நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்


பண் :

பாடல் எண் : 1

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.

பொழிப்புரை :

பன்னிரு கலைகளை உடையதாகச் சொல்லப்படு கின்ற ஓங்காரத்தில் நாத விந்துக்களைப் பாவித்து, அதன் பின் ஆதி யாகிய வயிரவியது மந்திரத்தில் முதல்எழுத்து அகாரம் முதலிய வற்றில் பன்னிரண்டாம் எழுத்தாகிய `ஐ` எனவும், ஈற்றெழுத்து அவற்றில் பதினான்காம் எழுத்தாகிய `ஔ` என்பது பதினாறாம் எழுத்தாகிய விசர்க்கத்தோடு கூடியது எனவும் அறிந்து அவ்வாறே ஓதிப் பயன் பெறுக.

குறிப்புரை :

``பன்னிரண்டாம் கலை`` என்பதில் `கலை` சினையாகு பெயராய் அவற்றையுடைய ஓங்காரத்தைக் குறித்தது. ஓங்காரமே பிராசாத கலைகளாய் விரிந்து நிற்பதாதல் அறிக. `கலையின்கண்` என ஏழாவது விரித்து, அதனை, ``கற்பித்து`` என்பதனோடு முடிக்க. அகாரம் - நாதம். எனவே, மாயை சுத்த மாயையாயிற்று. ``ஆதி பயிரவிதன்னில்`` என்பதை மூன்றாம் அடியில் முதலிற் கூட்டுக. பயிரவியது மந்திரத்தையே ஒற்றுமை பற்றி, `பயிரவி` என்றார். `பயிரவி தன்னில் ஆதி பன்னிரண்டோடு, அந்தம் அந்தப் பதினாலு சோடசமும் சொல்நிலை என்று ஓதிடு` எனக் கூட்டி வினைமுடிவு செய்க. `ஓடு` `உம்` என்பன எண்ணிடைச் சொற்கள். இங்ஙனம் கூறியதனால், `ஹோம் ஹைம் ஹௌ: பைரவ்யே நம:` என்பதே வயிரவி மந்திரமாதல் பெறப்பட்டது. தொடக்கத்தில் கூறப்பட்ட பொருளாகிய இது பற்றியே இவ்வதிகாரம், `வயிரவி மந்திரம்` எனப் பெயர் பெற்றது என்க. `பைரவ்யே நம:` என்பது `பயிரவிதன்னில்` என்பதனானே விளங்கிக் கிடந்தது. `வயிரவி` என ஓதாது, ``பயிரவி`` என ஓதியதும் இதன் பொருட்டு.
இதனால், வயிரவியது முதனிலை (மூல) மந்திரம் உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு விசர்க்கத்தோடு கூடி இறுதியில் நிற்கின்ற `ஔ` என்னும் எழுத்தே வயிரவி மந்திரமாகிய சொல் தொடருக்கு முன்னும், ஏனைய `ஐ, ஓம்` என்பவை முறையே அந்த ஔகாரத்திற்கு முன்னே நடுவணதாயும், முதற்கண்ணதாயும் உள்ள பீசங்கள் முன்னே நிற்க. அவ்வாற்றால் உள்ளக்கமலத்தில் விளங்கு கின்ற பராசத்தியாகிய வயிரவி, உலகிற்கு முடிவும் முதலுமாய் உள்ளாள்.

குறிப்புரை :

``அந்தம் பதினாலதுவே முந்து`` என அனுவதித்து ஓதினமையால், ஏனையிரண்டும் சொல்லாமே விளங்கிக்கிடந்தன. எனவே, இதன் முதல்மூன்று அடிகளாலும், `ஹோம் ஹைம் ஹௌ: பைரவ்யே நம:` எனபதே வயிரவி மூலமந்திரம் என்பதை வலியுறுத் தியதாயிற்று. ஈற்றடி அவளது முதன்மை உணர்த்திற்று. அது, பகுதிப் பொருள் விகுதி. இதனால், வயிரவியது முதன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

உலகிற்குக் காரணர்களாகின்ற `அயன், அரி, அரன்` என்னும் மூவரும் வயிரவியது அழிப்பும், காப்பும், படைப்பும் ஆகிய செயல்களில் ஒரு கூற்றிலே அடங்குபவர் ஆதலின், வீடாகிய பெரும் பயனைப்பெற விரும்பி அவளை வழிபடுகின்ற சிறந்த புண்ணியத்தை உடையவர்கள், நிலையற்ற அம்மூவர் பதவிகளுள் ஒன்றனையும் விரும்பார்.

குறிப்புரை :

முதலடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்ச மாய் நின்றது. போகின்ற - அழிகின்ற. `பூதத்தில்` என உருபுவிரிக்க. ``புரம்`` என்றது புவனத்தை. ஆதரர் - விரும்புபவர். என்றது, முன்னர்க் கூறிய மூவரையே. எனவே, `புராதரர் ஆகிய அவர்` என்றதாயிற்று. ``சார்வுழி`` என்பதில் சார்தல், வாளா அடையாயிற்று. போகும் - அவ் வழியில் ஒழுகுகின்ற. `போகும் புண்ணியத்தோர்` என இயையும்.
இதனால், `வயிரவியை வினைநீக்கம் வேண்டி நிட்காமிய மாக வழிபடுதலே சிறந்தது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

பொழிப்புரை :

இருபத்தேழு நாட்களைக் கொண்ட மதியளவை (சாந்தரமான) மாதம் ஒன்றுகாறும் அகத்தும், புறத்தும் வளர்க்கப் படுகின்ற ஓமாக்கினியே வயிரவி வடிவமாகும். அதனைப் பகல் இரவு இடைவிடாது ஓம்புகின்ற மன உறுதியுடையவன் `சிவனே` என எண்ணத்தக்கபெருமை யுடையவனாவன்.

குறிப்புரை :

``புண்ணிய நந்தி, புனிதன்`` என்றவை, ``சிவன்`` என்ற வாறு. அவனது திரு, சத்தி. இங்கு வயிரவி ``எண்ணிய ... ... வன்னி, புண்ணிய ... ... ... திரு ஆகும்`` எனக் கூட்டியுரைக்க. ``பகலோன், மதி`` என்றது அவர்கள் விளங்கி நிற்கும் பகலும், இரவுமாகிய காலத்தைக் குறித்தன. ``நாளின் தொடக்கம் பகலவன் தோற்றமும், இறுதி மதியின் மறைவும்` என்னும் பொது முறை பற்றி ``மதியீறு`` என்றார். `மதியீறாக அதனை (அவ்வன்னியை)ப் பண்ணும் திண் ணியன்` என்றார். ``பண்ணிய வன்னி`` எனப்பொதுப்படக் கூறி யதனால், அகத்தும், புறத்தும் பண்ணுதல் கொள்ளப்பட்டது. அவ்வாறு பண்ணும் முறை மேலெல்லாம் சொல்லப்பட்டது. வடக்கில் கயிலைச் சிகரமாகிய ஓரிடத்தில் அரிதிற்காண இருக்கின்ற சிவன், தென்னாட்டில் அளவற்ற கோயில்களில் எளிதிற் காண இருத்தலால் அவனை, `தென்னன்` எனத் தமிழாகமம் கூறிற்று என்க. வாதவூரடிகளும் சிவனை இவ்வாறு கூறுதல் இது பற்றியே எனக் கொள்ளலுமாம்.
இதனால், வயிரவி வழிபாட்டில் சிறப்புடையது ஒன்று கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

பொழிப்புரை :

உள்ளத்தில் பொருள் வடிவாக எண்ணப்படுகின்ற திரிபுரை மந்திரத்தை, உயர்த்துச் சொல்லப்படுகின்ற அன்பினாலாகிய மேற்கோளோடு வாழ்நாளின் இறுதிவரை சிவனொடு வைத்து, சொல் வடிவிலும் ஓதிவரும் அன்பன் பொருட்டாக அவளை நிலவுலகம் கயிலாய மலைபோலவே சிவனோடு தன்னகத்து வைத்துப் போற்று கின்றது.

குறிப்புரை :

சேவகன் - வீரன். கிரியினில் - கிரியைப் போல. பரிதல் - அன்பு செய்தல். `கட்டு, ஒட்டு` முதலியன போல, ``பிடி`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். ``பரி பிடி`` நிகழ்கால வினைத் தொகை. `பிடியொடு` என உருபு விரிக்க. ``திரிபுரை`` என்றது அவளது நாமத்தை. ஓதி நின்றானுக்காக அவள் கயிலையிற் போல சிவனோடு வெளிநிற்றலை, ``பூதலம் போற்றிடும்`` என உலகின்மேல் வைத்துக் கூறினார். `ஓதி நின்றான் அவனைச் சிவனோடு இங்குத்தானே காண்பான்` என்றவாறு.
இதனால், `மேற்கூறிய வழிபாடு இம்மையிற்றானே பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

பொழிப்புரை :

நூல்களால் சொல்லப்படுகின்ற சிவனுடையதும், உணர்வுடையோரால் உணரப்படுவதும் ஆகிய திருவருட்சத்தியும், வேதத்தின்வழி வழுவாது ஒழுகிவருவோரால் வழிவழியாக உபதேசிக் கப்பட்டு வருகின்ற ஞானமும், மேற்கூறியவாறு இருபத்தேழு நாள்களை உடைய ஒரு மதி வட்டங்காறும் விளங்கி நிற்கின்ற ஓமாக்கினியை வயி ரவிதேவி தன் அடியார்களின்முன் சூலத்தோடு வந்து அருள்புரிவாள்.

குறிப்புரை :

`நந்தி அருள், உணரும் அருள்` எனத் தனித்தனி முடிக்க. `நீதி -முறை, நீதியில்வந்து` என இயையும். சோதி, ஆகு பெயர். திரு வருள், போதம், சோதி என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயராய் வயிரவியையே குறித்தன. `சூலத்தோடு` என உருபு விரிக்க. `சூலம் அவட்குச் சிறப்படையாளம்` என்பது தோன்றுதற் பொருட்டு அதனை விதந்தவாறு.வருகின்ற மந்திரத்துள் மறித்தும் `சூலி` என்றலும் இது பற்றி.
இதனால், மேற்கூறிய வழிபாட்டினது சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

பொழிப்புரை :

வயிரவிக்கு அழகிய கைகள் நான்கு. அவைகளில் சூலம், கபாலம், நாகபாசம், அங்குசம் என்பவற்றை ஏந்தியிருப்பாள். இவள், மாலாலும், அயனாலும் அறியப்படாத அழல் வடிவத்தை உடைய சிவனுக்குச் சிறந்த திருமேனியாகின்ற அருளேயன்றி, வேறல்லள்.

