இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை


பண் :

பாடல் எண் : 1

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. 

பொழிப்புரை :

ஓர் உயிரைக் கருப்பையுள் தோற்றுவிக்கின்ற சிவ பெருமான் அதன் முன்னைத் தூல உடம்போடு ஒழிந்த ஐந்து ஞானேந் திரியம், ஐந்து கன்மேந்திரியம், ஐந்து பூதம், சத்தாதி ஐந்து விடயம், வச னாதி ஐந்து விடயம் என்னும் இருபத்தைந்தையும் மீள அதன் சூக்கும உடம்பினின்றும் தோற்றுவிப்பான். அங்ஙனம் தோற்றுவித்தல், அக் கருப்பையுள் அத்தோற்றத்திற்குத் தடையாகவரும் ஊறுபாடு களையறிந்து அவற்றை நீக்குதற்பொருட்டு அவ்விடத் திருந்தேயாம்.

குறிப்புரை :

முதற்கண் ``ஆக்குகின்றான்`` என்பது பெயர். ஏனைய, சொற்பொருட்பின்வருநிலையாய் நின்றன. `ஆதியும் எம் ஆருயிருமாகிய அவன்` என மாற்றியுரைக்க. கோளகை - வட்டம்; இங்குக் கருப்பை.
இதனால், சிவபெருமான், கருவைத் தோற்றுவித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்களினும் முதலாவதாக அறியப் படுகின்ற மூலதாராத்திற்குமேல் உதராக்கினியும், உணவாக உண்ணப் படும் நீரும் நிறைந்திருக்கின்ற சுவாதிட்டானத் தானத்தில், `பூதசார சரீரம், யாதனா சரீரம்` என்பவற்றிற்கேனும், அவை இரண்டுமின்றித் தனக்கேனும் (சிவனுக்கேனும்) சுமையாய் நின்ற உயிர் வந்து பொருந்துமாற்றை எண்ணி, முதற்கண் செந்நீராகிய நிலைக்களத்தை நிற்பித்து, அந்நிலையை அக்கரு வெளிப்போதுதற்குப் `பத்துத் திங்கள்` என்னும் சுமைக் காலத்தையும் சிவபிரான் ஆக்குகின்றான்.

குறிப்புரை :

செந்நீர் - தாயின் கருப் பையுள் நின்று கருவைத் தாங்கி வளர்ப்பது. நிலைக்களத்தை, ``தாள்`` என்றார். நிலவுலக உடலாகிய பூத உடம்பை விட்ட உயிர் நுண்ணுடம்போடு சென்று, நல்வினை, பயன்தருமாயின், அவ்வுடம்பு பூதசார சரீரத்தைத் தோற்றுவிக்கப் புத்தேள் (தேவ) உடம்பு பெற்றுத் துறக்கத்தை (சுவர்க்கத்தை) அடை யும். தீவினை, பயன் தருமாயின் நுண்ணுடம்பு யாதனா சரீரத்தைத் தோற்றுவிக்க அதனைப் பெற்று நிரயத்தை (நரகத்தை) அடையும். இரண்டும் இல்லையாயின், நுண்ணுடம்போடே கல்லுப்போல் அதற்குரிய புவனங்களுள் யாதானும் ஒன்றிற் செயலற்றுக் கிடக்கும். அம்மூன்று நிலைகளுமே முறையே பூதசார சரீரம், யாதனா சரீரம், இறைவன் திருவருள் என்பவற்றிற்குச் சுமையாகச் சொல்லப்பட்டன. உயிர் நுண்ணுடம்பைப் பற்றி நின்று கருவில் வந்து பொருந்தித் தூல உடம்போடு பிணிப்புண்டு, அதுவே தானாய் ஒற்றுமைப்பட்டு, அதற்கேற்ற உணர்வுகள் அனைத்தும் பொருந் துதற்குப் பத்துத் திங்கள் கால எல்லை வேண்டுவதாதலையறிந்து இறைவன் அத்துணைக் காலமும் அக்கருவைத் தாய்க்குச் சுமையாமாறு வைத்துக் காக்கின்றான் என்றபடி. இதனானே ஊழ் வேறுபடுமாயின், சில திங்களுக்குள்ளே அவ்வுயிர் `அந்நிலையினின்றும் நீங்கிப் பிறிது நிலையை அடையச் செய்வான்` என்பதும் பெறப் பட்டது. ``அங்கி அப்புச் செறிகின்ற தானத்து`` என்றதனால், `அவ் விரண்டாலும் அக்கரு அழிவுறாது காக்கின்றான்` என்பதும் கூறியவாறாயிற்று. `ஞானத்து` என்பது பாடம் அன்று.
இதனால், அப்பெருமான் கருவை வளர்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இன்புறு காலத் திருவர்முன்பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே. 

பொழிப்புரை :

முதற்கண் தந்தை தாயர் இன்பம் நுகர்கின்ற காலத்து அவர்தம் உடம்பினின்றும் வெளிப்படும் வெண்டுளி செந்துளிகளால் அமைந்த இல்லமாவது உடம்பு துன்பத்தைத் தருகின்ற வினையின்வழி அதனை நுகரும் அவ்வில்லமாகிய உடம்பின்கண் அதன் தலைவ னாகிய உயிர்க்கிழவன் பலவகைப் பண்புகள் பெற்று வாழும் காலத்தையும், அக் காலத்து அவனுக்கு உளவாகின்ற வாழ்க்கை முறைகளையும் கருவைத் தோற்றுவித்து வளர்க்கத் திருவுளம்பற்றிய அப்பொழுதே அதன்கண் அமையுமாறு சிவபெருமான் அமைத்து விடுகின்றான்.

குறிப்புரை :

`முன்பு இருவர் இன்புறு காலத்து ஊறிய மனை` என்க. காரணப் பொருளின் தன்மையைக் காரியப்பொருள்மேல் ஏற்றி, ``ஊறிய மனை`` என்றார். ``நூலாக்கலிங்கம்`` (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து 2) என்பதிற்போல. வான் - பெருமை; தலைமை. உளம் - ஆன்மா; அதனை, `உளன்` என ஆண்பாலாக ஓதினார். அன்றி, இறுதிப்போலியாகக் கொள்ளினும் ஆம். அருளை, ``அன்பு`` என்றார்.
இதனால், கருவில் உள்ள உயிர் பிறந்தபின் வாழ்தற்குரிய முறைகளைச் சிவபெருமான் முன்பே வகுத்தமைத்தல் கூறப்பட்டது.
``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்காடென்னும்
ஆறும்முன் கருவுட் பட்டது``
எனச் சிவஞானசித்தி (சூ. 2.9)கூறுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 4

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

பொழிப்புரை :

மெய்யுணர்வால் பிறப்பின் நீங்கிய அறிவர் கண்ட, நில முதல் புருடன் ஈறாக உள்ள இருபத்தைந்து கருவிகளும் (தத்துவங்களும்) தந்தை உடலிலே பொருந்தியிருந்து, பின் தாயது கருப்பைக்குள்ளே, ஆண், பெண் இரண்டில் யாதேனும் ஓர் உருவமாமாறு புகும். இதனை மெய்யுணர்வில்லார் அறியார்.

குறிப்புரை :

மற்று, அசைநிலை. ``ஓரார்`` என்றதனை ஈற்றில் வைத்து உரைக்க. `புகுந்த அது` என்பதில் அகரம் தொகுத்தல்; புகுதலை அனுவாத முகத்தாற் கூறினார் என்க.
இதனால், சிவபெருமான், தாயது கருப்பைக்குள் மட்டுமன்றி, அதிற் புகுமுன்பே தந்தையது உடம்பில் அதனை வைத்துக் காத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே. 

பொழிப்புரை :

தந்தையது உடலில் பொருந்தியிருந்த இருபத்தைந்து கருவிகளும் தாயின் கருவில் புகுதற்கு அவ்விருவரது கூட்டம் நிகழும். அப்பொழுது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, பூதம் ஐந்து ஆகிய பதினைந்து கருவிகளால் பருவுடம்பு வளருமாறு தந்தை உடம்பினின்றும் வெண்பால் (சுக்கிலம்) பொழியும். அதன்பின் பருவுடம்பு வளர ஏனைத் தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும் அவ்வுடம்பினுள் புருவ நடுவிலும், தலையிலும் பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

`தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும்` என்றது, `நுண்ணுடம்பு` என்றவாறு. அதனை இவ்வாறு கருவியாக வகுத் தோதியது, மேல், ( தி.10 பா.448) ``நால் மூவேழ்`` என்றதனோடு இயைதற் பொருட்டு. `பொழிந்தது` என்பது ஈறு குறைந்தது.
பூதத்தின் காரணத்தைப் ``பூதம்`` என்றார். `ஒழிந்த` இரண்டும், `நுண்ணுடம்பிற்கு வேறாய்` எனப் பொருள் தந்தன.
இதனால், தந்தை உடலில் தொகுத்து வைத்துக் காத்த இருபத்தைந்து கருவிகளைப் பின் தாயுடலில் வகுத்து வைத்துச் செயற்படுத்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே. 

