பாயிரம்


பண் :

பாடல் எண் : 1

கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

பொழிப்புரை :

ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

குறிப்புரை :

முதற்கடவுளை, `அவன்` எனப் பண்டறிசுட்டாற் கூறுதல் வழக்கு. ``அவன்தானே`` என்றதில் தான் அசைநிலை; ஏகாரம் பிரிநிலை./n ``பிரமம் ஒன்றே இரண்டாவதில்லை``1 எனவும், ``மெய்ப் பொருள் ஒன்றே``2 எனவும், வேதமும் கூறுதல் காண்க. ``தனக் குவமை இல்லாதான்`` என்றதும் இப்பொருட்டு. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியுமாம். இலயம் முதலிய வற்றின் இயல்பையும் ஆறத்துவாக்களின் இயல்பையும் சிவாகமங் களிலும், மெய்கண்ட நூல்களிலும் கண்டுகொள்க./n ``அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொருளின்பம் வீடு - மொழிந்த வாயான்``3 எனவும், ``விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்``4 எனவும், போந்த அருட்டிரு மொழிகளால், அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள்களையே முனிவர் நால்வர்க்கு நான்கு வேதங்களால் உணர்த்தியருளினான்` என்பது இனிது விளங்கிக் கிடத்தலின், `நான்கு உணர்ந்தான்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``உணர்ந்தான்`` என்னுமிடத்து, `தானே` என்பது இசையெச்சம். அவ்வினைச் சொல் உணர்ந்து உணர்த்துதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது./n ``வென்றனன்`` என்றது, `அவற்றொடு பொருந்திநின்றே அவற்றால் திரிபின்றி நின்றான்` என்றவாறு. ``வினையின்நீங்கி`` 5 என்றும், ``பற்றற்றான்``6 என்றும் ஓதியவற்றிற்கும் இவ்வாறே உரைக்கப்படுதல் காண்க. இவற்றானே, ``பொறிவாயில் ஐந்த வித்தான்``7 என்றதும் இப்பொருட்டாயிற்று. ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் - வென்றானை``8 ``மங்கை யோடிருந்தே யோகுசெய்வானை``9 என்பனவும் இக்கருத்தே பற்றி வந்தன. மனைவியோடிருந்த முனிவரைத் திருவள்ளுவர், ``ஐந்த வித்தான்`` 10 என்றதும் இங்கு நினைக்கத்தக்கது./n நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகட்கு உட்பட்ட புவனங்களை அவற்றிற்கு முதல்வராகிய கடவுளரது உலகங்களாகவும், இறுதிக் கண்ணதாகிய சாந்தியதீத கலையில் இலய புவனங்களை வேறிரண் டாகவும் வைத்து `ஏழுலகம்` என்றலே ஆகம முறை. `பூலோகம், புவ லோகம், சுவலோகம், மகலோகம், தவலோகம், சத்தியலோகம்` என வேதமுறையிற் கூறப்படும் ஏழுலகங்களில் ஏழாவதாகிய உலகம் புவனபதி உலகமாகவும், ஏனைய ஆறும் கீழ்க்கீழ் நோக்க ஒன்றின் ஒன்று தாழ்ந்தோர்க்குரிய உலகமாகவும் மேல் ஆகம முறையிற் கூறிய ஒவ்வோர் உலகத்திலும் உட்கூறுகளாய் அவ்வவ்வுலகங்கட்கு ஏற்ற பெற்றியில் அமைந்துள்ளவை என்பது சிவாகம நூல் துணிவு. கீழ்க்கீழ் உள்ள உலகங்களில் மேன்மேல் உள்ள புவனபதிகட்குரிய இடங்களும் உள; மேன்மேல் உள்ள உலகங்களில் கீழ்க்கீழ் உள்ள புவன பதிகட் குரிய இடங்கள் இல்லை என உணர்க. ``சென்றனன்`` என்றது முற்றெச்சம்./n ``தான் இருந்தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரமும், ஆக்கச் சொல்லும் தொகுத்தல் பெற்றன. தானேயாய் இருத்தலாவது சத்தி யோடு கூடிச் செயற்படுத்தலைத் தவிர்ந்திருத்தல். இதுவும், முதற்கண் ``ஒன்றவன்றானே`` என்றதும் இறைவனது, `சொரூபம்` எனப்படும் உண்மை நிலை. ஏனைய, `தடத்தம்` எனப்படும் பொது நிலை. ஒன்று முதலாகத் தொடங்கி ஆறு ஈறாகக் கூறியது, `ஒருவனே பலவாய் விரிந்து நிற்கின்றான்` என்பது உணர்த்துதற்கு. ``ஏழும்பர்ச் சென்றனன்`` என்றது, `அவ்வாறு விரிந்து நிற்பினும் அவன் மன வாக்கிற்கு எட்டாதவனே`` என்றற் பொருட்டு./n ``எட்டு`` என்றது, சொல் ஒப்புமையால் எண்ணலங்காரத்தை நிரப்பிற்று, ``நால்வாய் ஐங்கரத்தன்``1 என்பதிற்போல. எட்டுதல் - முயன்று பற்றுதல். அம் முயற்சிகள் பலவும் நூலுட் கூறப்படும். ``உணர்ந்து எட்டு`` என்றது, `மேற்கூறியவாற்றால் அவன் ஒருவனே உணரப்படுதற்கும், அடையப் படுதற்கும் உரியவன்` என்பது அறிவித்தவாறு./n `வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல்` என்னும் மூவகை வாழ்த்துள் இது பொருளியல்புரைத்தல். இதனானே இந்நூல் நுதலிய பொருள் தொகுப்புக் குறிப்பாற் கூறப்பட்டது. அஃது ஆமாறு, `முதற்கடவுள் உளன்; அவன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை. ஆயினும் அவன் தன்னின் வேறாகாத சத்தியால் `அருளல், மறைத்தல்` என்னும் இரண்டனையும் செய்தற் பொருட்டு, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூவகை நிலைகளில் நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு, என்பவற்றை அடையும் நெறிகளை உலகிற்கு உணர்த்தித் தான் ஒன்றிலும் தோய்விலனாய் நின்றே எப்பொருளுமாக விரிந்து, அங்ஙனம் விரிந்தவிடத்தும், மன வாக்குக்களைக் கடந்த தனது நிலைமையில் மாறுபடாதே நிற்கின்றான். ஆதலின், அவனை அறிந்து அடைதலே உயிர்கள் செயற்பாலன` எனக் கண்டு கொள்க. நூல்நுதல் பொருள் இங்ஙனம் குறிப்பால் தோன்றவருதல் நூன்முகத்து வரும் கடவுள் வாழ்த்திற்கு இயல்பு என்க./n இப்பாட்டு இந்நூல் நுதலிய பொருள் இது என்கின்றது.

பண் :

பாடல் எண் : 2

நுதலிய பொருள்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொழிப்புரை :

மலமாசகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும், உலகம் முழுவதற்கும் நலந் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும், தென்திசைக்குத் தலைவனாம் கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதிமுறையால் கூறுவேன்!