குறிப்புரை :

``சூலம் கபாலம் கையேந்திய சூலி`` என்றது உடம் பொடு புணர்த்தல். வலக்கையிரண்டில் மேலதிற் சூலமும், கீழதில் அங்குசமும் இடக்கை யிரண்டில் மேலதில் கபாலமும், கீழதில் நாகபாச மும் உள எனக் கொள்க. `இவள் சிவனது அருளே` என்றது, `சாந்த ரூபி` என்பதன்கண் ஐயம் அறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 8

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.

பொழிப்புரை :

மேலும் இவள், மென்மையான இயல்பை உடையவள்; வஞ்சிக் கொடிபோலும் வடிவினை யுடையவள்; சிறிது சினங்கொண்ட மனத்தினள்; பலகலையும் உணர்ந்தவள் ; தோன்றுகின்ற வாய் முள்முருக்க மலர்போலச் சிவந்திருப்பவள்; நீல மணி போன்ற நிறத்தை உடையவள்; பல நிறத்தோடும், பல மணிகளோடும் கூடிய உடையை அணிந்தவள்.

குறிப்புரை :

``சொல் இயல்`` என்பதில் இயலுதல், அதற்குரிய இடத்தின் மேல் நின்றது. கிஞ்சுகம் `கிஞ்சம்` என மருவிற்று. `காணும் திருமேனி கல் இயல் ஒப்பது` எனக் கூட்டுக. ``ஆடையும்`` என்னும் உம்மை, சிறப்பு. மணியை உடையதனை ``மணி`` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

பொழிப்புரை :

இன்னும் இவள், பல வயிரங்கள் இழைத்த கோடி சந்திரன்போலும் அழகிய முடியை அணிந்தவள்; சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரத்தின குணடலத்தை அணிந்த காதினை உடையவள்; மான் போல மருண்டு பார்க்கும் பார்வையை உடையவள்; சிறந்த ஒளிகளாகிய சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவள்; பொன்னாலாகிய மணி போலும் நெருப்புக் கண்ணையும் நிரம்ப உடையவள்.

குறிப்புரை :

திருமுடி, அன்மொழித்தொகை. `கன்மணி குண்டலக் காதி` எனப் பாடம் ஓதி, இங்கும், `மணி` என்பதற்கு `அழகு` எனப் பொருள் கொள்ளுதல் சிறக்கும், ``வன்னி`` என்றது அதனையுடைய கண்ணினை. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். நிரம்புவது சிவசத்தித் தன்மை என்க.
இவை மூன்று மந்திரங்களாலும் வயிரவியது தியானவடிவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

பொழிப்புரை :

விரிந்துநின்ற ஒரு தாமரை மலரின் எட்டிதழின் நடுவில் (பொகுட்டில்) மேலான சத்தி ஒருத்தி இருக்கின்றாள். அவ் எட்டிதழ்களில் கன்னியர் எண்மரும், அவருள் ஒருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் பணிமகளிரும் அங்குச்சூழ்ந்து பணிபுரிந்து அந்தச் சத்தியைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

குறிப்புரை :

இவளே `மனோன்மனி` எனப்படுபவள். நான்கு திசை யிலும் திசைக்கு இரண்டாக உள்ள எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக முறையே `வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத தமனி` எனச் சொல்லி, எண்மர் கன்னியரை அறிக. பாரித்தல் - சூழ்தல். `சரித்து` என்பது முதல் நீண்டது. இதன்கண் கூறப்பட்ட தாமரை மலர் வடிவத்தையும், அதன்கண் இருக்கும் முதற்சத்தி ஒருத்தி பரிவாரசத்தி எண்மர் ஆகியோரைக் கீழ் உள்ளவாறு கண்டுகொள்க.
சிவனைப் பூசித்தற்குரிய பதுமாசனத்தின் அமைப்பு ஆகமங் களில் ஆங்காங்கு வேறு வேறுவகையாகச் சொல்லப் படுகின்றது. அவற்றுள் இங்குக் கூறிய எட்டிதழ்களும் சுத்த வித்தை ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் கூடியவையாம். ஆகவே, இதன் பொகுட்டு முதலியன ஏனைச் சிவத்தத்துவங்களும், இதன் தண்டு ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம். இதனை, அகத்தே பாவிக்கும் பொழுது தண்டினைக் கொப்பூழ் அடி முதலாகவும், மலரை இருதயத் திலும் கொள்ள வேண்டும். மனோன்மனியே இங்குப் பூசிக்கப் படுவள். ஏனையோர் அவளுக்குப் பரிவாரமும், பரிவாரங்கட்குப் பரி வாரங்களும் ஆவர். சிவ வழிபாட்டு முறையே சத்திக்கும் ஆதலின், அதனை இங்குக் கூறினார். இதனானே, எந்தச் சத்தியை யார் வழி படினும் வழிபடப்படுபவளைத் தலைவியாகப் பொகுட்டில் வைத்துப் பரிவாரங்களை இதழ்களில் நிறுத்திப் பூசித்தல் வேண்டும் என்பது கொள்ளப்படும்.
இதனால், சத்தியை அகத்தும், புறத்தும் ஆசனத்தில் வைத்து வழிபடுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

பொழிப்புரை :

இறைவியாகிய பராசத்தி மேற்கூறிய மனோன் மனியாய்ப் பூசிக்கப்படும் பொழுது கன்னித் தன்மையைக் குறிக்கச் சிலம்பும், வளையலும் அணிந்தவளாகவும், உலகத்தைக் காக்கின்ற செயலைக் குறிக்கச் சங்கு சக்கரங்களை ஏந்தியவளாகவும், எட்டுத் திசையும் நிறைந்தவளாதலைக் குறிக்க எட்டிதழ்த் தாமரையின் நடுவில் உள்ளவளாகவும் கருதப்படுவாள்.

குறிப்புரை :

``எண்டிசை யோகி``, ``எண்டிசை தாங்கும் அருட் செல்வி`` என்பன உடம்பொடு புணர்த்தலாய் நின்றமையின், இதற்கு இவ்வாறுரைத்தல் கருத்தாதல் அறிக. யோகி - பொருத்தி யிருப்பவள்.
மேற்கூறிய மனோன்மனியைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவளாகிய சத்திக்கு உரிய பூசைப் பொருள்களாவன. சந்தனம் குங்குமம் பனிநீர் முதலிய நறுமணப் பொருள்கள். சூடத்தக்க மிக்க பல மலர்கள், ஐவகை வாத்தியங்கள், ஒலிக்காத மணிபோல வாய்க்குள்ளே சொல்லப்படும் மந்திரங்கள் முதலியனவாம்.

குறிப்புரை :

பூசனைப் பொருள்களில் சிறந்தன சிலவற்றை எடுத்தோதி, ஏனையவற்றை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். வழக்கம் பற்றி அவற்றை உணர்தல் எளிதாதலின், ``தேசந் திகழும் திரிபுரை` என்பதனை முதற்கண் வைத்து, `திரிபுரைக்கு` என உருபு விரித்துக்கொள்க. காண். முன்னிலையசை.
இதனால், சத்தி வழிபாட்டிற்குரிய பொருட்படை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.

பொழிப்புரை :

உலகில் காணப்படுகின்ற பலப்பல தெய்வங் களும், வேறு வேறு வகையாய் அணியப்படுகின்ற அணிகலங்கள் பலப்பலவும் ஒரு பொன்னின் வேறுபாடேயாதல் போலத் தோன்று வனவாம். அவைகளுள் முதல்வராகப் போற்றப்படுகின்ற மும் மூர்த்தி களாயும் காணப்படுந்தலைவி உலக காரணியாகிய ஆதி சத்தியே.

குறிப்புரை :

`வெவ்வேறாய், மாயனுமாய்` என ஆக்கம் வருவிக்க. ``பூணும் பல பலவும்`` என்னும் முற்றும்மை தொகுத்தல் பெற்றது. ``பொன்`` என்றது அதன் காரிய வேறுபாட்டினை. `தெய்வங்கள் தோற்றத்தில் பலப் பல வாய்க் காணப்படினும் பொருளால் ஒன்றே` என்பது முன் இரண்டடிகளால் கூறப்பட்டது. இதனை எடுத்தோதியது, `சத்தி ஒருத்தியே முதல்வி` எனப் பின்னர் வருவதனை நிறுவுதற் பொருட்டு. வேறுபட்டுக் காணப்படுகின்ற பல தெய்வங்களும், `சம்பு பட்சமும், அணுபட்சமும்` என இருதிறத்தன என்பது முதல் தந்திரத்தில் (90) காட்டப்பட்டது. சிவபுண்ணிய மிகுதியால் உருத்திரன் மாலும், அயனும் ஆகிய ஏனை இருவர்போல ஒரோவழியும் மயக்கம் எய்துதல் இலனாயினமையின் அவனைச் சிவனாகவே கூறுதல் உண்டு என்க. ``சிவன்`` முதலிய மூன்றிலும் உள்ள உம்மைகள் எண்ணோடு உயர்வு சிறப்பு. `மும்மூர்த்திகட்கும் முதல்வி யாதல் கூறவே, ஏனையோர்க்கு முதல்வியாதல் கூற வேண்டா` என்பது கருத்து. சத்தியது முதன்மையை விதந்தது. அவளை வழிபட்டால் அனைத்துத் தேவரையும் வழிபட்டதாம் என்பது உணர்த்துதற்கு என்க.
இதனால், மேற்கூறிய வழிபாட்டின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.

பொழிப்புரை :

தூலம், சூக்குமம் முதலாக வகுத்துச் சொல்லப் படுகின்ற மந்திரங்களுள் காரண மந்திரத்தை ஓதுவோரது உள்ளக் கமலத்தில், பூரக கும்பக இரேசகங்களாகின்ற பிராணாயாமத்தால் விளங்கி நிற்கின்ற சத்தி, சத்தனாகிய சிவனது நடுவில் உள்ளவளாய் இருப்பாள். இவ்வாறு சொல்லுகின்ற வேதப் பகுதி வேதத்தின் முடிவாய் விளங்குவதாம்.

