முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்


பண் :

பாடல் எண் : 1

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே. 

பொழிப்புரை :

மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத் தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலிற் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள்புரிவன்; அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தேயாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. `இகழ்தலும், பெறுதலும் அன்பை` என்பது பின்வரும் குறிப்பால் விளங்கிற்று. கொழுந்து - இளையநிலை. ``அருள் என்னும் அன்பீன் குழவி` என்ற திருக்குறளிலும், `அன்பின் முதிர்ந்த நிலையே அருள்` என்பது கூறப்பட்டது. `அன்பு காரணம்பற்றிப் பிறப்பது` எனவும், `அருள், காரணம் பற்றாது பிறப்பது` எனவும் உணர்க. `வல் லார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அன்பு செய்யும்` என்பதை, `அன்பின்மேற் செய்யும்` என ஏழாவதாக விரிக்க. பெருவிருப்பை, `பித்து` என்றார். ``அது`` என்பது ஆகுபெயராய், `அதன் காரணம்` எனப் பொருள் தந்தது. `அது மகிழ்ந்தன்பு ... ... ஆம்` எனக் கூட்டுக.
இதனால் இறைவன் அன்பு செய்வார்க்கே அருள் செய்தலும், செய்யாதார்க்கு அருள் செய்யாமையுமாகிய இரண்டும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. 

பொழிப்புரை :

முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.

குறிப்புரை :

`பிறவிக்குச் செய்தவன்` என இயையும். `செய்த` என்பதன். ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆதிப் பிரான் முன்பு வைத்த இப்பிறவி முடிவு அதுதானே` எனக் கூட்டுக. துன்பப் பிறவித் தொழில் பலவாவன ``அறமும், மறமும்` என வகையால் இரண்டாய், விரியால் எண்ணிறந்தனவாய் உள்ள வினைகளை அறிந்து அவற்றை ஏற்ற காலத்தில் ஏற்குமாற்றால் கூட்டுதல். எனவே, `பிறப்பிற்குக் காரணங்கள் பலவாயினும், வீட்டிற்குக் காரணம் அன்பு ஒன்றே` என்றதாயிற்று.
இதனால், `சிவபெருமான் அன்புடையாரிடத்தே கலந்து நின்று பிறவித் துன்பத்தை நீக்குவன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொழிப்புரை :

அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடையவளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.

குறிப்புரை :

``ஒளி`` என்றது உருவகம். அஞ்ஞான இருளைப் போக்குதல் பற்றி இவ்வாறு உருவகித்தார். அவ்வொளி ஒன்றே யாயினும், நிலை வேறுபாட்டால் பலவாகக் கூறப்பட்டது. அந் நிலைகளை,
நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன். -திருக்களிற்றுப்படியார் - 15
என்பதனானும், பிறவாற்றானும் அறிக. அருட்சத்தியே சிவத்தை அடைவித்தலின், திரோதானசத்தி, தானே தொழில் செய்வதாகக் கூறினார். அருட்சத்தி அன்பின் வழியே சிவத்தை அடைவிக்கும் என்பதை ``அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். அதனானே, `வீடுபெற வேண்டில்; உள்ளம் அன்புடையது ஆமாற்றை நாடுங்கள்` என்றார். ``நண்பு`` என்றது, அன்பை. ``நண்புறு சிந்தையை`` என்றாராயினும், `சிந்தை நண்புறுமாற்றை` என்பது கருத்து என்க. ``நீர்`` என்றது சிவனைப் பெற விரும்புவாரை `ஐந்தோடு` என உருபு விரிக்க.
இதனால், பெத்தர்களுக்கு விளங்காது நிற்கின்ற சிவபெரு மான், முத்தர்கட்கு `அன்பினில் விளையும் ஆரமுதாய்` (தி.8 பிடித்த பத்து, 3) விளங்கி நின்றருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே. 

பொழிப்புரை :

பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகிவிளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.

குறிப்புரை :

``ஆயிழை`` என்றது இனங்குறித்து நின்றது. பொருளிற் கூறப்பட்ட ஒடுங்குதலை உவமைக்குங் கூட்டுக. ஆயிழை மேல் அன்பை ஒடுங்குதல் மாத்திரைக்கே உவமைபோலக் கூறினா ராயினும், ஏனையவற்றிற்கும் ஆதலை அறிந்து கொள்க. இல்லாது - இல் லாதபடி. பெருகுதலை, `உலாவுதல்` என்றார். குலாவுதல் - விளங் குதல். ``இன்பமது`` என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. இஃது அதீதமாகிய முடிந்த அனுபவ நிலையைக் கூறியது. இவ்வாறே இந்நிலையை,
``சொற்பால் அமுதிவள் யான்சுவை என்னத்
துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நான் இவளாம் பகுதிப்
பொற்பார் அறிவார்`` (தி.8 திருக்கோவையார், 8)
``உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்
பலத்தொருத்தன்`` (தி.8 திருக்கோவையார், 9)
எனவும், மாணிக்கவாசகரும் குறித்தருளுதல் காண்க. `இவ்வதீத நிலையும் அன்பானன்றி ஆகாது` என்றபடி. மெய்கண்ட தேவரும் இதனை, ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் - சூ. 11) என ஓதியருளினார். ``அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே`` (தி.10 பா.268) என்றது இதனையே என்க.
இதனால், `அன்புடையார்க்கே சிவபெருமான் தன்னை முழுவதும் கொடுப்பன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொழிப்புரை :

அடியவர்கள் தங்களுக்கு உளதாகிய அன்பினாலே சிவபெருமானை நிலத்தில் வீழ்ந்து பணிந்தும், கை கூப்பிக் கும்பிட்டும் பல்லாற்றானும் வழிபட அப்பெருமான் அவர்க்கு முத்தியைக் கொடுத்து, அவரது செயல் யாதொன்றிற்கும் தானே முன்னிற்பான். இவ்வாறு தன்னையே சார்ந்து நிற்கும் அவரோடே தானும் அவரையே சார்ந்து நிற்கின்ற சிவபெருமானது தன்மையைச் சித்தர்கள் ஆராய்ந்தறிகின்றார்களில்லை.

