நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்


பண் :

பாடல் எண் : 1

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

பொழிப்புரை :

தன்னுள்ளே ஏரொளி எழப்பெறுவதாகிய தாமரை மலர் நான்கிதழ்களை யுடையது. அவ் ஏரொளியாவது, சுத்த மாயையினின்றும் தோன்றும் வாக்கேயாம். அவ்வொளி பல கூறுகளாய் வளர்ந்து உடம்பெங்கும் குறைவின்றி நிறையப் பெற்ற பின், உடலாகிய சக்கரம் (யந்திரம்) ஏரொளிச் சக்கரமாய்விடும். அப்பொழுது ஐம்பூதங்களில் ஒளிப் பொருளாகிய தீ, அச்சக்கரத்தின் நடுவிலே அணையாது நின்று ஒளிர்வதாம்.

குறிப்புரை :

`எழப்பெறுவதாகிய தாமரை` எனவே, `அதுவே ஏரொளி தோன்றுவதாகிய முதலிடம்` என்பது பெறப்பட்டது. இது `மூலாதாரம்` என்பதும், இதன் இயல்பும் முன்னையதிகாரத்தில் விளக்கப்பட்டன. இவற்றைத் தோற்றுவாய் செய்யவே, `பிற ஆதாரங்களின் இயல்பையும் ஈண்டு நினைவு கூர்க` என்றதாயிற்று. விந்துவினால் - `விந்து` என்னும் காரணப் பொருளால், `அவ் ஏரொளிக் கலை`எனச் சுட்டினை மாற்றி யுரைக்க. ``எங்கும்`` என்றது, `உடலெங்கும்` என்னும் பொருளதே யாதலின், `ஏரொளிச் சக்கரமாய் அமைவது உடம்பே` என்பதுபோந்தது. போதரவே, அஃது அங்ஙனம் அமையுமாற்றைப் புறத்துக் கண்டு வழிபடும் முறை இனி இங்குக் கூறப்படுவது என்பது விளங்கும். ``அந்நடு`` என்றது `அதன் நடு` என்றவாறு. `உடலாகிய சக்கரத்தின் நடுவே தீ நிற்கும்` எனவே, `புறத்து வரையப்படும் சக்கரத்தின் நடுவில் அக்கினிக்குரிய `ஹ்ரூம்` என்னும் பீசாக்கரம் அடைக்கப்படும் என்பது புலனாம்.
இதனால், இவ்வதிகாரப் பொருள்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.

பொழிப்புரை :

தீயின் பீசாக்கரங்களே ஏனைய பூத அக்கரங்கள் எல்லாவற்றினும் சிறந்து நிற்கும். அதனால், அவை வானத்தையும் அளாவி நிற்கும். அவற்றையே `சக்கரம்` என்று கூடச் சொல்லி விடலாம்; அவற்றைச் சக்கரத்துள் இடும் முறை இங்குச் சொல்லப்படும்.

குறிப்புரை :

பிரணவத்தோடு கூடி நிற்றல் பற்றிப் பன்மையாக ஓதப் பட்டது. மூன்றிடத்தும் `அவையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல் பெற்றது. ``சொல்லும்`` என்றது `சொல்லப்படும்` என்றவாறு.
இதனால், மேல், ``அந்நடு வன்னி`` என்றதன் சிறப்புக் கூறப்பட்டது. இச்சிறப்பு, ஒளிச் சக்கரமாகிய இயைபு பற்றிக் கொள்ளப்படுவது என்க.

பண் :

பாடல் எண் : 3

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :

``விந்துவினால் எழும் நாதம்`` என்புழிச் சொல்லப் பட்ட சுத்த மாயை வாக்காக விருத்திப்படுமிடத்துப் பன்னிரு பிராசாத கலைகளாயும் விருத்திப்படுவதாம். அக்கலைகளே சிவமாயும் விளங்கும். அவைகளை, நூற்று நாற்பத்து நான்கு அறைகளில் அமைக்க, மேற்கூறிய ஏரொளிச் சக்கரம் தோன்றுவதாம்.

குறிப்புரை :

நாதம் - வாக்கு. அதன் கலைகளையும் நாதம் என்னும் பெயராற் கூறினார். ``எழுத்து`` என்றதும் அதனை. பிராசாத கலைகள் முன்னைத் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `அவ்வெழுத்து அப் பதியாவன` என மாறிக் கூட்டுக. `பதியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. சிவசத்தியால் நேரே இயக்கப்படுதலால், `சிவமும் ஆவன` என்றார். நூற்று நாற்பது அறைகள் அமையுமாறு பின்னர்க் காட்டப்படும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் வடிவு பொதுமையிற் கூறி, அது திருவருளைப் பெறுதற்கு வாயிலாதற் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.

பொழிப்புரை :

உயிரெழுத்துக்களின் ஈற்றில் ஓதப்படும் விந்து வாகிய `அம்` என்பது தனிஓர் எழுத்தாய் நிற்பினும், அகரம் முதலிய பிற உயிர்களோடு கூடி நிற்றலும் உடைத்து, முடிவில் உள்ள நாதமாகிய `அ;` என்பதும் அத்தன்மையது. சக்கரங்களில் முதற்கண் உள்ள அறையில் எந்த எழுத்து உள்ளதோ, அந்த எழுத்துக்குரிய கலையின் சக்கரம் அதுவாகும். அவ்விடத்து அச்சக்கரம் அக்கலைக்குரிய பிண்டமாதலேயன்றி அண்டமாயும் விளங்கும்.

குறிப்புரை :

``அவ்வெழுத்து`` மேற்சொல்லப்பட்ட கலைக்குரிய எழுத்து, அவை பின்னர் அறியப்படும். `சக்கரமே ஞாலமாய் வரும்` என மாற்றிக் கொள்க.
இதனால், ஏரொளிச்சக்கர எழுத்துக்கள் சிலவற்றின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரம் பல உலகங்களாயும் அமையும் பெருமையது. அதில் உள்ள விந்து நாதங்களும் அன்ன. அதனால் அச்சக்கரத்தில் இருக்கும் எழுத்துக்களை அறிவுடையோர் சிவமேயாக எண்ணுதலில் தலைப்படுவர்.

குறிப்புரை :

`எழுத்தை அப்பதியாக யோசித்தலில் ஞாலம் ஆயிடும்` என்க. மூன்றாம் அடியில் ``ஞாலம்`` என்றது அறிவுடையோரை. இதனால், ஏரொளிச் சக்கரத்தின் எழுத்துக்களைச் சிவமாக எண்ணுதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும், விருத்திப் பட்ட எழுத்துக்கள் முதற்கண் `நாதமும், விந்துவும்` என்னும் சூக்கும, சூக்குமாசூக்கும நிலைகளாய் நின்று, பின்னரே தூலமாயினவாம். அந்த எழுத்துக்களால் சக்கரங்கள் அமையுமிடத்து ஒடுக்க முறையில் முதற்கண் பிருதிவி சக்கரமும், அதன்மேல் அப்பு சக்கரமும் நிற்கும்.

குறிப்புரை :

`விந்துவும் நாதமும் ஆய்` என ஆக்கம் வருவித்து முடிக்க. ``விந்துவும், நாதமும்`` என்றது ஒடுக்கமுறை. விந்துவே, `பைசந்தி` எனவும், நாதமே `சூக்குமை அல்லது பரை` எனவும் சொல்லப்படும். விரிந்தநிலை மத்திமையும், வைகரியும், இச் சக்கரங்கள் அமையுமாற்றைப் பின்னர்க் காண்க. இதனால், ஏரொளிச் சக்கரத்தின் பகுதிகள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய அப்புசக்கரத்தின்மேல் தேயுசக்கரம், அதன்மேல் வாயுசக்கரமும், அதன்மேல் ஆகாய சக்கரமும் அமையும்.