குறிப்புரை :

`பூரகம், கும்பகம், இரேசகம்` என்பன திரிவுபெற்று நின்றன. `இரேசகத்தால்` என உருபு விரிக்க. ``நடு`` என்பதன்பின், ``இருப்பாள்`` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதனுள், ``மந்திரம்`` என்றது பஞ்சாக்கரத்தை. ``காரணம்`` என்றதும், மகா காரணமாம். அஃது ஒன்பதாந் தந்திரத்தில் பஞ்சாக்கர பேதங்களைக் கூறுமிடத்து ஈரெழுத்தின் ஈரடுக்காக எடுத்தோதப்படுதல் காண்க. அதன்கண் சத்தி சிவத்தின் நடுவிலும், சிவம் சத்தியின் நடுவிலும் இருப்பினும் இங்கு இயைபு பற்றிச் சத்தி சிவத்தின் நடுவில் இருத்தலையே குறித்தார். ஓதுபவரது வினை அவரது உள்ளத்தின்மேல் ஏற்றப்பட்டது.
``உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீஇருத்தி`` 1
என்பது இம் மகாகாரண பஞ்சாக்கரத்தின் மேலும்,
``அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்``
என்பது மூன்றெழுத்தாய் நின்று அடுக்கிவரும் காரண பஞ்சாக் கரத்தின்மேலும் நோக்குடையன என்றல் மரபு. இதனின் மிக்க மந்திரம் இன்மையின் இதனைக் கூறும் உபநிடதமே வேத முடிவாகும் என்றார். மகாகாரண பஞ்சாக்கரத்தைச் சத்தி பரமா ஓதுங்கால் சத்தியெழுத்தை நெடிலாக ஓதுதல்வேண்டும் என்பது உய்த்துணர்ந்து கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாட்டின் மந்திரங்களுள் தலையாயது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.

பொழிப்புரை :

கைகளில் மோதிரவிரல், சிறுவிரல் முதலாகத் தொடங்கி வலமாகப் பெருவிரலின் நுனியால் வரைகளைத்தொட்டு உருவை எண்ணி நடுவிரலில் முடிக்கும் வகையால் மீள மீள உருவேற்றப்படும் தமிழ்மந்திரம் முதலிய மந்திரங்களை அவ்வவற்றிற் குரிய தெய்வங்களாகவே தெளிந்து வழிபடுங்கள்; (பயன் விளையும்.) இதனை எங்கள் நந்திபெருமான் நான் உணரும் வண்ணம் உரைத்தருளினார்.

குறிப்புரை :

நடுவிரலிற் சிறியவாதல்பற்றி மோதிரவிரலையும் `சிறுவிரல்` எனப் பொதுப்படக் கூறினார். எனவே, `தீரச் சிறியவிரல்` எனக் கூறவில்லை என்க. கையில் உள்ள ஐந்து விரல்களில் பெருவிரல் எண்ணுவதும், ஏனை நான்கு விரல்களும் எண்ணப்படுவனவுமாய். நிற்கும். ஒவ்வொரு விரலிலும் மும்முன்று கீற்றுக்கள் உள; எண்ணப் படும் விரலின் வரைகள் பன்னிரண்டில் நடுவிரலிலும், மோதிர விரலிலும் உள்ள நடுக்கீற்று இரண்டும் எப்பொழுதும் தீண்டப்படா. `அவையிரண்டும் சிவமும், சத்தியும்` என்பர். அவை ஒழிய ஏனைப் பத்துக் கீற்றுக்களை மோதிரவிரலின் அடிக்கீற்று முதலாகத் தொடங்கி வலமாகச் சுற்றிவந்து நடுவிரலின் அடிக் கீற்றில் முடிக்க உளவாகின்ற உருக்கள் பத்தாம். இவ்வாறு பெருவிரலின் நுனியால் மீள மீளச் சுழன்று எண்ண உருக்கள் பலவாக ஏறும். `எட்டு` என்னும் உருவும் உண்மையில் பத்தாகவே எண்ணப்படும். அவ்வாறு எண்ணப்படுத லால் இடையில் நிகழ்ந்த குறை நிரம்பும் என்பது கருத்து. இனி எட்டு வேண்டியவிடத்துச் சிறுவிரலின் அடி தொடங்கிச் சென்று சுட்டு விரலின் அடிக்கண் முடித்தல் வேண்டும் என்பாரும் உளர்.
செபமணியிலன்றிக் கைவிரல்களால் மந்திரங்களைக் கணிக்கும் வகையில் பலவேறுமுறைகள் பலவிடத்து உள்ளன. அவற்றுள் ஒன்றனை நாயனார் விதந்தார்.
`மேற்கூறிய பத்துக் கீற்றுக்களோடு பெருவிரலில் இரண்டு கீற்றுக்களைக் கூட்டிப் பன்னிரண்டு பன்னிரண்டாக ஒன்பது முறை கணிக்க நூற்றெட்டு உருவாகும் என்பாரும், `சிறு விரலின் அடி தொடங்கிப் பெருவிரலின் ஒரு கீற்றேகொண்டு நடுவிரல் அடிமுடியப் பத்தாகும்` என்பாரும் இங்ஙனம் பலதிறத்தர் கிரியையாளர் என்க.
தமிழ் மொழியிலும் மந்திரம் உண்மையை வலியுறுத்துபவர் இந் நாயனார் ஆதலின் ``செந்தமிழாதி`` என்றார். ``செந்தமிழாதி மந்திரங் களை` என்க. ``தமிழ்`` என்பது அதனாலாகிய மந்திரத்தைக் குறித்தது.
தமிழ்ச் செய்யுட்கே இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர் அதன் செய்யுட்களை ஏழாகவகுத்து, `அவற்றுள் ஒன்று மந்திரம்` எனக்கூறி,
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப`` 1
என நூற்பாச் செய்வாராயின், அந்நூற்பாவினுள் ``மந்திரம்`` என்றது வடமொழி மந்திரமே என உரைத்தல் உரையாதல் எங்ஙனம்? இந்நூற் பாக் கூறும் மந்திரம் தமிழ் மந்திரமே என்பதில் உரையாளர் யாவரும் ஒத்த கருத்தினர் ஆதலை அவர் உரைநோக்கி உணர்ந்து கொள்க. நவம் - புதுமை; அஃதாவது முன்னர் அறியாதிருந்து பின்னர் அறிதல்.
இதனால், மந்திரங்களைக் கணிக்கும் முறைகளுள் எளிதான ஒன்று இயைபு பற்றிக் கூறப்பட்டது.
இதற்குப் பிறர் இவ்வாறன்றி, வயிரவி மந்திரங்களால் கர நியாசம் செய்யுமாறு கூறியதாகக்கொண்டு, அம்மந்திரங்களை இங்குத் தந்துரைப்பாரும், பஞ்சாக்கரத்தால் இருவைகப்படக் கரநியாசம் செய்யுமாறு கூறியதாகக் கொண்டு, அம்மந்திரத்தைத் தந்துரைப் பாரும் ஆவர். அவரெல்லாம், ``செந்தமிழாதி`` என்பதற்கு, `தமிழுக்கு முதல்வியாகிய வயிரவி` என இயைபின்றியும், `செந்தமிழாவது ஆகமம்` எனவும் `செந்தமிழ் மந்திரமாவது திருவைந்தெழுத்தே` எனவும் தத்தமக்கு வேண்டியவாறே உரைத்துக் கொள்வர். அவ் வுரைகளது தன்மை ஓர்ந்துணர்க.

பண் :

பாடல் எண் : 16

உரைத்த நவசக்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

பொழிப்புரை :

``மேல்,`` ``பூரித்த பூவிதழ்`` (1067) என்னும் மந்திரத் திற் சொல்லப்பட்ட ஒன்பது சத்திகளுள் இறுதியதாகிய `மனோன்மனி` என்ற ஒன்று முடிவாய் நிற்க. மற்றைய எட்டினையும், வரிசைப்பட்ட எட்டு இடங்களில் வைத்துஒன்றன்பின் ஒன்றாக முறையே எண்ணிப் பிராசாத கலைகள் பன்னிரண்டில் இறுதி எட்டோடும் அவற்றை முன்னே கூறிய நந்திபெருமான், அவ்வாற்றானே வரிசைப்பட நியமிக்கப்பட்ட முறையில் வழிபாட்டு முறையை ஆக்கியருளினார்.

குறிப்புரை :

`ஆதலின் அங்ஙனமே அச்சத்திகளை வழிபடுக` என்பது குறிப்பெச்சம். இராசி - இடம். `இராசிக்கண்` என ஏழாவது விரிக்க. ``நெடுமுறை` என்பது, `நெடுங்கணக்கு` என்பது போல இடை யில் ஒன்று விடாது கூறுதலைக் குறித்தது. `பிராசாதம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `பிரைச்சதம்` என்பதும் பாடம். `பிராசாதம்` என்றது அதன் கலைகளை, இங்குக் குறிக்கப்பட்டது, துவாதச கலாப் பிராசாதமே, அதன் இறுதி எட்டுக்கலைகளாவன உன்மனைக்குக்கீழே உள்ளனவாம். அவை, `விந்து, அருத்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, சமனை என்பன. `இவற்றிற்கு உரிய இடங்கள் ஆஞ்ஞை முதலாக மேலே உள்ளவை` என்பதை முன்னைத் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத் தொடக்கத்தே விளங்கக் கூறினோம். கிழக்கு முதலாக ஒரு திக்கிற்கு இரண்டாக உள்ளன என மேற்காட்டிய எட்டிதழ்களில் வாமை முதலிய எட்டுச் சத்திகளையும், பொகுட்டில் மனோன்மனியையும் வைத்து எண்ணுங்கால் விந்து, முதலிய பிராசாத கலைகளோடு ஒன்றுபட வைத்து எண்ணுதல் வேண்டும் என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இவ்வாறு எண்ணு தலால் சத்தி வழிபாடு பிராசாத யோகமாயும் அமையும் என்பது கருத்து. `எட்டோடும் நிரைத்து` என்க. நியதி - நியமிக்கப்பட்டமுறை. நியமம் - வழிபாட்டுமுறை, செய்தான் - ஆக்கினான். சத்தியை அஃறி ணையாகக் கூறுதலும் உண்மையின் இங்கு அவ்வாறு கூறப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாட்டினைப் பிராசாத முறையிற் செய்யின் சிறப்பாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.

பொழிப்புரை :

மாலையையணிந்த கூந்தலை உடையவளும், அருள் பொழியும் கண்களை உடையவளும், உயிரின் அறிவில் பொருந்திய வலிய ஆணவ இருள்போகும்படி ஞான ஒளியைப் பரப்பு கின்ற இளமையான கொடிபோல்பவளும் ஆகிய வயிரவி, வெளியில் ஓமத்தீ வடிவாயும், உள்ளே மூலாக்கினி வடிவாயும் பொருந்தி, விந்துத் தானத்து அமுதத்தோடு இருதயத்தில் வந்து நின்றதை, நீ காண்பாயாக.

