முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை


பண் :

பாடல் எண் : 1

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே. 

பொழிப்புரை :

குடிகளிடத்து இரக்கங்கொள்ளும் நல்ல அரச னாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இல னாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலமருவன், அவன் செய்த அறம் தன் வாழ்நாள் முழுதும் அரசனேயாய் வாழ்தற்கு ஏற்ற பேரறம் என்பது ஒரு தலையன்றாகலின்.

குறிப்புரை :

``அருளும்`` என்றது, பெயரெச்சம். ``அரசனும்`` என்ற உம்மை உயர்வு சிறப்பு. ``ஆனையும், தேரும்`` என்றது உபலக்கணம். ``பிறர்`` என்றது பகைவரை. ``தெருளும், மருளும்`` என்னும் செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலில் வந்தன. தெருளலும், மருளலும் அலமரல் இன்மையையும், அதனை உடைமையையும் குறித்து நின்றன. `சேரின் தெருளும்` எனவும், `பினை மருளும்` எனவும் மாற்றிப் பொருள் கொள்க. ``பின்னை`` என்றது வினைமாற்றின்கண் வந்த `மற்று` என்னும் பொருட்டாய் நின்றது. `ஆதலின்` என்பது சொல்லெச்சம். `அவன் மாதவமன்றே` என்பது பாடம் ஆகாமை அறிக. இதனுள், `சிற்றம் பலமேய செல்வன் கழல் ஏத்தும் செல்வமே நிலையுடைய செல்வம்; (தி.1 ப.80 பா.5) பிற செல்வங்கள் அன்ன வல்ல` என்றற்கு நாயனார் சிவபெருமானை இங்கு, ``செல்வன்`` எனக் குறித்தமை அறியத்தக்கது.
யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
என்றார் நாலடி நானூற்றினும்.

பண் :

பாடல் எண் : 2

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொழிப்புரை :

வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் இருட்பிழம்பு போல்வதாகிவிடுகின்ற துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டு வதில்லை. (நேற்று அரசனாய் இருந்தவன் இன்று அடியனாயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே.) ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, துறக்கச் செல்வத்தினரான தேவர் கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள்; அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவனாகின்றான்.

குறிப்புரை :

இயக்கு - இயங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். பொதுப்பட, ``இயக்கு`` என்றமையால், முற்பக்கமாகிய நற்காலம் காரணமாகத் திங்கள் வளர்ச்சியுறுதலும், பிற்பக்கமாகிய தீக் காலம் காரணமாக அது தேய்வுற்று இருட்பிழம்பு போலாவதும் ஆகிய இருதன்மையும் கொள்ளப்படும். படவே, பொருட்கண்ணும், செல்வம் நல்லூழ் காரணமாக வளர்தலும், தீயூழ் காரணமாகக் குறைந்து மறைதலும் ஆகிய இருதன்மைகளும் விளங்குவனவாம்.
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று. -குறள். 232
எனத் திருவள்ளுவர், செல்வத்தின் ஆக்கக் கேடுகட்கு உண்மைக் காரணமான காலத்தை, அதன்வழி நிகழும் பொதுக் காரணத்தின்வழி உய்த்துணரக் கூறினமை உணர்க. மேல், ``செல்வன்`` எனக் குறிப்பாற் கூறியதனை இதனுட் கிளந்து கூறியவாறு காண்க. செல்வத்தைத் தருபவனை, ``செல்வம்`` என்றார்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `செல்வம் நில்லாது நீங்கும் இயல்பினது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 

பொழிப்புரை :

தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப்பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. (அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!)
பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள்கண்ணில் உள்ளது. அதனைக்கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.

