நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி


பண் :

பாடல் எண் : 1

அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

பொழிப்புரை :

சத்தியது அருட் பெருமையை நான் சிந்தித்து தெளிந்தேன். அதனானே, உலகத்திற்கு ஆதியும், அந்தமும் ஆன பொருளினையும், உலகத்தார் பலபடக் கூறுகின்ற முதற்கடவுளையும், உலகில் உள்ள உயிர்களின் இயல்பையும் என் அறிவின்கண் அகப்படும்படி நன்கு உணர்ந்தேன்.

குறிப்புரை :

என்றது, `சத்தியை விட்டு வேறாய் யாதொரு பொருளும் இல்லை` என்றவாறு. ஈற்றடியை முதலில் வைத்து, அதன் பின், `அதனானே` என்பது வருவித்துரைக்க. `முன்னும்` என்னும் எண்ணும்மை தொகுத்தலாயிற்று. அவன் - சிவன். அருள் - சத்தி; என்றது அவளது இயல்பை. ``அந்த முன்`` என்பதில் சுட்டு, `அந்தத்தை உணர்தலினும் ஆதியை உணர்தல் அரிது` என்பதை விளக்கி நின்றது.
இதனால், சத்தியை முற்ற உணர்தலே முற்றறிவாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

பொழிப்புரை :

பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படும் முற்றுணர்வாகும். இதனை உணராதவர் சிவனையும் உணராதவரே. தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, அங்ஙனம் பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனைக் கும்பிப்பதே.

குறிப்புரை :

``உணர்ந்திலர் ஈசனை`` என்றது, சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோரை நோக்கி யாதலின் அதனை, ``பூரணம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கொண்டு`` என்பதை, ``கொள்ள`` எனத்திரிக்க. ``உணர்ந்திலர் ஈசனை, ஊழி செய் சத்திபுணர்ந்தது பூரணம்`` என்றது, மேலதனை வலியுறுத்தியவாறு.
இதனால், சத்தியைப் பெறுதற்குரிய வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.

பொழிப்புரை :

மத்தகத்தை யுடைய களிற்றியானைகளாகிய ஐந்து புலன்களும், அவற்றை மனமாகிய கோலால் செலுத்துகின்ற பாகனாகிய உயிரும், அவ்யானைகட்கும், பாகனுக்கும் தலைவனும், அரசனாகிய சிவனும், அச்சிவனோடு இன்பக் கலவி செய்து இனிதே உறையும் அரசியாகிய சத்தியும் இனிதாகிய கூட்டத்தில் இன்ப முற்றிருக்கின்றனர்.

குறிப்புரை :

என்று, `மாயா காரியமாகிய கருவி கரணங்களுள், அவற்றைக் கொண்டு செயலில் ஈடுபடுகின்ற ஆன்மாவும், சிவனும், சத்தியும் ஒருங்குகூடி நிற்றலாலே உலகியல் நடைபெறுகின்றது` என்ற வாறு. இங்ஙனங் கூறினும், சத்தியது இன்றியமையாமையே இங்குக் கருதப்பட்டது என்க. ஐம்புலன்களே உலகியலாம். ஐம்புல அவா வையே `யானை` என்றல் மரபாயினும், அவ் அவாவினோடு காரண காரியத் தொடர்ச்சிகளை யுடையனவாதல் பற்றி இங்கு அப்புலன் களையே ``களிறு`` என்றார். வம்பு - வாசனை. அஃது அதனையுடைய மாலையை உணர்த்திற்று. இன்பக் கலவி`` இரண்டில் முன்னது காமக் கூட்டம் ; பின்னது இனிய நட்பு, நட்டாரை, ``கலந்தார்`` என்றல் வழக்காதைல,
``கலந்தாரைக் கைவிடு தல் கானக நாட,
விலங்கிற்கும் விள்ள லரிது`` (நாலடி - 76.)
என்பது முதலியவற்றால் அறிக. ஈற்றடியை, `அன்பிற் கலவியுளா யொழிந்தாரே` என ஓதுதல் பாடமாகாமை, அந்தாதிக்கு ஒவ்வாமை யான் அறிக. இதனுள் இனவெதுகை வந்தது.
இதனால், மெய்ந்நெறியே யன்றி உலகியலும் சத்தியின்றி அமையாமை கூறப்பட்டது. இந்நிலையில் சத்தி, `திரோதாயி` எனப் படுவாள் என்பது பலவிடத்தும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

பொழிப்புரை :

எங்கள் தந்தையாகிய சிவன் ஆணும், பெண்ணு மாய உயிர்களைக் காமக் கூட்டத்தில் செலுத்தி, அதுகாரணமாக எழுகின்ற அன்பினையே வாயிலாகக்கொண்டு அவ்வுயிர்களின் உள்ளத்தில் புகுந்து நலம்செய்யும் தன்மையை உடையவன். என் தாயாகிய சத்தி, உயிர்கள் துன்ப மயமாகிய கருப்பைக் குழம்பில் அகப் பட்டுத் துன்புறுகின்ற அவ்வுடம்பில் தானே அவற்றின் சுழுமுனை நாடியிற் பொருந்தி நலம் புரிகின்றவளாவள்.