குறிப்புரை :

பின்னர், உள்ளெழுதல் கூறப்பட்டமையால், முன்னர் வெளியில் எழுதல் பெறப்பட்டது. மூலாக்கினி கருத்துப் பொருளா தலின், அதனை நுண்ணிதாகக் கூறியதோடு `புகை` எனவும் கூறினார். `மேவி` என்பது ஈறுகெட்டு நின்றது, `விந்து` என்பது வலித்தல் பெற்றது.
இதனால், சத்தி வழிபாட்டினைப் புறத்தும், அகத்தும் அழலோம்பல் முறையால் செய்க என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.

பொழிப்புரை :

இருதய மந்திரமும், சிரோமந்திரமும் `நம:` என்னும் முடிபினை உடையன. சிகா மந்திரமும் `வஷட்; என்னும் முடிபினை உடையது.

குறிப்புரை :

`இருதய மந்திரமும் `நம` என்று கண்டு பேசும்; தலை மேல் ``மந்திரமும்`` `நம` என்று கண்டு பேசும், சிகை `வம்சம்` என முடிவு கொள்க. ``மந்திரமும்`` என்பது, ``தலைமேல்`` என்பதனோடும் சென்று இயையும். `வம்,சம்` என்பன வகாரத்தையும், ஷகாரத்தையும் குறித்து `வஷட்` என்பதை உணர்த்தின. ``பேசும்`` என்பது, `பேசப் படும்` என்னும் பொருளது. ``வேணு நடுவு மிக நின்ற ஆகுதி பூணும் நடு என்ற`` என்றது, `மூங்கிற் குழல்போலும் சுழுமுனை நாடியின் உள்ளே ஓங்குகின்ற மூலாக்கினியை எதிரேற்றுக்கொள்கின்ற நடுவிடமாகிய உச்சிக்கு உரியது எனப்பட்ட சிகை வம்சம், என்றவாறு.

பண் :

பாடல் எண் : 19

சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி
பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.

பொழிப்புரை :

சிகா மந்திரத்தில் உள்ள `வஷட், என்னும் முடிபு சிறிது வேறுபட்ட `வௌஷட்` என்பது கவச மந்திரத்திற்கும், `பட்` என்பது அத்திர மந்திரத்திற்கும் முடிபாகும். நேத்திரங்கட்குரிய மந்திரத்திற்கு, பொதுவாயுள்ள, `நம:` என்பதே முடிபாம். நேத்திர நியாசத்தில் திரிசூல முத்திரை காட்டல் வேண்டும். சத்தி வழிபாட்டில் யோனி முத்திரை காட்டலும் பொருந்தும்.

குறிப்புரை :

இவ் இரண்டு மந்திரங்களிலும் எடுத்துச் சொல்லப் பட்டவை, `இருதயாய நம:, சிரசே நம:, சிகாயை வஷட், கவசாய, வௌஷட், அஸ்த்ராய பட், நேத்ரோப்யோந் நம:` என்னும் அங்க மந்திரங்கள் ஆறுமாம். ``கொண்டு`` என்பதை, `கொள்ள` எனத் திரிக்க ``பகை நின்ற`` என்பது, `பகைக்கு - பகையை அழித்தற்கு - நின்ற, என்றவாறு, ஆதி - வயிரவி. `ஆதியிடத்து நின்ற` என்க, `பாரென்று` என்பது பாடம் அன்று. தொகை - பொது `நேத்திரம் தொகையோடு நின்றன` என மாறிக் கூட்டுக. ``நின்றன`` எனப் பன்மை கூறியதனால் அது பன்மை வாசகமாகச் சொல்லப்படுதல் கொள்க. `வருவித்தல்` என்பது இடைக் குறைந்து, `வருத்தல்` என நின்றது. `சிரோ மந்திரம் சுவஹாந்த மானது`, என்பாரும் உளர். `நம:` பொதுவாக எல்லாவற்றிற்கும் உரியதே. அஃது ஒன்றே பட இம்மந்திரங்கட்குப் பொருளுரைப் பாரும் உளர். அவர், `வம்சம்` என்பதையும், `அந்தம்` என ஓதித் தமக்கு வேண்டியவாறு உரைத்துப் போவர்.
இவ் இரண்டு மந்திரங்களாலும் அங்க மந்திரங்கள் கூறப்பட்டன, வழிபாட்டில் இவை அங்க நியாசத்திற்கும், பிறவற்றிற் கும் பயன்படுதல் கருதி.
சம்மிதா மந்திரங்களுள் பிரம மந்திரம் ஐந்தும் சத்தி வழிபாட்டில் சத்திக்கு ஏற்பச்சொல்லப்படும். அங்கமந்திரங்கள் அவ்வாறன்றி எவ்விடத்தும் ஒருபெற்றியவாயே வரும் என்க.

பண் :

பாடல் எண் : 20

வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.

பொழிப்புரை :

கைகளை உள்முகமாகக் கொண்டு முயற்சியோடு சிறுவிரல் இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக மாறி வைத்து அணிவிரல்களையும் அவ்வாறே சுட்டு விரல்களால் மாறிப்பிடித்து மோதிர விரல்களின் மேல் நீண்டதாகிய நடுவிரல் ஒவ்வொன்றையும் நிமிர்த்திப் பொருந்த வைத்துப் பெருவிரல் இரண்டையும் மாற்றமின்றி உள்ளே புகச் செய்தபின், நேத்திர மந்திரத்தைச் சொல்லுக.

குறிப்புரை :

இவ்வாறு அமைப்பது யோனிமுத்திரையாம். இது பஞ்சமுக முத்திரையினின்றும் சிறிதே வேறுபடுதல் அறிக. மாறி வைக்கப்பட்ட சிறு விரல்களைப் பின் நடு விரல்களின் மேல் சார்த்த வேண்டுதல் காண்க. மேற்கூறிய இரண்டில், `திரிசூல முத்திரை நன்கு அறியப்பட்டது` என்னும் கருத்தால். ஏனை ஒன்றன் அமைப்பையே கூறினார். சிலர் வலக்கையில் உள்ள சிறுவிரலைப் பெருவிரலால் வளைத்துப்பிடித்து அவற்றின் நடுவில் உள்ள மூன்று விரல்களை நிமிர்த்திக் காட்டும். ஆக்ரகண்ட முத்திரையையே `நேத்ர முத்திரை` என்றும், `திரிசூல முத்திரை` என்றும் கொள்வர். எனினும், இரு கை விரல்களையும் நன்கு கோத்துப் பிடித்துச் சிறுவிரல்கள், நடுவிரல்கள், பெருவிரல்கள் என்பவற்றை நிமிர்த்தித் தம்முள் பொருந்த வைத்துக் காட்டுவதே திரிசூல முத்திரை என்க.
`வருத்தத்தோடு சிறுவிரல் இரண்டும் மாறிப் பொருந்தி` எனவும், `நெடிதாகிய நடுவை நெரித்து ஒன்ற வைத்து` எனவும் கூட்டுக. `புக்கபின்` என்பது, `புக்கு` எனத் திரிந்தது.
இதனால், அரிதில் அறியப்படுவதொரு முத்திரையை அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

பொழிப்புரை :

சத்தி வழிபாட்டில் பிராண வாயு வசப்படுதற்கு உரியதாகிய உபதேசத்திற்குச் சொல்லப்பட்ட மந்திரமாவது, இகர உயிர், அம்ச மந்திரத்தினின்று பிரித்துத் தனியே தயக்கம் இல்லாமல் சொல்லப்படுகின்ற சகர மெய்யை முன்னர்க் கொண்டு, இறுதியில், முடித்துச் சொல்லப்படும் விந்துவாகிய மகாரத்தையும் ஏற்று நிற்கச் சொல்லப்படுவதாம்.

குறிப்புரை :

எனவே, `சிம்` என்பதே அம்மந்திரமாதல் அறிக. மூன்றாம் அடியை முதற்கண்வைத்து உரைக்க. `மந்திரம்` என்னும் வட சொல்லில் `இகரம் சகாரத்தை முன்கொண்டு` என்க. இங்கு, `முன்` என்பது, புணர்ச்சிவிதிகளின் முறைப்படி, `இடமுன்` என்க. வாசிப் பிராணன் - யோக நூல்களில் `வாசி` எனவழங்கும் பிராணன். `பிராணனுக்கு` என்னும் நான்காவது தொகுத்தலாயிற்று, கூசுதல், இங்கு, அடங்கு தலின் மேற்று. ``கூவு`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய்ச் செயப்படுபொருள் மேல் நின்றது. இனி ஏவல் முற்றாக்கி, அது கருத்து வகையால் பெயர்ப் பயனிலையாய் நின்றதாக உரைத்தலுமாம்.
இதனால், சத்தி வழிபாட்டில் கொள்ளப்படும் பிராணாயாம மந்திரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய பிராணாயாம மந்திரத்தைச் சொல்லிப் பிராணாயாமம் செய்த அடியவன், பின்பு மாயையின் அடையாளமாகக் காட்டுகின்ற சங்க முத்திரையின் நடுவில் சத்தி விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகள் அனுவாதம். கையை நிமிர்த்திப் பெருவிரல் தவிர மற்றைய நான்கு விரல்களையும் சேர்த்து நீட்டிச் சிறிது வளைத்துப் பெருவிரலை வளைத்து அதன் நுனி சுட்டுவிரலின் அடியில் பொருந்த வைப்பதே சங்க முத்திரையாம். `இது மாயையின் விரிவைக் குறிக்கும்` என்பது இங்குக் கூறப்பட்டது. இம்முத்திரை தேவர்கட்கும், தேவகணங்கட்கும் செய்யும் தர்ப்பணத்திற்குக் கொள்ளப் படுவது. இதனால் விரல் நுனிகளின்வழிச் செல்லும் நீர் `தேவதீர்த் தம்` எனப்படும். `கணபதி, கந்தர், தேவர், நந்தி, மகாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் இவர்களுக்கும் இவ்வாறே தர்ப்பணம் செய்யப்படும் ஆகையால், `சங்க முத்திரையின் நடுவில் தேவி விளங்கு வாள்` என்றார். எனவே, `பிராணாயாமத்தின் வழியான தியானம், செபம் இவைகளோடு தேவிக்குத் தர்ப்பணமும் செய்க என்றாராயிற்று.
``கூவிய சீவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து, `மாயையாக விரிக்கின்ற சங்க முத்திரை நடுவுள் தேவி திகழ்ந்துநின்றாள்` என முடிவுசெய்க.
இதனால், சத்தியது தர்ப்பணம் விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

பொழிப்புரை :

துன்பத்தை நீக்க முன்னிற்கும் வயிரவி நீல நிறத்தை உடையவள்; இரவில் உலாவுபவள்; மனமாகிய ஒன்றும், வாக்கும் காயமுமாகிய ஏனை இரண்டும் ஒருவழிபட்டோரது உள்ளத்தில், தானே விளங்கி அருள்புரிபவள்; சிவபிரானுக்கே உரியசத்தி; அவளைத் துதித்து, அவளது நல்ல திருவருளை இவ்வுலகத்தில் பெற விரும்புங்கள்.

