ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்


பண் :

பாடல் எண் : 1

மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.

பொழிப்புரை :

விரும்பப்படுகின்ற சற்புத்திர மார்க்கமாகிய கிரியை யாவது, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் ஒளிவடிவில் சிவனை நிறுத்தி முகம் முதலிய உறுப்புக்களை நினைவால் (பாவனை யால்) கண்டு பல முகமன்களும் (உபசாரங்களும்) செய்து வழி படுதலாம். சகமார்க்கமாகிய யோகமாவது, உலகத்தோடு ஒட்டி நிகழும் முகமன் நிகழ்ச்சிகள் `அகம், புறம்` என்னும் இரண்டிடத்தும் நிகழ்தலாகிய அத்தன்மை இன்றி, யோகத்தில் வெளிப்படும் யோக சத்தியை அகத்தில் கண்டு, அதனோடு ஒன்றாதலாம். அனைத்தினும் மேலான சன்மார்க்கமாவது, தெளிவான ஞானமேயாகும்.

குறிப்புரை :

`உண்மை ஞானம் சன்மார்க்கமாய் நிற்க, உடனாய் நிகழும் திருவருளோடு கூடுமாற்றால் யோகம் சகமார்க்கமாதலின், அவ் இரண்டிற்கும் முன்னே நிகழும் ஒளியுருவ வழிபாடு சற்புத்திர மார்க்கமா யிற்று` என்பதாம். ஆகவே, இக்கருத்து இனிது விளங்குதற் பொருட்டே சகமார்க்க சன்மார்க்கங்களின் இயல்புகள் இங்கு எடுத்துக் காட்டப் பட்டன என்பது விளங்கும். சற்புத்திரமார்க்கம் - மகன்மை நெறி - அல்லது - மைந்தர்நெறி. மகன் தந்தைக்கு வேண்டும் உபசாரங் களை அணுக்கமாயிருந்து அவனது மெய்யைத்தீண்டி அன்புடன் செய்தல் போலச் செய்தலே கிரியையாதல் அறிக. `அகல நின்று செய்யும் புறம்படித் தொழில்கள் சரியையாக, அணுகி நின்று செய்யும் அகம்படித் தொழில்களே கிரியை` என உணரலாம். `கிரியைக்கு உரியது அருவுருவத்திருமேனி` என்பது ``தாவிப்பது`` என்றதனால் பெறப்படும்; என்னை? உருவத் திருமேனியாயின், வழிபடும் பொழுதெல்லாம் தாவித்து வழிபடல் வேண்டாமையின். இங்ஙனம் செய்யும் அருவுருவ வழிபாடு பின்னர் அருவ வழிபாடாகிய யோகத்தில் செலுத்த வல்லதாகும். அதனானே, கிரியையில் அக வழிபாடும் ஒரு பகுதியாய் நிகழ்கின்றது. அருவுருவத்திருமேனி அல்லது ஒளியுருவமாவது இலிங்க வடிவாம்.
``மெய்த்தொழில்`` என்றது `கிரியை` என்றவாறு, ``சகத் தொழில்`` என்பது, `உலகியலோடு ஒத்த மார்க்கம்` என்னும் பொருட் டாய்ப் பல முகமன் செயல்களை உணர்த்திற்று. இரண்டு - அகம், புறம். `இரண்டினும் ஆவது அகன்று` என்க. `சகமார்க்கம் ... ... ... இரண்டும் அகன்று ... ... ... தேவியோடு ஒன்றல்` என இயையும்.
இதனால், கிரியை சற்புத்திர மார்க்கம் ஆமாறு ஏனைய வற்றோடு வைத்துக் காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

பொழிப்புரை :