குறிப்புரை :

போற்று, முதனிலைத் தொழிற்பெயர். போற்றுதல் - துதித்தல். `போற்றி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தல் பெற்றது எனக் கொண்டு, `வணக்கம்` எனப்பொருள் கொள்ளலும் பொருந்தும். `போற்றிசைத்து` என்றதனை, `கூறுகின்றேன்` என்பதற்கு முன்னே வைத்து உரைக்க. `தூய உயிர்` என்றதற்கு, `இன்னுயிர்` என்றார். தயிரில் நெய்போல இறைவன் இனிது விளங்கி நிற்றல் சுத்தான்ம சைதன்னியத்திலே யாதல் அறிக. `நாற்றிசைக்கும்` என்றது, `உலகம் முழுவதற்கும்` என்றவாறாம். நன்மை, அருள். உலகத்தோடு இறைவ னுக்கு உளதாய தொடர்பு அவனது சத்தி வழியே ஆதலின், `நாற்றி சைக்கு நாதன்` என்னாது, `நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதன்` என்றார் `அளி யன்றித் தெறலும் அருளே` என்றற்கு `நல்ல` என்றும், `அவ்விரண் டனையும் செய்வது சத்தியே` என்றற்கு, `மாது` என்றும், `சத்தி, முதலன்று; முதலது பண்பே` என்றற்கு, `நாதன்` என்றும் கூறினார். `மாது` உயர்திணை ஆதலின், சாரியை வேண்டாதாயிற்று. மேல் திசை - மேற்சுட்டிய நான்கு திசைகள். `ஒரு வேந்தன்` என்றது, `திசைக்காவலர் எண்மருள் ஒருவன் என அவனது சிறப்பின்மை கூறியவாறு. கூற்றுதைத்தமையைக் கூறியது, மேல், `அவன்` எனப் பொதுப்படக் குறித்த முதற்கடவுளை, `சிவபெருமான்` எனச் சிறப்பு வகையால் விளக்குதற் பொருட்டு, சிறப்பாதற்கு `மாதுக்கு நாதன்` என்றதினும் இது வலி யுடைத்து என்க. முதற் கடவுளை முதற் கண்ணே சிறப்புப் பெயராற் கூறாது இலக்கணத்தாற் பொதுப்படக் கூறியது, `முதற்கடவுளாவான் இத்தன்மையனே, என்பது உணர்த்து முகத்தால், தாம் கூறும் சிவபெருமானையன்றி ஏனையோர் கூறும் கடவுளரை முதற்கடவுள் என்றல் ஒவ்வாமையை நிறுவுதற் பொருட்டாம். `புனிதன்` முதலியன ஆகுபெயராய் அவனது பெருமைமேல் நின்றன. எனவே, `இந்நூல் சிவபெருமானது பெருமையை உணர்த் தற்கு எழுந்தது` என்பது பெறப்பட்டது. `சிவபெருமானது பெருமையே யன்றி உயிர்களின் இயல்பு, அவைகளைப் பற்றியுள்ள பாசங்களின் இயல்பு என்பனவும் இதனுட் கூறப்படுகின்றன அல்லவோ, எனின், அவை அவனது அடிமையும், உடைமையுமே ஆதலின்` அவற்றது இயல்புகளும் அவனது பெருமையாய் அடங்கும் என்க./n `போற்றிசைத்துக் கூறுகின்றேன்` என்றதனால். வரையறை வகையால் கூறாமை பெறப்பட்டது. வரையறை வகையாற்கூறின், அளவு படாமையின் குன்றக் கூறலாய் முடியும்` என்பது கருத்து. `யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென்`1 எனப் பிறிதோரிடத்தும் கூறப்பட்டமை காண்க. இதனானே இந்நூல் தோத்திர வகையாகிய திருமுறைகளுள் ஒன்றாயிற்று./n `கூறுகின்றேன்` என வாளா கூறின், `வரையறை வகையாற் கூறுகின்றார்` என்பதே படும் ஆதலின், அது படாமைப் பொருட்டு, `போற்றிசைத்து` என்றதனையும் உடன் கூறினார். ஆகவே, நுதலிய பொருளோடு அதனைக் கூறும் முறைமையும் இதனுள் பெறப்பட்டது. `கூறுகின்றேன்` எனத் துணிவுபற்றி எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது./n இதுவும், அடுத்த பாட்டும் நூற்சிறப்புக் கூறுகின்றன/n

பண் :

பாடல் எண் : 3

நூற் சிறப்பு

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

எண்ணில்லாத தேவர்களில் ஒருவனாய் அவர் களோடொப்ப நிற்பவனும், அவ்வாறு நிற்பினும் அவர் அனை வராலும் என்றும் வணங்கப்படுபவனும், தன்னை அடைந்தவர் களாலும் தன் தன்மை முழுதும் அறியப்படாத மேலானவனும், ஆகிய சிவபெருமானது பெருமையை யான் அவனுள் அடங்கிநின்று உணர்ந்து துதிக்கின்றேன்.

குறிப்புரை :

`உலப்பிலி தேவர்கள்` என்றது தாப்பிசையாய், முன்னும் சென்று தொகைநிலை வகையான் இயைந்தது. இலி என்பது இன்மையென்னும் பொருட்டாய் அதனையுடைய பொருண்மேல் இந் நூலுட் பயின்றுவரும். திகம்பரன் என்னும் பொருட்டாகிய `நக்கன்` என்பது வியாபகனாதலைக் குறித்து, ஏனையோரால் ஏத்தப்படுதற் குரிய இயைபு உணர்த்தி நின்றது. நம்பன் - விரும்புதற்குரியவன். `பழை யோன்` என்றும் ஆம். `நாள்தொறும் ஏத்திடும்` என முன்னே கூட்டுக./n `பக்கம் நின்றார்` என்றது சீவன் முத்தரையும், பரமுத்தரையும். `பக்கம் நின்றாரும்` என்னும், சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. நாதன், பரமன் என்பனவும் மேலனபோல ஆகுபெயர்கள். இறைவனது பெருமை முத்தராலும் முற்றும் அறியப்படாது என்பதனை,/n கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்/n கடல்அளக்க வாராதாற் போலப் -படியில்/n அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்/n கருத்திற்குச் சேயனாய்க் காண். -திருக்களிற்றுப்படியார். 90/n என்பதனான் அறிக./n புக்கு நின்று என்றது அதீத நிலையையும், உன்னி என்றது துரியநிலையையும் குறித்தவாறு. உன்னுதலன்றிப் புகாதே நிற்கும் துரிய நிலையிலே நிற்பின் சிவானந்தத்தை உணர்தல் கூடாமையால், `புக்குநின்று` என்றும், புக்கு உன்னுதலொழித்த அதீத நிலையிலே நிற்பின் மனவாக்கினால் போற்றுதல் கூடாமையால், `உன்னி` என்றும் கூறினார். இந்நிலைகளின் இயல்புகளை நூலுள் அறிக. இதனால் தமது அநுபவ நிலையை உணர்த்தியவாறாயிற்று./n

பண் :

பாடல் எண் : 4

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தவராகிய மக்கட்கும், விண்ணுலகத் தவராகிய தேவர்கட்கும் முதலாய் நிற்பவனும், வந்த இடத்திலே எனது உடம்பை விழச்செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் பகலும், இரவும் வணங்கியும், துதித்தும் மயக்கத்தைச் செய்யும் இவ்வுலகத் திற்றானே மயக்கமின்றி இருக்கின்றேன்.

