ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்


பண் :

பாடல் எண் : 1

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

பொழிப்புரை :

ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை. இருப்பதாகக் கருதும் சமயம் யாதேனும் உண்டாகுமானால், அது நல்ல சமயம் ஆகாது. ஞானத்தின் நீங்கிய எந்தச் சாதனங்களும் முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே மக்களுட் சிறந்தவராவர்.

குறிப்புரை :

மேற் சரியை முதலியவற்றின் சிறப்புக்களை இதுபோல மிக உயர்த்துக் கூறாமையால், `அவையெல்லாம் ஞானம் வாயிலாக வீட்டிற்குச் சாதன மாதலல்லது நேரேசாதனமாவன அல்ல` என்பதும், `ஞானம் ஒன்றே வீட்டிற்கு நேர்ச்சாதனம்` என்பதும் பெறப்பட்டது.
``ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமம்சொல்ல, `அல்லவாம்` என்னும்
ஊனத்தார் என்கடவர்! அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான்
ஆனத்தால் அதுபோவ தலர்கதிர்முன் இருள்போல்
அஞ்ஞானம் விடப் பந்தம் அறும்; முத்தி ஆகும்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே வலியுறுத்தி ஓதினமை காண்க.
ஞானம் - மெய்யுணர்வு. அஃதாவது, `பொருளல்லவற்றைப் பொருள் என்று உணராது` 2மெய்ப்பொருளை உணர்தல். இது `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பை அளவைகளாலும், பொருந்துமாற்றானும் நன்கு சிந்தித்துத் தெளிதலே உளதாவதாம். இதனையே, வடமொழியில் `தத்துவ ஞானம்` என்பர். இம்மெய்யுணர் வாவது சிவஞானமே என்பதையும் சித்தியார் மேற்குறித்த செய்யுளின் இறுதியில்,
``ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்;
இறைவனடி ஞானமே ஞானம் என்பர்``
எனக் கூறி முடித்தது. உண்டி சுருக்கல், கொல்லாமை, புலால் உண் ணாமை, ஐம்பொறி யடக்கல், உயிர்கள்மாட்டு இரக்கம் முதலிய பொது அறங்களும், நித்திய நைமித்திக கன்மங்களாகிய சிறப்பறங்களும் ஞானத்தை உணரும் பக்குவத்தை உண்டாக்குவன வன்றி, அவை தாமே ஞானமாய் நின்று வீட்டினைப் பயவா. ஆதலின், அவற்றையே `ஞானம்` என்றாயினும், `ஞானத்தினும் மேம்பட்டன` என்றாயினும் கூறுவார் உளராயின், அவர் கூற்று அறியாமையின்பாற் பட்டதாகும் என்ப தனையே முதலிரண்டு அடிகளில் குறித்தார். அங்ஙனம் கூறுவோர் சமணரும் பௌத்தரும் ஆகிய அவைதிகரும், வைதிகருள் மீமாஞ்சகரும் ஆவர். ஆகவே, அவரது மதங்களை உளத்திற் கொண்டே இதனைக் கூறினார் என்க. அவருள் மீமாஞ் சகரையே மாணிக்கவாசகரும்,
``விரத மேபர மாக வேதியரும்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்`` 1
என்று அருளிச் செய்தார். இடை இரண்டு அடிகளில் வந்த மிகுதி,
``மிகுதியான் மிக்கவை செய்தாரை`` 2
என்பதிற்போலப் புறம்பாதலை உணர்த்திற்று.
இதனால், ஞானத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சத்தமும் சத்த மனமும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஓசை முதலிய புலன் வகைகளும், அவற்றைப் பொறிகளின் வழிச்சென்று பற்றுகின்ற மனமும், பின்பு அம்மனம் பொதுப்படப்பற்றி ஐயுற்றதை ஒருதலையாகத் துணியும் புத்தியும், எவ்விடத்தும் எழுச்சியுற்று எவ்வுணர்வையும் உணரத் தூண்டுகின்ற அகங்காரமும். அம்மூன்றானும் பெற்ற தெளிவுணர்வைப் பதியக் கொண்டு பின்னும் நினைப்பதாகிய சித்தமும் என்னும் இவற்றினது இயல்பை நன்குணர்தலே ஓசை முதலிய ஐம்புலன்களையும் கடந்த ஞானிகள் பெற்ற ஞானமாகும்.