அருக்கிய. பாத்திய. ஆசமனாதி முகமன்களைச் செய்தலும், தோத்திரம் சொல்லலும், திருமேனியைக் கண்ணை இமை காத்தல்போலப் பேணிக் காத்தலும், வழிபாட்டு முடிவில் மந்திரத்தைப் பலமுறை கணித்தலும், பசி தாகம் முதலியவற்றைப் பொறுத்துக் கொண்டு, செயல்களை விரையாது அமைந்து செய்தலும், உண்மையே பேசலும், காம வெகுளிகளாகிய மனக் குற்றங்கள் இல்லா திருத்தலும், அன்போடு படைக்கப்படுகின்ற அன்னம், பெரிதும் உதவு கின்ற நீர் என்பவற்றையும் செயலாலும், பாவனையாலும் மிகத் தூயன ஆக்குதலும், மற்றும் இன்னோரன்ன செயல்கள் பலவும் அன்போடும், ஆர்வத்தோடும் செய்யப்படுதலால், கிரியை குற்றம் அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகின்றது.

குறிப்புரை :

``உற்றநோய் நோன்றல்`` (திருக்குறள் - 291) முதலிய வற்றை வாளா செய்யாது வழிபாடு பற்றிச் செய்தலை, ``நற்றவம்`` என்றார். `இட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `இடுதல்` என்பது `படைத்தல்` என்னும் பொருட்டாய் ``அன்னம்`` என்பத னோடும், `உதவுதல்` என்னும் பொருட்டாய் ``நீர்`` என்பதனோடும் இயைந்தது. சிறப்புடைய இவ் இரண்டற்கும் நேசித்தல் கூறவே, பிறவற்றிற்கும் அஃது உண்மை தானே பெறப்பட்டது. ``அன்னமும்`` என்னும் சிறப்பும்மை ``நீர்`` என்பதனோடும் இயையும். அதனால், பிறவும் சுத்தி செய்யப் படுதல் தானே அமைந்தது. சுத்திகளை ஐந்தாகக் கிரியாபாதம் கூறும். அவை: `பூத சுத்தி, தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி` என்பன. இவற்றின் இயல்பெல்லாம் கிரியை பற்றிய நூல்களிற் கண்டு கொள்க.
இதனால், இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடாக நிகழ்தலால், கிரியை சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரைஅன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.

பொழிப்புரை :

`அறுகாற் பறவை` எனப்படுகின்ற வண்டுகள் தேன் உள்ள மலர்களையே தேடித் திரியும்; வெறும் மலர்களை அணுக மாட்டா. வெண்ணிறத்தையுடைய அன்னப் பறவைகள் தாமரை மலரையே விரும்பியடையும்; நீலப் பூவை அடையமாட்டா. அவை போலச் சிவ வழிபாடு செய்வோர் சிவனுக்கு உவப்பாகின்ற நல்ல மலர்களையே பறிப்பர்; பிற மலர்களைப் பறியார். இவற்றையெல்லாம் நேரிற் கண்டும் நல்லறிவில்லாதார் இளமைக்காலத்திற்றானே சிவனை வழிபட்டு சிவபுத்திரராய் விளங்கும் வழியை அறிகின்றிலர்.

குறிப்புரை :

``அலர்`` என்பது, இசையெச்சத்தால், `தேன் நிறைந்த மலர்` எனப்பொருள் தந்தது. `அன்னம் தாமரையைக் கண்டு மறுகா; நீலம் குறுகா` எனக் கூட்டுக. மறுகுதல் - வருந்துதல்; வெறுத்தல். அஃது இன்மை விரும்புதலை உணர்த்திற்று. ``அரன் நெறி சேரகிலார்`` எனப் பின் வருதலின், நறுமலர் கொய்வார் அந்நெறியைச் சேர்ந்தோராதல் அறியப்படும். ``சிறுகால்`` என்பது `முன் நேரம்` எனப் பொருள் தந்து இளமைப் பருவத்தைக் குறிக்கும்.
``கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார்`` 1
என்பதனானும் அறிக. `சிவ புத்திரராதற்கு இளமைப் பருவம் மிக ஏற்புடைத்து` என்றற்கு, `சிறுகால் சேரகிலார்`` என்றார்.
``முன்னடைந்தான் சம்பந்தன்`` 2 என ஞான சம்பந்தர் தாமே அருளியவாறும், சேய்ஞலூர் பிள்ளையாரும் அங்ஙனமே ஆயின வாறும், ``முன் இளங் காலத்திலே பற்றினேன்`` 3 எனப்பிறரும் அருளியவாறும் இங்கு நினைவு கூரத்தக்கன.
இதனால், கிரியை இளமைக் காலத்தேயும் கொள்ளத் தக்கதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அருங்கரை யாவ தரனடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.