குறிப்புரை :

சிறப்புப்பற்றி, ``அகலிடத்தார்`` என மக்களையே கூறி னாராயினும், இனம்பற்றிப் பிற உயிர்களும் கொள்ளப்படும். நிலை பேறு உடைமைபற்றிக் காரணத்தை, ``மெய்`` என்றார். காரணம் இங்கு வினைமுதல். அகலிடத்தார் என்றதனோடு இயைய `அண்டத்தார்` என நின்றதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. அனைத்துயிர்க்கும் முதல்வனாதலை வலியுறுத்தற்பொருட்டு இரு தொடராக வகுத்தருளிச் செய்தார். ``விட்டான்`` என்பது `விடு வித்தான்` என்னும் பொருளது. `போத இட்டார்` எனப் பிரித்து, `மிக இருத்தினான்` என்றலும் ஆம். நாயனாரது உடம்பை நீக்கி அவரை மூலன் உடம்பில் இருக்குமாறு இறைவன் செய்த வரலாறு பெரிய புராணத்துள் விரித்துரைக்கப் பட்டது. `எம்மெய்யை, என்றனை` என்பனவும் பாடங்கள். ஐம்புலன் கள் உயிர்செல்லும் வழிக்கு மாறாய் நின்று மறித்தலின், அவற்றின் வடிவாகிய உலகத்தை ``இக லிடம்`` என்றும், அஃது அன்னதாயினும், மேற்கூறியவாறு நான் இறை நிறைவில் நீங்காது நிற்குமாற்றால் மயக்க மின்றி இருக்கின்றேன் என்பார், ``இருள் நீங்கி நின்றேன்`` என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டாலும், `இந்நூல் அருள்வழி நின்று செய்யப்படுவதன்றி, ஆன்ம போதத்தின் வழிநின்று செய்யப்படுவ தன்று எனவும், அன்ன தாயினும். பதி போதமும் ஒரோவழி உள தாங்கொல்லோ` என ஐயுறல் வேண்டா எனவும் கூறி, நூலது சிறப்பு உணர்த்தப்பட்டது.
இவற்றின் பின்னவாகப் பதிப்புக்களில் காணப்படும் ``சிவனோ டொக்கும் தெய்வம்`` என்பது முதலிய பாட்டுக்களும், வேதச்சிறப்பு, ஆகமச்சிறப்பு, திரிமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை என்னும் அதிகாரப் பாட்டுக்களும் எடுத்துக்கொண்ட பொருளையே கூறலின், அவை நூற்பாட்டுக்களன்றிப் பாயிரப் பாட்டுக்களல்லவாதல் இனிது விளங்கும். அதனால், ஏடுசேர்த்தோர் அவற்றை முறைபிறழக் கோத்தார் எனவே கொள்க.
இந்நூல் பொருள் வரலாற்றுமுறையாற் கேட்டுச் சொல்லப் பட்டதன்றித் தாமே தம் மனவழிப்பட்டுச் சொல்லியதன்று என்றற்கு இது முதல் ஏழு பாட்டுக்களால் தமது அருட்குடி வரவு கூறுகின்றார். குரு பாரம்பரியம் - ஆசிரியத் தலைமுறை.

பண் :

பாடல் எண் : 5

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

பொழிப்புரை :

எங்கள் நந்தி பெருமான், ஆனேறு, மான், மழு என்ப வற்றை விடாது கொண்டுள்ள சீகண்ட பரமேசுரனது உபதேசப் பொரு ளாகிய பொருட் பெற்றியாம் மறைபொருளையும் எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தரும் திருவடிகளையும் அடியேனது தலைமேல் சூட்டியருளினார்.

குறிப்புரை :

சீகண்ட வுருத்திரர் என்பது விளங்குதற் பொருட்டே வாளா, `தற்பரன்` என்னாது, பெற்றம் முதலிய அடையாளங்களைக் கூறினார். கற்பனை - உபதேசம். சராசரம் என்பது, `சித்து, அசித்து` என்னும் பொருட்டாய், அனைத்துப் பொருள்களையும் குறித்தது. அற்றம் - மறை பொருள்; இரகசியம். நன்மை - ஞானம். இதனால், சீகண்ட பரமேச்சுரன்பால் நந்திபெருமானும், நந்திபெருமான்பால் இவ்வாசிரியரும் ஞானம் பெற்றமை கூறப்பட்டன. இப்பாட்டும் பதிப்புக்களில் இடம் மாறி உள்ளது.

பண் :

பாடல் எண் : 6

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

பொழிப்புரை :

நந்திபெருமானது அருளைப்பெற்ற ஆசிரியன்மார் யாவர் என்று ஆராயுமிடத்து, அவரோடு ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தை வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்ற இவர் என்னொடு கூட எண்மருமாவர் என்பதாம்.

குறிப்புரை :