குறிப்புரை :

`அறிந்தாராயின், அவர் அவன்பால் அன்பையே வேண்டுதலல்லது, அணிமாதி சித்துக்களை வேண்டார்` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. பயன் வேண்டுவாருட் சிறந்தவர் சித்தராகலின், அவரையே எடுத்து ஓதினார். ஓதவே, பிறரும் அத்தன்மையராதல், தானே பெறப்பட்டது. அடியவரது செயல்யாதாயினும் அதற்குச் சிவன்தானே முன்னிற்றலை,
``சிவனும்இவன் செய்தியெல்லாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்று கொள்வன்;
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே``
-சிவஞானசித்தி - சூ. 10.1
என்பதனான் அறிக. சிவபெருமான் தன்னையே சார்ந்து நின்றாரையே தானும் சார்ந்து நிற்றலை, `அற்றவர்க்கு அற்ற சிவன்` (தி.3 ப.120 பா.2) என்று அருளியவாற்றான் அறிக.
``சித்தர்கள் என்றும் தெரிந்தறிவார் இல்லை`` என்றதனால், பத்திமையாலே தொழாதார்க்குச் சிவபெருமான் முத்தி கொடுத்தலும், முன்னிற்றலும் செய்யாது, பிறப்பைக் கொடுத்து அவர் வினைக்கு அவரையே முதல்வராகச் செய்தல் பெறப்பட்டது.
இதனால், இருதிறத்தாரையும் சிவன் அறிந்து அவரவர்க்கு ஏற்றன செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 

பொழிப்புரை :

கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத் தாமரையின்கண் விளங்கு பவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.

குறிப்புரை :

கொன்றை மாலையும், கரியுரியும் சில குறிப்படை யாளங்களாய் உள்ளன. அவற்றையும், மலர் உறைதலையும் வைத்த வைப்புமுறை அறிந்துகொள்க.
கழலது என்ற ஒருமை, இனம்பற்றி வந்தது. ``அன்பினுள்`` என்றதன்பின், `ஆதலால்` என்பது சொல்லெச் சமாய் நின்றது.
இதனால், `மந்திரங்களின் உண்மையறிந்து ஓதி வழிபாடு செய்து அதனால் மலம் நீங்கப்பெற்று, அதன்பயனாக அன்பு நிகழப் பெற்றாரிடத்தே சிவன் உறைவன்` என்பது குறிப்பாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 

பொழிப்புரை :

அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவ ரல்லது பிறர் அறியமாட்டார்.

குறிப்புரை :

``நம்பனை`` என்பது முதலியவற்றால், `அன்பு செய்யப்படுபவன் சிவபெருமானே யாதலைத் தெரித்துணர்த்தி, அவ் வாறாகவும் அதனைப் பலர் செய்கின்றிலர்` என்று இரங்கியவாறு.
``இன்பம்`` இரண்டும் ஆகுபெயர்கள். ``இரதிக்கும்`` என்றது `ரதிக்கும்` என்னும் ஆரியச்சொல்லின் திரிபு. ``அன்பன்`` என்றதனால், அறியமாட்டாதவர் அன்பில்லாதவர் என்பது போந்தது.
இதனால், அன்பில்லாதவர்க்குச் சிவன் அறியப்படானாதல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.

பொழிப்புரை :

இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.

குறிப்புரை :

முன்பு, இடமுன் ``அறியாதார்`` என்றது, `இல்லாதவர்` என்றபடி. ``நந்தி அன்பு`` என்றது `நந்தி மேல் செலுத்தும் அன்பு` என்றதாம்.
இதனால், அன்பினால் சிவனை அடைதல் பக்குவர்க்கே கூடுவதும், ஏனையோர்க்கு அது கூடாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே. 

பொழிப்புரை :

இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

குறிப்புரை :

`இருந்திடில்` என்பது பாடம் அன்று. ``எம்`` என்றது, தம்மோடு ஒத்தாரை. ஈட்டுதல், `ஈண்டுதல்` என்னும் தன்வினைச் சொல் திரிந்த பிறவினைச்சொல்; ஈண்டுதல் - சேர்தல்; ஈட்டுதல் - சேர்த்தல்.
இதனால், அன்பும், அதன் பயனும் கைவரப்பெற்ற தம் அநுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 

பொழிப்புரை :

மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெரு மானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெரு மானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.

குறிப்புரை :

`அதனால் அவன் என்னைக் கைவிடாமை திண்ணம்` என்பது குறிப்பெச்சம். ``ஆருயிரால்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `மட்டுப்போல` என உவம உருபு விரித்து, `அறிந்து` என்பது வருவிக்க. அன்பே பெருமானுக்கு மஞ்சனமாதலை,
`நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டி` (தி.4)
என்பதனால் அறிக. அன்பு சிவபெருமானுக்குப் பிறவுமாதலை,
``அறவாணர்க்கன்பென்னும் அமுதமைத்தற் சனைசெய்வார்``
-தி.12 பெ.பு.வாயிலார், 8
என்பதனால் அறிக.
சிற்பி