நான்காம் தந்திரம் - 3. அருச்சனை


பண் :

பாடல் எண் : 1

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

பொழிப்புரை :

தாமரை முதல் செவ்வந்தி ஈறாக இங்குக் கூறப்பட்ட பூக்கள் வழிபாட்டிற்குக் கொள்ளத் தக்கனவாம்.

குறிப்புரை :

அம்புயம் - தாமரை. நீலம் - நீலோற்பலம்; குவளை, கழுநீர் - செங்கழுநீர்; இதுவும் குவளையின் வகை. நெய்தல் - ஒரு வகை ஆம்பல். வம்பு அவிழ் - வாசனையோடு மலர்கின்ற. பூகம் - கமுகு; இஃது இதன் பாளையில் உள்ள அரும்புகளாம். மாதவி - குருக் கத்தி; இதுவும் ஒருவகை மல்லிகை. மந்தாரம் - மந்தாரை. வகுளம் - மகிழ்.
வழிபாட்டிற்கு வேண்டும் பொருள்களுள் முதன்மை யானதாகிய பூவின் வகைகள் இதனால் எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.

பொழிப்புரை :

சந்தனத் தேய்வையைக் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம், அகிற் சாந்து இவை சேர்த்துப் பனிநீராற் குழம்பாக்கிச் சாத்தி நீரால் ஆட்டி அன்போடு வழிபடுங்கள்.

குறிப்புரை :

சாங்கமதாக - திருமேனியில் படத்தக்கதாக. சாந்து - தேய்வை. தேம் கமழ் - இனிதாக மணக்கின்ற. பாங்கு - நன்மை. `பாங்காகப் பட` (பொருந்த) என்க ``வைத்து`` என்றார், `முன்னே ஆட்ட வேண்டிய பொருள்களை ஆட்டியபின்` என்றற்கு. `அர்ச்சித்தல்` என்னும் பொதுச் சொல், இங்கு, ஆட்டுதல்மேல் நின்றது, இனி, ``நீர்`` என்பதை முன்னிலைப் பெயராக்கி உரைத்தலும் ஆம்.
இதனால், சிறப்புடைய ஒன்றை எடுத்துக் கூறும் முகத்தால் அபிடேகம் விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால்
இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.

பொழிப்புரை :

நிவேதனம், தீபம், தூபம் என்பவைகளால், எட்டுத் திக்கிலும் வரற்பாலனாவாகிய தடைகளை அகற்றி வழிபாடு செய்பவர், தாம் விரும்பும் பொழுது முத்திநிலை இன்பமே வடிவாய் வந்து எய்தப் பெறுவர்.

குறிப்புரை :

ஏற்றுதல் - ஏற்பித்தல். பொன் - உலோகம். `பொன் னால் செய்த` என்க. அமுதம் முதலிய மூன்றிலும் மூன்றாம் உருபு விரிக்க. முதலிரண்டடிகளை வேறாக ஓதுவன பாடம் அல்ல. திசை தொறும் வரும் துன்பங்கள் தீத் தெய்வங்களால் ஆவன. அவற்றைத் திக்குப் பந்தனம் முதலியவற்றால் நீக்கல் வேண்டும் என்க.

பண் :

பாடல் எண் : 4

எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண்
டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே

பொழிப்புரை :

வழிபாட்டினை அன்போடு மனம் பற்றிச் செய்தால், கிடைக்காதன இல்லை. எண்வகைச் சித்திகளும், இந்திராதி போகங்கள் மட்டுமன்று; முக்தியும் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

`வழிப்படில்` என்பன பாடமல்ல.

பண் :

பாடல் எண் : 5

நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார்
அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும்
மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.

பொழிப்புரை :

பிறருக்கு உரியராய மனைவியரை விரும்புதலை விட்டவர்களும், புலனடக்கம் உள்ளவர்களும் ஆகிய அவர்களது நிவேதனம், தோத்திரம், வணக்கம், செபம், ஓமம் என்னும் இவையே வழிபாட்டிற்கு உரியனவாம். அவ்விடத்தில் காற்றும் தூய்மை யுள்ளதாய் இருக்கும்.