ஆசிரியரை, நாயனார் `நாதர்` என்கின்றார். ``நமச் சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க`` என்ற திருவாசகம் இங்கு நினைக்கத் தக்கது. நந்தி பெருமானோடு ஒத்தமை, சீகண்ட பரமேசுரன் பால் அறம் முதலிய நான்கையும் கேட்டமையாலாம். `அந்நான்கையும் உணர்த்துவன வேதங்கள்` என்பது முதல் திருப்பாட்டின் உரையுட் காட்டப்பட்டது. அறமுதலியவற்றோடு ஒருங்கோதிய வீட்டுநெறி பொதுவகையானன்றிச் சிறப்பு வகையான் அன்மையின், அதனைச் சிறப்பு வகையான் இனிதுணர்ந்து அடைய அப்பெருமான் அவர் களை, நந்தி பெருமான்பால் கேட்க என விடுத்தவண்ணம் அவர்களும் நந்தி பெருமான்பால் ஆகமவழியாக வீட்டு நெறியைச் சிறப்பு வகையாற் கேட்டுணர்ந்தார். ஆகவே, அவர்கள் நந்தி பெருமானோடு ஒருங்கொத்த மாணவராய், முதிய மாணாக்கரிடம் இளைய மாணாக்கர் கேட்கும் முறையிற் கேட்டனர் என்றற்கு, ``நந்திகள் நால்வர்`` என்றார். அவர்களை `சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர்` என்ப. சிவயோகமுனி என்பவரைப் பற்றிப் பிற நூல்களில் ஓரிடத்தும், ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் அவரைப்பற்றி யாதும் அறிதற்கில்லை. சிலர் இவரை `அகத்தியர்` என்றும், `துருவாசர்` என்றும் கூறுவர். அவ்வாறாயின், நாயனார் அப்பெயரால் கூறுதலல்லது பிறவாறு கூறார் என்க. எனவே, சிவயோக முனி என்பது பெயரேயன்றித் தன்மை கூறுவதன்று என்க.
பதஞ்சலியாரும், வியாக்கிரரும் தமிழ்நாட்டோடு தொடர் புடையவர் என்பதற்கு, ``மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்`` என்றார். எனவே, மன்று தொழுத என்னும் அடைமொழியைப் பதஞ்சலிக்கு மட்டுமே உரியதாக வைத்து அஃது யோகநூல் பதஞ்சலி யாரினை வேறு படுத்தற்குக் கூறப்பட்டது என்றல் பொருந்தாதாம். ஆகமத்துள் யோக பாதமும் உளதாதலின், அதனையே இப் பதஞ்சலியார் செய்யப் பின் வந்தோர் அதனை நன்குணராது வேறு கூறினமையின் அது, `பாதஞ் சலம்` என வேறு மதமாயிற்று எனக் கொள்ளுதலில் தவறில்லை. பொருட்பெற்றியை இனிதுணர்த்துவது ஞானபாதமேயாதலின், யோக பாதத்துட் கூறப்பட்ட தத்துவங்கள் சிறிது சுருங்கியிருத்தல் கூடும். மன்று தொழுது நின்றமையால் நூல்செய்தல் கூடாதென்பது இல்லை யன்றோ! நாயனாரும் மன்று தொழுதவராதல் பின்னர்க் காணப்படும்.
இங்குக் கூறப்பட்ட எண்மரும் ஒருகாலத்தே நந்தி பெரு மானிடம் ஞானம்பெற்றனர் என எண்ணுதல் கூடாது. நந்திகள் நால் வரும் முதற்கண் பெற்றனர் என்றும், சிவயோக மாமுனி அதற்குப்பின் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும், அவருக்குப்பின் பதஞ்சலி வியாக் கிரர் இரு வரும் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும் இறுதியாக இவ்வாசிரியர் பெற்றனர் என்றும் கொள்ளற்பாலன. ``மன்று தொழுத`` என இறந்த காலத்தால் கூறினமையின், முன்னே மன்று தொழுது பின்னர் அதன் பயனாக நந்தி பெருமானை அடைந்து ஞானம் பெற்று மீண்டனர் என்பது பெறப்படும். வியாக்கிரர் மூத்தோராகவும், வழி பாட்டில் பெரும்பற்றுடையராகவும் சொல்லப்படுதலால், தில்லை, `பெரும்பற்றப்புலியூர்` என அவர்பெயராலே வழங்கப்பட்டது. பதஞ் சலியாரும் அத்தலத்திலே தங்கி யோகநூல் செய்தார் என்க. வியாக் கிரர் நூல் செய்திலர். வியாக்கிரர் வசிட்ட முனிவர்தம் தங்கையை மணந்து பெற்ற உபமன்னிய முனிவர் இமயத் தாழ்வரையிலே பிறந்து சிறிது வளர்ந்து, பின்னர்ச் சில்லாண் டுகள் தில்லையில் தந்தையார்பால் வளர்ந்து பின்னர்த் தவத்திற்கு உரியராய காலத்து மீளவும் அத்தாழ் வரைக்கண்ணே சென்று தங்கினார் என்க. உபமன்னியரை யாதவன் - துவரைக் கிறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தான் என்று சேக்கிழார் அருளிச் செய்தமையால் இம் முனிவர் பாரத காலத்தவர் என்பது பெறப்படும். இருக்கு என வழங்கப்பட்ட ஆரிய மந்திரப் பாடல்களை, இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வியாச முனிவர் முறைப்படுத்து நான்காக வகுத்து பிராமணம், உபநிடதம் என்ப வற்றையும் அவற்றுக்கு உரிமை செய்து அனைத்திற்கும் வேதம் எனப் பெயரிட்டதும் பாரத காலத்திலேயாம். அதன் பின்னரும் உப நிடதங்கள் தோன்றின என்க.

பண் :

பாடல் எண் : 7

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

பொழிப்புரை :

நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.

குறிப்புரை :

பெற்றோம், நாடினோம் என்பன பாடமாயின் அவற்றை ஒருமைப் பன்மை மயக்கமாகக் கொள்க,

பண் :

பாடல் எண் : 8

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

பொழிப்புரை :

எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

குறிப்புரை :

மந்திரம் எனப்பின்னர்க் கூறப்படும் பெயரை இங்கு எதிரது போற்றிக் கூறினார். இந்திரன் முதலியோர் கடவுளரல்லர், அப்பெயர்பெற்ற மாணாக்கர் என்க. இவர்களை ஓரோரிடத்தில் நாயனார் பின்னர்க் குறித்தல் காண்க. இவர் என்வழியாம் என வேறு தொடராக்குக. இங்ஙனமாகவே, இவர் எழுவரும் திருமூலர்தம் நேர் மாணாக்கராய்ப் பின்பு அவரது மரபினை வேறுவேறிடத்தில் இருந்து வளர்த்தனர் என்பது பெறப்படும். அண்மையில் வாழ்ந்த தாயுமான அடிகள் தம் ஆசிரியராகிய மௌன குருவை, மூலன் மரபில்வரு மௌன குருவே என விளித்தமை காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 9

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

பொழிப்புரை :

நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.

குறிப்புரை :

அதனால், அவர் இந்நிலவுலகத்திற்கு வந்திலர் என்ற வாறு. அந்நால்வருள் சனற்குமாரர்க்குச் சத்தியஞான தரிசினிகளும், அவர்க்குப் பரஞ்சோதி மாமுனிகளும் மாணாக்கராக, பரஞ்சோதி மாமுனிகள் வான்வழிச் செலவின் இடையே தமிழ்நாட்டில் திரு வெண்ணெய்நல்லூரில் கருவிலே திருவுடையவராய் (சாமுசித் தராய்)த் தோன்றி, சுவேதவனப்பெருமாள் என்னும் பிள்ளைத் திருப் பெயர் உடையாராய் இருந்தவர்க்குச் சிவஞானத்தை உபதேசித்து, மெய் கண்டார் எனத் தீக்கைத் திருப்பெயரும் இட்டுச் செல்ல, அவரது மரபு இன்றும் தமிழ் நாட்டில் நின்று நிலவுதல் அனைவராலும் அறியப் பட்டது. நான் என்றது, பன்மை ஒருமை மயக்கம். மெய்கண்டாரது தோற்றம் நாயனார்க்குப் பன்னூறாண்டுகட்குப் பிற்பட்டது என்பதைப் பலர் அறிவர்.

பண் :

பாடல் எண் : 10

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

பொழிப்புரை :

பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான்மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோகமாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.