பொழிப்புரை :

பூவின் மணத்தைக் காற்றே உலகிடை எங்கும் பரவச்செய்தல்போல, நுண்ணுடம்பின் செயல்களைத் தச வாயுக்களே பருவுடம்பில் கூவி அழுதல் முதலிய தொழில்களாக நிகழச் செய்யும், அவ்வாறு செய்விக்கச் சிவபெருமான் நினைந்தபொழுது.

குறிப்புரை :

தசவாயுக்கள், `பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பன. சீவன் - உடம்போடு கூடிய உயிர். அஃது இங்கு உடம்பையே குறித்தது. `பிராணன் முதலிய வாயுக்கள் இல்லையேல் நுதலிலும், உச்சியிலும் நிற்கும் அந்தக்கரணங்களின் ஆற்றல் பயன்படாது` என்பதாம். கூவி அழுதல் - அழைத்து அழுதல். `அவிழும்` என்பது பாடம் அன்று. பிறந்த குழவிக்கு முதற்செயல், வாய்விட்டு அழுதல். ஆதலின், அதனையே எடுத்தோதி ஏனைய வற்றை உடன்கொள்ள வைத்தார். நுண்ணுடம்பின் செயலாற்றலே தூல உடம்பில் செயலாக வெளிப்படும். அதற்குத் துணைசெய்வன தச வாயுக்கள் என்க.
இதனால், குழவி பிறந்தபின் அதனைச் சிவபெருமான் தச வாயுக்களின் வழிச் செயற்படுத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.

பொழிப்புரை :

குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாதுவிடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.

குறிப்புரை :

போகின்ற எட்டு, உயிரோடு ஒட்டிச் செல்கின்ற சூக்கும சரீரத் தத்துவங்கள். புகுகின்ற பத்து எட்டு, கருவில் வந்தபின் வருகின்ற மேற்சொன்ன (தி.10 பா. 449) பதினைந்துடன் `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` என்னும் முதல் நாடிகள். மூழ்கின்ற - ஆன்மா அழுந்துகின்ற. `முத்தனுவும்` என்பது குறைந்து நின்றது. முன்பு, `எட்டும், பதினெட்டும்` எனவும், பின்பு, `ஒன்பது வாய்தலும்` எனவும் கூறினாராயினும், `அனைத்துக் கருவிகளும் மூவுடம்பாய் அடங்கு கின்றன` என்றற்கு, ``முத்தனுவும்`` என்றார். குண்டலினி மூலாதாரம் முதலாகப் பிரமரந்திரம் ஈறாகத் தலைகீழாக நிற்கும் பாம்பு வடிவாய் இருத்தலின் அதனை, ``நாகம்`` என்றார். ``புரவி`` என்றது, இடைகலை பிங்கலை வழிச் செல்லும் பிராண வாயுவை. அஃது ஆகுபெயராய், அதற்கு இடமாகின்ற அந்நாடிகளைக் குறித்தது. விடுதல் - தூண்டுதல். ``பன்றி`` என்ற இழிவு வகையால் பயன்படாமை குறித்தவாறு.
இதனால், சிவபெருமான் உயிர்ப்பு வழியாகப் பருவுடம்பை நிலைப்பித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே. 

பொழிப்புரை :

தந்தையும் தாயும் கூடுங்காலத்துக் காமம் மிக்கிருப்பின், பிறக்கும் மகன் தாமத குணம் மிக்கிருப்பான். காமம் குறைந்திருப்பின், மகன் சத்துவகுணம் மிக்கிருப்பான். காமம் மிகுதலும் குறைதலும் இன்றி அளவிற்பட்டதாக இருப்பின், மகன் இராசதகுணம் மிக்கிருப்பான். இம்முத்திறத்து மைந்தருள் சத்துவ குணம் மிக்கவன் அரசனாதற்கும் உரியவனாவான்.

குறிப்புரை :

எதிர்த்தல் - கூடுதல். இறையவன் - உருத்திரன். ``அரியவன்`` என்பதில் அவன், பகுதிப்பொருள் விகுதி. `மைந்தன் அரசும் ஆளும்` என உம்மையை மாற்றி உரைக்க. உருத்திரன், மால், அயன் என்னும் குணமூர்த்திகள் மூவரும் தொழிலால் முறையே தாமதம், சாத்துவிகம், இராசதம் என்னும் குணத்தினராதலின், அக்குணம் மிக்க மைந்தரை அவர்களாகவே கூறினார். அதனானே, `அம்மைந்தர்க்கு அத்தேவர், இயக்கத் தேவராய் (அதிதேவராய்) நிற்பர்` என்பதும் கொள்ளப்படும். இருவரிடத்தும் காமம் ஒருவகையாய் நில்லாது மாறி நிற்பின், இங்குக் கூறிய பயன் தந்தையின்பால் வைத்துக் கொள்ளப்படும். என்னை வித்தின்கண் உள்ளதே விளைவின் கண்ணுமாம் ஆதலின், ``மகனறிவு தந்தை யறிவு`` (நாலடியார், 367) எனப் பிறவிடத்தும் கூறப்படுதல் காண்க.
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
என்னும் திருக்குறளும் (குறள், 114) இப்பொருள்மேல் நோக்குடையதேயாம். இதனால், `தோன்றும் கருவினது வினைக்கு ஏற்பச் சிவன் தந்தை தாயரது கூட்டத்தில் அவர்கட்கு இந்நிலையே விளைப்பன்` என்றவாறு. `பேர் ஒத்தமைந்தன்` என்பதில், ``பேர்`` என்றது, முன்னர்க் கூறிய மூன்றனுள் ``அரி`` என்பது, அரசனை மால் எனக் கூறும் வழக்குப்பற்றிக் கொள்ளப்படும். ஏறுதல் முதலியவற்றிற்குத் தந்தை உடற்பொருளாகிய வெண்டுளியையே வினை முதலாக உரைப்பர்; அது பொருளாயின் எடுத்தோதலே வேண்டும் என்க.
இதனால், ``பண்புறுகாலமும்`` என மேற்கூறப்பட்ட (தி.10 பா. 445) பண்புகளைச் சிவபெருமான் கருவில் அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

பொழிப்புரை :

காமம் பொருந்திய ஒருவனும் ஒருத்தியுமே பற்றுக் கோடாக நின்று அவரின் நீங்கிப் பாய்கின்ற கருமுதற் பொருள்கள், பின்பு கருப்பதிந்து உருவாதற் பொருட்டுப் பதிவிற்கு முன்பே அப்பொருள்களில் அவர் உடம்புகளிலே பல கூட்டுப்பொருள்கள் வந்துசேர, கருப் பதிந்தபின் அக்கருவிற்குக் குணங்கள் மேற்கூறிய முறையில் அமையும்.

குறிப்புரை :

`அதனால், மேற்கூறியவாறு நிகழும் கூட்டத்தினால் பிறக்கும் மைந்தர் மேற்கூறிய வகையினராய் இருப்பர்` என்பது குறிப்பெச்சம். ஏயம் - இழிவு; காமம். `தஞ்சம்` என்பது `தஞ்சு` எனக் கடைக்குறைந்து நின்றது. `நிறம்` என்னும் பொருட்டாகிய `சாயம்` என்னும் திசைச்சொல் நாயனார் காலத்து இன்மையின் `சாயத்து` என்பது பாடம் ஆகாது. கரு, ஆகுபெயர். உருவாம் என - உருவாய்த் தோன்றும் என்னும் காரணத்தால். காயம் - கூட்டுப் பொருள். கலந்து, `கலக்க` என்பதன் திரிபு. ``அது`` என்றது, `கரு` என்றதன் இயற் பெயர்ப்பொருளை. காண - உருத்தோன்றுமாறு. மாயம் - நிலை இல்லாது மாறிவருகின்ற. மனம் - அந்தக்கரணம். அவை ஒடுங்குதல் குணதத்துவத்திலாகலின், ``மனோலயம்`` என்றது ஆகுபெயரால், முக்குணத்தை உணர்த்திற்று. ஆனது - பொருந்திற்று.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது. இதனானே கருவில் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் `மனோமய கோசம்` எனப்படும் குண சரீரத்தைக் கூட்டுமாறும் பெறப்பட்டது. குண சரீரம், பர சரீரம் முத்திறத்தினுள் ஒன்று. பரசரீரத்தின் முத்திறம், `காரண சரீரம், கஞ்சுக சரீரம், குண சரீரம்` என்பன. இவைமுறையே `ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமய கோசம்` எனவும் பெயர்பெறும்.
இதனால், கருவினுள் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் சூக்கும தேகத்தையும் வாக்குகளையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே. 