குறிப்புரை :

``பாசம்`` என்றது, இங்கு உடம்பினை, என்பு முதுகந் தண்டு. அஃது அதன்கண் உள்ள சுழுமுனை நாடியைக் குறித்தது. அப்பனுக்குக் கூறிய புகல் வன்மை, அம்மைக்கும் ``என்பில்`` என்பதன்பின் வந்து இயைந்தது.
இதனால், சத்தி பெத்த நிலையிலும் முதற்றொட்டு உயிர் களைப் புரந்து வருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று
உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன்
மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

பொழிப்புரை :

உடல்வழிப்பட்டு, `என் தாய், என் தந்தை` எனக் கூறி உலகியலில் மயங்குகின்ற மயக்கத்தை விடுத்து நினைத்தவழி, உண்மைத் தாயாய் ஊழிக் காலத்தும் அழியாத உயிர்த் தலைவன் அவ் விடத்தே உளனாவன். இனி, `அத் தலைவனாவான் யாவன்` எனின், முதலிலே திரோதான சத்தியாய்ப் பொருந்தி, உண்மையை மறைத்து நின்று, பின் அருட் சத்தியாகிய உண்மையை விளக்குகின்ற சிவனேயாம்.

குறிப்புரை :

உம்மை, சிறப்பு. உரை செய்தல் - உபதேசித்தல், உண்மை ஞானத்தை விளக்குதல். ``உரை செய்யும்`` எனவும், ``பின்`` எனவும் பின்னர் வருகின்றமையால் முன்னர் அவற்றின் மறுதலைகள் கொள்ளப் பட்டன. `பின் உரைசெய்யும் அம்மையாய் நின்ற நந்தி` என இயைக்க. ``பேர் நந்தி`` என்பது அடையடுத்த சொல்லாகுபெயர். சிவனே சத்தியாதலன்றி வேறின்மை இங்குத் தோன்றும்படி இவ்வாறு ஓதினார்.
இதனால், திரோதான சத்தி அருட் சத்திகளும், ஆதி சிவன், அநாதிசிவன் இவர்களுமே உலகிற்கு உண்மைத் தாயும் தந்தையும் ஆதல் கூறப்பட்டது. ``அம்மையப்பரே உலகுக்கம்மையப்பர்`` என்பது திருக்களிற்றுப்படியார்.

பண் :

பாடல் எண் : 6

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொருநூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகி வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

பொழிப்புரை :

காரணக் கடவுளர்களது வரிசையில் முதற்கண் பிருதிவி அண்டத்தின்மேல் இருக்கின்ற பிரமன் அவ்வாறிருப்பது நூற்றிதழ்த் தாமரை மலரின் மேலேயாம். அவனுக்குத் துணைவியாய் வெண்டாமரைமேல் வாணி அமர்ந்திருக்கின்றாள். இவையெல்லாம் வாகீசுவரியாய் நிற்கின்ற திரோதான சத்தியது ஆணையாலேயாம்.

குறிப்புரை :

தார் - மாலை; அது வரிசையைக் குறித்தது. ``உள`` என்னும் வினைக்குறிப்புப் பெயர், உண்மைக்கு இடமாய மலரினைக் குறித்தது. ``தான்`` என்பது பன்மை யொருமை மயக்கம். ``நூறு`` என்பது மலரின் இதழாதல் விளங்குதற்கு முதற்கண், ``தண்மலர் நான் முகன்`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். ஈற்றடியின் முதலில், `எல்லாம்` என்னும் எழுவாய் வருவிக்க. இதனுள் ஆசெதுகை வந்தது.
இதனால், படைப்புத் தொழிலும் திரோதான சத்தியதாதல் கூறப்பட்டது. பொதுமக்களாய் உள்ளவர், உலகத்தைப் படைக்கும் தொழில் ஒன்றையே இறைவனது அதிசயத் தொழிலாக எண்ணுவர். ஆதலின், அஃதொன்றனையே இங்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

பொழிப்புரை :

திரோதான சத்தியின் வசமாய் வருந்தாது பற்றற்றுத் திருவருளில் இருப்பவர். அதன் மேலும், எப்பொழுதும் பெரிய ஐயத்தையே கொண்டு அலைவதாகிய மனத்தை அவ்வாறு அலையாமல் ஒருவழிப்படுத்தி எல்லாம் அற்ற இடத்தில் விளங்குவ தாகிய பரம் பொருளை உணர்வார்களாயின், அப்பொருளாகிய சிவன் அப்பொழுது தனது அருட்சத்தியாகிய இயற்கை ஆசனத்தில் விளங்கி நின்று அருள் புரிவான்.

குறிப்புரை :

ஆணை, திரோதானசத்தி, `அகமாய்` என்பது இடைக் குறைந்து நின்றது. திரோதான சத்தியின் வசமாய் நிற்றலாவது வினைப் பயனை நுகர்வதிலும், ஈட்டுவதிலும் முனைந்து நிற்றல், அதனால் வருவது அல்லலே யாதலாலும், அதனின் நீங்கினார்க்கு அருளே தாரகம் ஆதலாலும் ``வருந்தாது உள் இருந்தார்`` என்றார். ``மாண் ஐயம்`` என்பதில் மாண்பு, பெரிது. ``பாழ் நயம், தாள் நயம்`` என்ப வற்றில், நயம் `நையம்` எனப் போலியாயிற்று. `பாணயம், தாணயம்` என்பனவும் பாடம். தத்துவம் அனைத்தும் கடந்த இடத்தை, ``பாழ்`` என்றார். அவ்விடத்துள்ள நயம், இன்பம். பின் வந்த நயம் விருப்பம் `தாள் ஆய நய ஆதனம்` என மாற்றிக் கொள்க.
இதனால், படைப்பு முதலியவற்றைச் செய்யும் திரோதான சத்தி செயற்கையேயாக, அருட்சத்தியே இயற்கையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

பொழிப்புரை :

உயிர்களின் முயற்சியாலன்றித்தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச்செய்தாள். இனி, இனிமையைத் தருவ தாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.