குறிப்புரை :

ஓசை முதலிய புலன்களே காரண நிலையில் தன் மாத்திரைகளாய் நின்று ஆகாயம் முதலிய பூதங்களைத் தோற்று வித்தலாலும், பின்னும் தன்மாத்திரையாய் ஐம்பூதங்களோடும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுக்குத் துணையாய் நின்று அவை தத்தம் காரியங்களைச் செய்ய உதவுதலாலும், `ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம்` என்பவற்றையும் `புலன்வகை` என அடக்கினார். எவ்விடத்தும் ``சத்தம்`` என்றது, ஏனைப் பரிசம் முதலிய வற்றிற்கு உபலக்கணம். அஃது அதன் வகையை உணர்த்திற்று. ஆகவே, `புலன் வகை` என்றதனால், `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து` ஆக இருபது கூறப் பட்டனவாம். இவற்றோடே மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும் கூறப்பட்டமையால், சிவாகமங்களில் `ஆன்ம தத்துவம்` என எண்ணப்படும் இருபத்து நான்கு தத்துவங்களும் கூறப்பட்டதாயிற்று. சிறிது சிறிது வேறுபாட்டோடே இவை வைதிக சமயங்கள் எல்லா வற்றாலும் உணரப்பட்டன. ஆதலின், இவற்றது இயல்பை உணரும் ஞானத்தையே தத்துவஞானமாக ஓதினார். ``சுவைஒளி ஊறோசை`` என்னும் திருக்குறளையும் நோக்குக. வைதிக சமயங்களின்வழியும், அவற்றிற்கு ஒத்த அளவில் சைவாகமங்களின் வழியும் இவற்றின் இயல்பை உணர்ந்த பின்பு, சைவாகமம் பற்றியே சிறப்பாக உணரத் தக்க வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் இயல்பை விரைய உணர்வர் என்பது கருத்து. வித்தியா தத்துவம், `காலம், நியதி` கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என ஏழு. சிவதத்துவம், `சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்` என ஐந்து, ஆக, `தத்துவம் முப்பத்தாறு` என்பது சைவாகமங்களின் முடிபு. இவற்றின் இயல்பெல்லாம் அவ் ஆகமங்களிலும், அவற்றை முதலாகக் கொண்டெழுந்த பிரகரணங்களிலும், மெய்கண்ட சாத்திரம் முதலிய சித்தாந்த நூல்களிலும் காணப்படுகின்றன.
சிவ தத்துவம் ஐந்தும் ஏனைத் தத்துவங்களை இயக்கிநிற்கும் முறையால் ஆன்மாவிற்கு உதவுவன அன்றி, அவை ஏனைத் தத்துவங்கள்போல் ஆன்மாவிற்குநேரே உடம்பாய்ப்பொருந்தி நின்று உதவுவன அல்ல. வித்தியா தத்துவங்கள் ஆன்மாவின் அறி விச்சை செயல்கள் வெளிப்படுதற்குக் காரணமாய், அதனோடு ஒட்டி ஒன்றாய் நின்று ஆன்மாவை ஆன்மாவாகச் செய்யும் இயல்புடைமையால் அவை அனைத்தையுமே `புருடன்` என ஒன்றாக வைத்து, தத்துவங்களை, `இருபத்தைந்து` என்றே கூறுதலும் உண்டு.
``ஐயஞ்சின் அப்புறத் தானும், ஆரூ ரமர்ந்தஅம் மானே``
என்ற திருநாவுக்கரசர் திருமொழி இம்முறைபற்றி எழுந்ததே. தத்துவங்கள் மாயையின் காரியங்களாம். அவற்றின் இயல்பை ஆராய்ந்து உணரவே அவற்றினின்றும் நீங்குதல் உளதாம் என்க. தொகுத்தல் பெற்ற அகரத்தை விரித்து, `சித்தம் என்ற செய்கையும்` என இயைக்க. செய்கையுடையதனை, ``செய்கை`` என்றார்.
இதனால், தத்துவங்களை ஆராய்ந்து உணர்தல் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தன்பால் உலகம் தனக்கரு காவதும்
அன்பால் எனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

