ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்


பண் :

பாடல் எண் : 1

சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

எல்லாவற்றினும் மேலானதாகச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற சொரூப சிவத்தின் உண்மை இயல்பை விளக்குவனவாகிய வேத சிவாகமங்களில் ஞானப் பகுதியின் பொருளை உள்ளவாறு உணர்ந்து, அதனால் `வெகுளி, காமம், மயக்கம்` என்னும் முக்குற்றங் களும் நீங்கிச் சிவத்தோடு ஒன்று படும் நிலை சித்திக்கப் பெற்றுக் காலனை வென்றவரே குறிப்பொருளை (இலட்சியப் பொருளை) அறிந்து அடைந்தோராவர்.

குறிப்புரை :

`சன்மார்க்கமாம் சுடர்` என இயையும். இயல்பினை, ``தோற்றம்`` என வைத்து, காரணத்தைக் காரியமாகக் கூறினார். சிவா கமங்களும் சுருதியாதல் அறிக. `சுருதியில் கண்டு` என உருபு விரித்து முடிக்க. சுடர் - ஞானம்; அஃது அதனை உணர்த்தும் பகுதியைக் குறித்தது. ``சீற்றம்`` என்றது உபலக்கணம். கூற்றத்தை வெல்லுத லாவது, தூல உடம்பை விட்டு எமலோகம்போகாது, தூல, சூக்கும, பர உடம்புகளாகிய அனைத்தையும் விடுத்து இறைவனை அடைதல். `வெல்வார்` எனறப்பாலது, துணிபு பற்றி `வென்றார்` எனப்பட்டது.
இதனால், சரியை முதலிய நான்கனுள் முடிவாகச் சொல்லப் படுகின்ற உண்மை ஞானம், பிறவியாகிய பெருந்துன்பத்தை நீக்கிச் சிவானந்தமாகிய எல்லையில் இன்பத்தைத் தருதலால், `சன்மார்க்கம் - நன்னெறி` எனப்படுவதாயிற்று என்பது கூறப்பட்டது. `இதனின் மிக்க நன்னெறி பிறிதில்லை` என்பதாம்.
[இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``சைவப்பெருமை`` என்னும் மந்திரம் இத்தந்திரத்தின் இறுதி யதிகாரத்தில் வருவது.]

பண் :

பாடல் எண் : 2

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத் தோர்க்குத்
தரும்முத்தி சார்பூட்டும் சன்மார்க்கந் தானே.

பொழிப்புரை :

குருபத்தி செய்யும் நன்மாணாக்கர் கண்ணால் காணுதல், திருமுழுக்கு, ஒப்பனை, புகை, ஒளி, படையல், மலரிடல் முதலாக முறைப்படி வழிபடுதல், தியானித்தல், தீண்டி அடிவருடல் முதலியன செய்தல், துதித்தல், பாதுகையைத் தலைமேல் தாங்குதல் முதலியவற்றால் குருவை வழிபட்ட வழியே சன்மார்க்கமாகிய ஞானம் கைகொடுத்து, முத்தி நிலையைத் தரும்.

குறிப்புரை :

`குருபத்தி செய்யும் குவலயத்தோர்` என்று எடுத்துக் கொண்டு, ``சூட`` என்பதன்பின், `அவர்க்கு` என ஓதற்பாலதனை இவ்வாறு ஓதினார். ``கீர்த்திக்க`` என்பது வடநூல் மதமுடிபு. `குவலயத் தோர்க்கே சன்மார்க்கம் சார்பு ஊட்டும்; முத்தி தரும்` எனக் கூட்டுக. சார்பு ஊட்டுதல், தன்னோடு இயைபினை உண்டாக்குதல். தான், அசை.
இதனால், `ஞானம், நல்லாசிரியரானே (சற்குருவாலே) தரப் படும் நன்னெறி - சன்மார்க்கமாம்` என்பது கூறப்பட்டது. அந்நெறி ஞானமேயாதல் அறிக. இதனுள் குருபத்தி செய்யும் வகையும் கூறப் பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 3

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

பொழிப்புரை :

குருவருளால் பெறப்படும் உண்மை ஞானத்தைப் பெறாதவர் சிவனது இயல்பை உணரமாட்டார், அதனால், அவர் ஆன்மலாபத்தை அடைதற்குரிய ஆன்மாவும் ஆகார். (`சடத்தோ டொப்பர்` என்பதாம்.) ஆதலின், அவர் சிவமாம் நிலையைப் பெறுதலும், அப்பேற்றால் பிறவி யற்றவராதலும் இல்லை.

