நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்


பண் :

பாடல் எண் : 1

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.

பொழிப்புரை :

மாமாயை முதலாகச் சொல்லப்படும் பொருள்கள் யாவும் தானேயாயும், அல்லவாயும் சிவ சத்தி நிற்பாள்.

குறிப்புரை :

மா மாயை - சுத்த மாயை. இதுவே வியாபகமாய்ப் பெரிதாதலின் இப்பெயர் பெற்றது. `மாயை` என வாளா கூறும் வழியெல்லாம் அஃது அசுத்த மாயையையே குறிக்கும். வயிந்தவம் - விந்துவின் காரியம்; சுத்ததத்துவங்கள். சுத்த மாயைக்கு `விந்து` என்பது பெயராகலின், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனப்படும். அசுத்த மாயையின் காரியங்கள் `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும் என்பதும் இங்கு உணர்ந்து கொள்க. வைகரி - வைகரி, முதலிய நால்வகை வாக்குகள். அவை, `வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்பன. சூக்குமை, `பரை` எனவும்படும். இது காரணநிலையாய், நுண்ணிதாய் நிற்பது. `நாதம்` எனப்படுவதும் இதுவே. இதன் விருத்தி (வளர்ச்சி) வகைகளே பைசந்தி முதலிய ஏனைய மூன்றும். ஓ மாயை - அசுத்த மாயை யினின்றும் தோன்றிய, ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை. `மூலப் பிரகிருதி` எனப்படுவது இதுவே. ஓவுதல் - நீங்குதல்; வெளிப்படுதல். உள்ளொளி - குண்டலி சத்தி. மந்திரங் களின் கோடி (முடிவு) ஏழனுள், `ஹும், பட்` என்னும் இரண்டும் சிலவிடத்து ஒன்றாக எண்ணப்படும். அம்முறை பற்றி இங்கு ``ஓராறு கோடியில் தாமான மந்திரம்`` என்றார். ஏழு கோடிகள் முன் தந்திரத்தில் கூறப்பட்டன. சத்தி தன் மூர்த்திகள் - சத்தியின் வேறுபாடுகள்தாம் பல. அவை, `ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி` என்பனவும், `ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி` என்பனவும், `வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி,` எனவும், `சத்தி, விந்து, மனோனமனி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும், மற்றும் பலவுமாம். `ஆம் ஆய்` `` என்பதில், `ஆம்` அசை நிலை. `அன்று, அல்ல` என்பன வற்றைப் பொதுவினை போலக்கூறுதல் சிலவிடத்துக் காணப்படு கின்றது. ஆங்கு - சிவன் நினைத்தவிடத்து.
இதனால், `சிவனது சத்தியே பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.
``பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள் அத்துவித மாதல்`` 1
என்ற சிவஞான போதத்தைக் காண்க. இதனுள் `தான்` என்றது சத்தியாதல் அறிக. ஒன்றாதலும் வேறாதலும் கூறவே உடனாதலும் பெறப்பட்டது.
``பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை`` 2
என்பது அப்பர் திருமொழி. இங்ஙனமாகவே சிவனுக்குப் பிற பொருள்களோடு தொடர்பு உண்டாதல் அவனது சத்திவழியேயாதல் அறியப்படும்.
இதனால், `எல்லாப் பொருளும் சத்தியே` என அவளது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

பொழிப்புரை :

மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, அவ்வகையிலெல்லாம் விளங்குவாள்.

