இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம் 


பண் :

பாடல் எண் : 1

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 

பொழிப்புரை :

சிவநெறி ஒழுக்கமும், தவமும் இன்மையால் உயர்வு பெறாத மக்களை வேடமாத்திரத்தால் வழிபட்டுத் தானம் செய்வது, வறட்டுப் பசுவைப் பிறவி மாத்திரத்தால் வணங்கி உணவளித்துப் பாலைக் கறந்து பருக நினைத்தலோடு ஒக்கும். இனித் தானத்தை உயர்ந்தோரை அறிந்து செய்யாமல் எவரிடத்தும் செய்தல், ஒரு பயிரைக் காலம் அறிந்து செய்யாது, எக்காலத்திலும் செய்தலையும் ஒக்கும்.

குறிப்புரை :

பசுவினது வறட்டுத் தன்மையை அறிதலினும், காலத்தை அறிதல் அரிதாதல் பற்றி, உயர்ந்தோரை அறிதலின் அருமையை விளக்கப் பின்னும் அவ்வுவமையைக் கூறினார். இரண்டு உவமைகளானும் `உயர்ந்தோர் எய்தியவழி இகழ்ந்திராது ஏற்று வழிபட்டுத் தானம் செய்க` என்பதும் பெற்றாம். ``குனிந்து`` என்பது பொருளினும் சென்று இயையும். ``ஈந்தது`` என்றே போயினா ராயினும், `ஈந்து பயன்பெற நினைப்பது` என்பது உவமையால் விளங்கும். `அது பயிரும் ஆகும்` என்க. உம்மை, தொகுத்தல். இதனால், அசற்பாத்திரத்தில் செய்த தானம் பயன்படாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே. 

பொழிப்புரை :

பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.

குறிப்புரை :

``ஈவது`` முதலிய நான்கும் தொழிற்பெயர்கள். `தவிர்வன செய்வன` என்னாது ``யோக இயம நியமங்கள்`` என்றார், `அறநெறியளவில் நில்லாது, கடவுள் நெறியினும் சென்றவராதல் வேண்டும்` என்றற்கு. `அன்பால் தங்கும்` என உருபு விரிக்க. பின்னர் வந்த, ``அறிந்து`` என்னும் எச்சம் ``தங்காதவர்`` என்பதன் எதிர் மறையோடு முடிந்தது. இத்தொடர், `அந்நிலையில் நில்லாதவர்` என்னும் சுட்டளவாய் நின்றது, `அவர்க்கே` என்னும் ஏகாரம் தொகுத் தலாயிற்று. ``அன்றி`` என்பது முதலியவற்றை வேறு தொடராக்குக. `தகாதார்க்குக் கொடுக்கப்படும் பொருள் தீய வழியிற் சென்று பலர்க்கும் தீங்கு விளைக்குமாகலின், அக்குற்றம் பொருளை ஈந்தாரையே முன்னர்ச் சாரும்` என்பது கருத்து. அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால் அலறு முந்நீர்த் தடங்கடல் நடுவுள் தீவு பலஉள அவற்றுள் தோன்றி உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வார் மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேல் மன்ன ரேறே. -சீவகசிந்தாமணி - முத்தியிலம்பகம் , 27 என்றதும் காண்க. இதனால், அசற்பாத்திரத்தில் இட்ட தானம் பயன்படா தொழிதன் மேலும், துன்பம் பயக்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.

பொழிப்புரை :

குற்றம் நீங்குதற்கு நிமித்தனாய சிவபிரானுக்கும், சிவகுரவர்க்கும், சிவயோகியர்க்கும் குற்றம் கற்பித்து இகழ்பவன் பின் விளைவதை அறியான். அவன் பஞ்ச மாபாதகனிலும் பெரும் பாதகன். அதனால், அவன் பின்னர்ப் பெரு நரகில் வீழ்வான். இகழ்ந்து நிற்கும் அவன் பின்னொரு ஞான்று நல்லறிவைப் பெற்று அவர்களைப் புகழ்ந்து வழிபடுவானாயின், முன் செய்த பாதகத்தினின்றும் நீங்கி நரகம் புகாதொழிவான்.

குறிப்புரை :

முதலடியை மூன்றாமடிக்குப் பின்னர் வைத்து `மா நரகில் போம்` எனவும், `போதம் கற்கப் புகான்` எனவும் கூட்டி உரைக்க. இதனால், சற்பாத்திரராய் உள்ளாரை அசற்பாத்திரராக இகழ்தலால் வரும் குற்றம் கூறப்பட்டது. இதுவும் தானம் செய்வார்க்கு ஆகாமை பற்றி இவ்வதிகாரத்திற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. 

பொழிப்புரை :

`தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.

குறிப்புரை :

``அத்தனை`` என்றதனை, `மண்` என்றதற்கும் கொள்க. `இறைஞ்சாதார்க்கு ஈயினும்` என மேலே கூட்டுக. தானம் வாங்கு வோர் அதனைத் தமக்கு உரியதாக நினையாது சிவனுடையதாக நினைந்து, `சிவனுக்கு ஆகுக` (சிவார்ப்பணமஸ்து) எனக் கூறியே ஏற்றல் வேண்டும். அவ்வாறு ஏலாதார் சிவனது பொருளைக் கவர்ந்த சிவத் துரோகிகளாவர். அதனால், `அவரும், அவருக்குக் கொடுத் தோரும் நரகுறுவர்` என்றார். தானம் வாங்காது தம் பொருளை நுகர்வோரும் அங்ஙனமே நினைத்தல் வேண்டுமாயினும், அவர், `அங்ஙனம் நினைக்கும் உயர்ந்தோர்` எனத் தம்மைக் கூறிக் கொள்ளாமையின் அவர்க்கும், அவரொடு பழகுவோர்க்கும் பெருங் குற்றம் இல்லை`. தானம் வாங்குவோர் அத்தன்மையுடைய உயர்ந் தோராகத் தம்மைக் கூறிக்கொண்டு, தானம் செய்வாரை வஞ்சித்தலின் குற்றமுடையராகின்றனர். இதனை உட்கொண்டே திருவள்ளுவரும், நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். - குறள் - 276 என்றார். இனிக் கொடுப்பாரும் அவ்வாறே சிவனை நினைந்து, ஏற்போரைச் சிவனாகவும், பொருளைச் சிவனுடையதாகவும் கருதி `சிவனுக்கு ஆகுக` என்று சொல்லிலே கொடுத்தல் வேண்டுமாதலின் ``இருவரும்`` என்றார். ``ஈந்த`` என்னும் பெயரெச்சம் வினைமுதற் பொருண்மையும், கோடற் பொருண்மையுமாக இருநிலைமை எய்திநின்றது. இதனால், மேல், ``பெரும்பிழை`` எனப்பட்ட, அசற் பாத்திரத்தில் இடும் குற்றத்தால் விளையும் துன்பம் கூறப்பட்டது.
சிற்பி