன்` என்றல், உபாதி பற்றிய செயற்கையாலாம். தத்துவங்கள் யாவும் உபாதியேயாகலின், உயிரை மேல், `புருடன்` முதலாகக் கூறியதும் உபாதி பற்றியேயாம். மேவிய கூறு - கிடைத்த ஒரு கூறு ``ஆயினால்`` என்பதன் பின், `அதில்` என்பது வருவித்து `அதில் நூறாயிரத்தொன்றே ஆவியின் கூறு` என்க.
இதனால், `உயிர், உண்மையில் சூக்குமப் பொருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையி னுட்கலந் தங்குளன்
வானோ ரறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை :

கட்புலனாகாப் பொருள் சிவன் ஒருவனேயாக, பலவாகிய உயிர்களையும் அத்தகைய பொருளாகக் கூறுதல் கூடுமோஎனின், கூடும். ஏனெனில், சிவனது பெருமையை நோக்கு மிடத்து ஏனைத் தேவர் அனைவர் பெருமையினும் பெரிது. ஆயினும் பருப்பொருளாகிய உடம்புகளில் சூக்குமமாய் நிறைந் திருக்கின்ற உயிர்களினுள்ளே அவற்றினும் அதிசூக்குமமாய் அவன் நிறைந் திருக்கின்றான். (எனவே, உயிர் சூக்குமப் பொருளும், சிவன் அதி சூக்குமப் பொருளுமாம் ஆதலின் அதுபற்றி ஐயமில்லை என்றபடி,) சிவன் இத்தகைய அதிசூக்குமப் பொருளாதலின் அவன் தேவர்களா லும் எளிதில் அறியத்தக்கவனல்லன். ஆயினும் அவனே அவரவரது தவத்தின் அளவை யறிந்து அவ்வளவிற்கு ஏற்ப விளங்கி நிற்பன்.

குறிப்புரை :

`ஏனோரினும்` - என ஐந்தாவது விரிக்க. ``ஊனே சிறுமை`` என்பதற்கு, `ஊனின்கண் உள்ள சூக்குமப் பொருள்` எனப் பொருள் கொள்க. அப்பொருள் உயிர்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதற் காலத்திலே, `சிவனை அறியும் வாயில் உண்டு` எனக் கூறுதற்கு அவனைத் தம்முன்னே கொண்டு யோகம் பயில்கின்ற குணம் இல்லவிட்டாலும் பின்பு அக்குணத்தை அடைந்து தம்முன்னே கொண்டு யோகம் பயிலும். ஆகவே, உயிர்கட்கு என்றாயினும் ஒருநாள் சிவனைத் தெளிவாக உணரும் உணர்வு உண்டாகவே செய்யும்.

குறிப்புரை :

`அவ்வுணர்வு முதற்கண் தோன்றாமைக்குக் காரணம் பக்குவம் வாயாமையும், பின்பு தோன்றுதற்குக் காரணம் பக்குவம் வாய்த்தலும் ஆம்` என்பது கருத்து. `பக்குவம் சிவனது அருள் நோக்கத்தால் வாய்க்கும்` என்பது, ``பண்டு பயிலும் பயில் சீவனார்`` என்பதனால் குறிக்கப்பட்டது. பயில் சீவனார் - பயில்வை உடைய சீவனார் பயிலுதல் - நீங்காது உடன் இருத்தல். உரைத்தற்கு, `உணரும் வாயில் உண்டென` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஏகாரத்தைப் பிரித்து, ``குணம்`` என்பதனோடு கூட்டுக. `யோகம்` என்பதன்முன் உள்ள இகரம் வடசொல் நோக்கி வந்தது. இவ்வேகாரம் தேற்றம். `தெளிவு உண்டு` என மாற்றி யுரைக்க.
இதனால், முன் மந்திரத்தில், `அறியும் அளவல்லன் மாதேவன்` என்பது பற்றி நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து)
ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

பொழிப்புரை :

மாயா காரியமாகிய கருவிக்கூட்டம் சடமாகலின், அது சித்தாகிய உயிருக்குக் கூடாப் பொருளாய்க் குற்றமாகும். ஆயினும் அவ்வுயிரின் உள்ளே என்றும் உள்ள சிவன் அதனது பக்குவம் அறிந்து அருள் காரணமாகக் குருவாகி எதிர் வந்து அதனை அக்குற்றத்தினின்றும் பிரிவிக்க, அஃது அங்ஙனமே பிரிந்து திருவருளில் புகுந்து, அதன் கண் பேருறக்கத்தை எய்தி அமைதியுற் றிருக்கும். அருள் உறக்கம், இருள் உறக்கம் அன்றாகலின் அந் நிலையில் உயிர் அறிவே வடிவாய் விளங்கும்.

குறிப்புரை :

உபாதி - செயற்கைப் பொருள்; மாசு, சேதனம் - அறிவுடைய பொருள். ``சேதனத்து ஆய குரு`` என்றது, `சிவம்` என்றபடி அதனால் சிவமேகுருவாய் வருதல் பெறப்பட்டது. `குரு தூண்ட` என இயையும். தூண்டுதல் - விரிந்து செல்லும்படி அதற்குரிய உண்மையை உணர்த்துதல். அஃது ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தமையை* அறிவித்தலாம். `அதினின்றும் தூண்ட` என்க. `உயிர் உபாதி ஒன்றினோடும் ஒன்றாது துரியம் புகுந்து அறிவாகவே ஓயும்` என முடிக்க. துரியம் - பேருறக்கம். மலத்தின் உறங்குதல் கேவல துரியம். திருவருளில் உறங்குதல் சுத்த துரியம். இங்குக் குறிக்கப்பட்டது சுத்த துரியமே என்பது வெளிப்படை.
இதனால் உபாதி வசத்தால் மாசுபட்டுச் செயற்கை நிலையில் இருந்து உயிர் அம்மாசினின்றும் நீங்கித் தூயதாய்த் தனது இயற்கை நிலையை அடையுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

பொழிப்புரை :

கருவுறும் பருவம் வாயாத இளம் பசுக்கள் இனச் சார்பால் கதற மட்டும் தெரிந்து கொண்டு, கன்றை ஈன்ற பசுக்கள் தம் கன்றினை அழைக்கக் கதறுவதுபோலத் தாமும் கதறித் திரியும். கன்றை ஈனாது கருவுற்று மட்டும் உள்ள பசுக்கள் தமக்குரிய புல்லை விடுத்து மனிதர்க்கு உயிர பயிரில் சென்று மேயாதபடி அதன்தலைவன் புல்வெளியில் ஓரிடத்தில் முளையடித்து நீண்ட கயிற்றால் கட்டி வைக்க, அக்கயிற்றின் அளவிற்கு அவை கட்டில்லாதது போலத் தம் விருப்பப்படி சென்று புல்லை மேயும். எனினும் கன்றை ஈன்று தாய்மையை எய்திய பசுக்களே ஒன்று ஒரு குடம்போல நிரம்பப் பால் பொழியும் பசுக்களாகும். அவை தவிர மேற்சொன்ன மற்ற இருவகைப் பசுக்களும் பயன்படாத பசுக்களாகவே இருக்கும்.

குறிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி, ``கற்ற பசுக்கள்`` என்பதனால், நூலை மட்டும் கற்றுப் பரிபாகம் இன்மையால் அந்நூலை மட்டும் இளஞ் சிறார் காதற் பாட்டுக்களைப் பாடி அவற்றிற்கேற்ப நடித்தல் போலப் படித்துப் பொருள் விரிக்கின்றவர் குறிக்கப்பட்டனர். ``கதறித் திரி யினும்`` எனப்பின்னர் வருதலால், ``கற்ற`` என்றது, கதறக் கற்றதனையே குறித்தது. பசுக்கள் வாயொலி செய்தலை, `கதறல்` என்றல் மரபு.
கொற்றம் - வெற்றி. பசுக்களுக்கு வெற்றியாவது மலட்டுத் தன்மையின்றிக் கருவுறுதல். `கொற்றப் பசுக்கள்` என்னு சந்தி ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. குறி - முளை. கட்டி - கட்டப் பட்டு. `குறியில் கட்டி` என உருபு விரிக்க. `கருவுற்றுக் குறியில் கட்டப் பட்டு மேயும் பசுக்கள்` என்றதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்திக்கும் நிலையில் உள்ளவர் குறிக்கப்பட்டனர். அவரைப் பொய்ந்நெறியில் சென்று இரண்டும் கெட்டவர் ஆகாதபடி ஆசிரியர் தம் ஆணைவழி நிற்பித்தலே, `குறி கட்டி மேய்தல்` என்பதனஆல் குறிக்கப்பட்டது. எனவே ``கொற்றம்`` என்றது ஆசிரியரால் ஆட்கொள்ளப் பட்டமையைக் குறித்ததாம்.
``உற்ற`` என்பதற்கு, `கன்றை` என்பது வருவித்து, `கன்றை உற்ற பசுக்கள் என்க. `தாய்மை எய்துதல்` என்பதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்த பின்பு தெளிதலையும், நிட்டை கூடுதலையும் உடையராதலைக் குறித்தது.
``பால்`` என்றதனால், பரஞானம், அஃதாவது அனுபவஞானம் குறிக்கப்பட்டது. ``ஒருகுடம் பால்`` என்றதனால் `நிறைந்த ஞானம்` என்பது குறிக்கப்பட்டது.
போதுதல் - வெளிவருதல்; பொழிதல் எனவே தெளிவும், நிட்டையும் உடையவரது ஞான நிலை அயலார்க்கும் இனிது விளங்குதல் பெறப்பட்டது.
வறள் - வறட்சி; பால் சிறிதும் சுரவாமை. மலட்டுப் பசுக்களும் கதறித் திரிவனவற்றுள் அடங்கின.
இதனால், `சீவர்கட்குப் பசுத்துவம் மலபரிபாகம் காரணமாக இருவினை யொப்புச் சத்தி நிபாதமும் வாய்க்கப்பெற்று, ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்தலேயன்றித் தெளிவும், நிட்டையும் எய்துதலானே நீங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே.

பொழிப்புரை :

காப்பாருமின்றி, மேய்ப்பாருமின்றி, கறப்பாரு மின்றித் தம் விருப்பம்போல் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுப் பசுப்போன்ற மக்களை எப்படித் திருத்த முடியும். (அவர் யாருக்கும் அடங்குபவரல்லர்.) அவர் தாமே தமது இழிநிலையை உணர்ந்து ஆசிரியரை அடைக்கலமாக அடைவாராயின் அவரை ஆசிரியர் கல்லில் நார் உரிப்பதுபோலவும், கல்லைப் பிசைந்து கனியாக்குதல் போலவும்* தமது திருவருள் திறத்தால் அவரது நிலையினின்றும் நீக்கிச் சீர்செய்து, அவர் சீர்ப்பட்டமையை நன்குணர்ந்து சிவமாக்கிய பின்பல்லது அதற்கு முன் காடும், மேடும், கல்லும், முள்ளுமாய்க் கிடக்கின்ற நிலம் போன்றுள்ள அவரது மனம் உணர வேண்டியவற்றை உணராது.

குறிப்புரை :

``மேயும்`` என்றது `தம் விருப்பப்படி சென்று மேயும்` என்றபடி. `அவ்வாறு மேயும் பசுக்கள்` என்றதனால் `அவை காட்டுப் பசுக்கள்` என்பது விளங்கிற்று. ``பசுக்கள்`` என்றது உவமையாகு பெயராய், பசுக்கள்போல் உயிரைக் குறித்தது. இறுதியில் வைக்கற் பாலதாகிய ``இறைவனடி கூட்டி`` என்பதைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``செய்`` என்பது உவம உருபு. ``குறிப்பு`` என்பது ஆகு பெயராய்க் குறிக்கப்படும் பொருளை உணர்த்திற்று.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய பொருள் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

பொழிப்புரை :

`சீவன்` எனவும், `சிவன்` எனவும் வேறு வேறாய்த் தனித்து எக்காலத்தும் இல்லை, உடலும், உயிரும் போல என்றும் ஒன்றியே நிற்கும். அவ்வாறிருந்தும் சீவன் சிவனை அறிந்ததில்லை. ஏன்? பாசங்கள் சீவனது அறிவை மறைத்து நிற்கின்றன. (அம்மறைப்பு நீங்கிச்) சீவன் சிவனை அறியுமாயின் அது சீவனாய் இராது, சிவமாகவே இருக்கும்.

குறிப்புரை :

எனவே, `சார்ந்ததன் வண்ணம் ஆதல் உயிரினது இயல்பு` என்பது பெறப்படுகின்றது. அநாதி முதலே பாசத்தைச் சார்ந்து பாசமாய் நிற்கின்ற உயிர், சிவத்தைச் சாருமாயின் சிவமாயே நிற்பதாகும். அந்நிலையில் அது `போதன்` எனப்படும்.
`ஆவர்` என்னாது ``ஆயிட்டிருப்பர்`` என்றதனால், `அதுவே உயிர் அடையும் முடிநிலைப்பயன்` என்பது விளங்கிற்று. `இத்தகைய பெருநிலைக்கு உரியதாகிய உயிர் அநாதியே இழிநிலையை எய்தியதும், பின்னரும் அந்நிலையை உணராது அதிலே இருத்தலும் வருந்தத் தக்கன` என அதன் இழிபு குறித்தற்கு இழித்தற் குறிப்பில் வரும் பன்மையால், ``சீவனார்`` என்றார். `அவருக்கு உண்மையிலே பெரியோனாகிய சிவனை அறிதல் எளிதன்று` என்றற்கு, ``சிவனார்`` என்றார். ``இல்லை`` என்பதன்பின் `ஆயினும்` என்பது வருவிக்க.
சீவன் சிவனை அறிதல் தனது அறிவினுள்ளேயாகும். அது `சிவன் நான்` எனப் பாவிக்கும் சிவோகம் பாவனையாம்.
``யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால்,
உன்னை `நான்` என்று பாவிக்கின்
அத்துவித மார்க்கம் உறலாம்``
என அருளிய தாயுமான அடிகள் வாக்கும், (``எங்கும் நிறைகின்ற சிவம்``)
``... ... ... ... நற்கமலை
ஊரிற் குறுகினேன்; ஓர்மாத் திரைஅளவென்
பேரிற் குறுகினேன் பின்``
என்னும் குமரருபர அடிகள் வாக்கும். (பண்டார மும்மணிக்கோவை, 24) இங்கு நினைவு கூரற்பாலன. இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி கொண்டது.
இதனால், `பசு` எனப்படுகின்ற சீவன் `போதன்` ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பஃறலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாமே.

பொழிப்புரை :

எண்குணங்களையுடைய கூத்தப்பிரான், மனத்தை விளக்காகக் கொண்டு பொருள்களை அறிந்து வருகின்ற, நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம், படந்தோறும் மணியாகிய விளக்கினையுடைய பலதலைப் பாம்புபோலவும், இரவிலும் பல விளக்குக்களை ஏற்றி வைத்துக் கொண்டு பொருள்களைக் காவல் செய்கின்ற கண்காணி போலவும் இருக்கின்றான்.

குறிப்புரை :

எனவே `சீவனார் ஒரு பொழுதும் சிவனாரை அறியா விடினும், சிவனார் சீவனாரை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருக்கின்றார்` என்பதாம். `ஆகவே அவரை அறியச் சீவனார் ஆவன செய்தல் வேண்டும்` என்றபடி. `சிவன் இயல்பாகவே பாசங்கள் இன்மை, இயற்கையுணர்வு, முற்றுணர்வு என்னும் குணங்களை உடையன் ஆதலின் அவன் தனக்கு அறிவிக்கும் துணையை வேண்டாது தானே எல்லாவற்றையும் அறிவான்` என்றற்கு, ``குண விளக்காகிய கூத்தப்பிரான்`` என்றும், வேறொரு விளக்கை வேண்டாது தனது மணிகளாகிய விளக்கினாலே விளக்கத்தைத் தரும் பல தலைப் பாம்பு போல உயிர்கட்குத் தான் அறிவைத் தருகின்றான்` என்றும், `உயிர்களை இமைப்பொழுதும் நீங்காது காண்கின்ற கண் காணியாய் உள்ளான்` என்றும் கூறினார். ``மன்னுயிர்க்கு`` என்னும் நான்கன் உருபு, `கரும்பிற்கு வேலி` என்பது போல, அதற்கு வினை யுடைமைப் பொருளில் வந்தது. `தான் தோன்றி` என்பது `தானே தோன்றுதலையுடையவன்` எனப்பொருள் தருதல் போல, `கண் காணி` என்பது `கண் காணுதலையுடையவன்` எனப் பொருள் தந்தது. ``ஆகும்`` என்பதை நாகத்திற்கும் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிவன் சீவனை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருத்தலால் உரிய பொழுதில் அவன் சீவனுக்கு வெளிப்பட்டு அருளச் சீவன் என்பது போதனாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தான்ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தான்ஆய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

பொழிப்புரை :

சிவன் அறியாமையோடு விரவாது அறிவாயே இருப்பவன். அவன் சீவன்களின் அறிவில் பொருந்திச் சீவர்கள் அறிவனவற்றையெல்லாம் தான் உடனாய்நின்று அறிவன். அதனால் அவன் சீவன்களாகியும் இருப்பான். ஆகையால் இந்நிலையை உணர்கின்ற சீவன் தானும் அச்சிவனேயாய் நிற்கும் ஆதலால், அத்தகைய சீவனே யாதும் அறியாத இருள் நிலையும், பொறிகளின் வழிப்பட்டு உலகை ஏகதேசமாய் அறிகின்ற மருள் நிலையும் ஆகிய இவற்றினின்றும் நீங்கிச் சிவனைப் போல எங்கும் வியாபகமாய் நின்று அறியும் நிலையை எய்தி, `போதன்` எனப்படுவதாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. பின் இரண்டு அடிகளால் சீவன் வியாபக நிலையை எய்திப் போதனாவதற் குரிய இயைபு கூறப்பட்டது. அவற்றுள் ``அறிவாய் அறிவன், சீவனு மாகும்`` என்னும் பயனிலைகட்கு, `சிவன் என்னும் எழுவாய் வருவிக்க. ``சீவனும் ஆகும்`` என்றதனால், `அவ்வாறு ஆகின்றவன் சிவன்` என்பது தானே அமைந்தது. அலவன், கலுழன், கடுவன் முதலியன போல, `சீவன்` என்பது அஃறிணைப் பெயர். அவைகளைச் சுட்டிய ``அவற்றினுள்`` என்பது செய்யுளாகலின் முன் வந்தது. வேறு தொடராய் நிற்றலால் ``நீங்கியவன், போதன்`` என்பன திணை வழு ஆகாமை அறிக.
இதனால், சீவன் போதனாதற்குரிய இயையும், போதனார் நிலையது இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.

பொழிப்புரை :

`தத்துவங்கள் சடம்` என்று அறியாமல், அவை களையே யானாக மயங்கிக் கிடந்த எனக்குச் சிவபிரான் தனது அருளைப் பற்றி நின்று அவ்வுண்மையை நான் உணர்ந்தபின் அவ்வாறு உணர்த்திய அவன் தத்துவங்கட்கு அப்பாற்பட்டு நிற்றலையும் உணர்ந்தேன்.

குறிப்புரை :

அதற்கு முன்னே, `நான் தத்துவங்களின் வேறானவன்` என்பதை உணர்ந்தமை சொல்லவேண்டாவாயிற்று. இவ்வாற்றால் `பாசம், பசு, பதி` என்னும் முப்பொருளின் இயல்புகளை உணர்ந்தமை போந்தது. `இவ்வாறு உணரும் பொழுதே சீவன் போதனாம்` என்பது குறிப்பு.
அருளால் அறிதல், அருள்வழியாக அறிதலாம். அருளே `பதிஞானம்` எனப்படுகின்றது. பாசஞான பசுஞானங்களின் நீங்கிப் பதிஞானத்தைப் பெற்று அது வழியாக எல்லாவற்றையும் அறிந்த வழியே உண்மை இனிது விளங்குவதாகும்.
``அருளால் எவையும் பார் என்றான்; அதை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி``
என்றருளிய தாயுமான அடிகள் (ஆனந்தக் களிப்பு) வாக்கையும் நோக்குக.
``ஆறாறு`` என்பது தொகைக் குறிப்பாய் அத்துணையான தத்துவங்களை உணர்த்திற்று. சொற்பொருட் பின் வருநிலையணி.
இதனால், `போதமாவது இஃது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சிவமா கியஅருள் நின்றறிந் தோரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவதறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.

பொழிப்புரை :

பிற ஆகமங்களிலன்றிச் சைவாகமங்களில் சொல்லப்படுகின்ற தத்துவங்களின் உயர்வை உணர்ந்து அவற்றைத் தெளியமாட்டாதவர் சிவமுதற் பொருளையும், அதனது ஆற்றலின் சிறப்பையும் உணர்ந்து அதிலே பழகியறியார். அதனால் அவர் உயிர் பஞ்ச மலங்களால் போதம் இழந்து நிற்றலையும் உணர மாட்டார். பிற பிற சமய நூல்களில் எல்லாம் சொல்லப்படுகின்ற தவங்களைச் செய்து, தாம் அடையவேண்டிய பயனை அடையாது இளைக்கின்றவ ராகின்றனர்.

குறிப்புரை :

``சிவமாகிய அருள்`` என்றதனை இரட்டுற மொழிந்து, `சிவம்தான் அதுவாகிய அருள்` என்றும், தான் சிவமே ஆகிய அருள்` என்றும் இரு பொருள் கொள்க. கொள்ளவே சிவமே அருளாயும், அருளே சிவமாயும் நிற்றல் பெறப்படும். ``அறிந்து ஓரார்`` என்பதனை, `ஓர்ந்து அறியார்` என மாற்றியுரைக்க. இந்நிலை சைவ தத்துவத்தை உணர்ந்தார்க்கல்லது. `ஏனையோர்க்கு உணரவாராது` என்பதே முதல் அடியால் கூறப்பட்டது.
ஆன்ம லாபத்தை அடையவொட்டாமல் ஆன்மாவைத் தடுப்பனவாகிய மலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி - என ஐந்து உளவாதலையும் அவர் அறியமாட்டார். அதனால் அவற்றை நீக்குமாற்றினையும் அறிந்து அவ்வழியில் முயலார். பிற சமயங்களில் சொல்லப் பெறுகின்ற தவங்கள் சிவ ஞானத்தைப் பயவா ஆதலின் அவற்றைச் செய்வோர் சிவனது திருவருளை அடைதலாகிய தலையாகிய பயனை எய்தாது பிறவிக் குழியினின்றும் ஏறமாட்டாதவராவர் என்பதாம். ``தலைப்பறிகின்றார் என்றது தலைப்பறியை எய்துகின்றார் எந்றபடி. தலைப்பறி - தலைபோலும் முடிநிலைப் பயனை இழத்தல். நவம் - புதுமை. அது பிற நூல்களில் காணப்பபடாத சிறப்பினைக் குறித்தது. ஈற்றடியை முதலில் வைத்துப் பொருள் கொள்க.
இதனால், போதராகாதாரது இயல்பு கூறும் எதிர் மறை முகத்தால் போதன் ஆமாறும், அதன் உயர்வும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார்
நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான்
நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

பொழிப்புரை :

நாளும் நாளும் தம்பால் நிகழ்வன யாவும் சிவ பெருமான் நிகழ்த்துவிக்க நிகழ்வனவே யாதலையும் ஊன்றியுணரார்; அங்ஙனம் அவன் நிகழ்த்துவித்தல் தாம் செய்த வினையின் பயன்களைத் தமக்குத் தனது அருள் காரணமாக ஊட்டுவித்தலே யாதலையும் கேட்டல் சிந்தித்தல்களின்வழி எண்ணிப்பாரார். சிவன் தனது அருளைத் தான் நேரே வழங்குதல் மேற்சொல்லிய உண்மைகளை ஆசிரியரது அருளால் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர் கட்கே என்பதையும் எண்ணமாட்டார். யார் எனில், நாள்தோறும் முன் மந்திரத்தில் கூறிய ஐம்பாசங்களின் வழியே உழைத்து நாட்களைக் கழிக்கின்றவர் என்க.

குறிப்புரை :

``நல்லோர்`` என்பதற்கு, `கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர்` என மாதவச் சிவஞான யோகிகள் உரைத்ததனை (சிவஞான போதம், மங்கல வாழ்த்து) உன்னுக. சொற்பொருட் பின்வரு நிலையணி.
இதனுள், \\\"வினை`` என்றது ஐம்புல நுகர்ச்சிக்கு ஆவனவற்றைத் தேடலும், அவற்றை நுகர்தலுமே யாகலின் அதனை வெறுத்துக் கூறியதனால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 1

ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

பொழிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி. ஐந்து களிறுகள். ஐம்புலன் களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம் - மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்தாயிற்று. ஆக மதத்தமை. மிகவும் மதம் கொண்டமை. அஃதாவது அவா மிக மிகுத்தமை. தறி - திருவருள். பாகன் - உயிர். அவன் எய்த்தமை - அந்த மனத்தை அவாக் கொள்ளாதவாறு தன் முயற்சியாலே தான் அடக்கி அடக்கிப் பார்த்து இயலாது இளைத்தமை. இனிக் களிறுகள் இளைத்தமை - மனம்தான் அவாவிய புலன்களை அடைந்து அடைந்து நிறைவுபெற விரும்பி, நிறைவு கூடாமையால் வெறுப்புற்றமை. இந்நிலையிலே அந்த மனம் திருந்தி நிறைவு பெறுதற்கு வழி சிவயோகத்தைத் தவிர வேறொன்றில்லாமை அறியப்பட்டது.

குறிப்புரை :

ஆதல் - மிகுதல். அஃது இங்கு அளவின் மிகுதலைக் குறித்தது. இரண்டாம் அடியில், `மதத்தால்` எனவும், ஈற்றடியில் `யோகினால்` எனவும் உருபு விரிக்க. ``யோகு`` என்பது தமிழ் முறையில் முதனிலைத் தொழிற்பெயராய் வரும். யோகம், இங்குச் சிவயோகமேயாம். `திருந்துதல்` என்பதன்பின் `ஒழிய` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `ஒன்றையும்` என உருபும், இழிவு சிறப்பும்மையும் விரிக்க. `ஐந்திந்திரியங்களை அடக்குதல் சிவ யோகியர் சிலராலல்லது ஏனையோரால் கூடாமையும், சிவயோகத்தை எய்துதல் பலர்க்குக் கூடாமையும் நோக்கின் ஐந்திந்திரியங்களை அடக்குதற்கண் உளதாய அருமை விளங்கும் என்பது கருத்து.
இதனால், இங்கு எடுத்துக் கொண்ட பொருள் முதற்கண் இனிது புலப்படுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து)
எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

பொழிப்புரை :

இதுவும் ஒட்டணி. அடங்காமையை ஐம்பொறி மேல் வைத்துக் கூறினும் அடங்காது ஓடுவது மனமே. ஓட்டத்தின் விளைவு குறித்து மனம் குதிரையாக உருவகிக்கப்படும். பாய்மா - குதிரை. குதிரையைப் போரின்கண் செயற்படுத்தும் வீரன் அதன் முதுகின் மேல் அமர்ந்துகொண்டு கால்களால் குறிப்புத் தருவான். நல்ல குதிரைகள் அக்குறிப்பின் வழியே பாய்ந்து பாகனுக்கு வெற்றியை உண்டாக்கும். முருட்டுக் குதிரைகள் முரணி வேறுவழியிற் பாய்ந்து பாகனுக்கு வீழ்ச்சியைத்தரும். இங்கு ``பாய் மா`` என்றதை, `குறிப்பிட்ட ஒரு பாய்மா` எனக் கொள்க. அது மனம். அதனைப் பிராணாயாமத்தால் அடக்குதல் கூடும். ஆகவே ``கால்`` என்றது சிலேடை வகையால் உவமையில் பாகனது கால்களையும், பொருளில் பிராண வாயுவையும் குறித்தது. கொத்துதல் - உட்செலுத்துதல். பாகன், ஆன்மா. அவன் யோகநூலைக் கருத்துடன் கற்று அதன்படி பிராணா யாமம் செய்து தாரணை நிலையில் நின்று அடக்கினாலும் அடங்காது ஓடுவதே மனத்தின் இயல்பு. உவமையில் `நூல்` குதிரை செலுத்தும் நூல். `எருத்தம்` என்பது ஈறு குறைந்து, ``எருத்து`` என நின்றது. எருத்தம் - பிடரி; இங்கு அது முதுகைக் குறித்தது. `முதுகு` என்றது தாரணை நிலையை. திருத்துதல் - பிராணாயாமத்தினாலும், வருத்துதல், அஃதாவது அடக்குதல். தாரணையினாலும் என்றற்கு அவற்றைத் தனித் தனிக் கூறினார். திகைத்தல் - வேறு வழியில் செல்லுதல். வழி, நேர்வழி. அம் மா - மேற் குறிப்பிட்ட அந்தக் குதிரை. ``திகைத்தன்றிப் பாயாது, வழி நடவாது` என்றவை, அடங்குதல் அரிதாதலையே குறித்தது.

குறிப்புரை :

இதனால், `பொறி வழி ஓடும் மனத்தினை அடக்கி ஞான நெறியில் செலுத்துதல் யோகியர்க்கும் அரிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே.

பொழிப்புரை :

மேய்ப்புத் தொழில் செய்து பிழைக்கும் குலங்கள் ஆமேய்க்கும் குலம், எருமை மேய்க்கும் குலம், ஆடு மேய்க்கும் குலம், தாரா, கோழி முதலிய பறவைகள் மேய்க்கும் குலம் எனப் பலவகை உண்டு. அவற்றுள் பறவை மேய்க்கும் குலத்தில் இரங்கத் தக்க ஒரு குலம் உண்டு. அந்தக் குலத்தில் ஒருவனுக்கு ஒரு குடில். அந்தக் குடிலில் ஐந்து கூடுகள். அந்தப் பறவைகள் வெளியே மேயும் இடங்களும் ஐந்து. அந்த இடத்தில் மேய்கின்ற உணவுகளும் வேறு பட்ட ஐந்து. அந்த உணவுகளின் குணங்களும் வேறுபட்ட ஐந்து. இந் நிலையில் அந்த மேய்ப்பான் ஒருவன் அந்தப் பறவைகளை ஒரு வழியிற் செலுத்தி மேய்க்க வேண்டும். இது மாற்ற முடியாத ஓர் அமைப்பு முறை - அதனால் இந்த மேய்ப்புத் தொழிலில் வெற்றி பெற மாட்டாதார் பலர் மேற்குறித்த ஒரு குடிலில் ஒன்பது வாயில்கள் இருப்பதால் அந்த வாயில்களில் எந்த ஒன்றின் வழியாகவாவது யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுகின்றார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரம் பிசிச் செய்யுள். கூடு இங்கு, `புலம்` எனப்பட்டது. அவை தத்துவங்களில் ஞானேந்திரியங்களாம். அவை புறநோக்குடைய மனத்திற்கு இடமாதல்பற்றி, `புலம்` எனப்பட்டன. ஞானேந்திரியங்கள் `புலம்` எனவும் படுதல் வழக்காதல் அறிக. புள் - மனம். அஃது ஒன்றாயினும் மேற்குறித்த இடச்சார்பு பற்றி ஐந்தாகின்றது. நிலம் - மனம் பொறிவழியாகச் சென்று பற்றும் பொருள். ``ஐந்து`` என்றது, `ஐந்து வகை` என்றபடி. மேய்க்கப்படும் பறவைகள் நீரை விரும்புதல் பெரும்பான்மையாதல் பற்றி உணவு ``நீர்`` எனப்பட்டது. அவை அப்பொருள்களில் பொறிவழியாகக் கவரப்படும் உரு, ஊறு, நாற்றம், சுவை, ஓசை என்பன. நீர்மை - குணம். அவை நுகர்வாரது தன்மைக்கு ஏற்பப் பெரிதும் சிறிதுமாக அவரது அறிவையழித்தல். ``கொண்டு`` என்பதை, ``குலம் ஒன்று`` என்பதனோடும் கூட்டுக. ``ஒருவன்`` என்பதன்பின் ``இது நிலைமை`` என்னும் இசையெச்சம் வருவிக்க. உலமருதல் - உழன்று எய்த்தல். `உலமந்தவழி` என்பது `உலமந்து` எனத் திரிந்து நின்றது. ``போம் வழி ஒன்பது`` என் றதனால், `எந்தவழியாலாவது புறப்பட்டுப் போதல் எளிது` என்றபடி, வழி - வாயில், வாயிலைக் கூறவே, `அவை உள்ளது குடிலில்` என்பது தானே பெறப்பட்டது. `அஃது உடம்பு` என்க. ``ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்`` (தி.6 ப.99) என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ஐந்திந்திரியங்கள் அடக்குதற்கு அரியனவாயுள்ள இயல்பினை விளக்கி, அதனால் அடக்க முயன்றோர் பலரது நிலையை எடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

இம்மந்திரமும் பிசிச் செய்யுளே, முன் மந்திரங்களில் களிறுகளாகவும், குதிரைகளாகவும், பறவைகளாகவும் குறிக்கப்பட்ட புலனடக்கம் இல்லாத மனம் இம்மந்திரத்தில் அதனது அடங் காமையின் மிகுதி இனிது விளங்குமாறு சிங்கமாகக் குறிக்கப்பட்டது. அடவி - வேறுபட்ட பல பெருமரங்கள் செறிந்த காடு. அது `நல்லன, தீயன` எனப் பெரும்பான்மையாக இருவகைப்பட்டு, அவற்றுள் எண்ணில வாய் விளையும் வினைகளைக் குறித்தது. நல்வினை, பயன்மரம், தீவினை, நச்சுமரம், வாய்ப்பு உள்ள பொழுது சென்று ஐம்புலன்களை நுகர்கின்ற மனம் வாய்ப்பு இல்லாதபொழுதும் அவற்றையே நாடுதல் பற்றி ``அஞ்சு அகமே புகும்`` என்றார். அஞ்சு - பொறிகள். சிங்கங்கட்கு உகிர் (நகம்) உண்டற்குரிய விலங்குகளை இறுகப் பற்றுதற்கும், எயிறு (பல்) அவ்விலங்கின் தசைகளை உண்டு சுவைத்தற்கும் உதவுவன. எனவே, `அவற்றை அறுத்தல்` என்பது மனத்திற்குப் பொருள்களின் மேல் உளதாய பற்றினையும், அவற்றை நுகர்தற்கண் உளதாய ஈடுபாட்டினையும் நீக்குதலாயிற்று. `நீக்குதற்குக் கருவி சிவயோக சிவானங்கள் என்பது மேல் பல இடங்களில் கூறப்பட்டது. ``அறுத் திட்டால்`` எனவே, ``அறுத்திடல் மிக அரிது`` என்பது விளங்கிற்று. நகமும், பல்லும் போயபின் காட்டில் வாழும் சிங்கங்கள் அங்குச்சென்றோரை அப்பாற் போகவிடாமல் மறித்துக் கொன்றொழிக்க மாட்டா. அதனால் அவர் அக்காட்டைக் கடந்து இன்புறலாம் என்பது பற்றி, ``அறுத்திட்டால் - எஞ்சாது இறைவனை எய்தலும் ஆகும்`` என்றார்.

குறிப்புரை :

இதனால், `ஐந்திந்திரியங்களை அடக்குதல் செயற்கருஞ் செயல் என்பதும், `ஆயினும் அதனைச் செய்தார் அடையும் பயன் பெரிது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.

பொழிப்புரை :

அரசராகிய நம்மில் ஒவ்வொருவருக்கும் ஐவர் அமைச்சர் உள்ளிட்ட தொண்ணூற்றாறு பேர் வல்லுநர் பணியாளராய் உள்ளனர். அவர் நமக்கு அடங்கிப் பணி புரியாமல் ஒவ்வொருவரும் தனித்தனியே நம்மை ஆள விரும்புகின்றனர். எனினும் ஐவர் அமைச்சரே நம்மை ஆள்வதில் வெற்றி காண்கின்றனர். அந்த ஐவருக்குள்ளேயும் ஒற்றுமையில்லை. அதனால் அவரவரும் ஒவ்வொரு நோக்கத்தோடு நம்மை ஆள முயல்கின்றனர். அவர்கட்கு வரிசெலுத்தி நாம் எவ்வாறு நிறைவு செய்ய இயலும்!

குறிப்புரை :

`இயலாது; ஆகவே அவர் அனைவரையும் அடக்கிப் பணிய வைத்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். ஐவர் அமைச்சராவார் ஐம்பொறிகள். தொண்ணூற்றறுவர் அப்பொறிகள் உள்ளிட்ட தத்துவ தாத்துவிகங்கள். `உள்ளிட்டு` என்பது, `உள்` எனக் குறைந்து நின்றது. நோக்கம் நிறைவேறாதபொழுது சினம் உண்டாகும். ஆகையால் நோக்கத்தை, `சினம்` என்றது காரிய ஆகுபெயர். இறை - வரி; என்றது, சுவை, மணம் முதலிய புலன்களாய் உள்ள பொருள்களை, `அவற்றைப் பலகால் நுகரினும் நிரம்பாது மீள மீள அவாவே உண்டாதலின் நுகராது அடக்குதலே தக்கது` என்பது கருத்து.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. -திருக்குறள், 343
என்றே திருவள்ளுவரும் அருளினார்.
மைந்து வலிமையாதலின், ``மைந்தர்`` என்றது, `வலியர்` என்றபடி, அதனால் அவற்றை அடக்குதல் அருமை குறிக்கப்பட்டது. ``ஐவர் உம் மைந்தர்`` என்பதில் உகரம் சுட்டெழுத்து.
இதனால், `ஐந்திந்திரியங்களை வருந்தியாயினும் அடக்குதல் வேண்டுமன்றி, அடக்காது அவற்றின் வழிச் செல்லுதல் தகாது, என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.

பொழிப்புரை :

``துஞ்சும் போதும் சுடர்விடும் சோதியாய், (தி.5 ப.93 பா.8) உள்ள இறைவனையும், அவனோடே நீக்கமின்றி யிருக்கின்ற இறைவி யையும் நாள்தோறும் ஒழிவின்றி மந்திரமொழியாலும், தோத்திரப் பாடல்களாலும் சொல்லக் கடவேனாகிய யான் அங்ஙனம் செய்ய மாட்டாதவனாய் நிற்கின்றேன். அதனால் அங்ஙனம் மாட்டா தாரிடத்து வளர்வனவாகிய ஐம்புல ஆசைகளையும், அதனை உடைத்தாகின்ற மனத்தையும் அடக்கும் வலியிலேனாகின்றேன் அதனால், தன்மேல் இருப்பவனைக் குழியில் வீழ்த்திக் கொல்லவே நினைத்து வேகமாகப் பாய்ந்து ஓடுகின்ற குதிரையை அடக்க மாட்டாது விழிப்பவன்போலத் திகைக்கின்றேன்.

குறிப்புரை :

இரண்டாவது அடியில் வந்த ``சொல்லகில்லேன்`` என்பது சொற்பொருட் பின்வருநிலையணி. `மங்கையையும்` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. ``வெல்லகில்லேன்`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டுக. ``தன்னை`` என்றது மனத்தை. ஐம்புலன்களை வெல்லுதல் அவற்றின்மேல் அவாக்கொள்ளாதவாறு அடக்குதலும், மனத்தை அடக்குதலாவது அதனைப் புறத்துப்போக விடாது அகத்தே நிற்கச் செய்தலும் ஆகும். `இவ்விரண்டும் கை கூடுதற்கு உபாயம் இறைவனை இறைவியோடு தியானித்துத் துதித்தலே` என்றற்கு` `அவற்றை நான் செய்ய மாட்டாதவனாய் இருக்கின்றேன்` என்றார். மாட்டாமை பரிபாகம் இன்மையால் உளதாவது. `இத்தகையோரிடத்து ஐம்புல ஆசை வளர்தல் இயல்பே, என்றற்கு, ``அங்குள புலன் ஐந்து`` என்றார். `குதிரையோடு` என ஒடு உருபு விரிக்க. ``ஒத்தேன்`` என்றது, அதனை மாற்றிச் செலுத்த வகையறியாது, `அதன் வழியிலே நிற்கின்றேன்` என்றதாம்.
இதனால், `ஐம்புலனை அடக்கும் உபாயம் இது` என்பது அனுவாத முகத்தாற்கூறி, `பரிபாகம் இல்லார்க்கு அவ்வுபாயத்தைச் செய்தல் அரிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.

பொழிப்புரை :

ஒரு தலைவன் எனக்கென ஓர் அறையை ஈந்துள்ளான். (தலைவன் - பிரமன். அறை - உடம்பு) அதில் உள்ள பொத்தல்களோ அளவில்லன. (மயிர்க்கால்கள்) ஆயினும் அந்த அறைக்குள்ளே சிறிதே ஒளிபுகாது இருட்டிக் கிடப்பது வியப்பைத் தருகின்றது. (ஞானம் உடம்பு வழியாக வாராமை தெளிவு,) இந்த இருட்டறையிலேதான் என்னுடைய காலமெல்லாம்போய் ஆக வேண்டும் என்றால், அஃது எத்துணைத் துன்பத்தைத் தரும் என்பது சொல்லவேண்டுவதில்லை. ஆயினும் இறைவன் என்னை அவ்வறை யிற்றானே யிருந்து காலந் தள்ளாமல் காக்கத் திருவுளம் பற்றுவா னாயின், உடனே எனக்கு அளவுட்படாத கலத்தையுடைய ஒரு பெரிய மாளிகையைத்தரின் ஒப்பற்ற பெரியதோர் இன்பம் கிடைத்துவிடும். (அம்மாளிகை வியாபகப் பொருளாகிய திருவருள். இன்பம், சிவானந்தம்.)

குறிப்புரை :

`திருவுளம் பற்றுவானா` என்பது குறிப்பெச்சம். ``அவ் விருட்டறை`` எனச் சுட்டிக் கூறினமையால், `அஃது ஒருவனால் தரப் பட்டது` என்பது பெறப்பட்டது. ``அறை`` என்றார், எண்சாண் நீளமும் இருசாண் அகலமுமே உடைமையின். ஏகுதல் - செல்லுதல், காலம் போக்குதல். `பீழை` என்பது குறுகி நின்றது. மூன்றாம் அடியில் ``இல்லி`` என்றது ஆகுபெயராய் அவற்றையுடைய அறையைக் குறித்தது. `காத்தல்` என்பது அதன் காரணம் உணர நின்றது.
இதனால், `ஐந்திந்திரியத்தை அடக்குதற்குத் திருவருள் துணை புரிய வேண்டும்` என்பது கூறி அத்துணை கிடைத்தல் அருமையாதலின் ஐந்திந்திரியங்களை அடக்குதலும் அருமையாதல் கூறப்பட்டது. திருவருள் துணைகிடைத்தலின் அருமை முன் மந்திரத்தில் கூறியவாற்றால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 8

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

பொழிப்புரை :

உலகில் அறத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் உள்ள பொருளின் வலிமைக்குக் காரணம் மழையின் வலிமையே யாகும். அதுபோல, கடல் சூழ்ந்த நிலவுலகில் உள்ள அனைத் துயிர்களின் வாழ்க்கை வலி அயன் விதித்த விதியின் வலிமையும், அவ்வுயிர்களுள் மக்கள் உயிர்களின் வாழ்க்கை வலிமைக்குக் காரணம் அவர்களது ஆறாவது அறிவின் வலிமையும், சுவர்க்க லோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த பல தெய்வ வழிபாடுகளின் வலிமையும், சிவலோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த சிவவழிபாட்டின் வலிமையுமாகும்.

குறிப்புரை :

ஆகவே, `ஐந்திந்திரியங்களை அடக்கியொழுகி அதனால் சிவலோகத்தை அடைதற்கு வழி சிவ வழிபாடேயாம்` என்பது கருத்து. ஈற்றடி எடுத்துக்காட்டுவமை யாதலின் அதனை முதற்கண் கூட்டியுரைக்க. ``நீரின்று அமையாது உலகு எனின் அந்நீர் வான்இன்று அமையாதது`` (திருக்குறள், 20) பற்றி, ``நீர்`` என்பதற்கு `மழை` எனப் பொருள் உரைக்கப்பட்டது. ``விதியை மதியால் வெல்லலாம்`` என்பது உலக மொழியும் (பழமொழி) `ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர்`` என்பது ஆசிரிய மொழியும் (திருக்குறள், 620) ஆகையால் ``மானுடர் வாழ்க்கைக்குக் காரணம் மதியின் பெருவலி`` என்றார். ``வானுலகம்`` என்பதை `விண்ணுலகம்` எனவும், `மேலான உலகம்` எனவும் இரட்டுற மொழிந்து கொள்க. ஐந்திந்திரியங்களை அடக்கிப் பெறும் பயன் கூறுவார், அவற்றை அடக்காதோர் பெறும் பயனையும் உடன் கூறினார். அடக்கிக் பெறும் பயனது சிறப்பு விளங்குதற்கு. ``துதி`` என்றது உபலக்கணம். `நதியின் பெருவலி நார்வலி தானே` எனப் பாடம் ஓதி, `நாரம்` என்பது அம்முக் குறைந்து நின்றது எனினும் ஆம்.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய பொருள் உவமை முதலியவற்றால் நன்கு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.

பொழிப்புரை :

ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். எனவே அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும். ஆயினும் அவ்வாறின்றி ஒரு சாணுக்குமேல் கூடுதலாக ஒரு முழ ஆழம் உள்ளது. (குளம் - முகம். ஆழம் கழுத்திற்குக் கீழ் மூலாதாரம் வரை உள்ள இடம்.) மேற்குறித்த குளத்தில் ஐந்து கொடிய மீன்கள் உள்ளன. (அவை அந்நீர் வாழ் உயிரை அமைதியாக வாழ விடாமல் அலைக்கழிப்பன. மீன்கள், (ஐம்பொறிகள்) இந்த நிலைமை எமக்குந்தான் உள்ளது. இதனை அறிந்த ஓர் வலைஞன் எம்மிடத்தில் இரக்கங்கொண்டு வலையைக் கொணர்ந்து வீசினான். மீன்கள் தப்ப முடியாமல் அவ்வலையில் அகப்பட, வலைஞன் அவைகளைத் தான் எடுத்துக் கொண்டான். (சிவன் கருணை கூர்ந்து தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்.) அதனால் யாம் துயர் ஒழிந்தோம்.

குறிப்புரை :

எனவே, ஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்றதாயிற்று. ``வட்டம்`` என்பதன் பின் `ஆய்` என்பது வருவிக்க. ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் ஆகையால் அதனையே மனித உயிர்க்கு இட மாகக் கூறினார். எனினும் ஏனைய பகுதிகளை, `குட்டம்` என்பதனால் தழுவினார். குட்டம் - ஆழம். `பரதவன்` என்பது இடைக் குறைந்து நின்றது. அவனது சிறப்புணர்த்தும் `ஓர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `இடுதல்` அதன் காரியம் தோன்ற நின்றது. ஏதம் - துன்பம்.
இதனால், `ஐந்திரியங்களை அடக்கும் முறைகளுள் நேரிதாவது` இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறுமவன் றானே அமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.

பொழிப்புரை :

நாம் நடத்தினால் நடந்து, கிடத்தினால் கிடப் பதாகிய உடம்பை நம் விருப்பத்தின் படியே நடத்திட ஒட்டாது, அதினின்றும் எழுகின்ற ஐந்து இந்திரியங்களும் கிளர்ச்சி செய் கின்றன. அக்கிளர்ச்சியை அடக்குபவனே மனிதருள் தேவனாவான். அவ்வாறின்றி, அக்கிளர்ச்சியின் வழிப்பட்டு நமது உடம்பாகிய ஒரு மாமிச பிண்டத்துடன் இன்னொரு மாமிச பிண்டத்தை அணைத்து இன்பம் அடைய விரும்புவனவாய் உள்ளன தமது மனங்கள். அந்த மனத்தின் வழியே நாம் நடந்து கொண்டிருந்தால் நமது உடம்புகள் அவற்றிற்கு வரையறுத்த நாள் வரையில் நடந்து பின்பு வீழ்ந்துவிடும்.

குறிப்புரை :

`பின்பு நாம் பெறுவது யாது` என்பது குறிப்பெச்சம். `எனவே, உடம்பு நடக்கும் காலத்திலே மனத்தை அடக்கி அது வழியாக இந்திரியங்களையும் அடக்கிப் பயன் எய்துதல் வேண்டும்` என்பதாம். `அப்பயன் அமரராதல்` என்பது கூறப்பட்டது. ``அடக்கம் அமரருள் உய்க்கும்`` (திருக்குறள், 121) என்று அருளினமை காண்க. உயிருள்ள உடம்பை ``விடக்கு`` என்றார், அதனது இழிவு தோன்றுதற்கு எனவே, `அதனால் வரும் இன்பம் அருவருப்புடையது` என்பதாம். விடக்கு, மாமிசம். மற்றொரு விடக்காவது ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாம், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களையும் ஒருங்கேயுடைத்தாயது இணை விழைச்சு இன்பமாகலின், அதனையே விலக்கினார். விலக்கவே ஏனை இன்பங்கள் தாமே விலக்குண்டன. ``சிந்தை`` என்பதற்குப் பின், `பின்` என்பது வருவிக்க. ``நடக்கும்`` என்னும் பயனிலையை இறுதியிற் கூட்டி, அதற்கு `அவ்விடக்கு` என எழுவாய் வருவிக்க. ``நடக்கு மளவும்`` என்பதற்கு உண்மைக் காரணமாகாத உயிர்ப்பினை எழுவாயாக இயைபின்றி வருவிப்பாரும் உளர்.
இதனால், `உடம்புள்ள பொழுதே இந்திரியங்களை அடக்கி உயர்நிலை பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :

`ஐம்பொறிகளையும் அடக்குதல்` என்பதற்கு, `அவற்றைக் கெடுத்தல்` எனப்பொருள் செய்து, `அவற்றை அடக்கு, அடக்கு` என மாணாக்கர்க்கு வலியுறுத்திக் கூறும் ஆசிரியர் உண்மை ஞானாசிரியர் ஆகார். ஏனெனில் அவ்வாறு அடக்கி உயர்நிலை பெற்றவர் வானுலகத்திலும் இல்லை. அதற்குக் காரணம் ஐம் பொறிகளைக் கெடுத்தொழித்தால் அவற்றால் அறிந்துவருகின்ற ஆன்மா அறிவற்ற சடம்போல் ஆகிவிடும். அதனையறிந்து யான் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே பெறுகின்ற ஞானத்தை அறிந்தேன்.

குறிப்புரை :

அந்த ஞானமாவது அவற்றை மனம் சென்றவழிச் செல்லவிடாது, அருளாசிரியர் அறிவுறுத்திய வழியிற் செல்லச் செய்தலாம். அருளாசிரியர் அறிவுறுத்தல் பின்வருமாறு அமையும்.
``ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே``-தி.2 ப,44 பா.4
`` ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே`` -தி.2 ப,44 பா.7
``ஆமாத்துர் அம்மானைக்
கேளாச்செவியெல்லாம் கேளாச் செவிகளே``-தி.2 ப,44 பா.8
``கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை`` -தி.4 ப,9 பா.2
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப,9 பா.3
``வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்`` -தி.4 ப,9 பா.5
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணியாய் வந்தது.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்குதல் பற்றிய தவறாம் முறைமையை விலக்கி, நேரிய முறைமை தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஐந்திந்திரியங்களாகிய மத யானைகள் தறியில் கட்டுண்ணாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல் புடையன. அதையறிந்து நான் அவைகளை அடக்கி நேரிய வழியில் செலுத்துதற் பொருட்டு ஞானமாகிய அங்குசத்தைப் பயன் படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமான உணவை அளவு கடந்து உண்டு, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.

குறிப்புரை :

`அந்நிலை சொல்லுக் கடங்காது` என்பது குறிப் பெச்சம். `ஐந்திந்திரியமாகிய வேழம்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. இல்லையேல், `வேழம் எனப்பட்டன யாவை` என்பது விளங்காமை யறிக. ``உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்`` (திருக்குறள், 24) என இவ்வாறு வருதலே மரபாகலின், அறிவென்னும் கோட்டையை வைத்தேன் என்பது பாடமாகாது. `அறிவென்னும் தோட்டியை வைத்தேன்` என்பதே பாடம் என்க. அறிவு, ஞானாசிரியரால் அருளப் பட்ட அறிவென்க. அந்த அறிவு முதிர்ந்து முறுகாமையால் கூர்மை செய்யப் பெறாத தோட்டிபோல் ஆய்விட, யானைகள் அதற்கு அடங்காது ஓடின என்க. இவ் யானைகட்கு உணவாவன அவற்றிற்குரிய புலன்கள். அவற்றை உண்ணுந்தோறும் அவாவே மேன்மேல் எழுதலால் ``கொழுத்தன`` என்றார். பின் வந்த ``வேழம்`` என்பது, `அவை` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பெருங்கேடு மண்டி`` என்பதைப் பின்வந்த ``வேழம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கேடு`` என்றது கேடு பயக்கும் குணத்தை. பாட்டின் இறுதியில், `பெரிது` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `அருளாசிரியர் அறிவுறுத்தவழியால் ஐந்திந் திரியங்களை அடக்க மாட்டாது புறக்கணிப்பாய் இருப்பின் அவற்றால் பெருங்கேடு விளையும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

பொழிப்புரை :

இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கி யிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.

குறிப்புரை :

``ஐந்து`` என்பன தொகைக் குறிப்பு, அவை முன்னை மந்திரங்களின் தொடர்ச்சியால் `யானை` எனப் பொருள் தந்து, உருவக வகையால் இந்திரியங்களை உணர்த்தின. ``அகலிடம்`` என்றது ஆகுபெயரால், உலகியல் எனப் பொருள் தந்து அறத்தை உணர்த்திற்று. பின்னர் ``தவம்`` என வருதலால் அறம் இல்லறமாயிற்று. பதம் - பதவி. அருள் - சிவஞானம். `இவை யாவும் பொறியடக்கம் இல்லாத பொழுது விளையா` என்றற்கு, பொறியடக்கத்தையே இவையாக உபசரித்துக் கூறினார். `இல்லின்கண்` என ஏழாவது விரிக்க. முன்மந்திரத்தில் ``அறிவென்னும் தோட்டி`` என்றதனால், இங்கு ``இல்`` எனப்பட்டதும் அஃதேயாதல் விளங்கும். இங்கும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், எல்லா நன்மைகட்கும் இந்திரிய அடக்கம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

`உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின்மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற் றொன்றின்மேல் தாவி அதனைப் பற்றிக்கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓடவிடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாகும். `இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.

குறிப்புரை :

பிதற்றுவது வாய் ஆதலின், அதற்கு ஏற்புடைய `நூல்` என்பது கொள்ளப்பட்டது. நினைதல் அவற்றின் பொருளையேயாம். ``பேய்த்தேர்`` என்பதன் பின் `ஆதலை` என ஆக்கமும் உருபும் விரித்து முதற்கண்வைத்து உரைக்க. ``விரித்த பொருள்`` எனப் பின்னர் வருதலின், `பேய்த்தேராவனவும் அவையேயாதல் தெளிவு. `பிரபஞ்சம்` என்பது `விரிவுடையது` என்னும் பொருளதாதலின் அது பற்றி, ``விரித்தபொருள்`` என்றார். ``பொருள்`` என்றது அவைபற்றிய உணர்வை. ஏனெனில் பெருக்கில் பெருகுவதும், சுருக்கில் சுருங்குவதும் அதுவேயாகலின்.
இதனால், `இந்திரிய அடக்கமாவது மன அடக்கமே` என அதன் உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.

பொழிப்புரை :

இன்பத்தை நுகர்ந்து இனிதே வாழ்தற்கு உரியன வாகிய உயிர்கள் அவ்வாறின்றித் துன்பத்திற் கிடந்து துயர் உறுதலை அறிந்து அவை அத்துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய வழியை அமைத்துக் கொடுத்து, அதனாலே உறவாதற்குப் பொருந்தியவன் தானேயாய் நிற்கின்ற இறைவனைப் புகழ்ந்து போற்றி அதனால் தானும் என்றும் அழியாப் புகழைப் பெறுகின்ற அறிவன், ஐம்பொறிக ளாகிய பாம்புகள் ஐந்தும் தாம் படம் எடுத்து ஆடுகின்ற ஆட்டத்தை விடுத்துத் தமது புற்றிலே சென்று அடங்கிக் கிடக்கும்படி அடக்கி விடுவானாயின், அதன்பின், அவனும் துளையை உடைய அந்தப் புற்றுவழியாகவே இன்பம் பெற்று அமைதியை அடைவான்.

குறிப்புரை :

உயிருக்கு, ``இன்னுயிர்`` எனப் புணர்த்த அடை கருத்துடை அடை. அதனை முதற்கண்கூட்டி யுரைக்க. ``வழி`` எனப் பின்னர் வருதலின் முன்னர் வாளா, ``வைத்த`` என்றார் ஆகலின், அதனை முன்னரும் கூட்டி `வழி வைத்த ஈசனை` என்க. `ஈசனைப் புகழும் புகழோன்` என ஒருசொல் வருவித்து முடிக்க. கிளைக்கு ஒன்றுதல் - சுற்றம் ஆதற்குப் பொருந்துதல். ``அளைக்கு`` என்பது, `அளைக்கண்` என்பதன் மயக்கம். `கேடில் புகழோன் நாகம் அஞ்சு அளைக்கண் ஒன்ற ஆடல் ஒடுக்கத் தூங்கும், எனக் கூட்டி முடிக்க. `தூங்கும்` எனச் செய்யும் என் முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ``வழி`` என்றதும், ``அளை`` என்றதும் சுழுமுனையை என்பது தோன்றுதற் பொருட்டு, ``துளைக்கொண்டது அவ்வழி`` என்றார். `அவ்வழியானே` என உருபும், தேற்றேகாரமும் விரிக்க. வினையொடு தொகும் மூன்றாவதன் தொகையிலும் சிறுபான்மை வல்லினம் மிகாது. இனி, `அவ்வழித் தூங்கும்` எனப் பாடம் ஓதுதலும் பொருந்தும். படைத்தல் - உண்டாக்கிக் கொள்ளுதல். ``படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும் - உடைப்பெருஞ் செல்வராயினும்``(புறநானுறு, 188) என்றது காண்க. மேல், `ஐந்திந்திரியங்கட்கு இடமாவது ஆன்ம அறிவு` எனக்கூறி, இங்கு, `அவற்றிற்கும் இடம் சுழுமுனை நாடி` என்றது, ``நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே` (புறநானுறு, 186) என்றதில், நெல் நீர்போல நேரே உணவாகாதாயினும், வழிமுறையால் உணவாதல் பற்றிப் பான்மை வழக்கமாகக் கூறியது போல, யோகப் பயிற்சியால் வழிமுறையில் இடமாதல் பற்றிக் கூறியதாகலின் முரணில்லை என்க. யோகி தூங்குதற்கு இடமும் அதுவாகக் கூறியதும் அன்னதே.
இதனால், வாசியோகமும் ஐந்திந்திரியமும் அடக்குதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

பொழிப்புரை :

பூத காரியங்களாகிய ஐம்புலப் பொருள்கள்மேல் மதங்கொண்டு செல்கின்ற ஐந்து இந்திரியங்களாகிய யானைகளை அவற்றின் வழியே செல்கின்ற உயிரினது அறிவு, தான் அடையத் தக்க தாகிய திருவடி ஞானமாகிய தறியை அடைந்து அதன்கண் கட்டிவிட, அதனைக் கண்டு, அறிவர் பலரும் அறிந்து அடைகின்ற அருளானந் தத்தை இறைவன் தருவானாயின், அதுவே, யாவரும் மேற்கொள்ளத் தக்க முதல் நூல் விதியின் பயனாகும்.

குறிப்புரை :

``பூதங்கள்`` கருவியாகு பெயர். `பூதங்களின் மேல் பாய்ந்தனவாகிய ஐந்தினையும் ஞானத் தறியினில் பூட்டிட்டு, அருள் செய்யில் அதுவே மேலை விதி` என இயைத்துப் பொருள் கொள்க. ``ஐந்து`` என்பது தொகைக் குறிப்பாய் ஐந்து இந்திரியங்களைக் குறித்தது. படர்தல் - செல்லுதல். ``ஒளி`` என்றது ஆன்ம அறிவை. சார்ந்திடும் - சாரத் தக்க. ஞானத்தை, ``தறி`` என்றதற்கு ஏற்ப இந்திரியங்களை `யானை` என்னாதது ஏகதேச உருவகம். `ஒரு கம்பத்திலே இரண்டு யானைகள் கட்டப்படுதல் கூடாது` என்பது உலகியல். அதற்கு மாறாக `ஒரு தறியில் ஐந்து யானைகளைக் கட்டல் வேண்டும்` என்றதனால், இத்தறி உலகத்தில் இல்லாததோர் அதிசயத் தறியாயிற்று. `பூட்டியிட்டு` என்பது குறைந்து நின்றது. அதனை, `பூட்டி யிட` எனத் திரித்துக் கொள்க. `ஆய்தல்` என்னும் பயனிலைக்கு `இறைவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. வேய்தல் - தலையிற் சூடிக் கொள்ளுதல். அஃது இங்கு மேற்கொள்ளுதலைக் குறித்தது. விதியின் பயனை, ``விதி`` என்றது ஆகுபெயர். தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், ஐந்து இந்திரியங்களை அடக்கும் முறையும், அடக்கினால் விளையும் பயனும் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.

பொழிப்புரை :

உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல் களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம் மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில் களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும்.

குறிப்புரை :

``படர்க்கின்ற`` என்பதில் உள்ள ககர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது. `சிந்தையைப் பைய ஒடுக்குமாறு எவ்வாறு` என்பதற்கு விடை மூன்றாம் அடியில் தரப்பட்டது. ஆகவே, `சிந்தை குறிவழி நோக்கி ஒடுங்குமாறு பைய ஒடுக்கி ஆம்` என வினை முடிபு செய்தல் கருத்தாயிற்று. `குறியல்லாததனைக் குறியாகக் கொண்ட சிந்தை உண்மையைக் குறியை நோக்கில்` என்பது மூன்றாம் அடியில் கூறப்பட்டபொருள். குறி- குறிக்கோள். உண்மைக் குறி, சிவன். `கோயில்` எனப்பின்னர் வருதலின், ``வடக்கு, தெற்கு`` என்பனவும் ஆகுபெயராய் அத்திசையில் உள்ள கோயில்களையே குறித்தன. ``வடக் கொடுதெற்கு`` என்றது, `நிலம் முழுதும்` என்றபடி. `அனைத்துக் கோயில்களும் மனக்கோயிலாகவே அமையும்` என்றது, `அவற்றில் எல்லாம் சென்று வழிபடுவார்க்கு அளிக்கும் பயன்களையெல்லாம் சிவன் இவர்க்கு இருந்த இடத்தில்தானே அளிப்பான்`` என்றதாம்.
c

பண் :

பாடல் எண் : 10

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.

பொழிப்புரை :

வாழ்நாளில் கழிவன சில நாழிகைகள் போலத் தோன்றுகின்றன. ஆயினும் அவை உண்மையில் சிலவும், பலவுமான நாட்களாய் விடுகின்றன. நெடுங்காலம் நிற்பதுபோலத் தோன்றுகின்ற உடம்பு நீர்மேல் எழுத்துப்போல விரைய மறைவதாகின்றது. இதனை உணர்ந்து, `அறிவுடையேம்` என உங்களை நீங்களே மதித்துக் கொள் கின்ற உலகீர், இளமையிற்றானே ஐம்புல ஆசையை வென்று, அப்புலன்களுக்குச் சார்பாய் உள்ள பொருள்களைத் துறந்து விடுங்கள். இல்லையேல், அவ்வாசையால் விளையும் வினைகள் மலைபோல வந்துவிழும்; அவைகளைத் தாங்க இயலாது.

குறிப்புரை :

``சென்றன`` என்பதைப் பின்னரும் கூட்டுக. பிற பொருள்களைப் பற்றுதற்குக் கருவி உடம்பாதலின் அதன் நிலை யாமையே முதற்கண் உணரத்தக்கது ஆகலின், ``பொருள்`` என்றது அதனையே குறித்தது.நீர்மேல் எழுத்து ஒத்து ``நின்றது`` என்றது, `என்றும் நிற்பதாக நினைக்கப்படுகின்ற உடம்பு. நிற்கும் நிலை நீர்மேல் எழுத்து நிற்பது போன்றதுதான் என்றபடி. எனவே, நிலையில்லாததனை, ``நின்றது`` என இகழ்ச்சியாகக் கூறியதாம். ``குன்று`` என்பது உவமையாகு பெயராய், அதுபோலும் வினைக்கூட்டத்தைக் குறித்தது. அதில் - அந்நேரத்தில். ஏகாரம், எதிர்மறை வினாவாய் வந்தது.
இதனால், `அறிவுடையராயினார் ஐந்திந்திரியங்களை இளமைக் கண்ணே அடக்கி நலம்பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.

பொழிப்புரை :

சிவனது திருமேனியைத் துதிக்குமாற்றால் பருப் பொருள்களாய் உள்ள அவைகளைச் சார்ந்துள்ள புலன்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச்செலவினின்றும், மீட்டு, மீண்டும் அதனையே துதி. அங்ஙனம் துதித்தால், அப்பெருமானை அவனது ஆனந்தத்தைப் பொழிகின்ற மனத்திலே ஒன்றியிருக்கச் செய்தலும் கூடும்.

குறிப்புரை :

`புனிதன் திருமேனியைப் போற்றிசைத்துப் புலன் ஐந்தும் புத்தியால் மீட்டுப் போற்றிசெய்` என்க. பருப்பொருள்மேல் செல்கின்ற மனத்தைப் பருப்பொருள் வழியாகவே மீட்டலும், நிலை நிறுத்தலும் வேண்டும் என்பது பற்றி, `திருமேனியைப் போற்றி செய்து மீட்டுப் போற்றி செய்` என்றார். ``புத்தியால்`` என்றது, `இஃதே அறிவாம்` என்றபடி. ஊற்றுகை - ஊற்றுதல்; பொழிதல், தொழிற் பெயர். இதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஊற்றுகை உள்ளம் - ஊற்றுதற்கு இடமாய் உள்ள உள்ளம். உம்மை, சிறப்பும்மை.
இதனால், `திருமேனி வழிபாடு இந்திரிய அடக்கத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.

பொழிப்புரை :

சிவபெருமானது உருவத் திருமேனியினுள்ளே படிந்து நிற்றற்குரிய மனத்தை அங்ஙனம் நிற்க ஒட்டாமல் நச்சரித்துப் பெயர்க்கின்ற ஐம்புலன்களாகிய குறும்பரது தீச்செயலை உலகவர் யாரும் உணர்வதில்லை. அதனால் அங்ஙனம் உணராத நிலையில் இருந்து கொண்டே கவலையின்றி ஒருவரோடொருவர் நகையாடிச் சிலவும் பலவுமாகிய பேச்சுக்களைப் பேசி அவர் பொழுது போக்குவாரேயானால் அவரது செயல் தனது நிலையான இயற்கைப் பொலிவுடன் விளங்கத் தக்கதாகிய மலையை நிலையாது நீங்கும் அழகையுடைய மேகங்கள் வந்து சூழ்ந்து மறைத்தல் போல்வதாகும்.

குறிப்புரை :

தரித்தல் - நிலையாக நிற்றல். `சகளத்தினுள்ளே தரிக்கின்ற நெஞ்சத்தை அரிக்கின்ற ஐவர்` ``பேசில்`` - என்றது, `பேசுகின்றனர்` என்பதை அனுவாத முகத்தாற் குறித்தது. வரி - அழகு. மேகத்தின் அழகு சிறிது பொழுதில் அழியக்கூடியது. `அதனால் சூழப் பட்டது` என்றதனால், மலையினது அழகு நிலைத்து நிற்பதாதல் குறிக்கப்பட்டது. `உயிர் சிவத்தில் அழுந்திப்பெறும் அழகு இயற்கை யானது; ஆதலின் அஃது அழியாது` என்பதையும், `ஐம்புலன்களின் மேல் சென்று பெறும் அழகு செயற்கையாதலின் அது சிறிது பொழுதில் அழியும்` என்பதனையும் குறித்தவாறு. ``மைசூழ்வரை யாம்`` என்றாரேனும், `மை வரையைச் சூழ்தலாம்` என்றலே கருத்து என்க.
இதனால், சிவனது உருவத் திருமேனியை இடைவிடாது நினைத்தலே ஐந்திந்திரியங்களை அடக்கும் முறையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

பொழிப்புரை :

`ஐந்திந்திரியங்களை அடக்குதல் நம்மால் ஆகிற காரியம் அன்று` என இளைத்து, அதனைக் கைவிடுதற்குக் காரணம் சிறிதும் இல்லை. ஏனெனில், ஐந்திந்திரியங்களின் அவாவிற்குக் காரணமான நிலையற்ற பொருள்களில் பொருந்தியுள்ள புலன்களும் ஐந்திற்குமேல் இல்லை. அந்த ஐந்தையும் அடக்குதற்குச் செய்யத் தக்க உபாயமும் ஒன்றே ஒன்றுதான். அஃது ஒருபொழுதும் நம்மை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாது, எப்பொழுதும் நம் உள்ளத்திலேயே வீற்றிருக்கின்ற சிவனை நல்ல இசைப் பாடல்களால் துதிப்பதுதான். ஆகவே, அதனைச் செய்து இந்திரியங்களை அடக்கி, இன்பம் எய்துங்கள்.

குறிப்புரை :

கைவிடுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது. ``ஒன்று`` என்றது `சிறிது` என்னும் பொருட்டாய் அவ்வளவிற்றான காரணத்தைக் குறித்தது. `துதித்தலுக்கு இயற்பாக்களிலும் இசைப் பாடல்களே சிறந்தன` என்றற்கு, ``இசையினால் ஏத்துமின்`` என்றார். ``அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே`` என அப்பரும் அருளிச் செய்தார். (தி.4 ப.77 பா.3) ஒருவர் ஒரு செயல் அன்றிப் பல செயல் செய்தல் உலகியலாய் இருக்க, `ஐவர் ஐந்து செயலே செய்பவராகின்றனர்` என அவரது மெலிவு உணர்தற்கு, ``ஐவருடைய அவாவினில் தோன்றிய புலன்களும் ஐந்தே`` எனவும், `அவரை வெல்லுதற்குரிய உபாயமும் ஒன்றே; அதுவும் எளிதானதே` என்றற்கு, ``கருத்தினுள் எய்தியவனை ஏத்துமின்`` எனவும் அருளிச் செய்தார்.
கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள நீர்உள;
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே.
எனப் பிற இடங்களிலும் இங்ஙனம் எளிமையை உணர்த்துதல் காண்க. ஐந்திந்திரியங்களை, ``ஐவர்`` என்றதுபோலப் பொய்ப்பொருள்களை அஃதாவது நிலையாத பொருள்களை, ``பொய்வர்`` என்றார். ``ஐவர்`` என்பதிற்போல, ``பொய்வர்`` என்பதிலும் வகரமெய் பெயர் இடை நிலையாய் வந்தது. ``உடைய`` இரண்டும் குறிப்புப் பெயரெச்சங்கள். முன்னதனை, `ஆறாவதன் சொல்லுருபு` என்றலுமாம்.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்கும் முறை அதனது எளிமை கூறி, `அதனால் அதனைத் தப்பாது செய்து பயன் பெறுங்கள்` என வலியுறுத்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``அசற்குருவாய்`` என்னும் பயனிலையை ``மூடன்`` முதலிய எல்லாவற்றோடும் தனித்தனி கூட்டுக. ``உணர்வு`` என்றது நல்லுணர்வை. `ஒன்று` இரண்டும் `சிறிது` என்னும் பொருளன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுக்கப்பட்டன. உண்மை - பொருள்களின் உண்மையியல்பு. `தத்துவம்` எனப்படுவது இதுவே. கணு - எல்லை, என்றது ஏகதேசத்தை. எனவே, `சற்குரவ ராவார் வேதாகமங்களை முற்ற உணர்ந்திருப்பர்` என்பது போந்தது. பரநிந்தை, புறங்கூறல். அணு - உயிர். அதற்கு இயற்கையாய் உள்ளது அறியாமை. அஃதாவது உணர்த்தினும் உணர மாட்டாமையாம். ``கொடிறும் பேதையும் கொண்டது விடா`` (தி.8 போற்றித் திருவகவல், 63) என்று அருளிச் செய்தது காண்க. `கூறப்பட்ட குற்றங்களுள் ஒன்றையே உடையராயினும் அவர் சற்குருவாகாது, அசற்குரு வேயாவர்` என்றற்கு `அசற்குருவாமே` என்பதனைத் தனித்தனி கூட்டிக் கொள்ள வைத்தார். அசத்தை உணர்த்துவோன் அசற்குரு.
இதனால், `அசற்குருவாவரிடத்துக் காணப்படும் குற்றங்கள் இவை` என்பது கூறி, அவர் `இன்னார்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.

பொழிப்புரை :

சற்குரவராதற்கு உரியன பலவற்றை உடையோரும் தமது உபதேசத்தை உணரும் தகுதியில்லாதோர்க்கு அவர் வழியாகப் பெறப்படும் சில பயன் கருதி அவரை விலக்கமாட்டாராய் அவர்க்கு உபதேசம் செய்வாராயின், அவரும் அறியற்பாலனவற்றை அறியாத அறிவிலிகளாய், அசற்குரவராய் விடுவர்.

குறிப்புரை :

மந்திரம் முத்தி நெறிக்குரிய மந்திரங்கள். தந்திரம், வேதாகமங்களில் உள்ள ஞானப் பகுதிகள். மாயோகம் - சிவயோகம். ஞானம் - சிவஞானம். இவ்விடத்து உள்ள உம்மையை ``மந்திரம்`` முதலியவற்றோடும் கூட்டுக. ``பந்தம், வீடு`` என்றது, உண்மைப் பந்தத்தையும், உண்மை வீட்டையுமேயாம். `தரிசித்துத் தெளிவி யாதோர்` என இயைக்க. இவ்வினையெச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `தரிசித்தும்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பார்ப்பவர் - அறியத்தக்கவர். `பார்ப்பவரை` என்னும் இரண்டன் உருபு உயர்திணைக்கண் தொகுக்கப்பட்டது. செய்யா - செய்து. ``ஊண்`` என்றது உபலக்கணம். ``அந்தகர்`` என்றது அகநோக்குப் பற்றி.
இதனால், `சற்குரவர்க்கு ஆகாததொன்றினை உடையராயின் சற்குரவரும், அசற்குரவராவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.

பொழிப்புரை :

`தக்கது இன்னது; தகாதது இன்னது` என உணரும் உணர்வில்லாதவன் மூடன்` என்பது உலகம் அறிந்தது. ஆயினும், அவ்வாறு அவற்றை அறிந்தும் காமம் முதலிய குற்றங்களின் நீங்கி, நல்லவற்றைப் பற்றியொழுகும் நல்லொழுக்கம் இல்லாதவன் அறிவுடையவன் ஆயினும் அதிமூடன் ஆவான். இனிக்குற்றங்களின் நீங்கி வல்லவற்றையே கடைப்பிடித்தொழுகும் நல்லொழுக்கம் உடையனாயினும் நல்லனவற்றை மதித்து உவந்து ஏற்கும் பண்பின்றி அவற்றை உணர்த்துவோரையும் இகழ்கின்ற கீழ்மக்கட்கு நல்லுபதேசத்தைச் செய்வானாயின் அவனும் அறிவிலியேயாவான். ஆகையால் அத்தகையோனும் சற்குருவாகாது, அசற்குருவாயாவன்.

குறிப்புரை :

கலதி - கீழ்மகன். ``ஆமாறு`` என்றதனானே அதன் மறுதலைப் பொருளும் போந்தது. நல்லன தீயனவற்றை அறிய மாட்டாதவன் மூடனாதல் இயல்பாகவே நன்கறியப்பட்டதாயினும், அவற்றை அறிந்தவனினும் அறிந்தவாற்றில் நிற்கமாட்டாதவன் அவனிலும் பெருமூடன் ஆதலை வலியுறுத்தி ஓதுதற் பொருட்டே இயல்பாக அறியப்பட்டதனை அனுவாதமாக எடுத்தோதினார்.
ஓதி யுணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையிற் பேதையார் இல். -திருக்குறள், 834
என அருளினமை காண்க.
`கலதிகட்கு ஆமாறு அறிவிப்பின் அது பயன்படாது ஆகலின், அஃது அரும்பொருளை அழிவு செய்ததாம்` என்பதை,
``அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்``-திருக்குறள், 720
எனவும், `ஆகவே, அவ்வாறு அறிவிப்பவன் அறிவிலியாவான்` என்பதை,
``காணாதாற் காட்டுவான் தான்காணான்`` -திருக்குறள், 849 எனவும் அருளிச்செய்தார் திருவள்ளுவர். கோமான் - தலைவன். இங்கு, `தலைவன்` என்றது ஞானத்திற்குத் தலைவனாகிய சற்குருவை. ``அசத்தாகுங் குரவனே`` என்றது, `அசற்குருவே` என்றபடி. சற்குருவினின்றும் பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை.
இதனால், மேலது பிற சிலவற்றோடு ஒருங்கு வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும்
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

பொழிப்புரை :

சற்குருவாவான் தன்னை அடைந்த மாணாக்க னிடத்தில் உள்ள குற்றங்களை முதலில் நல்லனவற்றைக் கூறும் முறையால் நீக்கி அதன் பின்பே ஞானத்தை உணர்த்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாமலே ஞானத்தை உணர்த்தினால் தனது ஆசிரியத் தன்மையுங் கெட்டுத் தனது செய்கையே தனக்குத் தீங்காய் முடியும். அதனால் நாட்டில் புல்லரே தலையெடுப்பர் ஆதலின் அரசு நல்லரசாய் இருப்பினும் அதற்கும் கேடு விளையும். நாடும் தீய நாடாகி விடும். இதனைப் படைப்புக் காலத்திற்றானே சிவன் தனது ஆகமங்களில் சொல்லி வைத்துள்ளான்.

குறிப்புரை :

கற்பு - கல்வி. அது பின்னர் அம்முப்பெற்று, ``கற்பம்`` என நின்றது. `கல்வியாகிய கல்வி` என்றது, ஆசிரியர் கற்பியாது அவர் தாமே கற்ற சொந்தக்கல்வி` எனக் குற்றங்களைக் குறித்துநின்றது. குணம்போலக் குற்றம் பிறர்கற்பிக்க வேண்டாதுதானே தோன்றி வளர்வதாதலை அறிக. பாவம் - தன்மை. தனக்குத் தீங்காதலாவது, உணர்த்தப்பெற்றோரால் நன்கு மதிக்கப்படாமையும், உலகரால் பழியும் அடைதல்.
இதனால், கலதிகட்கு ஆமாறு அறிவிப்போர் அடையும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே.

பொழிப்புரை :

குருடர் சிலர், வேறு சில குருடருடனே சேர்ந்து வழிச் செல்வார்களாயின் எல்லோருமாக `முன், பின்` என்பதின்றி ஒருங்கே குழியில் விழுவதைத் தவிர வேறு என்ன நிகழும்! ஆகையால், சில குருடர்கள் வேறுசில குருடர்களுக்கு `நாங்கள் உங்கட்கு வழிகாட்டு கின்றோம்` என்றுசொல்லி அவர்கள் கையில் கோலைக் கொடுத்துத் தாங்கள் அக்கோலைப் பற்றிக் கொண்டு முன்னே செல்வாராயின், முதலில் வழிகாட்டும் குருடர் பாழ்ங்குழியில் வீழ்வர். பின்பு அவர்களால் அழைத்துவரப்பட்ட அந்தக் குருடர்களும் அந்தக் குழியிலே வீழ்வார்கள், (அது தான் நிகழும்.)

குறிப்புரை :

``முன்பின் அறவே`` என்பது முதலாக உள்ளவற்றை முதலில் கொண்டு உரைக்க.
இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.
`அஞ்ஞானிகள் சிலர் தங்களைப் போலவே அஞ் ஞானிகளாய் உள்ள சிலரைக் குரவராக மதித்து அடைவார்களாயின் இருவரும் பிறவிக் குழியில் விழுவதைத் தவிர வீடுபேறாகிய கரையை அடையார்; அவருள்ளும் குரவராய் நின்றவரே முதலில் பிறவிக் குழியில் வீழ்வர்` என்பது இதனால் குறிக்கப்பட்ட பொருள்.
ஆதல் - ஒன்றாதல். ``ஆகில்`` எனப் பின்னர் வருதலின் நான்காம் அடியில் முதற்கண் நின்ற குருடர் `ஆகிய குருடர்` என்பது விளங்கிற்று. அதன்கண் வந்த உம்மை இறந்தது தழுவிய எச்சம். முன் தந்திரத்தில் போந்த ``குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்`` என்னும் மந்திரத்தை இதனோடு ஒப்பிடுக.
இதனால், அசற்குரவராயினார் பிறரையும் கெடுத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.

பொழிப்புரை :

சற்குருவே தன்னையடைந்த மாணாக்கர்க்குத் திரு வருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனையடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தை யாலும், திருவடி சூட்டலாலும் தன்னை யடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்துவிடுவான்.

குறிப்புரை :

`அத்தன்மைகளால் அவனது சற்குருவாம் தன்மையைத் தெளிக` என்பது குறிப்பெச்சம். திருவருளை, `திருவடி` என்றல் மரபு. தாள் முயற்சியும் ஆம் ஆதலின் அது `முயற்சி` என்னும் குறிப்பினையும் உடையது. திருவருள் எல்லாம் வல்லதாதலை நினைக. ``குருவே சிவன்`` (தி.10 மந்.6) `சற்குருவே தலைவன்` என மொழிமாற்றி யுரைக்க. தன்னை அறிந்தபின் தலைவனை அறியத் தடையில்லை ஆதலின் அதனையே கூறி யொழிந்தார். ``சீவன்`` என்றது, `பசு` என்றபடி, `அவன் வசனத்தாலும், தாள் தந்தும் தத்துவாதீதத்துப் பாசம் தணிக்கும்` என்க. முதலடி ஒழிந்த ஏனை அடிகளில் ``தாள் தந்து`` என வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், `சற்குருவினது பெருமை அவனது செயலால் விளங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

பொழிப்புரை :

(சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும் ஒன்பான் கோள்களின் தீங்கு நீங்கவும் யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.

குறிப்புரை :

இப்பொருட்கேற்ற கொண்டு கூட்டினை அறிந்து கொள்க. இதனுள்ளும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. `சற்குரு` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. அஃது, ``ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வரும்`` (தொல். பொருள், பொருளியல்) முறைமையில் வந்ததாகலின் இம்மந்திரமும் சற்குருவினது பெருமை கூறியதாதல் அறிக.
இதனால், சற்குரு அருளால் வீடுபேறாகிய முடிநிலைப் பயனேயன்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கறுத்த இரும்பே கனகம தானால்
மறித்திரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொருளில், ``குருவருள் பெற்றான்`` என்றதற்கு ஏற்ப உவமையில், `இரத குளிகை சேரப்பட்டு` என்பதும் உவமையில் ``கனக மதனால்`` என்றதற்கு ஏற்ப, `சிவமாகியவன்` என்பதும் வருவித்துக் கொள்க. ``குரு அருள் பெற்றான்`` என்பதை மூன்றாம் அடியில் முதற் கண் கூட்டியுரைக்க. குறித்தல் - சற்குரு தன் மாணவனைச் சிவமாகப் பாவித்தல். ``குரு`` என்றது, அதிகாரத்தால் சற்குரு மேலதாயிற்று.
இதனால், சற்குருவின் பெருமை மேலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்
ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப்
பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.

பொழிப்புரை :

உலகப்பற்றை ஒழித்து வீடுபேற்றில் விருப்பம் கொண்டு தன்னையும், தலைவனாகிய சிவனையும் ஆசிரியர் அருள் மொழியைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுமாற்றால் தனது அறி யாமையைப் போக்கித் தன்னை அடைந்தவரது அறியாமையையும் முற்றப்போக்க வல்லவனே குற்றம் அற்ற உண்மை ஞான குரு ஆவான். அவ்வாறன்றி, அனுபவ ஞானம் இன்றி, நூலறிவு மாத்திரையால் செய்யும் ஆரவாரத்தில் மயங்கித் தானும் அதனையே செய்பவன் உண்மை ஞான குரு ஆகான்.

குறிப்புரை :

``அறிவு`` என்றது, அனுபவ ஞானத்தை. இதனுள் பன்மையாக ஓதுவன பாடம் ஆகாமை அறிக.
இதனாலும் சற்குருவின் இலக்கணம் உடன்பாட்டானும், எதிர்மறையானும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற
நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே
ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற
நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.

பொழிப்புரை :

நித்தியனாகிய சிவன் நின்மலன் ஆகலின், அவன் மலம் நீங்கித் தன்பால் மெய்யன்பு செலுத்துவோரது அறிவிலே விளங்கி நின்று அம்மெய்யன்பினை மேலும் மேலும் பெருக்க வல்லவ னாவன். ஆகையால், மலம் நீங்கிச் சுத்தான்மாவாய் நிற்கின்றவனே தன்னை அடைந்த மாணவக் கூட்டத்தாரது உண்மை நிலையை உணர்ந்து, அவர்களில் பாசப் பற்று அறும் பக்குவத்தை எய்தி னோர்க்கே ஞானத்தை உணர்த்துவன். ஆதலால் அவனே நிலைபெற்ற சற்குரு ஆவன்.

குறிப்புரை :

`சுத்தான்ம சைதன்னியத்திலே சிவன் தான் அதுவே யாய் ஆவேசித்து நிற்றல் பற்றியே குரு சிவனாகின்றான்` என்பதை உணர்த்தற் பொருட்டு அவ்வியல்பை முதல் இரண்டு அடிகளில் கூறி, பின்பு, `சுத்தன்` என எடுத்துக்கொண்டு, ``சுத்தனே நீடும் குரவன்`` என்றார். `நித்தன் நிமலன் ஆதலின் மலம் அற்ற நேயத்தே நிற்கும்; நேயத்தை நல்க வல்லோன்` எனக் கூட்டுக. அறும் பக்குவத்தை எய்திய நிலையைத் தெளிவு பற்றி, ``அற்ற`` என இறந்த காலத்தாற் கூறினார். குரவரல்லா தாரைக் `குரவர்` என மயங்கிய மாணாக்கர் பின்பு அவரின் நீங்கி உண்மைக் குரவரை யடைவர் ஆகலின் அவர் அங்ஙனம் ஆகாமைக்கு ஏதுவாய் நிற்பவனை `நீடும் குரவனை` என்றார்.
இதனால், `பெத்தத்தின் நீங்கிய சுத்தனே சிவமாய் நிற்கும் சற்குரு` என்னும் உண்மை எடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரிசன வேதி பரிசித்த எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

வேதித்தல் பற்றி இரச குளிகை `வேதி` எனப் பெயர் பெற்றது. வேதித்தல் - மாற்றுதல். பரிசனம் - பரிசித்தல்; தீண்டுதல். தீண்டிய மாத்திரத்தில் பொன்னாக மாற்றுவது பரிசன வேதி. வரிசை - மேன்மை. குவலயம் - நிலவட்டம். அஃது ஆகுபெயராய் அதன்மேல் வாழும் உயிர்களை உணர்த்திற்று. உயிர்களுள்ளும் சிறப்புப் பற்றி மக்கள் உயிரையே உணர்த்திற்று. ``குரு பரிசித்த எல்லாம்`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், `சிவோகம் பாவனையோடு பரிசித்த எல்லாம்` என்பதே கருத்து. `தீர` என்பது. `தீர்ந்து` எனத் திரிந்து நின்றது. ஆம் - உண்டாம்; கிடைக்கும்.
முன்பு, ``கறுத்த இரும்பே வகையதுபோல`` என்றது மாணவன் அடையும் பேற்றின் சிறப்பை உணர்த்தற்கும், இங்கு ``பரிசன வேதி ... பொன்னாகுமாபோல்`` என்றது சற்குருவினது திருவருள் ஆற்றலின் சிறப்பை உணர்த்தற்கும் கூறப்பட்டன ஆகலின் கூறியது கூறல் அன்றாம்.
இதனால் சற்குருவினது அருளாற்றலின் சிறப்பு உவமையில் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

பொழிப்புரை :

`யான் சிவனே` என மாணாக்கற்கு அறிவுறுத்து கின்ற அந்தக் குருவின் சந்நிதியில் அவன் சிவனே ஆன தன்மை எவ்வாற்றா லேனும் மாணாக்கனுக்கு இனிது புலப்படுமாயின், அவனது மனித உடம்பைச் சிவனது அருள் திருமேனியாகவே உணர்ந்து, தான் அவனால் சிவமாந் தன்மையைப் பெறல் வேண்டும். (பின்னர் வேறு நினைத்தல் கூடாது.) இதனை உன் உள்ளத்திற்குள்ளே ஆராய்ந்து கொள்க.

குறிப்புரை :

சிவமாம் தன்மை புலப்படுதல், அருணந்தி தேவர்க்கு மெய்கண்ட தேவர் நோக்கின மாத்திரத்தே மலச்செருக்கு முழுவதும் அற்றொழிய, உள்ளம் அனலிடை மெழுகு போல உருகப் பெற்றமை போல்வது. அதன் பின்னர் அவர் தம் ஆசிரியரை, ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருளி - மண்ணிடை`` (இருபா இருபஃது - குருவணக்கம்) வந்த சிவனாகவே உணர்ந்தமை அறிக. அதன் பின்னரும் வேறு நினைவாராயின் அவர் உய்யும் வழி இல்லை என்றபடி. ஆசிரியனது தன்மையை மாணவன் வெளிப்பட ஆராய்தல் கூடாமையின். ``உன்னிலே தேர்ந்துகொள்`` என்றார். இதனுள் `குரு` எனப் பொதுப்படக் கூறாது ``சற்குரு`` என்றது உணர்த்துவோனது சொற்பற்றி, சதுர்பெறல் - `அருள்உரு` எனப்படும் பெருமையை அடைதல். `ஊனே சதுர்பெறல் என நினைந்து தானே தனைப்பெறவேண்டும்` என்க.
இதனால், சற்குருவைத் தெளியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வரும்வழி போம்வழி மாயா வழியே
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலும் ஆமே.

பொழிப்புரை :

பிறப்பும், இறப்பும் ஆகிய மாயையின் வேறு பாடுகளே `பிறவி நெறி` எனப்படும். அதனையே கண்டு அவ்வழியே உழல்பவர் கண்டறியாத பெருவழியாக எங்கள் நந்தி பெருமான் தம்மை யடைந்தவர்க்குக் காட்டியருள்கின்ற வீட்டு நெறியை அவரைப்போலும் சற்குரு காட்டும் வழியிலே சென்று பிறரும் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

`அதனைக் கண்டவர்` என வேறு எடுத்துக் கொண்டு உரைக்க. உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால் `உண்மைக் குரவர் வழியாக யாவரும் வீடுபெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குருஎன் பவன்வேத ஆகமம் கூறும்
பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித்
தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி
வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.

பொழிப்புரை :

`குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

ஆகவே, அவன் வழியாகவே பக்குவிகள் சிவனை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.
இதனால் குருவினாலன்றி ஞானம் எய்துதல் கூடாமையால் `குருவினாலன்றி வீடடைதல் இயலாது` என்பது கூறப்பட்டது. சகல வருக்கத்தினருள் முன்னைத் தவமிகுதியால் பிரளயாகலர் விஞ்ஞான கலரோடு ஒப்போர் மிக அரியர் ஆதலின் பொதுநிலை இதுவாதலைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 10

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.

பொழிப்புரை :

சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவன் தன் மாணாக்கர்க்கு ஒரு வார்த்தையைச் சொல்வானாயின் அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச்செய்து, ஏனை எல்லாப் பொருளும் சிவ வியா பகத்தை விட்டு வேறு நில்லாமையைப் புலப்படுத்தி, சுத்தம், அசுத்தம் என்னும் இருவகைப் போகங்களும் அல்லாத வேறு ஒரு தனிப் போக மாகிய பரபோகத்தை விளைத்து நிற்கும் வார்த்தையாய் இருக்கும்.

குறிப்புரை :

`அதனால் அத்தகைய குருவை அடைந்த மாணாக்கர் ஞானத்தை எய்தி, வீடு பெறுதல் உறுதி` என்பது கருத்து. நான்காம் அடியை முதற்கண் வைத்து, கூறுதலுக்குச் செயப்படுபொருள் வருவித் துரைக்க. `ஒருவார்த்தை, மகா வாக்கியம், பெரும்பெயர்` என்பன ஒரு பொருட் சொற்கள். ``மன்ன என்னை ஓர் வார்த்தையுட்படுத்துப் - பற்றினாய்`` (தி.8 செத்திலாப் பத்து, 2) என்றதனால் அவ்வார்த்தை இத்தன்மைத்தாதல் விளங்கும். இது பற்றியே,
``சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்நலம் வந்துறுமே``
-திருக்களிற்றுப்படியார், 6
எனச் சொல்லப்பட்டது. சத்து பதி; அசத்து பாசம்; சதசத்து பசு. சித்து - சேதனப் பிரபஞ்சம்; உயிர்கள். அசித்து - அசேதனப் பிரபஞ்சம்; உயி ரல்லன. ஆணவமும், கன்மமும் உயிரோடு, ஒற்றித்து நிற்பன. சேர்ந்து நிற்றலை விளக்குதலைச் சேர்த்தலாக. உபசரித்துக் கூறினார். `சுத்தம், அசுத்தம்` என்பன ஆகுபெயர். சுத்த போகம் சுத்தப் பிர பஞ்சத்திலும், அசுத்த போகம் அசுத்தப் பிரபஞ்சத்திலும் உள்ளன வாம். சிவபோகம் இவற்றின் வேறாய், மேம்பட்டதாய், எல்லையின்றியிருத்தலை அறிக. சுகத்தை ஆக்கும் சொல்லை, ``சுகம் ஆனசொல்`` என்றதும் உபசாரம். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், குருவினால் ஞானம் எய்தி, வீடுபெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறும் நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதக ராமே.

பொழிப்புரை :

பக்குவம் இன்மையால் உயிர் பாச ஞானத்தையே உண்மை ஞானமாகக் கருதி நிற்றலால் அனாதியே அதனைப் பற்றிய ஐம்மலங்களும் அதனை விட்டு நீங்காது அதனைப் பற்றியே நிற்கும். பக்குவம் வந்தபொழுது பாச ஞானத்தை வெறுத்துப் பதியாகிய சிவனை நோக்கி நின்று அவனைப் பல முறையால் வணங்குதலால் முன் கூறிய ஐம்மலங்களும் அற்றொழியும். ஆகவே, தம்மைக் கட்டி யுள்ள பாசக் கூட்டத்தால் தாம் சிவனை விட்டு நீங்கியிருக்கும் நிலையை முத்துரிய நிலைகளால் முறையே போக்கிச் சிவனை அடைய முயல்பவரே சற்குருவின் அருள்வழி நிற்கும் சாதகர் ஆவார்.

குறிப்புரை :

`சற்குருவின் அருளைப் பெற்றும் அங்ஙனம் முய லாதவர் சாதகர் ஆகார்; அஃதாவது பயன்பெற்றவர் ஆகார்` என்பதாம். `பாச உணர்வினால் ஐம்மலம் உற்றிடும் எனவும், `நாதன் அடியில் பணிதலால் பற்றறும்` எனவும் கூட்டுக`. `நாதன் அடியில் பணிதலாகிய செயலில் நிற்றலே சாதனையில் நிற்றலாம்` என்பது உணர்த்துதற்கு அதனையும், அதற்கு மறுதலையானதையும் முதற்கண் எடுத்துக் கூறினார். உறுதல், இங்கு நீங்காது நிற்றல். மூன்று துரியம் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்பன. இவை பற்றி அடுத்த தந்திரத்தில் காண்க.
இதனால், `சற்குருவை அடைந்து அவனால் ஆட்கொள்ளப் பெற்றோர் செயற்பாலன இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.

பொழிப்புரை :

ஞானம் வரும்பொழுது ஆன்ம இயல்பு உள்ளவாறு விளங்கப்பெற்று, ஐந்து மலங்களும் சத்தியடங்கி நிற்க அவற்றைக் கடந்து மோனம் உடையராய் நிலைபெயராத வீட்டு நிலையை அடைதல் எளிதாகும். அந்நிலை சிவானந்தமே. ஞானியர் எல்லாரும் அதனைப் பெறவல்லவராவர்.

குறிப்புரை :

புலன் - ஞானம். அது முதலாகத் தொடங்கி, ``விளையாட்டே`` என முடித்துப் பின், `இறைவன் இறைவியுடன் இன்பம் எல்லாம் வல்லார்` என வேறு முடிபு செய்க. `எல்லாம்` என்னும் பொதுப்பெயர் இங்கு உயர்திணையாய் நின்றது. இறைவன் மெய்ப் பொருளும், இறைவி அதனது ஆனந்தமும் ஆதலின், `இறைவன் இறைவியுடன் ஆன இன்பம்` என்றார். `ஆன` என்பது தொகுத்த லாயிற்று. `சொல்லாது` என்பதன் ஈறு குன்றிற்று. `இப்பயனுக்குரிய ஞானத்தை அருளுபவன் சற்குருவே` என்பது கருத்து.
இதனால், மேற்கூறிய சாதகர் எய்தும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.

பொழிப்புரை :

இழிவான பிறப்பு நிலையில் அதன் இழிவு தோன் றாதவாறு மறைத்து மீள மீள அதிலே நின்ற கருவிக் கூட்டத்தின் இயல்பை உணர்த்தி, அதனின்றும் பிரித்து உயிர் தனது இயல்பினைத் தான் உணருமாறு செய்து அவ்வுணர்விலே சிறிது காலம் நின்று தாமதிக்கச் செய்தலும், பின்பு இறைவன் இயல்பை உணர்த்தி உயிருணர்வினின்றும் பிரித்து இறை உணர்விலே நிலைத்திருக்கச் செய்தலும், பின் இறையின்பத்திலே தோய்ந்து பேச்சற்றிருக்கச் செய்தலும் ஆய இவையெல்லாம் முத்தான்மாவாய் நின்ற சற்குருவின் செய்கைகளாய் விளங்கும்.

குறிப்புரை :

``இட்டது`` என்பது கருவிக் கூட்டத்தைக் குறித்த காரணப் பெயர். ஊட்டுதல், அறிவு புகட்டல். `ஊட்டி மீட்டு` என மொழி மாற்றி, ஊட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. `அத்தானத்து` எனச் சுட்டு வருவிக்க. ``தன்`` என்றது, தனது இயல் பினைக் குறித்த ஆகுபெயர். `கருவியுணர்வு` மெய்யுணர் வாகாமை எளிதில் விளங்குதல்போல, உயிருணர்வு மெய்யுணர் வாகாமை எளிதின் விளங்குவதன்றாகலின் `அதனினின்றும் நீக்குதல் தாழ்த்து நிகழும் என்றார். ஞானம் - மெய்யுணர்வு, இறையுணர்வே அது என்க. கருவியுணர்வு - பாச ஞானம். உயிருணர்வு - பசுஞானம். இறை யுணர்வு - பதி ஞானம்` கருவிக் கூட்டத்தை `இது நானன்று` எனக் கழித் தவுடன் தோன்றுவது `சித்தாகிய யானே முதற்பொருள்` என்னும் உயி ருணர்வாம் என்பதை, ``ஆன்மா இவை கீழ் நாடலாலே - காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசுஞானம்` என்பதனான் அறிக. ``மோனத்துள்`` என்பதன்பின் `இருக்க` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது என்பதனால் அறிக. ஏகாரம் பிரிநிலை. அதனால் உணர்த்தப்பட்டது. `இவை தன் செயலால் ஆவன அல்ல` என்பது.
இதனால், சற்குருவின் அருளாற்றல் திறம் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.

பொழிப்புரை :

சிவன் தனது கருணை காரணமாகச் செய்யும் முத் தொழில்களாகிய விளையாட்டு நிகழும் இடம் சடமாய மாயை யினிடத்திலாம். ஆயினும் அவ்விளையாட்டிற்குப் பயன் அறிவுடைப் பொருளாகிய உயிரை, `சித்து இவை, அசித்து இவை` என்பதை அறியச் செய்து மும்மலங்களைத் துடைத்துத் தூய்மையுறப் பண்ணி வேறு இரு தொழில்களால் மெய்ப்பொருளை அடையச் செய்தலேயாகும்.

குறிப்புரை :

முத்தொழிலுக்கு வேறாய இருதொழில்களாவன மறைத்தலும், அருளலும். எனவே முத்தொழில்களின் வழி முன்னர் மறைத்தலை அடையப் பண்ணிப் பின்பு அதன் பயனாகப் பக்குவத்தை வருவித்து அருளலை அடையப் பண்ணுதலே சடத்தின்மேல் செய்யும் முத்தொழிற்குப் பயனாதல் விளங்கும்` ``இடம் சடம்`` என்றதனால் முதற்கண் ``விளையாட்டு`` என்றது படைத்தல் முதலிய முத்தொழில் களையே குறித்தன. என்னை? ஏனை இரண்டிற்கும் இடம் சடம் ஆகாமையின். `முத்தொழில்` என்பதை முதற்கண் வெளிப்படையாகக் கூறாமை பற்றி அவையும் அடங்க இறுதியில் ``ஐங்கருமம்`` என்றா ராயினும் அதனால் குறிக்கப்பட்டன எஞ்சிய இரு தொழில்களேயாம். சத்தாகின்றவனும் அத்தனேயாயினும் அதனை வேறு போலக் கூறினார், `முடிந்த பயனான பரமுத்தி நிலை அது` என்பது உணர்த்துதற்கு.
இதனால், `இறைவன் செய்யும் தொழில்களில் முடிவானது சற் குருவாய் வந்து ஞானத்தை அருளுதலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.

பொழிப்புரை :

உலகீர், எங்கள் சிவபெருமான் `தனக்கு வேறாய் விலகி நிற்கும் பொருள் எதுவும் இல்லை` என்று அறிந்து தன்பால் செலுத் தப்படும் அன்பிலே விளங்கி நிற்பவன். அத்தகைய அன்பர்க்கு அவன் அனைத்துப் பொருளின் உண்மைகளையும் தெளிவாக உணரக் காட்டி னான். ஆதலால் நீங்கள் `அவனது வியாபகத்தைக் கடந்து அவனின் வேறாக யாதொரு பொருளும் இல்லை` என உணர்ந்து உடம்பில் உள்ள பொழுதும் அவனை எவ்வகையிலேனும் உணர்ந்து போற்றுங்கள்.

குறிப்புரை :

`உங்கட்கும் அனைத்துப் பொருள்களின் உண்மை களையும் தெளிய உணர்த்துவான்` என்பது கருத்து. ``இல்லை`` என்பதற்கு, `எப்பொருளும்` என்னும் எழுவாய் வருவிக்க. `அப்புறம் இல்லை` என்க. `பாசத்துளேயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. ``பாசம்`` என்றது உடம்பை. ஏன்? சீவன் முத்த நிலையில் கூறப்படுதலின். ``தேசம்`` என்பது இட ஆகுபெயராய் அதன்கண் உள்ள பொருள்களைக் குறித்தது.
இதனால், சற்குருவின் அருளால் பெற்ற அறிவிற்குப் பயன் இறைவனிடத்தில் அன்பு செய்தலே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

பொழிப்புரை :

மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு வடத்தைத் தூங்கவிட்டது போல உடம்பினுள்ளே ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்து ஒளிவிட்டு விளங்கும் ஏழு மண்டலங்கள் உள்ளன, அங் கெல்லாம் அவற்றுக்கு மேல் உள்ள மாற்றுயர்ந்த பொன் போல்வ தொரு நற்பொருளினின்றும் ஓர் அமுதம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. அதனையறிந்து போற்றிக்கொண்டு உண்டவர்களே பிறப்பற்றிருக் கின்றார்கள். அதனை அறியாதவரெல்லாம் விலங்கொடொத்து உணவை உண்டு வயிறு வளர்ப்பதற்காகவே வாழ்கின்றனா.

குறிப்புரை :

`அவர் பிறவிக் கடலினின்றும் ஏறமாட்டார்` என்பது கருத்து. `மலர்ந்தன` என அன்பெறாது `மலர்ந்த` என நின்ற வினை முற்றின் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``மலர்ந்த`` என்றது, `மலர்ந்தன போன்றுள்ளன` என்னும் பொருளைத் தந்தது. ஏழு மண்டலமாவன மூலாதாரம் முதலாக உச்சி ஈறாக உள்ளவை. அவை தாமரை மலர் வடிவின ஆதல் பற்றி, `மாணிக்க மாலை மலர்ந்தன போன்றுள்ளன`, என்றார். ஏழாந் தானத்திற்கு மேல் நிராதாரமான பன்னிரண்டங்குலத்தைக் கடந்த மீதானத்தில் உள்ள செம்மேனி யனாகிய சிவனை ``ஆணிப் பொன்`` என உவமையாகு பெயரால் கூறினார். ஏழாந்தானத்திற்றானே அமுதம் ஊறுவதாயினும் அஃது அருள் மயமாதல் சிவனாலேயாதல் பற்றி அவனிடத்தினின்றே அமுதம் ஊறுவதாகக் கூறினார்.
இதனால், `சற்குரு அருளால் சிவஞானத்தைப் பெற்றோர் பின் இச்சிவயோக சாதனாத்தால் நிட்டை கூடல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே
அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.

பொழிப்புரை :

சத்தோடு கூடியவழிச் சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியவழி அசத்தாம் தன்மையும் உடைத்தாதல் பற்றி, `சதசத்து` எனப் பெயர் பெற்ற உயிரை அநாதியில் சத்தோடு சேராது நீங்கச் செய்து, அசத்தோடு சேர்த்த ஆணவ மலத்தொடர்பு இப்பெத்த காலத்தில் அற்றொழிதற் பொருட்டு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இருமாயைகளைச் செயற்படுத்தி, உயிரையும் அச்செயற் பாட்டிற்கு உள்ளாக்கியவனும், பின் என்றும் திரிபின்றி ஒருபடித்தாய் நிற்பதாகிய உண்மையை உணர்த்தி, அவ்வுயிரை உய்யக் கொள்கின்ற வனும் இறைவனேயன்றிப் பிறர் இல்லை.

குறிப்புரை :

`அசற்சத்து சத்தினின்றும் நீங்கச் செய்து அசத்தோடு இசைத்திடு பாசப்பற்று` என இயைத்துக் கொள்க. `சதசத்து` என்பதே வழக்காயினும் செய்யுள் நோக்கி அதனை முன் பின்னாக மாற்றி `அசற்சத்து` என்றார். ``நீங்க`` என்பதன் பின், `செய்து` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது. ``ஈங்கு`` இசைத்திட்டபின் உளதாகிய பெத்த நிலையை. ``அணு`` என்பது இரண்டாவதன் பொருள்மேல் ``இசைத்தான்`` என்றதனோடு தொக்கது. தான், அசை. உம்மை, மாயையை அசைத்ததேயன்றி என இறந்தது தழுவி நின்றது. அறிவித்தாய் அறிவிப்போனும் என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதன் காரியத்தையும் உடன் தோற்றி நின்றது. ஏகாரம், பிரிநிலை. எனவே, `ஒன்றை அறிவித்த சற்குரு, இதற்கு முன்னுள்ளவற்றை யெல்லாம் செய்த இறைவனே` என்றபடி.
இதனால், சற்குரு சிவனே யாதல் அருளல் தொழில் அவனுடையதேயாதலை ஏனைத் தொழில்கள் நிகழுமாற்றின் வைத்து உணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

பொழிப்புரை :

சத்திநிபாதம் படிமுறையால் நாளும் நாளும் மிகுந்து வரும் வகையால் ஆணவத்தைச் சிறிது சிறிதாக முறையே நீக்கி வருதலாலும், முடிவில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் உப தேச மொழியால் அவ்வாணவங் காரணமாக இருந்து வந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தருதலாலும், பின்னும் பண்டை வாசனையால் பாச உணர்வு தோன்றுமாயின் அதனைத் தோன்றும் பொழுதே பசையின்றி உலர்ந்து கெடும்படி வாட்டி விடுதலாலும், ஆராய்ந்து சொல்லுமிடத்து எல்லா முதன்மையும் உடையவனாக உண்மை நூல்களில் கூறப்படுகின்ற இறைவனே உயிர்கட்கு வீடுபேறு கிடைக்கும்படி குருவாய் வருபவனாவான்.

குறிப்புரை :

இறைவன் தனது அருட்சத்தியால் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைப் படிப்படியாய் நீக்குதலை,
மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின்
மன்னும் அரனே மலம் துரந்து.
-சிவஞானபோதம், சூ. 11. அதி.2
எனக் கூறியதானானும் உணர்க. மாறுதல் - ஞான நெறியினின்றும் விலகல். ``ஏறு நெறியால்`` எனவும், `ஈறில் உரையால்` எனவும் கூறியவற்றிற்கு ஏற்ப, `தனது அருள் ஞானத் தீயால் வாட்டலால்` என ஏது வருவித்துக் கொள்க.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே``
-சிவப்பிரகாசம், 9-8
எனவும்
`` ... ... ... ... இடை ஏறுவினை
தோன்றில் அருளே சுடும்`` -திருவருட்பயன் - 98.
எனவும் பின்னோர் கூறுதல் காண்க. `இங்குக் கூறப்பட்டன பிறரால் இயல்வன அன்மையின், இறுதிக்கண் கூறிய செயலும் சிவன் செய்யும் செயலேயாம்` என்பது கருத்து. `வீடுறக் குருவாம்` என இயையும்.
இதனால், மேற்கூறிய பொருள் தக்கதோர் ஏதுக்களால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர்.

குறிப்புரை :

`அவரைப் பின்பற்றி ஒழுகுதலே அறிவுடைமை யாகும்` என்பது குறிப்பெச்சம். இம்மந்திரப் பொருளையே,
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள், யாவரையும்
வஞ்சித்தோம் என்றுமகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு. -நீதிநெறி விளக்கம் - 93.
எனப் பின்வந்த பெரியார் ஞானப் பகுதியில் எடுத்தருளிச் செய்தார். மெய்கண்ட தேவரும்.
தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது. -சிவஞானபோதம் சூ. 12- அதி, 4
என ஞானியரை நோக்கியே அறிவுறுத்தமை காண்க. ``கண்காணி`` என்பது நேரே நோக்கிக் காவல் புரிபவனைக் குறிக்கும் பெயர். ``ஆக`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், `ஞானியர் தாம் அறிந்து மேற்கொள்ளும் கூடா ஒழுக்கத்தை இறைவன் பொறான்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.  

பொழிப்புரை :

`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக.
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம். பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார். ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகு வோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும் அவன் நோக்கி யிருந்து அவரவர்க்குத் தக்க பயனைத் தருவான்` என்னும் குறிப்பினது. பின்னர், ``மைதாழ்ந்திலங்கு மிடறுடையோன்`` என்றமையால், முன்னர், ``செய்தான்`` என்றதும் அவனையேயாயிற்று. `நல் லொழுக்கத்தினாலே நற்பயன் பெறுதல் கூடுவதாய் இருக்க அதனை விடுத்துத் தீயொழுக்கத்தில் ஒழுகுதல் அறியாமை` என்பது கருத்து. மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது.
இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

சற்குரு அருளால் ஞானம் பெற்றவர்கட்கும் மறு பிறப்பு உண்டு` எனக் கூறுதல் அதன் பின்பும் பத்திச் செய்கைகளைத் தமக்கு விருப்பமின்றி உலகத்தார் பாராட்டுதற் பொருட்டே செய்து அதனால் புகழும் பொருளும் பெற்றுக் காலத்தைக் கழிக்கின்ற அந்தப் பித்தர்களுக்கேயாம். அவ்வாறின்றிப் புகழ் பொருள் முதலியவற்றுள் ஒன்றையும் விரும்பாது பத்திச் செய்கைகளைத் தமது அன்பானே செய்து ஒழுகுமாற்றால் மறுபிறப்பாகிய பயிருக்கு வித்தாய் அமைகின்ற ஆகாமிய வினையை வித்தைக் குற்றியுண்பார்போல வலுத்து நில்லாதபடி அழித்து, மறுபிறப்பாகிய பயிர் விளைக்கின்ற நெறியைப் பாழாய்க் கிடக்கும்படி செய்கின்ற அந்தப் பித்தர்களுக்கு ஒருஞானறும் மறுபிறப்பு உண்டாதல் இல்லை.

குறிப்புரை :

``ஞானத்திற்கு உலகம் பேய்; உலகத்திற்கு ஞானம் பேய்`` என்பது ஒரு பழமொழி. அதன்படிஞானிகளும், அஞ் ஞானிகளும் ஒருவரையொருவர் பேய் பிடியுண்டவர்களாக, அல்லது பித்தர்களாகக் கருதுதல் தெளிவு. அம்முறையில் இம்மந்திரத்தில் இருவகைப் பித்தர்களைக் குறிப்பிட்டு, ஒருவகைப் பித்தர்கட்கு மறு பிறப்பு உண்டாதலையும் மற்றொருவகைப் பித்தர்கட்கு மறுபிறப்பு உண்டாகாமையையும் வலியுறுத்தினார், ``பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி`` (தி.6 ப.6 பா.4) எனமறுபிறப்பில்லாத பித்தரை, ``பெரும் பித்தர்`` என அருளிச் செய்தமை அறிக.
``தென்பாலுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்; பெரும்பித்தன் காணேடி``
-தி.8 திருச்சாழல் 9
எனப்பட்ட அந்தப் பெரும்பித்தனுக்கு ஆட்பட்டோர் தாமும் பெரும் பித்தர் ஆதலல்லது, வேறு என் ஆவர்? `கழிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மத்தகர் - மத்தச் செயலைச் செய்பவர். மத்தம் - உன்மத்தம்; பித்து. ``அன்றோ`` என்றது தேற்றமாதல் குறித்தது. ``வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்`` என்றது ஒட்டணி.
இதனால், `ஞானம் பெற்றோர் அந்நெறியில் உறைத்து நின்று நிட்டை கூடாது, கூடாஒழுக்கம் உடையராயின் ஞானம் பெறாதவ ரோடு ஒத்தவரேயாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.  

பொழிப்புரை :

குருவருளைப் பெற்றபின்னும் இறைவனை எவ்விடத்தும் ஒருபெற்றியாகவே உணர்ந்து அவனது திருவருளில் மூழ்கி நிற்றலாகிய ஞானத்தில் ஞானமாம் அசைவிலா நிட்டை நிலையை எய்த மாட்டாதவரே அவனைக் காலம், இடம் முதலிய, சிறப்புக்கள் காரணமாக ஏகதேசமாக உணர்ந்து அவ்வாற்றான் வழிபடும் வழிபாடுகளை நிறைவேற்ற முயல்வர். மேற்கூறிய அந்த நிட்டை நிலையை எய்தினார்க்கு எவ்விடத்தும், எக்காலத்தும் இறை யருட் சிறப்பு அவரது ஞானத்தினுள்ளே இனிது விளங்கியே நிற்கும்.

குறிப்புரை :

தமிழ் மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் செய்கின்றார் ஆகலானும், அம்மக்கட்கு இடம் தென்றிசை ஆகலானும், `அவர் வட திசையைச் சிவனது திருவருட்சிறப்பு இனிது விளங்கும் திசையாகக் கொண்டு முயன்று பயன்பெறும் மரபு நிலை அவருள் நிட்டை எய்தினோர்க்கு வேண்டா` என்றார். எனவே, `நிட்டை கூடப் பெறாது, ஏனைச் சிந்தித்தல் தெளிதல்களில் நின்றோர் அதனை இகழலாகாது` என்பதும் கூறினாராயிற்று. `வேண்டா` என்றது, `அவர் அது செய்யாமை குற்றம் அன்று` என்றபடி. இஃது இம் மந்திரத்தின் கருத்துரை. இதன் சொற்பொருள் வெளிப்படை. ``ஞானம்` என்றது ஞானத்தில் ஞானத்தை. ``அறிவு`` என்றதும் அதனையே. ஒன்று - ஒருசிறப்பு. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``இல்லை`` என்றது பொதுமை நோக்காது உண்மை நோக்கிக் கூறியது. வையகம் - புண்ணியத் தலங்களும், தீர்த்தங்களும். ``அகத்தில்`` என்றது, `இருந்த இடத்தில்` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
இதனால், `ஆவன இவை, ஆகாதன இவை` என்னும் வரை யறை அவற்றை மேற்கொள்வாரது நிலை பற்றியதாதல் கூறப்பட்டது.
ஏதேனும் காலமுமாம், ஏதேனும் தேசமுமாம்;
ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும்
செய்வான் ஒருவனுமாம்; செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது.
-திருக்களிற்றுப்படியார் - 60.
எனவும்,
``தேசம் இடம் காலம்திக் (கு) ஆசனங்கள் இன்றிச்
செய்வதொன்று போற்செய்யாச் செயலதனைச் செய்து``
-சிவஞானசித்தியார், சுபக்கம், 285
எனவும் வரும் சாத்திர மொழிகளையும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

பொழிப்புரை :

காயக் குழப்பன் - உயிர்களின் உடம்புகளை அவற்றின் வினைக்கேற்ப உழல் விப்பவன். காயநன்னாடன் - உயிர்க்கு உயிராய் நிற்றலால் உயிர்களின் உடம்புகளைத் தனது இடமாக உடையவன். காயத்தினுள்ளே கமழ்தல் - ``உற்ற ஆக்கையின் உறுபொருளாய் நறுமலர் எழுதரு நாற்றம்போல்`` (தி.8 அதிசயப்பத்து, 9) உள்நோக்கி உணர்வார்க்கு நுண்ணிய இனிய பொருளாய் வெளிப்படுபவன்.
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

`கருத்து அறியார் தேடித் திரிவர்கள்` என்பதன் பின், அவர்க்கு அது வேண்டுவதே` என்னும் குறிப்பெச்சம் வரு வித்துரைக்க. அதனானே, `கருத்தறிந்தார்க்கு அது வேண்டுவதின்று என்பது போந்தது போதரவே அவர் அங்ஙனம் திரியாமை அவர்க்குக் குற்றமாகாதாயிற்று. ஆகவே, அறியதார் அறிந்தார் போன்று ஒழுகுதல் கூடா ஒழுக்கம் ஆதல் அறிக.
இதனால், `கீழ் நிலையில் உள்ளோர் மேல்நிலையில் சென்றோர் போல ஒழுகுதல் கூடாது` என விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கண்காணி யாகவே கையகத்தே எழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் றானே.

பொழிப்புரை :

உயிர்களின் கண்ணைத் தன் இடமாகக் கொண்டு அவற்றிற்கு அக்கண்போலச் சிறந்து நிற்கின்ற இறைவன் ஞானிகட்கு அவர்தம் புறக் கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான்.அகக்கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான். ஆகையால் அவர்களது செயல்திறங்களை இடைவிடாது நோக்கி அவற்றிற்கு ஏற்ற பயனை அருளுதல் அவனுக்கு இயல்பாகும்.

குறிப்புரை :

``காணி`` நான்கனுள் முன்னைய மூன்றும் பகுபதம்; இறுதி ஒன்றும் பகாப்பதம். பகுபதங்களில் வந்த இகர விகுதி மூன்றனுள் முன்னைய இரண்டிலும் செயப்படுபொருண்மையிலும், இறுதி ஒன்றும் வினைமுதற் பொருண்மையிலும் வந்தன. காணி - தனக்குரிய இடம். காணி உடையவனை, ``காணி`` என உபசரித்துக் கூறினார். `உயிர் தனது வலக்கண்ணில் சிறந்து விளங்கும்` என்றும் `அவ்விளக்கத்தில் இறைவனும் சிறந்து விளங்குவான்` என்றும் கூறும் உபநிடத வழக்குப் பற்றி(பிருகதாரணியம், அத்தியாயம் 5) இறைவனை, ``கண்காணியாகிய காதலன்`` என்றார். ``கண்ணே! கண்ணிற் கருமணியே! மணியாடுபாவாய்`` (தி.6 ப.47 பா.1) என்னும் திருத்தாண்டகமும் இங்கு நோக்கத் தக்கது. ஈற்றடியை முதலில் கூட்டியுரைக்க. புறத்து விளங்குதலை, `கையகத்தே எழும்` என்றும் அகத்து விளங்குதலை ``கருத்துள் இருந்திடும்`` என்றும் கூறினார். வழி - தீரும் வாயில். ஞானியர் தற்போதம் நிகழ்ந்து செய்யின் அவற்றை அவர் செயலாகவும், தற்போதம் இழந்து செய்யின் அவற்றைத் தன் செயலாகவும் கொண்டு அவற்றிற்கு ஏற்ற பயனைத் தருதலையே இங்கு, ``வழி செய்யும்`` என்றார்.
இதனால், `ஞானியரும் தற்போதம் நீங்காநிலையில் அற நெறிபிழைப்பாராயின் அஃது அவர்க்கு ஏனையோர்க்குப் போலவே கூடா ஒழுக்கமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை
தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்பறி யாரே.

பொழிப்புரை :

திருவருட்சத்தி பதிவு எல்லோர்க்குமன்றி ஒரு சிலர்க்கே உண்டாவதால் உண்மை நூல்களை ஓதுதலை சிலர் செய்தும், மற்றும் சிலர் சிவனைக் கிரியா முறையில் வழிபடுதலைச் செய்தும், மற்றும் சிலர் யோகம் புரிதலைச் செய்தும் மற்றும் சிலர் சிவனது உண்மை நிலையைக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல்களால் உணர் தலைச் செய்தும் நிற்கின்றனர். ஆகவே, மிகப்பலர் இவற்றுள் ஒன்ற னையும் செய்யாது சிவவேடத்தை மட்டும் புனைந்து கொண்டு திரி கின்றனர். இஃது என்ன முறைமை!

குறிப்புரை :

முதற்கண் `ஒரு சிறையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. மூன்றாம் அடியிறுதியில் `ஆகின்றனர்` என்னும் பயனிலை அவாய் நிலையான் வந்து இயைந்தது. எதிர்காலத்தாற் கூறாது. இறந்தகாலத்தாற் கூறியது அவர் அந்நிலையில் முற்றினமை குறித்தற்கு. ``என் இது`` என்ற குறிப்பால், `வேடத்தை மட்டும் புனைந்துகொண்டு திரிகின்றனர்` என்பது இசையெச்சமாய் வந் தியைந்தது. `சத்திநிபாதம் தானும் ஒரு வகையாகாது பலவகையாய் நிகழ்தலின், சிவநெறியில் நிற்போரும் பலதிறத்தராயினர். அது முறைமையே, சத்திநிபாதம் வாயாதவரும் வாய்ந்தார்போல நடித்தல் என்னமுறை` என்றபடி. `அது முறைமையன்றாகவே அதன் விளைவை அவர் பெறுவார்` என்பது கருத்தாயிற்று. அதிகாரம் சத்தி நிபாதர்களைப் பற்றியதாகவும் இடையே பிறரைப்பற்றியும் கூறினார், `சத்திநிபாதரும் தற்போதத்தால் ஏலாத செய்யின் சத்தி நிபாதர் அல்லாதவரோடு ஒருங்கொத்தவராவர்` என்பது உணர்த்துதற்கு, இதுவே இம்மந்திரத்தின் திரண்ட கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 8

காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி
காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி
காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :

முகக்கண்கள் புறப்பொருளைக் காணுதல் இயல் பாயினும் சில கண்கள் அப்பொருள்களைக் காணமாட்டாதன ஆதற்குக் காரணம் அக்கண்ணில் ஒளிக்கு மாறாகப் படலம் இருப்பதே யாகும். இனி முகக்கண் உடையார்க்கே யன்றி அக்கண் இல்லா தவர்க்கும் அகக்கண்ணாகிய அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாம் சிவ ஒளியைத் தற்போத வழியாற் காணாது அருள் வழியாகக் கண்டவரே கள்ளத்தனமாகச் செய்யும் செயல்களைச் செய்யாது ஒழிவர். அந்தச் சிவ ஒளி அகக்கண்ணாகிய ஞானக் கண் இல்லா தவர்க்குக் காணப்படாத ஒன்றேயாய் இருக்கும்.

குறிப்புரை :

`அதனால் அவர்கள் வினை விட்டொழியாது செய் பவரேயாவர்` என்பது குறிப்பெச்சம். `வறியவர்கட்கு அடகுதான் சோறு` என்றல் போல, ``காணாத கண்ணில் படலமே கண்ணொளி`` என்றார். அங்ஙனம் கூறியது, காணுதற்குரிய கண் காணாதொழிதற்குக் காரணங் கூறியவாறு. புறக்கண் பற்றிய இக் கூற்று உவமையாய், அகக்கண்ணை மறைத்து நிற்கும் மலம் காரணமாச் சிவ ஒளியைக் காண்டல் இயலாமையை விளக்கிற்று. இரண்டாம் அடியில் ``காணாதவர்`` என்றது அகக்கண்ணால் காணாதவரையேயாம். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.
இதனால், `கூடா ஒழுக்கம் உடையார் ஞானியர் ஆகார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.

பொழிப்புரை :

பித்துக் கொண்டவன் அதற்காக மருத்துவன் தரும் மருந்தால் பித்து நீங்கித் தெளிவுற்று உடம்பை முன்போலத் தறிகெட்ட நிலையில் செலுத்திக் கெடுக்காமல் இயற்கை நிலையில் செலுத்தி ஏனையோர் குழாத்தில் தானும் ஒருவனாய் ஒன்றுபடுதலைப் போலவும், படலத்தால் மறைக்கப்பட்ட கண்ணும் அவ்வாறே மருத்துவன் செய்யும் சிகிச்சையால் படலம் நீங்கித் தனது ஒளி கிடைக்கப் பெறும் அத்தன்மையைப் போலவும் அஞ்ஞானத்தால் அறிவு மயங்கி, `யான், எனது` எனச் செருக்கித் திரிந்த யான் எம் ஆசிரியாராகிய நந்திபெருமான் ஞானத்தை அருளியதனால் அறிவு தெளிந்து செருக்கொழிந்து அருள் வழியில் ஒழுகி ஏனைய அருளாளரது குழாத்தில் சேர்ந்து அவர்களில் ஒருவன் ஆயினேன்.

குறிப்புரை :

`அதனால் யான்எனது என்னும் செருக்கால் கூடா ஒழுக்கத்தை மேற்கொள்ளுதலை இலன் ஆயினேன்` என்பது குறிப் பெச்சம். `ஆகவே, இப்பேற்றினைப் பெறாதவர் கூடாவொழுக்கத்தை ஒழிதல் இயலாது` என்பது கருத்தாயிற்று, உவமையில், `பிரகிருதி உய்த்து ஒன்றுமாபோல்`` எனக் கூறினமையால், பொருளிலும் அதற்கு ஏற்புடையன கொள்ளப்பட்டன. ``பிரகிருதி`` என்றது உடம்பை; சிவஞான போதத்திலும் (சூ. 3 அதி.5), ``ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பம் சீவனம் பிரகிருதிக் கின்மையின்`` என உடம்பு ``பிரகிருதி`` என்றது காண்க.
இதனால், `தற்போதத்தால் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளு தற்குக் காரணம் திருவருளின்மையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார்
சுராமய முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.

பொழிப்புரை :

கள்ளை மிக உண்டலால் உடல் அக்கள்மயமே யாய் இருத்தலை விரும்பும் வஞ்சமனத்தவர் ஞானிகட்குச் சிவமயமாகத் திகழ்கின்ற உலகப் பகுதி எட்டினையும் அருள்மயமாக எண்ணி அடங்குதலாகிய ஞானவிழிப்பைக் கொள்ளாது அஞ் ஞானத்தில் உறங்குவோராய்த் தாம் குற்றம் சிறிதும் இல்லாத தூயராய் இருத்தல் வேண்டும் என்பதைச் சிறிதும் நினையாதே கெடுகின்றனர்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்துரைக்க. பெயர்தல் - விளங்குதல். உலகப் பகுதி ஐம்பெரும் பூதமும், `ஞாயிறு திங்கள்` என்னும் இருசுடர்களும், உயிர்களும் எட்டுப் பகுதியுள்ளே அடங்குதலின், ``எட்டும்`` என முற்றும்மை கொடுத்து ஓதினார். உடலை உயிர் இயக்குதல்போல் இவற்றை இறைவன் இயக்கி நிற்றலின் இந்த எட்டும் அவனுக்குத் திருமேனிகளாகச் சொல்லப் படுதல் பற்றி இவற்றை, ``பிரான் மயமாகப் பெயர்ந்தன`` எனவும், அதனானே அவை அருள்மயம் ஆதல் பற்றி, `பராமயம் என்றெண்ணி உணரார்`` எனவும் கூறினார். பரா - பரை; சத்தி; அருள். ``உணரார்`` என்பது முற்றெச்சம். நிராமயம் - நோய் இன்மை; அஃது இங்குக் குற்றம் இன்மையைக் குறித்தது. நிராமயம் ஆகும்படி நினைத்தலை ஒழிந்தனர்` என்க. இது ஞானிகட்கு ஆகாமைபற்றி இவ்வாறான நிலையில் நிற்பவர்கள் ஞானத்தில் விழியாது அஞ்ஞானத்தில் உறங்குபவராகவே கூறினார். கள்ளால் களிப்பெய்தினார் நன்று தீது அறியாது மயங்கிக் கெடுவர் ஆதலின், கள்ளுண்டல் மற்றும் பலகுற்றங்கள் விளைதற்கு வழியாகும் என்பது கருத்து.
இதனால், `கள்ளுண்பார் ஞானியராகாது அஞ்ஞானியரே யாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு)
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.

பொழிப்புரை :

`பலவாய் உள்ள உயிர் ஒன்றாய் உள்ள சிவத்தோடு இரண்டறக் கலத்தலே முடிநிலைப் பயன்` என்பது எல்லோர்க்கும் உடன்பாடு. ஆயினும், ஒரு பொருளாய் உள்ள பிரமமே அவிச்சை யால் பலவாய் உள்ள உயிர்களாக மயங்கி அறியப்பட்டு, அவிச்சை நீங்கியவுடன் உயிர் முன்போல ஒரு பொருளாகிய பிரமத்தோடு ஒன்றாய்விடும் எனக் கூறுகின்றவர்கள் அவிச்சைக்குக் காரணம் கூறாமையால் உயிர் பிரமமேயான நிலைநிலைத்தல் இன்றிப் பிரமமும் உயிரும் வேறு வேறாய் நிற்கும் அவிச்சை நிலையே நிலைபெறுவ தாகும். ஆகவே அவர்கட்கு இரண்டும் ஒன்றாகும் நிலை என்றும் கிட்டுவதின்றாம் இனி `ஒன்றாகிய பரமனும், பலவாகிய உயிர்களும் என்றும் வேறு வேறாக இருத்தல் அன்றி, ஒன்றாதல் இல்லை` எனக் கூறுவார்க்கு அவ்வாறு நிற்றலே பயனாவதன்றி, முதற்கண் கூறிய முடிநிலைப் பயன்கிட்டாதாம்.

குறிப்புரை :

அதனால் `அவ்வாறெல்லாம் கூறுவாருடன் எதிர்வாதம் செய்து பொழுதைப் போக்குதலும் ஞானியர்க்குக் கூடா ஒழுக்கம்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில் ``ஒன்று, இரண்டு`` என்றது, `முதலாவது, இரண்டாவது` எனவும், ஏகாரம் தேற்றம். அது ஈற்றடியிலும் சென்று இயையும். ஆகவே, இரண்டிடத்தும் ``ஒன்றிரண்டு`` என்பன பயனிலையாம் ஆகலின், அவற்றிற்கு எழுவாய் வருவித்து, `ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே என்று உரைதருவார்க்கு எலாம் ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே (அவை ஒன்றாதல் இல்லை) என்க. ``ஒன்றோடொன்றானதே`` என்பதில் முதற்கண் நின்ற ஒன்று சிவம். ஒன்றாதலுக்கு உயிர் என்னும் எழுவாயும், `ஆனதே முடிநிலைப் பயன்` என்னும் சொல்லெச்சமும் வருவித்து முதலில் கூட்டியுரைக்க.
இதனால், உண்மை ஞானியர்க்குப் பிற மதத்தவரோடு தருக்க வாதம் செய்து பொழுதை வீண்படுத்துதலும் குற்றமாதல் கூறப்பட்டது. சாத்திரங்களில் சொல்லப்படுகின்ற பிற மத மறுப்புக்கள், அம்மதம் பற்றி மயங்கும் மாணாக்கரை நோக்கி விளக்கம் தருவனவேயாகும்.

பண் :

பாடல் எண் : 12

உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும்
அயரறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.

பொழிப்புரை :

உயிர் உடம்பில் இருப்பதனால்தான் அந்த உடம்பு முழுதிலும் அறியுந்தன்மை காணப்படுகின்றது. (அத் தன்மையால் உடல் வீழ்ந்தொழியாது வாழ்ந்து செயற்படுகின்றது) உயிர் உடலை விட்டு நீங்கினால் உடலைச் செயற்படுத்துகின்ற அந்த அறிவு இல்லையாய்விடும். அறிவு இல்லையானால், வேறு எல்லா அமைப்புக்களும் நிறைந்துள்ள உடம்பு அவ்வமைப்பால் பயனின்றி வீழ்ந்து அழியும். ஆகவே `உயிர்` எனப்படுவது உடம்பிற்கு வேறாதல் தெளிவாகலின் அத்தகைய உயிரும் உடம்பும் ஒன்றி நிற்கும் பயப்பாடு வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கவும் சிலர் உடம்பையே தாமாக மயங்கிக் கூடா ஒழுக்கத்தினை மேற்கொள்கின்றனர்.

குறிப்புரை :

`இஃது ஓர் அறியாமை` என்பது குறிப்பெச்சம். ``நின்றால்`` என்றமையால், `நில்லாவிடில்` என்பது வருவிக்கப் பட்டது. அயர்தல் - செயலாற்றுதல்; விருந்தயர்தல், விழா வயர்தல் முதலியன காண்க பயிர் - `பயனைத் தருவது` என்னும் பொருட்டாய் நின்றது. ``கிடந்து`` என்னும் எச்சத்தைத் திரித்து, உம்மையை மாறிக் கூட்டி, ``கிடக்கவும்`` என உரைக்க. உள்ளம் - ஆன்மா. பாங்கு - அதன் தன்மை.
இதனால், `குருவருளால் தம்மையும், தலைவனையும் உணர்ந் தாராயினும் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளின் உணராதவரேயாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும்
உயிரை அறியின் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

பொழிப்புரை :

உயிர் உடம்பு போல அன்றி அதனின் வேறாய் இருத்தலால்தான் அந்த உடம்பு முழுதும் அறிவுத் தன்மை காணப் படுகின்றது. இதனை ஆய்ந்தறியும் அறிவே மெய்யறிவாகும். உயிர் தான் உடம்போடு சேர்ந்த அன்று முதலாக உடம்பு முழுவதையும் தனது அறிவால் அகப்படுத்தி ஆண்டு வருகின்ற அந்தச் செயலை அவ் வுயிர்க்கு உயிராய் நின்று செய்து வருகின்ற ஒரு பெரும் பொருளை அறிபவர் உலகத்தில் ஒரு சிலரே.

குறிப்புரை :

``வேறாய்`` என்பது, `வேறாக` என்பதன் திரிபு. ``அன்று`` என்பதன் பின் `முதலாக` என்பது எஞ்சி நின்றது. உணர்வை அயர்தல், அறிவைச் செயற்படுத்துதல். ஆங்கு - அவ்வாற்றால் என்றது, `அவ்வுண்மையை` என்றபடி. அறியாமை` சிறிதும் அறியாமையேயன்றி, முற்ற அறியாமையையும் குறித்தது; `முற்ற அறியாதவரே கூடா ஒழுக்கத்தினை உடையராகின்றனர் என்பது கருத்து.
இதனால், முன்னை மந்திரத்திற் கூறிய பொருள் வேறோ ராற்றான் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும்
சிலஆணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை யறிவதே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களின் தொகுதியாகிய தேரினை நிலைபெறச் செய்கின்ற அச்சாணியாய் உள்ளவன் ஒளியாய் உள்ள அனாதி முத்தனாகிய சிவனே. அவன் நிவிர்த்தி முதலிய ஆதார கலைகள் ஐந்திலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்றான். அவ் வைந்து கலைகளுக்கு உட்பட்டுள்ள இடங்களில் சிற்சிலவற்றிற்குத் தலைவராய், `தேவர்` எனப்பெயர் பெற்று விளங்கும் அனைவர்க்கும் தலைவனாய் உள்ள அந்தப் பெருமானையே ஒருவன் தன் தலைமேல் வைத்து ஒழுகுவானாயின், அவன் அவ்வாறு ஒழுகுதலே தனது இயல்பை உள்ளவாறு அறிந்துஒழுகும் ஒழுக்கமாகும்.

குறிப்புரை :

`சித்தன், முத்தன்` என்பன ஒருபொருட்சொற்கள். ஆதிமுத்தர் அனைவர்க்கும் முன்னே முத்தனாய் உண்மைபற்றி அவ்வானாதி முத்தனை, ``உத்தம சித்தன்`` என்றார். நிலம் - ஆதாரம். அஃது ஏனை ஐந்து அத்துவாக்களுக்கும் ஆதாரமாய் உள்ள கலைகளைக் குறித்தது. நேர்மை - நுண்மை. `அத்தேவர் பிரானை` எனச் சுட்டுவருவித்துக்கொள்க. வாணி, `மொழி` எனப் பொருள்தரும் வடசொல். அது மொழிவடிவாய் விளங்கும் தியானத்தைக் குறித்தது. இவ்வாறு ஒழுகுவோர் கூடாவொழுக்கத்தைக் கொள்ளார் என்பதாம்.
இதனால், `எந்நிலையிலும் கூடா ஒழுக்கம் திருவருள் நெறிக்கு ஏலாததே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

தானந்த மாமென நின்ற தனிச் சுடர்
ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.

பொழிப்புரை :

மாணவகனே, நீ `எல்லாவற்றையுங் கடந்துவிட்ட எனக்கு இனி அறம் பாவங்கள் எங்குள` எனச் செருக்கி, தேன் துளியால் வரும் இன்பம்போல மிகச்சிறியனவாய்ப் பெறப்படுகின்ற சிற்றின்பத்தைப் பெறும் செயலை அறவே ஒழி. அவ்வாறு ஒழித்தால்தான் சிவனது அளவில்லாத இன்பத்திற்கு ஏதுவாகிய அவனது அருள் முற்றக் கிடைக்கும்.

குறிப்புரை :

இது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்ட பொருள், கோன் - தலைவன்; பதி; சிவன். முன்னிரண்டடிகளில் அவனது பெருமை சொல்லப்பட்டது. அஃதாவது, உலகம் அனைத்திற்கும் தானே முடிவிடம்` என வேதம் முதலிய பல உண்மை நூல்களாலும் சொல்லப்பட நின்ற விளக்காயும் எல்லாப் பொருட்கும் பின்னும் முன்னுமாய் விளங்கும் ஒளியை யுடைய விளக்காயும் உள்ளவன் என்பது. ``ஊன்`` என்றதும் உடம்பு முதலாய உலகங்களையே, `அவற்றிற்கு அந்தமாய்ப் பின் ஆதியாகி உலகமாயினான்` என்க. `எஞ்ஞான்றும்தான் சுதந்திர அறிவனே யாவதல்லது பிறிதொன்று விளக்க விளங்கும் பரதந்திர அறிவினன் அல்லன்` என்றற்கு `சுடர்` என்பதனை இருகாற் கூறினார். ``தேன் அந்தம்`` என்பதில் ``அந்தம்`` என்றது, `விரைய முடியும் துளி` என்றபடி. அவ்விடத்தும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. இங்கு ``குணம்`` என்றது ஆனந்தத்தையே, ``உணர்ந்தார்க் குணர்வரியோன்தில்லைச் சிற்றம்பலத்தொருத்தன் - குணந்தான் வெளிப்பட்ட ... ... ... ... இக்கொடியுடை தோள்`` (தி.6 ப.1 பா.5) என்பதில் ``குணம்`` என்றது போல்,
இதனால், `எஞ்ஞான்றும் சிற்றின்பத்தில் இச்சை செய்பவர் திருவருளை முற்றப் பெறார்` என்பது கூறப்பட்டது. ``வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக மாற்றி`` (தி.8 திருக்கோவையார் , 9) என்பதிலும் இக்கருத்தே அருளிச் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முத லாகிய தத்துவம் ஆமே.

பொழிப்புரை :

``காட்சியால்`` உணரப்படும் உடம்பேயன்றிக் கருதலால் உணரப்படும் உயிரும் உடம்பினுள்ளே உண்டு என்னும் உண்மையையும், `அவ்வுயிருக்குத் தலைவராகச் சொல்லப் படுவோர் பலருள்ளும் கயிலைக் கடவுளாகிய சிவனே முழுமுதல் தலைவன்` என்னும் உண்மையையும் அறிகின்றவர் உலகத்து அரியர். இனி அவ் வுண்மையை உணர்ந்தவர்களும் அவற்றை உணர்வதற்குமுன் கொண்டிருந்த ஆசை வழிப்பட்ட செயல்களை முற்றவிடுத்தால்தான், ஓர் உயிரும் எஞ்சாதபடி ஒவ்வொன்றிற்கும் முதலாய் உள்ள மெய்ப் பொருளின் விளக்கம் நிரம்ப உண்டாகும்.

குறிப்புரை :

உயிரை, `உன்னியுணரப்படும் முதல்` என்றமையால், `ஊன் - உடம்பு - கண்டுணரப்படும் முதல்` என்றது பெறப்பட்டது. உன்முதல், வினைத்தொகை. கல் - மலை, `எனும்` என்பதை ``ஈசன்`` என்பதனோடும் கூட்டுக. படிமுறையால் உணர வேண்டுதல் பற்றி இரு தொடராக ஓதினார். ஏறிய - ஏறியன. அஃதாவது `பழகிப்போன செயல்கள்` என்றபடி. `நன்குஏறிய` என்க. `நன்கு` என்பது கடைக் குறைந்து நின்றது. `நாமமும்` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று. நாமம் - பெயர்.
இதனால், `அறிதற்கரிய உண்மைகளை அறிந்தவராகிய மெய் அறிவாளரும் கூடா ஒழுக்கம் உடையாராயின் அவ்வறிவால் பயன் எய்தார்` என்பது கூறி முடிக்கப்பட்டது.
[இம்மந்திரத்திற்குப் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற ``இந்தியம் அந்தக் கரணம் இவை`` எனத் தொடங்கும் மந்திரம் அடுத்த தந்திரம் முதல் அதிகாரத்தில் இருந்ததாகும்.]

பண் :

பாடல் எண் : 1

வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.

பொழிப்புரை :

மக்கள் தமக்கு வரையறுக்கப்பட்டு அமைந்த வாழ் நாள் இத்துணையது என்று அறியமாட்டாதவராய் அன்றாடம் உண்டு வாழ்வதேயன்றி, அடுத்துவரும் ஆண்டிற்கும் உணவின் பொருட்டான முயற்சிகளை ஓயாமற் செய்வதிலேயே மனம் அமைதியுற்று விடுகின்றனர். இஃது அவர் பிரார்த்த வினைவிளைவாகிய துன்ப நிலையே என்பதையும் அவர் சிறிதும் அறிவதில்லை. இந்தப் பொய்யான இன்பத்திலே அவர் வீழ்ந்து கெடுதல் ஓங்கி எரியும் விளக்கை இனிய உணவென்று கருதிச்சென்று அதில் வீழ்ந்து மடிகின்ற விட்டிற் பூச்சியின் செயலோடு ஒப்பதாகும். அந்தோ? இஃது அவர் ஓர் அறியாமை இருந்தவாறு!.

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். நாற்றுதல் - நாற்றங்காலில் நாற்றுவிடுதல். ஒளி, ஆகுபெயர். விட்டிலை ஒப்புமைபற்றி, `ஈயல்` என்றார். இதன் ஈற்றடியில் காணப்படும் பாட வேறுபாடுகள் சில.
இஃது யாக்கை நிலையாமையை அறியாது உழலுதல் நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 2

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

பொழிப்புரை :

நாள்கள் மிக விரைவாக வந்து வந்து போவதை அறிந்திருந்தும் பலர் அந்நாள்களை வாது செய்வதிலே கழித்து விடு கின்றனர். ஒழுக்கத்தில் நில்லாமல் வாதுசெய்வதனால் அவர் என்ன பயனை அடையப் போகின்றனர்! ஒரு பயனும் இல்லை. ஒழுக்கத்தில் நின்றும், இறைவன் திருவடியை வணங்கியும் வருவராயின் நாளடைவில் இறையன்பு தோன்றி வளர அவனை அவர்நேரே அறிந்து இன்புறுவர். அதனை அவர் அறிகின்றாரில்லையே!

குறிப்புரை :

``வாது`` எனப் பொதுப்படக் கூறினமையால் உலகியல் பற்றிய வாது, மெய்ந்நெறி பற்றிய வாது என்னும் இரண்டும் கொள்ளப் படும். அதுபின்னர் ``நீதியில் நின்று`` எனவும், ``நின்மலன் தாள் பணிந்து`` எனவும் கூறியதனாலும் விளங்கும். முன்னர் அவ் விரண்டையும் கூறினமையால், பின்னர் ``ஆதியை`` என எடுத் தோதினார். ``நின்றும், பணிந்தும்`` என்னும் வினையெச்சங்கள், ``அறியகில்லார்கள்`` என்பதில் உள்ள அறிதல் வினையோடு முடிந்தது. ஆகவே, ``அறியகில்லார்கள்`` என்பது `அறிதலைச் செய்ய கில்லார்` எனப் பொருள் தந்தது.
இது, மேற்கூறிய வினைத்துயரை அறிந்து அதனினின்றும் நீங்கும் வழியை எடுத்தோதி அதனை மனிதப் பிறப்பை எய்தியும் பெறாது கெடுகின்றவரது கேடு நோக்கி இரங்கியவாறு,
``பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்``
எனப் பின்னரும் இரங்குவார்.

பண் :

பாடல் எண் : 3

கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி
உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

நெல்லைக் கடனாகவேனும் வாங்கிக் குற்றி, குற்றிய அரிசியைக் கொண்டு ஒரு சாண் வயிற்றினுள் இருக்கும் சிறு கருவி களின் வேகத்தைத் தணிக்கும் முகத்தால் உடம்பைப் பாது காக்கின்றவர்களும் தங்களை `உயிர்` என்று சொல்லிக்கொண்டு திரி கின்றார்கள். அவ்வாறு திரிகின்றவர் தம்மைப்போன்றோர் பலரது உடம்புகளும் முடிவில், மலைச்சாரலில் பற்றி எரிகின்ற தீப்போன்ற பெரிய தீயை உடைய முருட்டணையில் ஏறிப் பின் அதினின்றும் இறங் காமல் அதனையே இடமாகக்கொண்டு கிடந்து ஒழிந்துபோதலைப் பல முறை கண்டிருந்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்துதல் இல்லை.

குறிப்புரை :

இவரை, `உயிர்` என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும் என்பது குறிப்பெச்சம். ``உயிரா`` என்பது பாடமாயின், `உயிர்த்து`, அஃதாவது `மூச்சுவிட்டுச் சீவித்து` என உரைக்க. இறுதியில், `அறியார்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது. கடனாகவும், என்னும் ஆக்கச் சொல்லும், உம்மையும் தொகுத்தலாயின. குற்று, `குறு` என்பது அடியாக வந்த வினையெச்சம். அவ்வெச்சம் இக்காலத்தில் `குற்றி` என வழங்குகின்றது. குறுதல் - உரலில் இட்டு உலக்கையால் குற்றுதல். குத்துதல் - கையை முட்டியாகப் பிடித்துக் குத்துதல். இவ் வேறுபாடு உணரத் தக்கது. கை - சிறுமை. கையர், உடலார் - என்பன இழிவு நோக்கி உயர்திணையாகக் கூறப்பட்டன.
இது ``நாடாமை, நாணின்மை, நாரின்மை, யாதொன்றும் பேணாமை`` என்னும் பேதையார் தொழில்களில் நாடாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 4

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

பொழிப்புரை :

தனக்கு உண்மையிடமாகிய திருக்கயிலையின் பாங்கர் நிலவுலகத்து மக்கள் பொருட்டாகத்தான் நிலைநிறுத்திய கல்லால மர நிழலின்கண் இருந்து சிவன் படைப்புக் காலத்திலே முனிவர் நால்வர்க்கு அவர் விரும்பிய உடனே அருளிச் செய்த முதல் மொழிகள் அம்முனிவரிடமிருந்து நல்லோரால் வழிவழியாகப் பெறப் பட்டு உலகில் வழங்கா நிற்கவும் அவற்றைக் கேளாது பழித்து ஒதுக்கத் தக்கனவாகச் சிற்றறிவுடையரால் சொல்லப்பட்டு வழங்கும் மொழிகளைக் கேட்டு நிற்போர் அக்கேள்வியின் பயனாகத் தமது வன்மையையே மெய்ம்மையாகத் துணிந்து இடர்ப்படுகின்றார்களே!. இஃதென்ன அறியாமை!.

குறிப்புரை :

`மறைகள்` எனப்படும் முதல்நூல்கள் நான்கு - என்பதும், அவற்றைப் படைப்புக்காலத்தில் சிவபிரான் கல்லால மர நிழலின்கண் எழுந்தருளியிருந்து முனிவர் நால்வருக்கு அருளிச் செய்தான் - என்பதும், அந்நான்கு மறைகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்துவன என்பதும் தேவார திருவாசகங்களாகிய திருமுறைகளில் பல இடங்களில் பரவலாகவே சொல்லப்படுகின்றன. அவற்றுள் சிவன் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நால்வர்க்கு முதல் மொழி யாகச் சிலவற்றை மொழிந்தது ஒன்று மட்டும் இம்மந்திரத்தில் சொல்லப் பட்டது. மேற் கூறிய மறைகள் பற்றிய செய்திகளுள் ஒன்றேனும் இன்று வழங்கும் இருக்கு முதலிய ஆரிய நால் வேதங்களுக்கு ஆரியத்துள் ஓரிடத்தும் சொல்லப் படாமையாலும் இவ்வேதங்கள் நான்கும் அறம் முதலிய நாற்பொருள் பற்றிக் கூறாமையாலும் திருமுறைகளில் சொல்லப்பட்ட அம்மறைகள் இருக்கு முதலிய ஆரிய வேதங்கள் அல்ல என்பது தெளிவாதலால் அம்மறைகள் தமிழால் ஆயவையாய், விளங்கியிருந்து பின்னர் மறைந்தனவாகும் என்பர் ஆராய்ச்சியாளர். நீதிநூல் செய்த, ஔவையார் ``தேவர்குறளும்`` (நல்வழி) எனத் தொடங்கும் வெண் பாவில், ``திருநான்மறை`` என்றது திருமுறை களில் மேற்காட்டிய வாறாகச் சொல்லப்படும் தமிழ் மறைகளையே - எனவும், அஃது அவ்வெண்பாவில் குறிப்பிடப்பட்ட நூல்கள் யாவும் தமிழ் நூலாகவே இருத்தல் பற்றியும் அறியப்படும் - எனவும் நிலை நாட்டியவரும் உண்டு. (திரு. கா. சுப்பிரமணியபிள்ளை, எம். ஏ., எம். எம். எல்., திருநான்மறை விளக்கம்).
பரம் - மேன்மை. அது காலத்தால் அனைத்திற்கும் முன்னாக வெளிப்பட்ட மொழிகளைக் குறித்தது. பிறமொழிகளை, ``பழி மொழி`` என்றதனால், `இம்முன் மொழிகள் புகழ்மொழி` என்பது, பெறப்பட்டது. இருக்கு முதலியஆரிய நால்வேதங்களை ஆன்றோர் முன்மொழிகளாகத் தழுவிக் கொண்டமையால், ``பழிமொழி`` என்றது அவற்றிற்கு மாறாக எழுந்த நூல்களையேயாம். அவை உலகாயத சமண பௌத்த சமய நூல்களாம். அவை முற்றிலும் வேதத்திற்கு மாறாவன. வாமம், பாசுபதம், காளாமுகம் முதலிய சமயங்களின் நூல்கள் வேதத்திற்கு ஒருபுடை மாறா வனவாம். உண்மை நூல்கள், `சிவனது ஆற்றலே மெய்ம்மை` எனக்கூற, ஏனைய நூல்கள் அவ்வாறு கூறாமையால், அவற்றின்வழி நிற்போர் உயிர்களாகிய தமது ஆற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் பற்றி, ``உரம் தன்மையாக ஒருங்கிநின்றார்களே`` என்றார். உயிர்களின் ஆற்றல் உலகியலிற்றானே சிலவற்றிற் செல்லமாட்டாமை கண் கூடாகவும் அவ் வாற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் அறியாமை என்பது கருத்து. `ஏனைய எவ்வாறாயினும், இத்தன்மையோர் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கார்` என்பதே இங்குக் கருதப்பட்டது.
இது, ``நெறியல்லா நெறிதன்னை நெறியாக``க் (தி.8 அச்சோப்பதிகம்) கொள்வாரை நோக்கி இரங்கியவாறு. இவர்
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறிய சரண் ஆதல் திண்ணம்`` -தி.4 ப.11 பா.9
என்பதை அறியார்.

பண் :

பாடல் எண் : 5

நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

அனைத்திற்கும் முதல்வனாகிய எங்கள் சிவ பெருமான் உலகியலில் நிலைத்த புகழையும், நிரம்பிய மேலான தவத்தையும், அதன் பயனாகிய உண்மை ஞானத்தையும் தன்னை யடைந்த அடியார்களுக்கே அளித்தருள்வான் ஆகையால், உலகர் அவற்றை இழத்தற்குக் காரணம் அவ்வடியவரோடு மாறுபட்டு, `அது கடவுள், இது கடவுள்` எனத் தத்தமக்கு எட்டிய பொருள்களைத் தனித்தனி கூறித் தம்முள் கலாய்த்துக்கொண்டு, ஞானம் குறை கையாலேயாம். இஃது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``நிறைதவத் துண்மையும்`` என்ற அனுவாதத் தானே நிறைதவத்தை நல்குதலும் பெறப்பட்டது. அன்றுதல் - மாறுபடுதல்; ``அன்றினார் புரமெரித்தார்க்கு`` (தி.12 பூசலார். பு.1) என்றது காண்க. சிலர் நிலம், நீர், தீ முதலிய சடப் பொருள்களையே தெய்வமாகக் கூறுதல் பற்றி, ``அது, இது`` என அஃறிணையாற் கூறினார்.
இது, மேற்கூறிய பழிமொழியாளர் மெய்ப்பொருளை யுணராது தாம்தாம் கொண்டதே கொண்டு வாதிட்டு ஒழிதலை நோக்கி இரங்கியவாறு. இவரை நோக்கியே யன்றோ,
``... ... ... ... மற்றோர் தேவர் எத்தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே`` -தி.8 அச்சப்பத்து
என்று அருளிச் செய்தார். ``சலமிலன் சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` (தி.4 ப.11 பா.6) என்று அருளிச் செய்ததும் காண்க.

பண் :

பாடல் எண் : 6

இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந்
தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

பொழிப்புரை :

மக்கள் யாவரும் பிறக்கும்பொழுதே இன்பத்தில் பிறந்து, வளரும் பொழுதும் இன்பத்திலே வளர்ந்து இன்பத்திலே திளைக்கின்றவர்களே யாயினும் சிலர் இதனையறியாது தாங்கள் துன்பத்திலே மூழ்கியிருப்பதாகக் கருதிக்கொண்டு அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியாக, `உணவு` என்றும், `உடை` என்றும் அவாவி, அவற்றைப் பெறவேண்டி அல்லற்பட்டு, அவ்வல்லலை விட்டு நீங்க நினையாமல் அதிலேயே செயலற்றிருக்கின்றார்கள்; இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதே யாகலின் அந்தப் பந்தம் பின் வீடு பெறுதற்கு வழியாகும் என்பதே உண்மையாதலின், அவ்வுண்மையை உணர்வார்க்குப் பந்தமும் இன்ப முடையதாயே அமைதல் பற்றி, `இன்பத்துளே பிறந்து, இன்பத்திலே வளர்ந்து, இன்பத்துளே திளைத்து`` எனவும், இவ்வுண்மையை உணராமையாலேதான் வாழ்க்கை துன்ப மயமாகின்றது என்பது பற்றி, ``சோறொடு கூறையென் துன்பத்துளே நின்று`` எனவும், இவ் வறி யாமையுடையார்க்கு அவர் கருத்தாலும், செயலாலும் உண்டாக்கிக் கொள்கின்ற துன்பத்தினின்றும் நீங்கும் வாயில் இல்லாமைபற்றி, ``தூங்குகின்றார்களே` என்றும் கூறினார். `அனைத்தும் திருவருட் செய லாதலின் அவை இன்பமயமேயாம். ஆயினும் அவற்றை அவ்வாறு உணராதார்க்கு அவை அனைத்தும் துன்பமேயாம்` என்பது கருத்து.
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப் பகுதி, அடி, 52
என்பது முதலிய திருமொழிகளால், வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதேயாதல் விளங்கும். மற்றும் இதுபற்றிய விளக்கங்கள் சாத்திரங்களில் பெறப்படும். இங்குக் கூறப்பட்ட இம்மக்களை நோக்கியே,
பால்ஆழி மீன் ஆளும் பான்மைத்(து) அருள் உயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து. -திருவருட்பயன், 34
எனச் சாத்திரத்தில் கூறப்பட்டது. உண்மையுணர்வார்க்கு, ``பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`` (திருவுந்தியார், 53) என்றது அறிக. துன்புறுவோர் பலராயினும் ``சிலர்`` என்றது, அவர்தம் அறியாமையது சிறுமை பற்றி வந்த இழித்தற் குறிப்பு.
இதனால், உண்மையுணர மாட்டாத அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 7

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

பொழிப்புரை :

பெறுதற்கரிய பிராணிகள் ஞானத்தையும், அது வழியாக வீட்டையும் பெற இயலாத பிராணிகள். அவை மக்களை யொழித்து ஏனைய உயிர்கள். அவைகளால் பெறுதற்கரிய பேறு இறைவன் திருவடி. ``பெறார் பேறிழந்தார்`` என்க,
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

``அரிய`` என்னும் பெயரெச்சக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது வினைமுதற்பெயர் கொண்டது. ஏனைய செயப்படு பொருட் பெயர் கொண்டன. இறைவன் திருவடிப் பேற்றை `ஏனை உயிர்கள் பெற இயலாத பேறு` என்றமையால், `மக்கட் பிறவியைப் பெற்றும் அப்பேற்றைப் பெற நினையாதவர்கள் மக்களாகாது, ஏனை உயிர்களேயாவர்` என்பது கருத்தாயிற்று.
இதனால், கிடைத்த சாதனத்தின் அருமையை அறியாது அதனை வீண்படுத்துகின்ற அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 8

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

பொழிப்புரை :

யாவரிடத்தும் நட்பையே பாராட்டும் மனமும், எச் செயலிலும் சோர்வடையாத ஊக்கமும், கிளைஞர் எல்லோரிடத்திலும் செல்லுகின்ற ஈரமும் குறைவின்றியிருத்தலால் தாமும், பிறரும் `இது மிக நல்லதாகிய பருவம்` என மகிழ்ச்சியுறுவதாகிய இளமைப் பருவத்திலே அந்நல்லவற்றை யெல்லாம் உமையொருபாகனுக்குப் பணி செய்வதில் பயன்படுத்தாது, அவனது இன்பத்தைப் பெறாமல் மறந்து, அந்நல்லனவெல்லாம் விரையக் கெடுதற்கு ஏதுவாகிய சிற்றின்பச் செயலிலே சிலர் ஈடுபட்டு ஒழிகின்றார்களே; ஈதென்ன அறியாமை!

குறிப்புரை :

`ஈதென்ன அறியாமை` என்பது குறிப்பெச்சம். `இன்புறு காலம் இளமைக் காலமே` என்பது தோன்ற முன்னரே ஊக்கத்தினை, அதனைத் தருகின்ற இளமையாக உபசரித்துக் கூறினார். ஆர்வம் - பேரன்பு. `அது நட்பைத் தரும்` என்பதனை,
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. -திருக்குறள், 74
என்பதனால் அறிக. `மக்கள் மனம் அவரது இளமைக் காலத்திலே தூயதாகவே இருந்து, நாள் செல்லச் செல்ல உலகச் சூழலில் படிந்து படிந்து மாசேறிவிடுகின்றது` என்பது பொதுவான ஓர் உலக வழக்கு. அஃதே பற்றி இளமைப் பருவத்தை ``நல்ல என்று இன்புறுகாலம்`` என்றார். ஈற்றடி முதலில், `உமாதவன்` என வரற்பாலதாகிய உகரம் தொடைநோக்கி, மூன்றாம் அடியின் இறுதிக்கண் வகையுளியாய் நின்றது. ``நின்று மறந்தொழிந்தார்களே`` என்றலே கருத்தென்க. ஈற்றடி உயிரெதுகை.
இதனால் கனியிருக்கக் காய் கவர்ந்து கெடுதல் போல்வதோர் மயக்கம் நோக்கி இறங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 9

இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு
அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய உமாதவனாகிய சிவன் தன் அடியவர் முன் புறத்தே தோன்றிக் காட்சி வழங்குமிடத்துக் காலையில் தோன்றுகின்ற இளஞாயிற்றைப் போலும் உருவுடையனாய் விளங்குவான். [அது ``காலையே போன்றிலங்கும் மேனி`` (தி.11) என்பது முதலிய திருமொழிகளான் உணரப்படும்] இனி அவர்க்கு இவ்வாறு புறத்துத் தோன்றுதல் போலவே அகத்துத் தோன்றுங்கால் உள்ளக் கமலத்தை இடமாகக்கொண்டு என்றும் இருப்பவனாய் விளங்குவான். இவ்விரண்டும் இன்றிக் கரந்து நின்று அருள்புரியுமிடத்துச் சிறிதும், பெரிதுமாய தீப்பிழம்புகளின் உள்ளிருந்து அருள்புரிவான். [இவ் வுண்மைகள் எல்லாம் அவனை அறிந்து இன்புறும் பெரியோரை அடுத்துக் கேட்பின் விளங்கும்]. அவ்வாறு கேட்டுணராது நாளை வீணாகக் கழிக்கின்றோமே; இஃது அறியாமையன்றோ!

குறிப்புரை :

பரிசு - தன்மை. அண்மையிடத்தனாய் வெளிப்படும் நிலைகளை ``இப்பரிசு`` எனவும், வெளிப்படாது சேயனாய் நிற்கும் நிலையை ``அப்பரிசு`` எனவும் கூறினார். இவ்விடங்களில் `பரிசின் கண்` என ஏழாவதும், ``மெய்ப்பரிசு`` என்பதில் இரண்டாவதும் விரிக்க, பிறரது அறியாமையைப் புலப்படுத்தக் கருதினவன் அவர் உடன்படுமாற்றால் தம்மையும் அவரோடு உளப்படுத்திக் கூறினார்.
செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு. -திருக்களிற்றுப் படியார், 61
எனப் பிறரிடத்தும் இவ்வாறு வருதல் காண்க. ``அம்மானை ஈசனை`` என்பவற்றோடு இயைய, ``உரு`` என்பதைனயும், `உருவனை` என்க.
இதனால், ஞானம் இல்லாதார் அஃது உடையாரை அடைந்து அதனைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு பெறாதிருக்கும் புறக்கணிப்பு நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 10

கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.

பொழிப்புரை :

சிலர் பெரியோரைக் குரவராக அடுத்து உண்மையைக் கேட்டுணர்ந்தாராயினும் அவர் தங்கட்கு ஒருதலைப் பட உணர்த்திய குறிக்கோளை அங்ஙனமே உணர்ந்து அடைய மாட்டார். `அடைய வேண்டும்` என நினைக்கவும் மாட்டார். குரவர் தம்மை மலம் கழுவித் தூயராகச் செய்த செயலின் அருமையை அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடவும் மாட்டார். ஆயினும் பிறர் தம்மை மதிக்கும்வண்ணம் இனிமை உண்டாகப் பேசுவர். அப்பேச்சுக்கு ஏற்றவாறு நடிக்கவும் வல்லவராவர். அவர் அடையும் பயன்தான் எதுவோ!

குறிப்புரை :

`யாதொன்றும் இல்லை` என்றபடி, ``அவன்`` என்றது ஆசிரியனை. `செய்த பரிசறிந்து பாடகில்லார்` எனக் கூட்டுக. ``நயம் பேசித்திரிவர்கள்`` ``ஆடவல்லார்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. ஆடுதல், இங்கு நாடக மாத்திரையால் நடித்தலின்மேற்று.
இதனால், பெற்றதனைப் பேணிப் பயன்கொள்ளாமையாகிய பேதைமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 11

நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமானை, `ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து அங்கு ஒளிவிட்டும் விளங்குகின்ற அணையா விளக்கு` என்றும், `உயிர்கட்கெல்லாம் உண்மையான முதற் கடவுள்` என்றும் உணர்ந்து நாள்தோறும் வழிபடுங்கள். இறக்குமளவும் வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித் திருப்பின் உங்களுடைய ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த அத்தன்மையை உடைய யானைகளாய் விடும்.

குறிப்புரை :

அஃதாவது, `அவை நும்வழிப்படாது தம் வழியிலே உங்களைக் கொண்டு சென்று அலைக்கழிக்கும்` என்பதாம். நெடுமை, காலம் பற்றி வந்தது. ``நாதனை`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. ``நம்`` என்றது உயிர்கள் அனைத்தையும் ஒரு பெற்றியவாகத் தம்மோடு உளப்படுத்தி எண்ணுதலை. ``நாதன்`` என்றது சொல்லு வாரது குறிப்பால் சிவனை உணர்த்திற்று. செம்பிரான் நேர்க்கடவுள்; உண்மைக் கடவுள். ``தொழுமின்`` என்பதை ``நாடொறும்`` என்பத னோடும் கூட்டுக. `அஞ்சும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அஞ்சும்ஆம்` என இயையும். ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஓர்`` என்றது தன்மையைக் குறித்தது.
இதனால், ஐம்பொறியால் ஆட்டுண்டலின் நின்று நீங்கும் வழியறியாது அல்லலுறுவாரை நோக்கிஅவர் மேல் எழுந்த இரக்கத்தால் அவர்க்கு அவ்வல்லலின் நின்று நீங்கும் வழி கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 12

மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை
ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.

பொழிப்புரை :

விலங்குகள், மக்கள், தேவர்கள், பறவைகள், மற்றும் இவர்கள்போல் உள்ள இனத்தவர் ஆகியோரில் ஓரினத்தவரும் சிவபிரானிடத்தில் அன்பு வைத்து, அதனை மேலும் மேலும் பெருக்கி வழிபடாமையில்லை. அதனை அறிந்தவர்கள் அப்பெருமானது திரு வருளைப் பெறுதற்குரிய பெரிய தவத்தைச் செய்து, அதன் பயனாக விளைந்த அன்பினால் சிவபெருமானைக் கண்டால் இனிய பாலைப் போலப் பருகிவிடுவார் போல்வார்; `அவன் வெளிப்படும் இடம் எது` என்று தேடிப்பல திசைகளிலும் ஓடுவர். அதனால், தாம் மண்ணில் மக்களாய்ப் பிறந்த பயனை எய்துவர்.

குறிப்புரை :

`அறிவிலார் அங்ஙனமின்றி வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவர்` (தி.5 ப.90 பா.3) என்பதாம். எழுவகைப் பிறவியுள் உயர்ந்தது, தெய்வப் பிறப்பு ஆதலின் அதனை எய்தினோரை, ``மிக்கோர்`` என்றார். வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அர்ச்சிப்பர்`` (சிவஞான சித்தியார், சூ. 2,91) என்பது சாத்திரம். இவையெல்லாம் புராணங்களில் மிகவெளிப்படை. ``ஒருவர்`` என்பதில் ஒன்று இனத்தைக் குறித்தது. `ஒருவரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அன்பு வைத்துச் செய்து` என மாற்றி உரைக்க, ``உன்னாதது`` என்றது எதிர்மறைத் தொழிற் பெயர். அதனை உணர்ந்தோர் மாதவம் செய்து பருகுதல் முதலியவற்றைச் செய்வர்` என்க. அன்பால் பிறரை இறுகத் தழுவிக் கொள்ளுதலே, பருகுதல் போல்வதாகக் கூறும் மரபினை, ``பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை - பெருகலிற் குன்றலினிது`` (திருக்குறள், 811) என்னும் திருக்குறளாலும் அறிக. `தேடி ஓடுதலும் அன்புடையாரது செயல்` என்பதனை,
``... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் னெவ்விடத்தான்,
எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன்`` -தி.8 நீத்தல் விண்ணப்பம், 45
என்று அருளிச் செய்தவாற்றானும் அறிக.
இதனால், அறிவுடையாரது செயலை விதந்து கூறும் முகத்தால் அறிவிலாரது நிலைமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 13

நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை
ஆதி அயனென் றமரர் பிரானென்று
நாதியே வைத்தது நாடுகின் றேனே

பொழிப்புரை :

அற உணர்வு இல்லாதார் பொன்னைப் பெற்றால் அதனது பயனை யறிந்து அப்பயனை எய்தாது பொன்னை வாளா வைத்திருந்தே இறந்தது போலச் சிலர் சிவனை அறிந்தும் அவனால் அடையத் தக்க பயனை அறிந்து அம்முறையில் அவனை வழிபட்டு அப்பயனைப் பெறுகின்றவர் யாரும் இல்லை. ஆயினும் யான் உலகத்தைச் செயற்படுத்துதற்கு, `படைப்புக் கடவுளாகிய பிரமன்` என்றும், மற்றும் `தேவேந்திரன்` என்றும் இப்படிப் பல தேவரைத் தக்க வாறு சிவன் நியமித்திருக்கின்ற பெருஞ்செயலை நினைந்து அவனால் அடையத்தக்க பயனை அடைகின்றேன்.

குறிப்புரை :

`பிற தேவரால் அடைவிக்க முடியாது சிவன் ஒருவனாலே அடைவிக்கப்படும் பிறவி நீக்கம். அஃது அயன் முதலிய தேவர் பலரையும் அவனே படைத்து அவரவர் அதிகாரத்தில் நியமித் திருத்தலால் விளங்கும்` என்பது பின்னிரண்டடிகளால் குறிப்பால் உணர்த்தப்பட்ட கருத்து. அப்பயனைப் பெறாதோர் சிவனை உணர்ந்தும் உணராதவரேயாதல் பற்றி அவரது செயலுக்கு நீதியிலார் பொன்பெற்ற செயலை உவமையாகக் கூறினார்.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு. -திருக்குறள், 760
என்பதனால் பொன் அறத்தையும், இன்பத்தையும் எளிதின் எய்துதற்கு வழியாதல் அறிக. ``பெற்ற பொன்போல்`` எனப்பொருளுவமம் போலக் கூறினாராயினும், `பொன் பெற்றது போல` எனத் தொழிலுவுமமாகக் கூறுதலே கருத்தென்க. ``சோதி`` என்றது அறிவை. அதனால் தொடர்தலாவது அவனால் பெறும் பயனை அறிந்து அவனைப் பற்றுதல். அறிதல் அதன் காரியமாகிய வழிபடுதலையும், நாடுதல், அதன் காரியமாகிய உண்மை யுணர்தலையும் குறித்து நின்றன. `நாடி` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.
இதனால், சிவனை உணர்ந்தவரும் அவன்பால் வீடு பேற்றினை வேண்டாது, உலகப்பயனை வேண்டி அவற்றை மட்டுமே அடைதல் இரங்கத் தக்கது என்பது கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 14

இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

பொழிப்புரை :

வண்டுகள்தாம் இன்புற வேண்டும் என்றுதான் மிகுந்த தேன் உள்ள மலர்களை அறிந்து அவற்றினுட்புகுந்து கிண்டிச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து மிகுந்த தேனைச் சேர்க்கின்றன. ஆயினும் அத்தேனில் ஒருசிறிதையும் அவை பருகுவதில்லை. அதனை எண்ணிப் பாராதவர்களாய், அவற்றினும் கீழ்மையராக, தானாகவே வாயில் ஒழுகுவதும், எவ்வுலகத்திலும் கிடைத்தற்கரியதும் ஆகிய தேனை மக்களில் ஒருவரும் அறிந்து பருகுகின்றார்களில்லை. ஆயினும் யான் அவர்களைப்போல அத்தேனை நுகராமல் விட்டு வருந்தமாட்டேன்.

குறிப்புரை :

`வண்டுகளின் பெற்றிமையை எண்ணிப்பார்ப்பார் களாயின் தாமும் அவை செய்யும் தவற்றினைச் செய்யமாட்டார்கள்` என்பார், ``வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்`` என்றார். சிவம் தானே தனது கருணையால் உயிர்களுக்குத் தன் இன்பத்தை வழங்குதல் பற்றி, ``வாய்புகுதேன்`` என்றும், அது வழங்கும் அவ்வின்பம்போலும் பிறிதின்பம் வேறின்மையின், ``அருந்தேன்`` என்றும் கூறினார் `நுகராது வருந்தேன்` என மாற்றிவைத் துரைக்க.
இதனால், சிவனால் தரப்படும் பேரின்பத்த சிறப்பைக் கூறி, அதனைப் பெறாது இழப்போரது அறியாமைக்கு இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 15

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

பொழிப்புரை :

தன்னிடத்துச் செலுத்துகின்ற அன்பு உடையாரது அன்பிலே விளங்கி நிற்பவனும், தேவர்கட்கும் தேவனுமாய் உள்ள ஒருவனே அனைத்துயிர்கட்கும் ஒப்பற்ற தலைவன். அடங்காது ஓடுகின்ற மனத்தை வருத்தியாயினும் அடக்கி அவனை நினைந்து நில்லாமையால் பலர் அவனைப் பெறத் தவறுகின்றார்கள். அதனால் அவர்களது காலங்கள் உண்மையை உணராமலே கழிந்தொழியும்.

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். முதலடியை ஈற்றில் வைத்துரைக்க. துணிவு பற்றி எதிர்காலம் ``கழிந்தன`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. அருத்தி - அன்பு. அமராபதி - தேவர் உலகம். அஃது ஆகுபெயராய்த் தேவரை உணர்த்தி நின்றது. ``உள்ளான்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் எழுவாயாய் நின்றது. ``உயிர்க்கெல்லாம்`` என்பதன் பின்னும் ``ஒருத்தன்`` என்பதைக் கூட்டி மேற்குறித்த எழுவாய்க்குப் பயனிலையாக்கி முடிக்க.
இதனால், மனத்தால் அன்புசெயற்பால பொருளில் அன்பைச் செலுத்தாது, பிறபொருளில் அன்பு செலுத்தி நிற்கும் அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 16

குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

பொழிப்புரை :

உலகீர், உங்களுக்கு இவ்வுடம்போடு கூடி வாழ்தற்கு வரையறுத்த நாள்கள் யாவும் தவம் செய்யாமையால் அவமே கழிந்தொழிந்தன. ஆகவே, உங்களை இவ்வுடம்பினின்றும் பிரித்தெடுத்துக் கொண்டு துள்ளி ஓடுபவனாகிய கூற்றுவனும் வந்துவிட்டான். இப்போது நடுங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் அமைதியுற வேண்டின் கொதிக்கின்ற கூழில் கையை யிடாமல் அகப்பையை இட்டு அள்ளி ஆற்றி உண்பதுபோலும் செயலைச் செய்தலே தக்கது.

குறிப்புரை :

``சார்வாய்க் கழிந்த`` என்றாராயினும், `கழிந்து சார் வாயிற்று` என்றலே கருத்தென்க. கழிந்து, செயவெனெச்சத் திரிபு. தெளிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. சார்வு - நெருங்குதல். ``துடுப்பிடல்`` என்பது, அதுபோலும் செயலைச் செய்தலைக் குறித்தது. கொதிக்கின்ற கூழ், கூற்றுவனால் கணக்கிட்டுக் கொள்கின்ற நாட்கள். கையிடுதல், அதனையறியாது தம் வயத்தன வாகக் கருதிக்கொண்டு அவற்றைத் தவத்தில் அல்லாமல் அவத்தில் கழித்தல். துடுப்பிடுதல் - சில நாட்களையாயினும் தவத்தில் கழித்தல். ஆம் - பொருந்தும் - ஏகாரம் ஈற்றசை.
இதனால், கூற்றத்தைக் கடத்தற்குரிய செயலில் நாளைக் கழியாமல், கூற்றத்தால் அடர்த்தற்குரிய வகையில் கழித்தலை நோக்கி இரங்கியவாறு,

பண் :

பாடல் எண் : 17

கரையரு காறாக் கழனி விளைந்தது
திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரையரு கூறிய மாதவம் நோக்கின்
நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.

பொழிப்புரை :

ஆற்றங் கரையை அடுத்து ஒரு கழனி உண்டு. அதில் உண்டாகின்ற விளைவை உடையவன் பெறுதல் அரிது ஏனெனில், ஆற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் பெருகி வந்து விளைவை அழித்துவிடும். அதனை உணர்ந்து நீவிர் விழிப்பாய் இருந்து வெள்ளம் பெருகி வருவதற்கு முன்னே விளைவிற்குப் பாதுகாப்புச் செய்து விளைவின் பயனை எய்துங்கள். [இஃது ஒட்டணி. ஆறு - வினைவிளைவின் தொடர்ச்சி. ஆற்றங்கரை - அத்தொடர்ச்சியைச் சார்ந்திருக்கின்ற உடம்பு. கழனி - உடம்பில் உள்ள உயிர்; என்றது அதன் உணர்வை, அதில் விளைவது சிவபுண்ணியத்தின் பயனாக விளங்கிய சிவஞானம், அதனை எப்பொழுதும் வந்து அழிக்க இருப்பது உயிருணர்வை வேறுபடுத்தும் வினைவிளைவு. அருகாமுன்னம் - நெருங்குதற்குமுன்னே, இவற்றை இங்ஙனம் அணிவகையால் உணர்த்திய பின்பு அப்பயனைப் பெறுமாற்றைப் பின்னிரண்டடிகளால் நேராகவே உணர்த்தினார். அஃதாவது] மலைமுழை முதலிய தனியிடங்களில் இருந்து செய்வதனால் வளர்ந்து முதிர்கின்ற தவத்தில் உணர்வு செல்லுமாயின் நரை, திரை, மூப்பு இவற்றோடுகூடி வருகின்ற நாட்கள் உங்கட்கு இல்லையாகும்.

குறிப்புரை :

`ஆகையால் அத்தவத்தில் உணர்வைச் செலுத்தி உணர்வு திரியாது நின்று சிவஞானத்தை முற்றப்பெற்றுப் பயன் அடையுங்கள்` என்பதாம். ``கரையருகு ஆறா`` என்பதனை, `ஆறுகரை அருகா` எனமாற்றி உரைக்க. இங்ஙனம் மாறி நின்றமையால், `ஆறு` என்பது ஒற்று இரட்டுதலும் அம்முப் பெறுதலும் இல்லையாயிற்று. ``தவம்`` என்றதும் சிவபுண்ணியத்தையே யாகலின், அது கேட்டற்குப் பின் விடாது நிகழும் சிந்தித்தல் தெளிதல்களாகிய ஞானத்திற் கிரியை ஞானத்தில் யோகம் இவற்றைக் குறித்து நின்றன. இந்நிலையுடையோர் சிவயோகத்தையும் உடையராவர் ஆதலின் அவர்க்கு நரை திரை மூப்புக்கள் இலவாதல் அறிக.
இதனால், ஞானத்தை எய்தினோரும் பார்க்காமல் அதனை இழத்தலை நோக்கி யிரங்கி அவர் அவ்வாறு அதனை இழவாதிருக்க அறிவுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 18

வரவறி வானை மயங்கிருள் ஞாலத்
திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி

பொழிப்புரை :

பகலும், இரவும்கலந்து நிற்கின்ற உலகத்தில் உயிர்கள் தோன்றுதல், மறைதல் ஆகியவற்றின் வழிமுறைகள் முழுவதையும் நன்குணர்ந்து அவைகளை ஏற்றபெற்றியால் செய்விக் கின்றவனும், முடிவில் அவ்வுயிர்கள் இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கும்படி வைத்து அவைகட்கு என்றும் விளக்கத்தைத் தந்தும் விளங்கியும் நிற்கின்ற, சுடர்விடுகின்ற பெருவிளக்காய் உள்ளவனும் ஆகிய சிவபெருமானை, `நுண்ணறிவாளர் திரிபின்றி உணர்கின்ற ஒப்பற்ற முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து அவனை அடைந்து உய்ய அறியாமையால் பலர்வேறு வேறு தெய்வங்களை முதற் கடவுளாகக் கருதி இடருள் அழுந்துதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``மயங்கிருள் ஞாலத்து`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்றியைந்தது. மயங்குதல் - கலத்தல். ``இருள்`` என்றதனால் `ஒளி` என்பது போந்தது. மேல் உலகம் ஒளியுலகமும், கீழ் உலகம் இருள் உலகமும், இடையுலகமும் இரண்டையும் உடைய உலகமும் ஆதலின் ``மயங்கிருள் ஞாலம்`` என்றது இடையுலகத்தை யாயிற்று ஏனை இரண்டும் போக பூமியும், இதுவே கரும பூமியும் ஆதலின் உயிர்கள் இவ்வுலகத்துத் தோன்றுதல் மறைதல்களையே குறித்தார். வரவு தோற்றமாதல் வெளிப்படை. இரவு, இருள் ஆதலின் அஃது அறிவைத் தரும் தேகத்தை விட்டு அறியாமையிற் செல்வதாகிய இறப்பைக் குறித்தது. ``எழும்`` என்ற விதப்பு, எஞ்ஞான்றும் மறைதல் இன்றி விளங்கியே நிற்றலைக் குறித்தது. அதுவே அருள்வெளி என்க. அர அறிவு - அரம் போலும் கூரிய அறிவு. ``அரம் போலும் கூர்மைய ரேனும்`` (திருக்குறள், 997) என்றதும் காண்க. முன் தெய்வம் - நினைக்கின்ற கடவுள்; வினைத்தொகை. ஒரு தெய்வம் - ஒப்பற்ற தெய்வம். ``மேல்`` என்றது `வேறு` என்னும் பொருட்டு ஆக்கம் வருவிக்கப்படும். ``வைத்து`` என்றது, அதனால் இடர்ப்படுதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. `இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், இன்றியமையாது அறியற்பாலதனை அறிந்து பயன்பெறாது மயங்கி இடர்ப்படுவாரது மயக்கம் நோக்கி இரங்குதலைச் செய்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

பொழிப்புரை :

மண்மேல் உள்ள பிறவிகள் நிலையின்றிச் சின்னாளில் அழிந்தொழிவனவேயாம். ஆதலின் அவற்றுள் சில பிறவிகளை உயர்ந்தனவாகக் கருதி அப்பிறவியில் பிறக்க வேண்டும் என விரும்புதலை விட்டுவிடுங்கள். அங்ஙனம் விட்டு வீடுபெற விரும்பும் பொழுது அதன் பொருட்டுப் பிற நெறிகளை நாடாது, நெறிகள் அனைத்திலும் மிக மேலானதாகிய சிவ நெறியை நாடுங்கள். நாடி அதனை அடைந்து இறக்குங் காலம் உட்பட எக்காலத்தும் சிவனை இடைவிடாது நினையுங்கள். அவ்வாறு நினைந்தால் அவன் நலனடைதற் பொருட்டு அதற்கான வழிகளைத் தேடி எவ்விடத்தும் விரைந்து ஓடி அலையும் நம் அலைவை நீக்கியருளுவான்.

குறிப்புரை :

புதியன புகுதல் முறையில் புகுந்த முன்னிலைப் பன்மை ஏவல் விகுதியாகிய `உம்` என்பது ``மறந்தொழி`` என்பதன் ஈற்றில் தொகுத்தலாயிற்று. உலகத்தில் அரசரும், அவரோடொத்த பெருஞ்செல்வருமாய்ப் பிறக்கும் பிறவி இனிதானது என ஏனையோர் விரும்புதல் உண்டு ஆதலின், `அஃது ஒரு மயக்க உணர்வேயாதலின் அதனை விடுத்தல் வேண்டும்` எனவும், `விடுத்தவழி வீடுபெறுதலே விரும்பப்படும் ஆதலின் அதன் பொருட்டுப் பிறவி நீங்கப் பெறாத பிறர் பலரை முதல்வராகக் கொண்ட நெறிகளை நாடாது பிறப்பில் பெருமானாகிய சிவனை முதல்வனாகக் கொண்ட சிவநெறியையே நாடுதல் வேண்டும். `அதனை நாடி அடைந்தவழியும், அந்நெறியின் முறைமைகளை இடைவிடாது கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்` எனவும் அறிவுறுத்தபடி. ஈற்றடியை இரண்டாம் அடியாகக் கூட்டி யுரைக்க. ``சிறந்த`` என்பது இயைபின்மை நீக்கிய விசேடணம். இனி பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாகக் கொண்டு, `சித்தாந்த சைவம்` என உரைத்தலுமாம். ஐந்தாம் தந்திரத்தில் நாயனார் சில சைவ வேறுபாடு குறித்தமையை நினைவுகூர்க.
இதனால், `உய்திவேண்டுவார்க்கு உரிய நெறி இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.

பொழிப்புரை :

நாங்கள், `ஒருகாலத்திலும் பிறத்தலும், இறத்தலும் இல்லாதவன், எல்லாவற்றையும் அறிந்தவன், எல்லா உயிர்களிடத்தும் காரணம் இல்லாமலே இரங்குகின்ற பேரிரக்கம் உடையவன்\' என்பன போலச் சொல்கின்ற அப்படிப் பட்ட முதல்வன் ஒருவன் இல்லை; இருக்க இயலாது\' என்று சிலர் முரணிக் கூறுவராயினும் அப்படிப்பட்ட பேரதிசயமான தன்மைகளையுடைய சிவ முதல்வன் இருக்கவே செய்கின்றான். அதனை நம்பி அவனது நல்ல நெறியை நீங்கள்நாடி அடையுங்கள். அடைந்து எந்த அளவு உங்கள் மனம் சோர்வடையாது நினைக்க வல்லதாகின்றதோ அந்த அளவு அவனை நினையுங்கள். எந்த அளவு அவன் பொருள் சேர்ந்த புகழை உணர்ந்து உரைக்க இயலுமோ; அந்த அளவு உரையுங்கள்; பயனுண்டு.

குறிப்புரை :

`பயனுண்டு\' என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். -திருக்குறள், 416
என்றாற்போலும் முறை பற்றி, \"செல்லுமளவும் செலுத்துமின் சிந்தையை\" எனவும், \"வல்லபரிசால் உரைமின்கள் வாய்மையை\" எனவும் கூறினார்.
\"வாய்மை\" என்பது ஆகுபெயராய், அதனை யுடைய புகழைக்குறித்தது.
\"பெரிதுளன்\" என்றது `திண்ணமாக உளன்\" எனவும் , \"எம் இறை\" என்றது `சிவன்\' எனவும் கூறியவாறு. \"நாடுமின்\" என்றது அதன்காரியம் தோன்ற நின்றது. இதனால், `உண்மையை ஐயுறுதலை விடுத்து இயன்ற அளவு கடைப்பிடித்து ஒழுகுக\' என உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

பொழிப்புரை :

உலகத்தார் பல சாதிகளைக் கூறுவராயினும் உண்மையில் உள்ளது ஒரு சாதியே. அது சிவ சாதி. உலகத்தார் பல கடவுளர்களைக் கூறிக் கொண்டாடுவராயினும் உண்மையில் உள்ள கடவுள் ஒருவனே. அவன் சிவன். இவற்றை நீவிர் முதலில் நன்றாக உணருங்கள். உணர்ந்தால், நமனும் உங்களை அணுகான்; வெட்கமின்றி முன்முன் பிறந்து இறந்த பிறப்புகளிலே மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையும் உங்களுக்கு இல்லையாகும். அப்பால் மேற்கூறிய உண்மைகள் உங்கள் உள்ளத்தில் அசையாது நிலைபெற, அதன்வழிப் பின்னர்ச் சிவனை இடையறாது நினைந்து உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

``ஒன்றே, ஒருவனே`` என்னும் தேற்றேகாரங்களால் அவற்றிற்கு மாறாக அறியாதார் பல கூறுதல் பெறப் பட்டது. ``ஒன்று`` எனப் பட்ட குலம் இது என்பதும். ``ஒருவன்`` எனப்பட்ட தேவன் சிவன் என்பதும் முன் முன் மந்திரங்களின் வழிவரும் தொடர்பால் இனிது விளங்கின, ``சிவ சாதி`` என்றது. சிவன், சத்தி இவரையே அப்பனும் அம்மையுமாய்க் கொண்டு பிறந்தவர்கள் என்றதாம், முதற்கண் ``நினை மின்`` என்றது அதற்கு முன்கூறிய உண்மையைக் குறித்தும், பின்னர் ``நினைந்து`` என்றது, அவ்வுண்மை உள்ளத்து நிலைபெற்றதன் பயனாக நினைக்கும் பொருளைக் குறித்தும் என்க. முன்னர் ``நமன் இல்லை`` என்றதனால், பின்னர்க் கூறிய உய்தி துன்பம் நணுகாத எல்லையில் இன்பத்தை அடைதலாம். கதி - பிறப்பு.
இதனால், `பொது மக்களது பொதுநெறியிற் செல்லாமல் விடுத்து, மேன்மக்களது மேல் நெறியிற் செல்க என உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை.
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.

பொழிப்புரை :

இனி இங்கு நின்றும் இவ்வதிகாரத்தில் மேல் `` ஒருவனே தேவனும்` என ஒருதலைப் பட வலியுறுத்தி உணர்த்தி யருளிய, `சிவபிரானுக்கு ஆட்செய்வதையே நும் கடமையாகக் கொண்டு ஒழுகிப் பயன் பெறுங்கள்` என்பதையே பல்லாற்றானும் பன்னிப் பன்னி அறிவுறுத்துகின்றார்.
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

நடுவாதல் - தலைமையிடத்தனாதல். பலபொருட்கும் தலையாதலை `நடுநாயகம்` என்பர். ``திை\\\\\\\\u2970?`` என்றது ஆகுபெயராய் அவற்றில் வாழும் உயிர்களை. ``நடுவாய் நின்றநம்பன்`` என்றதனால், ``அவனே யாவராலும் வணங்கப்படுவோன்`` என்பது குறிப்பு. காற்று, பிராணவாயு. அதுவே உடம்பின் உட்கூறுகள் பலவற்றையும் தக்கவாறு இயைவித்து இயங்கச் செய்தல் பற்றி. ``காற்றிசைக்கும் ஆக்கை`` எனவும், அக்காற்று உள்ள பொழுது மெல்லவும், நீங்கியபின் மிகவும் புலால் நாற்றம் வீசுவது உடம்பு என அதன் இழிவு தோன்ற, ``கமழ் ஆக்கை`` எனவும் கூறினார். நறுமணம் வீசுதலை, `கமழ்தல்` என்றல் மரபாகலின், இங்கு தீ நாற்றம் வீசுதலை, ``கமழ்தல்`` எனக் கூறியது இழித்தற் குறிப்பு. `இசைக்கும் ஆக்கை, கமழ் ஆக்கை`` எனத் தனித் தனி இயைக்க. ``கொண்டு`` என்றது `கருவியாகப் பற்றி` என்றபடி. `அவனைத் துதித்தால் உய்தி பெறுதல் திண்ணம்` என்பதை நிறுவ, ``கூற்றுதைத்தான்றனைக் கூறிநின்று`` என்றார்.

பண் :

பாடல் எண் : 5

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

பொழிப்புரை :

`உயிராகிய நமக்கு உடல் எக்காலத்தில் வந்து பொருந்திற்று` என்று அக்காலத்தை ஆராய்ந்து உணரின், `அதனை நமக்குப் படைத்துக் கொடுத்ததலைவன் இவன்` என்பது புலனாகும். அது புலனாகவே, அவன் மீது அன்பு செல்ல அவனது அருளைப் பெறுதல் உண்டாகும். அவ்வாற்றால் இவ்வுடம்பைக் கழித்துவிட்டு, இனி மற்றோர் உடம்பில் புகுந்து பிறத்தல் இன்றி உய்ந்துபோம் வழியை நாடுங்கள்.

குறிப்புரை :

அனைத்தும் அழிந்தொழிந்த காலத்தில் உயிர்கள் உடம்பின்றியே இருக்கப் பின்பு அவற்றிற்கு உடம்பைக் கொடுத்தவன் அனைத்தும் அழிப்பவனாகிய சிவனேயாதலின், நமக்கு உடல் வந்த காலத்தை அறிந்தால், உடல் கொடுத்த தலைவன் இவன்` என்பதும் அறியப்படும் `ஆதலின் அக்காலத்தை ஆராய்ந்துணர்ந்து அருள் பெறுக` என்றும் அவ்வாறு அருள் பெறுதலே பிறவி நீங்கும் வழி யாகலின், `பிறவாமல் போம் வழி நாடுமின்`` என்றும் கூறினார். ``அந்தம் ஆதி என்மனார் புலவர்``l என்றார் மெய்கண்டதேவர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.

பண் :

பாடல் எண் : 6

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.

பொழிப்புரை :

நீவிர் போகின்ற போக்கிலே உங்களைப் போக விட்டுத் தானும், அப்போக்கிற்குத் துணையாய் உடன் வருகின்ற முதற்பொருள் சிவனே. அவன் அவ்வாறு விடுதலும், உடன் புகுதலும் நீவிர் உண்மையை உணர்தற்கு உரிய காலம் வருவதை அறிதற்காகவே யாம். ஆகையால், வாழ்கின்ற பொழுது மட்டுமின்றிச் சாகின்ற பொழுதும் அவனை நினையுங்கள். ஏனெனில், அவனே பிறவியாகிய கடலுக்கு அப்பால் உள்ள கரையாவான்.

குறிப்புரை :

அரனை முன்னர், ``பொருள்`` என்றமையால் மீட்டும் அவ்வாறே கூறினார். ஆகின்ற போது - தக்க காலம். அது, `செவ்வி` என்றும், `பருவம்` என்றும் ``போதும்`` என்றும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். எனவே, போகின்றவாறே புகுதலும் அப்பொழுது உயிர்களின் நிலையை அறிதற் பொருட்டு என்பது போந்தது. அறிவான் - அறிதற் பொருட்டு. உளன் - உடன் இருக்கின்றான். `அவனே பிறவியாகிய கடலுக்குக் கரையாகலானும், அந்தக் கரையை அடைதல் அதனை நினையும் நினைவானேயாகலானும் அவ்வழியை இடையறாது பற்றி நிற்க, அவன் எந்த நேரத்திலும் உங்களைக் கரைசேர்ப்பன்` என்பது பற்றி, ``சாகின்ற போதும் நாடுமின்`` என்றார். ``தலைவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ஆகின்ற அப்பொருள், மேற்கூறியவாறுள்ள அப்பொருள்.

பண் :

பாடல் எண் : 7

பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.

பொழிப்புரை :

கூட்டில் சிறிது போது தங்கியிருந்து பின்பு இரையை நாடி அக்கூட்டைவிட்டுப் பறந்து போகின்ற பறவையைப் போல உடம்பில் சிறிது காலம் வாழ்ந்து பின்பு அவ்வாழ்வினும் வேறான பயனை நாடி அவ்வுடம்பை விட்டு ஓடுகின்ற உயிர், உண்மையாகவே தான் அடையத்தக்க பயனை அடைய வேண்டின் உடம்பை விட்டுப் பிரிகின்ற காலத்திலும் சிவனை மறவாமல் நினைக்கும். அவ்வாறு நினைத்தால் எல்லாச் சிறப்பினும் மேம்பட்ட சிறப்பாகிய, சிவ ஞானத்தின்வழி சிவகதியைச் சேரும் இனி அச்சிவகதிதான், ஏனையுலகங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதாகிய உலகமும், அதனையும் கடந்த நிலைமையும் ஆகும்.

குறிப்புரை :

``பறக்கின்ற ஒன்று`` என்பது அடையடுத்த உவம ஆகு பெயர். ``கூட்டைவிட்டுப் பறக்கின்ற` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ``வேண்டின்`` என்றது `உண்மையாக விரும்பினால்` என்றபடி, உண்மையாக விரும்புதலாவது தப்பாது பெறக் கருதுதல். தப்பாது பெறக்கருதினால் உள்கும்` என்றமையால், ``உள்கா தொழியின் பயனில்லை` என்றாயிற்று. ``பின்னைப் பிறப்பொன் றிலாமை, பேருலகு`` என்பவற்றைப் பின்முன்னாக மாற்றிவைத்து உரைக்க. செய்யுள் பற்றி முறை பிறழ வைக்கப் பட்டன. சிவலோகம் சுத்தமாயாகாரியம் ஆதலின், அஃது அசுத்த மாயா காரியமாகிய ஏனை உலகங்களை வியாபகமாய் நிற்றல் பற்றி, ``பேருலகு`` என்றார். ``பேருலகும்`` எனத் தொக்கு நின்ற எண்ணும்மையை விரிக்க. முன்னர்ப் பதமுத்தி, அபர முத்திகளை அடைந்து, பின்னர்ப் பரமுத்தி அடையப்படும் ஆதலின் பேருலகும், பிறப்பிலாமையும் ஆம்` என்றார். ஆம் - வாய்க்கும்.

பண் :

பாடல் எண் : 8

கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானை அவன் அடியவரோடு கூடியும், தனித்தும், பாடியும், ஆடியும் வணங்குவதுடன் உள்ளத்திலே யும் அவனது திருவடிகளை நினைந்து அடிபணியுங்கள். ஏனெனில், உள்ளத்திலே நினைந்து பணிபவர்கட்குக் கன்றையீன்ற பசு அக் கன்றைவிட்டுப் பிரியாதது போலக் கரவாது விளங்கி அருள் செய்வான்.

குறிப்புரை :

செய்யுளுக்கேற்ப ``ஆடி`` என்பதனை வேறு வைத்து ஓதினாராயினும், முன்னர் கூறிய கூடுதல் முதலியவற்றுடன் ஒருங்கு வைத்து ஓதுதலே கருத்து என்க. நிற்றல் - தனித்து நிற்றல். உள்ளே நிற்றல் - ஒருங்கிய மனத்தோடு கூடி நிற்றல். பணிதல், அறிதல்களைச் சுருக்கம் கருதி வேறு வேறு வைத்தாராயினும் அவற்றையும் ஒருங்கு வைத்து இருமுறை ஓதுதலே கருத்தாம். அறிதல், இங்கு நினைத்தல், நீடுதல், பிரியாது உடன் இருத்தலைக் குறித்தது. அறிவு - அறிதல். அது பகுதிப் பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 9

விடுகின்ற சிவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.

பொழிப்புரை :

எப்பொழுதாயினும் உடம்பை விட்டு நீங்குவதே யன்றி அதில் நிலைத்திராததாகிய உயிர் அவ்வாறு எப்பொழுதாயினும் உடம்பைக் கீழே வீழ்த்தி விட்டுத் தான்மேலே செல்கின்ற பொழுது வாழ்விற்கும், சாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவனது திருவடிகளை நினையுங்கள். நினைந்தால் உங்கள் வினைகள் கெட்டொழிவன. தான் மறைந்திருப்பினும் தனது செயல் எஞ்ஞான்றும் நிகழ்வதால் அதுபற்றி முடிவின்றி வருகின்ற புகழை உடையவனாகிய சிவன் உங்களைத் தேவர்களோடு தேவர்களாய்ச் சேர்ப்பான்.

குறிப்புரை :

``விடுகின்ற`` என்றது அதன் இயல்பு கூறிய வாறு, ``சீவனார்`` என்றது நிலைநில்லாமையைக் குறிக்கும் இழிவுக் குறிப்பு. உயிர் உடம்பை இயக்குதலும், இயக்காது விட்டு நீங்குதலும் இல்லாத நேரத்தை ``நடு`` என்றார். நாதன்றன் பாதத்தை முன்பெல்லாம் துணை யாக நினைந்து வந்தவர்கட்கே அந்த நேரத்தில் அவற்றை நினைதல் கூடும் என்க. ``கெடுகின்ற`` என்பது அன்பெறாது வந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. தெளிவு பற்றி எதிர்காலம் ``கெடுகின்ற``, ``இடுகின்றான்`` என நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது. ``இமையவர்`` என்றது அவரது தகுதிக் கேற்ப மால், அயன், இந்திரன் என்னும் இவர் உலகத்தவரையும், சிவலோகத்தவரையும் குறிக்கும். பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``ஏறுடையாய்`` என்னும் மந்திரம் மேல் `மாகேசுர பூசை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப்
பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று
துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.

பொழிப்புரை :

மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து உழல்வதாகிய அந்தத் தொழிலிற்றானே நின்று, அத்துன்பத்தை அடைதற்கு ஏதுவான வினைகளில் கிடந்து உழைத்துக் கெட்டவர்களே, கேளுங்கள். எம் இறைவனாகிய சிவன் எல்லா உயிர்கட்கும் என்றும் உறுதுணையாய் இருந்து உதவி வருதலை உணர்ந்து அவனிடத்திலே அன்பு செய்யுங்கள்; அதன் மேலும் தவத்தைச் செய்யுங்கள்; அப்பொழுது உண்மை ஞானத்தைப் பெற்ற சிறப்பை உடையவராவீர்கள். அச்சிறப்பால் நிலையான இன்பத்தை எய்துவீர்கள்.

குறிப்புரை :

``பிறவித் தொழிலே நின்று`` என்பது தொடங்கி, `இன்புறுவீர்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தவமாவன சரியை கிரியா யோகங்கள். அது சிவநெறி நூல்களால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 11

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.

பொழிப்புரை :

`யாவரும் மேற்கொள்ளத்தக்க நல்ல முறை எது` என்று அறிந்து அதனை மேற்கொள்ள விரும்புபவர்க்கு அம்முறை குறிப்பிடுகின்ற ஒப்பற்ற உண்மையான தவமும், ஒப்பற்ற அரு ளாற்றாலும், ஒப்பற்ற வீட்டு நெறியும் உள்ளன.

குறிப்புரை :

`அவற்றை அறிந்து மேற்கொள்ளுதல் அறிஞர் கடனாகும்` என்பது குறிப்பெச்சம். `அத்தவம் சிவபுண்ணியமும்` சிவன் அருளும், சிவநூல் கூறும் பொருள்களின் மெய்ம்மையுமாம். என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு, தாள் - முயற்சி. அஃது அதற்கு ஏதுவாகிய ஆற்றலைக் குறித்தது. ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 12

சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

பொழிப்புரை :

பொதுவாக, `தேவரைச் சேர்தல்` என்பது தேவரை அவரை உணரும் நெறியிற் சென்று உணர்தலே யாகும். அம்முறையில் சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்ப நிலையாகிய வீட்டையும், சாராது நீங்கினவர்கட்குத் துன்ப நிலையாகிய பிறப்பையும் கொடுப்பான். இதனை உணர்ந்து அவனிடத்தில் அன்பு மிகப் பெற்றவர்கட்கே அவன் தனது திருவடி நிழலைத் தருவான்.

குறிப்புரை :

`அதனைப்பெற முயலுங்கள்` என்பது கருத்து, முதல் இரண்டு அடிகளில் சிவனது இயல்பையும், மூன்றாம் அடியில், `அவ் வியல்பினை மக்கள் உணர்தல் வேண்டும்` என்பதையும் கூறினார். ஆதலின், அது `கூறியது கூறல்` ஆகாமை யறிக. `சிவபெருமானைச் சார்தலாவது இது` என்று உணர்த்துவார் பொதுவாகத் தேவரைச் சாருமாறு கூறினார். அங்ஙனம் கூறிய ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க.
``சலம்இலன் சங்கரன்; சார்ந்த வர்க்கலால்
நலம்இலன்; நாடொறும் நல்குவான் நலன்`` -தி.4 ப.11 பா.6
என்று அருளிச் செய்ததும் காண்க. பிறவியை ``இன்னாமை`` என்றமையால், இன்பமாவது வீடாயிற்று.

பண் :

பாடல் எண் : 13

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே.

பொழிப்புரை :

வீடாகிய முடிநிலைப் பயனாயும், அப்பயனுக்கு நேர்வாயிலாகிய ஞானமாயும், அந்த ஞானத்தை முதற்கண் கேள்வி யால் உணர்த்தும் முத்தமிழின் ஒலியாயும் உள்ள சிவபெருமானையே அறிஞர் எத்துணைக் காலமாயினும் ஒழியாது துதித்து நிற்பர். அங்ஙனம் துதிக்கின்ற துதியில் அவன் தன்னுள்ளே நெய்யைக் கொண்டிருத்தலால் தன்னைப் பருகுகின்றவர்கட்கு இனிக்கின்ற பால்போல அவன் இனிப்பான். ஆகவே அறிவில் இனிக்கின்ற அறிவாயுள்ள அவனை அறிவுடையோர் விரும்பாமல் இருப்பரோ?

குறிப்புரை :

`விரும்பவே செய்வர்` என்பதாம், ``ஈசனை`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டுக. அங்ஙனம் கூட்டவே, முத்தி முதலிய மூன்றும் ஈசனையே குறித்தனவாம். தலை - இடம். இங்கு உள்ளிடம். பால் இனித்தலைக் குறித்தற்கு, ``நெய்த்தலைப் பால்`` என விதந்தோதினார். ``அங்கு`` என்றது துதியை. ``அது`` பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம் வினாப் பொருட்டாய், அதன் எதிர்மறையைக் குறித்தது. விரும்புதலுக்கு `அறிஞர்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. அறிஞர் விரும்பாதொழியார்` என்றதனால் `நீவிரும் அதனையே செய்மின்கள்` என உலகர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகமெத் தனையென் றொருவருந் தேறார்
பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

பொழிப்புரை :

`ஒவ்வொரு பொருளையும் அதனதன் தன்மையில் நிற்குமாறு நிறுத்தி நடத்துபவனாகிய சிவபெருமான் அனைத்து உயிர்களையும் வீடு பெறுவிக்க எத்தனை யுகங்களை வரையறுத் திருக்கின்றான்` என்பதை அறிய வல்லவர் ஒருவரும் இல்லை, இந்நிலையில் அவரவரும் அச்சிவபரம் பொருளை உள்ளவாறு உணரும் நெறியால் உணர்ந்து பிறவியினின்றும் நீங்குதலையே ஒவ்வொருவரும் செய்தலே தக்கதாய் இருக்க, ஒருவரும் அதனைச் சிறிதும் செய்யாது, பிறவிக் கடலிலே குதித்து அதன் கரையைக் காணாது அமிழ்கின்றனர்.

குறிப்புரை :

`அதனை அவர்கள் விட்டொழிதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். வலியுறுத்தற் பொருட்டுப் பின்னிரண்டு அடிகளில் எதிர் மறையாற் கூறப்பட்டது. தெளிவின் பொருட்டு உடன்பாட்டால் உரைக்கப்பட்டது. `பாய்தல்` என்றது குறிப்புருவகம். ``பவமது, சிவமது`` - என்ற `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். `பவ மதிலே, சிவமதை` என்பன இடையே ஒற்று விரித்தல் பெற்றன. இம் மந்திரம் உயிரெதுகை பெற்றது.

பண் :

பாடல் எண் : 15

இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை
நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.

பொழிப்புரை :

இவ்வுலகில் தமக்கு வருகின்ற நன்மை, தீமை இரண்டினையும் அவை ஒரு நிகரனவாக நிற்க வைக்கும் காலத்தில் மாணிக்க வண்ணனாகிய சிவபெருமானை, அவனது ஞானத்திலே விளங்கும் தனியொரு பொருளாக உணர்ந்து அவ்வாறான அவனது பெருமையைச் சொல்லி நினைக்கின்ற தூய மனம் உடையவர்க்கன்றி, அவனை உணர இயலாது.

குறிப்புரை :

இன்று சில இடங்களில் `அங்கு, இங்கு` என்பன அங்கிட்டு, இங்கிட்டு, என வழங்குதல் போல் முற்காலத்தில்` இங்கு` என்பது` இங்கித்தை` எனச் சில இடங்களில் வழங்கிற்று என்பது, ``எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும்`` என்னும் சிவஞான சித்தி (சூ. 10.6)ஆட்சியாலும் விளங்கும். பின்னர், ``அகிதம்`` என வருதலால் ``வாழ்வு`` என்றது இதத்தையாயிற்று. துஞ்சுதல் - தங்குதல். முதனிலைத் தொழிற் பெயர். `ஒப்பத் தங்கிய காலத்து` என ஓதற்பாலதனை, `தங்குதல் ஒத்த காலத்து` என்றார். நன்மையையும் தீமையையும், ஒருபடித்தாக நோக்குதல் இருவினையொப்பு வந்த காலத்தன்றிக் கூடாது. இருவினை ஒப்போடு உடன் நிகழ்வன மல பரிபாகமும் சத்திநிபாதமும். இம் மூன்றும் எய்தப் பெற்றவர் இறைவனைத் துதித்தலே உண்மையுணர்ந்து துதித்தலாக ஏனையோர் துதிப்பனவெல்லாம் ``ஊரா மிலைக்கக் குருட்டா, மிலைத்த`` (தி.8 திருச்சதகம், 87)வாறாம் ஆதலின், இருவினையொப்பு வாய்த் தோர்க்கன்றித் தூய்மணி வண்ணனை ``நாட ஒண்ணாது`` என்றார். எனவே, `முன் மந்திரத்திற் கூறிவயாறு ஏனையோரைச் சொல்லி என்ன பயன் `என்றதாயிற்று. ``என - என்று சொல்லி என்க. `விஞ்ஞானத்து` என்பது, `விஞ்சானத்து` என மருவிப் பின் எதுகைக் கேற்பத் திரிந்து நின்றது. விஞ்ஞானம் - மேலான ஞானம்; பதி ஞானம். விகிர்தன் - ஏனை எல்லாப் பொருளினும் வேறுபட்ட தன்மையுடைவன். அத்தன்மை யாவது பாச, பசு, ஞானங்களால் பற்றவாராமை. ``நினை நஞ்சற்றவர்`` என்பது வினைத்தொகை. நஞ்சு - தீமை. அஃது இங்கு மனக்குற்றத்தைக் குறித்தது. `மணி` என்பது நீலமணியையேயன்றி மாணிக்கத்தையும் குறித்தல் வழக்காதல் அறிக. இதன் கண் இன எதுகை வந்தது.
முதற்றொட்டு இதுகாறும் வந்த பதினைந்து மந்திரங்களாலும் யாவர்க்கும் பொதுவாகச் சிவவழிபாட்டினையே வலியுறுத் துணர்த்தினார். இனிவரும் நான்கு மந்திரங்களால் அச்சிவன் குருவாகி வந்து தன்னைக் காட்டப் பெற்றார்க்கு அவன் அக் குருவாய் நின்றே அருள்புரிவன் ஆதலின் அவரை நோக்கி, அக் குருவழிபாட்டினை வலியுறுத்துணர்த்துகின்றார். யாவருக்கும் சிவன் பொதுவாய்த் தாபர சங்கமங்களில் நின்று அருள்புரியினும் சிறப்பாக அவன் யார் யார்க்கு எவ்வெவ்வுருவில் நின்று அருள் புரிந்தானோ அவர்க்கு அவ்வுருவே சிவவடிவாம் என்பது உணர்க. ஆளுடைய பிள்ளையார் எங்கும் சென்று சிவனைக் கண்டு வழிபட்டாராயினும் திருக்கழுமலத் திருத்தோணி வீற்றிருந்தருளும் பெருமானையே தாம் சிறப்பாகக் கொண்டு வழிபட்டமை முதலியன இதற்குச் சான்றாகும். இவ்வாறான சிறப்பு வடிவங்களே அவரவர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி என்க.

பண் :

பாடல் எண் : 16

பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி
வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

பொழிப்புரை :

தமக்கு ஞானத்தை அளித்த நல்லருள் ஆசிரியரிடத்து அவரையும் ஏனைப் பலரொடு ஒப்ப நினைக்கும் நேர்மையில்லாத மனத்தையுடைய மாணாக்கர் நன்மாணாக்கருள் தாமும் ஒருவராய் இருந்து அவர்கள் போல ஒழுகிவருவாராயின் அவரது கரவொழுக்கத்தால் நாடு பஞ்சத்தை எய்தும். அவரை அணுகச் சிவனும் அஞ்சுவான். அதனால் அவரைப் பின்பு அவன் மீளுதற்கரிய நரகத்தில் இடுவான். நேர்மையான மாணாக்கரைக் கண்ணால் கண்டவர்கட்கும் நற்பேறு உண்டாம்.

குறிப்புரை :

``ஆம்புவி`` என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. ``பஞ்சமும் ஆம்`` என்பதனை, ``வைகில்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, `ஏனைத் தீங்குகளே யன்றி` என இறந்தது தழுவி நின்றது. ஈற்றடி, இதற்கு ஏதிராக, நன் மாணாக்கர் உள்ள நாடு நலம் பல எய்துதலை உணர்த்தியவாறு எனவே, இதனால் குருவை நம்மனோரில் ஒருவராக எண்ணுதலின் குற்றமே இனிதுணர்த்தப் பட்டதாம். `செஞ்செவே நிற்போர், என்பது, ``செஞ்ச நிற்போர்`` என மருவி நின்றது. செஞ்செவே நிற்றல், மிக நேர்மையாக நிற்றல்.

பண் :

பாடல் எண் : 17

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலும் ஆமே.

பொழிப்புரை :

அளவற்ற தேவர்கள் சிவனையை நேராகச் சென்று கண்டு வழிபட்டனர். ஆயினும் அவர்கள் பின்பு துன்பம் இன்றி வாழ்ந்ததாக வரலாறில்லை. பின்பும் துன்பம் எய்தியதாகவே வரலாறுகள் உள்ளன. ஆகையால், என்றும் துன்பமில்லா வாழ்வைப் பெறும் வகையில் சிவனை வழிபடும் முறையைத் தெரிவிக்கின்ற குருவை வழிபட்டால், அவரது அருளால் அவ்வழிபாட்டில் நின்று துன்பம் இல்லாத நிலையை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மே;இந்தப் பூமி
சிவன்உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
... ... ... ... ... திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்``
-8 திருப்பள்ளியெழுச்சி, 10
எனவும்,
``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்``
-சிவஞானசித்தி. சூ. 2-92
எனவும், பிறவாறும் போந்த திருமொழிகளால், `தேவரும் நிலையான இன்ப வாழ்வை எய்துதற்கு மண்மேல் மானுடராய்ப் பிறந்து ஞான குருவால் ஆட்கொள்ளப்பெறல் வேண்டும்` என்பது தெளிவாதல் போலவே இந்நாயனாரும் தேவர், குருவை வழிபடாமல் சிவனை வழி பட்டுப் பெரும்பயன் எய்தாமையை எடுத்துக் காட்டிக் குரு வழிபாட்டினை வலியுறுத்தினார். `குரு வழிபாடே ஞான வழிபாடாம்` என்பது கருத்து.
``அங்கு`` இரண்டில் முன்னது `அத்தேவர்பால்` எனவும், பின்னது, `வழிபட்ட இடத்து` எனவும் கூறியபடி. ஆமாறு - பயனால் உயர்ந்த நிலை. ஒன்றில்லை - சிறிதும் இல்லை. பின்னர் வந்த ``ஆமாறு`` என்பதற்கு, `பயனால் உயரும் முறை` என உரைக்க. உம்மை உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 18

நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலின் கண்டு
குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.

பொழிப்புரை :

மக்களே யாகுக; அவரினும் மேற்பட்ட தேவரே யாகுக; எல்லோரும் பாசத்துட்பட்ட பசுக்களேயாய் வினைவழிவந்து நீங்கிப் போதலின், `குரு` எனப்படுபவன் அந்நிலையை உணர்ந்து பாசத்தின் நீங்கி நிற்றலால், `ஞானி` என வேறுவைத்து எண்ணப் படுதலால், அவனை, `பதி` எனவே கூறுதல் வேண்டுமன்றி, வேறு சொல்லுதற்கில்லை.

குறிப்புரை :

அஃதாவது, `பசு` என்பதற்கில்லை என்பதாம். எழுவகைப் பிறப்புக்களுள் உயர்ந்தவை மக்கட்பிறப்பும், தெய்வப் பிறப்புமே யாகலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். கூறவே, ஏனைப் பிறப்புக்களும் அவற்றுள் அடங்கின. எனவே, உயிர் வகைகளாக நாம் அறிவன யாவும் பசுக்களேயாதலால் அவை நிலை யான இன்பத்தைப் பெறவிரும்பும் தமது விருப்பம் நிறைவேறாமல் துன்பப்பட்டு உழலவே காண்கையாலும், `குரு` எனப் படுபவன், அவ்வாறன்றி, ``நாம் ஆர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் ஏமாப்போம்; பிணியறியோம்; இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை`` (தி.6 ப.98 பா.1) என்று சொல்லிச் செம்மாந்து இன்புற்றிருக்கக் காண்கையாலும், அவனை ஏனையோரில் ஒருவனாக வைத்து, ``பசு`` எனல் கூடாமையும், அவ்வியல்பு பதிக்கன்றிப் பிறர்க்கு இன்மையால் ``பதி`` என்றலே ஏற்புடையதாதலும் விளங்கும் என்றவாறு. `கழிதலின் குரு என்பவன் (அவற்றைக்) கண்டு கோதிலன் ஆனால் ஞானியாதலின் பதி என்றல் அன்றிப்பகர்வு ஒன்றும் இன்றே` என இயைக்க, `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, நீ இப்படிச் செய்வதனால், நான் உன்னுடன் இருக்க இயலாது` என்பது போல. இதனால், `குரு சிவனே` எனப்படுதற்குக் காரணத்தை விளக்கியவாறு, இதனானே ``குருவே சிவம்`` என்றல் மலம் நீங்கித் தூயராய்ச் சிவன் அவரெனத் தானென வேறாகாது அவரே தானாய் அவரிடத்துத் தயிரில் நெய்போல விளங்கி நிற்கப் பெற்ற நிறைஞானியரை நோக்கியன்றி, வேடமாத்திரத்தால் `குரு` என நிற்பாரை நோக்கியன்று என்பதும் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 19

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாகிய சிவன் தான் குருவாகி வந்து ஆட்கொள்ளப் பெற்றவர்களுள் பின்னும் நாள்தோறும் அக்குரு வடிவின்கண் அன்பு மேலும், மேலும் மிகச் செய்கின்றவரது வினைகள் சேய்மைக்கண் விலகிக் கெடும்படி, தனது இயற்கை உருவத்தில் நீண்டசடையினிடத்தே கங்கையை அடக்கி வைத்திருப்பது போல் அவற்றின் ஆற்றலை அடக்கி அவரிடத்தே விட்டு நீங்காதிருப்பான்.

குறிப்புரை :

`ஆட்கொண்டவர்`` என்றது, `ஆட்கொள்ளப் பட்டவர்`` எனச் செயப்பாட்டு வினைப்பொருள் தந்து நின்றது. ``அங்கணர் ஒலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு`` (தி.12 தடுத்தாட்கொண்ட பு.1) என்பதிற் போல, `ஆட்கொண்டவருள்` என `உள்` என்னும் உருபு விரிக்க, ``தனிநாயகன்`` என்பதை முதலிற் கொள்க, நாள்தொறும் உற மேற்கொண்டவர். நீர்போல நெகிழ்ந்துபோதலை, நீர்த்துப் போதல்` என்னும் வழக்குப் பற்றி, ``நீர்ததும்புகின்ற சடையை நீர்க்கின்ற செஞ்சடை`` என்றார் ``ஆறு`` என்பது உவம உருபாய் நின்றது. சிவனது உருவத்தை இங்கு ``நீர் உருவம்`` என்றது, பகீரதன் பொருட்டு ஆகாயத்தினின்றும் குதித்த கங்கையை உடனே தாங்கி நின்ற கோலம் நோக்கியாம். உயிர்களைத் தாக்கி மெலியச் செய்கின்ற வினைகளது ஆற்றல் கரையை மோதிக் கரைக்கின்ற கடல் அலையோடு ஒத்தல் பற்றி அவையாக உருவகம் செய்தார். ``ஆகாய கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றின் உரோமத்தின் நுனியில் புல்நுனியில் நீர்போல நிற்குமாறு அடக்கிய பெருமானுக்கு வினையின் ஆற்றலை அடக்குதல் அரிதன்று` என்றற்கு `நீள்தன் உருவத்தின் நீர்க்கின்ற செஞ்சடை மேற்கொண்டவாறு வீவித்துளான்` என்றார். வீதலுக்குப் பிற வினை வீவித்தல், வீவித்தான்` என்றே ஒழியாது ``வீவித்துளான்`` என்றார் உடம்புள்ள துணையும் பிராரத்தம் விளைந்து கொண்டே விருத்தலின் அதனை மெல்வித்தற் பொருட்டு அவன் இமைப் பொழுதும் நீங்காது உடன் நிற்றல் பற்றி, சிவன் குருவாகி வந்து அருள்செய்யும் பொழுதே சஞ்சிதம் வறுத்த விதைபோலக் கெட்டொழியினும், பிராரத்தம் உடம்போடு ஒட்டி நிகழ அந்நிகழ்ச்சி உடல் ஊழாய் நிற்றல் அல்லது வரும் பிறவிக்கு வித்தாக ஆகாமியத்தைத் தோற்றுவியாது கழிதற் பொருட்டுத் தன்னால் ஆட்கொள்ளபட்டவருள் தொடர்ந்து அன்பு செய்பவரிடம் விளங்கி முன் நிற்பான் என்பது உணர்க. இங்ஙன மாகவே, சிவன் குருவாகி வந்து ஆட்கொள்ளப்பட்ட பின்பும் குருவையே சிவனாகக் கண்டு அன்புசெய்து வழிபடுவார்க்கன்றி ஏனையோர்க்கு முன்போல ஆகாமியவினை விளைந்து அது சஞ்சிதம் ஆக, மீட்டும் பிறவியே விளையும் என்பது விளங்கும். இதுபற்றியே,
தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது.
என்றார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம், இறுதி வெண்பா). பிழையலது - தப்பமுடியாத குற்றம்; உய்தியில் குற்றம். பிழைத்தல் - தப்புதல் இதனால், ``குருவான் ஆட்கொள்ளப்பட்டார் அதன்பின் குருவையே சிவமாகத் தேறி வழிபட்டு வருதல் இன்றியமையாதது` என்பதும் ``அங்ஙனம் வழிபடாதவழிப் பழையே நிலையே ஆய்விடும்`` என்பதும் கூறப்பட்டன.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியாது அத்திசை
என்பு நைந் துருக, நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள,
நன்புலன் ஒன்றி, ``நாத`` என் றரற்றி

உரைதடு மாறி, உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்,
கண்களி கூர, நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல் - 75-87
என்னும் திருமொழியும் இங்குக் கூறிய வழிபாட்டு அநுபவ வழி எழுந்தது என்க.
குருலிங்க சங்கமம்` என்னும் மூன்றன் வழிபாடு ஞானத்தைப் பெறுமுன்னர் அதற்குச் சாதனமாயும் பெற்றபின்னர் அதனைநிலை பெறுத்துவனவாயும் இருத்தலின் அவையே யாவராலும் செயற்பாலன என்பதை வலியுறுத்தியவர், அவற்றுள் குருவழிபாடு ஞானியர்க்குத் தலையாதலை எடுத்துக் கூறி, இத்தந்திரத்தை முடித்தார். இதனுள் இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.

பண் :

பாடல் எண் : 1

காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

பொழிப்புரை :

ஒரு பையில் பல பண்டங்களை அடைத்து வைத்தல் போல, யாவராலும் நன்கு அறியப்படும் உடம்பாகிய ஒரு பை ஒவ்வோர் உயிர்க்கும் கிடைத்திருத்தல் கண்கூடாக, அதன்கண் அடைக்கப்பட்டுள்ள பண்டங்களோ பல உள்ளன. (அவற்றை ஆராய் கின்றார் ஒருவரும் இல்லை) இனி, அந்தப் பை மாயம்போலக் கட்புல னாகி, விரைவில் மறைவதாகும். என்றாலும், அந்தப் பைக்குள்ளே மற்றொரு பையும் உண்டு; (அதனை அறிந்தோர் சிலரே.) யாவரும் அறிந்த அந்தப் பைக்குள் அதற்கு வேறாகிய ஒன்று உள்ளதோ, இல்லதோ` என ஐயுறுமாறு ஒளிந்து நிற்கின்ற உயிர் அதனை விட்டு வெளியே போய்விடுமானால், தோன்றியழிவதாகிய அந்த உடம்பு மண்ணோடு மண்ணாய்ப்போக, அதனை நிலையானதாகக் கருதி, அதனைத் தமக்கு உறவாகத் தெளிந்திருந்தோர் திகைப்புற்று நிற்கும் நிலை இரங்கத்தக்கதாகும்.

குறிப்புரை :

`காயப்பை` என்றது உருவகம், சரக்காவன. என்பு, தசை, நரம்பு, குருதி, கோழை முதலியனவற்றை, `சரக்கு` எனவே கூறியது சிறப்புருவகம். `காயப்பை ஒன்று` என்பதன் பின்னும் `உண்டு` என்பது எஞ்சி நின்று. ஈரிடத்தும் `மாய் அப்பை` எனப் பிரிக்க மாய்தல் கூறவே, தோன்றுதல் தானே பெறப்பட்டது. `மற்றும் ஓர் பை உண்டு` என்பதை உணர்த்தப்புக்கவர், `முற்கூறிய அந்தப் பையே அன்றி` என்றற்கு `மாய் அப்பை ஒன்றுண்டு` என அதனையே மீளச்சுட்டிக் கூறினார். முதற்கண் கூறிய பையை `மாயும் பை` என்றதனால், மற்றும் ஒன்றாகக் குறிக்கப்பட்ட பை, `மாயாப் பை` என்பது பெறப்பட்டது. மாயும் பை தூல உடம்பும், மாயாப் பை சூக்கும உடம்புமாம் என்க. உயிர்கட்கு அவ்வப்பொழுது வினைக்கீடாக விரைவில் மாறி மாறி வருவது தூலவுடம்பேயாதலும், நுண்ணுடம்பு அவ்வாறன்றி, உயிர் வீடுபெறும் வரையிலாவது, அல்லது உலகம் அழியும் வரையிலாவது உயிர்களோடு நீங்காது நிற்பது ஆதலும் அறிக. இங்ஙனமாகவே, பஞ்ச பேதங்களுள் `தூலம, சூக்குமம்` என்னும் இரு பேதங்களைக் குறிப்பிட்டு அவற்றது இயல்பு தொகுத்துக் கூறியவாறாயிற்று. என்பு, நரம்பு, குருதி முதலியவற்றின் கூட்டமே தூல தேகமாயினும், அவை அங்ஙனம் வெளித் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றித் தூல தேகத்தைப் பையாகவும், என்பு முதலியவற்றை அதனுள் அடைக்கப்பட்ட சரக்காவும் உருவகம் செய்தார். தூலதேகத்தைப் `பை` என்றமையால் அதனோடு ஒப்ப ஏனைய தேகங்களையும் `பை` என்றார். `ஆக` என்பது ஈறு குறைந்து நின்றது. `மற்றும் ஓர் பை உண்டு` என அறிவுறுத்தமையால், `உடம்பாவது கண் கூடாய்த் தோன்றி யழிகின்ற அஃது ஒன்றுமே போலும்` எனவும், `அது மாய்ந்தபொழுது உயிர் தனித்து நிற்பதுபோலும்` எனவும் மயங்காது, `தூல உடம்பு நீங்கிய பொழுது உயிர் சூக்கும உடம்பளவாய் நிற்கும்` எனவும், தூல உடம்பு உள்ளபொழுது அதனை உயிர் சூக்கும உடம்பு வழியாக இயக்கும்` எனவும் உணர்க - என உணர்த்தினமை காண்க. . ஈற்றில், `இரங்கத் தக்கது` என்பது அவாய் நிலையாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 2

அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்காக அமைத்துக் கொடுத்த, `தூலம், சூக்குமம்` என்னும் இருவகை உடம்புகளுள் (தூலஉடம்பின் இயல்பு பற்றி மேலே கூறினோம்) இனி அதுபோலப் புலால் நாற்றம் நாறுதல் இன்றியே உயிர்க்குப் பயன்படுகின்ற சூக்கும தேகத்தைப் பற்றிக் கூறுமிடத்துச் சத்தம் முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், அந்தக் கரண நான்கனுள் சித்தம் ஒழிந்த ஏனை மூன்றும் ஆக எட்டும் கூடிய தாகும். அதனால் அது, `புரியட்டகாயம்` என்றும் சொல்லப்படும்.

குறிப்புரை :

ஐவகை உடம்புகளில் மேற்கூறிய இரண்டு உடம்பின் இயல்பினையே கூறப் புகுந்தமை பற்றி, `அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்` என்றாரல்லது, `ஏனை உடம்புகள் அத்தனால் அமைக்கப் பட்டன அல்ல` என்றிலர் ஆகலின், அனைதுடம்புகளும் அத்தனால் அமைக்கப்பட்டன ஆதற்குத் தடையின்மை அறிக. `அனைத்தையும் ஆக்கி, அழிக்கும் அத்தன் ஒருவன் உளன்` என்பதை மேலெல்லாம் பல்லாற்றானும் தெளிவித்துப் போந்தமையால், இங்கு அதனை நினைப்பிக்கும் அளவில் `அத்தன் அமைத்த உடல்` என அனு வாதமாகக் கூறினார். வகையை `கூறு` என்றார். சத்தம் முதலிய ஐந்தும் சிறப்பு நிலை எய்தியவழியே செவி முதலிய பொறிகட்குப் புலனாகும். அப்பொழுது அவை `புலன்` என்றும், `விடயம்` என்றும் சொல்லப் பட்டு, ஆகாயம் முதலிய பூதங்களின் குணமாய் நிற்கும். அப்பொழுது அவை, தாத்துவிகங்களாம். அவை சிறப்புநிலை எய்தாது பொதுமை யில் நிற்கும்பொழுது பொறிகட்குப் புலனாகாது, புலனாகாது, ஆகாயம் முதலிய பூதங்கள் தோன்றுதற்குக் காரணமாய் நிற்கும். அப்பொழுதே அவை `தன்மாத்திரைகள்` எனப்படும். தன் மாத்திரைகள் தத்துவங்களாம். ஆகாயம் முதலிய பூதங்கட்குக் காரணம் ஆதல் பற்றித் தன்மாத்திரைகள் `சூக்கும பூதம்` என்றும் சொல்லப்படும்.
அந்தக்கரணங்கள் நான்கனுள் மேல் நிற்பதாகிய சித்தம் பரசரீரப் பகுதியாதலின், ஏனை மூன்றுமே சூக்கும சரீரப் பகுதியாம் என்க.
ஆகம பேதங்களின், `தாத்துவிகங்களே தூலசரீரம்; தத்துவங்கள் யாவும் சூக்கும சரீரம்` என்னும் ஒரு கருத்து உள்ள தாயினும் இங்கு நாயனார், `தன்மாத்திரை ஐந்தும், அந்தக்கரணம் மூன்றும் கூடியதே சூக்கும சரீரம்` எனத் தெளிவாகக் கூறினமையின், மேற்கூறிய ஒரு கருத்தை இங்கு நோக்க வேண்டுவதில்லை, `இங்குக் கூறப்பட்ட கருத்தே காலோத்தரம் முதலிய ஆகமங்களில் சொல்லப் பட்டது. என்றார் சிவஞான போத மாபாடியம் உடையார். l
`மனம்` என்பது கடைக் குறைந்து `மன்` என நின்றது,
இதனால், மேற்கூறிய இரு பேதங்களுள் `சூக்குமம்` எனப்பட்ட உடலின் இயல்பு வேறெடுத்து வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.

பொழிப்புரை :

எட்டுக் கருவிகள் கூடியதனால் `புரியட்ட காயம்` எனப்படும் உடம்பு - என மேற்கூறப்பட்ட சூக்கும சரீரத்திலிருந்தே மாபூதங்கள் ஐந்தும், இருவகை இந்திரியங்களும் தோன்றும். (எனவே, அப்பதினைந்தும் கூடியதே தூலசரீரமாம்.) இனித்தூல சரீரத்தில் உள்ள இருவகை இந்திரியங்களும், சூக்கும சரீரத்தில் உள்ள அந்தக்கரணங்கள் மூன்றும் `சரீரம்` எனப்பட்டாலும், உண்மையில் அவை கரணங்களேயாம்.
அறிவுக்குத் துணையாதல்பற்றி ஆன்மாவோடு பெரிதும் ஒற்றுமைப் பட்டு நிற்கின்ற அவற்றைக் கொண்டே சிவன் ஆன்மாவின் அறிவைப் புலன்களில் அகப்படுத்தி வைத்துப் பின்பு அப்புலன்க ளினின்றும் பிரித்துவிடுவான்.

குறிப்புரை :

`ஐந்து` என்றது மாபூதங்களையாதல் தெளிவு ஆகும்` என்பதனை `இந்திரியங்கள்` என்பதன் பின்னும் கூட்டுக. `இந் திரியங்கள்` எனப் பொதுப்படக் கூறியதனால் ஞானேந்திரியம், கன் மேந்திரியம் இரண்டும் கொள்ளப்படும். மாபூதங்கள் தன்மாத்திரை களிலிருந்தும், ஞானேந்திரியங்கள் அகங்காரத்தின் சாத்துவிகக் கூற்றி லிருந்தும், கன்மேந்திரியங்கள் அகங்காரத்தின் இராசதக் கூற்றி லிருந்தும் தோன்றுவனவாம். இங்ஙனம் தோன்றிய பதினைந்தனுள் மாபூதங்களே எலும்பு, தோல், தசை முதலியவனவாகப் பரிணமித்துத் தூலதேகமாக, இருவகை இந்திரியங்களும் பிறவாறு பரிணமியாது நிற்கும். ஆகவே, மாபூதங்களே உண்மையில் தேகம் ஆக, இருவகை இந்திரியங்கள் அத்தேகத்தின் நிற்றலால் ஒற்றுமை பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும், அந்தக் கரணங்களும் அவ்வாறு சூக்கும தேகத்தில் நிற்றல் பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும் உண்மையில் கரணங்களே என்பது உணர்த்தற்கு, `இந்திரியங்களும்` மூன்றும் கரணமாதாயிடும்` என்றார். இவ்வாறு `மூன்றும்` என்பத னோடு இயைதற் பொருட்டு, `ஆகும்` என்பதனை மீண்டும் கூறாது விடுத்தார். ஆகவே, `இந்திரியங்களும்` என்பதனை `இந்திரியங்களும் ஆகும்` எனவும் `இந்திரியங்களும் மூன்றும்` எனவும் இருமுறை ஓதி இயைத்துக் கொள்க. சூக்கும சரீரத்திலிருந்தே தூல சரீரம் தோன்றும் என்றற்கு, `எட்டினில் ஐந்து ஆகும்; இந்திரியங்களும் ஆகும்` என்றும், `தத்துவங்கள் யாவும் பொதுவாக, `தனு` என்று கூறப்பட்டாலும், அவற்றுட் சில உண்மையில் கரணங்களே` என்றற்கு, `இந்திரியங் களும் மூன்றும் கரணமதாகும்` என்றும், `அவற்றுள் அறிவுக் கரணங்களே வலியபந்தங்கள்` என்றற்கு, `ஒட்டியபாசத்து உணர்வது வாகவே கட்டிய` என்றும் கூறினார். கட்டிய - ஒன்று படுத்தப்பட்ட. காணும், முன்னிலை அசை. `அறிமின்` என்றும் ஆம்.
இதனால், `மேற்கூறிய என்பு முதலிய தாத்துவிகங்களே யன்றி, இருவகை இந்திரியங்களும், மாபூதங்களும் ஆகிய பதினைந்து தத்துவங்களும் தூலசரீரமாம்` என்பதும், `அவற்றுட் சில உண்மையில் கரணங்களேயாம்` என்பதும் கூறப்பட்டன.
தனு, அல்லது தேகம் ஆன்மாவிற்கு நிலைக்களமும், கரணங்கள் ஆன்மாவிற்குக் கருவியுமாய் உதவும் என்க. இந்திரியங்கள் புறக்கருவிகளும், மனம் முதலியன உட்கருவிகளும் ஆதல் அறிக. `உட்கருவிகள்` என்பனவே, `அந்தக் கரணங்கள்` எனப்படுகின்றது.
[பதிப்புக்களில் முன் தந்திரத்தில், `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்து இறுதியில் காணப்படும் `இந்தியம் அந்தக்கரணம் இவை உயிர்` என்னும் மந்திரம் இத்தந்திரத்தில் இம்மந்திரத்தை அடுத்து இருந்ததாகும்.]

பண் :

பாடல் எண் : 4

இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.

பொழிப்புரை :

`மாபூதங்கள் மட்டுமே உயிர்க்குக் கரணம் ஆகா தொழிய, `இருவகை இந்திரியங்களும் அந்தக்கரணம் போல உயிர்க்குக் கரணமாம்` என மேலே சொல்லப்பட்டமையால், `மாபூதங்ளும் அவற்றின் காரியங்களுமே தூல தேகமாக இந்திரியங் களும் அந்தக்கரணம்போலச் சூக்கும தேகமாம் என்றலே பொருத்த முடைத்துப்போலும்` எனின், அங்ஙனம் கொள்ளுதல் பொருந்துவ தன்றாம். (இந்திரியங்கள் தூலதேகத்தில் இருந்து புறப் பொருளை அறிதலும், பொருள்களை எடுத்தல், கொடுத்தல் முதலிய வற்றைச் செய்தலும் கண்கூடாதலின் அவை தூல தேகமேயாம் என்பது கருத்து.) இனி மூலப்பிரகிருதியினின்றும் தோன்றுவனவாகிய பஞ்சக் கிலேசங்களால் அவற்றிற்கு முன்பே தோன்றிய பொதுப் புருட தத்துவத்தில் சிறப்புப் புருட தத்துவம் பொருந்தும். வித்தியா தத்துவம் ஏழில் `புருடன்` தவிர மற்றை ஆறு தத்துவங்களும் புருட தத்துவத் திற்கு மேலே உள்ளனவாகும்.

குறிப்புரை :

`இந்திரியம்` என்பது இடைக் குறைந்து நின்றது. `வந்தன என்பதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `இவை என்பு, தோல், இறைச்சி முதலியனபோலன்றி, உயிரின் அறிவு செயல்களுக்குக் காரணமாய் நிற்றலின் உயிர்போலவே தோன்று மாயினும்` என உரைக்க. இதனால், `இருவகை இந்திரியங்கள் - சூக்கும தேகம் - என்றால் என்ன` என்னும் ஐயத்தை நீக்கியவாறு. `உயிர் வந்தன` என்பது `உயிர்போல வந்தன` என வினையுவமத் தொகை, `உளத்தின்கண் மன்னும்` என ஏழன் உருபு விரிக்க.
தூல தேகம், சூக்கும தேகம் இவற்றைக் கூறியபின், `பண் புடம்பு` எனப்படும் குண சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `போர்ப்புடம்பு` எனப்படும் கஞ்சுக சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `முதலுடம்பு` எனப்படும் காரண சரீரத்தின் இயல்பையும் கூறினார்.
மான் - மகத்து; மூலப் பிரகிருதி. அது முக்குணமயமானது. அக்குணங்கள் வெளிப்படாது சூக்குமமாய் நின்றநிலை அவ்வியத் தமும், தூலமாய் வெளிப்பட்டுச் சமமாய் நின்றநிலை வியத்தமும் ஆகும். அவ்வியத்தமே பிரகிருதி. வியத்தமே காரணநிலையாதலின் அதனால் உயிர்க்கு வருவது ஒன்றுமில்லை. வியத்தமே காரிய நிலையாதலின் அதனாலே உயிர் முக்குணமயமாய் விகாரம் எய்துகின்றது. ஆகவே இந்த வியத்தமே குணசரீரம் ஆதல் அறிக.
பஞ்சக் கிலேசமாவன, அவிச்சை, அகங்காரம், இச்சை, ஆசை, கோபம் - என்பன. `இவை பிரகிருதியினின்றும் தோன்றும்` என்பதும், `இவற்றின் தொடர்பினாலே, இயற்கையில் விகாரம் இன்றியிருக்கும் உயிர் விகாரம் எய்தி, அகக் கரணம் புறக் கரணங்களால் புறத்து நிற்கும் பொருள்களைப் பற்றி, இன்பத் துன்பங்களை அடையும்` என்பதும் சாங்கிய மதக்கொள்கைகள். `அக்கொள்கை ஆகமங்கள் சிலவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது` என்பது இம்மந்திரத்துள், `மானது தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் முந்துளம் மன்னும்` என்பதனால் அறியக் கிடக்கின்றது. இந்தப் பஞ்சக் கிலேசத்தாலே உயிர் முக்குண உலகத்தோடு தொடர்பு பட்டு வினைகளை ஈட்டுவதும், நுகர்வதுமான நிலையை அடைதல் பற்றி இக் கிலேசத் தொகுதி `பும்சூத்துவ மலம்` எனப்படும் என்றும், பும்சுத்துவ மலத்தை எய்திய உயிர் `புருடன்` எனப்படும் என்றும் சிவஞான போத மாபாடியத்தில் சொல்லப்பட்டது. 3
இனி, `பிரகிருதிக்கு முன்பே புருடதத்துவம் உள்ளது` என்பது ஆகமங்களில் வெளிப்படை. அது பற்றி மாபாடியம் உடையார், `முன்பு உள்ளது பொதுப் புருடதத்துவம்` என்றும், `பின்பு பஞ்சக்கிலேசத்தால் ஆவது சிறப்புப் புருட தத்துவம்` என்றும் கூறிச் சிவஞான சித்தியாரின் `நிச்சயம் புருடனாகிப் பொதுமையில் நிற்பனன்றே`l என்பதைத் தம் கொள்கைக்கு மேற் கோளாகக் காட்டினார். `பொதுமையில் நிற்பன்` என்றது பொதுப் புருட தத்துவத்தைக் குறிக்குமாயின், பின்னர் பும்சுத்துவ மலத்தைக் குறிப்பிட்டு, அதனால் சிறப்புப் புருட தத்துவம் தோன்றும்` என்பதனையும் கூறியாக வேண்டும். அவ்வாறு பஞ்சக் கிலேசமோ, பும்சுத்தவ மலமோ, சிறப்புப் புருட தத்துவமோ எந்தச் சித்தாந்த மூல நூலிலும், எங்கும் சொல்லப்படவில்லை. எனினும், `இம் மந்திரத்தில் அவை கூறப்படுதல் சில ஆகமங்களின் கூற்றுப் பற்றி` எனக் கொள்ள வேண்டியுள்ளது. பும்சுத்துவம் - புருடத் தன்மை.
சித்தாந்த நூல்களில், புருடத்தத்துவம் வித்தியா தத்துவம் ஏழனுள் தோற்ற முறையில் இறுதியானதாகச் சொல்லப்படுகின்றது அதனால் மூலப் பிரகிருதியை அடுத்து மேல் நிலையில் உள்ளதாகும். அதற்குமேல் ஏனை வித்தியா தத்துவங்களில், `அராகம், வித்தை, கலை, நியதி, காலம்` என்பன முறையே ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ளன. இந்த ஐந்து தத்துவங்களையும் ஐந்து சட்டைகளாக உயிர் அணிந்து நின்ற நிலையில்தான் அது `புருடன்` எனப் பெயர் பெறுகின்றது. அது பற்றி அந்நிலை ஒரு தத்துவமாகச் சொல்லப் படுகின்றது. காலம் முதலாக உள்ள ஐந்தும் ஐந்து சட்டை போல்வதால், அவற்றது தொகுதி `கஞ்சுக சரீரம்` எனப்படுகின்றது. இந்த ஐந்து தத்துவங்களும் `மாயை` என்னும் தத்துவத்தின் காரியமாய், அதனின்றும் நேரேயும், பின் ஒன்றின் ஒன்றாயும் தோன்றும். ஆதலால் அம் மாயா தத்துவம் ஏனை வித்தியா தத்துவங்கட்குக் காரணமாதல் பற்றி, `காரண சரீரம்` எனப்படுகின்றது. ஆகவே, வித்தியா தத்துவங்கள் ஏழனுள் புருடன் கீழே நிற்க, ஏனை ஆறும் அதற்கு மேல் உள்ளனவாதல் பற்றி, ``மற்றாறும் முடிவிலே`` என்றார்.
தற்புருடன் - தானாகிய புருடன். அஃதாவது, சகலனாகிய புருடன். பிரளயாகலரினின்றும் சில உயிர்கள் `சகலர்` எனப் பெயர் பெறுதற்குக் காரணம் அவை முக்குண வடிவாகிய பிரகிருகியாற் கட்டுண்பதே யாதலின், `ஐவிதத்தால் தற்புருடன் மன்னும்` என்றார். முந்து உளம் - இப்புருடனுக்கு முன்னே உள்ள புருடன் அது, வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் இறுதியானது. அந்த அளவில் நிற்கும் உயிர்கள் பிரளயாகலராகும்.
வித்தியா தத்துவங்கள் அசுத்த மாயையின்காரியம். எனினும் அசுத்த மாயை பெரிதாய், வியாபகமாய் இருத்தலால், அது முற்றிலும் தத்துவங்களாய்ப் பரிணமித்துவிடுவதில்லை. அதனில் ஒரு சிறு கூறே தத்துவங்களாய்ப் பரிணமிக்கும். இது `மண் குடமாயிற்று` என்றால், அளவின்றியுள்ள மண்முழுதும் குடமாய் விடாது அதில் ஒரு சிறு பகுதியே குடமாயது போல்வதாம்.
இனி, மண்குடமாவதற்கு முன் அங்ஙனம் ஆகுமாறு பிசைந்து பக்குவப்படுத்தப்படுதல் போல அசுத்த மாயையின் ஒரு கூறு தத்துவங்களாய்ப் பரிணமிக்குமாறு பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் செய்யப்பட்ட அதுவே, `மாயா தத்துவம்` என ஒரு தத்துவமாகச் சொல்லப்படுகின்றது. `இவ்வாறு அசுத்த மாயையை அனந்த தேவர் தமது சத்தியால் பக்குவப்படுத்துவார்` என்பது ஆகமங்களின் கருத்து. இந்த மாயா தத்துவமே காரண சரீரம் என்க.
இதனால், பஞ்ச பேத உடல்களில் முன் சொல்லப்பட்ட இரு பேதங்கள் போக, எஞ்சிய மூன்று பேதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே?

பொழிப்புரை :

நிலையாய் இராமல் நிலையழிந்து ஒழிந்து போவன வாகியகுருதி, இறைச்சி முதலிய அழுக்குப்பொருள்களாம் பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும்?

குறிப்புரை :

`கூடாது, அதனால், இருவகை இந்திரியங்களும் ஆற்றலேயாயினும் அவை செவி, தோல் முதலிய உறுப்புக்கள் இன்றிச் செயற்படுதல் கூடாமையால், அவை தூல உடம்பே யல்லது சூக்கும உடம்பாகா` என்பதாம்.
இரதம் - இரசம்; அஃதாவது, உண்ணப்படும் உணவிலிருந்து ஊறிக் குருதி முதலியவாய்ப் பரிணமிப்பது அதுவே, குருதி முதலியன நிலைபெறுதற்குத் துணையாதல் பற்றி முதற்கண் கூறப்பட்டது. மேதை - நிணம். `கொழுப்பு` என்பர். அத்தி - அஸ்தி; எலும்பு. வழும்பு - நிணத்தில் உள்ள பசை. இதனை நிணத்திற்கு வேறாக எண்ணுதல் இல்லை. மச்சை - பித்த நீர். இங்குக் கூறப்பட்டவற்றுள் இரதம் வழும்பு இவை தவிர ஏனைய ஏழும் `தாதுக்கள்` எனப்படும். தாது - மூலப்பொருள். பாழாதல் - காணந்தோறும் பதனழிந்து, முடிவில் அழிந்து போதல். தாதுக்கள் யாவும் அத்தன்மையவே யாதல் பற்றி, `பாழாம் உபாதி` எனவும், இவ்வுபாதிகள் யாவும் பருப் பொருள்களாய்க் கட்புலனாவனவே` என்றற்கு `உருவம்` எனவும் கூறினார். உபாதி - மாசு. `இரதம் முதலியவாகக் கூறப்பட்ட செவ் வெண்ணின் இறுதியில் தொகைச் சொல் தொக்கது. ஏகாரம் வினாப் பொருளாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், மேல், `சூக்கும உடலன்று` எனக் கூறப்பட்டவை தூலதேகமே யாதல் காரணம் கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆரே அறிவார் அடியின் பெருமையை
ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.

பொழிப்புரை :

மேல், `அத்தன் அமைத்த உடல்` என்றபடி உயிர்களின் தகுதியை அறிந்து அத்தகுதிக்கேற்பப் பல்வேறு வகையான உடம்புகளை அமைத்துத் தருகின்ற இறைவனது அருள் மிகுதியையும் ஆற்றலின் மிகுதியையும் அறிய வல்லுநர் யாவர்; அந்நிலையில் `மக்களாய்ப் பிறந்தோர் அவ்வுடம்பைப் பெறுதற்குப் பல பிறவிகளில் தாம் செய்த நல்வினை இவை` என்பதை அறிய வல்லுநர் யாவர்; மக்களுடம்பு அசுத்த உலகத்து உளது ஆதலின் அஃது அவ்வுலகத்திற்கு மேல் உள்ள மிச்சிர உலகம், சுத்த உலகம் என்பவற்றில் உள்ளோரது உடம்புகளில் உள்ள கருவிகட்குமேல் அறுபத்தெட்டுக் கருவிகள் கூடியது என்பதை அறிபவர் யாவர்! மூவகை உலகத்து உயிர்கட்கும் திருவருளே முதற்காவலாய் உள்ளது என்பதை அறிகின்றவர் யாவர்! ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

முதற்கண் `அடி` என்றது இறைவனது திருவடியை, அது திருவருளே. `தத்துவம் தொண்ணூற்றாறு` என்பது வைதிகசமயம் அனைத்திற்கும் பொதுவான ஒரு கொள்கை. அத்தொண்ணூற்றாறும் தத்துவம், தாத்துவிகம்` என இரண்டாகவே பகுக்கப்படும். அவற்றுள் `தத்துவம் எத்தனை` என்பதில் சமயங்கள் வேறுபடுகின்றன. ஆகவே, `தாத்துவிகங்கள் எவை, என்பதிலும் ஒருமித்த கருத்து இல்லை. கட்டளைகளிலும் தாத்துவிகங்கள் பல்வேறு வகையாகவே சொல்லப் படுகின்றன. சைவ சித்தாந்தத்தில் தத்துவம் முப்பத்தாறு ஆகலின், தாத்துவிகம் அறுபதேயாதல் வேண்டும். அந்த அறுபதையும் கட்டளை களை ஒட்டிப் பலர் பல வகையாகக் கூறுகின்றனர். அவைகள் சில காரணங்களால் பொருத்தமாகத் தோன்றவில்லை. மாதவச் சிவஞான யோகிகள் `தாத்துவிகம் அறுபதும் ஐம்பெரும் பூதங்களின் கூறுகளே` என்கின்றார்.8 அதுவே பொருத்தமானதாகத் தெரிகின்றது. எனினும், பூதங்களின் கூறுகளாக அவர் ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன்மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து என்னும் இருபதை மட்டுமே கூறி `மற்ற நாற்பது எவை` என்பதைக் கூறாது விடுத்தார் ஆயினும் நாடிகள் பத்தும் ஆகாயத்தில் கூறுகளாகும். ஆக முப்பது போக மற்றை முப்பதும் மேற்கூறிய என்பு, தோல், இறைச்சி முதலியனவாகவும், மற்றும் பூதக் கூறுகளாகக் கட்டளைகளில் கூறப் படுவனவற்றையும் கொள்ளுதல் வேண்டும். எனவே, தாத்துவிகம் அறுபதில் அவற்றிற்கு மூலமாகிய மாபூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து என்பவற்றையும், அந்தப் பூதமும், தன்மாத்திரையும் இன்றிச் செயற்படமாட்டாத இருவகைப் பத்து இந்திரியங்களையும் அடக்கி, தூல தேகக் கருவிகளை `அறுபதே` என்றும், சூக்கும தேகக் கருவி `மேற்கூறப்பட்ட எட்டே` என்றும் வைத்து, `ஆகத் தூல சூக்கும தேகக் கருவிகள் அறுபத்தெட்டு` என, அறுபத்தெட்டாக்கை என்றார். எனவே `ஆக்கை` என்றது, தூல சூக்கும தேகங்களை யாயிற்று. இந்த இருவகை உடம்பும் சகலருக்கல்லது, பிரளயாகலர் விஞ்ஞான கலருக்கு இல்லையாதல் அறியத்தக்கது.
இதனால், `மக்களுக்குச் சிறப்பாக அமைந்த தூல சூக்கும தேகத்தின் இயல்பையும், அவற்றை அவ்வுயிர்கட்கு வழங்கிய இறைவனது அருளையும், ஆற்றலையும் அறிவுடையோர் ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.

பொழிப்புரை :

உடம்பை `எண்சாண் உடம்பு` என்றல் யாவரும் அறிந்தது. `அவரவர் கையால் எண்சாணேயாகும்` என்பது இதன் பொருள். `எறும்பும் தன் கையால் எண்சாண்` (தனிப்பாடல் திரட்டு, என்றார் ஔவையார். இந்த அளவு யாவராலும் நன்கறியப்பட்ட தூல தேகத்தைப் பற்றியதே. அந்த உடம்பிற்றானே கண் முதலிய ஞானேந்திரியங்களும், கால் முதலிய கன்மேந்திரியங்களும் ஆற்றல் வடிவாய்ச் சூக்குமமாய்த் தோன்றாது நிற்கின்றன. எவ்வாற்றா லேனும், எவ்விடத்திலேனும் ஊறு உண்டாகுமாயின் அவ்விடம் புண்ணாகிக் குருதியையும், சீழையும் ஒழுக விடுகின்ற தூல தேகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டு மேற்கூறிய அறுபத்தெட்டுக் கருவிகளைத் தக்கவாற்றால் திருவருள் ஒன்று சேர்க்கின்ற சேர்க்கையால் ஓர் உடம்பிலிருந்து மற்றோர் உடம்பு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

எடுத்த - ஆக்கப்பட்ட. `உடலிற் கைகளில் எனக் கூட்டுக. `கரக்கின்ற` என்றது. அன்பெறாதுவந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. `கை` என்றது `ஒருபுடை` என்றபடி. `அந்த இடம் ஊறுபட்ட இடம்` என்பது, `புண்கால்` என்றதனால் விளங்கிற்று. காலுதற்குச் செயப்படுபொருள்கள் வருவிக்கப்பட்டன. `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டன் நண்பால், உடம்பால், உடம்பு ஆம்` என இயைக்க. `புண் கால் ஆக்கை` என்றது, `தூல உடம்பு` என்ற வாறு. `அதனைத் தோற்றுவித்தற்காகவே அதற்குமுன் சூக்கும உடம்பு ஆக்கப்படுகின்றது` என்றற்கு, `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டு` என்றார். சேர்க்கை, `நண்பு` எனப்பட்டது. அது பான்மை வழக்கு, `உடம்பால் உடம்பு ஆம்` என்றதற்கு, சூக்கும `உடம்பால் தூல உடம்பு தோன்றும்` எனவும், சில தூல உடம்புகளால், வேறு சில தூல உடம்புகளும் தோன்றும் எனவும் இருபொருள் கொள்க. தூல உடம்பால் தூல உடம்பு தோன்றுதலே இனப் பெருக்கமாம். தன், சாரியை.
இதனால், தூல சூக்கும உடம்புகள் ஒருவகையில் காரியங்களாயும், ஒருவகையில் காரணங்களாயும் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன்
ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றதிங் காரறி வாரே.

பொழிப்புரை :

தூல உடம்புக்குள் சூக்கும உடம்பாய் நிற்கின்ற அந்தக்கரணங்கள் நான்கிற்கும், மேலும் நுண்ணிதான அதிசூக்கும உடம்பைக் கொண்டு இயக்கும் முதற்பொருளாய் உள்ள சீவான்மாத் தான் பரமான்மாவாகிய சிவத்தில் வியாப்பியமாய் நிற்கும். ஆகவே, எப்பொருளிலும் எஞ்சாது நிறைந்து நிற்கும் பிரமப் பொருளாகிய சிவம், தான் ஒன்றேயாயினும் பல சீவான்மாக்களிலும் வியாபித்து அதனதன் தன்மைக்கேற்ப ஏகதேசமாயும் நின்று, பின் சீவான்மா சீவத்துவம் (பசுத்துவம்) நீங்கிய பொழுது தன்னைப் போலவே வியாபகமாகிவிடுதலால் அவ்வேகதேசத் தன்மை நீங்கி வியாபகமாகி விடுகின்ற தன்மை, ஞாயிறு ஒன்றேயாய் வியாபகமாயினும் பல குடங் களில் உள்ள நீரில் எல்லாம் அதனதன் அளவிற்கேற்ப வேறு வேறு அளவில் பலவாய்த் தோன்றி, அக்குடங்களில் நீர் நீங்கிய பொழுது முன்பு நின்ற சிறு நிலையின் நீங்கி வியாபகமாகிவிடுகின்ற தன்மையை ஒக்கும் என்னும் உண்மையை அறிந்தனர் எத்துணைப் பேர்!

குறிப்புரை :

`கணக்கு` என்றது, `நிலைமை` என்றபடி. அஃது உவமம் குறித்து நின்றது. அது, பகுதிப்பொருள் விகுதி. `கடம்` என்றது, `நீர் உள்ள குடத்தையே என்பதும் `நின்றது ஞாயிறு` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `காட்டி` என்றது, `ஒத்துநிற்றலைத் தெளிவாகப் புலப்படுத்தி` என்றவாறு. `அடங்கி` என்றது, `ஏக தேசமாய்த் தோன்றி` எனவும், `அற்றது` என்றது, `அவ்வேகதேசத்தின் நீங்கி வியாபகமானது` எனவும் கூறியவாறு. `ஆர் அறிவார்` என்றது, `ஒரு பிரமமே, ஞாயிறு ஒன்றாயினும் பல குடங்களில் பலவாய்த் தோன்றுதல் போல, பல உடம்புகளில் பல சீவராய்த் தோன்றும்` என மயங்கிக் கூறும் ஏகான்மவாதிகளை உட்கொண்டு கூறியது. ஞாயிறு குடங்களில் உள்ள நீரில் தோன்றினும் ஞாயிறேயாய் விளங்குத லன்றிப் பிற இயல்புகளைப் பெற்று வேறுபட்டுத் தோன்றுதல் இல்லை. சீவரோ பிரமப் பொருளின் தன்மையினின்றும் பெரிதும் வேறுபட்டுத் தோன்றுதல் தெளிவு. சிறப்பாகப் பிரமம் ஞானானந்த மயத்தது. சீவர் அஞ்ஞான துக்கமயத்தர். இதனை அறியாமையே யன்றி, உவமையில், `குடம், நீர், ஞாயிறு` என மூன்று பொருள்கள் உளவாக, பொருளில் `பிரமமும், உடம்பும்` என இரண்டையே கூறுதலால் அவரைக் கருதி, `ஆர் அறிவார்` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

ஆறந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.

பொழிப்புரை :

யோகமுறையால் ஆறு ஆதாரங்களும் கீழாகி யதனால், அவற்றிற்குமேல் உள்ள பிரமரந்திரத்தை அடைந்தால், அங்ஙனம் அடைந்தவருடைய தூல உடம்பு விரையில் அழிந் தொழியாது உறுதி பெற்று நெடுநாள் இருக்கும். அந்நிலையில் சூக்கும உடம்பும் அதற்கு சார்பாய் உறுதிப்பட்டு நின்று, அதனை என்றுமே உயிர் உள்ள உடம்பாகச் செய்யும்.

குறிப்புரை :

முன்னர், `மூவாறு` என்றது தூல உடம்பின் கூறுக ளாகிய பூதம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, இவற்றிற்கு முதலாக அகங்கார வகை மூன்று ஆகிய பதினெட்டினை, பின்னர், `கலைகள் பதினெட்டு` என்றது. புரியட்ட காயமாகிய சூக்கும உடம்பின் தத்துவம் எட்டும், பத்து வாயுக்களாகிய தாத்துவிகம் பத்தும் ஆகப் பதினெட்டினை. வாயுக்கள் தூல தேகத்தனவாயினும் அவற்றாலே சூக்கும உடம்பு செயற்படுதல் பற்றிச் சூக்கும தேகக் கூறுகளுடன் கூட்டி எண்ணினார். இக்கருத்தே பற்றிச் சூக்கும உடம்பு. `பிராணமயகோசம், எனப்படுதலை நினைக. `ஊறும் உடம்பு` என்றது மேல், `புண் கால் ஆக்கை` என்றது போன்றது என்னும் - எனச் செய்யும். சிக்கென்றிருத்தல் - உறுதிபெற்றிருத்தல்.
இதனால், விரைவில் அழிதற்பாலதாகிய தூல உடம்பை அங்ஙனமாகாது நீடியிருக்கச் செய்யுமாறு கூறப்பட்டது. இது மேல் மூன்றாம் தந்திரத்துள் `காய சித்தி` அதிகாரத்துள் விரிவாகக் கூறப்பட்டதாயினும். `உடம்புகளைப் பற்றிக் கூறும் இவ்விடத்தில் நினைவூட்டுதல் நன்று` என்னும் கருத்தால் சுருங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

பொழிப்புரை :

`தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்றுடம்பு களையும் ஒருங்குசேர்த்து ஓர் உடம்பிற்கு உவமித்தால், தூல உடம்பு முகத்தையும், சூக்கும உடம்பு கழுத்திற்குக் கீழும், காலுக்கு மேலும் உள்ள உடலையும், பர உடம்பு கைகால்களையும் ஒத்து நிற்கும் அவ்வாறு அமைந்த அந்தப் பேருடம்பு சிவனது திருவருளில் அடங்கும்.

குறிப்புரை :

மெய்யினில் தூலம் - கண்கூடாக விளங்குதலால் ஐயத்திற்கு இடமின்றித் துணியப்படுகின்ற தூல உடம்பு. பொய்யினில் பொருந்தும் சூக்க உடல் - காட்சிப் புலனாகாமையால் உண்மை எளிதில் துணியப்படாது நுண்ணிதாய் உள்ள சூக்கும உடம்பு. `தூலம், சூக்குமம்` என்பவற்றின்பின் `ஆக` என்பது வருவிக்க. காட்டும் உடல் - உயிர்க்கு அறிவைத் தரும் பர உடம்பு. இங்கு `உடலை` என்றதில் ஐ சாரியை; வேண்டாவழி வந்தது. முகத்தையும், உடலையும் என்பவற்றோடு இயைக்க `கையினில்` என்பதையும் `கையையும்` எனத்திரிக்க. இஃது உருபு மயக்கம். துல்லியம் - ஒப்பு. இதன்பின் `என்க` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `துல்லியம் என்க` என உரைக்க. ஈற்றில் நின்ற `உடம்பு` என்பதற்கு, இவ்வாறான உடம்பு,` என உரைக்க.
இதனால், `மூவகை உடம்புகளும் வேறுவேறு இயல்பின வாயினும் செயற்பாட்டின்கண் ஒன்றுபோல இணங்கிச் செயற்படும்` என்பது கூறப்பட்டது. `அதற்குச் சிறந்த காரணம் திருவருள்` என்றற்கு அஃதும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட்
டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.

பொழிப்புரை :

பகைவரைச் சினக்கின்ற வேகம் பொருந்திய போர்க் குதிரை அண்மை, சேய்மை என்னும் இடங்கட்குத் தக்கபடி முன்கால்களை எட்டி வைத்துப் பின் கால்களை வாங்கிக்கொண்டு தடையின்றி ஓடுதல் போலச் சூக்கும உடல் அண்மை சேய்மைகளுக்கு ஏற்ப விரைந்து செல்ல வல்லது. அதனால், உயிர் அவ்வுடலைப் பற்றிக் கொண்டு, அத்தன்மையில்லாத தூல உடம்புகளுள் ஒன்றை விட்டு நீங்கி மற்றொன்றை எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளும். தூல சரீரம் சூக்கும சரீரத்தின் மேல் போர்வைபோலவே உள்ளதாகும். அதனால், உயிர் தூல உடம்பில் ஒன்றை நீக்கி விட்டு, மற்றொன்றை எடுத்துக் கொள்ளுதல் மக்கள் தமது போர்வை ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றை எடுத்துப் போர்த்துக் கொள்ளுதல் போல்வதே.

குறிப்புரை :

`வல்லது` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன் மந்திரத்தினின்றும் வந்தது. `போர்வை ஒன்றை விட்டு ஒன்றை இட்டு ஏயும் அவர் என்ன உயிர் காயத்தை ஏயும்` என்க. காயம் - தூல தேகம். ஏயும் - பொருந்தும். `உயிர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `ஏயும் அவரென்ன` என்றாராயினும் `அவர் ஏய்த்தல் என்ன` என்றலே கருத்து என்க. தாம் கூறிய சொற் கிடக்கைக்கு ஏற்ப `அவர்` என்றார். ஆகவே கருத்திற்கு ஏற்ப அது `மக்கள்` எனப்பட்டது.
இதனால், `தூல தேகத்தை விட்டு உயிர் நீங்குதலே இறப்பு என்பதும், அது மற்றொரு தூல தேகத்திற் சேர்தலே பிறப்பு` என்பதும் கூறப்பட்டன. தூல தேகம் சூக்கும தேகத்தினின்றே தோன்றுவ தாயினும் அதனைக் கொண்டே சூக்கும தேகம் அறிதல் செய்தல்களை இயற்றலால் எடுத்துக் கொள்வதாகக் கூறப்பட்டது. இதனானே உயிர் பல பிறப்புக்களில் செல்லுமாறும் கூறப்பட்டதாம். பிறப்புக்களின் மாற்றம் வினை நிமித்தமாக நிகழ்வது.

பண் :

பாடல் எண் : 12

நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம்
ஆகும் நனாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று)
ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.

பொழிப்புரை :

இவ்வுலகில் ஓர் உடம்பை விட்டு நீங்கிய உயிர் இறைவனது அருளாணையின்படி வேறோர் உடலில் சென்று, அவ் வுடலுக்குரிய இடத்தை அடைந்து, முன்பு இருந்து இடத்தில் அனுபவித்த அனுபவங்களை மறந்து அவ்விடத்து வரும் இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் அவை எவை போல எனின், பாம்பு முன்பிருந்த உடம்பாகிய தோலை நீக்கிவிட்டுப் புதிய உடம்பைப் பெறுதல் போல்வதும், முட்டையிற் பிறக்கும் உயிர்கள் முன்பு முட்டைக்குள் இருந்து பின்பு வெளிவந்து வேறு இடத்தை அடைதல் போல்வதும், கனவில், முன்பு நனவில் நிகழ்ந்தவற்றை மறத்தல் போல்வதுமாகும்.

குறிப்புரை :

`அரனருளாலே` என்பது முதலாகக் கொண்டு உரைக்க. முதற்கண் `சென்று` என்பதற்கு மற்றோர் உடம்பில் சென்று என்பது பொருளாகும். இஃது இவ்வுலகிலே மறுபிறப்பு எடுப்பதையே குறித்தது. `ஆகும்` என்றனவும், `போலும்` என்றவாறேயாம். நனவு, கனவோடொப்ப, `நனா` எனப்பட்டது. அல்லது - வேறு நிகழ்ச்சி. போகல் - நிகழ்தல். `நனாவில் நிகழ்ந்தவற்றைக் கனாவில் மறந்து, அல்லது போகல் போல்வதுமாம்` என்க. பாம்பு தோல் உரித்தல் ஓர் உடலைவிட்டு வேறு உடலில் செல்லுதற்கும். அண்டசம் ஓர் இடம் விட்டு, வேறொர் இடத்தை அடைதற்கும், நனவில் நிகழ்ந்தவற்றைக் கனவில் மறத்தல் முன் பிறப்பில் நிகழ்ந்தவற்றை அடுத்த பிறப்பில் மறத்தற்கும் உவமையாகச் சொல்லப்பட்டன. `பன்னகம் அண்டசங்கள்` என்னும் சிவஞான சித்திச் செய்யுளையும்,l அதன் உரையையும் இங்கு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், மறுபிறப்பு உளதாதல் பற்றித் தூல தேகத்திற்கு வேறாய்ச் சூக்கும தேகம் முதலியன உளவாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.

பொழிப்புரை :

ஓர் உயிர் நிலத்தில் இறந்தபின் சூக்கும சரீரம் பற்றாகச் சென்று நரக சுவர்க்கங்களை அடைந்து அங்கு உள்ளவைகளைப் பார்த்து அவற்றால் வரும் துன்ப இன்பங்களை நுகர்ந்து, அந்த உலகங்களை விடுத்துத் தான் செய்த வினையில் மேற் கூறிய உலகங்களில் நுகரப்பட்டு எஞ்சி நிற்கின்ற வினைகள் தொடர்த லால், யோக சித்தர் ஓர் உடம்பை விட்டும் மற்றோர் உடம்பில் புகுதல் போல வேறு பிறப்பை அடைந்து மீண்டு நிலவுலகத்தில் அப்பிறப்பிற் குரிய உடம்பை எடுத்துக் கொள்ளும்.

குறிப்புரை :

`இறப்பு எய்திச் சூக்கம் காரணமாச்செல நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு உண்டு பண்டு தொடர (சூக்கம் காரணமாச் செல) பிறப்பு எய்திப் பிண்டம் எடுக்கும் எனக் கூட்டிப் பொருள் கொள்க. `ஓர் உயிர்` - தோன்றா எழுவாய்.
`சூக்கம் காரணமாக` என்பதும், `எய்தி` என்பதும் பின்னும் கூட்டுதற்கு உரியன. காரணம் - கருவி. புடைபெயர்தற்கு உரிய கருவி. செல - செல்லுதலால். `நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு உண்டு` என்றது, `வினையிருந்த வகைக்கு ஏற்ப முன்னும் பின்னுமாக அடைந்து கண்டு நுகர்ந்து` - என்றபடி. தூல உடம்பை விட்டுச் சூக்கும தேகத்தோடு இருத்தற்குப் பாம்பு தோல் உரித்தலும், மறுபிறப்பில் முன் பிறப்பில் நிகழ்ந்தவற்றை மறத்தலும் முன் மந்திரத்தில் உவமையாகக் கூறியபின், ஒருதூல தேகத்தை விட்டு மற்றொரு தூல தேகத்தை எடுத்தற்கு யோகிகள் பரகாயப் பிரவேசம் செய்தல் இம் மந்திரத்தில் உவமையாகக் கூறப்பட்டது.
இதனால், மேற்கூறியது உவமைகூறி வலியுறுத்தப்பட்ட துடன், சுவர்க்க நரக அனுபவங்களைக் கூறும் முகத்தாலும் சூக்கும தேகம் உண்மை நிறுவப்பட்டது. சுவர்க்க நரக லோகங்கட்கும் வேறு வேறு தூல உடம்பு உளவாயினும் நிலவுலகத் தூல உடம்பே இங்குச் சிறப்பாக எடுத்து, அதன் இயல்பு விளக்கப்பட்டது.


பண் :

பாடல் எண் : 14

தானவ னாகிய தற்பரந் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

பொழிப்புரை :

தான் சிவனேயாய் நிற்கின்ற சிவ யோகி, அது காறும் தான் அடைந்திருந்த நிலைகளை யெல்லாம் போக்கி, உடல் நீங்கினபின் அந்நிலைக்கு அப்பாற்பட்ட முடிநிலைப்பேற்றை அடைவான். அந்நிலையை அடையாது தாமேயாய் நிற்கின்ற மற்ற உயிர்கள் தாம் செய்த வினைக்கீடாகக் கிடைக்கின்ற இடங்களில் செல்வனவாய், விண்ணுலகிலும், மண்ணுலகிலும் புகுந்து துன்புறும்.

குறிப்புரை :

தற்பரம் - தனக்கு மேல் உள்ள பொருள். அதனைத் தான் தாங்குதலாவது அதன்கீழ் அடங்கியிருத்தல். அஃதாவது தனக்கென ஒன்றின்றி, எல்லாவற்றையும் அதனுடையதாகவே கண்டிருத்தல். `தான் அவன் ஆதலாவது இதுவே என்றற்கு, `தான் அவன் ஆகிய` என்றதனோடு அமையாது, `தற்பரம் தாங்கினோன்` என்றார். இதுவே ஞான சிவ யோகம். இந்நிலை `அருள் நிலை` என்றும், `சுத்த துரியநிலை` என்றும் சொல்லப்படும். அதனையும் கடந்தது ஆனந்த நிலையாகிய அதீத நிலை யாகலின் அதனை, `பரமம்` என்றார். பரமம் - மேல் எல்லை. `விண் மண், இரண்டுலகத்துள்ளும் உயர்வு தாழ்வான இடங்களில் உயிர் செல்லும்` என்றற்கு, அவற்றை வேறு போல வைத்து, `எய்தும் இடம் சென்றும்` `வானும் நிலனும் புகுந்தும்` வருந்தும் என்றார்.
இதனால், தூலதேகமே நிலையின்றி, மாறி மாறி வருவதாகச் சூக்கும தேகம் வீடுபெறுங்காறும், அல்லது ஊழி முடிவுகாறும் நிலைத்திருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

பொழிப்புரை :

மெய்ஞ்ஞானிக்கு உடம்பாவது சிவனது அரு ளாகிய உடம்பேயாம், அஞ்ஞானிக்கு உடம்பாவது புலாலால் ஆகிய அந்த உடம்பேயாம். அஞ்ஞானிக்குமேல் நிற்பவனாகிய யோகிக்குப் பைசந்தி வாக்கும் அதற்கு மேல் உள்ள சூக்குமை வாக்கும் தக்கபடி உடம்பாகும். ஞானத்தின் மேல் எல்லையாகிய மோன நிலையை எய்தியவன் முப்பாழையும் கடந்த முத்தி நிலையையே உடம்பாகக் கொண்டிருப்பான்.

குறிப்புரை :

சிவம் ஏய் தனு - சிவத்தைப் பொருந்தி உள்ள உடம்பு. அஃது அருளே. முதல் இரண்டடிகளில் முறையே மேல் நிற் பவனையும், கீழ் நிற்பவனையும் பற்றிக் கூறினமையின், மூன்றாம் அடியில் இடை நிற்பவனைப் பற்றிக் கூறினார். ஈற்றடி முடிநிலையை எய்தினோனைப் பற்றிக் கூறியது. எனவே, `ஞானி` என்றது துரிய நிலையில் நின்றவனையேயாம். மோனி, அந்த நிலையை அடைந் தவன். சீவன் முத்தனாவான் அவனே. யோகிகளுள் சவிகற்ப சமாதியை அடைந்தவன் பைசந்தி வாக்கைக் கடக்கமாட்டாது அதனுட் பட்டும், நிருவிகற்ப சமாதியை அடைந்தோன் சூக்குமை வாக்கைக் கடக்க மாட்டாது அதனுட்பட்டும் நிற்பன் என்றபடி. `உடம்பாகும்` என்பது மூன்றாம் அடி ஈற்றிலும் சென்றியையும். எனவே, மோனியைத் தவிர ஏனையோர் யாவரும் ஓரளவில் பந்தம் உடையவர்களேயாயினர். முப்பாழ் ஆவன பின்னர்க் கூறப்படும்.
இதனால், `யோகியரும், ஞானியரும் தூலசூக்கும சரீரங்களோடு கூடி நிற்பாராயினும் அவர் அவற்றால் கட்டுண்ணாது, மந்திர வடிவராயும் நிற்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு
எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

பொழிப்புரை :

மூவகை ஆன்ம வர்க்கத்தினருள் விஞ்ஞானகலர் நிலையை ஆணவமே சூக்கும தேகமாய் நிற்கும். இனி அந்த விஞ்ஞானகலர்க்கு அடைய இருப்பவராகிய பிரளயாகலருக்கு அசுத்த மாயையே எல்லா உடம்புமாய் இருக்கும். `ஞானம் இல்லாதவர்` எனப் படுகின்ற சகலர்க்குக் கன்மத்திற்கு ஈடாக வருகின்ற பிராகிருதங்களே உடம்பாகும். ஆகவே, அருள் உடம்பு மெய்ஞ்ஞானைத்தை எய்தினவர்கட்கே வாய்ப்பதாம்.

குறிப்புரை :

மிகு தனு - சூக்கும தேகம். இஃது ஒப்புமையாகக் கூறியது. `நுண்ணிய பந்தம்` என்றபடி. `ஏய்` என்பது `எய்` எனக் குறுகிநின்றது. ஆகவே, அதனையடுத்து `ஞானம்` என்றது முன் சொன்ன விஞ்ஞானத்தையாயிற்று. பிரளயாகலருள் நேரே முத்தி பெறுபவரன்றி, விஞ்ஞானகலராகி முத்தி பெறுபவரும் உளர் என்க. கன்மத்தால் வருவதை, `கன்மம்` என்றார். அவ்வாற்றால் வரும் தனு பெரும்பான்மை பற்றிப் பிராகிருத சரீரத்தைக் குறித்தது. `ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாகும்` என்றதனால், `ஏனையோர்க்கு அது வாயாது` என்பதனை வகுத்துக் காட்டி, இறுதியடியால் அதனை நிறுவினார்.
இதனால், மேற்கூறியவற்றுள் சிறப்புடையது ஒன்று இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மலமென் றுடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.

பொழிப்புரை :

அறிவுடையீர், தம் உடம்பை அருவருத்து நீக்கத் தக்கதாக அறிவும் அறிவையில்லாதவர் அதனையே தாம், என்றும் இருக்கும் இடமாகக் கருதி, அதன்கண் தனியான ஒருபற்று வைத்துப் போற்றிவருதலைக் கண்டீரன்றோ! அவர் நிலையை அடைந்திருக்கும் உயிர்கள் அதன் பயனாகப் பற்பல தூல தேகங்களை எடுத்து உலகங்களிலேயே உழலும்.

குறிப்புரை :

`வீடு பெறா` என்றபடி. `இருக்கின், பற்றும்` - என்னும் பயனிலைகட்கு, `அத்தகைய உயிர்கள்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `கண்டீர்; பற்றும்` எனக் கூறியவற்றால், `நீவிரும் அவ்வாறு நிற்பின் அந்நிலையை அடைவீர்கள்` எனக் குறித்தவாறு.
இதனால், `உடம்புகள் யாவும் அழுக்குப்பொருளே` என்பதும், அஃதறிந்து அவற்றின் நீங்குதலே அறிவுடைமை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 18

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.

பொழிப்புரை :

நல்ல சொற்களையே பேசுகின்ற வாக்கிலும், நல்ல நினைவுகளையே நினைக்கின்ற மனம் முதலிய அகக்கருவிகளிலும் இறைவன் மெல்ல மெல்ல வெளிப்பட்டு விளையாடுவான். நல்லன அல்லாத சொற்களையே கேட்க விரும்புகின்ற செவியையும், அவ்வாறே, அறியத் தகாத தம் தம் புலன்களையே அறிய விரும்புகின்ற கண் முதலிய ஏனைப் பொறிகளையும், நல்லன அல்லாதவற்றையே நினைக்கின்ற உட்கருவிகளையும் உடைய மக்கள் இவ்வுலகில் வறுமையால் பசி மிக்கவராய் வருந்துவர்.

குறிப்புரை :

`அவர்மறுமையில் நற்பிறப்பையும், பிறப்பற்ற வீட்டையும் அடைதல் எங்ஙனம்` என்பது குறிப்பெச்சம். `உடம்புகளை அருவருத்து நீக்கத் தக்கனவாக உணர்பவரே நல்ல வாக்கு. மனங்களையும், அங்ஙனம் உணராவதவர் தீயனவாகிய வாக்கு மனங்களையும் உடையவராய், அதுவதற்குத் தக்கபயனை அடைவார்கள் என்றபடி. ஆகவே, `வாக்கு மனங்கள் நல்லன வாகும்படி செய்து` அதனால், உடம்புகளின் நீங்கப் பெறுதலே செயற் பாற்று` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 1

பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

பொழிப்புரை :

நன்கு அமைந்த உடலால் எழுகின்ற காமமும், பலவகையாகப் பேசுகின்ற பேச்சுக்களும், வெளிச்செல்லும் பொழுது விளங்கி நிற்கின்ற மூச்சும், அம்மூச்சுப் பெரிதாயவழி எழுகின்ற ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் ஆகிய இவைகளையெல்லாம் பிறர், `எங்கே போயின` என்று திகைத்து அண்ணாந்து பார்க்கும்படி உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்தொழியும்.

குறிப்புரை :

ஆகவே, `இதனை நிலையுடையதாக எண்ணிப் பற்றுச் செய்தல் நன்றன்று` என்பதாம். முதல் தந்திரத்தில் `யாக்கை நிலை யாமை` கூறியது அறத்தை வலியுறுத்தல் பற்றி. எனினும் ஞானத்தை உணர்த்தும் இவ்விடத்திலும் அதனையுணர்தல் இன்றி யமையாமை பற்றி, வேறொரு கருத்துப் பற்றிக் கூறுகின்றார். `பண்` என்னும் முதல் நிலை, பண்ணி அமைக்கப்பட்ட நல்ல நிலையை ஆகு பெயரால் உணர்த்தும். முறைப்படி அமைந்த இசை `பண்` எனப்படுவதும் அவ் வாற்றாலேயாம். `அந்நிலையில்தான் காமம் உளதாகும்` என்றற்கு, `பண் ஆரும் காமம்` என்றார். `மனத்தையும்` என்றதனோடு இயைய, ஏனை உம்மைகட்கு முன்பும் இரண்டன் உருபு விரிக்க. `அண்ணாந்து பார்த்தல்` என்பது, எங்கும் காணாது திகைத்து நிற்றலைக் குறிக்கும் குறிப்பு. பார்க்க - பார்க்கும்படி.
இதனால், `காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி,கண்,
கழிகின்ற கால்,அவ் இரதங்கள், தானம்,
மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.

பொழிப்புரை :

நிலையின்றி அழிவதாகிய உடம்பை இடமாகக் கொண்டிருப்பனவே செவி, கண் முதலிய அறிவுப் பொறிகளும், வாக்கு முதலிய செயற்பொறிகளும், அவற்றின்வழி வருகின்ற புல இன்பங்களும், அந்தக் கரணங்களுக்கு வலுவூட்டுகின்ற பிராண வாயு வும், ஒன்றையொன்றோடு முடிந்துவைத்துள்ள நாடிகளும், மற்றும் பல ஆற்றல்களுக்கு உரிய இடங்களும். ஆகவே, உடம்பு அழிந்தால், அவையும் அதனோடே அழிந்தொழிதலால், அழிவதாகிய உடம்பிற்கு அதனை அழியாது நிலைபெறுத்துவதொருதுணை எதுவுமில்லை.

குறிப்புரை :

`உடம்பின்கண் ஆகும்` என ஏழாவது விரிக்க. `ஆகும்` என்னும் செய்யுமென்னும் முற்றிற்குச் செவி, கண் முதலியபல பெயர்களும் முடிவாயின. செய்யுள் நோக்கி அப்பெயர்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. கால் - காற்று; பிராண வாயு. இரதம் - சுவை; என்றது இன்பத்தை.
இதனால், `தூல தேகம் அழிவுடையதாகலின், அதன் இயல்பை மாற்றுமாறில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இலையாம் இடையில் எழுகின்ற காமம்
உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.

பொழிப்புரை :

மாதரது நுண்ணிய இடையின்மேல் எழுகின்ற காம உணர்ச்சி மக்கள் உள்ளங்களில் உலையிடத்தில் உள்ள நெருப்புப் போல மிகுகின்ற ஆசையாலே பெருகி மிகும். ஆயினும் அந்த ஆசையால் சிறிதும் கலங்காது கல்போல உறுதியுற்று நிற்கும் உள்ளம் உடையவர்கள், சிவனது திருமுன்பில் காமம், குரோதம் முதலிய குற்றங்களோடு கூடாது மேன்மையுற்று விளங்குகின்ற ஒளி உடம்பைப் பெற்று வாழ்வார்கள்.

குறிப்புரை :

இலையாம் இடை - `இல்லை` என்றே சொல்லத்தகும் முறையில் அமைந்த இடை. `இடை` என்றது இடக்கர் அடக்கல். உலை வாய - கொல்லனது உலையின்கண் உள்ளவை; நெருப்பு இடம் பற்றிப் பன்மையாகக் கூறப்பட்டது. `உலைவாயன போலும் நேசம்` என அஃது உவமத் தொகையாய் வந்தது. `மூழ்குவிக்கும்` என்பதில் பிற வினை விகுதி தொகுத்தலாயிற்று. அதற்கு `அவற்றை` என்னும் செயப் படு பொருள் வருவிக்க. `உளத்து` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. `மின்னுடல்` என்றது, `ஒளியுடம்பு` என்றபடி. `திவ்விய சரீரம்` என்பர். சித்தத்தை உடையவரது செயலை, `சித்தம் திருமுன்னிடக்கே தாங்கித் திரியும்` எனச் சித்தத்தின் செயலாக உபசரித்துக் கூறினார். முன்னிடை - முன்னிடம். குவ்வுருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. சிவலோகத்தையே, `சிவ முன்னிடை` என்றார். `சிவ முன்னிலைக்கே` எனப்பாடம் ஓதுதலுமாம்.
இதனால், `நிலையில்லாத உடம்பினாலே சிவ புண்ணியங்களைச் செய்து நிலையுடைய வீட்டைப் பெறுதல் தக்கது` என்பது, அவ்வாறு செய்யாதாரது செயலையும், செய்தாரது செயலையும் ஒப்பிட்டுக் கூறுமுகத்தால் உணர்த்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

பொழிப்புரை :

மேற்கூறிய அவத்தைகளில் மத்தியாலவத்தை ஐந்தும், கீழாலவத்தைச் சாக்கிரமும் நிகழும் இடம்புருவநடு, அவற்றுள் மத்தியா லவத்தைச் சாக்கிரமும் ஒன்றிலேதான் எல்லாக் கருவிகளும் குறை வின்றிச் செயற்படும். மற்றையவற்றில் சிற்சில கருவிகள் செயற்படாது நிற்கும். அவற்றைப் பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளாகக் கூறுவர். மத்தியாலவத்தையை விட்டு, ஆன்மாக் கீழாலவத்தையில் சாக்கிரத்தை அடைதற்குக் காரணம் ஆன்ம தத்துவங்களில் சிலவும், தாத்துவிகங் களில் சிலவும் குறைதலேயாகும். அந்நிலையில், கீழாலவத்தைச் சாக்கிரத்தில் செயற்படும் கருவிகள் முப்பத்தைந்து` என்று சொல்லப் படுகின்றது. `சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்` என்பது சிவஞான சித்தியார்.3 முப்பத்தைந்தில் தத்துவம் பதினைந்து; தாத்துவிகம் இருபது. ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று. இவை தத்துவங்கள், ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன் மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து. இவை தாத்து விகங்கள். `முப்பத் தைந்து` எனத் தொகை கூறி வரையறுத்தது பிரிந்தும், கூடியும் வரும் நிலைமையுடைய கருவிகளை நோக்கியேயாம். ஆகவே, பிரிவின்றி எஞ்ஞான்றும் கூடியே நிற்கும் கருவிகள் இந்த அவத்தை பேதங்களில் நீங்குவன அல்ல. அவை வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்துமாம். `புருடன்` என்பது ஒரு தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஐந்தும் கூடிய நிலையேயாம். இவை ஐந்திற்குக் காரணம் `மாயை` என்னும் தத்துவம். எனவே, புருடன்` என்றதனால், மேற்கூறியவற்றோடு சிவ தத்துவமும் பெறப்படும். ஆகையால் `முப்பத்தைந்து` எனச் சுருக்கமாகக் கூறியபோதிலும் `நாற்பத்தாறு` என்பதே உண்மையாம். எனவே, கீழாலவத்தை தொடங் குங்கால், தொண்ணூற்றாறு கருவிகளில், நீங்குவன ஐம்பதே` என்பது விளங்கும். ஐம்பதில் தத்துவம் பத்தும், தாத்துவிகம் நாற்பதும் ஆகும். தத்துவம் பத்தாவன மாபூதங்கள் ஐந்து; தன்மாத்திரை ஐந்து, தாத்துவிகம் நாற்பதவான. மேற்கூறிய சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து ஆகிய இருபது தவிர மற்றவையாம்.

குறிப்புரை :

இம்மந்திரத்தில், `மத்திமை` என்றது புருவ நடுவை. `சாக்கிரம் என்றது, அதிகாரத்தால் கீழாலவத்தைச் சாக்கிரமாயிற்று. `ஐயைந்து` என்றது, பிராணாதி வாயுக்கள் பத்தினையும் விடுத்து, அஃது, ஒன்று இடைவிட்டு வரும் மந்திரத்தால் விளங்கும். `ஐயைந்தால் என உருபு விரித்து மத்திமையில் ஐயைந்தால் சாக்கிரம் ஆனது` என இயைத்துக் கொள்க.
இனி, இரண்டாம் அடியில், `மேற்கூறிய ஐயைந்தில் விடயங் களாய் நிற்கும் கருவிகள் பதினான்கினால் கண்டத்தில் சொப்பனம் நிகழும் என்பர்` எனக் கூறினார் `விடயங்களாய் நிற்கும் கருவிகள்` என்றதனால், `அவ்விடயங்களை அறிகின்ற கருவிகள் சாக்கிரத் தோடே நின்றுவிடும்` என்பதாயிற்று. அவையாவன ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்துமாம், புருடன் கருவியாகாமை பற்றி அதனை நீக்கி, ``பன்னான்கு`` என்றார். ஆகவே, சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து, அந்தக் கரணம் நான்கு புருடன் ஒன்று என இருபத்தைந்து கருவிகளால் கண்டத்தானத்தில் சொப்பனம் நிகழும் என்றமை அறிக.
மூன்றாம் அடியில், `இதயம்` என்பது இரட்டுறமொழிதலாய், முன்னர்ச் சித்தத்திற்குப் பரியாயப் பெயராயும், பின்னர் இருதயத் தானத்தைக் குறிப்பதாயும் இருபொருள் தந்து நின்றது. ஆகவே, `புருடன், சித்தம்` என்னும் இருகருவிகளாலே இருதயத் தானத்தில் சுழுத்தி நிகழும்` எனக் கூறியது காண்க. சுழுத்தியைச் செய்யுள் நோக்கி, `சுழுனை` என்றார். முதற்றொட்டே வாயுக்களைக் கூறாமை யால், இங்கும் கூறிற்றிலர் ஆதலின் `பிராணன்` என்னும் ஒரு வாயு மட்டும் சுழுத்தியில் நிற்கும் என்பது அறிக. அவ்வாயுவைக் கூட்டக் கருவிகள் மூன்றாகும். `பொய் கண்டிலாத` என்றது, `விடயங்களை நன்கு உணர்ந்து வருகின்ற` என்றபடி. எனவே ஈற்றடியில் `மெய்கண் டவன் என்றது அப்புருடனை ஆயிற்று. ஆகவே, அஃது ஒன்றினாலே உந்தித்தானத்தில் துரியம் நிகழும்` என்றதாயிற்று. இங்கும் பிராணன் உண்டு. ஆகவே, சுழுத்தியோடு நீங்கியது சித்தம் ஒன்றுமேயாயிற்று.
துரியத்தைக் கடந்த துரியாதீதத்தில் தத்துவம் பற்றிக் கூறற் பாலது இல்லாமையால் அதனைக் கூறாதொழிந்தார். ஆகவே, புருடன் ஒரு காலத்தும் நீங்குதல் கூடாது ஆகையால், `அதீதம்` பிராணன் ஒன்றும் நீங்கப் புருடன் மட்டும் இருப்பதாயிற்று. அதற்கு இடம் மூலாதாரம் - என்பதும் கீழாலவத்தை இறுதியில் உந்தியைக் கூறியொழிந்ததனால் விளங்கும். `மெய்கண்டவனால் உந்தியில் துரியம் ஆகும்` என்க.
இதனால், கீழாலவத்தை ஐந்தன் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும்
செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களாலும் (எனவே, தாத்து விகம் அறுபதும் உளவாம் ஆதலின் தொண்ணூற்றாறு கருவிகளாலும்) நிரம்பிய அறிவாய்க் கீழாலவத்தைக்கு முன்னே உள்ள மத்தியா லவத்தையில் சாக்கிரம் நிகழும். அதுபொழுது சிவதத்துவம் ஐந்து உள்ளனவாம். அதன் பின் மத்திய சொப்பனம், மத்திய சுழுத்தி, மத்திய துரியம், மத்திய துரியாதீதம் - என்பவை முறையே சிவ தத்துவங்களில் ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு குறைய நிற்கும் தத்துவங்கள் நான்கு, மூன்று, ஒன்று, ஆகுமாற்றால் நிகழும் நீங்குவன சுத்த வித்தை முதலாகவாம் ஆதலின், இறுதியில் நிற்பது `சிவம்` என்பதொன்றுமே யாம். தத்துவங்கள் செலுத்துவனவும், கலை முதலிய ஐந்தும் செலுத்தப் படுவனவும் ஆதலின், செலுத்துவன நான்கும் நீங்கிய பொழுது செலுத்தப்படுவனவற்றிலும் நான்கும் நீங்கும். அவை, `அராகம், வித்தை, கலை, நியதி - என்பன. எனவே, எப்பொழுதும் நீங்காது நிற்பன `சிவம்` என்னும் தத்துவமும், அதனால், செலுத்தப்படுகின்ற காலமும் ஆம். ஆகவே, மத்திய துரியாதீதத்தில் நிற்பன அவை மட்டுமேயாம். இவற்றை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று` எனப்பட்டன சிவ தத்துவங்களின் எண்ணிக்கையே. வித்தியா தத்துவம் ஏழில் புருடன் தனித்தத்துவம் அன்று. மாயை காரணமாய் நிற்பதன்றிச் செயற் படாது. அவையொழிந்த ஐந்துமே செயற்படுவன ஆதலின் சிவ தத்துவம் ஐந்தும் அந்த ஐந்தையே செலுத்தி நிற்கும். செலுத்தும் முறை யாவது, சிவம் - காலம், சத்தி - நியதி. சாதாக்கியம் - கலை. ஈசுரம் - வித்தை. சுத்தவித்தை - அராகம் என்க. செலுத்துவனவற்றில் நீங்குவன சுத்தவித்தை முதலாகவும், அதற்கேற்பச் செலுத்தப்படுவன நீங்குதலும் அராகம் முதலாகவுமாய் நிகழும். தத்தவங்களை எண்ணுங்கால் தோற்ற முறை பற்றி எண்ணுதல் வழக்காதல் பற்றி `நியதி முதலாக` என்றாராயினும் நீங்கும் முறை அராகம் முதலாகவே என்க. செலுத் துவன செலுத்தப்படுவனவற்றின் இயைபை வேறு கூறுவாரும் உளர்.
`இரண்டொன்று` என்றது இரட்டுற மொழிதலாய், முன்னர் உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாய் `மூன்று` எனவும், பின்னர் உம்மைத் தொகையாய் `இரண்டும், ஒன்றும்` எனவும் இருபொருள் தந்தது. நியதி முதல் - நியதி முதலிய தத்துவங்கள். `அவை ஆகும்படி சிவம் ஈறாய் அப்பதி ஆகும்` என்க. பதி - சிவ தத்துவம்.
கீழாலவத்தையில் நிகழும் சொப்பனம் முதலியவற்றை, `இஃது இத்தன்மையது` என யாவரும் தாமும் உணரவும். பிறர்க்கு உணர்த்தவும் கூடிய முறையில் அவை இனிது விளங்கக் கால நீட்டிப் புடன் அன்றாட அனுபவமாய் நிகழும். மத்தியாலவத்தை அவ்வா றின்றி நன்கு விழித்திருக்கும்பொழுதே மிக விரைவில் நினைப்பும், மறப்புமாய் மாறி மாறி நிகழ்வன ஆதலின் அவற்றை யாவரும் தாமும் இனிதுணர்தல் அரிது; பிறர்க்கும் உணர்த்துதல் அரிது. இதன் வேகத்திற்குக் கறங்கோலையை (கற்றாடி ஓலையை) உவமையாகக் கூறுவர். அதபற்றி அருணந்தி சிவாசாரியரும்,
``அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும்
செறிதரும்; கரணந் தன்னில் செயல்தொறும் கண்டுகொள்நீ``*
என்னும் அளவே கூறிச் சென்றார். ஆயினும் சிவாக்கிரர் முதலியோர் கைப்பொருளைத் தொலைத்துவிட்டவன் அத்துன்பமிகுதியாலும், மற்றும் புத்திர சோகம் முதலியவற்றாலும், மூர்ச்சை எய்துதலை `மத்திய துரியாதீதம்` - என வைத்து, அதினின்றும் சிறிது சிறிதாகத் தெளி வடைந்து பழைய நிலையை எய்தும் வரையிலான நிகழ்ச்சிகளை மத்திய துரிய, மத்தி சுழுத்தி, மத்திய சொப்பன, மத்திய சாக்கிரா வத்தைகளாக வகுத்துக் காட்டுவர். ஆயினும், அவையெல்லாம் ஓரளவு தரும் விளக்கங்களேயன்றி, `அவைதம் மத்தியாலவத்தை` எனக்கொண்டு விடுதல் கூடாது. மத்தியாலவத்தை விழிப்புநிலையில் நாம் பொருள் களை உணர்ந்து நிற்கும்பொழுதே நிகழ்வனவாம். அவற்றுள் நினைப்பு, `சகலத்தில் சகலம் என்றும், மறப்பு, `சகலத்தில் கேவலம்` என்றும் சொல்லப்படும். சகலம் `பகல்` எனவும், கேவலம் `இரவு` எனவும் உருவகித்து வழங்கப்படும். ஆகவே, நினைப்பும், மறப்பும் இல்லாத சுத்த நிலை `இராப் பகல் அற்ற இடம்` எனக் கூறப் படுகின்றது.
இதனால், மத்தியாலவத்தைகளின் இயல்பு தொகுத்துக் கூறப்பட்டது. `அவத்தைகளின் பொது இயல்புகள் முதற்கண் ஒருங்கு வைத்துக் காட்டப்படவேண்டும் என்னும் கருத்தினால் இவை இங்குக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.

பொழிப்புரை :

கேவலம் வருமாறு செய்கின்ற அந்தச் சாக்கிரா வத்தையானது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அவற்றின் விடயங்கள் பத்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று - என்னும் முப்பத்தைந்து கருவிகளால் நிகழும்.

குறிப்புரை :

ஞானேந்திரிய விடயங்கள் முன்பு தன் மாத்திரை நிலையில் இருந்தமை பற்றி அவற்றை, `தன்மாத்திரை` என்கின்றவர், அவற்றோடொத்த கன்மேந்திரிய விடயங்களையும் ஒருங்கு கூட்டி, `தன்மாத்திரை` எனச் சுருங்கக் கூறினார். வாயுக்களில் பிராணனும், உதானனும் சொல்லொலியாயும் தோன்றுதல் பற்றி ஏனை வாயுக் களையும் `மந்திரமாகும்` என்றார். `பந்தம்` என்றது கேவல நிலையை. `சக்கரப்பாலது` என்பது, யாதும் அறியாதவர் தாம் அறிந்தவாறே திரித்துக்கொண்ட பாடமாகும். பால் - பகுதி அது, பகுதிப் பொருள் விகுதி. `ஆன்மாவும்` என்பதன் ஈற்றில், `ஆகிய முப்பத்தைந்தும்` என்னும் தொகைச் சொல் விரித்து, `முப்பத்தைந்தாலும் சாக்கிரப் பால் ஆகும்` எனமுடிக்க` `சாக்கிரமாவது இங்கு எடுத்துக்கொண்ட கீழாலவத்தைச் சாக்கிரம்` என்பது விளங்குதற்பொருட்டு, `பந்த அச்சாக்கிரம், என்றார்.
இதனால், முதற்கண், `மத்திமை யானது சாக்கிரம்` எனக் கூறி யதன்கண் செயற்படும் கருவிகளாவன இவை - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாரது பொன்மைப் பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை யுடையது
வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.

பொழிப்புரை :

(அவத்தைக்குக் காரணமான கருவிகளுள் மிக எளிதில் விளங்குவனவாகிய ஐம்பெரும் பூதங்களில்) நிலம் பசும் பொன்னிறத்தையும், நீர் வெண்மை நிறத்தையும், நெருப்புச் சிவப்பு நிறத்தையும், காற்றுக் கருப்பு நிறத்தையும், வானம் புகை நிறத்தையும் உடையன. இவற்றின் அதிதேவர்கள் இவைபோலப் புலனாகாது மறைந்து நிற்பார்கள்.

குறிப்புரை :

`அதிதேவர்கள்` என்பது ஆற்றலால்கொள்ளக் கிடந்தது. தத்துவங்களினின்றும் விடுபடுதற்கு அவற்றை வழிபடுதலும் ஒரு முறையாகும். அதன்பொருட்டு அவற்றிற்கு வடிவம் நிறம் முதலியன ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. அவ்வழிபாட்டிற்குப் பயன் தருபவர்கள் அவற்றின் அதிதேவர்களேயாதல்பற்றி அவர்களை இங்கு உடன் கூட்டி, `மறைந்து நின்றார்களே` என்றார். அதனானே, `இது வழிபாட்டு முறை` என்பது பெறப்படும். சித்தாந்த சாத்திரங்களில் நிறங்களோடு வடிவம் முதலியன கூறப்படுதல் காண்க. பசுமைப் பொன்மை` என மொழி மாற்றியுரைக்க. மூன்றாம் அடியில் தளை மயங்கி வந்தது. காரது மாருதம் - மேகங்களோடு சேர்ந்து வீசும் காற்று. ஈற்றடி உயிரெதுகை பெற்றது.
இதனால் கருவிகளுள் சிலவற்றிற்குக் கூறற்பாலன சிலகூறப்பட்டுள்ளன.

பண் :

பாடல் எண் : 5

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும்
ஏதம் படச்செய் திருந்த புறநிலை
ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு)
ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

பொழிப்புரை :

தத்துவம் முப்பத்தாறனுள் பூதம் ஐந்து, ஞானேந் திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப்பதினைந்தும் புறக்குற்றங் களில் மூழ்கச் செய்கின்ற புறக்கருவிகளாம். ஆறு ஆதாரங்களும், ஒரு வகை மாயையாகச் சொல்லப்படுகின்ற பிரகிருதிகுணங்களும் அவத் தைக்கு ஏதுவாகும். அந்நிலையில் ஐந்தவத்தைகளுள் முதலாவதாகிய சாக்கிராவத்தையில் தொண்ணூற்றாறு கருவிகளும் தொழிற்படுவன வாம்.

குறிப்புரை :

எனவே, இது மத்தியசாக்கிராவத்தையாம் ஆறா தாரங்கள், முக்குணங்கள் இவையும் சில இடங்களில் தாத்துவிகமாகச் சொல்லப்படுகின்றன. `மலம்` என்றது மாயா மலத்தை, `கருவி தொண்ணூற்றாறு என்றது, எல்லாக் கருவிகளும் `குறைவின்றிச் செயற்படும்` என்றபடி.
இதனால், மத்தியாலவத்தையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை
படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை :

மேற்கூறிய மத்தியலாவத்தையின் இயல்பைக் கூறுமிடத்து உயிரினது செயற்பாடு, அனைத்துச் சுற்றங்களும் சூழ அரசன் உலாவருதல் போன்றதாகும். யானை இருபத்தைந்து, (இவை ஆன்மதத்துவங்கள்) குதிரை ஐந்து, (இவை காமம், வெகுளி, உலோபம், யோகம், மதம், என்னும் உணர்ச்சிகள்) அமைச்சர் நால்வர். (இவை நால்வகை வாக்குக்கள்) புறஞ் சூழ்ந்து வரும் சேனைகள் காலாட்படைகள் (இவை வித்தியா தத்துவங்களும், சிவ தத்துவங்களும்) சென்று சென்று நிற்கும் வாயில்கள் ஒன்பது. (இவை நவத் துவாரங்கள்) இங்ஙனமாக அறிக.

குறிப்புரை :

சொல்லாது விடுத்த தாத்துவிகங்களையும் உபலக் கணத்தால் ஏவலர் முதலியவராகக் கொள்ளல் வேண்டும். ஞானா மிர்தத்திலும்l கருவிகள் அரசச் சுற்றங்களாக உருவகித் திருத்தல் அறியத்தக்கது. இடம், அதன்கண் செயற்படும் கருவியைக் குறித்த ஆகுபெயர். படுதல் - பொருந்துதல். பரசேனை - வேறு நின்று சூழும் சேனை. `மத்திமை` என்பதின்பின் `ஆக` என்பது வருவித்து அதனை எண்களுடன் முடிக்க.
இதனால், மேற்கூறிய மத்தியாலவத்தையின் இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு உருவகமாக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

பொழிப்புரை :

அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம்மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்` எனமயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள் தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையாது` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியன வாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது அவர் அறியாமை இருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `தழுவி` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருளில் வந்தது. இரண்டாம் அடியில் `அவ்வுடம்பிடை` எனச்சுட்டு வருவிக்க. `சாக்கிரம் முதலிய அவத்தைகளின் இயல்பை அறிவார்க்கு, உயிர் உடம்பின் வேறாதல் தெற்றென விளங்கும்` எனற்கு இம்மந்திரத்தை இங்கு அருளிச்செய்தார். `கனவில் தூல உடம்பு செயலற்றுக் கிடை யாய்க் கிடக்கவும் உயிர் சூக்கும உடம்போடு கூடிச் செயற்படுதல் அனு பவம் ஆதலின், அவ்வாறே உயிர் ஏனை உடம்புகளின் வேறானது என்பது ஏனையவத்தைகளையும் உணரின் விளங்கும்` - என்பதாம். சிவஞான போதம் மூன்றாம் சூத்திரத்திலும் அவத்தைகளின் இயல்பு பற்றியே உயிர் உடம்பின் வேறாய் உண்மை நாட்டப் பட்டது. `நின்ற உயிர்` என்றாரேனும் `உயிர் நின்றமை` என்றலே கருத்து.
``குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு``
என்னும் குறளில் 8 `நட்பு` என்றது நட்பு இன்மையைக் குறித்து நின்ற குறிப்பு மொழி என்பது அதன்கண் கூறப்பட்ட உவமையால் விளங்கும். அஃதே இங்கும் கூறப்பட்டது. மடத்திற்கும், நாய்க்கும் இயைபில்லையாயினும், ஏதோவொருவழியால் நாய் மடத்தினுள் புகுந்து விட்டதாயினும் அஃது அங்கு நிலையாது நீங்குதல்போல, சடமாகிய உடம்புகட்கும், சித்தாகிய உயிருக்கும் இயைபில்லை யாயினும், வினைகாரணமாக உயிர் உடம்போடு இயைந்து நின்றது ஆகலின், அவ்வியைபு நிலையாது நீங்குதல் இயல்பென்றவாறு. இங்ஙனம் உவமையை விரித்துரைத்துக்கொள்க.
இதனால், `மேற்கூறிய உடலின் பஞ்ச பேதத்திற்கு அனுபவம் அவத்தை பேதங்கள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்
துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர்கள், `உலகத்தில் நாம் எவ் வாற்றால் உயிர் வாழ்கின்றோம்` என்பதைச் சிறிதும் உணர மாட்டார்கள். (உள்வாங்கியும், வெளிப்போக்கியும் பிராண வாயுவை ஓய்வின்றி இயக்குதலால்தான் அவர்கள் வாழ்கின்றனர். ஆகையால் அதனையறிந்து) பிறவியை அறுக்கின்ற அசபா மந்திரத்தால் பிராண வாயுவை மேற்சொல்லியவாறு இயக்கிப் பயின்று தூயராய்ப் பின் அவ்வாயுவை உள்ளே நிறுத்தி` அம்மந்திரத்தை, `சிவன் நான்` எனப் பொருள்படும் வகையில் மாற்றி நினைந்து அவ்வாற்றால், காமனை அழித்தோனாகிய சிவன் தம்மிடத்தில் பதிந்து பின் நீங்காது விளங்கும் படி செய்தலாகிய இம்முறையை உணர்ந்து, அதனால் அவன் அருளே தமது உடம்பாகச் செய்து கொள்வார்க்கு, அங்ஙனம் அமைந்த உடம்பு அழிந்தொழியாது; நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

`சிவன் நான்` எனப்பொருள்படும் மந்திரம், `சிவோகம்` என்பது. அம்ச மந்திரத்தை, `சோகம்` என மாற்றிய வழியும் அதன் உண்மைப் பொருள் `சிவோகம்` என்பதேயாதல் பற்றி, `அசபையை மாற்றி` என்றார். முகத்தல் - பிராணவாயுவைக் கும்பித்தல். இங்குக் கூறியவற்றையெல்லாம் கல்வி கேள்விகளால் அறிந்திருந்தும் அவ்வாறு செய்யாதாரை நோக்கியே, `ஏழைகள்` என்றும், `அறிகிலர்` என்றும் கூறினார். `அறிவினான் ஆகுவ துண்டோ`l எனத் திருவள்ளுவர் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
இதனால் யாக்கை நிலையாதாயினும் அதனை நீட்டிக்கும் வழியை அறிந்தோர் அது செய்யாதிருத்தலின் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள்
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

பொழிப்புரை :

அறிவுப் பொருளேயாயினும் ஆணவ மறைப் பால் அவ்வறிவை இழந்து நின்ற உயிரை இறைவன் கருவிக் கூட்டத்துள் மறைந்து நிற்கும்படி செய்தான். (பின்பு அவ்வுயிர் பக்குவம் எய்திய காலத்தில்) குருவாகி வந்து எனக்கு உபதேசித்த நூல்கள் வழியாக என் உடம்பினுள்ளே மறைந்திருந்த பிராசாத கலைகள் பதினாறையும் விளக்கினான்.

குறிப்புரை :

`அதனால் நான் கருவிக் கூட்டத்தினின்றும் வெளி யேறினேன்` என்பது குறிப்பெச்சம்.
`ஆரியன் ஒடுங்கிய சித்தினை அறுபத்துள் ஒளித்திட்டு வைத்தான். (பின்பு அவனே) வந்து அளிக்கும் கலைகளினால் என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறை அளித்தனன்` என இயைத்துக்கொள்க.
`ஆரியன்` என்பது இரட்டுற மொழிதலாய் முன்பு `பெரி யோன்` எனவும், பின்பு, `ஆசிரியன்` எனவும் இருபொருள் தந்தது. இரண்டாவது பொருட்கு `ஆகி என ஆக்கச் சொல் விரித்துரைக்க.
`ஒரு பதினாலை` - என்பது பாடம் அன்று. ஒரு பதினாறு - பிராசாத கலைகள் பதினாறு. அவற்றை உபதேசமுறையான் அன்றி அறிதல் கூடாமையின், `என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறு` என்றும், அவற்றை அறிந்து அவ்யோகத்தை (பிராசாத யோகத்தை)ச் செய்யவே உடற்கூறுகள் அனைத்தும் இனிது விளங்கி, உயிரினது நிலையும் புலப்படுதல் பற்றி, `ஆரியன் வந்து அளித்தனன்` - என அப்பேற்றினது சிறப்பையும் கூறினார்.
இதனால், யோகிகட்கு அவத்தை பேதங்கள் யாவும் இனிது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்த தொருபூ தசயமே.

பொழிப்புரை :

மண்ணிலிருந்து தோன்றிய பல மலர்களை உடைத் தாய் விளங்குகின்ற நீர், பொன்னிறத்தை உடைத்தாகிய தீயினின்றும் அதற்குப்பின் தோன்றியதாம். இனி அத்தீக் காற்றி லிருந்தும், காற்று ஆகாயத்திலிருந்தும் தோன்றினவாம். புத்தியினின்றும் தோன்றிய தாகிய அகங்காரத்திலிருந்து தோன்றியது மனம். இவ்வாறு தூல சூக்கும தேகங்களின் உற்பத்தியைப் பகுத்துப் பகுத்து உணர்ந்தால், அவற்றை ஒடுக்கி, ஆன்மாத் தூய்மை அடைகின்ற நிலை கைகூடும்.

குறிப்புரை :

`நீரில் உள்ள மலர்கள் மண்ணில் தோன்றியன` என்றதனால், `நீர் மண்ணில் தோன்றவில்லை; மண்ணே நீரில் தோன்றியது` என்பது குறிக்கப்பட்டது. யாப்புக்கு ஏற்பச் சொற் சுருங்கி வருதற்பொருட்டுத் தனித் தனியாகக் கூறாமல், தொடர்ப் படுத்திக் கூறினார். பொன், உவம ஆகுபெயராய்த் தீயைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப்பகுதியைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப் பகுதியைக் குறித்தது. `வளியின், ஆகா யத்தின்` - என அவ்விடங்களில் தொகுக்கப்பட்ட நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபை விரித்து, `வளி` - என்பதை இரண்டாம் முறையும் ஓதுக. `புத்தி ஆங்காரம், என்பது, `புத்தியினின்றும் தோன்றிய ஆங்காரம்` என ஐந்தாவதன் உருபும் பயனும் உடன் தொக்கதொகை. அதன்பின் இன்னுருபு விரித்து, `மன்னும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `புத்தி ஆங்காரத்தின் மனம் மன்னும்` என்க. அனைத்தும் நான்கடிகளுள் அடங்கு மாறெல்லாம் கருதி இவ்வாறு அடக்கி ஓதினார்.
பூத சயம் - பூத காரியமாகிய உடம்பை வென்று மீளும் வெற்றி. `பூத சயம் கூடும்` என்பதில் `கூடும்` என்பது அவாய் நிலையாய் நின்றது. அகங்காரத்தினின்றும் மனத்திற்குப்பின் தோன்றிய ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் உளவாயினும் அவை ஓராற்றால் பூதங்களின் அடங்குதல் பற்றி ஓதாது விடுத்தார். `ஒருபூ சயமே` என்பதை `ஒருபூத தசயமே` - என வகையுளியாக்குக.