குறிப்புரை :

``தன்னது, என்னது`` என்றவற்றில் னகர ஒற்று விரித்தல். ``தனது, தனக்கு`` என்றவை, பன்மையொருமை மயக் கங்கள். மாடு - செல்வம். ``எனது மாடு`` என்றதன்பின், `எமக்கு உதவும்` என்பது எஞ்சிநின்றது. உன் உயிர், வினைத்தொகை. உயிரை, ``உன் உயிர்`` என்றதனால், `உடல், காணப்படுவது` என்பது பெறப் பட்டது. இவ்வாறு அவ்விரண்டன் தன்மைகளையும் எடுத்தோதியது `இயைபில், லன ஒரு நிமித்தத்தால் தம்முள் இயைந்தன; அந்நிமித்தம் நீங்கியவழி அவ்வியைபும் நீங்கும்` என்பது உணர்த்தற்கு. நிமித்த மாயது வினை. ``உடலோடு`` என உருபு விரிக்கப்பட்டது. ``போம்`` என்றதனைப் ``பிறந்தது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `ஒக்கப் பிறந்தது போம்` என்றது, `அவ்வாறு பிறவாதது போதல் சொல்ல வேண்டா` என்றற்கு. ``கண்ணது காணொளி`` என மிகுத்துக் கூறியது, `பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்றற்கு. தனது நிழல் தனக்கு உதவாமையை எடுத்துக் காட்டியது, தமக்கு உரியது தமக்குப் பயன்படாதொழிதலைத் தெளிவித்தற்காம்.
``வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே``
-கந்தரலங்காரம்
என்ற அருணகிரி நாதர் திருமொழியும் காண்க.
இதனால், `செல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

பொழிப்புரை :

ஈக்கள் தேனைச் சேர்த்தற்குப் பூக்களின் மணங் களை அறிந்து அதன் வழியே பூக்களை அணுகித் தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, அவையாதும் செய்யமாட்டாது அத் தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.

குறிப்புரை :

அஃதாவது, வலியுடையார் புகுந்து தம்மைத் துன்புறுத்தி விலக்கிவிட்டுக் கைக்கொள்ளத் தாம் யாதும் செய்ய மாட்டாது விலகியொழிவர் என்பதாம்.
ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு. -குறள். 1077
என்னும் திருக்குறளால், கீழ்மக்களது செல்வம் அவர்க்கும், சுற்றத்தார் முதலியோர்க்கும் பயன்படாது; வலிமையால் துன்பம் செய்வார்க்கே பயன்படும் என்பது விளங்கும்.
உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னாரிழப்பர்; வான்றோய் மலைநாட,
உய்த்தீட்டுந் தேனீக் கரி. -நாலடியார் 10
என்ற நாலடி வெண்பாக் காணத்தக்கது. ``ஈட்டிய``, வினையெச்சம்.
இதனால், `செல்வம் கொடுத்தும், துய்த்தும் இன்புறாது இறுகப் பிடித்தவிடத்தும் நில்லாதொழியும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 

பொழிப்புரை :

அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.

குறிப்புரை :

``தெற்ற`` என்பது நீட்டலாயிற்று. தெற்றத் தெளிதல், நன்கு தெளிதல். `கலக்கி மலக்கல்` என்பதொரு வழக்கு என்பது, ``கலக்கி மலக்கிட்டுக்கவர்ந்துதின்ன`` (தி.4 ப.1 பா.8) என்பதனால் அறிக. பெரிதும் கடிந்துரைத்தல் தோன்றச் ``செல்வத்தை`` என்றாராயினும், `செல்வப் பற்றினை` என்றலே, கருத்து என்க. ``ஆமே`` என்ற ஏகாரம் எதிர்மறை உணர்த்திற்று. அதனை ஈற்றசையாக்கிக், `களைந்தால் குதித்தல் கூடும்` என உரைப்பாரும் உளர். இதனால், `செல்வம் பயன் தருவதாயினும், பெரும்பயன் தருதல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. 

பொழிப்புரை :

மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந் தொழிதலைப்போல விழுந்தொழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினை யால் கூட்டுவிக்கப்பட்டிருத்தலை உலகர் அறிந்திலர்.