குறிப்புரை :

மேற்கூறியவையன்றி மேலும் உள்ள பொருள்களைக் கூறுவார், `அவற்றை ஈட்டிக் கொண்டு வழிபடுவோர் முதற்கண் நல்லொழுக்கத்தில் நிற்பவராய் இருத்தல் வேண்டும்` என்பதனை அஃது இயல்பென்பது தோன்ற, அனுவாத முகத்தாற் கூறினார். கூறவே, `வழிபாடு சிறந்த ஓர் ஒழுக்கமாதலின் அது செய்வார் பிற ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தல் வேண்டும் என்னும் கட்டளை யில்லை` என்று எண்ணுதல் மடமையாகும் என்பது இனிது விளங்கிற்று. புலனடக்கம், நாச் சுவை, வேட்கை முதலியவற்றை அடக்குதல் யோக நெறியிலும் இயம நியமங்கள் அடிநிலையாகக் கூறப்படுதல் இங்கு நினைக்கத்தக்கது.
`தாரம்` என்பது தமிழில் அஃறிணை இயற்பெயர் போலவே வருதலை அறிக. `நீத்தாருடையனவும், அவித்தாருடையனவும்` என உரைக்க. அண்ணிய - இனிய. அனுசந்தானம் - இடைவிடாது தொடர்ந்து செய்தல். பஞ்சாங்கம் - ஐந்துறுப்புக்கள் நிலத்திற் பொருந்த வணங்கும் வணக்கம். ஐந்துறுப்புக்களாவன; தோள் இரண்டு, முழந்தாள் இரண்டு, முகம் ஒன்று, இவற்றோடு காது இரண்டு, மார்பு ஒன்று இவையும் நிலத்திற் பொருந்த வணங்குதல் அட்டாங்க வணக்கமாம். இதனை `சாஷ்டாங்கம்` என்பார்கள். இனம் பற்றி இதனையும் இங்குக் கொள்க. மகளிர்க்குப் பஞ்சாங்க வணக்கம் ஒன்றே உரியது. மண்ணும் அனல் - சிவாக்கினியாகச் செய்யப்பட்ட நெருப்பு. பவனம் - காற்று.
இதனுள்ளும் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல
இதனால், மேற்கூறப்பட்டவற்றிற்குப்பின் எஞ்சி நின்ற பொருள்கள் கூறப்பட்டன்.

பண் :

பாடல் எண் : 6

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு அடியவராகத் தம்மை ஒப்படைத்துவிட்டவர்களும், பசு புண்ணியத்தால் விளையும் சிறு பயன்களில் விருப்பம் இல்லாதவர்களும். உயர்ந்த சிவயோகத்தில் நிற்பவர்களும், பயன் கருதிச் செய்யும் காமிய வழிபாடுகளை மேற்கொள்ளாது, ஆய்ந்துணர்ந்த உணர்வினால் மிக்க அன்பு ஒன்றே காரணமாக வழிபாட்டினை மேற்கொள்வர்.

குறிப்புரை :

ஈற்றடியை, `கன்மம் வேண்டார்களாய், ஆய்ந்து அன்பே மிகுதியோராவர்` எனக் கூட்டி முடிக்க. ``கன்மம்`` என்பதற்கு இங்கு இதுவே பொருளாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

பொழிப்புரை :

அறிவுருவாகிய இறைவனை எவரும் அவனறி வாலே அறிய முயலாமல் தம் அறிவால் ஐம்பொறிகளாலும், மனம் முதலிய உட்கருவிகளாலும் ஆராய்ந்து துன்புறுகின்றார்கள். ஆயினும், முறைப்படி, மேற்கூறிய சக்கரம் முதலியவற்றின் வழி மனம் ஒருங்கிநினைத்தால், ஒளி வீசுகின்ற மாணிக்கம் போல்பவனாகிய இறைவனது அருளில் மூழ்கியிருத்தல் கூடும்.