பொழிப்புரை :

பிறவிக் கடலுக்கு காணுதற்கு அரிய கரையாய் உள்ளது அரனது திருவடி நிழலே. உலகில் உயிர்கள் ஒழுக வேண்டிய நெறிமுறையாகச் சொல்லப்படுவது அவனது ஆணையே. அவ் வாணையின்வழி அவனது திருவடி நிழலாகிய கரையை நோக்கிச் செல்கின்ற உயிர்கள் பலவற்றிற்கும் தொகை நிலையாய் அமைந்த ஒரு பேரரசினை உடையவனாய், அனைத்துலகின் மேலும் கோட்டம் இன்றி ஒருபடித்தான கருணையையே யுடையவனாய் அரன் இருக்கின்றான்.

குறிப்புரை :

ஆகவே, `உயிர்கள் யாவும் அவ்வரசன் மைந்தரே யாய் இருந்தும், அதனை அறியாமல் மயங்குகின்றன` என்பதாம்.
``மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்தவனை யறியாது`` 1
என்றமை காணத்தக்கது. `உயிர்களாகிய மைந்தர்க்கெல்லாம் பெரு நிலையையும், பெருநலத்தையும் தருகின்ற பேரரசத் தந்தை அரன்` என்பது கூறுவார், `அவனது திருவடி நிழலே உயிர்கள் அடையும் இடம்` என்பதும் அதனை அடையுமாறும் உடன் கூறினார். `அவ்வடி நீழல்` என்பது பாடமன்று. `பெருங்கரை` என்பதில் கரை. `வரம்பு` என்னும் பொருளாய், ஒழுகும் நெறியைக் குறித்தது. அந்நெறியை இறைவன் தன் ஆணையாக வகுத்து வைத்திருத்தலை இரண்டாம் அடியிற் குறித்தார்.
``பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி` 2 எனத் திருவள்ளுவரும் கூறினார். `அரசாய்` என்பது, `அரைசாய்` எனப் போலியாய்ப் பின், `அரையாய்` என நின்றது.
இதனால், எஞ்ஞான்றும் உயிர்கள் இறைவன் மைந்தராய் இருக்கும் உரிமையுடைமையின் கிரியை இளமைக் காலத்தில் மறந் தொழியினும் பின்னராயினும் அறிந்து மேற்கொள்ளுதற்கு உரித்தாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயன்அது வாகும்
பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.

பொழிப்புரை :

அரனது திருவடிகளின் நேரேநின்றும், வீழ்ந்தும், மனம் விரும்பியும், கைகளால் பிடித்தும், புகழ்ந்தும் முறைப்படி வழிபாடு செய்யுங்கள். அம்முறையீடு உலகப் பயனையும் தருவதா யினும், மானுடப் பிறப்பின் பயனாகிய வீடு பேற்றைத் தருவது அஃது ஒன்றே, ஆதலின், அதனை மேற்கொள்ள அஞ்சி ஒழிவாரிடத்தில் குற்றம் வந்துதங்குவதாம்.