பொழிப்புரை :

சிவனது வியாபகத்தில் உள்ள உலகம் சிவனது உடைமையும், அடிமையுமாய் அவனுக்கு உரித்தாதலை உணர் தலையே `ஞானம்` என்றும், சிவனிடத்து வைத்த அன்பு காரணமாக அவனது திருவருள் தமக்குக் கிடைக்கப் பெறுதலையே `சிவோகம் பாவனை` என்றும் ஞானிகள் கூறுவார்கள். அவ் இரண்டையும் பெற்றோர், அவற்றின் பயனாகப் பின்பு, அறியத்தக்க பொருளையே அறிந்து, அதில் அழுந்துவார்கள்.

குறிப்புரை :

`ஆவதும், ஆவதும் - ஞானமும், சிவோகமும்` என்றது நிரல்நிறை. ``என்பார்கள்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. ``தன்`` என்றது சிவனாதல் விளங்குதற்கே, பின்னர், ``எனக்கு`` எனத் தம்மேல் வைத்துக் கூறினார். ``பெற்றிடும்`` என்பதற்கு, `அந்நிலையை எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. சடமும், சித்துமாகிய இருவகை உலகத்துள் சடம் சிவனது உடைமையும், சித்து சிவனது அடிமையும் ஆம் என்க.
இதனால், தத்துவ ஆராய்ச்சியால், `யான்` எனத் தன்னையே முதல்வனாக மதிக்கும் அகமயக்கமும், பலவற்றையும் தனித்தனி `எனது` எனப் பற்றும் புற மயக்கமும் நீங்கி. எல்லாம் சிவனது அடிமை யும், உடைமையுமாகின்ற உண்மையை உணர்தலே ஞானமாதல் கூறப்பட்டது. இதனையே, `தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்`` 1 என்றார் மெய்கண்ட தேவநாயனார்.

பண் :

பாடல் எண் : 4

இருக்குஞ் சேம இடம்பிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை :

மாறுபாடில்லாத ஞானத்தை ஓர்ந்துணர்ந்தவர்க்கு அவர் இருத்தற்குரிய பாதுகாவலான இடம் `பிரமம்` எனப்படுகின்ற சிவமே. ஏனெனில், உலகம் `இயங்கியற்பொருளும், நிலையியற் பொருளும்` என்னும் ஈரினமாய் நின்று உணர்வை அலைப்பனவாம். (ஆதலின் அவை அவர்க்கு இருத்தற்குரிய இடமாகா என்பதாம்.) ஆதலின், சிவ வியாபகத்தில் நிற்கின்ற பெருமகிழ்வோடு செய்கின்ற செயல்களே, எல்லா இன்பங்களையும் தருவனவாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்தும், `உலகம் சராசர வருக்க மாகும்` என மாற்றியும் உரைக்க. முதல் இரண்டடிகள் காரிய காரணப் பொருளவாய் நின்றன. தருக்குதலோடு நிகழ்கின்ற ஆசாரத்தை, ``தருக்கிய ஆசாரம்`` என்றார். ஆசாரம் - நடை; செயல்கள் ``எல்லாம்`` என்றது, `உலகர்க்கு `நன்மை, தீமை` என இருவகையாய்த் தோன்றி நிகழும் பலவும்` என்றவாறு. `அருள்வழி நின்று செய்யின், தீயசெயல்களும் நல்ல செயல்களாய் இன்பம் பயக்கும்` என்றதனால், `அருளை மறந்துசெய்யின், நல்லசெயல்களும் தீயசெயல்களாய்த் துன்பம் பயக்கும்` என்பது போந்தது.
``அரனடிக் கன்பர் செய்யு ம் பாவமும் அறமதாகும்;
பரனடிக் கன்பி லார்செய் புண்ணியம் பாவ மாகும்;
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளும், திருமுறைகளிலும் இத்தக்கன் வரலாறு சண்டேசுர நாயனார் வரலாறுகள் சிறந்தெடுத்தோதப்படுத லும் நன்குணரத்தக்கன. `சிவவியாபகத்தின்நீங்கி உலகிடைப்புகின் தீங்கு வருதலையுணர்ந்து ஞானிகள் அதனின் நீங்காது அதனுட்டானே நிற்பர்` என்பதை உமாபதிதேவர்,
``புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவர்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
என்று அருளிச் செய்தார். இதனானே,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து``2
என்னும் திருவள்ளுவர் திருமொழியும் இப்பொருட் குறிப்புடைய தாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், தன் பணியறுத்து அருள்வழி யொழுகுதல் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.