குறிப்புரை :

`திரிபுரை` என்பதன் காரணம் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறப்பட்டது. சுந்தரி - மிக்க அழகுடையவள். அந்தரி - ஆகாயத்தில் விளங்குபவள். சிந்துரம் - திலகம். இது நீட்டல் பெற்றது. `சிந்துரத்தை அணிந்த பரிபுரை` என்க. `சிந்துரை` என வேறோதற்பாலதனைச் செய்யுள் நோக்கித் தொகுத்தோதினார். பரிபுரை - சிலம்பணிந்தவள். நாரணி - `நாரணன் தங்கை` எனப் படுபவள். நாரணன் சிவனுக்குப் புருட ரூப சத்தியாதல் பற்றிப் பெண்ணாகச் சொல்லப்படுகின்ற இவள், `அவனுக்குத் தங்கை` எனப் படுகின்றாள். ஆம் - பொருந்திய, பல வன்னத்தி - பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள். அந்நிறங்களுள் சிறப்பாக நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி,மனோன்மனி` என்னும் பெயர்களைப் பெற்று நிற்பாள் என்பது மூன்றாம் அடியின் பொருள். இவ்வாறு வருகின்ற பல்வேறு நிலைகளில் நிற்பாள் என்க.
இதனால், மேலை மந்திரத்து இறுதியிற் கூறப்பட்ட சத்திதன் மூர்த்தி வேறுபாடுகள் பல விரித்துக் கூறப்பட்டன. அதிகாரமும் சத்திபேதம் ஆதல் நினைவு கூரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொழிப்புரை :

சத்தி, தனது வியாபகத்தைப் பெற்றுள்ள, `உருத்திர லோகம், விட்டுணுலோகம், பிரமலோகம்` என்னும் மூன்று உலகங்களில் தலைமை பூண்டு நிற்கின்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் மூவரையும் தோற்றி ஒடுக்கும் நான்காவது பொருளாய் நிற்பாள். அவள் ஓருத்தியே பொன்னிறம் உடைய சத்தியாய் நின்று முத்தியையும், செந்நிறம் உடைய திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் உடைய கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.

குறிப்புரை :

`உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் மூவரும் ஒற்றுமை பற்றி, `சிவன்` என ஒருவராக அடக்கப்பட்டனர். மூவுரு ஓர் உரு - மூவுருவையும் அடக்கி உள்ள ஓர் உரு. எனவே, பிரேரக தத்துவங்களில் பலவாகி நிற்கும் ஆதிசத்தியைக் குறித்ததாயிற்று. சத்தி, `நீல நிறம் உடையள்` என்பது பற்றி `நீலி` எனப்படுதலேயன்றி, `கௌர நிறம் உடையள்` என்பது பற்றி, `கௌரி` எனவும் படுவளாதலின், இங்கு அவளுக்குப் பொன்னிறம் கூறினார்.
இதனால், ஒருத்தியே மூவராய் முத்தொழில் இயற்றியும், ஐவராய் ஐந்தொழில் இயற்றியும் நிற்கும் தலைவர் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.

பொழிப்புரை :

ஐந்தொழில் முதல்வரைத் தருகின்ற திரிபுரை நாதம், நாதாந்தம், பலவாய் விரியும் பரவிந்து, நிலம், வானம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள். அதனால், அவள் அனை வர்க்கும் மேலானவள்; பலரையும் இன்புறச் செய்பவள்; மன வாக்குகளுக்கு அகப் படாதவள். பக்குவம் வந்த நிலையில் அருட் சத்தியாயும் பதிவாள். பின்பு ஞானத்தைக் கொடுத்துத் தன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்வாள்.

குறிப்புரை :

நல்குதல் இரண்டில் முன்னது அருளல்; பின்னது படைத்தல். நாதம் முதலியன, காரியப் பொருள்கள் பலவற்றுள் சிலவற்றை விதந்தவாறு. பரை முதலிய மூன்றும் காரணப்பெயர்களாய் நின்றன. புல்குதல் - பதிதல். ``அருளும்`` என்னும் உம்மை சிறப்பு. `மெய்யுணர்வு` என்றற்கு. `அப்போதம்` எனச் சிறப்பித்துக் கூறினார். `போதமும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று.
இதனால், சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

பொழிப்புரை :

திருவடிகளில் சிலம்பு, இடையில் சிவந்த பட்டுடை, மார்பில் கச்சு, நான்கு கைகளிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடி, காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் - இவைகளே திரிபுரைக்கு உள்ள அடையாளங்களாம்.

