மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்


பண் :

பாடல் எண் : 1

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

``பதுமம்`` முதலியவற்றின் வடிவத்தால் அவ்வப் பெயரைப் பெற்று பரந்து நிற்கும் ஆதனங்கள் யோக முறையில் பல உள்ளன. அவற்றுள் எட்டு ஆதனங்கள் தாழ்வில்லாது உயர்ந்தனவாய் நிற்க, அவற்றுள்ளும், ``சுவத்தி`` ஆதனத்தில் ஒருவன் இருப்பனாயின் யோகத்தில் மிக்கவனாவான்.

குறிப்புரை :

எனவே, ``சுவத்தி ஆதனம் ஏனை எல்லாவற்றினும் மேலானது`` என்பது பெறப்பட்டது. பங்கயம் - பதுமம்; தாமரை. `அவற்றுள் இருநாலும் சொங்கில்லை` எனக்கூட்டுக. சொங்கு - இழிவு. ``இழிவில்லை`` என்றது, ``உயர்ந்தன - உத்தமம்`` என்றவாறு. உத்தமாதனங்களை வருகின்ற திருமந்திரங்களுட் காண்க.
இதனால், ஆதனங்களின் இயல்பு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 

பொழிப்புரை :

பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.

குறிப்புரை :

ஆதனங்களில் விலக்குண்ணாத இடங்களில், ``உடலை நேரே நிமிர நிறுத்தி, இருகண்களாலும் மூக்கு நுனியை நோக்கி நிற்றல்`` என்பது பொதுவாகச் சொல்லுதலை உடைத்து. இதனுள், உடலை நேராக நிறுத்துதலைப் பத்திராதனத்திலும், மூக்குநுனியை நோக்குதலைச் சிங்காதனத்திலும் எடுத்தோதுவார். ஓர் அணைய - ஒன்றாகச் சேர. ஊரு - துடை. ``அழகுற`` என்றது, ``மலர`` என்றவாறு. ``தன்`` என்றது, பாதத்தை. ``அதனை, தன்`` என்பன பன்மை ஒருமை மயக்கம்.
இதனால், உத்தமாதனங்கள் எட்டனுள் பதுமாதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே. 

பொழிப்புரை :

``பதுமாதனத்தைச் சிறிது வேறுபடுக்கப் பத்திராதனமாம்`` என்கின்றார். பத்திரம் - வாள்.
பதுமாதனத்தினின்றும், வலக்காலை எடுத்து இடமுழந்தாள் மேலாக ஊன்றி, இரண்டு கைகளையும் அவ்வலக்கால் முழந்தாளின்மேல் நீட்டி, உடலை நேர் நிற்க நிறுத்தினால், அந்நிலை வாளின் வடிவிற்றாய், `பத்திராதனம்` என்னும் பெயரைப் பெறும்.

குறிப்புரை :

``அது பத்திராசனப் பரிசு பெறும்`` என மாற்றுக. பரிசு - தன்மை; என்றது, பெயரை. இதனைப் பிற நூல்கள் பிறவாறும் கூறும்.
இதனால், பத்திராதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே. 

பொழிப்புரை :

``பதுமாதனத்தை வேறொரு வகையாக மாற்றக் குக்குடாதனமாம்`` என்கின்றார். குக்குடம் - கோழி.
பதுமாதனத்தில் மேல்வைக்கப்பட்ட கைகளை உள்ளே விடுத்து நிலத்தில் அழுந்த ஊன்றி, அவ்வாறே முயன்று முழங் கையளவாக மேலெழுந்து சுமைமுழுதும் கைகளில் நிற்றலை அறிந்து வீழாது நின்றால், அந்நிலை கோழி வடிவிற்றாய், ``குக்குடாதனம்`` எனக் கொள்ளத்தகுவதாம்.

குறிப்புரை :

முதல் அடி பதுமாதனத்தின் பகுதியைக் குறித்தது. ``கொள்ளலும்`` என்ற உம்மை சிறப்பு. பிருட்டங்கள் குதிகால்களின் மேல் நிற்க, கால் விரல்களை நிலத்தில் ஊன்றிக் குதிகால்கள் மேல்நிற்க எழுந்து முழங்கால்களின்மேல் கைகளை வைத்து எளிதின் இருத்தலும் ஒருவகைக் குக்குடாதனமாம். எனினும், சிறப்புடையதனையே கூறினார் என்க.
இதனால், குக்குடாதனத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

பொழிப்புரை :

`குக்குடாதனத்தை வேறுபடுக்கச் சிங்காதனமாம்` என்கின்றார்.
இருகைகளையும் இருமுழந்தாள்களின் இடையே புகச் செலுத்தி இருபாதங்களிலும் படுமாறு நீட்டி, வாயைத் திறந்து கொண்டு, இருகண்களும் மூக்கு நுனியை நோக்க இருக்கின், அவ் இருக்கை சிங்கவடிவிற்றாய், `சிங்காதனம்` என்று பெயர் சொல்லப் படும்.

