ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்


பண் :

பாடல் எண் : 1

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.

பொழிப்புரை :

வளி நிலை (பிராணாயாம) முறைப்படியே மூலாதார முதலிய ஆறு ஆதாரங்களிலும் உணர்வாய் ஏறிச்சென்று இறுதியில் சிவனது அருவத் திருமேனியில் நிலைத்து நின்று, ஊன்றி நிறுத்தப்பட்ட தூண்போலும்படி தமது உடலை நேராக நிமிர்த்துச் சிறிதும் அசைவற நிறுத்தி, அதனைப் பிறர் கீறினாலும், தாக்கினாலும் அவற்றால் உணர்வு பிறழ்ந்து விரைய அவரை நோக்குதல் இல்லாது, தியானப்பொருள் ஒன்றையே உணர்ந்திருக்க வல்ல மாயோகிகட்கே அந்தத் தியானப் பொருளாகிய சிவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

நேர்மை - நுண்மை. அஃது அருவத்தை யுணர்த்திற்று. ``தாம்`` ஆகுபெயர். `இவ்வாறிருப்பார் யோகிகளே` என்பது வெளிப்படையாதலின், `யோகியர்` என்பதனை எடுத்தோதாதே போயினார்.
இதனால், `யோகத்தினது இயல்பு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

பொழிப்புரை :

யோகப் பயிற்சியால், பல ஊழிகள் செல்லவும் எடுத்த உடம்பு நீங்காது நிற்க, அதன்கண் நின்று அவ்வூழிகளைக் காண வல்லவர்க்கல்லது, ஊழிகள்தோறும் காரணக் கடவுளர்களது தொழிலிற்பட்டுப் பிறந்து இறந்து உழல்பவர்கட்கு அப்பிறப்புக்களில் பல்லூழிகள் சென்றாலும் அவர் தன்னை உணர நில்லான் சிவன். பாற் கடலில் பள்ளி கொள்பவனாகிய மாயோனும், பிரமனும்` என்று சொல்லப்பட்ட தலைமைத் தேவர்களே பல்லூழிக்காலம் தேடியும் காணவராமல் அவர்களது ஆற்றலுக்கு அப்பாற்பட்டு அவன் நின்றதே அதற்குச் சான்று.

குறிப்புரை :

``உச்சி`` என்றது, மேல் உள்ள இடத்தை.
இதனால், இறைவன் `சரியை, கிரியை` என்பவற்றிற் போலன்றி யோகத்தில் வெளிப்பட்டு விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணரவல் லார்கட்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.

பொழிப்புரை :

பூ மலர்தற்குமுன் அதன் மணம் அதனுள் அடங்கி யிருத்தல் போல, உயிர் பக்குவப்படுதற்கு முன் அதன் அறிவுக்கு அறிவாய் அதனுள்ளே தோன்றாதிருந்த சிவம், பக்குவத்தால் உள்ளமும், உடலும், எழுதப்பட்ட ஓவியம் போல அசைவற்று நிற்கப் பெற்ற யோக உணர்வினர்க்கு வெளிப்பட்டு விளங்கும். அப்பொழுது அவர்களது உள்ளமும், உடலும் புனுகு பூனையால் கூடப்பட்ட மூங்கில் தறி அதன் மதநீரால் மணம்பெற்றுத் திகழ்ந்தது போலச் சிவமணம்கமழப் பெற்றுச் சிவதனுவும், சிவகரணமுமாய் விளங்கும்.

குறிப்புரை :