குறிப்புரை :

``குண்டலக் காதிக்கு`` என்றது உடம்பொடு புணர்த்ததாகலின் அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாயிற்று.
``பனிமலர்ப்பூங் - கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் [குசமும் கையில்
அணையுந் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே`` 1
எனப் பின்வந்த அடியார் ஒருவரும் அம்மைதன் திருவடிவை இங்ஙனமே கூறினார். இவ்வடிவத்தை `இராசேசுவரி கோலம்` என்பர். முதலடி இனஎதுகையாய் நின்றது.
இதனால், திரிபுரையது ஒருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

பொழிப்புரை :

குண்டலம் அணிந்த காதினை உடையவள்; கொலை செய்கின்ற வில்லை ஒத்த புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறை அணிந்தவள்; `சண்டிகை` என்னும் பெயர் உடையவள்; இவள் உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருள்கின்றாள்.

குறிப்புரை :

தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்று கின்றாள்` என்றபடி. இவளுக்குச் சிவந்த நிறம் - நெருப்புப் போன்ற காட்சி கூறினமை அறியத் தக்கது. `முடியில் மதியை உடைய சண்டிகை` என்க.
இதனால், திரிபுரையது மற்றொருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

பொழிப்புரை :

நித்தியளாகிய திரிபுரை கால எல்லையைக் கடந்த பழமை உடையவள். மாயை வழியாக உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள் ; நன்கு விளங்குகின்ற உருத்திராக்க மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.

குறிப்புரை :

தாமரை, திருமேனி என்பவற்றது நிறத்தோடு ஒப்ப யானையின் நிறத்தையும் வெண்மையென உணர்க. வெண்மை, ஞானத்தின் அடையாளம். `பின்னர் ஞானத்தை வழங்கும் இவளே முன்னர் மயக்கத்தைச் செய்பவள்` என்பார், ``குன்றலில் மோகினி`` என முன்னே கூறினார். மாது - அழகு. கூந்தலை, `சிகை` என்றது வழு வமைதி. சுத்தமாவது வெண்மை. `சுத்தை` என்பது பெண்பாற் பெயர்.
இதனால், திரிபுரையது முதல் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.

பொழிப்புரை :

திரிபுரை இன்னும் தூய, அழகிய, திண்ணிய கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றத்திலே விளங்கு பவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள். எல்லாச் சத்திகளினும் பெரியளாய் மேலான சத்தி; அப்பொழுதே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியளுமாய் எண்ணப்பட்டு அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளுமாவாள்.

குறிப்புரை :

ஞானம் நிறைந்து நிற்றலைக் குறிக்க, ``சுத்த, அம், பாரத்தனம்`` என்றார். வத்து - பொருள்; மெய்ப்பொருள். அதன் தன்மை, ``வத்துவம்`` எனப்பட்டது. வத்துவம் உடையதனை, ``வத்துவம்`` என்றார். `வாஸ்துவம்` என்னும் வழக்குண்மை காண்க. எழுவாய், மேலை மந்திரத்தினின்றும் வந்தது. ``கோலம் மதியவள்`` எனப் பண்புப் பெயர் பண்பி வினையொடு முடிந்தது.
இதனால், திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியத் தக்க பெருமைகள் கூறப்பட்டன. தனமும், ஒளியும் உருவவழியாக ஞானத்தை உணர்த்தின.

பண் :

பாடல் எண் : 9

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

ஐவர், படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் தலைவர். ஊர், முத்தி. சிவ பரத்துவம் உணர்த்திய. ``அவனை ஒழிய அமரரும் இல்லை`` என்ற மந்திரத்தினை (41) இதனுடன் வைத்து நோக்குக.
இதனாலும், அவளது பெருமை பிற சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

பொழிப்புரை :

திரிபுரையை அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை, `ஆனந்தமாய் இருப்பவள்` என்றும், `அருவமாயும், உருவ மாயும் விளங்குபவள்` என்றும் `நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையினள்` என்றும் கூறுவர். அதனால், அறிவுருவின னாகிய சிவனும் அவள் வழியாகவே தோன்றுவான்.

