முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்


பண் :

பாடல் எண் : 1

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 

பொழிப்புரை :

ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.

குறிப்புரை :

தழல் ஓம்பல் முதலியவற்றைப் பின்னரும் எடுத்துக் கூறியவதனால், `அவற்றை வழுவின்றி ஆர்வத்தொடு செய்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. ``தழல் ஓம்பி`` என்றதனால், வேட்டலையும், ``சந்தியும் ஓதி`` என்றதனால் ஓதலையும் வலியுறுத் தமை வெளிப்படை. ஆகவே, நற்கருமம் என்றது பிறர்க்கு உதவுத லாகிய ``ஓதுவித்தல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல்`` என்னும் நான்கனை யும் வலியுறுத்துவதாயிற்று. ஈதல் ஒழிந்த பிறவும் பொருளாசையின்றிச் செய்யின் அவர்க்கு அறமாதல் பற்றி அவற்றை, ``அம் தவம்`` என்றார். ஏற்றலாவது, குற்றக் கழுவாயாகவும் குறித்த பயனைத்தரும் அறமாக வும் கருதி உயர்ந்தோர்க்குக் கொடுக்கும் கொடையாகப் பிறர் தருவனவற்றை, அவர் நலங் கருதி ஏற்றல். அங்ஙனம் ஏற்ற பொருளை அவ்வந்தணர், தென்புலத்தார் தெய்வம் முதலிய அறவழியிலே செலவிடுதலன்றி, இவறுதல் செய்து ஈட்டிவையார் என்க. முப்போதும் நியமம் செய்தல் வேட்டலின் பகுதியாகவும், சடங்கறுத்தல் ஈதலின் பகுதியாகவும் வைத்து வற்புறுத்தப்பட்டன என்க. ``சடங்கறுப்போர் களே`` என்ற ஏகாரம் பிரிநிலை. இங்ஙனம் பிரித்துக் கூறிய அதனால், `இவ்வொழுக்கம் இல்லா தவர் பிறப்பால் அந்தணராயினும், அந்தணர் எனப்படார்` என்பது பெறப்பட்டது. படவே, அந்தணர், அரசர் முதலிய வருணவகை ஒழுக்கம் பற்றி உயர்ந்தோரால் வகுக்கப்பட்டன வல்லது, `உடம்பிலே தானே அமைந்தது` என்னும் மிருதிநூற் கொள்கை அடாது என்ற தாயிற்று. இங்கு, `பிறப்பு` எனப்படுவது, தம் குடியின் முன்னோர், தம் ஒழுக்கத்தால் பெற்ற வருணவகை.
``பிறப்பே குடிமை ஆண்மை`` -தொல். பொருள் - 269
``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்`` -குறள் - 972
``பார்ப்பான் - பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` -குறள் - 134
என்பவற்றிலும், ``பிறப்பு`` எனப்படுவது இதுவே என்க. `சாதிகள் நெறியின் தப்பா`` (தி.12 திருநாட்டுச் சிறப்பு 34) என்பதில் சேக்கிழார் ``சாதி`` என்றதும் ஒழுக்கம் பற்றியதே என்பது, திருஞானசம்பந்தர் திருநீலகண்டப் பாணரையும், தில்லைவாழந்தணர் திருநாளைப் போவாரையும் ``ஐயரே`` என உயர்த்து அழைத்தாராக அவர் கூறிய குறிப்பால் விளங்குவதாகும். இன்னும் ஞானசம்பந்தர் நாவுக்கரசரை ``அப்பர்`` என்றே குறித்துப் போந்தமையும் நோக்கற்பாற்று.
இதனால் அந்தணர்க்குரிய ஒழுக்கங்கள் பலவும் தொகுத்துக் கூறப்பட்டன.


