இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு


பண் :

பாடல் எண் : 1

கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 

பொழிப்புரை :

அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது `திருக்கோவலூர் வீரட்டம்` என்னும் தலமாம்.
ஆணவமலம் அறிவை அழித்தல் பற்றி அதற்கு, `மிருத்தியு` என்ற ஒரு பெயர் உண்டு. `அந்தகன்` என்பதற்கு `இறுதியைச் செய்பவன்` என்பது பொருள். அதனால் இவ்விரு பெயர்களும் ஒரு பொருளவாதல் பற்றி, ``கருத்துறை அந்தகன்றன்போல் அசுரன்`` என்றார். கூற்றுவனுக்கு `அந்தகன்` என்ற பெயர் கூறப்படுதலும் இப் பொருள் பற்றியேயாம். அதனால், `மிருத்தியுவைக் கடத்தல்` என்பதற்கு, `ஆணவ மலத்தின் நீங்குதல்` என்பதே உண்மைப் பொருள் என்பர். உபநிடதங்கள் `இருளைக் கடந்து மேற் போகின் றான்` என்றலும் ஆணவ மலத்தின் நீங்கி இறைவனை அடை தலையே யாம். எனவே, சிவபெருமான் அந்தகாசுரனை மூவிலை வேலால் அழித்த வரலாறு, `அவன் ஆணவ மலத்தை இச்சா ஞானக் கிரியை வடி வாய்த் தொழிற்படும் தனது சத்தியைக் கொண்டு அழிப்பவனாவன் என்னும் உண்மையை விளக்கும்` என்பதும், `அப்பயன் கருதி அவனை வழிபடுதலே சிறந்தது` என்பதும் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் அறிக. குருத்து - நுனி. `குருத்தினால்` என உருபு விரிக்க. `உயர் சூலம் கைக்கொண்டு குருத் தினாற் கொன்றான்` எனக் கூட்டுக. இச் செயல் வைரவக் கடவுளைக் கொண்டு செய்வித்ததேயாயினும், `அரசன் ஆலயம் எடுத்தான்` என்பது போல, ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்வித்தமை பற்றிச் சிவபெருமான் தானே செய்ததாக வைத்து அருளிச் செய்தார். ``அந்தகனை அயிற் சூலத் தழுத்திக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.5) என்பது திருநாவுக்கரசர் திருமொழி.
`இரணியன், (இரணிய கசிபு) இரணியாட்சன்` என்னும் இரு வருள் இளையவனாகிய இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற வரத்தினால் வலிமை மிக்க வனாய்த் திருமால் முதலிய தேவரையெல்லாம் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது மகளிர் உருவங்கொண்டு ஓடிக் கயிலையில் அம்பிகையின் தோழியர் கூட்டத்துள் மறைந்திருந்தனர். அதை அறிந்த அந்தகாசுரன் அங்கும் சென்று போர் செய்ய நினைத்த பொழுது, தேவர்கள் முறையீட்டிற்கு இரங்கிச் சிவபெருமான் வைரவக் கடவுளை ஏவ, அவர் தமது சூலத்தலையில் அவனை ஏற்றிப் பலநாள் துன்புறச் செய்து பின் முத்தி பெற அருளிய வரலாற்றின் விரிவைக் காஞ்சிப் புராணம் அந்தகேசுரப் படலத்தில் காண்க. `சிவதீக்கை பெற்றோர் குற்றம் செய்யின், அவர் கூற்றுவனால் தண்டிக்கப்படார்; இவ்வாறு வைரவக் கடவுள் சூலத்தில் ஏற்றித் தண்டிக்கப்படுவர்` என்பது சிவாகம நூற் கருத்து என்பது இங்கு உணர்ந்து கொள்க.
இதனால், சிவபெருமான் அந்தகாசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொழிப்புரை :