குறிப்புரை :

அருவமும், உருவமும் கூறவே, அருவுருவம் கொள்ளப்படும். மூன்றாமடி நான்காமடிகளில் ``அறிவார்`` என்ற வற்றை, `அறிவு ஆர்` எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` முதலியன வாகவும், `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் உரைக்க. இரண்டாம் அடியை `அறிவுரு` எனப்பாடம் ஓதுவாரும் உளர். அவர்க்கு அவள் அருவம் முதலியன ஆதல் கிடையாமை அறிக. மூன்றாம் அடியிலும் `அவள்` என்பதை ``இச்ை\\\\u2970?`` என்பதன் பின் கூட்டுக. ``இடம்`` என்றது, `வழி` என்றவாறு.
இதனாலும், வேறும் சில பெருமையே கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.

பொழிப்புரை :

உடம்புகள் எங்கு உள்ளனவோ அங்கெல்லாம் உள்ள உயிர்களைக் காப்பவனாகிய சிவன், தான் எங்கு இருப்பவனாக அறியப்படுகின்றானோ அங்கெல்லாம் சத்தியும் உடன் இருக் கின்றாள். அதனால், ஆகாயம் உள்ள இடங்களில் எல்லாம் இருக்கின்ற எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நின்றும், அப்பொருள்களையும், அவற்றிற்கு இடம் தந்து நிற்கின்ற ஆகாயத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் எங்கும் விளங்குகின்ற எந்த உருவமும் சத்தி என்றே அறிவாயாக.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. இரண்டாம் அடி உயிர்கள் உடம்பையின்றி அமையாமையும், மூன்றாம் அடி எப்பொருள்களும் வானத்தையின்றி அமையாமையும் கூறியவாறு. வந்தும் அப்பாலாதற்கு `அவள்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. குறி, வடிவம்.
இதனால், சிவனது வடிவங்கள் யாவும் சத்தியே யாதல் கூறப்பட்டது.
``தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்`` 1
என்றாற் போலவரும் திருமொழிகளும், தென்முகக் கடவுள் முதலிய கோலங்களும் அம்மையோடு உடனாய உருவமாகக் கூறப்படுதலும், பிறவும் இக்கருத்தே பற்றியனவாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 12

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

பொழிப்புரை :

`திரிபுரை` என்னும் சத்தியே மேலானவளும், பெரியவளும் ஆவள். அதனால், அவளே பல்வேறு வகையான காப்புச் சத்தியாய் நிற்றலை, மாணவனே, நீ அறிவாயாக. இனி, அக் காப்புத்தான், திரிவுபடுகின்ற ஊழிகள் தோறும் உடனாய் நின்று புண்ணியத்தின் பயனாகிய உலகின்பத்தைத் தருதலேயாம்.

குறிப்புரை :

``புரா சத்தி`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. தரா சத்தி - தாங்கும் சத்தி. தாங்குதல், காத்தல், உராவுதல், திரிவு படுதல். புண்ணியத்தின் பயனை, `புண்ணியம்` என்றே கூறினார். பெத்தத்தின் வகையாகிய முத்தொழில்களுள் கன்மத்தை நுகர்விப்பது காத்தலேயாகலின், அஃது ஒன்றனையே திரோதானசத்தியது தொழிலாகக் கூறினார். பாவத்தின் பயனாகிய துன்பத்தைத் தருதல் விருப்பின்றிச் செய்யப்படுவதாதலின், அதனையொழித்துப் புண்ணியத்தின் பயனாகிய இன்பத்தைத் தருதல் ஒன்றையே கூறினார். `முன்னர்த் திரோதான சத்தியாய் உலகின்பத்தையும், பின்னர் அருட் சத்தியாய் வீட்டின்பத்தையும் தருபவள் திரிபுரை` என்பது குறிப்பு. பிற்பகுதியில் `அச்சத்தி` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், திரிபுரை ஒருத்தியே திரோதான நிலையில் பல்வேறு வகையினளாய் நின்று உயிர்களைப் புரத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

பொழிப்புரை :

அடியார்கள் நாள்தோறும் தங்கள் உள்ளத்தில் தியானிக்க, அங்ஙனம் தியானிக்குந்தோறும் அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படர்தற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தியே, முன்பு ஒரு கூற்றில் அவ் விடத்துத் திரோதான சத்தியாய் நின்று, பின் அருட் சத்தியாயே விளங்குவாள்.