பண் :

பாடல் எண் : 2

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருளை உணர்தற்கண் விருப்பம் உடையவராய், மூன்று கூறுகளை உடையதாய் நூல்களின் முடிவாகிய பிரணவ மந்திரத்தின் பொருள் நிலையில் நின்று, நாத முடிவான பொருட் பிரபஞ்சத்திற்கும், வேத முடிவான சொற்பிரபஞ்சத்திற்கும், உயிர்களது அறிவின் எல்லைக்கும் அப்பால் நிற்கும் முதல்வனாகிய சிவபெருமானை உணர்ந்து, இன்பத்தின் எல்லை காணாராய் அதில் திளைத்திருப்பவரே அந்தணர் எனப்படுவோர்.

குறிப்புரை :

பிரணவம், ஓங்காரம். இதன் முக்கூறுகளாவன அகரம், உகரம், மகரம், அவற்றின் பொருள் நிலை பகுப்பும் (வியட்டியும்) தொகுப்பும் (சமட்டியும்) என இருவகைத்து. அகரம் தோற்றத்தையும், உகரம் நிலைபேற்றையும், மகரம் ஒடுக்கத்தையும் குறித்தல் பகுப்புப் பொருளாம். அவை அப்பொருளைக் குறித்தல் அவற்றின் பிறப்பியல் பால் அமைந்தது என்க. முத்தொழிலையும் உடைய மண்முதல் நாதம் ஈறாகச் சொல்வடிவாயும், பொருள் வடிவாயும் நிற்கும் உலகம் முழுவதையும் ஒருங்கு சுட்டி நிற்றல் அதன் தொகுப்புப்பொருளாம். அப்பொருள் நிலையில் நிற்றலாவது, `முத்தொழிலை உடைய பொருள் செயற்கையாவதலல்லது இயற்கையாகாமையானும், செயற்கைப்பொருள் யாவும் அறிவிலவாதலல்லது அறிவுடையன வாகாமையானும் அவை, தாமே அங்ஙனம் தோன்றல், நிற்றல், ஒடுங்கல் என்பவற்றை எய்துதுல் கூடாமையின், அவற்றை அங்ஙனம் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் பேரறிவும் பேராற்றலும் உடைய முதல்வன் ஒருவன் உளன்` என்பதை ஆசிரியர் அருளுரையும், நூற்கொள்கையும் சார்பாக நின்று ஓர்ந்து தெளிதல். அதன்பின் நாதனைக் காணுதலாவது, அங்ஙனம் உணரப்பட்ட அம்முதல்வனது அருட்குணங்கள் பல வற்றையும் அறிந்து அன்புசெய்து அவனிடத்தே அழுந்திநிற்றல். அங்ஙனம் அழுந்தி நிற்கும் நிலையை மாற்றுதற்கு வேறு பொருள் இன்மையின், அந்நிலையில் விளையும் அவனது இன்பத்திற்கும் எல்லை இல்லையாம். ஆகவே, அந்தணர் எனப்படுவோர் இப் பேற்றினைப் பெற்று நிற்போரேயாவர் என்க.
`பிரமத்தை அறிந்தவனே பிராமணன்` என மிருதி நூலாரும் சொற்பொருள் கூறுவர். ஆயினும் அவர், `பிரமத்தை அறியும் தன்மை பிராமணன் என்னும் பிறப்பிலே அமைவது; ஆதலின், அத்தன்மை இல்லாத பிற வருணத்தார்க்கு அவ்வறிவு கூடாது` என்பர். அவர் கூற்று வேதத்திற்கு ஒவ்வாததேயாம்.
``ஈதாந்தம்`` என்பதில், `அந்தம்` என்பது முதல்நீண்டு நின்றது. `அந்தம் ஈது என்னார்` என மாற்றி, `முடிவு இதுவென்று உணர்தல் இன்றி` என உரைக்க. இவ்வாறு உரைக்கவே, `எல்லையற்ற இன்ப நுகர்ச்சியைப் பெற்று` என்பது அதனாற் போந்த பொருளாகும். என்னார், முற்றெச்சம். `எனாது` என்பது பாடம் அன்று. ``கண்டு`` என்பதனை, ``நாதனை`` என்றதன்பின்னர்க் கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 

பொழிப்புரை :

அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.

