முதல் தந்திரம் - 13. நல்குரவு


பண் :

பாடல் எண் : 1

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 

பொழிப்புரை :

ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.

குறிப்புரை :

`கிழிந்ததேல்` என்னு வினையெச்சம் ``கிழிந்தது`` என முற்றாய்த் திரிந்தது. ``புடவை கிழிந்தது`` என்பது, `வறுமை வந்தது` என்பதனை உணர்த்திய குறிப்புச்சொல். அடைதல், இங்கு அதன் காரணமாகிய தெளிதலை உணர்த்திற்று. தெளியப்பட்டார், பெண்டி ரும், பிள்ளைகளும், பிற சுற்றத்தாருமாவர்.
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். -குறள் 1047
என்றார் திருவள்ளுவரும். ``இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்`` என ஔவையாரும் நல்வழியில் கூறுதல் காண்க. வறுமை எய்தினார்க்குப் பிறர்பால் பொருள்கொடுக்கும் நிலை இல்லை என்றல் கூறவேண்டாமையின், இங்கு, ``கொடை, கொள்ளல்`` என்றவை, உறவு பற்றி நிகழும் மகட்கொடை, மகட்கோடலேயாம். அவை இன்மையால் கொண்டாட்டமும் இல்லையாயிற்று. பிற உலக நடையாவன, கண்டவழி இன்முகம் காட்டலும், முகமன் கூறலும் போல்வன. ``இயங்குகின்றார்கட்கு`` என்றது, `பிறிது செயலில்லை` என்றவாறு. ``நாட்டில் இயங்குகின்றார்கட்கு`` என்பதனை, மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், நல்குரவினது கொடுமை கூறும் முகத்தால், அதனால் உள்ளந் திரியாமை நிற்றலின் அருமை குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொழிப்புரை :

`பொழுது விடிந்து விட்டதே; காலை உணவுக்கு என் செய்வது` என்று நிலையில்லாத வயிற்றை நிரப்புதற்கு வருந்தி, அதற்குரிய அரிய பொருள்களைத் தேடி அலைகின்றவர்களே! நீவிர் உங்கள் வயிற்றை நிரப்பினாலும், உங்கள் சுற்றத்தார் வயிற்றை நிரப்பினாலும், வேறு யார் வயிற்றை நிரப்பினாலும், குற்றமில்லை. அவைகளை நிரப்பும் முயற்சியால் சிவனை மறவாதீர்கள்; மறவாது நின்று துதியுங்கள். அப்பொழுதுதான் வினை நீங்கும்; வினை நீங்கினால் வறுமை நீங்கும்.

குறிப்புரை :

வயிற்றினது இழிபு உணர்த்த வேண்டி அதனை, `பொய்க்குழி` என்னும் பெயரால் கூறினார். கூறவே, பின் வருவன வற்றையும் அதனோடு இயைய, ``குழி`` என்றார். எனவே, அதற் கேற்ப, `தூர்த்தல்` என்றார். ``தூர்த்து`` என்னும் செய்தெனெச்சம்,
``செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்`` -தொல். சொல். வினை
என்பதனால், இங்கு எதிர்காலத்தில் வந்தது. அழுக்கு, வினை மாசு. ``புகலூர்ப் பாடுமின் புலவீர்காள் - இம்மையே தரும் சோறும் கூறையும்`` ( தி.7 ப.3 பா.41) என அருளிச் செய்ததனாலும் சிவபெருமானை ஏத்துவார்க்கு வறுமை நீங்குதல் அறியப்படும்.
இதனால், `சிவபெருமானை ஏத்தாமையே வறுமைக்குக் காரணம்` என்பது கூறும் முகத்தால், அவ்வறுமை வந்த காலத்து அது காரணமாக அவனை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. 

பொழிப்புரை :

மக்கள் அன்னமே (சோறே) யன்றிச் சொன்னமும் (பொன்னும்) தேடுதல், இயல்பாகவே தூர்ந்து போவதாகிய மட்குழிபோலாது, தூர்க்கினும் தூராத கற்குழி போன்ற வயிற்றை நிரப்புதற்கேயாம். ஆயினும், அப்பொன்னை நிரம்பக் குவித்து வைத்தவர்க்கும் வயிற்றை நிரப்புதல் இயலாததே எனினும், அதனை நிரப்புதற்கு வழி ஒன்று உண்டு; அவ்வழியை அறிந்தால் உள்ளம் தூய்மைப்பட்டு வயிறும் நிரம்பும்.