குறிப்புரை :

அவர்களோடு அப்பேறு எனக்கும் கிடைத்தது என்பது குறிப்பெச்சம். பணிவினால் இதனை எடுத்தோதாது குறிப்பாற் பெறவைத்தார். நாங்கள் பெற்ற பேறு பிறர் பெறுதற்கரியது என அதன் அருமை கூறியவாறு. இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கிப் பொருள் கூறுக. மூன்று, நான்கு என்னும் முறைமையால் உளதாகும் செய்யுளின்பம் நோக்கி மூவரை முன் வைத்தார். இறப்பும், பிறப்பும் ஒழிந்த பெருமையை உடைய தேவன் என்க. ஒழிந்த அதனையே பெருமை எனக் கூறலால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். மூன்றன் என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முச்சுடர்களின் ஒளியும் சிவபெருமானது முக்கண்ணின் ஒளியாதல்பற்றி, செழுஞ்சுடர் மூன்றன் ஒளியாகிய தேவன் என்றார்.

பண் :

பாடல் எண் : 11

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

பொழிப்புரை :

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.

குறிப்புரை :

அதனால் அவர்கள் என்றும் அவனோடு இருப்பர் என்றவாறு. எழுந்து நீர் பெய்வன ஏழுமேகங்களும். அவைவிடாது பெய்யினும் என்றது, ஊழிக் காலத்தும் என்றவாறு. எட்டுத் திசையும் பெய்யினும் என முன்னே கூட்டுக. மூன்றாம் அடி சிவபெருமான் காட்சி வழங்கினமையைக் குறித்தது. ஆசான் மூர்த்தி வாயிலாக அருள்செய்தபின்னர் நேர்நின்று அருள்புரிந்தார் என்பதாம்.
நந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பிலராயினார் எனக் கூறி, `இந்த எழுவரும் என்வழியாமே` எனத் தமது மரபினை எடுத்துக் கூறிப்போந்தமையால், ஏனை மூவரும் இவ்வாறே தம் தம் மாணாக்கர் சிலரால் நந்திமரபினை நிலைபெறுத்தினர் என்பது கொள்ளக் கிடக்கின்றது. எனினும், இன்று சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலைபெற்றுளது என்க.
மேல் ஆசிரியமரபுவகை பலவற்றையும் கூறிய நாயனார் இனி அவற்றுள் ஒன்றன் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்தற்பொருட்டுச் செய்யும் இந்நூலாசிரியர் வரலாறு விளங்குதற் பொருட்டுத் தம் வரலாற்றைக் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 12

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

பொழிப்புரை :

என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்.

குறிப்புரை :

முதலிரண்டு அடிகளும் ஆசிரிய வணக்கங்கூறும் கருத்துடையன. `மந்திரம்` என்பது `மனத்தில் நிலைத்து நிற்பது` எனவும் பொருள்தருமாதலின், பின்னிரண்டடிகளால் நூற்பெயர்க் காரணமும் புலப்படுத்தவாறாயிற்று, இதனானே நாயனார் சிவாக மங்களை மொழிபெயர்த்துச் செய்யாது, அவற்றது தெளிந்த பொருளையே திரட்டி இந்நூலால் அருளிச் செய்கின்றார் என்பது பெறப்பட்டது. படவே, ``ஆகமம்`` என்றது அவற்றின் தெளிந்த பொருளையாயிற்று. சிவாகம நெறியே `சைவம்` எனப்படும் சிவநெறி யாதலின், நாயனார் தமிழ்நாடு செய்த தவப்பயனானே இங்கு எழுந் தருளியிருந்து, அந்நெறியின் முறைமையை இந்நூலால் அறியச் செய்தார் என்க.

பண் :

பாடல் எண் : 13

செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.

பொழிப்புரை :

உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்றபின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்திபெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.

குறிப்புரை :

இருந்தது கயிலைத் தாழ்வரையிலாம். இவ் வரலாற்றைத் தமக்கு இயைபில்லாமைபற்றிச் சேக்கிழார் கூறிற்றிலர் என்க. மண்ணுலகத்தார் மன்றின்கட்சென்று திருக்கூத்துக் காண்டல் இன்றியமையாதது என்னும் மரபு நிலைபெறுதற்கு நந்திதேவர் நாயனாரை அது செய்யுமாறு பணித்தருளினார் எனக் கொள்க. அநுபவ ஞானம் கைவரப்பெற்றோர் உடம்பொடு நிற்க விரும் பாமையை வாதவூரடிகளது நிலைபற்றி உணர்க. ஞானம் கைவந்தபின் நாயனாரது நிலை இதுவாயினும், அதற்கு முன்னர் அவர் நெடுங்காலம் இருக்க விரும்பிச் செய்த பெருந்தவம் தனது பயனைத் தந்து நின்றமை யின், அவர் அவ்வாறே இருத்தல் வேண்டுவதாயிற்று என்பதை அவர் அடுத்தபாட்டிற் கூறுதல் காண்க. இவ்வாற்றானே இவரைச் சேக்கிழார், `அணிமாதி சித்திபெற்றவர்` எனக் குறித்தல் காண்க. ஒப்பு - உடன்பாடு. இவ்வாறு உடன்பாடின்றி இருந்தமையால், ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் யுகம்போலத் தமக்குத் தோன்றின என்பது தோன்ற, ``எழுகோடியுகம் இருந்தேன்`` என்றார். பலவற்றைக் குறித்தற்கு, `கோடி` எனக்கூறலும், பலவற்றைக் குறிக்கு மிடத்து ஏழென்னும் எண்ணோடு தொடர்புபடுத்தலும் வழக்கு. எனவே இன்னோரன்ன வாக நாயனார் கூறுவனவற்றிற்கு, `பன்னெடு நாள் இருந்தார்` என்னும் பொதுப்பொருளே கொள்ளலாவது அறிக. இது பற்றியே நாயனாரது வாழ்நாளைச் சேக்கிழார் அவரது நூலின் பாடற்கணக்கொடு தொடர்பு படுத்தி, `மூவாயிரம் ஆண்டு` என வரையறுத்து, `பாடலும் மூவா யிரம், நாயனார் வாழ்ந்த ஆண்டும் மூவாயிரம்` என்னும் நயம்பற்றி, `ஓராண்டுக்கு ஒன்றாக ஒன்றவன்றான் என எடுத்து இந் நூலை அருளிச் செய்தார்` எனக்குறித்தருளினார். நாயனார் தாம் வாழ்ந்த காலத்தை `மூவாயிரம் ஆண்டு` என ஓரிடத்தும் குறியாமையை நோக்குக.

பண் :

பாடல் எண் : 14

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொழிப்புரை :

இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவமாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்துவந்தேன்.

குறிப்புரை :

`அதனால் அவள் என்னை அவ்வாறு இருக்கச் செய் தாள்` என்றவாறு. அருந்தவச் செல்வி, உருவகம். ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும் செய்ய வல்லது தவமாகலின், அதனை உலகத்தின் தலைவியாகக் கூறினார். கல்வி செல்வங்களைக் `கலை மகள், திருமகள்` என்றல்போலத் தவத்தை, `புவனாபதி` என்றார். `புவனா` என்பது உலகமாகிய பெண்பாலை உணர்த்தி நின்றது. `பதி` என்பது, `அவனைப் பதமாக உடையவள்` என்னும் ஈகார ஈற்று ஆரியச்சொல். `இந்திரனே` என்றது, அப்பெயருடைய மாணாக்கரை முன்னிலைப் படுத்ததாம்.

பண் :

பாடல் எண் : 15

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.