பண் :

பாடல் எண் : 11

முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

பொழிப்புரை :

ஐவர் சத்திகளில் முன்னவளாகிய மனோன் மணிக்கு மகன் ஒருவன்தான். அவளிடத்தினின்றும் தோன்றிய மகேசுரனுக்கு மக்கள் இருவர். நெருப்புப்போலும் உருவத்தையுடைய உருத்திரனுக்கு மக்கள் மூவர். மணமகள் போல அழகு மிக உடைய திருமகளுக்கு மக்கள் நால்வர். கணவனது இயல்பு நோக்கிக் கன்னி யாகச் சொல்லத்தக்க வாணிக்கு மக்கள் ஐவர். இவையெல்லாம் அநாதியில் யில்லை. ஆயினும் அநாதியாகிய சிவன் அவ்வாறாகிய தனது சத்தியை அநாதியே தாய்மை அடையுமாறு கருதினான்.

குறிப்புரை :

`அதனால் இவைகள் எல்லாம் உளவாயின` என்பது குறிப்பெச்சம் `உலகம் சிவம் சத்திகளின் விளையாட்டே` என்பது பற்றிச் சிலவற்றைச் சத்தியின் மேலும், சிலவற்றைச் சிவத்தின்மேலும் வைத்துக் கூறினார். மகேசுவரன் அருவனும், அருவுருவனும் ஆகாது உருவன் ஆதலின், `மூர்த்தி` - என்றார். ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்திற்கும் சதாசிவன் முதலிய ஐவர் அதிதேவர் ஆதல் பற்றி, அவற்றில் உள்ள குணங்கள் அவர் ஈன்ற மக்களாக உவமித்து ஓதினார். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் - என்பன ஆகாயம் முதலியவற்றில் ஒன்று தொடங்கி, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என இத்துணையவாகப் பொருந்தியிருத்தலை அறிந்துகொள்க. ஐம்பூதங்களை வழிபடுதற்கண் அவை அவற்றின் அதிதேவராலே செயற்படுதலை அறிந்து வழிபட்ட வழியே பயன் விளையும் ஆகலின், அவற்றை அவ்வாறறிதற் பொருட்டு இம்மந்திரத்தை ஓதினார். பஞ்ச பூதங்களின் முறைமையே பஞ்ச கலைகட்கும் ஆதலை உணர்க. வது - மணத்திற்கு உரிய பெண். விட்டுணு போகத்தையே தருதல் பற்றி, அவனது சத்தியைக் `கன்னி` என்றுங் கூறினார். பின்னர் வந்த கன்னி, சத்தி உலகத்தை நோக்குதல் இன்றித் தன்னிலையில் நின்ற நிலைமையைக் குறிப்பால் உணர்த்திற்று. கன்னியின்கண்ணே காதலித்தான்` - என ஏழாவது விரிக்க காதலித்தல், இங்கு உலகத்தைத் தோற்றுவிக்க விரும்பி நின்றது. காதலித்தற்கு வினைமுதல் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், மேற்கூறப்பட்ட பூத சயத்திற்கு அறியற்பாலன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சுழுத்திக்குப் பின் கண்ட கனவிலே செயற்பட்ட ஓசை முதலிய புலன்கள் ஐந்தும், பின்னர்ச் சென்று கலந்த பொறிகள் ஐந்தோடும் கூடியிருக்கும் நிலையில் அப்பொறிகளின் வழியாகப் புறப்பொருள்களை அந்தக்கரணங்கள் நான்கும் உணர்வுறும் நிலைமையை ஒருங்கே அடைந்தபின் புருடன் முன்னை நிலையை அடைந்து, விரிந்த பரந்த சிறந்த சாக்கிராவத்தையையுடையனாய், உலகமே தானாயது போன்ற வியாபக நிலையைப் பெற்று, வினைகளை நுகர்தலும் ஈட்டலும் செய்திருப்பான்.

குறிப்புரை :

ஐந்து, ஐந்து, நான்கு என்னும் எண்கள் அவ்வவ்விடம் பற்றி அவ்வக் கருவிகளை உணர்த்தின. சிறப்புப் பற்றி ஞானேந்திரிய விடயங்களையே கூறினாராயினும் இனம் பற்றிக் கன்மேந்திரிய விடயங்களும் அவற்றிற்குரிய கன்மேந்திரியங்களும், அவற்றிற்கு, வலிமை தருகின்ற வாயுக்கள் பத்தும் கொள்ளப்படும். படவே, `எடுத்துக் கூறிய பதினைந்துடன் இவ்விருபதுங்கூட, அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் முப்பத்தைந்து` என்பதும், `அவற்றால் நிகழ்வது கேவல சாக்கிரம்` என்பதும் விளங்கும். `அமர்ந்து நின்றான்` - என்னும் பயனிலைக்குத் தோன்றா எழுவாயாய் நின்றது `புருடன்` என்பதே யாகலின், அதுவும் எடுத்துக் கூறப்பட்டதாயிற்று. மந்தமாய் நிகழினும் ஐம்புலனையும் உணர்தலிற் குறையாமைபற்றி. `அண்டமும் தானாய் அமர்ந்து நின்றான்` என்றார்.
இதனால் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து)
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

பொழிப்புரை :

ஞானேந்திரியமும், கன்மேந்திரியமும், அந்தக் கரணங்களும் ஆகிய பதினான்கு கருவிகளோடு கூடிச் சாக்கிரா வத்தையில் நின்ற புருடன், அவ்வாறு நிற்கும் நிலையிற்றானே இரு வகை இந்திரியங்களாகிய பத்துக் கருவிகளை நீக்கிவிட்டு, எஞ்சிய நான்காகிய அந்தக்கரணங்களோடு மட்டும் அழுத்தமான கண்டத் தானத்தில் சென்று, முன்பு சாக்கிரத்தில் புருவ நடுவில் நின்று நுகர்ந்த உலக நுகர்ச்சிகளின் வாசனையைக் கனவாகக் காண்பான்.

குறிப்புரை :

அவத்தைக்கு ஏதுவாவனவாக மேற்கூறிய கருவிகள் முப்பத்தைந்தனுள் ஞானேந்திரிய விடயம் ஐந்தும், கன்மேந்திரிய விடயம் ஐந்தும், பிராணாதி வாயுக்கள் பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்களாதல் பற்றி அவற்றை விடுத்து, தத்துவங்களாகிய பதினைந்து மட்டுமே இங்குக் கூறினார். கண்டத்தில் கனா நிகழும் பொழுது, `அந்தக்கரணம், புருடன்` என்னும் ஐந்தோடு தாத்துவிகங் களாகிய இருபதும் கூட, இருபத்தைந்து கருவிகள் செயற்படும் என்பது அறிக. இதுவே சொப்பனமாம்.
`மன்று` - என்றது புருவ நடுவை. கன்றுதல் - இறுகப் பற்றுதல். விழிப்பினின்றும் நீங்கிய உயிரை அமைதியாக உறங்க ஒட்டாது கனாவில் பிணித்து வைத்தல் பற்றிக் கண்டத்தானத்தை, `கன்றிய கண்டம்` - என்றார். `வாதனையைக் கனவாகக் கண்டான்` என்க. அது, பகுதிப்பொருள் விகுதி. பல நாளும் நிகழ்வதை எதிர்காலத்தாற் கூறாது, ஒரு காலத்தின்மேல் வைத்து, இறந்த காலத்தாற் கூறினார். `பதினாலிற் பத்து நீத்து` என்றதனானே, கேவல சாக்கிரம் முப்பத் தைந்து கருவிகளால் நிகழ்தல் பெறப்பட்டது.
இதனால், கேவல சாக்கிரம், கேவல சொப்பனம் ஆகிய அவத்தைகளின் இயல்பு கூறப்பட்டது. கேவல ஐந்தவத்தையே கீழாலவத்தையாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 14

தானம் இழந்து தனிபுக் கிதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி
ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்திய தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய கண்டமாகிய தானத்தை (இடத்தை) விட்டுப்புருடன் கீழ் இறங்கி, அங்ஙனம் இறங்கும் நிலையில், முன்பு இருந்த அந்தக்கரணங்களுள் மானமாகிய அகங்காரத்தையும், மதியாகிய புத்தியையும் விடுத்து, யாதொன்றையும், பற்றிநினைக்க மாட்டாத நிலையையடைந்து, இருதயத்தில் தனியேசென்று, புலன் உணர்வையிழந்து இழப்பு நிலையில் உயிரினது சொரூபமே காணப் படாது கிடக்கும் நிலையே சுழுத்தியவத்தையாம்.

குறிப்புரை :

அகங்காரத்தையும், புத்தியையுமே இழந்ததாகக் கூறினமையால், சித்தம் விடப்படாதாயிற்று. நினைத்தல் மனத்தால் ஆகலின், `நினைக்க மாட்டாது` என்றமையால் மனம் நீங்கினமையும் பெறப்பட்டது ஆகவே, பெரும்பான்மை பற்றி, `தனி புக்கு` - என்றா ராயினும், `சித்தத்துடன் புக்கு` என்பதே பொருளாயிற்று. புறப் பொருளைப் பற்றுவது மனமேயாகலின், அஃதில்லையாகவே, `அதனால் பற்றப்படும் ஞானேந்திரிய விடயங்களும், கன்மேந்திரிய விடயங்களும் இலவாம்` என்பது தானே விளங்கிற்று. தாத்துவிகம் ஆதல்பற்றி, வாயுக்களை நாயனார் கூறாதே விடுத்தலால், பிராணாதி வாயுக்களில் பிராணன் தவிர ஏனை ஒன்பது வாயுக்களும் சொப்பனத் தானத்தோடே நின்று விடுதல் உரையிற் கொள்க. இதனால், சொப்பனத் தானத்தில் செயற்படுவனவாகக் கூறப்பட்ட இருபத்தைந்து கருவிகளில் சத்தாதி விடயங்கள் ஐந்து, வசனாதி விடயங்கள் ஐந்து, வாயுக்கள் ஒன்பது, மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்கள் மூன்று ஆக இருபத்திரண்டு கருவிகள் சொப்பனத் தானத்திலே நின்று விட, `சித்தம், பிராணன், புருடன்` என்னும் மூன்று கருவிகளினாலே இருதயத்தில் சுழுத்தி நிகழும் என்க. சித்தம் செயற் படுதலால் `சுழுத்தியில் ஆன்மாவிற்கு ஆழ்ந்த சிந்தனை உண்டு` என் பதும், ஆயினும் `புத்தி` இல்லாமையால் விழித்தபின் `முன்பு என்ன சிந்தித்தோம்` என்பதை ஆன்மா உணர்வதில்லை - என்பதும் உணர்க.
பிராண வாயுவை இயக்குவது அகங்கார தத்துவமே ஆகையால், `பிராணன் உண்டு` எனவே, `அதனை இயக்கும் அகங்கார தத்துவம் உண்டு` என்பது பெறப்பட்டதாயினும், அஃது பிராணனை இயக்குவதைத்தவிர, `நான்` என முனைப்புற்று எழுச்சி யாகிய தனது காரியத்தைச் செய்யமாட்டாமையால், நீங்கிய கருவி யாகவே எண்ணப்படும்.
இதனால், கேவல சுழுத்தியின் இயல்பு கூறப்பட்டது.
சுழுத்தியில் ஆன்மா அறியும் கருவிகள் இல்லாமையால் அறியாமையிற்பட்டு, முடமாய்க்கிடப்பதையே ஏகான்மவாதிகள், ஆன்மாச் சுழுத்தியின் பிரம்மானந்தத்தில் அழுந்தியிருப்பதாகக் கூறுவர். `நிர்க்குணமாகிய சுத்தப்பிரமமே அவிச்சை வசத்தால் சகுணமாகிய பந்தத்தை எய்தும் எனக் கூறுகின்ற அவர்கட்கு, `பிரம்மா னந்தத்தை அடைந்த சீவன் மீட்டும் அதைவிட்டு விடயானந்தத்திற்கு வந்துவிடும்; இந்நிலை அன்றாட நிகழ்ச்சியாகச் சீவனுக்கு மாறி மாறி நிகழும் எனக் கூறுதல் பொருந்தும். `சிவனை அடைந்து, அவனது இன்பத்தை நுகர்ந்த உயிர், மீட்டும் ஐம்புல இன்பத்தை நோக்கி வருதல் இல்லை. அதனால், சிவன் தன் அடியார்களுக்கு மீண்டு வாரா வழியையே அருள்புரிவான்` எனக் கூறுகின்ற சித்தாந்திகட்கு அது பொருந்தாது - என்பதை விளக்கச் சுழுத்தி நிலையை, `விரிவு - அறியா அவ்வியத்தம்` என்றார். விரிவு - அறியப்படுவனவாய் விரிந்து கிடக்கும் பொருள்கள். அவ்வியத்தம் - விளங்காமை. `அவ்வியத்தம்` என்பது காரண இடுகுறியாய் மூலப் பிரகிருதியைக் குறிப்பதாயினும் இங்குக் காரணக்குறியால் ஒன்றும் விளங்காதநிலையைக் குறித்தது. உலக அனுபவத்தை இழந்துவிடுவதே சிவாநுபவத்தை, அல்லது பிரம்மாநுபவத்தைப் பெற்றுவிடுதல் ஆகிவிடாது. `ஆகும்` எனின், கட் குடியில் மயங்குவோர், விடம் தலைக்கேறுதல் முதலிய காரணங் களால் மூர்ச்சையுற்றோர் முதலிய பலரும் யாதொரு ஞான ஒழுக்கமும் இல்லாமலே சிவாநுபூதியைப் பெற்றவர் ஆகி விடுவர். ஆகவே, `சுத்தத்தில் அரிதில் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன வேறு; கேவலத்தில் எளிதில் அன்றாட நிகழ்ச்சியாய் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன வேறு எனவும் தெரிந்துணர்ந்துகொள்க. மேனி - சொரூபம். ஆன்மாவின் சொரூபம் அறிவு.
இவ்விடத்தில் கூறப்பட்டுவருவன `கீழாலவத்தை` எனப்படும் கேவல ஐந்தவத்தைகளேயாம்.

பண் :

பாடல் எண் : 15

சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.

பொழிப்புரை :

சுழுத்தியில் உள்ள மூன்று கருவிகளுள் புருடனுக்கு அறிவைத் தருவதாகிய சித்தம் நீங்கிப்போக, உந்திக் கமலத்தின்கண் பிராணவாயு ஒன்று மட்டுமே அவனுக்கு அறிவைத் தருவதாய் அமைய அங்கு இருந்துகொண்டு, ஆன்ம தத்துவங்கள் யாவும் தன்கண்வந்து ஒடுங்கநிற்பதாகிய மூலப்பிரகிருதியைத் தான் சிறிது அறிதலை அவன் செய்துகொண்டிருப்பான்.

குறிப்புரை :

அதுவே கேவல துரியமாம். சுழுத்தியை, `சுழுனை` என்றார். காட்சிக்குக் கருவியாவனவற்றை, `காட்சி` என்றது ஆகு பெயர். `பிராணன் தன்காட்சியாக` என ஆக்கம் விரித்து, அத்தொடரை ஈற்றடியில் முதலில் கூட்டுக. ஒழுகுதல் - ஒழுகிப்போதல்; நீங்குதல். `சித்தம் ஒழுக` - என இயைக்க. `கமலம்` என்பது இடத்திற்கு ஏற்ப உந்திக் கமலத்தைக் குறித்தது விழுதல் - வந்து ஒடுங்குதல்.
இதனால், புருடன், பிராணன்` என்னும் இரு கருவிகளே செயற்பட, ஆன்மா உந்தியில் நிற்றல் கேவல துரியம், அல்லது கீழாலவத்தைத் துரியம் - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தானத் தெழுந்து தருந்துரி யத்தினின்
வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத் தெழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.

பொழிப்புரை :

உயர் தனக்குச் சிறப்பிடமாகிய இருதயத்தினின் றும் புறப்பட்டவழி அதற்குத் தரப்படும் துரியத்தானத்தில் நின்று பின்பு அதனையும் விட்டு அப்பாற் சென்று, உலகத்தைப் பின் தள்ளிவிட்டு, நாதத்தால் உணர்வு விளங்குமாறு நிற்கின்ற குண்டலினி சத்தியின் தலைபொருந்தியுள்ள மூலாதாரத்தை அடைந்து, அவ்விடத்தில் பொருள்களை மயங்கியறிதலாகிய அந்த அறிவும் இன்றி அறிவே யில்லாதது போலக் கிடக்கும்.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களும் உயிர்க்கு இடமாயினும் அவற்றுள் இருதயமே சிறந்ததாதல் பற்றியே `உயிருக்குத் தானம்` என்றார். `தானத் தினின்றும்` என ஐந்தாவது விரிக்க. `எழுந்தவழி` என்பது `எழுந்து` எனத்திரிந்து நின்றது. வாயுவுக்குமேல் உள்ளது வானம் ஆதலின், `வானத்தெழுந்து`` என்றது, பிராண வாயு நீங்கிய நிலையைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றது. பிராணவாயுவின் இயக்கமும் இல்லாது போதலின் உயிர் உலக அனுபவத்தைச் சிறிதும் உடைத் தாகாமையை, ``வையம் பிறகிட்டு`` என்றார், கானம் - நாதம், கருத்து - உணர்வு. அஃது அதனைத் தரும் குண்டலி சத்தியை உணர்த் திற்று. `வித்தை` என்பதும் உணர்வே, `அது மயக்க உணர்வு` என்றற்கு `ஊனத்த வித்தை` என்றார். ஊனம் - குறை. `ஊனமாய் நின்றான்` என ஆக்கம் விரித்து, ஆக்கம் உவமை குறித்து நின்றதாக உரைக்க. ஊமனுக்கு உணர் விருப்பினும் அதனை வெளிப்படுத்த மாட்டுவான் அல்லன் ஆதலின், அவன் உணர் வுடையனாயினும் அது செயற்படாத நிலையை உடைய உயிருக்கு உவமையாயினான். காரியமாகிய உலகத்தை நுகராமையின் காரண மாகிய மூலப்பிரகிருதியே அவ்விடத்தில் உயிருக்கு நுகர்ச்சியாவதாம்.
இதனால், `பிராணவாயுவின் இயக்கமும் இன்றிப் புருடன் மூலாதாரத்தில் மூலப்பிரகிருதியைப் பற்றிக்கொண்டு, வெறும் மூடமாய்க் கிடப்பதே கேவல துரியாதீதம்` என அதனது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.

பொழிப்புரை :

[நால்வகை வாக்குக்களில் மிகவும் தூலமாகிய வைகரிவாக்குச் சகல ஐந்தவத்தையிலும் தூலமாகிய மத்திமை வாக்கு கேவல ஐந்தவத்தையிலும், சூக்குமமாகிய பைசந்தி வாக்கு யோகா லவத்தையிலும், மிகவும் சூக்குமமாகிய சூக்குமை வாக்கு சுத்த ஐந்த வத்தையிலும் செயற்படும். அதுபற்றித்தான் வாக்குக்கள் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகளாக எண்ணப்படவில்லை.]
மேற்கூறிய நால்வகை ஐந்தவத்தைகளில் மேற்கூறியவாறு நால்வகை வாக்குக்கள் செயற்படுங்கால், சாக்கிரம் முதலிய ஐந்திலும் முறையே, தூலதமம், தூலதரம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம்` என்னும் நிலையில் செயற்படும் அதிசூக்குமமே ``ஊமையெழுத்து`` என்றும் ஏனையவை ``பேசும் எழுத்து`` என்றும் மறைபொருட் கூற்றாகக் கூறப்பட்டன. அதிகாரம் கீழாலவத்தையாதலின் இங்குக் கூறப்பட்ட, `பேசும் எழுத்து, ஊமையெழுத்து` - என்பன கீழாலவத் தையில் செயற்படுவ தாகிய மத்திமை வாக்கின் `அதிசூக்குமம், சூக்குமம்` என்பவற்றை யாம். தூலதமம், தூலதரத்திலும், தூலதரம் தூலத்திலும், தூலம் சூக்குமத்திலும் ஒடுங்கிவிடப்பின்பு சூக்குமமும் அதிசூக்குமத்தில் ஒடுங்கிவிட்டால் பெத்தநிலையில் உள்ள உயிர் புறப்பொருள்களில் யாதொன்றையும் அறியமாட்டாது உணர்வை முற்றிலுமாக இழந்து, பிரகிருதிமயமாகியே கிடக்கும். இதுவே கீழாலவத்தையில் துரியா தீதத்தின் நிலைமை. இதனையே,
``ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்``
என்றார். `ஆமை` என்றது உயிரை. இஃது உருவகம். அஞ்சு - ஐம் புலன்கள்மேல் சென்று அவற்றைக் கவர்கின்ற உணர்வு. அவ்வுணர்வு சிறிதும் வெளிச்செல்லாது உயிரோடு உயிராய் ஒட்டிக் கிடத்தல், ஆமையின் ஐந்து உறுப்புக்கள் அதனது ஓட்டிற்குள்ளே அடங்கி வெளித் தோன்றாதிருத்தலோடு ஒத்திருத்தல் பற்றி, உயிர் ஆமையாக உருவகம் செய்யப்பட்டது. சுழுத்தி துரியங்களிலும் அஞ்சும் அடங்கி யிருப்பினும் சித்தமும், பிராணனும் செயற்படுதலால் `அவற்றின் வாசனை சிறிதாயினும் இருக்கும்` என எண்ண இடம் உண்டு. உயிர்ப்பு அடங்கி விட்டமையால் அதீதத்தில் அவ்வாறு எண்ணச் சிறிதும் இடம் இல்லாமை பற்றி, இவ்விடத்திற்றானே ``அஞ்சும் அடங்கிடும்`` எனக் கூறினார். `தமோமாய்` (இருள்மயமாய்) நிற்கும் அதீத நிலையை சிவத்தில் அழுந்தி ஒளிமயமாய் நிற்கும் நிலையாகக் கூறுபவர் யாதும் அறியாதவர்` என்பதை உணர்த்துதற்குப் பின்னிரண்டடிகளைக் கூறினார். அவற்றுள் `ஓம்` என்றது அதன் உண்மைப் பொருளாய் நிற்கும் சிவத்தை.
`சுத்த துரியாதீதத்தில் சிவத்தை அடைந்த சிவமயமான உயிர், இருள் முழுவதும் நீங்கி ஒளிமயமானதாகும். அதனால் அது `நாம்` என்னும் சீவபோதமும் இல்லாததாகும். அந்த நிலையை நாம் அறிந்திலோம் என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

குறிப்புரை :

கீழாலவத்தையைக் கூறிவருகின்றார் ஆகலின், அது பற்றித் தம்மை அந்த அவத்தையின் நின்று பேசுபவராக வைத்து, ``நாம் அறியோம்`` என்றார். ஆகவே `கீழாலவத்தையில் நிற்போர் சுத்த வத்தையின் அனுபவத்தை அறியார்` என்பது அதன் உண்மைப் பொருளாயிற்று.
இதனால், `கீழாலவத்தைத் துரியாதீதம் இருள் மயமானது, என்பது உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள
நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

பொழிப்புரை :

சுழுத்தியைக் கடந்து உள்ள `துரியம், துரியாதீதம்` - என்னும் இரண்டனுள் துரியம், `எவ்வாறு இருந்தது` என வினாவு பவர்க்கு, `இவ்வாறு இருந்தது` என விடையிறுக்கக் கூடியதாகும். துரியா தீதமோ எனில், அவ்வாறு வினாவுவார்க்கு இவ்வாறு இருந்தது` எனச் சொல்லவாராத நிலையாகும். ஏனெனில், சாக்கிராவத்தையில் அடக்கினும் அடங்காது, யாதானும் ஓர் ஆற்றால்தப்பிப் புறத்தே ஓடுதலால், `நரிகள்` என்று சொல்லத்தக்கனவாகிய ஞானேந்திரியம், கன்மேந் திரியம், அந்தக்கரணம் என்னும் பதினான்கு பொறிகளும் (கரணங்களும்) பிரகிருதியின் தமோ குணமாகிய விடத்தை உண்டமையால் இறந்து போய்விட்டன. அப்பொறிகளின் வழிச் செல்லும் உணர்விற்கு ஊர்தியாகிய `பிராணன்` என்னும் குதிரையும் தனது ஓட்டம் அடங்கி ஒழிந்தது.

குறிப்புரை :

எனவே, நரிகள் பதினான்கு இல்லையென்றாலும் பரி (குதிரை)யின் ஓட்டம் இருந்ததால் துரியநிலை `இவ்வாறு இருந்தது` எனச் சொல்லத் தக்கதாயிற்று - என்பதாம். `நான் சுகமாகத் துயின்றேன்` - எனப் பின்பு விழிப்பு நிலையில் கூறுவது, துரிய நிலையில் எய்திய அனுபவத்தையேயாம். அந்த அனுபவமும் அறியப்படாத நிலையே கீழாலவத்தைத் துரியாதீத நிலை என்க. `இறந்த` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், கீழாலவத்தைத் துரியாதீத நிலை உயிர் தன்னையும் மறந்திருக்கும் நிலை` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு)
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து)
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

பொழிப்புரை :

முத்தி பெறுங்காறும் விட்டு நீங்காதிருக்கின்ற ஐந்து மலங்களால் நிலைபெறுவதாகிய சகலாவத்தையில் தனியொரு சிறப்பினையுடைய மாயேயமாகிய தனு, கரணம் முதலியவற்றிற்கு இந்தச் சகல நிலையில் முடிவேயில்லாமையால், எல்லாவகையான உயிர்களும் ஒரு பிறப்பின் பிறந்து, பின் அதனை விட்டு நீங்கி, வேறொரு பிறப்பை அடைந்து அலமரும். அதற்குக் காரணம் தனது ஆற்றல் குன்றப்பெறாத வினையே.

குறிப்புரை :

எனவே, `அவத்தை பேதங்கள் பெரும்பான்மை யாகச் சகலாவத்தையிலே நிகழ்வன` என்பதும், `அவற்றிற்குக் காரணம் வினையே` என்பதும் கூறியவாறாம். ஆகவே, `கேவல ஐந்தவத்தை என்பன` - சகலத்திற் கேவல அவத்தைகள் என்றும் சகல ஜந்தவத் தைகள் - என்பன, - `சகலத்திற் சகல ஐந்தவத்தைகள்` என்றும், `சுத்த ஐந்தவத்தைகள் - என்பன, - சகலத்தில் சுத்த ஐந்தவத்தைகள்` என்றும் உணரற்பாலன - என்றதாயிற்று. சகலத்திற் சகலம் `மகாசகலம்` - எனப்படும் இவற்றைக் கூட்டிக்கணக்கிடின் மூவைந்து பதினைந்தாதல் அறிக. இனி, `யோகாலவத்தைகள் - என்பனவும் சகலத்தில் நிகழ் வனவேயாதலின் அவற்றைக்கூட்ட, சகலத்தில் நிகழும் அவத்தைகள் இருபதாம், அவை நிற்க. தனியே கேவலத்தில் ஐந்தும், தனியே சுத்தத்தில் ஐந்தும் கூட்ட அவத்தைகள் முப்பதாம். `இவற்றுள் சகலத்தில் நிகழும் அவத்தைகளே பெரும்பாலன` - என்றது உணர்த் துதற்கே` `மாறா மலம் ஐந்தின் மன்னும் அவத்தையின்` என்றார். கேவலத்தில் மன்னும் மலம் ஆணவம் ஒன்றே சுத்தத்தில் யாதொரு மலமும் இல்லை. ஆகவே, `மலம் ஐந்தால் மன்னும் அவத்தை` என்றது சகலாவத்தையாயிற்று. `கேவலம், சகலம், சுத்தம்` எனக் காரண அவத்தைகள் மூன்று. அவை ஒவ்வொன்றிலும் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தும்காரிய அவத்தைகள். ஈறாகாது` என்னும் எதிர்மறை வினையெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது.
இதனால், இயைபுபற்றி, `அவத்தை` என்பன பலவும் குறிப்பால் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து)
எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.

பொழிப்புரை :

இன்ப துன்பங்களை வினைக்கு ஏற்றவாறு விளைவித்து நிற்கின்ற மாயேயமாகிய உலகம், அந்த இன்பத் துன்பங்கள் தன்கண் வாதியாதபடி புளியம் பழத்தின் ஓடுபோல ஒட்டற்றுக் கழிய, இறைவனது திருவருளில் தோய்ந்து நிற்றலே முத்தியாகும். (என்றது, சீவன் முத்தி நிலையை, அதுவே சகலத்தில் சுத்தம் - என்க. இந்நிலைமுற்றாகக் கைகூடுதற்கு முன் பிராரத்த மாயினும் நீங்கிவிடுமாயின் அந்த உயிர் மற்றொரு பிறப்பை அடையும்) அத்தகைய உயிர் மற்றொரு பிறப்பை அடையுமாயினும் முன்னை ஞானத்தோடே பிறந்து, அது வழியாக அப்பிறப்பில் அது சீவன் முத்திநிலை முற்றாகக் கைகூடப் பெற்றுப்பின் முடிநிலையாகிய பரமுத்தியை அடையும்.

குறிப்புரை :

``ஊட்டிடும் மாயை`` என்றதனால் அவை மாயேய மாயின. எனவே, `மாயேயத்தின் ஒட்டற்று நிற்கும் நிலையும், அதுவும் இன்றி நீங்கி வைந்தவத்தோடு நிற்கும் நிலையுமே சுத்தாவத்தை` என்பதும் கூறியவாகும்.
ஏர்முத்தி - எழுச்சியையுடைய முத்தி முடிநிலை முத்தி. `ஊட்டிடும் மாயையும் உண்ணும் தன் ஊடாடாது அண்ணல் அருள் பெறல் ழுத்தியதாவது; அவனை நண்ணல் இலா உயிர்` என உரைக்க. ஞானத்தினால் - ஞானத்தினோடு.

பண் :

பாடல் எண் : 21

அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
இதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாக ஐயவத் தைப்படு வானே.

பொழிப்புரை :

அறிவு சிறிதேனும் தொழிற்படாத, `ஒரு பேருறக்கம்` எனச்சொல்லத்தக்கது, ஆன்மா ஆணவத்தோடு மட்டும் இருக்கின்ற நிலை (அஃது `அநாதி கேவலம்` எனப்படும்). பின்பு அந்த ஆணவ மலத்தின் சத்தி மாயையினால் சிறிதே கெட, அந்த மாயை விளக்கும் அளவிற்கு அறிவு விளங்கப் பெற்ற உயிர், நீக்குதற்கரிய வினைக்கு ஈடான உணர்வையே உடையதாம் நிலையில் இன்பம் போல நிகழ்கின்ற அறியாமையில் செல்வதே சகலத்தில் கேவலம். இந்தக் கேவலத்தில்தான் ஆன்மாக் கீழாலவத்தை ஐந்தினையும் அடையும்.

குறிப்புரை :

ஆணவத்தின் சத்தி கெடுவது மாயையால் ஆதலின் அஃது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கன்மத்தால் முன்னி` என உருபு விரிக்க. `கேவலம்` - என்பது `அறியாமை` என்னும் பொருட்டாய் நின்றது. `கேவலத்து` என்னும் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. பரம் - மேன்மை `பரம் ஆக` - என்றது `வேறு (கீழ்) ஆகின்ற` என்னும் பொருளைத் தந்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
இதனால், கீழால் அவத்தை` - எனப்படுவன சகலத்தில் நிகழும் கேவல ஐந்தவத்தைகளாம் - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடா ணவத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

பொழிப்புரை :

அநாதியே பற்றி, இறுதியற்றிருக்கும் ஆணவ மலத்தால் அறிவிழந்து கிடக்கும் உயிர்களைக் கருணையே உருவாய் உள்ள இறைவன் எவ்வாறு அறிவை மறைத்தல் இன்றி, அதனை விளங்கச் செய்வதாகிய மாயையாகிய பணிப்பெண்ணை விட்டு ஆணவ உறக்கத்தினின்று தட்டி எழுப்பும்படி செய்வான். இது நல்லாசிரியன் ஒருவன் முன்னைநிலையில் சோம்பலால் உறங்கி விடுகின்ற சில மாணவர்களை அவ்வாசிரியன் மாணவர்களது அறிவை வளர்க்கத் தனது கையில் கொண்டுள்ள பிரம்பால் தட்டியெழுப்புதல் போல்வது.

குறிப்புரை :

`ஆசான்எழுப்பும்` என இயைக்க. `தன்முன்னே துயில் மாணவகரை` என்க. உவமையில் சொல்லளவில் திணை மயங்கின எனினும், பொருளில் மயக்கம் இன்று. நேசம்` என்பது கடைக் குறைந்து நின்றது `ஆணவத்தரை மாயையால் எழுப்பும்` என்றதனால், `ஆணவம் சோம்பல்போல உறக்கத்தை விளைவிக்கும்` என்பதும், `மாயை ஆசான் கைப்பிரம்புபோல உறக்கத்தினின்றும் விழிப்பிக்கும்` என்பதும் பெறப்பட்டன. இன்னும், மாயையை ஆசானது கையில் உள்ள பிரம்போடு உவமித்தமையால், `அது சிவனுக்கும் பரிக்கிரக சத்தியேயன்றித் தாதான்மிய சத்தியன்று` என்பதும் விளங்கிற்று. இம்மந்திரப் பொருள் உமாபதி தேவரது சதரத்த சங்கிரகத்துள். l
``குருர் யதாக்ரதா; சஷ்யாந் ஸுப்தாந் தண்டேந போதயேத் I சவோபி மோஹநீத்ரயாம் ஸுப்தாந் சத்தியா போதயேத் II
எனக்கூறப்பட்டது. அதனைத் துறைமங்கலம் சிவப்பிரகாசர் தமது சதமணி மாலையில்,
``குரவன் முன்துயில் கொள்ளும்மா ணாக்கனை
உரிய கோல்கொண் டுணர்த்துவன்; ஈசனும்
துரிய போகத் துயில்கொளு வான்றனை
அரிய சத்தியி னால்அறி விக்குமே`` 8#
என மொழிபெயர்த்தார்.
சதரத்ந சங்கிரகத்தின் மூலத்திலும், அதன் மொழிபெயர்ப்பிலும் `சத்தி` எனப் பொதுவாகக் கூறப்பட்டதனை இம்மந்திரத்தில் `மாயாள்` எனச் சிறப்பாக விளக்கினமை அறியத்தக்கது.
இதனால், `கேவலாவத்தைக்கு காரணம் ஆணவ மலம்` என் பதும், `சகலாவத்தைக்குக் காரணம் மாயை` என்பதும் கூறப்பட்டன.
`ஏசாத மாயை` என்றது, `அறிவை மறைத்தலைச் செய்யாது, விளக்கத்தைச் செய்வது` என்னும் குறிப்புடையதேயாகும். அதுபற்றி, `சுத்தமாயை` எனப் பொருள் கூறுதல், `பிரளயாகலர், சகலர்` என்னும் இவர்கட்குப் பொருந்தமாட்டாது.

பண் :

பாடல் எண் : 23

மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என
விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.

பொழிப்புரை :

`காலம், இடம், கருவி, கரணம் ஆகிய இவற்றுள் எந்த ஒன்றினாலும் உட்படுத்தப்பட்டு, ஏகதேசப்படுதலை ஒரு ஞான்றும் எய்தாத பேரறிவாகிய அந்தப் பரப்பிரமந்தான் இந்த உயிர்` என ஏகான்மவாதி கூறும் அக்கூற்று, `ஒரு குடத்துள் அடங்கியுள்ள நீரைச்சுட்டி, - மேகம் - என்பதும் இதுதான்; - தான் கங்கா நதி - என்பதும் இதுதான் எனக் கூறுகின்ற மிக்க அறிவில்லாதவன் மிக்க அறிவுடையான் போன்று கூறுகின்ற கூற்றோடு ஒப்பதாய்ப் போக, இந்த உடம்பிற்குத் தலைவனாகிய உயிர் இதைவிட்டு நீங்கும் நாள் வருகின்ற வரையில் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகளை இந்த உடம்பின்கண் எய்தி, ஏகதேசப்பட்டுத் துன்பன் உறும்.

குறிப்புரை :

`எஞ்சலில் ஒன்றெனும் ஆறு` என்பதை முதலில் வைத்து உரைக்க. எஞ்சல் இல் ஒன்று, பரப்பிரமம். ஆறு - முறைமை. `இவ்வுடற்கண்` என ஏழாவது விரிக்க. குடம், அதன்கண் உள்ள நீரைக்குறித்த ஆகுபெயர். `மஞ்சு, மத்தாகினி` - என்பனவும் அன்ன.
அவத்தை இயல்பே கூறுகின்றாராயினும், `இவ்வியல்பானே ஏகான்ம வாதம் பொருந்தாமையும் விளங்கும்` என அதனையும் இனிது விளங்குதற்பொருட்டு இடம் வாய்த்தமையின் கறினார்.

பண் :

பாடல் எண் : 24

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

பொழிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணியாய் நின்று பொருளைத் தருகின்றது. படி - நாடு; என்றது புற உலகத்தை. அதனை இறைவன் ஆணையால் தனதாகக் கொண்டு இன்பத்துன்பங்களை எய்திவரும் உயிரையே, `உடை மன்னவன்` என்றார். வடிவு - பல உள்ளமைப் புக்கள். மாநகர் - கோநகர்; என்றது உடம்பை. வருதல் - உலாவருதல். என்றது, எல்லா இடங்களிலும் வியாபித்து, எல்லாப் புலன்களையும் உணர்ந்தும் அவற்றிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் செய்தும் வரும் சாக்கிராவத்தையை. அடியுடை ஐவர் - அணுக்கமாய் நிற்கும் அமைச்சர்கள். என்றது, ஞானேந்திரியங்கள் ஐந்தையும், அவற்றால் உணரப்படும் பொருள்கள் அந்தக்கரணங்களாலே தெளிவுபடும் ஆதலின், அந்த அந்தக்கரணங்களும் `ஐவர்` என்றதிலே அடங்கின. அங்கு உறைவோர் - அமைச்சர்களுக்குக் கீழாய் அரசனது உலாவில் பலவகைப் பணிகளையும் செய்துநிற்கும் பல பணியாளர்கள் என்றது பிறகருவிகளை. இம்முறையை, `கால்கொடுத்து இருகை மூட்டி` என்னும் ஞானாமிர்த அகவலிலும் காண்க. (அகவல் - 9) இச்சாக்கிர நிலை, ``படைகொடு பவனிபோதும் பார் மன்னன்`` எனச் சித்தியாரிலும் கூறப்பட்டது. (சுபக். சூ. 4)

குறிப்புரை :

`மன்னன் உலா வரும்போது அங்கு உறைவோர் துயின்றனர்` என்றதனால், `துயின்றது, அவன் அந்தப்புரத்தில் சென்றபொழுது` என்பது போந்தது. அந்தப்புரமாவது மூலாதாரம். அந்தப்புரத்தில் அரசன் தன் மனையாளைத் தழுவிக் கிடத்தல், உயிர் மூலப்பிர கிருதியைப் பற்றி அதனை யொழித்துப் பிறிதொன்றையும் அறியாது கிடத்தல். இது சகலத்தில் கேவல துரியாதீத நிலையாகும். `சகலத்தில் சகல சாக்கிரம் ஆன்மாவின் அறிவு முற்றாகவும், தீவிரமாகவும் செயற் படும் நிலை எனவும் சகலத்தின் கேவல துரியாதீதம் ஆன்மாவின் அறிவு சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலை எனவும் உணர்க. முற்றாகவும் தீவிரமாகவும் செயற்படும் நிலைக்கு அரசன் குதிரைமீது ஏறி நகர்வலம் வருவதையும், சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலைக்கு அரசன் அந்தப்புரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து கிடத்தலையும் நூல்களில் உவமையாகக் கூறுதல் மரபாக உள்ளது. இல்லம் - அவரவருக்கு உரிய இடம். `அவற்றை அடைதற்கு அவர்கள் துடிப்பர்` என்க. `அரசன் உலாவரும்பொழுது அமைச்சர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகச் செயற்படுதல்போலச் சகலத்தில் சகல சாக்கிரத்தில் அனைத்துக் கருவிகளும் நன்கு செயற்படும்` எனவும், `அரசன் அந்தப்புரத்தில் சென்று உறங்கிவிட்டபொழுது தனி யொரு காவலாளியுங்கூட உறங்கிவிடுதல்போல, உயிருக்குக் காவ லாகிய பிராண வாயுவுங் கூட இயங்காது` எனவும் கொள்க. சாக்கிர நிலைக்கு, அரசன் கொலுமண்டபத்தில் அமர்ந்து அரசியலை ஆழ்ந்து நோக்குதலும் உவமையாகச் சொல்லப்படும். `சாக்கிரத்திற்கு இடம் புருவ நடு` என்பது முன்பே சொல்லப்பட்டது. அதனால் அவ்விடம் அரசனது கொலுமண்டப மாகவும் கூறப்படும்.
இதனால், சகலத்தில் விளக்க நிலைகளில் உச்சகட்டமானதும், மூடநிலைகளிலும் உச்சகட்டமானதும் சொல்லப்பட்டன. இவற்றாலே இடையில் உள்ளவற்றின் இயல்புகள் தாமே விளங்கும் என்பது பற்றி.

பண் :

பாடல் எண் : 25

நேரா மலத்தினை நீடைந் தவத்தையின்
நேரான வாறுன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.

பொழிப்புரை :

சகலத்திற் கேவலமாகவும், சகலத்திற் சகலமாகவும் இயல்பாக நிகழ்ந்து வருகின்ற அஞ்சவத்தைகளிலே பாகம் (பக்குவம்) எய்தாத ஆணவமலத்தைச் சகலத்தில் சுத்தமாய் நிகழும் சாக்கிரா வத்தையில் பாகம் எய்தியதாக அறிந்து, அதனானே பஞ்ச மலங்களும் பாகமெய்தியவற்றையும் நன்கு கண்டு, எஞ்ஞான்றும் தனது செம்மை யினின்றும் திரிதல் இல்லாத மேலான பொருளோடுகூடி நிற்பதே உண்மைச் சுத்தாவத்தையாகும்.

குறிப்புரை :

நீடு ஐந்தவத்தை - நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்ற ஐந்தவத்தை என்றதனால் அவை பந்த நிலையில் நிகழும் சகல ஐந்தவத்தைகளாயின. இதனை முன்னர்க் கூட்டியுரைக்க. `நீடு நனவு` என்னும் காலங்கந்த பெயரெச்சத் தொடர், `நீடுதற்கு ஏதுவாகிய நனவு` எனப்பொருள் தந்து, சுத்தசாக்கிரத்தைக் குறித்தது. `ஞானச்செய்தி` - எனப்படும் தச காரியத்துள் முதல் ஆறும் சுத்த சாக்கரமும், ஏனைய நான்கும் சுத்த சொப்பனம் முதலிய நான்குமாம். இவையே சகலத்தில் சுத்தமாம் ஐந்தவத்தைகள். இந்நிலையில் உயிர்தான் தன்னையும், தலைவனையும் அறிதலின் இதுகாறும் அங்ஙனம் அறியாதிருந்தது ஆணவ மலத்தாலே என்பதையும், இப்பொழுது அது நீங்கியதால்தான் இந்த அறிவு நிலை எய்தியதையும் வழியளவையானே தெளிவாக உணரும் ஆதலின் அதனையே, `நேரா மலத்தை நடு நனவினில் நேரானவாறு உன்னி` என்றார். `மூலமலத்தின் இயல்பு விளங்கவே, ஏனைய மலங்களின் இயல்புகள் தாமே விளங்க, எல்லா மலங்களின் இயல்பும் விளங்கினவாம்` என்றற்கு `முன்பு நேராதிருந்த மலம் ஐந்தையும் இப்பொழுது நேரே தரிசித்து` என்றார்.
இந்நிலை துகளறு போதத்தில் `பத்தாம் அவதாரமாகிய கேவலாதீதம்` - எனக் கூறப்பட்டது.
சகலத்தில் சுத்தம் நிலையில்லாது மாறி மாறி நிகழ்வதாக, உண்மைச் சுத்தமே நீங்காது நிற்பதாகலின் அதனை `நித்தம்` என்றார்.
இதனால், `சகலத்தில் நிகழும் ஐந்தவத்தைகளில் சுத்த ஐந்தவத்தைகளும் உள` என்பதும், `ஆயினும் அவை நிலை யற்றனவாக, நிலையானவையாய்ச் சகலத்தோடு தொடர்பு சிறிதும் இல்லாத உண்மைச் சுத்தாவத்தைகளும் உள` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்
சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம்
சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையாகிய சாக்கிர சாக்கிரத்தில் மட்டுமே திரோதானமலம் செயற்படும். (எனவே இந்நிலையில்தான் அனைத்துக் கருவிகளும் செயற்பட, ஆன்மா உலகினை நன்கு உணர்வதாகும்). சாக்கிர சொப்பனத் தளவிலேதான் - அஃதாவது, சாக்கிர சாக்கிரம், சொப்பனம் என்னும் இரண்டில் மட்டுமே ஆன்ம தத்துவம் செயற்படும். (அவற்றுள் சாக்கிரத்தில் மட்டுமே புறக் கருவிகள் செயற்படச் சொப்பனத்தில் அந்தக்கரண நிகழ்ச்சியாகிய சிந்தனை மட்டுமே உளதாகும்) சாக்கிர சுழுத்தியளவில்தான் - அஃதாவது சாக்கிர சாக்கிரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி என்னும் மூன்றளவிலேதான் கன்மங்கள் நிகழும். (எனவே, அந்த மூன்றளவிலேதான் ஆன்மாவிற்குச் சுக துக்கங்கள் விளங்கித் தோன்றும்). சாக்கிர துரியத்தளவில்தான் வித்தியா தத்துவங்கள் செயற்படும். (எனவே, அந்த நான்களவில்தான் ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு உளதாகும்).

குறிப்புரை :

எனவே, சாக்கிர துரியாதீதத்தில் யாதொரு செயற் பாடும் இன்றி, மூச்சும் நின்றுவிட ஆன்மாத்தான் சாக்கிர சாக்கிரத்தில் அறிந்த சுகம், அல்லது துக்கத்திலே தன்னையும் மறந்து, `அதுவேயாய் அழுந்தியிருக்கும்` என்பதுதானே விளங்கிற்று.
ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு வித்தியா தத்துவத்தாலும், `இஃது இன்னது` என்றும் இஃது எனது, பிறருடையது என்றும் நிகழ்வதாகிய பிறபொருள் உணர்வு ஆன்ம தத்துவத்தாலும் நிகழும். `யான், எனது, பிறருடையது` - என்னும் உணர்வுகள் முழு அனுபவங்கள் ஆகா, அவை பொருள்களை உணரும் உணர்வுகளே யாம், அங்ஙனம் பொருள் உணர்வு நிகழ்ந்தபின், ஆன்மா அந்த உணர்வுகள் அனைத்தையும் இழந்து, உணர்ந்த பொருளில் அதுவாய் அழுந்துவதே முழு அனுபவமாகும். உலகப் பொருளிள் ஆன்மா அவ்வாறு அழுந்தி நிற்பதே உலகத்தைப் பற்றிய முழு அனுபவமாகும். அதுவே சாக்கிர துரியாதீதம். அதிற் சிறிது குறைந்தன எல்லாம் சாக்கிர துரியம் முதலிய நான்குமாம். இதுவே இம்மந்திரத்தால் கூறப்பட்டது.
வித்தியா தத்துவங்களைச் சிவ தத்துவங்கள் செயற்படுத்த, வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களைச் செயற்படுத்தும். ஆகவே, `வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களில் சில பல வற்றைச் செயற்படுத்தாது நிற்கும் நிலைகளே கீழாலவத்தை` எனவும், `சிவதத்துவங்கள் வித்தியா தத்துவங்களில் சில பலவற்றைச் செயற்படுத் தாது நிற்கும் நிலைகளே மத்தியா லவத்தை` எனவும் உணர்ந்து கொள்க.
சித்தாந்த சாத்திரங்களில் கூட, `மாயேயம்` என இருக்க வேண்டிய பாடங்கள் `மாமாயை` என்றே மாற்றப்பட்டிருத்தலைக் காணலாம். அவ்வாறே இம்மந்திரத்திலும் சில பிரதிகளில் பாடம் மாற்றப்பட்டுள்ளது.
`மாயேயம்` என்பது இங்கு பிரகிருதியின் காரியங்களையே குறித்தது. மூல கன்மமே `கன்மம்` எனப்பட, அதினின்றும் தோன்றும் நல்வினை தீவினைகளாகிய காரிய கன்மம், `கான்மியம்` எனப்பட்டுப் பின் `காமியம்` என மருவி வழங்குகின்றது. ஈற்றடியில் `மாயை` என்றது அசுத்த மாயையை. அஃது ஆகுபெயராய், அதன் காரிய மாகிய வித்தியா தத்துவங்களை உணர்த்திற்று.
நான்கடிகளிலும் `செயற்படும்` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன.
இதனால், மத்தியாலவத்தை ஐந்தன் இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத் துளானே.

பொழிப்புரை :

சிவதத்துவம் அனைத்தும் செயற் படாமையால், வித்தியா தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய அதீத நிலையில் சிவதத்துவங்கள் தொழிற்படத் தொடங்கிய பொழுது வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் எழுந்து, கலை, காலம், நியதி என்னும் மூன்று தத்துவங்களை எழுப்பும். பின்பு கலையினால் வித்தையும், வித்தையால் அராகமும் எழுந்து தொழிற்படும். இவ்வாற்றால் மத்தியா லவத்தைகளில் துரியாதீதம் முதலிய ஐந்தும் நிகழும், அவை ஐந்தும் `மகாசகலம்` எனப் பொதுப் பெயரைப்பெறும்.

குறிப்புரை :

`வித்தியா தத்துவங்களில் மாயை தவிர யாதொரு தத்துவமும் செயற்படாதநிலை சாக்கிரத்துரியாதீதமும் மாயையோடு காலம் மட்டும் தொழிற்படும் நிலை சாக்கிரத் துரியமும், அவற்றோடு கலை நியதி இவை தொழிற்படும் நிலை சாக்கிரச் சுழுத்தியும், அவ்றோடு வித்தை செயற்படும் நிலை சாக்கிர சொப்பனமும், அவற்றோடு அராகமுங் கூட, சிவதத்துவம், வித்தியா தத்துவம் அனைத்தும் செயற்படும் நிலை சாக்கிர சாக்கிரமும் ஆம்` - எனக் கூறியவாறு. சிவதத்துவங்களும் இவற்றிற்கு ஏற்பச் செயற்படும் என்க.
`மாயை எழுப்பும்` - என்றதனால், `அது பிறிதொன்றையும் எழுப்பாது, தன்னளவில் செயற்பட்டிருந்த நிலை உண்டு என்பது பெறப்பட்டது.
முன்னை மந்திரத்தில், `சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி` - என்றதனாலும், `சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்` என்றதனாலும், `அந்நிலைகளில் வித்தியா தத்துவங்கள்மேற்கூறிய முறையில் செயற்படும்` என்பது கொள்ளப்படும்.
வித்தியாதத்துவங்களைக் காலம் முதலாக வைத்து எண்ணுதல் முறையாயினும், கலை முதலாக வைத்து எண்ணுதலும் உண்டு` என்பதைச் சிவப்பிரகாசம் முதலியவற்றால் அறிக.
பின்னர் `இராகாதி` என வருதலால், `கலாதி` என்றதில் `ஆதி` என்றது, நியதியை மட்டுமே தழுவி நின்றது.
வித்தை, அராகம் இவை யொழிந்த ஏனையவற்றை முன்னே வேறு பிரித்து ஓதினமையால், `ஏய்` என்பதில் ஏயப்பட்டன, அவையேயாயின,
வித்தியா தத்துவங்கள் பெரும்பாலும் ஒடுங்கினமையால், சாக்கிரத்தில் அதீதத்தை எய்திய ஆன்மாப் பின்பு அதினின்றும் மீளுதல் வித்தியா தத்துவங்கள் செயற்படுதலாலே, என்பார் முன்னிரண்டடிகளில் சிலவற்றை வகுத்துக்கூறிப் பின்னிரண்டடி சிலவற்றைச் சுட்டியொழிந்தார். மாசகலத்தையே இங்கு, `சகலம்` என்றார். `இராகாதி ஏய்` என மாற்றி ``கனா, நனா`` என்பதற்கு முன்னும் `ஆயினன்` என்பதை இறுதியிலும் கூட்டுக. `ஆன்மா ஆயினன்` எனத் தோன்றா எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், மத்தியாலவத்தைகளில் சிலவற்றினியல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேவிய அந்தன் விழிகட் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.

பொழிப்புரை :

பிறவிக் குருடன் கண்ணை விழித்து விழித்துப் பார்ப்பினும் யாதொன்றையும் காணமாட்டுவானல்லன். (இது போன்றது சாக்கிர துரியாதீதநிலை அஃதாவது, உணர்வு சிறிதும் இன்றிக் கிடக்கும் நிலையாம்).
ஒன்றும் காணப்படாத நிலையில் அக்குருடன் தன் காலில் கீழ்க் கிடப்பதைத் தடவித் தடவிப்பார்ப்பான். (இதுபோன்றது சாக்கிர துரிய நிலை. அஃதாவது, உணரத் தக்கனவற்றைச் சிறப்பாக அன்றிப் பொதுவாக உணரும் நிலையாம்).
தடவிப் பார்த்த குருடனுக்குக் கோல் ஒன்று கிடைத்ததாயின் அதனைத் துணையாகப் பற்றிச் சில இடங்களுக்குச் செல்வான். (இது போன்றது சாக்கிரச் சுழுத்தி நிலை; உணரப்படும் பொருள்களைச் சிந்தனையால் உணரும் நிலையாம்).
இதன் பிறகு அக்குருடன்தனக்குக் கண் தெரிவதற்கு வேண்டியவற்றைச் செய்வாரை அணுகி அவர்கட்கு உபசார வார்த் தைகளைச் சொல்வான். (இதுபோன்றது சாக்கிரச் சொப்பனநிலை. உணரவேண்டுவனவற்றை உணர்தற்கு முனையும் நிலையாகும்).
(இறுதியில் குருடன் கண்பெறுதலும் உண்டு. அதுபோன்றதே சாக்கிர சாக்கிரம்) சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்று நிலைகளில்தான் ஆன்மா செயற்பாடுடையதாம். ஏனை இரண்டும் செயலற்ற நிலைகளாம்).

குறிப்புரை :

மேவிய-பிறப்பிலே பொருந்திய. விழி கண், நிகழ் கால வினைத்தொகை. `குருடன்` என்றது, `பார்க்க இயலாதவன்` என்ற தாம். `காணும்` என்றது, தடவிப் பார்த்தலை, `தடிகொண்டு மேவும்` எனவும் `விழிபெற ஆவன கொல்லும்` எனவும் மாற்றியுரைக்க.
இங்குக் கூறிய இவ்வியல்புகள் பெரிதும் அதிர்ச்சியைத் தரத் தக்க செய்தியை அறிந்தவுடன் ஆன்மா மூர்ச்சித்துப் பின் தெளிவடை தலில் நன்கு விளங்கம். அது பற்றி அவற்றையே சிலர் உதாரணமாகக் காட்டினாலும் அவை மட்டுமே உதாரணங்கள் அல்ல. மிகச் சிறு சிறு செய்திகளிலும் விழிப்பில் இவைகள் இடையறாது நிகழ்வனவேயாம்.
இதன் முதல் மூன்று அடிகள் ஒட்டணியாய் அமைந்தன. ஆதலின், இதனால், மேற்கூறியவை உவமைகாட்டித் தெளிவிக்கப் பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 4

மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள்
ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல்
அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று
சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

பொழிப்புரை :

ஐம்பொறிகளைக் கருவியாக உடைய அந்த உடம் பாகிய ஆடரங்கத்துள் நின்று சத்தம் முதலிய புலன்களை உயிர் நுகரும் முறை, சிலந்தியானது வலைக்குள் ஏற்புடைய இடத்தில் இருந்து கொண்டு, அங்குவந்த உயிர்களை உண்ணும் முறைபோல்வது. ஆதலின், அதற்கு ஏற்புடையன மத்தியாலவத்தைகளே.

குறிப்புரை :

`தான்` என்றது உயிரை. `தான் சத்தம் முதல் ஐந்தும் உண்ணுமாறு, சிலந்தி உயிர் உண்ணும் மாறுபோலும்; ஆதலின் மத்திமம் ஒத்த` - எனக் கூட்டி முடிவு செய்க.
`ஐம்பொறி அத்தனுவாகிய ஆடு அகம்` என்க. உயிரின் செயற்பாட்டை ஆட்டமாக உருவகித்தார். `அத்தனும்` - என்பதைப் பாடமாகக் கொண்டமையால், பலரும் இடர்ப்பட்டனர். `வலையது` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `சிலந்தி உயிர் உண்ணுதல் வலையின் மத்தியில் இருந்து` என்பது, பொருளில், `மத்திமம் ஒத்த` என்றதனானே பெறப்பட்டது` `மயில் போல ஆடினாள்` என்றால், மயில் ஆடுதல் தானே பெறப்படுதல் போல. `ஒத்த` என்பது அன் பெறாத அஃறிணைப் பன்மை வினைமுற்று. ஒத்து - வலைக்கு ஏற்ப இயைந்து பின் வந்த `அங்கு` என்பதன்பின், `வந்து` என ஒரு சொல் வருவிக்க. `போல்` என்னும் பகுதியே நின்று, `போல்வது` என முற்றுப் பொருள் தந்தது. அதன்பின், ஆதலின் என்பது சொல் லெச்சமாய் நின்றது.
இதனால், மத்தியாலவத்தையே உயிர் உலகத்தை நன்கு அனுபவிக்கும் நிலையாதல் கூறப்பட்டது. அதுபற்றி இது, `பிரேரகாவத்தை` - எனப்படும்.

பண் :

பாடல் எண் : 5

வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு)
உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு உதவியாக அவைகளின் வசமாக வைக்கப்பட்ட கருவிகள் இருபத்தஞ்சு. எனினும், (அவைகளை வைத்துமட்டும் போதாமையால்) எல்லாவற்றையும் நடத்தும் தலைமைப்பாட்டோடு உடனாய், நீங்காது ஒருவன் இருக்கின்றான். அவனை எல்லா நூல்களும் ஒருமுகமாக, `பித்தன்` என்றும் `பெரியோன்` என்றும் `பிறப்பிலி` என்றும் கூறுதலையறிந்து. அவனையே விரும்பி நான் உய்ந்தவாறு குறிக்கொளத்தக்கதாகும்.

குறிப்புரை :

இருபத்தஞ்சு கருவிகளாவன, ஆன்மதத்துவம் இருபத்து நான்கும், புருட தத்துவம் ஒன்றுமாம். வித்தியா தத்துவங்கள் அனைத்தும் `புருடன்` என ஒன்றாக அடக்கப்பட்டன. ஆன்மாக் களுடன் இறைவன் கருவிகளைக் கூட்டினால் மட்டும் போதாது. செயல்தோறும் அவனும் உடன் இயங்கினால்தான் உயிர்கள் அக் கருவிகளால் அடையத் தக்க பயனை அடையும். அதுபற்றி இறைவன் அவ்வாறு உடன் நிற்றலையே இம்மந்திரத்தால் குறித்தார்.
இறைவன் இவ்வாறு உடனாய் நிற்கும் நிலைபெத்த காலத்தில் மத்தியாலவத்தையிலே சிறப்பாக நிகழ்தலால், அவ்வவத்தை `உணர்த்து முறைமை` - எனப்படுகின்றது. ஆகவே அதனை இங்குக் குறித்தல் முறைமையாகின்றது. ஈற்றில் உரைக்கப்பட்டது சொல்லெச்சம்.
இறைவன் இங்ஙனம் உடனாய் நிற்கும் நிலை சிவஞான போதம் பதினொன்றாம் சூத்திரத்தில் `காணும் உபகாரம்` என இனிது விளக்கப்பட்டது.
`இங்ஙனம் உடனாய் நிற்பவனைப் பிற தேவராக உணராது, சிவபெருமானாகவே உணர்தல் வேண்டும்` என்பதையே பின்னிரண் டடிகளால் கூறினார். `பிச்சன், பிறப்பிலி, பேர் நந்தி` என அப்பரும் அருளிச் செய்தார்.l `அவனருள் நச்சி` என மாற்றி யுரைக்க.
`இருபத்தஞ்சு` - என்றதை மாகேசுர மூர்த்தமாகக் கொள் ளுதற்கு, இங்கு யாதோர் இயைபும் இல்லாமை யறிக.
இதனால், மத்தியாலவத்தை பற்றி அறியத்தக்கதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன்
வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம்
கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.

பொழிப்புரை :

`சாங்கியர் கூறும் நிலம் முதல் மூலப் பகுதி ஈறான இருபத்து நான்கு தத்துவங்களுடன் அவர் இருபத்தைந்தாவதாகக் கூறு கின்ற புருடனையும் ஒரு தத்துவமாகக் கூட்ட, சாங்கியர் கொள்கை யினின்றும் வேறான இருபத்தைந்து தத்துவங்கள் உளவாகின்றன. அவற்றிற்கு மேல் உண்மையில் `புருடன்` எனச்சொல்லத்தக்க ஈசுரனும் அவனுக்கும் மேலான, சொல்லுக்கு எட்டாத பராகாயமும், அதற்கு மேல் பரப்பிரமமும் ஆகத்தத்துவம் இருபத்தெட்டு` எனத் `தத்துவ எண்ணிக் -கையை இவ்வாறு கொள்வதே சிறப்பு` என வேதாந்திகள் கூறுகின்றனர்.

குறிப்புரை :

`வேதாந்திகளது கொள்கையை உணர்ந்தாலன்றிச் சித்தாந்திகளது கொள்கையின் சிறப்பு விளங்கமாட்டாது` என்பது பற்றி அதனைக் கூறினார். சாங்கியர் முதலியோர் நிரீச்சுரவாதிகள் ஆயினமை பற்றி அவரது கொள்கைகளை நாயனார் கூறிற்றிலர். `உடன்` இரண்டில் பின்னது `தொகை` என்னும் பொருளது.
சாங்கியர் `புருடன்` எனக் கூறுவதே சிவன் - என்பது வோதந்திகள் கருத்து. அதனினின்றும் பிரித்தற்கு ஈசுரனை `மெய்ப் புருடன்` - என்றார். இதனையடுத்து, `பரம்` - என்றது. `மேல்` என்ற படி. `வியோமம், ஆகாயம்` - என்பன ஒரு பொருட் சொற்களாயினும் பூதாகாயம் அல்லாது, எல்லாவற்றிற்கும் மேலே உள்ள பராகாயமே சிறப்பாக, `வியோமம்` எனப்படும்.
சித்தாந்தத்தில் சிவனது சத்தியே பராகாயமாம். ஞானம யமாய் இருத்தல்பற்றி `சிதாகாசம்` - எனப்படும். `சிற்பர வியோமம்`* என்றார் சேக்கிழார்.
`எல்லாப் பொருள்கட்கும் இடங்கொடுத்து நிற்கும் பூதா காயம் போல, பிரகிருதி முதலாகிய அனைத்திற்கும் மேலாய் உள்ளது பரா காயம் `என்பது வேதாந்திகள் கொள்கை. அதனை, அனிர்வ சனீயம்` - என அவர் கூறுதல் பற்றி அதனை, `கூறா வியோமம்` என்றார். இதன் பின், பரம் என்றது, `பரம்பொருள்` - என்றபடி. இறுதியில் `வேறான` - என்றது, `சிறப்பான` என்றதாம் `வேறான தத்துவம் நாலேழு என வேதாநதி கொண்டனன்` - என்க. இம்மந்திரம் இருவிகற்பமாய் வந்தது.
மத்தியாலவத்தையில் வைத்துத் தத்துவங்களைக் கூறுவார். வேதாந்திகள் கூறும் தத்துவ முறைமையை இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டானடி காணலு மாமே.

பொழிப்புரை :

உயிர் (ஏலாத நிலைகளின் நீங்கி) ஏற்புடையதாகிய அழகிய நிலையைத் தலைப்பட்டபொழுது, இடைகலை, பிங்கலை நாடிகள் வழியாக இயங்குகின்ற காற்றோடு பொருந்தி அவற்றின் வடிவாகி, அப்பொழுதே இராசத சத்துவ தாமத குணங்களிலும் பொருந்திக் (கீழ்நோக்கிச் சென்று) மூலாதாரத்தை யடைந்து, அங்கே உள்ள குண்டலி சத்தியின் கீழ் நோக்கு நிலையை மாற்றி மேல்நோக்கி எழச் செய்து, பின்பு பிருதிவிமண்டலம், அப்புமண்டலம், தேயு மண் டலம் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மேற்கூறிய முக்குண வடிவாய் உள்ளமும் மூர்த்திகளிடமாக இறைவனைத் தரிசித்தல் கூடும்.

குறிப்புரை :

ஏற்புடை நிலையே அழகிது ஆதலின் அதனை `ஏல் அம்` என்றார். அம் - அழகு. அஃது ஆகுபெயராய், அழகிதாகிய நிலையைக் குறித்தது. அழகிய நிலையாவது யோகாவத்தை. அட்டாங்கத்தில் இயமம்முதலிய நான்கும் `யோக சாக்கிரம்` என ஒன்றாய் அடங்கும். ஏனைய பிரத்தியாகாரம் முதலிய நான்கும் யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம் என்பனவாய் அமையும். இவை ஐந்துமே சிறப்பாக, `மேலாலவத்தை` எனப்படும்.
யோகநூலார் இவற்றையே `மலம் நீங்கிய நின்மலாவத்தை` எனக் கூறுவராயினும்` ஒளியாலன்றி இருள் நீங்காதவாறு போல, ஞானத்தாலன்றி மலம் நீங்காது ஆதலின், ஞானவத்தைகளே நின்மலாவத்தையாம். இதனை,
``யோகில் தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்துபின் சன்னம் சாரும்``
எனச் சிவஞான சித்தி இனிது விளக்கிற்று.3 தாழ்தலாவது, கீழ் நிலையை அடைதல். இவை இங்ஙனமாயினும் நின்மலாவத்தையில் சேர்க்கும் ஆற்றலுடையன ஆகலின் `ஏற்புடையஅழகிய நிலை` எனப்பட்டன. கீழாலவத்தையும், இத்தன்மை இலவாதல்அறிக.
உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின் `இடையொடு பிங்கலை கோலங் கொண்டு` என்றார். இடையும், பிங்கலையும் அவை வழியாக இயங்குகின்ற காற்றைக் குறித்தலால் ஆகுபெயர்கள். உடல் உள்ள அளவும் முக்குணங்கள் நீங்கா ஆதலின் ஆன்மா அவற்றினுட் புகவேண்டியதாயிறறு. முறுக்குதல் - திசை மாற்ற வைத்தல். `கோண்` என்றது, `மண்டலம்` என்றபடி. பிராசாத நிலையில் நிராதாரத்தை உட்கொண்டு முதலில் உள்ளது அக்கினி மண்டலமாகச் சொல்லப்படினும் ஆதார யோகத்தில் பிரமனை நோக்கி முதலில் உள்ளனப் பிருதிவி மண்டலமாகக் கூறினார். ஆதாரங்களின் காணப் படுபவர்கள் குணமூர்த்திகளேயாயினும் அவர்களை நிர்க்குண மூர்த்தி யாகிய சிவனது விபூதிகளாகவே உணர்தல் வேண்டும், என்றற்கு,
``காலம் கொண்டான் அடி காணலும் ஆமே``
என்றார். உம்மை சிறப்பு. அதனானே யோகாவத்தையில் சிறப்பு விளங்கும். காலம் கொண்டான் - காலத்திற்கு உட்படாமல் அதனைத் தன் செயலுக்குக் கருவியாகக் கொண்டவன் சிவன்.
``காலமும் கடவுள் ஏவலால் துணைக் காரணங்காண்``
என்றது சிவஞான சித்தி.l
`அவத்தை` எனப்படுவன மேற்கூறிய `கீழாலவத்தை, மத்தியா லவத்தை` - என்பனவேயன்றி, மேலாலவத்தையாகிய யோகா வத்தையும் உண்டு - என்பதை இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 8

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குறிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

பொழிப்புரை :

நாடிகள் பத்தும், நன்மை விளங்குகின்ற வாயுக்கள் பத்தும் நாடிகளில் சிறப்புடைய, `இடை, பிங்கலை, என்னும் இரு நாடிகள் வழியாக இயங்குகின்ற `பிராணன்` என்னும் வாயுவிற்குக் கீழ்ப்பட்டு, அவற்றின்வழி நிற்கும். ஆணும், பெண்ணும் கூடியதனால் விளைகின்ற இன்பத்தில் உயிர் மூழ்குதற்குக் காரணமான சுக்கில சோணிதங்களும், அவ்வின்பத்தை விரும்புவதாய் அன்பைச் செய்கின்ற மனமும் உடல் முழுவதுமாய் இருக்கும்.

குறிப்புரை :

நாடிகள் பத்தும் தூல உடம்பிற்கு உறுப்பாய் அமைவன. அவை, `அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தானி, குகுதை, சங்கிலி, சிகுவை, புருடன்` - என்பன.
`பத்தும்` - என்பது, `வாயு` என்றதனோடும் சென்று இயைந்தது. வாயுக்கள் பத்தாவன, `பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` - என்பன. `நாடிகளாலும், வாயுக்களாலும் உடல் உருப்பெற்று நிலைபெறுகின்றன` எனவும், `உடலை மனம் பற்றி உலாவுதலால் இன்பம் விளைகின்றது` எனவும் கூறியதனால், தூலமும், சூக்குமமும், பரமும் ஆகிய உடம்பாய் உள்ள கருவிகளின் கூடுதல் குறைதல்களாலே அவத்தைகள் பலவாய் நிகழ்கின்றன` என்பது உணர்த்தியவாறு.
இதனால், அவத்தை பேதங்கட்குக் காரணம் குறிப்பால் உணர்த்தப்பட்டது. ஒடுங்கியிருந்திடும்` என்பதை இறுதியிலும் கொண்டு கூட்டுக.
(இரண்டாம் தந்திரத்து, `பாத்திரம்` - என்னும் தலைப்பில் வந்துள்ள `ஆவன ஆவ` என்னும் மந்திரம் (496) பதிப்புக்களில் இதனையடுத்தும காணப்படுகின்றது).

பண் :

பாடல் எண் : 9

பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.

பொழிப்புரை :

(`வேதாந்திகள் கொள்வன` - என மேற்கூறப்பட்ட) தத்துவங்கள் இருபத்தெட்டு என்னும் தொகை, தூலபூதம் ஐந்து, சூக்கும பூதம் (தன்மாத்திரை) ஐந்து, ஆகிய பூதங்கள் பத்தும், ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகிய இந்திரியங்கள் பத்தும், `மனம், அகங்காரம், புத்தி` - என்னும் அந்தக் கரணங்கள் மூன்றும், மூலப்பகுதி ஒன்றும் ஆகிய சடங்கள் இருபத்து நான்கும், அவற்றிற்கு மேல் அபர துரியமாகிய புருடன், அல்லது சீவன் ஒன்றும், அதற்குமேல் காலத்தின் வாயிலாக எல்லாவற்றையும் இயக்குகின்ற ஈசுரன் ஒருவனும், அவனுக்கு மேலேயுள்ள மாயையாகிய பராகாசமும், அவனுக்கு மேல் பரதுரியமாகிய பரம்பொருள் ஒன்றும் எனக் கருதத் தக்கதாகும்.

குறிப்புரை :

சித்தம் மூலப்பகுதியுள் அடங்கிற்று. `பராகாயம்` என்பதற்கு `மேய்த்த வியோமம் என்றார். ஈசுரனை மாயைக்கு உட்பட்டவனாகவே வேதாந்திகள் கொள்வர்.
இதனால் மேல் எண்ணளவாகக் கூறிய வேதாந்தி தத்துவங்கள் இவை என்பது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான்
தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால்
வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே.

பொழிப்புரை :

முந்நூறு, அதனுடன் முப்பதொருபான்; அஃதா வது முந்நூறு, இரண்டும் கூட அறுநூறு. தளம் - படி. இரட்டிய தாகிய ஆறு. ஆறாறு = முப்பத்தாறு, அறுநூற்றை முப்பத்தாறு படியாக உறழ வருவது இருபத்தோராயிரத்து அறுநூறு. இஃது ஒரு நாளைக்கு வெளிச்சென்றும், உட்புகுந்தும் நடக்கின்ற மூச்சின் எண்ணிக்கை யாகும். இவ்வாறு வாயு - பிராணன். எழுந்து நடந்தால், உயிரைப் பற்றி யுள்ள பஞ்சமலங்களும் தன் தன் வேலையைச் செய்யும். அப்பொழுது தான் மாயா காரியமாகிய தத்துவங்களின் செயல்களும் விளங்குவனவாம்.

குறிப்புரை :

`உடம்பில் உயிர் நிலை பெறுதற்குப் பிராண வாயு வினது இயக்கமே இன்றியமையாக் காரணமாய் இருத்தலின், அவ் வியக்கம் உள்ளதனால்தான் தத்துவங்கள் காரணமாக அவத்தைகள் நிகழ்கின்றன` என்றவாறு. துரியாதீத நிலையில் உயிர்ப்பு அடங்கு தலால் மேற்கூறிய எண்ணிக்கையில் சில குறையலாம். உயிர்ப்பு அடங்கிய நிலையில் உயிர் கேவலத்திலே கிடக்கும். மூன்றாம் இடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `அவத்தை பேதங்கட்கு உயிர்ப்பு ஓர் இன்றியமை -யாக்கருவி` என்பதும், அவ்வுயிர்ப்பின் நிலைகளும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 11

நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம்
மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை
கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.

பொழிப்புரை :

`நாலுகோடியே நாற்பத்தொண்ணாயிரத்து ஐந்நூறு` என்பது முற்கூறிய எண்ணிக்கையில் உயிர்ப்பு இயங்கும் இயக்கத் தொகை. அத்தொகையளவு, சிறிதே ஏற்றம் உள்ள ஐந்தாண் டுகளாம். (எனவே, அந்த அளவு மூச்சு, உடல் வளர்வதற்குத்தவிர, உயிர்க்கு யாதும் பயன்தருவன அல்லவாம்). இனி, `மூச்சு இயங்கும் காலத்தில் விளங்கிடும்` எனப்பட்ட தத்துவங்கள் தொண்ணூற்றா றாகும். எனினும், அவற்றை இருபத்தைந்தில் அடக்குவார் உளர்.

குறிப்புரை :

தத்துவங்களைப்பற்றிக் கூறிவரும் தொடர்ச்சிக்கு இடையில் அவற்றோடு இயைபுடைய உயிர்ப்பியல்கள் சிறிது இடம் பெற்றன. `ஐயைந்துள் ஆகும்` என்றது பிறன் கோட் கூறல். கோலிய - வரையறுத்த. `பால் அவை` என்றதில் `அவை` என்றது மேற்கூறிய தத்துவங்களை.

பண் :

பாடல் எண் : 12

ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

மாயா வாதியை வேறு கூறினமையால், `வேதாந்தி` என்றது பிரம பரிணாம வாதியையாயிற்று. இதனானே மேல் `வேதாந்தி` என்றதும் இவனையேயாதல் தெளிவாம். `ஐயைந்து` என் பதில் அந்தக்கரணம் நான்காக, அவற்றிற்குமேல் பிரகிருதி உளதாம்.
இதனால், மதவாதிகளின் தத்துவக்கொள்கைகள் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
தத்துவ மாவ(து) அகார எழுத்தே.

பொழிப்புரை :

`மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.

குறிப்புரை :

மெய்ம்மையை அறியும்பொழுதே பொய்மை பொய்மை யாதல் விளங்கும் ஆதலின், `தத்துவமானவை தன்வழி நின்றிடில் பொய்த்தவமாம் அவை போயிடும்` என்றார் பயனில்லாத செயல்களை, `தவம் என்றது இழித்தற் குறிப்பு. சொல்லும் பொருளு மாகிய இருவகைப் பொருள்களில் சொல்லைத் தனது அறிவினின்றும் வேறு பிரித்துக் காணுதல் அரிதாதல் பற்றி `தத்துவமானது அதுவே` என்றார். தன்னைக்கண்டால் போக்கொடு வர இறப்பும் விகாரமும் புருடன் இன்றாம்` என்பது சிவஞானசித்தி.l நாதத்தை அகாரமாகக் கூறுதல் மரபு.
இதனால், தத்துவ ஞானமே பந்தம் நீங்குதற்கு வழியாதல் கூறப்பட்டது. `ஐந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு` என்றார் திருவள்ளுவரும்.*

பண் :

பாடல் எண் : 14

அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி:
அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

`நான் எது` என்று தொடங்கி, முப்பத்தாறு தத் துவங்களையும் நிலம் முதல் நாதம் ஈறாக, ஒவ்வொன்றாக ஆராய்ந்து வந்தபொழுது, அவை அனைத்துமே சடமாய் இருத்தலால், `யான்` என்றும், `எனது` என்றும் உணரும் உணர்வுகளையுடைய நான் அவை களில் ஒன்றேனும் அல்லாமை புலப்பட்டது. ஆயினும் `அவ்வுணர் வினையுடைய நான் எது` என உணர இயலாமலே திகைத்திருந்தேன். அப்பொழுது நந்தி பெருமான், `முப்பத்தாறு தத்துவங்களும் சடம்` என்றும், `நான் அவைகளில் ஒன்றேனும் அல்லேன்` என்றும் உணர்ந்தது எது? அதுதான் நீ என்று உணர்த்தினார். அதன் பின் நான் அவ்வாறே உணர்ந்து மெய்யுணர்வு உடையனாயினேன்.

குறிப்புரை :

ஆன்மாத் தன்னைப் பிற பொருள்களை உணர்தல் போலத் தன்னினும், பிறவற்றினும் வேறாகப் பிரித்து எதிர்ப்படுத்தி வைத்து உணர்தல் இயலாது` என்பதும், பிற பொருள்களின் இயல்பை உணரும் முகத்தானே, `அவ்வுணர்வையுடைய பொருளே நான்` என அனுமித்தே உணர்தல் வேண்டும் - என்பதும் கூறியவாறு. இஃது அறியாமையைப் பின்னர்த் தோன்றிய அறிவைக் கொண்டே அனுமித் துணர்தல் போல்வது. உலகில் ஒருவன் பிறரையும், பிற பொருளையும் எதிர்ப்படுத்திப் பார்த்தல் கூடும் ஆயினும், தன் முகத்தைக்தான் அவ்வாறு பார்க்க இயலாது, கண்ணாடி வழியாகவே பார்க்க இயலும். `அது போல்வது இது` என்றும் கூறலாம்.
`என்முகம் எப்படியிருக்கிறது, எப்படியிருக்கிறது` என எண்ணி அலமருகின்ற ஒருவனும் அறிவுடையான் ஒருவன் கண்ணாடியைக் கொடுத்துக் காட்டிச் செய்வது போல, `நான் எது` எனத் தேடி அலைகின்ற பக்குவான்மாவிற்குச் சிவன் குருவாகிவந்து, `பிற பொருள்களை அறிந்து வருபவன் யாரோ, அவன்தான் நீ` என உணர்த்தி அருளுவான் - என்பதையே பின்னிரண்டடிகளால் கூறினார்.
`ஆன்மா - அருவுருவாய்த்
தோன்றிஉடன் நில்லாது; தோன்றாது நில்லாது;
தோன்றல்மலர்மணம்போல் தொக்கு`l
என மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.
இதனால், `பொருளியல்புகளை உணர்ந்துவரும் ஆன்மா தன்னை உணருமாறு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும்
ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி
போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.

பொழிப்புரை :

சகலத்தில் சகலமாகிய சகலசாக்கிரத்திற்றானே நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தையும், ஆணவத்தாலே ஆக்கப் படுகின்ற கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் அவை நிகழாதபடி, முதலாவதாகச் சொல்லப்படுகின்ற சகல சாக்கிரத்தில் உறைத்து நிற்கு மாற்றானே போக்கிச் சிவத்தோடும் திருவருள் வழியில் நிற்பவன், சடம் ஆதலின் நிலையின்றித் தோன்றியழிவனவாகிய முப்பத்தாறு தத்துவங்களுட்பட்டு, தத்துவான்மாவாய் நில்லாது, அவற்றின் நீங்கிச் சுத்தான்மா ஆவான்.

குறிப்புரை :

`மாசு நீங்கிய வழி, ஞாயிற்றின் முன்னிலையில் நிற்கும் படிகத்தில் ஞாயிற்றின் ஒளி பிரதிபலிக்கப் படிகம் அந்த ஞாயிறாகியே நிற்றல்போல, தத்துவங்களின் நீங்கியவழி, என்றும் சிவத்தோடே கூடி நிற்கின்ற ஆன்மாவில் சிவத்துவம் பிரகாசிக்க, அந்த ஆன்மாச் சிவமே யாய் நிற்கும்` - என்பது கருத்து.
ஆன்மாத் தத்துவங்களின் நீங்கிச் சிவத்தைத் திருவருளால் உணர்ந்து நிற்கும் நிலையே சகலத்தில் சுத்தாவத்தையாகும். `அவையே தச காரியங்களாக வகுக்கப்பட்டன` என்பது மேலே கூறப் பட்டது. அந்தச் சுத்தாவத்தையும் சாக்கிரம் முதல் ஐந்தாக நிகழ்தல் பற்றி, `நெறிநின்றோன்` என்றார். நெறிநிற்றல் - படி முறையாக ஏறி நிற்றல். `நனவாதி` என்பதற்கு, `நனவாகியமுதல் அவத்தையில் என உரைக்க. போக்கப்படுவன, முன்னர்க் கூறிய இருவகை ஐந்தவத்தை களாம். `சிவத்தோடும் நெறிநின்றான்` என இயைக்க. `இவற்றோடும்` - என்பது பாடம் அன்று.
`கீழாவத்தை மத்தியாலவத்தைகளில்வேறாய், யோகாவத்தை களும் உள` என மேற்கூறியதன் பின்8 `யோகாவத்தைகளின் மேலாக ஞானாவத்தைகளும் உள` - என்பது இதனால் கூறப்பட்டது.
தத்துவ ஞானத்தின் பயன் பந்தம் நீங்குதல் என மேற்கூறிய வாறுபோல,* பந்தம் நீங்கிய உயிர் சிவமாம் தன்மையை அடைதலே ஞானாவத்தைகளாகிய சகலத்தில் சுத்தாவத்தை என்பதும் இதனால் பெறப்பட்டதாம். `இவைகளே நின்மலாவத்தையான அல்லது யோகாவத்தைகள் நின்மலாவத்தையாகா` என்பது யோகாலத்தை கூறியவிடத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு)
ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு
ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே.

பொழிப்புரை :

(பஞ்ச மலங்களும், `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்னும் முறையில் வைத்துச் சொல்லப்படும். இவற்றுள் மறைத்தல் தொழிலைச் செய்வதில் தலைமை பெற்று நிற்பது திரோதாயியே. அதனால்), பிரமன் சிவனைச் சிறிதும் உணராதவன் ஆகலின் அவனைப் பஞ்ச மலங்களையும் உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், சீகண்ட ருத்திரன் பிரளயாகலன் ஆகலின் அவனைத் திரோதாயி, மாயேயம் - இவை யொழிந்த மூன்று மலங்களே உடையவனாகவும், வித்தியேசுரர் மந்திர மகேசுரர் முதலியோர் விஞ்ஞானகலர் ஆயினும் அதிகார மலம் நீங்கா மையால் ஆணவத்தோடு, கன்மமும்கூட, இரண்டு மலங்களை யுடையவர்களாகவும், அணு சதாசிவர்கள் அதிகார மலம் நீங்கினும் போக மலம் நீங்காமையால் ஆணவம் நீங்கப் பெறாது அஃது ஒன்றனையே உடையவர்களாகவும் கூறலாம்.

குறிப்புரை :

`இதனுள் குறிக்கப்பட்ட கடவுளர் யாவரும் அணு பக்கத்தவர்களே` என்பது சொல்லாமே விளங்கும். `இவர்களை இவ்வாறு பகுத்துக் கூறியதும் பொதுவகையில் இவரிடையே உள்ள தார தம்மியம் இனிது விளங்குதற் பொருட்டே` என்க. இவர்களை இங்ஙனம் பகுத்துக் காட்டியதனால், இவர்கட்கு உட்பட்டனவாகச் சொல்லப்படும் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுட்பட்ட ஆன்மாக் களின் பந்த வேறுபாடுகளும், அவற்றிற்கு ஏற்ப அவற்றிற்கு நிகழும் அவ்தை பேதங்கலும் ஒருவாறு உணர்ந்து கொள்ளப்படும். `அஃதே இந்த மந்திரத்திற்குப் பயன்` என்க. இரண்டாம் அடியீற்றில் குற்றிய லுகரம் கது நின்றது.
இதனால், `பந்தம் முழுவதும் நீங்காது சிறிதாயினும் உடைய இயிர்கட்கு எந்த வகையிலாவது அவத்தை பேதங்கள் நிகழவே செய்யும்` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து
மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி
ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று
வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.

பொழிப்புரை :

ஆறத்துவாக்களில், `தத்துவம் முப்பத்தாறு` என்பது முன்பே குறித்து, விளக்கம் தரப்பட்டது. (எனவே, அஃது இங்கு நினை வூட்டும் அளவே கூறப்பட்டதாம்.)

குறிப்புரை :

சொல்லுலகத்தில் முதலாவதாகிய மந்திரம் பதினொன்று, அவை `ஈாசனம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தி யோசாதம் என்னும் பிரம மந்திரம் ஐந்தும், `இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அத்திரம்` - என்னும் அங்க மந்திரம் ஆறுமாம். தன் என்றது உயிரை.
இவற்றை ஏற்க விரும்பாதவர்கள், `ஏழ்கோடி` எனப் பாடத்தைத் திருத்தினர். கோடி` என்பது ஏனையவைபோல எண்ணுப் பெயர் ஆகாமையை நோக்குக.
செய்யுள் நோக்கி - `எண்பான் ஒன்று வைத்த பதம்` என்பது பின் கூறப்பட்டது.
பதங்கள் எண்பத்தொன்று. `அவை யிவை` என்பதைச் சிவநெறிப் பிரகாசச் செய்யுள் - 179,80,81 - இன் உரையிற் காண்க. இங்கு எடுத்துக் கூறின் விரியும்.
வன்னம் ஐம்பத்தொன்று. வன்னம் - எழுத்து. அவைகளை வடமொழி பற்றி யறிக. இவற்றுள் ஒன்று நீக்கி, ஐம்பது என்றலும் வழக்கு என்பதனை, ``ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்`` என்னும் மந்திரத்தான் அறிக.
மேதினி - புவனம். புவனம் இருநூற்றிருபத்து நான்கு. தத்துவங்கள் தோறும் புவனங்கள் உள்ளன. அவற்றின் எண் ணிக்கையைச் சிவஞான மாபாடியம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தில் காண்க.
கலை ஐந்து. `அவை நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` - என்பன. வந்த - ஆன்மாவிற்கு வழியாகக் கிடைத்தன.
இந்த அத்துவாக்கள் ஆறிலும் உயிர் வியாபித்திருத்தலால், அது செய்த வினைகள் சஞ்சிதமாய், இவ்வத்துவாக்களைப் பற்றிக் கிடக்கும். அவை உள்ள வரையில் உயிருக்கு உண்மை ஞானம் விளங்கமாட்டாது. அதனால் பக்குவம் எய்திய உயிர்கட்குச் சிவன் குருவாகி வந்து, `அத்துவ சுத்தி` அல்லது `கலா சோதனை` - எனப்படும் நிருவாணதீக்கையில் ஞானவதியாகவாவது, கிரியாவதி யாகவாவது செய்யும் ஆகுதிகளால் சஞ்சிதத்தைத் துடைத்து, உபதேசத்தைச் செய்தருளுவான். அங்ஙனம் அவன் செய்த உபதேச மொழியை உயிர் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து பின் நிட்டை எய்தும்.
ஞானவதியாவது குண்டம், மண்டலம், வேதிகை முதலிய எல்லாவற்றையும் குரு தமது அகத்திலே கற்பித்துக் கொண்டு செய்வது. கிரியாவதியாவது, அவைகளை வெளியில் யாவரும் காண அமைத்துச் செய்வது.
இதனால், அத்துவாக்களின் தொகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து)
ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும்
கூடினர் கூடிக் குறிவழி யேசென்று
தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.

பொழிப்புரை :

(அத்துவாக்களைத் தரிசிக்க, அஃதாவது உள்ளபடி நேரிலே காண விரும்பியவர்கள் பிராசாத நெறியில் நின்று) உடம்பிலே கீழிருந்து பாவிக்கப்படுகின்ற நெருப்பு மண்டலம், நீர் மண்டலம், நிலா மண்டலம் - என்னும் மூன்று மண்டலங்களை உள்ளே உணர்ந்து இடை கலை, பிங்கலை வழியாக ஓடுகின்ற அந்தத் துணைவரோடு தாமும் ஓடித் தூல சூக்கும தத்துவங்களாகிய இருபத்தைந்து தத்துவங்களைக் கண்டார்கள். அதன் பின்பு அந்தத் துணைவரால் ஆகாமையின், குரு காட்டிய அந்தக் குறியான வழியிலே சென்று பர தத்துவங்களைத் தேடினர். அவ்வாறு தேடியும் அவை தரிசனப்படாமையால், ஒன்றும் தோன்றாது திகைத்து நின்றுவிட்டார்கள்.

குறிப்புரை :

`ஓடும் அவர்` - என்றது உருவகம். ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு, புருட தத்துவம் ஒன்று இவை இருபத்தைந்து தத்துவம். வித்தியா தத்துவங்கள் `புருடன்` என ஒன்றாய் அடக்கப் பட்டன. ஆன்ம தத்துவம் தூலமும், வித்தியா தத்துவம் சூக்குமமும் ஆகும். சிவ தத்துவம் பரம். அஃதாவது அதிசூக்குமம். தூல சூக்கும தத்துவங்கள் சகலர் பிரளயாகலர் கட்குச் சரீரமாய் அமைதலால், அவை யோகக் காட்சியில் காணப் படுவவாயின. `உள் இருபத்தைந்து` - என்றதும் இதுபற்றி, சிவ தத்துவம் அவ்வான்ம வருக்கத்தினருக்கு வேறாய் நிற்றலின், அவை அங்ஙனம் காணப்படாவாயின.
சிவ தத்துவங்களையும் அனுபவமாக உணர்ந்த பின்பே ஆன்மாச் சிவத்தை அடைய இயலும். தத்துவம் முப்பத்தாறும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் அடங்கியுள்ளன. ஏனை நான்கு அத்துவாக்களும் தத்துவத்தில் அடங்கிவிடும். ஆகவே, தத்துவங் களைக் கண்டுவிட்டால், கலைகளைக் காண்டலும் எளிதில் கூட, அத்துவாக்கள் அனைத்தும் காணப்பட்டனவாய்விடும்.
இதனால், அத்துவாக்களில் சில பகுதிகளைக் காணுமாறும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலமள வாக்கிஅ தீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.

பொழிப்புரை :

`நமசிவாய` என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஏனைக் கிரியா மந்திர யோக மந்திரங்களைப் போல எண்ணாமல், உண்மையை அனுபவமாக உணர்விக்கும் ஞான மந்திரமாகக் கொண்டு) சகலசாக்கிரத்தில் (சகலஐந்தவத்தைகள் நிகழாதவாறு தடுத்து,) ஞானவத்தைகளாகிய சுத்த சாக்கிரம் முதலியனவே நிகழுமாறு, அந்தச் சாக்கிரம் முதலிய ஐந்திலும் ஐந்து வகையாகச் சுத்த மானதம் ஆகிய அறிவினாலே கணித்து, ஆதாரங்கள் ஆறும், அவற்றிற்கு மேல் ஏழாவதாகிய நிராதாரமும் உடம்பளவினவாய் நீங்க, உடம்பைக் கடந்த துவாதசாந்தமாகிய மீதானத்தில் சென்று பொருந்திய அன்பே வடிவாய் நிகழும் திருக்கூத்தை உயிர் சென்று அடைவதே, எல்லையில் இன்பத்தைச் சிவம் பெருக்கி, அதற்கு வழங்குகின்ற சிவமாம் நிலையாகும்.

குறிப்புரை :

`நமசிவாய` என்பதை ஒரு பெயராக்குதற் பொருட்டு அதன் ஈற்றில் மகரமெய் புணர்க்கப்படுதலை, `நமச்சிவாயம்சொல்ல வல்லோம்`3 என்னும், அப்பர் திருமொழியால் உணர்க. `நமச் சிவாயம்` என்பதை `சிவாயம்` என்றது முதற்குறை `நமசிவாயம் ஐந்தும்` எனமாற்றி முதலிற் கூட்டி, `ஐந்தினையும் சாக்கிர சாக்கிரம் ஆதியில் தலை முதலாக ஆக்கி` - என உரைக்க. தலை - முதல். முதலாவது. நமசிவாய இரண்டாவது, சிவாயநம. மூன்றா வது,சிவாய, நான்காவது,சிவ. ஐந்தாவது, சி. இவையே சுத்த சாக்கிரம் முதலிய ஐந்திலும் கணிக்கும் முறை. `தூலம்` - என்றது உடம்பை `அதீதம்`, `கடந்தது` என்னும் பொருளது. இவ்வியல்பினை,
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற``
என்னும் திருவுந்தியாரால் உணர்க. `ஆதார நிராதாரயோகங்கள் பாவனை மாத்திரமே` என்பதை அந்நூல்.
``ஆக்கில் அங் கேஉண்டாய், அல்லதங் கில்லையாய்ப்
பார்க்கில் பரமதன் றுந்தீபற;
பாவனைக் கெய்தாதென் றுந்தீபற``
எனக் கூறிற்று.l இந்தப் பாவனாயோகங்கள் ஆன்மாத் தன் முனைப்பு அறுதற்குரிய சாதகங்களாம். அச்சாதகங்களால் அம்முனைப்பு அற்றால், ஆன்மா `யான்` என்றும், `எனது` என்றும் எழுந்து உலகத்தில் சென்றும் பற்றும் நிலை ஒழியும். அஃதொழிந்த பொழுது, மீதானத்தில் இறைவனது திருக்கூத்தின், சிலம்பொலி கேட்கும்` அது கேட்டவுடன் ஆன்மா இல்லார்க்குக் கிழியீடு நேர் பட்டாற் போலப் பேரார்வத்துடன் ஓடி அவனையே அடைந்து அவன் மீதே அன்பு செலுத்தி அவனது இன்பத்தில் அழுந்தியிருக்கும். அதனைத் திருக்களிற்றுப்படியார்,
``ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியேசென் றொத்தொடுங்கி - ஓசையின்
அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தில்
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து``.3
என விளக்கிற்று.
இவ்வெண்பாவில் கூறப்பட்ட அந்த நிலையே இங்கு அதீதம் எனப்பட்டது.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``.
(தொல், பொருள் - பொருளியல்.) எனத் தொல்காப்பியரும், அவ்வாறே,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையே அது,`` * *திருவருட்பயன் - 80.
என உமாபதி தேவரும் கூறியவாறு. அன்பே இன்பத்திற்குக் காரணம் ஆதலின், ஆனந்த தாண்டவத்தை உயிரினது அன்பான தாண்டவம் என்றும், அந்நிலையில் அந்த ஆனந்தத்தை வழங்குகிற சிவத்தை. (இன்ப வெள்ளத்தைத்) தேக்கும் சிவம் என்றும் கூறினார். அன்பே சிவம். (முதல் தந்திரம் - அன்புடமை) என்றதும் இங்குக் கூறிய அன்பையே என்பதையும் இதனானே உணர்க.
அன்பு நிலையே ஆனந்த நிலையாம் அன்றி வெறும், அறிவு நிலை ஆனந்த நிலை ஆகாமையை இங்கு உணர்ந்துகொள்க.
இதனால், `அத்துவாக்களைக் கடக்குமாறும்` கடந்தவழி உளதாகும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.

பொழிப்புரை :

கீழாலவத்தையாய் யாவராலும் நன்கு உணர நிகழும் கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் போல்வனவே, நுண்ணறி வுடையோரால் மட்டும் ஊன்றியுணரப் படுகின்ற மத்தியாலவத்தை யாகிய சகல சாக்கிரம் முதலிய ஐந்தும். அந்த ஈரைந்து அவத்தை களிலும் உள்ள இருபத்தைந்து தத்துவங்களும் சுத்த மாயையிலும் உள்ளன. (யோகாவத்தையில் அவை செயற்படும்) அவைகளி னின்றும் உயிர் தனது உணர்வு விடுபட்டுச் சென்று, திருவருளில் முன் பெல்லாம் தான் கண்டு வந்த கனவு போல உணரப்படுகின்ற காட்சியில் தோய்கின்ற நிலையே சுத்த சாக்கிரம் முதலிய சுத்தாவத்தைகளாம்.

குறிப்புரை :

`கேவல ஐந்தவத்தைகளை உவமையாகப் பற்றிச் சகல ஐந்தவத்தைகளின் உண்மையை உணர்தல் போல, அவ்விரண்டையும் உவமையாகப் பறஅறிச் சுத்த ஐத்தவத்தைகளின் உண்மையை உணர்ந்து கொள்ளல் வேண்டும்` - எனவும்,
பிரகிருதி மாயை, அசுத்த மாயை இவற்றின் தொடர்பு கீழாலவத்தை மத்தியாலவத்தைகளோடு ஒழிய, யோகாவத்தையில் சுத்த மாயையின் தொடர்பு மட்டுமே உளதாம்` - எனவும்,
`அந்தச் சுத்தமாயைத் தொடர்பும் நீங்கித் திருவருள் பற்றாக நிகழ்வனவே சுத்தாவத்தைகள்` - எனவும் கூறியவாறு. யோகாவத்தை களின் உண்மை யோக நூல்களால் விளங்கும்.
`இங்கு, `சுத்தம்` எனப்படுவது உடம்போடு கூடி நிற்கும் பொழுதே திருவருள் வயப்பட்டு நிற்பது ஆகலின், இது சகலத்திற் சுத்தமே, `தனியான சுத்தம் வேறு உண்டு` என்பது மேலேயும் குறிக்கப்பட்டது. `அசுத்த மாயையில் உள்ள தத்துவங்களைப் போல சுத்த மாயையும் அவ்வகைத் தத்துவங்கள் உள்ளன என்பது சிவாகமங் களின் துணிபு` என்பதைச் சிவஞானமாபாடியம் முதலியவற்றால் உணர்க.
`அன்ன` - என்பது இடைக்குறைந்து நின்றது. `அன்னவற்றில் ஆன` என உருபுவிரித்து, `விந்து சத்தியில் உள்ளன` என முடிக்க. `இன்` வேண்டாவழிச் சாரியை, `உயிர்` என்றது அதன் உணர்வை, `கலந்ததும் இவ்வாறே` - என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. `இவ்வாறு` எனச் சுட்டியது, முன்னர், `தூலம், சூக்கம்` என்றவற்றை.
இதனால், மேல், `சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும் என்னும் மந்திரத்தில் பொதுவாகச் சுட்டிப்போந்த சுத்தாவத்தைகளின் உண்மை தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.

பொழிப்புரை :

`சாக்கிரத்தில், `அதீதம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்பட்ட பொருளையும் தம்மையும் வேறு வேறாக அறிதல் இன்றி அப்பொருளேயாய் அழுந்தித் தற்போதத்தை இழந்திருப்பர். அதனால் அவர், இடம் பெயரமாட்டாது கிடந்த கிடப்பில் கிடக்கும் பசுங்குழவி போல்பவாவர்.
சாக்கிரத்தில் `துரியம்` - என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்படும் பொருளையும், தம்மையும் வேறு வேறாக அறிந்து, அந்த அளவில் அனுபவிக்கும் உணர்வு உடையவராவர், அதனால், அவர் இடம் பெயர்ந்து தவழ்ந்து செல்லும் குழவி போல்வர்.
சாக்கிரத்தில், `சுழுத்தி` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் உணரப்படும் பொருளையும், உணரும் தம்மையும் வேறுவேறாகப் பகுத்து நன்குணர்வர். அதனால் அவர் வளர்ச்சியடைந்து நன்கு நடக்கும் சிறுபிள்ளைகள் போல்வர்.
சாக்கிரத்தில், `சொப்பனம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், பொருளில் மேலும் மேலும் நாடும் நாட்டம் மிகுந்து இருப்பர். அதனால் அவர் நன்கு ஓடி ஆடும் பருவச் சிறுபிள்ளை களோடு ஒப்பர். (மகளிரில், `பெதும்பைப் பருவத்தாரோடு ஒப்பர்` எனலாம்.)
சாக்கிரத்தில், `சாக்கிரம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவர். அதனால் அவரக்ள கட்டிளமையுடையவரோடு ஒப்பர். (எனினும், ஆடவர்களில் பிரமசாரிகளையும், பெண்டிரில் கன்னிகைகளையும் இங்கு உவமையாகக் கொள்க.)

குறிப்புரை :

இம் மந்திரம். `சாக்கிரத்தில் சகல மாகிய மத்தியா லவத்தையின் இயல்பும், சாக்கிரத்தில் சுத்தமாகிய நின்மலா வத்தையின் இயல்பும், ஒரு தன்மையனவே` என உணருமாறு அவற்றின் இயல்புகளைப் பொதுமையில் வைத்து உடலினைச் சிலேடையாக உணர்த்திற்று. மத்தியாலவத்தையில், உணரப்படும் பொருள் உலகமும், நின்மலாவத்தையில், உணரப்படும் பொருள் சிவமும் ஆகின்ற இவ்வளவே வேறுபாடு என்க. இதனை,
``ஆணவத்தோடு அத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோடு அத்துவிதம் சாருநாள் எந்நாளோ``
என்னும் தாயுமானவர் வாக்கும் ஓராற்றான் விளக்கும்.
முன்னர் நின்ற, `பிறந்தார்` முதலிய மூன்றும் `பிறக்கப் பெற்றார்` என வினையாலணையும் பெயராய எழுவாய்கள். பின்னர் நின்ற, `கிடந்தார்` முதலிய மூன்றும் பயனிலைகள். கிடந்தார் முதலியவரோடு ஒப்பவரை, `கிடந்தார்` முதலியோராகவே உபசரித்தார். ``கிடந்தார்`` என்றது முதலியன அப் பருவத்தினரையே. அதிகாரப் பெயருள் `பருவம்` என்றதன் பொருள் இதனான் நன்கு விளங்குகின்றது.
ஈற்றடியில், `நனவிற் கனவு ` என்பதன் பின் `தோன்றப் பெற்றார்` என்பதும், `ஓடல்` என்பதன் பின்` உடையார்` என்பதும் தொகுக்கப்பட்டன.
`நற்செய்தி` என்றது அதனை உடைய பருவத்தைக் குறித்தது. அப்பயனிலைக்கு, முன்னர்ப் போந்தவற்றுக்கு இயைய, `நனவில் சாக்கிரம் தோன்றப் பெற்றார்` என்னும் எழுவாய் வருவித்ததுக் கொள்க.
இதனால் சாக்கிரத்தில் நிகழும் இருவகை ஐந்தவத்தைகளின் இயல்பு உண்மையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

பொழிப்புரை :

சிவநெறி மார்க்கம் நான்கனுள் சற்புத்திர மார்க்க மாகிய கிரியையில் நிற்பின் சிவ தத்துவங்கள் ஐந்தும் காட்சிப்படுவன வாம். சிவத்தோடு தன்னை ஒன்றவைத்து உன்னும் சகமார்க்க மாகிய யோகத்தால் சிவனது திருவருளை நிரம்பப் பெறுதல் கூடும். சிவனது ஞானத்தை உணர்தலாகிய சன்மார்க்கத்தால் ஆன்மாவினது ஞானமும் சிவஞானமேயாய், அதுவே தற்சொரூபமாய் நிற்கும். அந் நிலையில் சிவனது எல்லாக் குணங்களும் ஆன்மாவுக்கு உளவாகும். அப்பொழுது ஆன்மாவும் சிவனைப் போலவே எங்கும் நிறைந்து விளங்கும்.

குறிப்புரை :

கல்வி - வித்தை; ஞானம், என்றது சிவ ஞானத்தை. குறி - குறித்தல்; உணர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `தன்` - என்றது ஆன்மாவை. சிவமாம் தன்மையை எய்தினமை தோன்ற, `திரு மேனி` என்றார். `பலவும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அந்த அறிவில்` எனச் சுட்டு வருவிக்க. `அளவு` என்பது `சராசரம்` என்றதனோடும் இயையும். சரியை, கிரியையிற் செலுத்துமுகத்தானே பயன்படுதலின், அஃதொழிந்தவற்றையே கூறினார். கிரியை, யோகம், கல்வி ஆகிய காரணங்கள் காரியங்கலாகவே உபசரிக்கப்பட்டன. மூன்றாம் அடி தளை மயங்கி வந்தது.
இதனால், ஆன்மா நின்மலாவத்தையை அடையும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
போதம் கலைகா லமேநியதி மாயையும்
நீதி அராகம் நிறுத்தினன் என்னே.

பொழிப்புரை :

`சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை` என்னும் சிவ தத்துவங்களையும், அவற்றின் கீழ் உள்ள `கலை, காலம், நியதி, வித்தை, அராகம், மாயை` என்னும் வித்தியா தத்துவங் களையும் அநாதி நிலையினின்றும் இறங்கி ஆதியாய் நிற்கின்ற சிவன் படைத்தருளினான் என்று உணர்க.

குறிப்புரை :

`ஆம் தத்துவம்` என்றது `அராகம்` என்பதனோடும் சென்று இயையும். `போதம்` என்றது `வித்தை` என்னும் பொருட்டாய்ப் பொதுவாக `வித்தியா தத்துவம்` எனவும், சிறப்பாக அவற்றுள் ஒன்றாகிய `வித்தை` என்றும் இருபொருள் தந்து நின்றது. கலை முதலிய ஐந்தும் கூடிய நிலையிலே ஆன்மா `புருடன்` எனப்படுவ தன்றி, புருட தத்துவம் தனித் தத்துவம் அன்றாதலின், அதனை இங்குக் கூறிற்றிலர்.
இதனால், அத்துவாக்களில், `ஆறாறு` எனப்பட்ட தத்துவங் களில் சிவதத்துவம் ஆவனவும், வித்தியா தத்துவம் ஆவனவும் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.

பொழிப்புரை :

(மேற்கூறிய இருவகைத் தத்துவங்களையும் கூட்டித் தொகை காணின்) `சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை, கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை` - எனப் பன்னிரண்டாம். இவற்றுள் `புருடன்` என்பது ஏனையபோல ஒரு தத்துவம் அன்று. கலை முதலிய ஐந்தனோடும் கூடி நிற்கும் ஆன்மாவே.

குறிப்புரை :

இங்ஙனம் தொகையை வேறு மந்திரத்தில் வைத்துக் கூறியதற்குப் பயன், `புருடன்` என ஒரு தத்துவத்தைக் கூட்டியதும், அது பற்றிய விளக்கத்தைத் தந்ததும் ஆகும். ஆதி - முதல். என்றது, `தத்துவம்` என்றபடி. செய்யுள் நோக்கி வித்தியாதத்துவங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. சைவத்தின் சிறப்புத் தத்துவங்களை மட்டுமே கூறினார், ஆன்ம தத்துவங்கள் பிறராலும் கொள்ளப்பட்டு, விளங்கிக் கிடத்தல் பற்றி.
இதனால், மேற்கூறப்பட்ட தத்துவங்கட்குத் தொகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

பொழிப்புரை :

`ஆணவம், மாயை, கன்மம்` - என மலங்கள் மூன்றாம். அவற்றை எதிர்நிரல் நிறையாக வைத்து, அரிசிக்கு முளை, தவிடு, உமி - இவைபோல்வனவாக உணர்க. ஆன்மாவும் சிவனைப் போலச் சித்துப் பொருளேயாயினும், அரிசி போன்ற ஒரு தன்மையை அஃது உடைமையால் அரிசிக்கு உமி முதலிய குற்றங்கள் அநாதியாக இருத்தல் போல, ஆணவம் முதலிய குற்றங்கள் அநாதியே உளவாக, அது சிவனைப் போலப் பதியாகாது, பசுவேயாய் நின்றது. உனது தன்மையை இங்ஙனம் நீ உள்ளவாறு உணர்ந்து, பாசங்களில் பற்றுக் கொள்ளாது விடுத்துப் பதியாகிய சிவனைப் பற்றி இன்புறுவாயாக.

குறிப்புரை :

`முளை அத்தவிடுமி போலக் காணும்` என மாற்றி உரைக்க. `ஆன்மாவும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். தண்டுலம் - அரிசி. ஆக்கம், உவமை குறித்தது நின்றது, ஆணவத்தைப் பிற சமயிகள் கொள்ளாமையால், `மலம் மூன்று` என்பதை எடுத்தோதி வலியுறுத்தினார்.
இதனால், அத்துவாக்கள் யாவும் மாயையேயாக, அவை பற்றி வேறும் இருமலங்கள் ஆன்மாவிற்கு உளவாதல் கூறப்பட்டது.
``மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்``
என்னும் சிவஞான சித்தியாரையும், அதற்கு மாதவச் சிவஞான யோகிகல் உரைத்த உரையையும் காண்க.

பண் :

பாடல் எண் : 7

பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின்
பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.

பொழிப்புரை :

உலகில் பாலைத் தரும் பசுக்கள்யாவும் ஒரே நிறம் உடையன அல்ல; பல நிறம் உடையன. (அது போல, சீவர்களாகிய பசுக்களும், `பசுத்துவம்` எனப்படும் பந்தத்தைத் ஒரே வகையாக உடையன அல்ல; ஒரே வகையை உடையனவாயின், பந்தத்தினின்றும் விடுபடுதலும் எல்லாப் பசுக்களுக்கும் ஒரு காலத்திலே நிகழ்தல் வேண்டும். அவ்வாறில்லாமையால், பந்த வேறுபாடு பலதிறப் பட்ட தாம்.) ஆயினும், பசுக்கள் தரும் பயனாகிய பால் ஒரு நிறமேயாம். (அது போல அவை அடையும் வீடுபேறு ஒருதன்மையுடையதே.) இனிப் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவன். (ஆகவே, அவன் ஒரு தன்மையனேயன்றிப் பல தன்மை உடையவன் அல்லன். (அதுபோலச் சீவர்களை, `பெத்தம், முத்தி` என்னும் இரு நிலைகளிலும் உடன்நின்று நடாத்தும் பதி ஒருவனே, ஆகையால் அவன் பதித்தன்மை ஒன்றே உடையனன்றிப் பசுக்கள் போலச் சார்த்ததன் வண்ணமாய்த் தன்மை வேறுபடுபவனல்லன்.)
ஆயன் பசுக்களை மேய்க்காமல் அவற்றின் இச்சைப்படி விட்டு விடுவானேயானால் இவை ஆயனைச் சென்று சேராமல், காட்டில் திரிந்து அல்லற்பட்டே ஒழியும். (அதுபோல, சிவன் சீவர்களைக் கண் ணெடுத்துப் பார்க்காமல் விட்டுவிடுவானேயானால், அவை அவனை அறிந்து இன்புற மாட்டா, பந்தத்தால் விளையும் துன்பத்தில் கிடக்கும்.
``மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே``
எனப் பின்னரும் பசுக்களுக்கு மேய்ப்பான் இருத்தல் இன்றியமையாது எனக் கூறுவார்.)

குறிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி பெற்று நின்றது. `பசுக்கள் தலை வனைப் பற்றி விடாவே` எனப் பாடம் ஓதுபவர்கள்; `சிவனது அருள் இன்றியே சீவர்கள் சிவனை அடைய இயலும் எனக் கூறுவோராவர்.
`பசுக்கள் கொட்டிலை அடைந்த பின்பும் ஆயன் அவைகளைப் புறக்கணித்துவிட்டு விட்டொழிவான் அல்லன்` என்பதையும் நோக்குக. இதனால், `மேய்க்கும் கோல்` என்பது திரோதான சத்திமட்டும் அன்று; அருட்சத்தியுந்தான் - என்க.
பால் பிறர்க்கு மட்டுமே பயன் படுவன அல்ல. கன்றுகளின் நலத்தில் கருத்துடைமையால், அக்கன்றுகளை வளர்த்தல் பசுக்கள் அடைகின்ற பயனேயாம். மேலும் வறட்சுப் பசுக்கள் போற்றப் படாமல், மிக்க பாலைத் தரும் பசுக்களே போற்றப்படும். அதனால் பால் அதனைத் தரும்பசுக்கள் அடையும் பயனுமாகும். ஆகவே அது சீவன்கள் அடையும் வீடுபேற்றிற்கு உவமையாதற்கு இழுக்கில்லை.
இதனால், `மேற்கூறப்பட்ட மலங்கள் உயிர்தோறும் வேறு வேறு வகையாய் உள்ளன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

பொழிப்புரை :

தாத்துவிகங்களாகிய உடம்பு, அதில் கரணங் களாய்ப் பொருந்தியுள்ள ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், அந்தக் கரணங்கள் ஆகிய இவற்றின் இயல்பினை அறியாமையால் அவை களையே `தான்` என மயங்கிக் கெடுகின்ற அந்த உயிர், (அந்த அறியா மையை நீக்கிக் கொள்ள முயலாமல்) மேலும் மேலும் அந்த அறியா மையையே வளர்த்துக் கொண்டிருக்குமானால், அது அடைவது ஏழு நரகங்களிலும் சென்று வீழ்ந்து அங்குள்ள துன்பத்தைத்தான்.

குறிப்புரை :

`வீடு பெறுதல் இயலாது` - என்றபடி. `உடல்` என்பது பெரும்பான்மையும் தூல உடம்பையே. இந்தியம், `இந்திரியம்` என்பதன்மரூஉ. நல்வினைசெய்வார் அரியர் ஆகலின், அதன் பய னாகிய சுவர்க்கத்தை அடைதலைக் குறியாதொழிந்தார்` இந்நிலை யிலே நிற்கும் உயிர்கட்குச் சுத்த நனவாதிகள் நிகழா என்பது கருத்து. எனவே, தத்துவங்களின் இயல்பை உணருமுகத்தால் தம்மை அவற்றின் வேறாக உணர்ந்த உயிர்கட்கே திருவருள் கிடைக்கச் சுத்த நனவாதிகள் உளவாம். சிவஞானபோதத்திலும்,
``இவ்வான்மாத் தன்னை அவ்விந்திரியத்தின் வேறாவான் காணவே
தமது முதல் சீபாதத்தை அணையும் ``*
என்றது காண்க. இங்குக் கூறப்பட்ட தத்துவ தாத்துவிகங்கள் வைதிக சமயத்தார் பலர் கூறுவனவேயாதலின், அவற்றை எடுத்தோத்த தாகக்கூறாது, அனுவாதமாகக் கூறினார். சிவாகமங்கள் நரகங்களைப் பலவாகக் கூறினும் `ஏழ் நரகம்` - என்பது ஒரு பொது வழக்கு.
இதனால், தத்துவஞானத்தவரே சுத்தநனவாதி பருவங்களைத் தலைப்படுவாராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம்
சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம்
பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம்
மற்றது உண்டி கனாநன வாதலே

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` - என்னும், காரண அவத்தை மூன்றனுள் கேவலத்தில் துரியாதீதம், உயிர், `நான்` என் -கின்ற தன்னுணர்வும் இன்றி, ஆணவத்தில் அழுந்தி அதுவேயாய்க் கிடந்த நிலை `யான்` என்னும் உணர்வு முகிழ்க்கின்ற கேவலத்தில் துரியம், மேற் குறித்த நிலையில் இறைவன் அவ்வுயிருக்கு மூலகன் மத்தைக் கூட்டு வித்த நிலை. கேவலத்தில் சுழுத்தி, மூலகன்மத்தோடு காரண சரீரமாகிய மாயா தத்துவத்தைக் கூட்டிய நிலை. இவைகளில் ஆன்மாவிற்கு வினையை ஈட்டுதல் நுகர்தல்கள் இல்லை, கேவலத்தில் சொப்பனம் கால நியதிகளைக் காட்டுவித்த நிலை. சாக்கிரம் கலை வித்தை அகாரகங் களைக் கூட்டிய நிலை. இந்தச் சொப்பன சாக்கிரங்களில் தான் உயிர் வினைகளை ஈட்டுதலும் நுகர்தலும் நிகழும்.

குறிப்புரை :

இவற்றுள் முதல் மூன்றினையும் முறையே `அநாதி கேவலம், விஞ்ஞான கேவலம், பிரளயகேவலம்` - என்பர். `காதல்` என்றது மயக்கத்தை. அஃது ஆகுபெயராய் மாயையைக் குறித்தது.
இதனால், மும்மலங்களைக் கூறிய இயைபு பற்றி, அவற் -றோடு தொடரும் கேவல ஐந்தவத்தையின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

பொழிப்புரை :

நனவில் கனவு இல்லாமைபோலக் கனவிலும் நனவு இல்லையாதலின், சுழுத்தியில், சுழுத்தி முதலிய மூன்று நுட்ப அவத் -தைகள் மட்டுமே உள்ளனவாம். (அவைகளை `சுழுத்தியிற் சுழுத்தி, சுழுத்தியில் துரியம், சுழுத்தியில் துரியா தீதம்` எனக் கூறிக் காண்க.)
இங்ஙனம் கூறியதனானே, சொப்பனத்தில் சாக்கிரம் ஒழிந்த நான்கும் உளவாதல் பெறப்பட்டது.
நனவில் சொல்லப்படும் துரியமும், துரியாதீதமும் தாமே தனித்து நிகழும் நிலையில் துரியத்தில் இரண்டும், துரியாதீதத்தில் அஃது ஒன்றுமாகவே நிகழும். (அவை, `துரியத்தில் துரியம்` துரியத்தில் துரியாதீதம்` எனவும், `துரியாதீதத்தில் துரியாதீதம், எனவும் சொல்லப்படும்.)
``ஐந்துசாக்கிரத்தில்; நான்கு கனவினில்`` என்னும் சிவஞான சித்திச் செய்யுளுக்கு இதுவும் பொருளாமாறு அறிந்து கொள்க.

குறிப்புரை :

`இதனுட் கூறியன யாவும் கீழாலவத்தை` என்க.
பகுதி - மூலப்பகுதி. தற்கூட்டு மாயை - கீழாலவத்தையில் ஆன்மாவிற்குக் கூட்டப்படும் மாயை. `அது மூலப்பகுதியே` என்ற படி. `வந்தவழி` என்பது `வந்து` எனத்திரிந்தது. வந்தவழித் தாமே உளவாம் என்க. மூன்றாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. முதற் கண் ``நனவிற் கனவில்லை`` என்றது `கனவில் நனவு இல்லை` என்பதனைத் தெளிவிக்கக் கூறிய உவமை.
இதனால், கீழாலவத்தை பற்றிய சில நுட்பங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.

பொழிப்புரை :

தத்துவம் முப்பத்தாறில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியா தத்துவத்தில் புருடன் ஒன்றும் ஆக இருபத்தைந்து தத்துவங்களை ஆன்மாத் தன்னின் வேறாகக் கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சாக்கிரமாகும்.
பின்னர், வித்தியா தத்துவத்தில் எஞ்சியுள்ள ஆறு தத்துவங் களையும் அவ்வாறு கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சொப்பனமாகும்.
பின்னர், சிவ தத்துவம் ஐந்தனையும், `இவை பிரளயாகலர் சகலர்கட்கு பிரேரக மாத்திரையாயும், விஞ்ஞானகலருக்குத் தனு கரண புவன போகங்களாயும் பயன்பட்டுத் தோற்றமும் அழிவும் உடைய அநித்தியப் பொருள்களேயன்றி, இவை தாமே சிவனது இலய போக அதிகாரத் திருமேனிகளாகிய நித்தியப் பொருள்கள் அல்ல; அத் திரு மேனிகள் இவற்றின் வேறாய்ச் சத்தி வடிவாவனவே` எனத் தெளிந்து, அவை பற்றியிருந்த மயக்கத்தின் நீங்குதலே சகலத்தில் சுத்த சுழுத்தி யாகும். இவற்றிற்குப் பின் எஞ்சி நிற்பது காரண நிலையில் உள்ள சுத்த மாயையே,

குறிப்புரை :

`சிவ தத்துவங்கள் பிரேரக காண்டம்` - என்பதை நோக்காதார், `அவை யின்றியும் வித்தியா தத்துவங்கள் நீங்கிய வழியும் சிவதத்துவங்கள் தொழிற்படும்` எனவும் இம்மந்திரத்திற்குப் பொருள் உரைப்பர்.
மலாவத்தைகட்கே தத்துவங்களின் தொழிற்பாடும், அவை யின்மையும் காரணமாவதன்றி, நின்மலாவத்தைக்கு அவை காரணம் ஆகாமையையும், `நின்மலாவத்தை திருவருளானே நிகழ்வன` என்பதையும் அவர் நோக்கிலர்.
சகலத்தில் சுத்த சாக்கிரம் முதலியனவும் சகலத்தில் சகல சாக்கிரம் முதலியனபோல இலாடத் தானத்தே நிகழ்தல் பற்றி இவற்றையும் `சாக்கிர சாக்கிரம் முதலியனவாகக் கூறுவர். எனினும் இடம் நோக்கி `அவை இவை` எனக் கொள்ளப்படும்.
இம் மந்திரத்துட் கூறப்பட்டன நின்மலாவத்தைகளே.
இதனால், `நின்மலாவத்தைகளாவன இவை` - என்பதை வகுத்துக் கூறத் தொடங்கி, முதல் மூன்றின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன்இல்லை யாமே.

பொழிப்புரை :

(முன்னை மந்திரத்திற் கூறியவாறு) உயிர் மாயா காரியங்களையெல்லாம் கடந்து எஞ்சி நின்ற காரண நிலையில் உள்ள சுத்த மாயை தாரகமாகச் சிவத்தை உணர்ந்து நிற்றலே சகல சாக்கிரத்தில் சுத்த துரியமாகும்.
பின்னர் ஆன்மா அந்த நிலையிலும் நில்லாமல் விட்டு நீங்கி, அந்தக் காரணமாயையும் தொடர்பின்றி நிற்கச் சிவமே தாரகமாக அதனை உணர்ந்து நிற்றல் சகல சாக்கிரத்தில் சுத்த துரியாதீதமாகும். இந்நிலையில் உடம்பு இருந்தும் இல்லாததேயாம்.

குறிப்புரை :

`உடம்பு வழியாக மலவாசனைகள் உயிரைத் தாக்கா` என்பதாம். `மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை` என்றாரேனும், `புருடன் மாயையில் வந்ததே துரியத்தில் ஆயமுறை` என்றலே கருத்தென்க. சேய்மை, `சேய்` எனமுதனிலை மாத்திரமாய் நின்றது. `சேய்மை` என்றது `அதீதம்` என்றவாறு. கேவலம் - தனிமை; கட்டற்ற நிலை. `விந்துவும் தன்னைவிட்டுச் செல்ல, உயிர் தான் சிவத்தில் சென்றக்கால், சேய்மைத்தாகிய கேவலமாம்` என்க.
இதனால், முன்னை மந்திரத்திற் கூறியவைபோக, எஞ்சி நின்ற இரண்டன் இயல்புகள் கூறப்பட்டன. இவை ஐந்தும் தச காரியத்துள் முதல் மூன்றினை ஒன்று கூட்டிப் பகுத்தன என்க.

பண் :

பாடல் எண் : 13

அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா
அதீதத் துரியத் ததனால் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய அனலின் துரியத்து முற்றுமே.

பொழிப்புரை :

நின்மல துரியாதீத நிலையில் சிவனையன்றிப் பிறி தொன்றையும் தாரகமாகக் கொள்ளாமையால், சடத்தன்மை சிறிதும் இன்றித் தூய அறிவேயாய் நிற்கின்ற ஆன்மா, அந்நிலையில், பழஞ் சுடராகிய சிவனது அவ்வருள் வழியே, தொடர்ந்து அவனையே உணர்ந்துநிற்குமாயின், அவ் வருளால் தனது தூய்மை கெடாது, என்றும் அந்நிலையிலே நிற்கும் நிலை கைகூடுவதாகும்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்யாவிடில், மீளக் கீழ்நிலையை அடையும்` என்பதாம். `துரியாதீதம்` என்பது, `அதீத துரியம்` எனப் பின் முன்னாகி நின்றது. `முதிய அனல்` என்பதைச் சுட்டும் `அது` என்னும் சுட்டுப் பெயர், செய்யுள் பற்றி முன் வந்தது. `அனல்` என்றது, சுடர் என்னும் பொருளது ஆதலின் ``அதனால்`` என்றது `அருளால்` என்றதேயாம். முதலடியை மூன்றாம் அடியாகவும் அனு வத்தித்துக் கூறியது. `இங்குக் கூறுமாறு நில்லாவிடின் ஆன்மாத்தான் அரிதில் அடைந்த நிலையை இழந்துவிடும்` என்பது உணர்த்தற்கு. இயமானன், `யஜமானன்` - என்பதன் திரிபு. `வேள்வித் தலைவன்` என்பது இதன் பொருள். யஜமானன்` என்பது உலகவழக்கில் பொதுவாகவழக்கினும், செய்யுள் வழக்கில் உயிரையே குறித்தல் அன்றிப் பிறவகையில் பொருள் தாராது. முதுமை, பழமையைக் குறித்தது. `அநாதி` என்பதை, `பழமை என்றல் தமிழ் வழக்கு. இறுதியில் உள்ள `துரியம்`, `கடப்பு` என்னும் பொருளதாய்ப் பாசங்களைக் கடந்ததை உணர்த்திற்று`.
இதனால், அரிதிற் பெற்றதொன்றைப் பேணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.

பொழிப்புரை :

பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளில் முப்பத் தைந்து கருவிகள் மட்டுமே கூடிச் செயற்படுவது கேவல சாக்கிரம். (இதுவும் சகல சாக்கிரம்போலப் புருவநடுவில் நிகழும்` என்பது மேற் பல இடங்களில் கூறப்பட்டது.)
சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும் ஆகப் பன்னிரண்டு தத்துவங்களும் ஆன்மாவை எப்பொழுதும் விட்டுக் நீங்குவன அல்ல, அதனால், `புருடன்` என ஒன்றுபோலக் கூறுமிடம் எல்லாம் அவத்தை பேதத்தில் இப்பன்னிரண்டு தத்துவங்களும் கொள்ளப்படும். `அவற்றுள் முப்பத்தைந்து கருவிகள் மட்டுமே கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்` என்றமையாலும், அவற்றுள் `புருடன்` என்பது, மற்றும் பதினொரு கருவிகள் கூடியது ஆகையாலும், நாற்பத்தாறு கருவிகள் கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்.
கேவலசாக்கிரத்தில் செயற்படும் நாற்பத்தாறு கருவிகளாவன; ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரிய விடய மாகிய சத்தாதி ஐந்து, கன்மேந்திரிய விடயமாகிய வசனாதி ஐந்து, அந்தக் கரணம் நான்கு, புருடன் ஒன்று, பிரணாதி வாயுக்கள் பத்து என்பன, ``புருடன்` என்பது பன்னிரண்டு கருவிகளை அடக்கியது - என்பது மேலே கூறப்பட்டது.
ஆன்மா புருவ மத்தியிலே நிற்பினும் தொண்ணூற்றாறு கருவிகளும் செயற்படின் சகல சாக்கிரமும், அவற்றுள் ஐம்பது கருவிகள் நீங்க, கேவல சாக்கிரமும் நிகழும் என்க.
சகல சாக்கிரத்தில் ஆன்மா புலன்களை அறிவதில் தீவிரமாய், நன்குணர்ந்து நிற்கும். கேவல சாக்கிரத்தில் ஆன்மாப் புலன்களை அறிந்தும் அறியாதது போன்ற மந்த உணர்வு உடையதாய் இருக்கும். இவை அவ்விரு சாக்கிரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு.
முப்பத்தைந்து கருவிகளில் ஞானேந்திரியம் ஐந்தும், கன் மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்துக் கருவிகள் நீங்க, ஏனை இருபத் -தைந்து கருவிகள் மட்டும் செயற்படுவது கேவல சொப்பனம். இந்நிலையில் ஆன்மாக் கண்டத் தானத்தில் நிற்கும். கைகண்ட - சாக்கிரத்தில் நன்கு துய்க்கப்பட்ட.
அவ்விருபத்தைந்தில் சித்தம், பிராணன், புருடன் - ஆகிய மூன்று கருவிகள் மட்டுமே செயற்படுவது கேவல சுழுத்தி. (பொய் என்றது ஐம்புலன்களை. `சுழுனையில் பொய்கண்ட மூவர் உளர்` என இயைத்துக் கொள்க. `இவருள் புருடனும் ஒருவன்` என்பதாம்.) `சுழுத்தி நிகழும் இடம் இருதயம்` என்க.
பொருள்களை உணரும் ஆற்றல் உடைய புருடன் இரு -தயத்தை விட்டு உந்தியை அடைந்தால் அந்நிலை கேவல துரியமாம். அப்பொழுது பிராணன் மட்டுமே உளதாக இருவரே இருப்பர். (இரு கருவிகள் மட்டுமே அவ்விடத்தில் செயற்படும்` என்றபடி.) இங்குப் புருட தத்துவத்தையே உயிராக உபசரித்தார். `உந்தி மேவில்` என்றதனால் முன்பு இருதயத்தில் நின்றமை பெறப்பட்டது.

குறிப்புரை :

உந்திக்குகீழ் உள்ளது மூலாதாரமே. ஆதலால், `புருடனோடு உடன் இருந்த ஒரு கருவியாகிய பிராணனும் நீங்க, புருடன் ஒருவனும் மூலாதாரத்தை அடைந்தால் கேவல துரியா தீதம் நிகழும் - என்பது குறிப்பால் விளங்கிற்று.
கீழாலவத்தைகளில் செயற்படும் கருவிகளை, `தொகைக் குறிப்பு` - என்னும் குறிப்பு வகையால் மரபு பற்றி உணர்த்தினார். என்க.
இதனால், `கீழாலவத்தைகட்கு உரிய கருவிகள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.

பொழிப்புரை :

(`புரியட்டக சரீரம்` - என்பது பெரும்பான்மையும் சூக்குமசரீரத்தையும், சிறுபான்மை பரசரீரத்தையும் குறிக்கும். இது சிவஞான போத இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண சிவஞான மாபாடியத்தாலும் விளங்கும்.)
தன்மாத்திரை ஐந்தும், அந்தக் கரணம் மூன்றும் ஆக எட்டும் கூடியது சூக்கும சரீரம். இவ்விடத்தில் சித்தம் பிரகிருதியில் அடங்கும்.
மூலப் பிரகிருதி ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் ஆக எட்டும் கூடியது பர சரீரம்.
எனவே, `புரியட்டகம்` என்பது இவ்விரு சரீரங்கட்கும் பெயராதல் விளங்கும். (இவை இரண்டுமே இம் மந்திரத்திற் குறிக்கப்படுகின்றன.)
இரு புரியட்டக சரீரங்களும் தூல சரீரத்தோடு பொருந்தி நிற்கும் நிலையே இருவகைச் சாக்கிராவத்தையாகும். (இருவகை சகலமும், கேவலமும், இவ்வாறு சுருங்கக் கூறினாராயினும் கேவல சாக்கிரத்திலும் கனவிற் போலவே புரியட்டக சரீரம் நிற்கும் என்க.) சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், பிராணாதி பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்கள். ஆகையால் அவற்றை எண்ணாமல் விடுக்கச் சூக்கும சரீரத்தில் மூன்று அந்தக்கரணங்கள் மட்டுமே செயற்படும் நிலை கேவல சொப்பனமாம். கேவல சாக்கிரத்தல் இருவகை இந்திரியங்கள் செயற்படும். கேவல சொப்பனத்தில் அவை செயற்படா. (இங்குப் பரசரீரம் கருத்தில் கொள்ளப்படவில்லை.) பரசரீரத்தில் `பிரகிருதி, புருடன்` என்னும் இரண்டு மட்டுமே தொழிற்படும் நிலை கேவல சுழுத்தியாம். (இங்கும் பிராணன் எண்ணப்படவில்லை.) பரசரீரத்தில் புருடன் ஒன்று மட்டுமே செயற்படும் நிலை கேவல துரியமாம். (இங்கும் பிராணன் எண்ணப்பட வில்லை. ஒரு கருவியும் இன்றி ஆணவ மாத்திரம் இருத்தலே கேவல துரியாதீதம்` என்பது கருத்து.)

குறிப்புரை :

கேவல துரியாதீதத்தில் பிரகிருதி சிறிதும் அறிவைப் பிறப்பியாது, இருளாயே இருக்கும் என்க.
இதனால், கீழாலவத்தைக் கருவிகள், வேறு வேறு சரீரங்களாதல் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.

பொழிப்புரை :

சாக்கிரத்தில் சாக்கிரமாவது உயிர் பொறிகளின் வழியாகப் புறத்தே உலாவிப் புலன்களைப் புதிது புதிதாக உணரும் நிலை.
சாக்கிரத்தில் சொப்பனமாவது, புறத்துச் சென்று புதிய காட்சி -களைக் காணாது முன்பு கண்டவற்றைப் பற்றியே நினைந்திருத்தல்.
சாக்கிரத்தில் சுழுத்தியாவது, முன்பு கண்ட காட்சிகளை நினைதலையும் விடுத்துப் பொதுமையின் நிற்றல்.
சாக்கிரத்தில் துரியமாவது, புறப்பொருள்களால் விளைந்தது துன்பமாயின் அதனைப் போக்கவும், இன்பமாயின் அதனைக் காக்கவும் ஆன வழிகளைப் பலவாக எண்ணுதல்.
சாக்கிரத்தில் துரியாதீதமாவது, அவ்வாறு எண்ணுதல் இன்றி, துன்பம், அல்லது இன்பத்திலே மூழ்கித் தன்னை மறத்தல்.

குறிப்புரை :

இவையே `சகலத்திற் சகலம்` - என்றும், `மகாசகலம்` என்றும் சொல்லப்படுவன என்க. இவை இனிது விளங்குதற் பொருட்டு, அரிய பொருளை மறந்து கைவிட்டவன் நினைவு வந்த பொழுது அதுபற்றி மூர்ச்சித்தல், தெளிந்து புலம்பல், விட்ட இடத்தை நினைத்துப் பார்த்தல் முதலியவற்றை அதீதம் முதலியனவாகக் கூறிக் காட்டுவர்.
`அதீதத்து ஊண் ( அநுபவித்தலை) நந்தி (விடுத்து) உள்நாடல் இலாமையாம் என்க.
இதனால், சகலத்தில் சகல சாக்கிரம் முதலியவற்றின் இயல்புகள் அனுபவத்தில் வைத்து உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டமறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாத காணல்
அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.

பொழிப்புரை :

(மேல், `நனவிற் கனவில்லை` என வந்த மந்திரத்தில் சித்தாந்தம் கூறிய நாயனார். இது முதல் மூன்று மந்திரங்களால் சில பூர்வ பக்கம் கூறுகின்றார்.)
கனவு நனவுபோல மிகத் தெளிவாக நிகழ்தல் சொப்பனத்தில் சாக்கிரம். (இதுவே, `சொப்பனத்தில் சொப்பனம்` என்பது சித்தாந்தம்.)
கனவு தெளிவாக அன்றி, மந்தமாக நிகழ்தல் சொப்பனத்தில் சொப்பனம். (இது வேறன்று என்பது சித்தாந்தம்.)
கனவில் காட்சியாகக் காணாது, கருத்தாக மட்டும் சிலவற்றை உணர்தல் சொப்பனத்தில் சுழுத்தி. அந்த உணர்வும் இன்றி இருத்தல் சொப்பனத்தில் துரியம் (இதனானே, `உணர்வு கனவில் உண்டாகும் இன்பத்துன்பங்களிலே அது அதுவாக அழுந்துதலே சொப்பனத்தில் துரியாதீதம்` - என்பது பெறப்படும்.)

குறிப்புரை :

`கனவில் நனவில்லை` என்பதே சித்தாந்தம். `கண்ட, காணாத` என்பன அஃறிணை பன்மை வினைப் பெயர்.

பண் :

பாடல் எண் : 18

சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

பொழிப்புரை :

சுழுத்தியில் ஒருகால், `இது நல்ல உறக்கம்` என அதனை உணர்தல் சுழுத்தியில் சாக்கிரம். சுழுத்தியில் `நாம் நன்கு உறங்குகின்றோம்` எனத் தன்னை உணர்தல் சுழுத்தியில் சொப்பனம். (இவை இரண்டும் நிகழில் சுழுத்தி யில்லையாம் என்பது சித்தாந்தம்.)

குறிப்புரை :

சுழுத்தியை உணர எழுகின்ற அறிவைச் சுழுத்தியில் தோய் கின்ற அறிவு அழிக்க, யாதும் தோன்றாதநிலை சுழுத்தியில் சுழுத்தி, அவ் எழுச்சியும், அழிப்பும், தோன்றாது அடங்கும் நிலை சுழுத்தியில் துரியம். (இதனானே, `அவ்வடக்கத்தால் எழுகின்ற உறக்க இன்பத்தில் ஆழ்ந்துவிடுதல் சுழுத்தியில் துரியாதீத நிலை` என்பது பெறப்படும்).

பண் :

பாடல் எண் : 19

துரிய நனவாம் இதம்உணர் போதம்
துரியக் கனவாம் அகம்உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியத்
துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :

துரியத்தில் பேருறக்கத்தில் விளைகின்ற மிக்க இன்பத்தினைக் காலத்தொடு ஒட்டி நெடிதுணர்தல் துரியத்தில் சாக்கிரம். அவ்வின்பத்தை உணராது தன்நிலையை உணர்தல் துரியத் தில் சொப்பனம். துரியத்தில் திருவருள் உணர்வு தோன்றல் துரியத்தில் சுழுத்தி. துரியத்தில் திருவருட்கு முதலாகிய சிவத்தை உணர்தல் துரியத் தில் துரியம். (இதனால், சிவத்தில் ஒடுங்கல் துரியத்தில் துரியாதீத மாதல் கொள்ளப்படும்.)
(இவற்றுள், `முதற்கண் கூறிய நிலையே துரியத்தில் துரியம்` என்பதும், அவ்வின்பத்தில் தோய்ந்து, அதுவேயாய்க் கிடத்தலே துரியத்தில் துரியாதீதம்` என்பதும், `பிறவெல்லாம் கீழாலவத்தைக் கண் நிகழா` என்பதுமே சித்தாந்தம்.)
ஏகான்ம வாதிகள், `கீழாலவத்தையில் நிகழும் சுழுத்தியில் சீவன் பிரமமாய்விடும்` எனவும், `அதனால் அங்கு நிகழ்வது பிரமானந்தமே` எனவும் கூறுவர். இம்மந்திரத்திற் கூறிய பூர்வ பக்கமும் அவர்களது கொள்கையோடு ஓராற்றான் ஒத்துள்ளன்.
இனி `இங்குக் கூறப்பட்ட துரியம் பரதுரியமே` எனக் கொள்வாரும் உளர்.
துரியாதீத நிலை இங்குக் கூறப்படாமையால், அதில், `சித் தாந்தத்திற்கு வேறாய்ச் சொல்லப்படுவன இல்லை` என்பதாகின்றது.

குறிப்புரை :

வியோமம் - பரவியோமமம். பூர்வ பக்கங்களையும் உணர்ந்து கழித்தாலன்றிச் சித்தாந்தத்தில் தெளிவு பிறவாது ஆகலான், அதுபற்றி இம்மூன்று மந்திரங்களாலும் கீழாலவத்தை பற்றிய பூர்வ பக்கங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

அறிவறி கின்ற அறிவு நனவாம்
அறிவறி யாமை அடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாயின தான துரியமே.

பொழிப்புரை :

ஆன்மாத் தத்துவங்களின் இயல்பை அறியுமுகத் தானே தன்னியல்பை அனுமித்தறியும் நிலை சகலத்தில் சுத்த சாக்கிரம். (இதனை, `ஆன்மரூபம்` என்க.) தத்துவங்களின் இயல்பை உணரும் முகத்தால் அவற்றால் தனக்கு உண்டாகும் பாச அறிவை நீக்கி நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சொப்பனம். (இதனை, `தத்துவ சுத்தி` என்க.) பாச அறிவை நீக்கிய ஆன்மாப் பதியறிவை நாடி அது தோன்றாது நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சுழுத்தி. (இதனை, `ஆன்ம தரிசனம்` என்க. `சிவரூபம்` இங்கு உடன் நிகழும்.) பதியறிவை நாடி அதனை அறிந்த ஆன்மா, அந்த அறிவில் தனது அறிவு ஒடுங்கத் தான் தோன்றாது அது வேயாய் நிற்கும் நிலை சகலத்தில் சுத்த துரியமாம். (இதுவே, ஆன்ம சுத்தியும், சிவதரிசனமும், சிவயோக மும் என்க.) இதற்கு மேல் ஆன்மாத் தன்னால் பற்றப்பட்ட சிவம் விளைக்கின்ற ஆனந்தத்தில் மூழ்கிப் பிறிதொன்றையும் அறியாது நிற்றலே சகலத்தில் சுத்த துரியாதீதம் என்பது குறிப்பால் கொள்ளக்கிடந்தது. அதுவே `ஆன்ம லாபம்` என்க.

குறிப்புரை :

ஆன்ம சுத்தி, சிவ தரிசனம், சிவயோகம் இவை உடன் நிகழ்ச்சியாய் நிகழ்தல் பற்றி அம்மூன்றையும் ஒன்று கூட்டிச் சுழுத்தி துரியங்களாகப் பகுத்துக் காட்டினார். இவற்றிற்கு முன் இரண்டை, `சொப்பனம்` என ஒன்றாகக் காட்டினார்.
மேல், `ஆறாறில் ஐயைந்து` எனவும், `மாயையில் வந்த புருடன்` எனவும் போந்த மந்திரங்களை இங்கு உடன்வைத்துக் காண்க. மூன்றாம் அடியில் வகரமெய் விரித்தல் `அறிவையறிதலால் வரும் அறியாமை சுழுத்தி` என்க.
இதனால், நின்மலாவத்தையில் சில உட்கூறுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்து பின்
தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.

பொழிப்புரை :

வியாபகப் பொருளாகிய ஆன்மா, அந்த வியா பகத்தைத் தடுத்து அணுத்தன்மைப் படுத்திய ஆணவாதி பாசம் ஐந்தி னின்றும் நீங்கித் தனது வியாபகத்தைத் தலைப்பட்ட நிலை உண்மைச் சுத்த சாக்கிரம். (இதுவே சீவன் முத்தியாம்.)
சீவன் முத்தியில் மாயையாகிய உடம்பு இருத்தலால், அது வழியாக ஏனைப் பாசங்களின் வாசனைகளும் உளவாம். அவ் வாசனைகள் பெரும்பான்மையும் நீங்கி, அதிகார மலவாசனை நின்ற விடத்து, அனந்தேசுராதி பதங்களில் விருப்பம் உண்டாகும். அவ் வாற்றால் அப்பதங்களில் இருத்தல் உண்மைச் சுத்த சொப்பனம் (இஃது அதிகார முத்தியாம்.)
பின்பு அதிகாரமலம் நீங்கிப்போக மல வாசனை நின்ற விடத்து நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளையும் உள்ளடக்கிப் பெரு வியாபகமாய் நிற்கின்ற சாந்தி யதீத கலையில் சத்தி தத்துவத்தில் உள்ள புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த சுழுத்தி. (இது போக முத்தியாம்.)
போக மல வாசனை நீங்கி, இலய மல வாசனை நின்றவிடத்து, அச்சாந்தியதீத கலையில் உள்ள சிவதத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த துரியம். (இஃது இலய முத்தியாகும்)
(சாந்தி கலையில் சாதாக்கிய தத்துவ புவனத்தை அடைந் தவர்களும், சாந்தியதீத கலையில் உள்ள புவனங்களை அடைந் தவர்களும், `அணு சதாசிவர்கள்` எனப்படுவர். சுத்த வித்தை, ஈசுரம் ஆகிய தத்துவ புவனங்களை அடைந்தவர்கள் `வித்தையேசுரர்கள்` என்றும், `மந்திர மகேசுரர்கள்` என்றும் இருவகையினராய் இருப்பர்.)
(இலய முத்தி `உண்மைச் சுத்த துரியம்` என்றதனானே, ஆன்மா அனைத்து மல வாசனைகளும் சிறிதும் இன்றி நீங்கப் பரம சிவனோடு இரண்டறக் கலக்கும் சாயுசச்ச நிலை உண்மைச் சுத்த துரியாதீதம் ஆதல் விளங்கும்.)
இவையெல்லாம் பராவத்தைகளாம்.)

குறிப்புரை :

இவ்வாற்றால், சீவன் முத்தி, அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி, பரமுத்தி - என்பன உண்மைச் சுத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன சுழுத்தி துரிய துரியாதீதங்களாதல் போந்தவாறு அறிக.
`விட்டு, நயந்து, நின்று` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்து, `சூக்கம்` என்பதன் பின் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடு முடிந்து, உண்மைச் சுத்த சாக்கிரம் முதலிய மூன்றனையும் முறையே குறிப்பால் உணர்த்தின. `சூக்கம்` என்றது துரியத்தை.
பின்வந்த `விட்டு` என்பது, `விட்டவழி` என்பதன் திரிபு. அது `நந்த` என்பதனோடு முடிந்தது. `ஞானம்` என்பது `வித்தை` என்னும் பெயர்க்குப் பரியாயமாய், `வித்தைகள், வித்தையீசர்``* என்போரைக் குறித்தது. `வன்னம்` என்றது அவத்தையை, `மேலீடு` என்றது, `பராவத்தை` என்றபடி. நந்துதல் - வளர்தல்.
இதனால், உண்மைச் சுத்தமாகிய பராவத்தைகளின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 22

ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.

பொழிப்புரை :

சகலசாக்கிரத்தில் முப்பத்தாறு கருவிகளும் குறைவின்றிச் செயற்படும். அந்தச் சாக்கிரத்திற்குப் பின்னர் அதிலே, `சொப்பனம், சுழுத்தி` என்பவையும் நிகழும். அவைகளில் இளைத்து மடங்கும் கருவிகள் அசுத்த மாயையின் காரியங்களாம். அவை காலம், நியதி முதலியன. அவை செயற்படுதல் சிவதத்துவங்கள் செலுத்துதலினாலேயாகலின், `அவை செயற்படா. எனவே, சிவ தத்துவங்களும்செயற்படாமை பெறப்பட்டது. சிவதத்துவங்கள் ஐந்தில் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி என்பவை முறையே ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே போவதால், சகலத்தில் சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை நிகழும் என்க.
`உளனோ, இலனோ` - என்னும் ஐயம் நிகழுமாறு உயிர்ப்பின்றிக் கிடப்பது, அதற்குமுன் துரியநிலையில் இருந்த அந்த ஆன்மாவேயாம். (எனவே, விழிப்பு நிலையிலே உயிர்ப்பின்றி மூர்ச்சித்துக் கிடத்தலே சகலத்தில் துரியாதீத மாயிற்று.)

குறிப்புரை :

இவையெல்லாம் மத்தியாலவத்தைகள், எய் பகுதி - வினைத்தொகை. எய்த்தல் - இளைத்தல். பகுதி - தொகுதியுள் சில கூறுகள். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். `முந்த ஆனவன்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. `உந்த ஆனவன்` என்றலும் ஆம். இங்கும் துரியம் `சூக்கம்` எனப்பட்டது.
இம்மந்திரத்திற்குச் சித்தாந்ததத்துள் ஓரிடத்தும் பெறப்படாது அவரவர் கருதியவாறே உரைத்த உரைகள் உள.
இதனால், வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் கூடுதல் குறைதல்களாலே மத்தியாலவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும்
ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென் றறியும் அறிவை யறிந்தபின்
ஈதென் றறியும் இயல்புடை யோனே.

பொழிப்புரை :

(சுருதியும், குரு மொழியும் ``ஒன்று அவன்தானே`` என்றபடி,* `தன்னோடு ஒப்பவைத்து எண்ணுதற்கு மற்றொரு பொருள் இன்றித் தான்ஒன்றேயாய தனிமுதற் பொருள் ஒன்று உண்டு` என வலியுறுத்திக் கூறுகின்ற அப்பொருளை) மத்தியாலவத்தை கீழா லவத்தைகளில் மட்டுமே அகப்பட்டு உழன்ற இவ்வளவு காலமும், `இது` என்று நான் உணரவில்லை (யோகாவத்தையை அடைந்த பொழுது அதனைச் சிறிதே உணர்ந்தேன்.) நின்மலாவத்தையை அடைந்தபின் அதனைத் தெளிவாக உணர்ந்தேன். அதனை அவ் வாறுணர்ந்த பின் பிறிதொன்றையும் அரிய முயல்கின்றிலேன். (`அதனையே அறிந்து நின்றேன்` என்பதாம்.) அவ்வாறு அதனை உணரும் உணர்வை எய்திய பின்புதான் நான் மெய்யுணர் வுடையேனாயினேன்.

குறிப்புரை :

அவத்தைகளே அதிகாரப்பட்டு வருதலால் `இத்தனைக் காலமும்`-என்றது பயன்படாத அவத்தையிற் கிடந்த காலத்தையே குறித்தது. ஆகவே, அறிந்த காலம் பயன்படும் அவத்தை நிகழ்ந்த காலம் ஆயிற்று. `அறிந்தபின்` - என்ற அனுவாதத்தால், அறிந்தமை தானே பெறப்பட்டது. அறியற்பாலதாய பொருளை அறிவதே அறிவாதலின், அங்ஙனம் அறியும் பொழுதே அறிவராந் தன்மையை மக்கள் பெறுதல் பற்றி, ``அறியும் இயல்புடையேன்`` என்றார். `உடையேன்` என்னும் ஆக்கவினைக்குறிப்பில் ஆக்கச் சொல் தொக்கு நின்றது. அடைதலே அறிவிற்குப் பயன் ஆதலின், `அறிந்தபின்` என்றது, `பெற்றபின்` என்றதேயாம்.
ஞாயிற்றின் ஒளியால் இருள்நீங்கிப் பொருள்களைக் காண் கின்ற கண் அவ்வொளியால் ஞாயிற்றையே நோக்கியவழி அதற்கு அந்த ஞாயிறன்றிப் பிறிதொரு பொருள் தோன்றாதவாறு போல, முதல்வனது அருளால் மலம் நீங்கிப் பொருளியல்புகளை உள்ளவாறு உணர்ந்துவரும் உணர்வு, அம்முதல்வனையே உணர்ந்தவழி அவ்வுணர்விற்குப் பிறிதொருபொருள் புலனாகாது` என்பதே, ``ஈதென்றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்`` என்பதனால் கூறப்பட்டது.
இதனால், அவத்தைகளின் பயன்கள் அனுபவ முறையால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய்
அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதனுல காதி
இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.

பொழிப்புரை :

உலகிற்கு முதல்வனாகிய இறைவன் அறிவுடைப் பொருளாகிய உயிர்களில் அவற்றுக்கு உயிராகியும், அறிவில்லாத உருவமும், அருவமும் ஆகிய பொருள்களில் அவையேயாகியும் இவ்வாறு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் அவை யனைத்தினும் தான் வேறாவதோர் திறம் உடையனாயும், உயிர்களின் அறிவு ஒன்றை அறியுமிடத்துத் தானும் அவ்வாறு அப்பொருளை அறிகின்ற அறிவாய் உடனாயும் `சத்தியும், சிவமும்` என்னும் இரு திறத்தால் இயக்காவிடின் உயிர்கள் முழு மூடங்களாயும், உயிரல் பொருள்கள் சூனியமாயும் ஒழிவனவாம்.

குறிப்புரை :

எனவே, `அவன் அவ்வாறு இயக்குதலானே மேற் கூறிய அவத்தைகள் பலவும் நிகழ்கின்றன.` என்றபடி. இதனானே, இறைவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு அவ்வந் நிலைக்கேற்ற அறிவையும், அனுபவத்தையும் தந்துதவுதல் விளங்கும்.
`உலகிற்கு ஆதி` என உருபு விரித்து அதனை முதற்கண் கூட்டி, `நாதனும் ஆய்` என உம்மையும், ஆக்கச் சொல்லும் வருவித்து உரைக்க. இயற்பு - `நடத்துதல்` எனப் பிறவினை இது, `நடத்தல்` எனத் தன்வினையாயின், `இயல்பு` என நிற்கும். `இருள்` என்றது, `சூனியம்` என்றபடி. சூனியம், இங்கு, இருந்தும் இல்லாமை. `இருள், மூடம்` - என்பவற்றை எதிர் நிரல் நிறையாகக் கொள்க.
இதனால், `ஆன்மாவும், கருவிகளும் கூடிய துணையானே அவத்தைகள் நிகழமாட்டா; இறைவனது திருவருள் உடனாய் நின்று நிகழ்விக்கவே நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

பொழிப்புரை :

சிவன், `இச்சை, ஞானம், கிரியை` என்னும் தனது மூன்று சத்திகளில், `உயிர்களை உய்விக்க வேண்டும்` என விரும்பும் இச்சா சத்தியினால் உயிர்களில் எல்லாம் தான் நல் உயிராய்க் கலந்து, அநாதியே உயிர்களில் தன்னைப் போலவே பொருந்தியுள்ள பாசம், `அஃது ஒன்றே` யாகாது `ஐந்து` என்னும் படி முதல் மலத்தொடு நான்கு மலங்களைக் கூட்டியதனானே அம்முதல் மலம் முற்றிலும் அற் றொழிதற் பொருட்டுத் தத்துவ வகை முப்பத்தாறினையும் உண்டாக்கி, அம்முப்பத்தாறின் கூறுகளாக மற்றும் அறுபத்தாறு கருவிகளையும் தோற்றுவிக்து வைத்தான்.

குறிப்புரை :

`இவ்வாற்றால் உயிர்கள் முதல் மலம் முற்றிலும் நீங்கச் சிவனையடைந்து பேரின்பத்தை யடையும்` என்பதாம். `ஈசன் இராக சத்தியின் தான் நல் உயிராகி, ஐந்தோடு, மலம் அறுமாறு பேதம், சமைத்து, கருவியும் வைத்தனன்` என இயைத்துக் கொள்க. இராகம் - இச்சை. `பாசத்தோடு` என உருபு விரிக்க.
நன்மை, இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையால் அறிவேயாயும், இன்பமேயாயும் இருத்தல். `மலம் ஐந்து ஆக்கிய -தோடு` என்க. இவ் ஓடு, எண் ஓடு முதல் மலம் ஆணவம்; பின்னர்க் கூட்டிய நான்கு மலங்களாவன மாயை, கன்மம், மாயேயம், திரோ தாயி, மாயேயம், தத்துவ தாத்துவிகங்கள். எனவே, `தத்துவ பேதம், கருவி` என்றது மாயேயங்களை விளக்கியதாம். `கருவியும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
அவத்தை பேதங்கள் பெத்தமும், முத்தியுமாய் நிற்றலால், அவையிரண்டும் சிவன் செயலே யாதலை விளக்கியவாறு.
இம்மந்திரம் சைவ சித்தாந்தச் சுருக்கமாய் நிற்குமாற்றையும் உணர்ந்து கொள்க.
முன்னை மந்திரத்தில் தொகுத்துக கூறிய சிவனது செயல் இதனால், வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல்
சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.

பொழிப்புரை :

சகல சாக்கிரத்தில் சாக்கிரம் முதலியன நிகழுங் கால் இறுதியில் நிகழும் துரியாதீதத்தில் ஆன்மாத் தன்னையும், பிறிதை -யும் உணர்தல் இன்றி, ஆணவத்தால் விளையும் பேரிடரிலே மூழ்கி யிருக்கும். இது `தன்னுண்மை` எனப்படும். (இந்நிலை அநாதி கேவலத்தொடு ஒத்ததாகும்.)
நின்மல சாக்கிரத்தில் நிகழும் துரியாதீதத்தில் ஆணவம் இன்மையான், அதில் ஆன்மாச் சிவனால் தரப்படும் பேரின்பத்தில் மூழ்கித் தன்னையும் அறியா நிலையில் இருக்கும். (இஃது ஆன்மா இறுதியில் அடையும் சாயுச்ச நிலையோடு ஒத்ததாகும். இதுவே முன்பு ஆணவத்தோடு அத்துவிதமாய் நின்றதுபோலப் பின்பு மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதமாய் நிற்கும் நிலை.)
இங்குக் கூறிய இருவகைச் சாக்கிரத்திலும் துரியாதீதத்திற்கு முன்னாதல், பின்னாதல் நிகழும் துரியத்தில் ஆன்மாத் தனக்கு உளவாகும் இன்பத் துன்பங்களை அறிவதாய் இருக்கும்.

குறிப்புரை :

`முதல் அடியில் கூறிய சாக்கிரம் சகல சாக்கிரம்` என்பதும் `இறுதியிரண்டடிகளில் கூறிய சாக்கிரம் நின்மலசாக்கிரம்` என்பதும், இரண்டாம் அடியில் கூறியசாக்கிரம் இரண்டனையும் குறித்த பொது சாக்கிரம் என்பதும் அவ்வவற்றில் காட்டப்பட்ட அனுபவம் பற்றி உணர்ந்து கொள்ளப்படும்.
இரண்டாம் அடியை இறுதியிற் கூட்டி, `சாக்கிராதீதத்தின் பக்கத்ததாகிய துரியத்தில்` எனவும், `தான் அனுபவத்தை உறல்` எனவும் உரைத்துக் கொள்க.
முதற்கண் உள்ள `ஆணவம்` தன்காரியம் உணர்த்தி நின்றது. ஈற்றில், `பரன் உண்மையில் தங்கும்` என உருபு விரித்துரைக்க.
இதனால், `சகல சாக்கிரம், நின்மல சாக்கிரம்` என்பவற்றின் இயல்புகள் அவற்றை ஒப்பிட்டுக் காட்டி உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 27

மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`மலம்` என அடைகொடாது கூறுமிடத்துப் பெரும் பான்மையும் `ஆணவம்` என்றே பொருள்படும். இங்கும் அவ்வாறே கொள்க. கலப்பு செம்பிற் களிம்பின் கலப்புப் போல அநாதியே உள்ளது. அதனால் அந்த ஆணவத்தின் விளைவாக இங்குக் கூறியன யாவும் அநாதியே உள்ளனவாம். தாணு - சிவன். மதி - ஞானம். இஃது ஆன்மாவின் ஞானம். `மலக் கலப்பால் இருளாய் இருந்த ஞானம், சிவக் கலப்பால் ஒளியாம்` என்றபடி. `மலம் நீங்குமாறு இது` என்பது, ஒன்று இடையிட்டு மேல் உள்ள மந்திரத்தில் கூறப்பட்டது.
சத்தி, இங்கு அருட்சத்தி. `ஞானம் அழிந்தது` எனக் கூறாமல், `மறைந்தது` என்றே கூறினமையால், மலக் கலப்பு அற்றால் மதி ஒளியாதற்குத் தடையின்மையறிக.
இதனால், மலாவத்தைகட்குக் காரணம் ஆணவமும், நின்மலாவத்தைகட்குக் காரணம் அருட்சத்தியும ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.

பொழிப்புரை :

கீழாலவத்தைச் சுழுத்தியில் காட்சி எதனையும் காணுதல் இன்றித் தெளிவில்லாதிருக்கின்ற ஆன்ம அறிவில், சிங்கங்கள் போன்ற கொடிய குணங்கள் மூன்று விளங்கி நிற்கும். (அவை, `காமம், வெகுளி, மயக்கம்` - என்பன. `இவற்றின் விரியே பஞ்சக்கிலேசம்` என்பர். பஞ்சக்கிலேசமாவன, `அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம்` - என்பன. இவை, கொடுமை மிகுதி பற்றிச் சிங்கங்களோடு உவமிக்கப்பட்டன.)
அச் சுழுத்தியினின்றும் மேல் ஏறிச் சொப்பனத்தை அடைந்த ஆன்ம அறிவில் நான்கு நரிக்குட்டிகள் போன்ற சூழ்ச்சி வல்ல நான்கு கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்பன, இவை சூழ்ச்சிக் கருவிகள் ஆதலின், நரிக் குட்டிகளோடு உவமிக்கப்பட்டன. `நரிகள் சூழ்ச்சி வல்ல பிராணிகள்` என்பர்.
அச்சொப்பனத்தினின்றும் மேல் ஏறிச்சாக்கிரத்தை அடைந்த ஆன்ம அறிவினுள் பின்பு மதங்கொள்ளும் ஐந்து ஆனைக்கன்றுகள் போன்ற ஐந்து கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, செவி முதலிய ஞானேந்திரியங்கள். மத்தியாலவத்தைச் சாக்கிரத்தில் இவை வளர்ந்து மதம் மிக்க யானைகள் போல் ஆய்விடும்.)
(கீழாலவத்தையை விட்டு, மத்தியாலவத்தையை அடைந்த ஆன்ம அறிவு, மேற்கூறிய யானைக் கன்றுகள் வளர்ந்து, மதம் மிக்கு, ஒன்றோடொன்று மாறுபட்டு நிற்றற்கு இடமாய், இரு நிலைகளை யுடையதாம்; ஒன்று, அவ் யானைகளால் ஈர்ப்புண்டல். மற்றொன்று, அவற்றை அடக்கி ஒடுக்குதல்.)

குறிப்புரை :

`சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்* கூறும் முறைமையால், ஆன்ம அறிவே, இங்கு, `சிந்தை என்றும், `நெஞ்சு` என்றும் கூறப்பட்டது. அங்ஙனம் கொள்ளாது நேர்ப் பொருள் கொள்ளின் பொருந்தாமை அறிக. திகைத்தல் மூடம் ஆகாது, அறிவு அலமரும் நிலையாதலின், அந்நிலை துரியாதீதமும், துரியமும் ஆகாது, சுழுத்தியே யாதல் அறிக. பிறவும் இங்குக் கூறியன ஆதலை ஓர்ந்துணர்க. ``பகைக்கின்ற நெஞ்சு`` என்றது இடப்பெயரோடு முடிந்த பெயரெச்சத் தொடர். ஏனைய மூன்றும் வினைமுதற் பெயரோடு முடிந்த அத்தொடர்கள். நகைத்தல் - ஒளிவிடுதல். அகைத்தல் - பிளவுபடுதல்.
இதனால், கீழாலவத்தை சிலவற்றில் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன. மத்திய சாக்கிரத்தைக் கூறியது, ஐயம் அறுத்தற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 29

கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும்
விதறு படாமூனம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே.

பொழிப்புரை :

துன்பத்தால் அலறிக் கொண்டு, ஒரு வழிபடாது பதினெட்டு வழிகளில் போவதற்குப் பலமுகமாய் எழுகின்ற மனத்தை, நீவிர், நும் வாழ்நாள் முடிவதற்கு முன்னே மெய்ந்நெறியில் நிறுத்தினால், முன் மந்திரத்தில் கூறிய அந்த ஆனைகள் ஐந்தும் நடுங்கும்படி ஒப்பற்ற ஒரு பெரிய யானை உங்கள் அருகில் வந்து உங்களை எடுத்துச் செல்லும்.

குறிப்புரை :

அந்த யானையாவது சிவன். `ஆனையும்` என்னும் உம்மை சிறப்பு யானை, தன் பாகனைத் தானே எடுத்துச் சுமத்தல் போல, அடியார்களைத் தானே வந்து ஆட்கொண்டு அவர்களைத் தாங்கி நிற்றல் பற்றிச் சிவனை, `ஆனை` என்பர் அருளாளர். திருக்கடவூர்த் திருக்குறுந்தொகை ஒரு திருப்பதிகம் முழுவதிலும் சிவபிரானை, `ஆனை, ஆனை` எனப் பலகாலும் கூறினமை காண்க. `எடுத்துச் சுமப்பான்`l என்றார் உமாபதிதேவர். இனி `ஆனை` என்பதை `ஆன் + ஐ` என இருமொழித் தொடராக்கி, `பசுக்கட்குத் தலைவன்` எனப் பொருள் உரைப்பாரும் உளர்.
பதினெட்டு வழிகளாவன. புரியட்டக சரீரத்தில் உள்ள எட்டுக் கருவிகளும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் ஆம். தூல பூதங்கள் தன்மாத்திரைகளில் அடங்கின. அடங்கவே அவற்றின் கூறாகிய தாத்துவிகம் அறுபதும் அவற்றோடு உடன் அடங்கின. எனவே, `சூக்கும தூல சரீரங்களின் வழியே ஆன்மாப் புறத்துச் சென்று அலமரும்` எனக் கூறியவாறாம். கண் - புழை. `கண்களிலும்` என ஏழாவது விரிக்க. அவ்வாறு அலமராது நிற்றற்கு உபாயம் சரியையாதி தவங்களே. அவைகளே இங்கு, `மெய்வழி` எனப்பட்டன. `நின்றால்` என்பது, பிவ்விகுதி தொகுக்கப்பட்ட பிறவினை. சிந்தையை மெய்வழி நிற்பித்தலே நின்மலாவத்தையாம்.
இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் நில்லாது` நின்மலாவத்தையில் செல்லல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா
கனவகத் தேஉட் கரணங்க ளோடும்
உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.

பொழிப்புரை :

(கனவிலும் பிராணாதி வாயுக்கள் பத்தும் செயற் படுதலால், அந்தக் கரணங்களும் செயற்படவே செய்யும் - அதனால்,) நனவிற்போலக் கனவிலும், மேல் `ஆனைகள் ஐந்து` எனப்பட்ட ஞானேந்திரியப் புலனகள் ஐந்தோடு, கன்மேந்திரியப் புலன்கள் ஐந்தும், இன்னும் பிராணாதி வாயுக்கள் பத்தும் கூடி ஆன்மா அமைதி யுற்றிராதபடி தொல்லையுறவே செய்யும். இந்நிலையில் நிற்கும் ஆன்மா, ஒருமுகப்பட்ட சிந்தனையை விரும்புதலால், புலன்களை யெல்லாம் உதறித்தள்ளி, இருதயத்துட்புகுந்து சுழுத்தியில் நிற்கும்,

குறிப்புரை :

`கனவகத்தே, நனவகத்தே (நிற்கும்) உட்கரணங் களோடு, நால் ஐந்தும் வீடா` எனவும், `அகத்தே நின்று உள்ள, உதறி, நினைவகத்தே உள்புக்கு, இன்று இச் சுழுத்தி நின்றான்` எனவும் இயைத்துப் பொருள் கொள்க. இப்பொருள் காணமாட்டாதார் சித்தாந்தத்தில் இல்லாத பொருளை இயைபறவும் உரைப்பர்.
நினைவகம் - இருதயம். இது சுழுத்தித்தானம். இன்று - இப் பொழுது. அதாவது இருதயத்துட்புக்க பொழுது. `இச் சுழுத்தி என்றது, `நனவும், கனவும் போலப் புலன்களில் தொல்லையில்லாது, அமைதியாய் இருக்கும் சுழுத்தி` என்றபடி.
இதனால், `பெத்த காலத்தில் புலன்களின் நீங்கி நிற்கும் நிலை சுழுத்தி நிலை` என்பதும் கூறப்பட்டது. படவே, துரிய துரியா தீதங்களில் அவை யில்லாமை கூறவேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 31

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச்
சென்று துரியாதீ தத்துச் சிலகாலம்
நின்று பரனாகி நின்மலன் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சுழுத்தியில் அமைதியை உற்றுணர்ந் தவன், அஃது அறியாமையாகிய இருளால் விளையும் அமைதியே யாதலைத் தெரிந்து, அவ்விருள் நீங்கி, ஒளியில் விளையும் அமைதியை அடையவிரும்பி, ஆசானிடத்துச் சென்று அவன் உணர்த் தியவாறே, உலகியலிற்றானே இயம நியமாதிகளை மேற்கொள்ளும் யோகத்தில் பொருந்தி நின்று, அவ்யோகத்தில் துரியமாகிய தியானத் -தில் முதிர்ந்தவனாய், அதற்கு மேற்சென்று, அதன்கண் துரியாதீத மாகிய சமாதியில் சில காலம் நின்று, அதன் பின் பராவத்தையாகிய ஞானாவத்தைகளை அடைந்து, அதனால் பாசங்கள் முற்றிலும் நீங்கப் பெற்று முத்தனாவான்.

குறிப்புரை :

`நின்று, ஆகி` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்தன. `ஆசான்` என்பதன் பின், `கீழ்` என்னும் பொருளில் வரும் கண்ணுருபு விரிக்க. `உலகின் நியமாதிகளுற்று` என்பதனை மேலே `நிகழ்` என்பதன்பின் கூட்டுக. `ஒன்றி` என்றது, `யோகத்தில் பயின்று` என்றபடி. நின்மலம், இங்குப் பரமுத்தி,
இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் அன்றாடம் இயல்பாகவே பயின்று வருவோர், ஆசான் அருள்வழியில் முயன்று, முன்னர் மேலாலவத்தையில் பயின்றால், பின்னர் நின்மலாவத் -தையால் வீடு பெறலாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம்
தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோன மடைந்தொலி மூலத்த னாமே.

பொழிப்புரை :

பராவத்தை உண்மைச் சுத்தாவத்தையே யாயினும் துரியாதீதம், துரியம் ஒழிந்த மற்றை மூன்றாகிய சிவன் முத்தி, அதிகார முத்தி, போகமுத்திகளில் ஆன்மாஉலகபோகத்தை நுகரும். ஏனெனில், சுழுத்தி சொப்பனங்களில், தோற்ற முறையில் சாதாக்கியம் முதல் ஐந்து தத்துவ உடம்புகள் இருத்தலாலும் சாக்கிரத்தில் மாயா உடம்பு இருத்தலாலும் அவ்வாறு அதுகாறும் போகத்தை நுகர்ந்த ஆன்மா, இலயமுத்தியல் சத்திதத்துவத்தைக் கடந்து, சிவதத்துவத்தில் தடத்த சிவமாய்ப் புறப் பொருளுணர்ச்சி யின்றிச் சிவ உணர்வே மிக்கிருக்கும். அந்நிலையில் சூக்கும வாக்கை அது பற்றி நிற்கும். ஆகவே, பர துரியாதீதத்தை அடைந்த பொழுதுதான் ஆன்மாச் சிவஞானம் ஒன்றையன்றிப் பிறிதொரு பற்றும் இல்லாமல், சிவத்தை முழுமையாக அனுபவிக்கும்.

குறிப்புரை :

ஈசன் அதீதம் - பராவத்தையில் நிகழும் அதீதம்` இம் முதலடியை இறுதியிற் கூட்டியுரைக்க. ஆன்மா `தான் உலகு உண்டு` என்பதை, `போய்` என்பதன் பின்னர்க் கூட்டுக. தான் `சாதாசிவமாதி` என்பதில் `ஆதி` என்பது தொகுக்கப்ட்டது. மாய் சத்தி - தோற்றமும் ஒடுக்கமும் உடைத்தாய் நிலையில்லாத சத்தி. இங்குச் சுத்த மாயா சத்தி. `மாசத்தி` என்பதே பாடம் எனினும் `மாமாயையின் சத்தி` என்றே கொள்ளப்படும். மேனிகள் ஐந்து அணு சதாசிவர், மந்திர மகேசுரர், வித்தியேசுர், சுத்த வித்தையில் நிற்கும் மால், அயன். `ஐந்திலும் போய்` என உருபு விரிக்க. போதல் - புகுல். `அடைந்து` என்பதன் பின் `அவ்விடத்து` என்பது வருவிக்க. ஒலிமூலம் - மூலஒலி; நாதம். அதுவே சூக்குமைவாக்காம்.
இதனால், பராவத்தைகளில் அதீதம், அஃதொழிந்த பிற இவற்றின் உயர்வு, தாழ்வுகள் தெரித்துக் காட்டப்பட்டன.

பண் :

பாடல் எண் : 33

மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற
விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.

பொழிப்புரை :

அண்டத்தில் `தீ, ஞாயிறு, திங்கள்` என்னும் மூன்று மண்டலங்களில் விளங்கும் முதல்வனைப் பிண்டத்திலே அம்மூன்று மண்டலங்களில் வைத்துக் கண்டு மேல் எழுதற்கு ஏதுவாய், உடம்பிற்குள்ளே மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக நாளத்தையும் உடையவாய், நன்கு மலர்ந்த தாமரை மலர்கள் உள்ளன.

குறிப்புரை :

`அவைகளில் அவனை அவ்வாறு கண்டு, மேற் போவதே யோகாவத்தை` என்பதாம். மாயம் - நிலையாமை; அஃது அதனையுடைய மாயா காரியத்தைக் குறித்தது. `நாடன்` என்றதனால், அக்காரியம் அண்டமாதல் விளங்கிற்று. `கழிகின்ற` என்னும் பெய ரெச்சத்தை, ஏதுப் பொருட்டாகிய `தாமரை` என்பதனோடு இயைக்க. `ஒன்றும்` என்பது, `கீழ்` என்பதனோடும் சென்று இயையும். `மேல்` என்றது உச்சித் தலையை. `கீழ்` என்றது மூலாதாரத்தை. `மேல், கீழ்` என்றதனானே, இடையில் உள்ளனவும் பெறப்படும். யோக முறையில் மூலாதார முதல் மூன்று ஆதாரங்கள் அக்கினி மண்டல மாகவும், மற்றை மூன்று ஆதாரங்கள் ஞாயிற்று மண்டலமாகவும், ஏழாந்தானம் திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். `மூன்றினுள் உள்ள நாடன்` என்க.
இதனால், `யோகாவத்தைகள் அண்டத்தில் காணும் சிவக் காட்சியைப் பிண்டத்தில் காண்பனவாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதறி யாவகை நின்று மயங்கின
வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை
சூதறி வார்உச்சி சூடிநின் றானே.

பொழிப்புரை :

விடியல் வாராத பொழுதும் வந்ததாகக் கருதி நள்ளிரவிலே ஆரவாரித்த சில பறவைகளைப் போன்ற உயிர்கள், திருவருள் தம்மை நோக்குதல் இல்லாத நிலையிலே நின்று, பொய்யை `மெய்` எனக் கொண்டு மயங்குகின்றன. ஆதனால், எங்கள் இறைவனாகிய சிவனும் செம்பைப் பொன்னாக்கும் வித்தையை அறிந்தும் அறியாதவன் போல இருக்கின்றான். இச் சூழ்ச்சியை அறிந்த பெரியோர்கள், நீராதார யோகத்தாலும், சுத்த துரியத்தாலும் அவனது அருளில் தோய்ந்திருப்பர்.

குறிப்புரை :

நள்ளிரவில் ஆரவாரிக்கின்ற பறவை போல்வதாவது, சிவனையுணரும் பக்குவம் வாராத முன்பே வரப் பெற்ற வரைப்போல ஞான அனுபவங்களைக் கூறுதல். மாது, அருட்சத்தி, அது நோக்கா மையாவது ஆன்மாவிற் பதிய எண்ணாமை. எண்ணாத வகையில் நிற்றலாவது, பாசப் பற்றிலே கிடத்தல். வேது - வேதித்தல்; இரசவாதம் செய்தல், இங்குச் சீவனைச் சிவமாக்குதலாம். `வண்ணம் - வண்ணத் -தனாய்` என்க.
இதனால், `மலபரிபாகமும், சத்தி நிபாதமும் இல்லாதார் நூலறிவு பேசினாலும், யோகாவத்தையிற்றானும் செல்லாது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளிலே கிடத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :

(சுருதி உத்தி அனுபவங்களால்) அறிய வேண்டு -வதை அறிந்து, அதனால், `உலக முதல்வன் யாவன்` என ஆராய்ந்து, `அம்முதல்வன் சிவபிரானே` என நான் நன்குணர்ந்தேன். பின்பு அவனை என்பால் வருவிக்கும் வழியறிந்து வருவித்தேன். அவன் அவ்வாறே வந்து என் மனத்தில் நிலையாக நின்றுவிட்டான்.

குறிப்புரை :

கருத்து - அறியத் தக்க பொருள். `பாரத வருடம் ஒன்பது கண்டமாய் உள்ளது` என்பது ஆகமங்களில் சொல்லப் படுவது. `பிண்டத்தில் நவகண்டமாவன, ஆறு ஆதாரங்களும் மூன்று மண்டலங் -களுமாம்` எனின் அவ்விருவகையினவும் ஒன்றை விட்டு மற்றொன்று இல்லாமையறிக. `கண்டத்தையும்` என இரண்டாவது விரிக்க.
பொருத்து, பொருத்துதல்; மூவினையுட் படுத்தல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். இஃது ஆகுபெயராய்த் தனக்குக் காரணமாகிய முதனிலைமேல் நின்று, வினைமுதலை உணர்த்திற்று. எனவே, `உலகிற்கு முதல்வன் ஒருவன் உண்டு` என்பதை அறிந்ததாயிற்று. நிலத்தை `நிலமகள்` எனப் பெண்பாலாகக் கூறும் வழக்குப் பற்றிப் புவனத்தை, `புவனா` என்றார். திருத்து - திருத்தம்; `திருந்து` என்பதன் திரிபு. `திருத்தமாக` (செம்மையாக) என ஆக்கம் வருவிக்க. `மிகு தேவர் பிரான்` என்றது, `சிவபிரான் என்றபடி, `மிகு தேவர் பிரானைத் திருத்து அறிந்தே` என மாற்றியுரைக்க. `வா` என்னும் பகுதி `வரு` எனத் திரிந்து, `து` என்னும் பிறவினை விகுதியோடு புணர்ந்து, `வருத்து` என வருதல் உலக வழக்கில் உள்ளது. இதுவும் ஆகுபெயராய், இதற்குரிய உபாயத்தின் மேல் நின்றது. அது சரியை யாதி தவங்களுள் மேலானதாகிய யோகத்தையே உணர்த்திற்று. சிவன் மனத்தில் மன்னி நிற்றல் நின்மலாவத்தையிலாகும்.
இதனால், மல பரிபாகம் சத்தி நிபாதம் வரப் பெற்றோர் மேலாலவத்தை வழியாக நின்மலாவத்தை அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து)
ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு)
ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.

பொழிப்புரை :

ஓரிடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு மற்றை யிடங்களிலும் வியாபித்து நிற்றல் போல, மூலாதாரமாகிய இடத்தில் உள்ள அந்த விளக்கினை அதனை ஏற்ற வேண்டிய முறையை யறிந்து அவ்விடத்திற்றானே மேலே நிலாமண்டலங்காறும் உள்ள இடங் -களில் வியாபிக்கும்படி, இடையே அணைந்துவிடாதபடி எரியுங்கள்.

குறிப்புரை :

`எரித்தால், சிவபிரான் உங்கள் மனத்திலே வந்து மன்னியிருக்கப் பெறுவீர்கள்` என்பது குறிப்பெச்சம். ஆன விளக்கு - உலகில் ஓரிடத்தில் உள்ள விளக்கு. `விளக்கினைத் தூண்டுபவன் போல மூலசாதனத்து அவ்விளக்கினை எரியும்` என முடிக்க தன் வினை, பிறவினை இரண்டிற்கும் பொதுவான `எரி` என்னும்பகுதி, இங்குப் பிறவினையாய் நின்றது. `எரியும்` உம் ஈற்று ஏவல் வினை முற்று. தானம் என்றது மூலாதாரம் ஒழிந்த மற்றை ஆதாரங்களை, சாதனம் - தொழில் முதல் நிலைகள் இங்கு அஃது இடத்தைக் குறித்தது. `மூல சாதனத்து அவ்விளக்கு` என இயைக்க. `அவ்விளக்கு` எனப் பண்டறி சுட்டாகச் சுட்டியது, `அவ்விடத்து எழாது மடிந்து கிடக்கின்ற குண்டலிசத்தி` என்பது விளங்குதற் பொருட்டு. ஆன விதி - பொருந்திய விதிமுறை. அவை யோகநூல்களுட் கூறப்படுவன. மூலத்தான் - வழியால். `அதனில்` என்பது `அத்தில்` என மருவி வந்தது. `ஏனை` என்பது இடையில் உள்ள ஆதாரங்களைத் தழுவிற்று. கொண்டு - அகப்படுத்து.
இதனால். `முன் மந்திரத்தில் வருத்துதற்கு அறிந்த உபாயம் இது` என்பது சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய
விண்ஆட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின்
கண்நாடி காணும் கருத்ததென் றானே.

பொழிப்புரை :

(கண் முதலியனபோல வெளியிலே கண்டறியப் படாமல்) `உள்ளே கருதியறியப்படுகின்ற ஐம்புல ஆசைகளின் களியாட்டம் ஒழிதற் பொருட்டு யோகாவத்தையை நிகழ்த்துதற்குரிய இடங்கள் யாவை என ஆராயின், இருதயத்தினின்றும கீழே நோக்காமல், மேலே நோக்கினால், அந்த ஐம்புல ஆசைகளும் ஒருங்கு கூடி வந்து ஒடுங்கும் இடம் ஒன்று உண்டு. அந்த இடத்திலே நின்று, மேலும் ஆராய்க. அதுவே சிவனைப் புலப்படக் காணும் வழி` என்று எம் ஆசிரியர் நந்திபெருமான் எங்கட்கு அறிவுறுத்தார்.

குறிப்புரை :

`நாடும்` என்றது, `நாடி உணரப்படும்` என்றபடி. குமண்டை - களியாட்டம். ஒதுங்கிய - ஒதுங்குதற்பொருட்டு. விண் - மேலிடம். மேலிடத்தில் ஆடுதலாவது, மேலாலவத்தையில். அஃதாவது யோகா வத்தையில் நிற்றல். `வெளி` என்றது, `இடம்` என்றபடி, ஐவர் கூடும் சந்தி, ஆஞ்ஞை, (புருவ நடு) `நாடி` என்பது இகர ஈற்று ஏவல் வினைமுற்று. இது `நாடுதி` எனத் தகரம் ஊர்ந்து வருதல் பெரும்பான்மை. சிறுபான்மை தகரம் ஊராதும் வரும். காணுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய உபாயத்தைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறி வாகான்
அறியாத வற்றை அறிவானைக் கூட்டி
அறியா தறிவானை யாரறி வாரே.

பொழிப்புரை :

அறிவில்லாத சடங்களாகிய பாசங்களை அப்பாச அறிவினால் அறிகின்ற ஆன்மா அந்தப் பாச அறிவைக் கொண்டு அறியவாராத பதி, அப்பாசங்களின் நீங்கியவழியும் பசு அறிவாலும் அறியவாரான். ஆகவே, அறிவில்லாத சடங்களாகிய பாசங்களையும், அறிவுடைய சித்தாகிய ஆன்மாவையும் ஒன்று கூட்டி அவற்றின் செயற்பாடுகளை அறியாதறிபவனாகிய பதியை அறியவல்லார் யாவர்? (ஒருவரும் இல்லை.)

குறிப்புரை :

`பாச ஞான பசு ஞானங்களின் நீங்கிப் பதி ஞானங் கண்ணாகக் காண்பவர்களே பதியை அறிவார்கள்; அத்தகையோர் உலகில் மிக அரியர்` என்பது கருத்து. `தன்` என்றது `பசுவை, `தன்னறி விற்கும் ஆகான்` என உருபும் உம்மையும், அறியாதவற்றையும் அறிவானையும் கூட்டி என உம்மையும் விரிக்க. `அறியாதறிதலாவது, சுட்டியறியாது, பொதுவாக அறிதல். `கீழாலவத்தை மத்தியா லவத்தை களில் பாச அறிவும், மேலாலவத்தையில் பசு அறிவும் செயற்படுதலால் அவைகளில் பதி வெளிநில்லாது, நின்மலாவத்தையில் மட்டுமே வெளிநிற்பான்` என்பதையே இம் மந்திரத்தாற் கூறினார்.
இதனால், அவத்தைகளில் பதி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம். அந்நன வாதி
பெரியன கால பரம்பிற் றுரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.

பொழிப்புரை :

`பரவெளி` எனப்படுகின்ற திருவருள் வழி நிகழ் கின்ற நின்மலாவத்தைகளில், `பேருறக்கம்` என்னும் நிலையை அடைதலையே சிறந்ததாகக் கூறினோம். அதற்குக் கீழ் உள்ள நனவு, கனவு, உறக்கம், என்பவைகளும் எல்லார்க்கும் எளியன அல்ல. எனினும் நின்மலாவத்தையும் காலத்தொடு பட்டு நிகழ்வனவாகலின் அவை கழித்தற்குரியனவே. காலத்தைக் கடந்து எல்லையற்று நிகழ்வன பராவத்தைகள். அவைகளில் ஈற்றில் உள்ளது துரியம். அரிதாகிய, துரியத்தையும் கடந்த நிலை துரியா தீத நிலையாகும்.

குறிப்புரை :

`வியோமத்தின்கண்` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. எனவே, அது முதலில் வைத்து உரைக்கப் படும். `அந்நனவாதியும் அரியன; ஆயினும் தூடணம்` என்க. பரம் - மேல். அஃது ஆகுபெயராய், மேலனவாகிய நிலைகளைக் குறித்தன. `பின்` என்றது, `பின்னது` என்னும் பொருட்டு. `அதீதம்` இரண்டில் முன்னது, `கடந்தது` என்னும் பொருளது.
இதனால், `பதி பசுவை உண்மையில் அடையும் நிலை பராவத்தையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமாய் யோனியுள்
தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே.

பொழிப்புரை :

அசுத்த மாயையால், ஆணவ மலம் காரணமாக முன்பு சடம் போலக் கிடந்த உயிர் சித்துத் தன்மையை உடையதாம். (அஃதாவது, `செயற்படாதே கிடந்த, அறிவு இச்சை செயல்கள் செயற்படத் தொடங்கும்` - என்பதாம். இந்நிலை வித்தியா தத்துவங்களின் சேர்க்கையால் நிகழ்வது.)
பின்னர் மூலப் பிரகிருதியால், அந்தச் சித்துத் தன்மை நிலை பெற்று விளங்கும். (அஃதாவது, `அறிவு இச்சை செயல்கள் நன்கு செயற்பட்டு விளங்கும்` என்பதாம். இந்நிலை ஆன்ம தத்துங்களால் நிகழ்வது.)
`மாயை` என்கின்ற மலத்தினாலே மற்றொரு மலமாகிய ஆணவத்தை இறைவன் கழுவியொழிக்கின்றான் என்பது வியப்பான செய்திதான். `பொருளியல்புகள் அவ்வாறு அமைந்துள்ளன. `மலம் மலத்தான் - கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை, என ஐயம் எழுப்பி, `செழுநவ அறுவை சாணி உவர் செறிவித்து அழுக்கை - முழுவதுங் கழிப்பன்`-என விளக்கம் தந்தார் அருணந்தி தேவரும்.*
மாயை சேராத பொழுது ஆன்மாத் தனிமையுடையதாகும்` மாயை சேர்ந்த பொழுது கலையோடு கூடியதாகும். அதுவே நிலையில்லாத பல்வேறு பிறப்புக்களில் புகும் பிறவிநிலை. இனி, `மாயை, ஆணவம்` என்னும் இரண்டையும் கடந்து நிற்கும் நிலையும் உயிருக்கு உண்டு. (அதுவே சுத்தம்.)

குறிப்புரை :

`சீவன்` என்பதை முதலில் கூட்டுக. `சேதனமாம்` என்னும் ஆக்கச் சொல் தொக்கது, `பகுதியால் மன்னும்` - என மொழி மாற்றி, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. `மற்றையது` என்பது `மற்றது` என மருவிற்று. ஈற்றில் உள்ள மாயை, `வியப்பு` என்னும் பொருளது. கேவலம் - தனிமை. ஆணவம் சகசமாதலின் உயிர்க்கு ஆணவம் மாத்திரமே உள்ள நிலை `கேவலம் எனப்படும். `தன்னுண்மை` என்றும் சொல்லப் படும். கேவலாத்து விதிகள் முத்தி நிலையை, `கேவலம்` என்பர். `கலை` என்பது மாயையின் கூற்றையே குறித்தலால் மாயையின் காரியங்களாகிய தத்துவங்களோடு ஆன்மாக் கூடி நிற்கும் நிலை. `சகலம்` எனப்படுகின்றது. `சகலமாய், யோனியுள் அநித்தத்தில் தோயும்` என இயைக்க. கேவலத்தாகும், சகலத்தாய், எனக் கூறற்பாலன `கேவலமாகும், சகலமாய்` எனக் கூறப்பட்டன. `துரியத்துள்ளும்` எனச் சிறப்பும்மை விரித்து, `தோயும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `துரியத்துள்ளும் தோயும்` எனஉரைக்க. துரியம் - கடப்பு. இஃது இடுகுறியாகாது, காரணத்தளவில் நின்றது.
இதனால், மேற்கூறிவந்த அவத்தைகளையெல்லாம் ஓராற்றால் தொகுத்துக் காட்டும் முகத்தால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.

பொழிப்புரை :

தத்துவங்களையும், அவற்றின் நீங்கியவழித் தன்னையும் அறிதலை விடுத்துச் சிவத்தை அறிகின்ற சுத்த நிலையை அடைந்தவனும், அவ்வாறின்றி, `தத்துவம், சிவம்` என்ற இரண்டையும் அறியாது, ஆணவம் ஒன்றிலே மட்டும் அழுந்தி யிருக்கின்ற, தனது அநாதியியல்பை உடையவனும், இவ்விருவரின் வேறாய்த் தத்துவங் -களை அறிந்து நிற்பவனும் தம்தம் ஆற்றலுக்கு ஏற்ப முறையே, சத்து, அசத்து, சதசத்து ஆகிய பொருள்களில் பொருந்தியிருப்பர்.

குறிப்புரை :

இங்ஙனம் அநுவாத முகத்தால் கூறியதனானே, `கேவலம், சகலம், சுத்தம்` என்பன காரண அவத்தைகள்` என்பதும், அவற்றின் இயல்புகளும் பெறப்பட்டன.
அவற்றின் இயல்புகளாவன, ஆன்மா அநாதியில் ஆணவ மலத்தோடு மட்டும் பொருந்தி, இருளில் மூழ்கியிருந்த நிலை கேவலம். எனவே, பிற்காலங்களிலும் கருவி கரணங்களின் நீங்கி, ஆணவ மலத்தோடு மட்டும் இருத்தலும் கேவல நிலையேயாதல் விளங்கும். கீழாலவத்தை மத்தியாலவத்தைகளிலும் இந்நிலை இடையிடையே வருவதாம்.
ஆன்மா மாயா காரியங்களாகிய தத்துவங்களோடு கூடியச் சிறிதே அறிவு பெற்று உலகத்தை அறிந்து நிற்கும் நிலை சகலம். யோகா வத்தையும் கருவிகரணங்களின் வழி நிகழ்வனவேயாகலின் சகலமேயாம்.
ஆன்மா மும்மலங்களினும் நீங்கிச் சிவத்தையே அறிந்து நிற்கும் நிலை சுத்தம் என்க. சகலத்திலும் இது நிகழ்வதாயினும் அது நிறைவுடையதன்று.
`தன்` என்பது முன்னர்ச் சிவத்தையும், பின்னர் ஆன்மாவையும் குறித்தன. `சுத்தன்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. `சத்தாவது நிலைத்ததும், அசத்தாவது நிலையாததுமாம்` என்றற்கு, ``மன்னிய சத்து` என்றார். ஆணவம் முத்தியில் சத்தி கெட்டு நிற்றலால், `அசத்து` என்றார். தத்துவங்களில் இங்குத் தனு கரணங்களையே `சதசத்து` என்றார். சதசத்தாவது உயிரே ஆயினும், சகல நிலையில் தத்துவங்களையே உயிராக உணரும் நிலை உளதாதல் பற்றி அவ்வாறு கூறினார். `தொழில்` என்றது, அதற்கு ஏதுவாய ஆற்றலை. `தத்தம் தொழிலளவாகவே துன்னுவர்` என்க.
இதனால், `இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காரண அவத்தைகள் இவை` என்பதும், அவற்றின், இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்``*
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து)
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக்
காமிய மாயேய மும்கல வாநிற்பத்
தாமுறு பாசம் சகலத்த தாமே.

பொழிப்புரை :

உயிர் மாயை கன்மங்களோடு கூடாது ஆணவத்தோடு மட்டும் இருந்த நிலை கேவலாவத்தை. (இதுவே உயிர்களின் அநாதி நிலை). பின்பு இறைவன் மாயா காரியங்களைக் கூட்டுவிக்க, அவற்றால்சிறிது அறிவைப்பெற்று வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும் நிலை சகலாவத்தை.

குறிப்புரை :

எனவே, `உயிர் மாயை கன்மங்களோடு கூடுதற் கியலாத தன்மை கேவலத்திற்கும், அவற்றோடு கூடுதற்கியன்ற நிலை சகலத்திற்கும் காரணம்` என்றதாயிற்று.
`உயிர் மாயையின் இடைந்து கேவலம் ஆம்` எனக் கூட்டுக. `இடைதல்` என்பது இயற்கையிலே விலகி நிற்றலைக் குறித்தது. `இடைந்தவழி` என்பது `இடைந்து` எனத் திரிந்து நின்றது. எறித்தல் - ஒளிவிடுதல். எனவே, மாயை விளக்காதல் பெறப்பட்டது. இஃது ``எறிப்ப`` என்ற குறிப்பாற் பெறப்பட்டமையால், குறிப்புருவகம். `மாயா தனுவிளக்கா`l என்றார் மெய்கண்டதேவரும். `கான்மியம்` `காமியம்` என மருவிற்று. `மூல கன்மம் காரணமாக உயிர்களால் செய்யப்பட்டது` என்பது இதன் பொருள். மாயேயம் - மாயையின் காரியங்கள். அவை தனு கரண புவன போகங்கள். இறைவனால் உறுவிக்கப்படுவனவற்றைத் தாமாக உறுவன போல வைத்து, `தாம் உறு பாசம்` என்றார். அங்ஙனம் கூறினமையால், அவை ஆகந்துக மாகிய மாயை கன்மங்களைக் குறித்தன. `அப்பாசம்` எனச் சுட்டு வருவித்து, `அப்பாசங்களால்` என உருபு விரிக்க.
இதனால், முன்னை மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட காரண அவத்தை மூன்றனுள் முதல் இரண்டு அவத்தைகளின் இயல்புகள் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள்
இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.

பொழிப்புரை :

ஆன்மதத்துவங்கள் கூடுதல் குறைதல்களால் நிகழும் அவத்தைகளே சகலாவத்தைகள் ஆதலின், அவைகளை அடைந்தோர் யாவரும் சகல வருக்கத்தினரே. ஏனெனில், அவர்களே முக்குண வடிவாகிய பிரகிருதியுட்பட்டு, மும்மலங்களை உடையவர் -களாய் இருத்தலின். எழுவகைப் பிறவியும் எய்தும் உயிர்கள் யாவும் சகல வருக்கத்தினவாதல் தெளிவு. இனி அவ் உயிர்களின் மேம்பட்டவர்களாக எண்ணப்படுகின்ற `அயன் மால்` என்பவர்களும் பிரகிருதி புவனத்துள் பிறந்து இறந்தமை புராண இதிகாசங்களில் கேட்கப்படுதலால், அவர்களும் சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

`நீல உருத்திரர்` என்பவர் ஆகமங்களில் அருகிச் சுட்டப்படுதலால், அவர் சகல வருக்கத்தினராதலை நாயனர் இங்குக் குறிக்கவில்லை. `சகலரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. சகல வருக்கத்தினரே சிவனை அறியாது மயங்குபவர். அது ``தோன்றலர்தொத் துள்ளார் துணை``3 என்னும் திருவருட்பயனாலும் விளங்கும். அயன், மால் என்பவரும் ஒரோவழி அங்ஙனம் மயங்குபவராதலை நினைக்க. இரண்டாம் அடியின் இறுதியில், `அவரேயாதலின்` என்னும் காரணச் சொல்தொக்கு நின்றது.
மாலோனைப் பிறவாதவனாகக் கூறின், நிலவுலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தமக்கள் சிலரைப் புராண இதிகாசங்கள் `மாயோன் அவதாரம்` எனக் கூறுதலை `உண்மை` என்னாது, உயர்த் -தற்பொருட்டுக் கூறிய உபசாரமொழிகளாகக் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கொள்ளின், மாயோன் சம்பு பக்கத்தவனே யாவன்.
நரர் - மக்கள். கீடம் - புழு. `நரராதி கீடம் அந்தமாம்` என்க. உம்மை, `அனைத்தும்` எனப் பொருள் தரும் முற்றும்மை.
இதனால், `காரண அவத்தைகளை மூன்றாக எண்ணுதல் சகலரை நோக்கியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தாவிய மாயையில் தங்கும் பிரளயர்
மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர்
ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :

மாயை ஒழிந்த ஏனை இரு மலங்களையுடைய `பிரளயாகலர்` என்போர் பிரகிருதியைக் கடந்த மாயாதத்துவத்தில் இருப்பர். அதனால் இவர்களது தனு கரணாதிகள் பிராகிருதம் ஆகாது. மாயேயமேயாம். (எனவே, `மாயையின் நீங்கினார்` என்பது, `பிரகிருதியின் நீங்கினார்` என்பதேயாம். ஆகவே, இவர்கள் சகலரினும் மேம்பட்டவர்கள், சிவனை ஒரு போதும் அறியாது மயங்குவாரல்லர்.) மாயையின் நீங்கினாராயினும் கன்மம் நீங்கப் பெறாதவர்கள். (இவர்களுக்கு உள்ள கன்மம் சூக்கும கன்மமே.) அனந்த தேவர் வழிநின்று குணமூர்த்திகளை ஏவிப் பிரகிருதி மாயையில் காரியங்களைச் செய்விக்கும் சீகண்ட ருத்திரர், மற்றும் பிரகிருதி தத்துவத்தில் உள்ள நூற்றெட்டுப் புவன ருத்திரர்கள் ஆகியோர் இப்பிரளயாகலர் வருக்கத்தைச் சேர்ந்தவர்களே.

குறிப்புரை :

இவ்வுருத்திரர்களைப்பற்றிச் சிவஞானபோதம் சூத்திரம் இரண்டு, அதிகரணம் மூன்றின் மாபாடியத்தால் அறிக. தானிய கடந்த, `பிரளயர் மிக்குள்ளனர்` என இயைக்க. மேவிய மேவப்பட்ட. `மாயையில் தங்கும் பிரளயர்` என்ற அனுவாதத்தானே. `அவர் மாயையில் தங்குவர்` என்பது பெறப்பட்டது. மற்று, அசை. அது - முன்னர்க்கூறிய மாயை. ``உடம்பு`` எனத்தனுவையே கூறினா ராயினும், இனம்பற்றிக் கரணம் முதலியனவும் கொள்ளப்படும். `ஒன்றிய - கீழ் உள்ளாரோடு பொருந்திய` என உரைக்க. `சீகண்ட உருத்திரரே சகலர்கட்குப் பரம்பொருளாய் எல்லாவற்றையும் அருளுபவர்` என்பது சிவாகாமங்களில் சொல்லப்படுவது. `கைலாச பதியாய் உள்ளவர் இவரே` என்பதும் அத்தகையது. அதனால், இவர் பிரளயாகலருள் பக்குவராய்ச் சிவனருளைப் பெற்றவர் என்க. `ஆவயின் உள்ளார்` என ஒரு சொல்வருவித்து, அத் தொடரை, `கன்மத்தர்` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``தாவிய மாயையில் தங்கும் பிரளயர்`` என்றதனால், அவருக்குச் சகலாவத்தை உண்டாகாமை பெறப்பட்டது. கேவலாவத்தை சுத்தாவத்தைகள் எல்லார்க்கும் உள்ளது.
இதனால், சகலாவத்தை இல்லாதவருள் ஒருசாராரது இயல்பும், `அன்னார் இவர்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.

பொழிப்புரை :

எல்லார்க்கும் உரித்தாகின்ற கேவலாவத்தையைத் தாங்களும் உடையவர்களாய், ஆயினும் கன்மமும், மாயையும் இன்றி, ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்களில் பக்குவம் பெற்றோர் அனந்தர் முதலிய அட்ட வித்தியேசுரர்களும், சத்த கோடி மகாமந்திரேசுரர்களும் ஆவர். அபக்குவரோஅநேகர்.

குறிப்புரை :

அபக்குவர்களையும் `மந்திரேசுர்` என்பர். இவர்களைச் சிவஞான சித்தி.8 ``வித்தைகள்`` எனக்கூறிற்று. `மந்திர மகேசுரர்` என்பதனை, ``ஈசர்`` எனக் கூறினார். `அநேகர்` என்ற குறிப்பானே, அபக்குவர் என்பது போந்தது. ஒரு மலம் உடையோர் `விஞ்ஞான கலர்` எனப்படுவர்.
இதனால், `சகலாவத்தை யில்லாதவருள் மற்றொரு சாரார் இவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு)
ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர்
தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.

பொழிப்புரை :

மேல், `ஒருமலம் உடையார்` எனக் கூறப்பட்ட -வர்களில், பெறுதற்கரிய சிவனது திருவருளை நிரம்பப் பெற்ற சிலர் அதிகார மல வாசனை, போக மல வாசனை ஆகியவைகள் நீங்கப் பெற்று, இலய மல வாசனை மட்டுமே உடையவர் ஆவர். ஆகவே, அவர்கள் மலம் முற்றும் நீங்கிய முத்தர்களாகவே கருதப்படுவர். (அதனால் அவர்கட்குக் கேவல நிலை உள்ளதாகவும் கருதுதல் கூடாது. அவர்கள் வாழ்வது அபர விந்து அபர நாதங்களைக் கடந்த பரவிந்து பர நாதங்களிலாம். ஆகவே, அவர்கள் சூக்குமை வாக்கு ஒன்றை மட்டுமே உடையவர் ஆவர். அவ்வாற்றால் அவர்கள், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவராகக் கருதப்படுவர்.

குறிப்புரை :

`போம்மலந் தன்னால்` என்றது, `மலம் போயதனால்` என்றபடி, மலம் இங்கு மல வாசனை. போயவை அதிகார மல வாசனை, போக மல வாசனைகளே. அஃது, ``ஓம் மயமாகி`` என்றத னாலும், ``ஒடுங்கலின்` என்றதனாலும் விளங்கும். ஒடுங்கல். இலய நிலையில் நிற்றல். அதனுள்ளும் இங்கு கூறப்பட்டது சூக்கும இலய நிலையே. அதனால், `விந்து, நாதம்` என்பன அபர `விந்து, அபர நாதங்களே ஆயின. இங்ஙனமாகவே, `அபர முத்தர்கள்` என்னும் பெயர் இந்நிலையில் நின்றோர்கட்கு பெரிதும் பொருந் துவதாம். `அணு சதாசிவர்கள்` என்னும் பெயரும் போக மலம் உடையவர்கட்கே பொருந்துவது. அவர்கள் சாதாக்கிய தத்துவத்தில் போகங்களை நுகர்ந்து கொண்டிருப்பர். தோம் - குற்றம்; மலம். `இவர் தொழில்` என ஒரு சொல் வருவித்து `தோம் அறு சுத்தாவத்தையே` என ஏகாரத்தை மாறிக் கூட்டி முடிக்க. ஏகாரம் - பிரிநிலை.
இதனால், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஓரிருள் மூவகை நால்வகை யும்முள
தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை
சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை
வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.

பொழிப்புரை :

ஆன்மாத் தன் அறிவை யிழந்து நிற்பதாகிய கேவல நிலையுள் மூன்றுவகை உண்டு. அவை நாலாகவும் வகுத்துக் கூறப்படும். `அவை யாவை` - என ஆராயின், ஆணவகேவலம், ஆணவத்தை நீக்குதற்குச் சிவன் விரும்பும் விருப்பக் கேவலம், தத்துவ சுத்திக்குப்பின் ஆன்ம தரிசனத் தொடக்கத்தில் உளதாகும் திகைப்புக் கேவலம்` என்பன. (இவை முறையே ஆன்மா அநாதியில் ஆணவத்தில் மூழ்கியிருந்த நிலையும், பின்பு இறைவன் ஆன்மாவை அந்நிலையினின்றும் விடுவிக்க மாயையைக் கூட்ட முனையும் நிலையும், பின்பு மாயா காரியங்களாகிய கருவி கரணங்களினின்றும் நீங்கிய நிலையுமாகும். இவை முறையே மருட்கேவலம், சகல கேவலம், அருட் கேவலம் - எனப் பெயர் பெறும். இறைவன் மாயையைக் கூட்டமுனைவது சூக்கும ஐந்தொழிலாகும். இந்நிலை சருவ சங்காரத்திற்குப் பின் மீளப் படைத்தற்கு முன்னேயும் உளதாகும். இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்து அதிகரணத்தின் சிற்றுரையால் உணர்க. அருட் கேவலம் துகளறு போதத்திலும் சொல்லப்பட்டது.
இனிச் சகல கேவலத்தை, விஞ்ஞான கேவலம், பிரளய கேவலம் - என இரண்டாக்கி, `கேவலம் நால் வகைத்து` என்றலும் உண்டு (இதனை நாயனார் உய்த்துணர வைத்தார். சகல கேவலத் -தையும் வேறாக எண்ணி, `கேவலம் ஐவகைத்து` என்றலும் உண்டு. அதனை நாயனார் குறித்திலர். மாயை, கன்மம் - இரண்டனோடும் கூடாது, அவை கூட்டப்படுதற்கு ஆவன செய்யப்படும் நிலை விஞ்ஞான கேவலம் - எனவும், கன்மம் கூட்டப்பட்டு, மாயை கூட்டப் படாத நிலை பிரளய கேவலம் - எனவும் உணர்க.)
இவ்வாறான பல வகை அவத்தைகளை வைத்துச் சிவன் ஆன்மாக்களின் பாசங்களைப் போக்குகின்றான்.

குறிப்புரை :

`ஆகவே அஃது அருட் செயலேயன்றி, வன்கண்மைச் செயலன்று` என்பது குறிப்பெச்சம். `சேர் இச்ை\\\\u2970?` `சேர்க்கும் இச்ை\\\\u2970?` எனப் பிறவினை வினைத்தொகை. சார் இயல் - சார்பு தன்மை. இயல் உடையவற்றை `இயல்` என்றார். அவை மாயா காரியங்கள். `தாம், ஏ` அசைகள். தணப்பு - நீக்கம். இஃது ஆகுபெயராய், அது நிகழும் நிலையைக் குறித்தது. வாரி வைத்தல் - அள்ளி வைத்தல்; `மிகுதியாக வைத்து` என்றவாறு.
இதனால், காரண அவத்தைகள் மூன்றனுள் ஒன்றன் உட்பகுதிகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று)
எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி
மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு)
எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.

பொழிப்புரை :

உண்மையான சுத்தாவத்தையாவது, விபரீத ஞானத்தையே தருகின்றவைகளாகிய கருவிகள் முப்பத்தாறினின்றும் விடுபட்டு அப்பாற்போய், அங்ஙனம் போயதனால் அறியா -மையையே தருவதாகிய ஆணவமலம் வந்து பற்றுதலாகிய அந் நிலையும் தோன்றாதொழிய, யாதொன்றனையும் உண்மையாகவே அறியும் அறிவை யுடையவனாய், அந்த அறிவால் சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஒருகாலத்திலே ஒருங்கே உணரும் நிலையை உடையனாய், அத்தன்மைத்தாய் விளங்கும் பராகாயமாகிய அருள் வெளியுட் பகுந்து, அவ்வெளிக்குள் உள்ள சிவனை, அடையாமல் அடைந்திருப்பதாகும்.

குறிப்புரை :

போதம் - அறிவு. `பொய்` என்றது விபரீதத்தை. போதம் தருவனவற்றை, `போதம்` என்றார். எய்யாமை - அறியாமை. `எய் யாமையே அறியா மையே` என்பது தொல்காப்பியம்.l எய்யாமைக்கு எதிராக `எய்தல்` என்றோ, `எய்த்தல்` என்றோ ஒரு சொல் அக்காலத்தில் இல்லையாயினும் இங்கு நாயனார் `அறிகின்ற அத்தன்மையுடையவன்` என்னும் பொருளில், `எய்யவன்` என்றார். மெய் - பொருள். `மெய்யாம் வெளி` என இயைத்தலும் ஆம். சராசரங்களும் தானாதல், அவற்றை ஒரு காலத்தே ஒருங்கே உணர்ந்து நிற்றல். எய்தாமல் எய்தல், புதுவதாய்ச் சென்று அடையாமல் அநாதியே பெற்றிருந்த பொருளை அஃது அன்ன தாதலை உணர்ந்து, வியத்தல். இதனானே, `சுத்தாவத்தையே இயற்கை` என்பதும், `கேவலமும், சகலமும் மலங்களாகிய உபாதியான் ஆக செயற்கைகள்` என்பதும் விளங்கும். இக்கருத்தே பற்றித் திரு வள்ளுவரும், வீட்டு நிலையை, `பேரா இயற்கை`3 என்றார். எய்துதற்குச் செயப்படு பொருள், `வெளி` என்ற குறிப்பால் பெறப்பட்டது. `எய்தும்` எனக் காலம் வினை முதல் போலக் கூறப்பட்டது.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு உண்மையாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அனாதி பசுவியாத் தியாகும் இவனை
அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு)
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.

பொழிப்புரை :

அனாதியே பாசத்துட்பட்டுப் பசுத்தன்மை எய்தி நின்ற இந்த உயிரை, அனாதியாயும், ஆதியாயும் வந்த ஐந்து மலங்களால் ஆட்டிப் படைப்பவன் சிவன். அவன் அனாதியில் கேவல நிலையிலிருந்த உயிரை சகல நிலையில் கொணர்ந்துவைத்துப் பின்பு அனாதியாய பிறப்பு ஒழியும்படி சுத்தாவத்தையில் சேர்ப்பான்.

குறிப்புரை :

முதல் அடியில் `அனாதியில்` என ஏழாவது விரிக்க. `பசுவாய்` என்னும் ஆக்கச் சொல்தொக்கது. `வியாத்தியாய்ப் பசுவாகும் இவனை` என மொழிமாற்றி உரைக்க. ஒன்றைத் தன்னுள் அடக்கியிருப்பது வியாபகப் பொருள்; ஒன்றில் தான் அடங்கி யிருப்பது வியாப்பியப் பொருள். அடங்குதலும், அடக்குதலும் இன்றிச் சமமாய் இருப்பது வியாத்தி (வியாப்தி) பொருள். `அனாதி யாய், இல்லாய் வந்த` என இரண்டிலும் ஆக்கம் வருவித்து உரைக்க. அனாதியில்லாய் வருதலாவது, ஆதியாய் வருதல். அனாதியாய் வந்தது ஆணவம். ஆதியாய் வந்தவை மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி. `ஆட்டி` என்பது பெயர். ஆட்டுமாறு பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. `ஆட்டி - இட்டு, ஆக்கும்` என முடிக்க. `ஆகும்` என்பது பாடம் அன்று. `கேவலனை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப் பட்டது. `வித்தினின்று` மரம், மரத்தி -னின்றும் வித்து என்பது போல, `வினையால் பிறப்பு, பிறப்பால் வினை` என இவ்வாறு முதல் அறியப்பாடது தொடர்ந்து வருதலின் பிறப்பை `அனாதி` என்றார்.
இதனால், `கேவலம் ஆணவத்தின் செயல்` என்பதும், `சலகமும், சுத்தமும் சிவன் செயல்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

பொழிப்புரை :

எல்லாவற்றினும் மேலாய், நிறைவாய் உள்ள உண்மைச் சுத்த துரியாதீதமே, `சுத்தாவத்தை` என்றற்குப் பெரிதும் ஏற்புடையது. அஃது `அருட்கேவலம்` எனப்படும் தத்துவ சுத்திக்குப் பின் வாய்ப்பதாகும். அதனை அவ்வாற்றால் சிவனால் தரப்பட்டவர் தனித்த ஒரு சுத்தமாகிய அந்த அதீத நிலையில் யாதொரு பற்றும் இல்லாத சிவமேயாய் இருப்பர். (இதில், `யான், எனது` என்னும் உணர்வு இல்லையாம்.) இனி அதற்குக் கீழ்நிலையில் உள்ள துரிய நிலையில் ஆன்ம அறிவு சிறிதே நிகழ்தலால், ஆன்மாச் சிவனை அறியும் முகத்தால் தன்னை அறிபவனாக உணரும் நிலை உள்ளதாம்.

குறிப்புரை :

`அந்தரம்` என்பது, `ஆகாயம்` என்னும் பொருட்டாய், மிக மேலான நிலையைக் குறித்தது. அஃது உண்மைச் சுத்த துரியா தீதமாம். `அதற்கு வழி` என்றதனால், `கேவலம்` என்றது, அருட் கேவலம் ஆயிற்று. தந்தோர் - தரப்பட்டோர். `அதனைத் தந்தோர்` என்க. `சுத்த கேவலம்` என்றதில், `கேவலம் கலப்பற்றது` எனப் பொருள் தந்தது. ``தற்பரத்தின்பால்`` என்பதன் பின் `உளர்` என்பது எஞ்சி நின்றது. `இடை` - ஏழனுருபு. `அறிவுற` என்னும் செயவெ னெச்சம் காரணப் பொருளில் வந்தது. தான், அசை. ஏகாரம், தேற்றம். இதன்பின்னும் `உள்ளது` என்பது எஞ்சி நின்றது. `தத்துவம் ஆமே` - எனப்பாடம் ஓதலும் ஆம்.
இதனால், சுத்தத்தில் சுத்தமாய் உள்ளவை சுத்த துரியமும் துரியாதீதமும் ஆதல் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

பொழிப்புரை :

நிலம் முதல் பிரகிருதி ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் சகல வருக்கத்து ஆன்மாக்கட்குப் பரமாய் உள்ள சீகண்ட உருத்திரரிடத்தில் ஒடுங்கும் (இது பற்றியே இவை, `ஆன்ம தத்துவம்` எனப் பெயர் பெற்றன. ஒடுக்கம் கூறுதலால் காரணமாய் உள்ள பிரகிருதியையும் கூட்டி `இருபத்தைந்து` என்றார்.)
அந்தச் சீகண்ட உருத்திரரும், `தமக்கு` தனு கரணம் முதலியன வாய் வருவன அசுத்த மாயையே` என்னும் உண்மையை உணர்ந்து அவற்றின் நீங்கிச் சுத்த வித்தையில் வீடு பெறுவார். (எனவே, `அசுத்த மாயா காரியங்களாகிய வித்தியா தத்துவங்கள் அந்தச் சுத்த வித்தைக்குத் தலைவராகிய அனந்த தேவரிடத்தில் ஒடுங்கும்` என்பது தானே பெறப்பட்டது.)
இனி, அந்தச் சுத்த வித்தை முதலாக ஒடுக்க முறையில் நிற்கும் முதல் மூன்று தத்துவங்களும், `சத்தி` எனப்பெயர் பெற்று நிற்கும் இலய சிவனிடத்தில் ஒடுங்கும். சிவ தத்துவம் ஐந்தில் எஞ்சிநின்ற `சத்தி, சிவம்` என்னும் இருதத்துவங்களும் முடிநிலைப் பேறாய் உள்ள சுத்த சிவனிடத்தில் ஒடுங்கும். இவை யெல்லாம் மீளத் தோன்றுங்கால் இம்முறையானே தோன்றும்.

குறிப்புரை :

`ஆன்மா` என்பது, ஏற்புழிக் கோடலால், `சகல வருக்கத்து ஆன்மா` எனப் பொருள் தந்தது. அவைகட்குப் பரமா யுள்ள கடவுளை அவ்வான்மாக்களாக உபசரித்துக் கூறினார். `ஆன்மாவும்` - என்னும் உம்மை சிறப்பும்மை. சுத்த சிவன், `இலயம், போகம், அதிகாரம்` - என்னும் நிலைகளில் நிற்குங்கால் முறையே, சத்தன், `உத்தியுத்தன், பிரவிருத்தன்`-எனப் பெயர் பெறுதலை நினைக. சத்தன் - சத்தியை உடையவன். எனவே, சத்தியை உடை யவனை, `சத்தி` - என ஆகுபெயரால் கூறியதாயிற்று. `ஐயை - சத்தி. `சித்தி` என்றது, `முடிநிலைப் பேறு` என்னும் பொருட்டாய் நின்றது. இப்பொருளை, `தத்துவம் எண்மூன்றும் சென்று ஆன்மா தத்துவத் தொடுங்கும்` என்னும் சிவஞான சித்திச் செய்யுட்கு8 மாதவச் சிவஞான யோகிகள் உரைத்த உரை பற்றித் தெளிக.
சீகண்ட உருத்திரருக்கு ஒடுக்கங் கூறிய அதனானே, சகல வருக்கத்தினரான `அயன், மால்` என்பவரில், `அயன் மாலிடத்திலும், மால் சீகண்ட உருத்த்திரரிடத்திலும் ஒடுங்குவர்` - என்பதும், `வித் -தியேசுரர் மகேசுரனிடத்திலும் மகேசுரன் சதா சிவனிடத்திலும், சதா சிவன் `சத்தி` என நிற்கும் இலயசிவனிடத்திலும், `சத்தி` என்னும் சிவன், `சிவன்` என்றே பெயர்பெற்று நிற்கும் சிவனிடத்திலும் அந்தச் சிவன் சுத்த சிவனிடத்திலும் ஒடுங்குவர் என்பதும் பெறப்படும். இவற்றால், `சகலத்தில் நிகழும் சுத்த சாக்கிரம்` எனப்படும் தத்துவ சுத்தி ஒன்றே, `நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளின் அடங்கிய தத்துவங் -களினின்றும் முறையே நீங்குதலே, சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத் தில் சொப்பனம் முதலான பஞ்சாவத்தைகளாய் நிகழும்` என்பதும் உய்த்துணரவைத்தமை அறிந்துகொள்க.
இதனால், `அவத்தைக்கு ஏதுவாவன தத்துவங்களே` என்பது பற்றி அவற்றின் ஒடுக்கத் தோற்றமுறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.

பொழிப்புரை :

(மேல், `நாலாறுடன் புருடன்` - என்னும் மந்திரத்தில் `வேதாந்தி தத்துவம்`-எனக் கூறப்பட்ட இருபத்தெட்டுத் தத்துவங்களில்) ஒடுக்க முறையில் முதல் இருபத்தைந்து தத்துவங்கள் சீவனில் அடங்கும். இருபத்தாறாம் தத்துவமாகிய ஈசுரன் உட்பட மற்றைய மூன்று தத்துவங்களும் மெயப்பொருளாகிய பரப்பிரமத்தில் சீவன் ஒன்றாகும் பொழுது அதில் அடங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், `விவகாரத்திற்குக் காரண சத்தியாகிய மாயை, அதற்கு அதிட்டானமாம் பாரமார்த்திகப் பொருளாகிய பரப்பிரமம் என்னும் அவ்விரண்டிலே எல்லாம் தோன்றுதலால், எல்லாம் ஒடுங்குதலும் அவற்றிலேதான்` எனலாம்.

குறிப்புரை :

`இது வேதாந்தி கொள்கை` என்பதாம். `ஐயைந்தும் ஆன்மாவில்` என்று, `ஐயைந்தாவன ஆன்மா உட்பட` என்றபடி, ``அடங்கிடும்`` என்பது `ஆன்மாவில்` என்பதனோடும் சென்றியைந் -தது. `மெய்யாகக் கண்ட` என ஆக்கம் வருவிக்க. `மேவும் மெய் யோகத்தில்` என்றாரேனும் `மெய் யோகம் மேவுகையில்` என்றலே கருத்து. மேவுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. காண - காணுதல். காணுதல் - தோன்றுதல். எய்யும்படி - அறியும்படி. `எய்யும் படி காணுதலால் நாலேழ் அவற்றில் எய்தி அடங்கும்` எனக் கூட்டி முடிக்க. `நாலேழும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அவற்றில் அடங்கும் எனச் கூட்டியுரைக்க.
இதனால், தத்துவங்களின் தோற்ற ஒடுக்க முறைகளை வேதாந்திகள் சித்தாந்தத்தின் வேறுபடக் கூறுமாறு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.

பொழிப்புரை :

ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக் காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். இரு மலம் உடையவராகிய பிரளயாகலர் கேவலா வத்தையை அடையும் பொழுது வித்தியாதத்துவத்தின் முடிவாகிய மாயாதத்துவம் அவர்கட்கு அனுபவப்பொருளாகும். போக்கிய காண்டமாய்த் தூலமாய் உள்ள பிரகிருதிக் காரியங்களை உடைய சகலர் கேவலாவத்தையை அடையும் பொழுது காரணமாகிய பிர கிருதியையே பற்றிக்கொண்டு, அதன் காரியப் பொருள்களில் ஒன்றையும் அனுபவித்தல் இன்றியிருப்பர், இனிச்சகலாவத்தை சகலர்கட்கே உளதாகும்.

குறிப்புரை :

`ஒன்றும்` - என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது. இரண்டாம் அடியோடு இயைய, முதல் அடியின் ஈற்றிலும், `ஆவர்` என்னும் ஆக்கம் வருவிக்க. விஞ்ஞானகலர்க்கும் சுத்த மாயை உளதாயினும் அதனால் செலுத்தப்படும் அசுத்த தத்துவங்கள் அவர் கட்கு இல்லாமையால், `கேவலத்தில் அனுபவம் இல்லை` என்றும், ஏனையோர்க்குப் பிரேரக காண்டம், போசயித்திரு காண்டம்` -என்பவை இருத்தலால் அவர்கட்கு `கேவலத்தில் அனுபவம் உண்டு` என்றும், `சகலர்` என்பதில், `கலை` எனப்படுவது பிரகிருதியே யாகையால், `சகலர்க்கு மட்டுமே சகலாவத்தை உண்டு` என்றும் கூறினார். `கேவலம்` என்பது பின்னும் சென்றியைந்தது. காணும் உருவம் - காணப்படுகின்ற தூலப்பொருள். `காணாமை` என்பதில், காணுதல் - அனுபவித்தல். காணாமை, காணும் உருவத்தைக் காணாமை. பூணும் - பற்றாகும்.
இதனால், காரண அவத்தைகள் பொதுவாகச் சொல்லப் படினும் அவை அவ்வவ்வுயிர்களின் பந்த வேறுபாட்டிற்கு ஏற்ப வேறுபட்டு நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆணவமா கும்விஞ் ஞானகலருக்குப்
பேணிய கன்மம் பிரளயா கலருக்கே
ஆணவம் கன்மமும் மாயையும் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.

பொழிப்புரை :

(இம் மந்திரத்தில் பதிப்புக்களில் காணப்படும் பாடம் திரிவு செய்யப்பட்ட பாடம்.)
விஞ்ஞானகலர் - என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் ஆணவமலம் ஒன்றுமே. `பிரளயாகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் அந்த ஆணவத்துடன் கன்மமும் கூடிய இரண்டு மலங்கள். `சகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாச பந்தமே. `ஆணவம், கன்மம், மாயை` - என்னும் மும்மலங்களும்.
`பிரளயாகலர்` என்பதில், `பி` என்னும் இகரம், வடசொல் பற்றிவந்த குற்றியலிகரமாய் அலகு பெறாதாயிற்று. பின்னும் இவ்வாறு ஆம் இடங்கள் உள.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் உள்ள `ஆணவம்` என்பதன் பின் எண்ணும்மை விரிக்க.
இதனால், மூவகை உயிர் இனங்களில் இலக்கணங்களும் கூறப் பட்டன. இதனால், `மாயை` எனப்பட்டது பிரகிருதியே - என்பதை மேலெல்லாம் கூறியவாற்றால் உணர்க.

பண் :

பாடல் எண் : 16

கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால்
ஆவயின் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

பொழிப்புரை :

(ஒன்று இடையிட்டு முன்னை மந்திரத்தில் கூறிய கேவல வகைகளில்) தமக்குரிய கேவலநிலை அடைபவராகக் கூறப்பட்ட விஞ்ஞானகலர், அக்கேவல நிலையினின்றும் எழுச்சி பெறுதல் `விந்து` எனப்படும் சத்தி தத்துவத்தினாலாம். (எனவே, கேவல நிலையில் அவர்கள்` நாதம்` எனப்படும் சிவதத்துவத்தைப் பற்றியிருந் -தமை பெறப்படும். ) அந்த விந்து சத்தியோடு பிற சுத்த மாயா தத்துவங் -களைப் பற்றிச் செயற்படுதலே அவர்களது சகல நிலை யாகும். (ஆகவே சகலருக்குப் போலப் பிரகிருதி தத்துவங்களைப் பற்றும் சகல நிலை அவர்கட்கு இல்லையாம்.) அந்தச் சகல நிலையில் அவர்களுடைய தனு கரணங்கள், மந்திர வடிவாகிய சுத்த மாயையால் ஆயினவேயாம்.

குறிப்புரை :

`கிளர்ந்த` என்பது பாடமாயின், `எழுச்சியுற்ற` என்பது பொருளதாகும். அப்பொழுது, பின்பு வந்த `கிளர்` என்பது `கிளர்ந்தமை` எனப்பொருள்தரும். `விஞ்ஞான` என்பது `கிளர்ந்தமை` எனப் பொருள் தரும். `விஞ்ஞான` என்பது கடைக் குறைந்து நின்றது. கிளர், முதனிலைத் தொழிற்பெயர். `இவரது சகல நிலை, சகலரது சகல நிலை போன்றதன்று` என்றற்கு, `அச்சகலம்` எனச்சுட்டிக் கூறினார். எனவே, இங்கு, `சகலம்` என்பது ஒப்பின் ஆய பெயராயிற்று. `சகலத்தை` என்னும் இரண்டன் உருபை ஏழன் உருபாகத் திரித்துக் கொள்க. இரண்டன் உருபை ஏழன் இருபாகத் திரித்துக் கொள்க. உம்மை சிறப்பு. `மெய்ம்மை, மந்திர மாமாயை மேவிய` - என மாறிக் கூட்டியுரைக்க. மெய் - உடம்பு. தனு வொன்றையே கூறினாராயினும் கரணமும் உடன் கொள்ளப்படும். மை, பண்புணர்த்தாது, பகுதிப் பொருள் விகுதியாய் நின்றது. `மாமாயையாய்` - என ஆக்கம் வருவிக்க. `மேவிய`-என்பது, `மேவின` என முற்று.
இதனால், விஞ்ஞானகலர் தமது கேவலத்தில் நீங்கித் தமக்குரிய சகலத்தில் நிற்குமாறு கூறப்பட்டது. (இந்தச் சகலம் சகலரது சகலம் போலாமையால் இதுவும் `கேவலம்` என்றே வழங்கப் படுகின்றது. எனினும், விஞ்ஞானகலரது கேவலம் இரு தன்மைப்பட்டு நிற்குமாற்றை இம்மந்திரம் கூறிற்று என்க.)

பண் :

பாடல் எண் : 17

மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம்
மாயச் சகலத்துக் காமியம் மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :

வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் மட்டுமே செயற்பட்டு நிற்கும் நிலையில் பிரளயாகலர்பால் அந்த மாயா தத்துவ மும் மெத்தெனவே செயற்படுதலால் ஆணவம் மேற்பட்டு நிற்கும். (அஃதே அவர்க்குக் கேவல நிலையாகும்.) இனி, அவர்கட் குரிய சகலா வத்தைக்கண் சுத்த தத்துவங்கள் செயற்படுதலானே கன்ம மலங் காரியப் படுவதாகும். இந்நிலையில் நிற்பவர்கள், மேல், ``தாவிய மாயை``- என்னும் மந்திரத்தில் (2199) குறிப்பிடப்பட்ட நூற்றெட்டுருத்திரராவர்.

குறிப்புரை :

`பிரளயாகலர்பால்` - என ஏழாவது விரிக்க. `ஆணவம்` என்பதின்பின் `மிகும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. மாயம் - நிலையாமை. பிரளயாகலர்க்குரிய சகல நிலையாவது, வித்தியாதத்துவங்கள் செயற்பட அவற்றால் அறிவு விளங்கப்பெறும் நிலை. காமியம் - கான்மியம். அஃதாவது காரிய கன்மம். மாமாயை என்றது, அதன் காரியமாகிய சுத்த தத்துவங்களைக் குறித்த ஆகு பெயர். `மாமாயையால் காமியம்` என உருபு விரித்து, மாறிக்கூட்டுக. `சுத்த தத்துவங்கள் செயற்பட்டுநிற்கும்` என்றதனால், அவற்றால் வித்தியா தத்துவங்கள் செயற்படுதல் தானே பெறப்பட்டது.
`காமியம்` என்பதன்பின்னும், `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. மன்னுதல் - நிற்றல். இது `மன்` என முதனிலையளவாய் நின்று, மன்னுவாரைக் குறித்தது.
இதனால், இருமலம் உடையார்க்குக் கேவல சகலங்கள் நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.

பொழிப்புரை :

`மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

`ஆகவே, இவர்கள் அனைவரும் மூன்றவத்தை -களையும் அடைவர்` என்பது குறிப்பெச்சம். மேல், விஞ்ஞான கலர் பிரளயாகலர்கட்கும் சிலவகையான சகலாவத்தைகள் உள என்பதுபோலக் கூறியமையால், `மும்மலத்தவரே உண்மையில் சகலாவத்தையை அடைவர்` என்றற்கு, `அம்மெய்ச்சகலத்தர்` என்றார். ஆர்த்தல் - ஆரவாரித்தல். இஃது உலக மயக்கத்தில் மயங்கிச் செருக்குதல். மேல், ``சகல அவத்தையில் சார்ந்தோர்`` - என்னும் மந்திரத்திலும் (2198) இம்மந்திரப் பொருள் கூறப்பட்டதாயினும் அங்கு, `சகல வருக்கத்தினராவார் இவர், என்பதை உணர்த்துதலும், இங்கு, `உண்மைச் சகலாவத்தையை எய்துபவர்கள் இவர்` என்பதை உணர்த்துதலும் ஆகக்கருத்துக்கள் வேறுவேறு என்க. பின்னர்க் குறிக்கப்பட்ட கருத்தே இம்மந்திரத்தாற் கொள்ளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம்
மத்த இருள்சிவ னானகதி ராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சுத்தவத்தையில் மூழ்கினவர்களே, `ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலங்களும் செயல் ஒழிந்து, உண்மை மாத்திரையாய் நிற்றலாலும், அம்மலங்களைச் செயற்படுத்தித் தனியாகி அவறறிற்குத் தலைமை பூண்டு நின்ற திரோதான சத்தியாகிய மலமும் சிவசூரியனது கிரணமாம் அருட் சத்தியால் சற்று விட்டு நீங்குதலாலும் உண்மையில், `சுத்தர்` எனத் தக்கவர் ஆவர்.

குறிப்புரை :

சகலத்தில் சுத்தத்தை எய்தினோரை நீக்கி உண்மைச் சுத்தத்தை எய்தினோரைச் சுட்டுதற்கு, `தோய்ந்தவர்` என்றார். சத்து - செயற்படுதல் இன்றி உண்மை மாத்திரையாய் நிற்றல். `சத்து ஆதலாலும்`-என ஆக்கமும், உம்மையும் விரிக்க. செயற்படத்தக்க பொருள்கள் செயற்படாது, உண்மை மாத்திரையாய் நிற்றல், `அவற்றின் காரண நிலை`-என்றும், செயற்பாடு, `அவற்றின் காரிய நிலை` என்றும் சொல்லப்படும். மலங்கள் காரண நிலையில் நிற்கு மிடத்து உயிரைப் பந்திக்க மாட்டா; காரிய நிலையை அடையும் பொழுதுதான் உயிரைப் பந்திக்கும். மலங்கள் உயிர்களிடத்தில் காரியப்படுதலும், படாமையும் அவற்றின் அபக்குவ பக்குவங்கட்கு ஏற்ப நிகழும். `மும்மலங்கட்கும் காரியங்கள் உள` என்பதைச் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண மாபாடியத்தாலும், இருபா இருபஃதாலும் அறிக. காரணங்கள் நிலையுடையவாதல் பற்றி அவற்றை, `சத்து` என்றும், காரியங்கள் நிலையாமை பற்றி அவற்றை `அசத்து` என்றும் கூறினார்.
மத்தம் - மயக்கம். `மத்தமாகிய இருள்` என்க. எனவே, `விபரீத ஞானம்` என்றதாம். விபரீத ஞானத்தைச் செய்வதை, விபரீத ஞான மாகவே உபசரித்துக் கூறினார். அருட் சத்தியை, `கதிர்` என்றதனால், சிவன் கதிரவனாதல் பெறப்பட்டது. இது குறிப்புருவகம். சத்து ஆதலாலும், ஓடலாலும், விட்டிடலாலும் சுத்தராவார்கள்` என முடிக்க.
இதனால், உண்மைச் சுத்தாவத்தை நிகழும் முறைமையும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.

பொழிப்புரை :

உயிர் சிவத்தோடு மட்டுமே பொருந்தி நிற்கின்ற அந்தத் தனிநிலையே பரமுத்தி நிலையாகும். அதுவே உண்மையில் தூய்மை யாகும். (இதனைச் `சிவகேவலம்` என்றும். `பர கேவலம்` என்றும் கூறலாம்.) இதற்குக் கீழ்ப்பட்டன எல்லாம் சகலங்களே. (அஃதாவது, மாசொடுபட்டனவே.) அந்நிலையில், சகல வருக்கத்து ஆன்மாக்கள் கலை முதல் மண் ஈறாய் உள்ள தத்துவங்களின் நீங்கி நிற்றல். அவற்றிற்கு மெய்ந்நூல்களில்சொல்லப்படுகின்ற சுத்த கேவல மாகும். (இஃது, `அருட் கேவலம்` என்பதாகத் துகளறு போதத்தில் சொல்லப்பட்டது. வெண்பா-25) புருவ நடுவிலே நிகழ்வதாகிய சாக்கிராவத்தையிலே புறப்பொருளில் தோய்தல் இன்றி, அறிவுக் கறிவாய் உள்ள சிவத்திலே தோய்ந்திருத்தல் சகலத்தில் சுத்தமாம். (இதுவே, `சாக்கிரத்தில் அதீதம்` - என்க.)

குறிப்புரை :

முதற் பொருளை, `தத்` எனக் குறிப்பிடுதல் உபநிடத வழக்கு. `தான்` என்றது, முன்னர்க் கூறிய தற்கேவலத்தை. `சகலம்` என்பது `கலப்பு` என்னும் பொருட்டாய் நின்றது. இரண்டாம் அடியின் ஈற்றில் உள்ள `ஆம்` என்பதை மூன்றாம் அடியில் உள்ள `கேவலம்` என்பதன் பின்னர்க் கூட்டுக. `சாக்கிரத்தில்` என ஏழாவது விரிக்க. ஈற்றடியிலும் `சிவம்` தத்` என்றே சொல்லப்பட்டது. இரண்டிடத்திலும் `தன்` என்றே பிரித்து, `சிவத்தை இவ்வாறு கூறுதல் தமிழ் வழக்கு` என் -றலுமாம். `தற் சுத்தம்` என்பதில் `தன்` என்றது, மேற்கூறிய சகலத்தை.
இதனால், `கேவலம்` என்னும் காரண அவத்தை பல வகையில் நிகழ்தலும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன. மேல், `ஓரிருள் மூவகை` என்னும் மந்திரத்தில்8 கேவலம் மூன்றும், நான்குமாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

அறிவின் றமூர்த்தன் அராகாதி சேரான்
குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல்இலான் தினக்கற்றல் இல்லோன்
கிறியன் மலவியாபி கேவலத் தானே.

பொழிப்புரை :

சிவஞான சித்தியாரில்,
``அறிவிலன்; அமூர்த்தன்; நித்தன்;
அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன்; கலாதி யோடும்
சேர்விலன்; செயல்க ளில்லான்;
குறியிலன்; கருத்தா அல்லன்;
போகத்திற் கொள்கை யில்லான்;
பிறிவிலன் மலத்தி னோடும்
வியாபி - கேவலத்தில் ஆன்மா``l
எனப் போந்த செய்யுளின் உரையை நோக்கி இம்மந்திரத்தின் பொருளை உணர்ந்து கொள்க.

குறிப்புரை :

இம்மந்திரத்து இறுதியில் உள்ள `கேவலத்தான்` என்னும் எழுவாயை முதற்கண் வைத்து, `அறிவின்று` என்பதன்பின் `ஆக` என்பது வருவித்துப் பின் அனைத்துப் பயனிலைகளோடும் கூட்டி முடிக்க. அமூர்த்தன் - உடம்பில்லாதவன். அராகம் முதலியவை புத்தி குண பாவகங்கள். குறி - இச்சை. நித்தம் - பிறப்பு இறப்பு இன்மை. கலாதி - கலை முதலிய தத்துவங்கள். `கலாதியைக் கூடான்` என்க. `தின` என்பது, `தின்ன` என்பதன் இடைக்குறை. `போகம் புசிக்க` என்பது பொருள். கிறியன் - பொய்யன்; இருந்தும் இல்லாதவன். மல வியாபி - ஆணவ மலத்தையே முழுமையாகப் பற்றியிருப்பவன்.
இதனால், காரண அவத்தை மூன்றனுள் `கேவலம்` என்னும் அவத்தையின் இயல்பு அதனை அடைந்த ஆன்மாவின்மேல் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.

பொழிப்புரை :

பிரளயாகலர், சகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை யினராய் விளங்கும் ஆன்மாக்கட்கும் முறையே அசுத்த மாயை, பிரகிருதி மாயை, சுத்த மாயை என்பவற்றால் அவ்வப் புவனங்களில் தனு கரண போகங்கள் உளவாகும். எல்லா உயிர்கட்கும் சுத்த மாயை -யின் காரியமாகிய வாக்குக்களால்தான் சவிகற்ப உணர்வு உண்டாகும்.

குறிப்புரை :

`விந்து` இரண்டில் முன்னது பைசந்தி வாக்கைக் குறித்து, அதற்குக் பற்றுக்கோடாகிய அசுத்தமாயையை உணர்த்திற்று. அதனால், `மாயை` என்பது பிரகிருதி மாயையைக் குறித்தது. பரையாவது சூக்குமை வாக்காகலின் அஃது அதன் வடிவாய் நின்ற சுத்த மாயையைக் குறித்தது. இம்மூன்றும் பின் வந்த பிரளயாகலர், சகலர், சுத்தர் என்பவரோடு முறையே இயைந்தன. இங்கு, `சுத்தர்` என்றது ஏனை இரு திறத்தாரை நோக்கச் சுத்தராகிய விஞ்ஞான கலரைக் குறித்தது. இம்மூத்திறத்தாரையும் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார்.
`பிரளயர், சகலர், சுத்தர் ஆன்மாக்கட்கு வையத்தே தனுவும், சத்தியும், கிரியையும் விந்துவினாலும், மாயையினாலும், ஞான பரையினாலும் சந்ததம் (எப்போதும்) மேவும்; மெய்ஞ்ஞானம் விந்துவின் மேவும்` - என இயைத்துப் பொருள் கொள்க. சத்தி - ஆற்றல்; என்றது கரணத்தையும், `மெய்ஞ்ஞானம்` என்றது சவிகற்ப ஞானத்தையும் ஆகும். `மூவகை ஆன்மாக்களுக்கும் சவிகற்ப உணர்வு வாக்குக்களாலேதான் உண்டாகும்` என்பதை,
``மூவகை அணுக்க ளுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்``*
என்னும் சிவஞான சித்தியாலும் அறியலாம். விளங்கிய ஞானம் - சவிகற்ப உணர்வு.
`கேவலத்தில் நின்ற ஆன்மாக்கள் தங்கள் தங்களுக்கு ஏற்ற தனு கரண புவன போகங்களால் சகல நிலையை அடையும்` என்பது கருத்து.
இதனால், மூவகை ஆன்மாக்களுக்கும் சகலாவத்தை நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கேவல மாதியில் பேதம் கிளக் குறின்
கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள்
ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா
ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.

பொழிப்புரை :

காரண அவத்தைகள் `கேவலம்` முதல் மூன்றாகச் சொல்லப்பட்டாலும் அவற்றுள் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து `கேவலத்திற் கேவலம், கேவலத்திற் சகலம், கேவலத்திற் சுத்தம்` என்று மூன்றும், `சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தம்` என மூன்றும், `சுத்தத்திற் கேவலம், சுத்தத்திற் சகலம், சுத்தத்திற் சுத்தம்` என மூன்றும் ஆக ஒன்பதாம். இவ்வேறுபாடுகள் நுண்ணுணர்வுடையார்க்கே விளங்கும்.

குறிப்புரை :

இதனால், காரண அவத்கைள் மூன்றிலும் உள்ள வேற்றுமை வகைகள் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 24

கேவலத் திற்கே வலம்அதீ தாதீதம்
கேவலத் திற்சக லங்கள் வயந்தவம்
கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்
ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.

பொழிப்புரை :

உயிர்கட்கு ஆணவ மல மறைப்பைச் சிறிதே நீக்கிச் சிறிதே அறிவைத் தருவன மாயா கருவிகள். அதனால், அவை ஒடுங்கிய விடத்து ஆணவம் மேற்படுவதே கேவல நிலை. கீழா லவத்தை மத்தியாலவத்தைகளில் எல்லாக் கருவிகளும் நீங்காது, தலை யாய கருவிகள் நீங்கியதே `அதீதம்` எனப்படுகின்றது. கீழா லவத்தையில் நிகழும் அதீதம் முக்குண வடிவான பிரகிருதி மேம் பட்ட நிலை. மத்தியாலவத்தையில் நிகழும் அதீதத்திலும் சிவ தத்துவமும், கால தத்துவமும் ஒடுங்காதே நிற்க, உயிருக்குப் புலன்கள் மிக்கு நிகழும். இதுவும் அதீதமேயாகும். இவ்விரண்டும் சகலாதீதமாகும்.
சருவ சங்கார காலத்தில் இறைவன் எல்லாக்கருவிகளையும் அழித்துவிட்டு, உயிர்களுக்கு முழு ஒய்வைத் தருதலால், அது பொழுது உயிர், உணர்வு சிறிதுமின்றி, முழுமூடமாய், ஆணவ இருளில் மூழ்கிக் கிடக்கும். இது கேவலாதீதமாகும். இதனையே `விஞ்ஞான கேவலம்` என்பர். இந்நிலையில், ஒடுக்கிய உயிர்களை இறைவன் மீளத் தோற்றுவிக்க முயலும் நிலையும் கேவலந்தான். அதனையும் `சகல கேவலம்` - என்றே கூறுவர். அதற்குக் காரணம் அந் நிலையில் இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்வான் என்பதே. இவை முதலான அவத்தைகள் பலவற்றுள் ஒன்றும் இல்லாது ஆன்மா ஆணவ இருளில் மூழ்கிக் கிடந்த நிலை அனாதி கேவலமாகும். இதனை, `மருட் கேவலம்` - என்பர். இவற்றுள் இரு சகலாதீதத்திற்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான கேவலத்தையே, `அதீதாதீதமாகிய கேவலத்தில் கேவலம்` என்றார். அதீதாதீதம் - அப்பாலைக்கு அப்பால்.
மேற்கூறியவாறு இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்யும் நிலையாகிய சகல கேவலமே கேவலத்தில் சகலமாம். சூக்கும ஐந் தொழிலாவது சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும் தோற்று விக்கும் முகத்தால் உயிர்கட்கு உணர்வைப் பொதுவாக நிகழ்வித்தல். சிவதத்துவங்கள், வித்தியா தத்துவங்களைச் செலுத்தியவழியே உயிர் கட்கு அறிவு இச்சை செயல்கள் சிறப்பாக விளங்கும். அஃது இந்நிலை -யில் இல்லாமையாலும், நால்வகை வாக்குக்களும் சுத்த மாயையில் காரியமேயாதலாலும், `கேவலத்தில் சகலங்கள் வயிந் தவம்` என்றார். வயிந்தவம் (வைந்தவம்) - விந்துவின் காரியம். விந்து- சுத்த மாயை. வாக்குக்கள் பலவாதலால் அவற்றால் தோன்றும் உணர்வுகளும் பலவாதல் பற்றிச் `சகலங்கள்` எனப் பன்மையாகக் கூறினார்.
சகலரும், பிரளயாகலரும், `விஞ்ஞானகலர்` என்னும் நிலையை அடைதலே, கேவலத்தில் சுத்தமாகும். அஃதாவது` சகலர் மண் ணாதி கலையந்தம் முப்பத்தொரு தத்துவங்களைக் கடந்து சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலும், பிரளயாகலர் வித்தியா தத்துவங் -களைக் கடந்து, சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலுமாம்.
இந்நிலையை அடைந்த பிரளயாகலர் சகலர்கட்கும் இறைவன் இயற்கை விஞ்ஞானகலர்க்குப் பக்குவ காலத்தில் உள்நின்றே ஞானத்தை உணர்த்தி, வீடு தந்தருள்வது போலவே அருள்தருவான்.

குறிப்புரை :

`விஞ்ஞான` என்பது கடைக் குறைந்து நின்றது. `விஞ் ஞானகலர் ஆதல்` எனவும், `அருள் மூர்த்தி யாதல்` எனவும், `தானேயாய்` எனவும் எஞ்சி நின்ற சொல்லெச்சங்கள் வருவித்துக் கொள்க. தானேயாதலாவது, செயற்கையால் முன்னிலையினும், படர்க்கையினும் தோன்றாமல், இயற்கையில் தன்மையிலே நிற்றல். `அருள் மூர்த்தியாதலும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மையும், `தானேயாயே` என்னும் தேற்றேகாரமும் அவ்விடங்களில் உடன் வருவிக்க.
இதனால், முன் மந்திரத்தில் ஒன்பதாகத் தொகுத்துக் கூறிய அவத்தைகளில் `கேவலத்தில் மூன்று` என்ற அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிரா தீதம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையில் நிகழும் அதீதமே சகலத்திற் கேவலமாகும். மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரமே சகலத்திற் சகலமாகும். சகலத்தில் சுத்தாவத்தையே சகலத்தில் சுத்தமாகும்.

குறிப்புரை :

மத்தியாலவத்தை, சகலத்தில் சுத்தாவத்தை இவை -களின் இயல்புகள் மேலே உணர்த்தப்பட்டன. முதற்கண் ஒன்பதாக வகுத்துக்காட்டி, இங்கு, `சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆம்` என்றது, `கீழாலவத்தை, மத்தியாலவத்தை, மேலாலவத்தை இவையும் சகலத்திற் கேவலமும், சகலத்தில், சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆம்`-என்பது உணர்த்துதற்கு.
இதனால், முன் மந்திரத்தில் கூறியவற்றைத் தொடர்ந்து `சகலத்தில் மூன்று` - எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல்
சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.

பொழிப்புரை :

பரமசிவனோடு இரண்டறக் கலந்த நிலையே சுத்தத்தில் சுத்தம். சீவன் முத்தி நிலையில் பிராரத்தத்தால் விளையும் இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பற்றிருக்கும் நிலையே சுத்தத்தில் கேவலம். சீவன் முத்தி நிலையில் உலகர்பால் இரக்கம் மிக்கு அவர்கட்கு உய்தியை வலிந்து சென்றும் உணர்வித்தலும், அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி இவைகளை அடைந்து அவ்வந் நிலையில் விளையும் சுத்த போகங்களை நுகர்தலும் சுத்தத்தில் சகலம்.

குறிப்புரை :

உபசாந்தம் - அமைதி; நடுவு நிலைமை. விலாசம் - விளையாட்டு; தமக்கு உவப்பான செயல்களில் ஈடுபடுதல். இங்கும், `சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே` என்றது, `சீவன் முத்தி ஒன்றிலேதானே இம்மூன்றும் சொல்லுதற்கும் உரியன என்பது உணர்த்துதற்கு.
இதனால், `சுத்தத்தில் மூன்று` எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடு
சாக்கிரந் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிர தீதந் தனில்சகா னந்தமே
ஆக்கும் மறையாதி ஐம்மல பாசமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்திலும் சொல்லுலகம் முதலாகச் சொல்லப்படுகின்ற ஐந்து மலங்க ளாகிய பாசங்களே உயிருக்கு உலக அனுபவங்களையே தந்து நிற்கும்.

குறிப்புரை :

எனவே, `இவைகள் மலாவத்தைகளேயன்றிப் பரா வத்தைகள் அல்ல` என்பதாம். முதற்கண் நின்ற, `சாக்கிரம்` என்பது மத்தியாலவத்தையைக் குறித்தது. இரண்டு, மூன்றாம் அடிகளில் வந்த `சாக்கிரம்` என்பவனவும் சொற்பொருட் பின்வரு நிலையாய், அதனையே குறித்து நின்றது. ஒடு, எண் ஒடு. மறையாதி - வேதம் முதலியன. அவை சொல்லுலகம் ஆதலை நினைக. `சாக்கிர சாக்கிரந் தன்னில் ... சாக்கிராதீதந்தனில், மறையாதி ஐம்மல பாசமே சகா னந்தமே ஆக்கும்` எனக் கூட்டி முடிக்க. ஏகாரம் இரண்டும் பிரிநிலை. அவற்றுள் முன்னதனால் பிரிக்கப் பட்டது சிவானந்தமும், பின்னதனால் பிரிக்கப் பட்டது திருவருளும் ஆகும். எனவே, `பராவத்தையில் உயிருக்குத் திருவருள் சிவானந்தத்தை ஆக்கும்` -என்பது போந்தது.
இதனால், `சகலம், சுத்தம்` - என்னும் இரண்டிற்குக் காரணமும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 28

சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை
நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.

பொழிப்புரை :

(`சாக்கிராதீதம்`-என்ற பெயர் சொல்லப்படுவன இரண்டு. ஒன்று ஆணவம் நீங்கிய சாக்கிராதீதம்; மற்றொன்று, ஆணவம் நீங்காத சாக்கிராதீதம்.) அவற்றுள் ஆணவம் நீங்கிய சாக்கிராதீதமும் பராவத்தையில் உயிர் சென்று தங்காதபடி பரோ பாதியை உண்டாக்கும் ஆகையால், பராவத்தையாகிய உபாதியற்ற நிலையை நோக்கியே செல். ஏனெனில், `உபாதியாயினும் பரோபாதி தானே` என நினைப்பனவெல்லாம் பாசத்தோடு கூடியிருக்க நினைப்பனவேயாகும்.

குறிப்புரை :

`ஆணவம் அறும் சாக்கிராதீதம்` என எடுத்துக் கொண்டு உரைக்க. தான், அசை, பாடத்தை இவ்வாறே ஓதலும் ஆம். ஆணவம் அறாத சாக்கிராதீதம், மத்தியாலவத்தையில் நிகழும் அதீதம். ஆணவம் அற்ற சாக்கிராதீதம், நின்மலாவத்தையில் நிகழும் அதீதம். இவை யிரண்டும் சகலத்தில் சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆகும். இவற்றுள் நின்மலாவத்தைகள் தமக்குக் கீழ் உள்ளவற்றை நோக்கச் சுத்தமே யாயினும், உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் செல்லு தற்குத் தடை யாதலும் உடையன. அவை அன்னவாதல் பரோபாதியை உடைமை யினாலாம். அது பற்றியே, `பராவத்தை தங்காது பரோ பாதியை ஆக்கும்` என்றார். உபாதி - தடை. பரோபாதி - மேல் நிலைத் தடை. அஃது உலகம் எங்கும் சிவம் நிறைந்து நிற்றலை நினைந்து எப்பொருளிலும் சிவத்தையே கண்டிருத்தல். இது சிறப்புடையதே யாயினும், சிவத்தையே நேராகக் கண்டிருத்தலை நோக்கச் சிறப்பில தாதலை உணர்க.
உபசாந்தம் - உபாதியற்றநிலை. அது பராவத்தையேயாதல் அறிக. `உபசனுந்தத்தையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. `குணம் நோக்குதல் மலம் நோக்குதலாகும்` - என மொழி மாற்றி, `அதன் குணம்` என உரைக்க. எல்லாப் பொருளிலும் சிவத் தையே காணிணும் அஃது உலகத்தை இடையிட்டுக் காண்பதேயாத -லின் அக்காட்சியின் சிறப்பை மட்டும் நோக்குதல், `மலம் நோக்குதல் ஆகும்` என்றார். சிவத்தை `உபாதி` என உரைத்தாரும்` உளர்.
இதனால், மேற்கூறிய அவத்தை பேதங்களில் `சுத்தத்திற் சுத்தத்தையே குறிக்கொண்டு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும்
`அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.

பொழிப்புரை :

`பெத்தம், முத்தி` - என்பவற்றையும், `சாக்கிர சொப்பன சுழுத்திகளுக்கு அப்பாலும், குறைந்த கருவிகளே செயற் படுகின்ற துரியம், ஒரு கருவியும் செயற்படாத துரியாதீதம் ஆகிய அவத்தைகள் உள` என்பதையும் அறியாமலே உயிர், அவத்தைகளை அனுபவித்து வருகின்றது. ஆயினும், `அவையெல்லாம் சிவனது திருவருளால் இன்ன இன்னவாறு நிகழ்கின்றன` என்பதை அவனது அருளாலே அறிந்த பின், உயிருக்குத் தற்போதம் இல்லை. அஃது இல்லையாகவே, அதற்குத் தனக்கென யாதொரு செயலும் இல்லை.

குறிப்புரை :

``சுத்தம்`` என்றது கருவிகள் அனைத்தும் ஒடுங்கிய ஒடுக்கத்தைக் குறித்தது. துரியமும், அதீதமும் அறிதற்கு அரியனவாம். ``தோன்றாமல்`` என்பது வழக்கு முறையால், ``தோன்றப் பெறாமல்`` எனப் பொருள் தந்தது. ``தான்`` என்றது உயிரை. உண்டல் - அனுபவித்தல். ``அறிந்த பின்`` எனக் கூறிப் பின் நிகழ்ச்சியை உணர்த் -தினமையால், `அதற்குமுன் கூறப்பட்டவை அறிதற்கு முற்பட்ட நிகழ்ச்சி` என்பது விளங்கிக் கிடந்தது. ஆகவே, ``அனுபவிக்கும்`` எனக் கூறப்பட்ட அவத்தைகள் பெத்த அவத்தைகள் - என்பதும், `அறிந்த பின் நிகழ்வன மத்தியவத்தைகள்` என்பதும் போந்தன. `தான்` என்றது திரோதான சத்தியை - எனக் கொள்கின்றவர்கள், `சுத்த துரியாதீதத்தையும் அது மறைக்கும், என உரைத்தல் வியப்பிற்குரியது.
இதனால், பலவாகக் கூறப்பட்ட அவத்தைகள் எல்லாம் பெத்த அவத்தை, முத்தி அவத்தை என இரண்டாய் அடங்குதலும் அவற்றுள் பெத்த அவத்தைகள் மலங்களாலும் அவத்தைகள் திருவருளாலும் நிகழ்தலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

எய்திய பெத்தமும் முத்தியும் என்பன
எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு)
`எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே
எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் அனாதியே அடைந்துள்ள பெத்த நிலையும், பின்பு முடிவில் அடையும் முத்தி நிலையும் சிவன் தனக்கு ஒரு விளையாட்டைப் போல மிக எளிதிற் செய்யும் அருட்செயலே யாகும். `அச்செயல்களில் அகப்பட்டு வருகின்ற உயிர்கள், இறுதியில் மாசு நீங்கிய நிலையில் இடப்படும்` என்று சொல்லப்படுவதால், அந்நிலையில் அவை சிவனையே அடைந்திருக்கும். அப்பொழுது அவை அறிவே முடிவாய் இருக்கும்.

குறிப்புரை :

`விளையாட்டு` என்றது, விளையாட்டுப் போல் வதனைக் குறித்தது. ஒடுருபை ஆல் உருபாகத் திரித்து, `எய்தும் அருள்` என முன்னே கூட்டி முடிக்க. அருளால் நிகழவனவற்றை அருளாகவே உபசரித்துக் கூறினார். `எய்திடு உயிர் நெறியானே சுத்தத்து இடும் என்னவே` எனக் கூட்டுக. இடும் - இடப்படும். என்ன - என்று சொல்லப்படுதலால். `அறிவாம்` என்றதனால், முன்பு அறியாமையாய் இருந்தமை பெறப்படும்.
இதனால், `எல்லாம் சிவனது அருளேயாதலின் அவ்வருள், முடிவில் சிவனையே அடைவிக்கும்` என்பதும், `அந்நிலை அறிவு நிலை` என்பதும் கூறப்பட்டன. `அறிவு நிலை` என்றதனால் `ஆனந்த நிலை` என்பது சொல்லாமலே அமைந்தது.

பண் :

பாடல் எண் : 31

ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர்
ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே

பொழிப்புரை :

ஐந்து மலங்களையுடையவர்களாகச் சொல்லப் படுவோர் யாவரும் அதிகமான மாயைத் தொடக்கு உடையவர்கள். அவர்கள் அசுத்த வினையிலும் நீக்குதற்கரிய தூல வினைத் தொடக்குடையவர்கள். அத்தன்மைத்தான வினைத்தொடக்கால் சுவர்க்க நரகங்களை அடைந்து உழல்பவர்கள். ஆகையால், அவர்கள் சிவனை எளிதில் அறியும் அறிவுடையராவாரோ! `ஆகார்`.

குறிப்புரை :

`அதனால், அவர்கட்குச் சிவன் தன்மையிலும், முன்னிலையிலும் தானே நேர்நின்று ஞானத்தை உணர்த்தாமல், படர்க்கையில் ஆசான் மூர்த்தியை அதிட்டித்து நின்று, பலநாள் உடன் கொண்டு, கேட்பித்தும், சிந்திப்பித்தும், தெளிவித்தும் ஞானத்தை உணர்த்துவன்` என்பது குறிப்பெச்சம். `ஆகவே, இவர்கள் சுத்தாவத்தையை அரிதில் எய்துவர்` என்பதாம்.
முன் இரண்டடிகளில், `ஐம்மலத்து ஆரும்` எனப் பிரித்து இரண்டாம் வேற்றுமைப் பெயர்த் தொகையாகக் கொள்க. `அதிகரித்த` என்பது, `அதித்த` எனக் குறைந்து நின்றது. `சகலர்` என்பது, `மாயையோடு கூடினவர்` எனப் பொருள் தரும் ஆதலின், `அதிகரித்த சகலர்` என்பது, பெரிதும் மயக்கத்தைத் தருகின்ற, முக்குண வடிவாகிய பிரகிருதி பந்தத்தை உடையவர் ஆதலைக் குறித்தது. `அரனார்க்கு` என்றது, `அரனாரை அறிவதற்கு` என்றபடி. ஏகார வினா, எதிர்மறைப் பொருளில் வந்தது.
இதனால், சுத்தாவத்தை பற்றியதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம்
உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து)
அரிய கனா தூலம் அந்நன வாமே.

பொழிப்புரை :

(உயிர்கள் யாதானும் ஓர்யோனியிற்புக்குப் பிறந்த பின்பு தான் சாக்கிரம் முதலிய அவத்தைகளை அடையும்` எனக் கருத வேண்டா. அவ்வவ் யோனியிற் புக்கிருக்கும் நிலையிலு ஐந்தவத்தை -களை அடையும். அவை கருவளர் அவத்தைகளாம்.)
வித்தில் நின்ற உயிரை முளையாகிய உடம்போடு முதற்கண் கலக்கச் செய்வதாகிய `காரண சரீரம்`, அல்லது, `ஆனந்தமயகோசம்` எனப்படுகின்ற மாயா தத்துவத்தோடு உயிர்தொடர்பு கொள்வதே கருவினில் துரியாதீதம். பின்பு `கஞ்சுக சரீரம்` அல்லது, `விஞ்ஞானமய கோசம்` - எனப்படுகின்ற, அராகம் முதலிய ஐந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் துரியம். பின்பு, `குணசரீரம்`, அல்லது, `மனோமய கோசம்` எனப்படுகின்ற மூலப் பிரகிருதியோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சுழுத்தி. பின்பு, `சூக்கும சரீரம்`, அல்லது `பிராணமய கோசம்` எனப்படுகின்ற சித்தம் ஒழிந்த அந்தக்கரணம் மூன்று, தன்மாத்திரை ஐந்து ஆக எட்டுத் தத்துவங் களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சொப்பனம். (சித்தம் பிரகிருதியில் அடங்கும்.) பின்பு, `தூல சரீரம்`, அல்லது அன்னமய கோசம்` எனப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, மாபூதம் ஐந்து ஆகப் பதினைந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சாக்கிரம்.

குறிப்புரை :

இந்த ஐவகைச் சரீரங்கள் பற்றியே இத் தந்திரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டது. உயிர்கள் கேவல நிலையிலிருந்து சகல நிலைக்கு வரும்பொழுது அதீத நிலையிலிருந்தே முறையாக வருதல் பற்றி, `கருவளர்ச்சியும் அதீதத்திலிருந்தே முறையாக நிகழும்` என அறியுமாறு அவத்தைகளை அதீதத்திலிருந்து முறையாகக் கூறினார். ஆசை - அராகம். தோற்ற முறையில் இறுதிக்கண் உள்ள அராகத்தைக் கூறவே, அதற்கு முன்னுள்ள தத்துவங்களும் அடங்கின. முதல் - மூலம்; அது மூலப் பிரகிருதி. எட்டுதல் - தீண்டுதல். `சுழுத்தி, முதலை எட்டும்` என்க. சுழுத்தியில் நிற்கும் உயிரினது செயலைச் சுழுத்தியின் செயலாகக் கூறினார். `சூக்கத்து` என்றாற்போலத் `தூலம்` என்பதிலும் அத்துச் சாரியை விரித்து, `ஆம்` என்பதைக் `கனா` என்பதனோடும் கூட்டுக.
இதனால், கருவிலும் அஞ்சவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணுங் கனவுமா யேயம் திரோதாயி
காணும் நனவில் மலக்கலப் பாகுமே.

பொழிப்புரை :

துரியாதீத நிலையில் உயிருக்கு ஆணவ மலம் மட்டுமே இருக்கும். அதற்குமேலே உள்ள தான துரிய நிலையில் அதனோடு வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் முதலிலே உள்ள மாயா தத்துவம் வந்து பற்றும். அடுத்து நிகழும் சுழுத்திய வத்தையில் நல்லனவும் தீயனவும் ஆகரிய காரிய கன்மங்கள் வந்து பற்றும். (இதனால், கால தத்துவமும், நியதி தத்துவமும் பற்றுதல் பெறப்படும்) அடுத்து நிகழும் சொப்பனத்தில் மேற்கூறிய கன்மங் களுக்கு ஏற்பமாயா காரியங்களான கலை முதல் நிலம் ஈறான ஏனை எல்லாத் தத்துவங்களும் வந்து பற்றும். (ஆகவே, சுத்த தத்துவங்கள் வந்து பற்றுதலும் தானே அமைந்தது.) இறுதியாக நிகழும் சாக்கிரத்தில், முன்பு நான்கு மலங்களும் பற்றிக்கொண்டதனால் அவை அனைத் -தையும் செலுத்துகின்ற திரோதான மலம் வந்து பற்றும். (என்றது, `அனைத்தையும் முழுமையாக நடத்தும்` என்றபடி.) ஐந்தவத்தை -களிலும் ஐந்து மலங்கள் இம்முறையில் உயிரை வந்து பற்றுவனவாம்.

குறிப்புரை :

`அதீதம் ஆணவம் ஆகும்; மேல் பூணும் துரியம் மாயை ஆம்; சுழுத்தி பொய்க் காவியம் ஆம்; பேணுங்களவு மாயேயம் ஆம்; நனவில் திரோதாயி காணும்; மலக் கலப்பு இவ்வாறு ஆகும்` என இம்மந்திரத்தின் சொல்முறைமை கொள்க.
காரணம் நிலையுடைமையால் அது, `மெய்` என்றும், காரியம் நிலையால் அது, `பொய்` என்றும் சொல்லப்படும். கான்மியம், `காமியம்` என மருவி வழங்கும். `மாயேயம்` எனவரும் இடங்களில் எல்லாம் `மாமாயை` எனப் பாடம் திரிக்கப்பட்டது என்பதை மேலேயும் கூறுவோம்.
இதனால், அவத்தைகளில் பாசங்கள் பற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

அரன்முத லாக அறிவோர் அதீதத்தர்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக்
கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர்
அருளும் மறைவார் சகலத்துற் றாரே.

பொழிப்புரை :

`ஆணவம் அதீதத்தில் பற்றும்` என முன் மந்திரத்தில் கூறினமையால், அந்நிலையை மட்டும் உடையராய் அதிலே நிற்பவர்கள், `சிவபெருமான் முதல்வன்` என உணரும் உணர்வை இழவார். (இவர்கள் விஞ்ஞான கலரே.)
`மாயா தத்துவம் துரியத்தில் வந்து பற்றும்` என்றும், `வித்தியா தத்துவங்களில் காலமும், நியதியும் வந்து பற்றும்` என்றும் முன் மந்திரத்தில் கூறினமையால், அந்த இரண்டில் நிற்பவர்களும் மேற் கூறப்பட்டவர்போல, `சிவபெருமானே முதல்வன்` என்னும் உணர்வை இழத்தல் இல்லை. (இவர்கள் இருதிறத்தினரும் தம்முட் சிறிது வேறுபாடுடைய பிரளயாகலரே. இவர்களில் பின்னவர் புருட தத்துவத்திற்குச் சிறப்பு ஏதுவாய் நிற்கும் கலை, வித்தை, அராகங்களைப் பொதுமையாக அன்றிச் சிறப்பாக உடையராகார் என்பது நாயனார் கருத்து - என்க. `கருவில் அதீதம்` என்னும் மந்திரத்திற் கூறியவற்றிற்கும், அடுத்து முன் மந்திரத்திற் கூறிய வற்றிற்கும் சிறிது வேறுபாடு உண்டென்க.)
`கலை முதலிய ஏனை எல்லாத் தத்துவங்களும் சொப்பனத்தில் வந்து பற்றும்` - என்று முன் மந்திரத்தில் கூறப் பட்டமையால், அவர்கள், `தமக்கொரு தலைவன் உளன்` என்பதையே அறியார். இவர்கள் சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

சொப்பன நிலைதானே இத்தன்மையதாகலின், சாக்கிரநிலை இத்தன்மையதாதல் சொல்லவேண்டாவாயிற்று.
இறுதியில் `சகலத்துற்றார்` எனக் கூறியதனால், மேற் சொல்லப்பட்டவர்கள் விஞ்ஞானகலரும், பிரளயாகலருமாதல் விளங்கிற்று. அவத்தைகளைக் கூறியது பற்றி, அவற்றில் வந்து பற்றும் மலங்களையும், மலங்களைக் கூறியது பற்றி அவை வந்து பற்றும் அவத்தைகளையும் முன் மந்திரம் பற்றி உயத்துணர வைத்தார். `அருளும்` என்ற உம்மை, முதல்வனைப் பொதுப்பட உணரும் உணர்வும் இலராதலைக் குறித்தது.
இம் மந்திரத்தில் பாடம் பலவிடத்துத் திரிவுபட்டுள்ளது.
இதனால், மூவகை உயிர்கள் அடையும் அவத்தைகளின் கூடுதல் குறைவுகள் கூறும் முகத்தால் அவற்றின் பாச நிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று
மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி
வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.

பொழிப்புரை :

`கருவில் அதீதம்`l என்னும் மந்திரத்திற் கூறியபடி கருவிலேயே பல அவத்தைகளை அடைந்த உயிர், பின்பு பலருங்காணப் பிறந்து, சகலாவத்தையில் பூதம் முதலிய புறக் கருவிகளாலும், மனம் முதலிய அகக் கருவிகளாலும் செய்தற் குரிய செயல்களை மேற்கொண்டு, பல போக்கியப் பொருள்களில் பொருந்தி, ஓசை முதலிய புலன்களில் மூழ்கிப் பலவகை அனுபவங்களை அனுபவிப்பதாய்க் காணப்படும்.

குறிப்புரை :

`கருவுற்றிடும் சீவன் உரு உற்றுச்சகலத்தே பூத மனாதியால் மன்னிவரும் செயல் பற்றிப் போகத்து உற்றும், சத்தாதி மன்னிப்போகம் மருவுற்றும் காணும்` எனக் கூட்டி முடிக்க. ஞானேந் திரியங்களின் புலன்களையே கூறியவாராயினும், இனம் பற்றிக் கன்மேந்திரியங்களின் புலன்களாகிய மொழிதல் முதலியனவும் கொள்ளப்படும். சூக்கும தூல பூதங்களே ஞானேந்திரிய கன்மேந் திரியங்கட்கு நிலைக்களன் ஆதல் பற்றி அவற்றை, ``பூதம்`` எனப் பொதுப்படக் கூறினார். பூத மனாதி, `பூதங்களும் மனாதிகளும்` என உம்மைத் தொகை.
இதனால், சகல வருக்கத்து உயிர்கள் சகல நிலையில் நிற்குமாறு இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

இருவினை ஒத்திட இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக்
குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

பொழிப்புரை :

உயிர்கள் தமக்கு இருவினையொப்பு வாய்க்கப் பெற்ற பொழுது சிவனது சத்தி முன்பு பிறவித் துன்பத்தைத் தரும் திரோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, வீட்டின்பத்தைத் தரும் அருட்சத்தியாகித் தங்கள் அறிவில் பதியப் பெற்று, அதனானே மெய்யுணர்வு வேட்கை நிலைத்து நிற்க அவ்வேட்கை மிகுதியால் ஞான குருவை அடைந்து அவர் உபதேசித்த முறைப்படி தம்மைச் சிவனது அருட்சத்தியின் வழிப்படுத்திக் கொண்டு, அதனாலே எல்லா மலங்களும் நீங்கப் பெற்று, மீட்டும் பிறவா நிலையில் நிற்பதே சுத்தாவத்தையாம்.

குறிப்புரை :

கேவல நிலையில் இருந்த உயிர்கள் சகல நிலையை அடைந்த பின்பு அதன்கண் பல்வேறு பிறப்புக்களை எய்தி, வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும். அப்பொழுது நல்வினைப் பயன்களில் விருப்பமும், தீவினைப் பயன்களில் வெறுப்பும் கொண்டு, நல்வினைப் பயன்களை விரைவில் எய்தவும், எய்திய வழி நீங்காது நிறுத்திக் கொள்ளவும், தீவினைப் பயன்களை எய்தாது தடுக்கவும், எய்தியவழி விரைவில் அகற்றவும் முயலும், அம்முயற்சியே அவற்றிற்குப் பின்னைப் பிறவி கட்குக் காரணமாய் அமையும். ஆகவே, `நல்வினையும் தீவினை போலப் பிறப்பைத் தருவதே` என உணர்ந்து, `விலங்கு பொன்னால் இயன்றதாயினும், இரும்பால் இயன்றதாயினும் விலங்கயேன்றி வேறன்று` என்பதுபோல, இருவகை வினைகளையும் தளைகளாகவே உணர்ந்து, விருப்பு வெறுப்பின்றி இரண்டையும் சமமாக நோக்கும் பக்குவ நிலையே இருவினை யொப்பாகும். அத்தகைய நோக்கு உண்டாயின், மேலும் மேலும் வினை ஏறுதல் நீங்கும். அந்நிலையில் என்றுமே உயிரினது அறிவில் ஒன்றி நிற்கின்ற சிவனது சத்தி, முன்பு திதோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, அருட்சத்தியாகிப் பதியும். அதுவே சத்தி நிபாதம். சத்தி நிபாதத்தால் `வினைகளே பிறப்பிற்குக் காரணம்` - என்பதை உணர்ந்து, உயிர் வினைக்கு அஞ்சும். அவ்வஞ்சுதல், பிறவிக்கு அஞ்சுதலேயாகும். இங்ஙனம் பிறவிக்கு அஞ்சும் உயிர், பிறவி நீங்கும் வழியை உணர்த்துவாரையே நாடி ஓடும். அவ்வாறு ஓடுதலே ஞான வேட்கையாகும். இந்த ஞானவேட்கையே சத்தி நிபாதத்தின் பயன். அவ்வேட்கை நீங்காது நிலைக்கப் பெற்ற உயிர்களின் முன் சிவன், ஞானியராகிய ஆசான் மூர்த்திகளை அதிட்டித்து நின்று, ஞானத்தை உணர்த்துவன். அவ்வாறு உணர்த்த உணர்ந்த உயிர், அஞ்ஞானம் நீங்கப் பெற்றுச் சிவனை அடைந்து, அவனைப் போலவே பிறவாமை யுடையதாய் அவனது இன்பத்தில் திளைத்திருக்கும். அவ்வாறு திளைத்திருத்தலே சுத்தாவத்தை. இவையே இம்மந்திரத்தில் முறையாகக் கூறப்பட்டன.
அருட்சத்தியை, `இன்னருட்சத்தி` என்றதனால், திரோதான சத்தி இன்னாமைச் சத்தியாதல் விளங்கிற்று. ஆதரம் - விருப்பம். சத்தி நிபாதம் வாயாத முன்பும் இடையிடையேயும் ஓரொரு கால் ஞானவேட்கை நிகழுமாயினும் அது, துயில் எழாதவன் துயிலின் இடையிலே சிறிது சிறிது விழிப்பை அடைதல்போல, நிலைத்தல் இன்றி விரைய நீங்குவதாக, சத்தி நிபாதத்தின் பின் உண்டாகும் ஞான வேட்கையே நிலையுடைய உண்மை ஞான வேட்கையாம்` என்பது உணர்த்துதற்கு, `ஞான ஆதரம் மன்னி` என்றார். சக்தி நிபாதம் வாய்க்கப் பெறாதவரது ஞான வேட்கையையே திருவள்ளுவர், `தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்` என்றார்.3 `கூட்டி என்றது, தானே தன்னை அருட்சத்தி வழியில் சேர்த்தி` என்றபடி.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு முறைப்பட இனிது விளக்கப்பட்டது. இந்நிலை சிவஞான சித்தியிலும் இவ்வாறே,
``இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்தி தோயக்
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டை சிற்றறி வொழிந்து ஞானம்
பெறுகிநா யகன்றன் பாதம் பெறுவது சுத்த மாமே``*
எனக் கூறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 37

ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ
டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப்
பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின்
ஈறார் பரசிவம் ஆதேய மாமே.

பொழிப்புரை :

முப்பத்தாறாகச் சொல்லப்படுகின்ற கருவிகளே அவத்தை வேறுபாடுகட்குக் காரணம். அந்தக் காரணத்தின்வழிக் காரியமாய் நிகழும் அவத்தைகள் இருபத்தைந்து. (கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் சுத்தம், நின்மலம் ஆகிய ஐந்தில் ஒவ்வொன்றிலும் சாக்கிரம் முதலிய ஐந்து.) அந்த இருபத்தைந்தில் முடிவாய் உள்ளது சுத்த துரியாதீதம். அதனை உயிர் அடைந்த பொழுது, ஐந்தொழில் தலைவர்களாகிய ஐவரும் அதனைத் தடை செய்யாது இருக்க, அவ்விடத்து மிக்கு விளங்கும் அருள் ஞான ஒளியினால், அனைத்துயிர்கட்கும் முடிவான புகலிடமாய் உள்ள பரசிவனது பேரின்பம் அதன் அறிவினுள்ளே பொங்கித் ததும்பும்.

குறிப்புரை :

முப்பத்தாறினையும் தொகுத்து `ஆறு` என ஒன்றாகக் கூறினமையின் `அதின்` என ஒருமையாற் கூறினார். ஆறு - வழி. `ஓட` என்னும் செயவெனெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ஓடுதல், தொடர்ச்சியாக நிகழ்தல். `போம்` என்னும் பெயரெச்சம், `போய தனால் உண்டாகும்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. ஈறார் பரசிவம் - முடிநிலையில் பொருந்தி நிற்கும் பரசிவம். ஆதேயம் - இடத்து நிகழ்பொருள். ``ஆதேயம் ஆம்`` என்றதனால, ``பரசிவம்` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் இன்பத்தைக் குறித்தது. எந்நிலையிலும் சிவம் உயிருக்கு ஆதாரமேயன்றி, ஆதேயம் ஆகாது. எனினும் அதனால் தரப்படும் இன்பம் உயிரினது அறிவினுள்ளே ஊற் றெழவே உயிர் அதனை நுகர்வதாகும். அதுபற்றி அஃது `ஆதேயம்` எனப்பட்டது. ``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது``l என முன்னருங் கூறினார். ``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம்போல் - பற்ற வாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``1(*) எனவும் ``ஊற்றிருந்துள்ளம் களிப்போன் போற்றி``(*)2 எனவும் ஆளுடை அடிகள் அருளிச் செய்தார். இவை யெல்லாம் பற்றியே,
``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்``(*)3
என்றார் உமாபதிதேவர். ``ஐயைந்தாவன, சாக்கிரம் முதலிய ஐந்திலும் தனித்தனி நிழும் சாக்கிரம் முதலியன`` என்பார்க்குக் காரண அவத்தைகள் யாதேனும் ஒன்றேபெறப்படுதல் அன்றி, அனைத்தும் பெறப்படாமை அறிக.
இதனால், மேல் பெயரளவாகக் சுட்டப்பட்ட சுத்தாவத்தை -யின் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான்
தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.

பொழிப்புரை :

சகலாவத்தையில் தன்னை உடம்பின் வேறாக உணராமல், உடம்பையே ``தான்`` என உணர்ந்து நின்றவன், சுத்தா வத்தையை ஓரளவேனும் அடைந்த பின்பே தன்னை உடம்பின் வேறு பட்ட பொருளாக உணர்ந்தான். பின்பு சுத்தத்தில் துரிய நிலையை அடைந்து, சிவனது அருளை உணர்ந்தான். ஆயினும் அதனையும் கடந்த சுத்த துரியாதீதத்தை அடைந்து சிவனை உணர்ந்து அவனோடு இரண்டறக் கலவாது, துரியத்திலேயே அவன் இருந்துவிடுவானாயின், உடம்பு நீங்கிய பின், மீளவேறோர் உடம்பை எடுத்தலும் கூடும்.

குறிப்புரை :

``தனைக்கண்டான்`` என்பதில் `தன்` என்றது சிவனை யாகலின், அங்கு, `துரியம்` என்றது சுத்த துரியமேயாயிற்று. அஃது அங்ஙனமாகவே, `முதல்` என்னும் பொருள்பட வந்த `முன்` என்பது, சுத்தாவத்தையின் தொடக்கமாயிற்று. `அதன்கண் தன்னைக் கண்டான்` என்றதனால், தன்னைக் காணாதிருந்தது சகலத்தில் ஆயிற்று. `துரியத்தில்` என ஏழாவது விரிக்க. துரிய நிலை அருள் நிலையும், துரியாதீத நிலையே சிவ நிலையும் ஆதலால், சிவனது அருளே சீவனாக உபசரித்து, `தனைக் கண்டான்` என்றமைதெளிவாம். `துரியமுன்`` என்பதில் `முன்` இடமுன். அவ்விடத்து நிகழ்வது துரியா தீதம். `பின்னையும்` என்ற உம்மை, உயர்வு சிறப்பும்மை. ``பிறந்திடும்`` என்றது, `பிறத்தல் கூடும்` என்றதேயன்றி, அஃது ஒருதலையன்று என்பதைச் சாத்திரங்களைக் கொண்டு தெளிக.
துரிய நிலையில் பிராரத்தவாசனை தாக்காதவாறு திருவருளில் உறைத்து நிற்றல், `நள் அனல் வேவாத நற்றவரது செயலைப் போலவும்`, `பண் அமர மாச் செலுத்தும் பாகரது செயல் போலவும்`l பெரிதும் அரிதாகலின், அதனிற் சிறிதே சோர்வு உண்டாயின், அவ் அற்றம் பார்த்து, பிராரத்த வாசனை தாக்க, அதனால், ஆகாமியம் தோன்றி முதிர்ந்து, அடுத்த பிறப்பு வருதலும் கூடும். அது பற்றியே, `ஈசனோ டொன்றாக்கால் - பின்னையும் வந்து பிறந்திடும்` என்றார். `தான்` என்பதை ஈற்றடியில் முதலிற் கூட்டுக.
இதனால், `சுத்த துரியாதீதமே பிறவா நிலை` என்பது உணர்த்தும் முகத்தால், அதனது இன்றியமையாச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்
ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த
நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.

பொழிப்புரை :

புருவ நடுவிற்றானே திருவருளால் சிவத்தைத் தலைப்படும் சாக்கிரம் முதலிய அவத்தைகளில் முடிவான அதீத நிலை கைகூடுமாயின், பாச ஞானத்தை உண்டாக்க வந்த வாக்காகிய மயக்கும் பொருள் கெடும். அது கெடவே, `இனியும் வருங்கொல்` என எதிர்நோக்கி அஞ்சப் படுவதாகிய பிறப்பு, வாராதே ஒழியும். அதனால் பரமுத்தி நிலை கிடைக்கும். எவ்வாறெனில் அவ்விடத்தில் பாச ஞான பசு ஞானங்கள் தோன்ற மாட்டா ஆகையால்,

குறிப்புரை :

`ஆக்கிய` என்பது, `செய்யிய` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வயிந்தவம் - விந்துவின் காரியம். அஐவ இங்கு வாக்குக்களே. மால் - மயக்கம். நந்த - கெட. `நந்த` என்றமையால், நந்துதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. மயக்கம் தருவனவற்றை, `மயக்கம்` என்றார். பெத்தர்களுக்கு வாக்குக்கள் தெளிவைத் தருவன வாயினும், முத்தர் கட்கு அவை சிவஞானம் நிகழ்தற்குத் தடையாய் உலகுணர்வைப் பயக்கும் ஆதலின் அவற்றை, `மால்` என்றார். நோன்மை - வலிமை. ஏனை முத்திகளினும் வலியுடைத்தாய் நிலைத்து நிற்பது பரமுத்தி என்க. `வாக்கு` என்பது பாச ஞானத்தையும், `மனம்` என்பது பசுஞானத்தை உணர்த்துதலைச் சிவஞானபோதம் ஆறாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தால் உணர்க.
இதனால், `சாக்கிரத்தில் சுத்தாவத்தையைத் தலைப்பட்டோர் அவற்றுள் துரியத்திலே நின்று விடாமல், துரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என மேற்கூறியது, அதன் பயன் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில்
அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.

பொழிப்புரை :

`இன்பம், துன்பம்` என்னும் இரண்டும் உலக உணர்வே நிகழும் சகலாவத்தையில் நிலையின்றி, மாறி மாறித் தோன்றும். அகலாவத்தையாகிய சுத்தாவத்தையில் அவை தோன்றவேமாட்டா. `சகலாவத்தையில் அவை தோன்றுதல் ஏன்` எனில், இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் சகலாவத்தை.

குறிப்புரை :

`பிரபஞ்சம்` என்னும் வடசொல்லுக்கு, `விரிவுடையது` என்பது பொருளாகலின் அதனை `அகலம்` எனத் தமிழாக்கி, முதலிலும், கடைசியிலும் சொற்பின்வரு நிலையணி தோன்றக் கூறினார். அஃது ஆகுபெயராய்ப் பிரபஞ்சத்தை உணர்ந்து நிற்கும் சகலாவத்தையைக் குறித்தது. இடையில் உள்ள `அகலம்`, `சகலம்` என்னும் வடசொற்கு எதிராய வடசொல். `சுத்தம்` என்னாது `அகலம்` என்றது அவ்வணி தோன்றுதற் பொருட்டேயாம். `அப்பும் அனலும்` என்றவை மறைபொருட் சொற்கள். அவையும் சொற்சுவை தோன்ற வந்தனவேயாம். அப்பு - நீர். அனல் - தீ. இவை அவற்றின் வெளிப் படைப் பொருள். அச்சொற்கள் நான்கடியிலும் வந்தது, சொற்பொருட் பின்வருநிலையணி. அவ் ஆறு - அந்த வழி. நிலையை `வழி` என்றார்.
இதனால், சகலாவத்தை பந்தமும், சுத்தாவத்தை வீடும் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம்
உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து)
உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களில் கீழ் உள் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்த தத்துவங்களாகும். அவை அவ் வியத்தமாகிய மூலப்பிரகிருதியினின்றும் நோறி ஒடுங்கும். இடையில் உள்ள வித்தியா தத்துவம் ஏழும் மிச்சிர தத்துதவமாகும். அவை அசுத்த மாயையினின்றும் தோன்றி ஓடுங்கும். மேலே உள்ள சிவ தத்துவம் ஐந்தும் சுத்த தத்துவங்களாகும். அவை சுத்த மாயை யினின்றும் தோன்றி ஒடுங்கும். இம் மூவகைத் தத்துவங்களும் மூன்று காண்டங்களாய்ப் பிரிந்து ஆன்மாவோடு கூடி, அதற்கு அறிவிச்சை செயல்கள் நிகழக் கருவிகளாய் நிற்கும்.

குறிப்புரை :

மூன்று காண்டங்களாவன; `போக்கிய காண்டம், போசயித்திரு காண்டம், பிரேரககாண்டம்` என்பன. இவற்றை ஆன்ம தத்துவம் முதலாக வைத்துப் பொருத்திக் கொள்க. போக்கியம் - புசிக்கப் படுவது. போசயித்திரு - புசிப்பவன். பிரேரகம் - செலுத்துதல். இவற்றை இவ்வாறே,
``ஐந்து சுத்தத்தின் கீழ், ஏழ் சுத்தாசுத்தம்; அசுத்தம்
தந்திடும் புமான்கீழ் எண்மூன் றாய தத்துவம்; சீவற்கு
வந்திடும்; பிரேரகாண்டம், மருவு போசயித்திரத்தோடு
அந்தமில் அணுக்களுக்குப் போக்கிய காண்ட மாமே``3
என சிவஞானசித்தியில் கூறப்பட்டமை காண்க.
`மாயேயம்` என்று உள்ள இடங்களில் எல்லாம் `மாமாயை` என்றே பாடம் திரிக்கப்பட்டது போலவே, `போசயித்திரு காண்டம்` என்று உள்ள இடங்களில் எல்லாம், `போகசயித்திரு காண்டம்` என்றே பாடம் திரிக்கப்பட்டுள்ளது.
அவ்வியத்தமாகிய மூலப்பிரகிருதி பல சமயத்தாராலும் நன்கறியப்பட்டது ஆதலின் அதனை `அதின்` எனப் பண்டறிசுட்டாற் கூறினார். `உறும்` என்பதை `அதின்` என்பதனோடும் கூட்டுக. உறுதல் - சூக்குமமாய்ப் பொருந்தியிருத்தல். எனவே அது, தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் உளதாம் நிலையாதல் அறிக. `ஏழ் சத்தா சுத்தம்; மாயையின் உறும்` என இயைக்க. `உறுமால் மாமாயையின்` என்பதனையும் `சுத்தம்` என்பதன் பின்னர்க் கூட்டி, `உறும் ஆன்மாவினோடே` என்பதை மீட்டும் மூன்றாம் அடியின் இறுதியில் கூட்டி யுரைக்க. காண்டம் - பகுதி.
இதனால், தத்துவம் முப்பத்தாறும் பற்றிய சில சிறப்பியல்புகள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின்
ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே.

பொழிப்புரை :

சிவனே எல்லாம் செய்பவன் ஆகையால், உலக மாகிய மகவிற்கு அவனை, `தந்தை` எனலாம். உலகிற்கு முதற் காரணமான `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளுள் சுத்த மாயையையே சிவன் தான் நேரே பற்றிச் செயற்படுத்துதலால் அதனைச் சிவனோடு புணர்ந்து உலகமாகிய மகவை ஈன்ற, `நற்றாய்` எனலாம்; அசுத்த மாயையைச் சிவன் தான் நேரே பற்றிச் செயற் படுத்தாமல், அனந்த தேவரைக் கொண்டும், அவர்வழியாகச் சீகண்ட உருத்திரரைக் கொண்டும் செயற்படுத்துதலால் அதனை, உலகமாகிய மகவை வளர்க்கும் `செவிலித் தாய்` எனலாம். எனவே, சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு முதற் காரணங்களாலும், சிவனாகிய கருத்தாவினாலும் உலகம் தோன்றி நிலை பெற, உயிர்கள் அவ் வுலகத்தைப் பற்றி நின்று, `சகலம், கேவலம்` என்னும் இருநிலைகளில் மாறி மாறி உழன்று, முடிவில் சிவனது அருளாலே ஞானத்தைப் பெற்று, அவற்றினினின்றும் விடுதலை அடைந்து சுத்த நிலையை அடையும்.

குறிப்புரை :

செவிலி முதலியோரைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். உலகமாகிய மகவை எடுத்துக் கூறாமையால் அது. `தந்தை, நற்றாய், செவிலி` என்பவற்றால் பெறப்பட்ட குறிப்புருவகமாகும். உயிரை, `தான்` என்றது சாதி யொருமை. இங்ஙனம் மகவாக உருவகிக்கப்பட்டவை, `சேதனம், அசேதனம்` என்னும் இருவகைப் பிரபஞ்சமுமாகும். சேதனப் பிரபஞ்சங்கள் அறிவைப் பெறுதலும், அசேதனப் பிரபஞ்சம் பல்வேறு வகையான தன்மைகளைப் பெறுதலும் இங்குக் குறிக்கப்பட்ட மூவராலுமாம் என்க. சுத்த மாயை சகலர் பிரளயாகலர்கட்குப் பிரேரகமாத்திரையாயும், நால்வகை வாக்குக்களாயும் பயன்படும். அஃது அவர்கட்குத் தனு கரண புவன போகங்களாய் வருதல் இல்லை. விஞ்ஞானகலர்க்கு மட்டுமே சுத்தமாயை தனு கரண புவன போகங்களாய் வந்து பயன்படும்.
சுத்தமாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனறும், அசுத்த மாயையே, `மாயை` எனப்படுதலால், அதன் காரியங்கள், `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும். எனினும், பிரகிருதியும் அசுத்த மாயையின் காரியம் ஆதல் பற்றி பிராகிருதங்களையும், `மாயேயம்` என அடக்கிச் சொல்லுதல் உண்டு.
``வித்தைகள், வித்தை யீசர், சதாசிவர் என் றிவர்க்கு
வைத்துறும் பதங்கள், வன்னம், புவனங்கள், மந்திரங்கள்
தத்துவம், சரீரம், போகம், கரணங்கள் தாம் எலாமும்
உய்த்திடும் வைந்தவந்தான் உபாதான மாகி நின்றே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக. இதனுள் `விந்து` என்பதே பகுதிப் பொருட்டாகிய விகுதியைப் பெற்று, `வைந்தவம்` என வந்தது. பகுதிப் பொருள் விகுதியை வட நூலார் `சுவார்த்த பாவ தத்திதப் பிரத்தியயம்` என்பர்.
இதனால், உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள் ஆமாற்றை விளக்கி, அதனாலே காரண அவத்தைகள் மூன்றும் நிகழ்தலைத் தெரிவித்து, அதிகாரம் முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

பொழிப்புரை :

உருவம் இரண்டு, (வித்தை, ஈசுரன்) உருவாருவம் ஒன்று, (சதாசிவன்) அருவம் இரண்டு (சத்தி, சிவன்) ஆகமுத்திறத்து ஐந்துநிலைகளையும் கடந்து, தன்னியல்பில் நிற்கும் பரசிவனே சுத்த சிவன். (மேற்கூறிய ஐந்தும் அபர சிவங்களாம்.) பரசிவன் - மனத்தையும் கடந்தவன். இயல்பாகவே மலங்கள் இல்லாதவன். எனவே, மாயா சரீரங்களை எடாதவன். ஆகவே, அவன் (தனது திருவருள் காரணமாக) மலங்களுட் பட்டனவாயினும் உண்மையில் அவற்றினும் மேற்பட்ட உயிர்களை முன்னர் மாயாகாரியமாகிய உடலோடு ஒன்று படுத்திப் பின்பு அதனினின்றும் வேறுபடுத்தி உய்வித்தற் பொருட்டு அவ்வுயிர்கள் தன்னை அறியாதபடி அவற்றின் அறிவினுள்ளே கள்வன் போல ஒளித்திருந்தான். எனினும், அவனது கள்ளத்தை நான் அவன் அருளாலே அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

`அதனால் பராவத்தையில் உள்ளேன்` என்பது குறிப் பெச்சம். `நீவிரும் இதனை எய்தலாம்` என்பது கருத்து. `அஞ்சு` என்றது ஐம்மலங்களை எனின், `நின்மலன்` என்பது வெற்றெனத் தொடுத்தல் ஆதலும், `தடத்த சிவத்தின் மேற்பட்ட சொரூப சிவமே பரசிவம்` என்பது பெறப்படாமையும் அறிக. `அனாதி` என்றது, செயற்கையோடு கூடாத இயற்கையைத் குறித்தது. `தெய்வம்` என்பது `திவ்வியம்` என்னும் பொருட்டாய்த் தூய்மையை உணர்த்திற்று. `நெஞ்சமும்` என்னும் உம்மை, `நாவையேயன்றி` என, இறந்தது தழுவி நின்றது. `மனம், வாக்கு` - என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந்தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்தின்* உரையிற்காண்க. தாய - கடந்த, `விஞ்சும் உயிர்` எனக் கொண்டு கூட்டுக. `உயிருடல்` என்றே பாடம் ஓதுதலும் ஆம். வேறு படுத்துதல் கூறினமையால், முன்பு ஒன்றுபடுத்தினமை பெறப்பட்டது. `திருவருளால்` என்பதும் `அவன் அருளால்` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.
இதனால், `பராவத்தைக்கு நிலைக்களம் பரம்பொருள்` என்பதும், அதன் சிறப்பியல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சத்தி பராற்பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்தி அம் மாயை தனுட்சக்தி ஐந்துடன்
சத்தி பெறும்உயிர்தான் அங்குற் றாறுமே.

பொழிப்புரை :

(குண குணிகட்குத் தம்முன் வேற்றுமை யின்மையால்,) `சத்தியே சிவம்` என்று கூறலாம். எனினும், சத்தியை ஆள்வது பொருளேயாதலின், சிவத்தினின்றே சத்தி தோன்றுகின்றது. (அஃதாவது செயற்படுகின்றது.) அதனால் உயிர்கட்கு, அமைதியைத் தருவதும், மேலான ஆனந்தமாய் விளைவதும் பராசத்தியே. இனி அந்தச் சத்தியினால் தான் சுத்தமாயையாகிய சத்தி காரியப்படுகின்றது. அது காரியப்படும் நிலையில் சிவசத்தி, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என ஐந்தாய் இருக்கும். அந்த ஐந்துடனும் கூடுவதனாலே தான் உயிர் ஆற்றலைப் பெறுகின்றது. ஆகவே, உயிர் அமைதியை அடைந்து, ஆனந்தத்தைப் பெறுவது பரையாகிய சத்தியிடத்தில்தான்.

குறிப்புரை :

`சத்தியேபராற்பரம்` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பராற் பரம் - மேலானவற்றிற்கெல்லாம் மேலானது; `தனில் ஆன சத்தி சாந்தி; பரானந்தம்` எனவும், `தன்னில் விந்து சத்தி சுடர்` எனவும் கொண்டு கூட்டுக. விந்துவின் (சுத்த மாயையின்) சத்தி, மோகினியின் (அசுத்த மாயையின்) சத்திபோல மயக்குதலைச் செய்யாது, தெளிவைச் செய்தலின் அதன் சத்திகாரியப் படுதலை `சுடர்தல்` என்றார். சுடர், முதனிலைத் தொழிற்பெயர். `சுடர்தல் நிகழும்` எனப் பயனிலையும் `உடன்` என்பதன்பின், `கூடி` என்னும் சொல்லெச்சமும் `உயிர்` என்பதன்பின் `ஆகலின்` என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. ஆறும் - சாந்தி யடையும். ஆகவே, ஆனந்தத்தை அடைதல் சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `பராவத்தையாவது உயிர்பராசத்தியைப் பொருந்தி நிற்றல்` என்பதும், `அவ்விடத்து அதற்கு அமைதியும், அதன் வழியாக ஆனந்தத்தையும் பராசத்திதரும் என்பதும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களும் சடமேயாதலின் சித்தாகிய பரம்பொருள் அத்தத்துவங்கள் அனைத்திற்கும் அப்பாற் பட்டதாம். (அந்தப் பரம் பொருளை யடைதலே பராவத்தை) இந்தச் சடசித்துக்களைப் பகுத்து, சித்தின் இயல்பை அறிபவரும் அரியர். அந்தச் சித்துப் பொருளின் குணமே அருள் ஆதலின், அப்பொருளை அறிந்து அருளைப் பெறுபவரும் அரியர். உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது. ஆகலின், அறிவே வடிவான பரம் பொருளைச் சார்ந்து அறிவே வடிவாய்விட்ட அவர்கட்குத்தான் சிவன் அளவிலா இன்பப் பொருளாய் இன்புறுத்துவான்.

குறிப்புரை :

இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது. இனிச் சொற்பின்வருநிலையணி பெற்றதாகக் கொண்டு. `ஆறு` என்பவற்றிற்கு வேறு வேறு பொருள் உரைப்பாரும் உளர். `இனிது` என்றது, `இன்பப் பொருள்` என்றதாம். இனி இதனை வினையெச்சக் குறிப்பாகக் கொண்டு, `நன்கு விளங்குவான்` என உரைப்பினும் ஆம்.
இதனால், `பராவத்தை அறிவு, அருள், ஆனந்த மயமானது` என்பதும், `அதனால், அதனை மடமை, வன்கண்மை, துக்கமயமாகி நிற்பவர் அடைதல் அரிது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சொடு நான்கும் கடந்(து) அகமேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடின் நயஞ்செய்யு மாறே.

பொழிப்புரை :

வித்தியா தத்துவங்கட்கு முதற் காரணமாய் உள்ள அசுத்த மாயையைக் கடந்து சிவத்துவத்தை அடைந்தமையால் `வித்தியாதரர்கட்குத் தலைவன்` எனச் சொல்லுதற்குரியசாதகன், பிராசாதகலைகளில் ஒன்பதைக் கடத்தலால், சுத்த மாயாகாரியங் களையும் கடந்த ஒருநிலையைப் பெற்றுப் பத்தாம் கலையாகிய வியாபினி கலையில் நின்று, அருட் சத்தியை வஞ்சம் அற்ற நெஞ்சுடன் நாடுவானாயின் அஃது, ஒன்பது அடுக்குக்களுக்கு மேல் உள்ள பத்தாவது மாடியில், காலில் செம்பஞ்சு ஊட்டுதல் முதலிய ஒப்பனை களுடன் கட்டிலில் உறங்குகின்ற தலைவியைத் தலைவன் அடைந்து, அவளோடு இனிய சொற்களைக் கூறுவது போன்றதாகும்.

குறிப்புரை :

இங்கு, மெல்லியலாளுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது அருட்சத்தியேயாகலின், `அஞ்சொடு நான்கும்` என்றது, பொதுப்பட `ஒன்பது` என்னும் பொருட்டாய்ப் பிராசாத கலைகளில் கீழுள்ள ஒன்பதைக் குறித்தது. ஆகவே, `அகம்` என்று பத்தாவதாகிய வியாபினிகலையாயிற்று.
`விஞ்சையர் வேந்தனும் அஞ்சொடு நான்கும் கடந்து, அகமே புக்கு, நஞ்சு அற நாடின்(அது) நயம் செய்யும் ஆறு` எனக் கூட்டிப் பொருள் கொள்க. `அது` என்பது தோன்றா எழுவாய். `பஞ்சு அணிகால் அத்தோடு துயில்கின்ற` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. அது, பகுதிப் பொருள் விகுதி. அத் தோடு, `அதனோடு` என்பதன் மரூஉ. காலில் செம்பஞ்சுக் குழம்பூட்டுதல், ஏனை ஒப்பனைகளுக்கு உபலக்கணம். `செல்வர் இல்லத்து இளமகள் நலத்தை வேண்டினோன், பல மாடிகளைக் கடந்து மேல்மாடியில் சென்றவழியே அவனைத் தலைப்பெய்தல் கூடுவது போலச் சுத்த சிவனது அருட்சத்தியை அடைய வேண்டினோன் பிராசாத யோகத்தில் பல படிகளைக் கடந்து மேலே சென்றபொழுதே அந்தச் சத்தியை அடைதல் கூடும்` என்றபடி.
``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனே நில்``l
என்றார் திருவுந்தியார் ஆசிரியர். `அவள் கிடக்கும் இடம் பத்தாம் தானம்` என்பதை இம்மந்திரத்தால் அறிகின்றோம். பத்தாம் தானத்தைக் கடந்து நான்கு தானங்கள் அந்தரமாய் நிற்க. அப்பால் உள்ள இரண்டு தானங்கள் சிவன் இருக்கும் ஆத்தானம் ஆகும். இன்ப வழியாதல் பற்றி, `கிழவி` என்றும்` `மெல்லியலாள்` என்றும் சொல்லப் படினும், `தாயுடன் சென்றே பின் தாதையைக் கூடவேண்டும்`3 என்பது பற்றி, `சத்தியை முதற்கண் சார்தல் வேண்டும்` எனக் கூறினார்.
`சத்தி ஐந்துடன் - சத்தி பெறும் உயிர் தான் அங்குற்று ஆறுமே` என முன் மந்திரத்திற் கூறினார். அதனை ஞான நெறியாற் கூட இயலாபொழுது, பிராசாத யோக நெறியால் கூடுதல் கூடும்` என்பது இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உரிய நனாத்துரி யத்தின் இவன்ஆம்
அரிய துரிய நனாவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரன்ஆம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.

பொழிப்புரை :

எளிதில் இயல்பாக நிகழும் சகல சாக்கிர துரியம் போலவே, அரிதில் சாதித்து அடைவதாகிய நின்மல துரியத்திலும் ஆன்மா, ஆன்மாவாய்த்தான் இருக்கும். ஆயினும், வியாபகமாகிய பர துரியத்தில் அது மேல்நிலையை அடையும். அந்தத் துரியம் வேறுபட நிகழ்கின்ற பரதுரியாதீதத்தில் தான் ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில் `விஞ்சையர் வேந்தன்` என ஒப்புமைப் பெயரால் குறிக்கப்பட்ட ஆன்மாவை இங்கு எழுவாயாக வருவிக்க. பின்னர் `அரிய` என வருதலால், முன்னர், `உரிய` என்றது எளிதில் இயல்பாக நிகழ்வதாயிற்று. நனாத் துரியம் - சகல சாக்கிரமாகிய மத்தியா லவத்தையில் நிகழும் துரியம். `துரியத்தின்` என்பதில் உள்ள `இன்` உருபு. ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை உருபு. ``மூன்றில்`` என்னும் ஏழாவதனை முடிப்பதாகிய `இவன் ஆம்` என்பது அவ்வேற்றுமைக்குப் பின்னர் வாராது, முன்னர் வந்தது. பருமை - வியாபகத்தைக் குறித்தது. எனவே, பராவத்தையில் தான் ஆன்மா உண்மையாக அணுத்தன்மை நீங்கி, விபுத்தன்மையை அடைதல் பெறப்பட்டது. `பரன்` என்பது, பொதுப்பட, `மேல் நிலையன்` எனப் பொருள் தந்தது. அது வியாபக நிலையன் ஆயினமையைக் குறித்ததேயாகும். திரிதல் - வேறுபடுதல். `திரிய வரும் துரியம்` என்றது, துரியம் வேறுபட, அதன்பின் நிகழும் அதீதத்தைக் குறித்தது. `ஆம்` என்றதை இறுதியிலும் கூட்டுக.
இதனால், பராவத்தை நின்மலாவத்தையினும் உயர்ந்ததாதல் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப்
பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

பொழிப்புரை :

`பராவத்தையிலும் அதன் முடிநிலையாகிய அதீதத்தை அடைதல் வேண்டும்` எனக் கூறுதல், சிறிதே எஞ்சி நிற்கும் மலவாசனை நீங்குதற் பொருட்டாம். (வாசனை, `இலய மலவாசனை` என்க.) இனி அந்த அதீதத்தைத் தலைப்பட்ட பின்பும் விடாது தொடர்ந்து அதிற்றானே பழகிப் பழகியிருந்தால்தான், ஆன்மாச் சிவமாம் தன்மையைப் பெறும். ஆகவே, அதில் அவ்வாறு தொடர்ந்து பழகா தவர்கள் எத்துணைச் சாதகங்களைச் செய்தவராயினும் அவர் சிவமாம் தன்மையை அடையார். அத்தன்மையை அடையாமையால், சிறிதளவு எஞ்சி நின்ற பாசமும் நீங்காமல் இருந்துக் கொண்டேயிருக்கும்.

குறிப்புரை :

`அவ் இருப்பு எல்லையில் இன்பத்திற்குத் தடையாகும்` என்பது கருத்து. ``பற்றறப் பற்ற`` - என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரை கூறப்பட்டது.
``பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு``l
எனத் திருவள்ளுவரும்,
``பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றில், அப்
பற்றை அறுபர்என் றுந்தீபற``3
எனத் திருவுந்தியார் ஆசிரியரும் அருளிச் செய்தமை காண்க.
இன்னும் திருவுந்தியார் ஆசிரியர்,
``பழக்கந் தவிரப் பழகுவ தன்றி,
உழப்புவ தென்பெண்ணே, உந்திபற;
ஒருபொரு ளாலேயென் றுந்திபற``*
என்றமையும் அறியற்பாற்று. பாசம் - பாச வாசனை. ஒன்று - சிறிது, அஃது அவ்வளவிற்றாகிய பாச வாசனையைக் குறித்தது. `ஒன்றும்` என உம்மை விரிப்பின், அது நின்மலாவத்தையைப் பயனிலதாகச் செய்தல் உணர்க. ``பற்று`` என்றதை, `குறிகளும் அடையாளமும் கோயிலும்`3 ஆக உரைததாரும் உளர்.
இதனால். பராவத்தையிலும் அதீதம் இன்றியமையாதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

பொழிப்புரை :

பல சமயத்தாராலும், `எத்தன்மைத்து` என ஆராயப் படுவதாய், அருவமாய் நிற்கும்மாயை, சிவத்திற்கு வேறும் ஆகாமல், ஒன்றும் ஆகாமல் இடைப்பட்டதாய் இருக்கும். அதனால், வாக்கு மனங்கள் நீங்கிய பின்பும் வாசனை யளவாய் நிற்கின்ற அந்த மாயை அறவே நீங்கினால், அறிவு முழுத் தூய்மை அடைந்து, அதனால் சிவானந்த மயமாகிப் பின்பு அந்தச் சிவானந்தத்தால் விழுங்கப்பட்ட பொருளாகிவிடும்.

குறிப்புரை :

`பொய்` என்றது கண்ணுக்குப் புலனாகாமையே. அகம் புறமாய் நிற்றல், சிவத்தில் வியாப்பியமாய உயிரில் வியாத்தியாய் நிற்றல், `வாக்கு, மனம்` என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்து8 உரையிற் காண்க. வேய்தல் - மூடுதல்; அகப் படுத்தல். `விளைவது` என எதிர்காலத்தில் கூறற்பாலது, துணிவு பற்றி, ``விளைந்தது`` என இறந்த காலமாகக் கூறப்பட்டது.
இதனால், பராவத்தையில் அதீதத்தில் செல்லவேண்டுதற்குக் காரணம் கூரப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்(கு)
உரிய வினைகள்நின்(று) ஓலமிட் டன்றே.

பொழிப்புரை :

பர துரியமாகிய குதிரைமேல் ஏறிய ஆன்மா, அதனை விடுத்து, அதற்குமேல் உள்ள அதீதமாகிய புலிக்குள் தன்னைப் புகவிடுமாயின், புலியால் கௌவிக் கொள்ளப்பட்ட ஆட்டினை நரிகள் பற்ற மாட்டாது அஞ்சி ஒடிவிடுதல் போல, அந்த ஆன்மாவை மாயாகாரியங்களாகிய தத்துவங்கள் அணுகமாட்டாது நீங்கிவிடும். (அஃதாவது, `செயல் இழந்துவிடும்` என்பதாம்) மாயா கருவிகள் நீங்கினமையால் பிராரத்த கன்மம் வந்து பற்றமாட்டாது ஒழியும்.

குறிப்புரை :

`விசாக்கிரம், வியாக்கிரம்` என்னும் சொல் ஒற்றுமைப் பற்றி பராவத்தையில் முடிவான அதீதத்தைப் புலியாக உருவகிக் கின்றவர், அதற்கேற்பத் தத்துவங்களை நரிகளாக உருவகித்தார். அத னானே ஆன்மா ஆடாக உருவகிக்கப்பட்டதும் விளங்கும். `ஆட்டை உண்பன நரியும், புலியும் ஆயினும், புலிபற்றிக் கொண்ட ஆட்டினை நரி அணுகமாட்டாது. அதுபோல ஆன்மாவை உட் கொள்வன மாயா கருவிகளும், சிவமும். ஆயினும் சிவத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட ஆன்மாவை மாயா கருவிகள் அணுக மாட்டா` என்பது நயம்.
நாதர் - தலைவர். இங்கு, ஞானத்தலைவர். உரியவினை, முகந்து கொண்ட பிராரத்த வினை. ஓலமிடுதல் - அஞ்சி, தீங்கு செய்யாதிருக்கும்படி முறையிடுதல். `ஓலமிட்டன்று` என்றது, `ஈயென இரத்தல் இழிந்தன்று`* என்பது போல, `ஓலமிட்டது` என்பதாம். இது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், பர துரியாதீதத்தை அடைந்த ஆன்மாவை மாயை கன்மங்கள் தொடராமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில்
மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

பொழிப்புரை :

இங்குச் சொல்லிவாராநின்ற இந்தச் சாக்கிரமுதலிய அவத்தைகளில் துரியத்தை அடைந்த போதிலும் சிவன் அனைத்தும் கடந்த வெற்ற வெளியான அதீத நிலையில் இருப்பவன் ஆதலால், அவ்விடத்திலே உயிரைக் கூட இருப்பான். (துரியத்தில் வந்துகூட மாட்டான்.) அவன் உயிரைக் கூடினால்தான் உயிர்க்கு உலக உணர்வு மறையும். அப்பொழுது அது சிவ உணர்வு ஒன்றேயுடையதாய்ச் சிவமாகும். (எனவே `உயிர் அதீத நிலையை அடைதல் வேண்டும்` என்பதாம்.)

குறிப்புரை :

அதிகாரம் `பராவத்தை` ஆதலின், பராவத்தையை `நின்ற இச் சாக்கிரம்` என்றார். சாக்கிர நீள் துரியம் - சாக்கிரத்தினின்று நீண்டுசெல்ல உளதாகின்றதுரியம். மன்றல் - அம்பலவன். அம்பலம் - வெற்ற வெளி. அது அனைத்தும் கடந்த அதீத நிலையைக் குறித்தது. `மாயை` என்பது காரிய ஆகுபெயராய் உலகத்தை உணர்த்தி, இருமடி யாகுபெயராய் உலக உணர்வை உணர்த்திற்று. கூடுதல், புணர்தல் முதலிய சொற்களாற் கூறாமல், `மணம்` என்னும் சொல்லாற் கூறினமையால், அது, தலைவன் தலைவியை ஈருடல் ஓருடலாக முயங்குதல் போல இரண்டறக் கலத்தலைக் குறித்தது. எனவே, `துரியம் முதலிய பிற நிலைகளில் சிவன் உயிரோடு, கேளிர், கிளைஞர் முதலியவரோடு தலைப்பெய்தல் போலத் தலைப்பெய்திருப் பானாயினும் இரண்டறக் கலத்தல் அதீதநிலையில்தான் என்றதாயிற்று.
``அவன் இவன் ஆனது அவன் அருளால் அன்றி,
இவன் அவன் ஆகான் என் றுந்தீபற``3
என்பர் ஆதலால், `உயிரை வந்து மணப்பவன் சிவனே` எனக் கூறினார். அன்றே - அப்பொழுதே.
இதனால், `சிவன் தன்னிலையில் நிற்பது சுத்த துரியாதீத நிலை` என்பது கூறும் முகத்தால், `அதனை ஆன்மா அடைதலே அது பேறு பெறும் நிலையாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை யீடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதல லாதே.

பொழிப்புரை :

சிவத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையே நிற்பதாகிய மாயை தனது நிலையினின்று விருத்திப் படுமாயின் ஆணவ இருளில் உள்ள உயிர்கட்கு விளக்குப் போல உதவும். அதனாலேயே மத்தியாலவத்தை நிகழும் துரியத்தில் ஆன்மாப் பாசத்தினின்றும் நீங்காது அழுந்திநிற்கும். (ஆதலின் அஃது ஆன்மா அடைதற்குரிய துரியம் அன்று.) அஃது அடைதற்குரிய துரியம் பரதுரியமே. அதனை அடைந்தால் அது பாசங்கள் நீங்கித் தூயதாம்.

குறிப்புரை :

`இடையீடான மாயை இருந்த இடத்து விரிந்திடின் விளக்காய்ச் சாக்கிரம் மேவும்` என மாற்றி இதன் பின் ஈற்றடியைக் கூட்டுக. `ஆய்` என்பதை ஆக` எனத் திரிக்க. `தெரிந்த துரியம்` என்பது, `எல்லார்க்கும் அனுபவமாய் அறியப்பட்டதுரியம்` என மத்தியாலவத்தைத் துரியத்தைக் குறித்தது. `தீது அகலாது` என்றதனால் அது பொருந்தி தாத் துரியம் ஆயினமையின், `பொருந்துந் துரியம்` என்றது பரதுரியம் ஆயிற்று. தான் ஆதல், ஆன்மாப் பாசமாய் இருந்த நிலையின் நீங்கித் தானேயாய் இருத்தல்.
இதனால், `துரியம்` என்பது உயர்வுடையது போலக் கூறப்பட்டாலும், உண்மையில் உயர்ந்த துரியம் பர துரியமே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே.

பொழிப்புரை :

மாணவனே, நீ கீழாலவத்தை மத்தியாலவத்தை -களில் நின்ற பொழுது உன்னையே நீ, `யார்` என்று அறிந்து கொள்ளாது, உடம்பையே, `நான்` என்று சொல்லிக் கொண்டிருந்தாய். பின்பு, நின்மலாவத்தையை அடைந்தபொழுது உன்னை நீ, `சடமாகிய உடம்பின் வேறாகிய சித்துப் பொருள்` என அறிந்து, அதன்கண் துரிய நிலையிலே சிவன் உன்னையே தானாகக் கொண்டு நிற்கும்படி அவனது அருள் வழியில் நின்றாய், எனினும் ஆன்மாத் தன்னையும், தலைவனையும் அறிந்து அவனது அருள் வழியில் நின்ற அளவிலே அதற்குப் பிறவி நீங்கி விடாது. `சிவன் எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்து நின்றானாயினும், அவனது உண்மை நிலை பிறிதொன் றோடும் கூடாது அனைத்தினும் வேறாய் நிற்கு தூய்மையே` என்பதை அறிந்து, அவனை அந்நிலையிலே சென்று தலைப்படமுயல்.

