முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு


பண் :

பாடல் எண் : 1

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 

பொழிப்புரை :

`அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர், `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.

குறிப்புரை :

`கொல்லாமையே சிறந்த அறம்; அது வேதத்துள் இல்லை` எனக் கூறும் புத்த சமண மதத்தவரது கூற்றை உட்கொண்டு கூறியது இத்திருமந்திரமாதலின், இதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. வேதத்துள் ஊன் வேள்வி கூறப்பட்டதாயினும், வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுட் கூறப்பட்ட அறங்கள் அவ்வத்திறத்தார்க்கே உரியனவன்றி, எல்லா அறங்களும் எல்லார்க்கும் உரியன அல்ல; அவ்வாற்றால், ஊன் வேள்விகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கியே கூறப்பட்டன என்பதும், ஊன் வேள்வியன்றித் தூய வழிபாடுகளும், தூய நோன்பு களும் அவற்றிற்கு உரியாரை நோக்கி வேதத்திற் கூறப் பட்டுள்ளன என்பதுமே வேதத்தை உடன்பட்டோர் துணிபாகலின் ``வேதத்தை விட்ட அறமில்லை`` என்பது முதலியவற்றால் வேதத்தின் சிறப்பை வலியுறுத்தினார் நாயனார். திருவள்ளுவ நாயனாரும்,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
என `ஊன்வேள்விகள் உயர்ந்தோர்க்கு உரியன அல்ல என்பது மாத்திரையே கூறியதல்லது, `ஒருவர்க்கும் ஆகாது` என முற்றக் கடிந்து கூறினாரல்லர். ஊன் வேள்விகளை அறிவுடையோர் விலக்கா மைக்குக் காரணம், அவற்றாலும் சிலர்க்குக் கடவுள் உணர்ச்சி உள தாதல் பற்றியேயாம். புத்த சமண மதங்கள் கடவுட் கொள்கை இல்லாத மதங்களாதலின் அவை அவற்றை மறுக்கு முகத்தான் கடவுள் வழி பாட்டினையே மறுப்பனவாயின. அன்றியும், ஊன் வேள்வியை விலக்குதலைத் தம் மதத்தினைப் பரப்புதற்குத் தக்கதொரு கருவி யாகவுங் கொண்டு தம் ஆரவார உரைகளைப் பெருக்கின என்பது, ``கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம்`` (தி.12 திருநாவுக் கரசர் புராணம். 37) என்ற சேக்கிழாரது திருமொழிக் குறிப்பால் நன் குணரலாம்.
``வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை`` -தி.3 ப.108 பா.7
என்னும் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
`கடவுள் வழிபாடு உயிர்க்கொலையோடு கூடாது நிற்றலே சிறப்பு; கூடினும் அமைக` என்பது வேத மதங்களின் கருத்து. `கடவுள் வழிபாடு செய்யப்படாது ஒழியினும் ஒழிக; உயிர்க் கொலை கூடாது` என்பது புற மதங்களின் கொள்கை. `இப்புறமதக் கொள்கையால் ஒழிவது கடவுள் வழி பாடேயன்றி உயிர்க்கொலையன்று` என்பதை ஊன்றியுணரவல்லார்க்கு, அம்மதங்களால் விளையும் தீங்கு புலனாவ தாகும். அது நோக்கியே அறிவுடையோர் அனைவரும் வேதத்தை உடம்பட்டு ஒழுகினர் என்க.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். -குறள் 543
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின். -குறள் 560
என்பவற்றால் திருவள்ளுவ நாயனாரும் வேதத்தை உடம்பட்டமை புலனாகும். ``வேதத்தில் அறம் எல்லாம் உள`` என்றதனால், `வேதம் அறத்தைக் கூறும் பொது நூல்` என்பது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

பொழிப்புரை :

வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமனும் வேதத்தைச் செய்தவனாயினானில்லை. ஏனெனில், வேதத்தைச் செய்தவன் அதனைச் செய்தது, அப்பிரமன் அதனை ஓதி அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும், மற்றும் கன்மத்தில் விருப்பம் உடைய வர்க்கு வேள்விகளை உளவாக்குதற்பொருட்டும், மெய் யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டுமாம்.