பொழிப்புரை :

தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாதலை உணரும் உணர்வும், அவ்வுணர்வால் அதற்குட்டானே அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி, அதனைமறவாதுஉணர்கின்ற உணர்வால் பெருகுகின்ற அன்பும் என்னும் இவை ஒரு சேரக் கூடி நீங்கா திருக்கின்ற அந்த உள்ளமாகிய கோயிலிலே நீங்காதிருக்கின்ற பேரரு ளாளனாகிய சிவனது அருட்டிரு மேனி, அருட்குணம், ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடி இவைகளை மறவாதிருக்கின்ற முறையை உணர்ந்த ஞானிகட்கு இவ்வுலகமாகிய இருள் நீங்கி, ஞானமாகிய ஒளி பிரகாசிக்கும்.

குறிப்புரை :

`குரை கழலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஈற்றடியில் `இது நீர்த்தொனி யாமே, நீர்த் தோணி யாமே` என்பன பாடம் அல்ல. ` `அறிவும் ... ... ... ... பிறியா நகர்``,
இதனால், அருளது உபகாரத்தை உணர்தல் முதலிய மூன்றும் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.

பொழிப்புரை :

ஞானத்தை விரும்பி எழுச்சி பெற்ற உள்ளத்தில், பிராணவாயுவாகிய ஊர்தியை விரும்பி ஏறி மேலே செல்லும்பொழுது வழியில் எதிர்ப்படுகின்ற இடந்தோறும், சந்திர மண்டலத்திலிருந்து பெருகும் அமுத தாரை நிரம்பியிருக்கக் கண்டு, அதனால் உடற்கும், உள்ளத்திற்கும் வருவனவாகிய குறைகளைப்போக்கி நிலைபெற்று ஒளிமயமாக ஆகுங்கள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியில் `ஏனம்` என்பது பாடம் அன்று. உடற்கு வரும் குறைகள், `நரை, திரை, மூப்பு, சாக்காடு` என்பன. உள்ளத்திற்கு வரும் குறை, ஒருவழி நில்லாமை. இவை யோகத்தால் நீங்குதல் அறிக. ஒளி, உடற்பொலிவும், ஞானமும் என்க.
இதனால், ஞானவேட்கை யுடையோர் யோகத்தால் உள்ளமும் உடலும் நிலையுடையதாகப் பெறின், இப்பிறப்பிலே அதனைத் தப்பாது அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொழிப்புரை :

ஞானத்தைத் தலைப்பட்டவனுக்கு, ஞானத்திற் சரியை முதலிய நான்கு படிகள் உள்ளன. நான்காவது படியிற் சென்று முற்றிய மௌன எல்லையை அடைந்தவனுக்குப் பின் இவை என்றும் வேண்டாவாம். ஞானத்தைத் தலைப்படுதற்குமுன் யோகத்தையே `ஞானம்` என மயங்கிச் சத்தி மண்டலத்திலே நின்று, அங்குள்ள சத்தியைத் தரிசித்தோர்க்கு அந்தச்சத்தி ஞானத்தைத் தருதலாகிய பயனைத்தரும். அதற்குக் கீழ் உள்ள ஆறு ஆதார சத்திகளை அடைந்தவர்கட்குக் கிடைக்கும் பயன் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை என்பனவேயாம்.

