முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்


பண் :

பாடல் எண் : 1

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

பொழிப்புரை :

சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``விழுப் பொருள்`` என்பது, வான் முதலிய நான்கு எழுவாய்கட்கும் உரிய பயனிலை. வெற்றியாவது தத்தமக்குரிய பெருமையைத் தப்பாது பெறுதல். அதனைப் பெறுதற்குரிய வழியைக் கூறுவது வேதம். அது நிலைபெறுதலாவது, மறக்கப்பட்டொழியாது, ஓதப்பட்டு நிற்றல். `ஒழுக்கம் ஒழிந்தபின், அதனைக் கூறும் நூலால் பயனின்றிப் போம்` என்பது கருத்து. இதனானே,
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும். -குறள் 134
எனக் கூறினார் திருவள்ளுவர்.
மழை விழுப் பொருளாதலாவது, காலத்தில் பொய்யாது பொழிதல். நிலம் விழுப்பொருளாதலாவது, விளைவு குன்றாது மிகுதல். நாடுகள் விழுப்பொருளாதலாவது, அவ்வந்நாட்டுப் பண்டங் கள் குன்றாது பெருகல். தேவர் விழுப்பொருளாதலாவது, உவகை மேலீட்டால் மேலனவற்றை யெல்லாம் பயன்தரச் செய்தல். `அந்தணர் வேத விதியை ஆறங்கங்களாலும் உணர்ந்து, உணர்ந்தவாறே வேள்வியைத் தப்பாது செய்தலாலே நாடு, பசியும் பிணியும் நீங்கி, வசி யும், வளனும் சுரப்பதாகின்றது` என்பதனைத் திருஞானசம்பந்தரும்,
``கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லை`` (தி.1 ப.80 பா.1)
என்பதனால் குறித்தருளினார். உலக நலம் கருதி இதனைச் செய்தலானே இவர் `அந்தணர்` என்னும் காரணப்பெயர் எய்தினர். எனினும், `புலால் மறுத்தும், கொல்லாதும், அனைத்துயிர்மேலும் அருளுடையார்க்கே அது முற்றப் பொருந்தும்` என்றதற்கு, ``அந்தணர் என்போர் அறவோர்`` (குறள் - 30) என்றார் திருவள்ளுவர். சோர்வின்மை, நெறிமுறைகளில் உறைத்து நிற்றல்.
இதனால், முத்தீ வேள்வியது இன்றியமையாமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓது கின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.

குறிப்புரை :

