முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை


பண் :

பாடல் எண் : 1

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 

பொழிப்புரை :

பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக் கழு நீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மைய வாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.

குறிப்புரை :

`ஆதலின், அதுவே மக்கள் பருகற்பாலது` என்பது குறிப்பெச்சம். `ஞானிகள் கள்ளுண்டு களிப்பர்` என்னும் வழக்கிற்குப் பொருள் இதுவேயன்றிப் பிறிதன்று என்பது மேலே விளக்கப் பட்டது. கழுநீர், வினைத்தொகை. முழுமை - நிறைவு. ``முழுநீர், செழுநீர்`` என்பவற்றில் நீர், நீர்த்தன்மையுடைய பொருளைக் குறித்தது. முதல் அடியின் உண்மைப் பாடம் வேறாதல் வேண்டும். ``கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா`` என்பதாதல் கூடும்.
இதனால், கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும் என்க.

பண் :

பாடல் எண் : 2

சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே. 

பொழிப்புரை :

சித்த விருத்தியைக் கெடுத்துச் சிவமாய் நிற்கின்ற, அதீத நிலையில் விளைகின்ற சிவானந்தமாகிய தேனே தூய மதுவாம். அதனை உண்டால், இயற்கை இன்பம் நீங்காது நிற்கும். அஃதல்லாத பிற மதுக்களை நாள்தோறும் உண்டு மகிழ்தலும், செயலற்றுக் கிடத்தலும் பிறபொருட் கலப்பாலாகிய செயற்கை விளைவேயாம்.

குறிப்புரை :

``சிவானந்தத்து`` என்பதில் அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை. ``செயற்கை விளைவு மயக்கமே யன்றி, உண்மை யன்று`` என்பது கருத்து. `கீழ்க்காலன` என்பவற்றை, ``கீழ்க்கால்`` என்றார். கீழ்க்காலன - கீழிடத்தன; இழிந்தன. எனவே, அவற்றை உண்டல் நன்மக்கட்கு ஆகா என்றதாயிற்று. செயற்கையை, `இழிந்தன` எனவே, `இயற்கை உயர்ந்தது` என்பது பெறப்பட்டது.
இதனால், கள்ளுண்டல் நன்மக்கட்கு ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. 

பொழிப்புரை :

காமக் களிப்பும், கள்ளுக் களிப்பும் கீழ் மக்கட்கே உரியனவாம். அதனால், அவற்றைச் சிறப்பித்துச் சொல்கின்ற, அறியா மையும் மயக்க உணர்வும் பொருந்திய சமயத்தில் நிற்பவர்க்கு அறிவு அழிவதேயாகும். தூயோனாகிய சிவபெருமானது திருவடியி னின்றும் உண்டாகின்ற, மாசற்ற, நிறைந்த இன்பத் தேனில், அறிவு நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

என்றது, ``காமம், கள் என்பவற்றிலும் சுத்த அதீத நிலையிலும் அறிவு நிகழாமை ஒன்றே யாயினும், காமத்திலும், கள்ளிலும் உண்டாகும் இன்பம் அறிவு அழிதலால் யாதும் அறியாது கிடக்கும் துன்பநிலையையே இன்பநிலையென மயங்கும் மயக்கமே. அதீத நிலையில் உண்டாகும் இன்பம் ஞேயப் பொருளையொழிந்த பிறவற்றை அறியாது அதனையே அறிந்து நிற்றலாகிய உண்மை இன்பமாம்` என்றவாறு.
மா மலம் - ஆணவம். `மயலும்` என உம்மை விரித்து, `மயலும் உறும் சமயத்துள் மதி போவதாகும்` என மாற்றிக் கொள்க. `இணையடி ஆனந்தத் தேறல்` என இயையும். ஓ - ஓவுதல்; நீங்குதல். மயம் - நிறைவு. `தேறலின்கண்` என உருபு விரிக்க. கள்ளினை விலக்குவார், ஒப்புமை பற்றிக் காமத்தையும் விலக்கினார்.