தக்கன் சிவபெருமானை இகழ்ந்து செய்த வேள்வியை அப்பெருமானது அருளாணையின்வழி வீரபத்திரக் கடவுள் சென்று அழித்தபொழுது, தக்கனது இகழ்ச்சியை மறாது உடன் பட்டிருந்த தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தலோடு ஒழித்து, அவ் இகழ்ச்சியைச் செய்தவனாகிய தக்கனது தலையை வெட்டித் தீக்கு இரையாக்கி, `சிவனை இகழ்ந்தவர் பெறும் இழிநிலைக்கு இவன் தக்க சான்றாகற்பாலனாகலின், அதன் பொருட்டு இவன் உலகிற்கு இன்றியமையாத ஒருவன்` எனக் கருதி அவனை அழித்தொழியாது ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிரோடு இருக்கச் செய்தார்.

குறிப்புரை :

இவ்வீரச்செயலைக் குறிப்பது திருப்பறியலூர் வீரட்டம்.
கொலையில் - வேள்வியை அழித்தபொழுது. பிழைத்த - பிழை செய்த. பிரசாபதி - பிரமன்; இப்பெயர் அவன் மகனாகிய தக்கனுக்கும் வழங்கும். அதனால், அவனை, `தட்சப் பிரசாபதி` என்பர். பிரசாபதி, இங்கு, தட்சப் பிரசாபதியே. ``தான்`` என்றது வீரபத்திரக் கடவுளை. நிலை - இழிநிலை; இதில் நான்கனுருபு தொகுத்தல். ``தலையை அரிந்திட்டு`` என்பதில், ``ஆட்டுத் தலையை`` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. சந்தி செய்தல் - பொருத்துதல். இவ்வரலாறு கந்தபுராணத்துள் விரித்துக் கூறப்படுதல் காண்க. இவ்வரலாறும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் உணர்க.
இதனால் தக்கன் வேள்வியை அழித்த வரலாறும், சிவ நிந்தை உய்தியில் குற்றமாதலாகிய உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்கச் சுதனை உதிரங்கொண் டானே. 

பொழிப்புரை :

ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட் கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்தாகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுகற் பாலராய தேவர்கள், தம் அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து அவரைத் தெருட்டுதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்குற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திரு மாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கொழித் தருளினான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது திருக்கண்டியூர் வீரட்டம்.
ஒருமுறை பிரமனும் மாலும் மகாமேரு மலையின் சிகரம் ஒன்றில் சேர்ந்திருந்தபொழுது தேவர், முனிவர் முதலிய பலரும் அங்கு வந்து அவரை வணங்கி, `நீவிர் எங்களைப் படைத்துக்காக்கும் தலைவராதலின், அனைத்துலகிற்கும் முதல்வனாய், உயிர்க்குயிராய் நிற்கும் முதற்கடவுள் யாவன் என்னும் ஐயத்தினையும் நீக்கி உண்மையை உணர்த்தல் வேண்டும்` என வேண்டினர். அதுபொழுது பிரமனும், மாயோனும் தம் அதிகாரச் செருக்கால் மயங்கித் தாங்களே முதற்கடவுளாகத் தனித்தனிக் கூறி வாதிட்டனர். வேதங்களும், மந்திரங்களும் உருவாய் வெளிப்பட்டு, `நும்மில் ஒருவரும் முதல்வரல்லீர்; சிவபெருமானே அனைத்துயிர்க்கும் முதல்வன்` எனக் கூறவும் தெளிவு பெறாது வாதிட்டனர். அதனால், சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளியாய்த் தோன்றி, அதினின்றும் உமையொருபாகனாய் வெளிப்பட, திருமால் தெளிந்து அச்சுற்று, `எம் தந்தையே, பிழைபொறுத்தருள்க` என வணங்கினார். ஆயினும், பிரமன் செருக்கு நீங்காதவனாய், அன்று ஐந்து தலைகளோடு இருந்த அவன், தனது உச்சித் தலை வாயினால், `என் மகனே, வருக` என்று அழைத்து இகழ்ந்தான். அதனால், சிவபெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கி `நம்மை இகழ்ந்து பேசிய இப் பிரமனது நடுத்தலையைக் கிள்ளிக்கொண்டு, இப்பிரமனே யன்றிச் செருக்கால் மயங்கி நம்மை இகழ்ந்து நிற்போர் யாவராயினும் அவர்தம் உதிரத்தைப் பிச்சையாகப் பிரம கபாலத்தில் ஏற்று, அவரது செருக்கை நீக்கித் தெளிவுபெறச் செய்க` என்று அருளிச் செய்து மறைந்தார். திருமாலும் தம் உலகை அடைந்தார். வைரவக் கடவுள் அவ்வாறே தமது நகத்தால் பிரமனது உச்சித் தலையைக் கிள்ளி எடுத்த உடன் அவனது உதிரம் உலகை அழிக்கும் வெள்ளம்போல் பெருக, அவன் நினைவிழந்து வீழ்ந்தான். பின்பு வைரவக் கடவுள், தமது நெற்றிக் கண்ணால் உதிர வெள்ளத்தை வற்றச் செய்து, பிரமனையும் உயிர்ப்பிக்க, அவன் நல்லறிவு பெற்று வணங்கிப் பிழைபொறுக்க வேண்டினான். அப்பால் வைரவக் கடவுள் அவனை மன்னித்து, அவனை என்றும் நான்முகனாகவே இருக்கச் செய்து, தாம் ஏந்திய பிரம கபாலத்துடன் தேவர், முனிவர் முதலான வர்களில் செருக்குக் கொண்டவர்பால் சென்று, `எனது கபாலம் நிறைய உங்கள் உதிரத்தைத் தாருங்கள்` என்று கேட்க, அவர்கள் அனைவரும் அச்சத்தால், ஏற்ற பெற்றியில் தம் தம் உடம்பினின்றும் இரத்தத்தைப் பிரம கபாலத்தில் சொரிந்து சோர்வுறலாயினர். பின்பு வைரவக் கடவுள் அவர்களுக்கும் உயிர்ப்பிச்சை தந்து தெளிவை உண்டாக்கி, வைகுந்தம் சென்று, அங்குத் தம்மைத் தடுத்த சேனா முதலியாகிய விடுவச் சேனனைச் சூலத்தின்மேல் கோத்தெடுத்துக் கொண்டு செல்லத் திருமால் இதனை அறிந்து எதிர்வந்து வணங்கி, `எந்தையே நீ வேண்டுவது யாது` என, வைரவக் கடவுள், `உன் கபாலத்தின் வழி யாக எனது பிரம கபாலம் நிறைய உதிரம் தரல் வேண்டும்` என்றார். திருமால் தாமே தமது நகத்தால் தம் நெற்றியி னின்றும் ஒரு நரம்பைப் பிடுங்கிப் பிரம கபாலத்தில் விட, அது வழியாக உதிரம் பல்லாண்டு காறும் ஒழுகிற்று. திருமால் நினைவிழந்து வீழ்ந்தார். ஆயினும், வைர வரது கைக் கபாலம் பாதியாயினும் நிறைந்ததில்லை. அதனைக் கண்ட `சீதேவி, பூதேவி` என்னும் இருவரும் நடுக்கங் கொள்ள, வைரவக் கடவுள் அவர்கள்மீது இரக்கம் வைத்துத் திருமாலை உயிர்ப்பித்துத் தந்து, விடுவச் சேனனையும் சூலத்தினின்றும் இறக்கிவிட்டுச் சிவபெரு மான் முன்பே தமக்காகப் படைத்துக் கொடுத்த கணங்களுடன் தமது புவனத்தில் தங்கி, அண்டங்கள் பல வற்றைக் காத்து வருவாராயினார். இவ்வாறு கந்த புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத்துள்ளும் இவ்வரலாறு விரித்துப் பேசப்படுதல் காண்க.
``அவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற (பின்) அச்சுதனை உதிரங் கொண்டான்`` என்றதனால், `செல்வம், அதிகாரம்` முதலியவற்றால் எழும் செருக்குக் காரணமாக முதல்வனாகிய கடவுளை மறந்து `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கித் திரிவாரை அம்முதல்வனது திருவருள் ஒறுத்து அடக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தவே இவ்வரலாற்றைப் புராணங்கள் வலியுறுத்துகின்றன என்பது உணர்த்துதல் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் பெறப்படும். தக்கன் வரலாறு, என்றும் செருக்குடை யராய் இருப்பவரை ஒறுத்தலையும், இஃது, ஓரோவழிச் செருக்குறு வாரை ஒறுத்தலையும் குறிக்கும். இவையே இவற்றிடை உள்ள வேற்றுமை.
பரத்தல், `இடங்கொடுத்தல்` என்னும் பொருட்டு. இதனால், ஆகாயத்தையும் அடக்கி நிற்றல் பெறப்பட்டது. நிலத்தையும் தாங்குதல் கூறினமையால், அதற்கும் நிலைக்களமாதல் பெறப்பட்டது. `தங்கும் படித்தாகிய தாள்` என்க. அவன் பண்டறி சுட்டு. `உணர் தேவர்கள்` என்னும் முக்கால வினைத்தொகை, அஃது அவர்க்குரிய பண்பாதல் விளக்கி நின்றது. பொங்கும் சினம் - மிகக் கொண்ட சினம். `தேவர்கள் கொண்ட சினம்` என்க. சினம் - பகை. இஃது இங்கு மயக்கத்தால் கொள்ளும் மாறுபாட்டினைக் குறித்தது. ``சினத்துள்`` என்பது வினைசெய்யிடத்தில் வந்த ஏழாம் வேற்றுமை. எனவே, `சினங்கொண்ட பொழுது` என்பது பொருளாயிற்று. முன் - முதலில். ``முன் அயன் தலை அற`` என்றதனால், `பின் அச்சுதனை உதிரங் கொண்டான்` என்பது போந்தது. இதுவும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் அறிக.
இதனால், பிரமனது தலையை அரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