குறிப்புரை :

தத்துவம் - மெய்ப் பொருள். `போல` என்பது `போல்` என வருதல்போல, `நேரே` என்பது இரண்டிடத்தும், `நேர்` என வந்தது. ``மானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் `ஞான நடம் புரிகின்ற பெருமான்` என்பது உணர்த்தி நின்றது. ``நடம் உடை மன்று`` என்பதை, `மன்று உடை நடம்` என மாற்றிக்கொள்க. இஃது அருள் பெற்றுநின்ற ஞானியரை நோக்கிக் கூறியவாறாக அருளிச் செய்யப் பட்டது.
இதனால், அருட் சத்தி பக்குவ நிலையில்தானே தோன்று தலும், அத் தோற்றத்தின் பயன் முறையே அறிவும், ஆனந்தமும் ஆதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரின்
பிறியா அறிவறி வாருளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.

பொழிப்புரை :

அருள்வழி நிற்கும் அறிவேயன்றி, மாயா கருவிகளின் வழி நிற்கும் அறிவும்தான் ஐம்புலன்களை நுகர்கின்ற பொழுது அறிவே வடிவான அருட் சத்தியோடு கூடியிருக்கப் பெறு மாயின், உயிர்க்குயிராய் உள்ள சிவத்தையே நினைக்கின்றவருடைய உள்ளத்தையே விரும்பியிருக்கும் தனது முறைமையை அவர்கள் இடத்தும் அருட்சத்தி கொண்டிருப்பாள்.

குறிப்புரை :

அஃதாவது, `அவர்கள் உள்ளத்திலும் விரும்பியிருந்து, அவர்கள் செயலெல்லாம் தன் செயலாகச் செய்வள்` என்பதாம். `மாயையேயான அறிவு` எனற்பாலதனை, ``அறிவான மாயை`` என ஓதினார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம். கூட்டம் - கூடி நுகர்தல். ``கூட்டத்துச் சேரின்` என இயையும். ``சித்தம்`` என்பது அதன்கண் கொள்ளப்படும் பொருளை உணர்த்திற்று. ``சேரின்`` என்பதன்பின், `அவள்` என்பது வருவிக்க.
இதனால், அருட்சத்தி ஞானிகட்கு உலகியலால் பழுதுண்து ஆகாதவாறு காத்தல் கூறப்பட்டது. இந்நிலையே, ``பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்`` 1 நிலை என்க.

பண் :

பாடல் எண் : 10

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.

பொழிப்புரை :

`இரவு, பகல்` என்னும் வேறுபாடுகள் இல்லாத ஓர் அதிசய இடத்திலே சென்று அங்கே உள்ளவளாகிய அருட் சத்தி யையே நினைந்து, பிறிதொன்றும் செய்யாமல் அவளது அருளுடனே கூடித் தன்னை மறந்திருப்பவன், என்றும் இளையவனாய் இருக்கும் அவள்தன் மகனாய் விளங்குவான்.

குறிப்புரை :

நினைப்பும் மறப்பும் ஆக மாறிமாறி நிகழும் மாயா உணர்வுகளை, `இரவு, பகல்` எனக் குறித்தல் மரபு. அவை அற்ற இடம் என்றும் ஒரு பெற்றியாய அருளுணர்வு. மகளிரது கூந்தலில் குராமலர் முடிக்கப்படுதலை ஒரு சிறப்பாகக் கூறும் இலக்கிய மரபு பற்றி,`` குரவம் செய்கின்ற குழலி`` என்றார். அரவம் செய்யாமை, மௌனமாய் இருத்தல்; என்றது செயலற்றிருத்தலை, பருவம் செய்தல், `காளை, முதியன்` என்னும் நிலைகளை அடைதல், `அவை இல்லாமை` என்றது, என்றும் ஒரு பெற்றியனாய் இருத்தல். எனவே, உலகியலால் வேறுபட்டு வருந்தாமை பெறப்பட்டது.
இதனால், அருட் சத்தியால் பாதுகாக்கப்பட்டவர்களது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

பொழிப்புரை :

`முத்திக்கு மூலம்` என்றும், எல்லாவற்றிற்கும் மேலான பொருள்` என்றும் சொல்லப்படுகின்ற அருட்சத்தி, சிவ புண்ணிய மிகுதியால் தனக்குக் கிடைக்க அவளோடு கூடி நின்றவன். அதன் பயனாக மாயா காரியங்கள் பலவும் தன்னை அணுகமாட்டாது நீங்க, இதுகாறும் மாயையின் மகனாய் நின்ற நிலைநீங்கி, அவ்வருட் சத்தியின் மகனாகின்ற பேற்றைப் பெற்று விளங்குவான்.

குறிப்புரை :

உம்மைகள், சிறப்பு. ``பராசத்தி`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது, ``நேர்பட`` என்பதை ஈற்றடியின் பின் வைத்து, ``முத்திக்கு மூலமதாம் எனும் ... ... தற்பரத்தாள் நேர்பட, பராசத்தி தன்னொடு கூடி மேலணுகா ... ... விட்டிடப் பாலனும் ஆகும்`` எனக் கூட்டி உரைக்க.
இதனால், அருட் சத்தியைச் சார்ந்தவழி மாயை அணுக மாட்டாமை கூறி, அவளை அடைந்தவர் துன்புறாதிருத்தற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.

பொழிப்புரை :

`முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய் விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர் களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப் படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திக ளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.