``பூத்தது`` என்பதனை மூன்றாம் அடியில் இறுதியிற் கூட்டி,அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சமும், ``ஆம்`` என்பதற்கு வினைமுதலும் வருவித்து உரைக்க. புனுகு பூனையே, `கத்தூரி மான்` எனப்படுகின்றது. இதன் மதமே மிக்க நறுமணம் கமழ்வதாகிய கத்தூரி, கத்தூரியே `மான் மதம்` என்றும், ``மிருக மதம்`` என்றும் சொல்லப்படுவது. இவ்விலங்கினிடமிருந்து இதன் மதத்தைக் கொள்ள வேண்டுவோர் இதனைக் கூட்டில் அடைத்து நல்லுணவு கொடுத்து, இதற்கு இன்ப வேட்கை மிகும்படி செய்வர். அதுபொழுது இஃது அக்கூட்டினுள் முன்பே பொருத்தப்பட்டுள்ள மூங்கிற் குழாயை அணைந்து தனது மதத்தை வெளிப்படுத்த, அதனை அம்மக்கள் எடுத்துக்கொள்வர். அம்மதம் உள்ள பொழுதும், எடுக்கப்பட்ட பின்பும் அம் மூங்கிற் குழாய் தன்னுள்ளே அம்மணம் கமழப் பெறுவதாயே இருக்கும். அதனையே, ``நாவி அணைந்த நடு தறியாமே`` என உவமித்தார். ஆக்கம், உவமை குறித்து நின்றது.
``நாவியின்கண் - போதுறு மதம் விடுத்துப்
புன்மலங் கொள்ளு மாபோல்`` 1
என்ற சிவப்பிரகாசர் மொழியிலும் இம் மான்மதம் குறிப்பிடப்படுதல் காணலாம்.
இதனால், மேற்கூறிய சிவ விளக்கம் உவமையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.

பொழிப்புரை :

உலகீர்! நீவீர், உய்திக்குக் காரணமாய்ப் பொருந்தியுள்ள பொருளை அறியவில்லை. ஆயினும், `யாம் உய்ந்தோம், உய்ந்தோம்` என்று மயங்கி உரைக்கின்றீர். மலரில் மணம்போல உம்மிடத்து உள்நின்று தோன்றக்கூடிய சிவனை, யோக நெறியால் உள்ளத்தில் பொருந்தக்கண்டு, அதனால் உம் மயக்கம் நீங்கப் பெற்றால், தொன்று தொட்டு வருகின்ற பிறவிக்கு மூல காரணமாய் உள்ள ஆணவ மலம், கீழ்ப்பட்டு அடங்கிவிடும்.

குறிப்புரை :

`உறுபொருள் காண்கிலீர், உய்ந்தமை என்பீர்` எனவும், `மலரிற் கந்தம்` எனவும் மாற்றியுரைக்க. `யோக நெறியால்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஆணவம் ஆழ்தலாவது தனது சத்தி மடங்கிக் கிடத்தல். மூலவித்தாமே, மூலவித்தாகுமே` என்பன பாடம் அல்ல.
இதனால், யோகத்தால் ஆணவ சத்தி மெலிவடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா
அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.

பொழிப்புரை :

இயல்நூற் கல்வி, பாடல்களை ஓதுதல், மற்றும் அறுபத்து நான்கு கலைகளையும் பயிலல் இவையெல்லாம் இகழ்ச்சிக் குரிய பாசத்தால் விளையும் பிறவியை நீக்கமாட்டா. அதனால், நான் அப்பிறவியை அழிக்கும் முறையை. `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` எனப் பெயர்பெறும் மூச்சின் இயக்கங்களை நெறிப்படச் செய்யும் வகையால் அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

பழித்தலைப் பாசம் - பழியின்கண் நிற்கும் பாசம். `பிறவியும் நீங்கா` என்பது பாடம் அன்று. `அழித்தலை உணர்ந்தேன்` என இயையும். இதற்குமுன், `அதனை` என்பது வருவிக்க. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் நாடிவழி இயங்கும் பிராணன் `சந்திர கலை` முதலிய பெயர்களைப் பெறுதல் அறிக. ``வழித்தலை`` என்பதன்பின், `பட` என்பது எஞ்சி நின்றது. `வகையால்` என உருபு விரிக்க. நூலறிவு ஒன்றே பிறவியை நீக்கமாட்டாது; அதற்கு யோக முயற்சி வேண்டும்` என்றதாம்.
இதனால், யோகம் பிறவி நீக்கத்திற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.

பொழிப்புரை :

யோகத்தைத் தியானப் பொருளிடத்து வைக்கும் பேரன்புடன் செய்த வழியே அதனால் விளையத்தக்க பயன்கள் யாவும் விளையும்.

