நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்


பண் :

பாடல் எண் : 1

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
நாலித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.

பொழிப்புரை :

நான்கு இதழ்களையுடைய தாமரையாகிய மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் சுத்த
தத்துவம் ஐந்தும், புருடன் ஒன்றும் தவிர, ஏனையதத்துவ தாத்துவிகங்கள் தொண்ணூறும் அடங்கி நிற் கின்றன. இடைநான்கு ஆதாரத்தின் தாமரைகளில் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. இரண்டிதழ்களையுடைய அந்த ஆஞ்ஞைத் தாமரைக்கு அடியாயுள்ள ஏனைய ஆதாரத் தாமரைகளாய் நின்று அந்த ஆஞ்ஞையைத் தாங்கியும், அவ் ஆஞ்ஞைத் தாமரையாய் நின்று அதன்கண் விளங்கும் தியானப்பொருளைத் தாங்கியும் அருள் புரிகின்றாள் சத்தி.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களும், அவற்றின் அமைப்புக்களும், அவற்றில் உள்ளனவும் முன்னைத் தந்திரத்தில் விளங்கக் கூறப் பட்டன. ``இதழ்`` நான்கில் முதலதும், ஈற்றதும் ஆகுபெயர். முத லடியில் ``நாலிதழ்`` என்பதன்பின் `முதலிய` என்பது எஞ்சி நின்றது. சுத்த தத்து வங்கள் ஏழாந் தானத்தில் நிற்றல் பற்றியும், புருடன் ஆஞ் ஞையைக் கடந்தும் செல்லுதல் பற்றியும் அவை ஒழிந்தன ஆறா தாரங்களில் நிற்கும் என்க. ``நாலிதழானவை`` என்பதில் ``நாலின்கண் இதழானவை`` என ஏழன் உருபு விரித்துக்கொள்க. ``அவிர்ந்தது`` என்பது `நவின்றது` என இருந்தது போலும். பால் - பகுப்பு. எனவே, `இரண்டு` என்றதாயிற்று. தரித்தல் - தாங்குதல்; இதற்குச் செயப்படு பொருள் வருவித்துக்கொள்க. உயர்ந்ததாகிய ஆஞ்ஞையின் ஆதார ஆதேயங்களாதல் கூறவே, கீழுள்ளவற்றிற்கும் அவ்வாறாதல் பெறப் பட்டது. மூலாதாரத்திற்கு ஆதார மாதல் நேரேயாம். `சத்தி` என்பது முன்னை அதிகாரத்தினின்றும் வந்து இயைந்தது. ஈற்றடி உயிரெதுகை.
இதனால், சத்தி ஆதார பங்கயங்களின் ஆதார ஆதேயமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.

பொழிப்புரை :

சத்தி அனைத்துயிர்க்கும் தாயாகலின் அவள் மேற் கூறியவாறு ஆதார பங்கயங்களின் ஆதாரமும், ஆதேயமுமாய் நிற்றல் தனது ஒளியுருவை யோகியர் காணுதல் குறித்தும், கலைஞானத்தை மிகத்தந்தும், ஐம்புல ஆசைகளின் கொடுமையைக் கண்டு அதனைத் தடுத்துக் கொண்டுமாம்.

குறிப்புரை :

`மாதுரு` என்னும் வடசொல் ஈறுதொகுத்தல் பெற்று நின்றது. இதன்பின் `ஆதலின்` என்பது எஞ்சி நின்றது. `மாதுரு நல்லா ளாகலின்` என எடுத்துக்கொண்டு உரைக்க. ``தன்னொளி நோக்கி`` என்பது, `தன்னொளியை அடியவர் காணுதல் குறித்து` எனப் பொருள் தந்தது. ``கூறிய ஐந்தும்`` என்பது, இடைநிலைத் தீவகமாய் நின்றது. பின்னிரண்டடிகள் ஒப்பெதுகை.
இதனால், சத்தி ஆதார பங்கயங்களின் ஆதார ஆதேயமாய் நின்று செய்வன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

பொழிப்புரை :

சத்தி தனது மணாளனாகிய சிவன் ஒருபோதும் தன்னைவிட்டு நீங்காதிருத்தலினாலே ஒரு பாதியேதானாய், மற்றொரு பாதி அச்சிவனாய் இருக்கின்றாள். (இந்நிலை எக்காலத்தும் வேறு படுதல் இல்லை என்றபடி) அத்தன்மையை உடைய ஒளி வடிவி னளாகிய அவளைத் துணையாக உங்கள் உள்ளத்தில் இருத்த வல்லீ ராயின், எல்லாத் துன்பமும் நீங்கும்; வெளுக்கப்பட்ட ஆடைபோல் ஆன்மா மும்மலங்களும் நீங்கத் தூயதாய் விளங்கும்.

குறிப்புரை :

``மாது நல்லாளும்`` என்னும் உம்மை சிறப்பு. `மாது நல்லாளும் ஆனது இருந்திட` என இயையும். சொல்லமைதி இங்ஙன மாயினும், கருத்து நோக்கி மேற்கண்டவாறு உரைக்கப்பட்டது. `துணை யாக` என ஆக்கம் வருவிக்க. வெள்ளாடை என்பது குறுகி நின்றது. இயல்பாகவே கொண்டு, `உயிர் தூய்மையை அடைதல் உண்டாகும்` என உரைத்தலுமாம். வெள்ளாடையாதற்கு வினைமுதல் வருவிக்க.
இதனால், `சத்தியை, சிவனை ஒரு பாதியில் உடையவ ளாகவே தியானித்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.

பொழிப்புரை :

கருவி கரணங்கள் சென்று பற்றும் வகையில் வெளி நில்லாதவனும், கரிய வண்டுகள் மொய்க்கின்ற மலர்களின் தேன் பொருந்தி நிரம்புதலால் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிரால் மனம் வருந்துதல் இல்லாதவனும் ஆகிய சிவன், அத் தன்மையனாயினும், சிலபொழுது தனது கூறேயான ஒரு பெண்ணைத் தன் உடம்பில் ஒருபாதியில் கொண்டவனாய்க் காணப்படுதலும், சிலபொழுது பெண்ணேயாய்க் காணப்படுதலும் உடையன்.

குறிப்புரை :

``மா`` இரண்டில் முன்னது வண்டு, ``கள் அடை`` என்பதில் ``அடை`` என்னும் பகுதி `அடைந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `குழலாரால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மள் - மள்கல்; முதனிலைத் தொழிற் பெயர். `மழுங்குதல்` என்பது பொருள். `வெள்ளடையானாகிய மள்ளடையானாயினும்` என்பது சொல் அமைதி. ``ஆம்`` என்பதை, ``பாகன்`` என்பதனோடும் கூட்டுக. `பிறவியே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `சிவன் உண்மையில் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அதனால், வேடங்கட்டி ஆடுவார் போன்று பொது நிலையில் எவ்வகையாயும் தோன்றுவன்` என்பது ஈற்றடியின் கருத்து. எனவே, சிவனது ஆண் தோற்றம் ஒன்றையே கொண்டு `அதுவே அவனது உண்மையியல்பு` என வழக் கிடுதலும், பெண் தோற்றம் ஒன்றையே கொண்டு, `அதுவே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும், மாதொரு கூறாய தோற்றம் ஒன்றையே கொண்டு `இரண்டும் கூடியுள்ளதே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும் பேதைமைப் பாலவாதல் விளங்கும். இவ்வியல்பு சிவன், சத்தி இருவர்க்கும் உரியதென்க. எனவே, கடவுளது ஆண் தோற்றம் முதலிய மூவகைத் தோற்றங்களுள் எதனைக் காணினும், `இஃது உயிர்கள் பொருட்டு ஏற்ற பெற்றியாற் கொண்ட பொதுவியல்பாம்` என உணர்தலல்லது, `சிவன், சத்தி இவர்களது உண்மை யியல்பு என மயங்குதல் பொருந்தாதாயிற்று. இவ்வியல்பினை,
``ஒன்றொடொன் றொவ்வா வேடம்ஒருவனே தரித்துக்
[கொண்டு
நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் என்றும் ஓரார்`` 1
என விளக்கிற்றுச் சிவஞான சித்தி. இன்னும்,
``எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் தமையன்`` 2
எனவும்,
``சிவம் சத்தி தன்னை யீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும் புணர்ந்திங் குலகுயி ரெல்லாம் ஈன்றும்
பவன்பிரம சாரி யாகும்; பால்மொழி கன்னி யாகும்;
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே`` 3
எனவும் வருவன போல்வன பலவும், இவையெல்லாம் கடவுள் தனது அருள் நாடகத்திற்கொள்ளும் பொதுவியல்பாதலன்றி உண்மை யியல்பாகாமையை விளக்க எழுந்தனவேயாம். ஆகவே,
``கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகு மாபோல்`` 4
என்ற பெரியவர் ஒருவர் வாக்கின்படி ஆடவர் போலவும், மகளிர் போலவும் வேடங்கட்டியாடுவார். அவ்வேடத்திற்கு ஏற்பவே நடித்து நிற்பினும் அவரது உண்மைத் தன்மை அவ்வேடத்திற்கு வேறாயினாற் போலவே, ஆணாயும், பெண்ணாயும் தோன்றும் கடவுளின் உண்மையியல்பு அவற்றின் வேறேயாம் என்பது இனிது விளங்கும்.
``சத்திதான் நாத மாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதான் ஆதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமும் ஆகும்`` 1
என்ற சிவஞான சித்தியையும் அதற்கு மாபாடியம் உடையார் உரைத்த உரையும் இங்கு இனிது நோக்கி உணர்க. இங்ஙனம், உணரமாட்டாது தம்முள் மாறுபட்டு வழக்கிடுவாரை நோக்கியேயன்றோ தாயுமான அடிகள்,
``அன்னே அனே எனும் சிலசமயம் நின்னையே;
ஐயா ஐயா என்னவே
அலறிடும் சிலசமயம்``
என முதற்கண் நகையாடியும், பின்னர்,
``என்னே எனேகருணை விளையாட் டிருந்தவாறு`` 2
என வியந்தும் கூறியருளினார். ஈற்றடி இனவெதுகை.
இதனால், `சிவம் சத்தி இவர்களிடையே சொல்லப்படும் நாயக நாயகித் தன்மை குணியும், குணமுமாய் நிற்கும். அதனை விளக்கும் அத்துணையதேயல்லது முழுவதுமாகின்ற உண்மையியல்பு அன்று` என்பதும், `அதனால் அத்தன்மைக்கு ஏற்ப அவர்கள் கொள்ளும் கோலம் அவர்களது பொதுவியல்பேயாம்` என்பதும் குறிப்பு மொழியாற் கூறப்பட்டன. இது பற்றியன்றே ஞானசம்பந்தரும், இறைவனை ``ஒருமை பெண்மை யுடையனாக`` 3 முன்னரே கண்டு வைத்திருந்தும், வையைக் கரையில் பாண்டியன் கேட்க அருளிச் செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்தில்
``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ`` 4
என அருளிச் செய்தார்! அதனால், இறைவனது உண்மையியல்பு உயிர் களால் `இன்னதுதான்` என வரையறுத்துணரப் படாததாதல் தெற்றென விளங்கும். இதனை விளக்கும் முகத்தானே ஆதார ஆதேயங்களாய் நிற்றல் சத்தி, சிவம் இருவர்க்கும் பொதுவேயாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

பொழிப்புரை :

ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு புணர்தலால் பயனின்மையின் அங்ஙனம் புணர்தல் பேதமைச் செயலாதல் தெளியப் பட்டதாயினும், அச்செயலால் ஆண் ஒன்று பிறந்த பயன் ஓரிடத்தில் காணப்படுகின்றது (இஃது அதிசயம்) இனி, புணரப்பட்ட அப் பெண்ணிடத்தினின்றும் பிறந்த அந்த ஆணின் உண்மையை உணர்ந்து, யாவரையும் அந்த ஆணினிடத்தே ஈர்த்து வைக்கின்ற அந்தப் பெண்ணைத் துணைவியாக உடைய அந்த ஆணின் பக்கல் அந்தப் பெண் ஈர்த்தவாறே சென்று அடைவதே, `இஃது இயற்கைக்கு மாறாய் இயலாததொன்றாம்` என்று பேசும் பேச்சு அற்றொழிதற்கு வழியாம்.

குறிப்புரை :

முதலில் உள்ள `பெண்` பராசத்தி. அடுத்த வந்த பெண் ஆதிசத்தி. பராசத்தி ஆதிசத்தியோடு புணர்தலாவது அந்நிலையில் கலந்து நிற்றல். ஆதிசத்தியினின்றும பிறந்த ஆண் சதாசிவ மூர்த்தி. `இவ் வுண்மையை அறிதல் வேண்டும்` என்றவாறு. `பேதைமையால்` என உருபு விரிக்க. ஈர்க்கின்ற பெண், அனுக்கிரக மூர்த்தியாகிய சதாசிவர் பால் உயிர்களை ஈர்த்துச் சேர்க்கின்ற மனோன்மனிசத்தி, `ஆணிடைப் பேச்சறும்` என்றது, ஆணிடை அடைந்தால் பேச்சறும் என்றதாம்.
இதனால், ``தவந்தரும் ஞானத்தோர்க்கு இத்தன்மைதான் தெரியும்`` என மேற்காட்டியவாறு. மேற்கூறிய உண்மைகள் எல்லாம் திருவருள் கிடைக்கப்பெற்ற பின்பு இனிது விளங்கும், என்பது நகைச்சுவை படக்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.

பொழிப்புரை :

சொல்லற்ற இடத்தில் நிற்கும் தலைவனாகிய சிவன் குற்றம் அற்ற ஒளிப்பொருள். துணைவியாகிய சத்தியும் அங்ஙனம் குற்றம் அற்ற ஒளிப்பொருளே. ஆயினும் சத்தியே சிவத்துடன் வந்து குற்றம் அற்ற என்உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்றாள்.

குறிப்புரை :

அஃதாவது, `சிவமும் சத்தியும் ஒரு பொருளே யாயினும், அப்பொருள் உயிர்களோடு தொடர்புகொள்ளும் நிலையில் `சத்தி` எனப்படுகின்றது` என்பதாம். பெருந்தகை - தலைவன். காண், உம் அசைகள். `குற்றம்` என்னும் பொருளைத் தருகின்ற, `மாசு, காசு, ஆசு` என்பன எதுகை நோக்கி விரிதல் பெற்றன. இறுதியடியில், `அற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மங்கையாம் மனோன்மனி என மாறுக. இங்கு உம்மை தொகுக்கப்பட்டது `மங்கையும்` என்றே ஓதுதலுமாம். `அவள் புணர்ந்து புகுந்து ஆலிக்கும்` என வேறு தொடராக்கி முடிக்க. ``கடவுளுடன் புணர்ந்து`` என்றது. தனித்து நில்லாமையை வலியுறுத்தியதாம்.
இதனால், `முதற்பொருள் இரண்டில்லையாயினும், செய லிடத்துச் சத்தியாய் நிற்கும்` என்பதுணர்த்தி, மேல், `சத்தியே ஆதார ஆதேயமாய் நிற்கின்றாள்` எனக் கூறியதன்கண் ஐயம் அறுக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித் துலகில் பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஓலித் தொருவன் உகந்துநின் றானே.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்ற கன்னிப் பெண்ணாகிய சத்தி பெண் தன்மையை உடையளாய் உலகெங்கும் நிறைந்து உலகினைப் பாதுகாத்து நிற்பாள். உலகத்தலைவியும், வேதங்களால் குறிப்பிடப்படும் முதல்வியுமாகிய அவளை வேதங்களும் காணமாட்டாது ஓலமிட்டு நிற்கின்ற சிவன் யாண்டும் பிரியாதே கூடி நிற்கின்றான்.

குறிப்புரை :

`பாலித்துப் பரந்து பெண்ணாகும்` என்பதை, `பெண் ணாகிப் பரந்து பாலிக்கும்` எனப் பின் முன்னாகவைத்து, விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. ஓலித்தல் - ஓலம் இடுல். `ஓலித்த` என்னும் அகரம் தொகுத்தல். வேலை - கடல். அஃது அதனாற் சூழப்பட்ட உல கிற்கு ஆயிற்று. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் ஆகாமை அறிக.
இதனால், மேற்கூறியவாறு சத்தி சிவனோடு கூடியே நிற்றல் போல, சிவனும் சத்தியோடுகூடியே நிற்றலைக் கூறி, இருமையின் ஒருமை வலியுறுத்தப்பட்டது.
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான்`` 1
என்றார் திருக்களிற்றுப்படியாரினும்.

பண் :

பாடல் எண் : 8

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.

பொழிப்புரை :

நம்பியாகிய சிவன் காமனை எரித்த நெற்றிக் கண்ணோடு நின்றே மேற்கூறிய நங்கையாகிய வேத முதல்வியை விரும்பி நின்றான். பின்பு அவளது தோள்களைத் தன் தோளோடு ஒன்றாகும்படிச் சேர்த்து மகிழ்ந்து நின்றான். இவை முறையே அவன் உயிர்களாகிய நம்மிடம் வருதல் குறித்தும் அனைத்து உயிர்களுக்கும் போகத்தைத் தருதல் குறித்துமாம்.

குறிப்புரை :

`இல்லையேல் அவை இயலா` என்பது கருத்து. மூன்றாம் அடிக்கு, `இவ்வுலகங்கள் எல்லாம் போகத்தை எய்த உகந்து நின்றான் ஆதலின்` என உரைக்க.
இதனால், `சிவன் தனது உண்மை நிலையில் அணியனல்ல னாயினும், உயிர்களின் பொருட்டு அணியனாதற்கும், போகியல்ல னாயினும் உயிர்கள் போகத்தை எய்துதற் பொருட்டும் சத்தியோடு மணந்து நிற்பன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்தது சொல்லகி லேனே.

பொழிப்புரை :

சத்தி பெண்ணியல்புகள் பலவும் தோன்ற நின்று சிவனை மணந்ததில் உள்ள கருத்து சொல்லுதற்கரிதாம்.

குறிப்புரை :

துத்தி - பாம்பின் படப்பொறி. விரிதல் - பரத்தல். `துத்தி போல விரிந்து சுணங்கு` எனவும், `புத்தகம் போலும் சீறடி` எனவும் விரித்துக்கொள்க. தொத்தல் - பற்றுதல் `தொகுத்த` என்பதன் விகார மாகக் கொண்டு, `உள்ளீடான` என்று உரைப்பினும் அமையும். சத்தி சிவங்களது குறிப்பு முழுதும் உயிர்களால் அறிதல் கூடாது என்பதாம். ``புணர்வினை`` என்பது இரண்டாவதன் விரியாக முன்னர்க் கூறிய பொருளும், வினைத் தொகையாகப் பின்னர்க் கூறிய பொருளும் அமைவனவாம்.
இதனால், சிவம் சத்திகளது ஆதார ஆதேயங்களாய் நிற்கும் அருட்பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே.

பொழிப்புரை :

அருள் ஒளி மண்டலம் உயிர்களது சொல்லுக்கு எட்டாதது. அதனால், அங்குச் செல்லமாட்டாது பலரும் திகைத்து நிற் கின்றார்கள். அம்மண்டலமாவாள் பிறரால் கடத்தற்கரிய செயல்களை உடையவளும், வலிந்து பற்றிக் கொள்ளவாராதவளும் ஆகிய சத்தியே.

குறிப்புரை :

``அங்கு`` என்றது, அவரவர் இருக்கும் இடத்தை. `வலிமை` எனப் பொருள்தரும் `மல்` என்னும் உரிச் சொல்லடியாக ``மல்ல`` என்னும் செயவெனச்சம் பிறந்தது.
இதனால், சத்தி ஒளி மண்டலமாய் நின்று அனைத்திற்கும் ஆதாரமாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண்கடற் கண்ணே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

``தான்`` என்றது சத்தியை. தாங்குதல், இடந்தருதல். மழை பொழி தையல், கங்காதேவி. எனவே, கங்கையை உமைக்கு மாற்றாள்போல வைத்துச் சொல்வனவெல்லாம் செய்யுளின்பம் படக்கூறும் கூற்றேயாதல் தெளியப்படும். வடவரை - மேருமலை. தலைமை பற்றி இதனைக் கூறவே பிறமலைகளும் கொள்ளப்படும். ``கண்`` என்பது, `இடம்` எனப் பொருள்தரும் பெயர்ச்சொல். எனவே, ``கடற்கண்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `தண்கடலாகுமே` என்பதும் பாடம்.
இதனால், சத்தி ஆதராமாய் நிற்கும் வகைகள் சில கூறப் பட்டன. மழை பொழி தையலாய் நிற்றல் உயிர்கள் அழியாதவாறு நிறுத்தலாம். இதனுள் ``தான்`` என்றதனைச் சிவத்திற்கு ஆக்கி, சிவ பரத்துவ அதிகாரத்திலும் இம் மந்திரத்தை, ``பொன்னாற் புரிந்திட்ட`` என்னும் மந்திரத்தின்பின் ஒருமுறை ஓதுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 12

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

பொழிப்புரை :

எவ்விடத்தையும் தனதாக உடைய சத்தியைக் கூடி அவளுடன் எங்கும் வியாபகமாய் நின்ற அறிவர் சிவத்தன்மை பெற்றவர்; சீவத் தன்மையாகிய முனைப்பு நீங்கியவர். அதனால் பர வெளியில் நிற்பவராகிய அவரை மிக்க மேன்மை உடையவராக அறிந்து, மண்ணில், வாழ்பவராகிய மனிதரில் வைத்து எண்ணா தொழிதல் வேண்டும். (`விண்ணில் வாழும் கடவுளரில் வைத்து எண்ணல் வேண்டும்` என்றபடி).

