ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்


பண் :

பாடல் எண் : 1

பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.

பொழிப்புரை :

சுத்த சைவநிலையை அடைய வேண்டுவார் கொள்ளத்தக்க முதற் சாதனங்கள், பொன்னாற் பொதியப்பட்ட உருத்திராக்கங்களின் மாலை, விபூதி என்னும் இரண்டுமாம். இவை நன்மையைத் தருகின்ற பெரிய ஞான சாதனமும், தீமை தோன்றாவாறு செய்கின்ற பெரிய காப்புச் சாதனமுமாம். ஆதலால், அவர்கட்கு இவை இன்றியமையாச் சாதனங்களாகும்.

குறிப்புரை :

எனவே, `இச்சாதனத்தளவில் நிற்போர் ஒரு கூற்று மார்க்க சைவர்` என்றதாயிற்று. முதற்கண் ``சாதனம்`` என்றது உருத்திராக்கத்தை, இதனை ``எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால்``1 என்பதிலும் காண்க.
இதனால், மார்க்க சைவத்துள் ஒரு பகுதி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி
னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.

பொழிப்புரை :

பின்னர்க் கெட்டொழியாது நிலை பெற்று நிற்கும் ஞானத்தை உணர்ந்தவனும், அதனால் `ஞான வேந்தன்` எனப் புகழப்படுபவனும், அழிவில்லாத வேத முடிவில் தொடங்கி விரிந்த சிவாகமங்களின் நாற்பாதங்களினுள்ளும் பொருந்தி விளங்கும் பொருள்கள் விளங்கப்பெற்ற அறிவையுடையவனும், அவற்றால் உண்மை முத்தியாகிய பரமுத்தியைப் பெறும் தகுதியை அடைந்தோனு மாகிய பெருமை பொருந்திய சுத்த சைவனுக்குத் தொண்டு பூண்டவன் பிறவிப் பயனைப் பெற்றவனாவன்.

குறிப்புரை :

எனவே, `இவன், மார்க்க சைவத்துள் மற்றொரு பகுதியினன்` என்பது பெறப்பட்டது. இதனுள் சுத்த சைவனது பெருமையை யே விரித்து, `அவன்பால் பத்தி பூண்டவன் சித்தன்` எனக் கூறப் பட்டது. சித்தன் - சித்திக்கப் பெற்றவன். பெறுதலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``சித்தாந்தம்`` என்றது சிவாகமங்களை.
இதனால், சுத்த சைவர்க்குத் தொண்டு பூண்டொழுகுதலும் மார்க்க சைவத்தின் ஒரு பகுதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.

பொழிப்புரை :

தொல் ஆகமங்கள் ஒன்பதே, `இருபத்தெட்டு` என்பன அவற்றினின்றும் விரிந்தனவாம். `சிவபேதம், உருத்திர பேதம், தேவ பேதம்` என்னும் முப்பேதங்களும் `இருபத்தெட்டு` என்னும் அவற்றில் சொல்லப்படுவனவே. ஆகமங்கள் எத்துணையாக விரிந்து, எத்துணைப் பேதப்பட்டிருப்பினும் தற்போதத்தைப் போக்க வல்ல, வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த மாகிய அவற்றின் துணிபு ஒன்றேயாக முடிந்ததே சுத்த சைவநிலை வாய்ப்பதாகும்.

குறிப்புரை :

எனவே, `அங்ஙனம் பல ஆகமங்களின் பொருள்களை யும் ஒருமைப்பட உணர்தலும் மார்க்க சைவப் பகுதியாம்` என்ற தாயிற்று. இங்குக் கூறப்பட்ட ஆகமம் பற்றிய செய்திகளை முதல் தந்திரம் - ஆகமச் சிறப்பு அதிகாரத்தில் காண்க. ஆன - ஆனவை. மெய்ம்மை - முடிந்த பொருள்.
இதனால், சைவாகமங்களின் பொருள்களை ஒன்றோடு ஒன்று முரணாதவாறு ஒருமைப்படக் காண்டலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.

