இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை


பண் :

பாடல் எண் : 1

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

பொழிப்புரை :

கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமையேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!

குறிப்புரை :

``கற்றிருந்தார்`` என்றது ``கற்று வல்ல சான்றோர்`` என்றவாறு. ``உற்றிருந்தாரவர்`` என்றதில் அவர் பகுதிப் பொருள் விகுதி. ``நல்லன பலவும்`` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.
தாய், தந்தை, தமையன்மார் மாதுலன் முதலிய மூத்த உறவினர் இவரெல்லாம் ``குரவர்`` எனப்படுவராகலின், ``அவரை நிந்தித்தல் கூடாது`` என்பதனையும் இவ்வதிகாரத்துள் முதற்கண் வைத்துக் கூறினார். இனி ``கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குரவராதல்`` வெளிப்படை. அவரை, ``கற்றிருந்தார்`` என்பதனுள் அடக்கினார்; அவர்தாம் எழுத்தறிவிப்பவரும், நூற்பொருள் உணர்த்துபவரும், தொழில் கற்பிப்பவரும் முதலாகப் பல திறத்தராதலின்.

இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``ஓரெழுத்தொரு பொருள்`` என்னும் பாடல் முழுவதும் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், அது நாயனார் திருமொழியன்றாம். அதன் பொருளும், ``மந்திரம் ஒன்றை`` என வரும் திருமந்திரத்துட் பெறப்படுகின்றது.

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

பண் :

பாடல் எண் : 2

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.

குறிப்புரை :

``பத்தினிகள்`` என்பதில் விகுதி தொகுத்தலாயிற்று. தத்துவ ஞானம் நூலானும், அநுபவத்தானும் வருவது. பத்தினிகள் முதலிய மூவரும் நேரே குரவராகாவிடினும், தமது ஒழுக்கத்தால் உலகம் நன்னெறி நிற்கச் செய்தலால் உலக ஆசிரியராதல் பற்றி அவர்கட்குத் தீங்கு செய்வது உலகிற்கே தீங்கு செய்வதாய் முடிதலின், அதனால் விளையும் தீமை பெரிதாயிற்று. சதாநந்தி - சதா ஆநந்தி; எப்பொழுதும் இன்பம் உற்றிருப்பவர்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், உபதேச குரவரையே யன்றிப் பிற குரவரை இகழ்தலும் கூடா என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 

பொழிப்புரை :

மந்திரமாவனவற்றுள் ஒன்றையே உபதேசித்தவ ராயினும், அவரது மனம் நோவத் தீமைகளைச் செய்தவர்கள், இம் மண்ணுலகில் யாவரும் இகழ்ந்து ஒதுக்குகின்ற நாயாய் நூறுமுறை பிறந்து, பின்பு மக்களாய்ப் பிறக்கினும் புலையராய்ப் பிறந்து, இம்மை மறுமைகளில் யாதொரு பயனையும் எய்தாது வாளா இறந்தொழிவர்.

குறிப்புரை :

`ஒருபிறப்பில் குருவை இகழ்ந்தவர் பல பிறப்புக்களில் பலராலும் இகழும் நிலையை அடைவர்` என்பதாம். மந்திரத்தைப் பன்முறை கணித்துப் பயன் பெற்றவரை ``மாதவர்`` என்றார். `சுணங்கன்` என்பது கடைக்குறைந்தது. இத் திருமந்திரத்தின் பாடம் பெரிதும் வேறுபட்டுள்ளது.
இதனால், மந்திர குருவை (கிரியா குருவை) நிந்தித்தல் விலக்கப்பட்டது.
இதன்பின்னர் உள்ள, ``ஈசனடியார்`` என்னும் திருமந்திரம் அடுத்த அதிகாரத்ததாம்.

பண் :

பாடல் எண் : 4

சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே. 

பொழிப்புரை :

ஞான நெறியை உணர்த்துகின்ற ஞானகுருவின் திருமுன்பில், `பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்` என்னும் தீய சொற்கள் எவர் வாய்வழியாக நிகழினும் உலகில் நன்னெறி அழிந்து, மெய்யுணர்வும் இல்லாதொழியும். தொன்றுதொட்டு வரும் உலகியல் துறைகளும், மெய்ந்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுப் பல சமயங்களும் கெட, நாட்டில் பஞ்சமும் உண்டாகும்.

குறிப்புரை :

ஞானநெறி, `சன்மார்க்கம்` என வழங்கப்படுதலை அறிந்துகொள்க. ``பொய்`` என்றது உபலக்கணம்.
இதனால், ஞான குருவை இகழ்தல் பெரிதும் தீமை தருவதாம் என, அது விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே. 

பொழிப்புரை :

கன்மி ஞானிக்கு ஒப்பாதல் - அஃதாவது, ஞானிக்கு ஒப்பாகக் கருதி, ஞானகுரு இருக்கவும் அவனை விடுத்துக் கன்மியைக் குருவாகக் கொள்ளுதல், கையில் மாணிக்கம் கிடைத்திருக்கவும் அதனை எறிந்துவிட்டு, வெயிலால் வெதும்பிக் கிடக்கும் பரற்கல்லைக் கையில் எடுத்துச் சுமப்பவன் செயல்போலவும், கையில் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் இருக்க அவற்றை உண்ணாமல், பின்புதான் அழிதற்கு ஏதுவாகிய எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போலவும் ஆம்.

குறிப்புரை :

ஒப்பு - ஒத்தல். இஃது ஒப்பாகக் கருதிச் செய்யும் செயலின் மேல் நின்றது. கன்மி - `கன்மமே முத்தி தரும்; ஞானம் வேண்டுவதில்லை` என்பவன். இக்கொள்கையினரை, `கன்ம காண்டிகள்` என்பர். கன்மி ஞானிக்கு ஒத்தல், சுமப்பான் விதி போன்றும், கைப்பு இட்டு உண்பான் (செயல்) போன்றும் ஆம் என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், உண்மைக் குரவரது பெருமையை அறியாமையும் குற்றமாதல் கூறப்பட்டது.
சிற்பி