குறிப்புரை :

``கண்`` என்பது மேலை மந்திரத்தில் வந்தவாறே வந்தது. இதற்கு, `விழி - நெற்றிக்கண்` என உரைத்தற்கு ஓர் இயை பின்மை அறிக. இரண்டாம் அடியில் நின்ற ஐகாரம் சாரியை. `மண் ணுடையாராகிய மனிதர்` என்க. பண் - பண்ணப்படுதல்; செம்மை யாக்கப்படுதல். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.
இதனால், சத்தியது ஆதாரமாய் நிற்கும் நிலையை உலகில் வைத்து உணர்பவர் ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வைப் பெறுதல் கூறப்பட்டது. சத்தியது ஆதார ஆதேயமாம் நிலையை உலகில் வைத்து உணர்தலை, `பாரயோகம்` என்பர்.

பண் :

பாடல் எண் : 13

கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களையும் நினைவு மாத்திரத்தாலே உண்டாக்கி, அவை அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சத்தி, அதற்கு முன்னே அவ்வுலகங்களைக் கடந்து நின்ற ஒரு சத்தியாய் இருப்பாள். அதனால், எட்டுத்திக்கில் உள்ளாரும் தாம் தாம் தமக்கு ஏற்ற பெற்றியால் மணம் பொருந்திய மலர்களைக் கையிலே கொண்டு தோத்திரங்களைச் சொல்லித் தொண்டுபட்டு அம்மலர்களைத் தூவித் தொழுகின்ற தேவி அப்பராசத்தியே யாவாள்.

குறிப்புரை :

கு-ரை: `அந்நிலையை அறியாதவர் வேறு வேறு தேவியராகக் கருதிச்செய்யும் வழிபாடுகளையும் ஏற்று அவர்கட்கு ஏற்ற பெற்றியால் அருள் புரிபவளும் அவளன்றி வேறில்லை` என்றபடி,
``யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``1
என்னும் சிவஞான சித்தியை நோக்குக. காணல் - கருத்தாற் படைத்தல். `எண்திசையும் கண்டு` எனக் கூட்டுக. ``நிற்கும்`` என்பது இறந்த காலத்தில் நிகழ்காலம். இதன்பின் `அதனால்` என்பதும், இறுதியில் `அவளே` என்பதும் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `தொழநின்ற கன்னி கலந்து வருங் கன்னியாம். அவள், பண்டு பராசத்தியாய் நிற்கும்` என உரைத்தலும் ஆம். இவ்வுரையில் மேற்கூறிய கருத்து உடம்பொடு புணர்த்தலாய் அமையும். மூன்றாம் அடியில் ``தசை`` ஆகுபெயர். ஈற்றடியில், `எண்டிசையிலும்` என்னும் உருபு விரித்துக் கொள்க. இதனால், சத்தி ஆதார ஆதேயமாய் நிற்றலின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

பொழிப்புரை :

இறைவி அழியாத ஒளி வடிவாய் நிற்கும் இடம் இது போலும் பிறைவடிவம் பொருந்தியிருக்கின்ற ஆஞ்ஞைத் தானமாம். அது சிவந்த நிறத்தை உடைய தாமரை மலர் வடிவும் உடையது. அவள் தலையாகிய இருப்பிடத்தில், நிரம்பிய பதினாறு கலைகளை யுடைய சந்திரனோடு கூடியிருக்கும் பொழுது பராசத்தியாய் விளங்குவாள்.

குறிப்புரை :

என்றது, `சத்தி, ஆதாரயோகத்தில் ஒளியுருவாயும், நிராதார யோகத்தில் உருவம் அற்ற அருவப் பொருளாயும் நிற்பாள்` என்றதாம். கன்னி - அழியாமை, ``இச்சந்திரன்`` என்றது, `இவ்வாறு கன்னி ஒளியாயுள்ள சந்திரன்` என்றவாறு. இதில் கன்னிமை இளமையைக் குறித்தது. ``சந்திரன்`` என்றது அவனது வடிவைக் குறித்த ஆகுபெயர். `சென்னியாகிய இருப்பிடத்தில் இருப்ப` என இயையும். `இருப்பிடத்தில்` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முன்னர் `சந்திரன்` என வந்தமையால், ``பதினாறு`` என்பது அவனது கலைகளைக் குறித்தது. நிரம்பிய சந்திரன் போல்வதாய், `சந்திர மண்டலம்` எனப்படுவது, நெற்றிக்கு மேலிடத்துள்ள ஆயிர இதழ்த் தாமரை மலராகும். ``பன்னி`` என்பது, `பத்நி` என்னும் ஆரியச் சொல்லின் சிதைவு. இதனையே முதற்கண் கொண்டு உரைக்க. ``பராசத்தி`` என்பது, `உருவத்தைக் கடந்தவள்` என்னும் அளவினதாய் நின்றது.
இதனால், சத்தியது ஆதார ஆதேயமாய் நிற்கும்நிலை உடலில் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங்
குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.

பொழிப்புரை :

`பராசத்தி` என்றே பல வகையிலும் பன்முறை துதிக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் ஆதார சத்தியாய் நிற்கின்ற, வேதத் தின் வழி அறியப்படுகின்ற அவளே முழுமுதற் சத்தியாம். அவளை யாமள ஆகமம் பலபடக் கூற, அவ்வாறும் பல்கி நின்ற அவளது பல கோலங்களையும் யான் அவளது அருளாலே அறிந்தேன்.

குறிப்புரை :

``என்று`` என்பது, `எனப்பட்டு` எனப் பொருள் தந்தது. `பல்வகையானும் பராசத்தி என்றென்று` என மாற்றி உரைக்க. அடுக்கு, பன்மை குறித்தது. தலைப்பிரமாணம் - தலையாய நூல். அது வாயிலாக அறியப்படுபவளை, ``தலைப்பிரமாணி`` என்றார். `இரா சாத்தி` என்பது குறுகிநின்றது. இராணியை `இராசாத்தி` என்றல் நாட்டு வழக்கு. யாமள ஆகமம் வாம மார்க்கத்ததாய்ச் சத்தியின் வடி வங்களைப் பலப்படக் கூறி, அவற்றிற்குரிய வழிபாடுகளையும் பலபட விதிக்கும். அந்நிலையில் நிற்பாரையும் உய்வித்தல் சத்திக்குக் கடப்பாடாதலின், அவ்வாறு நின்று அவர்கட்கும் அருள்புரிதல் பற்றி, ஆங்கு ``உரா சத்திகோலம் பல உணர்ந்தேன்`` என்றார். உராவுதல் பரந்து தோன்றல். `உராவு` என்பது குறைந்து நின்றது, `உராவு கோலம்` என இயையும். முருகனும் இவ்வாறு தாழ் நிலையில் நின்று செய்வாரது வழிபாட்டினையும் ஏற்று, அவர்க்கு ஏற்றவாறு அருள் புரிதலைத் திரு முருகாற்றுப்படை ``சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து`` என்பது முதலாகப் பல அடிகளால் உணர்த்துதல் காண்க. `ஆகமத் தாளாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சத்தி தன்னை அறிவார் அறிந்த வாற்றான் வழி படும் இடங்களில் எல்லாம் ஆதார ஆதேயங்களாய் நின்று அவர வர்க்குத் தக அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி
இணைந்து பரமென் றிசைந்திது தானே.

பொழிப்புரை :

சிவன் தனது சங்கற்ப மாத்திரையானே தோற்று வித்த ஏழு உலகங்களையும், அவ்வுலகத்தோடே பொருந்துவதாகிய சத்தி, தான் அறிந்து, அவற்றிற்கு உயிராய், அவைகளோடு கலந்து நிற்கும். அங்ஙனம் நிற்கின்ற அச்சத்திக்குச் சத்தனாய் நிற்கின்ற இறைவன் அச் சத்தியை மணந்த பொழுதே உயிர்கட்குப் போகம் அமையும். அச் சிவத்தோடு இணைந்து நின்ற இச்சத்தியே உலகிற்குத் தலைமையாவது.

குறிப்புரை :

`என்றது, சத்தி படைப்புக் காலத்தில் இறைவனது சங்கற்பரூப ஆதி சத்தியாய் நின்று உலகைத் தோற்றுவித்துப் பின் யோகினி சத்தியாய் உலகெங்கும் வியாபித்துப் பின் இறைவனோடு இணைந்து நின்று போக சத்தியாகி உலகிற்குப் போகத்தைத் தந்து, உலகிற்குத் தலைமை பூண்டு நிற்கின்றது` என்றவாறு. முதலடி மூன்றாம் அடிகளில் `உணர்ந்த, புணர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரங்களும் தொகுத்தலாயின. `இசைந்த` என்பதன் அகரமும் அன்னது. `யோக சத்தி` எனின் பிறிது பொருள் படுமாகலின் `யோகினி` என்றார். எனவே, இதனை யாமள தந்திரங் கூறும் யோகினிகளாகக் கொள்ளுதல் பொருந்தாமை அறிக. `அதனோடு` என உருபு விரிக்க. ஆதி, பரம் இவை இங்குத் தலைமை. `இதுதானே ஆதி` என மேலே கூட்டி முடிக்க.
இதனால், `சத்தி `யோகினி` என நின்று ஆதார ஆதேயங் களாய்ப் போகத்தைப் பயப்பித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்
பொதுவக் கலவியுள் போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மனி மங்கை
அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

பொழிப்புரை :

`போகத்தைத் தருவது` என மேற்கூறப்பட்ட இம் மறைப்புச் சத்தி சிவனுடன் உயிர்கட்கெல்லாம் பொதுவாயுள்ள போகக் கலப்பில் நின்று போகத்தைத் தந்து `அருட்சத்தி` என்னும் அந்தச் சத்தியாய் அச்சத்திக்கும் சிவத்திற்குமே சிறப்பாய் உள்ள அந்த அருட்கலவியுள் நின்றவழி உயிர்கட்கு யோகம் உளதாகும்.

குறிப்புரை :

`போகமும்` என்னும் உம்மை இழிவு சிறப்பு. அனுக் கிரக மூர்த்திதன் சத்தியின் பெயராகிய `மனோன்மனி` என்பது, இங்கு `அருட்சத்தி` எனப் பொருள் தந்தது. அது - அந்நிலை. `அதுவாய்` என ஆக்கம் வருவிக்க. `அக்கலவி` என்னும் சுட்டு, அவர்கட்கே உரித்தாகி, சிறப்புணர நின்றது. `பொதுவக் கலவி, மதுவக் குழல்` என்பவற்றில் அகரம் விரித்தல். ``பொதுக்கலவி`` என்றது, `பொதுக்கலவி போலும் படிக் கலக்கும் கலவி`` என்றவாறு. இதனுள் முன்னிரண்டடி அனு வாதம். ``ஆயுழி`` என்பது முன்னரும் சென்று இயைந்தது.
இதனால், சத்தி ஆதார ஆதேயங்களாய் நின்று உயிர்கட்கு யோகத்தைப் பயக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதரம் நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.

பொழிப்புரை :

`போகசத்தி, யோகசத்தி` என்னும் இருசத்திகளில் யோக சத்திக்கு வானத்தில் சூரியனும், பூமியில் வேள்வித்தீயும் ஆசனமாகும். அவ்வாசனங்களின்மேல் அவள் தெற்கு நோக்கிய முகத்துடன் உடம்பை நடுவில் வைத்துக் கால்களைப் பாதங்கள் வடக்குநோக்க மடக்கி நீட்டிக்கிடந்த கோலமாய் இருப்பாள். இதனை அறிந்து வழிபடுக.

குறிப்புரை :

தெற்கு நோக்குதல், வழிபடுவோர்க்கு அருளுதற் பொருட்டு. கிடத்தல், தாயாகிய தான் தன்னை வழிபடுவோராகிய மகவுகளை யோகத்தில் ஆழ்த்தற்பொருட்டு. யோகம் வேண்டுவோர் இச்சத்தியை இங்ஙனம் சூரிய மண்டிலத்திலும், வேள்வித்தீயிலும் கண்டு வழிபடின் பயன்பெறலாம் என்றமை அறிக. முதலடியில், `சத்திக்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், சத்தி யோகியர்க்குச் சில ஆதாரங்களில் நின்று பயன்தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற
ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

பொழிப்புரை :

யோக சத்தி யோகத்தை விரும்புவர்க்கு அதனை அருளுமாற்றை யறிந்து சிவாக்கினியோடு பொருந்தி நிற்பின், பல்வேறு வகையாய்ப் பரிணமித்து நின்று பந்திக்கின்ற மாயை அங் ஙனம் பந்தத்தைச் செய்தலைத் தவிர்ந்து, ஞானத்திற்குத் துணையாய் நிற்கும். அதன்பின் விந்து நாதங்களின் வடிவாய் உள்ள குண்டலி சத்தி துயிலெழுந்து மேலோங்கிச் செல்லுமாறு யோகசத்தி மேலும் அருள் மிகுந்து நிற்பாள்.

குறிப்புரை :

அக்கினியைச் `சிவாக்கினி` என்று கூறவே, சூரியனும் `சிவசூரியன்` என்பது பெறப்பட்டது. ``கோல் வளைதான்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், யோகசத்தி மேற்கூறியவாறு நிற்றலால் வரும் பயன் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை
தானான வாறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

பொழிப்புரை :

சத்திக்குத்தானே அதுவாய் நின்று அருள்செய் கின்ற சிறந்த ஆதாரம், உள்ளே எட்டாயும் வெளியே பதினான்காயும், இடையில், `இரண்டு பத்து` என்னும் சம அளவினவாயும் உள்ள கோணங்களை உடைய சக்கரமாகும். இச்சக்கரம் சொல்லும், பொரு ளும் ஆகிய இருவகை உலகங்களாயும், அவற்றைச் செயற்படுத்து கின்ற கடவுளராயும், அக்கடவுளரது செயல்களாயும் விளங்கும்.

குறிப்புரை :

`ஆதலின் அச்சக்கரத்தில் சத்தியை வழிபடுதல் தக்கது` என்பது குறிப்பெச்சம். இங்குக் குறிக்கப்பட்ட சக்கரம் ஷ்ரீசக்கரமாகும். இது மேல்நோக்கிய முனைகளையுடைய முக்கோணம் நான்கு, கீழ் நோக்கிய முனைகளையுடைய முக்கோணம், நான்கு, நடுமுக்கோணம் ஒன்று இவை ஒன்பதும் வேறு வேறாய்த் தோன்றாது ஒன்றினுள் ஒன்று கோத்து நிற்கும் வண்ணம் உபதேச முறையால் வரையப்பட்டு, நடுக் கோணத்தில் விந்துப்புள்ளி இடப்படும். மேலும், பதினான்காய் உள்ள வெளிக் கோணங்களைச் சுற்றி எட்டிதழ்த் தாமரையும், அதனைச் சுற்றி ஒருவட்டமும், அதற்குமேல் பதினாறு இதழ்த்தாமரையும், அதற்கு மேல், மேல் மூன்று வட்டங்களும் வரைந்து, எல்லாம் ஒரு நாற் கோணத்தின்மேல் அமைந்துள்ளதாக வரையப்படும். நாற்கோண மேடையை, `பூ புரம்` என்பர். 1
இவற்றுள் மேல் நோக்கிய முனைகளையுடைய முக் கோணங்கள் சிவ கோணங்களும் கீழ்நோக்கிய முனைகளையுடைய முக்கோணங்கள் சத்தி கோணங்களுமாகும். இவற்றுள் நடு முக் கோணம் மேல் நோக்கியிருப்பது, சிருட்டிக்கிரம சக்கரமும், கீழ் நோக்கி யிருப்பது சங்காரக் கிரம சக்கரமும் ஆகும்.
இப்பாட்டில் நாயனார் நடுக்கோணம் ஒழிந்த நாற்பத்திரண் டினைக் குறித்தார். எனவே, `நடுக்கோணத்தையும் கூட்ட இச் சக்கரத்தில் அமையும் முக்கோணம் நாற்பத்து மூன்றாம், என்பது தெளி வாகும். சத்திக்குரிய சக்கரங்கள் அனைத்தும் இதனுள் அடங்கும் என்பதுபற்றி இது `ஷ்ரீசக்கரம்` எனப்படுகின்றது.
இதில் எழுதப்பட வேண்டிய எழுத்துக்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், சத்திக்குரிய பொதுச் சக்கரம் ஆதலின், பின்வருமாறு கொள்ளுதல் பொருந்தும்.
பூ புரமாகிய நாற்கோணத்தில் மேற்பக்கம் தொடங்கி வலமாக `ஓம், ஐம், க்லீம், ஸௌ`: என்பனவும், பதினாறு இதழ்களில் ஓம் என்ப தன் கீழ் `ஷ்ரீம்` என்பதும், அதனையடுத்து வலமாக, ககாராதி பஞ்சத சாட்சரங்களும், எட்டிதழ்களில் `ஷ்ரீம்` என்பதன் கீழ்முதல் வலமாக வும், அங்ஙனமே பதினான்கு கோணம், வெளிப்பத்துக் கோணம், உட்பத்துக் கோணம், உள் எட்டுக் கோணம் என்னும் ஐம்பது கோணங் களிலும் ளகாரம் நீக்கி ஏனை அகராதி ஐம்பதெழுத்தும், நடுக்கோணத் தில் பிரணவமும், விந்துவில், `ஹ்ரீம்` என்பதும் எழுதப் படலாம். பிறவகை சொல்லப்படின் ஏற்பது கொள்க. `பஞ்சத சாட்சரங்களில் சிவாட்சரங்களும் உள` எனவும், ஷ்ரீசக்கர கோணங்களில் சில கோணங்களும், விந்துவும் சிவாம்சங்கள் எனவும் கூறப்படுதல் அறிக. இன்னும் பஞ்சதசாட்சர அம்சங்கள் முப்பத்தேழும் முப்பத்தாறு தத்துவமும், தத்துவாதீதப் பொருளும் ஆகும் எனப் படுதலும் காண்க.
இங்ஙனம் இச்சக்கரம் அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்டிருத்தல் பற்றி, ``விந்து, சகம், பரம்`` எனவும், ``பரவாதனை`` எனவும் சொல்லத் தக்கது என்றார். விந்து - வாக்கு; சொற்பிரபஞ்சம். பரவாதனை - கடவுளர்தம் அதிகாரம். ``பரைக்கு`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``தானானவாறும்`` என்னும் உம்மையை, ``சமகலை`` என்பதனோடு கூட்டுக.
இதனால், சத்தி தன்னை வழிபடுவார் பொருட்டுக் கொள்ளும் ஆதார ஆதேயங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

தக்க பராவித்தை தான்இரு பானேழில்
தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.

பொழிப்புரை :

ஷ்ரீசக்கரத்தில் சத்தியை வழிபட்டு, அவளுக்கு உரிய மந்திரங்களில் எந்த ஒரு மந்திரத்தையேனும் திரும்பத்திரும்பச் சொல்லி உருவேற்றினால், வெண்ணிறமும், மூன்று கண்களும், திரு மேனி அழகும், அபய வரத முத்திரைகளும் உடையவளாகிய ஞான சத்தியாகிய மனோன்மனியே ஏனை வாமாதி எண் சத்திகளாயும் மிகத்தோன்றி அருள்புரிவாள்.

குறிப்புரை :

சக்கரத்தையே ``வித்தை`` என்றார். இருபத்தேழு, ஒன்பது முக்கோணங்களிலும் உள்ள கீற்றுகள். இஃது ஆகுபெயராய் அவற்றாலாகிய சக்கரத்தை உணர்த்திற்று. காரணக் குறியாக மந்திரத் தினையே ``ருத்திரம்`` என்றார். ஷ்ரீசக்கர வழிபாட்டிற்குரிய ஷ்ரீவித் தியா மந்திரம், ``யாம் - ராம் - லாம் - வாம் - ஸாம் - த்ராம் - த்ரீம் - க்லீம், - ப்லூம் - ஸ: ஸர்வ ஜம்பநேப்யோ காமேஸ்வரீ காமேஸ்வர பாணேப்யோநம: பாண சக்தி பாதுகாம் பூஜயாமி`` என்பது.
இனி, ``ஓர் ருத்திரம்`` என்பதற்கு `தேவிக்குரிய யாதேனும் ஒரு மந்திரத்தை` எனப் பொருள் உரைத்தலுமாம். தொக்கு - மெய்; உடம்பு. ஐ - அழகு.
இதனால், ஷ்ரீசக்கர வழிபாடாகிய ஷ்ரீவித்தை சத்தியின் எல்லா வழிபாட்டுப் பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.