பொழிப்புரை :

கருப்பையுள் முதற்கண் அதீத நிலையில் உள்ள குழவிக்குப் பின் `மாயை` (அசுத்த மாயை) என்பவள் தனது சுற்றமாகிய வித்தியா தத்துவங்களைச் சேர்ப்பிக்கத் துரிய நிலையைப் பெறும். பின்பு அத் துரிய நிலையும் நீக்கிச் சுழுத்தி சொப்பன சாக்கிரங்களாகிய நிலைகள் கூடுமாறு வலிமை மிக்க வினைப் பயன்களாகிய `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம்` என்னும் பாவங்கள் எட்டும் மாயேயமாய்ப் பொருந்தும். அதனால், குழவி தனது வினை நுகர்ச்சிக்குரிய தன்மைகள் யாவும் நிரம்பப் பெறும்.

குறிப்புரை :

``மாயாள்`` எனவும், `கிளை` எனவும் உருவகமாக்கிக் கூறியது, குழவியது அறிவைச் செவிலிபோல வளர்த்தல் தோன்றுதற்கு. `துரியமும்` என்பதும் பாடம். `கான்மிகம்` என்பது ``காமிகம்`` என நின்றது. தன்மம் முதலிய புத்தி குண பாவங்களைக் கூறியது குழவி நிரம்பிய வளர்ச்சி உடையதாதலைக் குறித்தவாறு. `பொருந்தும்` என்பது சொல்லெச்சமாய் நின்று ``எழ`` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று. `மாயேயம் எட்டாதல் பொருந்தும்` என மாற்றி உரைக்க. `மறை வாக்குப்போலச் சொல் உளதாம்` என்க. அஃதாவது `தெளிவான உணர்வுநிலை உளதாம்` என்றபடி. இதனால், சிவபெருமான் குழவிக்கு உணர்வு நிரம்பச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே. 

பொழிப்புரை :

எலும்புகளைக் கழிகளாகவும், நரம்புகளைக் கயிறுகளாகவும், குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண்ணைச் சுவர்களாகவும் பொருந்த அமைத்து, உயிர் இன்புற்று வாழ்தற் பொருட்டு இல்லம் ஒன்றை ஆக்கி, அளித்த, நீதி மிக்கவனாம் நல்லவனாகிய ஒருவனை (சிவபெருமானை) நான் நினைக்கின்றேன்.

குறிப்புரை :

`அவ் இல்லத்தில் வாழும் நீவிரும் அவனை நினைத்தல் வேண்டும்; நினையீராயின், நன்றிகொன்றீராவீர்` என்பது கருத்து. மிடைந்து - கழிகள் நெருங்க வைத்து. ``என்பால்`` என்றற்கேற்ப, `நரம்பால், செம்பாலால்` என உருபு விரிக்க. வரி - வரிய; இறுக. செம்பால் - இரத்தம். இறைச்சி திருந்த - ஊன் பதப்பட. ``இன்பால்`` என்பது ``நிலை`` என்னும் தொழிற்பெயர் கொண்டது. நிலை - நிற்றல்; இஃது ஆகுபெயராய், நிற்கும் இடத்தைக் குறித்தது. இறை - இறைமை; நடுவு நிலைமை. ``இறைபுரிந்து`` (குறள், 541) என்றார் திருவள்ளுவரும். நன்பால் ஒருவன் - நன்மைப் பகுதிக்கண் நிற்கின்ற ஒப்பற்றவன். இது தூலதேகத்தின் ஆக்கப்பாட்டினை விரித்தவாறு. இவ்வாறே,
``என்பினால் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் மில்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின்
மூழ்கி டாதே`` -தி.2 ப.79 பா.8
என ஞானசம்பந்தரும்,
``என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோ
ருருவ மாக்கி`` -தி.4 ப.5 பா.2
என நாவுக்கரசரும் அருளுமாறு அறிக.
இதனால், கருவுள் நின்ற உயிருக்குச் சிவபெருமான் தூல சரீரத்தைக் கூட்டுதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே. 

பொழிப்புரை :

கருவிற்குத் தூலதேகம் அமைந்த பின்னர் தாயது சந்திரகலையாகிய மூச்சுக் காற்றுச் சூரிய கலையொடு மாறு கொள்ளாமல் இயங்கிக் குழவியது தூலதேகம் முழுதும் பரவிக் குளிர்ச்சியைத் தந்து வளரப்பண்ணும். அவளது சூரிய கலையாகிய மூச்சுக் காற்றும் அவ்வாறே சென்று குழவியின் உடலில் வெப்பத்தை உண்டாக்கி அதனை அழியாதிருக்கச் செய்யும். இவ்வாறு அவ்விரு வகைக் காற்றினையும் சிவபெருமான் தாயது மூலத்தின்கண் உள்ள வெப்பம் மிக்கெழாது அளவில் நிற்குமாறு அமைக்கின்றான்.

குறிப்புரை :

`ஒத்து எங்கும் புகுந்து` என்பதை முன்னும் கூட்டி, `பால்வண்ணன் ஒத்து மேனி எங்கும் புகுந்து பதம் செய்யும்` எனவும், `பகலோன் ஒத்து உடல் எங்கும் புகுந்து இதம் செய்யும்` எனவும் உரைக்க. பால்வண்ணன் - சந்திரன். கருவில் நிற்கும் குழவிக்குத் தாயது மூச்சே மூச்சாவதன்றி வேறில்லையாகலின், பொதுப்பட வாளா ஓதினார். தேகத்தை அழியாமல் இருக்கச் செய்வது வெப்பமே யாகலின், அதனை, ``இதம்`` என்றார். பதம் குளிர்ச்சியாதல் வெளிப்படை.
இதனால், சிவபெருமான், கருவினுள் குழவியது தூல தேகத்தை வளர்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 

பொழிப்புரை :

கருவினுள் வீழ்ந்த உயிர் அவ்விடத்தே இறக்கும் ஊழ் உளதாயின், பதிந்த கருவைச் சிவபெருமான் பலநிலைகளில் பல்லாற்றான் அழிந்தொழியச் செய்வான். அவ்வாறின்றிப் பிறந்து வாழும் ஊழ் உளதாயின், இடையூறுகள் பலவற்றால் தாக்கப்படுகின்ற வினைக்கட்டுடைய அக்கருவைச் சிவபெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் சுழிகளில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோற் குவையிலிருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும், நெருப்பாலும் அழியாது காப்பான்.

குறிப்புரை :

ஒழி - ஒழிதல்; அழிதல். முதனிலைத் தொழிற்பெயர். ``செய்யும்`` என்பது முற்று. ``வினையுற்ற நாள்`` என்பது தாப்பிசையால் முன்னரும் சென்றியையும். மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. உயிர் மண்ணில் வாராது கருப்பையுள் நிற்கும் காலத்தை ``வழி`` என்றார். ``சுழிபல வாங்கி நீராட்டி, வைத்தழு வாங்கிச் சுடாமல் வைத்தான்` எனக் கூட்டுக. வை - வைக் கோல். வைக்கோற் குவையைத் `தழு` என்றல் வழக்கு.
இதனால், கருவைச் சிவபெருமான் வினைக்கேற்றவாறு அங்கே அழித்தல், காத்தல் இரண்டனையும் செய்தல் கூறப்பட்டது.
குழவி கருவினுள் அழியாது தப்புதலை மாணிக்க வாசகர் போற்றித் திருவகவலுள் பலபட விரித்தருளிச் செய்தார்.
``கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவதாயும்
பரிணமித் தழிவதாயும் பாலனாய் அழிவதாயும்``
எனச் சிவஞான சித்தி (சூ. 2.93) யும் கூறிற்று.

பண் :

பாடல் எண் : 14

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே. 

பொழிப்புரை :

தந்தையது வெண்டுளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த வெண்டுளியும், அவ்வாறே தாயது செந்துளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த செந்துளியும் கலந்து, பன்னிரண்டு அங்குலமாகிய தாயது மூச்சுக்காற்றில் நான்கு அங்குலம் புறத்தே போந்தொழிய, எட்டங்குலமே உட்புகுதலால், அக் கரு தனது கையால் எண்சாண் அளவினதாய் வளரும்.