குறிப்புரை :

எனவே, `பிறரெல்லாம் அவ்விருப்பமின்றி, வாளா அம்மந்திரங்களைச் சிறிதுபொழுது ஓதுதலோடு ஒழிவர்` என்றது ஆயிற்று. ஆகவே, `இந்நிலையுடையோரே சிறப்புடை அந்தணர்` என்பது பெறப்பட்டது. அநுபவத்திற்கு அறிவன்றி அன்பே நேர் வாயிலாகலின், ``நேயத் தேர் ஏறி`` என்றார். ``நேயத்தாய்`` என்றதில், நேயம், `ஞேயம்` என்னும் வடசொல்லின் திரிபு. ஞேயம் - அறியப் படும் பொருள்.

பண் :

பாடல் எண் : 4

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே. 

பொழிப்புரை :

பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான் காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.

குறிப்புரை :

மந்திரங்கள் அனைத்திற்கும் முதலாவது ஓங்கார மாதலின், அதனை அனைத்து நெறிகட்கும் இடம் என்றார். ``உரை`` என்றது விடாத ஆகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் முடிந்த பொருளைக் குறித்தது. `வேதத்திற்குப் புறம்பான நெறிகளின் முத்தி உண்மை முத்தியாகாது போலியாய்ப்போம்` என்றற்குத் `திருநெறி` என வாளா கூறியொழியாது, ``வேதத் திருநெறி`` என விதந் தோதினார். பின் வந்த திரு, செல்வம்; அது `சென்றடையாத` (தி.1 ப.98 பா.1) (தி.6 ப.87 பா.1) இறைவன் செல்வமாகிய திருவருளையே குறித்தது. திருவருளின் வசமாய் நிற்றலை, `அதன் கையில் இருத்தி` என்றார்.

பண் :

பாடல் எண் : 5

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே. 

பொழிப்புரை :

`பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்க தாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.

குறிப்புரை :

`பிரமஞானம் எய்தினோரே பிராமணர் என்னும் சொல் பொருளுடையதாக வேண்டின், இவ்வொழுக்கம் கைவரப் பெறல் வேண்டும்` என்றற்கு, பிரமஞானமாவது இது என்பதை வகுத்துக் கூறினார். இவற்றுள் ``உணர்வுற்று`` என்பது ஒன்றுமே பிரமஞானமாக, ஏனையவை அவற்றிற்குப் படிகளாயினும், பரம்பரையால் பிரமஞானத்தைப் பயத்தல் பற்றி, அவற்றையும் `பிரமஞானம்` என்றார். பிரமத்தை உணரும் உணர்வை ஒற்றுமை பற்றி, ``பிரமம்`` என்றார். ``பிரமம், ஒத்த உயிர்கள்`` என்பவற்றை இம்முறையானே முதற்கண் கூட்டி உரைக்க. தான் அவனாதலாகிய சமாதிநிலை உணர்வுறுதற்கு முன்னிற்கற்பாலதாயினும், செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். ``தவம்`` என்புழியும் எண்ணும்மை விரிக்க.
இவை நான்கு திருமந்திரங்களானும் அந்தணர் ஒழுக்கமும், அவற்றது சிறப்பும் உடன்பாட்டு முகத்தால் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே. 

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையே யாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.

குறிப்புரை :

`அங்ஙனம் ஆசையறாது நின்று ஒதல் முதலிய அறு தொழில்களைப் பொருளாசை முதலியவற்றாற் செய்வோர் அந்தண ராகார்` என்பதாம். பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. `ஒழிந்த` என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று. நிலையை, ``இடம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 7

நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

பொழிப்புரை :

முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்புரை :

