இரண்டாம் தந்திரம் - 10. திதி


பண் :

பாடல் எண் : 1

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

பொழிப்புரை :

என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனாலே அவை நிலைத்து நிற்கின்றன` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. இதில் `நின்றான்` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்றெச்சம். ஒவ்வோர் அடியிலும் எச்சங்களை முதலிலே கூட்டி முடிக்க. `வெளி` எனினும் `ஒளி` எனினும் ஒக்கும். இங்கு, ``ஒளி`` என்றது, ஆன்ம அறிவை விளக்கும் மாயா காரியங்களை. ``இருள்`` ஆணவமாதல் வெளிப் படை. அதனுள்ளும் இறைவன் நிற்றல், அதன் சத்தியை இடையறாது தொழிற்படச் செய்து மெலிவித்தற்காம். புகழ்வு - புகழ்தல். இகழ்வு - இகழ்தல். இத்தொழிற் பெயர்கள் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளாய அவ்வச்சொன்மேல் நின்றன. இவற்றால் அவன் அச்சொற் கட்குப் பொருளாம் உயர்பொருள் இழிபொருள்களின் நிற்றல் குறிக்கப்பட்டது. ``உடல்`` என்றது சடப்பொருள்கட்கு உபலக்கணம்.

பண் :

பாடல் எண் : 2

தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தான் ஒருவனே பல பொருள் களினும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பித்தலுடன், அவற்றைத் தன் இச்சைவழி நடத்துபவனுமாகின்றான்.

குறிப்புரை :

`அதனால் அவை இயங்கிவருகின்றன` என்பது குறிப் பெச்சம். முதல் மூன்றடிகளும் அனுவாதம்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், `காத்தலாவது, அழியாது நிற்பித்தலும், நடத்துதலுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் இவ்வாறு எல்லாப்பொருளிலும் நிறைந்து நிற்றல், அவன் பிறபொருள்களால் அடைக்கப்படாத பெருவெளியாய் நிற்றலினாலாம்.

குறிப்புரை :

``உலகம்`` என்றது, விதந்தோதாதன பிறவற்றை. வான் - மேகம். இடை - வெளி; ஆகாயம். உலப்பிலி எங்கும் - அள வில்லாத இடம் எங்கணும். ``அடையாப் பெருவெளி அண்ணல்`` என்றது உடம்பொடு புணர்த்தல். அன்றி, `அண்ணல் ஆதலின்` எனச் சொல்லெச்சம் வருவித்துரைத்தலுமாம். அங்ஙனம் வருவிப்பின், இத்தொடர் முதலில் வைத்து உரைக்கப்படும்.
இதனால், `ஒருவன் பிற எல்லாப் பொருளிலும் நிற்றல் எவ்வாறு கூடும்` என்னும் ஐயத்தினை, இங்கும் நீக்குதற்கு அங்ஙனம் நிற்குமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் சிருட்டி அதிகாரத்தில் வந்த ``தேடுந்திசை எட்டும்`` என்னும் மந்திரம் இங்கு மீளவும் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 4

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயனு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்களது அறிவு நிலைக்கு ஏற்பக் கதிர்க்கடவுள், வளிக்கடவுள், மழைக்கடவுள், (இந்திரன்) முதலிய பல்வேறு கடவுளராய்த் தோன்றுவான். ஆதலின், அவன் திருமாலாய்த் தோன்றுதலில் வியப்பில்லை.

குறிப்புரை :

ஒருகால் - ஒருகாலத்தில்; என்றது, `உயிர்களின் பக்குவ நிலையில்` என்றவாறு. சுடர் முதலியன அவற்றை இயக்கும் கடவு ளரைக் குறித்தன. தண்மை, சத்துவகுணத்தைச் சுட்டியது. `பிறர் சத்துவ குணத்தை யுடையவனாகக் கூறும் மாயோன்` என்றவாறு. மாயோன் தொழிலால் மட்டுமே சத்துவன்; குணத்தால் தாமதனே. சிவபெருமான் பல்வேறு கடவுளராய்த் தோன்றலாவது, அவர் அவர் அறிவிற்கு ஏற்ப அவரையே முதற்கடவுளாக மயங்குமாறு அவர்பால் தனது ஆணையை வைத்துத் தத்தமக்கு இயலும் அளவு உலகத்தை நடத்தச் செய்தல். `அவ்வாற்றால் காக்கும் ஆணையைத் திருமாலிடத்து வைத்து நடத்துகின்றானாதலின், அத்திருமாலையே காத்தற் கடவுளாக உண்மை நூல்கள் ஓரோர் இடங்களிற் கூறுதலும், அங்ஙனம் கூறுதலின் உண்மையை உணரமாட்டாதார் அவனையே காத்தற் கடவுளாகவும், முதற்கடவுளாகவும் மயங்குதலும் இயல்பாகலின், அதுபற்றி ஐய மில்லை` என்பதாம். சண்டம் - வேகம். மாருதம் - காற்று. தளி - துளி.
இதனால், `காப்பவன் மாயனன்றோ` எனப் பௌராணிக மதம் பற்றி எழும் ஐயத்தினை நீக்கி, `காப்பவனும் சிவனே` என்பது இங்கும் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே. 

