ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்


பண் :

பாடல் எண் : 1

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.

பொழிப்புரை :

சிவநெறியில் யோகத்தை, `சகமார்க்கம்` - ஒத்துடன் நிற்கும் தோழமை நெறி - எனக் கூறுதல், சன்மார்க்கமாகிய ஞானத்தின் தன்மையையே கொண்டு விளங்குதல் பற்றியாம். அதனால், சிவநெறியோகம், உண்மை ஞானத்தால் உளதாகின்ற முத்திப் பேற்றுள் உய்க்கும். ஏனையோர் கூறும் யோகங்கள் ஓயாது பிறந்து இறத்தலை வெறாது விரும்பிக் கொள்வனவேயாகும். அவற்றால் ஞானமாகிய உறுதிப் பொருள் கிடைத்தலும் கூடுமோ!

குறிப்புரை :

சிவமாந்தன்மையைப் பெறுதற்கு அணித்தாம் நிலையை எய்துவித்தல் பற்றியே யோகம், `சகமார்க்கம் தோழமை நெறி` எனப்படுகின்றது என்பதும், அதனால், அந்நிலையை எய்து விக்கமாட்டாத பிற யோகங்கள் `சகமார்க்கம்` என்பதற்குப் பொரு ளாகா என்பதும் கூறியவாறு. எனவே, பிற யோகங்களைச் சிவ நூல்கள் யோகமாகச் கொள்ளுதல் இல்லை என்பது பெறப்பட்டது. யோகத்திலும் ஞானத்தன்மையே உளதாதல், ஆதார பங்கயங்களை ஆறு அத்துவாக்களாகவும், நிராதார சத்தி மண்டலம் கொள்ளப்படுத லும் அதற்கும் மேலான மீதானம் கூறப்படுதலும் பிறவுமாம். இவை அடயோகம், பாதஞ்சலி யோகம் முதலியவற்றில் இல்லாமை அறிக.
``சன்மார்க்க ஞானமதின் பொருளும், வீறு
சமயசங்கே தப்பொருளுந் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை`` 1
என்றார் தாயுமான அடிகளும்.
``மெய்ம்மைச் - சிவயோக மேயோகம்; அல்லாத எல்லாம்
அவயோகம் என்றே அறி`` 1
என்ற திருக்களிற்றுப்படி இங்கு நினைக்கத் தக்கது. ``பிறந்து, இறந்து உன்மார்க்கம்`` என்றது, `பிறந்து இறந்து உழன்றும் அதனையே விரும்புகின்ற மார்க்கமாம்` என்றவாறு. எனவே, அவை மல நடையே யாய் பிறவியை அறுக்கமாட்டா என்பது போந்தது. `ஆனது` என்றது, பிறவற்றுள் ஒவ்வொன்றையும் தனித்தனி நோக்கிற்று. ``இறந்தும்`` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அதனையே உன்னும் மார்க்கமாம்` என்க. ``உறுதியும்`` என்னும் உம்மை சிறப்பு. ``ஆமே`` என்பது எதிர்மறைப் பொருட்டு.
இதனால், சிவயோகத்தது சிறப்புக் கூறும் முகத்தால், அது `சகமார்க்கம்` எனப்படுதற்கு ஏது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீடில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.

பொழிப்புரை :

சிரசிற்குமேல் பன்னிரண்டங்குலமாகச் சொல்லப் படுகின்ற நிராதாரத்தைப் பொருந்துகின்ற யோகநெறி யில்லாது, பிற வற்றையே யோகமாக மயங்குவோர், ஞான குருவையும், சிவனை யும், உண்மைச் சமயத்தையும் அடையமாட்டார். அவர் அணி மாதியாக விரும்பும் சித்திகளாகிய செல்வத்தைத் தரும் திருமகளும் அவர்பால் அணுக அஞ்சுவாள்; மோட்சமும் அவருக்கு இல்லை. உடம்பையும், சுற்றத் தொடர்பையும் வீணே இழப்பர்.

குறிப்புரை :

துவாதச மார்க்கம், பிராசாத யோகமுமாம். மேற் காட்டிய திருக்களிற்றுப்படியின்படி, சிவயோகம் அல்லாதன அவ யோகமாதலை வலியுறுத்துக் கூறியவாறு, சுற்றமும் பயன் செய்யாமை கூறவே, இறைவன் தோழன்போல அணியனாய் நின்று அருளுதல் இன்மையும் தானே பெறப்பட்டது. அதனால், அவை சகமார்க்கம் ஆகாமை அறிக. ``சிவனும்`` என்பதில் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.
இதனால், சிவயோகமே சிவனை அணியனாக்கும் சகமார்க்க மாதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

யோகச் சமாதியி னுள்ளே அகலிடம்
யோகச் சமாதியி னுள்ளே உளரொளி
யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

பொழிப்புரை :

சிவயோக சமாதியுள்ளே உலக முழுதும் அடங்கித் தோன்றும். உள்நிற்கும் ஒளியும் விளங்கும். அருட்சத்தியும் விளங்கு வாள். ஆதலால், சிவயோக சமாதி பெற்றவரே எல்லாம் சித்திக்கப் பெற்றவராவர்.