குறிப்புரை :

``அடியவர் நாள்தொறும் ஆகம் செய்தாங்கே`` என மாற்றி, அது முதலாகத் தொடங்கி உரைக்க. `அகம் செய்தல்` என்பது முதல் நீண்டது. அங்கு, ``செய்து`` என்றது, `செய` என்பதன் திரிபு. `பாகம் செய் கொம்பு` என இயையும். இங்கு, பாகம் செய்தல், பக்குவப்படுத்தல். முன் வந்த `பாகம் செய்தல்`, பங்கில் கொள்ளுதல். போகம்செய் சத்தி, திரோதான சத்தி. `போகம் செய் சத்தியாகிய புரிகுழலாள்` என்க.
இதனால், திரோதான சத்தி அருட் சத்தியின் வேறாகாமை கூறப்பட்டது. அருட் சத்தியது இயல்பும், திரோதான சத்தியால் உளதாகும் பயனும் என்னும் இவைகளும் அனுவாத முகத்தால் ஈண்டே கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்றவள். வம்பு அவிழ்கோதை - வாசனையோடு மலர்கின்ற பூக்களையுடைய மாலையை அணிந்தவள். நாடி - நாடப்பட்டவள். சிறுமி - கன்னி. நம்பி - தெளிந்து. நயந்து - விரும்பி. இதனுள்ளும் அம்மைக்குச் செம்மை நிறம் கூறப்பட்டமை அறியத் தக்கது.
``மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி [அபிராமி`` 1
எனப் பின்வந்த அடியவரும் கூறினார்.
இதனால், திரிபுரையது தியானச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.

பொழிப்புரை :

பலவகை வழிபாட்டிலும் விளங்கும் தலைவி யாகிய திரிபுரையே, உலகத்தில் வைக்கப்பட்டுள்ள பல சடப்பொருள் களும், அளவிறந்த உயிர்களாகிய சித்துப்பொருள்களும், உலகின் பத்துத் திசைகளும், சூக்குமை முதலிய நால்வகை வாக்குகளும் அந்தக் கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாற்றல்களுமாய் நிற்பாள்.

குறிப்புரை :

``பரை`` என்றது உபலக்கணம். `வித்தைத் தலைவியள் வைத்த பொருள் முதலிய பலவும் ஆம்` என்க.
இதனால், திரிபுரையே வழிபாடுகள் பலவற்றிலும் விளங்கிப் பல பயன்களையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொழிப்புரை :

`வழிபாடுகளின் தலைவி` என மேற்கூறப்பட்ட திரிபுரை கொங்கைகள் விம்ம நிற்பவள்; அழிவில்லாத தவத்தைச் செய்யும் தூய நெறியை உடையவள்; நூல்கள் பலவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பவள் ; என்றும் கன்னியாய் இருப்பவள். அவள் இவ்வுலகில் என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

``தலைவி`` என்றது அனுவாதம். கொங்கைகள் பால் சுரந்து விம்ம நிற்றல் அருட் பெருக்கையும், தவம் செய்தலும், நூல்களை அடக்கி நிற்றலும் ஆசிரியத் தன்மையையும், கன்னிமை பற்றின்மையையும் விளக்குவனவாம்.
இதனால், திரிபுரை ஒன்றொடொன்றொவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.