குறிப்புரை :

முதலடி அனுவாதம், இம் மந்திரத்தில் அப்புவை அடியாக எடுத்தமையின்யாவும் அதன்மேல் உள்ளனவாக ஓதினார்.
இதனால், அவை மற்றும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.

பொழிப்புரை :

ஆகாய பீசத்தைச் சொல்வதனால், ஆகாய சக்கரத்தில் அமைந்த எழுத்துக்கள் யாவும் அந்த ஆகாய பீசமாகவே ஆய்விடும். அதனால், ஆகாய சக்கரம் சிவானந்தத்தைப் பயக்கும் ஆற்றலுடையதாம்.

குறிப்புரை :

``சொல்லிடில்`` என்பது காரணப்பொருளில் வந்தது. இறுதிக்கண் இவ்வாறு கூறவே, ஏனைய பூத எழுத்துக்களைச் சொல் வதனால், அவ்வச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்களும் அவ்வாறாய்ப் பயன் தருதல் கொள்ளப்படும்.
இதனால், முன்னை இருமந்திரங்களில் எய்திவற்றிற்கு மேலும் ஒரு சிறப்புநிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.

பொழிப்புரை :

இங்கு அறியப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரம், வரிசைக்கு ஐந்தாக ஐந்துவரியில் இடப்படும், இருபத்தைந்து புள்ளி களால் அமைவது. (எனவே அப்புள்ளிகளை நேர்க் கோடுகளால் இணைக்கத் தோன்றும் நானான்கு (4X4=16) பதினாறு அறை களால் அமைதல் பெறப்பட்டது.) அவ் அறைகளில் உயிரெழுத்துப் பதினாறும் நாதம் முதலாக அடைக்கப்படும். இவ்வாறாக அமையும் இச்சக்கரம் பொதுவே சிவசூரியனால் விளக்கப்படுவது.

குறிப்புரை :

``நாதம் முதலா`` என்றது ஒடுக்கமுறைபற்றி. உயிரெழுத் தின் ஈற்றில் நிற்கும் விசர்க்கத்தை `நாதம்` என்றும், அதன் அயலில் நிற்கும் அநுசுவாரத்தை `விந்து` என்றும் குறிப்பிடுதல் வழக்கு. பதி - பதம்; அறை. ஓர்க்கும் - பதிகளில் வைத்து நினைக்கப்படும். இருபத் தைந்து புள்ளிகளால் பதினாறு அறையுள்ள சக்கரம் அமைக்குமாறு:-
இதனால் ஏரொளிச்சக்கரத்தின் பகுதி வடிவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

பொழிப்புரை :

மாதுருகாட்சரங்களில் அகாரம் முதலிய ஆறு எழுத்துக்களும் சிவன் எழுத்துக்களும் ஏகாரம் முதலிய ஆறு எழுத் துக்கள் சத்தி எழுத்துக்களும், இவற்றுக்கு இடையே உள்ள நான்கு எழுத்துக்கள் அங்கி எழுத்துக்களும் ஆகும். ஆதலின், உடலெழுத் துக்கள் பலவும் இந்த உயிரெழுத்துப் பதினாறனுள்ளே அடங்கிநிற்கும்.

குறிப்புரை :

உயிரெழுத்துக்களில் ஆறாவது எழுத்தினையே `இரு` எனத் தமிழ்முறையாற் குறித்தார். இதில் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது. நான்காம் அடியில், ``முதல்`` என்று, `முதன்மையான எழுத்து` என்றதாம். இரண்டாம் அடியின் முதற்சீரை முதலடியின் முதற்சீரே போலவும், மூன்றாம் அடியின் முதற்சீரை நான்காமடியின் முதற்சீரே போலவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக. உடலெழுத்துக்கள் பலவும் உயிரெழுத்துக்களில் அடங்கும் எனவே, அவ்வுயிரெழுத்துப் பதினாறினாற்றானே ஏரொளிச் சக்கரம் ஆக்கப்படும் என்றதாயிற்று, அங்ஙனம், அச்சக்கரம் அமையுமாறு:-

எழுத்துக்களின் வைப்பு முறையில் ஏழாவது முதலாகப் பத்தாவது முடிவாக உள்ள அந்நான்கு எழுத்துக்களை அம்முறை யானே அடைத்தல் வேண்டுமாயினும், நாயனார் அவற்றை அங்கி எழுத்துக்களாக ஈற்றில் வைத்து ஓதினமையின் அவைகளை மேற் காட்டிய முறையானே அடைத்தல் வேண்டும். மேல் (1240) ``சொல்லிடு விந்துவும் ஈராறு நாதமாம்`` என்றமையால், ஆதி எழுத்தாய அம்முதல் ஆறும், அம்மை எழுத்தாய ஏமுதல் ஆறும் ஆகிய பன்னீரெழுத்துக்களையும் முறையானே அகார கலை முதலிய பிராசாத கலை பன்னிரண்டிற்குரிய பன்னிரு கலைக்கும் உரிய எழுத்துக்களாகக் கொள்ளல் வேண்டும்` ``மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கரமாய்வரும்`` (1241) என்றமையால், மேற்காட்டியவாறு இருபத்தைந்து புள்ளிகளால் பிறந்த பதினாறு அறைகளையுடைய சக்கரம் பன்னிரண்டு வரைந்து, அவை ஒவ்வொன்றின் முதல் அறையிலும் அ ஆ முதலிய பன்னிரண்டு எழுத்துக்களையும் முறையானே வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே அடைத்து, எல்லாச் சக்கரங்களிலும் இங்குக் காட்டிய வாறே நான்காம் வரிசையில் ஏழாம் உயிர் முதலிய நான்கனையும் அடைத்து முடிக்க. அகாரம் முதற்கண் நின்றது முதலிய சக்கரங்கள் பன்னிரண்டும், முறையானே அகார கலா சக்கரம், உகார கலா சக்கரம் முதலாக உன்மனா கலாசக்கரம் இறுவாய்ப் பன்னிரு பிராசாத கலா சக்கரங்களாய் விளங்கும். பிராசாத கலைகள் பன்னிரண்டில் வியாபினிக்கும், சமனைக்கும் இடையே வியோம ரூபினி முதலிய நான்கு கலைகள் அடங்கி நிற்கும். ஆதலால், எல்லாச் சக்கரங்களிலும் நான்காம் வரிசையில் உள்ள ஏழாம் உயிர் முதலிய நான்கு கலைகட்கும் உரிய எழுத்துக்களாகக் கருதிக்கொள்க.
பன்னிரண்டு சக்கரங்களிலும் உள்ள அறைகள் அனைத்தும் கூடி, (12X16=192)நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆயினும், ஏழாம் உயிர் முதலிய நான்கெழுத்துக்கள் உள்ள(4X12=48) நாற்பத் தெட்டு அறைகளை எண்ணாது விடுப்ப, எஞ்சிய அறைகள் (12X12 =144)நூற்று நாற்பத்து நான்காய் வரையறைப்படும். அதனையே மேல் (1240)``சொல்லிய நூறொடு நாற்பத்து நால்உரு`` என்றார்.
இன்னும், ``விரிந்த எழுத்து, அப்பதுவாக`` என்னும் மந்திரங்களில் (1243, 44) அகார கலை முதலிய பன்னிரு கலைகளும் பிருதிவி முதலிய ஐம்பூதங்களில் நிற்கும் எனக் கூறினமையாலும், பிருதிவி முதலிய பூதங்கள் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாகவும் கருதப்படும் ஆதலாலும், அகார கலை முதலிய நான்கு கலைகளும் நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளிலும், அர்த்த சந்திரன் முதலிய நான்கு கலைகளும் சாந்தியதீத கலையிலும் நிற்க, சத்தி முதலிய நான்கு கலைகள் சாந்தியதீத கலைக்கு மேல் உள்ள மந்திர கலையில் நிற்கும் ஆதலாலும் அவற்றின்மேல் முறையானே அப்பன்னிரு சக்கரங் களையும் அமைத்தல் வேண்டும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் களது தொகையும், முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் கள் நூற்று நாற்பத்து நான்கும் மந்திர கலை உளப்பட ஆறு வட்டங் களில் நிற்பனவாம். அவ் ஆறுவட்டங்களின் நடுவே அமைந்த இடமே ஏரொளிச் சக்கரத்தின் நடுவிடமாக, அவ்விடத்திலே முதற்கண் (1238) கூறிய வன்னி பீசமாகிய `ஓம் ரம்` என்பதுபொறிக்கப்படும். அவ் விடத்து நிற்கும் பிரணவமும், பீசமுமாகிய அவையே சிவசோதி சொரூபமாய் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக் களிலும் தனது ஆற்றலால் வியாபித்து நிற்கும்.