பொழிப்புரை :

திருவருளால் ஐம்பூதங்களிலும் நிற்கும் சிவ பெருமானே, குணங்கள் மூன்றாயும், காலங்கள் மூன்றாயும் நிற்பான்.

குறிப்புரை :

`அதனால் சத்துவ குணத் தொழிலாகிய காத்தலைச் செய்பவனும் அவனே` என்பதாம். அன்பு முதலாக இன்பம் ஈறாகக் கூறியவை சத்துவ குணத்தை விரித்தவாறும், இன்பக் கலவி தாமத குணத்தைக் குறித்தவாறுமாம். முன்புறு காலம் - உலகத்தது தோற்றக் காலம். ஊழி அதன் இறுதிக் காலம். இவை முறையே இறப்பும், எதிர்வும் குறித்தன. இராசத குணமும், நிகழ்காலமும் உபலக்கணத்தாற் கொள்ளநின்றன.
சிவபெருமான் எட்டுருவினன் (அட்ட மூர்த்தி) ஆதலும், அவற்றுள் ஐம்பூதங்கள் முக்குண வடிவினவாதலும் பலரும் அறிந்தன வாதலின், அவனை, `தாமத குணம் ஒன்றே உடையன்` எனவும், `அதனால், அழித்தலையே செய்வன்` எனவும் கூறுதல் அறியாதார் கூற்றேயாம் என்றபடி. இனி அவன் குணாதீதன் ஆதலும் நூல்களால் நன்குணர்த்தப்படுவது என்றற்குக் காலங்கள் மூன்றாதலையும் உடன் கூறினார்.
இதனால், `சிவபெருமான் காத்தற்கு உரியனல்லன்` எனப் பிணங்கிக் கூறும் பாஞ்சராத்திர மதத்தை மறுத்து, மேலது வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே. 

பொழிப்புரை :

முதற்கண் உலகுயிர்களை அவற்றிற்கு அம்மை அப்பனாய் நின்று படைப்பவனும் சிவபெருமானே. பின்பு அவற்றைத் தன் மக்களாகக் கொண்டு புரப்பவனும் அவனே. இவை `தேவர், மக்கள்` என்னும் சிறப்புடைப் பிறப்பினர்க்கு மட்டுமன்று; `விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் சின்னஞ்சிறிய பிறவிகட்குமாம்.

குறிப்புரை :

``வனைதல்`` மூன்றனுள் முன்னது `ஆக்குதல்` எனவும், இடையது `திருத்தல்` எனவும், ஈற்றது `இரண்டனையும் செய்தல்` எனவும் பொருள் தந்தன. ``உலகு, பிறவி`` என்பன சொல் வேறுபட்டுப் பொருட்பின்வருநிலை அணியாய் நின்றன. சால் முதலிய நான்கும் பெரியனவும், சிறியனவுமாய உடம்புகளை உணர்த்தி நின்றன. மற்றும் - ஏனைய கலங்களும். தூதையை, `மொந்தை` என்பர். `தூதையும்` என்னும் உம்மை தொகுத்தல். ``வனையவல்லான்`` என்றதனால், இது குறிப்புருவகம்.
இதனால், சிவபெருமானது ஆற்றலின் பெருமையை மீளவும் நினைப்பித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