குறிப்புரை :

யோனி, ஆகுபெயர். மூச்சுக் காற்று நான்கு அங்குலம் ஒழிய, எட்டு அங்குலம் உட்புகும் என்பது நன்கறியப்பட்டதாகலின், அக்காற்றினை எடுத்தோதாராயினார். புறப்பட்டு `புறப்பட` என்பதன் திரிபு. ``அக் கரம்`` என்றது, `அக்குழவியின் கரம்` என்றவாறு. எட்டும் - நீட்டியளக்கின்ற.
இதனால், உடம்பு எண்சாண் ஆகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே. 

பொழிப்புரை :

ஒருவன், ஒருத்தி ஆகிய இருவரது இன்பநுகர்ச்சிக் காலத்தில் கருவைத் தோற்றுவிக்கப் புகுந்த சிவபெருமான், அவ்வொருத்தியது கருப் பையினுள் ஓர் உடம்பைக் கொணர்ந்து வைத்த கொடைத் தொழிலாலே வெள்ளிய துளிகள் பலவற்றுள் ஒரு துளியின்கண்ணே முப்பத்தொரு கருவிகள் ஆகிய மாயா காரியங்கள் சேர, அவற்றால் முதற்கண் ஒரு பிண்டத்தை அமைக்கின்றான்.

குறிப்புரை :

மோகம் - மோகினி. ஆன்ம தத்துவத்திற்கும் இது வழிமுறையாற் காரணமாதல் பற்றி இதனையே கூறினார். `இரண்டெட்டும், மூவைந்துமாகிய மோகத்துள்` என்க. மோகம், கருவியாகுபெயர். ``கோசம்`` என்பது உயிரெதுகை.
இதனால், பரசரீரத்துள் குண சரீரமே யன்றிக் கஞ்சுக சரீர காரண சரீரங்களும் கூட்டப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. 

பொழிப்புரை :

உடம்பிலே பொருந்தியுள்ள மயக்கத்தை உடைய ஐம்பொறிகளும் அவ்வுடம்பையே என்றும் பற்றுக்கோடாகக் கொள்கின்றன. அதுபோலவே முட்டை வடிவாகத் தோன்றும் கருவைப் பற்றியுள்ள உயிரும் அக்கருவையே பற்றுக்கோடாகக் கொண்டு தாயின் கருப்பைக்குள் இருக்கும்.

குறிப்புரை :

இது, கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாத பிண்டமாகிய கருவில் உயிர் செயலற்றிருத்தல் எவ்வாறு என்பார்க்கு, `செயலின்றி, அறிதல் மாத்திரையாய் நிற்கும்` என ஐயம் அகற்றியவாறு. ``பிண்டம்`` என்றது உடம்பை. `மரித்தது` என்பது பாடம் ஆகாமை அறிக. விந்துவை அடக்கிக் கொள்ளுதலால் கருப்பை ``நாதம்`` எனப்பட்டது. `பிறவற்றை நோக்க அறிவாய் நிற்கின்ற ஐம்பொறிகள், அவ்வறிவுத் தன்மை யில்லாத உடம்பிலே நிற்றல் போல, சடம் போல்வதாகிய பிண்டத்தில் சித்தாகிய உயிர் நிற்கும்` என்பதாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன்
அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி
நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே. 

பொழிப்புரை :

எனது உடலில் நிற்கின்ற சிவபெருமான் ஒவ்வோர் உயிர்க்கும் கருவில் அதன் விதியாகிய எழுத்தோலையைத் தலையிலே வைத்து, தானே இயங்குதல் உடைய யந்திரம் போன்ற ஐந்து உடல்களை நிலைபெறச் செய்தளித்து, அவ் ஐந்துடல்களில் வேறு பட்ட, நிலையான முப்பது கருவிகளை அமைத்து, ஒன்பது வாய்களை உடைய ஒரு துருத்தியைச் செய்து தருகின்றான்.

குறிப்புரை :

ஓலையை ``இலை`` என்றது, `பத்திரம்` என்னும் வடநூல் முறை. அதன்கண் பொறிக்கப்படுவது எழுத்து. ``அலைப் பொறி`` என்பதில் அகரத்தைத் துகரமாக மயங்கினமையின், பாடம், ``துலைப் பொறி` எனப் பிழைபட்டது.
ஐந்து உடல், மேலே சொல்லப்பட்டன. (பாடல் - 402, 424) நிலைத்தல், தம் காரியம் அழியினும் தாம் அழியாது நிற்றல். முப்பது கருவிகள், ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவங்களில் புருடன் ஒழிந்தவை. புருடன் தனித் தத்துவம் அன்றாதலின் அதனை நீக்கி ஓதினார். `நீர்மையாக` என ஆக்கம் வருவித்து `அவற்றின் தன்மை தோன்ற` என உரைக்க.
உலைப் பொறி - துருத்தி. `ஒன்பதில் உலைப்பொறி ஒன்று செய்தான்` என மாறிக் கூட்டுக. ஒன்பது, எண் ஆகுபெயர். `ஒன்பதில்` என்பதில் இல், ஐந்தாம் உருபு. ``கரு`` என்றதை ``ஈசன்`` என்றதன் பின்னர்க் கூட்டி, இரண்டையும் முதற்கண் வைத்து உரைக்க. ஒன்பது வாயையுடைய துருத்தி, இல் பொருள் உவமை. இஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது. `ஒன்பது வாய்கள்` இவை என்பதை அடுத்துக் காண்க.
இதனால், துருத்திபோல் அமைந்த தூல உடம்போடே ஏனை நான்குடம்புகளும் ஒட்டிக்கிடக்கச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் வனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே. 

பொழிப்புரை :

ஒருவனும், ஒருத்தியும் ஆகிய இருவர் இன்பம் நுகர்தற்கண் பொருந்த வைக்கும் மண்ணால் துன்பத்திற்கு ஏதுவான கலங்கள் பலவற்றையும் செய்பவன் ஒருவனே. அப் பல கலங்கள் ஆவன, நீர்ச்சால்கள் ஒன்பதும், அவற்றில் நீரை முகந்து ஆள்கின்ற கலயங்கள் பதினெட்டுமாம். இவ்வாறு குயவனது சூளை கலங்களை உருவாக்கிற்று. அதனாலே கலங்கள் உளவாயின.

குறிப்புரை :

மண், கருப் பிண்டம். ``கலசம்`` என்றது, `கலம்` எனப் பொதுப்பட நின்றது. உடம்பு ஒன்றேயாயினும், அதன் உட்கூறுகளைப் பகுத்துணர்த்துதற்குப் பலவாகக் கூறினார். அணைவான், உயிர், ஒன்பது, ஒன்பான் துளை (நவத்துவாரம்). அவை, கண் இரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, வாய் ஒன்று, எருவாய் ஒன்று, கருவாய் ஒன்று. இவை நீர்வடிவாய்க் கழியும் கழிவுப் பொருள்கள் வெளிப் படும் பெருவாயில்களாதல் பற்றி ``நீர்ச் சால்`` என்றார். பதினெட்டா வன, நானூற்று ஐம்பதாம் திருமந்திரத்தில் குறிக்கப்பட்ட கருவிகள். அவை அருவப் பொருளாய் நின்று இவ்வாயில்கள் பயன்படச் செய்தலின், `கலயம்` என்றார். சூளை இறைவன் செயல். விளைந்தது, கிடைத்தது; இவ்வொருமை தொகுதி மேல் நின்றது. `தான், ஏ` அசைநிலைகள்.
இதனால், உயிர்களின் பொருட்டு உடம்பை அமைக்குமா றெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீரதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே. 

பொழிப்புரை :

உலகீர், வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகளாகிய ஆறும் கருவிலே அமைக்கப்பட்டன என்பதை அறியமாட்டீர். அதனால், அவற்றில் அழுந்துதலின்றி நீங்கமாட்டீர். அவ்வுடம் பிற்றானே நல்லன பல பெருகுமாற்றையும், சிவபெருமான் அந்நல்லனவற்றால் பல பயன்கள் விளைய வைத்திருத்தலையும் உணர்ந்து அடையமாட்டீர்; ஆயினும், நீவிர் அனைவீரும் பிண்ட மாகிய உங்கள் உடம்புகள் தாயர்தம் வயிற்றில் பத்துமாதம் தங்கி வளர்ந்து வந்ததை அறிவீர்கள்.

