முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை


பண் :

பாடல் எண் : 1

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

பொழிப்புரை :

நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை. பிறந்த கன்று வளர்ந்து காளையாய்ப் பின் கிழமாதற்கு ஞாயிற்றின் தோற்றம் செலவு சாய்வு என்னும் இவை ஒருவாற்றான் உவமையாதல் அறிக. தமது இளமை நீங்குதல் அப்பொழுது காட்சிக்கு எய்தாதாயினும், காட்சிக்கு எய்துவதாயகன்றின் இளமை நீக்கமாகிய உவமை யளவையின் வைத்தாயினும் உணர்தலே அறிவுடைமையாம் எனவும், அவ்வாறு உணர்வார் உளராயினும், உணர்ந்த தற்கேற்ப ஒழுகாமையின், அவரும் உணராதவரே எனவும் கூறுவார் இவ்வாறு கூறினார். இனி, இங்ஙனம் எடுத்துக்காட்டுவமையாக்காது, ஞாயிற்றையும், கன்றோடு உடன்வைத்து இரண்டு உவமை அளவை கூறிற்றாக உரைப்பாரும் உளர். ``எருதாய்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``கன்று`` என்று போயினார். வருவித்துரைத்தன பலவும் இசையெச்சங்கள். இதனால், இளமை நிலையாமை காட்சியானே உணரப்படுதலின், அதனையறிந்து தக்கது செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 2

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 

பொழிப்புரை :

மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.

குறிப்புரை :

`ஆகவே, அவர் இளமை நிலையாமையை அறிவா ரல்லர்` என்பதாம். ``கழிந்தன`` என்றதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. பூண்டுகொள்ளுதல், கடனாக மேற்கொள்ளுதல். ``நீண்டன`` என்றது வினைப்பெயர். காலம் ஒன்றாயினும், நாள், திங்கள், யாண்டு முதலிய பாகுபாட்டால் பலதிறப்படுதலின், ``காலங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். ``கொடுக்கினும்`` என்ற உம்மை, எதிர்மறை. `பேரொளி உடையவன்` என்பார், சிவபெரு மானை, `தூண்டப்பட்ட விளக்கின் ஒளி` என்றார். ``தூண்டு சுடரனைய சோதி கண்டாய்`` (தி.6. ப.23. பா.1) என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.
இதனால், உலகரது அறியாமை கூறுதல்போல, ஆண்டு தோறும் இளமை கழிந்து செல்லுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. 

பொழிப்புரை :

சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவ பெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

துணிவு பற்றி, ``ஒழிந்த`` என இறந்த காலத்தாற் கூறினார். அற்ற கங்கை - அடங்கிய கங்கையை உடைய. முதுமைக் காலத்தில் உயிர் செயலற்றுப்போதலின், அது செயலாற்றுதற்குரிய இளமைப் பருவத்தையே, ``உயிருள்ள போது`` என்றார். இதனால், முதுமைக் காலம் யாதொரு பயனையும் தாராத தாகலின், இளமை நிலையாமையை மறக்கலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. 

பொழிப்புரை :

முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய்போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.

குறிப்புரை :