பண் :

பாடல் எண் : 4

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 

பொழிப்புரை :

`சத்தியை வழிபடுகின்றோம்` என்று சொல்லிக் கொள்ளும் அவைதிகராகிய வாம மதத்தினரும், அக் கொள்கை இல்லாதே கள்ளுண்ணும் மடவோர் போலக் கள்ளுண்டு அறிவு அழிபவரேயன்றிச் சிறப்பு ஒன்றும் இலர். இனிக் காமத்தை மட்டும் விரும்புபவர் அறிவு அழியப்பெறாராயினும், மயக்கம் உடையவரே. (ஆகவே, கள், காமம் இரண்டையும் போற்றிக் கூறும் சமயங்களால் உய்தி கூடாது) அவ்விரண்டையும் வெறுத்தொதுக்கும் வைதிக சமயிகளே வழிமுறைக் காலத்தில் அறிவினுள் அறிவாய் நிற்கின்ற முதற்பொருளினுள் ஒடுங்கி அதன் இன்பத்தை நுகர்வர். சிவநாமத்தை உய்யும் வழியாகப் பற்றும் சித்தாந்த சைவர் அவ்வின்பத்தை இடையீடின்றி அப்பொழுதே பெறுவர்.

குறிப்புரை :

தந்திர மார்க்கத்தார் காமம் முதலிய தீயொழுக்கங் களைப் போற்றிக் கொள்ளுதலை,
வாழவே வல்லை,வாமி; வலக்கைதா; என் உயிர்க்குத்
தோழன்நீ; உன்னை ஒப்பார் சொல்லிடின் இல்லை கண்டாய்;
கோழைமா னுடர்தீ தென்னும் கொலைகள வாதி கொண்டே
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றினாயே.
-சிவஞானசித்தி - பரபக்கம் - உலகாயதன் மதம் - 15
என்னும் உலகாயதன் கூற்றாலும், அவர் ஒழுகுமாற்றாலும் அறிக. வாமம் முதலிய மதங்கள் தங்கள் நூல்களையும் `ஆகமம்` என்று சொல்லிக்கொள்வதால், ஆகமங்கள், `சுரௌதம், அசுரௌதம்` என இருவகைப்படும் எனப் பிரித்து, `வேதநெறியோடு முரணாத ஆகமங்கள் சுரௌதம்` என்றும், அதற்கு முரணான ஆகமங்கள் `அசுரௌதம்` என்றும் சொல்லப்பட்டு, அசுரௌதமாகிய ஆக மங்களே `தந்திரம்` எனவும், அவற்றை உடைய சமயங்கள் `தந்திர மார்க்கங்கள்` எனவும் விலக்கப்பட்டன. சிலவிடத்து, `தந்திரம்` என்றும், சிலவிடத்து `ஆகமம்` என்றும் கூறி அவற்றை இகழும் பகுதிகள் அசுரௌதமாகிய தந்திரங்களை இகழ்வனவேயாம். இவ் வேற்றுமை அறியாதார், சுரௌதமாகிய `திவ்வியாகமங்கள்` எனப்படும் சைவாகமங்களும் அத்தகையன போலும் என மயங்கிக் கூறியொழிவர். தந்திர மார்க்கங்களும் சைவாகமத்தை ஒருவாற்றால் தழுவுதல் பற்றி ஒரோவிடத்து, `சைவம்` எனக் கூறப்படுதலால், வேத சிவாகமங்களையன்றிப் பிறவற்றை முதல் நூலாகக் கொள்ளாத சிவநெறியை, `வைதிக சைவம்` என அடைகொடுத்து வழங்குதலும் உண்டு. எனவே உண்மை வைதிகத்திற்கும், சைவத்திற்கும் கள் ளுண்டலோடு சிறிதும் இயைபில்லாமை அறிக. இதனால், `சத்திக்கு உவப்பைத் தருவன கள்ளும் ஊனும்` என்று அவற்றை அவட்குப் படைத்துத் தாமும் உண்டு மகிழ்தல் வைதிகரும், சைவரும் ஆய உயர்ந்தோரல்லாத தாழ்ந்தோர்க்கேயாதல் உணர்க.
வாமத்தோர் - வாம மதத்தவர். இவர்கள் சத்தியே உலக முதல்வி என்று அவளை வணங்குவோர். இதனால், இவர்மதம், `சாத்தேயம்` எனப்படும். `அறிவழிதலின் இறந்தாரொடு ஒப்பர்` என்றற்கு, ``மாள்பவர்`` என்றார். ``நஞ்சுண்பார் கள்ளுண்பவர்`` (குறள், 926) என்பது திருவள்ளுவர் வாக்கு. ``ஓமத்தோர்`` என்றது, `வைதிகர்` என்றவாறு. பின்னர், `அன்றே` என்றமையால், முன்னர், `வழிமுறைக் காலத்தில்` என்பது பெறப்பட்டது. உணர்தல் நணுதல்கட்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :

கள்ளினை உண்டு களிக்கும் அவைதிகராகிய வாம மார்க்கத்தவர் வேதாகமங்களின் கருத்துக்களை உணரமாட்டா மையின், `சுரௌதம்` எனப்படும் திவ்வியாகமங்களாகிய சிவாகமங் களில் சொல்லப்பட்ட `பதி, பசு, பாசம்` என்னும் மூன்று பொருள்கள் உண்மையை உணர்தலும், அவ்வுணர்வால் அவற்றுள் மேலான வனாகிய பதியின் அருளைப் பெற விழைதலும், அவ்விழைவால் சரியை கிரியா யோகங்களாகிய இறப்பில் தவத்தில் நின்று அதன் பயனாகத் தெளிந்த உண்மை ஞானமாகிய சிவஞானத்தைப் பெறு தலும், அச்சிவஞானத் தெளிவினால் சிவனோடு ஏகமாகிய இறைபணி நின்று இன்புறுதலும் இலராவர்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு, `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. சைவாகம ஞானபாதப் பொருள் அடைவைக் கூறி, அப் படிமுறையானே சைவ சமயிகள் பெரும்பயன் பெறு தலையும், தாந்திரிகர்க்கு (தந்திரமார்க்கத்தவர்க்கு) அது கூடாமையும் விளக்கு முகத்தால் அவர் விரும்பும் கள்ளுண்டலை விலக்கினார் என்க. உள்ளாயவற்றை `உள்` என்றார்.

பண் :

பாடல் எண் : 6

மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொழிப்புரை :

மயக்கத்தைத் தருகின்ற மயக்க நோய், மயக்கம் இல்லாதாரையும் மயங்கச் செய்யும் மருந்தால் நீங்கும் எனக் கூறுவார் கூற்றைத் தெளிந்து அம்மருந்தை உண்ணின் உண்டாவது பெரு மயக்கமேயன்றி வேறுண்டோ! இல்லை. அதுபோல, `உலகப் பற்றாகிய மயக்கம், அறிவை மயக்குவதாகிய கள்ளினால் நீங்கும் எனக் கூறி மயக்குகின்ற அறியாமையையுடைய சமயத்தில் உறைத்து நிற்கும் அறிவிலிகள், அவ்வறியாமையால் அறிவை அழிக்கும் கள்ளை உண்டு மேலும் பேரறியாமையில் அழுந்துவர்; அவரைத் தெளிவித்தல் இயலாது.

குறிப்புரை :

பின்னிரண்டு அடிகளை முதலிற் கொண்டு உரைக்க. `மலச் சமயம்` என்பது பின்முன்னாக நின்றது, ``தேறார்`` என்பது வேறு முடிபு. ``மாமாயை`` என்பதும், ``மாயை`` என்பதும் மாயைபோல மயக்கும் நோயையும், மருந்தையும் குறித்தன. இன், ஏதுப்பொருளில் வந்த ஐந்தாம் உருபு. ``வீடும்`` என்பதன் பின், `என்னும்` என்பது வருவிக்க. மயக்கு - மயக்க உரை. தெளியின் - தெளிவு கொண்டால். அன்றே, தேற்றம். `மாயை மாயையால் நீங்கும்` என்றல், `நோய் நோயால் நீங்கும்` என்றல்போலும் என்பது கருத்து.
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. -குறள், 929
என்றவாறு, கள்ளுண்பார்க்கே உண்மை தெளிவித்தல் கூடாதபொழுது `அது சமய ஒழுக்கம்` என்பாரைத் தெளிவித்தல் எவ்வாறு கூடும் என்பார், ``தேறார்`` என்று அறுதியிட்டுக் கூறினார்.
இவை நான்கு திருமந்திரங்களானும், `கள்ளுண்டல் சமய ஒழுக்கமே` என்பாரது கூற்று அடாது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொழிப்புரை :

தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய கள், வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!