குறிப்புரை :

முதற்றொட்டு இதுகாறும் கூறிவந்த ஏரொளிச் சக்கரத் தின் முழு வடிவம் இங்குத் தனியாகக் கொடுக்கப் பட்டிருத்தல் காண்க.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் ஒளி எழுத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அந்தமும் ஈறும் முதலா னவைஅற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருட மானதே.

பொழிப்புரை :

உடலெழுத்துக்களில் கவர்க்கமாதி ஐவருக்கத்தின் ஈற்றெழுத்துக்களும், யகாராதி சகாராதி (‹) வருக்கங்களின் ஈற்றெழுத்துக்களும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத்துக்களோடு கூடி அனாகத சக்கரத்தோடே நீங்கி யொழிய, விசுத்தி, ஆஞ்ஞை என்னும் இறுதி இரண்டாதாரங்களிலே உயிரெழுத்துப் பதினாறனோடு மற்றிரண்டெழுத்துக் கூடப் பதினெட்டெழுத்தே நிற்றலால், எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய பரசிவனும் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரண்டு எழுத்துக் கடந்து நிற்பவனாகவே எண்ணப்படுகின்றான். அதனால், யோகத்தின் முடிவும் சந்திர மண்டலத்தையும் கடந்து துவாதசாந்தத்தை அடைவதே யாகின்றது.

குறிப்புரை :

`முதலானவற்றொடு` என உருபு விரிக்க. முன்னை மந்திரத்தில் `எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்`` என்றதனானே, ``அப்பதினெட்டு`` எனப்பட்டவை எழுத்துக்களாதல் பெறப்பட்டது. இறுதி ``அந்தம்`` இரண்டு முறையே சிவனையும், யோகத்தின் முடிவை யும் உணர்த்தின. பன்னிரண்டைக் கடந்தவனை, பதின் மூன்றாவதில் நிற்பவனாகக்கூறினார். கை - பக்கம்; இடம். நாத காரியமாவன் ஐம்ப தெழுத்துக்களாக, அவற்றுட் சிலவற்றானே ஏரொளிச் சக்கரம் அமை யும் என்றது என்னை? என்னும் ஐயத்தினை, முன்னிரண்டடிகளால் காரணங் காட்டி அறுத்தருளினார். பதின்மூன்றாந் தானமே துவாத சாந்தம்; அங்கே உள்ள பரவெளியே பரசிவன் விளங்கும் இடம்.
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 1
என்றார் திருவுந்தியாரிலும். பதின்மூன்றாந் தானத்தில் நிற்றலை எடுத்தோதியது பன்னிரண்டு எழுத்துக்களைக் கடந்தவனாக எண்ணப் படுதலை உணர்த்தற்கு. ஈற்றடியால். ஆதார யோகத்தோடு நின்றொழி யாது, நிராதாரத்தின்வழி மீதானத்துச் செல்லுதலின் இன்றியமை யாமையைக் குறித்தார்.
இதனால், இவ்வதிகாரத்தின் கண்ணது, ஓர் ஐயம் அறுக்கப் பட்டது. முதற்றொட்டு இதுகாறும் வந்த மந்திரங்களின் வழி, அமையும் சக்கர வடிம் தனியாகக் காட்டப்பட்டிருத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 13

ஆஇன மானவை முந்நூற் றறுபதும்
ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும்
ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும்
ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.

பொழிப்புரை :

ஐம்பதெழுத்துக்களில் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அவ்வுயிரெழுத்துக்கள் பன்னிரண்டுமே முந்நூற்றறுபது நாள்களாகிய ஆண்டும், பதினைந்து நாள்களாகிய பக்கமும், ஆறும், பன்னிரண்டும் ஆகிய இருதுக்களும், மாதங்களும் என்று இவை அனைத்துமாய் நிற்கும். அவற்றிற்கு அச்சிறப்பு, சிவ சூரியனது தோற்றத்தால் ஆனதாம்.

குறிப்புரை :

அ இனம் - அகரம் முதலிய உயிரெழுத்துக்கள் தொடை நோக்கி அகரம் நீட்டல் பெற்றது. எனவே, மேல் (1246) ``அறிந்திடும் அப்பகலோன் நிலையாமே`` என்றதனை வலியுறுத்தியவாறாயிற்று. வலியுறுத்தவே, பிராசாத யோகிகட்கு இச்சக்கர பாவனா முதிர்ச்சியே காலக் கணக்காய் அமைதல் கொள்க.
இதனால், ஏரொளிச்சக்கர எழுத்துக்கள் பற்றியதோர் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

வந்திடும் ஆகாச ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்ப திராசியும்
வந்திடும் நாளது முந்நூற் றறுபதும்
வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரமே மேற்கூறிய சிவசூரியன் தோன்றும் ஆகாச வழியாகும். அதனால், அதன்கண் உள்ள எழுத்துக் களே அச்சூரியன் இயக்கத்தால் அமைகின்ற நாழிகைகளும், அந் நாழிகையால் ஆம் நாட்களும், அந்நாட்களால் ஆம் மாதங்களும், அம் மாதங்களின் நாள் முந்நூற்றறுபதால் அமைகின்ற ஆண்டும் ஆகும்.

குறிப்புரை :

``அது`` என்றது ஏரொளிச் சக்கரத்தை. செய்யுள் நோக்கி, நாழிகைக்குரிய `அறுபது` என்பதும், இராசிக்குரிய `பன்னிரண்டு` என்பதும் ஆகிய எண்ணுப் பெயர்கள் தொகுக்கப் பட்டன. ``இராசி`` என்றது மாதத்தை. `அக்கரமே வந்திடும் நாழிகை அறுபதும், வந்திடும் நாளது முப்பதும். இராசிபன்னிரண்டும் வந்திடும் நாளது முந் நூற்றறுபது வந்திடும் ஆண்டுமாகிய அவ் வில்லாக வகுத்துரை` எனச் சொற்களை விரித்தும் மாறிக் கூட்டியும் பொருள் உரைத்துக்கொள்க. வில் - ஒளி; என்றது, `சோதிட வகை` என்றவாறு.
இதனால், மேற்கூறிய சிறப்புப்படும் வகையெலாம் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 15

அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம்
தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.