குறிப்புரை :

``இடம், ஒளி`` என்பவற்றின்பின், `விளங்கும்` என்பது எஞ்சி நின்றது. உளர்தல் - அசைதல்; ஒளிவிடல். இவ்வொளி திரோ தான சத்தியாம். `அகலிடமும், இவ்வொளியும் உள்ளன` என்றது, கால இடங்களைக் கடந்த பொருள்கள் விளங்குதல் கூறியதாம். அருட்சத்தி விளங்குதலாவது, சத்திநிபாதம் முதிர்தல்.
இதனால், சிவயோகத்தால் உலகம் கடந்த வியாபகம் பெற்றுச் சிவனோடு ஒக்கும் நிலைவாய்த்தலால் அது சகமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

பொழிப்புரை :

சிவயோகிகட்கு யோகத்தோடு உலக போகமும் சுத்தபோகமாய் வரும். சிவயோகத்தால் சிவசாரூபம் கிடைக்கும். ஆகவே, இம்மை, மறுமை இரண்டையும் இழவாது பெறும் சிவ யோகிக்கு அவன் உலகில் விரும்புகின்ற புருடார்த்தம் உளதாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியில், `யோகத்தால்` என உருபு விரிக்க. `உள்ளத்தின்கண் ஓர்கின்ற போகமாகிய புருடார்த்தம் சித்தியாகும்` என்க. அது, பகுதிப் பொருள்விகுதி.
இதனால், சிவரூபம் உற்றிடுதல் பற்றிச் சிவயோகம் சக மார்க்கம் ஆதல் தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.

பொழிப்புரை :

சிவயோகத்தில் ஆறு ஆதாரங்களிலும் சிவனது நிலைகளையே காணுதலால் உணர்வை உண்டாக்கும் நாடிகள் நல்லனவாகும். மேதாகலை முதலிய பதினாறுகலைகளின் முடிவில் பர வெளியில் விளங்கும் ஒளியாகிய சிவம் தோன்றும். சீவ போதம் ஒடுங்கிப் பஞ்சேந்திரியங்கள், அந்தக்கரணம் இவையும் சீவத் தன்மை கெடச் சிவத்தன்மையைப் பெறும். அதனால், அவ்யோகம் சகமார்க்கம் ஆதற்குத் தடையில்லை.

குறிப்புரை :

சுத்திப்பட்டனவற்றை, ``சுத்தி`` என்றார். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலையும், ``விண்ணொளி`` என்பதன்பின், `தோன்றும்` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றன. `ஆலயம்` என்பதும் `ஒடுக்கம்` எனப்பொருள்தரும். சாதாரணம் - பொதுமை. ``சகமார்க்கத்தே`` என்பதனை, முதலில் வைத்து உரைக்க. `சகமார்க்கமே` என்பது பாடமன்று.
இதனால், சிவயோகத்தின் பயன்கள் பலவும் கூறி, அது சகமார்க்கமாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயில்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவயோகம் வல்லானது சிந்தையிடமாகப் பதினெண் கணங்களும் வணங்குகின்ற தனித்தலைவனாகிய சிவன் வந்து நிலைத்து நிற்பானாயின், பின்பு அவன் தன்னோடு இகலி நிற்கின்ற ஐம்பொறிகளாகிய பகைவர்களைத் தனது மனமாகிய கூரிய வாளால் தாக்கி வெட்டி யொழிப்பான்.

குறிப்புரை :

`பிணங்கி நிற்கின்றவையாகிய ஐந்தையும்` என்க. `பிணங்கி நிற்கின்ற ஐயைந்தையும்` எனப் பிரித்து, `இருபத்தைந்து தத்துவங்களையும்` எனவும் உரைப்பர். அணங்குதல் - வருத்துதல். `அணங்க` எனப்பாடம் ஓதுதலுமாம். `அயில்மனம்` என்பது, `இன்பதுன்பங்களை நுகர்கின்ற மனம்` என்னும் பொருட்டாய், `சிலேடை வகையால் கூர்மையான மனம்` எனப் பொருள் தந்தது. இனி, `மனத்துக்குக் கூர்மை நுண்ணிதாக நோக்கல்` எனலுமாம். `அயிர்மனம்` என்பது பாடம் அன்று. யோகமாகிய அக வழிபாட்டினையே இங்கு, ``வணங்குதல்`` என்றார். `நின்றானேல்` என்பதில், `எனில்` என்பதன் மரூவாகிய `ஏல்` என்பது எஞ்சி நின்றது, `நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தால், பின் நீ என் செய்வை` என்பதிற்போல. `சிந்தை சிவன் வந்து நின்றானேல்` `பின்னை ஐந்தையும் எறிவன்` என்றது, `சிவன் வந்து நிற்கும் சிந்தை யில்லாதார் அது மாட்டார்` என்பதைத் தோற்றுவித்து நின்றது.
இதனால், சிவயோகமே ஐம்பொறிகளை வென்று, சிவனோடு சிந்தையால் கூடி நிற்கின்ற சகமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

பொழிப்புரை :

மேற் கூறிய சிவன், வேடத்தால் வளப்பமானகனி (சிவப் பழம்) போன்ற பொலிவையுடையராய் உள்ள சரியை கிரியா மார்க்கத்தார்க்கும் வளப்பமான கனி கிடைத்தாற்போலும் உண்மையையே உடையனாவன். ஆயினும், யோகத்தால் உள்ளம் பழுத்து அவனை உள்ளத்தே விரும்பிக் கண்டுகொண்டிருப்பவர்க்குப் பழம் அளிந்து கிழிந்து சாற்றைப் பொழிதல் போல மிக்க இன்பத்தைத் தருபவனாய் இருப்பன்.

குறிப்புரை :

வளங்கனி - வளவிதாகிய கனி. பகுதல் - கிழிதல். ``பகுந்து`` என்றது, `கிழிந்து பொழிந்தாற் போன்று` எனப் பொருள் தந்தது. ஈற்றடி இனவெதுகை பெற்று நின்றது.
இதனால், சரியை கிரியைகள் சகமார்க்கமாகாது, யோகமே சகமார்க்கமாயினவாறு கூறப்பட்டது.
சிற்பி