குறிப்புரை :

`அம்முயற்சியாவது, நின்மலாவத்தையையும் கடந்து பராவத்தையை அடைய முயலுதல்` - என்பது குறிப்பு, ஈற்றில் தந்துரைத்தது இசையெச்சம். `முள்` என்றது, `ஞானவத்தைக்கு முன்` என்றது. ஆகையால் அது, கீழாலவத்தை மத்தியாலவத்தைகளையும், அறிதல் ஞானத்தினால் ஆதலின், `அறிந்து` என்றது, ஞானாவத்தை யாகிய நின்மலாவத்தையையும் குறித்தன. உறுதற்கு வினை முதல் வரு வித்துக் கொள்க. `அமலன்` என்றது, `சகலாவத்தைக்கு அப்பால் நிற்பவன்` என்பதைக் குறிப்பினால் உணர்த்தியது. எனவே, சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையும் கடந்து, பராவத்தையில் செல்லுதல் வேணடும்` என்பது போந்தது. அன்ன வியாத்தன் - அத்தன்மை யாதான ஒரு நிறைவினையுடையவன்.
இதனால், நின்மலாவத்தையும் சகலத்தில் சுத்தமேயாக, பராவத்தையே உண்மைச் சுத்தம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கருவரம பாகிய காயத் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

பொழிப்புரை :

கருவிற்கு உட்படுதலையுடைய உடம்பில் நிகழ் வதாகிய துரியத்தில் நீயும், சிவனும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டீர்கள். (அது போதாது; ஏனெனில்,) பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழல்கின்றவர்கள். ஞான குருவின் அருளைப் பெற்றுச் சிவனும், தாமும் வேறறக் கலந்த பின்பே தாம் சிவனின் வேறாய சீவராய் நில்லாது. சிவமாகி நிற்பர்.

குறிப்புரை :

`அங்ஙனம் நின்றவரே பிறப்பிறப்பு அற்றவராவர்` என்பது குறிப்பெச்சம். `துரியத்தில்` - ஏழாவது விரிக்க. `துரியத்து` எனப் பாடம் ஓதுதலும் ஆம். கூடுதலுக்குச் செயப்படுபொருளாகிய `சிவனை` என்பது வருவிக்க. `கண்டீர்` என்றதனால், அது சிவ தரிசனமும், `கூடிய` என்றதனால் அது சிவயோகமும் ஆயின. சிவ தரிசனமும் குருவருளால் பெறற்பாலதே யாயினும் பிறப்பறுதியைத் தரும் சிறப்புப் பற்றிச் சிவயோகமே குருவருளால் பெறப்படுவது போலக் கூறப்பட்டது. சிவதரிசனத்தளவில் நின்றவர் பிறப்பெய்து தலை நோக்கிச் சிவயோகத்தில் நின்றவர் பிறப்பெய்துதல் சிறு பான்மையாதலின், அவர்களைப் பிறப்பறப்பு அற்றவராகக் கூறினார். அங்ஙனம் கொள்ளாக்கால் மேல், ``தன்னையறிந்தும் பிறவி தணவாது`` என்றதனோடு முரணும் என்க. சிவயோகமே துரியமாக, சிவதரிசனம் சுழுத்தியே யாயினும் அது துரியத்தின் தோற்றுவாயாதல் பற்றி அதனையும் `துரியம்` என்றார். `நின்றார்` என்பது, துணிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாக வந்த கால வழுவமைதி.
இதனால், `தம்மை உணர்ந்து தலைவனை உணர்தலாகிய நின்மலாவத்தைய அடைதற்குக் குருவருள் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றால் நின்மலாவத்தையை அடைந்து பராவத்தையை எய்துதல் கூடும்` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 13

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை விற்பரா தீதம். சுழுத்தி
பணியில் பாதுரி யம்பரம் ஆமே.

பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

பொழிப்புரை :

(`மேலாலவத்தை` என்றும், சகலத்தில் `சுத்தா வத்தை` என்றும் கீழ் உள்ளவைகளை நோக்கிச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற யோகாவத்தைகள் அது காரணம் பற்றியே `துரியம்` எனப்படும். (துரியம் - மேற்பட்டது) ஆயினும், அதில் சீவத் தன்மை நீங்காமையால் அவை சீவதுரியமேயாம். அவையே இங்கு `அணுவின் துரியம்` என்றும் `அணுவசைவு` என்றும் சொல்லப்படுகின்றன.
சீவ துரியமாகிய யோகாவத்தையில் உள்ள, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன தாழ்வுடையனவே - என அறியப்பட்டால், அதன் பின்பே பராவத்தை உளதாகும். அந்தப் பராவத்தையே அவத்தைகளில் எல்லாம் மேலான அவத்தை.

குறிப்புரை :

`ஆகவே - மேலாலவத்தை - எனக் கூறப்படுதலே பற்றி அவற்றையே `பராவத்தை` - என மயங்கற்க` என்பதாம்.
`யோகில் - தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்து பின் சனனம் சாரும்`
-சுபக்கம் சூ.5.34.
என்னும் சிவஞான சித்தி மொழி மேலேயும் எடுத்துக்காட்டப் பட்டது. செய்யுள் நோக்கிச் சுழுத்தி இறுதியில் வைக்கப்பட்டது. பராதீதம் - பரமும் அதீதமும்; உம்மைத் தொகை. இதன் பின்னும், `சுழுத்தி` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. `பரம்` என்றது துரியத்தை. பணிதல் - தாழ்தல். அஃது இங்கு அறிபவனது அறிவில் அத்தன்மை யதாய் விளங்குதலைக் குறித்தது.
இதனால், பராவத்தை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `பரதுரியத்து நனவும்` என்னும் பாடல் மிகையாகத் தெரிகின்றது)

பண் :

பாடல் எண் : 14

பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவு சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே
தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.

பொழிப்புரை :

பராவத்தையில் சாக்கிரம் சீவன் முத்தி அதில் உலக அனுபவம் சிவானுபவமாய் நிகழும், (அதுவே,
`பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`l
எனக் கூறப்பட்டது.) அந்த அனுபவம் அதிகார முத்தியில் பழக்க வாசனையாய் நிகழும். அதுவே பர சொப்பனம். போக முத்தியில் அந்த வாசனையும் தாக்கமாட்டாது நீங்கும். அதுவே பர சுழுத்தி. (இதில் சுத்த தத்துவ போகத்தில் இச்சையுண்டாம்) அந்த இச்சையும், அதனால் வரும் அந்தப் போகமும் அடங்கி நிற்றலே `உபசாந்தம்` எனப்படும். அது பர துரியம். அதை அடைந்தவன் மேல்நிலையை அடைந்தவனாவன். `சிவ துரியம்` எனப்படுகின்ற நின்மலத் துரியத்தை அடைந்தவனும் இந்நிலையை அடைந்தே உயர்வு பெறுதற்குரியன்.

குறிப்புரை :

காயம் இருந்து நீங்கின பாத்திரத்தில் அதன் வாசனை பதித்திருத்தல் போன்ற பதிவை, `திரம்` என்றார். திரம் - நிலைப்பு. `கனவில் வாசனை உண்டாம்` என்றதனால், நனவில் அனுபவந் உண்மை பெறப்பட்டது. வாசனை தாக்காத உறுதி. `உறும்` எனப் பட்டது. `உரம் சிறந்த சுழுத்தியாம்` என்க. முற்றல் - முதிர்தல். துறவு - கீழ் நிலைகளின் நீங்குதல்; அது துரியம். `சிவ துரியத்தனும் ஆம்` என்பது `ஒரு தலையாக ஆவன்` என்றதாம். உபசாந்தம் துரியம் ஆகவே, இன்பம் துரியாதீதம் ஆயிற்று. ஆகவே, `முடிநிலை உயர்வு பராவத்தையே` என்பது பெறப்பட்டது.
இதனால், பராவத்தைகளின் இயல்பும், `அவைகளே முடிநிலை உயர்வு` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

சீவன் துரியம் முதலாகச் சீராக
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து)
ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

பொழிப்புரை :

`சிவதுரியம்` எனப்படுவது, யோகாவத்தையில் இமயம் முதலிய எட்டில் ஏழாவதாகிய `தியானம்` என்பது. `சிவ துரியம்` எனப்படுவது, தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம். இவ்வொன்பதில் ஆன்ம சுத்தி சிவ தரிசன சிவயோகங்களில் அடங்கிவிடுதலால், எஞ்சிய எட்டோடு, யோகாவத்தையில் `தியானம் சமாதி` - என்னும் இரண்டைக் கூட்ட, சீவதுரியம் முதலாகச் சிவ துரியம் ஈறாக உள்ள அவத்தைகள் பத்தாம். ஆகவே, இந்தப் பத்த வத்தைகளையும் கடந்து, சிவானந்தந் தருவதாகிய உண்மைச் சுத்தா வத்தை அடைந்தவனே, தான் முன்பு கட்டுண்டிருந்த அனைத்துத் தத்துவங்களினின்றும் நீங்கினவனாவன்.

குறிப்புரை :

`மேலாலவத்தை` எனப்படுதலால் யோகாவத்தையில் நிகழும் துரியம் சகலத்திற் சுத்தமே யாகையால், அது சீவ துரியமாம். எவ்வாறெனில், சகலத்தில் நிற்கும் உயிரே சிவன் ஆகலின். இனி- ஞானாவத்தையும் சகலத்தில் சுத்தமாயினும் அது ஞான குருவின் அருளால் ஞானத்தைப் பெற்றபின் அதனை முற்றுவிக்கும் நிலை யாதலின் அதன்கண் நிகழும் துரியம் சிவதுரியமாம். தசகாரியத் துள்ளும் `சிவயோகம்` என்றே சொல்லப்படுதல் நினைக்கத் தக்கது. என்னும், உண்மைச் சுத்தாவத்தையாகிய முத்தி வகைகளே பரா வத்தை யாதலின், அதன்கண் நிகழும் துரியம் பர துரியமாம். அதன் பின் நிகழும் அதீதமே சாயுச்சிய முத்தியாகலின், அந்நிலையில் விளையும் ஆனந்தமே முடிநிலைப் பேரானந்தம் ஆதலின் அது பரானந்தமாகும். பரானந்தத்தை அடைந்தவன் பரானந்தி. உண்மைச் சுத்தத்தை, உண்மை` என்றும், `அனைத்துத் தத்துவங்களும்` எனக் கூற வந்தவர் அதனை வேதாந்திகளும் உணரும் வகையில், `மேவிய நாலேழ்விடுத்து நின்றான்` என்றும் கூறினார். `அந்தம்` என்பதன் பின்னும் ஆக்கம் வருவித்து, `சீவன் துரியம் முதலாகச் சிவன் துரியம் அந்தமாகச் சீராக ஆவ அவத்தை பத்து` என முடிக்க.
இதனால், யோகாவத்தை, தசகாரியம் இவற்றை வைத்து நோக்கின், சுத்தாவத்தைகள் பலவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.

பொழிப்புரை :

`பரம்` என்பது `மேல்` என்னும் பொருளது ஆதலின், `எங்கும் பரன் என்று சொல்லப்படுகின்ற சிவன், மேலானவன்` - என்பது போதரும். இனி, `பரமம்` என்பது பரத்தினும் உயர்ந்த மேன்மையைக் குறிக்கும். ஆகவே, `பரம்பரன்` என்று சொல்லப்படுகின்ற சிவனே மேலான சிவன். அவனைத் தலைப்படும சீவன் முத்திநிலையே பரசாக்கிரம். (அதில் பிராரத்தம் உயிரைத் தாக்காவிடினும் உடலூழாய் வந்து போகும்.) `பர சொப்பனம்` எனப் படுகின்ற அதிகார முத்தியில் பிராரத்துவத் தொடர்பு உண்டாகாது. பர சுழுத்தியாகிய போக முத்தியிலும், பர துரியமாகிய இலய முத்தியிலும் ஞானம் முற்றி நிற்கும். பரதுரியாதீதமாகிய பரமுத்தியில் சிவானந்தப் பெருக்கு உளதாம். இவையே உண்மைச் சுத்தாவத்தைகளாம்.

குறிப்புரை :

`பரமம் பரத்தின் மேலாம்` என இயைக்க. `பரன்` என்பதை `சொரூப சிவன்` என்றும், `சிவன்` என்பதை தடத்த சிவன் என்றும் நாயனார் கொள்கின்றார். `பர நனவாக` என்பதோடும் `இடர்` என்பதைக் கூட்டி. `பரநனவில் (இடர்) ஆக விரிந்த கனா இடர் வீட்டும்` என முடிக்க. விரிந்த கனா பர சொப்பனம். எனவே, `சுழுனை` என்றதும் பர சுழுத்தியே ஆயிற்று உயிர் ஆனந்தியாதல் பரா தீதத்தில் ஆதலின், அதற்கு முன்னேயுள்ள துரியமும், `உரந்தகும்` என்றதிலே அடங்கிற்று. அனைத்தையும் `உண்மை` என ஒன்றாய் அடக்கினமையின், `தானே` என ஒருமை அசையே கூறினார்.
இதனால், பராவத்தைகளே உண்மைச் சுத்தாவத்தைகள் ஆமாறு காரண வகையாலும், பயன் வகையாலும் வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 17

சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅமர் ஆபதித்
தேவாம் உருத்திரன் ஈசன்ஆம் காணிலே.

பொழிப்புரை :

தத்துவங்களை ஆராயுமிடத்து, எல்லா உயிர் களும் முடிவில் அடையும் இடமாய் உள்ள பரமசிவனும், பரா சத்தியும் முதற்கண் முறையே பர நாத மூர்த்தியும் பரவிந்து சத்தியுமாய் நிற்க பின்பு பரவிந்து சத்தியினின்று அபர நாத மூர்த்தியும், அவனிடத் தினின்று அபரவிந்து சத்தியும் தோன்ற, அதன்பின் அபரவிந்து சத்தியினின்று சதாசிவன், மகேசுரன், உரூத்திரன், மால், அயன், என்போர் முறையே ஒருவரினின்று மற்றொருவர் தோன்றுவர்.

குறிப்புரை :

`இங்ஙனம் பரமசிவனும், பராசத்தியும் ஆகிய அவர்களே தடத்த நிலையில் பர நாத மூர்த்தி, பர விந்துசத்தி முதலாகிய ஒன்பது பேதங்களாய் நிற்பர்` என்றபடி இதனை,
``சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்தி ரன்றான், மால், அயன் - ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; அருவம் நால்; இங்கு உருவம் நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்``3
என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. இச் செய்யுளில் பரநாத மூர்த்தியே `சிவம்` என்றும், பர விந்து சத்தியே `சத்தி` என்றும் சொல்லப் பட்டனர். எனவே, `நாதம், விந்து` எனப் பட்டவை அபர நாதமு, அபர விந்துவும் ஆயின. இம் மந்திரத்துள் `பரநாதம்` என்றதனானே அபர நாதமும், `பரவிந்து` என்றதனானே அபர விந்துவும் பெறவைக்கப் பட்டன. `காணில்` என்பதை முதலில் வைத்து, `ஓங்கி` என்பதை `ஓங்க` எனத்திரித்து, `ஈசன் அவன்பால் ஆய், அரி, பிரமன், அமர் ஆபதித் தேவாம் உருத்திரன் ஆம்` என இயைத்து முடிக்க. செய்யுள் பற்றி இங்ஙனம் முறை பிறழவும், சொற் சுருங்கவும் ஓதினார். ஈசன் - மகேசுரன். `ஆய்` என்பதனையும் `ஆக` எனத் திரிக்க. `மகேசுரன், சதா சிவன்பால் ஆவன்` என்றகுறிப்பானே, `உருத்திரன் மகேசுரன்பால் ஆம்` என்பது பெறப்பட்டது `அரி, பிரமன்` என்பது செவ்வெண். அதன்பின் தொக்கு நின்ற `இவ்விருவரும்` என்னும் எழுவாய் `ஆபதி` என்பதில் ஆதலாகிய பயனிலையோடு முடிந்தன. `அமர்` என்னும் முதனிலையே `அமர்ந்து` என எச்சப்பொருள். அமர்ந்து ஆதலாவது. ஒடுங்கியிருந்து தோன்றுதல். `ஆ பதி` ஏதுப் பொருட்டாய வினைத்தொகை. பதி - தலைவன். பதித் தேவாம் உருத்திரன்` என்பது, `பதியாகிய தேவனாகிய உருத்திரன்` எனப் பல்பெயர் ஒட்டுப் பண்புத் தொகை. இந்திரனுக்கு இங்கு இடம் இன்மையால் `அமராபதி` என்பதை இந்திரனது நகரமாகக் கொள்ளுதற்கு யாதும் இயைபில்லை. `அமர்ந்தாபதி` என்றே பாடம் ஓதுல் சிறக்கும்.
சிவனது இந்த ஒன்பது நிலைகளும் தடத்த நிலைகளேயாகும். இவை `நவந்தரு பேதம்` - எனப்படுகின்றன. இவைகளை நாயனார் இங்குக் கூறியதற்குக் காரணம், `முத்தி வகையாகிய பராவத்தையை அடைந்தோர் படிமுறையானே கீழ் இருந்து மேல் உள்ள இந்நிலைகளை யெல்லாம் அடைவர்` என்பதும், `அந்நிலையில் அவர்களும் இங்குக் கூறிய பெயர்களையெல்லாம் பெறுவர்` என்பது உணர்த்தற் பொருட்டாம். சிவனது நிலைகள் `சம்பு பட்சம்` என்றும், பராவத்தையை எய்தினோரது நிலைகள் `அணுபட்சம்` என்றும் சொல்லப்படும்.
மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் கூறியபடி கீழ் உள்ளவை நான்கும் உருவம். மேல் உள்ளவை நான்கும் அருவம். இடையில் உள்ள ஒன்றும் அருவுருவம். அருவம் இலயம், அரு வுருவம் போகம். உருவம் அதிகாரம். இந்த மூன்றும் இறை யவத்தைகளாகும். மேல் எல்லாம் கூறியன உயிர் அவத்தைகள். அருவம், `நிட்களம்` என்றும், உருவம், `சகளம்` என்றும், அருவுருவம் `நிட்களசகளம்` அல்லது `சகள நிட்களம்` என்றும் சொல்லப்படும். இறையவத்தை மூன்று பற்றிய முத்திகளே, `அதிகார முத்தி, போக முத்தி, இலயமுத்தி` எனக் கூறப்படுகின்றன. இம்மூன்றும் `அபரமூத்தி` என்றும் சொல்லப்படும். இவையெல்லாம் இம்மந்திரத்தின் வழிப் பெறப்படும். இதனானே இது, மேல், `சிவமாம் பரத்தினில் சத்தி`* என்றதற்குப்பின் `கூறியது கூறல்` ஆகாமை உணர்க.
இதனால், `பராவத்தை சாக்கிரம் முதலியவற்றால் ஐந்தாதலே யன்றிப் பிறவாற்றால் பலவாதலும் உண்டு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கலப்பறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்பறி யார்உடலோடுயிர் தன்னை
அறப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல கடலது வாமே.

பொழிப்புரை :

சிவன் தமது அறிவினுள் அறிவாய்க் கலந்திருத் தலையும், `பூவுலகம் முழுதும் ஒரு காலத்தில் முற்று அழிந்தொழியும்` என்பதையும் அறியாதமடவோர், உடலோடு கலப்பினால் ஒன்றாய் இருக்கின்ற உயிர் பொருளால் வேறாதலை உணர்ந்து உடம்பையே தாமாகப் பற்றி நின்று, அதனால் இவ்வுலகத்திற்றானே அருளரசு ஆள மாட்டுவாரல்லர். அவர் அத்தகைய நிலையை அடைய வேண்டின், அவர்கள் குறிக்கொளத் தக்கது சிவனது தடத்தத் திருமேனிகளை எழுதி வைக்கும் உள்ளமாகிய கிழியேயாம்.

குறிப்புரை :

``உயிரா வணம் இருந்து உற்றுநோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி,
உயிரா வனஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி``*
என அப்பரும் அருளிச் செய்தார். அவ்வருள்மொழியால், அஃது யோகப் பயிற்சியானே கூடும்` என்பது விளங்கும்.
`கடல் சூழ் உலகு ஏழு` ஆவன, நாவலம் பொழில் முதலிய ஏழு பொழில்கள். தாம் உள்ள இடத்து உள்ளவர்களை உள்ளத்துட் கொண்டே ஓதுகின்றார் ஆதலின், பூவுலகத்தின் நிலையாமையையே எடுத்துக் கூறினார். பூவுலகமும் ஏழ்கடலும் ஏழ்பொழிலுமாய் விரிந்து கிடத்தலின், `இவை முழுதும் எஞ்சாது அழிந்தொழிதலும் உளதாகுமோ` என மயங்குவர் என்றற்கு ``கடல் சூழ் உலகேழும் உலப் பறியாது`` என்றார். பறிதல் - நீங்குதல். `அலப்பறிந்து` என்பது பாடம் அன்று. `அறப்பிரிந்து` என ஓதலும் ஆம். இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், `பராவத்தை நிலையை அடைதற்கு அந்நிலையில் நிற்கும் சிவனைச் சகலாவத்தையிற்றானே பாவனை முறையால் வழிபடுதல் வழியாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியின் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற ஞானமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

பொழிப்புரை :

சிறு தவங்களையெல்லாம் செய்து அலுத்துவிட்ட பின்பு நல்லறிவு பிறந்து செய்கின்ற பெருந்தவந்தின் வழியாக உயிர்களைப் பராவத்தையில் சேர்க்கின்ற தனது இயல்பை ஒருவன் அறிந்து தன்னை அடைய விரும்பினால் எங்கள் இறைவனாகிய சிவன் உடனே அவன் முன் தோன்றுவான். ஏனெனில் அவன் பெருங் கருணையாளன். அம்முறையில் யான் எனது பழைய சிற்றறிவு முடியும் காலத்தையும் அறிந்தேன் அதனால் சிவனது பேரறிவாலே என்னையும் அறிந்தேன். யான் இது பொழுது இன்புற்றிருக்குமாறு இவ்வாறாம்.

குறிப்புரை :

பெருந்தவம், சரியை கிரியா யோகங்கள், இவற்றை பின்னையறிவனவாகக் கூறினமையால், முன்பு சிறு தவங்களைச் செய்தமை விளங்கிற்று. அவை உலகப் பயன்களை விரும்பிச் செய்தன வாகும். அப்பயன்கள் யாவும் சில காலமே யிருந்து அழிந்தொழிதலை உணர்ந்தமையால், அவற்றைத்தரும் தவங்களைச் செய்வதில் அலுப்பு உண்டாயிற்று. முன்மந்திரத்தில் சொல்லியபடி இப்பெருந்தவத்தால் சிவன் உயிர்களைப் பராவத்தையில் சேர்த்தல் பெறப்பட்டது. மோனை நயம் கெடுதலையும் நோக்காது, `உண்மை செய்து அன்னை அறியின்` எனப் பிரித்து, `சத்தி நிபோதம் வாய்க்கின்` எனப் பொருள் உரைப் பார்க்கு சத்தி நிபாதத்தின் பின்னர் நிகழ்வதாகிய பெருந்தவம் சத்தி நிபாதத்திற்கு முன் நிகழ்வதாய் முடிதலை நோக்குக. சிற்றறிவு - ஏக தேச ஞானம்; அஃதாவது சில பொருள்களையே அறிதல். அது முடியுங் காலம், அவ்வாறு அறிந்து வருதலில் உவர்ப்புத் தோன்றும் காலம். `தன்னாலே தந்தால் தன்னையும் தானே காணும்` என்பவாகலின், `என்னையறியலுற்று` என்றது சிவ ஞானத்தினால் ஆயிற்று. இவ்வாற்றால் பராவத்தையைத் தலைப் பட்டமையால் இன்புற்றிருக்க இயன்றது.
இதனால், முன் மந்திரத்தில், ``குறிப்பது கோல மடலது வாமே`` எனக் கூறிய அந்நெறியிலே நின்றவழி, முறையாக விளையும் பயன்களின் முடிநிலைப் பயனாகப் பராவத்தையும் அதன்கண் பரானந்தமும் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.

பொழிப்புரை :

பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணி கலன்கள் தம்மிடத்துப் பொன் உள்ளதாயினும் அதனை உரைச் செய்யாது மறைத்துத் தமது அழகினையே உணரப் பண்ணி மக்களை மயக்குகின்றது. ஆயினும் அந்த அணிகலன்களின் செயற்கை நலன்களை அழித்துவிட்டால், அணிகலனாய் இருந்த பொருள்கள் அழியாதிருப்பினும் அவை பொன்னாகி விட்ட அதனுள்ளே மறைந்து விடும். அவைபோல, சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற ஆன்மாவைப் பெத்தகாலத்தில் அதனுடைய தனு கரணங்கள் தம் வயப்படுத்தித் தம்மயம் ஆகச் செய்து, ஆன்மாத் தன்னைத் தான் அறியாதபடி மறைத்து அதனைத் தாமென்றே மயங்கிச் செய்துவிடுகின்றன. ஆயினும், ஆன்மாக் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுதலால், ஆன்மாவில் வியாப்பியமாய்த் தமக்கெனச் சுதந்திரமின்றி ஆன்மாவின் வழியே செயற்படுகின்ற தனு கரணங்கள் தாம் அழிந் தொழியாது ஆவ்வான்மாவின் வயப்பட்டு முன்போல மருள் வழியில் இயங்காமல், ஆன்மாவைப் போலவே அருள் வழியில் இயங்கும்.

குறிப்புரை :

இவையிரண்டிற்கும் காரணம், ஆன்மாவின் அபக்குவமும், பக்குவமுமேயாகும். `ஆன்மா அபக்குவ காலத்தில் மாயை கன்மங்களின் வழிபட்டுச் சகலாவத்தையையும், பக்குவ காலத் -தில் அதனின் நீங்கி நின்மலாவத்தையையும், வீடுபெறும் காலத்தில் பராவத்தையையும் அடையும்` என்பது இதனால் ஆன்மாவின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இஃது எடுத்துக் காட்டுவமை.

பண் :

பாடல் எண் : 21

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.

பொழிப்புரை :

மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மாவின் பெத்த காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுவதால், உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும் பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும்.

குறிப்புரை :

இவற்றிற்கும் காரணமும், மேற்கூறிய அபக்குவ பக்குவங்களே என்பது வெளிப்படை.
இதனால், மேற்கூறிய அந்தப் பொருளே பரம் பொருளின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இதுவும் அவ்வுவமை.

பண் :

பாடல் எண் : 22

ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

பொழிப்புரை :

பெத்தம், முத்தி இரண்டும் சிவன் செயலே யாகலின் அது பற்றி அவையிரண்டும் முறையே, `ஊனநடனம், ஞான நடனம்` எனப்படும். ஊன நடனத்தில் சிவனது சத்திதிரோதான சத்தியாயும், ஞானநடனத்தில் சிவனது சத்தி அருட்சத்தியாயும் செயற்படும். சிவசத்தி பொருளால் ஒன்றேயாயினும், செயல் பற்றி இவ்வாறு இரண்டாக வகுத்து விளக்கப்படுகின்றது. திரோதான சத்தி மறைத்தலையும், அருட் சத்தி அருளலையும் செய்யும்.
உமாபதி தேவர், திருவைந்தெழுத்தை `நமசிவாய` எனத் தூலமாகக் கொண்டாலும், `சிவாயநம` எனச் சூக்குமமாகக் கொண்டாலும்,
``ஊன நடனம் ஒருபால்; ஒருபால்ஆம்
ஞானநடம்; தான்நடுவே நாடு``l
என அருளிச் செய்தார். தான் - சீவன்; அல்லது ஆன்மா. `அது நடுவே உள்ளது` எனக் கூறப்பட்டமையால், யகாரம் பசு வெழுத்தாயிற்று.
`உண்மை விளக்க` - நூல் திருவைந்தெழுத்தை, `சிவாயநம` எனச் சூக்குமமாக எடுத்துக் கொண்டு,
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன் எழுத்து ஐந்தின் அடைவாம்``*
எனக் கூறிற்று. ஆகவே, `சிகாரம் சிவன்; வகாரம் அருட்சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதான சத்தி, மகாரம் ஆணவ மலம்` என்ற தாயிற்று. மாயை கன்மங்கள் ஆணவ மலம் போல உயிருக்கு இயற்கை யாகாது, திரோதான சத்தியாலே செயற்யைாகக் கூட்டப்பட்டு, ஆணவ மலத்தின் பரிபாகத்திற்குத் தக்கவாறு அந்தத் திரோதான சத்தியாலே செயற்படுத்தப்படுவதால், அவை வேறு நில்லாது, திரோதான சத்தியுள் அடங்குகின்றன. `மாதவச் சிவஞான யோகி கட்கும் இதுவே கருத்து` என்பது அவரது உரைகளால் விளங்கும். இஃது அறியாதார், `மகாரம் மாயையைக் குறிக்கும்` என்பர். `அவ்வாறாயின் மூல மலமாகிய ஆணவத்தைக் குறிப்பது எது` என அவர் நோக்காமை யறிக.
உமாபதி தேவரும் ஆன்மாவை நடுவாக வைத்து,
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத், திரோதம், மாசு, அருள், சிவம்``l என முதலில் முன் உள்ள எழுத்து பாச எழுத்து இரண்டையும், பின்பு பின் உள்ள பதியெழுத்து எழுத்து இரண்டையும் குறித்தார். `முன், பின்` என்பவற்றைக் காலம் பற்றிக் கொள்ளாது. இடம் பற்றிக் கொள்க. இவற்றால், `ந, ம` என்பன பாச எழுத்துக் களும், `சி, வ` என்பன பதி எழுத்துக்களும் ஆயின. எனவே, முப்பொருள்களும் அஞ்செழுத்தில் அடங்குதலாலும், ``பலகலை ஆகமம், வேதம் யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தலே`` யாகலானும்,
``அஞ்செழுத்தே ஆகமமும், அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும்``8
என உண்மை விளக்கத்திலும்,
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``3
எனத் திருவருட் பயனிலும் கூறப்பட்டன.
இவற்றால், `நகார மகாரங்கள் ஊன நடனம்` என்பதும், `சிகாரவகாரங்கள் ஞான நடனம்` என்பதும் விளங்கும்.
கீழாலவத்தை மத்தியாலவத்தை, மேலால் அவத்தைகளில் நிற்போர் தத்துவங்களின் நீங்காமையால் அவர்களில் பற்றுக்களை விட விரும்பாதவர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்தும், பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்தும் கணித்தற்கு உரியர். அவற்றின் பயனாக ஞான குருவின் உப தேசத்தைப் பெற்றுப் பற்றுக்களை விட்டொழிக்க முயல்கின்றவர்கள் தத்துவங்களாகிய பாசங்கள் நீங்குதற்பொருட்டு அஞ்செழுத்துக்களில் பாச எழுத்துக்கள் இரண்டையும் நீக்கி, மற்றை மூன்றெழுத்தை மட்டுமே கணித்தற்கு உரியர். இதனை, `அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பர். இந்நிலையில் பிரணவத்தைச் சேர்த்தல் கூடாது. பிரணவம் இன்றிச் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களைத் திரும்பத் திரும்பக் கணிக்குங்கால், யகாரம்வகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைப்பட்ட தாகிவிடும். ஆகவே, ஆன்மாவை எவ்வகையிலும் பாசங்கள் பற்றுதற்கு வழியில்லை, யகாரத்தைத் தொடர்ந்து சிகார வகாரங்கள் வர,பின்பு வகரத்தைத் தொடர்ந்து யகாரம் வருதலால், ``அடியேன் நடுவுண் இருவீரும் இருப்பதனால் ``* என்னும் திருவாசகத் தொடர் இதனையே குறிப்பதாகக் கூறுவர்.
சிவஞான போதஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர்.
``உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி``
எனக் கூறி, அதனையடுத்து ``எண்ணும் அஞ்செழுத்தே`` எனக் கூறியவர், அதனை வாளா கூறாது, `விதி எண்ணும் அஞ்செழுத்தே, எனக் கூறியருளினார். வார்த்திகத்திலும்.
``இவ்விடத்துச் சீபஞ்சாக்கரத்தை
விதிப்படி யுச்சரிக்க``
என்றார். `பாசம்ஒருவ` என முன்னே கூறினமையால், `விதிப்படி` என்றது, `பாச எழுத்துக்களை நீக்கிப் பிரணவமும் இல்லாமல் உச்சரித்தல் வேண்டும்` என்றதேயாகின்றது. வெளிப்படையாகவே அந்த மூன்றெழுத்து மந்திரத்தை அவர் எடுத்துக் கூறாமைக்குக் காரணம், `அவ்வாறு கூறுதல் மரபன்று` என்பதும், இன்னோரன்னவை யெல்லாம் குருமுகமாகவே அறிதற்குரியன` என்பதுமேயாம். ஆயினும் காலப்போக்கில் அவரது பொருளை உணர்ந்து பயன் பெறு பவர்கள் அருகி மாறுபட்ட கருத்துக்கள் மலிந்து வருதலால், இவ் விடத்து எடுத்துக் காட்ட வேண்டி வருகின்றது. இதுபற்றியே மாதவச் சிவஞான யோகிகள்.
``இங்ஙனம் ஆசிரியர் மாட்டெறிந்ததூஉம்
உணராதார் ... ... ... ... சித்தாந்த வழக்கொடு
முரணிக் கூறுவர்``8
எனக் கூறினார்.
பஞ்சாக்கரத்தைத் தூலமாகக் கணித்தலை விடுத்துச் சூக்குமமாகக் கொண்டு கணிப்பினும் யகாரம் வகாரத்திற்கும், நகாரத்திற்கும் இடைப்பட்டே நிற்றலால் பாசம் நீங்காதது பற்றி,
``ஆசில் நவா நாப்பன் அடையாது, அருளினால்
வாசி யிடை நிற்கை வழக்கு`` * *திருவருட்பயன் 89.
என்றார் உமாபதி தேவர். அஞ்செழுத்தில் பாச எழுத்துக்களை நீக்கி உச்சரிக்கின், யகாரம் வகாரதிற்கும் சிகாரத்திற்கும் இடைப்பட்டு நிற்றலை மேற்கூறியவாற்றால் அறிக. இதனையறியாதார், `சிவாய சிவ` என்பதை ஓர் உருவாக வைத்துப் பல உருக்கள் கணிக்க வேண்டும் என்பர். அவ்வாறு கணிப்பின். சில உருக்களில் `சிவா` என்பது `வசி` என இயைந்து அவ்வுருக்கள் வாசியிடை நிற்றலாகிய சாதகத்தப் பயவாமை உணர்க.
சிவஞானபோத ஒன்பதாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட சகலத்தில் சுத்த சுழுத்தியில் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையே உச்சரித்தல் வேண்டும் எனக் கூறினமையால், `பத்தாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட `அவனே தானே ஆகிய. அந்நெறி - ஏகனாகி` ஆன்மாத் தன்னை யிழந்து நிற்பதாகிய சகலத்தில் சுத்த சுழுத்தியில் யகாரத்தையும் நீக்கி, `சிவ` என இரண்டெழுத்தாக உச்சரித்தல் வேண்டும்` என்பது போந்தது. `இது காரண பஞ்சாக்கரம்` எனப்படும். இதனை நாயனார் அடுத்து வரும் தந்திரத்தில் ``சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்``, ``சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்`` என்பன முதலாக அருளிச் செய்வார்.
இங்ஙனமாகவே, சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்தில் அரன் கழலின்கீழ் ஆன்மா ஆனந்தத்தில் மூழ்குதலாகிய சகலத்தில் சுத்த துரியாதீதத்தில் அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்க. சிகாரம் ஒன்றுமே அசபா நலமாய் நிற்கும் என்பதும் பெறப்படும். இந்த ஓரெழுத்து மந்திரத்தை நாயனார் `நாயோட்டு மந்திரம்` என மறைபொருட்கூற்றாக ஓதினார். அந்தமந்திரத்தை மிகையானதாகப் பிற்காலத்தார் கருதிவிட்டனர். நாயின் தன்மை குரைப்பது. நாயின் தன் மையையே, `நாய்` என்றார். `குரைத்தலை ஓட்டுவது` என்றது, `பேச்சை ஒழித்து மௌனத்தை உண்டாக்குவது` என்றதாம். தருமை ஆதீன ஆதி பரமாசாரியராகிய குருஞான சம்பந்தரும்,
``கற்க இடர்ப்பட்டுமிகக் கற்றஎலாம் கற்றவர்பால்
தற்கமிட்டு நாய்போலச் சள்ளெனவோ``1
என, ஞான நெறியில் நில்லாது பேசும் பேச்சுக்களுக்கு நாயின் குரைப்பை உவமை கூறினார். `பேசா அனுபூதி`2 `மோனம் என்பது ஞானவரம்பு3 என்பன போன்றவற்றை நோக்குக. இந்த ஓரெழுத்து மந்திரம், `மாககாரண பஞ்சாக்கரம்` - எனப்படும். மந்திர நூல் வழக்கில், ஓர் எழுத்தான் ஆயதே சிறப்பாக `மந்திரம்` எனப்படும். அந்த மந்திரத்தை நாயனார் தமது மந்திர மாலையில் கூறாது போவாரோ.
ஐந்தெழுத்தாய் இருந்த மந்திரம் பின்பு மூன்றெழுத்தாய்ப் பின்பு இரண்டெழுத்தாய், இறுதியில் ஓரெழுத்தே ஆகிவிடுகின்றது. இது,
``சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே``4
என அருளிச் செய்த அனுபவத்திற்கு ஒத்துள்ளது. இதனை உமாபதி தேவர்,
``பதிபசு பாச முதிர்அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனமில் ஞாதுரு ஞானம் ஞேயம் என்று
இசைய மூன்றாய்ப் பசு பதி என்றவற்று
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயனெனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிவற் றியற்கை இயம்புதல் தகுமே``*
எனக் கூறினார். இங்ஙனம் கூறிய இதனையே சிவஞான யோகிகள் பரம சித்தாந்தத்தை ஓதியதாக உரைத்தார்.* இங்ஙனம் ஓதப்பட்டதன் பொருளை உணரமாட்டாதவர், பூர்வ பட்சம் எது? என அறிந்து கொள்ளாமல் இதற்கு உரை செய்துள்ளனர்.
இம்மந்திரத்தின் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இத்துணையும் கூற வேண்டியதாயிற்று.
(உரை): தச காரியங்களில் முதல் மூன்றின் முடிவில் உள்ள தத்துவ சுத்தி எய்திய பொழுது அது நிலை பெறுதற் பொருட்டுத் திரு வைந்தெழுத்தில் பாச எழுத்தாகிய நமக்கனை நீக்கி - மூன்றெழுத்தாகக் கணித்து, அதனாலே முன்பு தத்துவங்களாகிய சடத்தோடு கூடிச் சடமாய் இருந்த நிலை நீங்கிச் சித்தாகிய ஆன்மாத் தானேயாகி யகாரத்தோடே நின்று, (அஃதாவது நமக்களோடு சேராது நின்று - ஆன்ம ரூபம். ஆன்ம தரிசனம் இரண்டும் இவ்விடத்தே நிகழ்ந்துவிடும் இவையெல்லாம் சகலத்தில் சுத்த சாக்கிரம் சுத்த சொப்பன சுத்த சுழுத்திகளாய்விடும்) பாசங்களினின்று மிக மேன்மை யுற்றுப் பின் இறுதியில் உள்ள அருட் சத்தி வழியாக, (இது சகலத்தில் சுத்த துரியம்.) இயல்பாகவே பாசம் அற்று இருக்கின்ற சிவனைப் பெறும் பேற்றை அடை (இது சகத்தில் சுத்த துரியாதீதம்) அப்பொழுது முன்பு இருந்த யகாரம் வகாரத்திலே அடங்கும். பின்பு வகாரமும் சிகாரத்திலே அடங்கிவிடும் அதன் பிறகு உனக்குக் கிடைப்பது பரானந்தந்தான். (இதற்குமேல்) அடையத்தக்கது எதுவும் இல்லை என்பதாம்.

குறிப்புரை :

இதனைக் கீழ்க் காணும் பிற்காலத்து அடிகளது பாட்டு ஒன்று மிக நயம்படத் தெரிவிக்கின்றது.
``மாயநட் டோரையும், மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட் டோட்டிவெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே. ``
நட்டோர் - நண்பர். திரோதான சத்தியும். அதனால் கூட்டிச் செயற் படுத்தப்படுகின்ற மாயை கன்மங்களும். இவை நகாரத்தால் குறிக்கப் படுகின்றன.
மாயா - என்றுமே அழியாது நிற்கின்ற, மலம் - ஆணவம். ஆணவத்தை ஒரு பெண்ணாகக் கூறும் வழக்கு உண்மையை,
``பலரைப் புணர்ந்தும்இருட் பாவைக்குன் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``3
என்னும் திருவருட் பயனாலும் அறிக. இம்மலம் மகாரத்தால் குறிக்கப்படுகின்றது.
வீயவிட்டு ஒட்டுதல், நகார மகாரங்களை நீக்குதல். மெய்யருளாம்தாய் வகாரம். அதனோடு கூடுதலாவது, முன்புபோல நகார மகாரங்களோடு கூடாது, வகாரத்தோடே இணைந்து நிற்றல்.
தாயுடன் செல்லுதல் யகாரத்தையும் நீக்கி, இரண்டெழுத்தாகக் கணித்தல்.
தாதையைக் கூடிப் பின் தாயை மறந்துவிடுதல், வகாரத்தையும் நீக்கிச் சிகாரத்தோடு மட்டும் இருந்துவிடுதல்.
`தானே` என்பது, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி. ஈறு ஆர் பரை - இறுதியில் உள்ள அருட் சத்தி, பரையின் - பரையினால், தற்பரன் பேறு - தற்பரனைப் பெறும் பேறு. நிலை மொழியின் ஈறுதிரியாமை சிறுபான்மை பொதுவிதியானே கொள்ளப் படும். பேறு ஆர், `பேற்றினைப் பொருந்து` என முன்னிலை ஏவல். `சிவாய அடங்கும்` `சிய்யில் வவ்வும் யவ்வும் அடங்கும்` எனக் கொள்க. `முத்தி` என்றது ஆனந்த நிலையை. ஏகாரம் தோற்றம்.
இவையெல்லாம் நின்மலாவத்தைக்கண் நிகழ்வனவே யாயினும், `பராவத்தையிலும் அதீதம் ஒழிந்த ஏனை நான்கிலும் சூக்குமமாய் நிகழும்` என்பது உணர்த்துதற்கு இங்கு இதனைக் கூறினார்.
இதனால், `அஞ்செழுத்தின்புணை` எல்லா அவத்தைகளிலும் ஏற்றபெற்றியில் பிறவிக் கடலைக் கடத்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

துரியத்துல் ஓரைந்தும் சொல்அகா ராதி
விரியப் பரையின் மிகுநாதம் மந்தம்
புரியப் பரையின் பராவத்தா போதம்
திரியப் பரமாமாம் துரியம் தெரியவே.

பொழிப்புரை :

சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தை ஐந்திலும் வாக்குக்கண் அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாய், (அ, உ, ம, விந்து, நாதம் - என்பனவாய்)த் தூலமாய் நிகழும். (எனவே, அவ்விடத்து உலக வாசனை இருக்கவே செய்யும் என்பதாம்.) நின்மலா வத்தைக்கு மேலான உண்மைச் சுத்தாவத்தையில் அவ்வாக்குக்கள் சூக்குமமாய் நிகழும். (அதனால், உலக வாசனை தோன்றாவிடினும், `யான்` எனது என்னும் உணர்வினால் ஞாதுரு ஞான ஞேய வேற்றுமை நிகழவே செய்யும்.) அந்த வேற்றுமையும் அறுவது பர துரியத்திலாம். (அவ்விடத்தில் ஆன்மா அருள்மயமாய் நிற்கும்.) அதன் பின்பு மேலானதாய அதீதம் தோன்றும். (அதில் ஆன்மா ஆனந்தமயமாய் இருக்கும்.)

குறிப்புரை :

`துரியம்` என்பது, `மலாவத்தைகளைக் கடந்தது` என்னும் பொருட்டாய், நின்மலாவத்தையைக் குறித்தது. `ஐந்திலும்` என உருபும், `ஆதியாய், மந்தமாய்` என ஆக்கங்களும் விரிக்க. `சொல், நாதம்` என்பன வாக்கைக் குறித்தன. `விரிய, புரிய, தெரிய` என்ற அனுவாதத்தானே விரிதலும், புரிதலும், தெரிதலும் பெறப்பட்டன. விரிதல் - தூலமாய் நிகழ்தல். புரிதல் - இடையறாது நிகழ்தல். தெரிதல் - விளங்குதல். `மந்தம்` என்றது சூக்குமத்தைக் குறித்தது. `பரை` இரண்டில் முன்னது ஆகுபெயராய்ப் பராசத்தியால் நிகழும் பராவத்தையைக் குறித்தது. மூன்றாம் அடியில் அவை நேராகவே கூறப்பட்டன. பராவத்தா போதம் - பராவத்தையில் நிகழும் திரிபுடி ஞானம். இது வடமொழிச் சந்தி. திரிய - வேறுபட; நீங்க. `திரிய` என்னும் எச்சம் `தெரிய` என்னும் எச்சத்தோடும், அவ்வெச்சம் `பரமம்` என்பதில் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடும் முடிந்தன. `பராவத்தா போதம் திரியத் துரியம் தெரியப் பரமம்` என வினைமுடிக்க. பரம் - மேலான அதீதம்.
இதனால், `பந்தம் சூக்குமமாய் நிற்கும் அவத்தைகளும் பின் அது முற்றும் அறும் அவத்தையும் இவை` என்பது சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.

பொழிப்புரை :

சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளையும் சகலத்தில் மாயா கருவிகளால் அடையாது, திருவருளால் அடைந்து, (எனவே, `மேலா லவத்தையையும் கடந்து நின்மலாவத்தையை அடைந்து` என்றதாம்.) சகலத்திற் சுத்தமாகிய அந்த அவத்தைகளில் மேலே பாய்ந்தும், கீழே வீழ்ந்தும் பந்துபோல அலைகின்ற அலைவினால் அவ்வலைவு நீங்கப் பெறுகின்ற உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் நாட்டம் உண்டாகுமானால், அந்த நாட்டத்தின் முன் ஐந்து மலங்களும் அந்திக் காலத்தில் விளக்கின்முன் இருள் நில்லாது நீங்குதல் போல நில்லாது நீங்கும்.

குறிப்புரை :

`சகலத்து` எனவும, `அருளால்` எனவும் கூறிய வற்றால், புரியப்படுவன நின்மலாவத்தைகளாயின. தானே நிகழ்வன வற்றை ஆன்மாநிகழ்வித்துக் கொள்வது போலவைத்து, `புரிவுற்று` என்றார். பந்து இடும் - பந்தினை வீசுவது போல நிகழும் நந்தி - சிவன்.
இதனால், `ஆன்மாநின்மலாவத்தையையும் கடந்து, பரா வத்தையை எய்திய பொழுதே உண்மையில் தூயதாம்`என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.

பொழிப்புரை :

`இருபத்தைந்து` எனத் தொகை பெற்று நிற்கின்ற தத்துவங்களாய் உள்ள மூலப் பிரகிருதியில் இயல்பையும், `மாயேயம்` எனப்படுகின்ற வித்தியா தத்துவங்களாய் உள்ள அசுத்தமாயையின் இயல்பையும் சாதகன் உள்ளவாறு உணர்ந்து தத்துவ ஞானியாய், எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாகியும், பொருள் தன்மையால் வேறாகியும் நிற்கின்ற சிவமாகிப் பிறவியினின்றும் நீங்கி நிற்கும் பராவத்தையை அடைதலே உண்மைச் சுத்தாவத்தையாகும்.

குறிப்புரை :

`பொய்கண்ட` என்பது தாப்பிசையாய் `ஐயைந்து` என்றதனோடும் சென்றியைந்தது. பொய்கண்ட - நிலையாமை நன்கு உணரப்பட்ட. இங்கும் `மாயேயம்` என்பது, `மாமாயை` எனப்பாடம் திரிக்கப்பட்டுள்ளது. `மாயையாம் மாயேயம்` என்றாராயினும், `மாயேயமாம் மாயை` என மாறிக் கூட்டுக. தான், அசை, எய்தல் - அறிதல், படி - வகை. இஃது ஆகுபெயராய், `படியன்` எனப் பொருள் தந்தது. `சிவமாந் தன்மையைப் பெற்ற ஆன்மாவும் சிவம்போலவே வியாபகமாய் நிற்கும்` என்பார். ``எவற்றுமாய் அன்றாகி`` என்றார். ``எவற்றுமாய்`` என்றது, `எவற்றிலும் அவையேயாய்` என்றபடி.
இதனால், பராவத்தையை எய்துமாறும், `பராவத்தையே பிறவாநிலை` என்பதும், `அஃதே உண்மைச் சுத்தாவத்தை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

பொழிப்புரை :

பரம்பொருளை அறிய அவாவிநிற்கின்ற சுத்தான் மாவும், அதற்கு அதனை அறிதற்குத் துணைபுரிந்து அதன் அறிவுக்கு அறிவாய் நிற்கின்ற திருவருளும், அவ்வருளின் துணையால் அந்த ஆன்மாவால் அறியப்படுகின்ற பரம் பொருளும் ஆகிய மூன்று உயர் பொருள்களும், ஆன்மாவினிடத்து மூவகை உடம்புகளாய் நிற்கின்ற தத்துவங்களும், அவற்றைச் செலுத்துகின்ற திரோதான சத்தியும் நீங்கினவிடத்து ஒன்றாய்ப் பொருந்திவிடும். அஃதன்றியும், சிவன் பின்னர் அந்த ஆன்மாவைவிட்டுப் பிரியாத நிலைமையும் உண்டாகும்.

குறிப்புரை :

`நின்றான்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க `முன்னேயமும்` என்பது பாடம் அன்று. நேயம் - அன்பு; விருப்பம், விருப்பத்திற்குரிய பொருளை `விருப்பம்` என்றார். முந்நேயம் - திரிபுடி. அவை `ஞாதுரி, ஞானம், ஞேயம்` என்பன. இவைமூன்றும் வேறு வேறாய்த் தோன்றுங்காறும் `அனுபவம்` என்பது இல்லையாம். சிவத்தை உணர்தல் சிவஞானத்தாலன்றிக் கூடாமையால், பிற மதத்தினர் என்ன கூறினாலும் சித்தாந்தம் `ஞானம்` என்பது சிவ ஞானத்தையே. அது திருவருளேயாதல் அறிக. உபாதிகளைச் செலுத்துதல் பற்றித் திரோதான சத்தியும், `உபாதி` என உபசரித்துக் கூறப்படும். `சென்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. சென்ற ஆன் - நீங்கிய அவ்விடத்து. எங்கு - வேறிடம். `சொல்லாமையும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். இதன் பின்னும் `மருவும்` என்பதனைக் கூட்டுக. `உருவும், உபாதியும் சென்ற ஆன், நின்றானும் ... ... ... ஒன்றாய் மருவும்; நன்றான ஞானத்தின் நாதப் பிரான் (ஞானத்தின் நாதன் - திருவருளுக்குத் தலைவன்) எனை விடுத்து ஊங்கிற் செல்லாமையும் மருவும்` எனக் கூட்டி முடிக்க `ஊங்கிற் செல்லாமை` என்பதை, `எங்கெழுந்தருளுவது இனியேl என்பது போலக் கொள்க.
இதனால், பராவத்தை எய்துமாறும், அதன்கண் நிகழும் அனுபவமும் கூறும் முகத்தால் அதனது மேன்மை எடுத்தோதி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாத்திகம் எய்தும் நனவென்ப சாற்றுங்கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

பொழிப்புரை :

சாக்கிரம் பொருள்களை நன்குணரும் நிலையாகலின் அது, `சாத்துவிக குணத்தின் காரியம்` என்றும், சொப்பனம் பொருள்களைச் சாக்கிரத்தில் அனுபவித்த வாசனையளவாய் நிற்கும் நிலையாதலின் அது மெய்ம்மைக்கு எதிரான போலி அனுபவம் ஆதல் பற்றிச் சாத்துவிகத்திற்கு எதிரான, `இராசதகுணத்தின்காரியம்` என்றும், சுழுத்தி, யாதும் உணராத நிலையாதலின் அஃது, இருள் மயமான `தாமத குணத்தின் காரியம்` என்றும் சொல்லப்படும். துரியம் இம்மூன்றையும் கடந்ததாகலின் அது `நிர்க்குணமாய் நிகழ்வது` என்றும் சொல்லப்படும்.

குறிப்புரை :

`துரியம் நிர்க்குணம்` எனவே, அதனைக் கடந்த துரியாதீதம், நிர்க்குணம்` எனச்சொல்ல வேண்டாவாயிற்று. துரிய துரியாதீதங்களை `நிர்க்குணம்` எனக்கூறியதனானே `நிர்க்குணம்` என்னும் வழக்கு. மாயாகுணங்கள் இல்லாமையையே குறிக்குமன்றி, யாதொரு குணமும் இன்மையைக் குறியாது - என்பது பெறப்படும். இறைவனை `நிர்க்குணன்` எனவும், `குணாதீதன்` எனவும் கூறுதலும் இந்தக் கருத்திலே தானே யன்றி, `யாதொரு குணமும் இல்லாதவன்` என்னும் கருத்தினாலன்று. இயல்பாகவே மாயையின் நீங்கி நிற்கும் இறைவன், குணங்கள் பலவற்றையுடையனாதலை நினைக.
முத்தொழில்களில், `படைத்தல் இராசதத்தொழில்` என்றும், `காத்தல் சாத்துவிகத் தொழில்` என்றும், `அழித்தல் தாமதத் தொழில்` என்றும் சொல்லப்படும். அதனால் அவ்வத்தொழிலைச் செய்யும் மூர்த்திகளை அவ்வக்குணம் உடையவராகக் கூறுவர். ஆகவே மும் மூர்த்திகளும் `குண மூர்த்திகள்` என்றும், மூவருக்கும் அப்பாற்பட்ட பரமசிவனை, `நிர்க்குணன்` என்றும் `குணாதீதன், என்றும் கூறுவர்.
மற்றும் மேற்கூறிய சாக்கிரம் முதலிய அவத்தைகள் முக்குணங்களின் காரியங்களாகச் சொல்லப்படுதல் பற்றித் திருமாலை, `சாக்கிரமூர்த்தி` என்றும், பிரமனை, `சொப்பனமூர்த்தி` என்றும், முக்குணங்களையும் கடந்து, நிர்க்குணனாய் உள்ள பரமசிவன் துரியமூர்த்தியாகின்றான். துரியம் நான்காவதாகலின், பரமசிவனை, `மூவருக்கும் அப்பால் உள்ள நான்காமவன்` என்பர்.
இனி மும்மூர்த்திகளை முக்குணங்களில் ஓரோர் குணத்தை உடையவராகக் கூறுதலும் அவர் கொண்டுள்ள தொழில் பற்றியே யன்றி, அவரவருக்கு உள்ள குணம் பற்றியன்று. `குணம் பற்றி` எனின், சொப்பன மூர்த்தியும், சுழுத்தி மூர்த்தியும் விழித்துக்கொண்டை யிருக்க, சாக்கிர மூர்த்தி துயில்கொள்பவனாய் இருத்தல் அமையாது. சாக்கிரம் முதலிய மூன்று பற்றியே கூறினாராயினும், சகலத்தில் கேவலம் தாமதத்தாலும், சகலத்தில் சகலம் இராசதத்தாலும் சகலத்தில் சுத்தத்தில் யோகம் சாத்து விகித்தாலும் நிகழும் என்க. ஆகவே, சுத்தம் நிர்க்குணமாம். முக்குணம் கூறுதல்பற்றி, நிர்க்குணமும் கூறவேண்டிய தாயிற்று. `சாத்துவிகம்` என்பது `சாத்திரம்` என மருவிற்று.
இதனால், சகலாவத்தையில் முக்குணங்கள் தொடருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

பொழிப்புரை :

அண்டங்களை ஆசனமாகக் கொண்டு, அவற்றிற்கு மேலே விளங்குகின்ற சிவபெருமான், உயிர்களால் பற்றப்பட்டுப் புறமும், அகமுமாய்ப் பல்வேறு வகையில் அமைந்துள்ள அண்டங்கள் எண்ணிலவாய் நிற்க, அவை அனைத்திலும், கட்பொறிக்குப் புலனாகின்ற மாற்றொளியையுடைய, பொன்னால் ஆகிய அணிகலன்போல அவற்றினுள் நிறைந்திருக்கின்றான்.

குறிப்புரை :

பெறுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``எறிகடல் ஏழின் மணலளவாக`` என்றது, `எண்ணிலவாக` என்றபடி, ``ஒளி`` என்றதனால், பொறி, கட்பொறியும், ``பொன்`` என்றதனஆல், ஒளி, பொன்னினது மாற்றொளியும் ஆயின. `பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் உள்ளனவாயினும் அவற்றது ஒளியையே மக்கள் நோக்குதல் போல, அண்டங்களிலே சிவபெருமான் நிறைந்திருப் பினும், அண்டங்களை மட்டுமே உயிர்களை உணர்கின்றன` என உவமையை, உணர்ப்படுதல் படாமை பற்றிய ஒரு புடை உவமையாகக் கொள்க.
``அண்டம் ஆரிரு ளூடுகலந் தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவார் எலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``l
எனவும்,
``அண்டங் கடந்தபொருள்; அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்``8
எனவும் ஓதினாற்போல இவரும், ``அண்டாசனத் தேவர்பிரான்`` என ஓதினார். `விளங்கி` என்பதை `விளங்க` எனத்திரித்து, `அண்டங்கள் விளங்கத்தான் அவற்றினுள் விளங்காது நிறைந்திருப்பான்` என்க.
இதனால், `தத்துவங்களின் காரியமாகிய அண்டங்கள் எண்ணிலவாம்` என்பது கூறப்பட்டது. `தேவர்பிரான் செறியும்` என்றது, அவை அவனால் நிலைபெறுதலை உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தானந்த மில்லாத தத்துவ மானவை
ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே.

பொழிப்புரை :

அண்டங்களாகிய ஆசனத்தின்மேல் ஆனந்தமாய் உள்ள மெய்ப்பொருள்தான் (வடிவமற்றதாயினும்) அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்துவடிவங்களைக் கொண்டு விளங்குதலால், அதனால் வியாபிக்கப்பட்ட முப்பத்தாறு முதனிலைப் பொருள்கள் தோன்றி, அழிவின்றி நிற்பனவே `தத்து வங்கள்` எனப்படுகின்றன. அவையே குறைவில்லாத அண்டங் களாய்க் காரியப்பட்டு, அளவிறந்து நிற்கின்றன.

குறிப்புரை :

ஐந்துவடிவங்கள் மேல், \\\"சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்`` 3 என்னும் மந்திரத்தின் உரையில் சொல்லப்பட்ட `சிவம், சத்தி, சதாசிவன், மகேசுரன்` என்பவற்றோடு `வித்தை` என்பதுமாகும். ஆகி நின்று செயலாற்றுதலால். முப்பத்தாறு தத்துவங்களில்மேல் உள்ள ஐந்தையும் மெய்ப்பொருள்தானே நேரே செயற்படுத்துகின்றது. கீழ் உள்ள முப்பத்தொன்றினைப் பிறரைக்கொண்டு செயற்படுத்து கின்றது. `தத்துவம்` எனப்படுவன முதற் காரணப் பொருளாய் ஊழி முடிவுகாறும் அழியாது நிற்பன ஆதல் பற்றி, \\\"தான் அந்தம் இல்லாத தத்துமானவை`` என்றார். \\\"தான்`` என்றது பன்மையொருமை மயக்கம். `தத்துவமானவை அண்டமாய், எண்மடங்கு ஆம்` என்க. ``எண் மடங்கு`` என்பது மிகுதியைக் குறிப்பதொரு வழக்கச்சொல். அண்டத்து - அண்டமாம் நிலையில். `அண்டங்கள் குறைந்த எண்ணிக்கையையும், தத்துவங்கள் அவற்றினும் மிக்க எண்ணிக்கை யையும் உடையன` என உரைப்பார்க்கு, `அவ்வாறான மேற்கோள் எங்குளது` எனத் தெரியவில்லை.

பண் :

பாடல் எண் : 1

அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொழிப்புரை :

கெடுதல் இல்லாத ஓங்காரத்தின் கலைகள் பனி -ரண்டில் `அ, உ, ம, விந்து` என்னும் நான்கிற்கு அப்பால் ஐந்தாவதாய் உள்ள அர்த்த சந்திர கலையை அடைந்தால் ஓர் அமுததாரை ஒழுகும் (அஃது உடல் எங்கும் உள்ள நாடிகளில் பாய்ந்து உடலை உறுதிப் படுத்தும். இந்த இடம் புருவநடுவிற்குச் சற்றுமேல், `நெற்றி நடு` என்னலாம்) பின்பு நிரோதினியைத் தாண்டி ஏழாவதாய் உள்ள நாத கலையை அடைந்தால் அவ்விடத்து ஓர் ஆனந்தம் தோன்றும் (அந்த ஆனந்தம் சிறையில் உள்ளவனுக்கு, `விடுதலை தோன்றி விட்டது` என்பது தெரிந்தவுடன் உண்டாகின்ற ஆனந்தம் போல்வதேயாகும். இந்த இடம் பிரமரந்திரத்திற்குப் பின்) அதனைக் கடந்து நாதாந் தத்தைத்தாண்டி, ஒன்பதாவதாய் உள்ள சத்திகலையிலும் அதனைக் கடந்து வியாபினி கலையைத் தாண்டிப் பதினொன்றாவதாய் உள்ள சமனா கலையிலும் சென்று உள்ளத்தை அசையாதிருக்கச் செய்தால், அத்தகையோர் இவ்வுலகத்திலே இருப்பினும் உமைகேள்வனாகிய சிவன், `ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே`` 3 என அருளிச்செய்தபடி அவர்கள் உடம்பிற்குள்ளே இனிது வெளிப்பட்டு நின்று, ``வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால்தோறும் - தேக்கிடச் செய்து``8 (அஃதாவது பேரானந்தத்தை விளைத்து) நிற்பான்.

குறிப்புரை :

``மூஞ்சில் ஓங்காரம்`` என்பதை முதலிற் கொள்க.
`ஓர் ஒன்பானில், பதினொன்றில் வைத்திடில், வஞ்ச அகமே நின்றும் கிளிமொழி கேள்காயம் ஆம்` எனக் கூட்டி முடிக்க.
வைத்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
பிரபஞ்சம், `வஞ்சம்` என வந்து, புணர்ச்சியில் வகரம் கெட்டபின் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்றும்` என்னும் உம்மையும் தொகுக்கப் பட்டது. கேள் - கேள்வன். ஈற்றடியை மகடூ முன்னிலை யாக்கினாரும் உளர். நாயனார் இந்நூலில் யாண்டும் மகடூ முன்னிலை வைக்கக் காண்கிலம்.
இதனால், பிராசாத யோகமும் கரணத்தோடு கூடிய மலாவத்தையேயன்றி, நின்மலாவத்தை ஆகாமை அதன் பயன்கள் சிலவற்றை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.
மேல் மந்திரம் - 696 இன் உரையைக்கொண்டு இப் பொருளைத் தெளிக. மற்றும் பிராசாத நூல்களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 2

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.

பொழிப்புரை :

[சகலத்தில் சுத்தமாகிய யோக வகைகளில் பிராசாத யோகத்தில் ஒருவகையான பராவத்தை நின்மலாவத்தைகள் சொல்லப் படுகின்றன. அவை மேற்கூறிய சுத்தத்தில் சுத்தாவத்தைகளாகிய பரா வத்தையும், இனிக்கூறப்படும் நின்மலாவத்தைகளும் அல்ல.* அந்த அவத்தைகளில் தத்துவங்களின் நீக்கமும் சொல்லப்படுகின்றது. அவற்றுள் அமைந்த நின்மலாவத்தையை இம்மந்திரம் குறிப் பிடுகின்றது.]
புருடதத்துவமும், அதற்குக்கீழேபொருந்தியுள்ள சித்தமும் சூக்குமமாகிய நாதவிந்து கலைகளிலே ஒடுங்கும். அவ்வொடுக் கங்கள் முறையே யோகத்தில் நின்மலாதீதமும், யோகத்தில் நின்மல துரியமும் ஆகும். சித்தத்திற்குக் கீழ் உள்ள புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்று அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் யோகத்தில் நின்மல சுழுத்தி முதலியவற்றில் விரிந்துநிற்கும். இங்ஙனமாகவே ஞானவத்தைகளை நோக்க, மேற்கூறிய பதினொன்றாந் தானமாகிய சமனா கலையும் யோகாவத்தைத் தானமேயாம். (`ஏனெனில், அவ்விடத்தும் சுத்த மாயைத் தொடர்பு இருத்தலின்` என்பது கருத்து).

குறிப்புரை :

ஆறும் - தணியும்; ஒடுங்கும் ``உடனே`` என்பது எண்ணொடுவின் பொருட்டாய் நின்றது. ``அருவம்`` என்றது, சூக்குமம் என்றபடி. அகார உகார மகாரங்களை நோக்க, விந்து நாதங்கள் சூக்குமம் ஆதலை உணர்க. ``அருவமொடு`` என்றது, `அருவத்தளவில்` என்றபடி. அதீதத்துரியம், உம்மைத் தொகை. `துரியத்தில்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `மிக்குள்ள எட்டும் சுழுத்தியினின்றும் கீழ்க்கீழ் விரியும்`` என்க. புத்திமட்டும் தோன்றுவது சுழுத்தியும் அதனுடன் அகங்காரமும் தோன்றுவது சொப்பனமும் அவற்றுடன் மனமும் தன்மாத்திரையும் தோன்றுவது சாக்கிரமும் ஆகும். இம்முறையில் நாதாந்தம் முடிய, `துரியாதீதம்` எனச் சொல்லப் பட்டாலும் அதற்குமேலும் பரவிந்து பாநாதங்கள் இருத்தலால் பதி -னொன்றாந்தானமும் சகலத்தில் சுத்தாவத்தைத் தானமே - என்றபடி. இதனை, சிவமூல மந்திரங்களை நோக்கிப்பிரணவ கலைகள் பொதுவாக, `சூக்கும பஞ்சாச்சரம்` எனச் சொல்லப்பட்டாலும் அகார உகார மகாரங்கள் விந்து நாதங்களை நோக்கி, `தூலம்` எனச் சொல்லப் படுதலைப்போலக் கொள்க. ``பதினொன்றும்`` என்னும் உம்மை சிறப்பு. பிராசாத யோகத்தின் அவத்தைகளை எடுத்துக்காட்டியது. அவற்றிடையேயுள்ள தாரதம்மியங்கள் போன்றனவே சுத்தத்திற் சுத்தாவத்தைகட்கும், சகலத்திற் சுத்தாவத்தைகட்கும் இடையேயுள்ள தாரதம்மியங்கள்` என்பது உணர்த்துவதற்கு அவத்தைத் தானத்தை `அவத்தை` என உபசரித்தார்.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் காரணங்காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திட நந்தியல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டும் அதுதிடம் எண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபடி சிவாகமங்கள் கூறுகின்ற அந்தத்தானங்கள் பதினொன்றிலும் சென்று நின்றால் உடம்பு விரைவில் அழியாது நெடுங்காலத்திற்கு நிலைபெறும் வகையில் உறுதியடையும். அந்நிலையில் அவ்வுடலில் உள்ள உயிருக்குச் சிவனைத் தவிரத் துணையாவார் வேறு ஒருவரும் இலராவர். (அஃதாவது, `அவ்வுண்மை அவ்வுயிருக்கு நன்கு விளங்கி நிற்கும்` என்பதாம்) அதனால் உனது மனம்போனபடி நீ போய் அலைந்துகொண்டிருந்த அலைவுகளையெல்லாம் விடுத்து அமைதியுற்றிருந்த அந்த அமைதியே வழியாகச் சிவன் தன் அடியார்களோடு கூட்டுதல் உறுதி. இந்த உறுதியும் உனக்கு அந்நிலையில் விளங்குவதாகும்.

குறிப்புரை :

கைகலத்தல், `கலத்தல்` என்னும் பொருட்டாய ஒருசொல். நாட்டி அழுத்திட - நிலைப்படுத்தி உறுதிசெய்ய `உறுதி செய்ய` என்ற அனுவாதத்தானே உறுசெய்தலும் பெறப்பட்டது. விதி - முறைமை.
இதனால், சகலத்திற் சுத்தம் மலாவத்தையேயாயினும் அது பயனுடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

பொழிப்புரை :

கேவலாவத்தைக்குப் பின்பு ஆன்மாச் சகலத்தை அடைதலே கலவு நிலையாகும். (கலத்தல்மலத்தோடேயாகையால், இக்கலப்பு அசுத்தமேயாம். எனவே, கேவலத்திலிருந்த அசுத்தம் போய்விடவில்லையாம். முன்னை அசுத்தமே பின்னை அசுத்தத் திற்குக் காரணம் ஆகையால்) விடாது பற்றியுள்ள முதல் அசுத்தமாகிய இருள் நீங்கும் சமையத்தில் ஆன்மாச் சகல நிலையினின்றும் சிறிது சிறிதாக விலகி அப்பாற் செல்லுதலே செலவு நிலையாகும். (இது மலங்களினின்றும் நீங்கும் நிலையாகலின், `நின்மலாவத்தை` எனப்படும்) இந்நிலையில் ஆன்மாத் தன்னைக் காணுதல், பின் திரு வருளைக் காணுதல், பின் திருவருளைக் காணுதல், பின் பராசத்தியைக் காணுதல் இவை மூன்றும் முறையே நிகழ்ந்து நீங்கினால் சாக்கிராதீதம் வாய்க்கும். அதன் பின்பே நின்மலாவத்தை முடிவுபெறும்.

குறிப்புரை :

தன்னைக் காணுதல் முதலிய மூன்றும் முறையே, `சைதன்னிய தரிசனம், ஞான தரிசனம், பரை தரிசனம்` எனத் துகளறு போதத்தில்* கூறப்படுதல் காண்க. சாக்கிராதீதம், `பரையில் அதீதம்` என்பதனோடு கூட்டி இரண்டாகவும், பரையில் அதீதத்தை யடுத்துச் சுத்தாவத்தையும் அந்நூலில்l கூறப்படுதலையும் காண்க. அந்நூலில் `சுத்தாவத்தை` எனப்பட்டதும், இம்மந்திரத்தில் `சுத்தம்` எனப் பட்டதும் நின்மலாவத்தையேயாம். ``மேவும், பாவும்`` என்றாராயினும், `கேவலந் தன்னில் சகலத்து மேவுதல் கலவு` எனவும், `விடா இருள் நீக்கத்துப் பாவுதல் செலவு` எனவும் உரைத்தலே கருத்தென்க. பாவுதல் - பரவுதல்; முற்றும் பொருந்துதல்.
இதனால், சகலாவத்தை சுத்தாவத்தைகளின் இயல்பு ஒப்பிட்டு உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

பொழிப்புரை :

எந்தப் பொருள் மேலும் எழுகின்ற விருப்பத்தை வெல்லுங்கள்; வெறுப்பை ஒழியுங்கள்; உள்ளம் தூய்மையாகும். ஆனபின் அதனை இயன்ற அளவு திருவருளைப் பற்றியே இயங்கச் செய்யுங்கள். பின்பு அஃது அல்லும், பகலும் திருவருளையே சார்ந்து அமைதியுற்றிருக்கும். அப்பொழுது மலைக் குகையுள் அடைக்கப் பட்டவனுக்கு அந்தக் குகை வெடித்துப் பெரிய விடுதலை கிடைத்தது போன்ற ஒருநிலை உண்டாகும்.

குறிப்புரை :

`மலாவத்தைகள் நீங்கிப் பராவத்தை நிகழும்` என்றபடி. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதும் ஆயிற்று. இஃது ஒட்டணி.
அளவு - அளாவுதல்; கலத்தல். அது விரும்புதலைக் குறித்தது. வெகுளி, `வெறுப்பு` என்னும் அளவாய் நின்றது. `விருப்பம் நீக்குதற்கு அரியது` என்பதுபற்றி அதனை, `வெல்லுமின்` என்றார். `தூங்கினால்` என்றதனால், தூங்குதல் பெறப்பட்டது. `வெல்லுதல், விடுதல், செலுத்துதல் எல்லாம் யோகத்தால் உளவாகும்` என்பதும், `அவை உளவாகவே நின்மலாவத்தை பராவத்தைகளில் செல்லுதல் கூடும்` என்பதும் கருத்து.
இதனால், கலவு செலவுகளில் நிகழும் சுத்தாவத்தையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் ஒட்டணி பெற்றது.]
ஊமைக் கிணறு - வாய் இல்லாத கிணறு. அஃதாவது, தோண்டப்படாமல் நிலத்தினுள்ளே கிடக்கின்ற நீர்நிலை. என்றது கேவல நிலையை. ஆமை, கேவலத்தில் கிடக்கும் ஆன்மா. அழுவை - அழுவம்; பள்ளம். பள்ளங்கள் ஐந்தாவன, கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் யோகம், சகலத்தில்ஞானம்` என்னும் காரண அவத்தைகள், அவற்றுள், `வாய்மை` என்னும் பள்ளம் சகலத்தில் ஞானம். இதுவே நின்மலாவத்தை. இதனை அடைந்த ஆன்மா நித்தியமாம் தன்மையைப் பெறும்.

குறிப்புரை :

ஆன்மா எப்பொழுதும் நித்தியமேயாயினும் உடம்போடு கூடிப் பிறந்தும், இறந்தும் வருதலால் அநித்தியமாக எண்ணப்படுகின்றது. ஆகவே, `மென்மேலும் ஓர் ஆயிரத்தாண்டு` என்றது. `என்றும் இறவாமையை உடையதாம்` எனப்பொருள் தந்து, நித்தியம் ஆதலை உணர்த்திற்று.
இதனால், `நின்மலாவத்தை பராவத்தைக்கு வாயிலாய் நிற்கும்` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

பொழிப்புரை :

`நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் ஐம்பூதங் களும் முறையே பிரமன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர்களாலேதான் தொழிற்படுகின்றன. ஆகவே அந்த ஐவரையும் ஆதார யோகத்தால் `சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்னும் ஆதாரங்களில் முறையாகக் கண்டு, பின்நிராதாரத்தை அடைய வல்லவர்கட்கு இறப்பும் இல்லை. வாழ்வில் உணர்வும் இல்லையாம்.

குறிப்புரை :

`எனவே, மேல் - வெல்லும் அளவு என்பது,* என்பது முதலாகக் கூறிய சாதனங்கள் ஆதாரயோகத்தாலே எளிதில் கைவரும்` - என்பதாம். `நிலம் முதலிய ஐம்பூதங்கட்கும் பிரமன் முதலிய ஐவரும் அதிதேவர்கள்` என்பதை உண்மை விளக்கம், சிவஞான சித்திச் சுபக்கம் ஆகியவற்றால் அறிக. செய்யுள் நோக்கிப் பூதங்களையும், அதிதேவர்களையும் முறை பிறழவைத்தார். அங்கிக்கு அதிதேவ னாகிய உருத்திரனை `அங்கி` என்றே கூறினார். மேல் அஞ்சு - மூலா தாரத்திற்கு மேலே உள்ள ஐந்து ஆதாரங்கள் ஓடி - முறையாக ஏறி விரவுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `ஆதார யோகம் ஆயுளை வளர்த்து, உலகியல் உணர்வை நீக்கும் முகத்தால் நின்மலாவத்தைக்கு வாயிலாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.

பொழிப்புரை :

`உயிர்கள் அனைத்திற்கும் சிவன் தந்தை` என்பதும், `சித்தி தாய்` என்பதும் வேதாகமங்களில் எங்கும் முழங்கும் முழக்க மாதலை அறியாது சிலர் ஆன்மாவை, `தாயும் இலி; தந்தையிலி` என்கின்றார்கள். அஃது உண்மையாயின், சடப்பொருள்களாகிய தத்துவங்களும், அவற்றைக்கொண்டு ஆன்மாக்கள் உலகில் பிறந்து வினைகளை நுகர்ந்தும் ஈட்டியும், பின்பு இறந்தும் செல்லும்நிலை இல்லையாகவேண்டும்.

குறிப்புரை :

உயிர்களுக்குச் சிவனும், சத்தியும் தந்தையும், தாயும் ஆதலை, ``ஆலவாயில் அப்பனே`` எனவும் ``பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை``l எனவும், மற்றும் பல இடங்களிலும் இவ்வாறு வருவனவற்றால் அறிக. சிவனுக்கும், சத்திக்கும் வேறு பாடின்மை பற்றிச் சிவனையே. ``தொடர்ந்து நின்றேன் - தாயானை``3 ``அம்மையே, அப்பா``8 என்றாற்போலவும் பல இடங்களில் அருளிச் செய்வர். எவ்வாறாயினும், `பரம்பொருட்கு ஆன்மா மகன்` என்பதில் ஐயமில்லை. ``அறிகிலர்`` என்பது, அறியாமையால் அதனை மறுத்துக் கூறுதலாகிய காரியத்தை உணர்த்திற்று. ஆன்மா அறிவுடை உலகமாயும், தத்துவ தாத்துவிகங்கள் அறிவிலா உலகமும் ஆதலின், `ஆன்மாத் தோற்றம் உடையது ஆகாவிடின் உலகமே இல்லை` என்பார். ``ஆன்மாவும் இல்லையால்; ஐயைந்தும் இல்லையே`` என்றார். வித்தியாதத்துவங்களைப் புருடதத்துவத்தில் அடக்கி ``ஐயைந்து`` என்றார்.
இதனால், `ஆன்மா யோக ஞானங்களால் உலகினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.

பொழிப்புரை :

அறிவு உதயசூரியன் போலத் தோன்றி விளங் குதலும், அவ்வாறின்றி மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல மழுங்கி நிற்றலும், அத்தமித்த சூரியன்போல ஒடுங்கி யிருத்தலும் ஆகிய இவையே பெத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன துரியங்களாகும். ஆகவே, `அவற்றின்பின் நிகழும் துரியமும் அறிவுசெயற்படாது அடங்கிக் கிடக்கும் நிலை` என்பது சொல்ல வேண்டா. இந்தப் பெத்தநிலை அவத்தைகளை விடுத்துச் சுத்தநிலை அவத்தையை ஒருவன் எய்துவானாயின்` அவன் மிக நன்மையை அடைந்தவனாய், எல்லையில்லாத ஆனந்தத்தையுடையவனாவான்.

குறிப்புரை :

``உதயம்`` எனக் கூறிய சொற்குறிப்பால் இவ்வாறு பொருள் கொள்ளக்கிடந்தது. ``மூன்றின்`` என்பதில் `இன்` வேண்டா வழிச் சாரியை கதி - நிலை. பதிதல் - அழுந்துதல். `பற்றுக்களில் பதிதரும்` என்பது, பின்பு ``பற்றாத் துரியம்`` என்றதனால் விளங்கும். பற்றாத் துரியமும் யோக துரியமும், ஞான துரியமுமாம். `யோகா வத்தையை அடைந்தவன் ஞானாவத்தையையும், பின்பு பரா வத்தையையும் அடைதல் உறுதி` என்பது பற்றி ``அதிசுபனாய் அனந்தானந்தியாகும்`` என்றார். சுபன் - நன்மையை அடைந்தவன். அனந்தம் - முடிவில்லாதது. அனந்த + ஆனந்தி = அனந்தானந்தி. இது வடமொழிப்புணர்ச்சி.
இதனால், மலாவத்தைகள் துன்பநிலையும், நின்மலாவத்தை இன்ப நிலையும் ஆதலைக் கூறும் முகத்தால், நின்மலாவத்தின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

பொழிப்புரை :

சட உலகங்கள் யாவும் தனக்குள் அடங்கியிருக்க, சிவஞானத்தால் எல்லாப் பொருளையும் ஒருங்கேயறியும் தன்மை யுடையவன் ஆகின்ற அத்தகைய நல்ல துரியத்திலே தங்கும் நிலையை ஓருயிர் அடைந்துவிட்டால் அது நல்ல உயிராகும், பின்பு அது பிறவி யாகிய தீமையை விளைவிக்கின்ற முப்பத்தாறு தத்துவங்களில் செல்லாது. முன்பெல்லாம் சடங்களாகிய அவற்றிற்சென்று அவையே யாய் இருந்ததுபோல் இல்லாமல் அவற்றின் நீங்கி அறிவுப் பொருளாய், செல்லாது செல்வதாகிய சிவகதியை அடையும்.

குறிப்புரை :

பெத்த காலத்தில் ஆன்மாப் பாசங்களின் வியாப்பி யமாய் இருந்து, முத்திகாலத்தில் அவைகளைக் கீழ்ப்படுத்தி நிற்றல் பற்றி, ``எல்லாம் தன்னுட் புக`` என்றும், பெத்த காலத்தில் ஆன்மாத் தத்துவங் -களைப் பற்றி ஏகதேசமாய் இருந்து, முத்தி காலத்தில் சிவ ஞானத்தைப் பற்றி வியாபகமாய் நிற்றல் பற்றி, ``யாவுளும் தானாய்`` என்றும் கூறினார். `நன்று` என்பது இறுதிநிலை கெட்டு, ``நல்`` என முதனிலை யளவாய் நின்றது. ``நல்லாந் துரியம், நல்லுயிர்`` என்பவை, `சுத்த துரியம், சுத்தான்மா` என்பதாம். ``புரிந்தக்கால்`` என்பது, புரிதலின் அருமை தோற்றி நின்றது. ``ஆகிப்புரிந்தக்கால்`` என்றாரேனும், `புரிந்து ஆகியக்கால்` என்பது கருத்தென்க. செல்லாது செல்லுதலாவது, `முன்பு வேறாய் இருந்து, பின்பு சென்று அடைதல்` என்பதின்றி, முன்பே உள்ளதனை உணர்தல் ``அன்றே`` என்றது தேற்றம்.
இதனால், நின்மலாவத்தையின் இயல்பும், பயனும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 6

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும்
தோய்ந்த கருமத் துரிசக லாதே.

பொழிப்புரை :

நெருப்பில் காய்ந்து நெருப்பாகவே இருந்த இரும்பு நெருப்பை விட்டு நீங்கினால் நெருப்பாய் இராமல் இரும்பாகவே யிருக்கும். இருப்பின் நெருப்பின் சூடு விரைவில் ஆறிவிடாது; இருக்கவே செய்யும். அதுபோல நின்மல சாக்கிர சொப்பன சுழுத்தி -களோடு தத்துவங்களின்றும் ஆன்மா நீங்கியபோதிலும் துரியத்திலும் அவற்றில் முன்பு மூழ்கியிருந்த வாசனை இருக்கவே செய்யும்.

குறிப்புரை :

`அதனால் நின்மலதுரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். கருமம் - தொழில். துரிசு - குற்றம். என்றது அதன் வாசனையை. தசகாரியங்களுள் தத்துவ ரூபம். தத்துவதரிசனம் இவ்விரண்டும் நின்மலசாக்கிரம். ஆன்ம ரூபம் தத்துவ தரிசனத்தில் உடன் நிகழும். ஆன்ம தரிசனம் நின்மல சொப்பனம். இதில் தத்துவ சுத்தி அடங்கும். சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி நின்மல சுழுத்தி, இதில் தரிசனம் நிகழ, ஆன்ம சுத்தி ஓரளவே நிகழும். சிவயோகம் நின்மல துரியம். இதில் ஆன்மசுத்தி முற்றுப்பெறும். எனினும் பண்டை வாசனை சிறிது இருக்கும். சிவபோகமே நின்மல துரியாதீதம். இதுவே ஆன்ம லாபம். இங்கு ஆன்மாப் பண்டை வாசனையும் இன்றிச் சிவமேயாய் நிற்கும். ஆகவே இதனை அடைதல் இன்றியமையாததாயிற்று. வாதனை - வாசனை.
இதனால், நின்மல துரிய துரியாதீதங்களின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைந் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

பொழிப்புரை :

வேதம் முதலாகிய சொல்லுலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும் தனது வடிவமாகக் கொண்டுள்ள சிவன் புலப்பட்டு நின்று, தனது திருவருளாகிய தேனை வழங்குகின்ற நின்மலாவத்தையில் கடக்க வேண்டிய சாக்கிரம் முதல் நான்கையும் கடந்து முடிந்தபின் துரியாதீதமே பாரவத்தையாய் விளங்கும்.

குறிப்புரை :

என்றது, `விரைவில் பராவத்தை கைகூடும்` என்றதாம். தெரிசனாவத்தை, பொருள்களின் இயல்பை உள்ளவாறுணரும் நிலை. அது ஞானாவத்தையாதல் அறிக. `விடு` என்பது `வீடு` எனத்திரியாது செய்யுள் நோக்கி, `விடு` என்றே, நின்று, விடுதலாகிய தொழிலையே குறித்தது. உம்மை, சிறப்பும்மை. `விடுத்திட வேண்டிய வகை` என்றதனால் அவைமுதல் நான்கு நிலைகளேயாயின. `விட்டது` என்பதே துணிவுப் பொருளை உணர்த்துமாயினும், `ஆய்விட்டது` என்றல் உலக வழக்கு. `முடிந்துவிட்டது` என்பது அதன் பொருளாகும். அது பற்றி, `அடைந்துவிட` என்பதை, `அடைந்தாய்விட` என்றார். `நின்மலம்` என்பதை ``மலம்`` என்றது முதற்குறை. `நிருவிகற்பம்` என்பது `விகற்பம்` என்றதும், `சன்மார்க்கம்` என்பது `மார்க்கம்` எனவும் வந்த செய்யுட்களைக் காண்க.l
இதனால், `நின்மல துரியாதீதமேபராவத்தைக்கு நேர்வாயில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையிற்றானே நின்மல துரியாதீத நிலை (இதுவே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படுவது) தோன்ற, ஆன்மா அதிலே நிலைத்திருக்குமாயின், சிவனது திருவருள் அதனை விட்டு நீங்காது. அந்நிலையில் நீ பராவத்தையை அடைவதற்குச் சித்த சலனத்தால் பற்றக்கூடிய உலகியல் நிலை வந்து சிறிதும் தீண்டாதபடி சமாதி நிலையில் நில். அப்பொழுது முன் சொன்ன திருவருள் உன்னைச் சிவனோடு ஒன்றுபடுத்தும்.

குறிப்புரை :

`ஆங்கண்` என்பது பெயரால் நின்று உருபேற்றது. `தான்` என்றது சிவனை. `ஒன்ற முதலாகும்` என்றாராயினும், `முதலாய் நின்று ஒன்றுவிக்கும்` என்பதே கருத்து.
இதனால், நின்மல துரியாதீதத்தில் சிவன் அருளுருவாய் நின்று, பராவத்தையில் ஆனந்த உருவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

பொழிப்புரை :

எவ்வுயுரினின்றும் தன்னை வேறுபடுத்திக் கொள்ளாது, அதனோடு ஒன்றாகியே, அதற்கு அப்பனாகியும் இருக்கின்ற சிவன். எவ்வுலகிலும் உள்ள உடற்கூட்டத்தை `ஆண், பெண்` என இருசமபாதிகளாகப் பிரித்து வைத்துள்ளான். என்னையும் தன்னினின்றும் வேறுபடுத்தி, அத்தகையனவாகிய உடம்புகள் உள்ள அனைத்திடங்களிலும் செல்லவிடுத்து, அந்த உடம்புகளுக்குள்ளே புகுத்தினான். பின்பு தன்னினின்றும் என்னை வேறுபடுத்தாது ஒன்றாக்கிக் கொள்கின்ற அருட்கேவலத்திலே செலுத்தி, என்னோடு பொருந்தி நிற்கின்றான்.

குறிப்புரை :

``வேறுசெய்யா அத்தன்`` என்பதை முதலிற் கொள்க. இரண்டாம் அடியில் ``வேறு செய்தான்`` என்பது முற்றெச்சம். `என்னையும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்த லாயிற்று. அருட்கேவலமாவது, ஆன்ம தரிசனத்தில் தத்துவ சுத்தி நிகழ்ந்த பின்னர் ஆன்ம சுத்திக்கு இடைப்பட்ட நிலை. இதுவே துகளறு போதத்தில் * ஆம் அவதரமான கேவலம்` எனச் சொல்லப்பட்டது. இதைச் சிறப்பாகக் குறிப்பிடும் முகத்தால் நின்மலாவத்தை முழுதும் குறிக்கப்பட்டது. ``வேறுசெய்யா அருட்கேவலம்`` என்றதனால், `நின்மலாவத்தையே பதியைப் பசு பற்றும் நிலை` என்பது விளங்கும். இது சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தை. இதனால், ``வேறுசெய்தான் என்னை எங்கணும் விட்டுய்த்தான்`` என்றது, சகலத்தில் கேவலம். சகலத்தில் சகலம், சகலத்தில் சுத்தமாகிய யோகம் - என்னும் இவைகளைக் குறித்ததாயிற்று.
`உடம்புகளை ஆண், பெண்` - என இருவகையாய்ப் பிரித்து வைத்ததைக் கூறியது, `அவத்தைகள் யாவும் இருபாற்கும் பொதுவே` என்பது உணர்த்துதற்கு, `மெய்த்தொகை வேறுசெய்தான்` என்றே கூறினமையால், உயிரில் - ஆண், பெண் - என்னும் வேறுபாடில்லை என்பதும், `உயிராகிய பறவைக்குக் கூடாய் உள்ளனவே உடம்புகள்` என்பதும், `அதனால், வினைக்கீடாக ஆண் உடம்பில் புகுந்திருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய்ப் பெண் உடம்பில் புகுதலும், பெண் உடம்பில் இருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய் ஆண் உடம்பில் புகுதலும் கூடும்` என்பது விளங்கும். விளங்கவே, இதனை உணராத மதங்கள், ஆணுக்கன்றிப் பெண்ணுக்கு வீடுபேறில்லை என்றும், `ஆணைவிடப் பெண்ணுக்கு இறைதொடர்பு எளிதும் மிக்கதுமாம்` என்றும் கூறுவன எல்லாம் போலியாதல் பெறப்படும். இம்மந்திரம் சொற்பொருட்வருநிலையணி பெற்றது.
இதனால், `பதியை அடைதற்குப் பசு - ஆண், பெண் - என்னும் வேறுபாடின்றி நின்மலாவத்தையை அடையமுயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில்
நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே
அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து)
இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

பொழிப்புரை :

உயிர்கள் காற்றாடியில் உள்ள ஓலைகளைப் போலவும் கொள்ளியைச் சுழற்றுங்காலத்தில் தோன்றுகின்ற வட்ட வடிவுபோலவும், கடலில் அலைகள் போலவும், தயிரைக்கடையும் மத்தைப் போலவும் `மேல், கீழ், நடு` என்னும் மூன்றுலகங்களிலும் விரையச் சென்று மீண்டு மீண்டு, ஆழ்குழிப்பட்டுத்துன்புற்று, சிவன் அருள்புரிந்தபொழுது அவ்வருளால் ஆழ்குழிகளாகிய இவற்றி னின்றும் மீண்டு கரையேறி, அவனை அடைந்து இன்புறும்.

குறிப்புரை :

உவமைகள் ஒரு நிலையில் நில்லாது பல நிலையில் மாறி மாறி விரையச் சுழலுதலை விளக்க வந்தன. இச்சுழற்சிக்குக் காரணம் பாசங்களே.
``மலம் மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி மன்னிச்
சலமாரும் பிறப்பி றப்பில் தங்கி, இத் தரை, கீழ், மேலும்
நிலையாத கொள்ளி வட்டம், கறங்கென நிமிடத் தின்கன்
அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே``8
என்னும் சிவஞான சித்தியினைக் காண்க.
``மலங்கள் ஐந்தால் சுழல்வதன் தயிரில் பொருமத்துறவே``l
என்பது திருவாசகம்.
``ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி``3
என்றார் பிறரும், அறம் காண் - அறம் காரணமாகச் சென்று காண்கின்ற - கவர்க்கத்தை இத்தகையதாகக் கூறவே, நரகம் மறம் காரணாகச் சென்று காண்பதாயிற்று. புவி, அறம், மறம் இரண்டாலும் சென்று காண்பது. இறங்கா - வீழ்ந்து `இறங்கா நீங்கும் என இயையும், எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. இறங்குதல் சொல்லப்பட்டமையானே சுவர்க்க நரக புவிகள் ஆழ்குழியாயின. `அக்குழிகளில் வீழ்வன எல்லாம் மலா வத்தைகள்` என்பது மேற்காட்டிய மேற்கோள்களாலே விளங்கும். ஆகவே, நின்மலாவத்தையே உயிரின் கரையேற்றம் ஆகின்றது.
இதனால், சகலமாகிய மலாவத்தை பிறவி நிலையாய்ப் பெருந்துன்பம் விளைக்கும் இழிவைக் கூறுமுகத்தால், நின்மாலவத்தையினது உயர்வு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

பொழிப்புரை :

`ஆன்மாவே சிவம்` என்று சொல்லத்தக்க நிலையை ஆன்மா அடைந்தபின், அநாதியே பொருந்திய சகசமலமாகிய ஆணவமும், அதனை முன்னிட்டு வந்த, `மாயை` கன்மம், மாயேயம், திரோதாயி, என்னும் பாசவேறுபாடுகளும் அவற்றிற்கு உரியவாய் ஆன்மாவினிடத்து விளங்கிய இழிகுணங் களும், இவை நீங்கினாலும் நீங்கப் பெற்ற சுத்தான்மா விடத்திலும் பின்னும் நிற்கின்ற இவற்றின் வாசனைகளும் சூரியன்முன் சந்திரன் போல அடங்கி ஒடுங்கிவிடும். (வாதிக்கமாட்டா` என்றபடி).

குறிப்புரை :

மலங்களின் இழிகுணங்களை இருபாஇருபஃது நான்காம் செய்யுளால் அறிக. ஆன்மாச் சிவமாம் தன்மையை அடைதல் நின்மலாவத்தையில் ஆதலின், `அதனை அடைக` என்பார், இவ்வாறு அதன் பயனை விரித்தார். இதனானே `நின்மலாவத்தை` என்னும் பெயர்க்காரணமும் விளங்கிற்று.
இதனால், நின்மலாவத்தை அதன்பெயருக்கேற்ற பயனை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.

பொழிப்புரை :

[இதன்பொருள் வெளிப்படை]

குறிப்புரை :

`உள்ளம்`, ஏற்புழிக்கோடலால், `யோகியர் உள்ளம்` என்க. ஏனையோர்க்கு அப்பாவனையில்லாமையறிக. `நினைப்பவர் மனம் கோயிலாக்கொண்டவன்* என்றாற்போல்வனவும் இக்கருத்தே பற்றி வரும் என்க. செய்யுளாகலின் உள்ளத்தைச் சுட்டும் `அங்கு` என்பது முன்னே வந்தது.
`தத்துவ தாத்துவிகங்களும், அவற்றைச் செலுத்தும் கடவுளரும் யோகபாவனையால் கடக்கத்தக்கவர்கள்` என்பதை உணர்த்தும் முகத்தால் யோகத்தை விதித்தவாறு.
இதனால், நின்மலாவத்தைக்கு உரிய வாயிலின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு)
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாகுமே.

பொழிப்புரை :

(இதன் பொருளும் வெளிப்படை)

குறிப்புரை :

அறிவு என்னும் ஞானம் - அறிவுகளில் எல்லாம் மேலானமை பற்றி, `அறிவு` என்றே சொல்லப்படுகின்ற மெய்யறிவு. நாயனாரது நோக்கில் அது சிவஞானமே. ``திரி`` என்றது உயிர் அறிவை. ``உயிர் எனும் திரி மயக்கி`` என்பதிலும் ``உயிர்`` என்பது அப்பொருட்டு. ஞானத்தை - தீ - என்னாதது ஏகதேச உருவகம். உயிரை, `திரி` என்றே கூறியது சிறப்புருவகம். ``அதனுட்புக்கு ஊனை நோக்கும்`` என்றதை, `ஊனுட்புக்கு அதனை நோக்கும்` எனக் கொள்க. இருளற நோக்கியவழி முன் புலப்படாதிருந்தவை புலப் படுதல் போல, ஊனை இருளற நீக்கினால் முன் மந்திரத்திற் கூறியன எல்லாம் விளங்கும் ஆகலின், ``வானகம் ஏற வழி எளிதாமே`` என்றார். ``வானகம்`` என்றது, யோகத்திற்கு அப்பாற்பட்ட நின்மலா வத்தையை,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக,
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி, இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில், கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே``
-திருமுறை - 4.75.4.
என்று அருளினமையை நோக்குக. மடம்படும் உணர் - பசு போதம்.
இதனால், `மேல் குறிப்பால் உணர்த்திய யோகம் சிவயோகம் ஆதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி யெழுகின்ற வேதா கமங்களும்
நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.

பொழிப்புரை :

நான் எனது விருப்பப்படியேவிட்டும், வாங்கியும் இயக்குகின்ற பிராணவாயுவையும், மிகுத்தெழுக்கின்றதமருக ஓசையையும், வல்லுநர்கள் பாடுதலால் எழுகின்ற வேதாகம ஒலிகளையும், நான் கண்ட முறை, சுழுமுனா நாடியினுள்ளாக, நடனத்தில் தூக்கிய காலின் கீழாம்.

குறிப்புரை :

`யோகத்திலே ஞானத்திற்குரிய எல்லாவற்றையும் சிவனது நடனத்தின் வழியே பெறலாம்` என்றபடி. `தடித்து` என்பது செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், `சிவயோகமே ஞானத்திற்கு வாயில்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

பொழிப்புரை :

முதலில் நிகழும் அறிவு பெரிய தவ அறிவாயும், பின்னர் நிகழும் அறிவு அந்தத்தவத்தால் வரும் மெய்யறிவாயும் நிகழ்தல் வேண்டும். பின்னை அறிவு மெய்யறிவாய் நிகழ்ந்தவழியே முன்னை அறிவு தவ அறிவாய் நிகழ்ந்தமை அறியப்படும், இல்லையேல், அது வெற்றறிவாக அறியப்படும். முதல் அறிவால் நிகழ்ந்த தவத்தால் பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளேயாம்.

குறிப்புரை :

முதுதவம் - பெருந்தவம். ``அறிவினில்`` என்ற `இன்` ஏதுப் பொருளில்வந்த ஐந்தாம் உருபு. பின்னைப் பெற்றால்` என இயையும். ``அறிவினைப் பெற்றால்`` என்பதில் `அறிவு` எனப் பட்டது. பின் இரண்டடிகளால் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் `இன்னது` என விளக்கப்பட்டது.
ஆன்மாத் தன்னை உள்ளவாறு அறிதலாவது, உலக வாழ்க்கையானே தனக்குச் சுதந்திரம் இன்மையை உணரும் முகத்தால், தனக்கு ஒரு தலைவன் உளன் ஆதலை அனுமானத்தால் உணர்தலும், பின்னர்த் தனது தவத்திற்கு ஏற்ப நிகழும் நிகழ்ச்சிகளால் அனுபவமாக உணர்தலுமாம். அனுமானத்தால் உணருமாற்றை ஔவையார்,
``ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்;
அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;
எனை ஆளும் ஈசன் செயல்`` 3
என விளக்கினார். `பின்னை` என்பது `மற்று` என்னும் பொருளைத் தந்தது. பேயினது அறிவு நெறிப்படா அறிவு அஃது உவம ஆகு பெயராய் அதுபோன்ற அறிவைக் குறித்தது.
`பல பிறப்புக்களில் செய்த தவமுதிர்ச்சியால் பின்னர்ச் சில பிறப்புக்களில் ஞானம் நிகழும்` என்பதும், `அந்த ஞானமாவது இது` என்பதும் உணர்த்தும் முகத்தால், `ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை` என்பது இதனாற் கூறப்பட்டது. ``இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத் தான் ஞானம் நிகழும்``8 எனவும், ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார் எம்மையுடைமை`` எனவும் மெய்கண்ட தேவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 16

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.

பொழிப்புரை :

நின்மல துரியத்தை அடைந்தவர்கட்கே, அதன் பின்னர் ஆனந்த நிலையாகிய அதீத நிலை வாய்க்கும். அதனால் அவர் அந்த அதீத நிலையை அடையமுயலுதலன்றி, முன் சொன்ன சிவ யோகத்தைப் புரிய எண்ணமாட்டார்கள். அவ்யோகத்தைப் புரியாமை -யால், அவர்கள் உலகப்பற்றில் வீழ்ந்துவிடமாட்டார்கள். ஆகவே, சிவானுபவமாகிய செயல் ஞான துரியாதீதத்தை அடைந்தவர்கட் கல்லது. ஏனைச் சிவயோகிகட்கு உண்டாகமாட்டாது.

குறிப்புரை :

ஆன்மா, ``தான்பணியைநீத்தல்``l நின்மல துரியத்திலேயாதலை அறிக. ஆன்மாச் செயலற்றிருத்தலாகிய இதனையே நாயனார் முதல் தந்திரத்து `உபதேசப்` பகுதி 15.16,17 ஆம் மந்திரங்களில் நயம்பட விளக்கியிருத்தல் காண்க.
இதனால், ஒன்று இடையிட்டு மேற்கூறிய சிவயோகம் நின்மலா வத்தைக்குச் சாதனமேயன்றிச் சாத்தியம் ஆகாமை உணர்த்தப் பட்டது.
ஆன்மா தன் செயல் அற்று, `எல்லாம் சிவன் செயல்` என்று இருக்கும் நின்மல துரிய நிலையே
``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்`` (திருவுந்தியார் - 30)
எனவும்
``செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோ! நாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு``l
எனவும் சாத்திரங்கள் கூறுகின்றன.

பண் :

பாடல் எண் : 17

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

பொழிப்புரை :

[கீழாலவத்தை மத்தியாலவத்தைகளை நோக்க, மேலாலவத்தையாகிய யோகாவத்தை நிறைவுடையதேயாம். எனினும், ஞானாவத்தையை நோக்கின் அது குறைவுடையதேயாகும். ஆகையால்] இயமம், நியமம் முதலாக உள்ள அந்த எட்டுறுப்புக் களையும் (சமாதி உட்படக்) கடந்து, நின்மல துரிய நிலையில் ``அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி நிற்றலாகிய``8 அந்தச் சமாதி கைவந்தால்தான் அநாதி தொட்டே பற்றியுள்ள ஆணவமலம் வாசனையும் இன்றி நீங்கும். (அப்பொழுது பின் வந்த மாயை கன்மங் களாகிய பாசங்களும் அவ்வாறாம். ஆகவே, அப்பொழுதுதான்) ஆன்ம, `பசு` என்கின்ற நிலைமை நீங்கப்பெற்று, `சிவம்` எனப்படும் நிலையை எய்தும்.

குறிப்புரை :

ஒளி வந்தவழியல்லது இருள்போகாதது போல, ஞானம் வந்த வழியல்லது அஞ்ஞானத்தைச் செய்வதாகிய ஆணவ மலம் அறுமாறில்லை. ``அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான் - ஆனத்தால் அதுபோவது; அலர்கதிர்முன் இருள் போல்``3 என்பது சிவஞானசித்தி. இதனால் இங்கு ``சமாதி`` என்றது ஞான சமாதியேயன்றி, யோக சமாதியன்று. ``தான் அவனாகும் சமாதி`` என எடுத்தோதியதும் அது விளங்குதற் பொருட்டு. இந்த ஞான சமாதியையே திருக்களிற்றுப்படியார்,
``சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியும்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று``8
எனக்கூறிற்று. இங்குக்கூறிய சமாதியை `யோக சமாதியே` எனக் கொள்கின்றவர்கள் `எட்டு` என்னும் எண்ணிக்கைக்குத் தங்கள் தங்கட்குத் தோன்றிய பொருளைக் கூறுவர்.
ஈற்றடியை முதலிற் கூட்டி, `ஈன்மில் காயம் இருநிலத் திருக்கும்` என முடிக்க. காயம் இருத்தலைக் கூறியது, `ஞான சமாதியை அடைந்தோர் காயத்தை இருந்த வேண்டினும் இருக்கும்` என்பது உணர்த்துதற்கு, ஞானிகளது உயிரேயன்றி, உடம்பும் நின்மலமேயாதலைக் குறித்தற்கு, ``ஈனம் இல் காயம்`` என்றார்.
இதனால், `யோக துரியாதீதத்தைக் கடந்து நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

பொழிப்புரை :

(இருவினையொப்பு மலபரி பாகம்வந்த பொழுது ஆன்ம அறிவில் பதிகின்ற அருட்சத்தியை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என அதன் தன்மை பற்றி வழங்கப்படுமாயினும் அவை `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் சக்தி களின் வகையாகவே சொல்லப்படுகின்றது.l அந்த ஐந்து சக்திகளும் சிவனது திருவடியேயாம். (அருளை `அடி` எனக் கூறுதல் மரபு. அதனால், சத்தி நிபாதத்தில் உண்டாகின்ற ஞானமும் `திருவடி ஞானம்` என்றே கூறப்படும்). அந்த ஞான ஒளி தோன்றியவுடன், அநாதி தொட்டு விடாது பற்றி நிற்கின்ற ஆணவ இருள் நீங்கும். அது நீங்கவே, ஆன்மாவிற்கு இயல்பாய் உள்ள இச்சாஞானக்கிரியா சத்திகள் (ஆணவத்தால் தடுக்கப்பட்டிருந்தனவேயன்றி, அழிக்கப் படாமையால்) விளக்கம் பெற்று ஆன்மாத் தனது இயற்கை நிலையை அடையும். அடைந்த பொழுது முதற்கண் முற்றும் நீங்காத பெத்தமும் அது முற்றும் நீங்கிய முத்தியும் என்னும் இரண்டற்கும் இடைநிலையில் ஆன்மா இருக்கும்.

குறிப்புரை :

அந்த நிலையே நின்மலாவத்தை என அறிக. `தோன்றும் ஐஞ்சத்தி தொலையா அரனடி` எனவும், `ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா` எனவும் கூட்டுக.
`ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா`` எனப்பொதுப் பட ஓதினாராயினும் சொல்லுவாரது குறிப்புத்திருவடி ஞானத்தின் மேலதும், ஆணவ இருளின் மேலதும் ஆதலை அறிக. மூன்றாம் அடியில் நின்ற ``தொலையா`` என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெய -ரெச்சம். மூன்றாம் அடியில் உள்ள ``தொலையா`` என்பது `செய்யா` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அதனை, `தொலைய` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக்கொள்க. இங்ஙனமாகவே இம்மந்திரம் சொற்பின்வருநிலையணிபெற்றதாம்.
இதனால், ஞானாவத்தையே நின்மலாவத்தையாதலன்றி, யோகாவத்தை அன்னதாகாமை தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.

பொழிப்புரை :

உயிர்கள் அவற்றைச் செலுத்துகின்ற சிவசத்தியின் தன்மைக்கு ஏற்ப மயக்க உணர்வைப் பெற்றுப் பெத்தத்தையும், மெய் உணர்வைப் பெற்று முத்தியையும் ஏனெனில், அந்த `மயக்கம், மெய்` என்னும் இரண்டையும் உயிர்கட்குத் தருகின்ற ஞானமாகிய தன் சத்திக்குச் சத்தனாய் உள்ள சிவன், ஒரு பெற்றியில் நில்லாது இருவேறாய் நிற்கின்ற அந்தச் சத்திக்கு உயிராய் நின்று அதனைச் செலுத்துவன் ஆதலின்.

குறிப்புரை :

`உயிர், சத்தியால் மான்று பெத்தத்தையும், தெருண்டு முத்தியையும் பெறும்` என்க. இது முறை நிரல்நிறை. உயிர் பக்குவம் எய்தாத பொழுது மலங்கள் அதன் ஆற்றலை அடக்கித்தாமே மேற்பட்டு நிற்றலால் அப்பொழுது சிவனது அப்பாசங்களைச் செலுத்தி அவை வழியாக உயிருக்கு மயக்க உணர்வையும், உயிர் பக்குவம் எய்திய காலத்தில் அதன் ஆற்றலை மலங்கள் அடக்க மாட்டாது, அதற்குக் கீழ்ப்பட்டுப் போதலால், அப்பொழுது சிவனது சத்தி தான் நேர்நின்று உயிர்கட்கு மெய்யுணர்வையும் தரும். அதனால், ``மான்றும், தெருண்டும் பெறும்`` என்றார். மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து. ஒன்றாகிய சத்தியே, பாசத்தின் வழிநின்று அறிவை மயக்கும் பொழுது `திரோதான சத்தி` என்றும், மயக்காது விளக்கும் பொழுது `அருட்சத்தி` என்றும் பெயர் பெறும். `ஞானத்தன்` என்பது இன்னோசை நோக்கி மெலித்தல் பெற்றது. ஒன்றேயாயினும் இரண்டாய்ச் செயலாற்றுதல்பற்றிச் சத்தியை ``ஊன்றல் இல்லா ஒளி`` என்றார். மற்று, தான் அசைகள். ``ஒளிக்கு ஒளி`` என்றது, `சிவன் செயற்படுத்திய வழியிலே சத்தி செயற்படும்` என்பது உணர்த்துதற்கு முன்பு, ``சத்திக்குச் சத்தன்`` என்றதை இனிது விளக்கியவாறு.
இதனால், மேற்கூறிய பெத்தமும் முத்தியும் சிவனாலே ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

தத்துவங்கள் முப்பத்தாறினையும், அவை தாமே அறிந்தும், செய்தும் வருவனவாக மயங்கி, உண்மையில், `அவற்றைக் கருவிகளாகக்கொண்டு அறிபவனும்` செய்பவனும் நான்தான்` என்பதையான் பெத்த காலத்தில் அறிந்து கொள்ளாமலே மயங்கி யிருந்தேன். பின்பு நந்திபெருமான், மேற்குறித்த உண்மையை எனக்கு அறிவுறுத்தருளினார். அந்த உண்மையை அங்ஙனமே அறிந்து கொண்டமையால், முத்தனாயினேன்.

குறிப்புரை :

`பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `இவ்விரண்டிற்கும் காரணம் பக்குவம் எய்தாமையும், எய்தினமையும்` என்பது மேலே கூறப்பட்டது.
இதனால், `மெய்யுணர்வு திரோதானசத்தி அருட்சத்தியாய் மாறின அளவில் பெறப்படாது. குருவினாலே பெறப்படும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

பொழிப்புரை :

தான் `சீவன்` என்கின்ற நிலைமை நீங்கி, `சிவன்` என்கின்ற நிலைமையை அடைந்த பெரியோன் சிவன் சத்தி இருவனாயும் நேரே கண்டது தன்னுடையே உடம்பிற்குள்ளேயாகும்.

குறிப்புரை :

`சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தையாகிய நின்மலா வத்தையிலாம்` என்றபடி `அந்நிலையை அடைந்தவன் பின் பரா வத்தை அடைதல் உறுதி` என்பது கருத்து. முன் இரண்டு அடிகளில் சிவனும், பின் இரண்டு அடிகளில் சத்தியும் குறிக்கப்பட்டனர். அவ் வடிகளின் பொருள் வெளிப்படை ``கண்டது`` என்னும் ஒருமை அத் தொழிலைக் குறித்தது. `கண்டது ஊனிடை` என மாற்றியுரைக்க.
இதனால், `சகலத்திலேயே நின்மலாவத்தையில் சிவ சத்திகளை அவர்களது ஞானமாகிய கண்ணால் காணுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.

பொழிப்புரை :

ஆணவ இருளைச் சிறிதே நீக்குவனவாகிய மாயா காரியக் கருவிகளும் அவற்றால் சிறிதே நீக்கப்படுகின்ற ஆணவ இருளும், அதனை நீக்க உதவுகின்ற சிவசத்தியும் அச்சத்தியால் காப்பாற்றப்படும் ஆன்மாவும் ஆகிய இவைகளை முறையாக முன்னர் உணர்தல் வேண்டும். (அவ்வாறு உணர்தலே அரிது. ஆயினும்) அதன்பின் அவற்றோடு நில்லாது ஆன்மாவின் எளிய நிலையையும், அந்நிலையை உணர்ந்து சிவன் அதன்மேல் கொள்ளும் இரக்கத்தையும், அவ்விரக்கத்தால் ஆன்மாவிற்கு உண்டாகின்ற அனைத்துப் பொருள்களையும் பற்றிய உண்மையான உணர்வின் சிறப்பையும் உணர்ந்து, பின் பல பொருள் உணர்வை விடுத்துச் சிவன் ஒருவனையே உணர்கின்ற உணர்வு உண்டாகுமானால், அதன் பின்பே சிவனது பேரின்பம் ஆன்மாவிற்கு உளதாகும்.

குறிப்புரை :

பின்னர், ``பரை`` எனத் திருவருள் குறிக்கப்படுதலால், முதற்கண் ``ஒளி`` என்றது மாயையாகிய ஒளியையே குறித்தது. அளியது - அளிக்கத்தக்கது. அஃதாவது, இரங்கத்தக்கது.
துகளறுபோதத்தில், ஒளியை உணர்தல், முதல் ஏழு அவதாரங் களாகவும், இருளையுணர்தல், அடுத்துமூன்று அவதரங்களாகவும், ஆன்மாவை உணர்தல், அடுத்த `தன்னுண்மை சைதன்னிய தரிசனம்` எனவும், இரக்கத்தை (திருவருளை) உணர்தல் `ஞானதரிசனம்` எனவும் தெருளைஉணர்தல் அடுத்த எட்டு அவதரங்களாகவும் கூறப் பட்டன. இவற்றின் பின்னர்க் கூறப்பட்டன எல்லாம் சிவன் ஒருவனையே உணர்ந்து நிற்கும் நிலைகளாம். அந்நிலைகளே சிவானந்த விளைவுகளுமாம். ``பரை`` என்பது பொதுவாக `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், நின்மலாவத்தையின் உட்கூறுகள் ஒருவாறு விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.

பொழிப்புரை :

`சிவானந்தம்` என்பதும் சிவனது அருட் குணங்களில் ஒன்றேயாம். (வரம்பில் இன்பம்) ஆகவே, அச்சத்தி வழியாக ஞான நிலைகளில் முடிநிலையை அடைந்த உயிர் பின் சிவத்திலே அழுந்தி, ஐவகை உடம்புகளினின்றும் நீங்கி, அறிவே வடிவாய், அந்த அறிவுக்கு அறிவாய் உள்ள சிவத்திலேயே பிரிதல் இன்றி நிற்குமாயின் சிவனை முற்றும் பெறுதலாகிய மிகப்பெரிய பேறு உளதாகும்.

குறிப்புரை :

``தானே`` என்பது, `அந்த உயிரே` எனத் தேற்றப் பொருள் தந்தது. சமாதி - தான் அதுவாதல், கோபம் - கோவம், பாபம் - பாவம்` என வருதல்போல, `மகாபாக்கியம், என்பது, ``மகா வாக்கியம்`` என வந்தது. பாக்கியம் - பேறு இவ்வாறன்றி `மகா வாக்கியம்` என்றே கொள்ளுதற்கு இங்கு ஏதும் இயைபில்லாமை அறிக.
இதனால், முன்மந்திரத்தில் குறிக்கப்பட்ட சிவானந்தம் வாய்க் குமாறும் `அதுவே பெரும்பேறாகிய ஆன்மலாம்` என்பதும் கூறப் பட்டன. இப்பேறு கிடைத்தற்குக் கூறப்பட்டவழி நின்மலாவத்தையே யாதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 24

அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.

பொழிப்புரை :

அறிவித்தாலும் அறியும் தன்மையில்லாத அபக்குவர்க்கும் குருவின் உபதேசம் ஏற்புடையதன்று; (பயன் இன்மையால்) முற்பிறவியிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தும் நிட்டை கூடாது விட்டமையால் கருவிலே திருஉடையவராய்ப் பிறந்து, ஞானத்தின் திருவுருவாயே நிட்டையை வேண்டி நிற்பவர்க்கும் குருஉபதேசம் வேண்டுவதன்று. எனவே அறிவித்தால் அறியும் பக்குவம் உடையவராய் அறிவிப்பாரை நாடிநிற்கும் அவர்கட்கே ஞான குரவர் உபதேசத்தைச் செய்வராக. பக்குவம் வாய்ப்பினும் தம்மையும், தலைவனையும் குருஉபதேசத்தாலன்றித் தாமாகவே அறிபவர் உலகில் யார் இருக்கின்றார்கள்? (ஒருவரும் இல்லை).

குறிப்புரை :

அறிவித்தால் அறியும் ஆற்றலும், `அறியவேண்டும்` என்னும் அவாவும் இல்லாதவர் `பிராகிருதர்` என்றும் முற்பிறப்பிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர். `சாமுசித்தர்` என்றும், பரிபக்குவம் வாய்ந்து, ஞானகுருவைத் தேடுகின்றவர் `வைநயிகர்` என்றும் சொல்லப்படுவர். இதனை, `பண்டை நல்தவத்தால் தோன்றி`l என்னும் சிவஞானசித்திச் செய்யுளின் உரையால் உணர்க. இவர்களையே இங்கு நாயனார் `அறிவற்றவர் அறிவுற்றவர், அறிவுற்று அறியாமை எய்தி நிற்பார்` என்றார். இம்மூன்று பெயர்களில் நடுவில் உள்ள ஒன்றில் உள்ள `அறிவு` என்பது மட்டும், `ஞானம்` என்றும், மற்றையிரண்டும் `அறியும் ஆற்றல்` என்றும் பொருள் தந்தன. ``அறியாமை`` என்பதில், `மை`. வினையெச்ச விகுதி. எனவே, `அறியாமல்` என்பது அதன்பொருள். அறியும் ஆற்றல் இருந்தும் அறியாமல் நின்றதற்குக் காரணம், அறிவிப்பார் இன்மை. இறுதியில், ``தம் அறிவு ஆர் அறிவார்`` என்றதும், `அறியும் ஆற்றலைப் பெற்றவர்க்கும் அறிவிப்பார் இன்றி அறிதல் இயலாது` என்பதை விளக்குதற்கேயாம். உம்மை இரண்டும் எதிரதுதழுவியும், இறந்தது தழுவியும் நின்றன. முன்னிரண்டடிகளில் பாடம் திரிவுபட்டுள்ளது. ``அறிவிக்க`` என்பது வியங்கோள் அதற்கு எழுவாய், ஆற்றலால் வந்து இயைந்தது.
இதனால், ஞான குரவராயினார்க்கு ஒரு கட்டளைபோல வைத்து பரிபக்குவம் இல்லார்க்கு ஞானாவத்தை நிகழாமையும், பரிபக்குவம் உடையார்க்கும் ஞானகுரு இன்றி அது நிகழாமையும் கூறப்பட்டன. ஞானம் ஞான குரு இன்றி நிகழாமை மேலே சில இடங்களில் கூறியிருக்கவும், இங்கும் அதனைக் கூறியது, `பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்டு` என்பவாகலின் நின்மலாவத்தை கூறும் இவ்விடத்திலும் அதனை வலியுறுத்தற்பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 25

சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.

பொழிப்புரை :

சகலத்தில் சுத்தமாகிய மேலாலவத்தையும், (யோகாவத்தையும்) சகலத்திற் சகலமாகிய மத்தியாலவத்தையும், சகலத்தில் கேவலமாகிய கீழாலவத்தையும் ஆகிய இவைகளின் தொடர்புகள் சிறிதும் இல்லாது நீங்கிய நின்மல துரியத்தில் நிற்றலால் சுத்தான்மாக்களாய், சொல் நிகழ்ச்சி அத்துரியத்திற்கு முற்பட்ட, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி` என்னும் மூன்றோடே நீங்கப் பெற்றவர்கட்கு, சத்தாய் உள்ள சிவமும், அசத்தாய் உள்ள பாசங்களும், சதசத்தாய் உள்ள ஆன்மாவும் முறையே சித்தும், அசித்தும், சிதசித்தும் ஆதல் முற்ற அனுபவமாய் விளங்கும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. அசுத்தம் போலத் தொடர்பற்றதாகக் கூறினமையால், ``சுத்தம்`` என்றது சகலத்திற் சுத்தமேயாயிற்று. முப்பொருள்களின் இயல்பு சத்து, அசத்து, சதசத்து ஆதல் மட்டும் விளங்கல் நிரம்பாமையால், `அவை முறையே சித்தும், அசித்தும், சிதசித்துமாதல் விளங்கும்` என்றார். சிவஞான போதத்துள்ளும் `இருதிறன் அல்லது சத்தாம்` என்று ஒழியாது. ``சிவசித்தாம்`` என அருளியதையும் 8 அதன் உரையையும் நோக்குக.
`சத்து` என்பது, `உள்ளது` என்றும், `அசத்து` என்பது இல்லது` என்றும், `சதசத்து` என்பது, `சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்கும்` என்றும் பொருள் தரும். இன்றும் `உள்ளது` என்பது, `என்றும் ஒரு படித்தாய் உள்ளது` என்றே பொருள்தரும். அதனால் `அசத்து` என்பது `சிலகாலம் உள்ளதாய் இருந்து பின் இல்லதாகிவிடும்` என்றே பொருள் தரும். இம்முறையில் சத்தாய் உள்ளது சித்தாயும் இருக்கும்; அஃதாவது அறிவாய், ஒருஞான்றாமை அறியாமை உடையதாகாமல் இருக்கும். அசத்தாய் உள்ளது அசித்தாயும் இருக்கும். அஃதாவது எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் அறிவுடையதாகாது அறியாமையை உடையதாயே இருக்கும் `சடம்` என்பது இதுவே சதசத்தாய் உள்ளது சிதசித்தாயும் இருக்கும். அஃதாவது சித்தோடு கூடிச் சத்தாயும் அஃதாவது அறிவுடையதாயும் அசித்தோடு கூடி அசத்தாயும் அஃதாவது அறியாமையுடையதாயும் இருக்கும். `இவையெல்லாம் நூலறிவால் அறியப்பெறினும், அனுபவமாக விளங்குவது நின்மல துரியத்தில்` என்பது இம்மந்தரத்தில் கூறப்பட்டது ``கூடிநிற்கும்`` என்றது அனைத்தும் விளங்கும்` என்றபடி ஏகாரம் பிரிநிலை.
இதனால், `நின்மலாவத்தையில்தான் அனுபவ ஞானம் உண்டாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

பொழிப்புரை :

புருடன், (ஆன்மா) பிறிதொரு பொருள் அறிவியாமல் தானாகவே ஒன்றையும் அறியும் தன்மையுடைய னல்லன்; அதனால், அவன் அறிவில்லாத சடப்பொருளும் அல்லன். (`அறிவித்தால் அறிவான்` என்றபடி). இத்தன்மை உடைய இவன், பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் அறிபவனாகிய சிவனது அறிவைக்கொண்டு தன்னை முன்மந்திரத்திற் கூறியவாறு, `சதசத்து` என அறிவானாயின்` அப்பொழுது இவனும், இவனால் சாரப்பட்ட கருவித்தொகுதியும் சிவனது அருளாகியே நிற்கும். (`இவனும் சிவமாகி, இவனது கரணங்களும் சிவகரணமாய்விடும்` என்றபடி). அங்ஙனம் நிற்கவே, முன்பு அசித்தோடு கூடி அசித்தாய் இருந்த, அல்லது ஏகதேசமாய் அறியும் சிற்றறிவை உடையவனாய் இருந்த இவனே, எல்லாவற்றையும் அறியும் அறிவுடையவனாகிச் சிவத்தோடே கூடி இரண்டற்றிருப்பான்.

குறிப்புரை :

``தானே`` மூன்றில் இறுதியில் உள்ளதில் ஏகாரம் தேற்றம். ஏனைய பிரிநிலை. ஆன்மா நின்மலாவத்தையை அடைதல் பற்றியே கூறி வருதலாலும், முன் மந்திரத்திலும் ``சுத்தராய்ச் சொல்லற்றவர்கட்கே`` எனச் சீவர்களே குறிக்கப்பட்டமையாலும் அத்தொடர்ச்சி பற்றி இம்மந்திரத்திற்கு `ஆன்மா` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``தானே அறிவான் அறிவு`` என்பதன் ஈற்றில் `ஆன்` உருபு விரிக்க. ``ஆனால்`` என்பதில் ஆக்கம் அறியாததனை அறிதலை உணர்த்திற்று. ``நிற்க`` என்ற அனுவாதத்தால், `நிற்கும்` என்பது தானே பெறப்பட்து. ``சதசத்து`` என்றதில் அசத்தும் பெறப்பட்டமைாயல், ``இரண்டும்`` என்றதில் அசத்துத் தொகுதியும் ஒன்றாயிற்று. ``தங்கும்`` என்னும் `செய்யும்` என்முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ஆன்மா, வடமொழி வழக்குப் பற்றி ஆண்பாலாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன்மந்திரத்தில், `ஆன்மாச் சிதசித்து` எனக்கூறிய வகையில், `சித்தாதல் இவ்வாற்றால்` என்பது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.

பொழிப்புரை :

மாயாகாரியங்களாகிய கருவிகளின் உண்மையை உணர்ந்தவர்கட்கே மெய்ப்பொருளாகிய சிவத்தை உணரும் உணர்வு கிடைக்கும். அந்த உணர்வானே ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும். அதனை அடையவே, அந்தச் சிவஞானமே சிவபத்தி -யாய்ப் பரிணமிக்க, அந்தப் பத்தியால் சிவானந்தம் விளைவதாகும்.

குறிப்புரை :

``தத்துவம்`` நான்கில் முதலது உபசார வழக்கால் `தத்துவம்` எனப் பெயர்பெற்றது நிற்கும் மாயா கருவிகளைக் குறித்தது. ஏனையவை உண்மை வழக்கால் மெய்ப்பொருளைக் குறித்தன. ``தலைப்படல்`` இரண்டனுள் முதலது ஆன்மாவின் செயலாயும், இரண்டாவது ஞானத்தின் செயலாயும் நின்றன. தான் - ஆன்மா. அவன் - சீவன். ``ஆகவே`` என்ற அனுவாதத்தால், ஆதல் தானே பெறப்பட்டது. ஈற்றில் உள்ள தான், அசை.
இதனால், முன் மந்திரத்தில் `ஆன்மாத் தன்னை யுணர்தல் சிவஞானத்தால்` என்றமை பற்றி, அந்தச் சிவஞானம் கிடைக்குமாறும், அது கிடைப்பின் விளையும் பெரும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 28

தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.

பொழிப்புரை :

ஆன்மாத் தனது இயல்பை உள்ளவாறறிந்தால் தான் பாசத்துடன் நில்லாது சிவத்துடனே நிற்கும். அவ்வாறு நிற்கும் பொழுதுதான் மலங்களின் சேட்டை ஒழியும். பாசங்களின் சேட்டை ஒழிவே பிறப்பின் ஒழிவாகும். எவ்வாற்றானும் மீண்டும் பிறவி எய்தாத நிலையே முடிநிலைப் பரமுத்தியாகும். மற்றும் அதுவே நன்னெறியாகிய ஞானத்தால் அடையப்படும் பேரறிவுப் பொருளும் ஆகும். அது சின்முத்திரை வழியாகக் கிடைக்கும்.

குறிப்புரை :

சேட்டையை, `குணம்` என்றார். ``பின்`` என்பது, `மற்று` என்னும் பொருளில் வந்தது. `பின்னும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மையும், `அதுவே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயின. `பின்னும் அதுவே` என்பதை, ``சன்முத்தி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `நன்றது` என்பது எதுகை நோக்கி, `நன்னது` என வந்தது. `முத்திரையால் என உருபு விரிக்க. சின்முத்திரையைப் பெறுமாறு, வருகின்ற மந்திரத்தில் காண்க.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய தத்துவ ஞானத்தால் ஆன்ம சுத்தி உண்டாக, அதன்பின் நிகழும் ஆன்ம லாபமும் அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 29

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

பொழிப்புரை :

(சிவனுக்கு வடிவமாய் அமைவது. அவனது சத்தியே. அதனை, ``காயமோமாயை அன்று; காண்பது சத்தி தன்னால்l என்னும் சிவஞான சித்தியால் அறியலாம். `அரிதரு கண்ணியாணை ஒருபாகமாக அருள் காரணத்தில் வருவார்``3 என அருளிச் செய்ததும் இதனையே. அவ்வாறு ஆகுமிடத்து.)
ஞானசத்தியே உடல். கிரியாசத்தியே உடலில் உள்ள பல உறுப்புக்கள். இச்சாசத்தியே `உயிர்களை உய்விக்கவேண்டும்` என்னும் கருணையாய் உள்ளிருந்து உந்துவதாய் மேற்கூறியவைகளை இயக்கும் உயிராகும். இவைகளையெல்லாம் கொண்டு அவன் செய்யும் தொழில்கள் ஐந்து. (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்). இங்ஙனம் ஆகலின் அவ்வைந்தொழிலில் இறுதிக்கண்ணதாகிய அருளலை தற்போதம் அற்றிருந்தவர்கள் மட்டுமே பெற்றார்கள் (`பிறரெல்லாம் ஏனை நான்கையே பெறுகின்றனர்` என்பதாம்).

குறிப்புரை :

இறைவனுக்கு `அருவம், அருவுருவம், உருவம்` என மூவகை வடிவங்கள் உள. அவற்றுள் அருவம் தவிர, ஏனைய இரண்டும் பற்றி இங்குக் கூறப்பட்டன. `உருவ வடிவத்தில் உடலும் உறுப்பும் நம்மனோரது உடலும், உறுப்பும்போலவே இருப்பினும் அவை அன்ன அல்ல; இங்குக் கூறிய சத்திகளே` என அறிவுறுத்தபடி அருவுருவ வடிவம் மந்திர வடிவம். அதனுள் சத்தியோசாத மந்திரம் உடலும், ஈசான மந்திரம் சென்னியும், தற்புருட மந்திரம் முகமும், அகோரமந்திரம் இருதயமும், வாமதேவமந்திரம் மறைவுறுப்பும் ஆக இவ்வாறு அமைகின்றன.
இறைவன் சனகாதி நால்வர்க்குத் தென்முகக் கடவுளாய்க் கல்லால மர நீழலில் இருந்து சின்முத்திரையாலே ஞானத்தை உணர்த்தியதைக் கருத்தில்கொண்டே,
``மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே``
என்றார். (`ஆகவே, அவரைப் போன்றாரும் அவ்வாறு ஞானத்தைப் பெறுதல் கூடும்` என்பது குறிப்பெச்சம்.)
அருவம் வடிவம், `இலயம்` என்றும், அருவுருவ வடிவம் `போகம்` என்றும், உருவம் வடிவம் `அதிகாரம்` என்றும் சொல்லப் படும் நிலைகளையுடையனவாம். இனி ஞானகுரவருடைய திருமேனியும் சிவோகம்பாவனை காரணமாகச் சத்தி வடிவம். அல்லது அருட்டிருமேனியாம் ஆகலின், அவரால் சின்முத்திரை வழியாகப் பலரும் பெறுதல் கூடும் என்க. சின்முத்திரையின் இயல்பை முத்திராலட்சணங்களில் காண்க.
இதனால், முன்மந்திரத்தில் கூறிய ஞான முத்திரையின் உண்மையும், அதனைப் பெறுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.

பொழிப்புரை :

[முன்மந்திரத்தில் சிவனுக்கு உள்ளனவாகக் கூறிய ஞான சத்தி இச்சா சத்தி கிரியா சத்திகள் உயிர்கட்கும் உள்ளன, அஃது எவ்வாறு பெறப்படுகின்றது எனின்,], `சடப்பொருள்கட்கு வேறாய் உயிர் உண்டு` என உணரவைப்பதே உயிரினது ஞான சத்திதான், (அஃதாவது, எங்கே அறிவு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் `உயிர் உள்ளது` என உணரப்படுகின்றது என்பதாம்). இனி, அந்த அறிவு `யான்` எனத் தன்னைப் பற்றியும், `எனதும்` எனப் பிற பொருளைப் பற்றியும் கொள்கின்ற பற்றும் இச்சாசத்தியின் செயலேயாகும், அந்தப் பற்றுக் காரணமாக உயிர் பலவான மாயா காரியப் பொருள்களைச் செயற்படுத்தி, அவற்றால் பயன் உறுவது கிரியா சத்தியின் செயற் பாடே. இவ்வாறு இவை நுட்பமாக ஓர்ந்துணரத்தக்கன. (அங்ஙனம் உணராமல், `உயிர்கட்கு இந்தச் சத்திகள் இல்லை` என்று கருதிவிடுதல் கூடாது). எனினும், உயிர்கட்கு அவற்றின் வினைப்பயன்களை ஊட்டுவிக்கின்ற சிவன் செயற்படுத்தவே இச்சத்திகள் செயற்படும். ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் அவைகளே தனி நின்று செய்யும் செயல்கள் ஆகாது, அவற்றுள் உயிர்க்கு உயிராய் நிறைந்து நிற்கும் சிவன் செயல்களே ஆகின்றன.

குறிப்புரை :

இவ்வாற்றால், `ஒன்றேனும் நம் செயல் அன்று; எல்லாம் சிவன் செயலே` என்று உணரப்பெறுவதே தம்மையுணர்ந்து, பின் தலைவனை உணர்தலாகும்.
``சீவனும் இச்சா ஞானக்
கிரியையால் சிவனை ஒப்பன்
ஆவன்என் றிடின் அனாதி
மலம்இவற் றினை மறைக்கும்;
காவலன் இவன்செய் கன்மத்
தளவினில் கொடுப்பக் காண்பன்;
பாவியாம் புத்தி முத்திப்
பயன்கொளும் பண்பிற் றாமே``
-சுபக்கம் - சூ. 1 . 64.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளைக் காண்க. ``உயிர்க்கு அறிவு`` என்பதை, `உயிருக்கு உள்ள அறிவு` என விரிக்க. ``உயிர்க்குக் கிரியை`` என்பதும் அத்தகைத்து. உண்மையை உணர்த்துவதை ``உண்மை`` என உபசரித்தார்.
அபிமானம், `மானம்` எனப்பட்டது. `பற்று` என்பதே பொருள். உயர்தல், எண்மிகுதல். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். பின்னும் அஃது இருமடியாகுபெயராய், அவற்றைக் கொண்டு செய்யப்படும் செயல்களை உணர்த்திற்று. `ஊட்டுதல்` இரண்டில் முன்னது, `வலுப்படுத்துதல்` என்னும் பொருளது. பின்ன -தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``உள்ளத்துளான்`` என்பதன்பின், `செயல்` என்பதுசொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், மேல், ``தன்னை யறிந்து சிவனுடன் தானாக`` என்றது பற்றி, அங்ஙனம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு)
அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.

பொழிப்புரை :

`கிரியை, இச்சை, ஞானம்` என்பன சிவனுக்கு என்றும் இயல்பாகவே விளங்கி நிற்கின்றன. `உயிர்கட்கோ` எனின், அவை அனாதியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுப் பின்பு சிவனால் கூட்டப் பெறுகின்ற சுத்தமாயை அசுத்த மாயைகளின் காரியங்களில் அவை சிறிதே விளங்குகின்றன. சிவன் இந்த மாயைகள், அவற்றின் காரியங்கள், ஆணவம் ஆகிய அனைத்தையும் கடந்து, நிலைத்து நிற்பதாகிய துரியாதீத நிலையில் இருக்கின்றான்.

குறிப்புரை :

`தொன்மை` என்பது விகுதி கெட்டுப் பகுதி மாத்திரமாய் நின்றது. தொன்மையானவற்றைத், ``தொன்மை`` என்றார். `சீவர்க்கு` என்னும் நான்கன் உருபுதொகுத்தலாயிற்று. கழிவற்ற - அழிவில்லாத; என்றும் உள்ளகாரணம், மாயைகள் காரியம் அவற்றினின்றும் தோன்றிய கருவிகள் சுத்த மாயை விஞ்ஞான கலருக்கே கருவியாய்ப் பயன்படும் என்க. இருள் போலுதலின் ஆணவத்தைப், `பாழ்` என்றார். சாந்த + அதீதம் = சாந்தாதீதம். சாந்தம் - அமைதி; என்றது துரிய நிலையை` பராவத்தையில் அதீதத்தை அடைந்தோர்க்கு மீட்சியில்லை ஆகையால் அதனை, `அழிவற்றது` என்றார்.
இதனால், சிவ சீவர்களது இச்சா ஞானக் கிரியைகளின் வேறுபாடு உணர்த்தப்பட்டது. இதனானே அவற்றை உடையவர்களது வேறுபாடும் தானே பெறப்படும். முன்மந்திர உரையிற் காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அஃது இனிது விளக்கப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 32

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.

பொழிப்புரை :

உணருமாற்றால் உணராதவர்களால், `இல்லை` என மறுத்துக் கூறப்படும் பொருளாய் உள்ளவனும், உணருமாற்றால் உணர்ந்தவர்களால், `உண்டு` என நிறுவப்படும் பொருளாய் உள்ளவனும், உலகின்கண், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகைப் பட்ட எல்லாப் பொருள்களிலும் ``அவையே தானாய்``க்* கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையைத் தான் எய்தாமையால் அவற்றின் வேறாய் உள்ளவனும் ஆகிய முதல்வனாம் சிவனை வாக்குக் குறிப்பிட முயலுமாயின் அதற்கு எட்டாத நெடுந்தொலைவில் உளன். இவ்வுண்மையை உயிர் எவ்வளவு விரைவாக அவ்வளவு விரைவில் அதன் உள்ளுயிராய் விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

``இல்லதும் உள்ளதுமாய்`` - என்பதை முதலிற் கொள்க. முதல் அடியில் சொல்லப்பட்ட இன்மை உண்மைகள் புலனாகாமை புலனாதல்களைக் குறித்து நின்றன. ``உண்மையுமாய், இன்மையுமாய்``8 என்று அருளிச்செய்ததும் இவ்விரு பொருளும் பற்றி என்க. `இல்லதும் உள்ளதும் ஆகிய யாவையும்` - என்க. ``ஆகியும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது சொல்லால் சொல்லுதலை, `சொல் சொல்லிடில்` எனக்கருவியே வினை முதல் போலக் கூறப்பட்டது. சொல், வாக்கு, அது நால்வகைத்தாதலை அறிக. வாக்குக்கள் சுத்த மாயாகாரியம் ஆதலின் அதற்கும் அப்பாற்பட்ட நிலையை `தூர அதிதூரம்`` என்றார். ``பாதாளம் ஏழினும் கீழ் சொள் கழிவு பாதமலர்``l ``சோதி மணிமுடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை``3 ``சொற்பதச் சொற்பதமும் கடந்துநின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை`` * என்னும் திருமொழிகளை உணர்க. அது, பகுதிப்பொருள் விகுதி. `உணர்தல், அவன் அருளால்` என்பது அறிக.
இதனால், முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் துரியா தீதனாயினும் எங்கும் நிறைந்து நிற்பவன் ஆதலின், அவனை உணரு மாற்றால் உணரின் உணரப்பட்டு நிற்பான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி
உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட
உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே
உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.

பொழிப்புரை :

சிவனது சத்தி (உயிர்கள் பக்குவம் எய்தாத பொழுது) அவற்றுக்கு உலகின்மேல் ஆசையை உண்டாக்குதலும், (பக்குவம் எய்திய பொழுது) அவற்றுக்கு அவ்வாசையைப் போக்குதலும் ஆகிய இரு செயல்களைச் செய்யும். (முன்னை நிலையில் திரோதான சத்தியாயும், பின்னை நிலையில் அருட் சத்தியாயும் அது நிற்கும். திரோதானசத்தி, `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும்) உயிருக்கும் உலக ஆசை நீங்கிய பொழுது அருட் சத்தி உயிரை அசத்தை விடுத்து சத்தினை நாடுதலில் விருப்பம் உண்டாக்கி, இவ்வாறு அதனுடன் என்றும் உடனாய் நிற்றலால்தான் உயிர் உலகப் பற்றினை ஒழித்து, மேலான வீட்டினைச் சேர்வதாகின்றது.

குறிப்புரை :

இம்மந்திரத்தில் பாடவேறுபாடு மிகுதியாய் உள்ளது. ``அருள்சத்தி``, வினைத்தொகை. மூன்றாம் அடியில் உள்ள ``உயிர்`` என்பதன்பின் நான்காம் உருபு விரிக்க.
இதனால், `பெத்த நிலையாகிய சகலாவத்தைகளும், முத்தி நிலையாகிய சுத்தாவத்தைகளும் சிவசத்தியாலே நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.

பொழிப்புரை :

`மலம்` எனப்படும் ஐந்தும் நீங்கப் பெற்றவர்களே சிவமாந்தன்மையைப் பெற்றார்கள். அவற்றுள் ஒன்று ஒன்று நீங்கப் பெற்றவர்களும், ஒருமலமேனும் நீங்கப் பெறாதவர்களும் நிலத்திற் பிறந்து, பின் சுவர்க்கத்திலும், நரகத்திலும், புகும் பகுதியினரேயாவர். ஆயினும், `இவ்விருவகை நிலைகளும் சிவனது கருணை காரணமாக அவனது சத்தியாலே நிகழ்வன` என்பதை அறிபவர் உலகத்தில் அரியர்.

குறிப்புரை :

ஒன்றிரண்டு மலங்கள் நீங்கப்பெறுதலாவது ஆணவம் தவிர ஏனைய மாயை கன்மங்கள் நீங்கப் பெறுதலாம். `அவர்கள் இயற்கையாயுள்ள பிரளயாகலர், விஞ்ஞானகலரா தன்மையர் ஆதலல்லது, சிவமாம் தன்மையைப் பெறாமையால், ஆணவ வலியால் மீண்டும் சகலர் நிலையை அடைதல் கூடும்` என்பதாம். ஆயினும் `இவ்இருவகையும் பக்குவ அபக்குவங்களை நோக்கிச் சிவனது அருட் சத்தியும், திரோதான சத்தியும் செய்யும் செயலேயாம்` என்பதும் `திரோதான சத்தியின் செயலும் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல்போலக் கருணை காரணமாக நிகழ்வதே` என்பதும் அறியத் தக்கன என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் சிவத்தினது ஞானத்தாலே என்பது தோன்ற அடைபுணர்க்கப்பட்டது. ஆகவே, `ஐம்மலம் தீர்ந்தவர் அந்த ஞானத்தைப் பெற்றுச் சிவம் ஆவர்` என்பதும், `ஐம்மலத் தீராதவர் அந்த ஞானத்தைப் பெறார் ஆகலின் சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆக மாட்டாது பிறப்பை எய்துவர்` என்பதும் போந்தவாறு அறிக. `பாரின்கண் பிறந்து` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `மலாவத்தை நீங்கப் பெறாதவர்க்குப் பிறப்பு அறாது` என்பதும், `மலாவத்தை நீங்கி நின்மலாவத்தையை எய்தினோரே பிறப்பற்றவர் ஆவர்` என்பதும் ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.

பொழிப்புரை :

ஏற்புடைய செயல்களை ஏற்குமாற்றால் செய்யும் இறைவனுடைய கருணை பரிக்கிரக சத்தியாகிய `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளின் ஆற்றலைக் கொண்டும், `மந்தம, தீவிரம்` என்னும் இருவகை அருட் சத்தியைக் கொண்டும், கன்மத்தின் வழியாக, `இன்பம், துன்பம்` என்னும் இரண்டை ஊட்டுகின்ற திரோ தான சத்தியைக் கொண்டும் அவ்வப்பொழுது ஏற்புடையவற்றைச் செய்யும்.

குறிப்புரை :

`எய்தினர்` என்பது பாடம் ஆகாமை அது பற்றி யெழுந்த உரைகளானேவிளங்கும். எய்தின - ஏற்புடையன. `எய்தின செய்யும்` என்பது, சொற்பொருட் பின்வருநிலை அணியாய்ப் பலமுறை வந்தது. ``செய்யும்`` நான்கில் ஈற்றில் உள்ளது எச்சம். ஏனையவை முற்று. இதனையும் முற்றாகக் கொள்ளின் இறையருள் எவ்வாற்றானும் ஏற்புடையனவே செய்யும்` என முடிக்க. இப் பொருட்டு ``இறையருள்`` என்பது மட்டுமே முதலிற் கூட்டத்தக்கது. அருள்காரணமாக இறைவன் செய்வனவற்றை அருளே செய்வன போலக் கூறினார். `பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து` என்றாற்போல. ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. தான், அசைகள். ஞால சத்தி - ஞாலத்தை நடத்தும் சத்தி. ஞானசத்தி, ஞாலசத்தி இரண்டும் தாதான்மியமாய் உள்ள ஒரு சத்தியின் வகையேயாம். மந்ததரம் மந்தத்திலும், தீவிரதரம் தீவிதத்திலும் அடக்கி இரண்டாகக் கூறப்பட்டன.
இதனால், முன் மந்திரத்தில், ``ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே`` எனக் கூறியது இவ்வாற்றால் என விளக்கு முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

பொழிப்புரை :

ஆணவ மலத்தால் வளைக்கப்பட்ட கோணல் நீங்கி நேரான நிலையை அடைந்தோர் சிவமே ஆயினமையால், சுவர்க்கத்தை விரும்புதல், நரகத்திற்புகுதல், மாயை கன்மங்களின் குழாத்துள் இருத்தல், அவற்றால் பிறந்து இறந்தும், இறந்துபின் பிறந்து உழல்வதாகிய பயனில் செயல்களை உடையராதல் ஆகிய இவை அனைத்தையும் விட்டு நலம் பெற்றார்கள்.

குறிப்புரை :

`திருந்தனர்` என்பது எங்ஙனம் பாடம் ஆயிற்று என்பது தெரியவில்லை. ``திரு`` என்றது இன்பத்தை - இன்பம் இன்மை, துன்பம் உண்மையைக் குறித்தது. ``திருந்தினர்`` என்பவற்றோடெல்லாம், ``சிவமாய்`` என்பதனைக் கூட்டி, `விட்டார்` என முடிக்க. சொற்பொருட் பின்வரு நிலைஅணி. `திருந்தியது முன் மந்திரத்திற் கூறிய ஞான சத்தியால்` என்க.
இதனால், மேற்கூறிய இறையருட் செயலால் உயிர்கள் அடையும் முடிநிலைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன்அரு ளாமே.

பொழிப்புரை :

அவம் - பயன் இன்மை. பயனாவது நன்மையே, எனவே, ``அவம்`` என்றது, `நன்மை இன்மை` என்றபடி. அது தீமை உடையதாகவும் இருக்கலாம். சிவம் - நன்மை.
பகுத்தறிவில்லாதவர், `இஃது அவம், இது சிவம்` எனப்பகுத் துணர மாட்டார். (ஆகவே, `அவர் அவத்தைச் சிவமாக எண்ணி, அதனைப் பற்றிக்கொண்டு உழல்வர்` என்பதாம்). பகுத்தறி வுடையவர் அவற்றை நன்கு பகுத்துணர்வார். (ஆகவே `அவர் அவத்தை விடுத்துச் சிவத்தைப் பற்றி நன்மையடைவர்` என்பதாம்). பகுத்தறிவு திருவருளால் வாய்ப்பது. அங்ஙனம் வாய்க்கப்பெற்று, அவத்தினையும், சிவத்தினையும் உள்ளவாறு உணர்ந்தால், பகுத்தறிவு இல்லாத பொழுது, `உயிர் அவத்தில் உழன்றதும் சிவனது அருளால்தான் பின்பு அதனைவிடுத்துச் சிவத்தைப் பற்றியதும் சிவனது அருளால்தான் என்பது அனுபவமாய் விளங்கிவிடும்.

குறிப்புரை :

`அறிவு, அறிதல்` என்பன பகுத்தறிவையும் பகுத்தறிதலையுமே குறத்தமை, `அவமும், சிவமும்` என்றதனால் விளங்கும். `பகுத்தறிதற்கு அங்ஙனம் அறியும் அறிவு வாய்ப்பது திருவருளால்` என்றற்கு, ``அருளால்`` என்றே கூறிப் போயினா ராயினும், `அருளால் பெற்ற அறிவால்` என்பதே கருத்து. அவமும், சிவமும் அவன் அருளாதல் விளங்கும்பொழுது, `முன்னையது பக்குவம் இன்மையின் அது வருதற்பொருட்டு இயற்றப்பட்டது` என்பதும் விலங்கும் என்பது கருத்து. அவம், மலாவத்தைகளும், சிவம், நின்மலாவத்தைகளும் ஆகும்.
இதனால், `நின்மலாவத்தையே பயனுடையதாம்` என்பதும், `அது திருவருளால் நிகழும்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 38

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.

பொழிப்புரை :

[`சிவன் அருள்` என்றும், `சிவனது சத்தி` என்றும் சொல்லப்படுவது ஒருபொருளேயாகும். அதனால்,] அருளாகிய சத்தி, தீ பொருளாய் இருக்க, சூடு அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றியிருத்தல்போல, சிவம் பொருளாய் இருக்க, தான் அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றி யிருக்கும். அங்ஙனம் இருக்கும்பொழுது அறிவாகியேயிருக்கும். (இது சத்தியின் `உண்மை` எனப்படும் சொரூபம்) அதுவே, `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும் மலங்களாயும் நின்று (உயிர்கள் சிவனை அறியாதபடி மறைக்கும். இந்நிலையில் அது, `திரோதனகரி, திரோதாயி` - என்னும் பெயர்களைப் பெறும். இஃது அதன், `பொது` எனப்படும் தடத்தம்) பின்பு அதுவே தனது உண்மையான அருளாகும்பொழுது, சிவன் உயிர்களுக்கு முன்போல மறைந்து நில்லாமல், இனிது விளங்கும் பொருளாய்த் திகழ்வான்.

குறிப்புரை :

``அருளது சத்தி யாகும் அரன்றனக்கு; அருளை யின்றித்
தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம்இன்றிச் சத்தியில்லை``l
``ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினைச் செய்ய ஏவும்
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
ஆய்வர்``8
என்னும் சிவஞான சித்தியையும்,
``முயங்கி நின்று - (மலம்) பாகம் உற உதவு
திரோதாயி ஒன்று``
``நேராதல் மருவுங்கால், முன்
சினமருவு திரோதாயி கருணையாகித்
திருந்திய சத்தி நிபாதம் திகழும் அன்றே``3
என்னும் சிவப்பிரகாசத்தினையும் காண்க.
`போதமாய்` என ஆக்கம் விரிக்க. ``இருள் ஒளியாய் ஈண்டும் மும்மலம்` என்றது, `இருளுக்கு ஒளிவந்து பொருந்துதலால், அதற்கு மேலும் கூடுகின்ற மும்மலங்களாய் நிற்கும்` என்றவாறு இருள் - ஆணவம். நான்காவது தொகுத்தலாயிற்று. `இருளுக்கு ஒளி` என்பதைப் ``பிணிக்கு மருந்து``3 என்றது போலக் கொள்க. `ஒளியாவது மாயை` என்பது வெளிப்படை. ஆய் - ஆதலால். ஆதல் - பின்பு வந்து சேர்தல். ஈண்டுதல் - திரளுதல். எனவே, அவை கன்மம் ஆயின. மலங்களை ஏவுதலால், சத்தியமே மலமாக எண்ணப்பட்டது. `திருவருள் ஆக` என்பது கடைக்குறைந்து நின்றது. `திருவருளால்` என்பது பாடமாயின், `அது திருவருள் ஆக, அதனால்` என உரைக்க. நந்தி - சிவன்.
`சத்தி புணரும்; முன் மந்திரத்தில் சுட்டப்பட்ட அருளின் நிலைமையெல்லாம் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 39

ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.

பொழிப்புரை :

`படைக்கும் சத்தி, காக்கும் சத்தி, அழிக்கும் சத்தி` என இவ்வாறு சத்திகள் வேறு வேறாகச் சொல்லப்படினும், உண்மையில், அவை அனைத்தும ஒரு சத்தியின் பேதங்களே. அஃது எவ்வாறெனி ல் பூக்கள் அனைத்தும் ஒரு நிலையையே அடையாமல் பல நிலைகளை அடைகின்றன. (சில அரும்பாகவும், சில போதுக ளாகவும், சில மலர்களாகவும்,சில வாட்லகளாகவும் ஆகின்றன) அந்த வேறுபட்ட நிலைகள் அனைத்திற்கும் ஏற்பச் சூரியனது கதிர்கள்` என்னும் வகையில் ஒன்றேயாவது போல்வதாம்.

குறிப்புரை :

சிவசத்தியின் வேறுபாடு `பிறவற்றை நோக்கிய வேறுபாடேயன்றித் தன்னிலே வேறுபட்ட வேறுபாடு அன்று` என்பதாம். ``அருட் பேதம்`` என்பதை முதலில் வைத்து, ``பேதித்துப் பேதியாவாறு`` என முடிக்க. ``தம்`` என்பதனை, ``செயல்`` என்பதனோடும் கூட்டுக. ``வினை`` என்பது, அது நிகழ்தற்கு ஏதுவாகிய பக்குவத்தைக் குறித்த ஆகுபெயர். ``பேதிப்ப`` என்பதில் உள்ள `பேதித்தல்` என்னும் செயலின் வினை, செயலையுடைய பதுமாதிகள் மேல் ஏற்றப்பட்டது. சேட்டித்தல் - செயற்படுத்தல். ``ஆதித்தன்`` இரண்டில் பின்னது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பேதித்துப் பேதியவாறு`` என்னும் பயனிலைக்கு. `அக்கதிர்கள்` என்னும் எழுவாய் வருவிக்க.
`அருட் பேதம், ஆதித்தன் தோன்றப் பது மாதிகள் செயல் பேதித்து நிகழும்படி அவனது கதிர்கள் செயற்படுத்துமிடத்து அக்கதிர்கள் பேதித்தும் பேதியாவாறு` என வினை முடிவு செய்க.
இதனால், முன் மந்திரத்தில் சத்தி பலவாதல்போலக் கூறப் பட்டமை பற்றி, `சத்திகள் பலவோ` என எழும் ஐயம். `சத்தி செயல் பற்றிப் பலவாகச் சொல்லப்படுகின்றதேயன்றி, உண்மையில் பலவன்று. `ஒன்றே` எனஅபதை உவமையால் கூறித் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே.

பொழிப்புரை :

`சிவனது அருள்` எனப்படும் சத்தி, உலகுயிர் களோடு பொருள் தன்மையால் வேறாய் நின்று அவற்றை அறிவித்தும், இயக்கியும் நிற்றல், அவ்வாறு நிற்பினும் தான் அவற்றின் வேறாய்த் தோன்றாது ஒன்றேயாய் நிற்றல் என்னும் இவ்வகைகளால் ஒரு வகையில் பேதமாயும், பிறிதொரு வகையில் அபேதமாயும் இருத்தலும், மலங்களை நீக்குதலால் உயிர்களின் அறிவை விளக்கு தலால் அறிவாயும், மலங்களைச் செலுத்துதலால் அவற்றின் அறிவை மறைத்து அறியாமையாயும் இவ்வகைகளால் ஒருவகையில் அறிவாயும், பிறிதொரு வகையில் அறியாமையாயும், நாதத்தை எழுப்புதலால் நாத மாயும், அதனை ஒடுக்குதலால் நாதம் இல்லதாயும் இவ் வகை களால் ஒரு வகையில் நாதமாயும், பிறிதொரு வகையில் நாதம் இல்ல தாயும் இவ்வாறெல்லாம் பேதப்பட்டு நிற்றல் அதன் இச்சையாலேயாம்.

குறிப்புரை :

இம்மந்திரத்துள் இரண்டாம் அடியில் பாடம் பெரிதும் திரிபு பட்டுள்ளது. மற்றும் திரிபுகள் உள. ``பேதா பேதம், போதா போதம், நாதாநாதம்`` என்பன அன்மொழித் தொகையாய், `இரண்டும் அல்லாத வேறொன்று` எனப்பொருளஅ தாராமல், உம்மைத் தொகையாய் இரண்டையும் குறித்துநின்றன. நாதம் - மொழி. ``அருள்`` இரண்டில் பின்னதை முதலிற்கூட்டி, ``அருளின்`` என்பதற்கு, `அதன்` எனப் பொருள் உரைக்க. அருளையுடைய சிவனது இச்சையை ஒற்றுமை பற்றி அருளது இச்சையேயாகவும், இச்சைப்படி நிகழ்வனவற்றை இச்சையாகவும் உபசரித்துக் கூறினார்.
இதனால், `சத்தியினது பேதங்கள் அது தானாகவே ஆக்கிக் கொள்வன அன்றிப் பிறிதொன்றால் ஆக்கப்படுவன அல்ல` என்பது கூறப்பட்டது. `சத்திதான் பலவோ என்னில், தான் ஒன்றே. அனேகமாக வைத்திடும், காரியத்தால்` என்பது சிவஞான சித்தி.l

பண் :

பாடல் எண் : 41

மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.

பொழிப்புரை :

மனிதன் ஒருவன், யானைபோலப் பொய்யாகச் செய்யப்பட்ட பொறியினுட் புகுந்து மறைந்து கொண்டு, அதனை உயிருடையது போலப் பலவகையில் இயங்கச் செய்யும் செயல்போல, அருள் மாயையின் காரியமாய்ப் பரந்து விரிந்த உலகினுள் மறைந்து நின்று அதனைப் பலவகையாக இயங்கச்செய்து, அதனானே உயிரினது அறிவைப் படைத்தல் முதலிய தொழில்களால் பலவாறாக விளங்குவித்து, அவ் இயக்கத்துட்பட்டு அலமரச் செய்யும். `அருள்` எனப்படுவது சிவனது அருளே.

குறிப்புரை :

கரி - யானை. அதனை ஆட்டுதல் வினைக்கு வினை முதல் ஆற்றலால் பெறப்பட்டது. `பொய்யானையின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே எண்ணிச்சிறுபிள்ளைகள் பலவகை உணர்ச்சிகளை அடைதல்போல, உலகத்தின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே கருதி, அறிவில்லாதவர் பலவகை உணர்ச்சிகளை எய்துகின்றனர்` என்பது உவமையால் போந்த பொருள். அத்தகைய உணர்ச்சிகளைத் தோற்றுவித்தலையே, ``போதம், புரிந்து`` என்றார். ``அருள்`` என்பதை முதலிற்கூட்டுக. ``பூதம்`` என்பது உபலக் கணத்தால் `பூதம் முதலியவை` எனவும், `பூ` என்பது, மண் முதலியவை` எனவும் பொருள் தந்தன. `படைப்பாதியால்` என உருபு விரிக்க. ``இயல் கூட்டத்தால்`` என்றாரேனும், `கூடிய இயலால்` என்பது கருத்து. இயல் - இயலல்; இயங்குதல். முதனிலைத் தொழிற்பெயர். `அஃது அரன் அருளாமே` என, எழுவாய் வருவித்துரைக்க. இதனை எடுத்துக் கூறியது, `பிறகடவுளரது அருள்கள் அல்ல` என்பது உணர்த்தி, `அவர்களது செயல்களும் அரன் அருளே` என வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், `எல்லாம் திருவருட்செயலே` என்பது விளங்காமை அறியாமையால் என்பகு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.

பொழிப்புரை :

`தத்துவம் முப்பத்தாறினுள் ஒன்றேனும் தான் அல்லன்` எனத் தெளிந்து, அவைகளை, `தான்` என மயங்கும் மயக்கத்தினுள் நீங்கினவன் எவனோ அவனே, அவற்றிற்கு வேறாகி, மேலே உள்ள பரவெளியை அடைந்து வீடு பெற்றவனாவன் அந் நிலையில் முன்பு இருந்த மயக்கம் நீங்கித் தெளிவு பெற்று, எளிதில் அணுக இயலாத சிவத்தை அடைந்து அதுவேயாவன், அதுவே அவன் அடையவேண்டிய இறுதி நிலையாகும். அந்நிலையில் சிவனைப்போல இவனும் வியாபகமாய், ஏனை எல்லாப் பொருள்களும் தன்னில் வியாப்பியமாய் நிற்க விளங்குவான்.

குறிப்புரை :

``ஆகி எய்த`` என்றது, `ஆகி எய்துதற் பொருட்டு` என்றது ஆகலின், அஃது இறுதியில் வைத்து உரை கூறப்பட்டது ``வீடு`` என்றது, வீட்டின்பத்தை. தேறா - தேறி. மருள்தேறுதலாவது, மருளின்றும் நீங்கித் தெளிவையடைதல். பின்னும், ``தெளிவுற்று`` என்றது, `அத்தெளிவு நிலைபெறப் பெற்று` என்றபடி. தீண்டாச் சிவம் - பற்றுதற்கரிய சிவம்.
இதனால் மேல், `திருவருள் செய்வனவாகச் சொல்லப்பட்ட செயல்களில் இறுதியாக உயிர் பயனடைதல், இவ்வாறான நின்மலாவத்தையில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொழிப்புரை :

அடைதற்கரிய சிவபத்தியைப் பொதுவாகத்தான் அறிந்த முறையில் அடைந்து ஒழுகிய ஒருவன் பின்பு கிரியா குருவின் அருளால் சிறப்பாக அதனை அடைந்து, அவர் அறிவுறுத்த முறை யிலே சிவதன்மத்தில் ஒழுகிச் சிவயோகத்திலும் பயின்று, அதன் பயனாகப் பின்பு சிவஞானமாகிய யானையின்மீது ஏறிச் செலுத்தி, மும்மாயை களையும் தாண்டிச் சென்று, அப்பால் உள்ள சிவனோடு கூடுதலும் கூடும்.

குறிப்புரை :

``மீண்டு உற்று`` என்றதனால், முன்பு ஒரு முறை உற்றிருந்தமை பெறப்பட்டது. நூல்வழியாகவும், காட்சி வழியாகவும் அவரவர் தாம் தாம அறிந்தவாற்றால் சிவ பத்திகொண்டு சிவதன்மங் களில் ஒழுகுதலால் வரும் சிவபுண்ணியம், பொதுச் சிவபுண்ணியமும், குரு அருளால் அறிந்து அவற்றில் முறைப்படி ஒழுகுதலால் வரும் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியமும் ஆகும். பொதுச் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியத்தைத் தர உண்மைச் சிவ புண்ணியமே உண்மைச் சிவ ஞானத்தைத் தரும். உண்மைச் சிவ ஞானமே சிவமாம் தன்மையைப் பயக்கும். இம்முறையையே இம்மந்திரம் கூறுமாறு அறிக.
சரியை, கிரியை இரண்டும் `சிவ தன்மம்` என ஒன்றாகவும் சொல்லப்படும் என்பதை,
``நல்லசிவ தன்மத்தால், நல்லசிவ யோகத்தால்,
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்``*
என்னும் திருக்களிற்றுப்படியாரால் விளங்கும்.
`நேயத்தை அருளால் மீண்டு உற்றுச் சென்று ஏறித்தூண்டித் தாண்டிச் சாரலும் ஆம்` என வினைமுடிக்க. `மா` என்பது காட்டு விலங்குகள் அனைத்திற்கும் பொதுவான பெயர். `பாய்மா, பரிமா` என்பன குதிரையைக் குறிக்கும் சிறப்புப்பெயர். `அரிமா` என்பன சிங்கத்தைக் குறிக்கும் சிறப்புப் பெயர். `கைம்மா` என்பது யானையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். எனவே, இங்கு, `மா` என்னும் பொதுப்பெயர், இடம் நோக்கிக் கைம்மாவைக் குறித்தது. அது, ஞானம், எவ்விடத்திலும் யானையாக உருவகப்படுத்துதலே மரபாதலால் விளங்கும். உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால், `தவம், ஞானம்` என்னும் இரண்டுமே குரு வருளால் எய்தற்பானவாய், ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``சிவனுடன் சாரலும் ஆமே`` எனக்கூறிய சார்ச்சி, `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என நால்வகைப் படுதலால், அவ்வம்முறையால் சிவனைச் சார்ந்தவர் முறையே. `சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர்` என நிற்பர். எனினும் இறுதியில் சொல்லப்பட்ட சமாதியரே சிவானந்தத்தை அடைந்தவர். அவரே நிலையான அருள் தன்மையைப் பெற்றவரும் ஆவர்.

குறிப்புரை :

சாரணர் முதலிய மூவரும் சிவலோகத்தில் இருக்கும் நிலைபற்றி அப்பெயர்களால் கூறப்பட்டன. சாரணர் - எங்கும் சென்று உலாவி வருபவர். `ஒருவர் இல்லத்தில் பணி புரியும் பணியாளர் அவ் இல்லத்தில் எங்கும் செல்லும் உரிமையுடையர் ஆதல்போலச் சிவ லோகத்தில் எங்கும் செல்வபர்` என்றபடி. இதுவே `சாலோக பதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் சரியைத் தொண்டு, `தாச மார்க்கம்` அல்லது, `தொண்டர் நெறி` எனப் பட்டது. சித்தர் - சிறப்புப் பயன் கிடைக்கப் பெற்றவர். `சிவ லோகத்தில் சிவனுக்கு அணுக்கராய் இருக்கும் சிறப்புரிமை பெற்றவர்` என்றவாறு. இதுவே `சாமீபபதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகைத்தாதல் பற்றியே இதனைத் தரும் கிரியைத் தொண்டு, `சற்புத் திரமாரக்கம்` அல்லது `மகன்மை நெறி` எனப்பட்டது. சமாதியர் - சிவனுக்குச் சமமானவர். `சிவலோகத்தில் சிவனது உருவத்தைப் போன்ற உருவத்தையே பெற்றிருப்பவர்` என்றபடி. இதுவே `சாரூப பதவி` எனப் படுகின்றது. இப்பதிவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் யோகப் பயிற்சி, `சகமார்க்கம்` அல்லது `தோழமை நெறி` எனப்பட்டது. இவை மூன்றுமே பத முத்திகளாம். சாத்தியர் - சாத்தியத்தை, அஃதாவது தமது கிறிக்கோளை அடைந்துவிட்டவர். இவரை ``மெய்ஞ்ஞான தத்துவர்`` என எடுத்துக்கூறியதனால், `முன் சொல்லப்பட்ட மூவரும் மெய்ஞ்ஞானத்திற்குரிய படிகளில் நின்றவர்` என்பது பெறப்பட்டது. குறிக்கோள், சிவனோடு இரண்டறக் கலந்து, மீண்டுவாரா நிலைமையில் இருத்தல். அந்நிலையே ஆனந்த நிலையுமாம் ஆதலின், ஆனந்தத்தைப் பெறுதலும் குறிக்கோளாயிற்று. ``சத்த அருள்`` என்பது, `வெண்மைய ஆடை` என்பதுபோல வினைக் குறிப்பு பெயரெச்சத்தொடர் `தத்துவம்` என்பதபல பொருட்கட்கு உரியதாகச் சொல்லப்படுதலால், இங்குச் சொல்லப்படும் தத்துவம், `மெய்ஞ் ஞான தத்துவம்` என்றார். `மெய்ஞ் ஞானமாகிய தத்துவம்` என்றபடி. `முன் மந்திரத்திற் சொல்லிய சார்ச்சி வகையை உடையவர் நால்வகையினர்` என்றற்குச் ``சார்ந்தவர்`` என்பதை எழுவாயாக வைத்துக் கூறினார். சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இங்குக் கூறிய சமாதி, `அநாதிக்குச் சமமாக எண்ணப்படும் ஆதி` என்க.
இதனால், `சிவனைச் சாருமுறையும், அம்முறைகளால் அடையும் பயன்களும் நால்வகையினவாம்` என்பது உணர்த்தும் முகத்தால் `இறுதியிற் கூறிய பயன்நின்மலாவத்தையாலே உளதாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

பொழிப்புரை :

(உண்மையுணர்ந்தோர்) `அறிபவனும், அறியப் படுபவனும் - என உள்பொருள் இரண்டு` எனக்கூறுவர் ஆயினும் அவ்விரண்டு பொருளும் எஞ்ஞான்றும் வேறுநில்லாது உடலும், உயிரும் போல ஒன்றாகியேயிருத்தலால், பாசமாகிய அசுத்தத்தின் நீங்கினோர், அறியப்படுபவனை யறிதலோடு அறிபவனையும் அறிதலாகிய இரண்டறிவையுடையராகாது, அறியப்படுபவனை மட்டுமே அறிதலாகிய அந்த ஓர் அறிவை மட்டுமே உடையவராய் இருப்பர் அவ்வாறிருத்லே நிறைவான சுத்த நிலையாகும்.

குறிப்புரை :

உடலும், உயிரும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விரண்டனுள் ஒன்றே உள்ளது; மற்றொன்று இல்லை` எனக் கூறுதல் அறியாமையுடையாரது கூற்றாதல்போல, அறிவானும், அறியப்படுபவனும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விருவருள் ஒருவனே உளன்; மற்றொருவன் இல்லை` என்றல் அறியாமை யுடையவரது கூற்றாய்விடும் - என்பது உணர்த்துதற்கு. ``தான் என்று, அவன் என்று தத்துவம் இரண்டு என்பர்`` எனவும், `ஆயினும், அறிபவனது அறிவை அறியப் படுபவனிடத்தே நிலைத்து நில்லாத -வாறு அகற்றி, `தான்` என்றும், இவ்வாறெல்லாம், `யான், எனது - பிறர், பிறரது` என மயங்கி உழலச் செய்வது மல சத்தியேயாகலின் அச்சத்தி முழுவதுமாக நீங்கப் பெற்றவர் அங்ஙனம் பலதலைப்படும் அறிவுடையராகாது, `அவனே` என அறியும் அந்த ஒருதலைப்பட்ட அறிவையே உடையராய் இருப்பர்` - என்பது உணர்த்துதற்கு ``கேவலத்து ஆனவர்தான் என்று இரண்டு உன்னார்`` எனவும், அவ்வாற்றால், அறிபவன் அறியப்படுபவனேயாய் நிற்றலே மலம் முழுவதுமாக நீங்கிய நிறைவான சுத்த நிலை - என்பது உணர்த்துதற்கு, ``தான் இன்றித் தான் ஆகத்தத்துவ சுத்தமே`` எனவும் கூறினார்.
ஈற்றடியில் உள்ள ``தான்`` இரண்டில் முன்னது அறி -பவனையும், பின்னது அறியப்படுபவனையும் குறித்தன. தன்மையை என்பது பாடம் அன்று ``கேவலம்`` என்றது. கலப்பின் நீங்கி நிற்றலைக் குறித்தது. ``தத்துவம்`` இரண்டில் முன்னது, `உள்ளது, என்றும், பின்னது `உண்மை` என்றும் பொருள் பயந்தன. ``சுத்தம்`` என்பதன் பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. ஏகாரம் தேற்றம். உண்மைச் சுத்தத்தை அதைற்குச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. அதனுள்ளும் சிவயோக நிலையே இங்கு வலியுறுத்தப்பட்டது. மெய்கண்ட தேவரும் இவ்வாறே,
``நான் அவன்என்(று) எண்ணினர்க்கும் நாடும் உளம் [உண்டாதல்,
தான்எனஒன்(று) இன்றியே, தான் அதுவாய் - நான்என ஒன்(று) இல்என்று தானே எனும்அவரைத் தன்அடிவைத்(து)
இல்என்று தான்ஆம் இறை`` l
என அருளினமை காண்க.
இதனால், நின்மலாவத்தையின்றிப் பராவத்தையை எய்துதல் கூடாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.

பொழிப்புரை :

(`என்னை உடையானாகிய தலைவன் எங்குளன்` எனப்புறத்தே பலவிடத்துத் ``தேடியும் தேடொணாத் தேவனாய்`` உள்ள சிவனை, `இனி என்னுள்ளேதான் நான்தேட வேண்டும்` என உணர்ந்து, அவ்வாறே) அவனைத் தன்னுள்ளே அறிய முயல்கின்ற பெருமகன் அம்முயற்சியில் உறைத்து நிற்பனாயின், அவனைத்தான் அடைந்துவிடுவான். அம்முறையில் அவன் தன்னுள்ளே தேட முயலாது, புறத்திற்றானே தேடிக் கொண்டிருப்பானாயின், அவன் சிவனைத் தன்னுள்ளேயும் அடைதற்கு அறியவனாகியேயிருப்பான்.

குறிப்புரை :

`சிவனைப் புறத்தே தேடாது தன்னுள்ளே தேடி அடைவதுதான் நின்மலாவத்தை` என்பது குறிப்பு.
``தேடிக் கண்டுகொண்டேன்;திர மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்``* என நாவரசர் அருளிச்செய்தமையை இங்கு உன்னி உணர்க. மற்றும் அவர் இத்திருமந்திரத்தை ``முன்னோர் மொழி பொருளேயன்றி, அவர்மொழியும் - பொன்னேபோல்போற்றும்`` வகையில் (நன்னூற் பாயிர உரைமேற்கோள்) தமது `சித்தத் தொகை`த் திருக்குறுந்தொகையில் எடுத்தருளிச் செய்தமையும் உணரற்பாற்று. இதனானே, உண்மைப் பாடங்களும் சில விளங்கும். யாப்புக்கேற்பன கொள்ளப்படும். எனவே முன்பு, ``தேடிக் கண்டுகொண்டேன்`` என்னும் திருப்பாடலும் இதனையே இனிது விளக்கியதாயிற்று. ``தன்னினில்`` என்பவற்றில் இன்னுருவோடு ஒத்த இல்லுருபு இன் சாரியை பெறுதல் சிறுபான்மை இலேசினால் கொள்ளப்படும்.l உம்மையை மாற்றிவைத்துரைக்க.
இதனால், நின்மலாவத்தையே சிவனை அடையும் வழியாதல் வயியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகிய இயற்றவல் லானும்
ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.

பொழிப்புரை :

மாணவகனே, குருவருள் பெறாத மற்றவர் -களைப்போல நீயும் இராக் கதிரிபோலச் சிறிதறிவைத் தருபவனாயும், பகற் கதிர்போலப் பேரறிவைத் தருபவனாயும் இருந்து எல்லா வற்றையும் செய்கின்ற சிவனைப் புறத்தெல்லாம் தேடி, `ஐயோ!` சிவனைக் காணமுடியவில்லையே` என்று கதறி அழாதே. ஏன் எனில், அவனை அகத்தே அறிதலாகிய அந்த நெறியைப் பற்றி, அதிலே சென்ற பொழுது அவன் எனக்குக் கிடைத்தான். அதன்பின் அவன் முன்போல இருசுடராய் இல்லாமல் பகற் கதிராகிய ஒரு சுடரேபோலத் தோன்றி, அந்நிலையினின்றும் மாற்றம் சிறிதும் இன்றி, என் உள்ளத்துள் நீங்காதிருக்கின்றான்.

குறிப்புரை :

`நீயும் அந்நெறியிலே சென்றால் தவறாமல் அவனை அடைவாய்` என்பது குறிப்பெச்சம். `அகத்தே அறியும் நெறியே நின்மலாவத்தை` என்பது மேலே குறிக்கப்பட்டது. ``வழியே`` என்றது, `பிறழாது பற்றி` என்றபடி. ``நேர்பட்ட பின்னை`` என்ற அனுவாதத்தால், நேர்பட்டமை தானே பெறப்பட்டது. உம்மை சிறப்பு. சிறிதறிவைத் தருதல் திரோதான சத்தியால், பேரறிவைத் தருதல் அருட்சத்தியால். இவையே பெத்த முத்தி நிலைகளாம். ரகாரவகையால் எதுகை ஒன்றிற்று.
இதனால், நின்மலாவத்தையை எய்தாது வருந்தும் மாணாக்கன் மேல் இரக்கங்கொண்டு, அதனை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.

பொழிப்புரை :

குடம், சால், சாடி முகலாகக்கலங்கள் பல வகையால் இருப்பினும் அவை அனைத்திலும் ஒருமண்ணே பொருந்தியிருத்தல் போலப் பிறப்பு வகையால் உயிர்களின் அறிவு பல்வேறு வகைப்பட்டிருப்பினும் ஒரு பேரறிவாகிய சிவன் அவை அனைத்தின் அறிவினுள்ளும் இருக்கின்றான், அங்ஙனமாயினும், கண் எல்லாப் பொருளையும் பார்க்க. பார்க்கப்பட்ட பொருள்கள் கண்ணைப் பாராததுபோல, அறிவுக்கறிவாய் உள்ள சிவன் அனைத்துயிர்களையும அறியினும் அவ்வுயிர்களுள் ஒன்றேனும் அவனை அறிதல் இல்லை.

குறிப்புரை :

இதனுள் முதலிற்போந்த உவமை, ஒருவனே பலவற்றில் இருக்கும் அளவிற்குக் கூறிய ஒருபுடை எடுத்துக்காட்டு உவமை. மற்றுக் காரிய காரணங்களைப் பற்றியதன்று. `பலவற்றை` என உருபு விரிக்க. `குடம் முதலியனை கண்ணைக் காணாமை மட்டும் அன்று; தம்மையும் மட்டும் அன்று; தம்மையும் தாம் அறிவதில்லை` என்பதனையும் பின்னர்க் கூறிய உவமையால் உடன்கொள்க.
``காட்டிய கண்ணே தனைக்காணா, கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான்; உள்ளத்திற் காண்``l
``காணொணா கர ணங்களுக்குயிர்
கண்டி டாமையின் இன்றெனின்,
காணுமோ கடம் கண்ட கண்ணினைக்
கண்டு நிற்பதும் கண்ணதே``8
எனவும் போந்த சாத்தர மொழிகளைக் காண்க.
``ஒருவனே`` என்பதன் பின் `அறிவாய் உளன்` என்பது வருவிக்க. உள்நின்ற - உலகத்துள் நின்ற யோனிகள். ஆகுபெயர். வண்ணம் - நிலைமை. நிலைமையனை `நிலைமை` என்றதும் ஆகுபெயர். ``அண்ணலும்`` என்னும் உம்மை, உவமையைத் தழுவிநின்ற எச்ச உம்மை.
இதனால், `மேற்கூறியவாறு ஒருவனே எல்லா உயிர்களின் அகத்திலும் நிற்றல் எங்ஙனம்` என்னும் ஐயம் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.

பொழிப்புரை :

ஏழுலகத்தில் உள்ள உயிர்களையும் சிவன் ஒப்ப நோக்கித்தான் அவற்றின் உள்நின்று காத்து வருகின்றான். (என்றாலும், சிலரே அதனை யுணர்ந்து, ஏனையவற்றைப் பற்றாது விடுத்து அவனிடத்திலே சென்று அடங்குகின்றனர். அங்ஙனம் அடங்கினவர்கள் சிவனது எண்குணங்களையும் தாங்களும் உடையவராவர். பலர் அவ்வாறு உணர்ந்து சிவனை அடைதல் இல்லை. அங்ஙனம் அடையாதவர்கள் உலகியலில் சிக்கித் துன்புறுகின்றனர். சிவனை அடைந்து அடங்காதவர்கள் சிவனது குணத்தைப் பெறுதலும் கூடுமோ! (கூடாது).

குறிப்புரை :

`சிவம்` எனப்பின்னர் வருதலால் `ஓம்புபவன் சிவன்` என்பதும் குணம் அவனுடையன என்பதும் போந்தன; ஓம்புதலை எடுத்துக் கூறினமையால், ஒப்ப நோக்குதல் பெறப்பட்டது. `ஓம்புபவன் ஒப்ப நோக்கினும் ஓம்பப்படும் உயிர்கள் பக்குவ பேதத்தால் பயன் பெறுதலில் வேறுபடுகின்றன, என்பதாம். ஆகவே, `அனைவரும் ஒருகாலத்திற்றானே நின்மலாவத்தை எய்தார்` என்பதாம் `சென்று` எனற்பாலதனை, `வந்து` என்றது இடவழுவமைதி `அக்குணம் கொள்ளலும் ஆமே` என்க. உம்மை சிறப்பு. ஏகார வினா, எதிர்மறை உணர்த்தி நின்றது. சிவனது எண்குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை* இவைமுறையே சுதந்திரத்துவம், விசுத்ததேகம், நிராமயானமா` சருவஞ்ஞத்துவம்,அநாதி முத்தத்தன்மை, அலுத்த சத்தி. அநந்த சத்தி, பூர்த்தி` என வடமொழியில் சொல்லப்படும்* அலுத்த சத்தி, `குறைவில்லாற்றல் உடைமை` என்றும் சொல்லப்படும். பூர்த்தி, `திருத்தி` என்றும் சொல்லப்படும். அநாதி முத்தத்தன்மை `அநாதி போதம்` என்றும் சொல்லப்படும். சிவனைச் சேர்ந்தார். ``என் குணத்துளோமே``l எனக்கூறுமாறு காண்க.
இதனால், அனைவரும் பக்குவபேதத்தால் ஒருங்கே நின்மலாவத்தையை எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடம் கூடல் பெரிது
குறியறி ஆவகை கூடுமின் கூடில்
அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.

பொழிப்புரை :

`குறிக்கொளத் தக்கது இது` என அறியாதவர்கள் அதனை அடைதல் எங்ஙனம் கூடும்? (கூடாது) அவர் உடம்பிற் கட்டுண்டு நிற்குங் காலம் பெரிதாகும். ஆகையால், நீவிர், `குறிக்கொள்ளத் தக்க பொருள் இது` என்பதை அறிந்து, பின்பு அதுவே யாகும்படி பொருந்தி நில்லுங்கள். நின்றால், உங்களுடைய அறிவு அறிவாய் இருக்கும். வீட்டின்பமும் சித்திக்கும்.

குறிப்புரை :

குறி - குறிக்கப்படும் பொருள். முதனிலைத் தொழிற் பெயர் ஆகபெயராய்ச் செயப்படுபொருளை உணர்த்திற்று. காணுதல், இங்கு, `அடைதல்` எனத்தன்காரியம் தோற்றி நின்றது. கூடல், அதற்குரிய காலத்தைக் குறித்த ஆகுபெயர். என் வினையெச்சப் பொருள் தந்தது. `வரிப்புனை பந்து`, என்பதிற்போல. ``ஆவகை``, வினைத்தொகை. அன்னம் - சோறு. அது, ``பாதகமே சோறு பற்றினவா`` என்பதிற்போல நின்றது உம்மை, சிறப்பு.
இதனால், `உயிர் குறிக்கொளத் தக்க பொருள் சிவமே யாதலின், அதனை நின்மலாவத்தையால் அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
தானோ பிறப்போ டிறப்பறி யானே.

பொழிப்புரை :

உயிர் உடம்பொடு கூடி நிற்கும் நிலையில் வருகின்ற இன்பத் துன்பங்களை நுகர்வது உடம்பா? உயிரா? இதனை எண்ணிப் பார்த்து உண்மையை உணரமாட்டாமல் திரோதான சத்தியால் வரும் மயக்கத்திலே இருந்து கொண்டு, `யான் உண்மையைநன்கறிவேன்` என்றுசொல்கின்ற மனிதன்தான் பிறந்ததாகிய `பிறப்பு` என்பதும், பின்பு இறக்கப்போவதாகிய `இறப்பு` என்பதையுமே `இன்ன` என அறியமாட்டான்.

குறிப்புரை :

`மற்ற உண்மைகளை எங்ஙனம் அறிவான்` என்பது இசையெச்சம். `இன்பம் உறுகின்றது ஏது? என மொழி மாற்றியுரைக்க. ``ஏது`` என்பது, `யாது` என்பதன் மரூஉ, சிறப்புப்பற்றி இன்பமே கூறப்பட்டதாயினும் துன்பமும் உடன்கொள்ளப்படும். `யான் சுகிக்கின்றேன்; துதிக்கின்றேன்` என உணரும்பொழுது யான்` எனப்படுவது உடம்பின் வேறாகிய உயிரே; அவ்வுயிரே தான் என உணரமாட்டாது, திரோதான சத்தியால் வரும் மயக்கத்தால் உடம்பையே தானாக மதிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் `பிறப்பு, இறப்பு` என்பவற்றின் உண்மையையே `இவை` என அறியமாட்டான் ஆதலின், அவன் தனது அறிவை `அறிவு` எனக் கூறுவன எல்லாம் போலியே என்பதாம். `பிறப்பு` என்பது உடம்பு தோன்றுதலும், `இறப்பு` என்பது உடம்பு அழிதலுமே. ஆவன அல்லது, உயிர் தோன்றுதலும், அழிதலும் அல்ல. ஆயினும் மயக்கத்தால் மக்கள் உயிர் தோன்றுவதும், அழிவதுமாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பு. மயக்குதற்கு உரியவளாகக் கூறியதனால் ``வானோர் தலைவி`` திரோதான சத்தியாயினார் `திரோதான சத்தி உள்ள வரையில் மக்கள் மெய்யறிவைப் பெறமாட்டார்` என்பதனால், `அருட்சத்தி தோன்றினால் மெய்யறிவைப் பெறுவார்` என்பது பெறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் பெறப்படுகின்றது. `அருட்சத்தி` தோன்றியபொழுதே மெய்யறிவு தோன்ற, நின்மலாவத்தை நிகழும் என்றலின், இம்மந்திரம் இவ்வதிகாரத்திற்கு உரியதாயிற்று. இம்மந்திரத்துள் பன்மையொருமை முதலியன அறியாரால் பாடம் திரிக்கப்பட்டது. இது, வருகின்ற மந்திரத்தானும் விளங்கும்.
இதனால், `நின்மலாவத்தைக்குக் காரணம் மெய்யறிவு` என்பது உணர்த்தி முடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது

பண் :

பாடல் எண் : 1

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

பொழிப்புரை :

ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது; தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.

குறிப்புரை :

இங்கு, அறிபவனையே ``தான்`` என்றார், `ஆன்மா` என்னும் வழக்குப் பற்றி `அகம்` என்னும் தமிழ்ச் சொல்லாலும் குறிப்பது உண்டு. முதற்கண் தன்னை அறிதல் அனுமானத்தானும், பின்னர் அனுபவத்தானும் என்க. `தானே` என்றது, `பிறர் கெடுக்க வேண்டாது` என்றபடி. அறிவை அறிதல் - அறிவைப் பெறுதல். வழிபடுதல் சிவமாய தன்மை பற்றியாதலின், `சிவமாகி இருப்பன்` என்றபடி.
இதனால், `மெய்யறிவில் தன்னை அறிதல் முதற்படி` என்பது கூறப்பட்டது. ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார்`` எனவும், ``தம்மை உணரார் உணரார்`` எனவும் மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.l

பண் :

பாடல் எண் : 2

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.

பொழிப்புரை :

`எந்த உயிருக்கு மல பரிபாகம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே சிவபெருமான், வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்தலால், அருட்சத்தியாகிய தேவியும் அங்கே மகிழ்ச்சியோடு விரைவில் சென்று அப்பெருமானை வணங்குவாள்.

குறிப்புரை :

என்றது, `அவனது குறிப்பின்வழியே செயற்பட முற் படுவாள்` என்றபடி. சத்தி சத்திமான் வழிபட்டவள் ஆதலை இவ்வாறு விளக்கினார். சிவன் அங்கே என்றும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றிப் புதியனாகச்சென்று இருந்தது போலக் கூறினார். ``அங்கே`` எனப் பொதுப்படக் கூறியது. மெய்ந்நூல் வழக்கு. சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள் என்பது தோன்றுதற்கு, சலேல், ஒலிக் குறிப்பு. இஃது, ஓடி வருதலைக் குறிப்பால் உணர்த்திற்று. `சலேல் எனப் புகுந்து` என ஒருசொல் வருவிக்க. கூந்தலுக்குப் பொங்குதல் கற்றையாய் அடர்தல். `பொங்குதல் நிறைந்த குழலை உடையவள்` என்க. சத்தியை வேறெடுத்துக் கூறியது, `சத்தி நிபாதம் உளதாகும்` என்பது உணர்த்தற் பொருட்டு. ஆகவே, `மலம் பரிபாகம் உற` அதனால் சத்தி நிபாதம் உண்டாகி, அறிவு உதயம் உளதாம்` என்றதாயிற்று.
இதனால், அறிவுதயம் வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.

பொழிப்புரை :

மேற்3 கூறியவாறு, ``வானோர் தலைவி`` தந்த மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை அறியாது. `உடம்பே` என்று மயங்கியிருந்த என்னை, நந்திபெருமான் தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பன்று; அறிவு` என அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அன்று` என உணர்ந்து அதனின் நீங்கியிருக்கின்றேன்.

குறிப்புரை :

`நந்தி பெருமான் எனக்குச் சொல்லியதைத் தான் நான் உனக்குச் சொல்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். முன்மந்திரத்தில், ``சிங்காதனத்தே சிவன் இருந்தான்`` என்றும்; ``பொங்கார் குழலியும் போற்றியென்றாள்`` என்றும் கூறிப் பின், ``அருள் செய்தான் நந்தி`` என்றும், பின் ``அருளால் அறிந்தேன்`` என்றும் கூறியதனால், மலபரிபாகத்தால் சத்தி நிபாதமும், சத்தி நிபாதத்தால் குருவருளும், குருவருளால் அறிவுதயமும் உளவாதலைக் குறிப்பான் உணர்த் தினமை காண்க. அறிவுதயம், `ஞானோதயம்` என்றும் சொல்லப்படும். அருள்காரணமாக அருளிச் செய்த அறிவுரை ``அருளால்`` என்று உபசரிக்கப்பட்டது.
இதனால், அறிவுதயம் குருவருளாலே உளதாதல் கூறப்பட்டது.
[ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
மாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவே சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.]

பண் :

பாடல் எண் : 4

அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு)
அறைகின் றனமரை ஈறுகள் தாமே.

பொழிப்புரை :

தோற்றமும், கேடும் சடத்துக்கன்றிச் சித்துக்கில்லை. சித்துக்குப் பற்றுக்கோடு சித்தேயன்றிச் சடம் அன்று. அவ்வாறே சித்தை யறிவதும் சித்தன்றிச் சடம் அன்று. இவ்வாறு, `வேத முடிபுகள்` எனப்படுகின்ற உபநிடதங்கள் யாவும் கூறுகின்றன.

குறிப்புரை :

இந்த முறைமையால், `பிறப்பதும், இறப்பதும் உயிரன்று; உடம்பே உயிருக்கு உடம்பு பற்றுக்கோடன்று, சிவமே பற்றுக்கோடு - இனிச் சிவத்தை அறிவதும் உயிரேயன்றி, உடம்பன்று` என்பவற்றை உணர்த்தி, `உதயமான அறிவைக் கொண்டு இவற்றை யெல்லாம் இவ்வாறு அறிதல் வேண்டு` என்பது உணர்த்தியவாறு. `இட்டு`, அசை நிலை.
இதனால், `மெய்யறிவாவது இது` என்பது கூறப்பட்டது. (இம் மந்திரத்தின் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``ஆயு மலரின்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து முதல் அதிகாரத்து இறுதியில் சொல்லப்பட்டது.)

பண் :

பாடல் எண் : 5

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.

பொழிப்புரை :

`உலகத்தில் பலராய்க் குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய வேண்டும்` என்கின்ற சூழ்ச்சியைத் திருவுளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற சிவனை யான் `சிவன்` என்று அறிந்துகொண்டு போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து, `அப்பா` நீ மிகப் பெரியை` என்று கூறினான்.

குறிப்புரை :

மன்னுதல், இங்குப் பலராதல் எனவே, அவர் உலக மக்கள் ஆயினர். மாயம், `சூழ்ச்சி` என்னும் பொருட்டு, `மாயத்தின் கண்` என உருபு விரித்து. `சில முன்னி நின்றானை` என ஒருசொல் வருவித்து முடிக்க. `அருள் மாயம்` வினைத்தொகை. போற்றுதல், ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருள்``* வந்தான் என்றும், ``பிறவா முதல்வன் பிறந்து``* வந்தான் என்றும் இன்னோரன்னவாகச் சொல்லித் துதித்தல். ``பொன்`` என்று, `நிதி போல வந்து` என்றது. `இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாற்போல வந்து` என்றதாம். ``வந்து`` என்பதை `வா` எனத் திரித்துக்கொள்க. ஆனோர் - நாட்டோர்; உண்மையறிந்து வந்து மாணாக்கர் ஆயினோர். நட்டோரை `ஆனவர்` எனவும், பகைவரை `ஆகாதவர்` எனவும் கூறுதல் உலக வழக்கு. ``அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல்``8 எனக் கூறிய செயற்கரிய செயலைச் செயதமை பற்றி, `நீ ஏனையோரினும் வேறாய பெரியை` எனப் பாராட்டினார் என்பதாம். `குரு ஏனை மக்கள் போலவேயிருப்பினும் அவரை, மக்களுள் ஒருவராக அறியாது, தம்மை ஆட்கொள்ள வந்த சிவனாகவே அறிதல், பக்குவிகட்கன்றி, அபக்குவி -கட்கு இயலாது` என்பதை உமாபதி தேவர்.
``அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள் ஆர் அறிவார் புவி``
என்றும்,
``பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணா புவி`` l
என்றும் கூறினார். இதனால், `நாயனார் தம் குருவாகிய நந்தி பெருமானை நந்தி கணத் தலைவராக மட்டும் காணாது, சிவ பெருமானாகவே `கண்டிருந்தார்` என்பதும், `அது பற்றி இவரது சிறப்பை உணர்ந்து, அவரும் இவரைச் சிறப்பாகப்பாராட்டினார்` என்பதும் விளங்கும்.
இதனால், `அறிவை உதிப்பித்த குரு சிவமேயாவர்` என்பது உணர்த்தும் முகத்தால், `உண்மையறிவு சிவனால் அல்லது, பிறர் ஒருவராலும் தரப்படாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி வாக அறியும்அவ் வண்ணம்
அறிவறி வாக அணிமாதி சித்தி
அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.

பொழிப்புரை :

மெய்யறிவு வேண்டுவீர், உமது வேட்கை நிரம்ப வேண்டுமாயின் நீவிர் சிவனையே பொருளாக உணர்ந்து அவனிடம் அன்புசெய்யுங்கள் (பிறரைப் பொருளாக அறியும் அறிவுகள் எல்லாம் போலியறிவே.) யான் சிவனை உணர்ந்து பயன் பெற்றேன். (``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``) இவ்வாற்றால் உமது அறிவு உண்மை மெய்யறிவாயின், அதனைச் சிவனும் அறிந்து, பயன் தருவான். அதனால் அத்தகைய அறிவால் நிலையான வீடுபேறே யன்றி, இடையில் அணிமாதி சித்திகளும் தாமே வந்து வாய்க்கும்.

குறிப்புரை :

``அறிவு அறிவாக`` என வந்த நான்கிற்கும், `அறிவு மெய்யான அறிவாக` என்பதே பொருள். சொற்பொருட் பின்வரு நிலையணி. நந்தி சிவன். அது, ``அறிந்து`` என்பதனோடும் இயையும். ``நந்தியை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. ``அறியும்`` என்பதற்கும் வினைமுதல் ``நந்தி`` என்பதே அவ்விடத்து அறிதல், பயன் தருதலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. இரண்டாம் அடியில் `ஆக` என்பது `ஆனபின்` என்னும் பொருளதாயும், மூன்றாம் அடியில், ``ஆக`` என்பது, ``ஆதலால்`` எனக் காரணப் பொருட்டாயும் நின்றன. ``அணிமாதி சித்திக்கு`` `ஆம்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், `மெய்ப்பொருளை அறியும் அறிவே மெய்யறிவு. எனப் பொதுவாகச் சொல்லப்படினும், சிவனை மெய்ப்பொருளாக அறியும் அறிவே உண்மை மெய்யறிவாம்` என்பது கூறப்பட்டது. ``பொருள் அல்லவற்றை பொருள் என்று உணர்தலை, மருள்`` 3 3திருக்குறள் - 351. என்றார் திருவள்ளுவர்.

பண் :

பாடல் எண் : 7

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை அழகிய வாறே.

பொழிப்புரை :

உலகினர், `எமக்கு அறிவு வேண்டும், அறிவு வேண்டும்` என்று கூப்பாடு போடுகின்றனர். `ஆயினும், அங்ஙனம் கூப்பாடு போட்டுப் பெற்ற அறிவு அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார், அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாதிருக்கின்ற அந்த அறியாமை நீங்கி, அறிவு அறிவாகுமானால், முன்பு `அறிவு` என்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுகு வெளிப்பட நகைப்பு உண்டாகும்.

குறிப்புரை :

`தன்னை உடையார் ஒருவருக்கும் தான் காணப் படாது, அறிவுபோலவே தோன்றுதலும், தான் நீங்கிய பின் விளங்கி நிற்கும் அறிவைக் கொண்டே தான் அனுமித்துணரப்படுதலுமே அறியாமையின் இயல்பு` என்பது உணர்த்தியவாறு. ``அறிதோறறி யாமை கண்டற்றால்`` என்னும் திருக்குறளை8 நோக்குக.
``சுடரால் இருள்தேடச் சொல்லார்கள் எந்தாய்!
சுடரால் இருள்தேடச் சொன்னாய்`` *
என்றதும் இஃதே பற்றி. ``அறிவுபோல் அடரந்தெழும் அறியாமையின் வலியால்``* எனச் சிவஞான யோகிகளும் கூறினார். இத் தன்மையதான அறியாமையைச் செய்வது ஆணவ மலமே. அது பற்றி உமாபதிதேவர்.
``ஒருபொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``
எனவும்,
``பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்குண் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``*
எனவும் கூறினார்.
அழகிதல்லாததை, `அழகிது` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``அழகியவாறே`` என்பதன்பின் `தோன்றும்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், முன்மந்திரத்தில் கூறியபடி, `அறிவு அறிவாக அறிந்து அன்பு செய்ய அறிவு உதயம் ஆவதற்குத் தடையாய் உள்ளது, பெரும்பான்மையோரால் நம்ப இயலாத ஆணவ மலம்` என்பது உணர்த்தும் முகத்தால், `அது பரிபாகம் ஆதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது
அறிவாய வற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.

பொழிப்புரை :

அறிவு அறியாமையாய் இருந்த நிலையினின்றும் நீங்கி, அறிவேயாய் நிற்கப் பெற்றவனே, புற இந்திரியம் முதலிய கருவிகளில் அவையேதானாய் ஒன்றி, அவற்றின் அளவாய் நின்ற ஏகதேச நிலை நீங்கி, எங்கும் தானாம் வியாபக நிலையைப் பெறுவான். அந்நிலையைப் பெற்றபொழுதுதான். சடமேயாயினும் சித்துப் போலத்தோன்றிய கரணங்களில் அறிவாய் உள்ளவனும், அவற்றால் சீவனாய் இருந்தவனும் தானே ஆதல் அவனுக்கு விளங்கும்.

குறிப்புரை :

நீவுதல் - துடைத்தல். அறிவின் வினையை அதனை உடையான்மேல் ஏற்றி, `நீவியவன்` என்றார். ``பொறி`` என்றது உபலக்கணம். ``எங்கும் தானானபோது`` என்ற அனுவாதத்தால், எங்கும் தானானமை தானே பெறப்பட்டது. `அறிவாய` என்னும் அஃறிணைப் பன்மைப்பெயர், சாரியையும் உருபும் பெற்று, `அறிவாயவற்றினுள்` என வந்தது. `அறிவாய` என்றது, `அறிவுடையனபோலத் தோன்றியன` என்னும் பொருட்டு. செறிவு - மிகுதி. உம்மையை ``நின்றவன்`` என்பத -னோடும் கூட்டுக. ``ஆம்`` என்றது, `ஆதல் விளங்கும்` என்றவாறு.
இதனால், அறியாமை நீக்கத்தின் இன்றியமையாமை அதன் பயன் கூறும் முகத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து)
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து)
அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.

பொழிப்புரை :

மெய்யறிவை அடைந்தோரது உள்ளங்கள் அனைத்துலகங்களையும் உட்கொள்ளவல்லன; செய்தற்கரிய சரியை கிரியா யோகங்களில் பழகிப் பழுத்தன. அதனால், முதற்கடவுளாகிய சிவபிரானும் அவரது உள்ளங்களையே தானாகச் செய்து, அவற்றின் கண் நீங்காமலும் நிற்கின்றான்.

குறிப்புரை :

``ஆவது`` இரண்டும் துவ்வீறுபெற்ற தொழிற் பெயர்கள். அவை ஆகுபெயராய், அவற்றையுடைய உள்ளங்களைக் குறித்தன. `நெஞ்சொடு` என்பதன்பின் `ஒன்றாகி` என்பது வருவிக்க. ``நெஞ்சு`` என்பது பொதுப்பட அந்தக் கரணங்களைக் குறித்தன. அதனானே இனம் பற்றிப் புறக் கரணங்களும் கொள்ளப்படும். ஈற்றில் `அறிவுடையார் நெஞ்சம்` என்றது, `அது` (அதன்கண்) என்றும் சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இதனால், மெய்யறிவு பெற்றோரது கரணங்கள் நம்மனோரது கரணம்போலப் பசுகரணமாகாது, பதிகரணமாதல் கூறப்பட்டது.
``பாலை நெய்தல் பாடியதும், பாம்பொழியப் பாடியதும் காலனைஅன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்``
-திருக்களிற்றுப்படியார் - 2.
என்னும் சாத்திர மொழியை இங்கு ஒப்பு நோக்கி யுணர்க.

பண் :

பாடல் எண் : 10

மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

பொழிப்புரை :

உடம்பும், உலகமும் ஆகிய இவற்றின் அடிநிலைப் பொருளாகிய மாயைக்குத் தலைவனாய் உள்ள சிவன், உயிர்களின் பெத்த காலத்தில், `அயன், மால், அரன்` என மூவராய் நின்று அவைகளை முத்தொழிலில் அகப்படுத்தி, அவைகளால் அணுகுதற்கு அரியனாய்ச் சேய்மையில் நின்றவன், முத்தி காலத்தில் அம்மூவர்க்கும் மேலாய மூர்த்தியாய் வெளிப்பட்டு அருகில் விளங்கி கரும்பு போலவும், அமுதம் போலவும் இனிப்பவன் ஆகின்றான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. உலகத்தை ``நன்னாடு`` என்றார். ``காய நன்னாடு`` உம்மைத் தொகை. கரு - முதற் காரணம். முதல் - முதல்வன் தலைவன். சேயவன் - சேயவனாய் நின்றவன்` என இறந்த காலத்து வந்தது. ``ஆய்`` என்பது ``அணியன்`` என்பதனோடும் இயையும். ``கரும்பாய்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக்கிடந்தன.
இதனால், முன் மந்திரத்தில், ``அறிவுடையார் நெஞ்சத்து ஆகி நின்றான்`` எனக் கூறியதன் மேல், `அவன் அங்ஙனம் ஆகி நின்று செய்வது இது` என்பது கூறப்பட்டது. இஃது இனிது விளங்குதற் பொருட்டு இதன் மறுதலை நிலையையும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 11

என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
என்னையிட் டென்னை உசாவுகின் றேனே.

பொழிப்புரை :

இவ்வளவு காலமும் யான் என்னையறியாமல், என்னின் வேறாகிய பொருள்களையே யானாக எண்ணியிருந்தேன். (அதனால் அவற்றில் அழுந்தி, அவையேயாய் இருந்தேன்.) நந்தி பெருமானது அருளால் என்னை யான் அவற்றின் வேறான பொருளாக அறிந்தபின் அந்தநிலை சிறிதும் இல்லை. மேலும் யான் யானாகிய நிலையை நழுவ விடாமல் உறுதியாகப்பற்றி, என்னையே ஏதுவாகப் பற்றி, எனது இயல்பை யான் நன்கு ஆராய்ந்து வருகின்றேன்.

குறிப்புரை :

மாணாக்கன் நிலைமை இதுவாய் இருத்தல் பற்றி நாயனார் தமது நிலையையும் அதுவாகக் கூறினார். அவன் அந்நிலையினின்று தாழாமல் நிலைத்து, மேல் ஏறுதற்பொருட்டு. `நந்திபெருமான் அருளால்` என்பது, மேலெல்லாம் நாயனார் கூறிவந்தவாற்றால் கொள்ளக் கிடந்தது.
இதனால், `குருவருளால் அறிவு உதயமானபின் அதனை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனற்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

பொழிப்புரை :

நம் கையில் உள்ளது உடம்பாகிய ஒரு விளக்கு, அது நிலையற்றது; சிறிதுபோதுநின்று மறைந்து விடும் என்பது நம் போன்றவர்களை விட்டு அது மறைந்தமையால் அறிந்தேன். மேலும் இது முடைநாற்றம் வீசுவதாயும், பசி, நோய் முதலியவற்றால் வருத்துவதாயும் உள்ளது. இனித் திருவருளாகிய மற்றொரு விளக்கு மிகச் சேய்மையில் உள்ளதாகப் பெரியோர்கள் சொல்வதால் அறிகின்றேன். அந்த விளக்கு எப்பொழுதுமே நம்மை விட்டு நீங்காமல் ஒளிவீசிக் கொண்டே யிருக்குமாம். மேலும் அது தூய்மையானதாயும், தனி ஓர் இன்பத்தைத் தருவதாயும் இருக்குமாம். அதனை அடையத்தான் நான் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

இதுவும் முன் மந்திரம்போலவே மாணாக்கனது நிலை நோக்கிக் கூறியதாம். `நீயும் இந்த விளக்கைவிட்டு, அந்த விளக்கைத் தேடி அடை` என்பது குறிப்பெச்சம். ``காய விளக்கது`` என்பதை முதலில் கூட்டுக. இதில் உள்ள `அது`, பகுதிப்பொருள் விகுதி. மாயம் - நிலையாமை. உடம்பு மாயையின் காரியம் ஆதலாலும், ஆணவம் இருள்போல்வதாக, மாயை விளக்குப் போல்வது ஆதலாலும் ``காய விளக்கு`` என்றும், திருவருள் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்து வருதலின் அதனையும் ``விளக்கு`` என்றும் கூறினார். தூய்மையையும், கனற்றுதலையும் கூறவே அவற்றின் மறுதலைகள் பெறப்பட்டன. கனற்றுதல் - வெதுப்புதல்; துன்பந் தருதல்.
இதனால், `உதயமான அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், என்பது கூறப்பட்டது. `திருவருளே ஞானக்கண்` - என்க.

பண் :

பாடல் எண் : 13

தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி
பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

பொழிப்புரை :

`நன்றேயுடையனாயும், தீதேயில்லாதவனாயும் உள்ள சிவனது அருளே எல்லாவற்றினும் மேலான துணையாம்` என்று துணிந்து அதனையே பெற விரும்புகின்றேன். விரும்பி அதனை எல்லாத் திசைகளிலும் சென்று தேடுகின்றேன். அதனைத் துதிக்கின்றேன். இவ் வகையில் யான் அதனை நினைவளவில் பெற்றுவிட்டேன்.

குறிப்புரை :

`இனி அதனை அனுபவமாகப் பெறுவேன்` என்பதாம். ஆகவே, நீயும் நாடியும், தேடியும், பாடியும் நின்றால், அதனை அனுபவமாகப் பெறுவாய்` என்பது குறிப்பு. இறந்த காலத்தில் நிகழ்ந்த -வற்றை மாணவன் பொருட்டு நிகழ்காலத்தில் நிகழ்வதாகக் கூறினார்.

`நலமே உடையான் அடியே பரம் துணையாம் என நாடுகின்றேன்; திசை எட்டோ டிரண்டிலும் தேடுகின்றேன்; பாடுகின்றேன்; குறையா மனத்தாலே கூடுகின்றேன்` எனக் கூட்டி முடிக்க. சிவனது அருளை, `அவன் அடி` என்றல் மரபு. இதனால், `அறிவு உதயமாகி, ஆன்மரூபத்தாலும், ஆன்ம தரிசனத்தாலும் தத்துவ தரிசனம் தத்துவ சுத்திகளைச் செய்தபின் சிவதரிசனத்தைப் பெற முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறவியே.

பொழிப்புரை :

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய்8 உள்ள முதல்வனாகிய சிவபெருமானது விளை -யாடலால் முதற்கண் இயல்பாய் உள்ள ஒரு மலமாகிய ஆணவமும், அது பற்றிப் பின் வந்து பெருகிய மலங்களாகிய மாயை கன்மங்களும் அவை வந்தவழியே ஒருவன் போகச் செய்து, அநாதியே அடியவ னாகிய தன்னையும், தனக்கு அநாதியே தலைவனாய் உள்ள அப்பெருமானையும் உணர்ந்து, பாசங்களை விட்டு அவனது திருவடியை அடைந்து அவனே ஆயினால், பின்பு அவனுக்குப் பிறவிகள் வாரா.

குறிப்புரை :

`ஆடல்`, `ஆட்டம்` என வருதல் போல, `விளையாடல்` என்பது `விளையாட்டம்` என வந்து, அத்துச் சாரியை பெற்றது. `விளையாட்டத்தில்` என ஏழாவது விரிக்க. ஐந்தொழில் இறைவனுக்கு விளையாட்டுப் போல்வதாதல் பற்றி அவற்றை அவனது விளையாட்டம்` என்றார். `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``மலம்`` என்பது ``ஓர்`` என்பதனோடும் சென்று இயைந்தது. `பெருகு` என்பது கடைக்குறைந்து நின்றது. மாயையும், கன்மமும் முறையே விரிதலும், தொடர்தலும் உடைமைபற்றி, ``பெருகு மலம்`` எனப்பட்டன. மலங்கள் வந்தவாறு, உயிர்களின் அபக்குவம். `அது நீங்கினால், அது வழியாக வந்த மலங்களும் நீங்கும்` என்பார், ``வந்தவா பேர்த்திட்டு`` என்றார். `ஆறு` என்பது கடைக் குறைந்து நின்றது ``பண்டை`` என்பது, ``தன்னை`` என்பதனோடும் இயையும் `தலைவனாவான் சிவனே`` என்றற்கு, ``சிவமாக`` என்றாரேனும், `அவனாக` என்றலே கருத்து.
இதனால், அறிவு உதயத்தின் பயன்கள் முறையானே தொகுத்துணர்த்தப்பட்டன

பண் :

பாடல் எண் : 1

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :

அந்தங்கள், அவையாவன சமயநூல்களின் முடிவுகள் ஆறு. அவை, `வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்` - என்பன.

குறிப்புரை :

`இவை இன்ன` என்பதனை நாயனார் பின்னர் அருளிச் செய்வார்.
இதனால் ஞானம் பற்றிச் சமய நூல்கள் கொண்டுள்ள முடிவுகள் ஆறு வகையில் அடங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு)
அந்தமொ டாதி அறியஒண் ணாதே.

பொழிப்புரை :

(ஒரு பொருளை உடன்பாட்டினும், எதிர் மறையினும் ஆய்ந்து உணர்பவரே உண்மை உணர்பவர் ஆதலால்), மேற்கூறிய ஆறு அந்தங்களையும் அறிந்தவரே அறிவர் ஆவர். அவற்றை அறியாதவர் அறிவர் ஆகார்.

குறிப்புரை :

அதி சுத்தர் - மிகத் தூயர்; மலம் முழுதும் நீங்கப் பெற்றவர். அந்தம் ஆதிகள், ஞானத்தின் முடிவும், முதலும். செய்யுள் பற்றி அந்தம் முன் வந்தது. ``அறிய`` என்னும் செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது.
இதனால், ஆறந்தங்களை உணர்தலின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேரச் சிவோகமாய்
ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.

பொழிப்புரை :

பிறிதொரு நூலால் அன்றித் தன்னாலேதான் பிரமாண மாகின்ற வேதத்தின் முடிவுதான் எக்காலத்தும் சிவாகமங் களின் முடிவு. அவ்விரண்டிலும் கூறப்படுவது, நின்மலாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளுள் சிவனின் நீங்கி நில்லாத துரியாவத்தையில் ஆன்மா, தன்னை முதற்கண் உள்ளவாறுணர்ந்து, தேன்போல இனிக் -கின்ற பரம்பொருளை அடைதற்கு வழியாகிய சிவோகம் பாவனையில் நின்று, அதனானே அனாதிதொட்டு நீங்காது பற்றி வருகின்ற மலம் முற்றும் நீங்கப்பெற்று, பெறுதற்கரிய பேற்றைப் பெறுதலேயாம்.

குறிப்புரை :

``தான்`` இரண்டில் முதற்கண்ணதில், `தானே` என்னும் ஏகாரம் தொகுக்கப்பட்டது. ஓடு, எண்ணிடைச் சொல். பின்னது தேற்றப் பொருளில் வந்த இடைச்சொல். `முடிந்த முடிபு` எனப் பொருள் தருவ தாகிய `சித்தாந்தம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவாகமாந்தத்திற்கே காரண இடுகுறிப் பெயராய் வழங்குகின்றது. எனவே, மேல் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறிய `சித்தாந்தம்` என்பதும் இதுவே யாதல் அறிக.
இனி, `வேதாந்தம்` என்பதும் காரணப் பெயராய் உப நிடதங்களையும், காரண இடுகுறிப் பெயராய்ப் பிரமசூத்திரத்தையும் குறிக்கும். எனினும் சித்தாந்த சைவத்தில் எங்கும் `வேதாந்தம்` என்பது உபநிடதங்களையன்றிப் பிரமசூத்திரத்தையன்று. `பிரமசூத்திரம் ஏகான்ம வாதநூல்` - என்பதே சித்தாந்த சைவத்தின் முடிவு என்பதைச் சர்வான்ம சம்பு சிவாசாரியார் செய்த சித்தாந்தப் பிரகாசிகையாலும் சிவஞான மாபாடியத்தில் சிறப்புப் பாயிரத்து, `சைவாகமப் பிராமணியம்` கூறும் பகுதியாலும், அவையடக்கத்தில் `ஏகான்ம வாதம்` கூறும் பகுதியாலும் அறிக.
`வேதாந்தமே சித்தாந்தம்` - என்பதைப் பின்னரும் நாயனார் விளக்குதல் காண்க. ``அச்சிவோகம்`` என்ற அகரச்சுட்டு. வேதாகமங் களில் சொல்லப்படுதலைச் சுட்டிற்று. இறுதியில், `இவற்றின் முடிவு` என்பது இசையெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `வேதாந்தமும், சித்தாந்தமும் முடிவால் வேறல்ல` என்பது கூறப்பட்டது. `அங்ஙனமாயின் இரண்டாகக் கூறுவானேன்` என்னும் வினாவிற்கு விடை, பின்வரும் ``வேதமோடாகமம்`` என்னும் மந்திரத்திற் காணலாம்.

பண் :

பாடல் எண் : 4

நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து)
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

பொழிப்புரை :

`பரனே யன்றிச் சீவனும் அவன் போலவே என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள்` என்னும் கொள்கையை முதலிற் கொண்டு, (சீவன் அனாதியே பந்தப்பட்டு நிற்றலாம்), அது சுத்த மாயை, அசுத்தமாயை இரண்டும் பின்னர் வந்து பற்றாதவாறு விலகுதற்குரிய வழியை அறிந்து, அவ்வழியால் பந்தத்தினின்றும் நீங்கி, தந்தையாகிய சிவனை அடைதலே `சித்தாந்தம்` என்னும் தத்துவமாகும்.

குறிப்புரை :

`வேதாந்தம்` என்னும் தத்துவமும் அதுதான் என்பது. முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அமைந்தது. `பரனோடு உயிர் நித்தம் ஆதலை உற்று` என்க. ``சத்த முதல் ஐந்து`` என்பது ஆகுபெயராய் அவற்றை அறியும் செவி முதலிய ஐந்து பொறிகளை குறித்தது. இதனானே உபலக்கணத்தால் அனைத்துக் கருவிகளும் கொள்ளப் படும். ``தத்துவம்`` என்றது, `கருவி` என்றவாறு. `மாயை தொடரா வகை` என்றது. `பிறவி தொடரா வகை` என்றதாம்.
இதனால், `சக சீவ பரங்களில் முதல் இரண்டும் நித்தப் பொருள்களே` என்பதே சித்தாந்தம் எனக்கூறி, இக்கொள்கையே வேதாந்தம்` என்றமையால், `பரம் ஒன்றே நித்தம்` என்பது வேதாந்தம் ஆகாமையும் கூறப்பட்டது. எனவே ஆறந்தங்களுள் இங்கு சித்தாந்தம் கூறப்பட்டதாம், வேதாந்தம் இதன்கண் அடங்கிற்று.
சகம் - பிரபஞ்சம். காரியப் பிரபஞ்சம் அநித்தம் ஆதலின், முதலிரண்டு மட்டுமே இங்கு `நித்தம்` எனக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.

பொழிப்புரை :

பஞ்ச கலைகட்கு அதிதேவராகப் பொருந்துபவருள் பிரமனது அதிகாரத்திற்கு உட்பட்டது. நிவிர்த்தி கலை. இது `பிருதிவி` என்னும் தத்துவத்தைத் தன்னுட் கொண்டது. இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது பிரதிட்டா கலை. இஃது அப்பு முதல் பிரகிருதி முடிவாக உள்ள இருபத்து மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இதற்கு அதிதேவன் மாயோன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இது வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னுட்கொண்டது. இதற்கு அதிதேவன் உருத்திரன். இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி கலை. இது சிவதத்துவங்களில் கீழ் உள்ள சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் மகேசுரன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப் -பது சாந்தி யதீத கலை. இது சிவதத்துவங்களுள் எஞ்சி நின்ற, `சத்தி, சிவம்` என்னும் இரண்டு தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் சதாசிவன். இங்குக் கூறிவந்த தத்துவங்களில் இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலே உள்ளனவாகச் சொல்லப்பட்ட `சத்தி, சிவம்` - என்னும் தத்துவங்களே `விந்து, நாதம்` என்றும் சொல்லப்படும். ஆகவே, இவைகளையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங் -களையும் கடந்தததாகும். அவ்வாறு கடந்தபொழுதுதான் கருவி கரணங்களின் வேறாய், `ஆன்மா` என ஒன்று உளதாதல் விளங்கும்.

குறிப்புரை :

பஞ்ச கலைகளைப் பற்றி அறிய வேண்டுவன பல உள. அவையெல்லாம் சிவஞானமாபாடியம், பிராசாத யோக நூல்கள் முதலியவற்றில் சொல்லப்பட்டுள்ளன. அவையனைத்தையும் இங்குக் கூறுதல் கூடாமையின் அவைகளுள் தலையாய அதிதேவர்களை மட்டுமே கூறி, அவர்வழியாக அக்கலைகளையும், அவைகளில் அடங்கி நிற்பனவற்றையும் உணர வைத்தார். ஆகவே, பிரமன் முதலிய ஐந்தும் ஆகுபெயர்களாய், அவரால் செயற்படுத்தப்படும் கலை, தத்துவம் முதலியவற்றைக் குறித்தன. `விந்துவும், நாதமும் மிக்கு அப்பால் மேவும் எனக்கூட்டுக. இதனை எடுத்துக் கூறியது `இவை கடத்தற்கு அரியன` என்பதும், ``கடந்த இடமே நாதாந்தம்` என்பதும் விளங்குதற்பொருட்டு. `பிரமன்` முதலியன செவ்வெண். இறுதியில், `இவர்களில்` என்பது வருவிக்க.
இதனால், ஆறந்தங்களுள் நாதாந்தம் கூறப்பட்டதாம். தத்துவங்களைக் கொள்ளாதொழியினும் நாதத்தைப் பொதுப்பட உணர்ந்து `அதன் அந்தத்தை அடைதலே முடிநிலை` என்பவர் பாசுபதர் முதலிய சில புறச்சமயிகள்.

பண் :

பாடல் எண் : 6

உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியவாறு, தத்துவம் முப்பத் தாறனையும் கடந்த நிலையில் `தான்` என ஒரு பொருள் அவற்றின் வேறாய் உளதாதலை உணர்ந்த ஆன்மா, தனக்கு உபாதியாய் (குற்றமாய்)ச் சேர்ந்த அவற்றினது சடத்தன்மையையும், தனது சித்துத் தன்மையையும் தெள்ளியவாக ஆராய்ந்து, அதனானே, அவற்றி -னின்றும் அறவே நீங்கி, அவ்விடத்தில் உள்ள தன்னை மறைக்கின்ற ஆணவ இருளும் சிவனது அருளால் நீங்க, அவனது உணர்வாகிய சிவஞானத்தோடு கூடி, அதுவாகி நிற்குமாயின், அவ்விடத்தில், `போதம்` எனப்படுகின்ற ஞானம் உண்டாகும்.

குறிப்புரை :

ஆறாறு - ஆறாறன் தொகுதி. ``நாதாந்தம்`` இரண்டனுள் முன்னது அவ்விடத்து விளங்கும் ஆன்ம அறிவைக் குறித்தது. ``மேல் உள்ள`` என்றது, `மாயைக்கு மேல் உள்ள` என்றபடி. இருள் அருளாலன்றி நீங்காமை வெளிப்படை. ஓர் உணர்வு - தன்னோடு ஒப்பது வேறொன்றிலாத உணர்வு; சிவனது உணர்வு. உயிர் நாதாந்தத்தை அடைந்தமை முன்பே கூறப்பட்டமையால், ஈற்றில், ``நாதாந்தத்து`` என்றது, `அவ்விடத்து` என்னும் சுட்டளவாய் நின்றது. இங்கு, ``போதம் எய்திடும்`` என்றதனால், `போதம்` எனப்படுவது சிவபோதமே என்பது விளங்கும். விளங்கவே, போதாந்தமாவது, ஆன்மா, தான் சிவஞானத்தில் முற்றி நிற்கும் நிலையே போதாந்தம் என்பது போந்தது.
தத்துவம் முப்பத்தாறனையும் கடந்தவழி இருமாயை களையும் கடந்ததாம். மாயைகள் ஆணவத்தைப் போக்கவே இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலின், `அவை நீங்கியவிடத்து ஆணவம் நிற்றல் இயல்பு` என்பது பற்றி, ``நாதாந்தத்தைச் சென்று மேல் உள்ள இருள்`` என்றும்,
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்;
ஒன்று மேலிடின் ஒன்று
ஒளிக்கும்; எனினும் இருள் அடராது``*
என ஓதியபடி, நாதாந்தத்ததில் ஆணவமே யன்றிச் சிவமும் உளதாக, பக்குவம் இல்லாத பொழுது மேலிடுகின்ற ஆணவம், பக்குவம் வந்த பொழுது மேலிடமாட்டாதிருக்கச் சிவமே மேலிடும் ஆதலின் ``இருள் நீங்க`` என்றும், சிவம் மேலிட்ட வழி ஆன்மா அதனைப் பற்றுதற்குத் தடை இன்மையால், ``ஓர் உணர்வு ஆகுமேல்`` என்றும் கூறினார்.
இதனால், `போதமாவது இது` எனவும், அதனை அடையு -மாறும் கூறும் முகத்தால், ஆறந்தங்களுள் போதாந்தம் கூறப்பட்டது. `போதாந்தமே முடிநிலை` என்பவர் பாடாண வாத சைவர் முதலிய அகச் சமயிகள். இவர்களை, `பூர்வ சைவர்` - என்பர் சிவாக்கிர யோகிகள்.

பண் :

பாடல் எண் : 7

தேடும் இயம நியமாதி சென்றகன்(று)
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொழிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களையும் மேற்கொள்ளப் புகுந்து, அவ்வாறே படிமுறையால் மேல் ஏறி, முடிவான `சமாதி` என்னும் நிலையை எய்திச் சிவனுக்கு அணுக்கமாகி நிற்கச் சீவன் சிவனாய்விடும். அந்நிலையில் உலகத்தாக்கம் ஒழிய ஓர் அமைதி நிலை தோன்றும். அதுவே உயிர் பெறத்தக்க பேறு - என்னும் இதுவே யோக நூலின் முடிவான கொள்கை.

குறிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களின் இயல்பை மூன்றாம் தந்திரத்தில் காண்க. `இயமத்தில் தொடங்கி முறையே வளர்ந்து ஏழாவது உறுப்பாகிய தியானத்தை அடைதலே ஞானத்தின் முடிநிலை` என்பதும், `அதன்பின் சமாதியை அடைதலே ஞானத்தின் பயன்` என்பதும், `அதனை அடைந்தோர் உடம்பு நீங்கிய பின் பரம் பொருளோடு ஒன்றாகி விடுவர்` என்பதும் யோகநூற்கொள்கை என்றபடி. `உடம்பு நீங்குதலின்ற, என்றும் நிலைத்திருக்கப் பெறுதலே முத்தி` என்னும் கொள்கையும் உண்டு.
ஊடுதல் - உட்புகுதல். `ஊடுறும்` என்பது குறைந்து நின்றது என்றலும் ஆம். `சிவனுக்கு அணியராதல் சமாதியின் தொடக்கநிலை` என்க. `உபசாந்தம் கூடும்` எனமாற்றியுரைக்க.
இதனால், ஆறந்தங்களுள் யோகாந்தம் கூறப்பட்டது. இக்கொள்கையுடையோர் யோகமதத்தினர். இவர் முதல் ஆசிரியர் பெயர்பற்றி, `பாதஞ்சலர்` எனவும் கூறப்படுவர்.

பண் :

பாடல் எண் : 8

கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

பொழிப்புரை :

`ஆறந்தம்` எனப்படுகின்ற கொள்கைகளில் ஒன்றான, `கலாந்தமாவது யாது` என அறிந்து கொள்ளப்புகின், உயிர் பாசங்களினின்றும் நீங்குதற்கண் துணையாய் உள்ள நிவிர்த்தி முதலிய சத்திகட்கு இடமாய் நிவிர்த்தி முதலிய கலைகளும், மற்றும் பிராசாத மந்திரத்தின் மேதா முதலிய கலைகளும் சுத்த மாயையிலே தோன்றிச் சுத்த மாயையிலே ஒடுங்குமாற்றை ஆராய்ந்து தெளிதலே கலாந்தமாம்.

குறிப்புரை :

நிவிர்த்தி முதலிய சத்திகளாவன, `நிவிர்த்தி, பிர திட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்துமாம். இச்சத்தி களுக்கு இடமாகின்ற சுத்த மாய விருத்திப் பகுதிகளும் இச்சத்திகளின் பெயர்களையே உடையன. `உலகம் ஆறு அத்துவா மயமானது` எனக்கூறுமிடத்து, ஏனை ஐந்து அத்துவாக்களும் கலாத்துவாவிலே அடங்கும். அதனால் அத்துவ சுத்தி, `கலாசுத்தி` என்றும், `கலா சோதனை` என்றும் சொல்லப்படும். இந்தச் சுத்தி, அல்லது சோதனையே நிருவாண தீக்கையாதலின் `தீக்கையே முத்தியாம்` எனக் கூறும் ஒருசார் சைவர்கள் `கலாந்தத்தில் பஞ்ச கலாந்தம்` என்பர்.
இனிப் பிராசாத கலைகள் மூன்றாம் தந்திரத்து. `கலை நிலை` என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டன. `அவைகளை முன்னர் ஆராய்ச்சியால் உணர்ந்து பின்னர் அனுபவத்திற்காணுதலே முடி நிலை` என்பவர் `கலாந்தத்தில் பிராசாத கலாந்தர்` என்க. இவரை யோக சைவர்` அஃதாவது, `பிராசாத யோகமே முத்தியைப் பயக்கும் - எனக் கூறும் சைவர் என்பதாம். இவரும் ஐக்கிய வாத சைவர் போல ஆணவ மலத்தை உணராதவர் ஆதலின், அவரோடு ஒப்பர் என்க.
ஈசானம் முதலிய பஞ்சப் பிரம மந்திர சத்திகளாகிய ஈசானி முதலிய ஐந்தும், அவைகளில் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டும் - ஆக முப்பத்தெட்டாய் நிற்கும் சத்திகளும் `கலை` எனப்படுதலால், அவற்றைத் தெளிதலும் கலாந்தமாம் என்பாரும் உளர். அவை மந்திர கலைகளாய் நாதாந்தத்தில் அடங்குத -லாலும், நாயனார் அவ்வாறு ஓதாமையாலும் அவைகளை இங்குக் கொள்ளல் வேண்டா என்க. ``ஆதிக்கு`` என்பது கண்ணுருபின் பொருளில் வந்து உருபு மயக்கம். `ஆம்` என்பதனை, `ஒடுங்கலும்` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, தோன்றுதலைத் தழுவிய எச்சவும்மை.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் கூறப்பட்டது. அஃது இருவகைத் தாதலும் உடன் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று)
ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு)
அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் கூறப்பட்ட கலாந்தம் ஒழுக்கம் பற்றியது. இனி), நூல் அறிவு பற்றி நோக்குங்கால் உள்ள கலாந்தம் வேறு ஐந்தாகும். அவை, `மந்திர கலாந்தம், தந்திர கலாந்தம், தெளிவுக் கலாந்தம், ஞான கலாந்தம். உபதேச கலாந்தம்` என்பன. அவையும் ஞானப் பகுதிகளேயாம். அவை ஆராய்ச்சியில் வேட்கை உடையவர்கட்கு ஆவனவாம்.

குறிப்புரை :

`அவை இன்ன` என்பது வருகின்ற மந்திரத்தால் பெறப்படும். அவன் அளியன் ஆகிய - சிவன் அருள் மிக்கவனால் அளித்தருளிய (கலைகள்).

பண் :

பாடல் எண் : 10

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

பொழிப்புரை :

அநாதியே உள்ளவனால் செய்யப்பட்டமையின், `அநாதி நூல்` எனப்படுகின்ற ஆகமங்களையும், வேதங்களையும் ஓதி, ஐயம் திரிபு அற உணர்தல் மந்திரகலாந்தம். ஏனைப் பாசுபதம் முதலிய தந்திரங்களை அவ்வாறு உணர்தல் தந்திர கலாந்தம். அவ்வாறு உணரப் பட்ட அந்நூல்களில் கண்டவாறு ஒழுகும் ஒழுக்கத்தில் மேம்படுதல் தெளிவுக் கலாந்தம். திருவைந்தெழுத்தைத் தத்தமக்கு உரியமுறையில் மனம் முதலிய அந்தக் கரணங்களால் அன்றி, அறிவால் சுத்தமான -தாகப் பெரிய அளவில் கணித்தல் ஞான கலாந்தம். குரு உபதேசத்தை நன்கு சிந்தித்துத் தெரிந்தபின் நிட்டையில் நிற்றல் உபதேச கலாந்தமாம்.

குறிப்புரை :

உபதேசகலை மட்டிலே, `குரு உபதேசம்` எனக் கூறினமை பற்றி, `ஏனைய கலைகள் குரு இன்றியும் உணரப்படும்` எனக்கொள்ளலாகாது. ஏனெனில், `உபதேசம்` என்றது ஞானோப -தேசத்தையேயாகலின், அவ்விடத்து, `குரு` எனப்பட்டோரும் ஞான குருவே. ஞான குருவைக் கூறியது ஏனைக் குருமாரை விலக்கிய -தாகாது. பிறரெல்லாம் வித்தியா குரவரும், கிரியா குரவரும் ஆவர் என்க.
`அனாதி ஆகும் கலை` என மாறிக் கூட்டுக. ஆகும் அத்தந்திரம் - வேதாகமங்கட்குப் பின்னிலையினவாகிய அந்தத் தந்திரங்கள் ஆகும். மனாதி - மந்திரங்களைக் கணித்தற்குக் கருவி யாகும் மனம் முதலியன. உடல் - கருவி. ஈற்றில் உள்ள `ஆகும்` என்பதை வேதம் முதலிய எல்லாவற்றோடும் கூட்டுக.
இவ்விரண்டு மந்திரங்களாலும் கலாந்தம் வேறுவகையால் அமைதல் கூறப்பட்டது. மந்திர கலாந்தம் கொண்டவர் தருக்க மதத்தவர். தந்திர கலாந்தம் கொண்டவர் அகப்புறச் சமயிகள். தெளிவுக் கலாந்தம் கொண்டவர் பௌராணிகர். ஞான கலாந்தம் கொண்டவர் அகச்சமயிகளில் ஒருசாரார். உபதேச கலாந்தம் கொண்டவரே சித்தாந்த சைவர்.

பண் :

பாடல் எண் : 11

தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

பொழிப்புரை :

ஞான கலாந்தத்தில் சிவம் வெளிப்படும். (என்றாலும் அதன்கண் அன்பு செய்து அழுந்துதல் உபதேச கலாந் தத்தில் உண்டாகும்). தெளிவுக் கலாந்தம் இறைநெறி ஒழுக்கத்தையும், இறையன்பையும் வலுப்படுத்தும். (என்றாலும் அவற்றை அஃது அறிவியல் முறையில் உணர்த்தாது. அவ்வாறு உணர்த்துவது உபதேச கலாந்தமே). வாய் வாளாமைபெற்று, பிறபொருள் உணர்வும், தன்னுணர்வும் அற்ற பெருந்தகையோன் வாக்கு மனங்களைக் கடந்த பரம சிவன் ஆவான்.

குறிப்புரை :

தன் ஞானம் - சிவ ஞானம். `அதனை உணர்த்தும் கலை` என்க. அக்கலைகள் பலவும் திருவைந்தெழுத்தில் அடங்கும், ``கலை, கலாந்தத்து`` என்பவற்றில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆசார நேயம்`, உம்மைத் தொகை. அறைதல் - வலியுறுத்தல். அறையும் - அறையப்படும். `பேசாது` என்பது ஈறு குறைந்துநின்றது. உரை, சொல்லப்படுவது. உணர்வு - சொல்லவாராது உணர்வு மாத்திரையாய் நிற்பது, பெருந்தகை, ஆகுபெயர். இவ்வொருமை சாதி யொருமை. நந்தி - சிவன், மாநந்தி - பரமசிவன். ``மாநந்திதானே`` எனத் தேற்றேகாரத்தால் `வேற்றுமையில்லை` என வலியுறுத்தியது. அத்தன்மை குறைவின்றி நிரம்புதல் பற்றி இங்ஙனம் வலியுறுத் -ததனானே, `அவன் பொருளால் வேறே` என்பது பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய ஐந்து கலாந்தங்களுள் உபதேச கலாந்தத்தின் சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தானது வாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும்
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

பொழிப்புரை :

(வேதாந்தம் சித்தாந்தத்துள் அடங்க ஆறந்தங்கள் ஐந்தந்தங்களாகும்). `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்னும் மூன்று பொருள்கள் உள்ளன எனக் கூறுவதில் எந்த அந்தமும் வேறுபட வில்லை. (`ஞானம் ஒன்றே உள்ளது; ஏனையவை இல்லை` - எனக் கூறும் ஏகான்மவாதம் வேதாந்தம் அன்று - என்பது மேலேகூறப் பட்டது), இவற்றுள் ஞாதுருவாகிய ஆன்மாவும், அதன் ஞானமும் சமாதிநிலையில் ஞேயத்திலன்றிப் பிறவற்றிற் செல்லாமையால், ஞாதுருவாகிய ஆன்மாவும் சிவமேயாய்நிற்கும்.

குறிப்புரை :

`அந்நிலை உபதேச கலாந்தமாகிய சித்தாந்தத்திலல்லது இல்லை` என்பது கருத்து. ஞானம் - அறிவு ஞேயம் - அறியப்படும் பொருள். ஞாதுரு - அறிபவன். இவை முறையே `காட்சி, காணப்படு பொருள், காண்பான்` எனவும் கூறப்படும். இவை `திரிபுடி` எனப்படும். `மூன்று பொருள் இல்லை; ஞானம் ஒன்றே உள்ளது` என ஏகான்மவாதம் கூறும். `மூன்று பொருள்கள் உள்ளன. ஆயினும் உணர்பவனது உணர்வில் அம்மூன்றும் மாறி மாறித் தோன்றும் நிலை சிவானுபவ நிலையாகாது. அவனது உணர்வில் ஞேயமாகிய சிவம் ஒன்றுமே தோன்றும் நிலையே சிவானுபவ நிலை. அதுவே பரமுத்தி` என்பது சித்தாந்தம். இவற்றுள் ஏகான்ம வாதக் கொள்கையை மறுத்துச் சித்தாந்தக் கொள்கையை வினா வெண்பா, பின்வருமாறு நயம்பட வலியுறுத்துகின்றது.
``காண்பானும், காட்டுவதும், காண்பதுவும் நீத்துண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``l
இம்மந்திரத்தில் ``சமாதி`` என்றது பாவனையளவாக நிகழும் யோகசமாதியன்று. ஞானசமாதி. இதுவே திருக்களிற்றுப்படியாரில் கூறப்பட்டது.
(இதனாலும் மேற்கூறிய கருத்தே வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.3

பண் :

பாடல் எண் : 13

ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே
ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறிஉடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களிலும், `ஞாதுரு ஞானத்துடன் சென்று, ஞேயத்தில் அடங்குதலைத்தான் முடிநிலையாகக் கூறுகின்றன. ஆகவே, ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தில் சென்று அடங்குதல்தான் ஆறந்தங்களின் குறிக்கோளும். ஆயினும், `ஞேயத்தில் அடங்குதல் மட்டுமன்றி, அவ்விடத்தில் எல்லையில்லாததோர் இன்பநுகர்ச்சியில் ஞாதுரு மூழ்கியிருத்தலே உண்மைப்பேறு` எனக் கூறுகின்ற சித்தாந் -தமே ஏனை அந்தங்களினும் வடித்தெடுத்த மோன நிலையாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து, `ஆறந்தமும், ஞாதுரு, ஞானக்குறி உடன்வீட, ஞேயம் அடங்கிடும்; (ஆகலான்) ஆறந்தமும் சென்று அஞ்ஞேயத்தே அடங்கிடும்; (ஆயினும்) சிவானந்த உண்மையே தேறிய மோனம்` எனக் கூட்டி முடிக்க.
அடங்கிடுதலைக் கூறும் அந்தங்களை, அவையே அடங்குவனவாக உபசரித்துக் கூறினார். ``அஞ்ஞேயம்`` என்னும் சுட்டு, பின்னர்க் கூறப்படும் அடங்குதல் தொழிலையை உட் கொண்டது. ``ஆறந்தம்`` இரண்டில் பின்னதிலும் உம்மை விரித்து, `ஞேயத்தின்கண்` என உருபுவிரிக்க. `ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தின்கண் அடங்கிவிடும் அளவே முத்தியாவது என, அவ் விடத்து, பெறுவானையும், பேற்றினையும் அழித்துச் சில அந்தங்கள் கூறும் ஆகலின், அதனை மறுத்துச் சித்தாந்தத்தை வலியுறுத்துதற்கு, ``தேறிய மோனம் சிவானந்த உண்மையே`` என்றார்.
``முத்தியிலும் மூன்று முதலும் மொழியக்கேள்;
சுத்தஅனு போகத்தைத் துய்த்தலனு; - மெத்தவே
இன்பம் கொடுத்தலிறை; இத்தைவிளை வித்தல்மலம்;
அன்புடனே கண்டுகொளப் பா``8
என்பதே சித்தாந்தம் ஆதலை யறிக.
இதனாலும், சித்தாந்தத்தின் தலைமையே ஏதுக் காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து)
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.

பொழிப்புரை :

உண்மையை உணர்த்தும் கலைகள் பலவாகச் சொல்லப்படினும் அவை அனைத்தும் பன்னிரு கலைக்குள் அடங்குவனவாம். இனி, அனைத்துக் கலைகளையும் விடாது கடக்க வேண்டின், பதினாறைத்தாண்டி அப்பால் செல்லுதல் வேண்டும், `நாதந்தம்` என்பது, இவ்வாறு கூறப்படுவனவற்றின் இடையே நிற்கின்ற ஒன்று. ஆகையால், அதையே `உண்மை` என்று சொல்லின், அஃது ஏகதேசத்தையே `முற்று` எனக் கருதுவதாகவே முடியும்.

குறிப்புரை :

`ஆறு, ஒன்று, ஐந்து` என்பன அவ்வெண்களையே குறித்தன. அதனால், ஏழன் உருபு பெறாது, மூன்றன் உருபு பெற்றது. பிராசாத கலைகள் பலவாவன பஞ்ச கலை, அட்ட கலை, தச கலை, சதுர்த்த கலை முதலியன. அவைகளையெல்லாம் பிராசாத நூல்களில் காண்க. அவை அங்ஙனமாயினும் துவாதச கலையும், சோடச கலையுமே சிறப்புடையனவாகப் பயிலப்படற்குரியன என்றற்கு, ``பன்னிரண்டில் அடங்கும்`` என்றும், `பதினேழாகிய அந்தம்` என்றும் கூறினார். கலைகட்கு அடக்கம் கூறினமையால் பன்னிரண்டு என்றும் மேற்போதல் கூறினமையால், `பதினாறைக் கடந்த பதினேழ்` என்றும் கூறினார். இப்பிராசாதங்களைப் பற்றி இத்தந்திரத்திலும், மூன்றாம் தந்திரத்திலும் சிறிது விளங்கக் கூறினோம்.
``ஓர் அந்தம்`` என்றது, `ஏகதேச அந்தம்` என்றபடி.
இதனால், ஆறந்தங்களில் ஒன்றாகிய நாதாந்தத்தின் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

பொழிப்புரை :

தேவரையெல்லாம் தம் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சி புரிகின்ற, எங்களுடைய புகழ்மிக்க நந்திபெருமானே, நாங்கள் (`வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு வேறு` எனக் கூறிப்பிணங்குவார் பின் சென்று) கெடாதபடி எங்களை அறைகூவி அழைத்துத் திருவடி தீக்கை செய்து, `அவ்விரண்டிலும் சொல்லப்படுகின்ற உண்மை ஒன்றே என்பதையும், அவ்வுண்மையின் உயர்வையும் இனிது விளங்க உபதேசித்தருளிய ஞான குருவாவார். பசுக்களாகிய அனைத்துயிர் களையும் அடிமையாக உடைய சத்தி ஆதி சத்தியாய் நின்று ஆட்டிப் புடைக்கும் நிலையில், சிவனும் ஆதிசிவனாகவே அவளுடன் இருந்தவன், அந்நிலையை மாற்றித் தனது இயற்கை நிலையாகிய அநாதி சிவனாம் பரமசிவனாகி வந்து, அவளைத் தழுவிக்கொண்ட பின்பு, ஏனையோர்க்கும் எங்கட்கு அருளியவாறே அருளுமாறு அவன் அந்நந்தி பெருமானைத் திருவுள்ளத்தில் எண்ணுவான்.

குறிப்புரை :

`அப்பொழுது அவ்வுண்மை ஏனையோர்க்கும் இனிது விளக்கப்படும்` என்பது குறிப்பெச்சம். `பசு` என்னும் வடசொற்கு நேரிய தமிழ்ச்சொல் `ஆ` என்பதாதல் பற்றி அதனையே கூறினா ராயினும் அது `பசு`, அஃதாவது, `பாசத்தில் கட்டுண்டது` என்னும் பொருளையே தருதலின், `உடையாள்` என்றது ஆதிசத்தியை, அஃதாவது திரோதான சத்தியையேயாயிற்று. ``அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்`` என்ற இடத்திலும் `உலக வாழ்க்கையைத் தரும் அவள்` என்றது, திரோதான சத்தியையே யாதலை நினைக. `அரன்` - என்பது, `பாசங்களை அரிப்பன்` என்னும் பொருளது ஆதலின் அஃது, `அநுக்கிரகத்தைச் செய்பவன்` என்னும் பொருட்டாய்ப் பரமசிவனைக் குறித்தது. உயிர்கட்கு இருவினை யொப்பு மலபரிபாகம் வரும் பொழுதே திரோதான சத்தி அருட் சத்தியாய் மாறி ஆன்மாவிற்பற்றி, அரன் அப்பொழுதுதான்வந்து மணப்பவன் போலக் கூறினார். இது, `சத்தி நிபாதம் வந்த பின்பு` எனக் கூறியவாறேயாம். ``கோனை`` என்பது, `கோன் ஆவன்; அவனை` என இருசொல் தன்மைப்பட்டு நின்றது. ``கருதும்`` என்னும் `செய்யும்` என்முற்று, இங்கு ஆண்பால் படர்க்கையில் வந்தது. `அரன் வந்து கொண்டபின் கோனைக் கருதும்` என முடிக்க. தமக்கு அருள்புரிந்த வகையைக் குறித்து `நந்திபெருமானையே கருதுவன்` என்றா ராயினும், `அவரவருக்கு ஏற்புடையாரைக் கருதுவன்` என்றலே கருத்தாம். முதல் அடியை, ``கோனை`` என்பதன் பின்னர்க்கூட்டுக.
இதனால், `ஆறந்தங்களில் வேதாந்த சித்தாந்தங்களே மேலானவை` என்பது குருவருள் பெற்றபின் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப
அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில்
வரும்சம யம்புறம் மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

பொழிப்புரை :

கொள்வார் கொள்ளும் வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிவன் உலகில் பலவகைச் சமய நூல்களை ஆக்கி வைத்திருக் -கின்றான். (அவை ஒன்றோடொன்று முரணுதல் போலத் தோன்றுதல், அவற்றைக் கொள்வாரது பக்குவத்திற்கு ஏற்ப அவை அமைந்ததனாலேதான். அதனால் அவற்றைக் கொள்வோர் தமக்கு விருப்பமானவற்றைக் கொண்டு அமைதல் வேண்டுமன்றிப் பிறருக்கு விருப்பமானவற்றைப் பழித்தல் கூடாது. ஏனெனில் எல்லா நூல்களும் இறைவன் அருளால் தோன்றியவையேயாகலின்) அந்நூல்களின் வழி அமைந்த சமயங்களில் சில, `புறம்` எனப்படும். மாயை, மகாமாயை இவற்றைக் கொண்டுள்ள சமயங்கள் அகச்சமயங்களாம். அவற்றையும் கடந்து நிற்பன வேதாந்த சித்தாந்தத் தத்துவங்கள்.

குறிப்புரை :

`ஆகமங்களில் சிவாகமங்களே சித்தாந்தம், என்றல், அவை முற்றறிவுடைய சிவனால் செய்யப்பட்டமையாலேயாம். எந்தச் செயலும் சிவன் தான் நேரே செய்யவும், பிறரைக் கொண்டு செய்விக்கவும் நிகழ்வதேயன்றி, அவை தாமாக நிகழ்வன அல்ல ஆகலின், சமய நூல்கள் பலவும் காரணக் குறிபற்றிச் சிவாகமமேயாம்.
``துணை நன்மலர் தூய்த்தொழும் தொண்டர்காள், சொல்லீர்;
பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
இணையில் இரும் பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டே. இன்னும்,
``விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்``
என்றதும் கொள்பவரது பக்குவ வேறுபாடுகளை நோக்கியதேயாம்.
`உயிர்கள் பக்குவம் எய்தியபொழுதே இறைவன் குருவாகி வருவான்` என்பதை, ``அரும்பருவம் அடைதலுமே ஆசானாகித் தோன்றி``l என முன்னர்க்கூறிய சிவஞானசித்தி, பின்னர், `அவ்வரும் பருவம் எப்பொழுது வரும் என வினாவுவார்க்கு,
``புறச்சமய நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்
புகல்மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவையடைந்தும், அருந்தவங்கள்புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணநூல் படித்தும்,
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால், சைவத்
திறத்தடைவர்``8
எனப் பின்னர்க் கூறிற்று. இதனால் அனைத்துச் சமயநூல்களையும் அவற்றைக் கொள்வாரது பக்குவத்தை நோக்கின் வேண்டத்தக்கனவே யாதல் அறிக.
`சாருவாகம் முதல் எல்லாச்சமயமும் பரமசிவனால் செய்யப் பட்டமையின் பிரமாணமேயாயினும் ... ... சோபான முறையான் உபதேசித்தருளியது - என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப் படும்`` (கிறப்புப்பாயிரம் - `சைவாகமப்பிராமணியம்` எனச்சிவஞான மாபாடியத்தில் உரைக்கப்பட்டமையும் காண்க.
பக்குவம் நோக்கிச் செய்யப்பட்டமையால், `உலகம் மாயை மகாமாயைகளினின்று பரமசிவனால் தோற்றி ஒடுக்கப்படும்` என்பதை உணரமாட்டாதார்க்கு அது சொல்லப்படவில்லை அதனால், சாருவாகர், (உலகாயதர்) `பூதம் நான்கே; அவை கூடுதலும் பிரிதலும் இயற்கை. கூடுவதால், உலகமும், உடம்புகளும் தோன்றும்; பிரிவதால் அழியும். நான்கு பூதங்களும் கூடியபொழுது அறிவும் தோன்றும்; பிரியும்பொழுது அறிவும் அழியும்; ஆயினும், உடம்பு உள்ளவரையில் உலகில் நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும்; இல்லையேல் வாழ்வு நல்வாழ்வாக அமையாது` என்பர். ஆயினும் நீதியைக் கடைபிடிக்காத பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
சமணரும், பௌத்தரும், `உலகம் தானே தோன்றியழியும்` என்பர். அவருள் சமணர், `அறம் - என்பது ஒன்று உண்டு, அதன் வழியிலேதான் உலகம் நடைபெற்று வருகின்றது` - என்பர். ஆகவே, அறத்தைக் கடைப்பிபிடிக்காது வழுவி விடும் பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்;
பௌத்தர், `மனிதர் பரதுக்க துக்கராய் வாழவேண்டும்; அஃதாவது, பிறர்க்காயினும், பிறஉயிருக்காயினும் துன்பம்வரின், அத்துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அத்துன்பத்தைக் களையவும், துன்பம் வராமல் காக்கவும் வேண்டும்; இதுவே தவம். இத்தவத்தால் ஞானம் பிறக்கும்; ஞானத்தால் வீடு உளதாம்` என்பர். எனவே, இத்தவத்தினின்றும் வழுவும்பொழுது அவர்கள்தங்கள் மதத்தை அவர்கள் கைவிட்டவராகின்றனர்.
இவரெல்லாம் வேதசிவாகமங்களை இகழ்தலால் புறத்திலும் புறப்புறச்சமயிகள் ஆகின்றனர். வைதிகருள் மீமாஞ்சகரும், சாங்கியரும் நிரீச்சுரவாதிகள். அவருள் மீமாஞ்சகர், ஈசுரன் இல்லாவிடினும் இருப்பதாக வைத்து வேதத்தில் சொல்லப்படுகின்ற வேள்வி முதலிய கருமங்களைச் செய்தல் வேண்டும்; செய்தால் அந்தக் கருமங்களே பயனைக்கொடுக்கும். கருமங்களை விட்டவன் வழியை விட்டுக் குழியில் வீழ்ந்தவன் ஆவான்; அவனுக்கு உய்தியில்லை என்பர். எனவே, அவர் கருமங்களின் வழுவும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆவர்.
சாங்கியர், `உலகமே மயக்கத்தைத் தருவது, சாங்கிய நூலின் வழியே தத்துவ ஆராய்ச்சியில் முதிர்ந்து நிற்றல் வேண்டும். அவ்வாறு நின்றால் மயக்கம் நீங்கும்` என்பர். ஆகவே, அவர் தத்துவ ஆராய்ச்சி செய்யாது, வாழ்க்கை நடத்தப் புகும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர்.
நியாய வைசேடிகர்களும், `ஈசுரன் ஒருவன் உண்டு` எனக் கூறினாராயினும், உய்யும் வழி கூறுவதில் சாங்கியரை ஒத்திருக் கின்றனர்.
யோக மதத்தினர், `யோகத்தின் எட்டுறுப்புக்களாகிய இயமம், நியமம் முதலியவற்றை முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டும்` என்பர். முற்றாகக் கடைப்பிடித்தோர் எவரும் இலர்.
ஏகான்மவாதிகள், `உலகம் கனவு போன்றதே; என்றாலும், அதைக்கனவாகக் கண்டு கழித்து, பரமார்த்தத்தின் விழிக்கின்ற வரையில் உலகில் உள்ள எல்லா நீதி அநீதிகளையும் உணர்ந்து, தீவழி நீக்கி, நல்வழியில் ஒழுகவேண்டும்` என்பர். எனவே, அவர் அவ்வாறு ஒழுகாதபொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
`பாஞ்சராத்திரம்` எனப்படுகின்ற வைணவ மதத்தினர், பெரும்பான்மையும் சைவரோடு ஒத்திருப்பினும் சைவத்தின் உயிர்க் கொள்கையாகிய, `பிறப்பு இறப்பு உடையன எல்லாம் உயிர்களே; எக்காரணத்தாலும் அவையில்லாதவனே கடவுள்` என்பதை மறுத்து, `உயிர்களின் பொருட்டுக் கடவுள் பிறந்தும் வருகின்றான்` என்பர். பிறப்பாவது அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சார்யுசம் என்னும் நால்வகை யோனிகளுள் எந்த ஒன்றிலேனும் கருவாய் இருந்து தோன்றி, வளர்ந்து, சிலகாலம் வாழ்ந்து மறைதலாம். இதனை `அவதாரம்` என்றல் உபசாரமே. உண்மையில் அவதார மாவது, கடவுள் எவையேனும் சில காரியங்களை முன்னிட்டு யாதானும் ஓர் உருவில் தோன்றிச் சில நொடிகளில் அக்காரியத்தை முடித்து மறைவதேயாகும். பிறப்பு எய்திய வர்களையே இவர்கள் கடவுளாகக் கூறினாலும், `அவர்களையும், கடவுளையும் வழிபட்டு உய்யவேண்டும்` என்பர். மேலும், `அற நெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும், அறநெறிக்கு எதிரான மறநெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும் தரும் ஆதலின் அற நெறியிலே ஒழுகவேண்டும்` என்றும் கூறுவர். இக் கொள்கை சைவத்திலும் உள்ளதே. `உலகிற்கு அறநெறியை அருளியவன் கடவுளே` எனக் கொள்வதால் அறநெறியில் ஒழுகுவதும் கடவுள் வழி பாட்டின் ஒரு பகுதியேயாகின்றது. எனவே, வைணவரும், சைவரும் அறநெறியையும், இறைவழிபாட்டினையும் விடுவாராயின் தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர். மீமாஞ்சகர் முதல் பாஞ்சாரத்திரம் முடிய உள்ள மதத்தினர் வேதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் வேத சாரமாகிய சைவாகமங்களை ஏற்றுக்கொள்ளாமல் இகழ்தலால் இவர்களுடைய சமயங்கள் `புறச்சமயங்கள்` எனப்படுகின்றன.
இனிப் பாசுபதம் முதலிய தாந்திரிகர்கள், இறையுண்மை கொண்டபோதிலும் வேதத்திற்கு மாறான ஒழுக்கங்களை `நல்லொழுக்கம்` எனக்கொள்ளுதலாலும், `ஆன்றோர் யாவரும் வேத ஒழுக்கமே நல்லொழுக்கம்; அவற்றிற்கு மாறானவை தீயொழுக்கம்` எனக்கொண்டமையாலும் இவர்களது சமயங்கள் `அகப்புறச் சமயங்கள்` எனக்கூறப்படுகின்றன. சிவாகமங்களை இவர்கள் முழுமையாகக் கொள்ளாவிடினும் ஓரளவு தழுவுவர். அதனால் இவர்களது சமயம் அறவே, `புறச்சமயம்` எனப்படவில்லை.
புறப்புறச் சமயிகள் `மாயை` என்றை ஒன்றைக் கொள்வதே யில்லை. அதிலிருந்து அவர்களுடைய தத்துவங்கள் எவ்வளவு முரண் பட்டவை என்பது விளங்கும். புறச்சமயிகள் வைதிகர்களாயினும் மாயையை மட்டும் கொண்டு, மகாமாயையைக் கொள்வதில்லை. அதனால் அவர்களுடைய தத்துவங்களும் நிறைவுடையன ஆகாமை விளங்கும்.
இவைகளையெல்லாம் நோக்கும்பொழுது சமயவாதிகளது பக்குவநிலை விளங்கும். விளங்கவே இறைவன் எல்லாரிடத்தும் ஒப்பவே கருணையுடையவன் ஆகையால், சமயநூலை ஒன்றாகச் செய்யாது பலவாகச் செய்தும், செய்வித்தும் உள்ளான் என்பதை இம்மந்திரம் விளக்குகின்றது.
`ஆகமம்` எனத் தொகையால் ஒன்றாகிப் பின் வகை விரிகளால் பலவாதல் பற்றில் ``தன்னில்`` என ஒருமையால் கூறப்பட்டது. ``புறம்`` என்பதில் முக்கூற்றுப் புறங்களும் அடங்கின. `வரும் சமயமே புறமும்` என ஏகாரமும், உம்மையும் விரிக்க. `அதனால் அவை இகழற்பால அல்ல` என்பதாம். உருவிய உண்மை `வேதாந்த சித்தாந்த உண்மை` என்க. ``உருவிய`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பன்மை வினைப்பெயர்.
இதனால், `ஆறந்தங்களில் மேற்பட்டவை வேதாந்தமும், சித்தாந்தமும்` என்பது பரந்த நோக்கத்தில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம்
நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.

பொழிப்புரை :

ஆறந்தங்களில் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் ஒன்றே எனத்தெளிவான அடையாளங்களைப் பெற்றுள்ளன. `போதந்தம்` என்பது உயிர் அஞ்ஞானம் நீங்கி, ஞானத்தைப் பெறும் நிலையாகும். `யோகாந்தம்` என்பது, பொதுப்பட ஒரு பொருளைக் குறியாகக்கொண்டு அதனையே நோக்கிநிற்பது. நாதாந்தம் திரு வருளைத் தலைப்பட்டு, அதனாலே சிவானந்தம் தோன்றப் பெறுவது. இவற்றிற்கு மேலாக முதலிற்கூறிய வேதாந்த சித்தாந்தங்களே முடிந்த அடையாளமாகிய பேசாநிலையைப் பெற்றுச் சிவானந்தத்தில் திளைத்திருக்கலாகும்.

குறிப்புரை :

`சீராக உதயம் ஆதல் ஆகும்` என்க.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் ஒழிந்த ஏனை ஐந்து அந்தங்களின் பயன் கூறப்பட்டன. கலாந்தத்தின் பயன் மேற்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல்
நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம்
போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.

பொழிப்புரை :

வேதாந்தத்தில் சொல்லப்படுவது, `பிரகிருதியும் அதன் காரியமுமாகிய ஏழுவகைக் குற்றங்களினின்றும் நீங்க வேண்டும்` என்பதே. அவை 1. பூதங்கள், 2. ஞானேந்திரியங்கள், 3. அவற்றின் விடயங்கள், 4. கன்மேந்திரியங்கள், 5. அவற்றின் விடயங்கள், 6. அந்தக் கரணங்கள் என்பனவும், எல்லாவற்றிற்கும் மூலமாகிய 7. பிரகிருதியும் ஆகியவையாம்.
வேதாந்தத்திற்கு மேலேயுள்ள கலாந்தமாகச் சொல்லப் படுவது பிரோக காண்டம் ஆதல் பற்றிக்காரண தத்துவங்களாகச் சொல்லப்படுகின்ற சுத்த தத்துவங்களால் செலுத்தப்படுகின்ற வித்தியா தத்துவங்கள் ஏழும் நீங்குதலாம். இத்தத்துவங்கள் தடத்த சிவனால் செலுத்தப்படுதல் பற்றி, `பரோபாதி` என்றும் சொல்லப்படும்.
நாதாந்தமாகச் சொல்லப்படுவது, உயிர் உபாதிகள் அனைத்தும் நீங்கி நிற்கின்ற நிலையாம். `தத்துவமசி` மகா வாக்கியத் -தில் ஆன்மாவைக் குறிப்பதாகிய `துவம்` பதம் இந்நிலையில் நின்ற ஆன்மாவையே குறிப்பதாம்.
போதாந்தமாகச் சொல்லப்படுவது, உபாதிகளின் நீங்கிய ஆன்மா மல வாசனையால் `யான், எனது` எனநிற்கின்ற நிலையை விடுத்துச் சிவமாகும் நிலையாம் `தத்துவமசி` மகாவாக்கியத்தில் `ஆசி` பதம் ஆன்மா இவ்வாறாகும் நிலையையே குறிப்பதாம். `தத்` பதம் சிவத்தைக் குறிக்கும்.

குறிப்புரை :

``மேல்`` என்றது பிரகிருதியைக் குறித்தது. இரண்டாவதாகக் கூறப்படவேண்டிய மீதாந்தம், வேறுபொருள் படாமைப் பொருட்டு மூன்றாவதாகக் கூறப்பட்டது. ``விடு`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதனை காரணோபாதியோடும் கூட்டுக. காரணோபாதி காரணங்களால் வரும் உபாதி. `தற்பதத்துப் போம் அசி` என்க.``தற்பதம்`` என்பதில் `தத்` என்பது அதன் பொருளைக் குறித்து நின்றது. போதல் புகுதல். `போதலையே அசி` என்றமையால், ``போம் அசி`` என்பதில் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம்.
இதனால் ஆறந்தங்களுடன் மேற்கூறப்பட்ட ஐந்தில் உள்ள பாச நீக்க முறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.

பொழிப்புரை :

`உலகங்கள் அனைத்தையும் கடந்தாலும் அவற்றிற்கு அப்பாலும் ஒருபேரொளி உள்ளது` என வேதாகமங்கள் கூறுகின்றன. அந்தப் பேரொளிக்குள்ளே உள்ள ஓர் ஒளிதான் எங்கள் சிவபெருமான். அவன் அந்தப்பேரொளியைத் தனக்கு இயல்பாய் உள்ள மேலான ஆற்றலாக உடையவன். எனினும் அந்த ஆற்றலை ஆட்சி செய்கின்ற ஒருவனாகவும் அவன் அதற்குள் இருக்கின்றான்.

குறிப்புரை :

அண்டம், இங்கு `உலகம்` என்னும் பொருட்டாய் நின்றது. `உலகங்கள் ஏழு` என்னும் மரபு பற்றி, `ஏழு` எனப்பட்டது. ``கடந்தகன்று`` என்பது ஒருபொருட்பன்மொழி. ``அப்பாலும்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம் இதனால் அண்டங்களுக் -குள்ளேயும் அந்த ஒளி இருத்தல் பெறப்பட்டது. ``என்ற`` என்னும் அனுவாதத்தால், என்றலும் பெறப்பட்டது. ``உள ஒளி`` என்பது குறிப்பு வினைப்பெயரெச்சத் தொடர். ``பண்டு`` என்றது `அனாதி` என்றபடி. `ஆற்றல் யாவும் பொருளைப்பற்றியே நிற்கும் ஆதலால், இந்த ஆற்றலுக்குப்பற்றுக்கோடாய் உள்ளவனே எங்கள் பெருமான்` என்றார். `அன்றி நின்றான்` என்றது, `அந்த ஆற்றலாகிய குணத்திற்கு வேறாய், அதனையுடைய குணியாய் நிற்கின்றான்` என்றதாம்.
`பரம்பொருள் அறிவு மட்டுமான குணமேயன்றி, அறிவையுடைய குணியன்று` என்பர் ஏகான்மவாதிகள். `அது சித்தாந்தம் அன்று` என்பதை இம்மந்திரத்தால் கூறினார்.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``8
என்றார் உமாபதி தேவர். சிவன் வெறும் சத்தியன்று; `சத்தியையுடைய சத்திமான்` என்க. எந்த ஒரு சத்தியும் தன்னையுடைய பொருள் இன்றித் தனியேயிராது.
``... ... ... ... ... சத்திதான் சத்தனுக்கோர்
சத்தியாம்; சத்தன்வேண்டிற் றெல்லாமாம் சத்தி தானே``l
என்ற சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், ஆறந்தங்களுள் மேலானதாய சித்தாந்தத்தின் சிறப்புப்பொருள் ஒன்று எடுத்துக்கூறப்பட்டது.
``அண்டம் ஆரிருள் ஊடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``3
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 20

கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.

பொழிப்புரை :

சிவன் தனது சத்தியாலே உயிர்கட்கு அறிவிக்கும் முறையை உணர்ந்து, அந்த வழியிலே குரு உபதேசித்த பணிகளைச் செய் வதாலும், மற்றும் மந்திரங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்வதாலும் பாசங்கள் யாவும் நீங்கும். பின்பு என்றுமே உயிர்க் -குயிராய் நீங்கா -திருக்கின்ற சிவன் ஒருவனே உயிரினிடத்து உள்ள பொருளாவான்.

குறிப்புரை :

கோ - யாவர்க்கும் தலைவன்; சிவன். அவன் முன்னர்த் திரோதான சத்தியால் உலகத்தையே உணர்த்துவான். பின்பு அருட் சத்தியால் உலகத்தை மறைத்துத் தன்னை - உணர்த்துவான். அதுவே சத்திநிபாதமாம். அதுதான் மந்ததரம் - மந்தம் முதலாகப் பல வகைப் படுதலின் அதற்கேற்ப குரு முன்னர் `சரியை, கிரியை, யோகம்` என்ப வற்றை உணர்த்தி, முடிவிலே ஞானத்தை உணர்த்துவார். அவற்றுள், ``கருமச் செய்தி`` என்பது சரியையும், ``அற்சனை`` என்பது கிரியா யோகங்களையும் குறித்தன. யோகமும் அருவத் திருமேனி அருச் சனையே. ``செய்ய, பார்ப்ப`` என்பன வினையிடத்து வந்த செவ்வெண். தே - சிவனேயான குரு. பா - பாட்டாயினும் மந்திரமே. ``அற்சனை பாட்டேயாகும்``* என்றது காண்க. படைத்தல் - சமர்ப்பித்தல். பாரித்தல் - மிகுதியாகச் செய்தல். ``ஓ`` என்னும் முதனிலையே. `ஓவும்` என முற்றுப்பொருள் தந்தது. `அனைத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்த -லாயிற்று. `ஒழியாத ஒருவனே உண்டு` என மாற்றியுரைக்க.
இதனால், `ஞானத்திற்கு வழி சரியை கிரியா யோகங்கள்` என்பது சித்தாந்தம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

ஒருவனை உன்னார் உயிரினை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே

பொழிப்புரை :

சித்தாந்தம், ``மற்றாருந்தன்னொப்பாரில்லாத`` l தலைவன் ஒருவன் இருக்கின்றான். எனக் கூறுவதையோ, `அத் தலைவனுக்கு அடிமையாய் உள்ள உயிர்கள் பல உள்ளன` எனக் கூறுவதையோ, `அவ்வுயிர்கட்கு நல்வினை; தீவினை யென்னும் இருவகை வினைகளும், சுத்த மாயை என்னும் மாயைகளும் ஆகிய கட்டுக்கள் உள்ளன` எனக் கூறுவதையோ சக்திநிபாதம் வாயாதவர் உணர வல்லவராகார். ஆகையால், எக்காலத்திலும் உயிர்களின் அறிவுக் கறிவாய் நின்று அவைகளுக்கு அறிவித்து, வினைப்பயனை நுகர்வித்து, அவற்றிற்கு அவை அறியாமலே ஆதாரமாயும் நிற்கின்ற அந்தத் தலைவனே இருவினை யொப்பு மல பரிபாகங்களின்போது அறி -வித்தால்தான் எவரும் இந்தச் சித்தாந்த உண்மைகளை உணர இயலும்.

குறிப்புரை :

வருவித்துரைத்தன குறிப்பெச்சங்கள். `சக்திநிபாதம் வாயாதோர், வாய்த்தோர்` என்பன, முன் மந்திரத்தில், ``கோவுணர்த்தும் சத்தியாலே`` என்றதனால் கொள்ளக் கிடந்தன. அருவம் - புலனாகாமை. `ஆதாரம்` என்பது குறுகி நின்றது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் எதிர்மறை முகத்தான் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு)
உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன்பால் அன்புள்ளவர்களை இடமாகக் கொண்டு வெளியாகின்ற ஆற்றல்கள் எல்லாம் அவர்களுடைய ஆற்றல்கள் அல்ல; மற்று, சிவனிடத்தினின்றும் வெளியாகின்ற ஆற்றல்களே அந்த ஆற்றல்களின் முன்னிலையில் எல்லாப் பொருள் களையும் சிவன் நிற்க வைத்துச் செயற்படச் செய்தலால், உயிர் நிலையாகச் சிவானந்தத்தில் மூழ்கி, அவ்வானந்தமே மயமாம் நிலையை அடையும்.

குறிப்புரை :

`ஆகிவரும் அவை, சிவத்தினின்றும் வரும் சத்திகள்` எனவும் `அவற்றின்முன் வகுத்திட்டு எனவும், மொழி மாற்றியும், வேண்டும் சொற்களை வருவித்தும் உரைக்க சிவனது சத்தி, செயலாற்றுகையில் `அதிகாரசத்தி` எனப்பெயர் பெறும். அது சிவத்தினிடம் இருந்தே செயலாற்றாது, அவனுடைய அன்பர்களிட மிருந்தும் செயலாற்றும். அந்த அதிகாரத்து பதியப் பெறுதற்குப் புண்ணியம் வேண்டும் ``புரைத்ததி காரசத்தி புண்ணியம் நண்ணலாலே``l என்றது காண்க. செயல்கள் தாம் பலவாகலின், அவற்றிற்கு ஏற்ப அதிகார சத்திகளும் பலவாம். `இவை செயல் நோக்கியல்லது பொருள் நோக்கியல்ல` என்பதை,
``சத்திதான் பலவோ என்னில், தான்ஒன்றே; அனேகமாக வைத்திடும் காரியத்தான்; மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்திபோல்;அர னுடையதாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்தவாறாம்``l
என்பதனான் உணர்க.
அதிகார சக்திகள் பலவும் அவரவரது புண்ணியத்திற்குத் தக அவ்வவரிடம் பதிந்து ஏற்புடைய செயல்களைச் செய்யும் என்க. உரன் உறுதல், எல்லாவற்றையும் செய்தும் தான் நிலை திரியாது இருத்தல். ``முன்`` என்றதும், ``சந்நிதி`` என்றதும் வெறும் எதிர்முக மாத்திரை யன்று; `இஃது இவ்வாறு ஆகுக` எனச் சங்கற்பித்தலையேயாம். இத்தகைய சங்கற்ப மாத்திரையானே சிவன் எல்லாவற்றையும் செய்கின்றான் என்பதை உணர்க. சேட்டித்தல் - செயற்படுதல். ``சேட்டிப்ப`` என்னும் செயவெனெச்சம் காரணப்பொருளில் வந்தது. ``சிவாநந்தி`` என்றது சாதியொருமை. இதற்கு, `உயிர்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. `சிவத்தினின்றும் வரும் சத்திகள்` என்றதனால், `அவற்றின் முன்னாக வகுத்தவன் சிவனே` என்பது பெறப்பட்டது. ``வகுத்திட்டு`` என்னும் செய்தென் எச்சம். `ஆசிரியன் சொல்லி, மாணாக்கன் அறிந்தான்` என்பதுபோலக் காரணப் பொருட்டாய் நின்றது. `வகுத்திட்டுச் சேட்டிப்ப` என இயையும்.
இதனால், முன்மந்திரத்தில், ``ஒருவனே தலைவன்`` என்றது பற்றி, `தலைவர் பலராதலைக் கண்டும், கேட்டும் அறிகின்றோமே; அஃதென்` என்று எழும் ஐயம் தீர்க்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

பொழிப்புரை :

வேதாந்தப் பொருள் முழுவதையும் மிகச் சுருக்கமாகத் தொகுத்துணர்த்தும், `ஒருமொழி அல்லது `பெரும்பெயர்` எனப்படுகின்ற மகாவாக்கியங்கள் சிலவற்றுள், `தத்துமசி` என்பதே சிறந் தெடுத்துச் சொல்லப்படுவது. (இது சாமவேதவாக்கியம்) இதனுள் `தத்` என்பது பதியாகிய சிவத்தையும், `துவம்` என்பது பசுவாகிய உயிரையும், `அசி` என்பது, உயிரைச் சிவமாக்குகின்ற அருட் சத்தியையும் குறிக்கும். எனினும், `இவற்றுள் பசுவாகிய உயிர் பஞ்ச பேதங்களை யுடைய (இத்தந்திரத்து முதல் அதிகாரம்) உடலளவில் ஏகதேசமாய உள்ளதன்று; வியாபகமானதே` என்பதை வலியுறுத்தி விளக்குவதே வேதாந்தமாகும். மண்முதல் நாதம் ஈறாகச் சொல்லப் படுகின்ற உபாதி களுள் ஒன்றும் இன்றி, நின்மலமாய் நிற்பது எதுவோ அதுவே பதிப் பொருள்` என வலியுறுத்தி விளக்குவது நாதந்தமாகும் (`உயிர் இவ்வு பாதிகளை உடைமையாலே - பசு - எனப்பட்டது` என்பதும் இதனானே விளங்கும்).
இனி, துவம் பதப்பொருளாகிய உயிர் தத் பதப் பொருளாகிய சிவத்தில் சென்று `பாலோ டளாயநீர பாலாகு மலலது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதவாறுபோல``3 சிவமேயாய் வேறு தோன்றாது ஒன்றிவிடுதலை வலியுறுத்தி விளக்குவதே போதாந்தமாகும். (போதம் - சீவபோதம். அந்தம் - அதன் ஒடுக்கம். அஃதாவது கதிரொளியில் விளக்கொளிபோலச் சிவபோதத்தில சீவ போதம் அடங்கியிருத்தல்).
[`போதாந்தம் கூறும் நிலையை எய்தி, அவ்விடத்தில உயிர் பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்துதலை வலியுறுத்தி விளக்குவதே சித்தாந்தமாகும்` என்பது குறிப்பு.]
`சிவமும், சீவனும் பொருள் இரண்டாமாயின், அவை ஒன்றாதல் எங்ஙனம் கூடும்` எனின், அவ்விரண்டற்கும் இடையே உள்ள பொதுத்தன்மைதான் அவை அங்ஙனம் ஒன்றாதற்குக் காரணம் [அத்தன்மையாவது, இரண்டும் சித்தாய் இருத்தலாம். எனவே, சடத்திற்குச் சிவத்தோடு ஒன்றுதல் கூடாமை விளங்கும்].

குறிப்புரை :

பசு - பசுவின் இயல்பு; ஆகுபெயர். பசு இயல்பைக் கூறுவதை `பசு` என்றே உபசரித்தார. இவை `பதி` என்றதற்கும் ஒக்கும். `தற்பத்துப் போய்` என்க. `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலா யிற்று. `ஐக்கியம்` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சி நின்றது. ஆதலைக் கூறுவதை `ஆதல்` என்றதும், சாயுச்சம் ஆதற்குக் காரணமாவதை, `சாயுச்சியம்` என்றதும் உபசாரம். சாதாரணம் - பொதுத்தன்மை.
இதனால், மேல், ``ஒருவனையுன்னார்; உயிரினை உன்னார்`` என்பன முதலாக எதிர்மறை முகத்தாற் கூறியவற்றை நீக்கி, உடன்பாட்டு முகத்தால் உன்னுமாறு ஆறந்தங்களுள் பெறப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால்
நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள், `வேதாந்தம், சித்தாந்தம்` என்னும் இரண்டும், சீவன் சிவம் ஆதலைக் கூறுவதில் வேறுபட வில்லை. ஏனை, `போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம்` என்னும் நான்கும் ஒன்றின் ஒன்று கீழ்ப்பட்ட நிலைகளையே விளக்கி நிற்கும். வேதமும், சித்தாந்தத்தைக்கூறும் சிவாகமும், உண்மையில் `சிவம் எனப்படுகின்ற அந்தப்பொருளே, தடத்தத்தில் `சதாசிவன்` என்னும் பெயரையும், அதற்குரிய வடிவத்தையும் கொண்டு செய்த முதல்நூல் ஆகுமானால், அவற்றுக்கிடையே வேறுபாடிருத்தல் எங்ஙனம் கூடும். கூடாது. ஆகவே, வேதாந்த ஞானம், சித்தாந்த ஞானமேயாம்.

குறிப்புரை :

ஆதலைக் கூறுவனவற்றை ``ஆதல்`` என்றது உபசாரம். அவமம் - கீழ் (பரமம் ளு அவமம்). ``செய்தது`` எனவும், ``ஒன்று`` எனவும் கூறியது. `வடிவால் வேறாயினும், பொருளால் ஒன்றே` என வலியுறுத்தற்கு `வேதம் ஒருவரால் செய்யப்பட்டதன்று; தானே உள்ளது` எனக் கூறுபவர்க்கே (மீமாஞ்சகர்) வேதம் ஆகமத்தின் வேறாகும். `வேதமும் சிவனால் செய்யப்பட்டதே` என்பார்க்கு வேதமும் ஆகமந்தான் இது பற்றியே நீலகண்ட சிவாசாரியர், `வேதமும் ஆகமமே` (``வேதோபி ஆகம்`` சிவாத்துவித பாடியம் - பதியதிகரணம்) என்றார். வேதாகமங்கள் தோன்றிய வரலாற்றை முதல் தந்திர உரையிற் காண்க.
நவம் - புதுமை; முதலிலே உணரப்படுவது` என்பது கருத்து.
இதனால், மேற்கூறியவற்றுள் வேதாந்த சித்தாந்தங்களது உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள் சித்தாந்தத்தில் நிற்கும் நிலையில் தான் சீவன் முத்தி (அஃதாவது, உடம்பு உள்ளபொழுதே அதில் தொடக்கற்று, வீட்டின்பத்தில் இருக்கும்நிலை) கிடைக்கும். ஆகையால், சித்தாந்த நிலையில் நிற்பவர் உலகர்போலவே காணப் படினும், அவர் உலகருள் ஒருவராகாது, வீடுபேற்றில் இருப்பவரே ஆவார். வேதாந்தத்தின் உட்கிடையும் சித்தாந்தமேயாதலால், அவ்வுட்கிடையை உணரவல்லவர்கட்கு வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் சிவனையே பரமாகக் காட்டி நிற்றல் விளங்கும்.

குறிப்புரை :

``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம்ஒன்றி லேசீவன் முத்த ராக்கி
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர்; இது என்ன பிராந்தி!`` -பக்கம் - சூ. 8 - 16.
என்னும் சிவஞான சித்தி மொழியினை இங்கு ஒப்புநோக்கியுணர்க.
இதனால், ஆறந்தங்களுள் சித்தாந்தத்தின் தலைமை அதன் பயன்கூறும் முகத்தால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால்
நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

பொழிப்புரை :

சிவனை ஈசுரனிடத்திலும், சீவனிடத்திலும் வைத்துக் காட்டுவது வேதாந்தம். அதில் இருவகை உண்டு. ஒன்று பரிணாம வாதம்; மற்றொன்று ஆபாசவாதம். ஆபாசம் - போலி. விவர்த்தனம் ஆபாசத்துள் அடங்கும். விவர்த்தனம் - கயிறு பாம் பாதல் போலும் பொய்த்தோற்றம். `நிர்க்குணமாகிய பரப்பிரமமே தன் இச்சையால், சத்துவகுணனாகிய ஈசுரனாகவும், இராசத குண னாகிய சீவனும், தாமத குணத்தவாகிய அந்தக் கரணம் முதலிய கருவி களுமாய்ப் பரிணமிக்கும்` என்பது பரிணாம வாதம். `நிர்க் குணமாகிய பரப்பிரமத்திலே - இன்னது எனச்சொல்ல இயலாத - மாயை என்பது உண்டு. அது முக்குணங்களை யுடையது. மூன்றுநிறம் உடைய கண்ணாடியைப் போன்றது. அம்மூன்றுகூற்றிலும் கண்ணாடி -யில் நிழல் போலப் பரப்பிரமம் பிரதிபலிக்கும். அவற்றுள் சத்துவக் கூற்றின் பிரதி பலனம் ஈசுரனாயும், இராரசதக் கூற்றின் பிரதிபலனம் சீவனாயும், தாமதக் கூற்றின் பிரதி பலனம் அந்தக் கரணம் முதலிய கருவிகளாயும் நின்று செயற்படும்` என்பது ஆபாசவாதம். இந்த ஆபாசத்திற்கு அடிப்படை மாயையே யாகையால், ஆபாசவாதமே `மாயாவாதம்` எனப்படுகின்றது எவ்வகை யிலேனும் இந்தவேதாந்தம் `சகம், சிவன், பரம்` என்னும் முப் பொருளை உணர்த்துதலால், இதனை உணர்ந்த பின் ஆகமாந்தத்தை உணருங்கால், வேதாந்தக் கூற்று தூலாருந்ததி முறைமைத்தாதல் விளங்கும். தூலாருந்ததி முறைமை யாவது, `அருந்ததி மீன் மிக நுண்ணி தாதலின், அதனைக் காட்டுதல் அரிது` என்று கருதி முதற்கண், அதற்கு அருகில் உள்ள ஒரு பெரு மீனைச் சுட்டி, `அதுவே அருந்ததி` எனக் காட்டுதல் போன்ற முறை. முதலில் அப்பெருமீனைக் கண்டுணர்ந் தவனுக்குப் பின்பு, `அஃதன்று அருந்ததி மீன்; அதனைச் சார்ந்து மிக நுண்ணியதாய் விளங்குகின்றதனைப் பார்; அதுவே அருந்ததி மீன்` எனக்காட்டினால், அவன் அருந்ததியைக் கண்டுகொள்வான். இம் முறையில் அருந்ததி யல்லாத மீனை அணுக்கம் பற்றி `அருந்ததி` என்றல் போல்வது இங்குக் கூறிய வேதாந்தப் பொருள். அருந்ததி மீனையே சுட்டி, `அருந்ததி மீன்` எனக் காட்டுதல் போல்வது ஆகமாந்தப்பொருள். ஆகவே, தூலாருந்ததி முறைமை பற்றி நோக்கினால் இங்குக் கூறிய வேதாந்தமும் பயனில்லது ஆகா தாகலின், இந்த வேதாந்தமும் சித்தாந்தமேயாம். இவ்வாறு ஆகும் நிலைமையில் ஒருவனது ஞானம் அமையுமாயின், அந்த ஞானம் தசகாரியத்துள் ஒன்பதாம் நிலையாகிய `சிவயோகம்` எனப்படுகின்ற சீவன் சிவனாய் நிற்கும் நிலைமையைத் தரும். `சரியை, கிரியை, யோகம்` என்றும் தவங்களின் மிகுதியனாலே இத்தகைய ஞானத்தை எய்தினோரே, `தத்துவ ஞானிகள்` எனப்படுகின்றார்கள்.

குறிப்புரை :

`பரப்பிரமத்தை` என்னாது, ``சிவனை`` என்றது, `சித்தாந்தத்தில் சொல்லப்படும் சிவனே, வேதாந்தத்தில் சொல்லப் படும் பரப்பிரமம்` என்றற்கு. இச்சிவன், சொரூப சிவன் என்க. இஃதே பற்றித் தடத்த சிவனை, `வேதாந்திகள் கூறும் ஈசுரன்` என்றோ, `சகுணப் பிரமம்` என்றோ மயங்கற்க. சித்தாந்தம் கூறும் தடத்த சிவனும் நிர்க்குணனே. பரமன் - வேதாந்திகள் கூறும் பரமன்; ஈசுரன். ``நவம்`` என்றது, ஒன்பதாம் எண்ணுமுறைமையை. `உற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மிக்கு - மிகுந்ததனால். உணர்தற்கு, `இதனை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `சித்தாந்தமே வேதாந்தம்` என்னும் உண்மையை உணராதவர் வேதாந்த வாக்கியங்கட்குத் தாம் தாம் அறிந்தவாற்றால் கூறும் பொருள்களும் சித்தாந்தத்தை உணர்ந்தவர்கட்கு நேர் மாறானவை யாகாது, தூலாருந்ததி முறைமையவாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ மாகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

பொழிப்புரை :

சித்தாந்தத்தில் சொல்லப்படுகின்ற உருவம், அருவம் உருவாருவம் ஆகிய சிவவடிவங்களும், அவற்றிற்கு இடமாகின்ற விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய நிலைக்களங்களும், சீவனும், அதனின் மேம்பட்ட சிவன், சத்தி, சதாசிவன் ஆகிய கருத்தாக் -களும் உண்மைகளேயன்றி, மேற்கூறிய வேதாந்தத்தில் சொல்லப் படுபவன போல, பரிணாமமோ, ஆபாசமோ அல்ல. ஆகவே, சீவன் சிவனோடு, கதிரவன் ஒளியில் விளக்கொளிபோல இரண்டறக் கலக்கும் சித்தாந்த முத்தியே உண்மை முத்தியாம்.

குறிப்புரை :

தத்துவம் - உண்மை. `தத்துவமாகும்` என்னும் பயனிலை நான்கடிகளிலும் முதற்கண்ணே நின்றது. சகளம் - உருவம். அகளம் - அருவம். இவ்விரண்டைக் கூறியதனால் சகள நிட்களமாகிய உருவாருவமும் பெறப்பட்டது. தன்பரம் - தனக்கு மேலே உள்ளவர். அவர் சதாசிவர் முதலிய கடவுளர். இவரையும், சீவர்களையும், மற்றும் இவர்களது தனு கரண புவன போகங்களையும், `கனவிற் காணப்படும் மயக்கக் காட்சிபோல வியாவகாரிக சத்தைகள்; பாரமார்த்திகத்தில் இவையெல்லாம் பொய்யாய் ஒழியும்` எனக் கூறுவர் மாயாவாதிகள். `அது பொருளன்று` என வலியுறுத்தற்கு அடிதோறும் ``தத்துவம் ஆகும்`` எனக்கூறினார்.
இதனால், மேற்கூறிய வேதாந்தப்பொருள் தூலாருந்ததி முறைமைத்தாதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.

பொழிப்புரை :

இதன்பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொது, உண்மையை முற்ற உணர்த்தாது, ஓரளவாக உணர்த்துவது. சிறப்பு, உண்மையை முற்ற உணர்த்துவது, உலகர் உண்மையை ஓரளவே உணர்வார்; சத்தி நிபாதரே முற்ற உணர்வார். மேலும் உண்மையை முதற்கண் ஓரளவாக உணர்ந்தே பின்பு முற்ற உணர இயலும். அது பற்றியே உலகர்க்காவும், சத்திநிபாதர்க்காகவும் முறையே வேதமும், ஆகமமும் சிவனால் செய்யப்பட்டன. எனவே இவ்வுண்மையை உணராதவர், `வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு` என்பர். இவ்வுண்மையை உணர்ந்தவர் ஓர் உண்மைதானே பொதுவும், சிறப்புமாம் வகையில் `வேதாந்தம்` எனவும், `சித்தாந்தம்` எனவும் நிற்கின்றது என்பர் என்றபடி.
``வேதநூல், சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறும்உள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது;சைவம் அருஞ்சிறப்பு நூலாம்; நீதியினால் உலகர்க்கும் சத்தநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
-சுபக்கம் சூத். 8 - 15.
என்றது சிவஞானசித்தி.

இதனால், ஆறந்தங்களுள் வேதாந்த சித்தாந்தங்களது தலைமை அவற்றின் இயல்பு கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம்
பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

பொழிப்புரை :

வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த நெறியில் அடையப்படும் ஆனந்தம் சிவானந்தம். அதனை முற்றப்பெற்ற உயிரே மேலான ஆனந்தத்தைப் பெற்ற உயிராகும். இனி அந்த ஆனந்தம் முப் பாழுக்கு மேலே விளைவதாகும். அதனை இவ்வுலகிலே இறைவன் செய்யும் திருக்கூத்திலும் பெறலாம். திருக்கூத்தில் பெறும் `முத்திரானந்தம், எனப்படும். அதனை எல்லாரும் பெறுதல் கூடும். சிவானந்தத்தை எந்த வகையிலேனும் பெறும் உயிரே இன்பத்தால் நிறைக்கப்பட்ட உயிராகும்.

குறிப்புரை :

பர + ஆனந்தம் = பரானந்தம். `பரா + ஆனந்தம்` என்றலும் ஆம். ஆனந்தத்தை உடையது ஆனந்தி. ``பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்`` என்றாரேனும், `சிவானந்தம் எல்லாம் மன்னியது பரானந்தி` என்றலே கருத்து. எல்லாம் - முழுதும். `முழுதிலும்` என்க. மன்னுதல் - நிலைத்திருத்தல். இரண்டாம் அடியில், `அந்தப் பரானந்தம்` எனச்சுட்டியுரைக்க. ``மேல்மூன்றும் பாழ்உறு ஆனந்தம்`` என்பதை, `மூன்று பாழுக்கும் மேல் உறு ஆனந்தம்` என மாறிக்கூட்டுக. `முப்பாழ்இவை` என்பதைப் பின்னர்க்காண்க. விரா ஆனந்தம், வினைத்தொகை. ``விரா`` என்றது உடம்பொடு புணர்த்தது. எனவே, `முத்திரானந்தம் (யாவராலும்) விராவப்படும்` என்பது கருத்தாயிற்று. கூத்தப்பெருமானது கூத்து, ``ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தலையே``l குறிப்பதாகலின், அந்த நடனத்தில் காணப்படும் முத்திரை (வீசியகரமும், எடுத்த திருவடியும்) `ஆனந்த முத்திரை` யாகும். அதனால் அதை, ``முத்திரானந்தம்`` என்றார். முத்திரானந்தம் - முத்திரையில் விளையும் ஆனந்தம்.
`இறைவன் இல்லை` எனப் பிணங்கிய தாருகாவன முனிவர்க்கு `அவன் உளன்` என விளக்கினமையால், பிட்சாடனர் கையில் காணப்படுவது `சன்முத்திரை` சன் + முத்திரை (சத் + முத்திரை) என்றும், சனகாதி நால்வர்க்கு ஞானத்தைத் தெளிவித் தமையால், தென்முகக் கடவுள் கையில்காணப்படுவது `சின்முத்திரை` (சித் + முத்திரை) என்றம் சொல்லப்படும். எனவே இம்மூர்த்திகளின் முத்திரையும் கூடி, சச்சிதானந்த முத்திரையாதல் விளங்கும்.
`பொரு` என்னும் பகுதி நேரே, `போர் செய்தல்` எனப்பொருள் தருமாயினும், உகரம் பெற்று, `பொருவுதல்` என நின்று `ஒத்தல்` என்றும் பொருளைத் தரும் ஆதலின் இங்கு, ``பொராநின்ற`` என்பது, `ஒத்திரா நின்ற` எனப்பொருள்தத்தது. ஒத்திருத்தல் - தகுதி பெற்றிருத்தல். உள்ளம் - ஆன்மா. பூரித்தல் - நிறைத்தல். பூரிப்பி - நிறைக்கப் பட்டது.
இதனால், சித்தாந்தத்தில் பெறப்படும் பயன் ஒப்புயர் வற்றதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின்
ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே

பொழிப்புரை :

ஆறந்தங்களில், `கலாந்தம், நாதாந்தம்` என இரண்டு கூறப்படினும், நாதாந்தம் கலாந்தத்துள் அடங்கும் ஆதலின், நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளின் முடிவே முடிவாகும் ஆகவே, `அந்தப் பஞ்சகலைகளையும் சுத்த மாயையுள் ஒடுக்கியும், மீள விரித்தும் நிற்பவன் சிவன்` எனக் கேட்கப்படுதலன்றிப் பிறர் ஒருவரும் அத்தன்மையராதல் கேட்கப்படாமையால், அவனே ஆறந்தங்கட்கும் மூலமாகிய வேதாகமங்களைச் செய்தருளினான்.

குறிப்புரை :

அன்றே, தேற்றம், `பஞ்ச கலைகளையும் ஒடுக்கி, விரிப்பவனே முழுமுதல் தலைவன்` என்பதும், `கீழ்க் கீழ் உள்ள சிலகலைகளை மட்டும் ஒடுக்கி, விரிப்பவர் முழுமுதல் தலைவராகாது, முழுமுதற்றலைவன் கீழ் ஒருபுடை நிற்கும் தலைவர் என்பதும் சித்தாந்தம். ஆதலின், உலகிற்கு இருவகை முதல் நூல்களைச செய்தளித்தவனும் அவனே என்றபடி. `இரண்டந்தம்` என்பதை, `நாதாந்தம்` என்பதன் பின்னர்க்கூட்டுக. என்ன - என்று சொல்லும்படி. பஞ்சாந்தகன் - ஐந்தையும் இறுதி செய்பவன். இறுதி செய்தலைக் கூறவே, தோற்றுவித்தலும் தானே பெறப்பட்டது.
இதனால், மேல் ``நாதன் உரை அவை`` எனப்பொது வகையால் சுட்டப்பட்ட தலைவன் இவன் என்பது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை
ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு
நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

பொழிப்புரை :

வேதாந்தத்தைத் தவிர மற்றை ஐந்து அந்தங்களை, `உண்மையல்ல; போலி என்று இகழாதே தலையாய வேதாந்தத்தைச் சித்தாந்தத்தின் வழியாக உள்ளவாறுணர்ந்து நின்றால், யோகாந்தம் செயல்முறையில் வாய்க்கும். அது வாய்த்தால், மன்றாடியாகிய சிவனது திருவடிப்பேறும் கூடும்.

குறிப்புரை :

அன்று, பன்மையொருமை மயக்கம். ``என்னாதை`` என்பது, எதிர்மறை ஒருமை ஏவல். இஃது, `என்னாதே` என மருவி வழங்கும். ``அன்றாகும் என்னாதை` என்பதை முதல் அடியின் இறுதியிற் கூட்டுக. உணர்வு முறையில் சித்தாந்தம் முடிவானதாயினும், செயல் முறையில் அதற்கு முதற்படி யோகாந்தம் என்றபடி. அனைத்து அந்தங்களும் படிமுறையில் வேண்டுவன ஆதலின் அவற்றை, ``அன்றாகும் என்னாதை`` என்றார்.
இதனால் ஆறந்தங்களும் படி வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம்
அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.

பொழிப்புரை :

பதியைப்போலவே பசுவாகிய சீவனும் அனாதி. அதற்கு அனாதியே ஒரு குற்றம் உண்டு. அந்தக்குற்றம் மேல் எழாமல் கீழாம்படி அடக்கினால் சீவன் தனது உண்மையைத் தான் உணரும். தன்னை உணர்ந்தால், பின் தலைவனை உணர்ந்து, அவனைச் சார்ந்து அவனாகி நிற்கும். அங்ஙனம் நிலையை அடைதற்பொருட்டுச் சீவன் அனாதிக்குப் பின் ஆதியாய் வந்த மலங்களும் நீங்கும்படி அவற்றைக் கடக்கும் முறையை ஞான குருவை அடைந்து வினாவும். பின் அவர் உபதேசித்தபடி நின்று, ஐந்து மலங்களும் நீங்கப் பெற்றுத் தூயதாய் உலகத்தைக் கடந்து நிற்கும். அந்நிலையில் அது சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆதல், நீர் பாலோடு சேர்ந்து பாலாதல் போல்வதாம். வேதாந்தத்தின் உண்மைப்பொருள் இதுதான்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில், `வேதாந்தப் பொருளைச் சித்தாந் -தத்தின் வழியாக உணர்தல்வேண்டும்` என்றமையால், `அதனை அவ்வாறு உணருங்கால் வேதாந்தப் பொருள் இவ்வாறாம்` என்றபடி.
ஐம்மலம் - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி. இவற்றுள் ஆணவம் அனாதி; அன்றே உள்ளது. ஏனைய ஆதி; பின் வந்தவை. இரண்டாம் அடியில் ``அனாதி`` என்றது. அனாதியாய மலத்தை. அனாதிக்கு அந்தம் இல்லை ஆதலின், `அழித்து` என்னாது ``அடக்கி`` என்றார். ஆணவம் தவிர ஏனை நான்கும் ``ஆதி மலம்`` எனப் பட்டன. சம்பந்தம் ஆயினமை பற்றி, ``தத்துவாதீதம்`` என மாயே யத்தையே கூறினாராயினும் இனம் பற்றி அனுபந்தமும், சார்பு பந்தமு -மாய் உள்ள ஏனைய மலங்கட்கு அதீதம் ஆதலும் கொள்ளப்பட்டது. வினாவுதற்கு, வினாவப்படுவார் வருவிக்கப்பட்டார்.
சீவனை, `ஆதி` என்பாரை மறுத்தற்கு, ``அனாதி சீவன்`` என்றும், `மலம் இரண்டே` என்பாரை மறுத்தற்கு, ``ஐம்மலம் அற்று`` என்றும், ஆணவத்தைப் பலபட மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு ``அனாதி மலம்`` என்றும். `சீவன் சிவனாதல் நீரும், நீரும் சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், `குடம் உடைந்த வழிக் குடாகாயம் மகா காயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், மற்றும் இன்ன பிற போல்வனவாகவும் கூறுவாரை யெல்லாம் மறுத்தற்கு, ``நீர் பாலாதல்`` என்றும் கூறினார்.
``ஐம்மலம் அற்று அப்பால் ஆம்`` என்பதை ``வினாவும்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `அது நீர் பால் ஆதல் போல்வது` எனவும், `இதுவே வேதாந்த உண்மை` என்று எழுவாய்கள் வருவித்து, தேற்றேகாரத்தை மாற்றிவைத்துரைக்க. அதீதம் ஆதற்குரிய முறையை ``அதீதம்`` என்றார்.
இதனால், மேல் ``நாடில் இரண்டந்தம் பேதமதென்னில் பெரியோர்க் கபேதமே`` என்றது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை
அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால்
செயலற் றறிவாகி யும்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.

பொழிப்புரை :

`உயிர், பரன், திருவருள்` என்னும் முப்பொருளை யும், `அவற்றுள் ஒன்றையும் விடாது முறையே உணர்த்துகின்ற, `துவம், தத், அசி` என்னும் மூன்று பதங்களால் ஆகிய வேதாந்த மகா வாக்கியத்தை அனுபவமாக உணர்வதால், நீ சடமாகிய பாசங்கள் ஆகாது, சித்தாகி விடுவாய். ஆயினும், அதன்பின் `யான் எதனையும் யானே அறியமாட்டாமையால், தூலசித்தாகின்ற எனக்கு எஞ் ஞான்றும் அறிவித்து வருகின்ற சூக்கும சித்து ஒன்று உண்டு என உணர்ந்து, எதனையும், `யான் அறிகின்றேன், யான் செய்கின்றேன்` எனச் செருக்குதலை விடுத்து, அந்தச் சூக்கும சித்தின்கீழ்ப் போய் அடங்கியிரு. அப்பொழுதே வேதாந்தம் சித்தாந்தம் ஆகிவிடும்.

குறிப்புரை :

சிவன், அவனது அருளைக் குறித்த ஆகுபெயர். வாக்கியம், `தத்துவமசி` என்று இருப்பினும் உண்மையில் அதன் சொற்கிடக்கை முறை, `துவம் தத் அசி` என்பதே ஆதலை விளக்குவார். `தொம் தத் அசி` என்றார். `அசி` என்பது, `ஆகின்றாய்` எனப் பயனிலை ஆதலாலும் அது முன்னிலையிடத்தது ஆதலாலும் `துவம்` (நீ) என்னும் முன்னிலை எழுவாய் முதற்கண் நிற்றலே முறையாதல் அறிக. எனவே, `தத்துவமசி` என்ற மகாவாக்கியத்தின் பொருள், `நீ அது ஆகின்றாய்` என்பதே ஆகின்றது.
ஒரு பொருள் மற்றொரு பொருளேயாதற்குக் காரணம் அவற்றிடையே யுள்ள இயைபு. அவ்வியைபுதான் பல. `குடம் மண் ஆகின்றது` என்பதில் ஆதற்குக் காரணம் காரிய காரண இயைபு. அது போன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் பிரம பரிணாமவாதிகள்.
`வெண்மை தாமரை யாகின்றது`, `இலை பூ காய்கள் மரமாகின்றன` என்பவற்றில் ஆதற்குக் காரணம் குண குணி, இயைபும், அவயவ அவயவி இயைபும் ஆகும். இவைபோன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் விசிட்டாத்து விதிகள்.
`பாம்பு பழுதையாகின்றது`, `அரசன் ஆண்டியாகின்றான்` `குடாகாயம் மகாகாயம் ஆகின்றது` என்பவற்றில் ஆதற்குக் காரணம் காட்சிவகையும், நிலைமை வகையும், பொருள் ஒருமை வகையும் ஆகும். இவைபோன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணமும் என்பர் கேவலாத்து விதிகள்.
இவரெல்லாம், `வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு, வேறு` எனப் பேதம் கூறுபவரும், சித்தாந்தத்தை ஏனையோர் கூறும் வேதாந்தம் ஆக்குபவரும் ஆவர். அவர்களையெல்லாம் மறுத்து, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம், ``நான் இவள்ஆம் பகுதிப் பொற்பு``* என்று அருளிச்செய்தபடி, `தலைவன் தலைவி ஆகின்றான்` என்பதில் ஆதற்குக் காரணம், தலைவனது உணர்வு தன்னை உணரும் உணர்வாகாது, தலைவி தன் நலத்தையே உணரும் உணர்வாதலாம் அது போன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் எனச் சித்தாந்தம் கூறுவார், ``அறிவாகியும் சென்று அடங்கி`` என்றார். ``தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னை``* என்பதில், ``என் -றன்னை`` என்றதும், ``என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``l என்பதில் ``என்னை`` என்றதும் உயிருணர்வையே -யாம். இவற்றில், ``கொண்டது`` எனவும், ``விழுங்கி`` எனவும் கூறப் பட்டதே இங்கு, ``அடங்கி`` எனக்கூறப்பட்டது. `அடங்குதி` என்னும் இகர ஈற்று ஏவல் வினை தகரம்பெறாது நின்றது, ``நன்றுமன் இது நீ நாடாய் கூறி``8 என்பதிற்போல.
``அறி`` என்பது, `தொந்தத்தசி` என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றதனோடு வினைத்தொகைபடத் தொக்கது. அயர்வு - அறியாமையால் கொள்ளாதொழிதல்.
இதனால், முன் மந்திரத்தில் கொள்வகையால் விளக்கிய உண்மை, சொற்பொருள் வகையால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே.

பொழிப்புரை :

பொது மறையாகிய வேதத்தை மட்டுமே நூலாகக் கொண்டு, சிவாகமங்களை நூலாகக்கொள்ளாதவர்கட்குத் தலையான மகாவாக்கியமாய் உள்ளது, ``ஸோஹம் அஸ்மி`` என்பது [இதன் பொருள், `அது நான் ஆகின்றேன்` அல்லது, `அவன் நான் ஆகின்றேன்` என்பது `தத்துவமசி` மகாவாக்கியத்தில் முன்னிலையில் வைத்துச் சொல்லப்பட்ட பொருளே இதில், தன்மையில் வைத்துச் சொல்லப்பட்டது. ஆகையால் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளது வடிவு வேற்றுமையே யன்றிப் பொருள் வேற்றுமையில்லை. `தத்துவமசி` மகாவாக்கியம், மாணவனுக்கு உபதேசிக்கும் ஆசிரியர் கூற்று. `ஸோஹம் அஸ்மி` மகாவாக்கியம், ஆசிரியர் உபதேசித்த பொருளை அனுபவமாகக் காணும் மாணவன் கூற்று. இவற்றால் இவை முன்னிலையிடத்தும், தன்மையிடத்தும் ஆயின].
இனிப் பொதுமறையாகிய வேதத்தோடு, சிறப்பு மறையாகிய சிவாகமங்களையும் நூலாகக் கொள்வோர், வேதாந்தத்தில் `ஸோக மஸ்மி` எனப் பொதுவாகக் கூறப்பட்டது, உண்மையில், `சிவோஹ மஸ்மி` எனக்கொள்வர். (இதன் பொருள், `சிவன் நான் ஆகின்றேன்` என்பது). அக்கொள்கையே சிறப்பு மறையாகிய சிவாகமங்கள் ஆராய்ந்து காட்டும் முடிநிலை முடிபாகும். அந்த முடிபைப் பல்லாற்றா -னும் வலியுறுத்த எழுந்த நூல்களே `சிவாகமம்` எனப்பெயர் பெற்று விளங்குகின்றன.

குறிப்புரை :

`இருவகை நூல்களின் முடிவும் பொதுவும், சிறப்பும் ஆகின்ற அத்துணையேயல்லது, அவற்றிடையே பிறிது வேற்றுமை யில்லை` என்பது குறிப்பு.
`மாமறையாளர்தம் சென்னியது சோகம் ஆம்` எனவும், `ஈது, ஆன சிவோகமாம் என்ன, அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்` எனவும் இயைத்துக் கொள்க. ``தோன்றும்`` என்னும் பயனிலைக்கு, `அது` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``பண்டை மறைகளும் `அது நான் ஆனேன்` என்று
பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைத் தானே``*
என்னும் சிவஞானசித்தியில், ``இப்பாவகம்`` என்றது, `சிவன் நான் ஆனேன்` என்னும் சிறப்புப் பாவனையையேயாம்.
ஒருவனை, `அவன்` எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும், ஒருபொருளை, `அது எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும் அக்கூற்றைக் கேட்டவனுக்கு என்ன பயன் உண்டாகும்? பொதுவாகச் சுட்டியவற்றைப் பின்பு சிறப்பாகச் சுட்டியவழியே, கேட்பவனுக்குப் பயன் உண்டாகும். எனவே, பொதுக்கூற்றுச் சிறப்பிற்கு முன்னோடியேயன்றி, அதுவே முடிநிலை முடிபு ஆகாமை உணர்க.
``அதுபழச் சுவையென, அமுதென, அறிதற்(கு)
அரிதென, எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருஉரு; இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு``*
என்னும் அருள்மொழியால், `பொதுவாக விளக்கமின்றியிருக்கும் மகாவாக்கியப்பொருளைச் சிறப்பாகத் தெளிய உணர்த்துவதே ஆசிரியர் வழங்கும் அருள் உபதேசமொழி` என்பது விளங்கும்.
`தத்துவமசி` என்னும் பொது வாக்கியமே, `சிவத்துவமசி` எனச்சித்தாந்த ஆசிரியரால் சிறப்பாக உபதேசிக்கப்படுகின்றது. `ஸோஹமஸ்மி` என்னும் பொது வாக்கியமே. `சிவேஹமஸ்மி` எனச்சித்தாந்த மாணவனால் சிறப்பாகப் பாவிக்கப்படுகின்றது.
`சிவாய` எனநிருவாண தீக்கையில் உபதேசிக்கப்படுகின்ற முத்தி பஞ்சாக்கரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதனால், `ய, சி, வா` என அமையும் எழுத்துக்கள் முறையே `துவம், தத், அசி` என்னும் பதங்களாய் அமைதல் விளங்கும். அதனால் உபதேசிக்கப்பட்ட அந்த மூன்றெழுத்துக்களை விந்துத்தானமாகிய புருவ நடுவில் வைத்துத் தியானிப்பதனால், சிவோஹம் பாவனை, அஃதாவது `நான் சிவன் ஆகின்றேன்` என்னும் பாவனை அமைந்து விடுகின்றது.
`தத்துவமசி` என்பதேமகாவாக்கியம் ஆயினும், `துவம்ததசி` என்பதே பொருளாதல் போல, `சிவத்துவமசி` என்பதே மகா வாக்கியம் ஆயினும், `துவம்சிவாசி` என்பதே பொருளாதலின், அப் பொருள் மேற்கூறிய மூன்றெழுத்துக்கணிப்பால் அமைதலை உணர்க.
இதனால், வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றாம் முறைமையும். அவற்றுள் சித்தாந்தமே சித்தாந்தம் ஆதலும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.

பொழிப்புரை :

உலகத்தாரால், `அறிவு, அறிவு` என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியே உள்ளன. அவற்றின் அறிவுக்கு அறிவாய் உள்ள இறைவனும் அனாதியே உளன். அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள அறிவற்றனவாகிய பாசங்களும் அனாதியே உள்ளன. ஆயினும் அனாதியாகிய சிவனது ஞான சத்தி உயிரி -னிடத்துப் பதியுமாயின், உயிர் பிறவித்தொடர்ச்சி அறப்பெறும்.

குறிப்புரை :

``அனாதி`` எனவே, ஆதியும், அந்தமும் இலவாயின. ஞானசத்தியே அருட்சத்தி என்க. அது பதிதலே சத்தி நிபாதம். `சத்தி நிபாதம் வந்தால் பிறப்பு அறும்` என்றாரேனும், `ஞானம் நிகழப் பிறப்பறும்` என்றலே கருத்தென்க.
இம்மந்திரத்தில் கூறப்பட்டன, மேல், ``பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்``8 என்னும் மந்திரத்துக் கூறப்பட்டனவே யாதலின், அவை நெடுஞ்சேயவாயினமைபற்றி, இங்கு இயைபு படுதற் பொருட்டு மறிதுணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

பசுப்பல கோடி பிரமன் முதலாப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``அனாதி`` எனப்பட்ட பசுக்கள் பிரமதேவன் முதலாகக் கோடிக் கணக்கில் உள்ளன. ஆயினும், அவற்றைக் கட்டியுள்ள பாசங்கள் மூன்றே. (ஆணவம், மாயை, கன்மம்). பதி பசுக்களைக் கட்டியுள்ள பாசங்களை அறுத்துவிட்டால், பசுக்கள் பசுத்தன்மை நீங்கிப் பதியைப் பற்றிக்கொள்ளும். பின்பு அவை பதியை விட்டு நீங்கமாட்டா.

குறிப்புரை :

`பிரமன்` முதலிய பெயர்கள் பிறப்புப் பற்றி வருவனவாம். `பிரமன் முதலா` என்றது, காரணக் கடவுளர்களைக் கீழ்த் தொடங்கிக் கூறியது. `அறுப்பது பதி` என்பது பாரிசேடத்தால் அமைந்தது. `பந்தம் அனாதியாய் இருக்கும் அதினின்றும் நீங்குதல் உளதாதல் போலப் பதியைப் பற்றிய பின்னும் அதினின்றும் நீங்குதல் உளதாகும்போலும்` என நிகழும் ஐயத்தை நீக்குதற்கு ``பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே`` என்றார். பாசங்களின் சத்தி காலப் போக்கில் மெலிவடைவன அதனால் உயிர் அவற்றினின்றும் நீங்குதல் உளதாகின்றது; சிவசத்தி அத்தன்மைத்தன்றாய் என்றும் ஒருபெற்றித் தாம் ஆதலின் சிவத்தை அடைந்த உயிர்க்குப் பின் அதனினின்றும் நீங்கும் நீக்கம் இல்லை என்க.
``துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்``l
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``3
என்னும் திருமொழிகளையும் நோக்குக. `அறுத்தால் நீங்கிப் பற்றிவிடா` என்றதனால், `பசுக்கள்தாமே பாசங்களை அறுத்துக் கொள்ள வல்லுன அல்ல` என்பது பெறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கி னல்லது
எட்டுணை யாயினும் யான்அவிழ்க் கறியேன்``*
என்றது காண்க. ``தலைவனைப் பற்றி விடா`` என ஒருமையும், பன்மையுமாகக் கூறியவற்றால், `பதிப்பொருள் ஒன்றேயன்றி, இரண்டாவதில்லை` என்பது பெறப்பட்டது.
இதனால், `முப்பொருளில் பதி ஒன்றே; பசுக்கள் எண்ணில; பாசம் மூன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்
நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்
தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் அனாதியே கிடந்த பாசநிலையிலே கிடந்தாலும் அப்பொழது அவைகட்கு உண்டாகின்ற பயன் மூன்று. அவை, `அறம், பொருள், இன்பம்` என்பனவாம். நான்காவதாகிய வீடு அந்நிலையிலே கிட்டாது. அது கிடைக்க வேண்டுமாயின், அந்த மூன்றும் நீங்குதற்கு ஏதுவாகிய ஞானம் ஒன்றையே விரும்பிப் பதியை உலகப் பற்றுச்சிறிதும் இன்றி, நாள்தோறும் வழிபடுங்கள். வழிபட்டால் அந்தப் பதி, குடத்தில் இட்ட விளக்குப் போல மறைந்திருந்த நிலையினின்றும் நீங்கிக் குன்றில் இட்ட விளக்குப் போல வெளிப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

`அது வெளிப்பட்டு விளங்கவே, முன் மந்திரத்திற் கூறியபடி பாசம் அறுக்கப்படப் பதியைப் பற்றிக் கொள்ளும் நிலை உளதாம்` என்பது குறிப்பெச்சம். `கிடக்கின்ற ஆற்றிலே` என உருபு விரித்துக்கொள்க. பயன், உயிர்கள் அடையத்தக்க பயன் `அவை அறம் முதலிய நான்கு` என்பது வெளிப்படை. நடத்தல், இங்கு நீங்குதல். ``இம்மூன்றும் - விட்டதே பேரின்ப வீடு`` என்னும் ஔவையார் வாக்கையும் நினைக. நடக்கின்ற ஞானம் - நடத்தற்கு ஏது வாகிய ஞானம். அறம் முதலிய மூன்றும் உலகியலாதலின் அவை பாச நிலையிற்றானே நிகழ்வவாயின. விளக்கால் அல்லது இருள் நீங்காதவாறுபோல, ஞானத்தால் அல்லது உலகியல் நீங்காமை பற்றி, ``மூன்றும் நடக்கின்ற ஞானம்`` என்றும், பதியைத் தொழுதலே தவம் ஆதலாலும், அத்தவத்தை உலகப் பற்றுடன் செய்யின் உபாயத் தவமும், பற்றற்றுச் செய்யின் உண்மைத் தவமுமாம். ஆதலால், உண்மைத் தவத்தாற்றானே ஞானம் உண்டாம் ஆதலாலும், ``தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின்`` என்றும், `தொழுதல் நியமமாதல் வேண்டும்` என்பார். ``நாடோறும் தொழுமின்`` என்றும் கூறினார். பதியைத் தொழுதலாகிய தவம், `சரியை, கிரியை, யோகம்` என மூன்று என்பதும், `அத்தவத்தானே பதிஞானம் உளதாம்` என்பதும் மேல் பல இடங்களில் கூறப்பட்டன. குடத்திட்ட விளக்கு, குன்றில் இட்ட விளக்கு` இருதொடராக்கி உரைக்க. ``அது`` என்றது, உபநிடத வழக்கு. `பதி` என்றவாறு. `குடத்தில் இட்ட விளக்காயுள்ள அது, குன்றில் இட்ட விளக்காம்` என்க. சாதன சாத்தியங்கள் தம்முள் இயைபிலாவாதல் கூடாமையின், தொழுவதும் பதியையேயாயிற்று.
இதனால், `பதியால் பாசம் அறுக்கப்படுதல் இவ்வாற்றால்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும்
கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முற் பாசத்தை நீக்குதற்குப் பிற்பாசங்களைக் கூட்டிப் பிறப்பு இறப்புக்களில் சூழலவைத்து இவனை, `அஃதும் கருணையே` என அறிந்து அவன் மாட்டு அன்பு செய்து அவனை நினைப்பவர். அவ்வாறு நினைத்தபின், அவன் பிறப்பு இறப்புக்களில் வைத்துள்ளமை பற்றி நாணம் உறுதலும், அந்நாணத்தால் அதனை வன் கண்மையாகக் கருதுதலும் எங்ஙனம் உளவாகும்? உளவாகா.

