முதல் தந்திரம் - 23. கல்வி


பண் :

பாடல் எண் : 1

குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 

பொழிப்புரை :

மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, நீவிரும் இப்பயன் வேண்டின் மாசில்லாத உயர்ந்த கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற் கொள்க. `உடலுயிரது` என்பது பாடம் அன்று. ``கூடி`` என்றது, `கூடியதன் பயனைப் பெற்று` என்றவாறு. `கூடிக் குறிப்பறிந்தேன்` எனவும், `தேவர் பிரானைச் செறிப்பறிந்தேன்` எனவும் முன்னே கூட்டுக. மறிப்பு - மீட்சி. கறிப்பு - உணவினின்று உமிழப்படுவது; மாசு. `கற்பவையே கற்றல் வேண்டும்` (குறள், 391) என்றற்கு, ``கறிப்பறியா மிகுங்கல்வி`` என்றார்.
இதனால், `சிறப்புடைக் கல்வியே கல்வி` என்பதும், அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

பொழிப்புரை :

கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ் வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லு கின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.

குறிப்புரை :

``பாம்பறியும் பாம்பினகால்`` (பழமொழி நானூறு) என்றபடி, கற்றாரது நிலைமையைக் கற்றவரே உணர்வரல்லது மற்றவர் உணர மாட்டார் ஆதலின், ``கற்றறிவாளர் கருதிய காலத்து ... ... ... கண்ணுண்டு`` என்றார். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்` (மூதுரை) என ஔவையாரும் கூறினார். ``ஓர் கண்`` என்றது, பலர்க்கும் முகத்தின்கண் உள்ள ஊனக் கண்ணல்லாத வேறொருவகைக்கண் என்றவாறு. அது ஞானக்கண். ஞானக்கண்ணே சிறப்புடைத்தாதலை,
கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். -குறள், 393
எனத் திருவள்ளுவரும் குறித்தருளினார். நான்கிடத்தும், `கற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயின. கற்ற அறிவு - கற்றதனால் உண்டாகிய அறிவு; ``கற்றறி`` என்பதில் அறி, அறிவு; முதனிலைத் தொழிற்பெயர். காடு, இங்குப் பாலை நிலம், ``அக்கயல்`` என்பதில், சுட்டுப்பண்டறி சுட்டாய், `நீரினுள் வசிக்கும் அத்தன்மை உடைய` என அதன் இயல்பை விதந்தவாறாய், நீர் நிறைந்து நிற்றலைச் சுட்டுங் குறிப்பாயிற்று. `காட்டில்` என ஓதுதலும் ஆம். `பாலையை மருதம் ஆக்கினாற்போல, அறியாமையாற் பாழ்பட்டுக் கிடக்கும் உள்ளத்தை அறிவுடையதாய் நலனுறச் செய்யும்` என்பதாம். `கற்ற அறிவு கயலை உளவாக்கும்` என்க. எனவே, `அவர் சொல் கேட்கத்தக்கது` என்பதும் குறிக்கப்பட்டதாம்.
இதனால், கல்வியின் சிறப்பும், அது, தன்னை உடையார்க்கே யன்றிப் பிறர்க்கும் பயன் தருதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே. 

பொழிப்புரை :

இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம்.

குறிப்புரை :