பொழிப்புரை :

`சுத்தம், அசுத்தம், மிச்சிரம்` என்னும் மூவகைப் பல்வேறு நிலைகளையும், மாயை கன்மங்களின் காரண காரிய நிலை களையும் கடந்து, பரையாவும், அபரையாதற்குரியவளாயும் உள்ள, சிவனது அருளாகிய சத்தி, எல்லாப் பொருள்களையும் நடத்து பவளாய், அவற்றின் உட்பொருளாகி எவ்விடத்திலும் நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

``துரியங்கள்`` என்றதனால், ``சுத்தம், அசுத்தம்`` எனப் பட்டனவும் அவற்றில் நிகழும் சாக்கரம் முதலியனவும் அவத்தையாதல் அறியப்படும். இங்கு, `சுத்தம்` என்றது, கேவலமல்லாத சகலத்தை, அசுத்தம், கேவல சாக்கிரம் முதலியன. இவற்றின்பின் வாளா ``துரியங்கள்`` என்றதனால் அவை முன் இரண்டைக் கடந்த சுத்த சாக்கிரம் முதலியவாயின. இவ்வைந்தோடு சுத்த அசுத்தங்களை ஒவ் வொன்றாக்கி, `ஏழு என்றார், காரண காரியங்களையே சத்து, அசத்து என ஓதினார், அவை அங்ஙனம் சொல்லப்படுதற்கு உரியன வாகலின். உய்த்தல் - நடத்துதல், இதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. பின்வந்த ``பராபரை`` இரண்டும், `சத்தி` என்னும் அளவாய் நின்றன. ``அத்தன் அருட் சத்தி`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. ``அத்தன் அருட் சத்தி எங்குமாம்`` என்றது, `அந்நிலையை உணர்ந்து அதில் அடங்கி நிற்போர் மார்க்க சைவர்` என்றதாம்.
இதனால், அத்தனது அருள்நிலையை அடைந்தோர் மார்க்க சைவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.

பொழிப்புரை :

எங்குமாய் நிற்கும் அருட் சத்தியை அடைந்து நிற்கும் நிலைக்குமேலே, எல்லாப் பொருளையும் கடந்த பராசத்தியை அடைந்தவர், அச்சத்திக்கு முதலாய பரசிவமேயாய், சித்தும் சடமு மாய உலகங்களுள் யாதும் தோன்றாது சிவோகம் பாவனையில் அழுந்தி, பரமுத்தி நிலையில் விளையும் பேரின்பமாகிய ஆனந்த சத்தியில் மூழ்கி யிருப்பர். அவரது பேறே ஏனை எல்லார் பேற்றினும் சிறந்த பேறாகும்.

குறிப்புரை :

``தணந்தவர்`` என்று மேற்கூறிய ``தணந்தபரையை`` அடைந்தவர் என்றவாறு. எல்லாமாய் நிற்பவள் அருட் சத்தியும், எல்லாவற்றையும் கடந்து நிற்பவள் ஆனந்த சத்தியும் ஆதலின் அந் நிலையே முடிந்த பேறாயிற்று. `உளது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `உளதாமே` எனப் பாடம் ஓதலுமாம்.
இதனால், `மேற் கூறப்பட்டவர் மார்க்க சைவரேயாயின், அவருக்கு மேலேயுள்ள சுத்தசைவாராவார் யாவர்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு. `அருள் நிலையைக் கடந்து ஆனந்த நிலையை எய்தினோர் சுத்த சைவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.

பொழிப்புரை :

ஆன்மா, `யாதும் செய்யாது அமைதியாயுள்ள பரசிவன், `சதாசிவன்` எனப்படுகின்ற ஐந்தொழில் முதல்வன், அப்பதியோடு ஏனைப் பசு பாசங்கள், அநாதி தொட்டே உள்ள ஆணவப் பிணிப்பாகிய முதற்பந்தம், அது நீங்கி நின்ற வீடு` என்னும் இவற்றை ஐயந்திரிபு அற ஆராய்ந்துணர்தல் என்பர். இவை சுத்த சைவராவார் தமக்கு உரிய உபாயமாகும்.