குறிப்புரை :

`ஆறு ஆதாரங்களிற் பெறுவன யோகத்தில் சரியையும், யோகத்தில் கிரியையும்` எனவே, `ஏழாந் தானமாகிய சகத்திராரத்தில் நிற்போர்க்கு விளைவது யோகத்தில் `யோகம்` என்பதுபோந்தது. குணம் - இயல்பு. வித்தை - ஞானம். தானி - ஆதாரசத்தி `குலத் தோர்க்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தல் பல ஆதாரங்களிலும் விளங்குவது ஒரு சத்தியேயாதல்பற்றி ஒருமையாற் கூறினார். `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்குமே ஞானத்திற் சரியை முதலிய நான்கு என்க. நிட்டை கூடினவனையே ``மோனி`` என்றார்.
இதனால், யோக முதிர்ச்சி யுடையோன், பின் ஞானத்தில் சென்று அதன் நான்கு படிகளில் ஏறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

பொழிப்புரை :

ஞானத்தில் ஞானத்தை அடைந்தவனுக்கு, அந்த ஞானத்திற்குக் கீழுள்ள மூன்றும் முன்பே கைவந்தனவாம். ஞானத்தில் ஞானமாவது `யான், எனது` என்னும் ஞாதுரு ஞானங்கள் தோன்றாது, ஞேயம் ஒன்றேயாக அதனுள் அழுந்துதல். ஞானத்தில் யோகமாவது தத்துவாதீதத்தில் எல்லையற்ற சிவ ஒளியில் சேர்தல். ஞானத்தில் கிரியையாவது தத்துவக் கூட்டத்தினின்றும் விடுபடுமாற்றைச் சிந்தித்தல்.

குறிப்புரை :

சிந்தித்தல் கூறியதனானே, தான் தத்துவங்களின் வேறாதலைக் கேள்வியுறுதல் ஞானத்தில் சரியை என்பது அறியப் படும். ``ஞானி`` என்றது இவ்வாறே பொருள்படுதல் அறிந்துகொள்க.
இதனால், `மேற் குறித்த நான்கு படிகள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

பொழிப்புரை :

ஞானத்தில் ஞானம் முதலியவற்றை அடைவோன், முதற்கண் வினைக்கட்டு அற்றவனாயும், இரண்டாவது சிவஞானத் தால் ஞேயமாகிய சிவத்தைத் தரிசித்தவனாயும், மூன்றாவது மும் மலங்களின் வாசனையும் நீங்கிய நின்மலனாயும், முடிவில் சிவனை அனுபவமாய்ப் பெறுதலாகிய முத்தியை அடைந்த, முடிந்த பேறுடையவனாயும் விளங்குவன்.

குறிப்புரை :

ஞானாதி நண்ணுவோனது தன்மையைக் கீழிருந்து கூறும் முறையாற் கூறினார். இந்நான்கு அனுபவங்களும் கேட்டல் முதலிய நான்கினாலும் நிகழ்வனவாதல் அறிக. வினைக்கட்டு நீங்கினமைகூறவே, அதற்குப் பற்றுக்கோடாகிய மாயைக்கட்டு நீங்கினமையும் தானே பெறப்பட்டது. கண்ணல் - கருதல். கரை ஞானம் - மேல் எல்லையாகிய ஞானம். `கரை ஞானத்தால்` என உருபு விரிக்க. திண்மை வாதனை காரணமாக அசைதல் இன்மை. `உறைப்பு` என்றபடி. சித்தன் - சித்திக்கப் பெற்றவன்.
இதனால், மேற்கூறிய நான்கு படிகளிலும் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே.

பொழிப்புரை :

ஞானத்திற் சரியை முதலிய நான்கையும் பெற்றோர் முறையே ஞான சமயி, ஞான புத்திரன், ஞான சாதகன், ஞான ஆசாரியன் என்பவராயும் நிற்பர்.

குறிப்புரை :

நாடும் தனைக்காண்டல் `நான் யார்` என்று ஆராய் கின்றவன் தன்னை `இன்னான்` என அறிதல், பர உதயம் - பரம் பொருட்காட்சி. நன்றறிவான் - எல்லாவற்றையும் நன்கு அறிகின்ற சிவன். அருள் - அவனது அருளைப் பெறுதல். இங்கு, `நற்சிவோகம் பாவம்` என்ற பாடமும் காணப்படுகின்றது. குரு பாதம் - குருவாம் நிலை.
இதனால், மேற்கூறிய நால்வரும் உலகில் விளங்கும் முறை கூறப்பட்டது.
சிற்பி