ஐந்தாம் தந்திரம் - 5. சரியை


பண் :

பாடல் எண் : 1

நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.

பொழிப்புரை :

`மூலன் உடன்பட்டுக் கூறிய சரியை நெறி யாது` என்று ஆராய்கின்ற கஞ்சமலையமானே, கந்துருவே` `பூமியில் உண்மையை ஓர்ந்து உணரச் செய்வதாகிய சுத்த சைவத்தின் உயிர் நாடியாம் நெறிகள் இவை` எனக் கூறுகின்றேன்; கேண்மின்கள்.

குறிப்புரை :

`மூலன் நேர்ந்திடும் சரியை` என மாற்றிக் கொள்க. `கஞ்சன் முதலியோர் நாயனார்க்கு மாணாக்கர் என்பது பாயிரத் துள்ளே அறியப்பட்டது, அவர் பெயரை ஒரோவழி நாயனார் எடுத் தோதுதல் செய்வர். ``சரியை நெறி எது`` என்று எடுத்துக்கொண்டு, ``சைவத்துக்கு உயிர் கேண்மின்`` எனப் பொதுப்படக் கூறியது, `சரியையோடு பிறவற்றையும் கூறுவன்` என்றவாறு. இதனானே இவ்வதிகாரத்துள் பிறவும் பொதுப்பட உடன் வைத்துக் கூறுதல் பெறப்படும். இதனுள் பொருட்பின் நிலையும் வந்தது.
இதனால், இனிவரும் அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை
செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் உள்ள பொருளை ஆராய்ந் தறிவது ஞானபூசை. உயிர்க்கு உணர்வுண்டாக்குகின்ற பிரணவத்தைப் பல வகையாலும் காணுதல் பெரியயோக பூசை. புறத்தில் விளங்கும் மூர்த்தி உயிருடையதாகும்படி மூர்த்திமானை அதன்கண் வருவித்துச் செய்தல் புறப் பூசை. இனிக் குற்றந் தீர்ந்த அன்புடன் செய்வனயாவும் சிவனுக்குச் செய்யப்படும் பூசையாம்.

குறிப்புரை :

அதனால், `அன்பின்றி நிகழின் இங்கு எடுத்தோதப் பட்டனவும் பூசை யாதலில்லை` என்றதாம்.
``நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே`` 1
எனவும்,
``அன்பேஎன் அன்பேஎன் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தந் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாத்தும் பழமன்றே தான்`` 2
எனவும் போந்தன காண்க. இதனுள் யாவற்றையும் ``பூை\\\\u2970?`` என்றே குறித்தலின், `பசுக்களாகிய உயிர்கள் பதியாகிய இறைவன் எவ்வாற்றாலும் வழிபட்டு நிற்றலே சைவத்தில் உள்ள உய்யும் நெறி` என்பது விளங்கும். `அவ்வழிபாடுதான், `ஞான யோகக் கிரியா சரியைகள்` என நான்காய் நிற்கும்` என்பது அம்முறையானே கூறப்பட்டது. முதல் மூன்று அடிகளிலும் முறையே ஞானம் முதலிய மூன்றனையும் கூறி, `அவையல்லாத பிறவெல்லாம் சரியையாம்` எனப் பொதுப்படக் கூறினார் என்க. `பிராசாத யோகம்` என்பார், ``மகா யோகம்`` என்றார். ``ஆய் நிற்றல்`` என்பது, `ஆய்` என்னும் முதனிலை, `ஆய்ந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `உயிர்ப் பெறும்` என்பது பாடமாயின், `பகரஒற்று விரித்தல்` என்க. செயிர் - குற்றம். `அறன்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்தல் போல, `செயிர்க்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்து.
இதனால், சைவத்தின் ஒழுகலாறு நால்வகைத்தாதலும், அவற்றின் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``நன்மை`` என்றது அருள் விளக்கத்தை. இதனை முன் உள்ள ``நாடு, நகரம்`` என்பவற்றிற்கும் கூட்டி, `நல்ல நாட்டையும், அதனுள் நல்ல நகரத்தையும், அதனுள் நல்ல திருக்கோயிலையும் கருதித் தேடித் திரிந்து` என உரைக்க.
``தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்`` 1
என அருளிச்செய்ததும் அறிக. நெஞ்சத்தை உடையாரது தொழிலை நெஞ்சத்தின் மேல் ஏற்றி, ``கூடிய நெஞ்சம்`` என்றார். கொள்ளுதற்கு எழுவாய், முன்னர் வந்த சிவபெருமானைச் சுட்டும். `அவன்` என்பது வருவிக்க. இங்ஙனம் விரித்துக்கூறிய இவை, `சரியை` என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது. `நெஞ்சத்து` என்பது பாடம் அன்று.
இதனால், சரியை ஓழுக்கமாவன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பத்தர் சரியை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த இயமாதி தூயோகர் சாதகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.