குறிப்புரை :

`அறிவு அறியார்` என இயையும். `ஞானம்` என்பது சிறப்புப்பற்றிப் பதி ஞானத்தையே குறித்தல் வழக்கு முறைமை. `நெறி யால் நோக்கில்` என்க. மனை, இங்குச் சக்கரத்தில் உள்ள அறைகள். இனம் பற்றிக் கும்ப விம்ப தம்பங்களும் கொள்க.
இதனால் `வழிபாடுகள் பதிஞானத்தைத் தந்து, அது வழி யாகப் பதியை அடைவிக்கும்` என்று அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம்
மருள்அறி யாமையும் மன்னும் அறிவும்
அருள் இவை விட்டறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.

பொழிப்புரை :

ஆன்ம அறிவு இருளே போன்றும், ஒளியே போன்றும் இருதன்மையதாய் நிற்கும் இயல்புடையது. அதனால் அதனிடத்தே மயக்கத்தைத் தரும் அறியாமையும், தெளிவைத்தரும் அறிவும் என்னும் இரண்டுமே என்றும் நிலை பெற்றிருக்கும், எனினும், அறிவால் இருதன்மையை நீக்கி ஒரு தன்மையாகிய அறிவேயாய் நிற்பவரே, அழிவற்ற அறியாமையை அழியப் பண்ணினவராகவும் சொல்லப்படுவர்.

குறிப்புரை :

`ஆதலால், மேற்கூறிய முறையால், அறிவாய் நிற்கும் நிலையைப் பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம் ``போல்`` என்றது `அவையே போலத் திரிந்து` என்றவாறு. ஆன்ம அறிவை `இதயம்` என்றல் பொருந்துமாறு,
``சிந்தையைச் சீவன் என்றும்
சீவனைச் சிந்தை என்றும் ... ... ... வந்திடும்`` 1
என்னும் சிவஞான சித்தியால் அறிக. `அறிவும் மன்னும்` என முன்னே கூட்டி முடிக்க. ``அறியாமை`` என்றது அதனைச் செய்யும் ஆணவ மலத்தையும், ``அறிவு`` என்றது இறைவனது திருவருளையும் ஆதல் அறிக. `இரண்டும் அழிவுற்ற பொருளாயினும், மலம் திருவருளை வெல்லமாட்டாமையால் அதனைக் கொண்டு அறியாமையைப் போக்க வேண்டும்` என்பார், ``அருளால் இவை விட்டு`` என்றார். உருபு தொகுத்தலாயிற்று. `இது பக்குவம் எய்திய வழிக்கூடும்` என்பது கருத்து.
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்; ஒன்றுமேலிடின், ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது; உள் உயிர்க்குயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே`` 2
என்பதிலும் இவ்வாறு கூறப்படுதல் காண்க.
இதனால், மேற்கூறியவாற்றால் பதிஞானத்தைப் பெற்றோரது சிறப்புக் கூறப்பட்டது. அறியாமை மயங்கும் மருள் - உண்மையை உணராமல் திரிய உணர்வதற்கு ஏதுவாகிய மலம்.

பண் :

பாடல் எண் : 9

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.

பொழிப்புரை :

சிவம் தான் தோன்றாது ஆன்மாவேயாய் நிற்றலும், ஆன்மா தான்தோன்றாது சிவமேயாய் நிற்றலும் என்னும் இருநிலைகளுள், அறிபவனாகிய ஆன்மா அறியப்படுபொருளாகிய சிவமேயாகி விடுகின்ற இரண்டாம் நிலையை எய்தினவன் பின்பு `அறிபவன்` என்பதோடு நில்லாது, அன்பு செய்பவனாயும் நிற்பான். இந்நிலையே, `சிவ ரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவ போகம்` என்னும் நான்கனுள் இறுதிக்கண்ணதாகிய சிவபோகத்தை அடையச் சிவமாம் தன்மையை எய்தும் வழியாம்.