இது, முதுமை எய்தி, அதனால் நாணமும், துயருங் கொண்டு வருந்துவான் ஒருவனது கூற்றாகச் சொல்லப் பட்டது. இதன் பயன், `இளையராயினார் பலரும் இளமைக்காலத்தே உயிர்க் குறுதியைத் தேடிக்கொள்ளாராயின், பின்னர் இவ்வாறு வருந்துதல் அன்றிப் பிறிதொன்றும் காணார்` என்பது உணர்த்துதல். திருநாவுக்கரசர்,
``தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்பமெய்த
இளையது மல்லேன் எந்தாய், என்செய்வான்தோன்றினேனே ``
-தி.4 ப.78 பா.9
என்று அருளிச்செய்ததும் மேற்காட்டியவாறு, இளமையிலே பயன் பெறாது முதுமையில் துன்புறுதல்கருதி இரங்கியதேயன்றிப் பிறி தில்லை என்பது வெளிப்படை. அங்ஙனமாகவும், `அவரும் மகளிரின் பத்தை இழந்தமையை எண்ணிக் கழிவிரக்கங்கொண்டார்` எனத் தமக்கு வேண்டியவாறே உரைத்து, எரிவாய் நிரயத்தைத் தேடிக்கொள் வாரும் உளர். ``முன்விரும்புவர்`` என்றது இயற்கைக்கண் வந்த கால வழுவமைதி. ``முன்`` என்றதனால், `இது பொழுது` என்பது போந்தது. முடிவில் உளதாதல் பற்றிப் பயனை, ``கடை`` என்றார். `கடையாக` என ஆக்கம் வருவிக்க. `நீர்போல் விரும்புவர்` என மேலே கூட்டி முடிக்க. மூன்றாம் அடி, `அவர்க்கு` என்னும் அளவாய் நின்றது. ``கரும் பொத்து`` என்றது வழிமொழிதல் (அனுவாதம்). அதனால், `அந் நிலையை உடையனாய் இருந்தயானே, இந்நிலையை எய்தினேன்` என்பது பெறப்பட்டது.
இதனால், இன்பச் செருக்கும் இளமையோடே ஒழிதல் கூறப்பட்டது.
காலி னோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்
ஏல வார்கு ழலினா ரிகழ்ந்து ரைப்ப தன்முனம்
மாலி னோடு நான்முகன் மதித்த வர்கள் காண்கிலா
நீல மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே.-தி.2 ப.97 பா.9
எனத் திருஞானசம்பந்தரும், இன்பச் செருக்கு இவ்வாறொழியும் என்று அருளிச்செய்தார். இன்னும் அவர்,
நிலைவெ றுத்தநெஞ்ச மோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெ றுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்
தலைப றித்த கையர் தேரர் தாம்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான் திருந்து காழி சேர்மினே.
-தி.2 ப.97 பா.8
என முதுமைக் காலத்தில் புதல்வர், பெயரர் என்பவராலும் வெறுக்கப் படுதலை அருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 5

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 

பொழிப்புரை :

ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.

குறிப்புரை :

``பாலன்`` முதலிய மூன்றும், அப்பருவத்தையே குறித்து நின்றமை அறிக. தம் செய்தியைக் கூறியது நிலையாமையால் தமக்கு உளதாய அச்சத்தினை உணர்த்து முகத்தான் அறிகிலாதவரது அச்ச மின்மை குறித்தற் பொருட்டாதலின், அது வருவித்துரைக்கப் பட்டது.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர். -குறள். 1072
எனத் திருவள்ளுவரும் அறிவிலாதாரது யாதும் அறியாநிலையை எடுத்து உள்ளுறையாக இகழ்ந்தோதினார். `அடி, மேல்கிடந்தும்` என உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. `பிறிதொன்றைச் சிறிது விரும்பினும் அது பிறப்பிற்கு ஏதுவாம்` என்பது கருத்து. அதனை, ஆலாலசுந்தரரது வரலாறு நன்கு உணர்த்துதல் காண்க. இதனால், `இளமை நிலையாமை நோக்கிக் கவலாமை அறிவிலாதாரது இயல்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. 

பொழிப்புரை :

நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர் தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.

குறிப்புரை :

``நித்தலும்`` இரண்டனுள் முன்னதனை முதலிற் கூட்டுக. ``சாலும்`` என்றது, `அதனால் பயனில்லை` என்றவாறு. `இச் சலவியன்` எனச் சுட்டு வருவித்துரைக்க. சலம் - சினம்; அது மறைத்தற் சத்தியாம். ``முற்சினமருவுதிரோதாயி`` என்றார் சிவப்பிரகாசத்தினும் (48). மிக நினைத்தலாவது, இளமைதொட்டே நெடுங்காலமாக நினைத்தல்.
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்
இவன் என்னைப் பன்னாள் அழைப்பொழியான் என்று
எதிர்ப்படுமே`` -தி.4 ப.112 பா.9
என அப்பரும்,
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. -தி.11அற்புதத் திருவந்தாதி 78
எனக் காரைக்கால் அம்மையாரும் சிவபெருமானைப் பன்னாள் வழிபடுதலை வலியுறுத்து ஓதுதல் காண்க. இதனால், `இளமை நீங்குதற்கு முற்றொட்டே சிவபெருமானை நினைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொழிப்புரை :

நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையுமாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.

