மூன்றாம் தந்திரம் - 2. இயமம்


பண் :

பாடல் எண் : 1

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே. 

பொழிப்புரை :

கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

குறிப்புரை :

எனவே, `யோகியாக வேண்டுவான், முதற்கண் இந்நிலையை முற்றப்பெறுதல் வேண்டும்` என்பதும், `முற்றப் பெறாத வழி, முற்றுப்பெறுமாற்றின் முயலுதல் வேண்டும்` என்பதும் பெறப் பட்டன. செய்யுட்கு ஏற்பச் சிலவற்றை உடம்பாட்டு முகத்தாற் கூறினா ரேனும், எல்லாவற்றையும் எதிர்மறையாகக் கூறுதலே கருத்தாம்; என்னை? `இயமம்` என்பதற்கு `விலக்கியன ஒழிதல்` என்பதே பொருளாதலின்.
இவற்றுள், திருவள்ளுவர், `கொல்லாமை, பொய்யாமை, (வாய்மை) கள்ளாமை, வெகுளாமை, காமம் இன்மை, (கூடா ஒழுக்கம் இன்மை) என்னும் ஐந்தையே துறவறத்துள் எடுத்தோதி, கரவாமையை (ஈகையை) இல்லறத்துள்ளும், `நிரம்ப உண்ணாமை, (மருந்து) கள்ளுண்ணாமை` என்னும் இரண்டனையும் பொருட் பாலுள்ளும் எடுத்தோதினார். அவை முறையே பொருளுள்ள வழி யும், உடல் நலம் நோக்கியவழியும் வேண்டப்படுவனவாதல் பற்றி.
அவர் கூறிய `வெஃகாமை, கள்ளாமை` என்பவற்றுள் வெஃகாமை பொருள் பற்றியே நிற்பது. கள்ளாமை பொருளன்றியும் புகழ், நூற்பொருள், மெய்ப்பொருள் உணர்வு முதலியன பற்றியும் நிற்பது. புகழ் முதலியவற்றைத் தாமே தலைவராய் நின்றும், வழிபட்டுக் கொள்ளாது இகலுரை கூறியும் கொள்ளக் கருதுதலும், பிறவும் கள்ளல் எனப்பட்டன. இஃது உணரமாட்டாதார், `கள்ளாமை இல்லறத்துள்ளும், வெஃகாமை துறவறத்துள்ளுமாக மாறிக் கூறற்பாலன` எனத் தாம் வேண்டுமாறே கூறிக்கொள்வர்.
இனி, விருப்பு வெறுப்பின்மையை, `வேண்டுதல், வேண்டாமை இலானடிசேர்ந்தார்` (குறள், 4) என்பதனுள்ளும், மாசின்மையை, ``மாண்டார் நீராடி``(குறள், 278) என்பதனுள்ளும் அவர் உய்த்துணர வைத்தமை அறிக.
வரையறையின்றிக் கிடப்பனவற்றை யாதானுமோராற்றால் வரையறைப்படுத்துக் கூறுதலே நூல்கட்கு இயல்பாகலின், இங்குப் பத்தினையே எடுத்துக் கூறினாராயினும், இவற்றோடு எண்ணத்தக்க பிறவும் கொள்ளப்படும் என்க. வரையறை இல்லவற்றை வரையறைப் படுத்தலை, ``சிறப்புடைப்பொருளைத்தான் இனிது கிளத்தல்`` (தொல். சொல். சேனாவரையம் 33) என்பர். இவ்வாறே தொல்காப்பியனார் சிறப்புடையவற்றைக் கிளந்தோதி, ஏனையவற்றை, `பிறவும்` எனப்புறனடை தந்து போதலை அவர் நூலுள் ஆங்காங்குக் கண்டுணர்க. நாயனார் இங்குப் `பத்து` என்று தொகைகொடாமை கருதத்தக்கது.
எள்கு உணன் - மறுக்கின்ற உணவை உடையான். திருவள்ளுவரும் குறைய உண்டலை, ``மறுத்துண்டல்`` (குறள், 945) என்பர். எள் குதல் - மறுத்தல். ``உணன்`` என்பது, ``உண்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அடியாகப் பிறந்த பெயர். ``ஊணன்`` எனப் பாடம் ஓது தலும் ஆம். `எண்குணன்` என்பது பாடம் அன்று. ``நல்லான்`` என்றது, இங்கு, ``பொறுமை உடையான்`` என்னும் பொருட்டாயும் ``அடக்கம்`` என்றது, ``அடக்குதல்`` என்னும் பொருட்டாயும் நின்றன. ``நல்லனாய்`` என்னும் ஆக்கமும், ``வெகுளியை`` என்னும் செயப்படு பொருளும் வருவித்துக்கொள்க. நடு - நடுவு நிலைமை. இதனை, ``சமநிலை`` எனவும், ``சாந்தம்`` எனவும் கூறுப. செய்தல், தனதாகப் பெறுதல்.
சிற்பி