`முத்தீ வேள்வி செய்கின்ற` என்றதனால், தேவ யாகம் பிதிர் யாகங்களும், `வேதத்தை ஓதுகின்ற` என்றதனால் பிரம யாகமும், `பிறர்க்கும் பிற உயிருக்கும் கொடுத்து உண்பர்` என்றதனால், மானுட யாகம், பூத யாகங்களும் ஆகிய ஐவகை வேள்விகளும் குறிக்கப்பட்டன. எனவே, `சிறப்புப்பற்றி, அக்கினி காரியமே, `வேள்வி` எனப்படுமாயினும், இவையும் வேள்வியேயாக, வேள்வி ஐவகைத்து` என்பதும், `ஐவகை வேள்வியையும் எஞ்சாமற் செய்பவரே சிறப்புடை அந்தணர்` என்பதும் கூறியவாறாயிற்று,
இனைத்துணைத் தென்பதொன் றில்லை, விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -குறள் 87
எனவும்,
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார், விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். -குறள் 88
எனவும் விருந்தோம்பலைத் திருவள்ளுவரும் `வேள்வி` எனக் குறித்தார். `போங்கதி` என்பது தொகுத்தலாயிற்று. `போகதி` வினைத் தொகை என்றலுமாம். ``புறம்`` என்றது ``அயல்`` என்னும் பொருட் டாய், பிற மக்களையும், உயிரையுங் குறித்து நின்றது. `அறங் கறக்கும்` என்றல்போல, ``புறங் கொடுக்கும்`` என்றது நான்காவதன் தொகை.
`அந்தணர்க்கு வீட்டு நெறி அவரவர் அறிவிற்கேற்ப அமையும்` எனவே, `கன்மமே வீடு பயக்கும்` என்று உணர்வார்க்கு, அக்கன்மத்தின் பயனாகிய துறக்கமே வீடாகும். `பிரமம் ஒன்றே மெய்; பிறவெல்லாம் பொய் என்று உணர்வதாய பிரம ஞானமே வீடு பயக்கும்` என உணர்வார்க்கு, அவர் பிறவெனக் கழிப்பன பிரகிருதி யளவேயாதலால், பிரகிருதிக்கு மேலேயுள்ள புருட தத்துவமே அவர்க்கு வீடாகும். தத்துவங்களும், அவற்றிற்கு வேறாய் உள்ள சீவான்மாவும், பரமான்மாவைப் போல வேறு முதல்களே; ஆயினும், தத்துவங்கள் சடமாயும், சீவான்மா தூல சித்தாயும் நிற்றலின், சூக்கும சித்தாகிய பரமான்மாவிற்கு அவை முறையே உடைமையும், அடிமையுமாய்ச் சுதந்திரமின்றி நிற்பனவாம் என்பதை உணர்ந்து யான், எனது என்னும் செருக்கு நீங்கிப் பரமான்மாவினது நிறைவில் அடங்கிநிற்றலே உண்மைப் பேறு என உணரும் பதி ஞானமே வீடு பயக்கும் என உணர்பவர்க்குப் பரமான்மாவே வீடாகும் என்பது பெறப்பட்டது.
இங்ஙனம் கூறிவந்த பலவற்றுள் ஒன்றையும் வேதம் ஒரு தலைப்பட உணர்த்தாது, எவ்வாறும் உணர நிற்றலின், வேதம் ஒன்றையே ஓதி வீடுபெற எண்ணுவார் மெய்ந்நெறியைப் பலபட உணர்ந்து தம்முள் இகலி நிற்பர் ஆகலின், ``தாமறிவாலே தலைப் பட்டவாறே`` என்றார்.
வேதத்துட் கூறப்பட்ட பல திறப்பொருளையும் இஃது இன்ன அளவினது எனவும் `எல்லாவற்றினும் மேலாக முடிந்து நிற்கும் பொருள் இது` எனவும் வரையறுத்து ஒருதலைப்பட உணர்த்துவன சிவாகமங்களே யாதலின், அவற்றை உணரும் சைவர் பிறரோடு இகலுதலின்றி மெய்ந்நெறியை உண்மையாகத் தலைப்படுவர் என்க.
வேதத்தை உடம்பட்டோர் அனைவர்க்கும் `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றுள், `வீடே சிறந்த பேறு` என்பது ஒப்ப முடிந்ததாக லின், `அதனை இத்தன்மைத்து என உணரும் உணர்விற்கு ஏற்பவே, அவரது வேள்வி முறைகளும் அமையும்` என்றற்கு இது கூறினார். கூறவே, `ஐவகை வேள்விகளும் அவற்றைச் செய்வாரது கருத்திற்கேற்ப `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றைத் தரும் என்பது பெறப்பட்டது.
`அக்கினி காரியமேயன்றிப் பிறவும் வேள்விகளே` எனக் கூறியவாற்றால், `சைவாகமங்கள், `சிவபெருமானை அகத்தாலும், புறத்தாலும், அறிவாலும் வழிபடும் வேள்வியே சிறப்புடை வேள்வி` எனவும், அக்கினி காரிய வேள்வியுள்ளும் சிவபெருமானைப் பொது நீக்கித் தனிப்பெரு முதல்வனாக வைத்துச் செய்யும் வேள்வியே செய்யத்தக்கது` எனவும் கூறும்.