பொழிப்புரை :

எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவிற்குடி வீரட்டம்.
ஒருமுறை சிவபெருமான், தமது கயிலைக்கு வந்த இந்திரன் முன், ஒரு திருவிளையாடலால் வேற்றுருக் கொண்டபொழுது, உண்மையறியாத இந்திரன், அப்பெருமானை இகழ்ந்து நோக்க, அதனால் அவர் உருத்திர வடிவுடன் நின்று கொண்ட சினத்தைக் கண்டு இந்திரன் அஞ்சி வணங்கினான். அதனால், சிவபெருமான் தாம் கொண்ட சினத் தீயை மேற்றிசைக் கடலில் எறிய, அஃது ஓர் அசுரக் குழந்தையாயிற்று. அதனைக் கடல் அரசனாகிய `வருணன்` வளர்த்தான். சலத்தால் (நீரால்) தாங்கப்பெற்ற காரணத்தால் `சலந்தரன்` எனப் பெயர் பெற்ற அவ்வசுரன் மிக்க வன்மை உடைய வனாய்த் தேவரைத் துன்புறுத்தத் திருமால் முதலிய தேவர் பலரும் அவனுக்கு அஞ்சி ஓடிக் கயிலையில் வசித்தனர். அதனை அறிந்த சலந்தராசுரன் சிவபெருமானோடு போர் செய்யக் கருதிக் கயிலை நோக்கிச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட அப்பெருமான், அவன் தன்னாலே தான் அழிய வேண்டியவனாதலை உணர்ந்து, ஓர் அந்தண வடிவில் அவன்முன் சென்று, `சலந்தரனே, உனது ஆற்றலை அளந்து காணவே யாம் வந்தோம்; உன்னால் இயலுமாயின், இச்சக்கரத்தை எடுத்துச் சுமக்க` என்று சொல்லித் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறினார். சலந்தரன் செருக்குக் கொண்டு அதனை அரிதில் பெயர்த்து மிக முயன்று உயர எடுத்துத் தன் தலைமேல் வைத்துக்கொள்ள, அச்சக்கரம் சிறந்த படைக்கலமாய் அவன் உடலை இருகூறு செய்து, சிவபெருமானிடம் மீண்டது; தேவர் துன்பம் நீங்கி இன்புற்றனர். இவ்வாறு இவ்வரலாறு கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இது சிவபெருமான், தான் நேரே செய்த வீரச்செயலாதல் அறிக.
`அறம், மறம் அனைத்திற்கும் நிலைக்களமாய் உள்ளவன் இறைவன். அவன் உரிய காலத்தில் மறத்தினை வெளிப்படுத்தி, ஏற்கும் முறையால் அதனை அழித்து அறத்தினை வளர்த்தருளுவான் என்பது இதனால் அறியத் தக்க உண்மை` என்பது நாயனார் திருவுள்ளமாதல், ``எங்கும் கலந்தும் என் உள்ளத்தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதி`` என்ற குறிப்பால் அறியப்படும்.
இதனால், `சலந்தரன்` என்னும் அசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. 