குறிப்புரை :

முற்பாசம், ஆணவம், பிற்பாசம், மாயை கன்மங்கள். பாசத்தால் பாசத்தை நீக்குதல் ஆடையின் அழுக்கினை உவர்மண் முதலிய அழுக்கினால் நீக்குதல் போல்வதாகும். இவ்வுண்மையை உணர்வார் பிற்பாசங்களைச் சேர்த்தமையை வன்கண்மையாகக் கருதார் என்பதாம். பிற்பாசங்களைச் சேர்த்தமையே மேற்காட்டியபடி ``கட்டிய நீ`` எனப்பட்டது.l `வைக்கின்றவாற்றை உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்` என்க.
இதனால், கட்டியவனே பதிதான்` என அவனை வெறாது அன்பு செய்து, முன்மந்திரத்திற் கூறியவாறு, `நாள்தோறும் தொழுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.

பொழிப்புரை :

ஒருவனுடைய உடலில் பற்றிய விடம், மணி மந்திர ஔடதங்களால் நீங்கிப் போனபின்பு மீண்டும் அஃது அவன் உடலில் ஏற இயைபில்லாததுபோல, மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவன், அவ்வுணர்வினால் அவனோடு ஒன்றியிருந்த பாசங்கள் வேறாகி நீங்கிவிட்ட பின்பு, அவன் அப்பாசங்களோடு பொருந்துதற்கு இயைபில்லை. அதனால், அவன் தன்னைத் தடை செய்திருந்த கேவல சகல நிலைகளைப் போக்கி சாக்கிரத்தில் அதீதமாகிய நின்மல துரியாதீதத்தில் அழுந்திச் சீவன் முத்தனாகியே நிற்பான்.

குறிப்புரை :

கட்டிய கேவலம் - ஒன்றையும் அறியாத கேவலம். காணும் சகலம் - சிறிது அறிவு பெற்றுச் சிலவற்றை அறிகின்ற சகலம். சுடுதல் - போக்குதல். `தோன்றும்` என்பது பாடம் அன்று. `மெய்கண்டான்` என்பது நாயனாராலே கூறப்பட்டிருத்தலும் சிவஞான போதத்தில் அச்சொல் ஆளப்பட்டிருத்தலும் குறிக்கொளத் தக்கன.
இதனால், `பசுக்கள் தலைவனைப் பற்றிய பின் விடா` என மேற்கூறியது, உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்த நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

பொழிப்புரை :

சத்தி நிபாதம் வரப்பெற்றமையால், `நாம் உய்யும் வழியாவது யாது` என ஏக்கற்று ஆராயும் பக்குவிகள் அவ்வழியை உணர்தற் பொருட்டுச் சிவாகமங்கள் வழியாகச் சிவபெருமான் அருளிச் செய்தவை, பதியேயன்றிப் பசு பாசங்களின் அனாதி நித்தத் தன்மையும், அவற்றுள் பசுக்கள் பாசத்தினின்றும் நீங்கிப் பதியை அடையும் முறைமையும் ஆகும். ஆயினும் அவைகளை அறியும் பக்குவிகள் உலகத்து அரியர்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் கொண்டு, அதன்பின் மூன்றாம் அடியையும், அதன்பின் முதல் இரண்டு அடிகளையும் கூட்டியுரைக்க. முதல் இரண்டடிகளில் சித்தாந்தத்தின் அடி நிலைப் பொருள் சுருங்கக் கூறப்பட்டது.
இதனால், முப்பொருளியல்பை உள்ளவாறு உணரமாட்டா தாரது நிலைமையது இரங்கத்தக்க தன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :

சிவாலயங்களின் அமைப்பை உற்று நோக்கி உணரவல்லார்க்குக் கருவறையில் முதலிடத்தில் உள்ள இலிங்கமே பதியாயும், அவ்விலிங்கத்தின் திருமுன்பில் உள்ள இடபமே பசுவாயும், (உயிராயும்) இடபத்திற்குப் பின் உள்ள பலிபீடமே அடக்கிஒடுக்கப்பட்ட பாசமாயும் காட்சியளிக்கும்.

குறிப்புரை :

இடபம் இலிங்கத்தை நோக்கின் பலிபீடம் அதன் பின்னதாயும், இலிங்கத்தை நோக்காது வெளியை நோக்கின் இடபத்தின் முன்னதாயும் இருக்கும், இவை சிவத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் பிற்படுதலையும், சிவத்தை நோக்காது, உலகத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் முற்படுதலையும் உணர்த்தும்.
சிவத்தை நோக்கும் உயிரைப் பாசங்கள் அடரமாட்டாது, இருந்தும் இல்லதாயக் கிடத்தலின், பலியிடப்படும் பீடமே பாசமாகின்றது. பாசத்தை, ``ஆகும் நற்பாசம்`` என்றும் இது பற்றி, `சன்மார்க்கமாகிய தத்துவப் பொருள்களே சிவாகமங்களில் சமய சங்கேதப் பொருள்களாகச் சொல்லப்பட்டுள்ளன` என்பது - இதனை
``சன்மார்க்க
சமய சங்கே தப்பொருளும் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை``
என வியந்து கூறினார் தாயுமான அடிகள்.
இதனால், `முப்பொருள்களின் இயல்பை ஆகமங்களைப் பற்றி உணரமாட்டாதார், சிவாலயங்களின் அமைப்பை நோக்கி யேனும் உணரற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பதிபசு பாசம் பயில்வியா நிற்கப்
பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில்நில் லாவே.

பொழிப்புரை :

முப்பொருள் இயல்பை மாணாக்கர்க்கு முன்னர்க் கேட்பித்துப் பின்னர் மீள மீள அவற்றைச் சிந்திப்பித்தற்பொருட்டு அவற்றை உபதேசிக்கின்ற ஆசிரியன் மார்கட்கு உபதேச மொழியை ஆக்கி, அதுவழியாகச் சிவன் பசுக்களின் பாசங்களை அறிவே நீக்குவான். அம்முறையில் முப்பொருள் இயல்பைச் சிந்தித்துத் தெளியின் பாசங்கள் தம்மியல்பில் நிற்கமாட்டா `நிலைகெட்டு ஒடுங்கும்` என்பதாம்.

குறிப்புரை :

`பயில்வியாநித்தம்` என்பது பாடம் அன்று. ஆறு - வழி என்றது உபதேச மொழியை அம்மொழியாவது திருவைந்தெழுத்து மந்திரமேயாதல்.
``நானேயோ தவம்செய்தேன்! சிவாயநம எனப்பெற்றேன்``l
என்னும் அனுபவ மொழியால் விளங்கும். ஐந்தெழுத்தின் உட்பொருள் முப்பொருளே என்பது.
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்,
அவன் எழுத் தஞ்சின் அடைவாம்``8
என்பது முதலியவற்றில் விளக்கப்பட்டது. ``நில்லா`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், `முப்பொருள் இயல்பைச் சிவாலயங்களை நோக்கி ஒருவாறுணர்ந்தார், பின்பு ஆசிரியரை அடைந்து அவர் உபதேசிக்கும் உபதேச மொழியைப் பெற்றுத் தெளிய உணர்ந்து உய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பொழிப்புரை :

சித்தாந்தத் தத்துவங்களைச் சிவாகம ஞான பாதத்தில் அருளிச்செய்த சிவபெருமான், அப்பொருளைப் பயக்கும் தோத்திரங்களையும் கிரியா பாதத்தில் சொல்லிவைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

`அத்தோத்திரங்களையும் அன்போடு பொருள் உணர்ந்து பாடித் தோத்திரித்து உய்தி பெறுக` என்பதாம். ``தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே``8 என அப்பாரும் அருளிச் செய்தமை காண்க. ``காணும்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. சுத்த சைவம் பூர்வபக்க ஞானங்களைப் போக்கிச சித்தாந்த ஞானத்தைத் தருகின்ற சிவாகமம்.
இதனால், `சைவ சாத்திரங்களின் பொருளைச் சைவ தோத்திரங்களை நியமமாக ஓதும் முறையால் பயிலுக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.

பொழிப்புரை :

மூவகை ஆன்மாக்களும் தாம் தாம் பெற்ற தனு கரணத்தளவாக அறிவு விளங்கப் பெறுதலின், அவை யாவும் `அணு` எனப்படுகின்றன ஆயினும் அவற்றின் உண்மை நிலை பதியைப் போல வியாபகமே. பாசத் தடை நீங்கியபின் உயிர் தனது உண்மை நிலை யாகிய வியாபக நிலையை அடையும். ஆயினும், பதியினது வியாபகத்தில் அது வியாப்பியமேயாம். உயிர்களின் ஏகதேச நிலை, வியாபக நிலை ஆகிய இருநிலைகளும் என்றும் ஒரு பெற்றியனாய் உள்ள பதியே அவைகட்கு ஆவனவற்றைச் செய்துநிற்பான்.

குறிப்புரை :

பின் இரண்டடிகளிற்போல `அறிந்த` என வர வேண்டிய பெயரெச்சம் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்று நின்றது. யாங்களும் ஆதல் வியாபகம் ஆதல். இரண்டாம் அடி அனுவாதம், அனாதி - அனாதியாய சிவன். `அனாதியில்` என உருபுவிரிக்க. உம்மை, சிறப்பு. ``அனாதியில் வியாத்தனும் ஆவன்`` என்றதனால், `முப்பொருள்களும் அதிசூக்கும சூக்கும தூலமாம் முறையால் வியாபக வியாப்பிய வியாத்தியாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்தப்பட்டது. இதுவே ``பதிபசு பாசம் வேறின்மை`` என்க. ``அவற்றையே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, `பதியே` எனக் கூட்டுக. `முப்பொருள்களும் வியாபக வியாப்பிய முறையால் சமமாய் நிற்பினும் பதியே சுதந்திரமுடையதாய் ஏனையவற்றை இயக்கி நிற்கும்`` என்றற்கு. `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` என்றார். அங்கு அவ்விருநிலைகளிலும். ``படைப்பான்`` என்றது, `எல்லாவற்றையும் செய்வான்` என்னும் குறிப்பு மொழி.
இதனால், பதி பசு பாசம் வேரின்மையும், அவற்றுள் பதியே தலைமையது ஆதலும் கூறப்பட்டன.
முன்மந்திரத்தில், `சுத்த சைவத்திலே நந்திமதி தந்து வைத்தனன்` எனக் கூறப்பட்டவற்றில் இவ்வதிகாரத்தில் எடுத்துக் கொண்ட சிறப்புப் பொருளை இதனுள் இவ்வாறு கூறிய நாயனார், இதன் தொடர்பாக மற்றும் சிலவற்றை இங்கும் கூறிகின்றார். அவை மேலே கூறப்பட்டன வாயினும், `பெற்றதன் பெயர்த்துறை நியமப் பொருட்டு` என்னும் முறையால் இவ்வதிகாரத்தில் எடுத்துக்கொண்ட பொருளோடு அவற்றையும் உடன்கூறித் தெளிவிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 11

படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி
இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.

பொழிப்புரை :

படைப்பு முதலிய செயல்கள் நிகழ்தல் `பரசிவம், பராசத்தி` என்னும் இருவராலேயாம். படைப்பு முதலிய ஐந்தொழில் களாவன, தனுகரண புவன போகங்கைள உயிர்களுக்குச் சேர்ப்பித் தலும், நீக்குதலுமேயாம். இவ்வைந்தொழில், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகையில் நிகழும். சூக்கும ஐந்தொழிலைச் சிவன் சுத்தமாயையில் தான் நேரே செய்வான். தூல ஐந்தொழிலை அவன் அசுத்த மாயை பிர கிருதி மாயைகளில் அனந்ததேவர், சீகண்டர் வழியாகச் செய்விப்பான்.

குறிப்புரை :

`முதற் பொருள் பொருளால் ஒன்றாயினும் ஞாயிறு ஒன்றே `கதிரவனும், கதிரும்` என இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல்போல, `சிவம், சத்தி` என இருதிறப்பட்டுத் தாதான் மியமாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``படைப்பாதி ஆவ, பரசிவம் சத்தி`` என்றார். `சத்தியால்` என உருபு விரிக்க. இடைப் பால் - `கேவலம், சுத்தம்` என்னும் இரண்டற்கு இடையேயுள்ள சகலத்தில், படைத்து ஒடுக்கப்படுவன தனுகரணாதிகளேயாதலின், வாளாதே, ``இவை`` எனச் சுட்டிப் போயினார். `சூக்கப் படைப் பாதியை`` எனவும், `தூலப்படைப்பாதி` எனவும் பின் முன்னாக மாற்றிக் கொள்க. ``சூக்கத்தைத் தற்பரம் செய்ய`` என்றதனால், தூலம் பிறரால் செய்யப்படுதல் விளங்கிற்று. அவற்றிற்கு ஏற்ப முதற்காரண வேறுபாடும் காட்டப்பட்டது. ``பாசம்`` என்றது, இங்கு தூலம் அதிதூலமாகிய அசுத்தமாயை பிரகிருதி மாயைகளை.
இதனால், முன் மந்திரத்தில், `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` எனக் கூறப்பட்டபொருள் அஃது ஆமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.

பொழிப்புரை :

அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம், பராசத்தி என்னும் மேலான ஐந்து நிலைகளில் நின்று சூக்கும ஐந்தொழில் செய்பவன். அருவத்தையும் கடந்த பரம சிவன். தூல ஐந்தொழிலைச் செய்பவன் மகேசுரன்.

குறிப்புரை :

சத்தி ஞானம், கிரியை முதலிய பாகுபாடின்றி நிலையில் பராசத்தியாம். ஞானம், கிரியை முதலியனவாகப் பாகுபட்டுப் பொதுவகை ஞானமாய் நிற்கும் நிலையில் பரநாதமாம். பொதுவைக்கிரியையாய் நிற்கும் நிலையில் பரவிந்துவாம். சிறப்புவகை ஞானமாய் நிற்கும் நிலையில் அபரநாதமாம். சிறப்பு வகைக் கிரியையாய் நிற்கும் நிலையில் அபரவிந்துவாம். இங்ஙனம் இவ்வைந்தையும் காண்க. விந்துவை முதலிற்கூறியது கீழிருந்து எண்ணும்முறை பற்றியாம். ``பரம்`` எனப் பின்னர்க் கூறினைமையின், `சத்தி, சிவம்` என்று பரவிந்து பரநாதங்களையாயிற்று. `அவ்விந்து நாதமும்` என்று எடுத்துக் கொண்டு, சூக்கத்து ஐங்கருமம் செய்வோன் சூக்கத்து ஐ` என மேலே கூட்டி முடிக்க. சூக்கத்து ஐ - அருவத்தையும் கடந்தலைவன். இங்கு, ``ஈசானன்`` என்று மகேசுரனை. என்னை? தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்பவன் அவனே யாகலின். அவன் தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்குமாறு வருகின்ற மந்திரத்தால் கூறப்படும்.
இதனால், முன் மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட சூக்கும தூல ஐந்தொழில் நிகழ்ச்சிகளில் சூக்கும ஐந்தொழில் நிகழுமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அரன் மே.

பொழிப்புரை :

(இம்மந்திரத்தில் கூறப்படும் பொருள் எழாம் தந்திரத்தில், ``சிவமொடு சத்தி நிகழ்நாதம் விந்து``, ``தலையான நான்கும் தனதருவாகும்`` என்னும் மந்திரங்களில் கூறப்பட்டதேயாம். ஆகையால், அவற்றில் கண்டு கொள்க.)

குறிப்புரை :

பரசிவம் - பரநாதம். மேற் சத்தி - பரவிந்து `உம்பரின் மேவும் விந்து` என்க. உம்பர் - சதாசிவத்திற்குமேல். ஐம்முகன் - சதாசிவன். ஈசன் - மகேசுரன். மேதினி ஆகும்படி - உலகம் தோன்றும்படி. படைப்போன் அரனே ஆம் இந்த அனைவரையும் உண்டாக்குபவன் ஒரு சிவனே. எனவே, `உலகம் இந்நவந்தரு பேதங்களால் நடைபெறுகின்றது` என்பதாம். ஈற்றடி உயிரெதுகை.
இதனால், சூக்குமம், தூலம் ஆகிய இருவகை ஐந்தொழில் களும் நடைபெறும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்(து)
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சகலத்தில் படைத்தல், காத்தல், உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு அழித்தல், சிற்றின்பத்தை அதன் இழிவு அறிந்து வெறாது விரும்பி நுகருமாறு மறைத்தல் ஆகிய முன்னர் நிகழும் அருட் செயல்களையும், சடமாகிய பாசங்களை விடுவித்துத் தன்னைக் காட்டி யருளும் அருளலாகிய பின்னர் நிகழும் அருட்செயலையும் உயிர்கள் பொருந்த வைத்த அனாதியாகிய பரமசிவனை, இத்தொழில்களை நோக்கி, `ஐவர்` என்று கூறலாம்.

குறிப்புரை :

`மறைத்தலும் அதன்வழி நிகழும் படைப்பு முதலியனவும் அருளே` என்றற்கு அவற்றை ``முற்றோன்றும் அருளும்`` என வும், `அழித்தல்கூட அருளோ` என்றும் ஐயத்தை நீக்குதற்கு அதனை ``இளைப்பாற்றும் துடைப்பும்`` எனவும் கூறினார். தன்னிலையில் நிற்கும் சொரூப சிவன் `அனாதிசிவன்` என்றும் உயிர் களின் பொருட்டாய் ஐந்தொழில் செய்யும் தடத்தசிவன் `ஆதிசிவன்` என்றும் சொல்லப் படுவான். `ஒருவனாகிய அனாதிசிவனே, ஐந்தொழில் பற்றி ஐவர் தடத்த சிவராய் நிற்பர்` என்பது உணர்த்துற்கு, ``அனாதியை ஐந் தெனலாமே`` என்றார். ஐவர் - சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன். அவர் சம்பு பட்சத்தினர். சம்பு பட்ச அணுபட்ச விளக்கங்களை மேலே காண்க. நிலைநோக்கி, ``ஐந்து`` என அஃறிணையாகக் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் ஒன்பதாகச் சொல்லப்பட்ட பேதங்களில் தூல ஐந்தொழிற்கு உரியனவாய், யாவராலும் அறியப்படுவன ஐந்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு)
ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு
வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.

பொழிப்புரை :

பதி, முப்பத்தாறு தத்துவங்களைச் சுத்த மாயையில் வியாப்பியமாகச் செய்து, அம்முப்பத்தாறு தத்துவங்கட்குக் காரணமாய் வேறுநிற்கும் மாயையை, சுத்த, சுத்தாசுத்தம், அசுத்தம்` என மூன்றாக வகுத்து, அந்த மாயை மாயேயங்களின் பின்னவாகிய `தாத்துவிகம்` என்னும் காரிய பூதங்களையும் இந்தமாயை மாயேயங்களால் ஆக்கி, அனைத்துப் பொருள்கட்கும் வேறாய் நிற்கும். (எனவே, `பசு, மாயை, மாயேயம், தாத்துவிகம் ஆகியவற்றில் கட்டுண்டு நிற்கும் என்பது பெறப்பட்டது. எனினும்) பாசங்கள் நீங்கியவழிப் பசு, பதியாகும்.

குறிப்புரை :

குண்டலி - சுத்த மாயை. ``தன்னின்`` என்பதில் இன், சாரியை மேற்சாரியை, `அவற்றினின்` முதலியன போல `மாயையில் மிகுத்திட்டு` என இயையும். `மூன்று` என்னாது, ``முப்பால்`` என்றமையால், ஒருமாயைதானே மூன்றாகி நிற்றல் பெறப்படும். `வீட` என்பது ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `பதி ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. `பசு, பதி ஆதல் எவ்வாறு` என்பது. மேல் ``உயிரைப் பரனை, உயர்சிவன் தன்னை`` [மந்திரம் - 2368.] என்னும் மந்திரத்து உரையில் காட்டப்பட்டது.
இதனால், `அனைத்தையும் செய்தும் பதி அவற்றால் எய்துவ தொன்றின்றி நிற்க, பசுவே அவற்றால் பல நிலைகளை எய்தும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத்
தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு
நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.

பொழிப்புரை :

பதி, பசுவை இயல்பாகவே உள்ள ஒரு பாசத்தின்மேல் மற்றொரு பாசம் பற்றும்படி அதனுள்ளே புகுத்தும். (இப்பாசம் மாயை, இயல்பாக உள்ளது ஆணவம்) அதன்பின், இருவினைகளாகிய குழியிலே ஆழச் செய்யும். அதன்பின், அந்த இருவினைகளுக்கு ஈடான துன்பத்தையும், இன்பத்தையும் பசு நுகர்தற்பொருட்டு அதனை நரகத்திலும். சுவர்க்கத்திலும் சேர்த்து, அங்கே சிலநாள் தங்க வைக்கும், இவையெல்லாம் இப்படித் தொடர்ச்சியாக நிகழ்தல் திரோதான சத்தியாலாம். அச்சத்தி இவ்வாறு செய்வித்தல், பசுக்கள் தம் பசுத்துவத்தின் நீங்கிப் பதியை அடையும் நாளைக் கிட்டுதற் பொருட்டாம்.

குறிப்புரை :

`வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்` என்பன திரிந்து நின்றன. தாழ்த்தல் - தங்கச் செய்தல். ``மீதுற`` என்றதனால், முன்பே ஒரு பாசம் உள்ளமை விளங்கும். ``ஆழ்க்கும்`` என்றது, குறிப்புருவகம். ``இருவினைக்கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆங்கவை` என்பது ஒருசொல். ``அவற்றால்`` என்பதன் பின், `வரும் பயனை` என்பது, `நாட்கு` என்பதன்பின், `அணிமைக் கண்` என்பதும் வருவிக்க. முன்னர் ``வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்`` என்றமையால், ``நாள்`` என்றது, அவை நீங்கும் நாளாயிற்று. நாலுதல், நீளுதல், பாசங்களைச் செலுத்துதல் பற்றி இறைவனது சத்தியும், `பாசம்` என உபசரித்துக் கூறப்படும். ஆயினும் அது நலங்கருதியே செலுத்துதலின், ``நற்பாசம்`` என்றார். `நற்பாசத்தால்` என உருபு விரித்து, `இவையெலாம் நாட்கு உற, நற்பாசத்தால் நான்று அங்கு நண்ணும்` என முடிக்க.
இதனால், `பதி, பசுக்கள் பாசத்தின் நீங்கித் தன்னை அடைதற் பொருட்டுத் திரோதான சத்தியால் அவைகட்கு மாயை கன்மங்கைளச் சேர்த்து, அவை வழியாக ஐந்தொழில் புரியும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.

பொழிப்புரை :

உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களில், `நான்` என்னும் முனைப்பை உண்டாக்குவது ஆணவமே. (இம் முனைப்பே, `தற்போதம்`) என்றும், `சீவ போதம்` என்றும் சொல்லப்படும். மாயையைக் கருவியாகப் பற்றி உயிர்கள் செயற்படும்பொழுது, இந்த `நான்` என்னும் முனைப்போடு செயற்படுவதால்தான் அவைகட்கு வினைகள் உண்டாகின்றன. `நான் செய்கின்றேன்` என்னும் உணர் -வோடு செய்தலால், அச் செயல்களின் பயனைச் செய்த உயிரையே நுகரச் செய்ய இறைவன் திருவுளங் கொள்கிறான். அதற்குக் காரணமும் அவன் அவ்வுயிர்கள் மாட்டு வைத்த கருணையே யன்றிப் பிறிதில்லை. அதனால், வினைப் பயனை ஊட்டுவித்தலும் அவை அவனது திருவடியை அடைதற்கு உபாயமேயாகும்.

குறிப்புரை :

`மாயையில் பண்ணிய ஊட்டல்` என்க. பண்ணிய, அன்பெறா அகஈற்று அஃறிணைப் பன்மை வினைப் பெயர். பண்ணி - பண்ணப்பட்டவற்றை. `ஊட்டற்குப் பரிந்தனன்` என்க. `அதுவும் போருளே` என எழுவாய் வருவிக்க. ``போருள்`` என்பதன்பின், `ஆதலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.
இதனால், இறைவன் உயிர்கள் செய்த வினைகளைத் தான் ஏற்றுக்கொண்டு, அவற்றின் பயனை அவைகளை நுகரச் செய்தற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல்
ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்கு ஆணவ பாசத்தின்மேல் மாயை கன்ம பாசங்களைச் சேர்த்தது பல உபாயங்களுள் ஓர் உபாயம் அன்று. உயிர்கள் ஆணவ மலத்தினின்றும் நீங்கித் தூய்மை பெறுதற்கு அவற்றைச் சேர்ப்பது தவிர வேறு வழியேயில்லை. அஃது எதுபோலும் எனின், புதிதாகத் தோன்றிய ஆடையில் இயல்பாய் உள்ள அழுக்கினை மேலும் பிற அழுக்கை ஏற்றித் துவைத்தும் போக்குதல் போல்வதாம். அதனால், இயற்கையாக அன்றி இறைவனால் சேர்க்கப்பட்ட பாசங்கள் யாவும் அருளால் சேர்க்கப்பட்ட பாசங்களே.

குறிப்புரை :

``மூலமே`` என்னும் ஏகாரம். தேற்றம். `அறுவையை எற்றல்போல்` என்க. எற்றல் - அடித்தல்; துவைத்தல். ``போல்`` என்றும் முதனிலை, `போலும்` என முற்றுப் பொருள் தந்தது. அருட்பாசம் - அருளால் சேர்க்கப்பட்ட பாசம்.
இதனால், ``அண்ணலடிசேர் உபாயமதாகும்`` எனப்பட்டது. உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பாசம் பயில்உயிர் தானே பரம்முதல்
பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப
பாசம் பயிலப் பதிபரம் ஆதலால்
பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.

பொழிப்புரை :

பசு தன்னைக் கட்டியுள்ள பாசங்கள் குறும்பு செய்தலால், `நானே பரம்` என்கின்றது. ஆயினும், அங்ஙனம் நினைப்பதும், சொல்வதும் என்றும் நிலைத்து நில்லாமல் பின் நீங்கிப் போவதால், உயிர்க்கு அந்நிலை செயற்கை நிலையாதல் விளங்கு தலின், `உயிர் அனாதியே செயற்கையோடு கூடிப் பசுவேயாய் நிற்கின்று? என, அறிந்தோர் கூறுவர். ஆயினும், `பதிதான் முதலிலே பாசத்தோடு கூடிப் பசுவாய் இருந்து பின் பாசத்தினின்றும் நீங்கிப் பதி யாகின்றது` எனச் சிலர் கூற முற்படுவாராயின், அங்ஙனம் கூறு வார்க்குப் பதியின் வேறாய்ப் பசு இல்லையாம் ஆகலானும், பாசங்கள் சடம் ஆகலின் தாமே செயற்படமாட்டா ஆகலானும் பதியே தன்னின் மிக இழிந்த பாசங்களை மேலிட்டுக்கொண்டு பசுவாதல் கூடுமோ?

குறிப்புரை :

`கூடாது ஆதலின், அங்ஙனம் கூறுதல் அடாததே` என்பது குறிப்பெச்சம். ``பயில்`` இரண்டும் முதனிலைத் தொழிற் பெயர். இரண்டிடத்தும் `பயிலுதலால்` என உருபு விரிக்க. முதல் அடியின் ஈற்றில் `என்னும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது, இரண்டாம் அடியில், ``தான்`` அசை நிலை. `உயிர் பசுவே என்ப` எனத் தேற்றேகாரத்தை மாற்றி வைத்து உரைக்க. ``பயில`` இரண்டில் முன்னது, `பயிலும் படி` எனவும், பின்னது `பயிலுதலால்` எனவும் பொருள் தந்தன. பயிலுதல் - செயற்படுதல். பரம் - தலைமைப் பொருள். ஈற்றில் உள்ள ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், `பசுவே ஐந்தொழில் செய்யும்` என்பாரையும், `பதியே தனது விளையாட்டால் பசுவாகி ஐந்தொழிற்படும்` என்பாரையும் மறுத்துச் சித்தாந்தம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே.

பொழிப்புரை :

வேதாகமங்களின் அர்த்தத்திலே தெளிவு பிறவாமல் ஐயுற்று வினாவிய முனிவர்களை, அந்த வேதாமகப் பொருள்களில் முடிந்த பொருளாய் உள் அருட்டிரு மேனியானது தனது கையினாலே அணைத்துத் தழுவிக் கொள்ளுதலும், அவர்கள் அத்திருமேனியில் அமைந்த கைக்குறிப்பினாலே தம்மை உள்ளவாறு உணர்ந்துகொண்டார்கள்.

குறிப்புரை :

`அருந்தவரை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. ``உத்தரம்`` இரண்டில் முன்னது விடை; பின்னது முடிநிலை. மேனி - தக்கிணா மூர்த்தி அணையப் பிடித்தல் - அவர்களது தலைமேற் கை வைத்துத் தானாகச் செய்தல். அத்திரு மேனியின் கைக் குறிப்பு, சின்முத்திரை, இம்முத்திரை.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்பதையும்,
``பதியினைச் சென்றணு காபசு பாசம்``*
என்பதையும்,
``பதியணு கில்பசு பாசம்நில் லாவே``
என்பதையும் உணர்த்தும் அதனால் அருந்தவர் ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தனர்``* என்க. ``தம்மை அடைந்து நின்றார்`` என்றமையால், பின் தலைவனை அடைந்து நின்றமை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `இவ்வதிகாரப் பொருளே முதல் ஆசிரியனாகிய தென்முகக் கடவுளால் முனிவர்க்கு உணர்த்தப்பட்டது` என்பது கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

பொழிப்புரை :

முற்செய் தவம் இன்மையால் இப்பிறப்பில் நல்லறி வின்றிப் புல்லறிவேயுடையார், தம்மை எல்லாம் அறிந்தவராக மதித்துக்கொண்டு, ஏவவும் செய்கலாது, தாமும் தேராதுl பயனில வற்றைப் `பயனிடைய` எனவும், பயனுடையவற்றை `பயனில` எனவும் கொண்டு தாம் வேண்டியவாறே செல்பவர்களை, `தலை கால் தெரியாது திரிபவர்` என்றல் வழக்கு. அதன் பொதுப் பொருள் வெளிப் படையாயினும், சிறப்புப் பொருள் குறிப்பாகவே உள்ளது. அஃது யாதெனின், `கால்` என்பது சிவனது சத்தி. அஃதே திருவருள். அஃதே எல்லாவற்றிற்கும் வினை முதல் `தலை` என்பது உயிர். `உயிர்க்கு அறிவு உண்டாதல் தலையிலே` என்பது யாவரும் அறிந்தது. எனவே, ஞானம் உதயமாவது `தலை` எனப்படுகின்ற உயிரினிடத்திலேதான். அந்த ஞானம் தானே உதயமாகாது. `கால்` எனப்படுகின்ற சிவசத்தி உதிப்பிக்கவே உதயமாகும். (ஞானகுரு மாணாக்கனது தலையில் தமது காலை வைத்துத் தீக்கைசெய்தல் இந்த உண்மையை நன் குணர்த்தும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் காலில் தங்கள் தலைபடும் படிவணங்கும் மரபும் இது பற்றியது. ``பொல்லார் இணை மலர் நல்லார் புனைவரே``8 என மெய்கண்டதேவர் அருளிச்செய்த குறிப்பும் உணரத்தக்கது.
``கோள் இல் பொறியிற் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை``*
என்றதும் இக்குறிப்பினதே.) காலாகிய சிவசத்தி உதிப்பிக்கின்ற ஞானத்தின் பயன் அந்த உயிர் வீடு பெறுதலாம்.

குறிப்புரை :

`கால்` என்பது, `தாள்` எனவும்படும் தாள் - முயற்சி -யுமாம். முயற்சியே கிரியை. ``எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி``* என்றபடி, இச்சையும் கிரியையும் ஞானத்தின் வேறு பாடேயாம். இச்சை எப்பொழுதும் ஒரு நிலையிலேயிருக்கும். ஏனை ஞானமும், கிரியையுமே செயற்படும் அதனால், இயங்கு கருவி யாகிய கால், (இறைவனது இருதிருவடிகளும் இறைவனது) ஞானமும், கிரியையுமேயாம். உயிர்கட்கு அறிவு தலையில் இருத்தலால், அவற்றின் இச்சை செயல்களும் தலையில் உள்ளனவாம். எனவே, `காலின்கீழ் உள்ளது தலை` என்பது பொருள். இறைவனது ஞானேச்சாக் கிரியைகள் வியாபகமாய் நிற்க. அவற்றில் உயிர்களின் ஞானேச்சாக் கிரியைகள் வியாப்பியமாய் நிற்றலைக் குறிப்பதாம். சிவமும், சீவனும் ஒன்றும் ஆகாமல் இரண்டும் ஆகாமல் நிற்பதே சித்தாந்தபரமுத்தியாகலின், அதனை விளக்குதற்கு எத்தனையோ தொகைச் சொற்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் விடுத்து, ``தாடலைபோல்`` எனக் கூறுவதும் இது பற்றி.
``தாடலைபோற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக்
கூடலைநீ ஏகம்எனக் கொள்``*
என்பது காண்க. `காறலைபோல்` எனக் கூறலும் உண்டு. ``என்பர்`` என்பதை, ``காரணம்`` என்பதன் பின்னர் கூட்டுக. `கால்` என்பதைக் குறையெண்ணுப் பெயராகக் கூறுவோர், `தலை` என்பதை அங்ஙனங் கூறமாட்டாமை அறிக.
இதனால், `அடிதலை தெரிதல்` என்னும் வழக்கின் உண்மைப் பொருள் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
தலைஅடி உச்சி உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில், ``காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே`` என்ற சிவஞானமாகிய பதி ஞானமாம்) உடம்பில் `தலை, கால்` என்பன. வெளியுறுப்பாய் இருத்தல் யாவரும் அறிந்தது. ஆயினும் உடம்பிற்கு உள்ளே தலை கால்கள் உள்ளன; அவற்றைப் பலர் அறியார். அந்த `தலை, கால்` என்பன முறையே தலை உச்சியும், மூலாதாரமும் ஆகும். (தலை உச்சி `ஏழாம்தானம் எனப்படும்) அந்தத் தலையில் எல்லாருக்கும் இயல்பாக உண்டாகின்ற அறிவு உலகியல் அறிவாகும். அந்த அறிவு, மூலாதாரத்தில் உள்ள குண்டலி கீழ் மேலாகச் சுழன்று செய்யும் செயலால் யோகக்காட்சி அறிவாய் மாறி நிகழப்பெற்றவர், அந்த அறிவையே உடையராய் இருத்தலன்றி, உலகியல் அறிவை உடையவர் ஆகார்.

குறிப்புரை :

`தலையும், அடியும் முறையே உச்சியில் உள்ளது. மூலத்தில் உள்ளது` என நிரல்நிறையாக வைத்து உரைக்க. ``உள்ளது`` என்பது, ``மூலம்`` என்பதன் பின்னரும் சென்று இயையும். தலை அடியான அறிவு - தலை அறிவு அடி அறிவாக மாறிய அறிவு. `தலை அடியாகவே இருந்தார்` என்க.
இதனால், `அடி தலை யறிதல்` என்னும் வழக்குச் சிவஞான நிகழ்ச்சியைக் குறித்தலேயன்றி யோக ஞான நிகழ்ச்சியையும் குறிக்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.

பொழிப்புரை :

`அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.

குறிப்புரை :

`அஃது அவனே இரங்கி வந்து எனக்கு அருளியது` என்பது குறிப்பு. இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `நின்றான்` என்பதை முதலடியின் இறுதியில் வைத்து உரைக்க. `முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``அண்டமும்`` என்பதன்பின் எஞ்சி நின்ற `கீழ்` என்பதை வருவித்து நிரல்நிறையாக்குக. `பின்` என்பது தெளிவுப் பொருட்கண் வந்தது, `நீயிர் பொய் கூறியபின், மெய் கூறுவார் யாவர்` என்பதிற் போல. ``தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரம் விரித்து, `உலகம் படைத்தவன் தானே` என்க. ``படைத்தவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், `அடிதலை அறிதலை இறைவனிடம் வைத்து நோக்குங்கால் - அவை நம்மால் அறிய இயலாதன - என அறிதல் வேண்டும்` என்பதும், `அறிந்து அவனது அடியை அடைய முயல வேண்டும்` என்பதும் கூறப்பட்டன.
``நிலமுதற்கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ``3
என்றதும், `அவன் அவ்வாறு நின்றிராவிடில் உலகம் அழிந்திருக்கும்` என்பதையே குறித்தது.
``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே`` 8
``கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் ;
சோதி மணிமுடிசொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை``*

பண் :

பாடல் எண் : 4

சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லா னாயின்
எந்தையை யானும் அறியகி லேனே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் சொல்லியவாறு சிவனது திருவடி -யினை எனது தலைமேல் மட்டும் உள்ளதன்று எனது சித்தத்தி னுள்ளேயும் உள்ளது. இனி எனது சித்தத்தை உள்ளடக்கி, வெளியி -லேயும் உள்ளது. (இந்நிலை, அவன்தானே இரங்கி எனக்குச் செய்த அருட்செயலாகும். ஏனெனில்,) முதற் கண் அவன் என்னை நினையாதிருப்பின், நான் அவனை நினைப்பதற்கே வழியில்லை.

குறிப்புரை :

அந்தக்கரணம் நான்கனுள் சித்தம் ஒன்றை மீள மீள இடைவிடாது நினைந்து நினைந்து நிற்றலால்தான் ஆன்மா அப்பொருளில் அழுந்தி நின்று அதனை அனுபவிக்கின்றது. அது பற்றியே, ``திருவடி சிந்தையினுள்ளே`` என்றார்.
``சிந்திப் பரியன;சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன ... ... ஐயாறன் அடித்தலமே``3
``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக``*
என அருளிச் செய்தன காண்க.
``என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்;
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன்அடி யான்என் றறிதலும்,
தன்னை நானும் பிரான்என்றறிந்தேனே``l
எனவும்,
``எந்த மாதவம் செய்தானை நெஞ்சமே,
பந்தம் வீடவை யாய பராபரன்,
அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளும், சிரத்துளும் தங்கவே``8
எனவும் போந்த அப்பர்திருமொழிகளை இங்கு உடன்வைத்துக் காண்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட திருவடிப் பேற்றின் நிலை மேலும் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம்
உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

பொழிப்புரை :

சொற்களால் சொல்லவராராத ஒரு நிலம்; அவ்வாறான ஓர் ஓளி; இவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்ற அதற்கு அப்புறத்தாகிய இடமே என்னுடையதலைவர் இருக்கும் இடம். அவர் அவ்வாறிருக்கவும் மனக் கண்ணிற்கும் காணப்படாத ஓர் ஒளியாயும், வாக்கிற்கு வாராத ஒரு மந்திரமாயும் உள்ள அதனது இயல்பையும், அதனை அடையும் வழியையும் ஒருவன் எனக்குச் சொன்னான். அந்த வழியிலே நின்றமையால், முன் தந்திரத்திற் கூறியவாறு என் தலைவனது திருவடியை யான் அடைந்தேன்.

குறிப்புரை :

``பன்னாத`` என்பதை ஒளிக்கும் கொள்க. `ஒரு நிலம்` என்றும், `ஓர் ஒளி` என்றும் சொல்லப்பட்டது. `பரவெளி` என்றும், `சிதாகாசம்` என்றும் சொல்லப்படுகின்ற பராசத்தி அது தன் குணமாக, அக்குணத்தையுடைய குணியாதல் பற்றிப் பரமசிவனை, அதற்கும் அப்புறத்துள்ளவனாகக் கூறினார். ``அப்பால்`` என்றது, `அந்த இடம்` என்றபடி. `அப்புறத்துள்ள அந்தப் பால்` என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளத்துள் ஒரு பொருளை நினைப்பது என்றாலும் யாதானும் ஒருவடிவில்தானே நினைத்தல் வேண்டும். அஃது இயலாமையால், ``உன்னா ஒளி`` என்றார். உரை செயா மந்திரமாவது உரைசெய்யப்படும் மந்திரங்களையெல்லாம் வாயிலாகக் கொண்டு இயக்கி, அம்மந்திரங்கைளக் கணிப்பவர்க்கு அவற்றின் பயனைத் தந்து நிற்கும் அந்தப் பொருள். இங்ஙனம் இருவகையாகக் கூறிய இதுவும் திருவருளைக் குறித்ததேயாம். ``உரைசெயா மந்திரம்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. ஒருவன் - குருமூர்த்தி. அவ்வெழுவாய் வருவிக்கப்பட்டது. குருமூர்த்தி அருளைச் சொன்னதாவது, `உண் அறிவிற்கு அருளையே தாரகமாகக் கொண்டு, அறிந்தும், செய்தும்நில்` எனக் கூறியது. `அவ்வழியில் நிற்கவே, தலைவனது திருவடிப்பேறு கிட்டிற்று` என்பதாம்.
இதனால், `அடி, தலை` என்பவற்றுள் இறைவனது, திருவடிபின் சிறப்பும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

பதியாகிய சிவன் உங்கட்குக் காட்டாவிடினும் அன்பர்கட்குக் காட்டிய திருவடிகளை பதி வரலாறு உணர்ந்து அவைகளைப் பாவனையால் உங்கள் தலை மேல் வையுங்கள் மற்றும் மலர்போன்று அவைகளை உங்கள் உள்ளத்திலே வைத்துத் தியானிப்ப -துடன், வாயால் புகழ்ந்து பாடுங்கள். இவைகளையெல்லாம் இடை யறாது செய்யாவிடினும் இவற்றிற்குரிய காலங்களைத் தெரிந்து அக்காலங்களில் செய்யுங்கள்.

குறிப்புரை :

`செய்தா அவன் தனது திருவடிகளை உங்கட்கும்காட்டி உய்யக்கொள்வான்` என்பது குறிப்பெச்சம் ``தோற்றும்`` என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம் பின்னர் ``மதி`` என்றும் ``ஓதும்`` என்றும் கூறுதலால், முன்னர்வைத்த தலைமேலாயிற்று.
``வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சுழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே``l
என்ற அப்பர் திருமொழியும் காண்க.
`இறைவனைத் தியானித்தற்குரிய சிறப்புக் காலங்கள் மூன்று` என்ப. அவை `காலை நண்பகல் மாலை` என்பன
``தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங்கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே``8
என ஓதியருளினமை காண்க. இவைகளை, `சந்தியாகாலம்` என்பர். சம் தியா காலம் - நன்றாகத் தியானித்தற்குரிய காலம்.
இனி வழிபாட்டிற்குரிய காலங்களை `முன் மூன்று, பின் மூன்று` என வைத்த ஆறு காலங்களும் சொல்லப்படும் `வைகறை, காலை, நண்பகல்` - என்பன முன் மூன்று காலங்கள், `எற்பாடு, மாலை, யாமம்` - என்பன பின்மூன்று காலங்கள். ``கதிசெயும்` என்பதில், செய்தல் - உண்டாக்குதல்.
இதனாலும் இறைவனது திருவடியை அடையும் முறையே வகுத்துச் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில்
தரித்துநின் றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

பொழிப்புரை :

எல்லாப்பொருள் கட்கும் ஆதாரமாய் அவை -களைத் தாங்கிநிற்பவனாகிய சிவன் தன்னை எண்ணாதவர்களது உள்ளத்தை வெறுத்தும், அடைதற்கரிய அப்பரிபாகத்தை அடைந் தமை காரணமாக பரிபாகிகளது உள்ளத்தை விரும்பியும் நிற்கின்றான். ஆகவே, அவனது திருவடியைத் தனது உள்ளத்தில் தாங்கி நிற்பவன் இவ்வுலகத்திருப்பினும் சிவலோகத்தில் இருப்பவனேயாவான்.

குறிப்புரை :

`தரித்து நின்றான், கருதாதவர் சிந்தை கரித்து நின்றான்; அப்பரிபாகத்தானே பரித்துநின்றான்; அவன் அடி தன்னுடை நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதிநாதன்` என இயைத்துப் பொருள்கொள்க; ``பரித்து`` என்பதை, `பரிப்ப` எனத்திரிக்க. ``சிந்தை`` என்பது பரித்த லோடும் இயையும். அகரச்சுட்டு அடைதற்கு அருமை தோன்றி நின்றது. `அவன் அடி` எனச் சுட்டியுரைக்க. கரித்தல் - வெறுத்தல். `கருதாமைக்குக் காரணம் பரிபாகம் இன்மை` என்பது தோன்றுதல் அறிக. `அமரர்` என்பது தேவரையும், `அமராபதி` என்பது தேவ ருலகத்தையும் குறித்தல் பொது வழக்காயினும், சிவநெறி வழக்கில் அவை சிவ சாலோக சாமீப சாரூப நிலைகளை அடைந்தவர்களையும், சிவலோகத்தையும் குறிக்கும்.
இதனால், சிவனது திருவடிப்பேற்றின் அருமையும், அப்பேறு பெற்றவர்களது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
கன்றாத தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு)
இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

மக்கள் உடம்பிற்குள் தாமரைக் கொடி ஒன்றே உள்ளது: அதில் மலர்கள் மூன்று உள்ளன. அந்த மூன்று மலர்களிலும் என்றும் அவற்றால் வருந்துதல் இல்லாத சிவனது திருவடியிணையும் உள்ளது. ஆயினும் அத்திருவடியிணையைக் காண்பதற்கு அந்த மூன்று மலர்களும் மலராக மலர்தல்வேண்டும். அவ்வாறு மலர்தற்கு அவை பக்குவப்படவேண்டும். அதற்கு உடம்பிற்றானே உள்ள நெருப்பை எழுப்பி வெதுப்பினால், அம்மலர்கள் பக்குவப்பட்டு மலரும் மலர்ந்தால், அங்ஙனம் மலர்விக்க வல்லவர்கட்குச் சிவனை அடைதல் இப்பொழுதே எளிதாகிவிடும்.

குறிப்புரை :

தாமரைக்கொடி, சுழுமுனைநாடி, மூன்று மலர்கள், அனாகதம், (இருதயம்) விசுத்தி, (அடித்தொண்டை) ஆஞ்ஞை (புருவநடு) ஆகிய ஆதாரங்கள். அனாகதத்திற்குக் கீழ் உள்ள ஆதாரங்கள் தாமரைக்கொடியின் அடிப்பாகமாகக் கருதப்படுகின்றன. வழிபாடு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றுறுப்புக்களால் நிகழ்வது. அவை மூன்றும் முறையே மொழி, மெய் மனம் என்ப வற்றால் நிகழுங்கால், விசுத்தி, அனாகதம், ஆஞ்ஞை என்பவற்றில் நிகழ்தல்பற்றி அம்மூன்றையே கூறினார். இன்றே - இப்பிறப்பிலேயே.
இதனால், `சிவனது திருவடியை அடைதற்கு மேற்கூறிய நினைத்தல் வாழ்த்தல் வணங்கலேயன்றிச் சிவயோகமும் சிறந்த சாதனமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான் பக்குவம் எய்திய என்னைத் தனது திருவடியாகிய மலர்கள் எனது தலையிலே எனது பாசக்கட்டு நீங்குமாறு மலரும்படி செய்யும் முகத்தால், மயக்கம் கொண்ட எனது மனத்தால் திகைத்து நிற்கின்ற திகைப்பை நீக்கி ஆட்கொள்ள நினைத்தான். அதனால் நான் கோணங்கள் எல்லாம் நீங்கி, நேர்மையை அடைந்தேன் அந்த நேர்மை இது` எனச் சொல்லவாராது.

குறிப்புரை :

`கால்கொண்டு` என்பது, இறுதியில் நின்ற ``கட்டற`` என்பதனோடு இயைந்தது. அந்த `கட்டற` என்றது, `முறுக்கவிழ்ந்து மலர` என்றதாம். ``கால்கொண்டு கட்டற`` என்றாரேனும், `கால் கட்டறலைக் கொண்டு` என்றலே கருத்து. `பரன், பால் கொண்ட என்னைக் கால் கட்டறல்கொண்டு துயக்கறக் கொள்ள நாடினான்` என இயைக்க. பால் - பான்மை` பக்குவம் மேல் - அதன்பின் மேல் கொண்ட` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. கோணங்கள் ஆணவ மலத்தால் எழும் செருக்கும், கன்ம மலத்தால் வரும் இன்பத் துன்பங்களும், மாயா மலத்தால் வரும் ஐம்புலத் தாக்குதலும் பிறவுமாம். நேர்மை, மெய்யுணர்வு, முதல்வனது இயல்பு பற்றி எழும் அன்பு, அதனால் விளையும் ஆனந்தம் முதலியனவாம்.
`பக்குவம் வந்தால் நீவிரும் இவையெல்லாம் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `திருவடிப் பேறே கோட்டம் நீக்கிச் செம்மை செய்வது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர்
பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச்
செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.

பொழிப்புரை :

தாம் பெற்ற புதல்வரிடத்தில் உள்ள தீ நாற்றத்தையும், அதற்குக் காரணமான அசுத்தப் பொருள்களையும் அனுபவித்த போதிலும் அப்புதல்வரிடத்தில், வெறுப்புக் கொள்ளாமலே பெற் றோர்கள் அவை நீங்குதற் பொருட்டுப் புதல்வர்க்கு வெறுப்பான செயல்கைளச் செய்வார். (அவை நெய்யிட்டு, நலங்கிட்டு முழுக் காட்டுதல், மருந்தூட்டுதல் முதலியனவாம்) அது போலவே, சிவனும் உயிர்கள் பக்குவம் எய்தற் பொருட்டு உலகப் பற்றை அவைகட்கு உண்டாக்குதலால், அப்பற்றின் வழியவான செயல் -களைச் செய்வான் ஆகவே, அது கருணை காரணமானது அன்றி, வன்கண்மை காரணமானது அன்றாம்.

குறிப்புரை :

குற்றம் - இங்கு, அசுத்தம். இதனைக் கூறவே ``நாற்றம்`` என்றது தீ நாற்றமாயிற்று. ``குணம் குறை`` என்றது `குணம் இல்லன்` என்றபடி. `குணம் இல்லன` என்று புதல்வரது கருத்து நோக்கி `பான்மை பக்குவம்` என்பதை முன் மந்திர உரையிலும் கூறினோம். பான்மைக்கு - பக்குவம் வருதற்கு, செற்றம் - பகை; வன்கண்மை `இலாது` என்பது ஈறு குறைந்து நின்றது. செய்கைக்கு - செய்கையால்; உருபு மயக்கம். ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றம் இலாது ஓர் பற்றைச் செய்கையால், அதற்கு எய்தின செய்யும்` என்க. உலகப் பற்றிற்கு எய்தன பிறப்பு இறப்புக்களும், இன்பத்துன்ப நுகர்ச்சிகளுமாம்.
இதனால், `பக்குவம் வாயாத உயிர்கட்கு இறைவன் செய்வதும் அருளேயன்றி, வன்கண்மையன்று` என்பது கூறும் முகத்தால், அவ்வுயிர்களும் திருவடிப்பேற்றை அடைவனவே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்களை எப்பொழுதும் வருத்துவனவாய் மூன்று குற்றங்கள் உள்ளன. அதனால் ஆணவத்தின் சத்தி முற்றும் மடங்காது செயற்பட, சில வேளைகளில் ஒன்றை மற்றொன்றாக உணர்ந்தும், சில வேளைகளில் எதனையும் அறியாதே கிடந்தும் உயிர்கள் துன்புறு கின்றன. ஆகவே அம்முக்குற்றம் நீங்கப்பெற்றவரே துன்பத்தை நீக்கினவர் ஆகின்றனர். நீங்கப் பெறாதவர் அக்குற்றங்களில் கிடந்து கெடும் முறைமையை உடையவர் ஆவர்.

குறிப்புரை :

`மூன்று குற்றங்கள் இவை` என்பது வருகின்ற மத்திரத்தால் கூறப்படும். ``மான்று`` என்பதும் `மயங்கி என்றதே யாயினும் அது திரிபுணர்வையும், மயங்கி என்பது யாதும் அறியாமை -யையும் குறித்தன. ``ஆறு`` என்பதன்பின், `உடையர்` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `உயிர்களின் துன்பத்திற்குக்காரணம் முக்குற்றம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக்கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

குறிப்புரை :

காமம் - விருப்பம். வெகுளி - சினம்; வெறுப்பு. மயக்கம் - அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் ஆக்கியும் குற்றத்தை `ஐந்து` என்றல் சாங்கிய நூல் முறைமை. அந்த ஐந்தையும் அந்நூலார் `பஞ்சக்கிலேசம்` என்பர். அந்த ஐந்தையே திருவள்ளுவர். ``காமம், வெகுளி, மயக்கம்``* என மூன்றாக்கிக் கூறியதாகப் பரிமேலழகர் உரைத்தார். எனினும், தமிழ் நூலார் மூன்றாகக் கூறுவதையே சாங்கியர் ஐந்தாக விரித்தனராவர். பிடித்திருத்தல் - குறிக்கொண்டிருத்தல். `எறிமணி போலும் ஓை\\\\u2970?` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர், மணியை அடிப்பது ஒரு கணமேயாயினும், அதினின்றும் எழும் ஓசை நெடிது போது தொடர்ந்து ஒலித்தல் போல, உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது` என்றற்கு `எறி மணி ஓசை போல்` என்றார். `இவ்வோசை யோகத்திற் கேட்கப்படும்` என்பது மூன்றாம் தந்திரத்தில் கூறப்பட்டது. `ஓம்` என்பது ஒரு
சொல்லாகலானும் சொல்லுக்குச் சார்பாய் உள்ளது பொருளாகலானும் பொருளை `சார்பு` என்றார். தாமம் - சார்பு. இதன்பின், `வெளிப்பட` என ஒருசொல் வருவிக்க. ``உள்ளே உறைவது`` என்றதனால் அஃது அறிதற்கரியது என்பது பெறப்பட்டது. `வியப்பு` என்பது சொல்லச்சம்.
இதனால், `முக்குற்றங்கள் இவை` என்பதும், `அவை யோக முயற்சியால் நீங்குதலும்` கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.

பொழிப்புரை :

`துவம்` என்பதே சித்தர் மரபில், `தொம்` என மரூஉ மொழியாகக் கூறப்படுகின்றது.] `துவம்` என்னும் பதம் முன்னே எழ, அதனை அடுத்து, `தத்` என்னும் பதம் வந்து பற்ற. அதன்பின் `அசி` என்னும் பதமும் வந்து சேர, இம் மூன்றும் கூடிய கூட்டமாய் அமைந்த வாக்கியத்தின் பொருளாக ஒருவன் ஆகிவிடுவானாயின், அவன் வியாபகப்பொருளாகிய பரம்பொருளேயாவன். பின் முன்பு தான் பொருந்தியிருந்த மும்மலங்களும் நீங்கச் சிவமாகியிருப்பான்.

குறிப்புரை :

வாக்கியம் `தத்துவமசி` என்று இருப்பினும் பொருள், `துவந்ததசி` என்பதேயாகலின் அவ்வாக்கியத்தை நாயனார் இவ்வாறே கூறுகின்றார். இதுபற்றி மேலே குறினோம்* எய்துதல் - பொருள் அனுபவமாகப் பெறுதல். வேதம், முதற் பொருளைப் பொதுவாக, `பரம்` எனக் கூறும். ஆகவே, `நீ அது ஆகின்றாய்` என்னும் வேதவாக்கியத்தால் பொது அனுபவம் உண்டாதலை ``பராபரம் ஆகும்` என்ற கூறிப் பின், சித்தாந்தம் `துவம்சிவமசி` எனக் கூறுகின்ற சிறப்புப்பொருளை எய்திச் சிவமாய் இருக்கும் எனக் கூறினார். மற்றும் இது பற்றிய சில விளக்கங்கள் மேலே* கூறப்பட்ட வற்றைக் காண்க.
இதனால், `முப்பதம் ஆவன இவை` என்பதும், அவற்றால் பெறப்படும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

பொழிப்புரை :

`அறிவாவது சடத்தின் குணமாகாது, வேறேயாம்` என்பதை உணர்ந்து பூதம் முதலிய தத்துவ வகைகளையும், அவற்றின் கூறுகளாகிய தாத்துவிக வகைகளையும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் நாதமுடிவாக அவற்றின் இயல்புகளை ஆராயும் முகத்தால், `தான்` என மயங்காது விட்டொழித்து உண்மையாகவே, `தத்துவமசி` என்னும் வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள `தொம்` பதப்பொருளாகி நிற்றலே ஆன்மாவின் உண்மை இயல்பாகும்.

குறிப்புரை :

`உண்மையாக அன்றி வெறும் வாய்மொழியாக அவ்வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை` என்பதாம். இதுவே. தசகாரியத்துள் `தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி ஆன்மரூபம்` என நான்காக வகுத்துக் கூறப்படுகின்றது. சிவஞானபோதத்தில், `இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே``* எனப் பட்டதும் இதுவே. தொண்ணூற்றாறு கருவிகள் மேலே கூறப்பட்டன.
இதனால், முப்பாதங்களுள் ஆன்ம பதமாகிய தொம்பதப் பொருளை உண்மையாக உணருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

முப்பதங்களுள், `அசி` என்னும் பதமே தத் பதம் என்றும் `துவம் பதம்` என்றும் சொல்லத்தக்கதாய் உள்ளது. (அஃதாவது, இரண்டையும் ஒன்றாகச் செய்கின்றது.) அந்தப்பதத்தில் தான் அருட்சத்தி இருக்கின்றாள். அதனால், வாக்குக்களால் எட்ட முடியாத சிவனும் அந்தப்பதத்திலேதான் கற்பனையாக அன்றி, உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

தத் - அது. துவம் - நீ. அசி - ஆகிறாய். எனவே, `அது நீ ஆகியாய்` என்கின்ற பொழுது இரண்டையும் ஒன்று படுத்துவது `அசி` ஆதல் உணர்க. பெத்தகாலத்தில் சிவன் சீவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும், முத்தி காலத்தில் சீவன் சிவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும் சத்தியினாலேயாகலின், `அசி` என்னும் பதத்திலே நேரிழையாள் உளள் - என்றார். திருவைந் தெழுத்தில் அசிபதமாய் நிற்பது வகாரமும், நகாரமும் ஆம்.
``அவன்இவ னானது அவன் அருளால் அல்லது,
இவன் அவன் ஆகான் என்று உந்தீபற``*
எனத் திருவுந்தியார் சீவன் ஒன்றும் மாட்டாமையை வலியுறுத்துகிறது. `உளன்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. `அப்பதத்து` எனச் சுட்டு வருவித்து, `சிவன் கலந்து நின்றான்` எனமுடிக்க.
இதனால், முப்பதத்துள் `அசி` பதத்து உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து
கணுவொன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால் தேன் அமுதென இன்பத்
துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.

பொழிப்புரை :

`துவம்` பதப்பொருளாகிய ஆன்மாவும் `தத்` பதப் பொருளாகிய பரமும் `அசி` பதத்தால் ஒன்றான பின்பு, அதில் சிவமும் கலந்துவிடுமாயின், அக்கலவை, பாலும் தேனும் கலந்த கலவையில் அமுதமும் கலந்தாற்போல இனிமையோடு, உறுதியையும் தந்து நிற்கும். அக்கலவையின் சிறப்புச் சொல்லற்ற நிலையாய்த் தோன்றும்.

குறிப்புரை :

பரம், சிவம் இரண்டும் ஒன்றாயினும் பொதுவும், சிறப்புமாகிய உணர்வு வேறுபாடு பற்றி வேறுவேறாகக் கூறினார். பரமாதல் வேதாந்த ஞானத்தாலும், சிவமாதல் சித்தாந்த ஞானத்தாலும் என்க. `அசிபதத்தால்` என மூன்றாவது விரிக்க. ``ஏய்ந்து`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. கணு - வேற்றுமை. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இணை - ஒப்பு. பால், ஓரளவு இனிப்புடையது. தேன், மிக இனிப்புடையது. ஆகவே அவை முறையே ஆன்மாவிற்கும், பரத்திற்கும் உவமையாம். அமுது உறுதி பயப்பது. ஆகவே, அது சிவத்திற்கு உவமையாம். இன்பத் துணை - இனிய பொருள்களின் கலப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் அனுபவச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :

அழகிய சொற்களால் ஆகிய, பழமையான, மெய்ம்மை கூறும் மகாவாக்கியம் `தொம், (துவம்) தத், அசி` என்னும் மூன்று சொற்களை யுடையது. அச்சொற்கள் முறையே புத்தி முத்திகளை விரும்புகின்ற சீவன், பரம்பொருள், அதன் சத்தி ஆகியவற்றைக் குறித்து நிற்கும். அவ்வாக்கியத்தைப் பன்முறையும் உணர்தலால் அடையப்படும் செவ்விய பொருள், குருவாகி வந்து ஆட்கொள்கின்ற சிவனே.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதற்கண் கூட்டியுரைக்க.
`பத வாக்கியம்` என இயையும். வாக்கியம் சாதனம் ஆகலின், செம்பொருள், அதனால் அடையப்படும் பொருளாயிற்று. செம்மை, எஞ்ஞான்றும் திரிபின்றி ஒருதன்மைத்தாய் நிற்பது. இதுவே, வடமொழியில் `சத்து` என்பதற்குப் பொருள் என்பது சித்தாந்தம்.
இதனால், `முப்பத வாக்கியம் மெய்ப்பொருளை அடையும் வழி` என்பதும், அதனால், அடையப்படும் மெய்ப்பொருள் சிவனே என்பதும் கூறப்பட்டன. இரண்டாம் அடி அனுவாதமாய், மேலெல்லாம் கூறியதை வலியுறுத்திற்று.

பண் :

பாடல் எண் : 6

ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்

உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

பொழிப்புரை :

எழுத்தறி கல்வியில் அறியவேண்டிய எழுத்துக்கள் ஐம்பது. அவற்றுள் ஒன்றையேனும் அறியாதவரும் உளர். அவரும் மக்களுட் சிலராகவே இருக்கின்றனர்: (அவர்கள் நற்கதி அடையு மாறில்லை. ஆகவே,) கல்வி கற்றவர் அக்கல்வியின் முடிநிலையாக முப்பதங்களைக் கொள்ளுதல் வேண்டும். கொண்டு, செம்மையான, உயர்ந்த வாசியோகத்தைச் செய்தல் வேண்டும். அவ்யோகம் `ஹம்ஸ:` என்னும் மந்திரமாக அமைதலின், அதுவே தொம்பதமும், தத்பதமுமாய் நிற்கும். நிற்கவே, அது, `யோஹம்` என்று ஆகி, சீவன் சிவனாகின்ற பயனைத் தகும்.

குறிப்புரை :

``கல்லா நெஞ்சில் - நில்லான் ஈசன்`` ஆதலின், எழுத்தறியாதவரை இகழ்ந்தார்* ``அறியாதவரும்`` என்பதன்பின், `உளர்` என்பது வருவிக்க. `அவரும்` என்னும் உண்மை தொகுத்த லாயிற்று. சிவனை நினையாது செய்யும் யோகம் வெறு ஹடயோக மாய் ஆன்மிகப் பயனைத்தாராது ஆதலின், `உம்பனை நாடி முப்பதத் திடை வாசி செலுத்திட` என்றார். `உம்பரன்` என்பது குறைந்து நின்றது. `நாடிச் செலுத்திட` என இயையும். உரைபதம், வினைத் தொகை. செம்பரம் - செவ்விதும், மேலானதும் ஆகிய பொருள். அப் பொருளாம் தன்மையைக் குறிக்கின்ற பதத்தையே அதுவாக உப சரித்தார் `ஹம்ஸ` மந்திரம் இயல்பாக இயங்கும் சுவாசத்தாலே அமைதலின் அதனை, `அசபா மந்திரம்` என்பர். செபிக்கப்படாத மந்திரம்` என்பது இதன் பொருள். `பேசாத மந்திரம்` என்றும் கூறுவர். `தம் யோகம், பரயோகம்` எனத் தனித்தனி முடிக்க. தம் யோகம் - தம்மால் செய்யப்படும் யோகம் பரயோகம் - மேலான யோகம். ``ஆகும்`` என்றது `ஆதலாகிய பயனைத் தரும்` என்றபடி.
இதனால், `முப்பத அனுபவத்தை வாசியோகத்தால் பெறலாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.

பொழிப்புரை :

ஆன்மாவிற்குச் சிவனை அறிகின்ற அறிவும் நழுவுவதே `அதீதம்` எனப்படும் முடிவுநிலைவாய்க்கும். அஃதாவது, ஆன்மாச் சிவனை அறியும் பொழுது, `யான் சிவனை யறிகின்றேன்` என அறிகின்ற அறிவும் அதைவிட்டு நழுவினால் அதன் பின்பே துரியாதீதநிலை வாய்க்கும்` என்பதாம். (ஆகவே அவ்வறிவு நழுவிய நிலை துரியமாதல் பெறப்பட்டது.) இனி அவ்வாறின்றி, ஞானேந்திரியம், கன்மேந்திரியம் அவற்றின் விடயங்களாகிய சத்தாதி, வசனாதி முதலிய தத்துவ தாத்துவிகங்கள் நீங்கியபோதிலும், `யான்` என்னும் உணர்வு நீங்காது. ஆகவே, அது நீங்குதல் நின்மல சாக்கிரம் முதலியவற்றிலாம். அவையும் நீங்கினால் பரசாக்கிரம், பரசொப்பனம் முதலியனவே இயற்கை நிலையாகிய முத்தியைக் கூட்டுவிக்கும்.

குறிப்புரை :

நந்தி யறிவு - நந்தியை அறிவும் அறிவு. விட - நீங்க. `யான்` என்பது நீங்குவதாகிய நின்மலாவத்தையை. `நின்மலாவத்தை` என ஒரு சொல்லாற் கூறிப்போகாது அனைத்தையும் முறையானே எடுத்தோதினார். அவற்றை அதீததம் முதலாகக் கீழ்நோக்கிக் கூறும் பொழுது `யான்` என்னும் உணர்வு ஒன்றைவிட மற்றொன்றில் மிக்கிருக்கும் - என்பது உணர்த்துதற்கு துரியத்தில் பாசநீக்கமே உளதாகும். சிவப்பேறு அதீதத்திலே உண்டாகும். ``நல ஐந்தும்`` என்றதனால் அவை நின்மலாவத்தையாயின. `அவையும் நந்தில்` என்றதனால் `நனவாதி` எனப்பட்டவை பராவத்தையாயின. நின்மலா வத்தை பராவத்தைகளின் இயல்பு மேற்போந்த அதிகாரங்களில் கூறப் பட்டன. அனாதி - இயற்கை. `அனாதியை முட்டும்` என இயைக்க.
இதனால், முப்பத அனுபவம் நின்மலாவத்தை பராவத்தைகளில் நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

பொழிப்புரை :

பரதுரியத்தில் உலகத்தை அனுபவித்தலாகிய கேவல சகல அஞ்சவத்தைகள் எஞ்ஞான்றும் நிகழாது அறவே நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரோவொருகால் நிகழினும் நிகழும். ஆகவே, நின்மல துரிய `அசி` பத அனுபவமாய் நிற்பதே. `அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை` என்பதாம்.)

குறிப்புரை :

`பரதுரியத்து ஓவும்` என இயையும் ஓவும் - நீங்கும். ஓவுவன நனவும், கனவும், சுழுனையும்` இவை கேவல சகல அவத்தைகள்` என்பது. ``படி உண்ட`` என்றதனால் விளங்கிற்று. படி - உலகம். ``படி உண்ட`` என்பதை, ``நனவு`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. விரிவு இல் கனவு - நனவுபோல விரிந்த அறிவு இல்லாத கனவு. சுழுத்தியில் அறிவு பெரிதும் ஒடுங்குதலால் அதனை, `கனவும் ஒடுங்கிய உபசாந்தம்` என்றார். ``சிவன்பால்`` என்பதன்பின், `நிகழும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `நின்மலாவத்தை மகாவாக்கிய அனுபவமாக, பராவத்தை அதனையும் கடந்த அனுபவமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி
நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.

பொழிப்புரை :

எனது உடம்பினுள்ளே உற்பத்தியாகி, கீழ்மேலாய் உள்ளது. யோக முயற்சியால் மேல் கீழாய்ச் சுழல்வதற்கு இடமாகின்ற மூன்று மண்டலங்கள் உள. (அவை `தீ, ஞாயிறு, திங்கள்` என்பன) அம்மண்டலங்கட்கு மேலேயுள்ள முதல்வனைப் பற்றியுள்ள ஓர் இளமையான கொடி, அவனைப் பற்றித் தொங்கிக்கொண்டு, உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் தருதல் அறியத் தக்கது.

குறிப்புரை :

எனதாகிய உடம்பை `யான்` என்றே கூறினார். உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் என்னும் அளவில் உள்ள பகுதி தீ மண்டலமாகவும், அனாகதம், விசுத்தி உள்ள பகுதி ஞாயிற்று மண்டலமாகவும், ஆஞ்ஞை, அதற்குமேல் உள்ள ஏழாந்தானம் உள்ள பகுதி திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். இம் மூன்று மண்டலங் களையும் கடந்து துவாதசாந்தத்தில் விளங்குகின்ற சிவனே மண்டல பரம். பரம் ஆகின்றவனை, ``முதல்வன்`` என்றார். அவனைப் பற்றிக் கொண்டு மூலாதாரம் வரையில் தொங்கி, மூலா தாரத்தில், தலையை வைத்துத் தூங்குகின்ற பாம்பு வடிவாய் உள்ளது. குண்டலி சத்தி. அதனையே, ``ஏன்றெய்தி இன்புற்றிருந்த இளங்கொடி`` என்றார். இன் புறுதல், சுகமாகத் துயிலுதல். ``நான்று`` என்பதை, ``எய்தி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நலம் செய் ஆறு, நலம் தரும் ஆறு` எனத் தனித்தனிக் கூட்டுக. இருகாற் கூறியது உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் உணர்த்தற் பொருட்டு. யோக முயற்சியால் ஞானமே யன்றி, அதற்குமுன் உடல் நலமும் கூடுவது என்க. சுழல்கின்றது ஓர் மூன்று படி மண்டலம் - சுழலுகின்ற இடமாகிய ஒரு மூன்றடுக்கு மண்டலம். கீழ் மேலாகச் சுழல்வது, மேற்குறித்த குண்டலிசத்தி, யோக முயற்சியால் எழும் மூலாக் கினியால் விழித்தெழுந்து சுழலுதல், `அஃது` இங்ஙனம் எழுந்து சுழன்றே நலந்தரும்` என்க. `அறியத் தக்கது` சொல்லெச்சம்.
இதனால், முப்பரங்களுள் மண்டல பரம் பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே.

பொழிப்புரை :

மண்டல பரம் துவாதசாந்தத்தில் நிற்றலால் ஏனைய கடவுளர்க்கெல்லாம் மேலான கடவுளாயும், அங்கே திருநடனம் புரிவதால் மன்றில் நிறைந்ததாயும், தனது சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குவதாயும், இன்னும் நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாயும் உள்ளது. அந்தப்பரம் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்த பின்னர், குடத்துள் இருந்த விளக்குப்போல இருந்த அது, குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

குறிப்புரை :

``மாபரம் ஆயது`` என்பதை முதலிற் கொள்க. ஏனைய கடவுளாவார் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் விளங்குபவர்கள். `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்கும் கீழாய் அடங் குவதே ``நந்தி`` என்றது `குரு` என்றவாறு ``நந்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. இதன் பின் `ஆம்` என்பது எஞ்சிநின்றது. `வருதல், ஆதல்` என்ப வற்றிற்கு `அது` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. நன்மையை, `குணம்` என்றல் வழக்கு. நன்மை, இங்கு இனிது விளங்கி நிற்றல்.
``கன்றை நினைந்தெழு தாய்என வந்த கணக்கது ஆகாதே``l
என்னும் திருவாசகத்தையும் காண்க.
இதனால், மண்டல பரத்தின் பெருமையும், அஃது உயிர்கட்கு அருள் புரியுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

பொழிப்புரை :

பரம்பொருள், `முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது` என உணரப்படும் பொழது `தத்துவ பரம்` எனப்படும். பொருளால் வேறாகாமை பற்றி முன்மந்திரத்தில், `மண்டல பரமே குருவாய் வந்து உணர்த்துவது` எனக் கூறப்பட்டதாயினும் அவ்வாறு வந்து உணர்த்துவது தத்துவ பரமே. பரம் பொருள் குருவாகி வந்து உணர்த்தியது சைவ வரலாற்றில் அன்றிப் பிற சமய வரலாற்றில் காணப்படாமையால், குருவாகி வந்து உணர்த்தும் தத்துவ பரம் சிவபரமே என்பது தெளிவு. அது செய்த உபதேசமும் சொல்லமாற் சொன்ன உபதேசமே. அஃதாவது, சின் முத்திரையால் உணர்த்திய உபதேசமே. அந்த உபதேச பரத்திற்கு வேறாய்வெளிப்பட்ட, வேதாகமங்களை அருளிச்செய்த சதாசிவ நாயனார் வெளிப்பட்டது. முற்கூறிய கூறா உபதேசம் இனிது தெளியப்பட்டு பயன் தருதற் பொருட்டாம். அவ்விரு மூர்த்திகளது செயலாலும் பயன்கொள்பவரால் அச்செயல்கள் மேலும் மேலும் இன்பம் பெருகும்படி நன்கு பேணப்படும்.

குறிப்புரை :

``ஆறாறு தத்துவம்`` என முன்னர்க் கூறினமையால், ``அப்பரம்`` என்று, தத்துவபரம் ஆயிற்று. ``கூறில்`` என்னும் எச்சம், `கூறிற்றாயின்` எனத் தெளிவின்கண் வந்தது. `அது சிவபரமே` எனச் சுட்டு வருவித்து முடிக்க. `தத்துவ பரம் குருவாகிவந்து உணர்த்து மாயின், சதாசிவநாயனார் வேதாகமங்களை அருளிச் செய்தல் எதற்கு` என்னும் ஐயத்தை நீக்குதற்கு, ``பேறாக`` என்றார். பேறு பயன். ஆக - உண்டாதற் பொருட்டு. தென்முகக் கடவுள்பால் சென்று கேட்ட சனகாதி நால்வர் வேதாகமங்களை ஓதியுணர்ந்தபின், அவற்றின் பொருளைத் தெளிதற் பொருட்டுக் கேட்டாராயினும், பொதுவாக குரு உபதேசத்தைக் கேட்ட பின்பு அதனைத் தெளிதற்குப் பயன் படுவனவே வேதாகமங்கள் என்பது பற்றி, ``பேறாக`` என்றார். எனவே, தென்முகக் கடவுள் வரலாற்றை எடுத்துக்காட்டியது, முன் மந்திரத்தில், ``நேர்தரு நந்தியும் ஆம்`` என்றதற்கு அனுபவம் காட்டியதேயாம். வேதாகமங்களின் வழி மேலும் மேலும் சிந்தித்த பொழுதே குருவுபதேசம் நிலைபெற்றுப் பயன் தருவதாம். அதனையே, ``பேணும்`` எனக் கூறினார். பேணும் - பேணப்படும்.
இதனால், முப்பரங்களில், `தத்துவபரமாவது இது` என்பதும், அஃது உயிர்கட்கு அருள்புரியுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம்
பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.

பொழிப்புரை :

பரம்பொருள் உயிர்களைப் பாதுகாக்கும் பதியாகி நிற்றல், அவ்வுயிர்கள் வேறு பற்று எதுவும் இன்றி, அனைத்துப் பற்றுக்களையும் விடுத்து, அந்தப் பரம் பொருள் ஒன்றையே பற்றி நிற்கும் பொழுதுதான், (இப்பாதுகாவல், பிறவிக் கடலினின்றும் எடுத்துக் காக்கும் காவல்) பிற பற்றுக்களை யெல்லாம் விடுத்துப் பரம் பொருளையே பற்றுதல், குரு உபதேசத்தைச் சிந்தித்துத் தெளிதலால் உண்டாகும். அதனையே,
``ஓர்த்துள்ளம் உள்ள துணரின், ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு``
-திருக்குறள் - 357.
எனத் திருவள்ளுவர் கூறினார்.
அங்ஙனம் வேறு பற்று அறப் பரம்பொருளையே பற்றும் பொழுது அந்தப் பரம்பொருளின் ஞானமே உயிரினது ஞானமாகிப் பின்பு, அதுவே பரம் பொருளும் ஆகிவிடும். பரம்பொருளாகிய பற்றப்படும் பொருளை இவ்வாறு பற்ற வல்லவர்கட்கு அப்பற்றுதலின் கண் பரம் பொருள் பரம்பொருளாகவே வெளிப்படும்.

குறிப்புரை :

``பரம்பதியாவது`` என்பதை முதலிற்கூட்டுக. மூன்றாம் அடியில் ``பற்று`` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், ஆகுபெயரால், பற்றப்படும் பொருளைக் குறித்தது. ஈற்றடியிலும் ``பற்று`` என்பது முதனிலைத் தொழிற்பெயராய், ஏழாம் வேற்றுமை ஏற்றது. பரம் பரம் ஆதல் - உண்மையாக வெளிப்பட்டு விளங்குதல்.
இதனால், `தத்துவ பரத்தை அதன் உபதேசத்தின் வழியே சென்று அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பரம்பர மான பதி பாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரம் சிவம் மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.

பொழிப்புரை :

பாசங்களோடு சிறிதும் தொடர்பின்றி, மேலானதற்கும் மேலானதாய் நிற்கின் அதுவே மிகமேலான பரம்; பதி. (என்றது `பசு பரம்` என்றபடி பாசங்களின் மேலானது பசு; அது பரம். அதற்கு மேலானது பதி; அது பரம்பரம் `தற்பரம்` என்றும் சொல்லப் படும். தற்பரம் தனக்கு மேலானது. `தன்` என்பது ஆன்மா தற்பரம், பரமான்மா `தத்துவ பரம்` என்பது தத்துவங்களைக் கடந்த நிலையை மட்டும் குறிப்பது. `பசு - பரம்` என்பது, கன்மம் திரோதாயி இவற்றிற்கு மேல் பசு இவற்றையும் கடந்தது பசுபரம்) இவ்வாறான `பரம்` என்றும் `சிவம்` என்றும் சொல்லப்படுகின்ற அந்தப் பொருளை உயிர், மாயா காரியப் பொருள்களில் எந்த ஒன்றினின்றும் அடையப்படாத பேரானந்தத்தையுடையதாகும். அந்த ஆனந்தத்தைப் பொருளாகக் கொண்டு முயன்று அடையும் அறிவே, `அறிவு` என்று சொல்லப்படும்.

குறிப்புரை :

பாசம் பற்றாப் பரம்பரம், பரம்பரமான பதியாகும் என இயைக்க. ``பரசிவானந்தம்`` என்பதன் பின்னர், `ஆகும்` என்பது எஞ்சி நின்றது. இதன்பின், `இதனை` என்பது வருவிக்க.
இதனால், முப்பரங்களில் `பசுபரம்` என்பது இது - என்பதும் `அது பாசத்தோடு தொடர்பின்றி ஆனந்த மயமாய் உள்ளது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று
தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி
நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந்
தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.

பொழிப்புரை :

சகலத்தில் புருவ நடுவிலே நிகழும் `கேவல சாக்கிரம், சகல சாக்கிரம்` என்னும் இருவகைச் சாக்கிரத்துள், வித்தியா தத்துவங்களில் கலை முதலிய ஐந்து தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய நிலையில் ஆன்மா உயிர்ப்பும் இன்றித் தனித்துக் கிடக்கும் ஒருநிலையை அடையும் அந்நிலையும் ஒருவகைக் கேவலமே. அந் நிலையில் கருவிகள் இல்லாவிடினும், ஆணவம் உள்ளது. கருவிகள் ஒடுங்கிய நிலையில் இந்தக் கேவல நிலை உண்டாகாமல் நீங்கித் திருவருள் அறிவிக்க அறிதலாகிய அறிவினைப் பெற்று அறிகின்ற சாக்கிரம் முதலியவைகளை அடைந்து, முடிவாக அதீதத்தை எய்தி, அதன்கண் விளங்குகின்ற ஞேயத்தில் அழுந்தும் பொழுதே ஆன்மா, மேற்கூறிய பசு பரமாகிய தற்பரமாய் நிற்கும்.

குறிப்புரை :

நாலொன்று - ஐந்து. இரண்டாம் அடி, `சகலத்தில் சகலம்` என்றும், `மகா சகலம்` என்றும் சொல்லப்படுகின்ற மத்தியாவத்தையில் நிகழும் அதீதத்தின் இயல்பைக் கூறியது. ``நினைவுற்று அகன்று`` என்பதை `அகன்று நினைவுற்ற` என மாற்றிக் கொள்க. அகலுதல், மேற்கூறிய அதீதத்தை. நினைவுறுதல் - அறிவு பெறுதல். இவ்விடத்தில் அது திருவருளால் நிகழ்வதாகும். `இதுவே நின்மலாவத்தை` என்பதை மேலெல்லாம் கூறியவாற்றான் அறிக. `தான்` என்றது ஆன்மாவை. `தற்பரமே பசுபரம்` என்பது முன்மந்திர உரையில் கூறப்பட்டது.
இதனால், `முன்மந்திரதிற் கூறப்பட்ட நிலையை ஆன்மா அடைதற்கு வழி நின்மலாவத்தை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
தற்பர கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடக ராதியே.

பொழிப்புரை :

ஆன்மா தன்னைத்தான் வேறு `தத்துவங்கள் வேறு` என உணர்தல் ஆன்ம தரிசனமாம். அதன்பின், கருவிகள் நீங்கிய பின்பும் தனக்கு அறிவு நிகழக் காணுதலால் `எஞ்ஞான்றும் தனக்கு அறிவைத் தருவது சிவமே` என உணர்ந்து சிவனது அறிவையே தனது அறிவிற்குப் பற்றுக் கோடாக உணர்ந்து, அவன் அறிவினாலே அவனை நோக்குதல் சிவதரிசனமாகும். இவ்விடத்தில் ஆன்மசுத்தியும் ஓரளவு உடன் நிகழும். பின்பு அங்ஙனம் உணரப்பட்ட சிவனிடத்தில் தான் அடங்கி அவனேயாய் நிற்றல் சிவயோகமாகும். இந்நிலையில் ஆன்ம சுத்தி நிறைவுறும். அதனால், பின்பு பிரபஞ்சம் காட்சிப்படினும் ஆன்மா அதனைப் பற்றாது ஒதுக்கிவிடும். இம்மூன்று நிலைகளையும் தாண்டிய பொழுது, காலத்தைக் கடந்து நிற்றலால், `கால பரம்` என்னும், ஆன்மாவைக் கடந்து நிற்றலால், `தற்பரம்` என்றும் சொல்லப் படுகின்ற பசுபரம் தோன்றும். பின் அதனோடு ஒற்றுமைப் படுதல் நின்மல துரியாதீதமாகும். இஃது இம்மையில் அம்மையாம் ஆன்ம லாபமாகும். இவற்றிற்குப்பின் தேகம் நீங்கப் பரசிவத்தில் கலத்தல் பரதுரியாதீத மாகும். இவற்றை யெல்லாம் தெரிந்துணர்தல், அகரத்தை முதலாக உடைய எழுத்துக்களால் ஆகிய நூல்களினாலேயாம்.

குறிப்புரை :

தூயம் - தூய்மை. நன்மை, வன்மை, முதலிய சில பண்புப் பெயர்கள் மையீறு பெறாது, `நலம், வலம்` என்றாற் போல அம்மீறு பெற்று வருதல் பற்றி. `தூய்மை` என்பதை, `தூயம்` என்றார். இது நாயனாருடைய தனித்ததோர் ஆட்சி. ``கண்டதூய்மை`` என்பது `கண்டதனால் வரும் தூய்மை` எனப்பொருள் தந்து நின்றது. ஆன்ம தரிசனத்தையே, ``தற்கண்ட``என்றும், ஆன்ம சுத்தியின் முதல் நிலையையே ``தூய்மை`` என்றும், அதன் முடிநிலையை ``தன்னில் விலாசம்`` என்றும், சுத்தி பெற்ற ஆன்மாப் பின்னர் பிரபஞ்சத்தால் தாக்குண்ணாமையே ``தூடணம்`` என்றும் கூறினார். விலாசம் - விளக்கம். தன்னில் விலாசம் - சிவத்தில் வியாப்பியமாய் மாசுபற்றா திருக்கை பிறழ்தல் - மாறுதல். அஃது இங்கு நீங்குதல் மேற்று. `ஆன்ம சுத்தியையும் கடந்தது? என்றமையால், பின்னிரண்டடிகளில் ஆன்ம லாபம் கூறப்பட்டதாம். ``பரம்`` என்று அதன் தோற்றத்தை. ``கலந்து`` என்றது, `கலந்தபின்` என்றபடி. `கலந்துபின்` என்றதனால், கலத்தலும் பெறப்பட்டது. `கலந்த பின் உளதாம் பராதீதம்` என்க. இதனை ``அற்ற அதீதம்`` என்றது, `தேகம் நீங்கிய பின் நிகழும் அதீதம்` எனறபடி. நின் மலாவத்தையும், பராவத்தையும் அனுபவத்தில் சொல்லிறந்து நிற்பனவாயினும், அவற்றை முதற்கண் நூல்களால் உணர்ந்த வழியே முயற்சி கூடும் என்றற்கு ``நாடு அகராதி`` என்றார். நாடு, முதனிலைத் தொழிற்பெயர். அகராதி, அடையடுத்த ஆகுபெயர். `அகராதியால்` என உருபு விரிக்க.
இதனால், `முப்புரங்களில் தற்பரமாகிய பசுபரத்தை நூல்கள் வழியாக நுண்ணிதின் உணர்ந்து அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா
மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

பொழிப்புரை :

சிவன் நின்மல துரியாதீதத்தில் ஞேயமாய் வெளிப் பட்டுப் பின்பு அதனையும் நீங்கி நிற்பான். (அஃதாவது, `போக்கியப் பொருளாகாது நிற்பான்` என்றபடி. அவன் போக்கியப் பொருளாதல் பராவத்தைகளிலாம்) அந்நிலையில் உயிர் தற்போதத்தை இழந்து நிற்கும். ஞானத்தைப் பெற்று, அஞ்ஞானத்தினின்றும் நீங்கிய உயிரே, ஒன்றாகிய பதிப்பொருளில் அழுந்தி அதுவாகும். அங்ஙனம் ஆய பொழுது அந்த உயிரே `பரமான்மா` என்னும் பெயரைப் பெறும்.

குறிப்புரை :

``ஆகி அகன்றவன்`` என்றமையால் அவ்வதீதம் நின்மலாதீதமாயிற்று. இரண்டாம் அடியில் `அவ்வதீதத்துள்` என எடுத்துக்கொண்டுரைக்க. ``இருள்`` என்றது வாதனை அளவாய் நிற்கும் ஆணவ மலத்தை அதுவும் நீங்குதல், தேகம் நீங்கிய பின்பாம். ஆகவே, `இருள்விட்ட மன்னுயிர்`` என்றது பராதீதத்தை அடைந்த வுயிரையாம். பரான்மாவை அடைந்த பொழுது சீவான்மாவும் `பரமான்மா` எனப் பெயர்பெறும் - என்பது சர்வஞ்ஞானோத் தரத்திலும் கூறப்பட்டது. ``பர உயிர் தானே`` என்பதை, `தான் பர உயிரே` என மாற்றியுரைக்க.
இதனால், `சகல கேவலங்களில் பாலில் நெய்போல் விளங்காமலும், சுத்தத்தில் நின்மலாவத்தையில் பாசி படுகுட்ட நீர் போல ஒருகால் விளங்கியும், மற்றொருகால் விளங்காதும், பரா வத்தையில் தயிரில் நெய்போல விளங்கியும் நிற்பது பரம் என்பது கூறப்பட்டது. அந்நிலைகளில் ஆன்மா எய்தும் பயனும் விளங்குதற் பொருட்டு உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. வியாபகமான பேரொளியாயும், அப்பொழுதே உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் மி நுண்ணிய விளக்காயும் உள்ளது. அஃது ஏனைப் பொருள்கள்போல எல்லார்க்கும் இனிது விளங்கித் தோன்றாது, ஒரு சிலர்க்கே விளங்கித் தோன்றுவதாய் நின்றே, கோட்டம் இன்றி, நடுவு நிலையதாயே உள்ளது. காலத்தைக் கடந்ததாகிய அந்தப் பரம் பொருளின் இயல்புகளை உணர்ந்தவர் தவம் செய்தவராவர்.

குறிப்புரை :

`ஆதியும் அந்தமும் இல்லாதது` என வேறு கூறற் பாலதனை ஒன்றாக உடம்பொடு புணர்த்துக் கூறினார். ``அரும்பதி`` என்பதனை முதலிற் கொள்க. ``பரஞ்சுடர்`` என்பதில் பரம் - மிகு நுண்மை. பரபோதம் - பரத்தை உணரும் போதம். புண்ணியம், சிவபுண்ணியம். இதுவே தவம் ஆதல் அறிக.
இதனால், பரலக்கணம் மற்றும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

துரியங் கடந்து துரியாதீ தத்தே
அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே
தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

பொழிப்புரை :

யோகாவத்தையில், அனாகதம், விசுத்தி ஆஞ்ஞை, பிரமரந்திரம், துவாதசாந்தம் என்பன முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகட்குரிய தானங்க -ளாகும். அவற்றுள் துரியத்தானமாகிய பிரமரந்திரத்தையும் கடந்து, அதீதத் தானமாகிய துவாத சாந்தத்தில், அரிதாகிய அம்பலத்தில் பொருந்தி ஆடுபவன் பெரிய பெருமான்; மகாதேவன் அந் நடனத்தைக் காணுதல் பிரணவ கலைகளின் வழியாகவே கூடும் ஆகையால், அவ்வழியால் அக்கூத்தில் அவனைக் காணவல்லவர்க்கு மலக்குற்றங்கள் இல்லையாகும்.

குறிப்புரை :

துரியம், துரியாதீதம் என்பன அவற்றிற்குரிய இடங்களைக் குறித்தன. ``அம்பலத்து`` என்பதை, ``அரிய`` என்பதன் பின்னர்க் கூட்டுக. அரிய அம்பலம் - சிதாகாசம்; ``இயோகம்`` என்பதில் இகரம் விரித்தல். யோகம் - கூடுதல். சேர்தல். பிரணவக் கூத்து - பிரணவத்தின் வழியாக அடையப்படும் கூத்து. `கூபத்தே` என்பது பாடம் அன்று. ஏகாரம் பிரிநிலை அதனால் பிற வழிகளால் அடைதல் பிரிக்கப்பட்டது. ``கூத்தே`` என்பதில் ஏழாவது விரிக்க.
இதனால், `பரபோதத்தால் உண்மையாக அடையத்தக்க பரம்பொருள், பிரணவ யோகத்தால் பொதுவாக - ஒருவாறாக அடையப்படும்` என்பது கூறப்பட்டது. அடைந்தவர் பெறும் பயனும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

பொழிப்புரை :

மாணிக்க மணியின் செந்நிறம் முன் வந்து நின்ற போது, பளிங்கின் வெண்ணிறம் அந்தச் செந்நிறமாகவே திரிந்து காணப்படுதல் போல, வெளிப்பட்டு நின்ற அந்த நிலையான பரம் பொருள் முன்வந்து நின்றபொழுது ஆன்மாத் தன்வண்ணம் அப்பரம்பொருள் வண்ணமேயாக, அதனுள் அடங்கி நிற்கும் அப்பொழுது அதுகாறும் நிலையற்ற பிரபஞ்சத்தை நுகர்ந்து வந்த ஆன்ம ஞானம் பாச ஞானமாய் இருந்த நிலை அற்றொழியும். அவ்வொழிவில் சிவம் மேருமலையாய் நிற்க. ஆன்மா அந்த மேருமலையை அடுத்த காக்கையாய் இருக்கும்.

குறிப்புரை :

`சிவமேயாய் நிற்கும்` என்றபடி. ``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே``8 என்பதனால் இவ்வுவமப் பொருளை உணர்ந்து கொள்க. ``செம்மை, சுவேதம்`` என வாளா கூறினாராயினும், `மாணிக்கத்தினது செம்மை`` என்பதும், `பளிங்கினது வெண்மை` என்பதும் குறிப்பால் கொள்ளக் கிடந்தன. `மெய், பொய்` என்பன நிலை நிலையாமைகளைக் குறித்தன. `போதப் பாழ்` என இயையும். செம்மை - திரிபின்மை. சிவ மேரு, உருவகம். கொடி - காக்கை. ``ஆகும்`` என்றும் உருவகத்தையே தோற்றி நின்றது.
இதனால், `பரம்பொருள் உயிர்களைத் தன்வண்ணம் ஆக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வைச்ச கலாதி வருதத் துவம்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து)
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை :

எனக்குக் குருவாகிய நந்திபெருமான் சிவபெருமானால் எனக்கென என்னோடு கூட்டி வைத்த கலை முதல் நிலம் ஈறாக வருகின்ற தத்துவங்கள் எல்லாம் தம்தன்மை கெட்டுச் சிவ கரணங்களாகும் படியும், பின்பு அத்தத்துவங்கட்கு முதலாகிய அசுத்தமாயை. அதன் காரியங்களைச் செலுத்தி நிற்கின்ற கருவிகட்கு முதலாகிய சுத்தமாயை ஆகிய துன்பத்தைத் தரும் இருமாயைகளும் என்னைப் பொறுத்த மட்டில் காரண மாதற்றன்மை அடியோடு கெடும்படியும் செய்து, அதனால், யான் தடத்தசிவத்திற்கு மேலேயுள்ள சொரூபசிவத்தைத் தலைப்படும்படி. `இனியும் பிறவி வருமோ` என்னும் அச்சம் நிகழாதவாறு என்னை ஆட்கொண்டருளினார்.

குறிப்புரை :

ஏகாரம் தேற்றம். அதனால், `சிவன் இவ்வாறு சுத்தான்ம சைதன்னியத்தில் அதுதானேயாகும்படி ஆவேசித்து நின்று. அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தந்து, அது வழியாக வீடுபேற்றைத் தரும்` என்பது தோற்றுவிக்கப்பட்டது சிவஞான போதத்திலும் இவ்வாறே.
``இவ்வான்மாக்க ளுக்குத் தமது
முதல்தானே குருவுமாய் உணர்த்தும்
என்றது,
அவன் அன்னிய மின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்`*
எனக் கூறப்பட்டது வெச்ச - வெச்சென்ற; `கொடிய` என்றபடி உச்சம் - மிக மேலேயுள்ள இடம்.
இதனால், பரம்பொருள் உயிர்கட்கு முடிநிலைப் பயனை அருளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

என்னை யறிய இசைவித்த என்நந்தி
என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியில் சொருபம் புறப்படத்
தன்னை யளித்தனன் தற்பர மாகவே.

பொழிப்புரை :

எனக்குக் குருவாகிய நந்திபெருமான், முதலில் என்னை யான் அறியுமாறு அறிவித்தருளினார். (கருவிக் கூட்டத்தி -னின்றும் என்னை வேறாக யான் உணரும்படி செய்தார்.) அதனால், என்னை யான் அறிந்தபின்பு, என்னையான் அறியாது நிற்கின்ற ஓர் இடத்திலே என்னைச் செலுத்தினார். (சிவபோத மிகுதியால் சீவ போதம் தோன்றாது நிற்கின்ற திருவருள் நிலையிலே செலுத்தினார்.) பின்னர் அங்ஙனம் நின்ற அந்த ஒளியினாலே அவ்வொளிக்கு முதலாகிய பொருள் புலப்பட்டது. புலப்பட்டபின் யான் அந்த மேலான பொருளே ஆகும்படி அதனை என் கைக்குள் வருமாறு அளித்தார்.

குறிப்புரை :

`என்னை அறிய இசைவித்தது`, ஆன்ம தரிசனம்` என்றும், `என்னை அறியாதவிடத்து உய்த்தது`, `ஆன்ம சுத்தி` என்றும், `சொரூபம் புறப்படத் தன்னை அளித்தது`, `ஆன்ம லாபம்` என்றும் உணர்க. முன் மந்திரத்தில் கூறியன தத்துவ ரூபம் முதல் ஆன்ம ரூபம் முடிவாக உள்ளன ஆகையால், அவற்றிற்குமேலே எஞ்சியுள்ள பயன்களைப் பரம்பொருள் ஆசான் மூர்த்தியாய் வந்து அருளுதல் இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள்
அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

சிவன்,
``நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலாப், பகலோன்,
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்``3
எனவும்,
``இருநிலனாய்த், தீயாகி, நீரு மாகி,
இயமான னாய், எறியும் காற்றா மாகி,
அருநிலைய திங்களாய், ஞாயி றாகி,
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி
... ... ... எம்மடிகள் நின்ற வாறே``l
எனவும் அருளிச் செய்தவாறு, ஐம்பெரும்பூதங்களும், `ஞாயிறு` திங்கள், என்னும் இரு சுடர்களும், ஆன்மாவும் ஆகிய எட்டினையும் தனக்குத் திருமேனியாகும்படி அவைகளில் வேறின்றிக் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவனைப் போற்றி உய்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பரந்தும் சுருங்கியும் நின்றான்` என இயையும். பரத்தல், பெரியதிற் பெரியனாய் அளவின்றி விரிந்து நிற்றல். சுருங்கல், சிறியதிற் சிறியனாய் நுணுகி எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்றல்.
``அணோரணீயாந் ஹதோ மஹீயாந்``
என உபநிடதம் கூறும்.l செய்யுள் நோக்கி, எட்டுப்பொருள்களையும் முறை பிறழ வைத்தார். நிரந்த - எங்கும் நிறைந்த அரத்தம் - சிவப்பு. அது பண்பாகு பெயராய், அந்நிறத்தையுடைய தீயைக் குறித்தது. `அரத்தம், தரத்த` என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. தரம் - ஏனை ஏழிற்கும் மேலான வியாபகம். அங்ஙனமான தன்மையுடைமை பற்றி ஆன்மாவை உவமையாகுபெயரால் ``விசும்பு`` என்றார். ``அரன்`` என்பதை முதலிற் கொள்க. நெறியாய் - முறையாக. தாங்கி நிற்றல். அவற்றினுள் நிறைந்து அவற்றை நிலைத்திருக்கச் செய்தல், அரன், பார் முதலியவற்றுள் முறையாய் அவையாகி, விசும்பு ஒன்றைத் தாங்கி நின்றான்` எனவினை முடிக்க. சிவனுக்கு ஆன்மாவோடே நேர்த்தொடர்பு. பின்பு அதுவழியாகவே ஏனையவற்றோடு தொடர்பு. அது பற்றியே, விசும்பு ஒன்றையே சிவன் தாங்கி நிற்பதாகக் கூறினார்.
இதனால், பரம்பொருள் அட்ட மூர்த்தமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல்
உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.

பொழிப்புரை :

`தத்` பதப் பொருளாகிய சிவன், தனது உண்மை நிலையில் உள்ள பொழுது அவனின் வேறாகாது அவனோடு ஒன்றாகியே நிற்கும் சத்தியும், `பரை` என நிற்கும். அஃதாவது யாதொன்றனையும் பற்றாது, தான் தனியே மேலானதாய் நிற்கும் என்பதாம். ``சத்தியும்`` என்னும் உம்மையால், சத்தியையுடைய சத்திமானாகிய சிவனும் அப்பொழுது `பரன்` என நிற்றல் பெறப்பட்டது. `பரசிவனாய் நிற்பன்` என்க. அந்தச் சத்தியே சிவனுக்கு வடிவம். என்றது, `சிவம் சத்தியே மயமானது` என்றபடி. இனி அந்தச் சத்தி, அருள் காரணமாக உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலாகிய நாடகத்தை மேற்கொண்டு செய்யும் பொழுது, தன்னிச்சையாகவே இச்சை, ஞானம், கிரியை முதலிய வகைகளாய்ப் பலவாகி, அவ்வைந் தொழிலை இடையறாது நடத்தும்.

குறிப்புரை :

``தத்`` என்பதை முதலிற் கொள்க. `சத்து, உண்மை` என்பன ஒரு பொருட்சொற்கள். இதுவே, `சொரூபம்` எனப்படும். `பரம்பொருள் எவ்வாற்றானும் இருமையையுடையதன்று; முற்றிலும் ஒருமையையே உடையது` என்பர் மாயாவாதிகள். `அவ்வாறன்றிப் பரம்பொருள் பொருளால் ஒன்றாயினும், குண குணித் தன்மையால் `சிவம், சத்தி` எனத்தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்கும்` என்பது சித்தாந்தம். இது, ஞாயிறு பொருளால் ஒன்றாயினும் குணகுணித் தன்மையால், `கதிரவனும், கதிரும்` எனத் தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல் போல்வதாகும்.
சிவன் உயிர்களையும், மாயையையும் ஒரு கருத்துப் பற்றிச் சிறப்பாக நோக்காது, பொதுவாக அறிந்து மட்டும் நிற்றலே அவனது `தன்னியல்பு`, அல்லது `சொரூப லக்கணம்` எனப்படும். அந்நிலையில் அவன் `பர சிவன்` அல்லது `பரம சிவன்` எனப்படுவான். `சுத்த சிவன்` என்றும் சொல்வதுண்டு. அப்பொழுது அவனது சத்தியும் `பராசத்தி` எனப்படும். பரா - மேலானவள் அந்நிலையில் சத்தி செயலாற்றுதல் இல்லை. இதனையே, சத்தின் நிலையினில் தானான சத்தியும் - பரையாய் நிற்கும் என்றார். `இன்` வேண்டாவழிச் சாரியை. ``தானான`` என்றது `தாதான்மியமான` என்றபடி. `பரா` என நின்ற சத்தி உயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்ய விரும்பிமாயையைக் காரியப்படுத்த நினைக்கும் பொழுது அதில் ஒரு சிறிய கூறு, (`ஆயிரத்தில் ஒரு கூறு` என்பர்.) `ஆதி சத்தி` எனப் பிரிந்து நிற்கும். இஃது உயிர்களை கன்மம் மாயைகளினுட் செலுத்தலால், `திரோதான சத்தி` எனப்படும். திரோதானகரி, `திரோதாயி` என்னும் பெயர்களாலும் குறிக்கப்படும். மலங்களின் வழி நிற்றல் பற்றி, இதனையும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறுவர். இவ்வாறு `ஆதி` என நின்ற அது பின், `ஞானம், இச்சை, கிரியை` என மூன்றாகிப் பின் பலவாகும். அதனையே, ``ஞானாதி பேதமாய்`` என்றார். இவ்வாறு அது பலவாவது, தன்னிச்சை யாலன்றிப் பிறரால் அன்று. அதனையே, ``உய்த்தகும் இச்சையில்`` என்றார். `உய்த்தல்தகும்` என்பது, ``உய்த்தகும்`` என நின்றது. `இங்ஙனமாகி ஐந்தொழிலை அது நடத்துதற்கு முடிவில்லை` என்றற்கு, ``நித்தம் நடத்தும்`` என்றும், `இதனால் அது தன்னியல்பினின்று வேறுபடுதல் இல்லை` என்றற்கு, `நடிக்கும்` என்றும், `இவ்வாறு நடித்தற்குக் காரணம் உயிர்கள் மாட்டு வைத்த பெரிய கருணையே யன்றிப் பிறிதில்லை` என்றற்கு ``மா நேயத்தே`` என்றும் கூறினார். `நேயத்தானே` என உருபு விரிக்க. சத்தி `ஆதி சத்தி` முதலிய பெயர்களைப் பெற்றுச் செயலாற்றும் பொழுது, சிவனும் அந்நிலைகளில் எல்லாம் அவற்றிற்கு ஏற்ப ``ஆதி சிவன்`` முதலாகப் பல பெயர்களைப் பெற்று நிற்பன். பரமசிவன், `சொரூப சிவன்` எனவும், ஏனைய ஆதி சிவன் முதலியோர் `தடத்த சிவர்` எனவும் அறிக. இவ்வனைத்துச் சிவமும், சத்தியும் பெயர், உருவம், தொழில் என்னும் இவற்றால் வேறு வேறாகச் சொல்லப் படுகின்றனவேயன்றிப் பொருளால் வேறுபாடு சிறிதும் இன்றி, ஒன்றேயாம்.
``சத்திதான் பலவோ என்னில்,
தான்ஒன்றே; அனேக மாக
வைத்திடும், காரியத்தால்``*
``சத்தன் வேண்டிற்று எல்லாமாம் சத்தி தானே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், பரம்பொருளின் இயல்பு பற்றி மாயாவாதி முதலியோர் கூறும் கூற்றுக்களை மறுத்துச் சித்தாந்தம் உணர்த்தப்பட்டது.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``l
எனத்திருவருட் பயனிலும் இவ்வியல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள்
பாலிய விந்து பரஉட் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச்
சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய சத்தி மேல், கீழ், புடை என்னும் இடங்களையும், மெய், வாய், கண், நா, மூக்கு என்னும் ஐம் பொறிகளையும், விந்து, நாதம், பர நாதம் என்னும் வாக்குகளையும், அவைகட்குப் பற்றுக் கோடாய் நின்று அவற்றின் பெயர்களையே தாமும் பெற்று நிற்கின்ற சுத்த தத்துவங்களையும் இங்ஙனம் பாகுபட்ட பல பொருள்களை உண்டாக்கி அவற்றால் எல்லாம் சரியை முதலிய நான்கினாலும் ஞானத்தை வருவித்து, இவ்வாறெல்லாம் அஞ் ஞானத்திற் கிடக்கின்ற உயிர்களை ஈடேற்றுதலாகிய செயல்களை உடையதாய் நிற்கும்.

குறிப்புரை :

`ஆக்கப்படும் பொருள்கள் அளவில்லன` என்பது தோன்றுதற் பொருட்டுச் சிலவற்றை எடுத்து எண்ணிக் காட்டினாலே யன்றி, அனைத்தையும் எடுத்துக் கூறிற்றிலர். ஆகவே, அவற்றை உபலக்கணமாகக்கொண்டு, ஏனையவற்றையும் அறிதல் வேண்டும். பாலிய - பாகுபட்ட. கோலிய - வரம்பு செய்யப்பட்ட. ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. `நான்கவற்றால்` என உருபு விரிக்க. சீலம் - தூய்மை. `தூய்மை இலா` எனவே , மாசுடைமை பெறப்பட்டது. அணு - உயிர். அணுச்செய்தி - அணுவைப் பற்றிய செயல்.
இதனால், முன் மந்திரத்தில், `நித்தம் நடத்தும்`` எனத் தொகுத்துக் கூறப்பட்ட செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா
ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், `அணு` எனக் கூறப்பட்ட உயிரின் தன்மை தனியானது. ஆகவே, காணப்படாது நிற்கின்ற அந்த உயிருக்குக் காணப்படுகின்ற இந்த உடம்பில் உள்ள ஆறு அத்துவாக் -களும் உபாதிகளேயாம். அஃதாவது, அதனை மாசுபடுத்துகின்ற வேற்றுப் பொருள்களேயாம். அதனால், முப்பத்தாறு தத்துவங்களும் உயிர் தான் பெறுதற்குரிய மேலான ஒளியை அடைதற்குத் தூண்டு கின்ற சிறிய ஒளியாய் உதவுவதால், மாயையாலே உயிர் உறுதல், உயிர்த்தல், உண்டல் முதலியவைகளைச் செய்து, பின் அதிலிருந்து நீங்கியும் நிற்கும்.

குறிப்புரை :

`அதன் தன்மை வேறாம்` எனவும், `ஆறு உபாதியாம்` எனவும் மாறிக் கூட்டுக. `ஆறும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று. மேலும் - வேறாதல் மேலும், `ஆறும் உபாதியாம்` என முடிக்க. ஆறத்துவாக்களில் தத்துவங்கள் சிறந்தமை பற்றி அவற்றையே வேறெடுத்துக் கூறினார். `பரவொளிக்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. அதனை, `பர வொளியை அடைதற்கு` என விரிக்க. `பிரகாசமாக` என்பதன் ஈறு குறைந்தது. `உறா` என்பது நீட்டல் பெற்றது. `உற்று, உயிர்த்து, உண்டு` என்றதனால், `கண்டு, கேட்டு` என்பனவும் கொள்ளப்படும். `மாயை -யாலே` என உருபு விரித்து `உறா, உயிர்த்து, உண்டு உறங்கும்` என முடிக்க. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் மாயா காரியங்களால் வருதலால், `மாயையால் உயிர் இவைகளை நுகரும்` என்றார். உறங்குதல் - சுழுத்தி நிலையை அடைதல். `உறா` முதலியவற்றிற்கும், உறங்குதலுக்கும், `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. `மாயையும் உயிர்க்கு உபாதியேயாயினும், நோய்க்கு மருந்துபோல, அஃது உயிர்க்கு நலம் பயக்கும்` என்பது ``அனைத்தாகும் தத்துவம்`` என்பது முதலாகக் கூறப்பட்ட பொருள்.
இதனால், முன் மந்திரத்தில் ``அணுச் செய்தி`` எனக் கூறப்பட்ட பொருள் அன்னது ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி
சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும்
தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு)
அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.

பொழிப்புரை :

`தத்` பதப் பொருளாகிய பதி, தன்னிலையில், நிலையான ஒப்பற்ற, முதன்மை வாய்ந்த பேரறிவே எனினும், அதுவே உயிர்களை நோக்கி இயங்கும் பொதுநிலையில் உயிர்களை உலகத்தை நுகரும்படி செய்கின்ற பாச அறிவாய் நிற்கும். (`திரோதான சத்தியாய் நிற்கும்` என்றாம். ) அந்தப் பாச அறிவால் உயிர் உலகத்தை நுகர்ந்து வருங்காலத்தில் அந்தப் பாச அறிவும், அதன் அறிவாகிய பசு அறிவும் நீங்கப் பெற்ற பொழுது, முன்சொன்ன பேரொளியிற்கலந்து, அதற்கு அப்பாலும்போய், முன்னை நிலையெல்லாம் நீங்கப்பெற்று நிற்கும். அப்பொழுது அதற்கு ஒத்ததும், உயர்ந்ததும் இல்லாத ஓர் உயர்வை அஃது அடையும்.

குறிப்புரை :

`அச் சிற்பரம்` எனச் சுட்டு வருவிக்க. ``போதம்`` என்பதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. `தொல் பதம்` என்பது, எதுகை நோக்கி, ``தொற்பதம்`` எனத் திரிந்து நின்று. பதம் - நிலைமை. தீர் பாழ் - தீர்ந்ததாகிய பாழ். இது பின்னர், `போதப் பாழ்` எனக் குறிக்கப்படும். `அப்புறமாய்` என ஆக்கமும், ``இங்கு`` என்பதன்பின், `அதற்கு` என்பதும் வருவிக்க.
இதனால், சிவசத்தி திரோதான சத்தியாய் நின்று செயற்படுதலால் வரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக்
கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.

பொழிப்புரை :

முதல் நூல்களாகிய வேதாகமங்கள், சில இடங்களில் சுத்த மாயையை, `சிவனுக்குத் திருமேனி` எனக் கூறும். அஃது உபசாரமே.
[``சுத்ததத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவ மாகும்;
நித்தம்என் றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே``*
என்னும் சிவஞான சித்தியையும், அதன் உரையையும் காண்க.] ஏனெனில், சிவன் துரியத்தையும் கடந்து அதீதமூர்த்தி. (நின்மல துரியம் வரையிலே சுத்தமாயை உள்ளது) தத்துவசுத்தி, ஆன்மரூபம் ஆகியவற்றைக் கடந்து ஆன்ம தரிசனத்தைப் பெற்ற ஆன்மாவும் சிவ தரிசன சிவயோகங்களால் ஆன்ம சுத்தியை எய்தாது, காரணோபாதி யாகிய சுத்தமாயையில் இருப்பானாயின் அவனது நிலையை நன்கு ஆராயுமிடத்து அவன் தூய்மை எய்தியவன் ஆகான்.

குறிப்புரை :

``காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால்8 என எதிர்மறை முகத்தானும், உடம்பாட்டு முகத்தானும் தெளிவுபடக் கூறுதலின் சிவனுக்குச் சத்தியே - அருளே திருமேனியாவதல்லது, மாயை திருமேனியாகாது.
``அரிதரு கண்ணி யானை ஒருபாக மாக
அருள்கா ரணத்தில் வருவார்``
என்பதே திருமுறை மொழி. இதனை,
``உருஅருள்; குணங்களோடும்,
உணர்வருள் உருவில் தோன்றும்
கருமமும் அருள் அரன்றன்
கரசர ணாதி சாங்கம்
தரும்அருள்; உபாங்க மெல்லாந்
தானருள்; தனக்கொன் றின்றி,
அருளுரு உயிருக் கென்றே
ஆக்கினன்; அசிந்த னன்றே``*
எனச் சாத்திரமும் பலபடியால் வலியுறுத்தி ஓதுதல் காண்க. இங்ஙனமாகவே, சிவன் அசுத்த மாயையைப் போலச் சுத்த மாயையை விலக்காமல் அதிட்டித்து (இடமாகக் கொண்டு) நிற்றல் பற்றிச் சில இடங்களில் அதனைச் சிவனுக்குத் திருமேனியாக உபசரித்துக் கூறும். ஆகவே, சிவனுக்கு உண்மையில் திருமேனியாய் அமைவது அவனது சத்தியே என்பதாம்.
``ஆகாச சரீரம் பிரஹ்ம``
என்னும் உபநிடத மொழியில் ``ஆகாசம்`` என்பதும் சிதாகாசமாகிய சத்தி என்பதே சித்தாந்தம். ``பர வான்`` என்றது இங்குச் சுத்த மாயையை. காரணோபாதியாவதும் அதுவே. ``பரன்`` என்றது, தத்துவங்கடந்து தன்னைத்தான் கண்டமையால் பாசங்களின் நீங்கினவனாகிய ஆன்மாவை. ``பரனும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், முன் மந்திரத்தில், ``சுந்தரச் சோதிபுக்கு அப்புறமாய் அறுதல்` எனக் கூறியது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து)
அளியா கியதற் பரங்காண் அவன்றான்
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

பொழிப்புரை :

`மாயா காரியமாகிய உலகப்பொருள் அனைத்திலுமே பரமசிவன் அருள் காரணமாக நிறைந்திருக்கின்றான்` என வேதாகமங்கள் கூறும். அவ்வாறு கூறுவதற்கும், `அவனது சத்தியே அவ்வாறு நிறைந்துள்ளது` என்பதே கருத்து. பூதாகாயம் ஏனைப் பூதங்களில் எல்லாம் நிறைந்திருத்தல் போல அனைத்துலகங் களிலும் நிறைந்திருத்தல் பற்றி அச்சத்தி, `பரவெளி - பராகாயம்` எனக் கூறப்படுகின்றது. அந்தச்சத்தியே, உண்மையில் பரமனுக்கு திருமேனியாகும்.

குறிப்புரை :

அனைவரும் ஆறந்த ஐம்பூதங்களைக் கூறும் முகத்தால் உலகப்பொருள் அனைத்தையும் கொள்ளவைத்தற்கு அவற்றைத் தோற்ற முறையில் வைத்து எண்ணிக் காட்டினார். `நின்றது பரம்` என இயையும். ``அளியாகியபரம்`` என்றது உடம்பொடு புணர்ந்தது. காண், முன்னிலையசை ``அவன்றான் சத்தி`` என்றது, `சத்தி அவனின் வேறானதன்று`` என்றதாம். `பரம் பொருள் தன்னிலையில் தான் நிற்கும் பொழுது சிவம் என்றும், உலகத்தோடு ஒன்றாய், வேறாய், உடனாய்த் தொடர்பு பட்டு நிற்கும் பொழுது சத்தி என்றும், ஐந்தொழில் செய்யும் பொழுது பதி என்றும் பெயர்பெறும்` என்னும் ஆகமப்பொருளை யுணர்த்துவார். `வெளி, கால் ... ... ... நின்ற வெளியாய சத்தி` என்றார்.
இதனால், முன் மந்திரத்தில், `பரவான் உடல் - என்றல் உபசாரமாயின், உண்மை யாது` என்றெழுந்த அவாய்நிலை நிரப்பப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

மேருவி னோடே விரிகதிர் மண்டிலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டா பிறிதில்லை தானே.

பொழிப்புரை :

இடைகலை பிங்கலைகளை, `சந்திர சூரியர் வழி` எனக் கூறுதலால், அவ்வழியாக இயங்கும் பிராண வாயும் வலம் வரும் சுழுமுனை நாடியை, `மகாமேரு` என்றலும், அந்தச் சுழுமுனை நாடியின் நடுப் பாகமாகிய அநாகத விசுத்தி ஆதாரங்களை, `சூரிய மண்டலம்` என்றலும் யோக நூல் வழக்கு. அனாகதமாகிய இருதயம் பூசைத் தானமாகக் கொள்ளப்படும். அதனால், சுழுமுனை வழியாகச் சென்று இருதயத்தில் சிவபெருமானை நன்றாக நினைந்து வழிபடு பவனை, `மேருவினோடே சென்று விரிகதிர் மண்டிலத்தில் (சிவனை) ஆரநினையும் அருந்தவயோகி` (`சென்று`) என ஒரு சொல் வருவித்து, `விரிகதிர் மண்டிலத்தில்` என உருபு விரித்து கொள்க.) ``செய்யின்`` என்பது `செய்வதனால்` எனப் பொருள்தந்து நின்றது. ஆகவே, `அந்த அருந்தவ யோகிக்குச் சிவனருள் தானாகவே கிடைக்கும்` என்றும், `அவன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் வேறொன்றும் இல்லை யாகையால் அந்நெறியைவிட்டு அவன் விலகுதல் வேண்டா` என்றும் கூறினார்.

குறிப்புரை :

இதனால், `இங்குக் கூறப்பட்ட இலக்கணங்களையுடைய பரம்பொருளை அடைதற்கு யோகம் சிறந்த சாதனம்` எனக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம்
இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.

பொழிப்புரை :

[ஆன்மா, `சீவன்` எனப்படுவது பாசநிலையில் ஆகலின், முதற்கண் சொல்லப்பட்ட நனவு, சகலத்தில் கேவலமாய் நிகழும். கீழாலவத்தையிலும், சகலத்தில் சகலமாய் நிகழும் மத்தியாலவத்தையிலும் நிகழும் நனவுகளாம்.] கீழாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியம் ஆணவ அனுபவம் மிகுவது ஆதலாலும், மத்தியாலத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய வற்றில் நிகழும். துரியம் ஐம்புல அனுபவம் மிகுவது ஆதலாலும் அவையிரண்டும் சீவ துரியமாம். (இவை தொடக்கத்தில் நிகழ்வன. மேலாலவத்தையாகிய யோக துரியமும் சீவதுரியமே) இறுதியில் நிகழும் பராவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் உயிர் பாசப்பற்று இன்றிப் பரம்பொருள் அனுபவமே மிகப் பெற்றிருத்தலால் அது பர துரியமாம். (`இஃது இலய முத்திநிலை` என்பது மேலே குறிப்பிடப்பட்டது.) இடையில் மத்தியாலவத்தைக்கு மேல் நிகழும் மேலாலவத்தையாகிய யோகாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும், நின்மல சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும் உலகியல் உணர்வு முற்ற நீங்காத நிலையில் சிவானுபவம் மிகப் பெறுவன ஆதலின் அவை பரதுரியம் ஆகாது சிவதுரியமாம். இவற்றுள் சிவதுரியமும், பர துரியமுமே `தத்துவமசி` மகா வாக்கிய அனுபவங்களாம்.

குறிப்புரை :

தனது - பரம் பொருளினது. இன - இன்ன `இவை` என்றபடி `இவை` என்பது அண்மைச் சுட்டாகலின், அது பின்னிரண்டு துரியங்களையே குறித்தது. பதத்து ஈடு - பத அனுபவத்தில் இடுவன.
இதனால், `முத்துரியங்களாவன இவை` எனச் சுட்டியும், விளக்கியும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம்
தானாம் துரிய நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா
வானான மூன்று துரியத் தணுகுமே.

பொழிப்புரை :

சீவன் சீவனாகவே இருக்கின்ற மத்தியாலவத்தைச் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் ஆன்மா, `துவம்` பதப் பொருளாய் இருக்கும். ஆன்மாச் சிவமாந்தன்மையைப் பெறுகின்ற நின்மல சாக்கிரம், பராசாக்கிரம் முதலியவற்றில் நிகழ்கின்ற துரியங்களில் ஆன்மா சிவமாகி, `தத்` பொருளாய் இருக்கும். ஆகவே, இவ்விரு துரியங்களிலும் ஆன்மாப் பாசம் அற்றதாம். சகலத்தில் கேவலத்திற்கு மேலாக நிகழும் மூன்று துரியங்களிலும் ஆன்மா இவ்வாறான நிலைகளை அடையும்.

குறிப்புரை :

``தான்`` மூன்றில் முன்னது சீவனையும் ஏனையவை பரத்தையும் உணர்த்தின. ``தான்மூன்றில்`` என்பதை `மூன்றில் தான்` என மாற்றியுரைக்க. ``அரு நனா`` என்றது, எளிதில் இயல்பாக நிகழாது அரிய திருவருளால் நிகழ்வது என நின்மல சாக்கிர பரசக்கிரங்களைக் குறித்தன. ``அருநனாவான்`` என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத்திரித்துக் கொள்க. ``காலத்தினாற் செய்த நன்றி``l என்பதிற் போல,
இதனால், `முத்துரியங்களுள் சீவ துரியம் பெத்த துரியமும் ஏனைய துரியங்கள் முத்திதுரியமும் ஆம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அணுவின் துரியத்து நான்கும்அ தாகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சார் முத் துரியக்
கணுவிரு நான்கும் கலந்தஈ ரைந்தே.

பொழிப்புரை :

பெத்த துரியம் அனைத்தையும் `சீவ துரியம்` என ஒன்றாகவும் முத்தி துரியம் இரண்டையும் ஒன்றாகவும் ஆக்க. அவ்விரண்டிலும் துரியம் முதலாகக் கீழ் நோக்க உளவாம் அவத்தைகள் இருநான்கு; எட்டு. இனி இவ்விரண்டிலும் உள்ள துரியா தீதங்களைக் கூட்ட அவத்தைகள் பத்தாகும். இவைகளில் பெத்தா வத்தை ஐந்தில் ஆன்மாக்கீழ் நிலையதாயும், முத்தியவத்தை ஐந்தில் மேல்நிலையை எய்தியும் இருக்கும்.

குறிப்புரை :

`அது வாகி` என்பதில் முற்றியலுகரம் கெட்டு ``அதாகி`` என நின்றது. பணிதல் - கீழ்போதல். தணிவு - தாழ்தல். பரமாதல் - மேற் போதல். சார், முதனிலைத் தொழிற் பெயர். ``பரமாகி`` என்னும் எச்சம் இதனோடே முடிந்தது. கணு - சேர்க்கை. சேர்க்கையால் வருவதை, `சேர்க்கை` என்றார். `கணுவில்` என உருபு விரிக்க. `சீவ துரிய பரதுரிய அவத்தைகளின் தொகை பத்து` எனச் சுருங்கக் கூறிப் போகாமல் இங்ஙனம் விரிவாகக் கூறியது, `ஓர் ஐந்து தாழ்வுடையன; மற்றோர் ஐந்து உயர்வுடையன` என்பது உணர்த்துதற்கும்; அதீதத்தைக் கூட்டாமல் துரியத்தோடே முடித்து. அவத்தைகளை `நான்கு` எனவும், `எட்டு` எனவும் தொகை கூறுதலும் உண்டு என்பது உணர்த் துதற்குமாம் என்க.
இதனால், முத்துரியங்களது தராதரங்கள் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
நேரந்த மாக நெறிவழி யேசென்று
பாரந்த மான பராபரத் தைக்கியத்(து)
ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.

பொழிப்புரை :

கீழாலவத்தை ஐந்து, மத்தியாலவத்தை ஐந்து, மேலாலவத்தை ஐந்து இம் மூவைந்து பதினைந்தவத்தைகளை `சீவாவத்தை` என ஓரைந்தாகவும், நின்மலாவத்தை ஐந்து, பராவத்தை ஐந்து இவ்வீரைந்தையும் `பராவத்தை ஐந்து` என ஓரைந்தாகவும் தொகுக்க அவத்தைகள் ஈரைந்தாகி, `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரியங்களும் அவற்றுள்ளே அடங்கும். அவ் அவத்தைகளை மேலாலவத்தைச் சாக்கிரம் முதலாகத் தொடங்கிப் படி முறையாக மேலே மேலே ஏறிச்சென்று, முடிவில் எல்லாமாய் உள்ள பரம்பொருளில் ஒன்று பட்டு, முடிந்த பயனைப் பெற்று, அதற்கு முன்னே நிகழ்ந்த யோக துரியம், நின்மல துரியம் ஆகிய இரண்டு உபாதிகளையும் பயனுடைய அவத்தைகளாகும் படி ஆக்கிக்கொள்க.

குறிப்புரை :

பார் - உலகம். பார் அந்தமான அனைத்துலகங்கட்கும் அப்பாற்பட்ட. பராபரம் - மேல், கீழ் அனைத்துமாய் நிற்பது. நின்மலா வத்தையை நோக்க யோகாவத்தையும், பராவத்தையை நோக்க நின்மலா வத்தையும் இடர்தருவன வாதல் பற்றி அவற்றை ``உபாதி`` என்றார்.
இதனால், `முத்துரியங்களையும் முறையால் எய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.

பொழிப்புரை :

இறைவனை அறியுமாற்றால் அறியின், பல், நா, உதடுகள் இவைகளில் அகப்படாத ஒரு மெய்ப்பொருள் யாராலும் அணுக முடியாதாயினும் அணுக முடியும். ஆகையால், மெய்ப் பொருளை அடைய முயல்கின்றவர்களே, நீவிர் அதனை அடைதற் பொருட்டு துரிய நிலத்திலிருந்து கீழ் இறங்கிவிடாமல் இருங்கள்.

குறிப்புரை :

`துரியத்திற்குக் கீழ் உள்ள அவத்தைகள் தாம் மெய்ப் பொருளோடு தொடர்பில்லாத நிலை` என்பதும், `பல், நா, உதடுகளின் செயல்கள் துரியத்திற்குக் கீழ் உள்ள நிலைகளில்தான் நிகழும்` என்பதும் கருத்து. இங்குக் கூறிய துரியம் சிவ துரியம், ஏனெனில், சீவதுரியத்தில் மெய்ப்பொருள் தொடர்புறாது நிற்கும் ஆகலானும், பரதுரியத்திற்கு சென்றோர் மீளார் ஆகலானும் என்க. `இறைவனை ... ... ... தத்துவந்தான எட்டாதெனினும்நின் ரெட்டும். (ஆதலால்) துரிய நிலத்தினைத் தொட்டே இருமின்` எனக் கூட்டி முடிக்க.
``துரியம் கடந்தஇத் தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றதென் றுந்தீபற;
துறந்தார் அவர்களென் றுந்தீபற``*
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியுடும் அன்பர்க் கவன்``*
என்பவற்றிலும், `சிவதுரியத்திற்றான் சிவன் தொடர்புற்று நிற்பான்` எனக் கூறப்பட்டது. துரியத்திலே நிலையாக நின்றால், பிரபஞ்சம் தாக்கா தொழிதலுடன், மேல் அதீதத்திற்குச் செல்லும் ஆற்றலும் உளதாகும் என்க.
இறைவனை அறியுமாற்றால் அறிதலாவது, அவன் அருளாலே அறிதல். பல், நா, உதடுகளில் தட்டாமையாவது, சொல்லவாராமை. `எட்டப்படாது, எட்டப்படும்` என்பன, `எட்டாது` எனவும், ``எட்டும்`` எனவும் வந்தன.
இதனால், `முத்துரியத்துள் சிவ துரியமே முத்திக்கு வழி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே
பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொழிப்புரை :

சடங்களாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கும் முகத்தால், அடர்ந்துள்ள மாயையைப் போக்கிச்சித்தாய் நின்றுபின்னர் வெளிப்படுகின்ற திருவருளாலே அதுவேயாய் நிற்கின்ற தன்மையால் உயர் நெறியை அடைந்த அன்பர்களே சிவனது இயல்பை உண்மையாக உணர்ந்தோராவர்.

குறிப்புரை :

``அறிவாய்`` என்பதை, `சிதைத்து` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அசத்து`` எனவே, அசித்தாதலும் சடம் என்பதும் பெறப் பட்டது. `அருளாலே அருளாய்`` என்றதனால், `அருள் தானே வெளிப் பட, அதனாலே ஆன்மா அந்த அருளேயாய் நிற்கும்` என்பதும், `ஆறா றகன்று அறிவாய் அருளாயிடும்` என்றனால், `அருள் வெளிப்படல் ஆன்மா அறிவான பின்னர் ` என்பதும், `ஆன்மா அறிவாதல் ஆறாறகன்றபின்னும்` என்பதும் பெறப்பட்டன. ``ஆறாறகன்று`` என்பது தத்துவசுத்தி ஆன்ம ரூபங்களையும், ``அறிவாய்`` என்றது ஆன்ம தரிசன சிவரூபங்களையும், ``அருளாலே அருளாயிடும்`` என்றதனால், ஆன்ம சுத்தி, சிவதரிசன சிவயோகங் களையும் குறித்தமை காண்க. இவற்றுள் சிவயோகமே சிவதுரியமாம். `பெற்றியால்` என உருபு விரிக்க.
இதனால், `சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட சிவதுரியமே சிவத்தோடு உண்மையில் தொடர்பு கொள்ளும் நிலை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நனவில் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யம்தற் பதமே.

பொழிப்புரை :

பிராரத்த வினை நீங்காமையால், கருவி கரணங்களோடு கூடிய உடம்பிற்றானே புருவ நடுவின் கண் நிகழும் சுத்த சாக்கிரம் தலிய சிவ ஐந்தவத்தைகளில் நாலாவதாகிய சிவ துரியத்தில் சீவன் ஆன்ம சுத்தியைப் பெற்று `துவம்` பதப் பொருளாய் நிற்றல்போல, பிராரத்தவினை நீங்கினமையால், கருவி கரணங்களைக் கடந்து நிற்கின்ற நிலையில் நிகழும் பர சாக்கிரம், பர சொப்பனம் முதலாக நிகழும் பர அவத்தை ஐந்தில் நாலாவதாகிய பரதுரியத்தில் ஆன்மா, `தத்` பதப் பொருளாய் நிற்கும். அஃதாவது, `சிவமேயாய் நிற்கும்` என்பதாம்.

குறிப்புரை :

`பராவத்தைகளில் சீவன் முத்தி தவிர ஏனைய நான்கும் உண்மையில் உடம்பு நீங்கிய பின்னர் நிகழ்வனவாயினும் சீவன் முத்தி நிலையிலும் அவை பொதுவாக நிகழும்` என்பதும், `இம்மையில் (உடம்பு உள்ளபொழுது) பராவத்தையில் முடிவான அதீத நிலையில் நின்றவர்களே அம்மையில் (உடம்பு நீங்கியபின்) பரமுத்தியை அடைவர்` என்பதும், `ஏனையோர் தாம் தாம் இங்கு நின்ற நிலைக்கு ஏற்ப அங்குள்ள நிலைகளை அடைவர்` என்பதும் இம்மந்திரத்தால் அறிக. கேவலாத்துவிதிகளும் சீவன் முத்தரை, வரிட்டன், வரியான், முதலாக வகைப்படுத்துவர்.
முதலடியின் ஈற்றில் `கண்` உருபு விரிக்க. ``தனதுயிர்`` என்பதில் ஆறன் உருபு, `இராகுவினது தலை` என்பதுபோல `ஒற்றுமைக் கிழமைக்கண்` வந்தது. பின்னர் ``வினை அறு சீவன்`` என்றதனால், முன்னது `வினை உருசீவனது நிலை` என்பது பெறப்பட்டது. வினை, இங்குப் பிராரத்தம். ``ஆமாறுபோல`` என்ற அனுவாதத்தால், ஆமாறும்தானே பெறப்பட்டது. `தன` என்பது இடை ஐகாரச் சாரியை பெற்றது.
இதனால், சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட பர துரியத்தின் சிறப்பு அதனது பயன் உணர்த்தும் முகத்தால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :

`துவம்` பதம், `தத்` பதம் முதலிய சொற்களின் வழியாக நிகழும் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரிய அனுபவ நிகழ்ச்சிகளில், பெரிதும் விரும்பப்பட்ட மூன்றாவதாகிய பரதுரியத்தில் முதற்கண் சொல் நிகழ்ச்சி சிறிது உளதாயினும், முடிவில் சொல்லற்றதாகிய பேரொளியாம் பரசிவம் அனுபவப்பட்ட அந்நிலை, உலக வாசனை முழுதும் அற்றுச் சூக்குமத்திலும் சூக்குமமாய் விளங்க, `அவ்விடத்தில் அனைத்துப் பொருட்கும் அப்பாற்பட்ட அந்தப் பரசிவமே தனது பேரருள் காரணமாகக் குறுமூர்த்தியாய் வந்து தனக்கு அருள் செய்தது` என்னும் உண்மையும் விளங்கும்.

குறிப்புரை :

``தற்பதம்`` என்பதன்பின் `முதலிய` என்பது வருவித்து, `சொல்லால் நிகழும்` என உருபும், பயனும் விரிக்க. `முத்துரியத்துள்` என `உள்` என்பது விரிக்க. போல் அசை, ``பரம்`` என்பதன் பின் `வெளிப்பட`, என்பதும், `அதிசூக்கம்` என்பதன்பின் `ஆக` என்பதும், ஈற்றில் `ஆம்` என்பதும் வருவிக்க.
இதனால், முத்துரியத்துள் முடிநிலைத் துரியத்தின் உயர்வுகூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

பொழிப்புரை :

மும்முத்திகளுள் முதலாவதாகிய சீவன் மும்முத்தி யாவது, உலகத்தில் இருப்பினும் உலகத்தைக் கடந்து நிற்கும் நிலையாம். எனவே, `இஃது உடம்புள்ள பொழுதே நிகழ்வது` என்பது அறியப்படும். நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலியனவாம். மூன்றாவதாகிய பரமுத்தியாவது, உயிர் முன்பு இருந்த பாச நிலைகள் முற்றும் அற்று நிலையான அமைதியைப் பெறும் நிலையாகும். (ஆகவே, இஃது உடம்பு நீங்கிய பின்னர்ப் பெறப்படுவதால் விளங்கும். பிறர், `விதேக முத்தி` என்பர். இந்நிலையில், `சிவானந்தத்தை நாம் அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வும் இன்றி, அந்த ஆனந்தத்துள் மூழ்கியிருக்கும் நிலையாதல் பற்றி இதனை, `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். ஆனந்தாதீதம் ஆனந்தத்தில் ஆதீதம். இவ்வாறன்றி, உலக இன்பத்தில் தோயாது, சிவானந்தத்திலே தோய்தல் சிவமுத்தியாம். (எனவே நின்மலாவத்தையில் துரியாதீத நிலையாம்.) இவ்வாறு மூன்று நிலைகளில், உயிர் மூன்று தன்மைகளை உடையதாக, முத்தி மூன்று வகையாய் இருக்கும். இவற்றுள் சொல்லிறந்த முத்தியாகிய பரமுத்தியே நாதாந்த முத்தியாகக் கருதப்படும்.

குறிப்புரை :

``அதீதம்`` என்பது, `கடந்தது` என்னும் பொருளது. ஆனந்த அனுபவத்தை, ``ஆனந்தம்`` என்றார். `தாரகத்தில்` என்பது இடைக்குறைந்து நின்றது. தாரகம் - பிரணவம். இது அனைத்துச் சொற்களும் ஆதல் அறிக. ஓவுறு தாரகம் - தாரகம் ஓவிய (நீங்கிய) நிலை. உள்ளும் - உள்ளப்படும். என மாறிக் கூட்டியுரைக்க.
இதனால், `மும்முத்திகளாவன இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும்
ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும்
ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று)
ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.

பொழிப்புரை :

[``அறிவுடையார் ஆவ தறிவார்;`` அறிவிலார் - அஃதறிகல்லாதவர்``* என்றபடி, பின் வளைவதை முன் கூட்டிக் காரிய காரண இயைபு பற்றி உய்த்துணர்பவரே `அறிவுடையார்` எனப் படுவார். அங்ஙனம் அறியமாட்டாதவர் அறிவிலார் ஆவர். அறிவால் இன்பம் வருதலும், அறியாமையால் துன்பம் வருதலும் நியதி. ஆகவே] பின் விளைவதை முன்கூட்டி அறிந்து வருமுன்னர்க் காத்துக் கொள்ளாத உயிர்கள் பிறப்பாகிய துன்பத்திலே வீழ்ந்திடும். பின் விளைவதை முன்கூட்டியே அறிந்து, `வருமுன்னர்க் காத்துக் கொண்ட உயிர்கள் சிவனது திருவருளிலே சென்று பொருந்தும். `சிவனாலன்றி உடம்பாலும், உலகத்தாலும் உயிர்கட்கு வருவதொன்றில்லை` என்பதை உணர்ந்து, அவனது அருளைப் பெற்று, அந்த அருளாலே அவனுடன் ஒன்றுபடுதலே முத்தியாகும்.

குறிப்புரை :

`எனவே, சிவனது அருளைப் பெற்றோர் முத்தியாகிய இன்பத்தை அடைவர்` என்பதாம். `பிற` என்னும் முதனிலையே, `பிறப்பு` எனத் தொழிற் பெயர்ப் பொருளைத் தந்தமையின் முதனிலைத் தொழிற்பெயர்.
``ஞானத்தால் வீடு ... ... ... அஞ்ஞானத்தால்
உறுவதுதான் பந்தம்``*
என்பார், ``ஆவதறியா உயிர் பிறப்பால் உறும் - ஆவதறியும் உயிர் அருட்பால் உறும்`` என்றார். அகன்று அகமாகிய உடம்பையும், புறமாகிய உலகத்தையும் அடிநிலைக்காரணமாக உணர்தலினின்றும் நீங்கி, ஓவு சிவன் - எல்லாவற்றையும் கடந்தவனாகிய சிவன்.
இதனால், முத்திகளின் பொது இலக்கணம் கூறப்பட்டது. இதனானே, `சித்தாந்த முத்தி இது` என்பதும், `ஏனைச் சமயவாதிகள் பிற பிறவாகக் கூறும் முத்திகள் எல்லாம் பூர்வ பக்க முத்திகளே` என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அவர் கூறும் முத்தி வகைகளைச் சிவஞானசித்தி* சிவப்பிராகச* நூல்களிற் காண்க. முத்தியை இலக்கண வகையால் தெரிந்துணர்த்துபவர் `அதனை அடைதல் ஞானம் ஒன்றானேயாம்` என்பதும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

சிவமாகி மும்மலம் முக்குணஞ் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத் தைக்கியத்
துவமா கியநெறி சோகம்என் பார்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

பொழிப்புரை :

சித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களையும், ஏனைச் சமயத்தார் முடிவாகக் கூறுகின்ற முக்குணங்களையும் (சாத்துவிக ராசத தாமதங்கள்) போக்கிச் சிவமாம் தன்மையை எய்திச் சரியை முதலிய தங்களால் உண்டாகும் அந்த ஞானத்தின் பயனாகப் பெறுகின்ற மும்முத்திகளையே, `தத்துவமசி` `ஸோஹமஸ்மி` என்னும் மகா வாக்கியங்கள் கூறும் முத்தி நிலையாக உணர்ந்து, அந்த மகாவாக்கியப் பொருள்களை அனுபவமாக உணர வல்லவர்கட்கு நன்மையே நிறைந்து, தீமை சிறிதும் இல்லாதவனாகிய சிவன், பிற பொருள்களை யெல்லாம் விலக்கித் தான் ஒருவனே விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

சிவன் அவ்வாறு விளங்கி நிற்றல், ஞாயிறு பிற பொருள்களைக் காண்பவர்கட்கு அவற்றைக் காட்டித் தன்னைக் காட்டாது நின்று, தன்னைக் காண்பவர்கட்குப் பிற பொருளைக் காட்டாது, தன்னையே காட்டி நிற்றல் போல்வது. `சிவன் இவ்வாறு தன்னையே காட்டி நிற்பதே முத்தி நிலை` எனவும், `தன்னைக் காட்டாது பிறபொருள்களைக் காட்டி நிற்பதே பெத்தநிலை` எனவும் உணர்க. ``சிவம் ஆகி`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டுக. ``தவம்`` என்பது முன்னர் அதன் பயனாகிய ஞானத்தையும், பின்னர் ஞானத்தால் அடையும் பயனையும் குறித்த இருமடி யாகுபெயர். ``ஐக்கியம்`` என்றது, `அசி` என்றபடி. மூன்றாம் அடியில் உள்ள ``துவம்`` தன்மை. ``துவமாகிய நெறி`` என்பதை, ``சேகம்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தத்துவ மஸி, ஸோகமஸ்மி இவற்றின் தன்மையாய நெறி` என உரைக்க. மகாவாக்கியங்கள் இங்குத் தம்மை யுணர்த்தி யொழியாது, தம் பொருளை உணர்த்தி நிற்றலின் `தன்மை` என்றது அவை பற்றிய அனுபவங்களையாம். நெறி - ஞான நெறி. இதுவும் ஆகுபெயரால் அதன்பயனையே குறித்தது. ``சிவமாம் அமலன்`` என்று, `நன்றுடையானைத் தீயதில்லானை``8 எனஅறாற்போல்வது. இங்ஙனம் மறுதலைப் பொருளையும் உடன் கூறியது முத்திநிலையில் சிவன் உயிருக்குப் பிற பொருளைக் காட்டாமையை உணர்த்தற்கு. ``பொய்காட்டா மெய்யா``l என்றதும் காண்க.
இதனால், `வேதாந்தமுத்தி சித்தாந்த முத்தியே` என உணர வல்லவர்களே வேதாந்த ஞானிகளாய், மும்முத்திப் பயன் பெறுவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

பொழிப்புரை :

பக்குவான்மாக்கட்குப் பாசத்தை அறுத்துத் தன்னையே அளிப்பதாகிய சித்தாந்த முத்தியைத் தருகின்ற, பெரிய பெருமானாகிய (மகாதேவனாகிய) சிவனே ஏனையோர்கட்கு அவரவர்களது தகுதிக்கு ஏற்ப, பொது யோகிகள் விழைகின்ற அணிமாதி அட்ட மாசித்தியாகிய பயனையும், ஏனைச் சமயத்தார் தாம் தாம் `முத்தி` எனக் கொண்டு விழைகின்ற பல்வேறு பயன்களையும், அகப்புற, அகச்சமயிகள் விழையும் பொதுநிலைச் சிவபதமாகிய பயனையும், இப்பயனுக்கு எதிராய் உள்ள `தாபத் திரயம்` எனப்படும் மூவகைத் துன்பங்களைப் போக்கிக் கொள்கின்ற ஆற்றலையும், சிவயோகிகள் விரும்புகின்ற அந்தமேலான சமாதியாகிய சீவன் முத்தியையும் தருபவனாவான்.

குறிப்புரை :

`சிவன் முத்தி தரும் பெருமான்` என்பதே பற்றி, அவன் தன்னையளிப்பதாகிய அந்தப் பரமுத்தி ஒன்றைத் தான் தருவான் போலும்` என மயங்கி யுரைக்கும் பல்வேறான வழக்குரைகளால் மாணாக்கர் மயங்காமைப் பொருட்டு, `அனைத்துப் பயன்களையும் தருபவன் சிவன் ஒருவனேயன்றிப் பிறர் ஒருவரும் இல்லை` என்பதை விளக்கினார். `முத்தியைத் தரும் பெருமான், அதற்குக் கீழ்ப்பட்ட ஒன்றையும் தர வல்லனல்லன்` என்றல், தன்னைச் சார்ந்தவர்க்குக் காணியும், மனையும், மாடமும், மாளிகையும், ஊரும், நாடும் வழங்கவல்ல அரசனுக்குப் பரிசிலர் வேண்டும் பொன்னும், பூடணமும், யானையும், குதிரையும், தேரும் போல்வனவற்றைத் தருதல் இயலாது` எனக்கூறுவாரது கூற்றோடு ஒக்கும் என்பதாம். `சிவன்அ முத்தியைத் தருபவன்` என்பதற்கு, `ஏனைப் பயன்களை ஏனைத் தேவரிடத்தும் சென்று பெறுதல் கூடும்; பிறவியற்ற பெருநிலையாகிய முத்திப் பயனைச் சிவன் ஒருவனிடத்தில் பெற முடியும்` என்பதே கருத்தாகலின், அஃதறியாது, சிவன் முத்தியைத் தவிர வேறு ஒன்றையும் தர மாட்டுவானல்லன் என்பார்க்கு நாம் என் கடவோம் என்பது கருத்து. `சிவனலால் முத்தியில் சேர்த்துவார் இலை``* என்னும் காஞ்சிப்புராணத்தையும் காண்க.
`பிற சமயிகள் விழையும் முத்தி` என்றதனால் உலகாயதர் விழையும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அடங்கின. `பிற பயன்களையும் தேவர் பிறர் அளித்தல் சிவனது ஆணையைப் பெற்றே` என்பது மேலேல்லாம் விளக்கப்பட்டது ஆதலின், பிறர்தேவர் தரும் பயன்களும் அவர்தாமே சுதந்திரராய் நின்ரு தருவன அல்ல என்பது விளங்கும்.
மூவகைத் துன்பங்களாவன `ஆதியான்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம் என்பன. இவை முறையே, தன்னாலே தனக்கு வருவது (`தான்` என்பது தன் உடம்பையும் சேர்த்தே), ஐம் பெரும் பூதங்களால் வருவது, பிற காரணங்களைக் கருதாது, ஊழே காரணமாகக் கருத வருவது என்பனவாம். இவ்வாறு ஞானா மிர்தத்தில்l சொல்லப்பட்டது. பரிமேலழகர், `ஆதி பௌதிகம்` என்பதைப் பிற உயிர்களால் வருவனவாகக் கூறினார்.8 ``சுத்தி`` என்றது `குற்றம் அற்றதாகிய முத்தி` என்றபடி. தரும் பெருமானைத் தரப்படும் பயனாகவே உபசரித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 1

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.

பொழிப்புரை :

பெத்தம் தடத்தமாக, முத்தியே சொரூபம் ஆதலின், முன் அதிகாரத்தில் கூறிய மும்முத்திகளையே இவ்வதிகாரத்தில் `முச்சொரூபம்` என ஏழு மந்திரங்களால் வேறொரு வகையாக விளக்குகின்றார். `பெத்தம் தடத்தமே, முத்தியே சொரூபம்` என உணர்தலே இவ்வதிகாரத்தின் பயன். (தடத்தம் - செயற்கை, சொரூபம் - இயற்கை.)
`ஆணவம், திரோதாயி, மாயை, மாயேயம், கன்மம்` என இவ்வாறு ஐந்து மலங்களும் ஆன்மாவை வந்து பற்றி, ஒன்று, இரண்டு, மூன்று`, என இவ்வாறு தொகை மிகுந்த முறையிலே அவற்றினின்றும் ஒவ்வொன்றாக நீங்கி, முழுதும் விடுபட்ட ஆன்ம ஞானம், பின் `சிவோகமஸ்மி` என்னும் அனுபவத்தைப் பெற்று, அதற்குப் பின்னும் மேலே மேலே சென்று முச்சொரூபமாகிய மும்முத்திகளைப் பெற்று, முடிவில் அநாதியான சொரூப சிவனை அடைந்து நலம் பெறும்.

குறிப்புரை :

மலம் ஐந்தும் ஏறிய முறையே நீங்குதலாவது, பிராரத்த கன்மம் நீங்க, அதனால் வந்த மாயேயம் நீங்குதலும், காரியமாகிய மாயேயம் நீங்கவே காரணமாகிய மாயையும் நீங்குதலும், கன்மம், மாயேயம், மாயை இவைகளைச் செலுத்தி நிற்பதே திரோதாயி ஆதலின் இம்மூன்றும் நீங்க, திரோதாயியாய் அவற்றைச் செலுத்தி நின்ற சத்தியும் அந்நிலை மாறி அருட் சத்தியாய் ஆன்ம அறிவிற் பதிதலும், அஃது அவ்வாறு பதியவே, ஆணவம் நீங்குதலுமாம்.
`எறிய மலம் ஐந்திடை அடைந்தவாறே ஆறிய ஞானம்` என்க. ஆறுதல் - தணிதல்; நீங்குதல். ஞானம், இங்கு ஆன்ம ஞானம். முன் அதிகாரத்தில் கூறப்பட்ட, `சீவன் முத்தி, சிவமுத்தி, பர முத்தி` என்பனவே இவ்வதிகாரத்தில் ஆன்ம சொரூபம், சிவ சொரூபம், பர சொரூபம், என மூச்சொரூபங்களாக வைத்து உணர்த்தப்படுகின்றன. அவற்றுள் ஆன்ம சொரூபம், ``ஆறிய ஞானம்`` என்பதனாலும், சிவ சொரூபம் ``சிவோகம் அடைந்திட்டு`` என்பதனாலும், பர சொரூபம், பண்டைப்பரன் உண்மை எய்தும், என்பதனாலும் இங்கு உணர்த்த ப்பட்டன. தச, காரியத்துள் தத்துவரூபம் முதல் ஆன்ம தரிசனம் ஈறாக உள்ளவை ஆன்ம சொரூபமாகவும், சிவயோக சிவ போகங்கள் சிவ சொரூபமாகவும், பரமுத்தி நிலை பர சொரூபமாகவும் வைத்து உணர்த்தப்படுதல் அறிக. சிவ ரூபம் ஆன்ம தரிசனத்துள்ளும், ஆன்ம சுத்தியும், சிவ தரிசனமும் சிவபோகத்துள்ளும் அடங்கும்.
பின்வரும், `பரன் உண்மை எய்துதலையும் உடன் வைத்து, ``முச் சொரூபத்து வீடுற்று`` என்றார். பண்டு - அனாதி.
இதனால், `முச்சொரூபமாவன இவை` என்பதும், அவற்றின் இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பொழிப்புரை :

`சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்` என்னும் மூவகை உயிர்களுக்கும் மூன்றுவகையான மாளிகை போன்ற, `பிராகிருத சரீரம், மாயேய சரீரம், வைந்தவ சரீரம்` என்னும் மூன்று வகையான உடம்புகள் இருப்பிடமாய் உள்ளன. அந்த மூன்று வகை உடம்புகட்குள்ளேதான் தத்துவங்களும் உள்ளன. அவ்வுடம்புகளில் ஒவ்வொன்றிலுமே `ஆன்மா,சிவம், பரம்` என்னும் மூன்று ஒளிப்பொருள்களும் வெளிப்படுகின்றன. அவ்வொளிகளை நேரே உணரும் வாய்ப்பு உளதாயின், அதன்பின் மேற்கூறிய உடம்புகளுக் குள்ளே உயிர் இருக்க வேண்டிய விதி இல்லையாய்விடும்.

குறிப்புரை :

``மாளிகை மூவர்`` என்பன உருவகங்கள். `மூவர் இருப்பிடமாக மாளிகை மூன்று உளர்`` என இயைக்க. முதிர்பு - வலுவடைதல். அஃதாவது உடம்பு அழிந்தாலும் தாம் அழியா திருத்தல். அத்தன்மை யுடையனவே தத்துவங்களாம் ``மூன்றினின் என்பதில் இன், வேண்டாவழிச் சாரியை, சோதி - ஒளி; என்றது அறிவை. காண்டல் ஆன்ம, சிவ, பர தரிசனம் செய்தலாம். தடத்த சிவத்தையே `சிவம்` என்றும், சொரூப சிவத்தைப், `பரம்` என்றும் நாயனார் இவ்விடங்களில் குறித்தருளுகின்றார். ``மூன்றுஎன்பதைச் சோதிக்கும் கூட்டி, `மூன்று சோதியை`` என உரைக்க. பரம் உடம்பினுள்ளே முளைத்தெழுதலாவது, `ஞான நிலையாகிய நின்மல நிலைக்குமேல் பர நிலையில் அடையப்படும் ஞேயப்பொருள் உண்டு என்னும் உணர்வு தோன்றுதல். கணக்கு - கட்டளை, விதி. காயக் கணக்கு அறுதல் பிறப்பு அறுதலாம். பயனை, ``ஆறு`` என்றார், ``அறத்து ஆறு இது என வேண்டா``l என்பதிற்போல. ``ஆறு`` என்பதன் பின், `உண்டாம்` என்னும் பொருட்டாகிய, `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், முச்சொரூபங்களையும் மூவகை உயிர்களும் தம் தம் உடம்பிற்றானே உணர்ந்து அடைதற்குரியன என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன
நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய
பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.

பொழிப்புரை :

உலகங்கள் எல்லாம் ஒடுக்க நிலையை எய்தி விட்டன. அதனால், உலகம் உள்ளளவும் இருந்த அந்த ஊழியும் போய், அடுத்த ஊழி வரும் நிலைமை தோன்றி விட்டது, உலகம் உள்ள பொழுது விளங்கிக்கொண்டிருந்த, `ஞாயிறு, திங்கள் தீ` என்னும் முச்சுடர்களும் காரண நிலையில் ஒன்றாகி விட்டன. இவை போல எல்லாப் பொருள்களும் தம் தம் காரண நிலைகளை எய்தி விட்டன. ஆயினும் பரமசிவன் முன் இருந்தவாறே இருக்கின்றான் என்றால், அவனது நீளத்தின் எல்லையையும், அகலத்தின் எல்லையையும் யார் அறிய வல்லார்!

குறிப்புரை :

``பெயர்ந்து`` என்னும் எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `போயினது` என்பது, ``போன`` எனக் குறைந்து நின்றது. ஆய - ஆயின. பரிசு - தன்மை. காரியத்தில் தூலமாய்க் காணப்படும் இயல்புகள் காரணத்தில் சூக்குமமாய்க் காணப்படாது நிற்கும் ஆதலின் அங்ஙனம் நிற்பவனவற்றை, `தன்மை` என்றார். பான்மை - பகுதி; என்றது காரணப் பகுதிகளை, ``பான்மையுள்`` என்பதன்பின், `ஆயின` என என்னும் சொல்லெச்சம் வருவித்துக்கொள்க. நீள அகலங்கள் காலம் பற்றியும், இடம் பற்றியும் கொள்ளப்படும். பரம் பொருள், `நித்தியம்` ஆதலின் கால அளவைக் கடந்ததும், எல்லாப் பொருளும் தன்னில் வியாப்பியமாய் நிற்க, தான் எல்லாவற்றிற்கும் வியாபகமாய் நிற்றலின் இடத்தைக் கடந்ததும் ஆயிற்று, அவற்றையே, ``அளவும், பெருமையும் ஆர் அறிவார்`` என்றார். ``ஆர் அறிவார் அவ் அகலமும் நீளமும்``* என முன்னருங் கூறினார். ``நீள அகலம் உடையாய் போற்றி``* என்றதும், ஏனையெல்லாப் பொருட்கும் வியாபகமாய் நிற்றலையே குறித்தது. இதிலும் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால் முச்சொரூபங்களுள் பர சொரூபத்தின் பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து)
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.

பொழிப்புரை :

மகா மாயையை முதலாக வைத்து எண்ணுகின்ற காரணங்களையும், அவற்றின் காரியங்களையும் வேறு வேறு வகைபடத் தோற்றுவித்து, அவற்றை அங்ஙனம் செய்தற்கு ஏற்ற `அருவம், உருவம், அருவுருவம்` என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொண்டு, மூவகை நிலையில் நின்று, முடிவில் குருவாகியும் வந்து ஆட்கொள்கின்ற அருளாளனாகிய சிவன், அளவில்லாத உயிர்களிலும் அவ்வவற் -றோடும் சேர்ந்து உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும், கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான்.

குறிப்புரை :

``வாய்`` என்பது `வாயில்` என்னும் பொருட்டாய், `காரணம்` எனப் பொருள் தந்தது. உலகத்திற்கு உரிய முதற் காரணங்களில், `மகா மாயை` எனப்படும் சுத்த மாயையே பெரிதாகலின் அதனைப் ``பெருவாய்`` என்றார். `முதலாக` என ஆக்கம் வருவித்துக் கொள்க. அதனை முதலாக வைத்து எண்ணுமாறு `மகா மாயை, மாயை, பிரகிருதி` என இம்முறையால் எண்ணுதலாம். பேதம் வகை. காரணங்கள் இயல்பிலே வேறுபட்டிருப்பினும், அவ் வேற்றுமையை உயிர்களின் தகுதி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பொருத்துதலின், அங்ஙனம் பொருத்துதலையே காரணங்களையும் சிவனே பேதித்ததாகக் கூறினார். காரண வேறு பாட்டிற்கு ஏற்பக் காரியங்களை வேறு வேறாகச் செய்பவன் சிவனே யாதல் தெளிவு. செய்யுள் நோக்கி, அருவுருவம் இறுதியில் வைக்கப்பட்டது. அருவம் முதலிய மூவகைத் திருமேனிகளின் நிலை, `இலயம், போகம், அதிகாரம்` என்பனவாம் என்பது மேலெல்லாம் சொல்லப்பட்டது. `உடனாய், ஒன்றாய்,வேறாய் இருத்தலே அத்துவிதமாய் இருத்தலாம்` என்பது சித்தாந்தம் ஆதல் வெளிப்படை.
``உலகெலா மாகி வேறாய்
உடனுமாய்``3
என்பது சிவஞானசித்தி.
``ஈறாய், முதல் ஒன்றாய், இரு பெண் ஆண், குணம் மூன்றாய்,
மாறாமரை நான்காய், வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார்சுவை, ஏழோசையொடு, எட்டுத்திசை தானாய்,
வேறாய், உடன் ஆனான் இடம் வீழிம்மிழ லையே``l
என்னும் திருமுறைத் திமொழியும்,
``ஈறாகி அங்கே, முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய்,
மாறாத எண்வகையாய், மற்றிவற்றின் - வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை யென்றும்
கடனாய் இருக்கின்றான் காண்``8
என அதனை எடுத்துக்காட்டி நிறுவிய சாத்திர யாப்பும் கண்டுணரற் பாலன. சத்தி கோன் சத்திக்குத் தலைவன். ஞானேச்சாக் கிரியா சத்திகளைக் கொண்டு செயலாற்றும் முதல்வன் `பதி` எனப்படுபவன் இவனே. இந்நிலை தடத்தமேயாகலின் இவனை இங்கு, `சிவன்` எனக் கொள்க. `பன்மையில்` என உருபு விரிக்க. ஈற்றில் ``உருவாய்`` என்றது, உயிர்தோறும் தனித்தனிப் `பொருந்தும் பொருளாய்` என்றபடி.
இதனால், முச்சொரூபத்துள் சிவ சொரூபத்தின் இயல்புகள் வகுத்துரைக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
அணியென லாய்நின்ற ஆறது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

பொழிப்புரை :

இரத்தினங்கள் நிறம், ஒளி, வடிவம் என்பவற்றைப் பெற்றுப் பல அணிகலங்களாய் நிற்கும் முறைமை போலத் தான் `பரம், சிவம், ஆன்மா` என்னும் முச்சொரூபத்தை யுடையதாகி அந் நிலைகளில் தனது சத்தியால் சீவனும் அடங்கித் தோன்றும்படி செய்த, `நந்தி` என்னும் பெயரையுடைய அந்த முதல்வனது திருவடிகளையே பற்றாகப் பற்றி உய்வாயாக.

குறிப்புரை :

பரம் - சொரூப சிவம். அதன் வடிவம் அகண்டமாய் இருத்தல் பின்னர்க் கண்டமாய் உள்ள வடிவத்தைக் கூறுதலின் அதனோடு ஒப்ப அகண்டத்தையும் `வடிவம்` என்றார். `இலக்கணம்` என்றது வடிவத்தை. சிவம் - சதாசிவன், மகேசுரன் ஆகிய தடத்த சிவங்கள். இனிச் சிவமே ஆன்ம சொரூபமாய் நிற்றலாவது சீவனில் அதுவேயாய்க் கலந்து நிற்றல். `பர சொரூபம் சிவ சொரூபமாயும் ஆன்ம சொரூபமாயும் நிற்றல் ஆதி சத்தியால் என்றபடி ``ஆதி சத்தியால்`` என்பதன் பின், `அவற்றில்` என்பது வருவிக்க.
இதனால், `ஒரு பெரும் பொருளே தனது சத்தியால் முச்சொரூபமாய் நின்று உயிர்களை உய்விக்கின்றது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.

பொழிப்புரை :

பிற மணிகளில் ``ஒளி`` என்றும், `நிறம்` என்றும் `சோபை` என்றும் இங்ஙனம் பல பெயர்களால் சொல்லப்பட்டு விளங்குகின்ற கதிர்கள் ஒரு படிக மணியிலே பொருந்த, அப்படிக மணிவேறு பல மணிகளாய்க் காட்சியளிப்பது போன்றதே `தத்துமசி` மகாவாக்கியத்தால் உபதேசிக்கப்படும் பொருள். அஃதாவது, `உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின், பாசத்தைச் சார்ந்து பாசமாய் இருந்த நீ, அந்நிலை நீங்கிச் சிவத்தைச் சார்ந்து சிவம் ஆகிறாய்` என்பதாம். (சீவன் பாசமாய் இருந்த நிலை சொல்லால் சொல்லப்படும். அஃது அந்நிலையினின்றும் நீங்கிச் சிவமாகிய நிலை) சொல்லால் சொல்ல வாராது, முத்தி பஞ்சக்கரமும் மொழியாய் இராது அனுபவமான ஒளி நிலையாகும். இது முப்பாழும் கடந்த நிலையும், குரு பஞ்சாக்கரத்தை உபதேசித்து, சின்முத்திரையால் அஞ் ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞானத்தை உணர்த்திய முடிந்த நிலையும் ஆகும்.

குறிப்புரை :

``நல்ல மணி`` என்றது சார்ந்ததன் வண்ணமாம் இயல்பால் சாரப்பட்ட பல மணிகளாய் விளங்கும் மணி: என்றது படிக மணியை. ஆகவே, ``கல்`` என்றது பிற மணிகளையாயிற்று. கதிரின் இயல்பை இனிது விளக்குவார் அதனைப் பல பெயர்களால் குறித்தார். ``தட்ட`` என்பதை ``ஒன்றின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக, முப்பதம் - முப்பதப் பொருள். இது சொல்லாகுபெயர். இதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. அல் - இருள். அல் அறுத்ததைக் கூறவே, ஒளியை வழங்கியதும் தானே பெறப்பட்டது. அறு முத்திரை, `அறுத்த முத்திரை` எனப் பிறவினை வினைத்தொகை. `உரைத்த அறுத்த` என்பதற்கு. `குரு` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.
இதனுள், `முச்சொரூபத்துள் முடிவான பர சொரூபத்தை குரு உபதேசத்தின் வழி அடைதலே முடிநிலைப் பயன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்த
இடந்தரு வாசலை மேல்திற வீரே.

பொழிப்புரை :

வரிசையாய் அமைந்துள்ள செந்தாமரை மலர்களின் பல்வேறு வகையாய்க் காட்சியளிக்கின்ற இறைவனை மூலாதாரத்தி னின்றும் எழுந்து மேல்நோக்கி நடக்கின்ற அனல் நாதாந்தத்திலே நிறுத்திக்காட்ட, அதனால், அவ்விடத்தை அடைந்த பால் ஒழுகும் தனங்களையுடைய பெருமாட்டி அடைத்து வைத்திருக்கின்ற விசாலமான மேல் வாசலைத் திறக்கும் உபாயம் அறிந்து திறவுங்கள்.

குறிப்புரை :

`அப்பொழுது அவ்வத் தாமரை அளவில் அடங்கித் தோன்றிய இறைவன், எல்லையில் பேரொளியாய்க் காட்சி யளிப்பான்` என்பது குறிப்பெச்சம். `அக்காட்சி சிவ சொரூபக் காட்சி யாகும்` என்பதும், அதனைக் கண்டால் பர சொரூபத்தைக் காணுதல் கூடும் என்பதும் இதன் உட்கருத்துக்களாகும்.
ஒன்றையொன்று சார்ந்திருப்பதை, உடந்தையாய் இருப்பது, என்றல் வழக்கு. `உடந்தை` என்பது உடந்த` என நின்றது. ஒற்று மிகாமையும் இத்திரிபு நோக்கியேயாம் பின் வந்த `செந்தாமரை` என்பது அது போலும் தீயைக் குறித்தது உடந்த செந்தாமரை ஆறு ஆதாரங்கள். தீ, மூலாக்கினி. `நாதத்தில் தகைந்தால்` என்க. தகைதல் - தடுத்தல். `தகைந்ததால்` என்பது குறைந்து நின்றது. `சோதியைத் தகைந்ததால்` என இயைக்க. பயோதரி, குண்டலி, சத்தி, அட்டி அடைத்தல் இறுக மூடிவைத்தல் மேல் வாசல் துவாதாசாந்தத்திற் செல்லும் வழி. அஃது உச்சித் துளையாம். அதனைத் திறத்தலாவது, உணர்வு அதனைக் கடந்து செல்லும் இயல்பினை அடைதல் `மேல் வாசலை` என மொழி மாற்றி யுரைக்க.
இதனால், சிவசொரூப பர சொரூபங்களை அடைதற்கு உபாயம் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுறை பேதமும் ஒன்றென லாமே.

பொழிப்புரை :

உயிர் சகலாவத்தையில் தத்துவங்களோடு கூடி `சீவான்மா` எனப் பெயர் பெற்று நிற்பினும் அது தத்துவங்களின் வேறாதல்போல்வதும், நின்மலாவத்தையில் தத்துவங்களின் நீங்கி வாக்குகளின் வடிவாய் நிற்குமிடத்து `அந்தரான்மா` எனப்பெயர் பெற்று நிற்பினும் அது வாக்குகளின் வேறாதல் போல்வதும் பரா வத்தையில் பரத்தோடு கூடிப் பரான்மா எனப் பெயர் பெற்று நிற்பினும் அது பரத்தின் வேறாதல் போல்வதுந்தாம். பரம் பொருள் சீவான் மாவில் நிறைந்து `சிவம்` என நிற்பினும் அது சிவனின் வேறாதலும், பரான்மாவில் நிறைந்து `பரம்` என நிற்பினும் அது பரான்மாவின் வேறாதலும்.

குறிப்புரை :

எனவே, `பராமான்மாவும், சீவான்மாவும் எவ்வாற் றானும் ஒன்றாதல் இல்லை` என்பதே இதனால் சொல்லப்பட்டதாம். அவத்தைகளே இங்கு `இடம்` எனப்பட்டன. ``ஒருவன்`` என்பது `புருடன்` என்னும் பொருட்டாய், உயிரைக் குறித்தது. ``உரு`` என்றது, தனக்கு வேறாய பொருள்` என்றவாறு அவற்றை உயிர், `தன்னின் வேறு` எனக் காணுதல் ஞானத்தினாலாம். ஆகவே, அந்த ஞானத்தினாற்றானே உயிர் பரத்தையும் `தன்னின் வேறு` என உணர்தல் வேண்டும் என்பதாம். அவ்வாறு உணரும் உணர்வே பதிஞானத்தைத் தரும். அவ்வாறின்றி, உயிர் தன்னையே பரமாகக் காணுதல் மல வாசனை பற்றி நிகழும் பசுஞானமாம். ``ஒன்று எனலாம்`` என்றது, `வேறாக உணரப் படுதலால் ஒரு தன்மையவாம்` என்றபடி. `திடமது போலப் பேதமும் ஒன்றெனலாம்` என இயைக்க. அது பகுதிப் பொருள் விகுதி.
இதில் உணர்த்தப்பட்ட பொருள் முன்பே சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒளியை ஒளிசெய்து ஓம்என் றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல்எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதந் தானே.

பொழிப்புரை :

பொருள்களை மாறாக உணரும் மயக்கத்தை நீக்கி உள்ளவாறுணரும் தெளிவைத் தருதலால் குண்டலி சத்தி ஒளியெனத் தக்கது. அதனை உலகர் இருளாக்கி வைத்துள்ளனர். அவ்வாறில்லாது அதனை ஒளியாகவே விளங்கும்படிச் செய்தல் வேண்டும். அது பிராணாயாமத்தால் மூலாக்கினியை எழுப்புதலால் உண்டாகும். அஃது உண்டாகும் பொழுதுதான் `வெறுங் காற்று` எனப்படுகின்ற மூச்சு சூரிய சந்திர கலைகளாம் சிறப்பு வளியாகும். அதனை அவ்வாறு செய்து, பயன் கிட்டும்படி கும்பகத்தால் சேமித்து, அதனானே சுழு முனை வழி வழியாயில்லாமல் அடைத்தும், உச்சியில் அருள் ஞானம் விளங்குகின்ற இடம் இடமாய் இல்லாமல் பாழ்படுத்தியும் வைத்திருக்கின்ற நிலையை மாற்றி வழியாகவும், இடமாகவும் செய்து குண்டலியை `ஓம்` என்று எழுப்பி மேற்போய் உலாவச் செய்து தெளி வுணர்வைப் பெற்றால், சிவ சீவர்களது உண்மை நிலை விளங்கும்.

குறிப்புரை :

`ஓம்` என்று எழுப்பி - என்றதனால், இவ்யோகம் பிரணவயோகமாதல் விளங்கும்.
இதனால், மேற்சொல்லப்பட்ட சிவ பர சீவர் பேதம் விளங்குதற்கு வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

முக்கா ரணங்களின் மூர்ச்சை தீர்த்(து) ஆவதக்
கைக்கா ரணமென்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மனி வேறே தனித்தேக
ஒக்கும்அ துன்மனி ஓதுட் சமாதியே.

பொழிப்புரை :

ஆறாதாரங்களில் மணிபூரகம், அனாகதம் ஆஞ்ஞை என்னும் மூன்று ஆதாரங்கள் சிறப்புடையன. சுவாதிட்டத் தினின்றும் எழுகின்ற பிராணன் `உதானன்` எனப் பெயர் பெற்று மேலோங்கி இவ்விடங்களில் சென்று ஆஞ்ஞையில் முடியும். அவ்வாறு முடியும்படி அதனை முடித்த பின்பு அவ்வாறு முடித்ததனால் உண்டாகும் பயனைக் கைம்மேற் பலனாக எமக்கு எம் ஆசிரியர் நந்தி பெருமான் அளித்தருளினார். அப்பயன் தான் யாதெனில், ஆஞ்ஞையில் விளங்கிய மனோன்மணி சத்தி அதற்கு மேலே வியாபினி சமனை உன்மனைகளாய்ச் செல்ல, உன்மனாந்தத்தில் சிவத்தோடு ஒன்றும் சமாதி நிலையாம்.

குறிப்புரை :

``காரணம்`` இரண்டில் முன்னது இடத்தையும், பின்னது காரணத்தினால் விளைவதாகிய பயனையும் குறித்தன. தீர்த்தல் - முடித்தல். `தீர்த்து, அதனால் ஆவதாகிய அப்பயனைத் தந்தனன் நந்தி` என்க. காண், முன்னிலையசை. ஏக ஒக்கும் அது - செல்லும் நிலையில் முடியும் நிலையாகின்ற அது, `உன் மனியாம்` என்க. ``உள்`` என்றது நுட்பத்தை. இது, பொது யோக சமாதியாகாது, பிராசாத யோக சமாதி யாகலின், ``உட்சமாதி`` என்றார்.
இதனால், முன் மந்திரத்தில், ``ஓம்`` - என்று எழுப்பி மேல் எழ வைத்ததலால் பயன் விளைதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

பொழிப்புரை :

துவம் தத், அசி, என்னும் மூன்று சொற்கள் தொன்மை -யான வேதத்தில் சொல்லப்பட்டனவாகும். இவை உலகியலில் தோன்றுதல் போலாது யோக துரியம். நின்மலதுரியம், பரதுரியம் ஆகிய முத்துரியங்களில் உணர்வின்கண் தோன்றும் பொழுது அவை முறையே சீவ அறுதியும், பர அறுதியும், சிவ அறுதியுமாய் நிற்கும்.

குறிப்புரை :

`சிவம்` என்பது அருளையும் `பரம்` என்பது ஆனந்தத் -தையும் குறிக்கும் நிற்பது, தொழிற்பெயர். ஈற்றில் உள்ள பதம் நிலை, முடிநிலை. ``உயிர், பரம்`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. ஈற்றில் உள்ள ``தொந்தத்தசி`` என்பதை, ``மூன்றின்`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆம்` அம்மூன்றின், எனச் சுட்டு வருவித்துரைக்க. சிறப்பு நோக்கி, `அசி` என்பதை மட்டும் `முன்னர், தான் ஆம் அசி` என்றார்.
இதனால், `முச்சூனியம் ஆவன இவை` என்பதும், அவை தோன்றும் இடங்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற
இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய மூன்று அறுதிகளுள் தொம்பத அறுதியில் (சீவ அறுதியில்) மாயா - மலமும், தற்பத அறுதியில் பர அறுதியில்) ஆணவ மலமும், அசிபத அறுதியில் (சிவ அறுதியில்) கன்ம மலமும் நீங்கும். அவ்வாறே அம்மூன்று அறுதிகளிலும் முறையே இராசதம், சாத்துவீகம் தாமதம் என்னும் குறைகள் நீங்கும். இவ்வாறு மூவறுதியில் மும்மலங்களும், முக்குணங் களும் நீங்குதல் நிலாவின் முன் இருள் நீங்குதலை ஒக்கும்.

குறிப்புரை :

``மூன்றில்`` என்பன இரண்டும், `மூன்று அறுதிகளில்` என்றபடி. ``காமியம் ஆதி`` என்பதை, `காமியம், ஆணவம், மாயை என்றவாறாகக் கொண்டு, அவற்றை எதிர் நிரல்நிறையாகப் பொருத்துக தாமதமாதி முக்குணங்களை ஏற்ற பெற்றியால் பொருத்திக் கொள்க. ``சிவம் தோன்ற`` என்பதை ``மலம் குணம் மாளல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. ``ஆதி`` என்பதன் பின், `நீங்கும்` என்பது வருவிக்க.
இதனால், முச்சூனியங்களில் நிகழ்வன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

தொந்தத் தசிய வாசியில் தோற்றியே
அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு
அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து)
உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.

பொழிப்புரை :

`தொம், தத், அசி` என்னும் மூன்று பதங்களையும் முத்தி பஞ்சாக்கர மூன்றெழுத்துக்களில் முறையே யகார சிகார வகாரங் -களில் வைத்து அந்த முறையிற்றானே தூல பஞ்சாக்கரம் ஐந்தும், சூக்கும பஞ்சாக்கரம் ஐந்தும் அடங்கியிருப்பதாகக் கொண்டு அதனையே அழிவில்லாத யோகாவத்தை நின்மலாவத்தை பராவத்தைகளில் `தொந்ததசி` வாக்கியமாகச் சிகார வகாரங்களை முன் வைத்து உச்சரி.

குறிப்புரை :

`அவத்தையில்` எனவும், `அவ்வாக்கியத்தை` எனவும் அவ்வவ்வுருபினை விரிக்க. `ஓதினால் முச்சூனியமும் விளையும்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், திருவைந்தெழுத்து மந்திரமே தத்துவமசி மகா வாக்கியமாய் முச்சூனியங்களைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு முத்தி பஞ்சாக்கரத்தை சிவ முன்னாக வைத்து உணர்வைப் பர சொரூபமாகிய ஆனந்த நிலையிற் செலுத்தி அதனோடே பிரணவமாகிய அந்த உபதேச மந்திரத் -தையும் அவ்வாறே உள்ளத்தில் சேர்ப்பி, சேர்ப்பித்தால், அப்பொழுதே நீ மெய்யுணர்வைப் பெற்றுச் சிவனுக்கு அடிமையாகி விடுவை.

குறிப்புரை :

முன்மந்திரத்தை அடுத்து அந்தாதியாக ``வைத்து`` என்றனால், `முன் வைத்து` என்றதாயிற்று. பிரணவத்தையும் அவ்வாறாகி வைக்கும் முறை பின்னர்க் கூறப்படும். தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாயிற்று.
இதனால், பிரணவமும், தத்துவமசி, முத்திபஞ்சாக்கரம் இவை போல முச்சூனியத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது. `சிவத்தை முன் வைத்து` என்றது அனுவாதம்.

பண் :

பாடல் எண் : 5

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய
உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.

பொழிப்புரை :

`தத்துவமசி` மகாவாக்கியத்தில் `துவம்` பதப்பொரு ளாகிய சீவன் உயிர் தத்துவங்களையே `தான்` என மயங்கும் மயக்கம் மாயையால் தோன்றுவதாகும். தற்பதப் பொருளாகிய பதி ஐந்தொழில் செய்தற் பொருட்டுப் பரா சத்தியினின்றும் சிவமாகித் தோன்றும் சீவன் சிவமாதலைத் தெரிவிப்பதாகிய `அசி` பதப்பொருள் உயிர் அனைத்துப் பாசங்களினின்றும் நீங்கித் தூயதாய நிலையில் தோன்றும். இனி, `தத்துவமசி` மகா வாக்கியத்தில் உள்ள `அசி, தத், துவம்` என்னும் முப்பதங்களும் முத்தி பஞ்சாக்கரத்தில் முறையே `வா,சி,ய` மூன்றெழுத்துக்களில் அடங்கும்.

குறிப்புரை :

எனவே, தத்துவமசி மகாவாக்கியப் பயிற்சியின் பயனாகிய முச்சூனியங்களை முத்தி பஞ்சாக்கரப் பயிற்சியே தரும்` என்பது குறிப்பெச்சம். ``பதம்`` மூன்றும் அவற்றின் பொருளைக் குறித்த சொல்லாகு பெயர்களாம். நம்புதல், விரும்புதல் தூய்மையை, ``சாந்தி`` என்றார். உம்பர் உரை, தொன்மை மொழி ஈற்றில் யகர உயிர்மெய் செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரம், `தத்துவமசி` இவற்றின் பொருள் தோன்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து
ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி
வாகிய சீவன் பரசிவ னாமே.

பொழிப்புரை :

`சோயம் தேவதத்தன்` என்பது `தேவதத்தனாகிய அவனே இவன்` என்பது இதன் பொருள். ஒரு வடமொழி உதாரணம். இதன் விளக்கம் இல்லற நிலையில் அதற்குரிய கோலமும், உடையும், பெயருமுடையவனாய் இருந்த ஒருவன் அவற்றையெல்லாம் விடுத்துத் துறவியாகி, அதற்குரிய கோலம், தண்டு கமண்டலம், வேறு பெயர் ஆகியவற்றைக் கொண்டால், `அவன்` எனப்பட்ட நிலையில் அவனிடம் இருந்த சேர்க்கைப் பொருள்களையெல்லாம் விடுத்து, அவற்றை உடையவனாய் இருந்த அவனை மட்டுமே கொண்டு, `இவன்` எனச் சுட்டுதல் போல்வதே `சீவன் சிவமாகிறது` என்றலும் - என்பது அஃதாவது பசுத்துவத்தால் `சீவன்` எனப்படுகின்ற உயிர் அப்பசுதுவத்தின் நீங்கித் தூயதாகிய நடுநிலையிலேதான் சிவனைச் சார்ந்து சிவமாகின்றது என்பதாம்.

குறிப்புரை :

ஆகிய - இயற்சொல்லாகாது, ஆக்கச் சொல்லாய் அமைந்த அகரச்சுட்டு `சோயம் தேவத்தன்` என்னும் தொடர் முழு வதையும் சுட்டிற்று. ``இடத்து`` என்பது ஏழாம் வேற்றுமை பொருட்டாய் நின்றது. ஆகியவை - சேர்க்கைப் பொருளாகச் சேர்ந்துள்ளவை. `விட்டாற்போல` என உவம உருபு விரிக்க. `காயம் முதலிய` என ஒரு சொல் வருவிக்க. ஏகிய - நீங்கிய. ``ஏகிய` `தொம்` என்பதையே - தத் அசி - என்ப`` என முடிக்க. இங்ஙனம் கூறிய வற்றின் விளக்கமாகேவே, ``மெய்யறிவாகிய சீவன் பரசிவன் ஆமே`` என்பது கூறப்பட்டது. சீவனே என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. ``மெய்யறிவாகிய சீவன்`` என்றதனால், அது பொய்யறி வாகிய உடம்பு முதலியவற்றின் நீங்கினமை பெறப்பட்டது. இவ்வாறு பொருள் கொள்ளுதல் விட்டு விடாத `லக்கணை` எனப்படும். இலக்கணை பின்பு விளக்கப்படும்.
``சோயம் தேவதத்தன்`` என்னும் இவ்வுதாரணத்திற்கு ஏகான்ம வாதிகள் தரும் விளக்கம், `இல்லறத்தானாய் இருந்தவன் எவனோ அவனேதான் துறவியானவனும்; வேறொருவனல்லன்; அதுபோலத் -தான் சீவனும், பிரமமும் வேறாகாததும்` என்பது. துறவிக்கும் இல்லறத்தானுக்குப் போலக் கோலமும், உடைமையும் ஒழுக்கமும் உள்ளன ஆகலின், அவற்றைப் பெற்றவனே துறவியாதல் நினைக்கத் தக்கது.
இதனால், முச்சூனிய நிலை உவமையில் வைத்து விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தாமத காமிய மாதி தகுகுணம்
ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு
ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில்
தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே.

பொழிப்புரை :

முக்குணங்களும், மும்மலங்களும் `அ, உ, ம` என்னும் பிரணவ கலைகள் செயற்படில் செயற்படும்; ஒடுங்கில் ஒடுங்கும். அச்செயற்பாடு ஒடுக்கங்களும் மூவகை உடம்பின் கண் நிகழும் `தொம், தத், அசி` என்னும் முப்பதங்களின் சூனியங்களும் அவ்வாறேயாம். அஃதாவது `முச்சூனியங்கள் நின்மல துரியத்தில் நிகழும்` என்பதாம்.

குறிப்புரை :

`தாமத மாதி குணம், காமியமாதி மலம்` எனக் கூட்டுக. ``மூன்றில்`` என்பதன் பின் `நிகழும்` என்பது வருவிக்க. உடல் மூன்று, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்டன. தாம் ஆம் துரியம் - ஆன்மாச் சுத்தி பெற்ற நின்மல துரியம் `தொம் தத், அசி` என்பன அவற்றின் சூனியங்களைக் குறித்தன.
இதனால், முச்சூனியங்களின் இயல்புகள் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டன. இவற்றால் இவை பிராசாத யோகத்தில் சொல்லப்படும் சூனியங்கள் ஆகாமை விளங்கும்.

பண் :

பாடல் எண் : 1

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.

பொழிப்புரை :

காரிய தத்துவங்களாகிய தூல உடம்பு, தூல பூதம், சூக்கும பூதம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகிய ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு அவற்றின் நீங்கிய நிலை `மாயப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து காரண தத்துவங்களாகிய வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு நீங்கிய நிலை `போதப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து முன் நீங்கியவற்றின் வாசனை உளதாகிய சுத்த தத்துவங்களையும் வேறாகக் கண்டு கடந்த நிலை `உபசாந்தம்` எனப்படும் இதனையும் கடந்த நிலையே பந்தம் முழுதும் நீங்கிய வீட்டு நிலையாம்.

குறிப்புரை :

போதப்பாழ், `சீவப்பாழ்` என்றும், உபசாந்தம், வியோமப் பாழ்` என்றும் சொல்லப்படுதலை வருகின்ற மந்திரத்தில் காண்க. ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவத்தின் காரியம் ஆதல் பற்றி அவற்றைக் ``காரியம் ஏழ்`` எனவும், அவை போல வித்தியா தத்துவம் வேறு தத்துவத்தின் காரியம் ஆகாது ஆன்ம தத்துவத்திற்குக் காரண மாகியே நிற்றல் பற்றி அவற்றை, ``காரணம் ஏழ்`` என்றும், அதற்கு மேல் நீங்க வேண்டுவன இன்மையின் அந்நிலையை, ``உபசாந்தம்`` என்றும் கூறினார். தீர்தற்கு, `பந்தம்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `முப்பாழாவன இவை` என்பதும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

பொழிப்புரை :

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட மற்றும் அவையே, `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில் `போதப் பாழ்` எனக் கூறியதைச் ``சீவப் பாழ்`` என்றும் ``உபசாந்தம்`` எனக் கூறியதை ``வியோமப் பாழ்`` என்றும் இம்மந்திரத்திற் கூறியவாறு காண்க.
இதனால், `முப்பாழ்` என்பவற்றின் பெயர் வேறுபாடுகளும், உண்மை இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

எதிர்அற நாளும் எருதுவந் தேறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனும் பாழைக் கடந்துகற் பனையை
உதறிஅப் பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :

`என்றும் தன்னோடு ஒப்பார் இன்றி ஆனேற்றையே ஊர்தியாக உவந்து ஏறி உலாவுகின்ற சிவன் ஒருவனே பதி; ஏனையோர் யாவரும் பசுக்களே எனத் துணிந்து அவனது திருவடியை அடைய வேண்டி, முன்னர், `இதுவே கதி`, எனக் கருதிய மூன்று பாழ்களையும் கடந்து முன் கருதிய கருது கோள்களையெல்லாம் உதறித்தள்ளி, அவற்றையெல்லாம் கடந்த வேறொரு தனிப் பாழில் இப்பொழுது நான் அடங்கியிருக்கின்றேன்.

குறிப்புரை :

இதனால், `பாழ்` என்பது, `மாசாவன அனைத்தும் நீங்கிய தூய்மையே` என்பது விளங்கும். ஆகவே, மாயப் பாழாவது மான்` எனப்படும் பிரகிருதி நீக்கமும், `போதப் பாழ்` என்பது, `மோகினி` எனப்படும் அசுத்த மாயை நீக்கமும், `வியோமப் பாழ்` என்பது, `விந்து` எனப்படும் சுத்தமாயை நீக்கமும் ஆதல் பெறப் பட்டது. முப்பாழ்களுள் ஒன்றிரண்டையே முழுத் தூய்மையாகக் கருதுவார் கருத்துக்கள் திரிபுணர்வேயாதல் பற்றி அவற்றைக் ``கற்பனை`` என்றார். முப்பாழையும் கடந்த அப்பாழே முன் மந்திரத்தில் ``தூய சொரூபம்`` எனப்பட்டது. ``ஏறும் பதியெனும் நந்தி`` என்பதை, `ஏறும் நந்தியெனும் பதி` என மாற்றியுரைக்க. இந்தப் பதியினது பதமது கூட` என்றதனால் `இம் முப்பாழ்த் தரிசனமும், அவற்றது சுத்தியும் சிவபெருமானைப் பொதுநீக்கித் தனக்குவமை யில்லாத தனிப்பெரும் பொருளாக உணரும் உணர்வைப் பெற்றவர் களுக்கே கூடும்` என்றதாயிற்று. ``எதிர் அற`` என்றதும், இதனை வலியுறுத்தற்கேயாம்.
இதனால், `முப்பாழுங் கடந்தவழியே முதற்பாழாகிய சொரூப நிலையை அடைதல் கூடும்` என்பதும், `அது சிவஞானம் வழியாகவே கூடும்` என்பது கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

துரியம் அடங்கிய சொல்லுறும் பாழை
அரிய பரம்பரம்` என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் அன்றே உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறி வாரே.

பொழிப்புரை :

முப்பாழையும் கடந்த, சொல்லற்ற நிலையாம் சொரூபமாகிய உண்மையை, அறியாதார் சிலர், `அஃது உயிர்களால் என்றும் அடையப்படாத மிக மேலேயுள்ள நிலை` எனக் கூறுவர். (உயிர்களால் என்றுமே அடையப்படாது எனின், `அத்தன்மையதாகிய ஒருபொருள் உண்டு` என்பதே பெறப்படாது முயற்கோடு, ஆகாயத் தாமரை முதலியனபோல அதுவும் வெறும் கற்பனைப் பொருளாய் விடும். மிக மேலானதேயானும் ஆதலின்) அஃது என்றுமே உயிர்களால் அடையப்படாதது அன்று; செயற்கரிய சாதனைகளைச் செய்தவழிக் கிடைக்கின்ற ஓர் அரிய இடமேயாம். இவ்வுண்மையை அறிந்து, அவ்வாற்றால் அதனை அடைய முயல்பவர் எத்துணைப் பேர்? ஒரு சிலரேயாவர்.

குறிப்புரை :

``துரியம்`` என்றது பாழை. அடங்குதல் - கீழ்ப்படுதல்; எனவே சொல்லறும் பாழ் அதீத நிலையாயிற்று. ``அரிய`` என்பன, கிடைக்கப்படாத` என்னும் பொருளன. பரம், பரம் - மேலதற்கும் மேலானது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, ``நிலம்`` என்பதனுடன் கூட்டுக. உதித்தல் - எதிர்ப்படுதல். ``அறிவார்`` என்பதில் அறிதல். அதனுடன் காரியமாகிய முயலுதலையும் குறித்தது. `முயலுதல் இல்லையேல், அறிந்ததனால் பயன் என்னை` என்க.
இதனால், `முப்பாழும் கடந்த முதற்பாழ் உயிர்களால் முயன்று அடையற்பாலதோ, அன்றோ` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. முன் மந்திரத்திரத்திலும், ``அப்பாழில் ஒடுங்குகின்றேன்`` என அனுபவம் காட்டினார். ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``8 என்பது நாயனாரது திருவுளம் ஆதலின், அதுபற்றி எழும் ஐயத்தை இதனால் அறுத்தருள்வாராயினார்.

பண் :

பாடல் எண் : 5

ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு
வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ
தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.

பொழிப்புரை :

`மெய்ப் பொருளை அருளாசிரியர் பக்குவம் வாய்ந்தவர்கட்கு உபதேசிக்கும் உபதேச மொழி, `சிவாய நம` என்னும் மந்திரமே என்பதைச் சைவப் பெருமக்களன்றிப் பிறர் தெளிய மாட்டாராயினும் சைவப் பெருமக்கள் அதனைத் தெளிந்து அதன் உண்மையை ஆராயுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களும் தம்மின் வேறாகி நீங்கிய பொழுது அந்த ஐந்தெழுத்தில் பாசத்திற்கு வழியாகிய `நம` என்பதை நீக்கி, முன்பு நகரத்தின் பொருளாய்த் திரோதானமாய் இருந்த சத்தி வேறுபட்டு அருட்சத்தியாய் வகாரத்தின் பொருளாகி, யகாரத்தின் பொருளாகிய ஆன்மாவை, யகாரம் நீங்கிய இரண் டெழுத்தில் ஈற்றெழுத்தாகிய வகாரம், முதலெழுத்தாகிய சிகாரத்தின் பொருளாகிய உண்மைச் சிவத்தில் பின் என்றும் நீங்காதவாறு சேர்ப்ப தாகவே யன்றோ உணரப்படும்! `பிறிதாக ஒன்றும் உணரப்படாது` என்பதாம்.

குறிப்புரை :

`பக்குவிகளுக்கு ஆசிரியர் உபதேசிக்கும் உபதேச மொழி திருவைந்தெழுத்தே` என்பது,
``மன்ன என்னை ஓரு வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்``3
என்ற ஆசிரியர்,
``நானேயோ தவம் செய்தேன்; சிவாயநம எனப்பெற்றேன்``l என்று அருளிச் செய்தமையால் விளங்கும். அவர் எடுத்த எடுப்பிலே, ``நமச் சிவாய வாஅழ்க``* என எடுத்தருளிச் செய்தமையும் நினைக்கத் தக்கது.
``நன்னெறி யாவது நமச்சி வாயவே``*
``நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே``*
என்னும் திருமொழிகளும் ஓர்ந்துணரற்பாலன. நன்னெறி சன் மார்க்கம். ஞானநெறி. வாய் - வழி: பாசத்திற்கு வழி. ஈற்றடியை முதலில் வைத்து, `நமவாகிய வாய் அகன்றிட்டு, வேறாகிய பரை, யவ்வை மெய்ப் பரன்பால் கூட்டும்; அஃதாவது வா சிய்யில் கூட்டும்` என இயைக்க. செய்யுள் பற்றி எழுத்தும், பொருளும் விரவி வரக் கூறினார். தேறாமை, `சிவாயநம` என்பதன் பெருமையைத் தெளியாமை. எனவே, தேறுதலும் அதன் பெருமையேயாற்று. தேறுதல், அதன் காரியமாகிய ஆராய்தலையும் உடன் உணர்த்திற்று.
இதனால், `முப்பாழையும் முறையே கடத்தற்கும் பின் முப்பாழையும் கடந்து அப்பாழை அடைதற்கும் நற்றுணையாவது திருவைந்தெழுத்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும்
உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

பொழிப்புரை :

`உயிர் உடம்பே; உடம்பே உயிர்` என இவ்வாறு உயிரின் இயல்பை மயங்கி உணர்ந்து, அந்நெறியிலே தங்கள் ஆராய்ச்சியைச் செலுத்தபவர்கட்கு உயிர் இல்பொருளேயாம். உயிர் இல்பொருளாயினமையின், உடம்பின் தன்மையை அவர் உணர்ந்ததும் உணராமையேயாம். ஆகவே, அவர்கட்கு இங்குக் கூறி வந்த இருட்குழியாகிய தத்துவச் சிக்கலும் இல்லை; அக்குழியினின்றும் ஏறும் கரையாகிய முப்பாழும் இல்லை. அவற்றைக் கடந்த வேறு வெளியாகிய பரநிலையும் இல்லை.

குறிப்புரை :

`இவையெல்லாம் உயிர் உடம்பின் வேறு என்பதை உணர்ந்து, நிலையற்ற உடல் நலத்தைப் பெரிதாக நினைந்து, அதனை அடைய முயல்பவர்கட்கே உள்ளனவாம்` என்றபடி. ``இல்லை`` என்றது, இருத்தலைப் பற்றிக் கவலை உண்டாதல் இல்லை` என்றதாம். இத்தன்மையை நோக்கியன்றோ தெய்வப் புலவர்,
``நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்;
நெஞ்சத் தவல மிலர்``l
என்று அருளிச் செய்தார். ஈற்றடியை அதன் அயலடிக்கு முன்னர்க் கூட்டுக. உள்ளம் - உயிர். உரு - உடம்பு.
இதனால், முடிநிலைப் பேறாகிய இவற்றைக் கூறுமிடத்து `இன்னோரன்ன மெய்ந்நூற் பொருள்கள் எல்லாம் தக்கார்க்கே உரியன` எனத் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை
உற்றிடும் காரணம் காரியத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

பொழிப்புரை :

முன்அதிகாரத் தொடக்கத்தில்l `காரிய தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, சீவஉபாதி` என்றும், `காரண தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, `பரோபாதி` என்றும் கூறப்பட்டன. இங்கு, `பரம்` என்பது, பரம் பொருளைக் குறியாமல், `சீவ உபாதிக்கு மேலே உள்ளவை` எனப் பொருள் தந்தது. `இவ்விருவகை உபாதிகளும் நீங்கினால் காரியம் காரணத்தோடு அற்றுவிட்டதாகும். அங்ஙனம் அவை அற்று விட்டதால், `அணு` எனப்பட்ட உயிர் அவ்வணுத்தன்மை நீங்கி, வியாபகப் பொருளாகிய சிவத்தை அடைந்து தனது வியாபக நிலையைப் பெற்று இன்புறும்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

குறிப்புரை :

அற அறுதல் - முற்றும் நீங்குதல். இரண்டாம் அடியிலும் ``ஏழும்`` என்பதன் பின்னும் `அற` என்பது வருவிக்க. ``காரியம், காரணம்`` என்பன நிரல் நிறையாய் மேற்கூறிய `சீவ உபாதி, பரோ பாதி, என்பவற்றோடு இயைந்தன. பின்னர் ``அணு வருதலால், அச் சிவம்`` என்னும் சுட்டு `வியாபகச் சிவம்` என அதன் வியாபகத்தைச் சுட்டிற்றாம். `அணு வியாபகம் ஆகும்` என்றதனால், `அணுத்தன்மை உயிர்க்குச் செயற்கையால் வந்தது என்பதும், `வியாபகமே அவனது இயற்கை` என்பதும் பெறப்பட்டன. செயற்கை, ஆணவ மலம்.
இதனால், உயிர் செயற்கையின் நீங்கி இயற்கையை எய்துதற்குத் தடையாய் உள்ளவை உபாதிகள்` என்பதும், அவை, `காரிய உபாதி, காரண உபாதி` என இருவகையினவாம் என்பதும் கூறப்பட்டன.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அகராம் உயிரே; உகாரம் பரமே`` என்னும் மந்திரம் மேல் நான்காம் தந்திரத்தில், `திருவம் பலச் சக்கரம்` அதிகாரத்தில்* சிறிது வேறுபாட்டுடன் வந்ததேயாகும் இவ்வதிகாரத்தில் அதற்கு இயைபில்லை.]

பண் :

பாடல் எண் : 2

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நினைவு மிகுத்த நனா கனா
ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

பொழிப்புரை :

தத்துவங்களுக்குள்ளே சில காரியமும், சில காரணமும் ஆதல் பற்றி அவற்றை, `காரியம், காரணம்` எனப் பிரித்துக் கூறினாலும் தத்துவங்கள் அனைத்திற்கும் மாயையே காரணமாகத் தத்துவங்கள் அவற்றின் காரியம் ஆதல் பற்றி அவை அனைத்தையும் இங்கு ``காரியோபாதி`` என்றார். ``நனவு`` என்றது சகல சாக்கிரத்தை. அதன்கண் நிகழும் `நனவு, கனவு, உறக்கம்` என்பவற்றில், இவற்றிற்கு முன் நிலைகளில் எல்லாம் கிடைக்கப்பெறாத பேறு கிடைக்கப் பெறுகின்ற துரிய நிலையை அடைந்த பொழுதுதான் உயிர் உண்மையில் `துவம்` பதப் பொருளாகும்.

குறிப்புரை :

`நினைவு வேறாய்` என மாற்றியுரைக்க. நினைவு - உணர்வு. ``மிகுத்த`` என்றதனால், நின்மலமாதல் குறிக்கப்பட்டது. எனவே, இங்குக் கூறப்பட்ட நனவு முதலியன நின்மல சாக்கிரம் முதலியவாயின ஆகவே, `இங்குக் கூறப்பட்ட உபாதிகள் நின்மலாவத்தையில் நீங்கும்` என்றதாயிற்று. நிலம், துரியம், ஆதல் - கிடைத்தல். `ஆம் நிலம்` என்க. உபாதி நீங்கிய நிலையே உயிர்க்குத் தூய்மையாதலின் `அது தொம்பதப் பொருளாம்` என்றார். ``பதம்`` என்பது சொல்லாகு பெயராய் அதன் பொருளைக் குறித்தது.
இதனால் உபாதிகள் நீங்கும் இடம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உயிர்க்குயி ராகி ஒழிவற் றழிவற்(று)
அயிர்ப்பறு காரணோ பாதிவெதி ரேசத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமித்தா லன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாதே.

பொழிப்புரை :

எல்லா உயிர்களிலும் அவற்றிற்கு உயிராய், ஒரு ஞான்றும் விட்டு நீங்காது, அழிவின்றியிருப்பினும் உயிர்கள் முன் மந்திரத்தில் கூறிய உபாதிகள் அனைத்தினின்றும் நீங்கிய பின்பே முன்பு பாலில் நெய்போல விளங்காதிருந்த நிலையினின்றும் நீங்கித் தயிரில் நெய்போல வெளிப்பட்டு விளங்குகின்ற சிவன் அவ்வாறு வெளிப்பட்டாலன்றி யாதோர் உயிர்க்கும் துன்பத்தைத் தருகின்ற ஆணவ மலம் நீங்குதல் உண்டாகாது.

குறிப்புரை :

`உயிர்கட்கு உள்ள உபாதிகளில் மூல உபாதி ஆணவ மலமே யாதலின், முன் மந்திரத்தில் மாயேயங்களாகிய ஆறாறும் நீங்கியபின் உயிர்தொம்பதமாம் - என்றது என்னை` என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். ஆணவத்தை நீக்க வேண்டியே மாயேயங்கள் சேர்க்கப்பட்டமையால். `அவை நீங்க` என்றமையால், `அவற்றிற்குக் காரணமான ஆணவம் நீங்கினமை தானே பெறப்படும் என்றபடி. அயிர்ப்பு - ஐயம். வெதிரேகம் - எதிர்மறை; அது முன்னை நிலைக்கு மாறாய் அமையும் நிலையைக் குறித்தது. உயிர்த்தல், இங்கு விளங்குதல் உபமித்தல் - உடனாதல். இதுவும் அந்நிலை விளங்குதலையே குறித்தது. `ஒளியாலல்லது இருள் நீங்காதவாறு போல், சிவம் பிரகாசித்தா லல்லது ஆணவ மலம் நீங்காது என்பதாம். `மாயேயங்களாகிய உபாதிகள் நீங்கினவிடத்தே பிரகாசிப்பவன் சிவன்` என்றதனால், மாயேயங்கள் நீங்கினவிடத்துச் சிவம் பிரகாசித்தலால் ஆணவ மலம் நீங்கிற்றாம்` எனக் கூறற் பாலதனை வலியுறுத்தற் பொருட்டு `உபமித்தாலன்றி ஆணவம் வீடல் செய்யாது` என எதிர்மறை முகத்தாற் கூறினார்.
இதனால், `ஆதியாய உபாதி நீங்குங்கால், அநாதியாய உபாதி நீங்கியேவிடும்` என ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கரக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறு பாழில் பராற்பரந் தானே.

பொழிப்புரை :

`காரிய உபாதி` எனமேற் கூறப்பட்ட உபாதிகள் உள்ள பொழுது, உயிர் தன்னையே அறியாது மயங்கும். காரிய உபாதிகள் நீங்கக் காரண உபாதிகள் நீங்காதிருக்குமாயின் உயிர் தன்னை ஒருவாறு அறியினும் தலைவனை அறியாது மயங்கும். இக்காரிய காரண உபாதிகள் உயிர்கட்கு ஆக்கி வைக்கப்பட்டவை. இன்னும் இவ்வுபாதிகள் பலவாகச் சொல்லப்படுகின்ற பதங்களாகிய உலகங்களைச் சார்ந்து நிற்பனவாம். இவையெல்லாம் அற்ற நிலையே `வெறும் பாழ்` எனப்படுகின்றது. அவ்விடத்தில் தான் மேலானவற்றிற்கெல்லாம் மேலான பரம் பொருள் உள்ளது.

குறிப்புரை :

`உயிர் அந்த வெறும்பாழை அடைந்து தான் பரம் பொரூளை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. `கலக்கும்` என்பன பாடம் அல்ல. கடும்பசு - மலத்தால் மிக மூடப்பட்ட பசு; என்றது, சகலவருக்கத்து உயிரை - காரிய காரணம், உம்மைத் தொகை. ``கற்பனை`` என்றது, ஆக்கப்பாட்டினை. பதம் - பதவி. பார் - உலகம். ஏகாரம், பிரிநிலை. அதனைப் பிரித்து, ``பாழ்`` என்பதனோடு மாறிக்கூட்டி, `பாழிலேதான் பராற்பரம்` என்க. தான் கட்டுரைச் சுவைபட வந்தது. `உள்ளது` என்பது சொல்லெச்சம்.
இதனால், `உபாதிகள் எல்லாம் நீங்கின இடமே உயிர் அடையத் தக்க இடம்` என்பது கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

பொழிப்புரை :

``பற்றுக பற்றற்றான்; பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு``*
என்றபடி, உலகப் பற்றை நீக்குதற்கு வழி சிவப்பற்றைக் கொள்ளுத -லாகும். அப்பற்று உண்டாதற்கு வழி, சிவனைக் குருலிங்க சங்கமங் -களை வழிபட்டு உறுதுணையாகப் பற்றுதலாகும். மனம் புலன்களின் வழி ஓடாது தன் வயப்படுதற்கு வழி யோகசமாதி. முத்திக்கு வழி சிவ ஞானம். அந்த ஞானம் வருதற்கு வழி உயிர் உபசாந்தத்தை அடைதலாம்.

குறிப்புரை :

`இங்கு எடுத்துக்கொண்ட பொருள் முத்தியே` என்பது தோன்றுதற் பொருட்டு, `சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்` என்னும் முறைப்படி ``முத்திக்கு வித்து`` என்பதையே முன்னர்க் கூறினா -ராயினும் ஈற்றடிக்கு முன்னே கூட்டியுரைத்தல் கருத்தென்க. ``சத்தி`` என்றது ஞானத்தையே. `முத்திக்கு வித்து, சக்திக்கு வித்து` என்பவற்றைக் கூறுதலே கருத்தாயினும் அவை வலியுறுதற் பொருட்டு வேறு இரண்டை உடன் கூறினார். இஃது ஒப்புமைக் கூட்ட அணி பணிந்துற்றப் பற்றுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மனத்தை அது சென்றவிடத்தால் செலவிடாது* அடக்கித் தன் வயப்படுத்துதலே பெறற் கரிய பேறாகலின் அதனையே ``சித்தி`` என்றார். சிவபரம் - சிவமாகிய பரம் பொருள். தானாதல் - சமாதி. ``சிவம் பரம்`` என்றதனால், சிவ யோகமே குறிக்கப்பட்டதாம். உபசாந்தமாவது மாயேயங்கள் எல்லாம் நீங்கிய நிலை` என்பது முன்பே கூறப்பட்டது.
இதனால், `உபசாந்தம் ஞானத்தைப் பயக்க, ஞானம் வீடு பேற்றைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.

பொழிப்புரை :

`காரிய தத்துவம்` எனப்பட்ட ஆன்ம தத்துவங்கள் பிரகிருதியில் ஒடுங்கினும், பிரகிருதி ஒடுங்காத பொழுது அவை மீளத் தோன்றும் நிலை உளதாகும். ஆகவே, பிரகிருதி ஒடுக்கமே காரிய தத்துவ ஒடுக்கம் ஆதலின், அஃது அசுத்த மாயையில் ஒடுங்குவதாம். இனி, `காரண தத்துவம்` எனப்பட்ட வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையில் ஒடுங்க, அசுத்த மாயை கலக்குண்ணாது சுத்த மாயையில் வியாப்பியமாகி நிற்றலே காரணதத்துவ ஒடுக்கம் ஆதலின், அசுத்த மாயை சுத்த மாயையில் ஒடுங்குவதாகும். (இங்கு ஒடுக்கமாவது காரியப் படுதல் இன்றி வியாப்பிய மாத்திரம் ஆதல்) இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றபொழுது ஆன்மா பர துரிய நிலையை அடையும். (`அப்பால் அதீத நிலை தானே வரும்` என்பது கருத்து) `உபசாந்தம்` என்பதன் தன்மை ஆன்மா இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றுத் துரிய நிலையை அடைதலேயாகும்.

குறிப்புரை :

பார் - நிலம். என்றது, முன் அதிதகாரத்தில், ``எய்தாப் பேரும் நிலம்``3 எனப்பட்ட நிலம். அணவுதல் - அடைதல் இதற்கு, `உயிர்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், `உபசாந்தமாவது இது` என்பதும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத்
தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``பார்`` எனப்பட்ட அந்தப் பர துரியமே முற்றான ஆன்ம சுத்தி நிலையாகும். (எனினும், அதற்கு முன்னே `சிவதுரியம்` எனச் சொல்லப்பட்ட நின்மல துரியமே ஆன்ம சுத்தியாகச் சொல்லப்படுகின்றதன்றோ எனின்` பராவத்தையில் இனிது வெளிப்படுகின்ற பர சிவம், நின்மலாவத்தையில் ஓரளவாக வெளிப்படுதல் பற்றி அங்ஙனம் கூறப்படுகின்றது. ஆயினும் ஆன்மா பர சிவத்தோடு இரண்டறக் கலந்து உடனாய், வியாபகமாய் நிற்றல் ஒப்பற்ற உபசாந்தமாகிய பராவத்தையிலே யாகலின், பர துரியமே முற்றான ஆன்ம சுத்தியாம் என்க.

குறிப்புரை :

இதனை மெய்கண்ட நூல்கள் `ஆன்ம லாபம்` எனக் கூறும், ``சுத்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. முன்னியே - முன்பே கருதப்பட்ட சாக்கிராதீதம், நின்மல துரியாதீதம். `புரிவு` என்பது விகுதி குன்றி, முதனிலை மாத்திரமாய் நின்றது. புரிவு - செயல்; மேற்குறித்த ஆன்ம சுத்தி பரம் - பர சிவம் `காட்சியாவதனால்` எனவும், `உபசாந்தத்தில்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. தன்னில் - பரசிவத்தில், `வியாத்தி` என்றது வியாப்பியத்தை.
இதனால் உபசாந்தமே முடிநிலைப் பேறாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களும் தன்னின் மேம்பட்டுத் தன்னை மயக்காதபடி அவைகளைக் கீழ்ப்படுத்தி, அவைகளால் வரும் மயக்கத்தினின்றும் நீங்குதலே தன்னைத் தான் பெறுதலாகிய ஆன்ம தரிசனமாகும். (சிவரூபம் இதில் உடன் நிகழும். ``தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாம் தொழும்`9 என்றார் திருவள்ளுவரும்) ஆன்ம தரிசனத்திற்குப்பின் நிகழ்வதாகிய ஆன்ம சுத்தியாவது, சொல் நிகழ்ச்சியில்லாத, மௌன நிலையாகிய நின்மல துரியாதீதமாகும். (இதில் சிவதரிசனமும், சிவயோகமும் உடன் நிகழும்) ஆன்ம சுத்திக்குப் பின் அடையற்பலாதாகிய ஆன்ம லாபமாகிய சிவப்பேறாவது, பர துரியா தீதமே.

குறிப்புரை :

ஆறுதல் - அடங்குதல்; கீழ்ப்படுதல். தீர்தல் - மும்மலங்களும் நீங்குதல். குருவாகிவந்து அருள்செய்யும் அருட் பெருக்குப் பற்றிச் சிவனை, ``குருபரன்`` என்றார். குருபரம் - குருமார்களுக்கெல்லாம் மேலான குரு; ஞானகுரு. வியாத்தம் - வியாத்தி; சம நிறைவு. சமமாதல், சிவ வியாபகத்தோடாம். ஆன்மாச் சிவத்தில் வியாப்பிய மாயினும் பெத்தத்தில் ஏகதேசமாய் நின்ற நிலையினின்றும் நீங்கி வியாபகமாயினமை பற்றி ``வியாத்தி`` என்றார்.
இதனால், உபசாந்தத்தை அதற்கு இனமாய் முன்னிகழ்வன வற்றோடு ஒப்பித்துக்காட்டி அதன் இயல்பு இனிது விளக்கப்பட்டது. இதனானே அவற்றது இயல்புகளும் தெளிவிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய்
ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே
ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.

பொழிப்புரை :

உபசாந்தம் பத்து நிலைகளையுடையதாகச் சொல்லப்படும்.
1. கருவி கரணங்கள் உலகியல் வகையில் செயற்படாது, மெய்யுணர்வு நெறியில் செயற்படுதல். (இஃது யோகாவத்தை, இது முன்பு `சீவ துரியம்` எனப்பட்டது. இது கருவிகளின் மாற்றுச் செயல் ஆதலின், இதனை, வாதனை`` என்றார்).
2. ஆன்மாத் தன்னைக் கருவிகளின் வேறாக உணர்தல் (இஃது ஆன்ம தரிசனமாம். உள்ளம் - ஆன்மா; `ஆன்மா` என்றது, `ஆன்மாத் தான் ஆதல்` என்றபடி.)
3. ஆன்மாத் தன்னையிழத்தல். (அஃதாவது தற்போதம் நீங்குதலாம்.) ``போய்`` என்றது, `தான் போய்` என்றபடி.
4. தற்போதத்தை இழந்த ஆன்மாச் சிவனையே உணர்ந்து அவனேயாதல். (இதுவே தசகாரியத்துள் சொல்லப்படும் சிவயோகம். ஆன்ம தரிசனத்தில் சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி சிவதரிசனத்தில் தொடங்கி சிவயோகத்தில் முற்றுப்பெறும்.)
5. சிவானந்தம் உதயமாதல். (இது சிவயோகத்தில் முடிநிலையில் நிகழும்.)
6. உயிர் சிவானந்தத்தை அனுபவித்தல். (இஃது `ஆனந்தானுபவம்` எனப்படும். இதில் உயிருக்கு, `நாம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வு நிகழும்.)
7. உயிர் ஆனந்தத்தில் அழுந்துதல். (இதில் அந்த உணர்வும் இல்லாதொழியும்.) இஃது `ஆனந்தாதீதம்` எனப்படும். (இரண்டு முதல் 5 முடிய உள்ள நான்கும் நின்மலாவத்தையில் சாக்கிர, சொப்பன, சுழுத்தி, துரிய அவத்தைகளாம். 6,7 நின்மல துரியாதீதமாம்.)
8. சகலரினின்று பிரளயாகலர்களாகப் பெற்ற உயிர்களும், பிரளயாகலரில் பக்குவம் பெற்ற உயிர்களும் பின் விஞ்ஞானகலராய் இறைவனால் திருவருள் செய்யப்பெற்றுச் சுத்த புவன போக்கியப் பொருள்களால் இன்புற்றிருத்தல்.
9. அதற்கு மேலும் சுத்த புவன அதிபதிகளாய் ஆட்சி புரிதல். (இவை `அபர முத்தி` எனப்படும்).
10. இங்குக் கூறிய இவைகளில் ஒன்றும் இன்றிச் சிவனோடு இரண்டறக் கலந்து அவனது வியாபகத்தில் அடங்கி விடுதல் என்பன. (இறுதி மூன்றும் பராவத்தைகளாம். அவற்றுள் பத்தாவதே பரமுத்தியாம்.)

குறிப்புரை :

`இங்குக் கூறியன எல்லாம் உபசாந்தம்; எனப்படு மாயினும் பராவத்தையே உண்மை உபசாந்தம். என்பதும், அவற்றுள் பர முத்தியே முடிநிலை`- என்பதும் கருத்துக்கள் ``சிவானந்தத்து`` என்றதனால் சிவானந்தம் உதயமாதல் பெறப்பட்டது. ``தோய்ந்து`` என்றதனால், தோய்தலும் வேறொன்ற ாயிற்று. ``மோனம்`` என்றது அமைதியை; அது துன்பம் இன்மையைக் குறித்தது. ``அனுபவத் தொடே`` என்னும் ஒடு, எண் ஒடு. ஆய்தல் - இங்கு முற்றுணர்வுபெற்று எல்லாவற்றையும் அறிதல் ஆகவே, அஃது ஆட்சி செய்தலாயிற்று. `உபசாந்தம் ஈரைந்துமே` என முடிக்க. ஏகாரம் தேற்றம்.
இதனால், ஞானச் செய்தியாவன பலவும் உபசாந்தத்தின் படிநிலைகளாகத் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பரையின் பரஅப ரத்துடன் ஏகமாய்த்
திரையின்இன் றாகிய தெண்புனல் போலவுற்(று)
உரையுணர்ந்(து) ஆரமு தொக்க உணர்ந்துளோன்
கரைகண் டவன் உரை யற்ற கணக்கிலே.

பொழிப்புரை :

பர சிவத்தின் சத்தியாகிய பராசத்தியின் தடத்த நிலை அதன் அபரமும், சொரூபநிலை அதன் பரமும் ஆகும். பெத்தத்தின் நீங்கிய உயிர் முதற்கண் நின்மலாவத்தையிலும், பராவத்தையில் அதீதத்திற்குக் கீழ்ப்பட்ட நான்கு நிலைகளிலும் பராசத்தியின் அபர நிலையைப் பொருந்தியும் அதீதத்தில் அதன் பர நிலையைப் பொருந்தியும் அலையற்றுள்ள கடல்நீர் போல யாதோர் அலைவுமின்றியிருக்கும். எனினும், அபர நிலையில் தேவாமுதத்தைப் பெற்று உண்பவன், அதனைத் தான் பெற்ற அருமை, அதன் சுவை மிகுதி, அதன் பயன் முதலியவற்றை உணர்ந்து நிற்பவன் போலவும், பர நிலையில் அவ்வாறு உணர்தல் இன்றி அந்த அமுதத்தின் சுவையிலே மூழ்கித் தன்னை மறந்து நிற்பவன் போலவும் இருப்பான். இவ்விருவரில் தன்னை மறந்து, உரையுணர்விறந்தவன் நிலையே முடிந்த நிலையாம்.

குறிப்புரை :

``உரையுணர் விறந்து நின்று உணர்வதோர் உணர்வே``9 என்றும் அருளிச் செய்தமையும் காண்க. சத்தியின் நிலையே சிவத்தின் நிலையாயினும் உயிர் சத்தி வழியாகவே சிவத்தையடைதல் பற்றி அங்ஙனம் அடையப்படும் நிலைகளைச் சத்திநிலைகளில் வைத்துக் கூறினார். ``உரை உணர்ந்து`` என்றது, `உரையையும், உணர்வையும் வேறாக நன்குணரும் நிலையில் நின்று` என்றபடி. ஒக்க உணர்தல் - முற்ற உணர்தல்; என்றது நன்குணர்தலை `உணர்ந்துளோன் உரையற்ற கணக்கில் கரை கண்டவன் ஆவான்` என முடிக்க. கணக்கு நிலை - கணக்கில் நிலையை அடைந்த பொழுது.
இதனால், ஞானச் செய்திகளின் முடிநிலை அனுபவங்கள் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.

பொழிப்புரை :

`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.

குறிப்புரை :

`முயல்` எனப்படுவது, உண்மையில் முயலாகாமை போல, ஞானியர்பால் பிறர் குறையாகக் காண்பனவும் உண்மையில் ஆகாமையும் இவ்வுவமையால் கொள்ளத் தக்கது. `ஞானமில்லாரது இகழ்ச்சிகள் ஞானியைச் சார மாட்டாமையே யன்றிச் சார்தற்கு யாதும் இயைபும் இல்லை` என்பது இவ்வுவமையால் கூறப்பட்டதாம்.
``எறிவான்`` வான் ஈற்று வினையெச்சம். ``நெஞ்சு`` என்றது அறிவை. `அது குருவுபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியும் அறிவு` என்க.
இதனால், `உண்மையுணராதாரது இகழ்ச்சியால் உண்மை யுணர்ந்தார்க்கு வருவதோர் இழுக்கில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக்
கருந்தாழ் கயத்தில் கரும்பாம்பு நீங்கப்
பெருந்தன்மை பேசுதி ஒழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாறே.

பொழிப்புரை :

மனமே, `பெரிய முயற்சியையுடைய கருடன் தன்போக்கிலே தான் ஆகாயத்தில் பறக்கவும், கரிய நாகம் அஞ்சி ஓடி, மிக ஆழ்ந்த புற்றுள் ஒளிந்து கொள்ளுதல் போலவதே, மெய்யுணர் வுடையார் முன் மெய்யுணர்வில்லாதாரது நிலை என்பதைச் சில சான்று களால் நீ உணர்ந்திருந்தும் மெய்யுணர்வில்லாதாரது கூற்றுக்களைப் பெரிது படுத்திப் பேசுகின்றாய். இனி அவ்வாறு பேசுதலை விடு. ஏனெனில் உண்மை மெய்ந்நெறியாகிய பெருநெறியில் ஏனைச் சிறுநெறிகள் எல்லாம் பெரிய ஒரு கடலிலே சிறிய பல ஆறுகள் சென்று உருத்தெரியாது அடங்குதல் போல்வதே.

குறிப்புரை :

``கருமை`` இரண்டும் பெருமை; ஏனையது நிறம் ``நீங்க`` என்பது `மறைய` என்றபடி, அது, `மறைதல் போல்வதாக` பொருள் தந்தது. `பெருந்தன்மை பட` என ஒருசொல் வருவிக்க. பெரிது படுத்திப் பேசுதலாவது, `அவைகளும் ஏன் உண்மைகளாய் இருக்கக் கூடாது` என எண்ணி மயங்குதல். `சென்ற` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ``சென்ற`` என்றது சென்று அடங்குதலைக் குறித்தது. ``ஆறு`` இரண்டில் முன்னது நதி. பின்னது உவம உருபு. `ஆறாதலையுடையவே` என ஈற்றில் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. பிறர் நெஞ்சின் இயல்பினைத் தம் நெஞ்சின்மேல் ஏற்றியுரைத்தார்.
இதனால், `புறங் கூற்று மொழிகள் மயக்கும் தன்மையுடைய வாயினும் குரு உபதேசத்தில் உறைத்து நின்று மயங்கலாகாது` என்பது கூறப்பட்டது. `பிற நெறிகள் குற்றம் உடையன ஆகாது, குறை மட்டுமே உடையன` என்பது பின்னர்க் கூறிய உவமையால் பெறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 3

கருதலர் மாளக் கருவாயில் நின்றே
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் வேட்ட தனிஉம்பர் ஆமே.

பொழிப்புரை :

பகைவரைப் போர்க்களத்தில் எதிர்த்துப் போர் செய்யாது, அவர்தம் நகரத்தை முற்றுகையிட்டே காலத்தைப் போக்குதல் புல்லறிவாண்மையாகும். சிவநெறியைச் சாராதவர் செய்யும் பெரிய தவங்கள் எல்லாம் அப்புல்லறிவாண்மையை ஒக்குமேயானால், அவற்றால் தரப்படும் பயன்கள் எல்லாம் சுவர்க்க போக வாசிகளாய்ச் சில காலம் வாழ்ந்திருத்தலேயாகும்.

குறிப்புரை :

`முத்திப் பயனை அவை தரமாட்டா` என்பதாம். ``கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்``* என மேலே கூறினமையால், ``மருவலர்`` என்றது சிவனை மருதாவர்களை யாயிற்று. ``ஒத்தால்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின் கண் வந்தது, ``நீரின்றமையா துலகெனின்``* என்பதிற் போல ``ஆமே`` என்பது, `ஆகும் அதுவே` எனப் பொருள்தந்தது.
``பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``
என்னும் சிவஞான போதத்தை* நோக்குக. `பிறவிக்குக் காரணமான வினைகளை வெல்வதற்குப் பசு புண்ணியங்களைச் செய்தல்` என்பது இங்குக் கூறிய உவமையால் குறிக்கப்பட்ட பொருள்.
இதனால், பதி புண்ணியங்களை உணராது பசு புண்ணியங் களையே புகழ்வாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.

பொழிப்புரை :

பெரிய நிலவுலகத்தவர் யாவரும், வானுலகத்துப் பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய சிவனையே `பரம் பொருள்` என உடன்பட்டு மனத்தால் நினைத்தும் பின்னர் அவன் திரு வடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். அதனை நன்கு சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்தலே தக்கது. அதை விடுத்து பிற சமயிகளது சொற்களைக் கேட்டு மாறுபடாதீர்கள்.

குறிப்புரை :

``தட்டை யிடுக்கித் தலையைப் பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா;
பேணித் தொழுமின்கள்``9
என்றாற் போல ஞானம்பந்தரும் அருளிச் செய்வார். ``நிலம்`` என்றும் ``கணம்`` என்றும் கூறினமையால், ``எழும்`` என்று அஃறிணை முடிபு தந்தார். ``பெருநிலம் முற்றும், கணம் பதினெட்டும் - எம் ஈசனே ஈசன் என்று இணங்கி, உன்னி, காண வணங்கி எழும்` என இயைந்து, ``காண வணங்கி`` என்பவற்றில் விகுதி பிரித்துக்கூட்டி, `கண்டு வணங்க எழும்` என முடிக்க. `வணங்கி` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. ``பிறைநுதல் வண்ணமாகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே``8 என்றதும் காண்க.
பதினெண் கணங்கள் இவை என்பதை,
``விரவுசா ரணரே, சித்தர்,
விஞ்சையர், பசாசர், பூதர்
கருடர், கின்னரர், இயக்கர்,
காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர், ஆகாச வாசர்,
உத்தர குருவோர், யோகர்,
நிருதர், கிம் புருடர், விண்மீன்
நிறைகணம் ``மூவா றாமே``3
என்னும் நிகண்டினால் அறிக. விஞ்சையர் - வித்தியாதரர். இயக்கர் - யட்சர். காந்தர்வர் - கந்தருவர். சுரர் - தேவர். தைத்தியர் - அசுரர். உரகர் - நாகர் உத்த குருவோர் - போக பூமியர். யோகர் - முனிவர். நிருதர் - அரக்கர். விண்மீன் - நட்சத்திர மண்டலர்.
இதனால், `உயர்ந்தோர் நெறி சிவநெறியே` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

என்னிலும் என்உயி ராய இறைவனை
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை
உன்னில் உம் உன்னும் உறும்வகை யாலே.

பொழிப்புரை :

என்னைத்தான் நான், `என் உய ர்` என்று ஓற்றுமைக் கிழமை பற்றி எண்ணுவேன். ஆயினும், என் உயிரினுள் உயிராய் நின்று எனக்கு உறுதிசெதய்து வருபவன் எங்கள் இறைவனாகிய சிவன். ஆகவே, `என் உயிர்` என்று யான் வலியுறுத்திக் கூறுதற்கு உண்மையில் உரியவன் அவனே. அவன் உண்மையில் பொன்னினும், மணியினும் சிறப்பாகக் கொண்டு போற்றத்தக்கவன். தூய்மையே வடிவானவன் உலகில் காணப்படும் பொருள்களில் எல்லாம் மேலான ஒளிப்பொருளாகிய. பகலவன் ``வெங்கதிர்`` என்று சொல்லப்படுதல் போல, உயிரினுள் உயிராய் இருந்து அங்குள்ள இருளை முற்றக் கடிதலால் அவனை `வெவ்வுயிர்` என்றலும் பொருந்தும் (`வெம்மை` என்பதற்கு, `விருப்பம்` என்பதும் பொருளாகலின், ``வெவ்வுயிர்`` என்பது, `விரும்பத் தக்க உயிர்` என்றும் பொருள் தரும்) அவன் உயிர்களின் குணங்கட்கு வேறான குணங்களையுடையவன். அவனை நீவிர் நினைப்பீராயின், உம்மையும் அவன் நினைப்பான். (அவனை நீவிர் அடைதல் கூடும்)

குறிப்புரை :

``என்னில் ஆரும் எனக்கினி யார் இலை
என்னி லும் இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளே உயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே``3
என்னும் அப்பர் திருமொழியையும் காண்க.
``என்னிலும் என் உயிராய இறைவன்`` என்றது, `என் உயிர்` என்று யான் சிறப்பித்துக் கூறுதற்கு என்னிலும் மிக உரிமையுடைய இறைவன், என்றபடி, ``மணியிலும்`` எனப் பின்னரும் உருபு விரிக்க. ஆய - உயர்ந்த, மின்னிய - ஒளி விடுகின்ற. விகிர்தன் - வேறு பட்டவன். `உம்மை உன்னும்` என்பதில் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. உறும் வகையாலே உன்னும்` என முன்னர்க் கூட்டி முடிக்க.
இதனால் முன் மந்திரத்தில், ``எம் ஈசனே ஈசன்`` என்று உயர்ந்தோர் பலரும் உன்னி வந்து வணங்குவர் என்றதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து)
ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.

பொழிப்புரை :

நூல்களில் சொல்லப்பட்ட பொருள்களைப் பிறர் அறிய நன்கு உரைப்பவராயினும், தாங்கள் ஐம்புலன்களை வென்று, `இவன் பரமோ, அவன் பரமோ, எல்லாருமே பரமோ` என இங்ஙனம் பலவாறாக எண்ணி அலமரும் ஐயங்களை விரைவில் விடுத்து, `இவன் ஒருவனே பரம்` என்று ஒருதலையாக உணரத்தக்கவன் ஒரு முதல்வனே. அத்தகைய முதல்வன் எங்கள் பரமாகிய சிவன் ஒருவனே ஆதலின், அவனையே நீவிர் நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் மனத்தால் ஒன்றியிருங்கள்; பயன் அடைவீர்கள்.

குறிப்புரை :

`பொருள்கள் உரைப்பவராயினும்` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றில், `ஆதலின்` என்பது வருவித்து. `எம் நிமலனை நின்றும் ஒன்றும் என முடிக்க. மேல் ``எம் ஈசனை`` என்றும், ``என் உயிர்`` என்றும் கூறினாற்போல, இங்கும் `எம் நிமலனை` என்பதில் `எம்` என்பது தொகுத்தலாயிற்று.
``ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்``*
எனவும்,
``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினும் இல்லை:
அவனோடொப்பார் இங்கு யாவரும் இல்லை``*
எனவும் மேற்கூறியவற்றையே இங்கு வலியுறுத்து ஓதினார்.
இதனால், ஐயக் கொள்கை ஆகாமை கூறப்பட்டது.
``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து``*
எனத் திருவள்ளுவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

நுண்ணறி வாய் உல காய் உல கேழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப்
பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.

பொழிப்புரை :

உயிர்கள் தூல சித்தாதல் போல இல்லாமல் சூக்கும சித்தாய், சடவுலகத்தை இயக்கியும், அறிவுலகமாகிய உயிர்களின் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தும் நிற்கின்ற, எங்கள் தந்தையாகிய சிவபெருமான், உயிர்களின் தனித் தன்மையை உணர்ந்து அவற்றைப் பக்குவப்படுத்தும் முறைகளில் பக்குவப்படுத்துவோனாவான். அவனை உணர்ந்த பெருமக்களையே உயர்ந்த அறிவினையுடையோர் சேரவிரும்புகின்றார்கள்.

குறிப்புரை :

பின் ``என் அறிவாய்`` என்றமையால் முன்பு ``உலகு`` என்றது சட உலகத்தையாயிற்று. பண்ணுதல் தகுதி யாக்கல். ``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை``* என்பதனால், சிவன் பண்ணறிவாளன் ஆதலையறிக. ``விண்`` என்பது உயர்வைக் குறித்தது. அறிவின் மிக்கோராதல் பற்றித் தேவர்கள், `புலவர்` என்றும், `விபுதர்` என்றும் சொல்லப்படுவார்கள். ஆதலின் அவர்களையே ``விண்ணறிவாளர்`` எனக் கூறினார் எனவும், இனி `விண்ணாவது சிவபோகம்; அறிவாளர் அங்குள்ள சிவஞானிகள் எனவும் கொள்ளலும் ஆகும். விண்ணறிவாளர் விரும்புதற்குக் காரணமானவற்றையே முதலில் உடம்பொடு புணர்த்தலாகக் கூறினார். ``விண்ணறிவாளர் விரும்புகின்றார்`` என்றதனால், `நீவிரும் அவ்வாறு விரும்புதலே தக்கது` என்பது குறிப்பாயிற்று.
இதனால், `அறிவு வடிவான மெய்ப்பொருள் சிவனே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே.

பொழிப்புரை :

தேவர்களாலும், (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனைச் சிறுதும் இடையீடின்றி உள்ளத்தால் பற்றுங்கள்; பற்றினால் பற்றிய அப்பொழுதே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எஞ்ஞான்றும் நீவிர் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டால், உமது தன்மை சிவத்தன்மையாய்விடும்.

குறிப்புரை :

கண் - காலம் பற்றிய இடைவெளி. காலை - காலம் `அக்காலையே` எனச் சுட்டு வருவித்து உரைக்க. இயற்றுதல், பண்ணுதல் என இருகாற் கூறியது அகம், புறம் நோக்கியாம். `உம் தன்மை` என எடுத்துரைக்க. ``பராபரன்`` என்பது, அவனது தன்மையைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், சிவன் சாராதார்க்கு அரியனாயினும் சார்ந்தார்க்கு எளியன் ஆதலை உணர்த்தி, `அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்றான் அருள்செய்த பேரரு ளாளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.

பொழிப்புரை :

சிவன், தான் பொருளால் ஒன்றாயினும், எண்ணில்லாத பல பொருள்களிலும் நிறைந்திருப்பவன் (என்றது, `அவ்வாறு வியாபிக்கும் சத்தியை உடையவன்` என்றபடி) ஆயினும் தன்னைச் சார்ந்தவர்க்குச் சார்ந்தபின்பே அருளும் பேரருளை யுடையவன். அன்பு செய்யும் மனத்தினர் தாம் அறிந்தவாறு செய்யும் செயல்களுக்கெல்லாம் இணங்குபவன். அன்பர்கள் பலவாய் நிறைந்த மலர்களைத் தூவிப் புகழும் கெடாத புகழினையுடையவன்.

குறிப்புரை :

`அவனை அணுக வேண்டினார்க்கு அணுகுதல் எளிதேயாம்` என்பது கருத்து. `உலகு ஏழும் உடன் பரந்தவன்` என மாற்றியுரைக்க, எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உடன் - ஒருசேர. `ஆளவன்`` என்பதில் முதலில் நின்ற அகரம் விரித்தல். கன்றாமை - வெறாமை அது வெறுத்தலின் மறுதலையாகிய விரும் -புதலைக் குறித்தது, ``கல்வி`` என்றது, கற்றுச் செய்யும் செயல்களை, `அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளுபவன்` ஆதலை `கன்றா மனத்தார்தம் கல்வியுள்நல்லவன்`` என்றார். ``பொன்றாத`` என்பதைப் புகழுக்கு அடையாக்குக.
இதனால், `சிவனது இயல்பை உணரவல்லார்க்கு அவனை அடைதல் எளிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே யென்றும் எறிமணி தான்அகம்
காற்றின் விளக்கது காயம் மயக்குறல்
மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

பொழிப்புரை :

எம் தந்தையாகிய சிவபெருமானது பொன் போலும் சிவந்த திருவடிகளில், அகத்தில் எனது மனத்தையும், புறத்தில் பூக்களையும் ஏற்றி, `போற்றி போற்றி` என்று பலநாளும் துதித்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியின் ஓசை போன்ற ஓர் ஓசை உள்ளத்திலே கேட்டது. உடனே, காற்றின் முன்னே உள்ள விளக்குப் போல்வதாகிய உடம்பு எந்த நேரத்திலும் நீங்குவதாயினும், அஃது என்றும் நீங்காமலே இருப்பது போலக் காட்டி மயக்குகின்ற மயக்கத்தை நீக்கும் உபாயமும் கேட்டது. பின்பு எல்லாவற்றையும் அடக்கி, மேலே வியாபித்துள்ள பரவெளியும் என் கண்முன் காணப்பட்டது.

குறிப்புரை :

``போற்றி என்றேன்`` என்பதை, ``என்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``கேட்டது`` என்பதை, முன்னரும், கூட்டி, `அகம் எறிமணி கேட்டது, மாற்றலும் கேட்டது` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர். இவ்வோசை யோகத்திற் புலனாகும். ஓசை `விள
க் -காகிய காயம்` என்க. அது பகுதிப் பொருள் விகுதி. ``மாற்றல்`` என்பது ஆகுபெயராய் அதற்குரிய உபாயத்தைக் குறித்தது. உபாயம் கேட்டமை யாவது. அகத்தில் யோகத்தால் புலனாயினமையாம். ``கேட்டது`` எனச் செயப்படுபொருள் வினை முதல் போலக் கூறப் பட்டது. பரவெளி யாவது, திருவருள் அது காணப்பட்டமையாவது தெளிவாக விளங் -கினமை அதனைக் கண்டமை கூறவே அதன்கண் உள்ள சிவத்தைக் கண்டமை கூறவேண்டாவாயிற்று. `நீவிரும் ஏற்றிப் போற்றினால், கேட்டும், கண்டும் பயன் பெறலாம்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `சரியை கிரியா யோகங்களால் சிவனை அடைந்து, அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞ்ஞானிகள் ஆவீராக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வார் இல்லை
கூடுபுக் கேறலுற் றேன் அவன் கோலம் கண்
மூடிக்கண்டேன் உல கேழும்கண் டேனே

பொழிப்புரை :

என்னைத் தானே தேடிக்கொண்டு வந்து என்னுள்ளேயிருக்க ஒருப்பட்டுவிட்ட சிவனை என்னுள்ளே புகுந்து அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (ஆகவே, வேறிடத்தில் அவனை அறிதலும் இயலாமை வெளிப்படை) யான் வெளியே சென்ற அலையாமல் என் உடம்பினுள்ளே கீழ் இருந்து மேல் ஏறிச் சென்று பொழுது அவனது அழகைக் கண்டேன்; காணுங்கால் கண்ணைத் திறந்து பார்த்துக் காணாமல் கண்ணை மூடிக்கொண்டே கண்டேன். அப்பொழுது அவனை மட்டுமா கண்டேன்? ஏழுலகங்களையும் கண்டேன்.

குறிப்புரை :

``தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்``*
எனவும், ``தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்` எனவும் அருளிச் செய்தவாறு, பக்குவம் எய்திய ஆன்மாக்களை அவை பக்குவம் எய்தியது உணர்ந்து தானே சென்று அடைந்து அருளுபவன் சிவன் ஆதல் பற்றி, நேடிக்கொண்டென்னுள்ளே நேர்தரு நந்தியை`` என்றார். ``கூடு புக்கு ஏறலுற்றேன்`` என்றது மூலாதாரத்தினின்று ஆறு ஆதாரங்களையும் நிராதாரத்தில் யோக நெறியால் சென்றமையை, ``கண் மூடி`` என்றது அந்நெறியைக் குறித்தற்கு. யோகக் காட்சியில் அவனைக் கண்டவர்கட்கு அவனது அருளால் எவ்விடத்திலும் எக்காலத்துப் பொருளும் இனிது விளங்குதலைக் குறிக்க, ``கோலம் கண்டேன் உலகேழும் கண்டேன்`` என்றார். ``ஆரும் உணர்ந்தறிவார் இல்லை`` என்றதற்கு, இறைவன் யோகியர் உள்ளத்தில் விளங்குதல் போலப் புற இடங்களில் விளங்குதல் இல்லை` என்பதே கருத்து. இக்கருத்தே பற்றி அம்மை திருவந்தாதியிலும்,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``l
என்று அருளிச் செய்யப்பட்டது. இதில் அன்பர் உள்ளம் குறிக்கப்பட்டது.
``காலையும், மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம், ஆரூர் அரனெறி யார்க்கே``3
என்ற அப்பர் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
இதனால், யோக முயற்சியும், அன்பும் சிவனை அடைதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனும் உடைய சிறுவரை ஒன்றுகண்(டு)
ஊனம்ஒன் றின்றி உணர்தல்செய் வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே

பொழிப்புரை :

யோகக் காட்சி பற்றி, `முக்காலமும் உணர்ந்தவர்` எனப் பலரும் கூறப்பட்டுக் குவியும் புகழாகிய உயர்வையும், அவ்யோகத்தாலே பிறர் ஒருவரால் அசைக்க ஒண்ணா அருள் உணர்வாகிய துளங்கா நிலையையும், அமுதமாகிய தேனையும் உடைய ஒரு சிறு குன்று மக்கள் எல்லாரது உடம்பிலும் உள்ளது. அதனை உணர்ந்து, ஏறும் வழியறிந்து ஏறி, அதனை உணர்வினால் அடைந்த தவத்தோரை, அவர் உடம்பு நீங்கிய பின்னர்த் தனது பேருலகில் ஏற்றுகின்ற ஆண்மையுடையவனாகவும் எங்கள் சிவன் இருக்கின்றான்.

குறிப்புரை :

யோக நெறியில் பருவ நடு `மேரு` எனப்படுதல் பற்றி, அதனை ``வரை`` என்கின்றவர், அஃது எண் சாண் உடம்பினுள் ஓரிடத்ததாதல் பற்றி ``சிறுவரை`` என்றார். `நுண்ணியதாகக் காணத்தக்கது` என்றலும் கருத்து. `உடம்பினுள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. அவ்விடத்துப் பருகி இன்புறுதற்கு ஏதுவாய் உள்ள அமுதத்தை, ``தேன்`` எனச் சிறப்புருவகமாகக் கூறி, ஏனைய, `புகழ், ஞானம்` என்பவற்றை உருவகம் செய்யாது வாளா கூறினமையின், இஃது ஏகதேச உருவகம். ``கண்டு`` என்றது, காணுதற்கு அருமை குறித்தது. செய்தல் -தருதல். `ஏனையோர் அது மாட்டார்` என்பது உணர்த்துதற்கு மாட்டுவானை, ``மறவன்`` என்றார். மறவன் - வீரன் உம்மை சிறப்பு. இங்கும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், சிவநெறி நின்று சிவயோகம் செய்யின், புகழும், ஞானமும், இன்பமும், வீடும் பெறலாம்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாமதி ஆம்மதியாய் நின்ற மாதவர்
தூமதி யாகும் சுடர்பர மானந்தம்
தாமதி யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு)
ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.

பொழிப்புரை :

`மதி` என்பதற்கு, `அறிவு` என்பதும் பொருள் ஆதலால் `மதி` என்னும் பெயருக்கு வானத்துச் சந்திரனை விட மிக உரிமையுடைய உச்சிச் சந்திரனை அடைந்து, அதனால் உண்டாகும் அறிவையே அறிவாகப் பெற்ற யோகிகளுடைய தூய அறிவாய் விளங்கும் ஒளி, பேரின்பமே வடிவாக உடைய பரம்பொருளாம். அதனால், பிறரெல்லாம் தங்களுடைய நிலையற்ற அறிவையே அறிவாகப் பற்றி உலகத்தை நுகர்ந்துகொண்டிருக்க இவ்யோகிகள் `உபசாந்தம்` என்னும் நிலையை அடைந்து, அநாதியே பற்றிய மலங்கள் நீங்கப்பெற்று, அமைதி நிலையை அடைகின்றனர்.

குறிப்புரை :

`மாதவரது தூய்மதி` என்க. பரமானந்த வடிவானதை, ``பரமானந்தம்`` என்றார். தாமதி - தாவுகின்ற மதி. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றும் நிலையில்லாத அறிவு. அற்றார். முற்றெச்சம். தெளிவு பற்றி நிகழ்காலம், இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட யோகத்தின் சிறப்புடைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு)
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம்அற்(று) `எனதியான்` மாற்றிவிட் டாங்கே
திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே

பொழிப்புரை :

`சாலோகம், சாமீபம், சாரூபம்` மூன்றும் பத முத்திகளாம். சிலர் இவற்றையே வேறு வகையாகக் கூறி `பரமுத்தி` எனச் சாதிப்பர். அவற்றில் எல்லாம் இருள்மலம் ஆகிய ஆணவம் பற்றறக் கழியாமையால் அதன் காரியமாகிய துன்பம் அவ்விடங்களில் சிறிது சிறிது உள்ளதேயாம். ஆகையால், `அவை குறையுடையன` என்று அறிந்து, அவற்றோடு நிற்றலை விடுத்து. ஆணவம் பற்றற நீங்கினமையால், அதன் காரியமாகிய மயக்கமும், `யான், எனது` செருக்கும் பற்றறக் கழிய, அப்பற்றுக்களை இயல்பிலே இல்லாதவ னாகிய பரம சிவனிடத்தில் அடங்கி நிலைத்திருப்பவர்களே உண்மை -யில் சிவனைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`அயன், அரி, அரன்` என்னும் மூவர் பதவிகளைச் சிவநூல்கள் ஓரிடத்தும் `முத்தி` என்றல் இல்லையாகலின் அவைகளை மூனறு `பத முத்திகள்` என்றல் கூடாமையறிக. இதம் உற்ற பாசம் - பெத்த நிலையில் இன்பம்போலத் தோன்றிய பாசம். ``ஆங்கு`` என்றது பண்டறி சுட்டு திதம் - நிலைபேறு `இந்நிலையை அடைந்தவர்களே நிலை பெற்றவர்` என்றதனால், பதமுத்தியடைந்தவர்கட்கும் பின்னர்ப் பிறப்புவருதல் உண்டு என்பது,
``தவம் செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து
பவம் செய்து பற்றறுப்பா ராகத் - தவம் செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றாசூழ் சொல்லுமாம் கண்டு``
என்பது சிவஞான போதம்.* `பரமுத்தி யொழிந்த ஏனைய முத்திகள் இன்பநிலை ஆகா` என்பதைச் சிவஞான சித்தி கீழ்க்காணுமாறு விளக்கும்.
``பினாதி அருள் பெற்றவர்கள் நித்தஉரு வத்தைப்
பெற்றிருக்கை முத்தியெனில், பெறும்பதமே இதுவும்;
இனாதுநிலை இதுதானும்; காயம் உண்டேல்,
இருங்கன்மம், மாயைமலம் எல்லாம் உண்டாம்.`` 9
சித்தி - பேறு. சித்தர் - பேறு பெற்றவர்.
இம்மந்திரம் அகச் சமயத்தார்க்கு அறிவுறுத்தியது.

பண் :

பாடல் எண் : 15

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.

பொழிப்புரை :

சிவஞானத்தால் சிவதரிசனத்தைப் பெற்றோர் யாவரும் சிவனைப் பெற்றவராகவே எண்ணப்படுவர். (அவர் பின்பு பதமுத்திக்கு மேலான அபர முத்தி பரமுத்திகளை அடைவர் ஆதலின்,)
``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்.`` l
என்றபடி அவர்கள் `சுத்தம், அசுத்தம்` என்னும் இருவகைப் பிரபஞ்சத்துள் எதில் இருப்பினும் அதில் பற்றற்றேயிருப்பர். அவர், `பதமுத்தி, அபரமுத்தி, பரமுத்தி` என்னும் மும்முத்திகளையும் தம்மை அடைந்த மாணாக்கர்க்கு அளிக்க வல்ல ஆசிரியர்களும் ஆவர். இனி மூலாதாரத்தில் ஒடுங்கியிருக்கும் குண்டலி சத்தியை எழுப்பி அதன் பயனைப் பெற்ற யோகியரும் சதாசிவ மூர்த்திபோல அபர ஞானமாகிய கலைஞானங்களை வழங்கத் தக்கவராவர்.

குறிப்புரை :

`சீருடன் தோயாதவர்` என இயைக்க. சீர் - சிறப்பு திருவருள். `அதனுடனேயிருந்துகொண்டு, தோய்வின்றி இருப்பர்` என்க சத்தியைப் பெற்றவர் சத்தர். சதாசிவமூர்த்தி பரஞானத்தையும் தருவபர் ஆயினும், அவர் வேதாகமங்களை அருளிச்செய்து, பிறர்க்கு அறிவுறுத்தினமையே இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனால், சிவஞானிகளும், சிவயோகிகளுமே ஆசிரியராவர் என்பது உணர்த்தும் முகத்தால், பிறரை ஆசிரியராகக் கொண்டு மயங்குதல் கூடாமை கூறி முடிக்கப்பட்டது.
முதல் தந்திரம் முதலாகச் சில இடங்களில் கூறியவற்றையே இங்குக் கூறினார். ஆயினும் அவை சுபக்கத்தாரை நோக்கி உண்மை யுணர்த்தலாகக் கூறப்பட்டன; இவை பரபக்கத்தாரை நோக்கி, அறிவுரையாகக் கூறப்பட்டன. இவ்வேற்றுமை உண்மையால், இவை கூறியது கூறல் ஆகாமை உணர்க. இங்ஙனமாகவே, இவ்வாறு உரையாதார்க்கு இவை கூறியது கூறல் ஆதலையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 1

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.

பொழிப்புரை :

``அண்ட பிண்டம் அவை சமம்``* *கோயிற் புராணம் - பதஞ்சலி சருக்கம் - 70. என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது ஆதலின், இதய கமலம் எட்டிதழ்களை உடையதாகக் கொள்ளப்படுதல் போலவே நில வுலகமும் எட்டிதழ்களையுடைய தாமரை மலர்களும், அவ்விதழ்களில் திசைக் காவலர்கள் இருப்பதாகவும் பாவித்து அவர்களை வழிபடல் வேண்டும் - என்பது வைதிகக் கொள்கை. அவரளவிற்கு அது வேண்டுவதே என்பதை முதற்கண் கூறுகின்றார். இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

உதிக்கின்ற சூரியனுடன் தோன்றுகின்ற இருளில் தோன்றாமை எல்லார்க்கும் உரியது ஆதலின். இதனை ஏனையோர்க்கும் கொள்க. இந்திரன் முதலிய எண்மரையும் கிழக்கு முதலாகத் தொடங்கி எட்டுத்திசையையும் வலமாக எண்ணிப் பொருத்திக் கொள்க. ஈசன் - ஈசானன். நிதித்தல் - நிதிமிகுதல்.
இதனால் `திசை காக்கும் கடவுளர் எண்மராவார் இவர்` என்பது கூறப்பட்டது. கிழக்கிலும், வடக்கிலும் இந்திரனையும், குபேரனையும் நீக்கி, முறையே `ஞாயிறு, திங்கள்` என்பவரைக் கூறுதலும் உண்டு. அவ்விடத்தில் திங்களை, `சோமன்` என்ப,
``ஞாயிறாய், நமனு மாகி,
வருணனாய்ச், சோம னாகித்
தீ, யறாநிருதி, வாயு,
திப்பிய சாந்த னாகி`` - திருமுறை - 4,32.6.
என்னும் திருப்பாடலைக் காண்க. இனி, `சோமன்` என்பதும் குபேரன் பெயரே என்பாரும் உளர்,

பண் :

பாடல் எண் : 2

ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கியல் மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

பொழிப்புரை :

உயிர்களோடு ஒன்றி இயங்குகின்ற மாயா நகரத்தில் ஒன்றை ஒன்று ஒத்துள்ள தாமரைமலர்கள் எட்டிதழ்களையுடையன வாகும். அவை உள்ளே நுணுகிய புழையை உடைய தண்டின்மேல் உள்ளன. அவற்றுள் ஒரு தண்டு `சுழுமுனை` எனப்படுகின்றது. அதனோடு உள்ள புழையால் மலர்கின்ற தாமரையில் விளங்குகின்ற ஒளியையே யோகிகள் காண்கின்றனர் ஆதலின் மற்றொரு தாமரையிலும் அந்த ஒளியையே பாவித்து உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

இம்மந்திரம் இரட்டுற மொழிந்தது. பூ - 1 மலர்; இதய கமலம் 2 பூமி. மாயாபுரி - 1 அண்டம். 2 பிண்டம், உடம்பு இதய கமலத்தை உடைய தண்டு சுழுமுனை நாடி. பூமியைத் தாங்குகின்ற தண்டு அனந்தன் - (ஆதிசேடன்) இதய கமலத்தில் விளங்குகின்ற ஒளி சிவன். அவனையே அண்டத்திலும் (பூமியிலும்) நடுநாயகனாக வைத்து, ஏனையோரைச் சுற்றுக் கடவுளராகக் கொண்டு வழிபட்டு உய்க என்பதமாம். இவ்வாறு செய்யும் வழிபாடு சிவாலயங்கள் அனைத்திலும் என்றும் நிகழ்ந்து வருதல் வெளிப்படை எனவே, `முன் மந்திரத்துக் கூறப்பட்ட திசைக் காவலர்களைச் சிவனது ஆணையை நடத்தும் அதிகாரிகளாகக் கொண்டே வழிபடுதல் வேண்டும்` என்பது போந்தது. `இதுவே சிவ நெறி` என்க.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க எழுதல் - மேம்படுதல்.
இதனால், `வைதிக கருமங்களைச் செய்யினும் சைவ முறையிலே செய்தலே ஆன்றோர் ஆசாரம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ்
எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில்
பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே

பொழிப்புரை :

அரும்பாய் இருந்து அலர்த்த அலர்கின்ற தாமரை மலர்கள் உடலினுள்ளே ஒன்றல்ல; மூன்று உள்ளன. அந்த மூன்றிலுமே ஒளி வடிவான இறைவன் விளங்குகின்றான். எனினும், மேற்கூறிய எட்டிதழ்த் தாமரையிலே நின்றுவிடாமல் ஏறிச் சென்று இரண்டிதழ்த் தாமரையை அடைந்து அவனைத் தரிசித்தால், பிறந்து வளர்கின்ற உடம்பு கனவுக் காட்சியாய்விடும்.

குறிப்புரை :

``மொட்டு அலர்கின்ற`` என்ற விதப்பால், அலர்த்த அலர்தல் பெறப்பட்டது. அலர்த்துதல் பிராணாயாமத்தால். மூன்று தாமரைகளாவன, மேல் ஆதாரங்களாகிய, `அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்பன எட்டிதழ்த் தாமரை அனாகதமே. கீழ் ஆதாரங்களில் வேறு கடவுளர் இருத்தலின் அவற்றைக் கூறாது, இம்மூன்று ஆதாரங்களை மட்டுமே கூறினார். இவற்றில் சிவன் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என இருப்பன். அதனால், `உருத்திரனிடத்திலே நின்று விடாமல், சதாசிவனை அடைக` என்றார். ஆதார யோகத்தின் பயன் விளைவது அவ்விடமேயாகும் அனாகதம் பூசைத்தானமாக ஆஞ்ஞையே தியானத் தானமாம். ஏற்பு - எழுந்து பண்டம் - உடம்பு. இது பின்னர் வருதலின், முன்னர் ``மூன்றுள`` என்றது இதனுள்ளேயாயிற்று. கனவுக் காட்சியாதலாவது, `கனவு போல நிலையாது` என்னும் உணர்வு மிகுதல்.
இதனால், `ஆதார யோகம் யாவும் ஒரு பெற்றிப்பட்டன அல்ல; மேலையாதார யோகமே சிவ யோகமாய்ப் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

பொழிப்புரை :

உடம்பினுள், முன் அதிகாரத்தில் கூறியவாறு உள்ள சிறுமலையினின்றும் தோன்றுவது ஆறு அன்று; அருவியே அந்த அருவியின் நீரை ஏற்கின்ற குளம் (ஏரி) ஒன்று உண்டு. அதில் விளையும் விளைவுவகைகளோ பல. ஆயினும் அவ்வினைவினது இயல்பு அறிதற்கரிதாய மிக நுட்பமாய் உள்ளது. அதனை வெளிப் படக்கூறினால், மாதொரு கூறனாகிய பரம்பொருளேயாம்.

குறிப்புரை :

`அருவியே ஆறு` என ஏகாரத்தை மாற்றி யுரைக்க. ``அகம்`` என்பதை முதலிற் கூட்டுக. ``அருவி`` என்றதனால், அது தோன்றும் இடமாகிய மலையுண்மை தானே பெறப்பட்டது. `மலையில் ஆறு உற்பத்தியாதல் இயல்பு; ஆயினும் இங்கு அஃதில்லை` என்றபடி. `அஃது ஆஞ்ஞை` என்பது மேலே சொல்லப்பட்டது. அருவி - ஆஞ்ஞை யினின்றும் பெருகும் அமுத தாரை. குளம் - இருதயம். விளைவு பல வகையினதாதல் இறைவனது எண் குணங்கள் பற்றியாம். முதல் இரண்டடிகளிற் பொதுப்படக் கூறியவற்றை ஏனையோர் அறிவா ராயினும், அதனைச் சிறப்புவகையான் அறியாமை பற்றி, `அதனை அவ்வாறு அறிதல் வேண்டும்` என்பதைப் பின்னிரண்டடிகளால் கூறினார். `அங்ஙனம் உணராத பொழுது அவர் முயற்சி பெரும்பயன் தாராது` என்பதாம். வேறேயிருத்தல், தலைமையிடத் திருத்தல்.
இதனால், மேலையாதார யோகங்களையும் சிவ யோகமாகச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

தியானப் பொருள் பிராசாத கலைகள் பன்னிரண்டிலும் நிறைந்து, எட்டிதழ்த் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசையெட்டும், அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மரும், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்துமாய் உள்ள முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையேயாம்.

குறிப்புரை :

`தியானப் பொருள் சிவனே` என்றபடி ``தேர் எட்டும்`` என்பதை, ``தேவதை எட்டும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``தேர்`` என்றது, படைக்கலம் முதலிய பிறவற்றையும் தழுவிய உபலக்கணம். `திசைக் காவலர் அவ்வாறெல்லாம் வழிபடப்படுவர்` என்க. அகை - பிரிவு. மற்று, அசை. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `உதிப்பிக்கின்ற ஆறு, ஆதிப்பிரானை` என முடிக்க. `ஆதிப் பிரானை உதிப்பிக்கின்ற ஆறாம்` என்றபடி. ஆறு - முறைமை. `உதிப்பிக்கின்ற` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
இதனால், `யோகத்தின் எட்டுறுப்புக்களில் `தியானம்` ஏதேனும் ஒன்றைத்தியானிப்பது அன்று; சிவனைத் தியானிப்பதே` என்பது கூறப்பட்டது. `ஏதேனும் ஒன்றைத் தியானிக்கலாம்` என்பது யோக மதம்.

பண் :

பாடல் எண் : 6

ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.

பொழிப்புரை :

வைதிக முறையில் வழிபடினும், இதய கமலத்தின் எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக ஏழ் எண்ணி ஏழாவதாகிய வட இதழ் ஈறாக உள்ள இதழ்களில் உள்ளவர்களாக மேற்சொல்லப்பட்ட திசைக் காவலர்களைச் சகலவருக்கத்து ஆன்ம வர்க்கத்தவராகவும், அடுத்த வடகீழ் இதழில் உள்ள ஈசானனை அவரின் மேம்பட்ட பிரளயாகல உருத்திரனாவும், எட்டையும் கடந்து மேலாக ஓங்கி நிற்கும் உயர்புற இதழில் சீகண்ட உருத்திரரை வைத்துச் சிவனாகவும், கீழ்நோக்கித் தூங்கும் கீழ்ப்புற இதழில் ஆதார சத்தியை வைத்து அச்சத்தியாகவும் பாவித்து வழி படின் சிறப்புடைய சைவ வழிபாடாக அமையும்.

குறிப்புரை :

``ஏழ்`` என்று ஏழ் இதழ்களின் உள்ள தேவதைகளைக் குறித்தது. `சகலமாக இயம்பும்` என ஆக்கம் வருவிக்க. `இயம்பும்` - இயம்பப்படும். `வாழும் ஒன்று பரம்` என மாற்றிக்கொள்க. ``பரம்`` என்பது, `மேலானது` என்னும் அளவாய் நின்றது. ஊழி பராபரம் அயன், மால் இவர்களது ஊழிலும் அழியாது நிற்கும் சீகண்ட உருத்திரர். தாழ்வு - கீழ் உள்ளது; ஆதார சத்தி. மேல், ``சுருங்கிய தண்டின் சுழுனையினூடே`` என்றமையால் இம்முறைக்கு மூலா தாரத்தில் உள்ள குண்டலிசத்தியே தாமரையின் கிழங்காகும், இதய கமல வழிபாடு சைவாகமங்களில் சொல்லப்பட்ட சைவமுறை வேறாதலையறிக. தனித்தன்மை - சிறப்புத் தன்மை; அது சிவ வழிபாட்டுத் தன்மையாம்.
இதனால், வைதிகத்தில் சைவமாம் வகை சொல்லப்பட்டது. அனைத்துத்தேவர்களையும் ஒரு நிகராகப் பரமாகக் கருதுவது தனி வைதிகம் என உணர்க.

பண் :

பாடல் எண் : 7

பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.

பொழிப்புரை :

முதற்கடவுளாவான் உலகிற்குப் பலவகையான ஊழிகளைப் பகுத்து வைத்துத்தான் அவற்றில் அகப்படாது நிற்பவன். அங்ஙனம் பகுக்கப்பட்ட ஊழிகள் பெரும்பான்மையாக ஐந்தாகும். அவை நிவிர்த்திகலை யூழி முதலாக, சாந்தியதீதைகலை ஊழி ஈறானவையாம். அவற்றில் ஒன்றிலும் உள்ளாய் நிகழும் ஊழிகள் பல. ஒவ்வோர் ஊழியையும் கடந்து அனைத்து ஊழிகளும் முடிந்த பின்பும் அவற்றில் மாயையில் அனைத்து உலகங்களும் ஒடுங்கவும் தான் ஒடுங்காது மேல் நிற்பவன் எவனோ, அவனே முழுமுதற்கடவுள்.

குறிப்புரை :

`அத்தகையோன் பரம சிவனே` என்பது கருத்து. அதனால், `ஏனையோர் பலரும் அவனால் தோற்றி ஒடுக்கப்படும் உயிர் வருக்கத்தினரே` என்பதும் அருத்தாபத்தியால் பெறப்பட்டது. பகல் - பகுதல்; பகுத்தல். பகலோன் - பகுத்தலை உடையவன். நின்ற - நின்றன. இரண்டாம் அடியீற்றில் `பல` என்பது வருவிக்க. `செல்லூழிதோறும் அண்டத்துச்சென்றவன்` என்க. `அண்டம்` என்பது, `அப்பால்` என்னும் பொருட்டு. ``உச்சியுள்`` என்பதும் அது ஊழியுள் அவ்வூழி - எல்லா ஊழிகளிலும் முடிவான ஊழி. ஒன்றின் - பொருந்தியிருப்பின். `அவன் பகவனாம்` என முடிக்க. ஈற்றடி இன எதுகை.
இதனால், இதய கலம வழிபாடு சைவ வழிபாடாக நிகழ்தலே சிறப்புடையதாதல், அதற்குக் காரணம் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வளியும்
பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.

பொழிப்புரை :

முதற் கடவுளால் ஆக்கி அளிக்கப்படும் உலகத்தின் திசைகள் எட்டாகப் பாகுபட்டு உள்ளன. `அத்திசைகளில் எட்டு யானைகள் நின்று உலகத்தைத் தாங்குகின்றன` என்பதும், `அந்த யானைகளைத்தங்கள் ஊர்திகளாகக் கொண்டு உலாவும் தலைவர்கள் உளர்` என்பதும் இருக்கட்டும். நெருப்பும், நீரும், ஓயாது இயங்கும் காற்றும் ஆகாசமாகிய வெளியைப் பற்றாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அதுபோல, அனைத்திற்கும் பற்றுக்கோடாய் உள்ளவன் அனைத்து ஊழிகளையும் கடந்து நிற்கின்ற அவனே.

குறிப்புரை :

`அதிசைக் காவலர்களே உலகிற்குப் பற்றுக் கோடல்லர்` என்பது கருத்து. அக்கருத்து உவமை காட்டித் தெளிவிக்கப்பட்டது. பூண்ட - பூண்டன; சுமக்கின்றன. எண்மரையும் சேர்த்து, `குழாம்` என்றார். அவர்களை உலகிற்குப் போதியவராகக் கருதுபவரை உட்கொண்டு, ஏனைத் தேவரைச் சேர்த்திலர். `குழாமும் திரியும்` என்க. உம்மை, இறந்தது தழுவிற்று. பரிதல் - இயங்குதல். ஆகாசத்தில் பரியும் எனவும், `அதுவே பற்று` எனவும் மாற்றியுரைக்க. தான், அசை. `அதுபோல அனைத்திற்கும் பற்று அவனே` என்பது குறிப்பெச்சம்.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட பொருள் வலியுறுத்தி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.

பொழிப்புரை :

சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்குமேலே, தனக்கு வருவாயாகும் நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ் நிலங்கட்குப் பாய விடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேறும், கிழங்கும், இல்லாமலே செழிப்பான ஒரு கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களைச் சிவன் விரும்பிச் சூடுதல் இல்லை.

குறிப்புரை :

ஊறும் அருவி, விந்துத் தானத்தில் உண்டாகின்ற அமிர்ததாரை. அதனை உடைய உயர் வரை, ஆஞ்ஞை; புருவ நடு. அதற்கு மேலேயுள்ள அருங்குளம் உச்சி. அது `சந்திர மண்டலம்` எனப்பட்டு, சந்திரன் தருகின்ற அமிர்தத்தைப்போல அமிர்தத்தைத் தருதலால், `ஆறின்றிப் பாயும் அருங்குளம்` எனப்பட்டது. ``உண்டு`` என்பதன்பின், `அதன்கண்` என்பது வருவிக்க. செழுங்கொடி, ஆஞ்ஞையினின்றும் மிடற்றினின்றும் உச்சிக்குச் சென்று பரவும் நாடிகள்; நரம்புகள் பூத்த தாமரை, உச்சியில் மலர்கின்ற ஆயிர இதழ்த் தாமரை. அதனையே சிவன் விரும்பிச் சூடுதல், அத்தாமரையினின்றும் தோன்றும் யோகக் காட்சிகளையே ஆஞ்ஞையில் தன்னைத் தியானிக்கும் யோகிகட்குத் தான் வழங்கும் பிரசாதமாகக் கொண்டிருத்தல் இம்மந்திரமும் மேற் போந்த சில மந்திரங்களை போலப் பிசிச்செய்யுள். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
இதனால், அட்ட தள கமல வழிபாட்டிற்குமேல் யோக வழிபாடும் செய்யத் தக்க சைவ வழிபாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

பொழிப்புரை :

மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போகும் காலத்தில், அவனது திருவருளைப்பெற்று நிற்கும் பெரியோர்கள் உலகத்தார் ஆங்காங்கே நின்று கொண்டும், இருந்து கொண்டும், தங்கள் வாய்க்கு வந்த எவற்றைப் பேசினாலும் அவற்றைப்பொருட்படுத்தாது, ஐம்புலன்களை வெல்லுதலும் செய்து, நடந்தாலும், இருந்தாலும் சிவனை உணர்ந்தேயிருப்பர்.

குறிப்புரை :

`அவருடைய உணர்வே உண்மை அட்டதள கமல வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். இறைவனுடைய திருவுள்ளம், `உயிர் தன்னை உணர்தற்கு எந்தத் தடையும் இருத்தல் கூடாது` என்பது. ஆணவமலம் மறைத்தலைச் செய்யாது வாளா இருத்தலும், மாயை கன்மங்கள் உயிர்கள் திருவருள் நெறியில் ஒழுகுதற்குத் துணை செய்தலுமே மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போதலாம். `அந்நிலை மலம் பரிபாகமான காலத்தில் உண்டாகும்` என்பது கருத்து. ``மால் இவன் என்ன மன நினைவில் - ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் - தத்தம் மனத்தன பேச``3 என்னும் ``நிலையே, நிலம், நின்றும், இருந்தும் பல பேசினும் விகிர்தனை நாடுவர்`` என்றார். ``வென்றும்`` என்னும் உம்மை சிறப்பும்மை.
இதனால், சைவ வழிபாடு மலபரிபாகத்தில் உலகியலின் நீங்கினாரிடத்தில திரிபின்றி நிற்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன்
பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன்
பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.

பொழிப்புரை :

வியாத்தன், தைசதன், பிராஞ்ஞன், விராட்டன், இரணிய கருப்பன், அவ்வியாகிருதன் இதயன், பிரசாபதி, சாந்தன் இம்முத்திறத்து ஒன்பது பெயர்களும் சீவ சாக்கிரம் முதலிய முத்திறத்து ஒன்பது அவத்தைகளிலும் சிவன் தான் காட்சிப்படும் முறையால் எய்தும் பெயர்களாம். ஆகவே, அவனை அத்தன்மையனாகக் காணும் காட்சியில் சீவனும் சார்ந்ததன் வண்ணமாம் தன் றன்மையால் அப்பெயர்களைப்பெற்று நிற்கும்.

குறிப்புரை :

விசுவன் - உலகுயில் வடிவினன். தைசதன் - (தேசசு) ஒளி வடிவினன். பிராஞ்ஞன் - பெருஞான வடிவினன். இம்மூன்று பெயர்களும் முறையே பிராணாயாம பிரத்தியாகாரங்களாகிய சீவ சாக்கிரத்திலும் ஆன்ம தரிசன சிவரூபங்களாகிய சிவ சாக்கிரத்திலும், சீவன் முத்தி அதிகார முத்திகளாகிய பரசாக்கிரத்திலும் எய்துவனவாம்.
விராட்டன் - விராட் புருடன்; சகல புவன வடிவினன். இரணிய கருப்பன் - பொன்வண்ணத்தன்; கவர்ச்சி தருபவன். அவ்வியாகிருதன் - பிரிவுபடாதவன்; அருவுருவன். இம்மூன்று பெயர்களும் முறையே தாரணையாகிய சீவ சொப்பனத்திலும், ஆன்ம சுத்தி சிவ தரிசனங்களாகிய சிவ சொப்பனத்திலும், இலய முத்தியாகிய பர சொப்பனத்திலும் எய்துவனவாம்.
இதயன் - இருதயத்தில் ஒளிர்கின்றவன்; பிரசாபதி - உயிர்களைப் பாதுகாப்பவன். இங்கு ஆகாமியம் நிகழாவாறு தடுத்துப் பிறப்பில் வீழாதபடி காத்தல் என்க. சீவனும் இவ்வாற்றால் தன்னைத் தற்காப்பதாகும். சாந்தன் - அமைதியுடையவன். பிறபொருள் அனைத்திலும் பற்றின்றியிருத்தலோடு ஒன்றன் வாசனையேனும் இல்லாது இன்ப வடிவாய் இருப்பவன். இம்மூன்று பெயர்களும் முறையே தியான சமாதிகளாகிய சீவ சுழுத்தியிலும், சிவயோக சிவபோகங்களாகிய சிவ சுழுத்தியிலும், இலய முத்தி பர முத்திகளாகிய பர சுழுத்தியிலும் எய்துவனவாம். `பர சுழுத்தியில் காட்சிப்படுபவன் சொரூப சிவனாகிய பரம சிவனே` என்பது `சாந்தன்` என்னும் பெயரால் அறியப்படுவது. மாண்டூக்கியோப நிடதத்து ஏழாவது மந்திரம், ``சிவம், சாந்தம், அத்வைதம், சதுர்த்தம்`` எனக் கூறி மற்றும் பலவாறாக வருணித்தது சொரூப சிவத்தையேயாம்.
சதுர்த்தம் - நான்காவது பொருள். அஃதாவது, `துரிய மூர்த்தி` என்பதாம். இங்குத் துரிய துரியாதீதங்களும், `சுழுத்தி` என அடக்கப்பட்டமையால் மூன்றாவது மூர்த்தியாகச் சொல்லப்பட்டது. `சிவன் நான்காமவன்` என்பதனால், அவன் மூம்மூர்த்திகளுள் ஒருவன் ஆகாமை விளங்கும்.
மற்றும் அவ்வுபநிடதத்து நான்காம் மந்திரம் `தைசசன்` என்பது சொப்பனாவத்தையில் எய்தும் பெயராகக் கூறிய சொப்பனத்தைச் சீவ சாக்கிரத்தை நோக்கச் சிவ சாக்கிரம் சொப்பனம் போலத் தோன்றுதல் பற்றிக் கூறியதாகக் கொள்ளல் வேண்டும்.
விசுவ ரூபியை முண்டகோபநிடதம் `அந்தரான்மாவிற்கு அக்கினி தலை, சந்திர சூரியர் கண்கள், திக்குகள் காது, வேதங்கள் வாக்கு, வாயு மூச்சு, புவனங்கள் இருதயம்` என வருணித்து, `அவனது பாதங்களிலிருந்தே அனைத்துலகங்களும் `உண்டாயின` என்றது.3
``நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகமும் முகிழ்த்தன முறையே``
என்பது ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து.
`தொல் பதம்` என்பது எதுகை நோக்கி, `தொற் பதம்` எனத் திரிந்தது. இஃது உயிர்கட்கு அநாதியாய் உள்ள பசுத்துவத்தை ஒட்டி நிகழும் அவத்தையைக் குறித்தது. பதம் - அவத்தை. ``நற்பதம்`` என்பது நின்மலாவத்தையையும், ``பிற்பதம்`` என்பது அவற்றின்பின் நிகழும் பராவத்தையும் குறித்தன.
``அபிமானி`` என்பதைச் சாதியொருமைப் பெயராகக் கொண்டு சிவன், சீவன் இருவரையுங் கொள்க.
இவ்வதிகாரத்து இம்முதல்மந்திரத்தால் நவாவத்தை அபிமானிகள் எய்தும் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

நவமாம் அவத்தை நனவாதி பற்றின்
பவமாம் மலம் குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முக்கூற்று ஒன்பான் அவத்தைகளில் முதற்கூறாகிய `சீவ அவத்தை` எனப்படும் யோகாவத்தையில் நிற்பினும் பிறப்பு உண்டாகவே செய்யும். அதனால் குரு உபதேசத்தின் வழியாகச் சிவ அவத்தை ஆகிய நின்மலாவத்தையை அடைந்து, `யான், எனது` என்னும் பற்றுக்களை விடுத்து, அப்பற்றுக்கள் சிறிதும் இல்லாத சிவயோகமாகிய உண்மை ஞான வெளியில் நீ அதுவாகி அடங்கி நில். அந்நிலையே சிவ துரியமாகும். அதன்பின் துரியாதீத நிலை எளிதில் கைவர, பரம சிவனை அடையும் உண்மை நிலை உண்டாகும்.

குறிப்புரை :

விதந்தோதாது பொதுப்பட ஓதியதனால் ``நனவாதி`` என்றது முதற்கண் நிகழும் சீவ அவத்தையைக் குறித்தது. `பற்றினும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. மலம் - ஆணவம். அதன் காரியமே யான்` என்னும் செருக்கு. குணம் - மாயை. அதன் காரியங்களே `எனது` என்னும் செருக்கிற்கு நிமித்தம். `இவற்றால் வரும் பற்று` என்க. `அந்தப்பற்றுக்கள் வந்து பற்றாத தவம்` என்றதனால் அது சிவ யோகமாயிற்று. அந்நிலை அருள்நிலையே யாகலின் அது, ``சத்திய ஞானப் பொது`` எனப்பட்டது. துவம் - தன்மை. ஆர் - பொருந்து. ``ஆம்`` என்பதை முன்னரும் கூட்டி, `அதுவே துரியம் ஆம்; பின்பு சொரூபம் ஆம்` என முடிக்க.
இதனால், மேற்கூறிய அபிமானப்பெயர்கள் ஒன்பதில் இதயனிலும் மேலான, `பிரசாபதி, சாந்தன்` என்னும் பெயர்களைப் பெற முயல்வதே சிறப்பு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவமான சிந்தையில் சீவன் சிதையப்
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதம்
தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சிவ துரியத்தில் சீவன் ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏகனாகி`` நிற்றலால் `தான்` என்பதொரு முதல் இல்லையாய்விட, ``மல மாயை தன்னொடு வல்வினையின்றே ``* என்றபடி. பிறப்பிற்குக் காரணமாய் நின்ற மும்மலங்களும் அடியோடு கெட்டொழியும். ஒழியவே சீவபோதம் பராவத்தையின் இறுதியில் நிகழும் சாந்த சிவ போதமேயாம். அதனால் அந்நிலையில் அந்த சாகிய சீவன் செய்யும் செயல்களும் பிறப்பிற்கு ஏதுவாம் ஆகாமிய வினையாகாது சிவ போதத்தை நினைப்பிக்கின்ற தவங்களேயாய், மற்றும் தான் செய்தன ஆகாது சிவன் செய்தனவேயாகி விடும்.

குறிப்புரை :

``ஆகும்`` என்பதனைப் ``போதம்` என்பதனோடும் கூட்டி, `அந்தத்தின் நிகழும் நற்சிவ போதம் ஆகும்` என்க. `தவமாம் அவையாகி` என்றதனால், `அவர் செய்யும் செயல்கள்` என்பது பெறப்பட்டது. தான் செய்யும் செயல்களைத் ``தான்`` என்றார். `தான் செய்வன அல்ல ஆகும், என்றதனால், `சிவன் செய்வன ஆகும்` என்பது தானே பெறபட்டது``. சித்தம் சிவமாக்கிச் செய்தன வேதவமாக்கும் அத்தன்`` 8 என்று அருளிச் செய்தது காண்க.
இதனால், மேற்கூறிய அபிமானப் பெயர்களுள் `பிரசாபதி` என்னும் பெயரினனாதலும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதற்கண் சொல்லப்பட்ட ஒன்பது அவத்தைகளைப் போல அவற்றுக்கு முன்னே சீவன் தன் சொல்லால் சொல்லி எண்ணக் கூடாத ஒன்பது நிலைகள் உள்ளன. ஆகவே, அனைத்தையும் தொகுத்து நோக்கும்பொழுது பதினெட்டாகின்ற இவைகளினின்றும் சீவர்களைப் பிரித்துத் தானாகச் செய்துவரும் தலைவனாகிய சிவன் முத்தி நிலையில் தான் ஒருவனேயாகி விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

இங்கு, ``தத்துவம்`` என்றதைச் சித்தாந்த முறையில் சிறப்பாகவும், பிற மதங்கள் கூறும் முறையில் பொதுவாகவும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, மாயாகாரியங்களோடு `சிவன்` சிவன், பரன், என்பனவும் தத்துவங்களாம். ஆனபின், ``தத்துவம்`` என்றது ஆகுபெயராய் அவை பற்றி நிகழும் அவத்தைகளைக் குறிக்கும். ஆகவே, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்ட சீவன் முதலிய மூன்று பற்றிய ஒன்பது அவத்தைகளுடன், மாயா காரியங்களில் உணர்வுக் கருவிகளாகிய ஞானேந்திரியம் ஐந்து, அந்தக் கரணம் நான்கு ஆகிய ஒன்பது கருவிகளால் நிகழும் உணர்வு நிலைகளாகிய ஒன்பது அவத்தைகள் உளவாக, அனைத்தும் ``ஈரொன்பான்`` ஆகும். `இந்நிலைகள் அனைத்தையும் நீக்கிச் சீவனைத் தன்னைப் போலவே என்றும் ஒரு நிலையில் நிற்கச் செய்து சிவன் தான் மட்டுமே விளங்கி நிற்கின்றான். இதுவே உண்மை நிலையாகிய சொரூபநிலை` என்றபடி. `பர துரியத்தையும் பேர்கின்றான்` என்றது, அபர முத்தியினின்றும் நீக்குதலை நோக்கி. ``ஒன்பானின்`` என்பதில் இன் உவம உருபு. `மாயா காரியங்கள்` என்பது விளங்குதற் பொருட்டு. ``எண்ணத்தகா`` என்றார். ``பின்`` என்று. `முடிவில்` என்றபடி. `தன்போலச் செய்த` என உவம உருபு விரிக்க. `தற்செய்த` எனற்பாலது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ``செய்த`` என இறந்த காலத்தாற் கூறினமையின் பண்டு தொட்டுச் செய்து வருதல் விளங்கிற்று. `தானே சிறந்தான்` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், அவத்தைகள் பலவற்றாலும் உயிரைச் சிவன் உய்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை ஈடறுத் தானே.

பொழிப்புரை :

`உயிர்களின் பொருட்டு அவற்றிற்கு ஏற்புடைய வித்தை பதினான்கையும் செய்தருளிய முதல்வன்` என்று உயர்ந்தோர் யாவராலும் சொல்லப்படுகின்ற அத்தன்மையை உணர்ந்து நான் சிவனை ஏனைத் தேவரினின்றும் வேறு பிரித்து, `அவனே எங்கள் கடவுள்` என்று இரவும், பகலும் ஓயாது சொல்லிக் கொண்டிருப்பேன். அதனால், வரும் பிறப்புக்களில் என்னை வந்து பற்ற நின்ற வலிய வினைகள் இல்லாதொழிந்தன. மற்றும் இப்பொழுது தோன்றும் வினைகளையும் அவன் அழித்துவிட்டான்.

குறிப்புரை :

`அதனால் இனி எனக்குப் பிறவி இல்லை`, இசையெச்சம். ``உலகம்`` என்பதை முதலிற் கொள்க. வித்தை பதினெட்டாயினும் அவற்றுள் உபவேதம் நான்கை நீக்கி, `பதினான்கு` என்றலும் வழக்கு வித்தை பதினெட்டாவன, வேதம் நான்கு, உபவேதம் நான்கு, அங்கம் ஆறு, உபாங்கம் நான்கு.
``அட்டாதச வித்தைக்கும் சூலபாணியே
கர்த்தா என்று சுருதி கூறுகின்றது``
என்பது வாயு சங்கிதையில் சொல்லப்படுவது*
``ஈசாநஸ் ஸர்வ வித்யாநாம்``
என்பது மகாநாராயணோப நிடதம்.
அகைத்தல் - பிரித்தல். `அகைத்து` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ஈடு - முன் இடுதல். அது முன்பு, ``வல்வினை`` என்றதனால், முன் இடப்படுவதாகிய வினையையே குறித்தது.
இதனால், `அபிமானப் பெயர்கள் ஒன்பதனாலும் குறிக்கப்படுமாறு ஒன்பது அவத்தைகளிலும் விளங்குபவன் சிவனே` என உணர்ந்தவழியே பிறப்பு நீங்குதல் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும்
பலம்பல பன்னிரு காலம் நினையும்
நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.

பொழிப்புரை :

சிவன் உயிர்களுக்கான நல்லவழிகள் பலவற்றைச் சொல்லியருளிய காலம் எல்லையறியப்படாத பழமையுடையது. (`படைப்புக் காலம்` என்றபடி) உயிர்த் தொகுதிகள் அவ்வழிகள் பலவற்றில் தம் கருத்திற்கு ஏற்புடையவற்றைப் பற்றி அவற்றிற்கு ஏற்ற பயன்களை அடைந்து வருகின்றன. பெரும் பொழுது ஆறும், சிறு பொழுது ஆறுமாகிய பன்னிரண்டு காலங்களிலும் சிவபெருமானை நினைவதால் விளையும் பயன்களும் பல அங்ஙனம் நினைத்தற்குரிய இடங்களும் பல என்றாலும் ஆறு இடங்களில் (ஆறு ஆதாரங்களில்) சிவன் இனிது விளங்குபவனாய் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அந்த ஆறு இடங்களில் அவனை நினைக்கப் பழகுங்கள்` என்பது குறிப்பெச்சம்.
`தான் நலம் பல தொகுத்தன காலம் நீளம்` எனவும், பன்னிரு காலம் நினையும் பலம் பல` எனவும் மாறிக் கூட்டுக. நினைத்தற்குச் செயப்படுபொருளும், ``தான்`` எனப்பட்ட சிவனே என்பது எளிதின் விளங்கும். சிறுபொழுது ஆறும் பெரும்பொழுது ஆறின் வேறாவன அல்ல எனினும் `எஞ்ஞான்றும் ஒழியாது நினைக` என்றற்கு அவற்றை வேறுபோல வைத்து ``பன்னிரு காலம்`` என்பதை வினைத்தொகை யாக்கி, `சொல்லப்படும் காலை, மாலை இருகாலமும்` எனவும் உரைப்பர்.
இதனால், `வீடு பெற விரும்புவோர், ஒன்பான் அவத்தைகளில் சீவ அவத்தைகளாகிய யோகாவத்தையை முதற்கண் பற்றுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் மேலான முதற்பொருள் தன்னியல்பில் `சிவம்` என்றும், `சத்தி` என்றும் இரு கூற்றை யுடையதாய் இருக்கும். அவற்றுள் சத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி` என்னும் பெயருடையதாய் நின்று, `அறிவு அருள், உயிர், தத்துவங்கள் வேதம் முதலிய நூல்கள், பஞ்சகலைகள், சுத்தமாயை, அசுத்த மாயை, பல சமயத்தாரும், ஆராய்ந்து கூறும் முத்திநிலைகள்` என்னும் ஒன்பது வகையாய் நிற்கும்.

குறிப்புரை :

இவற்றுள் அறிவே ஞானம். அருளே இச்சை, இவை இரண்டும் தன்னால் தான் அடையும் பேதங்கள். ஏனைய ஆறும் தான் அவையேயாய்க் கலந்து நிற்கும் கலப்பினால் அடையும் பேதங்கள். அங்ஙனம் கலந்து நின்று அவற்றை இயக்குதலே கிரியை ஆதலின் அதனை வேறு கூற வேண்டாவாயிற்று.
``ஆதி`` இரண்டனுள் முதலது `முதற்பொருள்` என்னும் பொருட்டு. ஈற்றது ஆதி சத்தி. இதுவே `திரோதான சத்தி` எனப்படும். `பராற் பரம், பராற் பரை` என்பன `பராபரம், பராபரை` என மருவி வழங்கும். `மேலானவற்றிற்கும் மேலானது, மேலானவற்றிற்கும் மேலானவன்` என்பன இவற்றின் பொருள், `பராபரம்` என அஃறிணையாற் கூறியது. `சிவம்` எனக் கூறியவவாறு. தன்னிலையில் சிவம் `பரமசிவம்` என்றும், அதனது சத்தி `பராசத்தி` என்றும் சொல்லப்படும். அது வாளா இருப்பதன்றி, யாதொன்றையும் செய்வதன்று. செய்ய நினைக்குங்கால், ஒரு சிறு கூற்றானே `ஆதி சத்தி` என வேறு நின்றே செய்யும். அதனால், பேதங்கள் எல்லாவற்றிலும் ஆதி சத்தி உடனாய் நிற்கும் என்க.
ஆதி சத்தி `ஞானம்` என்னும் வகையில் அனைத்துயிர்களின் அறிவிலும் அறிவிற்கு அறிவாய் நின்று அவ்வறிவுப் பொருள்களை அறியச்செய்யும் `கிரியை` என்னும் வகையில் உயிர்களையும், உயிரல் பொருள்களையும் இயக்கி நிற்கும் இவற்றிற்கெல்லாம் காரணம் தான் அருள்வடிவாய் இருத்தலே.
``கலை`` என்பதனை இரட்டுற மொழிந்து கொள்க. ``தத்துவவம்`` என்றது பொருட் பிரபஞ்சத்தையாகலின். சொற் பிரபஞ்சம் எஞ்சாமைப் பொருட்டு அதனை வேறு கூறினார். பஞ்ச கலைகளும் இரு மாயைகளுள் சுத்த மாயா காரியமேனும் அவை தத்துவங்களின் வேறாய் அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்றல்பற்றி வேறு கூறப்பட்டன. காரியங்களை முன்னர்க் கூறிக் காரணங்களை முடிவிற் கூறினார். ஓர் முத்தி, வினைத்தொகை. சித்தாந்த முத்தி அருட்சத்தியால் ஆவது ஆகலின், பிற சமயத்தார் கூறும் முத்திகளே திரோதான சத்தியால் ஆவன என்க.
`ஒன்பானுடனும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `ஒன்பானுடனும் ஆதி ஆம்` என முடிக்க.
ஒன்பது பேதங்களையும் ``நீதியாம் பேதம்`` என்றது, `உயிர்கள் பக்குவத்தை யடைதற்கு, இவை இன்றியமையாத முறைகளாம்` என்றற்கு.
இதனால், `ஒருவனாகிய சிவன் தனது ஆதி சத்தியால் பல பேதங்களை அடைந்து நிற்றலால், நவாவத்தை அபிமானியும் ஆகின்றான்` என்பது குறிப்பால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.

பொழிப்புரை :

அநாதியே பற்றிய மலத்தால் அறியாமையை யுடையதாய் நிற்கின்ற உயிர்களின் அறிவு அவ்வறியாமை நீங்கித் தெளிவடைதற் பொருட்டுத் தெளிவிற்கு வித்தாக, தம்முள் மாறுபட்ட நரகலோக சுவர்க்க லோகங்களிலும் பூலோகத்திலும் வினைக்கீடாகச் சென்று பிறக்கும் பிறப்புக்களையும் சிவன் உயிர்கட்கு அமைத்திருக் -கின்றான். அங்ஙனம் அமைத்தது அருள் காரணமாகவேயாம். அதனை வன்கண்மையாக நினைக்கும் தங்கள் நினைப்பை விட்டு, அருளாகத் தெளியமாட்டாதார் தெளிதற்கு வாயிலான மானுடப் பிறப்பைப் பெற்றதும் வினையின் விளைவேயாம்.

குறிப்புரை :

``சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்``9 கூறும் முறையில் இங்கு உயிரிகளின் அறிவு ``சிந்தை`` எனப்பட்டது. ``தெளிவித்து`` என்றது வினைத்தொகை. `வித்தாகி` என ஆக்கம் வருவிக்க. ``பிறப்பும்`` என்னும் உம்மை, `வீடேயன்றி` என எதிரது தழுவிய எச்சம். ``உயிர் பெற்றது`` என்றது, `பிறப்பை எடுத்தது` என்றபடி. `உயிர் பெற்றது வினை` என மாறிக் கூட்டுக, வினையின் விளைவை ``வினை`` என்றார். என்றது, `முன்னைப் பிறவிகளின்றும் இப்பிறப்பிற்கு வேறு சிறப்பில்லை` என்றபடி. அஃதாவது, `இப்பிறப்பிலும் முன்புபோல வினையை ஈட்டிக் கொள்ளுதலை மட்டுமே செய்வவர்; உய்யும் நெறியைத் தலைப்படார்` என்பதாம்.
இதனால், `மானுடப் பிறப்பை எய்தினோர் சிவன் நவாவத்தை அபிமானியாதலை உணர்ந்து படிமுறையானே அவனை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை :

இங்குக் கூறிவரும் ஒன்பான் அவத்தைகளிலும் சிவன் அபிமானியாய் நிற்கும் நிலைகள், அவ் அவத்தைகளில் செயற்படும் தத்துவங்கள், மற்றும் சில இவற்றை உணர்ந்து அவ்வொன்பான் அவத்தைகளிலும் `துரியம்` எனப்படும் நிலையிலே நிற்றற்கண் பர துரியத்தில் சீவன் செம்மைச் சிவனாகிவிடுவதே சித்தாந்த நெறியின் முடிநிலைப் பயனாகும்.

குறிப்புரை :

எனவே, `பிற பிற சமயத்தார் கூறும் சித்திகள் எல்லாம் முடிநிலைச் சித்திகள் அல்ல` என்பதாம். நவாவத்தைகளில் செயற் படும் நவதத்துவங்களான, சீவ அவத்தையில் பிராணனை இயக்கும் அகங்காரம், தியானிக்கப்படும் பொருளை ஒருதலையாக உணரும் புத்தி, அதனையே சிந்திக்கும் சித்தம் என்பனவும், சிவ அவத்தையுள் குருமொழியைச் சிந்திக்கும் ஞானம், அடையப்படும் பொருளைத் தெளியும் ஞானம், தெளியப்பட்ட பொருளையே விரும்பி அதன்கண் அழுந்தும் ஞானம், என்பனவும், பராவத்தையில் சிவனது நேர் அதிகார சத்தி, போக சத்தி, இலயசத்தி என்பனவுமாம். இங்குப் பராசத்தியும் வேற்றுமை மிக இன்மையால் இலய சத்தியாகக் கொள்ளப்பட்டது. செம்பால் - செம்மைப்பகுதி. என்றது சொரூப நிலையை. எனவே, `சொரூப சிவம்` என்பதை நாயனார், `செம்பாற் சிவம்` எனக் குறித்திருத்தல் குறிக்கொளத் தக்கது. செம்மை - உண்மை நிலையில் வேறுபடாது இருந்தவாறே இருத்தல். சித்தி - பேறு. என்றது, சிறப்புப் பற்றி முடிநிலைப் பேற்றையே குறித்தது.
இதனால் நவாவத்தைகளின் முடிநிலைப்பயனும் அதனை அடையுமாறும் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி யிருக்கும் குணம் அது வாமே.

பொழிப்புரை :

மூன்றாம் தந்திரத்தில், நாசிக்கதோமுகம் பன்னிரண்டங்குலம்``8 என்னும் மந்திரத்திற் கூறியபடி, `மூக்கின் நுனிக்குக் கீழே பன்னிரண்டங்குலத்தில் உள்ள இருதயம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடம்` என்பதை உங்களுள் ஒருவரும் அறியார். (அதனால் அவர்கள் புறத்தே உள்ள இடங்களில் சிவனைக் காணும் அளவிலே அமைந்து, அதனையே சிவக்காட்சியாகக் கொண்டு இருந்துவிடுகின்றனர்.) ஆயினும் பெரிய மறைநூல்கள் மேற்கூறிய ஈசன் இருப்பிடத்தைச் சொல்லியிருக்கின்றன. எனினும் அந்த மறை நூல் அந்த இடத்தை அணுக இயலாதவர்கட்கு அதனைக் கூற நாணம் உற்று, வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகவே கூறியமைந்தன. அது மறைநூல்கட்கு இயல்பு.

குறிப்புரை :

`அதனால், அப்பொருளை நல்லாசிரியரை வழிபட்டுக் கேட்டுணர்ந்து அணுகல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இங்கு, ``பெருமறை`` என்றது, யோகம், தகர வித்தை முதலியவற்றைக் கூறும் உபநிடதங்களையும், சிவாகமங்களில் யோக பாதங்களையும். அவ்விடங்களில் குறிப்பு மொழிகள் உளவாதலை அறிக. நாயனாரும் `சூனிய சம்பாடணை` முதலியவற்றால் குறிப்பு மொழிகள் பல வற்றைக் கூறினமை வெளிப்படை.
இதனால், `புறத்தூய்மையோடு அமைந்துவிடாது அகத் தூய்மையை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது புறத்தூய்மையையே சிறப்பாக வலியுறுத்துவன பிரம்மாணங்களும், மிருதிகளும்.

பண் :

பாடல் எண் : 2

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.

பொழிப்புரை :

உயிர்களால் செய்யப்படும் செயல்கள் யாதேனும் ஒரு பயனைக் கருதிச் செய்யும் செயல்களாகுமிடத்து `அச்செயல்களைச் செய்தோன் அவனே` என்னும் உரிமை தோன்றுதலையும், செய்த செயல்களும், `இனி வரும்` எனக் கருதப்படுகின்ற பிறவிக்கு வித்தாம் ஆகாமியம் ஆதலையும் உணர்ந்து, அச்செயல்களில் பற்று வையாது `எச்செயலையும் செய்யும் வாய்ப்பினை நமக்கு அளித்தவன் சிவன்` என்பதை யுணர்ந்து, அவனிடத்து அன்பு செய்து, எச்செயலையும் அவன் பணியாகச் செய்யின் அம்முறையில் அறிந்தோ, அறியாமலோ நிகழும் செயல்கள் யாவும் வினை நீக்கத்திற்கு வாயிலான தவமாகி, அவற்றைச் செய்தவனை வினை நீக்கத்தில் சேர்ப்பிக்கும்.

குறிப்புரை :

ஒன்று ஒரு பயன் `கன்மமும் கருவினை ஆவதும்` என இயையும். `ஆவது` என்பது தொழிற்பெயர். ``கன்மமும்`` என்னும் உம்மை சிறப்பும்மை. உன்னும் - கருதப்படுகின்ற. கரு - முதல். கரு வினை. `இச்செயலை யானே செய்கின்றேன்; இச்செயல்களும், இவற்றால் வரும் பயன்களும் என்னுடையனவே` என்னும் கருத்தே `பற்று` எனப்படுகின்றது. இப்பற்றோடு செய்யும் கருமமே `காமிய கருமம்` எனப்படுகின்றது.
இனி, யாதொரு பயனையும் கருதாதவழிச் செயல் செய்வார் ஒருவரும் இலராவர். ஆகவே, `செயல்களைச் செய்தற்கு வேண்டுவன பலவற்றையும் அளித்தவன் இறைவன் ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் யாவும் `ஈசன் இடும்பணி`* என உணர்ந்து, அவற்றில் - யான், எனது என்னும் பற்றின்றி, ``என்கடன் (அவன்) பணிசெய்து கிடப்பதே``* என்று அவனிடத்து அன்போடும் செய்வதே பயன் கருதாது செய்தலாம். அதனையே இங்கு நாயனார், ``அகன்று அன்பின் புரிவன`` என்றார். இதுவே `நிட்காமிய கருமம்` எனப்படுகின்றது. இந்நிலைமை கடவுட் கொள்கையில்லார்க்கு வாயாது. `க்ஷயம்` என்னும் வடமொழி, தமிழில் `கயம்` என வரும். ஆகவே, கருமக் கயம் - வினை நீக்கமாம். `காமிய கன்ம நிட்காமிய கன்மங்களாவன இவை` என்பதும், அவற்றின் பயன் முறையே பிறப்பும் வீடுமாம்` என்பதும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
``காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்கு உள்ளத் துணர்மினோ``*
எனப் அப்பரும் அருளிச்செய்தார்.
இதனால், வினை மாசே உண்மை மாசும், அதன் நீக்கமே உண்மைத் தூய்மையும் ஆதல் கூறப்பட்டது.
``புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்``9
என அருளிச்செய்த திருவள்ளுவர்க்கும் புறத்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்தது என்பது கருத்தாதல் தெளிவு, அவர்.
``மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்``9
என அருளிச்செய்ததும் இங்கு நினைவுகூரற்பாலது.

பண் :

பாடல் எண் : 3

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.

பொழிப்புரை :

வேதங்களால் முடிநிலைப் பொருளாகக் கொள்ளப் பட்ட முதற்பொருள் உயிர்கட்கு வேறாய் இன்றி அவைகளிடத் திற்றானே இருக்கின்றது. ஆயினும், மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்கள் உயிரினது அறிவைத் தம் வயப்படுத்தியே வைத்திருத்தலால் உயிர்கள் அம்முதற்பொருளை அறியாதிருக்கின்றன. அதனால் முதற்பொருள் மறைந்து நிற்கும் பொருளாக அறியப்படுகின்றது. மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்களின் வயப்படாது விடுபட்டவர்க்கு அக்கருவிக் கூட்டங்கள் மறைந்துவிட, முதற்பொருள் வெளிப்பட்டுத் தோன்றும். அதன் பின்பும் அக்கருவிக் கூட்டங்கள் தம்மை மயக்காதபடி அம்முதற் பொருளுக்குள்ளே அடங்கி நிற்க வல்லவர்கட்கு உடம்பு இருந்தும் இல்லையாம். அதனால் அவை பற்றி யெழுகின்ற, `யான், எனது` என்னும் செருக்கும் இல்லையாம்.

குறிப்புரை :

ஆகவே, அவர்கள் உடம்பு நீங்கியபின் ``வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுதல்``* தெள்ளிது என்பதமாம்.
``முந்திவட் டத்திடைப் பட்டதெல்லாம்
முடிவேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்
புண்பதற் கஞ்சிக் கொல்லோ!
நந்திவட் டம்நறு மாமலர்க்
கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யான்அடிச்
சேர்ந்ததென் ஆருயிரே``
என்பனபோல ஆரூயிர்த் திருவிருத்தம்8 முழுவதும் அருளிச் செய்தமை காண்க. `அப்பொருளின்கண்` என, `உள்` எனப்பொருள் படும் ஏழாவது விரிக்க.
உலகியலில் வினை மாசே பெருமாசு ஆகலின் அது நீங்கு மாற்றை முன் மந்திரத்திற் கூறியபின், மாயை மாசு நீங்குமாறு இதனால் கூறப்பட்டது. `இம்மாசு நீக்கமே உண்மைத் தூய்மையாம்` என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 4

மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக்
கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.

பொழிப்புரை :

ர் புறம் போய் வீணாவதற்கு உரிய, வயல்களின் சிறு புழை போல, விந்து வெளிச்சென்று வீணாகின்ற வழியாகிய குறியைச் செயற்படாமல் தடுத்து, பிராணனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி அதனோடே மேல்நிலமாகிய ஆஞ்ஞையில் உணர்வினால் சென்று புகுந்து, அங்கு நிற்கின்ற நிலை சலித்தலை நீக்க முயலு மிடத்துச் சிவ நினைவால் அதனை அடியோடு நீக்கி, உடம்பையும் விரைவில் வீழ்ந் தொழியாதபடி யோகக் கனலால் கற்பஞ்செய்து தன்னைச் சிவத்திற்குள்ளே அடைத்து வைத்தலே ஒருவனுக்கு உண்மையான தன்வலிமையாகும்.

குறிப்புரை :

முழை. மலை முழை. சுழுமுனை நாடியை `மேரு` என்பதால், அதன் உள்வெளியை `மலைமுழை` என்றார். காயத்தைக் கற்பம் செய்தல் இப்பிறப்பிற்றானே சிவஞான முற்றுதற் பொருட்டேயாம்; என்னை? முற்றுப் பெறாதவழி மேலும் பிறப்பு வரும் ஆதலின் ``கோழை`` என்பது இங்குக் கோழைமையாகிய தளர்ச்சியைக் குறித்தது. தாழ்தல் - தங்குதல் ``வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும் - துணை வலியும் தூக்கிச் செயல்``3 என்ற விடத்துக் கூறப்பட்ட வலிமைகளிலும் ``தன் வலி`` என்றதே இன்றி யமையாதல் பற்றி `இச்செயலே உயிருக்குத் தன்வலியாம்` என்றார்.
இதனால், மேற்கூறப்பட்ட இருவகை மாசுகளையும் கழுவுதற்கு ஒருவகைச் சாதனம் கூறப்பட்டது.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும், ``காயக் குழப்பனை`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 5

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர்கள் தங்கள் உடம்பு அசுத்தத்தைத் தீண்டிவிட்டதனால் `தீட்டு உண்டாகிவிட்டது தீட்டு உண்டாகி விட்டது` என்று சொல்வார்கள். அவர்களில் ஒருவருமே, உண்மையில் தீட்டு எங்கு உண்டாகின்றது` என ஆராய்ந்தறியமாட்டார். யாராயினும் அதனை ஆராய்ந்து அறிவார்களோயானால் `உயிர் மக்கள் வடிவாய் உள்ள உடம்பைத் தீண்டியதே தீட்டு` என்பது அவர்கட்கு நன்கு புலப்பட்டுவிடும்.

குறிப்புரை :

`அசுத்தத்தைத் தீண்டுவதனால் தீட்டு உண்டாதல் உண்மையே. அந்தத் தீட்டு உடம்பிற்கு உண்டாவதைத் தங்களுக்கு உண்டானதாகவும், அதனைப் போக்கித் தூய்மை செய்வதால் தாங்கள் தூய்மை அடைந்துவிட்டதாகவும் கருதுதல் அறியாமை` என்பதாம். உண்மையை உணர்ந்தால், நாம் மானுட உடம்பைப் பற்றிக் கொண்டிருப் -பதே தீட்டு, என்பதும், `அதனைப் போக்கி இறைவனை அடைதலே நமக்குத் தூய்மை` என்பதும், விளங்கும். அவற்றை விளங்கிக் கொண்டவர்களே அறிவுடையோர் என்பது கருத்து. மாணாக்கர் செயற் பாலது மானுட உடம்பை நீக்குதலேயாதல் பற்றி, ``மானுடம் ஆசூசம்`` எனறாரேனும், `உடம்பாவன பலவும் ஆசுசமே` என்றலே கருத்து.
மானுட உடம்பை,
``பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
பொழுகிய பொய்க்கூரை``3
என்றார்போலப் பலபடக் கூறுமாறு அறிக. `மக்கள் தங்கள் உடல் தீட்டைப்போக்கி உடலைத் தூய்மையாக்கிக் கொள்வதனாலே தாங்கள் தூயோராய்விட்டதாகக் கருதிக்கொள்ளுதல் அறியாமை` என்றபடி. இதனானே, `புறத்தூய்மை ஒன்றே உயிரை நற்கதி யடைவிக்கும்` எனக் கூறும் கூற்றுக்கள் போலியாதல் விளங்கும்.
இதனால், `புறத்தூய்மையையே பெரிதாக வலியுறுத்தியமை யாது, அகத்தூய்மையையே பெரிதும் வலியுறுத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு)
ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு)
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு)
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.

பொழிப்புரை :

சிவனது முதன்மையை உணர்ந்து அவனைச் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நால்நெறியில் எவ்வகையில் நின்று வழிபடுவார்க்கும் புறத்தூய்மை வாயாவிடினும் அகம் திருவருளில் படிந்திருத்தலால் அவர்கட்கு எந்த வகையான அசுசியும் இல்லையாம்.

குறிப்புரை :

இஃது அறியாது அவர் புறத் தூய்மை குறைந் திருத்தல் பற்றி அவரை, `ஆசௌசம் உடையவர்` என இகழலாகாது என்பதாம். புறத் தூய்மை இல்லாமைக்குக் காரணம் அவர் அதனை இகழ்ந்து ஒதுக்குதல் அன்று; வாய்ப்புக் கூடாமையேயாம். கண்ணப்பர் முதலியோரது அருள் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
அரு நியமம் - கடைப்பிடித்தற்கரிய கடப்பாடான தொண்டு அருச்சனை அகத்தும், புறத்தும் செய்யும் வழிபாடு. யோகிகள் பிராணா யாமத்தால் மூலாக்கினியை வளர்ப்பர் ஆதலால், புறத்தே அழல் ஓம்பி வழிபடுவாரும் யோகிகளாகச் சொல்லப்படுவர். இவருள் சிவவேள்வி செய்வாரையே இங்குக் கொள்க. ஞானசம்பந்தர்,
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி``*
என அருளிச்செய்தற்குச் சேக்கிழார்,
``ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பின்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்``*
எனப் பொருள் விரித்தமை இங்கு நோக்கத் தக்கது.
அருமறை ஞானிகளாவார் வேதத்தின் `பிரமகாண்டம்` எனப்படும் ஞானகாண்டப் பொருளை அதன் தெளிவாகிய சிவாகமங்களின் ஞானபாதத்தின் வழிச் சிந்திப்பவர்களும், சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடியிருப்பவர்களும் ஆவர். இவற்றிற்கெல்லாம் முற்பட்டது. ``குருவார்த்தை கேட்டல்``* ``அருமறை`` என்பதனை இரட்டுற மொழிந்து, `அரிய உபதேசம்` என்றும், `அரிய பிரகாண்டம்` என்றும் இருபொருள் கொள்க.
இதனால், `சிவநெறி நிற்றலே சிறப்புடைத் தூய்மை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை :

முன்னர்ப் புறத்தொண்டுகளைச் செய்து, பின்பு அகத்தும், புறத்தும் சிவனை வழிபடுவார்க்குச் சுழித்தோடுகின்ற நீரில் மூழ்கினார்போலும் ஓர் உண்மைத் தூய்மை தொடங்குவதாகும். (பின்னர் அகத்தும், புறத்தும் அங்கி வளர்த்தலால் அத்தூய்மை முதிரும்.) இவைகளைச் செய்யாது புறத்தூய்மையை மட்டுமே வலியுறுத்திக் கூறு கின்ற நூல்களாகிய குழிகளில் வீழ்ந்தவர்கள் தூய்மையைப் பொருந்தார். இனி முற்கூறிய தூய்மையைப் பொருந்தியவர்களில்கூட, உருவம், அருவுருவம், அருவம் என்னும் குறிகளைக் கடந்து குறியிறந்து உணரும் உணர்வுடையார்க்கன்றிச் சிவனை நேர்படக் காணுதல் இயலாது.

குறிப்புரை :

`சிவனை நேர்படக்காணுதலே முழுத் தூய்மையாம்` என்றபடி கூடுதலுக்குச் செயப்படுபொருள் முன்னர்க் கூறிய தூய்மையேயாயிற்று. தொடங்குதல் கூறினமையால் முதிர்தலும் கொள்ளப்பட்டது.
இதனால், அகத்தூய்மை தொடங்கி, முதிர்ந்து, முற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.

பொழிப்புரை :

உலகத்தில், மாசு நீங்கக் கழவுவப்பட்ட இரத்தினமும், தூய பொருள்களாலே வளர்க்கப்பட்ட தீயும் தூய ஒளியையே தரும். `அதுபோல உடம்பினுள் தூய ஒளிகளைத் தரும் தூய இரத்தினமும், தூய தீயும் எவை` என்பதை அறிபவர் உலகருள் எவரும் இல்லை அவற்றை அறிய வல்லவர்கட்கு அவை தாம் தூயவாய் இருத்தலேயன்றி உடம்பிற்குத் தூய்மையைத் தருவனவாய் அமையும்.

குறிப்புரை :

கழுவப்படுவதனால் தூய்மை அடைகின்ற மணி உயிர். இயல்பாகவே தூய்மையுற்றிருக்கின்ற தீ சிவம். `சாதனங்களைச் செய்தவழி உயிர் தூய்மையுற்றும், சிவம் பிராகசித்தும் புலால் உடம்பை ஒளியுடம்பாகச் செய்யும்` என்பது கருத்து.
இதனால், `ஆன்ம சுத்தியே உண்மைத் தூய்மையாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தூயது வாளாக வைத்தது தூநெறி
தூயது வாளாக நாதன் திருநாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியாம்
தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.

பொழிப்புரை :

`முதல்வனாகிய முக்கண்ணன் முன்னெறியாகிய* தனது நெறியை உலகிற்கு வைத்தது உயிர் தூயதாதற் பொருட்டேயாம். அந்நெறியிற் செல்வார்க்கு உறுதுணையாக அவன் வைத்தது அவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரம். அந்த மந்திரத்தைப் பல்காலும் ஓதி உயிர் தூய்மையுற்றால் அட்டமா சித்திகள் தாமே வந்து அதனை அடையும். ஆதலின் உயிர் தூய்மை அடைவதற்கு முன்பு அங்ஙனம் தூயராயினார் சென்ற அடிச்சுவட்டில் செல்.

குறிப்புரை :

`நான்கு அடிகளிலும், வாள் தூயதாக` என மாற்றிக் கொள்க. வாள் - ஒளி; அஃது இங்கு அறிவுப் பொருளாகிய உயிரைக் குறித்தது. ``ஆக`` நான்கில் மூன்றாவது காரணப் பொருளிலும், ஏனைய காரியப் பொருளிலும் வந்தன. ``வைத்தது`` என்பதை இரண்டாம் அடியிலும் கூட்டுக. தூயவரது அடிச்சுவடும் தூயதே ஆம் என்க.
இதனால், உண்மைத் தூய்மையை வேண்டுவோர் சிவ நெறியைப் பற்றிச் சிவமூல மந்திரத்தை எப்பொழுதும் ஓதுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.

பொழிப்புரை :

மெய்ப் பொருளாய், என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பவன் சிவபெருமானே. அவனே எங்கட்குத் தந்தை. அவனது திருவருளைப் போற்றுகின்ற அடியவர்களே சுருண்டு சுருண்டு வருகின்ற கடலின் அலைபோல முடிவின்றி வருகின்ற பிறப்பாகிய துன்பச்சூழலினின்றும் நீங்குவர். அவனது திருவருளைப் போற்றாது ஒழிகின்றவர் எல்லாம் அச்சூழலில் அகப்பட்டுத் திகைக்கின்றார் ஆதலின் அவர் அருளுடையாராகாது மருளுடையவரேயாவர்.

குறிப்புரை :

எனவே, `திருவருட் செல்வராகிய சிவனடியாரே தூயவர் ; அச்செல்வத்தைப் பெறாதோரெல்லாம் மாசுடையவரே; அதனால் அச்செல்வத்தைப்பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம்.
``புண்ணியன்`` என்பது, `சிவன்` என்னும் பொருட்டாய் நின்றது. `அது` மூன்றும் பகுதிப்பொருள் விகுதி. ``சுருளதுவாய்`` என்பதில் ஆக்கம் உருவகம் குறித்து நின்றது. ``மருளவர்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
இதனால், உண்மைத் தூய்மையை உணராதவரது நிலைமை இரங்கத் தக்கதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வினையால் அசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.

பொழிப்புரை :

`நிலையில்லனவாகிய பல வகை உடம்புகள் ஒன்றழிந்தபின் மற்றொன்று தோன்ற, அஃதழிந்தபின் வேறொன்று தோன்ற, இவ்வாறு முடிவின்றி வந்து உயிரை அலைக் கழிப்பது வினையே` என்பதையும், `அந்த வினை பொருள்களை உற்றவா றுணரும் மெய்யுணர்வால் கெடும்` என்பதையும் ஆசான் அருள் பெறாதார் அறியமாட்டார். இனி, `வினை நீக்கமே வீடுபேறாம்` எனக் கூறுகின்ற வேதத்தையும் அவர்கள் ஓதுவதில்லை ஆகவே, அவர்கள் வினையை ஆண்டு, அதிற்றானே மகிழ்கின்றவராவர். அவர் பின்னும் பின்னும் எல்லையின்றி வரும் துன்பவினை அறிய மாட்டார்.

குறிப்புரை :

அசத்து - நிலையில்லாதது. சத்து - நிலையுடையது இங்கு ``வினை`` என்றது பிராரத்த வினை, ஆகாமிய வினைகளை. `அவை ஆசிரியன் உணர்த்தியவாற்றானே நின்மலாவத்தையை அடைந்து அதன்கண் நிற்பவரை வாதியா` என்பதை,
``எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்``
என்றும் சிவான போதத்தால்3
``எப்பொழுது இவனுடைய இருதயத்தில்
நிறைந்துள்ள ஆசைகள் எல்லாம் ஒழிகின்றனவோ
அப்பொழுது, சாகும் தன்மையுடைய மனிதன்
சாகாதவனாகி விடுகின்றான்``
என்று கடோப நிடத ஆறாவது வல்லிப் பதினாறாவது மந்திரம் கூறுகின்றது. ஆசையால் விளைவனவே வினையாதலின் ``வினைவீட வீடு`` என வேதம் கூறுதல் அறிக.
``அவாஎன்ப எல்லா உயிர்க்கும், எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து``8
``இன்பம் இடையறாது ஈண்டும், அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்``8
எனத் திருவள்ளுவர் வலியுறுத்தியதும் இதையே.
இதனால், `வினைமாசு நீங்கலே உண்மைத்தூய்மை, அது நீங்காமையே உண்மை மாசு` என்பன கூறி முடிக்கப்பட்டது. (யாவரும் அறிந்தது இதுவேயாதல் பற்றி இவ்வாறு கூறினார், `பின்பு ஆழ்ந்து உணர்வார்க்குக் காரணமாசாக ஆணவத்துண்மை புலனாகும்` என்பது கருதி.)

பண் :

பாடல் எண் : 1

பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.

பொழிப்புரை :

`பிறப்பிறப்பினின்றும் நீங்கிப் பரம்பொருளை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை உண்டு` என்று உண்மை நூல்களெல்லாம் கூறாநிற்கவும், `அஃது இல்லை` எனப்பிணங்கி, மனஞ் சென்றவாறே செல்பவர்கள் நரகலோகத்தை அடைதல் உலகத்தில் உயர்ந்தோர் பலரும் நன்கறிந்தது நரகத்தின் நீங்கிப்பின்னும் அவர் மக்களாய்ப் பிறப்பின் கடைதொறும் சென்று இரக்கும் செயலையே உடையராவர். அங்ஙனம் இரக்குங்கால் வயிறு நிரம்பாமல் உணவு வேளை முடிவதற்குள் பலரிடம் சென்று இரக்க வேண்டி ஓடவும் தொடங்குவர்.