குறிப்புரை :

இரவில் உலாவுதல் தீயவரை ஒறுத்தற்கு. `மனம்` என்பதும், `உள்ளம்` என்பதும் வேறு வேறாதலை அறிக. ``தேவர் பிரானுக்கு நாயகி`` என்றது, `வயிரவி சிவசத்தியே`` என்பதனை வலி யுறுத்தியதாம். இத்தொடர் ஒருபெயர்த்தன்மைப்பட்டு, `சென்றருள்` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. `நன்றாகிய அருள்` என்க. ``ஞாலத்து நாடிடும்`` என்றது, `உலகில் பகை முதலிய துன்பங்கள் நீங்கி வாழலாம்` என்றவாறு.
இதனால், வயிரவி வழிபாடு உலகில் வரும் துன்பங்களை நீக்குவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.

பொழிப்புரை :

முக்கண்ணியும், சோதி (ஒளி) வடிவானவளும், பராபரையும், `ஆதி` என்னும் பெயரொடு முதல்வியாய் நிற்பவளும் ஆகிய வயிரவி தனது ஆற்றலால் வேதம் சராசரப் பொருள்கள், ஐம்பூதம், நான்குதிசை, இருள், ஒளி, பலவகை உடம்புகளாய்த் தோன்றுகின்ற பல உயிர்கள் முதலிய எல்லாமாய் நிற்கின்றாள்.

குறிப்புரை :

மேல், `திரிபுரை` எனப்பட்ட அவளே இங்கு, `வயிரவி` எனப்படுகின்றாள் என்பது உணர்த்துதற்கு முன்னை யதிகாரத்தில், ``வைத்த பொருளும்`` (1042) என்னும் மந்திரத்திற் கூறியதனையே இங்கும் கூறினார். பர+ அபரை = பராபரை; மேலாய பொருளும், கீழாய பொருளுமாய் நிற்பவள். ஒடு உருபு ஆனுருபின் பொருளில் வந்தது.
இதனால், வயிரவி உலகப் பயனைத் தருதற்கு உரியவள் ஆமாறு குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.

பொழிப்புரை :

தென்கோடியாகிய குமரித்துறையில் நிலைபெற் றிருப்பவளும் எப்பொருட்கும் ஆதியுமாகிய வயிரவியைத் துதித்தும், தியானித்தும் நின்றால், உடலில் உள்ள உயிர் சிவமாகும். அறியாமை பொருந்திய இவ்வுலகில் பலவாறு பிறக்கும் பிறவிகள் ஒழியும். அவளது வடிவு எண்ணிறந்த வகையினது ஆகலின், அஃது ஒன்றாயே இருத்தல் கூடுமோ!

குறிப்புரை :

எவ்விடத்தும் சிவமும், சத்தியும் பிரிப்பின்றியிருப் பினும், சிலவிடத்துச் சிவத் தன்மையும், சிலவிடத்துச் சத்தித் தன்மை யும் முனைந்து தோற்றும். அவ்வாற்றால் வடக்கில் கயிலைமலை, சிவ மலையாகின்றது. அதுபோலத் தெற்கில் `குமரி` என்னும் மலை சத்தி மலையாய் இருந்தது. காலவேறுபாட்டால் அம்மலையைக் கடல் தன்னுள்ளே அகப்படுத்து வடக்கில் மிகப்பரந்து நின்றமையின், அதன் வடகரையில் சத்திகுமரியாய் எழுந்தருளியிருக்க, அக் கடல் முனை யும் `குமரி முனை` எனப் படுவதாயிற்று. அவ்விடம் சிவனுக்குக் கயிலைபோல, உமைக்கு மிகச் சிறந்த இடமாதலை உணர்த்தற்கு வயிரவியை, ``கன்னித் துறைமன்னி`` என்றார். இறையன்புடையோர் யாவரும் கயிலையை அணுகிக் காணலையும், குமரி தீர்த்தத்தில் (கடலில்) முழுகுதலையும் ஒருபெற்றியவாக மேற்கொள்ளல் இன்றும் நிகழ்வது. இதனால், ஒரு கருத்துப் பற்றிச் சிவனை, மேல், (1061, 62) ``தென்னன்`` எனக் குறித்த நாயனார், தேவியை இங்கு, ``கன்னித் துறை மன்னி`` என்றார். பின்னரும், (1088) ``இனிய தென்மூலை இருக்கும் குமரி`` என்பார். ``நல் ஆவடு தண்டுறை ஆவின் கிழத்தி`` (1105) எனவும் கூறுவார். பாயிரத்திலும், ``சிவன் ஆவடு தண்டுறை சீருடையாள்`` (17) என்றார். ``மன்னி`` என்பது பெயர். இதில் ஐயுருபு தொகுத்தலாயிற்று. கன்னித் துறையைப் பிறரெல்லாம் உருவகமாக்கித் தாம் தாம் வேண்டும் பொருளை உரைப்பர். `சத்தியது வடிவு ஒன்றாகாது பலவாதல் செயல் வேறுபாடு நோக்கியாதலின், அவற்றை அவ்வாறே கொள்க` என்பார், ``ஓத உலவாத கோலம் ஒன்றாகுமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை வினா. இதனால், வயிரவி சிவ சத்தியேயாதல் இங்கும் தெளிவிக்கப்பட்டது.
இதனால், வயிரவி வழிபாடு வீடுபேற்றினையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

பொழிப்புரை :

`அழகிய கூந்தல், வளைந்த புருவம்` நீல நிறத்தை உடைய குவளை மலர்போலும் கண்கள்` களிப்பைத் தருகின்ற இனிய அமுதம் போன்ற ஆனந்தமே உருவான அழகிய வடிவம், இவைகளை உடைய வயிரவியே எப்பொருட்கும் மேலான சிவத்தை உயிர்கட்கு வெளிப்பட்டுத் தோன்றச் செய்தாள்.

குறிப்புரை :

`சத்தி வழியாக அன்றிச் சிவத்தை நேரே காணுதல் இயலாது` என்பது தோன்ற, நேரே சென்று காணுதலினின்றும் பிரித்த, `சுந்தரியே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. அவ் ஏகாரத்தை இரட்டுற மொழிந்து தேற்றேகாரமாக்கி, `உலகப் பயனைத் தருகின்ற வயிரவியே மெய்ப் பயனையும் தருகின்றாள்` என்பது கொள்க. மெய்ப்பயன் கருதி வழிபடுவோர் அவளைச்சாந்த ரூபியாகக் கண்டு வழிபடுக என்பார், ``கோலக் குழலி`` என்பது முதலாக உடம் பொடு புணர்த்துக் கூறினார்.
இதனால், வயிரவியையே சாந்த ரூபியாகக் கண்டு வழி பட்டுப் பேரின்பத்தினைப் பெறுதல் கூடுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.

பொழிப்புரை :

முன்னே சிவத்தை வெளிப்படுவித்துக் காணச் செய்து, பின் அக்காட்சியின் பயனாக முற்றறிவையும், முற்றறிவின் பய னாகத்தெளிவையும், தெளிவின், பயனாக இன்ப அனுபவத்தையும், அவ்வனுபவத்தின் பயனாக, சிவத்தைவிட்டு நீங்காது அதனுள்ளே அடங்கியிருத்தலையும் முறையே பெறச் செய்து என்னை உய்யக் கொண்டாள் வயிரவி.

குறிப்புரை :

இதனால் சத்தி மெய்ப்பயனைத் தரும் முறை, நிரல்படக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

பொழிப்புரை :

வணங்குவாரது உச்சிமேல் நிற்பவளாகிய `வயிரவி` என்னும் நல்ல சத்தி, அளவிறந்த வடிவுகளைக் கொண்டாள், கொண்டு, அக இருளை நீக்குதற்கு `அறுபத்து நான்கு` எனப்படும் கலைத்துறைகள் அனைத்திலும் நூல்களை ஆக்கினாள். புற இருளைப் போக்குதற்கு வானத்தில் விளங்கும் ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் படைத்தாள்.

குறிப்புரை :

`உயிர்களின் பொருட்டு அவள் அளித்தன தாம் பல, என்றவாறு. `அதனால், அவளை மறாவது வழிபடுதல் உயிர்கட்குக் கடன், என்பது குறிப்பெச்சம். மாலை, மொழிமாலை. விண்டனள் - தோற்றுவித்தாள். தண்மை - தணிவு; வணக்கம். வணங்குவாரது தணிவு, அவரது தலைமேல் ஏற்றிச் சொல்லப்பட்டது.
இதனால், சத்தியது உதவியை உயிர்கள் மறக்கலாகாமை கூறப்பட்டது.
``அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம்`` 1
எனச் சிவஞானச்சித்தி கூறும்.

பண் :

பாடல் எண் : 29

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

``பைய`` என்றது, `இயன்ற அளவு` என்றவாறு, அவளது பெருமை முழுவதையும் அறிந்து துதித்தலும், அப்பெருமை யளவிற்குத் தக வழிபடுதலும் ஒருவர்க்கும் கூடாமையின் ``பைய`` என்றார். ``மலையளவு சுவாமிக்குக் கடுகளவு கர்ப்பூரம்`` என்பது பழமொழி.
``ஏழை அடியார் அவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசன்`` 2
என்பதில் ஞானசம்பந்தர். அடியார்களை, `ஏழை அடியார்`` என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றி,
``யானறி யளவையின் ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்`` 3
என்றார் முருகாற்றுப்படையிலும், நூக்குதல் - போக்குதல். பவம் - பிறப்பு.
இதனால், சத்தியது பெருமையும், உயிர்களது சிறுமையும் கூறுமுகத்தால், உயிர்கள் அவளை வழிபடும் கடப்பாடுடையன வாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

பொழிப்புரை :

[இதன் பொருள் வெளிப்படை.]