குறிப்புரை :

`நின்றவளாகிய நேரிழை` என்க. கலை - கூறு. ``அகம் படிந்து`` எனவும், ``மன்றது ஒன்றி`` எனவும் கூறியன, அகத்தும் புறத்தும் விளங்குபவளாதலைத் தெரித்தனவாம். `அவளொடு ஒன்றுகின்ற என்னோடு அவளும் ஒன்றி நின்றாள்`` என்றதனை,
``அற்றவர்க்கு அற்ற சிவன்`` 1
எனவும்,
``தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்பன்`` 2
எனவும் வருவனவற்றோடு வைத்துக் காண்க ``ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்`` என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்`` எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளம் ஒத்தல்; இசைதல்.
இதனால், திரிபுரை அன்பர்களையே அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பொழிப்புரை :

அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத் தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார் களில்லை.

குறிப்புரை :

`கமலத்திடை அடங்கும் ஆயிழை` என மாற்றிக் கொள்க. `பதியோடு` என உருபு விரிக்க. `மத்து` என்பது, நிறைவை உணர்த்தும் வடசொல். ``சித்து`` என்றது `அதிசயச் செயல்கள்` என்றபடி. ``வழி`` என்றது தான் சிவத்தொடு நின்றே எதனையும் செய்பவளாதலை. இதனால், திரிபுரை எதனையும் சிவத்தொடு நின்றே செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

பொழிப்புரை :

உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள் ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்ற வர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.

குறிப்புரை :

`உணர்ந்தவழி` என்பது `உணர்ந்து` எனத் திரிந்து நின்றது, நிற்றல் - விளங்கி நிற்றல். `ஆகி` என்பது பெயர். மூன்றாம் அடியில் ``உடனே`` என்றது, `உடனாகியே` என்றவாறு. `கணித்து` என்பது மெலிந்து, நின்றது. அளித்தலுக்கு எழுவாய், அதிகாரத்தால் வந்தது.
இதனால், சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டது. மேல் (1038) சிவனைச் சத்தியோ டன்றித் தனித்து நிற்பவனாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டதையும் இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 20

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.

பொழிப்புரை :

அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற் பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப் படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.

குறிப்புரை :

புளி - புளிய மரம். புன்மை, இங்கு முற்றி முதிர்ந்து வீழும் மென்மை நிலையைக் குறித்தது. போல - போல ஆகும்படி; அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளம் புளியம் பழம்போல ஆதலாவது, புளியம் பழத்தின் உள்ளேயிருக்கின்ற புளி அங்ஙனம் உள்ளே யிருப்பினும் ஓட்டில் பற்றுவிட்டுத் தனித்து நிற்றல்போல், உலகியலோடு உடனாய் இருப்பினும், பற்று நீங்கியதாதல். கதி - ஞானம். ஒளியுடையதனை, ``ஒளி`` என்றார்.
இதனால், திரிபுரை மேற்கூறியபடி கதியளிக்குமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 21

உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

பொழிப்புரை :

காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரி புரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமய வாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவியதில்லை யின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.

குறிப்புரை :

``காரண காரணி`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. ``நின்றது`` முதலிய மூன்றும் தொழிற் பெயராய்ச் செவ் வெண்ணாக எண்ணப்பட்டன. காரணமாவன, தத்துவங்களும், அவற்றின் தலைமைக் கடவுள்களுமாம். முன்னர் அக்கடவுள்களைப் படைத்து, அவர்கள் வாயிலாகத் தத்துவங்களைத் தோற்றி, நிறுத்தி, ஒடுக்கச் செய்து, பின்பு அக்கடவுள்களையும் ஒடுக்குதல் பற்றி, ``காரண காரணி`` என்றார். இது நான்காவதன் தொகை. காரணி - காரணமாய் நிற்பவள், `தான்` என்பது சிவத்தைக் குறிக்கும் குறியீட்டுச் சொல். மண்டிலம் - வட்டம்; `உலகம்` என்றவாறு. `உடம்பில் உள்ள அக்கினி சூரிய சந்திர மண்டலங்கள்` என்றலும் ஆம். ஈற்றில், `அதனையும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், திரிபுரை மெய்ப் பொருளேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பொழிப்புரை :

சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.