குறிப்புரை :

`பிரமன் வேதத்தால் அறிவு விளங்கப்பெறுதல், அவன் அதனை இடையறாது ஓதுதலால் அறியப்படும்` என்றற்கு, அவனை `வேதம் உரைத்தான்` என்னும் பெயராற்கூறினார். உம்மை நான்கனுள் முதலது, சிறப்பு; ஏனையவை எச்சம். `வேதத்தை ஓதி அறிவு விளங்கப் பெறுபவன், அவ்வேதத்தைச் செய்தவனாதல் எவ்வாறு` என்றற்கு, ``வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட`` என்றார். இக்கருத்தால் இது கூறப் புகுந்தவர், வேதத்தால் உளவாகும் ஏனைய பயன்களையும் உடன் கூறினார் என்க. இப்பயன்களது சிறப்பை வலிறுத்தற்கு எச்ச உம்மை புணர்த்து வேறு வேறு தொடராற் கூறினார். அவ்வும்மைகட்கு முன் `உரைத்தது` என்பன சொல் லெச்சமாய் எஞ்சிநின்றன. இதனால் `வேத்தைச் செய்தவன் பிரமன் எனக் கூறும் ஐரணிய கருப்பமத`த்தவர் முதலாயினவர் கூற்றும் பொருந்தா` என்பதும், `வேதத்தின் பயன் இவை` என்பதும் கூறப்பட்டன. இதனானே வேதம் ஒருவராலும் செய்யப்பட்டதன்று என்னும் மீமாஞ்சகரது கொள்கையும் பொருந் தாமை பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே. 

பொழிப்புரை :

பூனையை ஒத்த புறத்தோற்றம் உடைய வேதியர்கள் சொல்கின்ற, பிறப்பை உடைய ஆசிரியனாகிய மாயோன் றானும், மந்திரவடிவாகிய எழுச்சியான ஓசையை உடைய கன்ம காண்டத்துள் உள்ளத்தை உருக்குகின்ற அன்புருவாயும், ஞான காண்டத்துள் கேள்வி, ஆய்வு முதலியவற்றால் துணியப்படும் மெய்ப் பொருளாயும் உயர்ந்து நிற்பவனாவனோ? ஆகான்.

குறிப்புரை :

`அதனால், அவனும் வேதத்தைச் செய்தவன் ஆகான்` என்றபடி. வேதத்தின் பாகங்களையும் `வேதம்` என்றல் வழக்கு. உருக்கு உணர்வு, அன்பு உணர்வேதம், உணரப்படும் வேதம். ``ஓங்கி`` என்றது பெயர். `வேதம் முதல் நூலாதலின், அதனைச் செய்தவன் யாவர்க்கும் முன்னோனாய தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவனேயாதல் வேண்டும். அதனால், அவன் தனது தன்மையை உணர்ந்து தன்னைச் சாரமாட்டாத பிறர்க்கு அன்பினானும், ஆராய்ச்சியானும் தன்னை அடையுமாற்றையே அந்நூலுட் கூறியிருத்தல் வேண்டும். ஆகவே, அவன் அதன் கன்ம காண்டத்துள் அன்பிற்கும், ஞானகாண்டத்துள் அறிவிற்கும் பற்றாய் நிற்றல் வேண்டும். அத்தன்மை பிறப்பினுட்பட்டு நிற்கும் மாயோனுக்கும் கூடாது` என்பார், ``கருக் குரு வாய் நின்ற கண்ணனும் ஆமே`` என்றார். ``கரு`` என்றது பிறப்பை. ``கருக்குரு`` என்றதை, `கருவை உடை குரு` என விரிக்க. `கருவில் வீழ்பவன் குருவாகமாட்டான்` என்பது குறிப்பு. `கண்ணன்` மாயோன்` என்பன ஒருபொருட்சொற்கள். ``கண்ணனும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `ஆமே` என்ற வினா, `ஆகான்` என எதிர்மறைக்கண் வந்தது. `கண்ணனும் உருக்குணர்வாய் ஓங்கி ஆமே` எனக் கூட்டுக.
வரையறை இன்மையின், ``வெருக்குரு`` என, வேற்றுமைப் புணர்ச்சியுள் நிலைமொழியில் சிறுபான்மை ககரம் இரட்டிற்று. ``வெருக்குக்கண்`` (நாலடியார் 210) எனப் பிறவிடத்தும் வந்தது. `பிரமத்தை உணர்ந் திருத்தலால் பிராமணர் எனவும், பிரமஞானம் மிக்கிருத்தலால் விப்பிரர் எனவும் சொல்லப்படுகின்றோம்` என்று சொல்லிக்கொண்டு, பிரமமாகிய சிவபெருமானைச் சிறிதும் உணர்ந்து அன்பு செய்யாமலே, மாயோன் முதலியோரையே புகழ்வதோடு சிவபெருமானை இகழ்வதும் செய்துகொண்டே, நூலும் சிகையும் முதலாய தோற்றத்தால் மட்டும் சிலர் பிராமணராய் நிற்றலின், அவரது தோற்றத்திற்குத், தவத்தோடு சிறிதும் இயைபின்றி அதற்கு மாறாய் நின்று கொண்டே தோற்றத்தால் பெரிதும் தவமுடயைது போலத் தோன்றுகின்ற பூனையினது தோற்றத்தை உவமை கூறினார். பிராமணருட் சிலர் இவ்வாறு நிற்றற்குக் காரணம், ததீசி, கௌதமர் முதலிய முனிவர் சிலரது சாபம் என்பதைக் காந்தம், கூர்மம் முதலிய புராணங்களுட் காண்க.
இதனால், `வேதத்தை மாயோன் இயல்பாய் நின்றே செய்தான்` எனப் பாஞ்சராத்திரிகளும், `வியாதனாய் அவதரித்துச் செய்தான்` எனப் பௌராணிகரும் கூறுங் கூற்றுக்கள் பொருந்தா என்பது உணர்த்தினார். `வேதத்தைச் செய்தவன் பிரமனு மல்லன்; மாயனுமல்லன், என்பதைப் பொருந்துமாற்றின் வைத்து உணர்த்தி, `அது செய்தவன் சிவபெருமானே` என்பதைப் பாரிசேடத்தாற் பெறுவித்தார் என்க. வியாச முனிவன் வேதத்தை வகைப்படுத்திய தல்லது செய்திலாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 