குறிப்புரை :

கேட்டுச் சிந்தித்துத் தெளிவதனையே ``தெளிவு`` என்றார். உம்மை, எச்சப்பொருட்டு.
இதனால், குருவருளாலன்றிப் பிறவாற்றாற் பெறும் ஞானங்கள் உண்மை ஞானம் அல்லவாய், நன்னெறி சன்மார்க்க மாகாதொழிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானவவ னாகித்தான் ஐந்தாம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தானவ னாய்உற லானசன் மார்க்கமே.

பொழிப்புரை :

சீவன் சிவனேயாய் நிற்கும் முறையால் அஃது ஐந்து மலங்களை அழித்து, மௌனோபதேசத்தின் வழி முத்தி நிலையைப் பெறுதலும், பின் குறையில்லாத ஞானத்தால் உண்டாகும் அனுபவத் தில் விளைகின்ற இன்பமும் ஆகிய இவையே சீவன் சிவனேயாய் விடுகின்ற சன்மார்க்கமாகும்.

குறிப்புரை :

``தான் அவனாதல்`` இரண்டனுள் முன்னது அவ்வாறு உணர்தலாகிய சாதனையையும், பின்னது, அங்ஙனமேயாதலாகிய பயனையும் குறித்தன. ஐந்து மலங்களாவன. `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம்` என்பன. ``மலங்கள் ஐந்தாற் சுழல் வேன் தயிரிற் பொரு மத்துறவே`` 1 என மணிவாசகரும் அருளிச் செய்தார். மௌனோபதேசம், சின்முத்திரையால் உணர்த்தல். இனி, `மௌன நிலையைத்தரும் மொழி` என்றும் ஆம்.
இதனால், ஞானமே சன்மார்க்க மாதல், ஏதுக்காட்டி விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

பொழிப்புரை :

எந்நிலையில் நிற்போர்க்கும் நோக்கும் திசை, இருக்கும் இருக்கை, உறையும் இடம், தியானிக்கப்படுகின்ற தெய்வம், இணங்கும் கூட்டம், வழிபடப்படும் குறி முதலிய எல்லாம் சன் மார்க்கத்தார்க்குப் போலவே குருவருளால் கொள்ளத் தக்கனவாம்.

குறிப்புரை :

`அங்ஙனம் கொண்டவழியே அவை சன்மார்க்கத்திற் குரிய மார்க்கமாய் தாமும் சன்மார்க்கமாம் தன்மையைப் பெறும்; இன்றேல் துன்மார்க்கமாய்விடும்` என்றவாறு. `சற்குருவே இங்குக் கூறிய திசை முதலியவற்றைச் சிவனையடையும் முறையில் உணர்த் துவர்; பிறர் அதுமாட்டாது பிறவற்றை உணர்த்துவர்` என்பதாம். ``சன்மார்க்கத் தார்க்கு`` என்றது, `சன்மார்க்த்தார்க்கு உள்ள` என்ற வாறு. ``சன்மார்க்கத் தார்க்கும்`` என்னும் உம்மை அசைநிலை. `எம் மார்க்கத்தார்க்கும் ஆம்` என ஒருசொல் வருவிக்க. ``இயம்புவன் கேண்மின்`` என்றது `என் சொல்லைக் கேளுங்கள்` என வலியுறுத்தவாறு.
இதனால், சன்மார்க்கம் அல்லாதன நல்லன ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தானவ னாகும்சன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஞானம் ஒன்றே சன்மார்க்கத்தில் கொள்ளப்படும் சாதனமாகும். அந்தச் சாதனம் பின் ஞேயமாகிய சாத்தியத்தை அடை விக்கும். சகமார்க்கம் முதலியவைகளில் ஞானமல்லாத பிறவே சாதனங்களாம். பிற மார்க்கங்களைக் கடந்து சன்மார்க்கத்தில் நிற்போர் அதில் துரியத்தைக் கடந்தபொழுது விரும்புகின்ற சன்மார்க்கம் சீவன் சிவமாம் தன்மையாகிய சன்மார்க்கமே.