குறிப்புரை :

நீள் பரன் - தன்னிலையினின்றும் உயிர்களை உய் விக்கும் நிலைக்குச் செல்லும் சிவன். இங்ஙனம் செல்லும் நிலையே `ஆதி சிவன்` என்னும் நிலையாகும். எனவே, இந் நிலையில் அவனது சத்தியும் `ஆதி சத்தி` எனப்படுவாள் என்பது விளங்கும். `திரோதான சத்தி, திரோதானகரி, திரோதாயி` என்னும் பெயர்களால் குறிக்கப் படுபவளும் இந்த ஆதி சத்தியே. இவளே, `இச்சை, ஞானம், கிரியை` என முதற்கண் மூன்றாய் நின்று, பின், பற்பல காரணங்கள் பற்றிப் பல்வேறு வகையாய், அளவிறந்து நிற்பாள். ஆதிக்கு முன் உள்ள நிலை அநாதி. அந்நிலையில் சிவனும், சத்தியும் முறையே `பரசிவன்` என்றும், `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர்.
மன்றன் - மன்றில் (சபையில்) நிற்பவன் என்றது. `ஐந் தொழில் செய்து நிற்பவன்` என்றதாம். செயலே உயிர்களால் அறியப் படுதலின், அதனையே ``நன்றறி கிரியா சத்தி`` என்றார். `நன்றாக, கிரியா சத்தியாய், மன்றனாய்` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத் தலாயின. ``மன்றனாய் அவற்றுள் மருவிடும்`` என்றாராயினும், `அவற்றுள் மருவி மன்றனாயிடும்` என்பதே கருத்தாதல் அறிக.
இதனால், அருட்சத்தியே முதற்கண் ஆதிசத்தியாய் இறைவனது செயல்கள் எல்லாவற்றிற்கும் நீங்காத் துணையாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

பொழிப்புரை :

சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.

குறிப்புரை :

``மருவொத்த`` என்றதனால், `மலரொத்த` என்பது கொள்ளப்பட்டது. உரு - பொருள். உருஒத்து நிற்றல் - பொருள் ஒன்றேயாய் நிற்றல். கரு - அடிநிலை உண்மை. `கருவை ஒத்து (உடம்பட்டு) நின்று` என்க. திரு - அருட்சத்தி. `திருவுக்கு ஒத்த` என்க.
இதனால், `சத்தியைச் சிவனின் வேறாக உணர்தல், அறியாமையின் காரியமாய், அல்லற்படுத்தும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.

பொழிப்புரை :

மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.

குறிப்புரை :

``விரிந்தனள்`` என இறந்த காலத்தாற் கூறியதும், `விரி யும் இயல்பினை உடையவள்` என்றதேயாம். இடைநின்ற ஏகாரம், பிரித்து, ``சத்தி` என்பதனோடு கூட்டப்பட்டது. ``பூமி`` என்பதன்பின் வினைமுதற் பொருண்மை உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்டது. `ஆதியதோடு அந்தமாம் வன்னம்` எனற்பாலதனைச் செய்யுள் நோக்கிப் பிறழக் கூறினார். அது, பகுதிப் பொருள் விகுதி.
இதனால், சத்தி, ஆதியாய் நின்று செய்யும் செயல்களெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

பொழிப்புரை :

தோன்றாது அடங்கியிருந்த, ஞான உருவின ளாகிய அருட் சத்தி, அந்நிலைமாறி வெளிப்பட்டுநின்ற நிலையை அறிபவர் உலகருள் ஒருவரும் இல்லை, ஆயினும் புற நோக்கத்தை விடுத்து அக நோக்கத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு அவள் வெளிப் பட்டு, அவர்களைத் தன் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஞான ஒளியின்வழிப் பேரின்பப் பெருக்காய்ச் சுரந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

அமுத பயம் - அமிர்தமாய் (ஆணவத்தைப் போக்கு கின்ற மருந்தாய்) உள்ள பால். `அதனைக் கொண்ட தனங்களை யுடையவள்` என்க. அருட்சத்தியாதல் தெளிவு. தேறுதல் - தெளிதல்; ஏற்றுக்கொள்ளுதல். `சத்தி ஆறியிருத்தல், சிவத்தில் அடங்கித் திருவைந்தெழுத்தில் சிகாரத்தின் பின்னிற்றல்` எனவும், `மாறி இருத்தல், சிகாரம் பின்னாகத் தான் முன்னே நின்று `வசி` என்பதாக நிற்றல்` எனவும், `அவ்வாறு மாறிநிற்கும் வழியை அறிவார் இல்லை` எனவும் முதலிரண்டடிகட்குக் குறிப்புப் பொருள் கொள்வாரும் உளர். அக நோக்காவது அருட்கண்.
இதனால், அருட்கண்ணைப்பெறும் பக்குவம் உடையார்க்கே அருட்சத்தி பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களையும் அடிமையும், உடை மையுமாக உடையவனும், அக்கினியைச் சிறப்பு வடிவமாகக் கொண்டவனும், `உருத்திர மூர்த்தி` எனப்படுபவனும், இடப வாகனத்தை ஊர்பவனும் ஆகிய சிவன் இனிது விளங்கியிருக்கும் இடமே, மேற்கூறிய அக நோக்குடையவர் சென்று சேரும் இடமாகும். ஆகவே, அவ்விடத்திற் சென்று சிவனை நேர்படக் கண்டவர்களே உள்ளமாகிய வாயில் வாயிலாகப் பயன்படப் பெற்ற சாதகராவர்.