பொழிப்புரை :

சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவதிகை வீரட்டம். ஏனைய பலவற்றினும் இது சிறப்புடையதாய்ப் பண்டைத் தமிழ் நூல்களிலும் பயின்று வருவதாகலின், இதன் உண்மையை நாயனார் கிளந்தோதினார் என்க.
``தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்னும் மூவர் அசுரர் சிவபத்தியிற் சிறந்தவராய் மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர். சிவபெருமான் `நம்பால் பத்தி பண்ணுவோரை அழித்தல் ஆகாது` என்று அருளிச் செய்யத் திருமால் புத்தனாக உருக்கொண்டு பிடக நூலைச் செய்து, நாரத முனிவரைத் துணைக்கொண்டு முப்புரத் தவர்பால் சென்று சிவநெறியை இகழ்ந்து, புத்த மதத்தையே சிறந்ததாகக் காட்டி மருட்டினார். அதனால் அம்மாயோன் மயக்கில் அகப்பட்ட முப்புரத் தசுரர் சிவநெறியைக் கைவிட்டுச் சிவனை இகழ்ந்து புத்தராயினர். அதன்பின் திருமால் முதலியோர் சிவபிரானிடம் சென்று வணங்கி, முப்புரத்தவர் சிவநிந்தகராயினமையை விண்ணப்பித்து, அவர்களை அழித்தருள வேண்டினர். சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியாயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கியபொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக் கூறப்பட்டது.
இதனுள் தேவர் பலரும் சிவபெருமானுக்குக் கருவியா யினமை, `அப்பெருமானே கருத்தா` என்பதை விளக்கும். பூட்டிய அம்பினை எய்யாமலே திரிபுரத்தைச் சிரித்து அழித்தமை, அவன் யாதொரு செயலையும் கருவியாலன்றி நினைவு மாத்திரத்தானே செய்பவனாதலை விளக்கும். மலையை வில்லாக வளைத்தமை அவன் எல்லாம் வல்லனாதலைக் குறிக்கும். இவ்வாறு இத்திரிபுரம் எரித்த வரலாறு பல அரிய உண்மைகளை விளக்குவதாம். அவற்றுள் சிறந்த தொன்றினை எடுத்தோதியதனானே ஏனையவற்றையும் தழுவிக் கொள்ள வைத்தார்.
இதனால், திரிபுரம் எரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே. 

பொழிப்புரை :

முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.

குறிப்புரை :

`அஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். சிவபெருமான் செய்த இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவழுவூர் வீரட்டம்.
சிவபெருமான் யானையை உரித்த வரலாறு கந்த புராணத்துட் சொல்லப்பட்டது. அதில் அவன் பிறப்பு வரலாறு சொல்லப்பட வில்லை. ஆயினும், நாரத முனிவர் செய்த வேள்வியுள் ஆட்டுக் கிடாய் ஒன்று தோன்றித்தேவர் முதலிய பலரையும் துன்புறுத்தினமை கந்த புராணத்தால் அறியக் கிடப்பதுபோல, முனிவர் சிலர் செய்த வேள்வியுள் கயாசுரனாகிய யானை தோன்றித் தேவர்களைத் துன்புறுத் தினமை இத்திருமந்திரத்தால் அறியக் கிடக்கின்றது. சிவபெருமான் யானையை உரித்த பொழுது அவர் கொண்டிருந்த உருத்திரத் திருமேனியின் ஒளியையும், வீரச் செயலையும் காணமாட்டாது உமாதேவியை உள்ளிட்ட பலரும் நடுக்கங் கொள்ளச் சிவபெருமான் யானையை உரித்து அத்தோலைப் போர்வையாக அணிந்து அவர் களது அச்சத்தைப் போக்கினமை கந்த புராணத்துட் கூறப்பட்டது.
ஐம்பொறிகளை யானையாகக் கூறுதல் மரபாகலின், ஏனைத் தேவர் பலரும் மதங்கொண்ட யானைபோலும் அவ்வைம்பொறிச் சூழலில் அகப்பட்டுச் சுழலும் பசுக்களேயாக, அவற்றை வென்று நிற்கும் பதி சிவபெருமான் ஒருவனே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்கது என்பதை நாயனார் உய்த்துணர வைத்திருத்தலை நுண்ணுணர்வால் நோக்கி உணர்க. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயலாம். இதனைக் காசியில் நிகழ்ந்ததாகவே கந்தபுராணம் கூறிற்று.
கொளுவுதற்கும், முழங்குதற்கும் ``முனிவர்`` என்னும் எழு வாய் வருவித்து, ``கொளுவி முழங்கு`` என இயைக்க. முழங்குதல் - மந்திரத்தை உரத்து உச்சரித்தல். வேள்வியுள் அத்தி - வேள்வியுள் எழுந்த யானை. ``உரி`` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகு பெயராய், ``உரித்தவன்`` எனப் பொருள் தந்தது. தாம், அசைநிலை. ``பல தேவர்தாமும்`` என்பது மாறிநின்றது. உம்மை, முற்றும்மை. ``தீயின்`` என்றதும், `தீச் சாலையின்` என ஆகுபெயராயிற்று. `அத்தி யினுள்` என்பதே பாடமாயின், `தீ` என்பது குறுக்கல் பெற்றது என்க. எழுந்து - சென்று தங்கி. ``கொலையே`` என்றதன்பின் `உண்டார்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், சிவபெருமான் யானையை உரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 

பொழிப்புரை :

சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.

குறிப்புரை :