பொழிப்புரை :

மலரில் மணம் போலச் சிவத்தில் வேறாகாது நிற்பவளாகிய சத்தி மூன்று பிரிவுகளாய் அமைந்த பஞ்ச தசாட்சரி (பதினைந் தெழுத்து) மந்திரத்தில் முற்ற விளங்குகின்ற மெய்ஞ்ஞான வடிவினள்; தத்துவங்களாயும், அவை யல்லவாயும் எல்லாமாய் இருப்பவள்; வேதம் முதலிய நூல்கள் பலவும் முடித்துக் கூறுகின்ற சிவனோடு ஒன்றான சிவையாய் விளங்குபவள்; அருட் சத்தியும், ஆனந்த சத்தியுமானவள்.

குறிப்புரை :

கொங்கு - மணம்; உவமை யாகுபெயர். இதனை முதலிற் கொண்டு உரைக்க. பஞ்சதசாட்சரத்தின் உட்கூறுகளே தத்துவ மாயும், தத்துவாதீதப் பொருளாயும் நிற்றல்மேலே கூறப்பட்டது. `முத்திரை மூன்று` என்பதற்கு வேறு பொருள் உரைப்போர், இரண்டாம் அடிஈற்றில் `ச-க-ல` என்று பிரித்து, அதனைப் பஞ்ச தசாட்சரியின் மூன்றாம் பிரிவாகக் கொள்வர். பஞ்ச தசாட்சரங்களை நாயனார் புவனாபதி சக்கர அதிகாரத்தின் முதலிற் குறிப்பிடுவார்.
இதனால், ஷ்ரீசக்கரத்தில் விளங்கும் சத்தியது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாசம்எனும் அகி லம்களி
தங்கும் அவள்மனை தானறி வாயே.

பொழிப்புரை :

`நறுமணத்தை வெளிப்படுத்துகின்ற பூங்கொம்பில் தென்னங்குரும்பைகள் விளங்குவது போலும் தோற்றத்தையுடைய கன்னிகையாகிய சத்தி, குங்குமம், பூசப்பட்ட தோள்களை உடை யவள்` என்றும், அங்குச பாசங்களை ஏந்தியவள்` என்றும், `அவளது மகிழ்ச்சியுள்ள கோயில் அகில உலகங்களும்` என்றும் உண்மை நூல்கள் கூறும். இதனை அறிந்து போற்றுவாயாக.

குறிப்புரை :

உடம்பு பூங்கொம்பு போலவும், தனங்கள் குரும்பை போலவும் இருத்தலை முதலடியில் இல்பொருள் உவமையாகக் குறித்தார். `அங்குச பாசம் பொருந்தினள்` என்க. ``எனும்`` என்பதை ``அவள் மனை`` என்பதன்பின் கூட்டியுரைக்க. அறிதல், இங்கு அதன் காரியமும் உடன் தோன்ற நின்றது.
இதனால், ஷ்ரீசக்கரத்தில் விளங்கும் தேவியது வடிவம் கூறப்பட்டது. எனவே, அகிலமாவது, இச்சக்கரத்தில் பூபுரமாம்.

பண் :

பாடல் எண் : 24

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை).

குறிப்புரை :

இப்பொருள் மேலேயும் குறிக்கப்பட்டது. ``தாய்`` எனல், சத்தி தத்துவ சத்தியினின்று சதாசிவன் தோன்றுதல் பற்றி. ``மகள்`` எனல், சிவ தத்துவ சிவத்தினின்று மேற்கூறிய சத்தி தத்துவ சத்தி தோன்றுதல் பற்றி. ``தாரம்`` எனல், யாண்டும் சத்தனுக்குச் சத்தியாய் நிற்றல் பற்றி. வாய் - வாக்கு. கணம் - பூதக் குழாம்.
இதனால், சத்தி சிவனுடன் பல்வேறு வகையில் இயைந்து நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

பொழிப்புரை :

(இதன் பொருளும் வெளிப்படை).

குறிப்புரை :

தத்துவம் - முதற்பொருள். தாய் நிலை காரணமும், மகள் நிலை காரியமும் ஆதல் அறிக. கலப்புச் சிவனோடென்பது வெளிப் படை. பூரணம் - பெரு வியாபகம். விந்து - சுத்த மாயை. `விந்துவிற் பொதிந்த` என்க. புராதனி - பழமையானவள். பார் - உலகம். அளவு - எல்லை. உடையாள் - தன்னுடையனவாக உடையவள்.
இதனால், மேலதனை வேறோராற்றால் விளக்கி, சத்தி உலக நாயகியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

பத்து முகமுடை யாள்நம் பராசக்தி
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.

பொழிப்புரை :

பத்துத் திசைகளையும் நோக்கிய பத்து முகங்களை உடையவளாகிய, நமக்குத் தலைவியாம் பராசத்தி நம் பொருட்டு நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் ஆக்கி வைத்து, அவற்றிற் கூறப்பட்ட பொருளாகியும் நின்றாள். அத்தகைமைய ளாகிய அவள் ஒப்பற்ற ஓர் ஆதாரமாகிய ஷ்ரீசக்கரத்தில் நீங்காது நிற்கின்றாள். அவளை அந்நூல்களின் வழிப்போற்றுக.

குறிப்புரை :

`வேதம் நாலுடன் தான்வைத்தனள்` என இயைக்க. ஒத்தல் - தான் வைத்தற்கு ஏற்ப இருத்தல். முன்னர், ``வைத்தனள்`` என்றும், ``ஒத்தனள்`` என்றும் கூறிப்போந்தமையின், கூறுதல் அவற்றின் வழியதாயிற்று. ``நேரிழை`` என்பதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.
இதனால், `ஷ்ரீசக்கரத்தில் தேவியை வேத நெறியான் வழிபடுக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

கூறிய கன்னி குலாய பருவத்தள்
சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள்
ஆறிய நங்கை அமுத பயோதரி
பேறுயி ராளி பிறிவறுத் தாளே.

பொழிப்புரை :

மேற் சொல்லப்பட்ட சத்தி இளமையான தோற்றத்தையுடையவள்; ஏழுலகிலும் நுண்ணியளாய் நிறைந்தவள்; அடக்கமான பெண்மை இயல்புடையவள்; அமுதமயமாம் பால் நிறைந்த தனங்களை உடையவள்; வீடு பெறுதற்குரிய உயிர்களை ஆட்கொண்டு, அவை தன்னை விட்டுப் பிரிதலை நீக்குபவள்.

குறிப்புரை :

`சிறியள்` என்பது நீட்டலாயிற்று. இம் மந்திரத்தின் எல்லா அடிகளையும் ரகர எதுகைப் படவும், ஒன்றிரண்டு அடிகளை அவ் எதுகைப் படவும் பாடம் ஓதி, அவற்றிற்கேற்ப உரைப்பாரும் உளர். அவர், மேலைமந்திரத்தின் இறுதிச் சீரினையும் `கூரே` எனப்பாடம் ஓதுவர். அவையெல்லாம் சிறவாமை அறிந்துகொள்க.
இளமைப் பருவ சத்தி, `வாலை, வாலாம்பிகை` (பாலை, பாலாம்பிகை) எனப்படுவாள்.
இதனால், சத்தி பக்குவிகளுக்குச் சிறந்த தலைவியாய் வீடு பேறளித்தல் கூறப்பட்டது. இதனானே, ஷ்ரீவித்தை வீடுபேற்றையும் தருதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.

பொழிப்புரை :

சிவத்தோடு வேற்றுமையின்றி நிற்பவளாகிய சத்தி அடியவரது தியானத்திலே பொருந்தி விளங்குகின்ற அழகிய பூங் கொம்பு போன்றவள்; அதனால், முன்னர் மனம் முதலிய அந்தக் கரணங்களின் வழியே தலைப்பட்டுப் பின்னர் உயிர்களினது அறிவுக் கறிவாய் விளங்குவாள்.

குறிப்புரை :

குறி - இலட்சியம்; தியானம். பொறி - அந்தக்கரணம்.
இதனால், சத்தி முதற்கண் தியானத்தில் விளங்கிப் பின் அறிவினுள் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.

பொழிப்புரை :

தன்னைக் கூடியதனால் விளைகின்ற இன்பத்தை யுடைய வள்ளலாகிய சிவனுக்குத் தேவியாய் உள்ள சத்தி அடி யேனைத் தன்வசப்படுத்தித் தவநெறியை அடையச்செய்தது, என் உள்ளத்திலே நின்று ஐம்புலக்கள்வர் தம் கள்ளத்தைப் போக்கி இரண்டறக் கலந்து, என்றும் உடனாய் இருந்ததாம்.

குறிப்புரை :

தலைவி என்னை மருட்டி, யான் தவநெறி கொள்ளப் புரிந்தது, இருந்து, நீக்கி, கலந்து, புல்கி, எனக் கூட்டி முடிக்க. `இஃது அவளை வழிபட்டதன் பயன்` என்பது குறிப்பெச்சம். எதுகை நோக்கி, ``வள்ளல்`` என்பதன் ஈறு கெடாது திரிந்து நின்றது.
இதனால், சத்தி தன்னை வழிபடுபவரை மலத்தின்வழிச் செல் லாது தடுத்துத் தன்வழிப்படுத்தித் தவநெறியருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்
திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு நலம் செய்ய விரும்பி அங்ஙனமே செய்துவருகின்ற போக சத்தி, உயிர்களிடத்துத் தான் தங்கியிருந்து ஆக்க இருக்கின்ற இன்பம் இது என்பதனை உலகர் ஒருவரும் அறிய மாட்டார். பூவில் நிறம்போல உயிர்களிடத்தில் பொருந்தியிருக்கின்ற அவள், தான் அவ்வாறிருக்கின்ற குறிக்கோளினின்றும் சிறிதும் மாறுபடாமலே இருக்கின்றாள்.

குறிப்புரை :

`இருந்தருள் செய்கின்ற இன்பம் வீட்டின்பமே; உலக இன்பம் அன்று` என்றதாம். இருந்த இலக்கும் அதனைத் தருதலேயாம். ``புதல்வி`` என்பது முறை சுட்டாது, இளமை குறித்து நின்றது. `பூவில் வண்ணம்போல` என்பது ஒன்றாய்க் கலந்திருத்தற்கு உவமை.
``பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தான்`` 1
என்றது காண்க.
இதனால், சத்தியது குறிக்கோள் வீட்டின்பத்தைத் தருதலே யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை ஓடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.

பொழிப்புரை :

சத்தி, யான் உள்ளம் திருந்தித் தன்னை அடைய விரும்பிய நிலையில் அந்நிலையை நன்குணர்ந்து அவளும் எனது உள்ளத்தை விரும்பி, அதன்கண் இருப்பாளாயினாள். அவ் இருப்பு, இடையறாது ஓடும் நீர், தான் ஓடுகின்ற திசையை நோக்கி ஓடும் ஓட்டத்தை ஒப்ப இடையறாது இருக்கும் இருப்பாம்.

குறிப்புரை :

``திருந்து புணர்ச்சியில்`` என்பதில், `புணர்ச்சி` என்பது அதனை விரும்பி நின்ற காலத்தைக் குறித்தது.
இதனால், சத்தி பக்குவான்மாக்களது உள்ளத்தையே விரும்பி அவற்றில் இடையறாது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

பொழிப்புரை :

`எனக்கு அது வேண்டும், இது வேண்டும்` என்று அவாவுகின்ற அவாவை விடுத்து, சந்திர மண்டலத்தில் உள்ள ஆயிர இதழ்த்தாமரையில் விளங்குபவளாகிய சத்தி விளக்கியருளிய மூன்று மண்டலங்களில் உள்ள பொருள்களைப் போற்றி செய்து சுழுமுனை யில் நின்று பொருந்த நோக்கினால் விதியையும் வெல்லுதல் கூடும்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டியுரைக்க. சுழு முனையை, ``சுழி`` என்றார். மண்டலம் மூன்றாவன அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம். இவை `உடம்பில் உள்ளன` என்பது அடுத்த மந்திரத்தில் கூறப்படும். ``மூன்று`` என்பது இடவாகுபெயர்.
இதனால், சத்தியது குறிக்கோள் நிறைவுறுதற்கு யோக சாதனை வேண்டப்படுதல் கூறப்பட்டது. இதன்கண் மண்டலமாகிய ஆதாரமும், அவற்றின்கண் உள்ள ஆதேயமும் கூறப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 33

மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

பொழிப்புரை :

மேற்கூறிய மூன்று மண்டலங்களும் அசுத்த மாயையின் காரியங்களாய் நிற்கும் உடம்பில் உள்ள இடங்களே. எனினும், உச்சிக்கு மேல் பன்னிரண்டங்குலத்தில் உணர்வு செல்லின் அது சுத்த மாயையைப் பொருந்தியதாகும். அங்ஙனம் உணர்வு செல்லும்பொழுது சத்தி, பிராசாத கலைகள் பதினாறில் ஒன்பதை ஏற்றுச் சந்திர மண்டலத்தைக் கீழ்படுத்தி நிற்பாள்.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களில் மூலாதாரம் முதல் சுவாதிட்டானம் முடிய அக்கினி மண்டலமும், சுவாதிட்டானத்திற்குமேல் விசுத்தி முடியச் சூரிய மண்டலமும், விசுத்திக்கு மேல் பிரமரந்திரம் முடியச் சந்திர மண்டலமும் ஆதலின், `மூன்று மண்டலங்களும் உடம்பினுட் பட்டன` என்றார். `உச்சியின் ஈராறாய் எழுதலையில் தோன்றும் இலக்கு` என்க. கலை - கூறு; அங்குலம். இவ்வாறன்றி, `பிராசாதகலை பன்னிரண்டு, என உரைப்பின், அதற்கு அப்பால் உள்ளது பரசிவம் ஆதலின்` அதனை, ``மாமாயை`` என்றல் கூடாமை அறிக. ஆதார யோகத்தில் சவிகற்ப உணர்வு உடம்பைப் பற்றாது விடுதல் இன்றி, நிராதார யோகத்திலே அதனை விட்டு நீங்குதலின், அது நாத மாத்திரை யாம் மாமாயை ஆயிற்று. பிராசாத கலைகளில் ஒன்பதாவதாகிய சத்தி கலையே ஆதாரத்தைக் கடந்த முதற்கலையாதலின், ``ஏழிரண்டில், இந்துவொடு ஈறாக ஏன்றனள்`` என்றார். ஒடு, எண்ணொடு. `முன்னர் இந்துவை ஏன்று, பின் அஃது ஈறாதலை ஏன்றனள்` என்க. ஈறாதல், கீழ்ப்படுதல். பிராசாத ககைளின் விளக்கம் மேல், 696 ஆம் மந்திர உரையில் தரப்பட்டது.
இதனால், சத்தி ஆதார நிராதாரத்தானங்களில் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

பொழிப்புரை :

பிறை வடிவாயுள்ள ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழுந்து நுணுகிச் செல்கின்ற நாதம், (வாக்கு) கீழே வந்து, நாவினால் பிராணவாயு அலைக்கப்படும் பொழுது பரு வடிவினதாய்ச் செவிக்குப் புலனாகிக் கேட்போருக்கும் பொருளை இனிது விளங்கச் செய்யும் முடிவு மொழியாம். ஆகவே, கண்டத் தானத்தில் உதான வாயுவால் உந்தப்பட்டுச் சொல்வோனுக்கு மட்டும் பொருள் விளங்க நிற்கின்ற இடைமொழியும், அங்ஙனம் உதான வாயுவாலும் உந்தப் படாமல் இதயத்தானத்தில் பொதுமையில் விளங்கியும் விளங்காதும் நிற்கும் முதல்மொழியும், ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழும், எனப்பட்ட, ஒடுக்கமாகிய அந்த நாதத்தின் விரிவேயாகும்.

குறிப்புரை :

முடிவுமொழி `வைகரி வாக்கு` என்றும், இடைமொழி மத்திமை வாக்கு என்றும், முதல் மொழி `பைசந்தி வாக்கு` என்றும் சொல்லப்படும். `நாதம்` எனப்படுகின்ற அதுவே இவ்வாறு `பைசந்தி, மத்திமை, வைகரி` என மூவகை நிலையாய் விரியும் என்பது இங்குக் கூறப்பட்ட பொருளாகும். இம்மூவகை வாக்குகளும் இங்ஙனம் தோன்றவும், ஒடுங்கவும் உள்ள சுத்த மாயையின் பகுதியே `நாதம்` எனப்படுவது என்பார், ``நாதம் நாக்கின்மதித்தெழும்`` எனவும், ``கண்டத்தின் உந்திய சோதியும், இதயத்தெழும் ஒலியும் இந்துவின் மேல் உற்ற ஈறு அதுவே`` எனவும், கூறினார்.
பொருளை விளங்கச் செய்தல்பற்றி வாக்குகளை இரவிபோல் எழுவதாகவும் சோதியாகவும் கூறினார். இவை பற்றிப் பிறிது பொருள் தோன்றி மயக்காமைப் பொருட்டு, ``ஒலி`` என்று வெளிப்படக் கூறினார். ``இரவிபோல்வது`` எனவும் ``சோதி`` எனவும் கூறப் பட்டவை இனிது பொருள் விளங்க நிற்பனவும், ``ஒலி`` எனப்பட்டது அங்ஙனம் விளங்க நில்லாததும் ஆதல் தெரிந்துணரற்பாலது. `இரவிபோல் எழும்` என இயையும். ``பின்`` என்றது கீழிடத்தை. `பின்வந்து` என மாறுக. மதித்தல் - கடைதல்; அலைத்தல். ``மதித்து`` என்பதனை, `மதிக்க` எனத் திரிக்க. ``எழும்`` என்பது முற்று. மதித் தற்குச் செயப்படு பொருளும், உந்துதற்கு வினைமுதலும் வருவிக்கப் பட்டன. ``சோதி, ஒலி`` என்பன செவ்வெண். `ஈறாகிய அது` என்க. தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், மேற்கூறப்பட்ட இரு மாயைகளில் சுத்த மாயையின் சிறப்புக் காரியமாகிய சொல்லுலகம் ஆதார நிராதார யோகங்களில் காட்சிப் படுமாறு கூறப்பட்டது. இதனானே, `அவ் வுலகத் தொடக்கு அவ் யோகங்களால் முறையே ஒரளவிலும், பெரிய அளவிலும் மெலிவடையும்` என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.

பண் :

பாடல் எண் : 35

ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

பொழிப்புரை :

மேல், ``இந்துவின் மேல் உற்ற ஈறு`` எனப்பட்ட அந்த நாதமே சொல்லுலகங்கள் எல்லாவற்றிற்கும் (வேதம், வேதாங்கம், ஆகமம், புராணம், இதிகாசம், மிருதி முதலிய எல்லா நூல் கட்கும், பலவாய் வழங்கும் மொழிகட்கும்) முதல். சில சுழிக் கூட்டத்தால் பூங்கொத்துப் போல்வதாய வடிவினையுடைய அது நிராதார யோகத்தில் பிராசாத கலைபதினாறில் முடிவாயுள்ள உன்மனா கலையிலும், ஆதாரயோகத்தில் ஆயிர இதழ்த் தாமரை யிலும் மனம் யாதோர் அசைவுமின்றி நின்று வசமாகும்படி உயிரினது ஆற்றலை மிகக் குவிப்பதாகும். அதனால், அதனைக் காணுதலையே சத்தி தன் அடியவர்க்குப் பெரும்பேறாக அளித்துத் தானும் அவ்விடத்தே அவர்கட்குக் காட்சியளித்து நிற்பாள்.