குறிப்புரை :

`விடை ஏறியாகிய அவன்` என மாற்றிக் கொள்க. கடை - இடம், போதல், இங்குச் சேர்தலைக் குறித்தது. ``போயிடும்`` என்பது இங்குச் செயப்பாட்டு வினையாய் ``கடை`` என்றதற்கு முடிபாயிற்று. அறிவை `நெஞ்சம், உள்ளம்` முதலியனவாகக் கூறுதல் வழக்கு. தடை - வாயில். அதுவாதல் - வாயிலாகவே நின்று பயன்தருதல். `நெஞ்சத்து அடையதுவாகிய` எனப் பிரித்தல் மோனை நயத்திற்கு ஏலாமையும், ``அடை`` என்பதற்கு `அடயோகம்` எனப் பொருளுரைத்தலும், `அடயோகமே சிவனை விளங்கக் காணுதற்குச் சாதகம்` என்றலும் ஒவ்வாமையும் அறிந்துகொள்க.
இதனால், அருட்சத்தி விளக்கத்திற்கு உரியவர் ஆயினோர், பின் சிவப்பேறாகிய முடிந்தபயனைப் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தாமேல் உறைவிடம் ஆறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியை வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

பொழிப்புரை :

மேற் கூறிய சாதகர் உலகரின் மேம்பட்டுத் தங்கு கின்ற இடம் ஆறு. அவற்றுள் ஒவ்வொன்றும் தாமரைகளாய் விளங்கும். அவர்கட்குப் பிருதிவி `முதலாக மேல்நோக்கி எண்ணு கின்ற தத்துவம் முப்பத்தாறினையும் இதழ்களாகக் கொண்ட மாயை யாகிய தாமரையிலும், உண்மையாகவே நூறிதழ் உள்ள தாமரையிலும் உள்ளவளாய்க் காட்சியளிக்கின்ற அச்சத்தி, உலகர் பொருட்டுப் பூமியில் தேவியாயும் விளங்குகின்றாள்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள இதழ், சினையாகுபெயர். ஆறு தாமரைகளாகிய இடம் ஆறு ஆதாரங்கள். `இரு பதினெட்டு` என மாறிக் கூட்டுக. `இதழ் இருபதினெட்டு உள பூ, நூறுள பூ` எனத் தனி இயைக்க. வழிபாட்டிற்குச் சிறந்த ஆசனம் தாமரை மலரும், அதனுட் சிறப்புடையது நூறிதழ் உடையதும் ஆதலின், தேவியை அதன்மேற் கண்டு அன்பர்கள் வழிபடுதல் மரபு. ``பார்`` இரண்டில் முன்னது பிருதிவி தத்துவம்; பின்னது பூவுலகம். `பைந்தொடியாளாய் வந்தனள்` என மேலே கூட்டுக. இதனுள்ளும் ஆசெதுகை வந்தது. `புண்ணியம்` என்பது பாடமாயின், அதனை ஆகுபெயராகக் கொள்க.
இதனால், ஆறாதாரங்களின்வழி அகநோக்கிற் செல்ல மாட்டாத உலகர் பொருட்டு அச்சத்தியே திருக்கோயில்களில் உருக்கொண்டு எழுந்தருளியிருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகித் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்த துலகே.

பொழிப்புரை :

சிவன் யாதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது, சத்தியும் அசைதல் இல்லாத கொடிபோல ஞானமாத்திரையாய் நிற்பாள். சிவன் மேகத்தில் உண்டாகின்ற மின்னலைப்போல உலகை நோக்கித் தெய்வ நாயகனாய் வருதலினால், சத்தி தெய்வநாயகியாய் அவனுக்குத் துணை நிற்கின்றாள். அதனாலே உலகம் நடைபெற்று வருகின்றது.

குறிப்புரை :

``பரமன் இருந்திட`` என்பதை முதற்கண் வைத்து உரைக்க. `திண்கொடி` இல்பொருள் உவமை. ``ஆக`` இரண்டில் முன்னது உவம உருபு., ``பெண்கொடியாக`` என்ற அனுவாதத்தால், பெண்கொடியாதலும் பெறப்பட்டது. `பரமன், பைந்தொடியாள்` என்பன பின்னும் சென்று இயைந்தன.
இதனால், சத்தி சிவங்களது சொரூப தடத்த நிலைகள் கூறப்பட்டன. சொரூபம் அநாதி; பரம். தடத்தம் ஆதி; அபரம்.

பண் :

பாடல் எண் : 19

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்
படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழிச் சோதி அடுத்தே.

பொழிப்புரை :

உலகம் நடைபெறுவது ஒன்பது இதழ்த்தாமரை வடிவாகியாம். அதனால், சத்தியின் பேதங்களாய் உள்ள கன்னியரும் வாமை முதலிய எண்மரும், முதல்வியாகிய மனோன்மனியும் என ஒன்பதின்மராயினர். அவர் அனைவரும் இயங்குவது ஆதி சத்தியின் வழியேயாம். அவர்களை உலகத்தார் தொடர்வது மேற்கூறிய தாமரை மலரிலே. இவையெல்லாம். இங்ஙனம் இருத்தல் சிவனைச் சார்ந்தேயாம்.

குறிப்புரை :

1067 - ஆம் மந்திரத்தின் உரை பார்க்க. இரண்டாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை.
இதனால், சத்தியின் நிலைகளை வழிபாட்டு முறையிற் காணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அடுக்கின்ற தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கின்ற தாமரை இல்லகத் துள்ளது
மடுக்கின்ற தாமரை மத்தகத் தேசெல
முடுக்கின்ற தாமரை முற்சது ரத்ததே.

