ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்


பண் :

பாடல் எண் : 1

வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

பொழிப்புரை :

துறவுக் கோலம் இன்றியே, ஆசையாகிய தளையையும் அறுத்தெறிந்து, துன்பத்தொடு படுதற்கு ஏதுவாகிய மலங்களாகின்ற பசுத்துவம் இல்லையாம்படி அடித்துப் போக்குகின்ற சிவஞானச் செயலரே கடுஞ்சுத்த சைவராவர்.

குறிப்புரை :

இல்லம் துறந்து, எங்கும் செல்பவரே துறவுக் கோலத்தை உடையராவர் ஆகலின், ``வேடங் கடந்து`` என்றது இல்லந்துறத் தலாகிய புறத்துறவு இன்றி, அகத் துறவு மாத்திரம். உடையராதலைக் குறித்தது. இவர் சிவனிடத்தே அடங்கியிருத்தல், அலை ஒழியாத கடலில் அலைவின்றி மூழ்குதலோடு ஒக்கும் அருமை யுடைத்தாதல் அறிக. ஆடம்பரம் - ஆரவாரம். வேடங்கடந்தமை முன்னே கூறப்பட்டமையின், இது தமது நிலையைப் பிறர் அறிதற்கு ஏதுவாம் பேச்சினைக் குறிக்கும். இது முற்கூறியதினும் அருமை யுடையதாம். போதகர் - போதத்தை விடாதே செயற்படுவோர். ``சுத்தசைவர்`` என்றது, அதிகாரத்தால் கடுஞ்சுத்த சைவரையாயிற்று.
இதனால், `கடுஞ் சுத்த சைவ நிலை இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.

பொழிப்புரை :

தூல சூக்கும பர உடம்புகளாய் நிற்கும் முப்பத் தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிவான நிலையை யுடைய பெரிய மாயையாம். அவற்றை ஆன்மா நீக்கின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தைக் கழுவித் தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும். அவ்வாறு எய்துவதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.

குறிப்புரை :

``உடலான`` என்பது ``ஐந்தும், ஓராறும்`` என்னும் இரண்டோடே பொருந்தி நின்றது. அவற்றிற்கு மேல் உள்ள ஐந்தும் சுத்த தத்துவங்கள். அவை ஆன்மாக்களுக்கு உடம்பாய் வருதல் இல்லை. மடல் - விரிவு. `படலம்` என்பது. அம் குறைந்து நின்றது. கேவல பாசம் - ஆன்மாவோடு இயல்பாக ஒட்டி ஒன்றாய் நிற்கும் பாசம்; ஆணவ மலம், உள்ளம் - ஆன்மா. ஆன்மா என்றும் சிவ வியா பகத்தில் உள்ளதே யாகலின், அந்நிலை தோன்றாதவாறு மறைத்துள்ள ஆணவம் நீங்கியவுடன் தனது இயற்கை நிலையை எய்தலாவது சிவ வியாபகத்தில் இருத்தலை உணர்ந்து இன்புறுதலேயாதல் அறிக. ``சித்தாந்தம்`` என்பதே சுத்த சைவம் ஆதலின், `அந்த நெறியில் கடுஞ்சுத்தசைவர் இவ்வாறு நிற்பர்` எனக் கூறியவாறு.
இதனால், மேற்கூறிய அரு நெறியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சுத்தச் சிவனுறை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.

பொழிப்புரை :

தடத்த சிவன் எழுந்தருளியிருக்கின்ற சுத்தமாகிய சிவலோகத்தை அடையினும் அங்குப் பற்றுக் கொள்ளாமல் `முத்தர்` என்னும் சொல்லுக்குப் பொருளும் முத்தியாகிய நிலத்திற்கு வித்தும் ஆகியிருக்கின்ற அந்தத் தகுதியையுடைய முத்தான்மா ஆகின்றவர் அவ்வாற்றால் சிவனைச் சார்ந்து, அதனால், மூலமலம் பற்றறக் கழிந்தவழிச் சொரூப சிவனோடு இரண்டறக் கலப்பர். அங்ஙனம் கலப்பவரே உண்மைச் சுத்த சைவராவர்.

