முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை


பண் :

பாடல் எண் : 1

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

பொழிப்புரை :

நீதி நூலைக் கல்லாத அரசனும், கூற்றுவனும் யாவரிடத்தும் கொலையே புரிதலால் தம்முள் ஒருபடியாக ஒப்பர். ஆயினும், கல்லா அரசனினும் கூற்றுவனே மிக நல்லவன். என்னை? கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; கூற்றுவன் அறமுடையவர்பால் தண்டம் செய்தற்கு அடையான்.

குறிப்புரை :

`அதனால் அரசர்க்கு நீதிநூற் கல்வி இன்றியமை யாதது` என்பது குறிப்பெச்சம். கற்றற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `ஆயினும், என்னை` என்பன சொல்லெச்சம். ``அறம்`` என் றது நீதியை. ``ஓரான்`` என்பது முற்றெச்சம். நணுக நில்லான் என்புழி, `தண்டம் செய்தற்கு` என்பது இசையெச்சம். `நலியகில்லானே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கல்லா அரசன் அறம் ஓராது கொல்லென் றலை, ``பெண்கொலை செய்த நன்னன்`` (குறுந்தொகை - 292) முதலியோரிடத்துக் காண்க.
இதனால், `நீதிநூலை ஓதி உணர்தல் அரசர்க்கு முதற்கண் வேண்டப்படுவது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

பொழிப்புரை :

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை யறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.

குறிப்புரை :

``நாட்டில்`` என்புழி `நிகழும்` என்பது வருவிக்க. `அவன் நெறி` என்பது பாடம் அன்று. வைதிக நெறி பொதுமையான கடவுள் நெறியாதலின், அதனை, `தவநெறி` என்றார். வைதிக நெறி சைவநெறிகளே நீதி நூலின் நோக்காதலை, மேற்கூறிய உண்மை அந்தணர் அந்நூலை ஓதுவிக்கும்வழி, அவர் அரசனுக்கு உணர்த்து வாராதலின், அரசன் அவ்வழியில் வழுவாது நிற்றல் வேண்டும் என்பதாம். `நரபதி கெடும், குன்றும்` என உடைமையது தொழில்கள், உடையான்மேல் ஏற்றப்பட்டன. ``மூடம்`` என்றது அதன் காரியந் தோன்ற நின்றது. இத்தவநெறி சிவநெறிகளைப் புரத்தலில் வழுவாது நிற்பித்தற்பொருட்டே, `அரசன் பெரியாரைத் துணைக் கொள்ளல் வேண்டும்` (திருக்குறள், 45ஆம் அதிகாரம்) என்றார் திருவள்ளுவர். ஞானசம்பந்தர் ``வேந்தனும் ஓங்குக`` (தி.3 ப.54 பா.1) என அரசனை வாழ்த்தியதும் இது பற்றியே என்பதனைச் சேக்கிழார்,
``ஆளும் மன்னனை வாழ்த்திய தற்சனை
மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்``
-தி.12 திருஞான.பு. 4-822
என விளக்கினார். இவ்வரச ஒழுக்கத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திருத்தொண்டர் புராணத்துட் போந்த நாயன்மார் சிலரது அரசாட்சியைக் கண்டுகொள்க.
இதனால், அரசன், தன்கீழ் வாழும் மக்கட்கு, நிலை பேறில்லாத உடல் நலத்தை மட்டும் காப்பவனாகாது, நிலையுடைய உயிர் நலத்தையும் காப்பவனாதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. 

பொழிப்புரை :

யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்குரிய கோலம் இன்றியமையாதாயினும், அத்தொழிற்கண் செவ்வே நில்லாதார் அதற்குரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்! செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.

குறிப்புரை :

பலவகைக் கடவுள் நெறிக் கோலத்தை உடை யாரையும் அவற்றிற்குரிய செயலில் நிற்பித்தல் அரசனுக்குக் கடமையாதலை உணர்த்துவார் இங்ஙனம் பொதுப்படக் கூறினார். `வேடமே மெய்வேடம்` என, ஏகாரத்தை மாற்றி உரைக்க. ஒழுக்கம் இல்லாதார் வேடம் மாத்திரம் புனையின், உண்மையில் நிற்பாரையும் உலகம், `போலிகள்` என மயங்குமாகலானும், அங்ஙனம் மயங்கின் நாட்டில் தவநெறியும், சிவநெறியும் வளராது தேய்ந்தொழியும் ஆகலானும் அன்ன போலிகள் தோன்றாதவாறு செய்தல் அரசற்குக் பேரறமாம் என்பார், `அதுவே வீடாகும்` எனவும், இது செய்ய அரசற்குக் கூடும் ஆதலின் அதனை விட்டொழிதல் கூடாது என்பார், வேந்தனை, ``விறல் வேந்தன்`` எனவும் கூறினார். `உண்மை வேடத்தாலன்றிப் பொய் வேடத்தாற் பயன் இன்று` என்பதை,
வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின். -குறள், 272
எனவும், பொய்வேடத்தால் பயன் விளையாமையேயன்றித் தீமையும் பெருகுதலை,
தவம்மறைந் தல்லவை செய்தல், புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. -குறள், 273
வலியில் நிலைமையான் வல்லுருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று -குறள், 274
எனவும், வேடம் புனையாராயினும், உண்மையில் நிற்பார் உயர்ந் தோரே ஆவர் என்பதனை,
மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த தொழித்து விடின். -குறள், 280
எனவும் திருவள்ளுவரும் வகுத்துக் கூறியருளினார்.
இதனால், கடவுள் நெறியில் போலிகள் தோன்றாதவாறு குறிக் கொண்டு காத்தல் அரசற்குக் கடமை என்பது பொதுவாகக் கூறப் பட்டது.
எவரேனுந் தாமாக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே

உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. -தி.6 ப.51 பா.3
என்றாற்போலும், திருமொழிகள் உலகியலைக் கடந்து அருள் நெறியில் நிற்கும் அன்புநெறி (பக்திமார்க்கம்) பற்றியனவும், இங்குக் கூறிய பலவும் உலகியலைக் கடவாத நூல்நெறி (விதிமார்க்கம்) பற்றியனவுமாம் ஆதலின் இவை தம்முள் முரணாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 

பொழிப்புரை :

`பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன்` என்று வாய்ப்பறை சாற்றிவிட்டு, அப்பொழுதே அம்முயற்சி சிறிதும் இன்றி மூடத்தில் அழுந்திக்கிடப்போர் குலப்பெருமை கூறிக்கொள்ளுதற் பொருட்டுப் பிராமணர்க்குரிய சிகையையும், பூணூலையும் முதன் மையாக மேற்கொள்வாராயின், அத்தன்மையோர் உள்ள நாடும், நன்னெறி நிகழாமையால் வளம் குன்றும்; அந் நாட்டிற்குத் தலை வனாகிய அரசனும் பெருவாழ்வுடையனாயினும், தன் கடமையைச் செய்யாமையால், பெருமை சிறிதும் இலனாவன். ஆதலால், அத்தன்மையாளரது உண்மை நிலையை அரசன் பல்லாற்றானும் ஆராய்ந்தறிந்து, வெளியாரை மருட்டும் அவரது பொய்வேடத்தைக் களைந்தெறியச் செய்தால், பலர்க்கும் நன்மை உண்டாகும்.

குறிப்புரை :

வேடமாத்திரத்தானே தம்மைப் பிராமணர் என மதித்துக்கொள்வோர் தம் மூடத்தை நீக்கிக்கொள்ள முயலாராகலான் அவர்க்கும், அவரது வேடத்தால் அவரை உயர்ந்தோர் எனக் கருதி அவர்க்குப் பிறர் செய்யும் தானங்கள், அவரது தீயொழுக்கத்தால் உலகிற் பல தீச்செயல்கள் நிகழ்தற்கே காரணமாதலின் உலகிற்கும் உளவாகின்ற தீமைகள் அனைத்தும் அப்பொய் வேடத்தைக் களையவே நீங்க, மெய் வேடத்தாரால் நன்மை விளையும் என்பது பற்றி, ``அறுத்தால் நன்றே`` என்றார்.
இதனால், `அரசன் கடவுள் நெறியுள் வைதிக நெறியைக் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொழிப்புரை :

சிவஞானம் இல்லாத வெறுவியர் சிவஞானம் பெற்றுச் சிவனே ஆயினார் போலச் சிவனுக்குரிய சடை, சிகை, பூணூல் என்பவற்றைப் புனைந்துகொண்டு சிவஞானிகள் போல நடிப்பார் களாயின், அவரை அரசன் சிவஞானிகள் வாயிலாகவே பரிசோதனை செய்து உண்மைச் சிவஞானிகளாகச் செய்தல் நாட்டிற்கு நன்மை பயப்பதாகும்.