குறிப்புரை :

இரண்டு: பெத்தமும், முத்தியும். ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏக னாகி`` என்னும் சிவஞானபோதத்தை இங்கு உடன் வைத்துக் காண்க. அன்பு வடிவானவனை,``அன்பு`` என்றார். ஈற்றடியை` தான் ஆசித்ததேவனாகிய அவனாகும் ஓர் நிலை` எனக் கொண்டு கூட்டிக் கொள்க. `ஆசிரயித்த` என்பது ``ஆசித்த`` எனச் சிதைந்து நின்றது. `யாசித்த` எனப் பாடம் ஓதலுமாம். யாசித்தல் - வேண்டுதல்.
இதனால், பதி ஞானம் முதிர்ந்து முற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.

பொழிப்புரை :

பிரணவத் தியானத்தில் ஓங்காரம் மூலாதாரத்திலும், மகாரம் உந்தியிலும், அகாரம் இருதயம்,கண்டம் என்ப வற்றிலும், உகாரம் புருவ நடுவிலும், விந்துவும் நாதமும் அதற்குமேல் நெற்றியில் உள்ள வேறு வேறு இடங்களிலும் வைத்துத் தியானிக்கப்படும் என்க.

குறிப்புரை :

மகாரம் நிற்கும் இடம் குறிப்பினாற் கொள்ள வைத்தார். `பாங்கார் நகாரம்` என்பது பாடம் ஆகாமை யறிக.
இதனால், வழிபாட்டில் பிரணவத்தைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நமஅது ஆசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவ தன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.

பொழிப்புரை :

`நம` என்பதை அடிநிலையாகக் கொண்டு பசுவாய் நிற்கின்ற உயிரே. `சிவ` என்பதனை அடிநிலையாகக் கொள்ளும் நிலை கிடைக்கப்பெறுமாயின், சிவத்தோடு ஒன்றிப் பதியாய்விடும். ஆதலால், நகார மகாரங்களால் குறிக்கப் பெறுகின்ற திரோதாயியும், மலமும் அறுவதற்கு வழி அவற்றை முதலாகக் கொண்டு ஓதுவதன்று; மற்று, சிகார வகாரங்களை முதலாகக் கொண்டு ஓதுதலேயாகும். அவ்வாறு செபித்தல் பரமுத்திக்கு வாயிலாம்.

குறிப்புரை :

`பசுவே சிவமாய்ப் பதியாம்` என்க. `சித்தி` என்னும் முதனிலையே `சித்திக்க` என வினையெச்சப் பொருள் தந்தது. `ஆதி யாவது` என ஆக்கம் வருவித்து, அதனை, `சிவம் ஆதி ஆவதாகும்` என ஈற்றிலும் கூட்டுக. மோனம் சேர்தல் - செபித்தல். இவ்வாறே,
``நம்முதலா ஓதில் அருள் நாடாது; நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று`` (வெண்பா - 14)
என்னும் உண்மை விளக்கம் முதலிய சித்தாந்த நூன்மொழிகளையும் இங்கு நோக்குக. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், நிட்காமிய வழிபாட்டில் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தெளிவரும் நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.

பொழிப்புரை :

`சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.

குறிப்புரை :

எட்டு - அகாரம். அது நாதத்தைக் குறித்தல் வழக்கு. `பசுபோதம் தலையெடுத்தும் வழி வாக்காகிய பாச ஞானமும் விரையத் தோன்றி அலைவை உண்டு பண்ணும், என்பார், ``எட்டிலே உகளும்`` என்றார். `இவ்வாறு ஓரிரண்டாகில்` என அனுவாத மாக்கியுரைக்க. ``வெளி`` இரண்டில், முன்னது புறம்; பின்னது வெளிப்படை. திரிபுடி நீங்காதாயின் அருள் நிலையன்றி, ஆனந்த நிலை எய்தாமை பற்றி `நாதன் வெளியாய் இருந்தே வெளிதரும்` என்றார். வெளிதருதல் - ஆன்மாவிற்குத் தன்னின் வேறான இடத்தைத் தருதல். திரிபுடி - காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்பனவாம். `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்றும் சொல்லப்படும்.
இதனால், `திரிபுடி நீங்கும் தெளிவைப் பெறமுயல வேண்டும்` என்பது கூறப்பட்டது.
சிற்பி