பொழிப்புரை :

இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக் காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெரு மானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.

குறிப்புரை :

கீழுள்ள மகேசுரர் முதலியவர்க்கும் தலைவர் சதா சிவரேயாதலின், அவரே ஐந்தொழிற்கும் தலைவராதல் வெளிப்படை. அதனால், ஐந்தொழில் நிலையை, `சதாசிவம்` என்ற ஒன்றினாலே குறித்தார். இனி அதனை `உபலக்கணம்` என்றலும் ஆம். `முத்தமிழ்` என்ற இதனால், கயிலைத் தாழ்வரையிடத்தும் அக்காலத்தில் தமிழ் போற்றிக் கற்கப்பட்டது என்பது தெளிவாகும். அதனாலன்றோ பிற் காலத்திற் சேரமான் பெருமாள் நாயனார் தமது `திருக்கயிலாய உலா` என்னும் ஞானத் தமிழ்ப்பாடலைத் திருக்கயிலையில் யாவரும் கேட்க அரங்கேற்றினார்! இதனால், நாயனார் தாம் பலகலை வல்லுநராயி னமையைக் குறித்தவாறு காண்க. இவற்றையெல்லாம் இவர் நந்தி பெருமானது அருள்பெற்ற பின்னர் அதனையே துணையாகப் பற்றி நன்குணர்ந்தார் என அறிக. எனவே, இறைவன் திருவருள் உலகர் உய்தற்பொருட்டு இவரை இந்நிலையினராக்கியது என்பதும் உணரற் பாற்று. `மிருதம், இதம்` என்பன செய்யுள் நோக்கி; `மிதா, இதா` என நின்றன. சனித்தல் - தோன்றுதல். உதா சனித்தல் - புறக்கணித்தல். இரண்டாம் அடியில் `நிதாசனி` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 16

மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  

பொழிப்புரை :

மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். சிவபெருமான் முதற்கண் உமை அம்மைக்கு முதல் நூலாகச் சொல்லிய சிவாகமத்தின் ெபாருளைச் சொல்லுதற்காகவே வந்தேன்.

குறிப்புரை :

`மாலாங்கன்` என்பவர் நாயனார்தம் மாணாக்கருள் ஒருவர் என்பது மேலே சொல்லப்பட்டது. `மொழிந்த வேதம்` என இயையும். பல தேவர்களையும் பொதுப்பட வைத்துக்கூறிய வேதமும், தான் ஒருவனையே முதல்வனாக வைத்துக் கூறிய வேதமும் எனச் சிவ பெருமான் கூறிய வேதங்கள் இரண்டு எனவும், அவற்றுள் முன்னதை முனிவர் நால்வர்க்கும், பின்னதை உமையம்மைக்கும் கூறினான் எனவும் கூறப்படுவனவற்றுள், பின்னதாகிய வேதம் என்பார், திருக் கூத்தின் சீலாங்கவேதம் என்றார். அது சிவாகமம் என்பது வெளிப் படை. ஆகமமும், முதல்நூல் என்னும் பொருளில் வேதம் எனப்படுதல் அறிந்து கொள்க. சீலம் - இயல்பு. அங்கம் - வகை. நாயனார் வந்தது அகத்தியரைக் காணுதற்பொருட்டேயாயினும், திருவருட் செயல் இவ்வாறு இருந்தது என்பது இப் பாட்டின் கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 17

நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொழிப்புரை :

`உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய இச் சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.

குறிப்புரை :

`தேவியாவாள் சிவனது சத்தியே` என்பது பற்றி இவ்வாறு அருளிச்செய்தார், ``பேரின்பமான பிரமக்கிழத்தி`` என்றார் திருவுந்தியாரிலும் (பா.34). இதனால், தாம் திருவாவடுதுறையில் நிரதி சயானந்தம் உற்று இருந்த நிலையைக் கூறினார் என்க சீர் - செல்வம். `சீராக` என ஆக்கம் வருவிக்க. ஆவடுதுறை அம்மை ஆவாய் நின்று பூசித்த தலமாதல் அறிக,

பண் :

பாடல் எண் : 18

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

பொழிப்புரை :

சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்திருக்கின்றேன். இத் திருவா வடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவனுடையதுந்தான். இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக்கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

போதம் - ஞானம். போதத்தை உடையது போதி. `புத்தருக்குப்பின் அரசமரத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று எனினும், இதன் கீழ்ப் புத்தர்பெற்றது சூனியஞானம்; நான் பெற்றது சிவஞானம்` என்பார், `அரச மரம்` என்னாது ``சிவபோதி`` என்றார்.

பண் :

பாடல் எண் : 19

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.

பொழிப்புரை :

இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.

குறிப்புரை :

ஆசிரியர் சிவமேயாதல்பற்றி, நந்தி இணையடி சிவனடியேயாதல் அறிக. `இரவு, பகல்` என்பன அறியாமையும், அறிவுமாம். இவை கருவி கரணங்களின் நீக்கத்தாலும், தொடக் கினாலும் வருவன. இவை அற்றஇடம், என்றும் ஒரு பெற்றியாய் விளங்கும் பேரறிவாம். அதனால் அங்குத் துன்பம் என்பதின்றி, இன்பமே உளது என்க.

பண் :

பாடல் எண் : 20

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

பொழிப்புரை :

முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.

குறிப்புரை :

`ஆதலால் இதனைச் செய்கின்றேன்` என்பது குறிப் பெச்சம். மூலன் உடம்பில் புகுதற்குமுன்னே இருந்தநிலையை முற் பிறப்பாகவும், அதற்குப்பின் இருந்த நிலையைப் பிற்பிறப்பாகவும் வைத்து, இதில் நாயனார் அருளிச் செய்தார். ஆகவே, `படைத்தனன்` என்றது, மூலன் உடம்பில் இருக்கச் செய்ததையேயாயிற்று. தவம் இன்றியாதொன்றும் ஆகாது என்பதே முதல் இரண்டு அடிகளால் உணர்த்தப் பட்டது. `தமிழ்செய்தல்` என்னும் இரண்டாவதன் தொகை ஒருசொல் நீர்மைத்தாய்ப் பாடுதல் எனப் பொருள்தந்து, ``தன்னை`` என்றதற்கு முடிபாயிற்று. `தமிழ்ச்செய்யுமாறே` என்பதும் பாடம். இரண்டாம் அடியை முதலில் வைத்துரைக்க.

பண் :

பாடல் எண் : 21

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப் பாடல்கள் மேற்கூறியவற்றை மிகப் பின்வந்து கூறுதலாலும், இவர் மாணாக்கரல்லாத ஒருவரை நோக்கிக் கூறுதலாலும், `நாயனார் தரைவழியாகவே பல தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை அடைந்தார்` என்ற சேக்கிழார் திருமொழிக்கு மாறாக. வான் வழி வந்ததாகக் கூறுதலாலும் `இவைநாயனார் அருளிச் செய்தன அல்ல` என்க.