இது காலசங்கார மூர்த்தியைத் திருக்கடவூரில் உள்ள ஓர் யோகிபோல வைத்துச் சிலேடையால் உவமித்தது. இதனை,
யோகிக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`மூலாதாரமாகிய இடத்தில் வைத்துக் கீழ்நோக்கித் துயில் கின்ற நாகராசனை அதன்மேல் உள்ள சுழுமுனைக்கு மேலதாகிய புருவ நடுவாகிய இலாடத் தானத்தை நோக்கி நிற்குமாறு எழுப்பி, அதன்பொருட்டு வாயுக்களுள் முதலாவதாகிய பிராண வாயுவைச் சுழுமுனை நாடியின் அடியில் அசைவற நிறுத்தி, அத்தகைய வாயுப் பயிற்சியாலே, தனக்கு அளந்த வாழ்நாள் எல்லைக்கண் கூற்றுவன் வந்து தன்னை அணுகாதவாறு தடுத்துத் திருக்கடவூரில் நலத்துடன் நீடு வாழ்கின்றமை `வியப்பு` எனவும்,
காலசங்கார மூர்த்திக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`முப்பத்தாறு தத்தவங்களுள் கீழ் நிற்பதாகிய நிலத்தின்கண் அமைந்த கோயிலிலே வழிபாட்டில் முனைந்து நின்ற மார்க்கண்டேய முனிவரை நாதமாகிய மேல்தத்துவ புவனத்தில் மேலான அபர முத்தராய்ச் சென்று வாழுமாறு கடைக்கணித்து, அவர் வழிபட்ட இலிங்கத் திருமேனியில் வெளிப்பட்டு அவர்மேல் வந்த காலனைக் காலால் உதைத்துத் தள்ளி, அருளோடு நீடு நிற்றல் வியப்பு` எனவும் உரைத்துக் கொள்க.
நாகராசன், குண்டலினி. இதனைப் பெண்பாலாகக் கூறுதல் மரபாயினும், `நாகராசன்` என்னும் வழக்குண்மை பற்றி ஆண்பாலாக ஓதினார். இரண்டாவது பொருட்கு, துவாரம் - வாயில்; கருவி. முதல் உரையுள் ``நோக்கி`` என்பது, அதன் காரியம் தோன்ற நிற்கும். `சிவபெருமான்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது. `அங் கியோகமாய்` என்பதில், யகரம் வருவழி இகரங் குறுகிற்று(தொல். எழுத்து, 411) `யோகியாய்` எனற்பாலதனை, ``யோகமாய்`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது. இறுதியில் `வியப்பு` என்பது சொல்லெச்சம். இங்ஙனம் சிலேடித்ததனானே, அட யோகம் செய்வார், வாழ்நாள் சிறிது நீட்டிக்கப் பெறுதலையும், சிவயோகம் செய்வார், ஞானம் பெற்று வீடு அடைதலையும் குறிப்பால் உணர்த்திச் சிவனது திருவருட் பெருமையை விளக்கினார் என்க. எனவே, சிவபெருமான் காலனைக் காலால் உதைத்த வரலாறு ` யோக மதத்தவர், சிவநெறியாளர்` என்னும் இருதிறத்தார்க்கும் ஏற்ற பெற்றியால் மேற்குறித்த இரண்டு உண்மை களையும் விளக்கி நிற்றல் பெறப்பட்டது.
மிருகண்டு முனிவர் புத்திரப்பேறு இன்மையால் தம் இல்லா ளோடும் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யச் சிவபெருமான் வெளிப்பட்டு `உங்கட்கு அறிவிலியாய் நூறாண்டு வாழும் மகன் வேண்டுமோ, அறிவுடையவனாய்ப் பதினாறாண்டு வாழும் மகன் வேண்டுமோ` என வினாவ, தவம் புரிந்த இருவரும், `அறிவுடைய மகனே வேண்டும்` என்றனர். அதன்படி கொடுத்து மறைந்த சிவபெரு மானது வரத்தின்படி அவர்கட்கு மார்க்கண்டேய முனிவர் பிறந்து, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பொழுது பதினாறா வது ஆண்டு வந்து அடைய, பெற்றோர் இருவரும் மகனைக் காணுந் தோறும் வருந்திக் கண்ணீர் விடுத்தனர். மார்க்கண்டேயர் அவர்களது வருத்தத்திற்குக் காரணத்தை அவர்பால் கேட்டறிந்து அவர்களிடம் விடைபெற்றுச் சென்று சிவபெருமானை இலிங்க வடிவில் பூசை செய் திருந்தார். அவருக்கு அளந்த நாள் முடிவில் கூற்றுவன் வந்து அவரை அழைக்க, அவர் சிவபெருமானையே தஞ்சமாக அடைந்து நின்றார். கூற்றுவன் அம்முனிவர் பற்றி யிருந்த இலிங்கத்தோடு அவரைப் பாசத் தாற் பிணித்து இழுத்தபொழுது, சிவபெருமான் அவ் இலிங்கத்தி னின்றும் வெளிப்பட்டுத் தமது இடக் காலால் கூற்றுவனை உதைத்துத் தள்ளி, மார்க்கண்டேயரை என்றும் பதினாறாண்டாக இருக்க அருள் புரிந்து மறைந்தார். இவ்வாறு இவ் வரலாறு கந்த புராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்கடவூர் வீரட்டம் என்பதை நாயனாரே அருளிச் செய்துள்ளார். இது காசியில் கங்கா நதியின் மணி கண்ணிகைத் துறையில் நிகழ்ந்ததாகவே கந்த புராணத்தில் சொல்லப் பட்டது. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால் சிவபெருமான் காலனை உதைத்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.