குறிப்புரை :

ஈறு அதுதான் - `ஈறு` எனப்பட்ட அதுவே. `எண்ணிரண் டிலும், ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக` எனக் கூட்டுக. எண்ணுப் பெயர்கள் முறையே அவ் எண்ணு முறைக்கண் நிற்கும் கலையையும், அத்துணை இதழ்களையுடைய மலரையும் குறித்தன. இவைகளில் ஏழன் உருபுகள் தொக்கு நின்றன. ஆக - ஆகும்படி. இதன் ஈறு குறைந்து நின்றது. `எழில் - எழுச்சி; ஆற்றல். தூறு - குவியல். இதன் பின் நின்ற `அது`, பகுதிப் பொருள் விகுதி. சுகந்தம், முன்னர்ப் பூவையும், பின்னர் அதன் கொத்தினையும் குறித்த இருமடி ஆகுபெயர். `சுகந்தம் போலும் சுழியாகிய அது` என்க. `சுகந்தச் சுழி யாகிய அது, எண்ணிரண்டிலும் ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக, எழிலைத் தூறு செய்யும்` எனவும், `அதுபேறு செய்து பிறந் திருந்தாள்` எனவும் கூட்டி முடிக்க. பூங்கொத்துப் போலும் வடிவுடை யது விந்து வின் பகுதியாகிய நிரோதினி கலையே யாயினும், அவ் விடத்துச் சத்தி உருவப் பொருளாய் விளங்குதல் கூறுவார், விந்துவின் நுண்ணிலையாகிய அதனையே `நாதம்` என உபசரித்துக் கூறினார்.
இதனால், சத்தி விந்துத் தானத்தில் உருவப் பொருளாய்க் காட்சியளித்துப் பின் அடியவரை ஆதாரயோக முடிவிலும், நிராதார யோக முடிவிலும் மனோலயம் பெற்றவராக ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

பொழிப்புரை :

சத்தி மேற்கூறிய அவ்விடத்தே இனிது விளங்கி யிருக்கின்றாள்; பல புவனங்களில் உள்ளோரும் தாம் பேரானந்தத்தை அடைதற்குரிய செவ்விய வழியைப் பொருந்தித் தன்னை, `போற்றி` என்று சொல்லித் துதித்துப் பெருமுயற்சி செய்யவும் சத்தி அவர்கள் முன் வெளிப்படாமல், மேற்கூறிய இடத்தே அந்த ஆனந்தம் விளையும்படி அங்கே விளங்கி நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஏந்திழை ஈறு இருந்தனள்` எனவும், `மங்கை நல்லாள், புவனங்கள் வருந்த, திருந்திய ஆனந்தம் அதில் ஆக இருந்தனள்` எனவும் கூட்டி முடிக்க. ``ஈறு`` என்பது ஏழாவதன் தொகையில் ஒற்றிரட்டாமை, இரண்டாவதற்குத் திரிபு ஓதிய இடத்து நின்ற இலேசினால் அமையும். (தொல் - எழுத்து. 158)
இதனால், மேற்கூறிய ஆதாரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

பொழிப்புரை :

சத்தியும், சிவனும் தம்மிற் கூடிநின்று, தம்மைப் போலவே மங்கையர் ஐவரையும், அவர்கட்கு ஏற்ற காளையர் ஐவரையும் கை கோத்துவிட்டு, அவர்களது கருத்தையும் செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தம்பதியர் தங்களுள் அன்பு செய்து கூடித் தங்கள் தொழிலைக் கடமையாக நன்கு நடாத்தி வருகின்றார்கள்.

குறிப்புரை :

சத்தியும், சிவனும் இங்குக் குறிக்கப்பட்ட நிலை, வாகீசு வரியும், வாகீசுவரனுமாய் நிற்கின்ற நிலையாம். கொங்கை நல்லார் ஐவர், `மனோன்மனி, மகேசுவரி, உருத்திராணி, திரு, வாணி` என்பவரும், அவருக்கு ஏற்ற காளையர் ஐவர் முறையே, `சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன்` என்பவரும் ஆவர். இவர் செய்யும் செயல், முறையே, `அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல்` என்பவையாம். இவர்களை இங்குக் குறித்தது, முறையே, `ஆஞ்ஞை, விசுத்தி, அனாகதம், மணிபூரகம், சுவாதிட்டானம்` என்னும் ஆதாரங்களில் வைத்து. எனவே, சத்தியும், சிவனும் வாகீவரியும், வாகீசுவரனுமாய், நிற்றல், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள தானங்களிலாம். ஆகவே, `சத்தி சிவங்கள் இங்ஙனம் நிற்றலால், யோக நெறி, நின்று பயன் தருகின்றது` என்பது பெறப்பட்டது.
``மாரன்`` என்பது `அழகன்` என்னும் அளவினதாய் நின்றது. அங்குலி - கை விரல்கள். கூட்டுதல் - இருவர் கைகளையும் கோத்து விடுதல். `மணம் செய்வித்தனர்` என்றபடி. ``அகம், புறம்`` என்பன ஆகுபெயராய், கருத்தையும் செயலையும், ``பார்த்தனர்`` என்பது அவர்கள் அவ் ஐவருடனும் உடனாய் நிற்றலையும் குறித்தன. `கொங்கை நல்லாள்` என்பது பாடம் அன்று. ``குமாரர்கள்`` என்பது பருவம் குறித்து நின்றது. இலய நிலையின் கீழ்வந்து அதிகார நிலையில் நிற்பவர் என்பது தோன்ற, இவ்வாறு கூறினார். ``சடங்கு`` என்றது, திருமணச் சடங்கையும், தங்கட்கு உரிய கடமைகளையும்.
இதனால், சத்தியும், சிவனும் மேல் ஆதாரத்தினின்று, கீழ் ஆதாரங்களைப் புரந்தருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி னுள்ளே கருதுவ ராயின்
தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி
அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

பொழிப்புரை :

புறத் தொழிலைச் செய்யும் அளவில் தவத்தில் நிற்போர், உடம்பில் அகமுகத் தியானித்தலில் பழகுவார்களாயின், அந்தத் தியான உணர்வு தொடர்ந்து முதிர்ந்து, சுழுமுனை பற்றுக் கோடாக மேல் ஏறிச் சென்று, உயிர்களின் அன்பிற்குச் சார்பாகிய சத்தியிடத்தில் மேற்கூறிய இடத்தில் சென்று அடங்கும்.

குறிப்புரை :

`அதனால், அங்ஙனம் தியானிக்க என்பது குறிப் பெச்சம். ``உள்ளே கருதுவராகில்`` எனப் பின்னர்க் கூறியதனால், முன்னர், சடங்கது செய்தல் புறத்தின்கண்ணதாயிற்று. கடம் - குடம்; என்றது, மண்ணாற் செய்யப்படும் குடம் போல்வதாகிய உடம்பைக் குறித்தது. அதன் உள்ளே கருதுதல், ஆதார பங்கயங்களிலாம். எனவே, புறமாவதும் உடம்பின் கண்ணதேயாய், சடங்காவன கர நியாசம், அங்க நியாசம் முதலியனவாம்.
இதனால், மேற்கூறிய குமாரர்கள் ஐவரையும் அவர்தம் தேவி யரோடு முறையாகத் தியானித்துச் செல்வோர், விந்துத் தானத்தில் மங்கை நல்லாளை மாரனோடு தலைப்படுபவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்தின் மேலது முத்தது வாமே.

பொழிப்புரை :

துணைவழி ஏறுதற்குத் துணையாகின்ற மந்திரம் முதல் நிலையாகிய மூலாதாரத்திலே உள்ளது. அதுவே இரண்டாவது முதல் ஏழாவது முடிய உள்ள ஆறு நிலங்களின் தாமரைகளிலும் ஏற்ற பெற்றியிற் பொருந்தி, அவற்றைக் காத்து நிற்கும். அதனால், அம் மந்திரம் ஒன்றே அந்நிலங்களில் அழுந்தி விடுவதாகிய நிலையினை விடுத்து மேன்மேற் செல்லுதற்குச் சிறந்த துணையாம்.

குறிப்புரை :

`திகழ்ந்தெழு மந்திரம் மூலத்துமேலது; பனி மலர் ஆறினும் பாலித்திருக்கும்; `ஆலித்திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்க அதுவே முத்தாம்` எனக்கொண்டு கூட்டி முடிக்க. ஆலித் திருக்கும் அவை - மகிழ்ந்து அழுந்தியிருத்தற்கு இடமாகிய அவை. அகம்படி சீலம் - ஆதாரங்களினுள்ளே அழுந்தியிருக்கும் நிலை.
மந்திரம், பிரணவம். அது பிராசாதமாய்ப் பரிணமித்து ஆறு ஆதாரங்களிலும், அவற்றிற்குமேலும் பல கூறுகளாய் விளங்கி நிற்பதாம். ``முத்து`` என்றது, உயர்வுணர்த்தியவாறு, இதற்கு ஈண்டைக்கு இயைபில்லாத ஒரு பொருளையும் கூறுவார் உளர்.
இதனால், கடந்தனின் உள்ளே கருதித் துணைவழி ஏறுதற் குரிய மந்திரத் துணை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதுரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.

பொழிப்புரை :

மேல் (1155 - ல்) கூறப்பட்ட யோக நற்சத்தி முத்து வதனம் முதலியவைகளை உடையவளாய், என் உள்ளத்தில் விரும்பி இருக்கின்றாள்.

குறிப்புரை :

எனவே, `அவளை அவ்வாறு தியானித்தல் வேண்டும்` என்பதாம். ``சத்தி`` என்பதை முதலிற்கொள்க. முத்து, பற்களைக் குறித்து உவமையாகுபெயர். வதனம் - முகம்; என்றது வாயினை, சதுரி - திறமை உடையவள். சகளி - உருவத் திருமேனி கொண்டவள். ``பைந்தொடி`` என்பது, `தேவி` எனப் பொருள் தந்தது. ஏனையவை வெளிப்படை. பத்துக்கரம் கூறப்படுதலால் ஐம்முகம் உடையளாதல் பெறப்பட்டது.
இதனால் யோக சத்தியது வடிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.

பொழிப்புரை :

அக்கினி மண்டலம் முதலிய மூன்று மண்டலங் களுடன் அவற்றிற்குரியோராகிய, `அக்கினிதேவன், நிலவோன், கதிரோன்` என்னும் மூவரும் கலந்து, அவரே சத்தியாய் முன்னிற்பர். அவர்களுக்கு உள்ளீடாக ஓங்காரத்தினின்றும் மேலெழுந்து செல்கின்ற மந்திர ஒளி உளதாகும்.

குறிப்புரை :

`மேவிய மண்டலம் மூன்றுடன்` என்பதை, ``கூடி`` என்பதற்கு முன் கூட்டியுரைக்க. ``கீழ், தாவியநற்பதம்`` என்பவற்றால் முறையே எரியும், மதியும் பிண்டத்தில் நிற்குமிடம் குறிக்கப்பட்டன. அதனால், கதிருக்குரிய இடம் இடைப்பட்டது என்பதுதானே பெறப்படும். தாவிய நற்பதம் - உயரநிற்கும் இடம்; எனவே, அக்கினி அடியிலும், கதிர் இடையிலும், மதி முடியிலும் நிற்பனவாதல் அறிக. எரி முதலிய மூன்றும் அவ்வவற்றிற்குரிய தேவரைக் குறித்தன. அவரே சத்தியாய் முன்னிற்றலாவது, சத்தியது கலப்பால் அவனேயாக அறிய நிற்றல். அவர்களை `அங்ஙனம் அறிந்து நோக்க உள்ளொளி மேலிடும்` என்பது ஈற்றடியிற் கூறப்பட்ட பொருள்.
இதனால், மும்மண்டலங்களில் உள்ள மூவராகிய ஆதாரங்களைச் சத்தியின் வடிவாகக் கண்டு வழிபடுதலும் உள்ளொளியைப் பெறுதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய உள்ளொளி உயர்ந்து செல்கின்ற ஆறு ஆதாரங்களாகிய உறுப்புக்கள் வெண்மையான வேள்வித் தீயிலும் அவற்றின் அதிதேவர் வழியாகச் சத்தியைப் பொருந்தி விளங்கும். அதனால், அத்தீயின் வழியாகத் தேவர்கள் ஏற்கின்ற அவிசுகளும், யாவர்க்கும், எல்லாப் பயனையும் தருகின்ற சத்தியே யாய் நிற்கும்.

குறிப்புரை :

ஆகையால், `ஆதார தேவர்களும், ஏனைத் தேவர் களும் சத்தியால் நிலை பெறுகின்றவர்களேயாவர்` என்பதாம். ``உள் ளொளி யோங்கிய மூவிரண்டு அங்கங்கள்`` எனக்கூட்டுக. ``வெள் ளொளி அங்கி`` என்றது, `இனிது வளர்க்கப்பட்டு விளங்குகின்ற தீ` எனப் பொருள்தந்து, வேள்வித் தீயைக் குறித்தது. `மூவிரண்டு அங்கங்கள்` என்றதனால், அவற்றின் அதிதேவரை, ``அவர்`` எனச் சுட்டியொழிந்தார். ``கள்ளவிழ் கோதை`` என்னும் உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்குநின்றது. `மூவிரண்டு அங்கங்கள் அங்கியில் அவரொடு மேவிக் கோதையைக் கலந்து உடனே நிற்கும்` என இயைத்து முடிக்க, சித்திக் கொடி சத்தி. `சித்திக்கொடியாகிய அமுதம்` என உருவகங் காண்க. `அவி அமுதேயாம்` என்க. `சுத்திக் கொடி` என ஓதிப் பிறிது பொருளுரைத்தல் பொருந்தாமை அறிக.
இதனால், சத்தி யோகியர்க்கு உள்ளமுதாதல் போலத் தேவர்க்கு வெளியமுதாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

கொடிய திரேகை குருவுள் ளிருப்பப்
படிவது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

பொழிப்புரை :

``சிந்திக்கொடி`` என மேற் கூறப்பட்ட சத்தியது உருவம் ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் வெளிப்படாது மறைந்து நிற்கும் நிலையில் யாவரும் மூழ்குவது சிற்றின்பத்திலேயாம். ஆகவே, சிவனது வடிவாய் உள்ள ஆனந்தத்தை (சிவானந்தத்தை,ஆறு ஆதாரங் களிலும் முறையே வந்து வழங்குகின்ற முதல்வி யோக சத்தியே.

குறிப்புரை :

இரேகை - மின்னல்போலத் தோன்றுகின்ற ஒளி யுருவம். குரு - திண்மை; என்றது உயர்வினை. அது மேல் நிலமாகிய ஆஞ்ஞை முதலியவைகளை உணர்த்திற்று. அந்நிலங்களில் சத்தி உருவம் எப்பொழுதும் இருப்பினும், அந்நிலங்களில் சத்தியைக் காணு மளவு யோகம் முதிரப் பெற்றவர்கட்கே அது காட்சிப் படுவதாகும். அந்நிலையில்தான் சிவானந்தம் தோன்றும். அதனை அந்நிலையில் எங்கும் ஏற்ற பெற்றியால் வழங்குபவள் யோக சத்தி. ஆகவே, அவளை அங்ஙனம் அடையாத பொழுது யோகியரும் சிற்றின்ப வேட்கையைக் கடக்கமாட்டார் என்பது இதனுள் கூறப்பட்டது.
வாருணை - நீர்ச்சத்தி. இவள் சிற்றின்ப வேட்கையை உண்டாக்கி இன்புறுத்துபவள். `வாருணைக்கண்` என உருபு விரிக்க. `ஈசன் வடிவதுவாகிய ஆனந்தத்தை ஆறங்கங்களிலும் வந்து முறையே இடும் முதல் ஏந்திழையாள்` எனக் கூட்டுக. `அவ் ஏந்திழை யாளே` எனச் சுட்டு வருவித்துக் கொள்க. `படியது` என்பது பாடம் அன்று.
இதனால், சத்தி, சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் மறைந்து நின்று சிற்றின்பத்தையும், ஆஞ்ஞை முதலிய மேல் நிலங் களில் வெளிப்பட்டு நின்று சிவானந்தத்தையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

பொழிப்புரை :

மேற் கூறப்பட்ட யோக சத்தி `அயன், மால், உருத்திரர்` என்னும் மும்மூர்த்திகளும், அவர்களுக்குத் தேவியராய் உள்ளோரும், ஒளியை உடைய ஆதாரங்கள் ஆறுமாய் உள்ள ஆதார சத்தியும், `கலை` என்னும் பொருளாகச் சொல்லப்படுகின்ற மேதை முதல் உன்மனை ஈறாக உள்ள பதினாறு நிலைகளையுடைய குண்ட லினியும், மக்கள் அறிவில் பொருந்திப் புலன்களை அறிவிக்கின்ற திரோதாயியும், மந்திர மகேசுவர மகேசுவரிகளாய் உள்ள கூட்டத் தினரும் தன்னையடைந்து துதிக்கும்படி மேற்கூறிய மேல் நிலங்களில் எழுந்தருளியிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஏந்திழையாளும்` என்பது பாடமன்று. ``மூவர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``ஏந்திழையார்`` என்றார். காந்துதல் - ஒளி வீசுதல். ஆரம் - சக்கரம். `கலையாகிய முதல்` என்க. மூதல் பொருள், பராசத்தியின் சிறுகூறாதல் பற்றித் திரோதாயியை வேறுபோலக் கூறினார். (ஆயம் - மகளிர் கூட்டம்) திணை விராய் எண்ணிய விடத்துப் பெரும்பான்மைபற்றி, ``சார்ந்தனர்`` என உயர்திணை முடிபு கொடுக்கப்பட்டன. இது முற்றெச்சம். `அச்சத்தி` எனச் சுட்டு வருவித்துக்கொள்க.
இதனால், யோக சத்தியது உயர்வு இனிது விளங்கக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 45

சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

பொழிப்புரை :

`சத்தி` என்று யாவராலும் போற்றப்படுகின்ற தேவி, வேண்டுவார் வேண்டும் பயனைப் பெறுதற்குத் துணைபுரிகின்ற ஒரு கன்னிகை. ஆயினும், வீடு பேற்றைத் தரும் முதல்வி அவளே என்பதைப் பலர் அறியமாட்டாதவராய் அவளிடத்துத் தாம் செய்கின்ற அன்புக்கு உலக வாழ்வே பயனாக எண்ணி அந்த அன்பினை வீணாக்கி யொழிகின்ற அறிவிலிகள் அவளை உலக வாழ்வை அளிப் பவளாகவே சொல்லிப் புகழ்ந்து, அறிவுடையோரால் நாய் போன்ற வராக வைத்து இகழப்படுகின்றது.

குறிப்புரை :

`இவரது நிலை இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம். பொன்னும், மணியும் போல்வனவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை யுடையவரிடத்துக் கூழும், காடியும் இரந்து பெறுவாரை யொத்தலின், ``அப்பாவிகள்`` என்றும்` அவர், தாம் எல்லாம் அறிந்தவர்போலக் கூறுதலை, நாய் விருந்தினரையும் கள்வர்போலக் கருதிக் குரைத்த லோடு உவமித்தும் கூறினார். `பாவிகள் - புத்தியுடையோர்` ஆதலின், அப்பாவிகள், புத்தியில்லாதவர் என்க. இனி, `அந்தத் தீவினை யுடையோர்` என உரைத்து, இரக்க மிகுதியால் அவ்வாறு கூறியதாகக் கொள்ளலுமாம்.
இதனால், சத்தியை யோக சத்தியாகக் கண்டு வழிபட்டு முத்திப் பயன் பெறுதலே அறிவுடைமை யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஆரே திருவின் திருவடி காண்பர்கள்!
நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக்
காரேய் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

பொழிப்புரை :

பிறிது பயனை வேண்டாது தன்னைப் பெறு தலையே பயனாகக் கருதி, மந்திரங்களைச் சொல்லி, மறவாது தன்னை நினைக்கவும் வல்லவர்களுக்கே அம்மை தனது தாமரை மலர் போன்ற அழகு பொருந்திய சிவந்த திருவடிகளை அவர்களது உள்ளக் கம லத்தில் பதிய வைத்துக் காட்சி வழங்குகின்றாள். ஆகவே, அந்நிலை யில் நின்று அவளது திருவடிகளைக் காண வல்லார் உலகருள் எவர்!.