பண் :

பாடல் எண் : 22

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப் பாடல்கள் மேற்கூறியவற்றை மிகப் பின்வந்து கூறுதலாலும், இவர் மாணாக்கரல்லாத ஒருவரை நோக்கிக் கூறுதலாலும், `நாயனார் தரைவழியாகவே பல தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை அடைந்தார்` என்ற சேக்கிழார் திருமொழிக்கு மாறாக. வான் வழி வந்ததாகக் கூறுதலாலும் `இவைநாயனார் அருளிச் செய்தன அல்ல` என்க.

பண் :

பாடல் எண் : 23

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

பொழிப்புரை :

மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.

குறிப்புரை :

`தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு நியமித்து அதற் கேற்ற உடம்பைக் கொடுத்துக் கருத்துக்களையும் தோற்றுவித்தான்` என்றபடி. `உற்பத்தியும்` என்ற உம்மை தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 24

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப் பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப்பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.

குறிப்புரை :

உயிர்களின் உணர்வில் தோன்றும் கருத்துக்களே சுத்தமாயையின் காரியமாகிய நாதத்தைப்பற்றி நிற்பனவாக, இறைவன் உலகிற்கு உணர்த்தும் பொருள்கள் அவனது அருள் வெளியைப் பற்றுக்கோடாகக் கொண்டுநிற்றல் பற்றி ``வான் பற்றி நின்ற மறைப்பொருள்`` என்றார். இதனால், மந்திரங்களின் இயல்பும், அவற்றின் பயனும் இவை எனக் கூறுவார்போன்று, தாம் செய்யும் நூல் மந்திரமாதலையும், அதன் பயனையும் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 25

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.

பொழிப்புரை :

தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.

குறிப்புரை :

`உண்மைச் சிவநூல் எங்கு உளதாயினும் அதனைத் தேவர் மகிழ்ச்சியோடும் கைக்கொண்டு போற்றுவர்` என்னும் துணிவு பற்றி; ``வானவர் மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை`` என்றார். இக்கருத்தே பற்றிச் சேக்கிழாரும், `ஞானசம்பந்தர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை வானமும் நிலனுங்கேட்க அருளிச்செய்தார்` என்றும், `நாவுக்கரசரது திருப்பெயரை உலகேழினும் மன்னுக என்று இறைவன் அருளிச்செய்தான்` என்றும் கூறினார். ``மந்திர மாலை`` என்றது நூற் பெயர் குறித்தவாறு. எனவே, இவை இரண்டுபாட்டாலும் நூற் பெயரும், நூலது பெருமையும் கூறப்பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 26

அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

பொழிப்புரை :

உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப்படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல் களையும் கற்பாரின்றி வீணேகிடக்கவையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.

குறிப்புரை :

`ஆகவே, தமிழாலாய இந்நூலும் மூவாயிரம் பாடலுள் இன்றியமையாப் பொருள்களைக் கூறுவதாய் அமையும்` என்பதாம். `இலட்சம் கிரந்தம், கோடி கிரந்தம் என்றாற்போல் வனவற்றை நோக்க, இம்மூவாயிரம் பாடல் எம்மட்டாய் எல்லா ஆகமங்களுமாகும் என்று இகழற்க` என்றவாறு. இதனானே, `சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராய்ச் சுருங்கிய நில வுலகத்தின் கண் வாழும் சகலராய மக்கட்கு ஏற்புடையன தமிழ் நூல்களே` என்பதும் குறித்தவாறு காண்க. ``உலகேழ்`` என்றது நாவலந்தீவு முதலிய ஏழு தீவுகளை. நாயனார் இந்நூல்செய்த காலத்தில், `தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருவாசகம், திருக்கோவையார்` என்னும் இவையே தமிழ்மொழியில் சிறந்த நூல்களாய் விளங்கிப் பயனைக் குறை வின்றித் தந்தமையின்; ``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் - பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே`` என்றார். காரைக்காலம்மையார் பாட்டு முதலாக இன்று பதினொன்றாந் திருமுறையில் உள்ளனவற்றுள் சில, நாயனார் காலத்து இருந்தனவா என்பது ஆராய்ந்துணரத் தக்கது. மாணிக்கவாசகர் தாம் கூறும் தலங்களுள் திருவிடைமருதூரைக் குறித்துத் திருவா வடுதுறையைக் குறியாமையால், இந்நாயனாராலே அத்தலம் `நவகோடி சித்தபுரம்` என்பது முதலிய பல சிறப்புக்களைப் பெற்றது, அவர் காலத்திற்குப் பின்னரே என்பது துணியப்படும். நாயனாரது காலத்தில் திருவாவடுதுறை பொதுவான ஒரு சிவதலமாய் இருந்தது எனவும், எக்காரணத்தாலோ இறைவன் திருவருள் இவரை அத்தலத்தில் இருத்தியது எனவும் கொள்க. `கோகழி` என்பதைத் `திருவாவடு துறை` எனச் சிலர் கருதுதல் பொருந்துவதாய் இல்லை.
இப்பாட்டின் பின்பதிப்புக்களில் காணப்படும் ``அடிமுடி காண்பார்`` என்னும் பாட்டுச் சிவபரத்துவத்தில் இருத்தற்குரியது.

பண் :

பாடல் எண் : 27

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொழிப்புரை :

இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.

குறிப்புரை :

சுத்த தத்துவம் காலம் கடந்தன ஆதல்பற்றி, `நித்தப்பொருள்` என்று சொல்லப்படுதலால், காலத்திற்கு உட்பட்ட ஏனைத் தத்துவங்களை, `மாயம்` என்றார். மாயம் - மாய்தலுடையது. `பரை` என்றது பரநாதத்தை. ஆயம் - கூட்டம்; தொகுதி. `பரை முதலாகிய தொகுதி` எனச் சுத்ததத்துவங்களைக் குறித்தவாறு. மாயையைக் கூறவே, ஏனைய கன்ம ஆணவ மலங்களும் பெறப் படும். `அறிபவன்` எனப்பட்டது பசுவாகிய ஆன்மாவே என்பது வெளிப்படை. `ஞாதுருவத்தை` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. பதியாகிய இறைவன் அறியப்படும் பொருளாய் நிற்றல் தடத்தநிலையிலாதலின், ``ஞேயம்`` என்றது தடத்த சிவனையாம். ஞானம், அவனது சத்தி. `சொரூப சிவன்` என்பது உணர்த்துதற்கு, ``அச்சிவன்`` எனச் சேயனாகச் சுட்டிக் கூறினார். அகோசரம் - அகப் படாமை. பசு பாசங்களின் உண்மை இயல்புகளும் வாக்கு மனங்கட்கு அகப்படுவன அல்லவாதல் பற்றி அனைத்தையும் `அகோசரம்` என்றார். `பீசம்` என்னும் ஆரியச்சொல். `வீசம்` என்று ஆகிப் பின் எதுகை நோக்கி, `வீயம்` எனத் திரிந்தது. பீசம் - வித்து. `சிறிய அளவில் செய்யப்படினும், `இந்நூலுள் ஆகமப்பொருளாகிய முப்பொருள் இயல்பு முழுவதும் எஞ்சாமற் கூறப்படும்` என்றவாறு. துணிவு தோன்ற, ``விளக்கியிட்டேன்`` என இறந்த காலத்தாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 28

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொழிப்புரை :

இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெரு மானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.