குறிப்புரை :

வேய் - மூங்கில். விரை - நறுமணம். ஏய - பொருந்திய. குழல் - கூந்தல். `பிறையைச் சூடிய ஏந்திழை` என்க. பிறைசடையில் உள்ளது. சூலினி - சூலத்தை ஏந்தியவள். ஏய் உள்ளம் - தான் இருத் தற்குப் பொருந்திய உள்ளம்; அஃதாவது, அறிவும், அன்பும் நிரம்பிய உள்ளம். ``சுந்தரி`` என்பதை ``குழலி`` என்பதன் பின்னர்க் கூட்டி, அது காறும் ஒருவகைக் கோலமும், பின், ``சூலினி`` என்பது காறும் வேறொரு வகைக் கோலமும் ஆக இருவேறு வடிவங்களைக் கூறினமை கொள்க. முன்னது அமைதிக்கோலமும், பின்னது கடுமைக் கோலமுமாதல் அறிக. எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இது முதல் ஐந்து மந்திரங்களால் சத்தி தமக்கு அருள் புரிந்த வாறு கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 31

இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

பொழிப்புரை :

தென்கோடியில் உள்ள இனிய கடற்கரையில் எழுந் தருளியிருக்கும் குமரியாகிய வயிரவி, தன்னோடு இணை ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவி; அதனால், அவள் ஒருத்தியே உலகத்திற்கு முதல்வி. அவள் என்னை உலகச் சார்பினின்றும் நீக்கித் தனியனாகச் செய்து, பின் தனது துணைமையில் இருக்கவைத்து, இன்பத்தை மிக உண்டாக்கி, இவ்வாறு என் உள்ளத்தில் நின்று பயனளித்தாள்.

குறிப்புரை :

மேல் (1082) ``கன்னித்துறை`` என்பதனை உருவக மாக்கி உரைத்தாரும், இங்கு, ``தென் மூலை`` என்றதற்கு அவ்வாறு உரைத்தலில் திட்பங் கொள்ளாது நெகிழ்ந்து, இப்பொருளையே கருதுவாராயினார். ``நனிபடுவித்து`` என்பதில் பகர மெய் விரித்தல். படுவித்தலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின் றேனே.

பொழிப்புரை :

`இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளுள் நடுவிலே ஓங்குகின்ற நாளம் போல்வதாகிய சுழுமுனை நாடியுள்ளே பொருந்தி நின்ற, இளையவளும், கன்னிகையும் ஆகிய சத்தியது பாடகம் அணிந்த சிறிய பாதத்திலே உள்ள பசிய பொன்னா லாகிய சிலம்பினது ஒலி அந்த நாடிக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக் கவும் அதனைக் கேட்கமாட்டாமல் உறங்குகின்றேன் என்றால், எனது அறியாமையை என்னென்பது.

குறிப்புரை :

``ஊடகம்`` என்பதை, `அகத்தூடு` என மாற்றிக் கொள்க. ``மேவி`` என்பது `மேவ` என்பதன் திரிபு. `மேவியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `உறங்குகின்றாளே` என்பது பாடம் ஆகாமை. அடுத்த மந்திரத்தின் முதலடியால் விளங்கும். `உயிரின் உறக்கத்திற்குக் காரணம் குண்டலியின் உறக்கமே` என்பது மேல் பலவிடத்தும் கூறியவாற்றால் அறியக் கிடத்தலின், அதனை இங்கு உய்த்துணர்ந்து கொள்ள வைத்தார். எனவே, `யோக முயற்சியால் மூலாக்கினியை எழுப்பி, அதனால் குண்டலியைத் துயில் உணரச் செய்தவழியே அச்சிலம்பொலியைக் கேட்டல் கூடும்` என்பது போந்தது. அங்ஙனம் கேட்குமாறு நடு நாடியிற் பொருந்தியிருத்தலே சத்தியானவள் உயிருக்கு அளிக்கும் கருணையாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 33

உறங்கு மளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு யான் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனோன்மனியாகிய சத்தி வந்து, ஒலிக்கின்ற வளையணிந்த தனது கைகள் என் கழுத்திற் பொருந்தும்படிக் கட்டிக்கொண்டு, விளங் குகின்ற ஒளியை உடைய தம்பலத்தை என் வாயில் உமிழ்ந்து உடனே `யான் சிறிது விழித்தபொழுது, ஐயா உறங்கியே காலத்தைக் கழிக் காதே` என்று சொல்லி, உறக்கம் வாராதிருத்தற்கு வழியும் செய்தாள்.

குறிப்புரை :

`கழுத்தாரப் புல்லியது, உலக உணர்வை மாற்றி அருட் சத்தியாய்ப் பதிந்தமை` எனவும், `தம்பலத்தை வாயில் உமிழ்ந்தது, உணர்வின்கண் விழிப்பை உண்டாக்கியது` எனவும் `உபாயத்தைச் செய்தது யோக முயற்சியை உண்டாக்கியது` எனவும் ஒட்டணி வகையால் உணர்ந்துகொள்க.
``கறங்கு வளைக் கை`` என்றதும் விழிப்பைத் தரும் செயலை மேற்கொண்ட ஆற்றலையேயாம். `யோகத்திற் செலுத்தும் சத்தி நிபாத நிலையை இங்ஙனம் நயம்படக் கூறுதல் சித்தர்மரபு` என்பது இதனாற் பெறுதும். பெறவே, இம்மரபுணராது, வாம மார்க்கத்தார் இதற்குச் சிற்றின்பப் பொருளே கொண்டு, குழியை வழியாக மயங்கி வீழ்வர் என்பது விளங்குவதாம்.


பண் :

பாடல் எண் : 34

உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.

பொழிப்புரை :

எல்லாவற்றுக்கும் வழியைத் தருகின்ற ஒப்பற்றவள் ஆகிய சத்தி எனது மனத்தில் உண்டாகின்ற தீங்குளையெல்லாம் அறவே போக்கி, அவ்விடத்தில் அன்புவிளையச் செய்து, நல்லாள் ஆகிய குண்டலியை விளங்கச் செய்கின்ற சுழுமுனை நாடியினுள்ளே எனது மனத்தை ஒடுங்கப் பண்ணி `இனி நீ எதற்கும் அஞ்சவேண்டா` என்று என் அச்சத்தை நீக்கியருளினாள்.

குறிப்புரை :

`சுபா` என்பது `சுவா` எனத் திரிந்தது. சுபா - சுபை; நல்லவள். துயிலுணர்ந்தாளாயின் எல்லா நலன்களையும் தருதல் பற்றிக் குண்டலியை `நல்லாள்` என்றார். அவாவுதலைச் செய்து அதனால் தீங்கு விளைக்கின்ற மனத்தை ``அவா`` என்றார், ஆகு பெயரால். இதன்கண் ஈரடி எதுகை வந்தது. இது வருதற்பொருட்டே `சுபா` என்பதை, ``சுவா`` எனத் திரித்து ஓதினார்.

பண் :

பாடல் எண் : 35

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

பொழிப்புரை :

`சத்தி தனது திருவடியையே தஞ்சமாகக் கருதிப் போற்றுபவர்க்கே அருள்புரியும் இறைவியாவாள்` என்று அறிந்தோர் சொல்லுவர்.

குறிப்புரை :

முதல் இரண்டு அடிகள் சத்தியின் இயல்புகளை விரித்தவாறு. ``அஞ்சொல் மொழி, செஞ்சொல் மொழி`` என்பவற்றை, ``இடைச்சொற் கிளவி, உரிச் சொற்கிளவி`` 1 என்றாற்போலக் கொள்க. சத்தி தவம் செய்தல், ஆட்டுவான் ஆடிக்காட்டுதல் போல்வதாம். செஞ்சொல் - என்றும் செவ்வே நிற்கின்ற (மாறுபடாத) சொல். மடப்பம் - இளமை; இது பெண்மையியல்பு. சீர் - அழகு. சேயிழை - நன்கமைந்த ஆபரணம். மடமொழி, சேயிழை என்பன அன்மொழித் தொகைகள். இன்சொல், அருளின் அடையாளம். `போற்றுவார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தலாயிற்று. போற்றுவார்க்கு அருளல் கடனாதலின், பிறர்க்கு அருளாமை கோட்டமன்றாம்.
``சலமிலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` 2
எனவும்,
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்`` 3
எனவும் போந்தவற்றையும் காண்க.
இதனால், `சத்தியைப் போற்றுகின்றவரே, அவளது அருளைப் பெறுதற்கு உரியர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.

பொழிப்புரை :

சத்தியானவள், அரிய உயிர்களின் பக்குவங் களையே எப்பொழுதும் நோக்கி நிற்பவளாதலின், இயல்பிலே அவள் ஞானத்தைத் தருகின்ற சாந்த ரூபியாயினும், உயிர்களது அபக்குவ நிலைபற்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் துன்பத்திற்கு ஏதுவான தொழில்களைச் செய்பவளாகின்றாள். எனினும், என் உள்ளத்தில் அவள் சாந்தரூபியாயே விளங்கு கின்றாள்.

குறிப்புரை :

``அருந்தவம்`` என்பது அதன் பயனாகிய ஞானத்தின் மேல் நின்றது. காரியல் - மேகம் போன்ற. கோதை, அதனை அணிந்த கூந்தலை உணர்த்திற்று. இது சாந்த வடிவத்தைக் குறித்தவாறு. காரணி - தோற்றத் திற்குக் காரணமாய் இருப்பவள்; படைப்பவள், ``நாரணி`` என்றது, `காப்பவள்` என்றவாறு, ஊர்தல் - உலாவுதல். `ஊர் - உடம்பு` என்பாரும் உளர். ``ஊரும் உயிரும் உலகும்`` என்றது தாப்பிசையாய் முன்னும் சென்று இயையும். கோரி - கோரம் உடையவள். கோரம் - கொடுமை.
இதனால், சத்தி உயிர்களின் பொருட்டு முத்தொழில் செய்தலைக் கூறுமுகத்தால், வயிரவி அச்சத்தியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு என் உள்ளத்திலே மகிழ்ச்சியோடு இருக்கின்ற அந்தச் சத்தி அவ்வாறு அளவற்ற காலங்கள் இருந்தும் நீங்குதல் இல்லாதவளாய், நான் பிராசாத யோகத்திலே உழன்று நின்ற பொழுது அதன் கலைகளில் முடிவானதற்கு இடமாகிய துவாத சாந்தத்தில் பொருந்தி நிற்பவளாயினாள்.

குறிப்புரை :

`இஃது அவளது கருணையிருந்தவாறு` - என்பது குறிப்பெச்சம். `உணர்ந்தவழி` என்பது ``உணர்ந்து`` எனத் திரிந்து நின்றது. பிராசாத கலையில் முடிவாயுள்ளது உன்மனை. தலை - முடிவில் உள்ளது. இதனால், அவளது பேரருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.