குறிப்புரை :

`அதனால் பயன் என்னை` என்பது குறிப்பெச்சம். வாழ்வில் நிகழும் ஆறு மேலே சொல்லப்பட்டன. (தி.10 பா.440) `அதனில்` என்பதில் சுட்டு, ஆக்கத்தைக் குறித்தது. குணங்கள் தன்மைகள். அவை அறவுணர்வும், இறையுணர்வும் பற்றி எழும் விருப்பமும், செயல்களும். சித்திகள் - அவற்றின் பயன்கள். `இட்டது, ஆனது` என்பன தொழிற் பெயர்கள். `ஏனையவற்றை அறியாவிடினும், பிண்டம் பத்து மாதம் தங்கிப் பிறந்ததை அறிவீர்` என இகழ்ந்தவாறு. இவ்விகழ்ச்சி, முற்கூறிய அறியாமைபற்றியதாதல் அறிய.
இதனால், சிவபெருமான், `வேம்பினோடு தீங்கரும்பும் விரவி ஊட்டுதல்போல` (தி.7 ப.46 பா.2) உயிர்கட்கு வினைப் போகத்தை நுகர் வித்தலோடு, மெய்யுணர்வைப் பெறுவித்தற்பொருட்டும் உடம்பைக் கருவினில் தோற்றுவித்துக் காத்துத் தருகின்றான் என அதன் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே. 

பொழிப்புரை :

சிவபெருமான், உடலை அமைத்து, அதில் உயிரைக் கூட்டிய குறிப்பை உணர்ந்து, அவ்வுடல் நிலை பெறுதற் பொருட்டு அதில் நீர்மடைபோல் உள்ள ஒன்பான் துளைகளையும் அமைத்து, உறுதிப்பாடுள்ள நெஞ்சத் தாமரையின் மேல் தனது உருவத்தைத் தீயின் முனைபோல வைத்துள்ள அவனையே கூடி நான் இன்புறுகின்றேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு அவற்றை உணர்ந்து அவனைக் கூடுதலே உடல் எடுத்ததன் பயன்` என்பது கருத்து. ``உயிர் வைத்தவாறும்`` என்பதன்பின், `உணர்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``மடைவைத்த`` என்பதில் வைத்த, உவம உருபு. திடம், உண்மை அன்பு. `இருதய கமலத்தின் மேல் இறைவன் தீக்கொழுந்து வடிவாய் உள்ளான்` என, உபநிடதங்களில் தகர வித்தை கூறும் வழிகூறப் பட்டது. யோகியர் அதனையே நினைத்தலின், ``தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசன்`` என்றார். ``சென்னி`` என்றது மேல் இடத்தை. உடம்பொடு நிற்குங்கால் தியானத்தாலும், பாவனையாலும் இறைவனைக் கூடும் இடம் இருதயமும், புருவ நடுவுமேயாக, அவற்றை யொழித்து `சென்னித் தாமரை` என மொழிமாற்றி, உடம்பை விட்டுப் போகுங்கால் பற்றும் இடமாகிய பிரம ரந்திரத்தைக் கொள்ள வேண்டாமை அறிக. ``கைகலந்தேன்`` என்பதில் கை, இடைச்சொல்.
இதனால், உடம்பினை அளித்த தலைவனது குறிப்பை உணர்ந்து, அதன்கண்ணே அவனைக் கூடும் முறையறிந்து கூடுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.

பொழிப்புரை :

நான்கு வேத சிவாகமங்கள் அனைத்திலும் கேட்டு நின்றது, `என்றும் அழிவில்லாத பேரொளியாகிய சிவபெருமானே உலகனைத்திற்கும் முதற்காரண வடிவாய் நின்று அவற்றைக் கோக்கின்றான்` என்பது. எனவே, தாயது வயிற்றில் நெகிழ்ந்து பட்ட கருவை உறுதிப்படுத்தி உருவாக அமைப்பவன் அவனே. ஆதலின், தந்தை தாயாரது உடற்கூட்டம் அவனது செய்கைக்கு ஒரு கருவியாய் அமையும் அளவேயாம்.

குறிப்புரை :

மூட்டுதல், தேர் உறுப்புக்களை ஒருங்கிணைத்துத் தேராக்குதல்போல, உலகுறுப்புக்கள் பலவற்றைத் தொகுத்து உலக மாக்குதல். `யோனி` என்பதற்கு `வாயில் அல்லது காரணம்` என்பதே பொருள். உலகிற்கு முதற்காரணம் மாயையாயினும், வித்திற்கு நிலம் போல இறைவன் அதற்கு நிலைக்களமாதல் பற்றி அவனையே, `முதற் காரண வடிவினன்` என்று நூல்கள் சில இடங்களிற் கூறும். அவ் வாற்றால், ``முதல் யோனி மயன் அவன்`` என்றார். `அவன் மூட்டு கின்றான்` என முன்னே கூட்டுக. ``கேட்டு நின்றேன்`` என்பதன்பின், `அது` என்னும் எழுவாயும், ``மூட்டுகின்றான்`` என்பதன்பின், `என்பது` என்னும் பயனிலையும் அவாய் நிலையாய் நின்றன. மூட்டு தற்கு, `உலகம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `கருவை உருவாக நீட்டி நின்று கூட்டுகின்றான்` என்க. `ஆகத்து உளவாதல்` என ஒருசொல் வருவிக்க. நேர்படுதல் - நினையாததொன்றாய் இடை வருதல். இவ்வாறு கூறியது, அதன் தலைமையின்மை உணர்த்தற்கு.
இதனால், கருவை உருப்படுத்துகின்றவன் சிவபெருமான் என்பதே உண்மை நூல் துணிபாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே. 

பொழிப்புரை :

தாய் தந்தையரது கூட்ட உறுப்புக்கள் தம்மிற் கூடிய காலத்து முன்பு தந்தையுடலில் நின்ற கரு, தாயது கருப்பையுட் சென்று கலந்து முட்டை (பிண்டம்) ஆகும். அம்முட்டையினுள் நீர்க்குமிழியில் நிழல்போல நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் பருவுடல் எங்கும் பரந்து அதனைத் தாங்கி நிற்கும்.

குறிப்புரை :

`இவ்வாறு தாங்கிநிற்றல், அவன் திருவுளக் குறிப்பால் அல்லது ஆகாது` என்பது கருத்து. காவுடை - சுமையாதல் உடைய. ``தீபம்`` என்றது, கருவை என்பதை 478 ஆம் திருமந்திரம் பற்றி அறிக. இவை இரண்டானும், `கரு, பருவுடம்பு` என்பது கூறினார். நுண்ணுடம்புண்மையை உணராதார், `இப்பருவுடம்பே உடம்பு` என மயங்குவராதலின், அவர், `கருவுற்பத்தியில் இறைவன் திருவருள் என்பது இல்லை` என்றலும் மயக்க உரையேயாம் என்றற்குப் பருவுடம்பிற்குப் பற்றுக்கோடு நுண்ணுடம்பாதலை ஓதினார். குமிழி யில் நிழல், நுண்ணிதாய் உள்நிற்றற்குக் கூறிய உவமை. பாருடல் - பருவுடல். இத்திருமந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், மேலதற்கு ஏதுக்கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 

பொழிப்புரை :

நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந் திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவ பெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.

குறிப்புரை :

நுண்ணுடம்பு இல்லையேல், பருவுடம்பு பயனிலதாம் என்பது கூறியவாறு. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் வான் முதலிய மாபூதங்கள் ஐந்தனையும் முறையே தோற்றுவித்துப் பின் அவற்றின் குணமாய்ச் செவி முதலிய ஞானேந்திரியங்கட்குப் புலனாய் வந்து பொருந்துதலால், `நிருவிகற்ப ஞானம்` எனப்படும் பொதுவுணர்வும், பின் அவற்றை மனம் முதலிய அந்தக் கரணங்கள் பற்றிக்கொள்ளுதலால் `சவிகற்ப ஞானம்` எனப்படும் சிறப்புணர்வும், தோன்றுதலின், `நுண்ணுடம்பு இல்வழி, யாதோர் உணர்வும் நிகழாது` என்பதனை,
``ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்கள் என்று
பேசுமாத் திரைகள் ஐந்தும் பிறக்கும்பூ தாதிகத்தின்;
நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்``
எனவும்,
``சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்
கேற்றமாம் ஓசை யாதி இருங்குணம் இயைந்து நிற்கும்``
-சிவஞானசித்தி சூ. 2.64.65
எனவும்,
அந்தக் கரணம் அடைவே உரைக்கக் கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - புந்தியிவை
பற்றிஅது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர். -உண்மைவிளக்கம் - 17
எனவும் கூறுமாற்றான் அறிக. மாயா காரியங்களாகிய இக்கருவிகளின் வழி வரும் உணர்வெல்லாம் புறவிடயமேயாகலின், அவையெல்லாம் பாசஞானமே என்க. ஒட்டிய பாசம் - அவையே தானாகப் பொருந்திய மாயாகாரியங்கள். ``உணர்வென்னும் காயம்`` எனக் காரணத்தைக் காரியமாக ஒற்றுமை வழக்காற் கூறினார். கட்டி அவிழ்த்தற்கு `உயிர்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. இது முதற் பதின்மூன்று திருமந்திரங்கள் அந்தாதியாய் வரும்.
இதனால், பருவுடற்கு நுண்ணுடம்பு இன்றியமையாததாதல் கூறுமுகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே. 