குறிப்புரை :

`அதனால் அவற்றையே வீடுபேறாகக் கருதி அதன் கண் மயங்கி நின்று அழிகின்றனர்` என்றபடி. மாடு - காசு. செல்வம் - ஏனைய வளங்கள். `கவிழ்கின்ற கலம்` என இயையும். சிமிழ் - கட்டு. செல்வம் கட்டாதல், ஈட்டல் காத்தல்கள் காரணமாகச் செய்யப்படும் முயற்சிகளாலும், பற்றினாலும் உயிர்க்கு உறுதி நாடுதற்குக் காலம் பெறாதவாறு செய்தல். இம் மந்திரத்துள் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், செல்வம் தான் நிற்கும் சிறிதுகாலத்திலும் பந்தமாயே நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே. 

பொழிப்புரை :

ஒத்து வாழ்கின்ற, `மனைவி, மக்கள், உடன் பிறந்தார்` என்போரும் தம் தலைவரால் தங்கட்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவிற்று என்றே நோக்கி நிற்பர். அவரால் விரும்பப் படுகின்ற அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாள் போக்கு வார்க்கு இறுதிக்கண், `அந்தோ! எம்மைக் காக்க எம்முடன் வருக` என்று அழைத்துச் செல்லும் துணை ஒன்றைப் பெறுதலும் கூடுமோ!

குறிப்புரை :

`மனைவி முதலாயினார் உடன்வரும் துணையாக மாட்டாமை அறிந்து, அவர் பொருட்டாகப் பொருள் ஈட்ட முயலு தலை விடுத்துச் சிவபெருமானை வழிபட்டு வாழின், அவன் துணை யாவான் ஆதலின் அவனையே வழிபடுக` என்பது கருத்து. `வாழ்வும்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. செல்வத்தை ``ஒண் பொருள்`` என்றது, மனைவி முதலானோர் கருத்துப்பற்றி, `எமக்கு ஒண்பொருள் அளவு ஏது என்பர்` என மாற்றி உரைக்க. ``கூடலும் ஆமே`` என்றதற்கு, மேல், ``குதிக்கலும் ஆமே`` என்றதற்கு உரைத்த வாறே உரைக்க. ஈண்டும் ஏகாரத்தை ஈற்றசையாக்கி, `ஒண்பொருள்`; என்றதனைச் சிவபெருமானாகக் கொண்டு, `ஒண்பொருளாகிய அதனைச் செய்வார்கட்கு` எனக் கூட்டி உரைப்பாரும் உளர். இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `உயிர்ச்சார்பாகிய சுற்றத்தாரையும், அவர் தந்நலத்தராதல் நோக்கிப் பொருட் சார்பாகிய செல்வத்தோடு ஒப்ப வைத்துத் துறக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 

பொழிப்புரை :

உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப் பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசை மிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

``வேட்கை மிகுத்தது`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிலும்,`` மெய்கொள்வார் இங்கிலை`` என்பதை இறுதிக் கண்ணும் கூட்டி உரைக்க. ``மிகுத்தது`` என்பதன் பின் `ஆயினும்` என்பதும், ``கைவிட்டவாறே`` என்பதன்பின் `உளதாம்` என்பதும் எஞ்சிநின்றன. ``தறி`` என்றது உடம்பையும், ``வழி ஒன்பது`` என்றது அதில் உள்ள ஒன்பது பெரும்புழைகளையுமாம். பூட்டுதலுக்குச் செயப் படு பொருள் வருவிக்கப்பட்டது.
இதனால், `தந்நலம் கருதாத சுற்றத்தாராயினும் துணையாக மாட்டுவரல்லர்` என்பதுணர்த்தி, மேலது வலி யுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

பொழிப்புரை :

உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யம தூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.

குறிப்புரை :

`அடுக்கும்` என்பது இடைக் குறைந்து நின்றது. ``பரிசு`` மூன்றும் ஆகுபெயராய் அவற்றை உடைய பொருள்களைக் குறித்தன. `அதனையும்` என்பது, `அத்தையும்` என மருவிற்று. அதன்பின், `கொள்ள` என்பது எஞ்சிநின்றது. `அத்தையும் நமன் தூதர் சூழகிலாரே` எனக் கூட்டுக.
இதனால், செல்வமும், சுற்றமும் துணையாகாமையைத் தொகுத்துக் கூறி, `சிவபெருமானை அடைக` என முடித்துக் கூறப்பட்டது.
சிற்பி