குறிப்புரை :

பரமாகும் சோதி, பெருமையன், ஆனந்த நந்தி என்பனவும் சிவபெருமானையே குறித்தன. `வளப்பம்` என்பது, `வளப்பு` என நின்றது

பண் :

பாடல் எண் : 29

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றிநின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்திநிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.

குறிப்புரை :

``மூலனை நாடி`` என்றது வழிமொழிதல். `ஆகமத்தை அருளிச்செய்தவர் சதாசிவ நாயனார்` என்றல் பற்றித் தம்மை அவ்வாறு கூறினார். `சீவன் முத்தி நிலையிலிருந்தே இதனைச் செய்கின்றேனாதலின், இது, சிவன் மொழியேயன்றி என்மொழி யன்று` என்பதாம். உலகம் உய்தல் காரணமாக அருளாளர் இங்ஙனம் பட்டாங்குக் கூறுவனவற்றை நம்மனோர் சொற்போலத் தற்புகழ்ச்சி என்றல் கூடாமை அறிக. இது பற்றி யன்றே `நிறைமொழி மாந்தரா யினார் சில சொற்களை ஆணையாற் கிளப்பர்` (தொல் - செய்யுள் - சூ. 178) என்றதூஉம் என்க. `பல்லாண்டுகள்` என்பது ஆற்றலான் வந்தது.

பண் :

பாடல் எண் : 30

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.

பொழிப்புரை :

பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறை விடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இரு காற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும் படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.

குறிப்புரை :

`அவ்வாற்றால் நான் பல்லாண்டுகளாக இருக் கின்றேன்` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத்தொடங்கி, `இருக்கும் ஆரழலை அருக்கனும் சோமனும் வீச இருக்கில் எண்ணிலி கோடி இருக்கும்` எனக்கூட்டி, ``இருக்கும்`` என்பதற்கு `உடம்பு` என்பது வருவிக்க. உருக்குதல் - மனத்தைக் கவர்தல்.

பண் :

பாடல் எண் : 31

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

பொழிப்புரை :

இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.

குறிப்புரை :

விடாது சொல்லுதலை, `பிதற்றுதல்` என்றார். `நந்தி பேர் தன்னை` என மாற்றுக. நெஞ்சத்து இயற்றுதல், நினைத்தல். `உஞற்றுவன்` என்பது, `உயற்றுவன்` என நின்றது. `முயற்றுவன்` எனவும் பாடம் ஓதுவர். `இயல்பாகத் திகழ்கின்ற சோதி` என்க. இறைவன், ஆகுபெயர். ``ஆம்`` என்றதற்கு எழுவாய் வருவிக்கப் பட்டது.
பதினெட்டுத் திருமந்திரங்களால் தம் வரலாறும், நூல் வரலாறும் கூறிய நாயனார், நான்கு திருமந்திரங்களால் அவையடக்கம் கூறுகின்றார். நாயனார் அவையடக்கம் கூறியது, இறைவனது பெருமையை மாணாக்கர் உணர்தற்பொருட்டு என்க.

பண் :

பாடல் எண் : 32

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணர வல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.

குறிப்புரை :

``ஒன்று`` எனச் சிவபெருமானையே வேறு போலக் கூறினார். மெய்ம்மையை, ``வேர்`` என்றார். `அறியாமல்` என்றது, `முற்ற உணராது சிறிதுணர்ந்த அளவிலே` என்றவாறு. `அறிந்த அளவில் செய்கின்றேன்` என்றபடி. விளம்புதல் - பலரறியக் கூறுதல்.

பண் :

பாடல் எண் : 33

பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

பொழிப்புரை :

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் ஒன்றையும் நெறிப்பட அறிகிலேன். அளவை நூல் முறையால் ஆராயவும் வல்லனல்லேன். பேரன்பினால் இறைவனையே தேடி அலையும் நிலைமையும் இல்லேன்.

குறிப்புரை :

`நான் சிவபெருமானது பெருமையைக் கூறுதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். எனவே, `எனது சொல் அறிவுடை யோர்க்கு நகை விளைக்கும்` என்பதாம். பாடுதல், இயல்வகையாலும். இசைவகையாலும் என்க.

பண் :

பாடல் எண் : 34

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொழிப்புரை :

தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசைபோல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெரு மையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.

குறிப்புரை :

`அவ்வாற்றால் ஆகமத்தின்வழிச் சிறிது கூறு கின்றேன்` என்பது குறிப்பெச்சம். எனவே, `அம்முதனூற் பொருளை யுடையது என்பதுபற்றி அறிவுடையோர் இந்நூலை இகழார்` என்பது கருத்து. `மதித்தவர் உள்ளே இன்னிசைபோல எழுகின்ற ஈசனை` எனக் கூட்டுக. ``இன்னிசை வீணையில் இசைந் தோன் காண்க`` (தி.8 திருவாசகம் . திருவண்டப்பகுதி - 35) என்றமை நினைக்கத்தக்கது. பின்னைப் படைத்தல் - மீளப் படைத்தல்.

பண் :

பாடல் எண் : 35

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொழிப்புரை :

மன்னிய வாய்மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத் தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக்கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தி யருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.

குறிப்புரை :

`அதனால், அவற்றை வேதத்திற்குப் புறம்பான நூல் என்று இகழ்வர். அவர் என்னையும் இகழ்வராதலின், அது பொருளன்று` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `பத்திமையால் தத்துவஞானம் தாழ்வரை உரைத்தது` எனக்கூட்டி உரைக்க. ``உரைத்தது`` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன்னைப் பாட்டினின்றும் வந்தது. `பத்திமையால் உரைத்தது` எனவே, அறியார் அஃதில்லாதோர் என்பது விளங்கிற்று. இதனால், `வேதம் உலகர்பொருட்டும், சிவாகமம் சத்திநிபாதர் பொருட்டும் சிவபெருமானால் செய்யப்பட்டன` என்பது சொல்லப்பட்டது.
இதனை,
``வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறுமுள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம்;
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
எனச் சிவஞானசித்தி விளக்குதல் காண்க.
பாயிரத்திறுதியில் நூற்பாட்டின் தொகையும், நூற்பயனும் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 36

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.

குறிப்புரை :

``மூலன்`` என்றது தம்மைப் பிறர்போலக் கூறியவாறு. ஞானசம்பந்தரும், நம்பியாரூரரும் தம் பதிகத்திறுதியில் இவ்வாறு கூறுதல் காண்க. இங்ஙனம் நாயனார் ``மூவாயிரம் தமிழ்`` என்றமை யானும், மேல் ``மந்திர மாலை`` என்றமையானும் சேக்கிழார், ``நற்றிரு மந்திரமாலை`` எனவும், ``தமிழ் மூவாயிரம் சாத்தி`` எனவும் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 37

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தரும்இவை தானே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 38

வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 39

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.
சிற்பி