குறிப்புரை :

``அவன்`` எனச் சுட்டுப்பெயர் செய்யுளில் முன்னர் வந்தது. `சிவன்` என்னும் உயர்திணைப்பெயர் இங்குத் திரிபு புணர்ச்சி எய்தியது. கதி - நடை; செயல். ``சிவகதி`` என்பது, `அரச தண்டம்` என்பதுபோல ஆறாவதன் தொகை, `சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்`` எனக் கூட்டி உரைக்க. ``உணர்வு`` என்பது அனுபவ ஞானத்தை. அதனால், இன்பமும் பெறப்பட்டது. ``ஏடு அங்கையாள்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின், அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாதல் அறிக. ``ஏன்றாள்`` என்பது குறுகிநின்றது. நான்காம் அடியில் `நின்றாள்` என ஓதுதல் பாடமன்று.
இதனால், திரிபுரை ஞானத்தைப் படிமுறையால் அளித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தி யிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.

குறிப்புரை :

`இறை` என்பது தொழிலாகு பெயராதலின், பெண் பாற்கும் உரியதாம். `இறைவி` என்பது குறைந்து நின்றது எனினுமாம். `எங்கள் இறை` என மாறிக் கூட்டுக. ``பாடுந் திருமுறை` என்றது, வீணையுடைமையையும் குறித்தவாறு. `திருமுறையைப் பாடும்` என்ற லுமாம். ``பார்ப்பதி`` என்றது `பார்ப்பதியேயான அவள்` என்றபடி.
இதனால், முதற்கண்ணதாகிய நூலறிவைத் தரும் அவளது வடிவியல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

பொழிப்புரை :

காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்க ளாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற்காகவே உலகில் வாழ்வீராக.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``வழிபடுமாறு`` என்பது, வினையெச்சப்பொருட்டாய் நின்றது. ``பின்னை`` என்பது, `மற்று` என்னும் பொருளது. `பிள்ளை` என்பது பாடமன்று. ``ஆகுமாம்`` என்பதில் ஆம், அசைநிலை. `ஆம் ஆதி` என இயைத்து, `நன்மையை அடைதற்கு நிமித்தமாகிய ஆதிசத்தி` என உரைப்பினும் ஆம்.
இதனால், திரிபுரையை இராசேசுவரியாகக் கண்டு வழிபடுக என்பது கூறப்பட்டது. அதன் பொருட்டு, அவளது வடிவம் மறித்தும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

பொழிப்புரை :

ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படு பவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப் பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.

குறிப்புரை :

``அண்ணுதல்`` என்பது ``அண்டுதல்`` என மருவி வழங்கும். நீதி - நடுவு நிலைமை. `நீதியாளரது மனத்தாமரை என்றற்கு, ``நீதி மலர்`` என்றார். திரிபுரையது மந்திரம், ``ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் த்ரிபுராயை நம;`` என்பது. இது நவாக்கரியாதலை நோக்குக. மூலாதாரம் முதலிய ஏழ் நிலையுள் நடுவணதாகிய அனாகதத்தை, ``பாதி`` என்றார். `ஆறாதாரங்களில் மேற்பாதியில் முன் உள்ளது` என்றலுமாம்.
இதனால், திரிபுரையது ஆசனமும், மந்திரமும், அவ்வாற்றாற் செய்யும் வழிபாட்டின் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொழிப்புரை :

திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள் கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.

குறிப்புரை :

`அவளது பெருமையை இவ்வாறு அறிந்து கொள் ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். எழுவாய் மேலை மந்திரத்தினின்றும் வந்தது. `பிரசாத கலைகள் பதினாறு இவை` என்பது முன்னைத் தந்திரத்திற் காட்டப்பட்டது.
இதனால், திரிபுரையது மிக்க பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

பொழிப்புரை :

மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மை யான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவரா யுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.

குறிப்புரை :

`பொருள் பெற்ற சிந்தையில் உற்ற புவனாபதியார் சேவடி` என இயைத்துக் கொள்க. `சத்தி வழிபாடு சிவனை நீக்கிச் செய்யப்படுவதன்று` என்பது உணர்த்தியவாறு.
இதனால், சத்தி வழிபாட்டின் கண்ணது ஓர் ஐயம் அறுக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.