குறிப்புரை :

`இல்லையேல், ஒரு பயனும் விளையாது` என்பதாம். நான்கிடத்தும், `செயினே` என ஏகாரத்தை மாற்றியுரைக்க. மெய்த் தவன் - மெய்ப்பொருளைத் தலைப்பட்டு அதுவானவன். இது, `மெய்` என்னும் பெயரடியாகப் பிறந்த வினைப்பெயர். இதன்பின், ``ஆகும்`` என்ற செய்யுமென் முற்று. உயர்திணை ஆண்பாலில் வந்தது. ஈற்றில் வருவதும் அன்னது. இடை நின்ற இரண்டும் `உண்டாகும்` என்னும் பொருளன. விண் - சிவலோகம். ``மெய்த்தவனாகும்`` முதலிய நான்கும் சிறப்புடைப் பொருளை முற்படக் கிளக்கும் முறையிற் கூறப் பட்டன. முதலடியில் `மெய்த்தவராகும்` என்பது பாடமன்று. இரண்டாம் அடியில் `மெய்யுரையாகும்` எனப்பாடம் ஓதி, `குருமொழி கிடைக்கும்` எனவும் பொருளுரைப்பர்.
இதனால், `யோகம் பயன் தருதலும் அன்புள்ள வழியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
காணில் தனது கலவியு ளேநிற்கும்.
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடும்அங்கி உத்தமன் றானே.

பொழிப்புரை :

உடம்பினுள் நின்று வெப்பத்தைத் தருகின்ற மூலாக் கினியாய் உள்ள சிவன், அவ்வக்கினியை அணையாது ஓம்பி நின்றால் வீட்டுலகத்தை அளித்தருள்வான். அவ்வக்கினியை எழுப்பிக் காணும் அளவில் நின்றால், அங்ஙனம் நிற்கும் யோகிக்கு அவன் உறவான பொருளாய்ப் பல நலங்களைச் செய்தருள்வான். இவ் இரண்டும் இன்றி, உலகரது பழிப்பு நோக்கி அந்நெறியிற் செல்ல ஒருவன் கூசுவனாயின், அவன் நரகத்தை நோக்கிப் போகும் வழிக்கே வகையைச் சிவன் உண்டாக்குவான்.

குறிப்புரை :

`ஆதலின், மூலாக்கினியை எழுப்பிப் பயனடையும் விருப்பமும், ஆற்றலும் உடையோர் உலகரது இகழ்தல் புகழ்தல்களை நோக்காது, அதன்கண் முயல்க` என்பது குறிப்பெச்சம். ``கலவியுள்`` என்பதில், `உள்` என்பது ஏழனுருபு. ஈற்றடி இனவெதுகை பெற்றது.
இதனால், யோகத்திற்குத் தகுதியுடையோர் தப்பாது அதன் கண் முயலல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.

பொழிப்புரை :

யோகத்தில் விருப்பங்கொண்டு, மேற்கூறியவாறு மூலாக்கினியை ஓம்பி நின்றவனைத் தனது பூத உடலை விட்டுப் போவதற்குள், நீதிக்கு ஒத்த செங்கோல் அரசராயும், அமர முனிவ ராயும் உள்ளோர் எத்தனை ஆயிரவர் இறந்தார்கள்! எண்ணில்லாதவர் இறந்தார்கள். அதனால், சித்தர், தேவர், மும்மூர்த்திகள் ஆகியோரும் மேற்கூறிய யோகியை, `இவனே சிவன்` என்று பெருமையாகப் பேசி, அவனிடத்து அன்புடையராவர்.

குறிப்புரை :

``விரும்பி நின்றே செயின்`` எனவும் பேணின் எனவும், மேற்போந்த அதிகாரம் அறாது வருதலின், இம்மந்திரமும் அவனது சிறப்புக்கூறுவதேயாய், ``இவன்`` எனப்பட்டவனும் அவனேயாயினான் என்க. `தேவ இருடியர், முனிவர்` என்பார், ``உலப்பிலி மாதவர்`` என்றார். அவர் அவ் இருடியரும், முனிவரும் ஆயது முன்னைப்பசு புண்ணியத்தால் ஆதலின், அப்புண்ணியந் தீர்ந்தவழி அவரும் அப்பதவியின் நீங்குதல் பற்றி, அவரையும் வீழ்வாருள் ஒரு சாராராக ஓதினார். இங்குக் கூறும் யோகம் சிவயோகமாதலின், இவன் இறவாது வீட்டுலகம் புகுவன் என்க. `எண்ணிலி, உலப்பிலி` என்பவற்றை ஓர் எண்ணுப் பெயர்போலவும் வைத்து ஓதுவார் இந்நாயனார்.
இதனால், சிவனிடத்துச் செய்யும் அன்போடு கூடிய யோகத்தை உடையவனது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற்
காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள்
ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

