முதல் தந்திரம் - 9. கொல்லாமை


பண் :

பாடல் எண் : 1

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 

பொழிப்புரை :

மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.

குறிப்புரை :

``குருபூசைக்கும்`` என்ற உம்மை, `சிவ பூசைக் கேயன்றி` என, இறந்தது தழுவிற்று. ``பன்மலர்`` என்பதன்பின், `வேண்டும், ஆயினும்` என்பவற்றை வருவித்து, `ஒண்மலர் நல் தார் கொல்லாமை` எனவும், `தீபம் சித்தமும் அமர்ந்திடம் ஆவி உச்சியும்` எனக்கூட்டுக. ``சித்தம் `` என்றதை அடுத்து நின்ற குறிப்பால, `உற்று ஆர்தல் இருதயத்தில்` என்பது தோன்றிற்று. ``தீபமும்`` என்ற உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. ``ஓர்`` என்றது `ஒருவகை` என்னும் பொருட்டு, ``தார்`` என்றதனால் ``கொல்லாமை`` என்றது, `கொல் லாமைகள்` எனப்பன்மையாய் நின்றமை பெறப்பட்டது. உயிர்ப் பன்மையால் கொல்லாமைகளும பலவாயின. ஒருசார் உயிர்களைக் கொல்லாதார் மற்றொருசார் உயிர்களைக் கொல்வாராதலின், `எல்லா உயிர்களிடத்தும் கொள்கின்ற கொல்லாமை நோன்பே வேண்டும்` என்பார், `கொலலாமை மலர்` என்னாது, ``கொல்லாமை மலர்த் தார்`` என்றார். ஞான நெறியார் செய்கின்ற அகப்பூசைக்குக் கொள்ளப்படும் எட்டு மலர்களுள்ளும் கொல்லாமையே தலையாயதாகச் சொல்லப் படும். அவ்வெட்டு மலர்களாவன. `கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` எனபன. இவ்வாறு சிவஞான மாபாடியத்து (9 அதி.3)க் கூறப்பட்டது. `அமர்ந்த` என்னும் பெயரெச்சத்து கரம் தொகுத்தலாயிற்று. இறைவன் எழுந்தருளியிருந்து அன்பரது வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும் இடம் இலிங்கமாதல் உணர்க. இருதயமாகிய ஆசனத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி ஆன்மாவும், மூர்த்திமான் சிவனுமாதல் பற்றித் திருநாவுக்கரசர், ``காயமே கோயிலாக`` (தி.4 ப.76 பா.4) என்னும் திருப்பாடலுள், ``மனம் மணி இலிங்கமாக`` என ஓதியருளினமை காண்க. ``மனம்`` எனப்படுவது ஆன்மாவே என்பது உணர்த்தற்கு, நினைகருவியாகிய மனத்தை, ``கடிமனம்`` என முன்னே அடைகொடுத்துப் பிரித்தருளினார். உபநிடதங்களுள் தகரவித்தை கூறுமிடத்து, ``இருதயமாகிய தாமரை மலரின் மேல் விளங்குகின்ற சுடரின் முனையில் பரமான்மா நிற்கின்றது`` எனக் கூறப்படுவதில், `சுடர் என்றது, சீவான்மாவை` என்பது பின்னர், `பரமான்மா` என வருதலான் அறியப்படும் (மகாநாராயணோப நிடதம்). ``எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே`` என உண்மை விளக்க (32) நூலும் ஆன்மாவை` இலிங்கம்` என்றது காண்க. ஆன்மா வேயன்றித் திருவைந்தெழுத்தும் சிவபெருமானுக்கு இலிங்கமாம். தனது சத்தியும் இலிங்கமாம். இவ்வாறு பல தலைப்படக் கூறுதல் என்னை என ஐயுறும் மாணாக்கர்க்கு, `சிவபெருமானுக்குத் திருவைந் தெழுத்துத் தூல சரீரமும், ஆன்மா சூக்கும சரீரமும், சத்தி அதிசூக்கும சரீரமும் ஆதலின், அதுபற்றி ஐயமில்லை` என்பதை மாபாடியம் உடையார் தமது சிவஞான சித்தி (சூ. 9. 9) உரையுள் இனிது விளக்கினார். `கொல்லாமை என்னும் அறம் ஞான பூசையிலும் முதல் மலராகக் கொள்ளப்படும் சிறப்புடைத்து` என்பது கூறுவார், அப்பூசையின் உறுப்புக்கள் பிறவும் உடன் கூறினார் என்க.
இதனால், கொல்லாமையது சிறப்பு உணர்த்தப்பட்டவாறறிக.

பண் :

பாடல் எண் : 2

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

: ``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யம தூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது.
இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.
சிற்பி