குறிப்புரை :

பொருள்களை அறியும் அறிவுடைப்பொருள் உயிரே யாகலின் அதனை, `நுண்ணூசி` என்று வைத்து, அதற்கு வாயி லாய் நிற்றலின் தாமே அறிவுடையனபோலத் தோன்றுகின்ற ஐம்பொறி களைப் ``பருவூசி`` என்றார். ``பை`` என்றது உடம்பை. அறியு மாற்றால், `ஊசி` எனத்தக்க ஐம்பொறிகள் தாமே அடங்காது புலன்கள் மேற் செல்லுமாற்றால் `யானை` எனப்படுமாகலானும், `அவ்வாற்றால் அவை யானை எனப்படினும், புலன்களைச் சென்று பற்றும் விரைவு பற்றிப் பறவையாகவும் கூறுதற்கு உரிய` என்பார், `பறக்கும் விருகம்` என்றார். விருகம் - `மிருகம்` என்பதன் சிதைவு. ``பல்விருகமாகி`` (தி.8 சிவபுராணம்) எனத் திருவாசகத்தினும் வந்தது. `மிருகம்` என்றது ஏற்புழிக் கோடலால் யானையாயிற்று. ``ஆக மதத்தன ஐந்து களிறுள`` (தி.10 -5 ஆம் தந்திரம்). என்பது போல ஐம்பொறிகளை யானையாக உருவகித்தல் பெரும்பான்மை யாதல் அறிக. பனித் தல் - நடுங்கல்; தளர்ச்சி. பொறிகள் புலன்களைக் கவரும் ஆற்றலை இழப்பின் உடல் இறந்ததோடு ஒக்குமாதலின் `பரு வூசி ஐந்தும் பனித் தலைப் பொருந்தினால் பையும் பறந்தது போல்வதே` என்றார். எனவே, `அவைமெலிதலாகிய முதுமை வருதற்கு முன்னே ஈசனை நினைக` என்பதாம்.
இதனால் `இளமையது நீக்கம் உடல் நீக்கத்தோடு ஒக்கும்` என அதனது இன்னாதநிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :

திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபது யாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.

குறிப்புரை :