குறிப்புரை :

`ஞானந்தான் சன்மார்க்க சாதனம்` என மாற்றி, `அதனால், ஞேயம் ஆம்` என வேறு தொடராக்கியுரைக்க. பிறவற்றை, `பேதை - பேதைமை` என்றது, ஞானமல்லவாதல் பற்றி. `ஞான மாவது, தத்துவ ஞானமே` என்பது மேலே கூறப்பட்டது. சன்மார்க் கத்தில் நிகழ்வதை, ``துன்மார்க்கம் விட்டது`` என்றார். துரிய நிலை யிலும் திரிபுடி ஞானம் அற்றொழியாமையால் ``துரிசு`` என்றார்.
இதனால், அதீதமாகிய ஆனந்த நிலையே சன்மார்க்கத்தில் சன்மார்க்கமாதல், துரிசறுதலாகிய ஏதுக்காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொழிப்புரை :

சன்மார்க்கம் கைவரப்பெறும் தகுதியை அடைய விரும்பும் அரிய மாணாக்கர்க்கு, அதற்கு முன்னே ஏனை, யோகம் முதலிய மூன்றும் முற்ற வேண்டுதலே முறையாகுமாயின், வீடடையும் நெறியாவது, தன்னைச் சிவனுக்கு உரிய பொருளாக உரிமைப்படுத்து அறிதலேயாகின்றது, `இதுதான் ஆசிரியன்மார் தம் மாணாக்கர்க்கு அறிவுறுத்தத்தக்க நெறி` என்று உண்மை வேதம் தனது துணிவாகக் கொண்டு கூறுகின்றது.

குறிப்புரை :

அருமை, பக்குவ நிலை. ``என்றால்`` என்பது, `என்பதே முறை என்றால்` எனத் தெளிதற் பொருள் உணர்த்தி, ஏனைப் பசுபுண்ணியத்தளவில் அத்தகுதி வாராமை யுணர்த்திற்று. நன்மை - வீடு. அதனை அடையும் மார்க்கம். ``நன்மார்க்கம்`` எனப்பட்டது. `சிவனொடு படுத்து` என ஒரு சொல் வருவித்து, படுத்தல், நாடல் இரண்டற்கும் `தன்னை` என்னும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. இம்மந்திரம், `சிவ ஞானமாகிய சிறப்புணர்வின்றி, பிரம்ம ஞானமாகிய பொதுவுணர்வே வீடு பயக்கும் என்பதே வேதத்தின் முடிபு, என்பாரை மறுத்துக் கூறியது.
இதனால், உண்மைச் சன்மார்க்கம் சிவஞானமேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொழிப்புரை :

பூர்வபக்க மதங்களின் உணர்வுக்கு அப்பால் உள்ள பிரதி பந்தமாகிய ஆணவ மலத்தை, முன்னர் உணர்ந்து பின்னர் ஏனைய கன்மம், மூலப்பகுதி, அம்மதங்களால் உணரப்பட்ட சாக்கிரம் முதலிய அவத்தைகள், அவைகளில் தொடக்குண்டு நிற்கின்ற அறிவின் நிலைகள், பொருள்களிடையே உள்ள சிறியனவும், பெரியனவுமாகிய வேறுபாடுகள் என்பவற்றோடு தலைவனாகிய இறைவனையும் உணரும் சித்தாந்த ஞானம் வாய்க்கப் பெற்றவரே `சன்மார்க்கத்தோர்` எனப்படுவர்.