குறிப்புரை :

எனவே, `அது செய்யாவழி நாட்டிற்குத் தீமை உண்டாகும்` என்றதாயிற்று. ஞானம் உண்மையை அறிதல் அரசற்குக் கூடாமையின், `ஞானிகளாலே சோதிக்க` எனவும், `சிவசின்னத்தைக் களைக` எனக் கூறுதலும் குற்றமாதலின், `அவர்க்குச் சிவஞானத்தை உண்டாக்குக` எனவும் கூறினார். `சடை` என்னும் கோலத்தைக் கூறவே, ஞானம், சிவ ஞானமாயிற்று.
இதனால், `அரசன் கடவுள் நெறியில் சிவநெறியைப் பழுது படாமல் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை :

ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

குறிப்புரை :

`பாவையரையும்` என்பது குறைந்து நின்றது. `காப்பவன் காவலன்` என மாறிக் கூட்டுக. வைதிக வேள்வி சைவ வேள்விகட்கு அவியையும், சிவவழிபாட்டிற்குப் பால் முதலிய ஐந்தையும் தருவன ஆக்களும் (பசுக்களும்) `அறவோர்க்களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்` (சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை) முதலியவற்றையும், சிவவழிபாடு செய்யும் ஆடவர்க்கு அதற்கு வேண்டுவனவற்றை அமைத்து உடன் இருந்து உதவுதலையும் செய்வோர் பெண்டிரும், அறமுதற் பொருள்களை உலகர்க்கு உணர்த்துவார் துறவறத்தவரும், சிவஞான சிவபத்திகளைப் பரிபக்கு வர்க்குத் தருவார் சிவனடியாரும் ஆகலானும், இவரை நலியும் இயல்பு உடையார் முறையே புலையரும், தூர்த்தரும், நாத்திகரும், புறச்சமயி களும் ஆகலானும் அவரால் இவர்க்கு நலிவு வாராமைக் காத்தல் அரசற்குக் கடன் என்பதும்,
`அக்கடனை அவன் ஆற்றாதொழியின், ஆற்றுவார் பிறர் இன்மையின் உளவாகும் தீங்குகட்கு அவனே காரணன் ஆதலின், அவன் நிரயத் துன்பத்தை நெடுங்காலம் எய்துவன்` என்பதும் கூறியவாறு. மறுமைக்கு - மறுமைக்கண்.
இதனால், `உலகியல், மெய்ந்நெறி` என்னும் இருவகை நன்னெறிகட்கும் ஊறுண்டாகாதவாறு காத்தல் அரசற்குக் கடன் என்பதும், அக்கடமையைச் செய்யாவழி அவற்கு உளதாகும் குற்ற மும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

பொழிப்புரை :

பல சமய நூலாரும் தாம் தாம் அறிந்தவாறு கூறும் யாதொரு முத்தியைப் பெறவேண்டினும், இம்மை மறுமைச் செல்வங் களை எய்த வேண்டினும் அரசன் மறந்தும் தனது அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது. அதனால், அவன், தன்கீழ் வாழும் குடிகளிடத்து விரும்பற்பாலது அவர்தம் தொழில் வருவாயுள் ஆறில் ஒன்றேயாம்.

குறிப்புரை :

ஆகவே, `அதனின்மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாம்` என்றபடி. இல்லறத்தார் `தென்புலத்தார் முதலிய ஐந்திடத்து அறமும்` (குறள், 43) செய்ய வேண்டுதலின், ஆறில் ஒன்றிற்கு மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாயிற்று.
அரசரது ஒழுக்கம் கூறும்வழி அவர்க்குப் பொருள் வருவாயும் கூறவேண்டுதலின், அதனை அறத்தாற்றின் வழுவாது பெறல் வேண்டும் என்பது இதனால் கூறப்பட்டது. `உறுபொருளும், உல்கு பொருளும், தன்ஒன்னார்த் தெறுபொருளும்` (குறள், 756) பெறுதற்கண் அறத்தின் வழுவுதல் உண்டாகாமையின், அவை இங்குக் கூற வேண்டாவாயின.

பண் :

பாடல் எண் : 8

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

பொழிப்புரை :

அரசன் உலகத்தை மேற்கூறியவாற்றாலெல்லாம் காப்பது பலர்க்கும் நன்மையை மிகத் தருவதாகும். எவ்வாறெனில், அத்தகைய ஆட்சியில் பொருந்திய மக்கள் மேற்கூறிய நெறிகளிலே வழுவாது நிற்பராகலின். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து தனது நாட்டைப் பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு தான் தனது குடிமக்களைத் தமக்கும், அறத்திற்கும் உரியவராகக் கருதாது, தனது நலம் ஒன்றற்கே உரியதாகக் கருதிவிடுவானாயின், அவன் தனது பசியின்பொருட்டுப் பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியோடொத்த தன்மையனே ஆவன்.