`திருமால் உலகத்தை அதன் உள்ளிருந்து ஈரடியாலே அளந்தான் என்பதனை என்றோ ஒரு காலத்து நிகழ்தொழிந்த நிகழ்ச் சியாக எண்ணுதல் கூடாது; என்றும் நிகழ்வதாகவே எண்ணல் வேண்டும்; ஏனெனில், அக்கதையின் உட்பொருள், அவன் காத்தற் கடவுளாதலின், உயிர்கள் பிறக்கும் இடங்களிலெல்லாம் சென்று காத்தற்பொருட்டு அவ்விடங்களைத் தன்னுள் ஓர்ந்துணர்கின்றான் என்பதே ஆதலின்` என்பது நாயனார் கருத்து. அதனால், உலகத்தைத் திருமால் இடவகையாலும், பகலவன் கால வகையாலும் அளக்கின்ற வராதல் அறிக. இப்பொருள் உணரமாட்டாதார் ``கண்ணனும்`` என்னும் பாடத்தை, `கண்ணதும்` என ஓதுப.
``எண்ணுறும் முப்பது`` என்றதற்கு, `முதல் முப்பது. இரண்டா வது முப்பது` மூன்றாவது முப்பது என்று இவ்வாறு எண்ணப் படும் முப்பது` என உரைக்க. இவற்றுள் முதல் முப்பதாண்டிற்குள்ளே கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிரம்பி, நிலையாமை உணர்வுபெற்று நின்றாரை; `இனி இவர் உலகருள் ஒருவராகவைத்து எண்ணற் பால ரல்லர்` எனவும், அங்ஙனம் அவ்வுணர்வு பெறாதாரை அறுபதாண்டு வரையும் கண்காணித்து நின்று, அத்துணை ஆண்டுகள் கழிந்த பின்ன ரும் நிலையாமை உணர்வு வரப்பெறாதவரை, `இனி இவர் இவ்வுலகத் தில் வாழ்ந்தும் வாழ்நாள் முடிந்தவரேயாவர்` எனவும் காத்தற் கடவுள் துணிந்தொழிதலின், அவ்விருதிறத்தாரும் அவ்வவ் ஆண்டளவில் அக்கடவுளால் உலகத்தினின்றும் பிரிக்கப்படுவோராதல் அறிக. காய்கதிரோன் காத்தற் கடவுளது துணிவிற்குக் கருவியாய் நிற்றல் பற்றி, அவனையும் அக்கடவுளோடு ஒப்பவைத்து எண்ணினார்.
பதினாறாண்டில் மணவினை முடிக்கப்பெற்று முப்பதாண்டின் காறும் உலகியலில் ஈடுபட்டிருப்பினும், கட்டிளமைக் காலம் முப்ப தாண்டோடு முடிவுறுதலின், அதற்குள்ளே நிலையாமை உணர்வு பெறாதொழியின் அதன் பின்னர் அதனைப் பெறுதல் ஐயமேயா தலின், `இவர் வீடு பெறுதற்கு உரியார்` எனக் காத்தற்கடவுள் துணிதற்கு அவ் யாண்டே எல்லையாயிற்று.
இனி, முப்பதாண்டிற்கு மேலாய் அறுபதாண்டின்காறும் செல்லும் காலம், `இவர் இத்தன்மையாராவர்` என்னுந் துணிவினைப் பயவாது ஐயத்தையே தந்து நின்று, அதன்பின் நிலையாமை உணர்வு வருதல் பெரும்பான்மையும் இல்லையாதலின், `இனி இவர்க்கு நிலையாமை உணர்வு வாராது` என்று துணிதற்கு அவ்யாண்டே எல்லையாயிற்று. அறுபதாண்டின் காறும் பற்று விடப்பெறாதவர் பின் விடப்பெறுதல் பெரும் பான்மை இல்லை என்பதே ஆன்றோரது துணிபு. திருநாவுக்கரசு நாயனார்போல அறுபது யாண்டின் பின்னரும் மெய்யுணர்வு பெறுதல் இறைவன் திருவருள் தானே முன்நிற்க நிகழும் அருஞ்செயல் என்க. அது பற்றியன்றே, அந்நாயனார் இறைவன் தம்மை ஆட்கொண்ட நிலையைப் பெரிதும் சிறப்பித்துப் புகழ்கின்றார். இக்காலத்து உள நூலாரும், `அறுபதுயாண்டின் பின்னர் ஒருவர்க்கு மனமாற்றம் உண்டாகாது` என்பர்.
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு. -நல்வழி என ஔவையாரும், `மூவாசை நீங்கி மெய்ப்பொருளைப் பெறுதல் முப்பதாண்டிற்குள் உண்டாகவில்லையெனின், பின்னர் உண்டாதல் அரிது` என்றது காண்க.
இங்கு, `முப்பது` என்றது கதிரளவை (சௌரமான) யாண் டேயாம். மதியளவை (சாந்திரமான) யாண்டு கதிரளவை யாண்டிற்குச் சிறிது ஏறக்குறைய நாற்பது நாள்கள் குறைவுடையது. இனிப்பிற கோள் அளவைகள் மிகக் குறைந்தும், கூடியும் நிற்கும். அதனால் கதிர ளவையின் பத்துத் திங்களைப் பல்கோள்களின் பொதுயாண்டாக வைத்து, அவற்றின் பேராட்சி, உள்ளாட்சிகளை (திசா புத்திகளை)க் கணக்கிடுவர். அவ்வாற்றால் பலகோள் யாண்டின் ஒரு வட்டம், `நூற் றிருபதுயாண்டு` எனப்படுகின்றது. எனினும், அது கதிரளவையின் நூற்றியாண்டேயாம். ஆகவே, மக்களின் நிறைவாழ்நாள் `நூற்றியாண்டுக் காலம்` என்றல் இழுக்காதல் இல்லை. இஃது அறியாது இக்காலத்தார் கோள்களின், பேராட்சி உள்ளாட்சியாண்டுகளைக் கதிரளவையாண்டின் வைத்துக் கணக்கிட்டு, நடைமுறைக்குப் பொருந்தாவகை செய்கின்றனர். அது நிற்க.
சிலர், `இங்குக் கூறிய முப்பதிற்றுயாண்டு பல்கோள் யாண்டே; அதனால் அவை கதிரளவையில் இருபத்தைந்துயாண்டே யாகலின், ஒருவனது வாழ்நாள் எல்லையாகிய நூற்றியாண்டினை நாற் கூறிட்டு ஒவ்வொரு கூற்றினும் முறையே மாணி (பிரமசாரி), இல்வாழ் வான் (கிருகத்தன்), நோன்பி (வானப்பிரத்தர்) துறவி (சந்நியாசி) என்னும் நிலைகளை உடையனாதல் வேண்டும். இந்நிலை களில் நான் காம் நிலையிலே பற்றறுதி உளதாகும். இவ்வாறன்றி முதல் நிலைக் கண்ணே பற்றறுதி உடையனாய் நிலைமாணி (நைட்டிக பிரமசாரி) யாகி வீடுபேறு ஒன்றையே விரும்பி நிற்பவனே தலையாய மகனாகலின், அவனது நிலைபற்றியே முப்பது யாண்டு மெய்யுணர்வு பெறுதற்கு எல்லை எனப்பட்டது `எனவும், `அவ்வாறின்றி மேற்கூறிய வாற்றால் இல்வாழ்க்கை முதலிய நிலைகளை மேற்கொண்டு செல்வார்க்கு யாக்கை நிலைநிற்றலும், பற்றறுதலும் ஒருதலையன் மையின், அவற்றை வீடுபேற்றிற்குரிய காலமாக ஆன்றோர் கொண்டிலர்` எனவும் கூறுவர். அவையெல்லாம் ஒக்குமாயினும், முதல் நிலைக்கண்ணே பற்றற்று நிலைமாணிகளாய் நிற்போர் உலகத்து அரியராகலானும், இல்வாழ்க்கைக்குப் பின்னர் நோன்பியாய் இருத்தல் வேண்டும் என்பதும், முப்பதுயாண்டு இல்வாழ்க்கையில் நிற்றல்வேண்டும் என்பதும் பொதுவாகக் கொள்ளப்படுவனவன்றிக் கட்டளையல்ல ஆகலின், பற்றறுதி உண்டாய வழி அறுபதிற்றி யாண்டிலாயினும், அதற்கு முன்னராயினும் முற்றத் துறத்தல் குற்றமன்று ஆகலானும். அறுபதிற்று யாண்டின் பின்னரே நோன்பின ராதல் வழக்கின்கட் காணப்படுதலாலும், `முப்பதுயாண்டு` என் பதனைக் கதிரளவை யாண்டாகக் கொள்ளுதலே பொருந்துவது என்க.
அஃது அவ்வாறாக, சிலர் நூற்றியாண்டின் மேலும் வாழக் காண்கின்றோம் ஆதலின், `மக்கள் வாழ்நாள் எல்லை நூற்றியாண்டு` என்றல் எவ்வாறு பொருந்தும் எனின், அவையெல்லாம் கையிலும், காலிலும் சிலர் ஆறுவிரல், ஏழுவிரல் பெற்றுப் பிறத்தல்போல அரிதிற் காணப்படுவனவாகலின், பொதுமுறைமை ஆகா என்க. இவ் வாற்றால் இத்திருமந்திரம் முப்பதிற்றுயாண்டளவையாகிய இளமையின் சிறப்பை உணர்த்தி, அதற்குள்ளே சிவனது திருவடி உணர்வைப் பெறல்வேண்டும் என வலியுறுத்து முகத்தால், இளமை நிலையாமையைக் கூறியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 9