குறிப்புரை :

`நரக, துரக` என்பன கடைக் குறைந்து நின்றன. ``இர கதி`` என்பது வினைத்தொகை. இதன்கண் `கதி` என்பது நடை; தொழில். `கடை தோறும் இரகதி செய்திடுவார்; நிரம்ப உண்ணத் துரக கதி தொடங்குவர் என்க. தாம், ஏ - அசை. ``ஞாலம்`` என்றது ஆகமப் பிரமாணத்தையுடைய உயர்ந்தோரை.
`பரகதி உண்டு` என்பவரே நோற்றலை மேற்கொள்வர். `அஃது இல்லை` என்பார் நோற்றலைச் செய்யார். நோலாதவர் வறியராய்ப் பிறப்பர்` என்பது உண்மை நூல்களின் முடிவாதல்,
``இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்; பலர் நோலா தவர்``.9
``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``3 என்பன முதலியவற்றால் விளங்கும். வறுமையால் இரத்தல் உண்டாகும். இரந்த வழியும் மிக்க தீவினையால், உணவு கிடைத்தல் அரிதாகும்.
சித்தாந்த முத்தியை மறுத்து வேறு கூறி, அக் கூற்றிற்கு ஏற்ப ஒழுகுவார்க்கு இவ்வாறான தீங்குகள் உளவாகா ஆயினும், `அவர்க்குப் பிறவி நீங்காது` என்க.
``உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்``9
என்னும் குறட்பாவும் இம்மந்திரத்திற் கூறிய பொருள் நோக்கம் உடைத்தென்க.
இதனால், `முத்தி` என்பதொன்று இல்லை என்பார், தம்மாலே தாம் கெடுதல் கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும். ``கூடகில்லார் குரு வைத்த நெறிகண்டு`` என்னும் மந்திரம் முன்தந்திரத்தில் கேடுகண்டிரங்கல்` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி
அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன்
இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.

பொழிப்புரை :

பிராண வாயு வெளியே செல்லுங்கால் தானும் வெளிச்சென்றும், அஃது உள்ளே வருங்கால் தானும் உள்ளே வந்ததும் இவ்வாறு உழல்கின்ற எனது மனத்தின் அலைவுக்கிடையே அந்தப் பிராணனை அடக்கியதனால் நிலைபெற்ற சித்தத்தையே பரம் பொருளின் இருப்பிடமாகக் கருதி, அவ்விடத்தில் நின்றே, `புண்ணியங்களின் பயனாய் எதிர்ப்படுகின்ற தேவதேவனே என்று அழைத்தேன் அங்ஙனம் ஒருமுறை யழைத்ததோடன்றித் தொடர்ந்து பன்முறை அழைத்து அவனை உள்ளத்தால் இறுகப் பற்றினேன் அதன்பின்பு அவன் தோன்றி, `நீ இங்கு என்ன செய்கின்றார்` என்று வினாவுகின்றான்.

குறிப்புரை :

ஆகவே, உடம்பு நீங்கியபின் நான் அடையத் தக்க கதி அவனே` என உணர்ந்தேன் என்பது கருத்து `அதனால், பரகதி இல்லை என்பாரது கூற்று எனக்கு நகை விளைக்கின்றது` என்பதாம் போவதும், புகுவதுமாய் உள்ள நெஞ்சு நிற்றலைக் குறித்தமையால், அவ் விரண்டிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. நெஞ்சு, விடாத ஆகுபெயர். மனம் அலையின் சித்தம் ஒன்றையும் சிந்தியாதாக, அது நிலைத்தவழியே சித்தம் ஒன்றை ஆழ்ந்து சிந்தித்தலின் `திறப்பட்ட சிந்தை`` என்றதற்கு ஏற்ப மனம் நிலைபெற்றமை பெறப்பட்டது. திறப்படுதல். வலியுடைத்தாதல். ``அடியார் சிந்தையுள் தேனூறி நின்று``* ``கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும் - தேனவன்காண்``* என்றாற்போலும் சுருதிகளின் வழிநின்று, திறப்பட்ட சிந்தையைத் `தெய்வம்` என்று எண்ணினார் என்க. அறப் பட்ட - அறத்தால். வெளிப்பட்ட. `பட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``பட்ட`` என்பது, ``பதி`` என்பதனோடு முடிந்தது. சிந்தையில் இருப்பவனை அழைத்தல் சிந்தையாலேயாம். எனவே அவ்வாறு, பன்முறை பாவித்தலாயிற்று. `ஒரு நாள் அழைத்துவிட்டு விடாமல், பல நாள் அழைத்தல் வேண்டும்` என்பது,
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்,
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான்
என்று எதிர்ப்படுமே``3
``அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்! - இரங்குமேல்
என்னாக வையான்! தான் எவ்வுலகம் ஈந்தளியான்!
பன்னாள் இரந்தாற் பணிந்து.``9
என்றாற்போலும் திருமொழிகளால் விளங்கும். அதனால், ``இறப்பற்றி`` என்றால் ``இங்கு இது என் என்கின்றான்`` என்றது, `என்னோடு கலந்து உறவாடுகின்றான்` என்றபடி.
இதனால், `பரகதி உண்டு` என்பது இவ்விடத்திற்றானே அனுபவமாய் விளங்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.

பொழிப்புரை :

மேட்டு நிலத்தில் பொழியப்பட்ட மழைநீர் அங்கு நிலைத்து நில்லாது நீங்குவதுபோல, வினையால் உடம்பினிடத்துச் சேர்க்கப்பட்ட உயிர் அதன்கண் நிலைத்து நில்லாது நீங்குவதாகும். ஆயினும், தழல் வண்ணனாகிய சிவனும் அவ்வுயிரோடு கூட அவ்வுடம்பின்கண் நிற்கின்றான். ஏனெனில், கடலிடத்தே நில்லாது கரையையே சேர்வதாகிய மரக்கலம் கடலிடை நின்றாருடன் தானும் நிற்பதுபோல, உயிரைப் பந்தத்தினின்றும் விடுவித்து வீட்டை அடைவித்தற் பொருட்டாம்.

குறிப்புரை :

கருத்து நோக்கிச் சொற்கிடக்கை முறையானன்றி இவ்வாறு உரை கூறப்பட்டது. உவமம் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையால் அதனால் விளக்கப்படும் பொருள் இறுதியில் விரித்துரைக்கப்பட்டது. இடையில் நின்ற காட்டுதல் (அறிவித்தல்) வினை பொருட்கே உரியது ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவர்``3 என்றது காண்க.
`கடலிடைப்பட்டவர் மரக்கலம், அல்லது புணையைப்பற்றி யின்றித்தாமே கரைசேர மாட்டாமைபோலப் பிறவியுட்பட்ட உயிர்கள் இறைவனைப் பற்றியன்றித் தாமே கரை சேரமாட்டா` என்பதும், `அதனால் இறைவன் தனது கருணை காரணமாகப் பிறப்புடைய உயிர்களோடு உடனாய் நின்று அவற்றை வீடடைவிக்கின்றான்` என்பதும் இங்குக் கூறப்பட்ட பொருள்கள்.
``பிறவிப் பெரு கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவ னடிசேரா தார்``9
என்றார் திருவள்ளுவரும் `மறு பிறப்பு இல்லை` என்பாரைத் தவிர, ஏனையோர் பலர்க்கும் `உயிர்கள் பிறவியுட் பட்டன` என்பது உடன்பாடு. அதனால், அவர்கள் அனைவரும் இம்மந்திரத்திற்கூறிய உவமையை உடன்படுவர் மேற்காட்டிய திருக்குறளும் `மறுபிறப்பு உண்டு` என்பார்க்குக் கூறுவதாய் எழுந்ததன்றி `மறு பிறப்பு இல்லை` என்பார்க்குக் கூற எழவில்லை. ஆகவே, `பக்தி` என்பது உண்டு என்பது உவமையாலும் விளக்கப்பட்டதாம்.
இதனால், பரகதி உண்மை உவமையில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும்
போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர்
காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள்
தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.

பொழிப்புரை :

தாமரைத் தண்டின் நூல்போல் அறிவுடையார் முன் எளிதில் அற்றுப்போகின்ற நூல்களால், உண்மை நூல்களின் வழிச் செல்வாரைத் தடுக்கின்றவர்கள் தாங்கள் மேல்நிலையை அடைய விரும்பி, அதற்கு மாறான வழிகளில் சென்று அலைவார்கள் அவர்களது செயல்கள், தெரிய வேண்டிய வழியைத் தெரிந்தவர் காட்டினாலும் அதனைக் கண் கொண்டு பாராத குருடர்கள் தாங்கள் அறிந்ததே வழியாகக் கொண்டு துன்பம் தரும் வழிகளில் திரியும் செயல் போன்றனவேயாம்.

குறிப்புரை :

`நூல்` என்னும் பெயர் ஒற்றுமை பற்றித் தாமரை நூலை எடுத்துக்காட்டினார்.
``உன்நூலும் ஒருநூலா உரைப்ப தென்னே!
உலட்டு நூல், பருத்தி நூல், சிலம்பி நூல்கள்``*
என அருணந்தி தேவரும் கூறுதல் காண்க. `போல்வவற்றால் தடுப்பார்`` என உருபு விரிக்க. வினையொடு தொகுங்கால் மூன்றாவதன் தொகை விகற்பப் புணர்ச்சியைப் பெறும். ``வாள்போழ்ந் தட்ட நீள்கழல் மறவர்`` என்றது காண்க. `பரத்தொடும் - போம்வழி தேடிப் புறத்தே திரிதர்வர்`` என்பதை, ``கனக வகை குறித்துக் போய்க் கடற்கே வீழ்வார்``* என்றது போலக் கொள்க. ``திரிகின்றவாறு`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், முத்தியைப் பல்வேறாகக் கூறும் சமய நூல்களின் பொருந்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடல்தொறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.

பொழிப்புரை :

பாசக் கூட்டம் மறைக்கின்ற மறைப்பு நீங்கி உடல் வீடும் மனிதர்கள் உடலில் இருக்கும்பொழுது, ``மாயோன் மேய காடுறை யுலகம்``3 என்பது முதலாக முறைப்படுத்துச் சொல்லப்பட்ட நால்வகை நிலங்கள் தோறும் உள்ளிடத்துச் சிவபெருமான் கொண்டிருக்கும் திருவுருவங்களைக் குறித்துச் சென்று வணங்கியிருந்து, உடல் நீங்கிய பொழுது பேரின்ப வடிவினனாகிய சிவபெருமானை அடைந்து அவனோடு இரண்டறக் கலப்பர். ஆயினும், பாசக் கூட்டத்தின் மறைப்பு நீங்கப்பெறாத மனிதர்கள் அத்திருவுருவங்கள் எங்கும் இருப்பினும் அவைகளைப் பற்றி யாதும் நினைக்க மாட்டார்கள்,

குறிப்புரை :

`மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் காடும் ... ... ... ... உருவினைக் குறித்து நந்தியவனை (அடைந்து) உடன் கூடுவர்; (பிறர்) உன்னகிலார்` என இயைக்க. ``அவன்`` பகுதிப் பொருள் விகுதி. ``குறிகளும் அடையாளமும் கோயிலும் - நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்``9 நிலமெங்கும் உள்ளனவாகவும் பாசத்தால் மூடப்பட்டுக் கிடக்கும் மனிதர்கள் அவற்றைச் சிறிதும் நோக்குதல் இல்லை. அதனால், அவர்கள் உடல்விட்ட பின்பு` அடையும் நிலை யாது எனக்கூறி இரங்கியவாறு, ``மூடுதல் இன்றி`` என முன்னர்க் கூறப்பட்டமையால், பின்னர் அதன் மறுதலை வருவிக்கப்பட்டது. அவர்கட்கு மேற்கூறியl ``நரகம், சுவர்க்கம், மேதினி`` என்னும் மூன்று உலகங்களுள் யாதானும் ஒன்றிற்சென்று பிறத்தலே கதி என்பது குறிப்பெச்சம். `பிறப்பதற்கே தொழிலாகி, இறக்கின்றாரே`` 8 என்று அருளிச்செய்ததையும் நோக்குக.
இதனால், `சிவநெறியை உணராதவர் மறுமையில் அடையும் நிலை இரக்கத்திற்கு உரியது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவ
நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.

பொழிப்புரை :

(தலையில் வலக் கன்னத்தை, `தெற்கு` என்றும், இடக் கன்னத்தை `வடக்கு` என்றும், நெற்றியை, `கிழக்கு` என்றும், பிடரிக்கு மேல் உள்ள பகுதியை `மேற்கு` என்று குழூஉக் குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்முறையில்.)
தெற்கும், வடக்கும் உயர்வுடையன. அத்திசையிகளில் தேவர்கள் உலாவுவார்கள். (சூரிய கலை சந்திர கலைகளாகிய பிராணங்கள் வியாபிக்கும்.) மேற்கும், கிழக்கும் யோகி தன் தியானப் பொருளைக் குறித்துச் செல்லும் வழிகளாம். அங்ஙனம் செல்லும் பொழுது நாவால் உச்சரிக்கப் படுவன மந்திரங்கள். இவற்றை யெல்லாம் இவ்வாறு உணர்ந்து, மூலாக்கினியை எழுப்பி
நடுநாடி வழியாக ஓங்கச் செய்து, அதனால் அறிவு விளங்கப் பெறுவீர்களாக.

குறிப்புரை :

`அங்ஙனம் அறிவு விளங்கப்பெற்றால், சுவர்க்க நரகங்களும், அவற்றைக் கடந்துள்ள சுத்த புவனங்களும் விளங்கச் சித்தாந்த முத்தி நிலையும் விளங்கும்` என்பது குறிப்பெச்சம். ஆவது - உயர்ந்து நிற்பது, இதனை, தெற்கு, வடக்கு இரண்டனோடும் தனித்தனிக் கூட்டுக. மந்திரமாவன பிரணவமும், அம்சமும், திருவைந்தெழுத்துமாம். `உணர்ந்து` என்பது சொல்லெச்சம்.
இதனால், `உண்மை முத்தி நிலையை யோகக் காட்சியால் இவ்வுலகிலே உணர்தல் கூடும்` என்பது கூறப்பட்டது. அதனால், அதனை `இல்லை` என்றல் குற்றமாதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவனை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.

பொழிப்புரை :

சமயப் பூசலை மேற்கொண்டு, பிற சமயத்தவர் சினங்கொள்ளுமாறு கடுஞ்சொற்களைப் பேசின பாவத்தை யடைந்தவர் தாம் `நெறியல்லா நெறி தன்னை நெறியாக மயங்கும் மயக்கம்* தம்மிடத்தில் பொருந்துதலால் நெறிகளைத் திரிய நோக்கினாராயினும், `நாம் பெரிய தவத்தைச் செய்கின்றோம்` என்பது தான் அவர்கள் கருத்து அவர்கள் தங்களுக்கு உண்மை மனோலயம் வரும்படி சொல்லிய முறையைக் கைக்கொள்ளாமையால் அக் கருத்துப் போலியேயாய் உண்மையில் அவர்கள் தம்மை வந்து சார வேண்டிய வினைகள் வந்து சார்தலினாலே அவற்றைச் சுமந்து நிற்பவரேயாவர்.

குறிப்புரை :

`தவத்தினால் வினையை நீக்கிக்கொள்பவர் அல்லர்` என்பாம். ``மாதவம் செய்வார்`` என்றது அவர்களது கருத்தை நோக்கி. தரணை - எண் வகையோக உறுப்புக்களில் மனம் ஒடுங்கி நிற்கும் நிலை. அஃது அதற்குரிய முறையைக் குறித்தது. `சினக்க` என்னும் வினையெச்சம், குகரச் சாரியையும், `உரு` என்னும் துணை வினையும் பெற்று, `சினக்குற` என வந்தது. ``பேசின`` என்னும் காரணப் பொருளில் வந்த பெயரெச்சத்தை, ``தீவினை`` என்பதனோடே முடிக்க. ``அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்``* என்பவாகலின் உறுதி கூறுமிடத்தும் இன்சொல்லால் கூறுதலே நன்றாகலின் `சமயத்துறையில் தாம் பிறர்க்கு உறுதி கூறுவதாகக் கருதிக்கொண்டு, அவர்பால் கடுஞ்சொற்களை வழங்குதல் தீவினையாம்` என்றபடி. இத்தீவினையை நன்னெறி யாளர் ஒரோ ஒருகாற் செய்யினும் அவர் பிறர்க்கு உறுதி கூறிய நன்மையையேனும் பெறுவர். நெறியாளர் நெறியாளர் இதனைச் செய்யின் அவர்க்கு மிஞ்சுவத் கடுஞ்சொல் வழங்கினமையால் வரும் அத் தீவினைமட்டுமே என்பது கருத்து. இம்மந்திரம் மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
இதனால், சித்தாந்த முத்தியைப் பழிப்பார்க்குத் தீவினையும் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

பொழிப்புரை :

ஆன்மாவின் சொரூப (இயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களெல்லாம் இலக்கணைச்சொல்லாகாது இலக்கணச் சொல்லேயாம். அஃதாவது நேர்ப்பொருளைத் தருவனவேயாம். அவை `ஆன்மா நித்தியம், வியாபகம், சித்து` என்றல் போல்வன. ஆன்மாவின் சொரூப நிலையைக் கூறாது, தடத்த (செயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களே இலக்கணைச் சொல்லாய் நிற்கும். அஃதாவது நேரே பொருளை யுணர்த்தாமல், ஒன்றை இடையிட்டுப் பொருளுணர்த்தும். அது மூன்று வகைப்படும். (அவ்வகைகள் மேலே காட்டப்பட்டன.)
`ஆன்மா, மேல், கீழ், நடு உலகங்களில் பிறந்தும், இறந்தும் உழலும்` என்றால், ஆன்மா உண்மையில் வியாபகப் பொருள் ஆகையால், அதற்குப் போக்கு வரவு இல்லையாதலின், ஆன்மாவை விட்டு, `அதன் சூக்கும, பரசரீரங்களே அவ்வாறு உழல்வன` எனக் கொள்கின்றோம். ஆகவே இது விட்ட இலக்கணை.
இனி, `ஆன்மாச் சகலத்திற் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அவத்தைகளை அடைகின்றது` என்றால், அவ்வவத்தைகளில் உணர்வு வேறுபடுவது ஆன்மாவே ஆகையாலும், அதன் கருவிகளின் கூடுதல் பிரிதல்கள் என்பவற்றாலும், சீவ கரணங்கள் சிவ கரணங்களாய் வேறுபடுதலாலுமே அவத்தைகள் நிகழ்தலாலும் ஆன்மாவை விடாமலே அதன் கருவிகளின் கூடுதல் குறைதல் -களையே கொள்கின்றோம். அதனால் இது விடாத இலக்கணையாம்.
இனி, `ஆன்மா புறத்தே உள்ள ஓசையைக் கேட்கின்றது, உருவத்தைக் காண்கின்றது` என்றால், கேட்டல் காண்டல்களைத் தான் நேரே செய்யாது, செவியும், கண்ணுமாகிய பொறிகளே அவற்றைச் செய்கின்றன என்றும், ஆயினும் அப்பொறிகள் அச்செயல்களைச் செய்யுமாறு ஆன்மா அவற்றை அதிட்டித்து (வாயிலாகப் பற்றி ஏவி) நிற்கின்றது என்றும் கொள்கின்றோம். இதனால், இது விட்டும் விடாத இலக்கணையாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. `சொரூபம் இலக்கணாதீதம்` (இலக்கணைக்கு அப்பாற்பட்டது) எனக் கூறியதனால், `இலக்கணைச் சொற்களாய் வருவன தடத்தத்தைப் பற்றி வருவனவே` என்பது பெறப்பட்டது.
`ஆன்மாவின் தடத்த இயல்புகளைக் கூறுமிடத்து ஆன்மா விற்குச் செயற்கையாயுள்ள மலங்கலின் இயல்பை வேறாகவும், ஆன்மாவின் தற்சொரூபம் வேறாகவும் உணர்தல் வேண்டும்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. ஆகவே, ஆன்மாவைப் போலச் சிவன் தனது தடத்த நிலையில் முன்னை நிலையை மறத்தலாகிய உணர்வு வேறு பாட்டை அடைதல் இல்லாமையால், `அவனது தடத்த நிலைகளைக் குறிக்கவே இலக்கணைச் சொற்கள் பயன்படுகின்றன` எனக்கூறும் மாயாவாதிகள் கூற்றுப் பொருந்தாது என்பதும் இதனாலே குறிக்கப்பட்டதாம். இது வருகின்ற மந்திரத்தில் வெளியாகும்.
வியோமம் - ஆகாயம் ; வானுலகம். அஃது உபலக்கணம். ``உபசாந்தம்`` என்றது கருவிகளின் சேட்டை அடங்கிய நிலையை. சத்தாதி - ஓசை முதலிய புலன்கள். சுட்டும் - நேரே சுட்டுகின்ற.
இதனால், உபநிடதப் பொருள்களைச் செம்மையாக உணர்தற்கு உரிய ஒரு கருவியின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வில்லின் விசைநாணில் கோத்திலக் கெய்தபின்
சொல்லுங் களிறைந்தும் கொலொடே சாய்ந்தன
இல்லில் இருந்தெறி கூறும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிர்எதி ராகுமே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.]
வில்லினிடத்து விசையைத் தருகின்ற நாணை ஏற்றி, அதன்கண் அம்பைப்பூட்டி தொலைவில் உள்ள இலக்கை எய்ய வல்லார் அங்ஙனம் எய்வாராயின் அந்த இலக்கிற்குக் குறுக்கே நிற்கின்ற கொலையானைகள் ஐந்தும் அந்த அம்பாலே வீழ்ந்துவிடும். (அம்பு இலக்கைச் சென்று அடையும்.) இனி அவ்வாறு எய்யும் ஒருவன் தனக்கு வாய்ப்பான இடத்தில் இருந்து கொண்டு எய்யும் பொழுது அச்சாதனையால் இனியதோர் ஒளி மாணிக்கக்கலன் போல் வெளிப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

இவ்வதிகாரத்தில் உபநிடத வாக்கியங்களுக்குப் பொருள் கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றார். ஆதலின் `முண்டகம்` என்னும் ஓர் உபநிடதத்தில் கூறப்பட்டவாறே இம்மந்திரத்தில் கூறினார். அதிற் கூறப்பட்டது வருமாறு.
1. ``சித்தம் அழகியோய், உபநிடத்தில் உள்ள பெரிய அத்திரத்தை (வில்லை) எடுத்து அதில், முன்பே உபாசனையால் கூர்மை பெற்றுள்ள அம்பைத் தொடுத்து, பிரம்ம பாவனையால் அதை இழுத்து, அட்சரப் பிரம்மமாகிய இலக்கில் பாயும்படி செலுத்து``3
2. ``பிரணவமே வில். ஆன்மாவே அம்பு. பிரம்மமே அதன் இலக்கு அது சிறிதும் மறதியற்ற நினைவுடன் எய்யப்படல் வேண்டும். (எய்யப்பட்டால்) ஒன்று பட்ட நிலை ஏற்படும்``.3
இவற்றால் இம்மந்திரத்தில் மறைத்துக் கூறப்பட்டபொருள் இனிது விளங்கும். உபாசனை, இங்கு மந்திரோபாசனை யாதலின், ``விசை நாண்`` என்றது திருவைந்தெழுத்தாகக் கொள்ளப்படுகின்றது. இதனை மேற்காட்டிய உபநிடதம் வெளிப்படையாகக் கூறவில்லை. `பிரணவ கலைகளே அஞ்செழுத்து` என்பது உபநிடதங்களின் கருத்து ஆதலால் அது `வில்` என்பதில் அடக்கப்பட்டது என்பது இனிது விளங்க நாயனார், ``விசை நாணின்`` என வெளிப்பட ஓதினார்.
உபாசனையால் கூர்மை பெற்ற அம்பு, சமய விசேட நிருவாண தீக்கைகளால் பல முறைகளில் திருவைந்தெழுத்தை ஓதிப் பயின்று, திருவருள் உணர்வு மிகப்பெற்ற ஆன்ம உணர்வு, ஆன்மா எத்துணை முயற்சிகளைச் செய்தாலும் தனது இலட்சியத்தை அடைதற்கு, இடையே குறுக்கிடுவன ஐம்புலன்கள் ஆதலின், அவையும் இலட்சியத்தை நோக்கி உறுதியாகச் செல்லும் ஆன்மாவின் முன் வலியற்று வீழ்ந்துவிடும்` என்பதையும் நாயனாரே கூறினார்.
கோல் - அம்பு, ஒடு உருபை ஆன் உருபாகத் திரிக்க. ஏகாரம், `அந்த அம்பைத்தவிர வேறொரு படைக்கலம் வேண்டா` என்பதைக் குறித்தது. தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
உபநிடதத்தில் `மறவா நினைவு` எனப்பட்டது யோகா வத்தையில் சமாதி நிலையும், நின்மலாவத்தையில் நின்மல துரியமும் ஆகும் இவற்றையே நாயனார் ``இல்`` (இல்லம்) என்றார். எறி - எய்யப்படும் இலக்கு . கூரும் - அதனைக் கூர்த்து நோக்குகின்ற. கல் - மாணிக்கம். `கற்கலன்` என்பது எதுகை நோக்கி, `கல்கலன்` என இயல்பாய் நின்றது. கதிர் - கதிரவன்; ஆகுபெயர். சொரூப சிவம்.
இங்குக் கூறிய இவ்வுருவக முறையில் பரமான்மாவை, `இலக்கு` என்றதனால், அஃது இருந்தபடியே என்றும் இருக்கின்றது என்பதும், `கூர்மை பெற்ற அம்பு` என்றதனால், சீவான்மாவே பிரணவோபசனையாகிய சாதனத்தால் அவ்விலக்கினை அடைதல் வேண்டும்` என்பதும் உபநிடதத்தின் கருத்து என்பது போந்தது. எய்பவனும், எய்யப்படும் பொருளும் ஒன்றாதல் ஒருபோதும் இல்லையாகலானும், `உண்டு` எனின், `தன்னைப் பற்றுதல்` (ஆன்மாச் சிரய தோடம் என்னும் குற்றம் படும் ஆகலானும், ஏகான்ம வாதம் கொண்டு இலக்கணைகளைப் பிரமப் பொருளின் தடத்த நிலைகளுக்கு ஆக்குதல் பொருந்தாமை தெள்ளிது என்றபடி. இங்ஙனம் இதனைத் தெளிவுபடுத்தவே நாயனார் இம்மந்திரத்தைக் கூறினார். அதனால் இம்மந்திரம் இவ்வதிகாரத்தில் இடம்பெற்றது.
``புள்ளுவர் ஐவர் கள்வர்
புனத்திடைப் புகுந்து நின்று,
துள்ளுவர்; சூறை கொள்வர்;
தூநெறி விளைய ஒட்டார்;
முள்ளுடை யவர்கள் தம்மை
முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்துநின்(று) அங்(கு)
உணர்வினால் எய்ய லாமே``9
என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், இலக்கணை பயன்படும் முறை உபநிடதக் கூற்றால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
பாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம்
ஓவி விடும்தத் துவமசி உண்மையே.

பொழிப்புரை :

(`வேதாந்த மகாவாக்கியங்கள் சில உள` என்பதும், அவற்றின் இயல்பும் மேற்குறித்த அதிகாரங்களில் சொல்லப்பட்டன. அவ்வாக்கியங்களில் `தத்துவமசி` என்னும் வாக்கியமே சிறப்பாகக் கூறப்படுதலால் அது பற்றியே இங்குக் கூறுகின்றார். வடமொழியில் `தத்+த்வம்+அஸி` என்னும் மூன்று பதங்களின் சேர்க்கையே `தத்துவமஸி` என்று ஆகின்றது. தத் - அது. த்வம் - நீ, அஸி - ஆகின்றாய். தத்துவமஸி - அது நீயாகின்றாய். இங்ஙனமாயினும் `ஆகின்றாய்` என்பதனால், `நீ அது ஆகின்றாய், என்பதே கருத்து, த்வம், `துவம்` என வருகின்றது. `தொம்` என மரூஉவாகவும் வரும். இங்குக் குறித்த கருத்துப் பற்றி நாயனார், `தொந்தத்தசி என்றே கூறுவார்)
`தத்துவமசி` என்பதை, `தொம், தத், அசி என வைத்து நோக்கினால் முதற்கண் உள்ள `தொம்` என்பது, மேல் `முத்துரியம்` என்பவற்றில் சீவ துரியமாகிய யோகாவத்தையாகிய சகலத்திற் சுத்தா வத்தை நிலையில் தியான சமாதிகளில் உள்ள சீவான்மாவைக் குறிக்கும். `தத்` என்பது பர துரியமாகிய பர முத்தியில் அடையப்படும் சொரூப சிவத்தைக் குறிக்கும். `அசி` என்பது, நின்மல துரியமாகிய சிவ யோகத்தில் சீவான்மா பரமான்மாவாகிய சிவனேயாய் அவனோடு ஏகமாகி விடுதலைக் குறிக்கும். இதுவே `தத்துவமசி` மகாவாக்கியத்தின் உண்மைப் பொருள். இப்பொருளைச் சில மதங்கள் தள்ளிவிடுகின்றன.

குறிப்புரை :

`அதனைக் கொண்டு மயங்க வேண்டா` என்பது குறிப்பெச்சம். `தத்துவ மசி உண்மை இது` என முடித்து ஓவிவிடும் என்பதை இறுதியில் கூட்டி, அதற்கு எழுவாய் வருவித்து முடிக்க. தள்ளிவிடுகின்ற மதங்கள் சிலவகை ஏகான்ம வாத மதங்கள். அவை `சீவான்மா, பரமான்மா என இரண்டு ஆன்மாக்கள் இல்லை. பரமான்மா ஒன்றே பல சீவான்மாக்கள் ஆகின்றது` என்பதில் தம்முள் மாறுபடுதல் இல்லை.
ஒருவகை ஏகான்ம வாதம், `பொன்னே பூடணம் ஆவது போல` பரப்பிரம்மே சீவர்களாகவும், உலகமாகவும் பரிணமிக்கின்றது என்று கூறும் அக்கூற்று. `பரிணாம வாதம்` எனப்படுகின்றது.
`பரிணாம வாதம் பொருந்தாது` என விடுத்து, மற்றொருவகை ஏகான்ம வாதம். விவர்த்தனவாத ஆபாச வாதங்களைக் கூறும். விவர்த்தனம் - மாறுபட்ட தோற்றம். ஆபாசம் - உண்மை போலவே தோன்றும் போலி. கயிறு பாம்பாகவும், இப்பி வெள்ளியாகவும், கானல் நீராகவும் தோன்றுதல் போலும் தோற்றமே விவர்த்தனம் இத்தோற்றத்திற்குக் காரணம் மயக்கமே. போலியும் மயக்கம் காரணமாக, `உண்மை` என எண்ணப்படுகின்றது. `அவை போலவே மயக்கத்தால் பர பிரம்மம் ஈசுரனாகவும், சீவர்களாகவும், உலகமாகவும் (சக சீவ பரங்களாகத்) தோன்றுகின்றது என்பது விவர்த்தனவாத ஆபாச வாதங்கள், `மயக்கத்திற்குக் காரணம் மாயை எனப்படுகின்றது.
மாயை கண்ணாடிபோல்வது; அது `சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்று கூறுபாட்டினையுடையது. அக்கூறுகள் `குணம்` எனப்படும். அம்மூன்றிலும், சுத்தமாய் ஒன்றாய் உள்ள பரப்பிரமம் கண்ணாடியில் நிழல்போலப் பலவாய்ப் பிரதிபலிக்கும் அவற்றுள் சத்துவ குணப்பிரதிபலனமே ஈசுரன். இராசத குணப்பிரதிபலனம் சீவர்கள். தாமத குணப் பிரதிபலனம் பலவகை உடம்புகளும், உலகங்களும் கண்ணாடியில் நிழற் போல` என்பதனால், இஃது ஆபாச வாதமாம். ஆகாயத்தில் உள்ள சந்திரனும், சூரியனும் பூமியில் உள்ள பல நீர்நிலைகளிலும், பாண்டங்களிலும் உள்ள நீரில் பிரதிபலித்தலையும் உவமையாகக் கூறுவர்.
விவர்த்தன வாதம், ஆபாச வாதம் இரண்டுமே மாயையை அடிப்படையாகக் கொள்வதால் அவை இரண்டுமே `மாயா வாதம்` எனப்படுகின்றன.
இவ் வாதங்கள், `தங்கள் வாதங்களுக்கு மாயையே அடிப்படை` என்று சொல்லிவிட்டு, `அத்தகைய மாயை உள்பொருளா, இல்பொருளா` என்னும் ஆராய்ச்சியில், `இரண்டும் அல்ல; அதனால் உள்ளது என்றோ, இல்லது என்றோ ஒருபடித்தாக வரையறுத்துச் சொல்லொணாதது. (அநிர்வசனீயம்) என்கின்றன. அங்ஙனம் இவை கூறுதற்குக் காரணம். `பொருள்` என உள்ளது ஒன்றேயன்றி, இரண்டாவது இல்லை எனக் கொண்டதேயாகும். மாயையை `உள்பொருள்` என்று ஒப்புக்கொண்டால், `பொருள்கள் இரண்டு உள்ளன` என்று ஆகிவிடும்` என இவை அஞ்சுகின்றன.
`உள்ளது` என்றால், என்றும் உள்ளதாதல் வேண்டும். `இல்லது` என்றால் முயற்கொம்பு, ஆகாயத் தாமரை முதலியன போல அதனால் விளைவு ஒன்றும் உண்டாகாது. மாயை மயக்கத்தைத் தருவதால் இல்லதாகாது `உள்ளது` என்றால் என்றும் உள்ளதாதல் வேண்டும். அவ்வாறின்றி ஞானம் வந்தால் இல்லையாகி விடுகின்றது. அதனால் மாயையை, உள்ளது என்றோ, `இல்லது` என்றோ சொல்லமுடியாது என்பது இவ்வாதங்களின் நெறிமுறை. இவ்வாறு அடிப்படையைப் பற்றிக் குழப்பிவிட்டு. அதன்மேல் உயர உயரக் கட்டடங்கள் இவ்வாதத்தில் கட்டப்படுகின்றன.
ஏகான்ம வாதங்களில் மாயாவாதமே வலுப்பட்டு நிற்கின்றது.
சத்தப் பிரம வாதம், கிரீடாப் பிரம வாதம் என வேறு ஏகான்ம வாதங்களும் உள்ளன.
உபநிடதங்களுள் சிறந்த ஒன்றாகிய சாந்தோக்கியம் ஓர் உபதேசத்தில் ``சத்தே முதற்கண் ஒன்றேயாய். அத்விதீயமாய் இருந்தது`` எனக் கூறியுள்ளது.l இதில் `அத்வீதியம்` எனப்பட்ட `அத்துவிதம்` என்னும் சொல்லே பெரிதும் விவாதத்திற்குள்ளாகி விட்டது. பிரம சூத்திரத்திற்குப் பாடியம் செய்தோர், `அத்துவிதம்` என்பதற்கு `இரண்டில்லாதது` என்றே பொருள் கொண்டு, `இரண்டில் -லாதது ஒன்றே` என்றனர். அதனால் அவர்கள், `எவ்வகையிலும் உளளது ஒரு பொருளே; இரண்டாவதாக எந்தப் பொருளும் இல்லை` எனக் கொள்வாராயினர். ஆயினும் சத்தினை `ஒன்று` எனக் கூறும் உபநிடதம் வாளா `ஒன்று` என்று மட்டும் கூறாமல், `ஒன்றே` எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறியதிலேயே `இரண்டாவது இல்லை` என்பது விளங்கி விடுகின்றது. ஆகவே, அதன்பின், ``இரண்டாவது இல்லை`` எனக் கூறுதல் மிகையாகின்றது. ஆயினும், `வலியுறுத்தற்கு அதுவும் வேண்டும்` என்கின்றனர் பாடியகாரர்கள். `ஒருபொருளே உண்டு எனக் கொள்வதால் அவர்கள் ஒருமைக் கொள்கையினராதல் தெளிவு.
ஒருமை, `முற்றொருமை, தொகை யொருமை, இறை யொருமை` என மூன்றாகச் சொல்லப்படுகின்றது. முற்றொருமை கேவ லாத்துவிதம். (கேவலம் - தனிமை) தொகையொருமை - விசிட்டாத்து விதம். (விசிட்டம் - அடையும், அடைகொளியும் ஒன்றாய்த் தொக்க தொகை. அடை - விசேடணம். அடைகொளி - விசேடியம். விசிட்டம் - இவையிரண்டும் கூடியது.) இறை யொருமை - சிவாத்துவிதம்.
மூன்று ஒருமையாளர்களுள் முற்றொருமையாளர் `முதற் பொருள் (பரபிரம்மம்) எந்த வகையிலும் இருமை சிறிதும் இல்லாது, முற்றும் ஒன்றேயாய் உள்ளது` என்பர்.
இருமை, `பேதம்` என்றும், ஒருமை, அபேதம் என்றும் சொல்லப்படும். பேதம் - வேற்றுமை. அபேதம் - வேற்றுமை இன்மை.
ஒரு பொருட்கு மூன்று வகை வேற்றுமைகள் உள்ளன. அவை, `தன்னின வேற்றுமை, (சசாதிய பேதம்) வேற்றின வேற்றுமை (விசாதீய பேதம்) தன்னுள்ளே வேற்றுமை` (சுகத பேதம்) என்பன.
`மா மரம், புளியமரம்` என்றாற் போல்வனவற்றில் தன்னின வேற்றுமை உள்ளது. ஏனெனில், `மா, புளி` என்பன `மரம்` என்னும் ஒர் இனத்தில் உள்ள வேற்றுமையே, பரப்பிரமம் ஒன்றேயாதலின் அதற்குத் தன்னின வேற்றுமையில்லை.
மரம், விலங்கு, புள் முதலியவற்றில் அவ்வப்பெயர்களே வேற்றின வேற்றுமையை உணர்த்துகின்றன. ஏனெனில் அப்பெயர்கள் அவ்வவ்வினத்திற்கு மற்றையினங்களோடுள்ள வேற்றுமையை உணர்த்தியே நிற்கின்றன. பரப்பிரம்மத்திற்கு வேறாய் எந்தப் பொருளும் இல்லையாகையால், அதற்கு வேற்றின வேற்றுமையும் இல்லை என்பர் முற்றொருமையாளர்.
`செந்தாமரை, வெண்டாமரை - முக்கண்ணன, செங் கண்ணன்` என்றாற் போல்வனவற்றில் தன்னுள்ளே வேற்றுமை உள்ளது. ஏனெனில், தாமரை வேற்றுமையின்றி நில்லாது `செம்மை, வெண்மை` என்னும் வேறுபாடுகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. `செஞ்ஞாயிறு வெண்ணிலவு` என்பவற்றிலும் செம்மையும், வெண்மையும் ஞாயிற்றிற்கும், நிலவிற்கும் வேறு வேறாகவே உணரப் படுகின்றன. கண்களும், அவற்றை உடையவர்களும் வேறு வேறாகவே உணரப்படுதலால், `முக்கண்ணன் செங்கண்ணன்` என்ப வற்றிலும் தன்னுள்ளே வேற்றுமையுள்ளது. எனவே, ``குணம், குணி. (பண்பு, பண்பி) அவயவம், அவயவி (சினை, முதல்) என்னும் முறையில் உள்ள வேற்றுமைகள் தன்னுள்ளே வேற்றுமை` என்பது விளங்கும். `இத்தகைய வேற்றுமையும் பரப்பிரம்மத்திற்கு இல்லை` என்பர் முற்றொருமையாளர். `பரப்பிரம்மம் கேவலம் சின் மாத்திரமாய் உள்ளது`. அறிவு, அறிவை உடையது என்று அஃது இரண்டாய் இல்லை. அறிவு என்கின்ற ஒன்றேயாய் உள்ளது என்பது அவரது கொள்கை. `கேவலம் ஒன்று` என்பதனால், அவர் கூறும் அத்துவிதம், `கேவலாத்து விதம்` எனப்படுகின்றது.
`பரப்பிரம்மத்திற்குச் சசாதிய பேதம் இல்லை` என்பது மட்டுமே எல்லோர்க்கும் உடன்பாடு. `மற்றைய பேதங்கள் இல்லை என்பது எல்லோர்க்கும் உடன்பாடில்லை.
`மேற்காட்டிய உபநிடதம், சத்தினை, (பரப்பிரம்மத்தை) `ஒன்று` எனக் கூறியது. சசாதீய பேதத்தை நீக்குதற்கும், `ஒன்றே` எனத்தேற்றேகாரம் புணர்த்தது, சுகத பேதத்தை நீக்குதற்கும், (அத்விதீயம்) என்றது விசாதீய பேதம் நீக்குதற்கும் ஆகலின், அவற்றுள் மிகை எதுவும் இல்லை` என முற்றொருமையாளர் திறம் படச் சாதிப்பர். ஆயினும், `பரப்பிரம்மத்திற்கு விசாதீய பேதமும், சுகத பேதமும் இல்லை` என்றால், மேற்காட்டிய உபநிடத்திலும் மற்றும் உப நிடதங்களிலும் பரப்பிரம்மத்தை வருணிக்கும் பலவகை வருணணை களோடு பெரிதும் முரணும் ஆதலின், ``ஏகமேவாத் விதீயம்`` என்னும் இந்த ஒரு வாக்கியத்தை வைத்து முற்றொருமை சாதித்தல் கூடாது என மற்றையோர் மறுப்பர். சீவர்கள், பிரபஞ்சம் இவைகளை உப நிடதங்கள் வேறு வேறாகவும் கூறுகின்றன. எனினும், முற்றொருமை வாதிகள், உபநிடதங்களில் வரும் பிரம்ம வருணனைகளில் அன்மைச் சொற்கட்கு மட்டுமின்றி, ஆக்கச் சொற்களுக்கும் பிரம்மத்தைப் பிற பொருள்களினின்றும் வேறுபடுத்துதலே பயன்` என்று கூறிப்போவர்.
`பரப்பிரம்மம்` சசாதீய பேதம் இன்றி, ஒன்றேயாயினும், பசு பாசங்களின் வேறாய் நிற்கும் விசாதிய பேதம். `ஆனந்தம்` முதலிய குணங்களையுடைய குணியாய் நிற்கும் சுகதபேதம் இவைகளை யுடையதே` என்பர். மற்றையோராகிய அவர் அங்ஙனம் கூறுமிடத்து. (அரசனுக்குப் பரிவாரங்கள் அரசச் சுற்றம்) போல சீவர்களும், அவனது ஆற்றல் போல மாயையும் இருத்தலால் பசு பாசங்கள் பரப் பிரம்மத்தின் வேறாவன அல்ல` என்பதே அத்துவிதம் என்பதனால் பெறப்படுவது` என்பர் தொகை யொருமையாளர் (விசிட்டாத்து விதிகள்.) ஆற்றலும், பரிவாரமும் அரசனுக்கு அடைகள் (விசே டணங்கள்) அரசன் அடைகொளி. (விசேடியம்.) `ஆற்றலும், பரி வாரமும் இல்லாவிடில் அரசனே இல்லை, அதுபோலப் பசுபாசங் களாகிய அடைகள் இல்லையேல், பதியாகிய பரப்பிரம்மமும் இல்லை` என்பது அவர் கொள்கை. மேலும், `பரம்` என்பதற்கு `மேலானது` என்பது பொருள், `இரண்டாவது பொருள் இல்லை` என்றால், `மேல், கீழ்` என்னும் வழக்கிற்கே வழியில்லை.
இனி முற்றொருமையாளர், `பொய், மெய்` என்பவற்றிற்கு வேறாய்` `மித்தை` (வெறுந்தோற்றம்) என ஒன்றைக்கூறி, `மாயை, அஞ்ஞானம் அவித்தை` எனக் கூறப்படுவனவெல்லாம் `மித்தை`; அஃதாவது, பொய்யும் அல்ல; மெய்யும் அல்ல. ஆகவே, மித்தையையும் மெய்யையும் வைத்தே கீழ்,மேல் சொல்லப்படுகின்றன என்பர்.
`மேற்காட்டிய கயிற்றில் அரவு முதலியனவும், கனாவும் மித்தை (வெறும் தோற்றம்) அஃதாவது, உள்ளனவும் அல்ல; இல்லனவும் அல்ல` என்பர். இக்கொள்கை பௌத்த மதக் கொள்கை யாகிய `சூனியம்` என்பதைச் சிறிதே வேறுபடுத்திக்கூறுவதாகும். `மெய்` என்பதை `உள்ளது` என்றும், `பொய்` என்பதை இல்லது` என்றும் கொண்டால், இவ்விரண்டிற்கும் வேறாய், அல்லது இரண்டுமாய் நிற்பதொரு பொருள் இருத்தல் இயலாது. ஆகவே, அஃது இயல்வது போல வைத்து, சூனியம், அநிர்வசனீயம் `மித்தை சமுச்சயம்` முதலிய சொற்களைச் சொல்வன எல்லாம் வெறும் சொற்சாலங்களாய்ப் பொருளில் மொழிதலேயாம்.
கயிற்றில் அரவு இல்லையென்றாலும் அரவு வேறிடத்தில் உள்ளது. இப்பியில் வெள்ளி இல்லையென்றாலும் வெள்ளி வேறிடத்தில் உள்ளது. கானலில் நீர் இல்லையென்றாலும் நீர் வேறிடத்தில் உள்ளது. ஆகவே, ``இல்லதற்குத் தோற்றம் இன்மையின்``3 என்றபடி, எங்கும், எப்பொழுதும் இல்லதேயான பொருள் ஓரிடத்தும், ஒருகாலத்தும், ஒருவாற்றானும் தோன்று மாறில்லை. ஆகையால் கயிற்றில் அரவு முதலியவற்றை உவமை கூறினால், `பரப்பிரம்மத்தில் சக சீவ பரங்கள் இல்லையென்றாலும் அவை வேறிடத்து உள்ளன` என்று ஆகும்.
இனிக்கனவை, `மெய்யன்றி` என்றலும் பொருந்ததாது. கனவிற்கும், நனவிற்கும் உள்ள வேற்றுமை, ஒரு பிறப்பிற்கும். அடுத்தப் பிறப்பிற்கும் உள்ள வேற்றுமை போன்றதாகவே சொல்லப் படுகின்றது. ஒரு பிறப்பில் உள்ள உறவினர், பகைவர் அடுத்த பிறப்பில் அவ்வாறாய் வாராமை பற்றி முற்பிறப்பைப் `பொய்` என்பார் ஆத்திகருள் ஒருவரும் இலர். அதுபோல, கனவிற்கண்டது நனவிற் பயன்படாமை பற்றி அதனைப் `பொய்` என்றல் சாலாது. ஒரு சிலருக்கு முற்பிறப்பு நிகழ்ச்சிகள் நினைவிற்கு வந்து, விருப்பு வெறுப்புக்கள் நிகழ்வது போல, கனவு நிகழச்சிகளில் ஓரிரு நிகழ்ச்சிகள் நனவிலும் தாக்குகின்றன `நனவு தூலதேகத்தை மட்டுமை பற்றியது, கனவு சூக்கும தேகத்தை மட்டுமே பற்றியது` என்பது அனைவர்க்கும் உடன்பாடு. கனவில் நிகழும் மகளிர் இன்பம், பேரெச்சம், பெருந்துக்கம் முதலியன, சிலவேளைகளில் தூல உடம்பைத் தாக்குதலும் கண் கூடு. அவை பொய்யாயின் பொய்யானது பிறிதொன்றைத் தாக்குமாறில்லை. ஒழுங்கின்மை, நிலையாமை என்னும் அளவே கனவினிடத்து உள்ள குறைகளாகும். ஆகவே கனவு இல்லதன்று.
இன்னும் அவர், `குளக்கரையில் நிற்பவனுக்குக் குளத்து நீரில் தான் தலைகீழாய்த் தோன்றுவது போல, சத்துச் சித்து ஆனந்தமாய் உள்ள பரப்பிரம்மம் மாயையால், நேர்மாறான அசத்துச் சட துக்க உலகமாய்த் தோன்றுகின்றது` என்பர்.
குளக்கரையில் நிற்பவன் நீரில் நிழலையே தானாக மயங்குதல் ஓரிடத்தும், ஒரு காலத்தும் நிகழாதது. ஒருவன் கண்ணாடியில் தோன்றும் நிழலையே தானாக மயங்குதலும் அத்தகையதே. அதனால் அவற்றை உபமானமாகக் கூறி, `பரப்பிரமத்தின் பிரதி பிம்பங்களே சகசீவ பரங்கள்` என்றல் பொருந்துமாறில்லை.
அஃதன்றியும் கயிறு தானே தன்னைப் `பாம்பு` என மயங்கிப் பின்பு `இது பாம்பன்று, கயிறு` எனத் தெளியாது. அவ்வாறு முன்பு மயங்கப் பின்பு தெளிபவன் கயிற்றுக்கு வேறாய் உள்ளவனே. அதுபோலப் பரப்பிரமமே தன்னைத்தான் முன்பு சகசீவ பரங்களாக மயங்கிப்பின், இவையெல்லாம் அன்ன அல்ல, பரப்பிரம்மமே` எனத் தெளியாது. அங்ஙனம் முன்பு மயங்கிப் பின்பு தெளிபவன் பரப்பிரம்மத்தின் வேறாய் உள்ளவனே யாவன். ஆகவே, இத்தகைய உவமைகள் முற்றொருமையைச் சாதிப்பவனாய் இல்லை.
இனிக்கயிறு பாம்பாகத் தோன்றுமேயல்லது. தேளாய் ஒருவருக்கும் தோன்றாது. காரணம் என்னை? பாம்பினுடைய தன்மை கயிற்றினிடத்தும் உள்ளது. தேளினுடைய தன்மை கயிற்றினிடத்தில் இல்லை கயிறு, பாம்பு இரண்டிலும் உள்ள தன்மை `பொதுத் தன்மை` எனப்படும். எனவே, ஒரு பொருளைக் காண்கின்றவன் அதன் பொதுத் தன்மையைக் கண்டு. சிறப்புத் தன்மையைக் காணாமல், அப்பொதுத் தன்மையை உடைய மற்றொரு பொருளின் சிறப்புத் தன்மையையும் விரைவில் தனது நினவினால் எதிரில் காணப்படும் பொருளோடு சேர்த்து அதனை அதனோடு ஒப்புமையுடைய வேறொரு பொருளாகக் கருதி விடுகின்றான். அவ்வளவே பிழை `கியாதி வாதம்` கூறுவார். கூற்றின் முறையில் வைத்து நோக்கினால் இதனைச் `சாதிரு சயக்கியாதி` எனலாம். சாதிருசயம் - பொதுத்தன்மை.
`கயிற்றரவு` முதலிய உவமைகளைக் காட்டிலும் `கண்ணாடியில் நிழல்` உவமை பெரிதும் பொருத்த மற்றதாகின்றது. ஏனெனில், கயிற்றிற்கும், அரவிற்கும் உள்ள ஒற்றுமை சிறிதளவே பிம்பத்திற்கும், கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பத்திற்கும் உள்ள ஒற்றுமை மிகப் பெரிது இரண்டும் ஏறக்குறைய ஒரு தன்மையனவேயாம். அதனால் உலகம் பரப்பிரம்மத்தின் பிரதிபிம்பம் என்றால், உலகத்தைப் பார்ப்பதே பரப்பிரம்மத்தைப் பார்ப்பதாக ஆகிவிடும் மேலும், பிரதிபிம்பத்தில் காணப்படும் மாறுதல்கள் பிம்பத்தில் இல்லாமல் உண்டாகமாட்டா அதனால் உலகத்தின் மாறுதல்களைக் காணும்பொழுது அவற்றைப் பரப்பிரம்மத்திலும் உள்ளன` எனக் கொள்ளல் வேண்டும்.
இனி, `கண்ணாடியில் உள்ள அழுக்கினால் அதில் தோன்றும் பிரதிபிம்பம் பிம்பத்திற்கு மாறாக இருக்கலாம்` என்றால், அழுக்கினால் பிரதிபிம்பம் உண்டாகாது போனாலும் போகலாமே யன்றிப் பிரதிபிம்பம் உண்டாகும்பொழுது அது பிம்பத்திற்கு முற்றிலும் மாறானதாக உண்டாகமாட்டாது. இக்குற்றம் நீங்குதற் பொருட்டுப் பூமியில் உள்ள நீரில் தோன்றும் சந்திர சூரியர் நிழலை உவமையாகக் கூறி, `நீரில் தோன்றும் சந்திர சூரியர் பலராய், நீரின் அலைவால் தாமும் அலைவை அடையினும் அவ்வேறுபாடுகள் எல்லாம் வானில் உள்ள சந்திர சூரியர்க்கு இல்லாமைபோல, மாயையில் தோன்றிய பரப்பிரமச் சாயைக்கு மாயையால் உள வாகின்ற வேறுபாடுகள் பரப்பிரமத்திற்கு உளவாதல் இல்லை` எனக் கூறினால், வானில் உள்ள சந்திர சூரியர் இருளுக்குப் பகைவராய் இருளை நீக்குதல் போலவே, நீரில் தோன்றும் சந்திர சூரியரும் இருளுக்குப் பகைவராய் இருளைப் போக்குதல்போல, மாயையில் பிரதிபலிக்கும் சீவேசுரர்களும் மாயைக்கும் அவித்தைக்கும் பகைவராய் அவற்றை அவர் நீக்கிவிடுதல் வேண்டும். அஃது இன்மையால் இவ்வுவமையும் முற்றொருமையை நிறுவமாட்டாது.
கயிற்றைப் `பாம்பு` என மருண்டு, பின், `பாம்பு அன்று, கயிறு` எனத் தெளிவது கயிறன்று; அதற்கு வேறான ஒருவனே, அதனால் இவ்வுபமானத்திலேயே பரப்பிரம்மத்திற்கு வேறாய் ஆன்மா ஒன்று உண்டு என்பது பெறப்படும் என்பதையே மெய்கண்ட தேவர்.
``அத்துவிதம் - என்ற சொல்லானே - ஏகம்
என்னில், - ஏகம் என்று சுட்டுவது உண்மையின்``9
எனக் கூறினார்.
மாயையைச் `சடம்` என ஒப்புக்கொண்டு, `அஃது அரசனது ஆற்றல் போலப் பரப்பிரம்மத்தின் குணமாய், அல்லது கூறாய் உள்ளது` எனத் தொகையொருமை விசிட்டாத்துவிதம்) கூறுவதும் பொருந்த வில்லை ஏனெனில் சித்தின் குணம் அல்லது கூறுசித்தாய் இருத்தல் வேண்டுமன்றி, அதற்கு நேர்மாறான சடமாய் இருத்தல் சாலாது. `அரச சுற்றத்தார் அரசனில் வேறானவர்` என்பது வெளிப்படை.
இறையொருமைக் கொள்கையாளரும் (சிவாத்துவிதிகளும்) விசிட்டம் கூறுபவர்களே. `மரம்` என்பது ஒன்றுதான். ஆயினும் அதில் அடிமரம், கிளை, வளார், இலை முதலிய அக வேறுபாடுகள் இருத்தல் போலப் பரப்பிரம்மம் ஒன்றுதான். ஆயினும் அதில் பசு பாசங்களாகிய அகவேற்றுமைகள் உள்ளன` என்பர் அவர். அங்ஙனமாயின் ஆபாச வாதிகட்கு உளவாகும் குற்றங்கள் ஓரளவில் இவர்க்கும் உளவாகும். எங்ஙனம் எனில்,
ஒவ்வொரு சாதி மதத்திலும் வேறு வேறு சாதியான இலைகள், பூக்கள், காய்கள் தோன்றுவதால், மரத்தின் சாதித்தன்மை அதில் உள்ள இலைகள், பூக்கள், காய்களிலும் இருத்தல் தெளிவு, ஆகவே, பரப்பிரம்மம் மரம்போலவும், பசு பாசங்கள் இலை, பூ, காய் போலவும் இருப்பின், பதியினது சாதித் தன்மையே பசு பாசங்கட்கும் இருத்தல் வேண்டும். அவ்வாறிருப்பின் பாசங்களைத் `துக்கம்` என்றும், `ஒழிக்கத் தக்கன` என்றும் கூறுவன் எல்லாம் பொருளற்றனவாய், பந்தமே முத்தியாய்விடும்.
இங்ஙனமாகவே, உபநிடதம் சத்தினை, ``ஒன்று`` என்றதனோடு ஒழியாமல் `ஒன்றே` எனத் தேற்றேகாரம் புணர்த்துக் கூறியபின் `இரண்டில்லாதது` என்றல் வேண்டா கூறலேயாம். அதனால் `அத்துவிதம்` என்பதற்கு, `இரண்டில்லாதது` எனப்பொருள் கொள்ளாமல், `இரண்டல்லாதது` என்றே பொருள் கொள்ளல் வேண்டும் என்கின்றார் மெய்கண்ட தேவர். `இரண்டல்லாதது` என்றால், தனக்கு வேறான பொருள்கள் இருப்பினும் அவற்றை விட்டுத் தான் தனியே இராது அவற்றோடு ஒன்றாய் எஞ்ஞான்றும் பிரிப்பில்லாமல் இருப்பதாம். இதுவே `அத்துவிதம்` என்பதற்குப் பொருள் என்பதை உமாபதி தேவர், `பிறிவரும் அத்துவிதம்`* என்றும், மெய்கண்ட தேவர் ``அந்நிய நாத்தி``* (வேறாதல் இன்மை) என்றும் கூறினார். இதனால், `அத்து விதம்` என்னும் சொல் பொருள்களின் எண்ணிக்கையை வரையறுப்பதன்று பொருள்களின் இடையே உள்ள தொடர்பைக் குறிப்பதேயாம் என்பது விளங்கும்.
ஆகவே, உபநிடதம் `சத்து ஒன்றே` என எண் வரையறுத்தபின், அதற்கும் ஏனைய பொருள்கட்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கவே, `அத்துவிதம்` என்பதைக் கூறிற்று என்பதே நந்தி மரபின் சித்தாந்தம் அதனால் இந்நாயனாரும் அச்சித்தாந்தத்தையே வலியுறுத்துகின்றார்.
`சத்து, மெய், உள்ளது` என்பன ஒரு பொருட் சொற்களாயின், `சத்து ஒன்றே` என்று ஆகிவிட்டபின்பு வேறு பொருள்கள் இருத்தல் எப்படிக் கூடும் எனின், `சத்து` என்பதை `உள்ளது` என்னும் அளவில் கொள்ளுதல் சித்தாந்தம் அன்று. ஏனெனில், `இல்லது பொருளன்று ஆகையால், `அசத்து` என்பதை `இல்லாதது` என்றால், பொருள்களைச் `சத்து, அசத்து` எனப் பிரித்தலே இயலாது. ஆகவே, `சத்தாவது, என்றும் ஒருபடித்தாய் உள்ளது` என்பதும், அசத்தாவது நிலை மாறுதலை உடையது` என்பதுமே சித்தாந்தம். அசத்திற்கு நீரில் எழுத்தை* உவமையாகக் கூறுவர் மெய்கண்ட தேவர்.
``உண்டுபோல் இன்றாம் பண்பின்
உலகினை அசத்தும் என்பர்``l
என்பது அருணந்தி தேவர் கூறுவது. எனவே, `சத்து` என்பதற்கு `நிலை யுடைய பொருள்` என்பதும், `அசத்து` என்பதற்கு `நிலையில்லாப் பொருள்` என்பதுமே உண்மைப் பொருளாகும். ஆகவே உபநிடதம் `சத்து ஒன்றே` எனக் கூறியது,
`நிலைப்பொருள் ஒன்றே`
எனக் கூறியதன்றி, `பொருளே ஒன்றுதான்` எனக் கூறியதன்று,
``ஒன்று என்றது ஒன்றேகாண் ஒன்றே பதி``l
என்பதும் மெய்கண்ட தேவர் தரும் விளக்கம்.
``ஒன்றவன் றானே`` என்பது இந்நாயனார் இத்திருமுறையுள் முதற்கண் கூறிய திருமொழி.
`ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்``9
எனப் பின்னரும் கூறினார்.
திருவள்ளுவரும்,
``நில்லாத வற்றை நிலையின் என்றுணரும்
புல்லறி வாண்மை கடை``3
என்றாரேயன்றி ``இல்லாத வற்றை உள்ளன என்றுணரும் புல்லறி வாண்மை கடை`` எனக் கூறவில்லை.
முதல் வேதமாகிய இருக்கு வேத பாகமாகிய ஐதரேய உபநிடதத்தில் சொல்லப்பட்டது, ``பிரஜ்ஞானம் பிரஹ்மம்`` என்னும் மகாவாக்கியம். ``அறிவு பிரமம்` என்து இதன் பொருள்.
இரண்டாம் வேதமாகிய எசுர்வேத பாகமாகிய பிருதாரணிய உபநிடதத்தில் சொல்லப்பட்டது, ``அஹம்பிரஹ்மாஸ்மி`` என்னும் மகா வாக்கியம். `நான் பிரம்மமாய் இருக்கின்றேன்`` என்பது இதன் பொருள்.
மூன்றாவது வேதமாகிய சாமவேத பாகமாகிய சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்பட்டதே, `தத்துவஸி` என்னும், மகா வாக்கியம். அது நீயாகின்றாய்` என்பது இதன்பொருள்
இறுதி வேதமாகிய அதர்வண வேத பாகமாகிய மாண்டூக்கிய உபநிடதத்தில் சொல்லப்பட்டது. `அயமாத்மா பிரஹ்மம்`` என்னும் மகாவாக்கியம். `இந்த ஆன்மா பிரம்மம்` என்பது இதன் பொருள். இது ``சோயமஸ்தி`` என்பதாகவும் சொல்லப்படுகின்றது `அது இதுவாய் இருக்கின்றது` என்பது இதன் பொருள்.
இருக்கு வேத மகாவாக்கியம் (பிரஜ்ஞானம் பிரஹ்மம்) உண்மையைக் கூறுவதாய் உள்ளது. மற்றை மூன்று வேதங்களின் மகா வாக்கியங்களே சீவன் சிவனாவதற்குத் துணையாகின்றன. அஹம் பிரஹ் ாஸ்மி` யில் `அஹம், நான்` என்பதும் `தத்துவமசி` யில் `துவம், நீ என்பதும், அயமாத்மா பிரஹ்மத்` தில் `அயம் ஆத்மா இந்த ஆன்மா` என்பதும் ஒரு பொருளையே தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களில் வைத்துக் கூறுகின்றன அவ்வாறே, `தத் அது` என்பதும் மற்றைய வாக்கியங்களில் கூறிய `பிரம்மம்` என்னும் அந்தப் பொருளையே குறிக்கின்றது. அங்ஙனமே `அஸி ஆகின்றாய்`, அஸ்மி ஆகின்றேன்,` `அஸ்தி இருக்கின்றது` என்பனவும் முன்னிலையும், தன்மையும் படர்க்கையும் ஆகிய இடவேறுபாடன்றி, பொருள் வேறு பாடு உடையன அல்ல. எனவே மூன்று வாக்கியங்களும் ஒரு கருத் -ததையே குறிப்பவை யாகின்றன. `ஆயின் மூன்று எதற்கு` என்றால், சீவனைச் சிவமாக்குதற் பொருட்டு ஆசிரியர் மாணவனது ஆன்மாவை, ``இந்த ஆன்மாப் பிரம்மம் (சிவம்)`` எனத் தம்முள்ளே சிவபாவனை செய்து சிவமாக்கிப் பின்பு மாணவனை நோக்கி, `நீ பிரம்மம்(சிவம்) ஆகின்றாய்` என உபதேசித்து, பின்பு அவனை, `நான் பிரம்மமாய் (சிவமாய்), இருக்கின்றேன் என்று இடையறாது பாவித்து வரச் செய்கின்றார். எனவே, அயமாத்மா பிரம்மம்` என்பது ஞானாசிரியர் ஞானதீக்கையில் செய்யும் பாவனா தீக்கை வாக்கியமும், `தத்துவமசி` என்பது அவர் வாசக தீக்கையில் செய்யும் உபதேச வாக்கியமும், அஹம் பிரம் மாஸ்மி` என்பது உபதேசம் பெற்ற மாணவன் நாள் தோறும் இடை யறாது பாவித்துப் பயிலும் பயிற்சி வாக்கியமும் ஆகின்றன. `பிரஜ் ஞானம் பிரம்மம்` என்பது, `சீவனுக்குச் சிவமாம் தன்மை உண்டு` என்பதை அறிவிக்கின்றது. அத்தன்மை யாவது, சார்ந்ததன் வண்ணமாம் தன்மையேயாம். இது பற்றியே தாயுமானவர்,
``யாதொன்றும் பாவிக்க நான் அது ஆதலால்
உன்னை `நான் என்று பாவிக்கின்
அத்துவித மார்க்கம் உறலாம்``8
என்றார். சீவன் முத்தியில் பாவனையாய் உள்ள இது, பரமுத்தியில் உண்மையாய் இருக்கும்.
மகாவாக்கியங்களின்படி, `சீவன் சிவமாகின்றது` என்றால் `ஒருபொருள் மற்றொரு பொருளாதல் எங்ஙனம்` என்னும் ஐயம் எழு கின்றது. அவ் ஐயத்தை நீக்கவே, `அத்துவிதம்` என உபநிடதம் கூறிற்று என்பதும், `எனவே, பலவகைச் சம்பந்தங்களில் `அத்துவிதம்` என்பது ஒரு வகைச் சம்பந்தம் என்பதுமே சித்தாந்தம். அத்துவித சம்பந்தமாவது, இரண்டு பொருள்கள் என்றும் பிரிப்பின்று ஒன்றாய்க் கலந்து நிற்கும் சம்பந்தம். இது தமிழில் ``இருமையில் ஒருமை`` எனப்படுகின்றது.
இனி, ஒருமையில் இருமையும் உண்டு. அது `தாதான் மிய சம்பந்தம்` எனப்படும். அஃதாவது, பொருள் ஒன்றேயாயினும் இரண்டாகக் கருதப்படும் தன்மை. அது, குணியும் குணமும், (பண்பியும், பண்பும்) அவயவியும் அவயமும், (முதலும், சினையும்) சத்திமானும் சத்தியும் (பொருளும் அதன் ஆற்றலும்) போல்வன வற்றில் உள்ளது. சிவம், சத்தி என்பவைகட்கு இடையே உள்ள சம்பந்தம் இத்தாதான்மிய சம்பந்தமே.
இனி, ``பிரம்மத்திற்கு வேறாக வேறு பொருள் உளதாகக் கூறினால், பிரம்மத்திற்குப் பூரணத்துவம் பெறப்படாது. `பிரம்மம் பூரணம்` என உபநிடதங்கள் கூறுதலால், பிரம்மத்தைத் தவிர வேறு பொருள் எதுவும் இல்லை என்பதுதான் வேத முடிவு`` என்பதும் ஒருமை வாதிகள் கூறும் கூற்று. `பூரணமாவது, வியாபகம் - நிறைவு. அது, கால எல்லை, இட எல்லை. பொருள் எல்லை ஆகிய எல்லை களில் எந்த எல்லையையும் உடைத்தாகாமையேயாம். அவற்றுள் பிரம்மத்திற்கு வேறாய் மற்றும் பொருள் இருப்பின், அப்பொருள் உள்ள இடத்தில் பிரம்மம் இருக்க இயலாது ஆகையால், பிரம்மம் அப்பொருளால் எல்லைப்படுத்தப்பட்டு விடும்; பூரணத்துவம் சிதையும்` என்பதும் அவர் கூறும் வழக்குரை. `கால எல்லை, இட எல்லை` `பொருள் எல்லை` என்பன வடமொழியில், `கால பரிச்சேதம், தேச பரிச்சேதம், வத்து பரிச்சேதம்` எனப்படும்.
அவர் கூறும் வகையில் நோக்கினால், `ஒரு பொருளுக்கு அதனின் வேறாய், மற்றொரு பொருள் இல்லாமை` என்பதுதான், `பூரணம் - வியாபகம்` என்பதன் பொருளாகின்றது. அவ்வாறிருப்பின் `பூரணம்` என்னும் சொல் எழவே காரணம் இல்லை. ஏனெனில் ஏக தேசத்தை நோக்கியே `பூரணம் - வியாபகம்` எனப்படுகின்றது. அவ்வாறு, `ஏகதேசமாய் உள்ள பொருள் இல்லை` என்றால், `பூரணம்` என வருணிக்க வேண்டியது ஏன்?
மேலும் பூரணமாவது, `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் இருத்தல் என்றே கூறப்படுகின்றது. அப்பொழுது `இருப்பது` எனப்படும் பொருளுக்கு வேறாய், `அங்கு, இங்கு, எங்கும்` என்னும் சொற்களால் அறியப்படுகின்ற பொருள்களும் உளவாதல் தானே பெறப்படுகின்றது. ஆகவே, `பூரணம்`, அல்லது `வியாபகம்` என்பது, தன்னை நோக்க ஏகதேசமாய் உள்ள எல்லாப் பொருள்களிலும் தான் பொருந்து நின்று அவற்றின்கண் சில விளைவுகளை உண்டாக்குவதே யாம். அவ்வாறன்றி `ஒரு பொருட்டு அதனின் வேறாய் ஒன்று, அல்லது பல இல்லாமையே வியாபகம்` என்றல் போலியேயாம்.
இவற்றால் மகாவாக்கியங்கள், பிறப்பிற்கு அஞ்சி வீடு பேற்றை விரும்பிச் சைவாசாரியரை அடைந்து முன்னர்ச் சமய தீக்கை பெற்றுச் சரியையில் நின்று, பின்பு விசேட தீக்கை பெற்றுக் கிரியையில் நின்று, பின் யோகத்தை அடைந்து அதில் சமாதி நிலையை உற்ற மாணாக்கன் பின்னும் பேரின்பம் விளையாமையால் ஞானாசாரியை அடைந்து அவர்பால் `அடைக்கலம்` எனப் புகுந்தமையால் அவர் அவனது பக்குவநிலையை நோக்கி, `நீ தியான சமாதிகளால் பாவிக்கும் பாவனைகள் எல்லாம் உனது கருவி கரணங்களின் துணை கொண்டேயாகும். அவற்றுக்குள் கருவி கரணங்களைக் கடந்த சிவம் எங்ஙனம் அகப்படும்?` எனச் சொல்லி நிருவாண தீக்கை அத்துவ சுத்தியால் அவனது சஞ்சித கன்மங்களைப் போக்கி, இனி நீ ஞானச் செய்திகளில் தலைப்பட்டுத் திருவருளைத் துணையாகக் கொண்டு, நின்மல சாக்கிரம் முதலிய மூன்று நிலைகளில் நின்று ஒவ்வொன் றையும் கடந்து நான்கு ஐந்தாம் நிலைகளாகிய துரியம், துரியா தீதங்களை அடைந்தால் உனது சீவத்தன்மை நீங்க, நீ சீவமாவாய்` என உபதேசிப்பார். (ஞானச் செய்திகள் - தச காரியம்). அவ் உப தேசத்தைக் கேட்டு, அதில் உறைந்து நின்று `சிவோகம் பாவனையால் அவன் சிவமேயாவன்` என்பது இம்மந்திரத்தால் கூறப்பட்டதாம். ஆகவே தெளிவுரையில் கூறியபடி மகாவாக்கியங்களில் `இது, நீ, நான்` என்னும் சொற்குப்பொருள் யோக சமாதியில் நிற்கும் மாணவ னாகிய சீவான்மாவும், `பிரம்மம், அது` என்னும் சொற்கட்குப் பொருள் சொரூப சுவமாகிய பரமான்மாவும், `ஆதல்` என்பதற்குப் பொருள். சீவன் நின்மலாவத்தையில் பாசத்தினின்றும் நீங்கிச் சிவத்தைத் தலைப்பட்டமையால் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையால் சிவமாகியே நிற்றலும் ஆகின்றன.
எனினும் முற்றொருமையாளர், ``மாயையின் முக்கூற்றினுள் சாத்துவிகக் கூற்றில் முற்றறிவு. முடிவில் ஆற்றல், முதலிய குணங்கள் உள்ளன. நிர்க்குணப்பிரம்மம் அந்த சாத்துவிகக் கூற்றில் பிரதிபலித்து அதில் உள்ள அந்தக் குணங்களை உடைய `ஈசுரன்` ஆகின்றது. மகா வாக்கியங்களில் `பிரம்மம், அது` என்னும் சொற்களுக்கு அந்த ஈசுரனே நேர்ப் பொருள். ஈசுரனாவான் மாயை, அதில் உண்டாகும் பிரதிபலனம். பிரதிபலனத்துக்கு மூலமாகிய பிரம்மம் ஆகிய மூன்றின் சேர்க்கையே``
``அவ்வாறே மாயையின் இராசதக் கூற்றில் பிரதிபலித்த பரப் பிரம்மத்தின் பிரதிபலனம் `சீவன்` ஆகி அதில் உள்ள சிற்றறிவு, சிறு தொழில் ஆற்றல் முதலிய குணங்களை உடையதாகின்றது. மகா வாக்கியங்களில் உள்ள `இது, நீ, நான்` என்பவற்றிற்கு அந்தச் சீவனே நேர்ப் பொருள். ஈசுரனைப் போலவே சீவனும் அவித்தை, அதில் உண்டாகும் பிரதிபலனம் அதற்கு மூலமாகிய பிரம்மம் இம்மூன்றினது சேர்க்கையே. ஆகவே, `ஆகின்றது, ஆகின்றாய், ஆகின்றேன்` என இரண்டையும் ஒன்றாகிக் கூறும் சொற்கள் சீவன், ஈசுரன் என்னும் இவர்கட்குப் பொருந்து மாறில்லை. ஏனெனில் மேற்காட்டிய இருவகைச் சேர்க்கைகளும் முற்றிலும் மாறானவை. ஆகையால் அவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகாது. எனினும் தூயதாய், ஒன்றாய் உள்ள பிரம்மத்தை அசுத்தமாய், இரண்டாய்த் தோன்றும்படி செய்தவை மாயையும் அவித்தையும் ஆகிய உபாதிகளேயாகையால் உபாதிகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால், இருவரும் நிர்க்குணப் பிரம்மங்களே.
ஆகவே, சீவனைக் குறிப்பனவாகவும், ஈசுரனைக் குறிப்பன வாகவும் சொல்லப்பட்ட மகாவாக்கிய பதங்களை மேற்கூறிய இலக்கணைகளில் பாகத்தியாக இலக்கணை` (விட்டும் விடாத இலக்கணை) முறையால் `சோயம் தேவதத்தன்` என்பதிற்போல, ஈசுரன், சீவன் இருவரிடத்தும் உள்ள உபாதிகளை மட்டும் நீக்கி, அறிவை மட்டும் கொண்டால், அறிவாவது பிரம்மம் ஒன்றே ஆகையால் `இது அது ஆகின்றது, நீ அது ஆகின்றாய், நான் அது ஆகின்றேன்` என்னும் மகாவாக்கியங்கள் உண்மையாகும்`` என்பர். ஆகுபெயரும் இலக்கணையாதல் முன்பு கூறப்பட்டது.
இனித் தொகை யொருமையாளர், ``மகாவாக்கியங்களில் பிரம்மத்தை உணர்த்தும் சொற்களை இலக்கணையாகக் கொள்ளல் வேண்டா; ஏனெனில், `நிர்க்குணப் பிரம்மம்` என்ற ஒன்று இல்லை பிரம்மம் சகுணமே. ஆயினும் சீவன், சிவன்` எனப்படுதல் அது தன்னை பிரம்மத்தின் விசேடணம்` (அடை என்று அறியாது பிரம்மத்தின் வேறாக எண்ணுதலினாலேயாம் அவ் எண்ணம் உள்ள வரையில் அது பிரம்மம் ஆமாறு இல்லை. மகாவாக்கியங்களில் சீவான்மாவைக் குறிக்கும் பெயர்கள் அறியாமையால் சீவனாய் நிற்கும் ஆன்மாவையே குறித்தலால் அறியாமையை மட்டும் இலக்கணை முறையால் நீக்கிச் சீவனை மட்டும் கொண்டால் சீவன் பிரம்மமே ஆகும். ஆகையால், அவ்வாறு கொண்டால், `அஸி` முதலிய ஆக்கப் பதங்கள் பொருந்துவன வாகும் என்பர். இது பற்றியே மாதவச் சிவஞான யோகிகள்,
``பண்டை மறைகளும் - அது நான் ஆனேன் - என்று
பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைக் காணே``9
என்னும் சிவஞான சித்தி உரையில்,
``சுத்தாத்துவித உண்மை
உணராதார், ஒரு பொருள் மற்றொரு பொருளாதல்
யாண்டுமின்மையின், ஒருவார்த்தை (மகா
வாக்கியம்) பொருள்படுமாறு யாங்ஙன
மென் றாசங்கித்தார்க்கு, - ஒன்று கெட்டு
ஒன்றாம் - எனப் பரிணாமங் கூறுவாரும்,
அது, நான் - என்னும் இருபெயரும்
விட்டும் விடாத ஆகுபெயர் எனக்
கொண்டு கேவலாத்துவிதங் கூறுவாரும்,
அவற்றுல் ஒன்றனை மாத்திரம்
ஆகுபெயர் எனக் கொண்டு விசிட்டாத்
துவிதங் கூறுவாருமாய் இடர்ப்படுவர்``
என உரைத்தார். சைவ சித்தாந்தம் முப்பொருட் கொள்கையதாய், பதிக்கும், பசுவிற்கும் என்றும் பிரிவின்மையாகிய சுத்தாத்து விதம் கூறுவது ஆதலின், அதற்கு இத்தகைய இடர்ப்பாடு இன்றி, மகாவாக்கியங்கட்கு எளிதில் நேரே பொருள் கொள்ள இயல்கின்றது அப்பொருளைச் சிவஞான சித்தியார் கீழ்க்காணுமாறு மிகத் தெளிவாக விளக்குகின்றது.
``கண்டஇவை நான் அல்லேன் என்றகன்று, காணாக்
கழிபரமும் நான்அல்லேன் எனக்கருதிக் கசிந்த
தொண்டினோடும் உளத்து அவன்றான் நின்ற கலப்பாலே
`சோகம்` எனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி;
விண்டகலும் மலங்கள் எலாம் கருடதியா னத்தால்
விடம்அகலும் அதுபோல்; விமலதையும் அடையும்;
பண்டை மறைகளும் - அது நான் ஆனேன் - என்று
பாவிக்கச் சொல்லுவதுஇப் பாவத்தைக் காணே``
இதில் உளத்து அவன்றான் நின்ற கலப்பாலே - சோகம் எனப் பாவிக்க`` என்றது, `சிவன் உயிரினிடத்து அத்துவிதமாய்க் கலந்து நிற்றலால் சிவோகம்பாவனை வெறும் பாவனை யாகாது, உண்மையைத் தலைப்படுதலே யாகின்றது` என்பதை உணர்த்தியவாறு.
சைவசித்தாந்தத்தின்படி, சீவன் சிவமாதலாவது, சார்ந்ததன் வண்ணமாம். இயல்புடைய படிக மணி நீல மணியைச் சார்ந்து நீல மணியாய் இருந்த நிலையினின்றும் நீங்க, மாணிக்க மணியைச் சார்ந்து மாணிக்க மணியாவது போல, சார்ந்ததன் வண்ணமாம், இயல்புடைய ஆன்மாப் பாசத்தோடு சேர்ந்து பாசமாய், அதனால், `பசு` எனப்பட்டிருந்த நிலையினின்று நீங்கி, சிவத்தை அடைந்து சிவமாகி நிற்றலேயாம் ஒரு பொருள் மற்றொரு பொருள் ஆதல் அன்று.
சைவ சித்தாந்தச் சுத்தாத்துவத்தின்படி எந்நிலையிலும் சீவன், கலப்பினால் சிவமாகியே யிருத்தலால், மகாவாக்கியங்கட்கு இடர்ப் பாட்டின்றி நேரே பொருள் கொள்ள இயல்கின்றது. எனவே, `தத்துவ மசி` என்னும் உபதேச வாக்கியத்தில் ஆசிரியர் மாணாக்கனுக்கு அவன் அறியாதிருக்கின்ற உண்மையை அறிவிப்பதும், `அஹம்பிரம் மாஸ்மி` என்னும் பயிற்சி வாக்கியம் ஆசிரியர் அறிவுறுத்தியபடியே மாணாக்கன் அவ்வுண்மையை அறிவதும் ஆகின்றன. அவ்வளவே யன்றிப் பொருளில் வேறுபாடில்லை.
இதனால், மகாவாக்கியங்களின் பரபக்கப் பொருள்களை மறுத்துச் சுபக்கமாகிய சித்தாந்தப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே.

பொழிப்புரை :

(சகலாவத்தையில் தொம்பதப்பொருளாய் நின்ற தத்துவ வன்ன ரூபியான ஆன்மாச்) சுத்தாவத்தையில் தத்துவம் அனைத் தினின்றும் நீங்கித் தூயதாய்த் தொம்பதப் பொருளாய் நிற்கும். தத்பதப் பொருளாகிய, எல்லாப் பொருட்கும் முடிவாய் உள்ள சொரூப சிவம் எப் பொழுதுமே பரதுரியத்தில் உள்ளது. அதனை அத்துரியத்தில் அடைந்த ஆன்மா அவ்வாறு குருவருளால் அசுத்தத்தின் நீங்கிச் சுத்தத்தை எய்தி, சிவமாய் நிற்கும் பேற்றினையளிக்கின்ற, `தொம் தத்தசி` என்னும் பதத்தின் பொருளே `தத்துவமசி` மகாவாக்கியத்தின் பொருளாகும்.

குறிப்புரை :

`சகலாவத்தையில் தத்துவ வன்னரூபியாயும், சுத்தா வத்தையில் தூயதாயும் நிற்கும் ஆன்மாச் சிவத்தின் வேறானதே யாதலால், அது சிவமாவது, `சோயம் தேவதத்தன்` என்பதிற் போல, உபாதியுடன் நின்ற சிவம் அவ்வுபாதியின் நீங்கி அதுவாதல் அன்று; நீல மணியைச் சார்ந்து நீல மணியாய் நின்ற படிகமணி, மாணிக்க மணியைச் சார்ந்து மாணிக்க மணியாய் நின்றது போல்வதேயாம்` என்றபடி.
`தத்துமசி` என்பது, `சோயம் தேவதத்தன்` என்பதுபோல என்பவர், உபாதியுட்படுவதும் அதனின்றும் நீங்குவதும் ஆகிய அதனையே `பிரம்மம்` என்கின்றமையால், `அவர் பசுவையே பதியாகக் கருதுகின்றனர்` என்பது பெறப்படும் ஆகவே, அவரது பிரம்ம ஞானம் பசு ஞானமேயாகின்றது, இதனைச் சிவஞான சித்தியார்,
``நணுகி ஆன்மா இவை கீழ் நாடலாலே,
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசு ஞானம்``9
எனக் கூறிற்று.
பதங்களின் பொருள்களைப் பதங்களாகவே உபசரித்துக் கூறினார். `சுத்தத்து` என்னும் அத்துச்சாரியை தொகுத்தலாயிற்று. ``தற்பதம்`` என்றதும் அதன் பொருளையே தற்பதம் பேறாகிய` என இயையும் பேறாதலாவது, பெறப்படும் பொருளாதல், ``ஆகிய`` என்னும் பெயரெச்சம், `அரசன் ஆகொடுத்த பார்ப்பான்` என்பது போல, ``சீவன்`` என்னும் கோடற் பொருட்பெயர் கொண்டது. `பிர சாதத்து நீங்கி` என மாறுக பிரசாதம், குருப் பிரசாதம் `பிரசாதத்தால்` என உருபு விரிக்க. நீங்குதல், பாசத்தினின்று. வீறு - மேன்மை. ``ஆன`` என்னும் பெயரெச்சம் ``தொந்தத்தசி`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது.
இதனால், `தத்துவமசி` மகாவாக்கியம் பாருள் படுமாறெல்லாம் இனிது விளக்கப்பட்டன.
[இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``ஆகிய அச்சோயம் தேவதத்தன்`` என்னும் மந்திரம், மேல்`` ``முச்சூனிய தொந்தத்தசி`` அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 3

துவம்தத்தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன
தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச்
சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.

பொழிப்புரை :

`துவம் தத் அஸி` என்பதே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. அவை இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, பொருள்கோள் முறையில் ஒன்றாய் இயைகின்ற இயை பினால் ஒன்றேயாகின்றன. இனி, வேதாந்தத்தில் பெரிதும் பயின்று வருகின்ற `தத்துவமசி` என்னும் மகாவாக்கியம் வேதாந்தம் சீவன் சிவமாதலையே குறிப்பது. ஆகிவே, அதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் சொல்லலாம், `இல்லை, வேதாந்த மகாவாக்கியந் தான்` என்றும் சொல்லலாம்.

குறிப்புரை :

`எப்படிச் சொல்லினும் பொருள் ஒன்றே` என்து கருத்து முதல் அடி அனுவாதம். மன்னா - மன்னி, அந்நுவயம் - பொருள் கோள் முறை. தவ உறுதல் - பயின்று வருதல் ``அதுவும்`` என்னும் உம்மை சிறப்பு. சித்தாந்த வேதாந்தம் உம்மைத்தொகை. சித்தாந்த மகாவாக்கியம், `சிவத்துவமசி` என்பது, திருவைந்தெழுத்தேயும் இப்பொருளைப் பயக்கும்.
இதனால், `மகாவாக்கியங்களில் சொல்வேற்றுமை பற்றி மலைதல் வேண்டா; அவையெல்லாம் பொருளால் ஒன்றே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்என்பர் ஆகார்இ தன்றென்னார்
உரிய பரம்பர மாம் ஒன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

பொழிப்புரை :

துரியத்தைக் கீழ்ப்படுத்தி நிற்கும். துரியாதீத நிலை, சுட்டுணர்வினால், உணரவும், சொல்லாற் சொல்லவும் வாராமையால் அந்நிலையை எய்தாதவர்க்கு அது வெறும் பாழ்போல்வதாகும். அதனால் அவர் அதில் விளங்கும் பொருளை, ஒருவராலும் அடைய இயலாத ஒரு தனிப் பொருள் என்று கூறுவர். அதனை வேறு சிலர், `அஃது இன்னது ஆம் - என்றும், இன்னது அன்று` என்றும் அநிர்வச னீயமாகக் கூறுவர் ஆயினும், `அந்தத் துரியாதீத நிலை அனுபவிக்கத் தக்க, மிக மேலான, ஒன்றேயான ஒப்பற்ற ஒரு பெரும் பொருள் விளங்குகின்ற நிலை` என்பதை அறிபவர் யார்!

குறிப்புரை :

அந்நிலையையடைந்து, அப்பொருளைத் தலைப்பட் டுணரும் ஒரு சிலரே அறிவார் என்பது கருத்து. பாழ்போல்வதாதலை, ``பாழ்`` என்றார். `ஆகார் அரிய பரம் என்பர்` என மாற்றிக் கூட்டுக. `அவர் கூறுவது உண்மையாயின் அப்பொருளால் யாருக்கு, என்ன பயன்! ஒன்றுமில்லையாகையால் அவர் கூற்றுப் பிழையானது என்பது `அங்கு விளங்கும் பொருள் அனுபவப்படுவதே` என்பதும் கருத்துக்கள். ``என்னார்`` என்பதை முன்னும் கூட்டி, `இது என்னார்; அன்று என்னார்` என்க. பரம் பரம் - மேலானதற்கும் மேலானது, உதித்தல் - விளங்குதல்.
இதனால், ``வேதாந்த மகாவாக்கியங்களின் அனுபவம், `அறிவான், அறிவு, அறியப்படும் பொருள்` என்பன இல்லாது, வெறும் அறிவு மாத்திரையானதே`` என்றல் பொருந்தாது. பெறுவான், பெறப்படும் பொருள் என்பன உள்ளதாய்ப் பேரின்பமாவதே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொம்பம் தத்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்தும்மேல் நாட ஏ
யும்பத மும்பத மாகும் `உயுர்பரம்
செம்பொறா ளான சிவம்`என லாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய, சீவ துரியம், சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்று துரியத்திலுமே தொம்பதப் பொருளாகிய ஆன்மா, தத்பதப் பொருளாகிய சிவத்தை, அசிபதத்தின் வழியாக, மேல் நோக்கு உணர்வினால் உணருமாயின், பரதுரியத்திற்போலவே ஏனை, இரு துரியங்களிலும் அது சிவமாகியே நிற்கும் (சீவனாகி நில்லாது` என்பதாம்.)

குறிப்புரை :

அங்ஙனம் நோக்கி நிற்றலே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படும். இதனையே,
``... ... ... ... எல்லாம் ஈச
னிடத்திலும், ஈசன்எல்லா இடத்தினிலும் நின்ற
அந்நிலைமை அறிந்(து) அந்தக் கரணங்கள் அடக்கி
அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து,
மன்னுசிவன் றனையடைந்து நின்(று) அவன்ற னாலே
மருவு பசு கரணங்கள் சிவகரண மாகத்
துன்னியசாக் கிரமதனில் துரிய தீதம்
தோன்றமுயல்; சிவானுபவம் சுவானுபூ திகமாம்``
எனவும்,
``சாக்கிரந்தே அதீதத்தைப் புரிந்தவர்கள், உலகில்
சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள்; இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுஎன்! இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தைஅடை பராவுசிவர் அன்றோ!
``ஆக்கும்முடி கவித்(து) அரசாண்(டு) அவர்கள் அரிவையரோ(டு)
அனுபவித்தங்கு இருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்``8
எனவும், சிவஞான சித்தி கூறிற்று.
``மும்மை தரும்வினைகள் மூளாவாம்; மூதுலகில்
அம்மையும் இம்மையே ஆம்``9
என்றதும் இந்நிலை நின்றாரை நோக்கியேயாம்
தொம்பதம் நாட` என இயையும் `தத்பத்தை அதிபதத்தால்` என உருபுகள் விரிக்க. `ஏயும் பதமும் பதமாகும்`` என்றது, `எந்நிலையில் நின்றாலும் அது பரதுரியநிலையேயாம்` என்றபடி, `பரமும், செம்பொருளும் ஆன சிவன்` என்க.
இதனால், `மகாவாக்கியங்களில் ஊன்றி நிற்கின் எந்நிலை யிலும் சிவ நிலை கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வைத்த துரிய மதில்சொரூ பானந்தத்(து)
உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயந்து விட்டிடும் மெய்யுணர்
வைத்த படியே அடைந்துநின் றானே.

பொழிப்புரை :

`தத்துவமசி` என்னும் உபதேசத்தையேயன்றிப் பிரணவ உபதேசத்தை ஒருவன் தனது நிலையான உள்ளத்தில் அழுத்தி வைப்பினும் அதனால் விளையும் மெய்யுணர்வினால் அவன் தன்னை ஆசிரியர் ஆக்கி வைத்த சிவநிலையை இழக்காது அடைந்து நிற்பவனாவான்.

குறிப்புரை :

`பிரணவம் மகாவாக்கியப் பயனைத் தரும்` என்றபடி. அது, மேல், ``வில்லின் விசை நாணில்``9என்னும் மந்திரத்தில் கூறப்பட்டது. பிரணவ கலைகளாகிய `அ, உ, ம்` என்பன முறையே தத், த்வம், அசி பதங்களாய் நிற்கும் என்க. பிரணவம் இவ்வாறு நின்று உயிரைச் சிவமாகச் செய்தலால், ``எல்லாப் பிராணிகளையும் பரமான்மாவினிடம் வணங்கச் செய்வது பிரணவம்``8 என, `பிரணவம்` என்னும் சொற்கு உறுப்புப் பொருள் கூறுவர்.
துரியம், முத்துரியம். `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதி பன்மை யொருமை மயக்கமாய் வந்தது. சொரூபானந்தம் - சிவானந்தம். உய்த்த பிரணவம் - முத்துரியத்திலும் முன்பு பலரைச் சொரூபானந்தத்தில் செலுத்திய பிரணவம். ``இதயம்`` என்றது ஆன்ம உணர்வை. `தெளிந்த உணர்வு` என்றற்கு, ``மெய்த்த இதயம்`` என்றார். விட்டிடல், மேல் ஏழாது அழுத்தி வைத்தல். ``விட்டிடும்`` என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டாய், ``மெய்யுணர்வு`` என்னும் காரியப் பெயர் கொண்டது. வைத்தலுக்கு எழுவாய் வருவிக்க. தெளிவு பற்றி எதிர்காலம் ``நின்றான்`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன்னையதிகாரத்தில் சொல்லப்பட்ட பிரணவத் -தின் இயல்பு இவ்வதிகாரத்தால் இகந்துபடாமைக் காக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நனவாதி ஐந்தையும் நாதாதி வைத்துப்
பினமாம் மலத்தினைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவாச கங்கெட்ட மன்னனை நாடே.

பொழிப்புரை :

`அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்` என்னும் பிரணவ கலைகள் ஐந்தையும் முறையே யோகாவத்தையில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகளாகிய `பிரணாயமம், பிரத்தியாகாரம், தாரணை: தியானம், சமாதி` என்னும் ஐந்திலும் பொருந்த வைத்துப் பயின்றால், உன்னின் வேறாகாது உடனாய் ஒன்றி நின்ற ஆணவ மல சத்தி உன்னின் வோறாய்ப் பிரியும். அங்ஙனம் அது பிரியுமிடத்து நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்திலும் மேற்சொல்லியவாறே அகாரம் முதலிய கலைகளை வைத்துப் பாவிக்க, ஆணவ சத்தி உன்னை மறைக்க மாட்டாது. கீழ்ப் பட்டு அடங்கும். அஃது அடங்கவே, ஆன்ம சுத்தி உண்டாகி, அதன் பின் ஆன்ம லாபமும் கிடைக்கும். இவ்வாறு சத்தாதி ஐம்புலன் களையும் உணரும் ஐம்பொறிகளையும், அவற்றின் வழி ஓடுகின்ற மனத்தையும், அதற்குமேல் வாக்கையும் கடந்த தலைவனாகிய சிவனை நீ உணர்வாயாக.

குறிப்புரை :

``நாதாதி`` என்றது, எதிர் நிரல் நிறையாகக் கூறியது. ``வைத்து`` என்பதன்பின், `பாவிக்க` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `பின்னமாம்`` என்பது இடைக்குறைந்து நின்றது. பின்ன மாதல், வேறாதல். `பின்னமாம் மலத்தை` என்ற அனுவாதத்தால் பின்னமாதல் பெறப்பட்டது. ``பின்`` என்றது முற்படாது அடங்கு -தலை. `பின்னாக வைத்து` என்க. `பின் சுத்தத்து ஆம்` என்றதனால், பின் சுத்தநிலை வாய்த்தல் பெறப்பட்டது. `சிவகதி தனது ஆம்` என மாறுக. சத்தாதி` ஆகுபெயர். சாந்தி - அடங்குதல். ``கெட்ட`` என்றது, `கடந்த` என்றபடி. `சாந்தியை உடைய, கெட்ட மன்னன்` என்க.
இதனால், பிரணவம் மேற்கூறியவாறு சொரூபானந்தத்தில் உய்க்குமாறு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பூரணி யாவது புறம்பொன் றிலாமையால்
பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால்
ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் ``மன்னன்`` என ஆண்பாலாகச் சொல்லப்பட்ட சிவம்) தனக்குப் புறம்பாகயாதொரு பொருளும் இல்லாதபடி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றல் பற்றி, `பூரணத்துவம் உடையது` என்று சொல்ல படுகின்றது. (அஃதன்றி, `அது தவிர வேறு பொருள் இல்லை` என்னும் கருத்தில் `அது பூரணத்துவம் உடையது` என்று சொல்லப்படவில்லை.)
``அகிலாண்ட கோடி யெல்லாம்
தன் அருள் வெளிக்குளே தங்கும்படிக்கு இச்சை வைத்து``
என்னும் தாயுமானவர் பாடல் இங்கு நோக்கத் தக்கது.
வாக்கைக் கடந்து நிற்றலால் அஃது எந்த ஒரு பெயராலும் திட்டமாகச் சொல்ல ஒண்ணாதது. குணங்குறி ஒன்றும் இன்மையால் உயிர்களால் அனுமித்து உணரப்படாதது. ஆயினும் பிற காரணங்களால் காட்டப்படாது, தன்னாலே தான் காட்டப் படுவதாம்.

குறிப்புரை :

``ஊரிலான் குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேரிலான், ஒரு முன்னிலான், பின்னிலான், பிறிதோர்
சாரிலான், வரல், போக்கிலான், மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்``9
என்னும் கந்த புராணச் செய்யுளையும்,
``ஒன்றும் குறியே குறிஆத லால், அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால் - ஒனறோடு
உவமிக்க லாவதுவும் தானில்லை``8
``காண்பாரார் கண்ணுதலாய், காட்டாக் காலே``3
என்னும் சாத்திர தோத்திரங்களையும் காண்க. ஓர் - ஓர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். தன்னாலே தான் காட்டப்படுதலாவது, ஞாயிற்றைக் காணலுறுவார்க்கு அது பிறிதோர் ஒளியால் காட்டப்படாது, அது தனது ஒளியாலே தான் காட்டப்படுதல்போல, அதனது அருளாலே அது காட்டப்படுதலாம். பூரணி - பூரணத்துவம் உடையது. உபநிடதம் முதற் பொருளைப் `பூர்ணம், பூர்ணம்` எனப் பலமுறை கூறும்.
இதனால், `சீவன் சிவனாவது அவனது அருளாலே யன்றித் தன்னாலன்று` என்பது கூறப்பட்டது. இது பற்றியே `அஸி` பதப் பொருள் திருவருள் ஆகின்றது.
``அவன் இவன் ஆனது அவன் அருளா லல்லது
இவன் அவன் ஆகான் என் றுந்தீபற;
என்றும் இவனே என் றுந்தீபற``l
என்பதனால், சீவன் சிவன் ஆம் முறைமையைத் தேர்ந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 9

`நீஅது ஆனாய்` எனநின்ற பேரூரை
ஆய்`அது ஆனேன்` என்னச் சமைந்(து) அறச்
சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரரு
ளாய்அது வாய்அனந் தானந்தி யாமே.

பொழிப்புரை :

`நீ அது ஆகிறாய்` என்னும் பொருளதாய் ஆசிரியர் மாணவனுக்கு உபதேசிக்கின்ற `தொம்தத்தசி` (தத்துவமசி) என்னும் அந்த மகாவாக்கியமே, மாணாக்கன் பயில்கையில், `நான் அது ஆனேன்` என்னும் பொருளதாகிய `அஹம்பிஹ்மாஸ்மி` என்னும் மகாவாக்கிய -மாய் நின்று, சிவனை அதன் பாசங்கள் முற்றும் அற்றொழியப் பண்ணி, வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவமாகச் செய்யும். அங்ஙனம் பயில்கின்ற சீவன் முதலில் சிவனது அருளே தானாய்ப் பின்பு சிவனேயாய், அவனது முடிவில்லாத ஆனந்தத்தை அனுபவிப்பதாகும்.

குறிப்புரை :

பேருரை - மகாவாக்கியம். ஆய் அது - ஆசிரியரது உபதேசப் பொருளை வேதாகமங்களின் வழியால் சிந்தித்துத் தெளியப்படுகின்ற சிவம். ``அனந்தானந்தி`` என்பது வடமொழித் தீர்க்க சந்தி முத்தியில் ஆன்மாச் சிவத்தோடு சேர்ந்து சிவமாய் விடுமேயல்லது, அதன்பின் அது சிவனது ஆனந்தத்தை அனுபவிக்கும் பொருளாய் இராது`` எனச் சுத்த சைவர் கூறுவர், அதனை மறுத்ததற்கு `ஆனந்தமாம்` என்னாது, ஆனந்தியாமே`` என்றார்.
இதனால், `மகாவாக்கியங்கள் `படர்க்கை, முன்னிலை, தன்மை` என்னும் இட வேறுபாட்டால் வேறு வேறு போலத் தோன்றுகின்றனவே யன்றிப் பொருளால் வேறல்ல` என்பது உணர்த்தி, அதனால், உப தேசத்தால் பெற்ற வாக்கியப் பொருளைப் பயிற்சியில் வைத்துப் பயிலும் சீவன் சிவன் ஆம் முறைமையும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

உயிர்பரம் ஆக உயர்பர சீவன்
அரிய பரம்ஆக அச்சிவம் வேதத்
திரயிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓம்மயம் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறிய முறையால் சீவன் சிவமான பொழுது, அது `சீவான்மா` எனப்படாது, பரமான்மா` என்றே சொல்லப்படும். (இவ்வாறு சருவஞ்ஞானோத் தரத்தில் சொல்லப் பட்டது. என்பதைச் சிவஞான போத ஆறாம் சூத்திர மாபாடியத்தில் காண்க.) அங்ஙனம் சொல்லப்படுமாறு சீவன் சிவமேயாய் விட்ட பொழுது, அவ்வாறான அந்த ஆக்கச் சிவம், மூனறு வேதங்களிலும் பராபரம்` எனப் புகழ்தற்கு உரியது. சொல் இறந்ததும், பிரணவமே வடிவானதும் ஆன அந்தச் சிவமேயன்றி, வேறன்றாம்.

குறிப்புரை :

பர சீவன் - பரமான்மா. `பர சீவனாய்` என ஆக்கம் வருவிக்க. `அரிய சிவம் ஆக ஆம்` என இயைத்து முடிக்க. `ஆக` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டு. ஆக்கச்சிவத்தைக் குறிக்க, `அச்சிவம்` எனச் சுட்டினார். பின்னர்க் கூறியன எல்லாம் இயற்கைச் சிவத்தைக் குறித்து, `திரயத்திலும்` இடைக்குறைந்து நின்றது. திரயம் - மூன்று `இறுதி, வேதமாகிய அதர்வணம் ஏனை மூன்று வேதங் களுள் அடங்கும்` என்னும் கருத்தால், ``வேதம் த்ரயீ`` எனக் கூறும் வழக்கு உண்டு ஆதலின், ``வேதத்திரயத்தில்`` என்றார். ``என்ன`` என்பது, ``உரிய`` என்பதனோடு முடிந்தது. ``உரிய, உரையற்ற`` என்பன ``ஓம் மயம்`` என்பதனோடு முடிந்தன, ``மயம்`` என்றது, மயமான பொருளை. `சிவம் ஓங்காரமே` என்றல் வேத வழக்கு. ``ஓம்மயம் ஆமே`` எனறது உடம்போடு புணர்ந்தது. ஆகவே `ஓம்மயம் ஆனதும் ஆகும்` என முன்னர்க் கூறியவற்றோடு கூட்டி யுரைத்தல் கருத்தாயிற்று. `ஓம்மயமே ஆம்` எனப் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி உரைக்க. இவ்வாறு வலியுறுத்திக் கூறியது, `முத்தியில் சீவான்மாவிற்கும், பரமான் -மாவிற்கும் இடையே தூலமூம், சூக்குமமும் ஆகிய வேறு பாடன்றிப் பிறிது வேற்றுமை யில்லை` என்பது உணர்த்துதற்கு, `சிவம், சூக்குமம்` என்பது உணர்த்துதற்கு அது, `பரம்` எனப் பட்டது. இம்மந்திரம் இரு விகற்ப எதுகையதாய் நின்றது.
இதனால், மகாவாக்கியங்களில் அனுபவ வாக்கியத்தால் உளதாகும் பயனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்``
தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள்
சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.

பொழிப்புரை :

மேல் வாயின்கண் உள்ள, நாசிக்குச் செல்லும் வழியிடம், (என்பது நாக்கின் அடிக்கு மேல் உள்ள இடம். இஃது `அண்ணம்` எனப்படும்.) புருவ நடு, நடு நெற்றி, உச்சித் தலை என்னும் நான்கும் சுழுமுனை வழியாகச் செல்லும் பிராணன் செல்லும் வழிகளில் சிறப்பானவையாகும். அவற்றிலும் புருவ நடுவும், உச்சியும் சிறப்பிற் சிறப்பானவை. சுழுமுனை நாடிக்கும் முலதாய் உள்ள மூலா தாரத்தில் உறங்கிக் கிடக்கின்ற, நால்வகை வாக்கிற்கும் முதலாகிய குண்டலி சத்தி எழுந்தோங்கிப் பிராணனுடன் மேற்சொல்லிய இரண் -டிடங்களை அடைந்து, அவற்றிற்கு அப்பால் உள்ள பொருளைக் காணும் ஒளியாக அமையுமாயின் அப்பொழுது, `கலை, காலம், நியதி, வித்தை, அராகம்` என்னும் ஐந்து தத்துவங்களும் சிவகதியை அடை வதற்குத் துணையாகிவிடும்.

குறிப்புரை :

என்றது, `பசு கரணங்கள் பதி கரணங்களாகப் புருடன் சிவமாவான்` என்றடி. `நாசி இரண்டனுள் முன்னது நாசிக்குச் செல்லும் வழியையும், பின்னது நாசியின் அடிப்பாகத்தையும் உணர்த்தின. பிராசாத யோகத்தில், அகார உகார மகார விந்து நாத கலைகள் முறையே, `மூலாதாரம் முதல் இருதயம் வரையிலும், அப்பால் கண்டம் வரையிலும், அப்பால் அடி அண்ணம் வரையிலும், அப்பால் புருவ நடு வரையிலும், அப்பால் எவ்விடத்திலும் பரவி நிற்கும்` எனப் பிராசாத நூல்கள் கூறும். ஆகவே, `அகார உகார மகார கலைகளைக் கடந்த விந்து நாதங்களும் ஒருவனுக்கு இனிது விளங்குமாயின், அவன் துவாதசாந்தத்தில் விளங்கும் சிவனைத் தரிசித்துச் சிவம் ஆவான்` என்றற்கு இவ்வாறு கூறினார்.
தாய்நாடி - நடு நாடி; சுழுமுனை, `அதன் ஆதி` எனவும் `வாக்குகளின் ஆதி` எனவும் கொண்டு பொருள் உரைக்க. சேய் நாடு ஒளி - தொலைவில் காணத் தக்க ஒளி. தொலைவு, துவாதசாந்தம். `ஆக` என்பது கடைக் குறைந்து நின்று, ``சிவகதி`` என்பதன் பின் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடு முடிந்தது. `ஒளியென` என்பதே பாடமாயினும் `ஒளி என்று ஆக` என்பதே பொருளாம். ``கலாதிகள்`` என்பதை ஈற் றடியில் கூட்டி, `கலாதிகள் ஐந்தும் சிவகதி ஆம்` என இயைத்து முடிக்க.
இதனால், `முன் மந்திரத்தில் கூறியவாறு சீவன் சிவன் ஆவதற்குப் பிராசாத யோகம் உறுதுணை யாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அறிவறி யாமை இரண்டும் அகற்றிச்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாத பிரான்` என்று பேணார்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

பொழிப்புரை :

கருவி கரணங்களால் வரும் அறிவைக் கொண்டு புறப் பொருள்களை அறிந்து வருகின்ற சிற்றறிவையும், கருவிகள் முடங்கியவழி ஆணவ மலத்தால் உண்டாகின்ற அறியாமையும் ஆகிய இரண்டையும், எங்கும் நிறைந்துள்ள சிவனது பேரறிவால் நீங்கும்படி நீக்கி, அந்த அறிவினாலே சிவனை, `அவனே உயிர்களில் என்றும் நீக்க மின்றி நிறைந்திருக்கின்ற முதல்வன்` என உணர்ந்து அவனையே பற்றி நிற்கும் முறையை அறியாதவர்கள் (தாம் மெய்ப்பொருளை அறிந்து பற்றிவிட்டதாகக் கருதிக்கொள்ளினும்) அது மாட்டாதவரே ஆவர்.

குறிப்புரை :

மேற்சொல்லப்பட்ட சீவ துரியம் பிராசாத யோகம், சிவ துரியம் ஆகியனவே மெய்ப்பொருளை அடையும் நெறியாகலானும், அவை சைவ சித்தாந்தத்தில் மட்டும் சொல்லப்படுதலாலும் ஏனைச் சமயத்தார் அவற்றை அறிந்து அவற்றின் வழி மெய்ப்பொருளை அடையமாட்டார்` என்றபடி. சிவஞான சித்தியும் இவ்வாறு,
``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்(து) ஆனந்தம் பொழிந்து, வரும் பிறப்பை அறுத்து, முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும், உலகரெல்லாம் மூர்க்கராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி``
-சுபக்கம் - சூ. 8. 16.
என இரங்கிக் கூறுமாறு காண்க.
``செறி அறிவாய் எங்கும் நின்ற சிவன்`` என்றது உடம்பொடு புணர்த்தது ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப் பட்டது. குறி - குறிக்கோள்; என்றது கொள்ளத்தக்க பொருளை. `கொள்ள` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `கொள்ளவும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. ஏகாரம், தேற்றம்.
இதனால், பிற சமயத்தார்தம் நிலைநோக்கி இரங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே.

பொழிப்புரை :

பொருள்களைத் தாமாக அறிபவர் யாவரும் அறியும் பொருள்கள் காட்சிப் பொருள்களே. அவையேயன்றிக் கருத்துப் பொருள்களும் உள ஆதலால், அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிகின்றிலம்.

குறிப்புரை :

`மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனையின்றி உண்டாகாது` என்றபடி. ``அறிவார்`` என்றது, தாமாகவே அறிபவ -ராகத் தம்மைக் கொள்பவரை, அவரது மதம் பற்றிக் கூறியது. இவர் `ஆசிரியன் வேண்டா` என இகழ்பவர். இரண்டாம் அடியில் `அப் பூவும்` என்பது, `அப்பும் எனத் திரிபெய்திநின்றது. அன்றேல், கூறியது கூறிற்றாம். ``வானிற் கலப்பு வைத்தோன்``3 என்றாற் போலும் திரு மொழிகளை அவர் கொள்ளமை பற்றி, எங்கும் சென்று கலப்பதாகிய காற்றையே இங்குக் ``கலப்பு`` என்றார். எனவே, `காணாதான் - கண்டானாம் தான் கண்டவாறு``9 என்னும் பொதுமறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளார் உடன்படுவனவாகிய நான்கு பூதங்களையே இங்குச் செய்யுட்கு ஏற்பச் சொற்சுருங்கி வர, ஏற்ற பெற்றியால் கூறினார் என்க. ``காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` என்பவரை, `உலகாயதர்` என்றும், `சாருவாகர்` என்றும் `பூத வாதிகள்` என்றும் கூறுவர். ``அறிவான்`` இரண்டில் முன்னது, `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் பயந்தன. தொடர் வேறாகலின் பின்னதில் பன்மை யொருமை மயக்கம் இன்மை அறிக. இனிப் பின்னரும், `அறிவார்` என்றே பாடம் ஓதலும் ஆம். ``அறிவான்`` என்பதை ஆன் உருபு ஏற்ற பெயராக உரைத்தல் பொருந்தாமையறிக.
இனிக் காட்சிப் பொருள்களையும் முதற்கண் முதியோர் அறிவிக்கவே அறிதல் அனுபவம் ஆதலின், `மெய்ப் பொருளை யாமே அறிவோம்` என்றல் பொருந்தாமை உணரப்படும். `சித்தாந்த நெறி ஆசிரியன் அருளை வேண்டு நிற்பதே` என்பதை நாயனார், மேலெல்லாம் பலவிடத்தும்* கூறினார், மேலும் கூறுவார்.
``எமக்கென் எவனுக்கு எவைதெரியும், அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்``
``ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும், நற்கல்அனல்
பானு ஒழியப் படின்``9
என்றாற்போலச் சாத்திரங்களும் குருவருளை வலியுறுத்தி ஓதுதல் காண்க.
இதனால், மேற்கூறிய ஞான நெறி, ஆசிரியன் அருளையின்றி அமையாது` என்பது, `அது வேண்டா` என்பாரை நோக்கி வலியுறுத்தப்பட்டது.
(இதன்பின், ``அதீதத்துள் ளாகி அமர்ந்தவன் நந்தி`` என்னும் மந்திரம் மேல், `பரலட்சணம் என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 14

 அடிதொழ முன்னின் றமரர்கள் அத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த எல்லாம்
கடிதெழக் காண்என்னும் கண்ணுத லானே.

பொழிப்புரை :

சிவபெருமானைத் தேவர்கள் அவன் திருமுன் நின்று அவனது திருவடிகளைத் தலை வணங்கிப் பணிய, அவனும் அவர்கட்கு முன்னின்று அவர்கள் வேண்டுவனவற்றை அளித் தருளுவன். இனி, உலகமெல்லாம் `ஞானி` என்று வணங்கும்படி நிற்கின்ற உனக்கு அவன், நீ முன்பு யோக பாவனையில் பாவனை யாகப் பாவித்தவைகளையெல்லாம் இப்பொழுது விரைவில் உண்மை -யாய் விளங்கக் கண்டு இன்புறுவாயாக` என்று அருள்புரிவான்.

குறிப்புரை :

`போகம், மோட்சம்` என்பவற்றில் வேண்டுவார் வேண்டுவதைத் தருபவன் சிவன், அவன்பால் நீ மோட்சத்தையே வேண்டுவாயாக என மாணாக்கனுக்கு அறிவுறுத்தவாறு. `அத்தனை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. `முடிதொழ` என்றது, முன்பு ``அடிதொழ`` எனப் பொதுவாகக் கூறியதைச் சிறப்பாக விளக்கிக் கூறியவாறு. ``ஈசன் கண்ணுதலான்`` என்பன சுட்டுப் பெயரளவாய் நின்றன. `படிதொழப் பாவித்த` என இயையும். `கடி தொழ` என்து பாடமன்று.
இதனால், `சிவன் மோட்சம் தருபவனல்லன்` எனவும் `மோட்சமே தருவான்; போகம் தாரான்` எனவும் கூறிப் பிணங்கு வோரையெல்லாம் மறுத்து `அனைத்தும் தருவான்` என்பதும், `ஆயினும் உயர்ந்தோர் அவன்பால் மோட்சத்தையே வேண்டி மேற் கூறிய நெறியில் நிற்பார்`` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.

பொழிப்புரை :

வேதங்களில், `பொன்னிறம் விளங்க நிற்பவன்` (இரணிய கருப்பன்) எனப் புகழப்படுகின்ற சிவன், இயல்பாகவே மலம் இல்லாத தூயோன் ஆதலின் பிறப்பில்லாதவனாய் அருளே திருமேனியாகக் கொண்டு, `இவன் என்னுடைய அடியவன்` என்று கருணைகூர்ந்து, என் உள்ளம் மகிழும்படி என் எதிர்வந்து இவனும் என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக` எனக் கருதுதல் செய்து, அவ்வாறே நீங்குதற்கரிய எனது மலத்தை நீக்கவல்லவனாயினான்.

குறிப்புரை :

`இதற்கு யான் அவனுக்கு அடிமை பூண்டிருந்ததே காரணம்` என்பது இசையெச்சமும், `எனவே, பிறரும் அவனுக்கு அடிமை பூண்பாராயின், அவன் அவ்வாறு வந்து அருள்புரிவன்` என்பது குறிப்பெச்சமும் ஆம். நின்மலன் ஆகுக எனக் கருதினான்` என்றது, ``அயமத்மா பிரஹ்மம்``, அல்லது ``சோய மஸ்தி`` என்னும் மகாவாக்கியத்தைப் பயன்படுத்தியதைக் குறித்ததாம். ஆகவே, ``வந்து`` என்றது குருவாகி எதிர் வந்தததைக் குறித்தாயிற்று. அதனால், ``என் உளம்`` என்பதன் பின் `மகிழ` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றதாம். மூன்றாம் அடியை முதலிற் கூட்டுக. அன்றி, `அஃதே பாடம்`` என்றலுமாம். மேனி, மேனியனைக் குறித்த ஆகுபெயர். நின்மல மேனியன் ஆதற்குக் காரணம் பிறப்பின்மையும், பிறப்பின்மைக்குக் காரணம் மலம் இன்மையுமாம். ``மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோரர் வடிவமாகும்``8 என்பது சிவஞான சித்தி. `பொன்வளர் மேனி என` என்று, `என` என்து வருவிக்க. `ஆக` என்னும் வியங்கோளின் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``வல்லான`` என்பது இறந்த கால வினைக் குறிப்புப் பெயர்.
இதனால், மகாவாக்கியம் பற்றித் தமது அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

துறந்துபுக் குள்ளொளி சோதியைக் கண்டு
பறந்தஎன் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாஎன்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

பொழிப்புரை :

நான் இவ்வுலகில் `யான், எனது` என எனக்கு இருந்த பற்றை எனது புண்ணிய வசத்தால் துறந்து, வித்தியா குரு, கிரியா குரு இவர்களால் என் உள்ளே ஒளிந்து நிற்கும் ஒளியாகிய சிவனை ஓராற்றால் கண்டு, முன்பு அலையாய் அலைந்து கொண்டிருந்த எனது மனம் ஒருங்கி அவனிடத்தே அடங்கிக் கிடக்க, அதனால் அவனை மறவாதவனாகிய என்னை அவனும், இறத்தலும், பின்பு பிறத்தலும் ஆகிய இவைகளை அடையாதபடி செய்து, பின்னும் இவ்வுலகிலே இருக்க வைத்தான்.

குறிப்புரை :

`அதற்குக் காரணம் எனது பிராரத்தம்` என்பது குறிப் பெச்சம். இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். கிடந்து - கிடந்தாமையால், இறத்தல், தூல உடம்பு நீங்குதல், வீடு பெறுவார்க்குத் தூல உடம்போடே சூக்கும அதி சூக்கும உடம்புகளும் உடன் நீங்கும். அஃதன்றியும் தூல உடம்பும் வருத்தமின்றி நீங்குதலன்றி, நோயால் வருந்தி நீங்குவதன்றாம். `அந்நிலையே தமக்கு வாய்க்கும்படி செய்தருளினான்` என்பதையே `இறவாமல்` எனவும், சூக்கும அதிசூக்கும உடம்பு நீங்காதோர் மீண்டும் பிறிதொரு தூல உடம்பை எடுப்பர் ஆதலின், `அந்நிலை தமக்கு எய்தாதபடி செய்தருளினான்` என்பதையே ``பிறவாமல்`` எனவும் கூறினார். ``பிறவாமல்` என்பதன் பின், `செய்து` என ஒரு சொல் வருவிக்க. இஃது அறியாதார் உடம்பு நீங்குவனவற்றையெல்லாம் `இறப்பு` என ஒன்றாகவே கருதுவர். `சாவா வரம்` என்பதும் தூல உடம்பு மட்டும் தனித்து நீங்காத நிலையைப் பெறுதலேயாம். `ஞானிகள் பிராரத்தம் காரணமாக இவ்வுலகில் நின்றாராயினும் அவர்களது வாழ்வு உலகிற்கு உபகாரமாய் அமையும் என்பது தோன்ற ``ஈங்கு வைத்தான்`` என்றார்.
இதனால், மகாவாக்கிய அனுபூதிமான்கள் சீவன் முத்தராய் உலகிற்கு நலம் புரிபவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து)
ஐவாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே.

பொழிப்புரை :

`மெய், வாய், கண், மூக்கு, செவி` எனப் படுகின்ற ஐந்து புற அறிவுக் கருவிகளும், `மனம், புத்தி, சித்தம், அகங்காரம்` எனப்படுகின்ற நான்கு அக அறிவுக் கருவிகளும், பிறவும் கூடிய உடம்புகளும், அறிவின்றி விரிந்து பரந்துள்ள பல உலகங்களும், அவற்றைச் சார்ந்து எவ்விடத்தும் அறிவையும் இன்பத்துன்ப நுகர்ச்சிகளையும் பெற்று வருகினற அளவற்ற உயிர்களும் ஆகிய அனைத்தும் சிவன் ஆட்டவே ஆடுகின்றன. இதனை, ``ஆட்டு வித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே``* என்னும் திருமுறையும், ``அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது`` என்னும் முதுமொழியும் விளக்கி நிற்கின்றன. அதனால் சிவனது கை, வாய் முதலிய உறுப்புகளுள் யாதொன்றும் இல்லாத பெருநிறைவு எங்கும் உள்ளதாகிய அத்துவித உண்மை அருளாளரால் நன்குணரப்பட்டது.

குறிப்புரை :

சத்தினை உபநிடதம் `அத்துவிதம்` எனக் கூறியது, `அஃது அனைத்துப் பொருளிலும் உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன்போலப் பொருள் தன்மையால் வேறாயும், உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும் இயைந்து நிற்கும் இயைபினைக் குறித்தது` என்பதை சித்தாந்தம் ஆகலின், `அவ்வுண்மையை உணர்ந்தோரே மகாவாக்கியப் பொருளை அனுபவமாக உணர்வர்` என்றற்கு இங்ஙனம் வகுத்தோதி முடிக்கப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறும் அறிக. மெய்த் தோற்றம் - புறத்துக் காணப்படுதல். `ஐ வாயவும், அந்தக் கரணமும்` என அவற்றிலும் உம்மை விரிக்க. ``நிறை`` என்பதற்கு, `அவனது நிறை` என வருவித்துரைக்க. `எங்கு ஆம் மெய்` என்க. கண்டது - காணப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

பொழிப்புரை :

விரையத் தோன்றி மறைகின்ற சாயா புருடனைப் போலவும், சிறிது நின்று கெடுகின்ற நீர்க்குமிழி போலவும், சிறிது நீட்டித்துக்கெடுகின்ற, தீயிடைப்பட்ட கருப்பூரத்தைப்போலவும், அசுத்தத்தைப்பொழிகின்ற தூலவுடம்பும் ஒரு காலத்தில் சிவத்தில் ஒடுங்குவதேயாம்.

குறிப்புரை :

தத்துவ முறைப்படி தத்துவங்களில் தோன்றும் உடம்புகள் தோன்றிய தத்துவங்களிலே மீள ஒடுங்கத் தத்துவங்கள் மாயையில் ஒடுங்கும் ஆகலின், அவை மாயைக்கு வியாபகமான சிவத்தில் ஒடுங்குவதேயாம்` என்றபடி.
``இவ்வுடம்பு`` எனத் தூல உடம்பையே சுட்டினாராயினும், உபலக்கணத்தால் சூக்கும அதிசூக்கும உடம்புகளும் கொள்ளப்படும்.
சாயா புருடன், நின்மலமாகிய வானத்தை உற்று நோக்குங்கால் அதன்கண் உள்ள ஒளி மண்டலத்தின் ஒரு கூறு மனிதனைப் போலத் தோன்றும் வடிவம். இது மிக விரைவில் மறைதலால் விரையக் கெடும் உடம்பிற்கு உவமையாயிற்று.
சாயா - சாயை; நிழல். ஒளி மண்டலத்தின் ஒரு கூறே புருடன் வடிவற்றாய்த் தோனஅறுதலின், அஃது இல்லதன்று; உள்ளதே. அஃது ஒடுங்குதல் ஒளிமண்டலத்திலேயாம். காணின் - காணுதலைப் போல. `இன்` உவம உருபு. நீர்க்குமிழி நீரில் தோன்றி நீரில் ஒடுங்குதல் வெளிப் -படை. கருப்பூரம் - பச்சைக்கருப்பூரம். அது கூட்டுப் பொருளாகலின், அதன் கூறுகள் ஆற்றலாய் மாறி அவ்வப் பொருள் ஆற்றலில் ஒடுங்கும்.
இங்ஙனமாகவே, `உடம்புகளை இறைவன் ஓடுக்குதல் இல்லை` எனல் வேண்டா என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உம்மைகள் விரிக்க.
இதனால், உடம்புகள் ஒடுங்குமாறு உவம அளவையால் நிறுவப்பட்டது. `தோற்றம், ஒடுக்கம்` என்பவற்றில் இங்கு வேண்டுவது ஒடுக்கமேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின்
படரும் சிவசத்தி தானே பரமாம்
உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

பொழிப்புரை :

உடம்பும், உயிரும் நீக்கமற ஒன்றியிருக்கும் பொழுது, உலகத்தை நோக்கிச் செல்லும் சிவ சக்தியே உயிருக்குத் தலைமையாய் நின்று நடத்தும். உடலை அறவே விட்டொழித்தவழி, உயிர் சிவனைப் போலப் போலவே எங்கும் இருப்பதாய், முடிவும், முதலுமாகிய எல்லைகளில் எதுவும் இன்றி வியாபகமாய்ச் சிவனது வியாபகத்தில் அடங்கிவிடும்.

குறிப்புரை :

ஆகவே, `சிவன் உயிரை உண்கின்றான்` என்றல் பொருந்துமாறு அறிக என்பதாம். திருவாசகத்தில் `உயிருண்ணிப் பத்து` என ஒரு பகுதியிருப்பதும், ``யானாகிய என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``9 என்றதும் இங்கு நினைவு கூரத்தக்கன. `விட்டவழி` என்பது, ``விட்டு`` எனத் திரிந்து நின்றது.
`பெத்த காலத்தில் திரோதான சத்தி வழிப்பட்டு ஏதேசியாய்ப் போக்கு வரவு புரிகின்ற உயிர் முத்தி காலத்தில் ஏகதேசத் தன்மை நீங்கி வியாபகமாய்ச் சிவத்தில் அடங்கும்` என்பது இம்மந்திரத்தின் கருத்து. ``உடல்`` என்ற பொதுமையால் மூவகை உடம்பும் கொள்க.
இதனால், `உயிர் ஒடுங்குதல் இல்லை எனல் வேண்டா` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.

பொழிப்புரை :

செவி முதலிய ஐந்து ஞானேந்திரியங்கள், மனம் முதலிய நான்கு அந்தக் கரணங்கள், பிரகிருதி ஆகப் பத்தினையும் பற்றி நின்று செலுத்துகின்ற உயிர்கள் அவற்றைப் பலதலைப் பட்டு விரிந்து செல்லவிடாது சிவம் ஒன்றையே நோக்கிக் குவிந்து செல்லுமாறு செலுத்துதல் வேண்டும். அங்ஙனம் செலுத்தாமையால் அவை பல வழியாக விரிந்து செல்லத் தாமும் அவ்வாறே முதற்கண் உலகில் விரிந்து செல்கின்றன. ஆயினும் அவை முன் சொல்லிய வற்றுள் குவிந்த பொழுது, சராசரங்களாகிய அனைத்து உடம்புகளும் உயிர்களும் சிவத்தில் ஒடுங்கிச் சிறிதும் நீங்காதனவாய் இருக்கும்.

குறிப்புரை :

அவி இன்றிய - அடங்குதல் இல்லாத. ``ஐந்தும்`` என்ற குறிப்பால் பிரகிருதி தழுவப்பட்டது. `முன்பு விரிந்து, பின்பு குவிந்த வழி` என்க. `சாராசதரந்தாமே தவிர்வொன்றிலாதவாம்` என்க. சரம் - இயங்கு திணை. அசரம் - நிலைத்திணை. `தாம், ஏ` அசைகள்.
இதனால் உலகத்தின் விருவும், ஒடுக்கமும் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும்
உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும்
வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

பொழிப்புரை :

சிவன் வியாபகன்; மாற்றம் இல்லாதவன் எவ்விடத்திலும், எப்பொருளிலும் நிறைந்து அதனால், தனது ஆற்றலால் சுத்தமும், அசுத்தமும் ஆய இரு மாயா காரியங்களிலும் தனது ஆற்றலால் தங்கி அவற்றைத் தன்னுள் ஒடுக்கவும் செய்வான். பின்பு விரிக்கவும் செய்வான். நான் மேல்நிலை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந் திருத்தற்குக் காரணம் இந்த உண்மையை இவ்வாறு உணர்ந்ததே.

குறிப்புரை :

`அதனால் நீவிரும், இதனை, இவ்வாறே உணர்மின்; மேல்நிலையை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந்திருப்பீர்` என்பது குறிப்பெச்சம்.
``எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும்`` என்றது, `வியாபகன்` என்றபடி. பின்னர் வந்த ``எங்கும்`` என்பது, `எப்பொருளிலும்` என்றதாம். உரன் - ஆற்றல். `உரனால்` என உருபு விரிக்க. வரன் வரம்; மேன்மை. `யான் வரனில் வாழ்ந்துற்றவாறு இங்ஙன் கண்டு` என முடிக்க. `உமிழும்` என்பது இடைக்கண் வேண்டாவழிக் குகரச் சாரியையும்` சந்தியும் பெற்று, `உமிழ்க்கும்` என வந்தது.
இதனால், `மெய்யுணர்வோர், உலகத்தை இறைவன் ஒடுக்கியும், தோற்றுவித்தும் நிற்கின்றான் என உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அளந்த துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக்
கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.

பொழிப்புரை :

உயிரினது அறிவின் நிலைமையை அளந்து, அஃது நின்மல துரியத்தை அடைந்தவாற்றினைத் தெரிந்து, அதன்கண் உயிரினது அறிவினை வாங்கித் தன் அறிவினுள் அடக்கிக் கொண்ட நின்மல சிவம். அந்நிலையில் உயிரினது உடம்பும், உலகமும் இருப் பினும் அவையில்லாதது போலத் தனது அருளினுள் அடக்குமாற்றால், உயிரினது, `யான், எனது` என்னும் பற்றை அறுத்துத் துரியத்திற்கு மேற் பட்ட பரசிவமாய்ப் பொருந்தக் கிடைத்தால், ஆன்மா அந்தப் பரசிவ -மாகிய பராகாயத்தில் அடங்கிவிடும் பேற்றினையும் பெற்றுவிடும்.

குறிப்புரை :

``உளம்`` என்று அறிவினை. ``அஃது`` என்றதும் அதன்மேல் உள்ள பற்றினையே. வெளியன் ஆதற்கு வருவிக்கப் பட்டது. உம்மை சிறப்பும்மை.
இதனால், சிவன், உணர்வொடுக்கம் செய்யுமாற்றால் உயிர் ஒடுக்கம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.

பொழிப்புரை :

உலையிற்பட்ட இரும்பு தன்மேல் வீழ்ந்த நீரை மீள வெளிப்படாதபடி தன்னுள் ஒடுக்கிக் கொள்வது போல, மேலானதற்கும் மேலான பொருளாகிய சிவன், யான் அஞ்ஞானத்தை விட்டு மெய்ஞ்ஞானத்தைப் பெற்றமையால் முப்பாழிலும் முறையானே எனது சீவ போதத்தைத் தான் விழுங்கித் தான் மட்டுமே எனக்கு மேலேயிருந்தான்; என் அறிவினுள்ளும் இருந்தான்.

குறிப்புரை :

ஈற்றில் நின்ற ``பரம்`` வாளா பெயராய் நின்றது. அது பகுதிப்பொருள் விகுதி. உரம் - மெய்ஞ்ஞானம். பெற்றது மெய்ஞ் ஞானமாகவே, விட்டது அஞ்ஞானமாயிற்று. முப்பாழ், மேலே கூறப் பட்டன. அப்பாழ்தோறும் உயிரினது அறிவு வேறுபடுதலை யறிக. ஒளி - அறிவு. ``விழுங்கி யிருந்தனன்`` என்றதனால் அவன் மட்டுமே தனித்திருந்தமை பெறப்பட்டது. ``அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல்`` 9 சீவன் சிவத்துள் சென்று அடங்கச் சிவமே ஒளி வீசி நின்றது என்றபடி. பின்னர், ``இதயத்துளான்`` என்றதனால், முன்னர் `மேலே உளான்` என்றதாயிற்று.
``இரும்பிடை நீர் என`` என்றமையால் இது நிறைவொடுக் கமாகிய முடிநிலை முத்தியைக் கூறியதாயிற்று. ``மற்றீண்டு வாரா நெறி``. பேரா இயற்கை* மீண்டு வாரா வழிஅருள் புரிபவன்``* என்றாற் போலும் திருமொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 7

கரிஉண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.

பொழிப்புரை :

`சீவ அவத்தை, சிவ அவத்தை, பர அவத்தை` என மேற்கூறிய மூன்று அவத்தைகளிலும் அரியனவாம் துரிய நிலையில் சிவபெருமான் அனைத்துலகங்களையும், அவற்றில் வாழும் உயிர் -களையும் அவற்றது முன்னை இழிநிலை மாறி, உயர்நிலையாகும்படி விழுங்கிவிடுவான்.

குறிப்புரை :

`யானை` என்பது விளம்பழத்திற்கு உண்டாகின்ற ஒரு நோய். அஃது அப்பழத்தின் ஓடு இருந்தபடியே இருக்க, உள்ளே உள்ளதை மட்டும் அழித்துவிடும். அதனால், வெளிப்பார்வைக்கு மட்டும் நன்றாய் இருப்பதுபோலக் காணப்பட்டு, உட்பகுதியில் ஒன்றும் இல்லையாய் விடுகின்ற பொருள்கட்கு, `வேழம் உண்ட விளங்கனிபோல` என்னும் உவமை கூறப்படுகின்றது. அஃது இங்குத் தம் தன்மை திரிந்த மாயா காரியங்கட்கும், அவற்றைப் பற்றி நிற்கும் உயிர்கட்கும் உவமையாகக் கூறப்பட்டது. உயிர் - சீவன். `சீவன், சிவம், பரம்` என்பன அவ்வவ் அவத்தைகளைக் குறித்து நின்றன. செய்யுள் நோக்கி, இறுதிக்கண் நிற்றற்பாலதாய பரம் இடைக்கண் வைக்கப் பட்டது. முன் ஓதும் - மேலே சொல்லப்பட்ட. `உயிரும், சிவமும், பரமும் ஆன துரியத்து` என்க. ``அகிலம்`` என்றது மாயா காரியங்களையும், எல்லாம்`` என்றது உயிர்களையும், அங்ஙனம் கொள்ளாக்கால், ``எல்லாம்`` என்றது கூறியது கூறலாம். திரிய - தம் நிலை மாறும்படி. விழுங்குதல், இங்குத் தன் தன்மைய ஆக்குதல். உயிர் பெத்தத்தில் நிற்கும்பொழுது அதற்குச் சார்பாய், உள்ள மாயா காரியங்கள் பசுகரணங்களாயும், முத்தியைப் பெற்ற பொழுது அவை பதி கரணங்களாயும் நிற்கும். இவ்வாறு ஆதலையே ``திரிய`` என்றார்.
``மாயைமா யேயம், மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆய ஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``.l
என்னும் சிவப்பிரகாசச் செய்யுளைக் காண்க. முத்தி, இங்குப் பரமுத்தி தவிர ஏனைய. ``கரியுண் விளவின் கனி`` என்ற உவமையால் இது விளங்கும். முன்னர் ``இரும்புண்ட நீர்`` என வேறு உவமை கூறப்பட்டவாறு அறிக.
இதனால், சிவன் உலகத்தையும், உயிர்களையும் அவற்றின் தன்மைகளைத் திரித்துத் தன்வண்ணம் ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அந்தமும் ஆதியும ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே.

பொழிப்புரை :

சிவபெருமான், அனைத்துப் பொருள்கட்கும் அந்தமும், ஆதியுமாய் உள்ள பெரும் பொருளாய் நின்று, பல உயிர்களும் அடையும் பலவேறு அவத்தைகளில் தடத்த சிவனாய் எல்லாம் அவற்றிற்குத் தலைவனாய்ப் படிமுறையால் அவைகளை உயர்த்தி, முடிவில் சொரூப சிவனாய் அவனது ஞானமே கண்ணாக உணரும் ஞானத்திற்கு ஞேயமாய் இருக்கின்றான். அவனது செயல்களை நாம் அறுதியிட்டு அறியமாட்டோம்.

குறிப்புரை :

``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. `இயற்கையில் அந்தமும், ஆதியும் ஆகும் பராபரனும், உயிர்களின் அவத்தை வேறுபாடுகளில் தத்தமக்குப் பராபரனும், முடிவில் தன்னில் தான் ஆன பரமும் ஆகி நம்மை உண்டு, அந்தத்து ஞானத்திற்கு ஞேயமாய் இருந்தனன். அவற்றை யெல்லாந் நாம் அறியோம்` என இயைத்து முடிக்க உண்ணுதல் மேற்கூறிய வேழம் உண்ட விளங்கனிபோல ஆகும்படி உண்ணுதல். `ஆதலுடன் கூடி` என முன்னும் பின்னும் ஓரோர் சொல் வருவிக்க. ஆதல் - ஆதற்றன்மை.
இதனால், சிவன் உலகை உண்ணும் முறைகளையெல்லாம் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

பொழிப்புரை :

உயிர்கள் அடையத் தகும் முடிவான பயனை கூறுமிடத்து, அது வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் ஒருமித்த பொருளேயாகும். அதுமேலே சொல்லப்பட்டது. அந்தப்பயன், இறைவன், உயிர்கள் பாச பந்தங்களினின்றும் முற்றாக நீங்கத் திருவுளம் பற்றி, தான் அந்தப் பந்தங்களை நீக்கும் செயல்களைக் குறைவின்றிச் செய்தால் தீயில் இட்டு மாசுக்களை நீக்க நீங்கிய பொன்போல உயிர்கள் தன்னைச் சூழ்ந்துள்ள இருளை ஓட்டி ஒளிவிடுகின்ற விளக்குப்போல ஆகி, பந்தங்கள் அனைத்தையும் துரத்தி விளங்கும்.

குறிப்புரை :

அற்றது - முடிந்த பயன். இதன்பின், `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ``கனலிடை`` என்பதை அவ்வடியின் முதலிற் கூட்டி, அவ்வடியை ஈற்றுக்கு அயலிற் கூட்டுக`. ``இறை`` என்பதையும் அவ்வடியின் முதலிற் கூட்டுக. ``அற்று அற`` என்னும் ஒரு பொருட் பன்மொழி, `முற்றாக` எனப்பொருள் தந்தது ``அற`` , என்றதும், `முற்ற` என்றபடி. `திருவுளம் வைத்து` என்க. மாற்று - மாற்றுச் செயல்; பரிகாரம் ``ஆகும்`` என்பதற்கும், `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்க. ஆக்கம், உவமை குறித்து நின்றது.
இதனால், ஒருமொழி மகாவாக்கியங்களே உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுகின்ற புணையாகும்` என்பதும், (அம்மகா வாக்கியங்களில் தலையாயது திருவைந்தெழுத்து` என்பதே சித்தாந்தம். ``அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை`` (திரு வாசகம் - திருச்சதகம் - 27) எனவும், ``இருவினைப்பாசம் மும்மலக் கல் ஆர்த்திட - வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட - அருளும்மெய் அஞ்செழுத்து`` (பெரிய புராணம் - அப்பர் - 129.) எனவும் போந்த திருமொழிகளைக் காண்க). `அதுவும் இறைவனது அருளால் உரிய காலத்தில் பெறத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே
எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை
எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.

பொழிப்புரை :

உயிர்கள் இறைவனைத் தவிர மற்றை எல்லாப் பொருள்களையும் அறிதல் அவற்றிற்குப்பந்தமாகும், அதனைக் குருவருளால் நீங்கிச் சிவனைப்போல முற்றறிவைப் பெற்றபின்னும் இறைவனைத் தவிர வேறுபொருள்களை அறிவதில் பேறு ஒன்றும் இல்லை. (மாறாக, இன்ப இழப்பே உளதாகும், ஏனெனில், பிற எல்லாம் துன்பப் பொருள்களேயாதலின). ஆகவே `சிவன் நான்` என்னும் அந்த ஒற்றுமை உணர்விலே நிலைத்து நிற்பின், உயிர் இறை நிலையினின்றும் பிறழாதிருக்கும்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகள் முறையே பாச நீக்கத்தையும், சிவப்பேற்றையும் குறித்தன. `சிவப்பேறு பெற்றும் பயனில்லை` என்றதனால், அதற்குரிய காரணம், ``எல்லாம்`` என்றதனால் குறிப்பால் பெறப்பட்டது. `இறையே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. `திருவருளைப் பெற்றபின்னும் அது கண்ணாக இறைவனையே உணர்ந்து அவனிடத்து அடங்கி நில்லாது, தற்போதத்தால் பிறவற்றை யுணர்தல் மீட்டும் பந்தமாம்` என்பதனை,
``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்?
அக்கொழு நீ அறிந் துந்தீபற;
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` *
என்னும் திருவுந்தியாரால் அறிக. ``அறிந்து, அறியா வண்ணம்`` திருவருளாலே யறிந்து, தற்போதம் தலை யெடாதபடி நில்.
``எல்லாம் அறியும் அறிவுறினும், ஈங்கிவர் ஒன்(று)
அல்லா தறியார் அற`` *
என்றார் உமாபதிதேவர்.
இதனால், `உபதேச நிலையினின்றும் பிறழாது உறைத்து நின்ற வழியே பயன் உளதாம்; இல்லையேல் அஃது இழக்கப்படும்` என்பது கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``தலைநின்ற தாழ்வரை மீது தவம் செய்து`` என்னும் மந்திரம் அடுத்த தந்திரத்து, `சொரூப உதயம்` என்னும் அதிகாரத்தில் வருவது].

பண் :

பாடல் எண் : 3

தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.

குறிப்புரை :

இங்கு, ``தான்`` என்பன வடமொழி வழக்குப் பற்றிப் பொதுமையில் வாராது, தமிழ்வழக்கே பற்றி மேலெல்லாம் சிறப்பாக எடுத்து வலியுறுத்திப் போந்த சிவபெருமானை உணரச்சிறப்பாகவே வந்தது. `அல்லாக்கால், இம்மந்திரம் நின்று வற்றும்` என்க. `மாமறை வழி ஒழுக வானே மழை பொழியக் கூர்ந்திடும்` என ஒருசொல் வருவித்து இயைத்து முடிக்க. ``பொழி`` என்னும் முதனிலையே, `பொழிய` என வினையெச்சப் பொருள் தந்தது. ``வானே`` என்னும் பிரிநிலை ஏகாரம், ``வானின்றமையா தொழுக்கு``3 என்பதை விளக்கி நின்றது. `ஊனே` என்னும் தேற்றேகாரம், `உருகமாட்டாதது ஊன், அதுவும் உருகுதற்கு ஏதுவாய் நின்ற உள்ளம்` என்னும் பொருளைத்தோற்றுவித்தது. ``உருகிய`` என்னும் பெயரெச்சம், ``உள்ளம்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. அப்பெயர்விடாத ஆகுபெயராய் அதனையுடைய ஆன்மாவைக் குறித்தது. இனால், முன் மந்திரங்களில், ``இறை`` என்றும் ``எல்லாம் அறிந்த அறிவன்`` என்றும் கூறப்பட்ட முதல்வன் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

பொழிப்புரை :

`திருவருளைப் பெற்றவர் அதனைப் பெற்றது எதன்பொருட்டு` என்று அறிய விரும்பினால், அவர் அத்திருவருளால் மலம் நீங்கப்பெற்ற தமது அறிவுகள் அத்திருவருளே கண்ணாக அத்திருவருட்கு முதலாகிய சிவத்தை ஆராய்ந்து அவ்வாராய்ச்சியால் முன்பு நீங்கிப்போன மலத்தின் வாசனை தங்கியுள்ள தங்களது அறிவை அவ்வாசனையும் அற்ற தூய அறிவாய் நிற்கும்படி செய்து, இங்ஙனம் அரிதிலே பெறப்பட்ட பொருளாய் உள்ள இவனது திருவடியையே விடாது பற்றி, அவற்றின்கீழ் அடங்கியிருப்பர்.

குறிப்புரை :

`அவர் திருவருள் பெற்றது இந்நிலையை அடைதற் பொருட்டே; வேறொன்றின் பொருட்டன்று` என்பதாம்
``யாஅம் இரப்பவை,
பொருளும், பொன்னும், போகமும் அல்ல, நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும்
உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே``9
என்னும் சான்றோர் மொழியினை எண்ணுக. இம்மந்திரத்தின் பொருளைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தாலும், அதன் உரையாலும் உணர்க. `எனகொல் என அறிய` என ஒருசொல் வருவிக்க. அமர்தல் - விரும்புதல். சிந்தை, அறிவைக் குறித்த ஆகு பெயர். முன்னர், `சிந்தையின் கண்` என ஏழாவது விரிக்க. `அருமைப் பொருளாய்` என ஆக்கம் விரிக்க. தாம், அசை, ஏகாரம், தேற்றம்.
இதனால், மேல், ``எல்லாம் அறியும் அறிவுதனை விட்டே`` என்னும் மந்திரத்திற் கூறியது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.

பொழிப்புரை :

எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.

குறிப்புரை :

``மெய், பொய்`` என்ற பொதுமைகள், உலகியல் அருளியல் இரண்டிலும் உள்ள வாய்மை பொய்மைகளை உணர்த்திநின்றன. அதனால் உலகியலிலும் பொய்யைப் பற்று கின்றவர்களைச் சிவன் வெறுத்தல் விளங்கிற்று. ``கரவாடும் வன் னெஞ்சர்க்கு அரியானை``, 3 `கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` l ``வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார் - நஞ்சநெஞ்சர்க் கருளும் நள்ளாறரே`` 9(நஞ்ச - நைந்த; உருகிய) என அப்பர் கடிந்தோதியருளிய திருமொழிகளைக் காண்க. கரத்தல் - உள்ளதை `இல்லை` என மறைத்துக் கூறுதல். அது பொய்ம்மையே யாதல் அறிக.
``நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும்கண்டு,
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே``*
என அவர் அருளியல் பற்றிச் சிறப்பாக ஓதியருளினமையும்,
``யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என்
அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே. 8
என ஆளுடைய அடிகளும் அவ்வாறே அருளிச் செய்தமையும் உணரற்பாலன. மெய்கலந்தான் - நேரே விளங்கிக் கலந்தான். ஏனையோர்பால் விளங்காதே கலந்திருப்பான் என்க. இரண்டன் உருபுகள் ``உய்கலந்து`` என்பதில் கலத்தலோடு முடிந்தன.
உய்கலந்து - உய்யக்கலத்தலால். கலப்பவர் மெய்யர். கலத்தல், உணர்வால் ஒன்றுதல். `மெய்யர்க்கே`` என்பதை இதன்பின் கூட்டுக. `மெய் கலந்த` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மெய் - நிலைபேறு.

பண் :

பாடல் எண் : 6

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற்கூறிய அத்தகைமையனாகிய சிவனை, ஆவி உடலைவிட்டு நீங்கும் காலத்தில் நினைத்தல், அதற்கு முன்னெல்லாம் இடைவிடாது நினைந்தவர்கட்கே கூடும்.

குறிப்புரை :

`ஆதலின் அவ்வாறு இப்பொழுதே நினையுங்கள்` என்பது குறிப்பெச்சம். `உயிர்போங் காலத்து நினைத்தல் அரிது` என்பதை,
`` ... ... ... ... ... கடல்நாகைக்
காரோண, நின்
நாமம் பரவி, நமச்சிவா யவ்வெனும்
அஞ்செழுத்தைச்
சாம்அன் றுரைக்கத் தருதிகண்டாய்,
எங்கள் சங்கரனே`` 9
என்பதனாலும், `அவ்வாறு நினைந்தவழியே அவனை யடைதல் கூடும்` என்பதை,
``உன்னை நினைந்தே கழியும் என் ஆவி`` 3 என்பதனாலும் உணர்க. இறக்குங் காலத்தில் வினையின்வழி எந்த நினைவு உயிருக்கு உண்டாகின்றதோ, `அந்த நினைவின்படியே அஃது அடுத்த பிறப்பை அடையும்` என்பதை
``மரிக்கும்போ(து) உன்னும் வடிவமதை ஆவி
பரிக்கும் நினைவு பரித்து``
என்பதனாலும்,
``ஆதலினால் சுற்றத் தவரைநினை யா(து) அமலன்
பாதம் நினைக பரிந்து`` *
என்பதனாலும் அறிக.
மூன்றாம் அடியில், `கைகலந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆவி கலந்திருத்தலும், எழுந்து போதலும் உடலிடத்து` என்பது வெளிப்படை. ``கருத்துறல்`` என்பதை ``எழும்போது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. பின்வந்த, `கைகலத்தல்` என்பது, எப்பொழுதும் இடைவிடாது கலத்தலைக் குறித்தது.
இதனால், உய்திவேண்டுவோர் தப்பாது செயற்பாலது இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில்
ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.

பொழிப்புரை :

ஒருவன் எய்தற்கரிய மானுடப் பிறவி தனக்கு எய்தி யிருப்பதையும், அதன் நிலையாமையையும் உணர்ந்து காலை, மாலை இருபொழுதும் சிவன் வகுத்த உலகியல் அருளியல் இரண்டிலும் வாய்மையையே கடைப்பிடித்து ஒழுகுவானாயின்` அதுவே வருங்காலத்தில் அவன் பயனடைதற்கு ஏற்ற நெறி முறையாகும். சிவபெருமானும் அவ்வழியில்தான் புலப்பட்டு நிற்பான்.

குறிப்புரை :

`ஆகவே, எவ்வகையிலும் பொய்மையைப் பற்றாதொழிக` என்பதாம்.
``பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று`` *
எனவும்,
``பொய்கடிந்(து) அறத்தின் வாவ்வார்;
புனற்சடை முடியார்க்கு அன்பின்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்`` 8
எனவும் அருளிச்செய்தமை காண்க. செய்தல், சொல்லாலும், செயலாலும் நிலைநிறுத்துதல். `சிறிதளவு காலத்தையும் பொய்மையில் செலவழித்தல் கூடாது` என்பது, ``எய்திய காலத்து இருபொழுதும் சிவன் - மெய்செயின்`` எனப்பட்டது.
இதனால், `உய்தி வேண்டுவார்க்குப் பொய்மை கூடாது` என்பது வலியுறுத்தப்பட்டது. ஐம்புல விருப்பமே பொய்க்குக் காரணமாகும்` என்பதைக் குறிக்க அதுவும் உடன் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

பொழிப்புரை :

யாதானும் ஒன்று கிடைப்பது அல்லது கிடையாது ஒழிவது ஆகிய இந்நிலையை திருவருளால் அமைவது. இதனை உத்தம குருவாகிய எங்கள் புகழ்மிக்க நந்திபெருமான் நாங்கள் உய் வடைதற் பொருட்டு எங்கட்கு அருளிச்செய்தார். ஆகவே, ஒன்றைப் பெற வேண்டியோ, அல்லது போக்க வேண்டியோ பொய்யை மேற் கொள்ளத் தேவையில்லை. ஆயினும் யோகியரே இந்நிலைமையைத் தெளிபவர்கள். அந்த யோகம் வாய்க்கவேண்டினால், பொய்ப் பொருளிலே பூசையை உண்டாக்குகின்ற நவத்துவாரங்களையும் அடைத்தலாகிய இமய நியமங்களைக் கைக்கொளல் வேண்டும். கைக்கொண்டால் உண்மையான வாசியோகம் எளிதாக அமையும்.

குறிப்புரை :

ஐம்பொறிகளில் மெய் தவிர ஏனைய நான்கும் ஏழு துளைகளாய் உள்ளன. கன்மேந்திரியங்களில் எருவாய், கருவாய் இரண்டைக் கூட்ட ஒன்பது துவாரங்களாம் `எருவாய்` வழியாக அபானனைத்தடுக்க வேண்டும்` என்பதும் யோக நூல் முறைமை, `உலகத்தார் ஊர்வன பொய்க்குதிரை` என்றற்கு வாசி யோகத்தை ``மெய்யென் புரவி`` என்றார்.
இதனால், `வாய்மையை நன்கு கடைப்பிடித்தற்கு வழி யோகம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.

பொழிப்புரை :

(இவ்வதிகாரத்துள் முன்பே இரு மந்திரங்களில் கூறியபடி) வாய்மையாளரையே விரும்புதலும்` பொய்ம்மையாளரை வெறுத்தலும் உடையவனும், எல்லா உயிர் உள்ளங்களிலும் உள்ளவனும், வேத முதல்வனும் ஆகிய சிவபெருமானைப் பொய்யை யொழித்து, மெய்யாகப் பற்றினவர்க்கே அவன் புகலிடமாவான். (``மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து * செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே`` என அருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும்).

குறிப்புரை :

இரண்டன் உருபுகளை, `ஒழிந்து பற்றினார்க்கே` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், பொய்யாமையானே முன் மந்திரத்திற் சொல்லிய திருவருள் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு)
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

பொழிப்புரை :

உயிர்களின் உள்ளங்களாகிய கோயிலுக்கு உள்ளே சிவபெருமான் தனது நிலையான திருவடிகளை விரும்பி வைத்து விளங்குகின்றான் அக்கோயில் பூட்டப்பட்டுள்ளது. ஆயினும் அப்பூட்டைத் திறத்தற்குரிய திறவுகோல்கள் மக்கள் எல்லாரிடத்திலும் உள்ளது. இருந்து அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி அந்தப் பூட்டைத்திறந்து சிவனைத் தரிசிப்பவர் யாரும் இல்லை. அதற்குக் காரணம், அருவருக்கத் தக்க பொருள்களைப் பொதித்து வைத்து மூடியுள்ள பைகளை அவர்கள் `பொய்` என்கின்ற கயிற்றால் இறுகக் கட்டி, அவற்றைக் காவல் புரிந்து கொண்டிருப்பதாகும். மாணவகனே, நீயும் அவர்களைப்போல இருந்தும் விடாமல் அந்தப்பைக் காவலை உண்மையாகவே விட்டு, உன் கையில் உள்ள அந்தத் திறவுகோலால் அந்தக் கோயிலைத் திறப்பாயாயின், கிடைத்தற்கரிய பேறு உனக்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

``தாள்மேவிய`` எனச்சினைவினை முதல்மேல் நின்றது. கைத் தாழ் - இயல்பாகவே கையில் இருக்கின்ற திறவுகோல். என்றது, பிராணனை. பொய்த்தாழ் - பொய்ம்மையாகிய திறவுகோல். தாழ் இடுதல் - பூட்டுதல், பின்னர், `பை` என வருதலால், இவை பையைக் கட்டுகின்ற கயிற்றையும், கட்டுதலையும் குறித்தன. பையாவது உடம்பு.
``இடும்பைக்(கு) இடும்பை இயல்உடம்பி தென்றே
இடுபொய்யை மெய்யென் றிராதே`` 9
என ஔவையாரும் கூறினார். `பைம்மறியாப் பார்க்கப்படும் 8என்பது நாலடி பின் இரு தாள்கள் `தாழ்` என்பதன்மரூஉ. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், `வாசியோகத்தால் சிவனைத்தரிசித்தல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

பொய்ம்மையைச் சிறிதும் இல்லாது உறுதியாக அப்பாற்போக்கி, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் வாய்மை விளங்க நிற்பாரது நடுவிலே சிவனும் விரும்பி எழுந்தருளி யிருக்கின்றான். ஆகையால், உய்தியின் பொருட்டு, அந்த நிலைமையை உணர்ந்து சிவனைத் துதியுங்கள் அப்பால், மெய்ம்மையின்கண் உள்ளவனாகிய சிவனை அடையும் வழிதானே கிடைப்பதாகும்.

குறிப்புரை :

``திண்ணென`` என்பது தொடங்கி உரைக்க. ஒன்றும் - சிறிதும். புறத்திலும் வாய்மை பொலிதலாவது, கொள்ளும் கோலங்கள் அகத்தில் கொள்ளும் எண்ணங்களுக்கு ஏற்றவையாய் யிருத்தலும், நெஞ்சில் கரவு இன்மையால் முகம் மகிழ்ச்சியாற்பொலிதலும் போல்வன. நடு அங்கே - நடுவாகிய இடத்திலே. அமர்ந்து - விரும்பி. ``அடியார் நடுவுள் இருவீரும் இருப்பதானால்``l என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார்.
இதனால், `அகத்தும், புறத்தும் வாய்மையால் விளையும் தூய்மையே சிவநெறியும் ஆகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

 வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து)
அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே

பொழிப்புரை :

நறுமணம் மிக்க மலர்களினின்றும் காய்த்துப் பழுத்த நல்ல பழம் ஒன்று தோட்டத்தில் உள்ளது. அதனை தோட்டத்தில் விளைவித்தவன் உண்ணாதபடி ஒரு கொடிய பறவை வந்து கொத்தித் தின்கின்றது. அஃது அவ்வாறு செய்யாதபடி வில்லில் அம்பைத் தொடுத்து எய்து பறந்தோடும்படி ஓட்டினால் சிவந்த பொன்போலும் கிடைத்தற்கரிய சிவகதியைச் சென்று அடையலாம்.

குறிப்புரை :

முன் மூன்று அடிகள் ஒட்டணியாய் நின்றன. மலர்கள், ஆறு ஆதாரங்கள். மணம் - தெய்வமணம். பல மலர்கள் பூத்துப் பொலிய, அவற்றின் பயனாக ஒருகாயே காய்த்துப் பழுத்த அரிய பழம் சிவம் `வம்பு மலரிற் பழுத்த பழம்` என மாற்றியுரைக்க தோட்டம் - உடம்பு. தோட்டத்தை உடையவனாய், அதில் பயிர் செய்பவன் யோகி. பறவை - பொய்ம்மை. சிவத்தை மறைத்து விடுவதால், அதனை அப்பழத்தை உண்ணும் பறவையாகக் கூறினார். எய்தற்குரிய `வில், நாண், அம்பு` இவை என்பது மேலே கூறப்பட்டது. 3
இதனால், பொய்மை அகலப்போக்குதற்குப் பிரணவயோகம் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.

பொழிப்புரை :

தன் அடியார்களுடைய ஐம்புல ஆசையாகிய பாசங்களைப் போக்கி, அவர்கள் கலக்கத்தை நீக்கித் தெளிவைத் தருகின்றவன் சிவன் ஆதலின், அவனை அறிவினாலே பற்றுங்கள்; பற்றினால், அவன் சற்றும் தாழாது, உங்களை `உய்யப் போக` எனத் திருவுளம்பற்றி, உங்களுடைய மனங்களை ஒருவழிப்படுத்துவான்.

குறிப்புரை :

துயக்கறுத்தமை தம்மை உள்ளிட்ட பலரது அனுபவம் பற்றிக் கூறினார். அறிவால் தொடர்தல், சரியை, கிரியை யோகங்களில் இயன்றவாற்றால் பற்றுதல். என்னை? தொடர்ந்து நிகழ்வன அவையேயாதலின். `மனம் பல வழியிற் சென்று அலைதலானே அது பொய்ம்மையையும் ஏற்கின்றது; ஆகவே, மனம் ஒருவழிப்படின் பொய்ம்மையும் இல்லாதொழியும்` என்பதாம். `போக` என்னும் வியங்கோளின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. தெளிவுபற்றி எதிர்காலம் `ஒன்று வித்தான்` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், `யோகம் இயலாதவர் சரியை கிரியைகளாலாயினும் பொய்ம்மையைப் போக்கற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

மனமது தானே நினையவல் லாருக்(கு)
இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

பொழிப்புரை :

ஒருங்கிய மனம் தானாகவே சிவனை நினைக்கும் நிலையுடையதாகும். அந்நிலைக்கு மனத்தைக் கொணர வல்லவர் கட்கு, அனைத்துயிர்க்கும் துணையாகின்ற முறையில் அவர்கட்கு அமைந் துள்ள தூல உடம்பும் அவர் ஏவியவற்றையே செய்யும் ஏவலாளியாய்க் கீழ்ப்படிந்து நிற்கும். அக்கீழ்ப்படிதலைக் கொண்டு சிவன்பால் ஏற்புடைய செயல்களைச் செய்தால், இப்பிறப்பிலேயே அவர் செய்யும் செயல்கள் எல்லாம் மிகவும் சிவன் செயலேயாய்விடும்.

குறிப்புரை :

`அவர்கட்குப் பந்தம் ஆகா` என்பதாம். ``நினைய`` என்பதன்பின், `செய்ய` என ஒரு சொல் வருவிக்க. ஏவல் தணிவு - ஏவலிற்படும் பணிவு. தக்கன சரியை கிரியா யோகங்கள். `புவிக்கே போதப் புனிதன் செயல் ஆகும்` என இயைக்க. புவி - நில உலகம். இதனால், `இப்பிறப்பு` என்பது குறிக்கப்பட்டது. ``புவிக்கு`` என்பது உருபு மயக்கம். போத - மிகவும்.
இதனால், முன் மந்திரத்திற் கூறியவாறு மனம் ஒருமிக்கச் செய்தலின் பயன் கூறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாயும் ஆயிற்று.
``மெய்ம்மையாம் உழவைச் செய்து,
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்பராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் அப்பர் திருமொழியை இவ்வதிகாரத்துடன் கூட்டியுணர்க.

பண் :

பாடல் எண் : 1

முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

பொழிப்புரை :

தம்மை நன்குணர்ந்தபின் தலைவனையும் உள்ளவாறு அறிந்தவரே (சிவஞானபோதம் - அவையடக்கம்) உண்மைத் தத்துவஞானிகள். அவர்கள் பிராரத்த வினைதோன்றினால், `இது நாம் முகந்துகொண்டு வந்தது, இதனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்` என்று உணர்ந்து அதன் பயனாகிய இன்பத்தில் விருப்பமும், துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் கடன்கழிப்பார்போலப் பற்றற்றே ஐம்புலன்களை நுகருமாற்றால் அவ்வினையினின்றும் நீங்குவர். (பற்றுச்செய்யா மையால் அவ்வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல். உடலையே தாக்கி ஒழியும்) விருப்பு வெறுப்பு இன்மையால் இன்பத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், துன்பத்தை விரைவில் ஒழிக்கவும் அவர்கள் எண்ணமையால், அவர்கள் ஆகாமிய வினையில் வீழ்தல் இல்லை. அதன் தோற்றத்தை நிகழாதபடி தடுத்து விடுவார்கள்.

குறிப்புரை :

`அதனால், உடம்பு நீங்கியபின் அவர்கள் அடைவது வீடு பேறேயன்றிப் பிறவியன்று` என்பதாம். ``தன்`` என்பதை, `தலைவன்` என்னாவிடில், ``ஞானிகள்`` என்னும் பன்மையோடு இயையாமை அறிக. ஈற்றடியை, ``முன்னை வினைவரின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``வினைக்கு`` என்பது உருபு மயக்கம். அண்ணார் - சேரார்.
இதனால், ஞானிகள் பிறப்பை அறுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறிய அந்த ஞானிகள், அம் மந்திரத்தில் கூறியபடி தாங்கள் வினையினின்று நீங்குதலோ டல்லாமல், தங்களைச் சிவமாகக் கருதி வந்து அடைந்தவர்களது வினைகளையும் சிவனது திருவருள் வியாபகத்தில் நின்று நீங்கியருள்வார்கள்.

குறிப்புரை :

இதனை மெய்கண்டதேவர், ``தம்மையுணர்ந்து தமையுடைய தன் உணர்வார் - எம்மை யுடைமை` (சிவஞான போதம் - அவையடக்கம்) எனவும்,
``சிவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்துவான்`` என்றல் இத்தகைய ஞானிகளைச் சிவன் அவர் தானேயாக ஆவேசித்து வந்து அருள்புரிதலையே என்பதை, அவர்,9
``இவ்வான்மாக்களுக்குத் தமது
முதல்தானே குருவுமாய்
உணர்த்தும் என்றது,
அவன் அன்னியமின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்``l
எனவும் அருளிச் செயதைமையால் உணர்க.
முன் மந்திரத்தில் ``வரின்`` என்றதனால், ``முன்னைவினை`` என்றது பிராரத்துவமும், இம்மந்திரத்தில், ``முடிச்சு`` என்றதனால் ``முன்னை வினை`` என்றது சஞ்சிதமும் ஆயின. வருவதற்கும், முடிச்சாய்க் கிடத்தற்கும் உரியன அவையேயாகலின், ``அவிழ்ப்பர்`` என்றது, வினைகள் பின் நின்று விளையாது உருண்டோட வீழ்த்துவர் என்றதாம். முடிச்சு - மூடை. பின்னை வினை, ஆகாமியமே. அதனைப் பிடித்துப் பிசைதலாவது, அது தோன்றும் பொழுதே மாணாக்கரது உள்ளத்தில் தம்மையும், தமது உபதேச மொழியையும் நினைவு கூர்விக்கு மாற்றால் அவற்றின் கொடுமையையும் நினைந்து அஞ்சச்செய்து முற்றாதபடி போக்குதல். ``சென்னியில் வைத்த`` என்றது, அது மேலாய் நிற்கத் தாம் அதன் கீழாய் அடங்கி நிற்றல். அதனால் அவரது செயல் சிவன் செயலேயாதல் உணர்த்தப்பட்டது, ``திருவருளாலே`` என்றதனால் சிவசமவாதம் கூடாதியிற்று.
ஞானிகளாவார் குருவருள் பெற்றவர்களே. அவர்களது `சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம்` - என்னும் மூவகை வினைகளுள் சஞ்சிதம் ஞான தீக்கையால் எரிசேர்ந்த வித்துப் போலக்கெட் டொழியும். பிராரத்தம் அனுபவத்தால் தீரும். எனினும் அஃது அவர்களது உணர்வைத் தாக்காது உடலளவாய் ஒழிதலால், ஆகாமியத்தை உண்டாக்காது. சோர்வு காரணமாக ஒரோவழி ஆகாமியம் தலை யெடுக்குமாயினும் அது உடனே அவர்களது குருலிங்க சஙகமங்களைப் பற்றிய மனமொழி மெய் வழிபாடுகளால் முறுகுதலின்றிக் கெடும். இவ்வாற்றால் ஞானிகள் தாம் வினையினின்று நீங்குதலேயன்றித் தம்மை யடைந்த பக்குவிகளுக்கு ஆசிரியராய், அவர்களது வினையையும் நீக்குவர். இஃதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இங்ஙனம் கொள்ளாக்கால், கூறியது கூறலாய், இதனாற் போந்த பொருள் ஒன்றும் இல்லையாம். ``சென்னியில் வைத்த திருவருளாலே`` எல்லாம் செய்தல் மேற்பல விடத்தும் கூறப்பட்டமையால், அதனையே கூறுதற்கு இங்கொரு மந்திரம் வேண்டா.
மூன்று வகையான வினைகளும் நீங்கும் முறை மேற்கூறிய வாறே யாதலை,
``எல்லையில் பிறவி நல்கும்
இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்; ஏன்ற
உடல் பழ வினைய தூட்டும்;
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத்(து)
அழல் உற அழிந்து போமே``l
என்னும் சிவப்பிரகாசத்தாலும்,
``ஏன்ற வினை உடலோடு எகும் இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்`` -திருக்குறள் - 98.
என்னும் திருவருட்பயனாலும் அறிக. மற்றும்,
``உணக்கி லாததோர் வித்து மேல் விளையாமல்
என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம்
நீ வந்து காட்டினாய்``
-திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் - 1.
சிவமேயான ஞானிகள் பக்குவிகளுக்குச் சிவமாகவே தோன்றுவர். அதனால் அவர்களைக் கண்டவுடன் பக்குவிகள் தம்மையிழந்து அவர்பால் அடைக்கலம் புகுவர். ஞானிகளும் அவர்களது பக்குவத்தை உணர்ந்து அவர்களைத் தங்கட்கு ஆளாகக் கொண்டு, அருளுதலைச் செய்வர். இவற்றையெல்லாம் ஆசிரியர் அருணநந்தி தேவர், உமாபதி தேவர் வரலாறுகளின் வைத்து அறிக.
இதனால், ஞானிகள் தாங்கள் நலம் பெறுதலேயன்றிப் பிறரையும் நலப்படுத்துதல் கூறப்பட்டது. இந்நாயனார்,
``நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்``
எனத் தொடக்கத்திற்றானே அருளிச்செய்தது நினைக்கற்பாலது.

பண் :

பாடல் எண் : 3

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே.

பொழிப்புரை :

உயிர்களின் மனமும், வாக்கும், காயமும் நேர்முறையில் செயற்படாது, கோடும் முறையில் செயற்பட்டால் உயிர்கட்கு, நீக்குதற்கரிய வலிய வினைகள் உளவாகும். அவை அவ்வாறின்றி, நேர்முறையில் செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படாது. (எனினும் அஞ்ஞானமுடையவர்களது மனோவாக்குக் காயங்கள் நேர்முறையிற் செயற்படமாட்டா). இனி ஒருவன் அஞ்ஞானத்தின் நீங்கிமெய்ஞ்ஞானத்தைப்பெற்று, மனோ வாக்குக் காயங்களின் பிடியில் அகப்படாது விடுபட்டானாயினும், பழைய வாசனை காரணமாக ஒரோவழி அவை தம்மியல்பில் வந்து அவனைத் தாக்குதல் கூடும். அப்பொழுது அவன் தற்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உடையவனாய் அவற்றைச் செயற்படுத்தினால், அவன், `ஞானி` என்னும் நிலையினின்று நீங்கான்.

குறிப்புரை :

ஞானிகள் அவ்வாறுதான் அவைகளைச் செயற்படுத்தி நிற்பார்கள்` என்பது குறிப்பெச்சம். மனோ வாக்குக் காயங்கள் நேர் முறையில் செயற்படுதலாவது, `நாம் செயற்படுவது திருவருளால்` என்பதை மறவாமல் நினைந்து, தமது செயலை இறைவனது பணியாகக் கருதிச் செயற்படுதல். உடையானது நேர்மை, நேர்மை இன்மைகள் உடைமைகளின் மேல் ஏற்றிச்சொல்லப்பட்டன. ``தன்`` என்றது தற்போதத்தை, தற்போதத்தால் நுகராது சிவபோதத்தால் நுகரின் சிற்றின்பமும் பேரின்பமேயாகும். இதனை,
``பெற்றிசிற் றின்பமே பேரின்ப மாம்அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற,
முளையாது மாயையென் றுந்தீபற`` -திருவுந்தியார் - 33.
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்(து) ஆக்கில் - தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை, முடிவதுமொன் றில்லை; இளைப்பதுமொன் றில்லை இவர்``
-திருக்களிற்றுப்படியார் - 76.
எனவும் போந்த சாத்திரங்களாலும், மற்றும்,
``காணும் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியான்`` -திருவாசகம் - பண்டாய நான்மறை - 6.
என்னும் திருமொழியாலும் உணர்க. வாதனை - வாசனை. தன், சாரியை. வாதனையால் விளைவன ``வாதனை`` எனப்பட்டன. ``வாதனைதன்னால்`` என்னும் மூன்றாம் உருபை, `வாதனைதன்கண் என ஏழாம் உருபாகத் திரிக்க.
இதனால் ஞானிகள் பிராரத்தம் காரணமாகப் பழைய வாசனை தோன்றும்பொழுது அதனால் திரிபெய்தாது நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.

பொழிப்புரை :

வாசி யோகத்தின் பெருமையையும், அதிற் பயிலும் யோகியின் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, ஞானிகளும் விரித் துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிரல் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும் உயிர்ப் பொருள்கள்மேல் செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீவிர் இறை நிலையை அடைதல் எளிதாகும்.

குறிப்புரை :

`இல்லையேல், அரிதாகும்` என்பதாம். மூசுதல் - மூடுதல். மூசி - மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள். பேசி - பேசுபவன். வீண் காலம் போக்குதலை, `பிதற்றுதல் என்றார். அன்பு இல்லறத்தார்க்கே உயிரனவாய் நீங்க, ஞானிகட்கு அருளே உரித்தாதல் பற்றி, அன்பும் அறுக்கப்படவேண்டியதாயிற்று. ``இடம்`` என்றது நிலையை, இதனால், `சொல்லளவாய் நிற்கும் அவா அறுத்தல் ஞானி கட்கும் பயன் தருவதாகாது` என்பது கூறப்பட்டது. ``எனபோல் உடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுவர் ஆர்`` எனத் தாயுமான அடிகளும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

பொழிப்புரை :

சிவன், ஆசையால் மூடப்பட்டுள்ள அந்த மனங் களிலே வெளிப்படாது மறைந்து நின்று, ஆசையற்றவர்களது மனங் களிலே வெளிப்பட்டு விளங்கி, அவர்கட்கு முத்தியைத் தருகின்றான். ஆகையால் அவன், அவனை வைத்து வழிபடுகின்ற மாடம், மண்டபம், கூடம், கோயில், திருவேடம் ஆகிய இவ்விடங்களில் இல்லை.

குறிப்புரை :

மாடம் - இல்லங்களில் சுவர்களில் அமைக்கப்படும் சிறு நிலைகள். அடியார் வேடமும் சிவன் உரையும் இடமாகக் கொள்ளப்படுதல் தெளிவு. `இவ்விடங்களில் சிவன் இல்லை` என்றது, ஆசையுற்ற மனங்களுடன் அவ்விடங்களில் அவனை வழிபடு வார்க்கு. `மூடு அத்துளே நின்று` எனப்பிரித்து, அதனை, வேட்கை விட்டார் நெஞ்சில் முத்தி தந்தான்` என்பதற்கு முன்னே கூட்டி முதற் கண் வைத்து உரைக்க. `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. நின்று - மறைந்து நின்று. `மூடு அத்துளே மறைந்து நின்று` என்றதனால், மூடுதல் இன்றி விளங்கிய நெஞ்சில் வெளிப்பட்டு நிற்றல் பெறப் பட்டது. முன் மந்திரத்து நின்ற `ஈசன்` என்பதே இம்மந்திரத்திற்கு எழு வாயாய் வந்து இயைந்தது.இதனால், `உள்ளத்தில் ஆசை அறா தவர்கள் வெளியில் தனியிடங்களில் சிவனை வைத்து வழிபடுதலால் பயனில்லை, என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய உலக ஆசைகள் அனைத்தையும் நீவிர் கட்டாயமாக அறவே விட்டொழியுங்கள்; அவைகளை விட்டு நீவிர் சிவனை அடைந்தபின்பும் பழைய பழக்கத்தால் அந்த ஆசைகள் மீண்டும் உங்கள்பால் தோன்றுதல் கூடும். அப்பொழுதும் அதனை முளையிலேயே அறுத்தெறியுங்கள்; ஏனெனில் ஆசை மிகுந்து மிகுந்து வருவதால்தான் எந்நிலையிலும் துன்பங்கள் மிகுந்து மிகுந்து வருகின்றன. ஆசையை நீக்க நீக்க, இன்பங்களே மிகுந்து மிகுந்து வரும்.

குறிப்புரை :

அடுக்கு, வயியுறுத்தற்பொருட்டு, `ஈசனிடத்தாயினும்` என ஏழனுருபுபுணர்ப்பினும் அமையுமாயினும் அவ்வாறு புணர்த்தோதாது, ``ஈசனோடாயினும்`` என மூன்றுனுருபு புணர்த் தோதியதனையும் நோக்காது, `ஈசனை விரும்புதலையும் விடுமின்` என உரைப்பாரும் உளர். அந்த விருப்பத்தையும் அறுத்தவர் அடைவது யாது? மீமாஞ்சகரும், தருக்க மதத்தவரும், பாடணவாத சைவரும் கூறும், யாதோர் உணர்வுமின்றிக் கல்லுப்போலக் கிடக்கும் நிலையேபோலும்! ஈசனிடத்திருந்தபொழுதும் உலக ஆசை துன்பந்தருதற்கு நம்பியாரூரர் வரலாறு நற்சான்று பகரும். பின்னிரண்டடிகளில் வந்த ஆக்கம் மிகுதி மேலன.
இதனால், அவா துன்பத்திற்கும், அவா இன்மை இன்பத்திற்கும் காரணம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

பொழிப்புரை :

கொல்வது போலும் துன்பத்தை ஒருங்குகூடிச் செய்வனவே ஐம்பூதங்கள், அவற்றின்மேல் வைக்கின்ற பற்று மீண்டும் மீண்டும் சிக்குதற்கு வழி செய்வதே. அதனால், அந்தப் பற்றினைப் போக்கி, மீண்டும் அவற்றின்மேல் செல்ல எழுகின்ற ஆசையை எழாமல் தடுப்பதே நிலைத்து நிற்கின்ற ஞானமாகும். அந்தப் பூதங்களை மனத்தால் சிறிது தீண்டுதலும் அவை தொடர்தலுக்கு வழியேயாகும்.

குறிப்புரை :

அடுதல் - கொல்லுதல். இங்கு அதனோடொத்த துன்பத்தைக் குறித்தது, ``கொல்லப் பயன்படும் கீழ்``* என்பதிற்போல் ஐந்து பூதங்களும் துன்பம் செய்தலாவது, அவை உடம்பாகி நின்று, நோய், பசி முதலியவற்றைச் செய்தல், எனவே, ``பற்று`` என்றதும் உடம்பிற் பற்றேயாயிற்று. உடம்பிற் பற்றே வேட்கை பலவற்றிற்கும் காரணம் ஆதலை அறிக. உடன் - ஒன்றுகூடி. உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், `ஆசைகட்குக் காரணம் உடம்பின்மேல் பற்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து)
உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.

பொழிப்புரை :

நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடலைப்போல ஊழிவெள்ளம் தோன்றி உலகை விழுங்கிவிட்டு மறைந்தது. என்றும் கெடாத இன்பக்கடலை இறைவன் தாங்கிக் கொண்டிருக்கின்றான். ஆயினும், வானோரும், மண்ணோரும் ஆசைக்கடலில் மூழ்கியிருந் தமையால் இறைவனது இன்பக்கடலை அடைய மாட்டாது, அந்த ஊழி வெள்ளத்தில் மூழ்கி அழிந்தனரேயன்றி பயன் ஏதும் பெற்றாரில்லை.

குறிப்புரை :

ஈற்றடியை முதலடியின் பின்னர்க்கூட்டி, வானோர், மண்ணோர் அவாக் கடலும் பட்டு அழுந்தினராய், உவாக் கடலுட் பட்டு துஞ்சினர்` என முடிக்க. பின் வந்த ``உவாக்கடல்``, `மேற்கூறிய அந்தக் கடல்` என்னும் பொருட்டாய் நின்றது. ஏனைப் பிறப்புக்கள் பலவற்றினும் சிறந்த பிறப்பினராகிய தேவரும், மக்களும்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே தேவரும், மக்களுங்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே ஆயினர்` என்றபடி. ``அழுந்தினர்`` என்பது முற்றெச்சமாய் நின்றது. அவாக்கடலைத் துன்பக் கடலாக வருணித்தமையால், ``தவாக்கடல்`` என்றது இன்பக் கடலாயிற்று.
இதனால், மக்கள், தேவர் பிறப்பினையும் ஆசை பயனில்லன ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.

பொழிப்புரை :

ஞானிகளாயினார் செய்யும் வீட்டு நெறிச் செயலாவன, (தீக்கையால் எரிக்கப்பட்டு ஒழிந்த சஞ்சித வினைபோக, முகந்து கொண்டு) எஞ்சி நின்ற பிராரத்த வினைத் தாக்கத்தையும், கருவி கரணங்களால் நிற்கும் மாயையின் தாக்கத்தையும் வாசனை யளவாய் நிற்கும் ஆணவத்தின் தாக்கத்தையும் முன்போல நீடியாது (சிவஞானபோதப் பன்னிரண்டாம் சூத்திரத்திற் கூறிய முறையால்) உடனே தடுத்துப் போக்கித் தூய்மையோடிருத்தலும், ஐந்தொழில் முதல்வர் செய்யும் ஐந்தொழிலின்றும் நீங்கிச் சிவனது திருவருளைப் பெற்று அவற்றால் அவனை நேரே கூடி அவனது இன்பத்தில் மூழ்குதலுமேயாகும்.

குறிப்புரை :

`பின்னும் பின்னும் ஆசையில் வீழ்ந்து அழிவதன்று` என்பதாம்.
``தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்``*
என்றருளினார் திருவள்ளுவர். பிணி - கட்டு; நோயுமாம். வினையை முன்னர்ப் பிரித்தமையால் பிணி ஏனையவாயின. `பின்றை` என்பதன் ஈற்று ஐகாரமும் அதன்பின் உம்மையும் தொகுத்தலாயின. ``பின்றை`` என்பது, `மற்று` என்னும் பொருளதாயிற்று. பேர்த்தல் - நீக்குதல் அருள்பெற்று, நேர்த்துன்றி` என இயைக்க. அழுந்துதலுக்கு இடம் ஆற்றலால் பெறப்பட்டது. தூய்மை - வீடு. இஃது அதற்குரிய செயல்களைக் குறித்தது.
இதனால், `ஆசை அற்றொழிதற் பொருட்டு ஞானிகள் செய்யும் செயல்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம்
பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.

பொழிப்புரை :

பொருளியல்புகளை உள்ளவாறு உணருமாற்றால் பொய்ப் பொருள்களில் ஆசையை அறத்தொலைத்து, மெய்ப் பொருளை உணர்ந்து நிற்றலால் அடையப்படும் வீடு பேறே ஒருவனுக்குச் சிறந்த பேறாகும். அவ்வாறன்றிப் பெண்ணாசையை மட்டும் தொலைத்துப் புகழ், பொருள் முதலியவற்றை அவாவி யோகத்தில் நிற்றலால் பெறும் பேறு அட்டமாசித்திகளாம். (அவை பிறப்பை நீக்காமையால் `பேறு` எனப்படா) மற்று, மேற்கூறியவாறு மெய்யுணர்தலால், ``உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காக்கும்``3 திறம் பெற்ற ஞானி தனுவோடு (உடம்போடு) இருப்பினும் அவனது தனு சிவதனுவேயாகும், பிராரத்தம் முடிந்தபின் அத்தனு நீங்கினால், அவன் சிவனை மிக அணியனாய் அணைதற்குரிய அருளைப் பெற்று அணைவான். அணைந்தபொழுது சிவனிடத்தே அன்பு மீதூர்ந்து அவன் சிவனது இன்பத்திலே அமைதியுடன் திளைத்திருப்பான்.

குறிப்புரை :

சிவ தனுவின் பெருமை திருவுருத்திரத்துள் பின்வருமாறு கூறப்பட்டது.
``மகாருத்திரரே, உலகியலாகிய பிணிக்கு
மருந்தாய் உள்ளதும், உம் அருளைப்பெற்றுள்ள
உருத்திரருடனும் இரண்டறக் கலந்து உயிர்க
ளுக்குத் துன்பத்தை நீக்கி, இன்பத்தைத் தருகின்ற
மருந்தாய் உள்ளது மான உமது, சத்திமய
மான நன்மை மிக்க எந்தத் தனு
(உடம்பு) உண்டோஅந்தத் தனுவினால்
எங்களை நல்வாழ்வு வாழ அருளும்``*
இன்னும் அதனுள் அதுபற்றி,
``உருத்திரரே, (கயிலை) மலையில் வீற்றிருந்து
உலகிற்கு இன்பம் ஊட்டுபவரே,
சாந்தமானதும், நன்மை மிக்கதும்,
வினையற்ற நிலையை (வீட்டினை)
விளக்கி நிற்பதுமாய் எந்தத் தனு
உள்ளதோ அந்த உம்முடைய தனுவால்
எங்களுக்கு உண்மை விளங்கும்படி
அருள்வீராக`` 3
என்றும் கூறப்பட்டது. `சிவ ஞானிதன் தனுவும் இத்தகையதாகிய சிவ தனுவே` என்றற்கு, ``சிவ காயம்`` என்றார். ``உற`` என்பதன் `வரும்` என ஒரு சொல் வருவித்து `வரும் முத்தியே ஒண் சித்தியாம்` என முடிக்க. பெண் மயல் கெடுதல் `நியமம்` என்பதை உணர்த்திப் பின்யோகத்தையும் உணர்த்திற்று. `கெட்டறல்`, ஒருபொருட் பன்மொழி. பேறு - பெறப்படுவது. திண்மையின் ஞானி - திண்மையை (மன உறுதியை) உடைய ஞானி. `அண்மையாய்` என ஆக்கம் வருவிக்க. அடைந்தபின் அன்பு மேன்மேற் பெருக, அதனானே இன்பம் மேன்மேல் எல்லையின்றி விளையும் என்க. ``அன்பே இன்பமாம்`` என்பதை,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல், இன்றுண்டாம்; அன்பு நிலையே அது``l
என்னும் திருவருட் பயனால் அறிக. அறிந்தாலன்றி அன்பு உண்டாகாது, ஆகவே, ஞானத்தின் பயனே பத்தியாம். இதனைச் சேக்கிழார்
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்``
என்று அருளியது காண்க. சில சமயிகள், `ஞானமே முடிநிலையானது` எனக் கூறிப்பத்தியைப் படிநிலையாகக்கொள்வர். அவர்களை,
``வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவதங் கென்பெணே உந்தீபற``3
எனவும், அவர்களது சமயங்களையும் சமய நூல்களையும்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவி யறாதேஎன் றுந்தீபற;
அவ்வுறை கேளாதே உந்தீபற``l
எனவும் திருவுந்தியார் கூறிற்று, இது பற்றி,
``வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும அதன் அங்குரமும் மெய்யுணரில் - வித்ததனில்
காணாமை யால் அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால் அற்றார் பேறு``9
எனக்கூறிய திருக்களிற்றுப்படியாரையும் நோக்காது`` முளையைக் கைவிட்டவர்`` என்பதற்குப் பிறிதுரை உரைத்தாரும் உளர். சாவி போதலாவது, விளைத்த பயிர் கதிர்விட்டு முற்றியும் நிரம்ப முற்றிப் பயன்படும் அளவிலே அங்ஙனமாகாது காய்ந்து பதராகி விடுதல். ஞானத்தைத் தந்தும், அதன் பயனாகிய அன்பைத் தராதுபோதற்கு இஃது உவமையாயிற்று. இனித் திருக்களிற்றுப்படியாருள், ``காணாமையால் அதனைக் கைவிடுவர்`` என்றது பிற சமயத்தாரைக் கருதியும், `கண்டவர்கள் - பேணாமையால் அற்றார் பேறு`` என்றது சித்தாந்த சைவருள்ளும் நூலறிவு பெற்றும் நுழைவின்றிப் பத்தி செய்யாதாரைக் கருதியும் என்க.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``*
என்னும் திருக்குறள் இங்கு நெஞ்சிற்பதிக்கற்பாலது.
``நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக``* என அம்மையார் அருளிச்செய்தார். இவ்வாறான அருமை தோன்றுதற்பொருட்டே ``இறுதியில் அன்பின் ஆறும்`` என்று அருளிச்செய்தார். ஆறும் - அமைதியுறும்.
இதனால், ஞானத்தால் இருவகைப் பற்றும் அற்ற மெய் யுணர்வால் அறுக்கப்படும் அவா அறுதியே சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

`அவன் இவன் ஈசன்` என்(று) அன்புற நாடிச்
`சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார்
பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப்
புவன் இவன் போவது பொய்கண்ட போதே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனையே முதற் கடவுளாக உணர்தலே, முன் மந்திரத்திற் கூறியவாறு உண்மையை உணர்தலாகும். அவ்வாறின்றி, பிற கடவுளரை, `அவனே கடவுள், இவனே கடவுள்` என உணர்ந்து அன்பு செய்வன எல்லாம் இறையன்புகள் ஆகா; உயிர் அன்புகளே. தான் உண்மையை உணர்ந்துவிட்டதாகக் கருதிய ஒருவன் அதன் பின்னும் வலிய பலவகைப் பிறவிகளாகிய தேரினை ஊர்ந்து, பலவகைப் புவனங்களாகிய வீதிகள்தோறும் பவனி வருதல் அவன் பொய்யை மெய்யாகத் திரிய உணர்ந்த பொழுதேயாம்.

குறிப்புரை :

``அன்புற நாடி`` என்பதை, நாடி அன்புற்று`` என மாற்றிக் கொள்க. `வன் பல்வகையாம் இப்பிறவியில் புவனியில் இவன் பவனி போவது பொய்கண்டபோதே என இயைத்துக்கொள்க. `வன்பிறவி, பல்வகையாம் பிறவி` எனத்தனித்தனி முடிக்க. பிறவியில் உழலுதலைப் பவனியாக உருவகித்து, ஏனையவற்றை உருவகம் செய்யாமை ஏகதேச உருவகம். தொடர் வேறாதலின், ஈற்றடியில் ``இவன்`` என்றது பன்மையொருமை மயக்கம் ஆகாமை யறிக. ``இவன்`` இரண்டில் முன்னது, `சிவனாகிய இவன்` என இருபெயரொட்டாய் அண்மைச் சுட்டுப் பெயர். பின்னது, மேற்கூறிய உணராருள் ஒருவன். `புவனி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், சிவபத்தியாலன்றிப் பிற தேவர் பத்தியால் பதவி ஆசைகள் நீங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே.

பொழிப்புரை :

துன்பத்தைக் காய்தலும், இன்பத்தை உவத்தலும் ஆகிய இத்தன்மைகளையே உள்ளத்தில் உறுதியாகக் கொள்ளும் முறைமையையுடையதே இவ்வுலகம் முழுதும், ஆயினும், அந்தத் துன்ப இன்பங்கள் அவற்றிற்குக் காரணமான புலன்களைக் கொணர்ந்து பொருத்துகின்றவர் ஐம்பொறிகளாகிய துட்டரேயாகலின், அவரை உலகம் வெறுத்தொதுக்கி, அழியும் தன்மையுடைய இவ்வுடம்பில் இருந்துகொண்டே சிவநூல்களின் வழி நிற்றலே தக்கது.

குறிப்புரை :

`நிற்பின் அவா முற்றும் அறும்` என்பது குறிப்பெச்சம். பதிக்கின்றவாற்றை உடையதனை, ``பதிக்கின்றவாறு`` என்றார். ``பாரகம்`` என்றதும், `உலகம்` என்றதும் உயிர்களை விதித்தல், இங்கு தப்பாது பொருதுதல். `நொடிகின்ற` என்பது, எதுகை நோக்கி திரிந்து வலிமிகுந்தும் நின்றது. நொடிதல் - அழிதல், அது ``நொடித்தான் மலை``9 என்றமையானே விளங்கும். ``நூல்`` என்றது, இங்கு அதிகாரத்தால் சிவநூலையே குறித்துக் கருவியாகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் நெறியைக்குறித்தது. அந்நெறியில் சொல்லப்படுவனவற்றுள் பத்தியே தலையானவாதாகையால், ``ஒன்றல்`` என்றது அதனை ஒன்றுதலாகவே கொள்க. சிவ பத்தி மிகின், உலக ஆசை தோன்றாமை அறிக.
இதனால், ஆசையை அறுத்தற்கு உண்மை வழி சிவ பத்தியாதல் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதற்குப்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``உய்ந்தனம் என்பீர்; உறுபொருள் காண்கிலீர்`` என்னும் மந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் `யோகம்` என்னும் அதிகாரத்தில் வந்தது]

பண் :

பாடல் எண் : 1

முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரானைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.

பொழிப்புரை :

வீடுபேற்றைத் தருகின்ற ஞான நூலைக் கற்கின்ற கல்வியின் பயனாயும், அவற்றைப் பற்றிக் கேட்கின்ற கேள்வியின் பயனாயும் உள்ளவனும், உலகிற்குத் தந்தையும் தேவர்கட்குத் தேவனும், தான் இயல்பாகவே தூயனாய், உயிர்கள் தூய்மை அடைதற்குரிய வழியாய் நிற்பவனும், அறிவே வடிவாய் உள்ளவனும் ஆகிய சிவனையே, `உயிர்கட்குத் தலைவன்` என்று உணர்ந்து இறையன் புடையோன் போற்றுவான்.

குறிப்புரை :

``பத்தன்`` என்பது சாதி யொருமை. பாசப்படுதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலாகக் கூறப்பட்டது. ``ஞானமும் கேள்வியும்`` என்றது ஆகுபெயராய், அவற்றின் பயனைக் குறித்தது.
இதனால், `இறையன்பாவது இது` என உணர்ந்தார் பத்திசெய்யும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு)
அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட்ட
`அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.

பொழிப்புரை :

சிவனுக்கு அடியராயினார்க்கு அடியர் ஆயினார் சிலர் அவர்கட்கு அடியராயினார் சிலர். அவர்கட்கு அடியராயினார் மற்றும் சிலர் அவர்கட்கே நான் அடியவன் ஆக என்னைக் கொடுத்து அடியவனாகி, அடிமைகட்குரிய பணிகளைச் செய்வதையே எனது கடமையாகவும் மேற்கொண்டேன். அதனால் என்னை ஆளாக ஏற்றுக் கொண்ட அடியார்கள் என்மேல் கருணை வைத்து அந்தப் பெரு மானுடைய திருவடிகளில் என்னைச் சேர்ப்பிக்க, அப்பெருமானும் என்னைத் `தனக்கே அடியவன்` என்று சொல்லி, நேராகவே என்னை அடிமை கொண்டான்.

குறிப்புரை :

அடியார்க்கு அடியாரைப் பலராகக் கூறியது, `அன்று தொட்டு இன்று காறும் அடியவர் பரம்பரை தொடர்ந்து வருகின்றது` என்பதை உணர்த்தற்கு. `அந்தப் பரம்பரையில் வந்த எந்த அடியவர்க்கு அடிமை பூண்டாலும், அவர்களைச் சிவன் நேரே தன் அடியவராக ஏற்றுக்கொள்வான்` என்பதே இங்கு உணர்த்தப்பட்டது.
``திருப்பா திரிப் புலியூர்
உடையான் அடியார் அடிஅடி யோங்கட்கு
அரியதுண்டே`` -திருமுறை - 4.94-3.
``தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே``3 எனப்போந்த திரு மொழிகளுடன் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தையும்l உற்று நோக்குக. ``சீரணி குருசந்தானம்``* என்றதும் இக்கருத்தே பற்றி. முதலடியின் ஈற்றில், ``அடிமை`` என்றதும் `அடிமை` செய்யும் அடியரையே. `நல்கியிட்டு` என்பது குறைந்து நின்றது. `நல்கிட்டு அடியனாய்` என மாற்றுக.
இதனால், அடியார் அடியார், அடியடியார் பத்திகளே சிவபத்தி யாதல் கூறப்பட்டது.
``எனக்கன்பு நின்பொருட்டு எய்தாத தென்கொல்!
வெள் ளேறுடையான்
றனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்த, இத்
தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற அப்பூதியைச், சிவ
நேசம்உறும்
இனர்க்கன்பு செய் நம்பி யாரூரன் ஏத்தும்
இயல்பறிந்தே``
-நால்வர் நான்மணி மாலை - 6.
என்னும் சிவப்பிரகாச அடிகள் திருமொழியும் இங்கு உணரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர்
பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் குளிர்ச்சியால் இருக்க வேண்டிய சமையத்தில் நீரைவிடக் குளிர்ச்சியாய் இருப்பான். சுடவேண்டிய சமையத்தில் நெருப்பை விடச் சூடாகச் சுடுவான். (இரண்டும் கருணையே). அவனது முறை இவ்வாறாதலை அறிய வல்லார் ஆர்! நிலவுலகில் உள்ளார்க்குப் புலனாகாமலே சூக்குமமாய் இருந்து, அவர்கட்குப் பயன் தருகின்ற தேவர் பலரையும்விடச் சிவன் அதிசூக்குமன் ஆயினும், அவன் உயிர்களின் பொருட்டு ஊர்கள் தோறும் உமாதேவிக்குக் கணவனாய், அவளோடும் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றான்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவ்விடங்களில் சென்று பத்தி செய்க` என்பது குறிப்பெச்சம். ``நந்தி`` என்பதை முதலிற்கொள்க. இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``பயன்`` என்பதன்பின் `தரும்` என ஒருசொல் வருவிக்க. நேர்மை - சூக்குமம். இது பருமைக்கு எதிரானது. உமாபதியாகி நிற்றல், `உலகனைத்திற்கும் அம்மையும், அப்பனும் தானே` என்பது தோன்றுதற்கு, `அதனை யுணரின் பத்தி தானே பெருகும்` என்பது கருத்து.
இதனால், சிவன் உருப்பத்தி சிவ பத்தியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒத்துல கேழும் அறியா ஒருவன்என்
றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப்
பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.

பொழிப்புரை :

அன்பரது அன்பில் சென்றாலல்லது, `அனைத் துலகங்களாலும் அறிய இயலாத ஒருவன்` எனச்சொல்லப்படுகின்ற சிவன் இருக்கின்ற இடத்தை அறிந்து சென்றடைய வல்லார் யாவர்? அவ்வாறே, அன்பர்கள் தம் அன்பிற்கண்டு சொன்னாலல்லது, கிடைத்தற்கரிய முத்துப்போன்ற அவனைக் கண்டு சொல்ல முற்படுவார் யாவர்? ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

சிவனை அவன் அன்பர்களல்லது பிறர் காணவும், சொல்லவும் வல்லாரல்லர்` என்றபடி.
``சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க``3
என்றருளிச் செய்தமை யறிக. `ஒருவன்` என்பது சிவனைக் குறிக்கும் ஒருபெயர்.
``ஒருவன் என்னும் ஒருவன் காண்க``9
``ஒருவன் என்று உலகம் ஏத்தும்
நளிர்மதிச் சடையன்``8
எனத் திருவாய்மொழியுள்ளும் வந்தது. `என்ற, இருந்த` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. `ஆரறிவார் சொல்ல` என்பது பாட மன்று; அது பின்னர் வருதல் காண்க. ``பததர்தம் பத்தியின் பாற்படி னல்லது`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்தது. அங்ஙனம் இயையுங்கால் ``தம்`` என்பது முன்னர்ச் சாரியையாயும், பின்னர்ப் பெயராயும் நின்றது.
இதனால், `பத்தி யுடையாரே சிவனைக் காணவும், சொல்லவும் வல்லார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல
நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.

பொழிப்புரை :

தாயைப் பிரிந்த பசுக்கன்று தன் தாயை நாடி அழைப்பதுபோல, சிவன் ஆவாய் இருக்க, நான் அவனைப் பிரிந்து வாடும் கன்றாய் இருந்து, என் தலைவனாகிய அவனையே நாடி, `அப்பாவோ! ஐயாவோ!` எனப் பன்முறை அழைத்தேன்; அவன் வானுலகத்திலுள்ள பசுக்கன்றுகள் போலும் தேவர்கட்கெல்லாம் அப்பால் நிற்கும் வேதப்பொருளாயினும் எனது கூக்குரலைச் செவிமடுத்து, உருவம் யாதும் கொள்ளாமலே என்னைத் தேடி வந்து, என் உள்ளத்துள்ளே புகுந்தான்.

குறிப்புரை :

`நான் மகிழ்ந்தேன்` என்பது இசையெச்சம். `ஆனை` என இரண்டன் உருபு விரிக்க. ``கன்றாய்`` என்னும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. தேவர்கள் பசுவர்க்கத்தினராகலின் `பசு` என்றும், அவர்கள், `தாம் கன்றுகள்` என்பதையும், `சிவன் தாய்ப்பசு` என்பதையும் நினைந்து அவனை அழைத்தல் இன்றிச் சுக போகங்களில் ஆழ்ந்து கிடத்தலால் `அவர்கட்கு அப்பாலாய்` என்றும், `எனினும், மெய்யுணர்வார் அவனை அழைத்தே நிற்பர்` என்றற்கு, ``மறைப் பொருள்`` என்றும் கூறினார். `மறைப்பொருள் ஆமவன்` என்க. ஊன் - உடம்பு கன்றுதல் - விடாது பற்றுதல், `ஊன் கன்றானாய் வந்து புகுந்தான்` என்க. இங்ஙனம் கூறியது, `அவன் புறம் நின்று போதராமல், அகம் நின்ற நிலையையே விளக்கியருளினான்` என்றபடி.
இதனால், `பத்தியுடையார் சிவனை யின்றியமையாது அலமருவர்` என்பதுவும், `அவர்கட்குச் சிவன் நேர்வந்து அருளுவன்` என்பதும் கூறப்பட்டன.
``உடையான் கழற்கு அன்பிலை;
... ... துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றிலை; தெருவுதோ றலறிலை;
செய்வதொன் றறியேனே``*
எனவும்,
`` ... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ்விடத்தான்?
எவர் கண்டனர்? என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள்ளுருகேன்;
நின்று உழைத்தனனே``9
எனவும், பிறவாறும் போந்த பத்தித் திருமொழிகளைக் காண்க.
`ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே`*
எனத்தொடக்கத்தேயும் இவர் கூறினார்.

பண் :

பாடல் எண் : 6

பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

பொழிப்புரை :

உயிர்களின் நிலை `பெத்தம், முத்தி` என இரண்டு. பெத்தம், பாசங்களிற் கட்டுண்ட நிலை. முத்தி, அவற்றினின்றும் விடு பட்ட நிலை. இவ்விரண்டு நிலைகளிலும், `உயிர்களின் செயல்` என்று ஒன்று இல்லை ஏனெனில், பெத்தத்தில் உயிர்கள் பல பிறவிகளில் சென்று உழல்கின்றன. அப்பிறப்புக்களைத் தருபவனும், வாழுங் காலத்து இன்பத் துன்ப நுகர்ச்சிகளை அவற்றிற்குரிய பொருள்களைத் தந்து ஊட்டுவிப்பவனும், பின்பு அந்தப் பிறவியை நீக்கிவிடுபவனும் எல்லாம் சிவனே. அதனால், பெத்தத்திலும் அவற்றிற்கென்று ஒரு செயல் இல்லை. இனி, முத்தியாவது சிவன் குருவாய் வந்து ஞான தீக்கை செய்து வினைக்கட்டினை அறுத்து அதினின்று விடுவிப்பது. அந்நிலையிலும் உயிர் அவன் காட்டிய வழியில் நடத்தற்குரியதே யன்றித் தானாக எவ்வழியிலும் செல்லாது. மேலும் ஞான தீக்கையில் உயிர் தனது, உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவன் கையில் முழுமையாக ஒப்புவித்துவிடுகின்றது. இவ்வாற்றால், பெத்தம், முத்தி யிரண்டிலும் உண்மையில் உயிருக்கென்று ஒரு செயல் இல்லை. ஆயினும் மயக்கத்தால் உயிர்கள் பெத்தத்தில் நிகழும் செயல்களைத் தம் செயல்களாகவும், முத்தர்கள் செயலையும் அவரது செயல்க ளாகவும் கருதி மயங்குகின்றன. ஞானம் கைவரப்பெற்று பத்தி மிகுந் தவர்க்கு அத்தகைய மயக்கம் இன்றி, உண்மையே விளங்கி நிற்றலால், தமக்கும் பணியாதும் இல்லையாகும் நிலை அவர்கட்கே உள்ளது.

குறிப்புரை :

``தன்`` என்றது சாதியொருமை. ``பிறத்தலால்`` என்றது, `தம் வயம் இன்றிப் பிறத்தலால் என்றபடி. பிறத்தல் கூறவே, வாழ்தலும், இறத்தலும் பெறப்பட்டன `முத்தி` என்பது எதுகை நோக்கி, `முத்தம்` என இகரம் தொகுத்து அம் விரிக்கப்பட்டது. முறைமை - குரு கற்பித்த முறைமை. இரண்டு, பெத்த நிலை, முத்தி நிலை, அருளால் அருளின்படி. அளித்தது, அருளைத் தந்தவனுக்கு. ``தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னை`` (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 10.) என அருளினமை காண்க.
இனி ஒருபோது அளித்தமையை எப்போதும் மறவாமைப் பொருட்டு அவர் எல்லாச் செயல்களையும் `சிவனுக்கு ஆகுக, சிவனுக்காக` என அருள் வழி நின்று சொல்லி முடிப்பர். `இவ்வாற்றால் பணிச் சுமை யாதும் இல்லாதார்க்குப், பத்தி மேலும் மேலும் பெருகி முதிரும்` என்பது கருத்து.
இதனால், பத்தி யுடையார்க்கு அப்பத்தி மேலும் மேலும் பெருகி முதிருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக்
குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.

பொழிப்புரை :

உபநிடதம் கூறுமாறு ஐந்து பறவைகள் போன்றுள்ள ஐந்து உடம்புகளுள்ளும் உள்ளீடாய் நிற்கின்ற ஆன்மாவும், அன்ன மயம், பிராணமயம் என்னும் உடம்பினுள் பாம்பு வடிவாய் உள்ள குண்ட லினியும் பொதுமை நீங்கி, உண்மை நிலையை அடைந்திருக்க, அவ் வுடம்புகளுள்ளே மலையில் வாழும் குறவர்கள் இசைக்கும் இசைபோல எழுகின்ற நாதங்கள் ஒலிக்க, அமிர்தத்தால் குளிர்ந்திருக்கின்ற, விந்துத் தானமாகிய, `மேரு` எனப்படும் ஆஞ்ஞையை அடைந்து அங்குக் கொல் -லாமை முதலிய எட்டையும் எட்டு மலர்களாகக் கொண்டு வழிபட்டுத் `தியானம்` செய்யும்பொழுது, எங்கள் சிவபெருமானையன்றி, எனது மனம் வேறொருவனை `இறைவன்` என்று கொண்டு தியானியாது.

குறிப்புரை :

தைத்திரீய உபநிடதம் ஆனந்த வல்லியில், ஐங்கோசங் -களையும் தனித்தனிப் பறவையாகவும் அவற்றின் உறுப்புக்களைத் தனித்தனி ஐந்தாக வைத்து, முகம் முதலிய உறுப்புக்களாகவும் உருவகம் செய்து கூறிற்று. அதனை, மாதவச் சிவஞான யோகிகள்,
``ஆன்மா இத் தரை கீழ் மேலும்
கொள்ளி வட்டம் கறங்கென
நிமிடத்தின்கண் அலமரும் படி
கொண்டு திரிதல் பற்றி இவ்
வைங்கோசங்களை ஐந்து
பறவையாகவும், அவற்றுள் ஒரோ
ஒன்றை ஐவகைப் படுத்து முகம்
முதலிய உறுப்புக்களாகவும்
வேதத்துள் உருவகஞ் செய்
துணர்த்தியவாறு``
முண்டகோபநிடதம், மூன்றாம் முண்டகத்தில், ஆன்மாவையே பறவையாக உருவகம் செய்து, `அஃது உலகமாகிய மரத்தில் அமர்ந்து, அதில் உள்ள போகமாகிய பழத்தைப் புசிகின்றது` என்றும், `ஆயினும், அதனைவிட்டுப் பிரியாது இணைந்து உடன் இருக்கின்ற மற்றொரு பறவை அந்தப் பழத்தை உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றது` என்றும் கூறிற்று. உண்ணாமல் பார்த்துக்கொண்டிருக்கின்ற பறவை சிவன்.
பறவை உடம்பை எடுத்த உயிரும் `பறவை` என்றே சொல்லப் படுதல் பற்றி முண்டகோபநிடதம் ஆன்மாவையே (பறவை) என்றது. ஆயினும் உண்மையில் பறவையாவது, பறவை உடம்பே ஆகையால், தைத்திரியோபநிடதம் ஐவகை உடம்புகளையே ஐந்து பறவைகளாகக் கூறிற்று. இங்கு நாயனார், ``பறவை`` என்றது உடம்பையே. கர்ப்பம் - சூல்; உள்ளீடு உடம்பின் உள்ளீடாவது ஆன்மா. குறவர் பாடும் இசையை, ``குறவம்`` என்றார். ஆஞ்ஞையை `மேரு` என்பதால், அதன் கீழ் ஒலிக்கின்ற நாதத்தை, ``குறவம்`` என்றார். சிலம்புதல் - ஒலித்தல். இதனை, மேல், ``மணி கடல் யானை``l என்னும் மந்திரத்தும் குறித்தவாறு காண்க. கொல்லாமை முதலிய எட்டாவன, `கொல்லாமை, ஐம்பொறியடக்கல் பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` என்பன. 9 இவை எண்வகை யோக உறுப்புக்களில் இயம நியமங்களாய் வருதல் காண்க. ஏத்துதல், இங்குப் பொதுமையில் `வழிபடுதல்` என்னும் பொருட்டாய்த் தியானத்தைக் குறித்தது, குளிர் வரை ஏறியபின் செயற்பாலது அதுவேயாகலின்.
இதனால், சிவ பத்தியே இறை பத்தியாவதன்றிப் பிற பத்திகள் இறை பத்தியாகாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து)
உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், தன்னையே நெருங்கி நிற்கும் துணைவனாக உணர்ந்து, தனது திருவடிகளைச் சிந்தித்தவழிக் கிடைக்கும் துணைவனாயும், ஒளி விளக்காயும் உள்ளான். அவனையன்றிப் பெருந்துணைவரும், பெறத்தக்க துணைவரும் வேறிலர். (ஏனெனில், பேரருளால் உயிர்களின் பிறப்பை அறுப்பவன் அவனேயாகலின்) ஆகையால், உணர்வுடையீர், அதனை உணர்ந்து அவனையே துணையாகப் பற்றிப் பிறப்பையறுத்துப் பிழையுங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, அதனுள்ளும் ``சிவன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. செய்தல், இங்குக் கருதுதலைக் குறித்தது. ``உறுதுணை`` இரண்டில் முன்னது உரிச் சொற்றொடர்; பின்னது வினைத்தொகை. அங்கி- தீ. அஃது இங்கு விளக்கைக் குறித்து, அறிவை விளக்குதலைச் சுட்டிற்று. `அறிவுத் துணையே துணையாவதன்றி, உடற்றுணை துணையாகாது என்றபடி.
இதனால், `சிவன் ஒருவனே அறிவுத் துணையாகலானும், உற்றாரை உறுபவன் ஆகலானும் அவனையே துணையாகப் பற்றிப்பத்தி செய்து பயன்பெறல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் சென்ற தலைவனை
கானவன் என்றும் கருவரை யான்என்றும்
ஊனத னுள்நினைந் தொன்று படாரே.

பொழிப்புரை :

தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களது மூன்று கோட்டைகளைத் தன் சிரிப்பினாலே ஒரு நொடியில் சாம்பலாக்கி அழித்த தலைவன் சிவன். அவனைச் சிலர், `காட்டிலே ஆடுபவன்` என்றும், `கரிய மலையில் வாழ்பவன்` என்றும் தங்கள் ஊன் உடம்பின் உள்ளுக்குள்ளாகவே இகழ்ந்து, அவனைக்கூடார் ஆயினார்.

குறிப்புரை :

`அஃதவர் வினையிருந்தவாறே என்பது குறிப்பெச்சம்.
`ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண்கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல்``3
என்பனபோலும் சான்றோர் மொழியினை உணராதார் பிணங்குவர் என்பது முதல் இரண்டடிகளில் குறிக்கப்பட்டது. `ஒன்றுபட்டார்` என்பது பாடமாயின், `அவனது பெருமையை உணர்வினால் உணர்ந்து, அகமாகிய உள்ளத்துள் தியானித்துச் சமாதி நிலை கூடினர்` என உரைக்க. சிவன் இருப்பது வெள்ளிமலையாயினும், முகில்கள் தவழ்தலும், பசுமை படர்ந்திருத்தலும் பற்றி, `கருவரையான்` என்றார். `ஒன்றுபட்டார்` என்பதையே பாடமாகக்கொள்வார், `கரு - பிறப்பை. வரையான் - ஏற்காதவன்` என உரைப்பர்.
இதனால், உண்மை உணராதார் பத்திசெய்து பயன் பெறும் இடம் அறியாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே.

பொழிப்புரை :

உலகனைத்தையும், `இவை சிலகாலம் நிலைபெற்றிருந்து, பின் `ஒடுங்குக` என்று சங்கற்பித்துப் படைத்த தலைவன் எங்கேயிருக்கின்றான்`` என்று அவனைக் காணத்தேடி என் உள்ளம் திகைத்தது. பின்பு அவன் தேட வேண்டாது எங்கும் நிறைந்து, உயிர்களின் புறத்தும், அவனைத்தேடித் திகைக்கும் உள்ளத்தும் `புறம், அகம்` என்னும் வேறுபாடின்றி விளங்குதலைக்கண்டு வியந்தேன்.

குறிப்புரை :

`கெட` என்னும் வியங்கோள்முற்று ஈறுதொக்கு, முதல் நீண்டு `கேட்` என நின்றது. அது, `கேடு` என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயரன்று. ``தயங்கும்`` என்றது. இறந்த காலத்தில் நிகழ்கால முற்று. `எவ்விடத்தும்` என்றற்கு மலையையும், வானத்தையும் உபலக்கணமாகக் கூறினார். உலைதல் - வருந்துதல். ``உள்ளும் உள்ளத்தும்`` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் நிற்க, `உலை` என்பது அதனோடு தொக்கு வினைத்தொகையாயிற்று. ஊழ்த்து நிற்றல், காண்டற்குரிய செவ்வியோடேயிருத்தல். `நின்றான்` என்றது, அதன் பயனாகிய வியப்பைக் குறித்து நின்றது.
இதனால், பத்தி செய்வார்க்குச் சிவன்தேட வேண்டாது, இருந்த இடத்தில் இருந்தே காணப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.

பொழிப்புரை :

முத்தி நிலையை அடைந்தவர் சிவனது திருவருளை முழுமையாகப் பெறுவர். (எனவே, `ஏனையோர் சிறிது சிறிது பெறுவர்` என்றதாம்). அதனால், அவரே கருவி கரணங்களின் கட்டற்றவராவர் (கருவி கரணங்களோடு கூடியிருப்பினும் அவற்றால் உலகியலில் செல்லார்` என்பதாம்). ஆகவே, அவர் தன் முனைப்புக் கொண்டு `யான், எனது என்னும் வகையில்) உலகை நோக்கி ஒன்றைச் செய்தலும், அவ் வாறன்றிச் சிவனையே நோக்கி ஒன்றைச் செய்தலும் ஆகிய செயல்கள் எல்லாவற்றையும் விடுத்து, சொரூப சிவனிடத்து உண்மையான பத்தியில் மட்டுமே நிற்பர். அதனால், அவர் அடையும் ஆனந்தமே உண்மைப் பேரானந்தமாகும். உண்மை ஞானியரும் அவரே.

குறிப்புரை :

`தன்பணி` என்பது, பொதுவாகச் சீவபோதச் செயலை உணர்த்தும் ஒருசொல். `தன்பணியையும், மெய்த்தவத்தையும் செய்கை யாகிய வினையை விட்ட பத்தி` என்க. மெய்த்தவம், சிவனை நோக்கிச் செய்யும் செயல்கள். உலகியற் செய்கையை நோக்க மெய்த்தவம் சிறந்ததாயினும் அதுவும் நான்` என்னும் போகத்தோடு செய்வதேயாகலின், அப்போதத்தை விட்டவர்க்கு அதுவும் வினையேயாம் என்றற்கு, ``மெய்த்தவம் செய்கை வினை`` என்றார். இஃதே பற்றித் தாயுமானார், ``நான் பூசை செய்யல் முறையோ``3 என்றார் மெய், மெய்ப்பொருள், சொரூப சிவன் `மெய்யின்கண் செய்யும் உண்மைப்பத்தி` என்க. உண்மைப்பத்தி, பிறிது பயன் விரும்பாது, அவனையே விரும்பிச் செய்யும் பத்தி இங்கும் பத்தியையே முடிநிலையாகக் கூறினமை உணரற்பாலது.
இதனால், முத்தி நிலையின் இயல்புகள் எல்லாம் சுருக்கிக் கூறப்பட்டன. இவையும், அடுத்து வரும் மந்திரத்தில் வருவனவும் ஆகிய இயல்பினை உடையோரே சீவன் முத்தராவர்.

பண் :

பாடல் எண் : 2

வளங்கனி தேடிய வன்தாட் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

பொழிப்புரை :

(மேல், ``பறவையில் கர்ப்பமும்``9 என்னும் மந்திரத்தில் சொல்லியபடி) உலகமாகிய மரத்தில் தனக்கு இனிமையான பழத்தைத் தேடி அலைந்த சீவனாகிய பறவை, பின்பு அந்தப்பழம் தன்னுள்ளே யிருப்பதை அறிந்து அதனைத் தேடி அங்கு அலைந்துகொண்டிருக்கும் பொழுது, அதற்குக் கண்ணும், சிறகும்போல உதவுகின்ற அந்தக் கரணங்களாகிய நால்வரும் முன்புபோலத் தீயராய் இல்லாது நல்லவராய் விட்டமையால், அங்கே (உள்ளத்துள்ளே) மிக்கு விளங்குகின்ற பேரொளியிலிருந்து சிறு கைவிளக்கை ஏற்றிப் பிடித்து, அப் பறவைக்கு உதவி புரிகின்றனர்.

குறிப்புரை :

`பெத்த நிலையில் உலகியலில் ஈர்த்துச் சென்ற அந்தக் கரணங்கள், முத்தி நிலையில் சிவத்தை உணர்தற்குத் துணை புரிகின்றன` என்பதாம். `விளக் கனி, உளக் கனி` என்பன எதுகை நோக்கி, ஒத்த வல்லெழுத்து மிகாது, இனமெல்லெழுத்து மிக்கு முடிந்தன. தாள் - முயற்சி. களம் - இடம். `அக் களத்துக் கனிந்த அங்கி` என்க. கனிதல், இங்கே, மிகுதல், அங்கி - அக்கினி பேரொளி; பேரறிவு. `மலம் நீங்கிய உயிரின் அந்தக் கரணங்கள் பதிஞானத்தை உடையனவாகும்` என்பது உணர்க.
இதனால், சீவன் முத்தரது அந்தக் கரணங்கள் பாசத்தளை யாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.

பொழிப்புரை :

எல்லோரினும் பெரியவனும், பெருந்தலைவனும் சொல்ல வாராத பெரிய இன்பத்தைத் தன்னை அடைந்தவர்க்கு வழங்கி யருளும் அன்னதொரு பெருந்தகையை உடையவனும் ஆகிய சிவன் உம்முன் வந்து தனது திருவடிகளை எங்கள் தலைமேற் சூட்டினமையால் நாங்கள் அவனது திருவருளாகிய கடலில் மூழ்கினோம் அதனால், (நீருள் இருக்கும் மீனைச் சிச்சிலி கொத்தமாட்டாது ஓடி விடுதல்போல) பொய்யாகிய பாசங்கள் எல்லாம் எம்மைப் பற்றமாட்டாது நீங்கிவிட, நாங்கள் எங்களை அவனிடத்தில் ஒளித்து வைத்துச் சும்மா இருக்கின்றோம். இந்த நிலையில் எங்கட்குச் சோதனைகள் வருகின்றன.

குறிப்புரை :

அஃதாவது, `பாசங்கள் எங்களுடைய சோர்வை, மீன் நீரை விட்டு மேலே வரும் வரவைப் பார்க்கின்ற சிச்சிலி போலப் பார்க்கின்றன` என்பதாம். ஆகவே, `அப்பார்வை யினின்றும் நாங்கள் தப்புகின்றோம்` என்பது கருத்து. `பெம்மான் அம்மான்` என்னும் பொதுச் சொற்கள் சிவனையே குறித்தற்கு ``நந்தி`` என்னும் சிறப்புப் பெயரை இடையே பெய்தார். ``தந்து, விடுத்து`` என்பவற்றிற்கு `தந்தமையால், விடுத்தமையால்` என உரைக்க. `சும்மாதிருத்தல், வாளாதிருத்தல்` என்பனவே இலக்கணச் சொற்கள். அவை, `சும்மா, வாளா` என மருவி வழங்குகின்றன. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆகும் - தோன்றும்.
இதனால், முத்தி நிலையை அடைந்தவற்றை யெல்லாம் வகுத்துக் கூறி, இவற்றிற்குப் பின் சோதனை உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடும் கூடுவன் நானே.

பொழிப்புரை :

அறியாமையோடு கூடுதல் சிறிதும் இன்மையால், `அறிவுடையான்` எனப்படுதற்கு உரிமையுடையவனும், அரிய பெரிய வேதங்களில் எங்கும் பரவலாகப் போற்றப்படுபவனும், பெரிய தேவர்கட்கும் தேவனும், கண், செவி முதலிய பொறிகளையுடைய னாயினும் அவற்றால் அறியப்படுகின்ற ஐந்து புலன்களில் ஒருபோதும் தோய்வின்றித் தன்னிலையில் திரியாதிருப்பவனும், ஆகிய சிவனோடே யான் என்றும் கூடியிருப்பதன்றிப் பிரிதல் இல்லை.

குறிப்புரை :

இறைவனை, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``* என்றல் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்கும் தன்மை யுடைமை பற்றியேயன்றி, ஒரு காலத்தில் பாசத்தையுடையனாயிருந்து பின் நீங்கினவனல்லன் என்பது தோன்ற, ``அறிவுடையான்`` முதலிய மூன்றற்கும் பின்னர் இறுதியில் இதனைக் கூறினார். `இயல்பாகவே பாசங்களின் நீங்கினவன் எவனும் இல்லை` என்பவர், இதனை `ஒரு காலத்தில் புலனைக் கடந்தவனைக் குறிக்கின்றது` என்பர். இஃதே தொல்காப்பியத்துள் ``வினையின் நீங்கி விளங்கிய அறிவின் - முனைவன்``9 எனப்பட்டது. கூடுதல் பிரிவின்மையைக் குறிக்க வந்தது. `இயல்பாகவே பாசங்களால் பற்றப்படாது இருப்பவனைச் சார்ந்திருத்தலால், எம்மைப் பாசங்கள் வந்து அணுகுமாறில்லை` என்பது கருத்து. மிகுதேவர், காரணக்கடவுளர் மூவர். உம்மைகள், சிறப்பு. ``பொறியுடையான்`` என்பதன்பின், `ஆயினும், என்னும் சொல்லெச்சம் வருவிக்க. குறி - தன்னியல்பு. இதனால் மேல்,
``பதியணுகின்பசு பாசம்நில் லாவே``3
என்று அருளிச்செய்தபடி, பதியைச் சார்ந்து நிற்கும் உயிரைப் பாசம் பற்ற மாட்டாமைக்குக் காரணம் கூறப்பட்டது.
``சதசத்தாம் மெய்கண்டான், சத்து அருளிற் காணின்
இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதம்மிக்(கு)
எரிகதிரின் முன்இருள்போல் ஏலா அசத்தின்
அருகணையார்; சத்தணைவார் ஆங்கு``8
என்றதனை நோக்குக.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அறிவறிவென்றங் காற்று முகம்`` என்னும் மந்திரம், மேல், ``அறிவுதயம்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.3)

பண் :

பாடல் எண் : 3

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து)
அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம்என லாமே.

பொழிப்புரை :

குறியாக் குறி - தற்போதத்தால் தானே கொள்ளாது, குரு கொள்வித்தபடி கொண்ட இலட்சியம் கூடாத கூட்டம் - தற் போதத்தின் வழிச்சென்று புணராது, திருவருள் வழிச்சென்று புணர்ந்த புணர்ச்சி. அறியா அறிவு - தற்போதமாய் நின்று அறியாது, சிவ போதமாய் நின்று அறியும் அறிவு அவிழ்தல் பாசக்கட்டு நீங்குதல் எனவே, `குறியா ... ... அவிழ்ந்து` என்றது ``தானே கொள்ளாது குருவுணர்த்திய இலட்சியமாகிய சிவத்தில், தற்போதத்தால் முயலாது, திருவருள் வழியாக முயன்று ஒன்றுபட்டுபின்னும் அந்தத் திருவருளாலே அஃதொன்றையே அறிந்து நிற்குமாற்றால் பாசங்கள் நீங்கப்பெற்று` என்றதாயிற்று. பாசக்கட்டு நீங்கினமையால், பலவாகிய பொய்ப்பொருட்பற்றுத் தொலைய, ஒன்றாகிய மெய்ப்பொருளிடத்தே அன்பு மீதூர நிற்றலால், நன்னெறியாகிய அருட்சத்தியின் முதலாகிய அச்சிவத்தில் அவ்வருளால் அழுந்துதலாகிய இயற்கை இயைபே உண்மைச் சிவ சம்பந்தமாம்.

குறிப்புரை :

செறியாச் செறிவு - புதுவதாய்ச் சென்று இயையாது, முன்பே இயல்பாய் இயைந்துள்ள இயைபு, `சிவத்திற்கும், ஆன்மா விற்கும் இடையேயுள்ள அத்துவித சம்பந்தம், முன்பு இல்லாது பின்பு இடையே ஒரு காலத்தில் உண்டாகும் சம்பந்தம் அன்று: அஃது அனாதியேயுள்ள சம்பந்தம்` என்றபடி. எனவே, `சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்`* என்றது, முன்பு உணராதிருந்த அச்சம்பந்தத்தை உணர்தல் என்றதேயாம். `எல்லா உயிர்களிடத்தும் சிவனது அத்துவித சம்பந்தம் இயல்பாக உள்ளமை தோன்றவே, ``நின்றனவும், சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை அவர்க்கருள்செய்து`` எனக் குறித்தருளினார் சேக்கிழார்.*
``சென்றிவன்றான் ஒன்றில், சிவபூ ரணம்சிதையும்;
அன்றவன்றான் ஒன்றுமெனில் அன்னியமாம் -இன்றிரண்டும்
அற்றநிலை ஏதென்னில், ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றமற நின்றதுபோற் கொள்``*
என்னும் உண்மை விளக்கமும், இதனையே விளக்கிற்று.
பராநந்தி - பரைக்கு முதல்வனாகிய சிவன். `நந்தியின்கண்` எனவும், `நீடு அருளால்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. ``சிவம்`` என்றது, அதனோடு சம்பந்தம் ஆதலைக் குறித்தது. ``செறிவே`` எனவும் எனலாமே எனவும் போந்த பிரிநிலையும், தேற்றமும் ஆகிய ஏகாரங்கள், எத்தகைய சோதனையிலும் இந்நிலையினின்றும் சிறிதும் வழுவலாகாமையை உணர்த்தி நின்றன.
இதனால், `சோதனைகளால் சலியாது நிற்றற்குரிய நிலை இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களிலும் தங்கியிருத்தல் பற்றி, `இறை` என்றும், எல்லா உயிர்களையும் பாதுகாத்தல் பற்றி, `பதி` என்றும் சொல்லப்படுபவனாகிய எங்கள் சிவபெருமான், காற்றில் பரிசமும், கரும்பில் வெல்லமும், பாலில் நெய்யும், பழத்தில் சுவையும், மலரில் மணமும் போல, உயிர்களின் உள்ளங்களில் எல்லாம் இரண்டறக் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அக்கலப்பினை அறிந்து, `சிவோஹமஸ்மி` எனப் பாவிக்கும் பாவனையில் உறைத்து நின்றால், சோதனைகளால் வரும் ஊறு யாதும் இல்லையாம்` என்பது கருத்து.
``கசிந்த - தொண்டினொடும், உளத்து அவன்றான் நின்ற [கலப்பாலே
`சோகம்` எனப்பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. எனவே, `அஹம்பிரஹ் மாஸ்மி` `சோஹமஸ்மி` என்பன. இக்கலப்புப் பற்றிக் கூறப்படுத லல்லது, `சோயம் தேவதத்தன்` என்பதுபோல, விட்டும் விடாத இலக்கணை வகையாற் கூறப்படுவன அல்ல` என்றவாறாம். உளம், உளன் - மகர னகர உறழ்ச்சி. `உளன் எங்கும் கலந்து நின்றான்` என்க.
இதனால், சோதனைகளில் சலியாது நிற்றற்குரிய வழிவகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விருப்பொடு கூடி விகிர்தரை நாடில்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.

பொழிப்புரை :

எங்கள் சிவனார், தம்மை அன்பினால் நோக்கின், தம்முடைய சத்திபோல வந்து, அங்ஙனம் நோக்கி நிற்பவரது உள்ளத்தில், பேரறிவாய், உயிர்க்குயிராய் நிறைந்து, நீங்காதிருப்பார்.

குறிப்புரை :

பொருப்பகம் சேர்தரு பொற்கொடி, உமை; `சத்தி` எனற்பாலதை இவ்வாறு கூறினார். `முன்னர்ச் சத்திநிபாதம்போல வந்து, பின்னர்த் தாம் விளங்கி நிற்பார்` என்றபடி, `போல` என்பதன்பின், `வந்து` என ஒருசொல் வருவிக்க. ``நெருப்பு`` என்பது, `ஒளி` என்னும் பொருட்டாய், அறிவைக் குறித்து நின்றது. ``எங்கள் பிரானார்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``விகிர்தர்`` என்றது சுட்டளவாய் நின்றது. `மனத்திடை, நெருப்புருவாகி நிகழ்ந்து நிறைந்து இருப்பர்` என இயைத்துக்கொள்க.
இதனால், `சோதனைக் காலத்திலும் அன்பு குறைதலாகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள
`எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொழிப்புரை :

`பர வியோமம்` எனப்படுகின்ற அருள்வெளியில் உள்ள சிவபெருமான், அங்கு நின்றும் போந்து என் உள்ளத்துள்ளே புகுந்து அதனையே தனது இடமாகக் கொண்டான். கொண்டது எவ்வா றெனில், அவன் எனது உள்ளத்தை நோக்கி வரும்பொழுது, ``வாராத என் தந்தை வருகின்றான்`` என்று நான் பதைத்தெழுந்து எதிர்கொண்டேன். அதனால்தான் அவன் என் உள்ளத்தையே தனது இடமாகக் கொண்டுவிட்டான்.

குறிப்புரை :

`வியோமத்து நடுவுள் நின்றும் வந்து` என்க. வியோமம், பரவியோமம். கொள்ள - கொள்ளுமாறு. எழுதல், அதன் காரியத்தைக் குறித்து நின்றது. இருந்தான் - நீங்காது, இருந்தே விட்டான். `தன்னை வரவேற்கும் உள்ளப்பான்மை உள்ளவர்களை நோக்கியே அவன் வருவான்` எனவும், `அங்ஙனம் வந்த பின், அவன் மீண்டு நீங்கிப்போதல் இல்லை` எனவும் கூறியவாறு. ``வருதல் கோயில் கொள்ளல்`` என்பவற்றின் உண்மைப்பொருள், மேல், ``செறியாச் செறிவு``8. என்பதுபற்றிக் கூறியதனால் விளங்கும். `உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவ தினியே`3 என்பதனானும் இம் மந்திரப் பொருளை உணர்க. ``சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன்பள்ளி யாரே``l என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், `சிவனது அருமை பெருமைகளை எந்நிலையிலும் அயராது உணர்ந்திருத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே

பொழிப்புரை :

உயிர்களுக்கு ஆகும் நன்மைகளை யெல்லாம் செய்ய வல்லவனும், அனைத்துயிர்களையும் ஒப்ப நோக்கும் நடுவு நிலையாளனும் இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் புன்மை உண்டாகும்படி பொய்த்தல் இன்றி, உண்மையாக விரும்புங்கள்; விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, `இவ்வுயிர் யாது` எனச் சிறப்பாக நோக்கி, நும் செயற்கையை நீக்கி, இயற்கையாகச் செய்து அத்தொன்னிலையில் பின்னும் தொடர்ந்தே நிற்பான்.

குறிப்புரை :

`வேறுபடான்` என்பதாம். `புன்மையாக` என ஆக்கம் வருவிக்க. பொய்யாது நாடுதலாவது, வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை, பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை, பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை இஃதே தொன்னிலை; அனாதி நிலை; உண்மையியல்பு. அதில் தொடர்ந்து நிற்றலாவது, அதினின்றும் மாறுபடாதிருத்தல்.
இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.
[தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைசெய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.]
அடுத்து வரும் மந்திரம், ``தொடர்ந்து நின்றான்`` எனத் தொடங்குதலால், இப்பாடமே கொள்ளப்பட்டது.
இதனால், `மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் சற்குருவாய் வந்து எனது ஆறு அத்துவாக்களையும் அவற்றில் உள்ள சஞ்சித கன்மங்களை நீக்கித் தூய்மை செய்யும் பொழுது, அந்தச் செயலிலே தொடர்ந்து நின்றான். பின்பு தூய்மையாகிவிட்ட அந்த அத்துவாக்களிலே அவனே தொடர்ந்து நின்றான். அதன் பின்பு எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றா -கியும், பொருள்தன்மையால் வேறாகியும் நிற்கின்ற அந்த நிலைகளை எனக்கு அறிவித்துக் கொண்டே யிருக்கின்றான்.

குறிப்புரை :

`அவன் அவ்வாறிருக்கும் நிலையை மறவாதிருத்தலே நான் செய்யத்தக்கது` என்பது இசையெச்சம். `அதனைச் செய்தால் சோதனை எதுவும் என்னை ஒன்றும் செய்யாது` என்பது கருத்து. சோதித்தலுக்குச் செயப்படு பொருள் அத்துவாக்களேயாதலின் அவை வருவிக்கப்பட்டன. ஆகவே, பின் தொடர்ந்து நிற்றற்கு அவையே இட மாயின ஆதலின், `அங்கே` எனச் சுட்டினார். அதில் உள்ள ஏகாரம் பிற இடங்களினின்றும் பிரித்த பிரிநிலை. நல்லநாதன் - சற்குரு. `சற்குரு வாவான் சிவனே` என்பதைப் பின்னர், `ஆதிப் பராபரன் எந்தை` என் பதனால் சுட்டினார். படர்தல் - எங்கும் நிறைதல். `படர்ந்து நின்றும், கடந்து நின்றும் அவ்வழி காட்டுகின்றான்` என்க. ஏகாரம், ஈற்றசை.
இதனால், `இறைவன் உயிர்க்குயிராய் நின்று அறிவித்தலை மறவாமையே சோதனைகளினின்றும் நீங்கும் வழியாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும்
இவ்வழி நந்தி யியல்பது தானே.

பொழிப்புரை :

விண்ணுலகத்தில் விண்ணவர்கட்கும் அவர்கள் அவ்வுலகத்தில் பற்றற்றுச் செல்ல வேண்டிய அந்த வழியைக் காட்டும் அரிய பொருளாய் இருப்பான். மண்ணுலகத்தில் மக்களுக்குத் தந்தை போலவும், தாய்போலவும், உறவினர் போலவும் இம்மைக்கு வேண்டுவன பலவும் செய்து, அம்மைக்கு ஆகும் நல்வழியையும் கற்பித்துத் தனது உலகத்தில் இருக்கச் செய்வான். இஃது எங்கள் சிவபெருமானது இயல்பு.

குறிப்புரை :

``அமரர்க்கு`` என்பதை முதலிற் கொள்க. இவ்வழி - இவ்விடம்; மண்ணுலகம். தேவர்கள் இம்மை நலம் பெற்றுச் சிவனை ஓரளவு அணுகியவர் ஆகலின், அவர்க்கு வேண்டுவது அம்மை வழியேயாயிற்று. ஈற்றில், ``வழி`` என்பது, `இயல்பு` என்னும் பொருட்டு. `தன்னடியார்களைச் சிவன் தன் உலகத்து இருத்துவோன் ஆதலின் சோதனைகளில் அவர்களை நழுவ விடான்` என்பது கருத்து.
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்ஆதல்,
சார்ந்தாரைக் காத்தும் சலம்இலனாய்``3
எனவும்,
`` ... ... ... ... என்றுந்தான்,
தீதுறுவ னானால், சிவபதிதான் கைவிடுமோ!
மாதொருகூ றல்லனோ மற்று``9
எனவும் போந்த சாத்திர மொழிகளைக் காண்க.
இதனால், சிவன் தன் அடியார்களைச் சோதனைகளில் காத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி
அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.

பொழிப்புரை :

உலகப் பற்றை விடுத்துச் சிவப்பற்றைப் பற்றினோர், அந்நிலைக்கண் தமக்கு யாதேனும் இடையூறுவரின் அவர்கள் அவற்றைப் போழ்வது, ஞானமாகிய வாளைத் திரு வருளாகிய உறையினின்றும் உருவியாம். அங்ஙனம் இடையூற்றைப் போக்கி முன்போல அவர்கள் அறிந்து நிற்பது, தம் இயல்பையும், தலைவன் இயல்பையுமாம். (ஆகவே அடிமை நிலையினின்றும் பிறழார் என்பதாம்) அங்ஙனம் அறிந்து அடிமை செய்து நிற்றலால் அவர்கள் இரண்டறக் கலப்பது சிவபெருமானையே. அவர்கள் அறவே விட்டு விலகுவது, வேற்றியல்புடைய பல குழுக்களையாம்.

குறிப்புரை :

``ஞான வாள் ஏந்தும்; ... வான ஊர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே``* என்று அருளிச்செய்தது காண்க. ``ஞானத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. ஞானிகட்கு இடை யூறுகளாவன, ஐம்புலக் குறும்புகள். அறிவ, அன் பெறாத அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினைப்பெயர். அஃது அறிதலாகிய அத்தொழில்மேல் நின்றது. `தன்னோடு` என்பது இடைக்குறைந்து, பன்மை யொருமை மயக்கமாய் வந்தது. தேவர்க்கும் தேவர், மூவர். `எறிவது, செறிவது, பறிவது` என்பனவும் தொழில்மேல் நின்றனவே. `பற்றுவிடார்` என்பது பாடம் அன்று.
இதனால், சோதனைக் காலத்திலும் ஞானிகள் செய்யும் செயல்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின்
வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை
சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை :

யான் தொடக்கத்தில் தேவனாய் இருந்து, இப்பொழுது சிவனே ஆகிவிட்டேன். அஃது முழுமுதற் கடவுளாகிய சிவன் தனது ஞானமாகிய வாளை எனக்கு ஈந்தருள, இதனை யான் விடாது பற்றிக்கொண்டமையால். என்னை இனி அவனை அடைய ஒட்டாமல் வேறுபடுத்தி விலக்க வல்லவர் எங்கும், எவரும் இல்லை. அவ்வா றன்றி எங்கேனும், யாரேனும் என்னை வேறுபடுத்தி விலக்க வருவார்களேயாயின் அவர்கள் வந்து சென்ற சுவடும் தோன்றாதபடி அவர்களது வலிமையைச் சோதித்து ஓட்டிவிடுவேன்.

குறிப்புரை :

``நாம் ஆர்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்``, `தென்றிசைக்கோன்றானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய் கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`* ``யாம் ஆர்க்கும் குடியல்லோம்; யாதும் அஞ்சோம்`` எனப் போந்த திட்பத் திரு மொழிகளைக் காண்க. வேதித்தல் - பேதித்தல். ``வேதித்து`` என்னும் குற்றியலுகரம் கெடாது நின்றது. அங்கே - அப்பொழுதே. தெய்வம் ஆதல், மக்களினும் மேம்படுதல். அது ஞானத்தைக் கேள்வியளவில் உணர்ந்த நிலை. சிவமாதல் நிட்டை கூடியபின். வீரன் ஒருவன் தன்னையே சுட்டி, `இவன்முன்யாரும், எதுவும் செய்ய இயலாது` என்றவிடத்து, வீரம் காரணமாகப் படர்க்கைச் சொல் தன்மைப் பொருள் தருதல் போலவே, இங்கு `இவன்` என்பது தன்மைப் பொருள் தந்தது. இவன் ஆதிக்கண் தெய்வம், இப்போது `அவனே` என மாற்றி, முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், சோதனைகளில் ஞானிகளது துணிவு நிலை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அந்தக் கருவை அருவை வினைசெய்தற்
பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.

பொழிப்புரை :

எல்லா அனத்தங்கட்கும் மூலமாய் உள்ள ஆணவம், சத்தி சமூகம் ஆதலின் அருவமாய் உள்ள மாயை, அதனைக் கொண்டு சில செயல்களைச் செய்வதாகிய கன்மம் ஆகிய இப் பந்தங்களால் உளவாகின்ற, நடுங்கத் தக்க அச்சத்தைத் தரும், எண்ணிறந்தனவாகிய பிறப்புக்கள் அனைத்தையும் போக்கி, ஞானாசிரியர் ஆன்ம அறிவைத் தூயதாக்க, அதனால் சிவத்தைச் சேர்ந்து சிவமாயினோர், அதன்பின்பும் வரும் சோதனைகளை உறுதியோடு சந்தித்து வென்றால், அங்ஙனம் வென்ற திறமையாளர்க்கு அந்தச் சிவப்பேறு நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

`இல்லையேல் நழுவிடும்` என்றபடி. சேர்தற்குச் செயப்படுப்பொருள் வருவிக்கப்பட்டது. `அந்தக் கரு, அச்சோதனை` என்பன பண்டறி சுட்டு சந்தித்தல், புறங்கொடாமையைக் குறித்தது. ``தற்பரம்`` என்றது, பெறப்பட்ட பொருளைக் குறித்தபடி. ஆதல், என்றும் உளதாதல்.
இதனால், ஞானத்தை முறையாக எய்தினோர், அதன் பின்வரும் சோதனைகளால் கலங்காது நின்று சாதித்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத்
திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகும்தற் பரனே.

பொழிப்புரை :

முதுமை காரணமாக வருகின்ற திரையில்லா (இளமையாகவே யிருக்கின்ற) என்னுடைய உடம்பை அவ்வாறே என்றும் அழியாதிருக்கும்படி வைத்து, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் குற்றங்கள் அற்ற என்னுடைய உள்ளத்தில் புகுந்த சிவன், எனக்கு, அளவின்றிக் கிடக்கின்ற நூல்களின்மேல் செல்கின்ற அவாவை அறுத்து, சொல்லுக்கு எட்டாத ஓர் அரும்பொருளை எனக்கு உபதேசித்தான்.

குறிப்புரை :

`அதனையே யான் இத்தந்திரத்தில் கூறினேன்` என்றபடி. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. உரையற்றது ஒன்று - சிவானுபவம். ``நூலறிவை மட்டுமே கொண்டு நான் இத்தந்திரத்தைக் கூறவில்லை` என்பதாம். ``அரன் அடி சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே``1 எனப் பாயிரத்துட் கூறினாராகலின், இது கூற வேண்டியதாயிற்று. `சரியை முதலிய நான்கனுள் முதல் மூன்றும் நூலறிவானே கூறினும் கூடும்; ஞானம் அத்தகையது அன்று` என்பதாம். `உடலை நீங்கா திருக்கச் செய்தான்` என்றது நெடுநாள் இருக்கச் செய்தான் என்றபடி.
இதனால், `இத்தந்திரத்துள் ஞானம் இவ்வாற்றால் கூறி முடிக்கப்பட்டது` என முடிவுரை கூறினார்.

பண் :

பாடல் எண் : 1

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

பொழிப்புரை :

`வித்தியா குரு, கிரியா குரு, ஞான குரு எனக் குருமார் முத்திறப்படுவர். அவருள் வித்தியாகுருமார் இருக்குமிடம், `குருகுலம்` எனப்படும். குலம் - இல்லம். ஏனை இருதிறத்தார் இருக்குமிடம் `மடாலயம்` எனப்படும். அஃது இங்குச்சுருக்கமாக, ``மடம்`` எனப்பட்டது. அவருள்ளும் இங்கு, ``குரு`` என்றது, சிறப்பாக ஞான குருவையே.
வித்தியா குரவராவார் இல்லறத்தவரே. வானப்பிரத்தராயும் இருப்பர். ஏனையிருவரும் `கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்` என்னும் மூன்று ஆச்சிரமங்களில் தங்கட்கு ஏற்புடையதில் இருப்பர். இம்மூவரது இருப்பிடங்களுமே `மடம்` எனப்படும். எனினும், கிருகத்தர் தவிர ஏனையிருவரது இருப்பிடங்களையே வழக்கத்தில் `மடம்` என்பது குறிக்கின்றது.
``தாவில் சீர் முருகனார் திருமனைக் கெய்தி``
என முருக நாயனாரது இல்லத்தை, ``திருமனை`` என ஓரிடத்தில் அருளிச் செய்த சேக்கிழார் தாமே, அதனை வேறிடங்களில்
``திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல, அவர்மடம் சென்று புக்கார்``3
``முருகனார் திருமடத்தின் மேவுங் காலை``
``ஓங்குபுகழ் முருகனார் திருமடத்தில் உடனாக``3
என, ``மடம்`` என்றும், ``திருமடம்`` என்றும் அருளிச் செய்தார். ஆதலின், சிவனுக்கு அடியவராய்ச் சிவப்பணி செய்வார் யாவ ராயினும் அவரது இல்லங்கள், `திருமடம்` எனக் குறிக்கப்படுதற்கு உரியவாதல் விளங்கும். இன்னும் அவர், (சேக்கிழார்) அப்பரும், சம்பந்தரும் திருவீழிமிழலையில் சிலநாட்கள் எழுந்தருளியிருந்த இடங்களையே, `அக்காலங்களில் அந்த இடங்கள் திருமடங்களாய் விளங்கின` என்னும் கருத்தால்,
``ஈறி லாத பொருளுடைய
இருவர் தங்கள் திருமடமும்``l
 ``நாவினுக்கு வேந்தர் ``திருமடத்தில்``*
``பிள்ளையார்தம் திருமடத்தில்``
எனத், ``திருமடம்`` எனக் குறித்தருளினார். இன்னும் திருஞான சம்பநத்ர் திருமணத்தின் பொருட்டுச் சென்று, அதற்குமுன் சிறிதுபோது எழுந்தருளியிருந்த இடத்தையே, அவர் எழுந்தருளியிருந்தமை காரணமாகச் சேக்கிழார்,
``பூதநா யகர்தம் கோயிற்
புறத்தொரு மாமடத்திற் புக்கார்``*
என, ``மடம்`` என்று அருளிச்செய்தார்.
இனித் திருநாவுக்கரசு நாயனார், திருப்பூந்துருத்தியில்,
``திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் ஆங்கொன்று செய்தார்``
எனப்பட்டது, ஆசிரியன்மார்களும், அடியார்களும் எழுந்தருளி யிருக்கத் தக்கதாக, நிலையாக அமைந்த திருமடமாகும்.
``நான்காம் வருணத்தாறருள் நைட்டிகருக்கல்லது
ஆசாரியத் தன்மையில் அதிகாரம் இல்லை``
என்றும்,
``ஆதிதசைவராயின் கிருகத்தருக்கும் ஆசாரியத்
தன்மையில் அதிகாரமும் உண்டு``
என்னும் சிவஞான யோகிகள் தமது சிவஞான போத மாபாசியத்துச் சிறப்புப் பாயிரப் பாடியத்துள், ``ஆசாரியத் தன்மையின் அதிகாரம்`` என்னும் தலைப்பின்கீழ்ப் பலவகைத் தடைவிடைகளால் நிறுவினார். அதுபற்றிச், `சைவ சமய நெறி` நூலின்,
``சூத்திரனும் தேசிகனா வான்மரணாந் தம்துறவி,
சாத்திரத்தின் மூன்றும்உணர்ந் தால்``8
என்னும் திருக்குறளின் உரையில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பின்வருமாறு கூறியுள்ளதை இங்கு அறிதல் இன்றியமையாதது. (மூன்றும் - முப்பொருள்களின் இயல்பும்.)
``சூத்திரருள் நைட்டிகப் பிரமசாரிகட்கே
குருத்துவம்; கிருகத்தர்களுக்குச் சமயி,
புத்திர, சாதகத்துவம் மாத்திரம்; குருத்துவம்
இல்லை - என்று காமிகாகமத்தில் கூறப்படுதல்
பற்றி இவ்வாறுரைத்தார்.
- சூத்திரருட் கிருகத்தருக்கும் குருத்துவம்
உண்டு - என்று வேறுசில ஆகமங்களில்
விதிக்கப்பட்டது.
முன்னை விதி, நைட்டிகப் பிரமசரியம் வழுவாது
அநுட்டிப்போர் பலருளராகப் பெற்ற முனை
யுகங்களிலும், பின்னை விதி, நைட்டிகப்
பிரமசரியம் வழுவாது அநுட்டிப்போர்
மிக அரியராகப் பெற்ற இக்கலியுகத்திலும்
கொள்ளற்பாலன வாதலின், விரோதமின்மை
தெளிக.``
இதனால், `ஆகமங்களில் சூத்திரர்களில் கிருகத்தருக்கும் ஆசாரியத் தன்மையில் அதிகாரம் உண்டு` எனக் கூறப்பட்டிருப்பதை அறிகின்றோம். வழக்கத்திலும் அவ்வாறு உள்ள ஆசாரியர்கள், `தேசிகர்கள்` எனப் பெயர் பெற்று விளங்கக் காண்கின்றோம். அவர்களைச் சிவஞான யோகிகள் `ஆசாரியர்கள்` என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், தீக்கையைப் பற்றி விரிவாகவும், சுருக்க மாகவும் கூறுகின்ற, சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் என்னும் நூல்களிலும, சாதியை வைத்துத் தீக்கை வேறுபாடு கூறவில்லை. அவ்வாறே சாதி பற்றிக் கூறப்படும் சைவ பேதங்களையும் அந்நூல்கள் குறிப்பிடவில்லை. இந்நாயனாரும் குருமார்களைப் பற்றிப் பேசும் இடங்களில் இவ்வாறெல்லாம் கூறவில்லை.
`ஞான தீக்கையால், உயிரே சீவனாய் இருந்தது, சிவமாகி விடுகின்றது` என்றால், அதன்பின் அதற்குக் கருவியாய் அமைந்து, அது வேண்டியவாறே பயன்படுகின்ற உடம்பைப் பற்றிய சாதி, தீக்கை யினாலும், மாறுதல் இல்லை` என்பதை உடன்பட முடியவில்லை.
சிவப்பிரகாச நூலில் உமாபதி தேவர், ``பெத்தான்மாவின் உடம்பே பாசம்; முத்தான்மாவின் உடம்பு திருவருளே`` என்கின்றார்.3 இந்நாயனாரும்,
``திண்மையின் ஞானி சிவகாயம்``l
என்பதனால், ``சிறந்த ஞானியின் உடம்பு சிவனது திருமேனியே`` என முன் தந்திரத்தில் கூறியிருத்தலைப் பார்த்தோம். துறவிகள் உடம்பிற்குச் சமாதிக் கிரியை விதித்ததும் இது பற்றியே. திருநாவுக்கரசு நாயனார்,
``எவரேனும் தாம்ஆக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்டபோது
உகந்தடிமைத் திறம்நினைந்து அங்கு உவந்து நோக்கி,
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.``9
எனப் பொதுவான திருவேடமுடையாரைப் பற்றியே இவ்வாறு அருளிச் செய்தார். அங்ஙனமாக, `சிறந்த ஞானாசிரியரால் பலவகைத் தீக்கைகளையும் செய்து, ஔத்திரி தீக்கையால் அத்துவ சோதனையும் செய்யப்பட்டபின்னும் அந்த அத்துவாக்களையுடைய உடம்பு, தாய் வயிற்றினின்றும் பிறந்தது பிறந்தபடியேதான் உள்ளது. சிறிதும் மாற்ற மில்லை` எனக் கூறுதல், `சமயத்திலும் சாதியே வலுவுடையது; அது பிறப்பு மாறினாலன்றி, மாறாது` எனக் கறும் மிகுதி நூல்களையே தலை யாய பிராமாணங்களாகக் கொள்கின்ற சுமார்த்த சமயத்தின் தாக்கமே யாகும். `சைவத்தில் அஃதல்லை` என்பது திருத்தொண்டர் புராணத்தில் மிக மகி வெளிப்படை. `தீக்கையால் உயிரினது நிலை மட்டுமே மாறும்; உடலது நிலையில் மாற்றம் உண்டாகாது` எனக் கூறினால், `துறவிகளது உடம்பிற்குச் சமாதி விதித்தலால் பயன் என்னை, என்க. `அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்` என்போர்` நிருவாண தீக்கைபெற்றுச் சைவ சந்நியாசமும் பெற்ற பின்னரும், `முன்பு இருந்த அந்தணன் அந்தணன்தான்; வேளாளன் வேளாளன் தான்` எனக் கூறுதல் எவ்வளவு தொலைவு உண்மையோடு ஒட்டு கின்றது என்று பார்த்தல் வேண்டும்.
எனவே, இங்கு, ``குரு`` என்றது, எவ்வாற்றாலேனும் ஆசிரியத்தன்மை பெற்றோரையேயாம். எனினும் சந்நியாச ஆச்சிரமத்தில் உள்ள குருமார் இருப்பிடத்தற்கே `மடம்` என்னும் பெயர் சிறப்பாக உரியது. வானப்பிரத்த, கிருகத்த ஆசாரியர்கள் இருப்பிடத்திற்கு அது பொதுவாக உரியதே.
இனி, `சந்நியாசிகட்கு ஆசாரியத் தன்மை இல்லை` என்னும் ஓர் வாதமும் உண்டு.*
அது தபசுவி - என்னும் சந்நியாசியைக் குறித்து மட்டுமே கூறியது` எனச் சிவஞான யோகிகளே மேற்குறித்த இடத்தில் விளக்கினார். இங்கு வானப்பிரத்தர் `தபசுவி` அல்லாத சந்நியா சிகளுள் அடங்குவர்
``அப்பாஇம் முத்திக்(கு) அழியாத காரணந்தான்
செப்பாய், அருளாலே; செப்பக்கேள் - ஒப்பில்
குருலிங்க வேடம்எனக் கூறில்இவை கொண்டர்,
கருஒன்றி நில்லார்கள் காண்``
``கற்றா மனம்போல் கசிந்துகசிந் தேஉருகி
உற்றாசான் லிங்கம் உயர்வேடம் - பற்றாக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோகிக்கும்
பத்திதனில் நின்றிடுவார் பார்``9 என்றபடி, சித்தாந்த முத்திக்குத் துணையான, குரு லிங்க சங்கமங்களே யாதல் பற்றி அவைகளை, மேல் இடம் வாய்த்துழிக் கூறிய நாயனார், இங்கு முதற்கண் குரு இடமாகிய திருமடத் தரிசனத்தின் சிறப்பைக் கூறுகின்றார். இவ்வதிகாரம் ஆறு மந்திரங்களையுடையது.
`சிவபெருமான் ஒருவனுக்கே உரியன` எனக் கருதிக் கொண்டு, தனியாகப் படைக்கப்படுகின்ற படையல்களும், நெருப் பிடமாக இடப்படுகின்ற அவிசுகளும், தூபம், வேள்வி, குருலிங்க சங்கமங்கட்காக அடுகின்ற அட்டில் இவற்றினின்றும் எழுகின்ற புகைகளும், வழிபாடுகளில் மெல்ல ஓதுகின்ற மந்திர ஒலிகளும், இசையுடன் உரக்க ஓதுகின்ற வேதம், திருமுறை இவற்றின் ஓசைகளும் வந்து வந்து பரவிக் குவிகின்ற இடம் குருமடம், இதைக் கண்ணால் கண்டவர்களும் சிவலோகத்திலே சிவனது திருவடியைச் சார்வார்கள்.

குறிப்புரை :

`கண்டவர்கட்கு உலக ஆசைகள் நீங்க, சிவபத்தி தோன்றி முதிரும்` என்பதாம். ``நல்லாரைக் காண்பதுவும் நன்றே``8 என்றதும் இது பற்றி, ``ஈசன்றனக் கென்றே உள்கி`` என்பதை முதலிற்கொள்க, கருதுதலைச் `சங்கற்பம் செய்து கொள்ளல் என்பர். `அங்ஙனம் செய்து கொண்டு செய்வனவற்றிற்குப் பயன் மிகுதி என்பது ஆகமங்களின் துணிபு. ``ஈசன்`` என முன்னர்ப் போந்தாமையால், ``மலரடி`` என்றதும் அவனது திருவடியே யாயிற்று. `ஈசன்` என்பது சிவ பெருமானுக்கே உரிய சிறப்புப் பெயர். ``உள்கி`` என்பதன்பின், `செய்ய` என ஒரு சொல் வருவித்து ``பரந்து`` என்பதைக் ``குவியும்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. தெளிவு நோக்கி எதிர்காலம் `சார்ந்து நின்றார்` என இறந்த காலம் ஆயிற்று. பின்னிரண்டடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், குருமட தரிசனம் பத்தியைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

இவன்இல்லம் அல்ல(து) அவனுக்கங் கில்லை
அவனுக்கு வேறில்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன்இல்லம் என்றென் றறிந்தும்
அவனைப் புறம்பென்(று) அரற்றுகின் றாரே.

பொழிப்புரை :

`சிவனுக்கென்று சுத்த தத்துவங்களில் உலகங்கள் உள்ளன` எனக் கூறப்படுவன, அவனுக்காக அமைக்கப்பட்டன அல்ல இந்தச் சிவகுருவுக்காக அமைக்கப்பட்டனவே. (ஏனெனில், சிவனுக்கு இருக்க ஓர் இடம் தேவையில்லை. சிவகுருவுக்கு, மாசுடம்பு நீங்கிய வுடன் இருக்க ஒரு தூய இடம் வேண்டும்.) `சுத்த தத்துவ உலகம் தவிர, அவற்றின் வேறாகச் சிவனுக்கென்றே இடம் இருக்கின்றது` என்று சொன்னால் அந்த இடம் இந்தச் சிவகுருதான். இதை உண்மை நூல்கள் பலவற்றால் அறிந்தும் சிலர், `குருமடம் வேறு; சிவனது உலகம் வேறு` எனக் கூப்பாடு செய்கின்றனர்.

குறிப்புரை :

`குருமடம் சிவலோகமே` என்றபடி. ``இல்லம்`` என்பதை ``அங்கு`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியில், `சிவனே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப்பட்டது. (அவனுக்கு இல்லம் இவனே` என மாற்றிக்கொள்க. ``என்று என்று`` என்னும் அடுக்கு, பலமுறை கற்றும், கேட்டும் அறிதலைக் குறித்தது` ``அவனைப் புறம்பென்று`` என்பதற்குக் கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது.
இதனால், `குருமட தரிசனம், சிவலோக தரிசனமே` என அதனது சிறப்புக் கூறப்பட்டது. `அவ்விடம் திருவருள் விளக்கம் நிரம்பியுள்ள இடம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரிய சிறப்பில்லி எம்மிறை
ஓடும் உலகுயி ராகிநின் றானே.

பொழிப்புரை :

ஞானமாகிய கடலில் மூழ்குதற்கு உரிய பெரிய துறையாகிய குருமடத்தைச் சென்று நான் தரிசித்தபின்பு, எல்லா உயிர்களும் சென்று சேரும் இடமாகிய சிவனது, அப்பொழுது கொய்த தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகள் தேடிக் காண்பதற்கு அரியனவாகவே இருக்க, திருமடத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ள சிவகுருவே எங்கட்குச் சிவனாய் இயங்குகின்ற உலகம், உயிர் எங்கும் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

``பெருந்துறை`` என்றது, குறிப்புருவகம். `பெரிதாகிய கடலில் சென்று ஆடுதல், அதற்குரிய துறைவழியாக அன்றி இயலாத வாறு போல, அகண்ட ஞானத்தைப் பெறுதல் அதற்குரிய குருமடத்தில் சென்றன்றி இயலாது` என்பது தோன்ற இவ்வாறு உருவகித்தார். ``பெருந்துறை`` என்னும் சொற் குறிப்பால், `இந்நாயனார் ஆளுடைய அடிகள் காலத்திற்குப் பின் இதனை அருளிச்செய்தார்` எனக் கருதலாம்.
``பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன்``3
என அடிகளைச் சிவப்பிரகாசர் போற்றினார். `ஞானத்தைப் பெற்றவர்களுக்கு அதனை அளித்தருளிய ஞானகுருவே சிவன்` என்பதை, ``குருவே சிவம் எனக்கூறினன் நந்தி``88? என நாயனார் முதற்கண் கூறியதுபோலவே, அருணந்தி தேவரும்,
``பரம்பிரமம் இவன்என்றும், பரசிவன்றான் என்றும்,
பரஞானம் இவன்என்றும், பராபரன்றான் என்றும்,
அரன்தரும்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
அருட்குருவை வழிபட``9
எனக் கூறினமை அறியற்பாலது. இவ்வாற்றால், `சிவனது சேவடி தேடி அடைய அரியன அரியனவாகவே இருக்க, நாங்கள் குருமடத்தில் குருவினது சேவடியையே சிவனடியாக அடைந்து விட்டோம்` என்றார். சிறப்பு இல் - ஞானம் நிலையம். இகர ஈறு, அதனையுடைய குருமூர்த்தியை உணர்த்திற்று. ``கைகூடும் சிவனது ... ... ... தேட அரிய`` என்பதை இடைப் பிறவரலாக்கி, இம் மந்திரத்தை வினை முடிபு செய்க. `அரிய ஆக` என ஆக்கமும், `எம்மிறையும், உலகுயிராகியும்` என எண்ணும்மைகளும் விரிக்க.
இதனால் ஞானிகட்குக் குருமடம் புகலிடமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.

பொழிப்புரை :

`சிவன் எழுந்தருளியிருக்கின்ற இருக்கை, கயிலாய மலை, ஞானிகளது உள்ளம் என்பன. முறையே திருமடத்தில் உள்ள பீடமும், மடலாயமும், திருநந்தவனமுமே` என்று நான், பன்னிரு பகுதியாகிய, பெரிய தமிழ்நாட்டு மக்கட்கு உறுதியாகக் கூறுவேன்.

குறிப்புரை :

`சிவனுடைய` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. ``இயம்புவன்`` என்பது மீள மீள வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. மடம் முதலிய மூன்றினையும் ஆசனம் முதலிய மூன்றதனோடும் நிரல் நிறையாக இயைக்க. ``ஆதாரம்`` எனப்பின்னர் வருதலால், ``படம்`` என்பது பீடத்தைக் குறித்தது. தானியாகு பெயராக, மடத்தையே `பீடம்` என வழங்குதல் உண்மையையும் இங்கு நோக்குக. நந்தவனம் மலர்பொதுளி விளங்குதலால், அது ஞானிகளது உள்ளமாயிற்று. அதன் மணம், ஞான மணமாம். ஈராறு நிலம் - தமிழ்ப் பன்னிரு நாடுகள்.
``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்``8
என்றமையால், தொல்காப்பியர்க்கு, இவைகளைக் கொடுந்தமிழ் நாடாகக் கூறுதல் கருத்தாகாமை விளங்கும்.
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே``3
என நாயனாரே பாயிரத்துட் கூறியவாறு தமிழ் மக்கட்கே தாம் நூல் செய்கின்றார் ஆகலானும், ``தமிழ் மண்டலம் ஐந்து`` எனத் தமிழ்நாடு முழுதையும் நோக்கினார் ஆகலானும் தமிழ் மக்களையே குறித்தார். இனி, `ஈராறும், இரண்டும் ஆகிய நிலம்` என வைத்து,`பதினான்கு உலகங்களில் உள்ளார்க்கும் இயம்புவன்` என்றும் உரைப்பர். `அஃது எத்துணைப் பொருத்தம் உடையது` என அறிந்துகொள்க.
இதனால், `குருமடத்தில் உள்ள பீடம் முதலியன சிவனது பீடம் முதலியனவேயாம் சிறப்புடையன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

முகம்பீட மாம்மட முன்னிய தேகம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி
அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

பொழிப்புரை :

குருமடத்தில் முதன்மையாக அமைந்துள்ள பீடம், சிவபெருமானுடைய முகம். மடாலயம் உயிர்களால் நினைக்கப் படுகின்ற சிவனுடைய திருமேனி. திருமடத்தில் உள்ள பல உயிர்ப் பொருட்கள், உயிரல் பொருட்கள், சிவனுடைய வியாபகத்துள் அடங்கியுள்ள உயிர்களும், உயிர் அல்லாதனவும் ஆகிய உலகங்கள். குருமூர்த்தியின் ஆட்சி, சிவபெருமான் உயிர்களின் பாசத்தைப் போக்குதற்குச் செய்கின்ற செயல்கள். குருமூர்த்தியினுடைய உள்ளம், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மேலான இருக்கை. குருமூர்த்தி தாம் இருப்பதாகக் கொண்டுள்ள குகை, சிவனுடைய இடமாகிய சிதாகாசம். ஆகவே, குருமூர்த்திக்கு அவர்தம் மாணவர் செய்யும் பதினாறு வகை முகமன்களோடுகூடிய வழிபாட்டுச் செயல்கள். உலகில் சிவபெருமானுக்கு அந்தணர் முதலியோர் அவ்வாறு செய்யும் வழிபாட்டுச் செயல்களே.

குறிப்புரை :

``அகம்`` இரண்டில் முன்னது இடவாகு பெயராய், அதில் உள்ள பொருட்களைக் குறித்தது பரவர்க்கம் - ஏனைப் பொருட்கள். செய் - செயல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஆசு இன்மைக்கு ஏதுவான செயல்` என்க. `தேயம், காட்சி` என்பன பாடம் அல்ல. பரம் + ஆதனம் = பரமாதனம். எண் எண் - எட்டும் எட்டும்; பதினாறு. இஃது எண்ணாகு பெயராய் அத்துணை வழிபாட்டுச் செயல்களைக் குறித்தது எழுவாயாய் நின்று ``கிரியை`` என்னும் பயனிலையைக் கொண்டது. `குகையாகிய ஆதாரம்` என்க. குகையை `ஒடுக்கம்` என்பர்.
`பீடம் முகமாம்; பரவர்க்கம் அகம்; ஆட்சி செயல்; தற்குகை ஆதாரம் சிதம்பரம்; ஆகவே, எண்எண் முகமன் கிரியை` என இயைத்துக் கொள்க. ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிர் எதுகையுமாம்.
இதனால் குருமடமே சிவசொரூபமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும்
சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும்
செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

பொழிப்புரை :

புற ஆரவாரங்களை விடுத்து, அகநோக்குக் கொண்டு நோக்குகின்ற ஞான குரவர்கட்கு, அனைத்திற்கும் அடி நிலையாகிய அந்த அக நோக்கு உணர்வே சிவன் எழுந்தருளி யிருக்கும் ஆசனமாகும். அந்த அகநோக்கு உணர்வு. நிலை திரியாதே மாணாக்கர்பொருட்டு உலகை நோக்குகின்ற அதுவே சிவன் கொள்கின்ற திருவுருவமாகும். அங்ஙனம் நோக்கி மாணாக்கர்க்குச் செய்யும் அருட் செயல்களே அத்திருவுருவத்தில் உள்ள சிவபெருமானாகும்.

குறிப்புரை :

வழிபாடு, `ஆசனம், மூர்த்தி, மூர்த்திமான்` என்னும் மூன்றும் அமையச் செய்யப்படும் ஆகலின் அம்மூன்றும் குரு மூர்த்திகளது அருட்செயலில் அமைதல் காட்டியபடி. `ஞானகுரு தம் மாணாக்கர்க்கு அருள்புரியுமிடடத்துத் தமது நிலையை இவ்வாறு பாவித்து நின்றே புரிதலால், அவர் செயல் அவருக்குச் சிவப் பணியாயும், ஏனையோர்க்குத் திருவருட் செயலாயும் அமைந்து பயன் தருகின்றன` என்பதாம்.
`அகமுமாம் ஆதாரம் பீடம் ஆம்` என்க.
ஆதனம் - ஆசனம். என்றது, இங்கு, உறையும் இடமாகிய உருவத்தைக் குறித்தது. சிவனுக்குச் சத்தியே திருமேனியாதல் அறிக வழிபாட்டிற்கு உரிய வகையில் கட்புலனாகியிருக்கும் நனி நுண்ணுடம்பு சிவன் அவ்வுடம்புகளின் உள்ளிருக்கும் உயிர் ஆதலின், நனி நுண்ணுடம்பையே இங்குக் கூறினார். சத்தி வெளிப்படும்பொழுது சிவமும் உடன் வெளிப்பட்டு நிற்கும் ஆதலின் ``சகமுமாம் சத்தி`` என்றும், ``தெய்வம்`` என்றது, திவ்வியமாகிய செயல்களை.
இதனால், ஞானகுருவினது பாவனை முதிர்ச்சியால் அவர் சிவமாய் நிற்றலின் அவரது மடம் சிவசொரூபமாயிற்று` என்பது விளக்கப்பட்டது.
ஆறு, ஏழாந் தந்திரங்களில் குருவைப் பற்றிக் கூறினா ராயினும் அங்குக் குருமடத்தின் சிறப்புப் பற்றிக் கூற இயைபில் லாமையால், அவற்றின் ஒழிபாக இதனைக் இங்குக் கூறினார். இது முன்னைத் தந்திரத்து இறுதிக்கண் நின்ற `பத்தி யுடைமை` அதிகாரத்தோடு இயைந்து நிற்றலும் காண்க.

பண் :

பாடல் எண் : 1

மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.

பொழிப்புரை :

`அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் இரு மாயைகள் தம்முள் ஒடுக்க ஒடுங்குகின்ற ஐந்து உடல்களையும் அவற்றது இயல்பை உள்ளவாறு உணர்ந்து, `அவை நாம் அல்ல` என்று கழிக்கக் கழிதலால், மூன்னர்த் தாம் சடமாகிய அவையாகாது, சித்தாகி நின்று, அங்ஙனம் நின்ற அந்நிலையில், இயற்கையிலே அசுத்தமாய் நின்ற பாசஞானமும், செயற்கையால் அசுத்தமாகிய பசு ஞானமும் போலாது, இயல்பாகவே தூய்தாகிய பதிஞானம், தோன்ற, அதனானே அந்த ஞானத்திற்கு முதலாய் உள்ள சிவத்தை அறிந்து, அதனுள் அடங்கியிருப்பவர்` மோனிகட்கு மேலாகிய மோனிகளாவார்.

குறிப்புரை :

`அத்தகையோரே ஞானக் குரவர்` என்பது குறிப்பெச்சம். சுத்தமாயை சகலர்க்கு உடம்பாய் வருதல் இன்மையானும், இங்குக் கூறுவது சகலரையே ஆகலானும் ``மாயை இரண்டு`` என்பதற்கு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என உரைத்தல் கூடாமையறிக. சிவசத்தியால் செய்யும் மாயைகளை அவையே செய்வனபோலக் கூறினார் ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தில் கூறப்பட்டன. ஞான அதிமோனர் - ஞான முதிர்ச்சியால் முற்றிய மௌன நிலையை அடைந்தவர்.
ஞானகுரு தரிசனச் சிறப்பைக் கூறுதற்கு முதற்கண் ஞானகுருவின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலா அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.

பொழிப்புரை :

உயிர்க்குச் சிவத்தைக் காட்டாது தம்மையே காட்டி நிற்கின்ற முப்பத்தாறு கருவிகளின் சேட்டைகளும் அடங்கும் முறையை மேலான குரு உபதேசம் செய்யும் பேற்றினை அக்குருவைத் தரிசித்து வணங்குவதாகிய வணக்கமே தரும். அவ்வுபதேச வாயிலாக அது மேலும் சிறப்பாகச் சிவனது திருவடியைத் தரும் பின்பு முடிநிலைப் பேறாக அவனது ஆனந்தத்தைத் தந்து, அஃது எல்லை யின்றிப் பெருகி வருமாறு பேணியும் நிற்கும்.

குறிப்புரை :

`ஆகவே, உபதேசத்திற்கு முன்னும், அதன் பின் சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நிலைகளிலும் குரு வழிபாட்டினைத் தவிரற்க` என்பது குறிப்பெச்சம்.
``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது - முன்னவனே
தானேதா னாச் செய்தும், தைவமென்றுந் தைவமே;
மானே தொழுகை வலி``3
என்றார் மெய்கண்ட தேவரும்.
அங்கே - அப்பொழுதே. ``அடங்கிடல்`` என்றது, அதற்குரிய வழியைக் குறித்தது. `குருபரன் கூற, அவனைக் கும்பிடுதல் தந்திடும்` என இயைக்க. கும்பிடு, முதனிலைத் தொழிற்பெயர். `தத்துவம் முப்பத்தாறனுள் மேலே உள்ள சிவதத்துவம் ஐந்தும் செலுத்துதல் அளவாய் நிற்க, ஏனை முப்பத்தொரு தத்துவங்களே சகலர்க்கு மேற்கூறிய ஐந்துடம்புகளாய் வந்து பொருந்தும்` என்க.
இதனால், ஞான குரு தரிசனம் அடைதற்கரிய பேறுகளை யெல்லாம் அளித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையு மாகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.

பொழிப்புரை :

தம்மை அடைந்தவரை, முத்துரியங்கட்கும் அப்பாற்பட்டு ஒளிரும் பேரொளிப் பிழம்பாகிய, அணுகுதற்கரிய பரசிவப் பொருளேயாய், அதனைப்போலவே எங்கும் வியாபகமாய், அறிவு மாயாகாரியங்களின்மேல் படர்ந்து செல்லுதலும், அதனை விட்டு ஒன்றும் அறியாது அறியாமையுள் மூழ்கிக்கிடத்தலும் ஆகிய `சகலம், கேவலம்` என்னும் இரண்டும் அற்ற இடமாகிய சுத்த நிலையிலே தங்கும்படி கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பெருஞான குருவின் திருவடி தரிசனச் சிறப்பை அளவிட்டுச் சொல்ல இயலாது.

குறிப்புரை :

முத்துரியங்களை முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஆகி` என்பதை, ``பரசிவம்`` என்பதனோடும் கூட்டுக. விரிவு, சகலம். குவிவு, கேவலம். ``விரிவு குவிகு அற`` என்றதனஆல், `அவை அற்ற நிலத்தே விட்ட பெரிய குரு` என்க. விடுதல் - சேர்த்தல். அதிகாரம் `தரிசனம்` ஆதலின், ``பதம்`` என்பதும், பாத தரிசனத்தையே என்க. பாதம் பயன் தருதலும் தரிசனத்தினாலே யென்பதும் உணரற்பாற்று.
இதனால், முன் மந்திரத்தில் `வேறே சிவபதம் மேலா அளித்திடும்`` எனக் கூறப்பட்ட பயனின் பெருமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

பொழிப்புரை :

என் ஞானகுரு நந்தி பெருமான்; அவர் தாயைப் போலும் கருணையுடையவர்; உயிர்க்கு உறுதி பயக்கும் சொல்லை யுடையவர்; கட்புலனாகின்ற திருமேனியை உடையவர். எனினும் பாவிகட்கு எட்டாதவர். யான் தலையைப் பெற்றது அவரது திருவடிகளில் படும்படி வணங்குதற்காகவே; மற்றும் அவற்றைச் சூட்டுதற்காகவுமாம். நான் வாய்பெற்றது அவரை வாழ்த்துதற்காகவே. நான் கண்பெற்றது அவரைத் தரிசித்தற்காகவே, நான் மனத்தைப் பெற்றது அவரை நினைத்தற்காகவே.

குறிப்புரை :

`ஞானத்தை விரும்புவோர் பலரும் எந்த ஞான குருவையேனும் அடைந்து, அவருக்கு ஆட்படுதலையே தங்கள் பிறவிப் பயனாக உணர்தல் வேண்டும்; இல்லையேல், ஞானம் கிடையாது; கிடைப்பினும் நிலைத்து நின்று பயன் தாராது` என்பதாம். ஆயன் - ஆய் தாய் போன்றவன். வாய் - வாய்மை. `காயத்தன்` என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. `அந்நந்தி` என்பது, நான்கடிகளிலும் சந்தி நகர ஒற்று தொகுக்கப்பட்டு நின்றது. ``அடிக்கு, நந்திக்கு`` என்னும் நான்கன் உருபுகள் `அடியை வணங்குதற்கு, நந்தியைச் சிந்தித்தற்கு` என வினை பற்றி நின்றன. `பூவினைச் சென்றான், கடைக்குச் சென்றான்` என்பனபோல.
இதனால், ஞான குரு தரிசனமே மானுடப் பிறப்பின் பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடந் தீர்த்து பயங்கேடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`கருடோகம் பாவனையால் விடம் நீங்குவது போல்ச சிவோகம் பாவனையால் மும்மலங்களும் நீங்கும்` என்பது இதன் திரண்ட பொருள். சிவோகம் பற்றி முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. கருடோகம் பாவனை, சிவஞான போத ஒன்பதாம் சூத்திர பாடியத்துள் இனிது விளக்கப்பட்டிருத்தல் காண்க. இதனானே, `பாவனை பொய்யன்று` என்பதும் நிறுவப்பட்டதாம். ``கருட தியானத்தால் விடம் அகலும் அதுபோல``8 எனச் சிவஞான சித்தியிலும் சொல்லப்பட்டது. ``அவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக. ``அவன்`` என்றது பாவிப்பவனை.
இதனால், குருத்தியானமே சிவோகம் பாவனையாதல் கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்`` என்னும் மந்திரம், மூன்றாம் தந்திரத்து, `கால சக்கரம்` அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 6

தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும்
மான்ற அறிவும் மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

பொழிப்புரை :

தோன்ற அறிதல் - பொருள்களை இனிது விளங்கத் தெளிய உணர்தல். தோன்றல் தோன்றாமை - விளங்கவும் விளங்காமலும் ஐயமாக உணர்தல். மான்ற அறிவு - யாதும் அறியாது அறிவு மூடமாதல். இவையே மறித்து மறித்து வரும் நனவு கனவு உறக்கங்களாம். இம்மூன்றும் நீங்கிய நான்காம் நிலை துரியம் அது மூன்று வகையாய் நிகழும். (அவை முன் தந்திரத்தில், `முத்துரியம்` என்பதில் காட்டப்பட்டன. அம்மூன்று துரியங்களும் நீங்க, ஐந்தாவதாகிய அதீதத்தில் ஞான குருவை உணர்பவன் (மேற்கூறியவாறு கருடோகம் பாவனை செய்பவன் கருடனே யாதல் போலக்) குருவேயாகிவிடுவான்.

குறிப்புரை :

`மலம் நீங்கிய முத்தனாய் விடுவான்` என்பதாம். நந்தி நிலையை யடைந்தவனையே ``நந்தி`` என்றார். ``உயர் மோனந்தான்`` என்றது `ஞானகுரு` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், `துரிய பாவனை முதிர, அதீதபாவனையால் பாவகன் பாவிக்கப்படும் பொருளாகிவிடுவான்` என, மேல், ``சிவன் அவன் ஆம்`` எனக் கூறியது மெய்ம்மையாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.

பொழிப்புரை :

புருடனது உடம்பில் சந்திர மண்டலம் எனக் குறிக்கப்படுகின்ற அந்த எல்லைக்குள்ளேயிருக்கின்ற புருவ நடுவில், நறுமணம் பொருந்திய ஈரிதழ்த் தாமரை மலரில் அருட்சத்தி, பிறிதொரு நிறத்தொடு கூடாது தூய்மையாய் உள்ள படிகம்போன்றிருக்கின்றார். உனது பாச பந்தங்களை முற்ற அறுத்த ஞான குருவை நீ அவ்விடத்திலே தியானி.

குறிப்புரை :

`தியானித்தால் அவர் உன்னைச் சிவனாக்கி விடுவார்` என்பது குறிப்பெச்சம். ஞான பூசைக்கு ஓமத் தானம், பூசைத் தானம், தியானத் தானம் முறையே உந்தி, இதயம், புருவநடு ஆதலின், `தியானத்தைப் புருவ நடுவிலே செய்க` என்றார். புருவ நடுவே `ஆஞ்ஞை` எனப்படும். ஆஞ்ஞை, சிவனது ஆணை. அது சத்தியேயாதலை உணர்க. `இரண்டிதழ்க் கந்த மலரில்` என மாற்று. ``கன்னியும்`` என்னும் உம்மை சிறப்பு. பரம் குரு - மேலான குரு.
இதனால், கருடோகம் பாவனைபோலக் குருவைப் பாவகன் தானாகப் பாவித்தலைச் செய்யும் இடம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மனம்புகு தான்உல கேழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க
சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே

பொழிப்புரை :

`ஏழுலகங்களிலும் உள்ள உயிர்கள் மகிழும்படி அவைகளின் மனத்தினுள் இருப்பவனும், நீண்ட வானுலகத் தேவரையும், மண்ணுலக மக்களையும் அருள்புரிந்து காக்க வேண்டிப் பல தலங்களில் எழுந்தருளியிருப்பவனும். பாவத்திற்கு அஞ்சாது உலகிற்குக் கொடுமையை விளைப்பவர் யாராயினும் அவர்கள் அஞ்சி நடுங்கும்படி சினம் கொள்கின்றவனும், காட்டை இடமாகக் கொண்டு ஆடல் புரிகின்றவனும் ஆகிய ஒருவனது இருப்பிடம் இப்பெரு நிலத்திற்கு வடக்கெல்லையாகிய இடத்தில் உள்ளது` என்று அறிந்தோர் சொல்லுவர்.

குறிப்புரை :

கயிலை மலையை இவ்வாறு குறிப்பாற் சுட்டினார் `நகர்` என்பது இறைவன் இடத்தைக் குறிப்பதுபோலவே, `ஊர்` என்பதும் அவனது இடத்தைக் குறிக்கும்.
``பணியியர் அத்தைநின் குடையே, முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே``
என்னும் புறப்பாட்டில், இறைவனது இடம் `நகர்` எனச் சொல்லப் பட்டது. `இறைவனாவான் சிவன் ஆதலின், `ஊர்` என்பது அவன் இயல்பாக இருக்கும் இடமாகிய கயிலாய மலையைக் குறிக்கும்` என்னும் கருத்தினால், ``ஊர்க் கோட்டம்``9 எனச் சிலப்பதிகாரம் கூறியதற்கு அரும்பத உரையாசிரியர், `ஷ்ரீ கைலாயம் நிற்கும் கோயில்` என்றும், பொருள் உரைத்தமை இங்கு அறியற்பாலது. ஞான குரு தரிசனத்தில் இதனைக் கூறியது `கயிலை மலையில் தென்முகக் கடவுளாய் இருந்து நால்வர் முனிவர்க்கு ஞானத்தை நால்வர் முனிவர்க்கு ஞானத்தை அளித்த முதலாசிரியன் சிவனே` எனவும், `ஆகவே, உலகில் ஞானத்தை அருளும் ஞானாசிரியர் யாவரும் அவனாகவே கொள்ளற்பாலர்` எனவும் உணர்த்தற் பொருட்டாம்.
``யோகியார் யோக முத்தி உதவுத லதுவும் ஓரார்``l என்னும் சிவஞான சித்தியும் தென்முகக் கடவுள் வடிவத்தையேயாதல் அறிக. இரண்டு மூன்றாம் அடிகளில் அநுக்கிரக நிக்கிரகங்களைச் செய்வோன் ஆதலையும், முதலடியில் அவற்றை அவன் உயிர்களோடு அத்துவிதமாய் நின்று செய்தலையும் குறித்தார். ``உலகு`` என்றது உயிர்களை மகிழ்தற்குரியன அவையேயாகலின்,
``வானிடத் தவரும் மண்மேல் வந்து
அரன்றனை அற்சிப்பர்``8
ஆகலின் நிலவுலகத் தலங்கள் அவர்களது நன்மைக்காகவும் இருத்தலையறிக. இரண்டாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிரெதுகை பெற்றதுமாம்.
இதனால், இவ்வுலகத்து ஞான குரவரெல்லாம் தென்முகக் கடவுளாதலைக் கூறுமாற்றான், அவரது தரிசனத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும்
தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன
தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில்
தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.

பொழிப்புரை :

சார்ந்ததன் வண்ணமாம் தனது இயல்பினால் ஐந்து உடம்புகளைச் சார்ந்து அவையேதானாய் நிற்கின்ற பறவையாகிய உயிர் அது சென்ற திரியும் காடாகிய சொல்லுலகத்தில் `பதினாறு பாகளை உடைய ஒரு நல்ல வழியைக் கண்டு நடக்குமாயின், அது சிவமாம் தன்மையை அடையும், இனி, அஃதேயன்றி, அப்பறவை சிவமாதற்குப் பத்து படிகளையுடைய வேறொரு வழியும் உண்டு.

குறிப்புரை :

ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தே காட்டப் பட்டன. அவை பறவைகளின் உடம்பாகவும், அவற்றில் உள்ள உயிர் பறவையாகவும் உபநிடதங்களில் உருவகிக்கப் படுதலும் மேலே கூறப் பட்டன* சொல்லுலகமாவது மொழி மொழி வாயிலாகவே உயிர் உலகத்துப் பொருள்கள் பலவற்றையும் மிக விரைவாக, மாறி மாறி உணர் கின்றது. அதனால், மொழியை உயிராகிய பறவை பறந்து திரியும் காடாக உருவகித்தார். ஆயினும் உயிருக்கு உறுதி பயக்கின்ற மந்திரங்களும் அந்தச் சொல்லுல கிலேதான் உள்ளது. ஆதலின் அவற்றை அந்தக் காட்டில் கிடைக்கும் வழியாக வைத்து, அவற்றுட் சிறந்த சோடச கலாப் பிராசாத மந்திரத்தைப் பதினாறு படிகளையுடைய நல்ல வழியாகக் கூறினார். `தசாங்கம்` என்றது தச காரியத்தை. பிராசாத யோகம் யோகமாய் நிற்க, தச காரியம் ஞானம் ஆதல் பற்றி அவற்றின் வரிசையை ``வேறுள்ளது`` என்றார். இனி, ``சோடச மார்க்கம்`` என்பதை, `சரியை -யிற் சரியை, சரியையிற் கிரியை முதலிய பதினாறு` என்பாரும் உளர். இங்கு விளக்கப்படுவது ஞானம் ஒன்றேயாகையாலும், பிரிசாத யோகம் ஞானயோகமே ஆதலாலும் அவர் கூறும் பொருள் சிறவாமை அறிக.
பிராசாதயோகம், தச காரியம் - இவற்றை அவ்வந் நூல்களிற் காண்க.
``தான்`` நான்கில் முன்னிரண்டும்` ஆன்மாவால் சாரப்படும் பொருள். பின்னிரண்டும் சிவம். `வண்ணத்தோடும்` என உருபு விரிக்க. ``சார்தரும்`` என்பது, `சார்தந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `வனம் எனத் தக்கனவற்றில்` என ஏழாவது விரிக்க. `சோடசத்தையுடைய மார்க்கம்` என்க. மூன்றாம் அடியில் உள்ள ``ஆன`` என்னும் பெயரெச்சம், ``மார்க்கம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``ஆன்`` என்னும் இரண்டு இறந்த காலங்களும் முன்னை நிகழ்ச்சி வாயிலாக முக்கால நிகழ்ச்சியையும் குறித்தவாறு.
இதனால், `ஞான குரு தரிசனத்தால் உயிர் உய்யும் வழியை உணரும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி
உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும்
கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு)
அருவினை சோரும் அழிவார் அகத்தே.

பொழிப்புரை :

ஒருவரை அணுகிவிட்டால், பின்பு அவரை விட்டு ஒருபோதும் நீங்குதல் இல்லாதவர் எங்கள் நந்தி பெருமான். அந்நிலையில் அவரது திருவுருவத்தை உள்ளே நினைத்தால், நினைக்கின்ற உள்ளங்களை அஃது உருக்கிவிடும். அதனால், அங்ஙனம் உருகிய உள்ளம் உடையவர்கள் அவரிடத்தே ஒடுங்கி, அவரது அருள் கண்ணாகவே எதனையும் காண்பர். அங்ஙனம் காண வல்லார் முன்பு அவரது பிராரத்த வினை இவ்வுலகத்தில் மிகவும் மெலிந்து விடும். (உயிரைத் தாக்காது, உடல் ஊழாய்க் கழியும்` என்பதாம்.) அதனால், அவர் தியானித்த அந்த உருவத்திலே அடங்கித் தற்போதம் அற்றிருப்பர்.

குறிப்புரை :

`அதனால், அவர்க்குப் பின்னை வினையாகிய ஆகாமியமும் உண்டாகாது` என்பதாம் கரு - முதற்பொருள் தாக்க வரும் வினை தாக்க மாட்டாது மெலிதல் பற்றி, ``வல்லார்க்குச் சேரும்`` என தாக்கப்படுவோர்க்கு நான்கன் உருபு கொடுத்துக் கூறினார்; அவனை `அவனுக்கு இவன் இளைத்தான்` என்பது போலக் கொள்க. அரு - சூக்குமம். பிராரத்தம் யாரும் அறியாதபடி வருதாதல் அறிக. `அருவிகண் சோரும்` என்பதும் பாடம்.
இதனால், `ஞான குருவாய் வந்து ஞானத்தைத் தந்த சிவன் பின்பு நீங்கான் ஆதலின், ஞானியரும் அவனை விடாது பற்றி வினை திரப்பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை
அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பட நாடி நினைப்பற உள்கின்
தலைப்பட லாகும் தருமமுந் தானே.

பொழிப்புரை :

எங்களது மெய்ப்பொருளாகிய சிவனைப் பலரும் அடையலாம். ஆயினும், அதன்பின்பும் அலைகள் போல வந்து வந்து தாக்குகின்ற பாசங்களை அவ்வப்பொழுது அவை தாக்காதபடி அறுத்தறுத்துப் போக்கி, அடைந்த அடைவு நிலைப்பில் நிற்கமாற்றை ஆராய்ந்து, தற்போதம் தலையெடாதபடி குறிக்கொண்டிருந்தால், அடைந்தது அடைந்ததாகவேயிருக்கும். அதுவே சிவனை அடைந்தவர்க்குரிய தருமமும் ஆகும்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்து நிலைத்திருத்தல் அரிது` என்பதாம். இது பற்றியே ஞானம் பெற்றோர் தம் ஞானாசிரியரது அடி நிழலைப் பிரியாது உறைவர் என்க. அதிதீவிர நிலையை உடையவர்க்கு இவ்வாறான இடர்ப்பாடு தோன்றாது. ஏனையோர்க்கு இவை தோன்றும். அதனையே அருணந்தி தேவர்
``நேசமொடும் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நிலையுடையோர் நின்றிடுவார் நிலையதுவே ஆகி;
ஆசையுடன் அங்கும் இங்கும் ஆகி அலமருவோர்
அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி உரைப்பாம்.3
என்றார். மெய்ப்பொருளைத் தலைப்பட்டும் அதிலே நிற்கமாட்டாது மீளப்பிறவியிற் செல்வோரைக் கருதியே திருவள்ளுவர், ``தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்``9 என்றார். பின்னர் நிற்கும் நிலை, கழைக் கூத்தர் கரணம் இடுதலும் கயிற்றின்மேல் நடத்தலும், குடநீரைத் தலையிற்கொண்டவன் கையிரண்டையும் வீசி நடத்தலும் போலும் அருஞ்செயலாதல் பற்றி முதற்கண், ``தலைப்படலாம் எங்கள் தத்துவன்றன்னை`` என எளிது போலக் கூறினாராயினும் அதுவும் எளி தன்று என்பது வெளிப்படை. தருமம் கடமை. ``அவர்க்குத் தருமமும் ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. அது செய்யாவழித் தீங்கு வருதல் பற்றி, ``தருமம்`` என்றார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், ஞானத்தைப் பெற்றுவிட்டவர்க்கும் ஞானகுரு தரிசனம் இன்றியமையாததால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.

பொழிப்புரை :

சிவபெருமான், தன்னை நினைத்தால், நினைப்பவரைத் தானும் நினைப்பான். (நினைத்து, அவரை மேன்மேல் உயரச் செய்வான்) அதனால், சுனைக்குள்ளே மலர்ந்த ஒரு தாமரை மலரின்மேல் எழுகின்ற சோதிபோல இருதய கமலத்திலே ஒளிவடிவாய் விளங்கும் அப்பெருமானை `அடைதல்` என்பது மனத்தால் அடைதலேயாதலின் அவ்வாறு அவனை முதிர்ந்த அன்பால் அடைந்தவர், உலகியலில் எத்துணைச் சிறுமையராய் இருப்பினும், உயர்ந்தோரினும் உயர்ந்தோரேயாவர்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவரை அடைந்தோரும் உயர்ந்தவரே` அவரை அடைந்து பயன் பெறுதலே அறிவுடைமையும், அங்ஙனம் செய்யாது, உலகியல் பற்றி அவரைப் புறக்கணித்தல் அறியாமையும் ஆம்` என்பது கருத்து. `கொப்பூழ் அடியாகத் தோன்றிட தண்டின்மேல் மலரும் மலர் இருதயம்` எனச் சொல்லப்படுவதால், அதனை, `சுனையின் விளைந்த மலர்`` என்றார். அச்சோதியினை` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. `தினை, பனை என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டப்படும் சில அளவைகள்9 பரிமேலழகர் உரை. ஆதலின், சிறுமையை, ``தினைப்பிளந்தன்ன சிறுமையர்`` எனக் குறித்தார். பகர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது களத்தல் முதிர்தல். அஃது இங்கு அன்பு முதிர்தலைக் குறித்தது.
இதனால், `உயர்ந்தோரினும் உயர்ந்தோராவர் ஞான குரவரே` என்பது கூறும் முகத்தால், அவரது தரிசனத்தின் உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.

பொழிப்புரை :

சிவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அந்தப் பிராரத்தம் தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; சிவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் சிவபத்தி செய்பவராயே விளங்குவர்.

குறிப்புரை :

வினையை நுகர்வோர் ஆகார்; அதனால், அந்தப் பிராரத்தம் கட்டாயமாக விளைத்துச் செல்லும் ஆகாமியத்தையும் விளைக்கமாட்டாது உடல் ஊழாய் ஒழியும்` என்பதாம்.
``நின்னைஎப் போதும் நினையலொட்டாய் நீ;
நினையப்புகின்,
பின்னைஅப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று
நாடுவித்தி``9
எனப் பிராரத்த விளைவிலும் சிவனையே நினைந்தவாற்றை உணர்க. `தத்துவன் றன்னைத் தலைப்படும் காலத்து` என மாற்றியுரைக்க. விதி - பிராரத்தம் விதியை விளைவை, ``விதி`` என்றும், அயர்வொழிந்து நிற்றலை, ``நேடி`` (தேடி) என்றும் கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்று வந்தது.
இதனால், ஞானியர் பிராரத்தத்தால் தாக்குண்ணாது நிற்குமாறு கூறப்பட்டது. இவ்வாறு நிற்பவர் ஞானகுரு என்பதாம்.

பண் :

பாடல் எண் : 14

நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி
நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

பொழிப்புரை :

`யான், எனது` தன்முனைப்புக் கொண்டு தருக்குதலை ஒழிந்து, `எல்லாம் அவனே` என்று அடங்கி யிருப்பவர்களது அறிவினுள்ளே சிவன் நின்று எல்லாக்கலைகளாலும் புகழப்படுகின்ற தனது திருவருள் நெறியையே விளக்கி நிற்பான். அதனால், அவர்கள் அவனையே அறிந்து நிற்றலால் அத்திருவருள் நெறியைவிட்டு அப்பால் நகர்தல் இல்லை. மற்றும் அவனிடத்திலே அழுந்தி நிற்றலால் பிறவிக்குரிய நெறியில் சென்று பிறப்பதில்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. நகழ்வு - நகர்வு. திகழ்வொழிந்தாரைச் சுட்டுவதாகிய ``அவர்`` என்னும் சுட்டுப் பெயர் செய்யுளாகலின் முன் வந்தது. `நாதனை உள்கி நகழ் வொழிந்தார்; எம்பிரானொடுங் கூடி நிகழ்வொழிந்தார்` என்க. ``உள்கி, கூடி`` என்னும்`` செய்திகள் எச்சங்கள் காரணப் பொருளாவாய் நின்றன. (கற்றுப் பெரியன் ஆயினாள் என்பதிற் போல`. ``காட்டிப் புகுந்து நின்றான்`` என்பதை, `புகுந்து காட்டி நின்றான்` எனப் பின்முன்னாக வைத்துரைக்க.
இதனால், `ஞான குரவர் ஏனையோர் போலவாரல்லர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச்
சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.

பொழிப்புரை :

ஞான குரு காட்டும் ஞானநெறி, அன்று அயன் மால் தேடும்படி வந்த, மரகது மணியொளிவும் மாணிக்க மணி யொளியும் சேர்ந்த ஓர் ஒளிவடிவை அடையும் உபதேச மொழியே யாம். அந்தமொழியின் பொருளே மூக்கின் அடி இடமாகிய புருவ நடுவில், ஆன்மாவின் அறிவினுள் அறிவாகத் தியானிக்கப்படும் ஒளியுமாகும்.

குறிப்புரை :

``மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்``3
என்பதனால், அயன், மால் இவர்கட்டுமுன் ஒளிவடிவம் பச்சை நிறமும், செம்மை நிறமும் விரவிய ஒளியாய் இருந்தமை அறியப்படும் முதற்பொருள் `சத்தி, சிவம்` என இருதிறப்பட்டு இயைந்து நிற்றலை இந்நிறங்கள் குறிக்கும்.
``அழகாயும், மெய்ம்மையாயும் உள்ளவனும்,
பரப்பிரம்மம் - என்று பேசப்படுபவனும்,
உயிரினுள் இருப்பவனும், கருமை நிறமும்,
பொன்னிறமும் கலந்த உருவத்தை உடையவனும்,
மேல்நோக்கி பாயும் வீரியத்தை உடையவனும்,
மாறுபட்ட கண்களை யுடையவனும்,
உலகத்தைத் தன் வடிவமாகக் கொண்டவனும்
ஆகிய அவனுக்கு வணக்கம்! வணக்கம்!!*
என வேதமும் கூறிற்று. இரேகை - ஒளி. ``எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய``* என்பது பற்றித் தொகைச் சொல் இடையில் ரகர லகர முதல் ஆரியச் சொற்கள் முதற்கண் அகர இகர உகரங்களில் யாதும் பெறாது வருதலைக் `குற்றம்` என்றல் இல்லை. அதனால் ``மாணிக்க ரேகை`` என்றே வந்தது. ``மரகத மாணிக்க ரேகை`` என்னும் மும்மொழித் தொகைச் சொல் முதல் இருமொழிகள் உம்மைத் தொகையாய்ப் பின்பு `ரேகை` என்பதனோடு ஆறாம் வேற்றுமைத் தொகையாய்த் தொக்குப் பின்பு விடாத ஆகுபெயராய், அவற்றையுடைய ஓர் ஒளியைக் குறித்தது` ``வந்த`` என்பது, அயன், மால் இவர்முன் வந்த` என ஆற்றலாற் பொருள் தந்தது. `ரகையைச் சந்தித்திடும்` என இயையும். இவ்விரேகையை, ``சிவ`` என்னும் மந்திரம் உணர்த்து -மாறும், அதுவே உபதேசம் ஆமாறும் உணர்க. ``மூலம்`` என்றதை, `நாசியின் மூலம்` எனக் கொள்க. சுத்தான்ம அறிவை, ``சுந்தரச் சோதி`` என்றார்.
இதனால், ஞான குரு உபதேசம் பரசிவத் தியானத்தை உணர்த்திப் பயன் பெறச் செய்தல் கூறும் முகத்தால், அவரது தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது
மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய்
விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.

பொழிப்புரை :

நிலம் முதலிய பூதங்கள் ஐந்தையுமேயன்றி, அவை தோன்றியொடுங்கும் இடமாகிய மூலப் பகுதியையும் கடந்து அறிவேயான ஞானியரது உடம்பில், யோகத்தால் கருதியுணரப் படுகின்ற கடவுள் இருப்பது, உணவை உண்கின்ற வாய் முதலிய உறுப்புக்கள் அவற்றையுடைய, உடம்பு அதனுள்ளிருக்கும் உயிர் ஆகிய அனைத்திலும் ஒன்றாய்க் கலந்தேயாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. அருவமாதல் பற்றி மூலப் பகுதியை ``விண்`` என்றார். இங்குக் குறிப்பது சகலரையேயாதலின் அவருக்குரிய மூலப் பகுதியை மட்டுமே கூறினார். எனினும், உபலக்கணத்தால் அசுத்த மாயையும் கொள்ளப்படும். வெளியாதல் - விடுபடுதல். மாயையினின்றும் விடுபடுதலாவது, அவற்றின் காரியங்களைத் தாமாக மயங்காது, தம்மை அவற்றின் வேறாக உணர்வில் நிலைபெற்றிருத்தல் அத்தகையோர் மாசுடையாராகாது தூயராகலின், அவரது உடம்பும் தூயதாக, அதன் கண்ணும் சிவன் விளங்குவான்` என்க. இது பற்றியே,
``... ... நிலாவாத புலால் உடம்பே புகுந்துநின்ற
கற்பகமே``3
எனவும்,
``எந்தையே! ஈசா! உடல்இடம் கொண்டாய்;
யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே``l
எனவும் திருமொழிகள் எழுந்தன என்க. `மேனியில்` என ஏழாவது விரிக்க. உடம்பு நிலைபெறுதற்கு உணவு இன்றியமையாதாதல் பற்றி அதனை உண்ணும் உறுப்புச் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது. கண்ணல் - கருதல்.
``இருப்பது`` என்ற வினைப்பெயர் அத்தொழில் மேல் நின்றது ஆதலின், அவ்வெழுவாய்க்கு, ``ஆய்`` என்ற வினையெச்சம் பயனிலையாயிற்று. `ஒருவன் உயர்வது உழைத்து` என்பதிற்போல.
``மாயோகக் கடவுள்`` என்றது, தென்முகக் கடவுளையே என்பர்.
இதனால், ஞானிகளது திருமேனியைச் சிவன் தனதாகக் கொள்ளுதல் கூறும் முகத்தால், குரு தரிசனம் சிவ தரிசனமேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால்
பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு)
உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.

பொழிப்புரை :

வேதாகமங்களால், `பதி` என்று போற்றப்படுகின்ற பரமசிவனது திருவாணை எவ்வுலகிலும் தடையின்றிச் செல்லும். அதில் ஒரு கூற்றினால் முன்னுள்ள அடியார்களை அவன் தானாகச் செய்து, மற்றொரு கூற்றினால் பின்னுள்ள அடியார்களுக்காகப் பலவகையான உலகங்களைப் படைத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

பரசுதல் - துதித்தல். அதற்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `பதியென்று பரசு பரசிவன் ஆணை பார்முழுதெல்லாம் நடக்கும்` என இயைக்க. `பாதி` என்றது கூறு` என்னும் பொருட்டாய் நின்றது. ஆணை - சத்தி. அதன் ஒரு கூறு` திரோதான சத்தியாய் நின்று உலகைச் செயற்படுத்தும் மற்றொரு கூறு அருட் சத்தியாய் நின்று உயிர்களைச் சிவத்தோடு சேர்த்துச் சிவமாக்கும். இதனையே இம் மந்திரத்தாற் கூறினார். இரண்டையும் புடைபடவைத்துக் கூறியது இவ் விடத்திலேயாகும். எண்ணுப் பெயர்கள் இரட்டிக்குமிடத்து, ஒவ் வொன்று. இவ்விரண்டு, மும்மூன்று என்பன முதலாக வருதல் போல, ``பாதி பாதி`` என்பது ``பப்பாதி`` என வந்தது. அதனுள் ஒவ்வொன்று, `பதி செய்தல், பார் ஆக்கல்` என்பவற்றோடு வேறு வேறு சென்றியைந்தது. பின் ஆம் அடியார் - பின்பு தான் ஆதற்கு உரிய அடியார். எனவே, `முன் ஆம் அடியார்` என்பது தானே பெறப்பட்டது. பின் வந்த `பதி, வாழும் இடம். `பதியாகிய பாரினை ஆக்கியும் நின்றான்` என உம்மையை மாற்றியுரைக்க.
இதனால், `ஞானகுரு, பர சிவனால் பதியாக்கப்பட்டவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அம்பர நாதன் அகலிட நீள்பொழில்
தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

பொழிப்புரை :

மக்கள் நிலவுலகத்துள்ளாராயினும் அவர்கள் எங்கள் சிவபெருமானது திருவருளைப் பெற்றிருக்கின்றார்கள் ஆகையால், அவர்கள், `அகன்ற இடத்தையுடைய அனைத் துலகங்களும் சிதம்பர நாதன் ஆகிய அவனது ஆணைவழியல்லது பிறவாற்றால் நடத்தலைத் தாங்கள் அறியவில்லை` என்று கூறுகின் றார்கள். அஃதாவது, `அவன் அன்றி ஓர் அணுவும் அசைதலைக் காணவில்லை` என்கின்றார்கள். தேவரும் மக்களுக்கு மேலிடத்துள் ளாராயினும் இந்த உண்மையை அவர்கள் உணர்ந்திலர்.

குறிப்புரை :

`காரணம், அவர்கள் எம்பெருமான் அருள் பெறாமை` என்பதாம்.
``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற் கருளினை போற்றி!``
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்``
``புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாளும்
போக்குகின் றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி ... ... [திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்தமெய்க் கருணையும், நீயும்
அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``3
என்னும் திருமொழிகளும் இக்கருத்தே பற்றி எழுந்தன.
மக்கள், `யாம் மானுடர்; சிவன் கடவுளர். ஆகவே அவன் நமக்கு அருள்புரிதல் வேண்டும்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையவர். அதனால், அவர்களில் முயற்சியுடையோர் அவனது அருளைப் பெறுகின்றனர். தேவர், `நாமும் தேவர், சிவனும் தேவர்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையர். அதனால் அவர்களுள் அவன் அருள் பெறுபவர் அரியர் ஆகின்றனர். சிலர் பெற நினைப்பினும் தாழ்வெனும் தன்மை வருதற்பொருட்டு மண்ணுலகில் வந்து வழிபட்டே சிவன் அருளைப் பெறுகின்றனர்.
``வானிடத் தவரும் மண்மேல்
வந்து அரன்றனை அற்சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ``9
என்னும் சாத்திர மொழியைக் காண்க.
``அகலிடநீள் பொழில்`` என்பதை முதலிற்கொள்க. அம்பரம் சிறப்புப் பற்றி, சிதம்பரத்தைக் குறித்தது. `தாம் என்பர்` என இயையும். உம்பர் - மேலிடம். ``உம்பர்`` என்றதனால், `இம்பர்` என்பது பெறப்பட்டது. மூன்றாம் அடியை இறுதியிற் கூட்டுக. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், `சிவன் அருள் பெறாதார் சிவனது மேற்கூறிய இயல்பை உணர்தல் இயலாது` என்பது கூறப்பட்டது. `அதனாலே ஞான குருவின் பெருமையையும் அவர்கள் அறியார்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 19

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

பொழிப்புரை :

எங்கள் ஞான குருவாகிய நந்தி பெருமான் எங்களுடைய நாங்கள் எங்களையே புகழ்ந்து கொள்ளும் இயல்புடையனவாய் இருந்த நிலையை மாற்றித் தமக்கு வணக்கங் கூறுவன ஆகும்படி அருள்புரிந்தார். அதனால், பின்பு எங்கள் அறிவுகள் தெளிவுடையன ஆகப் பெற்றோம். ஆகி, தேவர்கோவும் மக்கட் கோக்கள் பலரும் வணங்கும்படி `கோவணமும் மிகையே` என்னும் மனப்பான்மையுடன் துறவுக் கோலத்தை உடையர் ஆயினோம். யாவரும் பல அரிய சாதனங்களின் வழியே சென்று அடையப்படும் பொருளாகிய சிவமேயாய் இருக்கின்றோம். ஆகவே இனிப் `பிறிதொரு தெய்வத்தை வணங்குதல்` என்பது எங்கள்பால் நிகழாது.

குறிப்புரை :

`நந்தி, நா வணங்கும்படி அருள் செய்தான்; பின் சித்தம் தெளிந்தனம்; கோ வணங்கும்படி கோவணம் ஆகிப் போய் வணங்கும் பொருளாகி யிருந்தோம்; இனித்தே வணங்கோம்` என இயைத்துக் கொள்க.
நா வணங்குதல் கூறவே, ஏனைத் தலையும், உள்ளமும் வணங்குதலும் உடன் கொள்ளப்படும். ஈற்றடி ஆசிடை எதுகை.
இதனால் ஞான குரு தரிசனத்தால் விளையும் பயன் தம் அனுபவ்தில் வைத்துக் காட்டி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

பொழிப்புரை :

வேதங்களில் உயர்த்துச் சொல்லப்படுகின்ற பிரணவ மந்திரம் மெய்ப்பொருள் இன்பத்தைப் பொதுவாக விளக்கும் தூல மந்திரமேயாம். (அஃது அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாகவே சொல்லப்படுகின்றது. அக்கரங்கட்கும் அத்தியான்மிக சத்திகள் உண்டு. எனினும் அவை வேத வேதாந்தங்களில் சொல்லப் படவில்லை. ஆகவே அத்தியான்மிக சத்திகளையுடையனவாகச் சொல்லப்படுகின்ற சீபஞ்சாக்கரமே (திருவைந்தெழுத்தே) சூக்கும மூல மந்திரமாகும். (இது பிரணவத்தை நோக்கி, `சூக்குமம்` எனப்பட்டது) இனித் திருவைந்தெழுத்திலும் மிகச் சூக்குமமானது ஞான குரு தமது கையால் காட்டுகின்ற சின்முத்திரை. இவற்றுள் முதற்கண் சொல்லப்பட்ட பிரணவ யோகம் வேதாந்த முறையாம்.

குறிப்புரை :

எனவே, சீபஞாசாக்கர யோகமும், அதன் பொருளைச் சின் முத்திரையால் உணர்வதும் சித்தாந்த முறை` என்பது அருத்தா பத்தியால் பெறப்பட்டது. பஞ்சாக்கர யோகமாவது பஞ்சாக்கரத்தைச் சுத்தமானதாக அறிவாற் கணித்தலாம். சின்முத்திரையை உணர்தல் அனுபவமாம். ``பிரணவம்`` என்பதை முதலிற் கூட்டுக. சொரூபம் - மெய்ப்பொருள். `தூலப் பேருரை` என இயையும். மூல மந்திரம், ``பேருரை`` எனப்பட்டது. திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு கூட்டிச் சொல்லுதல் `ஆறெழுத்து மந்திரம்` எனப்படும். ஆறெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து நோக்கி, பிரணவத்தை, `பரன்` என்றும், சிகாரம் முதலிய ஐந்தையும் முறையே `ஈசானம் முதலிய பஞ்சப் பிரமங்களின் சத்தி` என்றும் சிவாகமங்கள் கூறும். ஈசானம் முதலிய ஐந்தின் சத்திகள் முறையே `ஈசானி பூரணி, ஆர்த்தி வாமை, மூர்த்தி` எனப் பெயர் பெறும். இச்சத்திகள் ஐந்தும் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டுமாகிய கலைகளை (கூறுகளை) உடையன. இந்த முப்பத்தெட்டுக் கலைகளின் வடிவமாகவே சதாசிவ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவையெல்லாம் சிவாகமங்களிலும், சைவ பத்ததிகளிலும் காணத்தக்கவை. இந்தப் பஞ்ச சத்திகளையே நாயனார் இங்கு, `மேலைச் சொரூபப் பெண்`` என்றார். எனவே, `அக்கரங்களாகச் சொல்லும் வேதாந்தத்திலும், சிவசத்திகளாகச் சொல்லும் சித்தாந்தம் நுட்பமானது` என்பதை, ``பாவித்த சூக்குமம்`` என்றார். பாவித்த - மறைபொருளாக வைத்துக் காக்கப்பட்ட. சின்முத்திரையில் பெருவிரல் `சிவ` என்பதையும், சுட்டு விரல் `ய` என்பதையும், நடுவிரல் `ம` என்பதையும் ஏனை ஆழிவிரல் சிறுவிரல்கள் கன்மம் மாயைகளாய் `ந` என்பதையும் குறிப்பனவாம். ஆலித்தல் - உருப்படுதல். விரைவில் கரைவதாகிய பனிக்கட்டி (கல்மழை) அவ்வாறு கரைவதற்குமுன் `ஆலி` எனப் பெயர்பெற்று நிற்கும். ``காரணம்`` என்றது, `அதி சூக்குமம்` என்றபடி.
இதனால், ஞான குரு தரிசனத்தால் கிடைக்கும் பிரணவ யோகம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என மூன்றாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

பொழிப்புரை :

வேதாந்த சித்தாந்த ஞான குரவர்கள் ஒரு வார்த்தையாகச் சொல்லுகின்ற உபதேச மொழிகளும், சிவன் கொள்ளு கின்ற உருவம், அருவம். அருவருவம் என்கின்ற மூவகைத் திருமேனி களும், பலவகை மொழிகளும் ஆகிய எல்லாம் `ஓம்` என்பதாகிய பிரணவத்தில் உள்ளனவேயாம். அதனால் பிரணவயோகத்தால் சித்தி முத்திகள் யாவும் கிடைக்கும்.

குறிப்புரை :

`சொல்லுலகங்கள் யாவும் பிரணவத்தின் காரியமே` என்பதாம். ஓங்காரம் நான்கும் `பிரணவம்` என்னும் அளவில் வாளாபெயராய் நின்றன. ஒருமொழியே மகாவாக்கியமாம். மகாவாக்கியங்கள் முன் தந்திரத்துள் கூறப்பட்டன. `ஒருமொழி` என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப்பன்மை குறித்து நின்றது. முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் `உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. உருவும், அருவும் கூறவே இனம் பற்றி உருவருவும் கொள்ளப்பட்டது. வருகின்ற மந்திரத்துள் `சராசரம்` என வருதலால், இங்குக் கூறப்பட்ட உருவம் முதலியன இறைவனுடைய திருமேனிகளாயின. `திருமேனிகள் ஓங்காரத்தில் உள்ளன` என்றது அவற்றது மந்திரங்களை நோக்கி இறைவனை `மந்திரத்தால் உருக் கோலி`9 எனக் கருதுதல் கிரியா மார்க்க முறை. அருவத் திருமேனியை மந்திரமாகவே உள்குதல் (தியானித்தல்) யோகமுறை `இம் முறைகளால் பிரணவம் சித்தியையும், முத்தியையும் தரும்` என்பதாம். சிறப்பு பற்றி முத்தி முன்னர்க் கூறப்பட்டது. முத்தியையும், சித்தியையும் தருவதை அவையேயாக உபசரித்துக் கூறினார்.
இதனால், பிரணவத்தினது இயல்பும், அதன் வழித்தான யோகத்தின் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.

பொழிப்புரை :

பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியங்களாகிய பலவகை உடம்புகளும் பிரணவத்திலிருந்தே தோன்றின. பிரணவமாகிய அதற்கு அப்பால் உள்ளன மூவகை உயிர்கள், ஆகவே பிரணவமே வடிவான உயிரை, `பரசிவன்` என்றே சொல்லலாம்.

குறிப்புரை :

``உள்`` இரண்டிலும் `நின்று` என்பது வருவிக்க சொல்லாலன்றிப் பொருள்கள் பற்றி `விளங்கிய ஞானம்`3 உண்டாதல் கூடாமை பற்றிச் சொற்களையே பொருளாகக் கூறும் முறை பற்றி அச்சொற்கள் அனைத்திற்கும் மூலமான பிரணவத்தினின்றே பொருள்கள் பலவும் தோன்றினவக்கா கூறினார். எனினும் சித்தாகிய உயிர்கள் ஓங்காரத்திற்கு வேறாதல் பற்றி `அவை ஓங்காரத்திற்கு அப்பால் உற்றன` என்றும், பிரணவத்தைச் செலுத்தி நிற்பது சிவ சத்தியேயாகலின் `பிரணவ வடிவான உயிரை, சிவன் என்றல் கூடும்` என்றும் கூறினார்.
``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்,
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``.
என்னும் சிவஞான சித்தயைக் காண்க.9 இதனால் உயிர் தன்னை உணர்தல் பிரணவ யோகத்தின் வழியாதல் விளங்கும்.
இதனால் பிரணவத்தின் சிறப்பும், `அதன்வழித்தான யோகத்தால் உயிர் தன்னை உணர்ந்து, தலைவனையும் உணரும்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை :

`ஓம்` எனச் சமட்டியாகச் சொல்லப்படுவது `பிரணவம்` எனவும் அதனை `அகாரம், உகாரம், மகாரம், விந்து. நாதம் எனப் பெரும்பான்மை ஐந்தாகவும், மற்றும் பலவாகவும் பிரித்து வியட்டியாகச் சொல்லப்படுகின்றவற்றை, `பிரணவத்திற்கு` இனம் எனவும் கூறுவர். அவ் இனங்களை மேல், `கலைநிலை` என்னும் அதிகாரத்தில் காணலாம். * அந்த இனங்கள் ஞான வடிவான பல சத்திகளாகும். சத்திக்கும் சிவத்திற்கும் வேற்றுமையின்மையால் அவைகளை, `ஆனந்த மயமான சிவம்` என்றும் சொல்லலாம். அச்சத்திகள் அண்டத்தில் சரம், அசரம் ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்து நிற்கும். மற்றும் பிண்டமாகிய உடம்பில் ஆறாதாரங்கள் முதலான பல இடங்களிலும் நிற்கும். இத்தன்மைகள் எல்லாவற்றையும் உணர்ந்தவர்கட்கே விரிந்த ஞானம் உளதாகும்.