பொழிப்புரை :

மேற் கூறிய அச்சத்தி, உன்மனாகலையின் இடமாகிய அந்தத் துவாதசாந்தத்தில் தான் தனியே இராது சிவத்தோடு கூடியே விளங்குவாள். அவ்வாறு விளங்குதல், பிராசாத யோகிகட்கு அவ்யோகத்தால் புருவ நடுவில் அவ்வப்பொழுது புதிது புதிதாகத் தோன்றுகின்ற உணர்வைக் கண்டுகொண்டேயாம்.

குறிப்புரை :

``முலைத்தலை மங்கை`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `முலையையுடைய தலை மங்கை` என்க. `முலையை உடைய` என்னும் விதப்பு. அபர ஞான பரஞானங்களைத் தருபவ ளாதலைக் குறித்து நின்றது. தலை மங்கை - தலைவி. `அக்கலைத் தலைக்கண்` எனச் சுட்டு வருவித்தும், உருபு விரித்தும் ``இருக்கும்`` என்பதனோடு முடிக்க. ``கலைத் தலை, சிலைத் தலை`` என்பவற்றில் தலை, இடம். ``கண்`` இரண்டனுள், பின்னது, `உயிர்கட்குக் கண் போலச் சிறந்தவன்` எனப் பொருள் தந்து, சிவபிரானைக் குறித்தது. ``உள் முயங்கி`` என்றது. `இரண்டறக் கலந்து` என்றவாறு. `முயங்கியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. சிலை - வில். அஃது உவமையாகுபெயராய்ப் புருவத்தை உணர்த்திற்று. தெரிவு - அறிவு. அலைதல் - அசைதல். `அலைந்த` என்பது வலிந்துநின்றது கொம்பினள் - கொம்புபோல்பவள். `அலைத்த பூங்கொம்பினள்` என்பது, சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இதனால், சத்தி துவாதசாந்தத்தில் விளங்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

பொழிப்புரை :

என் இருதயத்தில் இருப்பவளாகிய அந்தச் சத்தி, மேற்கூறியவாறு சிவனுடன் துவாதசாந்தத்தில் விளங்குதல், பிராசாத யோகத்தைப் பற்றி இருதயத்தினின்றும் எழுந்து கண்டத் தானத்தை அடைந்து, அதன்பின்னர் அங்கு நின்றும் துவாதசாந்தத்தில் சென்றே யாம். அந்நிலையும் பழமையானதேயன்றிப் புதியதன்று.

குறிப்புரை :

`என்னுள்ளம் மேவி இருந்தனளாகிய ஏந்திழை, பொருந்து இருநால் விரல் கடந்து புக்கனளாய்ப் புல்லியபின், தாணுவில் சேர்ந்து உடன்ஒன்றி, ஆதியின் நாளே அருந்தவம் எய்தினள்` என முடிவு செய்க. தவம் எய்துதல், ஞானத்தைக் கொடுத்தலில் குறிக்கோளாய் இருத்தல். `அந்நிலை யோகத்தால் புலனாவதன்றிப் புதிதாக உளதாவதன்று` என்பார், ``ஆதியின் நாளே` என்றார். இவ்விடத்து இன், வேண்டாவழிச் சாரியை.
இதனால், மேற்கூறிய நிலை பிராசாத யோகத்தானே அறியற் பாலதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

ஆதி அனாதி அகாரணி காரணி
சோதி அசோதி சுகபர சுந்தரி
மாது சாமாதி மனோன்மனி மங்கலி
ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் இருந்துகொண்டு எனக்கு எல்லா வற்றையும் அறிவித்துக்கொண்டு என்னோடு உடனாய் இயைந்திருக் கின்ற சத்தி, ஆதியாதல் முதலிய பல பெருமைகளை உடையவள்.

குறிப்புரை :

ஆதி - தானே எல்லாவற்றிற்கும் முதல்வி. அனாதி - தனக்கு ஒரு முதற்பொருள் இல்லாதவள். காரணி - தானே எல்லா வற்றுக்கும் காரணமாய் இருப்பவள். அகாரணி - தனக்கு ஒரு காரணம் இல்லாதவள். சோதி - ஒளியாய் இருப்பவள். அசோதி - இருளாயும் இருப்பவள். சோதி, `அசோதி` என்பன முறையே அறிவையும், அறி யாமையையும் உணர்த்தி நின்றன. அறியாமையைச் செய்வது மலமே. எனினும், அதன் சத்தியைத் தூண்டி அதனைத் தொழிற்படச் செய்தல் பற்றிச் சத்தி, இருளாயும் இருக்கின்றாள். ``சுகபரம்`` என்பதை, `பரசுகம்` என முன்பின்னாக வைத்து, `மேலான இன்பம்` என உரைக்க. `மேலான இன்பத்தை (சிவானந்தத்தை)த் தரும் சுந்தரி` என்க. `சுந்தரி` என்பது இயற்பெயரளவாய் நின்றது. `சமாதியில் மனோன்மனி மாது` எனக்கூட்டி, `சமாதி நிலையில் மனோன்மனி என்னும் சத்தியாய் விளங்குபவள்` என்க. சமாதி, இங்கு மேற்கூறிய துவாதசாந்தத்தில் உணர்வை நிறுத்தி ஒன்றச்செய்தல். மங்கலி - என்றும் நன்மையே உடையவள்; `சிவை` என்றவாறு.
இதனால், ``கலைத்தலை இருக்கும்`` என மேற்கூறிய அவளது பெருமைகள் பலவும் விரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 41

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.

பொழிப்புரை :

சத்தி எனது உள்ளத்தில் பொருந்தியதனோடு அதனை விரும்பியும் இருக்கின்றாள். அவள், நான் அஞ்செழுத்தை ஓதி உணரும் பொழுது அவ்விடத்தைப் பற்றியிருக்கின்றாள். அதனை ஓதாத பொழுது நீங்கிவிடுகின்றாள். ஆயினும், பிற மந்திரங்களையும், பயனில்லாத சொற்களைப் பேசுதலையும் என்னிடத்தினின்றும் நீக்கிவிட்டாள்.

குறிப்புரை :

``நயந்தனள் மேவி`` என்பதனை `நயந்து மேவினள்` என மாற்றி யுரைக்க. அஞ்செழுத்தில் யகாரம் தொகுத்தலாயிற்று. பதம் - காலம். பற்றும் - பற்றுவாள். `பதத்தில் அங்கே பற்றும்` எனக் கூட்டுக. மற்று. வினை மாற்றின்கண் வந்தது. பிதற்றுதலுக்குச் செயப் படுபொருள் ஆற்றலால் வந்தது.
இதனால், `சத்தியது விளக்கம் உள்ளத்தில் இடையறாது நிற்றற்குத் திருவைந்தெழுத்தை மானதமாக ஓதுதலை ஒழியாது செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.

பொழிப்புரை :

ஞானத்தைக் கொடுத்துப் பின் அது வழியாக முத்தியைத் தருகின்ற முதல்வியாகிய சத்தியது கயல்போலும் மூன்று கண்களும், அறைகூவி அருள்செய்கின்ற சிவந்த வாயும், முகத்திலே உள்ளதாகிய திருவருட் பார்வையும் அடியார்களுக்குத் கண்முன் னாகவே நிற்பனவாயிருக்க, அவைகளை எண்ணித் துதியாமல் அறிவில்லாதமக்கள் எதைஎதையோ பிதற்றிவிட்டுப் போய்விடுகின் றார்கள்; அவர்தம் அறியாமை இருந்தவாறு என்!

குறிப்புரை :

முயற்று, `முயற்சி` என நின்றது. `முயற்சி` என்பதே பொருள் - முயற்சி, இங்கு ஞானச் செய்திகள். இது மேற்கூறிய அஞ் செழுத்தோதலைச் சிறப்பாகக் குறித்தது. `அதுவழியாக முத்தியைத் தருபவள்` என்பதனால், முன்னே அம்முயற்சியைத் தருதல் பெறப் பட்டது. கயலாகிய உவமை இனம் பற்றி நெற்றிக் கண்ணிற்கும் சொல்லப்பட்டது.
இதனால், திருவைந்தெழுத்தை ஓதுபவர்க்குச் சத்தி நேரே எளிவந்தருளுதல் கூறப்பட்டது. இதனுள் உயிரெதுகையும், மூன்றாமெழுத் தெதுகையும் வந்தன.

பண் :

பாடல் எண் : 43

உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

பொழிப்புரை :

பரசிவத்தினது சத்தியாகிய பராசத்தியது வயிற்றில் உள்ள சுத்த மாயையின் தோன்றி மறையும் ஒளியாகிய கருவினுள் நிற்பவளாகிய ஆதி சத்தி, பிள்ளையாய்ப் பிறந்து தவழும் இடமும் அகத்து உள்ளதாகவே சொல்லும்படி அங்குப் பிறந்தது, `சித்தம், புத்தி, மனம்` என்னும் மூன்றனிடத்துமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, இரண்டாம் அடியை முதலடியின் முன் வைத்து உரைக்க. சித்தம் முதலிய மூன்றனையும் நாயனார் உள்ளம் முதலிய மூன்றாக அருளினமை காண்க. ஆதி சத்தி உயிர்கட்குப் புலனாதல் வாக்கு அல்லது மொழி வடிவிலேயாதலானும், சுத்தமாயையின் காரியமாகிய வாக்குகள் அசுத்த மாயையின் காரியங்கள்போல மயக்கத்தைச் செய்யாது அறிவைத் தருவதேயாயினும், அவ்வறிவும் வினைக்கீடாக நிகழ்வதே யாகலானும் ஆதிசத்தியை ``மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகும் கன்னி`` என்றார். மாமாயைக்கு ஆதிசத்தி ஆதி வியாபகமேயாக. அனாதி வியாபகம் பராசத்தியே யாதல் பற்றி அதனைப் பராசத்தியின் வயிற்றில் உள்ள கருவாகக் கூறினார். ஆதி சத்தி பராசத்தியின் கூறாதலை, ``வள்ளல் திருவின் வயிற்றினுள் கருத்து`` என்பதனால் விளக்கினார். கருத்து - கருவினுள் இருப்பது. இருப்பது - இருப் பதாகிய பொருள். `வயிறு, கரு, கருவினுள் இருப்பது` என்பன உரு வகங்கள். தடம் - வழி; இங்கு இயங்கும் இடத்தைக் குறித்தது. வாக்கு வடிவில் பொருள்கள் தோன்றும் பொழுது மனத்தில் பொதுவாயும், புத்தியில் சிறப்பாயும், சித்தத்தில் பல்காலும் எண்ணி உணரும் உணர்வாயும் தோன்றுமாதலின், ஆதி சத்தியும் உயிர்கட்கு அவ்வாறே புலனாம் என்பார். `பிறந்தது உள்ளம் மூதலிய மூன்றிடத்திலும்` என்றார். ``பிறந்தது`` என்பது தொழிற்பெயர். ஆதிசத்தி தோன்றும் முறையை இங்ஙனம் விளக்கியது திருவைந்தெழுத்து உணர்வின் வழியே அவள் விளங்குதலை வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், மேலது இனிது விளங்க வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
என்னேஇம் மாயை இருளது தானே.

