ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்


பண் :

பாடல் எண் : 1

இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத்
திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

பொழிப்புரை :

சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர்க்குச் சிவனது இரண்டு திருவடிகளைத் தாம் வணங்குதற்குரிய கோலமாக உடம்பில் ஒன்று இரண்டாய்ப் பிணைந்த இருகுழைகள். இரண்டாகப் பொருந்திய முத்திரைகள், இரட்டை வடமாக அமைந்த கண்ட சரமும் ஆகியவை குறையாது பொருந்துதற்கு உரியன.

குறிப்புரை :

சீர் - அழகு. அஃது அதனைத் தருவதாகிய கோலத்தைக் குறித்தது. இணையார் குழையை, `ஆறுகட்டியும், சுந்தரவேடமும்` என்றும், இவை `ஆசிரியர்க்கு உரியன` என்றும் கூறுவர். `இவ்வாசிரியர் கிரியா குரவரே` என்பது இம் மந்திரத்தாற் பெறுதும். இருமுத்திரைகளா வனவற்றை, `இடபக்குறியும் சூலக் குறியும்` எனத் திருநாவுக் கரசரது வரலாறு பற்றிக் கூறுதல் கூடும். அவன் சமண் சமயஞ் சார்ந்திருந்த மாசு தீரவே அவற்றை வேண்டிப் பெற்றமையால், அவை சமய விசேட தீக்கைகட்கு உரியனவாக இங்குக் கூறப்பட்டன எனலாம். ``குன்றாது அணைவாம்`` என்றது, `தவறாது பொருந்துவது` என்றபடி. எனவே, சுத்த சைவர்க்கு அவை இலவாயினும் குற்றமின் றாதல் அறியப்படும்.
இதனால், `அசுத்த சைவருள் ஒருசாரார் இவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.

பொழிப்புரை :

காதில் பொன்னாற் செய்யப்பட்டுப் பொருந்திய கடுக்கன் இரண்டை அணிந்து, சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற `தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்று உடம்புகளையும் சோதித்துத் தூய்மை செய்யப் பெற்று, துவாதச கலாப் பிராசாதயோக நெறியில்நின்று, அந்நிலைக்கு ஏற்பத் தாம் உபதேச முறையாற் பெற்ற திருவைந்தெழுத்தையும் ஓதுபவர் மேற்கூறியவரின் வேறுபட்ட ஒருசார் சைவராவர்.

குறிப்புரை :

தூல உடம்பையே ``திருமேனி`` என்றார். சமய விசேட தீக்கைகளால் தூய்மை பெற்றமை தோன்ற அவ்வாறு கூறினார். சூக்குமம் பர உடம்புகளை ``உட்கட்டு`` எனக் குறித்தார். ``செய்து`` என்றது, `செய்வித்துக் கொண்டு` என்றபடி. ஒருசைவர் - மற்றொருசைவர்; என்றது `ஞானச்சைவர்` என்றவாறு. மேலை மந்திரத்துள் சரியை கிரியையினுள்ளும், இதன்கண் யோகம் ஞானத்துள்ளும் அடக்கப்பட்டன. இங்குக் குறிக்கப்பட்ட ஞானம் கேள்வியளவினது. இவற்றை ``சோதனை செய்து`` எனவும், துவாதெச மார்க்கராய்`` எனவும் போந்த குறிப்புக்களால் அறிக.
இதனால், அவருள் மற்றொருசாராரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

பொழிப்புரை :

பாரத வருடத்தின் ஒன்பது பகுதிகளையும் சென்று கண்டவரே அவைகளில் உள்ள சான்றோர் ஆராய்ந்துகண்ட அரிய உண்மையைக் கண்டவராவர். அதனால், அவர் எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனது நவந்தரு பேதங்களையும் உணர்ந்தோரும், பின்னர்க் கூறப்படும் கடுஞ்சுத்த சைவருக்கு நிகரானவரும் ஆவர்.