பொழிப்புரை :

இராசிகள் பன்னிரண்டில் இடபம் முதல் நான் கினை முதற் கூறாகவும், விருச்சிகம் முதல் நான்கினைக் கடைக் கூறாகவும், எஞ்சிய நான்கையும் இடைக் கூறாகவும் பகுத்து, அக்கூறுகளை முறையே `மேட வீதி, மிதுன வீதி, இடப வீதி` எனக் கொள்க. இராசிகள் பன்னிரண்டும் இங்ஙனம் இம் மூன்று வீதிகளாய் அமைவனவாம்.

குறிப்புரை :

``அவ்வினம்`` - முதலாய்சிறந்து நிற்கும் அக்கூட்டம். `கவ்வினம்` என்பது விகாரமாயிற்று. கவ்வுதல், தனை அடுத்திருத்தல். தவ்வினம் - தவிர்ந்தன; எஞ்சியன, `இனம்` என்றது தமக்கு ஒரு முதல் உடையவற்றை. எனவே, அம் முதலோடு கூட நான்கிராசி ஒரு கூறுபடும் என்க. `வீதி` என்பது, `சூரியன் செல்லும் வழி` என்பர்.
இதனால், மேலவை பற்றியதொரு முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு சக்கரங் களும் முறையே மேடம் முதலிய பன்னிரண்டு இராசியுள் நிற்பன வாகக் கருதித் தியானிக்கப்படும். அத்தியானம் பன்னிரண்டாம் ராசி முடியச்சென்று முற்றின், தியானிப்பவன் விந்து வெளியைப் பெற்ற வனாய்த் திகழ்வான். அவன் பின்னும் அந்தத் தியானத்திலே அழுந்தி நிற்பின், நாத ஒலியைக் கேட்பவனாகவும் ஆவான். பன்னிரு சக்கரங் களும் பன்னிரண்டு இராசிக்குள் நிற்பனவாகக் கருதும் கருத்திற்கு இதுவே பயனாகும்.

குறிப்புரை :

``எங்கும் நிறைந்தபின்`` எனவும் ``ஒத்தபின்`` எனவும் போந்த அனுவாதத்தால், அங்ஙனம் நிறைவுறும்படித்தியானித்தலும், ஒத்தலும் பெறப்பட்டன. `விந்துவாம் என்றறி` எனமாற்றிக் கொள்க. பிராசாத கலைகள் பலவாயினும், இடைநிற்கும் விந்து நாத கலைகளையே சிறந்தனவாகக் கூறுவர். அக்கலைகள் அனுபவத்தில் முறையே ஒளியாயும், ஒலியாயும், தோன்றும் என்க.
இதனால், ஏரொளிச் சக்கரத் தியான முறையும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.

பொழிப்புரை :

தம்மை அடுத்து நிற்கும் எழுத்துக் காரணமாகத் தாமும் விந்துவாய் நிற்கின்ற, ஏரொளிச் சக்கர எழுத்துக்கள், அன்ன காரணத்தானே நாதமாயும் நிற்கும். அவ்வெழுத்துக்களை அங்ஙனம் தியானித்தலில் சிறிதும் திரியாது நிற்பின், அந்நிலையின்பின் மேற்கூறிய ஒளிக்காட்சி விண்மீன்போலப் புலப்படும்.

குறிப்புரை :

`உயிரெழுத்துப் பதினாறனுள் ஈற்றில் நிற்கும் இரண் டெழுத்துக்கள் முறையே விந்து நாதங்களாய் நிற்கும்` என்பது முன்பே கூறப்பட்டது. அவற்றைத் தங்கீழ்ப் பெற்றவழி ஏனை உயிரெழுத் துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் எல்லாம் அங்ஙனமே விந்துவும், நாதமுமாய் நிற்கும் என்பதை இங்கு முதல் இரண்டு அடிகளில் எடுத் தோதினார். இரண்டாம் அடியின் பொருள், `நாதம் ஓங்கும் எழுத்துடன் (கூடி) அதுவாயும் நின்றிடும்` என்பதாம். நின்றிடும் அப்பதி - மனம் நிலைபெற்று நிற்கின்ற அந்த அறைகளில். அவ் வெழுத்தே வருதல், அந்த எழுத்தே தியானிக்கப்படுவனவாய் நிகழ்தல். நின்றிடும் அப்புறம் - நிற்கும் அந்நிலைக்குப்பின் `ஆகும்` எனற்பாலது, தெளிவு பற்றி, ``ஆனது`` எனப்பட்டது. ஒலியனுபவம், ஒளியனுபவம் இரண்டுமே நிகழுமாயினும் பரியதாய் முதற்கண் நிகழும் ஒளி யனுபவத்தையே சிறந்தெடுத்து ஓதினாராதலின், ஒலி யனுபவத்தை விலக்கிற்றிலர் என்க.
இதனால், மேற்கூறிய பயன்களுள் ஒன்றன் நிலை வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

பொழிப்புரை :

மேற் கூறியது காரணமாக ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரு கலா சக்கரங்களைப் பன்னிரு விண்மீன்கள் என்று கூறலாம். ஆயினும் அவற்றின் தியான முதிர்ச்சியில் விண்மீனினும் மிக்க பேரொளி ஒன்று மேலே உள்ளமை புலனாகும். ஆதலால், அந்த விண்மீன்போல நிற்கும் ஒளிக்காட்சியை இடைவிடாது காணுதல் அப்பேரொளி சிறிதுசிறிதாக மிக்கு விளங்குதற் பொருட்டாம்.

குறிப்புரை :

``சமைந்தது`` என்றது ஒப்புமை வழக்கு. `ஓர் பேரொளி தழைத்தது` என மாற்றிக்கொள்க. ``மேலே தழைத்ததோர் பேரொளி`` என்றே பாடம் ஓதலுமாம். `சந்திரனும், பகலோனுமாய்` என ஆக்கம் விரிக்க. வருதல் - புலனாதல். அடுக்கு, இடைவிடாமைப்பொருட்டு. `கண்டது வர` என மேலே கூட்டி முடிக்க.
இதனால், ஒளிக் காட்சி முதிர்வு தியான முதிர்ச்சியாதலால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றாற் கண்டு தியானிக்கின்ற சக்கரத்தின் பயன் விந்துவாகிய ஒளிக்காட்சியின் வளர்ச்சியே. அவ்வளர்ச்சியோடுகூட அதற்குத் தக நாத ஒலியும் மிக மிகக் கேட்கப்படும், அவ்விரண்டனாலும் ஆன்மாவின் உள்ளொளியாய் அதனுட் கரந்து நின்ற சிவமும் அனுபவப் பட்டுவரும். அன்னதொரு சிவானுபூதிக்குப்பின் ஆன்மாவைத் தன்னுள் அடங்கக்கொண்டு விரிந்துள்ள சத்தி ஒளியாகிய நீல ஒளி காட்சிப்படுவதாம்.