குறிப்புரை :

`அறநெறி பிறழ்ந்த அரசற்குக் கெடுவது மறுமை யேயன்றி இம்மையுமாம்` என்பார், ``இவ்வுலகைப் பிறர் கொள்ள`` என்றார். கொடுங்கோல் அரசனோடு குடிகளும், பிறரும் மேவுதல் (குறள் - 740 உரை) இன்மையால், அவன் தற்காத்தலையும் செய்து கொள்ளமாட்டாது பகைவர்க்கு எளியனாவான் என்க. `தாம்` என்பது பாடம் அன்று. ``தான்கொள்ளின்`` என்புழியும் `கொள்ள` என்பதே பாடமாயின் பொருள் இதுவேயாம் என்க. பாவகம் - தன்மை.
இதனால், `தன் கடமையினின்றும் வழுவுதல் அரசற்குப் பெருங்கேடு பயக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொழிப்புரை :

`கால் கட்டி மேல் ஏற்றிப் பால் கொண்டு சோம பானம் செய்க` என்பது யோகியரிடை வழங்குவதொரு குறிப்புச் சொல். அதன் பொருள் `காற்றை (பிராண வாயுவை) இடைகலை பிங்கலை வழிச் செல்லாதவாறு தடுத்து, சுழுமுனைவழிமேல் ஏறச் செய்து, அதனால் வளர்கின்ற மூலக்கனலால் நெற்றியில் உள்ள சந்திரமண்டலத்தினின்றும் வழிகின்ற அமுதத்தை உண்டு சமாதியில் அழுந்திப் பரவசம் எய்தியிருக்க` என்பதேயல்லது, `ஒருவனை இருகால்களையும் கட்டிக்கொண்டு பனை மரத்தின்மேல் ஏறச்செய்து, அவன் அதன் பாளையினின்றும் இறக்கிக் கொணர்கின்ற கள்ளை உண்டு அறிவிழந்திருக்க` என்பது பொருளன்று. அதனால், அவ்வுட் பொருளை உணரும் அறிவிலாதோர் தமக்குத் தோன்றிய வெளிப் பொருளே பொருளாக மயங்கித் தாமும் கள்ளுண்டு களித்துப் பிறரை யும் அவ்வாறு களிக்கச் செய்வர். அப் பேதை மாக்களை ஒறுத்தலை அரசன் தனது முதற்கடனாகக் கொண்டு ஒறுத்தல் வேண்டும்.

குறிப்புரை :

வேள்விக்கண் கொள்ளப்படும் சோமபானத்தைப் புகழ்ந்து கூறலும் இன்னதொரு மயக்க உரையே என்பது தோன்றுதற் பொருட்டுத் திங்களை அப்பெயராற் கூறாது, `சோமன்` என்னும் பெயராற் கூறினார். அதனால் அன்னதொரு வேள்வியை உயிர் நலம் கருதாது உடல் நலத்தின்பொருட்டு அப்பானம் செய்தல் வேண்டி வேட் பார்க்கும் அரசன் அறிவு புகட்டல் வேண்டும் என்பது பெறப்பட்டது. இத்திருமந்திரத்துள், `கால், மேலேற்றல், பால், சோமன்` என்னும் சொற்கள் இவ்விரு பொருள் பயந்து நிற்றல் அறிக. `முகத்தின்கண் சோமனைப் பற்றிப் பால்கொண்டு உண்ணாதார்` எனக் கூட்டுக. செய், `செய்கை` என்னும் பொருட்டாய முதனிலைத் தொழிற் பெயர்.
``காயத்தின் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற;
வறட்டுப் பசுக்களென் றுந்தீபற`` -திருவுந்தியார் 43
என்றார் திருவுந்தியாரிலும்.
இதனால், அரசன், `கடவுள் நெறியில் பேதை மாக்களது கட்டுரைகள் நிகழ்ந்து குழறுபடை செய்யாதவாறு காத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

பொழிப்புரை :

சமயிகள் பலரும் தம் தம் சமய அடை யாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லா தொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.

குறிப்புரை :

`மறுமைத் தண்டம், அதன்பின் வரும் பிறப்பில் அப்பாவம் தொடராது கழிதற்பொருட்டாதலானும், அதனைச் செய்தல் பிறர்க்கு இயலாதாகலானும் அதனைச் சிவபிரான் தானே செய் வானாய், இம்மையிற் செய்யும் தண்டம் அப்பாவம் மறுமையில் தொடராது கழிதற்பொருட்டாதலின், அதனை அவன் அரசனுக்குக் கடமையாக்கினான். ஆகவே, அரசன் அக்கடமையினின்றும் வழுவுதல் கூடாது` என்பதாம். சமயங்கள் பலவும் உயிர்களின் அறிவு வளர்ச்சிப்படிகளேயாதலின், `அவற்றை மேற்கொண்டுள்ளோம்` என்பவர் அவ்வொழுக்க நெறி நில்லாராயின் பொய்ம்மையாளராய்ப் பிறரை வஞ்சித்துக் கேடெய்துவராகலின், அவ்வாறு ஆகாமைப் பொருட்டு அவரை ஒறுத்தல் அரசற்குக் கடமையாயிற்று.
இதனால், `அவரவர் மேற்கொண்ட சமயங்கள் பலவற்றையும் பழுதுபடாமற் காத்தல் அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.
சிற்பி