பொழிப்புரை :

பிராணன் எளிதில் சென்று பொருந்துகின்ற ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள தாமரையே ஆதிசத்தி நின்று உயிர்களுக்கு அறிவிக்கின்ற இடமாகும். ஆன்மாவைக் கீழே செல்லாது தியானம் முதலியவற்றால் மேலெழச் செய்கின்ற ஆசனமாகிய தாமரை மலர் உடலின் நடுவிடத்தில் உள்ளது. (அனாகதம் - இருதயம் என்றவாறு.) வழிபடுவோன் சந்திரனது அமுதத்தைப் பருகும் இடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மலர் உள்ள தலையிலே உயிருணர்வு செல்லும்படி ஓட்டுகின்ற தாமரை மலர், மேற்சொல்லிய அனைத்திற்கும் முதலிலே நாற்கோண நிலையினதாய் உள்ளது. (மூலாதாரத்திலே உள்ளது என்பதாம்.)

குறிப்புரை :

`அம்முறையறிந்து சத்தியை அங்கெல்லாம் வழிபடுக` என்பது குறிப்பெச்சம். `அடுக்கும்` என்பது முதலாகவும், `முச்சதுரத்து` எனவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக.
இதனால், `சத்தியை யோக முறையில் வழிபடுதல் மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முற்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.

பொழிப்புரை :

முதல் ஆதாரமாகிய மூலத்தினின்றும் எழுகின்ற தீக் கொழுந்து ஏனை ஆதாரங்களிலும் சென்று பரவுதற்பொருட்டும், அங்ஙனம் பரவுதலின் பயனாகிய உள்ளொளியைத் தரிசித்தற் பொருட்டும் சத்தி அந்த ஆதராங்களாகிய சிறிய இடங்களில் அடங்கு பவள் அல்லளாய் இருந்தும் அவைகளில் எழுந்தருளியிருக்கின்றாள்.

குறிப்புரை :

`அதற்குக் காரணம் கருணையே` என்பது கருத்து. முன்னது, ``சதுரம்`` எனக் கூறினமையால், ஏனைய ஆதாரங்களையும் பொதுப்பட, ``சதுரம்`` என்றார். மந்திரக் கட்டங்கள் சதுர வடிவாயினும், `சக்கரம்` என வழங்கப்படுதல் போல, `சக்கரம்` எனப்படுபவற்றை `சதுரம்` என்றார். `கடந்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. முதலடி இன எதுகை.
இதனால், `எங்கும் வியாபியாய் உள்ளவளைச் சக்கரங்கட் குள்ளே காணுதல் எவ்வாறு` என்னும் ஐயம் நீக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை தோறும்
குவிந்தன முத்தின் முகம்ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

பொழிப்புரை :

சத்தி பத்துத்திருமுகங்களைக்கொண்டு பத்துத் திசைகளையும் நோக்கியிருக்கின்றாள். அதனாலே, காற்று எங்கும் சென்று அசைதலும், நெருப்பு மேல்நோக்கி எரிதலும், நீர் கீழ்நோக்கிப் பாய்தலும் உடையனவாய்த் தம்தம் செயலைச்செய்கின்றன.

குறிப்புரை :

``திசை திசைதோறும்`` என்றமையால் பத்துத் திசையையும் நோக்குதற் பொருட்டுப் பத்து திருமுகங்களையுடைய ளாயினமை பெறப்பட்டது. சிறப்புடைய மூன்றனை எடுத்துக்கூறிப் பிறபிற பொருள்களும் சத்தியின் பார்வையாலே செயற்பட்டு நிற்றலைக் கொள்ளவைத்தார். வாயு ஒன்றேயாயினும் திசைநோக்குப் பற்றிப் பலவாக வழங்கப்படுதல் நோக்கிப் பன்மையாகக் கூறினார். ``ஒளி`` என்றது சுடரை. தீயின் சுடர்கள் பலவாதல் வெளிப்படை. ``முத்து`` என்றது நகைப்பினை. `ஒளிமுத்தின் முகம் நோக்கிக் குவிந்தன` எனக் கூட்டுக. குவிதல், மேல்நோக்கி எழுதல். தேறல் - தேன். `அம்பு தேறல்போல அதோமுகம் நடந்தது` என்க. தேன் போறல், இனிமையை உண்டாக்கல். இதனுள் பின்னிரண்டடிகள் மூன்றாம் எழுத்தெதுகை.
இதனால், பொருள்தன்மை பலவும் சத்தியது அருள் நோக்காலே நிலைபெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி
கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

பொழிப்புரை :

சத்தி, சிவனது சிவந்த பொன் போலும் திரு மேனியில் நிறைந்த நறுமணம் கமழும்படி அவனையே நாள்தோறும் பற்றிப் பயில்கின்றாள்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகளின் பொருள் வெளிப்படை. ``செறி கமழ்`` என்பது, `செறிந்து கமழ` எனப்பொருள் தந்தது. நவிலுதல் - பயிலுதல். முதலடி உயிரெழுத்தெதுகை.
இதனால், சத்தி மேற்கூறிய செயல்கள் அனைத்தையும் சிவனிடத்தில் நின்றே செய்தலன்றித் தனித்து நின்று செய்யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுழை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும்செம் மாந்து
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களும் சொல்கின்ற பெருந்தெய்வம் (முதற்கடவுள்) ஆகிய பூரணசத்தி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு, பாதம் பூமியைக் கடந்தும், முடி வானத்தைக் கடந்தும் இருக்க, `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் முச்சுடர்களே மணிகள் இழைத்த அணிகளாய் அழகுபடுத்த நிற்பாள்.