பொழிப்புரை :

சரியையில் நிற்போர் பத்தியையுடைய `பத்தர்` என்றும், கிரியையில் நிற்போர் அணுக்கத் தொண்டு செய்யும் அத்தகுதியை யுடைய `தொண்டர்` என்றும், இயமம் முதலிய யோக நிலைகளில் நிற்போர் `சாதகர்` என்றும் ஞானத்தில் நிற்போர் `சித்தர்` என்றும் பெயர் பெறுவர். இவருள் முதல் இருவரும் திருவேடத்தைத் தவிராது பூண்பர்.

குறிப்புரை :

எனவே, பின்னை யிருவரும் பெரும்பான்மையும் புறக் காட்சி யிலராகலின், திருவேடம் இன்றியும் காணப்படுவர் என்பது போந்தது. பத்தர் - பத்தியுடையவர். அணுக்கத்தொண்டே `தொண்டு` எனப்படுமாதலின், இவர் `தொண்டர்` எனச்சிறப்பித்துக் கூறப் பட்டாராயினர். அணுக்கத்தொண்டினை `பணிவிடை` என்பர். சித்தர் - பேறு பெற்றவர். `சாதகர் தூயோகர்` என்பது பாடமாயினும் இதுவே பொருள் என்க.
இதனால், காரணப்பெயர் கூறும் முகத்தால், சரியை முதலிய நான்கிலும் நிற்போரது தராதரம் உணர்த்துப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே

பொழிப்புரை :

சிவமாந் தன்மையை எய்தினோரே மெய்ஞ் ஞானம் முற்றினவராவர். மனம் சமாதிநிலையில் அடங்கப் பெற்றவரே அட் டாங்கயோகம் முற்றினவராவர். ஒருநாளேனும் அர்ச்சனை தவறி யொழி யாதபடி செய்தவரே நுணுகியதான கிரியை முற்றினவராவர். நெடுந் தொலைவான நாட்டிலும் சென்று மூர்த்தி தலம் தீர்த்தங்களை முறைப்படி வணங்கினவரே தாம் ஏற்றுக்கொண்ட சரியை முற்றின வராவர்.

குறிப்புரை :

``தான்`` என்றது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், `சரியை முதலியவற்றில் நிற்பவர் அவற்றைக் கடைப்பிடியாகக் கொண்டு முதிர்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கிரியையோ கங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.

பொழிப்புரை :

கிரியை வழிபாட்டிலும், யோக வழி பாட்டிலும் சிவனது அருள் உருவம் நிற்கும். ஞானவழிபாட்டில் உருவம் அற்ற அருவ நிலை தோன்றும். இவ்வழிபாடுகள் சத்தி நிபாத நிலைக்கு ஏற்பக் குருவின் வழி நூல் நெறியாற் செய்யப்படுவன. இவ்வாறன்றி அன்பு காரணமாகத் தத்தமக்கு இயலும் வகையிற் செய்யப்படுவன இவற்றினும் உயர்ந்த வழிபாடாய் அமையும்.