இங்ஙனமாகவே, `முப்புரி நூலாகிய பஞ்சு நூல், அறிவு நூலாகிய வேதாந்தத்தைக் குறிக்கும் அடையாளமும், சிகை, அதன் முடிந்த பொருளைக் குறிக்கும் அடையாளமுமேயாய் அந்தணக் கோலத்திற்கு உரியவாயின. அப்பொருளைப் பெறாதவர் அவற்றைக் குறிக்கும் அடையாளமாகிய வேடமாத்திரங்கொள்வதால் அந்தண ராகி விடமாட்டார்` என்றதாயிற்று.
இங்கும் பிரமஞானத்தையே ஒற்றுமை பற்றிப் பிரமமாகக் கூறினார். இங்குக் கூறிய பிரமஞானம் இல்லாதோர் வேட மாத்திரத்தால் பிராமணராகார் என்றவாறு. திருநாவுக்கரசரும்,
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.
-தி.5 ப.39. பா.8
என்பதனால், `முப்புரிநூல் முதலிய வேடம் புனைந்தும் அபர ஞான பரஞானங்களில்லாதார் அந்தணராதல் இல்லை` எனவும், `அந்த ஞானங்களை உடையவர், முப்புரிநூல் முதலிய வேடங்கள் இன்றியும் அந்தணராவர்` எனவும் அருளிச்செய்தார். எனினும், நூலும், சிகையும் போல்பவை கலியூழிக் காலத்தில் பிறப்படை யாளமேயாயின. கார்ப் பாசம் - பஞ்சு. கேசம் - தலைமயிர். சிறப்புடைய இவை இரண்டன் உண்மையைக் கூறவே, கோவண உடை முதலிய பிற அடையாளங் களின் உண்மையும் உணர்ந்து கொள்ளப்படும் என்க. இங்குக் கூறப் பட்ட பொருள் இன்றிப் பிறப்பு ஒன்றே காரணமாக வேடமாத்திரம் புனையும் பிராமணர் பிராமணராகாது, பிராமணப் போலிகள் ஆவர் என்பதனை இந்நாயனார், ``பேர்கொண்ட பார்ப்பான்`` (தி.10 2ஆம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 8

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. 

பொழிப்புரை :

மேல் (தி.10 பா.225) சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்த்தலில் விருப்பம் மிக்க அறிவிலிகள் ஒருபோதும் பிராமணராதல் இல்லை.

குறிப்புரை :

என்றது, உடல் ஓம்புதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டமை காரணமாக, `பிராமணர் முதலிய வருண வேறுபாடு ஒழுக்கத்தாலன்றிப் பிறப்பிலே அமைந்தன` எனப் பிதற்றுவாரை வன்மையாக மறுத்தவாறு. விடயம் - ஐம்புலன். ஓர்தல், மெய்ப் பொருளை; அது, கற்றும் கேட்டும் ஓர்ந்துணரப்படுவதாம். ``உணர்வு`` என்று அந்த அபர ஞானத்தை. பரன் உண்மை - முதற்பொருளின் சொரூபம். இவ்விடத்து, `உணர்தல்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. பித்து, பேராசை. அதன்கண் பின்னும் உறைத்து நிற்றலின், `ஏறும்` என்றும், கிடைத்தற்கரிய பிறவியைப் பிழைபடும் நெறியிற் போக்கலால் ``மூடர்`` என்றும் கூறினார்.
இவை மூன்று திருமந்திரங்களாலும் அந்தணர் ஒழுக்கத்தது சிறப்பு எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. 

பொழிப்புரை :

``சத்தியமும் தவம்`` (தி.10 பா.227) என்னும் திருமந்திரத்துட் கூறப்பட்ட முறைமையில் நிற்கும் உண்மை அந்தணர்கட்கே சித்தாகிய தம்மையும், அசித்தாகிய பாசங்களையும் பொருளென உணரும் தன்மை நீங்கி, ``வேதத் திருநெறி`` (தி.10 பா.226) என மேற்கூறிய உபதேச பரம்பரை முறையிலே ஞானகுருவைத் தலைப்பட்டு, நாட்கடன் நோன்பு முதலியவை `உறங்கினோன்கை வெறும்பாக்கென்னத் தானே தவிர` (சங்கற்ப நிராகரணம் - 4. 234) ஞேயம் ஒன்றையே கண்டிருக்கின்ற துரியாதீத நிலை கை கூடுவதாகும்.

குறிப்புரை :

``சித்த சித்தின்றி`` என்பதை முதலிற் கூட்டி, ``தூய்மறையோர்க்கே ஆம்` என மாற்றி உரைக்க. ``இன்றி`` என்பது `நீங்கி` என்றவாறு. காண்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. சமாதி, `அதீதம்` என்னும் பொருளது.