குறிப்புரை :

முதலடியை இறுதியில் வைத்து உரைக்க. பிற பயன் கருதுவார் கோடுதல் (வளைதல்) உடையராகலின், அவரது நிலை நேரியதன்றாதல் தோன்ற, ``நேரே நின்று`` என்றார். சேவடி சிந்தை வைத்தல், அவ்விடத்துக் காட்சி தருதலை உணர்த்திற்று.
இதனால், மேலை மந்திரத்துக் கூறிய நிலையது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

பொழிப்புரை :

தேவியை முதலில் உங்கள் உடம்பில் சிரம் முதலிய இடங்களிலே வைத்தும், பின்பு இருதயம் முதலிய உறுப்புக்களிலே வைத்தும், அதன்பின் உங்கள்முன் உள்ள திருவுருவத்தில் வைத்தும், அதன்பின் மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்தும் வழிபட்டு அவளோடு ஒன்றாகி நில்லுங்கள். அங்ஙனம் வழிபடும் பொழுது பிற வற்றை நினைத்தலாகிய குற்றத்தில் அகப்படுத்தப்படாத மனத்தை அவ் விடங்களிலே பிறழாது நிறுத்துதலையும், அவ்வவற்றிற்கு ஏற்ற மந்திரங்களில் அவளை எண்ணுதலையும் இன்றியமையாததாகக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`மந்திரம், கிரியை, பாவனை` என்னும் வழிபாட்டுப் பகுதி மூன்றனுள், ``சந்தையில் வைத்து`` என்பதனால் மந்திரமும், ``நினைவு வைத்து`` என்பதனால் பாவனையும், ஏனையவற்றால் கிரியையும் கூறப்பட்டன. சிராதிகளாவன, `தலை, முகம், மார்பு, குய்யம், பாதம், முதலாக எஞ்சியவை` என்னும் ஐந்துமாம். இவ்விடங்களில் அம்மையின் தலை முதலியன முறையே பஞ்சப் பிரம மந்திரங்களால் வைத்து எண்ணப்படும். இருதயம் முதலியவை யாவன, `இருதயம், சிரசு, கூந்தல், கவசம், நேத்திரம், அஸ்திரம்` என்னும் ஆறுமாம். இவற்றில் அம்மையின் அங்கங்கள் அவ்வம் மந்திரங்களால் முறைப்படி வைத்து எண்ணப்படும். முந்தை - முன்னுள்ள இடம்; இஃது ஆகுபெயராய் அங்கு உள்ள திருவுரு வத்தைக் குறித்தது. திருவுருவத்தில் மேற்கூறிய இருவகை மந்திரங் களால் மேற்கூறிய இருவகையாகவும், வேறு பல மந்திரங்களால் விரிவாகவும் வைத்து அம்மை வழிபடப்படுவாள். `இருதயம், மூலம்` என்பன உபலக்கணமாய் நின்றன. மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்து வழிபடுதலே யோகம் என்பது வெளிப்படை. யோகத்திலும் கிரியை உளதாதலை நினைக்க. சந்தை - ஓசை; அஃது அதனையுடைய மந்திரத்தை உணர்த்திற்று. இங்ஙனம் செய்யும் வழிபாடுகளால் தேவியது காட்சியை நாளடைவில் பெறுதல் கூடும் என்பதாம்.
இதனால், சத்தி தன் அடியார்களது உடம்பும், அவர்கள் முன் நிற்கும் படிவங்களும் ஆகிய ஆதாரங்களில் நின்று அருள் புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை
நவாதியில் ஆக நயந்தது ஓதில்
உவாதி அவளுக் குறைவில தாமே.

பொழிப்புரை :

தன்னைத் தியானித்துத் தன்னிடத்து வேறற ஒன்றி நிற்கும் உணர்வுடையவர்கட்குத் தலைவியாய், `சிவா` என்பதை முதலாகக் கொண்ட மந்திரத்தில் பொருந்தி நிற்பவளாகிய சத்தியை, `நவாக்கரி` எனப்படும் ஒன்பது பீஜங்களில் பொருந்த வைத்து அந்த மந்திரத்தை விருப்பத்துடன் ஓதினால், செயற்கையாய் நிற்கின்ற நிலைமை அவளிடத்துப் பொருந்துதல் இல்லையாம்.

குறிப்புரை :

``நவாதி`` என்பதில், `பீஜம்` `ஆதி` எனப் பட்டது, வித்து, `முதல்` எனப்படுமாதலின். ``அது`` என்றது, ``சிவாதி`` என முன்னே கூறப்பட்ட மந்திரத்தை, உவாதி - உபாதி; செயற்கை. சத்திக்குச் செயற்கை நிலையாவது, மலத்தின்வழி நின்று மறைத்தலைச் செய்தல். `அஃது இலதாம்` எனவே, `இயற்கையான தனது விளக்க நிலையை உடையவளாய் நிற்பாள்` என்பது போந்தது. முதலடி உயிரெதுைக.
இதனால், `சத்தியை நவாக்கரியோடு கூடிய அஞ்செழுத்து மந்திரத்தால் வழிபடின் மருள்நிலை நீங்க, அருள்நிலையைப் பெறலாம்` என்பது கூறப்பட்டது. நவ பீஜம் `நவாக்கரிசக்கரம்` என்னும் அதிகாரத்திற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 49

உறைபதி தோறும் உறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.

பொழிப்புரை :

சத்தி இந்நிலவுலகத்தில் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்களில் அவள் எழுந்தருளியிருக் கின்ற வகைகளை விருப்பத்துடன் உணர்ந்து, நாள்தோறும் அவ்விடங் களை அடைந்து, அவளுக்குரிய மந்திரத்தோடு நீங்காது நிற்கின்ற `பிர ணவம், பீஜம், சக்தி, கீலகம்` என்னும் நான்கினையும் தெய்வத் தன்மை மிகும்படி ஓதி வழிபட்டால், பயன்கள் பலவற்றை அடையலாம்.

குறிப்புரை :

உறை முறையாவன: காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அன்னபூரணி, அபிராமி முதலாகப் பலவாம். ஆங்காங்கு உள்ள அவ்வகைகளை அறிந்து அன்புடன் வணங்கின், அவ்வவற்றால் அடையும் பலன்கள். கைகூடும் என்பதாம். இறை - இறைமை, தெய்வத் தன்மை, திளைத்தல் - மிகுதல், `திளைப்ப` என்னும் செய வென் எச்சத்தது அகரம் தொகுத்தலாயிற்று. எய்துதலும், `அவ்வப் பயன்கள்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. தலங்கள் பலவற்றில் சத்தி பீடங்களாய் உள்ளவை அம்மைக்குச் சிறந்தனவாம்.

பண் :

பாடல் எண் : 50

எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

பொழிப்புரை :

ஞானிகட்கு உரிய இருவினைப் பயனாவன, அம்மையிடத்தில் அன்பு செய்தலும் `செய்யாமையுமாகிய அவற்றால் வருவனவாம்.

குறிப்புரை :

``ஆகும்`` என்பது எச்சம். குலாம் - விளங்குகின்ற, மாதுரிகை - இனிமையைச் செய்பவள். கைதவம் - வஞ்சனை; அஃது அவளை ஐய உணர்வுடன் எண்ணுதல். `கை தவமும் அஃது இன்றிக் கருத்துறு மாறும்` என்க. இவற்றால் விளையும் பயனை இவையேயாக உபசரித்துக் கூறினார். `இருவினைப் பயன் மாதுரிகையோடு கைதவ மும், அஃது இன்றிக் கருத்துறுமாறுமாம்` என இயையும். `கருத்து அவள்பால் உறுமாறு` என்க. `பிறரெல்லாம் எண்ணும் புண்ணிய பாவங்கள் போலாது ஞானியர் எண்ணும் புண்ணிய பாவங்கள் அம்மையை நினைதலும், நினையாமையு மேயாம்` என்றவாறு. எனவே, `அவரது எண்ணமே உண்மை` என்பது அறியப்படும். ஒடு உருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. அன்றி, ஒடு `அதனொடு மயங்கற்` பொருளது எனினுமாம்.
இதனால், உயர்ந்தோர்க்குச் சத்தியது வழிபாடு இன்றியமை யாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

சத்தியிடத்து மனம் செல்லும் பொழுது அதனை நன் மனமாகச் செய்து, அதன்கண் உள்ள எண்ணங்களெல்லாம் குவிகின்ற இடமாகிய இருதயத்தில் ஒப்பற்றவளாகிய அவளையே முதல்வியாக உணர்ந்து தியானி. அங்ஙனம் தியானித்தால், அவள் உன்னை மேன் மேல் உயரச் செய்வாள். அதனால், நீ முடிவில் சிவனது எண்குணங் களையும் பெற்று விளங்கலாம்.

குறிப்புரை :

மனம் திருந்தியபொழுது உண்டாகின்ற எண்ணம், `எல்லாம் சத்தியின் செயலே` என்பதும், `அவளையின்றி நமக்குச் சுதந்திரம் இல்லை` என்பதும், மற்றும் இவை போல்வனவுமாம். சிவனது எண்குணங்களாளாவன: `தன்வயம், தூய உடம்பு, இயற்கை யுணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் இன்மை, முடிவிலாற்றல், பேரருள், வரம்பில் இன்பம்` என்பன. ``எண்குணத்துளோம்`` 1 என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தமையால், திருவருள் பெற்றோர் இவ் எண் குணங்களையும் பெறுதல் அறியப்படும்.
இதனால், சத்தியது வழிபாடு உயிர்களை மேன்மேல் உயரச் செய்து, முடிவில் சிவமாகச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

ஆமைஒன் றேறி அகம்படி யான்என
ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.

பொழிப்புரை :

யான் ஆமையைப்போல ஐம்புல ஆசைகளைத் திருவருளுக்குள்ளே அடக்கி, மெல்லென மேலேறிச் சென்று, புறத்தே செல்லாது அகத்தே நிற்பவனாகி, ஓங்காரத்தை உச்சரித்து, எம்போல் வார்க்கு உள்ளொளியாய் விளங்குகின்ற யோக சத்தியைத் தரிசித்த பின்பு, அவள் சந்திரமண்டலத்தில் உள்ள நறுமணம் பொருந்திய தாமரை மலரைச் சூடி வெளிநின்றாள்.

குறிப்புரை :

ஐம்புல ஆசையை அடக்குவோர்க்கு ஐந்துறுப்புக் களையும் ஓட்டிற்குள் அடக்கிக்கொள்ளும் ஆமை உவமையாதல்,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து`` (குறள் - 126)
எனவும்,
``புலன் அடக்கித் தம்முதற்கண் புக்குறுவார்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
எனவும் போந்தவற்றால் நன்கறியப்பட்டது. `ஒன்ற` என்னும் உவம உருபின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அகம்படி - அகத்தேபடிந்து நிற்பவன். `என` - என்று ஆகி. `ஓம்` என்பது அகரச் சாரியை பெற்று வந்தது. சந்திரமண்டலம், சென்னி. அங்குள்ளது ஆயிர இதழ்த் தாமரை மலர். அதனைச் சூடிநிற்றல். ஆஞ்ஞை முதலாக வெளிப்பட்டு நிற்றல்.
இதனால், ஐம்புலன்களை அடக்கிப் பிரணவ யோகம் செய்தால் யோக சத்தியைத் தரிசித்தல் கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

சூடிடும் அங்குச பாசத்துளை வழி
கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம்
ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.

பொழிப்புரை :

யோக சத்தியை அணுகும் வழி சுழுமுனா நாடி. அவளது இருகைகளில் காணப்படுவன சங்கமும், குண்டிகையும். அவளுக்குரிய சீருத்திர மந்திரம் சிகாரமும், வகர ஆகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்களால் ஆகிய சொல். அவள் நடனம் புரிகின்ற அரங்கு `புகழை உடைய பொன்மன்று` எனப்படும் புருவநடு.

குறிப்புரை :

அங்குசம்போல மேலே வளைந்து நிற்கும் முதுகந் தண்டினைச் சூழ்ந்து செல்லும் கயிறு போன்றுள்ளது பற்றிச், சுழுமுனை நாடியை, ``அங்குச பாசத் துளை`` என்றார். அங்குச பாசங்கள் அம்மைதன் ஆயுதமுமாதல் பற்றி, `சூடிடும்` என்றார். `இரு கோலக் கையில் வளை குண்டிகை` எனக் கூட்டுக. ருத்திரம், சீருத்திரப் பிரச்சினம். அஃது ஆகுபெயராய் அதன்கண் உள்ள மந்திரத்தைக் குறித்தது. `வேத பாகங்களில் சிறந்தது சீருத்திரமே` என்பதைக் குறிக்க, வாளா, `மந்திரம்` என்னாது, `ருத்திரம்` என்றார். `சிவா` என்னும் பதம் சீருத்திரத்துள் பலவிடத்து வருதல் அறிக. எழுத்தை, `பதம்` என்றது, ``வகரக் கிளவி`` 2 என்பது போல ஆகுபெயர். ``ஆடிடும்`` என்பது பாடமன்று, `சீர்` என்பது மிகுத்துக் கூறப்படுதலை உணர்த்திற்று.
இதனால், யோகசத்தியை அணுகுதற்குரிய வழி முதலியன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 54

ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன்
தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.

பொழிப்புரை :

உலகிற்கு முதல்வராம் `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்` என்னும் ஐவர்தாமும் சத்தியை வழிபட்டே தங்கள் பதவியைப் பெற்றார்கள். மற்றும் காமன், சாமன், சூரியன், அங்கி, சந்திரன் என்னும் இவர்களும் வந்து வணங்க அவள் வீற்றிருக்கின்றாள்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட அயன் முதலிய ஐவர் அணுபட்சத் தினர் என்க. `சாமன்` என்பான் காமனுக்குத் தம்பி என்ப.
இதனால், `சத்தியே கடவுளர் பலர்க்கும் தலைவி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞாளம் உருவநின்
றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.

பொழிப்புரை :

உலக முதல்வியாகிய சத்தி இளம் பிறையைச் சூடிக் கொண்டும், சூலத்தையும் கபாலத்தையும் ஏந்திக் கொண்டும், என்றும் மாறாத கொடிபோல்பவளாய் இருப்பாள்; இயல்பாகவே மலம் நீங்கியவள்; நேரிய (நுண்ணிய வேலைப்பாடமைந்த) அணி கலங்களை யணிந்தவள். அவள் நடு நாடியாகிய சுழுமுனையிடத்து அதன் உள்துளையில் பிராணவாயு ஊடுருவிச் செல்லும்பொழுது அவ்வாயுவின் வழியே நின்று நடனம் புரிவாள்.

குறிப்புரை :

``சூடும்`` என்பது முற்று. ``இளம்பிறை`` என்பதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. `நடுநாடியிடை` என மாற்றி யுரைக்க. `நாளம்` என்பது ``ஞாளம்`` எனப் போலியாயிற்று. உரு வுதலுக்கு வினைமுதல் வருவிக்க. `அதன்வழி நின்று ஆடும்` என்க. `ஆடுதல்` இங்கு விளங்கித் தோன்றுதல்.
இதனால், யோகிகட்கு அவரது அகக்காட்சியில் சத்தி விளங்கி நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

அண்ட முதலா அவனி பரியந்தம்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனும் கண்டியு மாகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

பொழிப்புரை :

ஆகாயம் முதல் பூமி ஈறாகப் பார்த்தால் நாம் கண்டது சத்தியைத் தவிர வேறொரு பொருளும் இல்லை. சத்தி தான் மாத்திரமாய் நின்று உலகிற்கு முதற்பொருளாகாது சிவத்தொடு கூடி நின்றே முதற்பொருளாயிருத்தல், உலகம், `ஆண், பெண்` என்னும் இரு பகுதிப்பட்டே நிற்றலைக் காண்கின்ற அதனானே அறியப்படும்.

குறிப்புரை :

``கனங்குழை யல்லது கண்டதொன்றில்லை`` என்றது, `சத்தியது கலப்பில்லாமல் எதுவும் இல்லை` என்றவாறு. ``கண்டன், கண்டி`` என்பன, `சிவம்` என்றும் `சத்தி` என்றும் வரையறுக்கப்படும் தன்மை யுடையவர்களாய் இருத்தலைக் குறித்தது. காரணம் - காரணத் தன்மை. ``குண்டிகை, கோளிகை`` என்பன ஆடவர் பெண்டிர் அவயவங்களை, `குண்டு` எனவும் `குழி` எனவும் மறைத்து வழங்கும் வழக்குப்பற்றி வந்தன. கோளிகை - கொள்வது. `கோளகை` என ஓதலுமாம், ஈற்றில், `அறியப்படும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இதனால், சத்தியே உலக முதல்வியாயினும், அவள் சிவனைப் பற்றி நின்றே முதலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.

பொழிப்புரை :

சத்தி, எல்லா உலகங்களையும் கடந்து சென்று எய்தப்படுவதாகிய சிவலோகத்திற்குத் தலைவனாகிய சிவனுடனே மிக அணிமையில் வந்து யோகியர்தம் உச்சியிலே இருக்கின்றாள். அவளை அடைதலாலே, சிவன் நஞ்சை உண்டதனால் அமுதத்தை உண்ணப் பெற்ற அந்தத் தேவர்கள் பதவிகள் மிகக் கிடைக்கும்; அதுவேயன்றிச் சரியை முதலிய தவங்களால் வருகின்ற சிவலோகத்து இன்பமும் கிடைக்கும்.

குறிப்புரை :

`ஆலம் உண்டானால் ஆங்கு அமுதுண்ட அவர்` என உருபும், ஒருசொல்லும் விரித்துக் கொள்க. கோலுதல் - விலக்குதல். ``கோலி வந்து`` என்பதில் ``வந்து`` என்பது இட வழுவமைதி, ``குவிந்த`` என்றது, `முடிந்த` என்றவாறு. ஐ - தலைவன். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் பின் `அவளால்` என்பது வருவித்துக் கொண்டு உரைக்க.
இதனால், சத்தியது அருளால் எல்லா இன்பமும் எய்தப் படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.

பொழிப்புரை :

உணவுப் பொருளாய் நின்று உடம்பையும், அது வழியாக உயிரையும் வளப்பவளாகிய சத்தி, நாலிதழ்த் தாமரையாகிய மூலாதாரத்திலிருந்து மேலேற்றிப் பல ஆதாரங்களில் ஊன்றப்பட்டு முடிவில் தலைக்குமேல் உள்ள துவாதசாந்தத்தில் முடிகின்ற பிரணவ வடிவாய் இருந்து அருள் புரிகின்றாள். இதனை யறியாது, பலர் மேலாகிய ஞானயோகம் முதிர்தற்பொருட்டு மலை, காடு, தீர்த்தக்கரை முதலிய இடங்களை அடைந்து துன்புற்று விரைய இறந்தொழி கின்றார்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``ஏத்தி`` என்பது பாடமாயின், `ஓதி` என உரைக்க. நட்டு, நடப்பட்டு, ஆமம் - உணவுப் பொருள். `பிறர் கணத்திடைக் கழிவர்` என்றதனால், யோகத்தினர் நீண்ட நாள் வாழ்தல் பெறப்படும்.
இதனால், `சத்தியைப் பிரணவ யோகத்தினாலே தலைப்படல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

பொழிப்புரை :

அடப்படாத உணவுப் பொருளாயிருந்து பின் அடப்பட்ட உணவாகவும் ஆகின்ற சத்தி, வயிற்றுத் தீயும், குண்டத் தீயு மாகிய ஓமத் தீக்களிலும் ஒப்பற்ற ஒருத்தியாய் இருந்து அவற்றை அடையும் பொருள்களைச் செரிப்பித்தும், அவியாக்கியும் உதவு கின்றாள். அவளது பெயராகிய திருவைந்தெழுத்தையே துணையாகப் பற்றி அமைதியுற்று இருப்பவர்கட்கு, தவத்தின் முதல்வியாகிய அவள் இனிது விளங்கி அருள்புரிவாள்.

குறிப்புரை :

``இருந்து`` என்னும் எச்சம் ``அன்ன மயத்தினள்`` என்பதில் தொக்குநின்ற `ஆவாள்` என்பதனோடு முடிந்தது. உணவு கொள்ளுங்கால் வயிற்றுத்தீயும் ஓமாக்கினியாகக் கருதப்படுதலை நினைக. வயிற்றுத் தீயில் நின்று மண்ணுலகத்தவர்க்கும், வேள்வித் தீயில் நின்று விண்ணுலகத்தவர்கட்கும் உதவுதலைக் குறித்தவாறு. இவ்வாறு யாவர்க்கும் உதவுபவளாகிய அவளை அஞ்செழுத்து வழியாக அடைந்து பயன்பெற வேண்டும் என்பதாம். `நமசிவ` எனப் பாடம் ஓதின் யாப்புக் கெடுதலை நோக்குக. சத்தி சிவங்கட்கு இடையே வேற்றுமையின்மையின், சிவனது நாமத்தைச் சத்தியது நாமமாகவே அருளிச் செய்தார். `நமச்சிவாயை என்று` எனப் பாடம் ஓதலுமாம். நியமம், ``நேமம்`` என மருவிற்று.
இதனால், சத்தி உயிர்களைச் சில ஆதாரங்களில் நின்று காக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

நிலாமய மாகிய நீள்படி கத்தி
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

பொழிப்புரை :

நிலவைப் போன்ற ஒளியையுடைய படிகத்தின் நிறத்தையும், ஒளிக் கல்லாகிய முத்தின் நிறத்தையும் உடையவளும், செறிந்த சுரிந்த கூந்தலை உடையவளும் ஆகிய சத்தி பிரணவ கலைகளின் வடிவாய் யோகிகளிடத்தில் கலந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

`ஆதலின், அவளை அக்கலை வழியாகக் காணுதலே சிறந்தது` என்பது குறிப்பெச்சம். படிகமும் தரளமும் அவற்றின் நிறத்தை உணர்த்தின. `படிகத்தின், தரளத்தின்` என்பன பாடம் ஆகாமை அறிக.
இதனால், சத்தி யோகிகளிடத்தில் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.

பொழிப்புரை :

சத்தி சிவனோடு தாதான்மியமாய் ஒன்றுபட்டு நின்றே, உயிர்களின் அறிவு. வேதம் முதலிய எண்ணிறந்த நூல்கள், காலம் முதலிய தத்துவங்கள் ஆகிய எல்லாப் பொருளிலும் அத்து விதமாய் ஒன்று பட்டிருக்கின்றாள்.