பொழிப்புரை :

பராசக்தியின் வயிற்றினின்றும் பிறந்த ஆதி சத்தி யாகிய பெண் தனது கன்னித்தன்மை அழியாமலே ஒருவனுக்கு மனைவியாய்ப் பொருந்தி ஐவர்மக்களைப் பெற்றாள். அவர்கள்பால் நல்ல நூல்களைக் கேட்டுணர்ந்த அறிவரும் பலர் உளர். இவ்வியப்பு தான் என்னே!

குறிப்புரை :

`கன்னியும் அழிந்திலள்` எனச்சிறப்பும்மையை மாற்றி யுரைக்க கன்னித்தன்மை அழியாமையாவது, படைத்தலைக் கரணத்தால் செய்து திரிபு எய்தாது, சங்கற்ப மாத்திரையாற் செய்து, என்றும் ஒருபெற்றியளாய் இருத்தலாம். `காதலியாய்த் துன்னி` என ஆக்கம் வருவித்துக்கொள்க. துன்னப்பட்டவனாகிய ஒருவன் ஆதி சிவனாதல் வெளிப்படை. ஐவராவார். `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்போர். இவர் யாவரும் சுத்த தத்துவத்தில் உள்ளோர். மொழி - நூல்; என்றது ஆகமங்களையும், அவற்றிற் சொல்லப்பட்ட மந்திரங்களையும். ``பன்னிய`` என்னும் பெயரெச்சம் ``பகவர்`` என்னும் கோடற்பொருட் பெயர் கொண்டது. ஆகமங் களைப் பிரணவர் முதலியோர் சதாசிவ மூர்த்தியிடத்துக் கேட்டமை முதல் தந்திரத்துள் `ஆகமச்சிறப்பு` என்னும் அதிகாரத்துள் விளக்கப் பட்டது. மந்திரத்தைச் செலுத்தி நிற்போர் மந்திரமகேசுரர். இவர்களும் மகேசுரரைச் சூழ்ந்திருப்பவர். ஆகவே, ``அங்கு`` என்றது சதாசிவ புவனத்தையும், மகேசுர புவனத்தையும் ஆயிற்று. அரிதற்கரிய பொருளாய் வியப்பைத் தருதல் பற்றியே, இதனை ``மாயை`` என்றும், ``இருள்`` என்றும் கூறினார்.
இதனால், ஆதிசத்தி தனது சங்கற்பத்தானே சதாசிவர் முதலிய முதல்வர்களைப் படைப்பவளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

சிவம் வெளிப்படாது நிற்க நிகழும் செயல் களெல்லாம் ஆதிசக்தியுடையன. அவற்றின் பயனாகப் பின்னர்ச் சிவம் வெளிப்படுவதாகும். அவ்வெளிப்பாட்டினைப் பெற்ற புண்ணியர்கள் இம்மையிலும் பொருளாகத் தெளிவது சிவானந்தம் ஒன்றையே. அத்தகைய தெளிவைப் பெற்ற உள்ளமே சிவனுக்கு இருப்பிடம் என்று அறிந்தால், சிவன் முன்னின்று அருள்செய்வான்.

குறிப்புரை :

`அது` என்பன பலவும் பகுதிப் பொருள் விகுதி. ``வெளியது`` என்பதில், `வெளியதாம்` என ஆக்கம் வருவித்துக் கொள்க. `புண்ணியர் பொருளது போகத்துள் இன்பம்` எனக் கூட்டுக. போகம் - இம்மை நுகர்ச்சி. தெய்வத்தின் இடத்தை, ``தெய்வம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.
இதனால், மேற் கூறிய படைத்தல் முதலிய செயல்களின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.

பொழிப்புரை :

உலகத்தைத் தோற்றுவிக்க நினைப்பவளும், அத்தோற்றத்திற்கு முன்னே உள்ளவளும், சிவத்தில் செம்பாதியாய் நிற்பவளும் ஆகிய பராசத்தி, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவற்றிற்கு அப்பாலும் உள்ளவளாய்ப் பின்பு சமாதியில் மேற் கூறிய வாறு மனோன்மனியாயும், நன்மையையே உடையவளாயும் உள்ள அவளைத் துதிக்கின்ற எனது உள்ளத்தில் விரையத் தோன்றினாள்.

குறிப்புரை :

``பராபரை`` என்பது எல்லாப் பொருளிலும் உள்ளன வளாதலைக் குறித்தது. இதுமுதலாக, ``மங்கலி`` என்பது காறும் வருவனவற்றில் `ஆய்` என்பது வருவித்துக்கொள்க.
இதனால், சத்தி, `பரை, ஆதி, அருள்வல்லி` என்னும் மூன்று நிலைகளை உடையவளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

பொழிப்புரை :

`பிறப்புக்கள் பலவும், பலவேறு வகைப்பட்ட ஏனைப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய தத்துவங் களுமாய் ஆதி சத்தி ஒருத்தியே நிற்பாள்` என்று ஆவுருவாய் நிற்கும் பெரு மாட்டி எனக்கு அறிவித்தாள். எல்லா நூல்களிலும் மேம்பட்டதும், தனக்கு ஒரு முதல்நூல் இன்றித் தானே முதல் நூலாய் நிற்பதுமாகிய வேதம் சொல்லிய முறையும் இதுவே என்பதைப் பலர் அறிந்திலர்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `வேதம் ஓதிய வண்ணமேயாம் என்று அறிகிலர்` என முடிக்க. வேதப் பொருளின் சிறப்பை உணர்தற்கு, ``கலையின் உயர்கலை, ஆதி இல்` என்பவற்றை விதந்து ஓதினார். `சாதி, பிறப்பு` என்பன ஒருபொருட் சொற்கள். இவை இங்கு உடம்பைக் குறித்தன. ``தத்துவம்`` என்பதில் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. ``ஆவின் கிழத்தி`` என்பதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. நாயனார் எழுந்தருளியிருந்த ஆவடுதுறையில் அம்மை ஆவுருவாய் வந்தமை வெளிப்படை. இத்தொடர்க்கு இதுவே பொருளாதல், வருகின்ற மந்திரத்தாலும் அறியப்படும்.
இதனால், `சத்தி மேற்கூறிய மூன்று நிலைகளில் `ஆதி` என்னும் நிலை ஒன்றில் நின்றே அனைத்துக் காரியங்களையும் செய்வள் என்பதே வேதம் முடிபாதலை அறிதல் திருவருளானே கூடும்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பல தெய்வக் கொள்கை. பக்குவம் இல்லாதாரை நோக்கி அமைந்தன என்பதாம்.

பண் :

பாடல் எண் : 48

ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

பொழிப்புரை :

ஆவுருவாய் நின்ற பெருமாட்டி திருவாவடு துறையில் பக்குவர்களுக்கு உண்மையை யுணர்த்துபவளும், தனது நன்மைகளை உயர்ந்தோர் பலரும் எடுத்துக் கூறித் துதிக்கின்ற கடவுள் தன்மை உடையவளும், முத்திச் செல்வத்தை உயிர்கள் அடைதற்கு ஏதுவான சிவசத்தியாய் நிற்பவளுமாய் இருந்து, உயிர்களின் சஞ்சித வினையை நீக்குகின்றாள்.

குறிப்புரை :

`அவளை யடைந்த எனக்கு வினை நீங்காது நிற்குமோ` என்பது கருத்து. தேவின் கிழத்தி - தேவினையுடைய கிழத்தி. கிழத்தி - எப்பொருளையும் தன்னுடையனவாக உடைய தலைவி. `முத்தியை அளிப்பவன் சிவன் ஒருவனேயாதலின், அவனது சத்தியாய் நின்று முத்தியையளிப்பாள்` என்றவாறு `சிவமங்கையாய்` என ஆக்கம் வருவிக்க.
இதனால், தமக்கு உண்மையை உணர்த்திய சத்தியது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

பொழிப்புரை :

என்னை அடிமையாகக் கொண்ட அந்தத் தலைவி, வினை நீங்கியவரது உள்ளத்தில் ஞானமாய் நின்று, தன்னைப் புகலிட மாக அடைந்தவர்க்கெல்லாம் மெய்ப்பொருளாய் (சத்தாகி) நிற்பாள். இனி அவள், சிவனிடத்தில் அவனைத் தலைப்பட்டுணரும் பொழுது அவனோடு இயற்கையாயுள்ள எண் குணங்களாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`உள்ளொளியாய்` என ஆக்கம் வருவிக்க. ``ஈசன் கண்`` என்றதில் ஏழாம் உருபு வகையுளியாய் அடுத்த அடிமுதற்கண் நின்றது. இவ்வாறன்றி, `ஈசன் அவளுக்குக் கணவன்` என்பாரும் உளர். அனாதியானவற்றை ``அனாதி`` என்றார். ``காண`` என்னும் செயவெனெச்சம், தனக்குரிய நிகழ்காலத்தில் வந்தது. சிவனது எண்குணங்களில் `வரம்பில் இன்பம்` எனப்படும் நிரதிசயானந்தம் இங்குச் சிறப்பாகக் கருதப்பட்டது.
இதனால், தமக்கு அருள்புரிந்த சத்தி சத்துச் சித்து ஆனந்தமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

பொழிப்புரை :

சத்தியே வேதியர்கள் பொருட்டு வேதத்தை நுட்பமாக ஓதியும், உணர்த்தியும் நின்றாள். ஒளி வடிவினனாகிய சிவனுக்கு அவ்வுருவமும் ஆவாள். பன்னிரு கலையை உடைய பிரணவ ரூபியாகிய குண்டலியாயும் விளங்குவாள்.

குறிப்புரை :

முதலடியில் உள்ளவை, பாதி, பராபரை இவற்றிற்குப் பொருள் மேலே கூறப்பட்டது. ஆய்தல் - நுணுகி நிற்றல். வேதியர், `சொல் நயம், ஓசை நயம்` என்பவற்றைச் சிறப்பாக விரும்புபவர் ஆகலின், அவர்கட்கு வேதத்தை அவ்வாறெல்லாம் அருளிச்செய்து, அடியார் கட்கு அருட்டிருமேனியாய் நின்றாள் என்க.
இதனால், சத்தி அவரவர்க்கு ஏற்ப அருள்புரிதல் கூறப்பட்டது.
சிற்பி