குறிப்புரை :

`சித்தாந்த ஞானம் கைவரப்பெற்றவர்க்கே பிற வெல்லாம் பூர்வ பக்கமாதல் இனிது விளங்கும்` என்றவாறு. ``முன்னும் அவத்தையும்`` என்பதனை, ``மூலப்பகுதியும்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. அதிபேதம் - பெரியவேற்றுமை. ``தன்`` என்றது ஒருவனான இறைவனை. இது, ``கண்டவர்`` என்பதனோடு இயைதல் கூடாமையின், கண்டவரை உணர்த்தாமை அறிக.
இதனால், பிற ஞானங்கள் `சன்மார்க்கம்` எனப்படாது, சித்தாந்த ஞானமே `சன்மார்க்கம்` எனப்படுதல் பொருந்துமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆனசன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஆன்மாவின் பசுத்துவம் காரணமாக வந்து பொருந் திய சம்பந்தங்களாகிய கருவி கரணங்கள் அனைத்தையும், `தன்னின் வேறானவை` எனக்கண்டு கழித்துத் தன்னைப் பதியாகிய சிவனுடன் பொருத்தி, அங்ஙனம் முன்பு பொருந்தாதிருந்த நிலையில் மறந்திருந்த அவனது உபகாரத்தை இடைவிடாது உணர்தலால், முன்பு அன்பினால் நெகிழ்தல் இன்றி வன்மையுற்றிருந்த மனத்தை இப்பொழுது நெகிழ்ந்து உருகும்படி உருகப்பண்ணி, அவ்வன்பினாலே, என்றும் மாற்றம் இன்றி நிற்கும் மெய்ம்மையாகிய சிவனது தன்னியல்பு வெளிப் பாட்டில் அசைவின்றி நிற்றலே முற்ற முதிர்ந்த சன்மார்க்கமாகும்.

குறிப்புரை :

``பசு பாசம் நீக்கி`` என்றது, ஆன்ம தரிசனத்தில் நிகழும் தத்துவ சுத்தியாகிய சுத்த சுழுத்தியையும், ``பதியுடன் கூட்டி`` என்றது, சிவயோகத்தில் நிகழும் ஆன்ம சுத்தியாகிய சுத்த துரியத்தையும், ஏனையவெல்லாம் சிவபோகமாகிய அதீதத்தையும், குறித்தனவாம். இரண்டாம் அடி முதலாயவற்றில் கூறியவற்றை மெய்கண்ட தேவரும்,
``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` 1
என அருளிச்செய்தல் காண்க.
இதனால், முற்ற முதிர்ந்த சித்தாந்த ஞானத்தின் சிறப்புணர்த்து முகத்தால், அது சிறந்த சன்மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர்
மார்க்கம்சன் மார்க்க மதுசித்த யோகமே.

பொழிப்புரை :

இங்குக் கூறிய சன்மார்க்கம் இதனைப் பெறுதற் குரியோர் பெறுதற் பொருட்டு வகுக்கப்படுவது. தலை சிறந்த நெறி. இந்தச் சன்மார்க்கமன்றி வேறொன்று இல்லை ஆயினும், இந்தச் சன் மார்க்கத்தை அடைந்து இன்புற்றிருக்க மாட்டாதவர்க்குரிய சன் மார்க்கம், மன ஒடுக்கத்தைப் பயனாக உடைய யோக நெறியேயாம்.

குறிப்புரை :

முதலடியில், `இம் மார்க்கம்` எனச்சுட்டு வருவித்து உரைக்க. இரண்டாம் அடி, `இஃது ஒருதலையாக அடையத் தக்கது` என்பதனை நிலைபெறுத்தியது. மூன்றாம் அடியில் உள்ள தொடர், `இந்நெறி` என்னும் சுட்டளவாய் நின்றது. ``வைகாதோர்`` என்றது, ``சென்று வைக்காதோர்`` எனப் பொருள் தந்தது. `வைகாதோர் சன்மார்க்கம் சித்தயோக மார்க்கமாம்` எனக்கூட்டுக. சித்த யோக மார்க்கம் - மனம் ஒடுங்கும் நெறி.
இதனால், சன்மார்க்கத்தை அடையமாட்டாதார்க்கு அதனை அடையும் வழி கூறும் முகத்தால், வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாய் கூறப்பட்டது.
சிற்பி