குறிப்புரை :

`வளர்வது` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. கண்டிடும் நான்கில் இடை இரண்டும் `அனுபவித்திடும்` என்னும் பொருளன. இறுதியது, `கண்டிடப்படும்` என்னும் பொருளது. இஃதொன்றும் முற்று; ஏனையவை எச்சம். ``வன்னி`` என்றது `ஒளி` என்றவாறு. `காரொளியானது கண்டிடப்படும்` என்க. ``எழுந்திட, ஒத்தபின்`` என்ற அனுவாதங்களால், எழுதலும், ஒத்தலும் பெறப் பட்டமை அறிக. ஒத்தல், விந்து நாதங்களின் வெளிப்பாட்டுக்குச் சமமாதல். `அப்புறக்காரொளி` என்பது மெலிந்து நின்றது. விந்து ஒளியை வளர்த்தலேயன்றிச் சிவஒளி சத்தி ஒளிகளையும் முறை யானே பயக்கும். இதனானும் இச்சக்கரம் ஏரொளிச் சக்கரமாதல் காண்க.
இதனால், ஒளிக் காட்சி முதிர்வின்பின் நிகழ்வன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

பொழிப்புரை :

யோக முதிர்ச்சியில் நீல ஒளியாய்க் காணப்படும் சத்திஒளி பூதாகாயத்தின் மேற்பட்ட பராகாயமாய் உலகத்தைத் தன்னுட் கொண்டு பரந்து நிற்றலாலே ஐம்பெரும் பூதங்கள் முதலிய பொருள்கள் பலவும் பயன் தரும் பொருளாய்ச் சிறந்து விளங்கு கின்றன. அச்சத்தி ஒளியூடே அதனினும் நுண்ணிய சிவமாகிய மெய்ப் பொருள் ஒன்றுபட்டு அச்சத்தி ஒளி உள்ள பொருள்களில் எல்லாம் தானும் உடன் நிறைந்து நிற்கின்றது.

குறிப்புரை :

`அதனை மறத்தல் கூடாது` என்பது குறிப்பெச்சம். அண்டம் - ஆகாயம். `அண்டமாய்` என ஆக்கம் விரிக்க. பொதிந்து - பொதிதலால். `உலகெங்கும் பொதிந்து` என மாற்றுக. விளக்கத்தையே இங்கு, `ஒளி` எனப் பன்முறையும் ஓதினார். சார் - யாதானும் ஒன்றைப் பற்றியே நிற்பதாகிய நெருப்பு. நேர்மை - நுண்மை. மூன்றாம் அடி உயி ரெதுகை.
இதனால், மேற்கூறிய சத்தி ஒளியது சிறப்பும், அதனோடு உடனிலையாய் நிற்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு சத்தியாகிய பராகாயம் பல அண்டங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிப் பரந்து நிற்பது, அவை நிலைபெறுதலைச் செய்தற் பொருட்டாம். இனி அவ்வண்டம் முதலிய பொருள்கள் மாயையின் விளைவுகளாய் உயிர்கட்குச் சிவத்தை மறைத்துத் தம்மையே காட்டி நிற்றலால், அவற்றை அவ்வாற்றாற் செயற் படச் செய்யும் சத்தியும் ஓராற்றால் ஆணவ மலத்தோடு ஒப்பதாம்.

குறிப்புரை :

உம்மை இரண்டனுள் முன்னது சிறப்பு; பின்னது இறந்தது தழுவிய எச்சம். அவற்றுள் சிறப்பும்மையைப் பிரித்து, `நின்றதும்` எனக்கூட்டி உரைக்க. `அண்டம் நின்றதும் நிலைபெறக் கண்டிட` என முடியும். ``இவ்வண்டம்`` மூன்றனுள் இடையது ஒன்றும் பராகாயம்; ஏனையவை பௌதிக அண்டங்கள். பலம் - பயன்; விளைவு; `காரியம்` என்றவாறு. ``விந்து பலமதே; ஆதலின் சத்தியும் மூல மலம் ஒக்கும்` எனக் கூட்டி முடிக்க. இச்சத்தி இவ்வாற்றால் திரோ தானகரி எனப்படுதலும் அங்ஙனமாதற்குப் பயன் மூல மலத்தைப் போக்குதலும் ஆதல் வெளிப்படை. மாயையையும் இங்கு ``விந்து`` என்றே போயினார். அதனுள் வியாப்பியமாம் ஒற்றுமை பற்றி.
இதனால், சத்தியது வியாபகத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம்
விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

பொழிப்புரை :

`ஏரொளிச் சக்கரம் எல்லா உலகங்களையும் அடக்கி நிற்கும்` என்பது விளக்குதற்கு இது முதல் நான்கு மந்திரங்களால் உலக உற்பத்தி முறையை உணர்த்துகின்றார்.
`விந்து, நாதம்` என்ற இரண்டு தத்துவங்கள் உலகிற்கு அடி நிலையாய் உள்ளன. அவை யிரண்டும் முதற்கண் நிற்றல் போலத் தனித்து நில்லாது சமமாய்க் கலந்து கீழ்வருமாயின், அங்ஙனம் கலந்த அக்கலப்பே உலகத்திற்கு முதலாய் நிற்கும். பின்பு விந்து மிகுதியாக நாதம் குறைந்து நிற்க வேண்டில், அங்ஙனம் நிற்றற்கும் நாதத்தினும் விந்துவை எண்மடங்கு மிகுதியாகக் கொண்ட ஒருநிலை முதலாக அமையும்.

குறிப்புரை :

ஒப்பற்ற தனிப்பெரும் பொருளாகிய சிவம் உலகத்தை எண்ணாது இயல்யாய் நிற்கும் நிலையில் `சிவம்` என்னும் ஒரு பொருளேயாய் நிற்கும். பின் அது உலகத்தைத் தோற்றுவிக்க எண்ணும் பொழுது` தானும், தன் சக்தியும்` என இருகூறுபட்டு நிற்கும். அவ் இரு கூற்றுள் சிவத்திற்கும், சத்திக்கும் முறையே `நாதம், விந்து` என்பனவும் பெயராம். ஆகவே, நாதத்தினின்றே விந்து தோன்றுவ தாம். அத் தோற்றத்தின்கண் நாதமும், விந்துவும் முறையே தனித்தனி நின்று, பின் இரண்டும் சமமாய்க் கூடி நிற்கும். அந்நிலைக்குச் `சதாசிவம்` அல்லது `சாதாக்கியம்` என்பது பெயர். பின்னர், விந்துக் கூறு மிகுதியாக நாதக் கூறு குறைந்த ஒரு நிலை உளதாம். அதற்கு, `ஈசுரம்` அல்லது `மகேசுரம்` என்பது பெயர். அம் மகேசுரத்திலிருந்து விந்து குறைய நாதம் மிகுந்த ஒரு நிலை தோன்றும். அதற்கு `வித்தை` என்பது பெயர். இங்ஙனம் `நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், வித்தை` என்னும் ஐந்து நிலைகள் அமைந்த பின்னரே, உலகம் பலப் பல வகையில் வியத்தகத் தோன்றுவனவாம். ஆகவே, அவ் அனைத்துத் தோற்றங்கட்கும் முதலாய் அமையும் ஐந்து நிலைகளையே இம்மந்திரத்திற் கூறினார் என்க.
``ஒக்க விழுந்திடில்`` என்றதனால் அவை இரண்டும் முன்னர்த் தனித் தனி நின்றமை பெற்றாம். ``எழுந்திடில்`` என்பது `எழுந்திடல் வேண்டுமாயின்` எனப் பொருள் தந்தது. ``எண்மடி`` என்றது, மிகுதி கூறியவாறு. மூன்று, நான்காம் அடிகள் முறையே வித்தை மகேச்சுரங்களைக் குறித்தமையும், ஐந்து நிலைகளையும் சொற் பல்காது செய்யுட்கேற்பச் சுருங்கி வர ஓதி முடித்தமையும் அறிக. விந்துவை முற்கூறியது ஒடுக்க முறைபற்றி. `விதை, வீசம், (பீசம்) என்னும் பொருட்சொற்கள் `முதனிலை` என்னும் பொருளவாய் நின்றன. இங்கும் இனி வருகின்றவற்றுள்ளும், `விதை` என்னும் இடங்களில் எல்லாம் `விரை` என்றே பாடம் ஓதுவாரும் உளர்.
இதனால், உலகத்திற்கு முதல் முதனிலையாகிய ஐந்து பொருள்கள் கூறப்பட்டன. இவை ஐந்தும் இறைவனாகிய சிவ னுக்கும், அவனுக்கு அவ்வந் நிலைகளில் இடமாய் நிற்கும் சுத்த மாயையின் விரிவுகட்கும் பொது என உணர்க. நாத விந்து நிலை வேறு பாட்டிற்குக் காரணம் முறையே சிவனது சத்தியின் `ஞானம், கிரியை` என்னும் வேறுபாடேயாம். உலகில் ஆண் பெண் கூறுகளாய சுக்கில சோணிதங்களையும் `விந்து, நாதம்` என்னும் பெயர்களால் கூறுப. ஆதலின் இம்மந்திரம் கருவுற்பத்தியாகிய வேறொரு பொருளையும் நயம்படக் தோற்றுவித்து இப்பொருட்குப் பின்னிரண்டடிகள் கருவுற்பத்திக்குச் சோணிதம் குறைதல் நலமாதலைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 23

வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற
வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

பொழிப்புரை :

சிவத்தினின்றும் தோன்றும் உலக முதல்கள் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று மேலாய் நிற்கும். (எனவே, மற்றொன்று கீழாய் நிற்பதாம். ) சிவத்தினின்றும் தோன்றும் அவ் இரு முதல்களும் முதற்கண் தனித்து நின்றவாறு நில்லாது சமமாய்க் கூடி நின்ற, பின்பே சுத்தமாயை பல உலகங்கட்கு முதலாய் நின்று, அவையாய் விரியும்.

குறிப்புரை :

``இரண்டு`` என்றது நாதவிந்துக்களையும், `மேலுற விரிந்திடும்` என்றது நாதத்தையும் என்க. இங்கு, ``நாதம்`` இரண்டும் `சிவம்` என்னும் பொருளவாய் நின்றன, ``வீசமும்`` என்னும் உம்மைகள் சிறப்பு. இறுதியதைப் பிரித்து விந்துவும்` எனக் கூட்டுக. ``விந்து`` இங்கு, சுத்த மாயை `விந்துவும் வீசமாய் விரிந்தது` என ஆக்கம் விரிக்க. காண் உம் அசைகள். `விரைந்திடும், நாதமும்` என்பன பாடம் அல்ல.
இதனால், மேற்கூறிய ஐந்தனுள் சிலவற்றது இயல்பு வகுத்துக் கூறப்பட்டது. அவற்றுள் சாதாக்கியத்தது இன்றியமையாமை வலியுறுத்தப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 24

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவு
விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விதையது வாமே.

பொழிப்புரை :

சுத்த மாயையே அனைத்தையும் வியாபித்து நிற்ப தாகலின், அதனை அறியாதார், `முக்குண வடிவான பிரகிருதி ஒன்றே உலகிற்கு முதனிலை` எனக் கூறும் கூற்று உண்மையன்றாய் ஒழிந்தது. சுத்த மாயை வித்தை முதலாக நாதம் முடிய விரிந்துநின்று அறுபத்து நான்கு கலைகளாகச் சொல்லப்படுகின்ற நூல்களையும் தன்னுட் கொண்டு நிற்குமாயின், சுத்த மாயையே வியாபகமானது; அதுவே உலகிற்குப் பெரு முதல்நிலை.

குறிப்புரை :

உம்மைகள் சிறப்பு. முதலில் உள்ள ``விந்துவும்`` என்பதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. இதனுள், ``வீசம்`` (பீசம்) என்றது, சாங்கியர் முதலிய பலருங் கூறும் முதனிலையைக் குறித்தது. அதுபற்றிக் கூறுவோரது கூற்று வீழ்தலை, அதுவே வீழ்தலாகக் கூறினார். `உட்பட்ட எட்டெட்டுமாய் விரிந்ததாகில்` எனவும், `அதுவே விதையாம்` எனவும் மாற்றுக. `எட்டெட்டுமாய்` என ஆக்கம் வருவிக்க. `உட்கட்ட` என்பதும், `அளவினில்` என்பதும் பாடம் அல்ல. ``அறுபத்துநான்கு கலைகளும்`` என்றது. `சொல்லுலகம் அனைத்தும்` என்றவாறு. இதனாலும், `சொல்லுலகம் ஆகாய பூதத்தின் காரியமே` என்றொழியும் சாங்கியர் முதலியோரது கூற்றுக்களை மறுத்தார். ``ஆகில்`` என்பது, ``நீரின் றமையா துலகெனின்`` 1 என்பதிற்போலத் தெளிவுப் பொருள்தந்தது.
இதனானே, பிற மதத்தார் கூறும் கூற்றுக்களை மறுத்து மேற் கூறியவை வலியுறுத்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 25

விதையது விந்து விளைந்தன எல்லாம்
விதையது விந்து விளைந்த உயிரும்
விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
விதையது விந்து விளைந்தவன் தாளே.

பொழிப்புரை :

சுத்த மாயை முதனிலையாக நிற்பவே பலவகை உலகங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், சவிகற்ப ஞானமும் உளவாவன. ஆயினும் அவை அங்ஙனம் உளவாதல் அம்மாயை சிவசத்தியை நிலைக்களமாகக் கொள்ளுதலாலேயாம்.

குறிப்புரை :

நான்கிடத்தும், `விந்து விதையதுவாகவே` என மாற்றி ஆக்கமும், தேற்றேகாரமும் விரித்துரைக்க. ``உயிர்`` என்றது அவற்றின் பிறப்பாகிய உடம்பை. சவிகற்ப ஞானம் உண்டாதல் சொல்லுலகத்தாலாம். ஈற்றடியில், `விளைந்த` என்னும் வினைப்பெயர் அகரம் தொகுத்தலாயிற்று. அப்பெயர் அத்தொழில் மேல் நின்றது. `அவன் தாட்கண்ணேயாய்` என இறுதியில் உருபும், ஆக்கமும் விரிக்க.
இதனால், மேலவற்றைப் பிறவாற்றால் வலியுறுத்தி, சுத்த மாயை முதனிலையாதல் சுதந்திரமாய் அன்று; சிவசத்தியின் வழியே யாம் என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம்
விளைந்த எழுத்தவை சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

பொழிப்புரை :

காரணகாரியங்கட்கு உள்ள ஒற்றுமையால் விந்து நாதங்களின் காரியமாகிய எழுத்துக்கள் பலவும் விந்து நாதங் களாகவே கொள்ளப்படும். அத்தன்மையவான எழுத்துக்களாலே எல்லாச் சக்கரங்களும் அமைதலின், அச்சக்கரத் தியானத்தால் அவை உடம்பினுள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நின்று உடம்பை யும் விந்து நாதமயமாக்கி, ஆன்மாவையும் மந்திரான்மாவாகச் செய்யும்; அஃது எவ்வாறெனில் எழுத்துக்கள்தாமே மந்திரமாய் உருப் பெறுதலின்.