பண் :

பாடல் எண் : 10

மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே. 

பொழிப்புரை :

அந்தணர் என்று சொல்லப்படுவோர் அந்தணரேயாதல் உண்மையாயின், `அந்தணர்க்குரிய வேத முடிவின் மெய்ப்பொருளால் அடையும் தூய்மையாவது, உயிர்களின் குறை பாட்டினை உணர்தலே` என்றும், ``நூலும் சிகையும் முதலிய பிற வெல்லாம் வெளிப்பகட்டாகிய ஆரவாரங்களே` என்றும் அறிவார். அவ்வாறு அறிந்தவரே வேதம் உணர்ந்த அந்தணராவர்.

குறிப்புரை :

`தெரிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவரே அந்தணராம்` என வேறு தொடராக்கி உரைக்க.

பண் :

பாடல் எண் : 11

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 

பொழிப்புரை :

உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப்பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.

குறிப்புரை :

`அந்தணர்` என்னும் சொற்பொருள் `அம் தணர்` எனவும், `அந்த அணர்` எனவும் பிரித்து இருவகையாகக் கூறப் படுதலை முறையே பரிமேலழகர் உரையிலும் (திருக்குறள் 30) நச்சினார்க் கினியர் உரையிலும் காண்க (திருமுருகாற்றுப்படை - 96. மதுரைக் காஞ்சி - 474, கலி கடவுள் வாழ்த்து). இவ்விருபொருளும் இங்குக் கூறப்பட்டவாறு அறிக. `நரபதி` என்பது வடசொல்லாதலின்; அஃறிணை முடிபு ஏற்றது. அந்தியும் சந்தியேயாயினும் சந்தியாதற்குச் சிறப்புப் பற்றி வேறெடுத்து ஓதினார். ``பண்ணும்`` என்பது `பண்ணப்படும்` என்னும் பொருட் டாய் நின்றது; ``எண்ணும் அஞ்செழுத்தே`` (சிவஞானபோதம் சூ. 9) என்பதிற்போல. ``நாடாயினும், காடாயினும், அவலாயினும், மிசையாயினும் எவ்வழி மக்கள் நல்லரோ அவ்வழியே நிலனும் நல்லதாம்`` (புறம் - 187) ஆகலின், நல்ல அந்தணர் வாழும் நாடு நலமிகப் படைத்தலை அறிந்து கொள்க. திருவள்ளுவரும் இக்கருத்தே பற்றி, `தள்ளாவிளையுள் முதலிய வற்றோடு, தக்காரை உடையதே நல்ல நாடு` (குறள் -731) என்றார்.

பண் :

பாடல் எண் : 12

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.

பொழிப்புரை :

நாதமுடிவான தத்துவங்களின் ஞானத்தைப் பெற்றவர்க்கே அஃது ஆன்ம போதத்தைக் கடந்த இறைவனை அடையும் நெறியாக அமைவது, ஆதலின் அதுவே வேதாந்த ஞானமாம். அதனால் அந்த ஞானத்தை உணரும் ஊழ் இல்லாமையால் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்களையே உணர்வார்க்கு மேற்கூறிய இறைவனை அடையும் பரமுத்தியாதல், அதற்குக் கீழாய்ச் சுத்த தத்துவ புவனங்களை அடையும் பதமுத்தியாதல் கிடைக்குமோ! கிடையா.

குறிப்புரை :

முதலடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி, தொகுக்கப்பட்ட உருவை `விதியிலோர்க்கு` என விரித்துக் கொள்க. புக்கது - கிடைத்த ஞானம். ``நண்ணுமே`` என்பதில் ஏகாரம் எதிர்மறைக்கண் வந்தது. பிரகிருதிக்குமேல் உள்ள வித்தியா தத்துவ சிவதத்துவங்களை உணர்தல் சிவாகமங்களை உணர்ந்தார்க்கன்றிக் கூடாமையால், சிவாகமங்களைக் கொள்ளாது, வேதத்தை மட்டுமே கொள்ளும் அந்தணர், அந்தணத் தன்மை நிரம்பப் பெற்றவர் ஆகார் என்றற்கு இவ்வாறு கூறினார்.
வேதமும், சிவாகமும் முறையே நூலும், உரையும்போல நின்று பொருள்களைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணர்த்தி நிற்றலின், நூலுள் தொக்கு நிற்கும் பொருள்களை விரித் துரைக்கும் உரையின்றி நூலது பொருளை முற்ற உணர்தல் கூடாமை போல, சிவாகமங்கள் இன்றி வேதத்தின் பொருளை விளங்க உணர்தல் கூடாது. அதனால், சிவாகமங்களை இகழ்ந்து வேதத்தமைட்டுமே ஓதுவோர் வேதத்தின் பொருளை முற்ற உணரமாட்டாது ஒருபுடையே உணர்வர். வேதத்தின் பொருளை முற்ற உணராத பொழுது, வேதத் திருநெறியின் முடிந்த பயனைப் பெறுதல் இயலாது என்க.
வேதம், சிவாகமம் இரண்டையும் ஒப்ப உணரும் அந்தணருள், வழிபாட்டுச் செயல்கள் பலவற்றையும் வேதமந்திரங்களால் செய்வோர், `வைதிக அந்தணர்` எனவும், ஆகமமந்திரங்களால் செய்வோர், `சைவ அந்தணர்` எனவும் சொல்லப்படுவர். `வைதிக அந்தணர்` எனினும், `மகாசைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர்` எனினும், `ஆதி சைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர், `சிவவேதியர், சிவ மறையோர்` என்றாற்போலச் சிறப்பித்துக் கூறிய வழியே `அந்தணர்` முதலிய சொற்கள் ஆதிசைவரைக் குறிக்கும். வாளா கூறியவழி அவை வைதிக அந்தணரையே குறிக்கும். எனவே, நாயனார் இங்குக் கூறுவனவெல்லாம் வைதிக அந்தணரையே குறிப்பனவாதல் அறிந்து கொள்ளப்படும். படவே, இவர் சிவாகமங்களையும் இகழாது வேதத்தோடு ஒப்ப மேற்கொள்ளுதல் வேண்டும் என நாயனார் கூறலின், `சிவாகமவழித் தீக்கை பெற்று - மகாசைவராய் விளங்கும் மறையவர்களே அந்தணர் எனப்படுதற்கு உரியர்` என்பது நாயனாரது திருவுள்ளமாயிற்று. ஆகவே, மகா சைவரல்லாத வைதிகப் பிராமணரைப் புரோகிதராகவும், பரிசாரகராகவும் கொள்ளுதல் சைவர்க்கும், பரார்த்த பூசை முதலியவற்றிற்கும் குற்றமாதல் விளங்கும்.
இதனானே, நாயனார் தமிழையும், வடமொழியையும் ஒரு நிகராகவே கூறினமையின், `வேத சிவாகமங்களோடு ஒத்து நிகழும் தமிழ் நூல்களையும் அந்தணராவார் இகழாது போற்றுதல் வேண்டும்` என்பதும், இங்ஙனம் வேதம், சிவாகமம், திருநெறித் தமிழ்நூல் என்ப வற்றை ஒப்ப ஓதி உணர்வோருள் வழிபாட்டுச் செயல்களைத் தமிழ் மந்திரத்தால் செய்வோர் `திருவந்தணர்` என்றும், `திருவாசிரியர்` என்றும் கொள்ளத்தகுவர் என்பதும் நாயனார்க்கு ஏற்புடையதாதல் விளங்கும்.
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த - மறைமொழி தானே மந்திரம் என்ப`` (தொல். செய்யுளியல்) என்ற தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தால், தமிழ் மொழியில் மந்திரம் உளதாதல் தெற்றெனப் புலப்படும்.