குறிப்புரை :

`உலகம் முழுவதையும் தனக்குத் திருமேனியாகக் கொண்டு விளங்குவாள்` என்றபடி. இதனையே `விசுவரூபம்` என்பர். விசுவம் - உலகம்.
`நான்மறை நவிலும் பெருந் தெய்வசத்தி` என மாறிக் கூட்டுக. உழை - பக்கம்; திசை. துகில் - உயர்வகைப்புடைவை. புலித்தோலே யல்லது மான்தோல் உடையாகச் சொல்லப்படாமையால், ``உழை`` என்பதற்கு `மான்` என உரைத்தல் பொருந்தாமை அறிக. நிலம் பொதி - பூமியை உள்ளடக்கிய. செம்மாந்து - நிமிர்ந்து; கடந்து.
``நிலமுதற்கீழ் அண்டம் உள நிமிர்ந்தது`` என்றல் காண்க. முதலடி உயிரெதுகை.
இதனால், `சில பொருள் அளவிலே வியாபகமாகாது, எல்லா உலகத்திற்கும் வியாபகமாகின்ற சத்தியே பூரண சத்தியாம்` என அவளது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

புனையவல் லாள்புவ னத்திறை எங்கள்
வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்புவ னத்தொளி தன்னை
புனையவல் லாளையே போற்றியென் பேனே.

பொழிப்புரை :

உலகத் தலைவனாகிய சிவனையும், உயிர்களாகிய எங்களையும் தாங்க வல்லவள்; உலகங்கள் அனைத்தையும் ஆக்க வல்லவள்; அவைகளைத் தனக்குள்ளே அடக்கிக் காக்க வல்லவள்; உலகத்து ஒளிகள் அனைத்தையும் தனது திருமேனியின் ஒளியாகச் செய்ய வல்லவள்; அத்தகைய பேராற்றல் உடையவளாகிய பூரண சத்தியையே நான் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள புனைதல் - தரித்தல். ``இறை`` என்பதில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது. ``எங்கள்`` என்பதில் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. சத்தி இறைவனைத் தாங்குதல் ஆவது, உற்ற துணையாய் இருத்தல். ``மண்டலம்`` என்பது `அண்டம்` என்னும் பொருளதாய் நின்றது. `அப்புனைய வல்லாளையே` எனச் சுட்டு வருவிக்க.
இதனால், பூரண சத்தியது ஆற்றலின் பெருமை வகுத்துரைத்து, `சத்தி` எனப்படுவாள் அவளேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

போற்றிஎன் பேன் புவனாபதி அம்மை என்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கோட்பைந் தொடியே.

பொழிப்புரை :

எனது இச்சா ஞானக்கிரியைகளாகிய ஆற்றலில் இயைந்து நின்று அவற்றை இயக்குகின்ற, அரியதவத்தால் அடையப் படுபவளும், `சாந்த ரூபம், யமனையும் வெல்லும் வேக ரூபம்` என்னும் இரு நிலைகளையும் உடையவளும் ஆகிய அந்த உலகத் தலைவியாம் பூரண சத்தியையே நான் வணங்குதல், வாழ்த்துதல் முதலியவற்றைத் தெரிவிக்கும் சொற்களைச் சொல்லி வழிபடுகின்றேன்.

குறிப்புரை :

புவனாபதி அம்மை - உலகத்தோடு இயைந்து நின்று அதனைச் செயற்படுத்திகின்ற சத்தியும், அச்சத்தியோடு கூடி நிற்பவ னாகிய `பதி` என்னும் சிவனும் என்னும் இருவராகவும் அறியப் படுகின்ற அம்மை. `சத்தியும், சிவமும் தம்மில் வேறல்லவாகலின், இங்குக் கூறிவருகின்ற பெருமைகளை அவ்விருவரில் எவருக்கு உரியதாகக் கூறினும் குற்றம் இன்று` என்பதை விளக்க. `அம்மை` என்றாயினும் கூறாது புவனாபதி அம்மை`` எனக் கூறினார். `இங்ஙனமாயினும், அவரவர்க்கு அன்பு செல்லும் வழியாற் கூறுதலே முறை` என்பது பற்றி இந்நூலுள் இத்தன்மைகளைச் சில விடத்துச் சிவனுக்குரியவாகவும், சிலவிடத்துச் சத்திக்குரியவாகவும் கூறப்படு கின்றன` என்பது பெறப் பட்டமை காண்க. `புவனாபதி அம்மை என்பதன் பொருள் விளங்கினமையின், `புவனாபதி` என்னும் அளவாகவே பின்னர்க் கூறுமிடத்து, அச்சொற்பொருளும் இதுபற்றி அறிந்துகொள்ளப்படும். அஃதாவது, `அம்மை என்பது ஆற்றலால் விளங்க வைத்துக் கூறப்படுதல் அறியப்படும்` என்க.
சீற்றங் கடிதல், சாந்தமாய் இருத்தல். கோள் - கருத்து. கூற்றந் துரக்கின்ற கோள் - பகையை அழிக்கும் கருத்து. ``அம்மை`` முதலியவற்றில் இரண்டனுருபுகள் தொகுத்தலாயின.
இதனால், பூரண சத்தி, `அமைதி, சீற்றம்` என்னும் இரு நிலையிலும் நின்று நலம் செய்தல் கூறப்பட்டது. வேகநிலை துன்பத்தைப் போக்குவது. சாந்த நிலை இன்பத்தை ஆக்குவது.

பண் :

பாடல் எண் : 27

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தர
வடிவார் திரிபுரையாம் மங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத் தாதியு மாமே.