குறிப்புரை :

நிரல் நிறையில் கிரியை, யோகம் இரண்டும் `உரு` என வரும் ஒன்றனோடே இயைதற் பொருட்டு, ``கிரியை யோகங்கள்`` எனத் தொகைப்படுத்து ஓதினார். `உரு` என்பதன் ஈற்று முற்றியலுகரம் உயிர்வரச் சிறுபான்மை கெட்டது. இவை, பருவத்துத் தேர்ந்திடும் பூசை எனச் சுட்டுப் பெயர் வருவித்து முடிக்க. தேர்தல், கேட்டல் சிந்தித்தல்களால் மெல்ல உணர்தல். உரியன, இயலுந் திறம்பற்றிக் கொள்ளுதற்கு உரியன. இவை திருநீலகண்டத்துக் குயவனார். அதி பத்தர் முதலியோரால் கொள்ளப்பட்ட செயல்கள் போல்வன. இவை யெல்லாம் உலகத்தார்க்குச் சரியை போலவும், பொதுச் சிவபுண் ணியங்கள் போலவும் தோன்றுதலின், இவ்வதிகாரத்துட் கூறினார். `நேயத்து உரியன` என மாற்றிக்கொள்க. எடுத்த எடுப்பில் இதன்கண் நெறிகள் பலவும் தொகுத்துக் கூறப்படுதலும் நோக்கத்தக்கது.
இதனால், நூன்முறை வழிபாடு, அன்பு முறைவழிபாடு` என வழிபாடு இருவகைத்தாதல் உணர்த்தப்பட்டது. இவற்றை முறையே, `விதி மார்க்கம், பத்தி மார்க்கம்` என்பர்.

பண் :

பாடல் எண் : 7

சரியாதி நான்கும் தகும்ஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.

பொழிப்புரை :

`சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நான்கு நெறிகளும், அவற்றில் முடிவாக உள்ள தகுதி பெற்ற ஞானம் ஒன்றிலே `ஞானத்திற் சரியை` முதலிய நான்கும் விரிந்துள்ள இவையே வேதத்தின் தெளிவாய் அமைந்த சிவாகம நெறி. அரனையே பொருளாகின்ற நிலையைச் சிவபெருமான், அறியாமை யுடைய மக்கள் அதனினும் நீங்கித் தனது ஒளி யுலகத்தை யடைந்து தன்னை வணங்கி வாழ்தற் பொருட்டு` வைத்துள்ளான்.

குறிப்புரை :

`அதனால், இவையே வீட்டு நெறிகளாம்` என்பது கருத்து. ஏனை வேத நெறிகள் இம்மை, மறுமை என்னும் உலக நெறிகளாம் என்க. ``சித்தாந்தம்`` என்பது இங்குச் சிவாகமத்திற்குப் பெயராய், அது பற்றிக் கொள்ளப்படும் நெறிகளைக் குறித்தது. அந்நெறிகள் ஆறாவன, `பாடாண வாத சைவம், பேதவாத சைவம், சிவ சமவாத சைவம், சிவ சங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாமவாத சைவம்` என்னும் அகச் சமயங்கள், இவற்றுள், இறுதியில் உள்ளது `சிவாத்துவித சைவம்` எனவும் படும். ஐக்கியவாத சைவமும் சிவாகம நெறியே யாயினும். அது அவ் ஆகமங்கள் முதன்மையாகக் கூறும் ஆணவ மலத்தைக் கொள்ளாமை யால், வேதாந்தத் தெளிவாகாது. அகப்புறச் சமயங் களோடு கூட்டி எண்ணப்படுகின்றது. சிவலோகத்தை அடைந்து வாழும் வாழ்வுகள் யாவும் பதமுத்திகளே. அகச் சமயங்கட்குப் பதமுத்திகளே பயன் என்றதனால், பரமுத்தி சித்தாந்த சைவத்தினன்றி எய்தலாகாமை அறியப் படும்.
இதனால், `சரியை முதலியவைகளே வீட்டு நெறிகள் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சமையம் பலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி
சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.