பொழிப்புரை :

திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்ற வராக முகத்தை உடை யவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.

குறிப்புரை :

`இறைவன் போகி, யோகி, வேகி - என்னும் மூன்று நிலையில் நிற்குங்கால் சத்தியும் அவற்றிற்கு ஏற்பவே நிற்பாள்` என்பது,
``எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்`` 1
என்பதனால் அறியப்படும். அற்றுள் சத்தியது வேகவடிவத்தில் `வராகி` - என்பவள் மிகக் கடுமையானவளாகக் குறிக்கப்படுதலால் அவளது நிலையை இங்குச் சிறப்பாக எடுத்துக் கூறினார். இதனானே, ஏனை வேகவடிவங்களும் கொள்ளப்படும்.
இதனால், சத்தியது மறக்கருணை நிலையாகிய வேகவடி வத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

பரவிந்துவாய் நிற்கின்ற சிவ சத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனி யளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.

குறிப்புரை :

`உயிர்களின் வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவ சத்தி அவற்றிற்கு அகப்படுதற் பொருட்டுக் கருணையால் இவ்வாறு உருவும், பெயரும்கொண்டு நின்று, உயிர்களை உய்வித்தற்குரிய செயல்களைச் செய்கின்றது` என்பதாம். அகங்காரம் - `யான் இது செய்வேன்` என முனைதல். இது தனக்கு ஏலாததன்கண் தோன்றின் குற்றமாகும். ஆகவே, தமக்கெனச் சுதந்திரம் இல்லாத உயிர்கட்கு இது குற்றமாகின்றது. சிவசத்திக்குச் சிறப்பாகின்றது. அகங்காரம், `ஆங்காரம்` என மருவி வழங்கும்.
``ஓருரு வாயினை; மான் ஆங்காரத்து
ஈரியல்பாய், ஒரு விண்முதல் பூதலம்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை`` 1
என்பது காண்க. சதாசிவன் முதலிய ஐவராவார், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்போர். இவர் சம்பு பட்சத் தினர் என்க. ஈற்றடி அவள் தன் அடியார்க்குப் பயன் தரும் முறையைக் கூறியவாறு. `ஹ்ரீம்` என்பதில் முதற்கண் உள்ள மெய்யின் சிதை வாகிய இகரம், அம்மெய்போலவே வேறெண்ணப் படாது நின்றது.
இதனால், திரிபுரையது கருணைச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :

உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான் கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியன வுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.

குறிப்புரை :

தத் + பரை = தற்பரை; `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்ற மேலிடத்தவள். உயர் வித்து - பிரகிருதிக்கு மேலே உள்ள முதனிலைகள்; அவை சுத்த மாயையும், அசுத்த மாயையுமாம். அவற்றுள் சுத்த மாயையின் காரியம் ஏழு. அவை, பரநாதம், அபர நாதம், சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தையின் ஊர்த்துவ பாகம், மத்திய பாகம், அதோ பாகம்` என்பன. ஊர்த்துவபாகம் உருத்திர னுக்கும், மத்திய பாகம் திருமாலுக்கும், அதோபாகம் அயனுக்கும் இடமாய் இருக்கும். அசுத்த மாயையின் காரியம் ஏழு வித்தியா தத்துவங்கள். மான் - பிரகிருதி. `மானாகிய ஓர் தலம்` என்க. இது பிரகிருதியாதல் பற்றி, `தலம் - இடம்` என்றார். ``மனமும், நற்புத்தியும்`` என்றது ஆன்ம தத்துவம் அனைத்திற்கும் உபலக்கணம். தன்மை - ஈகைக் குணம். தன்மை உடையவளை, ``தன்மை`` என்றார்.
இதனால், திரிபுரையது முழுமுதல் தன்மை இனிது விளக்கப் பட்டது.
சிற்பி