குறிப்புரை :

``தழுவி`` என்புழியும் எண்ணும்மை விரிக்க. ``முறை`` என்பது அதன் வழிபட்ட செயலைக் குறித்து. `விதி` என ஓதினுமாம். பிறவற்றைப் பயந்தும், என்பது ``பிறவிப் பயன்`` என்றதனால் போந்தது. ஈற்றடியைப் பிறவாறும் பாடம் ஓதுவர்.
இதனால், கிரியை இறைவன் மைந்தராகிய மக்கட் பிறப்பினர் யாவரும் தவறாது மேற்கொள்ளற்பாலதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.
``யாவர்க் குமாம்இறை வற்கொரு பச்சிலை`` 1
என இந்நாயனாரும்,
``உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணாராகில் ... ... ... ...
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே`` 2
என்று திருநாவுக்கரசு நாயனாரும் அருளினமை அறிந்து போற்றற் குரியது.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத்தருள`` 1
என்றே சேக்கிழாரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 6

நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

பொழிப்புரை :

எம் பெருமானாகிய சிவனை யான் அவன் முன்னே, நின்றும், கீழே வீழ்ந்தும் மிகுந்த மலர்களைத் தூவி வணங்குவேன். இஃது ஒருகாலத்தில் மட்டுமன்று; எக்காலத்துமாம். இவ்வாறு தொழு வாரிடத்தில் அவர் தொழுந்தோறும் தேவர் தலைவனாகிய சிவபிரான் சென்று வெளிப்பட்டு நிற்பான். அதனால், நீங்களும் அவனை அவ்வாறு வணங்குங்கள்.

குறிப்புரை :

தம்மை அடுத்தார்க்கு மலர் தூவித்தொழுமாறு பணித் தமையால், தாமும் அவ்வாறு தொழுதல் பெறப்பட்டது. ``என்றும்`` என்றது, `யோக ஞானங்கள் கைவந்த பின்னும்` என்றவாறு.
இதனால், கிரியை சிவனை வெளிப்படக் காணும் பயனைத் தருவதாய்ச் சகமார்க்க சன்மார்க்கங்களை அடைந்தோர்க்கும் ஒழியலாகாத சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது. இந்நாயனார் இம் மந்திரத்தில் தம் செய்கையை எடுத்துக் கூறினமையே இதற்குப் போதிய சான்றாகும். மற்றும் ``புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க`` 2 என்றற் றொடக்கத்தனவாகச் சாத்திரங்களிலும், வரும் உரையளவை களும், நால்வர் ஆசிரியர் முதலியோரது ஒழுகலாறுகளுமாகிய சான்றுகள் பலவும் நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 7

திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே.

பொழிப்புரை :

மக்கள் உடம்பிற் பொருந்தி வாழ்கின்ற உலகத் தவரே! சிவனாகிய தந்தைதன் செல்வத்தில் பொருந்தி வாழ்தற்குரிய சற்புத்திர மார்க்கத்தின் மரபினைக் கூறுகின்றேன்; கேளுங்கள். பிறவிக்கு ஏதுவாய் நிலைபெற்றிருக்கின்ற ஆணவ மலம் தனது செயல் மடங்கி நிற்குமாறு உங்கள் இருகைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து குவியும் படி சிவனைத் தொழுது, என்றும் இன்பத்திலே பொருந்தியிருங்கள்.

குறிப்புரை :

``கைகூம்ப`` என்பதனை இரட்டுற மொழிந்து பாசத்திற்குச் `செயல் மடங்க` எனவும், தொழுவார்க்கு, `கைகள் குவிய` எனவும் உரைத்துக் கொள்க. கை செயலாதல், `கையறுதல்` என்னும் சொற் பற்றியும் அறியப்படும். ஆணவம் செயல் மடங்குதல் ஆவது, தன் சத்தி மடங்கி நிற்றல். தொழுதல், மலர் தூவித் தொழுதலாம். இதனை, ``கைகாள் கூப்பித் தொழீர்;- கடி - மாமலர் தூவி நின்று``1 என்பதனாலும் அறிக. `இது செய்யாதார் வாளா பொழுது போக்குபவராவார்` என்பதை,
``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே`` 2
என்னும் நாவக்கரசர் திருமொழியால் உணர்க. ஈற்றடியில் உள்ள `மன், உம்` அசைகள். ``உற்றிருந்து`` என்பது ஒரு சொல்.
இதனால், சற்புத்திர மார்க்கத்தது முறையும், பயனும் சுருங்கக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.
சிற்பி