பொழிப்புரை :

`வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.

குறிப்புரை :

`அதனால், வேதத்தைச் செய்தவன் சிவபெருமானே` என்பது குறிப்பெச்சம். `திரு` என்பது வீடாதலை `போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7 ப.59 பா.1) என்பதனுட் காண்க. வியாபக நிலையை, ``பெரு நெறி`` என்றார். ``சிவமாம் நெறி`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பிரான்`` என்று போயினார். ``குருவே சிவம்`` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவாராகலின், ``குருநெறிஆம்`` என்றது, `அவனருளால் அல்லது கிடைக்கப்பெறாத` என்றவாறு. ``ஒருநெறி`` என்றதன்பின், `என்று` என்பது எஞ்சிநின்றது. `பிரானையே, ஒருநெறியே` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `திருநெறியாவது சிவமாம் நெறி கூடும் ஒருநெறியே` என வேதாந்தம் கூறுதல், ``பிற எல்லாவற்றையும் விடுத்துச் சிவன் ஒருவனே தியானிக்கப்படத் தக்கவன்; அதர்வ சிகை முற்றிற்று`` ``ஸிவ ஏகா தியேயக சிவங்கர ஸர்வ மன்யத் பரித் யஜ்யேதி ,மாப் தார்த்த வஸிஹா`` என்று வேதாந்தம் (அதர்வசிகோப நிடத முடிவு) இறுதியிற் கூறி முடிதலால் அறியப்படும்.
இதனால் மேல் பாரிசேடத்தாற் பெறப்பட்டதனைப் பொருந்து மாற்றின் வைத்துணர்த்தி வலியுறுத்தல் செய்யப்பட்டது. இதனானே, சிவமாம் நெறியாகிய திருநெறியது இயல்பும் தொகுத்துணர்த்தப் பட்டவாறு அறிக.
திருஞானசம்பந்தரது, ``அருநெறிய மறை`` (தி.1 ப.1 பா.11) என்னும் திருப்பாடல் இத்திருமந்திரத்தை அடியொற்றிச்செல்வதாய் இருத்தலும், அவர் தமது பாடலை, ``திருநெறிய தமிழ்`` என்று குறித்திருத்தலும் இங்கு நினைவுகூரத் தக்கன.

பண் :

பாடல் எண் : 5

ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 

பொழிப்புரை :

ஆறு அங்கங்களை உடையதாய், மேற்றொட்டு எழுதாக் கிளவியாய் வருகின்ற அவ்வேதத்தைச் செய்த சிவபெரு மானை அதன் முடிவில் விளங்குபவனாக உணர்ந்து அவனது அருட் குணங்களைப் போற்றுபவர் உலகருள் ஒருவரும் இல்லை; அவர் பலரும் வேறு எவ்வெவற்றையோ தங்கள் கடனாக நினைந்து, அவற் றால் சில பேறுகளை உளவாக்கிக் கொண்டு அவற்றால் கிடைக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பேயாக அவற்றைப் பெருக்கி உழல்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `சிவஞானத்தாலன்றிப் பிறவி அறமாட்டாது` என்பது கருத்து. ஆறங்கம்`-`சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி` என்பன. அவற்றுள் `சிட்சை வேதத்தை ஒலிக்கும் முறையை நன்குணர்த்துவது; வியாகரணம், வேதத்தில் உள்ள தொடர் மொழிகளின் இயல்பைப் புலப்படுத்துவது; நிருத்தம், வேதத்தின் தனி மொழிகளின் இயல்பைக் கூறுவது; சோதிடம், வைதிக கருமங்கட் குரிய காலத்தின் இயல்பைத் தெரிவிப்பது. கற்பம், வைதிக கருமங் களை அனுட்டிக்கும் முறையைக் கூறுவது சந்தோவிசிதி வேதத்தின் சந்தங்களை எழுத்தெண்ணிக்கை கூறி உணர்த்துவது. இவையின்றி வேதத்தாற் பயன்கொள்ளுதல் கூடாமையின், இவை வேதத்திற்கு அங்கமாயின. அங்கம் உடையதனை ``அங்கம்`` என்றார்` ``ஆறங் கமாய்`` என்றும், ``வரும்`` என்றும் கூறியது, `இவ்வாற்றால் வேதத்தை வருந்திக் கற்றும் சிலர் அதனால் பயன் பெறாத வராகின்றனர்` என்பது உணர்த்துதற்கு.
கூறு அங்கம் - சிறப்பாகச் சொல்லப்படும் உறுப்பு; தலை; ``வேறு அங்கம்`` என்றதில், ``அங்கம்`` என்பது, `இன்றியமையாதது` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே. 