குறிப்புரை :

`கோடி` என்பது குறுகிநின்றது. செப்பும் - செய்யப் படும்.
இதனால், சிங்காதனத்தின் இயல்பு கூறப்பட்டது.
பதுமாதனம் முதலியவற்றை முறையானே கூறிவந்த நாயனார் குன்றக் கூறார் ஆதலால், `கோமுகாதனம், வீராதனம், சுகாதனம், சுவத்திகாதனம்` என்பவற்றையும் கூறிய திருமந்திரங்கள் கிடையாதொழிந்தன என்றே கொள்க. இங்ஙனமாகவே அவற்றது இயல்பு பிற நூல்களின் வழிக் கொள்ளப்படுவனவாம்.

பண் :

பாடல் எண் : 6

பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே. 

பொழிப்புரை :

`பத்திரம், கோமுகம், பதுமம், சிங்கம், திரம், வீரம், சுகம்` எனப் பெயர் பெற்ற ஏழ் ஆதனங்களும் உத்தம ஆதனங்களாம். அவற்றொடு உத்தமோத்தம ஆதனமாக முதலிற் கூறப்பட்ட சுவத்திகாதனமும் கூடச் சிறப்புடைய ஆதனங்கள் எட்டாகும். ஆதனங்களை இவ்வாறு `எட்டு` என்பதேயன்றி, `பத்து` என்றும், `நூறு` என்றும், மற்றும் பலவாகவும் கூறுவர்.

குறிப்புரை :

`அவற்றுள் மிகச் சிறப்புடைய எட்டு ஆதனங்களையே யான் கூறினேன்` என்றவாறு. எனவே, இவையே சிவயோகத்திற்கு அமையும் என்பதும் `வேண்டுழிச் சிறுபான்மை பிறவும் கொள்ளத் தகும்` என்பதும் பெறப்பட்டன. சொல்லப்பட்ட ஆதனங்களுள் குக்குடாதனத்தை இங்குக் கூறாது, சொல்லப்படாத `திரம்` என்பதனைக் கூறியவாற்றால் `திராசனம்` என்பது குக்குடாதனமே யாதல் பெறுதும்.
இங்கு எடுத்துச் சொல்லப்படாத ஆதனங்களுள் சிறப்பு உடையன சில வருமாறு:-
மச்சம், (மீன்) கூர்மம், (ஆமை) மகரம், (முதலை) தனுசு, (வில்) பச்சிமோத்தானம், (பின்பாகம் மேல் எழுதல்) மயூரம், (மயில்) மண்டூகம், (தவளை) மற்கடம், (குரங்கு) ஏகபாதம், (ஒற்றைக்கால்) சிரசு, (தலை) அலம், (கலப்பை) நௌகம், (ஓடம்) சருவாங்கம், (முழுதுடல்) சவம் (பிணம்) முதலியன. மற்றும் இவற்றைப் பலவாகச் சிறிது சிறிது வேறுபடுத்துக் காட்டுவர்; அவற்றின் இயல்புகளை எல்லாம் இங்கு விரிக்கிற் பெருகும். வேண்டுவோர் அடயோக தீபிகை, பதஞ்சலி சூத்திரம் முதலிய யோக நூல்களுள்ளும், சில உபநிடதங்களினும் கண்டுகொள்க.
முது ஆதனம் - முன்னே சொல்லப்பட்ட ஆதனம்; சுவத்திகாதனம். `முது ஆதனத்தோடு எட்டு` என உருபு விரித்து முடிக்க. இனி, `எட்டு, எட்டு, பத்து, நூறு` எனக் கூறப்பட்ட தொகை களை ஒருங்கு கூட்டி, ஆதனங்கள் `நூற்றிருபத்தாறு` என வரையறை காண்பாரும் உளர்.
``நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல்என்
றொத்த நான்கின் ஒல்கா நிலையோ
டின்பம் பயக்கும் சமய முதலிய
அந்தமில் சிறப்பின் ஆதன மாகும்``
என நச்சினார்க்கினியரும் ஆதனங்களை வரையறாதே கூறினார். அவர் இதனுள் நடத்தலைக் கூறியதும், `சமயம்` என்றதும் அறியத் தக்கன.
இதனால், ஆதனங்கட்குப் புறனடை கூறப்பட்டது.
சிற்பி