குறிப்புரை :

`நாதமும்` என்னும் எண்ணும்மையைத் தொகாது வைத்தோதுதல் பாடம் அன்று. ``ஆக`` என்ற வினையெச்சம் காரணப்பொருளில் வந்தது. `தியானத்தால்` என்பது ஆற்றலால் வந்தது. ``நிற்கும்`` என்பது, தன் காரியத்தையும் தோற்றுவித்துநின்றது. ஈற்றில் `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. சக்கரங்களின் இயல்பாகப் பொதுப்படக் கூறினாராயினும், சிறப்புடைய இவ் ஏரொளிச் சக்கரத்தின் இயல்பு உணர்த்துதலே கருத்து.
இதனால், இச்சக்கரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

பொழிப்புரை :

`மந்திரம், சக்கரம்` என்பவற்றின் உண்மையைச் சொல்லுமிடத்து, அவைகளைக்கூறும் நூல்களின் கருத்து, `நாதமாகிய உண்மை எழுத்து ஒன்றே சோதி மண்டலமாம்` என்பதே. ஆகையால், அவ்வுண்மை எழுத்துக்களை உணர்த்தும் கருவிகளாகிய ஆகாய ஒலியையும், அதற்கு அறிகுறியாய் உள்ள வரிவடிவத்தையும் மிகச் சிறப்பித்துக் கூறும் அந்நூன்மொழிகள் முகமனாய் (உபசாரமாய்) அமைவனவே. இதனை, உணர்ந்து பரமபந்தமாய் உள்ள பிரணவத்தைத் தியானிப்பாயாக.

குறிப்புரை :

`தியானிப்பின் அது வேறாய்ப் புலப்பட்டுப் பந்தியா தொழியும்` என்பது கருத்து. உள் எழுத்து - உண்மையெழுத்து. அதனை ``ஒன்று`` என்றது வகைபற்றி. ``ஒன்றே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. வரிவடிவைக் கூறவே, அவற்றால் அறியப்படும் ஒலிவடிவும் பெறப்பட்டது. ``ஒன்றில்லை`` என்றது, `உண்மை ஒன்றில்லை` என்றதாய், உபசாரமாதலை உணர்த்திற்று. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தல் பெற்றது. ``இல்லை`` என்பதன்பின் `ஆதலின்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், மந்திரம், சக்கரம் என்பவற்றது உண்மை கூறிப் பிரணவத் தியானம் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

பொழிப்புரை :

தியானத்தின் பொருட்டு வரையப்பட்ட அறை களில் பொருந்தி விளங்கும் எழுத்துக்கள் அவ் அறைகளின் எல்லைக் கோடுகளைக் கடந்து ஒன்று மற்றொன்றிற் செல்வதில்லை. ஆகை யால், தியானிப்பவன் அவைகளைத் தனக்கு இயல்பாயுள்ள மறதி யாகிய தடை அற்றொழிய, அவ் அறைகளின் வழியே நின்று நினைக்கும் நிலையுடையனாயின், மேற்சொல்லிய உண்மை மந்திரத்தை நேரே காணுதல் கூடும்.

குறிப்புரை :

`உன்ன` என்பதன் ஈற்று அகரமும், `பின்னி, பன்னி` என்பவற்றின் ஈற்று இகரமும் தொகுத்தலாயின. `உன் வட்டம்` என இயைத்து வினைத்தொகை யாக்கலுமாம். தன் இட்டு - தன்னைக் கீழ்ப்படுத்தி.
இதனால், வரிவடிவங்கள் உபசாரத்தால் `மந்திரம்` எனவும், `சக்கரம்` எனவும் கூறப்படுகின்றன என்றமை பற்றி, அதன் கண் உறுதி நெகிழலாகாது என்பது கூறப்பட்டது. நெகிழின் பயன் விளையாது; நெகிழாத வழியே பயன் விளையும் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 29

பார்க்கலு மாகும் பகையறு சக்கரம்
காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

மேற்கூறிய முறைகளை அறிய வல்லவர்க்கு மந்திரங்களின் உண்மைக் காட்சியைக் காணுதலும், புறப்பகை அகப் பகைகளை நீக்குவதாய சக்கரத்தை நழுவ விடாது பற்றி அதனாற் பயன் அடைதலும், இருந்த இடத்திலிருந்தே எவ்விடப் பொருளையும் அகத்தில் காண்டலும், நுண்ணியவற்றிலும் நுண்ணிதாகிய சிவத்தைக் தன்னிடத்திலே பெறுதலும் கூடும்.

குறிப்புரை :

பார்த்தலுக்குச் செயப்படு பொருள் மேல் நின்று வந்தது. `கருத்தில் நோக்கல்` என இயையும். தடம் - வழி; இடம் ஆகு பெயர். நுணுக்கற்ற நுண்பொருள் - தன்னினும் நுணுகியது ஒன்றில்லாத நனி நுண்பொருள்.
இதனால், மேலதன்கண் நெகிழ்வின்றி நிற்றலால் வரும் பயன்கள் பல கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.

பொழிப்புரை :

ஏரொளிச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்கள் மேல் ``அம் முதல் ஆறும்`` என்னும் மந்திரத்தில் (1247) கூறியபடி முதலில் ஆறும், ஈற்றில் ஆறும், இடையில் நான்கும் ஆகிய எழுத்துக்கள் முறையே `சிவன், சத்தி, அக்கினி` என்னும் மூவருக்கும் உரியன ஆதலின், அவை முத்திறமும் கூடிநிற்கும் இச்சக்கரத்தின் பெருமை சொல்லில் அடங்குவதோ!

குறிப்புரை :

`நாலும் அங்கி; பார்` என மாற்றி இருதொடராக்கி உரைக்க. ``நாலும்`` என்றது `மேற்கூறியவாறு` என நினைவுறுத்திய வாறு.
இதனால், இச்சக்கரத்தின் பெருஞ்சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

கூறிய சக்கரத் துள்எழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தில் உள்ள எழுத்துக்களாகிய மந்திரங்கள், சிற்றறிவினார் மதித்து விரும்பும் `தம்பனம், வசியம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம்` என்னும் ஐந்தோடு `மாரணம்` என்பதும் கூட ஆறாகின்ற மாறுபட்ட செயல்களை நல்லனவாக மதித்து விரும்புகின்றவர்கட்கு அவ்வாறே வேறுபட்டனவாகவும் அமைந்து விரிந்துநிற்கும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை இறுதியில் வைத்துரைக்க. `அவ் ஆறியல்பாகவும்` என்னும் சுட்டும் எச்ச உம்மையும் தொகுத்தலாயின. தம்பனம் முதலியவற்றின் இயல்புகள் முன்னைத் தந்திரத்திற் சொல்லப்பட்டன. `மாறு மதித்து` என இயையும். மாறுபட்டனவற்றை, ``மாறு` என்றார்.

பண் :

பாடல் எண் : 32

மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

பொழிப்புரை :

மேற்கூறிய அம் மந்திரங்கள் அவரவரது பக்குவத் திற்கு ஏற்ப, ஒருத்தியே ஆய அருட்சத்தியாயும், அளவற்றவளாய திரோதான சத்தியாயும் நிற்கும். அச்சத்திகள் பலவுமாகின்ற பராசத்தி நீறுபூத்த நெருப்பு போல்பவள். ஆதலின், அம்மந்திரங் களால் உலகப் பயன்கள் கைகூடுமாயினும், பிறரை நலிய எண்ணு கின்ற தம்பனம் முதலியவைகளைச் சிறப்பாக மாரணத்தைப் பெரிதாக மதித்து அவற்றைச் செபித்தால் அவை சீற்றம் அடையும்; அதனால், அவ் இழி பயன்கள் கைகூட மாட்டா.

