இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி


பண் :

பாடல் எண் : 1

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

பொழிப்புரை :

தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.

குறிப்புரை :

இது முதலாகக் கூறுவன பலவற்றையும் கந்த புராணத்துட் பரக்கக் காண்க. `வெந்தழல் ஊடே புறப்பட` என்பதை முதலிற் கொள்க. `குண்டத்தின்` என்பது வருவிக்க. `பிரானை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. வெகுண்டானாகிய தக்கன் என்க. `முந்திய பூசையால்` என உருபு விரிக்க. `முடியார்` என்றது முற்றெச்சம். `கெடுதலால்` என்பது, `கெட்டு` எனத் திரிந்து நின்றது.
இதனால், அச்சம் காரணமாகச் சிவநிந்தையைத் தடுக்க மாட்டாது உடன்பட்டிருந்த தேவரைச் சிவபெருமான் ஒறுத்து முறைப் படுத்தினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே. 

பொழிப்புரை :

வீரபத்திரர் தன்மேற்கொண்ட சினந்தணிந்து நின்றதை அறிந்து அச்சம் நீங்கி எழுந்த மாயோன் `எம் தந்தையே; நாங்கள் இத்தக்கன் போலச் சிவநிந்தை செய்பவர் அல்லேம்; (ஆதலின், எங்களைத் துன்புறுத்தாதீர்)` என்று சொல்லி மண்ணில் பதிந்த அவரது பாதங்களில் வீழ்ந்து துதிக்க, சிவனேயாயுள்ள அவரும் அவன்மேல் இரக்கங்கொண்டு ஒறுத்தலை ஒழிந்தார்.

குறிப்புரை :

வீரபத்திரர் மாயோனை வெகுளாது சினம் தணிந்தது, அவர் அவனை ஒறுக்கச் சென்றபொழுது சிவபெருமான், வான் மொழியாக, `சினம் தவிர்தி` என்று கூறினமையாலாம். `எழுகின்ற` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. தான், அசைநிலை. உம்மை, சிறப்பு. ``யாமே`` என்ற ஏகாரம் அசைநிலை. இதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது. பந்தம் - சம்பந்தம். `உலகினில் பந்தம்செய் பாதம்` என்றது, அவ்வாறாதலின் அருமை குறித்தவாறு. `பாசம்` என்பது பாடம் அன்று. ``தவம்`` என்பது துதியை.
இதனால், சிவபெருமான் மாயோனது பிழையைப் பொறுத்து அவனுக்கு அருள்செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே சிவ நிந்தை செய்பவனாகிய தக்கனது தலைமையான வேள்வியில் அக்கினி தேவன் ஏனையோர் வேள்வியிற் போலவே கிளர்ந்தெழுந்து தன் கடமையைச் செய்யமுற்பட்டது வியப்பு என்றாலும், தக்கனோ டேயன்றி ஏனைத் தேவரோடும் மாறுபடுதற்கு அஞ்சிய அவனது நிலைமையைத் திருவுளத்தடைத்து அவனுக்கு அளித்திருந்த ஆற்றலை மாற்றாது சிவபெருமான் வாளா இருந்தான்.

குறிப்புரை :

`அயன்` என்பது தக்கனுக்கும் பெயராய் வழங்கும். பதி - தலைமை. `அந்நீர்மை` எனற்பாலதனை, ``அது நீர்மை`` என்றார். `அப்பரிசாய அந்நீர்மை` என்க; ஆலித்தல் - மகிழ்தல்; இசைந்திருந்தல். இதனால், சிவபெருமான் அக்கினிதேவனை மன்னித் தருளினமை கூறப்பட்டது. அக்கினி தேவன் கையை வெட்டினமை திருவாசகத்துத் திருவுந்தியாரில் கூறப்பட்டது. `அது பெருந் தண்டம்` அன்று என்னும் கருத்தால் அவனது சுடும் சத்தியை மாற்றாதிருந்தமை கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 4

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே. 

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே அயன், மால் முதலிய தேவர் பலரும் சிவனை நிந்தியாதொழியினும், நிந்தித்த தக்கனைத் திருத்தமாட்டதவராயினர். அன்னராயினும், தக்கனது வேள்வியில் அவர் ஒருங்கு கூடியிருந்து அவனுக்கு ஊக்கம் மிகச் செய் தமைக்குக் காரணம், தானும் அவர்போலவே அச்சங் கொண்டவனா கிய அக்கினி தேவன், ஏனை இடங் காலங்களிற் போலவே தன் கடமை யுட்பட்டுத் தன் செயலைச் செய்யக் கிளர்ந்து நின்றமையேயாம்.