குறிப்புரை :

`மாசற்ற வீட்டினை` எனக் கூட்டியுரைக்க. `சுத்த சைவராவார் உபாயம்` என ஆக்கம் வருவித்து உரைக்க.
இதனால், `தத்துவ ஆராய்ச்சி மார்க்க சைவமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

பொழிப்புரை :

சுத்த சைவராய் உள்ளார்க்கு உளதாகின்ற அனு பவத்திற்கு, எங்கும் நிறைந்த பொருளாகிய சிவனிடத்தே வைக்கப் பட்டதனால் பிற பற்றுக்கள் நீங்கிய ஆன்ம போதத்தில், வேதாந்தம், சித்தாந்தத்தோடு ஒற்றுமைப் பட்டுத் தோன்றப்பெற்ற உணர்வோடு, பிராசாத கலைகள் பன்னிரண்டும் காட்சிப்பட, அதனால் இடையறாது விளங்கும் பேரின்பமே காரணமாம்.

குறிப்புரை :

அதனால், அத்தகைய பிராசாத யோகத்தில் நிற்பவர் மார்க்க சைவராதல் பெறப்பட்டது. இம்மந்திரத்தில் பாடங்கள் மிகத் திரிந்துள்ளன. `காட்சிக்கு` என்னும் நான்கனுருபு இன்னோசை நோக்கித் தொகுக்கப்பட்டது.
இதனால், பிராசாத யோக நெறியும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மாறாத ஞானம் மதிப்பற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.

பொழிப்புரை :

சித்தாந்த சைவத்தின் அங்கமாகும் மார்க்க சைவரது ஒழுக்கத்தைச் சொல்லுமிடத்து,தொன்று தொட்டுத் தொலையாது நிற்கின்ற தற்போதத்தைப் பெரிதாக எண்ணாமல், அஞ்ஞானத்தி னின்றும் நீங்கமாட்டாத அறிவை மேற்கூறிய உயர்ந்த யோகமாகிய பிராசாத யோகத்தால் அஞ்ஞானத்தினின்றும் நீங்கித் தெளிவடையும் படிச் செய்து, அதனைச் சிவனது அறிவேயாக ஆக்கிப் பெறற்கரிய பேறாகிய சிவோகம் பாவனையைத் தலைப்பட்டு அதனைப் போற்றி அந்தப் பதிஞான நெறியில் நிற்றலேயாகும்.

குறிப்புரை :

`யோகத்தால்` என உருபு விரிக்க. சிவம், ஆகுபெயர். ``பேறான`` என்பது, `சிறந்த பேறாகிய` என்னும் பொருளைக் குறித்தது. ``கூறாகும்`` என்னும் பெயரெச்சம். ``ஞானி`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. ஞானமாவது, சித்தாந்த ஞானமே யாதல் அறிந்து கொள்க.
இதனால், மார்க்க சைவரது ஞான ஒழுக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.

பொழிப்புரை :

சிவாகமங்களை உணராது வேதாந்தத்தை மட்டும் உணர்ந்தோர் முதற் பொருளை உண்மை மாத்திரையான் உணர்ந் தவரே. அதன் இயல்பையும், அதனைப் பெறுமாற்றையும் பெற்றவழி உளதாகும் பயனையும் அறிந்தவரல்லர். பிராசாத நெறியால் நாத முடிவைக் கண்டவர் அசைவில்லாத யோகிகளோயவர்; ஞானிகள் அல்லர். சைவாகமங்களை வேதாந்தத்தோடு ஒற்றுமைப்படவைத்து உணராது தனிப்ப வைத்து உணர்ந்தோர் பொதுச் சைவரே; உண்மைச் சைவர் அல்லர். ஆதலால், அவர் மார்க்க சைவரே; சுத்த சைவர் அல்லர்.

