முதல் தந்திரம் - 21. அன்புடைமை


பண் :

பாடல் எண் : 1

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``இரண்டு`` என்றதற்கு முன், `இரண்டும்` என்னும், செவ்வெண் தொகை தொகுத்தலாயிற்று. `அன்பும் சிவமும்` என்பதும் பாடம். இரண்டு - இருவேறு பொருள்கள். ``சிவம்`` என்றது இங்கு, விடாத ஆகுபெயராய் அவனது பேரின்பத்தின்மேல் நின்றது. அறிவு - பொருட்பெற்றியை ஓர்ந்துணரும் அறிவு. ``ஆரும்`` இரண்டனுள் முன்னது உயர்ந்தோரையும், பின்னது தாழ்ந்தோரையும் குறித்துநின்ற அறிதலின் அருமையையும், அமர்தலின் எளிமை யையும் குறித்து நின்றன. `அறிந்தபின் ஆரும் அமர்ந்திருந்தார்` என மாற்றுக. ``அறிந்தபின்`` என்றது, `அறியின்` என்றவாறு. அமர்ந் திருத்தல் - அலமரல் இன்றி நிலைபெற்றிருத்தல். துணிவினால் எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று. உயிர்களிடத்துக் கொள்ளும் அன்பு பின் இறைவனிடத்து அன்பு செய்யும் தன்மையையும், இறைவனிடத்துச் செய்யும் அன்பு அவனிடத்தே அழுந்தி இன்புற்றிருக்கும் நிலையை யும் தரும் என்றற்கு, பொதுப்பட, ``அன்பு`` என்று அருளிச் செய்தார். இவ்விருவகை அன்பும் நிரம்பிய காலத்து அவை தம் பயனை இடை யீடின்றி விரையத்தருதலால், அவற்றையே இறைவனாக வலியுறுத்து ஓதினார். மாணிக்கவாசகரும் ``அன்பினில் விளைந்த ஆரமுதே`` (தி.8 பிடித்த பத்து, 3) என அன்பையும், சிவனையும் ஓரிடத்து வேற்றுமைப்பட ஓதினாராயினும், `இன்பமே என்னுடை அன்பே`` (தி.8 கோயில் பதிகம், 1) எனப் பிறிதோரிடத்தில் ஒன்றாகவே ஓதினமை காண்க. ``இன்பில் இனி தென்றல் இன்றுண்டேல் இன்றுண் டாம் - அன்பு நிலையே அது`` 3 என்றார் திருவருட்பயனிலும் (பா.80).
இதனால் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொழிப்புரை :

ஏனை அன்பினும் சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பின் பெருமையை நான் அறிந்தவாற்றால், என் உள்ளத்தில் சிறந்திருப்பது அந்த அன்பே.

குறிப்புரை :

கடந்து - வென்று. ``துன்னிக்கிடந்த`` என்பதில் `தலையில்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. தான் அசைநிலை. ஏகாரம் பிரிநிலை. அதனை, ``பொடியாடிக்கு`` என்றதனோடு இயைக்க. தோலாடையால் அவனது பற்றற்றதன்மையையும், பிறைச் சூட்டால் அவனது அருளையும், பொடியாடுதலால் அவனது முதன்மையையும் உடம்பொடு புணர்த்தலாகக் கூறி, `அவனே அன்பு செய்யப்படுதற்கு உரியவன்` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 3

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.

பொழிப்புரை :

மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றல், வேனிலில் ஐந்தீ நாப்பண் நிற்றல் முதலிய துணைச்செயல்களைச் செய்து உடம்பை ஒறுத்தாராயினும், முதற்செயலாகிய அன்பு செய்தல் இல்லாதார் என் தலைவனாகிய சிவபெருமானை அடைதல் இயலாது.

குறிப்புரை :

``பொன்மணி`` என்னும் உம்மைத்தொகை உவமை யாகுபெயராயிற்று. `என்போல்` எனப் பாடம் ஓதி அதனை ``எய்த`` என்பதனோடு இயைப்பாரும், முன்னே மூன்றாம் அடியோடு இயைப் பாரும் உளர். அவர் உரையிலெல்லாம், ``மணி`` என்பது ஒன்றே சிவபெருமானை வரைந்து சுட்டாமை அறிக.
இதனால், அன்பொடு கூடாத தவம் பயன்படாது என்பது கூறப்பட்டது. படவே, கடவுட் கொள்கை இல்லாத சமயிகள் கூறும் தவம் தவமாகாமையும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 4

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 

பொழிப்புரை :

சிவபெருமானிடத்துப் பேரன்பு உள்ளவரே அவனை முற்றப் பெறுவர். சிறிது அன்பு உடையவர் அவனது அருளைப் பெறுவர். அன்பே இல்லாது குடும்ப பாரத்தை உடைய வராய் இருப்பவர் பிறவிக் கடலையே காண்பவராய், கொடுமை நிறைந்த வழியிற்சென்று, கொங்குநாட்டை அடைந்தவர்போல் ஆவர்.