கற்றற்கு வேண்டுவது இளமைக் காலமே யாதலின், அஃது இங்கு ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. இளமை முதலிய நிலை யாமையுடையார்க்கு நிலைபேறாவது இறைவன் திருவடியே என்றற்கு, `நிலையுடையான் கழல்` என்றும், `அதனை விளக்கும் கல்வியே கல்வி` என்றற்கு, ``கழல் கற்கின்ற செய்மின்`` என்றும், `அக்கல்வியால் வினைமாசு, நீங்கும்` என்பதுபற்றி ``கழிந்தறும் பாவங்கள்`` என்றும்,
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக. குறள்,391
என்றவாறு, கற்றவண்ணம் நில்லாதபொழுது கற்றலாற் பயனில்லை யாகலானும்,
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள்,2
என்பவாகலின், கல்வியின் உண்மைப் பயன் இறைவன் திருவடியைத் தொழுதலேயாகலானும், ``சொற்குன்றல் இன்றித் தொழுமின்`` என்றும், திருவடிக் கல்வியால் வினை நீங்கப்பெற்றார் அத்திருவடியைத் தொழுவாராயின் அதனைப் பெற்று - இன்புறுவ ராகலின், ``தொழுதபின் மணி விளக்காம்`` என்றும் கூறினார். `திருவடிக் கல்வியே கல்வி` என்பதனை,
`சிவமுயன் றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதி`
-தி.12 பெ. பு. மனுநீதி, 18
எனவும்,
``உள்ளம்நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப்பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவு``
-தி.12 பெ. பு. சிறுத்தொண்டர், 4
எனவும் சேக்கிழார் குறிப்பிடுதல் காண்க. ``கற்றதனாலாய பயன் என்கொல்`` என மேற்காட்டிய திருக்குறளைக் கூறிய திருவள்ளு வனார்க்கும் இதுவே கருத்தாதல் உணர்க. வினைமாசினை அறுக்கும் திருவடிக்கல்வியை,
``சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
(ஆகிய)
உவமையிலாக் கலைஞானம்`` -தி.12 பெ. பு. திருஞான. 70
எனவும், இறைவன் திருவடியைப் பலவாற்றானும் தொழுது அடைத லாகிய அனுபவத்தை, அதே பாட்டில்,
``பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
(ஆகிய)
உணர்வரிய மெய்ஞ்ஞானம்`` தி.12 ஞான. 70
எனவும் சேக்கிழார் விரித்தமை காண்க.
சொல் - சொல்வடிவாகிய கல்வி. இதனை, `வாசக ஞானம்` என்றல் அறிக. குன்றல் - பயனின்றிக் கெடுதல்.
இதனால், `உண்மைக் கல்வியாவது இது` என்பது, அதன்
பயன்களும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே. 

பொழிப்புரை :

கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழி கின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவ தாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

`கல்வியுடையாரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பல்லி - பலிதம்; பயன். `பாம்பரிந் துண்கின்றார்` என்பது பாடம் அன்று என்பதற்கு, யாப்புச் சிதைதலே சான்று.
இதனால், கல்வியின்வழி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே. 

பொழிப்புரை :

உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.

குறிப்புரை :

`ஆதலின் அதனைக் கற்க` என்பது குறிப்பெச்சம். `கந்தம்போல்` என உவம உருபு விரிக்க. ஒடுவின் பொருளில் வந்த ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
இதனால், உண்மைக் கல்வி ஆசிரியர் உறுதி மொழியைத் தெளிவிக்கும் முகத்தால் இறைவனை அடைவித்தல் கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 6

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொழிப்புரை :

வருந்தியாயினும் நூல் ஏணியைப்பற்றி ஏறுவோர் மதிலின் உச்சியை அடைந்து கோட்டையைப் பிடிப்பர். அது செய்ய மாட்டாதார் பக்கத்தில் உள்ள சில வழிகளைப்பற்றி ஏறின் இடையே நின்று பயன்பெறார். அதுபோல நுண்ணிதாயினும் மெய்ந்நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் ஆன்ம லாபமாகிய முடிந்த பயனைப் பெற்று இன்புறுவர். அது மாட்டாது அயலாகிய மயக்க நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் பிற சில சிறுபயன்களைப் பெறுதலோடு ஒழிவர்; ஆன்ம லாபத்தைப் பெறார். இன்னும் ஓர் உணவுப் பொருளைக் காப்பவர் கையில் கோல் ஒன்றை உடையாராய் இருப் பின் அப்பொருளைக் கவர எண்ணும் பறவைகள் அணுக மாட்டா. அதுபோல மெய்யறிவு உடை யாராய் இருப்பாரது மனத்தை ஐம்புலன் கள் அலைக்க அணுகா. இவற்றையெல்லாம் அறியாது மக்கள் அறியாமையுள் நின்று மயங்கு கின்றார்களே, இஃது இரங்கத்தக்கது!