பொழிப்புரை :

இயலும், இசையும், நாடகமும் ஆகிய கலை களின் பயனை அறியாவிடினும் அவற்றை இடையறாது நிகழ்த்தி நிற்கின்ற இவ்வுலகில், வேதத்தை இடையறாது ஓதுகின்ற வேதியரும் அத் தன்மைரேயாய்ப் பொருள் பெறவிரும்பி, பொருளாசை நிறைந்த நெறி முறை இல்லாத அக்கலைவல்லுநர் பொருள் ஈட்டும் இடத்திற் சென்று அவரோடு மாறுகொண்டு நிற்கின்றனர்.

குறிப்புரை :

``பாட்டு`` என்றது, இயற் பாட்டினையும், ``ஒலி`` என்றது பண்ணமைந்த இசைப் பாடல்களையுமாம். நெறிப்பட்ட வாழ்க்கையை `விரதம்` என்றார் `இயற் பாட்டு முதலிய கலைகள் யாவும் நற்பண்பினை வளர்த்தற்கு உரியனவாகவும், அவற்றில் வல்லுநராகியும் அவை வளரப் பெறாதார் பொருளீட்டுதல் ஒன்றே அவற்றாற்பெறும் பயனாகக்கொள்வர். என்பார். ``விருப்பு ஆர் விரதம் இல்லாதவர்`` என்றும், `அவர் பொருளீட்டும் இடம் அரசர் முதலிய செல்வம் மிக்கோர்களாதலின், அவ்விடத்தில் இவ்வேதியரும் சென்று, அவர்க்கு முன்னே எமக்குத் தம்மின் என அவரின் முந்துகின்றதல்லது, தாம்வேதம் ஓதியதற்குப் பயன் பிறிதில்லை` என்பார், ``அவர் ஈட்டு மிடஞ்சென்று இகலலுற்றாரே`` என்றும் கூறினார். வேதியர் அவரின் முந்துதல், `தக்கார்க்குக் கொடுத்தலாகிய இது முன்செய்யத் தக்கது` என அறிவுறுத்தி நிற்றல். `வேதியர், பிறரெல்லாம் இலௌகிகர், யாம் வைதிகர் என்று சொல்லால் தம்மை உயர்த்திக் கொள்வதல்லது, செயலால் இலௌகிகரோடு ஒக்கின்றார்` என்பதும் கூறியவாறு. `சிவபிரானை உணராதார்க்கு உலகப் பற்று நீங்காது` என்பதாம்.
இம்மூன்று திருமந்திரங்களாலும், `வேதத்தின் பயன் சிவநெறியே நெறி என்று உணர்ந்து அந்நெறிநிற்றலே` என்பது உடம்பாட்டானும் எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது. ``வேதப் பயனாம் சைவம்`` (தி.12 சண்டேச்சுரர் 9) என்று அருளிய சேக்கிழார் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. இப்பயன் எய்தாதாரை நோக்கியே,
``அசிக்க ஆரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணாக் கண்; வாய்
பேசாத பேய்க ளோடே`` (தி.9 திருவிசைப்பா. 4, 5)
என்றாற்போலும் திருமொழிகள் எழுந்தன.
`வேதத்தைச் செய்தவன் இவன்` என்பது பற்றியும், அதனால், முடித்துக் கூறப்படும் நெறி இன்னது` என்பது பற்றியும் நாயனார் இவ்வாறெல்லாம் வலியுறுத்து அருளிச் செய்தமையால், `வேதம் அவரவர் தகுதிக்கேற்பப் பலவாற்றாற் பொருள் கொள்ள நிற்பது` என்பது பெறப்பட்டது, எனவே, நாயனார் பின்னர்க் கூறுமாறுபோல, உண்மையை முதற்கண்ணே முற்ற உணர்த்தினால் உணர்தல் அரிதாதல் பற்றி அதனை முதற்கண் ஒருவாற்றான் உணர்த்தும் பொது நூலே வேதம்` என்பதாயிற்று.
சிற்பி