குறிப்புரை :

வாய்மை, உபலக்கணம்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. -குறள், 913
என்பதனால், `பொருள் காரணமாகப் பொய்யாக முயங்கும் பொது மகளிரது இன்பம், பொருள் இல்வழி இழக்கப்படுதலே யன்றி உள்ள பொழுதும் உண்மையாவதன்று` என்றற்கு, ``இடையறா ஆனந்தம் எய்துமே`` என்றார். `வெண்ணெயைப் பெற்றும் நெய்க்கு அழுவான் போல, கற்புடை இல்லாளைப் பெற்றும் அவளால் இன்பத்தைப் பெறாது பொருட்பெண்டிரை நாடித் திரியும் பேதை மகன், கிடைத் தற்கரிய சிவானந்தத்தைப் பெயர்தானும் கேட்டறிவனோ` என்பதும், ``இடையறா ஆனந்தம்`` என்ற சொல்லாற்றலால் பெறுதும். ஏகாரம், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், கள்ளுண்டல் கழிகாமத்தையும், பொய் களவு முதலிய பலகுற்றங்களையும் தருதல் கூறப்பட்டது.
இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.

பண் :

பாடல் எண் : 8

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. 

பொழிப்புரை :

சத்தியின் அருளைப் பெறவேண்டிச் சத்தி மதத்தார் (வாம மதத்தவர்கள்) கள்ளுண்பார்கள். அதன் பயனாக அவர்கள் பெறுவது இயல்பாகத் தமக்கு அமைந்த சத்தியையும் (வலிமை யையும்) இழத்தலேயாம். (ஆகவே, அவர்தம் கொள்கை அறியாமை வழிப்பட்டது என்பது தெளிவு. அஃது எவ்வாறு எனில், கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து வீழ்ந்து செயலற்றுக் கிடத்தலால்) உண்மையில் `சத்தி` என்பது சிவபெருமானது அறிவு வடிவாகிய ஆற்றலே; அச் சத்தியால் பெறும் பயன், அதன்வழி நின்று, நிலைபேறும், தெளிவும் உடைய சிவானந்தத்தைப் பெறுதலே.

குறிப்புரை :

``சத்தி`` நான்கில் முதலது ஆகுபெயர். `அச் சமயத்தார்` எனச் சுட்டு வருவிக்க. தன்னில் - அந்த ஞானத்தில். `சார்தலே பயன்` என ஒருசொல் வருவிக்க.
இதனால், `சாத்தேயம்` எனப்படும் மதம் போலியாதல் கூறும் முகத்தால், அவர்தம் ஒழுக்கமாகிய கள்ளுண்டல் கடியப்படுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. 

பொழிப்புரை :

சத்திமானும், (சத்தியை உடையவனும்) சத்தியும் தன்மையால் இரண்டாதலல்லது, பொருளால் இரண்டாதல் யாண்டும் இல்லை. (இதனைத் தெரிவிக்கவே, `சிவன்` என்னாது சத்தன் என்றார்) ஆகவே, சிவமும், சத்தியும் தம்முள் வேறல்லர் என்பது வெளிப்படை. அதனால், முதற்பொருளை அடைய வேண்டுவார், `சத்தி, சிவம்` ஆகிய இரண்டனையும் ஒப்பக்கொள்ளல் வேண்டு மன்றி, அவற்றுள் ஒன்றனையே புகழ்ந்து கொள்ளுதலும், ஏனையதை இகழ்ந்து நீக்கலும் கூடாவாம். மேற்கூறியவாறு அவ்விரண்டனையும் ஒப்பக்கொண்ட வழியே எப்பயனும் கிடைத்தல் உறுதி.