குறிப்புரை :

இனத்தை, ``வருக்கம்`` என்றார். ``சுகமாம் பிரமம்`` என்பது பெயரெச்சத் தொடர் உம்மை இறந்தது தழுவியதனோடு, சிறப்பு. அதனால் சத்தியாதல் பெறப்பட்டது. ஞாயிற்றைக் குறிக்கும் `அருக்கம்` ஒன்பது `ஒளி` (விளக்கம்) என்னும் பொருட்டாய் நின்றது. மேனி - வடிவம். அது தியான வடிவம். `மேனி உளதாம்` எனவும், `ஞானம் உளதாம்` எனவும் எச்சங்கள் வருவித்து முடிக்க.
இதனால் பிரணவ யோகத்தில் பிரணவ பல கலைகளாய்ப் பிரிந்து நின்று பயன் தருதல் கூறப்பட்டது. அக்கலைகள் சராசரங்கள் அனைத்துமாய் நிற்றலைப் பிராசாத நூல்களில் காண்க.
இனி, இம்மந்திரத்திற்கு வைதிக முறையில் பொருள் கூறுவோர், `வருக்கமாவன` ஐம், க்லீம், ஸௌம், ஹ்ரீம், ச்ரீம்` எனவும், `அவை மூலாதாரம் முதலிய இடங்களில் நிற்கும்` எனவும் கூறுவர். அம்முறை சிறப்புச் சிவயோகமாகிய பிரணவ பிராசாத யோக முறையாகாது, பொதுயோக முறையேயாம். இதனையடுத்து வரும் ``சோடச மார்க்கமும், ஈராறின் அந்தமும்`` என்பவற்றாலும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 5

மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்த மாகும்
நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.

பொழிப்புரை :

தன்னறிவாலே தனக்குள் தோன்றும் மலைவுகள் எல்லாம் தெளிவைத் தாராது. மேலும், மேலும் மயக்கத்தையே தரும், இருள் நெறிகளேயாகும். ஆகையால், ஞான குருவின் தரிசனமே நிலையான உணர்வைத் தருகின்ற ஒளி நெறியாம். ஆகவே, தவத்திற் குரிய புண்ணியத் தலங்களும், அங்குள்ள தவத்தோர் கூட்டங்களும், அவரோடு கூடி ஒழுகுகின்ற தவ ஒழுக்கமாகிய நன்மையும் எல்லாம் நன்னெறியை உணர்த்துகின்ற நல்லாசிரியரது உபதேசமே.

குறிப்புரை :

உபதேசத்தின் வழிபட்டனவற்றை `உபதேசம்` என உபசரித்துக் கூறினார். நல்லாசிரியர்தம் உபதேச வழிபட்ட பொழுதே புண்ணியத் தலம் முதலியன உண்மைப் புண்ணியத் தலம் முதலியனவாம்` என்றபடி. `அவற்றைத் தன்னறிவளவிலே தான் அறிந்து கைக்கொள்ளுதல் பயனுடைத் தாகாது` என்பதாம். இங்ஙனம் கூறுமுகத்தானே, `பிரணவ யோகமும் உபதேச முறையான் உணர்ந்து மேற்கொள்ளற்பாலது` என்பது உணர்த்திய வாறு, `சித்தம் தவம் ஆகும் நலம்` என மாற்றிக் கொள்க. தவம் - தவ விருப்பம்.
இதனால், `உண்மைப் பிரணவ யோகம் இன்னது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு)
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து)
ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.

பொழிப்புரை :

ஞானத்தை அடைதற்குரிய வழியை அடைய விரும்புவோர்கட்கு, அவர்கள் ஆதாரயோகத்தின் முடிநிலையாகிய புருவ நடுவையும் கடந்து மேல் ஏறி ஏழாந்தானத்தை அடைந்து உணர்ந்த ஞானத்தினால் நிராதாரத்தையும் கடந்துள்ள ஞேயமாகிய சிவத்திற் சென்று அடங்கியிருத்தற்பொருட்டு, `பன்னிருகலை, பதினாறுகலை` என்று பிராசாத யோகங்களைப் பதினான்கு வித்தைகளின் முடிவாகிய பிராசாத நூல்கள் கூறும்.

குறிப்புரை :

`சன்மார்ககிகட்கு. கோதண்டமும் கடந்த ஏறிய ஞானத்தால் ஞேயமாகிய அந்தத்து இருக்க, சோடசத்தையும், ஈராறையும் ஈரேழில் கூடிய அந்தமும் சொல்லும்` என இயைத்துக் முடிக்க. ஆடிய - முன்னோர் பயின்ற இது தாப்பிசையாய். `சோடச மார்க்கம்` என்பதனோடும் சென்றியைந்தது.
புருவநடு ஆதார யோகத்தின் முடிநிலை இடமாகலின் ``கோதண்டமும்`` என்னும் உம்மை சிறப்பு ஏறிய ஞானம் - ஏறியதனால் விளைந்த ஞானம். `ஞானத்தால்` என உருபு விரிக்க. ஞேய அந்தம் - ஞேயமாகிய அந்தம். இதுவே பிராசாத யோக முடிநிலை இடமாதலின் ``அந்தம்`` எனப்பட்டது.
பதினான்கு வித்தைகளாவன வேதம் நான்கு, வேதாங்கம் ஆறு, உபாங்கம் நான்கு இவற்றுடன் உபவேதம் நான்கு கூட்டி, `பதினெண் வித்தை` என்றலும், உபவேதம் நீக்கி, ``பதினான்கு வித்தை`` என்றலும் ஆக இரு வழக்குக்கள் உள்ளன. அவற்றுள் பின்னதை இங்குக் கூறினார்.
``ஈரேழிற் கூடிய அந்தமும்`` என்னும் உம்மை முற்றும்மை. அந்தத்தின் பொருளை ``அந்தம்`` என்றது ஆகுபெயர். பின்னர் அப்பொருளைக் கூறும் நூலை ``அந்தம்`` என்றது இருமடியாகு பெயர். ஈற்றடி உயிரெதுகை பெற்றது.
இதனால், `ஞானத்தைப் பெறவேண்டினார்க்குச் சிறந்த வழியாவது பிரணவ யோகமே` என்பது கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன்இருந் தானே.

பொழிப்புரை :

உலகத்தில் கண்வழியாகக் காட்சி நிகழுங்கால் அக்காட்சி காணப்படும் பொருள், அதுவும் அதனைக் காணும் கண்ணொளியும் விளங்குதற்கு இன்றியமையாத் துணையாகிய ஒளி, அவ்வொளியால் விளங்கி உருவத்தைக் காண்பதாகிய கண்ணொளி ஆகிய மூன்றன் கூட்டத்திலே நிகழ்வதாகும். ஆயினும் கண்ணால் உருவத்தைக் காண்கின்றவன் அம்மூன்றனையும் ஒருங்கே அறிதல் இயலாது) மற்று காணப்படும் உருவத்தையும், காண்பதாகிய கண்ணொளியையும் விளக்கி நிற்கின்ற அந்த ஒளியை அறிவானாயின் அப்பொழுது ஏனை யிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இனிக் காணப்படும் உருவத்தை அறிவானாயின் அப்பொழுது ஏனையிரண்டும் மறைந்து நிற்கும், இனிக் கண்ணொளியின் இயல்பை அறியின் அப்பொழுது ஏனையிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இம்முறையில் தான் சிவன்தான் ஆன்ம ஒளி மறைந்தவிடத்து அவன் அவ்வான்மாவினோடு உயிர்க்குயிராய் என்று உடனாகியிருத்தல் விளங்கும்.

குறிப்புரை :

`ஆகவே, அவ்வாற்றால் அவனை அறிந்து நிற்றலே அறிவுடைமையாம்` என்பது குறிப்பெச்சம். தத்துவத்துறையில் `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களுக்கிடையே உள்ள உறவு எத்தகைய உறவு, என்னும் ஆராய்ச்சியல் ``அவ்வுறவு த்துவித உறவு`` என்னும் சிவாகநூல் துணிவினை முன்னைத் தந்திரத்தில், `பதி, பசு, பாசம் வேறின்மை` என்னுக. அதிகாரத்தில் ஓராற்றால் விளங்கிய நாயனார், அவ்வுறவு பிரசாத யோகத்தில் நிகழும் ஒளிக் காட்சியில் வைத்து அறியின் இனிது விளங்குதல் பற்றி அதனை இங்கு இவ்வாறு நுண்ணிதாக விளக்கினார். மெய்கண்ட தேவரும்,
``காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்``3

என அருளிச் செய்ய, அதனையே அருணந்தி வேதர்,
``... ... காட்டக் கண்டிடும் தன்மை உடைய கண்ணிற்கு
ஏயும் உயிர் காட்டிக்கண் டிடுமா போல
ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன்``9

எனவும், உமாபதி தேவர்,
``அறிவொளிபோல் பிறிவரும் அத்துவிதமாய்``l எனவும் கூறினர். ``அறிவொளி`` என்றதில் அறிவு, ஆன்ம அறிவு. ஒளி, கண்ணொளி.
முதற்கண் உள்ள `ஒளி`, காட்டும் ஒளி அது விளக்கொளி ஞாயிற்றின் ஒளிகளில் ஒன்றாகலாம். இரண்டாவதாய் உள்ள `ஒளி`, காணும் ஒளியாகிய கண்ணொளி இரண்டாம் அடியில் உள்ள ``ஒளியும்`` என்பது `செய்யும்` என் முற்று. `மறையும்` என்பது அதன் பொருள். அஃது, ``உருவும், ஒளியும்`` என்னும் எழுவாய்கட்கும் பயனிலையாய் நின்றது. ஒளிதல் தன்வினை; ஒளித்தல் பிறவினை. அவை `செய்யும்` என் முற்றாகுமிடத்து முறையே `ஒளியும்` எனவும், `ஒளிக்கும்` எனவும் வரும் ``ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்``8 என்பதில் ``ஒளிக்கும்`` என்பது தன்வினையால் நின்றது இரண்டாம் அடிப்பகுதியை, `உருவகத்தை அறியில் உருவேயாம்` என விரித்துக்கொள்க. `ஏனையிரண்டும் தோன்றா` என்பது கருத்து. மூன்றாம் அடியில் உள்ள ஒளிகள், கண்ணொலியாம். அவ்விடத்து ``உருவம்`` என்றது அதன் இயல்பை. இங்கும் ``ஒளியே`` என்றது, `அவ்வொளியே தோன்றும்; ஏனையவை தோன்றா` என்றதாம். மூன்றடடிகளாலும் உவமையே கூறப்பட்டது. ஈற்றடியில் உள்ள ஒளி, ஆன்ம அறிவு. அஃது உருகுதலாவது, நிலையழிதல் உம்மை, `பாச அறிவேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``உருக`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது. `இருப்பான்` என்னும் எதிர்காலம், விரைவு பற்றி ``இருந்தான்`` என இறந்த காலமாயிற்று. இருத்தல் இருக்கும் அது விளங்குதல் இருத்தலுக்கு `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
உவமையில், `மூன்றில் ஒன்றை யறியுமிடத்து ஏனையவவை மறைந்து விடும்` என ஒரு தொடராற் சுருங்க ஓதாது, மூன்று தொடரால் விரியக் கூறினார். `மூன்று யாவை` என்பதை முன்னர்த் தொகுத்து கூறாமையின் அவை விளங்கா என்பது பற்றி. பொருளில், காட்டுவது சிவனருளும், காண்பது ஆன்ம அறிவும், காணப்படும் பொருள் பதி, பசு, பாசங்களுமாகக் கொள்க. கண் உருவங்களைக் காணும்பொழுது காட்டுவதாகிய ஒளியையும், காண்பதாகிய தன்னையும் மறந்து, உருவங்களை மட்டுமே காண்பதுபோல, ஆன்ம அறிவு பெத்த காலத்தில், அறிவிப்பதாகிய திருவருளையும், அறிவதாகிய தன்னையும் அறியாது அறியப்படுவதாகிய உலகத்தை மட்டுமே அறிந்து வருதலால் அது பொழுது அது தன்னையும், தலைவனையும் அறியாது மயங்கு கின்றது. ஆசிரியர் அருளுரையைக் கேட்டு அதன்வழி நின்று அதுதான் அறியும் முறைமையை உற்றுணருமாயின் மயக்கம் நீங்கி மெய் யுணர்வைப் பெறும்` என்பதும் `மெய்யுணர்வாவது முப்பொருளும் பிரித்தறியுமாறு வேறு வேறு நில்லாது அத்துவிதமாய் இருத்தலின். அந்நிலையை அறிதல் ஆசிரியரது அருளாலன்றிக் கூடாது` என்பதும் கூறியவாறு. இம்மந்திரம் சொற்பின்வரு நிலையணி பெற்றது,
இதனால் `உலகில் காட்டுவதும், காண்பதும், காணப்படுவதும் ஆகிய மூவகை ஒலிகளின் முறைமையில் வைத்து பிரணவ யோகத்தில் வெளிப்படும் ஒளிகளின் இயல்பு உணரற்பாலன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி கலையில் `நூற்றியெட்டு` என்றும், பிரதிட்டா கலையில் `குய்யாட்டகம், அதிகுய்யாட்டகம், குய்யதராட்டகம்` என்று இன்ன பலவாகவும் எட்டு எட்டாகச் சொல்லப்படுகின்ற, சகல வருக்கத்தினராலும் எளிதில் அடையப்படும் புவனங்களிலும் ஞான ஒளியைப் பரப்பி அறியாமையாகிய இருளைப் போக்குகின்ற சிவனாகிய ஞாயிறு வெளிப்பட்டு விளங்குவதும் உள்ளதுமாகிய தாமரையிலேயாம். அத்தாமரையில் அந்த ஞாயிறாகிய சிவன் ஒன்றோடு ஒன்று மாறுபட்ட இரு நிற ஒளியுடையனாய் விளங்குகின்றான்.

குறிப்புரை :

`அதனை அறிவுடையார் உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். மாறுபட்ட இருநிற ஒளிகளாவன சிவப்பும், நீலமும். இவை முறையே சிவமும், சத்தியும் ஆகும். நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் உள்ள புவனங்கள் எட்டு எட்டாகச் சொல்லப்படுதலைச் சிவாகமங்களிலும் சிவஞான போத மாபாடியம் முதலியவற்றிலும் காண்க. அவை சகல வருக்கத்தினர்க்கு இடமாதல் பற்றி, `புகல் எளிதாகும்` என்றார். திருவருள் அண்டத்திலும் ஞானிகட்கு விளங்குதல் பற்றி ``அகல் ஒளி செய்து இருள் ஆசற வீசும் பகல்`` என்றார். அகல் ஒளி - விரிந்த ஒளி. தாய் - தாவ; பாவ. ஆகமலம் இருள் மலம் ஆணவம். வீசுதல் - அகற்றுதல். பகல் - பகலவன் `இருள் மலம் அகற்றும் பகலவன்` என்றதனால் அது சிவனாகி ஞாயிறாயிற்று. ஒளி செய்தல் ஒளியைத் தருதல். ``செய்ததும்`` என்னும் உம்மை இருத்தலாகிய எதிர் வருவதனைத் தழுவிற்று `சிவ ஒளி அண்டம், பிண்டம் இரண்டிலும் விளங்கி அறியாமையாகிய இருளைப் போக்கும் என்றபடி.
இதனால், மேற்கூறிய ஒளிகளில் ஆன்ம அறிவிற்குக் காட்டாகி நிற்கும் சிவ ஒளியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.

பொழிப்புரை :

[முன் மந்திர்ததிற் கூறியவாறு, `சிவனே அண்டத்திலும், பிண்டத்திலும் ஒளியைத் தருகின்றான்` என்றால், `இங்குக் கண்கூடாகக் காணப்படும் - தீ ஞாயிறு, திங்கள் - என்பவை ஒளியைத் தருகின்றன` எனக் கருதுதல் பிழையோ எனில், அன்று; மற்று.]
ஆங்காங்கு அவ்வப்பொழுது காலவரையறை ஏதும் இன்றி வெளிப்பட்டு மறைகின்ற தீயும், சில கால வரையறைகளின்படி தோன்றி நின்று ஒளியைத் தந்துவிட்டு மறைகின்ற ஞாயிறும், திங்களும் ஆகிய அவையும் அவ்வாற்றால் ஏற்ற பெற்றியால் ஒளியைத் தந்து விளங்குதலு, ஒளியைத் தாராது மறைந்து போதலும் ஆகிய நிலைமையை உடையனவாகச் சிவன் அருள் செய்தனாலேயே அவை ஒரளவில் உலகிற்கு ஏற்ற பெற்றியால் ஒளியைத் தரும் செயற்கைச் சிற்றொளிப் பொருள்களாய் உள்ளன. என்றும் வற்றா வளம் கொண்டவனாகிய சிவன் கொண்டுள்ள ஒளியே முற்றும் நீக்க மாட்டாது சிறிது சிறிது நீக்குகின்ற அந்தச் சிற்றொளிப் பொருள்களை உலகிற்குப் படைத்துத் தந்து தான் அவற்றோடு இரண்டறக் கலந்து அவற்றை நிலைபெறுத்தியும் நிற்கின்றான்.

குறிப்புரை :

துளங்குதல் - அலைதல்; நிலையில்லாது நீங்கியும், தோன்றியும் வருதல். `அங்கி, கதிர், சோமன் ஆகியவை துளங்கு ஒளியையே பெற்றன; சொதி அருளப் பெற்றன` என்க. வளம் கொளி - வளத்தைக் கொண்டிருப்பவன்; இயற்கையாகவே கொண்டிருப் பவன். `பெற்றது` என்றதும், `இயற்கையில் பெற்றிருப்பது` என்றதேயாம். பேரொளி - கால வரையறையும், இட வரையறையும் இல்லாத ஒளி - இஃது, `அளவில் பேரொளி` எனப்படும் `களங்கம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து நின்றது களங்கமாவது இருள். அதனை அறவே நீக்காது அதனுடன் இருக்கின்ற ஒளிகள் களங்கொளிகளாம். வேறு களங்கொளி - களங்கம் இல்லாத தனது பேரொளிக்கு வேறான களங்க ஒளி. செய்தல் படைத்தல். கலந்து நிற்றல் அவற்றை நிலைபெறுத்தற் பொருட்டு ஆதலின் அது வருவித் துரைக்கப்பட்டது. ``செய்து நின்றான்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `உலகில் காணப்படும் முச்சுடர்களாகிய ஒளிகளும், சிவனது திருவருட் பேரொளி தந்த ஒளிகளே; சுதந்திர ஒளிகள் அல்ல; அவை அளவில்லனவும் அல்ல` என்பது கூறப்பட்டது. இவ் வுண்மையை விளக்குவதே உமை சிவனது கண்களைப் பொத்திய போது, உலகம் ஒளியையிழந்து இருளடைந்ததைக் கூறும் வரலாறு.

பண் :

பாடல் எண் : 4

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.

பொழிப்புரை :

சிவன் என்றும், எவ்விடத்தும் பிறத்தலை இல்லாதவன் ஆதலால், அவனே இயற்கையாய் விளங்கம் ஒளி. அவனொழிந்த பிற பொருள்கள் எல்லாம் தோற்றம் உடையனவே யாதலால் அவற்றுள் சிலவாகிய முச்சுடர்களும் அவன் ஆக்கிய செயற்கை ஒளிகளே. முச்சுடர்களுள் ஞாயிறும், திங்களும் அவனது வல இடக் கண்களாகவும், தீ பிறருக்கில்லாத மூன்றாவதான நெற்றிக் கண்ணாகவும் உயர்ந்தோரால் சொல்லப்படுகின்றன. இனி அவனது திருமேனியே ஒளிமயமாகலின், ஒளியுடன் விளங்குகின்ற ஆகாயம் அவனது திருமேனியாகச் சொல்லப்படுகின்றது.

குறிப்புரை :

`இலங்கு` என்பது எதுகை நோக்கி ``இளங்கு`` எனத் திரிந்தது. இயற்கையாகவே இலங்குகின்ற ஒளி என்க. இதனை முதல் அடியின் ஈற்றிற் கூட்டி. அதற்கு முன் `ஆதலால்` என்பது வருவித் துரைக்க. ஏனையோரெல்லாம் பிறந்திறந்தமை பலவிடத்தும் கேட்கப் படுகின்றது. துளங்குதல், செயற்கையை உணர்த்திற்று. `மற்றை நெற்றிக்கண்` என மாற்றியுரைக்க. இதனை வேறு வைத்துக் கூறினமையால், இஃது ஏனையோர்க்கு இல்லாமை விளங்கிற்று. முச்சுடர்களும் இறைவனது உறுப்பாதலைக் கூறுகின்றவர், அவற்றிற்கு இடமாகிய ஆகாயம் அவனது உடம்பாதலையும் உடன் கூறினார்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9
என அப்பர் அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரம்ம`` எனத் தைத்திரீய உபநிடதம் கூறிற்று. மற்றை உபநிடதங்களிலும் இவ்வாறு கூறப் படுகின்றது. முன் மந்திரத்தில் இயற்கையிற் பெற்றுள்ளதைக் குறித்த ``வளங்கொளி`` என்பது இம்மந்திரத்தில் சிவனிடமிருந்து பெற்றதைக் குறித்தது. காயம் - ஆகாயம் - `காயம் மெய் ஆம்` என இயைக்க.
இதனால், `சுதந்திரமான ஒளியையுடையவன் சிவன் ஒருவனே` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

பொழிப்புரை :

எல்லா ஒளிகளினும் மேலான ஒளியாகிய திருவருள் ஒளியின்கீழ் அதினின்றும் தோன்றியனவை, விரிந்து பரந்த ஒளியை யுடைய ஆகாயம், காற்று, ஒளிப்பொருளாகிய தீ, நீர், நிலம் ஆகியவை. இவை ஐந்தும் உயிர்கட்கு அறிவைத் தந்து, ஆகாயம் ஒன்றிற்குள்ளே ஏனை நான்கும் அடங்கியிருப்பினும், இவை ஐந்தும் ஒடுங்கும் இடம் திருவருள் ஒளிதான்.

குறிப்புரை :

மேவிய - மேவின. செய்யுள் நோக்கிப் பூதங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. செவ்வெண்ணாகச் சொல்லப்பட்ட இவற்றின் இறுதியில் `ஐந்தும்` என்னும் தொகை வருவித்து, ``மேவிய`` என்பதற்கு முடிபாக்கிப் பின், `ஐந்தும் ஒளி செய்து விசும்பின் ஒன்றினும் ஒருங்கு ஒளி ஓரொளியாம் என இயைத்து முடிக்க. முதலடி இன எதுகை. `பரந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ஐம்பூதங்களும் தூல சரீரமாகி, ஒளி செய்வனவாகக் (அறிவைத் தருவனவாக) கூறினார். ஒருங்குதல் - ஒருசேர அடைதல். `ஒடுங்கொளி` என்றே பாடம் ஓதுதலுமாம். `மாயா காரியங்கள் ஆன்மாவிற்கு விளக்காய் அமையினும் அவை திருவருளால் விளக்கம் பெருவனவே, என்பது கூறியவாறு.
இதனாலும் `அனைத்து ஒளிகட்கும் மூல ஒளி அருள் ஒளியே` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
உன்னிய ஆறொளி ஒத்தது தானே.

பொழிப்புரை :

[`ஒளி` என்பதனை `மின்னியல்` ஞானம் என்பவற்றோடும் கூட்டுக.]
சிவனது சத்தி, பரை, ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என முன்னர் ஆறாகி நின்று அருள்புரிவனவாம். (ஈசானி முதலிய ஐந்துமே ``ஈசானம்`` முதலிய பஞ்சப் பிரம மந்திரங்களாம்) அந்த ஆறின் வடிவாகவே நாள்தோறும் பிரணவத்துடன் கூட்டிச் சிகாரம் முதலாக வைத்து எண்ணப்படும் திருவைந்தெழுத்துக் கொள்ளப்படும்.

குறிப்புரை :

`அதனை உணர்ந்து அம்மந்திரத்தைக் கணிக்கவே சிவஞானம் உளதாம்` என்பது கருத்து.
பராசத்தி ஏனைச் சத்திகளாய் வெளிப்படுதலல்லது நேரே வெளிப்படாமையின் அதனை ``மின்னியல் ஒளி`` என்றும், ``ஈசாளி பளிங்குபோன்றது, என்பதனால் அதனை, ``தூவொளி`` என்றும், பூரணி கன்ம சாதாக்கியமாய் நின்று எல்லாவற்றையும் செவ்வனே ஏற்றல் பற்றியும் அதனை, மேதக்க செவ்வொளி`` என்றும், ஆர்த்தி பற்றியும் அதனை, மேதக்க செவ்வொளி`` என்றும் ஆர்த்தி அஞ்ஞானத்தை அழித்தல் பற்றி அதனை`` ``பள்ளிய ஞானம்`` என்றும், (பன்னிய - வேதாகமங்கள் சொல்லிய) வாமை உலகுயிர்கள் அனைத்தையும் வினைவழி நடத்துதலின் ``பரந்த பரவொளி`` என்றும், (``பரத்து`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை) மூர்த்தி உயிர்களைப் பலபேதப்படத் தோற்றுவிக்குமாற்றால் சிவனை அடைய வழிவகுத்தல் பற்றி அதனை, ``துன்னிய ஆறொளி`` என்றும், (ஆறு - வழி நகரம் இரட்டியாமை செய்யுள் விகாரம்.) என்றும் கூறினார். இவ்வாறு நுண்பொருள்களை மறை பொருட் கூற்றுக்களால் உய்த்துணரக் கூறுதல் நாயனாரது நெறி என்பது பலவிடத்தும் நன்கறியப்பட்டது. ``துன்னிய ஆறொளி`` என்பதன்பின் ``இந்த ஆறு ஒளியும்`` என்பது வருவித்து. ``நாடொறும் உன்னிய ஆறு ஒளி ஒத்தது`` என முடிக்க. ``ஒத்தது`` என்பது பன்மை யொருமை மயக்கம். தான், ஏ அசைகள்) தூமொழி - தூய்மையைத் தரும் மொழி, திருவைந்தெழுத்து.
இனித் திருவைந்தெழுத்திற்கு ஈடாகப் பிரணவ கலைகளாகிய `அ, உ, ம், விந்து, நாதம்` என்பவற்றைக் கொள்ளுதல் பொது நெறியாம்.
இதனால், மூல மந்திரம் சிவசத்தி வடிவாய் நின்று ஒளியை (ஞானத்தை)த் தருதல் கூறும் முகத்தால் திருவருள் பேரொளியாமாறு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் மிக விளங்கு கின்ற ஒளியாய் இருப்பினும் தன்னை நினைக்கின்றவனது உள்ளத்தில் மட்டுமே விளங்கி நின்று, உடலிலும் உயிர்ப்பாய் இயங்குகின்ற வண்மையுடையவனாயும், மற்றை எல்லாப் பொருள்களிலும் மேகத்தில் ஒரே ஒரு காலத்தில் மட்டுமே சிறிது விளங்கி விரைவில் மறையும் மின்னல்போல மறைந்துள்ளவனாயும் இருக்கின்றான். ஆகையால் அவனை ஈங்கள் இடைவிடாது துதியுங்கள்.

குறிப்புரை :

`துதித்தால் உங்கள் உள்ளத்தில் விளங்கி, உடலில் உயிப்பாயும் இயங்குவான்` என்பது குறிப்பெச்சம். `துலங்கொளி` என்பது எதுகை நோக்கி, ``துளங்கொளி`` எனத் திரிந்து நின்றது. `ஈசன், உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற வளங்கொளியாய், எங்கும் விளங்கொளி மின்னொளியாகிக் கரந்து மருவி நின்றான். (அவனை) எப்போதும் சொல்லும் என இயைத்து முடிக்க. முதல் அடியில் உள்ள ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``உளம் கொளி`` என்பது, சாதியொருமை.
இதனால், பேரொளியாகிய சிவன் தன்னை நினைப்பவரது நெஞ்சில் மட்டுமே விளங்கி நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருதது மாமே.

பொழிப்புரை :

சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் விளங்குகின்ற தனது ஒளியை, எல்லா இருளிலும் மேலானதாய் மிக மறைக்கின்ற ஆணவ இருளின் வலிகெடுதற்கு ஏதுவான ஒளியாக உடையவன். அவ்வொளியை அவன் எவ்வுயிரிடத்தும் மறைத்தல் இல்லை. ஏனெனில், விளங்கும் ஒளியுடம்பினராகிய தேவர்கள் அமுதம் உண்டற்பொருட்டு நஞ்சம் நிறைந்த கண்டத்தையுடைய அவனது திருவுள்ளம் அத்தகையது.

குறிப்புரை :

``ஈசன்`` என்பதே முதலிற் கொள்க. ``விளங்கொளி யாகிய அவ்வொளியைத் துளங்கொளியாக உடையான்` என்க. அவ்விருள் - ஒளிகளின் மேலான ஒளிபோல, இருள்களின் மேலான அந்த இருள். அஃது ஆணவ மலம்.
``ஒரு பொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``9
என ஆணவ இருளின் கொடுமை மிகுதி கூறப்படுதல் காண்க. துளங்குதல் - பெரிதும் மெலிதல். ஆணவம் அநாதியாதலின் அழியாது சத்தி மெலிந்தே நிற்பதாதல் பற்றி, `துளங்குதல்` என்றார். அலங்குதல், `அளங்குதல்` என மருவி வந்தது. தொழுவார்க்கும் என்ற உம்மையால், `தொழாதார்க்கும்` என்பது கொள்ளப்பட்டது. ஒளியான் - கரவான். அது - அத்தன்மையது. அஃதாவது உயிர்கள் ஒளியைப் பெறத் தான் இருளைத் தாக்கி அடக்கும் தன்மை.
``சிற்றுயிர்க் கிரங்கிக் - காய்சின ஆலம் உண்டாய்
அமுதுண்ண``3
``விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு
விடம் உண்ட
கண்ணாளா``
என்பனபோலும் திருமொழிகளைக் காண்க.
இதனால், பிற ஒளிகளால் நீங்காத கொடிய திணியிருளை நீக்குகின்ற செவ்விய நுண்ணொளியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.

பொழிப்புரை :

பிறிதொரு பொருள் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளி எந்த ஒளியோ அந்த `ஒளியே சிவன்` எனப்படும் பொருள். (எனவே, விளக்கினால் விளக்கும் ஒளி எந்த ஒளியே சீவன்` எனப்படும் பொருள் என்பது தானே விளங்கிற்று.) இனி, ஞாயிறு, பிறரால் காணப்படுதற்கு ஏதுவாய் அதனினின்றும் வியாபிக்கின்ற அதன் கதிர்போன்றது சிவனது சத்தி. ஆக, விளக்கம் உடைய ஒளிகள் மூன்றாகும். அவற்றுள் பேரொளியாகிய சிவன் தன்னை நினைக்கின்ற உயிரினது நெஞ்சத்தில் வெளிப்பட்டு அதனது ஒளியைத் தனது ஒளிக்குள் அடக்கி விளங்குவான்.

குறிப்புரை :

``இலங்கியது`` என்றது, `தானே இலங்கியது` என்றபடி. தூங்குதல், நீக்கமின்றியிருத்தல். இதனுள் இன வெதுகை வந்தது.
இதனால், சிவ ஒளி சீவ ஒளிக்கு உதவும் ஒளியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

பொழிப்புரை :

பிறிதோர் ஒளியைத் தன்னுட் கொண்டிருக்கும் ஒளியாவது எந்த ஒளி? உடலினுள்ளே ஒளியாய் நிற்கும் சீவ ஒளியாம் அந்த ஒளிக்குள் ஒளியாகி நிற்கும் வன்மையை உடைய பெரிய மாணிக்க ஒளியாகிய சிவனஅ, தன்னைக் காணும் பக்குவம் எய்தினார் கண்முன் முதற்கண் திடீரென விளங்குகின்ற மின்னல் ஒளிபோல மின்னிப் பின்பு பரவெளியிலே ஒன்றி அதுவாகி, பேரொளியைப் பெற்ற திருக்கூட்டத்துள் நீங்காது நிற்பான்.

குறிப்புரை :

``உளம் கொளி`` என்பதில் கொள்வதும், கொள்ளப்படுவதும் ஒளிகளாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. அதனால் ``மாமணிச் சோதி`` என்பதும் ``விளங்கொளியாய் மின்னி`` என்பதும் பொருந்துவவாயின. வளம், ஒளிக்கு ஒளியாய் நிற்கும் செழுமை. இங்கும் அலங்கொளி அளங்கொளியாயிற்று.
இதனால், சிவ ஒளி பக்குவம் எய்தினார்க்கு வெளிப்பட்டு விளங்கிப்பின் மறையாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விளங்கொளி யான விகிர்தன் இருந்த
துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.

பொழிப்புரை :

தானே விளங்கும் ஒளியாகிய சிவன் விளங்கி நின்ற மெலியப்பெற்ற சீவ ஒளியின் உடல் பொறி காரணங்களில் முன்பு சேர்ந்திருந்த ஆணவ இருள் சேரமாட்டாது ஒதுங்கியிருக்கும். அவ்வாறு அந்த இருள் மெலிதற்குரிய அதிசூக்கும நடனத்தைச் செய்து கொண்டு தன்னை நினைக்கின்ற உயிரின் நுண்ணுடம்பில் முடிநிலைத் தானமாகிய உன்மனாந்தத்திலே இருப்பான்.

குறிப்புரை :

விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன். ``பாசம்`` என்றது இங்கு மாயேயத்தை, அதனானே அதனைப் பற்றுக் கோடாகக் கொள்ளும் வினையும் பெறப் பட்டது. `இருள் கலங்கு நட்டம்` என மாற்றியுரைக்க. அது ஞான நடனம். உன்மனை பற்றிக் `கலைநிலையில்` காண்க.l உயிரை ஆணவம் பற்றியுள்ள பொழுதே அதனை `மாயை, மாயேயம், வினை` என்பவற்றையும் இருள் பற்றி உயிரை ஆணவம் பற்றாது நீங்கிய பொழுது அதன் மாயை முதலியவற்றையும் ஆணவம் பற்றாது; அதற்குக் காரணம் திருவருள் விளக்கமே என்பதை,
``மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்,
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``* என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறிக. மூன்றாம் அடி இன எதுகை. `சேராது` என்பது ஈறு குறைந்து நின்றது. `உன் மனாந்தத்து` என்பது `உன் மனத்து` என இடைக் குறைந்து நின்றது.
இதனால் சிவ ஒளியால் சீவ ஒளி உடம்பொடு நலம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் சிவனுக்குத் தலைவனுக்குப் புதுமணம் செய்துகொண்ட மனைவியர் போன்றவர்கள். சிவனோ, புதுமணம் செய்து கொள்ளப்பட்ட மனைவியர் எளிதில் செல் லொணாத காவற் கட்டடத்தில் உள்ள தலைவன்போல் உள்ளான். இவர் இருதிறத் தாரிடையே தூதாகின்றவள் தலைவனுக்குக் காதற் பரத்தைபோன்ற ஆதி சத்தி. (திரோதான சத்தி) அவளது தூதின் பயனாகச் சிவன் இரங்கி வந்து ஆன்மாக்களது திணிந்த இருளை நீக்கியது வியப்பு.

குறிப்புரை :

போது - பேரரும்பு. `அதனை அணிந்த கருங்குழல்` என்றது, அக்குழலையுடைய புதுமண மனைவியை போல்நவர் - அவளோ டொத்த புதியர். பந்தத்தில் பழையவராயினும் வீட்டிற்குப் புதியரே. உவமையில் பன்மையில் ஒருமை மயங்கிற்று. அருட் சத்தியும், திரோதான சத்தியும் வேறு வேறல்லவாயினும் திரோப வித்தல் சிவனுக்குக் கருத்தன்றாகலின், அதனைச் செய்கின்ற செயல் பற்றித் தனது அறத்திற்கு ஒத்த அருட்சத்தியாகிய தேவியின் வேறான, தனது அறத்திற்கு ஒவ்வாத பரத்தையாக உருவகம் செய்தார். `பரத்தை` என்பது சொல் நயத்தால் பிறிது பொருள் தந்ததாயினும், அது, தொழு பவனை `தொழுத்தை` என்பது போல, `பரத்தின்பால் உள்ளவள்` என்றே பொருள் தரும். சிவனையடைந்து இன்புறுதற்கு உரியவாதல் பற்றித் தலைவனை அடைந்து இன்புறுதற்குரிய சீவான்மாக்கள் பெண்டிரோடு ஒப்பிக்கப்படுதலை,
``இருவர் மடந்தையருக்கு என்னபயன் உண்டு? உண்டாம்,
ஒருவன் ஒருத்தி யுறின்``8
என்பதிலும் காண்க. `இஃது உவமை மாத்திரையேயன்றிப் பொருளன்று` என்பது உணராதார். `உயிர்கள் எல்லாம் பெண்டிர்` எனவும் `இறைவன் ஒருவனே ஆடவன்` எனவும் கூறி மகிழ்வர். அவர், ஆடவர், பெண்டிர்` என்னும் வேற்றுமை மாயாகாரியப் பொருளான உடம்பின் கண்ணதன்றி அறிவேயான நுண் பொருளிடத்து எங்ஙனம் விளங்கக் கண்டனரோ!.
எண் ஒடு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் சென்று இயையுமாயின் இங்கு `ஒடு` `போல்நவர்` என்பதனோடும் சென்றியைந்தது. உம்மை அசை. `போது கருங்குழல்போல் நவரோடும், அமரர் பிரானோடும் இடை தூது ஆதி பரத்தை, எனக் கூட்டுக.
இதனால், அனைத்தையும் கடந்து நிற்கும் பேரொளியாகிய சிவன், அனைத்துப் பொருளிலும் கலந்து நின்று இயக்கும் சிற்றொளியாகிய திரோதான சத்தயுடன் நின்று ஆன்மாக்களது ஆணவ இருளை நீக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

`உண்டில்லை` என்னும் உலகத் தியல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

பொழிப்புரை :

உலகம், சிலர் சிலவற்றை `உண்டு` எனக் கூறினால், உடனே அவற்றை `இல்லை` என மறுத்துக் கூறும் இஃது உலகத்தின் இயல்பு ஆதலை எளிதில் காணுதல் கூடும். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு, எளிதில் அகப்படுகின்ற பொருள் பற்றியே இவ்வா றாதலின், `காலம், இடம் இவற்றைக் கடந்த, `முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் உண்டு`8 என அறிந்தோர் கூறுவதை, உலகம் `இல்லை` எனக் கூறிப் பிணங்குகின்றது இவ்வுலகத்திற்கு `மேற்கதி` என்பது உண்டாகுமோ! உண்டாகாது. அந்த முன்னைப் பழம்பொருளை மக்கள் கண்டதில்லை. ஒரு சிலர் கண்டனரேனும், அவர் `அதன் இயல்பு இது` என விளக்கிச் சொல்லியதில்லை. `மற்று அதன் இயல்புதான் யாது` எனின், புறக்காட்சியை விடுத்து அறிவிற்குள்ளே ஒற்றித்துக்காணும் அகக்காட்சியில் விளங்குகின்ற ஓர் அதிசய விளக்கொளியாகும் அது.

குறிப்புரை :

`பண்டு` என்பது இடைச் சொல்லாயினும் பெயர்த் தன்மைப் பட்டு ஆகுபெயராய்ப் பண்டையதைக் குறித்தது. `கண்டது, விண்டது` என அவ்வத்தொழில் மேல் நிற்கும் வினைப் பெயர்களில் அகரச் சாரியையும், துவ்விகுதியும் தொகுத்தலாயின. `கண்டவர் விண்டில, விண்டவர் கண்டிலர்` என்பது ஒரு பழமொழி. விள்ளுதல் - விளக்கிச் சொல்லுதல். `உண்மை மாத்திரையாற் சுட்டப்படுமே யன்றி, இலக்கண வகையால் விளக்கிச் சொல்லுதல் இயலாது, அநுபவித்து அறியத் தக்கது` என்பதாம். இதனை,
``மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லெனின் சொல்லுமா றெங்கனே``
எனப் பின்னர் நாயனாரும்,
``இங்ஙனம் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்;
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``9
எனவும்,
``அன்றுமுதல் ஆரேனும் ஆளாய், உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்!
அவ்வா றிருந்த தது``l எனவும்,
``மருவி இருவரும் புணர வந்த இன்பம்
வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்``3
எனவும் பின்னை ஆசிரியன்மாரும் கூறுமாற்றால் உணர்க. இங்ஙன மாதலின், `முன்னைப் பழம்பொருள்` என்பது சூனியம் போலும் என மலையாமைப் பொருட்டு, ``உள்ளே விளக்கொளியாமே`` என்றார்.
இதனால் `சிவ ஒளி பேரொளியாதலுடன் உள்ளொளி நுண்ணொளி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசி
உடலுறு ஞானத் துறவிய னாமே.

பொழிப்புரை :

உலகத்தில், விளக்கு முதலாய் நிற்க, அதினின்றும் வியாபிக்கின்ற ஒளி இருந்தும் இல்லையாய்ப் போகும்படி தோன்றி விளங்குகின்ற ஞாயிறு போன்றவன் சிவன். ஆகவே, உடல், பொறி, உலகு நுகர் பொருள்களாய்ப் பல்வேறு வகைப்பட்டு நெருங்கி யிருக்கின்ற மாயா கருவிகள் செய்யும் மயக்கத்தை அடக்கி, அதற்கு மாறான ஞானத்தினால் உயிர்களோடு உறவுகொள்பவன் அவன்.

குறிப்புரை :

`அஃதறிந்து, கருவி ஞானத்தை நீக்கி, அவனது ஞானத்தை நாடிப்பெறுக`` என்பது குறிப்பெச்சம். ``ஆங்கு`` என்றது, `அங்து நின்றும்` என்றபடி. படர்தல், இங்கு நீங்குதல். படர் உறு காட்சிப் பகலவன் படர்தற்கு ஏதுவாய் உறுகின்ற காட்சியையுடைய பகலவன். ``மாயை`` என்றது, மாயையின் காரியத்தை. இன், சாரியை மயக்கத்தை ``இருள்`` என்றார். மயக்கத்திற்கு ஏது அதுவாகலின். வீசுதல் - போக்குதல். உடலுல் - மாறுபடுதல். ``உறவியன்`` என்பதில் அன் ஆடூவை அறிவித்தற்கு வந்த விகுதிமேல் விகுதி.
இதனால், `மேற்கூறிய அக விளக்கைக் காணுதல் அதன் ஒளியாலல்லது, பிற ஒளிகளால் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருமேனி பவளமும், செம்பொன்னும் போல்வதற்கு ஏற்ப அருமையாலும் அன்பினால் பிறர்க்கு அளிக்கப்படுகின்ற பவளமும், பொன்னும் போல்பவன் அவன், உலகிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற பகலவன், உலகத்துத் திணிந்த இருளைப் போக்குதல் போல எனது உள்ளத்தில் திணிந்த இருளைப் போக்கி, `என் அறிவினுள்ளே இருக்கும் பவளம்` என்று சொல்லும்படி என்னும் இருக்கின்றான்.

குறிப்புரை :

``ஆதிப்பிரானும்`` என்பதை முதலிற் கொள்க. உம்மை சிறப்பு. ஆதிப்பிரானும்`` என்பதுடன் முதல் அடியும் கூடிய தொடர் `சிவபெருமான்` என்னும் பொருட்டாய் நின்றது. `வெண்ணீற்றில் ஒளிந்த - மறைந்த பவளத் திருமேனியன்` என்க. ``பவளச் செம் பொன்`` என்னும் உம்மைத் தொகை ஒரு சொல் நீர்மைப்பட்டு நிற்க, அதனோடு ``அளி`` என்பது வினைத்தொகை நிலைப்படத் தொக்கது. அளி - அளிக்கப்படுகின்ற. அன்பினால் ஒருவர் பிறர்க்கு அளிக்கும் பரிசுப் பொருள்களில் பவளமும், பொன்னும் சில அரும்பொருள் களாம். அவ்அருமை பற்றியே அவை இங்குச் சிவபெருமானுக்கு உவமையாகச் சொல்லப்பட்டன.
``வைப்பர் - பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து``* என்பதிலும் பொன் பொதிந்து வைத்துப் போற்றப்படும் அருமை பற்றியே பொறுத்தார்க்கு உவமையாகக் கூறப்பட்டது. இன்னும் ``முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் - பொன்னே போற் போற்றுவம்``* என்பதிலும் பொன் அருமை பற்றியே உவமை யாயிற்று. ``பவளத்தையும் பொன்னையும்போலச் சிவபெருமான் உள்ளத்துப் பொதிந்து வைத்தப் போற்றுதற்குரியவன்` என்பது, ``அளி பவளச் செம்பொன்`` என்பதனால் குறிக்கப்பட்டது. ``பவளச் செம்பொன்`` என்னும் உம்மைத் தொகை உவம ஆகுபெயர் இனன் - பகலவன் பவளத்து இனன் - பவளம் போலும் நிறத்தையுடைய இனன். களி இனன் - உலகம் களிப்புறுதற்கு ஏதுவாகிய இனன். திணிந்த இருள்` என்றற்குக் ``காரிருள்`` என்றார். `இனன்போல` எனவும் `பவளத்தைப் போல` எனவும் உவம உருபு விரிக்க. ஒளி பவளம் உள்ளத்தில் மறைந்து நிற்கும் பவளம். ``ஈசன்`` என்பது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. அதனை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக.
இதனால், சிவன் உயிர்களின் உள்ளொளியாய் நின்று உளளிருளை நீக்கும் அருமை அறியற்பாலதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

 ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.

பொழிப்புரை :

உள்ளத்துள்ளே உள்ளொளியாகிய சிவனும் இருக்கின்றான். கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவர்களும் இருக்கின்றார்களும். இருப்பினும், அவர்கள் ஒளி தம்மிடத்தில் சிறிதும் இல்லாததுபோல, `ஒளி எங்கே உள்ளது` எனத் தேடித் திகைத்து, `சிவனே! சிவனே` என ஓலமிடுகின்றனர். அதற்குக் காரணம், ஆணவமாகிய ஒரு பாசம் முதலிலே பற்றியிருக்க, அது காரணமாக வகையால் இரண்டாய், விரியால் அளவிறந்தனவாகிய வினைகள் வந்து பற்றியிருப்பதேயாம். ஆகவே, அவர்களது செயல், மலர் இருந்தும் மணம் கமழாதது போன்றதாகும்.

குறிப்புரை :

`தேசு` என்பது, `தேசம்` என அம்முப்பெற்று வந்தது. தேசு - ஒளி. இன்றி - இல்லாதது போல. `பற்றற` என்பது பாடம் அன்று. ``வாசம், ஒன்றாமலர் போன்றது`` என்றலே கருத்தென்க. `மலர் உயிரும், மணம் சிவமும்` என்க.
``பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்,
சீவனுக் குள்ளே சிவணம் பூத்தது``3
என முன்னரும் கூறினார். இதனை,
``உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். உயர் பிறப்பினராகிய தேவர்களைக் கூறவே மக்கள் நிலை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `சிவன் உள்ளொளியாய் இருந்தும் பாசப்பற்றால் விளங்கிலன்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பாசம் பற்று அற்றால் விளங்குவன` என்பது சொல்லாமே அமைந்தது.

பண் :

பாடல் எண் : 17

தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பாவலும் ஆமே.

பொழிப்புரை :

வேதமாய் இருப்பவனும் சிவனே. வேதத்தைச் செய்தவனும் சிவனே. இனி வேதமும் இயல்பாகவே அவனையே, `முடிநிலைப் பொருள்` எனக் கூறி முடியும். ஆகவே, ஆகாயத்திற்குள் அடங்கியிருக்கும் உலகம் அனைத்தினுள்ளும், `ஞான சூரியனாய் உள்ளவன் சிவன் ஒருவனே` எனப் புகழ்ந்து பாடி அவனை அடைதலே தக்கது.

குறிப்புரை :

முதலில் உள்ள, `தான்` சிவன் என்பது, அதிகாரத்தால் விளங்கிற்று. `இருக்கு` என்பது பொதுப்பட அனைத்து வேதங் களையும் குறிக்கும் பெயராயும் வரும். இரண்டாம் அடியில் ``இருக்கும்`` என்னும் உம்மை சிறப்பு. அவ்விடத்து, ``தானே`` என்றது `இயல்பாகவே` என்றபடி. ``அவன்`` என்பதன்பின் `முடிநிலைப் பொருள்` என்பது எஞ்சி நின்றது. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. `வானின் உள்ளாய் இருக்கும்` என உருபு விரிக்க. `சான்றோராவார் வேதாகமங்களின் வழி நிற்பவர் ஆகலான், எவ் விடத்தும் சிவனையே ஞான மயமான மெய்ப்பொருளாகப் போற்றி வணங்குதலே சான்றோராயினார்க்கு உரிய இயல்பு` என்றபடி. `பானுவாய்` என்பதில் ஈற்று உகரம் குறைந்து, `பானாய்` என வந்தது.
இதனால், `வேதாகம வழக்காகிய சான்றோர் சென்ற நெறிப்படி உயிர்களுக்குள்ளே ஒளி வளர் விளக்காய் ஒளிர்பவன் சிவனே` என உணர்ந்து அவனைக் கண்டு இன்புறல் வேண்டும்` என்பது கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது `உணர்த்தரிது` என எஞ்சி நின்ற சொல்லெச்சம் பற்றி. ``கண்டீர்`` மூன்று தொடர்ப் பொருளை வலியுறுத்தி நின்ற முன்னிலையசைகள். ``உலகு`` இரண்டில் பின்னது உயிர்த்தொகுதி. நன்றாவது ஞானம். அதனைத் தருவதனை ``நன்று`` என உபசரித்துக் கூறினார். இனித் தின்று கண்டேன் என இயையும். இனி - இப்பொழுது.
இதனால், `ஞானத்தைத் தருதல் பற்றி மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரம் `என்பதும், அது நகாரம் முதலாக அமையின் தூல பஞ்சாக்கரமாம்` என்பதும் சொல்லப்பட்டன. இதனைப் பிரணவத்தோடு கூட்டிக் கூறின தூல சடாக்கரமாம்.
வடமொழி `ம` என விசர்க்க ஈறாய் நின்று முப்பதாம் மெய்யோடு புணருங்கால், விசர்க்கம் அம்முப்பதாம் மெய்யாகத் திரிந்து வருதல் பற்றித் தமிழில் நமச்சிவாய` எனச் சொல்லப்படும். அவ்வாறாயினும் வடமொழியிலாயினும், தென்மொழியிலாயினும் மெய்யெழுத்து எண்ணப்படாமையின், எழுத்து ஐந்தேயாம். `நமசிவாய` என்றல் யந்திர முறையாகிய கிரியா மார்க்கமாம். திருமுறைகளில் எல்லாம் ஞானமார்க்க முறையாகிய `நமச்சிவாய` என்றே சொல்லப்படும். திருமுறைகளில் பெரும்பான்மையாக இத்தூல பஞ்சாக்கரமே எடுத்தோதப்படுதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

பொழிப்புரை :

சிவன், ``சொல் இறந்து நின்ற தொன்மையன்`` ஆயினும் சொல்லாலன்றி உயிர்கள் அவனை உணர்தல் கூடாமை பற்றி அவன் சொல்வடிவான பல பெயர்களையும் உடையவன் ஆகின்றான். எல்லாப் பொருள்களும் பெயராலே அறியப்படுதலாலும் எல்லாப் பொருள்களிலும் சிவன் அவையேயாய்க் கலந்து நிற்றலாலும் ஒரு வகையில், எல்லாப் பெயர்களும் சிவன் பெயர்களேயாகின்றன. பெயர்கள் யாவும் எழுத்துக்களால் ஆனவை. `அவ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` எனப்படுகின்றன. அந்த எழுத்துக்கள் பிரணவ கலைகளாகிய அகார உகார மகாரங்களால் முறையே `தோற்றம், நிலை, இறுதி` என்பவற்றை அடைவனவாகச் சொல்லப்படுகின்றன. ஆகவே, அனைத்துப் பெயர்களும் தோன்றி அழிவன ஆகின்றன. இந்நிலையில் தோற்றமும் அழிவும் இல்லாத சிவ நாமம், நகாரத்தை முதலாக உடைய ஐந்தெழுத்தாதல் ஆவதாம்.

குறிப்புரை :

எனவே, இந்த ஐந்தெழுத்துக்கள் ஐம்பத்தோர் அக்கரங்களுள் அடங்கி நிற்கின்ற அந்த எழுத்துக்கள் ஆகாது, வேறு எழுத்து என்பதாம். இது பற்றி, ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே`` என்ற மந்திரத்தை நோக்குக. மற்றும்,
``அஞ்செழுத்தீ தாகில் அழியும் எழுத் தாய்விடுமோ!
தஞ்ச அருடகுருவே சாற்று``
என்னும் உண்மை விளக்க அடிகளில் அமைந்த குறிப்பையும் உன்னுக. ஆதல் - தோன்றுதல். ஓங்கி உதித்தல் - நிலைத்து நிற்றல்.
``மாய்ந்து மாய்ந்து ஏறி`` என்றது, `பலவாய்த் தோன்றி மறைந்து பெயர்களாய் எண்ணிக்கை மிகுந்து` என்றபடி. இங்ஙனம் கூறியது பெயராயின பலவற்றையும் ``ஏறி`` என்பதன் பின் `முடிவாக` என்பது வருவிக்க. `முதலது` என்பதில் இறுதி நிலை தொகுத்தலாயிற்று.
இதனால், சிவ நாமமாகிய ஐந்தெழுத்துக்கள் ஏனை எழுத்துக்கள் பலவற்றில் சில ஆவன அல்ல` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
உகராதி சத்தி உள்ளொளி ஈசன்
சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.

பொழிப்புரை :

`ஐம்பது` அல்லது, `ஐம்பத்தொன்று` எனப்படும் அகரம் முதலாகிய எழுத்துக்களில் பதினாறு வகையாய்ப் பராசத்தி நிறைந்து நிற்கும். (பதினாறாவன சயை, விசயை, அசிதை, பராசிதை, நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, இந்திகை, தீபிகை, இரோசிகை, மோசிகை, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை` என்பன.
அந்தச் சத்தியைக் குறிக்கும் பெயர் உகாரத்தை முதலாக உடையது `உமா, என்பது (இஃது உ, ம், அ என்பது கூட்டாக இருத்தலால், `சத்தி பிரணவம்` எனப்படும்.) சத்தி ஒளியாய் நிற்க. அதற்குப் பற்றுக் கோடான சுடராய் உள்ளார்ந்து நிற்பவன் சிவன் முன் மந்திரத்திற் கூறிய ஐந்தெழுத்து மந்திரத்தைச் சிகாரம் முதலாகக் கொண்டு நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய், `பதி, பசு, பாசம்` என்னும் மூன்றையும் உணர்த்தும், ஆகவே, முன் மந்திரத்திற் கூறியவாறு நகாரத்தை முதலாகக் கொண்ட ஐந்தெழுத்தாலாகிய அந்த மந்திரமே அனைத்து மந்திரங்கட்கும் மூல மந்திரமாம் தகைமையை உடையதாகும்.

குறிப்புரை :

அகாராதி - அகரம் முதலாகிய எழுத்துக்கள். `அகாராதியில்` என உருபு விரிக்க. `பரையாம் தன் சத்தி உகராதி` உகாராதி - உகரத்தை முதலாக உடைய மந்திரம் என மாற்றியுரைக்க. ``உள்ஒளி`` என்பது, `ஒளி உள்` என்பது பின் முன்னாக மாறி நின்ற ஆறாவதன் தொகை. ``உள்`` என்பது ஆகுபெயராய் உள்ளார்ந்து நிற்கும் பொருளைக் குறித்தது. ஐந்தெழுத்து மந்திரத்தில், `சிவா` என்பது பதியையும் `ய` என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். அவற்றுள்ளும் சிகாரம் சிவனையும், வகர ஆகாரம் அவனது அருட் சத்தியையும் குறிக்கும். `நம` என்பதிலும் மகாரம் ஆணவத்தையும், நகாரம் திரோதான சத்தியையும் குறிக்கும். மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்கும். இவற்றையெல்லாம், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் முதலிய நூல்களில் காண்க. ஏதம் - குற்றம்; பாசம். கோணம் - வளைவு. இரு பக்கமும் வளைந்து சென்று பாசத்தோடும், பதியோடும் பற்றும் தன்மையுடையது பசு, மந்திரம்` என்றது, மூல மந்திரமாம் தன்மையை.
இதனால், முன் மந்திரத்தில் ``நந்திதன் நாமம்`` எனக் கூறிய நகாராதி ஐந்தெழுத்தால் ஆகிய மந்திரம் ஏனை மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமாதற்குக் காரணம் விளக்கிக் கூறப்பட்டது. அதனோடே அக்கரங்கள் எல்லாம் சத்திமயம் ஆதலும் உடன் இணைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.

பொழிப்புரை :

நந்தி நாமமாகிய நகாராதி ஐந்தெழுத்தாலாகிய மந்திரத்தின் நிலையை நுணுகி நுணுகி நோக்கினால், அடி அண்ணம், கண்டம், (மிடறு, இருதயம், உந்தி, மூலம் என்பவற்றில் முறையாகப் போய், முதல் நிலையாய் நிற்கும். அந்நிலையே `நாதம்` என்பர். அதனை `அகரம்` எனவும் வழங்குவர். இனி அது தியானிக்கப்படும் நிலையில் புருவநடு, நெற்றி, உச்சி அதற்கு மேலும் செல்வனவாகிய நிராதாரம், மீதானம் ஈறாகிய ஐந்திடத்திலும் பொருந்தும்.

குறிப்புரை :

எல்லாச் சொற்களுமே ஒருவன் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி சொல்லும்பொழுது பல், இதழ், நா, அண்ணம் முதலியவற்றின் முயற்சியால் பிராண வாயுவோடு கூடிப் பருமையாய் வெளிப்பட்டு வைகரி வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `வாசகம்` எனப்படும். தன் செவிக்குக்கூடக் கேட்காதபடி மெல்ல உச்சரிக்கும் பொழுது `அடி, அண்ணம், கண்டம்` என்னும் இடங்களில் மத்திமை வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `உபாஞ்சு` எனப்படும். இவ்வாறு உச்சரித்தலே இல்லாமல் பொருள்கள் கருத்தளவாய் நிற்கும்பொழுது இருதயத்திலும், கருத்தளவாய் உருவாக நிற்கும்பொழுது உந்தியிலும் பைசந்தி வாக்காய் நிற்கும். கருத்தளவாய் நிற்க மந்திரங்களை எண்ணுதல் `மானதம் எனப்படும். இவற்றிலும் நுண்ணிதாய்க் காரண நிலையில் நிற்கும் பொழுது மூலாதாரத்தில் சூக்குமை வாக்காய் நிற்கும். அந்நிலையே சிறப்பாக, `குண்டலி சத்தி` எனப்படுகின்றது. இந்நிலைதான் ஐந்தெழுத்து மந்திரத்திற்கும் உள்ளது. ஆயினும், புருவ நடுமுதல் மீதானம் ஈறாகத் தியானப் பொருளாய் வியாபித்து நிற்றல் ஐந்தெழுத்து மந்திரத்திற்கன்றிப் பிற சொற்களுக்கில்லை. இச்சிறப்பை விளக்குதற் பொருட்டே முதற்கண் அனைத்துச் சொற்களும் நால்வகை வாக்காய் நிகழுமாற்றை எடுத்துக் கூறினார். ஆகவே அது ஞாபக மாத்திரையேயாம். புருவ நடு முதலாக மேற்செல்லுதல் எல்லாம் தியானமே யாதலின் அதனைக் கூறிற்றிலர். இலிங்கம், அதனை அடுத்துள்ள மூலத்தைக் குறித்தது. `அவ்வாய்` ஆம், என முடிக்க. துண்டம் - மூக்கு. அஃது அதன் அடியாகிய புருவ நடுவைக் குறித்தது. மத்தகம் - தலை நெற்றியையும் சுட்டுதற்கு, ``இருமத்தகம்`` என்றார். செல்லல் - அதற்குமேற் பெயராய்ச் செல்லும் இடங்களைக் குறித்தது.
இதனால், ஐந்தெழுத்து மந்திரம் பிற சொற்களின் வேறுபட்டதாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும்
மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.

பொழிப்புரை :

``தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.(திருமுறை - 7-7-2) என்றபடி பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இயற்கை நியதியின்படி இறப்பை எய்திய மக்களின் உடம்பை உறவினரும், ஊராரும் முறைப்படி எரியூட்டுவார்கள். அவ் எரி, ஏழுவகையான கதிர்கள் மிக்குத் தோன்றும் வகையில் ஓங்கி எரியும். அப்பொழுதுதான் பருவுடம்பில் எஞ்சி நின்ற `தனஞ்சயன்` என்னும் காற்று முதலிய சில கருவிகள் அவ்வுடம்பை விட்டு நீங்குவனவாகும். அவையும் நீங்க உயிர் நுண்ணுடலோடு வினைக்கீடாகத் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செல்லும். இவ்வாறான இயற்கை இறப்புவரினும், உயிர் செய்த பெருந்தீவினை காரணமாக இடையே திடீர் செயற்கை இறப்பு வரினும் எப்பொழுதும் உயிருக்குப் பாதுகாவலைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே.

குறிப்புரை :

`நெருப்பிலும், ஞாயிற்றிலும் ஏழுவகையான ஒளிக் கதிர்கள் உள்ளன` எனவும், `அந்த ஏழு கதிர்களே பகலவன் தேரில் ஏழு குதிரைகளாக உருவகிக்கப்பட்டன` எனவும் இக்கால அறிவியலார் கூறி விளக்குவர். அதனை நாயனார் முன்பே, ``கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கி`` எனக் கூறினார். கரணங்கள் - கருவிகள். ``விட்டு`` என்னும் செய்தென் எச்சம் எண்ணின்கண் வந்தது. ``எரி பொங்கி`` என்றதனால் `இயற்கை மரணம்` என்பது போந்தமையின், பின்பு ``மரணம்`` என்றது, அகால மரணத்தையாயிற்று. இரு நிலைகளிலும் அஞ்செழுத்துப் பாதுகாவலைத் தருதலாவது, உயிர், சுவர்க்க நரகங்களில் புகாது, சிவலோகத்தை அடைவித்தல். சிவலோகத்தை அடைந்த உயிர் ஏனை உயிர்கள்போல மீள இவ்வுலகத்தில் வந்து பிறத்தல் நியதியன்று. பிறக்கினும் ஞானத்திற்கு உரியதாகவே பிறக்கும். `அந்நிலையைத் தருவது ஐந்தெழுத்து` என்றபடி.
இதனால், பிறப்பை நீக்குவது ஐந்தெழுத்து மந்திரம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.

பொழிப்புரை :

`ஞாயிறும், திங்களும் எழுகின்ற காலை, மாலை என்னும் வேளைகளில் சிறப்பாகக் கணிக்கத் தக்க மந்திரம் இது` என்பதை அக்காலங்களில் மந்திரக் கணிப்புச் செய்வோரில் பெரும்பாலோர் அறிந்திலர். (ஆகவே அவர்கள் காயத்திரி மந்திரத்தையே அவ்வேளைகளில் கணிக்கின்றனர். ஆகவே) `சந்தியா தேவதை` எனப்படும் சத்திக்கு மிகவும் விருப்பத்தைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே என்பதை அறிந்து அதனை அக்காலங்களில் வாசகம் முதலிய மூவகையானும் ஓதுதலாகிய சிறப்பு அவர்கட்குக் கூடுமோ!.

குறிப்புரை :

`கூடாது` என்பதாம். நவிலுதல் - முறைப்படி அமைதல். ஞாயிறு எழும் காலம் காலை வேளையாதல் வெளிப்படை. `திங்கள் எழும் காலம் ஞாயிறு மறையும் நேரம்` என்றே கொள்ளப்படும் இவையிரண்டும் கூறவே, இனம் பற்றி நண்பகலும் கொள்ளப்படும். இவையே முப்போதுகளாம் `சந்தியா காலம் எனப்படும் ஆசாரியராயினார் நள்ளிரவிலும் வழிபடுவர். அது சிறுபான்மை.
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்(கு)
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே``9
என்னும் ஞானசம்பந்தர் திருமொழியை இங்கு உடன் வைத்து உணர்க. ஆய் - ஆய்வு; முதனிலைத் தொழிற்பெயர். சேயுற் கண் - செவ்வரி பொருந்திய கண். மந்திரங்களைக் கணிக்கும் முறை `வாசகம், உபாஞ்சு மானதம்` என மூன்று என்பதை மேல், `வாயொடு கண்டம்`` எனப் போந்த மந்திர உரையிற் காண்க. ``வழுத்தலும்`` என்னும் உம்மை சிறப்பு, ஈற்றில் உள்ள ஏகாரம் எதிர்மறை வினாப்பொருட்டு.
``ஞாயிறு, திங்கள்`` என்பவற்றை வல இட உயிர்ப்புக்களாகக் கொண்டு, `அவற்றை முறையாக இயக்கித் திருவைந்தெழுத்தைக் கணிப்பினும், அம்ச மந்திரத்தைக் கணித்தலோடொப்பதே` என உரைத்து, ``ஊனில் உயிர்ப்பை`` எனத் தொடங்கும் ஞானசம்பந்தர் திருப்பாடலை மேறகோளாகக் காட்டுவர்.
இவ்விருபொருளையும் இம்மந்திரத்திற்குப் பொருளாகக் கொள்க.
[இதனை அடுத்துச் சில பதிப்புக்களில் காணப்படும் ``தெள்ளமு தூறச் சிவாய நம என்று`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.]

பண் :

பாடல் எண் : 7

குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வருவழி மாள மறுக்கவல் லார்கட்
கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

சிவகுரு உபதேசித்த மொழி வழியில் நின்று, பிறப்பிற்கு ஏதுவான வழியையே கூறும் சமய நூல்களைக் கைவிடவும், மற்றும் பிறவி வரும் வழிகெட்டுப் போகும்படி அதனைப் போக்கவும் வன்மை பெற வேண்டுவார்க்கு அவ்வன்மையைத் தருவதாகிய திருவருளாகிய வழியைக் காட்டுவது திருவைந்தெழுத்து மந்திரமே யாகும்.

குறிப்புரை :

குரு வழி - குரு காட்டிய வழி. அஃது உபதேச வடிவின தாம். குணம் - நற்பண்பு; என்றது நல்லொழுக்கத்தை. குணத்ததைத் தருவதனை, ``குணம்`` என்றார். `நின்று அறுக்கவும், மறுக்கவும் வல்லார்` என்க. கணக்கு - நூல். ``வல்லார்`` என்றது, `வன்மையை வேண்டுவார்` என அக்காரணத்தின்மேல் நின்றது. அருள் வழி - அருளாகிய வழி. `அதனைக் காட்டுவது அஞ்செழுத்து` எனவே, பிறவெல்லாம் அருள் அல்லாத மருள் வழியையே காட்டுதல் பெறப்படும்.
இதனால், `திருவருளைப் பற்றச்செய்வது திருவைந் தெழுத்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

பொழிப்புரை :

செயலற்று நிற்கும்படி வினையின் பயனாகிய துன்பங்கள் வந்து விளையும்பொழுது, அவற்றால் சோர்வுறாதபடி உறுதியைத் தருகின்ற திருவைந்தெழுத்தை ஓதும் கருத்தைக் கொண்டால் அக்கருத்து அதனை உடையவனைச் சிவனது திருவடியில் சேர்க்கும். மேலும் அக்கருத்துடையவன் செய்யும் செயல்கள் சிவனது உருவேயாகும்.

குறிப்புரை :

வெறித்தல் - வெறிச்சோடிப் போதல், செறிதல், அடங்குதல் ஆதலின், செறித்தல் அடக்குதல். அஃதாவது, துயரத்தை வெளிக்காட்டு இருத்தல். குறிப்பு - கருத்து.

பண் :

பாடல் எண் : 9

நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

பொழிப்புரை :

மேகங்கள் தவழும் வெள்ளி மலையில் வீற்றிருகின்ற இறைவனை திருவைந்தெழுத்து வழியாக நெஞ்சால் நினைதலும், வாயால், `தலைவனே` என்று சொல்லி வாழ்த்துதலும், இறக்கும்பொழுது, `உனது திருவடியே புகல்` என்று சொல்லியும் நின்றால் அவ்விறைவனது அருளை எளிதில் பெறலாம்.

குறிப்புரை :

``அஞ்சில்`` என்பதில், இல், ஏதுப் பொருள்கள் வந்த ஐந்தாம் உருபு. இதனை முதலிற் கொள்க. இதற்குப் பிறவாக உரைப்பன இவ்விடத்திற்கு இயையா. ``வாயால்`` என்பதனோடு இயைய, `நெஞ்சால்` என உருபு விரிக்க. ``என்று`` இரண்டின் பின்னும் வருவிக்கப்பட்ட சொல்லெச்சங்கள் காரணப் பொருளவாய், `பெறலாம்` என்பதனோடு முடித்தன.
இதனால், திருவைந்தெழுத்தான் சிவனது திருவருளைப் பெறுதல் எளிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கள் உய்தியின் பொருட்டு உண்டாக்கி வைத்துள்ள சாதனம் திருவைந்தெழுத்து மந்திரம். அதுவே அவனது பேராற்றலாகிய பொருட் சத்தியும், குண்டலினியாதல் பற்றி, `பாம்பு` என உருவகித்துக் கூறப்படும் சுத்த மாயையால் பலவகையாலும் வியாபிக்கப்பட்டு விளங்கும் அசுத்த மாயையும் பல புவனங்களும் ஆகும். ஆகவே, அதன் பெருமையை உணரமாட்டாத எளிய மக்கள் தங்கள் அஞ்ஞானமாகிய இருளைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ!.

குறிப்புரை :

`ஆகார்` என்பதாம். குண்டலினி - வளைந்திருப்பது; அஃதாவது, அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவற்றைச் சூழ்ந்திருப்பது. அது சுத்த மாயையே அது நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாய் விரிந்து அனைத்தையும் உள்ளடக்கி நிற்பதைக் குறிக்கவே சிவாலயங்களில் சிவலிங்கத்தின் மேல் பாம்பு ஒன்று ஐந்து தலைகளுடன் படம் எடுத்துக் கவிந்திருப்பதாக வைக்கப்படுகின்றது. இனிப் பூமியை அதன் அடியில் `ஆதிசேடன்` என்னும் பாம்பு தாங்குவ தாகக் கூறப்படுவதும், சுத்த மாயை எங்கும் வியாபித்துள்ளதைக் குறிப்பதே. திருமால் பாம்பணையிற்பள்ளி கொண்டிருப்பதாகக் கூறுவதும் பழமையாக இந்தக் கருத்து இந்நாட்டில் பலர்க்கும் பொதுவாய் இருந்ததைக் காட்டும். ஆயினும் பிற்காலத்தில் மாயோன் சமயம் சைவ தத்துவத்தை விட்டுச் சாங்கிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டது. இங்குப், ``பல்வகையாலும்`` என்றது, சுத்த மாயை நால்வகை வாக்குகளாயும், சிவம், சத்தி முதலிய சுத்த தத்துவங்களாயும், நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாயும் விரிந்து நிற்றலை. இவற்றுள் நால்வகை வாக்குக்களே சிறப்புடையனவும் ஆதலின், `மந்திரங்களில் தலையானதாகிய திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்துமாய் உள்ளது` என்றும், இதனை உணராதார்க்கு ஞானம் உதியாது ஆதலின், `அவர் அஞ்ஞானத்தைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ` என்றும் கூறினார். இரா - இரவு; இருள். பரா - பரா சத்தி. கீழ் - கீழது; அதோ மாயை; அசுத்த மாயை, பரா முற்றும், கீழொடு, அராப் பல்வகையாலும் சூழ்ந்த அகலிடம் முற்றும் தானே` என இயைக்க. தானே - அத்திருவைந்தெழுத்தே.
இவ்வாறு திருவைந்தெழுத்தின் பெருமையை பொதுப்படக் கூறி, தூல நிலை முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.

பொழிப்புரை :

எவராலும் மறுக்க ஒண்ணாத உண்மையை எளிய மக்கள் மிக எளிதாக உடன்படாது மறுத்து வாதிடுவர். அவர் அவ்வாதத்தினை விட்டு அஞ்ஞான இருளை அகற்றும் ஞான ஒளியாகிய எங்கள் சிவபெருமானை நினைந்து உருகுகின்ற மனத்தை உடையவராய்க் கணிப்பார்களாயின. அப்பெருமான் அந்த, `சிவாயநம` என்னும் குளிகையினால் அவர்களது உயிரை மட்டுமன்று; உடம்பாகிய செம்பையே பொன்னாக்கி விடுவான்.

குறிப்புரை :

`அப்பேற்றினை அவர்கள் பெறுகின்றிலர்` என்பது குறிப்பெச்சம். குளிகை பிற உலோகங்களைப் பொன்னாக்கும் இரச மணி. இதனைச் செய்யும் முறையை அக்காலத்தில் சித்தர்கள் அறிந் திருந்தனர். பிற உலோகங்களைப் புடம் இட்டு உருக்கிப்பதம் அறிந்து இக்குளிகையைச் சேர்த்தால், அந்த உலோகங்களில் உள்ள வேற்றுப் பொருட்கள் நீங்கி அவை பொன்னாய் ஒளிரும். கூடு - உடம்பு. ``கூட்டையே`` என்னும் தேற்றேகாரத்தால் உயிரை அதற்கு முன்பே பொன்னாக்குதல் பெறப்பட்டது. உயிர் ஆணவத்தால் அறிவையிழந்து களிம்பினால் ஒளியிழந்து நிற்கின்ற செம்புபோல் உள்ளது. திருவைந்தெழுத்துக் கணிப்பினால் ஆணவம் நீங்கி விட்டால், இரச குளிகையால் களிம்பு நீங்கிச்செம்பு பொன்னாய் ஒளிர்வது போல உயிர் சிவமாய் விளங்கும். உயிர் சிவமாயின், அதன் உடம்பும் சிவகாயமேயாம். இதனை மேலேயும் சில இடங்களில் கூறினார்.8
மேல், ``நகார முதலாகும்``9என்றதனை, `ஆகி உதித்து, ஏறி ஆகும்` என்றமையால் நகாரம் முதலாக அமைவது `தூலபஞ்சாக்கரம்` என்பதும், இங்கு, `உன்னி உருகும் மனதீதராய்த் தெளியவே ஓதின் கூட்டையே பொன்னாக்குவன்` என்றதனஆல், சிகாரம் முதலாக அமைவது `சூக்கும பஞ்சாக்கரம்` என்பது போந்தன.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
``சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்
றிருக்கினல்லால் ... ... ... ...
அத்தன் அருள்பெற லாமோ, அறிவிலாப்
பேதை நெஞ்சை``
``உனதருளால் - திருவாய்ப் பொலியச்
சிவாய நம என்று நீறணிந்தேன்,
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே``3
``நானேயோதவம் செய்தேன், சிவாயநம எனப்பெற்றேன்``l
எனத் திருமுறைகளில் இச்சூக்கும பஞ்சாக்கரம் சிறுபான்மையாகச் சில இடங்களில் எடுத்தோதப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 2

தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :

புறத்தில் தெளிவான அமுதமான கண்ணீர் கரந்து பாயவும், அகத்தில் அன்பு பெருகவும் சிவாயநம` என்று ஒருமுறை சொல்வதால் உண்டாகும் இன்பமாகிய அமுத வெள்ளத்தை உண்ண விரும்பாதவர்கள் பெருங்காற்றில் அகப்பட்ட மழைத்துளிபோல அடையும் இடம் அறியாது அலமருதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``உள் அமுது`` என்றது அன்பினை ``அமுது ஊற`` என்பதையும் ``தெள்ளமுதூற`` என்பதனோடு இயைக்க. உரைத்திடும் அமுது - உரைத்தலால் விளையும் அமுதம் `வெள்ள அமுது` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``விரும்பி உண்ணாதவர்`` என்றாராயினும் `உண்ண விரும்பாதவர்` என்றலே கருத்தென்க. ``துள்ளிய நீர்`` என்பதற்கு ஆற்றல் பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது, இறுதியில் `இரங்கத் தக்கது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது.
இதனால், பஞ்சாக்கரத்தைச் சூக்குமமாக வைத்து ஓதுவார் சிறந்த பயனை அடைதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.

பொழிப்புரை :

சூக்கும பஞ்சாக்கரத்தில் சிகாரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் முறையே சிவம், அருட் சத்தி, உயிர், திரோதான சத்தி, ஆணவ மலம்` என்னும் ஐந்தையும் குறிக்கும். (மாயேயம் மாயையில் அடங்க, மாயை கன்மங்கள் திரோதாயி வழிபட்டு அதனுள் அடங்க, திரோதாயியைக் குறிக்கு நகாரம் ஆணவம் ஒழிந்த மற்றை நான்கு மலங்களையும் குறிக்கும்.) ஆகச் சீவன் ஐந்து மலங்களிலும் நீங்கிச் சிவம் சத்திகளோடே சேர்ந்திருக்குமாயின், பயனில்லாத செயல்களில் செலுத்துகின்ற பாசங்கள் சிவனைச் சாராமாட்டா.

குறிப்புரை :

திரோதான சத்தி மலங்களைச் செயற்படுத்துதல் பற்றி அதுவும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறப்படும். மலத்தைக் கெடுத்தலே அதன் குறிக்கோள் ஆதல் பற்றி அதனை, ``செறு மலம்` ஒன்றார். `மலத்தைக் கெடுக்கின்ற மலம்`` என்பது அதன் பொருள். மாயையாகிய அவத்தினைச் சேர்த்த பாசம் ஆணவம். உண்மை விளக்கம். சிவப்பிரகாசம் ஆகிய நூல்களிலும் இவ்வாறே,
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன்எழுத் தஞ்சின் அடைவாம்``*
எனவும்
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத்
திரோதம், மாசு, அருள், சிவம்-சூழ்
தர, நடு நின்றது.3
எனவும் கூறப்படுதல் காண்க. சிவப்பிரகாசச் செய்யுளில், ஆன்மா நடு நின்றமை கூறப்பட்டது, முதற்கண் ``பாசம்`` என்பதன்பின் `இவற்றில்` என்பது வருவிக்க. இவற்றைக் குறிப்பன சிகாரம் முதலிய எழுத்துக்கள்` என்பது, மேல் அவற்றைக் கூறியதனானே அமைந்தது.
``சீவனார்`` என உயர்த்துக் கூறியது, பாசத்துள் அகப்பட்டுத் துன்புறுதலைக் குறிக்கும் இழித்தற் குறிப்பு. சீவனார் மலம் ஐந்து அகல, சிவம் சத்தி தன்னுடன் சேர` என்றது அதிசூக்கும பஞ்சாக்கரதத்திற் செல்லல் வேண்டும் குறிப்பின் உட்கொண்டது. ``உடன்`` என்பதைச் சிவனுடனும் கூட்டுக. ``பதி அணுகின் பசு பாசம் நில்லாவே``9 என முதலிலேயும் கூறினார்.
திருவைந்தெழுத்தை நகராம் முதலாகச் சொல்லுமிடத்து ஒரு தொடர்மொழியாய் நின்று, `சிவனுக்கு வணக்கம்` என்னும் ஒரு பொதுப் பொருளையே தந்து நிற்றலால் `தூல பஞ்சாக்கரம்` எனச் சொல்லப்பட, சிகாரம் முதலாகச் சொல்லுமிடத்து ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் நுண்பொருளைக் குறிக்க. உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் சிறப்புப் பொருளைக் குறித்தலால் `சூக்கும பஞ்சாக்கரம்` எனப்படுகின்றது என்க.
தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையிலும், சுக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையிலும் உபதேசிக்கப்படும். விசேட தீக்கை வேண்டுவோர் உலகியலில் ஓரளவேனும் பற்றுவிட்டவராய் இருத்தல் வேண்டும்.
``அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி``8 என்னும் திருமுறைத் திருமொழியுள் அஞ்செழுத்தை, ``அஞ்சு பதம்`` என்றது, சூக்கும நிலைபற்றி எனக் கொள்ளுதல் உண்டு.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் உட்கிடைப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.

பொழிப்புரை :

(சிவனுடையனவாகச் சொல்லப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் அவனது அருளேயாகலின்) அவனது திருப் பெயராகிய திருவைந்தெழுத்தும் அவனது அருளேயாகும். அதில் சிகாரம் முதலிய எழுத்துக்கள் மேற்கூறியவாறு, `சிவன், அருட்சத்தி, சீவான்மா, திரோதான சத்தி, ஆணவ மலம்` எனஅபவற்றைக் குறித்து நிற்குமிடத்து அவ்வெழுத்துக்கள் சிகாரம் முதலாக நின்று முத்திக்கு வழி யாகும். (ஆகவே `நகாரம் முதலாக நிற்பின் அஃது அத்தன்மையது ஆகாது` என்றதாயிற்று) அதனால், சிகாரம் முதலாகக் கொண்டு கணிக் -கின், அவ்வாறு கணிப்பவன் பிறவியினின்றும் நீங்கிச் சிவனாவான்.

குறிப்புரை :

முன் இரண்டடிகளால், முன் மந்திரத்தில் கூறியதனையே அனுவதித்துக் கூறினார். அது முத்தி நெறி ஆதலைக் கூறுதற் பயன் நோக்கி, உண்மை விளக்கத்திலும்,
``நம்முதலா ஓங்கிஅருள் நாடாது, நாடும்அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று``2
``அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில், இராப்பகல்அற் றின்பத்தே - நண்ணி
அருளா னதுசிவத்தே ஆக்கும் அணுவை,
இருளா னதுதீர இன்று``
ஆதி, மலம்இரண்டும் ஆதியா ஓதினாவ்
சேதியா மும்மலமும் தீர்வாகா``3
என்றும், (ஆதி, திரோதான சத்தி) சிவப்பிரகாசத்தில்,
``ஆசுறு திரோதம் மேவா(து)
அகலுமா சிவம்முன் னாக
ஓசைகொள்அதனில் நம்மேல்
ஒழித்(து) அருள் ஓங்கும்``*
என்றும்,
திருவருட் பயனில்,
``மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ,
மேலாசி மீளா விடின்``
``சிவம் முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்; இதுநீ ஓதும் படி``*
என்றும் எல்லா இடத்திலும் இவ்வாறே கூறப்பட்டன.
`சிறந்த`` என்னும் செய்தென் எச்சம் காணப் பொருளில் வந்தது. நிரோதம் - நீக்கம்; பாச நீக்கம். நிரோதம் ஆம்` எனப் பயனிலை வருவித்து முடிக்க. ``அகன்று ஆம்`` என்பதற்கு சீவன் என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால் சுக்கும பஞ்சாக்கரம் முத்தி நெறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாகம் ஆக
நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.

பொழிப்புரை :

நமாதி - `நம` என்பதை முதலாக உடைய தூல பஞ்சாக்கரம். திரோதாயி ஆகி நனவாதி - திரோதான சத்தி வசப்பட்டதாய்ச் சகல கேவலங்களில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளை உண்டாக்கும். (இனி) சமாதித் துரியம் தமது அகம் ஆக-நின்மலாவத்தையே சீவர்களுக்கு உடம்பதாற் பொருட்டு தம் ஆதியாய் நிற்க - அப்பாஞ்சாக்கரம் சிவன் சத்திகளது வசமாதற் பொருட்டு தான் அந்தத்து உற்று முன் சொன்ன `நம` என்பது ஈற்றில் பொருந்த நம ஆதி சமம் சிவ ஆகி ஆதல் எண்ண - `நம` முதலுக்கு ஈடாகச் `சிவ` முதல் ஆவலைக் கருதுக.

குறிப்புரை :

`நனவாதி` என்பது அகரம் தொக ``நனாதி`` என்று ஆயிற்று. திரோதாயி ஆதல் திரோதாயி வசம் ஆதல். அஃதாவது, பந்தத்தைத் தருவது ஆதலாம். நின்மலாவத்தை `சமாதித் துரியம்` எனப் பின்னர் வருதலால், முதற்கண் உள்ள நனவாதிகள் சகலத்திலும் கேவலத்திலும் நிகழ்வனவாம் `நனவாதியைத் தரும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ``தமாதியது`` என்பதலி ``தம்`` என்றது சிவனையும், சத்தியையும் அங்கு ``ஆதியது`` என்றது, முதன்மையையுடையது வசப்பட்டது என்றவாறு. ``நிற்க`` என்பது, ``ஆக`` என்பதனோடு முடிய, ``ஆக`` என்பது ``ஆதல்`` என்பதனோடு முடிந்தது ``நிற்க`` என்பதற்கு நமாதியைச் சுட்டும் `அத` என்பது வருவிக்க ``தான்`` என்றது, முதற்கண் கூறிய நம ஆதியதைதான் ``அந்தம் உற்று`` என்பதில், ``உற்று`` என்பதை `உற` எனத் திரித்து, அத்தொடரை ஈற்றடியின் முதலிற் கூட்டுக. தமது - சீவர்களது. ஆகம் - உடம்பு. சமாதி - பரம்பொருளோடு ஒன்றுதல், அஃது அத்தன்மையதாகிய நின்மலாவத்தையைக் குறித்தது. அந்நிலையில் திருவருளாய் நிற்றலால் ``தமது ஆகம் சமாதித் துரியம் ஆக`` என்றார் `சிவ ஆதி, நம ஆதி சமம் ஆதல் எண்ண` என மாற்றியுரைக்க. `சமம்` என்பது ஈற்று அம்முத் தொகநின்றது. சமம் ஆதல், ஈடாதல். ``எண்ண`` என்பது அகர ஈற்று வியங்கோள் `எண்ணுக` என்றது `ஆய்ந்தறிக` என்றதாம்.
அவத்தை வேறுபாடுகளை முன் மந்திரத்தில் காண்க.
இதனால், தூல பஞ்சாக்கரம் சகல கேவலங்களாய் , நிற்க, சூக்கும பஞ்சாக்கரம் சுத்தத்திற்கு ஏதுவாதல் கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

பொழிப்புரை :

மேல் எல்லாம் சொல்லப்பட்டு வந்த தூலமும், சூக்குமமும் ஆகிய ஐந்தெவுத்துக்களுள் திரோதாயியைக் குறிக்கும் நகாரமும், ஆணவத்தைக் குறஇக்கும் மகாரமும் ஆகிய இவ் இரண்டெழுத்துக்களையும் முற்ற நீக்கி, அதனாலே சிவனது `ஆதி` என்னும் சத்தி அருட் சத்தியாக மாறுவதால் முன்னர்க் குற்றம் அற்ற சிவஞானமும் பின்னர்ச் சிவயோகமும் கிடைக்கும். ஆனால் அவ்வாறு ஓதப்படும், `சிவாய` என்னும் மூன்றெழுத்தே பாசம் நீங்கிய முத்தி பஞ்சாக்கரம் ஆகும்.

குறிப்புரை :

`இதுவே அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பது குறிப்பெச்சம். ``ஆதி`` என்றது, ஆதியாய் நிற்கும் தன்மையை. `விட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அருட் சத்தியால்` என உருபு விரிக்க. சிவஞானமாவது, சிவனது அறிவு; திருவருள். `பதிஞானம்` எனப்படுவது இதுவே, பாச எழுத்துக்களை. விடாது ஓதுவதால் பாச ஞானமும், பசுஞானமும் உளவாகும். அவற்றுள்ளும் நகாரத்தை முன் வைத்து ஓதுவதால் பாச ஞானமும், சிகாரத்தை முன் வைத்து ஓதுவதால் பசு ஞானமும் உளவாம்.
பாச ஞானமாவது கருவி கரணங்களால் தரப்படும் அறிவு. சிவனையே நினைத்தும், வாழ்த்தியும், வணங்கியும் நிற்பினும் அவை யெல்லாம் கருவி கரணங்களின் வழிபட்டனவேயாகலின் பாச ஞானங் களேயாம். சரியையிலும், கிரியையிலும் இந்நிலையே உளதாகும்.
இனி யோகத்தால் கருவி கரணங்கள் அடங்க யோகி தனது அறிவாலே தான் சிவனை அறியுமிடத்து அறிவே முற்பட்டு நிற்றலால், அச்செயல் பசு ஞானத்தின் வழிப்பட்டதாம். இந்நிலையில் நிற்பவனுக்கு `எனது` என்னும் புறப்பற்று ஓரளவு நீங்கினாலும், `யான்` என்னும் அகப்பற்று நீங்குவதில்லை. திருவைந்தெழுத்தைச் சரியையாளன் நகாரம் முதலாகக் கணிப்பான்; கிரியையாளனும், யோகியும் சிகாரம் முதலாகக் கணிப்பர்.
யோகத்தால் `யான்` என்னும் அகப்பற்றும் மெலிவடைந்த பின் ஞான குருவைத் தேடியடைந்து, அவர் ஞான தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிக்க, பாச ஞான பசு ஞானங்கள் நீங்கிப் பதிஞானம் தோன்ற அதனால் உயிர் பதியைக் கண்டு இன்புறும். இதனையே இங்கு நாயனார் ``சிவஞானம் சித்திக்கும்`` என்றார் இதனானே பின்னர்த் தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம் கூடும் ஆதலின், அதற்குத் தோற்றுவாயாகவே இங்கு ``யோகமே சிந்திக்கும்`` என்றார். இவ்யோகம் கிரியையின் பின் நிகழ்வதாகிய யோகம் அன்று. தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய யோகமாம்.
மெய்கண்ட தேவரும் இவ்வாறே சிவஞான போதத்தில எட்டாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக்கர உபதேசத்தை, ``தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த`` என்றும், ஒன்பதாம் சூத்திரத்தில் ``பாசம் ஒருவப் பதி தண்ணிழலாம்`` என்றும், ``விதி எண்ணும் அஞ்செழுத்தே`` என்றும் கூறி, ஒன்பதாம் சூத்திரவார்த்திகத்தில், ``இனி இவ்விடத்தில் சீ பஞ்சாக்கரத்தை
விதிப்படி உச்சரிக்க``
என்றும் கூறினார். முரணிக் கூறுவனவாவன, முத்தி பஞ்சாக்கரத்தை வேறுவேறாகக் கூறுவன. திருவருட் பயனிலும்
``ஆசின் நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசி இடைநிற்கை வழக்கு``.*
என்றே கூறப்பட்டது. சிகாரம் முதலாக ஓதும் பொழுது ஆன்ம எழுத்தாகிய யகாரம் நகாரத்திற்கும், வகர ஆகாரத்திற்கும் இடை நிற்கின்றது. `அது வேண்டா` என விலக்கப்பட்டது. யகாரத்தை, `வா,சி` இவற்றின் இடையே நிற்க வைத்து உச்சரித்தல் வழக்கம் எனக் கூறப்பட்டது. அதனால் `சிவாயசிவ` என்பதே முத்தி பஞ்சாக்கரம் எனக் கொண்ட கொள்கையும் உள்ளது. ஆயினும் மந்திரங்களில் அது வே எழுத்தாக எண்ணப்படுதல் இல்லை. `சிவாயசிவ` என்பது பார்ப்பதற்கு ஐந்தெழுத்துப் போலத் தோன்றினஆலும், பின் வந்த `சிவ` என்பது முன்பு வந்ததே மீண்டும் வந்தது ஆகலானும் `முன்பு வந்த எழுத்துக்களின் பொருள்வேறு, பின்பு வந்த எழுத்துக்களின் பொருள் வேறு` என்றல் கூடாமையானும் அம்மந்திரம் உண்மையில் மூன்றெழுத்து மந்திரமேயாகும். ஆகையால் நகார மகாரங்கள் நீங்க நிற்கும் `சிவாய` என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் ஆகும். அதனை ஓர் உருக்கணித்து, அடுத்த உருத்தொடங்குகையலி யகாரம் வகர ஆகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைநிற்பதாக ஆகின்றது. இதனையே உமாபதிதேவர் `வா சி இடைநிற்கை` என்றார்.
வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. `பல சரக்குக்கடை வாணிகர் ஒருவர் தம் காலத்தையெல்லாம் வாணிகத்திலே கழித்தவர். இறக்கும் சமயத்திலும் தாம் விற்ற சரக்குக்களில் முதலில் விற்பது அரிசி என்பதையும், கடைசியில் கொடுப்படு வசம்பு என்பதையும் நினைத்து இரண்டையும் சேர்த்து `அரிசிவசம்பு அரிசிவசம்பு` என்று பலமுறை பிதற்றினார். ஆயினும் அஃது அவரது அவர், `அரி, சிவ, சம்பு` என விட்டுணு நாமத்தையும், சிவ நாமத்தையும் சொன்னதாக ஆக, அவர் முன்னே வைகுந்தம் சென்று, பின்பு சிவலோகம் சென்றார் என்பது அக்கதை.
``வால்மீகி முனிவர் முதலில் `ராம` எனச் சொல்லவாராமல் `மரா` மரத்தை நினைத்து, `மரா, மரா` என்று சொல்லிக் கொண்டிருந் -தாராம். அது ராம நாமத்தைச் சொன்னதாக ஆகிச் சிறந்த முனிவர் ஆகி விட்டார்` என்று வைணவத்தில் ஒரு கதை உண்டு. இவை போன்றது தான் முத்தி பஞ்சாக்கரத்தைக் கணிக்கும் பொழுது யகாரம் வாசி இடை நிற்றல்.
இனித் திருவைந்தெழுத்தில் சிகாரம் வேதாந்த மகா வாக்கியத்தில் `தத்` பதப் பொருளுடையதும், வகாரம் `அசி பதப்பொருளுடையதும் யகாரம் துவம், பதப்பொருளுடையதுமாதல் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. அந்நிலை உண்மையாய்ப் பயன் தருதற்குச் சிகார வகார யகாரங்கட்கு மேலும் எழுத்துக்களைக் கூட்டுதல் பொருந்தாமையும் நோக்கத்தக்கது.
`தத்துவமசி` வாக்கியத்தின் பொருள் `அது நீ ஆகிறாய்` என்பதாகலின், அவ்வாக்கியத்தில் `நீ` என்பது எழுவாயும், `ஆகிறாய்` என்பது பயனிலையும், `அது` என்பது பயனிலைக்கு அடைமொழி யுமாம் அள்ள நிலைமை எப்பொழுது மாறுவதில்லையாகலின், `முதல், இடை, கடை` என்னும் மூன்றிடங்களில் அவற்றுள் எந்தச் சொல் எந்த இடத்தில் நிற்பினும் பொருள் மாறுபடுதற்கில்லை. அதனால், முத்தி பஞ்சாக்கரத்தில் வகாரம் இடைநிற்றலால் தவறில்லை. இனி, `யகாரம் வா, சி இடை நிற்க ஓதுதலால், வா சிய்யை அருளி, யவ்வை வாழ்விக்கும் நிலை உண்டாகின்றது என்றார் உமாபதி தேவர்.*
சிவஞானபோத எட்டாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக் கரத்தைக் குரு உபதேசிக்கக் கேட்டல் மட்டுமே கூறப்பட்டமையால், அந்த அளவில் ஆன்ம தரிசனமும் சிவரூபமும் நிகழும். பின்பு ஒன்பதாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக்கரத்தைச் சிந்தித்தல் கூறப் பட்டமையால், அந்நிலையில் சிவ தரிசனம் தோன்றி ஆன்ம சுத்தி நிகழும். அது பின்பு, சிவ தரிசனத்தின்பின் நிகழ்வதாகிய சிவயோகம் தோன்றுதற்கு ஏதுவாகும்.
சிவஞான சித்தி சுபக்கம் ஒன்பதாம் சூத்திரத்தில் ``சோகம் எனப் பாவிக்க.``8 என்றது, பொருள் பற்றி ஓதியதன்றிச் சொற்பற்றி ஓதியதன்று. `சொற்பற்றி ஓதியதே` என வாதிப்போர் வாதிக்க; அதனால் நமக்கு வருவதொரு குறையில்லை. பொருள் பற்றி ஓதவே, அருணந்தி தேவரும் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர் கூறிய பஞ்சாக்கரத்தைத்தான் கூறினாராதல் விளங்கும்.
``விண்ணி னார்பணிந்தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாது சிவாய என்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே``*
என்று திருமுறையில் இவ்வதி சூக்கும பஞ்சாக்கரம் மிக அருமையாக எடுத்தோதியிருத்தல் அறிக.
இதனால், `அதிசூக்கும பஞ்சாக்கரமாவது இது` என்பதும், `இது முத்தி பஞ்சாக்கரம்` என்பதும் சொல்லப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.

பொழிப்புரை :

சீவான்மாவாகிய ஒருவனைத் தாயும், தந்தையுமாய்த் தம்மிற் கூடி ஈன்றவர்கள் மறமும், ஆம் இருவகையில் தோன்றும் அருளைத் தருகின்ற மகளிரும் சிவனும் ஆவர். மகளிருள் பிற நிலை யுடைய தாய்க்குத் தோழியாய் நின்றவள் மாயை. (அவளைச் சார்ந்து கன்ம மகளும், அவ்விருவர்க்கும் தலைவியாக ஆணவப் பெண்டும் உள்ளனர். ஆகவே அம்மூவரும் நீக்கத் தக்கவர்களே. அங்ஙனம் அவர்களை நீக்கவல்லது, பாச எழுத்துக்களை நீக்கி `சிவாய` என்று ஓதப்படும் அதிசூக்கும பஞ்சாக்கரமேயாகும்.

குறிப்புரை :

ஆயம் - மகளிர் கூட்டம், திரோதான சத்தி செயல் வகையால் அளவிறந்து நிற்ப, அவற்றோடெல்லாம் அவற்றிற்கு ஏற்ற வகையால் சிவன் கூடி நிற்றலாலும், சீவான்மா முதலில் திரோதான சத்தியாம் பாச அறிவு, பசு அறிவுகளைப் பெற்றுத் தோன்றி வளர்ந்து, முடிவில் அருட் சத்தியால் பதியறிவு விளங்கப்பெற்றுச் சிவசமம் ஆதலின் அச்சத்தி பேதங்களை எல்லாம் ஆயமாக உருவகித்து, `தம்மிற் கூடி ஒருவனை ஈற்றவர் ஆலயமும், அத்தனும்` என்றார். `கூடி` என ஒரு சொல் வருவிக்க. ``ஒருவன்`` என்றது சாதியொருமை ஈனல் கூறவே புறந் தருதலும் கொள்ளப்படும் இங்கு ஈனலும், புறந்தருதலும் அறிவைத் தோற்றுவித்து வளர்த்தலாம். `ஈன்று புறந்தரப்பட்டோர் அளவிறந் தோராயினும் அவரெல்லாம், `சீவர்` எனச் சாதியால் ஒருவரே என்றற்கு ``ஒருவனை ஈன்றவர்`` என்றார். உள்ளுறை அகம்படித் தொண்டு செய்யும் அடித்தோழி உள்ள உறைபவனை, ``உள் உறை`` என்றார். ``திரிமலம் தீர்ந்து`` எனவும், ``அரு வினை தீர்ப்பதும்`` எனவும் பின்னர் வருதலால் மாயையோடு ஏனை ஆணவ கன்மங்களும் திரோதான சத்தியின்கீழ் இருந்தமை பெறப் பட்டது. ``தீர்ப்பதும்`` உம்மை சிறப்பு. ஆணவ மலம் பரிபாகம் ஆய வழியே வினை நீங்குதலும், வினை நீங்கவே, மாயையும் உடன் நீங்குதலும் நிகழ்தல் பற்றி வினை நீங்கவே, மாயையும் உடனஅ நீங்குதலும் நிகழ்தல் பற்றி வினை தீர்த்தலையே சிறப்பாக எடுத்துக் கூறினார்.
இதனால், திருவைந்தெழுத்தில் பாச எழுத்துக்கள் நீக்கற்பாலனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அ தற்றால்
அவமதி தீரும அறும்பிறப் பன்றே.

பொழிப்புரை :

`சிவாய நம` என்னும் ஐந்தெழுத்தில், `நம, என்னும் உறுப்பினை நா அளவில் கொண்டு, அதனையும் சொல்லாமல் அடக்கி, ஏனை மூன்றெழுத்தை மட்டும் மந்திரமாகக் கொண்டு அறிவாற் கணித்தலாகிய சுத்த மானதமாக உணர்ந்துணர்ந்து நிற்க வினை நீங்கும். வினை நீங்கவே பதிஞானம் இனிது விளங்க ஏனைப் பசுபாச ஞானங்கள் யாவும் அகற்றுவிடும். அவை அற்றுவிடவே பிறவியறுதல் நிண்ணமாம்.

குறிப்புரை :

`மூன்றெழுத்துக்களில் பிறவி நீக்கத்திற்குக் காரணமாதற் சிறப்பு நோக்கி முதல் இரண்டெழுத்தையே கூறினார். அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் ஆயிற்று. பரிசு அது - அப்பரிசு; வினையாகிய பாசம், பாசம் உம்மை, `ஆணவமே யன்றி` என இறந்தது தழுவிற்று அவ மதி - பயன் இல்லாத ஞானம். அவை பாச ஞானமும், பசு ஞானமும் இவற்றை `அவம்` என்றது பெருந்துன்பமாகிய பிறவியை உண்டாக்குதல் நோக்கி, முதலடி உயிரெதுகை.
இதனால், அதிசூக்கும் பஞ்சாக்கரத்தின் சிறப்பு தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.

பொழிப்புரை :

முன் அதிகாரத்திற் கூறிய மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை மட்டுமே மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இடைவிடாது கணித்தல் சிறப்புடைத்து` என்பதைத் தெளிய மாட்டாதவர் அவ்வாறு கணியாமையால், பேசும் வன்மையிருந்தும் அஃது இல்லாத ஊமரேயாவர். அம்மந்திரத்தைக் கணிக்கும் தெளிவினுள் நிற்பவர்கள் அதனால் அடங்க, ஆன்ம போதமும் அடங்கச் சிவம் ஆதற்குரிய திருவருள் நிலை வாய்க்கப் பெறுவார்கள்.

குறிப்புரை :

இது மேற்கூறிய அதிசூக்குமத்தினும் சூக்குமம் ஆதலின் காரண பஞ்சாக்கரமாம். ``சிவ சிவ`` என்றது இரண்டெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும் முறையைக் கூறியது; நான் கெழுத்தைக் கூறியதன்று. இதன்பின் `சிறப்புடைத்து` என்பது வருவிக்க. `இம்மந்திரக் கணிப்பால் வாயு (பிராணவாயு) அடங்கும்` என்றதனால் இவ்விரண்டெழுத்தும் முறையே இரேசக பூரக எழுத்துக்களாய் அசபா மந்திரமாய்ப் பயன்படுதல் குறிக்கப்பட்டது. மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. சிவ சிவ ஆய தெளிவு - `சிவ சிவ` என்றலே உறுதி பயக்கும் எனத் தெளிந்த தெளிவு. இரண்டாம் அடியில் `சிவசிவவாய்` எனவும் ஈற்றடியில் `சிவவாய்` எனவும் மூன்றாம் உருபு விரிக்க. ஆகும் திருவருள் ஆம் - ஆதற்கு ஏதுவாகிய திருவருள் உண்டாகும்.
இதனால், அதி சூக்குமத்தினும் சுக்குமமாகிய காரண பஞ்சாக்கரம் இது` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.
`சிவ` என்பதைத் தொடர்ந்து உச்சரித்தால் `வசி` என வருதல் பற்றி, `வசி` என்பதே காரண பஞ்சாக்கரம் எனக் கூறுவாரும் உளர். அவர்,
``கலந்தருள் பெற்றது மாவசியே;
காழி அரனடி மாவசியே``3
என்னும் திருமுறையை எடுத்துக்காட்டி,
``நாலாய பூதமும், நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாம் என் றுந்தீபற``9
என்னும் திருவுந்தியார் `வசி` என்பதையே காண பஞ்சாக்கரமாகக் கூறிற்று என்பர். நாலாய பூதம் ஆகாயத்திலிருந்து எண்ண நான்காவது வாயு. அதன் பீசம் வகாரம். நாதம் சிவதத்துவ மூர்த்தி சிவன். அவனைக் குறிப்பது `சி` என்னும் எழுத்து. நாலாம் நிலை நின்மல துரியம், அல்லது சாயுச்சியம் என்பர்.

பண் :

பாடல் எண் : 2

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

`தேவர்` என்றது அபரமுத்தரை. உம்மை சிறப்பு. அதனால் பத முத்தர் ஆதல் தானே பெறப்பட்டது. சிவகதி - சிவமாம் நிலை. இது சீவன் முத்தி நிலை, பரமுத்தி நிலை இரண்டையும் குறிக்கும். தான், அசை. ஏகாரம் தேற்றம். இதனால் சிவகதியின் அருமை விளங்கும்.
இதனால், `காரண பஞ்சாக்கரம் முத்தியை எய்தும் நிலையுடையவர்கட்கே கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புறம்
மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

பொழிப்புரை :

இறக்கும் நிலையை அடைந்த ஒருவன் அப்பொழுது இந்தக் காரண பஞ்சாக்காரத்தை இரண்டு முறையேனும் சொல்வா னாயின், அவன் சூரிய மண்டலத்தைப் பிளந்துகொண்டு, அப்பால் மின்னல் உலகத்தையடைந்து, பின்பு அதனையும் கடந்து சிவனையே தனக்கு உயிராகக் கொண்டிருக்கும் நிலையைப் பெறுவான்.

குறிப்புரை :

``அபர முத்தியைப் பெறுவான்`` என்பதாம். `ஞானிகள் தாம் நின்ற உடலை விட்டு நீங்குங்கால் இங்குக் கூறியவாறு ஒளி வழியிற் சென்று இறைவனை அடைவார்கள்; ஞானம் இல்லாதவர்கள் பிறவழிகளில் சென்று தேவர் உலகம், அல்லது மானுடர் உலகம் இவற்றிற் செல்வார்கள்` என்பது உபநிடதங்களின் கருத்தாதல் சாந்தோக்கியம் பிருகதாரணியம் முதலிய உபநிடதங்களாலும், உத்தர மீமாஞ்சை நூலாலும் அறியப்படுவன. அவற்றுள், `ஒளிவழியில் சென்று இறைவனை அடையும் வீட்டு நிலை இக்காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் உண்டாகும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
``துஞ்சும் அவன் சொன்ன காலத்து`` என்பதனை முதலிற் கூட்டி, சொல்லுதலுக்குச் `சிவசிவ` என்னும் செயப்படுபொருளை அதிகாரத்தால் வருவித்து உரைக்க. ``நெஞ்சு`` என்றது உயிரை. `இறைவனையே உயிராகக் கொண்டிருத்தலாவது, அவனோடு பிரிவின்றி ஒன்றி, அவன் வழிப்பட்டு நிற்றல்` என்பதை நாயனாரே, ``நீங்கா நிலைபெற லாகுமே`` என விளங்க ஓதினார்.
இதனால், காரண பஞ்சாக்கரத்தால் பயன் எய்தும் முறை வகுத்துக் கூறப்பட்டது.
``கடல் நாகைக் காரோண, நின்
நாமம் பரவி நமச்சிவா யவ்வென்னும் அஞ்செழுத்தும்
சாம் அன்றுரைக்கத் தகுதிகண் டாய்எங்கள் சங்கரனே``*
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 1

அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

பொழிப்புரை :

வேதம், வேதாங்கம், வேதாந்தம் முதலாக உள்ள அனைத்து நூல்களையும் ஒருவன் ஓதி உணர்ந்தாலும் ஏனெனில், சிவன் இருப்பது ஓர் எழுத்திற்குள்ளே. (அஃதாவது, `சி` என்னும் எழுத்தின் உள்ளேயாம். எனவே, `அதன் உண்மையை உணராமல், மற்றை எத்தனை நூல்களை ஓதி உணர்ந்தாலும் அவனை உணர்தல் இயலாது` என்பதாம்.) இது கேட்பதற்கு முக வியப்பாய் இருக்கும் ஆகையால், `இஃது உண்மையாய் இருக்க முடியுமா` என எழும் ஐயம் நீங்குதல் அரிது. முன்னைத் தவத்தாலும், குருவருளாலும் அந்த ஐயம் நீங்கப் பெற்று அதனை உறுதியுடன் சாதித்தால் அங்ஙனம் சாதிக்கின்ற ஆன்மாத் தான் என்று அடைந்தறியாத அழகிய கரையை அடைந்த மரக்கலத்திற்கு ஒப்பாகும்.

குறிப்புரை :

அஃதாவது; `பிறவியாகிய கடலைக் கடந்து, வீடுபேறாகிய கரையை அடையும்` என்பதாம். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``ஓர் எழுத்து`` என்றது முன் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டெழுத்தில் வகாரம் நீங்க நின்ற சிகாரத்தினை ஆதல் எளிதின் விளங்கும்.
`தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகா காரணம்` என ஐந்து வகையாகக் கூறப்படுகின்ற பஞ்சாக்கரத்துள் சமய தீக்கைப் பேற்றால் தூல பஞ்சாக்கரத்தை ஓதிச் சரியையிலும், விசேட தீக்கைப் பேற்றால் சூக்கும பஞ்சாக்கரத்தை ஓதி முன்னர்க் கிரியையிலும், பின்னர் யோகத்திலும் நின்று, நிருவாண தீக்கைப் பேற்றால் அதி சூக்கும பஞ்சாக்கரத்தைக் கேட்டுப் பொதுப்பட உணருமாற்றால் தத்துவ சுத்தி ஆன்ம தரிசன சிவரூப நிலைகளையடைந்து, பின், அதனை நன்கு சிந்தித்துச் சிறப்பாக உணருமாற்றால் ஆன்ம சுத்தி சிவ தரிசன நிலைகளையடைந்து, பின் அதனை நன்கு தெளியுமாற்றால் காரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவயோக நிலைமை அடைந்து, பின் நிட்டை கூடுமாற்றால் மகாகாரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவபோக நிலையைப் பக்குவான்மா அடையும் என்க.
`சிவ யோகம்` என இங்குக் கூறப்படுவது, ஆன்மாத் தன்னை உணர்தல் இன்றிச் சிவனை மட்டுமே உணர்ந்து நிற்கும் நிலை. இதனால் இங்கு ஆன்ம எழுத்தாகிய யகாரம் நீக்கப்படுகின்றது. ஆன்மாத் தற்போதத்தை இழத்தலும் சிவபோதமே போதமாக நிற்றலும் திருவருளேயாகலின் இங்கு அருள் எழுத்தாகிய வகாரம் இருத்தல் இன்றியமையாததாகின்றது.
இந்தச் சிவயோக நிலை அருள்நிலையேயன்றி, ஆனந்த நிலையன்று. சிவபோதம், மேலிட மேலிட சிவானந்த வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்க அதனுள் ஆன்மா மூழ்குதலே ஆனந்த நிலை. அதுவே நிட்டை நிலை. அங்கு ஆன்மா அருளையும் நினையாது மது உண்ட வண்டுபோல் அந்த ஆனன்தமாயே நிற்றலால் அவ்விடத்து அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்குவதாயிற்று.
``மாயநட் டோரையும் மாயா மலம் எனும் மாதரையும்
வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு, மெய்யருளாம்
தாயுடன் சென்று,பின் தாதையைக் கூடிப்,பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே`` என்னும் பிற்காலப் பட்டினத்தடிகள் பாடலும் அதிசூக்கும, காரண, மகா காரண பஞ்சாக்கரங்களையே குறிப்பால் உணர்த்துதலை ஓர்ந்துணர்க.
தூல சூக்கும பஞ்சாக்கரங்களை ஓதுதல் சகல நிலையாய் முடிய, அதிசூக்குமம் முதலாக ஓதுவனவே சுத்த நிலையாகும். அதனுள் கேட்டல் சுத்த சாக்கிரம். சிந்தித்தல் சுத்த சொப்பன சுழுத்திகள். தெளிதல் சுத்த துரியம் நிட்டை சுத்த துரியாதீதம்.
ஆன்ம சுத்திக்குப்பின் ஆன்மா அடையும் ஆன்ம லாபம் இரண்டு. ஒன்று பாச நீக்கம். இதுவே அருள்நிலை மற்றொன்று சிவப்பேறு. இதுவே ஆனந்த நிலை, சிவஞான போத சூத்திரங்களுள் எட்டாவது முதலாக நான்கு சூத்தரங்களாலும் முறையே கேட்டல் முதலிய நான்கும் கூறப்பட்டன. பன்னிரண்டாம் சூத்திரம் அணைந்தோர் தன்மை கூறுவது.
உமாபதி தேவர் தாம் அருளிச் செய்த எட்டு நூல்களுள் இறுதி நூலாகிய சங்கற்ப நிராகரணத்து இறுதியில் இப்பஞ்சாக்கரங்களின் உண்மையே ஒருவாறு விளங்கும்படி பரம சித்தாந்தமாக ஓதியருளினார். அப்பகுதி வருமாறு:-
``பதிபசு பாச முதிர் அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனம்இல் ஞாதுரு, ஞானம், ஞேயம் என்(று)
இசைய மூன்றாய், பசு, பதி என்(று) அவற்(று)
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயன்எனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிறை யியற்கை இயம்புதல் தகுமே``
சிவப்பிரகாசத்து, ``ஆசுறு திரோதம் மேவாது`` என்னும் செய்யுளின் பொருளை வல்லார்வாய்க் கேட்டுணர்க. `அதிசூக்கும` முதலிய பஞ்சாக்கரங்கள் உலகப்பற்று `அற்று` ஞான வேட்கை கொண்டு, ஞானாசிரியரை அடைந்து ஞானோபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுவார்க்கே உரியன. மற்றையோர்க்குத் தூலமும், சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களே உரியன.
தூலமும், சூக்குமமும் ஆகிய இருபஞ்சாக்கரங்களும் பிரணவத் தோடு கூட்டியும், கூட்டாதும் ஆசிரியர் உபதேசித்தபடி ஓதப்படும். அதி சூக்குமம் முதலிய மூன்றுவகைப் பஞ்சாக்கரங்களும் பிரணவம் இன்றியே ஓதப்படும்.
``எல்லா உணவிற்கும் உப்பு இன்றியமையாதது. ஆயினும் சிறந்த உணவாகிய பாலுக்கு உப்புக் கூடாது. அதுபோல எல்லா மந்திரங் கட்கும் பிரணவம் இன்றியமையாதது. ஆயினும் மிகச்சிறந்த சிவமூல மந்திரமாகிய பஞ்சாக்கரத்திற்குப் பிரணவம் தேவையில்லை`` என்கின்ற ஒரு மரபு உண்டு. அது அதிசூக்குமம் முதலிய பஞ்சாக்கரங்களை நோக்கி எழுந்ததேயாகும்.
பிற மந்திரங்கள் கூட நிர் பீச தீக்கையில் பிரணவம் இன்றியே சொல்லப்படும்.
இனி, உமாபதி தேவர், தமது, `கொடிக்கவி` நூலில் ``எட்டெழுத்து, நாலெழுத்து``l எனக் கூறியவை `பிராசாத பஞ்சாக்கரம், தார பஞ்சாக்கரம்` எனக் கூறப்படுமேயன்றி அதிசூக்கும பஞ்சாக்கரம் என கூறப்படாது. அவையும் யோகிகட்கே உரியன. எட்டெழுத்து, நாலெழுத்து முதலியவற்றை அச்செய்யுளின் உரையிற் காண்க.
ஆகம வேதங்களைக் கூறவே இனம் பற்றி வேதாந்தமும் கொள்ளப்பட்டது. ``ஓதினும்`` என்னும் உம்மை சிறப்பு. அதனால் `அறிதல் இயலாது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது. ``ஒன்றையும்`` என்னும் உம்மை முற்று. அதனால் அதனது ஆற்றல் மிகுதி உணர்த்தப்பட்டது.
அதிகாரத்தை வேறுபடுத்தி விரிவு கூறாவிடினும் இம்மந்திரத்திற்குப் பிறகும் இப்பொருளையே கூறினமை காண்க.
இதனால், `மகா காரண பஞ்சாக்கரமாவது இது` என்பது குறிப்பால் உணர்த்தி, அதனது ஆற்றல் மிகுதி தெளிவாக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.

பொழிப்புரை :

மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது.

குறிப்புரை :

சித்தர் மரபில் உயர்ந்த பொருள்களைப் பிறர் அறியாவண்ணம் இழிந்தனபோல மறைத்தக் கூறுதல் வழக்கம். அம்முறையில் இஃது அவர்களால் `நாய் ஓட்டும் மந்திரம்` எனக் குறிக்கப்படுதலை இங்குக் கொண்டு கூறினார். ``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி``8 முதலியனவும் காண்க. நாயை ஓட்டுமிடத்தச் சொல்லப்படுவது. `சீ` என நெட்டெழுத்தாய் இருப்பினும், அதுவே அதனைக் குறிக்கும் தொடராகாமல், குறிப்பால் பொருளையுணர்த் தலின், `சி` எனக் குற்றெழுத்தையே குறித்ததாயிற்று. நால் வேதங்களும் சிவபிரானது பெருமையை விரித்தலால், `இதுவே நால் வேதங்கள்` என்றும், சிவனே இதன் பொருளாதல் பற்றி ``நாதன் இருப்பிடம்`` என்றும், ``நாதந்த சோதி`` என்றும் சிவன் பொது மக்களால் அறிதற்கரியன ஆதலின் தம்மைப் பிறர் போல வைத்து, `இம் மந்திரத்தை நாம் அறியோம்` என்றும் தமிழ், ஆரியம் இரண்டாலும் கூறி வலியுறுத்துவார், ``நான்மறை நால்வேதம்`` என்றும் கூறினார்.
இதனால் மகாகாரண பஞ்சாக்கரமே எல்லாமாய் இருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவாய நம`எனச் சித்த ஒருக்கி
அவாய3ம் அறவே அடிமைய தாகிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்லும். அதனால் ஆன்மாத் தான் சிவனுக்கு ஆளாகி வினையாகிய தீங்கினின்றும் நீக்கும். அப்பால் அதி சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்ம அறிவு பாசஞானமாகிய தீங்கில்லதாம். அப்பால் காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாப் பசு போதம் நீங்கிச் சிவபோதம் பெற்றுப் பிறப்பாகிய தீங்கினின்றும் நீங்கும். அப்பால் மகாகாரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாச் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும் ``என்று என்று`` என்னும் அடுக்கினுள் முன்னதைச் ``சிவாய`` என்பதனோடு கூட்டி, `அவாயம் அறநிற்க` என ஒருமுறையும் பின்னர் நிற்கும் ``என்று`` என்பதனை ``அவாயம்கெட`` என்பதனோடு மற்றொரு முறையும் முடிக்க. ``அவாயம்`` என்பது ஏற்ற பெற்றியால் பொருள் தந்தது. ``நிற்க`` என்பதன்பின், `பின்னர்` என ஒரு சொல் வருவிக்க. அதனால், `ஆனந்தம் ஆதல் ஓரெழுத்து மந்திரத்தால்` விளங்கிற்று. ``ஆம்`` என்றது `விளையும்` என்றபடி.

குறிப்புரை :

இதனால், உலகியலைத் தரும் தூல பஞ்சாக்கர் நீங்க, மற்றைய நால்வகைப் பஞ்சாக்கரத்தின் பயனும் ஒருங்கு தொகுத்துக்கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் வினையறி வார் இல்லை
எழுத்தறி வோம்என் றுரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்தறி யாரே.

பொழிப்புரை :

பஞ்சாக்கரம் பழமையான வேதமாகிய மரத்தில் அரும்பாய் அரும்பி, போதாய் முதிர்ந்து, பிஞ்சாய் உருப்பட்டு, காயாய்க் காய்த்து, பழமாய்ப் பழுத்து, உண்ண வல்லவர்க்கு இனித்துப் பயன்படுகின்றது. அதனை உண்டு, அல்லல் அறு அமைதியுடன் அறிதுயில் கொள்ளும் பயிற்சியை அறிபவர் உலகில் இல்லை. ஆயினும் பள்ளியில் எழுத்தறி கல்வியை மட்டும் கற்றவரகள் கூட, `இந்த ஐந்தெழுத்துக்களை நாங்கள் அறிவோம்` எனக் கூறுகின்றனர். ஆயினும் வேதம் முதலிய அனைத்தையும் கற்றவர்கள் கூட ஐந்தெழுத்து ஊழை நீக்கும் எழுத்தாதலை அறிய மாட்டார்கள்.

குறிப்புரை :

ஐந்து வகையான பஞ்சாக்கரங்களும் நிலையால் வேறு பட்டன அன்றிப் பொருளால் வேறுபட்டன அல்ல ஆதலை. ``பழுத்தன`` என்னும் குறிப்பால் உணர்த்தினார். அது பற்றியே அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``பழுத்தன`` என்றது குறிப்புருவகம். ``அங்கு`` என்றது, ``விழித்திருக்கும் போதே`` என்றபடி. விழித்தல் அறிவு அறியாமையுட் படாது விளங்கியிருத்தல் உறங்குதல் - உலக வாதனை யின்றியிருத்தல். எனவே, சிவத்தை மறவாது உணர்ந்திருத்தலாயிற்று. இந்நிலை ஆனந்த நிலையாதல் பற்றி, உலகத்தில் உறங்குவார் அல்லல் இன்றி இருத்தலோடு உவமித்து இந்நிலையில் நிற்பவரை, `தூங்குபவர்` என்றும், செயலற்றிருத்தல் பற்றி, ``சோம்பர்`` என்றும் நயம்படக் கூறுவர். ``தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே`` ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``* என்னும் மந்திரங்களைக் காண்க.
``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்;மற் றேதுண்டு சொல்``8
என்றார் உமாபதி தேவரும் இதனை, ``தூங்காமல் தூங்குதல்`` என்றும் கூறுவர். ஏதர் - குற்றம் உடையவர். ஏதம் - குற்றம்; அறியாமை. ஈற்றடியின் முதலில் உள்ள எழுத்து ஊழ். அதனை `அயன் எழுத்து` என்றும், `தலையெழுத்து` என்றும் கூறும் வழக்குண்மை யறிக. அழுத்துதல் - அடங்குதல். ஊழ் வினை ஊட்டியல்லது ஒழியாமை பற்றி `ஒழிக்கும்` என்னாது, ``அழுத்தும்`` என்றார். `உயிரைத் தாக்காது உடல் ஊழாய் வந்து போகும்` என்பதாம்.
``திருவாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை
நலிய ஒட்டாரே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டு. திருவைந்தெழுத்தை ஓதுவாரை ஊழ்வினை நலியா என்பதனை,
``பந்தமா னவை யறுத்துப்
பௌதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொழியா தங்குத்
தன்மைபோல் வினையும் சாரும்;
அந்தம்ஆ திகள் இலாத
அஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை
வாதியா பேதி யாவே``*
என்பதனான் அறிக.
``சிவாய நமஎன்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை;- உபாயம்
இதுவே; மதிஆகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்``* என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. இறுதியில் உள்ள ``எழுத்து`` எழுத்தாம் தன்மை. இசை வல்லுநர்கள், `ச ரி க ம ப த நி` என்னும் எழுத்துக்களைச் சொல்லக் கேட்ட ஒருவன் `இந்த எழுத்துக்களை நான் அறியேனா` என்று சொல்வது போல்வதுதான், `ஐந்தெழுத்துக்களை நாம் அறிவோம்` என்றல் என்றபடி.
இதனால், இதுகாறும் பலவாறாகக் கூறிவந்த அஞ்செழுத்தின் சிறப்பனைத்தும் ஒருவார்த்தையாகத் தொகுத்துணர்த்தி முடிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.

பொழிப்புரை :

சிவனது சத்தி `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந்திருத்தலால், `சத்தியே அவனது திருமேனி` என்பது பற்றி எங்கும் அவனது திருமேனி உள்ளதாம். `சத்தியே அவனது இருப்பிடமாகிய பர வெளி, அல்லது சிதாகாசம்` என்பது பற்றி, எங்கும் அவன் இருக்கும் சிதாகாரம் உள்ளதாம்; `அவனது சத்தி, அல்லது திருவருளே அவனது செயல்கள்` என்பது பற்றி, அவனது திருக்கூத்து எங்கும் நிகழ்வதாம். இவ்வாற்றால் எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், எங்கு நிகழும் எந்தச் செயலும் அவனது திருவருள் திருவிளையாட்டேயாம்.

குறிப்புரை :

`எங்கும் சிவ சத்தி ஆதலால் எங்கும் திருமேனி ... ... ... இருத்தலால், சிவனது அருள் விளையாட்டே எங்கெங்கும் தங்கும்` என இயைத்து முடிக்க. `அது` பகுதிப் பொருள் விகுதி.
இதனால், `எங்கும் நிகழும் எல்லாச் செயல்களும் அவனது திருவிளையாட்டாம் ஆதலின் அவ்விளையாட்டாகிய அவனது திருக்கூத்துக்கள் தாம் பலவாம்` என அவை தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

பொழிப்புரை :

அறிவே வடிவாதல் பற்றி, பரஞ்சோதியாய் மேலான ஒளியாய் - விளங்குகின்ற சிவனது அருள் விளையாட்டாக முன் மந்திரத்தில் கூறப்பட்ட அத்திருக்கூத்துத் தான் பலவாயினும் அவை, `சிவானந்தத்க் கூதது, சுந்தரக் கூத்து பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து` என ஓராற்றால் ஐந்து வகையாகின்றன. அவற்றின் மேலும் பலவாகின்ற கூத்தினை இயற்றுகின்ற அவனது ஆற்றலை யாரே அளவிட்டறிவார்!

குறிப்புரை :

இவைகளை ஒரோ ஒன்றாக நாயனார் பின்வரும் அதிகாரங்களில் விளங்கக் கூறுவார்.
இதனால் திருக்கூத்து வகைகள் தொகுத்துப் பெயரளவில் கட்டப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

பொழிப்புரை :

மேற்கூறிய ஐவகைக் கூத்துக்களுள் சிவானந்தக் கூத்தாவது, என்றும் அழிதல் இல்லாமையால் சத்தாய், அதனோடே சித்தாய், ஆனந்தமாய் உள்ள சத்தியிடமாக நின்று ஆனந்தத்தை முடிவின்றிப் பொழியும் கூத்தாகும் ஆகவே, ஆன்ம அறிவைக் கடந்து அந்தக் கூத்தினை இயற்றும் சிவனுக்கு அவ்விடத்தில் அந்த நடனத்தைச் செய்தற்கு அரங்காய் நிற்பது மேற்கூறிய அந்தச் சத்தியே.

குறிப்புரை :

`பரா சத்தி` என்பது உணர்த்துதற்கு, `சத்தாயும், ஆனந்தமாயும் உள்ளது` என்றார். அதனானே சித்தாதலும் தழுவப்பட்டது. `சத்தாவது உள்ளது` என்று மட்டும் கூறுவாரை மறுத்துச் சித்தாந்தம் கூறுதற்பொருட்டு, தோற்றக் கேடுகள் இன்றி உள்ளது` என்பார். ``தான் அந்தம் இல்லாச் சத்தி`` என்றார். அந்தம் இன்மை கூறவே, ஆதியின்மையும் பெறப்பட்டது. `ஆன்ம அறிவைக் கடந்து தன்னியல்பில் நிற்கும் சத்தியே பராசத்தி` என்றற்கு ``ஞானம் கடந்து`` என்றார். `அவ்வானத்தக் கூத்து` எனச்சுட்டு வருவிக்க. ``ஆடரங்கு`` என்பதில் ஆடுதல் வாளா பெயராகி நின்றது. `ஆனது அந்தச் சத்தியே` எனப்பயனிலை வருவித்து முடிக்க.
``ஆனந்த மாநடம்`` என்பதை முதலிற் கூட்டுக. கண்டீர், முன்னிலையசை. `சத்திமேல் நிகழ்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``உந்தும்`` என்பது கூறப்பட்டது.
எனவே, இது பரமுத்தியை அடைந்த ஆன்மாக்கட்கு அந்நிலையில் பராசத்தி வழியாகப் பேரானந்தத்தை இடையறாது தந்து கொண்டிருக்கும் கூத்தாதல் விளங்கும்.
``மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும் - ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும், அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து``
``பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக் கெட்டா ஒருவன் - வரைமகள்தான்
காணும் படியே கருணைஉருக் கொண்டாடல்
பேணுவர்க் குண்டோ பிறப்பு`` என்பவற்றால் அறிக.

பண் :

பாடல் எண் : 2

ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.

பொழிப்புரை :

`ஆனந்தம்` என்னும் சொல் வழியாக உணரப் படுகின்ற அந்தப் பொருள், ஆருயிர்களுக்கு அனுபவப் பொருளாதற் பொருட்டு ஆனந்தக் கூத்தை விரும்பிச் செய்யும் சிவனுக்கு அந்நிலையில், `மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி` என்பதுபோல, உடன் நிகழும் அரங்கமும் ஆனந்தமாய்; பாட்டுக்களும் ஆனந்தமாய்; பலவகை வாத்தியங்களும் ஆனந்தமயம்; இயங்கு திணை றிலைத் திணைகளாகிய அனைத்துப் பொருள்களும் ஆனந்தமயம்.

குறிப்புரை :

வாச்சியம் - சொற்பொருள். `ஆனந்த வாச்சியம் ஆனந்தமாக, ஆனந்தக் கூத்து உகந்தானுக்கு என்பவற்றை முதலில் கூட்டியுரைக்க. ``ஆனந்தம் ஆக`` என்றது, `உண்மையில் ஆனந்த மாகும்படி` என்றதாம். உண்மையாவது, அனுபவம் அகத்தல், தன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ஆனந்தத்தை விளைப்ப வற்றையும், பெறுபவற்றையும் ஆகுபெயரால் ``ஆனந்தம்`` என்றார். ``சராசரம்`` என்றது அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. ``சராசரம்`` என்ற அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. `எஞ்ஞான்றும் எல்லாப் பொருள்களும் முதல்வன் வழியாவனவற்றி வேறாவன அல்ல` என்பதாம். `பூவோடு சேர்ந்த நாரும் மணங் கமழும்` என்பது போல, `ஆனந்தக் கூத்தோடு இயைந்த அனைத்தும் ஆனந்தமாம்` என்பது கருத்து. பராகாசத்துள் நிகழும் ஆனந்தக் கூத்தின் இயல்பு இது வாகலின், அதுதானே இவ்வுலகில் நிகழுமிடத்தும் இவ்வியல்பினதேயாம்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை எனப்போற்றி``
என்ற ஆளுடைய பிள்ளையாரது அனுபவ நிலையை இங்கு நினைவு கூர்க.

இதனால், சிவானந்தக் கூத்தினால் எல்லாப் பொருளும் ஆனந்தமாய் விளங்குதற் பயன் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 3

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

பொழிப்புரை :

`உள்ளது` என வழங்கபப்டும் சத்தாதல் தன்மையும், `ஒளி` என வழங்கப்படும் சித்தாதல் தன்மையும், சமய நிலையில் `சிவகாமி` என வைத்து வணங்கப்படும் அருள் வடிவான ஆனந்த மாதல் தன்மையும் ஆகிய இம்மூன்று தன்மைகளையும் உயிர்கள் பெறுதல், சிவன் செய்யும் ஆனந்த நடனத்தை உள்ளத்தில் தெளிவாகக் கண்டு தியானிக்கும் தியானத்தினாலாம்.

குறிப்புரை :

``பரம்`` மூன்றும் பரமாதல் தன்மை மேல் நின்றன. பரமாதல் தன்மையை உபநிடதங்கள், `சத்து சித்து, ஆனந்தம்` என மூன்றாகக் கூறும் வழக்குப்பற்றி அவற்றையே எடுத்துக் கூறினார். செய்யுள் நோக்கிச் சித்து முதற்கண் கூறப்பட்டது. `சிவகாமி` என்பது பொதுவாக, `சிவனை விரும்புவள், விரும்பச் செய்பவள்` எனப் பொருள் தரினும் உண்மையில் `காமம்` என்பது இன்பத்தைக் குறிப்பதாக `சிவகாம வல்லி` என்பதை, தன் ஆனந்தக் கொடி`l எனக் கூறுமாற்றால் அறிக. தெளிவு, இங்கு, தியானம். ``தெளிவாம் நட்டத்தின்`` என்றது, `நட்டமாம் தெளிவானதின் சத்தி` எனப் பொருள் தந்து நின்றது.
இதனால் சிவானந்தக் கூத்துப் பரமுத்தி ஆனந்தத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.

பொழிப்புரை :

அருவம், உருவம் அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளை உயிர்களின் பொருட்டுக் கொள்கின்ற சிவன் படைத்தல் முதலிய ஐந்தொழிக்கு ஏற்ப ஐந்து வகை வடிவங்களையும், அவற்றிற் குரிய பெயர்களையும் கொண்டு செய்தலை நாடகமாக உடையவன். ஆகையால் அவன் செய்யும் தொழில்கள் யாவும் அருள் காரணமாகச் செய்வனவே அந்நிலையில் அத்தொழிலை அவள் ஐந்தாக வகுத்து அம்மையோடு உடனாய் நின்று திருக் கூத்தாடுகின்றான். அக்கூத்தும் ஐந்தாகும்.

குறிப்புரை :

அகளம் - உருவம். சகளம் - உருவம். இற்றைக் கூறவே, இனம் பற்றி அருவுருவமும் கொள்ளப்பட்டது. ``ஆடி`` என்பது பெயர். ``நடம் ஐந்து`` என்றது, பொன், வெள்ளி, செம்பு, இரத்தினம், பல்வகைக் கூட்டு, என்பவற்றாலாகிய மன்றங்களில் செய்யும் நடனத்தை எனவே, மன்றம் ஐந்தாதல் பற்றி நடனம் `ஐந்து` எனப்பட்டதாம். பொன் மன்றம் முதலியன முறையே `தில்லை` கூடல்` திருநெல்வேலி, திருவாலங்காடு, திருக்குற்றாலம்` என்னும் தலங்களில் உள்ளவை. ஆகம் - திருமேனி ஐந்தொழிலுக்கு ஏற்ற ஐந்து திருமேனிகளாவன யன், மால், அரன், மகேசுரன் சதாசிவன் ஆகிய திருமேனியின் அயன் முதலிய மூவரையும் இங்கு, `சம்பு பக்கத்தினர்` என்க. ஆன தொழில், தான்என்று கொண்டு தொழில், அருளால் ஆவன` என ஒருசொல் வருவிக்க.
``அகள சகளத்தன் ஐங்கருமத்து ஆகம் ஆன நடம் ஆடி`` எனத் தொடங்கி, `பாகனாய்` என ஆக்கம் வருவித்து, `ஆன நடம் ஐந்து` என முடிக்க. ``ஐந்தொழில் செய்து`` என்பதைத் `தொழில் ஐந்து செய்து` என மாற்றிக் கொள்க.
இதனால் முடிநிலைக் கூத்தாகிய ஆனந்தக் கூத்திற்குமுன் அதற்கு ஏதுவான வேறு கூத்தக்களையும் சிவன் செய்தருளுகின்றான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.

பொழிப்புரை :

`நிலையற்ற இன்பத்தில் மோகத்தை உண்டாக்குவ தாகிய சுவர்க்கம், மக்கள் விலங்கு முதலிய வேறுபட்ட பல உடம்புகளையுடையதாகிய பூமி, துன்பத்தையே தருவதாகிய நரகம்` என்றும் மூவகை உலகங்களில் உயிர்களைச் செலுத்தி ஐந்தொழில் செய்து அவைகளை ஆட்கொள்கின்ற, மேலான பரம்பொருளும் அனைத்துப் பொருட்கட்கும் இடமாதல் பற்றி, `பிரமம்` எனக் குறிக்கப்படுவதும் ஆகிய அந்த ஒரு பொருளில் அடங்கியுள்ள அண்டங்களோ பல கோடி என்றாலும் அவை ஐந்து தொகுப்புக்களில் அடங்குகின்றன. அவை, `பூதாண்டம், பேதாண்டம், போகாண்டம் இவை அனைத்திலும் பழைதான முத்தாண்டம்` என்பன.

குறிப்புரை :

இவை முறையே, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் அடங்கியுள்ளனவாம். ``மோகாண்டம்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ``மோகாண்டம்`` என்பது முதலிய மூன்றிலும் ``அண்டம்`` என்றது உலகத்தை உலகத்தை. ``தாகாண்டத்து`` என்பதில் அத்துத் தொகுத்த லாயிற்று. `ஐங்கருமத்தால்` என உருபு விரிக்க. ஆண்டதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. `ஏக அந்தமாம் பிரமமாகிய அண்டத்தன பூதாண்டம் ... ... ... முத்தாண்டம்` என முடிக்க. `பிரமத்தை அண்டம்` என்றது இடமாதல் பற்றி.
``பூதாண்டம்`` என்பதில் ``பூதம்`` என்றது யாவரும் நன்கறிந்த பிருதிவியை. ``பேதம்`` என்றது அதற்குமேல் அப்பு முதல் பிருகிருதி முடிய உள்ளவற்றை. ``போகம்`` என்பது போக்தா. (நுகர்வோன் மேலதாய்ப் புருட தத்துவத்தையும் அதற்குக் காரணமான மற்றை வித்தியா தத்துவங்களையும் குறித்தது.) யோகாண்டம், தவத்தோர் அடையக் கூடிய வித்தியேசுர புவனங்கள். அவை `சுத்த வித்தை ஈசுரம், சாதாக்கியம்` என்னும் தத்துவங்களில் உள்ளன. முத்தாண்டம், அபர முத்தித் தானங்களாகிய சிவதத்துவ, சித்தி தத்துவ புவனங்களை தோற்ற முறையில் இவை முற்பட்டனவாதல் பற்றி ``மூதாண்டம்`` எனப்பட்டன. ``மூதாண்டம்`` என்பது, ஏனைய வற்றோடு இயைந்து இன்னோசை தர வேண்டி, ``மூதாண்டம்`` என நீட்டல் பெற்றது. ``மோகாண்ட தேகாண்ட தாகாண்டம்``, உம்மைத் தொகை தற்பரத்து - தற்பரமாம் தன்மையையுடைய. அத்தன்மை யாவது உயிர்கள் அனைத்திற்கும் மேலானதாதல்.
`இவ் ஐங்கலைகளிலும் சிவனது ஆனந்தக் கூத்து நிகழ்கின்றது` என்பது கருத்து. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.
இதனால் ஆனந்தக் கூத்தின் வியாபகம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.

பொழிப்புரை :

(``அவனன்றி ஓரணுவும் அசையாது`` என்னும் பழமொழி. `அவன் அசையவில்லையாயின் எதுவும் அசையாது` என்பதையும் தெரிவிப்பதுடன் `அவன் அசைந்தால் அனைத்தும் அசையும்` என்பதையும் தெரிவிக்கின்றது. ஆகவே, `அனைத்தும் அசைய வேண்டி அவர் அசைகின்றான்` என்பது விளங்குகின்றது. அசைதல், அது அது தன் தன் இயல்பிற்கு ஏற்பச் செயற்படுதல், `அவனது திருக்கூதினாலே அனைத்தும் செயற்படுகின்றன` என்பதையே இம்மந்திரம் உணர்த்துகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சொல்லும், பொருளும்` என அனைத்தப் பொருளும் இருவகைப்படும். சொல் `வழக்குச் சொல், செய்யுட் சொல்` என இருவகைத்து. செய்யுட்களும் முதல் நூல்களே தலையாயவை. ஆகவே அவற்றை வேதங்கள் ஆட, மிகும் ஆகமம் ஆட`` என எடுத்தோதவே, ஏனைய சொல்வகைகள் ஆடுதல் தானே அமைந்தது. சொற்கள் அசைதலாவது வழக்கிலும், செய்யுளிலும் நின்று பொருளுணர்த்தி வருதல். செய்யுட்கண் தம்மியல்பில் நிற்குங்கால் இயற்செய்யுளாயே நிற்கும். இசையோடு பொருந்தினால் இசைச் செய்யுளாய் முன்னையினும் இனிமையைத் தரும். அதனால், ``கீதங்கள் ஆட`` என அவற்றை வேறெடுத்தோதினார். அண்டம் - உலகம். உலகங்களை `ஏழ்` என்றல் வழக்கு. ``பூதங்கள்`` என்றது உபலக்கணத்தால் தத்துவம் அனைத்தையும் தழுவி நின்றது. புவனங்கள், உலகங்களை ஆட்சி புரியும் அதிகார தேவர்களுக்கு உரிய இடங்கள், `அவை இருநூற்று இருபத்து நான்கு என்பது சைவ சித்தாந்தம். நாதன் ஞானானந்தக் கூத்தினைக் கொண்டு ஆடினான்` என இயைக்க. கொள்ளல், மேற்கொள்ளல், ஞானத்தைக் கூறவே, அதனோடு உடன் நிற்பதாய உண்மையையும் கொள்ளப்படும். உண்மை அறிவு இன்பக்கூத்தே ஆனந்தக் கூத்து ஆதல் விளங்கும்.
இதனால் சிவனது உண்மையறிவின்பக் கூத்தே அனைத்துப் பொருள்களும் நிலைத்துத் தத்தம் இயல்பிற்கேற்பச் செயற்பட்டு பயன் விளைக்கச் செய்வது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில், `அளைத்துப் பொருள்களின் இயக்கங்கட்கும் காரணமாய் நிகழ்வது சிவன் கூத்து` என்பது கூறப் பட்டது. இம்மந்திரத்தில், அவை இயங்குங்கால், அக்கூத்து அவற்றோடு உடனாயும் இயங்கி திகழ்கின்றது` என்பது கூறப் படுகின்றது. இவையே இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வேற்றுமை. எனவே மேற்கூறிய மந்திரத்தின் பொருளே இம்மந்திரத்திற்கும் ஆகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பாரதத்தை அதன் சிறப்புப் பற்றி, `ஐந்தாம் வேதம்` என்றல்போல வேதத்தின் பொருளை உபவிருங்கணம் செய்யும் புராண இதிகாசங்களை உபசாரத்தால் `வேதம்` என வைத்து, ``வேதங்கள் ஐந்து`` என்றார். துணை நூல்களாய் நின்று முதல் நூலின் பொருளை விரித்து விளக்குதல் ஓதும் - நூல்களில் சொல்லப்படுகின்ற கலை, காலம் இவை வித்தியா தத்துவங்களில் தலையாயவை. ஊழி, உலகத்தின் நிலைப்புக் காலம். `அண்டம் ஐந்தில் போதம்` என மாற்றியுரைக்க. அண்டம் ஐந்து, நிவிர்த்தி முதலிய கலைகளில் உள்ள அண்டத்தின் வகை ஐந்து, போதம் - அறிவு. இஃது உயிர்களின் அறிவு, என்றது அதன் நிகழ்ச்சியை. புணர்தல் - உடனாய் நிற்றல்.

பண் :

பாடல் எண் : 8

தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.

பொழிப்புரை :

முன் இரு மந்திரங்களில் அஃறிணையாக வைத்துக் கூறிய பொருளை இம்மந்திரம் உயர்திணையாக வைத்துக் கூறுகின்றது.
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`ஆதியின் மூவர்கள்` என மாற்றிக் கொள்க. ஆதி உலகத் தோற்றக் காலம். சாத்தர் - சாத்தியர். `சாத்தியர்` என்னும் ஒருசாராரும் தேவர் கூட்டத்துள் சொல்லப்படுகின்றனர்.
சிவனது திருக்கூத்து உலகத்தின் செயற்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் ஆதல் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.

பொழிப்புரை :

பிரகிருதி உலகங்களுக்கு அப்பால் உள்ளவை அசுத்த மாயா உலகங்கள். அவற்றிற்கு அப்பால் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் தத்துவ புவனங்கட்கு அப்பால் உள்ளவை சத்தி தத்துவ புவனமும், சிவ தத்துவ புவனமும், அவைகளில் முறையே `சத்தி` என்றும், `சிவன்` என்றும் இருதிறப்பட்டு நின்று ஐந்தொழில் புரிகின்ற சிவன், அத்தொழிலின் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு சத்தி காணத்தான் ஆடலை விரும்பி ஆடுகின்றான்.

குறிப்புரை :

எனவே, அங்ஙனம் ஆடுகின்ற கூத்தே சுந்தரக் கூத்தாம்` என்பது போந்தது. சுந்தரம் - அழகு. எனவே, அது வடிவைக் குறிக் -கின்றது. வடிவுதான் `அருவம், அருவுருவம், உருவம் என மூவகைப் படுதல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அவற்றுள் உருவத்திருமேனி கொண்டு செய்யும் கூத்தையே நாம் கூத்தாகக் காணினும், அதனோடு ஒப்ப ஐந்தொழில் இயற்றும் மற்றைத் திருமேனிகளின் செயலும் சுந்தரக் கூத்து` என்றே இங்குக் கூறப்படுகின்றன. `சூக்கும நடனம், அதிசூக்கும நடனம்` எனச் சாத்திரங்களில் கூறப்படுவனவற்றை இங்கு நினைவு கூர்க. இதனால் மேல் தொகுத்துக் கூறிய கூத்து ஐந்தனுள் முதலாவதாகிய சிவானந்தக் கூத்து ஒன்றும் சொரூப நிலைக் கூத்தம், ஏனைய நான்கும் தடத்தநிலைக் கூத்தும் ஆதல் அறிக.
``அண்டங்கள் ஏழ்`` என்றது, பிரகிருதி அண்டங்களை யாதலின், பின்னர்க் கூறப்பட்டவை அசுத்த மாயை, சுத்தமாயா அண்டங்களாதல் விளங்கிற்று. சிவன் இன்றிச் சத்தியில்லையாதலின், சத்தியைக் கூறவே, சிவன் தானே பெறப்பட்டான். `சத்தி, சிவன்` என்பன அவரையும், அவர்க்கு இடமாய தத்துவங்களையும் குறித்து நின்றன. `உச்சிமேல் உள்ளது` என ஒருசொல் வருவித்து முடிக்க. ``கண்டம் கரியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தலாம். உகத்தல் தன் காரியம் தோற்றி நின்றது.
இதனால், `சுந்தரக் கூத்தாவது ஐந்தொழில் பற்றிய கூத்து` என்பது கூறப்பட்டது.
(பதிப்புக்களில் இதனை அடுத்துள்ள ``கொடுகொட்டி பாண்டரம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.)

பண் :

பாடல் எண் : 2

பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் வியாபித்து நிற்றலால் சுத்த மாயை யின் வியாபகம் பரமாண்டம் ஆகும். அதற்குள்ளே உள்ள அனைத்து இடங்களிலும் பராசத்தியின் கூறாகிய ஆதி சத்தி பரவியுள்ளது. ஆகவே அந்தச் சத்தயைத் தனது விரிந்த ஒளியாகக் கொண்ட தடத்த சிவன், அவ்விடங்களில் எல்லாம் உளன். அவையேயன்றிச் சுத்தமாயையின் காரியமாகிய வாக்குக்களும் `அதிசூக்குமம், சூக்குமம், தூலம்` என்னும் வகையில் அந்த எல்லா இடங்களிலும் உள்ளன. ஆகவே, அந்த எல்லா இடங்களிலும் சிவன் தனது சுந்தரக் கூத்தினைச் செய்கின்றான்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உள்ளது, உளன், உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. மூன்றாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பதும் உடன் எஞ்சி நின்றது. நாதம் இல்லையேல் பொருள் விளங்காமை பற்றி அதன் இருப்பையும் உடன் கூறினார். நடம், அதிகாரத்தால் இங்கு நடைபெறுமாறு கூறப்பட்டடது.

பண் :

பாடல் எண் : 3

 `அங்குசம்` என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.

பொழிப்புரை :

(`அம்சம்` என்பதை இடையே குகரச் சாரியைக் கூட்டி, `அங்குசம்` என ஒரு கருவியின் பெயர்போல ஆக்கி மறை பொருட் கூற்றாக வழங்குதல் சித்தர் மரபு. எனவே,) அங்குசம் என்ன எழும் மார்க்கம்` என்பது, `அம்சம்` என எழுகின்ற வழி என்பதாம். இம்மந்திரம் இரேசக பூரகமாய் நிகழும் வாயு இயக்கத்தால் இயல்பாக நிகழ்தலின் `அசபா மந்திரம்` எனப்படும். அம்மந்திரவழி இயங்கும் உயிர்ப்பினாலே அறிவு நிகழ்தலி அவ்வாற்றால் அறிவை விளக்கு கின்ற இறைவனது செயல் `அசபா நடனம்` எனப்படுகின்றது. அந்த நடனத்திற்கு, `அம், சம்` என்பனவே, `தொம், தி` என ஒலிக்கின்ற தாளங்களாம். அந்தத் தாள ஒற்றுக்கு இயையச் சிவன் சுழுமுனை நாடிக்குள் நின்று சுந்தரக் கூத்து ஆடுதலை அறிவு விளங்கிய காலத்தில் தொடங்குகின்றான். ஆயினும் அக்கூத்தினை அவன் முடித்துவிட்டு அப்பாற்போதல் இல்லை.

குறிப்புரை :

போதம் - அறிவு. மூல நாடி, சுழுமுனை நாடி. தரித்தல் - தங்குதல். அறிவு விளங்குதல், குரு உபதேசத்தால் அசபா நடனத்தை அறியப் பெறுதல்`. ``புகுதல்`` எனப் புதிதுபோலக் கூறியது, அறிவுக்குப் புலனாகும் காலம் பற்றி. விளங்கிய அறிவு பின் விளக்கம் அற்று மறவாமை பற்றி, ``போதல் இல்லை`` என்றார். அசபா நடனத்தால் இங்ஙனம் அறிவு விளங்கச் செயதல் ஐந்தொழில் நடனத்தில் `அதிசூக்கும நடனம்` எனப்படும். எனவே, இதுவும் சுந்தரக் கூத்தின் வகையாயிற்று.
இதனால், சுந்தரக் கூத்த வகைகளுள் ஒன்றன் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.

பொழிப்புரை :

எனக்குத் தலைவனாகிய சிவபெருமான் முதலில் சுந்தரக் கூத்திற்கு ஆயத்தங்களைச் செய்தும், பின் அதனை, `அருவம் நான்கு அருஉருவம் ஒன்று, உருவம் நான்கு` என்னும் முறையில் திருமேனி கொண்டு மும்மாயைகளின் மேலும் நிகழ்த்திப்பின் முற் றொடுக்கத்தைச் செய்தும், அக்காலங்களில் உயிர்களின் அறிவின்கண் நின்று அதனை விளக்கியும், தோற்றம் நிலை, இறுதி மூன்றனுள் இடையதாகிய நிலைப்புக் காலத்தில் முன் மந்திர்ததில் கூறியவாறு சுழுமுனை நாடியில் நின்று உயிர்ப்பு வழியாகப் புலன் உணர்வைத் தந்து; இறுதியாக, என்றும் அழிதல் இல்லாத பெருநிலவுமாகிய முத்தி நிலத்தில் பேரானந்தத்தைத் தரும் நடனத்தைச் செய்தும் நிற்பதாக அக்கூத்தினை இங்ஙனம் வரையறை செய்துகொண்டான்.

குறிப்புரை :

ஆளத்தியாவது, பண் அமைதற்கு ஏழிசை முறையால் அதனை ஏற்றிழிவு வகைகளில் முன்னர் அமைத்துக் காண்பது. அஃது இங்குச் சுந்தரக் கூத்தினை இயற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலைக் குறித்தது. காலம் - ஊழி; பேரூழி; முற்றழிப்புக் காலம். ``கருத்து`` என்றது அறிவை, ``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் ஆறும் எண்ணுப் பொருளவாய் முறையே `ஆயத்தம், தூலம், சூக்குமம், கேவலம், சகலம், சுத்தம்` என்னும் அறுவகைக் கூத்தினையும் குறித்தன. சிவன் ஆயத்த நிலையில் பரநாத பரவிந்துக்களாயும், தூல நிலையில் அபநாத அபவிந்து சதாசிவன் முதலிய ஐவராயும் நிற்பன் `நவந்தரூ பேதம்` என்னும் மரபில் மலைபு வாராமைப் பொருட்டு. ``நவக்கூத்தாடி`` என ஒன்பது பேதம் கூறினாராயினும், அவற்றுள் முதலில் உள்ள பரநாத பரவிந்துக்கள் ஒழிந்த ஏழனையே அங்குக் கொள்க. இனி `நவக் கூத்தாடி` என்றே போயினால், ஆயத்த நிலை தோன்றாமை பற்றி அதனை வேறு வைத்தும் முற்றழிப்புத் தனிச் சிறப்புடைமையின் அதனைப் பின்னரும் எடுத்தோதியும் வலியுறுத்தினார். சுத்த நிலைக் கூத்து முன் அதிகாரத்திற்குரிய ஆனந்தக் கூத்தேயாயினும் அதுவும் கூத்தினுள் ஒன்றாதல் தோன்றுதற் பொருட்டு, ``முடிவிலா ஞானத்துள் ஆடி`` எனத் தொகுத்தோதினார். ``முடித்தான்`` என்றது, `இவ்வாறு முடித்தான்` என வரையறை செய்தமையைக் குறித்தது. இனிச் சுத்தம் ஒழிந்த கேவல சகலக் கூத்துக்களும் நவக் கூத்தில் அடங்குவனவே என்க. முதல் அடி இன எதுகை.
இதனால் சுந்தரக் கூத்தின் வகைகள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன. ஆனந்தக் கூத்தைக் கூறியது எய்தியது இகந்து படாமைக் காத்தது.

பண் :

பாடல் எண் : 5

சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும்
சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.

பொழிப்புரை :

சத்தி பேதங்கள் ஐந்து, அவை, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என்பன. இவற்றோடு இயைந்த சிவபேதமும் ஐந்து, அவை, `பரம், சிவன், சிவன், கருணாகரன், நாதமூர்த்தி, விந்துமூர்த்தி` என்பன. திருவருள் பெற்றோர் அடையும் முத்திகள் எட்டு. அவை, காலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம், சிவன் முத்தி, அதிகாரமுத்தி, போகமுத்தி, இலயமுத்தி, பரமுத்தி அல்லது சாயுச்சியம்` என்பன. முதன்மைப்பதவிகள் எட்டு. அவை, `கணபதி, குமாரன்` நந்தி, சண்டி, அரன், அரி, அயன், இந்திரன்` என்போரது பதவிகள். சித்திகள் எட்டு. அவை அணிமாதிகள். சிவபதம் - சிவனது நிலை. அவை எட்டாதல் அட்டமூர்த்தியாய் நிற்றலால். அட்ட மூர்த்தமாவன `ஐம்பூதம், ஞாயிறு, திங்கள், உயிர்` என்பன. இவற்றில் நிற்குமிடத்தே `பவன், சர்வன்` முதலிய எட்டுப் பெயர்களைச் சிவன் உடையவன் ஆகின்றான். சுத்திகள் எட்டு, வழிபாட்டில் செய்யப் படுவன. `நிரீக்கணம், புரோக்கணம், தாடனம், அப்பியுக்கரணம்` என்பன. இவை முறையே `பார்த்தல், தெளித்தல், தட்டுதல், மூடுதல் மும்முறை கை கொட்டல், திசைக்காப்புச் செய்தல், சுற்றுதல், அமுதமய மாக்கல்` என்பனவாம். இவை முதலாக அனைத்தும் நிகழும்படி சிவன் தொன்று தொட்டுச் சுந்தரக்கூத்தினை நிகழ்த்தி வருகின்றான்.

குறிப்புரை :

``பேதம்`` என்பதைச் ``சத்தி`` என்பதனோடும் கூட்டுக. ``எட்டீசன்`` என்பதில், `எட்டும் நிகழ` என ஏனையவற்றோடு இயைய எண்ணும்மை விரித்து, அவற்றிற்கு முடிக்கும் சொல் ஒன்றும் வருவிக்க.
இதனால், சுந்தரக் கூத்தின் பயன்கள் பலவும் விரித்தோதப் பட்டன.

பண் :

பாடல் எண் : 6

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.

பொழிப்புரை :

மேகங்கள் ஏழு:- பிங்கல நிகண்டிலும், சூடாமணி நிகண்டிலும்` சிறிது சிறிது வேறுபடச் சொல்லப்பட்டன. நீர்மழையை அளவாகவும், மிகையாகவும், சிறிதாகவும் பொழிவன, மண்மழை, கல் மழை, பொன் மழை, மணி மழை என்பவற்றைப் பொழிவன இவைகள். கடல் ஏழு:- உப்பு, பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன், நன்னீர் - என்பவற்றை உடையன. தீவு ஏழு:- அந்த ஏழு கடல்களாலும் சூழப்பட்டுத் தனித்தனியே ஏழு நிலப்பகுதிகள். அவை:- சம்பு, சாகம், குசை, கிரௌஞ்சம், சான்மலி கேரமேதகம், புட்கரம் என்னும் காரணப் பெயர்களையுடையன. சம்புத்தீவு, நாவலந் தீவு. இதுவே நாம் வாழும் நிலம். தேகங்கள் ஏழு:- `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுபிறப்புக்கள். பாற்கரன் - சூரியன். சிவ பாற்கரன் - சிவ சூரியன். சிவன் உள்ளிருந்து அறியாமை இருளைப் போக்கி அறிவைப் பிறப்பித்தற்குக் கருவியாய் அவனால் அமைக்கப்பட்டவை. அவை ஏழாவன:- ஐம்பொறிகளும், மனமும் புத்தியும் ஆய அந்தக் கரணங்களுமாம். இன்னும் `ஏழ்` என்றதனானே வித்தியா தத்துவம் ஏழினையும் கொள்க. தாகம் - வெப்பம்; அஃது அதனையுடைய தீயைக் குறித்தது. ``தீக்கு நாக்கு ஏழ் உள` என்பர். அது பற்றி அஃது ஏழ் எனப்பட்டது. சாந்தி என்றது சுத்தத்தை அஃது ஏழாதல் கலா சுத்தி ஐந்தும், கன்ம சுத்தி ஒன்றும், ஆணவ சுத்தி ஒன்றுமாம். இந்த ஏழ் சுத்தியாலும் ஆன்ம சுத்தி உளதாகும்.

குறிப்புரை :

இதனால், வகை வகையாகச் சொல்லப்படுகின்ற அனைத்துப் பொருள்களும் சுந்தரக் கூத்துள் அடங்குதல் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.

பொழிப்புரை :

தேவதாரு வனம், தில்லை வனம், திருஆலவனம் (திருவாலங்காடு என்பவற்றில் எழுந்தருளியுள்ள தலைவன் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம், ஆகிய சங்காரக் கூத்தக்களையும் அட்ட மூர்த்தத்தில் நின்று அவற்றை இயக்கி ஆடும் எட்டுக் கூத்தினையும், ஐந்தொழிற் கான ஐந்து கூத்தினையும், சுழுமுனை நாடியில் அறியப்படும் ஆறு ஆதாரங்களில் ஆறு கூத்தினையும் உறுதியாகக்கொண்டு ஆடுகின்றான்.

குறிப்புரை :

எனவே, `எங்கும் அகண்டாகாரமாய், அருவால் நின்று ஆடுதலேயன்றி, சில உயர் இடங்களில் அவற்றைத் தன்னுடையனவாக வரையறை செய்து கொண்டு அங்கு உருவத்திருமேனி கொண்டு ஆடுவதே பொற்பதிக்கூத்து` என்றதாயிற்று. `பொன்` என்றது தெய்வத்தன்மையை. பொற்பதி - தெய்வத் தன்மையுடைய தலங்கள்.
`கொடுகொட்டி, பாண்டரங்கம்` என்னும் கூத்துக்களை அசுரரை அழித்த காலத்தில் சிவபெருமான் ஆடினவாகச் சிலப்பதிகார உரை கூறிற்று.9 கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில், `சிவன் கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் - என்னும் கூத்துக்களை ஆடும் பொழுது அக்கூத்திற்கு உமையம்மையே தாளம் தருவான்` எனக் கூறியதற்கு, ஆண்டுப் பிறர் இல்லையே`` என்ற நச்சினஆர்க்கினயரது விளக்கத்தால் அக்கூத்துக்கள் சங்காரத்தின் முடிவில் செய்யப்படுவன வாதல் விளங்கும். இனி, பிரம கபாலத்தை ஏந்தி ஆரும் கூத்தே காபாலக் கூத்து ஆதலின் அதுவே தாருகாவனத்தில் அம்முனிவர்தம் பத்தினியர் முன்பும், முனிவர் முன்பும் ஆடிய கூத்தாகும். இவை போன்ற எல்லா வகைக் கூத்துக்களையும் சிவன், மேல், ஆன நடம் ஐந்து``3 எனக் குறிக்கப்பட்ட ஐந்து மன்றங்களில் ஆடல் திருமேனி ஆடுகின்றான் என்பது, ``தாருவனத் தில்லை (வன), வடமாவன மன்னவன்`` என்றதனால் விளங்கிற்று. தாருகாவனம் ஒரு தலமாக விளங்கவில்லை. தில்லை வளமும், திருஆலவனமும் தலங்களாய் விளங்குதல் வெளிப்படை. இவற்றைக் கூறவே சிறப்பாக ஏனை மூன்றும், பிறவும் கொள்ளப்படும். கோடு, கிளை` என்னும் பொருட்டால், முதல் உறுப்பாய தலையைக் குறித்தது. `பாண்டரங்கம்` என்பது ஈறு குறைந்து, `பாண்டரம்` என நின்றது. ``கோடு`` என்பதன் பின் `ஆகிய சங்காரங்கள்` என மாற்றிக்கொள்க. `இவற்றைத் திடமாகக் கொண்டு எழும் மன்னவன்` என வினைமுடிபு செய்க. எழுதல் - முயலுதல்; அது நிகழ்த்துதலைக் குறித்தது.
இதனால், அனைத்து வகையான கூத்துக்களையும் சிவன் உருவத் திருமேனி கொண்டு தலங்களில் ஆடுவதே பொற்பதிக் கூத்தாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

பொழிப்புரை :

சிவன் `உருவம்; அருவுருவம்` என்னும் இருவகை வடிவில் தலங்களில் எழுந்தருளியிருக்குங்கால் எங்கும் கிழக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பான். கோயில் வாயில் எத்திசையை நோக்கியிருப்பினும் அது கிழக்குத் திசையாகவே பாவிக்கப்படும். அந்நிலையில் உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் ஐந்து பக்கங்களிலும் முறையே ஈசானம், தற்புருடம், அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் முகங்கள் உள்ளனவாம். கோயிலின் வாயில் திசை மாறியிருப்பின் தற்புருட முகம் அந்தத் திசையில் வர அந்தத் திசையின் முகம் தற்புருட முகத்தில் சென்றுவிடும். சிவனது இந்த முகங்கள் ஏனை யோரது முகங்கட்கு இல்லாத பல அதிசய ஆற்றல்களை உடையன. அந்த முகங்களின் ஆற்றலால் சிவன் உயிர்களை நிகரற்ற பேரின்ப நிலையில் செலுத்துதற்கு மேற்கூறிய இருவகைத் திருமேனிகளிலும் இருந்து ஒப்பற்ற திருக்கூத்துக்களைச் செய்கின்றான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி உச்சி, கிழக்கு முதலிய பக்கங்கள் முன் பின்னாகக் கூறப்பட்டன. இந்த ஐந்து முகங்களும் முன் தந்திரத்தில், ``நடுவு கிழக்குத் தெற்குத் தரம்மேற்கு`` என்பது முதலிய மந்திரங்களிலும் கூறப்பட்டமை காண்க. இங்குக் கூறிய குறிப்புக்களால் சிவனது, `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியேசாதம்` என்னும் முகங்கள் ஐந்தும் சிவனது `உச்சி, முன்பக்கம், வலத்தோள், இடத்தோள், முதுகு` என்பவற்றின்மேல் உளவாகச் சிவன் எங்கும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருப்பவனாதல் விளங்கும்.
பக்கங்கள் பலவற்றிலும் முன்பக்கமே கொள்ளத்தக்கது ஆதலின், வழிபாடுகள் பலவும் தற்புருட முகத்திலே செய்யப் படுகின்றன. `தற்புருட முகத்தில் செய்யப்படுவது எதுவும் எல்லா முகத்திலும் செய்ததேயாம்` என்பது சிவாகமங்களில் சொல்லப்படுவது.
ஐந்து முகங்களும் ஐந்து சாதாக்கியங்களாகச் சொல்லப்படும். சத்தியோசாதம் அமூர்த்தி சாதாக்கியம், வாமதேவம் மூர்த்தி சாதாக்கியம். அகோரம் கர்த்திரு சாதாக்கியம். தற்புருடம் கரும சாதாக்கியம் முதலாக ஒவ்வொன்றும் அடுத்த சாதாக்கியத்தை முறையே சார்ந்து நிற்க, முடிவில் நான்கு சாதாக்கியமும் சிவ சாதாக்கியத்தைச் சார்ந்து நிற்கும் என்க.
1. `உச்சிமுகம் ஈசானம்; ஒளிதெளிஅப் பளிங்கே;
உத்தரபூ ருவத்திசையை நோக்கிஉறும் உகந்தே.
2. நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி
நிகழும்முகம் தற்புருடம்; கோங்கலர்போல் நிறமே.
3. அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது; கராளம்
அவிழ்தாடி; வலத்தோளில் தென்னோக்கி அமரும்.
4. செச்சைநிறத் தெரிவைமுகம்; இடத்தோள்மேல் வாமம்.
5. சிறுபுறத்தின் முகம் சத்தி யோசாதம் நிகழ்வால்.
என்னும் சிவதருமோத்தரச் செய்யுளாள் மேற்கூறியவை விளங்குதல் காண்க. உத்தர பூருவம் - வட கிழக்கு. பூர்வதிசை கிழக்குத் திசை. அறக் கரிது - மிகவும் கறுப்பானது.
அகோரமுகம் தோற்றத்தால் அச்சுறுத்தும் கோர வடிவாய் இருப்பினும் அது கோரத்திற்குக் கோரமாய்க்கொடிய வினைகளை அழித்தொழித்தலால் உண்மையில் அகோரமே - கோரம் இல்லாத - சாந்தமே. ``கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார்`9 என்னும் சிவஞான சித்தியை நோக்குக. இதனானே அகோர மந்திரம் பிராயச்சித்த மந்திரமாய் உள்ளது. ``ஒப்பில் பேரின்பத்து`` என்பதனை, ``தனி நடம் செய்யும்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. பேரின்பத்து நடம், பேரின்பத்துக்கு ஏதுவாய நடம். ``உபயம்`` இரண்டில் முன்னது, `இரண்டாவதான உருவம்` என்றும், பின்னது, `அருவம், இருவம் இரண்டுமான அருவுருவம்` என்றும் பொருள் பயந்தன. மூன்றாம் அடி இனவெதுகை.
இதனால், ஐந்து முக மூர்த்தியாகிய சதாசிவ மூர்த்தியே நிலவுலகத் தலங்களில் உருவத் திருமேனி கொண்டு நடம் செய்தல் கூறப்பட்டது.
சிவாலயங்களில் கருவறையில் உள்ள இலிங்கம் சதாசிவ மூர்த்தமே. ஏனை உருவத் திருமேனிகள் மகேசுர மூர்த்தங்களாம்.

பண் :

பாடல் எண் : 3

அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

பொழிப்புரை :

பொன்னம்பலம் முதலிய ஐந்து அம்பலங்களிலும், மற்றும் பல இடங்களிலும் ஆடற் பெருமானைக் கண்டு வணங்கினவரே `அடியார்` எனப்படுவர். அவரே சிவானந்தத்தை அடைந்தவர்; சிவன் அருளைப் பெற்றனர்; சிவனது திருவடியைச் சேர்ந்தவர்.

குறிப்புரை :

``பொன்னம்பலத்தாடல் கண்டோர்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. தலைமைபற்றிய இதனைக் கூறவே, மற்றவை தழுவப் பட்டன. மூன்றாம் அடியொழிந்த மற்றை மூன்றடிகளிலும் ``அடியார்`` என வந்தனவும், மூன்றாம் அடியில் ``அடியில்`` என்றதும் சொற்பொருட் பின்வருநிலையனி. ``அரன் அத்தன்`` என்றது இருபெயர் ஒட்டு.
இதனால், சிவாலய தரிசனத்தில் ஆடற்பெருமானது தரிசனத்தினஅ இன்றியாமையாச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.

பொழிப்புரை :

பலவகையான நடனங்களையும் செய்பவன் சிவன். அவன் மிக மேலான ஞான டனத்தையும் செய்ய வல்லவன். அந்த ஞான நடனத்தினால், அடங்காத எனது தற்போதத்தைத் தனது வலது தாளால் மிதித்து அடக்கி, இடப்பக்கத்தில் காணப்படுவதாய, எடுத்த பாதத்தை எனது தலைமேல் வைத்து, என்னைப் பேரின்பக் கடலுள் ஆழ்த்தினான். இனி ``உள்ளக் கிழியின் உருவெழிதிப்``* பார்க்கும் யோகிகட்கு அக்கிழி யுருவில் ஒன்றி விளங்குகின்றான்.

குறிப்புரை :

``என்னை`` இரண்டில் முன்னது, `எனது போதத்தை` என்றபடி. ``அடங்காத என்னை அடக்கி`` என்பதனோடு, ``மலம் சாய அமுக்கி``* என்பதையும், ``இடம் காண் அடி வைத்து என்னைப் பரானந்தத்து இட்டு`` என்பதனோடு, ``அருள்தான் எடுத்து - நேயத்தால் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்`` என்பதையும் ஒப்பீடுக.
மூன்றாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ``நடந்தான்`` என்பதில் `தான்`, அசை. ஞானக்கூத்தை வகுத்தரைப்பதே ``மாயை தனை உதறி``* எனத் தொடங்கும், ஞானக்கூத்து ஞானியர் பொருட்டச் செய்வதாகலின், ஈற்றடியிற்கூறியது யோகியர்க்காயிற்று. ஞானியரும், யோகியரும் அல்லாத பிறர்க்கெல்லாம் சிவன் ஊன நடனத்தைச் செய்வான் என்க. அது, ``தோற்றம் துடியதனில்``* என்னும் வெண்பாவில் சொல்லப்பட்டது.
இதனால், பொற்பதிக் கூத்துள் ஞான நடனம் உயிர்கட்குத் தரும் பயன் கூறும் முகத்தால், அதன் தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.

பொழிப்புரை :

நான், பிறவியாகிய துன்பத்தினின்று நீங்கி, வீடாகிய இன்பத்தை அடைதற்குரிய வழி யாது` என்று ஆராய்ந்து கூத்தப் பெருமானை என்னுடைய அன்பிற்குள் அகப்படும்படி வைத்தேன். தேவருள் அஅவனே கூத்தாட வல்ல பெருமான். அவனது கூத்து எல்லார் கூத்தினும் மேலாய கூத்து; செம்பொன் அம்பலத்தில் வெற்றியுடன் விளங்குதல் கூத்து; அனைத்துப் பொருள்காவல் இயகத்தோடு மிக நெருக்கமான தொடர்புடைய கூத்து. உபநிடதங்கள், `தத்` என்னும் சொல்லால் சுட்டுகின்ற பரம் பொருளின் கூத்து.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``கூத்தன்`` என வந்தன பலவும் ஒருபொருள்மேல் வந்த பல பெயர். கூத்தின் சிறப்பை அதனை உடையானோடு பலவகையில் சேர்த்துக் கூறினார்.
``கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்``8
என்பதனால், காளியோடு ஆடி, `அவளை வென்ற அந்த நடனமே தில்லையில் செய்யப்படுகின்றது` என ஆளுடைய அடிகள் அருளிச் செய்தவாறே இவரும் பொன்மன்றுட் கூத்தினைச் ``சேவகக்கூத்து`` என்றார். சேவகம் - வீரம், வெற்றி. கோயிற் புராணமும் இவ்வாறே கூறுதல் காண்க.
``சம்பந்தம்`` என்றது, இங்கு அத்துவித சம்பந்தத்தை. அதனைச் சித்தாந்த நூல்கள் இனிது விளக்கும்.
``நாடி வைத்தேன்`` என்றதனால், அதன் பயன் எண்ணியது எண்ணியவாறே கிடைத்தமை பெறப்பட்டது. அதனை இங்குக் கூறியதனால், `நீவிரும் அதனை அவ்வாறு வைத்தால் இன்புறுவீர்கள்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
``சித்தமும் செல்லாச் சேட்சியன காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!``J
``ஆர்காண வல்லார் அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோர் மறைத்து``l
``அழலார் வண்ணத்து அம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``3
எனப் பிற திருமுறைகளிலும் வந்தவாறு இங்கும் நாயனார், ``அன்பில் வைத்தேன்`` என்று அருளிச்செய்தார். அதனால், வேதங்களாலும் அறியவாராது `அது` எனச் சேய்மைச் சுட்டாகப் பொதுவிலே சுட்டப் படுகின்ற பரம்பொருள் அன்பர்தம் அன்பிற்குள்ளே வந்து அகப் படுதல் தெளிவாகும். பொற்பதிப் கூத்துப் பல வகைக் கூத்தும் ஆதல் தோன்றுதற்கு. இடையே ``சொம்பொன் திருமன்றுட் கூத்து`` என்றார்.
இதனால், பொற்பதிக் கூத்தின் தரிசனம் பலவகைக் கூத்தின் தரிசனமுமாய் வீடு பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.

பொழிப்புரை :

சிவன் தனது கூத்தினை மாணிக்கச் சபையில் மாணிக்கக் கூத்தாக இயற்றுவான். தில்லை பொற்சபையில் பொற் கூத்தாக இயற்றுவான். மற்றும் வெள்ளி முதலிய சபைகளில் அது அதற்குத் தக்க கூத்தாக இயற்றுவான். அனைத்தையும் கடந்த தனது இயற்கைப் பரஞ்சோதி வெளியில் சிவானந்தக் கூத்தாக இயற்றுவான். (அது முதலிலே சொல்லப்பட்டது.) ஆகவே, ஒருவகையாய் இல்லாமல் பலவேறு வகையாக இயற்றுகின்ற ஆணிப்பொற் கூத்தனது கூத்து வகைகளையெல்லாம் யார் வரையறை செய்து கூறவல்லவர்!.

குறிப்புரை :

`ஒருவரும் இல்லை` என்பதாம். பூணுதல் - வெள்ளி முதலியவற்றைத் தாமதமாகக் கொள்ளும். ``சடைக் கூத்து`` என்பதைச் `சடைபோலும் கூத்து` என உவமத் தொகையாக்கி, `சிவனது சடை ஒன்றாய் இல்லாது பலவாய் விரிதல் போலப் பலவாய் விரியும் கூத்து` எனத் தொழிலுமாம் ஆக்குக. ஆணிப்பொன் - பிற பொன்னின் மாற்றுக்களையெல்லாம் அளந்து காட்டித் தான் வேறொன்றால் அளக்கப்படாத பொன். இதனை `உரையாணி` என்பர். ஆணிப்பொன் போலும் கூத்து, பிற கூத்தின் தகுதிகளைத் தான் அளந்து, பிறிதொரு கூத்தினால் தன் தன்மை அளக்கப்படாத கூத்து.
``யார் அறிவாரே`` என்றது, `பொற்பதிகளில் சென்று காணின் அக்கூத்துக்களின் வகையை ஒருவாறு உணர்ந்துரைத்தல் கூடும்` என்றபடி.
இதனால், பொற்பதிக் கூத்து அவனது கூத்து வகை பலவற்றையும் காட்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.

பொழிப்புரை :

பொற்பதிகளுள் உள்ள நேர்மை மிகுந்த அம்பலங்களில் நிகழும் திருக்கூத்தில் அழகிய மலரும் பொன்னும் போலும் எடுத்த திருவடியில் தம் அன்பை வைப்பவர்கட்கு அவ்வன்பினால் உடம்பு அழுகையில் விம்மும்; `அதிருவடி எங்கே மறைந்து விடுமோ` என அஞ்சி நடுங்கும்; தந்து அடைக்கல நெறியையும், பிழைபொறுக்க வேண்டுதலையும் இனிது புலப்படுத்த வேண்டி நிலத்தின்மேல் நெடுங்கிடையாய் விழும்; பின்பு திருக்கூத்தினைக் காண வேண்டி எழும்; தளர்ச்சியடையும்; முடிவாக அவர்கள் தம்மையே தாம் மறந்துவிடுவார்கள் என்றால் `தற்பெருமை` என்பது அவர்கட்கு எங்கேயிருக்கப் போகின்றது? அஃது எங்கும் இல்லாது, அறவே கெட்டொழியும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பின், ``மெய்`` என்பதை ``விம்மும்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``தம்மையும்`` என்னும் உம்மை சிறப்பு. சதுர் - பெருமை. திருக்கூத்தை அன்போடு தரிசிப்பவர்க்கு இம்மெய்ப்பாடுகள் உளவாதலைத் திருநாவுக்கரசரது வரலாற்றில் சேக்கிழார்,
``கையும் தலைமிசை புனைஅஞ் சலியன;
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங் களும்உடன்
உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழும்;முன் பெழுதரும்;
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்``
எனக் கூறியவாற்றானும் அறிக.
இன்னும்,
``விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்;
தம்மாண் பிலராய்த் தரியார்; தலையால் முட்டுவார்;
எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்``
என்றதையும் காண்க. நேர்மை - மலக்கோண் நீங்கிய திருவருள் நேர்மை.
இதனால், பொற்பதிக் கூத்தினைத் தரிசிப்பார்க்கு உண்டாகும் அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.

பொழிப்புரை :

காண்பவரது உள்ளங்களில் சிவானந்த நாட்டத்தையே முறுகி வளரச் செய்கின்ற பொற்பதிக் கூத்துக் கண்டவுடன் கண்டவர்களது சித்தம் வேறு எதனையும் சிந்தியாது; அந்தத் திருக்கூத்து ஒன்றை மட்டுமே சிந்திக்கும். உயிர்ப்பினால் பொறிகள் வழியாகப் புலன்களின்மேல் செல்வனவாய ஏனைய அந்தக் கரணங்களும் அவ்வாறு செல்லமாட்டா. (``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக``* என்ற அனுபவத்தை நினைவு கூர்க.) அங்ஙனமாகவே, உலக ஆசைகள் பலவும் அற்றொழி வனவாம். அவை ஒழியவே உலகப் பொருள்களைத்தேடி, அவை கிடையாமையால் மனம் திகைத்தலும், தேடுதலாலும், திகைத்தலாலும் உடல் இளைத்தலும் நிகழா.

குறிப்புரை :

``ஆனந்த நாட்டம்`` என்பது முதலாகத் தொடங்கி, `சிந்தை தேட்டறும்` என மாற்றி, ``திகைப்பறும், பிண்டத்துள் வாட்டறும்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தேடுதல் - ஆராய்தல். தேடு, தேட்டு - முதனிலை திரிந்த தொழிற்பெயர். `காலால், புந்தியாகி வரும் புலன்மேல் (மனம்) ஓட்டறும்; திகைப்பறும்` என உருபு விரித்து, `மனம்` என்பது வருவிக்க. மனம் பொறிவழிச் சென்று கவர்கின்ற புலன்கள் முடிவில் புத்தியின்கண் வந்து முடிதலின், ``புந்தியாகி வரும் புலன்`` என்றார். `புலன்மேல்` என, `மேல்` என்பது விரிக்க. பிண்டம் - உடல். `வாட்டம்` என்பதில் அம்முக் குறைந்து நின்றது.
இதனால், பொற்பதிக் கூத்துக் காண்பவர்க்கு அக்கட்சியே முத்திப் பேரின்பமாதற் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.

பொழிப்புரை :

சிவன், படைப்புக் காலத்தில் உயிர்களைக் காளியின் பிடியிலிருந்து விடுவித்தற்கு அவளோடு நடனப் போட்டி யிடும் முறையில் நடனம் ஆடி அவளை வெள்கச் செய்து வென்றான். பின்பு தேவர்கள் கண்டு தனது முதன்மையை உணர்ந்து உய்தற் பொருட்டு அவர்கள் முன் மேரு மலையில் நடனம் ஆடினான். பின் நில உலகில் சுடலைகளில் பேய்களோடு கூடி நடனம் ஆடினான். பஞ்ச பூதங்களில் எப்பொழுதும் ஒருவரும் அறியாதபடி நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றான். அவன் பொற்பதிகளில் உள்ள அம்பலங்களில் யாவரும் காண, எந்நாளும் ஆடிக்கொண்டிருக்கின்றான்.

குறிப்புரை :

`அவ்வருமை யறிந்து அப்பதிகளில் சென்று அந்த நடனத்தை வணங்குதல் மானிடர்க்குக் கடன்` என்பது குறிப்பெச்சம்.
`காளி, தாருகன்` என்னும் அசுரனை அழித்து அவனது குருதியைக் குடித்த காரணத்தால், அவனைப் போலவே உலகை அழிக்கத் தொடங்கியபொழுது சிவன் அவளோடு நடனப்போர் செய்து அவளது சினத்தை அடக்கினான்` என்பது புராண வரலாறு.
``நீடுயர் மண்ணும் விண்ணும் நெடுவேலை குன்றொடு
உலகேழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதிஓதி நின்று தொழலும் ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்தும்
ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம்
அவையாம் நமக்கொர் சரணே`` என்னும் அப்பர் திருமொழிக் குறிப்பைக் காண்க. தாருகன் - ஆணவ மலம். அவனை அழித்த காளி - மாயை. சிவன் அவனது கோபத்தை அடக்கியது. மாயையின் மயக்கத்தை நீக்கியது. எனவே, உயிர்களைக் கேவல சகலங்களின் நீக்கிச் சுத்தத்தை அடையச் செய்தலே சிவன் செய்யும் திருக்கூத்து` என்பது விளங்கும். காளியோடு நடனம் ஆடிய ஐதிகத்தைக் குறிப்பதே திருவாலங்காட்டுத் தலம். எனவே, அவ்விடத்து நடனமே பழைய நடனம் ஆதல் விளங்கும்.
தேவர்கள் காண மேருமலையில் ஆடியதை இம்மந்திரத்தால் அறிகின்றோம்.
சிவன் சருவ சங்காரத்தின் பின் உடல்அற்ற உயிர்களோடு கூடி நடனம் ஆடுதல் அறியாதார் உலகத்தில் பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் ஆடுவதாக எண்ணுவர். அவர்தம் மனப்பான்மை பற்றி அதனையும் சிவன் உடன்பட்டுக் கொள்கின்றான். `குவலயத்தக் கூளியோடு ஆடி` என ஒரு தொடராக ஓதற்பாலதனை இரண்டு தொடராகப் பிரித்து ஓதினார். சிவனது செயல்கள் எல்லாம் அவனது திருக்கூத்தாகவே கூறப்படுதல் பற்றி. அவன் பஞ்ச பூதங்களைச் செயற்படுத்தி நிற்றலையும் அவனது திருக்கூத்தாகக் கூறினார். `எத்துணைப் பெரியோன் எத்துனை எளியனாய் வந்து பொற்பதிகளில் ஆடுகின்றான்` என்பதை விளக்குதற்கு அவனது பெருநடனங்கள் பலவற்றையும் எடுத்தோதினார். மூன்றாம் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால், பொற்பதிக் கூத்தின் அருமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.

பொழிப்புரை :

(`சிவன் அண்டம், பிண்டம்` இரண்டிலும் நடம் புரிகின்றான்` என்பதனாலும், `பிண்டத்துள் இருதயத்திலே நடம் புரிகின்றான்` என்பதனாலும் அண்டமும், பிண்டமும் சமம் ஆகின்றன. அம்முறையில் நோக்கும் பொழுது) பிண்டத்தில் நடு நாடியாகிய சுழுமுனா நாடியே மேரு மலையும், இடைநாடியே இலங்கையும், பிங்கலை நாடியே மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனையும் ஆகும். `இனி, `மேரு` எனப்படும் நடுநாடி மேல் நோக்கிச் செல்கின்ற மணிபூரகம் பொதிய மலையும். இருதயம் தில்லைவனமும் ஆகும். ஆகவே மேரு முதலியவற்றை உடைய நிலம் சிவனது திருவருள் மிக்கு விளங்குகின்ற சிவநிலம் ஆதல்போல், சுழுமுனை முதலியவற்றை உடைய பிண்டமும் சிவநிலமேயாம்.

குறிப்புரை :

`நடு நாடி மேரு வாய் உறும்; இடை இலங்கையாய் உறும், பிங்கலை குறியாய் உறும்; மலயத்தூடு ஏறும் சுழுனை தில்லை வனத்துச் சாரும் ஆகவே, இவைகளையுடைய பிண்டம் வெளியே இனிது விளங்குகின்ற நிலம் போல சிவபூமி என இயைத்துக் கொள்க.
குறி - எல்லை. அது வட எல்லையைக் குறித்தது. முன்னர்க் கூறிய உருவக முறையால், ``மலயம், தில்லைவனம்`` என்பன மணி பூரகத்தையும் இருதயத்தையும் குறிப்பவாயின. ``வான்`` என்றது அதன்கண் அடங்கி விளங்கும் நிலத்தை. இன், உவம உருபு. `இலங்கை, குறி` என்பவற்றை, இடைபிங்கலைகளோடு நிரல் நிறையாக இயைக்க. `ஆய் உறும்` என ஆக்கம் விரித்து எல்லா வற்றோடும் கூட்டுக. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ``இவை`` என்பது தானியாகு பெயராய் இவைகளையுடைய உடம்பைக் குறித்தது.
இதனால், அண்டத்தில் பொற்பதிகள் இருத்தல் போலப் பிண்டத்திலும் பொற்பதிகள் இருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

பொழிப்புரை :

[முன் மந்திரத்தில் பிண்டம் அண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கும் முறை கூறியது போல, அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கினால்,]
மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனை நிலமகட்குப் பிங்கலை நாடியும், தெற்கேயுள்ள இலங்கை இடைநாடியும், சிவன் நடனம் புரிகின்ற தலங்களுள் தலையாயதாகிய தில்லை நடுநாடியும் ஆகும். பூதகாரியமாகிய அண்டம், பிண்டம் இரண்டனுள் அண்டம் பிண்டத்தோடு ஒப்ப இவ்வாறு வரையறை செய்து உணரப்படும்.

குறிப்புரை :

`அண்டம், பிண்டம் என்பவற்றுள் பிண்டத்தை அண்டத்தோடு ஒப்பித்தலே மரபு போலும்` என மலையாமைப் பொருட்டு, `அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்பித்தலும் மரபே` என்றற்கு இது கூறினார். இதனால், அண்டம் பிண்டம் இரண்டும் தம்முட் சமம் ஆதல் விளங்கிற்று. கோயிற் புராணத்திலும்,
``அலைந்திடும் பிண்டம், அண்டம்
அவைசமம் ஆத லாலே,
இலங்கைநேர் இடைபோம்; மற்றை
இலங்குபின் கலையாம் நாடி
நலங்கிளர் இமய நேர்போம்;
நடுவுபோம் சுழுனை நாடி``
என்றும்,
``நாடரு நடுவின் நாடி
நலங்கிளர் தில்லை நேர்போய்க்
கூடும்``*
என்றும் இவ்வாறே கூறப்பட்டது.
`புறத்து ஆனது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. ``இடை பிங்கலை`` என்பவற்றை முன் மந்திரத்திற்கு இணங்க, `புறத்து ஆனது, தெக்கணம்` என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க. ``தெக்கணம்`` என்றது. தென் கோடியாகிய இலங்கையை, `நட்டம் பயில்` எனப் பயிலுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. நில உருண்டைதான் பல பகுதிகளை உடைத்தாயினும், அவற்றுட் சிறந்தது, `சுரும பூமி` எனப்படுகின்ற பரத கண்டமே இவ்வாறான பல சிறப்புக்களை உடையது என்க.
இதனால், பிண்டத்தைப் போல அண்டமும் நாடி முதலியவற்றை உடைத்தாதல் கூறப்பட்டது.
`அண்டம், பிண்டம் இரண்டும் சிவன் நடம்புரியும் பொற்பதிகளை உடையன` என்றற்கு இவ்விரு மந்திரங்களும் இவ்வதிகரத்தில் அருளிச்செய்யப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை :

பொன் வகைகளில் சிறந்தமை பற்றி, `அம்பொன்` எனப்படும் செம்பொன் நகரமாகிய தில்லைப் பதியே அனைத்து அண்டங்களாகவும், அப்பதியில் உள்ள ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம் போலாது, அதற்கு மிக முன்னே சுத்த மாயையில் தோன்றி, அனைத்துப் பொருள் களையும் தம்முள் அடக்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைக ளாகவும், அவ் ஆலயத்தின் முதல் ஆவரணத்துள் உள்ள திரு வம்பலமே ஐந்தொழில் செய்யும் சத்தியாகவும் அமையும்படி நின்று, அனைத்தையும் கடந்து நிற்கும் மேலான ஒளியாகிய சிவன் நடனத்தை விரும்பிச் செய்கின்றான்.

குறிப்புரை :

அண்டப் பகுதிகளை எடுத்துக் கூறவே, முன் அதிகாரத்தில் அண்டத்தோடு ஒப்பிக்கப்பட்ட ஒப்புமை பற்றிப் பிண்ட வகைகளும் அடங்கின. அதனால், `பொற்றில்லைக் கூத்துத் தானே அண்டபிண்டம் அனைத்தையும் இயக்குகின்ற கூத்தாம்` எனக் கூறியவாறாயிற்று. இன்னும் ``பரஞ்சோதி`` என்றதனால், ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத அந்தப் பரமசிவன்தானே பொற்றில்லையுள் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான்` என்பது தோற்றுவிக்கப்பட்டது.
தண்டு, `தெண்டு` என மருவிற்று. தண்டு - செங்கோல்` நீதி. அஃது உயிர்களை வினை நெறிக்கு உட்படுத்தி ஆளும் ஆளுகையைக் குறித்தது. ``தெண்டினினின்`` என இன்னுருபின் மேல் இன்சாரியை வந்தது சிறுபான்மை வழக்கு உகத்தல் - விரும்புதல். அது தன் காரியந்தோன்ற நின்றது.
கோயிலை, `நகர்` என்றல் பற்றி, `பதி` என்றார். அதனை ஐந்து ஆகாசமாகக் கூறினமையின், அஃது ஐந்து ஆவரணங்களை உடைத்தாதல் விளங்கிற்று. அனைத்தையும் அடக்கி நிற்றல் பற்றிக் கலைகள் `ஆகாசம்` எனப்பட்டன.
இதனால், `தில்லைத் திருக்கோயிலின்கண் உள்ள திருவம்பலத்தில் செய்யப்படும் திருக்கூத்தே பொற்றில்லைக் கூத்தாம்` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.

பொழிப்புரை :

குரு உணர்த்தியருள்கின்ற இன்பக் கதிராய்ப் பின் பெருகி விளைகின்ற தலையாய இன்பத்தைத் தன்னுள் நிரம்பக் கொண்டு சிவன் தென்னாட்டில் தில்லையை அடைந்து மங்கையோடு உடனாம் இன்பப் போக வடிவினனாய், நிலையான இன்பத்தைத் தரும் நடனத்தைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`அதனைத் தவறாது சென்று கண்டு தொழுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.
குரு + ஆனந்தம் = குரானந்தம். `ரேகை`, ஒளியின் சிறு கூறு. குரு உபதேசத்தில் சிவானந்தம் கேள்வியளவில் சிறிதே புலப் படுதலால் அதனை ``ரேகை`` என்றும், பின்னர்ச் சிந்தித்தல், தெளிதலால் பெருகி வருதலால் ``கூர்ந்த`` என்றும், அங்ஙனம் பெருகி எல்லையின்றி விளைகின்ற இன்பம் சிவனுக்கு ``வரம்பில் இன்பம்`` என்னும் குணமாய் இருத்தலின் ``குணமாம் சிரானந்தம்`` என்றும், அஃது அவனது நடனத்தில் பொங்கி வழிதலால் ``பூரித்து`` என்றும் கூறினார். ``தென்திை\\\\u2970?`` என்றது இங்குத் தில்லையை ஆதலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. தில்லையை அவன் தேர்ந்து கொண்டது, `அதன் சிறப்பு நோக்கி` என்றே கொள்ளப்படும். ``மாதவம் செய்த தென்றிை\\\\u2970?``9 எனச் சேக்கிழாரும் குறித்தருளினார். புரம் - திருமேனி; வடிவம். `பூவையும் தானுமாம் ஆனந்த போக புரனாய்` என்க. ஆனந்தம், சிவானந்தம். போகம் - உலக இன்பம். அவன் போக வடிவினனாய் இருந்து தரும் போகம் சிவானந்தத்திற்குத் தடையாகாமை பற்றி, ``ஆனந்த போகம்`` என்றார், மொழியின் இனிமை பற்றி மகளிரைக் `கிளி, பூவை` என உவம ஆகுபெயராற் கூறுதல் இலக்கிய வழக்கு. `நிர்` என்னும் உபசர்க்கம் நிலை பேற்றையும் உணர்த்தும், நிர்த்தாரணம் நிர்ணயம்` முதலியவற்றிற் போல. இம்மந்திரத்திற்குப் `பரஞ்சோதி` என்னும் எழுவாயை முன் மந்திரத்திலிருந்து கொள்க.
இதனால், தில்லைக் கூத்தினைச் சிவன் மேற்கொண்ட வகை -யும், அது போகம், மோட்சம் இரண்டையும் தருதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

பொழிப்புரை :

சிவன் தான் ஆடும்பொழுது, அவனோடு உடன் ஆடுவன பல. அவ்வாறு அனைத்தும் ஆடும்படி அவன் தான் நாதாந்தத்தைக் கடந்து செய்யும் நடனத்தைத் தில்லையில் நாதத்தோடு கூடியே ஆடுகின்றான்.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பதாம். ``ஆதிபரம்`` என்பதன் பின் `தான்` என்பது வருவிக்க. கை முதல் மதியீறாகச் சொல்லப் பட்டன எல்லாம் அவனுடையனவே. ஓதும் சடை, பிறருக்கு உரித் தாகாது அவனுக்கு உரித்தாகச் சொல்லப்படுகின்ற சடை. எனவே, `முதல் இருடியாவான் சிவனே` என்பது விளங்கும். ``விஸ் வாதிகோ ருத்ரோ மகரிஷி;`` என வேதமும், ``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி``* எனத் திருமுறையும் கூறும். உன்மத்தம் சடையில் அணிந்த ஊமத்தை மலர். அனல், வினையைப் போக்குதலையும், சடை ஞானத்தைத் தருதலையும், ஊமத்தை ஆனந்தம் விளைத்தலையும், பிறை அருள் வழங்குதலையும், குறிப்பால் உணர்த்துவன. `பாரும், மீது அண்டமும் ஆட` என்க. இது அவன் ஆட, அனைத்தும் ஆடுதலைக் குறிக்கும். ``நாதமொடு`` என்பதில் நாதம் சிலம்பொலி. கந்திருவர் யாழொலி முதலிய இன்னொலிகள். நாதாந்தம் - முடிவில் உள்ள நாத தத்துவத்திற்கு அப்பால். `அங்குச் செய்யப்படுவதே ஆனந்த நடனம்` என்பது மேற் கூறப்பட்டது.8 `அந்த நடனத்தைச் சிவன் இந்நிலையில் செய்கின்றான்` என்றார்.

பண் :

பாடல் எண் : 4

கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.

பொழிப்புரை :

அழகிய திருமேனியுடன் பெருமான் தில்லை யம்பலத்தில் ஆடுகின்ற தலைமை வாய்ந்த அந்த நடனம் அகில உலகங்களுக்குமான நடனமாகும், அதனை வணங்க வேண்டி அவ்வம்பலத்தை அடைந்தால், அவ்அடைவே மேலான ஞானத்தின் முடிநிலையாகிய மௌன நிலைப்பேறாகும்.

குறிப்புரை :

``அம்பரன்`` என்பதை முதலிலும், `கும்பிட` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிலும் கூட்டி உரைக்க. அம்பலம், அதிகாரத்தால் இங்குத் தில்லையம்பலம் ஆயிற்று. கோ - தலைமை. `அகிலாண்டத்திற்கும் ஆடும் நட்டமாம்` என்க. செம்பொருள், கண்கூடாக அறியப்படும் பொருள். ஈண்டுள்ளாரால் அங்ஙனம் அறியப் படும் சிவலோகம் தில்லையம்பலம்` என்க. ``கும்பிடச் சேர்ந்துற்றால்`` என்றது, `கும்பிடுதற்கு முன்பே பயன் விளையும்` என விளைவு கூறிய வாறு. உம்பர்அம் எனப் பிரிக்க. உம்பர் - மேன்மை. அம் - அழகு; சிறப்பு` என்றபடி `மோனமாகிய அந்தம்` என இயையும், மௌன மாவது, தற்போதம் அற்ற நிலை. ``மோனம் என்பது ஞான வரம்பு``*\\\\`20என ஔவையாரும் அருளிச் செய்தார். ஞான அந்தத்தின் உண்மை - ஞானத் -தின் முடிநிலையால் விளையும் மெய்யான பேறு; பரமுத்தி. தில்லைத் திருநடம், கண்டு வணங்கினஆர்க்கு வீடுபேற்றைத் தரும்` என்றபடி.
இதனால் தில்லைக் கூத்தின் தலைமையும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே.

பொழிப்புரை :

நில அண்டத்தின் பகுதி மூவேழும், அவற்றிற்கு மேல், `நீர் முதலிய பூதம் நான்கு, அகங்காரம், புத்தி, பிரகிருதி` என்னும் தத்துவ அண்டங்கள் ஏழும் உண்மை வீட்டிற்கு வழியாகின்ற உபநிடத நூல்கள் நூற்றெட்டும், இன்னும் அராகம் முதல் நாதம் முடிவாய் உள்ள தத்துவ புவனங்களும் ஆகிய அனைத்தும் சிவனது திருக்கூத்தின் எல்லையையே எல்லையாக உடையன. இனி உயிர்கள் அடையும் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய முத்திகளும் மாதுடன் ஆடும் சிவனது திருவடி நிலைகளேயாகும்.

குறிப்புரை :

நில அண்டப் பகுதி மூவேழாவன, கீழுலகம் ஏழு, நிலப்பரப்பின் தீவுகள் ஏழு, மேலுலகம் ஏழு, புவனங்களை நோக்கும் பொழுது தன்மாத்திரை, கன்மேந்திரியம், ஞானேந்திரியம், மனம். இவை அகங்காரத்தில் அடங்குதலைச் சிவஞான யோகிகளது இரண்டாம் சூத்திர மாபாடியத்துப் பிரதிட்டாகலை விளக்கத்தில் காண்க. வேதாந்த சித்தாந்த நூல்களே உண்மை ஞான நூல்களாதல் பற்றி அவைகளையே `சாதகம்` எனக்கொண்டு, அவற்றுள் வேதாந்த நூல்களையே சமய நூல்களாகச் சுட்டினார். `சமயம்` என்றது சமய நூல்களை. ஒடு, எண் ஒடு. அதன் இயல்பு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் இயைதல் ஆதலை அறிக. அந்தம், இங்கு எல்லை. முன் நின்ற அந்தம் மேதினி முதலிய பிறவற்றோடும் சென்றியையும். `மேதினி யந்தமொடு, மூவேழ் அந்தமொடு` என இவ்வாறு எண்ணி, ``நடனாந்தம்`` என்பதனோடு முடிக்க. ``பதம்`` என்றது முத்தியை, ``பாதி`` என்றது பாதியாய் இருப்பவனை.
இதனால், அனைத்தும் திருக்கூத்துள் அடங்குதல் பொது வகையால் கூறப்பட்டதாயினும், கருத்து வகையால் தில்லைக் கூத்துள் அடங்குதலே கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 6

இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.

பொழிப்புரை :

பிண்டத்தில் இடைகலை பிங்கலை நாடிகள் அண்டத்தில் உள்ள இலங்கையும், இமயமுமாகவும் நடு நாடியாகிய சுழுமுனை இரேசக பூரக வாயுக்களால் சூழப்படுதலால் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுகின்ற மேருவாகவும் மதிக்கப்படும். அந்நிலையில் தில்லை நடுநாடியாக மதிக்கப்படுதலால், அங்கு நடனம் புரிகின்ற பெருமானே யோகியர் தம் மனம் ஒன்றி உள்கும் முதற் பொருளாவான்.

குறிப்புரை :

அஃதாவது, `உலகம் முழுவதையும்` இயக்குபவ னாவான்` என்பதாம்.
`கடவும் மூலம், கைகண்ட மூலம்` எனத் தனித்தனியாக இயைக்க. கடவுதல், யோகியர் பிராணனைச் செலுத்துதல். ``கடவும்`` என்னும் பெயரெச்சம், ``மூலம்`` என்னும் இடப்பெயர் கொண்டது. கைகண்ட - அனுபவம் பெற்ற. இஃது ஏதுப் பெயர் கொண்டு முடிந்தது. `அனுபவம் பெற்றோர் யோகியர்` என்க. ``மூலம்`` என்றது நடு நாடியை. படர்வு - நினைவு. ``பரம்`` என்றது, `முதற்பொருள்` என்றபடி. `அங்கு (தில்லையில்) நடிகும் பரமே பரமாம்` என முடிக்க.
இதனால், தில்லைத் திருத்தலத்தின் முதன்மை கூறும் முகத்தால், அதன்கண் திருக்கூத்து நிகழ்த்தும் இறைவனது முதன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.

பொழிப்புரை :

பரத கண்டத்தின் தென்னெல்லையாகிய, `கன்னி துறை` எனப்படும் குமரித் துறையும், காவிரியும், பிற நவ தீர்த்தங்களும், `ஆனை மலை, பசுமலை, நாகமலை சிராமலை, அண்ணாமலை, மறைமலை, காளத்திமலை` என்னும் ஏழு மலைகளும், வேத ஆகம ஒழுக்கங்களுள் சிறந்து விளங்குதலால், அக்கண்டத்தில் நிலைதிரியாததாகிய தென்பகுதியே நிலவுலகத்தில் முத்தி நிலமாகும்.

குறிப்புரை :

காவிரியோடு உடன் வைத்து எண்ணத்தகும் வேறு ஒன்பது யாறுகள் `பொருநை, (தாமிரவருணி) வையை, மணிமுத்தம், நிலா, (வெள்ளாறு), கெடிலம், தென்பெண்ணை, பாலி, கம்பை, பொன் முகலி` என்பன. மிக்குள்ள ஏனைய வெற்புக்களினும் மேம்பட்டுள்ளன. `பிறத்தலால் என்பது பாடம் அன்று.
பரத கண்டத்தின் வடபகுதி யவனர்கள், முகமதியர்கள் முதலியோரால் பேரிடர்ப்பட்டுத் தனது நிலை திரிந்தது போலத் தென்பகுதி என்றும் நிலை திரிதல் இல்லாமை தோன்ற, ``மாறாத தென்திசை`` என்றார். `அசோக மன்னனும் பாலாற்றைக் கடந்து அப்பால் தெற்கே செல்ல இயலாமல் திரும்பி விட்டான்` என்பர்.
கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி முதலிய நதிகளாலும், இமயத் தொடராலும், காசி, கேதாரம் முதலிய தலங்களாலும் வடபகுதி இயற்கையில் சிறந்து நிற்பினும் அயலவர் நுழைவால் நிலை திரிந்தமை அறிக.
`வேதாகமங்கள் வடபகுதியில் தோன்றினவாகச் சொல்லப் படினும் அவைகளின் ஒழுக்கம் சிறந்து விளங்குதல் தென்பகுதியில் தான்` என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை ``சுத்தம்`` என்றது முத்தி நிலையை. சுத்தத்தைத் தருவதனை, ``சுத்தம்`` என்றார்.
சேக்கிழார் நாயனாரும் இவ்வாறே, `மாதவம் செய்த திசை தென்திசையே` எனக் கூறி, அதற்குக் காரணம் யாது` என முனிவர்கள் வினாவ, உபமன்னியர், `தில்லை, திருஆரூர், காஞ்சி, திருஐயாறு, சீகாழி முதலிய இறை தலங்களை மிகப்பெற்றிருத்தலே` என விடை யிறுத்து, பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை`` என வலியுறுத்திக் கூறினார் என அருளிச் செய்தார்.l இன்னும் அவர்,
``திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற`` எனவும்,
`அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல`3 எனவும் அருளிச்செய்தார்.இந்நாயனார்,
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச் செய்யு மாறே,``
``தங்கி மிகாமைவைத் தான்தமிழ் வேதம் ... ...
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்,``9
என்பவற்றால் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தி, இங்குத் தமிழ் நிலத்தின் சிறப்பை உணர்த்தினஆர். இவற்றால் எல்லாம் தமிழ் மொழியும், தமிழ் நிலமுமே சிவனருள் பெறுதற்குச் சிறந்த வாயிலாதல் விளக்கியவாறாம்.
இதனால், தென்திசையே சுத்தமாகத் தில்லை சுத்தத்தில் சுத்தமாய் உள்ளது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

பொழிப்புரை :

சொல்லுலகத்திற்கு முதலாகிய நாதத்திலும் அதன் காரியமாகிய நால்வகை வாக்குக்களிலும், அவ்வாக்குகளாய் வெளிப் படுகின்ற வேதாகமங்களிலும், அவற்றின்வழி வேட்கப்படுகின்ற வைதிகாக்கினி, சிவாக்கினி என்பவற்றின் கொழுந்திலும், உயிர்களின் அறிவிலும், எல்லா அண்டங்களிலும் ஆடுபவனாகிய சிவபிரான்,

குறிப்புரை :

(இதனை அடுத்துவரும் மந்திரத்தோடு கூட்டி முடிக்க.)

பண் :

பாடல் எண் : 9

தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.

பொழிப்புரை :

கூத்துக் கோலம் உடையனாய், `கோயில்` எனப் -படும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தேவர்களும், மூவர்களும், முனிவர்களும் வேதமும், தமிழும் பாட, உமையம்மைதன் கண்முன் ஆடுகின்றான்.

குறிப்புரை :

``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் பலவும் எண்ணின்கண் வந்தன. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. ``நாதத்தில் ஆடி`` என்னும் மந்திரத்துள் `சிவன் உலகரால் அறியப் படாத பல இடங்களில் ஆடுபவன் என்பதைக் கூறி, ``தேவரொடாடி`` என்னும் மந்திரத்தில் `அத்தகையோன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவத் திருமேனி கொண்டு ஆடுகின்றான்` என்பதைக் கூறினார். `நாதம் முதலியவற்றில் ஆடுபவன் தில்லையில் தேவர் முதலியோர் சூழ அம்மைமுன் ஆடுகின்றான்` என ஒரு தொடரால் சுருங்கக் கூறிப் போகாமல், `ஆடி, ஆடி, ஆடி ... ... ... ஆடுகின்றான்` என பல தொடரால் விரியக் கூறினார் தில்லைக் கூத்தின் அருமையை வலியுறுத்தற்கு. யாண்டும் மந்திரங்களைக் குனகமாகச் செய்தார். இக்கூத்தின் பெருமை ஒரு செய்யுளில் அடங்காமை காட்டிச் சொல்லில் அடங்காமை தோற்றுவித்தற்குப் ``பராசத்தியில்`` என்பது `பரா சத்தி யிடத்தில்` என்னும் பொருட்டாய், `பரா சத்தி முன் னிலையில்` எனப் பொருள் தந்தது. `கோவிலுள் கூத்தப் பிரானாய்` என ஆக்கம் வருவித்து, ஆடிடும்` என முன்னே கூட்டி முடிக்க.
இவ் இருமந்திரங்களாலும், `தில்லைக் கூத்தின் பெருமை சொல்லில் அடங்காதது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும்
கூறு சமயக் குருபரன் தான் `என்றும்
தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.

பொழிப்புரை :

கூத்தப் பிரான் ஒரு திருமுகத்தையே கொண்டு, ஒருவனேயாய் இருப்பினும் `ஆறு திருமுகங்களையுடைய முழுமுதற் கடவுளும் தானே` எனவும், அநைத்துச் சமய முதல்வனும் தானே` எனவும் தனது திருநடனக் குறிப்பை உணர வல்லவர்கள் உணர்ந்து கொள்ளும்படி தில்லைத் திருவம்பலத்துள் எஞ்ஞான்றும் விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`உச்சியில் ஒன்றும், நான்கு திசைகளிலும் நான்கும் ஆக ஐந்து முகங்களையே உடையவனாய்ச் சிவபிரான் உலகத்தை ஐந்தொழிற்படுத்து நடத்துகின்றான் என்றே வேதாகமங்கள் கூறியபோதிலும், `அந்த ஐந்து திருமுகங்கள் வெளிப்படையாய் விளங்குவன` என்பதும், `கீழ்நோக்கிய ஒருமுகம் ஞானியரே உணரும் வண்ணம் மறைந்துள்ளது` என்பதும் வேதாகமத் துணிபுகள் என்பதை நாயனார் இரண்டாம் தந்திரத்து `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள் குறிப்பால் உணர்த்தினமை காண்க. ஐந்து முகங்களும் பொதுவாக ஐந்தொழிலை இயற்றினும், அவரவர் விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றும் சிறப்புத் தொழில்களை அதோமுகம் செய்யும் என்க. அது தேவர் வேண்டுகோளுக்கு இரங்கி முருகனை அளித்த வரலாற்றால் நன்கு விளங்கும்.
`தோற்றம் துடியதனில்` என்னும் உண்மை விளக்க வெண்பாவால் கூத்தப்பிரான் ஐம்முகம் செய்யும் ஐந்தொழில்களைச் செய்தல் விளங்கும். `வரைமகள்தான் காண்படியே`` எனவும், ``மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் - நாதனார்`` எனவும் பிற இடங்களிலும் ``பரா சத்தியில் ஆடி`` என முன் மந்திரத்திலும் கூறிய வாறு தேவியை உடன் கொண்டு, அவள் காண ஆடுதலே அதோமுகம் செய்யும் செயலைக் குறிக்கும். சமயங்கள் யாவும் அவற்றின் முதலாசிரியர்களாலே தோற்றுவிக்கப்படினும் அவர்களை அவ்வாறு தோற்றுவிக்கச் செய்தவனும் சிவனே யாதல் பற்றி, ``கூறு சமயக் குருபரன் தான்`` என்றார். அதுவும் அதோமுகச் செயல்களில் ஒன்றே என்க. வேறின்மை - நீங்குதல் இன்மை.
இதனால், தில்லைக் கூத்தபிரானே எல்லா மூர்த்திகலுமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.

பொழிப்புரை :

எம் இறைவனாகிய சிவன், தில்லைத் திருவம் பலத்திலே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் ஓய்வின்றி ஆடுவான். அவனது வலம், இடம் ஆகிய இரண்டு திருவடி களினின்றும் எழும் கழல் சிலம்பின் ஓசைகள் முறையே நாதமும், விந்துவுமாய் நிற்கும். அவை பரநாத பர விந்துக்களாம். அவையே அவற்றின் கதிர்களாகிய `அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை` என்னும் ஐந்து தத்துவங்களில் அவற்றின் நிலைமையவாய் நிற்க, சிவனும் அம்முறையால் உயிர்களிடத்துப் பொருந்தி அவற்றிற்கு அறிவைத் தருவான்.

குறிப்புரை :

`உப்பாம்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. உகரச் சுட்டு மேலிடத்தை உணர்த்திற்று. ``பரமாம் என்பதன்பின், `அவை` என்னும் சுட்டு வருவித்து, ``நின்று`` என்பதனை, `நிற்க` எனத் திரிக்க. `இவ்வாற்றால் யாது சொல்லப்பட்டது` எனின், தில்லைப் பெருமான் திருக்கூத்தினின்றே பரநாத பர விந்துக்கள் தோன்றி, சிவம், சத்தி முதலிய சிவதத்துவம் ஐந்திலும் அவற்றிற்கு ஏற்ற வகையில் பொருந்தி நின்று உயிர்களுக்கு அறிவை உண்டாக்குகின்றன` என்பது சொல்லப்பட்டதாம். இவ்வாறு அறிவைத் தருகின்ற நடனம், `அதி சூக்கும நடனம்` என்றும், `பர நடனம்` என்றும், `அது புருவ நடுவில் நிகழும்` என்றும் சொல்லப்படுகின்றது.
``நாதத்து ரேகை`` என்பதில் நாதம், பரநாதம், அதனைக் கூறவே பரவிந்துவும் உடன் கொள்ளப்பட்டது. ரேகை - கதிர், என்றது கூற்றினை. சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்த, உயிர்களுக்கு அறிவு பொதுவகையான் நிகழும். பின்பு வித்தியா தத்துவங்கள் அந்தக் கரணங்களைச் செலுத்த அறிவு அவ்வப் பொருள்கள் மேல் சிறப்பு வகையால் நிகழும் `இவ்வாற்றால் இறைவன் உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கின்றான்` என்பதும், `அவ்வாறு பிறப்பித்தலே அவனது பர நடனம்` என்பதும் சைவ தத்துவங்களாதலை நாயனார் இம்மந்திரத்தால் உணர்த்தியருளினார்.
இதனால், தில்லைத் திருக்கூத்தே உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கும் கூத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

பொழிப்புரை :

ஞான குருவாய் நின்று ஞானத்தைத் தருகின்ற சிவன், அவ்வாறன்றி, ஊன்றியும் தூக்கியும் ஆடும் கால்களும் அவற்றில் கழலும் சிலமும் ஆகியவற்றின் ஓசைகளும், அருகில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்களும், பலவகையான கரணங்களும் கூடிய கூத்துக் கோலத்தைக் கொண்டு ஆடுதலை அறியாமல், அவனை எங்கெங்கோ தேடியலைந்து, பின்பு என் உள்ளத்திலே அந்தக் கூத்துக் கோலத்தைக் கண்டேன். அக் காட்சியே யான் பிறவிக் கடலினின்றும் நீங்கிக் கரையேறிய நெறியாகும்.

குறிப்புரை :

``குரு பரன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `குருபரனாய் வந்து செய்கின்ற அருளையே கூத்தனாய் நின்று செய் கின்றான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. கூத்தனாய் என ஒரு சொல்லாற் சொல்லியொழியாது, அக்கோலத்தை வகுத்துக் கூறினார், அதனை உள்ளத்தே கண்டவாறெல்லாம் இனிது விளங்குதற்கு. கண்டது, `உள்ளே` என்றதனால், தேடியது `வேளியே` என்பது போந்தது. `பிறவி யறுதலை எண்ணாதவர் திருக்கூத்தினைப் புறத்தே மட்டும் ஒருகாற் கண்டு ஒழிவர்` என்பதும், `பிறவியற வேண்டுபவர் அதனை எஞ் -ஞான்றும் உள்ளத்தே கண்டு கொண்டிருப்பர்` என்பதும் கூறியவாறு. கண்டமைக்கும், அற்றமைக்கும் `யான்` என்னும் எழுவாயும், `அற்றவாறு அறியத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. கூத்தப் பிரான் ஒருகாலிற் சிலம்பும், ஒரு காலிற் கழலும் அணிந்திருத்தல் அவற்றுள் ஒன்றைக் கூறவே மற்றொன்றும் பெறப்பட்டது.
இதனால், `கூத்துக்கோலம், போகியர்க்கு போகவடிவாதலே யன்றி, யோகியர்க்கு யோக வடிவுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.

பொழிப்புரை :

(`பிற உலோகங்களை நோக்கப் பொன் உயர்ந்தது` என்பதில் ஐயம் இல்லை. ஆயினும், `பொன்னிலும் மாணிக்கம் உயர்ந்தது` என்பது தெளிவு ஆதலால்) ஐவகை மன்றினுள்ளும் மணிமன்றினுள் ஆடும் ஆடற்பிரானே யோகியர்க்கு யோகமும், போகியர்க்குப் போகமும் ஆகின்ற அருட் கூத்தினை எல்லா இடங்களிலும் சென்று ஆடுகின்றான். `அஃது எதுபோலும்` எனின், இருதயத்திலே நிறைகின்ற பிராண வாயுவும் அவ்விடத்தினின்றும் குருதியோடு ஓடி உடம்பெங்கும் நிறைதல் போலும்.

குறிப்புரை :

`இச்சிறப்புப் பற்றியே அந்த மன்று மணிமன்றாய் உள்ளது` என்க. அது திருஆலங்காட்டு மன்றமாம். அவ்விடத்துக் கூத்து, காலை உயர்த்தி ஆடும் கூத்து (ஊர்த்துவ நடனம்) ஆதலும், ``எண்டோள் வீசிநின்று ஆடும் ஆடல்``33திருமுறை - 4.9.2. ஆதலும் எண்ணத் தக்கன.
``இன்னும் வேண்டும், நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும்போது `உன் அடியின்கீழ் இருக்க``*
என வேண்டிய அம்மைக்கு. இறைவன் ஆலங்காட்டு நடனத்திலே அவ்வாறு இருக்க அருள்புரிந்தமையும் கருதத் தக்கது. முன் அதிகாரத்தில் நாயனார் சிவன் ஆடும் இடங்களை எல்லாம் கட்டியதில், கனகா சலத்தில் ஆடுதலுக்கும் முன்னே காயோடு ஆடிய ஆலங்காட்டு நடனத்தையே முதலாவதாகக் குறித்தார். இது உலகம் காளியால் அழிந்தொழியாதவாறு காத்த நடனமாகச் சொல்லப்படுதலும் நோக்கத்தக்கது.
``தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்(கு) ஊட்டாங்காண் சாழலே``*

பண் :

பாடல் எண் : 1

குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே.

பொழிப்புரை :

சிவபிரானது கூத்த வடிவமே சகல வருக்கத் -தினருக்குக் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் வடிவமும், திருக் கோயில்களில் மூலத் தானத்தில் எழுந்தருளியிருந்து வழிபாட்டினை ஏற்று அருள்புரியும் இலிங்க வடிவமும் ஆகும். இனி அவ்வடிவத்தின் பக்கத்தில் பெண்ணுருவாய் நிற்பவளும், மற்றும் சிவனுக்கு மூவகைத் திருமேனியாய் விளங்குபவளும் கூத்தப் பெருமானது சத்தியே.

குறிப்புரை :

`குனிக்கும் உருவமே குரு உரு; அன்றி, அரு உரு ஆவதும் அந்த உருவே` என இயைத்துக் கொள்க. புரம் - திருமேனி. புரை - திருமேனியாய் உள்ளவள். `உருவாய் வருவாளும்` என ஆக்கம் விரிக்க. ``உமையவள்`` என்றது, `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. இவ்வாறெல்லாம் கூறியது, கூத்தப் பெருமானை வணங்கும் வணக்கத்தின் பயனை நோக்கியாம்.
இதனால், `கூத்தப் பெருமான் வணக்கமே அனைத்துத் திருமேனிகளின் வணக்கமாம்` என அவனது சமட்டி நிலை அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

பொழிப்புரை :

ஒருவனுக்கு வீட்டு நெறியாவது, அவனது உள்ளத்தில் அவனுக்குக் குருவாய் வந்து அருள் புரிந்தவர் நீங்காதிருக்க, வெளியில் சிற்றம்பலத்தில் அம்பலவாணர் ஆடுதலேயாகும். (உள்ளத்தில் குருவைத் தியானித்தலும், வெளியில் திருக்கூத்தைக் காணுதலுமேயாகும்` என்பதாம்.) உண்மையை ஊன்று உணர்ந் தோர்க்கு மூவகைத் திருமேனிகளும் ஞான நெறியும் அவையேயாம்.

குறிப்புரை :

`திரு` என்பது வீடாதலை, ``போகமும், திருவும் புணர்ப்பானை``3 என்பதனால் அறிக. `உன் குருவடிவு ஆக` என மாற்றி, ``திருவழியாவது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``குணக்கும் உருவே`` என்றாராயினும் `உருவாய்க் குனித்தலே` என்றலே கருத்தென்க. `குனித்தல்` என்றதும் அதனைக் காணுதலையே. உற்று உணர்ந்தோர்க்கு, உருவாவதும், அருவாவதும், அருள்வழி யாவதும் அவ்வழியே என இயைத்து முடிக்க. தான், அசை, வழி-வாயில். `உரு, அரு` என்பவற்றைக் கூறவே, உருவாருவமும் கொள்ளப்படும். தியானிக்கப்படுவதும் குனிப்பதும் உருவம் முதலியன ஆவனவும் வேறுவேறாய் இருக்க, அவற்றை, ``குனிக்கும் உருவே`` என, அஃது ஒன்றேயாகக் கூறியதுதான் இங்குக் குறிப்பிட்ட அற்புதம்.
``சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தை
யுள்ளுக உறைவான்``
என்றவிடத்தும் இவ்வற்புதம் குறிக்கப்பட்டமை காண்க.
இதனால், மேற்கூறிய சமட்டி நிலையில் உள்ளவைகளில் தலையாயதாகிய ஞான நிலை, சிறப்புப் பற்றி வேறெடுத்துக் கூறப்பட்டது.
``மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற
வாணுதல் மான்விழி மங்கை யோடும்
பொய்ம் மொழி யாமறை யோர்கள் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே!
``எம்மிறையே` இமை யாத முக்கண்
ஈச!என் நேச!இ தென்கொல் சொல்லாய்;
மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே``
``அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ,
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வம் மல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள
கங்குல் விளங்கெரி யேந்தியாடும்
கணபதி யீச்சரங் காமுறவே``1
``பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றி நின்று
நாடகம் ஆடும்நள் ளாறுடைய
நம்பெரு மான்!இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தை மார்கள்
துணைவ ரொடுந்தொழு தேத்தி வாழ்த்த
ஆடக மாடம் நெருங்கு கூடல்
ஆலவ யின்கண் அமர்ந்தவாறே``
``பருமதில் மதுரைமன் அவையெதிரே
பதிகம் தெழுதிலை யவை யெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே``2
``... ... ... ... பேணு பெருந்துறையுட் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்``3
என்றாற்போல ஏனை ஆசிரியர்களும் ஏகதேசியாய்க் காணப் படுபவன் எங்குமாய் நின்று அருள்புரிதலை வியந்தருளிச் செய்தல் காணத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.

பொழிப்புரை :

உள்ளே புகுந்து, வெளியே ஓடும் இயல்புடைய பிராணன் மூலாதாரத்திலினின்றும் எழுந்து சுழுமுனை வழியாக மேலே செல்லுங்கால், புருவ நடுவையும் கடந்து உச்சியை அடைந்து, அதற்கு மேலேயும் பன்னிரண்டங்குலம் சென்றால் பின்பு கிடைப்பது மேல் நிலைத் தத்துவமாகிய நாதத்தையும் கடந்து நிற்கின்ற நம் பெருமானாகிய சிவன் மிகவும் விரும்பி ஆடும் இடமாகிய திரு வம்பலமே. அதனை நீங்கள் உணருங்கள்.

குறிப்புரை :

``நாடுமின்`` என எடுத்தோதியது, பொற்பதிக் கூத்து, பொற்றிலைக் கூத்து ஆகியவற்றில் காணப்படும் அம்பலங்களை இம்மீதான அம்பலமாக உணர்ந்து வணங்குதல் சிறப்பு` என்பது உணத்துதற் பொருட்டாம்.
ஆறு ஆதாரங்களில் மேல் உள்ளதாகிய ஆஞ்ஞைக்கு அப்பால் உச்சி வரை ஏழாந்தானம். அதற்கு மேல் பன்னிரண்டங்குலம் நிராதாரம்; அதைக் கடந்த பெருவெளி மீதானம். அதுவே பரவெளி. `துவாதசாந்தம்` என்று சொல்லப்படுவது.
பிராணன் ஏழாம் தானத்திற்கு அப்பால் செல்லுதல் இல்லை. வலிந்து செலுத்தினால் பின் திரும்பாதாக, உடம்பு வீழ்ந்துவிடும். ஆயினும் பிராசாத கலைகளால் பிராணன் நிராதாரத்தளவு செல் வதாகப் பாவித்து நிற்றல் பற்றி ``பன்னிரண்டங்குலம் உதித்திட`` என்றார். உதத்தல், இங்கு, செல்லுதல். `உதித்திட அப்பால் அம்பலந் தான்` என ஒருசொல் வருவித்து முடிக்க. தான் என்பது தேற்றப் பொருள் தந்து நின்றது.
``ஓடும் உயிரெழுந்து ஓங்கி`` என்பதை முதலிலும், ``நாடுமின்`` என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க.
இதனால், புற அம்பலங்கள் அக அம்பலங்களாகச் சிறந்து நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.

பொழிப்புரை :

[அம்பலங்கள் பலவற்றையும் உகந்து ஆடும் நம்பெருமான் வானத்தில் அடங்கியுள்ள காற்று, மேகம், மின்னல், வில், இடி, ஓசை என்பவைபோல,] நிவிர்த்தி முதலிய கலைகளில் அடங்கியுள்ள `தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம்` என்னும் ஐந்தோடும், கலையையும் கூட்ட ஆறோடும் ஒன்றாய், வேறாய், உடனாய்க்கலந்து அறிவு வடிவாய் அவற்றினின்றும் பிரித்துக்காண வாராமல் மறைந்தே நிற்கின்றான்.

குறிப்புரை :

`அம்பலங்கள் பலவற்றிலும் காணப்படுகின்ற இவன், மேல் நுண்ணியவாய் மிகப்பெரிய அளவில் விரிந்து கிடக்கின்ற அவை அனைத்திலும் ஒளிந்து நிற்றல் வியப்பு` என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து வந்து இயைந்தது. காற்று வடிவம் உடைத் தாயினும், உருவம் இல்லது ஆகலின் அது காரண ரூபமான தத்துவங் கட்கும், மேகம் பல்வேறு வடிவங்களாய் வியப்புறத் தோன்றுவது ஆகலின் அது விசித்திரமான பல புவனங்கட்கும், மின்னல் விரையத் தோன்றி, விரையமறைவது ஆகலின், அது விரையத் தோன்றி விரைய மறையும் வன்னங்கட்கும், (எழுத்துக்களுக்கும்) வானவில் பல நிறங்களையுடையதாய், அழகிதாய் உள்ளத்தைக் கவர்தலின் அது பொருளுணர்ச்சியைத் தரும் பதங்கட்கும் இடியோசை பெருமுழக்கம் ஆதலின் அது நன்கு உச்சரிக்கப்படுகின்ற பாட்டாகிய மந்திரத்திற்கும், வானம் இவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றலின் அஃது அத்து வாக்கள் ஆறில் ஏனை ஐந்தையும் தன்னுள் அடக்கி நிற்கும் கலைக்கும் உண்மையாயின. இனி, ``ஓை\\\\u2970?`` என்பதை, `ஆகாயத்தின் குணமாகிய ஓை\\\\u2970?` எனக் கொள்ளலும் ஆம். பிற ஓசைகளை நீக்குதற்கு ``வானக ஓை\\\\u2970?`` என்றார். களிஒளி - களிப்பைத் தருகின்ற ஒளி. ``ஒளி`` என்றது அறிவை. அறிவைத் தருவனவற்றை `அறிவு` என்றார். `அறிவைத் தருகின்ற ஆறு` எனவே, அவை அத்துவா ஆதல் விளங்கிற்று. `கலந்து - ஒன்றாய்க் கலந்து` என்க.
இதனால், பொற்பதிகளிலும், பொற்றில்லையிலும் ஆடும் பெருமான் அகண்ட வியாபகனாய் நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே.

பொழிப்புரை :

இருளை ஓட்டுதலால் முதன்மை பெற்ற தீ முதலிய ஐம்பெரும் பூதங்களும், கிழக்கு முதலிய எட்டுத் திசைகளும், மற்றும் அவற்றோடு உடன் எண்ணப்படுகின்ற `கீழ், மேல்` என்னும் பக்கங்களும், இவற்றையெல்லாம் பற்றி ஆராய்ந்தறிவதாகிய உயிர்களின் அறிவும் ஆகிய இவையெல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளது உண்மையான இன்பம், அதனை அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய இருமாயைகளையும் கடந்தவரே பெறுவர். அவர் அங்ஙனம் அதனைப் பெறுதற் பொருட்டே சிவன் நிலவுலகில் நின்று பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து இவற்றைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`நாயகன் நின்று நடம் செய்யும் ஆறு, தீ முதல் அப்புற ஆனந்தம் கடந்து நின்றார் காண` என இயைத்து முடிக்க. ``அறி வினுக்கு`` `அறிவும் ஆகிய இவற்றுக்கு` என விரிக்க இகர. உயிரும், யகர மெய்யும் மொழியீற்றின் உறழ்ந்து வரும் இயல்புடைமையால்9 ஈகாரம் ஒன்றே யகர எதுகையை நிரப்பிற்று? என்க.
இதனால், நிலவுலகக் கூத்து பரானந்தத்தைத் தருகின்ற அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

பொழிப்புரை :

கூத்தப் பெருமான், தான் மட்டும் தனியே நின்று ஆடாமல், உமை ஒருபால் நிற்கக் கொண்டு, அவள் கானவே ஆடுதல் வெளிப்படை. அதனாலேதான் அவனது கூத்து ஆனந்தமயமாயும், ஞானமயமாயும் உள்ளது. ஒரு கூத்திலே இருவர் பங்கும் உள்ளனவேயன்றி, இருவரும் இருகூத்து இயற்றிலர்.

குறிப்புரை :

`ஞானமும், ஆனந்தமும் இறைவனுக்குக் குணங்கள் ஆதலின் அவை அவனது சத்தியேயாம்` என்பதும், `சத்தியின்றிப் பொருள் இல்லை ஆதலால், அவள் இன்றி அவன் ஆடுதல் இல்லை` என்பதும், `பொருளும், சத்தியும் வேறு வேறு ஆகாமையின், இருவரும் ஒரு கூத்தினையே உடையர்` என்பதும் கூறியவாறு. `வேறொரு கூத்தை ஆடியவன் காளி` என்க.
``கூத்ததின்மேலே`` என்பதற்கு, `ஒரு கூத்ததின்மேலே` என உரைக்க. அது பகுதிப் பொருள் விகுதி. `மேலே உள்ளனர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. கோது - துன்பமும், அறியாமையும். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், ஒரு நடனத்தை இருவர் இயற்றுதலும், அதனால் பிறவற்றில் பெறப்படாத பயன் விளைதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.

பொழிப்புரை :

`எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூடைபோல ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்.

குறிப்புரை :

``சத்தி`` என்றதனால், `சிவன்` என்பதும், ``எந்தை`` என்றதனால், `எம்தாய்` என்பதும் பெறப்பட்டன. `கருதல் அளவையால்` என்பது, ஆற்றலால் வந்தது. கருதலளவையால் அதனை யறிந்தவாறாவது,
``சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும், பெண்ணும், உயர்குண குணியுமாகி``9
நிற்றலைக் கொண்டு அறிவதாம்.
``இடம்`` என்றது உடம்பின் இடப்பாகத்தை யாதலின், `ஒருவரே இருவராய் நிற்றல்` பெறப்பட்டது. ``ஓர் உடம்பு இருவராகி``8 என அப்பர் அருளிச்செய்தமை காண்க. `இவர்கள் நடனம் ஆடுதல் உயிர்களின் பொருட்டே` என்பதை ஞான சம்பந்தரும்,
``ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் ... ... ... ... ... ...
நாடும் திறந்தார்க்கு அருளல்லது நாட்டலாமே``9
என அருளிச் செய்தமை காண்க.
இதனால், ஒருவரே இருவராய் நின்று ஆடுதலும் அவ் விடத்து, அடங்கலும் தாமாய் நின்று ஆடுதலும், தம் பொருட்டன்றிப் பிறர் பொருட்டாகவே ஆடுதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.

பொழிப்புரை :

எல்லா உயிர்கட்கும் ஏற்புடையதாகிய `இன்பம்` என்பது `சத்தி` என்னும் கூறே. அதனால், எந்த இன்பப் பொருளிலும் உள்ள எந்த இன்பமும் `சத்தி` என்னும் கூறே. (பொருள், `சிவம்` என்னும் கூறாம்) இனி எல்லாத் திருமேனி வகைகளும் சத்தியே. அந்நிலையில் பெருமானது சத்தியால் தோன்றி நிகழ்கின்ற ஒப்பற்ற நடனம், முத்தியின்பமாகிய பேரின்ப நடனமாகும்.

குறிப்புரை :

`திருக்கூத்துச் சத்தியால் உண்டாகி, ஆனந்தத்தைப் பொழியும்` என்றபடி. சகலம் - எல்லாம். உம்மை, முற்று. இனி, `சகலம் சகலநிலை` எனவும் உரைப்பர். அவர் உம்மையை இழிவு சிறப்பாகக் கொள்வர். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல். `சகளத்து` என்பதில் `அத்து` அல்வழிக்கண் வந்த சாரியை. `சகளமாய் எழும்` என ஆக்கம் வருவிக்க. ``சகளம்`` என்பது, பொதுவாகத் `திருமேனி` என்னும் அளவாய் நின்றது. `எழுந்து ஒத்த ஒரு நடம் ஆனந்த நடனமாம்` எனக் கூட்டுக. இரண்டு - இருவினை `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `இரு வினை யொப்பு` என்பது உபலக்கணத்தால் மலபரி பாகம், சத்திநிபாதம், ஞான முதிர்ச்சி இவைகளைத் தழுவி `முத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. ஒத்த காலத்தில் நிகழ்வதை ``ஒத்த`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், திருக்கூத்து ஆனந்தக் கூத்தாதலாகிய அற்புதத்திற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை :

நெற்றிக்குக் கீழே, இரு புருவங்கட்கு இடையே யுள்ள வெற்றிடம் தன்னை உற்று உற்றுப் பார்க்க, பார்க்குந்தோறும், பார்க்குந்தோறும் பார்ப்பவர்க்கு ஒளியை மிக மிக வீசுகின்ற ஓர் இல்லமாய் விளங்கும். `அந்த இல்லமே` சிவன் யாவரும் பற்றுதற்குரிய பற்றாய் இருக்குமிடம். அஃதாவது `ஞானாகாசம் என நான் திருவருளால் ஆராய்ந்து அடைந்தேன்.

குறிப்புரை :

உற்று உற்றுப் பார்த்தலாவது, உளம் ஒருங்கித் தியானித்தல். எனவே, அது தியானித்திற்குரிய இடமாதல் பெறப் பட்டது. ஒளி - ஞானம். மந்திரம் - இருப்பிடம். மேல் துவாத சாந்தத்தை `அம்பலம்` என்றும், இருதயத்தை `அம்பலம்` என்றும் கூறி, இங்கும் புருவ நடுவை `அம்பலம்` என்றது என்னையெனின், அண்டத்தில் அம்பலங்கள் பலவாதல்போலப் பிண்டத்திலும் அம்பலங்கள் பலவாதல் பற்றியாம். இருதய அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்கு உரியது, புருவ நடு அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்குரியது, புருவ நடு அம்பலம் தியானித்து ஞானம் பெறுதற்குரியது. துவாதசாந்த அம்பலம் அமைதியுற்று ஆனந்தம் எய்துதற்கு உரியது என்க. அண்டத்து அம்பலங்களும் வெள்ளி, பொன், மணி என வகைப்பட்டு நிற்றல் போலப் பிண்டத்து அம்பலங்களும் இவ்வாறு வகைப்பட்டு நிற்கும். ``மந்திரம்`` என்பதனை, `பஞ்சாக்கர மந்திரம்` என்பாரும் உளர். அஃது இவ்விடத்திற்கு இயைபில்லதாம் என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால் ஓர் அம்பலம் உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் அம்பலமாய் உள்ள அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை :

உலகங்கள் ஏழு, சாதாக்கியம் முதலாகக் கீழ் நோக்கியும், மேல் நோக்கியும் எண்ண வருகின்ற தத்துவங்கள் ஏழு, `தண்டு` எனப்படுகின்ற சுழுமுனை நாடியில் உள்ள, `சத்தம்` எனப்படுகின்ற வாக்கிற்கு முதல்வியாதல் பற்றி சாத்தவியாம் குண்டலி சத்திக்குரிய ஆதாரங்கள் ஏழு, அவற்றிற்குமேல் `வியாபினி, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்னும் சிவசத்திகளது இடங்கள் ஏழு, யாழ், குழல் முதலிய வற்றினின்றும் எழுகின்ற இசைகள் ஏழு ஆகியவற்றை எல்லாம் தனது இடமாகக் கொண்டு சிவன் நடம் புரிகின்றான்.

குறிப்புரை :

`இஃது அற்புதம்` என்பது குறிப்பெச்சம். ``ஏழும்`` என்பது இறுதி நிலை விளக்காய், ஏனை எல்லாவற்றோடும் சென் றியைந்தது. `சதாசிவம் ஆதி தத்துவம்` என இயைக்க. `சிவ தத்துவம் ஐந்து` என்பதே பெரும்பான்மையாக எங்கும் சொல்லப்படினும் பரநாத பரவிந்துக்களைக் கூட்டி, `ஏழு` என்றும் சிறுபான்மை சில ஆகமங்களில் சொல்லப்பட்டது. ``ஆதனம்`` என்பதைச் ``சாத்தவி`` என்பதனோடும் கூட்டுக. `தண்டு` என்பது, ``தெண்டு`` என மருவி வந்தது. தண்டு - யாழ். உபலக்கணத்தால் குழலும் கொள்ளப்பட்டது. இறைவன் சொல்லும், பொருளும் ஆதலேயன்றி ஏழிசையாய், இசைப்பயனுமாய்8 நிற்றலும் நன்கறியப்பட்டது. ``சிவாசனம்`` என்பதில் `சிவன்` என்பது `தன்` என்னும் பொருட்டாய் நின்றது அன்றி, `மங்கலப் பொருட்டாய் நின்றது` என்றலும் ஆம்.
இதனால், திருக்கூத்தின் வியாபக அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அம்பலங்கள் தாம் அளவிலவாதல் பெறப்பட்டமையால், அவைகளில் விளக்கொளி போல விளங்கி ஆடும் மூர்த்திகளும் எண்ணிலர். இனி அந்த அம்பலங்கள் மலராக விளங்க, இருநூற்றிருபத்து நான்கு புவனங்கள் அவற்றின் இதழாக, நிலையின்றித் தோன்றியழிவன. ஆகவே, என்றும் நிலையாயுள்ள சத்தியே அவனுக்கு என்றும் உள்ளதாகிய அம்பலமாம். ஆகவே, இதுவே அவனுக்கு நன்றாய அம்பலமாகும்.

குறிப்புரை :

`மன்று நிறைந்த விளக்கொளி நூறு; அவை மாமலராக, இதழ் தான் நாலொடு இருபத்து இருநூறு உள; சென்றது; நின்றதுதான் நெடு மண்டலம்; இதுதான் நன்று` என இயைத்துப் பொருள் கொள்க.
இதனுள் ``நூறு`` என்றது அளவின்மையைக் குறித்தது. `மலராக` என உவமம் குறித்த ஆக்கச்சொல் வருவிக்க. ``சென்றது`` என்றது பன்மையொருமை மயக்கம். `செல்வது` என எதிர்காலத்தாற் கூறற்பாலது, விரைவு பற்றி ``சென்றது`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. `நிற்பது` என்பதும் தெளிவு பற்றி ``நின்றது`` எனப்பட்டது. காலத்தின் நெடுமை அதில் உள்ள மண்டலத்தின்மேல் ஏற்றப்பட்டது. அம்பலத்தை, `மண்டலம்` என்றார்.
இதனால், அம்பலங்கள் பலவாயினும் உண்மை அம்பலம் சத்தியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.

பொழிப்புரை :

அளவின்றி உள்ள அண்டங்கள், பிண்டங்கள், (உடல்கள்) பிருதிவி அண்டங்கள் தோறும் உள்ள அளவற்ற எழுவகைக் கடல்கள், அவைகளால் சூழப்பட்ட எழுவகைத் தீவுகள், எல்லாத் திசைகளிலும் நிறைந்துள்ள அளவற்ற மூர்த்தங்கள் இவை அனைத்தும் சிதாகாச வெளியில் உள்ள சிவன் நடனம் புரியும் இடங்களாம்.

குறிப்புரை :

``எழுகோடி`` என்றது அளவின்மையைக் குறித்தபடி. ``திை\\\\u2970?`` என்பது `இடம்` என்னும் பொருட்டாய்த் தீவுகளைக் குறித்தது.
இதனால், அளவிலா, எல்லா இடங்களிலும் திருக்கூத்து நிகழும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.

பொழிப்புரை :

ஆகாயம் ஒன்றேயாய் எங்கும் வியாபித்துள்ளது. ஆயினும் செயற்கையால் வரையறுக்கப்பட்டு, `மடாகாயம், கோயில் ஆகாயம், மன்ற ஆகாயம்` முதலாகப் பலவாறு வழங்கப்படுகின்றன. அவையெல்லாம் சிறு ஆகாயங்களாக, இயற்கை ஆகாயம் `மகாகாயம்` எனப்படும். சிறு ஆகாயங்களில் பல உருவங்களில் நடனம் செய்கின்ற சிவன் மகாகாயத்தையே அம்பலமாக ஒன்றேயான விசுவ ரூபத்தை உடையவனாயும் நடனம் புரிகின்றான். அந்நிலையில் அவனுக்கு ஆகாயமே உடல்; உயிர்களின் ஆணவ மலமே முயலகன்; போர்வை போலச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளே எட்டுக் கைகள்; சூரியன், சந்தரன், அக்கினி என்னும் முச்சுடர்களே விரும்பத்தக்க மூன்று கண்கள் என இவ்வாறு அமையும்.

குறிப்புரை :

`ஆங்காரம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, ``ஆங்கார்`` என நின்றது. அஃது அதற்குக் காரணம் ஆணவ மலத்தைக் குறித்தது. `மோகமார்` என்பதும், அவ்வாறு, `மோகார்` என நின்றது. மோகம் - விருப்பம். ``மாகாயம்`` என்பதில் காயம் - ஆகாயம்.
இதனால் அகண்டமாய் உள்ள விசுவரூப நடன அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி
அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவன அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கூத்தியற்றுதற்குரிய அம்பலமாய் நிற்பன, நீர், தீ (இனம் பற்றி, நிலம், வளி, வான்) இவற்றின் அண்டங்களும், அனைத்து இயங்கு திணை நிலைத்திணை உயிர்களும், திருவைந்தெழுத்தும், அவனது வட இடத்திருவடிகளும் ஆகும்.

குறிப்புரை :

இவை தூல சூக்கும வகையில் ஒன்றைவிட ஒன்று சூக்கும மாகிய அம்பலம் இவை செய்யுள் பற்றி ஏற்ற பெற்றியில் கூறப் பட்டன. அஞ்செழுத்து அருட்சத்தி, திரோதான சத்தி, உயிர் என்பவை களாய் நிற்றலின் அவையும், பிரானது வலத்திருவடி திரோதான சத்தியும், இடத்திருவடி அருட்சத்தியும் ஆதலின் அவையும் அம்பலமாயின.
இதனால், திருக்கூத்து அனைத்த தூல சூக்கும அதிசூக்கும அம்பலங்களில் நடைபெறும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.

பொழிப்புரை :

சிவனது பலவகைக் கூத்தில் `பாண்டரங்கம்` என்னும் கூத்து (திரிபுரத்தை எரித்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆதலின்,) ஒன்றோடு ஒன்று இயைந்து ஒலிக்கும் மத்தளமும், குழலும் `ஓம்` என்று ஒலிக்கவும், அந்நடனத்தின் குறிப்பை ஆராய்ந்து நோக்கிய பதினெண் கணங்களும் நிறைந்த பூதப்படைகளும் பல பாடல்களைப் பாடவும், அவர்களோடு மக்களும் கண்டு, `இவனே முதற்கடவுள்` என உணர்ந்து களி நடம்புரியவும் நிகழ்ந்தது.

குறிப்புரை :

``பூதங்கள் பாடியவாறு`` - என்றாராயினும், `பூதங்கள் பாட மானுடர் ... ... ... ஆடியவாறு` எனக் கூட்டி, `நிகழ்ந்தது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இதில், மானுடர் கண்டு தெரிந்து ஆடினமை சிறப்பாகக் குறிக்கப்பட்டது.
``தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன்பாண்ட ரங்கமும்``3
என்பதற்கு,
``வானோராகிய தேரில், நான்மரைக் கடும்பரி பூட்டி நெடும் புறம் மறைத்து, வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன்னின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும்``
என்ற அடியார்க்கு நல்லார் உரையைக் காண்க. `பாண்டரங்கம்` என்பது கடைக் குறைந்து நின்றது.
இதனால், திருக்கூத்து வகைகளில் ஒன்றன் அற்புதம் எடுத்தோதி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

பொழிப்புரை :

வானம் அண்டங்களுக்கு உள்ளேயும் உள்ளது; வெளியேயும் உள்ளது. அதுபோல, நிலத்திற்கு அண்மையிலேயும் உள்ளது. சேய்மையிலேயும் உள்ளது. அதனால் அந்த இடங்களில் எல்லாம், வானவராகிய தேவர்களும் இந்த இடங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தில்லைப் பொன்னம்பலத்தில் கூத்தப் பெருமான் தாமரை மலர்போலும் திருவடிகளைப் பெயர்த்து ஆடும் திருக்கூத்தினைக் கண்டு வணங்கி நற்கதியை அடைகின்றார்கள்.

குறிப்புரை :

`தேவர்களைக் கூறவே, மக்களைக் கூறவேண்டா` என்பது கருத்து.
இதனால், மண்ணுலகத் திருக்கூத்தினை விண்ணவர்களும் கண்டு வணங்கி நற்கதிபெறும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

பொழிப்புரை :

புளியை நாவில் இட்டுச் சுவையாவிடினும் அதனைப் பார்த்தபோதே பார்த்தவர்கட்கு அதனைச் சுவைத்தாற் போல நாவில் நீர் ஊறுதல் அனைவரும் அறிந்தது. அதுபோல, கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்கட்கு அக்கூத்தில் காணப்படும் குறிப்பின் பொருளைப் பெறாவிடினும் பெற்றுவிட்டது போன்ற இன்பம் உள்ளத்தில் ஊற்றெடுக்க உடலிலும் அதற்குரிய மெய்ப்பாடுகள் தோன்றும்.

குறிப்புரை :

அம்மெய்ப்பாடுகள் கண்ணீரரும்புதல் ஒன்றை மட்டும் தோற்றுவாயாகச் சுட்டினார். மயிர் சிலிர்த்தல், உடல் கம்பித்தல், நாத்தழுதழுத்தல் முதலியன பிறவாம். களிக்கும் திருக்கூத்து - களித்தற்கு ஏதுவாய திருக்கூத்து. ``துளிக்கும் கண்ணீர் சேரா`` என்றது, `முன்பு அரும்பிப் பின்பு தாரையாய் ஒழுக` என்றபடி. `அக்கூத்து நெஞ்சை உருக்கும்` என்க. ஒளி - சிவம். அதனுள் ஆனந்தமாவது, அதில் தோய்ந்து பெறும் ஆனந்தம்.
`பெறத் தக்க பொருள்களைப் பெற்ற வழியே இன்பம் உண்டாதல் எங்ஙனம்` என்னும் ஐயத்தை உவம வாயிலாக நீக்கினார்.
``உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று``*
எனக் கூறிய அவ்வின்பத் தன்மை இவ்வின்பத்திற்கும் உண்டென்க. காமத்திற்கு உரியரல்லார்க்கு மேற்கூறிய காமத்திற்கு ஏதுவான காட்சி மகிழ்செய்யாதவாறு போல, இறையின்பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் கூத்துக்காட்சி இன்பம் செய்யாதாகலின், அவர், யாம், அக்கூத்தினைக் கண்டபொழுது எமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே ஏன்? என நாயனாரைக் கடாவலாகாமையறிக. ``புளிக் கண்டவர்க்கு`` என்பதில் சகர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது. புளி சுவைக்கப்பட்டு பொருளாகலின், `நாவில்` என்பது கூற வேண்டாவாயிற்று. `சோர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். ``ஆனந்தக்கூத்து`` என்பதில் அது, அல்வழிக்கண் வந்த சாரியை.
இதனால், திருக்கூத்துக் கண்ட அளவிலே ஆனந்தம் விளைக்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

பொழிப்புரை :

சிவானந்தத்தை அடைந்தவர்கட்கு உளவாகும் மெய்ப்பாடுகள் உடல் நிற்கலாற்றாது தள்ளாடி வீழ்தல் முதலியன வாம். (இந்நிலை எய்தினாரை, `ஆவேசம் வரப்பெற்றவர்` என்பார்.) இனிய உணவுகளால் விளையும் மகிழ்ச்சி அவற்றை உண்டபின்பே உண்டவர்க்கு உளவாகும். ஆயினும் யாவராலும் புகழப்பெறும் திரு வம்பலத்தில் சிவன் செய்யும் கூத்துக் கண்டவுடனே கண்டவர்க்குப் பெருமகிழ்வை உண்டாக்கும். (எனவே, திண்டாடி வீழ்தல் முதலியன கண்டார்க்கும் உண்டாவனவாம்.) இனி அதனைக் கண்டார்க்கே யன்றிக் கண்டவர் அக்கூத்தின் இயல்பைச் சொல்ல, அதனைக் கேட்டவர்க்கும் அத்தகைய மகிழ்வை அக்கூத்து உண்டாக்கும்.

குறிப்புரை :

`திண்டாடுதல்` என்பது நிலையாகாமல் தளர்ந்து வீழ்தலைக் குறிக்கும் நாட்டுப்புற வழக்கு. ``சிவானந்தம்`` என்பது அதனால் உண்டாகும் மெய்ப்பாட்டினைக் குறித்த ஆகுபெயர். பின் மூன்று அடிகள் வேற்றுமையணி பெற்றன. `இன்பம் பயத்தலால் இனிய உணவும், திருக்கூத்தும் ஒக்குமாயினும், இனிய உணவினும், திருக்கூத்துத் தனித்ததொரு சிறப்புடையது` என்பதாம். மேற்காட்டிய, ``உண்டார்கண் அல்லது`` என்னும் திருக்குறளும் அவ்வணியை உடையதே - `மகிழ்ச்சி கண்டவர்க்கு மட்டுமன்று; கேட்டவர்க்கும் உளதாம்` என்பதை இம்மந்திரம் கூறிற்று. `கண்டார்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது. ``குணம்`` என்றது நிகழ்ச்சிகளை.
இதனால், மேற்கூறிய அற்புதத்தினும் அற்புதம் ஒன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துங்கால், நான்கு கைகளோடே நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துங்கால் அவற்றில்,) தீயகல், உடுக்கை, உருத்திராக்க வடம், பாசம், அங்குசம், சூலம், பிரம கபாலம் என்பவற்றுடன் ஞானத்தின் பயனாகிய அஞ்ஞானத்தை நீக்குதலைக் குறிக்கும் நீல மலரையும் ஏந்தி, உமையம்மை ஒருபால் நிற்க ஆடுவான்.

குறிப்புரை :

நீல மலர் கரிய நிறத்தை உடையதாய் இரவில் முகிழ்த் திருந்து, கதிரவன் தோன்ற மலர்வது ஆதலின், அஃது ஆணவத்தில் அறியாமை எய்திக்கிடந்து, திருவருள் தோன்ற அது நீங்கி அறிவு நிகழ்தலைக் குறிப்பால் உணர்த்தும். இதனை நாயனார் எடுத் தோதவே, ஏனையவை பற்றிய குறிப்புக்களும் உணரப்படும். அவை நெருப்பு அழித்தல் தொழிலையும், வினையை எரித்தல் தொழிலையும், உடுக்கை ஒலியைப் பிறப்பித்துப் படைத்தல் தொழிலையும், மாயையை உதறித் தள்ளுதலையும், அக்கமாலை ஞானோபதேசம் செய்தலாகிய அருளல் தொழிலையும், குலம் இச்சா ஞானக்கிரியா சத்திகளுடன் கூடி அனைத்தையும் நடத்துதலையும், பிரம கபாலம் தனது நித்தியத் தன்மையையும் குறிக்கும். தேவி திருவருளைக் குறித்தல் வெளிப்படை. பயம் - பயன். `சிவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவித்துக்கொள்க. கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் கூத்துக்கோல வருணிப்பில்,
``ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய், கேளினி``
என எட்டுக் கையே கூறப்பட்டது.
இதனால், ஒருவகை நடனக்கோலம் வகுத்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர தேயத்தே
ஆடிய நந்தி புறம்அகத் தானே.

பொழிப்புரை :

கூத்துப் பதினொன்றின் உறுப்புக்கள் எல்லாம் முறையாகக் கூடிய பாதத்தில் அணியப்பட்டுள்ள சிலம்பும், கையில் கொண்டுள்ள உடுக்கையும் ஒலியை எப்பொழுதும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக, மேலானவற்றிற்கெல்லாம் மேலான இடத்தில் ஆடுபவனாகிய சிவன் எல்லா உலகிலும் உள்ள உயிர்களின் அகத்தும், புறத்தும் ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஆடல் பதினொன்றாவன, `அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்` என்னும் நின்றாடல் ஆறும், `துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை` என்னும் வீழ்ந்தாடல் ஐந்துமாம். இவற்றிற்கு உரிய உறுப்புக்கள் முறையே ஆறு, நான்கு, நான்கு, ஐந்து, ஆறு, ஐந்து, ஐந்து, ஆறு, நான்கு, நான்கு, நான்கு, இரண்டு. இவற்றின் இயல்பெல்லாம் ஆடல் நூலுள் (பரத சாத்திரத்தில்) சொல்லப்படும். சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக்காதை உரைகளில் சிறிது காண்க. `எல்லா ஆடலும் எல்லாரும் வல்லராகார்; சிலர் சிலர் சில சிலவே வல்லவராவர்; சிவன் எல்லா ஆடலும் வல்லன்` என்பதும் `ஆயினும் அவ்வாடல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவன்` என்பது கூறியவாறு `நாதம் நீடிய` என மாறுக. நீடிய - நீடின. நேயம் - விருப்பம். அது விரும்பப்படும் இடத்தைக் குறித்தது.
இதனால், `சிவன் ஒருவனே ஆடல் வல்லான்` ஆகும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை :

சிவவேதங்கள் ஒன்பதும், பிராசாத கலைகள் பதினாறும், சமயங்கள் ஆறும் ஒருங்கு ஆடும்படியும், உயிர்கள் இன் புறும் இடமாகிய ஏழ்அண்டத்துள் சிறப்பாக நிலவுலகில் ஏழு தீவுகளும், அவற்றினும் சிறப்பிற் சிறப்பாக பரத கண்டத்து ஐம்பத்தாறு நாடுகளும் ஆடும்படியும் உயிர்கள் மாட்டு அருள் உடையோனாகிய சிவன் ஆனந்தத்தை விளைக்கும் திருக்கூத்தைத் தில்லையில் ஆடுகின்றான்.

குறிப்புரை :

நில உலகத்தைச் சிறப்பாகக் கூறினமையால், கூத்து முன் அதிகாரத்திற்போந்த தில்லைக் கூத்தாயிற்று. சிவ பேதங்கள் ஒன்பதாவன, நவந்தரு பேதங்கள். அவை ஆடுதலாவன, தாம் கருதி யவற்றை நிகழ்த்துதல், `பிராசாத கலைகள்` என்றது அவற்றின் அதி தேவர்களையும் `சமயங்கள்` என்றது அவற்றை மேற்கொண்டவர்களை -யுமாம். ஒன்பது முதலிய மூன்றும் ஞான வாயிலாதல் பற்றி அவற்றை முன்னர்க் கூறினார். ``அன்பனும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், தில்லையில் உள்ள ஒருவன் ஆட, அனைத்தும் ஆடுதலாகிய அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழினை நாடகத் தேஇசைந் தானே.

பொழிப்புரை :

ஏழ் நரம்புகளில் ஏழு வகையாய்த் தோன்றி, அவற்றிற்குப் பொருந்திய ஏழ் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு, அந்த ஏழ் எழுத்துக்களில் ஒன்றே ஏற்றத்தின் தொடக்கமும், இறக்கத்தின் முடிவுமாய் நிற்க அமையும் ஏழு பண்களினாலும் பாடப்படுகின்ற நன்னெறியை எங்கள் சிவபெருமான் ஏழிசைகளோடு கூடிய தனது கூத்திலே பொருந்தி ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஏவு வகைகளாவன, `குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்` என்பன. இவற்றிற்குப் பொருந்திய எழுத்துக்களாவன முறையே `ஆ` முதல், `ஔ` ஈறான நெட்டெழுத்து ஏழுமாம். இவற்றை,
``களையறு குரலே துத்தம்,
கைக்கிளை உழையி னோடே,
இளியொடு, விளரி, தாரம்
என்ப ஏழிசையின் நாமம்``. ``ஆங்குள ஆ,ஈ ஊ,ஏ,
ஐ,ஓ,ஔ என்னும் ஏழும்
தீங்கிலா அக்க ரங்கள்
செப்பும்ஏ ழிசைக்குந் தானே``9 என்னும் சூடாமணி நிகண்டாலும் உணர்க. முற்காலத்தில் இருந்த யாழின் முன்னேற்றமாக வீணை தோன்றினாற்போல, முற்காலத்தில் இருந்த இசையின் பெயர்கள், இசையின் எழுத்துக்களின் முன்னேற் -றமே, ``சட்சம் இடபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நீடாதம்` என்னும் பெயர்களும், `ச,ரி,க,ம,ப,த,நி` என்னும் எழுத்துக் களும் என்க. எழுத்துக்களில் முதலாவதினின்று இசை மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்தை அடையும்பொழுது அந்த எழுத்தே சொல்லப் பட்டு, மீண்டும் அதினின்றும் மெல்ல மெல்ல இறங்கி முடிவடையும் பொழுதும் அந்த எழுத்தே சொல்லப்படுதல் பற்றி, ``ஏழினில் ஒன்று ஆய், இழிந்தமைந்து ஒன்றாய்`` என்றார். ஆதல் - மேன்மேல் உயர்தல். பண்கள் ஏழாவன, கோடிப்பாலை, செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை` என்னும் ஆதாரப் பண்கள். `இவற்றினின்றும் பிறக்கும் பிறவிப் பண்கள் நூற்று மூன்று` எனவும் `மற்றும் திறங்கள்` எனவும், `திறத்திறம்` எனவும் கூறுவர். இவையெல்லாம் இசைத் தமிழ் நூல்களில் சொல்லப்பட்டன. அந்நூல்கள் பலவும் இறந்து போயின. சிலப்பதிகார உரைகளில் சிறிது காணப்படுகின்றன.
நமது சிவநெறிப்பொருள்கள் இயற்றமிழ்ச் செய்யுட் -களிலன்றியும், இசைத்தமிழ்ப் பாட்டுக்களிலும் இனிமை பெறச் சொல்லப்பட்டமையை, ``ஏழினிற் சன்மார்க்கம்`` என்றும், அப் பொருள்களெல்லாம் பெருமான் தனது கூத்தில் குறிப்பினால் தோன்ற ஆடுதலை, ``ஏழிசை நாடகத்தே இசைந்தானே`` என்றும் கூறினார்.
`இயைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஏழது` என்பதில் `அது` பகுதிப்பொருள் விகுதி. அவ்விடத்து, ``எழுத்து`` என்றது சாதியொருமை. கூத்தின் வினையாகிய இசைதல் அதனைச் செய்வான் மேல் ஏற்றப்பட்டது.
இதனால், இசைத்தமிழ்ப் பாடல்களால் இனிமை பெற விளக்கப்படும் பொருள்கள் எல்லாம் திருக்கூத்தில் விளங்குதலாகிய அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

பொழிப்புரை :

(காலம், கதிர், மதி, சேய், மால், பொன், வெள்ளி காரி` என்னும் ஏழு கோள்களின் இயக்கம் பற்றிப் பலவகையாகப் பகுக்கப்படும். அவற்றுள் கதிரியக்க அளவில் அதற்கும், மதிக்கும் இடையேயுள்ள வழியளவு பதினைந்தாகப் பகுக்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு பகுதியும் `திதி` (ஸ்திதி-நிலை) எனப்படுகின்றது. மதி கதிருக்கு முன்னாக அகன்று செல்லும் நிலை பதினைந்தும் `முற்பக்கம் பூர்வ பட்சம் - மதியது ஒளி மிகுந்து வருதலால் சுக்கில பட்சம்` என்றும், மதி கதிரை அணுகிப் பின்னாக வருதலால் `அபர பட்சம்` என்றும், மதியது ஒளி குறைந்து வருதலால் கிருட்டினபட்சம் என்றும் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு பட்சத்திலும் உள்ள திதிகள் மூன்று வட்டங்களாக வகுக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள ஐந்து திதிகளும் முறையே `நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை` எனப்பெயர் சொல்லப்படும். எனவே, ஒன்று, ஆறு, பதினொன்றாம் திதிகள் நந்தையும் இரண்டு, ஏழு, பன்னிரண்டாம் திதிகள் பத்திரையும், மூன்று, எட்டு, பதின்மூன்றாந் திதிகள் சயையும் நான்கு, ஒன்பது, பதினான்காம் திதிகள், இரித்தையும், ஐந்து, பத்து, பதினைந்தாம் திதிகள் பூரணையும் ஆகின்றன. இவ்வாறு.) பதினைந்து திதிகளும் ஐந்தாகத் தொக்கு நின்று பயன் தருதலையே ``மூன்றினில் அஞ்சாதி`` என்றார். மூன்று - மூன்று. வட்டம். அஞ்சு - நந்தை முதலிய ஐந்து சிறப்பு நிலை. இவையெல்லாம் கணி நூல்களில் (சோதிட சாத்திரங்களில்) காணப்படும்.

குறிப்புரை :

முந்நூற்றறுபது - ஓர் ஆண்டில் உள்ள நாள்கள். ஒரு திங்களுக்கு முப்பது நாள்களாகப் பன்னிரண்டு திங்களுக்கு 30X12=360. (சிறிதே ஏறிப் பெரும்பான்மையாக நாள்கள் முந்நூற் -றறுபத்தைந்தும் ஒரோவோர் ஆண்டில் முந்நூற்று அறுபத்தாறும் ஆகின்ற அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் ஆண்டிற்கு முந்நூற் றறுபது நாள்` என்றல் பொது வழக்கு.) இந்த நாள்கள் முந்நூற்றறுபதும் பன்னிரண்டு அடிநிலைப் பகுதிகளாய்த் தொக்கு நிற்கும். அவையே பன்னிரு திங்கள்களாம். அவற்றையே ``முதற் பன்னீர் மூலமாய்`` என்றார். முதல் - `முந்நூற்று அறுபது` என் எண் பெறுதற்கு முன்பு. `மூலம் பன்னிரண்டாய்` என மாற்றிக் கொள்க.
பன்னிரு திங்களும் `கார், பனி, வேனில்` எனப் பெரும் பான்மை மூன்றாகிப் பின் அவற்றுள் ஒவ்வொன்று இரண்டாகப் பருவங்கள் ஆறாகும். அவற்றையே ``மூன்றினில் ஆறாய்`` என்றார். இவற்றை ஆவணி முதலாக நந்நான்காகக் கொள்க. கார்ப்பருவத்தின் பின் இரு திங்களும் `கூதிர்ப் பருவம்` (பெருமழையின்றிச் சிறு தூற்றலும், துளியும் மிகுந்து தொல்லை தரும் பருவம்.) பனிப் பருவத்தின் முன் இருதிங்கள் முன்பனிப் பருவமும், பின் இரு திங்களும் பின்பனிப் பருவமும் ஆகும். முன் பனியில் குளிர் மிகுந்தும், பின்பனியில் குளிர் குறைந்தும் இருக்கும். `முன்பனி, பின்பனி` என்பன, பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகைகள். வேனிற் பருவத்தின் முன் இரு திங்களும் `இளவேனில் (வேனில் இளமையுடைத்தாய் வெப்பத்தை மிகத் தரும் பருவம்) எனவும், பின் இருதிங்கள் `முதுவேனில்` (வேனில் முதுமையை எய்தி வெப்பத்தை மிகத் தரமாட்டாத பருவம்) எனவும் சொல்லப்படும்.
அக்கம் - கண்; சிவனது கண்கள் மூன்று `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்கள். `மூன்று, அக்கத்தில் முடிய` என மாற்றுக. முடிதல் - அடங்குதல். பெரும்பாலும் முச்சுடர்களாலே காலம் பல வகை நிலையை அடைந்து பல விளைவுகளை உண்டாக்குதலை அறிக.
மூன்றிலும் ஆடினான் - ஏதேனும் ஒருகாலத்தில் உள்ளார்க்கு அக்காலத்தோடு, அதற்கு முன்னும், பின்னும் ஆகிய காலங்களிலும் ஆடினான். எதிர்காலம் பற்றி நோக்குங்கால் ``ஆடினான்`` என்பதைத் தெளிவு பற்றி வந்த வழுவமைதியாகக் கொள்க.
மோகம் மயக்கம்; திரிபுணர்ச்சி. இஃது ஆணவ மலத்தின் காரியம். அந்தக் கூத்து - அந்தத்தை உண்டாக்கும் கூத்து. எனவே, `உயிர்களின் ஆணவ மலத்தை நீக்குதற்கே இவ்வாறு சிவன் அனவரத தாண்டவத்தைச் செய்கின்றான்` என்பதாம். ``ஆகி, ஆய், ஆய், ஆய், ஆக`` என்பவற்றிற்கு, `காலம்` என்னும் எழுவாயும், ``ஆடினால்`` என்பதற்கு, `சிவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. முந்தியே - அனாதி தொட்டே.
மேல் இட வரையின்றி எங்கும் ஆடும் அற்புதம் கூறப்பட்டாற்போல, இதனால், கால வரையின்றி என்றும், எப்பொழுதும் ஆடும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

பொழிப்புரை :

கற்பக மலர் மாலையை அணிந்த முடியை உடைய தேவர்களது தலைமேல் இருப்பனவாகிய, மாணிக்கம்போலும் சிவபெருமானது இருபாதங்களும், தகுதி வாய்ந்த அணியாகிய அன்பை உடையவர்களது உள்ளத்திலே விளங்கும் கற்பகத் தருவும், சிந்தாமணியும் ஆகும். ஆயினஉம் அவன் உலகத்தைக் கடந்தே யிருக்கின்றான்.

குறிப்புரை :

`கற்பகத்தரு இரந்தவற்றைக் கொடுக்கும்; சிந்தாமணி பெற நினைத்தவற்றைக் கொடுக்கும். உலகத்தைக் கடந்து நிற்கின்றவன் அன்பர்கள் உள்ளத்தில் கற்பகத் தருவும், சிந்தாமணியும் போல இருத்தல் கருணையினாலேயாகலின், அவன் மேற்கூறியவாறு எங்கும், எஞ்ஞான்றும் ஆடுதல் கருணையினாலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
`தாமமூடி` என்பது, ``தாமுடி`` எனக் குறைந்து நின்றது. அதனால் தேவர்களது தலையினது உயர்வு குறிக்கப்பட்டது. `உறை தாளிணை` என இயையும். `உறை மாமணி` என இயைத்தலும் ஆம். ``தாள்`` என்பது, கால் முழுவதையும் குறிக்க ``அடித் தாள்`` என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய், பாதத்தைத் குறித்தது.
இங்கு ``அணி`` என்றதை, ``ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி``* என்பதிற்போலக் கொள்க. ``கடந்து நின்றான்`` என்பதற்கு, `அவன்` என்னும் சுட்டு வருவிக்க.
இதனால், ஞானம் கடந்து நின்றவன் சிலரது உள்ளங்களிலே விளங்கி, எண்ணியவற்றை எண்ணியாங்கு முடிக்கும் அற்புதம் கூறும் முகத்தால் அவனது கூத்து அற்புதமும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.

பொழிப்புரை :

அனைத்தையும் படைத்தவனாகிய சிவன் அடி பெயர்த்து ஆடினால், அவனால் படைக்கப்பட்ட அகலிடங்கள் அனைத்தும் தாமாகவே ஆடும். (இயங்கும் `அவன் ஆடாவிடில் அவையும் ஆடா; இயங்கா` என்பது கருத்து.) இதை அறிந்த சிவன் அவை ஆடும் பொருட்டுத் தான் ஆடுமளவும் எங்கள் அறிவுகள் அறிதலைச் செய்யும். (`அவன்` ஆடாவிடில் எங்கள் அறிவுகளும் அறிதலைச் செய்யா` என்பது கருத்து.) இது பற்றி அவன் கருணை கூர்ந்து எங்கும், எப்பொழுதும் ஆடுகின்றான். அப்பொழுது அவனது சுற்றமாகிய பல பூதங்களும் களிப்பினால் ஆடுகின்றான். நாங்கள் இன்பம் அடைந்ததும் அவன் சோதியாய் விளங்கி நின்று ஆடுதலைக் கண்டேயாம்.

குறிப்புரை :

``புரிந்தவன், தெரிந்தவன்`` என்பன வினை யாலணையும் பெயர்கள். `அவன் புரிந்து ஆடில்` எனவும், `அவன் எரிந்து ஆடல்` எனவும் மாற்றி வைத்துரைக்க. `சிந்தையும்` ஆடும் என, இறந்தது தழுவிய எச்ச உம்மையும் அதனை முடிக்கும் சொல்லும் வருவிக்க. எரிதல் - ஒளி வீசுதல். `யாம் இன்புற்றவாறு ஆடல் கண்டு` என எடுத்து முடிக்க. ``இன்புற்றவாறு`` என்பதிலும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால் திருக்கூத்தினால் அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் அனைத்தும் செயற்படும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் முதல்வனாகிய சிவன் கூத்தனாய் நிற்றலைக்கண்டு, அதன் உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்கள், அக்கூத்தினை அவன் எவையோ சில பயன்களைப் பெற வேண்டி ஆடுகின்றான்` எனப் பிதற்றுவார்கள். (`எப்பொருட்கும் முதல்வ னாகியவனுக்குப் பிறர்பால் பெற வேண்டியது யாதுளது` என்பது கருத்து.) அவன் நடம் செய்தபின் உண்மை யாவராலும் அறிதற்கு அரிதேயாம். யாரேனும் அவ்வுண்மையை அரிவார் களாயின், `அவனுக்கு இயல்பாய் உள்ள கருணையின் விளைவே அவனது கூத்து` என்பதே அவ்வுண்மையாய் முடியும்.

குறிப்புரை :

`ஆராயினும்` என்பது, `ஆரும்` எனத் தொகுத்தல் பெற்று நின்றது. `அறிந்தால்` என்பது, ``அறிந்த பின்`` எனத்திரிந்து நின்றது. குணத்தை, ``சத்தி`` என்றார். `அருட் சத்தி ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. செய்கையின் உண்மையை, ``செய்கை`` என்றும் சத்தியின் விளைவ ``சத்தி`` என்றும் உபசரித்தார். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், சிவனது திருக்கூத்துச் சிறிதும் தன்பொருட்டாகாது, பிறர் பொருட்டேயாகின்ற அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து)
அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.

பொழிப்புரை :

தனித்தனி ஒன்பது, ஒன்பது பகுதிகளையுடை யனவும், `தத், துவம்` என்னும் இரு சொற்களால் குறிக்கப் படுவனவும் ஆகிய, `பதி, பசு` என்னும் இரண்டும் `அசி` என்னும் சொல்லில் இணையும்படியும், அதற்கு முன்னே பசு துன்பத்தைச் செய்கின்ற திரோதான சத்தியின் வசப்பட்டு எங்கும் பிறந்தும், வாழ்ந்தும் சுழலும் படியும் பசுக்களின் கருணையுடையவனாகிய எம்தந்தை சிவன் ஆடல் தொழிலைப் பொருந்தி நிற்கின்றான்.

குறிப்புரை :

என்றது, `உயிர்கட்கு `பிறப்பு, வீடு` என்னும் இருநிலைகளையும் `தருதற்காக ஆடுகின்றான்` என்றபடி. வீடு சிறந்தமை பற்றி முற்கூறப்பட்டது. வீட்டைத் தருவது ஞான நடனம். பிறப்பைத் தருவது ஊன நடனம். `ஒன்பதும் ஒன்பதும் ஆம் கோணம்` எனவும், `இருபதத்து உற்ற கோணம்` எனவும் தனித்தனி இயைக்க. அவற்றுள் முன்னையது பதியையும், பசுவையும் தனித்தனி நவகோண சக்கரமாக உருவகம் செய்ததாம். பதியின் ஒன்பது பகுதிகள் நவந்தரு பேதம். பசுவின் ஒன்பது பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றில் ஒவ்வொன்றிலும் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மும்மூன்று உட்பிரிவுகளாம். அவையெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன. அன்புறுதல், ஒன்றையொன்று நேசித்தல். `அசி` பதம் சீவன் சிவன் ஆதலைக் குறிப்பது என்பதும் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. ``ஒன்பதொ டொன்பது`` என்பதில் உள்ள ஒடு எண் ஒடு. ``ஆடிட, ஆட`` என்னும் எச்சங்களும் எண்ணின்கண் வந்தன.
இதனால், உயிர்களின் பல நிலைகளும் நிகழ்தற்பொருட்டுச் சிவனும் பல நிலைகளில் நின்று ஆடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
வைத்த சராசரம் ஆட மறைஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி பசு பல நிலைகளில் செயற்படும்படி சத்தி ஆடுதலால், சிவனும் அதற்கு இயையப் பல நிலைகளில் நின்று ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஐந்தொழிற்கும் முதல்வன் சதாசிவன் ஆதல்பற்றி அவனை வேறு பிரித்துக் கூறினார். சித்தம் - உயிர்களின் அறிவு. சராசரம் - பிறப்பு வகைகள். ``சிவசத்தி தான் ஆட`` என்பதை மூன்றாம் அடியின் ஈற்றில் வைத்து, `அவள் ஆட, அத்தனும் ஆனந்தக்கூத்து ஆடினான்` என முடிக்க. காரியப்பொருளில் வந்த ஏனை, `ஆட` என்னும் எச்சங்கள். `சிவசத்தி தான் ஆட` என்பதனோடு முடிந்தன. `தான்` இரண்டும் அசைகள். சத்தி, இங்கு ஆதி சத்தி.
இதனால், திருக்கூத்துக்கள் யாவும் சத்தியின் நிலைகட்கு ஏற்ப நிகழ்த்தப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

பொழிப்புரை :

உண்மையில் அருட்சத்திக்கு உள்ளே சென்று அடையப்படுபவனாய் ஆனந்தத்தைப் பொழியும் சிவன் இவ்வுலகில் `பதஞ்சலி, வியாக்கிரபாதர்` என்னும் முனிவர் இருவர் எப்பொழுதும் கண்டு களிக்கும்படி, உருவம் `அருவம், உருஅருவம்` என்னும் மூன்று திருமேனிகளில், அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.

குறிப்புரை :

``இருவரும் காண்`` என்றதனால், இங்குக் கூறிய அம்பல தில்லை அம்பலம் ஆயிற்று. அங்கு உருவம், கூத்துக் கோலம். அருவம், ஆகாசத்தைச் சுட்டும் இரகசியம். உருஅருவம், `திருச்சிற்றம்பலம் உடையார்` என்னும் இலிங்கத் திருமேனி. சித்தன் - அடையப்படுபவன். மூன்றாம் அடியை முதலில் வைத்து உரைக்க.
இதனால் தில்லைம்பலக் கூத்தின் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.

பொழிப்புரை :

சிவ முதற்பொருள், தான் செய்வோனாய் நின்று சங்கற்பிக்க, அச்சங்கற்பந்தானே சத்தியாகிப் பலவகையில் நிற்க, அதனால் உலகத்தில் தீயனயாயும் நிலைகெட்டு நீங்கும் நிலையை எய்த, உலகில் அசைவற்றதாக எண்ணப்படுகின்ற ஆகாயமும் ஒலி அலைகளைத் தோற்றுவித்துச் செயற்பட, புதிது புதிதாய்த் தோன்றி யமைகின்ற தத்துவங்கள் நிலம் முதல் நாதம் ஈறாக நின்று செயற்பட எப்பொழுதும் ஆடும் இவ்வுண்மை வேதாந்தத்திலும், சித்தாந்தத் திலுமே காணப்படும்.

குறிப்புரை :

`பிறவற்றில் காணப்படாது` என்றதாம். அஃதாவது, `புறச் சமயிகள் இதனை உணரார்` என்றதாம். ஈற்றில் உள்ள ``சிவம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. முதற்கண் உள்ள `சிவம் என்பது செய்வோன்` என்னும் பொருட்டாய் நின்றது. அதன்கண், `சிவமாய்` என ஆக்கம் வருவிக்க. ``சிவம் ஆட`` என்பதில் ஆடுதல், சங்கற் பித்தல், ``நாதாந்தம்`` என அந்தம் கூறவே, நிலமாகிய ஆதியும் பெறப் பட்டது. ``வேதாந்த சித்தாந்தம்`` என்பது உம்மைத் தொகை. `உள்ளது` என்பதில் இறுதிநிலை தொகுக்கப்பட்டு, ``உள்`` என நின்றது.
இதனால், திருக்கூத்தின் அற்புத நிலை வேதாந்த சித்தாந்தங்களிலே விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.

பொழிப்புரை :

உயிர் தத்துவங்கள் அனைத்தையும் `தான் அல்ல` என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணர்தலும், பின்பு, `தான், அறிவித்தால் அறியும் தூல சித்தாவதல்லது, தானே அறியும் சூக்கும சித்தன்று` எனத் தனது உண்மையை உணர்ந்து, அதனானே, `தானே அறிந்தும், உயிர்கட்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்துத் தலைவனாம் சிவன்` என அறிதலும், இவ்வறிவு வேதாகமங்களாகிய அபர ஞானங்களாய் இல்லாது, அவற்றைக் கடந்த அனுபவமாம் பரஞானமாகப் பெறுதலும் ஆகிய இவையெல்லாம் தனக்கு ஒரு மூலம் இல்லாது தானே மூலமாய் நிற்கும் சதாசிவ மூர்த்திக்கு மேலே நாதமாய் நின்று `நாதப்பிரமம்` எனப்படுகின்ற ஆதி சிவனது நடனத்தின் பயனேயாகும்.

குறிப்புரை :

``அந்தம்`` என்பன கடந்த நிலையைக் குறித்தன. தாது - மூலம். ஐந்தொழில்களில் இறுதியான அருளலைச் செய்வோன் சதா சிவன் ஆதலை நினைக. ``மெய்ச் சிவம்`` என்பதில் சிவம், சிவத்தைத் தரும் சிவாகமம். சத்தப் பிரம வாதிகள் சடமாகிய நாதத்தையே `நாதப் பிரமம்` என்பர். அது பொருந்தாது; நாதத்தை அதிட்டித்து நிற்கும் சிவனே நாதப்பிரமம் என்பார் `நாதப் பிரம சிவன்` என்றார். இந்தச் சிவன் அநாதி சிவனாகிய பரம் சிவத்தினின்றும் தோன்றிய ஆதி சிவன் ஆதலையறிக. நடத்தின் பயனை, ``நடம்`` என உபசரித்தார்.
இதனால், சுத்தாவத்தை பராவத்தைகள் யாவும் திருக்கூத்தின் விளைவாதல் கூறப்பட்டது. இவ் அவத்தைகள் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 32

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.

பொழிப்புரை :

சரியை முதலிய இறப்பில் தவங்களை நிரம்பச் செய்த உயிரைப் பாசங்கள் அப்பொழுதே விட்டு நீங்குதலால், அவ்வுயிர் சிவன் முதலிய ஐவரால் உண்டாகும் அலமரல் நீங்கும்படி, தவத்தின் வடிவாய் விளங்கும் சிவன் எங்கும் தானாய்த் திருக்கூத் தியற்றுவன். அக்கூத்துத் தவத்தால் விளைந்த ஞானத்தின் பயனாக அதற்கு உரியோர் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து `பசுவினின்றும்` என உருபு விரிக்க தனித்து. தனித்தலால், எங்கும் தான் ஆக-தனது வியாபக நிலை தோன்றும்படி. அஃதாவது, `எங்கும் சிவமாய்த் தோன்றும்படி` என்பதாம். `அது ஞானக் கூத்து` எனச் சுட்டு வருவித்து தவமாம் சிவானந்தத்தோர்க்கு` என உருபு விரித்து முடிக்க.
சிவமாதி ஐவர், சிவ தத்துவம் முதலிய சுத்த தத்துவம் ஐந்திலும் நிற்கும் முதல்வர்கள். இவர்கள் பந்தத்தில் உள்ள உயிர்களை அவற்றி னின்றும் நீங்குதற்கு ஆவன செய்வாராயினும், அச்செயல் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல் அப்பொழுது துன்பமாய் தோன்றுதல்போல அலமரலை விளைக்குமாகலின், அந்நோய் நீக்கத்தை, அவரால் விளையும் திண்டாட்டம் நீங்குதலாகக் கூறினார். `திண்டாட்டம்` என்னும் நாட்டுப்புற வழக்கு, 2736 ஆம் மந்திரத்திலும் வந்தது.
இதனால், திருக்கூத்து வகைகளுள் ஞானக்கூத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.

பொழிப்புரை :

`தேவர் என்பார் அனைவரும் தனது முன்னிலையில் ஒருங்கு கூடி வணங்க இருப்பவனும் அவர் அனைவருமே அழிந்து இல்லையாகிய காலத்திலும் தான் அழியாது ஒருவனாய்த் தனித்திருப் பவனும், உள்ள காலத்திலும் உயிர் வருக்கத்துட் பட்டார் யாவரும் `எம்மில் வேறாம் தன்மையுடையவனே`, (தலைவனே) என அந்தப் பெயரைச் சொல்லித் தேட நிற்பவனும் தனது முக்கண்கள் சுழலுதலால், உலகத்தார் முன் விளங்குகின்ற, `ஞாயிறு, திங்கள், தீ` என்னும் முச்சுடர்களும் சுழலும் படி ஆடகின்றவனும் ஆகிய அவன் என்னை ஆட்கொண்டவாறு வியப்பிற்குரியது.

குறிப்புரை :

கூடுதல், தன் பயனைத் தோற்றுகின்றது. ``தேவர்கள்`` என்பதை, ``கூட`` என்பதனோடும் கூட்டுக. `வீடவும்` என்னும் சிற்பபும்மை தொகுத்தலாயிற்று. விகிர்தன் - வேறுபட்டவன். மூன்றொளிகள் ஆடுதல் கூறினமையால் அவன் ஆடுதல் பெறப்பட்டது. `வியப்பிற்குரியது` என்பது சொல்லெச்சம்.
இதனால் ஆடல் வல்லானது அற்புத நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

பொழிப்புரை :

வேதாந்தத்திலே விளங்குகின்ற நம் சிவன், நாத தத்துவத்தையும் கடந்த முதல்வன். அவனை இந்தப் பூமியிலே இங் குள்ளவர்கள் தெளிவாகக் கண்டு ஆனந்தத்தை அடைகின்றார்கள். அது பற்றி அவன் அவர்களிடத்து வைத்த கருணையும், நடுவு நிலைமையும் முரணாகிவிடவில்லை; நேரொன்றியே நிற்கின்றன. அவ்வாறு உள்ளது அவன் இப்பூமியில் இயைந்து நிற்கின்ற நிலை.

குறிப்புரை :

`நாத தத்துவம்` என்பது கடைக்குறைந்து `நாதத்துவம்` என நின்றது. இனி `நாதத்தின்மை` எனக்கொண்டு `சுத்த மாயை` எனினும் ஆம். சிறப்பும்மையும்; `கடந்த` என்பதன் ஈற்று அகரமும் தொகுத்தலாயின. ``மறை`` என்றது அதன் முடிவை. `மறை நம்பி நாதத்துவமும் கடந்த ஆதி` என்க. இதனை அனுவதித்து ஓதினார், அவன் மிகக் கீழ்த் தத்துவத்தின்கண் விளங்கிநிற்கும் எளிமை யுணர்த்தற்கு. பூ - பூமி. `பூத் தத்துவம்` என ஒற்று மிகாமை வடநூல் முடிவு. பொலிந்து, `பொலிய` என்பதன் திரிபு. இன்பம் எய்துதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. `நேசத்துவம்` என்பது, எதுகை நோக்கித் திரிந்தது. நேசம் இறைவனுடையது இன்பம் எய்துவார் பலராகலின், அவர்மேல் வைத்த நேசமும் பலவாகச் சொல்லப்பட்டது. நீதி, ``மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பம்`` எனச் சொல்லி வைத்த நீதி. அது பேதப்பட்டாமை, அவனது காட்சியாலே மோகம் அற்றமையினாலாம். ஆகவே, அவரது நிலைமை அவ்வாறாகும்படி அவன் இவ்வுலகில் இயைந்து நிற்கின்றான்` என்பதாம். இனி, `நேதியும்` என்பதே பாடமாகக் கொண்டு ஏற்குமாறு உரைப்பர்.
``பின்னி நின்றான்`` எனப் பொதுப்படக் கூறினாரேனும் இங்குச் சிறப்பாகக் கூத்தனாய் நிற்றலைக் கூறுதலே கருத்தென்க. இன்பம் எய்துதல் அதனானே சிறக்க நிகழ்தலின்.
இதனால், திருக்கூத்தினால் சிவநெறி உண்மை அற்புதமாக விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின்
ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

``பேரின்பத்தை அடைய வேண்டும், அடைய வேண்டும் என்று, அஃது இருக்குமிடத்தை அறியாத பலர் அதனைத் தேடி அலைகின்றனர், ஆயினும் பேரின்பம் இவ்வுலகில் சிவன் செய்யும் திருக்கூத்திலே இருத்தலை யாரும் அறிதல் இல்லை. அறிவார்களாயின், அக்கூத்து, உலக இன்பம் அனைத்தும் கெடும்படி பேரின்பமாய் நிகழும்.

குறிப்புரை :

``ஆனந்தம்`` பலவற்றில் ஈற்றடியின் முதலில் நின்ற ஒன்று தவிர ஏனைய யாவும் சிறப்புப் பற்றிப் பேரின்பத்தையே குறித்தன. அடுக்கு, இடைவிடாமை பற்றி வந்தது. `வேண்டும்` என்பது சொல்லெச்சம். ஆனந்தத்தைத் தருதல் பற்றி நடனத்தையே ``ஆனந்தம்`` என உபசரித்துக் கூறினார். `அறுதல் விடயானந்தம் - ஐம்புல இன்பம்` என்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய அற்புதத்தை அறிய மாட்டாதாரது நிலை இரக்கத்திற்குரியதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.

பொழிப்புரை :

சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால். அதில் உதறிய கையை, மாயையை, `சீ` என்று உதறும் கையாகவும், வீசி அணைத்த கையை, அடியவனை, `வா` என்று அழைத்து அருள் வழங்கும் கையாகவும், சார்ந்தவிடத்து, `அஞ்சற்க` என அமைந்த கையை, `இனிதிருக்க` எனத்தேற்றம் தரும் கையாகவும், தீ ஏந்திய கையை, வினைகள் கெடத் திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகவும், ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகவும் காணுதல் வேண்டும்.

குறிப்புரை :

திருவைந்தெழுத்தில் உள்ள எழுத்துக்களின் சிலேடை தோன்ற உண்மை யுணர்த்தியவாறு. உதறுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இங்குக் கூறியவற்றில் அமைந்துள்ள எழுத்துக்களை வருகின்ற மந்திரத்துள் ``உதறிய கை, அணைத்த கை, `இய` என்ற கை`` - என உடம்பொடு புணர்த்து ஓதப்பட்ட பொருள்கள் இனிது விளங்க வெளிப்படையாக உரைக்கப்பட்டன. ``தீ, நிலை`` என்பன ஆகுபெயர்களால் அவற்றையுடைய கையையும், அடியையும் குறித்தன. ``ம்`` என்றது, மலத்தை அதன் முதலெழுத்துக் குறிப்பாற் கூறினார். `மவ்வை மிதித்தல்` என ஒரு சொல் வருவிக்க. வேண்டும் இடங்களில் எல்லாம் `ஆக` என்பது வருவித்து, அவற்றை ``ஆகும்`` என்பதனோடு முடிக்க. ``திருந்து அத் தீ ஆகும்`` என்பதை, `அத் தீ திருந்து ஆகும்` என மாற்றி உரைக்க. திருந்து - திருந்துதல்; அஃதாவது, தற்போதத்தால் வினைகளைச் செய்யாது திருவருள் வழி நிற்றல். முதனிலைத் தொழிற்பெயர் ``இய`` என்றது, `இயல்` என ஏவியதனைக் குறித்தது. ``ஆகும்`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறைகளுள் ஒரு வகை முறை கூறப்பட்டது.
``மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி,அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனன்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்``.* என்னும் உண்மை விளக்க வெண்பாவை இங்கு ஒப்பு நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 37

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.

பொழிப்புரை :

கூத்தப் பிரான் திருவுருவத்தில் உடுக்கை வீச்சு, அமைப்பு, நெருப்பு இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே `சி, வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக.

குறிப்புரை :

``சேர்க்கும் துடிசிகரம்; சிக்கெனவா வீசுகரம்;
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம்; அடிக்கீழ் முயலகனார்
தங்கு மகரமது தான்``* என்னும் உண்மை விளக்க வெண்பாவினைக் காண்க. திருவைந் தெழுத்து இவ்வாறு சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் ஆகும் என்பதனை நினைவூட்டுதற் பொருட்டு, ``உரு இல் சிவாயநம`` என்றார். உரு இன்மை அருவம்; சூக்குமம். இனி நகாரம் முதலாக அமையும் தூல பஞ்சாக்கர வடிவத்தை அந்நூல்,
``ஆடும் படிகேள்; நல் அம்பலத்தான்; ஐயனே,
நாடும் திருவடியி லேநகரம் - கூடும்
மகரம் உதரம்; வளர்தோள் சிகரம்;
பகருமுகம் வா;முடிய; பார்``9
என்பதனால் விளக்கிற்று. அதனை நாயனார் இங்குக் குறித்திலர். அஃது உலகப் பயனையே விளைத்தலின். கரு, ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. உடம்பு, முயலகனது. அன்றி, அம்மந்திரம் கிடைத்திலது என்றலும் ஆம். `கருவின்கண்` என `மேல்` என்னும் பொருட்டாகிய ஏழாவது விரிக்க.
இதனால், முன் மந்திரத்தில் சிலேடை வகையான் குறித்த சூக் கும பஞ்சாக்கர முறை வெளிப்படையாக இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.

பொழிப்புரை :

கூத்தப் பிரானது திருவுருவில் தோன்றும் குறிப்பைக் கூறுமிடத்து, உடுக்கையால் ஒலியை உண்டாக்கல் படைத்தல் தொழிலை யும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், மேல் எடாமல் உறுதியாக முயலகன்மேல் ஒருகாலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் இவ்வாறாக ஐந்தொழிலையும் உணர்த்தும் என்க.

குறிப்புரை :

மேல், ``திருந்த நற் `சீ` என்றுதறிய கையும்`` என்றதில் உணர்த்தப்பட்ட குறிப்பு முத்தர்கட்கான ஞான நடனக் குறிப்பு` எனவும், இது, பெத்தர்கட்கான `ஊன நடனக் குறிப்பு` எனவும் உணர்க. இதனையும்,
``தோற்றம் துடியதனில்; தோயும் திதி அமைப்பில்;
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்; - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்; முத்தி
நான்ற மலர்ப்பதத்தே; நாடு``3 என உண்மை விளக்க நூல் கூறுதல் காண்க. `ஊன்று` என்னும் முதனிலை வலித்தல் பெற்று, ஈற்றில் `அம்` ஏற்று, `ஊற்றம்` என வந்தது. ஊற்றமா - உறுதியாக. இஃது இம்மந்திரத்தில் ஆக்கம் இன்றி வந்தது. அணைத்தல் - (முயலகன் முதுகில்) சேர்த்தல். ``அரன்`` என்றது. இங்குக் கூத்தப் பெருமானையே. அப்பெயர் சொற்பொருட் பின்வருநிலையாய்ப் பின்னரும் வந்தது. ``ஊற்ற அணைப்பு`` என ஊன்றிய திருவடியைக் கூறினமையால், பின் வந்த ``அடி`` தூக்கிய திருவடியாயிற்று.
இது பெத்தர்க்கான குறிப்பாயினும், ஐந்தொழில் செய்தல் முதல்வனுக்கு இலக்கணமாதல் சிறப்பு நோக்கியும், இறுதியில் அருளல் அமைந்திருத்தலாலும் இதனையும் இங்கு நாயனார் கூறினார் என்க. ``அறையின்`` என்பதை முதலிற் கொள்க.
இதனால், கூத்தப் பெருமானது வேறொரு வகைக் கூத்தின் குறிப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன்
மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

பொழிப்புரை :

அக்கரங்கள் ஐம்பதைக் குறிக்கும் சுடர்கள் மேல் எல்லாம் விளங்குகின்ற, முதல் ஒளியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கும் கூத்தப் பெருமானது கூத்தினை எப்பொழுதும் காண்கின்ற அழகிய கண்களை யுடைய சிவகாமியம்மை அந்தக் கண்களினாலே மூவர் மூர்த்திகளும் பெருமானது மூன்று கண்களினின்றும் தோன்றும் வண்ணம் பார்த்தாள். (உடனே அவர்கள் தோன்றினார். பின்பு அவர்களுக்கு வழிகாட்டுதற் பொருட்டுப்) பல வேதங்களையும் பாடி உணர்த்தினாள்.

குறிப்புரை :

`அதனால் உலகம் நடைபெற்று வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``9
என்னும் உண்மை விளக்கப் பகுதியை இங்கு ஒப்பிடுக. `படைப்புக் காலத்தில் சிவன் தன்னிடத்தினின்றும் சத்தியை, `இலலிதா` என்னும் பெயருடன் தோற்றுவிக்க, அவள் தனது மூன்று கண்களினின்றும் மும்மூர்த்திகளைத் தோற்றுவித்து, அவர்களை முத்தொழில் புரியுமாறு அருளினாள்` என்பது படைப்பு முறைகள் பலவற்றில் ஒருமுறையாகச் சொல்லப்படுகின்றது.8 அம்முறை இங்கு ஒருவாறு குறிக்கப்பட்டது. கூத்தப் பெருமான் உலகத்தை நடத்தும் முறையைக் கூறியவாறு. `உள்ளொளியாகிய கூத்தன்` என்க. ``இடை`` என்பதைப் பெயராக வைத்து, முதல்வனிடையினின்றும் செல்லப் பார்த்தனன்` என்க. செல்லுதல் - தோன்றிச் செயல்புரிதல்.
இதனால், `மும்மூர்த்திகளும் கூத்தப் பெருமான் தனது சத்தியால் தோற்றுவித்து நிறுத்தி, ஒடுக்கப்படுபவர்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

பொழிப்புரை :

மேல், ``சுந்தரக் கூத்து`` எனக் கூறப்பட்ட கூத்தினைச் செய்யும் சிவன் இங்குள்ளவர்களுக்கு `ஓம்` என்னும் அந்த ஒரு மந்திரத்திலும், அதற்கு மேலாய திருவைந்தெழுத்து மந்திரத்திலும் நிறைந்து நின்று அருள்புரிகின்றான் என்றாலும், உண்மையில் அவன் அவற்றைக் கடந்து, எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டே யிருக்கின்றான். ஆகையால், `அவன் இன்ன தன்மையன்தான்` என்று யார் வரை செய்து கூற இயலும்!.

குறிப்புரை :

`நந்தி` என்பது சிவன் பெயர்கள் பலவற்றில் ஒன்று. அது முதலாக வந்த மூன்றும் சுந்தரக் கூத்தனையே குறித்தமை வெளிப் படை. மந்திரம் ஒன்று, பொது நோக்கில் பிரணவமும், சிறப்பு நோக்கில் திருவைந்தெழுத்துமாம். கூத்தப் பெருமான் அவற்றின் வடிவாய் நிற்றல் இங்கு விளக்கப்பட்டது. `மருவியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``ஓர் ஊரன் அல்லன் ... ... ... இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்டொ ணாத னாகிய``9 அவன், இங்கு மந்திரவடிவாய் நின்று ஆடல் புரியும் அருட் பெருமையை அறிந்து, அன்பு செய்து உய்தல் மக்கட்குக் கடன் என்பது கருத்து.
இதனால் திருக்கூத்தின் அருமை அறிந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

பொழிப்புரை :

ஆசிரியராய் உள்ளார் அனைவர்க்கும் அவ் ஆசிரியத் தலைமையை அருளிய இயற்கை ஆசிரியத் தலைவன் சிவபெருமானே. அவனே திருவம்பலத்தில் கூத்துக் கோலமும் கொண்டு ஆடுகின்றான். அதனால் அவனது திருமேனியின் தன்மை ஆய்ந்துணரத்தக்கது. அதனை அவ்வாறு ஆய்ந்துணர்ந்தவர் யாரும் இல்லை அதன் தன்மையாவது, நெருப்புப் பார்வைக்குச் சிவப்பு நிறத்தையும், உண்மையில் வெளுப்பு நிறத்தையும் உடையதுபோல இருதன்மைப்பட்டது. அதனை உணர்ந்தால் அவனைச் சார்ந்து அவனுள்ளே இரண்டறக் கலந்துவிடலாம்.

குறிப்புரை :

சீயம் - சிங்கம். இது தலைமை பற்றி வந்த உவமை. நந்தி ஆய் உறு மேனி என்க. ஆதல் - பொருந்துதல். மீட்டும் வந்த ``ஆய் உறு மேனி`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்று, ஆகுபெயரால் அதன் தன்மையைக் குறித்தது. ``ஆரும் அறிகிலர்`` என்றதனால், ஆய்ந்துணரற்பாலதாதல் பெறப்பட்டது. `தீ வெளுப்போடு செம்மை உறும் அத்தன்மை` என இயைக்க. தீயைப் பார்ப்போர் அனைவரும்` அது சிவப்பானது` என்றும் கருதுகின்றனர். `ஆயினும் தீ உண்மையில் வெளுப்பானதே` என நியாய நூலார் நிலை நாட்டுவர். இன்றைய அறிவியலாரும் `ஏழு நிறங்களின் சேர்க்கையே வெண்மை` என்பர். கூத்தப் பெருமானது சத்தி, `திரோதான சத்தி, அருட் சத்தி` என இரண்டாதல் பற்றி `சத்தி வடிவான அவனது மேனி இரு தன்மையுடையது` எனஅறார். திரோதான சத்தியால் பெத்தத்தையும், அருட்சத்தியால் முத்தியையும் உயிர்கட்கு அவன் அருளுகின்றான்; அவ்வருட்செயல் திருக்கூத்தினால் நிகழ்கின்றது என்க. ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து` என எச்சப்பொருள் தந்தன.
இதனால் திருக்கூத்து இரு சத்திகளால் இருவேறாகச் செய்யப் பட்டு, இருவகைப் பயனை விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.

பொழிப்புரை :

சத்தி சிவனின் வேறன்று ஆதலால், சிவன் உயிர்களைக் கடந்து `நிற்றல் போலவே சத்தியும் உயிர்களைக் கடந்து நிற்கும் (`இந்நிலையில் சிவன், `பரமசிவன்` என்றும், சத்தி, `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர். எனினும் அந்தச் சத்தி) பரமசிவனுக்கும், அவனுக்குக் கீழே உள்ள உயிர்கட்கும் முறையே ஐந்தொழில் செய்தலிலும், போக மோட்சங்களை அடைதலிலும் இச்சையையும், அவற்றிற்கு ஆவனவற்றை அறியும் அறிவையும், அறிந்தவாறே ஆற்றும் செயலையும் தந்து, உலகத்தை நடத்தும். நடத்துமிடத்து அஃது `ஆதி சத்தி` எனப் பெயர் பெறும். (`திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.) இவ்வாறு உயிர்களை நடத்துதலே திருக்கூத்து இயற்றுதல் ஆதலின் அக்கூத்தின் பயனாக உயிர்கள் திருவருளைப் பெறும் தன்மையை எய்துமாயின், அந்த ஆதி சத்தியே அருட்சத்தியாய் அவைகட்கு இறைவனுடைய திருவடியில் அன்பைப் பெருக்கும்.

குறிப்புரை :

எனவே, `இதுவே திருக்கூத்தின் முடிந்த பயன்` என்ற தாயிற்று. ``தான்`` இரண்டும் சிவன். இரண்டாவதில், `தானே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தானேயாதலாவது பிறி தொன்றையும் பற்றாது தனித்து நிற்றல். தற் பரை - தனக்கு மேலாய் நிற்பவள். ``தன்`` என்றது உயிரை. இச்சை ஞானங்களைக் கூறவே, இனம் பற்றிச் செயலும் கொள்ளப்பட்டது. `ஞான இச்ை\\\\u2970?` என்னும் உம்மைத் தொகை செய்யுள் நோக்கி பின்முன்னாய் நின்றது. `ஆதியாய்ப் பேதங்களை நடத்தும், அங்ஙனம் நடத்துதலாகிய நாடகத்தை நடித்து நேயத்தது ஆம்` என முடிக்க. தனது உண்மை யியல்பில் மாற்றம் எய்தாமையைக் குறிக்க இவற்றை, `நாடகம்` என்றார். நேயத்தது - நேயத்தைப் பெருக்குவது. உயிர்களது உள்ளத்தின் செயலை அவற்றின்மேல் வைத்து, ``அருள் ஆனால்`` என்றார்.
இதனால், திருக்கூத்தின் செயல் வகைகளையும், பயன் வகைகளையும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

பொழிப்புரை :

உயிர்களின் அறிவிலே சிவன் `ஓம்` என்னும் பிரணவ வடிவாயும், அதனால் உண்டாக்கப்படுகின்ற உணர்வு வடிவாயும், அவ்வுணர்வில் தோன்றுகின்ற அற வடிவாயும் விளங்குகின்றான். அவனை அங்கு அம்முறையானே சென்று தலைப்படும் இடம் அருள் வெளியேயாம்.

குறிப்புரை :

ஒருவன் - ஒப்பற்றவன். ``அங்கி`` என்றது ஒளியை. அஃது உணர்வேயாம். உணர்வுகள் நாதத்தானே உளவாதல் மேலெல்லாம் சொல்லப்பட்டது. ``நீதி`` என்றது அறத்தை. `அது தானும் அற உணர்வை` என்க. `நாதம், பொருள் உணர்வு, அவற்றுள் அற உணர்வு, திருவருட் பேறு இவை காரண காரியமாய் முறையானே நிகழும்` என்பதும், `அவற்றுள் திருவருட் பேறே முடி நிலை` என்பதும் கூறியவாறு. ஆகவே, `திருக்கூத்தினைக் கண்டு, இம்முறையானே திருவருளைப் பெறுக` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உறல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், உறும் இடத்தைக் குறித்தது. `உடல்` என்பது பாடம் அன்று.
இதனால், ஆகாசப் பேறே முடிநிலைப் பேறாதலும், அதற்குமுன் உள்ள படிநிலைப் பேறுகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

சிவன் (உடலில் உயிர்போல எப்பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பினால்) பெரிய பூமியாயும், அப்பூமிபோன்ற பல உலகங்களையும் அடக்கி நிற்கும் அண்டங்களாயும் இருப்பினும் அவை அனைத்தையும் கடந்த திண்ணிலமாகிய அருள் வெளியிலே விளங்குபவனாய்த்தான் இருக்கின்றான். அதனாற்றான் அவன் எல்லாவற்றையும் தாங்கும் பெரிய பூமிபோல. எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றலையும் ஒருவராலும் சென்று அணுகுதற்கரிய இடத்தையும் உடைய முதற்கடவுளாய் இருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், அவனை அவ்வருள்வெளியில் சென்று தலைப்படவே முயலவேண்டும்` என்பது குறிப்பெச்சம், ``கொள்கை`` என்றது உண்மையை. தாள் - ஆற்றல். ``அரு நிலமாய் நின்ற ஆதிப்பிரான்`` என்றது உடம்பொடு புணர்த்தல் ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. குருநிலம், அருநிலம் இரண்டும் ஆகுபெயராய், அதன்கண் உள்ளவனைக் குறித்தன. குரு - திண்மை; பேராற்றல்.
இதனால், அருள் வெளியது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

பொழிப்புரை :

அகண்ட ஒளியாகிய சிவ சொரூபத்தையும் தான் கண்ணாற் காணும் போல ஞாயிறு, திங்கள், பிறகோள்கள், விண்மீன் ஆகிய ஒளிகளைப் போலவே உடன் வைத்து எளிதில் கண்டு விட்டதாக, உடம்பாற் பெற்ற சிற்றறிவு கொண்டு பிதற்றுலாகிய சிறுமையை, அதனை விழுங்கி நிற்கின்ற அருள் வெளிக்குள்ளே ஒளியாகிய சிவ ஒளிக்குள் மறைந்து நிற்கச் செய்வதே, சீவன் தான் பெற்றுள்ள `சீவன்` என்னும் அப்பெயரைப் போக்கும் செயலாகும்.

குறிப்புரை :

அஃதாவது, `சிவமாகின்ற செயலாம் என்றபடி. `அண்ட ஒளியையும்` என உருபு விரிக்க. உம்மை, இழிவு சிறப்பு. பிதற்றுதல், அறிந்தோர் நகைக்கும்படி, அறிந்ததாக எங்கும் சென்று கூறுதல். பிதற்றுதலாகிய சிறுமையை ``பெருமை`` என்றது எள்ளற் குறிப்பு. அனைத்தையும் விழுங்கியுள்ள (அடக்கியுள்ள) வெளி அருள்வெளி. ``ஒளித்தது, குலைத்தது`` என்பன தொழிற் பெயர்கள். `ஒளிக்குள் ஒளித்தலைச் செய்யாமல் வேறுநின்று கூறுவன எல்லாம் வெறும் பிதற்றல்களே என்பதாம்.
இதனால் ஆகாசப் பேறல்லன எல்லாம் பேறாகாகமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு)
உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.

பொழிப்புரை :

உயிர்கட்குப் புறத்தே பெறப்படும் பயனாகிய மகளிரது இன்பத்தைப்போல, அகத்தே பெறப்படும் பயனாய் விளையும் இன்பமாய் நிற்பது, எல்லாவற்றிற்கும் முதலாயும், மேலாயும் உள்ள பேரொளிப் பொருள். அஃது அயன், மால் முதலியோர்க்கும் அறிய வாரா நிலைமையதாயும், மேலாய நெறியின் பயனாயும் பரவொளியின்கணுள்ள ஒரு பொருளாகும்.

குறிப்புரை :

ஈரிடத்தும், `பயனாய்` என ஆக்கம் விரிக்க. பின்னர் ``உள்ளே`` என்றமையால், முன்னர், `புறத்தே` என்பது பெறப்பட்டது. இன், உவம உருபு. ``உறும்`` என்பது முற்று. ஈற்றில் உள்ள ``அது`` என்பதை, ``சோதி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. நெறியின் பயனை, ``நெறி`` என்றார்.
இதனால், ஆகாசப் பேறே பேரின்பப் பேறாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

பொழிப்புரை :

உயிர்களின் அறிவுக்கறிவாய் நிற்கின்ற, `சிவம்` என்னும் ஒளியுடைப் பொருளையும், அதனை விட்டு நீங்காது தாதான்மியமாய் நிற்கும் ஆற்றலாய் எங்கும் பரவி நிற்கும் `இச்சை, ஞானம், கிரியை` என்னும் முச்சுடர்களையும் ஒருவன் தன்னின் வேறாக வைத்துச் சுட்டி உணராமல் அவற்றினுள்ளே அடங்கி ஒன்றாகி, அந்நிலையினின்றும் நீங்காதிருப்பானாயின், அவன் காலத்திற்குக் காலமாய் விளங்குவான்.

குறிப்புரை :

``காலத்தைக் கடந்து நிற்பான்`` என்பதாம். காலத்தைக் கடந்து நிற்றல் கூறவே, இடத்தைக் கடந்து நிற்றலும் தானே பெறப்பட்டது. ``ஒளி`` இரண்டனுள் முன்னது, ஒளியை உடையதனைக் குறித்தது. வலம் - வல்லமை; ஆற்றல், வலத்தினில் - `வல்லமை` என்னும் நிலைமையில் உள்ள. `பெயரொளி` என்பது ``பேரொளி`` என மருவி வந்தது. பெயர்தல் - பரவுதல். `வலத்திற் பெயரொளி மூன்றும்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `அத்தன் அடிக்குள் அடங்கிடில்` என முன்னே கூட்டுக. இதனால், `பரவெளி காலத்தைக் கடந்தது` என்பதும், அஃது அதுவேயாய் அடையத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.

பொழிப்புரை :

ஐந்து தத்துவங்களாய் நிற்கும் சுத்த மாயை யினையே ஐந்து தலைகளையுடைய பாம்பாக ஆடைபோல் அணிந்து, அந்தத் தத்துவங்களிலே நிற்கின்ற சிவன் அவையாகிய சுத்த மாயை யிடத்தவனாய், `அமரர்` என்னும் பெயருக்கு, முகமனாக அன்றி, உண்மையாகவே உரிய சிவலோகத்தார்க்குத் தலைவனாவான். இன்னும் அவன் அத்தத்துவங்கட்கு அப்பாற்பட்ட பர வெளியில் நிற்றலையே விரும்பி நிற்பினும் இங்குள்ளார் பொருட்டு இப்பூதா காசமாகியும், அதன்கண் விளங்குகின்ற ஒளியாகியும் இருக்கின்றான்.

குறிப்புரை :

ஏகாசம் - மேலாடை; உத்தரீயம். மேலாடையே, ஆடி அசைதல் பற்றி, `ஆடை` எனவும், இடையில் இறுக உடுத்தப்படுவது, `உடை, உடுக்கை` எனவும் சொல்லப்படும். இரண்டாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. முதற்கண் உள்ள ``ஆகாசம்`` சுத்த மாயை. வண்ணம் - வடிவம். அதிட்டானம் `வடிவம்` எனப்படுதலை, ``சுத்த தத்துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும்``3 என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. அமரர் - மரியாதவர்; இறவாதவர். இது தேவர்கட்கு முகமனாகிய பெயரே என்பதை,
``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சம் படு முகமனே யானபோல்``l
என்னும் கந்த புராணச் செய்யளாலும் அறிக. குலம் - கூட்டம். கொழுந்து தலைவன். இதன்பின் ``அப்புறம்`` என்பதை இயைக்க. ``ஆகாசம்`` மூன்றும் முறையே சுத்தமாயை, பரவெளி, பூதாகாசம் இவற்றைக் குறித்தன. இவையெல்லாம் ஒருங்குதோன்ற அப்பர், ``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9 என்று அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரஹ்ம``8 என்பது உபநிடதம். அமர்தல் - விரும்புதல். ``அங்கி`` என்றது ஒளியை. காசம் - ஒளி, அது, `ப்ர` என்னும் இடைச்சொல்லை முதலிற் பெற்று, `ப்ரகாசம்` எனவழங்கும். ஒளிக்கு இடமாதல் பற்றியே, `ஆகாசம்` எனப் பெயர் பெற்றது.
இதனால், ஆகாசங்களது சிறப்புணர்த்தும் முகத்தால் பராகாசத்தினது சிறப்புணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

பொழிப்புரை :

`சேதனம், அசேதனம்` என்னும் இருவகை உலகங்களும் இயங்குமாறு உளங்கொள்கின்ற உள்ளொளியாகிய சிவன் தன்னைச் செலுத்தியபோது, குயில்போலும் குரலையுடைய அருட்சத்தி அவனோடே குலாவி உலாவுதலால், எனது உள்ளம் அவனது ஒளியைப் பெற்று, இருள் நீங்கிப் பிரகாசிக்கின்றது.

குறிப்புரை :

உயிர்த்தல், உயிர்த்தன்மை பெற்று உணர்தல். எனவே, அதனைச்செய்வது சேதனமாயிற்று. ஆகவே, பின்னர் ``உலகம்`` என்றது அசேதனத்தையாயிற்று. பின் வந்த உயிர்த்தல், திருவுளங் கொள்ளுதல். `உயிர்க்கின்றவாற்றையும், உலகத்தையும் ஒக்க உயிர்க் கின்ற உள்ளொளி` என்க. சேர்தல். தன் காரியம் தோற்றி நின்றது. உலாவி - உலாவுதலால். `பரவெளியாவது அருட்சத்தியேயாதலின் உயிர் உடம்பொடு கூடியிருக்கும் பொழுதும் அஃது அந்தப் பரவெளியைச் சேர்தலாற்றான் ஒளியுடையதாய்த் திகழ்கின்றது` என்பது உணர்த்தியவாறு.
இதனால், சீவன் முத்தியும் பர வெளியிருப்பேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து)
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

பொழிப்புரை :

சிவன் தன்னைச் சாராமல் உலகத்தைச் சாரின் அவர்களை விட்டு மிகச் சேயனாய் நீங்கி நிற்பன். உலகத்தைச் சாராது தன்னைச் சாரின், அவர்களை விட்டு எப்பொழுதும் நீங்கான். முதற்கண் மின்னல் ஒளி போலத் தோன்றிப் பின்னர்ப் பேரொளியாகி விளங்கு கின்ற பரவெளியாம் அவனை வணங்கினால் அவன் கூறியவாறு நீங்காது நின்று அமுதத்தைப் பொழிவான். அதனை உண்டு தேக்கி மகிழலாம்.

குறிப்புரை :

``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்``* என்னும் முறைமையால், `சிவன் பொதுவாகவே யாவர்க்கும் தலைவனாயினும் அவன் சிறப்பாகத் தலைவனாய் நிற்றல் தன்னைச் சார்ந்தவர்க்கே` என்பதை முன்னிரண்டடிகளில் உணர்த்தி `அவனைச் சார்ந்து பயன் பெறுக` எனப் பின் இரண்டடிகளில் அறிவுறுத்துகின்றவ், `அவனைச் சார்தல் பர வெளியிலாம்` என விளக்கினார். `ஒளியும், சோதியும் ஆம் வெளி` என்க. வெளியில் உள்ளவனை ``வெளி`` என்றார். ``நந்தி`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. அகல்கிலனாகிய நாதன்` என்க. `நாதன், பதி` என்பன பொருட் பின்வரு நிலையணி.
இதனால், `உண்மைச் சிவப்பேறு பர வெளிப்பேறே` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.