இத்தன்மை உடைய மகாசைவருள் தில்லைவாழந்தணர் தில்லைக் கூத்தப் பெருமானுக்குத் தொண்டு பூண்டு அவனைக் காலந் தோறும் தவறாது வழிபடும் நியமம் உடையராதல்பற்றித் திருத் தொண்டருள் அவரே முதன்மை வாய்ந்தவர் என்னும் திருக்குறிப்பால் திருவாரூர்த் தியாகேசப் பெருமான், `தம்மைத் திருத்தொண்டருக்கு அடியராக்கும் நாள் எந்நாளோ` என இறைஞ்சி நின்ற நம்பி யாரூரர்க்கு, `தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` என அடியெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டத் தொகையில் முதற்கண் தில்லைவாழந்தணரை இடம்பெறச் செய்தருளினான் என்க. இவ்வுண்மை திருத்தொண்டத் தொகை தோன்றுதற்கு முன்பே குறிப்பாற் புலப்படுமாறு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தில்லை வாழந்தணரைச் சிவாகம நெறியாகிய, `தீக்கை` என்னும் சிறப்புப் (மெய்ந்நெறிச் செய்கை) பெற்றமை பற்றி, ``சிறப்பர்`` (தி.1 ப.80 பா.2) என்றும், இச்சிறப்பால் இவர் சிவோகம் பாவனையைத் தலைப்பட்டுச் சிவனுரு எய்தி நின்றமையை,
``நீலத்தார் கரியமிடற் றார், நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப்பொடி நீறணி வார்சடையார்``
-தி.3 ப.1 பா.3
என்றும் அருளிச்செய்தார். இச்சிறப்புப் பற்றி இவர் `தீக்கிதர்` எனப் பெயர் பெற்று நிற்றல் அறியற்பாற்று. இதனானே `தீக்கிதர்` என்னும் பெயருடைய பிற அந்தணரும் மகாசைவராதல் விளங்கும்.
தில்லைவாழந்தணர் சிவாகமங்களையும் வேதத்தோடு ஒப்ப மேற்கொண்டு ஒழுகுதலைச் சேக்கிழார்,
``வருமுறை எரிமூன்றோம்பி ... ..
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்றுவல்லார்``
``அறுதொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கியுள்ளார்``
``ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்துமிக்கார்``
-தி.12 தில்லைவாழந்தணர் பு. 5,6,7
என விளக்கினார்.
`இவர்கள் கூத்தப் பெருமானை வேதமந்திரங்களாலே வழிபடுவர்` என்பதனையும் அவர்,
``மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து .... ....
.... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... ....
அங்கணர் கோயி லுள்ளா அகம்படித் தொண்டு செய்வார்``
எனக் குறித்தருளினார்.
தில்லைவாழந்தணரைச் சேக்கிழார், ``அகிலமெல்லாம்புகழ் திருமறையோர்`` எனச் சிறப்பித்தார். அதனானே அவரால் ``திரு மறையோர்`` எனக் குறிக்கப்பட்ட அப்பூதியடிகள் முதலாயினாரும் மகாசைவராதல் அறியப்படும். ஞானசம்பந்தரது தந்தைவழி, தாய்வழி இரண்டும் மகாசைவ மரபே என்பதனைச் சேக்கிழார்,
``மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய்`` -தி.12
எனக் குறித்தருளினார். இவ்வாற்றானே, `குங்குலியக் கலயர், முருகர், சண்டேசர், சோமாசிமாறர், நமிநந்தியடிகள், நீலநக்கர்` என்னும் நாயன்மார்களும் மகாசைவரேயாதல் பெறப்பட்டது. சேக்கிழார் தில்லைவாழந்தணர் முதலியோரைக் குறித்தவாறே உமாபதிதேவரும் பெரியபுராணத்துட் போந்த வைதிக அந்தணர் அனைவரையும் ``திருமறையோர்`` (சேக்கிழார் நாயனார் புராணம் - 36) எனக் குறிப்பிடுதல் காண்க.