இன்னும், ``தாமறி வாலே தலைப்பட்ட வாறே`` என்றதனால், வேதத்தின் பொதுமை காரணமாக முத்தீ வேள்வியும் அவ்வாறு அமையும் என்பது கொள்க. அஃதாவது, பரிமேதம், பசுமேதம் முதலாகச் சொல்வனவற்றை உயிர்ப்பலி வேள்வியாகச் செய்தல் வேண்டும் எனக் கொண்டு ஊனை அவிசாக இட்டுச்செய்தலும், அவற்றிற்கெல்லாம் வேறு பொருள்கொண்டு பசுவிடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், நெற்பொரி, அரிசிமா, தேங்காய், வாழைப்பழம் முதலியவற்றையும் அவிசாகச் சொரிந்து செய்தலும் போல்வன. வேதத்துள் `அஜத்தைக் கொண்டு வேட்க` என்பதற்குப் பிறரெல்லாரும் `அஜம்` என்பதற்கு `யாடு` என்பது பொருள் என்று கூறினர் எனவும், அகத்திய முனிவர், `மூன்றியாண்டு கழிந்த நெல்` எனப் பொருள் கூறினர் எனவும் பாரதத்துட் கூறப்பட்டன. இங்ஙனம் வேறுபடுவாரது நிலையைத் திருஞானசம்பந்தர்,
``ஊனொ டுண்டல் நன்றென ஊனொ டுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்``
-தி.3 ப.53 பா.9
எனக் குறித்தருளினார்.
அறவினை யாதெனிற் கொல்லாமை; கோறல்
பிறவினை யெல்லாம் தரும். -குறள் 321-
என்றவாறு, கொலைப் பாவம் ஏனை எல்லாவற்றினும் பெரிதாகலின், அதனோடு தொடர்புடைய யாதொன்றும் அறமாவதில்லை எனினும், செய்வாரது கருத்துவகையால் அதுவும் அறம் என வைக்கப்பட்ட தாயினும், அன்னதொரு வேள்வி கடைப்பட்ட வேள்வி எனக் கழித்து, உயிர்க்கொலை இல்லாத தூயவேள்வியே, வேள்வி என உயர்ந்தோர் கொள்வர் என்பது பற்றியே,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
எனப் பொதுப்படக் கூறுமிடத்து ஊனாகிய அவியையே பெரும் பான்மையும் குறிப்பாற் கீழ்ப்படுத்துக் கூறி,
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. -குறள் 328
எனச் சிறப்பாகக் கூறுமிடத்து ஊன் வேள்வியை வெளிப்படை யாகவே மறுத்துக் கூறினார் திருவள்ளுவர். சைவ வேள்விகள் பலவும் சைவாகமத்துள்ளும், வழக்கத்துள்ளும் பசு விடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், தாவரங்களினின்று பெறப்படும் நெல் முதலியவற்றான் ஆய பொருள்களையுமே அவிசாக இட்டுச் செய்யப் படும் தூய வேள்விகளாகவே காணப்படுதல் அறிக.
இதனால்,
``பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லை`` -தி.1 ப.80 பா.2
என்றதனுள், ``பசு`` என்றது; `பசுவிடத்து உண்டாகும் நெய் பால்கள்` எனப் பொருள்படுதலன்றிப் பிறிது பொருள்படாமை அறிந்து கொள்க. `பிறிது பொருள்படும்` என்பார் உளராயின், அவர் சிவாகமங் களையே யன்றித் தில்லைக்கணுள்ள வழக்கத்தினையும் அறியாதவரே யாவர்.
``அவன்உகந் திட்டஇறைச்சி எனக்குநன்
மாதவர் இட்ட நெய்பால் அவியே`` -தி.11 நக். திருமறம்
எனப் பதினொன்றாம் திருமுறையிலும், `மாதவர், நெய்பால் அவியே இட்டுச் சைவ வேள்வியே வேட்பர்` என்பது சொல்லப்பட்டது. இவ்வாற்றானே, சிவபாத இருதயர் செய்யக் கருதியதாகச் சேக்கிழார்,
``ஆதி மாமறை விதியினால் ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே புரியும்நல் வேள்வி``
-தி.12 திருஞான. பு. 429
எனக் குறித்த நல்வேள்வியும், ஞானசம்பந்தர்தாமே,
``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்`
-தி.12 திருஞான. பு. 821
எனக்குறித்த வேள்வி. `உலகம் இன்புறச் சங்கரர்க்கு முன்வந்த அற்சனை வழிபாடுகளுள் ஒன்று`` என அவர் (சேக்கிழார்) விளக்கிய சந்த வேள்வியும் எல்லாம் சிவநெறி வேள்வியாகிய தூய வேள்வி களே என்பது விளங்கும். இவற்றானே, தம் உணவினும் சைவராய் உள்ளவரே ஊன் வேள்வியை மறுத்தற்குரியரன்றி, உணவில் சைவராய் இல்லாதோர் ஊன் வேள்வியை மறுத்தற்கு உரியரல்லர் என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
புத்தர் புலால் உண்டலை விலக்காது, கொல்லுதலை மட்டுமே விலக்குவர்; சமணர் இரண்டனையும் விலக்குவர். அவ்வாற்றால் அவ் விருவரும் ஊன்வேள்வியை இகழ்தல் அவர்தம் மதத்திற்கு ஏற்புடைய தாயினும், வேள்வி செய்வார்க்கு வரும் பயனை உணராமையானும், ஊன் இடப்படாத தூய வேள்வியை அவர் கைக் கொள்ளாமையானும் அவர் செயல் சிவநெறியாளரால் இகழப் படுவதாயிற்று என்க. இத்திருமந்திரத்துள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், வேள்விகளின் வகைகள் பலவும் வகுத்துக் கூறி, `அவற்றுட் சிறந்தது சைவ வேள்வியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 