பொழிப்புரை :

(பதிப்புக்களில் வருகின்ற அதிகாரத்தில் மூன்றாவதாய்க் காணப்படும் இம்மந்திரம் இங்கிருத்தற்குரியது.)
எழுவகைப் பிறப்புக்களில் மேற்பிறப்பை எய்தினவராகிய தேவர்கள் அமுதுண்ண வேண்டித் தான் அதற்கு முன்னே தோன்றிய விடத்தை உண்டதனானே, `எல்லாரினும் மேலானவன் சிவன்` என்பது இனிது விளங்கும். இன்னும்,
``அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை,
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை``*
என்று அருளிச்செய்தபடி, அமுதத்தை உண்டவர் சாவவும், தான் நஞ்சுண்டும் என்றும் ``சாவா மூவாச் சிங்கமாய்`` இருத்தலாலும் அவனது மேன்மை தெளிவாகும். அறிவும், ஆற்றலும் உடையாரினும் அருளுடையாரே மேலானவர் ஆதலாலும், அவ்வருட் பெருக்கம் தன்னையடைந்தார் அமுதுண்ண வேண்டித் தான் நஞ்சத்தை உண்டமையானே தெற்றென விளங்குதலாலும் ``மிக்கார் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டவன் மேலவன்``* ஆகின்றான். அவனைத் தக்கார் உரைத்த தவநெறியில் சென்று அடைந்தால் அங்ஙனம் அடைந் தவர்களைத் தானாம் வண்ணம் அருளுவான். ஆகையால் அவரது பொன்போலும் மொழியால் விளக்கப்படும் ஞானத்தை `இதுவோ ஞானம்` என இகழ்கின்றவர்களை விட்டு விலகும் உபாயத்தை நீங்கள் ஆராய்ந்து அறிவீர்களாக.

குறிப்புரை :

``பணியின் அமுதம் பருகலும் ஆமே`` என மேற் கூறியதனை அனுபவமாக நிறுவியவாறு. `இம் மேலவனை (பராகாசத் தவனை) இகழ்வாரை நீங்குமாற்றையறிதலே ஞானோதயத்தின் முதல் நிலையாகும் என இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.

பொழிப்புரை :

(`ஆகாசமாவது யாது` என்பார்க்கு, `ஆகாசமாவது ஏனை யெல்லாப் பொருள்கட்கும் இடம் தருவது` என்பது விடையாயின், பிற பொருளுக்கு இடம் தருவன யாவும் ஆகாசமாம். அந்நிலையில் பூதங்களில் ஒன்றை மட்டும் `ஆகாசம்` என்றல் இடுகுறியாம். அவ்வாறன்றிக்) காரண வகையால் நோக்கின் `புவனங்கள்` என்றும், `உலகங்கள்` என்றும் சொல்லப்படுவன புற ஆகாசங்களாம். எல்லாப் பொருள்களும் அறிவினுள் அகப்பட்டுத் தோன்றுதலால் நம் அறிவுகள் அக ஆகாசங்களாம். நமது அறிவுகளையும் அகப்படுத்தி நிற்பது சிவனது அறிவு ஆதலின் அஃது உள்ளுக்குள் ஆகாசமாம். அதனை அகப்படுத்தி நிற்பது வேறொன்றில்லை ஆகலின் அதுவே பரமாகாசமாம். அந்த ஆகாசத்தை இந்த உலகிலே பெறுதல் அழகிய `சமாதி` என்னும் நிலையாகும்.

குறிப்புரை :

`அதனைப் பெறவே முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம். புவனங்களாவன அவ்வவ் அண்டங்களைப் புரக்கும் கடவுளரது இடங்களாம். அவர்களது காப்பிற்கு உட்பட்ட அண்டங்களில் உலகங்கள் உள்ளன. ஆதி அறிவு - முதல் அறிவு. அது கருவிகளால் உண்டாகும் பாச அறிவாம். ``அறிவு`` என்பதை, ``சிவத்து`` என்பதற்கும் கூட்டுக. `அதற்கு மேலானது ஒன்று இல்லை` என்பதே ``செஞ்சுடர்ச் சோதி`` என்பதனால் குறிக்கப்பட்டது. இதற்கு `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றில் நின்ற ஆகாசம், அதனைப் பெறும் பேற்றினைக் குறித்தது. தான், அசை. அழகு, இங்கு நிரம்பிய இயல்பைக் குறித்தது. சமாதி, `யோக சமாதியும் ஞான சமாதியும்` என இருவகைத்து. ஞான சமாதியே ஞான நிட்டையாகும்.
இதனால், ஆகாசப் பேறுகள் பலவற்றுள் முடிநிலையான ஆகாசப் பேறே பேறாதல் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.

பொழிப்புரை :

மனம் புறக் கருவிகளோடு கூடிப் புறப்பொருளைப் பற்றும் நனவு நிலை (அவ்விடத்து இன்பமும் சிறிது உளதாயினும்) பொதுவாகத் துன்ப நிலையேயாதலும், அந்த மனம் புறத்திற் செல்லாது அகத்தே அடங்கிய கனவு, உறக்கம் முதலிய நிலைகள் இன்ப நிலையாலும் அனுபவமாக அறியப்படுவன. அந்த முறையை ஆராய்ந்து பார்த்தால், `இன்பமாவது, கருவி கரணங்களின் மேற் செல்லுதலை ஒழிதலே` என்பது விளங்கும். அவ்வொழிவினை எய்தியவன் அடையும் இன்பங்கள் இரண்டு. (உலகின்பம், வீட்டின்பம் என்பன.)

குறிப்புரை :

``கனவுற ஆனந்தம்`` எனப் பின்னர்க் கூறினமையால் முன்னர் `நனவு துன்பமாகும்` என்பது பெறப்பட்டது. வினவுதல் - ஆராய்தல். மீது - கருவி கரணங்களின் மீது. `மீது செல்லுதல்` என ஒருசொல் வருவிக்க. ஒழிவு - ஒழிதலையுடைய நிலை. பெத்த நிலையில் உளதாகும் இம்முறைமையை உவமையாகக் கொண்டு உணரும் உவம உணர்வால் `முத்தி நிலையின் இயல்பையும் உணரலாகும்` என்பார். ``இனம் உற்ற ஆனந்தி ஆனந்தம் இரண்டு`` என்றார். இனம், `ஆனந்தம்` என்னும் சாதி, ஆனந்தி ஆனந்தத்தை எய்தும் உயிர். `அஃது எய்தும் ஆனந்தம் இரண்டு என்க. முன்னர்க் கூறியவாற்றால் `அவ்விரண்டு இவை` என்பது விளங்கலின், வாளா, ``இரண்டு`` என்று போயினார். வீட்டிற்கு நேர் வாயிலாகிய `ஞானம் தோன்றுதல் கருவி கரணங்களினின்று நீங்குதல்` என்றபடி. உலகில் விழிப்புத் துன்பமாகவும், கனவும், உறக்கமும் இன்பமாகவும் உணரப்படுதல் வெளிப்படை. இது பற்றி ஏகான்ம வாதிகள் சகல சுழுத்தியையே, `பிரமானந்த நிலை` என்பர்.
இதனால், ஞானோதயத்தின் முதற்படி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால்
கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.

பொழிப்புரை :

சிவபெருமானை, மந்திரம் 337-இல் கூறியவாறு, `பிரமன் தலையைக் கிள்ளிக் கையில் ஏந்தியவன்` எனவும் மந்திரம் 340-இல் கூறியவாறு `யானையை உரித்தவன்` எனவும், `தக்கனுடைய சாபத்திற்கு அஞ்சி வந்து அடைக்கலம் புகுந்த சந்திரனைத் தலையில் அணிந்து காத்தவன்` எனவும் மற்றும் இவ்வாறு வரும் வரலாறுகள் பலவற்றால் உயர்ந்தோர் புகழ்ந்து கூறிய சொற்களால் அவனையே, `அரியவன்` என்றும், பெரியவன் என்றும் துணிந்து யான் அவனுக்கு ஆட்பட்டதல்லது, அவனை யான் நேரில் `கறுப்பன்` என்றோ, `சிவப்பன்` என்றே பார்த்து உணர்ந்ததில்லை.

குறிப்புரை :

இது, நாயனாரது தொடக்க நிலையைக் கூறியது. ஏனெனில், சிவனை நிருவிகற்பமாக உணர்ந்ததையே கூறிற்று ஆதலின்,
``அன்றும திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்!
இன்றும் திருஉருவம் காண்கிலேன்-என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்,
எவ்வுருவோ நின்னுருவம் ஏது``3 என்ற அம்மை திருவாக்கு, `சிவன் உருவிலன்` என்பதை உணர்ந்திற்றாதலின் அஃது இதனின் வேறு என்க.
இதனால், `அனுபூதிமான்கள் அருளிச்செய்த திருமொழியை ஐயுறாது பற்றுதலே ஞானத் தோற்றத்தின் முதல் நிலை` என்பது கூறப்பட்டது. ஞான சம்பந்தரும்,
``ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி,
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே``l

பண் :

பாடல் எண் : 3

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

பொழிப்புரை :

ஆணவ இருளால் அறிவை இழந்த நின்ற உயிருக்கு அந்த ஆணவ இருளைச் சிறிதே நீக்கும் விளக்குப் போல்வன மாயா காரியங்களாகிய தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகள். அறிவை விளக்கி நிற்கும் கருவிகளாகிய அவைகளையே `அறிவாகிய தான்` என உயிர் மயங்குகின்றது. அம்மயக்கம் நீங்கி, அவ்வுடம்புகளைத் தனக்கு வேறாக நீக்கி, அறிவு விளக்காம் தன்னைத் தான் உணர்ந்து, பின் தன் அறிவிற்குள்ளே அறிவாய் விளங்கும் திருவருளை விளங்கச் செய்து, பின் அந்தத் திருவருளாகிய விளக்கினுள் தானாகிய விளக்கினை, வெயிலின்முன் உள்ள பகல் விளக்குப்போல அடங்கி விளங்கச் செய்யவல்லவர்க்கு அந்தத் திருவருளாகிய ஒளியை உடையவனாகிய சிவனது இன்பக்கடலைப் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``விளக்கு``ப் பலவற்றுள் முதலாவது, மாயா காரியமாகிய உடம்புகள். இரண்டாவதும், மூன்றாவதும், ஆறாவதும் உயிரினது அறிவு. ஏனையவை திருவருள். கழல் - திருவடி, அஃதே சத்தி; அஃது அறிவாயும் இன்பமாயும் இருக்கும். அறிவாய் இருத்தல் முன்பு ``விளக்க`` எனக் கூறப்பட்டமையால், இங்கு, ``கழல்`` என்றது இன்பத்தையாம்.
இதனால், ஆசிரியரது அருள்மொழி வழியே தத்துவ சுத்தி, ஆன்ம தரிசனம், சிவ தரிசனம், சிவ யோகம் என்பன முறையாக நிகழ்தலே ஞானோதயத்தின் வளர்ச்சியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்ந் தொழியாது, அவற்றின் மெய்ம்மையை உணர்ந்தவரிடத்தில்தான் மெய்ப்பொருளாய் உள்ள சிவனும் விளங்கியிருப்பான். மெய்ம்மையை உணராதவரிடத்தில் அவன் விளங்குதல் இல்லை. ஆகவே, மெய்யுணர்வி சிறப்பினை உணர்ந்து அதனை ஒருவன் பெற்றுவிட்டால், உடனே சிவன் அவனிடம் வந்து விளங்குவான்.

குறிப்புரை :

``தத்துவம்`` என்றது மெய்ம்மையை; பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்தலாவது. வானவில் தோன்றினஆல், `இது மிக அழகிதுய பல நிறங்களைக் கொண்டு விளங்குகின்றது இஃது எங்கிருந்து வந்தது? அதிசயம்! அதிசயம்! என்று இவ்வளவில் உணர்தல் போல்வது. மெய்ம்மையை உணர்தலாவது, வானவில்லைக் கண்டபொழுது, இஃது ஓர் உண்மையான வில் அன்று. பெருவட்டமாகிய சூரியனது வடிவில் ஒரு பாதியின் பிரதிபலனம். நமக்குப் பின்னால் ஓரிடத்தில் மழை பெய்கின்றது. அதற்கு அப்பால் சூரியன் பிரகாசிக்கின்றான். அவனிடத்தில் உள்ள பல நிறக் கதிர்களும் மழைத்துளிகளின் இடையே ஊடுருவி, நமக்கு முன்னால் பிரதிபலித்தலால் இந்தப் பலநிற அரைவட்டம் நமக்கு வில்போலத் தோன்றுகின்றது. இஃது உண்மையில் வில் அன்று. பின்னால் பெய்கினஅற மழை நின்றால் இந்தப் பிரதிபலனமும் மறைந்து விடும் என இவ்வாறு அதன் உண்மையை உணர்தல் போல்வது. இந்த உண்மை உணர்வே மெய்யுணர்வே - தத்துவ ஞானம். பொது உணர்வும், ஐய உணர்வும், திரிபுணர்வும் `ஞானம்` எனப்படா. `அஞ்ஞானம்` என்றே சொல்லப்படும். ஆகவே, அந்த அஞ்ஞானம் உள்ள இடத்தில் சிவன் விளங்கமாட்டான். `கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்``* என்னும் ஞானசம்பந்தர் திருமொழியில், ``கல்லா நெஞ்சு`` என்பது, `ஞானத்தைக் கல்லாத நெஞ்சு` என்றும், `கற்றாலும் கல்லுப்போல நின்று உருகாத (கல் ஆம் நெஞ்சு) நெஞ்சு` என்றும் இருபொருளையும் தருவது. ``கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை``* என்னும் திருவாசகத் தொடரில் ``கல்லா மனம்`` என்பதும் அத்தகையது. மூன்றாம் அடியில் வந்த `அறிதல்,` அதன் காரியத்தை உணர்த்தி நின்றது. தத்துவத்தை உணரும் முறையே முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.
இதனால், ஞானமாவது `தத்துவ ஞானமே` என்பதும், அதன் இன்றியமையாச் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பினின் நூறும் ஆரமு தாகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

பொழிப்புரை :

பசிய பொன்போல விளங்கும் தனது விரிந்த சடையின்கண் குசும்ப மலரின் வாசனை கமழ நிற்கின்ற சிவன் ஆகாயத்தைப்போல எல்லாப் பொருளையும் தன்னுள் அடங்கக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானத்திலிருந்து கசிந்து ஊறுகின்ற அரிய அமுதமாவான்.

குறிப்புரை :

என்றது, `உதயமான ஞானம் பின் முறுகி வளரச் சிவானந்தம் பெருகும்` என்றவாறு. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``ஒன்ற`` என்பது உவம உருபு. `சிவஞானம் ஆகாசம் போன்றது` என்பது முன் அதிகாரத்தில் விளக்கப்பட்டது. அசும்பின் - அசும்பாக. அசும்பு - கசிவு. குசும்ப மலர். `செந்துருக்க மலர்` என்பர்.
இதனால், தத்துவ ஞானத்தின் சிறப்பும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

பொழிப்புரை :

முத்து, வைரம், பவளம், கட்டியான பசும்பொன், மாணிக்கம் ஆகியவற்றில் உள்ள ஒளிகளைப் போல அண்டங்களால் வேறறக் கலந்து நிற்கின்ற ஞான ஒளியை நீவிர் அவற்றினின்றும் வேறுபடுத்திப் பெறுவீர்? சொல்லுமின்.

குறிப்புரை :

`அதனை அவ்வாறு அவ்அண்டங்களில் வைத் துணர்தலே அதனைப் பெறுதலாகும்` என்றபடி. அவ்வாறு உணர்தலைச் ``சுத்த பராயோகம்`` எனத் துகளறு போதம் கூறும்.8 இவ்வுணர்வின் நிலையையே, ``மரத்தை மறைத்தது மாமத யானை`` என்னும் மந்திரத்தில், ``மரத்தில் மறைந்தது மாமத யானை`` என்றும், ``பரத்தில் மறைந்தன பார்முதல் பூதம்`` என்றும் கூறினார். கட்டியை, ``தொத்து`` என்றார். `மாணிக்கத்தின் தூவொளி ஒத்து` என மாறிக் கூட்டுக.
இதனால், ஞானக் காட்சியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

பொழிப்புரை :

(`நான்` என்று உணர்கின்ற என்னையன்றி, எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இல்லை என்று இறுமாந்திருந்த எனக்கு, `தான் என்று ஒருவன் இருக்கின்றான்`` என்று ஞான குரு உணர்த்த, அவர் உணர்த்திய முறையில்,) `நான்` என்கின்ற எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இருத்தலை முறையான ஆய்வினால் ஆராய்ந்து உணர்ந்தேன். அங்ஙனம் அவனது இருப்பை, மட்டும் உணர்ந்த யான், எனது இயல் பிற்கு வேறாக அவன்தான் கொண்டிருக்கின்ற இயல்பு யாது` என ஆராயும் பொழுது அவன் என்னின் வேறாய் இல்லாது, என்னில் யானாகவே கலந்து நிற்றலையும், முதற்கண், `நான் அன்றித் `தான்` என்று ஒருவன் இல்லை` என யான் உணர்ந்திருந்த அந்த உணர்வையும், பின்னர், `என்னின் வேறாய், `தான்` என்று ஒருவன் இருக்கின்றான்` என்று உணர்ந்த உணர்வையும், இது பொழுது `என் இயல்பு யாது, அவன் இயல்பு யாது` என ஆராயும் ஆராய்ச்சி உணர்வையும், அந்த ஆராய்ச் சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற் கின்றான்` என உணர்ந்த உணர்வையும், அந்த ஆராய்ச்சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற்கின்றான்` என உணர்ந்த உணர்வையும் `தந்தவன் அவனே` என்னும் உணர்வையும் அவனே அருளினான். அதனஆல், நான், `நான்` என என்னை உணர்தலை அறவே ஒழித்து, அவனை மட்டுமே உணர்ந்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகளையே `நான்` என உணர்தல் பாச ஞானம். அஃது இங்குக் குறிக்கப்படவில்லை. பின்னர், `அவ்வுடம்புகள் அனைத்தும் சடம் ஆதலின் அவை சித்தாகிய நானல்ல` எனத் தன்னை உணரும்பொழுது, பாசத்தினும் மேம்பட்ட தனது மேம்பாடு விளங்குகின்ற நிலையில், `நானே பரம்பொருள்; எனக்கு மேலாய் ஒரு பரம்பொருள் இல்லை` என உணர்தல் பசு ஞானம். `அதுவும் அஞ்ஞானமே` எனவும், `உன்னின் வேறாய், உனக்கு மேலாய், இதற்குமுன் உனக்கு உண்டான பாச ஞானத்தையும், இப்பொழுது உண்டாகிய பசு ஞானத்தையும் உள் உணர்வினுள் உணர்வாய் இருந்து நல்கியவன் அவனே` என ஞானகுரு உணர்த்த, அதனால், பாசங் களையோ, எனது உணர்வையோ கண்ணாகக் கொள்ளாமல், அவனது உணர்வையே எனது உணர்விற்குக் கண்ணாகக் கொண்டு நோக்கிய பொழுது `நான்` என என்னை உணர்கின்ற உணர்வு தலைக்காட்டாமல், `அவன்` என்னும் உணர்வே மேலோங்கி நிற்பது பதிஞானம். அந்தப் பதிஞானத்தையே இங்கு உணர்த்தும் முக்ததால் பசுஞானம் விலகும் முறையும் உணர்த்தப்பட்டது. நாடுதல் - ஆராய்தல்.
``ஞான முதல்வன்`` என்பதில் ஞானம்,உயிரினது உணர்வு. அவ்வுணர்விற்கு முதல்வனாதலாவது, உயிரின் உணர்வு கேவலப் பட்டு மூடமாய்க் கிடந்ததனை முதற்கண் கருவி கரணங்களோடு கூடி பாச ஞானமாய் நிகழச் செய்து, பின்பு ஆராய்ச்சியால் அதனைப் பசு ஞானமாய் நிகழப் பண்ணி, முடிவில் பதி ஞானமாய் நிகழச் செய்தல். இவற்றுள் முன்னை இரண்டும் பெத்த நிலையும். பின்னது முத்தி நிலையுமாகும். பெத்த நிலையைத் திரோதான சத்தியாலும், முத்தி நிலையை அருட்சத்தியாலும், சிவன் செய்கின்றான். `நானும் நானென்று நினைத்தலை ஒழிந்தேன் என மாற்றியுரைக்க.
பாச ஞானம் உள்ளபொழுது அதற்குப் பசுவும், பதியும் புலன் ஆதல் இல்லை. பசுஞானம் உள்ளபொழுது பாசமும் பசுவும் புலன் ஆதல் இல்லை. பதிஞானம் வந்தபின் பாசமும், பசுவும் புலன் ஆதல் இல்லை. ஒவ்வொரு நிலையில் சிற்சில பொருள்கள் புலனாகாமை பற்றி, `அவைகள் அறவே இல்லை என வாதிடுதல் அறியாமையின் பாலதாம். ஆகவே, பாரமார்க்கத்தில் (உண்மை நிலையில்) பசு பாசங்கள் புலனாகாமை பற்றி, `பதி ஒன்றே உளது; ஏனைய இரண்டும் இல்லை. அவை பொய்` என்றல் உண்மையாமாறில்லை.
``வேதசாத் திரம்,மிருதி, புராணகலை ஞானம்,
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானஎலாம் பாச ஞானம்;
நணுகி ஆன்மா இவை கீழ் நாட லாலே
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசுஞானம்``
-சுபக்கம், சூ-9,2.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளால் இவ்வியல்புகளையெல்லாம் தெற்றென உணர்க.
இதனால், ஞானங்களின் வகைகளை உணர்த்தும் முகத்தால், `உண்மை ஞானம் இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

பொழிப்புரை :

ஞானமாகிய உயர்நெறியில் முதற் கண்ணதாகிய ஞானத்திற் கிரியையாவது, நிலம் முதல் நாதம் ஈறாய்ச்சுட்டி அறியப் படுகின்ற அனைத்தையும் `சடம்` எனவும், அவற்றில் அவையேயாய்க் கலந்து ஒன்றி நிற்கின்ற உயிரை, `சித்து` (அறிவு) எனவும் இவ்வாறு இரண்டன் தன்மைகளும் வேறு வேறாதலை ஆராய்ச்சியால் உணர்ந்து, அங்ஙனம் உணர்கின்ற உயிர் அவை யனைத்தையும் தள்ளித் தன்னை அவற்றின் வேறாக உணர்தலாம்.அப்பால் ஞானத்தில் யோகமாவது, தான் சடத்தின் வேறாதலை யுணர்ந்தபின் மீட்டும் அவற் றின்கண் வீழ்ந்து தன்னை அவையாக மயங்காமல், உயர்நிலையில் நிற்றலாம். (உயிர் எப்பொழுதும் தனித்து நில்லாது ஆகையால் தனக்குத் தாரகமாகிய திருவருளில் நிற்றலே சடத்தில் வீழாது நன்னிலைக்கண் நிற்றலாகும் என்பது கருத்து. `நன்மை` என்றது திரு வருளையேயாம்.) இனி ஞானத்தில் ஞானமாகிய முடிநிலையாவது, நாதத்தின் துணையில்லாமலே பொருள்களை நன்குணரும் நிலையாம்.

குறிப்புரை :

இங்குச் சரியை கிரியையுள் அடக்கப்பட்டது. `சரியையே யன்றி யோகமும் சில இடங்களில் கிரியையில் அடக்கப் -படும்` என்பது, `கிரியையென மருவும் அவையாவும் ஞானம் கிடைத் -தற்கு நிமித்தம்``8 என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம்.
``கேட்டலுடன், சிந்தித்தல், தெளிதல், நிட்டை
கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்``3
யோகம், ஞானத்தில் ஞானம்` எனப்படும். இங்கு ``மோனம்`` என்பதும் ஞானத்தோடு ஒருபொருட் சொல்லாய் வந்தது. கேட்கவும், சிந்திக்கவும், தெளியவும் படுவது குருமொழி. ``அந்தம்`` இரண்டில், முன்னது `முடிவு` என்றும், பின்னது நீங்கிய நிலை` என்றும் பொருள் தந்தன. `நான் அறிவு என்று ஓர்தல்` என மாற்றியுரைக்க. ``பின்னர் அறிவு என்று ஓர்தல்` என்றதனால், முன்னர், `நாதாந்தம் சடம் என்னும் நன்னெறி` என்பது பெறப்பட்டது. ஓர்தல் - ஆராய்தல்; சிந்தித்தல். சரியையைக் கிரியையுள் அடக்கினாராகலின், அதற்கேற்பக் கேட்டலைச் சிந்திதலுள் அடக்கி, ஓர்தலையே கூறினார்.
கேட்டல் முதலிய நான்குமே `தசகாரியம்` எனப் பத்தாக விரித்துணர்த்தப்படும். `எத்தகையோர்க்கும் நாதம் இல்லையேல் பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகாது` என்பதை `நாதம் இல்லாமலே பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகுமாயின் அதுவே முத்தி நிலையாம்` என்பதையும்,
``மூவகை அணுக்க ளுக்கும்
முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில்
விளங்கிய ஞானம் இன்றாம்;
ஓவிட விந்து ஞானம்
உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன்
சேவடி சேர லாமே`` -சுபக்கம் - சூ, 1.26.
என்னும் சிவஞான சித்தியால் அறிக. நன்னெறிக்கு வாயிலாதல் பற்றி கிரியையே இங்கு ``நன்னெறி`` எனப்பட்டது. `அறிதற் கருவி` என்னும் பொருளதாகிய `வேதம்` என்பது, இங்கு `அறிவு` என்றே பொருள் தந்தது.
இதனால், ஞானத்தின் படிநிலைகள் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.

பொழிப்புரை :

பிறவித் துன்பத்தினின்றும் தப்ப வல்லவர்கட்கு அவர்தம் உயிர்போலச் சிறந்த நிற்பன சிவஞானமும், அதனால் அறியப்படுகின்ற சிவமாகிய கடவுளுமாம். அவர்கள் புறத்தே பரந்து சென்று அலையாமல் அகத்தே ஒடுங்கி அமைதியுறுதற்குத் துணை யாவது பிரணவ மந்திரம். அம்மந்திரத்தின் வழியாக அவர் அகத்தே ஒடுங்கி, அறிவினுள் அறிவாய் நிற்கும் சிவத்தை அடைவார்கள்.

குறிப்புரை :

பிரணவ யோகத்தாலே அறிவு, அறிவினுள் அறிவை அறிந்து அடங்குதல், மேல் `பிரணவ சமாதி` முதலிய அதிகாரங்கலில் விளக்கப்பட்டது. அங்ஙனம் அடங்கினவர்களே சிவஞானமாகிய கண்ணைப் பெற்றுச் சிவனை நேரே கண்டு அடைவார்கள். `சிவன் பிறப்பிலியாதலின், அவனையடைந்தோரும் பிறவியிலராவர்` என்பது கருத்து. ``முக்குணங்கள்வாய் மூடா ஊடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``9 என்பதனாலும் இதனை அறியலாம். ``ஒடுக்கம்`` என்பது அதற்காம் கருவியை உணர்த்திற்று.
இதனால், சிவஞானமே ஞானமும், சிவமே பரமும் ஆதலை வலியுறுத்தி, `உய்தி வேண்டுவார் அந்த ஞானத்தால், அந்தப் பொருளை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.

பொழிப்புரை :

(பிறபொருள்களை அறிதல்போல அறிவால் அறியாது, அறிவிறந்தே அவனை அறிதல் வேண்டும்.) அவ்வாறு அறிவார்க்கு அவன் அவர்தம் அறிவினுள் அறிவாய் விளங்கி, தேவர்கள் கடலைக் கடைந்து வருந்திப்பெற்ற அமுதம்போல வருந்தாது பெறப்பட்ட அமுதமாய்ப் பேரின்பத்தை விளைப்பான். அங்ஙனமாயின், (பெற்றதைச் சிறிதாயும், பெறாததைப் பெரிதாயும் கருதும் பழைய பழக்கத்தின்படி அவனைப் பேணாதொழிவார்க்கு அவன் முன்போல அயலவனாய் விடுவான். ஆதலால், அவ்வாறின்றிப்) பின்னும், பின்னும் பேணி ஒழுகுவாரை விட்டு அவன் நீங்குதல் இல்லை. ஆனந்த வடிவினன் ஆதல் பற்றி, `நந்தி` எனப்பெயர் சொல்லப்படுகின்ற அவன் அன்புடையார்க்கே அவ்வாறு உடனாய் நிற்பன்.

குறிப்புரை :

காணுதல், இங்கு அறிதல். ஆகவே, ``கண்ணின் மணி`` என்றதும், அறிவினுள் அறிவாயிற்று.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``3
என்றபடி, பெற்றதைப் பேணாதிழத்தல் பேதையார் செயலாதலின் ``பேண வல்லார்க்குப் பிழைப்பிலன்`` என்றார். பிழைத்தல் - தவறுதல். ஆணம் - ஆன்பு. ``ஆணம் இல் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக் - காண மிலாதார் கடுவணையர்``l என்றது காண்க.
`ஆணம் பெய்ய` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், தலைப்படுதலேயன்றிப் பேணுதலும், அன்பு செய்தலும் ஞானத்தினஅ பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

பொழிப்புரை :

``ஓம்`` என்று எழும் இசையோசையின் உள்ளீடாய் நிற்கும் எழுத்தோசையாகிய நாதம் போல, சுத்த மாயா உலகத்தில் வாழும் ஞான ஒளியினர் உயிர்க்குயிரான பரம்பொருளாக என்றும் விரும்பப்படுபவன் எங்கள் சிவபெருமான். அவனது அருள் சத்தி நிபாதர் அல்லார்க்கு ஞானம் இல்லாமையால் சேயனவாயினும் சத்திநிபாதராய் ஞானத்தைப் பெற்றவர்க்கு அவர்தம் அகத்தே விளங்குவனவாம்.

குறிப்புரை :

``மேல் நின்ற தேவர்`` என விதந்தோதினமையால் அதற்கு இதுவே பொருளாகும். `விழுப்பொருளாகிய எம்பெருமான் அடி` என இயைக்க. ஆய்நின்ற - ஆய்வின்கண் நின்ற ஆய்வு, இங்கு ஞானம். முன்னிரண்டடிகள் இன எதுகையும் பின்னிரண்டடிகள் ஆசெதுகையும் பெற்றன.
இதனால், `ஞானியரே சிவனை இம்மையிலும் பெற்று விளங்குவர்` என்பது உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வைத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.

பொழிப்புரை :

(காரியங்கள் ஒடுங்குதற்கு இடமாதல் பற்றிக் காரணங்கள் `பாழ்` எனப்படும். அதனால்,) ``எப்பாழும் பாழாம் யாவுமாய்`` என்றது, எக்காரணங்களும் ஒடுங்குதற்குக் காரணமாய் உள்ள பரம காரணங்கள் எல்லாமாகி` என்றதாம். உலகிற்குக் காரணம் தத்துவங்கள். அவை தோன்றி ஒடுங்குதற்கு இடமான பரம காரணங்கள் சுத்த மாயையும், அசுத்த மாயையும். ஓராற்றால் பிரகிருதி மாயையும் பரம காரணமாகக் கொள்ளப்படும். கலப்பினால் மெய்ப்பொருள் அம்மும்மாயையாகியும் நிற்கும். ஆயினும் மாயைகளின் தன்மே வேறு; மெய்ப்பொருளின் தன்மை வேறு ஆதலின் பொருள் தன்மையால் மெய்ப்பொருள் அம்மாயைகளின் வேறாகியும் நிற்கும்.

குறிப்புரை :

இனி இரண்டாம் அடியிற் கூறப்பட்ட பாழ்கள் பரம காரணத்தைக் குறியாது, அவற்றினின்றும் தோன்றிப் பிறவற்றிற்கும் காரணமாகின்ற இடைநிலைக் காரணங்களாம் தத்துவங்களைக் குறித்தன. மேல் உள்ள மூன்று தத்துவங்களாவன, `இலய தத்துவம், போக தத்துவம், அதிகார தத்துவம்` என்பன. அவை முறையே இரண்டும், ஒன்றும், இரண்டும் ஆக ஐந்தாம் முதல் இரண்டும் சிவம், சத்தி. இடை ஒன்று சாதாக்கியம். இறுதி இரண்டு ஈசுரம், சுத்தவித்தை. கீழ் உள்ள மூன்று தத்துவங்களாவன, `காரண தத்துவம், கஞ்சுக தத்துவம், குணதத்துவம்` என்பன. காரண தத்துவம், மாயா தத்துவம், கஞ்சுக தத்துவம், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், இவ்வைந்தில் அடங்கும் குண தத்துவம் சித்தம் முதலிய இருபத்து நான்கு. முன்னுதல் - நினைத்தல்; சங்கற்பித்தல். அஃதாவது மும்மாயைகளினின்றும் இம் மூவகைத் தத்துவங்களும், பின் அவற்றின் காரியங்களும் `இவ்விவ்வாறு தோன்றுக` எனவும் `இத்துணைக் காலம் நிலைபெற்றுச் செயலாற்றுக` எனவும், `இனி இப்பொழுது ஒடுங்குக` எனவும் சங்கற் பித்தல். இதனானே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும், அவற்றிற்குக் காரணமாம் மறைத்தல் தொழிலும் அவற்றின் காரியமாய் அருளல் தொழிலும் நடைபெறும். ``இப்பாழும்`` என்றதனோடு இயைய இன்னவாறும்` எனவந்த எண்ணும்மை தொகுத் தலாயிற்று. `இங்குக் கூறிய காரணங்களில் ஒன்று` என்றோ, அவையல்ல வாயின் `வேறு இன்ன தன்மையது` என்றோ ஒன்றதனோடு சார்த்திச் சொல்ல ஒண்ணாத இயல்பினது, பொதுவாக, `அது` எனச் சுட்டிச் சொல்லப்படும் மெய்ப் பொருள். ஆயினும் அதனைப் பற்றி உணர் வார்க்கு அது பேரின்பப் பொருளாய், உயிரினது அறிவுக்கு மேலான அறிவாய், ஆனந்தமாய் உள்ளது.
`சத்திய ஞானம்` என்றது, `சத்துச் சித்து` என்றபடி. எனவே, மெய்ப் பொருளின் உண்மை இயல்பு, `சத்துச் சித்து ஆனந்தம்` என்றதாயிற்று. சத்து என்றும் ஒருபடித்தாய்த் திரிபின்றியிருத்தல். சித்து - அறியாமை சிறிதும் இன்றி அறிவேயாய் இருத்தல். ஆகவே, அறிவிக்க. வேண்டாது தானேயறிதலும், ஒரு காலத்து ஓரிடத்து ஒன்றை மட்டும் அறிதல் என்பதின்றி, எக்காலத்தும், எவ்விடத்தும் எல்லாப் பொருளையும் அறியும் அறிவாதலும் தானே பெறப்பட்டது. ஆனந்தம் - துன்பக் கலப்பு இன்மையால் எஞ்ஞான்றும் வரம்பின்றி விளையும் இன்பமாதல். தற்பரம் - தனக்கு (உயிர்கட்கு) மேல், தன், சாதியொருமை. ``தான்`` என்பது தேற்றப்பொருளில் வந்தது.
``அது`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``ஆகும்`` என்றது, இயற்கையைச் செயற்கைபோலக் கூறும் இலக்கணையாய் உளதாதலைக் குறித்தது.
`காரணப்பொருள்கள் அனைத்திலும் தான் அவையேயாய்க் கலந்தும், பொருள் தன்மையால் வேறாகியும் நின்று தனது சங்கற்ப மாத்திரையானே ஐந்தொழிலை நடாத்துவதாயினும் மெய்ப்பொருள் பிறிதொரு பொருளோடு சார்த்தி, `இன்ன தன்மையது` எனச் சொல்ல ஒண்ணாத இயல்பினையுடையது. சத்தாய்ச் சித்தாய், ஆனந்தமாய் இருத்தலே அதன் உண்மையியல்பு` என்பது இம்மந்திரத்தின் திரண்டபொருள். பின்பு ``கீழுள முப்பாழ்`` என்றதனால் முற்கூறிய முப்பாழ் `மேல் உள` என்பது பெறப்பட்டது.
``ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றும் குறியொன் றிலாமையினால் - ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை; ஒவ்வாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று``8 என்னும் திருக்களிற்றுப்படியாரைக் காண்க.
இதனால், மெய்ப்பொருளின் பொதுவியல்பு சிறப்பியல்புகள் தொகுத்துக் கூறப்பட்டன.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``தொம்பதம் தற்பதம்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்தில் `முத்துரிய` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

பொழிப்புரை :

சிவனது சத்தி `பரா சத்தி` என்றும், `ஆதி சத்தி` என்றும் இரண்டாய் இருக்கும். (பராசத்தியே அருட் சத்தியும், ஆதி சத்தியே திரோதான சத்தியும் ஆகும்.) அவையிரண்டும் வேறு வேறல்ல. அஃது எது போல்வது எனின், மணியின்கண் (இரத்தினங் களில்) அதனிடத்தே நின்று அதனையே விளக்கி நிற்பதும், வேறிடத் திலும் சென்று பிற பொருள்களைப் பற்றுவதும் ஆகிய ஒளி செய்கையால் இரண்டாதல் அல்லது பொருளால் இரண்டாகாமை போல்வது. மணியொளி மணியையே விளக்கி நிற்குமிடத்து `பிரகாசம்` என்றும், பிற பொருள்மேல் பாயுமிடத்து `காந்தி` என்றும் சொல்லப்படும். (காந்தியே சோபை) இனி ஆதிசத்தியும் `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாம். ஆதி சத்தி இவற்றின் வேறல்ல வாயினும் அதனையும், பரை ஆதியின் வேறல்ல வாயினும் அதனை -யும் வேறு வேறாக வைத்து எண்ணினால், `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` எனச் சத்திகள் ஐந்தாகும். அதுவும் எதுபோலும் எனின், குவளை மலரின் குணம் ஒன்றேயாயினும் அதனை, பொலிவு, சிறப்பு, நிறம், மணம்,அழகு` என இவ்வாறு வேறுவேறாக உணர்வது போலும். சத்தி குணமும், சிவன் குணியும் ஆகலின், குணமாகிய சத்தி வேறுபாடு ஐந்தனோடு குணியாகிய சிவம் ஒன்றையும் கூட்டி எண்ண மெய்ப்பொருள் ஆறு கூற்றதாம்.

குறிப்புரை :

மன் சத்தி - நிலையாய் உள்ள சத்தி; மூல சத்தி. அது பரா சத்தி. இது காலத்தைக் கடந்தது. அதனால் அநாதி. இதினின்றும் ஒரு காலத்தில் தோன்றுவது ஆதி. மணியினது `ஒளி, சோபை` என்பவற்றை ``மன் சத்தி, ஆதி`` என்பவற்றோடு நிரல் நிறையாக இயைக்க. ``சத்தி`` என்பதை ஆதிக்கும் கூட்டுக. ஒளியாகிய `அன்னதோடு, சோபையாகிய அன்னதோடு` எனத் தனித் தனி இயைக்க. ``ஒப்ப`` என முற்று. மிடல் - சத்தி ``ஒன்றா மாறாது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `மிடல் ஒன்றாமாறு, உற்பலம் ஒண்மை முதலியன ஆமாறுபோலும்` என முடிக்க. உற்பலம் - குவளை. அது முன்னர் பொருளாகு பெயராய் அதன் மலரையும், பின்னரும் அவ்வாகுபெயராய், அதன் குணத்தையும் குறித்த இருமடியாகுபெயர். ஒண் - ஒண்மை. சீர் - சிறப்பு. அது மலர்களுள் மேலானதாகப் புகழப் படுதற்றன்மை. ``சோபை`` என்பதன்பின், `ஆனவாறு` என்பது எஞ்சி நின்றது. ``ஆறும் ஆனது`` என்னும் உம்மை, `ஒன்றானதேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``ஆனது`` என்னும் பயனிலைக்கு, `மெய்ப்பொருள்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது.
இதனால், மெய்ப்பொருள் `தானும், தன் சத்தியும்` என இரு கூற்றாகப் பின் சத்தி காரணமாகப் பல கூற்றதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.

பொழிப்புரை :

சத்தி, சிவம் இவற்றது இயல்பைச் சொல்லுமிடத்து முறையே பர ஞானமும், அதனால் தரப்படுகின்ற முடிவில் பொருளும் ஆகும். இனிச் சிவம் பிறிதொன்றிலும் இல்லாத, தனி ஒரு பேரானந்தப் பொருளுமாம். அந்தச் சிவத்தின் மேனிலைச் சத்தியே பக்குவான் மாக்களை ஆட்கொள்ளுதற்கு இந்நிலவுலகில் வந்து உலாவச் செய்கின்ற குரு வடிவும் ஆகும். இங்குக் கூறிய பரஞானம், முடிவின்மை, ஆனந்தம், ஆன்மாக்களை ஏற்ற பெற்றியால் ஆட்கொள்ளும் பேரருள் என்பனவற்றுக்கு முன் மந்திரத்திற்கூறிய குவளை மலரே உவமையாம்.

குறிப்புரை :

``சாற்றுங்கால்`` என்பதனை, ``சிவம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உய்த்தல் - தரப்படுதல். ``அனந்தம்`` என்பதிலும் எண்ணும்மை விரித்து, எஞ்சிநின்ற `ஆம்` என்னும் பயனிலையை வருவிக்க. அனந்தம் - முடிவின்மை. முடிவு காலம். இடம் இரண்டு பற்றியது. காலம் பற்றிய முடிவின்மை` நித்தியத்துவத்தையும், இடம் பற்றிய முடிவின்மை பூரணத்துவத்தையும் விளக்கும். நித்தியத்துவமே மெய்ம்மையும், பூரணத்துவமே பெருநிறைவும் ஆகும். மெய்ப் பொருள் `மெய்யாயும், அறிவாயும், முடிவிலதாயும் உள்ளது` என்பதை தைத்திரீய உபநிடதம், ``சத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம``8 எனக் கூறிற்று. சத்தி தன்னிலையில் நிற்குங்கால் `சொரூப சத்தி` என்றும், பிறவற்றோடு தொடர்புற்று நிற்குங்கால் `தடத்த சத்தி` என்றும் சொல்லப்படும். `அவற்றுள் சொரூப சத்தியே அருளுருவாய் வந்து ஆட்கொள்ளும்` என்பது பின் இரண்டடிகளில் கூறப்பட்டது. முன் மந்திரத்திற்கூறிய உற்பல உவமையை, `பூவண்ணம், பூவின் நிறம் போல மெய்ப்போத இன்ப மாவண்ண மெய்கொண்டவன்``3 என்னும் பரஞ்சோதி திருவிளையாடலாலும் அறிக.
இதனால், `மேற்குறித்த சத்தி சிவங்களாவன இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.

பொழிப்புரை :

மேல் உவமையாகக் கூறிய குவளை மலரின் நிறம், பொலிவு, மணம், அழகு என்பன அம்மலரின் வேறாகாததுபோல உயிர் சிவனிடத்தில் வேற்றுமையின்றி ஒன்று பட்டு நின்றால், `சிவாய` எனவும், `சிவத்துவமசி` எனவும் சொல்லப்படும் மகாவாக்கியங் களின் பொருளாய் உள்ள சிவனது அனந்த சத்தி, அலுத்த சத்தி முதலிய எண்குணங்களும் உயிரினிடத்து விளங்கி நிற்க, உயிர் சிவனாகியே நிற்கும்.

குறிப்புரை :

உரு - அழகு. `உற்பலத்தில்` என ஏழாவது விரிக்க. `தரமாய்` என ஆக்கம் விரிக்க. மருவுதல், அறிந்து நிற்றல். முப்பதங் களில் இரண்டொன்றையே முதற்குறிப்பாகக் கூறி, மகா வாக்கியங் -களை நினைப்பித்தார். சொரூபம், இங்குப் பொருள். சிவனது எண் குணங்களில் இரு குணம் `சத்தி, என்னும் பெயராற் சொல்லப் படுதலின். அவை முதலிய குணங்களைச் ``சத்தியாதி`` என்றார். முன்னர் `உயிர்` என்றதனைப் பின்னர் ``நின்றான்`` என ஆடூவறி சொல்லாற் கூறியது வடமொழி மதம் பற்றி. சிவத்திற்கும், உயிருக்கும் இடையே உள்ள தொடர்பு குணிக்கும், குணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு போன்றது அன்றாயினும் வேற்றுமையின்றி நிற்றல் மாத்திரைக்கு அத்தொடர்பினை உவமையாகக் கூறினார்.
இதனால், உயிர் ஞானத்தால் மெய்ப்பொருளாகிய சிவமாம் நிலையை எய்துதல் கூறப்பட்டது. அந்நிலையை எய்திய வழி உயிரும் மெய்ப்பொருளாதல் பற்றி இஃது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

பொழிப்புரை :

சிவனை அன்பால் நினைதற்குப் பக்குவம் வேண்டும். அது வாய்க்கப் பெற்று, அவனை அன்பினஆல் நினைந்தும், வணங்கியும், புகழ்ந்து பாடியும் நின்றால் ஒன்றிலும் அகப் படாத அவனை நம்முள்ளே அகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமானும் எனக்கும் பக்குவம் வாய்த்தமையை அறிந்தே தமது அருளை வழங்கிச் சிவனை நினைக்கச் செய்தார்.

குறிப்புரை :

என்றது, `நினைத்து வணங்கவும், புகழ்ந்து பாடவும் செய்தாரா` எனவும், `அதனால், நான் சிவனை இப்பொழுது என்னுள்ளே அகப்படுத்தியுள்ளேன்` எனவும் கூறியவாறு. நெகிழ்வது மனம். வணங்குவது உடம்பு. புனைதல், ``பூமாலை புனைந்து ஏத்துதலையும், புகழ்ந்து பாடுதலையும்``l ஒருங்கே குறித்து நின்றது. புகழ்ந்து பாடுதல், ஆசிரியன்மார் அருளிச் செய்த பாடல்களையும்,தாமே பாடும் பாடல் களையும், அவை அவன் அருள்வழியே அமையும். `நாயனார் இந் நூலால் அவனைப் புகழ்ந்து பாடினார்` என்க,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``3
எனவும்,
``இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கெழுந் தருளுவ தினியே``1
எனவும்,
``அழலார் வண்ணத் தம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``2
எனவும் இவ்வாறு அருளிச்செய்ப ஆதலின், அவனைப் பொதியலும் ஆகும்`` என்றமை பொருந்துவதாதல் காண்க. உம்மை சிறப்பு. நந்தி பெருமான் தம் அருளை வழங்கியது, நினைவிற்கு எட்டாதவனை நினைக்குமாற்றையும், வணங்குமாற்றையும், பூப்புனையுமாற்றையும், புகழ்ந்து பாடுமாற்றையும் விளக்கியருளியது. `அவர் அவற்றை அருளிச் செய்யாராயின், யான் எதனை அறிவேன்` என்பது கருத்து.
இதனால், `மெய்ப்பொருளை யுணர்தலும், அடைதலும் பக்குவ காலத்தில் குருவருள் வாய்க்கப் பெறுதலாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

பொழிப்புரை :

முன் தந்திரத்திற் கூறிய முத்துரியத்துள்
நிலையிற் புக்கபொழுது, பாலுந்தேனும் கலந்த கலப்பின்கண் உள்ளதும், கனிந்த பழத்தின் சாற்றில் உள்ளதும், மிகத் தூயதாகிய தேவரது அமுதத்தில் உள்ளதுமாகிய இனிமைகள் போன்ற ஓர் இனிமை அவ்வுயிரினது உடம்பில் உள்ள மயிர்க்கால்கள்தோறும் தேங்கி நிற்கும்.

குறிப்புரை :

`பாலொடு தேன் ஆகும் மதுரமும், பழத்துள் இரதம் ஆகும் மதுரமும்` என ``ஆகும் மதுரம்`` என்பதை ஏனையவற்றிற்கும் கூட்டுக. வாலிய - தூய. பேரமுது, தேவர் அமுது, ``துரியம் பொடிபட உள்புக`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொடிபடல் - விலகுதல். சீலம் - தன்மை, என்றது இங்கு இனிமையை மயிர்க்கால் தோறும் தேக்குதலை.
``வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்``*
என்னும் திருவாசகத்தாலும் அறிக.
இதனால், இங்கு எடுத்துக்கொண்ட ஆனந்தத்தின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `இறவா நிலை` எனப்படும் அபர முத்தி நிலையையும், அந்நிலைக்கு ஏற்புடைய சுத்தமாயா புவனங்களையும் கடந்து, அவ்விடத்தை அடைந்த தன் அடியார்களோடே கூடி, அவர்கட்கு ஒப்பற்ற தலைவனாய் இருப்பவன். (எனவே, `நிரதிசய சுத்த போகத்தையே தருபவன்` என்றதாம்.) ஆயினும் அவன், பவழம் போன்ற இதழையும், அதற்குள்ளே அரும்பும் முத்துப்போன்ற நகையினையும், அதற்குள்ளே மெல்ல மிழற்றுகின்ற இனிய சொல்லையும் உடைய மாதராளாகிய, கெடுதல் இல்லாத ஞான சொரூபியைத் துணையாகப் பற்றி நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால், பலவகைப்பட்ட மாயா போகங்களை வேண்டுவார்க்கு அவற்றையும் தருகின்றான்` என்பதாம். தமர் - அடியார். ``விண்வத்துக் கொட்டும் வண்ணத் தமரர்`` என்றாற்போல மகர ஈறொழிந்த ஏனையீறுகளின் முன்னும் சிறுபான்மை அத்துச் சாரியை வருதல் அறிக. `தமரிடத்து நின்ற` என ஏழாவதன் பொருள் பட விரிக்க. `அண்டம் கடந்து நிற்பவன், ஆயினும் தமரிடத்து நிற்பவன்` என்க. ``தனியைமன்`` என்றது, `சிவன்` என்னும் நிலையையும் , ``சோதி தொடர்ந்து நின்றான்`` என்றது, `சத்தன்` என்னும் நிலையும் குறித்தனவாம். இதனால், மெய்ப்பொருளின் இரு நிலைகள் விளங்கும். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `ஞான ஆனந்தமேயன்றி ஊன ஆனந்தமும் மெய்ப்பொருளால் ஆவதே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.

பொழிப்புரை :

`மத்தியாலவத்தை` எனப்படும் சகலத்திற் சகலமாகிய மாசகலத்திலே முப்பத்தாறு கருவிகளுள் யாதொன்றும் ஒடுங்காது எழுச்சியுற்றிருப்பினும் தான் அவற்றின் வசப்படாது, அவற்றை வேறு நிறுத்தி, அங்ஙனம் நிறுத்தியதனால் கேவலாவத்தை வந்துவிடாதபடி அதனையும் நீக்கிச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையை அடைந்து, பின் `அதுவும் சீவச் செயலேயாம். என அதனை நீக்கிப் பரா வத்தையை எய்தியவழியே பந்தம் முற்றும் நீங்கிய நிலையாகும். அந் நிலையை அடைந்து, `சீவன்` என்னும் நிலைமை மாறி, `சிவம்` என்னும் நிலைமையை அடைந்து, அதனால் சத்திய ஞானானந்தத்தை அடைந்தவனே நிறைவான ஞானத்தை அடைந்தவனாவான்.

குறிப்புரை :

``மத்திமம்`` என்றது மத்தியாலவத்தையை. `மத்திமத் தின்கண்` என ஏழாவது விரிக்க. ``மாற்றி`` என்றதும் `நீக்கி` என்றதே. `பிறழ்வுற்றுச் சிவமாகி` என மாறிக்கூட்டுக. ``சார்ந்தான்`` என்பது வினையாலணையும் பெயர். `சார்ந்தானே ஞானி` என ஏகாரத்தை மாற்றி வைத்துரைக்க.
இதனால், சத்திய ஞானானந்தமே நிறைஞானத்தின் பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

 சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானனந் தத்தே
துவமார் துரியம் சொரூபம தாமே.

பொழிப்புரை :

பயன் இலதாம் பிறவியிற் செலுத்துகின்ற மும்மலங்களும் நீங்கி உயிர் சிவமாதற்பொருட்டு உண்மையான மூன்று துரிய நிலைகளைப்பிற பற்றுக்கள் நீங்குதற் பொருட்டுப் பற்றினால், தவத்தின் பயனான சத்திய ஞானானந்தம் கிடைக்கும். அந்நிலையில் அந்த ஆனந்தத்தையுடைய பொருளும் காட்சிப்படும்.

குறிப்புரை :

``சிவமாம் மும்மலந்தீர`` என்பதனைப் பின்முன்னாக நிறுத்தி, `மும்மலந்தீர்ந்து சிவமாக` விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. பவம் - உண்மை. துரியம், `பாழ்` எனப்பட்டது. `துரிய நிலையில் ஆனந்தம் தோன்ற, அதனானே அதனையுடைய பொருள் உண்மை தோன்றும்` என்றபடி. சொரூபம், `வந்து` (பொருள்) எனவும் பொருள் தரும். ஆனந்தம் தோன்ற, அஃதே பற்றி அதனையுடைய பொருளை உணர்தல், அருணோதயம் உண்டாக, அஃதே பற்றி ஞாயிற்றை உணர்தல் போலும்.
இதனால், துரியத்தை எய்தி, அதில் ஞானானந்தத்தை உணர்ந்து, அதனானே பொருளை உணர்க` என்பது கூறப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

பொழிப்புரை :

`குருமார்களில் எல்லாம் மேலான குருவாகிய ஞான குருவே எங்கும் நிறைந்த பரம்பொருளாவான்` என்பது நன்கறியப் பட்டது. அதற்கேற்ப அவன் தன் மாணாக்கனை விட்டு நீங்காது, அவன் செல்லுமிடமெல்லாம் சென்று நிலையாகப் பொருந்தி, கண்ட பொருள்களில் எல்லாம் அது அதுவாகும் இயல்புடைய அவனது ஆன்ம சொரூபத்தினுள் அஃது அவ்வாறாகாமல் நிலைபெற்று விளங்கும் அறிவின்பப் பொருளாய், அடைதற்கரிய துரிய நிலையில் கிடைத்திருப்பான்.

குறிப்புரை :

என இவ்வாறு குருவின்மேல் வைத்துக் கூறினா ராயினும், ஞான குருவின்பால் ஞானத்தைப் பெற்ற நன்மாணாக்கர் எங்கும், எப்பொழுதும், எவ்வாற்றானும் அக்குருவை மறவாது அவனைச் சிவமாகவே அறிவினுள் கண்டு ஆனந்திப்பர்` என்பதே கருத்து. `அக்காட்சி வெறும் கருதுகோள் காட்சியன்று; உண்மைக் காட்சியாய்ப் பயன் தரும் காட்சியே` என்பதைத் தெளிவித்தற் பொருட்டே இம்மந்திரத்தைக் குருவின்மேல் வைத்து இவ்வாறு அருளிச்செய்தார். `எங்கும் ஆம் பரமாகி` என்க. ``ஆகி`` என்பது பெயர். ஒழிவு - விட்டு நீங்குதல். `எங்கணும் ஒழிவற்று திரம் உறச் சேர்ந்து` என மாற்றிக் கொள்க. நிரவுதல் - அது அதுவாய் வசப்பட்டு நிற்றல். `நீடும் சொரூபமாய்` என ஆக்கம் வருவிக்க. ``துரியத்து நின்றான்`` என்றதனஆல், `ஞானிகள் துரியத்தினின்றும் கீழ் இறங்கார்` என்க. துரியம் முதலிய அவத்தைகளின் இயல்பு முன் தந்திரத்தில் கூறப்பட்டது.
இதனால், `அடையத் தக்க பொருள் ஞான குரு உருவமே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

பொழிப்புரை :

மண் தன்னை அழிக்கும் தன்மையுடைய நீரினுள் அழியும், அவ்வாறே நீரும், காற்றும் முறையே நெருப்பினுள்ளும் ஆகாயத்தினுள்ளும் அழியும். எனவே, இப்பொருள்களுள் அடங்கியிருப்பவர் அல்லன் சிவன். அவன் பூமியையும் கடந்து மேற்போகியும் அளவின்றியிருப்பவன். (``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர் - போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``* அவனை ஒரு சிறுகுடிலுள் அடக்கி வைத்துக் கண்ணாற் கண்டு, காலால் வலம் வந்து, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி இன்புறுதல் எளிதாயிருக்க, அம்முறையை யறியாமல் யான் அல்லல் உறுகின்றேன்.

குறிப்புரை :

என்றது, அறிவிலாதார் செயலைத் தம்மேல் வைத்து அருளிச் செய்து இரங்கியவாறு. `குவலயம் குலைக்கின்ற நீரில்` என மாற்றி, அதன்பின்னும், ``ஆகாசம்`` என்பதன் பின்னும் `அழியும்` என்பன வருவிக்க. வரைத்தல் - அளவுட்படுத்தல். `படுத்தப்படுவது குருவுருவம்` என்க. என்றாற்போலும் திருமொழிகளால் ஞான குருவின் அருமையில் எளிமையை ஆய்ந்துணர்க. வலம் செய்தல் கூறவே, இனம் பற்றி ஏனையவும் கொள்க.
இதனால், அடைதற்கரிய பொருளை எளிதில் அடையும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

பொழிப்புரை :

அயன், மால் முதலிய தேவர்கள் முதலாக எங்குள் ளவர்களும் இறைவனை, `அவன் பரமாகாசத்தில் இருக்கின்றான், ஆயினும் ஏத்துவார்க்கு அருள்புரிகின்றான் என அவனைக் காணாமலே கருதிநின்று ஏத்துவார்கள். ஆயினும் எங்கட்கு அவன் குருஉருவாகி எதிர் வந்து எங்களோடு நீங்காது உறைகின்றான்.

குறிப்புரை :

`அதனால் நாங்கள் அவனை நேரிற்கண்டு வலம் வந்து வணங்கி, ஆடிப்பாடி, அளவளாவி மகிழ்கின்றோம்` என்பது குறிப் பெச்சம். ``அங்கு நின்றான்`` என்பதனை, ``இறைவன்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `தேவர்கள் முதலாக` என ஒரு சொல் வருவிக்க. ``தனி நாயகன், புவனாபதி`` என்னும் பெயர்கள் இரண்டன் உருபு ஏற்று, ``ஏத்துவர்`` என்பதனோடு முடிதற்கு உரியன; செய்யுள் நோக்கி வேறுபட்டு நின்றன. ``எம் இறை`` என்றது, குருவாகி வந்து அருள் புரிந்த உரிமை பற்றி. பொங்குதல், கூர்தலாகிய உள்ளது சிறத்தலே யாகலின் அதனை இங்கு, ``பொங்கி`` என்றார். ``பொங்கி நின்றான்`` எனப் பண்பின் வினைப் பண்பின்மேல் ஏற்றப்பட்டது. கூர்ந்தது அருள். `அது கூர்ந்து, குருவுருவாய் வந்தது` என்பதாம். புவனங்களை ``புவனா`` என பெண்பாலற் கூறினார். அன்னதொரு வழக்குப் பற்றி,
இதனால், அருட் குருவின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.

பொழிப்புரை :

ஒவ்வோர் உயிரும் தன்னைத் தான் அறியக் கடமைப் பட்டவை. அவற்றை அவ்வாறு அறியச் செய்யாமல் மயங்கச் செய்வன, புறச் சமய நூல்களும், அடக்கம் இன்றி, வேண்டியவாறே ஒழுகத் தூண்டும் காமம் முதலிய குற்றம் எட்டும், அவற்றுக்குக் காரணமான ஆணவ மலமும் ஆகும். அவை முற்றாக நீங்குமாறு ஞான குருவைப் பிரியாது அவரது நிழல்போல உடன் இருப்பவர் வானவர்க்கும் தலைவராவர்.

குறிப்புரை :

சுவடு - எழுத்தின் வரிவடிவம். அவற்றை உடையது சுவடி. எனவே சுவடிகளில் உள்ள எழுத்துக்களை, ``சுவடு`` என்றார். `தனை அறியாமற் செய்யும்` என ஒரு சொல் வருவித்து, அதனை முதலிற் கூட்டுக. கமை - பொறுமை. அஃது அடக்கத்தைக் குறித்தது. `ஆணவ மலத்தின் காரமயம் எட்டு` என்பதை,
``... ... ... ... விகற்பம், கற்பம்,
குரோதம், மோகம், கொலை, அஞர், மதம், நகை``3
என்னும் இருபா இருபஃதால் அறிக. இவற்றுள் `மோகம்` என்பதனையே தலையாயதாக எடுத்து, ``காமம்`` என்றார். இனி, காமம் முதலிய அறுபகைகளோடு, `மண், பொன் இரண்டு கூட்டி, `எட்டு` என்பாரும், `இடும்பை, அசூயை, இரண்டு கூட்டி `எட்டு` என்பாரும் உளர். திமிரம் - இருள்; அணவ மலம். ``செயல்`` என்றது எட்டொழிந்த பிறவற்றை அவை மறைப்பு. திரிப்பு முதலியன. `தெளிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `குருவுடன்` என்பது அதிகாரத்தால் வந்தது. தலைவராதல், மேல் நிலையில் நிற்றல்.
இதனால், சொரூப உதயத்தாலே உயிர் தூய்மை பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

பொழிப்புரை :

`முக்குணங்களால், `அயன், அரி, அரன்` எனச் சொல்லப்படும் மூவருள், `தனி ஒருவன்` எனச் சுட்டப்படும் அரன், குணம் பற்றி ஏனையிருவரோடு ஒத்தவனாகச் சொல்லப்படினும் ஏனையிருவர்போலச் சகலனாகாது, பிரளயாகலருள் பக்குவம் உற்ற வனாய், சிவனை மறந்து, `தானே முதல்வன்` என மயங்கும் மயக்கம் இன்றிச் சிவனையே முதல்வனாகத் தெளிந்து அவன் பணியையே ஆற்றுபவன் ஆதலின் வேற்றியல்புடையனாதல் போல முத் துரியத்திலும் சீவனும், சிவனும் ஒரு பெற்றியராய் நின்ற போதிலும் பல வகையில் சிவன் சீவனின் வேறு பட்டவன்` என்று சிவநூல்கள் செப்பும்.

குறிப்புரை :

முதல் உரு - காரணமூர்த்தி. தனது வலப்பாகத்தினின்று அயனையும், இடப்பாகத்தினின்று அரியையும் தோற்றுவித்தலால் அரன் காரண மூர்த்தியாயினன். இவனே சீகண்ட உருத்திரன். `முதல் உரு ஆயதனால்` என உருபு விரிக்க. அணு - உயிர். ``அணுப் பரன்,`` சேய - சேய்மையில் உள்ள. ``சிவம்`` என்பது, `சுத்தம்` என்னும் பொருளதாய் நின்றது. கேவல சகலங்களைக் கடந்து நிற்றலின் சுத்தாவத்தைகள் சேய வாயின. `முத்துரியம்` முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஒரு சீர் பெற ஏயும் நெறி` என்க. ஏய்தல் - பொருந்துதல்.
`அணுவும், பரனும் ஏயும் நெறி, மூவகைத் தெய்வத்து ஒருவன் வேறாயது` என இயைத்து முடிக்க. முதல் அடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `சொரூப உதயத்துச் சிவ சீவர்கள் அருள் நிலையால் சமமாயினும், பொருள் நிலையால் வேறானவர்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

பொழிப்புரை :

சிவன் தான், தனக்கு ஓர் உடம்பில்லாமலே பல உயிர்கட்கும் பல்வேறு வகையான உடம்புகளைப் படைத்துக் கொடுக்கின்றான். தனக்கு ஒரு காரணம் இன்றித் தானே அனைத் திற்கும் காரணமாய் உள்ளான். எந்தப் பொருளின் தன்மையும் தன்னைப் பற்றாது தான் அனைத்துப் பொருளிலும் தாமரை இலையில் தண்ணீர் போலப் பொருந்தி நிற்கின்றான். ஆகவே, அவனது நிலை யாவராலும் அறிய ஒண்ணாத பெருமறையாய் இருத்தலின், அம்மறையை அறிந்த நல்லா சிரியன் வழியாக அன்றித் தாமே நேராக அவனை அடைதல் யாவர்க்கும் இயலாது.

குறிப்புரை :

``கரு`` என்றது காரணத்தை. மருவுதல் பற்றுறப் பற்றல். மாயம், இங்கு மறைவைக் குறித்தது, அதனையுடைய தன்மையை உணர்த்திற்று.
``கருவினா லன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினா லன்றியே உருவுசெய்தான்`` (திருமுறை - 3.35.3.) என்னும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியை இம் மந்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், `உண்மைச் சொரூபமாம் சிவனது தோற்றத்திற்கு முற்பட்ட நிலை குருவினது தோற்றம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.

பொழிப்புரை :

குருவின் உருவத்தை உள்ளத்தில் உள்கியிருப்பவர் கட்கு அங்குச் சிவ சோதியே பிரகாசிக்கும். அவர்கள் ஊழிக் காலம் நிலவுலகில் வாழ்வர்; பின்பு சிவலோக வாழ்வினரும் ஆவர். அங்ஙன மாகவும் குரு உருவத்தின் சிறப்பை அறிந்து அதனை உள்ளத்தில் உள்குவோர் உலகத்தில் எத்துணைப் பேர்!

குறிப்புரை :

உருவம், அதிகாரத்தால் குரு உருவேயாயிற்று. `மணி மந்திர ஔடதங்களாலும், மற்றும் அடயோகம் முதலிய உழைப்புக் களாலும் அடையும் பயனை ஞான குருவால் அடையலாம்; ஆனால் ஞான குருவால் அடையும் பயனை வேறு வழியால் அடைய இயலாது` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார்.
``மந்திரத்தால், மருந்துகளால், வாய்த்தஇயோ கத்தால்,
மணியிரத குளிகையினால், மற்றும் மற்றும்
தந்திரத்தே சொனைமுறை செய்ய, வேத
சகலகலை ஞானங்கள், திரிகால ஞானம்,
அந்தமிலா அணிமாதி ஞானங்கள் எல்லாம்
அடைந்திடும்; ஆசான் அருளால் அடிசேர் ஞானம்
வந்திடும்; மற்றொன்றாலும் வாரா தாகும்;
மற்றவையும் அவன்அருளால் மருவு மன்றே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சொரூபத்தியானத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``உள்ளுறும் சோதி`` எனப்பட்ட அந்த மேலான ஒளி என் உள்ளத்துள்ளே தோன்றியவுடன் நான் அதனைச் சிக்கெனப் பிடித்தேன். பிடித்தபொழுது முதற்கண் அஃது என்னுள்ளே அடங்கப் பின்பு நான் அதனுள்ளே தோய்ந்தேன். தோயத் தோய, அஃது எல்லையின்றி விரியக் கண்டேன்.

குறிப்புரை :

`பதியாகும் பரஞ்சோதியை` என மாறிக் கூட்டி உரைக்க. உதயம் உள்ளத்துள் ஆதலின், `முதற்கண் அஃது என்னுள் படிந்தது` என்றும், விறகினின்றும் தோன்றிய தீ பின் அவ்விறகைக் கதுவுமாறுபோல, ஆன்ம அறிவில் தோன்றிய சிவஒளி பின்பு அவ்வறிவை விழுங்கி நிற்றல் பற்றி, `பின்பு நான் அதனுட் படிந்தேன்` என்றும், முன்பு சுட்டுணர்வாய் நின்ற ஆன்ம அறிவு பின்பு வியாபக அறிவாய் விரியுந்தோறும் சிவஒளி அவ்வறிவிற்கு வியாபகமாயே விளங்குதல் பற்றி, `அதனைப் பறையக் கண்டேன்` என்றும் கூறினார். பறைதல் - பறத்தல். அஃது இங்கு வியாபித்தலைக் குறித்தது. இனி, `பறைதல், சொல்லுதல்` எனக் கொண்டு, அஃதாவது, தன்னியல்பை அறிவித்தல்` என்பாரும் உளர். தன், சாரியை. ``பறைய`` என்னும் செயவென் எச்சம், `பறையும்பொழுதில்` எனக்காலம் உணர்த்தி நின்றது. இதனுள்ளும் முன் மந்திரத்திற் போந்த அணியே வந்தது.
இதனால், சொரூப உதயத்தின் படிநிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக் குரவன் சுகோயத் தானே.

பொழிப்புரை :

கவர்ச்சியான வடிவம், நிறம், மணம் முதலிய பிற பண்புகள் ஆகியவற்றை இயல்பாகவே கொண்டிருத்தலாலே குவளை மலர்கள் பிற மலர்களினும் கிடைத்தற்கரிய சிறந்த மலர்களாகக் கருதப்படுகின்றன. அதுபோலவே, `சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்னும் மெய்ப்பொருள் இயல்புகளைத் தனது ஞானமாக அடைந்த உண்மைக் குருவே வீட்டின்பத்தைத் தர வல்லவனாவான்.

குறிப்புரை :

குவளை மலரையே எல்லா மலர்களினும் சிறந்த மலராக நாயனார் கூறிவருதலை மேலேயும் சில மந்திரங்களிற் கண்டோம். அதற்குக் காரணம், அது தீக்கைக் காலத்தில் அணியப் படுதல் பற்றிப்போலும்! ``சொரூபம்`` இரண்டில் முன்னது வடிவம். பின்னது உண்மை. உருவம் - நிறம். `தொன்மை` என்பதில் விகுதி தொகுக்கப்பட்டது. `தொல்லாக` என ஆக்கம் வருவிக்க. இயல்பை, ``தொன்மை`` என்றார். விழுங்குதல், கொண்டிருத்தல். ``விழுங்கி`` என்னும் எச்சம் காரணப் பொருளில் வந்தது. `உற்பலம் அரியன ஆமாறு போல` என மாற்றிக் கொள்க. சத்தியம் முதலிய நான்கு மெய்ப்பொருளின் இயல்பாதல் மேலேயும் கூறப்பட்டது.
இதனால், `சிவனைப் போல, `சொரூபம்` எனச் சொல்லத் தக்கவன் உண்மையான ஞான குருவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

பொழிப்புரை :

(`சொரூபம்` என்பதைப் பொதுப்பட இயல்பு` - என வைத்துக் காணும்பொழுது அது, `மேனிலைச் சொரூபம், கீழ்நிலைச் சொரூபம்` என இரண்டாகும். அவற்றுள்) சிவனது மேனிலைச் சொரூபம் சொல்லைக் கடந்தது; இன்ப உருவானது. அநாதி; சிவமாவது கீழ்நிலைச் சொரூபம். `அகார உகார மகாரம்` என்னும் பகுதிகளாயும், அங்ஙனம் பகுக்கப்படாத தொகுதியாயும் உள்ள தாரக மந்திரத்தின் உள்ளொளியாகும். ஆதி; சத்தியாவது.

குறிப்புரை :

`உரையற்ற` எனப் போந்த இரண்டில் முன்னது ``மோனம்`` என்பதனை விளக்கியது. பின்னது `வெளிப்படச் சொல்ல வாராதது` என்னும் பொருட்டாய் ஓங்காரத்தைக் குறித்தது. உள் ஒளி - அதனால் சுட்டப்படும் பொருள். `தாரகம்` என்பது இடைக்குறைந்து நின்றது, `கீழ் நிலைச் சொரூபமும் அளவுட் படாதது` என்றற்கு, ``கரை -யற்ற`` என்றார். `மருவுற்ற` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
சொல்லைக் கடந்ததாய், இன்பமாய் அநாதியாய், `சிவம்` என நிற்பவனே, ஆராயுமிடத்து, அகார உகார மகாரங்களின் பொருளாயும், அவை ஒருங்கு தொக்க `ஓம்` என்பதன் பொருளாயும், ஆதியாயும் `சத்தி என நிற்பான்` என்பது இம்மந்திரத்தின் பொருள். சிவம் மேல்நிலைச் சொரூபம். சத்தி கீழ்நிலைச் சொரூபம். இவ் விரண்டையும் அனுபவமாக உணர்ந்தவனே ஞானகுரு. அவனே `சொரூபம்` எனப்படுவான். கீழ்நிலைச் சொரூபத்தை மட்டும் உணர்ந்தவன் கிரியா குரு. அவனும் ஓராற்றால் `சொரூபம்` எனப் படுவான் என்றற்கு இது கூறினார். கூறவே, கீழ்நிலைச் சொரூபத்தைத் தானும் உணராதவன் குருவாகாமை விளங்கும்.
இதனால், மேல்நிலைச் சொரூப உதயமே சொரூப உதயமாதல் அன்றிக் கீழ்நிலைச் சொருப உதயமும் ஓராற்றால் சொரூப உதயமாதல் கூறப்பட்டது.
இதனையடுத்துப் பதிப்புக்களில், ``தலைநின்ற தாழ்வரைமீது தவம் செய்து`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து `வாய்மை` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 11

ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே.

பொழிப்புரை :

பாச ஞான பசு ஞானங்களால் எளிதில் அறியப் படும் பொருள்கள் யாவும் நமக்குப் புறத்தே நிற்பனவாக, அந்த ஞானங்களால் அறிதற்கரிய பொருள் நம்மின் வேறாகாது நம் உள்ளே யிருத்தலை நான் அறிந்தேன். மேலும், அந்தப் பொருள் நம்மை விட்டு நீங்குதற் காரணத்தையும் நான் `இது` என அறிந்தேன்; நீங்கிப் போன அது மீட்டும் வந்து புகுதற் காரணத்தையும் `இது` என அறிந்தேன். இனி நான் `யான், எனது` எனச்செருக்கு மாட்டேன்; அந்தப் பொருளை யன்றி வேறொரு புகலிடமும் எனக்கு இல்லை. இந்நிலைமை, `முன்பு தானாய் இராது நாமாகவேயிருந்த முதல்வனும் நாமே` எனத் தக்கதாய் உள்ளது.

குறிப்புரை :

`அரும்பொருள் அகத்தின் ஆமாறு அறிந்தேன்` எனவே, எளிய பொருள்கள் புறத்தேயிருத்தல் பெறப்பட்டது. போதல் - நீங்குதல். அது விளங்காது மறைந்திருந்தைம அதற்குக் காரணம். ஆன்ம அறிவு `யான் எனது` எனச் செருக்கினமை. புகுதல், மறைவின்றி வெளிப்பட்டு விளங்குதல். அதற்குக் காரணம் அச்செருக்குக்கள் இன்றி, அடங்கி ஒடுங்கினமை. முன்பு செய்த குற்றங்களை இனிச் செய்யமாட்டேன்` என்பார். ``ஏமாப்பதில்லை. இனி ஓர் இடமில்லை`` என்றார். பெத்த காலத்தில் முதல்வன் வேறு விளங்காது, உயிர்களாயே நின்றதனை, ``நாம் ஆம் முதல்வன்`` என்றும், முத்தி காலத்தில் உயிர் வேறு விளங்காது முதல்வனாயே நிற்றலின், ``முதல்வனும் நாம் எனலாம்`` என்றும் கூறினார். இதனை மெய்கண்ட தேவர்,
``அவனே தானே யாகிய அந்நெறி
ஏக னாகி``8
என்றார். தம்மோடு தம் மாணாக்கரையும் உளப்படுத்த, ``நாம்`` என்றார்.
இதனால், சொரூப உதயத்தின் முடிநிலை இயல்பு கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

பொழிப்புரை :

தங்கள் உடம்பைப் பிறர் செத்தினால் தான் என்ன? சீவினால்தான் என்ன? உச்சந் தலையிலே உளியை நாட்டி அடித்தால்தான் என்ன? இவ்வாறன்றி சிவந்த சந்தனத்தைக் குளிர்ச்சியாகப் பூசினால்தான் என்ன? மெய்யுணர்வு எய்தினோர் ஞானகுரு உபதேசித்த உபதேச வழியில் நிற்றல் அல்லது, அதனினின்றும் பிறழார்.

குறிப்புரை :

செத்துதல் - ஆழப் போழ்தல். சீவுதல் - மேற்போக்காப் போழ்தல். இவ்விரண்டிற்கும் வினைமுதலும் செயப்படுபொருளும் வருவிக்கப்பட்டன. மறித்தல் - அசையாதபடி தடுத்தல்; அஃது அறைதலைக் குறித்தது. மிகக் கொடிய துன்பங்கள் சிலவற்றைக் கூறும் முகத்தால் பல துன்பங்களையும் குறித்தவாறு. வித்தகம் - சதுரப்பாடு; அது ஞானம். தம் குருவாகிய நந்தி பெருமானைச் சுட்டினாராயினும், பொதுப்பட, `குரு` என்றலே கருத்து. விதி - நெறிமுறை. `நந்தி சொல்லிய நெறிமுறை` என்க. அஃது, `உனக்கு இப்பொழுது வரும் துன்ப இன்பங்கள் எல்லாம் நீ முன்பு எர் உடலில் நின்று செய்த வினை இவ்வுடலை வந்து பற்றுவனவே. ஆதலின் அவை பற்றி நீ கவலுதலோ` மகிழ்தலோ கூடாது` என்பது. இவ்விடத்தில்,
``ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக; ... ... ...
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்
நிரயம் சேரினும் சேர்க; உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி,
`நல்லன்` எனினும் என்க; அவரே
`அல்லன்` எனினும் என்க; நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளம் சிதையாது
இன்பத் தழுந்தினும் அழுந்துக; அல்லாத்
துன்பம் துதையினும் துதைக; ... ... ஒன்றினும்
வேண்டலும் இலனே; வெறுத்தலும் இலனே,
ஆண்டகைக் குரிசல்நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும், நின் செய்யப்பொற் பாதமும்
அடையவும், அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே``3
என்னும் அனுபவ மொழியையும்,
``கேடும், ஆக்கமும் கெட்ட திருவினார்;
ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்``9
என அவ்வனுபவம் உடையாரது இயல்பை எடுத்து விளக்கிய திருமொழியையும் ஒப்பு நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 2

தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.

பொழிப்புரை :

ஒவ்வோர் உயிரும் தான் தான் முற்பிறப்பில் செய்த வினையின் பயனைத்தான் இப்பிறப்பில் அனுபவிக்கின்றதே தவிர, இப்பிறப்பில் சிலர் அவ்வுயிர்கட்கு நன்மை தீமைகளைப் புதியன வாகக் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றார்கள் இல்லை. (ஆகவே, அவைகளைப் பிறர் கொண்டு வந்து சேர்ப்பிப்பதாகக் கருதி அவர்களை விரும்புதலோ, வெறுத்தலோ செய்தால் அச்செயல்களே அடுத்த பிறப்பிற்குக் காரணமான ஆகாமிய வினையாய்விடும். இதை உணர்ந்த நான் எனது முன் வினையின் பயனைக் கூட்டுகின்ற முதல்வன் என் தலையில் எழுதிய எழுத்துப்படியே இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் பொழுதெல்லாம் அவைகளை அவனது அருளாகவே கருதி அனுபவித்ததல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொண்டதில்லை. அவ்வாறு செய்த எனது செயல் எனது நன்மைக்குச் சிறந்ததொரு காரணமாயிற்று.

குறிப்புரை :

`எனது நண்மை` என்றது, வினைத் தொடர்ச்சி அறுபட்டதை, ``தான்`` என்றது உயிர்களைப் பொதுப்படச் சுட்டியது. விதி - வினை. ``வழி`` என்றது பயனை. `அனுபவித்தல் அல்லால்` என ஒரு சொல் வருவிக்க. ``வான்`` என்பது `வெளி` என்னும் பொருட்டாய்ப் புறத்துள்ளாரைக் குறித்தது. மாட்டு - தொடர்பு. `சென்னியில் குறித்த வழியே` என்க. சென்று - செல்லாநின்று; என்பது, `செல்லும் பொழுது` என்றபடி ``செய்தது`` எனப் பொதுப் படக் கூறினாராயினும், ``கோன் முன்னம் குறித்த வழியே சென்றேன்`` என்றதனால் அது அவன் அருள் வழி நின்றதையே குறித்தது. நிலம் - நிலைக்களம். அது, `சிறந்த காரணம்` எனப் பொருள் தந்தது. நாயனார் சாத்தனூரில் பாதுகாப்பில் வைத்த தம் மூலன் உடம்பு காணாமற் போனதையும், தாம் மூலன் உடம்பிலே இருக்க நேர்ந்ததையும் சிவன் அருளாகவே கருதி ஏற்றமை நினைக்கத்தக்கது.
இதனால், ஊழின் பயனை அனுபவிக்கும்பொழுது அதனை, அவன் அருள்` என்று அனுபவிக்கின் அஃது உடல் ஊழாய்க் கழிதலோடு, ஆகாமியமும் விளையாது` என்பது கூறப்பட்டது.
``சிவாய நமஎன்று சிந்தி திருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லைனா;- உபாயம்
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியாய் மதிய்யா விடும்``*
என்ற ஔவையார் வாக்கு இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்வெண்பாவில் ``அபாயம்`` என்றது ஊழின் தாக்குதலும், அதனால் விளையும் ஆகாயமியமுமாம். ``விதியை மதியால் வெல்லலாம்`` என்னும் பழமொழியில் `மதி` எனப்பட்டது `சிவாயநம` எனச் சிந்திதிருப்பதே எனவும், அஃது அல்லாத வழியெல்லாம் அந்த ஊழ் உண்டாக்கும் மதியே` எனவும் ஔவையார் விளக்கியிருத்தல் அறியத்தக்கது. ஊழ்வினை நன்மையாகவோ, தீமையாகவோ வந்து விளையும்பொழுதெல்லாம் அதனைச் ``சிவாயநம`` என்று சொல்லி ஏற்க வேண்டும் என்கின்றார் ஔவையார்.

பண் :

பாடல் எண் : 3

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.

பொழிப்புரை :

(ஆற்றில் மணல் சமப்பரப்பாய்ப் பரந்திருப்பின் அஃது அதற்கு ஒரு சுமையாய் இராது. ஆனால் ஆறு சமமாய் இல்லாமையால், அதில் வெள்ளம் வரும்பொழுது பள்ளம் மேடுகள் மாறி மாறி அமைய சில இடங்கள் பெரிய மேடுகள் ஆகிவிடுகின்றன.) அந்த மேடுகளை அந்த ஆறு தான் சுமக்க வேண்டுமேயன்றி, அவைகளைப் பங்கு செய்து எடுத்துக் கொண்டு போய்ச் சுமப்பார் ஒருவரும் இல்லை. (அதுபோல, அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டுமன்றி அனுபவிப்பவர் வேறுயாரும் இலர். இதனை நன்குணர்ந்த எனது உள்ளம்) சிவனைப் பெறற்கரிய பேறாக உணர்ந்து அவனைத் தவிர வேறொன்றைப் பற்றுதலை ஒழிந்தது;

குறிப்புரை :

`அதனால், ஊழும் என்னைத் தாக்கவில்லை. அத் தாக்குதலால் தோன்றக் கூடிய ஆகாமியமும் தோன்றவில்லை` என்பது குறிப்பெச்சம். ``நீறிட்ட மேனி`` என்றது, `அவன் தன் அடியார்களது வினையைப் பொடியாக்குபவன்` என்னும் குறிப்பையும், ``நிமிர் சடை`` என்றது, உலகப் பற்றநைீக்கு பவன்` என்னும் குறிப்பையும் உடையன. பேறிட்டு - பேறாதலையிட்டு. `இட்டு` என்பது காரணத்தை உணர்த்தி வருதல் நாட்டு வழக்கு. முன் இரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையால், அதற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. ஆறு - உயிர். அது சமம் இன்மை உயிர் சமபுத்தி உடையதாகாமை. வெள்ளம் - ஊழ். மேடு பள்ளங்கள் - ஊழால் விளையும் ஆகாமிய வினைகள். ``சமவாதே`` என்னும் ஏகாரம், அசை.
இதனால், அவரவர் வினை அவரவருக்கே பயனாதல் உவமை முகத்தால் விளக்கப்பட்டது. சித்திற்குச் சட்டம் உவமை யாதலும் உவமத்திற்கு ஏற்புடையதே. அதிகாரப் பொருளை வலியுறுத் -தற்கு அதனை வெல்லுமாறும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
நானொன்றி நாதனை நாடுவன் நானே.

பொழிப்புரை :

இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

`இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட
உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்
றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்
அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்;
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான்
கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
கானத் துழுவை கலந்து வளைக்கில்என்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவினை நான்உழு வேனே.

பொழிப்புரை :

இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

`இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட
உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்
றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்
அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்;
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான்
கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்கட்கே.

பொழிப்புரை :

குருவருள் வாய்க்கப்ப பெற்றவர்கட்கு, `ஓர் உயிரின் உடம்பு அழிந்துவிட்டால், மற்றோர் உடம்பை அவைகட்குப் படைத்துக் கொடுக்க ஒருவன் இருக்கின்றான்` என்பது தெளிவாம். ஆதலால், `இறப்பு` என்பது அவர்கள் உள்ளத்திற்கு. `உயிர்கள் அழிந்துபோவதன்று; மற்று, ஒருநாடு எவையேனும் காரணத்தால் அழிவுறுமாயின், அதில் உள்ளவர்கள் வேறு நாட்டில் சென்று வாழ்தல் போல்வதும், ஓர் இல்லம் இடிந்து பாழாயின், அதில் வாழ்ந்தவர்கள் வேறோர் இல்லத்தில் குடிபுகுதல் போல்வதுமேயாகும்.

குறிப்புரை :

ஆகவே அவர்கள், உயிர்கள் எடுத்த பிறப்பில் அனுபவிக்கும் இன்பத் துன்பங்கள் அவை முற்பிறப்புக்களில் செய்த வினையின் பயனே` எனத் தெளிந்து, அனைத்துயிர்கட்கும் அவற்றின் வினைப் பயனை ஊட்டுவிக்கின்ற முதல்வன் திருவருளை உணர்ந்து நிற்குமாற்றால் தங்கள் ஊழினை வென்றிருப்பார்கள் என்பது கருத்து. ``நந்தி பரிசறிவார்க்கு`` என்பதை முதலிற் கூட்டி, ``உளன்`` என்பதன்பின் `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, ``ஒக்கும்`` என்பதை, ``இல்லை`` என்பதனோடும் இயைத்து, `பாடு இல்லை ஒக்கும்` என முடிக்க. ``இல்லை`` என்பது பண்பு; முற்றன்று. பாடு - இறப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், `முன் மந்திரத்தில் ஊழை வெல்லுதற்குத் தாம் செய்யும் செயலையே ஞானிகள் செய்து ஊழை வெல்வர்` என்பது குறிப்பால் உணர்த்தி முடிக்கப்பட்டது. ஆகவே மேற்கூறியபடி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் இதன்கண் அமைந்ததாம்.

பண் :

பாடல் எண் : 1

சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொழிப்புரை :

அறிவுப்பொருளாகிய உயிரும், அறிவுக்கறிவாய் உள்ள சிவனும் பொருளால் வேறேயாயினும், உடல் உயிர் போல ஒன்று பட்டு நிற்கும் கலப்பினால் வேறு நிற்பவர் அல்லர். ஆகவே, உயிரினது அறிவினுள்ளே, விறகில் தீயும், பாலில் நெய்யும் போலத் தோன்றாது மறைந்து நிற்கும் சிவன் அவ்விடத்தில் தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதனால், தங்கள் அறிவு மாசற்று விளங்கும்படி அவ்வுண்மை உணர்வில் உறைத்து நிற்க வல்லவர்கட்கு, கடைய வல்லவர்க்கு விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படுதல் ஒருதலையாதல் போல அவர்களது அறிவில் சிவன் வெளிப்பட்டு விளங்குதல் ஒருதலை.

குறிப்புரை :

``விறகில் தீயினன், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே``3 என்னும் அப்பர் அருள்மொழியை நெஞ்சினுள் ஆழப்பதித்துக் கொள்க. தெளிதல் இரண்டில் முன்னது மாசு நீங்கி, விளக்கம் பெறுதலையும், உறுதிப்பட உணர்தலையும் குறித்தன. அவை ஈரிடத்தும் செயவென் எச்சமாய் நின்றவற்றில் முன்னது காரியப் பொருட்டாய வினை யெச்சமாயே நின்றது; பின்னது தொழிற் பெயர்ப்பொருள் தந்தது. ``இருந்தான்`` என்னும் இறந்த கால வினை தெளிவை விளக்கி நின்றது. ஏகாரம், தேற்றம். எனவே, `மெய்யுணர்ந்தோர் ஒருஞான்றும் தங்கள் சிந்தையில் சிவன் இருத்தலை மறவார்; அதனால், அவர் மீள ஒரு ஞான்றும் பந்தத்தில் வீழார்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
இதனால் ஞானிகள் சிவரூப நிலையினின்றும் வழுவாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் சிந்தையினுள்ளே இருப்பதாகச் சொல்லி சிவன்) வாக்கும், மனமும் அடங்கி ஒடுங்கி நிற்கும் நிலையில் உள்ள ஓர் உள்ளீடான பொருள். ஆகவே, அவனை நேக்கும் முறை யறிந்து நோக்குங்கள். அங்ஙனம் நோக்கும்பொழுது அந்நோக்கிற்கு அவன் மிக நுண்ணிதாய்ப் புலனாகும் பொருளாவான். புலனாகியபின் அவன் போதல் இல்லை புலனாகும் பொழுதும் புதியனாய் அப்பொழுது தான் வந்து புகுதலும் இல்லை (முன்பே உள்ளவன் என்பதாம்.) அவனுக்கு என்றும் அழிவில்லை. `அழிவில்லை` எனவே தோற்றமும் இல்லையாம். நன்மையாவன பலவும் அவனை அவ்வாற்றால் நுணுகி நோக்கி அடைவார்க்கே உளவாம்.

குறிப்புரை :

மறைந்தவிடத்துத் தோன்றும் பொருளை மறைந் ததனால் தோன்றும் பொருளாக உபசரித்தார் ஆதலின், மறைந்த பொருள் என்பதில் பெயரெச்சம் காரியப்பெயர் கொண்டதாம். மறை பொருள் - மறைவை உடைய பொருள். ``மறைப்பொருள்`` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்த `சிவன்` என்னும் எழுவாய்க்குப் பய னிலையாய் நின்றது. பொருளை `வாக்கு மனம் மறைந்தது` என்றும், `மறைவுடையது` என்றும் கூறிப்பின், ``நோக்குமின்`` என்றதனால், `நோக்குமாற்றால்` என்பது போந்தது. நோக்குமாறாவது பிற ஒளிகள் அடங்கியொடுங்க நிற்கும் ஞாயிற்றைப் பிற ஒளி கொண்டு நோக்காது அதன் ஒளியையே கொண்டு நோக்குதல் போல அதன் ஒளியையே கொண்டு நோக்குதல். `அவ்வொளி அருள் ஒளி என்க. அது, நோக்கப் படும் பொருளாய், நுண்ணிதாம் என்க. நன்மைகளாவன ஆசை யறுதலும், அதனால் துன்பம் நீங்கலும், அன்பு வளர்தலும், இன்பம் மிகுதலுமாம். இறுதியில், `உளவாம்` என்னும் பயனிலை வருவிக்க. `முன்னர் அஃறிணையாகக் கூறியனயாவும் `சிவனே` என்றற்கு ஈற்றில், ``அத்தன்`` என உயர்திணையாகக் கூறினார்.
இதனால், அருள் ஒளியாலே சிவரூபம் தோன்றுதல் கூறும் முகத்தால், ஞானிகள் அருளாலல்லது எதனையும் நோக்காமை கூறப்பட்டது.
``அருளே உலகெல்லாம் ஆள்விப்ப(து); ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு``*
என்னும் அம்மை திருமொழியையும்,
``அருளால் எவையும்பார் என்றான்; - அத்தை
அறியாதே, சுட்டிஎன் னறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன்; என்னேடி தோழி``3
என்னும் தாயுமானவர் வாக்கையும் நினைக.

பண் :

பாடல் எண் : 3

பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்(று)
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர்
தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

பொழிப்புரை :

(இங்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்ற சிவன்) உலகங்கள் பலவற்றிலும் மேல் உள்ள உலகில் உள்ளான். இனிமேல் உள்ள பொருளுக்கும் மேலாய் அவற்றைக் கடந்தும் இருக் கின்றான். ஆயினும் தனக்குக் கீழே உள்ள எல்லா உலகங்களிலும் நிறைந்து நின்று உயிர்களின் பிறவித் தொடர்ச்சி அறுபட அருள் புரிகின்றான். அஃது எங்ஙனம் எனின், பிறிதொரு பொருளால் வெல்லப்படாத ஆற்றலையும், பிறர் அறிவிக்க வேண்டாது தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் அறிவினையும் உடையனாயும், அனைத்துப் பொருளையும் ஆதாரமாய் நின்று தாங்குபவனாயும், பாசங்களை அறித்தல் தெரியாமலே அரிப்பவனாயும் இருந்து.

குறிப்புரை :

பரன் - மேலானவன். இங்கு இஃது இடம் பற்றி வந்தது. அவ்விடமாவது நாத தத்துவன். `பராற் பரன்` என்பது ``பராபரன்`` என மருவி வந்தது. `அப்பாற் சென்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. `சென்றும் உலகில் அருள் புரிந்தான்` என இயைத்து முடிக்க. `ஆகவே, அவனை வாக்கு மனங்களைக் கடந்தவன்` எண்ணிச் சோர்ந் தொழியாது, மேற்கூறியவாறு நோக்குமாற்றால் நோக்கிக் காணுதல் கூடும்` என்பதும், `ஞானிகள் அவனை அங்ஙனம் கண்டிருப்பர்` என்பதும் கருத்துக்களாம். உரம் - அறிவு. `வழக்கு` எனினும், `தொடர்ச்சி` எனினும் ஒக்கும். அது பிறவித் தொடர்ச்சியையே குறித்தது. ``சுடர்`` என்றது அறிவை. தான், அசை. தான் - தாங்குபவன். ஆறு - வழி. தனாதென ஆறு அறிவொண்ணா - தான் கையாளும் வழி இது என அறிய ஒண்ணாமல், `ஒண்ணாது` என்பது ஈறு குறைந்து நின்றது. அரன் - பாசத்தை அறிப்புன். ``உரனாய் ... ... ... அரனாய்`` என்றது, சிவன் உலகில் நிற்கும் நிலையில் கொண்டிருக்கும் இயல்புகளை விரித்தது. அதனால், அவை அவன் அருள் புரிதற்குக் காரணமாக, அதற்குப் பின் வைத்து உரைக்கப்பட்டது.
இதனால், சிவன் பொருள் நிலையில் வாக்கு மனங்களைக் கடந்தவனாயினும், அருள் நிலையில் உலகில் எங்கணும் நிறைந்து நிற்றலால் இங்குள்ளார் அவன் உண்மை உணர்தல் கூடும் என்பது கூறப்பட்டது.)

பண் :

பாடல் எண் : 1

ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

பொழிப்புரை :

ஐந்தொழில் செய்யக் கருதிய காலத்துக் கொள்ளப்படுகின்ற `உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகை வடிவங்களும் இன்றி, அவற்றைக் கடந்துள்ள, உண்மை நூல்களால் கூறப்படுகின்ற சொரூப சிவனது மேலான இயல்பாவது, அவனைத் தன்னின் வேறாக வாயினும், ஒன்றாகவாயினும் உணரும்பொழுது அவ்வாறு உணரும் உயிரினது மயிர்கால்தோறும் தவறாது ஊறித்ததும்பகின்ற அமுதம்போலும் பேரின்பமேயாம்.

குறிப்புரை :

ஆதி - குறிப்பிட்ட ஒருகாலம். அக்காலத்தில் வடிவம், பெயர். தொழில் இவைகளைக் கொண்டு நிற்கின்ற சிவன். `தடத்த சிவன்` எனப்படுவான். அவைகளுள் ஒன்றும் இன்றித் தன்னியல்பில் நிற்கின்ற சிவன் `சொரூப சிவன்` எனப்படுவான். அவன் அநாதி. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, உரைக்க. ``சொரூபங்கள்`` என்றது வடிவங்களை. மூன்றும் என்னும் முற்றும்மை தொக்கது. ஓதுதல், இங்கு உணர்தலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. `ஓதும்` என்பது பாடம் அன்று. அமுது ஊறிய - `அமுதம்போல ஊறிய` என உவமத் தொகை. பேதம், வேறாக உணர்தல். அபேதம், ஒன்றாக உணர்தல், முன்னது முதல்நிலை. பின்னது முடிநிலை. இவற்றின் பின், `இரண்டிலும்` என்னும் தொகைச் சொல் வருவிக்க இரண்டிலும் உளதாகும் ஆனந்தம் முறையே காதலன் காதலியைக் களவுக் காலத்து இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் இடந்தலைப்பாடு முதலிய காலங்களிலும், கற்புக் காலத்துப் பிரிந்து மீண்ட பின்னும் காணும் பொழுதும், கூடிய பொழுதும் உளவாகும் இன்பங்களை ஒக்கும். அவற்றிடையே வேற்றுமை உளதாயினும் இன்பம் ஆதலில் வேற்றுமையின்மை பற்றி, ``பிறழாத ஆனந்தம்`` என்றார். `சிந்தையுள்ளே நிற்கும் சிவனை ஞானிகள் சுகோதயனாகவும், சுக வாரியாகவும் உணர்ந்து இன்புறுவர்` என்பதாம்.
இதனால், சிந்தையில் உள்ள சிவனது இன்ப நிலையை உணர்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பொழிப்புரை :

பொருள்களை உணர்தற் கருவியாகிய உணர்வும், அவ்வுணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் சிவன் ஒருவனே. அனைத்துப் பொருள்களையும் தக்கவாற்றால் இயைத்துச் செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் தனியே நினைக்கவும் வாரான். ஆயினும் கொத்தாய் உள்ள மலர்களினின்றும் மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயற்பாட்டில் அவன் விளங்குகின்றான்.

குறிப்புரை :

`அவனை அத்தன்மையனாக உணர்தல் வேண்டும்; ஞானிகள் அவ்வாறு உணர்ந்திருப்பர்` என்பதாம்.
`எல்லாம் அவனே` என்றல் அவன் அவற்றில் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியாம். ``அவன்`` என்பது பண்டறி சுட்டு. ``புணர்வு`` என்பது, விடாது பற்றுதல். அஃது அதற்கு ஏதுவாய விருப்பத்தைக் குறித்தது. ``இணரும்`` என்பது பெயரடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. `இணராக்கும்` என்றபடி. இணராக்கல் - கொத்தாக்கல். துணர் - பூங்கொத்து. `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.
இதனால், `அனைத்துப் பொருள்களின் செயற்பாட்டினையும் அவனது செயலாக உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு``
-திருக்குறள் - 355.
என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 3

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு மலர்க் கந்தம்போலத் துள்ளி நிற்கின்ற சிவன் தன்னை நினைந்திருப்பவர் குறையை முடிப்பவன். வேதத்தை ஓதும் அயன், மற்றும் மால் முதலியோருடைய தலைக்குள் இருந்து அறிவைப் பிறப்பிப்பவனும் ஆவன். ஆகையால் அவனையே நினைத்து அவன் திருமுன்பில் இரு.

குறிப்புரை :

`இருப்பின் உனக்குக் குறை உண்டாகாது` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``கேள்வி`` என்றது `சுருதி` என்றபடி. சிவனது திருமுன்பிலே (சந்நிதியிலே) இருத்த லானது புற உலகை நோக்கும்பொழுதும் அவற்றின் இயல்பினைச் சிவனது அருளாகவே கண்டிருத்தலாம். ``மறையவன், மாதவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், சிவனைச் சேர்ந்திருப்பவர் செம்மையராய் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவானான் என்விழித் தானே.

பொழிப்புரை :

மின்னல் மின்னினாற்போலத் திடீரெனத் தோன்றி மறைந்த ஓர் ஒளியால் மூடிக்கிடந்த எனது அறிவாகிய கண்ணைத் திறந்தேன். திறந்தவுடன் சிவன் அக்கண்ணில் என் அறிவினுள்ளே அறிவாய் விளங்கினான்.

குறிப்புரை :

இடையிரண்டு அடிகள் சிவனது இயல்பைக் குறித்து நின்றன. எனவே, ``தலைவன், இணையிலி, நந்தி`` என்பன ஒரு பொருள்மேற் பல பெயராய் வந்தனவாம். தன் உற்ற சோதி - தன்னை இயல்பாகவே பற்றியுள்ள ஒளி; அஃது அறிவேயாம். அந்த அறிவாகிய ஒளியே மின்னல்போலத் தோன்றி மறைந்தது. அஃதாவது, `சத்தி நிபாதம். முதற்கண் ஆன்ம அறிவில் ஓர் அதிர்ச்சி உண்டாகும் படி தோன்றிப் பின் மெல்ல முதிர்ந்தது` என்பதும், `அதனால் எனது அறிவு சிவத்தை அறியும் நிலையைப்பெற்றது` என்பதும், அதனைப் பெற்றபின் சிவன் அறிவினுள் அறிவாய் விளங்கினான்` என்பதும் கருத்து. அறிவினுள் அறிவே சிவஞானம். `விழிக்கண்` என ஏழாவது விரிக்க. அறிவு, ``சிந்தை`` எனப்பட்டது. `சிந்தையை விழித்தேன்` என்க. ``விழித்தேன்`` என்றது குறிப்புருவகம்.
இதனால், சத்தி நிபாதத்தில் திருவருள் மிக்கு விளங்க, அதனாலே பெற்ற சிவ தரிசனத்தை எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.

பொழிப்புரை :

உண்மையாயும், ஞானமாயும், உள்ள ஒப்பற்ற பரம்பொருள் அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கும். அந்த ஆனந்தம் ஆன்ம அறிவு இருந்துகொண்டிருக்கும் பொழுது இராது. (எனவே, ஆன்ம அறிவு தோன்றாத நிலையே அனுபவமாம்.) ஆயினும் ஆன்ம அறிவு உள்ளபொழுது மேற்கூறிய ஆனந்தத்தைக் காட்டுகின்ற அருள் ஒளி உளதாகும். (அந்த அருள் ஒளியால் சிவத்தை உணர்தல் சிவ தரிசனமாகும்.) அதன் பின் அருள் ஒளி ஆன்ம அறிவை விழுங்கி நிற்கும் நிலை நின்மல சிவ துரியமாகும். (இதுவே சிவயோகமாம்.) இத்துரியத்துள் விளங்குகின்ற அருள் ஒளியே ஆனந்த அனுபவமாகிய பர துரியத்துள் ஆன்மாவைச் செலுத்து.

குறிப்புரை :

``நில்லா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சம், ``சிவானந்தம்`` என்பதனோடு முடிந்தது, சிவானந்தப் பேரொளி - சிவானந்தத்தைக் காட்டும் பேரொளி. சுத்தம் - நின்மலம். அஃதாவது மலம் நீங்கினும் அதன் வாசனை நீங்காமையால் ஆன்ம அறிவு `யான், எனது` என முனைந்து நிற்றல் இன்மை எனவே, இம்முனைப்பின்றி பேரொளியாம் நிற்றலே சுத்தப் பிரம துரியம் ஆதல் அறிக. சிவத்தை, ``பிரமம்`` என்றார். ``துரியம்`` என்றதன்பின், ``துரியத்துள்`` என்றது. `அதனினும் மேலான துரியத்துள்` என்றதாம். ``உய்த்தல்`` என்னும் தொழிற்பெயர் உய்ப்பதாகிய வினைமுதலைக் குறித்தது. இதன்பின் ``துரியம்`` என்றது, முற்கூறிய பிரம துரியத்தை.
இதனால், `ஆனந்த அனுபவமே சிவபோக நிலை` என்பதையும் அருள் அனுபவம் `சிவ யோக நிலை` என்பதையும் விளக்கும் முகத்தால், அவற்றிற்கு முன் நிற்கும் சிவ தரிசன நிலை உயிர் சிவஞானம் கண்ணாகச் சிவத்தை உணரும் நிலை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரனல்லன் நீடும் பராபரன் அல்லன்
உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன்
தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும்
அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.

பொழிப்புரை :

``பரனாய்ப் பராபரன் ஆகி``9 என்னும் மந்திரத்திற் கூறியபடி சிவ ரூபத்தில் `பரன்` முதலிய இயல்பினனாய் வேறு தோன்றுகின்ற சிவன், சிவ தரிசனத்திலும் அத் தன்மையனாய், அவற்றிற்கு மேற்பட்ட சிவயோக சிவ போகங்களில் அவ்வாறு காணப்படாது அவற்றைக் கடந்து ஆன்மாவைத் தன்னுள் அடக்கி அருளையும், ஆனந்தமாயும் விளங்குவன்.

குறிப்புரை :

இது, ``பரனாய்ப் பராபர னாகி`` என்னும் மந்திரத்துட் கூறியவற்றை எதிர்மறுத்துக் கூறுமாற்றால், சிவரூப சிவதரிசனங்கட்கு மேற்பட்ட நிலைகள் உளவாதலைக் குறித்தது. `அதனால் அவற்றை அடைந்தார் புறப் பொருள்களை நோக்குமிடத்து சிவயோக நிலையில் நின்றே நோக்குதல் வேண்டும் என்பது கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 7

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.

பொழிப்புரை :

`வீடு பேறு` என்பதில் வீடு - விடுதல். பேறு - பெறுதல். விடுதல் பாசத்தை; பெறுதல் பதியை. வீடும், பேறுமே இங்கு ``முத்தியும், சித்தியும்`` என ஓதப்பட்டன. முற்றிய ஞானத்தோன் - இவ்விரண்டன் இயல்புகளையும் முற்றும் உணர்ந்தவனே நிறை ஞானி -யாவான். ``இருமை வகைதெரிந்து ஈண்டும் அறம் பூண்டார்``3 என்றார் திருவள்ளுவரும். இத்தகையோன் தனது ஞாநத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அதனானே அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, அவ்வாற்றால் சிவத்துள் அடங்கி, அதனானே அறிவர் யாவரும் ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் ``தலைப்படுதலால், சகலத்தில் சுத்தாவத்தை யாகிய சிவானந்தத்தை அடைந்த ஞானியர் ஆவர்.

குறிப்புரை :

``மா சத்தியுள் நின்று`` என்பதை, பரந்தன்னுள் நின்று`` என்பதற்கு முன்னே கூட்டுக. ஓர்த்தல் - ஆராய்தல். தத்துவம் - மெய்ப் பொருள். ``சுத்தி`` என்றது சகலத்திற் சுத்தத்தை. ``அகன்றோர் போதர்`` என்பது வேறு முடிபாகலின், ஒருமை பன்மை மயக்கம் இன்று.
இதனால், நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை எய்தினோர் அந்நிலையினின்றும் ஒரோ ஒருகால் இறங்கினும் சிவயோக நிலையினின்றும் தாழார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன்
உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.

பொழிப்புரை :

எவ்வகை அவத்தையிலும் `துரியாதீதம்` என்பது உயிர் தன்னை மறந்திருக்கும் நிலையாகும். ஆகவே, நின்மலா வத்தைத் துரிய துரியாதீதங்களே யாயினும் அந்நிலைகளை அடைந்த ஆன்மா புறத்துச் செல்லுதல், அகத்தில் மீளுதல், பொருள்களை நோக்கி ஓடுதல் என்பனவாகிய தனது இயல்பு அனைத்தினும் நீங்கி நிற்கும் என்றால், அவ்வான்மாவை முன்னது போல வைத்து, `சீவன்` என்று சொல்வது எங்ஙனம்?

குறிப்புரை :

`கூடாது` சிவம் என்றே சொல்லுதல் வேண்டும்` என்பதாம். முன் மந்திரத்தில் ``சுத்தி`` நின்மலாவத்தை இடம் பெற்றமையால் இங்கு, ``துரிய அதீதம், துரியம்`` எனப்பட்ட நின்மலாவத்தைய ஆயின. புரிதலுக்கு, `ஆன்மா` என்னும் எழுவாய் வருவிக்க. விள்ளா - விள்ளாது; இடைவிடாமல் மிளிர்தல். இங்கு அறிவு செல்லுதல். ``விரியும்`` என்பது முதலிய `செய்யும்` என்னும் எச்சங்கள் மூன்றும் அடுக்கி, ``உரு`` என்னும் ஒரு பெயர் கொண்டன. `உரு` என்றது இயல்பை. திரிதல் - வேறுபடுதல்; நீங்குதல். ``உரைப்பது`` என்பது தொழிற்பெயர். `முன்னது போல` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
பராவத்தையை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமைக்கு நின்மல துரியாதீதங்களை எடுத்துக் காட்டினார்.
இதனால், சொரூப சிவனை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமை உவமை முகத்தால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.

பொழிப்புரை :

நூல்களில் சொல்லப்பட்ட முத்தி, வரிசைப்பட்ட `துரியம், துரியாதீதம்` என இரண்டாகும். அவற்றுள் துரிய முத்தியாவது, ஆதியாய், ஆயினும் பரத்தோடு வேற்றுமையில்லாத சிவத்தை அடைந்து நிற்றலும், துரியாதீத முத்தியாவது, அநாதியாகிய பரத்தை அடைந்து நிற்றலும் ஆம் பரத்தை அடைந்த உயிர் பின் எவ்வாற்றானும் மீளா நிலையே அனைத்தும் நீங்கிய முடிநிலை முத்தியாகும்.

குறிப்புரை :

அடைவு - வரிசை. ``அடைவே`` எனக் கூறியதனால் துரியம் முன்னதும், துரியாதீதம் பின்னதும் ஆதல் விளங்கிற்று. `பரம், சிவம்` என்பன ஒன்றேயாயினும் தடத்த சிவத்தை, `சிவம்` என்றும், சொரூப சிவத்தை, `பரம்` என்றும் நாயனார் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார். அதனானே சகலத்திற் சுத்தாவத்தயை, `சிவாவத்தை` என வைத்து தனிச் சுத்தாவத்தையை, `பராவத்தை` என்றார். பரத்தை ``அநாதி`` என்றமையால், சிவம் ஆதியாதல் விளங்கிற்று.
`பரம், சிவம் வேறல்ல` என்றற்கு ``பரத்தொடு பேதம் இலாச் சிவம்`` `பரத்தொடு` எனவும் `சிவத்தை` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. ``சிவத்தை எய்தும் துரியம்`` என உடம்பொடு புணர்த்துக் கூறினமையால், `துரியமாவது சிவத்தை எய்துதல்` என்பது பெறப் பட்டது. சிவ நிலையிலும் அதீத நிலை உளதாயினும், அது நிலை பெறாது துரியமே மேற்பட்டு நிகழ்தலால், சிவ நிலையை, ``துரியம்`` என்றே கூறினார். இந்நிலை `சீவன் முத்தி` என்னும் முதல் முத்தியாம். ``சொரூபம்`` என்றது, சொரூபத்தை அடைந்த நிலையைக் குறித்தது. ``ஏதம் இலா நிருவாணம்`` என்றதனால், சொரூபத்தை அடைந்த நிலையை அனைத்துக் குற்றங்களும் பற்றற நீங்கிய `முழுத் தூய நிலை` என்றதாயிற்று. இது பரமுத்தி - முடிநிலை முத்தி. இதனை அடைந்த பின் மீட்சியில்லை. நிருவாணம் - முழு நீக்கம். `கரும நிருவாணம்` எனப்பட்டதும் அது.
`பராவத்தையிலும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகள் உள` என்பது மேற்காட்டப்பட்டமையின் அதனுள்ளும் அதீத நிலையை எய்தினோர்க்கே மீட்சியில்லை ஏனையோர்க்குச் சிவனது சங்கற்பத்தால் சிறுபான்மை மீட்சி உண்டாதலும் உண்டு.
இதனால், `முத்தி பேதம் இரு வகைத்து` என்பதும் `அவற்றுட் பின்னதே முடிநிலை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

பொழிப்புரை :

பரத்தை எய்துதலாகிய அதீத நிலையை அடைந் தவர்களே உலகர் செய்யும் செயல்களினின்றும் முற்றும் நீங்கினவராவர்.

குறிப்புரை :

எனவே, `ஏனையோர் பயிற்சி வயத்தால் ஒரோ ஒருகால் அச்செயல்களைத் தம் இழப்பில் நின்று செய்யினும் செய்வர்` என்பதாம். ``அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை``3 என அப்பர் குறிப்பு மொழி -யால் அருளிச்செய்தது பரத்தை எய்தினோர் நிலையையே ஆகும்.
பரத்தின் சிறப்பை இதனுட் பலவாறாக எடுத்தோதினார். பரத்தை, ``பரம்பொருள்`` என்றார், ``கண்ணுதல், சோதி`` எனக் குறித்ததும் அதனையே. இவை பொருட் பின்வருநிலையணி. கற்றல், இங்கு ஆசிரியர்பாற் கேட்டல். கருதுதல், சிந்தித்தல். ``சுற்றம் அற்றவர்`` என்பதில் `சுற்றம்` என்பது அம்முக்குறைந்து நின்றது. அவர் முற்றத் துறந்தோராவர் இங்ஙனம் கூறியது தெளிவெய்தினோரை. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, ``உற்றவர்கள்`` என்பதனோடு கூட்டியுரைக்க.
இதனால், பரமுத்தியின் சிறப்பு வகுத்தோதி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

பொழிப்புரை :

சிவன் கொடுத்த பொருளை அஃது அன்னதாதலை அறியாது தம்முடையனவாகக் கருதிச் சிவனுக்கும், சிவனடியார் களுக்கும் கொடுக்க மறுத்தவர்களது பொருளை மூர்க்க நாயனார் சூதாடிப் பறித்ததுபோல தம்மையுணருமுகத்தால் தமையுடைய தன்னை உணரற்பால வாகிய உயிர்கள் அதனைச் செய்யாது, தம் கருவி கரணங்களைத் தாம் விரும்பும் வகையிற் செலுத்தி அல்ல லுறுதலை அறிந்த சிவபெருமான் அவைகள் அறியாமல் அவை களோடு கூடியிருந்தே அக்கருவி கரணங்களின் வழித் தன் வழியில் அவைகளைத் திருப்புதலாகிய சூதாட்டத்தினைச் செய்வதாகக் குறிப்பிட்டு, ஆயினும், சூதாடுவோர் பிறர் தமக்கு எதிர் இருந்து தம் பொருளைக் கவர முயலுதலை நன்கு அறிதல் போல உயிர்கள் சிவனை அறிந்து கொள்ளவில்லை` எனக் கூறுகின்றார்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்த பொருளாயினும் அப்பொருளை கட்குடிக்கும், கவறொடுதலுக்கும் ஒருவன் பயன்படுத்துவானாயின் அஃது அவனுக்குப் பாவமேயாதல் போல, மூர்க்க நாயனார் சூதாடிப் பொருள் ஈட்டினாராயினும் அதனை அவர் சிவனுக்கும், சிவன் அடியார்களுக்குமின்றி, வேறுவகையில் செலவிடாமையால், அஃது அவர்க்குச் சிவ புண்ணியமேயாயிற்று. வாதவூரடிகள் பாண்டியன் பணத்தைச் செலவிட்டது இத்தகையதோ. சிவன் மறைந்து நின்று செய்யும் செயலும் இப்படிப்பட்டதே.
உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்தபோதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியிற் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று மாற்று கின்றான். அஃது ஒரு சூதாடியின் செயல் போன்றுள்ளது. ஆகவே சிவபெருமா -னாகிய சூதாடிக்கு உயிர்கட்கு அவனால் தரப்பட்ட உடம்புகளே சூதாடும் பலகைகள். சாக்கிரம் முதலிய மூன்றவத்தை இடமாகிய புருவ நடு, கண்டம், இருதயம் ஆகியவையே சூதாடு களம். உடம்பின் புறத்தும், அகத்தும் உள்ள கருவிகளே உருட்டியோ, குலுக்கியோ பந்தயம் பெறும் கருவிகள். எழுத்தும், சொல்லும், சொற்றொடருமாய் உணர்வைத் தரும் மொழிகளே. அக்கருவிகளின் வழிப்பெற்ற பந்தயத்தின் படி காய்களை இடம் பெயர்த்து வைத்து, வெற்றி தோல்வியைத் துணிகின்ற வரைகோடுகள் அல்லது கட்டங்கள், இவை -களில் பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.

குறிப்புரை :

`இஃதொரு பெருவியப்பு` என்பது குறிப்பெச்சம். ``ஐந்து`` என்றது உபலக்கணம் ஆதலின் தொண்ணூற்றாறையும் கொள்க. கண் - இடம்; களம். ஆயம் - தாயம். அது பத்து, பன்னிரண்டு முதலாகக் கொள்ளப்படும். `ஆயத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. பொருவது - பொருது, வெற்றி தோல்வி அறியும் கூட்டம்; வரைகோடுகள். அக்கரத்தையே கூறினாராயினும் அவற்றால் ஆகும் `பதம், வாக்கியம்` என்பனவும் கொள்ளப்படும். ஏயஏவிய `உடன் இருந்து` என்க. `உலகர் ஆடும் சூதுபோல்வதன்று; வியப்பைத் தரும் சூது` என்றற்கு ``மாயக்கவறு`` என்றார் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றிச் சிவனைக் ``கள்ளர்`` எனக் கூறிற்றுத் திருவுந்தியார்.8 குமர குருபர அடிகளும் ``வஞ்சித்த எங்கும் உளன் ஒருவன்`` என்றார். 9 மறைப்பு - மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்ற உணர்தல்.
இதனால், சிவன் தனது மறைத்தற் சத்தியை (திரோதான சத்தியை)க் கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு)
ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை :

அனைவரும் சிறிதும் துன்பம் இன்றி மிக இன்பத்துடன் நடந்து செல்லத் தக்க நல்ல வழி ஒன்று இருக்கின்றது. ஆயினும் முட்புதர்கள் பல அதனை மூடிக்கிடக்கின்றன. அதைத் தெரிந்து அப்புதர்களை நீக்கி நல்வழியைக் கண்டு நடப்பவர் மிகச் சிலராகவேயிருக்கின்றனர். அந்தச் சிலர்மேல்தான் எனது உள்ளத்தில் உள்ள அன்பு கரந்து பாய்கின்றது.

குறிப்புரை :

`நல்ல வழி` என்றது, நாயனார், ``சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` எனவும், ``சேயினும் நல்லன், அணியன் நல்ல அன்பர்க்குத் - தாயினும் நல்லன் தாள்சடையானே``3 எனவும் முதற்கண் கூறி அவனை அவ்வாறுணர்ந்து நிற்கும் நெறியை.
தூறுகளாவன, அச்சிவனை, ``அவன் தாமச குணத்தன், பித்தன்; சாம்பலைப் பூசிக்கொண்டு, எலும்பு மாலைகளையும், தலைமாலைகளையும் அணிந்துகொண்டு சுடுகாட்டில் ஆடுபவன்`` என்பனபோல் இகழ்ந்து கூறும் உரைகள்.
``இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்``l
என்னும் அம்மை திருமொழியையும் நோக்குக. அதனுள், ``பொருள்` என்றது, `உண்மை` என்றபடி. ஈற்றடி, `நல்லார்கண் நல்லான் அன்பு செய்வர்` என்பதை உணர்த்தி நின்றது.
இதனால், `சிவநெறியாகிய நன்னெறியை இகழ்ந்து கூறும் புன்னெறிகள் உள; அவற்றை அறிந்து விலக்கி அந்நன்னெறிக் கண் செல்ல வல்லார் மிகச் சிலரே` என்பது உள்ளுறையாக உணர்த்தப் பட்டது. ``சைவ சித்தாந்தத் - தேனமு தருந்தினர் சிலரே``l எனக் குரம குருபர அடிகளும் குறித்தருளினார். எனக் குமர குருபர அடிகளும் குறித்தருளினார்.

பண் :

பாடல் எண் : 3

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனைஉள
ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை
ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.

பொழிப்புரை :

ஆறு தெருக்கள் - அறிவினால் மிக்க அறு சமயங்கள். அவை அனைத்தும் சந்திக்கின்ற சந்தியிடம் - பக்குவான்மா. அதற்கு வீடு பேறாகிய சாற்றைத் தருவனவாய் முறைப்பட மேட்டு நிலத்தில் உயர்ந்து உயர்ந்து நிற்கும் நான்கு பனை மரங்கள் - சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆறு தெருவில் செல்பவர்களில் யாரும் அந்தப் பனை மரங்களில் ஒன்றிலேனும் ஏற இயலாது. அவற்றை விடுத்துச் சிவ குருவினை அருளால் சிவ நெறியை அடைந்தோரே அவற்றில் ஏற இயலும் ஆகையால், அந்தச் சிவநெறியே அந்தப் பனைமரங்களில் ஏறுதற்கு அரிதல் கிடைக்கும் ஏணி. அந்த ஏணி வழியாக நான் அவற்றில் முறையாக ஏறினேன். ஏறியவுடன் எழுவகைப் பிறவியாகிய கடல்கள் ஏழினது கரையையும் கண்டுகொண்டேன்.

குறிப்புரை :

`நாட்டில் வாழ்பவர்கள் கடற்கரையை அங்கிருந்தே காண வேண்டுமாயின் உயர்ந்த பனைமரத்தின்மேல் ஏறிக் காண வேண்டும். அதுபோலப் பிறவிக் கடலின் கரையை உலகியலில் நின்றே காணவேண்டுமாயின் மிக மேட்டு நிலத்தில் உள்ள ஞானமாகிய பனை மரத்தின்மேல் ஏறிக் காணவேண்டும். அதை அந்த மேட்டு நிலத்தில் சென்று அடைவதற்கு அதற்குக் கீழே கீழே `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்று பனை மரங்கள் உள்ளன. அவற்றில் முதலில் உள்ள `சரியை` என்னும் பனை மரம் முதலாக முறையே ஏறிச் சென்று, ஞானமாகிய பனை மரத்தை அடைந்து அதில் ஏறி நான் பிறவியாகிய ஏழு கடல்களை நான் கண்டுவிட்டேன்` என்கின்றார் நாயனார்.
`ஆறு தெருக்கள் சந்திக்கின்ற சந்திப்பை அடைந்த ஒருவன். தான் குறித்த மேலிடத்தை அடைதற்கு எந்தத் தெரு வழியாகச் செல்வது என்று திகைப்பான். அப்பொழுது அருளும், அறிவும் உடையான் ஒருவன், `இவைகளில் எதன் வழியாகவும் செல்லாமல், இதோ தெரிகின்ற இந்த பனைமரங்கள் வழியாக முறையே ஏறிச் சென்று அடைக` எனக் கூறி உதவி செய்தாற்போல ஆறு சமயங்களைக் கண்டு திகைத்த எனக்கு எங்கள் நந்தி பெருமான் வழிகாட்டினார் என்றபடி.
பனைமரத்தில் ஏறி இளைத்தவர்கட்கு ஓர் ஆறுதலாகக் கிடைப்பது அம்மரத்தின் சாறு. அதனை, `பத நீ` என்பர். அது போலச் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன் சாலோக சாமீப சாரூபங்களாகிய பத முத்திகளும் ஞானத்தில் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன்கள் அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி` - என்னும் அபர முத்திகளுமாம் ஆதலின் அவற்றைக் குறித்தற்கு, ``சாறு படுவன நான்கு பனை`` என்றார்.
இதனால், `ஒன்றோடொன்றொவ்வாத சமயங்களின் வழிச்செல்லாது, சித்தாந்த சைவ நெறியைச் சிவ குருவழியாக அறிந்து, அதில் சரியை, கிரியை, யோகங்களில் வழி ஞானத்தை அடைந்து, அது வழியாகச் சிவப்பேற்றினைப் பெறுதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

பொழிப்புரை :

என்னுடைய தோட்டத்தை ஒருசிலர் தங்களுடைய தாக ஆக்கிக்கொண்டு அவர்கள் விருப்பம்போல அதனைப் பயன் படுத்தி வந்தனர். இருப்பினும் அவர்களுக்கிடையே நான் ஒட்டி ஒன்றிச் சிறிது இடத்தைத் தோண்டிக் குழிசெய்து, எனக்குப் பழக்க -மான உணவாகிய கத்தரிக்காயைப் பெறவேண்டி அதன் விதையை ஊன்றினேன், ஆயினும் அந்த விதையினின்று பாகற் கொடி முளைத்துப் படர்ந்தது. படர்ந்த அக்கொடியோ பூசணிப் பூவைப் பூத்தது. அந்தப் பூவோ வாழைக் காயைக் காய்த்தது. அந்தக் காய் பழுத்ததைப் பார்த்துவிட்டு, முன்பு வலிசெய்து குடியிருந்த அந்த அற்பர்கள், `ஐயா, உங்கள் தோட்டம் மிகப்பெரிய புதுமைகள் விளைகின்ற தோட்டமாய் உள்ளது; உங்களுக்கு ஒரு கும்பிடு` என்று சொல்லிக் கும்பிட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.

குறிப்புரை :

`காய்களில் கத்தரிக்காயையே உண்டு களித்து வந்த நான் கனிகளில் சிறந்த வாழைக்கனி தானாகக் கிடைத்ததை உண்டு, அந்தக் கத்தரிக்காயை வெறுத்துவிட்டுப் பேரானந்தம் அடைந்தேன்` என்பது குறிப்பெச்சம்.
தோடம் - ஆன்ம அறிவு. அதில் குடியிருந்த அற்பர்கள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய மும்மலங்களின் காரியங்கள். தோண்டிய குழி குருவை அடைந்து வழிபட்டது. அதில் கத்தரி விதைத்தது, `குருவும் இவ்வுலகில் நல்வாழ்வை அடைய வழிசொல்வார்` என்று நினைத்து அவர உபதேசத்தைக் கேட்டது. கத்தரி விதையினின்றும் பாகற்கொடி முளைத்தது. குருவினுடைய உபதேசம் காதில் விழுந்தவுடன் உலகத்தின்மேல் வெறுப்புத் தோன்றியது. இது, `கடல் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டுவான்` என்று கருதித் திருவெண்காடர் வளர்த்த மகன் அவருக்குக் காதற்ற ஊசியை வைத்து விட்டு மறைந்தது போல்வது. சிலருக்கு இவ்வாறு ஞானம் எதிர்பாராத வகையில் கிடைப்பதுண்டு. திருவாதவூரடிகள் ஞானம் பெற்ற வரலாற்றையும் இங்குக் குறிக்கலாம். இறைவன் சுந்தரரைத் திருமுது குன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கூடலையாற்றூரில் கொண்டு விட்டதைக் கூறலாம். பாகற்கொடி பூசணிப் பூவைப் பூத்தது, உலகத்தை வெறுத்த வெறுப்புணர்ச்சியிலிருந்து வீடுபேற்றில் விருப்பம் பிறந்தது. அவ்விருப்பம் ஆன்மாத் தான் கொள்ளத்தக்க விருப்பமாய் அதற்கு அழகு செய்தல் பற்றி, அதனை `பூசு அணி` எனச் சிலேடைப் பொருள்படக் கூறினார். பூசு பூசப்படும் பொருள். அணி - அணியப்படும் பொருள். ``வாழை`` என்பதும் அவ்வாறு `வாழ் ஐ` எனப் பிரிந்து சிலேடைப் பொருள் உணர்த்திற்று. வாழ் - வாழ்வு. ஐ - வியப்பு; அதிசயம் அதிசயமான வாழ்வு, பேரின்ப வாழ்வு. இதனை, ``நீடு வாழ்தல்``3 என்பார் திருவள்ளுவர். `ஞானம் வந்தபின் மும்மல காரியங்கள் ஓடிவிட்டன` என்றார். `வழுதலை, வழுதுணை` என்பன ஒரு பொருட் சொற்கள். ``புழுதியைத் தோண்டினேன்`` என்பதை முதலிலும் ஈற்றடியை இரண்டாம் அடியின் பின்னும் கூட்டுக.
இதனால், ``ஆசாரியராய் உள்ளவரை அடைந்து வழிபட்டால் நம்மையறியாமலும் நமக்கு ஞானம் பிறக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

பொழிப்புரை :

`ஐ` என்று வியக்கத்தக்க மிகச் சிறிய பொருளையே (கடுகு, மிளகு, கொத்துமல்லி போன்ற பொருள்களையே) விளைக்கக் கூடிய விதைகளை இட்டால், அவற்றிலிருந்தே ஆனைபோன்ற மிகப்பெரிய (மாங்காய், தேங்காய், பலாக்காய் போன்ற) பொருள் -களையே விளைவிக்கின்ற அதிசய நிலம் ஒன்று உண்டு. அஃது அத்தன்மைத்தாதலை அறிந்து அதில் விதை விதைக்கின்றவர்கள் உலகத்தில் பலர் இல்லை. அந்த நிலம் சிவன் மனம் வைத்தால், தவறாமல் எளிதில் அடையப்பெறுவதாகும்.

குறிப்புரை :

`ஐ` என்பது வியப்புப் பொருட்டாய், வியப்பிற்குக் காரணமான, ``புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்`` என்னும் நான்கனுள் சிறுமை பற்றி வந்தது. ஆனை, உவமையாகுபெயராய் அதுபோலும் பொருளை உணர்த்திற்று. ``தெளிவு`` என்பது தெளியப்படும் தன்மை குறித்து நின்றது. ``மனம்`` என்றது. மனத்தின் உவகையை, `நிலம், சிவனது திருமேனி வகைகள்` எனவும், விதைகள் அவற்றிற் செய்யும் சரியை, கிரியை, யோகம் என்னும் வழிபாட்டு வகைகள் எனவும் கொள்க. சிலந்தி ஒன்று வெண்ணாவற் கீழ் உள்ள இலிங்கத்திற்கு வாய் நூலால் பந்தலிட்டுச் சோழ மன்னன் ஆயினமையும், எலியொன்று, திருக்கோயில் உள்ள விளக்கைத் தூண்டி, மூவுலகங்களையும், அடிப்படுத்து ஆண்டமகாபலிச் சக்கரவர்த்தியாயும் ஆயினமை போன்றவற்றை வைத்து இவ்வாறு கூறினார். முதல் இரண்டு அடிகளில், பெரியோர்க்குச் செய்த உபகாரம் பொருளால் சிறிதாயினும் பயனால் பெரிதாதல் அறநூல்கட்கெல்லாம் உடன்பாடாதலின் தேவர்க்கெல்லாம் தேவனாம் பெரியோனுக்குச் செய்யும் வழிபாடு பொருளால் மிகச் சிறிதாயினும், பயனால் மிகப் பெரிதாம்` எனச் சிவபுண்ணியத்தின் சிறப்பை உள்ளுறை வகையால் உணர்த்தி அதனைச் செய்யாதார் நிலைக்கு இரங்கியவாறு. `அச்செயின்` எனச் சுட்டு வருவிக்க. ``தவமும் தவம் உடையார்க்கு ஆகும்``8 என்றபடி. `சிவபுண்ணியத்தில் மனம் செல்லுதற்கும் சிவ புண்ணியம் வேண்டும்` என்பது குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

பொழிப்புரை :

மக்களில் ஒவ்வொருவருக்கும் உள்ளது ஒரு நிலந்தான். அந்த நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நீர் எளிதில் பாய்ந்து விளைவைத்தரக் கூடியதாய் உள்ளது மற்றை இரண்டு பகுதிகள் நீர் செல்லாது, முரம்பாய்க் கிடக்கின்றன. மூன்றிலும் உழமுடியாதபடி கருங்கற்கள் உள்ளன. இவற்றைச் சமப்படுத்தி உழ வல்லவர்கட்கு அந்த ஒரு நிலமே வேண்டுமளவு நீர் தேங்கி நிற்கின்ற நிலமாய், நல்ல விளைவைத் தருகின்றது.

குறிப்புரை :

ஒரு நிலம் - ஆன்ம அறிவு. மூன்று பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று அவத்தைகள் (இம்மூன்றையும் சகலத்தின் பகுதியாகவே கொள்க.) பள்ள நிலம், அஃதாவது, நன்செய் - சுத்தாவத்தை. `நின்மலாவத்தை` எனப்படுவதும் இதுவே. இதில் திருவருளின் வழிச்சிவம் பிரகாசித்து நிற்றலால், நீர் நன்கு பாயும், ``பள்ளச் செய்`` எனப்பட்டது. ஏனைக் கேவல சகலங்கள் திருவருள் விளக்கம் இன்றி இருத்தலால், ``பாழ்ச் செய்`` எனப்பட்டன. ``கல்ல செய்`` என்பது, எதுகை நோக்கித் திரிந்தும், ஒற்றுமிக்கும் நின்றது. கல்ல செய் - கற்களை உடைய நிலம். இங்ஙனம் கொள்ளாது, `கள்ளம்` என்றே கொள்ளின், கள்ளத்திற்கும், செய்க்கும் இயைபு யாதும் இன்மை அறிக. `கல்லச் செய்` என்றே பாடம் ஓதி `ஒற்று மிக்கது விகாரம்` என உரைப்பினும் ஆம். ``உள்ளச் செய்`` என்பதிலும் சகர ஒற்று, விரித்தல் `இள்ள செய்யாகிய அங்கே` என்க. ``உள்ள செய்`` என்றதனால் வேறு செய் இன்மை பெறப்பட்டது. ``உழவு செய்வார்`` என்றது, சொல்லுவாரது குறிப்பால், `செய்ய வல்லார்க்கு` எனப் பொருள் தந்தது. பாழ்ச் செய்யிலும், கற் செய்யிலும் உழ வல்லவர் அரியராதலை அறிக. நிலம் ஒன்றையே தொல்காப்பிடனார் பகுதி பற்றி ``காடுறையுலகம், மைவரையுலகம்`` என்பன முதலாய்ப் பலபோலக் கூறினாற்போல, இவரும் ஒரு செய்யினையே பகுதி பற்றி, ``பள்ளச் செய், பாழ்ச் செய்`` எனப் பல செய்கள்போலக் கூறினார். இம்மூன்றிலும் நிறைந்துள்ள கற்களாவன ஆணவ மலத்தின் சத்திகள். ஆகவே, இங்கு, சுத்தம் ஆவதும் சகலத்திற் சுத்தமே. மூன்றையும் சமப்படுத்தி உழுதலாவது, குருவுபதேசத்தை நனவிலே மட்டுமன்றிக் கனவிலும் மறவாது உணர்தலாம்.
``துஞ்சலும், துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும்``3
``துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை``9
என்றாற்போல ஆசிரியன்மார் அருளிச் செய்தலை அறிக. வெள்ளம் - நீர்த் தேக்கம். ``வெள்ளச் செய்யாகி`` என்றது, முதற்கண் கூறிய, ``பள்ளச் செய்`` போலவே ஆகி - என்றதாம்.
இதனால், `குரு உபதேசத்தை எந்நிலையிலும் மறவாது உணர்வார் உலகில் உலாவினும் முத்தராய் விளங்குவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
காலணை கோலிக் களர்உழு வார்களே.

பொழிப்புரை :

மூன்றாகப் பொருந்தியுள்ள ஏர்கள் மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. (அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்றும் நாடிகள் வழியாகச் செல்லும் பிராண வாயுக்கள், வழி பற்றி இவை மூன்றாயின.) அந்த ஏர்கள் அனைத்தும் உழுதுகொண்டிருப்பது முக்காணி (முக்கால் மா) அளவான சிறிய நிலத்தையே, (ஒரு மாவில் நான்கில் ஒரு பங்கு `காணி` என்னும் பெயரை உடையது. ஆறு ஆதாரங்களில் முதலாவதாகிய மூலாதாரம் முக்கோண வடிவினது ஆதலின், அதனை ``முக்காணி`` என்றார். சுவாசம் இயல்பாக மூலாதாரத்தினின்று எழுந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது) அந்த ஏர்களைத் தடை செய்து செலுத்தினால் அவை குறித்த வழியில் இயங்கிப் பயன் தர வல்லன அவ்வாறு அவற்றைக் குறித்த வழியில் செலுத்திச் சில சொற்களால் அதட்டி அடக்கி, நடுவில் உள்ள நல்ல நிலத்தை உழுதால் நல்ல பலன் கிடைக்கும். மக்கள் அவ்வாறு அந்த நல்ல நிலத்தை உழாமல், வடிகாலை மட்டும் பெரிதாக்கிக் களர் நிலத்தை உழுது கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம். `மூ அணை ஏரும்` என்பதில், `மூன்றாய் அணைந்த ஏர்களும்` என ஆக்கம் வருவிக்க. முற்றும்மை கொடுத்தமையால் `உள்ள ஏர்கள் மூன்றே` என்பது பெறப்பட்டது. ``தாம்`` என்றது உழுபவரை. அவர் அணைகோலலாவது, உழும் பகடுகளைத் தம் வழிப்படுத்தி ஓட்டுதல். குறித்த வழியை, குறிக்கோளாதல் பற்றி, ``தறி`` என்றார். ``பாய்ந்திடும்`` என்பது, பாய்ந்து பயன் விளைக்கும்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. யோகம் செய்வார் மூலாதாரத்தினின்றும் எழுத்து இயங்கும் வாயுவைத் தடுத்துச் சுழுமுனையில் செலுத்தி, அது பிரமரந்திரத்தில் சென்றபொழுது நா அடியால் மேல் துளையை அடைந்து நிறுத்துவர். அதனையே, ``நா அணை கோலி`` என்றார். எனினும் சூனிய சம்பாடணையாகக் கூறலால், `நா` என்பது ஆகுபெயராய் அதனுள் எழும் சொல்லைக் குறித்து, ஏர் உழுபவர் அதட்டும் மொழிகளைக் குறித்தது. ``நடுவில் செறு`` என்பதற்கு `நடுவில் உள்ள நல்ல நிலம்` என்பது வெளிப்பொருள். `புருவ நடுவில் வில்லைபபோன்ற வடிவத்தை உடைய ஆஞ்ஞை என்னும் ஆதாரம்` என்பது உள்ளுறைப் பொருள். `பிராண வாயுவை நடுநாடியில் பிரமரந்திரம் வகையில் செலுத்துதலால், மூலாதாரத்தில் அடங்கிக் கிடக்கின்ற குண்டலி சத்தி எழுந்து ஆஞ்ஞையை அடையும். அஃது அவ்வாறு அடைந்தால், உண்டாகும் விளக்க உணர்வுகளும், காயசித்தி முதலிய சித்திகளும் பலவாம். ஆகவே, மக்கள் அதனைச் செய்ய மாட்டாது. பிராண வாயுவை அது போன வழியிலே போக விட்டு, விரைவில் மக்கட் பிறப்பை இழக்கின்றனர்` என்பதாம். கால் - வடிகால்; வெளிப்பொருள். பிராண வாயுவின் இயற்கை இயக்கம்; உள்ளுறைப் பொருள். நிலத்திற்கு வடிகால் இன்றி, வடிகால் மட்டும் இருப்பின் காய்ந்து, கமர் வெடித்துக் கெடும். கனர் - எதுவும் விளையாத நிலம். அவை இடை பிங்கலை நாடிகள். இரண்டு, நான்காம் அடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், `யோகம் பயின்று பயனடைதற்குரிய மக்கள் அதனைச் செய்யாது, காலத்தை வீணடித்துக் கெடுகின்றனர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.

பொழிப்புரை :

(`ஏத்தம்` என்பதுதான் நீர் இறைக்கும் ஏத்தத்தின் பெயர். அஃது அறியாதார் `ஏற்றம்` என்பர்.) ஏத்தம் இரண்டு - இடை நாடி, பிங்கல நாடி. ஏழு தூவு - ஆறு ஆதாரங்களும், சகஸ்ராரமும், (துரவு - கிணறு) மூத்தோன் - `அகங்காரம்` என்னும் அந்தக் கரணம். இதுவே பிராணவாயுவை இயக்குவது. இளையான் - `மனம்` என்னும் அந்தக் கரணம். (பிராண வாயு இயங்குதலாலே உயிர் அறிவு பெற்று விளங்குகின்றது. அந்த அறிவை நீராகவும், அந்த அறிவு நிற்கும் இடங்களைத் துரவாகவும் பிராண வாயுவின் இயக்கத்தால் உயிரின் அறிவு பிரவர்த்திக்கச் செய்யும் செயலை நீரைப் பயன்படுத்த இறைப்ப தாகவும், அறிவு மனத்தின் வழியே சென்று பயன் விளைத்தலின் மனத்தை நீரை வேண்டும் இடத்திற்குக் கொண்டுபோய்ப் பாய்ச்சுபவ னாகவும் கூறினார். உயிர்க்கு அறிவை உண்டாக்கும் கருவியை நீர் இறைக்கும் மூத்த சகோதரனாகவும், அறிவைக் கொண்டு போய்ப் பயன் படுத்தும் கருவையை, நீரை வேண்டுமிடத்தில் பாய்ச்சும் இளைய சகோதரனாகவும் கூறினார்.) பிராண வாயு நடு நாடியாகிய சுழுமுனையில் சென்றால், ஞானமாகிய பயன் விளையும். அதனால் அதனை, ``பாத்தி`` என்றார். பிராண வாயுவை மனம் சுழுமுனையிற் செலுத்தாது வெளியில் செலுத்தி, அஞ்ஞானமே விளையப் பண்ணுதலால் மூத்தோன் ஓர் ஏத்தத்தின் வழியாக (இடைகலை வழியாக) நீரைத் துரவுக்குத் தந்து மற்றோர் ஏத்தத்தின் வழியாக (பிங்கலை வழியாக) வெளியேற்ற, `அந்நீர் பாத்தியிற் பாயாது, பாழ் நிலத்தில் பாய்கின்றது` என்றார்.

குறிப்புரை :

``பழியுடை ஆக்கை தன்னில், பாழுக்கே நீர் இறைத்து``*
என அப்பர் பெருமானும்,
``ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ கால மெலாம்
பாழுக் கிறைத்தேன்``8
என மாணிக்க வாசகரும் அருளிச் செய்தனர்.
கூத்தாடும் ஆடவன் `கூத்தன்` எனப்படுதல்போல கூத்தாடும் மகள் `கூத்தி` எனப்படுகின்றாள். இங்குக் குறிக்கப்பெறுகின்ற இக்கூத்து, அவிநயக் கூத்து. இதனைப் பழங்காலத்தில் விறலியர் (பாணத்திகள்) ஆடியபோதிலும், பிற்காலத்தில் இது விலைமாதர்க்கே உரியதாய் விட்டது. கோழியைப் பெரிதாக வளர்த்தற்கு மிகத் தொல்லை உண்டு. கூத்தி அத்தொல்லைகளுக்கு உள்ளாகிக் கோழியை வளர்ப்பது, பெரும் -பாலும் தனக்காக அன்றித் தனக்கு விலை கொடுத்துத் தன்னிடம் வருகின்ற விடர்கள் மகிழ்ச்சியடைய அவர்கட்கு ஆக்குதற் பொருட்டேயாம். ஆகவே, கூத்தி வளர்க்கும் கோழிகள் அவளையும், அவள் வாயிலாகப் பலரையும் தீநெறியிற் செல்ல ஊக்குவிப்பனவே யாகும். அது பற்றி உலகியலிலே ஊக்கம் பிறப்பிக்கின்ற பிராண வாயுவை, ``கூத்தி வளர்த்த கோழிப்புள்`` என்றார்.
இதனால், `மக்களத் தமது மூச்சினை வாயியோகமாக்கினால் பயன் மிகவிளையும்; அதைச் செய்யாது வீணடிக்கின்றனர் என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.

பொழிப்புரை :

பட்டி - தொழுவம். `பட்டியில்` என ஏழாம் வேற்றுமை உருபு விரிக்க. பட்டி, தூல, சூக்கும பர தேகங்களும், திரோதான சத்தியும். கன்றை, ``குட்டி`` என்றது மரபு வழுவமைதி. குட்டிப் பசுக்கள் - கன்றையுடைய பசுக்கள். பின்னால், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறி, முன்னே வாளா, ``பசுக்கள்`` என்றமையால், அவை தன்றை ஈனாத மலட்டுப் பசுக்களாயின. கன்றையீனாத பசுக்குள் துளிப் பாலும் தாராமையும் கன்றை யீன்ற` பசுக்கள் குடம் குடமாகப் பாலைத் தருதலும் வெளிப்படை. அவ்வாறிருந்தும் அனைத்தையும் பட்டிக்குள் வைத்துள்ள பார்ப்பானுக்கு மலட்டுப் பசுக்கள்தாம் தெரிந்தன; கன்றையுடைய பசுக்கள் தெரியவில்லை. இதற்கு அவன் கண்ணில் உள்ள கோளாறு காரணம்.

குறிப்புரை :

இருபத்து நான்கு, ஆன்ம தத்துவம். ஏழு, வித்தியா தத்துவம், ஐந்து, சிவதத்துவம். ஆக முப்பத்தாறு தத்துவங்கள் உள்ளன.
ஆன்ம தத்துவங்கள் போக்கிய கண்டமாய் ஆன்மாவால் நுகரப்படுவனவேயன்றிப் போசயித்திருகாண்டமாய், ஆன்மாவை நுகர்வோன் (போக்தா) ஆகவும், செய்வோன் (கர்த்தா) ஆகவும் ஆக்க மாட்டா. அதனால் போக்கிய காண்டமாகிய ஆன்ம தத்துவங்களை `மலட்டுப் பசுக்கள்` என்றும், போசயித்திரு காண்ட மாகிய வித்தியா தத்துவங்களை, `கறவைப் பசுக்கள்` என்றும் கூறினார். வித்தியா தத்துவங்கள் பிரேரக காண்டமாகிய சிவ தத்துவங் களாலே செயற்படுதல் பற்றி அவற்றையும் கறவைப் பசுக்கள் என்றார். பனவன் - பார்ப்பான், ``வாய்த்ததே`` என்று இரங்கிக் கூறினமையால், பார்ப்பான், கண் பார்வை குறைந்த பார்ப்பான் ஆகின்றான். பார்ப்பான், சமய வாதிகள். இது சாதியொருமை. `புறப்புறம், புறம்` என்னும் சமயத்தைச் சார்ந்தவர்கள் ஆன்ம தத்துவங்களை மட்டுமே மறைமுகமாகவோ, நேராகவோ அறிந்து வித்தியா தத்துவம் சிவ தத்துவங்களை அறியாமையால், `கண் பார்வை குறைந்த பார்ப்பான்` என்றது அவர்களையே. கண் பார்வையாவது, சமய ஞானம்.
இதனால், `தத்துவ உணர்வு வேண்டுவோர் சித்தாந்த சைவத் தத்துவங்களை உணராவிடில் பயனில்லை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

பொழிப்புரை :

ஈற்றுப் பசுக்கள் - ஈன்றணிய. அஃதாவது, கன்றை யீன்று ஒன்றிரண்டு நாட்களேயான பசுக்கள். இவைகளின் பாலும் பூசைக்கோ, வேள்விக்கோ பயன்படாது. மக்களுக்கு உணவாக்கூட ஆகாது. பயன்படாமை பற்றி மேல், `மலட்டுப் பசுக்கள்` எனக் கூறியவற்றையே, `ஈற்றுப் பசுக்கள்` எனக் கூறினும் இழுக்கில்லை என்னும் கருத்தால் இங்கு இவ்வாறு கூறினார். எனவே, முன் மந்திரத்திற் கூறிய அந்த இருபத்து நான்கே இங்குக் கூறிய இருபத்து நான்கும் ஆகின்றன. முன் மந்திரத்தில், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறியவைகளை இங்கு ``ஊற்றுப் பசுக்கள்`` என்றார். `பாலைச் சுரந்து பொழியும் பசுக்கள்`` என்றபடி. `தனித் தனி ஒவ்வொரு குடம்` என்க. `குடமாக` ஆக்கம் விரிக்க. `புகுதும்` என்பது. `போதும்` என்றபடி ``காற்று`` என்பது பகாப் பதமாய்ப் பிராணனையும், `கால்+று` எனப் பகுபதமாய், கறக்கும்படி துன்புறுத்தப்படும் பசுக்களையும் சிலேடை வகையால் குறித்து நின்றது. காலுதல் - கக்குதல். அஃது இங்குப் பாலைப் பொழிதலைக் குறித்தது. காணுதல், தன்வினை. காற்றுதல், பிறவினை. காற்றுதல், இங்குப் பாலைக் கொடுக்கப்பண்ணுதல். சில பொல்லாத பசுக்கள் கன்றை யீன்றாலும், கன்றுக்கும் பால்கொடாது உதைத்துத் தள்ளும். யாரையும் கறக்கவிடா அப்படிப்பட்ட பசுக்களை அடித்துத் துன்புறுத்தியும், மடியில் மருந்து பூசியும் வலியுறுத்திப்பால் கொடுக்கப் பண்ணுவர்.

குறிப்புரை :

``சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்``9
என்றார் திருவள்ளுவர்.
இவ்வாறு வருத்திக் கறக்கக் கறக்கும் பசுக்கள்போல இடை கலை பிங்கலைக் காற்றுக்கள் யோக முறையால் அடக்கி இயக்கப் பயன்தருதல் பற்றி அவைகளை, காற்றுப் பசுக்கள்`` எனச் சிலேடையாகக் கூறினார். மாற்றுப் பசுக்கள், காற்றுப் பசுக்களுக்கு வேறான பசுக்கள். என்றது, முதலிற் கூறிய ஈற்றுப் பசுக்களையே. வாசியோகம் பயிலுமிடத்து ஞானேந்திரிய கன்மேந்திரியங்களின் செயல் வந்து தடைசெய்ய மாட்டாமையால்,
``காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே``
என்றார். `காற்றுப் பசுக்களை` என இரண்டன் உருபு விரிக்க. வரவு அறியோம் - வருதலைக் காணோம்.
இதனால், `பிற சமயிகளும் ஹடயோகம் செய்யாது, தியான யோகம் செய்யின், அவரவர் சமய முத்தியை அடைவர்` என்பதும் `சித்தாந்தம் தத்துவ ஞானம் உண்டாயின், சிவஞானம் கைவந்து, சித்தாந்த முத்தி எளிதில் கிடைத்துப் பெரும்பயன் தரும்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

பொழிப்புரை :

தட்டான் ஒருவனது இல்லத்தின் மச்சுமேல், அவன் நண்பன் ஒருவன் தட்டானிடம் இருந்த நம்பகத்தால், `மொட்டு` என்னும் அளவில் பொன்னை வைத்திருந்தான். அது பின்பு அதிசய மாகச் `செம்பு` அளவாக விரிவடைந்தது. அதன் பயன் அனைத்தையும் தட்டான் தனதாக்கிக் கொள்ள எண்ணி உண்மையை மறைத்து, முழுவதையும் கவர்ந்து கொண்டான். (நண்பன் ஏமாற்றப்பட்டான்.)

குறிப்புரை :

தட்டான் - தூல சூக்கும அதிசூக்கும சரீரங்களைத் துருவித் தேடினாலும் அகப்படாதவன்; ஆன்மா. அகம் - உடம்பு. மச்சு - உச்சந்தலை. `குழை, தோடு` என்னும் இயற்கைப் பொருள்களைப் பொன்னால் செயற்கையாகச் செய்து ஆடவரும், மகளிரும் காதில் அணிதல் போல, `மொட்டு` (அரும்பு) என்னும் இயற்கைப் பொருளையும் பொன்னாற் செய்து, ஆடவர் கால் விரலில் அணிவர். `மொட்டு` என்பது தவறு எனக் கருதிச் சிலர் அதனை, `மெட்டு` என்பர். ``எழுந்தது`` என்றது, `காணப்பட்டது` என்றபடி காணப்பட்டமைக்குக், காரணம் குறிப்பாற் கொள்ளக்கிடந்தது. இப் பொன்னாவது, ஏழாம் தானத்தில் உள்ள சகஸ்ராரமே, அது குழவிப் பருவத்தில் மொட்டாயே இருக்கும். ஆகவே, ``மொட்டு`` என்றது சிலேடையாயிற்று. குழந்தை களின் வளர்ச்சி நம் கண்ணிற்குப் புலப்படுவதில்லையாகையால், `அதிசயமாக மலர்ந்தது` என்றார். செம்பு, நீர் முகக்கும் சிறு கலும். `சிறிய மொட்டாய் எழுந்தது, செம்பு அளவு பெரிதாய் விரிந்தது` என்றபடி. வட்டம் - வாசி, என்றது இலாபத்தை. இலாபம் - ஆன்ம லாபம். உச்சந் தலையில் சகஸ்ராரமாகிய பொன்னை மொட்டாக வைத்தவன் பிரம தேவன். அவன் தட்டா னிடத்தில் கொண்ட நம்பிக்கையாவது, `வினையை நுகர்தலாகிய தன் குறிக்கோளை நிறைவேற்றுவான்` என நம்பியது. ஆயினும் ஆன்மாத் தனது பக்குவ முதிர்ச்சியால் அதனை யோகக் காட்சிக்குப் பயன் படுத்திக் கொண்டதே, தட்டான் உண்மையை மறைத்துப் பொன்னைக் கவர்ந்து கொண்டதாகும்.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய, காற்றுப் பசுக்கைளக் கறந்துண்ணுதலாகிய பயன் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

பொழிப்புரை :

நெற்கதிரை அரி அரியாகக் கொள்ளும்படி மிக விளையக்கூடிய நல்ல வயலைப் புல்லும், பூடுகளும் ஆகிய களையைத் தந்து துன்பம் விளைக்கின்ற கழனியாக மாற்றுகின்ற ஒழுக்கலை உறுதியாக அடைத்து, உழும்பொழுதே பாலைப் பொழிந்து கொண்டு போகின்ற வலிய பசுக்களைப் பூட்டி உழுதலா, படர்ந்து செல்கின்ற வெல்ளரி விதையும் செந்நெல் விதையாய்ச் சிறந்த பயனைத் தரும்.

குறிப்புரை :

அரித்தல் - அரி அரியாகச் சேர்த்தல். நாற்று உள்ள இடமே `நாற்றங்கால்` எனப்படுமாயினும், ``அரிக்கின்ற`` என்னும் அடைமொழியால் அது நாற்றுக்களை நட்ட வயலைக் குறித்தது. நெல் வயலில் நீர் நீர் எப்பொழுதும் நிரம்பி நின்றால்தான் நெற்பயிர் வளர்ந்து பயன் தரும். அத்தகைய நீர் தேங்கி நில்லாமல், உழுபவனும் காணாதபடி வரம்புகளுக்குள்ளே சிறு துளைகளால் வெளியேறி விடுவதுண்டு. அத்துளைகளை `மோழை` என்பர். நீர் தங்காது போய் விட்டால், பயிர் வளராது; களைகள் வளர்ந்து விடும். நீரை இங்கு ``ஓட்டம்`` என்றார். ``நாற்றங்கால்`` என்றும், ``கழனி`` என்றும் கூறப்பட்டது உடம்பு. `கழனியாக` என ஆக்கம் விரிக்க. நீர், உடல் வலிமை. உடல் வலிமையுடன் நலம் பெற்றிருந்தால்தான், கற்பன கற்றுக் கேட்டுச் சிந்தித்து அறிவு பெறுதல் இயலும். இல்லையேல் பிணி பல நலிய, மூப்பும் விரைவில் வரும். இயல்பான மூச்சுக்காற்று வெளிச் செல்லும்பொழுது பன்னிரண்டங் குலம் வெளியேறப் பின்பு எட்டங்குலமே உட்புகுகின்றது. இவ்வாற்றால் உடல் வலிமை கணந்தோறும் இழக்கப்படுகின்றது. அதனைத் தடுத்து நிறுத்தினால் உடல் வலிமை பெற்றுத் திகழும். அதனையே, ``சிக்கெனக் கட்டி`` என்றார். வரித்தல் - விரும்பிக் கொள்ளுதல். நன்மை, இங்கு உடல் நலத்தைக் குறித்தது. ``மேல் காற்றுப் பசுக்கள்`` என்றற்கு ஏற்ப. இங்கு ``ஆன் கறவை`` என்றார். விரித்தல் - படரும் கொடிகளைத் தருதல். வெள்ளரி வித்து, சுக்கிலம். உம்மை இழிவு சிறப்பு. அதனால், பின் வந்த விந்து நெல்வித்தாயிற்று. யோகிகட்கு விந்து சயம் வந்து பயன் தருதல் முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.
இதனால், `மக்கள் வீணே மாய்ந்தொழியாது. யோகம் பயின்று பயன் பெறவேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இங்கு, ``சோறு`` எனப்பட்டது வீடுபேறாதல் தெளிவாகலின், அதுபற்றி ஏனையவும் அதற்கு ஏற்பனவாக உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.

குறிப்புரை :

இடா - கூடை. இஃது எருவைக் கொண்டுபோய் நிலத்தில் இடுதற்குப் பயன்படும்; விதையை நிரப்பி எடுத்து விதைக்கவும் பயன்படும். எரு ஓரிடத்திலே சேர்ந்துவிடாமல் தூவுதல் வேண்டும். எனவே, `எருவை இடாக் கொண்டு தூவி இட்டு` என மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். எரு, ஞானத்தில் வேட்கை. இது, விதை, முளை, பயிர் எல்லா வற்றையும் செழிக்கச் செய்யும். விதை - ஞானம். முளை - அன்பு; பக்தி. ``வித்தினைத் தேடி முளையைக் கை விட்டவர்``3 என்றார் திருவுந்தியாரில். கிடாய் - ஆட்டுக் கிடாய். இஃது இளம் பயிரைக் கறித்துப் பாழாக்கிவிடும். `கடா` என்பது எருமைக் கடாவையும், `கிடாய்` என்பது ஆட்டுக்கிடாயையும் குறித்து வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு பயிரை அழிக்க வரும் மற்றை விலங்கு முதலியவற்றையும் கொள்க. `சுற்றம்` என்னும் தொல்பசுக் குழாங்கள்l ``கொண்டு பூட்டி`` என்றது, `பிடித்து ஓரிடத்திலே நிற்கும்படி கட்டிவிட்டு` என்றபடி. முளையைக் கிளறுத லாவது தடையிற்றி முளைத்தற்கும், பின் நன்கு வளர்வதற்கும் ஆவன செய்தல். அவை முளை நீர் வடித்தலும், முளைநீர் பாய்ச்சுதலும் போல்வன. அவை இங்குக் குருலிங்க சங்கமங்களைச் சிவனெனவே கண்டு வழிபடுதலைக் குறித்தன. மிடா, இங்குச் சோறு சமைக்கும் பானை. சிவபோகத்தை ஏற்கின்ற ஆன்ம உணர்வைக் குறித்தது. ``மெள்ள`` என்றது `சுவைத்து` என்றதாம். விழுங்கார் - உண்ண மாட்டாதவர். `இவை மாட்டாதவர் செந்நெல்லை அறுப்பதாகக் கூறிக்கொள்ளுதல் எவ்வாறு பொருந்தும்` என்பதாம். அடர் - அடர்த்தல்; அறுத்தல். அஃது ஆகுபெயராய் அதற்குரிய கருவையைக் குறித்தது. அதன் உள்ளுறைப் பொருள் ஆன்மாவின் கிரியா சத்தி. ஈற்றில், `எங்ஙனம்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `ஞான வேட்கையும், அதன் வழியவாகிய ஞானம், பத்தி, பற்றறுதி என்பனவும் இல்லாதார் வீட்டு நெறியில் நிற்பதாகக் கூறிக்கொள்ளுதல் போலியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுக் காதமே.

பொழிப்புரை :

உயிர்களாகிய உழவர்களுக்கு இம்மைக் காலம் முடிவதற்குள்ளே மறுமை தோன்றுதற்கு விதை விளைந்து கிடக்கின்றது. அஃது `ஆகாமியம்` என்னும் வினையாம். பிராரத்தத்தின் பயன் விளையும் பொழுது அதுபற்றி மகிழ்ச்சியோ, வருத்தமோ கொள்ளாது ஒட்டின்றிருப்போருக்கு ஆகாமியம் தோன்றாது. மகிழ்ச்சி வருத்தங்களால் அதில் அழுந்துகின்றவர்கட்கு அவை பற்றி நிகழும் முயற்சிகள் ஆகாமியமாய்த் தோன்றிச் சஞ்சிதமாய் நிலைபெறும்.) இம்மை முடிவெய்தப் பெற்ற உயிர் மறுமையில் செல்லும் இடம் இந்நிலம். சுவர்க்க லோகம், நரக லோகம் என்பன ஆதலாலும், அவற்றிடையே உள்ள தொலைவு வேறுபட்டன ஆதலாலும் `இந்த உயிர் இன்ன இடத்தில் செல்லும்` என்னும் வரையறையும் அஃது இங்குச் செய்த வினையால் வரையறுக்கப் படுதலை, ``மேலைக்குக் காதம் விளைந்து கிடந்தது`` என்றார். காதம் - வழியளவு. இப்படி, `முன் விளைந்ததிலிருந்து பின் விளைவு; பின்பு அதிலிருந்து பின் விளைவு என்று விளைவு இடைவிடாது தொடர்ந்து கொண்டே போவதால். அந்த வினையின் பயனைக் கொள்கின்ற உயிர்களுக்கு அவை மாறி மாறிச் செல்லும் மூன்று உலகங்களும் `இது` என்பது முன்னதாகவே வரையறுக்கப்படுகின்றன.

குறிப்புரை :

`ஆகையால் அலைவு நீங்கி, அமைதியுற வேண்டுவார் பின் விளைவு தோன்றாதபடி பார்த்துக் கொள்க` என்பது குறிப் பெச்சம். பின் விளைவு தோன்றாமைக்கு வழி மேற்குறிக்கப்பட்டது. அடுக்கு, இடைவிடாமை குறித்து நின்றது. முக் காதம் - மூன்று வழிகளின் அளவு. சொற் பொருட் பின்வரு நிலையண் வந்தது.
இதனால், `பிறவிக்கு வித்தாகிய ஆகாமியத்திற்குக் காரணமான விருப்பு வெறுப்புக்களை விடுதல் வேண்டும்` என்பது குறிப்பால் அறிவுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை :

வினை நிலம் இருக்கப் புல்லும் முளையாத களர் நிலத்தை உழுகின்றவர்கள் அதில் தப்பித் தவறி முளைத்த வஞ்சிக் கொடியின் பொலிவினைக் கண்டு, `அஃது உணவாகும்` என்று மயங்கிப் பின் அஃது அவ்வாறு ஆகாமையால். பட்டினியால் இறத்தலும் கூடுவதே. இவ்வாறு களர் நிலத்தை உழுகின்றவர்கள் `நாம் ஏன் இதனை உழுகின்றோம்` என்றும் எண்ணுவதில்லை. ஆகவே, அவர்களது குறிக்கோளாக நாம் ஒன்றையும் அறியவில்லை.

குறிப்புரை :

`அவர்களது செயலுக்கு அவர்களது முன்னை வினைதான் காரணம்` என்பது குறிப்பெச்சம். விளைநிலம், சிவநெறி; தவநெறி. களர் நிலம், உலகர் நெறி. அதில் தப்பித் தவறி முளைக்கும் வஞ்சிக் கொடியாவது மகளிர் இனம். ``குறிக்கோளிலாது கெட்டேன்``* என்றார் அப்பர் பெருமானும். இம்மந்திரத்தின் அடிகளை 3,4,2,1 என்னும் முறையிற் கூட்டிக் காண்க.
இதனால், `உலகர் வழிபட்டுக் குறிக்கோள் இலாது நாளைக் கழித்தல் பிழை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை :

கூப்பிடு - கூப்பிடுதல்ஓ உரக்கக் கத்தி வெருட்டுதல். முதனிலைத் தொழிற்பெயர். அதனைச் சிறிதும் மதியாத குறுநரிகள் (குள்ள நரிகள்) ஐம்பொறிகள். அவைகட்கு இடமாய் உள்ள கொட்டகாரம் உடம்பு. யாப்பிடல், கட்டுதல். அஃது ``ஆப்பிடு`` என வந்தது. பாசம் - கயிறு. ``ஆப்பிடு பாசம்`` இறந்த கால வினைத் தொகை. கயிறு, வினை, அதில் உயிராகிய மகன் எப்படியோ அகப் பட்டுக் கொண்டான். அவன் அவ்விடத்திலேயே நெருப்பை உண்டாக்கி (சில புண்ணியங்களைச் செய்து) கயிற்றை எரித்துவிட்டுச் சிலநாள் உலாவியிருந்தான். அதை அறிந்து நன்றே அங்குப் புகுந்த மகள் ஒருத்தியின் துணை கிடைத்தமையால் (திரோதான சத்தி அருட்சத்தியாய்ப் பதிந்ததனால்) அந்தக் கொட்டகையை விட்டு வெளியேறி (உடம்பை விட்டு நீங்கி) நல்லதோர் இல்லத்தை (சிவத்தை) அடைந்து இன்பத்துடன் இருக்கின்றான்.

குறிப்புரை :

அவனைப்போல் மற்றவர்களும் ஏன் சிவ புண்ணியத்தைச் செய்து உய்த பெறுதல் கூடாது` என்பது குறிப் பெச்சம். `நலமாக` என ஆக்கம் வருவிக்க. `புகுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. தோன்றா எழுவாய் வருவிக்கப்பட்டது. பின்னிரண்டடிகள் இன எதுகை பெற்றன.
இதனால், `வினைத்தொகையை நீங்கிச் சத்திநிபாதம் வருவித்துச் சிவனை அடைவிப்பன சிவபுண்ணியங்கனே` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

பொழிப்புரை :

(மலைமேல் மழை பெய்தால், அங்கு வாழும் மான்கன்று வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியெய்தித் துள்ளத்தானே செய்யு?) யோகிகள் சுழுமுனா நாடியை `மேரு` என்பர் ஆகலான். இங்கு ``மலை`` என்றது அதனையே. மான் கன்று, அதில் உள்ள ஆதாரங்களைச் சார்ந்து நினைக்கும் அந்தக் கரணங்களை. துள்ளுதல், மகிழ்ச்சியெய்தல். கொல்லன் - கருமான்; இரும்புத் தொழில் செய்பவன். இங்கு ``கொல்லன்`` என்றது யோகியை. உலை, கொல்லன் உலை. என்றது மூலாதாரத்தை. அதில் அக்கினியிருத்தலால் ``உலை`` எனப்பட்டது. மூலாக்கினியை ஓங்கி எரியச் செய்தலின் யோகி ``கொல்லன்`` எனப் பட்டான். கொல்லனது உலைமேல் உறுப்பாவது இரும்பு. ``என`` என்றது உவம உருபு. ``அமிர்தம் பொழிய வைத்தான்`` என்றது. `அமிர்தத்தைப் பொழியும்படி செய்து விட்டான்`, அஃதாவது, உலைமேல் உறுப்பை வெதுப்புவதுபோல வெதுப்பிவிட்டான்` என்றதாம் ``முலைமேல் அமிர்தம்`` என்னும் குறிப்பால்` ``ஒருத்தியை`` என்னும் சொல்லெச்சம் வந்து இயைந்தது. ஒருத்தி, குண்டலினி சத்தி. `மூலாக்கினி வெதுப் பிய தால், குண்டலினி சத்தி விழித்தெழுந்து, தனது அமிர்தத்தைப் பொழிவா ளாயினாள்` என்றபடி. `தனது முலைமேல் அமிர்தத்தை` என்க. ``மேல்`` என்றது, `ததும்பி வழிகின்ற` என்னும் குறிப்பினது. ``குலைமேல் இருந்த கொழுங்கனி`` அருட் சத்தி. வீழ்தல், நிபாதமாதல். அந்தக் கனி சுவை மிகுதற்குக் குண்டலி சத்தியின் அமுதமும் வேண்டப்பட்டது.

குறிப்புரை :

இதனால், சிவயோகத்தால் தியான சமாதிகள் கைகூட, சத்தி நிபாதம் வந்து, அது முதிர்ச்சியடைதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 18

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.

பொழிப்புரை :

பார்ப்பான், கடவுளைத்திரு உருவிலாயினும், தீயிலாயினும் வைத்து வழிபடுவன், அவனுக்குப் பாற்பசுக்கள் இன்றி யமையாதன. அத்தகைய பசுக்கள் ஐந்து உள்ளன. ஆயினும் பார்ப்பான் பசுமேய்க்க மாட்டான். மேய்ப்பவர் வேண்டும். அவர் யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் அவிழ்த்து ஓட்டிய அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே போய்க் கொட்டிலுக்கு வாராமலே உள்ளன. மேய்ப்பவர் கிடைத்தால், அவை வழிப்பட்டு வந்து வேண்டிய அளவு பாலைக் கொடுக்கும். (மேய்ப்பவர் கிடைக்கவில்லையே!)

குறிப்புரை :

பார்ப்பான், ஆன்மா. அகம், உடம்பு, பாற் பசு ஐந்து, இறைவனைக் கண்டும், அவன் புகழைக் கேட்டும், அவன் புகழ் பாடுதலிலே சுவைகண்டும், அவன் வழிபாட்டில் மணம் கண்டும் கைகளால் அவனுக்குரிய பொருள்களைத் தீண்டியும் உவகையடைந்து ஆன்மாவுக்கு உதவக் கூடிய `கண், காது, நா, மூக்கு, மெய்` என்னும் ஐம்பொறிகள். மேய்ப்பர், குருவின் அறிவுரைகள். அவை அப் பொறிகளை அதற்கு உதவும் வகையில் நடத்தும். அவ்வுரைகள் இல்லாமையால் ஆன்மா ஐம்பொறிகளால் வரும் பயனை அடைய இயலாமல் அலமருகின்றது` என்பதாம்.
பாற்பசு - கறவைப் பசு. ``உண்டாய், அடங்கினால்`` என்றமையால், `உண்டாயின் அடங்கும்` என்பது பெறப்பட்டது. ``பாலாய்`` என்பதில் உள்ள ஆக்கம் மிகுதி குறித்தது. `சோறு கல்லும், மண்ணுமாய் உள்ளது` என்பதிற்போல.
இதனால், குரு உபதேசம் பெறாதார், நன்னெறியை அடைய மாட்டாது அல்லல் உறுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

பொழிப்புரை :

ஒரு காட்டிலே ஐந்து காட்டுப் பசுக்கள். முப்பத் தொரு சிங்கங்கள், தெய்வத் தன்மை வாய்ந்த இரண்டு குதிரைகள், ஒன்பது கொடிய புலிகள், காட்டெருமைக் கடாக்கள் வாழ்கின்றன. அங்குச் செல்வோர் அவைகளில் இரண்டு குதிரைகளை மட்டும் தம் வசப்படுத்தி, அவற்றின்மேல் தக்கபடி ஏறிச் செல்வாராயின், மேற் கூறிய கொடுவிலங்குகள் யாவும் அவர் விருப்பப்படி அடங்கி நடக்கும். மாறாக, குதிரைமேல் ஏறாது, கட்டுடல் வாய்ந்த அந்தக் கடாக்களின் மேல் ஏறுவாராயின், மேற்சொல்லிய கொடுவிலங்கு களையும் வெறியேற்றித் தாமே தமக்குத் துன்பத்தை வருவித்துக் கொள்பவராவார்.

குறிப்புரை :

ஆமா - காட்டுப் பசு. அவை ஐந்தாவன சிவ தத்துவங்கள். `காட்டுப் பசு, மக்களுக்கு இதம் செய்வது போல, நாவால் நக்கி நக்கியே கொன்றுவிடும்` என்பர். சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்தி, உலக இன்பத்தில் அழுத்திப் பிறப்பை உண்டாக்குதல் பற்றி அவைகள் காட்டுப் பசுக்களாகச் சொல்லப்பட்டன. பக்குவம் வாயாத ஆன்மாக்களுக்கு இறைவனது சத்தி திரோதான சத்தியாய்ப் பிறவித் துன்பத்தை பயத்தலால், அந்தச் சத்தியின் வேறுபாட்டால் உண்டாகிய சிவ தத்துவங்களே அவ்வாறு உருவகித்தார். ஆன்மாப் பக்குவம் எய்தியவுடன் திரோதான சத்தி அருட் சத்தியாக மாறினால் சிவதத்துவங்கள் மட்டுமல்ல; எல்லாத் தத்துவங்களுமே நல்லனவாக மாறிவிடும். அதுவரையில் அவை யாவும் பிறவித் துன்பத்தையே தரும். அரி - சிங்கம். முப்பத்தொரு சிங்கங்களாவன. சிவ தத்துவம் ஐந்து தவிர, மற்றைய தத்துவங்கள். புலியை நோக்கச் சிங்கங்கள் அத்துணைக் கொடியன அல்ல. ஏனெனில் `சிங்கம் பசித்து, உணவை நாடும்பொழுது தான் பிற விலங்குகளைக் கொல்லும்` என்றும், `மற்றை வேளைகளில் எதனையும் கொல்லாது` என்றும் கூறுவர். அம்முறையில் வீடுபேற்றினை நோக்கத் தத்துவங்கள் தடையாயினும், உலகியலை நோக்க, வை உறுதுணைகளேயாம். அது பற்றி அவற்றை `அரிகள்` என்றார். தே - தெய்வத்தன்மை. மா - குதிரை. இப்பல பொருள் ஒருசொல், விலங்குகளின் இடை வைத்து எண்ணப்பட்டதனால், குறித்த பொருளை உணர்த்திற்று. இரண்டு குதிரைகளாவன இடநாடி, வலநாடி மூச்சுக்கள். ஒன்பது புலிகளாவன தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள். இவை எஞ்ஞான்றும் தம் செயலைச் செய்யத் தவறுவதில்லை. அதனால் அடக்கப் படாமை பற்றி அவைகளை, ``தீப் புலி`` என்றார்.
``எண்ணென்றா, உறழ் என்றா ஆயிரண்டும் இனன் ஒன்றல் வேண்டும்`` என்ப.3 ஆகலின், `ஆமாக்கள், தாமாக்கள், கடாக்கள்` என்பவற்றோடு, திப்பிலியை உடன்வைத்துக் கூறுதல் பொருந்தா மையின், `திப்பிலி` எனப்பாடம் ஓதுதலும் ``தேமா`` என்பதற்கு `மா மரம்` எனப் பொருள் உரைத்தலும் பொருந்தாமையறிக. ``அறியேறு முப்பதும்`` எனப்பாடம் ஓதி, `முப்பது, என்பதற்கு, `மூன்றும், பத்தும்` எனப் பொருளுரைத்து, சிலவற்றை இடர்ப்பட்டுக் கொணர்ந்து, `பதின் மூன்று` எனக் காட்டுதலும் வேண்டாதனவேயாதல் அறிந்துகொள்க.
தாமா - தாவுகின்ற குதிரை. ``தாவுகின்ற`` அடையானே, `மா` என்பது பாய்மா ஆயிற்று. குரம் - குதிரையின் குளம்பு. இதனை ஊன்றி நடத்தல் பற்றியே குதிரையை வடமொழியாளர் `குரகதம்` என்றனர். ``குரங்கொளின்`` என்பது, ``நடக்குமாயின்`` என்பதைக் குறிக்கும் குறிப்பு மொழியாய்ப் பின்னும் ஏறிச் செலுத்துதலைக் குறித்தது. ``தம்மனத்து உள்ளன்`` என்பதற்கு, `தங்கள் மனத்தின்படி உள்ளன வாம்` என்க. ஆமா முதலியவற்றைக் கூறினமையால் `காடு` என்பது போந்தமையின், குதிரையை ஏறுவாரும், ``தம்மனம்`` என்பது அவர்மனமும் ஆதல் விளங்கிற்று. மூவாமை, தன் எதிர் மறையாகிய இளமையைக் குறித்தது. `முட்டுகின்றாரே ஆவர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. குதிரையை ஏறிச் செலுத்துதலாவது, வாசியோகம் செய்தலாம். யோகம் வல்லார்க்கு மூச்சுக் காற்று அவர் வழிப்படுதலின், அந்நிலையில் அதனைக் குதிரையாகவும், ஏனையோர்க்கு அதுதான் சென்ற வழியே செல்லுதலின் அந்நிலையில் அதனைக் கடாகவும் உருவகித்தார். ஒரு பொருளே நிலை வேறுபாடு பற்றிப் பல பொருளோடு உவமிக்கப் படுதலை, ``நட்டார்க்கு அமிழ்தொத்து, நள்ளார்க்கு நஞ்சொக்கும் இவன்`` என்னும் வழக்கத்தாலும்,
``கார்; அணி கற்பகம்; கற்றவர் நற்றுணை;
பாணர் ஒக்கல்;
சீரணி சிந்தா மணி; அணி தில்லைச்சிற்
றம்பலவன்
தாரணி கொன்றையன்; தக்கோர்தம் சங்கநிதி;
விதி; சேர்
ஊருணி உற்றவர்க்கு; ஊரன், மற்றியாவர்க்கும்
ஊதியமே``l
என்னும் செய்யுளாலும் அறியலாம்.
இதனால், யோகம் பயில்வார்க்கு அவரது கருவி கரணங்கள் அவர் வழிப்பட்டனவாய் வீடு பயத்தலும், அது பயிலாதார்க்கு அவை தம்மியல்பிற் சென்று அதனைப் பயவாமையும் உள்ளுறையாகக் கூறப் பட்டன. முன் தந்திரத்தில் ஐம்பொறிகளை மட்டும் கூறினார்; இம் மந்திரத்தில் அனைத்துக் கருவிகளையும் கூறினார். ஈற்றடி உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 20

எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.

பொழிப்புரை :

எழுத்துக்கள் எழுதப்படாத ஏடு ஒன்று உள்ளது; அதை, `புத்தகம்` என்கின்றனர். அந்தப் புத்தக்கத்தைப் பார்க்காமலே ஒரு பெண் அதில் உள்ள பொருளைத் தானே உணர்ந்து, பிறருக்கும் உணர்த்துகின்றாள். (இது நிற்க. மற்றொரு செய்தி.) மலராத மலர் ஒன்று உள்ளது; அதில் தேனை, பிறவாத வண்டு ஒன்று அதன் மணத்தின் வழியாக அறிந்து சென்று உண்கின்றது. (இவைகளை யெல்லாம் `நம்ப முடியாது` என்றாலும், உண்மையான அதிசய நிகழ்ச்சிகளாய் உள்ளன.)

குறிப்புரை :

எழுதாத ஏடு, இறைவனது ஞான சத்தி. எல்லாப் பொருள்களும் முதலில் அதன்கண் இயல்பாகத் தோன்றுகின்றன. கன்னி, அவனது கிரியா சத்தி அது ஞான சத்தியின் வேறன்மையால், ஞான சத்தியில் தோன்றியவற்றை அப்படியே உயிர்களை அறிவித்தும், செய்வித்தும் நடாத்துகின்றது. இது முதற்கண் கூறப்பட்ட பொருள்.
இனி, மலராத பூ, அரும்பாய்த் தோன்றிப் போதாய் முதிர்ந்து மலராத, அதனால், பின்பு வாடாத பூ, சிவம் என்றும் ஒருபடித்தான இன்பமாய் உள்ளது. பிறக்கும் பொழுது புழுவாய்ப் பிறந்து பின்பு வண்டாக மாறுகின்ற வண்டுகள் போலாது, பிறக்கும்பொழுதே வண்டாய்ப் பிறந்த வண்டு, முற்பிறவிகளிற்றானே ``புறச்சமய நெறி நின்றும், அகச்சமயம் புக்கும், புகல் மிருதி வழி உழன்றும் ... ...``3 வருதலாகிய படிகளையெல்லாம் கடந்து, பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபில் பிறந்த ஆன்மா. மணம், அருள்ஒளி. தேன், சிவானந்தம். ``சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேரத்திச் - செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக வைத்து ஆண்டு, மலம் கழுவி, ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிவன்`* ஆதலின் பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபிற் பிறந்த ஆன்மாவை, ``பிறவாத வண்டு`` என்றார்.
``ஓத`` என்னும் செயவெனெச்சம் நிகழ் காலத்ததாய் நிற்க, `உண்டவாறு வியப்பு` எனச் சொல்லெச்சத்தோடு முடிந்தமையால் `இரண்டும் வியப்பு` என்றதாயிற்று. `மணத்தால் உண்ட` என ஆல் உருபு விரிக்க. ஈரடி உயிரெதுகை வந்தது.
இதனால், உயிர்கட்கு ஞானம் நிகழுமாறும், பிறக்கும் பொழுதே ஞானத்திற்கு உரியவராய்ப் பிறந்தோரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

பொழிப்புரை :

பறவைகள் தங்கிக் கூவுகின்ற நாவல் மரத்தி னின்றும் உணவாய் அமைகின்ற கனிகள் சில பயன்படாத இடத்தில் உதிர்வனவாயும், சில, மரத்திற்கு அடியில் உதிர்ந்தும் புதர் முதலிய வற்றால் பயன்படாதனவாயும் போய்விட, அந்த நாவல் மரத்தை உள்ளடக்கியுள்ள குடிலில் வாழ்கின்ற ஐவர், வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்தொழிவதாய் உள்ளது.

குறிப்புரை :

நாவல் மரம், சுவாச கோசம். அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி, வெளிச்செல்லும் காற்று. புகுகின்ற கனி, உள்ளே வரும் காற்று. புகுகின்ற காற்றை வெளிவிடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றி அதனை ``வித்து`` என்றார். `எனினும், அதனைத் தடுப்பார் இன்மையால் வெளிச்சென்றே வீணாகின்றது` என்றற்கு இரண்டையும் ``பொய்`` என்றே கூறினார். பறவைகள் சுவாச கோசத்தில் உள்ள நரம்பு முதலியன. `கூவுகின்ற` என்பது குறைந்து நின்றது. ஆகின்ற - வளர்கின்ற. பைங்கூழ் - பயிர், அது கருவியாகு பெயராய், அதன் விளைவைக் குறித்தது. பயிராவது, முற்பிறவியில் ஆக்கிய வினை. அதன் விளைவாவது, பிராரத்த விளைவு. அதனை உண்ணும் ஐவர், ஐம்பொறிகள். உண்பது உயிரேயாயினும் அது தன்னை `வேறு` என உணராது அவையாய் நின்று உண்ணுதலின் அவற்றையே உண்போராகக் கூறினார். உயிர் தன்னை, `அவற்றின் வேறு` என உணர்ந்து நீங்கியிருப்பின், பிராரத்த விளைவு உணவாகாது` என்பது கருத்து. விரைவு பற்றி, ``வேகின்ற`` என, எதிர்காலம் நிகழ்கால மாயிற்று. கூரை - குடில். வேவதாய குடிலாவது. தூல உடம்பு. `கூரையில்` என ஏழாவது விரிக்க. விருத்தி - பிழைப்பு.
``நாவலின்`` என்னும் `இன்`, நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபு. கூழ் - உணவு. கனியே உணவாயினும் உணவாம் தன்மையை நோக்கி அதனை வேறு போல வைத்து, ``கூழைத் தரும் கனி`` என்றார். சுவாசத்தை நாவற் கனியாகக் கூறியது, அக்கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும் மரங்களினின்று சாலை நடுவில் உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி. `சுவாசமும் இயற்கையாய் அமைந்து, அருமையறியப்படாததாய் உள்ளது` என்பதாம். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி, முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
``பைங்கூழ்`` எனப்பட்ட பிராரத்த விளைவையே, ``போகின்ற பொய்`` என்பதற்கும் பொருளாக வைத்து, ``புகுகின்ற வித்தாவது ஆகாமியம்`` என்றவர், அதற்கு இயைபு காட்டிற்றிலர்.
இதனால், `சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவரே யாவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முளை, நிலத்தளவில் நிற்பதாகலின், அது அடி நிலத்தில் உள்ள மூலாதாரத்தைக் குறித்தது. சுவாசம் எழுதற்கு வழியை உடைத்தாய் இருத்தலின் அம்முளை உள்துளையை உடைய ``மூங்கில்`` எனப்பட்டது. வேம்பு, நல்லதொரு மருந்து ஆதலின், காய சித்தியைத் தருவதாகிய சுவாசமே ``வேம்பு`` எனப்பட்டது. அந்த வேம்பு மேற்கூறிய மூங்கில் முளையினின்றும் எழுவதாதலை அறிக. பனை, சுழுமுனா நாடி. அதனையே சுவாசம் சார்ந்திருப்பினும், ஒற்றுமைபற்றிச் சுழுமுனை சுவாசத்தைச் சார்ந்திருப்பதாக வைத்து, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனை`` என்றார். கிடந்த பனை என்ற அனுவாதத்தால், `வேம்பினைச் சார்ந்து பனை கிடந்தது` என்பதும் பெறப்பட்டது. குண்டலி சத்தி சுழுமுனையைப் பற்றியிருப்பது ஆகலின் அதனை, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்புண்டு`` என்றார். அந்த பாம்பு நன்கு துயின்று கொண் டிருப்பதால், அதனோடு பனையைப் பற்றியிருக்கின்ற வேம்பினைத் தின்றல் கூடாததாய் உள்ளது. அந்தப் பாம்பினை எழுப்பி விலகச் செய்தால் வேம்பினைத் தின்ன முடியும். அதனைச் செய்ய வல்லவர் இல்லை. அதனால் வேம்பு வீணே வற்றி வெடித்துப் போகின்றது.

குறிப்புரை :

`குண்டலி சத்தி துயில்வதால், நல்லுணர்வு உண்டாகவில்லை. ஆகவே, அதனை எழுப்பினால், நல்லுணர்வு உண்டாகும்; யோகம் பயில முடியும். அவ்வாறு செய்வார் இல்லாமையால், சுவாசம் வீணாய் அழிகின்றது` என்பதாம். துரத்துதல், இங்கு எழுப்பி இயங்கச் செய்தலைக் குறித்தது. `வெடிக்கின்றவாறு இரங்கத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால் யோகத்தைப் பற்றாத உலகர் நிலைக்கு இரங்குதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.

பொழிப்புரை :

(சித்தாந்தத்தில், `கருவிகள் தொண்ணூற்றாறு` என்பவற்றில் `தத்துவம் முப்பத்தாறு, தாத்துவிகம் அறுபது` எனச் சொல்லப்படுகின்றன. படைப்புக் காலந்தொட்டு, அழிப்புக் காலம் வரையில் நிலைத்து நிற்கும் கருவிகள் தத்துவம். அவற்றின் காரியங்களாய், இடையே தோன்றியழிவன தாத்துவிகம். ஆகவே, தாத்துவிகங்கள் யாவும் தூல உடம்பில் உள்ளனவாம். அது பற்றி அத்தாத்துவிகங்களை மட்டுமே இம் மந்திரத்தில் குறிக்கின்றார்.)

குறிப்புரை :

புலி, பாயும் தன்மை உடையது ஆகலின், `பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்` எனப் பெயர்பெற்று இயங்கும் வாயுக்கள் பத்தினையும் ``பத்துப் பரும்புலி`` என்றார். பருமை புலியின் உடலின் கண்ணது, இவை பத்தும், `வாயு` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.
யானை பதினைந்தாவன, பிருதிவி, அப்பு, தேயு, என்னும் மூன்று பூதங்களின் மூவைந்து பதினைந்து கூறுகளாகிய தாத்து விகங்கள். அவற்றுள்,
பிருதிவியின் கூறுகள்:
மயிர், தோல், நரம்பு, எலும்பு, தசை.
அப்புவின் கூறுகள்:
இரத்தம், வெயர்வை, சிறுநீர், நிணம், சுக்கிலம்.
தேயுவின் கூறுகள்:
பசி, தாகம், உடல் வெப்பம், சோம்பல், பித்து. இவைகளைத் தூல உடம்புடைய யானைகள்` என்றார்.
வித்தகர் - திறமையாளர். `ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்னும் புலன்கள் ஐந்தும் எல்லோரையும் தம்பால் ஈர்த்து நிற்றலின் இவைகளை ``வித்தகர்`` என்றார். இவ்வைந்தும் முறையே ஆகாயம் முதலிய ஐந்து பூதங்கட்கும் சிறப்புக் குணமும் ஆகும்.
வினோதகர் - பொழுது போக்கிற்கு வேடிக்கை செய்வோர். `இடை கலை, பிங்கலை, சுழுமுனை, அத்தி, அலம் புடை, காந்தாரி, குகு, சிகுவை, புருடன்` என்னும் நாடிகள் பத்தும் உடம்பை வாழச் செய்வதலாம், `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் குற்றம் ஆறும் உடலில் வாழும் உயிர் தன் வாழ்நாளைக் கழித்தற்கு ஏதுவாய் நிற்றலாலும் இவைகளை `வினோதகர்` என்றார்.
நாடிகள் பத்தும் `ஆகாயம்` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.
`மூவரோடு அறவர்` என உருபு விரித்து, `ஒன்பதின்மர்` என உரைக்க. இவ்வொன்பதின்மர் ஆவார். தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள், இவைகள் `ஒன்பது வாயில்கள்` என்றும் சொல்லப்படும். கண் இரண்டு, காது இரண்டு. மூக்கு இரண்டு, வாய், எருவாய், கருவாய் இவை ஒவ்வொன்று. இவைகளில் இறுதி மூன்றும் உடல் நிலைப்பிற்கு இன்றியமையாதனவாய் இருத்தலின் இவைகளை ``மூவரோடு`` என வேறு பிரித்து ஓதினார் இவ்வொன்பதும் உடல் நிலைப்பிற்குக் காரணம் ஆதல் பற்றி உடல் நலத்தைச் செய்கின்ற மருத்துவர்களாகக் கூறினார்.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதற்கு, `மற்றும் ஓர் ஐவர்` என உரைக்க. `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம், என்னும் கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தையே `மற்றும் ஓர் ஐவர்` என்றார். இவைகளும் ஆகாயம் முதலிய பூதங்களில் ஒவ்வொன்றின் சிறப்புக் குணமாகும்.
ஆகத் தாத்துவிகம் அறுபதினையும் கூறியவாறு காண்க.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதை, ``அத்தலை`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆகிய இவர்கள் அத்தலை அமர்ந்து நின்றார்` என முடிக்க. திணை விராய் எண்ணிய வழிச் சிறுபான்மை அஃறிணையால் முடியாது, உயர்திணையால் முடிதல், ``பலவயினானும்``* என்ற இலே -சினாற் பெறப்படும். தலை - இடம். சூனிய சம்பாடணையாதல் பற்றி, `அத்தலை` என மறை பொருளாகக் கூறினார். அது தூல தேகமே என்க.
இதனால், `தத்துவ ஆராய்ச்சி செய்வோர் தூல தேகத்தின் இயல்பினை இவ்வாறு ஊன்றி உணர்தல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

பொழிப்புரை :

(மேல், ``ஆமாக்கள் ஐந்து`` என்னும் மந்திரத்தில்,* `பிராண வாயுத் தன்னை அடக்குவார்க்குக் குதிரையாயும், அல்லாதார்க்குக் கடாவாயும் நிற்கும்` எனக் கூறியதனை இங்கு வேறோராற்றான் வலியுறுத்துகின்றார்.
இரண்டு கடாக்கள், இடநாடி வலநாடிகள் வழியாக இயங்குல் பிராணன். அஃது ஒன்றேயாயினும் இயக்க வகையால் இரண்டாகின்றது. இவ்வூர், இந்தத் தூல தேகம். தொழும்பன் - அடியான். ஆண்டான் சொற்படி அக்கடாக்களை மேய்ப்பவன். அஃது அகங்கார தத்துவம். ஆன்மாவாகிய ஆண்டான் அந்தக் கடாக்களை அந்த அடிமையினிடம் விடாமல் தானே தன்னிடத்தில் கெட்டியாகப் பிடித்து வைப்பானேயானால், அந்த இரண்டு கடாக்களும் ஒரு கடாவாய் விடும். அஃதாவது, `இடை நாடி பிங்கலை நாடி வழியாக இயங்காமல், சுழுமுனை நாடியில் நின்றுவிடும்` என்பதாம்.

குறிப்புரை :

இடை நாடியால் பெரியோர் ஆதலின், ஒன்றே தொழும்பன்` என்பது பாடமன்று.
`ஊர் பெரிது; அதற்கு உழைக்க இரண்டு கடாக்களே இருத்தல் அதிசயம். பின்னும் அவை இரண்டும் ஒன்றாகி விடுதல் அதிசயத்தினும் அதிசயம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 25

ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.

பொழிப்புரை :

பயிரிடுதற்கு ஏற்புடைய ஒரு கொல்லையை, அதனுட்கிடக்கும் மேடு பள்ளங்களைச் சமன் செய்து, வரம்பு கோலி, வரிசை வரிசையாக வேலியைக்கட்டிப் பருத்தியை நான் பயிரிட் -டதனால், எங்கள் ஊரில் உள்ளவர்களில் மூவர் யான் கொண்டிருந்த உள்ள நட்பையே சூதாடு கருவியாகக் கொண்டு இடைவிடாது என்னுடன் சூத பொருது, இப்பொழுது அதை விட்டுவிட்டார்கள்.

குறிப்புரை :

`உழைத்துப் பொருள் தேட விரும்பாதவரே சூதாடு களத்தில் சென்று சேர்வார்கள். நான் பயிர் செய்ய முனைந்து விட்டமையால், அங்கு செல்லவில்லை. அவர்களும் என்னை அங்கு அழைக்கவில்லை` என்பதாம். ஒத்தல், கொல்லைக்கு ஆகுங்கால், பயிருக்கு ஏற்புடைய தன்மையும், மனத்திற்கு ஆகுங்கால் தவத்திற்கு இயையும் பான்மையையும் குறிக்கும். ``மணல்`` என்பதை `மண்+நல்` எனப் பிரித்து, `மண்` என்றதன் உள்ளுறை `மனத்தின் இயல்பு` என்பதாக் கொள்க. கொல்லை, மனம். மேடு - பள்ளம், வெறுப்பு, விருப்பு. `பத்தி - வரிை\\\\u2970?` என்பது வெளிப்பொருள். ``வலை`` என்பதற்கு `வேலி` என வெளிப்பொருள் கொள்ளாவிடில் மறை பொருட் கூற்றாகாது. `பருத்தி` என்பதை உள்ளுறைப் பொருட்டு, `தீ` என்பது குறுகி நின்றதாகக் கொண்டு பெரிய தீ, மூலாக்கினி` என உரைக்க. நிறுத்தல், நிலைப்படுத்துதல். ``முத்தம்`` என்பது முத்தங் கொடுத்தல் போன்ற மிக நெருங்கிய நட்பைக் குறிப்பதாய், வேற்றுமை யின்றி ஒன்றி இயைபை உணர்த்திற்று. மூவர், முக்குணம். நிரம்புதல் - தம் அளவில் தாம் நிற்றல்.
இதனால், `வேண்டுதல், வேண்டாமையை விட்டு, சிவ பத்தியுடன் சிவயோகம் செய்தால், முக்குண விகாரங்கள் நீங்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

பொழிப்புரை :

கருடனைப் போலக் கூகையும் பாம்பைக் கண்டவுடன் கொல்லும். அதனால் கூகையும், பாம்பும் தம்முட் பகையாவன. கிளியும் பூனையும் தம்முட் பகையினவாதல் தெளிவு. நாகை - நாகணவாய்ப் புள். இதுவும் கிளியைப்போலப் பேசும் தன்மையுடையது; குறும்பூழ் (காடை) அத்தன்மையைப் பெறாமையால் அவையும் ஒன்றுவன அல்ல. இவை அனைத்தும் வாழ்கின்ற ஒரு காட்டில் எலிகளும் வாழ்கின்றன. ``கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்``3 என்றதனால், `பேசும் தன்மையோடு, கேட்கும் தன்மையுடையது நாகணவாய்ப்புள்` என்பது விளங்கும்.

குறிப்புரை :

கூகை, மற்றைப் பறவைகள் போல வெளியே விருப்பப்படி பறந்து காணப்படாது. இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்து கிடக்கும். பாம்பு மிகக் கொடியது. கிளி யாவராலும் மிக விரும்பப்படுவது. பூனை வெளிக்கு நல்லதுபோல இருந்து பாயும் நாகணவாய்ப்புள், கிளியோடு ஓரளவு சமமாக மதிக்கப்படுவது. குறும்பூழ், ஒன்றிலும் சேராதது. `சிறு துரும்பும் பல்லுக்குதவும்` என்பதுபோல, ஓரோர் காலத்தில் சகுனத்தை அது தரும். இவற்றின் நடுவில் உறைவன எலிகள். `இவற்றின்` என்பது எஞ்சி நின்றது.
இவைகளைப் போல, உலகத்தில் பல திறப்பட்ட மக்கள் வாழும் நிலையில், அவர்களுக்குள்ளேயும் ஒற்றுமையின்றி இகலி வாழ்கின்றார்கள். இங்குக் குறஇக்கப்படும் இகல், சமயப் பூசல்.
எலி, ஓர் எளிய பிராணி. மக்களுக்கு அதுவும் பகைதான். ஆயினும் இங்கு மக்களை நாம் கருத வேண்டியதில்லை. மேற்கூறிய, அனைத்தும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ எலிக்குப் பகையாவனதாம். அது போல, எத்திற மக்களும் ஏழைக்கு உதவுபவர் அல்லர். மாறாக, நலிவும் செய்வர்.
தத்துவத் துறையில் ஏழையராவார். சற்குரு கிடைக்கப் பெறாதவர். அவர்கள், `நமக்கு யார் வழிகாட்டுவார்கள்` என்று அலமந்திருக்கும் பொழுது, கூகை போல வெளியுலகத்தில் தொடர்பு கொள்ளாத சிலர் சில அறிவுரைகளை வேண்டி, நாகணவாய்ப் புள் போன்றவர்களிடம் அறிவுரை கேட்கச் செல்லும்பொழுது, செல்பவரது நிலை தெரியாமல் அவரைக் குருவைத் தேடுபவர் குருவாக அடைந்தால் என்ன ஆகும்?
``குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே``*
என இவரே முன்பு அருளிச் செய்தபடி, இருவரவுங் கெடுவது தவிர, வேறு எதுவும் விளையாது. இதனையே இங்கு,
``நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கையைக் கண்டு எலி கூப்பிடுமாறு``
என்றார். கூப்பிடுதல் - தன்பால் வரவழைத்தல். ஆறு - நெறிமுறை. `ஆறு உள்ளது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. பிற்பகுதிப் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு, முற்பகுதியில் பல பொருள்களைக் கூறினார்.
இதனுள் உய்த்துணர வைத்த காடாவது உலகம்.
இதனால், சற்குருவைச் சாராது அசற்குருவைச் சார்தலின் குற்றம் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

பொழிப்புரை :

(சிலர் இனிய நகை முகங்காட்டித் தீங்கு விளைவித்தல் உண்டு; சிலர் அவ்வாறன்றிக் கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தல் உண்டு.) அவர்களில் பின்னர்க் கூறிய வகையைச் சார்ந்தவன் ஒருவன் கொங்கு நாட்டு உழக்கில் அடைத்து மூன்று வெள் ளெலிகளைக் கொணர்ந்தான். அவைகள் கொல்லனது உலை போல எரிகின்ற எரிக்கு அப்பால் இருப்பின், ஓடும்; இருக்கும்; இன்னும் பிற வற்றை யெல்லாம் செய்யும். ஆகவே, அவைகளை எரியில் இட்டால், இட்டவனுக்கு உணவாய் விடும். தொல்லை நீங்கும். எனவே, இழிந்த இனத்தவாகிய அவைகளை ஒழிப்பதற்கு வழி அதுவே.

குறிப்புரை :

கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தவன் சிவன். தீமை, திரிபுரத்தவர். விளைத்தவை குலைத்தற்கு, `தீமை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. நிலைத்தல், வாழ்தல். ``வெள்ளெலி`` என்பதில் வெண்மை நிறம் குறித்ததன்று; வெற்ற வெளியைக் குறித்து இவைகளை `நாட்டெலி` என்றும், வீடுகளில் உள்ளவற்றை, `வீட்டெலி` என்றும் கூறுவர். நாட்டெலியே விளைவுச் சேதத்தை உண்டாக்குவன. `வெள்ளெலி மூன்று` என்றது. `புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக் கரணங்களை. அவையே புறப் புலன்களைப் பற்றிப் பல்வேறு விவகாரங்களை எய்துவன ஆகலின், அவற்றை, ``வெள்ளெலி`` என்றார். இனி, `மூன்றெலி முக்குணம்` என்பாரும் உளர். முக்குணங்கள் இங்ஙனம் காரியமாய்ப் பரிணமித்தன்றிச் செயற்படாமை யறிக. மாயையினின்றும் கருவி கரணங்கள் யாவும் சிவனது சங்கற்பத்தாலே தோன்றுதலின், அவன் இவ்வெலிகளைக் கொணர்ந்ததாகக் கூறினார். உழக்கு, ஒரு முகத்தலளவைக் கருவி. இங்கு அஃது உடம்பைக் குறித்தது. இன்னும் அதன் சிறுமையைக் குறித்தற்கு, ``கொங்குழக்கு`` என்றார். `கொங்கு நாட்டு அளவை அளவிற் குறைந்தன` என்பர். ``உலை`` என்றது, மூலாதாரத்தைக் குறித்துப் பின்னும் அதிலுள்ள அக்கினி எழுந்தோங்கிச் செல்லும் சுழுமுனா நாடியைக் குறித்தது. பிராண வாயு சுழுமுனா நாடியிற் செல்லாது, இடைகலை, பிங்கலை வழியிற் செல்லும், அந்தக் கரணங்களும் அவ்வுயிர்ப்போடு பொருந்திப் புறத்தே உலாவுதலை, ``உலைப்புறம் செல்லின் ஓடும்; இருக்கும் என்றார். அதினின்றே, `உலையகத்து அடங்கின் அடங்கி ஒடுங்கும், என்பது பெறப்பட்டது. புலை - கீழ்மை. கீழ்மையுடைய பொருளை, `கீழ்மை` என்றது உபசாரம். `கீழ்மையுடையது` என்றது, மூலப்பிரகிருதியை. அது தானே குணதத்துவமாகிச் சித்தமாய் நிற்றலால், சித்தம் இங்கு வேறு கூறப்படவில்லை. போதல் - அழிதல் ``போகின்றவாறு இது`` என ஒரு சொல் வருவித்து முடிக்க` வெள்ளெலியை உண்பவர் நெருப்பில் இட்டு உண்டல் பற்றி, `அவை போகின்றவாறு உலையில் இடுதலே` எனக் கூறினார்.
இதனால், `அந்தக் கரணங்களில் அடங்கி ஒடுங்கிப் பயன் தருதல் வாசியோகத்தாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.

பொழிப்புரை :

இருள் செறிந்த காட்டிற்குள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள், அதினின்றும் நீங்கி, ஒளி விளங்கும் வெளி யிடத்தைக் காணுதல் அரிதேயாம். இனி, நாம் குறிப்பிடும் காட்டிற் குள்ளே காட்டுக் குதிரைகள் ஐந்தும், எப்பொழுதுமே நற்குணத்தை அடையாத ஒட்டகங்கள் ஆறும் உள்ளன. (என்றால், இதர்குள் புகுந்துவிட்டவர்களது நிலைமை என்ன!) அந்தக் காட்டிற்குள் புகாமல் இருந்தால், வெளியில் மூன்று நல்லரசுகள் உள்ளன. அவைகளின் கீழ் நல்வாழ்வு வாழலாம்.

குறிப்புரை :

காடு, இருவினைப் புதர்கள். `கூடு, மூடு` என்பனவும் காட்டையே குறித்து நின்றன. ``ஆனது`` இரண்டும் பன்மையொருமை மயக்கம். ``புகாவிடின்`` என்றது வெளியே இருப்பின்`` எனப் புகுதலின் மறுதலைப் பொருளைத் தந்தது. அணை, அரியணை. குதிரைகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள். ஒட்டகம் ஆறு, `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் அகப் பகை ஆறு. `மூவணை` முத்துரியங்கள். முத்துரியங்கள் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. முதல் அடிவேற்றுப் பொருள் வைப்பணியாய் வந்தது. கடுமை, மிகுதி குறித்தது.
இதனால், `இருவினைகள் வெட்ட வெட்டத் தளிர்க்கும் காடுபோல் உள்ளன; அவற்றிற்குள்ளே அகப்பட்டு அடங்காது நிற்கின்றன பஞ்சேந்திரியங்கள்; அந்நிலையில் மேலும் காமம் முதலிய அறுபகைகள் துன்பம் விளைக்கின்றன. இவற்றிலிருந்து நீங்கினாலே இன்பம் உளதாகும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :

பரத்தையர் உடுத்துகின்ற ஆடை, அவர் நல்லுணவு உண்டு வளர்த்துக்கொள்ளும் தசை, குழாய்களில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்போல வெளியே தோன்றாது உள்ளே ஓடுகின்ற இரத்தத்தால் விளங்கும் மேனியழகு, கழுத்தில் அணிகின்ற காறையும், மார்பில் அணிகின்ற பொன் வடமும், கைகளில் அணிகின்ற வளையலும் முதலான அணிகலன்கள் ஆகியவற்றைக் கண்டவர்கள் அவவைகளிலே மயங்கி, பாறைமேல் உலர்த்தப்பட்ட சீலை விரைவில் ஈரத்தை இழந்து காற்றில் பறப்பதுபோலப் பறந்துபோய், அவர்களது உந்திக் குழியில் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

`அவர்களை மீட்குமாறில்லை` என்பது குறிப்பெச்சம்.
இம்மந்திரம் பரத்தையர் கூட்டத்தை விலக்கியதன்று. என்னை யெனின், இது சூனிய சம்பாடணையாகிய குறிப்புப் பொருளை உடையதன்றி, வெளிப்பபைபொருளதன்று ஆகலானும், அதனை விலக்குதற்கு இங்கு ஓர் இயைபின்மையானும் என்க. மற்று, பரத்தையர் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிதாதலாகிய உலகியலை வைத்து, `மாயையின் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிது` என்பதையே உணர்த்திற்றாம். ஆகவே, உடம்பு மாயையேயாகலின் அதுவே பரத்தை. திருவருளால் தோன்றும் சிவஞானமே இல்லக் கிழத்தி. அவளோடே கூடியிருப்பின், நாற் பயனும் நன்கு விளையும். இவளது மயக்கிலே வீழ்ந்தால், அனைத்துப் பயனும் கெடும்.
இப்பரத்தை உடுத்தியுள்ள அழகான சீலை தோல். தசை தசைகளே. எண்ணெய் - உதிரம். இஃது உலகியற் பொருளில் ஆகு பெயராய் மேனியழகைக் குறித்தது. காறை, எலுமப். நாண் - கயிறு; நரம்புகள். வளையல், நேர்நில்லாது வளைகின்ற மயிர்கள். ஆறு, ஆற்று நீர். ஐக்குழி - அழகிய குழி; என்றது அதன் சுழியை. அஃது இங்கு உவமையாகுபெயராய், உவமையில் உந்தியையும், பொருளில் கருப்பையையும் உணர்த்திற்று. `ஆற்றைக் குழி` என்னும் றகர ஒற்று, எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. மங்கையர் முயக்கில் மயங்கு -வாரை அவர்தம் உந்தியாகிய மடுவில் வீழ்பவராகக் கூறுதல் வழக்கு.
``மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தேந்தெனென்
வண்டினம் கண்டுதொடர் குழல்மாதர்
... ... ... ... ... ... உந்திஎன் கின்றமடு விழுவேனை
உன் ... ... ... ... அடி சேராய்``
என்னும் திருப்புகழைக் காண்க.
``சீலைபோல்`` என வாளா கூறாது, பாறையில் உற்ற சீலைபோல்`` என்றமையால் அச்சீலை விரைவில் ஈரம் இழத்தல் போல, அறிவையிழத்தல் குறிக்கப்பட்டது.
இதில், `பரத்தையர்` என்னும் முதற்பொருள் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உலகியலில் பரத்தையர் மோகம் நோயும், வறுமையும் போலும் பெருந்துன்பங்களைப் பயத்தல் போல, மெய்ந் நெறியில் உடல் மோகம் பிறவித் துன்பத்தைப் பயக்கும் என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.

பொழிப்புரை :

ஆற்றிடைக் குறை ஒன்று உள்ளது; அந்த ஆற்றின் அக்கரையில் மலை ஒன்று இருக்கின்றது. அந்த மலைமேல் நின்று தமது செயல்களைக் கண்காணிக்க நாள்தோறும், `காலை, மாலை, இரவு` என்பவற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவர் போகின்றார்`; திரும்பி வருகின்றார். அவரது கண்காணிப்பை முதலில் சிறிது சிறிதாகவும், பின்பு முழுமையாகவும் தன்பால் ஈர்த்து, அவரை அந்த மலைக்குச் செல்லாதபடி தடுக்கின்ற ஒருத்தி அவரோடு கூடவே இருக்கின்றாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதை நாம் அறியமாட்டோம்.

குறிப்புரை :

``துருத்தி`` என்பது ஆற்றிடைக்குறை. கொல்லன் துருத்தி இரண்டையும் குறிக்கும் பலபொருள் ஒரு சொல்லாகலின், அது வெளிப்படைப் பொருளில் ஆற்றிடைக் குறையையும், குறிப்புப்பொருளில் கொல்லன் உலைத்துருத்தியையும் குறித்தது. கொல்லன் உலைத்துருத்தியாவது சுவாசத்தை வாங்கியும், விட்டும் நின்ற சுவாச கோசம். எனினும் அஃது, அதற்கு இடமாய் உள்ள உடல் முழுவதையும் குறித்தது. `உடல்` என்பது தலைக்குக்கீழ் உள்ள பகுதிக்கெல்லாம் பெயராய், மூலாதாரம், உந்தி, இருதயம், கண்டம் ஆகியவற்றைக் குறித்தது. எனவே, அக்கரையில் உள்ள மலையாவது புருவ நடு. அதுவே ஆன்மாவின் சாக்கிரத்தானம் ஆதலின் உயிர் தன் கருவி கரணங்களின் வாய்ப்பிற்கு றே்ப மூலாதாரத்தினின்று படிப்படியாக மேல் ஏறி வந்து தன் செயலைக் கண்காணிக்கும் இடமாயிற்று. ஆகவே, `போவார் ஆவார் உயிர்` என்பது விளங்கும். ``போவார்`` எனவே, `வருவார்` என்பதும் அமைந்தது. போதல் மேல் ஏறுதலையும், வருதல் கீழ் இறங்குதலையும் குறித்தன. இவை முறையே மேலாலவத்தை, கீழாலவத்தை எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.
இனி மறதியை உண்டாக்குவது ஆணவ மலமேயாதலின், ``மலையைத் தவிர்ப்பாள் ஒருத்தி`` என்றது ஆணவ மலத்தையேயாம். ஆணவ மலம் வந்தவாறு அறியப்படாமையால், ``அவன் ஊரறி யோமே`` என்றார்.
விருத்தி - தொழில். வருத்தி - வருவித்து; தன்பால் ஈர்த்து.
இதனால், முன் தந்திரத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்ட மேலாலவத்தை கீழாலவத்தையின் இயல்புகள் உள்ளுறையாக உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 31

பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

பொழிப்புரை :

கானக மக்களில் மங்கைப் பருவம் எய்திய மகளிர், உண்மை வாச்சியங்களில் ஏதும் இன்றிப் பருந்தும் பறவையும், ஓசை வேறுபட்டபோதிலும் அடிநிலையிசை ஒன்றேயாக முழக்குகின்ற ஓசைகளையே வாச்சியமாகக் கொண்டே எப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளப்படுகின்றார்கள். அவர்கட்குப் பிறக்கின்ற பிள்ளை களும் பேயும், பூதமுமாகவே பிறக்கின்றன. ஆயினும் அவர்களில் யாரும் இதைப் பற்றி வருந்துவதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சி யுடனேயே வாழ்கின்றார்கள்.

குறிப்புரை :

`இது வியப்பு` என்பது குறிப்பெச்சம். உண்மை வாச்சியம் அருள் நாதம். பருந்து தீவினை. கிளி நல்வினை. இவை பறை கொட்டல், ஆரவாரத்தைத் தோற்றுவித்தல். அடிநிலையிசை. ஆணவ மலம். கானக மகளிர், கருவி கரணங்கள். அவர்கள் பருவம் அடைதல், ஒடுங்காது எழுச்சியுற்று நிற்றல். இவர்கட்குக் கணவராகும் கானவர், பெத்தான்மாக்கள். அதீதம் முதலாகச் சாக்கிரம் ஈறாக உள்ள கீழாலவத்தைகள். பிறக்கின்ற பிள்ளைகள், இவ்வவத்தைகளில் நிகழும் அனுபவங்கள். இவைகள் திருவருளை நினைய ஒட்டாது, மீட்டும் மீட்டும் வினைப்பயன்களையே நினைப்பித்தலால் அவை, `பேய் பூதம்` என இகழப்பட்டன. ஆயினும் அவைகளின் உண்மை உணராது மகிழ்ந்து வாழும் உயிர்களை, ``இன்புறுவாரே`` என்றார். ஏகாரம், தேற்றம்.
``பருந்தும், கிளியும் படுபறை கொட்ட`` என்ற குறிப்பினால், மணம் கானவர் மணமாதல் அறியப்பட்டது. `பெறல் உரு, தவப் பெரும் பூதம் ஆகும்` என மாற்றிக்கொள்க. ``ஆகும், இன்புறுவார்`` என்பன போலவே, `படுவார்` என எதிர்காலமாக ஓதற்பாலதனையே வேறோ ராற்றால், ``பட்டார்`` என இறந்த காலமாக மயக்கிக் கூறினார். `இருந்த` என்னும் பெயரெச்சம் இடையே ஓர் இகரம் பெய்து விரிக்கப்பட்டது.
இதனால், முத்திறத்து ஐந்தவத்தைகளுள் சகல ஐந்தவத்தையும் கேவல ஐந்தவத்தையும் பயனிலவாதலை உணர்ந்து சுத்தாவத்தையிற் செல்லமாட்டாதவாறு இழிவு உள்ளுறையாக உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 32

கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.

பொழிப்புரை :

கூட்டில் வாழும் பறவை இரையைத் தேடித் தின்று விட்டுக் கூட்டிற்குள் புகுந்து பின் அதனைச் சீரணிக்கப் பண்ணிக் கொண்டுமட்டும் இருந்தால், அந்தப் பறவை தனக்கு என்ன உறுதிப் பயனைச் செய்துகொள்ளும்? (ஒன்றையும் செய்து கொள்ளாது. ஆகலின் தம் உயிர்க்கு உறுதி செய்துகொள்ள விரும்புவோர் அந்தப் பறவையின் செயலைக் கைக்கொள்ளாமல் விடுத்து,) நெய்யை உணவாக உண்டு அதனாலே ஓங்கி எரிகின்ற நெருப்புப் பின் நறுமணமும், குளிர்மையும், அழகையும் உடைய சாந்தத் தருகின்ற அந்த மேலான செயலை நோக்கி, அதனைக் கடைப்பிடிக்க.

குறிப்புரை :

`கூட்டுப் பறவை` என்னும் பகர ஒற்று, எதுகை நோக்கித் தொக்கப்பட்டது. `மற்று`, வினைமாற்றின் கண் வந்தது. அறுதல் - சீரணித்தல். ``அற்றால் அளவறிந்துண்க``8 என்பது காண்க. அறுத்தல் - சீரணிக்கப்பண்ணுதல். சீரணித்தல் இயல்பிலே நிகழ்வ தாயினும் அது தவிரப் பிறிது செய்யாமையைக் குறித்தற்கு, அதனைப் பரவையால் செய்யப்படுவதுபோலக் கூறினார். உணவை உண்டு அதனைச் சீரணித்துக் கொள்வதனோடு அமைகின்ற உயிர்கள் பல உள ஆயினும் கூட்டில் வாழும் பறவையையே கூறினார், அஃது உடம்பில் வாழும் உயிரைக் குறித்தற்கு, `கூடு` என்பது உடம்பிற்கும் பெயர். அதனை, ``கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்பு ஆரே அனுப விப்பார் - பாவிகாள் அந்தப் பணம்``9என்பதனானும் அறிக. `சுடு` என்பது எதுகை நோக்கி நீண்டமையால் ஈற்றுகரம் குற்றுகரமாய் உயிர் வரக்கெட்டது. `சுடு எரி` முக்கால வினைத்தொகை. நெய்யை உண்டு, மையைக்காலும் எரி, விளக்கெரியும், ஓம குணடத்து எரியும். பாடு - உயர்வு; மேன்மை. ``அறிவார்க்குப் பன் எளிதாமே`` என்றாராயினும் `பயன் வேண்டுவார் அறிந்து கடைப்பிடிக்க`` என்பதே கருத்து.
இதனால், `மக்கள் உணவைத்தேடி உண்டு உடம்பை வளர்ப் பதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை; அவ்வளர்ச்சிக்கு ஏற்ப மெய் யறிவையும் வளர்த்து, அதற்கேற்ற செயல்களையும் உடையராதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை
தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

பொழிப்புரை :

எல்லாச் சமயங்கட்கும் வேர்போன்றது திருவருள். அஃதாவது, `திருவருட் குறிப்பின்றி, எந்தச் சமயமும் உலகில் இருக்கவில்லை` என்பதாம். அத்திருவருளே உணர்ந்த சமயங்கள் வேரின்மேல் வளர்ந்து தழைத்த மரங்களாகும். திருவருளை உணராத சமயங்கள் வளராது முடம்பட்ட மரங்களாம். அவைகளையே, ``வேர் உண்டு; தலையில்லை`` என்றார்.

குறிப்புரை :

பிறர்க்கு உறுதிப்பொருள்களை நன்கு விரித்துரைப்பாரது விரிவுரைகள், நல்லாசிரியரது உபதேசத்தின் வழி அமைந்தனவாயின், அவை பசுமையோடு தழைத்த இலைகளின் நடுவிலே பூத்த பூக்களாய், `பயன்` என்னும் தேன் உள்ளூறப்பெற்று நுகர்ந்து மகிழத் தக்கனவாய் இருக்கும். தான்றோன்றிகளாய் உள்ளாரது விரிவுரைகள் அத்தன்மை உடையன ஆகா. அவைகளையே, ``இலை இல்லை; பூ உண்டு; இன வண்டிங்கில்லை`` என்றார். இவையும் மேற்குறித்த சமயங்களின் பிரச்சாரங்களையேயாம்.
பிற சில கொள்கைகளில் வேறுபாடு உளவாயினும் கடவுட் கொள்கையுடைய சமயங்களிடையே `திருவருள் என்னும் ஓர் ஒற்றுமை உண்டு. அதனால் அவை ஒரு கொத்திலே பூத்த பூக்கள் போல விளங்கும் கடவுட் கொள்கையில்லாத சமயங்களிடையே அத்தகைய ஒற்றுமையில்லாமையால், அவை ஒன்றோடொன்று சேராத தனிப் பூக்கள் போலும். (தனிப் பூவிலும், கொத்தாய் உள்ள பூக்கள் சிறந்து நிற்றல் தெளிவு. இத்தன்மை பற்றிக் கடவுட் கொள்கையில்லாத சமயங்களை, ``(பூவுண்டு; ஆயினும்) பூவின் குலையில்லை; (அதற்குக் காரணம்) தாள் இல்லை`` என்றார். குலை - கொத்து. தாள் - காம்பு.
கடவுட் கொள்கை இல்லாவிடினும், ``நல்லதன் நலனும், தீயதன் தீமையும் இல்லன அல்ல; அங்ஙனமே அவற்றிற்கு ஏற்ற மறுபிறப்புக்களும இல்லன அல்ல``lஎனக் கொள்ளும் சமயங்கள் உள. ``அவை பலரால் எளிதில் பின்பற்றப் படுதலால், எளிதில் பறிக்க வரும் மலர்போல்வனவாம். ஆயினும் கடவுட் கொள்கை இல்லாமையால், நாற்றம் இல்லாத மலர் போலும். அதனால் அவை சூடப் பெறும் தலைகளை இல்லனவாம் - என்பதனை, ``கொய்யும் மலர் உண்டு; சூடும் தலையில்லை`` என்றார்.
இனி, மலர்கள் எளிதில் கொய்ய வருவதற்குக் காரணம், அவை பொருந்தியுள்ள கிளை தாழ்ந்திருத்தலேயாம். `அதுபோல நாற்றம் இல்லாத மலர்கள்போலும் அந்தச் சமயங்கட்கு அடி நிலை யாகிய, கடவுட் கொள்கையற்ற வெற்றறம் உலகில் நிலை பெற்றுத்தான் உள்ளது` என்பதை, ``தாழ்ந்த கிளைபுலராதே`` என்றார். புலர்தல் - உலர்தல்; வற்றுதல். கிளை வாடாமைக்குக்; காரணம், வேர் பசுமையாய் இருத்தல். `சமயங்களின் வேர் திருவருட் குறிப்பு` என நாயனார் முதற்கண் கூறியதை நினைக.
இரண்டாம் அடியின் முற்பகுதியை, `வேர் உண்டு இலையில்லை` என மாற்றி முதலிற் கூட்டியும், அதன் பின்னர், `பூவின் குலையில், (காரணம்) தாள் இல்லை` என மாற்றியும் பொருள் கொள்க. ``பூவின் குலையில்லை`` என்று மட்டுமே கூறியதால், `பூ உண்டு` என்பது பெறப்பட்டது.
இதனால், `புறப்புறம், புறம்` என்னும் இரு கூற்றுப் புறச் சமயங்களின் இழிபுகள் `மருட்கை` என்னும் மெய்ப்பாடு தோன்ற, உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 34

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

மக்கள் யாவரும் வினைத் தொடர்ச்சியாகிய ஆற்று வெள்ளத்தில் போய்க்கொண்டிருப்பவரே. ஆயினும் அவருள் ஒரு சிலர் மட்டும் ஆற்றின் அக்கரையில் ஓர் ஆலமரத்தையும், அதன் கீழே உடையின்றியிருக்கும் ஓர் அந்தணரையும் கண்டு வாழ்த்து கின்றார்கள். அதனால் அவ்வந்தணரால் தாம் கடலிற் சென்று விழுவதற்கு முன்னே கரைசேர்க்கவும் பெறுகின்றார்கள். மற்றவர் களும் அவ்வாறே கரை சேரலாம். ஆயினும் அவ்வாறு செய்யாமல் ஐந்து வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வெள்ளத் திலே மிதந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`வெள்ளம் கடலிற் கொண்டுபோய் விடுதல் உறுதி` என்பது கருத்து.
``ஆல நீழல் உகந்த திருக்கையே;
ஆன பாடல் உகந்த திருக்கையே``3
என்பது முதலாக வரும் பல அருட்டிரு மொழிகளால் ஆலமர நிழல் சிவபிரானது இருக்கையாதல் தெளிவு. சங்க இலக்கியங்கலிலும் இது பெறப்படும். ஆகவே, ``நக்கர்`` என்றது சிவபிரானையே என்பதில் ஐயமில்லை. நடுவே - கடலில் சென்று வீழ்வதற்கு முன்பே ஆல மரத்தை அக்கரைக்கண் நிற்பதாகக் கூறியது, சிவன் வினைத் தொடர்ச்சியோடும், பிறவிப் பெருங்கடலோடும் யாதொரு தொடர்புமின்றி அகல நிற்றலைக் குறித்தற்கு. ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பார் கரை சேர்த்தல் கூடுமன்றி, போவாருள் ஒருவர்க்கு அது கூடாமை சொல்ல வேண்டா.
ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பவர் கண்டால், எவரும் தாமே சென்று மீட்பர். அதற்கு மேல், அதற்கு மேல், வெள்ளத்திற் செல்வார் அவர்களை அழைத்து வாழ்த்தினால், அந்தணர் ஒருவர் மீட்கா தொழிவாரோ? ஒழியார். ஆதலின் ``வாழ்த்திப் பயன் கொள்வர்`` என்றார்.
ஆல மரம் விரிந்து படரக் கூடியது; அதன் விழுதுகள் எத்துணைத் தூரமும் எட்டக் கூடியன. ஆகவே, ஆலமரத்தின் கீழ் உள்ள அந்தணர் அந்த விழுதுகளில் ஒன்றன் வழியாக செல்வாரை எளிதில் மீட்பார். ஆயினும் அந்தணர் வீசும் ஆலம் விழுதை ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் பலர் ஆற்றோடே போகின்றனர்` என்பதை, ``தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே`` என்றார். தாழ்தல், ஆற்றில் வீழ்தல்.
ஆல மரம், வேதம். அதன் விழுதுகள், அதன் வழி நூல் சார்பு நூல்கள்.
ஆல மரமே பண்டு தொட்டு அருள் வடிவான மரமாகக் கொள்ளப்பட்டு வர, அதனை மாற்றி, அசோக மரத்தையும், அரச மரத்தையும் கொண்டவர்களையும், அவருள் ஒரு சாரார், ``நக்கன்`` என்பது, `திசைகள் தவிர வேறு ஆடை இலன் என்பதாகப் பொருள் தந்து, விபாயக நிலையை உணர்த்தி நிற்க, அதனை யறியாது, உலகியலுக்கு மாறாய், `ஆடையின்றி யிருப்பவன்` எனப் பொருள் கொண்டவர்களையும் குறிப்பிற் குறிப்பாய் உணர்த்தற்குச் சிவனை வேறோராற்றால் சுட்டாது, ``நக்கன்`` எனச் சுட்டினார்.
அசோகும், அரசும் ஆற்றிற் செல்வாரை மீட்கலாகாமை -யையும் நோக்குதல் வேண்டும்.
மிக்கவர் - எஞ்சினோர் ``அஞ்சு துயரம்`` என்பது வெளிப்படைப் பொருளில், `பல துயரம்` என்றும்` உள்ளுறைப் பொருளில் பஞ்சேந் திரியங்களின் துயரம் என்றும் பொருள் தரும். கிடக்கின்றவாறு இரங்கத் தக்கது` என எஞ்சி நின்ற சொல்லெச்சத்தோடு முடிக்க.
இதனால், முன் மந்திரத்தில் பொதுப்படக் கூறிய சமயங்களுல் ஒரு சாரனவற்று இரங்கத் தக்க நிலை வகுத்துக் கூறப்பட்டது. இதனால், காலத்திற்றானே களப்பிரர் ஆட்சி முதலிய காரணங்களால் தமிழ்நாட்டில் சிவனடியார்கட்கு இடுக்கண் தோன்றினமையை உணர்தல் கூடும்.

பண் :

பாடல் எண் : 35

கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.

பொழிப்புரை :

கூப்பிடு தூரத்தளவேயான குறு வழி ஒன்று உள்ளது. அதற்குள்ளே கடுமையான இரண்டு காடுகள் தனித்தனி ஒவ்வொரு காதம்போல உள்ளன. அந்தக் காடுகளில் வழிச் செல்வாரே மறித்துக் கொண்டுபோய் சிற்றறையில் அடைத்து வைக்கின்ற கள்வர்கள் வாழ்கின்றார்கள். ஒன்றும் அறியாத வழிப்போக்கர்கள் அந்தக் கள்வரை வழிகாட்டுபவராகக் கருதி அவரைப் பின் பற்றிச் சென்று, தமக்கு உதவுபவரை அழைக்க வேண்டிய நிலைமையராய் இச்சிறுவழியில் சிறு குடில் ஒன்றே புகலிடமாக அடைகின்றனர்.

குறிப்புரை :

ஓரிடத்தில் நின்று அழைத்தல், வேறோர் இடத்தில் உள்ளவர் காதில் விழுகின்ற அளவு தூரத்தை, கூப்பிடுதூரம்` என்பர். நெடுவழியின்றிக் குறுவழி` என்றற்கு, ``கூப்பிடும் ஆறு`` என்றார். ஆறு - வழி. இந்தக் குறுவழியாவது, எண்சாண் உடம்பேயாம். இதிற் செல்லும் வழிப்போக்கர், உடம்பில்வாழும் உயிர்கள். ``வன்காடு இரண்டு`` என்பது, சொல்வாரது குறிப்பால் விளங்கிற்று. அவை `கீழாலவத்தை, மேலாலவத்தை` என்பன. அந்தக் காட்டிலே வாழும் கள்வர் கருவிகள். (தத்துவ தாத்து விகங்கள்) இவைகள் மிகுதியாக உயிரைமேல் ஏற்றினால், புருவ நடுவிற்கு மேற் செல்லவிடாது அவ் விடத்தே தடுத்து நிறுத்தலால் ``காப்பிடு கள்வர்`` என்றார். இதனால் இக்கள்வர்கள் எய்தும் பயன் மெய்யறிவாக பொருளைக் கவர்ந்து கொள்ளுதலாம். (கருவிகள் சடமாயினும் உருவக நயம் பற்றிப் பயன் எய்துவனபோலக் கூறினார்.) எண்சாண் உடம்பில் புருவநடு ஓரங்குலமே யாதலாலும் அதற்குள்ளே உயிர் நிற்றலாலும் `இந்தக் குறுவழிக்குள்ளே ஒரு சிறுகுடிலில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள்` என்பார், ``ஈண்டதோர் கூரை கொண்டாரே`` என்றார். ``ஈண்டு`` என்றது, முன்னர்க் கூறிய கூப்பிடு தூரத்தை. கூரையாவது குடில்.
`சிறு குடில்` எனப்பட்டது புருவ நடுவாகவே, அதன்கண் அடைபட்டிருத்தல், கேவல சாக்கிரமும், மாசகலமும் ஆயிற்று. அவற்றில் கிடைப்பன. பெரிய அளவாகக் கூறின், ஐம்புல இன்பங்களுக்குமேல் இல்லை. அவையும் கண்டதையே கண்டும், உண்டதையே உண்டும், பிறவும் இவ்வாறானவேயாம். அந்நுகர்ச்சி களும் கருவிகளின் சேட்டையால் நிலையின்றி, `சொப்பனம், சுழுத்தி` என்று இப்படியான நிலைகளால் இழக்கப்படுவனவேயாம். இவற்றை யெல்லாம் அடைபட்டிருப்பர் எண்ணி இன்னலுறுவாராயின் இந்தச் சிறுகுடிலினின்றும் தம்மை மீட்டு உதவுபவரை அழைக்கவே செய்வர். அதனால் அக்குடில், ``கூப்பிடு கூரை`` எனப்பட்டது. உதவுவது திருவருளேயாதலான் அதனை அவர்கள் அழைத்தே ஆக வேண்டும். அழைத்தவாற்றை,
``தரிக்கிலேன் காய வாழ்க்கை;
சங்கரா போற்றி! போற்றி!!``3
``தினைத்துணை யேனும் பொறேன் துயர் ஆக்கையின்
திண்வலையே``l
என்பன முதலியவாற்றான் அறிக.
திருவருளாள் உயிர் புருவ நடுவற்கும் மேலே செலுத்தப் படுமாயின் துவாதசாந்தப் பெருவெளியை அடைதலாகிய யோகா வத்தையையும் அதனையும் கடந்து அகண்டாகாரமாய் நிகழும் ஞானா வத்தையையும் எய்தும். `அவ்வாய்ப்பினைப் பெறாத உயிர்கள் சகல கேவலங்களில் நின்று புருவ நடுவை மட்டுமே மேல் நிலையாகக் கொண்டு, இருட்டறையில் கிடக்கின்றன` என்பதே இம்மந்திரத்தால் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

குளம் ஒன்றில், பொருட்படுத்தி எண்ணலாகாத கொட்டியும், சிறந்தனவாகிய வெல்ளாம்பல் செவ்வாம்பல்களும் பூத்துள்ளன. அதுபோலவே, பார்வைக்கு அழகாய் உண்டால் கொல்லும் எட்டிப் பழமும், அழகும் இன்றி, இனிமையும் இன்றி, உண்டால் நோயைத் தீர்க்கும் வேப்பம் பழமும் அழகும், இனிமையும் உடையதாய், உண்டால் பசியைத் தீர்த்து, உடல் நலத்தை நல்குவ தாகிய வாழைப் பழமும் அந்தக் குளக்கரையில் பழுத்திருக்கின்றன. வாழையே மேலும் சுவைப்படுத்தி உண்ண வேண்டுமாயின், கட்டியும், தேனும் மக்கட்குக் கிடையாதன அல்ல; எங்கு கிடைப்பனவே. ஆகவே, வாழப்பழத்தைப் பறித்துக் கட்டியும், தேனும் கலந்து உண்டு, நாவிற்கு நறுஞ்சுவை பெற்றுப் பசி தீர்ந்து, உடல் நலத்தையும் எய்துமளவிற்கு அறிவில்லாத மக்கள், பார்வைக்குக் கவர்ச்சியாய் உள்ள எட்டிப் பழத்தையே பெவேண்டி, `அதனை அம்மரத்தில் ஏறிப் பறிப்பது எவ்வாறு` என்று எண்ணுவதிலேயே காலம் கழித்து இளைக்கின்றார்கள். இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`உலகம் சிறுமையும், பெருமையும் கலந்தது` என்பதை முதல் அடி விளக்கிற்று. கொட்டிப்பூ, சிறியனவற்றையும், ஆம்பற் பூ, பெரியனவற்றையும் குறித்தன. இரண்டாம் அடி இறுதியில், `பழுத்துள்ளன` எனச் சொல்லெச்சம் வருவிக்க. `குளத்திடை பழுத் -துள்ளன` என்றாரேனும், `அதன் கரையில் பழுத்துள்ளன` என்பதே கருத்து. `குளம்` என்றதும், `குளக்கரை` என்றதும் உலகத்தையே.
எட்டிப் பழமாவது, ``முற்பயக்கும் சின்னீர இன்பத்திற் பிற்பயக்கும் பீழை பெரிதாம்``* காம இன்பம். வேப்பம் பழமாவது, கவர்ச்சியும், தன்னலமும் இல்லாது, செய்தால், முன்பு உள்ள பாவத்தைப் போக்கும் பசு புண்ணியங்கள். வாழைப் பழம், பத்தியுடைய உள்ளங்கட்கு விருந்தாய், என்றும் நிலைத்து நின்று, ஞானத்தைத் தரும் சிவபுண்ணியங்கள்.
கட்டியும் தேனும் சிவபுண்ணியங்களைச் சிறப்பித்துக் கூறும் சிவ தோத்திர சாத்திர நூல்கள்.
`இளைக்கின்றவாறு இரங்கத் தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், `நன்மையும், தீமையும் கலந்துள்ள இவ் வுலகத்தில் அறிவுடையோர் தீமையை விலக்கி, நன்மையைப் பொருந்தி இன்புறுவர்` என்பதும், `அறிவிலார், நன்மையை விலக்கித் தீமையைப் பொருந்தித் துன்புறுவர்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 37

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும்
கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.

பொழிப்புரை :

வண்டினங்களில் `அரசவண்டு` (கோத்தும்பி) எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற அந்த இனத்தில் பெண் வண்டும், ஆண் வண்டும் உயர்ந்த தாமரை மலர்களையே நாடிச் சென்று தேன் நுகர்தலுடன், அவற்றை அரியணையாகவும், வெண்கொற்றக் குடையாகவும் கொண்டு அன்புடன் கலந்து அரசு வீற்றிருக்கும். சிற்றின வண்டுகளும் இனத்தால் அவற்றோடு ஒப்பனவாயினும் அவை அத்தன்மையின்றிச் சிறு பூக்களையும் நாடி ஒடுலுடன், மற்றும் தம் கண் சென்று கலந்த பொருள்களின் மேல் எல்லாம் ஓடிச்சென்று விழும். ஆகவே, அவ்வினத்துப் பெண்வண்டு அதன் ஆண் வண்டினால் இன்பம் பெற்றதாயினும் அந்த இன்பம் அரசப் பெண் வண்டு, அரச ஆண் வண்டினால் பெற்ற இன்பம் ஆகுமோ! ஆகாது.

குறிப்புரை :

`உடையான், அடியார்` என்னும் முறைமையில் சிவனும் சிவன் அடியார்களும், ஏனைத் தேவரும் அவன் அடியார் களும் ஒரு தன்மைப்பட்டவர் போலக் கருதப்பட்டாலும், சுத்த போகத்தையன்றித் தராமையும் நாடாமையும், மற்றும் அனைத்துலகங்களையும் ஆட்சி செய்யும் உரிமையும், ``இருநிலத்தல் எமக்கெதிரா வாருமில்லை``*\\\\`20``தென்றிசைக்கோன் தானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`` என இருக்கும் பெருமிதமும், இவ்வாறன்றிச் சில விடத்தளவில் சிலவற்றை மட்டுமே தரும் உரிமையும், காமம், வெகுளி, மாற்சரியம் காரணமாகத் தலைப்படும் செயல்களில் வெற்றியைத் தருதலும் விரும்புதலும், அவற்றுள்ளும் தம்மின் வலியாரைக் காணின் அஞ்சு தலும், மூவகைத் துன்பங்களில் ஆதி தெய்விகமாய் வருவனவற்றைக் கடப்பிக்கவும், கடக்கவும் மாட்டாமையும் போல்வனவற்றை நோக்கின், அவ் இரு திறத்தவர்க்கும் இடையேயுள்ள வேறுபாடு, மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வேற்றுமை போல்வதாம். ஆகவே, ஏனைத் தேவரையடைந்து அவன் அடியார் பெறும் இன்பம், சிவனை யடைந்து, அவன் அடியார் பெறும் இன்பம் ஆகாது என்பதைப் `பிறிது மொழிதல்` என்னும் அணிவகையால் தோற்றுவித்தது இம்மந்திரம்.
சிவானந்தத்தைத் `தேன்` என்றல் மரபாகலின், அதனை நுகரும் அடியார்களை வண்டாக உருவகிப்பார், அதற்கேற்ப ஏனையவற்றையும் ஒருபுடை ஒப்பாக வைத்து உருவகித்தார்.
``கடைவண்டு`` எனப் பின்னர் வருதலால், முன்னர்க் கூறப் பட்டவை அரச வண்டாயின. அரச வண்டிற்கு ஏற்புடைமை பற்றி, `பீடிகையும், குடையும் ஆவன தாமரை மலர்கள்` என்பது அறியப்படும். கொண்ட பாசம், கொள்வதற்கு ஏதுவாய் நின்ற பாசம். கோலம் - உருவம். `பாசத்தையுடைய உருவம்` என்க. `உண்டாயினும்` என்பது, `உண்டானும்` என மருவி நின்றது. ``எனைத்தானும் நல்லவை கேட்க``9 என்பதிற்போல. `கலந்திட்ட வற்றை` என இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. ஈற்றில் நின்ற பெடை வண்டு, கடை வண்டு இனத்தைச் சார்ந்தது. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய் வினா.
இதனால், ``சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை`` என முதற்கண் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாக வலியுறுத்தப் பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``கொல்லையில் மேயும் பசுக்கள்`` என்னும் மந்திரம் ஏழாந் தந்திரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 38

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

பொழிப்புரை :

தட்டம் - ஆழம் இன்றிப் பரவலாகத் தேங்கியுள்ள நீர். குட்டம் - ஆழமாய்ச் சிறிது இடத்தில் நிற்கும் நீர்; குளத்து நீர் போல்வது முன்னதில் குவளையும், பின்னதில் தாமரையும் பூத்தல் இயல்பு. ஆயினும் இங்கு அவை மாறிக் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றை விரைந்து சென்று பறியாமல், பக்கத்தில் இருக்கும் மரக்கிளையில் சிறிது நேரம் யாரேனும் காத்திருப்பார்களாயின், இந்த முரண்பாட்டு நிலை நீங்குதல் தெரியவரும்.

குறிப்புரை :

தட்டத்து நீர் விரைவிற் காய்ந்து மறைந்து விடும். குட்டத்து நீர் நீடு நின்று பயன் தரும். ஆகவே, அவை முறையே உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் குறித்தன.
தாமரை பெரு விருப்பினையும் குவளை சிறுவிருப்பினையும் குறித்தன. நிலையானதில் பெருவிருப்பும், நிலையாததில் சிறு விருப்பும் உண்டாதல் முறைமை. மெய்ப்பொருள் இயலில் இவை மாறி நிகழ்தலை முன் இரண்டடிகள் குறித்தன. இவை இயற்கைக்கு மாறாகலின் செயற்கையே. செயற்கை காரணம் உடைத்து. அஃது இங்கு ஆணவம். செயற்கை நிலையாதாகலின் ஆணவம் நீங்க இந்நிலை மாறித் தன்னியல்பு நிகழும். அதற்குச் சிறிது காலம் வேண்டும். அதனையே பன்னிரண்டடிகள் குறித்தன. பறித்தல், இங்கு அதனையே நிலையானதாகக் கருதுதல். விட்டமாவது, அதுபோலும் மரக்கிளை. விளங்குதல், அப்பால் செல்லாமல் காத்திருத்தல்.
கொம்மட்டி, ஒருவகைக்கொடி. அது நிலத்திற் படரும். ஆகவே, அதனை நீரில் இட்டால், அழுகிக் கெடும் ஆதலின், அது நிலையாமைக்கு உவமையாயிற்று. ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஆம்`` என்னும் பயனிலைக்கு, `அத்தன்மை` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், உயிர்கட்குச் சிவானந்த வேட்கையே இயற்கையும், விடயானந்த வேட்கை செயற்கையும் ஆதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

ஐந்து இல்லங்கள் உள்ளன. அந்த ஐந்திலும் ஆறு வாவல்கள் வாழ்கின்றன. ஐந்து இல்லங்களில் ஒன்றில் உள்ள ஒரு மரத்தின் நுனிக் கிளையில் நூறு வாவல்கள் வாழ்கின்றன. (இந்த இல்லங்களில் எப்படி நாம் குடியிருக்க முடியும்?) வாவல் முதலிய எந்த இடையூறும் இல்லாத வேறோர் இல்லம் உள்ளது. அது போகப் போக உயரமாய் உள்ள இடத்தில் உள்ளது. அந்த ஏறு நிலை முறையில் ஏழு பெரிய ஊர்களைக் கடந்தால், அந்த இல்லத்துட் புகலாம்.

குறிப்புரை :

ஆறு வாவல்கள், காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள். ஐந்து அகம், பஞ்ச கோசங்கள். அவை முன் தந்திரத் தொடக்கத்தில் காட்டப்பட்டன. மரம், பிராணமய கோசம், அதன் நுனிக்கிளை, புத்தி தத்துவம். நூறு வாவல்கள், புத்தி தத்துவத்தின் அளவிலாப் பாவங்கள். நூறு, அளவின்மையைக் குறித்தது. பெரும் பதி ஏழு, ஆதாரம் ஆறும், `நிராதாரம்` எனப்படும் சகச்சிராரமாகிய ஏழாம் தானமும். மனை, `மீதானம்` எனப்படும் துவாதசாந்தம். பிரணவ யோகத்தால் அதனையடைந்தோர் சிவனைச் சார்வர். மாறுதல், பின் விட்டு தீங்குதல். இது பிறப்பு எய்துதலைக் குறித்தது.
` `பறவை`` எனப்பட்டன ஏற்புழிக் கோடலால் வாவலாயின. வாவல், இனத்தால் பறவையன்றாயினும், பறத்தல் பற்றி, `பறவை` எனப்படும்.
இதனால், `ஆதார யோக நிராதார யோகங்களில் நிற்பின், காமம் முதலிய அகப் பகைகளும், புத்தி குண பாவங்களும் நீங்கிச் சிவனைத் தலைப்படுதல் கூடும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.

பொழிப்புரை :

[`அனம்` என்பது ``வட்டனம்`` என்பதில் பண்புப் பெயர் விகுதியாகவும், ஏனைய மூன்றிலும் தொழிற்பெயர் விகுதியாகவும் வந்துள்ளது. `கட்டு` என்பது அடியாக. `கட்டணம், கட்டடம்` என்னும் சொற்கள் இக்காலத்தில் வழங்கக் காண்கின்றோம். இங்கும் `அனம்` என்பதற்கு ஈடாக, `அணம்` என்ற பாட வேறுபாடும் காணப்படுகின்றது. கூலிக் நெற்குற்றுதலை, `கொட்டணம் குற்றுதல்` என்பர். எனவே, இம்மந்திரத்தின் முதற்சீர் நான்கும் முறையே, `கொட்டுதல், வட்டம், கட்டுதல், ஒட்டுதல்` என்னும் பொருளவாம். கொட்டுதல் - நிலத்தைத் தோண்டுதல்.]
நிலத்தைத் தோண்டி, மண் அல்லது மணலை அப்பால் குவிக்கின்ற கிணற்றில், அல்லது ஊற்றுக்குழியில் நீரோடு, சுற்றிலும் மண், அல்லது மணலும் உடன் சேர்ந்துவரும். அந்நீர் கலங்கல் நீராய் இருக்கும். மரத்தாலான வட்டத்தின் மேல் சுடுமட் பலகைகளால் ஓரளவு சுவர் எழுப்பி, அதனைக் கயிற்றால் இறுகக் கட்டிப் புறஞ்சுவரோடு ஒட்டிவைத்தால், மண், அல்லது மணல் வாராது, நீர் மட்டுமே ஊறி வந்து தெளிந்து எல்லார்க்கும் பயன்படும்.

குறிப்புரை :

கிணறு தோண்டி, அதனை இடிந்து வீழாமல் நிலைக்கச் செய்தற்கும் இன்றும் இவ்வாறு செய்யப்படுதலைக் காணலாம். இஃது இங்கு நிலத்தை அகழ்ந்து, அதன் அடியில் உள்ள நீரைபபெற்று இன்புறுவார்க்குச் சுற்றிலும் உள்ள மண், அல்லது மணல் ஆகிய கலங்கல் வந்து சேர்வதுபோல, ஞான சாதனைகளால் அஞ்ஞானத்தை அகழ்ந்தெறிந்து தோன்றாத் துணையாய் நின்று சிவத்தைத் தலைப் பட்டு இன்புறுபவர்கட்குச் சிவானந்தத்துடன், பிராரத்த வாசனையும் வந்து தாக்கும். அதனைத் திருவருளாகிய பாதுகாவலைப் பத்தியால் உறுதிப்படச் செய்யின் சிவானந்தமே மேலிட்டு யாவர்க்கும் பயன்தரும், என்பதைக் குறித்து நின்றது.
``தொழுமி`` என்பதும், `கட்டி` என்னும் பொருட்டாய் நின்றது இவையெல்லாம் சில நாட்டு வழக்குப்போலும்!.
(இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் இரு மந்திரங்கள் வெளிப்படைப் பொருள் ஆகலின், பின் அதிகாரத்தில் இருத்தற்குரியன.)

பண் :

பாடல் எண் : 41

கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

பொழிப்புரை :

கொட்டு - மண்வெட்டி. குந்தாலி - கோடலி. `இந்த இரண்டே உள்ளன` என்க. `உள்ளன` என்பது சொல்லெச்சம்.

குறிப்புரை :

``இரண்டுக்கும்`` என்பதை இரண்டாம் அடியில், ``குந்தாலிக்கும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. இரண்டாம் அடியில் `கோட்டுக் குந்தாலி` என்பது உம்மைத் தொகையாய் நின்றது. அதன் ஈற்றில் நான்கனுருபு. உறழ்பொருளாகிய ஐந்தாவதின் பொருளில் வந்தது. ஈற்றில் உள்ள உம்மை சிறப்பு.
பாரை - கடப்பாரை. ``பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின் - வேருக்கு நெக்குவிடும்``l என்னும் ஔவையார் வாக்கைக் காண்க.
மண்வெட்டி ஈர மண்ணைத்தான் பறிக்கும். கோடாலி மரத்தை மேலோடு வெட்டும். பாரை வலிய நிலைத்தையும் அகழும். மரத்தை வேரேடும் சாய்க்கும். ஆகவே, மண்வெட்டி, கோடாலி இரண்டையும் விடப் பாரை வலியது. ``இரண்டே உள; பாரை வலியது`` என்றதனால், பாரை கிடைத்தற்கரிதாதல் கூறப்பட்டது.
மண்வெட்டி இடைகலை நாடி, இது பூரிப்பால் நோயைப் போக்கும். கோடலி, பிங்கலை நாடி, இஃது இரேசகத்தால் மாசு நீக்கும். பாரை, சுழுமுனை நாடி. இது கும்பகத்தால் இறப்பு நீக்கல், அறியாமையைப் போக்கல் ஆகியவைகளைச் செய்யும். எனவே, முன்னிரண்டடிகளால் வாசி யோகத்தின் சிறப்புணர்த்தப்பட்டதாம்.
இட்டம் - வெளிப்படை பொருளில், `இட்ட+அம்` எனப் பிரித்து, மேகம் பெய்த மழையையும். (அம்-நீர்) உள்ளுறைப் பொருளில் அன்பையும் குறித்தது. அன்பு, சிவ பத்தி.
மழை நீர் நிலத்தையும் எளிதில் அகழும்; மரங்களையும் எளிதில் வேரோடு கல்லிவிடும். ஆகவே அது, மண்வெட்டி, கோடாலி, பாரை மூன்றையும் விட வலியதாம்.
`வாசியோகத்தைவிடப் பத்தி வலிது` என்றபடி,
`ஈசன் அருள் நிலை இவ்வாறு உள்ளது` என்க.
``ஆறு பார்ப்பானுக்கு இரண்டே கண்கள்;
மாறுகோள் இல்லை; மதியுள்ளோர் சொல்லுங்கள்``
என்றால், பின்னடி முன்னடியைச் சார்ந்து வந்ததேயன்றி, உள்ளுறைப் பொருளதாகாது. (ஆறு - வழி, அல்லது யாறு. பார்ப்பான் - பார்ப்பவன்.) அஃதே போல், இங்கு, ``ஈசன் அருள்`` என்பது உள்ளுறைப் பொருள் இன்றி, முற்கூறிய பொருளைச் சார்ந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 42

கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.

பொழிப்புரை :

குளத்தில் கயல் மீன்களில் ஒவ்வொன்றை அதன் துள்ளல், பிறழ்ச்சி முதலியவற்றின் கவர்ச்சியால் கண்டு மயங்கினோர் அதைக் கண்டுகொண்டிருப்பதோடே ஒழிவர். (இஃது, `உலகத்தில் மாயையின் விசித்திரத்தில் மயங்கினோர் அம்மயங்குதலோடே ஒழிவர்` என்பதைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது,
``மறை`` என்பது சிலேடையாய், காட்டுப் புதர் மறைவையும், வேதத்தையும் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள். `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின் வழி நில்லாதாரைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள் `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின்வழி நில்லாதாரைக் குறித்தது.
``பிறருக்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார்,
தமக்குப் பயன்வே றுடையார்; ... ... ...
... ... ... தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்`` *
என்றார் குமரகுருபரரும். பூசல் - ஆரவாரம்.

குறிப்புரை :

``ஓதி யுணர்ந்து, பிறர்க்குரைத்தும் தான் அடங்காப் - பேதையிற் பேதையார் இல்``l என்றபடியுள்ள வாய்ப்பறை சாற்று வானது இழிவு நோக்கி ஒருமையாற் கூறினார். அம்மூன்றாம் அடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க. உலக நெறி பிறவி நெறியாகலின் அதனைக் குளமாகவும், தவநெறி வீட்டு நெறியாகலின் அதனை நிலமாகவும் கூறினார். இதில் ஈரடி எதுகை வந்தது.
இதனால் உலக நெறியில் நிற்பார் உலக இன்பத்தையும், தவநெறியில் நிற்பார் வீட்டின்பத்தையும் பெறுதலும், யாதொரு நெறியிலும் நில்லாது வாய்ப்பறை சாற்றுவார் யாதும் எய்தாமையும் உடன் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 43

கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.

பொழிப்புரை :

இயல்பாகவே வலிய கோரைப் புற்கள் முளைத்துப் படர்ந்து கிடக்கின்ற ஒரு குளத்தில், அதற்கு மேல் மெல்லிய ஆரைக் கொடிகளும் தொடர்ந்து படர்ந்துவிட்டன. இந்நிலையில் அந்தக் குளத்தை உடைய நல்ல தலைவர் ஒருவர், அதில் நாரைகள் மூழ்குவதுபோலத் தரையளவும் செல்ல மூழ்குவது எங்ஙனம்?

குறிப்புரை :

`இயலாததாய் உள்ளது` என்பதாம். குளம், சீவான்மா, அதன் அறிவு அக்குளத்தின் நீர், வலிய கோரை ஆணவ மலம். அதன் மேல் தொடர்ந்து படர்ந்த ஆரைக் கொடிகள் மாயையும், கன்மமும், குளத்தை உடைய நாதனார், பரமான்வாகிய சிவன். நாதனார் குளத்து நீரில் தரையளவும் செல்ல முழுகுதல், சிவன் சீவான்மாவின் அறிவு முழுதும் பற்றி விளங்குதல். இஃது இயற்கையாயினும் ஆணவ மலம் காரணமாகச் செயற்கையாய்ப் புதிதாக விளங்குதல்போலக் கூறப்பட்டது. ``நாரைபோல்` என்பது இடைக்கண் போந்த உவமை. ``நாரை`` என்றது நீர்மூழ்கும் பறவைகளைக் குறித்த குறிப்பு மொழி. ``பாரை`` என்னும் இரண்டன் உருபை `பார்க்கண்` என ஏழாவதாகத் திரித்துக் கொள்க. படிதல் - மூழ்குதல் `படிகின்றவாறு எங்ஙனம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால், `வலிய மூல மலமாகிய ஆணவ பந்தமும், அதற்கு மேல் ஆகந்துக மலங்கலாகிய மாயா கன்ம பந்தங்களும் உள்ள வரையில் சிவ விளக்கம் சீவ போதத்தில் முழுமையாக உண்டாதல் இயலாது` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு)
ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.

பொழிப்புரை :

இரண்டு வழிகள் தனித்தனியே பிரிந்து விளங்காமல் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. ஒரு வழி மூன்று காத தூரம் உள்ளது. அதிற் சென்றால், விளைவுள்ள கொல்லையை அடைந்து இன்புறலாம்.
மற்றொரு வழி அரைக்காத தொலைவே உள்ளது. அது கருதி அதிற் சென்றால் அஃது இருள் அடர்ந்த காட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே, அவ்வழிகளில் முக்காத வழியை ஊன்றியுணர்ந்து கண்டு நடக்க வல்லவர் உளரானால், அவர் மேற்குறித்த கொல்லையை யேயன்றி, அதைக் கடந்துள்ள நல்லதோர் ஊரையும் விரைவில் அடையலாம்.

குறிப்புரை :

முக்காத வழி தவ நெறி அதனைக் கடைபோகச் செல்லுதல் அரிதாதல் பற்றி, முக்காவதம் என்றார். கொல்லை, சிவலோகம், அதைக் கடந்த ஊர் பரமுத்தி நிலை.
அரைக் காதவழி வினைவழி. அஃது எளிதாதல் பற்றி, ``அரைக் காதம்`` என்றார். எனவே, `இதிற்றான் பெரும்பாலோர் செல்வர்` என்பது விளங்கும்.
``செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்``
- திருக்குறள் - 26.
என்னும் திருக்குறளை இங்கு நினைவு கூர்க. காடு - பிறவிச் சூழல்.
முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
இதனால், உலகர் அவநெறி சென்று பிறவியை அடைய, பெரியோர் தவநெறி சென்று வீடு பெறுதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து)
எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யானே.

பொழிப்புரை :

வெள்ளிதாய் எழுந்த மேகம் மழை பெய்தல் இல்லை. அப்பொழுது உழவுக்கு வேண்டுவதாகிய விதைகள் சேமித்து வைக்கப்பட்ட இடத்திலே கிடக்க, நிலமும் பதப்படாது, உழவுத் தொழிலும் நிகழ்ந்து பயன் தாராது.
(இதனானே, `கரிதாய் எழுந்த மேகம் மழைபொழிந்த காலத்து, மேற்கூறியன மேற்கூறியவற்றிற்கு மறுதலையாய் நிகழும்` என்பதும் பெறப்படும்.) ஆகவே, மழையைப் பெய்விப்போனாகிய சிவன் பெய்வியாது ஒழிதல் இல்லை.

குறிப்புரை :

``மழை`` (மேகம்) என்றது, சிவனது அருளை. அதனைப் போககாமிகளை நோக்கி, மறக் கருணையாகிய திரோதான சத்தியாகவும், மோட்ச காமிகளை நோக்கி, அறக் கருணையாகிய அருட் சத்தியாகவும் கொள்க.
இனி, `உழவு, வித்து` என்பனவும் போகத்திற்கு ஆகாமியம் ஏறுதலும், சஞ்சிதம் கிடத்தலுமாகவும், மோட்சத்திற்குத் தவம் மிகுதலும், ஞானம் முதிர்தலுமாகவும் கொள்க. நிலம், இரண்டிற்கும் ஆன்ம உணர்வேயாம்.
``எழு மழை பெய்யாது`` என்பதனை முதலிற்கூட்டிப் பொருள் கொள்க. பெய்யாது - பெய்யாமையால், வினை. உழவுத் தொழில். மழையின் இன்றியமையாமையையே உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் வலியுறுத்தினார்.
இதனால் `போகமாயினும், மோட்சமாயினும் சிவனருள் இன்றி ஆகாது; அவன் அன்றி ஓரணுவும் அசையாது` என்பது உள்ளுறை வகையால் வலியுறுத்தப்பட்டது.
``கண்ணுதல் யோகிருப்பக்
காமன் நின்றிட வேட்கைக்கு
விண்ணுறு தேவ ராதி
மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ,
எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப்
பேரின்பம் அளித்த தோரார்``
என்பது சிவஞான சித்தி.* இதனை ஒட்டி,
``எல்லா உயிர்க்கும் உயிர் அருணேசர்;
இவர் அசைவி
னல்லாது அணுவும் அசையாது என்பது
அறிந்தனமே;
வில்லாடன் மாரன் இருக்கவும் யோகம்
விளைத்த அந்நாள்
புல்லா திருந்தன எல்லா உயிருந்தம்
போகத்தையே``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இதன் ஈற்றடி, முதல் மூன்று அடிகளின் சார்பு பொருளாக வந்தது.

பண் :

பாடல் எண் : 46

பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

பொழிப்புரை :

காட்டிலே வாழ்கின்ற ஒருவன் அங்குள்ள ஒரு புலிக்கு அஞ்சி எங்கே பதுங்கியிருந்தாலும் அந்தப் புலி பன்னிரண்டு காதம் வரையிலும் பாய்கின்றது. அதனால் அவன் அந்தக் காட்டை விட்டு ஒரு கடற்கரையை அடைந்தான். அங்கே புலிப் பாய்ச்சல் இன்றிக் குளிர்ச்சியான அலைகள் அழகாக வந்து வந்து சென்றன. பின் அவன் பெற ஒட்டாமல் ஐவர் வந்து கூர்மையான கருவியாற் குற்றினர். ஆயினும் அவன் அவர்களை வளைத்துக் கொண்டு அடித்துத் துரத்தினான். (பின்பு அவன் அமிர்தத்தை உண்டு மகிழ்ந்தான் என்பதைச் சொல்ல வேண்டுமோ!.)

குறிப்புரை :

காடு, தூல உடம்பு. அதில் உள்ள பிராண வாயு பன்னிரண்டங்குலம் வெளியேறி வாழ்நாளைச் சிறிது சிறிதாக உண்டு வருதலால் அதனைப் பன்னிரண்டு காதம் பாய்ந்து தாக்கும் புலியாகக் கூறினார். `பன்னிரு காதம் பாயும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
உடம்பையே உடம்பாகக்கொண்டு செயற்படுதலை விடுத்து, அருளையே உடம்பாகக் கொள்ளுதலைக் கடற்கரையை அடைந்ததாகக் கூறினார். கடற்கரை இனிய இடமாதல் தெளிவு. அருளை உடம்பாகக் கொண்டோர்க்கு நிகழ்வன யாவும் அருட் செயலாகத் தோன்றுதலைக் கடல் அலைகள் வந்து உலவுவதாகக் கூறினார்.
அமிர்தம், சிவானந்தம். அதனைப் பற்ற ஒட்டாமல் வந்து தாக்கும் ஐவர் ஐம்பொறிகள். அருள்வழி நிற்பார்க்கு ஐம்பொறிகளை வெல்லும் எளிதாதல்பற்றி, ``ஐவரைப் போய் வளைத்தான்`` என்றார்.
அதுக்குதல், பொதுக்குதல் என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. அதுக்குதல் வாயில் இட்டுச் சுவைத்தல். பொதுக்குதல், உடம்பில் தைத்தலும், தைக்கச் செய்தலும்.
`ஆர்கலி அதுக்கிய ஆரமுது ஊற` என்க.
``பாய்புலி`` என்றதனால், `பதுங்குதல் காட்டில்` என்பது பெறப்பட, அதனால் `ஒருவன்` என்னும் எழுவாய் பெறப்பட்டது. ஒருவன் உயிர்.
பெத்த நிலையில் நிற்பார்க்கு மாயா உடம்பே உடம்பாகவும் முத்தி நிலையில் நிற்பார்க்கு அருளே உடம்பாகவும் நிற்றலும், முறையே அவற்றால் விளையும் துன்ப இன்பங்களும் இதனால் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 47

தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து)
ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.

பொழிப்புரை :

கடலில் தோணி ஒன்றில் ஏறிப் புகுந்து சென்றும், மீண்டும் தொடர்ந்து வாணிபத்தைச் செய்தும் ஆக்கம் பெற்று வருகின்ற ஒருவன் தனது ஆக்கத்தை மனைவியர்க்குக் கொடுத்து வாழ்க்கை நடத்தச் சொல்லாமல் பரத்தைக்கு வழங்குவானாயின், நாளடைவில் அவன் கவலை மீதூர, ஆலங்கட்டி பழம்போலத் தோன்றிச் சாற்றைத் தாராமல் நீரையே தருதல் போலும் நிலையை அடைவான்.

குறிப்புரை :

``உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்``3 என்பது போல அவன் வாழ்க்கை கெடும் என்றபடி.
தோணி, மனம். ``மனம் எனும் தோணி பற்றி``l என அப்பரும் அருளிச்செய்தார். அந்தக் கரணம் அனைத்தும், `மனம்` எனத்தொகுத்து வழங்கப்படும். அந்தக் கரணமே சூக்கும தேகம். அது முத்தியடையுங்காறும் நீங்காதிருக்கும். `உயிர்கள் செய்த புண்ணிய பாவங்கள் புத்தி தத்துவத்தைப் பற்றிக் கிடந்து பயன் தரும்` என்பது சைவ சித்தாந்தம் அதனால், அதனைப் பிறவியாகிய கடலில் பயணம் செய்தற்குரிய தோணியாக உருவகித்தார். வழங்குதல் - பயணம் செய்தல்.
உயிர் உடம்பை பற்றி நின்று பிற உயிர்களிடத்து நல்லன தீயனவற்றைச் செய்தல், வாணிபத்தில் விலை கொடுப்பதனோடும், அதனால் செய்த உயிர் தான் அடைகின்ற அறம் பாவங்கள் பண்டத்தைக் கொள்வதனோடும் ஒக்கும். ஆதலின் இச்செயலை ``வாணிபம்`` என்றும், `அதனை உயிர் தொடர்ந்து நடத்துகின்றது` என்றும் கூறினார்.
அற உணர்வும் இறையுணர்வும் மனைவியர். கொண்ட பண்டங்களாகிய அறம் பாவங்களை இவ்விருவகை உணர்வுகளும் முதிர்வதற்குப் பயன்படுத்தினால் நலன் விளையும். அது பற்றி இவ்வுணர்வுகளை மனைவியராகக் கூறினார்.
பொய்க் கண்ணீர் வடிக்கின்றவளை `நீலி` என்றல் வழக்கு. அது பற்றிப் பொய்யாக பரிவு காட்டும் பரத்தையை, ``நீலி`` என்றார்.
பரத்தை, பல பொருள்கள் மேலும் செல்லும் ஆசை. ஒருவன் தனது அறிவால் மேலும் மேலும் ஆசையை வளர்த்தால் அவன் கெடுவானன்றோ! அது பற்றி, ``நெஞ்சின் நிலைதளர்ந்து ... ... அன்பே`` என்றார். அளிதல், மெலிந்து கரைதல். `அப்பே ஆம்` என முடிக்க. இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `அறிவால் அற உணர்வையும், இறையுணர்வையும் பெருக்கிக் கொள்ளாமல், ஆசையை வளர்ப்பார் கெடுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.

பொழிப்புரை :

முக்காத ஆறு - தனித்தனி ஒவ்வொரு காதத் தொலைவுள்ள மூன்று ஆறுகள். அவை, `உலகியல் ஒழுக்கம், மெய்நெறி ஒழுக்கம், மெய்யுணர்வு` என்பனவாம்.
அந்த ஆறுகளில் தனித்தனி ஒன்றாக, மூன்று வாழை மரங்கள் உள்ளன. அவை அவற்றால் விளையும், அறமும், அருளும், வீடு பேறுமாம்.

குறிப்புரை :

`செகு` என்னும் பகுதி ஒற்றிரட்டி, `செய்து` என்னும் இறந்த கால வினையெச்சமாய் நின்றது. இது, `செகுத்து` எனவும் வரும். செகுத்தல் - அழித்தல். பழுத்த - முற்றிய. ``காய்த்தன`` என்பது, `ஒழித்தன` என்னும் குறிப்பு. அதனால் ஏற்புடையன கொள்ளப் பட்டன.
`மலம்` என்பது இங்கு, `அழுக்கைக் குறித்து, அதனால் விளையும் நோயைக் குறித்தது. மூன்று வாழைகளும் முறையே பூ, காய், பழம் என்பவற்றால் ஒவ்வொரு நோயைப் போக்கும் நிலையில் உள்ளன. பக்குவம் மிக்கவர்கள் பழத்தை உண்டு எல்லா நோய்களும் நீங்கப்பெற்று அமைதியுற்றார்கள். (`பக்குவான்மாக்களாய் உள்ளவர்கள் மெய்யுணர்வாகிய பழத்தை உண்டு வீட்டை அடைந்து இன்புற்றார்கள்` என்பதாம்.)
`பக்குவனார்` என்பது, `பக்கனார்` எனக்குறைந்து நின்றது. `மிக்கு ஆர்பு அடங்கினார்` எனப்பிரிக்க. ஆர்பு - உண்டு; `செய்பு` என்னும் வினையெச்சம்.
பக்குவம் வாயாத சிறு மகளிரைப் போலப் பக்குவம் எய்தாது, அபக்குவராய் உள்ளோர் பூவையும். காயையுமே மகிழ்ந்து உண்டு, `நோயுற்றோர், நோயற்றோர்` என்னும் இருதிறத்தார்க்கும் நடுப்பட்ட வர்களாய் நின்றார்கள். பழத்தின் அருமையறிந்து அதனைப்பறித்து உண்பதற்கும் அறிவு வேண்டும் என்க.
[பக்குவம் முதிராது அபக்குவராய் உள்ளவர்கள், மெய் யுணர்வைப் பெறாது, இருவகை ஒழுக்கங்களை மட்டுமே உடையராய், `அறம், அருள்` என்பவற்றை மட்டும் பெறுதலோடு, உலகர்க்கும், அறிவர்க்கும் இடைப்பட்டவராய் உள்ளனர்` என்பதாம்.]
உடலில் உண்டாகும் மூன்று நோய்களாவன `தோல் நோய்` வயிற்று நோய் குருதி நோய்` என்பன. இவை முறையே, `மாயை, கன்மம், ஆணவம்` என்னும் மலங்கலைக் குறித்தன. இவைகளில் வாழைப் பூத் தோல் நோயையும், காய், தோல் நோயோடு வயிற்று நோயையும், பழம் எல்லா நோயையும் போக்கும். அது போல அறம் மாயையாகிய உலகியல் துன்பத்தைப் போக்கும். அருள் இருவினை யொப்பு வருவிக்கும் முகத்தால் கன்ம மலத்தைப் போக்கி, உலகியல் துன்பமும் உயிரைத் தாக்காதவாறு செய்யும். அருளாகிய சத்தி நிபாதத்தில் உண்டாகும் மெய்யுணர்வு, முன்பே பாகம் எய்திய ஆணவ மலத்தை அடியோடு போக்கி, மெய்ப் பொருளைக் காட்டி, வீடு அடைவிக்கும், ஆணவம் நீங்கவே, ஏனை மலங்களுக்கும் தொடர்பு யாதும் இன்றி, அகன்றொழியும். ஆகவே, வீடெய்தினார்க்குத் துன்பம் யாதும் இல்லையாம்.
``திரிமலம்`` என்பது, உள்ளுறைப் பொருளில் மும்மலங்களைக் குறித்தது.
நகுதல் - மகிழ்தல். ``மலர் உண்டு`` என்றாரேனும், ``மலரையும், காயையும் உண்டு`` என்றல் கருத்தென்க.
இதனால், அபக்குவ பக்குவிகளது இயல்பும், அவர் செய்யும் சாதனைகளும், அவற்றின் பயன்களும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 49

அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.

பொழிப்புரை :

வேரும், கிளையும் அமைய வேண்டிய முறையிலே அமைந்த அத்தி மரம் ஒன்று உள்ளது (அத்தி - எலும்பு. அது சிலேடையாய், உள்ளுறையில் உடம்பைக் குறித்தது. உடம்பிற்கு வேர் வித்தியா தத்துவத்தில் உள்ள மாயா தத்துவம். கிளை, பிருதிவி தத்துவம்.)

குறிப்புரை :

முடியும் நுனி - கிளைக்கும் மேல் உள்ள இடம். மூங்கில், சுத்த தத்துவம். முத்தலையாவன அதிகார போக, லய தத்துவங்கள்.
கொடியும், படையும் தாத்துவிகங்கள். கொடி, படர்க்கொடி. படை, இலை தளிர் பூ முதலியவற்றின் கூட்டம். கொள் சார்பு - கொடி கட்கும், படைகட்கும் பற்றாய் உள்ளவை. ``ஐயைந்து`` உம்மைத் தொகைப் பத்து. அவை ஞானேந்திரியம் ஐந்தும், கண்மேந்திரியம் ஐந்தும். இவைகளாலேயே உயிர்க்கு எல்லா அறிவும், செயலும் நிகழும்.
அத்திப்பழம் உணவாகவும், மூங்கில் பலவற்றுக்குக் கருவி யாகவும் நமக்கு உதவுவனபோலத் தோன்றினாலும் இவையெல்லாம் பேருதவிகள் அல்ல. இவற்றின் வேறாய் இனியதொரு சோலை உண்டு; அதனை அடைந்தால், அல்லல்கள் அற்று, அமைதியுடன் வாழலாம். ஆயினும் அந்தச் சோலையை இந்த அத்தி மரத்தின் வழியாகவே அடைய வேண்டியுள்ளது. அதனால் இந்த அத்தி மரத்தையும் புறக்கணித்தற்கு இல்லை.
வலம்புரி - நந்தியாவட்ட மலர். அது நல்லதொரு சோலையைக் குறித்த குறிப்பு மொழி. மடிதல், இங்கு, அல்லலற்று அமைதியுடன் இருத்தல். ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``3 என முதற்கட் கூறியதையும் நினைக.
சோலை, முத்தி நிலை. `அதனை அடைதற்குச் சாதனமாகவே இவ்வுடம்பு அமைந்துள்ளது` என்பதை, ``வலம்புரி வாய்த்தது அவ் ஆறே`` என்றார். ஆறு - வழி. `ஆற்றால்` என உருபு விரிக்க. ஏகாரம், பிரிநிலை.
இதனால், முன்பு, ``உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே`` என வெளிப்படையாகக் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாகக் கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

பன்றியும் பாம்பும்பசு முசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள்
குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒரு குறு நரிக் கூட்டத்திற்குள்ளே, பன்றி, பாம்பு, பசு, குரங்கு இவைகளும் நிறைந்துள்ளன. அவைகளின் இயல்பை முற்றவும், துலாக்கோலில் இட்டு நிறுப்பது போல நுட்பமாக ஆராய்ந்து உணர்ந்தால் அவற்றால் விளையும் துன்பங்களைச் சிறிது சிறிதாகக் குறைக்கும் நிலை உண்டாகும்.

குறிப்புரை :

குறுநரிகள், சகல வருக்கத்து ஆன்மாக்கள். பிரளயாகலர் விஞ்ஞான கலர்கள் பெரு நரிகள். நரி தந்திரம் உடையது ஆதலின் அது அறிவுடைய - சிற்றறிவுடைய ஆன்மாக்கட்கு உவமையாயிற்று.
பன்றி, பாம்பு, பசு இவை முறையே தாமத, இராசத, சாத்துவிக குணங்கள். குரங்கு, மனம், முசு, வானரம், இரு பெயர் ஒட்டு. தராசில் இட்டு நிறுத்தல் தத்துவ ஆராய்ச்சியை நுண்ணிதாகச் செய்தல்.
`குன்றியளவாக` என ஆக்கம் வருவித்து, `குன்றி குன்றியாக` என உரைக்க. குன்றி - குன்றிமணி. நிறை, பன்றி முதலியவற்றின் வலிமை. `குறைக்கின்ற ஆறு உளதாம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
`தெற்றி` என்பது மெலிந்து நின்றது. கிடந்த - கிடந்தன. தெற்றிக் கிடத்தல் - நெருங்கிக் கிடத்தல்.
இதனால், தத்துவ ஆராய்ச்சியே பந்த நீக்கத்திற்கு வழியாதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை :

ஓர் இல்லத்திற்குள்ளே சிறிதளவே அரும்பிய அரும்பு ஒன்று உள்ளது. அது மலராமைக்குக் காரணம் அதனை இறுக்கியுள்ள பொருள்கள். ஆகவே, இறுக்கிய பொருள்கள் நீங்கினால், அந்த அரும்பை மலர் நிலையிலும் வைத்துக் காண முடியும். (ஆனால், அரும்பு இல்லத்திற்குள் இருப்பதால், கதிரவன் ஒளி, காற்று முதலியன புக முடியாமையினால், இறுக்கியுள்ள பொருள்கள் நீங்குமாறில்லை.) உடையவள் அந்த இல்லத்தின்மேல் உள்ள பற்றைவிட்டு, அதனை வெற்ற வெளியாகச் செய்தால், இறுக்கிய பொருள்களும் நிங்கும்; அரும்பும் மலரும். ஆகவே, அந்த நிலையை அந்த இல்லம் வெளியானாலன்றிக் காண இயலாது.

குறிப்புரை :

மொட்டித்தல் - அரும்புதல். மொட்டு - அரும்பு. ஓர் மொட்டு, சாதியொருமை. அஃது பக்குவம் அடையாத உயிர்களைக் குறித்தது. பக்குவம் வாராதபடி தடுப்பது சூழ்நிலை. அஃது இங்கு மும்மலங்களைக் குறித்தது. இல்லம், அறிவர் இனம் இல்லாத, உலகர் இனம், `அவ்வினத்தை விட்டு அறிவர் இனத்தை ஒருவன் அடைந்தால், கட்டு நீங்குதற்குரிய நிலைமை உண்டாகி அறிவு முதிரப் பெற்று வீடு பெறலாம்; இல்லையேல் இயலாது` என்றபடி.
மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. ``அம்மனை`` எனச்சுட்டிக் கூறினமையால், அரும்பு மனைக்குள்ளே இருத்தல் பெறப்பட்டது. அரும்பு, உயிருணர்வு. ``கட்டு விட்டு ஓடின்`` என்ற அனுவாதத்தால் கட்டு விட்டோடுதல் பெறப்பட்டது. `மலர்தல் நிலையில் காணலாம்` என்க. உம்மை சிறப்பு. ஈற்றடி, எதிர்மறை முகத்தலால் வலியுறுத்தியது.

பண் :

பாடல் எண் : 52

நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.

பொழிப்புரை :

வயல்கள் யாவும் மேல் நீர் வந்து பாயவே பயிர்களை யுடையவாகும். ஆயினும் ஒரு வயல், மேல் நீர் வந்து பாயாமல் உள்ளிருந்தே ஊறும் நீரை உடையதாய்ப் பயிரை உடைய தாகும். அந்த வயலை அறிபவர் ஒருவரும் இல்லை. (அதனால் அவர்கள் வானத்தை நோக்கியிருந்து, `பஞ்சம், பஞ்சம்` என்கின் றார்கள்.) மேற் குறித்த வயலில் வானம் எதுவும், எப்பொழுதும் பொழிதல் இல்லை. இனி மழை நீரில் தன்மையை ஆராயுமிடத்து, அது `மேட்டில் ஏறாது` என்பது தெளிவு. (அதனால் பெய்கின்ற மழை நீரும் அந்த வயலில் ஏறிப் பாய்வதில்லை. ஆகவே, `மழையால் விளையும், மழையின்மையால் பஞ்சமும், என்கின்ற நிலை அந்த வயலிடத்தில் இல்லை.)

குறிப்புரை :

அந்த அதிசய வயலாவது சிவம். அதில் விளைவன எல்லாம் அதன் அருளாலே. ஆகவே, அந்த அருள் உள்ளிருந்தே ஊறும் நீராயிற்று.
மற்றை வயல்கள் உயிர்கள். அந்த வயல்களுக்கு ஆணவ மாகிய வானத்தில், மாயையாகிய மேகம் தோன்றி, கன்மமாகிய மழையைப் பொழியவே நன்செய்ப் பயிர்களும், புன்செய்ப் பயிர்களும் உளவாகும். இந்த மழை நீர் மேற்குறித்த அந்த மேட்டு வயலில் ஏறமாட்டாது. ஆகவே, இந்த மழை வளம்படுதலாலோ, வறட்சியடைதலாலோ அந்த வயலுக்கு வருவதொன்றில்லை.
``இந்த அரிய செய்தியை அறிந்து கொண்டு அந்த வயலை அடைந்து வாழ அரியாதவர்களாய், உலகர் அல்லல் உறுகின்றார்கள்` என்பதாம்.
பாய்தல் - இங்கு, மேல் எழுந்து பாய்தல்; ஊறுதல். நிலம் - வயல். ``பச்ை\\\\u2970?``, ஆகுபெயராய்ப் பயிர்களைக் குறித்தது. இங்கு முத்தான்மாக்காளைக் கொள்க.
படர்தல் - உள்ளது சிறத்தல். அஃது ஆவி மேகமாய், மேகம் மழையாதலால். `அங்குப் பொழியாது` என ஒருசொல் வருவிக்க. புனல், அதன் தன்மையைக் குறித்த ஆகுபெயர். இந்நீர்மை - இந்த நீரின் தன்மை. திடரில் நில்லாமையைக் கிளந்து கூறியது. `இந்நீர் அவ்வயிலில் செல்லாது` என்பதைப் பெறுவித்தற்கு.
இதனால், `பாசங்களால் விளையும் பயன்களை விரும்பாது விடுத்து, பதியால் விளையும் பயன்களை விரும்பி, அதனையடைய முயலல் வேண்டும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

பொழிப்புரை :

கூகை, கதிரவன் விளங்கி நிற்கவும் கண் தெரியாது அலமரும் பறவை. அது, சிவம் வில்கி நிற்கவும் அதனை அறிய மாட்டாது அல்லர் உறும் பெத்தான்மாவைக் குறித்தது.
கூகை பகற் குருடாயினும் அதற்கு நல்லதொரு குருந்த மரம் கிடைத்து, அதில் வாழ்கின்றது. அஃதாவது, வேதாகம வழக்கும், ஆன்றோர் ஒழுக்கமும் மிக்க கரும பூமி.
இருப்பினும், அந்தக் கூகை தன் குருடாதல் தன்மையால், அம்மரத்தில் பற்றுவன விடுவனவற்றையும் விலக்குவன கொள்வன ஆகியனவற்றையும் பிரித்தறிய மாட்டாது, தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது அத்தடுமாற்றத்தின் நடுவே தெய்வம் ஒன்று திடீரென அதற்குக் கண்கொடுத்தது. ஆகவே, அந்தத் தெய்வந்தான் அந்தக் கூகைகளை வழிநடத்தும் பாகனும், உற்றுழியுதவும் நண்பனும் ஆகும்.

குறிப்புரை :

`குணத்தால் பயில் மோகத்தை உணர்கின்ற காலத்து` என்க. குணம் - கூகையின் குணம்; குருட்டுத் தன்மை. மோகம் - திரிபுணர்வு. ``உலகுக்கு`` என்னும் நான்கன் உருபு, ``நாணற் கிழங்கு மணற்கீன்ற முளை``8 என்பது போல் ஏழாவதன் மயக்கமாய் வந்தது. நாகம் - விண்ணுலகம். ந + அகம் = நாகம். `பாவம் இல்லாத உலகம்` என்பது இதன் பொருள். அஃது ஆகுபெயராய், அங்கு வாழும் தெய்வத்தைக் குறித்தது. தெய்வம் கண் தந்ததாவது, சத்தி நிபாதம் வந்து ஞானத்தை உணரச் செய்தமை. அப்பால் அந்த சத்தியே (திருவருளே) ஆன்மாவுக்கு எல்லாமாய் உதவும்.
திணை மயக்கம், உருவக உவமைகளில் `வழு` எனக் கடியப் படாது ஆகலின், `நாகம் பாகனும், பண்பனும் ஆம்` என்றது திணை வழுவாகமையறிக.
``நாகமும்`` என்னும் உம்மை சிறப்பு, உரைசெய்தது, (கண் தெரிய) வரம் கொடுத்தது. வெளிப்படை பொருள் இறந்த காலம் ஆகற்பாற்றாயினும் உவமைகளில் சிறந்தது நோக்கி, முக்காலத்திற்கும் பொதுவாகக் கூறினார். ஆகின்ற பண்பன் உறுதுணை யாகின்ற பண்பினை யுடையவன்; நண்பன்.
இதனால், `சத்தி நிபாதத்தாலே அஞ்ஞானம் அகன்று பிரகாசிக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 54

வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒருவன் வாழும் இல்லத்தில் வாழைச் செடியும், முள் மிகுந்த பிரப்பங் கொடியும் வளர்ந்து, அதில் உள்ள இடம் முழுவதையும் கவர்ந்து கொண்டன, இந்நிலையில், அதில் வாழவேண்டிய தலைவன் எவ்வாறு வாழ்வது?
வாழையை அழிப்பதைவிடப் பிரப்பங்கொடியை வேரோடு அறுத்தெறிவது `கடினம்; கடினம்` என்கின்றார்கள். இருப்பினும் வாழை நல்லது போலத் தோன்றினாலும் வாழ இடம் இல்லாமல் செய்வதால் அதையும், பிரப்பங் கொடியையும் ஒருங்கே அறுத்தெறிந்துதான் வாழ வேண்டும்.

குறிப்புரை :

வாழை, இன்பம். சூரை - துன்பம் இவவைகளால் கவர்ந்து கொள்ளப்பட்ட இடம் புத்தி தத்துவம்.
ஈற்றடியில் உள்ள ``வாழை`` என்பதை, `வாழ்+ஐ` எனப்பிரித்து, `வாழ வேண்டிய தலைவன்` என உரைக்க.
தலைவன், ஆன்மா. வாழ்தல், பசுகரணத்தைச் சிவகரணம் ஆக்கிச் சிவானந்தம் எய்துதல். `வாழ்கின்றவாறு, வன்துண்டம் செய்திட்டு` என மாறிக்கூட்டி முடிக்க. இரண்டையும் துண்டம் செய்தலாவது, அவற்றில் அழுந்தாது விடுதல்.
அடுக்கு, வலியுறுத்தற் பொருட்டு, `இன்பத்தில் அழுந்தாமல் இருத்தல் கூடும்; துன்பத்தில் அழுந்தாமல் இருப்பது அரிது` என்பதை, ``வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர்`` என்றார்.
இதனால், ``ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்`` இருவினையொப்பு வந்தாலன்றிச் சிவானந்த வாழ்வு வாழ இயலாது` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

பொழிப்புரை :

குறிஞ்சி நிலத்தவனாகிய குறவன் ஒருவன் அவ் விடத்துத் தன்தொழிலை விடுத்து, அதே நிலத்தை அடைந்து நிலத்தை உழுதான். பின்பு அத்தொழிலையும் முற்ற முடியாமல் இடையே உள்ள கொழுத்த மீனைப் பிடித்துக் கொணர்ந்தான். (`இவன் இந்தத் தொழிலையேதான் தொடர்ந்து செய்து நிலைபெறுவான்` என்பது என்ன நிச்சயம்!) ஆகவே, இவனைப்போல நிலையின்றி வாழ்தலைத் தவிருங்கள். தவிராது வேண்டின் நிற்பின், என்றும் நிலைத்து ஊதியத்தைத் தரக்கூடிய முதலைப் பெறுதலும் இன்றி, கொல்வது போலும் நிச்சல் நிரப்பு``3 (வறுமை) வந்து பற்றிக் கொள்ளுதலும் கூடும்.

குறிப்புரை :

`எந்தத் தொழிலையும் நிலையாகச் செய்யாது, தாவித் தாவிச் செல்பவன் நிலைபேறு எய்தான்` என்பதை நினைவூட்டி, `அது போல எந்த ஒரு சமயத்திலும் (மதத்திலும்) நிலைத்து நில்லாதவன் எந்தப் பயனையும் அடையமாட்டான்`, என்பதை உள்ளுறையாக உணர்த்தினார். `நிலையாகச் செய்தல்` என்பது, அந்தச் சமயத்தின் வழி நிற்றலை.
`உயிர் இயல்பாகவே ஐம்பு வேடருட்பட்டது` என்பதனால் அதனை, `குறவன்` என்றார். குறவர் பண்பாடில்லாத வாழ்க்கையர் ஆதலின் அவர் இதனால் அவைதிக மதங்களைக் குறித்தது அவற்றில் உள்ள நவநிலையாகவும் பற்றாது விடுத்தலே, `அம்மதங்களை விடுத்தல்` எந்த நிலையாக ஓட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
மருத நிலத்தவர் பண்பாடுடைய வாழ்க்கையர் ஆதலின் அவர் இனம் வைதிக சமயங்களைக் குறித்தது.
நெய்தல் நில மக்கள் கொலை, களவு செய்யாது வாழ்தலால் குறவரினும் மேம்பட்டவராயினும், இழிதொழில் செய்பவர் ஆதலின் அவர் இனம் வாம மார்க்கங்களைக் குறித்தது. வாம மார்க்கத்தவர் கடவுட் கொள்கையினராதல் நினைவு கூரத்தக்கது.
`மீன்பிடி தொழிலின் இழிவினை உணர்ந்த காலத்தில் அதனையும் விட வேண்டி வரும்` என்பது குறிப்பு. தம்முள் வேறுபாடுடைய குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நிலங்கள், உயிர் வருக்கத்தவரால் தோற்றுவிக்கப்பட்டுத் தம்முள் மாறுபாடும் சமயங்கள் ஆகவே, இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு, `இது ஆகும்; அது அல்லது எனும் பிணக்கில்லாது``9 அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்ட சித்தாந்த சைவம், ``தெண்கடல் வளாகம் பொதுமையின்றி - வெண் குடை நிழற்றும் ஒருமையரசன்,8 வாழ்வு போன்ற, என்றும் மாறாது நின்று நிலவும் வாழ்வாம்`` என்றதாயிற்று. ``புனத்துக் குறவன்`` என்பதை முதலில் வருவிக்க. ``மீன் விலக்குமின்`` என்றாராயினும், `அதுபோன்ற செயலையும்` கருத்தையும் நீக்குதல் என்றலே கருத்து.
`வேண்டின், யாவர்க்கும் அருத்தமும் இன்றி, அடுவதும் ஆம்` எனக் கூட்டி யுரைக்க. அருத்தம் - முதல். அது திருவருள். வறுமை - வினை. இதனுள் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.
இதனால், `சித்தாந்த சைவமே ``பேரா இயற்கை``3 யாகிய வீடுபேற்றினைத் தரும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

தட்டான் - எதிலும் அகப்படாதவன். ஆறு அத்துவாக்களையும் துருவித் துருவி ஆராய்ந்தாலும் அறியப்படாதது ஆன்மா. அதன் அகம், தூல உடம்பு. அதில் வளர்கின்ற பிள்ளை மூச்சுக்காற்று. தளிர்த்தல் - வளர்தல். விளித்தல் - அழைத்தல். சங்கு குறிக்கப்பட்டால் குழந்தைகள் அதனை நோக்கி ஓடுதல் இயல்பு. சங்கு, இங்கு `ஹம்ஸம்` என்னும் அசபா மந்திரம். அதுவே மூச்சினை விட்டும், வாங்கியும் இயக்குதலால், அதனை அக்குழந்தையை அழைக்கும் சங்காகக் கூறினார். அம்மந்திரத்தின் பயனை ஆராய்ந்து உணர் பவர்கட்கு அஃது, அரசனைச் சார்ந்த குயவர் முதலிய சிறு தொழிலா ளர்க்கும், காவிதிகள் முதலிய பெருமையுடைய தொழிலாளர்க்கும் அரசன் இடும் கட்டளையாக முடியும். அக்கட்டளைகளாவன `போ, வா` என்பன. சிறுதொழிலாளர்களை அரசன் அகன்று செல்லும்படியும், பெருந்தொழிலாளர்களை அணுகி வரும்படியும் கூறுவான். `போ` என்பது இரேசித்தலையும், `வா` என்பது பூரித்தலையும் குறித்தன. காவிதிகள், வரி தண்டுவோர். பதம் - சொல். `தனித்தனி ஒன்றாம்` என்க. `அச்சங்கு` எனத்தோன்றா எழுவாய் வருவித்து, `பதத்து ஒன்றாம்` என முடிக்க. ``குசவர`` என்றது உபலக்கணம்.

குறிப்புரை :

இதனால், `யோகத்தை அசபா மந்திரத்தை உணர்ந்து செய்யும் பிரணவ யோகமாகச் செய்தல் வேண்டும்` என்பது, உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை :

தலைவன் ஒருவனது இல்லத்தில் கொட்டிலில் இருந்த எருமை அதைவிட்டுப் புறப்பட்டு மேயப் போந்தது. ஆயினும் உயிர்களைத் துன்புறுத்தும் படைகள் எதிரே வருதலைக் கண்டு அந்த எருமை பாதி வழியிலே திரும்பிவிட்டது. அதையறிந்து அந்தத் தலைவ -னுடைய அமைச்சன் அந்தப் படைகளை விலக்க, அந்த இல்லத்திற்கு உள்ள ஒன்பது வாயில்களுள் ஒன்றையும் ஒருவரும் அடைக்கவில்லை.

குறிப்புரை :

`அதனால் அந்த எருமை தன் விருப்பம் போலச் சென்று மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
கோ - தலைவன்; உயிர், அதனது இல்லம், தூல உடம்பு. எருமை, பிராண வாயு. இதுவே உயிர்க்கு வலு ஊட்டுவதாய்க் கட்டுப்படுத்தி நடத்தினால் பெரும் பயனைத் தருவதாய் இருத்தல் பற்றி இதனை, வலியையும், மிகுந்த பாலைப் பொழிதலையும் உடைய எருமையாக உருவகித்தார்.
குடை, குடைபோல் அமைந்த கொட்டில். அது மூலாதாரம். மூச்சு அதனினின்றும் போதல் வெளியேபோய் வலுப்பெற்று மீறாதற்கு. படைகள் பிராரத்தத்தால் வரும் நோய்கள். இந்நோய்கள் உடம்பின் வாயில்கள் ஒன்பதையும் அடைத்து, அகால மரணத்தை உண்டு பண்ணும். இவைகளால் மூச்சும் தடைப்படும். ஆகவே, ``படை கண்டு மீண்டது பாதி வழியில்`` என்றார்.
உயிர்க்கு அமைச்சன் சித்தம். அஃது அனைத்தையும் சிந்தித்து, உயிர்ப்பாகிய எருமையைத் தன் விருப்பப்படி நடத்திச் செல்ல, அந்த எருமையைத் தடுத்து நிறுத்தற்கு, உடம்பாகிய இல்லத்தின் வாயிலை அடைக்க ஒருவரும் முன்வரவில்லை. எனவே, எருமை தொடர்ந்து நன்கு மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது. அஃதாவது உடம்பை எந்த நோய் முதலியனவும் அழிக்க எழவில்லை. அதனால், `வாழ்நாள் எல்லையின்றி நீட்டிக்கின்றது` என்பதாம்.
``ஊரார்`` என்றதும், படைகளையே. உள்ள, அதன் காரியமாகிய நெறிப்படுத்தி நடத்துதலைக் குறித்தது. நெடுங்கடை - பெரிய வாயில். ஐந்தொடு நான்கு - ஒன்பது.
இதனால், `வாசியோகம் புரியின், உடல், நரை, திரை மூப்புப் பிணிகள் இன்றி வலிதாக, வாழ்நாள் நீட்டிக்கும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.

பொழிப்புரை :

வீரன் ஒருவன் ஓர் யானையையும், பன்னிரண்டு குதிரைகளையும் முறையாக வெளியே ஓட்டி நடத்தி, உள்ளே கொணர்ந்து கட்டிப் பணிபுரிதற்கு ஏற்புடைத்தாக அரசன் வெளிச் செல்லும் பொருள் எட்டும், உள்ள வந்து சேரும் பொருள் பதினெட்டுமாக, ஒன்பது வாயில்களையுடைய ஒரு கூடத்தைக் கட்டிக் கொடுத்தான். வீரன் அதில் முறையாக அந்த யானையையும், குதிரை -யையும் வைத்து நடத்தாவிடில், அவை பன்றிபோல யாவராலும் இகழப் படுவனவாய், அந்தக் கூடத்தையும அருவருக்கத் தக்கதாகிவிடும்.

குறிப்புரை :

நாகம் - யானை. இது மனத்தைக் குறித்தது. ``தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி``8 என்பது போல, ஐம்பொறிகளையே யானை யாகக் கூறுதல் பெருவழக்காயினும், உண்மையில் யானைபோல அடங்காது புலன்களின்மேல் செல்வது மனமே. `மனத்தொடு கூடாத வழி, இந்திரியங்கள் விடயங்களைக் கவரமாட்டா` என்பது தருக்க மதம். இஃதே பற்றி, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``l என்னும் குறள் உரையில், `ஐந்து அவா` எனப் பொருள் உரைத்த பரிமேலழகர், `அவா ஒன்றுதானே; ஐந்து எப்படியாகும்` என்னும் தடையைக் கருத்துட் கொண்டு, ``புலன்கள் ஐந்தாகலான் அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று`` என உரைத்தார். எனவே, ``ஐந்து`` என்றல் சார்பு பற்றியேயாகலான், `ஒன்று` என்பதே உண்மையாம். ஆகவே, ``அஞ்சு களிறு`` என்றல் சார்பு பற்றியேயாக, களிறு ஒன்றேயாதல் அறியப்படும். அடங்காது புலன்கள்மேற் செல்வது` மனமேயாகலான்` அதனை `யானை` என்றற்குத் தடையின்மை யறிக.
குதிரை பன்னிரண்டாவன, வெளிச்செல்லும் பன்னிரண் -டங்குல மூச்சு. பாகன் - நடாத்தும் வீரன். அவன் ஆன்மா விடுதல் - அடக்கிச் செலுத்துதல்.
ஒன்பது வாயிலையுடைய கூடம் தூல உடம்பு. அதில் வெளிச்செல்லும் பொருள்கள், `வெயர்வை, கோழை, பீளை, சளி, குறும்பி, மலம், சிறுநீர், சுக்கிலம்` என்பன.
உள்வந்து சேரும் பொருள் பதினெட்டாவன, ஞானேந்திரிய விடயங்கள் ஐந்தும், கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தும், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றம் மூன்றும், ஆதியான்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் ஆகிய துன்பம் மூன்றும், இவற்றால் ஏறும் நன்றும் தீதுமாய வினையிரண்டுமாம். முக்குற்றங்கள் அகத்து நிகழ்வன வாயினும் புறப்பொருள் ஏதுவாக அன்றி நிகழாமையறிக. வாயில்களையே கூறினாராயினும் அத்துணை வாயில்களையுடைய கூடத்தைக் குறித்தலே கருத்து.
முதற்கண் கூடத்தையே சிந்தெடுத்துக் கூறினமையால், ``பன்றியுமாம்`` என்றதன்பின், கூடம் பாழ்படுதலையுணர்த்துதல் கருத்தாயிற்று. ``பன்றியும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
இதனால், `வாசி யோகம் செய்து, மனத்தை அடக்காவிடில் எடுத்த பிறப்பு வாளா மாயும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

பாசி படர்ந்த குளம், மலத்தால் மறைக்கப்பட்ட ஆன்ம அறிவு. குளத்தில் இரைதேர்ந்து வாழும் குருகு, (பறவை) அவ்வறிவால் பயன்பெற்று வரும் ஆன்மா. பாசி படர்ந்து கிடத்தலால் குருகு தனக்குரிய இரையை எளிதில் காண இயலவில்லை. வருந்தி வருந்திச் சிறிது காண்கின்றது. அஃதாவது ஆன்மாத் தனக்குரிய சிவத்தை எப்பொழுதாவது, எவையோ சிலமுறையில் அறிகின்றது. கூசியிருத்தல் - உயிரற்றது போல ஒடுங்கியிருத்தல்.

குறிப்புரை :

தூசி மறவன் - படைகளில் முன்னணியிற் செல்லும் வீரன். அவன் குரு மூர்த்தியை அதிட்டித்து நிற்கும் சிவன். படை வீரன் தன் போக்கிலே போய்க்கொண்டிருக்கும் பொழுது குளத்தை அடுத்துச் செல்லும் வழியை அடைவானாயின், நீர் பருக வேண்டிக் குளத்தை அடைவான்; அவனால் பாசிகள் அப்புறப்படுத்தப்படும். அப்பொழுது குருகு, தனக்கு வேண்டிய இரையை வேண்டிய மட்டும் உண்டு மகிழும். `அதுபோலக் குருமூர்த்தி தம் இயல்பில் இருப்பினும், ஒருவனது சத்திநிபாத நிலையைக் காணின், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்``9 என்னும் வேட்கையால் அவனை ஏற்று அவனது பாசத்தைப் போக்குவார். அப்பொழுது அவன் `சிவத்தை நன்குணர்ந்து, சிவானந்தத்தில் மூழ்கித் திளைப்பான்` என்பதாம்.
ஆறு - முறைமை; நிலைமை. `மறவன் எய்திடப் பாசி பதைக்கின்ற நிலைமை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. துணை வழி, அருகில் சார்ந்து செல்லும் வழி.
இதனால், குருவருள் கிடைத்த வழியே பாச நீக்கமும், சிவப்பேறும் உளவாம்` என்பது உள்ளுறையாக உணர்தத்ப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள்
வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

பொழிப்புரை :

கும்பம் - குடம். இதனைக் கவிழ்த்து வைத்த குடமாகக் கொள்க. கவிழ்த்து வைத்த குடம் கீழே குறுகியும், மேலே விரிந்தும் இருக்கும். அதுபோலப் பிருதிவியிலிருந்து பிரகிருதி முடியப் போகப் போக விரிந்துள்ளன ஆன்ம தத்துவங்கள். ஆகவே அவற்றின் தொகுதியை, ``கும்பமலை`` என்றார். கும்பமலை - கும்பம் போன்ற மலை.

குறிப்புரை :

``கொம்பு`` என்றது தறி. மலையின் உச்சியில் தறி ஒன்று மலையுள்ளே அடிவரையில் ஊடுருவ அடிக்கப்பட்டு, மேலேயும் உயர்ந்து நிற்பதாகக் கொள்ளவேண்டும். ஏனெனில், இவையெல்லாம் அதிசயப்பொருள்களாகவே கூறப்படுதலின், இத்தறி, இத்தறி ஆன்ம தத்துவத்தை வியாபித்து, அவற்றிற்கு மேலேயுள்ள, அராகம் முதல், மாயை முடிய உள்ள வித்தியா தத்துவங்களின், தொகுதி. இவை ஆன்ம தத்துவங்களை நிலைபெறுத்தித் தாமும் நிலைபெற்றிருத்தலால் இவ்வாறு கூறப்பட்டன.
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்று சுத்த தத்துவங்கள். அவை சூக்குமமாயும், காற்றுப்போல வீசிப்பிற தத்துவங்களைத் தூய்மை செய்து, முற்றிலும் வியாபித்திருத்தலாலும் இவ்வாறு உருவகிக்கப்பட்டது.
வம்பு - புதுமை. புதுமையாய் மலர்ந்ததோர் பூ, தத்துவ ஆராய்ச்சியால் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம். தத்துவ சுத்தி இவைகளைச் செய்து இவற்றின் நீங்கி, அவற்றின் மேலாய் விளங்குகின்ற சுத்தான்மா.
இது வரையில் உருவக முறையால் தாம் கருதிய பொருளை உள்ளுறைப் பொருளாக உணர்த்திய நாயனார், `ஆன்மாக்களின் இரு தய கமலத்தில் விளங்குபவன் சிவன்` என்னும் முறைமை பற்றி, அவன் தயிரில் நெய்போல இனிது விளங்குவது சுத்தான்ம சைதன்னியத்தில் தான்` என்பதை, `சிவன் இந்தப் புதுமலரில்தான் வண்டாக் கிடந்து மணங்கொள்வன்`` எனச் சிறிது வெளிப்படை யாகவே கூறிவிட்டார்.
`மலர் ஆன்மா` எனவே, மணம், அதன் போதம் ஆயிற்று. ஆகவே, `இந்தப் புதுமலரில் ஈசன் வண்டாய்க் கிடந்து மணங் கொள்ளுதல்` என்பது, சீவபோதத்தைத்தான் உண்டு, சிவபோதம் வாயிலாகச் சிவானந்தத்தை வழங்குதல் ஆயிற்று. இதன் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், `தத்துவங்களின் நீங்கித் தூய்தாய் நின்ற சுத்தான்ம சைதன்னியத்தில் தான் சிவன் விளங்கி நிற்பான்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

பொழிப்புரை :

வீணை, நாதத்தைத் தரும் நரம்புகள். அது கன்ம மலத்தைக் குறித்தது. தண்டு, நரம்புகள் கட்டப்பட்டுள்ள கோல். அது மாயா மலத்தைக் குறித்தது. கோல் பற்றுக்கோடாக நின்று நரம்புகள் நாதத்தைத் தருதல் போல, மாயை பற்றுக்கோடாக நின்று நரம்புகள் கன்மம் விளைவுகள் பலவற்றையும் தருவதாதலை அறிக. இசை முரல் தாணு, வீணை வல்லான். அவன் மாயை கன்மங்களைக் கூட்டிச் செயற் படுத்துகின்ற சிவன். வீணை வல்லான் தன் இசை வன்மையைக் கொடுத்து, அரங்கில் உள்ளவர்களது உள்ளங்களைக் கவர்கின்றான். இஃது அவன் செய்யும் ஒரு வாணிபம் ஆகும். இங்கு அவ்வாணிபம், மாயை கன்மங்களைச் செயற்படுத்தும் முறையால், முன்பு தன்னை நோக்காது பிறவற்றை நோக்கியிருந்த உயிர்களைத் தன்னை நோக்கும் படியாகச் செய்தலைக் குறித்தது. சிக்கென்றது - பயனளித்துவிட்டது. அதனையே முன்பு ``தருதலைப்பெய்தது`` என்றார். தகு - தகுதி; உயிர்களின் பக்குவம்; முதனிலைத் தொழிற்பெயர். அடைத்தல், கடையை அடைத்தல்; அஃதாவது, `வாணிபத்தை விட்டுவிடுதல். அது சிவன் தனது ஐந்தொழிலை நிறுத்திவிடுதல். முத்தி பெற்ற உயிர் களிடத்தில் அவன் ஐந்தொழில் நடாத்துதல் இல்லை. எனவே, கடையை அடைப்பதற்கு முன் வாணிபம் தேவைப்படாத, நிலையான காணி யுரிமை வாய்த்துவிட்டது. அஃதாவது, `முத்தி நிலை வாய்த்துவிட்டது` என்பதாம்.

குறிப்புரை :

கலக்கின்றவாறு வியப்பு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. மேனி - மேவியதனால்.
இதனால், `இறைவன் மாயை கன்மங்களைக் கூட்டி ஐந்தொழில் செய்தலாலே உயிர்கள் பக்குவம் எய்திய வீடு பெறுகின்றன` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது. ஆகவே, `இறைவன் ஐந்தொழில் செய்தல் உயிர்களை உய்வித்தற் பொருட்டே` என்பதை உணர்த்தியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 62

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து)
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

பொழிப்புரை :

பரத கண்டத்திற்கு வெளியே உள்ள யவனர் பரத கண்டத்தில் வந்து இறங்குவது கொங்கு நாட்டிலே. அஃதாவது சேரநாட்டிலே. அவர்களோடு பரத கண்டத்தவர் வாணிபம் செய்து நல்ல அருங்கலம் முதலியவைகளைப் பெறுதலைப் பரத கண்டத்தில் உள்ளவர்கள் அந்தக் கொங்கு நாட்டில் சென்று பார்த்தால் தான் அறிந்துகொள்ள முடியும். அங்குச் செல்லாமல் தொண்டைநாடு. சோழ நாடு, பாண்டி நாடு இவைகளில் இருந்து கொண்டே அறிய முடியாது.
சந்திரன் உதயமானால் இருளைப் பார்க்கமுடியாது. (அது போலக் கொங்கு நாட்டை அடைந்தால் மேற்குறித்த அறியாமை நீங்கிவிடும்.) ஆயினும் நல்லூழ் உள்ள ஒரு சிலரே கொங்கு நாட்டையடைந்து வாணிபத்தில் நற்பயன் எய்தி வாழ்கின்றார்கள். (ஏனையோர்க்கு அஃது இயலவில்லை.)

குறிப்புரை :

பரத கண்டத்தின் நடுவில் வடக்குத் தெற்கு நீளத்தில் போதிய இடைவெளி விட்டு இமயம் முதல் குமரி வரை பிரித்தால், பரத கண்டம் கீழைக்கரை, நடுப்பகுதி, மேலைக்கரை` என மூன்று பிரி வினதாய் நிற்கும். அவற்றுள் மேலைக் கரைப்பகுதியையே ``கொங்கு நாடு`` எனறார். கீழைக்கரை முதலிய மூன்று பகுதிகளும், உடம்பில் யோக முறையில் கீழ் நின்றும் மேல் நோக்கிச் சொல்லப்படுகின்ற, அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம்` என்பவற்றைக் குறித்தன.
இவற்றுள் அக்கினி மண்டலம் கீழாலவத்தைக்கும், சூரிய மண்டலம் மத்தியாலவத்தைக்கும், சந்திர மண்டலம் யோகாவத்தை யாகிய மேலாலவத்தைக்கும் இடமாகக் குறிக்கப்பட்டன. கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் துவாத சாந்தத்தில் உள்ள சிவம் தோன்றா -மையால், கீழைக் கரைப் பகுதியும், நடுப்பகுதியும் மேலை நாட்டவர் தொடர்பு கொள்ளாத இடமாகவும், யோகாவத்தையில் சிவம் புலனாதல் பற்றி மேலைக்கரையை மேலே நாட்டவர் வந்து புகும் இடமாகவும் கூறினார். எனவே, பரத கண்டத்தவர் மேலை நாட்டவரோடு வாணிபம் செய்தலாவது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளில் உழல்கின்ற உயிர், யோகாவத்தையாகிய மேலாலவத்தையை எய்தி, ``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்``9 என்றபடி சிவனுடன் கொண்டும், கொடுத்தும் ஊடாடுதலையேயாயிற்று.
மேலாலவத்தையை எய்தினோர்க்கு அஞ்ஞான இருள் நீங்குதலையே மூன்றாம் அடி குறித்தது.
``தாபதர்`` என்றது, வெளிப்படைப் பொருளில் பசு புண்ணியம் செய்தாரையும், உள்ளுறைப் பொருளில் சிவ புண்ணியம் செய்தாரையும் குறித்து நின்றது. இச்சிவபுண்ணியம் `சரியை கிரியைகள்` என்க.
கொங்கு புக்கார், மேலை நாட்டவர். தங்கு - அவர் வந்து தங்குமிடம்; கொங்கு நாடு. தங்கு, தொழிலாகு பெயராய், தங்கும் இடத்தைக் குறித்தது. `அங்குப் புக்கால்` என்னும் பகர ஒற்று செய்யுள் நோக்கித் தொகுத்தலாயிற்று. பிற ஏழாவதன் தொகையில் ஒற்று மிகாமை இலேசினாற் கொள்க. இனி ஒற்று மிகுத்தே பாடம் ஓதினும் ஆம். அப்பொழுது, `திங்கட் புக்கால்` என, ஒற்றுத் திரிந்து நிற்கும்.
இதனால், `யோக நிலையை எய்தினோர் சிவத்தைத் தலைப்படுவார்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.

பொழிப்புரை :

பொழுது விடிந்துவிட்டது. அதனால், மலர்களை யுடைய புன்னைமரம் விளங்குகின்ற, கடலின் இக்கரை, அக்கரையாகிய இருகரைகளும் பொன்னிறம் பெற்று விளங்குவன வாயின் ஆகவே, அந்தக் கரைகள் சிவனும், சத்தியும் எழுந்தருளி யிருக்கும் இடமாகவும் ஆகிவிட்டன.

குறிப்புரை :

பொழுது விடிதலாவது, ஆணவ மலம் நீங்குதல். ``தாதவிழ் புன்னை`` என்னும் அஃறிணை யியற்பெயர். இங்குப் பன்மையில் வந்து, பல உயிர்களைக் குறித்தது. புன்னை அரும்பு ஆன்ம பூதம். அவ்வரும்பு மகரந்தத்தோடு மலர்தலாவது, திருவருள் உணர் உடையதாய் விரிவடைதல் பொழுது புலர்ந்தால் புன்னை மகரந்தத்தோடு மலர்தல் போல, ஆணவம் நீங்கியதால் ஆன்மாக் களின் அறிவு சிவகணமாகிய திருவருள் உணர்வைப் பெற்று விரி வடைந்தது. இரு கரை, பெத்த முத்திகள். முத்தியில் ஆன்ம உணர்வு சிவணம் பெற்றுத் திகழ்தல் நன்கறியப்பட்டது. பெத்த நிலையிலும் அவ்வுணர்வு அன்ன தாதல் சீவன் முத்தி நிலையிலாம் ஆகவே, ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. ஆணவ மலம் நீங்கினால், ஆன்மா இவ்வுடம்போ -டிருக்கும் பொழுதே முத்தியை அடைந்து நிற்கும்` என்பது உணர்த்திய வாறு. ``பொன்னிறங் கொண்டது`` என்பது அழகு பெற்று விளங் -குதலைக் குறித்தது. புன்னை மலரின் மகரந்தம் பொன்னிறம் உடையது. தயங்குதல் - விளங்குதல்.
பிறவி `கடல்` என்றும், முத்தி `அக்கரை` என்றும் சொல்லப் படுதலால், பெத்தத்தை `இக்கரை` என்றார். `இருகரையும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. பன்மையொருமை மயக்கம். ``போதும்`` என்னும் உம்மைச் சிறப்பு.
`மாதர், சத்தி, சிவமும், சத்தியும் இருக்கும் இடம்` என ஒருங்கு கூறற்பாலதனை வலியுறுத்தற் பொருட்டுத் தனித்தனியே கூறினார்.
இதனால், ``ஆணவ இருள் நீங்கினால், `அம்மை` என்பதின்றி இம்மையே முத்தியாம்`` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

பொழிப்புரை :

செங்கோல் அரசன் உண்மையாகவே மிகவும் அன்பு செலுத்தினாலும் அவனது தன்மையை அறியாத குடிகள் வெளிப்படையாக இன்றி, மறைவாகத் தங்களுக்குள்ளே வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் அவ்வரசனைப் பற்றிப் பல தூற்றுதல் மொழிகளைக் கூறிக்கொள்வார். ஆயினும் கால வரையறையின்றிக் குடிகளுக்கு அவை வாழ வழிவகுத்து வரும் அரசன் தன் கடமையி னின்று தவறுவானேயானால், நாம் உணவு முதலியவற்றைப் பெற்று வாழ இயலுமோ! (இயலாது.)

குறிப்புரை :

அமர்தல் - விரும்புதல். உம்மை, சிறப்பு. குடிகளை உண்மையாகவே மிகவும் விரும்பும் செங்கோல் அரசன், ஆன்மாக் களின்மேல் உண்மையான அறக்கருணையை உடைய சிவன். அவன் அத்தகைய கருணையாளனாய் உயிர்கட்கு, `பெத்தம், முத்தி` இரு நிலைகளிலும் உபகரித்துவரினும், அறிவற்ற உயிர்கள், `சிவன் இல்லை` என்றும், `இருப்பினும் அவனுக்குக் கண் இல்லை` என்றும் இன்னோரன்னவாகத் தம் வாய்க்கு வந்ததைத் தங்களுக்குள் கூறிக் கொள்வர். அதனையே, ``கடைதொறும், காமுற்ற கத்தியிடுவர்`` என்றார். கடை - இடம்; வாய்ப்பு. காமுற்ற - விரும்பிய சொற்கள். வீதல் - முடிதல் எல்லை, கால எல்லை. அரசன் ஒருவனேயன்றிப் பலர் வரினும் அரசு நீடு செல்வதேயாகலின் அதனைச் சிவன் செயலுக்கு உவமையாகக் கூறினார். ``வழிகாட்டி`` என்பது பெயர். `யாம் உற்றவற்றைத் தட்டினால்` என்க. தட்டுதல் - தவறுதல். ஐந்து, ஐம்புல நுகர்ச்சி.
அரசு கால வரையறையின்றிக் குடிகளை ஓம்பன், சிவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு உபகரித்தலைக் குறித்தது. பலவற்றைச் சொல்லுமிடத்துப் படர்க்கையில் வைத்துக் கூறிய பொருள் நமக்கும் பொருந்தவதாயின், அதனைப் பின்பு ஓரிடத்தில் நம்மேல் வைத்துக் கூறுதலும் பொருந்துவதே. அதனை, `நீர் இன்றி யமையாது உலகம் என்றால், மழையின்றி நாம் எங்ஙனம் அமைவேம்` என்பதுபோலக் கூறிக் காண்க. இம்முறையில், ``தம்மிலே கத்தி யிடுவர்`` எனக் கூறிப் பின்பு, ``உற்ற தட்டினால் யாம் உண்ணலாமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை குறித்த வினா, `ஐம்புல நுகர்ச்சி` என்பது வெளிப்படைப் பொருளில் உடல் ஓம்புதலையும். உள்ளுறைப் பொருளில் வினை நுகர்ச்சியையும் குறித்து நின்றது. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
`பெத்த நிலையிலும் சிவன் உடனாய் நின்று உபகரியாகிவிடின், உயிர்கள் வினையை ஈட்டுதல் நுகர்தல்களைச் செய்தல் இயலாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 65

தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொழிப்புரை :

தோட்டம் - வேதம், ஆகமம், திருமுறை ஆகிய முதல் நூல்களின் தொகுதி. அதில் பழுத்த மாம்பழம், திருவைந்தெழுத்து. ``வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே``3 என்னும் அருட்டிரு மொழியைக் காண்க.
தொண்டி விடுதல் - பழுத்து விழுதல். பழமையைக் குறிக்கும் `தொண்டு` என்னும் பெயரடியாகப் பிறந்த வினை. பழுத்த முதியோனை. `தொண்டு கிழவன்` என்பர். ``தொந்தி சரிய, மயிரே வெளிற, நிரை தந்தம் அலைய`` எனத் தொடங்கும் திருப்புகழைக் காண்க. திருவைந்தெழுத்துப் பழுத்து விழுதலாவது, சமயாசாரியர்கள் போன்ற பெயியோர்கள் கருணை மீதூர்ந்து அதனை உலகறிய எடுத்தக் கூறி வலியுறுத்துதல். நாயனார் காலத்திலும் அத்தகைய பெரியோர்கள் இருந்திருக்கலாம்.
``நமச்சி வாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க``9
என்றும்,
``தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான், ஆதிரையான், ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான்` செம்பொற் கழல்``l
என்றும்,
``வாயிலே வைக்கு மளவின் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயஏ
கம்பெருமான், தேவியொடு மன்னு கயிலாயத்(து)
எம்பெருமான் ஓரஞ் செழுத்து``
``அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைக ளாவனவும்,
அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும், - நஞ்சவித்த
காளத் தியில்யார்க்கும் கண்டற் கரிதாய்போய்,
நீளத்தே நின்ற நெறி``3
என்றும் அருளிச்செய்த ஆளுடைய அடிகள், காரைக்காலம்மையார், நக்கீர தேவ நாயனார் முதலிய பெரியோர்களை இங்கு நினைவு கூர்தல் நன்று.
நரி - நரிக்கூட்டம் அதனை, ``நாட்டின் புறத்தன`` என்றமையால், ஒரு கூட்டம் வேதத்திற்குப் புறம்பான. மற்றொரு கூட்டம் வேதத்திற்குள் இருப்பினும் சிவாகமத்திற்குப் புறம்பானது. `இவை எவை` என்பதை அறிந்துகொள்க. இந்த நரிக்கூட்டங்கட்கும், மேற்குறித்த மாம்பழத்திற்கும் என்ன தொடர்பு உண்டாகும். யாதும் தொடர்பு உண்டாகாது. அதனையே, ``நாட்டின் புறத்த நரிஅழைத் தென்செயும்`` என்றார். அழைத்தல் - கூப்பிடுதல்.
இனி, அகப்புறச் சமய நூல்களிலும், அகச்சமய உரைகளிலும் திருவைந்தெழுத்தின் சிறப்புக் குறிக்கப்பட்ட தாயினும், அவர் அதனைத் தெளியமாட்டாது புறக்கணித்துவிடுவர். அத்தனையே, ``காட்டிக் கொடுத்தவர் கைவிட்டவாறு`` என்றார். கொடுக்கப்பட்டவர் கொடுத்தவர் அந்நூல்களின் ஆசிரியர்களும், உரையில் ஆசிரியர்களும். `மாம்பழத்தைக் கனவிலும் கருதாது கூப்பிட்டுக் கொண்டிருக்கின்ற நரிக் கூட்டங்கள் போக, ஒரு சில மக்கட் கூட்டமும் அப்பழத்தைக் காட்டுவார் காட்டிக் கொடுக்கவும் எடுத்து உண்டு பயன்பெற்றில என்பதாம்.
மூட்டிக் கொடுத்த முதல்வன், தோட்டத்தை உண்டாக்கி வளர்த்த தலைவன். அவன் சிவன். தோட்டத்தையுடையான் கருணை காரணமாக, பசித்தவர்க்கு இதன் பழத்தைக் கொடுக்க` என்று தன் ஏவலாளர்க்குச் சொல்லியுள்ளான். அஃதே அவன் ஆணை. எனவே, `பிறவிப் பிணியால் துன்புறுவார்க்குத் திருவைந்தெழுத்தின் சிறப்பினை உணர்ந்தோர் உணர்த்துக` என்பதே சிவனது சங்கற்பம் என்பதும், அவ்வாற்றால் உணர்ந்தோர் உணர்த்தினும் மக்கள் அவரவர் பக்குவ பேதங்கட்கு ஏற்ப அதனைச் செவிமடாதோரும், செவிமடுப்பினும் பேணாதோரும், பேணினும் உட்கிடைப் பொருளை முற்ற உணர்ந்து முழுப் பயனைப் பெறாதோருமாய் உளர்` என்பதும் கூறியவாறு.