குறிப்புரை :

அருட்சத்தி, பராசத்தி இவர்களையே ``அம்மை`` என்றார், சிறப்பு நோக்கி. மாமாது - பெரியவள்; என்றது எண் பற்றி. ``ஆகும்`` என்பது எச்சம். மங்கி உள்ள அனல் அதன் இயல்பு அறியாது தீண்டினாரைச் சுடுமாதலின், அது அம்மையின் இயல்பறியாது தீங்கிற்குத் துணைபுரிய வேண்டி அணுகுவாரை ஒறுக்கின்ற பராசக்திக்குத் தொழில் உவமையாயிற்று. ``ஆகில்`` என்பதை, ``மதித்தங் கெழுந்தவை`` என்றதனோடும் கூட்டுக. ``காரணமாகில்`` என்பது பாடம் அன்று. கொதித்து அங்கு எழுந்து - அவ்விடத்துக் கொதித்து எழுதலால். பின்னர், ``கூடகிலா`` என்றே ஒழிந்தாராயினும், அவற்றிற்கு எதிரானவை விளைதல் இதனால் பெற்றாம். இங்ஙனமாயினும் சிறுபான்மை அப்பயன்கள் அப்பொழுதைக்கு நலமாய் விளைதலும், மேல், ``ஆறியல்பாக அமைந்து விரிந்திடும்`` என்றதனாற் பெறுதும்,

பண் :

பாடல் எண் : 33

கூடிய தம்பனம் மாரணம் வச்சியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்தடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்தின் சிறப்பை ஆராய்ந்து அதனை, `இம்மை மறுமை நலங்களைப் பயக்கும் திருவருளின் வாயில்` என்பதாக உள்ளத்திலே தெளிந்து, அவ்வாற்றால் அதனை மேற்கொள்பவர்க்கு, மேலே கூறிய தம்பனம் முதலிய ஆற்றல்கள் விளையாட்டின் தன்மையாக அவர்களிடம் தாமேவந்து பொருந்தி நிற்கும். அதனால், அவர்களைக் கெடுக்க எண்ணுகின்ற பகைவரும் அவர் இருக்கும் திருவருளாகிய பாசறைக்குள் புகமாட்டாதவராவர்.

குறிப்புரை :

`ஆதலின், அவர் அவைபற்றி இச்சக்கர வழி பாட்டினைச் செய்யார்` என்பது குறிப்பெச்சம். தம்பனம் முதலிய ஆறனுள் மூன்றை எடுத்தோதிப் பிறவற்றை உபலக்கணத்தால் தழு வினார், வச்சியம் - வசியம்; ஆரியச்சிதைவு, ``ஆடியல்பாக அமைந்து செறிந்திடும்`` என்றதனால், உயர்ந்தோரும் சிலவிடத்து உலகரை மகிழ்வித்தற்கு மாரணம் ஒழிந்தவற்றைப் பிறர்க்குத் தீங்கு பயவாத வகையில் சிறுபான்மை செய்தல் பெறப்படும். ``பகைவரும் வந்துறார்`` என்றேபோயினாரேனும், `பகைவரது மந்திர வலிகளும், அவரால் ஏவப்படும் தீய தெய்வங்களும் புகமாட்டா` என்பதும் கொள்க.

``ஆதி மந்திரம் அஞ்செழுத் தோதுவார் நோக்கும் மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே`` 1
என்ற சேக்கிழார் திருமொழி இங்கு ஆழ்ந்து உணர்தற்கு உரியது. இம் மூன்று மந்திரங்களாலும், ``ஏரொளிச் சக்கர வழிபாடு தம்பனம் முதலிய இழி பயன்களையும் பயப்பதாயினும், அஃது உயர்ந்தோர்க்கு ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே
அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து
அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.

பொழிப்புரை :

ஏரொளிச் சக்கரத்துள் அகார கலா சக்கரத்தை மூலா தாரத்தில் கருதிக் குண்டலினியோடு பொருந்த வைத்துத் தியானத்தைத் தொடங்க, கலா சக்கரங்கள் பலவும் பிராணாயாமத்தால் முறையே அருளுருவாய் முதிர்ந்து பயன் தரும்.

குறிப்புரை :

`சக்கர அகாரத்தை` எனக் கூட்டுக. அளித்தல் இரண்டிடத்தும் அருளுருவாதல். ஆடுதல், அசைதல், இயங்கல். `நாடிய கால்` என்பது பாடமாயின் `நளிந்தவை` எனப்பாடம் ஓதுக. நளிதல் - செறிதல். குளிர்ச்சி, உறக்கத்தைக் குறித்தது. ``வைத்து`` என்றதனை, `வைக்க` எனத் திரிக்க. ``வைக்க`` என்றே போயினா ராயினும், `வைத்துத் தொடங்க` என்றலே கருத்தாதல், பின்னர் ``எழும்`` என்பதனால் பெறப்படும். `காலால்` என்னும் மூன்றனுருபு தொகுத்தலாயிற்று. `காலால் எழும்` என உடம்பொடுபுணர்த்து ஓதியதனால், `பிராணாயாமம் செய்ய` என்பது கூறியதாம்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் தியான முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :

கால், அரை, முக்கால், ஒன்று என இங்ஙனம் பல வகையால் வரையறுக்கப்பட்ட மாத்திரைகளின் படி அகாரம் முதலிய கலைகள் மந்திரங்களாக உச்சரிக்கப்பட்டுத் தோன்றிப் பொருந்தி அழுந்தி நின்று வளர்ந்து தம் தம் பயனைத் தந்து மேற்போய் பிறவி யாகிய பகை நீங்கும்படி முற்றி நிற்குமாயின், ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அம்மந்திரங்களை அம் முறையானே மாறி நிற்கக் கொண்டு செபிக்கின்ற அவர்களுக்கு அம்மந்திரங்கள் அவர்களை மிகவும் விரும்புகின்றனவாய் அமையும்; `அஃதாவது அவர்க்குக் கைவந்து நிற்கும்` என்பதாம்.

குறிப்புரை :

``காலரை முக்கால் முழுது`` என்றது, `பல்வேறு வரையறையானவை` என்றவாறு. பிராசாதகலைகளின் மாத்திரை யளவை `பிராசாத சட்கம்` முதலிய நூல்களிற் காண்க. ஆலித்து - ஒலித்து; ஒலிக்கப்பட்டு, ஒலிக்கப்படுதல் சக்கரத்தில் உள்ள எழுத்துக் களின் வழியாம். ``மாலுற்ற`` என்றது முற்று. `மந்திரம் மாறிக்கொள் வார்க்கு மாலுற்ற` என்க.
இதனால், `ஏரொளிச் சக்கர மந்திரங்களை மாத்திரை பிறழாது உச்சரித்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டைஉள் நாவில் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி
என்றும் இதயத் தெழுந்து நமவே.

பொழிப்புரை :

பிராசாத கலைகளுக்குரிய மந்திரங்களாகக் கொள்ளப்பட்ட ஏரொளிச் சக்கர எழுத்துக்கள் இறைவன் எழுத் தாகவே ஆகி, யோக முறைப்படி உள்நாக்கில் மாறுபாடு நீங்க ஒலிக்கப் பட்ட பின்னர், முத்திக்கு நேரே வாயிலாகிய திருவைந்தெழுத்து இருதயத்திலே தோன்றி, அவ்வம்பலத்தில் நிறைந்து நிற்கின்ற, சிவமாகிய தூண்டாவிளக்காய் என்றும் ஒளிவிட்டு விளங்கும்.

குறிப்புரை :

பண்டை - பண்டை நெறி. `பண்டையின்` என ஐந்தன் உருபு விரிக்க. பகை - மாறுபாடு. `இன்றும்` என்பது பாடம் அன்று. `விண்டபின் நம எழுந்து ஆயிடும்` என முடிக்க. ``நம`` என்பது, திருவைந்தெழுத்தை முதற்குறிப்பாற் கூறியவாறு. பிராசாத யோகம் முதிர்ந்தவர்க்குத் திருவைந்தெழுத்து மந்திரம் எளிதில் பயன்தரும் என்றவாறு.
இதனால், ஏரொளிச்சக்கரத்தின் முடிந்த பயன் கூறப்பட்டு.
சிற்பி