பொழிப்புரை :

உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.

குறிப்புரை :

``அணைதுணை`` இரண்டில் பின்னது ஆகு பெயராய், அணைதுணை உள்ள இடத்தைக் குறித்தது. `இணை துணையோடு` என உருபு விரிக்க. யாமம் - இரவு; உலகியல் பிறவித் துன்பத்ததாக லின், அதனை `இரவு` என்றார். ``துணைஅணை`` என்றதில் அணை, முதனிலைத் தொழிற்பெயர்.
`வைதிக வேள்வி வேட்பார்தீயையே தெய்வமாகக்கொண்டு வேட்பர். அது பிறவியை நீக்கும் தூநெறியாகாது; சிவநெறி வேள்வி வேட்பார், தீயைத் தெய்வமாகக் கருதாதது, அத்தீக்கு உள்ளீடாய் நிற்கும் சிவபெருமானையே முதல்வனாகக்கொண்டு வழிபடுவர்; அதுவே பிறப்பை நீக்கும் தூநெறியாகும்` என இதனால் சிவநெறி வேள்வியின் சிறப்புக் கூறப்பட்டது. சிவநெறி வேள்வியில் அக்கினியைச் சிவாக்கினியாகப் பிறப்பித்து வளர்க்கும் முறையைச் சிவாகமங்களில் கண்டுணர்க.

பண் :

பாடல் எண் : 4

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 

பொழிப்புரை :

இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. போது - பொழுது. ``இரண்டு ஓதி`` என்றதில் இரண்டு, வேத சிவாகமங்கள். ``ஓதி`` என்பதில் பிறவினை விகுதி தொகுத்தலாயிற்று. மாது - சத்தி. அவள் இரண்டாதலாவது, திரோதான சத்தியும், அருட் சத்தியுமாய் அவ்வவ்வுயிருக்கேற்ப நிற்றல். திரோதானமும் ஒரு வகைக் கருணையே ஆதலின், `அருள் செய்திட்டு` என்றார். ``தாதிரண் டாகிய`` என்பதில், ஆதல், மேற் சொல்லுதல். ``இரண்டின் கண் ஆகிய`` என உருபு விரிக்க. தாது இரண்டு - இருவகை மகரந்தம்; அவை, குவளை, ஆம்பல் முதலிய சிறு மலரின்கண் உள்ளனவும், தாமரையாகிய பெரு மலரின்கண் உள்ளனவுமாம். ``தண்ணம் பறவை`` என்பதில் தண்மை, சிறுமை மேல் நின்றது. அம், சாரியை. வண்டினை `பறவை` என்றல் இலக்கிய மரபு. ``பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறுபறவை `` (தி.2 ப.76 பா.6) என்றார் திருஞானசம்பந்தரும். வேது - வேற்றுமை. இனத்தால் ஒன்றாயினும் விரும்பப்படும் தாது வேற்றுமையால் இரண்டாய் நிற்கின்ற வண்டு போல, உயிர்கள் அனைத்தும் இனத்தால் ஒன்றாயினும், விரும்பப்படும் பயனால் இரண்டு ஆதலாவது, உலகின்பமும், வீட்டின்பமும் ஆகியவற்றை விரும்பு தலால் `உலகர்` எனவும், `சத்தி நிபாதர்` எனவும் இருதிற னாய் நிற்றல். எனவே, சிவசத்தி உலகர்க்குத் திரோதாயியாய் நின்று வேதத்தை ஓது வித்து, அதன் பயனாக வைதிக வேள்வியை வேட்பித்து உலகின் பத்தை அடைவிப்பவளாயும், சத்தி நிபாதர்க்கு அருட்சத்தியாய் நின்று சிவாகமங்களை ஓதுவித்து, அதன் பயனாகச் சிவநெறி வேள்வியை வேட்பித்துச் சிவானந்தத்தை அடைவிப்பவளாயும் நிற்பாள் எனக் கூறுமாற்றால் வேள்விகளது வகை கூறியவாறு. வெறித்தல் - மதர்த்தல். `வெறிக்கின்றவாற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், `உலகவேள்வி, சிவவேள்வி` என்னும் வேள்வி களது வகையும், பயனும் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே. 