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 

பொழிப்புரை :

பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

குறிப்புரை :

``ஈரெண்கலை`` என்றதனால், `அதனை ஒருங்கு பெற்று நின்றது திங்கள்` என்பது விளங்கிற்று, ``நின்றது`` என்றது அதன் நிலைமையைக் குறித்த ஆகுபெயர். ``கருங்குழி`` என்றது `இருட்குழி` என்றவாறு. `கருக்குழி` எனப் பாடம் ஓதுதல் இவ் இடத்திற்கு ஏலாமை அறிக.
இதனால், இளமை சிறிது சிறிதாகக் கழியும் முறைமை உவமையில் வைத்துக் காட்டப்பட்டது.
``தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதருள் உலகத்து``
என்னும் புறநானூற்று (27) அடிகள் இதனோடு ஒருவாற்றான்வைத்து ஒப்புநோக்கத் தக்கன.

பண் :

பாடல் எண் : 10

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 

பொழிப்புரை :

மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக் கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.

குறிப்புரை :

`பலரும் முதுமைவந்த பிறகுதான் இறப்பர்` என்ற கட்டளை இன்மையால், இளமையிலே சிவனைப் பெறுதல் வேண்டும்` என்றபடி.
``அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க``
என்று திருக்குறளிலும் (36),
மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது
கைத்துண்டாம் போழதே கரவா தறம்செய்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
என்று நாலடி நானூற்றிலும் (பா.19) கூறப்பட்டமை காண்க.
இதனால், இளமை நிலையாமையை உணர்ந்து இளமைக் கண்ணே சிவனைப்பெற முயலல் வேண்டும் என்பது முடித்துக் கூறப்பட்டது.
சிற்பி