குறிப்புரை :

இதன் ஈற்றடியின் பாடம், ``சாதாரணர்; அன்ன சைவர் உபாயரே`` என இங்குள்ளபடியாவது, ``சாதாரணர் அன்னர்சைவம் உபாயமே`` என்றாவது ஓதப்படல் வேண்டும். மார்க்க சைவருள் இங்குக் கூறப்பட்ட சாதாரண சைவர் பாசுபதர் முதலிய அகப்புறச் சமயிகள் என்க. இவரைக் கூறுவார், மேற்கூறிய மார்க்க சைவரை அனுவதித்தும், புறச் சமயத்தாராகிய ஏகான்மவாதரைப் புடைபட வைத்தும் கூறினார்.
இதனால், சிவாகமத்தைப் பொதுவாக உணர்தலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

பொழிப்புரை :

பரந்துஎழும் மேகக் கூட்டம் அருவமாகிய ஆகாயத்தைப் பற்றமாட்டாது, பல காட்சிப் பொருள்களும் கண்ணொளியைத் தமக்கு இடமாகக் கொண்டு நிற்க மாட்டா. அவை போல, எண் வரையறை யில்லையாம்படி முடிவின்றி எண்ணப் படுவனவாகிய பசுக்களைப் பற்றிநிற்கின்ற பாசங்கள், தலைவனாகிய சிவனைச் சென்று அணுகமாட்டா.

குறிப்புரை :

இதனுள் இரண்டு எடுத்துக்காட்டுவமைகள் கூறப் பட்டன. `பாசம்` என்னாது ``பசு பாசம்`` என்றதனால், `பசுக்களைப் பற்றுகின்ற அவை பதியாகிய இறைவனைப் பற்ற மாட்டா` என்ற தாயிற்று. ஆகவே, அப்பாசங்களால் தோற்றுவிக்கப் பட்ட அறிவைக் கொண்டோ, அவற்றின் நீங்கியவழி எதனையும் அறியமாட்டாத தனது அறிவைக்கொண்டோ உயிர் இறைவனை அறியமாட்டா` என உணர்த்துதல் இம்மந்திரத்தின் கருத்தாதல் விளங்கும். அதனால், `பதி ஞானத்தால் பதியைத் தலைப்பட்டு உணர்வோரே சுத்தசைவர்` என்பதும், `அவ்வாறன்றி, பாசஞான பசுஞானங்களால் உணர்வோர் மார்க்க சைவரே` என்பதும் கூறியவாறாம். ``அண்ணலைச் சென்றணுகா`` என்பதை இறுதியிற் கூட்டி உரைக்க.
இதனால், மேற்கூறியவர் எல்லாரும் சுத்த சைவராகாது மார்க்க சைவராதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை :

மேற் கூறிய, `சிவனும், சீவனும் ஒருபொருளே` என்றுகூறும் `பிரம வித்தியாவாதமும், இருவரும் வேறுவேறானவர் களே` எனக் கூறும் வேதாந்தம் அல்லாத அசுரௌத வாதமும் இன்றி, `இருவரும் கலப்பினால் ஒன்றாய் பொருள் தன்மையால் வேறாய் இருப்பவர்` என்னும் சித்தாந்த அத்துவித ஞானத்தில் நிலைபெற்று நின்று, பொருளில்லாத சூனியம்` எனத்தக்க பல சமயத் தொடக்கி னின்றும் நீங்கி, அந்தச் சமயங்கள் அனைத்திற்கும் மேலே உள்ள முதற் பொருளாகிய, அறியப்படுபொருளாம் சிவனை, அவனது திருவடி ஞானத்தின்வழியே சென்று பொருந்திப் பின் அவனேயாகி விடுதலே சித்தாந்த ஞானத்தின் பயனாகும்.

குறிப்புரை :

நிராகாரம் - உருவின்மை; என்றது பொருள் யாதும் இல்லாத சூனியத்தை. மூன்றாம் அடியில் `நின்று` என்பது பாடம் அன்று `பராபரை` என்பது பாடமாயின், ``பாதம்`` என்பதற்கு `நிபாதம்` எனப் பொருள் உரைத்து, ``நேயத்தை`` என்பதை அதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``சென்று`` என்பதன்பின், `தலைப்பட்டு` என்பது எஞ்சிநின்றது.
இதனால், அசுத்த சைவம். மார்க்க சைவம் என்பவற்றது நிலை இனிது விளங்குவதற்குச் சுத்தசைவத்தினது சிறப்புக் கூறப்பட்டது.
சிற்பி