குறிப்புரை :

`முதல்வன்`, என்பது ஆகுபெயராய் அவனது ஆணையைக் குறித்தது. `கொடுத்தவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `கைவிட்டவாறு இரங்கத் தக்கது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால் சமயிகள் பலரும் திருவைந்தெழுத்திகள் உண்மை அடியோடே அல்லது முற்றவோ உணராதவர்களாய்ப் பிறப்பின் பயனை இழத்தல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.

பொழிப்புரை :

தலைவன் தலைவியர் இன்பமாகக் கூடியிருத்தற் குரிய காலம் இராக்காலம். பொழுது விடிந்துவிட்டால், தலைவன் துயிலை விட்டு வெளியே அறம், பொருள் ஆகியவற்றின் செயல்களில் செல்லுதற்கு உரியன். பொழுது விடிதலைத் தலைவன் தானே உணராவிடினும் அதனை அவனுக்கு, ``கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்``3 என்றபடி சிறப்பாகக் கோழி கூவ, அதனுடன் மற்றைப் பறவைகளும் ஒலித்து அறிவிக்கின்றன. அதனால் பொழுது விடிந்ததை நன்குணர்ந்தும் தலைவர் சிலர் விரைந்தெழுந்து வெளிச் செல்வதில்லை. அது நிற்கத் தலைவியருள்ளும் ஒரு சிலர் தலைவனை எழ விடாது புலம்புவர். இவ்வகையில் எவ்வகையிலோ, புட்கள் ஒலித்தும் எழுந்து வெளிச்சொல்லாதவர்கட்குப் புட்கள் ஒலித்தாலும், மற்றும் என்ன நிகழ்ந்தாலும் எப்பொழுது பொழுது விடிவதேயில்லை. (பகலாயினும் இரவேயாய் இருக்கும்.)

குறிப்புரை :

மக்கள் வாழ்க்கையில்,
``முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம்; காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு``
என்ற ஔவையார் வாக்கின்படி, கற்பன கற்று, அறிவன அறிந்து அறத்திற்குரியராம் தன்மை பெறுதற்குரிய காலம் முதல் முப்பது ஆண்டுகளாகும்.
பின்பு இல்லாளோடு கூடி இன்பம் நுகர்ந்து, அறத்தையும் தேடிக்கொள்ளுதற்குரிய காலம் அடுத்த முப்பதாண்டுகளாகும். அஃதாவது அறுபதாம் ஆண்டு முடியவாம். பின்பு உலகப்பற்றை விடுத்துத் துறவு பூணுதல் வேண்டும். இதுபொதுவான ஒரு முறை. சிறப்பாக இல்லறத்திற் செல்லாமலே உள்ளத்தில் பற்றில்லையாயின் துறவை மேற்கொள்ளுதல் சிறப்புடையதே.
தமிழாசிரியர் கூறும் துறவு, `நாட்டை விடுத்துக் காட்டிலே தான் வாழவேண்டும்` என்பதன்று. `பற்றற்று இருத்தல் வேண்டும்` என்பதே. பற்றில்லாதவர் உடல் நிலைமையைப் பொறுத்து எங்கிருப்பினும் துறவரே. `நாட்டை விடக் கூடாது` என்பதில்லை. விடுதல் விடாமை அவரவரது உடல் நிலையைப் பொறுத்தது.
துறவற இயலில் துறவு நிலையைப் பலவகையாக விளக்கிய திருவள்ளுவர் `நாடு, காடு` என்னும் இரு வாழ்விடங்களில் எதனையும் வரையறுக்கவில்லை.
அறுபதாண்டு வரையில் இன்பம் நுகரும் காலமாக வகுக்கப் பட்டமையால், அந்தக் காலத்தை `இராக் காலம்` என்றும், அறுபதாண்டு கடந்ததை, `பொழுது விடிந்துவிட்ட காலம்` என்றும் நாயனார் கூறியருளினார்.
அறுபதாண்டு கடந்து விட்டதை ஒவ்வொரு தன் மகனும் அறிவான். ஆயினும், உலகப் பற்று அறது அதனையே அவன் பற்றிக் கிடப்பதற்கு, அவனுடைய மனநிலை அல்லது குடும்பச் சூழ்நிலை இரண்டில் எந்த ஒன்றும் காரணமாகலாம். அதனையே நாயனார் பொழுது விடிந்தும் படுக்கையை விட்டு வெளிவாராதவனது தன்மையாகக் கூறினார்.
``பூங்கொடி`` என்பது உருவகம். ஆகவே, அஃது அஃறிணைப் பெயராய், பூங்கொடி புல்லி`` என்பது, `பூங்கொடியைப் புல்லி` என இரண்டாவதன் தொகையாகவும், `பூங்கொடியாற் புல்லப்பட்டு` என மூன்றாவதன் தொகையாகவும், `புலி கொன்ற யானை` என்பது போலத் ``தடுமாறு தொழிற் பெயராய்``* நின்றதாம். புலம்பினவள் - தனிமையைப் பொறாதவள். அஃது இங்குக் குடும்பச் சூழ்நிலையைக் குறித்தது.
புலம்பன், நெய்தல் நிலத்தலைவன். நிலத்திற்கு உரியது இரங்கல். எனவே, `இத்தகைய தலைவன் இரக்கத்திற்கு உரியவன்` என்பது குறிப்பு.
கோழி கூவுதல், நாள் நிலைச் சுவடிகள் ஒருவனது ஆண்டளவைத் திட்டவட்டமாகக் காட்டுதல். பிற புட்கள் ஒலித்தல், உடம்பில் நரையும், திரையும் முதலானவை தோன்றுதல் `மனத்திட்பம் இல்லாதவனுக்கு எவை நிகழ்ந்தும் என்ன பயன்` என்றற்கு. `புலம்பனுக்கென்றும் புலர்ந்தின்று போதே`` என்றார்.
இதனால், அறநூல் முறைப்படி வாழாதவர் மக்கட் பிறப்பின் பயனை எய்தாமை உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 67

தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கின் அதுஇது ஆமே.

பொழிப்புரை :

அடித் தட்டினைத் தக்கபடி மிதித்து, குறிப்பிட்ட ஐந்துபேர் ஓட்டினால், சென்று சேர வேண்டிய துறையில் கொண்டு போய் விடுகின்ற தோணி ஒன்று உள்ளது. (அது திருவைந்தெழுத்து மந்திரமாகும். ``அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை``3 என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். ``ஆணி`` என்றது அடித்தட்டினை. அதனைத் தக்கபடி மிதித்தலாவது பளு சமமாக இருக்கும்படி வைத்தல். படகின் அடித்தட்டுப் பளுவைத் தாங்கி நிற்பது. பளு சமமாய் இல்லாவிடில் தோணி புரண்டுவிடும். ``தோணி`` என்றது ஒரு மரத்தோணியன்று படகேயாம். பளுவைச் சமமாக வைதத்ல் அது வல்லார்க்கே கூடுவது. அதனால் இங்கு அது திருவைந்தெழுத்தின் மேலோட்டமான பொருளாகாது, உள்ளீடான பொருளாய் நிற்றலாம். அஃது உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் எனும் நூல்களில் ஐந்தெழுத்திற்கும் சொல்லப்பட்ட ஐந்து பொருள்கள்.) அவைகளையே இங்கு ``ஐவர்`` என்றார். அவர்கள் கோல் ஊன்றி ஓட்டுதலாவது, திருவைந்தெழுத்தை, `தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம்` என்பனவாகப் படிப்படியாக நுணுகி நுணுகி வர உணர்த்துதல்த. ``அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி``l என, ஐந்தையும், ``ஐந்து பதம்`` என அருளிச் செய்தமையும் உணரற்பாற்று.

குறிப்புரை :

தோணியில் சென்று வாணிபம் செய்வார், திருவைந்தெழுத்தின் உட்பொருளை ஆசிரியர் உபதேசிக்கக் கேட்டு, அதனை மேற்கூறியபடி முறையில் ஓதி, மேன்மேல் உயரும் உயிர்கள்.
தோணியை ஓட்டுவார் அதனைத் செவ்வனே ஓட்டுதற்கு, அதில் ஏறியிருப்பவர்களும் ஒத்துழைத்தல் வேண்டும். அவ்வாறின்று முரண்விளைப்பார்களாயின் தோணி கவிழ்ந்துவிடும். தோணி கவிழ்தலையே, ``ஆணி கலங்கின்`` ``அது இது ஆம்`` என்றது, `மேலது கீழாகியும், கீழது மேலாகியும் புரளும்` என்றபடி. ``அது இது ஆம்`` என்றதனானே, இது அது ஆம் என்பதும் கொள்க. ``வழியிடை யாற்றிடை`` என்றதில் வழி, செல்லும் வழியையும், யாறு, `அவ்வழியாவது இது` என்பதையும் குறித்துச் சிறப்பும், பொதுவுமாய் நின்றன. இரண்டாம் அடியை முதலில் வைத்து, `துறையில்` விடுவது தோணி ஒன்று உண்டு` என மாற்றியுரைக்க.
இங்குக் குறித்த வாணிபத்தின் இயல்பை, மேல் ``கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது``3 என்றதில் காண்க.
இதனால், பலதிறப் பொருள்களை மறைத்துரையாடலாகக் கூறிவந்து, இறுதியில் அந்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்து முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.

பொழிப்புரை :

புற உலகத்தை நோக்குமிடத்து நிலமும், வானமும் ஆகிய இரண்டிடங்களில் நிலத்தில் அதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களும், நிலத்தைத் தாங்குகின்ற எட்டு உயர் மலைகளுமாகியும், வானத்தில் நெருப்பு மயமாய் உள்ள ஞாயிறும், பிற மீன்களும், மேகமும், காற்றும் ஆகியும் வியப்பூட்டுவதாய் என்றும் அழியாது நிலைத்திருப்பது போலக் காணப்படுகின்றது. இப்படியிருத்தலைக் கண்டு இந்த மண்ணுலகத்தைப் பொருளாகக் கருதி இல்லை நீடு வாழ நினைத்தால், உண்மையில் இதன் தன்மையோ, இவ்விரிவுகள் எல்லாம் ஒன்றும் இன்றி அடங்கி ஒடுங்கிப் போவதாய் உள்ளது.

குறிப்புரை :

`ஆகவே, அறிவுடையோர் இதில் வாழ நினையாது, நிலைத்த வேறொரு நிலையில் வாழவே முயல்வர்` என்பது குறிப் பெச்சம். நிலைத்த நிலை, வீட்டு நிலை தாழ்தல் - தங்குதல். அது, பகுதிப் பொருள் விகுதி. லயம் - ஒடுக்கம். ஆலயம் - ஒடுக்கத்தை அடைவது.
இதனால், மோன சமாதிக்கு வாயிலாக உலகத்தின் நிலையாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.

பொழிப்புரை :

உலகத்தில் ஒருவனும், ஒருத்தியும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுமாற்றால் `அவளது வயிற்றிற்றானே அங்குள்ள தீயால் வெந்து உருவாகி நிலைப்பதாகிய மண் பாண்டத்தைக் கருவிலே அமைத்து, அதற்கு எந்தத் தன்னுரிமையும் இல்லாமற் செய்து விடுகின்றார்கள். பின்பு அது வெளியில் வந்த பிறகு அதற்கு வளர்ச்சி முறை அமைகின்றது. அப்பொழுது கிணற்றுப் பறவைகள் போல் வெளியுலகைப் பற்றி யாதும் அறியாத மக்கள் அந்தப் பாண்டத்திற்கு அமைத்து வைக்கும் நெறி, முன்பே பலமுறை அமைந்துகிடந்த மயக்க நெறியே யன்றிப் புதிய தெளிவு நெறி யாதுமன்று.

குறிப்புரை :

அந்நெறியாவது, உருவாவதும், உடைந்து போவதும் - பின்னும் உருவாவதும், உடைந்து போவதுந்தான். `செய்து, அமைத்து, கவிர்த்தனர்` என்பவற்றிற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. ``அகம்`` என்றது வயிற்றை. ``சுட`` என்றதனால் அதற்குரிய `தீ` என்பது வருவிக்கப்பட்டது. அஃதாவது உடல் வெப்பம். சூல் - கருப்பம். அத்து, வேண்டா வழிச் சாரியையாய் வந்து, ஏழாவதன் பொருளைத் தோற்றுவித்தது. சால் - மண் பாண்டம்; என்றது உடம்பையேயாதல் வெளிப்படை. உடம்பை மண்பாண்டமாக வருணித்தல் சித்தர் பாடல்களில் பல இடங்களில் காணலாம். உடம்பில் உயிர் உள்ளதேனும் அது தன்னியல்பை இழந்து, உடம்பின் இயல்பாயே நிற்றலின் அதனைக் குறியாது உடம்பையே குறித்தார். தலைமை தன்னுரிமை. அஃதாவது, உள்ளே முடங்கிக் கிடவாது வெளி வர விரும்பினும் அது மாட்டாமை. ``தலைமை தவிர்த்தனர்`` என்பது `அடைத்து வைத்தார்கள்` என்றவாறு. கோல், ஒழுங்கு. வெளியுலகம், வீட்டு நெறி. மால் மயக்கம், `மால் வழியே` என இயையும். ``முன்பின்`` என்பதில், `இன்`, சாரியை. `முன்பு உள்ள நெறியே` என்க. அது பிறந்தும், இறந்தும் மீளப் பிறந்தும், இறந்து வருதலாம். எனவே, முன் மந்திரத்திற் கூறியவாறு. `இவ்வுலகிற்றானே நீடு வாழ நினைவாரது நிலைமையெல்லாம் இவ்வாறே முடியும்` என்பதாம்.
இதனால், முன் மந்திரத்தில், `ஆலயம் ஆமே` எனப் பொதுவாகச் சுட்டிய நிலையாமை இனிது விளங்க உணர்த்தப்பட்டது. ஆகவே, இவ்விரு மந்திரங்கலாலும், `உலக வாழ்க்கையை விடுத்து, மோன சமாதியையே பெரியோர் அடைவர்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 3

நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

பொழிப்புரை :

உலகில் பலர் மறைகின்ற காலத்தில், ``நின்றான்; இருந்தான்; கிடந்தான்; தன் கேள் அலறச் சென்றான்``8 என்னும் சொல் நிகழும்படியாக, காளையராய்ப்பின் மூத்து ஒடுங்கிப் பின் பிணியுற்று கிடந்தே மறைகின்றனர். அவ்வாறின்றி, ஊர்ப் பயணம் புறப்படுவது போல இவ்வுலகை விட்டு நல்ல உணர்வோடு மறைகின்றவர்களது உணர்வு உற்றிருந்த நிலைமையே `மோன சமாதி` எனப்படுகின்றது. அந்த நிலை பலரும் சென்று அடையத்தக்க மன்றம் போன்றதுதான். மன்றம் ஆயினும் அங்கு மறைந்து நிற்கும் பொருள். அஃதாவது, அறி -வினுள் அறிவாய் நிற்கும் பொருள் ஒன்று உண்டு. அதை அடைந்தவர் அடைந்த முறையே முறை. `பிற எல்லாம் முறையல்ல` என்பதாம்.

குறிப்புரை :

``இல்லா`` என்பது, துவ்வீறு கெட்ட எதிர்மறை வினை யெச்சக் குறிப்பு. ``சித்தம்`` என்றது உணர்வை. அஃது ஆகுபெயராய், அதன் நிலைமையைக் குறித்தது. `அதனை அடைதற்கு எவர்க்கும் தடையில்லை` என்பது உணர்த்துதற்கு, அதனை, `மன்றுபோல்வது` என்றார். ஏயும், உவம உருபு. `ஆங்குச் சென்று அணைந்தவர்` என மாறிக் கூட்டுக. `சேர்கின்ற ஆறே ஆறு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ஆறு - முறைமை.
இதனால், மோன சமாதியாவது இன்னது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

பொழிப்புரை :

காட்டு - எடுத்துக்காட்டு. குறி - ஏது. நேரே காண வாராத பொருளை அதனை விட்டு நீங்காததாய்க் காணப்படும் ஏதுவாலும், அதனோடொத்த உவமத்தாலும் கருதியுணரலாம். ``ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டா``9 என்று அருளிச் செய்தபடி, முன் மந்திரத்தில் ``மறைபொருள்`` எனப் பட்ட அந்த மெய்ப்பொருளை விட்டு நீங்காது அதனை அறிவிக்கும் ஏதுவாய் நமக்குக் காணப்படுவதும் ஒன்றில்லை. இனி, தனக்குவமை யில்லாதான்``3 என்றபடி, அப்பொருளோடு ஒத்ததாய், அதற்கு உவமையாவதும் ஒன்றில்லை. அது பற்றி அப்பொருளை, ``காட்டும் குறியும் கடந்த அக்காரணம்`` என்றார். அப்பொருளே எல்லா வற்றிற்கும் முதலாய் நிற்றலின், ``காரணம்`` எனப்பட்டது. `காரணம், முதல்` என்பன ஒரு பொருட் சொற்கள். இங்ஙனம் காட்சி கருதல்கட்கு எய்தாத அப்பொருளை உணர்த்துவன உரைத்திட்சிகளேயாம். ஆயினும் அவ்வுரைப் பொருள்களை அனுபவமாகப் பயிலாது, உரைகளை ஏட்டின் புறத்திலே எழுதி வைத்தால், அதனால் என்ன பயன் விளையும்? ஒரு பயனும் விளையாது. இனி அப்பொருளை அனுபவமாகப் பற்ற அதனோடு சேர்ப்பிக்கின்றவர் சிவ குருவே. அவர் சேர்ப்பித்தால் மேற்குறித்த உரைப் பொருள்கள் எல்லாம் அனுபவமாகப் பயன்படும். இல்லாவிடில் ஏட்டில் எழுதி வைத்தன எல்லாம் ஆட்டின் கழுத்தில் மடிக் காம்புபோல்வன தூங்குகின்ற அத்தன்மையனவேயாம்.

குறிப்புரை :

`எழுதி மட்டும் படிப்பின், தமக்கும், பிறர்க்கும் அவை யாதொரு பயநையும் செய்யா` என்பதாம். இஃதே பற்றி, ``நூலறிவு பேசி நுழைவி லாதார் திரிக``* அம்மைத் திருவந்தாதி - 33.என்னும் அனுபவ மொழியும்,
``ஒன்றும் குறியே குறியாத லால்அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால், ஒன்றோடு
உவமிக்க லாவதுவும் தானில்லை; ஒவ்வாத்
தவமிக்கோ ரேஇதற்குச் சான்று``9
என்னும் சாத்திரத் திருமொழியும் எழுந்தன.
கு-ரை: ``காரணம்`` என்றது, காரணமாய் உள்ள இயல்பையும், அதனை அடையும் வழியையும் கூறும் உரைகளைக் குறித்தது என்னை? எழுதப்படுவன உரைகளேயாதலால், ``நந்தி`` என்றது, `சிவ குரு` என்னும் குறிப்பினது. `அவர் கூட்டினல்லது` என எடுத்துக் கொண்டுரைக்க. ``அல்லதை`` என்பது ஐயிற்றிடைக் குற்றுகரம்.
இதனால், `ஒரோ ஒருகால் பிற கல்விகள் எல்லாம் ஆசிரியன் இன்றியும் பயன்படும்; மோன சமாதியைப் பற்றிய கல்வி, ஆசிரியன் இன்றிப் பயன்படாது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. (இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``உணர்வுடையார்கட்கு உலகமும் தோன்றும்`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, ``சம்பிரதாயம்`` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 5

மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.

பொழிப்புரை :

தன்னை மறப்பதையே தனது தொழிலாகக் கொண்ட, வஞ்சக நாட்டில் வாழும் ஒருவன் (பெத்தான்மா) அம் மறதியால் அடைவது பிறவித் துன்பமே. அத்துன்பத்தை, அவன் தன்னை என்றும் மறவா நிலையை அடைவிக்கும் முகத்தால் நீங்கி யருளிய பெருங்கருணையாளன், எவ்வாற்றானும் பிறப்பை எய்தாத சிறப்புடையவன். (சிவன்) அவன், பிறவித் துன்பத்தின் நீங்கிய அவன் (முத்தான்மா) முன்போலத் தன்னை மறப்பதாகிய அந்த உறக்கம் அல்லாத வேறு உறக்க இன்பத்தில் இருக்கும்பொழுது, தானும் தன் தேவியுடன் அந்த உறக்கத்தில் பங்கு பற்றியிருப்பான்.

குறிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளில் கேவல நிலையே மறப்பும். சகலம் நினைப்புமாயினும் அந்நினைப்பு நிலையிலும் சிவனை நினைத்தல் இல்லையாகலின், பெத்தான்மாவை ``மறப்பே வடிவமாய் நின்றவன்`` என்றார். அது, பகுதிப் பொருள் விகுதி.
``நின்னை எப்போதும் நினைய லொட்டாய் நீ;
நினையப்புகின்
பின்னை அப்போதே மறப்பித்துப்
பேர்த்தொன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு
உனக்கு இனிதாய் இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு
வாழி இறைவனே``3
என்னும் அப்பர் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. மாயம் - வஞ்சனையும், நிலையாமையும். அவற்றை உடைய மாயா காரியங்களாகிய தத்துவங்கள். மறதியைத் தருதல் பற்றி வஞ்சனையையே இங்குப் பொருளாகக் கொள்க. அவை உயிர்க்கு இடமாதல் பற்றி, `நாடு` என்றும், கேவலத்தை நீக்குதல் பற்றி `நன்று` என்றுங் கூறினார். சுத்த நிலையே சிவனை மறவா நிலையும், அதனால் பிறவியற்றிருக்கும் நிலையுமாகும். `நாடனது` என ஆறாவது விரிக்க. சிவபோக நிலை, சிவனை மறந்து துயிலும் கேவல சகல அதீதங்கள் போலாது சிவனை நினைந்தே துயிலும் சுத்த அதீதம் ஆகலின் அதனை, ``உறக்கம் இல் போகம்`` என்றும், `அந்நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்றற்கு. ``திருமங்கையும் தானுமாய் (அப்போகத்தில்) தான் உறங்கிடும்`` என்றும் கூறினார். `சிவ போக நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்பதைச் சிவஞான போதப் பதினொன்றாம் சூத்திரத்து நுண்பொருள் பற்றி உணர்க.
ஈற்றில் நின்ற ``தான்`` என்பதை, ``சிறப்புடையான்` என்பதன் பின்னர்க்கூட்டி, `மங்கையும், தானுமாய்` என ஆக்கம் விரித்துரைக்க.
இதனால், `சுத்த துரியாதீதமே மோன சமாதி நிலை` என்பதும், `அந்நிலையும் சிவனது அருளாலே பயன்படும்` என்பதும் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.

பொழிப்புரை :

சிவன், `கேவல துரியம், சகல துரியம், யோக துரியம்` என்னும் இம்மூன்று துரியங்களையும் கடந்து நிற்கும் ஒளியாய் உள்ளவர். (இத்துரியங்கள் முன் தந்திரத்தில் விளக்கப் பட்டன. இம்மூன்றையும் கடந்தது அரிய துரியம். அது நின்மல துரியம். (இதுவும் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.) அதன்கண் உள்ள மூன்றாவன, ஞாதிரு, ஞானம், ஞேயம் (அறிபவன் அறிவு, அறியப்படும் பொருள்.) `இவை தோன்றி நிற்றல் விரிவு` எனவும், தோன்றாது மறைதல் குவிவு` எனவும் உணர்க. துரிய நிலையில் விரிவும், அதனையும் கடந்த அதீத நிலையில் குவிவும் உண்டாகும். ஆகவே, `விரிவை விழுங்கிக் குவிவை உமிழ்ந்தது` என நிரல் நிறையாகக் கொள்க. குவிந்த நிலையே பேசா அனுபூதி, அல்லது, மோன சமாதி ஆதலின், ``உரைஇல் அனுபூதிகத்து உள்ளான்`` என்றார். `சோதி, விழுங்கி, உமிழ்ந்து உள்ளான்` என முடிக்க. ``மீது`` என்பது ஏழன் உருபாயும், `மேல்` என்னும் பொருட்டாயும் நின்றது. ``ஆய்`` என்னும் வினையெச்சம், ``விரிவு`` என்னும் தொழிற்பெயர் கொண்டது.

குறிப்புரை :

இதனால், மோன சமாதி முத்துரியங்களையும் கடந்த அதீத நிலையாதல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரிக்கின்றது.)

குறிப்புரை :

உரு இலி - தன் இயல்பில் உருவம் இல்லாதவன். ஈன் இலி - பிறர் பொருட்டாக உருவம் கொள்ளுமிடத்தும் அவ்வுருவில் புலால் இல்லாதவன்; (`மாயா சரீரியல்லன்; சத்தி சரீரி` என்றபடி. ``அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள் காரணத்தின் வருவார்``3 என்னும் திருமுறையையும், காயமோ மாயையன்று; காண்பது சத்தி தன்னால்``l சாத்திரத்தையும் ஊன்றி யுணர்தல் வேண்டும்.)
ஊனம் - குறை. தனக்கு இயல்பாய் உள்ள ஆற்றல் குறைவு படுதற்குரிய காரணம். அது பாசம். அதனை இயல்பாகவே இல்லாதவன். பாசங்கள் பல ஆதலின், `அவற்றுள் ஒன்றும் இல்லாதவன்` என்க. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
திருஇலி - திருவை இல்லாளாக உடையவன். திரு - அருள். இல்லாள் - தேவி.
``தீதிலி`` என்றதே பற்றி, `நன்றிலி` என்பதும் கொண்டு, `உலகில் வரும் தீமை நன்மைகளில் ஒன்றினாலும் தாக்குண்ணாதவன்` என்க.
மருவு இலி - புதிதாக வந்து பொருந்துதல் இன்றி, அனாதியே அத்துவிதமாய்க் கலந்து நிற்பவன். அத்தகையோனைப் ``புகுந்தான்`` என்றது, புதியோன்போல விளங்கி நின்றமை பற்றி, ``மனம்`` என்றது அறிவை.
ஏனைய வெளி. பல பெயர்களும் ஒரு பொருள் மேலவாய், ``வந்து என் உளம் புகுந்தான்`` என்பதனோடு முடிக்க.
இதனால், `எத்துணையும் அரியன் மோன சமாதியில் எளியனாய் நிற்றல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.

பொழிப்புரை :

சிவபெருமானை அறிஞர் பலரும் `முதற் கடவுள்` என்று உணர்ந்து போற்றுகின்றனர். ஆயினும் அவன் அவரவர் உடலிற் குள்ளேயிருந்து அருள் புரிதலைப் பலர் அறிந்திலர், (புறத்திலேதான் வைத்துப் போற்றுகின்றனர் என்றபடி) ஆகவே, அதனை அறிந்த ஒரு சிலரே அவனுடைய மெய்த்தொண்டர் ஆகின்றனர். அவர்கள் உலகங்களைக் கடந்து ``கரையிலாக் கருணை மாகடலாயும்``3 அதனானே கரையிலா இன்ப மாகடலாயும் உள்ள சிவனிடத்தில் அந்த ஆனந்தத்தைத் தம்மால் ஆமளவும் முகந்து உண்கின்ற துறையை நாமெல்லாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.

குறிப்புரை :

``நந்தியை`` என்பது முதலாகத் தொடங்கி, `காயத்தில் கண்டறிவார் இல்லை`` என மாற்றி; அதனை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டியுரைக்க.
காயம் - தூய உடம்பு. அதன் உள்ளிடமாகச் சொல்லப்படுவது இருதயம். அதனைப் பூசாத்தானமாகக் கொண்டு செய்யும் அகப் பூசையே சிறப்புடைப் பூசையாகும். இஃது `அந்தரி யாகம்` எனப்படும். ``அந்தரியா கந்தன்னை முத்தி சாதனமாய் அறைந்திடுவர்; அதுதானும் ஆன்ம சுத்தி யாகும்``l என்றது சிவஞான சித்தி. இது கிரியா பூசை.
ஞான நிலையில், `சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம்` என்னும் முறையில் அறிவுக்கறிவாய் அறிவினுள்ளே வைத்துச் சிவன் உணர்ந்து வழிபடப்படுவான். அது ஞான பூசை. இவை ஒன்றின் ஒன்று மேம்பட்டன. இந்த மூவகை நிலையும், `காயத்தின் உள்` என்பதாகக் கொள்ளப்படுதலின், இவற்றுட் செல்லாது புறத்தில் மட்டும் வைத்து வழிபடுவாரை நாயனார், `நந்தியைக் காயத்தின் உள்ளே கண்டறிவார் இல்லை` என்றார். காயத்தின் உள்ளே என்பதில் சாரியை நிற்க, உருபு மறைந்தது.
``எந்தையே ஈசா, உடல்இடம் கொண்டாய்;
யான்இதற் கிலன் ஒர்கைம் மாறே``*
``நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே, யான் உன்னை விடுவே னல்லேன்``*
என்றாற்போல வரும் திருமொழிகளும் இவற்றையே குறிக்குமாற்றை ஓர்ந்துணர்ந்துகொள்க. இனி இவற்றிற்கெல்லாம் இவ்வுண்மைப் பொருளைக் கொள்ளாது, தூல உடம்பில் தரிக்கப்படும் சின்னங்களையே இவை குறிப்பனவாகக் கொண்டமை வாரும் உளர்.
``அண்டம் கடந்த பொருள்
அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்``8
``... ... பேரா, ஒழியாப், பிரிவில்லா,
மறவா நினையா, அளவிலா,
மாளா இன்ப மாகடலே``9
என்னும் திருமொழிகளை இதன் மூன்றாம் அடியோடு ஒப்பிட்டு உணர்க. நுகரும் பகுதியை முகக்கும் துறையாக உருவகித்தவர். முழு நிலையையும் கடலாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
இதனால், சிவனை அகத்தில் வழிபடுதலே மோன சமாதியைப் பயத்தல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
அற்புத மாகி அனுபவக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

(இம்மந்திரத்திற்கு முன் மந்திரத்திற் போந்த, ``நந்தி`` என்பதை எழுவாயாக வருவிக்க.)
சிவன், மோன சமாதியை அடைந்தவர்கட்கு, அதற்கு முன் பெல்லாம் அவர்கள் பாவித்த பாவனைகளில் தோன்றியது போலத் தோன்றாமல், அவர்களது பாவனைகளில் ஒன்றற்கும் உட்படாத வேறோர் அதிசயப் பொருளாய், அநுபவப் பொருளாய் விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`சிவன் ஒருவன் உளன்` என, வேதாகமங்கல் பற்றுக் கோடாகப் பொதுவகையான் உணர்ந்த நிலையில் அவன்,
``தேவராயும், அசுர ராயும், சித்தர், செழுமறையேர்
நாவராயும், நண்ணு பாரும், விண், எரி, கால், நீரும்
மேவ ராய விரைமலரோன், செங்கண்மால் ஈசன் என்னும்
மூவ ராயும்``3
இங்ஙனம் பல திறப்பட்டுக் காணப்படுகின்ற உயிர் வகைகளையும், ஐம்பூதம் முதலிய உயிரல்பொருள் வகைகளையும் வைத்து, `சிவன் இவை அனைத்திற்கும் மேலாய் உளன்` என்று உணர்ந்த அளவில், அவன் உண்மை மாத்திரையாக நிருவிகற்பமாகவே தோன்றினான். தற்பரம் - தனக்கு மேலானது. தான் உயிர். உயிர்களாகிய அறிவுடை உலகத்தைக் கூறவே, இனம்பற்றி, உயிரல்லாத அறிவிலா உலகமும் கொள்ளப்படும். இந்த நிருவிகற்ப உணர்வும் பாவனையே யாதல் அறிக. இவ்வாறும் அவன் இப்பொழுது இல்லை.
இனி, `உளன்` எனப் பொதுவாக உணரப்பட்ட சிவன் ஏழ்வியல்பினன்? என ஆராயுமிடத்து, `அவன் தன் பொருட்டாக யாதொரு தொழிலையும் வேண்டாதவனாயினும், உயிர்களின் பொருட்டாக ஐந்தொழில்களைச் செய்கின்றான்` என ஆசிரியர், வேதாகமங்களின்வழி அறிவிக்குமிடத்து, `அவ்வைந்தொழில் - அதி சூக்குமம், சூக்குமம், தூலம் என மூவகைப்படும்` எனவும், அதி சூக்கும ஐந்தொழிலை அருவத் திருமேனியை யுடையனாயும், சூக்கும ஐந்தொழிலை அருவுருவத் திருமேனியை யுடையனாயும், தூல ஐந்தொழிலை உருவத் திரமேனியை யுடையனாயும் நின்று செய்வன்` எனவும் அறிவிக்க. அவ்வாறே அறியுமிடத்து, அத்திருமேனிகள் ஏனைப் பொருள்கள்போலக் கட்புலனாகாமையால் ஆசிரியர் அறிவித்தவாறே பாவித்து வழிபடும் வழிபாட்டுப் பொருள்களாயின. அவற்றுள் உருவம் சரியை நிலையிலும், அருவுருவம் கிரியை நிலை யிலும், அருவம் யோக நிலையிலும் வழிபடும் பொருள்களாயின. அந்தப் பாவனைப் பொருள்களாகவும் அவன் இப்பொழுது இல்லை. இங்ஙனம் இவை எல்லாம் அல்லவாம் நிலைகளையே முதல் இரண்டடிகளில் எடுத்தோதினார். சதாசிவன் - அருவுருவத் திரு மேனியன். நிட்களம் - அருவத்திருமேனி. அது, `சிவம், சத்தி` என இருவகைத்து. சகளம் - உருவத் திருமேனி. இது, `மகேசுரன், வித்தை` என இருவகைத்து.
இவையெல்லாம் ஐந்தொழில் செய்தற்பொருட்டுக் கொள்ளப் பட்ட தடத்த வடிவங்களே யாதலாலும், தடத்தம் பெத்தான்மாக்களுக்கே உரியதாக, முத்தான்மாக்களுக்கு அவையனைத்தினும் வேறாய், வாக்கு மனோதீதமாய் உள்ள சொரூப நிலையே உரித்தாகலும் மோன சமாதியை அடைந்தோராகிய முத்தர்களுக்கு சிவன் `சதாசிவன்` முதலாகச் சொல்லப்படும் நிலையினன் அல்லன் என்றார். இந்நிலையைத் திருஞான சம்பந்தரும், ``கறையணி வேலிலர் போலும்``* எனத் தொடங்கும் திருப்பதிகம் முழுவதிலும் பலவாக விரித்தருளிச் செய்தார்.
தடத்த மெல்லாம் பாவனை யளவினவாய் நிற்றலாலும், சொரூபம் எவ்வகையும் பாவிக்க வாராது பாவனையால் கண்டு வந்த அவற்றினும் வேறாய் அநுபவத்தில் உணரப்படுவது ஆகலானும், ``அற்புதமாய்க் கற்பனையின்றி, அனுபோகக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார்.
காம இன்பமும், `கற்பனை இன்பமும், அனுபவ இன்பமும்` என இருவகைத்து. காதலனும், காதலியும் மெய்யுறு புணர்ச்சியின்றி, உள்ளப் புணர்ச்சி மட்டுமே வாய்த்த நிலையில் அவர்களது உள்ளத்தில் தோன்றுகின்ற இன்பம் கற்பனை இன்பம். மெய்யுறு புணர்ச்சி வாய்த்த காலத்தில் அவர்கள் அடையும் இன்பம் அனுபவ இன்பம். `அவ்வாறே குரு உபதேசத்தைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல்களால் விளையும் சிவானந்தம் கற்பனை ஆனந்தமாக, நிட்டையாகிய மோன சமாதியில் விளையும் சிவானந்தமே அனுபவ ஆனந்தமாய்` என்றற்கு, ``கற்பனையின்றி அனுபவக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார். ``மருவி யிருவரும் புணர வந்த இன்பம் வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்;* என்றது போல இதுவே மோன சமாதி அனுபூதி என்க. இதனுள் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சொரூப அனுபவமே மோன சமாதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதற்கண் கூட்டி, ஈற்றில் தொக்கு நின்ற `அச்சுகம், மகள் தன் மணாளனோடு ஆடிக் காணத்தக்கதே` என்னும் இசையெச்சத்தை விரித்து, `ஆனந்தம் சுகத்தில் கண்கொண்டு காண்பதே` என மாற்றியுரைத்து முடிக்க. முதல் அடி, இடைப்பிற வரலாய் வந்தது. இஃது எடுத்துக்காட்டுவமை.
காண்பதே - காணப்படுவதே. ஆனந்தம், ஏற்புழிக் கோடலால் இங்குச் சிவானந்தமே யாதல் தெளிவு. முகத்தினிற் கண்ணை `ஊனக் கண்` என்றும், அகத்தினிற் கண்ணை, `ஞானக் கண்` என்றும் வழங்குப. `தசையைக் குறிப்பதாகிய `ஊ` என்னும் பெயர், புணர்ச்சிக்கண் னகரச் சாரியை பெற்று, ஊன என வரும்` என்பது தொல்காப்பியம்.8 பிற்காலத்தி அஃது, `ஊன்` என னகர ஈறேயாய்ச் சில இடங்களில் அகரச் சாரியை பெற்று வருவதாயிற்று. அகக் கண்ணால் காண வேண்டுவதை முகக் கண்ணால் காண முயலுதலும், அகக்கண்ணிற்கு அஃது அகப்படாமை பற்றி, `அஃது இல்லை` என முரணி நிற்றலும் உடைமை பற்றி அத்தன்மையுடையாரை ``மூடர்காள்`` என விளித்தருளினால். இம்மந்திரத்துட் கூறப் பட்ட பொருளையே திருவுந்தியார்,
``இங்ஙன் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``3
என்றும், திருக்களிற்றுப்படியார்,
``அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை,
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அவ்வா றிருந்த தது``l
என்றும் கூறின.
இதனால், சிவானந்த அனுபவம் மோன (மௌன) சமாதி நிலையேயன்றி, மனோ வாக்குக்களின் செயற்பாட்டு நிலையன்று` என்பது வலியுறுத்திக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.

பொழிப்புரை :

செப்பு பராபரம் - குரு மொழியும், வேதாகமங் -களும் சொல்லுகின்ற மெய்ப்பொருள். `பராற் பரம்` என்பது, `பராபரம்` என மருவிற்று. `மேலானதற்கும் மேலானது` என்பது அதன் பொருள்.

குறிப்புரை :

சேர்பரம் - முன்பு பரமாய் இல்லாது பராபரத்தைச் சேர்ந்ததனால் `பரம்` எனச் சொல்லப்படுவது. அஃது ஆன்மா.
இவ்விரண்டையும் விடுதலாவது, சீவான்மா இது, பரமான்மா இது` எனப் பகுத்துக்காணும் நிலையை விடுவது. அஃதாவது, ஆன்மா `யான், எனது` என்னும் பகுத்துணர்வின், நீங்கியநிலை. `கப்புறுதல்` எனப்பட்டதும் அதுவே. கப்புறுதல் - கவர்த்தல்; இரண்டு படுதல்.
கப்பு உறு சொல் பதம் மாள - பகுத்துச் சொல்லும் சொல் நிலை நீங்க. கலந்தமை - சீவான்மா பரமான்மாவோடு ஒன்றுபட்ட நிலை.
`அப்பினில் உப்பென, அத்தென ஆன்மா அணைந்திட்டுக் கலந்தமை` என்க. `கலந்த நிலை எப்படி எனில; அஃது இப்படி - என இலக்கண வகையாற் கூறு வாராது - அப்படி எனப் பொதுவகையால் சுட்டும் தன்மையினதேயாம்` என்பது ஈற்றடியின் பொருள். இதன் முதல் மூன்றடிகளில் கூறப்பட்ட பொருளே சிவஞான போதத்துள்,
``நசித்து மலம் - அப்பணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்;
கப்பின்றாம் ஈசன் கழல்``9
எனக் கூறப்பட்டமை காண்க.
இதனுள் பாடம் பெரிதும் திரிபுற்றது.
இதனால், `மோன சமாதியின்பம் அனுபவத்தால் அறியப் படுமன்றி, அயலவர் உரையால் அறிய வாராது` என்பது உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

பொழிப்புரை :

எட்டி மரத்தின் பழம் பார்ப்பவர்கண்கட்கு மிக அழகிதாய்த் தோன்றும். ஆயினும் அதனைத் தின்றாலோ, சுவை கைப்பாதலுடன், தின்றவரையும் கொல்லும் தன்மையுடையது. (அதனால், அறிவுடையோர் ஒருபோதும் அப்பழத்தைத் தின்னார்.)
இனிப் பெண்ணொருத்தி பெண்மை நிரம்பி, `பெண்டு` என்பதற்குத் தகுதியடைந்த பின்பே அவளைக் கொண்டவன் அவளோடு தனிமையிற் பழகி, அவளுடைய குணங்கள் பல வற்றையும் உள்ளவாறு உணர்ந்து அவளது குணங்கட்கு ஏற்ப ஒழுகி இன்புறுத்துவான். (அவள் பெண்மை நிரம்பாதபொழுது கொண்டவன் அவ்வாறு செய்யான்.)

குறிப்புரை :

மோன சமாதி அல்லாதவற்றை மோன சமாதியாகச் சொல்லிச் சொற்சாலம் செய்யும் நூல்களும், உரைகளும் உள. ஆயினும் அவற்றின்வழி நின்றோர் அவற்றால் ஏமாற்றமே எய்தி, வாழ்நாள் வீணாளாயினமை அறிந்து இரங்குவர்.
``இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்டு
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே``*
என்னும் அப்பர் திருமொழியே இதற்குப் போதிய சான்று.
சிவன் எல்லா உயிர்கட்கும் உய்யும் நெறி காட்டி உய்விப்பவனே யாயினும் பக்குவம் எய்திய உயிர்கட்கே அவன் முன் வந்து அதனைச் செய்வான். (பக்குவம் எய்தாத உயிர்கட்கு அவன் அதனைச் செய்யான்.)
இவ்விரு பொருள்களையே இம்மந்திரம் முன், பின் இரு பகுதிகளாலும் உணர்த்தி நிற்றலின், இது பிறிதுமொழிதல் அணியைப் பெற்றதாம்.
பேதை, பெதுமைப் பருவத்திலேயும் மகளிரை மணம் செய்து கொடுத்தல் அக்காலத்து வழக்காதலைப் பற்றி இதன் பிற்பகுதியிற் போந்த உவமை வந்தது. `மடவியள் ஆனாலே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அறிதல், அறிந்து ஒழுகுதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. இதன் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சற்குரவன் கிடையாமை பற்றிப் பொறுமையிழந்து, அசற்குரவரை அடைந்து அல்லல் உறல் கூடாது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
``இரைதேர் கொக்கொத்து இரவு பகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்``
எனவும்,
``நல்கா தொழியான் நமக்கென்று உன்
நாமம் பரவி, நயனம் நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா,
வணங்கா, மனத்தால் நினைந் துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவி``*
எனவும் அருளிச் செய்தவாறு `அடங்கியிருத்தல் வேண்டும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 13

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை :

சிவன் நடுத் தெருவிலே வெளிப்படையாகத்தான் இருக்கின்றான். (ஆயினும், இருள் மூடியிருப்பதால் அவனைக் காண இயலவில்லை.) பின்பு அந்த நடுத் தெருவின் முதலில் எரிகின்ற ஒரு விளக்கை எனது அறிவுக் கூர்மையாற் கண்டு பற்றிச் சென்றேன்; சிவனைக் கண்டு கொண்டேன். அப்பொழுது மேற்குறித்த அந்த விளக் -கின்றிச் செய்யும் சந்தியானுட்டானங்களும், அவ்வனுட்டானத்தில் செய்யப்படும் தியானங்களும் என்னையறியாமலேயே நீங்கிவிட்டன.

குறிப்புரை :

நடுவுத் தெரு, ஆறு ஆதாரங்களுள் மேலதான ஆஞ்ஞை. அங்குச் சிவன் தியானப் பொருளாய் விளங்கியே நிற்றலால், ``நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே`` என்றார்.
யோகக் காட்சியைத் தருவது குண்டலினி சத்தியே. ஆகவே, குண்டலினி யோகத்தை மேற்கொள்ளாத நிலையை இருள் நிலையாக வைத்து, குண்டலினியை, ``சோதி`` என்கின்றவர், அது மூலாதாரத்தில் உள்ளபொழுது எழாது துயில் கொள்வதாய், மூலாக்கினியால் எழுப்பப்பட்ட பொழுது எழுந்து சுவாதிட்டானத்தைக் கடந்து, மணி பூரகத்தை அடைந்த பொழுதே விளக்கத்தைத் தருதலால் அவ் விடத்தில் விளங்குவதாக, ``உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியை`` என்றார். சோதி, இங்கு விளக்கு. அந்த விளக்குப் புறத்தே உள்ள கையால் பற்றப்பட்டது. அகத்தே அறிவால் பற்றப்படுவது ஆதலின், ``புந்தியினுள்ளே புணர்ந்து`` என்றும், விளக்குக் கிடைத்தலின் வெளியில் உள்ள பொருளை அடைதற்குத் தடையில்லாமை பற்றி, ``கொண்டேன்`` என்றார். கொள்ளுதல், கைப்பற்றுதல்.
யோகத் தியான சமாதிகளில் இருப்பவர்பால் கிரியானுட் டானங்களும், தியானங்களும் நிகழாதுபோதல் இயல்பேயன்றோ? அதனையே, ``சத்தி சமாதிகள் தாமே ஒழிந்தன`` என்றார். இதனுள் ``நான் ஒழிந்தேன்`` என்னாது, ``தாமே ஒழிந்தன`` என அருளிச் செய்ததை ஊன்றி உணர்தல் வேண்டும். யோக சித்தர்களும், ``நட்ட கல்லை தெய்வம் என்று`` என்னும் பாடல்போன்ற பல பாடல்களில் கிரியைகளை விலக்குதல் போலக் கூறியனயாவும், `கிரியையோடே நில்லாது யோகத்திற் செல்க` என அறிவுறுத்தியனவேயாம். அஃது அறியாதார், `கிரியைகள் பயன் இல் செயல்கள்` எனச் சித்தர்கள் கடிந்தொத்தினார்கள்` எனத்தாம் அறிந்தவாறே கூறித் தாமும் பயனை இழந்து, பிறரையும், இழப்பிப்பர்.
இதனால், `யோகத்தில் குண்டலினி யோகம் சிவனை விளக்கி நிற்கும், என்பது கூறப்பட்டது. அது `பிரணவ யோகம்` அல்லது `பிராசாத யோகம்` ஆம். ஹடயோகம் அதனைச் செய்யாது` என்பது கருத்து. எனவே, மோன சமாதிக்கு வாயிலாகிய யோகம் குண்டலினி யோகம்` என்னும் கருத்தினால் இம்மந்திரம் இவ்வதிகாரத்ததாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :

விதறு படுதல் - சோர்வு உண்டாதல். `வேறு ஆய்ந்து, இருந்து ஆய்ந்து` எனத் தனித்தனி இயையும். வேறு - முன் மந்திரத்திற்கூறிய அதற்கு வேறாக. இருந்து - மனம் ஒதுங்கியிருந்து. பதறு படுதல் - பதற்றம் உண்டாதல். ``பதறு படாதே`` என்றதும் ``இருந்து`` என்றதை வலியுறுத்தியதேயாம். மறை - மந்திரம். ``பழ மறை`` என்றது, `முதல் மந்திரம்` என்றபடி. அது திருவைந்தெழுத்தே.

குறிப்புரை :

``ஆதி மந்திரம் அஞ்செழுத்து``8
எனச் சேக்கிழாரும் அருளிச்செய்தார். பார்த்தல் - பொருளை ஊன்றி உணர்தல். பார்த்து - பார்த்தலால். `பார்த்தலால், கடந்து ஒடுங்கு கின்றேன்` என்க. ``பாழ்`` என்பது, `பயனற்றது` என்னும் பொருட்டாய், உலகியலைக் குறித்தது. கதறுதல் - துன்புறுதல் கூடாததனைக் கூடுவதுபோல் மனத்தாற் கருதிக்கொள்ளும் இன்பம் இல்லாத உலகியலை, `இதில் இன்பம் விளையும், விளையும்` என்று கருதி, விடாது பற்றி நிற்றல் பற்றி, அதனை, ``அந்தக் கற்பனை`` எனச் சுட்டிக் கூறினார். உலகியலை உதறிய பாழாவது, மாயையின் தொடர்பு சிறிதும் திருவருள் வியாபகம். `அதில் நான் முன்பு போல இன்றி ஒடுங்குகின்றேன்` என்க.
இதனால், குண்டலி யோகத்தால் பக்குவம் எய்திய உணர்வினால் திருவைந்தெழுத்தின் பொருளை உணர உணரத் திருவருள் வியாபகத்தில் ஒடுங்கியிருக்கும் மோன சமாதி கூடும்` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. `மேற் கூறியது யோக நிலை` எனவும், `இது ஞான நிலை` எனவும் உணர்க.

பண் :

பாடல் எண் : 15

வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடா அமுதுற நாடார் அமுதமே.

பொழிப்புரை :

தேவர்கள் இருவினைகளும் நல்வினையால் விளைந்த இன்பத்திலே மூழ்கிக் கிடத்தலால் அவர்கள் சிவனது திருவடியின்பத்தை நாடுதல் இல்லை. அவ்வாறே பெருமை நிறைந்த உள்ளக் கமலத்தில் ஒளிரும் ஒளி விளக்காகிய சிவனை அடைந்து, அவன் அருளால் தானே விளையும் அமுதத்தை உண்ணவும் அவர்கள் விரும்புதல் இல்லை. (ஆயினும் தாங்கள் அமுதத்தை உண்டு வாழ்வதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.) அவர்கள் உண்ணும் அமுதம் அமுதமாகமோ? (ஆகாது.)

குறிப்புரை :

`அமிர்தம்` என்பதற்கு `மிருத்யுவை (மரணத்தை) ஒழிப்பது` என்பது பொருள். அதனால் அமிர்தத்தை உண்பவர்கள் `அமரர்` (`மரித்தல் இல்லாதவர்`) எனப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் என்றுமே இறப்பதில்லையோ? தங்கள் நல்வினை முடிந்த வுடன் மாறி, வேறு பிறப்பை அடைவர். ஆதலால், அவர்கள் உண்ணும் உணவை `அமிர்தம்` என்றலும், அதனை உண்ணும் அவர்களை `அமரர்` என்றலும் உபசார வார்த்தைகளேயன்றி உண்மையாவன அல்ல. இதனை,

``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமனே யானபோல்``3
என்னும் கந்த புராணச் செய்யுளாலும் அறியலாம். இக்கருத்து பற்றியே` `தேவர் உண்ணும் அமுதம் அமுதமோ` என்றார். ``அமுதமே`` என்னும் ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாகிய வினாப்பொருட்டு. `அவர் உண்ணும் அமுதம்` என்னும் இசையும்.
சிவனை அடைந்தோரே இறப்பின் நீங்கினோர் ஆவர் ஆதலால், அவனது திருவடியின்பமே உண்மை அமுதமாகும். அஃது உள்ளத்துள்ளே இயல்பாக என்றும் உள்ளதேயாதல் பற்றி அதனை ``நாடா (தேட வேண்டாத) என்றார். `சென்று உற நாடார்` என இயைக்க. உறுதல் - பொருந்துதல். சேடு - பெருமை.
கற்பக மலர்க்கு வாட்டம் இன்மையால், ``வாடா மலர் புனை வானவர்`` என்றார். `இத்தகைய மலரைச் சூடுதல் பற்றியும் அவர்க்கு ஒரு செருக்கு உள்ளது` என்பதைக் குறித்தபடி. ``சேவடி`` என்பதை, இரண்டாம் அடியின் முதற்கண் வைத்து, `வானவர், அறப் பயனாம் இன்பம் நாள்தோறும் உறுதலால் சேவடி நாடார்` என்க. ``நெறி`` என்றது முன்னர் அதனின் நின்ற ஒழுக்கத்தையும், பின்பு அதன் பயனையும் குறித்து நின்றது. `அறப் பயன் இன்பம் சுவர்க்க இன்பமே` என்பதும், `அது நிலையற்றதாகலின் இன்பம் ஆகாது என்பதும்` கூறியவாறு. ``கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே``1 என்றார் ஆளுடைய பிள்ளையார்,
``பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``2
என்பது சிவஞான போதம், `சுவர்க்க இன்ப மயக்கத்தால் தேவர் சிவனை நாடுதல் இல்லை` என்றருளிச்செய்த இக்கருத்தே, பற்றி
``தேவர் கனாவிலும் கண்டறியாச்செம்மலர்ப் பாதங்கள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார்.
தேவர்களது செருக்கைக் கூறிய இதனால், மக்கள் செருக்குச் சிவனை நாட ஒட்டாகையை உணர்த்தி, `உலகியல் மயக்கம் அற்றோர்க்கே மோன சமாதி கூடும்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

பொழிப்புரை :

காமக் கலவிக்கு உரியராய் அமைந்த இருவர் (ஒருவனும் ஒருத்தியும்) அது பற்றித் தம்முட் குறிப்புச் சொற்களால் உரையாடுதலை எதிர்பாராத வகையில் கேள்வியளவிற் கேட்டாலும் அவரோடு ஒத்த பருவத்தினர்க்கு அடங்கியிருந்த காமக்குறிப்புச் சடக்கென அவர் உள்ளத்தில் எழுந்து அவரைத் தன் வயப்படுத்துதல் போல, மோன சமாதிக்கு உரியராய் உலகரோடு சேராது தனித் திருக்கும் ஞானியரை எதிர்பாராத வகையில் கண்ணாற் கண்டாலும் அவரோடு ஒத்த ஞானியர்க்கு, அடங்கியிருந்த மோன சமாதி அப்பொழுதே சடக்கெனமிக்கெழுந்து, அவரைத் தன்வயப் படுத்தும்.

குறிப்புரை :

``அதுக்கு`` `அதற்கு` என்பதன் மரூஉ. பின்வரும் ``காமம்`` என்பதைச் சுட்டுகின்ற அது என்னும் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்னர் வந்தது. `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. என்ற - என்று அமைந்த. அமர்தல் - விரும்புதல். ``கேட்டும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. உவமையில் வந்த இவ் வும்மைக்கு ஏற்புடைபபொருளிலும் `காணவும்` என உம்மை விரித் துரைக்க. சதுர் - பொதுக்கு, என்பது விரைவுக் குறிப்பாய நாட்டு வழக்கு இடைச்சொல். இது, `பொசுக்கு` என்றும் வழங்கும். பெருமை அஃது இங்கு அதிகாரத்தால் மோன சமாதியைக் குறித்தது. `மதுக் கொன்றைத் தாரானது வளம்` என ஆறாவது விரிக்க. அவ்வளமாவது, அவனது ஆனந்தம். அந்த ஆனந்த நிலையே மோன சமாதியாதலை அறிக. அன்றே - அப்பொழுதே` `காணினும் அக்காட்சி வளம் தரும்` என்க.
இதனால், `மோன சமாதி எய்தினார், உலகியலின் தாக்குதலால் அஃது இழக்கப்படாமைப் பொருட்டு அதில் உறைத்து நின்றாரொடு கூடியிருக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

பொழிப்புரை :

நான் மோன சமாதியில் மூழ்கிவிட்டபொழுது, எனக்கு அந்த நிலையை வருவித்த குருவும் தோன்றவில்லை. அவர் அளித்தருளிய செல்வமாகிய ஞானமும் தோன்றவில்லை. அவரால் தூய்மை செய்யப்பட்ட உடம்பும் தோன்றவில்லை. அந்த உடம்பை ஆட்டிப் படைத்த உயிரும் தோன்றவில்லை. அந்த உடம்போடு கூடி நான் இருந்த இடமும் தோன்றவில்லை. உடம்பிற்கு உள்ளும், வெளியுமாய் அலைந்து கொண்டிருந்த மனமும் தோன்றவில்லை. அந்த மனத்திற்குமேல் அதன் செயலை ஆராய்ந்து நின்ற அகங்காரம் புத்தி சித்தங்களும் தோன்றவில்லை. கடைசியாக, `நான், நான்` என்று என்னால் `சொல்லப்பட்டும் உணரப்பட்டும் வந்த அந்த ஆன்மாவும் தோன்றவில்லை. இவையனைத்தும் தோன்றாமல் எப்படி எங்கே மறைந்துவிட்டன என்பது தனக்குத் தெரியவில்லை.

குறிப்புரை :

`அழிந்தன` என்றது, புலனாகாமை பற்றியேயாம். ஏனெனில், அந்தச் சமாதி நிலையினின்றும் பிரிந்த வழி இவ்வாறு சொல்லும் சொற்கள் நிகழ்தலானும், அழிந்தவை மீள இவ்வாறு நின்று சொல் நிகழ்த்தா ஆகலானும் என்க.
`இவையெல்லாம் முன்னர்த் தோன்றினமை வெறும் கற்பனையே யாகலின், கற்பனை கழியவே அவையும் தோன்றுதல் இலவாயின. ஆகவே, ``அழிந்தன`` என்றது `அழிந்தன` என்று கூறியதேயாம்` என்பாரும் உளர்.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
எனவும்,
``அண்டங்கள் ஏழும் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளே உளஒளி``
எனவும், மற்றும் இன்னோரன்னவாக மேலெல்லாம் கூறிவந்த நாயனார்க்கும் அது கருத்தாகாமை யறிக.
``உயிர்`` என்றது, உடம்பை இயக்கிநிற்கும் நிலையை. ``வான்`` என்பது இடத்தைக் குறித்தது. மனத்தைக் கூறவே, இனம் பற்றி ஏனை அந்தக் கரணங்களும் கொள்ளப்பட்டன. ``நான்`` என்றது ஆன்மாத் தன்னைப் பதி பாசங்களின் வேறாக அறிந்து நின்ற நிலையை. `நான்` என்பது அழிந்தபின் பிற அழிந்தவாற்றை அந்த `நான்` எனப்பட்டது எங்ஙனம் அறிதல் கூடும்? கூடாமையின், ``நான் அறியேன்`` என்றார். ``அழிந்து`` என்னும் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. உம்மைகள் எண்ணும்மைகள்.
இதனால், `மோன சமாதி எய்தினோர் மது உண்ட வண்டு, அந்த மது மயக்கத்திலே தன்னையும் அறியாது கிடத்தல்போல சிவா னந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள்` என்பது கூறப்பட்டது.
``ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்,
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ``8
என்னும் திருவாசகத்தை இங்கு ஒப்பு நோக்குக.

பண் :

பாடல் எண் : 18

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.

பொழிப்புரை :

(`இம்மந்திரம் அதிகப்படியாக உள்ளது` எனப் பதிப்புக்களில் குறிக்கப்பட்டபோதிலும் இங்கு இருத்தற்குரியதே.)
மோன சமாதியை அடைந்தோர் பின்பு உலகத்தில் ஒன்றோ டொன்று மாறுபட்ட செயல்களைச் செய்தபோதிலும் திருவருள் உணர்வு சலியாது நிற்றலால் சிவஞானம் திரிபெய்தல் இன்மையால் சிவானந்தா -னுபவமும் குறையாது. அவர்கட்கு இனிப் பிறப்பும் இறப்பும் இல்லை இஃதே நிருவிகற்ப சமாதியாகிய நிட்டை நிலையாம்.

குறிப்புரை :

``சற்று`` என்பதன்பின் `சற்றும்` என உம்மை விரித்து, ``பேராமல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தங்குதலால் பிறப்பற்றது` என்க. ஒளிர்தல், மாசற்று விளங்குதல். ``நிட்டை`` என்பதன்பின், `ஆம்` என்பது வருவித்து முடிக்க.
இதனால், மோன சமாதியை முற்றப்பெற்று நின்றோர் உலகியல் தாக்குதலால் சலித்தல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

பொழிப்புரை :

`கேவலம் சகலம்` என்னும் இரு நிலைகளையும் கடந்து சுத்த நிலையை எய்தி, அதில் மேற்பொருள் மேற்பொருளே யாயும், கீழ்ப்பொருள் கீழ்ப்பொருளேயாயும் விளங்க, அந்த மேற் பொருளுக்குள்ளே அடங்கியதனால், இடையிட்ட முன் மந்திரத்திற் கூறியபடி அனைத்தும் திருவருளால், தோன்றாது மறைவதாகிய சிவனது திருவடி நிழலில், சிறிதும் நகர்ந்து அப்பாற் செல்லாத கல்போன்ற உணர்வை நான் இப்பொழுது பொருந்தி நிற்கின்றேன்.

குறிப்புரை :

கேவல நிலையில் யாதும் தோன்றிற்றிலது. சகல நிலையில் மேற்பொருள் கீழ்ப்பொருளாயும், கீழ்ப்பொருள், மேற்பொருளாயும் மாறித்தோன்றின. அவ்விரண்டும் குற்றம் ஆகலின், `சுத்தத்தில் அவை உள்ளவாறு விளங்கின` என்பார், ``பொருளிற் பொருளாய்ப் பொருந்த உள்ளாகி என்றார். ``ஆகி`` என்றது, ஆகினமையால்` எனக் காரணப்பொருட்டாய் நின்றது. ``அத்தன் அடி`` என்பது திருவருள் வியாபகமே. ``அடிக்கு`` என்பது, ஏழாவதன் பொருளில் நான்காவது வந்த உருபு மயக்கம். ``மனம்`` என்றது உணர்வை. சிறிதும் சலியாமை பற்றி, `கல்போன்றது` என்றார். அவ்வாறு நிற்றலே உறைத்து நிற்றலாம்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய சலியா நிலை உவமை முகத்தால் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

பொழிப்புரை :

நான் வெளியே எங்கெங்கு ஓடி ஓடி அலைந்ததை விட்டு, எங்கும் செல்லாது என்னளவுக்கு நின்று, என்னிடத்திலே என் அறிவை ஒன்ற வைத்து என்னுள் தானே நோக்கினேன். அப்பொழுது பரம்பொருள் காட்சிப்பட்டு பின் அதனை அடைந்து இன்புறும் வழியும் தோன்றிற்று. அவ்வழியாவது என் அறிவுக்கறிவாய் இருந்து பெத்தம், முத்தி இரண்டிலும் அறிவித்து வரும் திருவருளை அறிவாற் பற்றுதல். ஆயினும் இவைகளை நான் உணர்தற்கு எனக்குப் பல ஊழி சென்று விட்டன.

குறிப்புரை :

`சிவம்` என்பது, இங்கு, `பேரின்பம்` எனப்பொருள் தந்தது. `கதி, மார்க்கம், வழி` என்பன ஒரு பொருட் சொற்கள். `பேரின்ப வழி` என முன்னர்ப் பொதுவாகச் சுட்டிப் பின்னர் அதனை ``உணர்வு`` என விளக்கியருளினார். உணர்வு - உணர்வுக்கு உணர்வு; திருவருள். ``தம் உணர்வின் தமி அருள்``l என்றார் சிவஞான போதத்திலும், `திருவருளின் இடையறா உதவியை அறிந்து, அதன்கண் இடையறாப் பேரன்பு செய்தலே பேரின்ப வழி` என்பதை, ``அயரா அன்பின் அரன்கழ் செலுமே``9என்னும் சிவஞான போதத்தாலும் அறிக.
``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தோடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்``3
என அப்பர் பெருமானும் தாம் சிவனைக் கண்டுகொண்ட முறையை இங்ஙனமே அருளிச் செய்தவாறு அறிக.
``பல்லூழி காலம் பயின்றானை அர்ச்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``
என்ப ஆகலான் இந்நிலை வாய்த்தற்கு ஒரு பிறப்பில் செய்யும் தவம் போதாது; பல பிறப்புக்களில் தவம் செய்தல் வேண்டும் ஆகலின், ``ஒன்றி நின்றேன் பல ஊழிகண்டேனே`` என்று அருளியதன் உண்மையை உணர்க. இதில் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், மோன சமாதியை அடையும் வழியும், அதனை உணர்தல் பற்றல்களின் அருமையும் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

பொழிப்புரை :

தூய்மையாகிய சுத்தாவத்தையைப் பயக்கும் முத்தி பஞ்சாக்கரக் கணிப்பினால் ஓர் ஆன்மா தனது ஏகதேச உணர்வாகிய சுட்டுணர்வு கழியப்பெற்ற பின் அஃது யாரை வரைந்து சுட்டியுணரப் போகின்றது? இனி அது தான் சிவமாகி விட்டபின்பு யாரைத் தியானப் பொருளாக வரைந்து கொண்டு தியானிக்கும்? அவாவின் வேரையே அஃது அறுத்து விட்டபின்பு அஃது யாரை விரும்பும்? மாணவர்களே, நீங்களே சொல்லுங்கள்.

குறிப்புரை :

`இவற்றிற்கெல்லாம் சிறிதும் இடம் இல்லை` என்பது கருத்து. வினாக்கள் யாவும் இன்மையைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. `உலகத்தை உணர்வது சுட்டுணர்வினாலும், விருப்பு, வெறுப்புக்கள் தோன்றுதல் அச்சுடணர் வினை பயனாலும் ஆகலின் சுட்டுணர்வு நீங்கவே அவையெல்லாம் இயைபின்றி நீங்கும்` என்பதும் கருத்து. காமன் - மன்மதன். அவன் அவாவின் வேருக்கு ஓர் உருவகம். `அவன் சிவனது நெற்றிக்கண் முன் நில்லான் ஆகலின், சிவ ஞானியர் கண்முன்னும் நில்லான்` என்னும் நயம் தோன்றச் சிவ ஞானியரது அறிவை, காமனை வென்ற கண்` என்றார். `சுட்டுணர்வு நீங்கவே, சிவத்தையும் ஆன்மாத் தன்னின் வேறாக வைத்துச் சுட்டியுணர்தல் இன்றித் தன்னுள்ளே அறிவுக்கறிவாக அநந்நியமாய் நின்று உணரும்` என்பது, ``ஆரை`` நினைவது என்பதனால் குறிக்கப் பட்டது. ஆன்மாச் செயற்கையாய் எய்திய சுட்டுணர்வு நீங்குதல் பாச நீக்கத்தாலும், இயற்கையாகிய வியாபக உணர்வைப் பெறுதல் சிவத்தைத் தலைப்படுதலாலும் ஆதல் பற்றி, வியாபக உணர்வு எய்தினமையை, ``தான் அவன் ஆதல்`` என்றார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரமாகிய வரையுரை சீவனைச் சிவமாக்கியருளும் மாட்சிமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

பொழிப்புரை :

`கடலுக்கு கரை யில்லை` என்பது தெளிவு. (`கரை` எனப்படுவன எல்லாம் தீவுகளே) அங்ஙனமாகவும் அதற்குக் கரை யிருப்பதாகக் கருதிக்கொண்டு, அந்தக் கரையைச் சென்று காண முயலுதல் அறிவுடைமையாகுமோ? ஆகாது. அதுபோலச் சிவம் வியாபகப் பொருள்; சொல்லிற்குள்ளும் அடங்குவதன்று. அவ்வா றிருக்கவும், மாணவர்களே, நீங்கள், `சிவத்தை யாம் சொல்லாற் சொல்லி உணர்த்திவிடுவோம்` என்று உணர்த்த முயல்வீர்களேயானால், ஊமன் தனது கருத்தைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்த முயலுங்கால் அடையும் இடர்ப்பாடுகளைத் தான் அடைவீர்கள் அடைந்தாலும் உங்கள் கருத்து நிறைவுறாது. உண்மையென்ன வெனில், `அலை யில்லாத கடல் ஒன்று இருக்குமேயானால் அதனோடு ஒத்துச் சிறிதும் சலனம் அற்றுத் தெளிந்த விரிந்த அறிவினை யுடையாரது அறிவில் சிவன் வரம்பில் பொருளாய் ஒளிர்கின்றான்` என்பதே.

குறிப்புரை :

`பஞ்சாக்கரத்தை அறியும் முறையில் அறிந்து, ஓதும் முறையில் ஓதினால், அஃது இந்தத் தெளிந்த அறிவைத் தந்துவிடும்` என்பது கருத்து. முன்னிரண்டடிகளில் வேற்றுப் பொருள் வைப்பணி வந்தது. ``நீர்`` என்றது கரையற்ற நீரை ஆதலால், அது கடல் நீரேயாயிற்று. ``திரையற்ற நீர்போல்`` என்றது இல்பொருளுவமை. புரை - சிற்றிடம் அஃது` `ஏகதேசம்` ஒரு புடை) என்பதைக் குறித்தது. ``உரையற்ற தொன்று`` என்றதனால், முத்தி பஞ்சாக்கரத்தையும் சுத்தமானதம் ஆக அறிவாற் கணித்தலே இங்கு விதிக்கப்பட்டதாம்.
இதனால், முத்தி பஞ்சாக்கரத்தை அறியும் முறை ஓதும் முறைகளின் மாட்சிமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.

பொழிப்புரை :

மாயையின் உண்மை யாதாயினும் பொதுவாக `மாயை, மாயை` எனச் சொல்லிப் பலரும் முறை செய்வன எல்லாம் மாயா காரியங்களுள் ஒன்றாகிய மனத்தைக் குறித்தேயாம். (``மனம் எனவும் ஒரு மாயை எங்கேயிருந்து வரும்`` என்றார் தாயுமான வரும்.) இந்த மனமாகிய மாயை, `பிறரை மயக்குவது` என்பது இல்லாமல் அது மயங்கும்படி செய்க. அஃதாவது, `அதன் கொட்டம் அடங்கும்படி செய்க` என்பதாம். மனம் அடங்கிவிட்டால், ஆன்மாவை அலைப்பது வேறு எதுவும் இல்லை. ஆகவே, அப்பால் அடங்க வேண்டுவதாகவும் எதுவும் இல்லை. மனத்தின் வழிப்பட்டு உள்ளத்தில் தோன்றியவற்றைத் தோன்றியவாறே பலபடப் பேசும் பேச்சுக்களும் அற்றொழியும். அப்பால் புறப்பொருள்களைத் துருவித் துருவி ஆராய்வதை விடுத்து, ``நான் ஆர், என் உள்ளம் ஆர், ஞானங்கள் ஆர்``3 என்பன போல உள்நோக்கி ஆன்மாத் தன்னையும், தலைவனையும் ஆராய்ந்து உணர்வதே மெய்ப் பொருளைக் கூட்டுவிக்கும் மெய்யுணர்வாகும்.

குறிப்புரை :

மனமாயை, `மனமாகிய மாயை` என இருபெயர் ஒட்டு. இதில் ``மாயை`` என்பது அதன் காரியத்தைக் குறித்தது. `இம்மாயையை` என இரண்டாவது விரிக்க. `மயக்க` என்பது அகர ஈற்று வியங்கோள். பின்வந்த ``மன மாயை``, `இது` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. தான், அசை. ``வேண்டா`` என்பது. வேண்டப் படாதாய் அற்றொழிதலைக் குறித்தது. `தன்னை` என்பது இடைக் குறைந்து, `தனை` என நின்றது. தன்னை ஆய்தல் கூறவே, அதனோடு உடன் நிகழ்வதாகிய தலைவனை ஆய்தலும் கொள்ளப்பட்டது. பிறவற்றை ஆராயாது, தன்னையும், தலைவனையும் ஆராய்தலை மட்டுமே கூறினமையாயினும், இந்த ஆராய்ச்சி அருள்வழி நிகழ்வதே யாகலானும் `திருவைந்தெழுத்தில் பாச எழுத்துக்கள் இரண்டை நீக்கி ஏனை மூன்றெழுத்தையே கொண்டு உணர்க` என மறைபொருளாக உணர்த்தியதாயிற்று. `முத்தி பஞ்சாக்கரமாவது இதுவே` என்பது, மேல்` ஐந்தெழுத்து` அதிகாரத்தில் சொல்லப்பட்டது. `இதனைக் கணித்தல்` என்பதும் சுத்தமானதாக அறிவாற் கணித்தலேயாதல், முன் மந்திரத்தில் ``திரையற்ற நீர்போல்`` என உவமையாற் கூறப்பட்டது. இங்கு ``மன மாயைதான் மாய`` என்றதனால் நேரே கூறப்பட்டது.
இதனால், `பஞ்சாக்கரத்தை முத்தி பஞ்சாக்கரமாகக் கொண்டு, அதனையும் `வாசகம், உபாஞ்சு, மானதம்` முறைகளுக்கு அப்பாற்பட்ட சுத்த மானத முறையிலே கணிப்பின் முத்திப் பயன் உளதாகும்` என அதன் மாட்சிமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற்று` அதன் பயனாகச் சிவத்தில் புறம் போகாது, அன்பினால் தம்மை ஆழ்த்திவைத்திருப்பவர்கட்குப் புறத்தோற்றம் உலகத்தாரது தோற்றத்தோரடு ஒத்துத் தோன்றினும், உண்மையில் அவை இல்லையாம்.

குறிப்புரை :

மலம், ஆணவம், அஃது இங்கு ஆகுபெயராய் `யான், எனது` என்னும் செருக்கினைக் குறித்தது. உலகத்தார்போல இவர்களும், `யான் செய்தேன்; பிறர் செய்தார்` என வழங்கற்பாடு பற்றிக் கூறினாராயினும் அவர் உணர்வு, `எல்லாம் சிவன் செய்தது` என்றே உணர்ந்திருக்கும். மாசு - குற்றம். அஃது அவர் செய்த பிறவியைத் தருதலின் குற்றமேயாதல் அறிக. பாம்பு கடித்து இறந்த வணிகன் ஒருவனையும், அப்பூதியடிகள் மகனையும் உயிர்பெற்றெழச் செய்தும், முதலை வாயில் அகப்பட்டு இறந்த அந்தணச் சிறுவனை அவனது வளர்ச்சியோடு மீட்டும் வணிக்கன்னி யொருத்தி, அப்பூதி யடிகளும், அவர்தம் துணைவியாரும், அந்தணப் பெற்றோரும் ஆகியோர்ககு யாதொரு கைம்மாறும் வேண்டாமல் பெருநலம் தந்து உதவிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகி. மூவர் முதலிகட்கும் அவற்றால் யாதொரு புண்ணியமும் விளையாமையையும், தாதையைத் தாள் அற வீசிய சண்டேசரருக்கு அதனால் யாதொரு பாவமும் விளையாமையையும் அறிக. இவர்கட்குப் புண்ணியமும், பாவமும் விளைந்திருப்பின் இந்திராதி தேவர்கள் வாழும் சுவர்க்கத்திலும், பாதகன் சென்றடையும் நரகத்திலும் சென்றிருத்தல் வேண்டும். அவை அவர்க்கு இல்லாது போயினமை வெளிப்படை.
மானமாவது, தம்மைப் பிறர் இழிவு படுத்துதலைப் பொறுக்க மாட்டாமை, அப்பரைச் சமணர்கள்,
``தவ்வை சைவத்து நிற்றலின், தருமசேனரும் தாம் பொய்வகுத்ததோர் சூலைதீர்ந்திலதெனப் போயினார்``
என அரசனிடத்திற் கட்டிக் கூறி,
``தலைநெறியாகிய சமயந் தன்னைஅழித்து; உன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பின் நெறியழித்த பொறியிலி`` *
எனப் பலர்முன் இகழ்ந்தபோதும் வாளா இருந்ததை எண்ணுக.
அபிமானம் - பற்று. அஃதாவது, உடம்பும், தாய் தந்தையார், மனைவி, பிறர் ஆகிய சுற்றமும், பொன், பொருள், மக்கள், மாட மாளிகை, காணி முதலிய செல்வமும் ஆகியவற்றைத் துறக்க விரும் பாமல், அவை தாமே நீங்கும் நிலைமை எய்தியவழி உயிர் போவது போலக் கையற வெய்துதல். இந்நிலை நாயன்மாரிடத்து இல்லாமை தெளிவு.
குலம் இல்லாமை திருநீல நக்க நாயனார் திருநீல கண்டப் பாணருக்கு அவர் தம் துணைவியாரோடும் இரவுப் பொழுதைக் கழிக்க வேள்வி அறையை அளித்ததில் இனிது விளங்கிற்று.
``கொள்ளும் குணங்களும் இல்லை`` என்றதனால், `தள்ளும் குற்றங்களும் இல்லை` என்பது போந்தது. அவை, `நியமம்` என யோக உறுப்புக்களுள் ஒன்றாக வைத்துச் சொல்லப்படும் விதி முறைகள். குற்றங்கள், அவற்றிற்கு எதிரவாயுள்ள விலக்குமுறைகள். அவற்றை விலக்கியொழுகல், `இயமம்` எனப்படும். மோன சமாதியில் நிற்போர் உலகை மறந்திருத்தலால், `இவைகள் அவர்பால் கட்டாயமாக நிகழும்` என்பது இல்லை.
நலமாவது இன்பம். இதனானே தீங்கும் பெறப்பட்டது. `நலத்தில் விரும்பும், தீங்கில் வெறுப்பும் அவர்பால் நிகழா` என்பதாம். ``ஓடும்`` செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்`` என அருளிச் செய்தமை காண்க. ``நலத்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்``* என்றதனையும் நோக்குக.
`இவற்றையெல்லாம் இவர்கள் தாமே வலிந்து நீங்காது, உறங்கினோன் கையிலிருந்த பொருள் அவனையறியாது தானே வீழ்ந்துவிடுதல்போல, மோன சமாதியை அடைந்த இவர்களிடத்தி லிருந்து தாமே நீங்குவன` என்பதை,
``உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவும்
தானே தவிரா தானால், புரியாது
ஒழித்திடில் நிரயத் தழுந்துதல் திடமே`` *
என்னும் சங்கற்ப நிராகரணத்தால் அறிக.
``ஞாலமதில் ஞான நிட்டை யுடையோ ருக்கு
நன்மையோடு தீமையிலை; நாடுவதொன் றில்லை;
சீலமிலை; தவமில்லை; விரதமொடாச் சிரமச்
செயலில்லை; தியானமிலை; சித்தமல மில்லை;
கோலமிலை; புலனில்லை; கரண மில்லை;
குணமில்லை; குறியில்லை; குலமுமில்லை;
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்
பாடலினோ டாடல்இவை பயின்றிடினும் பயில்வர்``9
என்ற சிவஞான சித்திக்கும் இதுவே கருத்தென்க.
ஞானத்தினாலே நந்தியைப் பலம் மன்னி அன்பில் பதித்து வைப்பார்க்கு` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. பலம் - பயன். `பலமாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சிவனை அனுபவமாக அணைந்தோர், தோற்றத்தில் உலகர்போலவே காணப்படினும் அவரது நிலை முற்றிலும் வேறாதல் கூறப்பட்டது. இத்தன்மை யுடையாரே `சீவன் முத்தர்` எனப்படுவர்.

பண் :

பாடல் எண் : 2

ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.

பொழிப்புரை :

நல்லதொரு வளமான சார்பாய் உள்ள சீவனை நான் சார்ந்துவிட்டேன். அதனால், முன்பு எனக்குச் சார்பு போலத் தோன்றி என்னைப் பிறவிக் கடலிலே அலைய வைத்த பாசங்களினின்றும் நீங்கிவிட்டேன். இப்பொழுது நான் அப்பாசங்கட்கு மேலே போய்விட்டேன். `பரம்பொருள் வேறு நான்வேறு` என்பதன்றி, `ஒன்றே` எனப்படும் நிலையை `எய்தினேன்? ஆகவே, இறப்பதும், பின் பிறப்பதும் இனி எனக்குத் தவிர்க்க முடியாத சூழல் இல்லை.

குறிப்புரை :

ஈற்றடியை முதற்கண் கூட்டி உரைக்க. ``கழிந்தேன்`` என்பது அவற்றின் நீங்கி உயர்ந்தேன்` எனப் பொருள் தந்தது. `ஒன்று ஆனேன`` என்பது `ஒன்று எனச் சொல்லப்படும் நிலையினன் ஆயினேன்` என்றபடி.
ஆக்கம் - பிறப்பு. தம் குறிப்பின்றியும் வருவனவற்றைக் குறிப்பொடு கூடி வருவன போல, ``வேண்டேன்`` எனக் கூறியது இலக்கணை வழக்கு.
இதனால், மோன சமாதியை அடைந்தவர்கக்கு ஏனை யோர்க்கு உளவாகும் துன்பங்களுள் யாதும் இல்லாமை கூறப்பட்டது. ``இன்பமே எந்த நாளும்; துன்பம் இல்லை;3 என அருளிச் செய்ததையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 3

ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.

பொழிப்புரை :

ஆலையில் இடப்பட்ட கரும்பும், சோறும், வெல்லக் கட்டியும், சோலையின் நடுவில் உள்ள பொய்கை நீரும் ஆகியவற்றை உடையது எங்கள் நாடு. அதில் அழகிய சாலம் வல்ல பெண்ணொருத்தி யுள்ளாள். அவள் மயிலின் தோகையில் காணப்படும் வியத்தகு `புள்ளிகளைப்போல் பல பொருள்களை விளக்கத்தக்க வகையில் தோற்றுவிப்பாள். அதனால் பலர்க்குப்பல பயன்கள் விளைதலால் அவட்குப்புகழ் உளதேயன்றிச் சிறிதும் இகழ்வில்லை.

குறிப்புரை :

இம்மந்திரமும் மறைபொருட் கூற்றாகவே செய்யப் பட்டது. நாடு - நின்மலாவத்தை, ஆலைக்கரும்பு - உழைத்துப் பயன் பெறல் வேண்டும். அது நின்மல சாக்கிரம். சோறு, வாளா எடுத்து விழுங்கப்படும். அது நின்மல சொப்பனம். வெறும் சோறு சுவை யில்லாதது போல இதில் சிவானந்தம் இனிது விளையாது, அதன் உண்மை மட்டும் விளங்கும. வெல்லக்கட்டி வாயில் இட்டவுடன் இனிக்கும். இது நின்மல சுழுத்தி. துரியமும் உடன் நிகழும். இவற்றில் சிவானந்தத் தோற்றம் உளதாகும். சோலைத் தண்ணீர், குளிர்ச்சி யுடையதாய் உடல் வெப்பம் தணித்து, உண்ணீர் வேட்கையையும் தணித்து, நீந்தி விளையாடவும் இடமாம், இது நின்மல துரியாதீதம். இதில் சிவானந்த மேலீடு உளதாம். இவற்றையெல்லாம் தந்து நிற்பது அருட்டத்தி. அதுவே கோலப்பெண். இது திரோதான சத்தியைப்போல இடரை விளவியாது, இன்பத்தையே விளைத்தலால், இதனை உபசாரமாகக் கூட, `மலம்` என ஒருவரும் குறைத்துக் கூறார். ஆகவே, `இவட்குக் குறை ஒன்றும் இல்லையே` என்றார். ஏகாரம், தேற்றம். மோன சமாதியை அடைந்தோர் உடல் உள்ள அளவும் ஒரோ ஒரு கால் அதனின்றும் நீங்கிப் புறமோக்குடையராதலும் உண்டு. அந் நிலையிலும் அவர் பண்டை நிலை வந்து பற்றாதபடி நின்மலா வத்தையில் நிற்றல் அல்லது, அதற்குக் கீழ்ப்பட்ட மேலாலவத்தை மத்தியாலவத்தை கீழாலவத்தைகளில் வாரார் என்பதும் கூறியவாறு. அணைந்தோருள் தம்மையும் உளப்படுத்திக் கூறினார் என்க. `உடைத் தாகிய எங்கள் நாட்டிடையுள்ள பெண்ணாட்குக் குறையொன்றும இல்லையே` என்க.
இதனால், மோன சமாதி யுற்றருள் ஒரோர்கால்மீட்சி உறுவாரதுசெயல் கூறப்பட்டது.
``நேசமொடுத் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நீனைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
ஆசையொடும் அங்கும இங்கும் ஆகி அலருவோர்
அரும்பாசம் அறுக்கும் வகை அருலின் வழியே [உரைப்போம்.l
என்றார் சிவஞான சித்தியிலும்.

பண் :

பாடல் எண் : 4

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :

முதலடியை இறுதியில் கூட்டி, `இனிஎன்னை ஆராலும் அமட்ட ஒண்ணாது` என மாற்றியுரைக்க. அமட்டுதல் - அசைத்தல்; நிலைகலங்கச் செய்தல். சீர் - சிறப்பு. பிறர் ஒருவருக்கும் இல்லாத அருட்குணம். `சிந்தை` என்றது அறிவை, `அச்சீராடி எனச் சுட்டு வருவிக்க. ஆடுதல் - பயிலுதல் ஊடாடுதல்` என்னும் வழக்கையும் நோக்குக. அங்கு அவனிடத்தே. திரிதல் - உலாவுதல்; செயற்படுதல்.

குறிப்புரை :

பாடு - பக்கம். சாரா அறிவு, சாராமைக்கு ஏதுவாய அறிவு. `தான் சுதந்திரனாய் உள்ளவனைச் சார்ந்தால், நாமும் சுதந்திரமாய் வாழலாம்` என்னும் அறிவு.
``தாம் ஆர்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் ... ... ... ... ... ... ...
கோமற்கே நாம் என்றும் மீள் ஆளாய்க்
கொய்ம்மலராச் சேவடியிணையே குறுகி னோமே``
என அருளிச் செய்தமையும் காண்க.
``அறிவு அறிந்தேன்`` என்றது, `அறிவைப் பெற்றேன் என்றவாறு.
இதன் பொருள் வெளிப்படை.
இதனால், `சிவனை, பெறும் பொருளாகப் பெற்றார். எவ் வாற்றானும் பிறர்க்கு, அல்லது பிறவற்றில் அடிமையாகாது, வேண்டிய வேண்டியாங்கு எய்தி இன்புறுதல் கூறப்பட்டது. ``ஒன்றாலும் குறை வில்லை`` (திருமுறை - 6.98.1.) என்ற அருள் மொழிமையயும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

பொழிப்புரை :

நான் இப்பொழுது, முன்பு பிரமன் என் தலையில் எழுதி நியமித்த கட்டினின்றும் நீங்கிவிட்டேன். `ஊழ்வினைகள் வந்து என்னை ஒன்றும் செய்யா` என்பதாம்.) சிவனை அடையும் வழியைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான்செய்யும் செயல்களால் நான் பின்பு நுகரக் கடவனவாகப் புண்ணியமோ, அல்லது பாவமோ எதுவும் முளைக்காதபடி `ஞானம்` என்னும் கூரிய வாளால் அவைகளை அறுத்தெறிந்தேன்ய (`எனக்கு ஆகாமியம் இல்லை` என்றபடி.) என்னை வெளியில் செல்லாதபடி தடுத்து வைத்துள்ள உடம்பாகிய சிறைக் கூடம் இடிந்த பாழாய்விடப் பெற்றேன். ஆகவே, நான் எங்கும் செல்கின்றேன். (கருவிகளின் வயப்பட்ட ஏக தேச நிலை நீங்கி, வியாபகமாகப் பெற்றேன்` என்பதாம்.)

குறிப்புரை :

``நிலை`` என்றது வழியை. கதி - புகலிடம்.
``தொல்லையில் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்,
அல்லொளி புரையும் ஞானத்
தழலுற அழிந்து போமே``*
எனவும்
``ஏன்ற வினை உடலோ டேகும்;இடை யேறும்
தோன்றில், அருளே சுடும்``*
எனவும் கூறுபவ ஆகலான், ``மனம்`` என்று ஞானமேயாதல் அறிக. ``ஞான வாள் ஏந்தும்; ஐயர் நாதப் பறை அறைமின்`` * என்னும் திருவாசகத்தையும் காண்க.
``தண்டா யுதமும்,திரிசூ லமும் விழத்
தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்;செந்தில்
வேலனுக்குத்
தொண்டா கியஎன் அவிரோத ஞானச்
சுடர்வடிவாள்
கண்டா யடா அந்த காவந்து பார்சற்றென்
கைக்கெட்டவே,``
``பட்டிக் கடாவில் வரும் அந்த கா! உனைப்
பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாது விடேன்; வெய்ய
சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெருமான்
திருமுன்பு நின்றேன்;
கட்டிப் புறப்படடா! சத்தி வாள் என்றன்
கையது வே``
என எவ்விடத்தும் ஞானமே வாளாக உருவகிக்கப்படுதலை அறிக. (``சத்தி`` என்பது சிலேடை வகையால், `சத்தி` என்னும் ஆயுதத்தையும், ஞானத்தையும் ஒருங்கே குறித்து நின்றது. சத்தி, முருகனது படைக்கலங்களுள் சிறந்த ஒன்றாதல் தெளிவு.)
புரம் - உடம்பு. முரிந்தேன் - முரிந்ததாகப் பெற்றேன்.
இதனால், மோன சமாதியை எய்தினவர்க்குப பிராரத்தமும் ஆகாமியமும் இலலையாதலும், அதனானே தனு கரண புவன போகங்களாகிய மாயையின் மயக்கம் நிகழாமையும் கூறப்பட்டன. இக்கருத்தினை நாயனார் முன் தந்திரத்தில்.
``தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்;
முன்னை வினையும் முடிச்சை அவிழ்ப்பர்கள்;
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே``
எனக் கூறியருளினார். சஞ்சித சுன்மம் குருவின் திருக்கண் நோக்கத்தால் எரிசேர்ந்த வித்தபுபோல அப்பொழுதே கெட்டொழிந்தது. சஞ்சித கன்மம் நீங்காத வரையில் ஞானம் பிறவாது. ஆகவே, ஞானியர்க்குச் சஞ்சித கன்மம் இல்லை.

பண் :

பாடல் எண் : 6

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும்
நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை :

`கடவுள்` என்பதும், `தெய்வம்` என்பதும் வேறு வேறு. இரண்டும் ஒன்றல்ல. தெய்வம் எழுவகைப் பிறப்புக்களில் ஒரு பிறப்பு வகையைச் சேர்ந்ததது. அது தமிழில் `புத்தேள், அணங்கு` முதலிய பெயர்களால் குறிக்கப்படும்` கடவுள் பிறப்பில்லாது, அனைத்தையும் கடந்த நிற்கும் தனிமுதற் பொருள். கடவும் ஒன்றே; தெய்வங்கள் பல. மக்கள் அவர்தம் மரபுபடியும் விருப்பப்படியும் வேறு வேறு தெய்வங்களை வழிபடுவர். கற்புடை மகளிர் யாவர்க்கும் தெய்வம் கணவனே. கணவன் ஒரு தெய்வத்தை வழிபடுவானாயின் அவனோடு இசைந்த நின்று மனைவியும் அத்தெய்வத்தை வழிபடுவாள் ஆயினும், மனைவிக்கத் தெய்வம் கணவன் தான். இதனையே திருவள்ளுவர் ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்`` எனக் கூறினார். ஆகவே, மகளிர் கணவன் தொழாத தெய்வத்தைத் தாம் விரும்பி வழிபடுதல் குற்றமே யல்லது, கடவுளை வழிபடுதல் குற்றம் அன்றாம். ஏனெனில், கடவுள் யாவராலும் தெழத்தக்கவர்.
`மனைவி தன் கணவனைத் தவிரத் தான் ஒரு தெய்வத்தை வழிபடுதல் குற்றம்` என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. இந் நிலையில், `மனைவி கடவுளைத் தொழலாமா, தொழக்கூடாதா என்னும் வினா, சமண பௌத்த மதங்களில் இல்லை. ஏனெனில் அவை `கடவுள் உண்டு` எனக் கொள்ளவில்லை. கடவுளைக் கொள்ளாத அம்மதங்கள், `தெய்வங்கள் உள` என நம்புகின்றன். ஆகவே, `மனைவி கணவனைத் தவிரப் பிற தெய்வங்களைத் தொழ லாகாது` என மறுப்பதோடு அவை நின்றுவிடுகின்றன. `மனைவி கடவுளைத் தொழுதால் என்ன` என்று வினவினால், `அத்தொழுகை பயனற்ற செயல்` என்பது அம்மதங்களின் முடிவு. `கடவுள் உண்டு` எனக் கொள்கின்ற மதங்கள், `கடவுள் ஒன்றே` என்றும், `அஃது யாவராலும் தொழத் தக்கது` என்றுமே கூறும். தெய்வங்களும் கடவுள் அருளால் சில ஆற்றல்களைப் பெற்று விளங்குதலால் இவ் இடங்களில் `கடவுள்` என உபசரித்துக் கூறப்படும். கடவுள்பொது மக்களால் `தெய்வம்` என்றே` கருதி வழிபடப்பட்டு அவ்வழிபாட்டினை ஏற்று அவர்விருமிபிய பயனைத் தருதல் பற்றி, தெய்வம்` என உபசரித்துக் கூறப்படும். இம்மந்திரத்தில், ``உலகுக்கு ஒரு தெய்வம்` என்றமையால், கடவுளே `தெய்வம்` எனப்பட்டாமை தெளிவாம்.)
``ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்`` என்றது, `கடவுள் பல இல்லை`` ஒன்றே` என்பதைத் தெளிவித்தது. தெய்வங்களை யெல்லாம் `கடவுள்` எனக் கூறி, `அவற்றிடையே உயர்வு தாழ்வுகள் இல்லை` எனக் கொள்வோர், அநேகேசுர வாதிகள்` எனப்படுவர். `கடவுளே இல்லை` என்போர் நிரீச்சுரவாதிகள். அவருள் அநேகேசுர வாதிகள் கொள்கையை மறுத்ததே இதன் முதல் அடி.
அக்கடவுள் உலகுக்கு உயிர்`, அஃதாவது, `எல்லாப் பொருளிலும் எள்ளினுள் எண்ணெய்போல் நிறைந்து அவ்வப் பொருள்களின் தன்மை பயன்படச் செய்வது` என்பதாம். ஒன்றாய கடவுள். இவ்வாறு அனைத்துப் பொருள்களிலும் அது அதுவாய் நிற்றலையே மாணிக்க வாசகர்.
``ஏகன், அநேகன் இறைவனடி வாழ்க`` 8 என அருளிச் செய்தார்.
இந்நிலை `அந்தரியாமித்துவம்` எனப்படும்.
ஒன்றாய், உலகுக்கு உயிராய் உள்ள கடவுள் மந்திரம் `நமச் சிவாய` என்பதே உண்மை. அதன் உண்மைப்பொருளை உணர்ந்து பயில்கின்றவர்கள் கடவுள் இன்பம் கரையின்றி விளைதலைக் காண்பர். ஒரு பழத்தின் இனிமையை அதனைத் தின்று பார்த்தவர் அறிவாரேயன்றி, வாளா காண்பவர் அறியார். அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த இன்பத்தைக் கண்டேன். (பயிலாதவர் அதனை அறிதல் அரிது) ஆகையால், அம்மந்திரத்தை உருவகமாகக் கூறினால், `கிடைத்தற்கரிய தனி ஓர் இனியகனி` என்று கூறலாம்.
[இம்மந்திரம் முடிவான பொருளைக் கூறுதலாலும் அப் பொருளை உள்ளவாறுணர்தல் அரிதாய் இருத்தலாலும் உரை இங்ஙனம் விரித்தெழுதப்பட்டது.]

குறிப்புரை :

`கண்டீர்` முன்றும் முன்னிலையசைகள். `நன்று` என்றது, `பிழையற்றது`; உண்மை என்றபடி `நமச்சிவாய` என்பது ஒரு மந்திரம் - என்பதும், `மந்திரங்கள் எல்லாம் தெய்வங்களைப் பொருளாக உடையன் என்பதும் தெளிவாகலின், `நமச்சிவாயப் பழம் நன்று` என்பது இப்பொருட்டாயிற்று. ``இன்மைச்சிவாய`` என்பதை இன்னகை` என்பது போலக் கொண்டு சந்தி பிரித்துக் காள்க. `நமச்சிவாய இன்பழம்` என மாற்றிக்கொள்.
இதனால், `சிவானந்தப் பேற்றை எய்தினோர் அது நீங்காமைப் பொருட்டுத் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தமக்குரிய முறை யறிந்து ஓதியிருப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சந்திரனும், பாம்பும் பகைப் பொருள்கள்` என்பது புராணக் கொள்கை, அவை யிரண்டையும் சிவன் ஒருங்கே தனது முடியில் அணிந்துள்ளான். இது, `சிவன் உயிர்களை நடுவு நிலையில் நின்றே நோக்கியிருளுவன்` என்னும் குறிப்பையும், `உயிர்கல் அவை சார்ந்துள்ள உடம்பு காரணமாகப் பகைகொள்வனன்றி, இயற்கையில் அவற்றிடைப் பகையேதும் இல்லை என்னும் குறிப்பையும் உடைய தாகும். ஆகவே ``பாம்பும், மதியும் புனலும் தம்மிற் - பகை தீர்த்துடன் வைத்த பண்பா போற்றி``9 என்றது காண்க. இத்தகைய நடுவு நிலைமையும், பேரருளும், ஆதியந்தம் அற்ற நித்தியத் தன்மையும் உடைய சிவன் இனிது விளங்கப் பெற்ற நல்லறிவையுடைய பெரி யோர்க்குத் தியக்கம் (கலக்கம்) தோன்றுமாறில்லை என்பது குறிப்பு.
இதனால், `மோன சமாதி யுற்றார்க்கு நிலைகலங்கும் தன்மை யில்லை` என்பது ஏதுவுடன் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

பொழிப்புரை :

`படைப்புக்காலத்தில் எங்கள் கடவுளாகிய சிவன் அரியை முன்படைத்து, அவன் வழியாக அயனைத் தோற்றுவித்து, படைத்தல், காத்தல்களைச் செய்வித்த, அவர்கள் செயலைக் கண் காணித்துக் கொண்டிருக்கின்றான்` என்று வேதாகமங்கள் கூறுகின்றன. இஃது உண்மையாமாற்றை அறிய மாட்டாதவர் `அரி, அயன்` என்போருள் ஒருவனையே `முதல்வர்` என்றும், `அவர் உள்ளிட்ட பலர் முதல்வர்` என்றும் கூறிப் பிணங்குகின்றனர். தோற்றம் உடையவர்களாய்ச் சிவனின் வேறாகத் தோன்றிச் செயலாற்றுவோர், `நமது தோற்றமும், செயல்களும் சிவனது சங்கற்பத்தால் நிகழ்வன` என்பதை எண்ணாத வேறு நிலை உடையவர்களாய் இருப்பராயின், அவரது நிலைமை, ஒரு முப்பொருளில் ஒரு பகுதி துண்டாகிப் பிரிந்தவழி உளதாகும் பாழ் நிலையையே எய்தும்.

குறிப்புரை :

`காணப்படுகின்ற இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்யும் கடவுளர், அதிகார மூர்தத்களேயன்றி, முதற்கடவுள் அல்லர்` என்பது கடவுட் கொள்கையுடைய வேத மதங்கள் அனைத்திற்கும் ஒத்த முடிவு. `இவர்கள் முதற்கடவுள் அல்லர்` எனவே, `உயிர் வகுக்கதினர்` என்பதும், `மூவகை உயிர்களையும் மும்மலங்களுள் முதல்மலமாகிய ஆணவ மலம் பற்றியே உள்ளது` என்பதும், ஆயினும் அது மிக வன்மையாகப் பற்றியுள்ள உயிர்கள் அது காரணமாக முக்குண வடிவான பிரகிருதி வயப்பட்டு, முதல்வனை உணராமல் மயங்குகின்றன, அதனால் அவை சகல வருக்கத்தின` என்பதும், ஏனை இருவகை உயிர்களையும் ஆணவ மலம் மெய்மையாகவும் மிக மென்மையாகவும் பற்றியிருத்தலால் அவை பிரகிருதி வயப்படாதும், அதனானே முதல்வனை மறவாதும் உள்ளன; அதனால், அவை சகல வருக்கத்தின` என்பதும் சித்தாந்தம். `அரி, அயன்` என்போர்களில் அரி இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து உண்டு வளர்ந்து இன்பத் துன்பங்களை மயங்கினமையும் புராண இதிகாசங்களில் பரக்கக் கேட்கப் படுதலால் அவனை, `சகல வருக்கத்தினன்` எனக் கொள்ளுதலே பொருந்தும். அவன் சகலரே யாதல் சொல்ல வேண்டா. சிவன் இவ்வுலகில் பிறந்தமை ஓரிடத்தும் சொல்லப்படாமையேயன்றி சிவன் பிறப்பிலி` என்பது பலவிடத்து பேசப்படுகின்றது. ஆகவே, அவன் உயிர் வருக்கத்தினன் ஆகாது முதற்கடவுள் ஆகின்றான். நடுவுநின்று ஆராய்வார் இவ்வுண்மையை நன்கு உணரவே செய்வர், ஆயினும் பலர் நடுவு நில்லாது மாறுபடப் பேசுதல் பற்றி, ``எங்கள் ஈசன் கண்டு அங்கு இருக்கும் கருத்து அரிவார் இல்லை` என்றார். கருத்து - உண்மை. ``எங்கள்`` எனத் தம்மோடு உளப்படுத்தியது, பிறப்பின்மையே முதற் கடவுட்கு அடையாளம்` என்பதையும், `சிவன் பிறப்பிலி` என்பதையும் உடன்படுகின்ற பலரையும்.
``மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்;
தென்றலர்தொத் துள்ளார் துணை``
-திருவருட்பயன் - 13.
என்றது காண்க.
`தன்பொருட் டில்லையாயினும் உயிர்கள் பொருட்டாக இப்பரகிருதி உலகத்தில் பிறப்பெடுத்தலும் கடவுளது இயல்பு` எனக் குறின், அது, `முன்னே கடவுளின் இயல்புகள் யாவை` என ஆராய்ந்து வரையறுத்துக்கொண்டு, பின்னே, இவ்வுலகில் சிலரை, `இவர் கடவுளா, உயிர் வருக்கத்தவரா` என ஆராய்ந்து வரையரை செய்யாது, முன்னே சிலரை, `கடவுள்` என முடிவு செய்துகொண்டு, பின்னே `அவரது இயல்பே கடவுளின் இயல்பு` என மாறிக் கூறுவதாக்ம். இது `தலைக்கு ஏற்ப அமைவது தலை` என்பது போலத் தலைகீழபா பாடமாய்விடும். அன்றியும், எவையோ சில காரணங்களால், `பிறத்தலும் கடவுட்கு இயல்பு` எனக் கூறினால், `பிறப்பு இல்லாமையே கடவுள் தன்மை` என்பது நிலையாத ஒன்றாகி, `பிறவாமை` இழிவுடையதாகியும் விடும். அதனால், `எது உயிர்? எது கடவுள்? என ஐயுறுவார்க்கு, அவைகளை அடையாளம் காட்டித் தெளிவுபடுத்தலும் இயலாது. இத்துணை இடர்ப் பாடுகளும் பிறப்புடையாரை, `கடவுள்` என நிறுவ முயல்வதால் உளவாவனவாம். அதனால், உலகில் உயர்ந்தோர் சிலரை. `இவர் தமது தூய தன்மையால் கடவுள் தன்மையை எய்திய பெரியோராவர்` எனக் கூறியமைதலே பொருந்துவது.
மும்மூர்த்திகளில் ஒருவனாகிய உருத்திரன், அம்மூவருள் ஒருவனாயினும் அவன் சிவனை மறந்து செருக்குற்றதாக வரலாறு இல்லை. அதனால், அவன் சகல வருக்கதினனாகச் சொல்லப் படுகின்றான்.
இருமலம் உடையவனர் பிரளயாகலர். ஒருமலம் உடையவர் விஞ்ஞானகலர். இவர்களிலும் அதிகார மூர்த்திகளாய் அமைப்பவர் உளர். அவருள் `உருத்திரர்` எனப்படுவோர் பிரளயாகலர் வருக்கத் தினர். `வித்தியேசுரர்` என்றும், `மந்திரேசுரர்` என்றும் சொல்லப்படுபவர் விஞ்ஞான கலர் வருக்கத்தினர். விஞ்ஞானகலருள் `அணு சதாசிவர்` என நிற்பாரும் உளர் இவ்வாறான அதிகாரமூர்த்திகள் பலர் உளராயினும் சைவ நூல்களுள் அயன், மால் இருவரை மட்டுமே பெரும்பான்மையாக எடுத்துக் கூறுதற்குக் காரணம் அவர்கள் சகல வருக்கத்தினராய் இருத்தலாலேயாம்.
சகல வருக்கத்து ஆன்மாக்களும் அவை செய்த சிவபுண்ணியக் குறைவு மிகுதிகளால், இங்குக் காட்டிய எந்த அதிகார மூர்த்திகளாகவும் ஆதல் கூடும்.
``விறைக்கம லத்தோன் மாலும்
ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி
புண்ணியம் நண்ண லாலே``9
``வித்தைகள், வித்தை யீசர்,
சதாசிவர் என்றி வர்க்கு,
வைத்திடும் பதங்கள், வன்னம்,
புவனங்கள், மந்தி ரங்கள்,
தத்துவம்,சரீரம், போகம்,
கரணங்கள் தாம்எ லாமும்
உய்த்திடும் வயிந்த வந்தான்
உபாதான மாகி நின்றே`` 3
என்பன சிவஞான சித்தி.
காண்டல் - உண்டாக்கல். `அங்கு இருந்ததோர் துண்டின் தூறு ஆண்` என்க. பின் வந்த ``அங்கு`` இரண்டும், பொதுப்படக் குறித்த ஓர் இடத்தில்` எனப் பொருள் தந்தன. `தூறு, பாழ்` என்பன ஒரு பொருட் சொற்கள் ஈற்றில் நின்ற ``அது`` மேற்போந்த வெறுமனம் ஆதலைச் சுட்டு வந்தது.
இதனால், முன் மந்திரத்தில், `என்னை மோன சமாதியில் வைத்தவன் சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரனேயன்றிப் பிறர் அல்லர்` எனக் கூறியது வலியுறுத்தி நிறுவப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து)
அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.

பொழிப்புரை :

இவ்வுலகில் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், எல்லோராலும் அறியப்பட்ட அவ்விருவரும் `யான் பிறக்க வேண்டும்` என்று விரும்பித் தம்முட் கூடியதும், அதனால் யான் பிறந்ததும் உண்மை. ஆயினும் தங்களால் பிறந்த என்னை `யார்` என்று அவர்களில் ஒருவ ரேனும் அறிவாரோ? அறியார். அப்பால் வாழும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது முன்பு அவர்கள் என்னைக் காப்பாற்றியதுபோக அவர்களை யான் காப்பாற்றும் நிலை உண்டாயிற்று.

குறிப்புரை :

`ஆகவே, அவர்கள் எப்பொழுதுமே என்னைக் காப்பவர் ஆவரோ? சிலகாலமே அன்னராவர். என்றுமே என்னைக் காக்கும் அன்னையும், அத்தனும் வேறுனர்` என்பது குறிப்பெச்சம். `அந்த அன்னையும், அத்தனும் யாவர்` என்னும் வினாவிற்கு விடையும் பின்னிரண்டடிகளில் குறிப்பாய் அமைய அவற்றை இரட்டுற மொழிந்தார்.
முத்தி பஞ்சாக்கரத்துள் வகாரம் அன்னை; சிகாரம் அத்தன்; யகாரம் யான்; மூவரும் உடன் இருப்பது முத்து பஞ்சாக்கரம். புரத்தல் - பேணுதல், அது முத்தி பஞ்சாக்கரத்தை அயராது கணித்து அதன் பொருளை உணர்த்திருத்தல். `இதனால் யான் மோன சமாதியில் நிலைத்துள்ளேன்` என்பது கருத்து.
அன்புற்றது, அதன் காரியமும் உடன் தோன்ற நின்றது.
இரண்டாம் அடியில் ``அத்தனும்`` என்பதன்பின் `அவருள்` என்பது வருவிக்க. ஈற்றடியில், `அன்னையையும்` என உருபும், `அத்தனையும்` என உருபும் உம்மையும் விரிக்க.
இதனால், `உடம்பைப் பயந்த தாய் தந்தையார்க்கு மக்கள் கடமைப்பட்டவராயினும், உயிர்க்கு அறிவைப்பயந்து வரும் தாய் தந்தையாரை மறவாது போற்றுதல் அதனினும் பெரியதொரு கட்டுப்பாடு; அதனை மோன சமாதி அடைந்தோரே நிரம்பச் செய்வர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.

பொழிப்புரை :

இம்மந்திரம் சிவனது அருளைப் பெற்றுச் சிவனைச் சார்ந்து நிற்கும் மோன சமாதியினர்க்கு உலகு அனைத்தும் தமது வியாபகத்துள்ளே அடங்கித் தோன்றுதலைச் சில வகைகளால் விளக்கிற்று.

குறிப்புரை :

சுழி - சுழல், இதன்கண் தொகுக்கப்பட்ட துவ் விகுதியை, `சுழல் கொண்டது` என மாற்றி வைத்து உரைக்க. பல சுழல்களைக் கொண்டது கடல். குல வரை - உயர்ந்த மலை. இதனையும், உச்சிக் குலவரை` என மாற்றியுரைக்க. உச்சி - சிகரம், அண்டர் - வானுலகத் தவர். அவர்கட்குத்தலைவர் அண்டத்தலைவர் எண்டிசையோர், திசைக்காவலர், ஆதி - பிரமன். இவரைக் கூறியது உபலக்கணம் ஆதலின் எஞ்சியோரும் எஞ்சிய பொருள்களும் கொள்ளப்படும். சீவத்தன்மை நீங்கிச் சிவமாம் தன்மையடைந்தார்க்கு உலகம் தம்முள் அடங்கித் தோன்றிதற்குச் சான்று, உபநிடங்களில் வாம தேவர் முதலிய முனிவர்கள். ``யானே மனுவாய் இருந்தேன், சூரியனாய் இருந்தேன்``9 என்றாற்போலக் கூறியதாக உள்ள வாக்கியங்களும் சருவஞ்ஞானத் தரத்தில், ``யானே எல்லாமாய் நின்றேனும், எல்லாவற்றையும் கடந்து நின்றேனும்`` என்பனபோல் உள்ள வாக்கியங்களுமாகும். `கொள்` என்பது அடியாகக் `கொண்டனர்` எனவும் `விள்` என்பது அடியாக `விண்டனர்` எனவும் வருதல்போல் `உள்` என்பது வினைப் பகுதியாகாது, பண்புப் பகுதியாகலானும் `மாண்` என்னும் பண்படியாக `மாண்டது` என வருதல்போல, `உள்` என்பது அடியாக ஓரிடத்தும் `உண்டது` என வாராமை யாலும் இஃதோர் அரிய ஆட்சி. `உளராயினர்` என்பது இதன் பொருள். உய்ந்தேன் - பிறவியினின்றும் தப்பினேன். `ஒழி` துணிவுப் பொருள் விகுதி. பின் அதுவும் சேர்ந்து பகுதியாயிற்று.
மோன சமாதி என்றது மீளப் பிறவாமையை, ``வீட்டையடைந்திடுவர் நிட்டை மேவினோர்கள்; மேவாது தப்பினவர் ... ... ... இந்தப் பார்மேல் நாட்டிய நற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் ஞானநிட்டை அடைந்தடைவர் நாதன் தாளே``3 என்னும் சிவஞான சித்தியால் அறிக. [இதன்பின் பதிப்புக்களின் காணப்படும்`` தானே திசையொடு தேவருமாய் நிற்கும்`` என்னும் மந்திரம் இரண்டாம் தந்திரத்தில் `திதி` என்னும் அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 11

நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.

பொழிப்புரை :

ஞான நிட்டையில் நிற்கும் அறிவையுடையார்க்கு அவர்தம் உடல் நீங்கும் காலத்து அதனை நீங்கச் செய்து சிவனே முன் வந்தருளுவான். (ஏனையோர்க்கு யமதூதுவர் வந்து உடலை நீக்கி, உயிர்முன் நிற்றல்போல நில்லார்.) யான் தவத்தால் முன்பே பிறப்பிற்குக் காரணமான வினைகளை யெல்லாம் அருத்தொழித்துச் சிவனை மறவாமையாகிய நிட்டையில் நின்றேன். (ஆகவே, யம தூதுவர் என் முன்வாரார்.) `வந்தாலும், சிவனை உணரும் உணர் வாகிய வாளால் அவர்களை எறிய இயலும்` என்னும் உறுதி யுடையேன். முற்கூறியவாறு சிவன் தான் என்முன் வருவான். வந்தால் அவனுடன் நான் மகிழ்ச்சியோடு செல்வது திண்ணம்.

குறிப்புரை :

ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டிப் பின் அவற்றை முதலில் வைத்து உரைக்க. `தானே எதிராம்` எனப் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. `எதிராரே` என்பது பாடமாயின், `தாம் எதிராரே` என வருதல் வேண்டும். `அதுவும் அவ்வாறு ஆம் `எனில், `நிட்டையுடையார்க்கு மாறாய் முன்னிற்பவர் இலர்; அதனால் அவர்முன் நமன் தூதர் செல்லார்` என உரைக்க. ``நமன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, `வருதல் இல்லை` என்பதையும், சிவன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, வருதல் உறுதி` என்பதையும் குறித்து நின்றன. ஞானம் வாளாதல் மேலேயும் சொல்லப்பட்டது. 9 ``சிவன்வரின் நான் உடன் போவது` என்பதில் வருதல் போதல்கள் இடையீடகல ஒன்றுதலைக் குறித்தது.
பவம் - பிறப்பு. முகந்து வந்த பிராரத்த வினை முடிந்தால், எடுத்த உடம்பு வீழ்ந்துவிடும். அவ்வீழ்ச்சி, மேலும் வினை யுடையார்க்கு `இறப்பு` என்றும், வினையில்லாதார்க்கு `வீடு பேறு` என்றும் சொல்லப்படும். `இறவா நிலை` என்பது முதற்கண் கூறிய வகையில் உடம்பு நீங்காமையாம். ``நமனை அஞ்சோம்`` 3 என்ற அப்பர் திருமொழியும் காண்க. முதல் அடி உயிர் எதுகை பெற்றது.
இதனால் `மோன சமாதியடைந்தார்க்கு உடலை விழ்த்துவது திருவருளேயன்றி, வினைப் பயனை அடைவிக்கின்ற கூற்றுவன் அல்லன்` என்பது கூறப்பட்டது. இது பற்றியே, `ஞானிகளது` உடலை எரிப்படுத்தல் கூடாது` என ஏழாம் தந்திரத்தில் `சமாதிக் கிரியை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.

பொழிப்புரை :

மும்மலங்களையும் நீக்கித் தமது அறிவு சிவனது அறிவே யோகப் பெற்ற ஞானிகள், சீவராகாது, இயல்பாகவே பாசம் இன்மையால் தூயனாய் உள்ள சிவனேயாவர், ஆகையால் அவர்கள் மாயா மலமாகிய உடம்போடு கூடி, உலகில் உலவினாராயினும் அவற்றால் அவர் கட்டுறார். `சிவன் இல்லை` என அழித்துப் பேசுவாரது அழிப்புரையும், சிவனை அடைதற்கு இத்துணை விரைவு ஏன்` என மயக்க உரை கூறுவாரத் ஆரவார உரையும் `இவர்களது உரைகள் யாவும் பாசங்களுள் ஒன்றாகிய சுத்த மாயை அளிவினவே என எண்ணித்தம்பால் அணுகக் காணாதவராவர்.

குறிப்புரை :

முதலடி அவ்வாறு கூறப்பட்தாயினும், அதனை `மலம் மூன்றுஞ் செற்றுச் சித்தம் சிவம் ஆயவர்` என்றதாகவே கொள். ``சித்தம்` என்றது அறிவை. சிலுகு - புன்மொழி. அவை நாத்திகர் பேசும் நாத்திக உரை. கலகம், ``ஆத்தம் ஆனார் அயலார் கூடி நாத்திகமாகப் பேசும்`` மயக்க உரை. சொற்கள் யாவும் சுத்தமாயா காரியமேயாயின் பாசத்திள் நின்று கூறுவாரது சொல் அந்த மாயா நாதமே யாக, திருவருளில் நின்றாரது சொல் அருள் நாதமாம். `அவற்றுள் இங்குக் குறிக்கப்பட்டவர் சொல் மாய நாதமே` என்பதை, ``சத்தம் பரவிந்து மாயை. `சத்தம்` என்னும் வடசொல், `சொல்` என்றே பொருள் தருமாயினும், இங்கு, `வெற்றாரவாரம்` என்னும் நயத்தையும் தோற்றுவித்தது.
பின்னிரண்டடிகளில் வரும்பொருளை நிறுவுதற்கு முன்னிரண்டடிகள் அநுவாதமாய் வந்தன.
இதனால், மோன சமாதி எய்தினோர் அதன் சிறப்பை உணர மாட்டாதார் கூறுவனவற்றிற்குச் செவி கொடார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

பொழிப்புரை :

நினைப்பு, மனம் முதலிய கருவிகள் செயற் படுதலால் நிகழ்வது. மறப்பு, கருவிகள் செயற்படாது ஒடுங்குதலால் நிகழ்வது. கருவிகள் இல்லாத பொழுது அறிவு நிகாழமை ஆணவ மல மறைப்பினாலாம், ஆகவே, ஆணவ மலம் நீங்கினால் கருவிகளால் ஆவதொன்றில்லை. ஆன்ம அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும்; அறியாமையாகாது. இவை ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடி வேண்டாது, எப்பொழுதும் பார்வை நிகழ்வதும் போல்வன வாகும். ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட அறிவு ஒளி குறையாத கண் போல்வது. பெத்தான்மாக்களது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டிருத்தலால் அவ்வறிவு மேற்குறித்த நினைப்பும், மறப்புமாய் நிலைமாறிக் கொண்டேயிருக்கும். முத்தான்மாக்களின் அறிவு ஆணவ மலம் நீங்கப் பெற்றமையால் மாற்றம் இன்றி, அறிவாயே விளங்கும். அதனால் அவைகட்குச் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிறுகும்.

குறிப்புரை :

நினைப்பே சகலம்; மறப்பே கேவலம் இவைகளை, `பகல், இரவு` எனச் சாத்திரங்கள் குறியீட்டுச் சொல்லாற் கூறும். நினைப்பும், மறப்பும் இன்றி அறிவு ஒரே நிலையில் நிற்புது இரவு பகல் அற்ற இடமாகக் கூறப்படும்.
``இரவு பகலில்லா இன்பவெளி யூடே
விரவி விரவிநின் றுந்தீபற;
விரைய விரையநின் றுந்தீபற``9
என்றது திருவுந்தியார்.
இவ்வாற்றால், ``வினைப்பற்றறுக்கும் விமலன், நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சத்து இருக்கும்`` எனவு நினைப்பும் உள்ளவர் நினைப்பினாலே அவனைப்பற்ற முயன்றால் அவன் கிட்டான் ஆதலின், ``அவவைத் தேடி நினைக்கப் பெறில் நீளியன் ஆம்`` என்றும் கூறினார். நீளியன் - சேய்மையன். ``தேடி நினைக்கப் பெறில்`` என்றே கூறஇனாராயினும், `நினைத்துத் தேடப் பெறில்` என்றலே கருத்தென்க. விமலன் - பரிசுத்தன். என்னே, அவன் ஆவண மலத்தில் அகப்பட்டான்` என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் என்க. இனி, `அவன் ஆணவத்தில் அகப்படா னாயினும் வளர்பிறை மதி இருளைச் சிறிது சிறிதாக ஓட்டி வருதல்போல அவன் உயிர்களில் மறைந்து நின்று ஆணவத்தை நீக்கியே வருகின்றான் என்பதை ``வினைப் பற்று அறுக்கும்`` என்பதனால் குறித்தார். `நெஞ்சத்து` என்னும் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது.
இதனால், மோன சமாதி யுற்றார்குச் சிவன் கரவின்றி விளங்குதல் எதுக் காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

பொழிப்புரை :

நான் சிவபெருமானைச் சிவபெருமானாகவே அறிந்து, அப்பெயரையே சொல்லி ``சிவனே, சிவனை என்று ஓலம் இட்டுத் துதிக்க. `அந்த மெய்த்தவத்திற்கும் தலைவனே நான்` என்பான் போல அப்பெருமான் என்முன்னே வந்து நின்றான். இவ்வாறுதன் பெயரைச் சொல்லுவாரிடத்தெல்லாம் உடனே தோன்றுகின்ற அப்பெருமானை, `யார், யார் எவ்வெப்பெயரால் அழைக்கின்றாரோ, அவர் முன்னெல்லாம் அவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் அருளாளன்` எனவும் அறிந்து நான் பணிபவனாயினேன்.

குறிப்புரை :

சிவபெருமானை, `சிவபெருமான்` என்று சொல்பவ ரெல்லாம் அப்பெயரின் பொருளை உணர்ந்து சொல்லாமல், பொதுவாக ஓர் இடுகுறியாகவே நினைத்துச் சொல்கின்றனர். ஆயினும் அப்பெயர், `அமங்கலம்(பிறப்பிறப்பு) ஒருபோதும் இல்லாத நிறைந்த மங்கல குணத்தை யுடையவன்`3 எனவும், பேரின்பத்துக்குக் காரணன்` எனவும், `முற்றுணர்வினன்` எனவும், தூய தன்மையன்` எனவும் l பொருள் தருதலால் `அவ்வெல்லாத் தன்மைகளையுடையவனே அவன்` என உணர்ந்ததையே ``சிவபெருமான் என்று`` என்றார். இதில் `உணர்தல்` என்பது சொல்லெச்சம். தவம், `பொதுத் தவம்` என்றும், `மெய்த் தவம்` என்றும் இருவகைப்படும். பொதுத் தவம் பசு புண்ணியங்கள். மெய்த்தவம் சிவபுண்ணியம், இது சிவஞான போதத்துள், ``இறப்பில் தவம்`` எனப்பட்டது. இவற்றுள் இங்கு, ``தவம்`` என்றது மெய்த் தவத்தை. பின்மூன்று அடிகளிலும் சந்திப் பகர ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப் பட்டது. மூன்றாம் அடியில் அதனுடன், அகரத்தையடுத்து வந்த சந்திரவகர ஒற்றும் தொகுக்கப்பட்டது. ``அவ்வப்பெருமான்`` என்றது, அவரவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் பெருமான் என்றபடி இக்கருத்தே, ``யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்``3 எனக் கூறப்பட்டது. சிவனைச் சிறப்பாகக் குறிக்கும் மற்றைப் பெயர்களுள் `பவன்` என்னும் பெயர் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. `பவன்`` எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால் இவன் எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே``9 என அப்பரும் அருளிச் செய்தார். ``பவன்`` என்பதற்குப் பொருள், `நினைத்த இடத்தில் நினைத்த உடன் தோன்றுபவன்` என்பது ஆகலின், அப்பெயரையே சொல்லி அழைப்பவன்முன் அவன் எதிர்படுதல் உறுதி` என அப்பர் அருளிச்செய்தார். அந்தக் குறிப்பே இங்கு, சிவபெருமானைப் பணிந்து நின்றேன்`` என்பதில் அமைந்திருத்தலை உணர்க. ``நின்றேன்`` என்றது, `இனி நான் வேறொன்றை நினையேன்` என்றவாறுஎனவே இதுவே மோன சமாதியாதலை உணர்க.
இதனால், சிவபெருமானை உள்ளவாறுணர்ந்த அடையவரே மோன சமாதியில் நிற்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

பொழிப்புரை :

முதல்வகட்கெல்லாம் முதல்வனாய் முடிநிலை முதல்வனாயுள்ள சிவனையே நான் முதல்வனாகத் துணிந்தேன். அதனால் அவனையே நான் வணங்கினேன். இனி அவனை வணங்குதலைத் தவிர பிறிதொன்றையும் அவாவ மாட்டேன். அவனையே என்உள்ளத்தில் இருத்தினேன். அதனால், எனது முனைப்பு நீங்கப் பெற்றேன். அவனது உண்மை யியல்புகள் எல்லாம் எனக்கு அனுபவமாயின.

குறிப்புரை :

மோன சமாதி வாய்க்கப் பெறும் வழியையும் அது வாய்க்கப் பெற்றாரது இயல்பையும் தம் அனுபவத்தின்மேல் இட்டுக் கூறியவாறு.
பரம் +அதிபதி =பரமாதிபதி; வடமொழித் தீர்க்க சந்தி அதிபதி - முதல்வன். ``பரமாதிபதியைத் துணிந்து நின்றேன்`` என்பதை முதலிற் கூட்டியும், `ஆதிப் பிரானை உடல் அணிந்து நின்றேன்` என மாற்றி வைத்தும் உரைக்க. அணிதல் - தரித்தல். உள்ளத்தை ``உடல்`` என நாயனார் குறித்தலை மேலேயும் கண்டோம்.* `உடலில்` என ஏழாவது விரிக்க. காண்டல், அனுபவமாக உணர்தல்.

பண் :

பாடல் எண் : 16

என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.

பொழிப்புரை :

எனது நெஞ்சம் சிவனது இரண்டு திருவடிகளையே சார்ந்து, அவற்றையே நினைத்து, அவற்றையே துதித்தலால், எனது பிறவித்தொடர் முடிவடைந்து அற்றொழியும்; இது திண்ணம். இனித் தனக்கு மனம் முதலிய மாயா கருவிகள் ஒன்றும் இல்லாதவனாகிய அவன், இப்பிறப்பிலும் நான் முகந்து கொண்டு வந்த ஊழ்வினையை எனக்கு ஆகாதபடி பிரித்து, எனது உடலுக்கே ஆகும்படி செய் தமையால், எனக்கு இன்பத்தில் மகிழ்ச்சியும், துன்பத்தில் வாட்டமும் ஆகிய முரண்பட்ட நிலைமைகள் இல்லாதபடி அறவே நீக்கிவிட்டான்.

குறிப்புரை :

முன்னம் செய்தல் - நினைத்தல். ஏத்த - ஏத்தலால். ஏத்துதல் வாயின் தொழிலாயினும் அது மனத்தின் வழி இயங்குதல் பற்றி நெஞ்சமே ஏத்துவதாகக் கூறினார். தலைவிதி - ஊழ்; பிராரத்தம். பின்னம் செய்தல் - வேறுபடுத்தல். உடம்பை `யான்` என மயங்குதலும். அதனைப்பற்றிய பொருள்களை `எனது` என மயங்கும் சிவனையே நினைப்பார்க்கு இல்லாமையால் உடலை வந்து பற்றுவ தாகிய ஊழ் அவரைப் பற்றுதலும், அதனால் அவர் மகிழ்ச்சியும், வாட்டமும் அடைதலும் இல்லையாம். இந்நிலையே, `ஞானியர்க்கும் அவர்தம் பிராரத்த வினை உடல் ஊழாய்க் கழியும்` என்று சொல்லப் படுகின்றது. எனவே, இதனால் அணைந்தோரது இத்தன்மைகள் கூறப்பட்டமை காண்க.
``என்னைப் பிணக்கறுத்தான்`` என்பதை, `யானையை அரட்டடக்கினான்` என்பது போலக் கொள்க.

பண் :

பாடல் எண் : 17

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

பொழிப்புரை :

எங்கள் நந்தி பெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கினார். ஆகவே, என் உடம்பு நோய் உறு தலையும், முதுமை எய்தித் தளர்வுறுதலையும் போக்கி `அவை வரும் என்று எண்ணும் எண்ணங்களையும், அஃதாவது கவலையையும் போக்கி, என்னைத் தமக்கு ஆளாகக் கொண்டவராயினார். யானும் தொன்று தொட்டு என்னோடு கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்த வெறுப்பு விருப்புக்களைப் போக்கி, அவரையே சிவமாகக் கண்டு வழிபட்டேன். அதனால் சிவமே என்முன் வந்து நின்றது.

குறிப்புரை :

``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. ``பிணக்கறுத் தான்`` என்பதன்பின் `அதனால்` என்பது வருவிக்க கணக்கு - எண்; எண்ணம். காண், முன்னிலையசை, `என்னை ஆண்டனன்` என முன்னே கூட்டி முடிக்க. ``முன்`` என்பது `முற்றொட்டு` எனப்பொருள் தந்தது. ``துன்பம்`` என்றதனால், `இன்பம்` என்பதும் கொள்ளப்பட்டு, `என்னும்` என ஒரு சொல் வருவித்து, `துன்பம் இன்பம் என்னும் பிணக்கு` என உரைக்கப் பட்டது. `வணங்கல்` என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. தான், அசை, `தானே வந்தது` என்றலும் ஆம்,
இதனால், குருவருளாலே சிவப்பேறு முறையானே வந்து வாய்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு)
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.

பொழிப்புரை :

சிவன் ஒருவனே எனக்குத் தந்தை; குருவாகி வந்து ஆட்கொள்ளும் முதற்கடவுள். அத்தகையோன் முன்பெல்லாம் எனக்கு அகப்படாதிருந்து, இப்பொழுது வந்து என் உள்ளத்திலே அகப்பட்டமை தேவர் கூட்டமும் உடன் வர அவன் பற்றி நின்ற பாசத்தை அரித்தமையாலேயாம்.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முன் வைத்து உரைக்க. உரைக்கவே, முன்னின்ற ``அவன்`` என்னும் சுட்டுப் பெயர் `சிவன்` என்னும் சிறப்புப் பெயராயும் , `சிவன்` என்னும் சிறப்புப் பெயர், அவன் என்னும் சுட்டுப்பெயராயும் நிற்கும். இதனால் சிவன் நந்தி பெருமானாய் நின்று நாயனாரை ஆட்கொண்டதேயன்றி தன் இயற்கை வடிவிலும் காட்சியளித்து அருள்புரிந்தமை பெறப்படுகின்றது. ``ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகின் அளவில்லை``l ஆதலின், `குருவாகி நின்று அருள் செய்தபின்பும் இவர்க்கு இவ்வாறு தோன்றி அருள்புரிவான் ஏன்` என்றும், `இங்ஙனமாயின் ஏனை யோர்க்கும் இவ்வாறு ஏன் அருள் புரிதல் கூடாது` என்றும் அவனை வினாவ நாம் யார்?
`சிவன், தேவர் உடன் கூட வந்து` என மாற்றியுரைக்க, `அகப் பட்ட ஆறு` என்பதில் அகப்பட்டதையே `ஆறு` எனக் கூறினமையின் பெயரெச்சம் தொழிற் பெயரொடு முடிந்ததாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பது போல, `இவன் வாழ்தல், அவனைச் சார்ந்து` என்பது போலத் தொழிற்பெயர் எழுவாய்கள் வினையெச்சப் பயனிலைகளைக் கொண்டு முடிதல் உள ஆகலின், `அகப்பட்ட ஆறு பாசம் அறுத்திட்டு` என முடிந்தது.
இதனால், இயைபு பற்றி நாயனார் தமது தனி அனுபவம் ஒன்றை அருளிச் செய்தார். இதனானே பிறர்க்கும் இது கூடலாம் என்பது உணர்தல் வேண்டி.

பண் :

பாடல் எண் : 19

கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.

பொழிப்புரை :

கருப்பஞ் சாற்றையும், தேனையும் கலந்து உண்டவழி, `அதன் இனிப்பு இத்தகையது` என வரையறுத்துச் சொல்ல வாராமைபோல, `இன்னது` என வரையறுத்துச் சொல்ல வாராத ஓர் இன்பம் இவ்வுடம்பிற்றானே உண்டாகின்றது. (அஃது அரிவையர் இன்பம். அதனால் அதனை மக்கள் பின்னும் வெறாதே விரும்பு கின்றனர்.) ஆயினும், மலரில் மணம் போல அறிவினுள் அறிவாய் எழுகின்றஓர் ஆனந்தம் உண்டு. (அது சிவானந்தம்) அதனை அடையவே உயர்ந்தோர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த ஆனந்தம் அவர்களது முயற்சியால் அவர்கள் அறிவிலே வெளிப்பட, அதனை அவர்கள் நுகர்ந்த பின் அவர்கட்கு மேலே, குறிப்பிட்ட கருப்பஞ்சாறு போன்ற இன்பங்களும் கசந்து விடுகின்றன; ஏதன் போன்ற இன்பங்களும் புளித்துவிடுகின்றன.

குறிப்புரை :

எனவே, `அவை யிரண்டும் கலந்தது போன்ற இன்பமும் அவர் கடுகக் கசப்பும், புளிப்பும் ஆகின்றதேயன்றி, இனிப்பதால் இல்லை` என்பது இசையெச்சம். `இங்ஙனமாகவே அவ்வின்பம் அவர்களால் வெறுக்கப்படுவதாதலைச் சொல்ல வேண்டா` என்பதாம்.
``பெரும்பைம் புனத்தினில் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்,மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்து(து)றக் கைத்ததுவே, 3
என்னும் அனுபவ மொழியை இங்கு எண்ணுக
``கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை தோள்
புணர்ந்தால், புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்,
மணந்தாழ் புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றதே``l
என அருளிச் செய்த திருப்பாட்டிற்கும் உலகத்தாரது பேதைமையைப் புலப்படுக்கு முகத்தால், சிவபோகமே நுகருந் தொறும் நுகருந்தொறும் புதிது புதிதாய் எல்லையின்றி வினைவதாகிய பெரும் போகம் என்னும் உண்மையை உணர்த்தலே கருத்து` என்பதைச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரத்துச் சிற்றுரையால் அறிக.
``பாலொடு தேன்கலந் தற்றே, பணிமொழி
வாலெயி றூறிய நீர்``9
என்னும் திருவள்ளுவப் பயனும் அன்னது.
இதனுள் பாடம்மிக வேறு பட்டதுய ``ஓர் காயத்தில்`` என்பதை முதளிற் கூட்டுக. ``ஓர் காயம்`` என்றாரேனும், இன்பத்தை `ஓர் இன்பம்` என்றலே கருத்து, கலந்தது - கலந்தது போன்றது.
இதன்பின் `உண்டு ஆயினும்` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. `ஆகிய என்னும் ஆக்கச்சொல் உவமை குறித்து நின்றது விரும்புதற்கு எழுவாயும், கைத்தல் புளித்தல்களுக்குக் கோடற் பொருளும் வருவிக்கப்பட்டன.
இதனால், சிவானந்தத்தை நுகர்வார்க்கு ஐம்புல இன்பம் இன்பம் ஆகாது, உவர்ப்பேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளமின்றிக் கருக்கடந் தேனே.

பொழிப்புரை :

வள்ளலாகிய சிசிவபெருமான் முதலில் `சரியை, கிரியை, யோகம்` என்னும் தவ நிலையில் என் உள்ளத்தில் உள்ளப் படும் பொருளாய்ப் பொருந்தி, பின்பு ஞான நிலையில் தனது அருளை வைத்த அந்தப் பயனையே நினைந்து நான் போற்றிக்கொண்டு, என்னால் நிகழ்த்தப்படும் செயல்களையெல்லாம் என் செயலாகக் காணாது அவன் செயலாகவே நான் கண்டுவருதலால், எனக்கெனச் செயலின்றி பிறவியைக் கடந்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

`உள்ளம் ஒட்டியே` என இயைக்க. ஒட்டுதல், உண்மை மாத்திரையால் விளங்குதல், ஆகவே, ``சரியாதி`` என்பதும் சரியை முதலிய மூன்றையே குறித்தன. `அன்பு` எனப் பொருள் தரும் ``அருத்தி`` என்பது இங்கு `அருள்` எனப் பொருள் தந்தது. சிவன் சீவர்களிடத்தில் தான் அவை என்னாது ஒன்றி நிற்றல் அருள் வடி வாயேயாகலின் தம்மிடம் சிவன் அவ்வாறு நின்றமையை, ``அருத்தி வைத்து`` என்றார். அதனானே `அந்நிலை ஞான நிலை`` என்பது போந்தது. `சிவன் தவநிலை அந்நியமாயும், ஞான நிலை அந்நிய மாயும் நின்றான்` என அருளியவாறு ``மீட்டு`` என்பது, வினைமாற் றாய `மற்று` என்பதன் பொருட்டாய் நின்றது. ``வள்ளல்`` என்பதை முதலிற் கூட்டுக. `அருத்தி வைத்த வளமே பாடி` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றிவைத்துரைக்க. நினைவு தோன்றாத வழிப் பாடுதல் தோன்றாமையால் ``பாடி`` எனவே, `நினைந்து` என்பதும் தானே பெறப்பட்டது. ``துருத்தியாய், திருந்தடி உளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந் துரைப்பனே``l என ஆளுடைய பிள்ளையாரும் அருளிச்செய்தார். `மனம், மொழி, மெய்` என்பவற்றுள் மெய்யால் ஆவனவற்றை, கையால் ஆவனவாகவே கூறும் வழக்குப் பற்றி அவற்றை, ``கை வளம்`` என்றும், முப்பொறிகளாலும் வினை வரு மாயினும், வினை பெரும்பான்மை காய்த்தால் வருவனவாகவே கருதப் படுதலால் வினைவாராமையை, ``கைவளம் இன்றி`` எனவும் கூறினார். ``இன்றி`` எனப் பண்பின் நிலை பண்பின்மேல் ஏற்றப் பட்டது. அன்றி, `இன்றாக` எனத் திரிப்பினும் ஆம். இஃது ஈரடி எதுகை பெற்றது. `குறிலை யடுத்த யகர மெய் அசைக்கு ஐகாரம் எதுகையாய் வரும் என்க.
இதனால், மோன சமாதியுற்றார்க்கு அவரது நினைப்பின் தன்மையால் வினை இன்றாமாறும் அதனால் பிறப்பின்றாமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

பொழிப்புரை :

உலகியலிற் செல்லும் செலவிலிருந்து மீண்டவரது உள்ளக் கமலமாகிய தகளியில் ஞானமாகிய விளக்கு அணையாது எரியும் படி, தூண்டா விளக்கின் தகளியில் நெய்யையே, உலகத் தலைவியாகிய ஒப்பற்ற ஒருத்தி எடுத்துவார்க்கும் செயலை முன்சென்று மேற்கொண்டாள், அதனால், அவ்விளக்கின் ஒளி விளக்கத்தில், அனைவரிலும் மாட்சி மிக்கோள் ஒருவனது கை வன்மை இனிது நிகழ்ந்தது.

குறிப்புரை :

`இது குறிப்பிடத்தக்க ஒன்று` என்பது குறிப்பெச்சம். ``அங்கி`` என்றது சுடரை. இது ஞானமே மிக - மிகும்படி, `சோர்வித்தல்` என்னும் பிறவினைத் தொழிற்பெயரில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது. சோர்வித்தல் - சொரிதல்; வார்த்தல். `சோர் வித்தலும்` என்னும் உம்மை சிறப்பு. தூண்டா விளக்காவது மணி விளக்கு. அஃது மாணிக்க மணியே விளக்காக வைக்கப்பட்டு ஒளி தருவது. ``நொந்தா ஒணசுடர்`` என்பேது இதனையே, இதில் மணியே தகளியாகவும், அதன் தன்மையே நெய்யாகவும், அதன் ஒளியே சுடராகவும் இங்குக் கொள்ளப்படுதலின், சிவத்தை அவற்றினுள் தகளியாகவும், அதன் தன்மையாகிய அறிவு அல்லது ஞானத்தை நெய்யாகவும், அருட் சத்தியை உள்ளத் தகழியில் ஞானச் சுடர் அணைந்து விடாதபடி அந்நெய்யை வார்க்கும் பெண்ணாகவும் உருவகித்தார். `புவன சூடாமணி யாகிய ஒருத்தி` என்க. ஞானச் சுடர் ஒளிவிட்டு விளங்கவே, அவ்விளக்கத்தில் சிவத்தின் செயற்பாடு தடையின்றி நிகழ்ந்தது என்பதாம்,
ஞானம் முதலியவற்றைச் சுடர் முதலியவாக உருவகித்து, உள்ள கமலத்தைத் தகளியாக உருலவகம் செய்யாமையால், இஃது ஏகதேச உருவகம். `அங்கு, தூண்டா விளக்கு, தகளி, நெய்` என்பன சிறப்புருவங்கள் யாவரினும் மாட்சிமையுடைய ஒருவன் சிவன். ``கை`` என்பது அதன் செயலைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், முத்தரது அறிவில் அருட்சத்தி மேன்மேற் பதிந்து ஞானத்தை மிகுவித்தலால், அவர்களது அறிவில் சிவ விளக்கம் மிகுந்து, சிவானந்தம் மேன்மேல் விளைவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.

பொழிப்புரை :

`தன்பால் காதல் மிக்க பெண்டினிடம் காதல் மிக்க ஆடவன் அவளது நலத்தை எவ்வாறு கண்டு, கேட்டு உண்டு, உயிர்த்து, உற்று அனுபவிப்பானோ அது போல என்பால் அருள்மிக்க சிவனிடத்தில் நான் அன்பு மிகுந்த அவனது ஆனந்தத்தைப் பல்லாற்றானும் அனுபவிக்கின்றேன் என்பது இம் மந்திரத்தின் திரண்ட பொருள். (திருத்துதல் - தனக்கு ஏற்ற வகையில் கொள்ளுதல். `தானே` என்பது பாடமன்று)

குறிப்புரை :

`அன்பால்` என உருபு விரித்து, `அன்பால் உள் உருகி, என்பும் உருக. அழுவன்;அரற்றுவன் எனவும் `என் பொன் மணியை இறைவனை, ஈசனை இராப் பகல் ஏத்தி, தின்பன் ... நானே எனவும் இயைக்க.
`அன்பே இன்பாவதன்றி, வேறில்லை` என்பதை,
``ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்து
இன்பமே! என்னுடை அன்பே``8
எனவும் `யான் அனுபவிக்கும் இன்பமாவது என்னுடைய அன்பே` என அருளிச் செய்த திருவாசகத்தாலும்,
``இன்பில் இனிதென்றல் இன்றிண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையை அது`` *
என்னும் திருவருட் பயனாலும் அறிக.
``அன்பே சிவமாவது ஆரூம் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே``*
என இந்நாயனாரும் மேலே கூறினார்.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``*
என்றார் தொல்காப்பியனாரும், எனவே அன்பு நிலைதான் இன்ப நிலையேயன்றி, அனபில்லாத நிலை ஒரு வறட்டு நிலையேயாகும்.
இதனைத் திருவள்ளுவர்,
``அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதேதால் போர்த்த உடம்பு`` *
என வேறொரு வகையால் விளக்கினார். இஃதே பற்றி மெய்கண்ட தேவரும், ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``3 என்றார்.
ஞானமாவது, பொருளியல்புகளை உள்ளவாறு உணர்தல், அது, துன்பப் பொருளின் நீங்கி, இன்பப் பொருளைப் பற்றுதற்கு ஏதுவாம், ஆயினும் அதனாலே இன்பப் பொருளை உணர்ந்து பற்றினவன் அதனை மேலும் மேலும் விரும்பிதலாற்றான் அதனது இன்பத்தை அனுபவித்தல் கூடும். அந்த விருப்பமே அன்பு, அது முடிவின்றி வளர்தலாற்றான் இன்பமும் முடிவின்றி வளர்கின்றது. இதனையே ``பெருமபோகம் பின்னும் புதிதாய் ... ... ... வளர்கின்றதே`` என்னும் திருக்கோவையார் விளக்கிற்று.
``அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்,
செறிதொறும் சேயிழை மாட்டு``3
என்றதும் இதனையே. ஆகவே, `ஞானத்தால் அடையத்தக்கது அன்பே` என்பதும், `அந்த அன்பே இன்பத்தை விளைக்கும்` என்பதும் போதரும். இதனையே சேக்கிழார்.
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்`` l
என அருளிச்செய்தார். இவ்வாற்றால், ஞானம் வித்தாக, அன்பே விளைவதால் விளங்கும். வித்தை வேண்டுவது, விளைவின் பொருட்டேயன்றோ! ஆகவே, ஞானத்தை மட்டும் வேண்டு, அன்பை வேண்டாதவர், வித்தை வேண்டி, விளைவை வேண்டாதவர் ஆகின்றனர். இதனைத் திருவிந்தியார்.
``வித்தினைத் தேடி, முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவந் கென்பெணே!உந்தீபற``8
எனக் கூறிற்று. இன்னும் ஞானத்தை வேண்டி, அன்பை வேண்டாத சமயங்களைச் சுட்டி அந்நூல்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவியறாதேயென் றுந்தீபற;
அவ்வுரை கேளாதே; உந்தீபற``8
என்றும் கூறிற்று. இவ்வுந்திகளின் கருத்தைத் திருக்களிற்றுப் படியார்.
``வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்;
வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில், - வித்ததனில்
காணாமை யால்அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால்அற்றார் பேறு`` *
என விளக்கிற்று.
``விறகில் தீயின், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்(டு) உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே`` 3
என்னும் அப்பர் திருமொழியில், ``உறவு`` என்றது, சிவன் சீவர்களோடு அருள் காரணமாகக் கொண்டுள்ள ஆண்டான்
அடிமைத் தொடர்பினை அறியும் அறிவையும், ``உணர்வு`` என்றது, அத்தொடர்பினை அறிந்து, அவனையே விரும்பி, அவனிடத்திற் செலுத்தும் அன்பையும் குறிப்பன. அவற்றுள், அறிவைக் கோலாகவும் அன்பைக் கயிறாகவும் உருவகித்தமையால், `கயிற்றில் வழிக்கோல் இருந்து கடைதல் கூடாமையால் விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படாதவாறுபோல, அறிவாகிய ஞானம் இருந்தும் அன்பு இல்லாவிடில் சிவனிடத்தில் தோய்தல் கூடாமையால், மறைய நின்றிள்ள அவன் முன்னிற்றல் இயலாது` என்பது போவ்தவாறு அறிக. எனவே, இன்ப நிலைக்கு முடிநிலை ஏது அன்பேயாயிற்று.
இதனையே இம்மந்திரத்தால் அனுபவமாகக் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும்,
``மனம்வி ரிந்து குவிந்தது! மாதவ
மனம்வி ரிந்து குவிந்தது வாயு;
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்;
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே``
என்பது யாப்பு, முற்றிலும் வேறுபட்டதுடன், பொருள் சிறப்பிலதாயும். இவ்விடத்திற்கு இயைபில்லாதாயும் இருத்தலின் நாயனாரது வாக்காகத் தோன்றவில்லை.]

பண் :

பாடல் எண் : 1

மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

எத்துணையோ பேர் எத்துணையோ வகையில் காண முயன்றும் காணப்படாது ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவனை, `எப்படியும் கண்டுவிட வேண்டும்` என்று பலர் அவன் ஒளிந்திருக்கும் இடத்தையறியாமல், மனமாகிய நெடுந்தூரம் செல்லத்தக்க தேர்மேல் ஏறிக்கொண்டுச் சென்று வருந்துகின்றார்கள். நானும் அவர்களைப் போலத்தான் எங்கெங்கோ அவனைத் தேடி வருந்தினேன். ஆயினும் நான் `அவன் ஒளிந்திருக்கும் இடம் எனது உடம்பாகிய ஒளியிடந்தான்` என்று தெரிந்து அங்குச் சென்று அவனைக் கண்டு விட்டேன்.

குறிப்புரை :

மாயம் - வஞ்சனை; கள்ளத்தனம். அதனையுடையவன் மாயன். சிவன், பல்லாற்றானும் தேடிய பல்லோர்க்கும் அகப்படாத கள்வன் ஆதலை மாணிக்க வாசகர் தமது திருஅண்டப் பகுதியுள் நூற் றிருபத்து நான்கு முதல் நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்தமை காண்க. தேடுவார் தேடும் பொருளாயிமை பற்றி. ``போயின்`` என்றாரேனும், `இருந்த` என்றலே கருத்தென்க. ``நாடு`` மூன்றனுள் நடுவணது ஒன்றே தன் பொருளைத் தந்தது; ஏனை இரண்டும் `இடம்` என்னும் பொருளவாய் நின்றன. `தேயம் பெருநாடும், நாடு உள்நாடும் ஆம்` என்க. `காய நாடு, மின் நாடு` எனத் தனித் தனி முடிக்க. மின் - ஒளி. `ஞானியரது உடம்பு ஊனுடம்பாகாமல் ஒளியுடம்பாம்` என்பது கொள்கை. ஆகவே, `அஞ்ஞானியரது உடம்பன்றி, ஞானியரது உடம்பே சிவன் இருக்கும் இடம்` என்றற்கு, ``மின் என்றும், ``கண்டறி வார் இல்லை காயத்தில் நந்தியை`` என்று முன்னருங் கூறினார்.1
இதனால், `இத்தோத்திரம் புறக்காட்சித் தோத்திரம் அன்று; அகக் காட்சித் தோத்திரம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.

பொழிப்புரை :

நிலைபெற்ற மலைபோலும் தோற்றத்தை உடையதாய், ஆயினும் மதத்தால் அடங்காது நடக்கும் யானையின் மேல் பலர் இனிய இசைபாடிச் சூழ்ந்து வர இப்பொழுது உலாவரும் அரசர்கள் யாவரெனின், `முற்பிறப்பில் சிவனது ஆயிரம் நாமங்களை எடுத்தோதித் திரித்தவர்` என்றே அவரது பெருமையின் காரணத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

குறிப்புரை :

முன் இயல் காலம் - முற்பிறப்பு. ``என்றே`` என்னும் கோரம் தேற்றம்.
``வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி,
நந்தாவனஞ் சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும்,
சிதவல் சுற்றிக்
கால்நகம் தேயத்திரிந் நிரப்பாரும்
கனக வண்ணப்
பால்நிற நீற்றற்கு அடியரும், அல்லாப்
படிறருமே``
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண்ணாள்வீர்,
பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனொடு
ஒன்றலுற்றீர்,
நலகா மலரால் அருச்சிமின்; நாள்
நரகத்து நிற்கு
அலகா முறுவீர் அரனடி யாரை
அலைமின்களே``1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.
``மத வாரணம்`` என்றது, ஐராவதத்தையும் குறிக்கும் குறிப்பினது.
``வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் (இந்திரன்) இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்``2
``வானம் ஏத்த யான் (மாயோன்) வைகுந்த வாழ்வுபெற்றதுவும்,
ஞான நான்முகன் சத்திய உலகம்நண் ணியதும்,
ஏனை விண்ணவர் தத்தம வாழ்க்கை எய்தியதும்
ஆனுயர்த்தவர் அருட்குறி அருச்சனைப் பயனால்``3
எனக் காஞ்சிப் புராணத்திலும் சொல்லப்பட்டன. நல்வாழ்வு வாழ் வோரைக் கண்டால், ``அஃது அவர் பூசா பலம்`` என்றல் இன்றும் வழக்கில் உள்ளது. ``பாடறிவீரே என்றது, பன்னுவீராயின் நீவிரும் பெருவாழ்வு வாழலாம்` என்றபடி.
இதனால், தோத்திரத்தின் பயன் உணர்த்தும் முகத்தால் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர்
பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.

பொழிப்புரை :

பொன்னின் தராதரத்தை அளத்தற்கு உதவுகின்ற பொன் `ஆணிப் பொன்` எனப்படும். அஃது ஏனை எல்லாப் பொன்னினும் உயர்ந்தது. அதுபோல முத்துக்களின் தராதரத்தை அளக்க உதவுகின்ற முழுதும் `ஆணி முத்து` எனப்படும். அஃது ஏனை எல்லா முத்துக்களினும் உயர்ந்தது. அதுபோலச் சிவன் ஏனைத் தேவர் பலரினும் உயர்ந்தவன். பின் அவன், திருமேனி அழகால் காலையில் தோன்றும் ஞாயிற்றை ஒப்பான்,
``காலையே போன்றிலங்கும் மேனி; கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை; மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு``1
என அம்மையாரும் அருளிச்செய்தார். தேவர் என்று எத்துணைப் பேர் உளரோ அத்துணைப் பேராலும் `இறைவன்` என்று ஏத்தப் படுபவன் அவன்; கருவுற்ற நாள்முதல் இன்றுகாரும் அவன் என்னைப் புரந்து வருதலால் எனக்குத் தந்தை. ஆகவே, அரைக்கணமேனும் அவனை நான் காணமல் எப்படியிருத்தல் கூடும்?
``பாணியில் வீணை பயின்றவர் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே``2
என அப்பரும் அருளிச்செய்தார். அதனால் இவ்வுலக நிலை அவனை இடையறாது காணும் தன்மையுடைத்தாகாமையால் யான் `ஓ` என்று அழைத்து அரற்றிக் கதறுகின்றேன். எனது நிலைமையை அறிந்து கொள்ளாத உலகர், `துன்பத்திற்கு ஏதும் காரணம் இல்லாதிருக்கவும் இப்படி இவன் எப்பொழுது அழுது கொண்டிருக்கின்றான்; இவன் பித்துக் கொள்ளியல்லது வேறு யார்? என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

குறிப்புரை :

`அதற்கு நான் என் கடவேன்` என்பது குறிப்பெச்சம். ``சகம் `பேய்` என்று தம்மைச் சிரிப்ப``3
``உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு `மால்இவன்` என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே``4
என்றார் மாணிக்க வாசகரும்.
இதனால், உடம்பில் நிற்குங்காறும் சிவனது தலைப்பாடு இடையிடும் பொழுதெல்லாம் ஞானிகள் ஆற்றாமையால் அழைத்தும், அலறியும் நிற்றல் கூறப்பட்டது. அழைத்தலே தோத்திரம் ஆதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

பல்வேறு வகைப்பட்ட அறங்களையெல்லாம் தனது வடிவாகக் கொண்டிருத்தலால் `அற ஆழி` எனப்படுபவனும், எல்லா வற்றையும் ஒருங்கேயறிதலால், பேரறிவாளன் - முற்றுணர்வினன்` எனப்படுபவனும், எல்லாப் பொருள்களிலும் தான் நீக்கம் அற நிறைந் திருப்பினும் அங்கெல்லாம் பாலல் நெய்போல விளங்காது நின்று, தன் அடியவர் உள்ளங்களில் தயிரில் நெய்போல விளங்கி நிற்பவனுமாய் இருப்பவன் எங்கள் சிவபெருமான். அவன் என் உள்ளத்திலும் புகுந்துவிட்டமையால் அவனையே தோத்திரித்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஈற்றில் வந்த ``புகுந்து நின்றான்`` என்பது, `புகுந்து நின்ற அவன்` எனப்பொருள் தந்தது. புண்ணிய மூர்த்தி - அற வடிவினன். போது அறிவு - நிரம்பிய அறிவு. புகுதல், விளங் -குதலையே குறித்தது.
இதனால், `சிவன் இத்தன்மையன் ஆகலின் அவனே தோத்திரிக்கப்படுதற்கு உரியவன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

பொழிப்புரை :

பூதக் கண் ஆடி - பூத காரியமாகிய `கண்` என்னும் ஆடி. இஃது உருவகம். இது முகத்தில் உள்ள கண்ணைக் குறித்தது. இக் கண்ணிற்கு அகப்படாதவன் சிவன். ஆயினும், போது - அடியார் களுடைய உள்ளக் கமலத்தில் என்றும் விளங்கியே நிற்கின்றான். வேதக் கண்ணாடி - வேதமாகிய கண்ணாடி. இதுவும் உருவகம். பொருள்களைத் தெளிவுற விளக்குதல் பற்றி வேதத்தைக் கண்ணாடியாக உருவகம் செய்தார். இஃது ஆகமத்தையும் உள்ளடக்கியதே. வேதாகமங்களை உணர்வார்க்குச் சிவன் அந்நூல்களின் பொருளாய், உணர்பவர்க்கு வேறாய் நின்று விளங்குகின்றான். இனி, நீதிக்கண் நாடி நினைவார் மனத்து - ``சிவன் - நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்த தவன்``1 என உணர்ந்து அந்த உணர்வு வடிவாகத் தமது அறிவினுட் காண்பவர் கட்கு அவன் அவர்தம் அறிவுக்கறிவாய், ஒன்றாகியே விளங்கு கின்றான். அத்தகையோனை நான் பலர் பாடும் தோத்திரப் பாடல் -களில் கேட்டுக் கண்ணாடி நிழலைத் தெளிவாக உணர்தல் போல உணர்ந்து நின்றேன். இங்குள்ள கண்ணாடி அதன் நிழலைக் குறித்த ஆகுபெயர். அந்நிழல், தெளிவாக உணரப் படுதற்கு உவமையாயிற்று.

குறிப்புரை :

`அதனால், நானும் அவனைத் தோத்திரித்தலையே மேற்கொண்டேன்` என்பது கருத்து. முதல் மூன்று அடிகள் அவன் தோத்திரிக்கப்படுவதற்கு உரியன ஆதலையும் ஈற்றடி தோத்திரங்களில் அவன் இனிது விளங்கி நிற்றலையும் குறிப்பால் உணர்த்தின. இவையே இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டன என்க.

பண் :

பாடல் எண் : 6

நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

பொழிப்புரை :

`அளவற்ற மந்திரங்களை ஓத வல்லேம்` என்று சொல்லி, வேத வேள்விகளை அளவின்றிச் செய்தோர் யாவரும் அவற்றின் பயனாகிய போகங்களை அனுபவித்தலோடு போய் விட்டார்கள். ஆகவே, சிவனை அவனது அளவற்ற திருப்பெயர்களைச் சொல்லித் தோத்திரியுங்கள்; அளவற்ற இன்பத்தில் பொருந்துவீர்கள்.

குறிப்புரை :

`ஓமம் செய்தவர்கள் பெற்றது காமம்` எனவே, `நாமம் ஓதுவார் பெறுவது மோட்சம்` என்பது பெறப்பட்டது. ``காமம், ஏமம்`` எனவும், `ஒழிந்தார், இசைவீர்` எனவும் கூறிய சொற்குறிப்புக்களால், ஓமத்தை விலக்குதற்கண்ணதே நாயனாரது கருத்தாதல் விளங்கும். ``பசித்துண்டு பின்னும் பசிப்பானையொக்கும் - இசைத்து வருவினையில் இன்பம்``2 என மெய்கண்ட தேவரும் அதனை விலக்குதலையே மேற்கொண்டார்.
``அவிசொரிந் தாயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று``2
என்னும் திருக்குறளும் இக்குறிப்புடைத்து. ``ஆயிரம்`` என்றவை அளவின்மை குறித்து நின்றன.
இதனால், வேள்வி மந்திரங்களை ஓதுதலைவிட, வழி பாட்டுத் தோத்திரம் பயனுடைத்தாதல் கூறப்பட்டது.
[இதன் பதிப்புக்களில் காணப்படும், ``போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை`` என்னும் மந்திரம் நான்காம் தந்திரத்தின் தொடக்கமாய் வந்தது.]1

பண் :

பாடல் எண் : 7

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டவன்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

பொழிப்புரை :

தேவருலகமும் உங்களை வழிபடுமாறு, நீவிர் உங்கள் உடம்பில் உள்ள ஆதார கமலங்களில் மந்திர ரூபமாய் நுணுகிச் சென்று, அவற்றிற்கு அப்பால் நிராதாரம், அதற்கப்பால் மீதானம் ஆகிய இடங்களை அடைந்து அங்கே நின்றுகொண்டு சிவனைப் பல்லாற்றானும் நினையுங்கள். அவ்வாறு நினைகின்றவர்களில் எவனாயினும் ஒருவன் மீண்டு கீழே வருவானாயின், அவன் மயக்கம் தருகின்ற மதுவை நிரம்ப உண்டு, அதன் கீழ்மையை உணர்ந்து வெறுப்படையும் நிலை உண்டாதலும் கூடும்.

குறிப்புரை :

``வானோர் உலகம் வழிபட`` என்பதை இரண்டாம் அடியின் முன்னர்க் கூட்டிப் பின் இரண்டாம் அடியோடு முதலிற் கூட்டி யுரைக்க. நானாவிதம் செய்தல் - பலவகைப்படுத்துதல். அஃதாவது, சிவன், (ஹடயோகம், மந்திரயோகம், ஆதாரயோகம், நிராதார யோகம் முதலியவற்றில் நின்று அருளுமாற்றையெல்லாம் நினைத்து துதித்தல். மீளுதல் யோக நிலையினின்றும் நீங்கி உலகமுகப்படுதல். ``தேன்`` என்றது, மதுவை. `தண்ணீர்` என, நகை தோன்றக் கூறுதல்போலக் கூறிய வஞ்சப்புகழ்ச்சி. ``மீண்டவன் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆம்`` என்றது, `உலக மாயையில் வீழ்ந்து அல்லற்பட்டுப் பின் வெறுத்தலும் கூடும்` என்னும் பொருளைத் தோற்றுவித்தலின், பிறிது மொழிகல். `நிராதார மீதானங்களினின்று மீளுதல் கூடாது` என்பதை இங்ஙனம் கூறினார். `மீட்சியைத் தோத்திரம் விலக்கும்` என்பது இங்குள்ள குறிப்பாகக் கொள்க.
இதனால் தோத்திரம் மீதானத்தில் சென்றோர்க்கும் உரித்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

பொழிப்புரை :

(`தோத்திரம்` என்னும் அதிகாரத்தை முதலில் `தோத்திரத்தின் சிறப்புணர்த்துவது` என்னும் பொருளதாக வைத்து, முன் மந்திரம் வரையில் அதனையே கூறிவந்த நாயனார் தோத்திரத்தைக் கூறுவது` என்னும் பொருளதாக வைத்து, இது முதலாக வரும் மந்திரங்களில் தோத்திரமே செய்கின்றார். `இவ்வாற்றால் பிறரும் தோத்திரம் செய்யப் பயன்படும்` என்பது பற்றி திருவள்ளுவ நாயனாரும், `பெரியாரைப் பிழையாமை` என்ற ஓர் அதிகாரத்தை இரண்டு பொருளதாக வைத்துக் கூறியதைக் காணலாம்.) இவ்வுலகில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற இன்ப ஆரவாரமே யல்லது பிறிதொரு சிறப்பும் இல்லாத விண்ணுலகச் சிற்றின்பத்தை, நூறு பரிமேதங்களை வேதம் நுவன்றவாற்றானே சிறிதும் குறையின்றி வருந்திச் செய்து இந்திர பதவி எய்துவோர் முதலாகப் பலர் மயக்கத்தால் விரும்பினாராயினும் தன் அடியவர்களால் மட்டுமே பெறப்படுகின்ற சிவன் தரும் இன்பமே அவ்விண்ணுலக இன்பங்கட் கெல்லாம் அப்பாற்பட்ட அரிய பெரிய இன்பமாகும்.

குறிப்புரை :

``அந்தம்`` `வெளி` என்னும் பொருட்டாய், யாதும் இன்மையைக் குறித்தது. ``வானம்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்து விளையும் இன்பத்தைக் குறித்தது. இதனை முன்னர், வேண்டுதலுக்குச் செயப்படுபொருளாக்கிப் பின்னர், `அரும்பொருள் அதனின் அப்புறம் ஆம்` என இயைத்துரைக்க. எல்லாம், `பொருள்` எனப்படுதலின், இங்கு இன்பம் ``பொருள்`` எனப்பட்டது. `அடியார்கட்கு வந்து நின்றானது பொருள்` என இயைக்க. வந்து நிற்றல், கிடைத்தல்.
இதனால், சிவன் பிறவிடத்தில்லாத பேரின்பத்தைத் தருதல் எடுத்தோதிப் புகழப்பட்டது.
``செங்க ணவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா``1
என்ற திருவாசகத்தைக் காண்க.

பண் :

பாடல் எண் : 9

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

வானில் தெளிவாய் இருந்த நீர் மண்ணில் வீழ்ந்த வுடன் அம்மண்ணின் தன்மையைப் பெற்றுத் தன் தன்மை திரிந்தது போல, மக்களும் அநாதியே மும்மலச் சார்பினால் அறிவு கலங்கி, வேதாகமங்கள், ``சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை`` என அறுதி யிட்டுரைக்கவும் அதனைத் தெளிய மாட்டாராய், ``அதேவர் தேவர் அவர் தேவர் என்றிங்ஙன் - பொய்த்தேவு பேசிப் புலம்புவார்`` ஆயினர். ஆயினும், பருகுதற்கு உரிய நீராக ஒருவன் குளத்தினின்றும் சிறிது நீரை எடுத்து இல்லத்தில் ஒரு பக்கத்தில் தேற்றாங் கொட்டை யிட்டுத் தெளிய வைப்பதுபோல நல்லாசிரியன் ஓரிடத்திலிருந்து, பல சொல்லி ஆரவாரியாது ஒரு சொல் உறுதியாற் சொல்லித் தெளிவித்த வழி. அங்ஙனம் தெளிவிக்கப்பட்டவன், `சிவனே தெய்வம்` என்று தெளிந்து சிவனை அடைந்து, சிவனே ஆய்விடுவான்.

குறிப்புரை :

எண் - எண்ணம்; என்றது அறிவை. ``இவன்`` எனச் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்வந்தது. ``உண்ணில்`` என்பது, `உண்ண வேண்டின்` என்னும் பொருட்டாய், ``படுத்த`` என்பதனோடு முடிந்தது. `தெண்மையின்` என்பதில் மையீறு தொகுத்தலாயிற்று. தெண்மை - தெளிவு. இன், உவம உருபு. ``படுத்த`` என்பது, `ஆக்க` என்னுப் பொருட்டாகிய செயவெனெச்சம்.
``குருவே சிவம்``2 என்றாராகலின், `சிவன் குருவாய் வந்து பாசத்தை நீக்கி, உண்மையை உணர்த்தாதவழிச் சீவன் சிவனாமாறு இல்லை` என்பதை வலியுறுத்தி முகத்தான் `சிவன் யாண்டும் உள்நின்று உணர்த்தி வருதலே யன்றி முடிவில் குருவாகி வந்து பாசத்தை நீக்கிச் சீவனைத் தானாக்கியும் வைக்கும் கருணையாளன்` என அவனது கைம்மாறு கருதாத கருணையுள்ளத்தை இதனால் புகழ்ந்தார் என்க.
``சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``1
என்னும் திருமுறையால், சிவன் சீவரைத் தானாகச் செய்யும் கருணையையும்,
``சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்வளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு``2
என்னும் சாத்திரத்தால் குருவினாலன்றி மெய்யுணர்வு பிறவாமையையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 10

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

பொழிப்புரை :

சிவன், மெய்த்தவத்தாலன்றிப் பொய்த்தவத்தால் அணுகப்படாதவன்; பிறிதொன்றை விரும்பாது தன்னையே விரும்பு -பவர்கட்கு அங்கை நெல்லிக் கனியென விளங்கி அதனோடேதானும் தூயனாய், அவரையும் தூய்மை செய்து இன்பப் பொருளாயும் இலங்குபவன். ஆகவே, நானும் அவனையே நாடிய காரணத்தால், ``அலையிலாத சாகரம் போலவும், அநிலம் இல்லா விளக்குப் போலவும்`` அலையின்றி அமைதியுற்றேன்.

குறிப்புரை :

சிவ நெறியில் `தவம்` எனப்படுவன சரியை கிரியா யோகங்களே. அவை பயன் கருதிச் செய்யுமிடத்து `உபாயச் சிவ புண்ணியம்` எனப்பட்டு, நேரே ஞானத்திற்குச் சாதனமாகாது, உண்மைச் சிவ புண்ணியம் வழியாகவே ஞானத்திற்குச் சாதனமாம். பயன் கருதாது செய்யப்படும் சரியை முதலியனவே `உண்மைச் சிவ புண்ணியம்` எனப்பட்டு ஞானம் வாயிலாகச் சிவனைக் கூட்டுவிக்கும். அது பற்றியே சிவனை, `மெய்த்தவத்தாலே அடையப் படுவன்` என்றார். பயன் கருதாது செய்யும் சிவ புண்ணியம் மெய்த்தவம். ஆகவே, பயன் கருதிச் செய்யும் சிவ புண்ணியம் பொய்த்தவம் ஆயிற்று.
``கள்ளனேன்`` கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கவித்துப் போக்கி``1
``காமியம் செய்து காலங் கழியாதே``2
``யானே பொய்;என் நெஞ்சும் பொய்; என்
அன்பும் பொய்``3
என்றாற்போல, `கள்ளம், பொய்` என வருவன எல்லாம் பயன் கருதிச் செய்யும் சிவத் தொண்டையும்,
``மெய்கலந்த அன்பர்அன்பு எனக்கும ஆக வேண்டுமே`` 4
``மெய்த்தொண்டர் செல்லும் நெறியறியேன்``5
என்றாற்போல, `மெய்யன்பு, மெய்த்தொண்டு` என வருவன எல்லாம் பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யும் சிவத் தொண்டையும் குறிப்பனவாம். பொய்த் தொண்டர்கட்குச் சிவன் அகப்படாமையை மாணிக்க வாசகர் தமது திருவண்டப்பகுதி நூற்றிருபத்தாறு முதல், நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்துக் கூறி, மெய்த்தொண்டர்களுக்கு அங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதலை, ``தடக்கையின் நெல்லிக் கனி எனக்கு ஆயினன்`` என நூற்றறுபத் -தாறாம் அடியில் விளங்கக் கூறினார்.
நெல்லிக்கனி தூய்மைக்கும் இனிமைக்கும் உவமை. இன்னும் அருநெல்லிக்கனி சாவா மருந்தாதல் அதியமான், ஔவையார் வரலாற்றால் அறியப்படும். கனிந்த நெல்லிக்கனி, தன் உள்ளே யிருக்கும் விதையை ``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``6 இனிது விளக்குதல் பற்றி அஃது இனிது விளங்குதற்கு உவமையாகச் சொல்லப்படும். அக்கனி அகங்கையில் இருந்துவிட்டால், தெளிவு இன்னும் மிகுதியாம். இஃது அதன் தூய்மையாலே நிகழ்வதாம். நெல்லிக்காயைத் தின்றபின் குடிக்கும் தண்ணீரும் இனித்தல் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது. அத்தன் - தந்தை. ``தேவர்கள் அத்தன்`` என்பது, `சிவன்` என்றவாறாய், ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. இங்குச் சிவனது பெருமைகளை எடுத்துக் கூறியது, அவனை நாடியபின் பிறரை நாட வேண்டாமையைக் குறிப்பால் உணர்த்தற்கு. `ஒழி` துணிவுப் பொருண்மை விகுதி.
இதனால், சிவபெருமான் தன்னை அடைந்தவர்க்குக் குறைவிலா இன்பமும், தூய்மையும் உளவாக விளங்கி நிற்கும் தகைமையனாதல் கூறப்புகழ்தல் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

பொழிப்புரை :

இம் மண்ணுலகம் தீக்குணங்கள் பலவும் மூண்டு எரியும் இடம். புண்ணியமே வடிவான சிவன் இதன்கண் தன் திருவடி தோயும்படி எழுந்தருளி வந்து மெய்ந்நெறிப் பொருளை வகை வகையாக வகுத்துத் தெளிவிக்கின்ற குருமூர்த்தியும் ஆவான். அத்தகைய குருவருளால் நான் அளவற்ற புகழையுடைய ஞானத்தைப் பெற்றுவிட்டேன். அதன் கண் எனக்குத் தடுமாற்றம் யாதும் இல்லை. எனவே, யான் அலைவு ஒன்றும் இன்றி, முழு அமைதியை உடையவனாயினேன்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ``அமைந் தொழிந்தேன்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. ``வள்ளலும் ஆம்`` என்றது சிவன் பலர்க்கு அருள்வதைப் பொதுவாக எடுத்துக் கூறியது. உம்மை, சிறப்பு. வகைந்து - வகை செய்து. தாம் குருவருள் பெற்றவாற்றை மேல் பல இடங்களில் கூறினார் ஆகலான் இங்கு அதனைக் கூறாது பயனை மட்டுமே கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், சிவன் குருவாகியும் வந்து அருளும் கருணைத் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று)
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.

பொழிப்புரை :

[தலைவனை, நாடனை, முதல்வனை என வந்த வற்றிற்கு, `இத்தன்மையேனாகிய என்னை` என்பதே கருத்தாகலான், இவை தன்மைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி.]
`ஒப்புயர்வற்ற தலைமையையும், சிற்பர வியோமத்தில் இருக்கும் இருப்பையும், வேதத்தைச் செய்த முதலாசிரியத் தன்மையும் உடையேனாகின்ற என்னை, எனது உண்மையை உணராது, தாங்களையே தலைவர்களாகக் கருதிக் கொண்டு செயற்படுகின்ற மாக்கள் என்று உணர்வார்களோ` என்னும் அருள் நோக்குடன் சிவபெருமான் உயிர்களின் உள்ளத்துள்ளே தோன்றாத் துணையாய் இழிந்து, காலம் வந்தபொழுது தோன்றி ஆட்கொள்கின்றான்.

குறிப்புரை :

கள்ளம் உடையரை, ``பெருமக்கள்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``உடம்போ டுயிரிடை நட்பு``1 என்றது போல. கொல், அசை ``வள்ளல் தலைவன்`` என்பது முதலிய குறிப்பினால், ``ஒளிந்திருந் தானாம்`` என்னும் பயனிலைக்கு. `அவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. என்று இரண்டில் முன்னதை, என்று காண்பர் கொலோ` என மாற்றிவைத்துரைக்க. ஓர் என்றே பாடமாக ஓதுதல் பாடமன்று.
இதனால், சிவன் காலம் வாராத முன்னெல்லாம் தோன்றாத் துணையாயும், காலம் வந்தபொழுது தோன்றி ஆறாம் துணைவனாயும் நிற்கும் கருணைத்திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.

பொழிப்புரை :

[இங்கும் ``கடவுளை`` என வேறுபோலக் கூறப்பட்டதை, `கடவுளாகிய தன்னை` என ஒன்றுபடுத்தி உரைக்க.]

குறிப்புரை :

நாளும் - நாள்தோறும். நன்மை - நன்றிச்செயல். ``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப் - பின்னை மறத்தல் பிழையலது``1 என்றார் மெய்கண்ட தேவர். `நின்றவரது, குரிசிலினது` என ஆறாவது விரிக்க. கோள் - கிரக சாரம். ``கோட்பாலனவும், வினையும் குறுகாமை``2 என்றார் ஞானசம்பந்தரும். குரிசில் - சிவபிரான். அவன் தந்த வாள், ஞானம். ``நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்``3 என முன்னருங் கூறினார் உம்மை, சிறப்பு `மனத்தொடு பொருந்த` என ஒருசொல் வருவிக்க.
இதனால், ஞானம் பெற்றபின்னும் தன்னை வழிபடுவாரைச் சிவன் கைவிடாது காக்கும் கருணை புகழ்ந்து கூறப்பட்டது. ``துறக்குமா சொலப்படாய், துருத்தியாய்``4 என்பதும் ஞானசம்பந்தர் வாக்கு.

பண் :

பாடல் எண் : 14

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும்
வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.

பொழிப்புரை :

``கோழை மிடறாக, கவி கோளும் இலவான``5 நிலைமையை யுடையோரும் முயன்று, ``இசை கூடும் வகையால்``6 சிவனது திருவடிகளை வாழ்த்துபவர்கட்கு அவர்கள், `வீர சுவர்க்க இன்பம் எவ்வாறு உள்ளது` எனக் காண ஒரு கால் விரும்புவாராயின் அத்திருவடிகளே அதுவாய் நின்று அவர்கட்கு அதனைக் காட்டும். அங்கு அவர்கள் செல்ல வேண்டுவதில்லை.
இனிப் பொதுவான சுவர்க்க இன்பத்தைக் காண அவர்கள் அவ்வாற்றான் விரும்புவராயின் அதுவாயும் அத்திருவடிகள் நின்று இனிப்பிக்கும்.
தீர்த்தங்கள் பலவற்றில் சென்று மூழ்க அவர்கள் விரும்பு வராயின் அவையாயும் அத்திருவடிகள் அவர்கட்கு நின்று அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்யும்.

குறிப்புரை :

`இத்துணை ஆற்றல்களையுடையது சிவனது திருவடிகள்` என்றபடி. இதற்கு எடுத்துக்காட்டாக ஞானசம்பந்தர் திருவீழிமிழலையினின்றும் சீகாழிக்குச்செல்ல நினைத்தபொழுது திருவீழிமிழலைக் கோயிலேக் கோயிலாகிக் காட்சியளித்தமை, திருமருகல் கோயிலும் அவ்வாறே திருச்செங்காட்டங்குடிக் கோயிலாகிக் காட்சியளித்தமை, நாவுக்கரசர்க்குத் திருவையாற்றுக் கோயிலே திருக்கயிலையாகிக் காட்சியளித்தமை முதலியனவாம்.
``பொருந்தில்`` என்றதும், `மனம் பொருந்தில்` என்றதேயாம். திருந்துதல் - செந்நெறியிற் செல்லுதல். அதுவும் செல்ல விரும்பு தலையே குறித்தது. ``விரும்பில்`` முதலிய மூன்றும் பெரும்பான்மை விரும்பாமையைக் குறித்து நின்றது. `வருந்தியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அவன் `பண்டறி சுட்டு`.
இதனால், சிவனது திருவடிகளைத் தோத்திரிப்பார்க்கு அவை அவர் வேண்டும் பொருள் அனைத்துமாகிப் பயன் தரும் சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

பொழிப்புரை :

ஞானாசிரியன் தனது ஞானத்தால் அண்டங் கடந்த பொருளாய் உள்ளான். அவன் இவ்வுலகத்தில் இருப்பினும் ஏனையோர் போல `யான், எனது` என்னும் பற்றுடையவன் ஆகாது, பற்றற்றுத் தூயனாய் இருக்கின்றான். அவன் தந்த மலைவாழைக் கனியை நுகர்ந் -தமையால், நான் என்னுள்ளே ஊறுகின்ற அமுதமாயும், ஒளியாயும் உள்ள அம்மெய்ப் பொருளைப் பற்றி அசைவின்றி நிற்கின்றேன்.

குறிப்புரை :

``போதகன்`` என்பதை முதலிற் கொள்க. போதகன், இங்கு ஞான போதகன், கானக வாழைக் கனி, இனிமைக்கு ஒன்றனை எடுத்துக் கூறியவாறு. பானகம் - இனிப்புடைய நீர்ப் பொருள். அஃது இங்கு அமுதத்தைக் குறித்தது. தனி - தனிமை. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது.
இதனால், சிவன் அவன் தானாகும்படி ஆவேசித்து அருளும் ஆன்ம சைதன்னியததின் சிறப்புக் கூறும் முகத்தால், அத்தன்மைத்தாகிய சைதன்னியத்திலன்றி ஆவேசியாத அவனது மாண்பு புகழ்ந்து கூறப்பட்டது.
``நம்செய லற்று,இந்த நாம்அற்றபின் நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற;
தன்னையே தந்தான்என் றுந்தீபற``1
என்னும் திருவுந்தியாரையும் காண்க.

பண் :

பாடல் எண் : 16

விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.

பொழிப்புரை :

ஓர் அறிவு எனது அறிவைத் தன்னுள் விட்டது. அஃது எல்லாப் பொருள்கட்கும் அதுவது இயங்குதற்குரிய நெறி முறைகளை வகுப்பது. சுவர்க்க லோகத்தில் வாழும் அமரர்கட்கு மேலான அமரர்கள் வாழ்கின்ற அந்த உலகத்தில் அஃது உள்ளது. அதன் சடை முடியில் வேகமாகப் பரந்து பாய்கின்ற வெள்ள நீர் அடங்கிக் கிடக்கின்றது. யார் யார் எந்த எந்த பெயரைச் சொல்லிப் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளையெல்லாம் உண்மையில் தன்னுடையனவாகவே உடையது. அது பழவினையாகிய கட்டினை ஆசானைக் கொண்டு அறுப்பிக்கும். கடைசியாக எல்லாப் பொருட்கும் அதுவே புகலிடமாய் உள்ளது.

குறிப்புரை :

``மதியது வவ்விட்டது`` என்பதை முதலிற் கொள்க. ``மதியது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `வவ்வியது` என்பது, ``வவ்வியிட்டது`` என, `இடு` என்னும் அசைச்சொல்லோடு வந்து, இகரம் தொகுக்கப்பெற்றது. ``வவ்வியிட்டது`` என்னும் வினைப் பெயரே மேல் வந்த பயனிலைகளுக்கெல்லாம் எழுவா யாயிற்று. `மதியை வவ்வியது` என்றதனால் அதுவும் மதியாதல் பெறப் பட்டது. ``விதியது`` என்றது, `விதியை வகுக்கும் ஆற்றலுடையது` என்றவாறு. மேலை அமரர் சுத்த மாயா புவனங்களில் வாழ்வோர். பாய்புனற் கங்கையை உடைமை கூறியது. இங்குச் சொல்லப்பட்ட பெருமைகளையெல்லாம் உடைய அந்தப் பெரும்பொருள் இவ்வுலகத்தில் வெளிப்படும்பொழுது இவ்வுருவுடையதாய்த்தான் வெளிப்படும்` என்பது உணர்த்தற்கு.
``அண்டம் ஆரிரு ளூடுகடந் தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்? அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``1
என்னும் அப்பர் திருமொழியைக் காண்க. உம்மை, `பதயதேயன்றி` என இறந்தது தழுவிநின்றது. ``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்`` என்னும் முறைமையால் துதிப்பார் துதிக்கும் துதிகள் யாவும் சிவனுடைய துதிகளேயாதல் அறிக.
``எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர்
என்பதே வேதநூல் துணிபு``
என்பது சிவஞான மாபாடியம்.2

பண் :

பாடல் எண் : 17

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.

பொழிப்புரை :

மேலே உள்ள வானத்தில் வாழ்பவரும் கீழே உள்ள நிலத்தில் வாழும் பெருந்தவத்தோரும் தவம் இன்மையால் துன்புறுகின்ற உலகரும் ஆகிய அனைவர்க்கும் வெளித்தோன்றாது புதைந்துள்ளது ஒரு பெருநிதி. அது வில்வமாலை மணக்கும் சடையை உடையது. எங்கட்கு ஆவனவற்றையெல்லாம் அது தானாகவே செய்யும். அதுவே எங்கட்கு அரிய உயிர்.

குறிப்புரை :

``மேலது`` என்பது ``வான்`` என்பதனோடே முடிந்தது. முதற்கண் நின்ற ``கீழது`` என்பது கீழ் உள்ளதாகிய நிலத்தைக் குறித்தது. கீழ்தன்கண் உள்ள மாதவர், மானுடர்` என்க. தான், அசை, `வானவர், மாதவர், மானுடர்` என்னும் செவ்வெண்ணிற்குரிய தொகைப் பொருட்டாகிய `யாவரும்` என்பதனோடு, `யாவர்க்கும் என உருபும் விரிக்க. பின் வந்த ``கீழது`` என்பது `மறைந்துள்ளது` என்னும் பொருட்டு. கான் - மணம். இதன்பின் வந்த `அது` என்பது பகுதிப்பொருள் விகுதி. கூவிள மாலை கான கமழ் சடை` என மாற்றியுரைக்க. `சடைத்து என்னும் துவ்விகுதி தொகுக்கப்பட்டது. இவ்வாறன்றி, `சடையொடு` என உருபு விரித்து, அவனை, ``செய்யும்`` என்பதனோடு முடிப்பினும் ஆம். மூன்றாம் அடிக்கு, முன் மந்திரத்தில் இரண்டாம் அடிக்கு உரைத்தது. ``ஆனது தானே`` செய்யும்` என இயைக்க. முதலடி `எதுகை யின்றி, முரண் தொடை நயமே பெற்று வந்தது.
இதனால், சிவன் தன் அடியார்க்கே ``எய்ப்பினில் வைப்பாய்``1 அவர்க்கு ஆவனவற்றைத் தானே செய்து, அவர்கட்கு உயிர்போலச் சிறந்து சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
ஆழும் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.

பொழிப்புரை :

`நஞ்சத்தை உண்டமையால் கருமை நிறம் பெற்ற கண்டத்தை உடையவன்` எனச் சொல்லப்படுகின்ற அந்தச் சிவனையே கருமை நிறம் பொருந்திய கடல் சூழ்ந்து நிற்கின்றது என்றது, `நில உலகச் சிவன் கறைமிடற்றண்ணல்` என்றபடி. இவன், `சீகண்ட பரம சிவன்` எனப்படுவான். `பிரமாண்டம்` எனப் பெயர் பெற்ற இந்த அண்டத்தில் உள்ள, கீழ் ஏழ், மேல் ஏழ் ஆகிய பதினான்கு உலகங்கட்கும் இவனே மகேசுரன்; பிறப்பிறப்பில்லாத பரமசிவன். ஆழ்ந்த சுனைகளையும், காடுகளையும் உடைய கயிலாய மலையில் இவன் எழுந்தருளியிருக்கின்றான். மேலும் இவ்வுலகில் உள்ளார் ஓதும் திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு முதல்வனும் இவனே.

குறிப்புரை :

சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற ஒரு தலையாய பொருளை நாயனார் `தோத்திரம்` என்னும் இவ்வதிகாரத்தில் இம் மந்திரத்திற் கூறினார். அஃதாவது, `சுத்தம் மிச்சிரம், அசுத்தம்` என்னும் மூவகை உலகங்கள் முறையே `விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர்` என்னும் மூவகை உயிர்கட்கு உரியனவாய் உள்ளன. அவற்றுள் சுத்த உலகத்திற்குச் சிவனே நேராய்த் தலைவனாய் இருக்கின்றான். அவ்விடத்து அவன் `அருவம், அருஉருவம், உருவம்` என்னும் திருமேனிகளைக் கொண்டிருக்கின்றான். அருவத்திருமேனியில் `சிவன்` என்றும், அருஉருவத் திருமேனியில் `சதாசிவன்` என்றும், உருவத்திருமேனியில் `மகேசுரன்` என்றும் பெயர் பெறுகின்றான். இம்மூவகைப் பேதங்களும், `சம்பு பட்சம்` எனப்படும். மிச்சிர உலகத்திற்கு, விஞ்ஞானகலருள் பக்குவன் பெற்றுச் சுத்த வித்தையில் சிவனது அருளைப் பெற்று வைகும் அட்ட வித்தியேசுரர்களில் முதல்வ ராகிய அனந்த தேவரே தலைவராய் உள்ளார். அசுத்த உலகத்திற்குப் பிரளயாகலருட் பக்குவம் பெற்றுக் குண தத்துவத்தில் சிவனது அருளைப் பெற்று வைகும் சீகண்ட உருத்திரரே தலைவராய் உள்ளார் என்பது, இவ்விருவரும் உருவம் ஒன்றையே உடையர். `அணு பட்சத்தினர்` எனப்படுவர். சிவனது அருளால் மலம் நீங்கப் பெற்று ஞானத்தை அடைந்திருத்தலால், இவர்கள் அவனது முற்றுணர்வு முதலிய எண்குணங்களைப் பெற்று நிற்கின்றனர்.
இதனால், சிவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி அனைத்தையும் செய்பவனாகின்ற மாட்சிமை புகழ்ந்து கூறப்பட்டது.
சீகண்டர் குண தத்துவத்தில் இருப்பவராயினும் அவரது வியாபகம் ஆன்ம தத்துவம் முழுவதிலும் இருத்தலால், கீழ்த் தத்துவமாகிய பிருதிவி உலகத்தில் இங்குள்ள உயிர்களின் பொருட்டுக் கயிலாய மலையில் எழுந்தருளியிருக்கின்றார். இஃது பற்றி இவருக்குரிய குண தத்துவம் `மகா கயிலாசம்` எனப்படுகின்றது. `பிருதிவி தத்துவ உலகத்திற்கு இவரே சிவனாய் உள்ளார்` என்பதையே நாயனார் இம்மந்திரத்து இரண்டாம் அடியால் வலியுறுத்தினார். இவர் அணுபட்சத்தினராயினும் இவர் செய்வன வற்றை எல்லாம் தற்போதத்தின்வழிச் செய்யாது, சிவபோதத்தின் வழியே செய்தலால் அச்செயல்கள் அனைத்தும் சிவன் செயலே ஆகின்றன. இதனைச் சிவஞான சித்தியார், வேதத்துள் சிவனைப் பற்றிச் சொல்லப்பட்ட, `விசுவாதிகள், விசுவ காரணன், விசுவத்திற்கு அந்தரியாமி, விசுவரூபி` என்னும் பெயர்கள் ஆதலை நிறுவும் சான்று களாக இந்நில உலகத்தில் சீகண்ட உருத்திரர் பால் நிகழ்ந்த செயல் களையே எடுத்துக் காட்டிற்று. [சுபக்கம் - சூ - 1]. அது பற்றிச் சிவஞான யோகிகள் இவ்விடத்தில்,
``சீகண்ட ருத்திரர்க்குரிய வடிவங்களும்,
பெயர்களும், தொழில்களும் முதல்வனுக்கும்
ஒப்ப உள - என்பது வாயுசங்கிதையுட்
கூறப்படுதலின், ஈண்டுக் கூறியன
எல்லாம் முதல்வனுக்கு உரியனவேயாம்
எனக் கொள்க``
எனவும்,
``அற்றாகலின்றே ஈண்டுக் கூறிய
வடிவங்க ளெல்லாம் மாகேசுரமூர்த்தம்
இருபத்தைந்தனுள் வைத்தெண்ணப்பட்டன
என்பது``
எனவும் உரைத்தார். எனினும் சிவன் சருவ வியாபியாதலானும் அவன் எதனுள் நிற்பினும் அதன் தன்மை தனக்கு எய்தான் ஆகலானும் `அவன் இவ்வுலகத் தொடர்புடையன் அல்லன்` என்றோ, `ஈண்டுள்ளார்க்கு` அவன் காட்சி வழங்குதல் இல்லை` என்றோ கொள்ளுதல் கூடாதாம்.
உலகப் பயன் வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்பவர்கட்கெல்லாம் சீகண்ட உருத்திரரே தோன்றிப் பயன் கொடுத்தலைக் கந்தபுராணம் முதலிய பல புராணங்களாலும், இதி காசங்களாலும் உணரலாம். ஞானத்தைச் சிவன் சீகண்டர் வழியாகவும் அருளலாம்; தான் நேர் நின்றும் அருளலாம். இதனை, `சகல வருக்கத்தினர்க் கெல்லாம் ஞானத்தைச் சிவன் குரு மூர்த்திகளை ஆவேசித்து நின்று அருளுவான்` என்பதே பெரும்பான்மை பற்றிய விதியாய் இருப்பினும், வாதவூரடிகட்குச் சிவன், தானே குருவாகி வந்து ஞானத்தை வழங்கினமை கொண்டு அறிக. சீவன் தானை குருவாகி வந்து அருள்செய்த அந்த அருமையைத்தான் வாதவூரடிகள் பல விடத்திலும் பெரிதும் போற்றிப் புகழ்கின்றார்.
``அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``1
``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி!2
``பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க;
கண்ணால் யானும கண்டேன் காண்க``3
``புவனியிற் சேவடி தீண்டினன் காண்க;
சிவன்என யானும் தேறினன் காண்க;
அவன்எனை ஆட்கொண்டருளினன் காண்க``4
என்னும் திருவாக்குக்களைக் காண்க.
`அங்ஙனமாயின், வாதவூரடிகட்கு அருள்புரிந்த குரு சிவனே` என்பது தெளியப்படுதல் எவ்வாறு` எனின்` அடிகட்கு அருள்புரிந்த குரு நெடுநாள் இங்கில்லாமல் உடன் வந்த அடியவர்களோடும் விரைந்து திருவுருத் தோன்றாமல் மறைந்தமையால் தெற்றென விளங்கும் பலரை மாணாக்கராகக் கொண்டு ஞானத்தை அருளிய குருமூர்த்திகள் பலர் எங்கே, எப்பொழுது, எந்தப் பெற்றோருக்குப் புதல்வராய்த் தோன்றினர்? எப்படி வளர்ந்தார்? எப்படி ஞானம் பெற்றார்? என்பன பற்றிய வரலாறுகள் உள. அத்தகைய வரலாறு மாணிக்கவாசகருக்கு அருள்புரிந்த குருவுக்கு இல்லை. மற்றவர்களெல்லம் மாணாக்கர்க்கு ஞானத்தை உபதேசிப்பது மட்டுமன்று; பல காலம் உடன் இருந்து சிந்திப்பித்து தெளிவித்து, நிட்டை கூடுவித்து, பின்னும் அதிலே நிற்குமாறு நிறுத்தி இவ்வாறெல்லாம் அருள்புரிந்து, உடன் இருப்பர். உடம்பினால் அவரெல்லாம் நம்மனோருட் சிலரே. ஞானத்தினாலும் சிவனது திருவருளாலுமே அவர்கள் சிவமாகின்றனர். மாணிக்க -வாசகருக்கு அருள்புரிந்த குரு அவ்வாறெல்லாம் இல்லாது விரைய மறைந்தமையால் அவர் சிவனே யன்றி வேறல்லராதல் தெளிவு.
``... ... உன்தா ளிணை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார்;
புறமே போந்தேன் யான்``
``சிவமா நகர் குறுகப் - போனார் அடியார்;
யானும் பொய்யும் புறமே போந்தோமே``1
``உடையானே! நின்றனை உள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார், உடையாய் நின்பாதம்
சேரக்கண்டு இங்கு ஊர்நாயிற்
கடையானேன், நெஞ்சு உருகாதேன்
கல்லாம் மனத்தேன், கசியாதேன்,
முடையார் புழுக்கூடு இத காத்து,
இங்கு இருப்பதாக முடித்தாயே``2
என்றாற்போல் அடிகள் அருளிச்செய்த குறிப்புக்கள் பலவும் அவரை ஆட்கொண்ட குருமூர்த்தி அவருடன் பலநாள் இல்லாது விரைய மறைந்தமையைத் தெரிவிக்கின்றன. ஆகவே அவரை சிவனே` எனக்கொள்ளுதற்கு ஐயுறவு யாது மில்லையாம்.
மூவர் முதலிகளுள் சுந்தரரையே சேக்கிழார் கயிலாயம் சென்றதாகக் கூறினார்.
``மன்னும் வன்றொண்டர் ஆலால சுந்தரராகித்
தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்``1
என்னும் அடிகளால் `அவர்` முன்பு விட்டு வந்த பதவியிலே மீண்டும் சென்று அமர்ந்தார் என்றார். அப்பரும், சம்பந்தரும் சாயுச்சிய பரமுத்தியையே அடைந்ததாகவே கூறினார். இத்தகைய ஞானச் செய்திகள் எல்லாம்,
``ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்
கேட்பான் புகின் அளவில்லை; கிளக்கவேண்டா;
... ... எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றினை கேட்க, தக்கார்``2
என அருளிச் செய்ததில் சேர்வனவாம்.
சீகண்ட உருத்திரரை நஞ்சுண்ட கண்டராகக் கூறுதல், `அசுத்த உலகத்தில் தங்கு தருவனவாய் உள்ளவற்றையும் நன்மை தருவன வாக்கும் ஆற்றலுடையார்` என்பதைக் குறிப்பால் உணர்த்தற் பொருட்டேயாம். உருத்திரருள், `சீகண்ட உருத்திரர்` என இவர் விசேடித்துச் சொல்லப்படுதற்கும் இதுவே காரணம். இங்ஙனமாகவும் மகேசுரருக்கும் கறைக் கண்டம், அல்லது நீல கண்டம் சொல்லப் படுதல். இவருடைய செயல்கள் எல்லாம் அவருடைய செயல்களே` என ஒற்றுமை யுணர்த்தற் பொருட்டாம்.
`நஞ்சுண்ட கண்டனைக் கருங்கடல் சூழும் என மாற்றியுரைக்க. இது, `மண்ணுலகம் இவரையே முதல்வராகக் கொண்டுள்ளது` என்னும் குறிப்பினதாம். `சுனையையும், அடவியையும் உடைய அங்கு` என்க.
இதனால், இவ்வுலகத்தார் சொல்லும் தோத்திரங்களின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை
அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும்
நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல்
செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்கட்கும் முதலாயுள்ள சிவன் நிலம், நீர், தீ, காற்று, வானம், ஞாயிறு, திங்கள் என்னும் பொருள்களாக அவற்றுடன் ஒன்றாய்க் கலந்திருத்தலால், எல்லா உயிர்களும் அவனேயாய், அவை செல்லும் நெறிகளிலும் அவற்றோடு உடனாய் உதவி புரிந்து எண்திசைக் காவலர்கட்கும் தலைவனாய், உலக முதல்வன் ஆயினான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி நிலம் முதலியன முறையின்றி, ஏற்ற பெற்றியில் வைக்கப்பட்டன. கதிர் முதலிய பிறவற்றிலும் இரண்டன் உருபு விரிக்க. நிலவு - சந்திரன். முகில், இங்கு ஆகுபெயராய், வானத்தை உணர்த்திற்று. ``உலகம்`` என்றது உயிர்த் தொகுதியை. அது, பகுதிப்பொருள் விகுதி. ஒத்தல், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நிற்றல். `அமர் தேவர்` என இயையும். `ஆதிப் பிரான் ஒத்து, ஒத்துப் பிரான் ஆயினான்` என வினை முடிக்க. `உலகு` நிலம் முதலிய எட்டுக் கூறுகளாய் அடங்குதலாலும், அவ் எட்டுக் கூறுகளிலும் நிறைந்து அவற்றை இயக்குதலாலும் சிவன் உலக முதல்வனாயினான்` என அவனது பெருமையை விளக்கியவாறு. ``ஆதிப்பிரானும்`` என்னும் உம்மை. அசைநிலை. இறுதியில் `ஆயினான்` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. எண் திசைக் காவலர்களுக்குப் பிரான் ஆயினமை கூறும் முகத்தால் உலக முதல்வன் ஆயினமை குறித்தவாறு.
இதனால், சீவன் அட்ட மூர்த்தியாம் சிறப்பினால் உலக முதல்வன் ஆயினமை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறித் தங்குளன் மாருதத் தீசன்
பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.

பொழிப்புரை :

தீக்குத் தலைவனாகிய தீக் கடவுள், கதிர்க்குத் தலைவனாகிய கதிர்க் கடவுள். மதிக்குத் தலைவனாகிய மதிக்கடவுள், மற்றும் காற்றிற்குத் தலைவனாகிய காற்றுக் கடவுள் ஆகியோரும், நிலத்திற்குத் தலைவியாகிய நிலமகள், `எல்லாப் பொருள்களையும் தாங்கும் திண்மையை எனக்கு அருளியவன் சிவன்` என்னும் உண்மை யுணர்வோடே எல்லாவற்றையும் தாங்குதல் போலவே`` தாம் தாம் தீ முதலாக மேற்கூறியவற்றிற்குத் தலைவராய் இருந்து, அவற்றின் செயல்களைச் செய்வித்து வருகின்றனர்.

குறிப்புரை :

`எல்லாக் கடவுளரும் சிவனது முதன்மையை உணரும் உண்மை ஞானத்தாலே தம் தம் அதிகாரத்தை நடத்தி வருகின்றனர்` என்பதை உடம்பொடு புணர்த்தலாக நிலமகள் மேல் வைத்து, வேறு எடுத்துக் கூறினார். அட்ட மூர்த்தத்தில் இயமானன் தவிர ஏனை ஏழும் சடப்பொருள்கள். அவற்றுள், `நிலம், நீர், வானம்` என்னும் மூன்றிற்கும், `நிலமகள், நீர் மகள், வான் மகள்` எனப் பெண்மையர் முதல்வராகவும், `முச்சுடர், காற்று` என்னும் ஏனை நான்கிற்கும் ஆண்மையர் முதல்வராகவும் கூறப்படுதலின் அவருள் பெண்மையர்களில் நிலமகளை எடுத்துக் கூறி, ஏனை இருவரையும் உபலக்கணத்தால் தழுவினார்.
முச்சுடர்களை முதலிற் கூறுதல் கருத்தாகலின் பரிசறிந் தங்குளன் மாமதி என்பதை, ``அருக்கன் உளன்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. முதற்கண் உள்ள, ``பரிசறிந்தங்குளன்`` என்பதை ``அருக்கன்`` என்பதற்கு முன்னும் கூட்டுக. ``அருக்கன் ஈசன்`` என்பவற்றோடு இயைய, `அங்கி, மதி` என்றவற்றையும் `அங்கியன், மதியன்` என ஆடுவறி சொற்களாக்குக. அல் நிலம் - இவர்கள் அல்லாத நிலம். ``நிலம்`` என்றது நிலமகளையே. `பரித்தல்` என்பது முதல் நீண்டு வந்தது. பரித்தல் - தாங்குதல். `அல் நிலம், ஞானப் பரிசு அறிந்து பரிக்குமாறே, ஏனை அங்கியன் முதலியோரும் அங்கங்கு உளர் என்பது இம்மந்திரத்தின் சொற்சுருக்கம். அங்கு என்றது, `அவற்றை இயக்கி நிற்கின்றனர், என்றபடி. சிவனே எல்லாப் பொருள் கட்கும் அதுவதற்குரிய ஆற்றலைத் தந்தருளினானஅ` என்பதை,
``அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன், பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கம் கண்டோன், நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் - என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத்து அவ்வயின் அடைத்தோன்`` -திருவண்டப் பகுதி, 20-28.
என்னும் திருவாசகத்தால் உணர்க. இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால், `தேவர் யாவரும் சிவனது ஆணையால் சிற்சில அதி காரங்களைப் பெற்று அவற்றை அவனை நினைந்தே நடத்தி வருகின்றர்` என்ற அவனது முழுமுதற்றன்மை புகழ்ந்து கூறப்பட்டது. இதனானே, சிவனுக்கு, `தேவ தேவன்` எனவும், `மகா தேவன்` எனவும் சொல்லப் படும் பெயர்கள் பொருள் பொதிந்த பெயர்களாதல் விளங்கும். `பிறரெல்லாம் சிவனது ஆணையை நினைந்தே தம் அதிகாரத்தைச் செலுத்துபவர் - என்பது, சிவனை மறந்து தம் மனம் சென்றவாறே அதிகாரத்தைச் செலுத்த முற்படும்பொழுது இவர்க்கு ஒறுப்புண்டாயினமையால் அறியப்படும்` என்பதைச் சிவஞான யோகிகள்.
``அரன் நினைந்தவாறன்றி ஆகாமை,
தக்கன் வேள்வி, மார்க்கண்டி வாழ்நாள்,
ஆலாலத் தோற்றரவு முதலியவற்றால்
இனிது விளங்கக் கிடத்தலின்``
என விளக்கினார்.1 கூற்றுவனுக்குச் சிவன் இட்ட ஆணை `நம் அடியவர்க்கு வாழ்நாள் முடிந்தால், நாம் அவர்களை அழைத்துக் கொள்வோம் நீ அவர்களிடம் செல்ல வேண்டா` என்பது. அதனை மறந்து அவன் மார்க்கண்டேயரிடத்துச் சென்றமையால் ஒறுக்கப் பட்டான். அவ்வினையை இனிமேலாயினும் மறவாது செய லாற்றுங்கள் என அறிவுறுத்தும் முறையில்தான் அப்பர் கால பாசத் திருக்குறுந்தொகையை அருளிச்செய்தார்.2
தேவர்கள் சிவபெருமானை வேண்டி இசைவு பெறாதே தாமும் அவனைப் போல என்றும் இறவாதிருக்க அமுதம் பெற வேண்டிப் பாற் கடலைக் கடைந்தனர். அதனால் அவர்கள் பெற்ற பயன் என்றும் இறவா நிலையை வேண்டியவற்கு மாறாக, அன்றே இறக்கும்படி வந்த ஆலகால விடந்தான். பின்பு அவர்கள் சிவபெருமானை அடைந்தே நலம் பெற்றனர். இவைகளையே சிவஞானயோகிகள் குறித்தார். இவற்றால் எல்லாம் நாம் அறிய வேண்டிய முடிநிலைப் பொருள், `சிவபெருமானது சங்கற்பமே சங்கற்பமாக நின்று முற்றுப்பெறும் அன்றி ஏனையோர் சங்கற்பங்களெல்லாம் முற்றாப்பெரா என்பதே. இதனால் சிவனது சங்கற்பம் வேதங்களில் `சத்திய சங்கற்பம்` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 21

அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

பொழிப்புரை :

தான் படைத்த உலகத்திற்குத் தானே முன்னைப் பழம் பொருளும், பின்னைப் புதுப் பொருளுமாய்,1 நிற்கும் சிவன், தான் தன் மேல்நிலையினின்றும் இறங்கி வந்து உலகத்தைப் படைக்கின்ற முறை அதுவாகும் (அஃதாவது, `உலகத்திற்கு அது தோன்றும் இடமும், பின் ஒடுங்கும் இடமும் தானேயன்றிப் பிறரில்லாத தனியொரு முதல்வன்` என்பதாம்.) அவன் உலகத்திற்கு வித்தாகிய மாயையின் வியாபகத்தைக் கடந்து அப்பால் உள்ளவ -னாயினும் அசுத்த உலகமாகிய இந்தப் பிரகிருதி புவனத்தில் உள்ளவர்கட்கும் அவனே முதல்வன்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `பரம், உபரம்` என்பன, `முன், பின்` என்னும் பொருளைத் தந்தன. `கடலினின்றும் தோன்றும் அலை, நுரை, திவலை முதலியவற்றிற்குக் கடலே முன்னைப் பொருளும், பின்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளும் தானேயாய் இருக்கின்றான்` என்பதை,
``நுரையும் திரையும், நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடற்
பெருத்தும், சிறுத்தும் பிறங்கு தோன்றி
எண்ணில வாகி யிருங்கட லடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி, நின்னிடை அடங்கும்; நீ
ஒன்றினும் தோன்றாய்; ஒன்றினும் அடங்காய்``2
என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கால் உணர்க. உபநிடதமும், ``எல்லாம் பிரமத்தினின்றும் தோன்றி அதிலே அடங்குகின்றன. இடையிலும் அதிலேதான் நிலைத்திருக்கின்றன``1 எனக் கூறிற்று.
சிவன் தான் படைத்த உலகத்திற்கு வெளியிலே வியாபித்த லன்றியும் எல்லாப் பொருள்களினுள்ளும் எள்ளினுள் எண்ணெய் போல நிறைந்தும் நிற்றலால், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்`` என்றார். பெந்தம் - பெத்தம். என்றது இங்கு, முக்குண வடிவாய் அறிவை மாறி மாறி மயக்குகின்ற மூலப் பிரகிருதியை. `இதன் காரிய புவனங்களில் வாழ்பவர் மூவகை ஆன்மாக்களுள் கீழ்ப் பட்ட சகலர்` என்பதை ``கீழோர்`` என்பதனால் குறித்தார். `கீழோர்க்கும்` எனத் தொகுக்கப்பட்ட உருபையும், உம்மையையும் விரிக்க. `அதிகார மூர்த்திகள் பலரும் சிவனது ஏவல் வழி நிற்பவரே யன்றிச் சுதந்திரர் அல்லர்` என்பது முன் மந்திரத்தில் இனிது விளக்கப்பட்டமையால் ஈண்டுள்ளார்க்கும் சிவனே முதல்வன் ஆதற்கு இழுக்கின்மை அறிக.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தன்பா தாள அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.

பொழிப்புரை :

மூன்றும், இரண்டும் ஆக ஐந்தாய உலகங்களே அனைத்துலகங்கட்கும் முடியாய், `சிவனுக்கு உரியன` என்று சொல்லப்பட்டாலும், எல்லா உலகங்களுமே அவனுக்கு உருவமாகும். அப்படிப் பார்க்கின்றபொழுது, பிருதிவி அண்டத்தில் அதன் கீழ்ப் பகுதியாகச் சொல்லப்படுகின்ற பாதாள உலகங்களே அவனுக்குத் திருவடியாம். (சிவ தத்துவ உலகமே முடியாதல் முதலடியிற் கூறியதனானே பெறப்பட்டது.) அறியாமையுடையவர்கள் இந்த உண்மையை அறிந்து மகிழ்வெய்தும் நிலையில்லாதவராவர்.

குறிப்புரை :

இதுவும் முன் மந்திரத்தில், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும்பொருள்`` என்றதனை விளக்கியவாறு. ``முத்தண்ட ஈர் அண்டம்`` என்றதனை `மு இரு தண்ட அண்டம்` என மாற்றிக்கொள்க. `மூ இ` என்பது, ``மூன்றும் இரண்டும்` என உம்மைத் தொகை. ``ஐந்து`` என்பது, தத்துவங்களைக் குறித்த தொகைக் குறிப்பு. முடியாவது, பிறவற்றிற்கெல்லாம் மேல் நிற்பது. `உரு, பெயர், தொழில் ஒன்றும் இல்லாத சிவன் அவைகளை உடையனாய பொழுதும், சுத்த தத்துவத்திலன்றி, ஏனைத் தத்துவங்களில் இருத்தல் இல்லை` என்னும் தத்துவக் கோட்பாடு பற்றி, `அவன் அத்தத்துவங்கட்குக் கீழ்ப்பட்ட தத்துவ உலகங்கட்கு முதல்வனாதல் எவ்வாறு` என மலைவெய்து வார்க்கு அம்மலையை நீக்குதற்கு இவ்வாறு கூறினார் என்க. `திரு மேனி கொண்டு விளங்குதல் சுத்த தத்துவத்திலாயினும், எள்ளினுள் எண்ணெய்போல எல்லாப் பொருளிலும் அவன் நிறைந்திருக் கின்றான் ஆதலின், அவன் அனைத்துலகங்கட்கும் முதல்வனாதல் கூடுவதாம்` என விடுத்தவாறு. இந்நிறைவு நிலை பற்றியே அவனை, `விசுவ ரூபி` என்றும், `அட்ட மூர்த்தமாய் நிற்பவன்` என்றும் உண்மை நூல்கள் கூறுகின்றன என்க. இதனானே எவ்வுலகத்தார் செய்யும் வழி பாட்டினையும் அவன் ஏற்றுப் பயனளித்தல் கூடுவதாதலையும் அறிக.
தண்டம் - கோல். இஃது ஒரு நீட்டலளவை. சுத்த தத்துவங்கள் ஐந்தின் அண்டங்களையும் தனித் தனி ஒரு கோல் அளவினதாகக் கூறியது, பொதுப்பட அவையும் அளவுட்பட்டனவே தொகுத்த லாயிற்று. `உலகேழும் அத்தன் உருவம் எனப்படும்` எனவும், `அத்தன் சேவடி பாதள அளவுள்ள` எனவும், உணர்ந்து மகிழார் எனவும் மாற்றிக் கொள்க. பாதாள அளவு - பாதாளமாகிய அவ்வளவினதாகிய இடம் `சேவடியாய் உள்ளது என்க. இத்துவ்விகுதி தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களும் ஒடுங்கிய பின்னும் தான் ஒடுங்காது, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதற்கு முதல்வனாய் உள்ளவன் எவனோ அவனே நமக்குப் பெருமான். அவன், விரிந்த இடத்தையுடைய இந்த உலகத்திற்கு விளக்காய் உள்ள `கதிர், மதி, தீ` என்னும் மூன்றிற்கும் ஒளியைத் தரும் பேரொளிப் பெருமான்; முன் மந்திரத்திற் கூறியவாறு விசுவ ரூபியாய் நிற்றலேயன்றி, விசுவாதி கனாய், அனைத்துலகங்களையும் கடந்து அவற்றிற்குமேலும், கீழும் இருக்கின்றான். இனி மேற்கூறியவாறு அவற்றினுள்ளும் விசுவ ரூபியாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அவனது பெருமையை அறிய வல்லார் யார்` என்பது குறிப்பெச்சம். ``ஆதிப் பிரான்`` என்பது மீள மீள வந்தது சொற் பொருட் பின்வருநிலையணி. ``ஆதிப் பிரான்`` என்று இதனையே மெய்கண்ட தேவர் ``ஆதிப் பிரான்`` புலவர்``1 என்றார். `அகலிடச் சுடர் மூன்றின் ஒளியாய் நிற்கும் சோதிப் பிரான்` என இயைக்க. ``அப்புறம்`` என்பதிலும் `அப்புறத்தவன்` என்னும் விகுதி தொகுத்த லாயிற்று. சிவன் அண்டத்து அப்புறத்தவனும், கீழவனும் ஆதலை,
``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்;
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``2
என்னும் திருவாசகத்தால் அறிக.
இதனால், சிவபிரானது நித்தியத் தன்மையும், அளவில் ஆற்றலும் புகழ்ந்து கூறப்பட்டன. `எல்லாம் ஒடுங்கும் பொழுது ஒருவன் மட்டும் எங்ஙனம் ஒடுங்காது நிற்பான்` என்பனபோலும் ஐயங்கள், `திருவருள் கிடைக்கப் பெற்றார்க்கன்றி நீங்கா` என்பதை அப்பர்,
``கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோ டொக்கு மோகடல்? என்றல்போல்,
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்,
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே``3
என அருளிச் செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 24

அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

பொழிப்புரை :

அண்டங்கள் அனைத்தையும் கடந்து எல்லையற்று விளங்கும் அகண்டப் பொருளாய் இருப்பினும் பிறவாய் பிறவியாகிய திருமேனிகள் பலவற்றைக் கொண்டு கண்டப் பொருளாயும் விளங்குகின்ற சிவனது, தீயோர் அணுகாத திருவடிகளைக் காணுந் தோறும் அவன் அடியார்கள் சுத்தாவத்தையில் அழுந்துகின்றார்கள்.

குறிப்புரை :

`ஆகவே, யாவரும் அவனது திருவடிகளைக் காணுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பெருமை, சிறுமை` என்பன `அகண்டம், கண்டம்` என்னும் பொருளவாய் நின்றன. ``பெருமையன்`` என்பதன் பின் `ஆயினும்` என்பது வருவிக்க. பிண்டம் - தசை. நிணம் முதலிய தாதுக்களின் திரட்சி. எனவே, அது, தாய் தந்தையரது உடற் கூற்றால் தோன்றி வளர்ந்து, பின்னும் உணவால் பெருக்கின்ற புலால் உடம்பைக் குறிக்கும். `அவ்வா றில்லாத பிறவி` என்றது அருட்டிரு மேனியை. சிவனை, ``பிறவா யாக்கைப் பெரியோன்``1 எனப் பிறருங் கூறினார். அஃதாவது, `சிவனுக்கு யாக்கை உண்டு; ஆயினும் அது மேற்கூறியவாறு தாய் தந்தையரால் பிறந்து, அவரால் வளர்க்கப்பட்டது அன்று` என்றதால் ``சிறுமை`` `பிறப்பிப்பதுதான் கடவுட்குப் பெருமை`` எனக் கூறுவாரை நோக்கி, `அத்தகைய பெருமையில்லாத சிறுமையன் எங்கள் சிவன்` என நகை தோன்றக் கூறிய, பழிப்பது போலப் புகழ் புலப் படுத்திய வஞ்சப் புகழ்ச்சியாக உரைப்பாரும் உளர். `சிறுமை யானது` என ஆறாவது விரிக்க. கண்டர் - கண்டகர்; தீயோர். `இவர்கள் கடந்த கழல்` என்றது `அணுகாது விலகிச் சென்ற கழல்` என்றதாம். கனை கழல் அடையடுத்த ஆகுபெயர். `தொண்டர் நடந்த கனைகழல், என்பது பாட மன்று. ``நெறி`` என்றது அவத்தையை. சுத்தாவத்தையின் இயல்பு முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.
இதனால், சிவன் அகண்டப் பொருளாயினும் உயிர்களின் பொருட்டுக் கண்டப் பொருளாய்த் தோன்றியருளும் அருட்சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது. `இதுபற்றி அவன் பிறத்தல் இல்லை` என்னும் உண்மையும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.

பொழிப்புரை :

சீவன் ஓவாது வீசுகின்ற அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுதும் நிறைந்து நிற்கின்றான். நின்று, இதன்கண் உளவாகின்ற அனைத்துப் பயன்களையும் தோற்று -விக்கின்றான். இவையல்லாமலும் உயிர்களின் பட்பொறி சென்று பற்றும்படி பொன்னார் மேனியாய் முன் வந்து காட்சியும் தருகின்றான்.

குறிப்புரை :

`வேறு என்ன வேண்டும்` என்பது குறிப்பெச்சம். உலவு, உலவுதல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஓங்கு` என்னும் முதனிலை `அம்` என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று, வலித்தல் பெற்று, `ஓக்கம்` என வரும். தேங்கு, தேக்கம்; அடங்கு, அடக்கம்; விளங்கு, விளக்கம் முதலியவற்றைக் காண்க. இஃது இங்கு ஆகு பெயராய், ஓங்கியெழுகின்ற அலைகளைக் குறித்தது. இவ்வாறன்றி, `நோக்கம்` என்னும் பாடத்திற்கு இங்கு இயைபு யாதும் இன்மை அறிக. பலம் - பயன். `முழுதெல்லாம்` என்பது ஒரு பொருட் பன்மொழி. ``முன்னே`` என்பதை, ``நின்றான்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. ``புலம்`` என்பது பொறியின் மேலதாய், இங்குக் கண்ணைக் குறித்தது. கண் உழுதலாவது, பற்றிக் காணுதல். ``பொன்னிறம்`` என்பது பண்பாகு பெயராய், அதனையுடைய திருமேனியைக் குறித்தது. `சிவன் திருமேனி கொள்ளுங் காலத்தில், பொன்மயமான திருமேனியையே கொள்ள விரும்புகின்றான்` என்பதாம்.
இதனால், சிவனது மற்றும் பல அருட் சிறப்பே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், மேலான பொருள்கட்கெல்லாம் மேலான பெரும்பொருளாய் நிற்பினும் ஊழிகள் தோறும் அவற்றின் தொடக்க மாயும், முடிவாயும் நிற்கின்ற அளவினனும் ஆய், நாம் கண்டும், கேட்டும் உணர்கின்ற அனைத்துலகங்களையும் நிலம் போலத்தாங்கி நிற்கும் தன்மையுடையனாதலை உலகர் உணர்தல் இல்லை. ஆயினும், அவன் அதனால் கீழ்மை ஒன்றும் இலனாய், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து அவற்றை இயக்கியே நிற்கின்றான்.

குறிப்புரை :

`சிவன்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது. ``பராபரன்`` இரண்டில் முன்னது, `பராற்பரன்` என்பதன் மரூஉ. பின்னது, `பரனாயும் அபரனாயும் நிற்பவன்` என்றதாம். பரம் - மேல், அபரம் - கீழ். `பராபரன்` என்பதை, ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்திலும் காண்க. இந்த, `பரம், அபரம்` என்பன இங்கும், ``அந்தம் கடந்தும்`` 2 என்னும் மந்திரத்திற் போலவே, `முன், எனப் பொருள் தந்தன. `தராபரன்` என்னும் வட சொல் தொகை மொழி உவமத் தொகை. பரன் - தன்மையுடையவன். ``உணரார்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. `அபரன்` என்பது முதல் நீண்டு, `நிர்` என்பதனோடு புணர்ந்து` ``நிராபரன்`` என வந்து, `கீழ்மை யில்லாதவன்` எனப் பொருள் தந்தது.
``தரையை யுணராது தாமே திரிவார்;
புரையை உணரா புவி``3
என்றாற்போல், நிலம் யார் தன்னைப் போற்றினும், போற்றா தொழியினும் தாங்குதலாகிய தன் கடமையை அஃது ஆற்றி வருகின்றது. அதுபோலத்தான் சிவன் தன் செயலைச் செய்து நிற்கின்றான் - என்பதையே ``தராபரனாய் நின்ற தன்மை என்றார். இதனையே அப்பர் பெருமான், ``தன்கடன் அடியேனையும் தாங்குதல்`` அஃது யார் போற்றிடினும் நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றது. ஆயினும், ``என்கடன் பணி செய்து கிடப்பதே``4 என்பதை நான் உணர்ந்தேனா என்னும் ஐயம் எழுகின்றது என்று அருளிச் செய்தார். சிவன் இவ்வகலிடத்தைத் தாங்குதலை நாயனார் சில இடங்களில் நினைவு கூர்கின்றார். அப்பரும் சிவனை, ``பொய்யாத பொழில் ஏழும் தாங்கி நின்ற - கற்றூண்காண்``5 எனக் குறித்தருளினார் உலகனைத்தையும் தாங்கும் சிவனது சத்தி, `ஆதார சத்தி` எனச் சிவாகமங்களில் சொல்லப்படுகின்றது. ``நின்றான்`` என்பது, நின்று செய்தலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.
இதனாலும், சிவனது சில திருவருட் சிறப்புக்களே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 27

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம்
காற்றது ஈசன் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

பொருள்களும், சொற்களும், சொற்கள் ஒடுங்குகின்ற இடமும் தனக்கு வேறாயினும் அவை தனக்கு உடலாய் நிற்க, அவற்றிற்கு உயிராய் நிற்பது எதுவோ, அது பெருந்தெய்வம். (முதற் கடவுள்.) அத்தகைய பெருந்தெய்வம் சிவனன்றிப் பிறிதில்லை. அஃது எங்ஙனம் எனின், சிவனே எல்லா உயிர்களிடத்தும் அவற்றின் உயிராகிக் கலந்து நின்று அவற்றைப் புரந்து வருகின்றான்.

குறிப்புரை :

ஊற்றம் - பிறிதொன்றைத் தாங்கும் திட்பம். அஃது அதனையுடைய பொருளைக் குறித்தது. சொல் ஒடுங்குமிடம் நாதம். எனவே, `சொல்லும், பொருளுமாகிய இருவகை உலகங்களும் தனக்கு உடலாகத் தான் அவற்றுக்கு உயிராக் அவற்றைப் புரந்து வருவதே பெருந்தெய்வம்` எனப் பெருந்தெய்வத்தின் இலக்கணம் கூறப்பட்டதாம். `உடல் நிலை பெறுவது உயிரால்` என்பது வெளிப்படையாதலின், `இருவகை உலகங்கட்கும் உயிராவது பெருந் தெய்வம் எனவே, `உயிர்போல அவற்றை நிலைப்பிப்பது பெருந்தெய்வம்` என்றதாயிற்று. `அந்த இலக்கணத்திற்கு இலக்கியம் சிவபெருமானே` என்பதை நிறுவுதற்கு, ``காற்றது ஈசன் கலந்து நின்றானே`` என்றார். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை, நான்காம் தந்திரத் தொடக்கத்தில் அசபா மந்திரத்தால் நாயனார் விளக்கினார். அப்பரும், ``என்னுளே உயிப்பாய்ப் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``6 என்று அருளிச் செய்தார். ``காற்றது`` என்பதில் `அது` பகுதிப் பொருள் விகுதி. ``காற்றதன்கண்`` ஏழனுருபு விரிக்க. `மர வகைகளும் உயிர்க்கின்றன` என இக்கால அறிவியலார் கூறுவர். முதல் அடியை இரண்டாம் அடியின் பின்னர்க் கூட்டி, அதன்பின் `என்னையெனின்` என்பதும், இறுதியில் `ஆகலின்` என்பதும் வருவித்து முடிக்க. இடையிலும் `உடலாக, உயிர்` என வேண்டும் சொற்கள் வருவிக்க. இதனுள், ``ஈசன்`` என்றது `சிவன்` என்றதேயாதல் வெளிப்படை. ``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினு மில்லை``7 என முதற்கணே கூறினார்.
இதனால், முதற்கண்கூறிய சிவனது முதன்மை வலியுறுத்திப்புகழப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும்
முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

மனம் உடைமையால், `மனிதர்` எனப் பெயர் பெற்றவர்களே! (அந்த மனம் திருந்தியதாய் இல்லையே.) (``மனிதர்காள்! இங்கே வம்மொன்று சொல்லுகேன்``1 என்பதிலும் இக்குறிப்பு உள்ளது.) உலகனைத்தும் சிவமயேமே. அனைத்தும் அவனானபின்பு சொல்ல வேண்டியது என்ன இருக்கின்றது? ஆகவே, வீண் வாதங்களைக் கிளப்ப வேண்டா. ஏனெனில், சில இடங்களில் வெளியே காணப்படுகின்ற புகை உள்ளே மறைந்திருக்கின்ற நெருப்பினின்றும் வந்ததுதான். பின்பு அஃது அடங்குவதும் நெருப்பில்தான் அது போலத் -தான் காணப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் சிவனிடத்திலிருந்து வந்தவைதாம். ஆகவே, அவை ஒடுங்குவதும் அவனிடத்தில்தான்.

குறிப்புரை :

இவ்வாறு கூறுவன ஆணை மொழிகளாம். அஃதாவது உபதேச மொழிகளாம். ஆசிரியர் மாணாக்கனை `இவ்வாறு நில்` என்றால் மாணாக்கன் அவ்வாறு நிற்க வேண்டியவனே தவிர, `ஏன், ஐயா, இவ்வாறு நிற்கச் சொல்கின்றீர்` என வினாவுதற்கு உரியன் அல்லன். அத்தகையவான மொழிகள் ஆணை மொழிகளாம். ``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த``2 எனத் தொல்காப்பியர் கூறியதும் இவ்வாறான மொழிகளை நோக்கியே. இவ்வாறான நல்லாசிரியரை, தொல்லாணை நல்லாசிரியர்``3 எனச் சங்க இலக்கியங்கள் கூறும். ஞானசம்பந்தரது பாடல்களில் பல இத்தகையினவாய் இருத்தல் காணலாம். ``புறம்`` என்பதற்கு, `புறத்து உள்ளன`` எனவும் `பின் அங்கியிற் கூடும்` எனவும் உரைக்க. இஃது எடுத்துக் காட்டுவமை. முகை - அரும்பு. அரும்புதல் தோன்றுதல் ஆகலின் அது தோன்றிய பொருள்களைக் குறித்தது. ஆதிப் பிரான் - ஆதி சத்தியை உடைய கடவுள். ``எல்லாம் சிவன் என்ன நின்றாய் போர்றி``4 என்ற அப்பர் திருமொழியை, ``திகை அனைத்தும் சிவம்`` என்பதனோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், சிவன் எல்லாப் பொருளுமாய் நிற்கும் பெருமை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகி
நவின்றா உலகுறு நம்பனு மாமே.

பொழிப்புரை :

சிவன், ஏழுலகங்களும் ஒன்றாக ஓர் உருவாய்க் கலந்து, அப்பொழுதே தான் அவற்றுள் ஒன்றும் ஆகாது தனியனாய் நிற்பினும், தனிமையானோர் பலர் பிறர்க்கு எளியராதல்போல எளியனல்லன்; அரியனே, இனி இவன் அளவற்ற உயிர்களோடு அவையேயாய்க் கலந்து அவற்றின் செயல்களில் எல்லாம் தானும் உடன் பயின்று, அனைத்துயிர்கட்கும் ஆத்தனும் ஆகின்றான்.

குறிப்புரை :

செய்யுளாகலின், ``இவன்`` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. `தான் என நின்றும் எளிய னல்லன்` என உம்மையை மாற்றிவைத் துரைக்க. நவிலுதல் - பயிலுதல். நம்பன் - நம்பத் தக்கவன். இதுவே வடமொழியில் `ஆத்தன்` எனப்படுகின்றது. இதனுள் சிவன் எல்லாப் பொருளிலும் ஒன்றாய்` வேறாய் உடனாய் நின்று உயிர்கட்கு உறுதுணையாதல் கூறல் பட்டவாறு அறிக. இரு பொருள் ஒன்றாய், வேறாய், உடனாய் இயைந்து நிற்பதொரு சம்பந்த விசேடமே சைவ சித்தாந்தத்துள் கூறப்படும் சுத்தாத்துவிதம் ஆதலை நினைக. சிவன் இவ்வத்துவிதப் பொருளாம் முறைமை இங்குப் புகழ்ந்து கூறப்பட்டது.
இம்மந்திரம் பதிப்புக்களில் இரண்டாம் தந்திரத்தில் `அனுக்கிரகம்` என்னும் அதிகாரத்திலும் காண்பபடுகின்றது.

பண் :

பாடல் எண் : 30

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளில் முதல் மூன்றைக் கடந்து, மேலேயுள்ள `சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் விளங்குவோனாய் உள்ளவன் சிவனேயன்றிப் பிறரல்லர். (பிறர் எல்லாரும் மேற்கூறிய மூன்று கலைக்குள் இருப்பவரே` என்றபடி.) ஆகவே அவனே யாவர்க்கும் தலைவன் எல்லாத் தத்துவங் கட்கும் முதல்வன். உயிர்கட்கெல்லாம் உயிராய் அவைகளின் அறிவினுள் உள்ளவனும் அவனே. ஆதலின், ஏனைத் தேவர்களோடு அவனையும் ஒப்ப வைத்துக் கூறும் கூற்றுக்கே இடமில்லை. இனி அவன், எவராயினும் தம்மை அவனுக்குக் கொடுத்துப் பெறத் தக்கவனேயன்றி, வேறு பொன், பொருள் முதலியவற்றைப் பண்ட மாற்றாகக் கொடுத்துப் பெறத்தக்கவன் அல்லன். இவற்றையெல்லாம் அறிந்து அவனை நினைமின்கள்.

குறிப்புரை :

``கலையொரு மூன்று`` என்பவற்றை `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` எனவும், `தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை` எனவும், ``அருள் நூலும், ஆரணமும் அல்லாதும்``1 எனவும் உரைப்பாரும் உளர், சிவனை ஏனை விண்ணவரின் வேறு வைத்துக் கூறுதற்குக் காரணம் கூறுகின்றார் ஆகலின், அவற்றிற்கு இங்கு இயைபின்மையறிக. சிவனை `பரம்பொருள்` எனக் கொள்பவர் தவிர ஏனையோரெல்லாம் போக்கிய காண்ட தத்துவங்கட்குமேல் (ஆன்ம தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும், போசயித்திரு காண்ட தத்துவங்கட்குமேல் (வித்தியா தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும் உணராமையால் அவரால் கொள்ளப்படும் கடவுளர்கள் யாவரும் `நிவிர்த்தி பிரதிட்டை, வித்தை` என்னும் மூன்று கலைகட்குள்ளே நிற்பவராவர். ஆன்ம தத்துவங்களில் கீழ் உள்ளதாகிய பிருதிவி தத்துவத்தளவில் நிற்பவன் பிரமதேவன். ஆகவே இந்திரன் முதலிய பலரும் அவனுக்குக் கீழ்நிற்போரேயாவர். அவரெல்லாம் நிவிர்த்திக் கலைக்கு உட்பட்டவர்கள்.
பிருதிவிக்குமேல் பிரகிருதியானவும் சென்று நிற்பவன் மாயோன். ஆகவே, அவனும், அவனைச் சார்ந்த அதிகாரிகளும், அடியவர்களும் எல்லாம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டவர்கள். ஆயினும் பௌத்தரும், சமணரும் `உயிரும், வினையும் உண்டு` என நம்புபவர்கள். வினை, புத்தி தத்துவத்தையே பற்றிக் கிடத்தலாலும் அவர்கள் `அறிவு, அல்லது, உயிர்` என்பன எல்லாம் புத்தி தத்துவத்தையேயாகலானும் அவர்கள் புத்தி த்ததுவத்தளவில் செல்லுதற்கு உரியர். `புத்தி தத்துவம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டது` என்பது மேலே பெறப்பட்டது.
புறச் சமயிகளில் மீமாஞ்சகரும், சாங்கியரும் கடவுட் கொள்கை இல்லாதவர்கள். ஆயினும் உயிரும், அதற்குக் கருவியாகிய உடம்பு முதலியனவும், வினையும் உள்ளன` என நம்புபவர்கள். அவருள் சாங்கியர் கூறும் தத்துவமே மீமாஞ்சகர், ஏகான்ம வாதிகள் ஆகியோருக்கும் ஆகையால் அவரெல்லாம் பிரகிருதிக்குமேல் உள்ள புருட தத்துவத்தளவில் செல்லுதற்குரியர். புருட தத்துவம் வித்தியா கலையின் கீழ் எல்லையாகலின், இவர்களை பிரதிட்டாகலைக்குள் நிற்பவர்களாகவே கருதலாம். இவருள் ஏகான்ம வாதிகள் `கடவுள் இல்லை` எனக் கூறாவிடினும் `கடவுள் வியாவகாரிக சத்தைய வதன்றிப் பார மார்த்திக சத்தை அன்று` எனவும், `பாமார்த்திகப் பொருள் பரப்பிரம்பம்; அது நாமேயன்றி வேறில்லை` எனக் கூறுதலால் அவர்கட்கு எல்லையும் புருட தத்துவமே யாகின்றது.
அகப்புறச் சமயிகளாகிய பாசுபதர், மாவிரதர், காபாலிகர் வைரவ மதத்தினர் முதலியோர், `சிவன், சிவன்` எனக் கூறினாலும், அவர் கருதுவன எல்லாம் உருத்திர வகையினரையே. வாம மதத்தவர் `சத்தி` என்பதும் உருத்திராணிகளில் ஒருத்தியையே. சுத்த சாத்த மதத்தினர் இவரின் வேறுபட்டவர்கள். அவர்கள் அகச் சமயிகளுள் வைத்து எண்ணத் தக்கவர்கள். ஆகவே அகப்புறச் சமயிகளது கடவுளரும் வித்தியா கலைக்கு உட்பட்டவர்களே.
அகச் சமயிகளாகிய பாடாண வாத சைவர் முதலியோர் `இலய சிவன், போக சிவன், அதிகார சிவன்` எனப் பகுதிப்பட்டு, முறையே உருவம், அருவுருவம், அருவம் என்னும் திருமேனிகளைத் தாங்கித் தூல, சூக்கும, அதிசூக்கும ஐந்தொழில்களைச் செய்யும் தடத்த சிவபேதங்களுள் ஒரோ ஒருவனையே பரம சிவனாகக் கொள்வர். அதனால் அவர்களது கடவுளர், வித்தியா கலைக்கு மேல் உள்ள சாந்தி, சாந்தியதீதை கலையில் உள்ளவராவர். இம்மந்திரத்தில் ஐந்தொழில் இயற்றுதல் இன்றிச் சித்தாந்த சைவர்க்கே உரியவனாய்த் தன்னளவில் நிற்கும் சொரூப சிவனைக் கூறாமல், ஐந்தொழில் இயற்றி, `பதி` எனப் பெயர்பெற்றுத் தலைவனாய் அகச் சமயத்தார்க்கு உரிய தடத்த சிவனையே கூறினார் ஆதலின், `கலை ஐந்தும் கடந்து` என்னாது, ``கலையொரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற தலைவன்`` என்றார்.
ஒரு பொருளைப் பெறுதற்கு அதற்கு நிகரான மற்றொரு பொருளைக் கொடுக்குமிடத்து, அவ்வாறு கொடுக்கப்படும் பொருளே `விலை` எனப்படுவதல்லது, தன்னையே தான் கொடுப்பது விலை யெனப்படாது, ஏனெனில் விலையைக் கொடுப்பவன் பின்பு அவ் வலைக்கீடாகத் தான் வாங்கும் பொருளைப் பின் சுதந்திரமாய் நின்று அனுபவித்தற்கு உரியன். தன்னையே கொடுத்தவன் தன்னை வாங்கி -னவனுக்கு அடிமையேயல்லது, சுதந்திரமிலன். இவ்வகையில் உயிர்கள் தம்மையே கொடுத்துப் பெறத் தக்கவன் சிவன் ஆதலின், `அவனுக்கு விலையில்லை` என்றார். ``உள்ளுறும் உள்`` என்றதில் பின்னுள்ள ``உள்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்துள்ள பொருளைக் குறித்தது. உம்மை சிறப்பும்மை. இதனால் பிறரோடு ஒப்ப வைத்துக் கூறுதல் கூடாமை சொல்லவேண்டாவாயிற்று. `விண்ணவரோடும் ஒப்பித்து உரைப்ப` என ஒரு சொல் வருவிக்க. உரைப்ப உரை. உரைக்கப்படுவன -வாகிய உரைகள். ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், சிவனது முதன்மை தத்துவங்களில் வைத்து இனிது விளங்கக் கூறிய புகழ்ந்துரைக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.

பொழிப்புரை :

மேற்கூறிய தலைவன், மேற்கூறிய கலைகளும் கீழதாகிய நிவிர்த்தி கலையில் இருக்கும் பிரம தேவன் செய்கின்ற படைத்தலையும் நீக்கி, அவனுக்குமேல் இருபத்து மூன்று தத்துவங் -கட்குத் தலைவன் ஆதலின், `நெடியோன்` எனப்படுகின்ற மாயோன் செய்கின்ற சின்னாள் நிலைப்பதாகிய காத்தலையும் நீக்கி, அவனுக்கு மேல் உள்ள உருத்திரன் அறியாமையிற்படுத்துத் துன்பக்கிடையில் கிடத்துகின்ற அழித்தலையும் நீக்கி அடியேனை உய்ய வைத்து, என்மீது அருள்மிக உடையன் ஆயினான்.

குறிப்புரை :

`அவனது பெருமை அத்தகையது` என்பது குறிப் பெச்சம். கால் - அடிநிலை. இதனை, `கடைக்கால்` என்பர். பாசம், பிணிப்பது. ``பிரமன் செய் குறுமை நேசம்`` என மொழி மாற்றுக் கொள்க. நேசம் - கருணை. கருணையால் செய்யப்படுவதநை, `கருணை` என உபசரித்துக் கூறினார். முத்தொழில்களுள் காத்தல் தொழிலையே கருணைத் தொழிலாக மக்கள் கருதுதல் பற்றி அதனை, ``குறுமை நேசம்`` - என நகையாடிக் கூறினார். செடி - கீழ்மை. அஃது இங்கு அறியாமையைக் குறித்தது. ஊழியை முடிப்பவன் உருத்திரன். அது முடிந்தபொழுது கருவிகளுள் யாதும் இன்மையால், உயிர்கள் ஆணவத்துள் அழுந்தி, யாதும் அறியாது கிடக்கும் சிலவகைக் கேவலங்களுள் இது `சகல கேவலம்` எனப்படும். `தவம்` என்பது, `தாபம் - வெப்பம்` என்பதினின்றே வருதலால் இக்கேவல நிலையையும் `தவம்` என்கின்றவர் `செடியார் தவம்` என வேறு படுத்திக் கூறினார். ``சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் - சுடச்சுட நோற்கிற் பவர்க்கு``1 என்னும் திருக்குறளும் `தவம்` என்னும் சொல்லியல்பை விளக்குவதாய் உள்ளது. இவ்வாற்றால் அழித்தலைக் குறிக்கவே, அதனைச் செய்வோனை எடுத்தோதல் வேண்டா வாயிற்று. இங்கு, செய்தல், சேர்த்தலாம். முத்தியாவது விடுதலை யாகலின், `அவ்விடுதலை யாது` என்பார்க்கு, `படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் காரணக் கடவுளர்களது செயல்களினின்றும் விடுபடும் விடுதலை` என்பதே விடையாகக் கூறப்படுகின்றது. அதனையே நாயனார் இம்மந்திரத்தில் இவ்வாற்றாற் கூறினார்.
இதனால், முன் மந்திரத்தில் ``நாடுமின்`` எனக் கூறிய அத் தலைவன் உயிர்களிடத்துக் கொண்டுள்ள அருள்நிலை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `நாதம்` எனப்படும் சூக்குமை வாக்கினின்றும் தோன்றிய அனைத்து மொழிகளுமாகிய சொற் பிர பஞ்சத்திலும் நீங்காது நிறைந்து நிற்கின்றான். `தேசம், என்று சொல்லப் படும் பூமி ஒன்றுதான் ஆயினும் அஃது ஒன்பது கண்டங்களாகப் பிரிந்து நிற்கின்றது. அப் பிரிவுகளாகிய பொருட் பிரபஞ்சத்திலும் அவன் மலரில் மணம்போல் மருவி நிற்கின்றான். அதனால் அனைத்துலகங்களும், சிவனாகிய முதலையே முதலாகக் கொண்டு இயங்குகின்றன.

குறிப்புரை :

`ஆகலான் அவனைத் தோத்திரித்தல் உயிர்கட்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. `சத்தத்தும்` என அத்தும், உம்மையும் விரிக்க. ``இமயம், குமரி இவற்றின் இடைப்பட்ட நிலம், `பாரத வருடம்` என ஒன்றாகவும், அதுதானே குமரி முதலிய ஒன்பது கண்டங்களாகவும் சொல்லப்பட்டது`` என்பதைச் சிவஞான மாபாடியத்து இரண்டாம் சூத்திரத்து, மூன்றாம் அதிகரணப் பகுதியில் காண்க. `அனைத் துலகங்களும்` என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பாரத வருடம் முழுவதையும் கூறினார். ``வாச மரல்போல்`` என்பதை, `மலர் வாசம் போல்` என மாற்றியுரைக்க. ஈசன் - சிவன். `சிவன் என்று` என்றது, `சிவனே முதல் என்று கொண்டு` எனக் கூறியவாறு. இங்ஙனம் கூறியதனால், ``உலப்பிலி`` எனவும், ``மருவி நின்றான்`` எனவும் போந்த பயனிலைகட்கு, `சிவன்` என்பதே எழுவாயாயிற்று.
இதனால், சிவன் தோத்திரிக்கப்படும் பொருளாதல் காரணங் கூறி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், உலகர் எத்தனை கூறினாலும், அவனை உணர்ந்தோர். ``என் புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ``1 எனவும், ``ஏதுக்களாலும், எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி``2 எனவும் உறுதிப்பட உரைத்தலால், இல்லாதவனும் அல்லன். அவர் எத்தனை சொல்லினும் உலகர், ``காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு``3 என்றபடி. தாம் கூறுவதையே கூறி, `சிவன் இல்லை` எனப் பிணங்குதலின், உள்ளவனும் அல்லன். `இல்லை` என்பவரது கல் போன்ற நெஞ்சங்களிலும் ஒரு காலத்தில் அந்நெஞ்சைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றுவான்; ஏனெனில், அவன் பழமையாகவே எங்கும் இருப்பவன்; இயல்பிலே மாசற்றவன் ஆதலின் மாசிலாமணிபோல ஒளிவிடுந் தன்மையன்; தோன்றியபின் தோன்றிய இடத்தினின்றும் பெயர்தல் இல்லாதவன்; சொல்லைக் கடந்த அறிவு வடிவினன். என்றாலும் அனைத்துயிர்களையும் தொடர்ந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

``உண்மையுமாய், இன்மையுமாய்``4 என்னும் திருவாசகத்தையும் காண்க. ``உளதன் றிலதன்று``5 எனப் பிற்காலத்தவரும் கூறினார். ``தூய்மணி`` என்பதை, ``தூயவன்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தூயன் ஆகலின் தூய்மணிபோல்பவன்` என ஒரு சொல் வருவித்துரைக்க.
இதனால், சிவனது பெருமைகளே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.

பொழிப்புரை :

எப்பொழுதும் பகையாய் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவராகிய தேவரும், அசுரரும் தாம் தாம் தனித் தனியே வந்து நாள்தோறும் சிவபெருமானைத் துதித்து அவன் திருவடியை நினைப்பர். துதிப்பவர்க்கு அருளும் முறையில் அவர் வேண்டிய வற்றை அவர்க்கு அவன் அளித்து நிற்பான். (அவற்றால் விளையும் விளைவுகட்கு அவன் பொறுப்பாதல் இல்லை. மனிதருள்ளும் இத்தகையோர் உளர். அவர்களிடத்தும் சிவபெருமான் அத்தகையோ -னாகியே நிற்பன். ஆயினும், உள்ளத்தில் அன்பு மிகத் துதிக்கின்ற வர்களுக்கு அவன் அகமாகிய உயிரைப் பற்றியும், புறமாகிய பொருள், சுற்றம் பற்றியும் அவர் வேண்டுவனவற்றை வேண்டிய வாறே தாராது, ஆவனவற்றைத் தந்து, ஆகாதனவற்றை விலக்கி, அவர்களது அறிவையும் திருத்துவான்.

குறிப்புரை :

இதனை அப்பர் பெருமான் கயிலையை அடைய முயன்று அணுகியும் அடையச் செய்யாது மீள்வித்தமையும், வாதவூரடிகள் ஏனையடியார் போலத் தம்மையும் உடனழைத்துச் செல்ல வேண்டியும் அழையாது இருத்தினமையும் போல்வனவற்றால் உணரலாம்.
``வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மை எல்லாம்தொழ வேண்டி``1
என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. ``மாறாய் எதிர்`` என ஆக்கம் வருவிக்க. `உள்ளத் ஊறுவார்` என மாற்றியுரைக்க. `அகம், புறம்` என்பன முதற்கண் அவ்விடத்துப் பொருள்களைக் குறித்துப் பின் அவை பற்றிய பற்றுக்களைக் குறித்தன. `அப்பற்றுக்களில் அவர் வேண்டியவாறன்றி வேறு செய்தும்` என்க. `செய்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `விளக்கொளியாதல் அறிவிற்கு` என்க. ஊறுவார் உள்ளத்திற்கு அருளும் முறை கூறியதனால், அவரின் வேறானவர்க்கு அருளும் முறை பெறப்பட்டது.
இதனால், சிவன் தன் அடியார்க்குச் சிறந்த வகையில் அருள்புரிதல் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், ஆகாயத்திற்கு உள்ள அருவத்தன்மையன், ஆயினும் உருவம் உடையவனே. கண்ணாற் காணப்படும் பொருளல்லன். ஆயினும் கண்ணாற் காணப்படுபவனே. ஒன்றை ஆக்கும் செயலின் பலனாய்த் தோன்றுவது பலத் தோன்றியவன் அல்லன்; ஆயினும் அத்தன்மை உடையவனே. ஆகவே அவன் எல்லையுட்படாத இன்பமும் ஆவான்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளிலும் முன்னர்ச் சிவனது சொரூபத் தன்மையும், பின்னர்த் தடத்தத் தன்மையும் கூறப்பட்டன. `தடத்தத் தன்மையால் அளவுபட்ட இன்பத்தையும் தருவன்` என்றபடி. பண் - பண்ணுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எண்`` இங்கு அளவைக் குறித்தது. உம்மையால் எண்ணுடை ஆனந்தமும் பெறப்பட்டது. ஆனந்தம் இரண்டில் எண்ணில் ஆனந்தம் அவனே. எண்ணுடை ஆனந்தத்தைத் தருதல் பற்றி அதனையும் அவனேயாக உபசரித்தார். இதன்கண் பாடங்கள் வேறுபட்டன.

பண் :

பாடல் எண் : 37

உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :

சிவன் ஏனை யாவரினும் மேலானவன்; எந்த இடத்திலும் முகந்துகொள்ளக் கூடிய பேரானந்தப் பெருங்கடலாய் உள்ளவன்; முத்துப்போலும் வெண்மை நிறம் உடையவன். அப்பொழுதே நீலமணிபோலும் கருமை நிறத்தையும் உடையவன். அத்தகையோனைச் சித்தர்களும், தேவர்களும் எத்துணையோ காலமாக பொதுவாக எண்ணுகின்றார்கள். ஆயினும் இன்னும் உண்மையாக அறிந்திலர்.

குறிப்புரை :

சிவபெருமான், ``பொங்கழல் உருவன்``1 ஆயினும் பளிங்குபோன்றவன் என்பதை, ``தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே``2 என்பதனான் அறிக. வெண்ணிறம் அப்பன், கருநிறம் அம்மை. `எவரும் தாம் தாம் இடத்தில் இருந்தே முகந்து கொள்ளக் கூடியகடல் எதுவும் இன்மையால் சிவன் அத்தகைய கடலாய் இருத்தலாலும், ஒருபாதி உடம்பு ஒரு நிறமும், மற்றொரு பாதி உடம்பு வேறொரு நிறமும் உள்ளார் எவரும் இன்மையால் சிவன் அத்தகைய உருவம் உடையவனாக இருத்தலாலும் இந்த அதிசயங்களைச் சித்தரும், அமரரும் எண்ணி வியக்கின்றார்களேயன்றி, `எவ்வாற்றால் இவன் இப்படியிருக்கின்றான்` அறிந்தாரில்லை` என்பதாம். ``ஓருடம் பிருவாரகி``3 என வேறிடத்தும் வியந்தோதுதல் காணத்தக்கது. ``ஈசன்`` எனப்பின் வருவதனை வைத்து, அவ்விடத்தில், `அவனை` எனச் சுட்டியுரைக்க.
இதனால், சிவனது, யாவராலும் அறுதியிட்டறியப்படாத அதிசயத் தன்மை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

 நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.

பொழிப்புரை :

உயிர்களுக்குச் சிவனது அறக்கருணை எந்த அள வினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாக வீட்டின்பம் உள தாகும். அவனது மறக்கருணை எந்த அளவினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாகப் பிறவித் துன்பம் உளதாகும். இவையறிந்து, உலகில் எத்தனை வண்ணங்களும், வடிவங்களும் உள்ளனவோ அத்தனை வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குதலைக் கண்டும் மக்கள் அவனைத் துதிக்க மாட்டா தவர்களாய் உள்ளனர்.

குறிப்புரை :

முதலடியை இரண்டாம் அடிக்குப் பின்னர்க் கூட்டி யுரைக்க. ``அவ்வண்ணம் ஈசன்`` என்பதில் ``வண்ணம்`` என்று ஆகு பெயராய், `வண்ணத்தன்` எனப்பொருள் தந்தது. வண்ணம் கூறவே, வடிவமும் பெறப்பட்டது. யாதொரு தெய்வங் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்``1 என்பது சித்தாந்தமாகலின் தெய்வத் திருவுருவங்கள் எல்லாம் சிவன் வடிவே யாதல் பற்றி, `எல்லா வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குகின்றான் என்றார். `சிவன்` என்னும் வண்ணம் இன்றியே தெய்வங்களை வழிபடினும் அவ்வழிபாடு பின்பு சிவ நெறியிற் சேர்த்தல் பற்றி, ``போற்றகிலாரே`` என்றார். புறச்சமய நெறி நின்றும் அகச் சமயம் புக்கும் ... ... சென்றால் சைவத் திறத்தடைவர்`` என்னும் சிவஞான சித்தியால் பிற தெய்வ வழிபாடுகள் சிவநெறி அடைதற்கு வழியாதல் விளங்கும் ``ஈசன்`` என்றதன் சார்பால் ``அறம், மறம்`` என்பன அத்தன்மையவான அவனது கருணை வகைகளைக் குறித்தன. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியும் ஆகும். பவம் - பிறப்பு. அது, ``பாவம்`` என நீட்டப்பெற்றது. `இன்பம், பவம்` என்பன ஒன்றால் ஒன்று விளங்க வைத்தன ஆதலின், பவத்துன்பம், வீட்டின்பம்` என உரைத்துக் கொள்க. ``புறம் பல`` என்பதில் பல, பல தெய்வ வடிவங்கள்.
இதனால், `மக்கள் எவ்வளவாயினும் தோத்திரம் செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பரி சாயினும் ஏத்துமின்; ஏத்தினால்,
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே``1
என முன்னருங் கூறினார்.

பண் :

பாடல் எண் : 39

இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய்
எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.

பொழிப்புரை :

சிவன் இங்கிருக்கின்றான்; அங்கிருக்கின்றான்; எங்கும் இருக்கின்றான். எல்லாப் பொருள்கட்கும் மேலே யிருக்கின்றான்; உலகிற்குத் தலைவன்; அற வடிவினன்; இரவில் தண்கதிர் மதியாய் நிற்கின்றான்; பகலில வெங்கதிர் ஞாயிறாய் நிற்கின்றான்; மேகத்தைப்போலக் கைம்மாறு கருதாது எவ்வுயிர் கட்கும் தனது அருளைப் பொழிகின்றான்.

குறிப்புரை :

`அத்தகையோனை மக்களுயிர்கள் தோத்திரிக்க வேண்டாவோ` என்பது குறிப்பெச்சம். ``இங்கு, அங்கு`` என்பன இவ்வுலகத்தையும், பிற உலகங்களையும் குறித்தன. `எங்கும் உளன்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இது முடிந்தது முடித்தல். பொங்குதல் - மேல் எழுதல். உலகங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். `கங்குலில் கதிர் மதியாய் நின்றான்` என மாற்றி ஆக்கம் வருவித்துரைக்க. இதனானே ``ஞாயிறாய்`` என்பதில், `பகலில் நின்றான்` என்க. ``இறைதான்`` என்பதில் `தான்` எழுவாய்ப் பொருள்படவந்த அசை நிலை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

உணர்வது வாயுமே உத்தம மாயும்
உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானாகிய சிவன், சார்ந்ததன் வண்ண மாவதும், ஒருகாலத்து ஒன்றனை மட்டுமே உணர்தலின் சிறிதாயும் உள்ள அறிவினையுடைய உயிர்களாயும் அவ்வுயிர்கட்கு நிலைக் களமாகிய உடல்களாயும் அவ்வுடல்களுக்கு இடமாகிய அண்டங் களாயும் உள்ளான். அவனை, உயிர்களின் அறிவுக்கறிவாகவும், உயிர்க்குணங்கலின் மாறுபட்ட குணங்களையுடையவனாகவும் உணரும் அறிவே நுண்ணறிவாகும்.

குறிப்புரை :

``புணர்வது`` என்பது `அழுந்துவது` என்னும் பொருட்டு. `புணர்வதாயும், புல்லிதாயும் உள்ள உணர்வு` என்க. `எம்பெருமான்` என எடுத்துக்கொண்டு, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``உணர்வு, உடல்`` என்பவற்றிலும் உள்ள எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. ``எம்பெருமானை`` என்பதை `அவனை` என்றவாறாகக் கொள்க. முதற்கண் உள்ள, ``உணர்வது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. முதலடியில் உள்ள, ``ஆயும்`` என்றவற்றை, `ஆகவும்` எனத் திரிக்க. ஏகாரங்கள் அசை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
தன்வலி யாலே தடங்கட லாமே.

பொழிப்புரை :

சிவன் தனது ஆற்றலால் தானே உலகத்தை யெல்லாம் தாங்குகின்றான்; அதனால் அவன் மிகப்பெரிய பொருள் போலத் தோன்றினும் தனது ஆற்றலாலே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியனும் ஆகின்றான்; எட்டுப் பெருமலைகளிலும் நின்று நிலத்தை நிலைபெறுவிக்கின்றான்; நிலம் முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள பெரிய கடலாயும் விரிந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அவனது ஆற்றல் எத்தகையது? எவ்வளவினது? என அறிதல் அரிது` என்பது குறிப்பெச்சம். `சாரான்` என்பது பாடமன்று. சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சிவனது ஆற்றல் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான் ஏனைத் தேவரினும் பார்க்க மிகப் பெரியோனாயினும், உயிர்களின் சிற்றுடம்பினுள் அவற்றினும் சிறியவாய இருதயத்துட் சிறியனாய்க் கலந்து, அங்குச் சுடர்வடிவாய் விளங்குகின்றான். ஆகவே, அப்பெரியோன் ஏனைத் தேவரால் அளவிட்டறியப்படும் அளவினன் அல்லன். இங்ஙனமாகவே உயிர்கள் செய்யும் தவங்களை அளவிட்டறிபவன் அவனே.

குறிப்புரை :

``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற் றரற்றுகின் றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்ப ரீசனே``1
என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார். `சிறுமை` என்பது ஆகுபெயராய்ச் சிறியவாகிய உடல்களைக் குறித்தது. சிவன் உயிர்களின் இதயங்களில் சுவர் வடிவாய் நிற்றலைச் சாந்தோக்கிய உபநிடதம் தகர வித்தை கூறுமிடத்தில் கூறிற்று. `அம்மாதேவன்` எனச் சுட்டு வருவித்துரைக்க.
இதனால், சிவன் பெரியவற்றிற்கெல்லாம் பெரியவனாய்ச் சிறியவற்றிற்கெல்லாம் சிறியவனாய் நிற்கும் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது

உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.

பொழிப்புரை :

ஆல் மரத்தினின்றும் பாகுபட்ட பழத்தின் விதையி லிருந்து முளைத்த சிறு முனை, பெரிய மரமாகி, உருண்ட வடிவான ஆலங்காயே காய்த்தது. ஆயினும், அந்தக் காய் மாம்பழமாகப் பழுத்தது. இந்த அதிசயப் பழத்தை உண்டவர்கள் பிறவித் துன்பத்தி னின்றும் நீங்கிக் களித்தார்கள். உண்ணும் உணர்வு இல்லாத பேதை -யர்கள், பிறவித் துன்பத்தில் அகப்பட்டு முரணியே நிற்கின்றார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரமும் மறைந்துரையாடலாகவே அமைந்தது. ஆலமரம் - உடம்பு. உடம்பை அலமரமாகச் சிவாகமங்களின் கிரியா பாதங்கள் வருணிக்கும் பிண்ட - பாகுபட்ட. ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆல் - ஆலம் பழம்; ஆகுபெயர். அது முன் மந்திரத்திற் கூறிய இருதயம் முளை, இருதயத்தில் சுடர்விடும் சிவன். மரம், தியானம் - தியானிக்கப்படும் பொருட்டும் தியானத்திற்கும் வேற்றுமையின்மையாலும் வளர்வதாதலின் தியானமே `மரம்` எனப்பட்டது. பெருமுளை - பின் பெரிதாதற்குரிய முளை. காய், தியானத்தில் வரும் திருவருள். உருண்டைக்கு, கீழ், மேல், வலம் இடம் ஆகிய பக்க வேறுபாடுகள் இன்மை பற்றி யாவர்மாட்டும் ஒப்பச் செல்லும் திருவருட்கு உருண்டை வடிவம் கற்பிக்கப்பட்டது. `மா` எனக் கூறி, ஒருவகை மரத்தை உணர்த்தற்பாலதனை, `மா` என்னும் பெயருடைமையே பற்றி, `குதிரை` எனக் கூறியது. அதிசயத்தின் மேலும், மற்றும் ஓர் அதிசயம் தோற்றுவித்தற்பொருட்டு. இவ்வாறு எழுத்தொப்புமையால் ஒன்றாகின்ற சொற்களால் அவற்றின் பொருளல்லாத பிற பொருளைக் கூறுதலையும் ஒட்டணி வகையிற் சேர்ப்பர். கந்தபுராண ஆசிரியர், `சூரபதுமன் மாமரமாய் நின்றான்` எனக் கூறுமிடத்தில், `அத்தி, அரசு, வாகை, வன்னி, வீரை, இருப்பை` என்னும் மரப்பெயர்களை உடன் வைத்து, இந்திரன், அக்கினி முதலிய பிறபொருள்கள் தோன்றக் கூறியது முதலியன இதற்கு எடுத்துக்காட்டாகும். சீவக சிந்தாமணி ஆசிரியரும், `புத்திசேனன்` என்னும் பெயருடையவனை. ``திங்கள் விரவிய பெயரினான்``1 என்றார். அதற்கு நச்சினார்க்கினிரய், ``திங்கள் - மதி. `மதி எனவே புத்திசேனரும்`` என உரைத்து, தீத்தீண்டு கையார்`` என்றது வேங்கையை உணர்த்தினாற்போல - எனத் திணைமாலை நூற்றைம்பதின் தொடரை மேற்கோளாகக் காட்டினார். `வேங்கை` என்பது ஒரு சொல்லாயினும் அது, `வேம் கை` என்னும் புணர் மொழிபோல வைத்து, `வேகின்ற கை - தீத்தீண்டு கை` எனப் பட்டது பிற்காலத்தில் காளமேகப் புலவரும்,
``கரிக்காய் பொரித்தாள்; கன் னிக்காயைத் தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்; - உருக்கமுடன்
அப்பைக்காய் நெய்த்துவட்ட வாக்கினாள், - அத்தைமகள்;
உப்புக்காண் சீசீ உமி``2
எனப் பாடினார். கரி - யானை; அத்தி. கரிக் காய் - அத்திக் காய் கன்னி - அரம்பை. அரம்பை - வாழை. கன்னிக் காய் - வாழைக் காய். பரி - குதிரை; மா. பரிக்காய் - மாங்காய். பை - பாம்பின் படம் அது. `படத்தையுடைய பாம்பு` என்று ஆயிற்று. பாம்பில் ஓர் இளம் கத்தரி. அப்பைக் காய் - கத்தரிக் காய். இவை போல்வன எல்லாம் சொற்சுவை பட வருவனவாகும். மாம்பழம், சிவானந்தம், பிண்டம் - உடல், முதற்கண் உள்ள ``பிண்ட`` என்பதனையும் இப்பொருட்டாகவே உரைப்பர். அது மறைபொருட் கூற்றிற்கு ஒவ்வாமை அறிக.
`அம்முச் சாரியை இடையினம் வருமிடத்துக் கெடும்` எனத் தொல்காப்பியர் கூறினாராயினும், பிற்காலத்தில் கெடாதே வழங்கும் வழக்கம் உண்டாயிற்று. ``உறக்கும் துணையதோர் ஆலம் வித்து``3 என்னும் நாலடி வெண்பாவைக் காண்க.
``பிணங்குகின்றார்கள்`` என்றது சமய வாதிகளை.
இதனால், தோத்திரத்தால் சிவானந்தப் பேறு உளதாதலைக் கூறி, அது செய்யாதாருக்கு இரக்கம் காட்டி முடிக்கப்படுகின்றது. எனினும், சமய வாதிகளைக் கூறிய இயைபே கொண்டு சமயங்களைப் பற்றி மூன்று மந்திரங்கள் கூறி முடிக்கின்றார். அவை பதிப்புக்களில் `அதிகப் பாடலகள்` எனக்காட்டப்படுகின்றன.

பண் :

பாடல் எண் : 44

முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக் கை கால்
மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே
அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.

பொழிப்புரை :

``ஒன்றே பொருள் என்னின், வேறென்ப; வேறென்னின் - அன்றென்ப ஆறு சமயத்தார்.1 என்றாற்போலச் சமய வாதிகள் ஒருவர் கொள்கையை மற்றவர் மறுத்து வாதம் புரிதலை யானை கண்ட குருடர் கதையில் வைத்து உணர்த்திற்று இம்மந்திரம்.

குறிப்புரை :

``சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்``2
என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார். ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள``3 3மந்திரம் - 15,38. என்னும் மந்திரத்திற்கு இங்கும் கூறி முடிக்கின்றார்.
இதன் பொருள் வெளிப்படை. ஆனையாகிய முதல் ஒன்றேயாம்; ஆயினும் அந்தகர் அதன் உறுப்புக்களை வேறு வேறு முதல்களாகக் கூறிக் கலாம் விளைத்தல் போலவே, மெய்ப்பொருள் ஒன்றேயாயினும் அதன் இயல்புகளை வேறு வேறு பொருள்களாகக் கருதிச் சமய வாதிகள் ஒருவரை ஒருவர் மறுக்கின்றனர்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. சிவஞான போத அவையடக்கத்தில்,
``தம்மை - உணரார்; உணரார் உடங்கியைந்து தம்மில்
புணராமை``
என்றதன் உரையிலும் மாதவச் சிவஞான யோகிகள் இக்கதையையே உவமையாகக் காட்டினார்.
அகரம், பண்டறி சுட்டு அன்றி, `ஆறு ஆறாகச் சொல்லப் படுகின்ற சமயம்` எனினுமாம். `ஒருபுடையுணர்வே முரண்பாட்டிற்குக் காரணம் ஆதலின், முழுதுணர்வார்க்கு முரண் ஏதுமில்லை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 45

ஆறு சமயம் முதலாம் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி
ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.

பொழிப்புரை :

சமயங்களுட் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்ற ஆறு சமயம் முதலாக அனைத்துச் சமயங்களிலும் ஒரோ ஒன்றே `நன்று` என உணர்பவர் உணரட்டும் (அஃது அவர் விருப்பம்) சமய வேற்றுமை பாராட்டாது, `அனைத்துச் சமயங்களையும் அதனதனளவில் நன்றே` என உணர்பவர்க்கு உண்மைக் குரு நந்தி பெருமானேயாவார். அவரது மரபு நெறியே சான்றோர்க்கு இனிதாய் இனிக்கும்.

குறிப்புரை :

அதனதன் அளவில் நன்றாதலாவது, ஓரோர் பக்குவம் உடையார்க்கு அவர்க்கேற்ற நன்மையைத் தருவதாதல் ``எச்சமயத் தோர்செல்லும் - தீதொழிய நன்மை செயல்``1 1நல்வழி. என ஔவையார் கூறியதும், எல்லாச் சமயங்களும் ஓரோர் நன்மை கருதியே எழுந்தனவாதல் பற்றியே. அங்ஙனமாயின் பிற மதங்களை நூல்கள் மறுத்தல் ஏன் எனின், மறுப்பு, அதில் உள்ள நன்மையைப் பற்றி எழுதல் இல்லை; அவ்வச்சமயத்திற்கு மேம்பட்ட சமயத்தில் உள்ள நன்மையை மறுப்பதைப் பற்றித்தான் எழும் என்க.
உறுவது - நன்றாவது, ``உணர்வார் குரு`` என்னும் கிழமை்ப பொருள் தொகையில், `குரு` உயர்திணையாகலின் `உணர்வாரது குரு` என ஆறாவது விரியாது, `உணர்வார்க்குக் குரு` என நான்காவது விரிக்க. `அவரது ஆறு` எனச்சுட்டு வருவிக்க. `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். அமைபவர் - சான்றோர். சான்றோர் முழு துணர்ந்தவர். எனவே, `உணர்வார் உணர்க என்றது ஒருபுடை உணர்ந்தாரை நோக்கியாம்.
சமயங்களுட் சிறந்த சமயங்களாகச் சொல்லப்படும் ஆறாவன ஆறு தரிசன மதங்கள். அவை `வைசேடிகம், நையாயிகம், பூர்வ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை, சாங்கியம், யோகம்` என்பன. இவை வேதத்தின் தத்துவத்தை ஆராயும் நூல்களாகச் சொல்லப்படுதலின் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்றன. ``அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து``1 எனச் சுந்தரர் அருளிச் செய்ததும், வாதவூரடிகள் ``இருமுச் சமயம்``2 என்றதும் இவற்றையே. ``அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்``3 என அவர் அருளிச் செய்தது, காணாபத்தியம் கௌமாரம் முதலிய அறுவகைச் சமயங்களை. அவற்றிடையே கொள்கைப் பூசல் பெரும்பான்மையாக இல்லை.
இதனால், பிற சமயங்களெல்லாம் ஒருபுடை உண்மையை உடையனவாக, சைவம் முழுதுண்மை உடையதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனு மாமே.

பொழிப்புரை :

`புறப்புறம், புறம் அகப்புறம், அகம்` எனப் பாகுபட்ட சமயங்கள் பலவற்றுள் பெரும்பான்மை ஒத்த கொள்கை யுடையவாய்ச் சிறுபான்மையே வேறுபட்ட சமயங்கள் அகச் சமயங்களாகும். அவையாவும் சைவமே. அவை ஆறு வகைப்பட்டன. அந்த ஆறும், `தம்மை ஆக்கினவன் சிவனே` எனக் கருதுகின்றன. அதனைப் பிற சமயிகள் மறுக்கின்றனர். அம்மறுப்புக்களைக் கேளாமல், `அகச் சமயங்கள் ஆறும் சிவனையே முதல்வனாக உடையன` என்பதை ஒருவன் அறிந்து, அவற்றுள் எந்த ஒன்றனையேனும் தெளிந்து அதில் நிற்பானாயின், அவன் சிவஞானியாய்த் தானும் முத்திக்கு உரியவனாய்ப் பிறரையும் முத்திக்கு உரியவராகச் செய்ய வல்ல ஆசிரியனும் ஆவான்.

குறிப்புரை :

`சமயங்கள்` என்னாது, ஒத்த சமயங்கள் என்றதனால், அவை அகச் சமயங்களாயின. எனவே, அவை தம்முள் ஒத்தனவாதல் பற்றியே ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள்`` எனவும், அவற்றுள் ஒன்றை இகழ்வோரையும், ``குன்று குரைத்தெழு நாயைஒத் தாரே`` எனவும் முன்பு4 கூறினார். அவ்வகச் சமயங்கள் `பாடாண வாத சைவம்` முதலிய ஆறுமாம். அவற்றைச் சங்கற்ப நிராகரண நூலுட்காண்க. அந்நூலுள் இறுதியில் அடைமொழியின்றி, `சைவம்` என்றே கூறப்பட்டது சுத்த சைவம். அதற்கும், சித்தாந்த சைவத்திற்கும் இடையேயுள்ள வேற்றுமை மிகமிகச் சிறிதே. `குரு` என்பது பொது வாயினும், சைவத்துள் `சிவாச்சாரியார்` `சைவாச்சாரியர்` என்றும் குறிக்கப்படுவோரே `சிவகுரு` எனப்படுவர். சிறுசிறு வேறுபாட்டால் அவருள் தாரதம்மியமும், சித்தாந்த சைவாசாரியரை நோக்க ஆசிரியத்தன்மை முற்றப்பெறாமையும் உடையரேனும், அவரெல்லாம் சிவப்பேறாகிய முத்தியை வழிமுறையில் அடைவிப்பவரேயாவர் அதனால், `சிவப் பேற்றை விரும்புவர் அவருள் எவரையேனும் ஆசிரியராகத் தெளியின் பழுதடையார்` என்பதாம்.
இதனால், `சித்தாந்த சைவமும் பொதுவாக, `சமயம்` என வழங்கப்படினும், அது சமயங் கடந்த நெறியேயாம்` என்பதை அதற்கு அணியவாகிய அகச் சமயங்களது சிறப்புக் கூறும் முக்ததால் சமயங்களைப் பற்றிய கூற்றுக்களில் இறுதியாக முடித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 1

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

பொழிப்புரை :

ஆன்மா, பரமுத்தி நிலையில் விளைகின்ற சிவபோகத்தை நுகர்தலாகிய இஃது ஒன்றைத்தவிர, அந்தப் போகத்தைத் தருகின்ற சிவத்தைத் தனக்கு வேறாக வைத்து ஆராய்கின்ற அறிவையும், மாயா மலத்தின் காரியமாய்ப் பொருந்திய அதிசூக்கும, சூக்கும, தூல உடம்புகளைப்பற்றி, புறஞ்செல்லுதலையும் உடையதாகின்ற வரையில் அதனது இயற்கைத் தன்மையைத் தலைப்பட்ட வியாபக நிலை அதற்கு நிலைக்கமாட்டாது.

குறிப்புரை :

`சிவனைப்போல எங்குமாம் வியாபகமே ஆன்மாவின் இயற்கைத் தன்மை. ஆயினும் சிவனைப்போல ஆன்மாச்சூக்கும சித்தாகாது. தூல சித்தாய் இருத்தலின், அதனை அநாதியே ஆணவ மலம் பற்றி, அணுத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை வியாபகமும், ஆணவ மலம் காரணமாக அடைந்த செயற்கைத் தன்மையே அணுத்தன்மையும் ஆதலால், ஆணவம் நீங்கிய பொழுது, ஆன்மாத் தனது இயற்கையாகிய வியாபகத் தன்மையை எய்தும். ஆணவ மலம் காரணமாகவே ஆன்மாவை மாயையும், கன்மமும் வந்து பற்றின ஆகலான், ஆணவ மலம் நீங்கினாலும் அதன் வாசனை நீங்காத வரையில் ஆன்மாவிற்கு அது அடைந்த இயற்கைத் தன்மையாகிய வியாபகத்தன்மை அதற்கு நிலையாதாக, மாயை கன்மங்களைப் பற்றித் தனது முன்னைச் செயற்கைத் தன்மையாகிய அணுத்தன்மை உடையதாகும்` என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்ட பொருளாகும். ஆணவ மலத்தின் வாசனையே ஆன்மாவைச் சிவபோகத்தை நுகர்தலினின்றும் நீங்கிச் சிவனைத் தனக்கு வேறாக வைத்து ஆராயத்தூண்டும். அதனாலே ஆன்மா மாயா கருவிகளையும், அவற்றின செயற்பாட்டிற்கு ஏதுவான கன்மத்தையும் உடையதாகும் என்க. ஏய்தல் - பொருந்துதல். ஓர் ஒளி - சிவம். `ஒளியை` என உருபு விரிக்க. உபாதி - செயற்கை; குற்றம். ``பரிய`` என்பதில் `பரியவற்றை` என இரண்டாவது விரிக்க. `பரியவற்றைப்பற்றி` என ஒருசொல் வருவிக்க. ``சாயும்`` என்பதை இறுதியிற்கூட்டி முடிக்க. சாய்தல் - மெலிதல்; நீங்குதல். தான், ஏ அசைகள்.

பண் :

பாடல் எண் : 2

நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளை நம்மின் வேறாகத் தேடி அடையும் இடம், நான் அறிந்தவரையில் எதுவும் இல்லை. அதனை நாம் நம்மிலே அறிதல் எவ்வாறு` எனின், `பரவியோமம்` எனப்படும் திருவருளை முன்னே அறிந்து. நம் வழியை நாம் விட்டு, அதன் வழியில் நின்றால், மெய்ப்பொருள் விறகைக் கடைந்தவழித் தோன்றும் தீ, பின் அந்த விறகைத் தானி அழிப்பதுபோல. நம் அறிவிலே விளங்கிப் பின் `நாம்` என வேறு முனைத்து நிற்கும் தற்போதத்தை அழித்து, நம்மைத் தானாக்கிக் கொள்ளும். ஆகவே, கருவிக் கூட்டங்களை `நாம் அல்ல` என்று கண்டு கழித்து நாம் தனித்து நின்றவழி, முன்னெல்லாம் உயிர்ப்பு வடிவில் இருந்த அந்த ஒளி விளக்கு இப்பொழுது தானேயாய் விளங்கும். ஆகவே இம்முறையில் ஒருவன் அதனை அறிவானே ஆயின், அவன் அதனோடு ஒற்றித்துத் தனது செயற்கைத் தன்மையாகிய அணுத் தன்மையின் நீங்கித் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலைப்படுதல் கூடும்.

குறிப்புரை :

``அறிந்து`` நான்கில் முதலு. அறிந்த அளவு என அறியப்பட்ட இடத்தைக் குறித்தது. ஏனைய மூன்றும், `அறிந்தவழி` என்பன திரிந்து நின்றவை, `உற விம்மிடும்` என்பதில் செயவெ னெச்சம், `மழை பெய்யக் குளம் நிறையும்` என்பது போலக் காரணப் பொருளில் வந்தது, விம்முதல் - பெருகுதல். ஆன்மாவைத் தன்னுள் அடக்கித் தாம் மேம்பட்டு நிற்றல். ``ஊன்`` என்பது, பலவகை உடம்புகளால் நிற்கும் கருவிகளைக் குறித்தது. கருவிகளில் ஒவ்வொன்றையும் `இது` எனச் சுட்டி, நான் அன்று எனக் கழித்தல் `நேதி வாக்கியம்` எனப்படும். (நேதி = ந + இதி இவ்வாறான தன்று) `நாஹம்` (நான் அது) எனப் பாவிக்க வேண்டும். `நாஹம்` என்னும் உணர்வால் பாச நீக்கமும், `சோஹம்` என்னும் உணர்வால் `சிவப்பேறும், உளவாம் என்பர். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை`
``என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்(கு)
என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``1
என்னும் அப்பர் திருமொழியாலும் உணர்க. `அம்` எனப் புறம் போந்து `சம்` என உட்புகுந்து அசபா மந்திரம் வடிவாய் நிற்பன் என்பதை, ``ஊனங் கத்துரு வாய்உல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை``1 என்னும் சுந்தரர் திருமொழியால் உணர்க.
இதனால் ஆன்மா ஆணவ மலத்தால் தான் இழந்த வியாபக நிலையைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து)
உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்
உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே.

பொழிப்புரை :

ஆரவாரம் மிக்க கடலாற் சூழப்பட்ட உலகத்தில் உடலில் தங்கி வாழ்கின்ற ஆரவார வாழ்வின் உண்மையை ஆராய்ந்துணர்ந்தால், அந்த உடலிற்றானே தன்னோடு உடன் உறைகின்ற சிவானந்தத் தேனை கடலிடை நிரம்பப் புதிது புதிதாக எல்லையின்ற எழுந்து வருகின்ற அலைபோல்வதாகக் காண முடியும்.

குறிப்புரை :

``கௌவை`` என்பதைக் கடலுக்கும் கூட்டுக. கடல் கௌவையுடைத்தாதல் போல, அதனால் சூழப்பட்ட உலகத்தில் வாழும் வாழ்க்கையும் ஆரவாரம் மிக்கதாய் உள்ளது - என ஒரு நயம் தோற்றுவித்தவாறு, `கடலின் ஆரவாரம் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்தாதல்போல, உலக வாழ்வின் ஆரவாரவும் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்து` என்பது குறிப்பு. உடலிடை வாழ்வின் உண்மையாவது சில காலமே உளதாய்ப் பின் இல்லாதொழிவது. உள்ளொளி, சிவம். அதனை நாடும் முறை மேற் கூறப்பட்டது. `மலிதிரையின்` என, ஒப்புப்பொருளதாகிய ஐந்தன் உருபு விரிக்க. தேன் தான் உள்ள இடத்தில் சிறிதளவினதாகவே இருக்கும். `இந்தத் தேன் கடல்போல எல்லை யற்றதாம்` என அதிசயம் உணர்தியவாறு. ``காணலும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், `ஆன்மாத் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலையை அடைந்தவழி வியாபகமாகிய சிவத்தினது, கால, இட எல்லைகளில் ஒன்றும் இன்றிப் பெருகுகின்ற இன்ப வெள்ளத்தில் திளைக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.

பொழிப்புரை :

`கதிர், மதி, தீ` என்னும் பெருஞ்சுடர் மூன்றையும் அவை உலகிற்குப் பயன்படுவ ஆதலைத்தெரிந்து, தனக்கு உடம்பாகக்கொண்டு அந்த ஒளிப்பொருட்கட்கு ஒளியைத் தருகின்ற உள்ளொளியாய் அவற்றில் நிறைந்து நிற்கின்ற சிவனும் வியாபகப் பொருளாகிய ஆன்மாக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட அடையும் நிலைகளில் எல்லாம் தான் அருள் கூர்ந்து அவற்றின் அறிவுக்கு அறிவாய், அவற்றோடு உடனாய்ப் பலவாகின்றான்.

குறிப்புரை :

தெரிந்து உள்ளொளியாகி எனவும், `இகலிடம் எல்லாம் பரிந்து, இருஞ்சுடர் விட்டு உடன்போகின்ற பல்குரையாமே`` எனவும் இயைக்க. இகல் இடம் பெத்தமும் முத்தியும். ``பிரானும்`` என்னும் உம்மை எதிர்வருகின்ற `உயிர்` என்னும் பொருளைத் தழுவிநின்றது. பல உயிர்களிலும் நிறைந்து நிற்றல் பற்றி இறைவன், ``அநேகன்``1 எனப்படுதல் காண்க.
``பல்கு உரை`` என்பதில், `சொல்` எனப் பொருள் தரும் `உரை` என்பது அதனால் குறிக்கப்படும் பொருளைக் குறித்தது. பொருள், இங்கு உயிர். இனி, `பல் + குரை` என்றே பிரித்து, `குரை அசைநிலை இடைச்சொல்` என்றலுமாம். ``அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே``2 என்பது போலும் சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ``நல்குர வென்னும் நசையின்மை பல்குரைத் துன்பங்கள் சென்று படும்``3 எனத் திருக்குறளிலும் `குரை` என்னும் இடைச்சொல் ஆளப்பட்டமை காண்க. `பல் கோரை என்றே பாடம் ஓதித் தாம் தாம் வேண்டுமாறேயும் உரைப்பர்.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத்தால் பல உயிர்களோடும் உடனாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் எல்லா உயிர் களோடும் உடனாய் நிற்பினும், மாயா காரியங்களில் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் உளவாகின்ற வினைகளில் அகப்பட்டு உழன்ற போதிலும் முடிவில் தன் அடியில் வந்து, `அடைக்கலம்` என அடைந்தவர்க்கே பொன்போலப் பயன்படுவான். சிறியதிலும் சிறியதாய் விளங்குகின்ற ஒளிவடிவாகிய அவன், தன்னைப் பெற்றதனால் மேன்மை பெற்றவர்கட்கே எல்லையில்லா ஒளியாய், எங்கும் நிறைந்து விளங்குவான்.

குறிப்புரை :

``உறுதியினுள்`` என்பதில் `உள்` என்பது மூன்றாவதன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். உள் வினை - உளவாம் வினை. `இரணியம்` என்னும் வடசொல். `இரணம்` எனத் திரிந்து நின்றது. `அறுதி, பெறுதி` என்பனபோல, ``சிறுதி`` என்பது திவ்விகுதி பெற்ற தொழிற் பெயர். `சிறுத்தல்` என்பது அதன் பொருள். அஃது ஆகு பெயராய், அதனையுடைய பொருளைக் குறித்தது. ``ஒளி மூர்த்தி`` என்பது, `ஒளித்த மூர்த்தி` என வினைத்தொகை. `மேலோர்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது.
இதனால், சிவன் சருவ வியாபியாயினும் மலம் நீங்கப்பெற்றார்க்கே அவன் வியாபகன் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.

பொழிப்புரை :

பற்றப்படும் பொருள்களில் எல்லாம் மேலான பொருளாய், மேலான ஒளியாயும் உள்ள சிவன் அண்டம் முழுதும் நிறைந்து, `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்களாய்ப் புலப்படுவான். பிண்டத்தில் புருவ நடுவிலே தியானிக்கப்படும் பொருளாய் நிலைத் திருப்பான். பின்னும் அவ்வாறு தியானிப்போனும் தானேயாகின்ற தவ வடிவினனும் ஆவான்.

குறிப்புரை :

முதற்கண், ``பற்று`` என்றது, பற்றப்படும் பொருளை. பற்றப்படும் பொருள் நற்பொருளும், விடப்படும் பொருள் தீப் பொருளும் ஆதலை நினைக. `அத்தைகய பொருள்களுள் மேலானவன்` எனவே, அவனின் மிக்க நன்றாம் பொருள் இல்லை யாயிற்று. நன்மையே, வடமொழியில் `சிவம்` எனப்படுகின்றது. நன்மையை உடையது` என்பது அதன் பொருள். சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது. ``முளைக்கின்ற மூன்றொளி`` என்றதனால், ``முற்றும்`` என்றது அண்டத்தைப் பற்றியதாயிற்று. உம்மை முற்றும்மை. முற்றுதல் - நிறைதல். நெற்றி - ஆஞ்ஞை. இதுவே தியானத்தானம் ஆதலை யறிக. நினைவு - தியானம்; என்றது தியானிக்கப்படும் பொருளை. மூன்று ஒளியாய்ப் புலப்படும் நிலை மாறி மாறி நிகழ்வது. தியானிக்கப்படும் பொருளாதல் ஒன்றேயாகலின், ``நிலைதரும்`` எனவும், `தியானமும் அவன் உடனாகாத விடத்து நிகழாது` என்றற்கு ``அவனாய் நின்ற`` என்றும், அவன் தியானமுமாய்க் கலந்து நிற்றல் பற்றி ``மாதவன்`` என்றும் கூறினார். தான்ஏ அசைகள்.
இதனால் சிவன் அண்டத்திலும், பிண்டத்திலும் வியாபியாய், ஏற்ற பெற்றியில் அருள்புரியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும்
ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனு மாகி நவிற்றுகின் றானே.

பொழிப்புரை :

இன்னும், முன் மந்திரத்திற்கூறிய பரஞ்சுடராகிய சிவன், எல்லாத் திசைகளிலும் அதுவதற்குத் தலைவனாய் நிற்கின்றான். அவைகள் உள்ள எல்லாப் பொருள்களுமாய் இருக்கின்றான்; ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவுகளையும் ஆக்குபவனுமாகி, அவை அனைத்திலும் நிறைந்து அவற்றை நிலைக்கச் செய்பவனுமாய், அங்குள்ளாரது நாவில் அவையாய்க் கலந்து சொற்களைச் சொல்கின்றான்.

குறிப்புரை :

அடுக்கு, `அதுவது` எனத் தனித்தனியைச் சுட்ட வந்தது. `ஒவ்வொரு திசையையும் காக்கும் காப்பாளர் வேறு வேறாகச் சொல்லப்படினும் அவரிடத்தும் சிவனே வியாபியாய் நின்று காவல் புரிவிக்கிறான்` என்பது கருத்து. சிவாகமங்கள் பத்துத் திசைகளிலும் ஒவ்வொன்றிலும் பத்துப் பத்து உருத்திரர் இருந்து திசை காப்பாளரைச் செலுத்துகின்றனர்` என்று கூறுதலோடு, அவர்களின் பெயர்ப் பட்டியலையும் தருதற்கு இதுவே கருத்து என்க. `எவன்` என்னும் வினாப் பெயர் முதல் நீண்டு நின்றது. ``விரிநீர் உலகு`` என்றதனால், ``உலகு`` என்றது நிலவுலகத்தையாயிற்று. காட்சிப் பொருளாய நில வுலகத்தின் பகுதிகளை வகுத்துக் கூறியதனால், உரைப்பொருளாய பிற உலகங்களை ஆக்குதலும் தானே பெறப்பட்டது. `ஆக்குவன்` என்பது இடைக்குறைந்து நின்றது. அமர்தல் - தங்குதல். இதன் பயன் அப்பொருள்கள் நிலைபெறுதலாம். `எங்குமாம் உலகினும்` என ஆக்கம் விரிக்க. ``எங்கும்`` என்றது ஆகாயத்தை உணர்த்திற்று. நாவன் - நாவே வடிவானவன். `நவிற்றுதல்` என்பது பிறவினை வாய்பாடாய்த் தன்வினையையும் குறிப்பதொன்று. ``நம்பு வார்அமர் நாவின் நவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது``1 என்பதிலும் இவ்வாறு வந்தமை காண்க. ``நட்பாடல் தேற்றாதவர்`` 2 என்றார் போல்வன காண்க. நாவாய் நின்று நவிற்றுதல், பொதுப்பட எல்லார் மொழியையும் குறித்தலுடன் அருளாளர்களது நாவில் இனிது விளங்கி நின்று அருளிச்செய்யும் உறுதிச் சொல்லைச் சிறப்பாகக் குறிப்பதாம். ``எனதுரை தனதுரையாக``3 என்னும் அருள் மொழியை ஓர்ந்துணர்க.
இதுவும் சிவனது சருவ வியாபகத்தையே கூறியது.

பண் :

பாடல் எண் : 8

நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புரணவல் லானே.

பொழிப்புரை :

(ஆகாயத்தில் இருந்து அனைத்துப் பொருளையும் காணும் கருடன் நம்மால் அறியப்பட்டது.) அதுபோலப் பரம வியோம மாகிய சிதாகாசத்தில் இருந்து கொண்டு ஏனை எல்லாப் பொருளையும் அறிந்தாங்கறியும் கருடன் சிவன் பின்பு அழிக்கப்படுவனவாகிய ஏழுலகங்களையும் இதுபொழுது அவனே காக்கின்றான். ஆகவே உலக முதல்வன் அவனே. ஆதலின், அவ்வுலகங்களில் உள்ள வினைகளையெல்லாம் நீக்குகின்ற, இயல்பாகவே பாசம் இல்லாத, எஞ்ஞான்றும், எவ்வாற்றானும் பிறப்பினுட்படாத கடவுளும் அவனே. பிறப்பு இறப்பு இன்மையால், போக்கும், வரவும் இவன் ஆகிலும், உயிர்களில் அவையேயாய்க் கலந்து நிற்றலால், அவற்றது போக்கு வரவுகளில் நீங்காது நிற்கவும் அவன் வல்லவனாவான்.

குறிப்புரை :

``கருடன்`` என்றது, உவமையாகு பெயர். கருடன் மேற்கூறிய இயல்பினது ஆதல் பற்றியும், புள்ளரசு ஆதல் பற்றியும் இறைவனுக்கு அஃது உவமையாயிற்று. வேதத்தில் கருடனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது பற்றி, அங்கு, `கருடன்` என்பதைச் சிவனாகக் கொள்க என்றற்கும் இது கூறினார். `நோக்குதல்` என்பது பெரும்பான்மையும் காத்தல் தொழிலையே குறித்தலால், காத்தற் கடவுளாகிய மாயோனுக்குக் கருடன் ஊர்தி சொல்லப்பட்டது. `அங்குள வினை` என மாறிக் கூட்டுக. `வினையே நீக்குதற்கு உரியவன், வினையும், அதனால் வரும் பிறவியும் இல்லாதவனே என்றற்கு, `அங்குள வினையை நீக்கும் நிமலன்; பிறப்பிலி`` என்றார். `புணரவும்` என்னும் எதிர்மைறையும்மை தொகுத்தலாயிற்று. நொடித்தல் - அழித்தல். `நொடி உலகு, என் நிமலன்` - இவை வினைத் தொகைகள். அவை செயப்படு பொருள்மேல் தொக்கன. ``காக்கும்`` என்பது முற்று - எச்சமாகக் கொள்ளினும் ஆம். `தலைவனும் ஆவன்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் எல்லாப் பொருள்களையும் கடந்து நிற்பினும் எல்லாப் பொருளிலும் வியாபியாய் நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன் திருமேனி கொள்ளும்பொழுது சிவந்த சடை, சொம்பொன்போலும் நிறம் இவைகளையுடையனவாகவே கொள்வான். ஏனைப் பொருள்களில் ஒன்றன் வடிவிலேயும் அவன் தோன்றானாகிலும் அவை அனைத்திலும் உடன் நிறைந்து நீங்காமலே நிற்கின்றான். ஆயினும் அவை பிறப்பதுபோல அவன் பிறப்பதில்லை. அவன் ஒடுங்கல் தோன்றல்கள் இல்லாதவனாயினும் அவைகளை யுடைய உலகத்தோடு ஒட்டி நிற்கின்றான்.

குறிப்புரை :

``ஈசன்`` என்பதை முதலிற் கொள்க. `அவன் மேனி செம்பொனே ஒக்கும்` என்க. `எங்கும் கழிந்திலன்` என மாறிக் கூட்டுக. ``எங்கும்`` என்பது, `அப்பால் எங்கும்` எனப் பொருள் தந்தது. உலகத்தின் இயல்பாகிய ஒடுங்குதல் இலகுதல்களைப் பின்னர் கூறுகின்றார் ஆதலின். `சிவனுக்கு அவையில்லை` என்றற்கு ``பிறப்பிலன்`` என்பதை முன்னே கூறினார். இலகுதல் - தோன்றுதல்.
பிற வகையான தெய்வ வடிவங்களையே சிவன் வடிவாகக் கொண்டு வழிபடின் குற்றம் என்னை? என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். இது பற்றியே இத்தகைய வடிவங்கள், `சிவனது இயற்கை வடிவங்கள்` எனப்படுகின்றன. இவ்வாறன்றி, நாயன்மார் சிலரிடம் சிவ யோகியாகவும், பிரமசாரியாகவும், சிவனடியாராகவும் வந்து சில திருவிளையாடல்களைச் செய்த வடிவங்கள் யாவும் சிவனுக்கு நிலையானவாய் இல்லாது, அவ்வப்பொழுது ஏற்ற பெற்றியாற் கொள்ளும் செயற்கை வடிவங்கள் என்க.
``அண்டம் ஆர்இரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர், அச்சுடர்
கண்டிங் கார்அறிவார்? அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``
என அப்பர் பெருமான் அருளிச்செய்ததும் இக்கருத்தை விளக்கவேயாம்.
இதனால், `சருவ வியாபியாய் அகண்டனாய் நிற்கும் சிவன் கண்டனாய்த் தோன்றுமாறு இது` என்பது கூறப்பட்டது. இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் உணர்வும் அவனே உயிரும் அவனே`` என்னும் மந்திரம் மேல், `சிவ தரிசனம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 10

புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையில் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் தந்தையாகிய சிவபெருமான், வெறும் நூலறிவில் மட்டும் தோன்றுபவன் அல்லன்; தவத்தில் தோற்றஞ் செய்பவன். அப்பால் அத்தவத்தின் பயனாகப் பெறப்படுகின்ற நன்மையுடைய ஞானத்தில் இடையறாது தொடர்ந்து விளங்குபவனும் ஆவான். இனி, `இன்ன செயலுக்கு இன்ன பயன்` எனப் பண்ட மாற்றுப் போலக் கொண்டு வேதியர்கள் கூறுகின்ற காமிய கன்மங்களிலும் எங்கும் நிறைந்து வேதியர்கள் அவர்கட்குப் பயனளித்து வருகின்றான்.

குறிப்புரை :

நாற்றம் - தோற்றம். நாறுதல் - முளைத்தல். `நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க``1 என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. `நன்மை` என்பது எதுகை நோக்கி இடையே அகரம் பெற்று, ``நன்மை`` என வந்தது. `நன்மையின்` எனச் சாரியை நிற்க இரண்டன் உருபு, தொக்கது. `நன்மையைப் பயனாக உடைய ஞானம்` என்க. நன்மை, இங்கு வீடுபேறு வழக்கம் - தொடர்ச்சி, `விலைமை, என்பது, எதுகை நோக்கி, ``வில்மை`` என நின்றது. `பண்ட மாற்றுத் தன்மை, என்பது பொருள். பலம் - பயன். பலமை - பலன் தரும் தன்மை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய கன்மங்களைக் குறித்தது.
இதனான், சிவன் சருவ வியாபியாய் நிற்பினும் அவரவருக்கு ஏற்ற பெற்றியால் அருள்புரியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், பராகாயத்தில் அனைத்துலகங்கட்கும் மேலேயும் இருக்கின்றான். அப்பொழுதே மிகக் கீழே உள்ள மண்ணில் திண்மையாய் உள்ளவனாயும், அதனைச் சூழ்ந்துள்ள நீரில் தண்மையாய் உள்ளவனாயும், இவ்வாறு எல்லாவற்றிலும் அதனதன் தன்மையாய் நிற்பதுடன், உயிர்களுக் கெல்லாம் வேறோர் அறிவாயும் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`தன்மை` என்பது எதுகை நோக்கி இறுதி நிலை தொகுத்த லாயிற்று. `அதனதன்` என்னும் அடுக்கும் தொகுத்தலை பெற்றது, கண் - அறிவு. ``நிற்பதோர் கண்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின் நிற்றலையும், கண் ஆதலையும் வேறு வேறாகக் கொள்க. ``தண்ணவன், கண்ணவன்`` என்பவற்றில், ``அவன்`` என்பன பகுதிப் பொருள் விகுதிகள். எழுவாய் முன் மந்திரத்தி -னின்றும் வந்தது.
இதனால், சிவன் தனது வியாபகத் தன்மையால் மேலான வற்றிற்கெல்லாம் மேலாயும், கீழானவற்றிற்கெல்லாம் கீழாயும் நிற்றல் கூறப்பட்டது. ``மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 12

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாமே.

பொழிப்புரை :

சிவன், முன் மந்திரத்திற் கூறியபடி உலகத்தைக் கடந்து அப்பால் மேலும், கீழுமாய், உலகத்தில் எல்லாப் பொருளுமாய் வியாபித்து நிற்றலால் `மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்களை அதிட்டித்துக் காத்தல் படைத்தல்களைச் செய்பவனும் அவனே. அதனால், எல்லாப்பொருள்களின் முழுத்தன்மையும் அவனே.

குறிப்புரை :

``தான் நிலம்`` என்பது தொடங்கி, ஈற்றடியில் ``நின்றனன்`` என்பது காறும் சென்று, பின், `அதனால், என்பது வருவித்து மாலோடு நான்முகன் தானாகி நின்றனன்; தானே வளங்கனியாம்` என முடிக்க. ``என`` என்பதை ``வரை, கடல்`` என்பவற்றோடும் கூட்டுக. கனி, கனிவு; முதிர்ச்சி முதனிலைத் தொழிற்பெயர். சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இதன் கண்ணும் எழுவாய் முன் மந்திரத்திற்போல வந்தது.
முன் மந்திரத்தில் `சிவனே எல்லாப் பொருளுமாய் நிற்பினும் மாலும், அயனுமாகிய காரணக் கடவுளரும் அவனேயோ` என ஐயுறுவார்க்கு அவ்வையத்தை நீக்குவார் முன் மந்திரத்திற்கூறிய பொருள்களையே மீண்டும் இம்மந்திரத்தில் அனுவதித்துக் கூறினார். இங்ஙனம் உரையாதார்க்கு இவை கூறியது கூறலாம். ``நாரணங்கான்; நான்முகன்காண்; நால்வேதன்காண்``2 என்னும் திருத் தாண்டகத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 13

புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறைஎன மாலுற்ற வாறே.

பொழிப்புரை :

பெரியோர்கள் சிவனிடத்திலேயே காதல் மிக்கவர்களாய் அவனையே நோக்கி நிற்றற்குக் காரணம், `எல்லாப் புவனங்கட்கும் அதிபதி அவனே; புண்ணியத்தின் பயனாய்க் கிடைப்பவனும் அவனே, யாவர்க்கும் தந்தையும் இவனே; உலகத்தை வலிமை வாய்ந்த தலைமையோடு நடத்துவோனாகி அதனை நடத்துபவனும் அவனே; எண்ணித்தொகை கூறுதற்கு இயலாத அனைத்துயிர்களும் அவனே; ஆகலின் அவன் ஒருவனே கடவுள்` என உணரும் மெய்யுணர்வேயாகும்.

குறிப்புரை :

`சிவன்பால்` என்பதும், `பெரியோர்கள்` என்னும் தோன்றா எழுவாயும் வருவித்து, ``மால் உற்ற ஆறு`` என்பது தொடங்கி உரைக்க.
புவனங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். நிலத்தைப் பெண்ணாகக் கூறும் வழக்குப் பற்றி. `புவனா` என்பாள் ஒரு சத்தி என்றலுமாம். மிகுதி, பன்மை குறித்து நின்றது. ``என`` என்னும் செயவெனெச்சம், `என்பதனால்` என்னும் பொருட்டாய், ``மாலுற்ற ஆறு`` என்னும் எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. `பெரியோர்கள் சிவனிடத்துச் செலுத்தும் அளவிலா அன்பு, தலைவி ஒருத்தி தன் தலைவனை அவனை யின்றித் தான் அமையாளாய்க் காதலிப்பதனோடு ஒத்தது` என்றற்கு அதனை, `அன்பு, காதல்` என்பவற்றுள் ஒரு சொல்லாற் கூறாது. ``மால்`` என்னும் சொல்லாற் கூறினார். மால் - மயக்கம், மோகம்.
இதனால், மெய்யுணர்ந்தோர், சிவனே சருவ வியாபகனும், சருவேசுரனும் ஆதலையறிந்து அவன்பால் கரை கடந்த காதலை யுடையாராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.

பொழிப்புரை :

உயிர்களின் உடம்புள்ளிருந்து ஓவாது இயங்கி, உயிரை நிலைப்பிக்கின்ற பிராணனும், வானத்தில் இயங்கி உலகிற்குப் பல நலங்களை விளைவிக்கின்ற, அளவற்ற கதிர்களையுடைய பகலவனும், மண்ணில் ஒரு சிற்றிடமும் விலக்கின்றி எங்கும் இயங்கி வாழ்விக்கும் காற்றும், மற்றும் அனை்ததுப் பொருள்களுமாய் நிற்பவன் சிவன்` என்றால், உயிர்களின் அறிவினுள் விளங்கி, அவ்வறிவை அறியச் செய்பவனும் அவன்தானே? வேறுயாராய் இருக்கமுடியும்?

குறிப்புரை :

``ஒளிரும்`` என்பது ``ஒளிர்விக்கும்`` எனப் பிறவினைப் பொருட்டாய், நிலைப்பித்தலைக் குறித்தது. உலவா - உலவி; சஞ்சரித்து. `உலவா ஒளிரும்` என மாறிக் கூட்டுக. உம்மை கொடுத்து எண்ணியது, உபலக்கணத்தால் அனைத்தையும் எண்ணிக்கொள்ளுதற்கு, ``நிற்கும்`` என்பதன் பின் `எனின்` என்பது வருவிக்க. அல்லாக்கால், மேல், ``நின்றனன்`` என்னும் மந்திர உரையிற் கூறியவாறு. `கூறியது கூறல்` என்பது படும். ``நிற்கும்`` என வேறு தொடராக்கி முடிந்தமையையும் நோக்குக. கண் - அறிவு. கருத்து அதில் தோன்றும் புலன் கருத்திற்கு ஏதுவாவதனை, `கருத்து` என்றது உபசார வழக்கு. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. ஏகாரம், உடன்படுவித்தற்பொருட்டாகிய வினா.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத் தன்மையால் அனைத்துப் பொருளையும் நிலைப்பித்து, உயிர்களின் அறிவையும் அறியச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.

பொழிப்புரை :

என் அறிவையும், எழுத்து அவ்வறிவின் வழி இன்பத்தையும் உண்டாக்குதல், அவையிரண்டும் இயற்றமிழில் அறிஞரால் ஓர் இனப்படுத்தி எண்ணப்பட்டன. (``எண் என்ப, ஏனை - எழுத்தென்ப``1 ``எண்ணெழுத் திகழேல்``2 ``எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்``3 என்பவற்றைக் காண்க.) இசைத்தமிழில் பண், திறம், (இன்னும் - திறத்திறம்) என்பனவும் அவ்வாறு ஓரினப்படுத்தி எண்ணப்படுவனவாம் இன்னோரன்ன பலவற்றை இனம், இனமாகப் படைத்த சிவபெருமானைக் கண்ணிலும், பொருள்களை உணரும் கருத்திலும் `அது` என்றும், `இது` என்றும் சேய்மைப் பொருளாகவும் அண்மைப் பொருளாகவும் தம்மின் வேறு வைத்து உணர்வார்க்கு அவன் அங்ஙனம் உணரும் உணர்வை, அவ்வுணர்வின் வழியே சென்று உணர்விற்கு உணர்வாய்த் தோன்றி அழித்து, `அவனே தாம் எண்ணும்படி ஒன்றாகியே நின்று, ஒப்பற்ற ஓர் ஊதியமும் ஆவான்.

குறிப்புரை :

``செயல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளை உணர்த்திற்று. `பண்ணும் திறனும் அவ்வழியவே` எனச் செயப்படு பொருள் வருவித்துரைக்க `கண்ணிலும் கருத்திலும்` என எண்ணும்மை விரிக்க. ``அது இது`` என்பது அவ்வாறு உணரும் உணர்வைக் குறித்தது. அஃது உம்மைத் தொகை. `அது இதுவை உருக்கி` என இயைக்க. ஆயம் - ``பொருளாயம்``1 ``ஆயும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், சிவன் எங்கும் சருவ வியாபியாய் நின்று, தன்னை உணர்வார்க்கு முன்னர் அவரின் வேறாகியும், பின்னர் அவரேயாகியும் பெரும்பேறாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

பொழிப்புரை :

`தோன்றல், நிற்றல், ஒடுங்கல்` என்னும் முத்தொழில்களில் நடுவணதாகிய நிற்றல் தொழிலுடையவாய் உள்ள உலகங்கள் அனைத்தும் தனது உருவத்திற்குள்ளே `இவ்வாறு அடங்கியிருக்க` எனச் சங்கற்பித்துச் சிவன் அவற்றில் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`இவ்வண்ணம் ஓங்கக் கருக்கொடு` என மாற்றியுரைக்க. ஓங்குதல் - நிலைத்து நிற்றல். கருக்கொள்ளுதல், திருவுளத்திற்குள் சங்கற்பித்தல். ஈற்றடி `சிவன்` என்னுந் துணையாய் நின்றது. ``ஓங்கக் கருக்கொடே எங்கும் கலந்திருந்தான்`` என்றதனால், `அவனது சங்கற்பத்தானே உலகம் நிலை பெற்றுள்ளது` என்பதும், `பிறவாறு சங்கற்பிக்கின் அவ்வாறே ஆம்` என்பதும் `பிறர்போலக் கரணத்தாலன்றிச் சங்கற்பத்தாலே எல்லாம் செய்வன்` என்பதும் போந்தன. ``தன்`` என்றது தனது உருவத்தை. அவனது உருவம் சத்தியேயாதலை நினைக.
இதனால், சிவனது சருவ வியாபகச் சிறப்புடன், இயைபு பற்றி அவன் செயலாற்றும் முறையும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.

பொழிப்புரை :

சிவனது பெருமை, உபநிடதங்களில் `அது` எனப் பொதுவாகச் சுட்டியும், `சித்து` என வரையறுத்தலும் கூறப்படுதலும், எல்லாப் பொருட்கும் ஆதியாயினும், தான் அநாதீயேயாதலும், எந்த அளவையினாலும் அளந்தறியப் படாமையும், உயிர்கள் பல வற்றிற்கும் பொதுப்பட இடமாய் விரிந்து உலகம் முழுதிலும் வியாபகம் ஆதலும் ஆகும். இன்னும் அவனது பெருமையை எல்லாம் எங்களுக்குக் குருவாகிய நந்தி பெருமான்தான் அறிவார்.

குறிப்புரை :

``பொதுவது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. எட்டும் - வியாபிக்கும். பெருமைகள் பலவாயினும் பொதுப்பட, `பெருமை` என்னும் அளவில் ``இது`` என்றார். ``ஈசன்`` என்பதை முதலில் கொள்க.
இதனால் முடிவில் முதற்கண் குரு வணக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

பொழிப்புரை :

எங்கள் சிவன் ஐம்பூதங்களுடன், `ஒளி` எனத் தக்க மற்றும் முப்பொருள்கள் கூட எடடுப் பொருள்களாகிய வடிவினை உடையவன், `பராபரன் பிஞ்ஞகன்` என்பன போன்ற பெயர்களால் புகழப்படுபவன், எல்லா இடங்களும் அவனுக்கு இடங்களே எல்லாவற்றிற்கும் இறுதியாயினும் தனக்கு இறுதியில்லாதவன். அவனை யான் வாழ்த்துகின்றேன்.

குறிப்புரை :

இறுதியிற்கூறியது குறிப்பெச்சம். சோதி - ஒளி. ஞாயிறும், திங்களும் ஒளிப் பொருள்களாதல் வெளிப்படை. இனி அறிவும் ஒளியாதலின் அவ்வாற்றால் `ஒளி` என்பது ஆன்மாவையும் குறித்தது. ஆக அட்ட மூர்த்தமும் சொல்லப்பட்டமை காண்க. பராபரன் - மேலோடு கீழாய் விரிந்தவன். பிஞ்ஞகன் - தலைக் கோலத்தை உடையவன். தலையில் உலகம் அழியாதபடி கங்கையைத் தாங்கினவன்; பாம்பையும், நிலவையும் பகையின்றி ஒன்றி வாழ அணிந்தவன்; தலைமாலைகளை அணிந்து தனது நித்தியத்தை உணர்த் துபவன்; பிரணவத்தைக் குறிக்கும் கொன்றை மலர் மாலையைத் திருஅடையாளமாலையாக அணிந்தவன். குரண்டாசுரனை அழித்துக் கொண்ட கொக்கிறகை அணிந்து, கொடியோரை ஒறுத்தலை உணர்த் துபவன்; இன்னோரன்ன பல புகழ்கள் `பிஞ்ஞகன்` என்பதனால் பெறப்படுதல் அறிக. தூரும் உடம்பு - சோற்றால் தூர்க்கப்படும் உடம்பு; அதனுள் சோதி உயிர். ``சோதியும்`` என்னும் உம்மையால் ஏனை ஒளியும் தழுவப்பட்டன. ``பேரும்`` என்னும் உம்மை சிறப்பு. ஊர் - இடம். சகலன் - எல்லாம் ஆனவன். ஈற்றடி, கால இட வரையறைகள் இன்மையைக் குறித்தது.
இது நூற்பொருள் கூறியதன்று. நூற்கும், தமக்கும் முதல்வனாகிய இறைவனை வாழ்த்தியது. `வாழ்த்து, வணக்கம்` என்பவற்றுடன் பொருளியல்புரைத்தலும் வாழ்த்தாதலை உணர்க.

பண் :

பாடல் எண் : 20

தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை. நூலைச் சிவனது முதன்மையோடு தொடங்கிய நாயனார் முடிவையும் அவனது முதன்மையோடு முடித்தமை நினைந்து இன்புறத் தக்கது.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 21

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.

பொழிப்புரை :

இது நூல் சிதையாமைப் பொருட்டு இதன் அளவை நூற்குள்ளே வரையறை செய்தது.

குறிப்புரை :

``தமிழ்`` என்பது தமிழால் ஆகிய பாடலைக் குறித்தது. இந்நூலின் பாடல் தொகை மூவாயிரம்` என்பதாம்.
`இந்நூற் பாடல்கள் அனைத்துமே `மந்திரம்` எனப் பெயரிடப்பட்ட போதிலும், சிறப்பாக மந்திரமாகவே அமைந்த பாடல்கள் முந்நூறு` என்றபடி. அவை நான்காம் தந்திரத்தில் எண்ணிக் கொள்ளற்பாலன. `எந்திரம்` எனப்படும் சக்கரங்களும் `மந்திரம்` என்றதனானே பெறப்பட்டன. அவை மிகச்சில ஆதலின், தொகை சொல்லப்படவில்லை. இங்ஙனமாயினும், `முந்நூறு மந்திரம்` என்றே ஒரு தனி நூலும் வெளி வந்துள்ளது.1
`உபதேசம்` என்பது ஓர் அதிகாரம். முப்பது பாடல்களுடன் முதல் தந்திரத்தில் இருத்தல் நன்கறியப்பட்டது. முந்நூறு மந்திரத்தை வேறு கண்டவர்க்கு, முப்பது உபதேசம் வேறு கிடைக்கவில்லை போலும்!.
ஈற்றடியில் ``மூன்றும் ஒன்றாமே`` என முடிபு கூறியது, `மந்திரம் உபதேசம்` - எனக் கூறியவற்றை மூவாயிரம் வேறு என மலையற்க - என மலைவு தீர்த்தது. ``செய்த`` `செய்தன` என அன் பெறா அகர ஈற்றுப் பன்மை வினைப் பெயர். இவை செயப்படு வினையாய் நின்றன. இதிலும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இங்ஙனம் நாயனார் பாதுகாப்புச் செய்தும், பிரதிகள் நன்கு போற்றாமையால் பாடங்கள் மிகத் திரிக்கப்பட்டும், பாடல்கள் இடம் மாற்றப்பட்டும் சொற்கள் இருமுறை, மூன்றுமுறை சேர்க்கப்பட்டும், சில பாடல்களை விடுத்தும், சில பாடல்களை. இடைச் செருகல்களாக மிகுத்தும் செய்யப்பட்டமை பாதுகாத்தவர்களது. ஊக்கக் குறைவால் நேர்ந்துள்ளதை உணர்ந்து கொள்ளுதல் அறிஞர்க்குக் கடனாய் உள்ளது.

பண் :

பாடல் எண் : 22

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.

பொழிப்புரை :

இது இறுதியில் வாழ்த்துக் கூறி நூலை முடிவு செய்தது. ``என் நந்தி`` என்றதனானே இது நாயனாரின் திருமொழியாதல் விளங்கும்.

குறிப்புரை :

இவ்வாழ்த்து இரட்டுற மொழிதலாகக் குருவையும், சிவனையும் ஒருங்கே வாழ்த்தியது. மலர் அறுத்தது நாயனார்க்கும் அவரோடு உபதேசம் பெற்றவர்கட்கும் என்க.
முதற்கண், `சிவ பரத்துவம்` எடுத்துக் கொடுத்து இடையிலேயும், அதனையே பல்லாற்றானும் வலியுறுத்தித் தம் குருவையும், பல இடங்களில் நினைவு கூர்ந்து, ஈற்றிலும் சிவன் பெயரையே கூறிச் சிவன் திருவடியையன்றி, மறந்தும் பிறிதொன்றை நினையாது அவனது நெறியை விளக்கிய நாயனாரது திருமொழியின் அமைப்பையும், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`` என்ற அவரது திருவுள்ளத்தையும் நினைந்து நினைந்து பயன் பெறுதல் அறிஞர் கடனாகும்.
ஒன்பதாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
பத்தாந் திருமுறையாகிய திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் தெளிவுரையும் இம்மூன்றாம் தொகுதியுடன் முற்றும் பெற்றன.
வாழ்க திருமந்திரம்! வளர்க சிவஞானம்!
திருமூல தேவநாயனார் திருவடிகள் வாழ்க! வாழ்க!
சிற்பி