பொழிப்புரை :

உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

நூல்கள் என்றது சொற்பிரபஞ்சத்தை. அவை நிவிர்த்தி முதலிய கலைகளில் வைகரி முதலிய வாக்குக்களாய் நிற்றலை அறிந்துகொள்க. வாக்குகள் சுத்த மாயையின் காரியங்களாம். அதனால், அவை மயக்கத்தை நீக்கித் தெளிவுதரும் என்க. `பாச ஞானத்தால் மயங்கும்படி பொருட் பிரபஞ்சத்தால் உயிர்களைக் கட்டி வைத்த சிவபெருமான், பின்னர் அதினின்றும் நீங்கிப் பசுஞானமும், பதிஞானமும் முறையானே எய்தி வீடுபெறுதற்குச் சொற்பிரபஞ்சத்தை யும் அமைத்துள்ளான்` என்றவாறு. `வேதமொடு` என்ற எண்ணிடைச் சொல் தொகுத்தல்.
இதனால், மேல் ``கட்டி அவிழ்த்திடும்`` என்றவழி, `அவிழ்த் தற்கு வாயிலாவன எவை என்னும் அவாய்நிலை நிரப்பப்பட்டது`. சிவபெருமான் கருவினுள் வாக்குகளைக் கூட்டுதல் மேலே (தி.10 பா.454) கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

பொழிப்புரை :

அருளின்றிச் சிவன் இல்லை. சிவனின்றி அருள் இல்லை. ஆகவே, என்றும் அருளோடே நிற்கின்ற அவன், கருவில் வீழ்கின்ற அந்த ஒர் உயிரை வளர்க்கத் தருகின்றபொழுது திரோதான சத்தி, அதனை வளர்க்கின்ற செவிலித் தாய் என்னும் இரு தாயாரிடத்து அன்பை உண்டாக்கித் தருவான்.

குறிப்புரை :

அருளும், சிவனும் ஒன்றாதலைக் காட்டியது உயிரை வளர்த்தற்குக் காரணமும், வளர்க்கின்ற தாயும் அவனே ஆகின்றான் என்பதும் தோன்றுதற்கு. `அருட்சத்தியே உயிருக்கு நற்றாய்` என்னும் கருத்தால், திரோதான சத்தியையும் செவிலியாகக் கூறினார்.
இதனால், கருவைப் பிறப்பித்த பின்னர் வளர்ப்பவனும் சிவபெருமானேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

வகுத்த பிறவியை மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே. 

பொழிப்புரை :

பாசஞானத்தைத் தருகின்ற உடம்பை வளர்க்கின்ற அம்மையும், நூல்களை மிக உணர்த்திப் பாச ஞானத்தைப் போக்கிப் பசுஞான பதிஞானங்களைத் தருகின்ற அப்பனும் செய்யும் செயல்களாவன முறையே, ஐம்புலன்களைப் பகுத்துணரும் வகையில் உயிர்கட்குப் பலவகைப் பிறப்புக்களைத் தருதலும், அவற்றின் அறிவுக்கறிவாய் நிற்றலைப் புலப்படுத்துதலும் ஆகும்.

குறிப்புரை :

`பிறவியை வகுத்த` என மாற்றிக்கொள்க. தொகுத் தற்குச் செயப்படுபொருள் மேல் (தி.10 பா.468) `வேதம் முதலாக இசைந்த பரப்பினை` என்பதனால் பெறப்பட்டது. அருளை அம்மையாகவும், சிவனை அப்பனாகவும் கூறும் முறை பற்றியும் உடலை வளர்ப்பவள் தாயும், அறிவை வளர்ப்பவன் தந்தையுமாகச் சொல்லப்படும் வழக்குப்பற்றியும் `அருளே பிறப்பைத் தருவது` எனவும், `சிவனே வீடு தருபவன்` எனவும் இருபொருளும் வேறு வேறுபோலக் கூறினார். அங்ஙனம் கூறினாராயினும், `இருபொருளும் ஒன்றே` என்பது மேலைத் திருமந்திரத்தால் இனிது விளக்கப்பட்டது. ``வகுத்த, நீக்கிய`` என முன்னர் உடம்பொடு புணர்த்தலால் பொது வாகச் சுட்டிய வற்றைப் பின்னர்ச் சிறப்பாக இனிது விளக்கினார் என்க.
இதனால், கண்ணுதல்தானே உயிர்களைக் கட்டியும், அவிழ்த்தும் நிற்குமாறு (தி.10 பா.467) கூறப்பட்டது. அஃதாவது திரோதான சத்தி வழியே கட்டுப்படுத்தும், அருட் சத்தியால் வீடுபெறு வித்தும் நிற்பான் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 27

மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே. 

பொழிப்புரை :

மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப் பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.

குறிப்புரை :

தந்தை தாயரது வெண்டுளி செந்துளிகளை `வன்னி - நெருப்பு` என்றார், அவை அப்பூதத்தின் கூறாதல் பற்றி. அச்சு, வடிவை அமைப்பதாகலின் அதனைக் ``கற்பனை`` என்றார். `கற்பனையாக` என ஆக்கம் வருவிக்க. `பூண்பது` என்பது தொழிற்பெயர். வழி - வாயில்; காரணம். பதிவை ``பதி`` என்றது முதனிலைத் தொழிற்பெயர். ஆண்மை - ஆற்றல். ``ஆம்பதி`` என்றது இன எதுகை.
இதனால், கருவைச் சிவபெருமான் மூவகை அச்சுப்பொருந்த அமைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 

பொழிப்புரை :

கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப் பயனின்றி அழிந்தொழியும்.

குறிப்புரை :

வெண்டுளி கருவாதலும், செந்துளி அதனை வளர்ப்பதும் ஆகும். அதனால், அவை இரண்டின் தன்மைக்கும் ஏற்பக் கரு அமையும் என்க. பாழ் நவம், `பாணவம்` எனப் புணர்ந்தது. நவம் - புதிது புதிதாய்த் தோன்றும் பொருள். பாழ் நவம் - பாழாதற்கு ஏதுவாம் பொருள். ஆண், பெண் என்பவற்றுள் முன் வந்தவை ஆகுபெயர்கள்.
இதனால், முன்னை மந்திரத்துள் ``பூண்பது மாதா பிதாவழி போலவே`` என்றது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே. 

பொழிப்புரை :

துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.

குறிப்புரை :

வெளிக்காற்றை ஒருமுறை உள்ளே வாங்கிச் சிறிது நிறுத்திப் பின் வெளியே செல்லவிடுத்து மீண்டும் அவ்வழியே வாங்கி உள்ளே நிறுத்துதல் `ஒருமூச்சு` எனப்படும். இஃது எல்லா மக்கட்கும் இயல்பில் நிகழ்வதே. ஆழ்ந்த நினைவு இயற்கைக்கு மாறுபட்ட வழிச்செலவு, வருந்திச் செய்யும் தொழில் முதலியவற்றில் மூச்சின் இயக்கம் இயற்கை நிலையினின்றும் வேறுபடும். அவ்வாற்றால் கலவி முடிவின்கண்ணும் அது மாறுபடுதல் இயல்பே. அதனால், கலவிக்குப் பின்னும் கலந்தோர் இருவரும் தம் இயற்கை நிலையில் இருத்தல், கருக்குழவியது உடற்கட்டு முதல் நிலையிலே நன்கு அமைதற்கு வாயிலாய் அமைகின்றது என்க. மூக்கு, வாய் என்பவை வழியாக மூச்சு நிகழ்தலே வெளிப்படையாக விளங்கினும், உடம்பு முழுதும் உள்ள நுண்டுளைகள் அனைத்து வழியாகவும் அது நிகழ்வதேயாம். அதனால் தந்தை தாயரது - சிறப்பாகத் தந்தையது - மூச்சுக் காற்று, கருவுற்ற குழவிக்குப் பயன்தருவதாகும் என்க.
பாய்ந்திடும் யோகிக்கு - மூச்சு நெறிப்பட இயங்கி நிற்கும் யோகிக்கு - `பாய்ந்திடும் யோகிக்கு இவ்வகை பகுத்தறிந்து பாய்ச்சலும் ஆம்` எனக் கூட்டுக. ``பாய்ச்சல்`` என்றது, இங்கு மூச்சுக் காற்றினை.
இதனால், சிவபெருமான் குழவிக்கு வாழ்நாளை வரையறுக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே. 