குறிப்புரை :

`காரணமாவது` என்று தொடங்கினமையால், `அலர்ந் திருந்தான்; அதுவே` என உரைக்க. உள நாள் - பிற இடங்களில் உள்ள காலம். ``நாளும்`` என்பது பாடமாயின், ``உள்ள பல நாள்களிலும் போல`` என உரைக்க.
இதனால், தக்கன் வேள்வியில், குற்றத்திற்கு ஆளானவருள் அக்கினி தேவன் முதல்வனாயினமை கூறி, அவ்வாறாகவும் மன்னித் தருளினமை குறிக்கப்பட்டது. அக்கினிதேவன் தன் காரியத்தைச் செய்யாதொழியின், வேள்வி நடத்தற்கே வழி இல்லையாதல் அறிக.
`தேவர் பலர்க்கும் இடும் அவியைத் தான் சுமக்கலாற்றாத அக்கினிதேவன் ஒருமுறை நீருள் ஒளிந்துகொள்ளத் தேவர் பலரும் வருந்தித் தேடியபொழுது மீன்கள் சில அவன் நீருள் ஒளிந்திருத்தலை அறிவிக்க, அறிந்து அவனைப் பிடித்துச் சென்றனர்` என்பதொரு வரலாறு காஞ்சிப் புராணச் சகோதர தீர்த்தப் படலத்துள் கூறப்படுதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே. 

பொழிப்புரை :

அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளி யாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.

குறிப்புரை :

வைதிகருள் கருமகாண்டிகள், தேவர் பலர்க்கும் அவரது அவியைச் சுமந்து சென்று கொடுத்தல்பற்றி அக்கினி தேவனை, `தேவர் பலர்க்கும் கீழ்ப்பட்டவன்` - விண்டு பரமன். அக்கினி அவமன்: அவ்விருவர்க்கும் இடையே எல்லாத் தேவரும் (சிவஞானபோத மாபாடியம் சூ.1 அதி.2) என்பர். அவர் கொள்கையே தக்கன் வேள்விக்குப் பொருந்தியது ஆதலின், ``குலந்தரும் கீழ் அங்கி`` என்றார். `குலத்தால் தரப்பட்ட கீழ்மையை உடைய அங்கி` என்க. கோள் - குற்றம். சிவந்த - கோபித்த. சிவத்தற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. சிவந்த இது - சினந்ததனால் வந்த இத் தீ. `அது` எனின், அக்கினி தேவனைச் சுட்டுமாகலின், `இது` என்றார். ``கீழ் அங்கி`` என்றதற்கு ஏற்ப, ``பரம் இது`` என்றார். கீழான தீ மேலான தீயின்முன் நிற்கலாற்றுமோ என்பது நயம். சிவபெருமானது சினத் தீயாவது, வீரபத்திரரே என்பது வெளிப்படை. ``தீ`` என்றதற்கு ஏற்ப, ``கதுவ`` என்றார்.
இதனால், தக்கன் வேள்வியுள் ஓட்டமெடுத்தவருள் முதல்வன் அக்கினிதேவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

பொழிப்புரை :

சிவபெருமானது கருணையைப் பெறாமையால், தலை, முகம், கை, தோள் என்பவற்றை இழந்த குற்றவாளிகள் முறையே, `மால், அயன், தக்கன்` என்பவரும், சூரிய சந்திரர் கலை மகளும், அக்கினிதேவனும், அழகிய இந்திரனும் ஆவர்.

குறிப்புரை :

``தலை`` என்றதைத் திருமாலுக்கு `தலைமை` என்ற வாறாகக் கொள்க. எண்ணொடுவின் பொருட்டாகிய ``உடனே`` என்ற தனால், `சூரிய சந்திரர்` என ஒரு தொகையாக்குக. வாலை - வெண் ணிறம் உடையவள். இதனைத் தக்கன் மனைவிதன் பெயர் என்பாரது உரைக்குச் சான்றில்லை. தக்கன் மனைவி பெயர், `வேதவல்லி` என்றே கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இதனுள்ளன்றித் திருவாசகத்தும்,
``நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகனெரித் துந்தீபற;
தொல்லை வினைகெட உந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 13.
என நாமகள் நாசி அறுபட்டமை கூறப்பட்டது. `முகம்` என்பது `வாய்` எனவும் பொருள்தருமாகலின், அதனை இரட்டுற மொழிந்து, `அருக்கன் (சூரியன்) பல்லிழந்தான்` என்க.
``சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற;
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 15
என்றருளினமை காண்க.
இந்திரன் போகியாதலைக் குறிக்க, `நல் இந்திரன்` என்றார். ``நல்லோர்`` என்றது இகழ்ச்சி பற்றி.
இதனால், தக்கன் வேள்வியில் தேவர் பலரும் பலவாற்றால் ஒறுக்கப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

பொழிப்புரை :

தம் ஆசிரியர் தம் செவியிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருளறியாது ஒப்புவிக்கின்ற அதனையே தவமாகக் கொண்ட நிலத்தேவர் (பூ சுரர்) ஆகிய அந்தணர்கள் அந்நிலை பிறழ்ந்து தக்கன் ஆணைவழியே யாகசாலை அமைத்து, அதில் நெருப்புக் குண்டம் விளைத்து, சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைப் பிறரைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களாக மாற்றும் முகத்தால் அப்பெருமானை இகழ்ந்து, தாங்கள் நலம் பெற நினைத்து மிகச் சொல்லிய மந்திரங்கள், அவரையே கொல்கின்ற மரண மந்திரங்களாய் விட்டன.