பொழிப்புரை :

வளையல் அணிந்த கைகளையுடையவளும், இன்பத் தோற்றத்திற்குக் காரணமாயிருப்பவளும், அழகிய வடிவத்தை யுடைய `திரிபுரை` என்னும் தேவியும் ஆகிய சத்தி, ஐயத்திற்குக் காரண மாயுள்ள கீழான முன்னை வினைகள் கெடுதலினால் தன்னை உணர்ந்து வந்து அடைபவர்களை, `என் அடியார்கள்` என்று சொல்லி ஏற்று, அவர்கட்கு, மேல் வினை வாராமல் காக்கின்ற தலைவியாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`சுந்தரி` என்பது பாடமாகாமை அறிக. `சேர்வாரை` என்பது குறுகிநின்றது. `என் அடியார் என்று வினை கெடுத்து` எனக் கூட்டுக. ``ஆதியும் ஆம்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், பூரணசத்தியைத் தெளிந்து அடைந்தோர் வினைக்கட்டு நீங்கி வீடுபெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.

பொழிப்புரை :

மென்மைத்தன்மையோடு பொருந்து தலை யுடைய பெண்மகளாகக் காட்சியளிப்பவளும், ஆகாயத்தில் தோன்றும் மின்னலை ஒப்பவளும், பலவாகிய புகழையுடைய தேவியாய் நின்று பல பயன்களைத் தருகின்ற, பசிய கொடி போன்றவளும் ஆகிய சத்தி, கீழ்மையோடு இசைதலையுடைய அக இருளாகிய பெண்டினை என் மனமாகிய வீட்டினின்றும் ஓட்டிவிட்டுத் தான் வலிமையோடு கூடிய பெண்டாய் அதனுள் குடிபுகுந்தாள்.

குறிப்புரை :

``இசை`` நான்கில் இரண்டாவது, புகழ். ஏனையவை முதனிலைத் தொழிற் பெயர்.
இதனால், பூரணசத்தி, மேற்கூறிய வினைகட்குக் காரணமாய் நின்று அக இருளையும் போக்கியருள்கின்ற ஆற்றலுடையளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

தாவித்த அப்பொருள் தான் அவன் எம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொரு ளானது தானே.

பொழிப்புரை :

சத்தி மேற்கூறியவாறு மனம் புகுந்தபின் அவளால் அங்கு நிறுவப்பட்ட (நிலைப்பிக்கப்பட்ட) அப்பொருள் எம் இறைவனாகிய சிவனேயாகும். எதனால் எனின், அவன் உலகைப் படைக்க நினைக்கும்பொழுது சத்தியும் அதனையே விரும்பி, மாயையின், மேல் கீழ் ஆகிய இரு பகுதிகளையும் சார்ந்து நின்று பல்வேறு வகையாகப் புலனாகின்ற அப்பொருளாய் நிற்கின்ற அச்செயலையே தான் செய்வாள் ஆதலின்.

குறிப்புரை :

``தாவித்த அப்பொருள்`` என்ற அனுவாதத்தால், தாவித்தலும் பெறப்பட்டது. படவே, சத்தி தான் மனம் புகுந்தபின் சிவனை அங்கு நிலைப்பிக்கச் செய்தலும் ஒருதலையாக நிகழ்தல் அறியப்படும். இதனை, சிவனே முதல்வனாக, சத்தி துணைவியாய் நிற்றலாகிய உண்மைபற்றித் தெளிந்து கொள்ளுதற்குப் பின்மூன்று அடிகளைக் கூறினார். `அவன்தான்` என மாற்றியுரைக்க. ``பாவித்துப் படைக்கின்ற காலத்து`` என்றாராயினும் `படைக்கப் பாவிக்கின்ற காலத்து` என்றலே கருத்தென்க. தொடர்தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.` ஆவித்தல் - உயிர்த்தல் புலனாதல். `ஆனதே செய்தாள்` எனவும், `ஆதலின்` எனவும் சொல்லெச்சங்கள் வருவித்துக் கொள்க. `தானது தானே` என்பது பாடமன்று.
இதனால், பூரணசத்தி, பின் சிவத்தைத்தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

அதுஇது என்பார் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :

`அதற்குக் காரணம் அதற்கு முன்னுள்ள அந்த ஒன்று; இதற்குக் காரணம் இதற்கு முன்னுள்ள இன்னொன்று` என்று இப்படிக் காரியப்பொருள்கள் பலவற்றிற்கும் பல காரணப் பொருள்களையே முடிந்த காரணப் பொருளாக மயங்கி, அனைத்துக் காரணங்கட்கும் காரணமாய் உள்ள பொருளை உணரமாட்டாதவர் சிவனை அறியுமாறில்லை. அதனால், முத்திக்கு வழியை அவர் அறியாதவரே யாகின்றனர். அவர் அன்னராதல் சத்தியின் இயல்பை முற்பட உணராமை யாலேயாம். ஆதலின், அவர் உண்மைச் சிந்தனையாளர் அல்லர்.

குறிப்புரை :

ஓர் காரணம் - பிறிதுகாரணம் இல்லையாகத் தான் ஒன்றேயாய் உள்ள காரணம். திதம் - நிலைமை; இயல்பு. அது, முன்னே திரோதாயியாய் நின்று பக்குவத்தை வருவித்துப் பின் அருட் சத்தியாய்ப் பதிதல்.
இதனால், பூரண சத்தியது இயல்பை உணர்தலின் இன்றி யமையாமை கூறப்பட்டது.
சிற்பி