பொழிப்புரை :

முன்னை மந்திரத்துள், `அஞ்சு, நாலு` எனக் குறிக்கப்பட்ட மூச்சுக்காற்று அங்ஙனம் இயங்கும்பொழுது இயல்பாக இயங்கும் அளவில் சிறிதே குறையுமாயின், குழவி குறளாய் (வளராது குட்டையாய்க் கிடப்பதாகப்) பிறக்கும். மிகக் குறையுமாயின் குழவி கைகால்கள் முடமாகப் பிறக்கும். இஃது ஆடவரது மூச்சுக் கணக்கேயன்றி மகளிரது மூச்சுக் கணக்கன்று.

குறிப்புரை :

எனவே, மகளிரது அப்போதைய மூச்சின் அளவு குழவி உடலைத் தாக்குதல் இல்லை என்பதாம்.

பண் :

பாடல் எண் : 31

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 

பொழிப்புரை :

கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.

குறிப்புரை :

`ஆதலின், கலவிக் காலத்தில் துணையர் மல சல உபாதிகள் இல்லாதவராய் இருத்தல் வேண்டும்` என்பதாம். இவ்வாறு இருத்தற்கு அவர் இயல்பிலே நல்லுடல் உடையராதல் வேண்டும். இந்நிலை குழவி வளர்ச்சிக் காலத்தில் எனவும் கருதுவர். நாயனார் முன்னும் பின்னும் கலவிக்காலத்தையே கூறி வருதல் நோக்கத் தக்கது.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் குழவியது வினைக் கீடாகச் சிவபெருமான் அதன் புற உறுப்புக்களையும், அகக் கருவிகளையும் அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே. 

பொழிப்புரை :

கலவிக் காலத்தில் கணவனுக்கு மூச்சுக்காற்று வலமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி ஆணாய் அமையும். இடமூக்கின் வழி இயங்கிக்கொண்டிருப்பின், குழவி பெண்ணாய் அமையும். இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண் டிருப்பின் குழவி அலியாய் அமையும். இவை நிற்க, கருத் தங்கும் காலத்தில் தாய் வயிற்றில் கீழ்ப்போகும் காற்றுப் போக்கப் படாமல் தடுக்கப்பட்டு மேலெழுந்து பாயுமாயின், இரண்டு கரு தங்கும்.

குறிப்புரை :

ஆண் பெண் அலியாதற்குத் தந்தையது கூறே முதற் காரணமாதலோடு, `பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை` என மேல் (பா. 474) எடுத்தோதியதனால், `வலத்தது` முதலியன தந்தையது மூச்சு என்பதும், குழவி ஒன்றும் பலவுமாய்க் கருக்கொண்டு பிறத்தற்குத் தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளே முதற்காரண மாதலோடு, ``மாதா உதரம் மலம்மிகில்`` என மேல் (பா.475) எடுத்தோதியதனால், ``அபானன் எதிர்க்கில்`` என்றது தாயது வயிற்றிலே என்பதும், பின்னர், ``கொண்ட கால் ஒக்கில்`` என்றதனால், ``வலத்தது, இடத்தது`` என்றதும் அக்காற்றையே யாதலும் அறியப்படும். மூன்றாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க. மேல், (பா. 472) ``ஆண்மிகில் ஆணாகும்`` என்றற் றொடக்கத்தனவாகக் கூறினமையின், இங்கு வலத்தது வாதல் முதலாகக் கூறப்பட்டவை, அவை அவ்வாறு மிகுதற்குக் காரணங்கள் ஆதல் பெறப்படும். அதனால் இவை துணைக்காரணமும், மேற் கூறியவை முதற்காரணமும் ஆதல், விளங்கும். அபானன் எதிர்த்தலும் துணைக்காரணமேயாம். அதனால், இவை, அவற்றிற்கு இவ்வாறு ஒருதலையாக வேண்டப்படாமையும் பெறப்படுவதாம். இவை எல்லாம் தந்தை, தாய், குழவி இவரது வினைக்கீடாகவே நிகழும் என்பது அறிக.
இதனால், குழவியது அச்சு அமைப்பிற்கும், எண் அமைப் பிற்கும் துணைக்காரணமாவன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே. 

பொழிப்புரை :

கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.

குறிப்புரை :

``ஒத்து`` என்றது, இடம், அளவு இரண்டற்கும் ஒப்பக் கூறியது. அதனானே, `அளவு ஒவ்வாதொழியின், அழகின்றி யிருக்கும்` என்பது பெறப்படும். `மாறிடில்` என்னாது, ``குழறிடில்`` என்றார், `பன்முறை மாறி நிகழின்` என்பது அறிவித்தற்கு.
குழவி ஆணும், பெண்ணும் ஆதற்குத் தந்தையது மூச்சுக் காற்றுத் துணைக்காரணம் என்பது மேற்கூறி, இதனால், `அதனோடு தாயது மூச்சுக்காற்று ஒத்தல் அழகிற்குக் காரணம்` என்பதும், தாயது மூச்சு ஒவ்வாமை கரு நிலைபெறாதொழிதற்குக் காரணம் என்பதும் கூறினார்.
``கொண்டதும்`` என்ற உம்மை, சிறப்பு. `கோல்வளை யாட்கு` என்பதனை, `கோல்வளையாள் கண்` எனத் திரித்து, `கோல்வளை யாள்கண் கொண்டதும் இல்லையாம்` என மாற்றுக. கொண்டது - கொண்ட கரு.

பண் :

பாடல் எண் : 34

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. 

பொழிப்புரை :

தாய் தனது கருப்பையில் ஏற்றுக்கொண்ட குழவி, முதற்கண் தந்தையது நடுநாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து, பின் தாயது கருப்பையினுள்ளே ஞாயிற்றின் நிறம்போலும் செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன்பின்னர், வகைபடத் தோன்றுகின்ற உறுப்புக்களை உடையதாகும்.

குறிப்புரை :

தால் - தாலு; நாக்கு. நாக்கின் முதலிடம் நடுநாடி (சுழுமுனை) ஆதல் பற்றி இவ்வாறு கூறினார். சோதி - தீ. பால் - பகுதி. `சோதியாம் பாலாய்` என ஆக்கம் கொடுக்க. இரண்டிடத்தும், `உள்ளே வளர்ந்து` என மாற்றுக. `தந்தையது, தாயது` என்பன ஆற்றலாற் பெறப்பட்டன. பொருந்துதல் - வளர்ந்து பொருந்துதல். கரு, தாயது செந்நீரால் முதற்கண் செந்நிறம் உடையதாயே இருக்கும் என்க.
தந்தையது வெண்டுளியை, `நீர்க் கூறு` என்பராயினும், அதன்கண் உள்ள உயிராற்றல் தீயின் கூறேயாதலை இந்நூலால் அறிகின்றோம். இவ்வுயிராற்றலை, இக்காலத்தார் `அணு` என்பர். `நீர்` என்னாது, `துளி` (விந்து) என வழங்குதலும் நுண்ணிதாதல் பற்றியும், கருவாகி நிலைபெறுதல் சிறிதளவேயாதல் பற்றியுமாம். தந்தையது உடற் கூற்றில் வளரும் உயிராற்றல், தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளினுள் புகுந்து கெடாது நிற்றலே கருத் தங்குதலாம். குழவி ஒன்றாதல் பலவாதற்கும் உயிராற்றல் புகப்பெறும் பூப்புப் பொருள்களின் எண்ணிக்கையே காரணம். இக் காரணங்கள் முதற் காரணங்கள் ஆதலின், பிறவாறு மேற்கூறியன பலவும் துணைக் காரணங்களேயாம் என்க. தாயது வயிற்றில் வந்தபின் வளருமாறு கூறுவார், அதற்கு முன்னர் வளர்ந்தவாறும் உடன் கூறினார். இதனால், கரு வளருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே. 

பொழிப்புரை :

தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள்காறும் கருப் பையிலே வளரும். பத்தாந்திங்களே பிறக்கும் பருவமாக, அப்பொழுது நிலத்தில் வந்து சேரும். வந்தபின் தாய் தந்தையரைப் புறந்தருபவராகப் பொருந்தி வளரும். அவ்வளர்ச்சி, சுவரெடுத்தல், ஆடைநெய்தல், மாலைதொடுத்தல் முதலியவற்றிற்போலக் கட்புலனாகாது, மாயையினாலே கணந்தோறும் நிகழ்தலை ஒருவரும் காணவல்லரல்லர்.

குறிப்புரை :

`வளர்ந்தபின் அவ்வளர்ச்சியைக் கண்டு வியப்ப தல்லது, வளர்ச்சி கட்புலனாகாது` என்றற்கு ``மாயையினாலே`` என எடுத்தோதினார். இதனால், மாயையின் ஆற்றலும் அறியப்படும் என்க. அருவம் - கட்புலனாகாமை. ஆவது - வளர்வது; என்றது தொழிற்பெயர். `அருவமதாகிய ஆவது` என்க.
இதனால், கரு, கருப்பையுள் வளர்ந்து குழவியாய்ப் பிறக்குமாறும், பிறந்து வளருமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 36

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே! 