பொழிப்புரை :

நெய் பொருந்துதலால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறி கின்ற அந்தணர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.

குறிப்புரை :

மை - இருள்; புற இருளைப் போக்குகின்ற தீயினை ஓம்புமாற்றானே, அக இருளையும் போக்கிக்கொள்ளுதல் கூடும் என்பது பற்றி ``நெய்நின்றெரியும் ... வகை அறிவார்கட்கு`` என்றார். அவ் வகையாவது, சிவபெருமானை முதல்வனாக உணர்ந்து பயன் கருதாது அன்பு மாத்திரத்தால் வேட்டல், அங்ஙனம் வேட்டோர் சிறப்புலி நாயனார், சோமாசிமாற நாயனார் முதலியோராதல் அறிக. ``அவிழ்தரும்`` என்னும் பெயரெச்சம் `மந்திரம்` என்னும் கருவிப் பெயர் கொண்டது. செய்தல் - தேடுதல். ``செய் நின்ற`` என்பது `செய்ய நின்ற` என்னும் பொருட்டு.
இதனால், `அந்தணர் வேள்வி அவர்க்கு முத்தி சாதனமும்` ஆம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பாழி அகலுள் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய் தங்கி வினைசுடு மாமே. 

பொழிப்புரை :

ஆழ்ந்த அகலில் நின்று எரிகின்ற திரிபோலச் சேர்க்கப்பட்டுப் பல்லூழி காலம் தொடர்ந்து நின்று வருத்துகின்ற மிக்க பாவப்பயனாகிய துன்பங்களோ பல. அவை அனைத்தும் ஓமாக்கினி அணையாது நின்று ஓங்க ஒழிவனவாம். அன்றியும், அவ்வக்கினியே வினைக்கட்டு முழுவதையும் அழித்தலையும் செய்யும்.

குறிப்புரை :

பாழி - பள்ளம். `வாழி, வீழி` என்பன, `வாழ்தல், வீழ்தல்` எனத் தொழிற்பெயராய் நின்றன. ``வினைநோய்`` என்றது, `வினையால் வரும் நோய்` என வேற்றுமைத் தொகை. நோய் - துன்பம். `துன்பத்தைத் தரும் வினை` எனவே, `பாவம்` என்பது போந்தது. பின்னர் நின்ற வினை, பொதுப்பட நிற்றலின், இரு வினையையுங் குறித்தது. `பாவத்தை ஒழிக்குமாற்றால் நரகத்தின் நீக்கிச் சுவர்க்கத்தில் சேர்ப்பதும்` இருவினைகளையும் நீக்குமாற்றால் ஞானத்தைத் தோற்றுவித்து வீடு அடைவிப்பதும் வேள்வியாம்` என்றபடி. இவற்றுள் முன்னது வைதிக வேள்வி என்பதும், பின்னது சிவநெறி வேள்வி என்பதும் உணர்ந்துகொள்க.
இதனால், இருவகை வேள்விகளின் பயனும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே. 

