முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை


பண் :

பாடல் எண் : 1

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

பொழிப்புரை :

அறமுதலிய நான்கற்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.

குறிப்புரை :

ஆத்தம் - துணையாக நம்புதற்கு உரிய தகுதி. இஃது, `ஆப்தம்` என்னும் வடசொல்லின் திரிபு. இனி இதனை, `யாத்த` என் பதன் மரூஉவாகக் கொண்டு, `கட்டிய மனைவி` என்று உரைப்பாரும் உளர். பிறன்மனை நயத்தல், காமத்தோடு, `களவு` என்னும் குற்றமு மாம் என்றற்கு, ``காத்த மனையாள்`` என்றார். இவற்றால் மக்கட்குரிய நெறிமுறை இலராதல் பற்றிப் பிறன்மனை நயக்கும் பேதையரை `எருது போல்பவர்` என இழித்துக் கூறினார். காய்ச்ச, `காய்த்த` என்பதன் போலி `இயற்கையாய்ப் பழுத்த பழம்` என்றற்கு, `கனிந்த` என்னாது ``காய்த்த`` என்றார். இயற்கையானன்றி இடையே பறித்துச் செயற்கையாற் பழுக்க வைக்கும் பழம் சுவையுடைத்தாகாமை அறிக. `உண்ணமாட்டாமை, மடமையான் ஆயது` என்க. `பேதைமை யாவது, ஏதம் கொண்டு ஊதியம் போக விடலே` (குறள் 831) யாதல் உணர்க.
தனது தோட்டத்தில் உள்ள பலாப்பழம் அச்சமும், இளி வரவும் இன்றி நாவாரவும், வயிறாரவும் உண்ணப்படுமாகலின் அதனை, அத்தன்மையளாய தனது மனையாட்கும், பிறனது புழைக் கடையில் உள்ள ஈச்சம் பழம் முள்ளுடைதாய அம்மரத்தியல்பானும், பிறனுடையதாகலானும் அச்சமும், இளிவரவும் தருவதாய் உண்ணப் போதாத சிற்றுணவாம் ஆதலின், அதனை, அத்தன்மையளாய பிறன் மனையாட்கும் உவமை கூறினார். அதனானே, பிறன்மனை நயப்பார் அறத்தையேயன்றித் தாம் கருதிய இன்பமும் பெறாமை பெறப்பட்டது. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும்,
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில். -குறள் 142
என்றார். இன்னும் அவர்,
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். -குறள் 146
என்றலும் காண்க.
இதனால், பிறன்மனை நயத்தல் மடவோரது செயலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

பொழிப்புரை :

தமக்கு உறுதியை அறியாதவர் ஆத்தமனையாள் அகத்தில் இருக்கவே, பிறன் காத்த மனையாளைக் காமுறுதல், காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்ற வாறன்றியும், தாம் செழிப்புறப் பேணி வளர்த்த தேமாமரத்தில் பழுத்த பழத்தைக் குறையுடையதென்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்த புளிமாமரத்தின் நுனிக்கிளையில் ஏறிக் கீழே விழுந்து கால் ஒடிந்ததையும் ஒக்கும்.

குறிப்புரை :

தேமாமரத்தைத் திருத்தி வளர்த்தமை, மனைவி உள்ளத்தில் ஒத்த அன்பும், மனைமாட்சியும் வளர அவளோடு அள வளாவி வாழ்ந்தமையைக் குறித்தது. அறத்தொடும், புகழொடும் இயைந்த இன்பத்தையும், உண்டி முதலிய உபசரிப்பையும் தந்து எஞ் ஞான்றும் விரும்பப்படுதல் பற்றித் தன் மனைவியைத் தேமாங் கனியா கவும், அவற்றிற்கெல்லாம் மறுதலையாதல் பற்றி அயலான் மனைவியைப் புளிமாமரமாகவும் கூறினார். அருத்தம் - பாதி; குறை. மாம்பழத்தை அறையில் புதைத்தல் பிறர் கொள்ளாமைப் பொருட்டு. பொருத்தம் இன்மை - இயைபின்மை; அயல். காலறுதல் கூறின மையால், கொம்பு, நுனிக் கொம்பாயிற்று. காலறுதல், அவளைக் கொண்டவனால் அவ்வழி வந்த கால் வெட்டப்படுதல். நாலடியுள், ``காணிற் குடிப்பழியாம்; கையுறிற் கால்குறையும்`` (நாலடியார், 84) என்றது காண்க.
`நுனிக் கொம்பர் ஏறினார்`(குறள் 476) வீழ்ந்து காலொடிதலும் இயல்பு. நுனிக் கொம்பர் செல்லலாகாத இடத்துச் சேறலைக் குறித்தது. ``காலற்ற வாறு`` என்றதில், இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், வேறும் ஓர் உவமையால் மேலது வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொழிப்புரை :

செல்வச் செருக்கில் ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.

குறிப்புரை :

`கண்டகன்` என்பது இடைக் குறைந்து நின்றது. செல்வச் செருக்கினாலும், புல்லறிவினாலும் தூர்த்தராய்த் திரிவோ ராயினும், அவர்தம் உள்ளமும், இம்மையில் `மழையைப் பெய் யெனப் பெய்விக்கும்` (குறள் 55) ஆற்றலையும், மறுமையில் புத்தேளிர் வாழும் உலகத்துப் பெருஞ் சிறப்பினையும் தருவது (குறள் 58) கற்பு என்று அதனது சிறப்பினைத் தெளிந்து அதன் கண்ணே நிற்கும் பெருந்தகைப் பெண்டிர்மாட்டுப்புகாது, அத்தெளிவின்மையால் அங்ஙனம் நிற்க மாட்டாது இழுக்கிச் செல்கின்ற பெண்டிர்மாட்டே புகுவராகலின், ``மருள்கொண்ட மாதர் மயல் உறு வார்கள்`` என்றார். இதனானே, அவ் இழுக்குடை மாதரும் கேடெய் துதலை உடம்பொடு புணர்த்துக் கூறினாராயிற்று. திருவள்ளுவரும்,
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். -குறள் 56
என்பதில் ``தகைசான்ற சொற்காத்து`` என்பதனால், அதனைக் `காவாதவள் பெண்ணல்லள்` என்பதும்,
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. -குறள் 57
என்பதனால், `சிறைக்காவல் நிறைக்காவலுக்குத் துணையாவதே யாகலின், அந்நிறைக்காவல் இல்வழிச் சிறைக்காவலாற் பயனின்றாம்` என்பதும்,
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. -குறள் 59
என்பதனால், ``கற்பென்னும் திண்மையால்`` (குறள் 54) கொண்டார்க்குப் பெருமையைத் தந்து, அவர்க்குத் தம் பகைவர்முன்னே ஏறுபோல இறுமாந்து நடக்கும் பீடு நடையை உண்டாக்கும் பெண்டிரே யன்றி, தம்மைக் கொண்டார்க்குத் தம் பகைவர்முன்னே தலை கவிழ்ந்து நிற்கும் இளிவரவினை உண்டாக்கும் பெண்டிரும் உளர் என்பது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கூறினமை காண்க. மேல், ``காத்த மனையாள்`` (தி.10 பா.199) என்பதனால் சிறைக்காவல் குறிக்கப்பட்டது. இவ்விழுக்குடையாளை, ``இல்லிருந்து எல்லை கடப்பாள்`` எனப் பிறருங் கூறி, அவளை, `வல்லே அருக்குங் கோள்` (திரிகடுகம்) என்பதனால், `உலகிற்கு ஆகாதவள்` என்றார்.
சிற்பி