குறிப்புரை :

`ஆகவே, அவளைச் சிவனது பண்பாகவே உணர்தல் வேண்டும்; தனித்த ஒருத்தியாக எண்ணுதல் கூடாது, என்பதாம். `கற்பனை` - எண்ணம்; என்றது அறிவை. ``கலைஞானங்கள்`` என்பதை `ஞானக்கலைகள்` எனமாற்றிக் கொள்க. இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலை.
இதனால், ``அண்ட முதலா அவனி பரியந்தம்`` (1193) அனைத்தும் சத்தி மயமாமாறு இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 62

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாகுமே.

பொழிப்புரை :

காலமாய் இருப்பவளும், எல்லா இடமுமாய் இருப் பவளும், உயிர்களின் எண்ணமும், விருப்பமும் கைகூட உதவியாய் இருப்பவளும், எல்லாப்பொருளிலும் தான் ஒன்றாயிருக்கும் கலப்பினைச் செய்தவளும், உயிர்களை மயக்குகின்றவளும், அம்மயக்கம் நீங்கத் தெளிவைத் தருகின்ற மேன்மை வாய்ந்தவளும், மந்திரங்களின் ஆற்றலாய் நிற்பவளும், உயிர்களைக் காக்கின்றவளும் ஆகிய சத்தி தன்னில் ஒரு கூறாய் நிற்கின்ற சிவனிடத்துத் தான் அவனிடத்தில் ஒரு கூறாய் இருப்பாள்.

குறிப்புரை :

`காலத்தி, கூலத்தி` என்பவை அத்துச் சாரியை தொக வந்தன. அனுகூலத்தை, ``கூலம்`` என முதற் குறைத்துக் கூறினார். ``எங்கு`` என்பது பெயர்த்தன்மைப்பட்டது. மாகுலம் - உயர்குலம்; அஃதாவது தெளிவிக்கும் தன்மை. சண்டிகை - வேகம் (மந்திரத்தினது ஆற்றல்) ஆகின்ற தன்மையுடையவள். பாலினி - பாலனம் செய் பவள். `சத்தியும், சிவனும் தம்மில் தாம் கூறாய் இருப்பர்` என்பதை விளக்க, ``பாலவன்`` என்றும், ``பாகமதாம்`` என்றும் கூறினார்.
இதனால், பல்வகைப் பெருமைகளும் உடையவளாகிய சத்தி சிவனது கூறாயே நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி
ஏக இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.

பொழிப்புரை :

பசிய பொன்போலும் சடைமுடியையும், ஒரே எண்ணத்தையும். திண்ணிய பத்துத்தோள்களையும், விருப்பத்தைத் தருகின்ற ஐந்து முகங்களையும், முகந்தோறும் மும்மூன்று கண் களையும் கொண்டு, யானையை உரித்துப் போர்த்து நடனம் புரிபவ னாகிய சிவபெருமானுக்கு அவனது ஒரு கூறாய் இருப்பாள் பராசத்தி.

குறிப்புரை :

`சிவபிரானது பல்வகை உருவும், குணமும், செயலும் ஆகிய எல்லாம் சத்தியால் அமைவனவே` என்பதை விளக்க, அவனது உருவம் முதலியவற்றை வகுத்துரைத்து, `அவனுக்குப் பாகம் பராசத்தி` என முடித்தார். ஆகவே, ``பைம்பொற் சடைமுடி`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இதனால், `சிவனின்றிச் சத்தி யில்லாமைபோலச் சத்தியின்றி யும் சிவனில்லை` என்பதுணர்த்தி, இருவரும் யாண்டும் பிரிந்து நில்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.

பொழிப்புரை :

தலைவனாகிய இறைவனும், அவனால் செயற் படுத்தப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் ஏற்ற பெற்றியால் பொருந்தி நிற்பவனவாகச் சொல்லப்படுகின்ற நிலையங்கள் ஐந்து உள்ளன. அவைகளில் பிரமன் முதலியோரும், பதினெண், கணங்களும், வந்து வணங்கச் சத்தி அவற்றிற்கு முதலும், முடிவுமாகி நிற்கின்றாள்.

குறிப்புரை :

ஐந்து நிலையங்கள் என்றது. `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்து கலைகளை. இவைகளிலே முப்பத்தாறு தத்துவங்கள் முதலிய பிற அத்துவாக்கள் ஐந்தும் அவற்றிற்கு ஏற்ற பெற்றியால் அடங்கி நிற்க, இறைவனும் பெற்றியால் ஆதியும் அந்தமுமாம் தலைவனாய் நிற்றலின், சத்தியும் அங்கு அவ்வாறு நிற்கின்றாள் என்க. ``வேதனும் ஈரொன்பதின்மரும் மேவ நின்று`` என்றது, அவளது பெருமை கூறியவாறு. `அவை மேவ` என இயையும். `பதினெண் கணத்தவர் இவர்` என்பதை
``விரவுசா ரணரே, சித்தர், விஞ்சையர், பசாசர், பூதர்,
கருடர்,கின் னரர், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர் ஆகாச வாசர் உத்தர குருவோர் யோகர்
நிருதர்,கிம் புருடர், விண்மீன் நிறைகணம், மூவா றாமே`` 1
என்பதனான் அறிக. தைத்தியர் - அசுரர். நிருதர் - இராக்கதர். உத்தர குரு - போக பூமி. யோகர் - முனிவர். ``விண்மீன்`` என்றதும் அவற்றிற்குத் தலைவரை.
இதனால், சத்தி பஞ்சகலைகளிலும் ஏற்ற பெற்றியால் அனைத்திற்கும் ஆதியும், அந்தமுமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத்
தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.

பொழிப்புரை :

உலகம் தோன்றும்பொழுது பஞ்ச கலைகளிலும் நிற்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் முதலில் முறையானேதோன்ற, அவற்றிற்கு முதல்வர் ஐம்பத்தொருவரும் உடன்தோன்றி நிற்பர். அங்ஙனம் நிற்கும் அவர் எல்லார்க்கும் சத்தி உயிராய் உள் நிற்பாள். ஆகவே, அவ் எழுத்துக்களைப் பல்வேறு முறையில் தம்முட்கொண்ட சக்கரங்களில் எல்லாம் அச்சத்தி உயிராய் நிற்றல் பெறப்படுதலின், சிவனும் அவளிடத்து நீக்கமின்றி அச்சக்கரங்களில் நிற்பவனாவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை, `அங்ஙனம் ஆகிநின்ற அவள் நீங்காது நிற்கின்ற சக்கரம்` என எடுத்துக்கொண்டு உரைக்க. பின் னிரண்டடிகளில், ``ஆகிநின்றாருடன் நாயகி சக்கரத் - தாகிநின்றான் அவன் ஆயிழை யோடே`` என்பதும் பாடமாய் உள்ளது.
இதனால், `சக்கரங்களாக அமைக்கப்படுவனயாவும் சத்தி சிவமயமேயன்றித் தனியில்லை` என்பது கூறி, தனிப்பட்ட வேறு ஆற்றல் உடையனவாகக் கருதுதல் அறியாமையாதல் விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 66

ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
றேய குழலி இனிதுநின் றாளே.

பொழிப்புரை :

சத்தி, சிவன் இருவருக்கும் உரிய இடம், உலக முதல்களுக்கு மேலாய், எட்டாய் அமைந்த இதழ்களையுடைய தாமரை மலராகும். அதுவன்றியும் தியான வகையால் வேறுபடுகின்ற ஆறு இடங்களும் உள. எல்லாவற்றிலும் சத்தி இனிது வீற்றிருக் கின்றாள்.

குறிப்புரை :

அண்டகம் - உலகம்; ஐ - முதல்; என்றது தத்து வங்களை. `தத்துவங்கள்` எனப் பொதுப்படக் கூறினும் சகலர்க்கே உரிய ஆன்ம தத்துவங்களே குறிக்கப்பட்டன. அவற்றின் மேல் உள்ள எட்டிதழ்க் கமலம், இருதய கமலமாம். இதனிடத்திலும், ஆறாதாரங்களிலும் சத்தியும், சிவமும் கலந்து நிற்பினும், தன்னை இவ்விடங்களில் நினைபவர்க்குச் சத்தி இனிது விளங்குவாள் என்றவாறு. பின்னிரண்டடிகளில் பாடம்பெரிதும் திரிபுபட்டுள்ளது.
இதனால், சத்தி தியான இடங்களில் விளங்குதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 67

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

யான் சத்தியோடு ஒன்றிச் செவ்வியனாகும்படி அவள் எனக்கு இனிது வெளிநிற்கின்றாள். எதனால் எனின், இப் பொழுது என் உடலுள்ளே உயிர்ப்புக் காற்று என் வசமாய் ஆறு ஆதாரங் களிலும், அவற்றின்மேல் உள்ள ஏழாந்தானமாகிய சிரசிலும் செல் கின்றது. பத்து வாயுக்களும் நெருங்கி நின்று சுழலுகின்ற உடம்பினுள் ஏனை ஒன்பதினும் உயர்வுடையது. உயிர்ப்புக் காற்று ஒன்றே என்பதை எனக்கு அவள் அறிவித்து, என்பொருட்டு அறிந்தும் நின்றாள்.

குறிப்புரை :

`ஏழிலும்` என உருபு விரிக்க. இதனுள் வந்த மூன்று தொடர்களும் முறையே ஒன்றற்கொன்று காரணமாம் பொருள்களை உணர்த்தி நின்றன.
இதனால், வாசி யோகம் சத்தியைக் காணுதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 68

உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழு மாகதி யாகிய தாகும்
கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.

பொழிப்புரை :

உயிர் உணர்ந்து உணர்ந்து மேன்மேல் உயர்தற் குரிய மந்திரம் `ஓம்` என்பது எனச்சொல்லப்படும். உணர்வால் இறையொடு கூடி மேன்மையுறுகின்ற முடிந்த பேறாகிய வீடுபேறும், பிறவும் அதனாலே கிடைக்கும். உயிரை இவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டு செல்கின்ற கள்வனும், கள்வியுமாகிய சிவனும், சத்தியும் இணைந்து நிற்றலும், அதனால் விரைய விளங்கும். அங்கு முன்னர்க் காணப்படுபவள் சிவனிடத்துப் பெருவிருப்புடையளாகிய சத்தியே.

குறிப்புரை :

``எனும்`` என்பது செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தி நின்றது. ``உள்`` என்றது உணர்வை, `கணத்து` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. இறுதியில் உள்ள ``எழும்`` என்பதில், செய்யும் என்முற்று பலர்பாலில் வந்தது. ஆரிடவமைதி ``காணும்`` என்றது முன்னர்த் தோன்றுதலை.
இதனால், `வாசியோகம் பிரணவயோகமாயவழிச் சத்தியை எளிதில் அடைவிக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டலம் மாருத மாதியும்
ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.

பொழிப்புரை :

`ஆதி` எனப்படுபவளாகிய சத்தியும், `ஈசன்` எனப் படுபவனாகிய சிவனும் வழிபாட்டிற்கு மிகச்சிறந்ததாகச் சொல்லப் படுகின்ற வேள்வித்தீ, யோகத்தில் சிறப்பிடம் பெற்று நிற்கும் சந்திர மண்டலம், வாயு முதலிய பூதங்கள் என்னும் இவைகளாய் நின்று உயிருக்கு நலம் செய்கின்றனர். அவ்விடத்தில், சத்தி, யோகியரது உடம்பில் தோன்றுகின்ற நரை முதலியவை அங்ஙனம் தோன்றாது அகலச் சிகை கறுத்தல் முதலிய இளமைத் தன்மைகள் தோன்றும்படி அவரது ஆஞ்ஞைத் தானத்தில் விளங்கி நிற்பாள்.

குறிப்புரை :

``ஆதியும், ஈசனும்`` என்பவற்றை முதலில் எழுவாயாக வைத்து, `மாருதம், ஆதியுமாய்` என ஆக்கம் வருவித்து, `ஏமம் ஆகின்றனர்` என முடிக்க. `ஆம் அதுவாகிய அங்கி` என்க. இதனுள் ``அது`` என்றது வேள்வித் தீயைக் குறித்த பண்டறி சுட்டு. `மா மண்டலம், மது மண்டலம்` எனத் தனித்தனிச் சென்று இயையும். மது, இங்கே அமுதம். பூதங்களில் மாருதத்தை ஆதியாகக் கூறினார். யோகத்திற்கு அது சிறந்ததாதல் பற்றி. `ஏமம்` என்பது இடைக் குறைந்து நின்றது. இதன்பின் உள்ள ``அது``, பகுதிப் பொருள் விகுதி. ``சீவன்`` என்பது, சொல்லுவாரது குறிப்பால், யோகத்தில் நிற்கும் சீவனைக் குறித்தது. `சீவனது சிகை` என்க. கோ - தலைமை; இஃது ஒரு சொல் தன்மை எய்தி நின்ற, `மலர்க் கோதை` என்பதனுடன் இரண்டாவதன் பொருள்படத் தொக்குநின்றது. கோதண்டத்தில்` என உருபு விரித்துக் கொள்க.
இதனால், அனைத்துமாய் நின்று காத்துவருகின்ற சத்தி சிவன் என்பாருள் சத்தி யோகத்தில் விளங்கிநின்று நலம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 70

ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரைஅவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

பொழிப்புரை :

`மேன்மைத் தானம்` எனப்படுவதாகிய ஆஞ்ஞை யில் சத்தி விளக்கமுற்றுத் திகழும் நிலையில் அது முதல் மூலாதாரம் ஈறாக நிற்கின்ற ஐம்பது எழுத்துக்களும் அவளிடத்தே செயலற்று அடங்கிவிடும். அஃது எவ்வாறெனின், சுத்த மாயையினின்றும் விருத்திப்படுகின்ற நால்வகை வாக்குகளில் அவ் எழுத்துக்களுக்கு முதல் நிலைகளாகிய `பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குகளாய் நிற்றலோடு, ஐந்தொழிலையும் தன்னுடையனவாக உடையவள் அவளேயாதலின்.

குறிப்புரை :

`மனோன்மனி` என்பது, `சத்தி` என்னும் அளவாய் நின்றது. `மனோன்மனிபால்` என ஏழாவது விரிக்க. `ஐம்பதும்` என்னும் முற்றும்மை தொகுத்தல் பெற்றது. உடனே - ஒருசேர. பைசந்தி சூக்குமை வாக்குகளை முறையே `பராபரை, பரை` என்றல் வழக்கு. பராபரை - பரை அபரை இருதன்மையும் உடையது. எழுத்துக்கள் அடங்கவே. உயிரினது பல தலைப்பட்ட உணர்வு அடங்கிச் சத்தியையே உணர்ந்து நிற்றல் பெறப்பட்டது. ஆஞ்ஞையில் விளங்கி நிற்கும் சத்தியது விருப்பம், அவ்வுயிரினது உணர்வைத் தன்பால் அடக்கிக் கொள்ளுதலே யாதலின், அவளது விருப்பத்திற்கு மாறாகப் பிறி தொன்று நிகழ மாட்டாமை பின்னிரண்டடிகளால் விளக்கப்பட்டது.
இதனால், (கோமலர்க் கோதை கோதண்டம்) ஆதலின் (முன்னை மந்திரம்) பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 71

தானிகழ் மோகினி சார்வான யோகி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந்
தானாம் பரசிவம் மேலது தானே.

பொழிப்புரை :

சிவசத்தி தனக்கு இடமாகக் கொள்கின்ற குண்டலினி சத்தி, அவளைச் சார்பாகக் கொண்டு விளங்கும் யோகினி சத்தி என்னும் இவர்கள் நீங்கத் தாம் தூயராய் நிற்போரே ஆதி சத்தியைத் தலைப் படுவர். அவரது உணர்வில் அவையேயாய்க் கலந்து நிற்கின்ற ஆதி சிவமாம் நிலையை அடைகின்ற பரசிவம் அந்நிலைக்கு மேலுள்ளது.

குறிப்புரை :

எனவே, `அந்தப் பரசிவத்தின் சத்தியாகிய பராசத்தியும் மேற்சொல்லிய அனைத்திற்கும் மேல் உள்ளது` என்றவாறு. முதற்கண் ``தான்`` என்றது, முன்னை மந்திரத்திற்கூறிய மனோன்மனியை. குண்டலியும் பந்தமாதல் பற்றி ``மோகினி`` என்றார். யோகினி - யோகத்தைப் பயப்பிக்கின்றவள். அடி, சிவனடி. ஆதி சத்தியை இங் ஙனம் கூறுதல் வழக்கு. `முன்னர்க் கூறப்பட்ட ஆதி சத்திக்கு முதலாகிய சிவம், என்பது தோன்ற, ``அச்சிவம்`` எனச் சுட்டிக் கூறினார். பரசிவ பராசத்திகளின் இயல்பை இவ்வாறு எடுத்துக் கூறியது, அவர்களை அடைதலின் அருமை யுணர்த்தற்கு. ஈற்றில் உள்ள தான், ஏ அசைகள்.
இதனால், சத்தி சிவங்களின் உண்மை நிலையின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 72

தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.

பொழிப்புரை :

ஆதி சத்தி, யோகியரது உச்சியிலும், அதற்கு மேலுள்ள பன்னிரண்டு அங்குலமாகிய நிராதாரத்திலும் குண்டலி சத்தியோடு அவட்கு முன்னவளாம்படி வைத்துச் சொல்லப்படும் வியட்டிப் பிரணவநிலைகளே பிரணவ யோக நெறியாகும்.

குறிப்புரை :

``தான்`` என்றது மேலே போந்த ஆதி சத்தியை. அந்தம்- முடி; தலை. தலைக்குமேல் உள்ள நிராதாரத்தையே இங்கு, ``சிகை`` என்றார். `அந்தமும் அதன்மேலே தரும் சிகையும் ஆகிய இவற்றுடன் ஆனந்த மோகினியாம் திருவோடு மோனையில் ஆக வைத்து மொழிதரு கூறு` என்க. தரும் - சொல்லப்படுகின்ற. அசுத்த மாயையாகிய மோகினியினின்று பிரித்தற்குக் குண்டலினியை ``ஆனந்த மோகினி`` என்றார். பொன் திரு - பொன்போலச் சிறந்த சத்தி. `மோனை` எனினும், `முதல்` எனினும் ஒக்கும். `கூறு` என்பது தொகையால் ஒன்றாகலின், ``கூறது`` என்றார்; `அது`, பகுதிப்பொருள் விகுதி. உயிர் மார்க்கம் - உயிர்ப்பு நெறி; யோக நெறி. யோக நெறி களுள் குண்டலினியைப் பொதுவே செயற்படுத்தலும், அவளைப் பிராசாத முறையாற் காணுதலும் ஒன்றின் ஒன்று ஏற்றமாவன என மேலெல்லாம் கூறிவந்தவற்றோடு, பிராசாத கலைகளை ஆதி சத்திக்குப் பொருந்திய இடமாக வைத்துச் செய்யப்படுதல் மிகச் சிறந்ததாதல் இதனுட் கூறப்பட்டதாம்.
இதனால், சத்தியை அடைதற்கும் பிரணவகலைகளில் அவை யேயாய்க் கலந்து அவற்றைச் செயற்படுத்துபவள் சத்தி என்பதை உணர்ந்து செய்யும் சத்தி யோகமே மிக மேலானதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 73

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

பொழிப்புரை :

ஆதி சத்தி, பலவகைப்பட்ட யோக நெறிகளையும் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அமைத்து வைத்தவள்; நிலையான மங்கலத்தை உடையவள்; ஆதலின், அவள் யார்க்கும் அறிதற்கரிய வளாவாள். ஆயினும் பாச ஞானம், பசுஞானம் என்னும் இரண்டும் ஒருசேர நீங்கும்படி விட்டுப் பதிஞானத்தால் அறிகின்ற பெரியோர்க்கு அவரது அறிவுக் கறிவாய் அவள் விளங்குவாள்.

குறிப்புரை :

``மார்க்கம்`` என்பதற்கு, `சமயங்கள்` என உரைத்தல் இவ்விடத்திற்கு இயைபற்றதாம். `மனோன்மனி, மங்கலி` என்னும் பயனிலைகட்கு, மேல்நின்ற ``தான்`` என்பது எழுவாயாய்வந்து இயைந்தது. அறிவரிதாவதும், நுண்ணறிவாவதும் அவளது உண்மை இயல்பாம். ஆகவே, தடத்த நிலையில் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அறியப்படுவாள் என்பது ``மார்க்கங்கள் ஈன்ற`` என்பதனால் பெறுதும். `வாக்கு, மனம்` என்பன முறையே பாச ஞானமும், பசு ஞானமும் ஆதலைச் சிவ ஞானபோத ஆறாம் சூத்திர உரையான் அறிக. `ஒன்றாய் விட்ட` என்பதும் பாடம் அன்று. ``பெருமை`` என்றது அதனையுடைய பதிஞானத்தை. பதிஞானமே வியாபக ஞானமாதல் அறிக. பெருமையுடைய ஞானத்தைப் பெற்றோரே பெரியராதல் உணர்க.
இதனால், பல்வகையான யோகங்களாலும் அடையப்படுவது சத்தியின் தடத்த நிலையேயாதல் கூறி, `அவைவாயிலாக ஞான நெறியை அடைய முயல்க` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 74

நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு
பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.