`தூய உயிர்` எனப்படும் பரமான்மாவாகிய பெருவெளியாய், தூய்மையின்றி மாசுண்டு கிடக்கும் சீவான்மாவாகிய உயிரினுள் அறிவு தோன்றுதற்கு ஏதுவாய் நிற்பதாய இயற்கை அறிவே உயிரின் உடலையும் இடமாகக்கொண்டு நிற்கும் `பரம்பொருள்` எனப்படுவது. அதனை இழந்துநிற்கும் உயிர் அதுவாம் வண்ணம், அதன் உடலாயும், அவ்வுடல் வாழ்வுறுதற்கு அதனுள் நிற்கும் உயிர்ப் பாயும் உள்ள சிவபெருமானே அதனைக் காத்து நிற்கின்றான்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, ``தாங்கி நின்றான்`` என்பதை உள்ளவாறே நிறுத்தி முடிக்க. ``விளங்கொளி`` என்பதன்பின் `ஆய்` என்பது விரிக்க. `நிலங்கொளி` என்பது பாட மன்று. ``தள் உயிர்`` என்பதில் ``தள்ளுதல்``, தவறவிடுதல். இதன்பின் `அது` எனப் பரம்பொருளைச் சுட்டும் சுட்டுப்பெயர் எஞ்சி நின்றது. `பரம்பொருளை அறியாது நிற்கும் உயிர் அதனை அறியும் வண்ணம் பக்குவம் முதிர்தற் பொருட்டே அதனை உடலில் நிறுத்திப் புரக்கின்றான்` என்றவாறு. ``உயிர்ப்பாய்`` என்றதனால் உடலை நிற்பித்தலையும், ``உடலாய்`` என்றதனால் உயிரை அஃது எடுத்த பிறப்பில் நிறுத்துதலையும் குறித்தவாறு. இறைவன் உடலினுள் உயிர்ப்பாதலை,
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` -தி.5 ப.21 பா.1
என்பதனான் அறிக.
இதனால், காத்தல் தொழிலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் பல உயிர்களையும் அவற்றது உடலில் நிறுத்திக் காக்கின்ற காலத்தில் அக் காத்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவரும், அவைகளை அவற்றது உடம்பினின்றும் பிரிக்கின்ற காலத்தில் அப்பிரித்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவருமாக அவனுக்கு எதிராவார் பிறர் இல்லை. இனி விடாது வந்த எழுவகைப் பிறப்பிற்கும் முடிவாவது ஞானமே. அந்நெறியில் அவ்வுயிர்களைப் பிறழாது நிற்பிப்பவனும் அச் சிவபெருமானே.

குறிப்புரை :

தன்மையைச் செய்வாரை, ``தன்மை`` என்றது ஒற்றுமை வழக்கு. பின் முன் உள்ள சொற்குறிப்புக்களால், `தாங்கிய காலத்து` என்பது முன்னரும், `வாங்கருந் தன்மையும்` என்பது பின்னரும் வருவித்துக் கொள்ளக் கிடந்தன. அதனால், `தாங்கிய காலத்துத் தாங்கருந் தன்மை செய்வாரும், வாங்கிய காலத்து வாங் கருந்தன்மை செய்வாருமாக மாற்றோர் பிறரில்லை` என்பது முன் னிரண்டடிகளின் பொருளாயிற்று. மாற்றோர் - எதிராவார். ``அந்தம்`` என்றது, `எழுமைக்கும்` என்றதனோடும் இயையும். `ஓங்கிய` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று. யோகத்தின் அந்தத்தில் தோன்று வதனை ``யோகாந்தம்`` என்றார். `ஞானம்` என்னாது ``யோகாந்தம்`` என்றதனானே, `சரியை முதலிய தவங்களில் நிறுத்திக் காப்பவனும் அவனே` என்பது போந்தது. தார் - (கொன்றை) மாலையை. அணி - அணிந்தவன். `மற்றோர் பிறிதில்லை` என்பது பாடம் அன்று.
இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே. 

பொழிப்புரை :

அண்ணலாகிய சிவபெருமான், உயிர்களோடு உடனாய் நிற்பினும், அவற்றால் அறிதற்கரியனே. யோக முறையால் பிராண வாயுவை அடக்கி மூலாதாரத்தினின்றும் எழுப்பப்படும் அங்கியின்வழி மேல்நிலமாகிய புருவ நடுவை அடைந்து தியான சமாதிகளால் அவனை உணரினும், உண்மையில் ஞான முதிர்ச்சி ஒன்றுமே அவனைப் பெறுவிக்கும். அதனால், சரியை முதலிய மூன்றால் அவனை வழிபடும் தவநெறியில் நிற்பினும், அதனில் செல்லாது உலகரோடு கூடி அவநெறியில் தாழினும் அவன் பிறவியை அறுத்தல் இன்றி அதனைக் கூட்டவே செய்வான்.

குறிப்புரை :

`ஒன்றுமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `அவனை நல்கும்` எனச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. தணிதல் - தாழ்தல்; கீழ் நிலையை எய்தல். மன் உடல் - நீங்காது வரும் பிறப்பு. செய்வான் - உண்டாக்குவான். ``மண்ணுடல்`` என்பது பாடமன்று.
இதனால், அருளல் தொழிலது சிறப்பை உணர்த்துமுகத்தான், அதற்குச் சிறப்பு வகையால் தோற்றுவாய் செய்யப்பட்டது.
சிற்பி