பொழிப்புரை :

கருவை இட்டவனாகிய தந்தையும் அதனை இட்டமை இடாமைகளை அறிந்தானில்லை. ஏற்றவளாகிய தாயும் அதனை ஏற்றமை ஏலாமைகளை அறிந்தாளில்லை. அக்கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணியாக்குகின்ற பொற்கொல்லனாகிய பிரமன் அவற்றை அறிந்திருந்தும் அவருள் ஒருவர்க்கும் சொல்லிற் றிலன். வினை நிகழ்ச்சி இருந்தவாறே அப்பொற் கொல்லனுக்குப் பணிக்கின்ற தலைவனாகிய சிவனும் அவ்விருவரோடே இருக் கின்றான்; அவனும் அவர்க்கு அவ் வினையியல்பையே உரைத்திலன். அந்தோ! இம்மாயையின் வஞ்சனை எவ்வகையினதாய் உள்ளது!

குறிப்புரை :

`இதனினின்றும் உயிர்கள் உய்திபெறுதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ``பட்டாங்கு`` என்பதில் படுதற்கு வினை முதலாகிய `வினை` என்பது வருவிக்க. சொல்லுதல் - பணித்தல். ``பரமன்`` என்றது, `தலைவன்` என்னும் பொருட்டு. கெட்டேன், இரக்கக் குறிப்பு இடைச்சொல். தட்டானும், பரமனும் உரையாமை, இட்டானும் ஏற்றாளும் தம்மை எண்ணாமையாலாம்.
இதனால், கருவினது தோற்றம் முதலியவற்றிற்குத் தந்தை தாயரே உண்மை நிமித்த காரணர் அல்லாராதல், அவர் மாயையின் வலியைக் கடக்கமாட்டாமையின் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொண்புற நாடிநின் றோதலு மாமே  

பொழிப்புரை :

ஒருவன், ஒருத்தி ஆகிய இருவர் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப் பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின், அவ்வுயிர், தான் நிலத்தில் வந்து சேர்தற்கு முன்பு கருப்பையினுள் உள்ள துன்பத்தால் `விரைவில் வெளிப்படல் வேண்டும்` என்று விரும்பிப் பெரிதும் முயன்று வெளிப் பட்டுப் பிறந்த செய்தியைப் பின் அறிவுடையோர் அவ்வுயிரும் தம்போல அறிவைப் பெறுமாறு அதற்குச் சொல்லுதல் கூடுமோ!

குறிப்புரை :

`இருவரும் கூடினமை தம் இன்பம் கருதியல்லது, ஓர் உயிர் மக்கள் உடம்பைப்பெற்று உய்தல் வேண்டும் என்னும் கருத்தினால் அன்று` என்பார் ``இன்புற நாடி இருவரும் சந்தித்து`` என்றும், `அக்கூட்டத்தால் அவர் பின்பு குழந்தையை வளர்க்கக் கடமைப்பட்டவராய்த் துன்புறுகின்றனர்` என்பார், ``துன்புறு பாசத்தில் தோன்றி`` எனவும் கூறினார். இவையெல்லாம் பெரும்பாலராய் உலகியலின் நிற்பாரது செயல்பற்றிக் கூறியன. `உலகுய்ய மகப்பெறுவான்` (தி.12 பெ. பு. திருஞான - 59) சந்திப்பாரும் உளர் என்க. ``சந்தித்து`` என்றதனை, `சந்திக்க` எனத் திரிக்க. ``நிலத்தின்`` எனப்பின்னர் வருகின்றமையின், ``உற நாடி`` என்றொழிந்தார். ஒண்மை, `ஒண்பு` என வந்தது. ஒண்மை - அறிவு. `பிறத்தற்கு முன் தான் பட்ட துன்பத்தை உணரின், அவ்வுயிர் மீளப் பிறவி எய்தாது வீடடைய விரையும்; அறிவிப்பினும் அதனை அறியமாட்டாமையால், மேலும் அது பிறவிக்கே வழிதேடுகின்றது; இஃது அதன் வினையிருந்தவாறு` என்றதாம். நான்காம் அடி, இன எதுகை. `தொன்பு` என்பது பாடம் அன்று.
இதனால், இட்டான், ஏற்றாள் என்பவரேயன்றி இடப்பட்ட அது தானும் தனது நிலையைத் தான் அறியாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.

பொழிப்புரை :

குயிற்குஞ்சாகத் தக்கமுட்டையை அவ்வாறாதற் பொருட்டு அதன் தாய் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே கருதி அடை காத்தல்போல, சிவன் தனது மகவாகிய உயிர், உடல் பெற்றுச் செயற்படுதற் பொருட்டுக் கருவிலே இட, தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது, உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அதனைப் போக்கிவிட நினையாமலும், `ஏன் வந்தது` என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தாலாவதே.

குறிப்புரை :

குயில் தன் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிக்க அறியாமையால் காக்கையின் கூட்டில் அதனை இடும் என்பர். வளர்த்தல், இங்கு முட்டையை அடை காத்தல். ``குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட்டிட்டால்`` என்றது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அதற்கேற்ற பொருள் வருவிக்கப்பட்டது. அங்ஙனம் காக்கப்பட்ட கரு, தாயது விருப்பம்போல இல்லாமையும் காணப் படுதலால், அது, காக்கையது விருப்பத்திற்கு மாறாய்த் தோன்றும் குயிற்குஞ்சு போல்வதே என்றபடி ``இல்லை`` என்பவற்றை `இன்றி` எனத் திரிக்க. `வளர்க்கின்றவாறு மயக்கத்தாலாம்` என்க.
இதனால், `கருவாய்த் தோன்றும் குழவி, உண்மையில் சிவன் மகவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. 

பொழிப்புரை :

மரவகைகளுள் சில, கிழங்காய் நின்றே பயன் படும்; சில, முளையானபின் பயன்படும்; சில, முளைக்குப் பின் புதலாய் நின்று பயன்படும்; சில, காய்த்துப் பழமாய்ப் பயன்படும். அந்த அந்த மரவகைக்கு அந்த அந்தப் பொருளே உளதாகிப் பயன் தருதல்போலச் சிவபெருமான் மக்கள் உயிர்க்கேயன்றிப் பிற உயிர்கட்கும் அவ்வவற்றின் தோற்றத்திற்கு ஏற்ப அத்தோற்றப் பொருள்களாய் நின்று அவற்றைத் தோற்றுவிப்பன்.

குறிப்புரை :

`எல்லா மரங்களும் பழமாய்த்தான் பயன்படும் என்பதின்றிப் பல்வேறு வகையில் பயன்படுதல்போல, எல்லா உயிர்களும் மக்களேயாய் - அல்லது கருப் பையில் தோன்றுவனவேயாய் நின்று தோன்றும் என்பதின்றிப் பலவேறு வகையில் தோன்றும்` என்றற்கு இவ்வாறு உவமை கூறினார். `மரவகை` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. அதர் - வழி. இதனால், மக்கள் உயிர்களின் தோற்றத்தை இவ்வாறு செய்விக்கின்ற சிவபெருமான், பிற பிற உயிர்களையும் அவ்வவற்றிற்கு ஏற்ற பெற்றியால் தோற்றுவிப்பன் என்பது இதுபற்றி அறியப்படும் என ஒரு திருமந்திரத்தால் தொகுத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. 

பொழிப்புரை :

உலகம் ஒடுங்குங் காலத்து உடம்பும் பல தத்துவங்களாய் ஒடுங்கி, முடிவில் எல்லாவற்றுடனும் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடல் மீளவும் முன்போலத் தோன்றுதல் வேண்டும் எனச் சிவபெருமான் திருவுளம் கொள்ளின், கடல் நீரில் தோன்றாது நின்ற உவர்ப்புச் சுவை பின் தோன்றி நிற்கும் உப்பாகத் திரண்டு உருவெடுத்தல்போல, அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்போலத் தோன்றும்.

குறிப்புரை :

மாயையில் ஒடுங்கும் உலகத்தை, அதற்கு நிலைக்களமாதல் பற்றி முதல்வனிடத்தில் ஒடுங்குவதாகக் கூறினார். ``வேண்டில்`` என்றது இச்சையையும், ``திருவருளாலே`` என்றது கிரியையும் என்க. திரித்து - மீண்டு.
இதனால், உடம்பு ஒடுக்கமும், தோற்றமும் உடையதாதல் கூறப்பட்டது.
சிற்பி