இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்


பண் :

பாடல் எண் : 1

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. 

பொழிப்புரை :

இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.

குறிப்புரை :

``ஏந்தி`` என்பது பெயர். வினையெச்சமாகக் கொண்டு எழுவாய் வருவித்தலுமாம். வலம் - வெற்றிப்பாடு. `பல் வானவர்` என இயையும். ``வலம்`` என்ற எழுவாய், ``ஆதி`` என்றதன்பின் எஞ்சி நின்ற `என்னும்` என்பதனோடு முடிந்தது.
`சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், ஒருகாலத்தில் சேர இறக்கும் பிரம விட்டுணுக்களது கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான்` என்பது, `அவர் யாவரும் வினைவயத்தால் பல்காலும் பிறந்து இறக்கின்ற பசுக் கூட்டத்தினரேயாகத் தான் ஒருவனே பிறப்பு இறப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் நின்று அனைத்துயிர்கட்கும் பந்தம் வீடுதரும் பதியாகின்றான் என்பதை விளக்கும்` என்பது கூறியவாறு. மாணிக்க வாசகரும்,
நங்காய்இ தென்னதவம், நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ!
கங்காளம் ஆமாகேள்; காலாந் தரத்திருவர்
தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ
-தி.8 திருச்சாழல், 11
என்று அருளிச்செய்தார்.
`அரிபிரமேந்திராதி தேவர் பலரும் நிலையாமையுட்பட்ட பசுக்களேயாகச் சிவபெருமான் ஒருவனே என்றும் ஒருபெற்றியனாய பதி` என்பதனைத் திருநாவுக்கரசர்,
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. -தி.5 ப.100 பா.3
என விளக்கியருளினார்.
`எலும்பையும், தலையையும் அணிந்த கோலம் மேற்குறித்த உண்மையேயன்றி, அவன் காரியப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலையும் உணர்த்தும்` என்பது பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது. இதனானே, `சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்` என்பதும் கொள்ளப்படும்.
சிவபெருமான் கங்காளத்தை ஏந்தி நிற்றலைக் குறிக்கும் தலங்களே `காயாரோகணம்` எனப்படுகின்றன. காயாரோகணம், `காரோணம்` என மருவி வழங்கும்.
இதனால், `சிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன்` என்பதன் உண்மை விளக்கப்பட்டது.
சிற்பி