குறிப்புரை :

ஒருவேளை நிரம்பியபின் அஃது அற்றொழிய, மறுவேளை வெறுவிதாய்விடுதல் பற்றி, ``அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது`` என்றார். அங்ஙனம் தூராத குழியைத் தூர்க்கும் வழி பிறப்பை நீக்கிக் கொள்ளுதலேயாகலானும், பிறப்பு நீங்குதல் வினை நீங்கியவழியேயாகலானும், `அது நீங்கும் வழியை அறிந்தால் வினை நீங்க அக்குழி தூரும்` என்றார். `அழுக்கற்றவாற்றானே அக்குழி தூரும்` என உருபு விரித்து மாறிக் கூட்டுக. `அவ்வழியாவது இறைவனை ஏத்துதலே` என்பது குறிப்பாதல், மேலைத் திருமந்திரம் பற்றி அறியப்படும்.
இதனால், `வயிற்றை நிரப்பும் துன்பம் செல்வம் உடையவர்க் கும் நீங்காமையை அறிந்து வறுமையால் உள்ளம் வருந்தாது நிறைவெய்தியிருத்தல் வேண்டும்` என்பது கருத்து.
``தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே`` -புறநானூறு 189
என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது.

பண் :

பாடல் எண் : 4

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே. 

பொழிப்புரை :

புதிய வினைகள் பலவற்றைச் செய்யத் தூண்டுதலால், `ஒருவரைப் பற்றி மற்றொருவர், அவரைப் பற்றி வேறொருவர்` என்று இவ்வாறு தொடர்ந்துவரும் சுற்றத்தார் பழ வினையினும் பார்க்கக் கொடியோரே. அதனால், அவரைப் புறந் தருதலில் தனது நாள் பல வற்றைக் கடந்துவிட்ட ஓர் உயிர், அந்நாளை முற்றக் கடந்தொழிவ தற்கு முன்னே என்றாயினும் ஒருநாளில் அச்சுற்றத்தை வெறுத்து மெய்யுணர்வாகிய விளக்கை ஏற்றினால், அவ்விளக்கொளியைப் பற்றிச் சென்று, பின்னும் அவர்களோடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைத்தலும் கூடுவதாம்.

குறிப்புரை :

`உடன்று` என்பது, எதுகை நோக்கி, `உடந்து` எனத் திரிந்தது. உணர், முதனிலைத் தொழிற்பெயர்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். -குறள் 38
என்பவாகலின், `அவ்வழி தூர்த்தல்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக.
``அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே`` -புறநானூறு 193
எனச் சான்றோரொருவர் சுற்றத் தளைக்கட் பட்டு வருந்தினமை இங்கு அறியத்தக்கது. `ஒருவர் உயிர்` என்னாது `ஓர் உயிர்` என்றது, இழிவு பற்றி.
இதனால், `சுற்றம் ஓம்புதலைப் பற்றுக்கொண்டு செய்யாது அறம்நோக்கிச் செய்யின் வறுமைத் துன்பம் உண்டாகாது` என, அத்துன்பம் நீங்குதற்கு வழி கூறப்பட்டது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். -குறள் 341
எனப் பின்னர்க் கூறலின், முன்னர்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. -குறள் 341
என்ற திருவள்ளுவனார்க்கும் இதுவே கருத்தாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 5

அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே. 

பொழிப்புரை :

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக்கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல; பல. (இவற்றை யெல்லாம் நோக்கி) நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.

குறிப்புரை :

`ஆனினம் ஆறினும்` என மாற்றுக. `ஆறினும், ஐவரும்` (குறள் 43)என்றவை தொகைக் குறிப்பு. நல்லன, தீயனவற்றைப் பகுத்துணரும் அறிவும் ஐவரால் அடர்க்கப்படுதலின் அனைத் துயிரையும் வேடரால் கவரப்படுகின்ற பசுக்கூட்டமாகக் கூறினார். `ஆனினம்` என்னாது, `மானினம்` என ஓதுதலும் ஆம். `அறுத்தல்` `வேண்டி நின்றானே` என்பன பாடம் அல்ல. `ஈசனையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால், தேவர் வாழ்க்கையும் முற்கூறிய பசுவினங்களின் வாழ்க்கையோடு ஒத்ததாதல் குறிக்கப் பட்டதாம்.
சிற்பி