பொழிப்புரை :

வீட்டு நெறிளாகிய சரியை முதலியவைகளில் நிற்க விரும்புவோர், ஆசிரியரை அடைந்து தீக்கை பெற்று நின்ற வழியே அவை உண்மைச் சரியை முதலியனவாய்ப் பயன்தரும். அத்தீக்கை, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நான்கு வகைப்படும்.
சமய தீக்கை தூல உடம்பைப் பல வகையில் தூய்மைப் படுத்து வதாகும். அதன் பயனாக, மாணவன், இது காறும் எல்லாச் செயல் களையும் தன்னால் ஆகின்றனவாகவேயாக மயங்கியிருந்த மயக்கம் நீங்குமாறு. `எல்லாம் அவன் செயல் (சிவன் செயல்)` ஆதலை உணரும் வாய்ப்பினைப் பெறுவான். அதனை அடுத்துச் செய்யப்படும் விசேட தீக்கை சிவமந்திரங்களைப் பீசங்களோடு கூட்டி உபதேசித்து, அதனால் பெரும்பயன் அடையச் செய்வதாகும். சாந்தத்தை உடைய நிருவாண தீக்கை, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தி யாதீதை` என்னும் கலைகள் ஐந்தில் ஏனைய பொருட் பிரபஞ்சம், சொற்பிரபஞ்சங்களாய் அடங்கியுள்ள அத்துவாக்களிடமாக நிற்கும் சஞ்சித கன்மங்களை ஆகுதிகளால் அழித்து, மாணவனது ஆன்மாவை நின்மலம் (மாசற்றது) ஆக்குவதாம். அதற்குமேல் உள்ள அபிடேகம்` ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்கும் தீக்கை செய்தற்கு உரிய பெரிய ஞானத் தகுதியுடையவர்க்கு அவ் ஆசிரியத்தன்மையை அபிடேகம் செய்து அளிப்பது.

குறிப்புரை :

சமய தீக்கை பெற்றவன், `சமயி` எனப் பட்டுச் சரியையில் நிற்றற்கு உரியன், `இந்நிலையில் கணிக்கப்படும் மந்திரங்கள் நிர்ப்பீசம்` என்னும் கொள்கை பற்றி இதனை நாயனார் `மந்திரசுத்தி` என்னாராயினார். எனினும், இங்கும் மந்திரங்களைச் சபீசமாகச் சொல்லும் வழக்கமும் காணப்படுகிறது. விசேட தீக்கையில் மந்திரங்கள் சபீஜமாகச் சொல்லும் அதிகாரத்தைத் தந்து, கிரியையிலும் யோகத்திலும் நிற்பித்தலால் இதனையே ``மந்திர சுத்தி`` என்றார். மந்திரம் ஆறத்துவாக்களில் ஓரத்துவாவேயாம். நிருவாண தீக்கையில் மட்டுமே ஏனை ஐந்தத்துவாக்களையும் அடக்கியுள்ள கலைகளைச் சுத்தி செய்து சஞ்சித கன்மம் துடைக்கப்படுதலால், அதனையே ``கலா சுத்தி`` என்றார். நிர்ப்பீசம் - பீசாக்கரங்களோடு கூடாதது - சபீசம் - பீசாக்கரத்தோடு கூடியது. `சமயம், விசேடம், நிருவாணம்` என்னும் மூன்றிலும் `நிர்ப்பீசம், சபீசம்` என்னும் இரண்டும் உள என்றலும், சமயம் நிர்ப்பீசமே; ஏனைய இரண்டும் சபீசமே, என்றலும் ஆகிய இருவேறு கொள்கைகளும் ஆகமங்களில் உள என்பர். `சபீச தீக்கை உயர்ந்தோர்க்கே செய்யப்படும்` என்பது ஒரு படித்தான கொள்கை யாகையால், `விசேடமும், நிருவாணமும் சபீசமே` என்னும் கொள்கை யில் `அவ் இரு தீக்கையும் உயர்ந்தோர்க்கே செய்யப்படுவன` என்பது விதியாய் அமையும். ``அமை மன்னும்`` என்பதற்கு. `அமைந்து நிலைபெறும்` எனப் பொருள் உரைக்க.
இதனால், சரியை முதலியவற்றைக் கூற எடுத்துக் கொண்ட நிலையில் அவற்றிற்கு உரிமையைத் தரும் தீக்கை வகைகள் இம்முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டன.
சிற்பி