பொழிப்புரை :

யோக நெறியில் நிற்பவனுக்கு, `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்றும் செய்ய உரிமை உண்டு. கிரியை நெறியில் நிற்பவனுக்கு, `கிரியை, சரியை` என்னும் இரண்டும் செய்ய உரிமை உண்டு. உலகியல் அவாவை விட்டுச் சரியையில் நிற்பவனுக்கு அஃது ஒன்றற்குமட்டுமே உரிமை உண்டு. அங்ஙனமாயினும் எந்த ஒன்றில் அன்புடையவனாயினும் அவனது அன்பை நான் விரும்புகின்றேன்.

குறிப்புரை :

`சரியை முதலியவற்றுள் எந்த ஒன்றில் நின்றோரும் பின்னர் உலகியலில் வீழாது வீடு பெறுதல் உறுதி` என்பதாம். இம் மந்திரத்துள் திரிவுபட்ட பாடங்கள் பற்றி இடர்ப்பட்டுப் பொரு ளுரைப்பர். ஆதிசரியை - முதற்படியாகிய சரியை. மூன்றாம் அடியில் `சரியையில் ஒன்றேயாம்` என விரிக்க. ஈற்றடியில் ``ஆகி`` என்பது பெயர். அதன்பின் ஒற்றுமிக்கது செய்யுள் விகாரம்.
``... ... ... ... ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரியா வான்தான் ஒண்கிரியை யாதி
ஆனஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேயுரியன்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், யோகி, `சரியை, கிரியை` என்னும் இரண்டில் நிற்பாரின் உயர்ந்தவனாதல் கூறப்பட்டது. அங்ஙனமாயினும் `அவை பசு புண்ணியங்கள் போல மலத்தின் வழிப்பட்டன ஆகா` என்றற்கு. ``ஒன்றுள் ஆகித்தன் பத்தியுள் அன்புவைத்தேனே`` என்றருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 10

யோகச் சமயமே யோகம் பலஉன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே.

பொழிப்புரை :

யோக நூல் பற்றி யோக வகைகள் பலவற்றையும் உணர்தல் `யோகத்தில் சரியை` எனப்படும். இயமம் நியமம் முதலிய எட்டுநிலைகளிலும் நிற்றல் `யோகத்தில் கிரியை` எனப்படும். உள்ளொளிக் காட்சி கிடைக்கப் பெற்று நிற்றல். `யோகத்தில் யோகம்` எனப்படும். மூன்றாம் தந்திரத்தில் `பரசித்தி` எனக் கூறப்பட்ட அவற்றைப் பெறுதல் `யோகத்தில் ஞானம்` எனப்படும்.

குறிப்புரை :

சரியை முதலியவற்றை அவற்றிற்குரிய தீக்கைப் பெயர் களாற் கூறினார், `யோக நிலையில் அவ் அவ்யோகப் பகுதிகளே அவ்வத் தீக்கைகளாயும் அமையும்` என்றற்கு நிர்வாண தீக்கை ஞான தீக்கையாயினும் சாதகருக்கு ஞானத்தை முதிர்விக்கப் பிராசாத யோகம் உண்மை பற்றி யோகப் பகுதியாகக் கூறினார். அதற்கேற்ப ஞானத்தின் மிக்க ஆசாரிய நிலையையே `ஞானம்` என்றார், வருகின்ற அதிகாரத்து இறுதியிலும் இவ்வாறே கூறுதல் காணத்தக்கது. யோகத்தில் சரியை முதலியன பிறவாறுகூறப்படினும், `இவ்வாறு கூறுதலும் உண்டு` என்பது இதனால் பெறப்படுகின்றது, ``உற்றல்`` என்பதில் றகர ஒற்று விரித்தல்.
இதனால், யோகத்தின் படிநிலைகள் பல கூறப்பட்டன.
சிற்பி