குறிப்புரை :

கொங்குநாட்டை இடர்மிகுந்த நாடு என்பர். ``கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பார்இலை`` (தி.7 ப.92 பா.3) என்ற நம்பியாரூரர் வாக்கைக் காண்க.
இதனால் அன்புடையார் பெறும் பயனும், அன்பிலாதார் எய்தும் துன்பமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே. 

பொழிப்புரை :

உலகீர், நீவிரும் எனது அன்பு போன்ற அன்பைப் பெருக்கிச் சிவபெருமானைத் துதியுங்கள். நீவிர் முன்னே அதனைச் செய்யுங்கள்; அவன் பின்னே உங்கட்கு அவ்வன்பு பெருகுமாறு வெளிப்பட்டுத் தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்கட்கும் கைவரச் செய்வான்.

குறிப்புரை :

`என் அன்புபோல உருக்கி` என்க. ``தன் அன்பு`` என்புழி ``அன்பு`` என்றது அருளை. `தலை நின்றவாறு` என்பதன்பின், `செய்வன்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 6

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொழிப்புரை :

வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாத வாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.

குறிப்புரை :

சயம்பு - சுயம்பு; தானே தோன்றியவன். வான் வழி - உயர்நெறி. சிவலோக நெறியுமாம். சடையிற் புனைதலால் தேன் ஏற்கும் வழியால் ஒழுகுதல் வேண்டிற்று. `தேன், உமாதேவி` என்பாரும் உளர். `ஒருவண்ணம் ஆக` என ஆக்கம் வருவிக்க. `தானொருவண்ணம்` என்னும் பாடமே பதிப்புக்களில் காணப் படுகின்றது.
இவ்விரண்டு திருமந்திரங்களானும் சிவனிடத்துச் செய்யும் அன்பின் சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

பொழிப்புரை :

தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `அம்முதலிடை` எனச் சுட்டு வருவிக்க. ``எம்பெருமானை`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. வன்பு - துன்பம், `வன்பு அடைத்த` (தி.7 ப.92 பா. 3) என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அடைத்தல் - நிறைதல்; நிறைத்தல் உலகத்தைத் திருஞானசம்பந்தரும், ``துயரிலங்கும் உலகம்`` என்றார். (தி.1 ப.1 பா.8)

பண் :

பாடல் எண் : 8

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 

பொழிப்புரை :

கருத்தில் ஒளிரும் பொன்னொளியாகிய சிவ பெருமானை உளத்திற்கொண்டும், புறத்தில் வைத்து வணங்கியும், `இறைவனே` என்று துதித்தும், அன்பினால் அவனை அவனது அரிய அருளைத் தருமாறு வேண்டினால், தேவர் தலைவனாகிய அவன் அங்ஙனம் வேண்டுவார்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பான்.

குறிப்புரை :

`கருத்துறு சோதி` என இயையும். அருத்தி - அன்பு. `அருத்தியுள் நின்று` என ஒரு சொல் வருவிக்க. விருத்தி - வாழ்வு. ``விண்ணவர் கோன்`` என்றது, விண்ணவர் பலரும் தாம் வேண்டிய வாழ்வை அவன்பால் பெற்று நின்றமையைக் குறித்த குறிப்பு என்க.
இவை இரண்டு திருமந்திரங்களாலும் சிவபெருமானிடத்து அன்பு செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடகி லாரே. 

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் உறக்கமும், விழிப்பும் நாள் தோறும் நிகழுமாறு செய்தவன் அங்ஙனம் செய்த குறிப்பை அறியாதார் நிற்க, அறிந்தவர்தாமும் உலக ஆசையையே உள்ளத்தில் கொள்கின்றனர். அத்தலைவனை விரும்பி, அவனையே தமக்குப் பெருமானாக நினைக்கின்றிலர்.

குறிப்புரை :

`அவர்தம் அறிவு என்னோ` என்பது குறிப்பெச்சம். துஞ்சு, முதனிலைத் தொழிற்பெயர். `உறக்கமும் விழிப்பும் நாள் தோறும் நிகழ வைத்தது, இறப்பும், பிறப்பும் மாறி மாறி விரையவரும் என்பதனை உணர்தற்பொருட்டு` என்பது கருத்து. அதுபற்றியே `உறக்கம், விழிப்பு` என்பவற்றை அவையேயாகக் கூறினார். திருவள்ளுவரும்,
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என அறிவுறுத்தல் காண்க. இங்ஙனம் கூறியவாற்றால், `சிவபெரு மானிடத்து அன்பு செய்யாதார் அடைவது பிறப்பும், இறப்புமாகிய துன்பமே` என்பது கருத்தாதல் அறிக.
இதனால், சிவபெருமானிடத்து அன்பு செய்யாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 

பொழிப்புரை :

உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறு துணையாவான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``புறத்தான்`` என்பதில் ஆன், உருபு மயக்கமாக வந்த மூன்றன் உருபு. ``புறத்தான்`` எனவே, `அகத்தான்` என்பது கொள்ளப்பட்டது. ``உடல்`` என்றது, `மூர்த்தி` என்றவாறு.
இதனால், `சிவபெருமானை அடைதற்கு எவ்வாற்றானும் அன்பே வாயில்` என்பது முடித்துக் கூறப்பட்டது.
சிற்பி