குறிப்புரை :

அவி மந்திரம் - அவிசை வழங்கும் இல்லம். யாக சாலை. அடுக்களை - அட்டில்; என்றது தீக் குண்டத்தை. சவித்தல் - சபித்தல்; இகழ்தல். மூன்றாம் அடியிலும், செவி மந்திரம் என ஓதுதல் பாடம் அன்று. குவி மந்திரம் - குவித்த மந்திரங்கள். ``கொடியது`` என்றது பன்மை மயக்கம். ``ஆம்`` என்றது, `அவை அன்னவாதல் இயல்பு`` என்றவாறு.
இதனால், சிவபெருமானை இகழ்ந்தவர்க்கு மந்திரங்கள் கேடு விளைத்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 

பொழிப்புரை :

நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.

குறிப்புரை :

அவ்வாறாக, அத்தேவர் தக்கன் வேள்வியில் அவியை உண்ண அப்பெருமானை விலக்கித் தாம் மட்டுமே சேர்ந்திருந்தது என்னை` என்பது குறிப்பெச்சம். மாணிக்கவாசகரும் இவ்வாறே,
``சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா இடும்நம் மவர் அவரே``
- தி.8 திருச்சதகம், 4
எனத் தேவரது இரங்கத்தக்க நிலையை எடுத்தோதியருளினார். `நல்லோர் இன்புற` என இயையும். `நவகுண்டம்` என்பது பாடம் அன்று. ``ஒன்பதும்`` என்றது, `முழுதும்` என்றவாறு. `ஒன்பதன் கண்ணும்` என உருபு விரிக்க. நாவலம்பொழில் ஒன்பது கண்டமாதல் பற்றி, உலகத்தை `நவகண்டம்` எனக் குறித்தல் வழக்கு. ஐ - தலைவன். `ஐயே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `பொன்றும்படிக்கு விளங்கு எரி கோத்தனன் வில்லார் வரை ஐ` எனக் கூட்டுக. மூன்றாம் அடியின் பாடம் பலபட ஓதப்படுகின்றன.
இதனால், தேவர்கள் தக்கன் வேள்வியில் சென்றமை நன்றி கோறலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே. 

பொழிப்புரை :

சிவபெருமானை இகழ்ந்தமையால் அப்பொழுதே செத்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு வைதும், பின்னர் அழிந்த அனைவரையும் மீள எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யாவர் தங்கள் மனத் திட்பத்தை இழந்து நிலைகலங்கிப் பிறரைச் சார்ந்தபோதிலும், நீ நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெரு மானையே யன்றோ!

குறிப்புரை :

படர்க்கையில் வைத்து வியக்கற்பாலளாய உமா தேவியை முன்னிலைப்படுத்து வியந்தார், அச்சுவை மிக்கு விளங்குதற் பொருட்டு, பின் இரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. நெளிதல் - நெகிழ்தல். `தெளிந்தார்` என்பது பாடம் அன்று. `ஆர் நெளிந்து கலங்கினும்` என மாற்றுக. அளிந்து - அன்பு மிக்கு. `ஆதிப் பிரானையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``விளிந்தான்`` என்றது துணிவு பற்றி எதிர்காலத்தை இறந்த கால மாகக் கூறியது. சுளிந்து - வெகுண்டு. `சுளிந்துகூறி` என ஒரு சொல் வரு விக்க. தக்கன் தனது வேள்வியைத் தொடங்கிய பொழுது, உமை அம்மை தன்னை அவன் அழையாதிருக்கவும் சென்று அவனுக்கு அறிவுரை கூறியும் கேளாமையால், அவனது வேள்வி அழியும்படி சபித்து மீண்டமையும், பின்னர் வீரபத்திரரால் யாவரும் அழிந்து கிடந் தமையைச் சிவபெருமானுடன் அங்கு அவள் எழுந்தருளியபொழுது கண்டு இரக்கம் உற்று அவர்களை உயிர்ப்பித்தருளுமாறு சிவபெரு மானை வேண்டினமையும் கந்தபுராணத்தால் அறிகின்றோம். அம்மையை வியக்கும் முகத்தால் தேவரது இழிபுணர்த்தியவாறு. இதனால், உமாதேவி தனது செயலால் ஏனையோர்க்கு உண்மை யுணர்த்தினமை கூறப்பட்டது.
சிற்பி