குறிப்புரை :

`இந்நிலை பல சமயத்தார்க்கும் பொது` என்பது பற்றி, `அருந்தவ யோகம்` எனப் பொதுப்படக் கூறிப் போந்தார். லிங்கம் - குறி. வழி - ஒழுக்கம். சிவபெருமான் காமனை எரித்த வரலாற்றால் அறியக் கிடக்கும் உண்மை வெளிப்படை என்பது பற்றி, இவ்வாறு இனிது விளங்க ஓதியொழிந்தார். ``அங்கண்`` என்றதன்பின் `நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. `குறுக்கை` என்பது, `கொறுக்கை` என மருவிற்று. `குறுக்கை என்பதே பாடம்` எனலுமாம். `சிவபெருமான் கொறுக்கை அமர்ந்தது, இருத்தி, போக்கி, அழித்து நிற்கும் யோகமே` என வினை முடிவு செய்க.
உமாதேவி, `தக்கன் மகள்` என்னும் நிலையை மாற்றிக் கொள்ள விரும்பிச் சிவபெருமானது அருளிப்பாட்டின்படி மலை யரையனுக்கு மகளாய்த் தோன்றி வளர்ந்து இமயமலையில் தவம் செய்துகொண்டிருக்க, சிவபெருமான் சனகாதி நால்வர் முனிவர்கட்கு உண்மை ஞானம் உணர்த்த வேண்டித் திருக்கயிலையில் தென்முகக் கடவுளாய் யோக நிலையில் இருந்த பொழுது, திருமாலின் சொற்படி, பிரமன் முதலிய தேவர்கள் தமக்குத் துயர் விளைத்த சூரபதுமனாதி அசுரரை அழித்தற்குச் சிவபெருமான் உமாதேவியாரைக் கூடி முருகப் பெருமானைத் தருதற் பொருட்டு அவருக்குக் காமத்தை விளைக் குமாறு காமவேளை ஏவினர். அவன் சென்று சிவபெருமான்மீது தனது மலர் அம்புகளை விடுத்தபொழுது, சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைச் சிறிதே திறக்க, அதினின்றும் புறப்பட்டுப் படர்ந்த தீயால் காமவேள் சாம்பராயினன். இவ்வரலாற்றைக் கந்த புராணம் விரித்துக் கூறும். இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்குறுக்கை வீரட்டம் என்பதையும் நாயனார் தாமே எடுத்தோதினார். இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால், சிவபெருமான் காமனை எரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.
சிவபெருமானது அட்ட வீரட்டங்களையும் அவை குறிக்கும் வீரச் செயல்களோடு கூறும் பழைய தனிப்பாட்டு ஒன்று வருமாறு:
பூமன் சிரம்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் கொறுக்கை, யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.
-தனிப்பாட்டு
(பூமன் - பிரமன். மாமன் - தக்கன். தேம் மன்னு - தேன் மிகுந்த. சேவகம் - வீரம்)
இவற்றுள் வழுவூர் ஒன்றும் வைப்புத்தலம்; ஏனைய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
இவ்வாறு நாயனார் ``வீரட்டம்`` எனச் சிறப்புப் பெற்றத் தலங்களைக் குறித்தருளினமையால், பிறவகையில் சிவபெருமானது அறக்கருணைச் செயல் மறக்கருணைச் செயல்களைக் குறிக்கும் தலங்களும், அவை பற்றிய வரலாறுகளும் சிவநெறி நிற்பார்க்கு இன்றியமை யாதனவாதல் அறியப்படும். இவ்வாற்றானே சமய குரவர் நால்வரும் தமது திருப்பாடல்களாலும், சென்று வணங்கிய திருநெறி ஒழுக்கத்தாலும், அதியற்புத விளைவுகளாலும் திருக்கோயில்களின் இன்றியமையாமையை இனிது விளக்கினமை கருத்திற் கொள்ளற் பாலது.
சிற்பி