குறிப்புரை :

இத்திருமந்திரம் ஒட்டணி. ``மயங்குகின்றார்களே`` என்ற தேற்றேகாரம், இரக்கங் குறித்து நின்றது.
இதனால் மயக்க நூற்கல்வியது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே

பொழிப்புரை :

பகலவனது கதிர்கள் எங்கும் பரவி நிற்பினும் தூயதாகிய சூரியகாந்தக் கல்லே அதனால் நெருப்பை உமிழ்வதாகும். அதுபோல, இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் கற்றவரே அத்திருவருளால் இறைவனைக் காண்பவராவார். ஆகவே, இளம்பிறையை அணிந்த சிவபெருமானை அடையும் ஆற்றலுடை யார்க்குப் பொருந்திய மனம் நிறைந்த மெய்ந்நூல்களே ஏணிபோல உதுவுவனவாம்.

குறிப்புரை :

எடுத்துக்காட்டுவமையாய் நின்ற இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``வெளிப்படும்`` என்றாராயினும், உவமைக்கேற்ப `வெளிப்படக் காண்பர்` என்றல் கருத்து என்க. தோய்ந்த நெருப்பு - சூரிய கிரணத்தில் தோய்ந்ததனால் உண்டாகிய நெருப்பு. ``இளமதி`` என்பது, ``கனங்குழை`` (குறள், 1081) என்றாற்போல அதனை யுடையான் மேல் நின்றது.
இதனால், மெய்நூற் கல்வியது இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 

பொழிப்புரை :

வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)

குறிப்புரை :

வழித்துணையாதலும், `யாண்டு பலவாயினும் நரையிலவாக்கி` அமுதமாதலும் கற்றார்க்கன்றிக் கூடாமையின், `கல்வியால்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. இதனாலும் கல்வியது சிறப்புக் குறிக்கப்பட்டது. `கழிதுணை, ஒழிதுணை` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. கழி, உரிச்சொல். ``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` (தி.1 ப.1 பா.2) ``கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) என்பன திருஞானசம்பந்தர் வாக்காதல் அறிக.
இதனால், `திருவருள் பெறுதல் கல்வியானே ஆவது` என்பது கூறப்பட்டது. கண்ணப்பர் முதலாயினார் கல்வி இன்றியும் திருவருள் பெற்றாரால் எனின், அவரெல்லாம் முற்பிறப்பிற் கற்று இப்பிறப்பில் அதன் பயனை எய்தினார் என்பதனை,
``கலிமலிந்த சீர்நம்பி கண்ணப்பன்`` -தி.7 ப.39 பா.2
என்பது முதலிய அருட்டிருமொழிகளான் அறிந்துகொள்க. இது பற்றியன்றே திருவள்ளுவர்,
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து. -குறள், 298
எனவும்,
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. -குறள், 297
எனவும் ஓதுவாராயினர் என்க.

பண் :

பாடல் எண் : 9

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொழிப்புரை :

யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.

குறிப்புரை :

`ஆதலின் அவனை அறிவிக்கும் கல்வியை ஒழியாது கற்றுக்கொண்மின்` என்பது குறிப்பெச்சம். முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. முற்று அது, வினைத்தொகை. `ஆவதாம்` என்பதும், `ஆயினும்` என்பதும், சொல்லெச்சம். `கற்றவரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், எத்தகையோர்க்கும் மெய்ப்பொருட் கல்வி இன்றி வீடு எய்தலாகாமை கூறப்பட்டது. முனிவரும், தேவரும், கணங்களும் போல்வாரும் சிவபெருமானிடம் வேதாகமங் களைக் கேட்டுணர்ந்தன ராகக் கூறும் புராண வரலாறுகளை நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 10

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் கொண்டு, அதன்பின், பல ``ஊழிதொறூழி`` என்றதனைக் கூட்டி உரைக்க. உருவத்தை ``உடல்`` என்றார். `பூதம்` என்றே ஒழியின், கட்புலனாகாகது, அருவமாயுள்ள தத்துவ மாத்திரையே குறிக்குமாகலின், கட்புலனாம் உருவை உணர்த்த வேண்டி இது கூறினார். இடம், ``இடனில் பருவம்`` என்புழிப் போல ஏற்புடைத்தாய நிலை. `அது கல்வியானாயது` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.
இதனால், சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பவனாயினும் கற்றாரது நெஞ்சத்திலே இனிது விளங்குதல் கூறுமாற்றால், `அவனைக் கண்டு பெறுதற்கு அவனது அருள்நூற் கல்வி இன்றியமையாதது` என்பது அறுதியிட்டுக் கூறப்பட்டது.
சிற்பி