பொழிப்புரை :

மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து நும் அருஞ் செல்வ மாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.

குறிப்புரை :

``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின்பின், ``இரண்டும்`` என்னும் தொகை தொகுத்தலாயிற்று. படைத்தல் - சொல்லால் வெளிப்படுத்தல். `நின்றாரே` என்பது பாடமாயின், ஏகா ரத்தை ஈற்றசையாக்காது, விளியுருபாக்குக. மீமாஞ்சகர் வேதத்தைச் செய்த முதல்வனை அறியாது `வேதம் அனாதி` என மயங்குதலாலும், பிறர் சிவபெருமானையே தலைவனாக உணராமை யாலும் அவர்க்கு வேள்வி முத்தி சாதனமாதல் கூடாமையால், அவர்க்கு அஃது அன்னதாதற் பொருட்டு அவரை நோக்கி இது கூறினார்.
இதனால், வேள்விகளுள் சிவநெறி வேள்வியது இன்றியமை யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப் பவனும், இறப்பில்லாத முதல்வனும் ஆகிய அவனை நினைத்தால், ஒளி பெற்றுத் திகழ்கின்ற எனது உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, முச்சுடர் களையே மூன்றுகண்களாக உடைய அப்பெருமானே உலகங் கடந்த தண்ணிய ஒளிப்பொருளாகிய முதற்பொருளும், வேள்விக்குத் தலைவனும் ஆவன்.

குறிப்புரை :

இங்குக் கூறியவாறே திருநாவுக்கரசரும்,
அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறி வார்! அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என ஓதியருளுதல் காண்க. சிவபெருமான் வேள்வித் தலைவன் ஆதலை விளக்குதற் பொருட்டு அவனது முதன்மையை எடுத்துக் கூறினார். ``நினைத்தால்`` என்னும் சொல்லெச்சம் முன்னை மந்திரத் தினின்றும் வந்தது.
இதனால், வேள்வியைச் சிவநெறி வேள்வியாக வேட்டற்கு வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.

பொழிப்புரை :

வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.

குறிப்புரை :

`ஆகவே, அவ்வினைக்கடல் கடத்தற்கரியது` என்ற படி. `ஈமத்துள் அங்கி உளன்` என இயையும். இரதம் - சாரம்; என்றது உடலினின்றும் நீங்கிய உயிரை. கொள்ளுதல் - தாங்கிக் கொள்ளுதல். `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. கோ மத்து - பெரிய மத்து. `மத்து` என்பது கடைக்குறைந்து நின்றது. `மத்தால்` என உருபு விரிக்கப்பட்டது. \\\"வினைக்கடல் குரைகடல் தானே`` என்றது, \\\"மாதர் வதன மதியம் - உதய மதியமே ஒக்கும்` (தண்டியலங்காரம்) என்பதிற் போல உருவக உவமை.
இதனால், `சிவபெருமானை வணங்கா தொழியினும் இகழ்தல் கூடாது; இகழின் உய்தியில் குற்றமாம்` என, வேள்வி செய் வார்க்கு இன்றியமையாததோர் அறம் கூறப்பட்டது. இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த சான்றாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 10

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 

பொழிப்புரை :

வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.

குறிப்புரை :

`முத்தீ வழியாக அன்றிப் பிறவாற்றால் சிவ பெருமானை அடைதல் கூடுமாயினும், முத்தீ வேள்வி வேட்கப்படா விடின், வேதவழக்கு மறைந்தொழியும்; அது மறைந்தொழியின், கடவுட் கொள்கையும், சிவபத்தியும் போல்வன பலவும் அவ்வாற்றானே மறைந்தொழியும்; ஆகவே அவ்வாறெலாம் நிகழாமைப் பொருட்டு முத்தீ வேட்டல் பேணற்பாற்று` என்பதாம். எனவே, `சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலும், சிவாகமம், திருமுறை முதலிய சைவ நூல்களிலும் முத்தீ வேள்வி சிறப்பிக்கப் படுதலும் இது பற்றி` என்பது இனிது விளங்குவதாம்.
இதனால், அக்கினி காரியம் மரபு நிலையாதல் கூறப்பட்டது.
சிற்பி