பொழிப்புரை :

மக்கட்கு ஐம்புலன்களில் செல்லுகின்ற அறிவு சுதந்திர அறிவாகவே தோன்றும்; ஆயினும், சிவனுடைய அறிவு அவர் தம் அறிவை அவற்றின் பின்னே இருந்து செலுத்துகின்ற அறிவாய் நிற்கும். (அஃது இல்லையாயின், எவரது அறிவும் ஒன்றிலும் நுழைய மாட்டாது. ஆகவே, உயிர்களின் அறிவு இறைவனது அறிவின் வழி யவேயன்றிச் சுதந்திரம் உடையன அல்ல). இங்ஙனம் சிவனது அறிவாய காட்டினை (காட்சிக்குத் துணையாவதை) அறிவதே செந்நெறியாம். இனிச் சிவனை அடைய விரும்புவோர்க்கு அவனது அறிவாலே அவனை அறிதலே தக்க நெறியாம்.

குறிப்புரை :

``நுண்ணறிவு`` என்பது, `இயற்கையில் நுண்ணிதாய்ப் புலன்களில் நுழையும் அறிவு` எனப்பொருள் தந்து நின்றது. இவ்விடத்து நின்ற ``ஆகும்`` என்பது `போலும்` என்னும் பொருளது. நுழை புல மாந்தர்க்கு அவர்தம் அறிவு நுண்ணறிவாகும்; ஆயினும் பிரான் அறிவு பின்னறிவாகும்` எனக்கூட்டி, வேண்டும் சொற்கள் வருவித்து உரைக்க. தடம் - வழி. அத்தடம் - அவ்வாறு உணரும் நெறி. தன் நெறி - தன்னாலே தன்னை அறியும் நெறி. `தன்னெறியாவது` என்பது பாடம் அன்று. சன்மார்க்கம் - நல்ல வழி; நன்மையைத் தரும்வழி. எனவே, பிறவெல்லாம் தீமையைத் தருவனவாயின. தீமையாவது பாசங்களையும், உயிரையும் இன்பப் பொருளாக அடைவித்தல். இங்ஙனமாகவே, `பாசஞான பசுஞானங்களை நீக்கிப் பதிஞானத்தால் உணரவரினும்` அது கொண்டு பதியாகிய சிவனை உணராது, பாசங்களையும், உயிரையும் உணர்தல் துன்பந் தரும் நெறியாதல் வலியுறுத்தப்பட்டதாம். இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய பதிஞானத்தது சிறப்பும், அதனால், பயன் எய்துமாறும் கூறி, மேற்குறித்த ஞானநெறி பற்றி அறியற் பாலவை இனிதுணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 75

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.

பொழிப்புரை :

ஒன்றாக அமைந்த நன்னெறி ஏனை தீநெறிகள் பலவற்றையும் போக்கிவிடும்; அந்நன்னெறிக்கு முதல்வராய கடவுள ராயும், அவரால் தோற்றுவித்துக் காக்கப்படும் அந்நன்னெறியாயும், அந்நன்னெறியால் அடையப்படும் அருட் சத்தியாயும் உள்ளவள், தலைமை பற்றி, `சத்தி` என்று, அடைகொடாது யாவராலும் சொல்லப்படுகின்ற சிவசத்தியேயாவாள்.

குறிப்புரை :

``சன்மார்க்கமாக`` என்றது, ``தான் ஒன்றே முழு நன் னெறியாக` என்னும் குறிப்பினதும், `சமைதரு` என்றது, `இயற்கையில் அமைந்த` என்னும் குறிப்பினதுமாயின, ``சமைதரு மார்க்கமும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``துன்மார்க்கமானவை`` என்றது, முழுத் தீமை முதலாகச் சிறிதே தீமையுடையது ஈறாக உள்ள ஏனை எல்லா நெறிகளையும், `மேற்குறித்த முழு நன்னெறி முதலியவாகக் கூறிய மூன்றுமாயிருப்பவள் சிவசத்தியே எனக் கூறிய அதனால், `அவ்வொன்றாய நன்னெறி சிவநெறியே` என்பது பெறப்பட்டது.
``முன்னெறி யாகிய முதல்வன், முக்கணன்
றன்னெறி யேசர ணாதல் திண்ணமே``
(திருமுறை - 4)
என அப்பரும் அருளிச் செய்தார். நன்னெறியாவது சிவநெறி` எனவே, அதற்கு முதல்வராவார் சதாசிவர், மகேசுவரர், உருத்திரர் முதலியோ ராதல் பெறப்பட்டது. அவர் சிவநெறியைத் தோற்றுவித்தலாவது, தம்பால் கேட்டற்கு உரியவர்கட்கு அதனை அறிவுறுத்தல். அதனைக் காத்தலாவது, ஆசிரிய மாணாக்கர் முறையால் வழிவழியாக விளங்கி வரச் செய்தல். சிவசத்தி நன்மார்க்கத் தேவர் முதலாக நிற்றல் கூறுவார், அந் நன்மார்க்கத்துச் சிறப்பினை முதற்கண் எடுத்துக் கூறினார்.
இதனால், சத்தி, மேற்கூறிய செந்நெறி முதலியனவாய் நின்று உயிர்கட்கு அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை
அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.

பொழிப்புரை :

`சத்தியும், யானும், சிவமும்` என்னும் மூவர் தவிர, வீடுபேற்றினை அதன் முதல் பற்றி அறிபவர் ஒருவரும் இல்லை. முதுகந் தண்டாகிய எலும்பின்கண் பிராண வாயுவைக் கும்பித்தால், அவ் எலும்பு பக்குவப்பட்டு, அந்தப் பிராணவாயு சுழுமுனையூடே மேல் ஏறிச் செல்லுதற்கு ஏற்றதாகும்.

குறிப்புரை :

`இதுவே முத்தி முதல்` என்பது குறிப்பெச்சம். `திருவருள் பெற்றோர்க்கு இது விளங்கும்` என்பார், அப்பேறு பெற்ற தமது பெருமை தோன்ற, ``யானும்`` என்றார்.
``முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப`` 1
என்பதனால், `முதற்கண் அறிவாரில்லை` என ஏழாவது விரிக்க. முதல் - வேர். வியப்புச் சுவை நயம் பற்றி, ``அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்`` என ஓதினாராதலின், ``அத்தி`` என்பதற்கு, `எலும்பு` என்பதும், ``மேல்`` என்பதற்கு, `கண்` என்பதும், `பழுத்து அக்கால்` என்பதும் பொருளாதல் விளங்கும். வித்திடுதல் நிலத்திலாதலின், ``அத்திமேல்`` என்றது, `அத்தியது அடிக்கண்` என்றதாம். ``அக்கால்`` எனப்பின்னர் சுட்டிக்கூறலின், வித்து என்றது அக்காலினை (பிராணவாயுவை) யாயிற்று. யோகத்திற்கு முதலாவது பிராணன் ஆதலின், அதனை `வித்து` என்றார். ``மத்தி`` என்பது ஆகுபெயராய் நடுநாடியாகிய சுழுமுனையைக் குறித்தது.
இதனால், முன்னர்ச் சத்தியை அடைந்து, பின் அவள் வழியாகச் சிவத்தை அடைவதாகிய முத்திக்கு வழி யோகம் என்பது கூறப்பட்டது. முத்திக்கு முடிநிலை வழியாகிய ஞானம் சத்தியேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 77

அதுஇது என்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

பொழிப்புரை :

வீடுபேற்றைத் தரும் வழியாவது `அது` என்றும் `இது` என்றும், சொல்லும் வழியில் எல்லாம் சென்று வாழ்நாளை வீணே கழிக்காமல், ஒருநெறியாய் உறுதிப்பட்ட மனத்துடன் சிவ சத்தியையே முத்தியைத் தரும் முதல்வியாகத் துணிந்து அவளை யோக நெறியால் சந்திர மண்டலத்திற் சென்று வணங்க வல்லவர்க்கு, வினை வழியாகிய பிறப்பு நெறியைக் கடக்கும் அப்பயனும் கூடும்.

குறிப்புரை :

பதி - இடம். மது, இங்கே அமுதம்; அஃது அதனை யுடைய சந்திரனை உணர்த்திற்று. `மதுப்பதி` எனப் பின்முன்னோக்கி உரைக்க. ``விதி`` என்றது வினையை. வினை வழி - வினையால் உளதாகும் வழி.
இதனால், சத்தி யோகமே வீடுபேற்றைத் தருவதாதல் கூறப்பட்டது சத்தியும், சிவமும் வேறல்ல ஆதலின், `சத்தியோகம், சிவயோகம்` என்பன வேறு வேறாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 78

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

பொழிப்புரை :

யாவரது ஆற்றலையும், எப்பொருளது ஆற்றலை யும் வெல்லும் பேராற்றலை உடையவளாகிய சிவ சத்தியினது உண்மை நிலையைத் தவத்தால் உணர வல்லவர்க்கு` விதியின் வழி யாகிய பிறப்பு, அப்பிறப்பிற்கு முதலாகிய `வினை, எனப்படுகின்ற அந்தப் பெரியகட்டு, அதனால், வந்து சார்ந்து மயக்குகின்ற ஐம் புலன்கள் என்னும் இவ்வனைத்துத் தீமைகளையும் வெல்லுதல் கூடும்.

குறிப்புரை :

இது சொற்பொருட் பின்வருநிலை, ``விழைபுலன்`` என்றது, `ஆசையை விளைத்து மயக்குகின்ற புலன்` என்னும் குறிப்பினதான உடம்பொடு புணர்த்தல். ``தன்னை`` என ஒருமையாற் கூறியது, `ஒருகாலத்து வருவது ஒன்றேயாயினும், ஒவ்வொன்றும் அத்தன்மையது` என்றற்கு. காம இன்பத்தை, ஒருகாலத்தே ஐம்புலனும் நுகரப்படுவதாகக் கூறுதல் விரைவு பற்றியாதலின், அதனிடத்தும், ஐம்புலன்கள் நுகரப்படுதல் ஒரு காலத்து ஒன்றேயாம் என்க. மங்கை தன் மெய்யுணர்வார்க்கும் அவளது ஆற்றல் உளதாம் ஆதலின் மேற்கூறிய எல்லாம் அவர்க்குக் கூடும் என்பார், ``வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே`` என்றார்.
இதனால், மெய்யுணர்வே தீமை அனைத்தையும் முற்றப் போக்குவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமது
தாரங் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம்இது சத்திய மாமே.

பொழிப்புரை :

தொன்று தொட்டு வழிவழியாகச் சத்தி சிவர்களைப் போற்றிவருகின்ற மரபு, ஐம்பதெழுத்துக்களின் அதிதேவரிடத்து அவர்கள் நிற்கின்ற முறைமையில் வைத்தேயாம். சத்தியும், சிவமும் முதற்கண்ணே சார்ந்திருக்கும் இடம் அவ் எழுத்துக் களும், அவற்றின் அதிதேவருமாம். இஃது உண்மையான ஒன்று.

குறிப்புரை :

`ஆதலின் இது மரபாயிற்று` என்பது குறிப்பெச்சம். எழுத்துக்களை வழிபடுமிடத்துச் சத்தியும், சிவமும் அவற்றின் அதி தேவர் வழியாய்ப் பயன்தருதலை உணர்தற்கு, ``ஓர் ஐம்பதின்மரும்`` என அருளினார். எழுத்துக்கள் அவற்றின் அதிதேவர் வழியாகவே பயன்தருதலை,
``எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவராம்
நண்ணிய விந்துவோடு நாதத்துக் - கண்ணிற்
பகர்அயன்மா லோடு பரமனதி தெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம்`` 1
என்பதனானும் உணர்க. சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை சிறந்ததாதல் பற்றி அகாரம் முதலிய எழுத்துக்கள் முறையானே தொடர்ந்து வர அமையும் மந்திரங்களை, ``மாலா மந்திரம்`` எனச் சிறந்தெடுத்துப் போற்றுவர். பரம் - கடன்.
இதனால், சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை (பீஜாக்கர மரபு) சிறந்ததாதல் கூறப்பட்டது. சத்தி வழிபாடு பற்றிக்கூறுவார், ஒப்புமை பற்றிச் சிவ வழிபாட்டினையும் உடன்வைத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 80

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

பொழிப்புரை :

சத்தியும், சிவமும் ஒருவர்க்கு உண்மையாற் கிடைப்பார்களாயின், எல்லாப் பயன்களும் அவற்றுக்கு உரிய காரணங்கள் இல்லாமலேயும் விளைந்து விடும். ஆதலால், அப் பொழுது ஐம்பத்தோர் அக்கரங்களின் அதிதேவர்களும் அச் சத்தி சிவங்களின் வழிபட்டபொழுது அவர்கள் உயிரினிடத்தும் கொடுமை நெறியின் நீங்கிச் செம்மையின் நிற்பவராவர்.

குறிப்புரை :

சத்தி சிவங்கள் எப்பொருளிலும் எக்காலத்தும் நீங்கி நிற்றல் இல்லையாகலின், ``நேர்படில்`` என்றது, பொதுமையானன்றி, உண்மையாற் கிடைத்தலையாயிற்று. ஆகவே, ``அத்தகையாகிய`` என்றதும், உண்மையால் நிற்கும் சத்தி சிவங்கட்கு ஆதாரமாதலை யாயிற்று. `தகையர் ஆகிய` எனற்பாலதனை ஆகுபெயரால், `தகையாகிய` என்றார். ``அத்தகையராய் மேவித் திருந்திடுவார்` என்பது கருத்தாயிற்று. மேல், ``ஓரைம்பதின்மருள்`` எனக்கூறி, இங்கு, ``ஐம்பத்தொருவரும்`` என்றது இரண்டும் மரபாதல் பற்றியாதலின், மலைவின்மை அறிக. ``சித்து`` என்றது உயிரை. ``வித்தது, சித்தது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. அத்தகையராய்த் திருந்துத லாவது, உலகியல் உணர்வை எழுப்பாது, மெய்ந்நெறி உணர்வை எழுப்புதல். இவர் இங்ஙனம் திருந்துதலை வலியுறுத்தற்கே முதலிரண் டடிகள் கூறப்பட்டன. வித்தின்றியே விளைதல், வினை முதலிய பிற நிமித்தங்கள் இன்றி அருளே நிமித்தமாக விளைதல். தெளிவு பற்றி எதிர்காலத்தை ``விளைந்தன`` என இறந்தகாலமாக்கிக் கூறினார்.
இதனால் எழுத்து முறை வழிபாட்டால் மேற் (1215) கூறிய மங்கைதன் மெய்யுணர்வு பிறத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 81

திருந்து சிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.

பொழிப்புரை :

மெய்நெறியில் விளங்குகின்ற சத்தியும், வந்து பொருந்திய வானவர்கள் தம்மை வணங்கித் துதிக்க, அவர்கள் பருகுதற்கு அந்த இடம் அரிய அமுதம் சுரக்கும்படி சந்திரமண்டலமே தமக்கு இடம் என்று சொல்லி, அங்கு வீற்றிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`வந்து பொருந்திய` என்பது, `தாம் இருக்கின்ற அந்தச் சந்திரமண்டலத்தில் வந்து பொருந்திய` என்பதாம் அவ்வாறு பொருந்துவோர் யோகியர். அவர்யோகத்தால் அவ்விடத்தில் உயர்ந்து செல்லுதலின், அவரை வானவரோடு ஒப்பித்து, அப்பெயராற் கூறினார். `அவர் அருந்திட` எனத் தோன்றா எழுவாய் வருவித்து, அத் தொடரை, ``அமுது ஆக`` என்பதனோடு முடிக்க. ஆக - உண்டாக. ``அவ்விடம்`` ``அங்கு`` எனச் சுட்டுச் சொற்கள் செய்யுளில் முன் வந்தன `அவ் இடம் ஆக` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. இடையிரண்டடிகள் சிவனும் சத்தியும் தேவர்கள் போற்ற அவர்கள் பொருட்டு ஆலகால விடத்தை உண்டவர்` என, மற்றும் ஒரு நயம் தோன்ற வைக்கப்பட்டன. `இருந்தனள் தான் அங்கு` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சிவனும், சத்தியும், ஞானயோகிக்குச் சந்திர மண்டலமாகிய ஏழாந்தானத்திருந்து மெய்யுணர்வைத் தந்து, அது வழியாகச் சிவானந்தத்தை நுகர்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர்
தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

பொழிப்புரை :

என்றும் யோக நெறியால் குண்டலி வழி மேல் ஏறும் முயற்சியில் இடைவிடாது நிற்பவர், சத்தியைத் தலைப்பட்டு, முடிவில் அவளது உடைமையேயாய்விடுவர். இனி அச்சத்திதான் யோகியர்க்கு அவர் பொருந்தும் தானந்தோறும் விளக்கொளி, விண்மீன், திங்கள், கங்கை என்னும் இவைகளாய் ஏற்ற பெற்றியில் விளங்குவாள்.

குறிப்புரை :

ஏர் - எழுச்சி; எழுகின்ற முயற்சி. `தனது` என்பது எதுகை நோக்கி விரிந்தும், திரிந்தும் நின்றது. தனது - அவளது உடைமை. `சிவானந்த வெள்ளம்` என்பது தோன்ற ``மன் தரு கங்கை`` என்றார். மன் தருநிலைபேற்றைத் தருகின்ற (புலப்படுத்துகின்ற) [மாதவர்க்கு, என்னும் நான்கனுருபு தொகுத்தல் பெற்றது.] விளக் கொளி முதலிய நான்காய் விளங்குதல் முறையே இருதயம் நெற்றி, உச்சி, உச்சிக்குமேல் பன்னிரண்டங்குலம் என்னும் இடங்களிலாம். `சோதியாய்` என ஆக்கம் வருவித்துக்கொள்க.
இதனால், ஞான யோகியர்க்குச் சத்தி படிமுறையால் விளங்கும் காட்சி வகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஏற்ற பெற்றியில் விளங்குகின்றவ ளாகிய சத்தியை உண்மையாகத் தலைப்பட்டு அவளோடு ஒன்றுதலாவது, உள்ளொளியாகிய பதிஞானத்தால் உணர்தலேயாம். அவ்வாறு உணர்ந்தோர், இனத்தால் பசுக்களேயாயினும், அவர் வேண்டிய யாவும் வந்து நிறையும், மற்றும் மெய்யுணர்வு வகைகளும் விளங்கும்.

குறிப்புரை :

`நின்றவளாகிய நேரிழை` என்க. அருள்பெறாத மருள் நிலையது எளிமையும், பின்னர் அவர்பெறும் அருள்நிலையின் அருமையுமாகிய நயம்தோன்ற, ``பிராணிகள்`` என்றாராயினும் `பிராணனை வழிப்படுத்திய யோகியர்` என்பதே பொருளாகக் கொள்க. கேட்டல், சிந்தித்தல் முதலிய வகையானும், அவற்றின் விரியானும் ஞானங்கள் பலவாதல் அறிக.
இதனால், சத்தியின் உண்மைக் காட்சி முறையும், அக்காட்சியும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 84

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஞானங்கள் தோன்றும்பொழுது; சிவமும், சத்தியுமே அவரவர் விரும்பித் தொழுகின்ற தெய்வங்களாய் நின்று அருள்புரிகின்ற உண்மை விளங்கும். சிவசத்தியே அவரவரது பக்குவ நிலைக்கு ஏற்ப மேற்கூறிய தெய்வங்களையே முதற் பொருளாகக் கூறும் பற்பல சமய நூல்களைப் படைத்தவாறும் புலப் படும். தாம் (மேற்கூறிய ஞானங்களைப் பெற்றோர்) சத்தியும் சிவ முமேயாய்விட்ட அந்நிலையிலும் அவ்விருவரும் தமக்கு இன்றி யமையாத உயிர்த் துணைவராய் நின்று உதவுதலும் காணப்படும்.