குறிப்புரை :

பாரத வருடத்தின் ஒன்பது கண்டங்களாவன:- `இந்திரம், கசேரு, தாமிரவர்ணி, கபத்தி, நாகம், சாந்திரம் காந்தருவம், வாருணம், குமரி` என்னும் பெயருடையவாகச் சொல்லப்படுகின்றன.
`பரத கண்டமே `கடவுள் நிலம்` (புண்ணிய பூமி)` என்றும், `அது மேற் குறித்த ஒன்பது கண்டங்களையுடையது` என்றும் `அக் கண்டங்கள் அனைத்திலும் அரும்பொருளை - மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த `அறிவர்` பலர் நிரம்ப உளர்` என்றும் ஆகமங்கள் கூறுதலால், `அவை அனைத்திலும் தொண்டரொடு கூடிச் சென்று தூநீராடியும், தொழுதகு படிவங்களை வணங்கியும், அறிவரை அடி பணிந்து அரும் பொருள் கேட்டும் வருவோர் அசுத்த சைவராயினும் மெய்ப்பொருளைக் கண்ட சுத்த சைவர் எனச் சொல்லத்தக்க பெருமை யுடையவர்` என்றவாறு `பரத கண்டத்துக் கண்டங்கள் ஒன்பதுள்ளும் குமரிக் கண்டமே சிறந்தது` என்பதும் சிவாகம நூல் துணிபு. இரண் டாவதாய் நின்ற ``கண்டங்கள்``, இடவாகு பெயர். ``கண்ட`` எனப் பொதுப்படக்கூறிய அதனால், அது முழுதுங்கண்டதாயிற்று. இறைவனது பேதங்களை ``மாகண்டம்`` என்றார். அப்பேதங்கள் ஒன்பதும் மேலே கூறப்பட்டன.
இதனால், `சுத்த சைவரல்லாதார் தீர்த்த யாத்திரை தல யாத்திரைகளை இன்றியமையாது மேற்கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது, இதன் பயன் ஞானத்தைப் பெறுதலாகும்.
``மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே`` 1
என்ற தாயுமானவர் மொழி இங்கே நினைக்கத் தக்கது.

பண் :

பாடல் எண் : 4

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

பொழிப்புரை :

`ஞானத்தை விரும்புபவன்` என்று சொல்லப் படுவோன், உலகில் விளங்கித் தோன்றுகின்ற சமய நூல்கள் அனைத்தையும் உணர்ந்த உணர்வோடு, மன ஒடுக்கம் வரும் நிலையையும், முழுமையாக எண்ணப்படுகின்ற `எட்டு` என்னும் தொகையைப் பெற்றுள்ள சித்திகளையும், இவ்வுலகமேயன்றி, ஏனை மேல் கீழ் உலகங்களின் இயல்புகளையும், இருக்கு முதலிய நான்கு வேதங்களின் முடிவாகிய `ஆரணியகங்கள், உபநிடதங்கள்` என்பவற்றின் பொருள்களையும், எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவனது இயல்பையும், அவனுக்கு என்றும் அடிமையாகின்ற தனது இயல்பையும் உணரும் பண்புடையவனேயாவன்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது மேற்கூறியவாறு பொருள் படு மாற்றைப் பின் வருவனவற்றால் அறிக. நன்நூல் - ஞானநூல். இங்ஙனம் பல நூலும் கண்டபின்பே, பொய் பொய்யாய் ஒழிய மெய் மெய்யாய்த் தோன்றும் என்பது பற்றி, இங்ஙனம் ஓதினார். ``நூல் பல கல்`` 1 என்று ஔவையாரும் கூறினார். ``கல்லார் நெஞ்சில் - நில்லான் ஈசன்`` 2 என்று அருளிச்செய்ததும் இது பற்றி. ``கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்`` என்பது பழமொழி. இதில் ``கண்டது`` என்பது கொள்கை வேறுபட்ட அறிஞர் பலரும், `இதுவே நன்னூல்`` எனக் கண்டது என்பதாம். சைவ சந்தான குரவர் நால்வருள் ஒருவர் அருட் குரவரது அருளுரையைப் பெறுதற்குமுன் `சகலாகம பண்டிதர்` எனப் பலராலும் புகழப்பெற்றிருந்தமை அறியத்தக்கது.
இதனால், சுத்த சைவராக வேண்டுவார் கேள்வி ஞானத்திற்குப் பின் சிந்தனையால் முதிர்ச்சி பெறவேண்டுதல் கூறப்பட்டது.
சிற்பி