சண்டேசுர நாயனாரது பதியாகிய திருச்சேய்ஞலூரைச் சேக்கிழார், ``திருமறையோர் மூதூர்`` என்றமையால், அதன்கண் வாழ்ந்த அந்தணரும் மகாசைவரே என்பது பெறுதும். எச்சதத்தன் சிவாபராதம் செய்து ஒறுக்கப்பட்டோனாதல் பற்றி அவனது சைவச் சிறப்பையும், அவனொடு வாழ்ந்த பிற அந்தணரது சைவச் சிறப்பையும் சேக்கிழார் விரித்திலர் எனினும், ``வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப்பதி`` என்பதனால் அங்குத் திகழ்ந்த சைவச் சிறப்பைக் குறித்தருளினார். இத்தகு சைவச்சிறப்பு அங்கு இல்லையேல், அவர் கூறியவாறு அவ்வூர் தில்லை வாழந்தணர்கள் சோழமன்னர்கட்கு முடிசூட்டும் தலங்கள் ஐந்தனுள் ஒன்றாயிருத்தல் கூடுமோ!
சைவ அந்தணர்க்கு நூல், சிகை என்பவற்றோடு காதில் சுந்தர வேடம் சிறப்படையாளமாம்.
சிவாகமத்தை இகழ்ந்தொதுக்குமாற்றால் அந்தணருட் சிலர் வேதத்தின் பொருளை முன்னொடு பின் முரணாதவாறு ஒருபடித்தாக உணரமாட்டாது, `பூர்வ பாகமாகிய கன்மகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `ஞானகாண்டம் புனைந் துரை` எனப் பொதுவகையால் தழுவி, `தெய்வம் இல்லை` எனக்கூறி நாத்திகராய் ஒழிவாரும், (மீமாஞ்சகர்) `உத்தர பாகமாகிய ஞானகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `கன்ம காண்டம் மந்த பரிபாகிகட்கே உரியது; அதனால் அதனுள் வலியது இப்பகுதி, மெலியது இப்பகுதி என ஆராய்தல் பயனில் உழப்பாம்` என்று பொதுவகையால் தழுவிக் கிரியா மார்க்கத்தில் அனேகசுர வாதிகளாயும், ஞான மார்க்கத்தில் `சீவான்மாவே பரமான்மா` என்னும் அகம்பிரமக்காரர்களாயும் நிற்பாரும் (மாயாவாதிகள்) `கன்ம காண்டம், ஞானகாண்டம்` என்னும் இரண்டையும் ஒப்பக்கொள்ளினும், உலகத்தின் `தோற்றம், நிலை, இறுதி` என்னும் முத்தொழிலையும் செய்பவனே முதல்வன் என உணரமாட்டாது, `அவற்றுள் நிலையாகிய சாத்துவிகத் தொழிலைச் செய்பவனே முதல்வன்; ஏனை இராசதத் தொழிலாகிய தோற்றத்தைச் செய்பவனும், தாமதத் தொழிலாகிய இறுதியைச் செய்பவனும் முதல்வர் ஆகார்` என்று இகழ்ந்து, `அவருள்ளும் தாமதத்தொழிலைச் செய்பவன், தோற்றத்தைச் செய்பவனிலும், கீழ்ப்பட்டவன்` எனக்கூறிச் சிவநிந்தகராவாரும் (பாஞ்சராத்திரிகள்) ஆவர். இவரை எல்லாம் சைவாகமங்கள் புறச்சமயிகள் என்றே ஒதுக்கும். இவருள் சிவநிந்தை செய்தொழுகுவாரை `அகத்தியர், கௌதமர்` முதலிய முனிவர்களது சாப வயப்பட்ட துர்ப் பிராமணர்கள் என்று காந்தம், கூர்மம் முதலிய உயரிய புராணங்கள் இகழ்ந்தொதுக் குதலை அறிந்துகொள்க. இன்னோரன்ன, குழறு படிகள் பலவும் சிவாகமங்களைப் பொருட்படுத்தி உணராமையான் உளவாவன என அறிக.
இதனால், `வேத சிவாகமஞானமும் வைதிக சைவ ஒழுக்க மும் உடைய அந்தணரே அந்தணத் தன்மை நிரம்பியவர்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
* * * * * * 

பொழிப்புரை :

இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 14

பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே
* * * * * * 

பொழிப்புரை :

இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.

குறிப்புரை :

* * * * * *
சிற்பி