குறிப்புரை :

`ஞானங்கள் தோன்றும் பொழுது` என்பது இயை பினால் கொள்ள நின்றது. வேண்டுருவாதலில், வேண்டுதல் பிறர் உடையதும், உருவாதல் பின்வரும் சத்தி சிவங்களுடையது மாயின. ``ஈன்றிடும்`` என்றது, `ஈன்றமை புலனாகும்` என்றவாறு. எய்திய - மேற்சொல்லிய உருவங்களைப் பொருந்திய. ``பல்கலை`` என்பதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. `எதிர்வந்து சான்றாகுவர்` என்பது, `உதவி புரிந்து நிற்றல் இனிது காணப்படும்` என்பதாம். முத்தி யின்பத்தையும் சத்தியும், சிவனும் அம்மை அப்பராய் நின்று நுகர் விக்கவே உயிர் நுகர்வதாக, `அறியாதார் சிலர்க்கு முத்தி நிலையில் சத்தி சிவரது உதவி வேண்டாத ஒன்று` என்னும் மயக்கம் உண்டாதல் போல, உண்மை ஞானிகட்கு உண்டாதல் இல்லை` என்பதை இறுதி யடியிற் கூறினார். இதனால், ஞானத்தின் பயன்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 85

ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி
மாயம தாகி மதோமகி ஆயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.

பொழிப்புரை :

பொருள்களை அறிதலில் மனத்தினும் நுண்ணிய தாகிய அறிவையும் கடந்து, சிறுமையில் அணுவுக்கு அணுவாயும், பெருமையில் மகத்துக்கு மகத்தாயும் நிற்கின்றவளும், உயிர்களால் எட்ட ஒண்ணாதவளும் ஆகிய சிவசத்தி, உயிர்கள் விரும்புகின்ற எல்லா நெறிகளுமாய் நின்று அருள் புரிகின்றாள்.

குறிப்புரை :

``அணோ ரணீ, மகதோ மகி`` (கடோபநிடதம்) என்னும் வடசொற்றொடர்கள் தற்பவமாயின; மாயம், இங்கு, வியப்பு. `ஆயிடும் அரிவை` என இயையும்.
இதனால், `சிவசத்தி அணுவுக்கு அணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் நிற்க வல்லளாதலின், வேண்டுருவாகிய தூய்நெறி ஈன்றிடுகின்றாள்` என மேலதன்கண் ஐயமறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 86

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு பலப்பல நெறிகளாய் நின்று உயிர்களுக்கு அருள்புரிகின்ற சத்தியை ஒருவனாகிய சிவனின் வேறாகாதவளாக அறிந்து அவளை அச்சிவனோடு ஒன்றவைத்தே அவரையே பொருளாகப் பொருந்திக் குறிக்கொண்டு எண்ணும் அறிவுத்திறன் படைத்தவரே, அவ்வறிவால் அம்மை யப்பராகிய அவ்விருவரிடையே அடங்கி ஆனந்தம் எய்துவர்.

குறிப்புரை :

குறி, குறிக்கப்பட்ட பொருள். `குறியதுவாக` என ஆக்கம் வருவித்துக்கொள்க. குறிக்கொண்டு நோக்குலாவது அயராது எண்ணுதல்.
இதனால், சிவ சத்தியது உண்மை நிலையை அறிந்து அழுந்தி நிற்பவரே உண்மை ஞானியராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 87

ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

பொழிப்புரை :

சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் முறையே பொருந்தியிருக்கும் அயன், மால், உருத்திரன், மகேசுவரன் என்னும் இவர்கட்கு மேல் உள்ள `விந்து` நாதம்` என்பவற்றுக்குரிய சதா சிவனும், அவனுக்கு மேற்பட்ட சத்தி, வியாபினி, சமனை, உன்மனை என்னும் நால்வரும் ஆகிய ஒன்பதுபேர் நிலைகளிலும் யோக நெறி யால் பொருந்தியவழி ஆன்மா இன்ப மயனாய்த் தேனுண்ட வண்டு அக்களிப்பினால் இசைபாடித் திரிவதுபோலுந் தன்மையை அடைவான்.

குறிப்புரை :

`மாலாங் கதி` என்பது பாடம் அன்று. கதி - தானம்: இடம். `ஒன்பதும்` எனத் தொகை கூறவே, `மேலாங்கதி நான்கு` என்பது பெறப்பட்டது. `தேமயனாய்` என ஆக்கம் வருவிக்க. மா - வண்டு. எய்தல், எய்தப்பெறுதல்.
இதனால், சிவ, `சத்தியைப் பிரணவ யோகத்தால் தலைப் படுதல் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 88

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

பொழிப்புரை :

சத்தியையும், சிவனையும் அடைய விரும்புவர் யாராயினும் அவர்களை வழிபட்டு அடைதல் அல்லது, பிறிதொரு வழியாலும் அடைய வல்லுநரல்லர். ஆதலின், மக்களில் அவர்களை அடைய விரும்பும் நல்லீர், நீவிரும் அதன் பொருட்டு அவர்களை வழிபடுதலையே நெறியாகக் கொண்டு பயிலுங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலிற் கொண்டு, ``வந்தடி போற்றுவர்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி, அதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க. இந்து - சந்திரன்; இவனும் வடக்கிற்குத் தலைவன். வந்தனை செய்தலையே `வழி` என்றார் ஆகலின், அவ்விடத்துப் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். நவிலுதல் - பயிலுதல்.
இதனால், சிவன், சத்தி இவர்களை வழிபாட்டினால் அல்லது அடையலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை யாமே.

பொழிப்புரை :

சத்தியைச் சிவனது ஆற்றலாக அறியும் அறிவில்லா தவர் சத்தியை வேறாகவும், சிவனிற் பெரியவளாகவும் கருதி அவளையே வழிபடினும், அவ்வழிபாடு தூய முறையில் அமைந் திருப்பின், சத்தியையேயன்றிச் சிவனையும் உவப்பிக்கும்.

குறிப்புரை :

`கள், ஊன் முதலியன கொண்டு செய்யும் வாம முறை வழிபாடு சத்தி சிவரை உவப்பியாது` என்பார், நன் மந்திரம் முதலிய நற்பொருள்களை எடுத்தோதிப் பிறிதொன்றையும் கூறாதொழிந்தார். கவற்றுதல், விருப்பத்தை மிகுவித்து மனத்தை மறுகச் செய்தல். கவர்தல், நெய்யை உண்ணுதல்,. `பயிற்றுதல்` என்பது, ``தேற்றா ஒழுக்கம்`` என்பதுபோல இங்குத் தன்வினையாயிற்று. `பயிற்றும் பூை\\\\u2970?` என இயையும். அவி - படையற் பொருள். ``சோதி`` என்றது, சிவனை. `சோதிக்கும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இதனுள், உயிரெதுகை வந்தது.
இதனால், `சத்தி வழிபாடும் தூயதாய வழிச்சிவ வழிபாடாய்ப் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 90

தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

பொழிப்புரை :

உலகத் தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் ஒருவனேயாய் உள்ள சிவன், உலகைத் தொழிற்படுத்தி நிற்குங் காலத்தில், சத்தியை ஒருபாற் கொண்டு அவளோடு உடனாய் இருவராயே நிற்கின்றான், ஆதலின், மாணவகனே, நீ சிவனோடு சத்தியையும் உடன் வைத்தே வழிபடு.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. தாங்குதலும் உவகை என்க. தரித்தல், நிலைபெறுதல், `தன்னைத் தாங்குவார் பிறரின்றித் தானே நிலைபெறுகின்றான்` என்றற்கு, ``தரித்த`` என்றார். ``பராபரன்`` என்றது, ``பராபரன் ஆயது`` எனக் குறிப்பு வினைப்பெயராய், ``பாங்குடன் ஏற்ப`` என்பதனோடு முடிந்தது. ஓங்கிய காலம், உலகம் விரிந்த காலம்; இஃது அதன் தொடக்க நிலையைக் குறித்தது. ``ஒருவன்`` என்பது பின்னும் சென்று இயையும். ``உலப்பிலி`` எனவே, உலகம் உலந்தமை பெறப்பட்டது. சிவன் `பூங்கிளி தங்கும்` என்பது பாடமன்று. சத்தியோடு கூடினவனாய் நின்றே உலகைச் செயற்படுத்தலின், அவனை அவ்வாற்றானே வழிபடுதல் வேண்டும் என விளக்கியவாறு, `சத்தியோடு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. `சத்தியோடே போற்று` என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி உரைக்க.
இதனால், சிவனைச் சிலர் சத்தியை நீக்கி வழிபடுதலும் கூடாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 91

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

பொழிப்புரை :

மாணவனே, நீ, துவண்ட தோற்றத்தால் கொடி போலுதல் கொண்டு, நிறம் பற்றி, `பசுங்கொடி` என்றும், பயன் பற்றி, `நற்கொடி` என்றும், அழகு பற்றி `ஒளிக்கொடி` என்றும், புகழப் படுபவளும், மெய்யுணர்ந்தோரது அன்பிற்குத் தலைவியும், மூன்று கண்களை உடையவளும் ஆகிய பராசத்திக்கு அன்பு செய்து மேம்படு; அழகிய கொடிபோல்பவராகிய கலைமகளும், திருமகளும் உன் பாதங்களைப் போற்றுவார்.

குறிப்புரை :

முதலடியை ஈற்றிற் கூட்டி உரைக்க. `பொற்கொடி மாதர்` என்பது பின்னர்க் கூறப்பட்ட மாதோடு உடன் எண்ணப்படு வாரைக் குறித்தது. இவ்வாறன்றி இயைபில்லாத மக்கட் பெண்டினர் எண்ணுதல் கூடாமையானும்` அங்ஙனங் கொண்டுரைப்பின் வாம நெறியாமாகலானும் அது பொருந்தாமை யறிக. `பராசத்தியை வழிபடினும் கல்வியின் பொருட்டும், செல்வத்தின் பொருட்டும் கலைமகளையும், திருமகளையும் வழிபடுதல் இன்றியமையாது போலும்` என ஐயுற்றமாணாக்கனை, `பேரன்புடைப் பெருமக்கட்குப் பராசத்தியே அனைத்தையும் தருவாள்` எனத் தெளிவித்தவாறு.
இதனால், சிவசத்தி வழிபாடு ஒன்றே அனைத்துப் பயன்களையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.

பொழிப்புரை :

விளங்குகின்ற விளக்குப் போல்பவளும், மிக்க ஒளியுடைய மணி மாலைகள் அசையும் மார்பினை உடையவளும் ஆகிய பராசத்தி, செறிந்த இருள் மறையும்படி கண்டத்தில் நீல மணியைக் கொண்டு விளங்கும் சிவனுடன் இன்ப விளையாடலைக் கருதுகின்ற, நாணம் பொருந்திய ஒரு தோற்றத்தையும் நினைத்து வழிபடு.

குறிப்புரை :

`வழிபடின் இன்பத்தைப் பெறுவாய்` என்பது குறிப் பெச்சம். இன்பத்திற்காகவும் பிறதேவியரை வழிபட வேண்டுவ தில்லை என்றபடி. மணியையுடையவனை, ``மணி`` என்றார். இலம்பியம், நாணத்தால் தலை இறைஞ்சிய தோற்றம்.
இதனால், சத்தி வழிபாடு இன்பத்தையும் அளித்தல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 93

தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.

பொழிப்புரை :

பாம்பை அணிந்த விரிந்த சடையில் பெரிய கங்கை நீர் ஒரு புல்நுனியில் நீர்போல் அடங்கியிருக்கச் சிவன் சத்தியோடு இரு திறமும் ஒருவடிவிலே அமைய நிற்கின்றான். உலகில் பிறந்து அறிவு தொடங்க நின்ற நாள் முதலாக அவனது அழகிய அந்த மணக் கோலத்திலே அடங்கி நிற்பதே எனது அன்பின் பெருமையாகும்.

குறிப்புரை :

`அதனால், இன்பம் முதலிய எந்த உறுதிப்பொருளிலும் எனக்குக் குறை இல்லை; உலகீர், நீவிரும் அவ்வாறு அடங்கி நின்று அனைத்துப் பயனையும் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம். `மணாளன் பால்` எனத்தொகுக்கப்பட்ட உருபை விரித்துக்கொள்க. `கங்கை பாம்பணிந்த சடையில் ஒடுங்க` என்றது ஓர் இன்ப நயம். `பாம்பையும், கங்கையையும் அடக்கின ஆற்றலுடையவன்` என்பது உண்மைப் பொருள். விடம், ஆகுபெயர். `ஒடுங்கி` என்பது பாடம் அன்று.
இதனால், சிவனைச் சத்தியோடு உடனாகக் கண்டு வழிபடுவார் எய்தாத பயன் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 94

உருவம் பலஉயி ராவல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடின்
புரிவளைக் கைச்சினம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

பொழிப்புரை :

பல உடம்புகளும், அவற்றில் உள்ள பல உயிர் களுமாய் நிறைந்து நிற்கின்ற சிவன் உயிர்களுக்குப் பல வேறு வடிவினனாய்க் காட்சியளித்தலை ஆராயின், அவையெல்லாம் அவன் தனது சத்தியோடு மணந்து மகிழ்கின்ற அருள் நாடகமே.

குறிப்புரை :

``பல`` என்பது ``உருவம்`` என்பதற்கு முன்னும் சென்று இயைந்தது. எளியனாய்க் காட்சிப்படுதலை, தெருவம் புகுதலாகக் கூறினார். ``இறைவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. `மகிழ்வனவாகிய மாயம்` என்க, அருவனாய் நிற்கின்ற சிவன் உருவனாய் விளங்குதல் சத்தியினாலே என்றவாறு.
இதனால், சிவன் உருவங் கொள்ளுதல் சத்தியால் என்பது கூறுமுகத்தால், சத்தியை மறத்தல் கூடாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 95

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.

பொழிப்புரை :

உயிர்களின் பொருட்டுப் பலப்பல நாடகங்களைத் திருவுளத்துக் கொள்கின்ற சிவனது திருவடியாகிய உரிமைப் பொருளை உயிர்களுக்கு கூட்டுவிக்கின்ற நடிகையாகிய சிவசத்தி அச்சிவனை உருவம் உடையவனாகச் செய்தற்கு, அவனோடு கூடுகின்ற கூட்டத்திலே அவனுக்கு உருவத்தைக் கொடுத்தலேயன்றிப் பல்வேறு இனங்களாக அமைக்கின்ற பிறப்பு வகைகளாயும் நிற்பாள்.

குறிப்புரை :

`மாயம் புணர்ப்பவனுக்கு ஏற்ற மாயா வல்லபை` என்பார், சத்தியை, ``சலதி`` என்றார். `சல நதி` என்பது பாடம் ஆகாமையறிக. ``அமலன், மாசத்தி`` என்பன சுட்டுப் பெயரளவாய் நின்றன. சத்தி சிவனை மணத்தலால் சிவனுக்கு உருவம் உண்டாதலே யன்றிப் பல்வேறு பிறப்பு வகைகளும் அமைகின்றன என்பதாம். `அவ்வியோனி` என்னும் தற்பவ மொழியில் இடைநின்ற இகரம் குற்றியலிகரத்தின் இயல்பினதாய் அலகு பெறாமல் நின்றது.
இதனால், சத்தி சிவனை மணத்தலால் உளதாகும் மற்றொரு பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 96

உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை
அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்களால், `அவன்` என்று சேய்மைச் சுட்டாகப் பொதுவே உணரப்படுபவனாகிய எங்கள் தலைவனாகிய சிவனை நான், `அவன் அன்ன அருமையினன்` என முதற்கண் உணர்ந்தேன். பின்னர் அவன் உலக முதல்வியாகிய சத்தியை யுடைய சத்திமா னாதலை அறிந்து அவனை அணுகினேன். அதன்பின்னர் அவனோடு ஒன்றினேன். முடிவாக ஒருஞான்றும் அவனை விட்டு விலகாத நிலைமையனாயினேன். இவையே நான் சிவனது திருவருளைப் பெற்ற முறைமை.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறே பெற்றுய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். ``புவனாபதியார்`` என்னும் உயர்வுப்பன்மை ஒருமையோடு மயங்கிற்று. `ஈசற் புணர்ந்தொழிந்தேன்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
இதனால், `சிவனைச் சத்தி வழியாகவே பெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 97

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

பொழிப்புரை :

இறைவனைப் போற்றுபவர், `நல்ல திருவடிகளை உடைய இறைவனே` என்றும், `அடியார்கட்கு மிக நல்ல பயனாய் உள்ளவனே` என்றும் அழைத்துப் போற்றுவர். அந்தத் திருவடிகளும், பயனுமாய் இருக்கின்ற பெருமையைப் பெற்றுள்ளவள் உயர்பெருந் தேவியாம் சத்தியே, இறைவனைப் பற்றிக்கூறும் நூல்களைக் கற்றுணர்ந்தவன் அறியும் பொருளாகிய இதனை அறிய வல்லவர்கட்கு இறைவனது அருளுலகத்தை அடைதல் சிறப்புப் பயனாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்தும், `அப் பெருமை பெற்றாள்` எனமாற்றியும் உரைக்க. நல்தாள், துன்பம் துடைத்து இன்பத்தைப் பொழியும்தாள். கற்றான் அறியும் கருத்தும் இதுவேயாதலை வேறுபோலக் கூறினார், அதனது அருமை தோன்று தற்கு, திருவருளை, `சிவன்தாள்` என்றல் வழக்கு. அருளுலகம், சுத்தமாயா புவனமாகிய அபரமுத்தித் தானங்கள். சிறப்புப் பயனாவது, அவருக்கே உரியதாய்ப் பிறருக்கு உரித்தாகாதது.
இதனால், சத்தியை உணரவல்லவரே உண்மை ஞானத்தைப் பெறுபவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 98

தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி
இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியா நினைவதென் காரண அம்மையே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாகிய சிவனோடே எனது நெஞ்சத்தை விரும்பி இனியவளாய் இருக்கின்ற சத்தி ஏழுலகத்திலும் நிறைந்திருப்பவளே. ஆயினும், எனக்குத் தாயாகிய அவளை நான் நல்ல புதுமலர்களைக் கையில் கொண்டு உண்ணுவது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே.

குறிப்புரை :

`இனியார்` என்பது பாடம் அன்று. ``பனியால்`` என்றது, `குளிர்ச்சியோடு` என்றவாறு. காரண அம்மை - ஈன்ற தாய். `அம்மையை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. `அம்மையைப் போது கை ஏந்தி நினைவது கனியா`` எனக் கூட்டுக.
இதனால், சத்தி பெரியவளும், அரியவளுமாயினும், வழி படுவார்க்கு எளியளாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 99

அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும்
இம்மனை செய்த இருநில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.

பொழிப்புரை :

சிவனுக்கு அழகிய மனைவியும், உயிர்களுக்குத் தாயும் ஆகிய சத்தி, உயிர்களின் பல்வேறு நிலைகளிலும் அவற்றிற்கு ஆதாரமாய் நின்று, வேண்டுவனவற்றை வழங்குபவளாயும் இருப்பாள். அதனால், இன்று நமக்கு ஆதாரமாய் நிற்கின்ற நிலமகளும் அந்தச் சிவசத்தியாகவே எனக்குத் தோன்றுகின்றாள்.

குறிப்புரை :

``செம்மனை, இம்மனை`` என்பவற்றில், நிலைக்களம் ``மனை`` எனப்பட்டது. ஈற்றில் உள்ள அம்மனை, அனைவர்க்கும் தாயாகிய சத்தியைக் குறித்தது.
``பரஞானத் தால்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்``. 1
என்னும் முறைபற்றி, ``இருநில மங்கையும் அம்மனையாகியமர்ந்து நின்றாள்`` என்றாள்.
இதனால், சத்தி அனைத்து ஆதார ஆதேயங்களுமாய் நிற்றல் முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 100

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை
அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.

பொழிப்புரை :

உலகத்தாயும், தந்தையுமாகிய சத்தியும், சிவனும் என்பால் அன்புவைத்து எனக்கு ஆவன செய்தலல்லது, என்னைப் பெற்ற தாய் தந்தையர்தாம் என்னை எந்த அளவில் அறிந்து எனக்கு என்ன செய்யவல்லுவர்! ஆகையால், உண்மைத் தாயாகிய சத்தியும், தந்தையாகிய சிவனும், மகனாகிய யானும் மட்டும் ஒன்றி யிருந்த காலத்து யான் அவ்விருவரையே விரும்பி அவரிடம் அயரா அன்பு உடையவனாயினேன்.

குறிப்புரை :

`அதனால், அளவிலா ஆனந்தத்தையும் பெற்றேன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடிக்கு, `அம்மையும் அத்தனுந் தாம் என்னை யாராக அறிவர்?` என உரைக்க. `உயிர்களே தம்மில் ஒன்றற்கு ஒன்று யாதும் செய்து கொள்ளல் இயலாது` என்பது முதல் இரண்டடிகளில் விளக்கப்பட்டது. அதனானே, உயிர்கட்குப் பெத்தம், முத்தி ஆகிய எக்காலத்தும் சத்தியும், சிவனுமே பரம ஆதாரமாதல் விளக்கப்பட்டதாம். இம்மந்திரம் முத்தி பஞ்சாக்கரப் பொருளதாய் நிற்றலை நுனித்துணர்ந்து கொள்க.
இதனால், உயிர்கட்குப் பரம ஆதாரம் இது என்பது வலியுறுத்தப்பட்டது.
சிற்பி