குறிப்புரை :

இரண்டிடத்தும் ``தரின்`` என்பவற்றில் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `சிவன், சத்தி என்னும் இருவருள் ஒருவர் அருள் இன்றி ஏனையோரது அருள் உண்டாக மாட்டாது` என்பது முதல் இரண்டடிகளில் கூறப்பட்டது. ``சத்தி சிவம்`` செவ் வெண். ``தன்`` என்றது, வழிபடுவோனை. சத்தியம் - உண்மை; இது தனிமுடிபு; இதற்கு, `இது` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, இறுதியில் வைத்து உரைக்க. ``எண்சித்தித் தன்மையும்`` என்ற உம்மையால், `பிறவும்` என உரைக்க. எண்சித்தி, அணிமா முதலியன.
இதனால், வாமமதம் போலியாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே. 

பொழிப்புரை :

மேல் பலவிடத்தும் சொல்லிவந்த சிவானந்த மாகிய தேன், உயிர், நிலமுதல் நாதம் ஈறாகிய தத்துவங்களே தானாய்த் தன்னை அறியாது நிற்கும் நிலையே முதற்கண் நீக்கி, அதன்பின்னர், தன்னைச் சடமாகிய தத்துவங்களின் வேறாகக் கண்ட உயிர் `யான் சித்தாகிய பிரமமே` என மயங்கும் மயக்கத்தையும் போக்கிச் சிவமாகச் செய்து, காமியத்தவங்களைக் கைவிடப்பண்ணி, இன்பத்தைத் துய்ப் பதாகிய அவ்வுயிர் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவத்தின்பால் சென்று அடங்கி இன்புற வைத்து உடம்பு உள்ள துணையும் நிற்பதாகிய இவ்வுலகத்தின் இன்ப துன்ப நுகர்ச்சியை உடல் ஊழாக நுகர்ந்து கழித்து, உடம்பு நீங்கிய பின்னர்ப் பேரா இன்பப் பெருவாழ்வாகிய பரமுத்தியைத் தலைப்படச் செய்யும்.

குறிப்புரை :

`ஆதலின், ஏனைநெறிகளை விடுத்து அத்தேனைத் தரும் நெறியாகிய சிவநெறியைப் பற்றிப் பயனடைதல் சமயிகள் பலரும் செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம். வாம மதத்தின் இழிபுணர்த்துவார், ஏனை மதங்களின் சிறப்பின்மையும் உடன் கூறினார். போகம் தருவதனை, `போகம்` என்றார். மெய்த்த - மெய்யின் கண்ணதான.
இதனால், சிவநெறியது சிறப்புக் கூறும் முகத்தால் பிறநெறிகளது தாழ்வு கூறிக் கள்ளுண்ணும் வாமம் முதலிய மதங்கள் கடியப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.

பொழிப்புரை :

உண்மை யோகிகள் ஆவார், பிராண வாயுவைத் தடுத்து அதனால் எழும் மூலக் கனலால் புருவ நடுவில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும், அறிவை வளர்க்கின்ற, இனிய அமுதத்தை உண்பவரே. (அவ்வமுதம் சிவானந்தத் தேறலில் இச்சையுண்டாக்கும்) அந்நிலையைப் பெறாத சிலர் அணிமா முதலிய சித்திகளில் இச்சையுடையராய்க் கள்ளை உண்டு மயக்கம் உற்று, அம்மயக்கத்தால் எழும் உன்மத்தம் உடையராய் அறிவழிகின்றனர்.

குறிப்புரை :

எனவே, `வாம மதத்தவரேயன்றி, யோகம் முற்றப் பெறாது இடைநிற்கும் சிலரும் வாம மதத்தவரோடு ஒத்து ஒழுகினும், அவர் ஒழுக்கம் கொள்ளத்தக்கது அன்று` என்றதாயிற்று.
இதனால், `கள்ளுண்பார் சிலர் சித்தியுடையராயும் இருத் தலைக் காண்கின்றோம் ஆகையால், அவர் ஒழுக்கம் இகழற்பாலது அன்று` என்பாரை நோக்கி, அவரது நிலையும் உயர்வுடையது ஆகாமை காட்டி, `எவ்வாற்றானும் கள்ளுண்டல் ஒழுக்கம் ஆகாது` என்பது வலியுறுத்தப்பட்டது.
பதிப்புக்களில் இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.
முதல் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.
சிற்பி