குறிப்புரை :

`அதனால்` வேடம் முதலியவற்றை மேற்கொள்ளாமலே அத்தகுதியையுடையராய் இருப்பர் கடுஞ்சுத்த சைவர்` என்பது குறிப்பெச்சம் `சுத்தத்தானம்` என இயையும். `சிவனுரை` என்பது பாடமன்று. ``மூலம்`` என்பதை, அற்றால் என்பதற்கு முன் கூட்டி உரைக்க. அத்தகைய ஆன்மா நிலையை அடைந்தவரை ``ஆன்ம`` என்றே கூறியது ஆகுபெயர். இஃது இயற்கையில் அஃறிணை இயற் பெயராய்ப் பன்மைகுறித்து நின்று பின் ஆகுபெயர் ஆயிற்று. `சுத்த சிவமாவர்; அவரே சுத்த சைவர்` என இருசொல் நீர்மைப்படுத்து உரைக்க. `சிவலோகத்தை அடைந்தாரும் பற்று நீங்காதவழி மீள நிலத் திற்பிறப்பர்` என்பதும், `பற்றற்றிருப்பின், அவ் விடத்திற்றானே சிவன் மூன்னின்று அவரை முத்தியிற் சேர்த்துவன் என்பதும் சிவாகம உண்மையாதலின் 1 அவரையே ``முத்தர் பதப் பொருள்`` என்றும் ``முத்திக்கு வித்து`` என்றுங் கூறினார். திருவள்ளுவநாயனாரும் இத்தகையோரை, ``வரன் என்னும் வைப்பிற் கோர் வித்து`` 2 என அருளிச்செய்தார்.
இதனால், கடுஞ் சுத்தசைவரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.

பொழிப்புரை :

`நான் எங்கே யிருக்கின்றேன், `தத்` பதப் பொருளாகிய பரம் எங்கே உள்ளது` என்று நான் தேடி அலையும் நிலையில், `தான் அதோ உள்ளது, நான் இதோ உள்ளேன்` என வேறு வேறு கண்டு எண்ணுமாறு `இரண்டு` என்னும் எண்ணிற்கே இடம் இல்லாது, என்னுள் ஒன்றாயே நிற்கின்ற அது எனது அலைவுக்கு இரங்கி வெளிப்பட்டு வந்து, தான் என்றுமே நானாய் - என் உயிருக் குயிராய் - ஒன்றியிருக்கிற உண்மையை உணர்த்தினமையால், நான் இப்பொழுது `தான்` என்று அதனைத் தனியாகவும், `நான்` என்று என்னைத் தனியாகவும் எண்ணிச் சொல்லும் தன்மை இலேனாயினேன்.

குறிப்புரை :

`தற்பதம்` என்பது பாடமாயின், ``பதம்`` என்பதைச் சொல்லாகு பெயராகக் கொண்டு உரைக்க.
``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்`` 3
என்றதும் இங்கு நினைக்கத் தக்கது.
இதனால், புறக்காட்சியற்று அகக் காட்சியில் உறைத்து நிற்றல் கடுஞ் சுத்த சைவமாதல், தம்நிலை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

பொழிப்புரை :

சொல்ல இயலாத மேற்குறித்த உண்மை நிலை கிடைக்கப்பெற்றால், பொறுத்தற்கரிய ஐம்புலன்களும் தம் குறும்புகள் நீங்கி அடங்கிவிடும். பாசஞான பசு ஞானங்களைக் கடந்து மேலாய் விளங்கும் பதிஞானம் நொந்தா விளக்குபோல நிலைபெற்று ஒளிரும். அதன் பயனாகப் பின்னர்ப் பதிப்பொருள், மேலான சாயுச்சியமாய்க் கிடைக்கும்.

குறிப்புரை :

`அத் தத்துவம்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. பால் -அப்பால்.
இதனால், கடுஞ் சுத்த சைவத்தின் அருமையும், பயனும் கூறப்பட்டன.
சிற்பி